வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல் திரட்டு – 26 மகாத்மா காந்தி ( மொழிபெயர்ப்பு நூல் ) ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா நூற் குறிப்பு நூற்பெயர் : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 26 ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2007 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10.5 புள்ளி பக்கம் : 16+ 192=208 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : cUgh.130/- படிகள் : 500 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள் தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணியாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ்த் தென்றல் திரு. வி.க., மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப்பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையை தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது. இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது. போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட்களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழி பெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல். சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனை களையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும். சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘ãsh£nlhÉ‹ muáaš’, ‘uh#jªâu í¤jfs¥ ãur§f§fŸ’, %Þn[hÉ‹ ‘rKjha x¥gªj«’, khÍÅÆ‹ ‘kÅj‹ flik’, ï§f®rhÈ‹ ‘khÅl rhâÆ‹ Rjªâu«’, r‹ah£br‹Å‹ ‘Rjªâu¤â‹ njitfŸ ahit? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும். காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே! எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்றுதலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே! ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி டோரதி கிருஷ்ணமூர்த்தி 6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை - 622 002. பதிப்புரை உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலகச் சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர். சர்மா வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த உலக நிகழ்வுகளை தமிழர் களுக்குப் படம் பிடித்துக் காட்டியவர். அரசியல் கருத்து களின் மூலம் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் ஊட்டி வீறு கொள்ளச் செய்தவர். உலக அரசியல் சிந்தனைகளைத் தமிழில் தந்து தமிழிலேயே சிந்திக்கும் ஆற்றலுக்கு வழிகாட்டியவர். தாம் வாழ்ந்த காலத்து மக்களின் பேச்சு வழக்கையே மொழிநடையாகவும், உத்தி யாகவும்கொண்டு நல்ல கருத்தோட்டங்களுக்கு இனிய தமிழில் புதிய பொலிவை ஏற்படுத்தியவர். தமிழ் மக்களுக்கு விடுதலை உணர்வையும்; தேசிய உணர்வையும்; சமுதாய உணர்வையும் ஊட்டும் வகையில் அரும்பணி ஆற்றியவர். தமிழ்ப்பண்பாட்டின் சிறப்புக்களை போற்றியவர்; பொருளற்ற பழக்க வழக்கங்களைச் சாடியவர். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களும் உலகளாவிய அரசியல் பார்வையைப் பெறுவதற்கு வழி அமைத்தவர். மேலை நாட்டுஅறிஞர்களின் தத்துவச் சிந்தனைகளை எளிய இனிய தமிழில் தந்தவர். வரலாற்று அறிவோடு தமிழ்மொழி உணர்வை வளர்த்தவர். அரசியல் தத்துவத்தை அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ் நாட்டுத் தலைவர்களுக்குக் கற்றுத் தந்தவர். தமிழகத்தின் விழிப்பிற்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர். தமிழர்கள் கல்வியில் வளர்ந்தால்தான் உலகில் உயர்ந்து நிற்க முடியும் என்பதை தம் நூல்களில் வாயிலாக உணர்த்தியவர். நன்மையும் தீமையும் இருவேறுநிலைகள்; தீமையை ஓங்கவிடாமல் நன்மையை ஒங்கச் செய்வதே மக்களின் கடமையென்று கூறியவர். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகின்றன. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல்களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்பதற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல் திறமையைக் குறிக்கோளாகக் கொண்ட - பகுத்தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தேடியெடுத்து வெளியிடுகிறோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரைகளை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். இவர் நூல்களைப் படிப்பவர்களுக்கு அந்தந்த நூல்களின் விழுமங்களோடு நெருக்கம் ஏற்படுவது உறுதி. இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ்க் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் அரசியல் வரலாற்று நூல்கள் 14. இந்நூல்களை 6 நூல் திரட்டுகளாக வெளியிட்டுள்ளோம். இவரின் தமிழ் நூல்கள் வெளிவந்த காலம் வடமொழி ஆளுமை ஒங்கியிருந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடையிலும், மொழி நடையிலும், நூல் தலைப்பிலும் எந்த மாற்றமும் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக சர்மாவின் நூல்களைப் படைக் கருவி களாகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுதிகளை முத்துமாலையாகத் தமிழர்தம் பார்வைக்குத் தந்துள்ளோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற இந்தியத் தேசியப் பெருங்கவிஞன் பாரதியின் குரலும், ஒற்றுமையுடன் தமிழர் எல்லாம் ஒன்று பட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும், என்ற தமிழ்த்தேசிய பெருங்கவிஞன் பாரதிதாசனின் குரலும் தமிழர்களின் காதுகளில் ஓங்கி ஒலிக்கட்டும். உணர்வுகள் ஊற்றாகப் பெருகி நல்ல செயல்களுக்கு வழிகோலட்டும். பதிப்பாளர் முன்னுரை பண்டைய இந்திய அரசியலைப் பற்றி வடமொழி நூல்களில் உள்ள செய்திகளை முழுவதும் பயின்று நிரல்பட வகுத்து சுருக்கமாக இந்த அரிய நூலை வெ.சாமிநாத சர்மா யாத்துள்ளார். பண்டைத் தமிழ் நூல்களில் உள்ள அரசியலைப் பற்றிய செய்திகளைத்தொகுத்துத் தனி நூல் ஒன்று எழுதி சர்மா ஆயத்தம் செய்து வந்தார். என்பதை முன்னுரையில் குறித்துள்ளார். ஆனால் அத்தகைய நூலை அவர் எழுதி வெளியிட்டதாகத் தெரியவில்லை. எனினும் வடமொழி நூல்களிலும் சரி தமிழ் நூல்களிலம் சரி கூறப்பட்ட அரசியற் கருத்துக்கள் பெருமளவுக்கு ஒரே மாதிரியான அடிப்படையின் மீதே அமைந்திருக்கின்றன என்று சர்மா கூறுவது சரியாகவே தோன்றுகிறது. 2. அர்த்த சாதிரம் முழுவதும கி.மு.நான்காம் நூற்றாண்டு சார்ந்தது என்ற அவர் காலத்திய பொதுக்கருத்தை சர்மா கூறியுள்ளார். ஆனால் இக்கருத்திலிருந்து இன்றைய அறிஞர்கள் மாறுபடுகின்றனர். (தாம ஆர்.டிராட்மன் 1971: Kaultilya and the Arthasastra”) அது கி.மு.4ம் நூற்றாண்டு முதல் கி.பி.300 வரை உள்ள காலத்தில் பல்வேறு கட்டங்களில் உருவான பகுதிகளின் தொகுப்பேயாகும்; அதன் இறுதி வடிவம் கி.பி.300 ஐ ஒட்டி உருவாக்கப்பட்டிருக்கும் என்பதே இன்றைய கருத்து ஆகும். கி.மு. 500ஐ ஒட்டி உருவாகிய தருமசாதிரங்களின் கருத்துக்கள் பல அர்த்த சாதிரத்தில் உள்ளன. அர்த்த சாதிரத்தின் அந்தப் பகுதிகள் மட்டும் மிகப் பழையனவாய் இருக்கலாம். மேலும் சில பகுதிகள் மௌரியர் ஆட்சிக்காலத்தில் உருவானவையாக இருக்கலாம். ஏனைய பகுதிகள் கி.பி.300 வரை அவ்வப்பொழுது சேர்க்கப்பட்டனவையே என இன்றைய அறிஞர் கருதுகின்றனர். (காண்க. இர்பான் ஹபீப் & விவேகானந்த் ஜா 2004; Mauryan India பக்கங்கள் 46-50; 156-7) 3. தமிழகத்தின் பண்டைய அரசியல் பற்றிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை வருமாறு: i) வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் (1930) Studies in Tamil Literature and History (கடைசி மூன்று இயல்கள் - பக்.177-308-பண்டைத் தமிழ் அரசியல் பற்றியவை) (ii) ஞா.தேவநேயப் பாவாணர் (1971) பழந்தமிழாட்சி (iii) சுப்பிரமணியன் என் 1966/1980 Sangam olity (iv) ....... (1973) பண்டைய இந்திய அரசியல் ஆட்சி நிலையங்கள் (v) தமிழ்நாட்டு அரசு வரலாற்றுக் குழு (1983) : தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் : அரசியல் ( காண்க. பக்.522-591): (சங்ககாலத் தமிழக) ஆட்சிமுறை சி.ஈ. இராமச்சந்திரன். 4. வடமொழியில் உள்ள தருமசாத்திர நூல்கள் அர்த்த சாதிரம் முதலியவற்றில் உள்ள அரசியற் கருத்துக்களை தெளிவாகச் சுவைபடத் தொகுத்துக் கூறியுள்ளார் அறிஞர் சாமிநாத சர்மா. மிகவும் பயனுள்ள நூல். பி. இராமநாதன் நுழையுமுன்... சமற்கிருதத்தில் உள்ள வேத இதிகாசங்கள், காவியங்கள் கூறும் கருத்துக்களை நடுவமாகக் கொண்ட நூல். அறம் தழுவிய அரசியல் கோட்பாடுகளும், செயல்பாடு களும், குடி தழுவிய கோனாட்சி முறைகளும் பேசப்படும் நூல். முகலாயப் படையெடுப்பிற்கு முன்பிருந்த இந்தியத் துணைக் கண்டத்தைப் பற்றிக் குறிப்பதே இந்நூல். அரண்மனையில் ஆகட்டும், குடிசையில் ஆகட்டும் முன்னோர் வகுத்து வைத்த வாழ்க்கைத் திட்டத்தில் கடமையையும், உரிமையையும் வலியுறுத்திக் கூறும் நூல். புராதன இந்தியாவின் காலம் முதிர்ச்சியடைந்து பண்பட்ட வாழ்க்கையின் பண்ணையாக இருந்த காலமே என்பதை அறிய உதவும் நூல். குடி தழுவிய அரசும் அரசுக் குடிகளை தன் உடலாகக் கொண்ட நெறியும் நிலவிய காலம் புராதன இந்தியாவின் காலம் என்பதை அறிவிக்கும் நூல். இயற்கையைப் பின்னனியாகக் கொண்டு எதனையும் பார்ப்பதிலும் பேசுவதிலும் அவற்றோடு, தன்னை இணைத்துக் கொண்டு பெருமை கண்ட முன்னோர்கள் வாழ்ந்த காலம் பண்டை இந்தியாவின் காலம் நிலையற்றவை மீது நாட்டம் செலுத்தாமல் நிலைத்திருப்பவை மீது நாட்டம் கொண்ட முன்னோர்கள் வாழ்ந்த காலம் புராதன இந்தியாவின் காலம். ஆண்ட அரசர்களைப் பற்றி அதிகம் கூறாது ஆண்டதன்மை களைப் பற்றி அதிகம் கூறிய காலம் புராதன இந்தியாவின் காலம். மக்கள் எப்படி வாழ்க்கை நடத்தினார்கள் வாழ்க்கை நடத்தத் துணையாய் இருந்தவை யாவை குமுகாய அமைப்பு எப்படி இருந்தது நாகரிகமும் பண்பாடும் கலையும் இலக்கியமும் மேன்மையுற்ற காலம் புராதன இந்தியாவின் காலம். நமது முன்னோர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவும், வருங்காலத் தலைமுறைக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று எண்ணிப் பார்க்கவும் இந்த நூல் உதவும். கோ. இளவழகன் பொருளடக்கம் சர்மாவின் சாதனைகள் iii முன்னுரை vi பதிப்புரை vii நுழையுமுன் xi வாசகர்களுக்கு - முதற் பதிப்பு xiii வாசகர்களுக்கு - இரண்டாம் பதிப்பு xvi 1. நமது பழமையும் பண்பாடும் 3 2. ராஜ தர்மம் 24 3. அரசு 43 4. ஜன ராஜ்யங்கள் 65 5. அரசன் 80 6 மகுடாபிஷேகம் 99 7. அரசனது கடமைகளும் உரிமைகளும் 112 8. இளவரசன் 126 9. மந்திரிகள் 137 10. ஜனங்கள் 153 பின்னுரை 172 அனுபந்தம் 179 பொருட்குறிப்பு 180 வாசர்களுக்கு (முதற்பதிப்பு) அரசியலைப்பற்றி வடமொழியிலுள்ள தனி நூல்கள் பல; தொகுப்பு நூல்களும் (நிபந்தங்கள்) அநேகம், தனி நூல்களுள் பிரசித்தி பெற்றவை. அரசியல் பண்டிதர்களுக்குக் கையேடு போன்றவை, ஒன்று, கௌடில் யனுடைய அர்த்த சாதிரம்; மற்றொன்று சுக்கிர நீதி, இவைகளைத் தவிர, வேத புராண இதிகாசங்கள், காவியங்கள் ஆகிய பலவற்றுள்ளும் அரசியலைப் பற்றின விஷயங்கள் ஆங்காங்குப் பொதிந்துகிடக்கின்றன. இவையனைத்தையும் அடிப்படையாக அமைத்துக் கொண்டு புராதன இந்தியாவில் அரசியல் என்ற இந்தக் கட்டடத்தை எழுப்பியிருக்கிறேன். கட்டடத்தை எழுப்பியவன் நான்தானென்றாலும், கட்டத்திற்குச் சொந்தக்காரன் நானல்லன், இதற்கத தேவைப்பட்ட தளவாட சாமான்கள் பலவும் பிறருடையதாயிருக்கும் பொழுது நான் எப்படிச் சொந்தம் கொண்டாடமுடியும்? இந்தக் கட்டடத்தைப் பத்து அறைகளாக வகுத்திருக்கிறேன். பின்னுரையென்ற பெயரால் வழக்குகளிலுள்ள மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும் பின்னறை யொன்றும் சேர்த்திருக்கிறேன். அரசியல் சம்பந்தமான சொல் லேசாகக் குறித்துக்காட்ட வேண்டுமென்பதே இந்தப் பின்னுரையைச் சேர்த்ததன் நோக்கம். இது, முடிவு கண்டதோர் ஆராய்ச்சியன்று. முற்காலத்து அரசியலைப் பற்றித் தமிழ் நூல்கள் என்ன கூறியிருக் கின்றன? இதற்கு தந்த நூலில் விடைகாண முற்படவேண்டாமென்று அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு சில இடங்களில் மட்டும், விளக்கத்திற்காக, தமிழ் நூலார் இங்ஙனம் கூறுவர் என்று சுட்டிக்காட்டி யிருக்கிறேன். அவ்வளவு தான் தமிழ்நாட்டு அரசியல். தனிக்கட்ட மாக அமைய வேண்டுமென்பது என் நோக்கம். அதற்கான தளவாடசாமான்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன; சிலவற்றைச் சேகரித்தும் வைத்திருக் கிறேன். அதுபோல் இன்னும் சில அரசியல் கட்டடங்களையும் கட்டிக் காட்ட வேண்டுமென்பது என் அவா. இது நிறைவேற ஆண்டவன் அருளையும் அன்பர்களின் ஆசியையும் வேண்டுகிறேன். வடமொழி நூல்களாகட்டும். தமிழ் நூல்களாகட்டும் பொது வாக வாழ்க்கையைப் பற்றியும், சிறப்பாக அரசியலைப்பற்றியும் கிளத்தியுள்ள கொள்கைகள், வகுத்துள்ள முறைகள் இன்னபிறவும் ஒரே மாதிரியான அடிப்படையின் மீதே அமைந்திருக்கின்றன. அறத்தோடு அரசியல் பின்னிக் கொண்டிருத்தல், குடி தழுவிய கோனாட்சி முறை, இவையிரண்டும் அந்த அடிப்படையின் முக்கியமான அமிசங்களாகும். இரு மொழி நூல்களையும் ஒப்பு நோக்கின் இந்த உண்மை புலனாகும். இந்த நூலில் மேற்படி அடிப்படையைச்சிறிது விரிவு படுத்திக்காட்ட முயன்றிருக்கிறேன். இதிலுள்ள விஷயங்கள் பலவும் பொதுவானவை; வடநாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் பொருந்துபவை. தமிழ் நூல்களில் செறிந்து கிடக்கும் கருத்துக்களை இந்த நூலில் கலந்து காட்டினால் வாசகர்கள் கலங்குதல் கூடுமென்ற அச்சத்தினால்தான். வடமொழி நூல்களை ஆதாரமாகக் கொண்ட ஒன்றும், தமிழ் நூல்களை ஆதாரமாகக் கொண்ட மற்றொன்றுமாக இரண்டு நூல்கள் எழுத அவாவுடை யேனாயினேனே தவிர, வடநாட்டு அரசியல் வேறே. தமிழ்நாட்டு அரசியல் வேறே, அதனால் இரண்டையும் பிரித்துக்காட்ட வேண்டுமென்ற கருத்தினாலன்று பிரிந்திருந்தால் தானே பிரித்துக்காட்ட வேண்டும்? வடநாடும் தமிழ்நாடும் மொழியில் மட்டும் வேறுபாடு கொண்டிருந்தனவே தவிர, வாழ்க்கையின் பல்வேறு துறைகளைப் பற்றின கொள்கைகள், நம்பிக்கைகள் முதலிய அனைத்திலும் ஒருமைப்பாடே கொண்டிருந்தன. நமது முன்னோர்கள், வாழ்க்கையை மொத்தமாகப் பார்த்தது போல தாய் நாட்டையும் மொத்தமாகப் பார்த்தார்கள். அவர்களைப் பற்றி முதல் அத்தியாயத்தில் கூறப்பெற்ற சிறப்பியல்புகள் பலவும் நாடு முழுவதிலும் பரந்து மிளிர்ந்தன. எனவே, இந்த நூலை ஒரு பொது நூலாகக் கொள்ளுமாறு மறுபடியும் வாசகாகளைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த நூலில் கூறப்பட்டிருக்கும் சில கால நிர்ணயங்கள் பற்றிக் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் இவை அறிஞர் பலருடைய அங்கீகாரம் பெற்றவையே. இங்கு ஒரு விஷயம். சமீப கால ஆராய்ச்சி யென்று சொல்லிக் கொண்டு, எதையும் கிறிது சகத்திற்கு இப்பால் வைத்து, அதிலும் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கு இப்பால் வைத்துக் காட்டும் அறிஞர் குழுவுடன் சேர்ந்து கொள்ளக்கூடிய பக்குவம் எனக்கு இன்னும் ஏற்படவில்லையென்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சரித்திர ஆராய்ச்சி யென்பது முடிவு பெறாத ஒன்று. இன்னும் என்னென்ன அற்புதங்களை அந்த ஆராய்ச்சி நமக்கு அள்ளி கொடுக்கப்போகிறதோ, யாரறிவார்? இந்த அற்புதங்களில் ஒன்றின் விளைவாக, நாம் வெகு தூரம் பழமைக்குச் செல்லலாமோ என்னவோ? இந்த நிலையில், இந்த நூலிலுள்ள கால நிர்ணயங்கள் மீது அதிக கவனஞ் செலுத்தாது, கருத்துக்கள் மீது கவனஞ் செலுத்தமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அரசியலைப் பற்றின பொதுவான அமிசங்களை இந்த நூல் மூலம் பார்த்த அன்பர்கள், அரசாங்கம் எப்படி நடைபெற்று வந்ததென்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆவல்காட்டுவார்களல்லவா? அதற்கு இந்த நூலைத் தொடர்ந்து வரும் புராதன இந்தியாவில் அரசாங்க நிருவாகம் என்ற நூலைப் படித்துப் பயனடையுமாறு வேண்டுகிறேன். அதிலிருந்து, இப்பொழுது அரசாங்க நிருவாகத்தில் புதுமையானவை, அந்நியரிட மிருந்து இரவலாகப் பெற்றவை என்று எவைப எவைகளைக் கருதிக் கொண்டிருக்கிறோமோ அவை யாவும் நமது பழமையிலிருந்து பிறந்தவையே என்பதை நன்கு தெரிந்து கொள்ளலாம். கடைசியில் ஒரு வார்தை அவசியம் சொல்ல வேண்டிய வார்த்தை. எனது எழுதுகோல் ஒரு தள்ளுவண்டிமாதிரி; தள்ளிக் கொடுத்தால்தான் நகர்கிறது. தள்ளிக்கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறவர் ஸ்ரீ அரு. சொக்கலிங்கம் அவர்கள். இது போன்ற நூல்கள் பல தொடர்ந்து வெளி வர வேண்டும் மென்பதில் இவருக்குள்ள ஆர்வம் சொல்லி முடியாது. நல்ல முறையில் நூல்கள் அமைய வேண்டுமென்பதில் சுப்பிரமணியம் அவர்கள். இவ்விருவரும். பிரபஞ்ச ஜோதி பிரசுலயத்தின் இரண்டு கண்கள்; எனது வாழ்க்கைச் சக்கரம் சரளமாக உருள உதவும் இரண்டு கைகள், இவர்கள் நீடூழி வாழ்க! இதுவே எனது இடையறாப் பிரார்த்தனை. தியாகராயநகர் சென்னை - 17 1.5.54 வாசகர்களுக்கு (இரண்டாம் பதிப்பு) இந்த நூலின் முதற்பதிப்பு வாசகர்களுக்கு என்ற பகுதியில் இந்த நூலைத் தொடர்ந்து புராதன இந்தியாவில் அரசாங்க நிருவாகம் என்ற நூலைப் படித்துப் பயனடையுமாறு அன்பர்களைக் கேட்டுக் கொண்டிருந் தேன். ஆனால் இந்த இரண்டாம் பதிப்பு வெளிவந்திருக்கிற இப்பொழுதும், மேற்படி நூலைப் படித்துப் பயனடையக் கூடிய வாய்ப்பை அன்பர்களுக்கு அளிக்க முடியாதவனாயிருக்கிறேன் என்பதை வெட்கத்தோடும் வருத்தத் தோடும் தெரிவித்துக் கொள்ள வேண்டியவனாயிருக்கிறேன். இடையே வேறு சில நூல்கள் வெளிவந்திருக்கின்றன. வென்றாலும், கெடுத்தவாக்கு படி நடக்காதது, குற்றந்தானே? இதற்காக அன்பர்கள் என் மீது கோபப்படாமலிருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் அந்த நூல் வெளியாவதற்கு முயற்சி செய்வேன். பலசரக்குகாரனுக்குப் பைத்தியம் பிடித்த மாதிரி என்று ஒரு வசனம் உண்டு. அது போன்றிருக்கிறது, எழுதுகோலுடன் இணைபிரியாது இயங்கும் என் வாழ்க்கை. இதனாலேயே எதையோ சுட்டிக்காட்டி விட்டு வேறெதையோ தொடவேண்டியனாயிருக்கிறேன். எனவே அன்பர்கள் என்மீது இரக்கங்காட்ட வேண்டுகிறேன். இங்கு இரண்டாம் பதிப்பில், ஓரிரண்டு இடங்களில், கருத்துப் பிறழாமல் சிற் சில மாற்றங்களைக் செய்திருக்கிறேன். வேறுமாற்றங் களில்லை, எனது எழுதுகோலின் முனை மழுங்காதிருக்க வேண்டு மென்று அன்பர்கள். அடியேனுக்கு ஆசி வழங்குமாறு பிரார்த்திக்கிறேன். தியாகராயநகர் சென்னை 28.12.61 புராதன இந்தியாவின் அரசியல் 1. நமது பழமையும் பண்பாடும் புராதன இந்தியா என்று சொன்னால், முலிம்கள் படை யெடுத்து வந்து நிலை பெற்றதற்கு முந்தியிருந்த இந்தியாவையே இங்குக் குறிப்பதாகும். இதனை - இந்தப் புராதன இந்தியாவை-முற்பகுதியென்றும் பிற்பகுதியென்றும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். முற்பகுதியானது, மகா அலெக்ஸாந்தரின் படையெடுப் போடு, ஏறக்குறைய கி. மு. நான்காவது நூற்றாண்டோடு முற்றுப் பெற்று விடுகின்றது. பிற்பகுதி யானது, அந்த முற்றுப்பெற்ற நிலையிலிருந்து தொடங்கி முலிம்கள் ஆதிக்கங்கொள்ள ஆரம்பித்ததுவரை, கி. பி. பன்னிரண்டாவது நூற்றாண்டு வரை வந்து நின்றுவிடுகின்றது. ஏன் இப்படி இரண்டு பகுதிகளாகப் பிரித்துச் சொல்கிறோ மென்றால், இரண்டுக்கும் சில சில வித்தியாசங்கள் உண்டு என்ற காரணத்தினால் தான். இப்பொழுது நாகரிமென்றும் கலாசார மென்றும் எவை எவை களையெல்லாம் திரட்டிச் சொல்கிறோமோ, அறவாழ்க்கையென்றும் அரசியல் வாழ்க்கையென்றும் எவைகளை யெல்லாம் சுட்டிக் காட்டுகிறோமோ இவைகளெல்லாம் ஓர் உருவம் பெற்று, வளர்ச்சி யடைந்து, முழுத்தன்மையுடன் பிரகாசித்துக் கொண்டிருந்தது இந்த முற்பகுயில் தான். ஞானத் திரட்டு என்றும், சிந்தனைச் சிகரம் என்றும், நற்போதனைகளின் தொகுப்பு என்றும் இப்படிப் பலவிதமாக மேதையர்களால் போற்றப்படுகின்ற வேதங்களென்ன, பிராம்மணங் களென்ன, உபநிஷதங்களென்ன, தர்மசாதிரங்களென்ன, இதிகாச புராணங் களென்ன, இவை பலவும் நல்லோர் நாவிலே வளர்ந்து, பல்லோர் வாழ்க்கையிலே புகுந்து பரிமளித்துக் கொண்டிருந்தது இந்த முற்பகுதியில்தான். சுருக்கமாக, இந்தியா சிருஷ்டியானதும், அந்தச் சிருஷ்டி, தனித்துவத்தோடும் தூய தன்மையோடும் விளங்கியது இந்த முற்பகுதியில்தான். பிற்பகுதியிலோவெனில், முற்பகுதியில் ஆழ்ந்த அடிப்படை யின் மீது அமைக்கப்பட்ட கட்டத்திற்கு மேல் பூச்சாகப் பல வணங்கள் தீட்டப் பட்டனவென்று கூறலாம். இந்தப் பகுதியில், இயற்கையன்னையின் அருளாட்சி மங்கி, செயற்கைச் சக்தியின் செல்வாக்கு வளர்ந்து வந்தது. சமுதாயத்திலாகட்டும், அரசியலிலா கட்டும், பிற குறைகளிலாகட்டும் ஆடம்பரத்தோடு கூடிய ஒருவித விறுவிறுப்பு படிந்து வந்தது. மிகவும் பிரகாசமான காலமென்றே சொல்லவேண்டும். இந்தப் பிரகாசமானது, வெளி நாடுகளிலும் பரவியது; ஆதிக்கமும் செலுத்தியது. இவை யெல்லாம் பெருமை தான் நமக்கு. ஆனால் இந்தக் காலத்தில் இந்தியா, தனது தனித்து வத்தை, தனது தூய தன்மையை இழந்து வந்தது, கலப்புகள் பல சேர்ந்து வந்தன; எல்லாவற்றிலும் ஒருவித மாற்றம் ஏற்பட்டு வந்தது. இந்த மாற்றத்தில், எந்த அடிப்படையின் மீது மனித வாழ்க்கையை அமைத்து வைத்திருந்தார்களோ முற்பகுதியில் வாழ்ந்த பெரியோர்கள், அந்த அடிப்படையானது. அந்த ஆத்மீக அடிப்படையானது, சிறிது சிறிதாகத் தளர்ச்சியடைந்து கொண்டு வந்தது. இங்ஙனம் தளர்ச்சி யடைந்து கொண்டு வந்த நிலையில் தான் அந்நிய சக்தி வந்து புகுந்து ஆதிக்கங்கொண்டு விட்டது. சுருக்கமாக, இந்திய, அந்நிய சக்திகள் பலவற்றிற்குப் படிப் படியாக இடங்கொடுத்து, கடைசியில் வந்த ஒரு சக்திக்குத் தலைவணங்கத் தயாரானது இந்தப் பிற்பகுதியில் தான். இதற்கு- இப்படித் தலைவணங்கத் தயாராவதற்கு - சுமார் பதினைந்து நூற்றாண்டுகள் பிடித்தன. மகா அலெக்ஸாந்தரின் படையெடுப் பிலிருந்து - கி. மு. 327 - ஆம் வருஷத்திலிருந்து - முகம்மது கோரி படையெடுப்பு வரை- கி. பி. 1192- ஆம் வருஷம் வரை - கணக்கு செய்து கொள்ளுங்கள். ஏறக்குறைய ஆயிரத்தைந்நூறு வருஷங்களாகவில்லையா? இன்னும் இந்தியாவினுடைய மகோன்னதமான வாழ்க்கையில், நண்பகற்காலமென்று முற்பகுதியையும், பிற்பகல் கால மென்றும் பிற்பகுதியையும் கூறினால் அதுவும் பொருத்தமாகவே இருக்கும். அல்லது, மகா அலெக்ஸாந்தரின் படையெடுப்புக்கு முந்திய இந்தியாவை, பல உபநதிகள் வந்து சேருவதற்கும், பலகிளை நதிகள் பிரிந்து செல் வதற்கும் முந்தியுள்ள ஒரு தலைநதிக்கு ஒப்பிட்டுச் சொல்லலாம். அப்படியானால், பிந்திய இந்தியா எத்தகைய தென்பதை நாம் விளக்கிச் சொல்லத் தேவையில்லை யல்லவா? மற்றொரு விதமாகவும் சொல்லிக்காட்ட விரும்புகிறோம். மூன்று மகத்தான யுத்தங்களிலே இந்தியாவினுடைய மகோன்ன தமான வாழ்வு, படிப்படியாக மங்கிவிட்டது. ஜீலம் நதிக்கரைப் போராட்டத்தில், அதாவது மகா அலெக்ஸாந்தர், போர மன்னனை எந்த யுத்தத்தில் தோல்வியுறச் செய்தானோ அந்த யுத்தத்தில் ஆத்மீக இந்தியா போய்விட்டது. தானேசுவர யுத்தத்தில், அதாவது கி. பி. 1192- ஆம் வருஷம் முகம்மது கோரி பிருதி விராஜனைத் தோற்கடித்த யுத்தத்தில் அரசியல் இந்தியா போய் விட்டது. பிளாசி யுத்தத்தில், அதாவது கி. பி. 1757- ஆம் வருஷம் கிளைவ் நடத்திய யுத்தத்தில் பொருளாதார இந்தியா போய்விட்டது. பிளாசி யுத்தத்தில் இந்தியா இறந்துவிட்டது என்று வில் ட்யூரண்ட் 1 என்ற அமெரிக்க அறிஞன் கூறுகிறான். பிளாசி யுத்தத்திற்குப் பிறகு இந்தியாவின் மீது அடிமை இருள் படர்ந்து விட்டது. ஏறக்குறைய இரு நூறு வருஷகாலம் இந்த நிலை. 1947- ஆம் வருஷம் ஆகட் மாதம் பதினைந்தாந்தேதிதான் இந்த இருள் அகன்றது; புதிய இந்தியா பிறந்தது. இந்தப் புதிய இந்தியாவை அழகாக நிர்மாணஞ் செய்து அதில் நன்றாக வாழ வேண்டுமானால் நாம் புராதன இந்தியாவுக்கே செல்ல வேண்டும். அதில் எத்தனையோ நல்ல பாடங்கள் நமக்காகப் பொதிந்து கிடக்கின்றன. வேரின்றி மரமில்லை. அதுபோல் பழமையின்றிப் புதுமை யில்லை. எனவே பழமையைத் திரும்பிப் பார்ப்பதில் பயனில்லை யென்று சொல்வதில் அர்த்தமில்லை. பழமையின் தொடர்ச்சிதான் புதுமை. பழமையை விட்ட புதுமைக்கு வாழ்வில்லை; வளர்ச்சியேது? பெருமை தான் எப்படி உண்டாகும்? சென்ற காலத்தவரிடமிருந்து நாம் எவ்வித பாடத்தையும் கற்றுக்கொள்ள மறுத்து விட்டோமானால், வருங்கால சந்ததியினருக்கு நம்மால் என்ன பாடத்தைக் கற்பிக்க முடியும்? நமது முன்னோர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளாத வரையில், நமது அறிவிலே ஒரு பகுதி பூர்த்தியடையாமலிருக்கிறதென்றே சொல்ல வேண்டும். சென்ற காலத்தில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளாமலிருப்பது அறிவில் குழந்தைப் பருவத்தில் இருந்து கொண்டிருக்கிற மாதிரி என்றான் ஓரறிஞன். உண்மையான வாக்கு இது. ஆதலின் நேயர்களே! நமது தாய் நாட்டின் பழமையில் சிரத்தை கொள்வோமாக! அதனைப் பெருமையோடு பாராட்டுவோமாக! நமது பழமையை அபிமானத்துடன் ஆராய்ச்சி செய்து அதிலிருந்து எண்ணரிய பொருள்களை அள்ளிக் கொடுத்த, அள்ளிக் கொடுத்து வருகின்ற அறிஞர் அனைவருக்கும், அவர்கள் நம் நாட்டவராயினும் பிறநாட்டவராயினும் அனைவருக்கும் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோமாக! புராதன இந்தியாவின் முற்பகுதி, அதனுடைய மகோன்னத வாழ்வின் நண்பகற் காலம், மகா அலெக்ஸாந்தரின் படையெடுப் போடு முடிந்துவிட்டதென்று மேலே கூறினோம். அப்படியானால், அந்த முற்பகுதியின் ஆரம்பகாலம், அந்த மகோன்னத வாழ்வின் உதய காலம் எப்பொழுது என்று வாசகர்கள் கேட்கலாம். என்ன பதில் சொல்வது? எப்பொழுது என்ற கேள்வியைத்தான் திருப்பிக் கேட்க வேண்டியிருக் கிறது. இந்தியாவின் புராதனம் அவ்வளவு ஆழமானது. காலம் ஏற ஏற? ஆராய்ச்சிகள் விரிய விரிய, இந்த ஆழம் இன்னும் ஆழமாகிக் கொண்டே போகிறது. எனவே பழமையின் ஆரம்பக்கோடு எது, உதயகாலம் எப்பொழுது என்று நிர்ணயமாகச் சொல்ல முடியாது. இது சம்பந்தமாக இப்பொழுது சொல்லப் படுவனவெல்லாம் உத்தேசந்தான்; ஊகந்தான். பொதுவாகக் கிறிது சகத்திற்கு அநேக நூற்றாண்டுகள் முந்தி என்று நாம் கொள்ளலாம். மேற்சொன்ன முற்பகுதியையும், முற்கூறு என்றும் பிற்கூறு என்றும் இரண்டு கூறுகளாகப் பிரிக்கலாம். எப்படியென்று கேட் கிறீர்களா? கூறுவோம். வேதங்கள் நான்கு. இவற்றுள் முதன்மையானது ருக் வேதம். உலகத்திலேயே மிகத் தொன்மையான இலக்கியமென்று கூறுவர் அறிஞர் இதனை, இந்த நான்கு வேதங்களும், இவற்றில் பல்வேறு தோற்றங் களென்றும், விரிவுரைகளென்றும் சொல்லத்தக்க பிராம்மணங்கள், உபநிஷதங்கள் முதலிய பலவும் பயிலப்பட்டும், ஜனங்களுடைய வாழ்க்கையில் கலந்தும் இருந்த காலத்தை, பொதுவாக வேதகால மென்பர். ஜனங்கள், நாகரிகத்தின் முதற்படியிலிருந்த காலமாக இந்த வேத காலத்தைக்கொள்ள முடியாது. நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்து, ஜனங்களின் பண்பட்ட வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டுகின்ற காலமாகவே இதனைக் கொள்ள வேண்டும். இந்த வேதகாலமே முற்பகுதியின் முற்கூறு. புராதன இந்தியாவின் மகோன்னத வாழ்க்கையில் முற்பகல் காலமென்று இதனைச் சொல்ல லாம். குறைந்த பட்சக் கணக்காக வைத்துக் கொண்டால்கூட கி. மு. பதினைந்தாவது நூற்றாண்டுக்கு முந்தியது இந்தக் காலமென்பது நிச்சயம். வேத உபநிஷதங்களின் பின்னணி போன்றவை மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள் முதலியன. மிருதிகளை தர்ம சாதிரங் களென்றும் அழைப்பர். இவற்றின் காலம் வேதகாலத்திற்குப் பிற் பட்டது; முற்பகுதியின் பிற்கூறு. புராண காலமென்றோ, இதிகாச காலமென்றோ சந்தர்ப்பத்திற் கேற்றாற்போல் இதனை அழைப்பர். ஏறக்குறைய கி.மு.நான்காவது நூற்றாண்டுக்கு முந்தியென்று கொள்ள லாம் இந்தக் காலத்தை. முற்பகுதியைப் போல் பிற்பகுதியை, அதாவது கி. மு. நான்காவது நூற்றாண்டிலிருந்து கி. பி. பன்னிரண்டாவது நூற்றாண்டு வரையுள்ள காலத்தை இரண்டு கூறுகளாகப்பிரித்துச் சொல்ல வேண்டிய தேவை யில்லை. பொதுவாக, இந்தப் பிற்பகுதியில், அநேக நல்ல காவியங்கள், சிறந்த நாடகங்கள், மேலான சாதிரங்கள் ஆகிய பலவும் சிருஷ்டியாயின. இந்த அளவுக்கு இங்கே தெரிந்து கொண்டால் போதுமானது. ஏற்கனவே இந்தப் பிற்பகுதியைப் பற்றிக் கூறியிருக்கிறோமல்லவா? முற்பகுதியின் கடைசியையும் பிற்பகுதியின் ஆரம்பத்தையும் இணைத்து வைப்பது பௌத்த காலம்; ஜைன காலமும் கூட. சுமார் ஆறு ஏழு நூற்றாண்டுகள். கி.மு. ஐந்தாவது நூற்றாண்டிலிருந்து கி. பி. மூன்றாவது நூற்றாண்டு வரையென்று கொள்ளலாம். இந்தக் காலத்தில் பௌத்த மதமும் ஜைன மதமும் ஒரு மரத்தின் இரண்டு கிளைகளெனப் பிரிந்து செல்வாக்குப் பெற்றிருந்தன. புராதன இந்தியாவின் அரசியலைப்பற்றிக் கூற எழுந்த இந்த நூலில், வேதங்கள், புராண இதிகாசங்கள் முதலியவைகளைப் பற்றிப் பிரதாபிப்பானேன் என்று வாசகர்கள் கேட்கலாம். புராதன இந்தியாவில் நிலவி வந்த அரசியற் கொள்கைகளென்ன, அனுஷ்டானத்தில் இருந்து வந்த ஆட்சி முறைகளென்ன, இவை பலவற்றைப் பற்றி அறிவிக்கும் சிறந்த கருவிகளாக இவை இருக்கின்றன. இந்நூலின் இடையிடையே இவைகளைப் பற்றித்தெரிவிக்க வேண்டியிருக்கும். வேதகாலத்தில் இன்னபடி இருந்தது, பௌத்த காலத்தில் இங்ஙனம் நடைபெற்றது, இன்ன நூலில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது என்று ஆங்காங்கு பிரதாபிக்க வேண்டிவரும். அப்பொழுது வேதகாலம் என்று சொல்லப் பட்டிருக்கிறதே அஃது எக்காலம். ஏதோ ஒரு நூலின் பெயர் சொல்லப்பட்டிருக்கிறதே அஃது என்ன நூல், இப்படியாக வாசகர்கள், அதாவது இந்தக் காலங்களைப் பற்றியும் நூல்களைப் பற்றியும் அதிகம் அறிந்திராத வாசகர்கள் திகைத்தல் கூடும். அப்படிப் பட்டவர்களின் அனுகூலத்திற்காகவே இவை களைப் பற்றிச் சுருக்கமாக இங்கே பிரதாபித்தோம். விளக்கமாக இவை களைப் பற்றிப் பிரதாபித்தால், அது, தத்துவ ஆராய்ச்சிப் பூமியிலோ, சரித்திர ஆராய்ச்சிப் பூமியிலோ வரம்பு மீறிப் பிரவேசித்த குற்றமாகி விடுமல்லவா? அரசியல் அரங்கத்தில் நுழைந்து பார்த்து வரவல்லவோ நாம் முனைந்திருக்கிறோம்? அந்த அளவோடு நின்று கொள்வோம்; அரங்கத்திற்குள் நுழைய முயல்வோம். அதற்கு முன் ஒருவார்த்தை, ஏற்கனவே சொன்ன வார்த்தைதான். வாசகர்கள் மனத்தில் பதியவேண்டுமென்பதற்காகத் திருப்பிச் சொல் கிறோம். ஆரம்பகாலம் எப்பொழுது என்று நிர்ணயிக்க முடியாத ஒரு காலத்திலிருந்து முலிம்கள் படையெடுத்து வந்து ஆதிக்கங்கொண்ட கி. பி. பன்னிரண்டாவது நூற்றாண்டு வரை வாழ்ந்த இந்தியாவை - ஆம்; வாழ்ந்த இந்தியா தான் - புராதன இந்தியா என்று இங்கே சொல்லியிருக்கிறோம். அந்த இந்தியாவின் அரசியல் அமிசத்தைப் பற்றி மட்டும் அன்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கவே இங்குத் துணிந்திருக்கிறோம். அந்தப் பெருமக்கள், ஆம், நமது முன்னோர்கள் கண்ட அரசியலைக் காண முந்துவதற்கு முன்னர், அவர்களைப் பற்றி மேலெழுந்த வாரியாகவாவது தெரிந்து கொள்வது அவசியமாகும். அப்பொழுதுதான் அவர்களுடைய அரசியலை நாம் சரியான படி காண முடியும்; புரிந்துகொள்ளவும் முடியும். எல்லாம் கடவுள் மயமெனக்கொண்டனர் நமது முன்னோர். எப்படியென்று பார்க்கலாம். எல்லாவற்றிற்கும் மேலானதொன்றுண்டு. இந்த ஒன்று, பல வாகத் தோற்றமளிக்கிறது; எல்லாவற்றிலும் ஊடுருவிப் பரந்து நிற்கிறது. மகத்திற்கு மகத்தாய், ஆனால் அணுவில் அணுவாய், எங்கணும் வியாபித்து என்றும் நிலைத்திருக்கின்ற இதனை அறிஞர்கள் பல பெயர் களிட்டழைக்கின்றனர். இதற்கு ஆரம்பமும் இல்லை; முடிவுமில்லை; அப்படியே உருவமும் இல்லை; பெயரும் இல்லை. இது, திணை, பால், வகுப்பு முதலிய வேற்றுமைகளனைத்தையும் கடந்தது. இதனிடமிருந்தே எல்லாம் பிறந்தன; இதன் மயமாகவே எல்லாம் இருக்கின்றன. காய்கின்ற சூரியனும், பேய்கின்ற மழையும், ஒளிர்கின்ற உடுக்கணங்களும், வீசுகின்ற காற்றும், பேசப்படுகின்ற பாஷையும், பரந்துள அன்பும், பிணைக்க வல்ல அரசும், யாவும் இந்த மேலான ஒன்றினிடமிருந்தே தோன்றின; இதன் மயமாகவே இருக்கின்றன. உண்ணுஞ் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையுமெல்லாம் . . . . எம் பெருமான் என்கிறது ஒரு நல்வாக்கு. உணரப்படுகின்ற அறிவுக்கும் இந்த மேலான ஒன்றுதான் ஊற்றுக் களமாயிருக்கிறது, இதுவே அறிவு மயந்தான். அறிவே என்றே போற்றினர் ஆன்றோர் இதனை. முப்பத்திரண்டு வித்தைகளும் அறுபத்து நான்கு கலைகளும் இதனிடமிருந்தே பிறந்தன. ஆயுர் வேதமா, தனுர் வேதமா, மனையடி சாதிரமா, அரசியல் சாதிரமா, எல்லாவற்றிற்கும் மூலம் எது? இந்த மேலான ஒன்றுதான். இதனை மெய்ப்பொருளென்று கூறினும் கூறுக; பரம்பொருளென்று சொல்லினும் சொல்லுக; கடவுளென்று அழைப்பினும் அழைக்க. இங்ஙனம் எல்லாம் கடவுள் மயமென்று கொண்ட கருத்துக் கிசைய இவர்கள் - நமது முன்னோர்கள் - எல்லா ஜீவராசிகளிடத்தும் சகோதர நேயம் பாராட்டினர். காக்கை குருவி எங்கள் ஜாதி என்றது, கவியின் கற்பனையாக இருக்கவில்லை; அன்றாட வாழ்க்கையின் நடைமுறையாக இருந்தது. எனவே தங்களுடைய நம்மையைப் போலவே பிறருடைய நன்மையும் நாடினர். இவர்கள் ஒவ்வொரு வருடைய காலைப் பிரார்த்தனையும் யாதாயிருந்தது? இவ்வுலகத் திலுள்ள சர்வமும் சந்தோஷமா யிருக்கட்டும்; சர்வமும் நோய்நொடி களில்லாமலிருக்கட்டும்; சர்வமும் நல்லனவற்றையே காணட்டும்; யாரும் துக்கமற்றிருக் கட்டும். இங்ஙனம் மற்றவர்களுடைய நன்மையை நாடியதோடு நிற்க வில்லை நமது முன்னோர்கள்; அப்படி நாடுவதில்தான் தங்களுடைய நன்மை இருக்கிறதென்றும் உணர்ந்து நடந்தனர். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற முதுமொழி அவர்களுடைய நித்திய அனுபவமா யிருந்தது. இந்தப் பரபர நலனை நாடுவதில் தான் தனிமனிதனுடைய வளர்ச்சியையோ சமுதாயத்தின் வளர்ச்சியையோ கண்டனர். ஆள்கின்ற அரசு, வாழ்கின்ற குடியின் நன்மையை நாட வேண்டும்; அப்பொழுது தான் அந்த அரசு வாழ முடியும். அப்படியே வாழ்கின்ற குடி, ஆள்கின்ற அரசின் நன்மையை நாடவேண்டும்; அப்பொழுது தான் அந்தக் குடி எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்க முடியும். குடிகள். அரசனைத் தங்கள் சரீரமாகவும், அரசன், குடிகளைத் தன் மேலான சரீரமாகவும் கருதவேண்டும்என்பது மகா பாரதம் இந்தக் கொள்கைதான் நமது ஆன்றோர்களின் அரசியலுக்கு அச்சாணிபோல் இருந்தது. எல்லாவற்றிலும் கடவுள் தன்மையைக் கண்ட நமது பெரி யோர்கள், எல்லாவற்றையும் அந்தக் கடவுள் தன்மையென்கிற அடிப்படையின் மீது வைத்தே பார்த்தாரென்றால் அதில் ஆச்சரிய மென்ன இருக்கிறது? கண்ணுக்குத் தோன்றும் பொருள் களையாகட்டும், கருத்துக்கு விஷயமாயிருக்கும் பொருள் களையாகட்டும் நன்றாக அறிந்துகொள்ள வேண்டு மானால், அந்தப் பொருள்களுக்கு அடியிலுள்ள கடவுள் தன்மையை முதலில் அறிந்துகொள்ள வேண்டுமென்று கூறினர். இதற்கு உதாரணமாக ஒரு சிறு நிகழ்ச்சியை இங்குச் சொல்லிக் காட்டுவோம். கி. மு. ஐந்தாவது நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து ஒரு ஞானி கிரீஸுக்குச் சென்று, அங்கு அப்பொழுது மனிதர்களுடைய அறிவைத் துலக்குவதில் முனைந்திருந்த ஞானியாகிய ஸாக்ரட்டீஸை சந்திக்க, இருவருக்கும் பின்வரும் சம்பாஷைணை நடைபெற்றதாம்:- இந்திய ஞானி : இப்பொழுது என்ன காரியத்தில் ஈடுபட்டிருக்கிறீர்கள்? ஸாக்ரட்டீ : மனிதர்களையும் அவர்களுடைய வழிகளையும் ஆராய்ச்சி செய்வதில் ஈடுபட்டிருக்கிறேன். இந்திய ஞானி கடவுளர்களின் வழிகளைப் பற்றித் தங்களுக்கு ஏதேனும் தெரியுமா? ஸாக்ரட்டீ அவைகளைப் பற்றி எனெக்கொன்றும் தெரியாதே. இந்திய ஞானி (லேசாகச் சிரித்துக் கொண்டு) கடவுளர்களையும் ஞானிகளையும் சரிவரத்தெரிந்து கொண்டாலொழிய மனிதர்களை அறிந்துகொள்ள முடியாது. இந்த நிகழ்ச்சி எவ்வளவு தூரம் உண்மையோ நமக்குத் தெரியாது. ஆனால் இதிலிருந்து நமது முன்னோர்கள், எந்த நிலையில் நின்று எல்லா விவகாரங்களையும் பார்த்தார்களென்பதை ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது. இயற்கையோடியைந்த வாழ்வு நடத்தினார்கள் நமது முன்னோர்கள்; அந்த இயற்கையை வழிபட்டார்கள். ஓங்கி நிற்கின்ற மலையும், ஓடுகின்ற ஆறும் இன்ன பலவும் வழிபாட்டுக்குரியனவா யிருந்தன. இதனால் இயற்கையின் நல்லருள் இவர்களுக்குப் பரிபூரண மாகக் கிடைத்துக் கொண்டிருந்தது. மனிதன் வசதியாக வாழ்வதற்கு என்னென்ன பொருள்கள் வேண்டுமோ அவையாவும் இந்தியாவில் கிடைத்துக் கொண்டிருந்தன. கடவுள் தன்மையையும் இயற்கையையும் பின்னணியாகக் கொண்டு எதனையும் பார்ப்பதில் தான், எதனைப்பற்றியும் பேசுவதில் தான் பெருமை கண்டார்கள் நமது பெரியோர்கள். இந்தப் பின்னணியைத்தான் ஆத்மீக அடிப்படையென்று சொல்லுவார்கள். இந்த அடிப்படையின் மீதுதான, உலக வாழ்க்கை என்னும் கட்டடத்தை நிர்மாணஞ் செய்தார்கள். ஆத்மீக அடிப்படையைப் பற்றிய அறிவுதான் பாரமார்த்திக ஞானம்; உலக வாழ்க்கையென்னும் கட்டடத்தைப் பற்றிய அறிவுதான் லௌகிக ஞானம். பாரமார்த்திக ஞானத்தை மையமாகக் கொண்டு இயங்குவது பாரமார்த்திக வாழ்க்கை; பர வாழ்க்கையென்பது இதனைத்தான் லௌகிக ஞானத்தை மையமாகக் கொண்டு இயங்குவது லௌகிக வாழ்க்கை; இக வாழ்க்கையென்பது இதனைத்தான். கடவுள் தன்மையையும் இயற்கையையும் பின்னணியாகக் கொண்டு பார்ப்பதில் மட்டுமல்ல, அவைகளோடு தங்களை இணைத்துக் கொண்டு பேசுவதிலும் பெருமை கண்டார்கள் நமது பெரியோர்கள், அமானுஷ்ய சக்தியோடு மனுஷ்ய சக்தியைச் சேர்த்து வைத்தே பார்த்தார்கள். இன்ன தெய்வத்தின் வழித் தோன்றல்கள் நாங்கள், இன்ன மலையின் கீழ் வாழ்பவர்கள் நாங்கள், இன்ன ஆற்றின் ஓரத்தில் வசிப்பவர்கள் நாங்கள் என்று இப்படியெல்லாம் சொல்லிக் கொள்வதில் தான் சிறப்பு கண்டார்கள். அரச பரம்பரையினர் பலரும், தங்களைச் சூரியவமிசத்தினரென்றும் சந்திரவமிசத்தினரென்றும் கூறி வந்ததன் காரணம் இதுதான். அரசர்கள் தெய்வாமிசமுடையவர்கள் என்று சொல்லப்பட்டு வந்ததன் காரணமும் இதுதான். இதைப் பற்றிப் பிந்திய அத்தியாயங்களில் விதரித்துச் சொல்வோம். இங்ஙனம் கடவுள் தன்மையென்றும் அமானுஷ்ய சக்தி யென்றும் சொல்லிக் கொண்டு போகிறீர்களே, அப்படியானால் நமது முன்னோர்கள் மனிதர்களாக வாழவில்லையா, இந்த உலக வாழ்க்கையென்பது அவர்களுக்குக்கிடையாதா என்றெல்லாம் வாசகர்களே! கேட்டு விடாதீர்கள். இந்த இடத்தில் சிறிது பொறுமையுடனிருந்து சொல்லப் படுகின்ற விஷயங்களை நிதானமாகக் கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நமது முன்னோர்களுக்கு உலக வாழ்க்கையென்பது கிடையாதா என்ற கேள்வியைக் கேட்கின்ற ஒரு மனப்பான்மையை நம்மவர்களுக்கே, அதாவது படித்தவர்களென்று பெருமையடித்துக் கொள்ளும் நம்மவர் களுக்கே உண்டு பண்ணிவிட்டுப் போயிருக்கிறார்கள். கி. பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய ஐரோப்பிய வித்துவான்கள் சிலர். இந்தியாவின் புராதனத்தைப் பற்றி ஆராய வேண்டுமென்று இவர்கள் கொண்ட ஆவலுக்கு வந்தனஞ் செலுத்தவும், அந்தப் புராதனத்தில் மறைந்து போயிருந்த அநேக அரிய பொருள்களை வெளிக்கொணர்ந்த தற்காக நன்றி செலுத்தவும் நாம் கடமைப் பட்டிருக்கிறோமாயினும், இவர்கள் கொண்ட முடிபுகளுக்கு நாம் வருத்தமே பட வேண்டியிருக்கிறது; இந்த முடிபுகளை அப்படியே விழுங்கி விடுகின்ற நம்மவர்களுக்காக இரங்கவும் வேண்டியிருக்கிறது. இந்தியர்கள் பாரமார்த்திக பாதையில் வெகு தூரம் சென்றிருக் கிறார்களே தவிர உலக மார்க்கத்தில் ஒர் அடிகூட எடுத்து வைக்க வில்லையென்கிறான் ஒர் அந்நிய நாட்டு அறிஞன். இந்தியாவின் சீதோஷ்ணம், இந்தியர்களை வலிமையற்றவர்களாகச் செய்து விட்டதென்றும், இந்தியர்கள் உலக வாழ்க்கையைத் துச்சமாகக் கருதி அதனை இகழ்ந்து வந்தார்களென்றும், அவர்களின் வாழ்க்கையின் மீது ஆதிக்கங்கொண்டு அதனை நடத்த முற்படாமல், அதனின்று தப்பித்துக் கொள்ளவே பார்த்தார்களென்றும் சொல்லுகிறான் இன்னொரு மேலை நாட்டு அறிஞன். என்ன பேதமை! உண்மைக்கு எவ்வளவு தொலைவில் இருக்கின்றன இந்தக் கருத்துக்கள்! இந்த மாதிரியான கருத்துக்களினின்று அன்பர்களே! உங்கள் முகத்தையும் அகத்தையும் திருப்பிக் கொண்டு விடுங்கள். இவைகள் மீது நாட்டஞ் செலுத்துவது நமது முன்னோர்களுக்கு அநீதி இழைப்பதாகும். நமது முன்னோர்கள், கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்; ஆம்; நிறையக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்காகத் தன்னம்பிக்கையை இழந்து விடவில்லை. விதி விதி யென்று சொல்லி வந்தார்கள். ஆனால் அந்த விதியில் நம்பிக்கை வைத்து மதியை இழந்துவிடவில்லை. அது மட்டுமல்ல; அந்த விதியை மதியால் வெல்லவும் செய்தார்கள். தசரதனுடைய குமாரன் ராமனுக்கு, அவனுடைய குருநாதனான வசிஷ்டன் என்ன உபதேசம் செய்கிறான், கேளுங்கள்:- அறிஞர்கள், தங்கள் சொந்த முயற்சியினாலேயே, ஆபத்தான நிலைமைகளைக்கடக்கிறார்கள்; விதியை நம்பிக் கொண்டிருப்பதில்லை விதியை எப்பொழுதும் நம்பித் கொண்டிருப்பவர்கள், அறம், பொருள், இன்பம் மூன்றையும் இழந்து விடுகிறார்கள் . . . . . . . . உண்மையில் அவர்கள், தங்களுக்குத் தாங்களே சத்துருக்களாயிருக்கிறார்கள். . . . எல்லாம் விதிவசம் என்று நம்பிக் கொண்டிருக்கும் மூடர்கள் அடியோடு அழிந்து படுகிறார்கள். . . . . . . . .விதி யென்பதொன்று இல்லவே இல்லை. அது வெறுங்கற்பனை தான். முயற்சியே திருவினையாக்கும் . . . . . . விதியென்பது ஆறுதலளிப் பதற்கான ஒர் உபாயமே தவிர உண்மையில் இல்லவே இல்லை.1 இன்னும் நமது முன்னோர்கள். வானுலகைப் பார்த்துக் கொண்டே பூவுலகில் அடிசறுக்கி விழவில்லை; பூவுலகில் கால்களை நன்றாக ஊன்ற வைத்துக் கொண்டுதான் வானுலகைப் பார்த்தாக்ள். கடவுள் ராஜ்யத்தைப் பற்றி அதிகம் பேசி வந்தார்கள் என்பது வாதவம். ஆனால் அந்தக் கடவுள் ராயத்தை இந்நிலவுலகில் நிலைநாட்டவே பாடு பட்டார்கள். லட்சிய வாதிகளாக இருந்தார்கள்; ஆனால் பிரத்தியட்ச வாதிகளாகவும் இருந்தார்கள். நமது முன்னோர்கள், இவ்வுலக வாழ்வை இழிவாகக் கருதியதே கிடையாது. அதற்கு மாறாக, மனிதன் இவ்வுலகில் நன்றாக வாழ வேண்டுமென்றும், இன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்றும் கூறினார்கள். ஆனால் அப்படி அனுபவிக்கிற இன்பம், அறவழியிலே ஈட்டப்பட்ட பொருளினால் வரும் இன்பமாயிருக்க வேண்டு மென்று தான் சொன்னார்கள். இந்நிலவுலகில் மனிதனின் நல்வாழ்வு நடைபெறுவதற்கு எவை எவை தேவையோ, எவை எவை சாதனங் களாயிருக்கின்றனவோ அவையனைத்தைப் பற்றியும் விதரித்து நூல்கள் பல எழுதியிருக்கிறார்கள். முப்பத்திரண்டு வித்தைகளென்றும் அறுபத்து நான்கு கலைகளென்றும் வகுத்திருப்ப தொன்றைக் கொண்டே அவர்கள்வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் ஆராய்ச்சி செய்து முடிவை கண்டிருக்கிறார்கள் என்பது நன்கு தெரியும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமனால், நமது முன்னோர்கள், பூத்தொடுத்தல் முதல் பரம்பொருளை அறிவது வரையில், கூந்தல் முடிப்பது முதல் குயிலின் , இன்னிசையை அனுபவிப்பது வரையில், மண்ணினைக்காப்பது முதல் விண்ணினை அளப்பது வரையில், உலகத்துச் சகல விஷயங்களைப் பற்றியும் ஆராய்ந்திருக்கிறார்கள். சில உதாரணங்களைச் சொல்லிக் காட்டவிழைகிறோம். கப்பல்கள் பல கட்டி, கடல்கள் பல கடந்து சென்ற நமது மூதாதை யர்களின் திறனைத்தான் என்னென்று சொல்வது? கப்பல்களில் தான் எத்தனை விதங்கள்? பொதுவாக எல்லா கப்பல்களையும் சாமானியக் கப்பல்களென்றும் விசேஷக் கப்பல்களென்றும் இரண்டு வகையாகப் பிரித்திருந்தனர். ஆறுகளிலும் சிறிய நீரோட்டங்களிலும் செல்லக் கூடியவை சாமானியக் கப்பல்கள்; கடல்களில் செல்லக் கூடியவை விசேஷக்கப்பல்கள். நீளம், அகலம், உயரம் இவைகளுக்குத் தகுந்தாற் போல் சாமானியக் கப்பல்களில் பத்து விதம்; விசேஷக் கப்பல்களில் பத்துவிதம், இந்தக் கப்பல்களில் பிரயாணம் செய்வோரின் சௌகரியத் திற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டு மென்பதைப் பற்றியும், கப்பல்களை எப்படி எப்படி அலங்கரித்து வைத்துக் கொள்ள வேண்டுமென்பதைப் பற்றியும் விரிவான விதிகள் வகுக்கப் பட்டிருந்தன. இவ்விதிகளின்படி ஒழுங்காக நடந்து வந்ததனால், பிரயாணிகளும் மாலுமிகளும் எவ்வித ஆபத்திற்கும் உட்படாம லிருந்தனர் என்று தெரிகிறது. கப்பல்களில் மந்திரம் என்றொரு பகுதியுண்டு. இதுதான் தற்காலத்தில்காபின்1 என்று அழைக்கப்படுகிறது. இந்த மந்திரம் இருக்கும் இடத்திற்கும் அளவுக்கும் தக்கபடி, கப்பல்கள் ஆங்காங்குச் செல்வதற்கு உபயோகிக்கப்பட்டு வந்தன. கப்பலின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குச் செல்லக்கூடிய அளவு விசாலமாயிருக்கக்கூடிய மந்திரத்தையுடைய கப்பல்களுக்குச் சர்ப்பமந்திரக் கப்பல்கள் என்று பெயர். திரீகள், அரசாங்க பொக்கிஷத்தின் பணம், குதிரைகள் முதலியன வற்றைக்கொண்டு செல்வதற்கு இவை உபயோகிக்கப்பட்டன. கப்பலின் மத்திய பாகத்தில் மந்திரத்தையுடைய கப்பல்களுக்கு மத்திய மந்திரக் கப்பல்கள் என்று பெயர். மழைகாலத்திலும், அரசர்களின் உல்லாசப் பிரயாணத்தின்போதும் இவை உபயோகிக்கப்பட்டன. கப்பலின் தலைப் பக்கத்தில் அதாவது முகப்பில் மந்திரத்தையுடைய கப்பல்களுக்கு அக்ர மந்திர கப்பல்கள் என்று பெயர். இவை பெரும்பாலும் கோடை காலத்தில் தூரப் பிரயாணங்களுக்கு உபயோகிக்கப்பட்டன. கப்பல்கள் கட்டுவதற்கு இன்னின்ன மரங்களே உபயோகிக்கப் படவேண்டுமென்றும், இன்ன மரத்தை உபயோகிப்பதனால் இன்ன நன்மை உண்டாகுமென்றும் சொல்லப்பட்டிருக்கின்றன. கப்பல்களைக் கட்டுகையில், மரப்பலகைகளை ஒன்றாகச் சேர்த்து இணைக்கும் போது, அவைகளின் அடிப்பாகத்தை, அதாவது தண்ணீர் படும் பாகத்தை இரும்புச் சாமான்களினால் இணைக்கக் கூடாதொன்றும், இரும்பைத் தவிர வேறெதையாவது உபயோகித்து மேற்படி பலகைகளை இணைக்கவேண்டும்மென்றும் ஒர் ஆசிரியன் எச்சரிக்கை செய்கிறான், ஏன் தெரியுமா? கடல்களில் ஆங்காங்குக் காந்த சக்தியுள்ள கற்பாறைகள் இருக்கின்றனவென்றும், இவை, இரும்புச் சாமான்களினால் இணைக்கப் பட்ட கப்பல்களை அடியிலே இழுத்துக்கொள்ளுமென்றும் இவன் காரணம் கூறுகிறான். என்ன ஆச்சரியம்! கப்பல் கட்டுந் தொழில் நுட்பமறிந்த தொழிலாளர் பலர் இருந்தனர். இவர்களுக்கு அரசாங்கம் ஆதரவு அளித்து வந்தது. இந்தக் கப்பல் கட்டுந் தொழிலைப் பற்றியும் கப்பல் போக்கு வரவு பற்றியும் இன்னும் எத்தனையோ விவரங்கள் இருக்கின்றன. விதரித்துத் தனி நூலே எழுதலாம். அஃதிருக்கட்டும். சமுத்திரத்திலே செல்லக் கப்பல்களை உபயோகித்து வந்தது போல், ஆகாய மார்க்கத்திலே சஞ்சரித்திட விமானங்களை உபயோகித்து வந்தனர் நமது முன்னோர். இந்த விமானங்களில் எத்தனை வகையுண்டு இவற்றை எங்ஙனம் இயக்குதல் வேண்டும், எங்ஙனம் நிர்மாணித்தல் வேண்டும் முதலியவைகளைப் பற்றி விரிவாகக் கூறியிருக்கின்றனர். இவை சம்பந்தமான நூல்களும் பல இருந்தன, சமீப காலத்தில் வைமானிக சாதிரமென்ற பெயருடைய ஏட்டுச் சுவடியொன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து, ஒர் ஆகாய விமானத்தை நிர்மாணஞ்செய்வதற்குப் பதினாறு வகையான உலோகங்கள் உபயோகிக்கப் பட்டனவென்றும், பிரதியோர் ஆகாய விமானமும் முப்பத்தோரு பாகங்களைக் கொண்டதா யிருந்ததென்றும் அறிகிறோம். இன்னும் அநேக விவரங்கள் இதில் அடங்கியிருக்கின்றன. யந்திர வகைகள் பலவற்றை நமது முன்னோர்கள் உபயோகித்து வந்திருக்கின்றனர். அறுபத்தைந்து யந்திர வகைகளைப் பற்றி விளக்கிக் கூறுகின்றது ஒரு நூல். இந்த யந்திரங்களில் பல, மனிதனுடைய அன்றாட வாழ்க்கையை ஒழுங்காகவும் திறம்படவும் நடத்தத்துணை செய்வனவா யிருந்தன வென்றும் அறிந்து, இந்த யந்திர யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிற, உண்மையில் யந்திரத்திற்கு அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் ஆச்சரியப்பட வேண்டியவர்களா யிருக்கிறோம். இந்த யந்திர சாதனங்கள், அவர்களின்- நமது முன்னோர்களின் -இயற்கையோ டிணைந்த வாழ்க்கைக்கு முரண்பட்டதாயிருக்க வில்லை யென் பதையும் இங்குச் சுட்டிக் காட்ட வேண்டியவர்களாயிருக்கிறோம். செயற்கை மழையைப் பற்றி இந்தக்காலத்தில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறதல்லவா, இது நமது முன்னோர்களுக்குத் தெரியாத தன்று. தேவையான காலத்தில் தேவையான அளவு மழையைத் தருவித்துக் கொள்ள சில உபாயங்களைக் கையாண்டனர். இவை களைப் பற்றி விளக்கிக் கூறும் நூல்களும் பல இருந்தன. பாதையிலே போகிறோம். யார் யாருக்கு வழிவிட வேண்டும்? குருடன், செவிடன், திரீகள், சுமை கொண்டு வருகிறவர்கள் இப்படிப் பட்டவர்களுக்கு வழி விட்டு விலக வேண்டுமென்று மகாபாரதம் வனபர்வம் கூறுகிறது. கூலி வேலையை மூன்று தரங்களாகப் பகுத்து வைத்திருந்தனர் நமது முன்னோர். இவை முறையே காரியமானம், கால மானம், காரிய காலமானம் என்பனவாகும். ஒரு சுமையை இன்ன இடத்தில் கொண்டு வைத்தல் வேண்டுமென ஒருவனிடம் அறுதியிட்டுப் பேசிக்கொண்டு கொடுப்பது காரியமானம். ஒரு நாளைக்கு அல்லது ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு வருஷத்திற்கு இவ்வளவு கூலி என்று பேசிக்கொண்டு கொடுப்பது காலமானம். இவ்வளவு காலத்திற்குள் இன்ன வேலையைச் செய்து முடித்தால் இவ்வளவு கூலி என்று பேசிக்கொண்டு கொடுப்பது காரிய காலமானம். இவ்வாறு சுக்கிர நீதி கூறுகிறது. சாப்பாட்டில் தான் எவ்வளவு ருசி இருந்தது நமது முன்னோர் களுக்கு? சாப்பிடும் வகைகளை இப்பொழுது நம்மால் கன பதார்த்த மென்றும் ஜல பதார்த்தமென்றும் இரண்டு வகையாகத்தான் பிரிக்க முடிகிறது. ஆனால் நமது முன்னோர் ஐந்து வகையாகப் பிரித்திருந்தனர். அன்னம் முதலியவை போஜ்யம்; குழம்பு முதலியவை சோஷ்யம்; பானகம் முதலியவை பேயம் துவையல் முதலியவை லேகியம்; சீடை, முறுக்கு முதலிய கடிக்கத்தக்கவை பக்ஷ்யம். இங்ஙனம் நூற்றுக்கணக்கான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் அஃது எடுத்துக்கொண்ட விஷயத் திற்குப் புறம்பானதாகும் பொதுவாக, நமது ஆன்றோர்கள், வாழ்க்கையின் பல துறைகளிலும் புகுந்து பார்த்திருக்கிறார்கள் என்று சந்தோஷப் பட்டுக்கொண்டு மேலே செல்வோம். உலகமென்றிருந்தால் அதில் வேற்றுமைகள் பல உண்டு என்பதை ஒப்புக் கொண்டார்கள் நமது முன்னோர்கள்; ஆனால் அந்த வேற்றுமையில் ஒற்றுமையைக் காணவே முனைந்தார்கள்; எல்லாத் துறைகளிலும் இந்த ஒருமை காண்பதையே குறிக்கோளாகக் கொண்டார்கள். தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு என்றாலும், அந்தப் பாஷைகள் வெளியிடும் கருத்துக்கள் ஒரு மாதிரிதானே இருக்கின்றன? இந்தியாவைப் பொறுத்த மட்டில் எத்துணை மொழி வேற்றுமை! எத்துணை இனப்பாகுபாடுகள்! எத்துணை சமயக்கோட்பாடுகள்! பழக்க வழக்கங்களில் தான் எவ்வளவு வித்தியாசம்! ஒரு பொருட்காட்சி சாலையென்றே சொல்லலாம். ஆயினும் எல்லோருக்கும் தாய்நாடு ஒன்றாகவே இருந்தது. நற்றவ வானினும் நனி சிறந்தது தாய்நாடு என்ற உணர்ச்சி எல்லோருடைய உள்ளத்திலும் குடி கொண்டிருந்தது. இந்த ஒற்றுமை உணர்ச்சியைப் பல வழிகளிலும் வலியுறுத்தியும் வளர்த்தும் வந்தனர் நமது முன்னோர். வடகோடியையும் தென்கோடியையும் புண்ணிய தீர்த்தங்கள் மூலமாகவும் புண்ணிய க்ஷேத்திரங்கள் மூலமாகவும் இணைத்து வைத்தனர். நமது முன்னோர்கள் நமது தாய்நாட்டை, பூகோளக் கண் கொண்டு, அதாவது நாற்புற எல்லைகளுக்கு மத்தியிலிருக்கிற வெறும் ஒரு நிலப்பரப்பு என்று பார்க்கவில்லை; ஒரே தர்மத்திற்கும் ஒரே கலாசாரத்திற்கும் கட்டுப்பட்டிருக்கிற குடும்பத்தினர் பலர் ஒன்று சேர்ந்து வசிக்கும் புனித இடமாகவே, புண்ணிய பூமியாகவே கருதினர்; அது மட்டுமல்ல, ஒரே ஆளுகைக்குட்பட்டிருக்கிற க்ஷேத்திரமாகவும் கருதினர். கொளடில்யன்1 சக்ரவர்த்தி க்ஷேத்திரம் என்றே அழைக்கிறான்; (வடக்கே) இமயமலையி லிருந்து (தெற்கே) சமுத்திரம் வரையுள்ளது, குறுக்காக ஆயிரம் யோஜனை2 அளவுள்ளது என்று இந்த க்ஷேத்திரத்திற்கு எல்லையும் வகுத்துக் காட்டுகிறான். இங்கே ஒரு வார்த்தை. ஆங்கிலேயர் வந்து நன்றாக ஊன்றிக் கொண்டு ஆளத் தொடங்கிய பிறகு தான், இந்தியா ஒரே ஆளுகைக்குட்பட்ட ஒரு நாடாகியது என்றும், அமைதியும் ஒழுங்கும் ஏற்பட்டன என்றும், அதற்கு முன்னர், சிறியதும் பெரியதுமான பற்பல ராஜ்யங்கள் ஒன்றுக்கொன்று சதா சண்டை போட்டுக் கொண்டும், கலகமும் குழப்பமும் விளைவித்துக் கொண்டும் இருந்தனவென்றும், அமைதி யென்பது லவலேசமும் இல்லாமலிருந்ததென்றும்., ஜனங்கள் எப்பொழுதும் அச்சத்துடனேயே வாழ்ந்து கொண்டிருந்தார்களென்றும் ஆங்கில சரித்திராசிரியர் பலர் கூறித் திருப்தியடைந்திருக்கின்றனர். இந்தக் கருத்துக்கள், நம்மவர் மனத்திலும் ஓரளவு படிந்து கிடக்கின்றன, இவற்றை- இந்தக் கருத்துக்களை - விரைவிலே அகற்றிக் கொண்டு விடுதல் நல்லது.வேத காலத்திருந்தே நம்மவர்கள் ஒரே ஆளுகைக் குட்பட்டிருப்பதை லட்சியமாகக் கொண்டிருந்தனர். இந்த லட்சியத்தை ஆரம்ப தசையில் நடைமுறைக்குக் கொண்டுவர முடியாமலிருந்திருக்கலாம். ஆனால் நாளா வட்டத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரக்கூடிய நிலைமை ஏற்பட்டது; நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது. கிறிது பிறப்பதற்கு ஆயிரம் வருஷங்களுக்கு முந்தியே, இந்தியா பூராவும் ஒரு சக்ரவர்த்தியின் ஆளுகைக் குட்பட்டிருக்க வேண்டுமென்னும் லட்சியம் அனைவராலும் அங்கீகரித்துக் கொள்ளப் பட்டது என்கிற வாசகம் இங்குச் சிந்திக்கற்பாலது. ஐம்பத்தாறு தேசங்கள்1 என்று சொல்லப்பட்டிருப்பது வாதவம். ஆனால் இவை பலவும், ஒரு சமயமில்லா விட்டாலும் மற்றொரு சமயம் ஒரு சக்ரவர்த்தியின் ஆளுகைக்குட்பட்டிருந்தன வென்பது நிச்சயம். ஏகராட், சம்ராட், சார்வபௌமன், மகாராஜாதி ராஜன், பரம பட்டாரகன் என்ற வார்த்தைகள் சக்ரவர்த்திப் பதவியையே குறிக்கின்றன. மற்றும் சக்ரவர்த்திகள், ராஜசூயம், வாஜபேயம், அசுவமேதம் முதலிய யாகங் களைச் செய்து, தங்கள் பதவியை திரப்படுத்திக்கொண்டார்களென்றும் அறிகிறோம். வேத காலத்து நூல்களிலும், இதிகாச புராணங்களிலும் சக்ரவர்த்திகள் பலர் நமக்கு அறிமுகமாகிறார்கள். ஜனமேஜயன், பரதன், திலீபன், மாந்தாதா, புரூரவன், கார்த்தவீரியார்ஜுனன், ப்ருஹத்ரதன், பகீரதன் இப்படி அநேகருடைய பெயர்களை எடுத்துக் காட்டலாம். இவையெல்லாம் சரித்திர திருஷ்டிக்குட்பட்டவை யல்லவென்று சிலர் கூறலாம். சரி; அப்படியே வைத்துக் கொள்வோம். கி. மு. நான்காவது நூற்றறாண்டிலிருந்தாவது, நமது தாய்நாட்டின் பெரும் பகுதி ஒரே ஆளுகைக்குட்பட்டிருந்தது என்பதை இவர்கள் ஒப்புக் கொள்வார் களல்லவா? கௌடில்யனுடைய உதவி பெற்று அரியணையில் அமர்ந்த சந்திரகுப்த மௌரியன் (கி. மு. 332 - 296) என்ன, இவனுடைய பேரன் அசோகன் (கி. மு. 274 - 232) என்ன, கனிஷ்கன் கி. பி. ( 78 - 96) என்ன, சமுத்திர குப்தன் ( கி. பி. 330 - 375) என்ன, ஹர்ஷன் (கி. பி. 606 - 647) என்ன, மிஹிர போஜன் (கி. பி. 840 - 890) என்ன இவர்களெல்லோரும் சக்ரவர்த்திகளாகவே ஆண்டார்கள். இவ்வளவென்ன, மொகலாய சக்ரவர்த்திகளான அக்பர் (கி. பி. 1556 - 1605) காலத்திலும் அவுரங்க ஜீப் ( கி. பி. 1659 - 1707) காலத்திலும் நமது தாய் நாடு ஒரே ஆளுகைக்குட்பட்டிருக்கவில்லையா? ஒரே ஆளுகையென்று சொன்னால், சிறிய ராஜ்யங்களை யெல்லாம் அழித்துவிட்டு, சிற்றரசர்களையெல்லாம் அழித்துவிட்டு, அடக்கி ஒடுக்கிட்டு, ஒருவனே சர்வாதிகாரிபோல் ஆண்டான் என்பது அர்த்த மல்ல. சிறிய ராஜ்யங்கள் பல இருந்தன; சிற்றரசர்கள் பலர் ஆண்டார்கள், இவர்கள்,தங்களுக்கு மேலாக ஒருவனை சக்ரவர்த்தியாக, ராஜாதி ராஜனாக ஏற்றுக்கொண்டு அவனுக்குக் கப்பஞ் செலுத்தி வந்தார்கள்; அவனுடைய ஆதிபத்தியத்தை ஒப்புக்கொண்டார்கள், அவனும், தன்னுடைய பிரதிநிதியாக ஒருவனை, ஒவ்வொரு சிற்றரசன் சபையிலும் நியமித்து வைத்தி ருந்தான். ஒரே ஆளுகையென்று சொன்னால், ஒருவனுடைய ஆதிபத்தியம் நிலவியது என்பதே அர்த்தம். இன்னொரு விஷயத்தையும் இந்த இடத்தில் வாசகர்களுக்குத் தெளிய வைக்க விரும்புகிறோம். நமது தாய் நாட்டை இந்தியா என்று தான் இப்பொழுது சாதாரணமாக அழைத்து வருகிறோம். இப்படி அழைத்தால்தான் எல்லோருக்கும் புரிகிற மாதிரி யிருக்கிறது. நாமும் இந்நூலில் இதுகாறும் இந்தியாவென்றே அழைத்து வந்திருக்கிறோம்; இனியும் அப்படியே அழைப்போம். இதே பிரகாரம் நமது முன்னோர்கள் அனுஷ்டித்த கலியுகாதி வருஷத்தையோ விக்கிரம சகத்தையோ1 அனுஷ்டிக்காமல், கிறிது சகத்தையே கணக்காக வைத்துக் கொண்டு கி. மு. (கிறிது பிறப்பதற்கு முந்தி) என்றும், கி. பி. (கிறிது பிறந்ததற்குப் பிந்தி) என்றும் சொல்லிக் கொண்டு போகிறோம். இவை களுக்காக வாசகர்கள் எம்மீது வருத்தங்காட்டாதிருப்பார்களாக. எல்லோருக்கும் விளங்குகிற மாதிரி சொல்ல வேண்டுமென்ற எமது ஆவலே, இங்ஙனம் எம்மைச் சொல்லும் படி செய்திருக்கிறது. இந்தியா வென்பது, நமது முன்னோர் வைத்த பெயரல்ல; அந்நியர் இட்ட பெயர். ஆதியில் சிந்து நதி பாயும் நிலப்பரப்பு மட்டுந்தான் அந்நியர் களுக்குத் தெரிந்திருந்தது. இதனைச் சிந்து தேசமென்று அழைத்தனர். பின்னர் பாரசீகர்களின் தொடர்பு ஏற்பட்டது. இவர்கள், சிந்துவை ஹிந்துவாக மாற்றி ஹிந்து தேசமென்றும் அதில் வசித்தவர்களை ஹிந்துக்களென்றும் முறையே அழைத்தனர். பின்னர் வந்த கிரேக்கர்கள் ஹி என்ற எழுத்தை வலுவாக உச்சரிக்க முடியாமல் இந்து தேசமென்றும் இந்துக்களென்றும் அழைத்தனர். இந்தப் பெயர்களே நாளா வட்டத்தில் இந்தியா என்றும் இந்தியர்களென்றும் மாறின. இந்தியா என்ற பெயர் ஆரம்பத்தில் சிந்து நதி பாயும் ஒரு குறுகிய நிலப்பரப்பைச் சுட்டிக் காட்டுவதற்கு வழங்கப்பட்ட தென்றாலும், காலக்கிரமத்தில் அந்த நிலப்பரப்பு குறுக்கிலும் நெடுக்கிலும் விரிந்து பரந்து நின்ற பிறகும் அதே பெயராலேயே- இந்தியா என்ற பெயராலேயே- அழைக்கப்படலாயிற்று. நீண்ட கால வழக்கங் காரணமாக இந்தியா என்றே இப்பொழுதும் நாம் அழைத்து வருகிறோம். ஆனால் நியாயமாக நமது நாட்டை, பாரத வர்ஷம் அல்லது பரத கண்டம் என்றே அழைக்கவேண்டும். இதுவே நமது முன்னோர்கள் வைத்த பெயர். வெகு காலத்திற்கு முன்னே பரதன் என்ற ஓர் அரசன் ஆண்டான். இவன் துஷ்யந்தனுக்கும் சகுந்தலைக்கும் பிறந்தவன். இவனால் ஆளப்பட்ட தேசம், பாரத வர்ஷம் அல்லது பரதகண்டம் என்று அழைக்கப்படலாயிற்று.1 ஜம்பூத்வீபம் என்ற பெயராலும் அழைத்தனர் நமது நாட்டை முன்னோர். விஷ்ணு புராணம் இதன் எல்லையையும் பின் வருமாறு வகுத்துக் கூறுகிறது: (இந்து) மகாசமுத்திரத்திற்கு வடக்கிலும், பனி மலைக்கு (இமயத்திற்கு)த் தெற்கிலும் உள்ள பிரதேசம் எதுவோ, எதில் பரத வமிசத்தினர் வசிக்கின்றனரோ, பக்கத்தில் யவனர்களும் முறையே வசிக்கிறார்களோ அதுதான் ஜம்பூத்வீபம்2 பொதுவாகக் கூறுமிடத்து நமது தாய்நாட்டைப் பாரத தேசமென்று அழைப்பது நமது சரித்திர பரம்பரைக்குப் பொருத்த மாக இருக்கும். நமது முன்னோர்கள், தனி மனிதனுடைய வாழ்க்கையை யாகட்டும். சமுதாயத்தினுடைய வாழக்கையை யாகட்டும் பல கூறுகளாக வகுத்துக் காட்டியிருக்கிறார்கள்; ஆனால் அனைத்தையும் தொகுத்தே பார்த்திருக் கிறார்கள். ஏற்கனவே சொன்னதுபோல், ஒருமை காண்பதே அவர்கள் குறிக்கோளா யிருந்து வந்திருக்கிறது. வகுத்துக் காட்டியது அறிவு வளர்ச்சிக்காக; தொகுத்துப் பார்த்தது அனுபவத்திற்காக. எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு ஆராய்ந்த போதிலும், அதை வலியுறுத்தியும் உயர்வாகவும் சொல்லியிருக்கிறார்களென்பதை நமது புராதன கிரந்தங்கள் பலவற்றிலும் காணலாம். அப்படி ஒன்றை வலியுறுத்தியும் உயர்வாகவும் சொன்னதனால், மற்றவை வேண்டப் படாதனவென்றும் மட்டமென்றும் அவர்கள் கருதியிருந்தததாக நாம் அர்த்தப்படுத்திக் கொண்டுவிடக் கூடாது. அவர்களுடைய நோக்கமும் அதுவல்ல. ஒவ்வொன்றும் அதனதன் நிலையிலே முக்கியமானதுதான்; தேவைதான்; உயர்வுதான். ஆனால் ஒன்றோ டொன்றை இணைத்துப் பேசுகிறபோது, ஒன்று உயர்வு, மற்றொன்று தாழ்வு என்பதில்லை. உடல் ஒன்றுதான்; ஆனால் அதில் தலை வேறு, தோள், வேறு, இடைவேறு, கால்வேறு என்று பிரித்துச் சொல்கிறோம். இந்த அங்கங்கள் பலவும் ஒன்று சேர்ந்தால்தான் உடலாகிறது. உடல் நன்றாக இருப்பதற்கு அதன் ஒவ்வொர் அங்கமும் அதனதன் கடமையைச் செய்து கொண்டு வர வேண்டியிருக்கிறது; அப்படியே ஒன்றோடொன்று ஒத்துழைக்க வேண்டியிருக்கிறது. இவற்றுள் ஒன்று உயர்வு மற்றொன்று தாழ்வு என்று சொல்ல முடியுமா? உயர்வு தாழ்வு என்று கற்பனை செய்து கொண்டு ஒன்றுக் கொன்று சண்டை போட்டுக் கொள்ளுமானால் உடல் இருக்கமுடியுமா? முடியாது, வீடு என்றிருந்தால் அதற்குத் தெருப்பக்கத்துக் கதவும் தேவைதான்; புறங்கடைக்கதவும் தேவைதான். இவற்றுள் ஒன்று முக்கியம், மற்றொன்று முக்கிய மில்லை, ஒன்று உயர்வு, மற்றொன்று தாழ்வு என்றெல்லாம் சொல்லலாமா? கூடாது. இத்தகைய கருத்துக்களையே நமது முன்றோர்கள் கொண்டிருந்தனர். அவ்கள், அறிவையும் அனுபனத்தையும் லௌகிகத்தையும், வைதிகத்தையும், தனி மனிதனையும் சமுதாயத்தினையும், அரசையும் குடியையும், இப்படி ஒன்றோடொன்றை இணைத்தே பார்த்தார்கள்; ஒன்றுக் கொன்று சமமென்றே கருதினார்கள். போகமும் தியாகமும். தேக பலமும் ஆன்ம பலமும், தூல அழகும் சூட்சும இனிமையும் இப்படிப் பலவும் இணைந்தே நின்றன நமது முன்னோர்கள் திருஷ்டியில். அவர்கள் இயற்றிப் போந்த தர்ம சாதிரங்களில் அரசியல் நுட்பங்கள் பல காணப் படுகின்றன. அப்படியே அர்த்த சாதிர மென்கிற அரசியல் நூலில்தர்மத்தின் அவசியம் வலியுறுத்தப் படுகிறது. அதாவது அறம் வேறு, அரசியல் வேறு என்று அவர்கள் கருதவில்லை. அறம் செழுமையுடன் இருப்பதற்கு அரசியல் அவசியம். அப்படியே அரசியல் ஒழுங்காக இயங்கி வருவதற்கு அறம் அவசியம் என்றே கருதினார்கள். இவ்விரண்டின் சேர்க்கை யினால் விளைவது எதுவோ அதுதான் இன்பம். இந்த இன்பத்தை நுகர முற்படுவது பிரதியொரு மனிதனுடைய கடமையு மாகும். இதற்கு - இன்பத்தை நுகர்வதற்கு - அனுகூலங்களாயுள்ளவை எவை எவை யென்று தெரிந் தெடுத்து அவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று சொன்னார்கள்; அப்படியே, பிரதிகூலங்களா யுள்ளவைகளை விலக்கவேண்டுமென்றும் சொன்னார்கள், ஆக, மனிதன் நிம்மதியாக வாழ வேண்டும், சீராக வாழ வேண்டும் என்பதே நமது முன்னோர்களின் நோக்கமாயிருந்தது. இந்த நோக்கத்துடன் வாழ்க்கையைத் தொகுத்துப் பார்த்தார்கள். இந்தத் தொகுத்துப் பார்க்குந் தன்மையினால் தான் நமது முன்னோர்கள், வாழ்க்கையில் எந்த ஒரு தீவிரத்திற்கும் செல்ல வில்லை. ஒரு முனையை மட்டும் பிடித்துக்கொண்டு மற்றொரு முனையைக் கைவிட்டுவிடவில்லை. எதற்கும் தெய்வத்தை நம்பிக் கொண்டு சும்மா இருக்கின்ற வடகோடிக்கும் செல்லவில்லை; அப்படியே தெய்வ நம்பிக்கை என்பது லவலேசமும் இல்லாமல் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்குகின்ற தென்கோடிக்கும் செல்லவில்லை. உலகத்தில் தெய்வமே பெரிதெனச் சொல்பவனும் தெய்வமே இல்லையென்று பிடிவாதமாகச் சொல்கிறவனும் நம்பக் கூடாதவர்கள் என்கிறது மகாபாரதம் வனபர்வம். ஆகவே எதிலும் ஒரு நிதானத்தையே அனுஷ்டித்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். மற்றும் நமது முன்னோர்கள், அனுஷ்டான சாத்தியமானதா என்ற ஒரே தராசில் வைத்துத்தான் எந்த ஒன்றையும் நிறுத்துப் பார்த்திருக்கிறார்கள். அனுஷ்டான சாத்தியமென்கிறபோது, எல்லோரும் ஒரே மாதிரி அனுஷ்டிக்க முடியாதல்லவா? எல்லோருக்கும் ஒன்றே சாத்தியமாயிருக்க முடியதால்லவா? இந்த நுட்பத்தை நன்குணர்ந்து, அவரவர்களுடைய நிலைமைக்கும் பக்குவத்திற்கும் தகுந்தபடி தர்மா தர்மங்களை நிர்ணயித்திருக்கிறார்கள். அவர்களுடைய அனுபவத்தோடு ஒட்டிய அறிவைக் கண்டு நாம் வியப்பே அடைய வேண்டியிருக்கிறது. உதாரணமாக, பொறுமை என்ற குணத்தை எடுத்துக் கொள்வோம். இதனைக் கையாள வேண்டியது அவசியந்தான். பொறுமையே தர்மம். பொறுமையே தானம். பொறுமையே யாகம். பொறுமையே தவம். பொறுமையே சத்யம். பொறுமையே நல்லொழுக்கம். எல்லாம் பொறுமையே. வாதவம். ஆனால் இதனை அளவுக்கு மிஞ்சிக் கையாள லாமா? அதுவும் கூடாது. அப்படிக் கையாண்டால் என்னென்ன கஷ்டங் களை அனுபவிக்க நேரிடுமென்பதைப் பற்றி மகாபாரதம் விதரித்துக் கூறுகிறது. யாரிடத்திலும் பகைமை பாராட்டக்கூடாது. எல்லா மனிதர்களும் கடைப்பிடிக்கவேண்டிய பொது நியதி இது. ஆனால் அரசகடமையைச் செய்கிறவர்கள் பகைமை காட்டவேண்டிய இடத்தில் காட்டாவிட்டால் அவர்கள் அழிந்துபடுவார்கள். சத்துருக்களிடத்தில் விரோதம் பாராட்டாத அரசனை, பாம்பானது எலிகளைத் தின்பதுபோல் பூமியானது தின்று விடுகிறது என்று மகாபாரதம் கூறுகிறது. ஆனால் அந்த விரோதத்தை எப்பொழுதும் பாராட்டிக் கொண்டிருக்கலாமா? அதுவும் கூடாது. அதிலும் ஓர் அளவு இருக்கவேண்டும்; ஒரு நிதானம் இருக்கவேண்டும். அரசன், சத்துருக்களிடம் கொடிய வனாகவும் இருக்கக் கூடாது; மிருதுவாகவும் இருக்கக்கூடாது; கடுமையாகவும் இருக்க வேண்டும்; மிருதுவாகவும் இருக்கவேண்டும் என்று அதே மகாபாரதம் கூறுகிறது. உரிமைகளைக் காட்டிலும் கடமைகளிலேயே அதிக கவனஞ் செலுத்தியிருக்கிறார்கள் நமது முன்னோர்கள். மனிதன் யார்? கடமைகள் பல அடங்கிய ஒரு பொட்டணம். ஒரு மனிதன் பூரண வளர்ச்சியடைந் திருக்கிறானென்று சொன்னால், அவன், தன் கடமைகளை ஒழுங்காகச் செய்துகொண்டு வருகிறானென்பதுதான் அர்த்தம். நமது தர்ம சாதிரங்கள், மனிதன் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யாமல் விடக்கூடாது என்று சொல்வதில் தான் அதிக கவனஞ் செலுத்தியிருக்கின்றனவே தவிர, என்ன செய்யக்கூடாது என்று சொல்வதில் அதிக கவனஞ் செலுத்த வில்லை. என்ன செய்யாமல் விடக்கூடாது என்பதற்கும் என்ன செய்யக்கூடாது என்பதற்கும் அதிக வித்தியாசமுண்டு. இங்கு வாசகர்கள் சிறிது சிந்தித்துப் பார்க்கவேண்டும். அரசியலைப் பற்றி எழுந்த நூல்களும், அரசின் லட்சிய மென்ன, அந்த லட்சியத்தை நோக்கிச் செல்கிறபோது அது செய்ய வேண்டிய கடமைகளென்ன, அந்த அரசை நடத்துகின்ற அரசனுடைய கடமைகளென்ன, பிரஜைகளின் கடமைகளென்ன, இவைகளைப் பற்றியே அதிகம் வற்புறுத்திப் பேசியிருக்கின்றன, இங்ஙனம் கடமைகளைப் பற்றி வலியுறுத்திப் பேசியிருப்பதற்கு அடிப்படையான காரணம், நம்மவர்கள் இயற்கையோடு கொண்டிருந்த தொடர்புதான் என்று சொல்ல வேண்டும். பொதுவாக, இயற்கையோடு போராடிப் போராடி வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலையிலுள்ளவர்கள், உரிமையை வலிறுத்தி அதிகம் பேசுவார்கள். இயற்கையின் உதவி பெற்று வாழ்க்கையை நடத்து கின்ற நிலையிலுள்ளவர்கள் கடமை வலியுறுத்தி அதிகம் பேசுவார்கள். நமது முன்னோர்களுக்கு ஏற்கனவே நாம் கூறியதுபோல், இயற்கையின் நல்லருள் பரிபூரணமாகக் கிடைத்துக் கொண்டிருந்தது. பிறருடைய உதவி நமக்குக் கிடைத்துக் கொண்டிருந்தால், நாம் நமது கடமையை மறந்துவிடுவது சகஜம். அப்படி மறந்துவிடக் கூடாதென்பதற் காகவே. திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்துகின்ற முறையிலேயே, நமது முன்னோர்கள், கடமையை வலியுறுத்தி அதிகம் பேசினார்கள் போலும். நமது முன்னோர்கள், செய்தவனைக் காட்டிலும் செயலுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஒரு காரியத்தைச் செய்தவன், ஒரு நாளில்லாவிட்டால் ஒரு நாள் மறைந்து போவது நிச்சயம். ஆனால் அவன் செய்தகாரியமோ என்று இருந்துகொண்டிருக்கும். இதனால் நிலை யற்றவை மீது நாட்டஞ் செலுத்தாமல் நிலைத்திருப்பவை மீதுதான் நாட்டஞ் செலுத்தினார்கள். எந்த ஒரு விஷயத்திலும் இதைக் காணலாம். ஆண்ட அரசர்களைப் பற்றி அதிகம் கூறவில்லை நம்மவர்கள்; ஆண்ட விதத்தைப் பற்றித்தான் அதிகம் கூறியிருக்கிறார்கள், இதைக் காரணமாகக் காட்டி, நம்மவர் களுக்குச் சரித்திர திருஷ்டியில்லையென்று கூறிவிடுகின்றனர் சிலர். இது தவறு. சரித்திரமென்பது, அரசர்களின் பெயர்களை அடங்கிய பட்டியலன்று; நடைபெற்ற போர்களின் வர்ணனையு மன்று, ஜனங்கள் எப்படி வாழ்க்கை நடத்தினார்கள், நடத்து வதற்குத் துணையாயிருந்தவை யாவை, சமுதாய அமைப்பு எப்படி இருந்தது, அந்தச் சமுதாயத்தின் நாகரிகம், கலாசாரம், இலக்கியம் முதலியன அளித்த நன்கொடைகள் யாவை, இப்படிப்பட்ட விஷயங் களைப் பிரதானமாகக் கொண்டு சொல்லப்படுவதே சரித்திரம். அப்படிச் சொல்லுகையில். இடையிடையே அரசர்களின் பெயரும் வரலாம், அவர்கள் நடத்திய போர்களின் விவரங்களும் வரலாம்; அது வேறு விஷயம். அவையே முக்கியத்துவம் பெறுதல் கூடாதென்பதுதான் நியதி. இந்த நியதியில் நின்றுதான் சரித்திரத்தை நோக்கினார்கள் நமது முன்னோர்கள். நமது முன்னோர்ககளைப் பற்றி இந்த அளவுக்குத் தெரிந்து கொண்டது போதும். இனி அவர்கள் கண்ட அரசியலைக் காண முந்துவோம். 2. ராஜ தர்மம் நமது முன்னோர்கள், அரசியலில் பலவித பரிசோதனைகள் செய்து பார்த்திருக்கிறார்கள; அரசியல் தத்துவங்களென்றும் கொள்கைகளென்றும் இப்பொழுது என்னென்ன பேசப்பட்டு வருகின்றனவோ அவைகளை யெல்லாம் அலசி ஆராய்ந்து பார்த்தி ருக்கிறார்கள்; உலகத்தில் இதுகாறும் நடைபெற்று வந்த இதுகாலை நடைபெற்று வருகிற ஆட்சி முறைகள் பலவற்றையும் நடத்திப் பார்த்திருக்கிறார்கள். இவற்றுள் நிலையாக நின்றது முடியரசுத் தத்துவந்தான்; நெடுகிலும் நடைபெற்று வந்தது முடியாட்சிதான். வேத காலத்திலிருந்து ஆங்கில ஆட்சி முடிவுற்றது வரை மேல் நோக்காகப் பார்த்தால் கூட, முடியாட்சி ஒன்றுதான் முன்னணியில் வந்து நிற்கிறது; ஜனங்களுடைய மதிப்புக்குரியதாய் இருந்து வந்திருக்கிறது . இந்த முடியாட்சி, குடி தழுவிய ஆட்சியாயிருந்தது. இதைச் சிறிது அழுத்தமாகச் சொல்லிக்காட்ட விரும்புகிறோம். ஏனென்றால், மேலை நாட்டுப் பண்டிதர்கள் பலர், கீழை நாடுகளில், அதாவது இந்தியா, சீனா, பாரசீகம் முதலிய பழம்பெரும் நாடுகளில் சுயேச்சாதிகார ஆட்சியே காலம் நெடுகிலும் நடைபெற்று, வந்திருக்கிறதென்றும், மன்னர்கள் கொடுங்கோலர்களாகவே இருந்துவந்திருக்கிறார் களென்றும், அரசர் களுடைய இஷ்டத் துக்குத்தான் ராஜ்ய விவகாரங்கள் நடைபெற்று வந்தனவே தவிர ஜன சம்மதத்தைப் பெற்று ராஜ்ய விவகாரங்கள் நடைபெற வில்லையென்றும், ஜனங்கள் அரசியலில் எவ்வித சிரத்தையும் கொள்ளாமல் யார் எப்படி ஆண்டாலென்ன என்ற மனப்பான்மை யுடனேயே இருந்தார்களென்றும், இப்படியெல்லாம் உண்மைக்கு மாறுப் பட்ட கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். இவைகளை நம்மவர் களும் நம்புகிறார்கள். பாட புத்தகங்களிலும் இந்தக் கருத்துக்கள் புகுத்தப் பட்டிருக்கின்றன. அபசாரம்! சிறப்பாக நமது பழமைக்குப் பண் பாட்டுக்கும் மிகுந்த அபசாரம்! வேறென்ன கூறுவது? வாசகர்களே. எச்சரிக்கை! இந்தக் கருத்துக்களின் சாயல் கூட உங்கள் உள்ளத்தில் படியவிடவேண்டாம், இவை யாவும் தவறு; முற்றிலும் தவறு. அரசர்கள் சுயேச்சையாக ஆள முடியாதபடி அநேக அரண் களை அமைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள் நமது முன்னோர்கள். இந்த அரண்களில் பல, தற்கால திருஷ்டியில் சட்ட ரீதியான அரண் களாகத் தோன்றினாலும். வாதவத்தில் இவைகளைத் தர்மரீதியான அரண்களென்றே சொல்லவேண்டும். வெறும் சட்ட அரண்களாயிருந்தால் காலக்கிரமத்தில் மாறுதலடைந் திருக்கக்கூடும்; உடைந்து போயிருக்கவும் கூடும். ஆனால் நமது முன்னோர்கள் வகுத்த அரண்கள் தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட, தர்மரீதியானஅரண்களானபடியால் மாறுதலடைய வில்லை; உடைந்து போகவுமில்லை. சாசுவதமா யிருப்பதல்லவோ தர்மம்? நமது முன்னோர்கள், ஆளும் அரசை ஒரு சக்தியாகக் கொண்டன ரென்றால், ஆளப்படும் பிரஜையையும் ஒரு சக்தியாகவே கொண்டனர். இந்த இரண்டு சக்திகளுக்கும் சம அந்தது கொடுத்து, ஒன்றுக்கொன்று பிணக்குக்கொள்ளாதபடி இரண்டையும் பிணைத்து வைத்தனர். பிரஜை களுக்கு அரசன் அவசியமாயிருந்ததுபோல் அரசனுக்கும் பிரஜைகள் அவசியமா யிருந்தார்கள். அரசன் விஷ்ணுவானால் பிரஜைகளும் விஷ்ணு என்பது ஒரு வாசகம். பிரஜைகளில்லாத அரசன் இல்லை. அப்படியே அரசனில்லாத பிரஜைகள் இல்லை. பிரஜை களினுடைய நன்மைதான் அரசனுடைய நன்மை. அரசனுடைய நன்மைதான் பிரஜை களினுடைய நன்மை. பிரஜைகளின் காரியந் தான் அரசனுடைய காரியம். பிரஜைகளின் சுகந்தான் அவன் சுகம். பிரஜைகளின் விருப்பந்தான் அவன் விருப்பம். பிரஜைகளின் நன்மைதான் அவன் நன்மை. அவனுடைய சொத்துக்களெல்லாம் பிரஜைகளுக்காக ஏற்படுத்தப்பட்டதேயன்றி அவனுக்காக வல்ல என்கிறது மகாபாரதம். அரசனையும் பிரஜை களையும் இங்ஙனம் பின்னி வைத்திருக்கிறார்கள் நமது பெரியோர்கள். இந்தப் பின்னலி லிருந்து அரசன் பிரிந்து செல்வானாகில் அவன் அரசனல்லன்; கொடுங்கோலன்; தன் அழிவுக்குத்தானே குழி தோண்டிக் கொள்கிறவன். பிரிந்து செல்கிற பிரஜைகளும் பிரஜைகளல்லர்; சமுதாயத்தினர் என்ற அந்ததை இழந்துவிட்ட, ஒழுங்கும் ஒழுக்கமும் இல்லாத ஒரு ஜனக் கும்பல். இங்ஙனம் சொன்னதனால் நமது நாட்டில், பிரஜைகளுக்கு விரோத மாக நடந்துகொண்ட அரசர்களோ, அரசர்களுக்கு விரோதமாக நடந்து கொண்ட பிரஜைகளோ இல்லையென்று, அதாவது கொடுங்கோலாட்சியோ ஜனப்புரட்சியோ நடைபெற வில்லையென்று நாம் சொன்னதாகக் கருதக்கூடாது. கொடுங் கோலரசர்கள் இருந்திருக்கிறார்கள்; அவர்களுக்கு விரோதமாக ஜனங்களும் புரட்சி செய்திருக்கிறார்கள். ஆனால் எல்லா அரசரிகளும் எப்பொழுதும் ஜனவிரோதிகளாயிருந்தார்கள். அப்படியே எல்லா ஜனங்களும் எப்பொழுதும் அரச விரோதி களாயிருந்தார்கள் என்று தீர்ப்புக் கூறப்படுவதைத்தான் நாம் ஆட்சேபிக்கிறோம். ஒரு சில அரசர்கள், ஜன விரோதிகளாயிருந்து ஆட்சி நடத்தினரென்றால், அவர்கள், அரச சக்தியோடு பின்னிக் கொண்டிருக்கிற, அந்த அரச சக்தியில் தன்னுடைய நன்மையைக் காணுந் தன்மையதாகிய பிரஜா சக்தியின் பிரதிநிதிகளாக ஜனங்களைக் கருதாமல், வெறும் மனிதக் கும்பலாகக் கருதி விட்டதுதான் காரணம். இவர்கள் மனிதத் தன்மையிலிருந்து இறங்கிவிட்டவர்கள்; அரச கடமையை உணராதவர்கள். இப்படிப் பட்டவர்கள் ஒரு சிலராகத்தானே இருக்க முடியும்? இதே பிரகாரம், ஒரு சில ஜனங்கள், எப்பொழுதோ ஒரு காலத்தில், அரச விரோதி களாயிருந்து புரட்சி நடத்தினார்களென்றால், உரச சக்திக்கு விரோதமா யிருந்து புரட்சி நடத்தினார்களென்று சொல்ல முடியாது; அரச பதவியைத் தவறாக உபயோகித்து வந்த ஒரு தனி நபருக்கு விரோதமாகப் புரட்சி செய்தார்கள் என்றே சொல்ல வேண்டும். அரச சக்தியும் அரசாங்கமும் சாசுவதமானவை. அரச சக்தியின் பிரதிநிதிகளான அரசர்கள், அரசாங்கத்தை நடத்தும் அதிகாரிகள். இவர்களெல்லோரும் மாறுகின்றவர்கள்; ஒருவர் போனால் மற்றொருவர் வரக்கூடும். எது சாசுவதமானதோ, எது ஜனங்களுடைய நன்மைக்காக ஏற்பட்டதோ அதற்கு நம் நாட்டார் - ஏன்? கீழ்நாட்டார் அனைவருந் தான் - விரோதமே காட்டவில்லை. அதனை அழிக்க முற்படவுமில்லை. யார் ஜனங்களுடைய நன்மைக்கு விரோமாயிருந்தனரோ, யாருடைய செயல்கள் சமுதாயத்தின் மீது பூஞ்சணம் மாதிரி படிந்து அதனை ஒழுங்காக இயங்கவிடாமல் செய்து வந்தனவோ, அவர்களுக்கே அந்தத் தனி மனிதர்களுக்கே விரோதங் காட்டினர்; அவர்களை அழிக்கவும் முற்பட்டனர். எந்த இடத்தில் அரச சக்தியும் பிரஜா சக்தியும் ஒன்றுக் கொன்று முரண்பட்டவை; இரண்டும் பரபர விரோதத் துடனேயே எப்பொழுதும் இருந்து வருகின்றன என்ற கருத்து நிலகின்றதோ அந்த இடத்தில் கொடுங்கோலாட்சியோ, ஜனப் புரட்சியோ ஏதாவது ஒன்று எப்பொழுதும் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கும். தனக்கு விரோதமாகவே ஜனங்கள் எப்பொழுதும் இருந்து வருகிறார்களென்றும் ஓர் அரசன் கருதும் படியான நிலைமையில் அவன் என்ன செய்வான்? தனது சொந்த நலத்தைப் பாதுகாப்பதில் மட்டும் கவனஞ் செலுத்துவான். ஏனென்றால், அவனுடைய நலன் வேறு, ஜனங்களுடைய நலன் வேறு ஆகிவிடு கின்றதல்லவா? ஜனங்களுடைய நலன் என்றால் என்ன? தேசத்தினுடைய நலன்; அரசனுடைய நலத்தை நாடுகின்றவர்கள் ஒரு கட்சியின ராகவும், தேசத்தினுடைய நலனை நாடுகின்றவர்கள் வேறொரு கட்சியின ராகவும் பிரிகின்றனர். அதாவது, ராஜ பக்தர்கள் வேறே, தேசபக்தர்கள் வேறேயாகி விடுகின்றனர்; ராஜபக்தி வேறு தேச பக்தி வேறு என்று ஆகிவிடுகிறது. ஒன்றுக்குப் பக்தி செலுத்துவது மற்றொன்றுக்கு விரோதமாயிருக்கிறது. இந்த விரோதங்களின் திரட்சிதான் புரட்சி என்ற கோலமெடுத்து ஆள்வோரையும் ஆளப் படுவோரையும் அலக்கழிக் கின்றது. நமது நாட்டில் ராஜபக்தியும் தேச பக்தியும் வேறுவேறாகப் பிரிக்கப் படவில்லை; இரண்டும் ஒன்றாகவே கருதப்பட்டது, தேசம் உடம்பானால் அரசன் உயிர். ஒன்றிலே மற்றொன்று, தன் வளர்ச்சியையும் வாழ்வையும் காண்கிறது. அப்படியிருக்க இரண்டையும் வேறுவேறாக எப்படிப் பிரிக்க முடியும்? இரண்டும் எப்படிப் பிணங்கியிருக்க முடியும்? இந்த அடிப்படை யான உண்மையை நாம் மனத்தில் பதிய வைத்துக்கொண்டோமானால், நமது முன்னோர்கள் வகுத்துவைத்துப் போயிருக்கிற அரசியல் சித்தாந்தங்கள் பலவும் நமக்குச் சுலபமாகப் புரிந்துவிடும். இனி ராஜ தர்மத்திற்கு வருவோம். ராஜ தர்மம் என்ற சொற் றொடரைக் கேட்ட மாத்திரத்தில், அரச கடமைகள் என்ற பொருளே நமக்கு முன்வந்து நிற்கிறது. இது தவறில்லை. மகா பாரதம் சாந்தி பர்வம் முதற்பகுதியும், பிற்காலத்துப் பண்டிதர் சிலரும் இந்தப் பொருளிலேயே ராஜ தர்மம் என்ற சொற்றொடரை உபயோகித்திருக்கின்றனர். ஆனால் நமது முன்னோர்கள் இந்தச் சொற்றொடரில் விரிந்த பொருளையே கண்டனர். எப்படி? அரசனாயிருக்கப்பட்ட ஒருவன், தனது ஆளுகைக்குட் பட்டிருக்கும் பிரஜைகள் அனைவரும் அவரவர் கடமைகளைச் செய்து வருகிறார் களாவென்று பார்த்து வரவேண்டும்; அவரவரும் அவரவர் கடமைகளைச் செய்து வருவதற்கான அனுகூலங்களைச் செய்து கொடுக்க வேண்டும்; கடமைகளிலிருந்து வழுவியவர்களைத் தண்டித்து நல்வழிப் படுத்தவேண்டும். அரசனுடைய முக்கியமான கடமைகள் இவை. இந்தக் கடமைகளை ஒழுங்காகச் செய்துவர வேண்டுமானால் அவன், தனது பிரஜைகளின் கடமைகளை நன்கு அறிந்திருக்கவேண்டியது அவசிய மல்லவா? அறிந்தவன்தானே அறிவிக்கமுடியும்? ஆகவே அரசனுடைய கடமையாவது, தனது ஆளுங்கடமையை அறிந்திருப்பது மட்டுமன்று, தனக்கு ஆட்பட் டிருக்கிறவர்களுடைய கடமைகளையும் அறிந்திருப்ப தாகும். இங்ஙனம் ஆள்வோர் ஆளப்படுவோர் ஆகிய இரு சாராருடைய கடமைகளும் திரண்டுதான் ராஜ தர்மமாகிறது. மகாபாரதம் சொல்வதைக் கேளுங்கள்:- யானையின் அடியில் மற்றெல்லாப் பிராணிகளின் அடி களும் அடங்குவது போல், ராஜதர்மத்தில் மற்றத் தர்மங்கள் யாவும் அடங்கியிருக்கின்றன . . . . . எல்லாப் போகங்களும் ராஜதர்மத்தில் காணப் படுகின்றன. எல்லா நியமங்களும் ராஜ தர்மத்தில் சொல்லப்பட்டிரு கின்றன. எல்லாக் கல்விகளும் ராஜதர்மத்திலேயே இருக்கின்றன. எல்லா உலகங்களும் ராஜதர்மத்தில் அடங்கியிருக்கின்றன. தர்மங்களும் போகங்களும் யோகங்களும் ராஜதர்மத்தில் நிலைபெற்றிருக்கின்றன. ராஜ தர்மத்தைவிடச் சிறந்த தர்மம் வேறெதுவுமில்லை . . . . . ராஜ தர்மத்தை விட்ட மற்றத் தர்மங்கள் நாசமடைவதுடன் அவைகளைச் செய்யும் மனிதர்களும் பல இடையூறுகளால் தம் தர்மத்தில் ஆதரவின்றி நாசமடைவார்கள். ராஜ தர்மமானது, உலகத்திலுள்ள பிராணிகள் யாவற்றிற்கும் முக்கிய ஆதார மாயுள்ளது. அறம், பொருள், இன்பம் ஆகிய இம்மூவகைப் பயன்களும் ராஜதர்மத்தில் நிலைபெற்றிருக் கின்றன என்ற வாசகமும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. ராஜ தர்மத்தை, அரச கடமைகள் என்ற குறுகிய அர்த்தத்திலேயே பார்த்தாலும், அது மகத்துவமுடையதாகவே இருக்கிறது. அதனை ஒரு தர்மமாக, ஒரு கடமையாகக் கொண்டார்கள் நமது முன்னோர்கள் என்பது இந்தச் சொற்றொட ரிலிருந்து விளங்குகிறதல்லவா? மற்றும், தர்ம வழியே இயங்குவது தான் அரசு இல்லாவிட்டால் தர்மம் இல்லை. அரசும் தர்மமும் எப்படி இணைந்திருக்கின்றவென்பதும் இந்தச் சொற்றொடரி லிருந்து தெரிகிறது. இன்னும், சாசுவதமாயிருந்து ஆள்வது தர்மந்தான், ஆனால் அஃது அருவமாய் இருப்பதால் அதன் பிரதிநிதியாயிருந்து அரசன் ஆள்கிறான் என்று நமது முன்னோர்கள் கொண்டிருந்த கொள்கையையும் இந்தச் சொற்றொடர் ஞாபகப் படுத்துகிறது. இவ்வளவு பெருமை வாய்ந்த இந்த ராஜ தர்மத்தில் எல்லாத் தர்மங்களும் அடங்குகின்றன என்றால், தர்மம் என்பதுதான் என்ன வென்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசிய மல்லவா? தர்மம் என்ற இந்தச் சொல்லானது, இந்தியாவின் பண்பாடு அனைத்தையும் திரட்டிக் காட்டுகின்ற ஒரு சொல்லாயிருக்கிறது. பிற மொழிகளில் இதனைப் பெயர்த்துச் சொல்ல முடியாது. ஒவ்வொரு பாஷைக்கும் உரித்தானதும், அந்தப் பாஷையில் மட்டும் தெளிவான அர்த்தத்தைக் கொடுக்கக்கூடியதுமான சில சொற்கள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று. தர்மம் என்னும் பதத்தின் பகுதிக்கு தரிப்பது அதாவது எல்லா வற்றிற்கும் ஆதாரமாக இருப்பது என்றும் விடாமல் கூட இருப்பது என்றும் அறிஞர்கள் பொருள் கூறியிருக்கின்றனர். ஜீவ ராசிகள் அனைத்தையும் கட்டியணைத்துக் கொண்டிருப்பது எதுவோ, அவை ஒழுங்காக வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணமாயிருப்பது எதுவோ அதுதான் தர்மம் என்று இதற்கு வியாக்கியானம் செய்யலாம். தனி மனிதனும் சமுதாயமும், மதமும் தத்துவமும், இகமும் பரமும், மனிதனும் கடவுளும் சந்திக்கிற இடம் எதுவோ அதுதான் தர்மம். அது சமுதாயத்தை ஒன்றுபடுத்தும் சேர்க்கை; அன்பின் இணைப்பு; கடவுளை அடைவதற்கான சாதனம் என்கிறது ஒரு நல்வாசகம். அறிஞர்களால் இயற்றப்படுகின்ற சட்ட திட்டங்களுக்கு மட்டும் கட்டுப்பட்டு நடப்பதென்றில்லாமல், ஜனங்களே சுபாவீகமாக எதைச் செய்து கொண்டு போகிறார்களோ, எது அவர்களுடைய வாழ்க்கையோடு ஒட்டிக் கொண்டிருக்கிறதோ அதுவே தர்மம். அது யாரையும் கட்டாயப் படுத்தி நல்லதைச் செய்யுமாறு தூண்டுவதில்லை. நல்லதைச் செய்வதற்கு ஜனங்களைப் பக்குவப்படுத்துவது அது. அது, ஜீவனுடையது; ஆனால் கண்ணுக்குப் புலப்படாதது; மனிதனுடைய வளர்ச்சிக்கு உறுதுணை யாயிருப்பது; அவனுடைய வளர்ச்சியோடு தானும் வளரும் தன்மையது. தனி மனிதனோ, அந்தத் தனி மனிதனை வளர்க்கும் சமுதாயமோ, அந்தச் சமுதாயத்தை இயங்க வைக்கும் அரசோ, அந்த அரசுக்கு நிலைக்களனாயுள்ள பிரபஞ்சமோ அனுசரிக்கவேண்டிய ஒழுங்கு, கடைப் பிடிக்கவேண்டிய ஒழுக்கம், செய்ய வேண்டிய கடமை, கட்டுப்பட வேண்டிய சட்டம், வழங்கவேண்டிய நீதியாவும் இந்தத் தர்மத்திலே அடங்கும். சுருக்கமாக, எந்தச் சந்தர்ப்பத்தில் எதைச் செய்யவேண்டுமோ, எதைச் செய்தால் செய்கிறவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் நன்மை உண்டாகுமோ அதுவே தர்மம் என்று சொல்லலாம். ஆக, எல்லாவற்றிற்கும் மூலமாயுள்ளது, எல்லாவற்றிலும் ஊடுருவிப் பரந்திருப்பது இந்தத் தர்மம். இதனைக் கடவுள் சிருஷ்டியாகவே கொண்டனர் நமது பெரியோர். காரியங்கள் யாவும் தர்மத்தை மூலமாக உடையன என்ற வாசகமும் பிரம்மன், பிராணிகளின் பெருமைக்காகத் தர்மத்தைப் படைத்தான் என்ற வாசகமும் இங்குக் கவனிக்கத்தக்கன. இது நிற்க. இவ்வுலக வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கிறவர்கள் நாட வேண்டியவை மூன்று. அவை முறையே தர்மம், அர்த்தம், காமம் என்பன. இம்மூன்றும் திரிவர்க்கம் எனப்படும். இங்கே ஓர் எச்சரிக்கை. காமம் என்றால், கீழான இச்சையைக் குறிக்கின்ற ஒரு சொல்லாக வாசகர்கள் கருதிவிடக்கூடாது. தமிழில் இன்பம் என்று சொன்னால் பொதுவாக எந்த அர்த்தத்தைக் குறிக்கிறதோ அந்த அந்த அர்த்தத்தையே இங்குக் கொள்ள வேண்டும்.1 இந்தத் திரிவர்க்கத்துள் முதலாவது தர்மம், இதுதான் ஏற்கனவே சொன்னபடி எல்லாவற்றிற்கும் மூலமாயுள்ளது. பிந்திய அர்த்தமும் காமமும் இதனையே அடிப்படையாகக் கொண்டி ருத்தல் வேண்டும். இரண்டாவது அர்த்தம்; அதாவது பொருள். மனிதன் நல்வாழ்க்கை நடத்துவதற்கு இன்றியமையாது வேண்டப் படுவது இது. இதனை ஒழுங்காகச் சம்பாதித்து நன்றாகக் காப்பாற்றி வரவேண்டும். மூன்றாவது காமம்; அதாவது இன்பம். சம்பாதித்த பொருளைக் கொண்டு வாழ்க்கை யில் இன்பம் நுகர்தல் வேண்டும். ஆக மனிதன், அறிய வேண்டியது பொருள்; அனுபவிக்க வேண்டியது இன்பம். இம்மூன்றும் ஒன்றை யொன்று தழுவிக் கொண்டிருக்கின்றன. அறமின்றிப் பொருளில்லை; பொருளின்றி இன்பமில்லை; இன்பமின்றி வாழ்க்கையில்லை. இந்தத் திரிவர்க்கத்தை முறையே அறிந்து, அடைந்து, அனுபவிப் பதற்குக் காரணமாயுள்ளது எது? அரசு. அரசின்றேல் இம்மூன்றும் இல்லை. இந்த அரசு ராஜ்யத்திலுள்ள குறைகளைக் களைந்து, அதனைச் செல்வத்திலோ வறுமையிலோ, சுகத்திலோ துக்கத்திலோ, ஊக்கத்திலோ சோர்விலோ எதிலும் ஓர் அதீதத்திற்குச் செல்லவிடாமல் சமநிலையில் வைத்து, நல்லதையே நோக்கமாகவுடைய முறையில் வளர்த்துவரக் கடமைப்பட்டிருக்கிறது; இந்தக் கடமையைச் செய்யத் தண்டத்தைத் துணைக் கருவியாகக் கொண்டிருக்கிறது. அரசு என்பது ஏற்கனவே சொன்னபடி ஒரு சக்தி; அதற்கு உருவமில்லை. எனவே அஃது, அரசன் மூலமாகவே இந்தக் கடமையைச் செய்கிறது. அரசு உயிரானால் அரசன் உடல். இரண்டும் வேறுவேறு தான். ஆனால் ஒன்றைவிட்டு மற்றொன்று பிரிந்திருக்க முடியாது. அப்படிப் பிரிந்திருக்குமானால், அரசும் தனித்து ஆள முடியாது; அரசனும் அரசனாக மதிக்கப் படமாட்டான். இதனால் அரசையும் அரசனையும் இணைத்து வைத்தே பேசியிருக்கிறார்கள் நமது பெரியோர்கள். எனவே அரசுக்குச் சொன்னதை யெல்லாம் அரசனுக்கும் கொள்ள வேண்டும். அரசனுக்கு, அவனுடைய கடமையைச் செய்யத் துணைக் கருவி யாயிருப்பது தண்டம்.1 இதற்கு உருவமுண்டு; ஆனால் உயிரில்லை. உயிர் கொடுக்கிறவன் அரசன். அவனுக்கு ஆளுஞ் சக்தியை அளிப்பது தண்டம். அரசையும் அரசனையும் பிரிக்க முடியாதது போல் அரசனையும் தண்டத்தையும் பிரிக்கமுடியாது. இதனால் அரசனுக்கே தண்டம் என்ற பெயருண்டு. தண்டதரன் என்றும் சொல்வார்கள்; தண்டத்தைக் கைக் கொண்டிருக்கிறவன் என்று அர்த்தம். இந்தத் கைக்கொண்டிருக்கிறவன் என்று அர்த்தம். இந்தத் தண்டமிருப்பதனால் தான், அரசனுக்கு, கெட்டவர்கள் அடக்கியும் நல்லவர்களைக் காப்பாற்றியும் ராஜ்யத்தில் நீதியை நிலைநாட்டுகின்ற காரியம் சுலப சாத்தியமாகிறது. நீதியென்பது என்ன? நல்லன இவை, தீயன இவை என்று துணிதலேயல்லவோ? இங்கே இரண்டு விஷயங்கள் கவனிக்கப்படவேண்டும். ஒன்று, நமது நாட்டில் முற்காலத்தில் அரசன், ராஜ்யத்தின் முதல் நிருவாகத் தலைவனாக மட்டும் இருக்கவில்லை; முதல் நீதிபதியாகவும் இருந்தான். மற்றொன்று, அவன் வழங்கிய நீதி, தண்ட நீதியென்று அழைக்கப்பட்டது மட்டுமல்ல, அவன் அனுஷ்டித்த நீதியும் தண்ட நீதி யென்றே அழைக்கப் பட்டது. அதாவது அரசன் நீதி வழங்கும் நீதிபதியாக மட்டும் இருந்தால் போதாது; நீதிமானாகவும் வாழ்ந்து காட்டவேண்டும். இதில்தான் ஓர் அரசனுடைய சிறப்பு இருக்கிறது. இன்னும் அவன், பொருள் நிறைந்தவனாக மட்டும் இருந்தால் போதாது; அருள் நிறைந்தவனாகவும் இருக்கவேண்டும். அறத்தின் அடிச்சுவடு பற்றிச் சென்றால் மட்டும் போதாது; இன்பத்தையும் நுகர்தல் வேண்டும். அறம், பொருள், இன்பம் மூன்றையும் தனக்கு மட்டும் சொந்தமாக்கிக் கொண்டால் போதாது; ராஜ்யத்திற்கும், அதாவது ராஜ்யத்திலுள்ள சகலமான பேருக்கும் சொந்தமாக்க வேண்டும். அரசனது பொறுப்புதான் என்னே! இங்ஙனம் திரிவர்க்கமானது அரசையும், அரசு அரசனையும், அரசன் தண்டத்தையும், தண்டம் நீதியையும் இப்படி ஒன்றை யொன்று தொட்டுக் கொண்டிருக்கிறது. இதனை ஒரு சங்கிலி யென்று சொல்லலாம். இந்தச் சங்கிலிதான் மொத்தமாக ராஜ தர்மம் என்ற பெயரைப் பெறுகிறது. ராஜ தர்மத்தைத் தமிழில் அரசியல் என்று சொல்லிக்கொண்டு போவோம். அரசியலைப் பற்றிக் கூறும் புராதன நூல்கள் பல. இவை ராஜ சாதிரமென்றும், ராஜ நீதியென்றும், அர்த்த சாதிரமென்றும், தண்ட நீதியென்றும் இப்படிப் பல பெயர்களால் அழைக்கப்பட்டன.பெயர்களை மேல்நோக்காகப் பார்த்தால், குறிப்பிட்ட ஒரு பொருளை மட்டும் கூறுகின்றமாதிரி தோன்றும். ஆனால் உள்ளே பார்த்தால், மேலே சொன்ன அர்த்தத்தில், ராஜதர்மம் பூராவும் அடங்கியிருக்கும். உதாரணமாக, ராஜ சாதிரமென்றும் சொன்னால், ராஜன் அனுசரிக்க வேண்டிய நியதிகளைப் பற்றி மட்டும் கூறும் நூலன்று; ராஜதர்மம் பூராவையும் சொல்லுகின்ற நூலேயாகும். அப்படியே ராஜ நீதி யென்று சொன்னால், அரசன் வழங்க வேண்டிய நீதி முறைகளைப் பற்றி மட்டும் கூறும் நூலென்று கொள்ள முடியாது; ராஜ தர்மத்தைப் பற்றிய நூலென்றே கொள்ள வேண்டும். அர்த்த சாதிரமென்று பெயரைக் கேட்ட மாத்திரத்தில் பொருளாதார சாதிரமென்றும் தான் தோன்றும். அர்த்தம் என்றால் பொரு ளல்லவா? ஆனால் அர்த்த சாதிரமென்பது அரசியல் முழுவதையும் விளக்கும் நூலாக விளங்குகிறது. கௌடில்யனே இதற்குப் பின்வருமாறு வியாக்கியானம் செய்கிறான்: மனித சமூகத்தின் உயிர் வாழ்க்கைக்கு அவசியமானது எதுவோ அதுவே அர்த்தம். மதி சமூகம் நிறைந்த பூமியும் அர்த்தமென்றே அழைக்கப் படுகிறது. அந்த பூமியைச் சம்பாதித்து அதைக் காப்பாற்று வதற்கான உபாயங்களைக் கூறும் சாதிரமே அர்த்த சாதிரம். வேத தர்ம சாதிரங்களுக்கு விரோதமில்லாமல் ஓர் அரசன் ஆட்சி நடத்த வேண்டிய முறைகளைக் கூறுவதும், பொருளைச் சம்மபாதிப்பதற்கான உபாயங்களை விளக்கிச் சொல்வதுமே அர்த்த சாதிரம் என்கிற சுக்கிர நீதி. தண்ட நீதியென்பதும் இப்படித்தான். அரசியல் சித்தாந்தங்களும் அரசியலை நடத்த வேண்டிய முறைகளும் இதில் முழு இடம் பெற்றிருப்பதைப் பார்க்கிறோம். நய சாதிரம் என்ற பெயராலும் பிற்காலத்தில் அரசியல் நூல்கள் அழைக்கப்பட்டன.1 நய என்றால், தலையாய அல்லது முதன்மையான என்றும் அர்த்தம். எல்லாச் சாதிரங் களுக்கும் முதன்மையாயுள்ளது அரசியல் சாதிரம், ராஜ தர்மம், எல்லாத் தர்மங்களுக்கும் ஆதாரமாயுள்ளது என்ற கருத்தை வேறு வார்த்தையில் சொல்வது போலிருக்கிறது இந்தப் பெயர். ஆக, பல்வகைப் பெயர்களுடன் அரசியல் நூல்கள் பல புராதன இந்தியாவில் இருந்தனவென்பது பிரசித்தம். கௌடில்யன், தன்னுடைய அர்த்த சாதிரத்தில், தன் காலத்திற்கு முந்தி, அதாவது கி. மு. நான்காவது நூற்றாண்டுக்கு முந்தி அரசியல் நூல்கள் எழுதிய ஆசிரியர் பலரைக் குறிப் பிடுகிறான். இவர்களிற் சிலர், நூலெழுதிப் புகழ் பெற்றவர்கள் மட்டுமல்ல; தாங்கள் நிர்ணயம் செய்த சித்தாந்தங்களை அப்படியே ஏற்றுப் போற்றிய ஒரு சிஷ்ய பரம்பரையைப் பெற்றுப் பெருமை யடைந்தவர்கள். இந்தப் பூர்வாசாரியர்கள் கூறிப் போந்த கருத்துக்களிற் சிலவற்றைக் கௌடில்யன் தனது நூலில் ஆராய்கிறான்; அங்கீகரிக்கக் கூடியவைகளை அங்கீகரிக்கிறான்; மறுக்க வேண்டியவைகளை மறுத்து, தன் கருத்துக்களைத் திடமாகத் தெரிவிக் கிறான். இவனால் பிரதாபிக்கப்படாத பூர்வா சாரியர்கள் எத்தனை பேரோ? ஓர் ஆசிரியன், தனது நூலில், தனக்கு முந்தியிருந்த எல்லா ஆசிரியர்களைப் பற்றியும் பிரதாபிக்க வேண்டுமென்பதில்லையல்லவா? எப்படியும் கௌடில்யனுக்கு முந்தி அரசியல் சாதிரங்கள் பல இருந்தன வென்பது நிச்சயம். இவனே, தனது நூலின் ஆரம்பத்திலும் இறுதியிலும், முந்திய அர்த்த சாதிரங்கள் பலவற்றையும் சுருக்கி இந்த நூலாகக் கொடுத்திருப்ப தாகக் கூறுகிறான். கௌடில்யனால் பிரதாபிக்கப்படாத பூர்வாசாரியர்கள் சிலரை மகாபாரதம் சாந்தி பர்வத்திலும் பிற நூல்களிலும் சந்திக்கிறோம். இவர்கள் விரிவான முறையில் அர்த்த சாதிரங்கள் எழுதி, அரசர்களுக்கு ஆளும் வழியைக் காட்டினார்களென்றும் தெரிகிறது. கௌடில்யனால் பிரதாபிக்கப்பெற்ற ஆசிரியர்களுள் இருவரை மட்டும் இங்குக் குறிப்பிட்டுக் காட்டுதல் அவசியம். ஒருவன், தேவ குருவான பிரகபதி; மற்றொருவன் அசுர குருவான சுக்கிரன்.1 இவனுக்கு உரனன் என்ற ஒரு பெயருண்டு. முன்னவன், தானியற்றிய அரசியல் நூலுக்கு அர்த்த சாதிரமென்று பெயர் சூட்டினான். பின்னவன், தனது நூலுக்குத் தண்ட நீதி2 யென்று பெயர் கொடுத்தான். இப்பெயர்களே நிலைத்து, பிற்காலத்து வழக்கில் வந்தனவென்பர். எனவே இவ்விரு வரையும் அரசியல் சாதிரத்தின் ஆதிகர்த்தர்கள் என்று சொல்லலாம். இதனால்தான் கௌடில்யன் இவ்விருவருக்கும் வணக்கஞ் செலுத்தி விட்டுத் தனது அர்த்த சாதிரத்தைத் தொடங்குகிறான் போலும். இவ்விருவரும் உண்மையில் இருந்தார்களோ அல்லது பிற்காலத்துப் பண்டிதர் களின் கற்பனையில் தோன்றினார்களோ, நமக்குத் தெரியாது. தெரியாதற்காகக் கவலையுமில்லை. ஏனென்றால். எந்த ஒரு சிருஷ்டிக் கும் அதிமானுஷ்ய முத்திரையிட்டு அதைப் போற்றி வந்தார்கள் நமது முன்னோர்களென்பதை நாம் தெரிந்து கொண்டிருக்கிறோமல்லவா? அரசியல் சாதித்தை முதன்முதலாக எழுதி உலகினுக்கு உபகரித்தவர்கள் யாராயிருந்தபோதிலும் அவர்கள் அதிமனுஷ்யர்களாக இருந்திருக்க வேண்டுமென்பதில் சந்தேக மில்லை. பிரகபதியும் சுக்கிரனும் இந்த அதிமானுஷ்ய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களென்று நாம் கொண்டால் அது தவறாகாது. இவர்கள், முதன்முதலாக எழுதி வைத்துப்போன நூல்கள் - மூல நூல்கள் -இப்பொழுது கிடைக்கவில்லை; எந்த முறையில் எழுதினார்கள், எந்த அளவில் எழுதினார்கள் என்ற விவரங்கள் எங்கே கிடைக்கப் போகின்றன? மிக விரிவாகவே எழுதியிருக்கவேண்டும். இதை மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம். இவர்களின் பெயர்களைத் தாங்கிக் கொண்டு பிற்காலத்தில் இரண்டு நூல்கள் எழுந்தன. ஒன்று, பாரஹகாலத்தில் இரண்டு நூல்கள் எழுந்தன. ஒன்று, பார ஹபத்திய அர்த்த சாதிரம்; மற்றொன்று, சுக்கிர நீதி சாரம், இவற்றை இயற்றியவர் யார், இவை சுயமாக இயற்றப்பட்டனவா, அல்லது மூலநூல்கள் கிடைக்கப் பெற்று அவற்றின் சாரமாகத் தொகுக்கப் பட்டனவா என்பவை பற்றி ஏதும் நிர்ணயமாகச் சொல்ல முடிய வில்லை. முந்தியது - பாரஹபத்திய அர்த்த சாதிரம் - கி. பி. ஏழாவது நூற்றாண்டினதாயிருக்கலாமென்றும், பிந்தியது - சுக்கிரநீதி சாரம்- கி. பி. பத்தாவது நூற்றாண்டின தாயிருக்கலாமென்றும் அறிஞர் கருதுகின்றனர். கௌடில்யனுடைய அர்த்த சாதிரம், இவ்விரண்டு நூல்களுக்கும் காலத்தில் முந்திய தாயினும் கருத்தில் பிந்தியதென்பதை இங்கே நாம் மறந்து விடலாகாது.1 பிரகபதியினால் இயற்றப்பட்டதாகச் சொல்லப் பெறும் நூல் பாரஹபத்திய மென்றும், சுக்கிரன் என்று அழைக்கப்படுகிற உசனன் எழுதிய நூல் ஔசனஸம் என்றும், கௌடில்யனுடைய அர்த்த சாதிரம் கௌடிலீயம் என்றும் முறையே வழங்கப்படும். இவை பற்றி இந்த நூலில் பிரதாபம் வருகிறபொழுது இந்தப் பெயர்களை உபயோகிப்போமானால் வாசகர்கள் திகைத்தலாகாது. கௌடிலீயத்தைப் பின்பற்றிப் பிற்கலத்தில் பல நூல்கள் எழுந்தன. இவற்றுள் காமந்தகனுடைய நீதிசாரம் ( கி. பி. நான்காவது நூற்றாண்டு) என்கிற நூலும், ஜைன ஆசிரியனான சோமதேவ சூரி எழுதிய நீதி வாக்கியாமிருதம் ( கி. பி. பத்தாவது நூற்றாண்டு ) என்ற நூலும் குறிப்பிடத் த்தக்கன. காமந்தகனுடைய நீதிசாரம், ஜாவா முதலிய தீவுகளில் குடியேறி வசித்து வந்த ஹிந்துக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. முலிம்கள் ஆட்சி தொடங்கிய பின்னரும், புராதன அரசியலைப் பற்றிய ஆராய்ச்சியோ அதில் சிரத்தையோ குன்ற வில்லையென்றே சொல்ல வேண்டும். ஆனால் இந்த ஆராய்ச்சியும் சிரத்தையும், புதிய சிருஷ்டிகளாகப் பரிணமிக்காமல், நிபந்தங்கள் என்னும் தொகுப்பு நூல் களாகவே தோன்றின. அதாவது, தர்ம சாதிரங்கள், புராண இதிகாசங்கள் முதலியவற்றில் அரசியலின் பல்வேறு அமிசங்களைப் பற்றிக் கூறப்பட்டு கருத்துக்களின் திரட்சியே இந்த நூல்கள். அரசியலானது அறத்தை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டுமென்ற கருத்தை வலி யுறுத்தும் பொருட்டே இவை எழுந்தன வென்பர். இவற்றுள், சண்டேசு வரம் தொகுத்த ராஸ நீதி ரத்னாகரம், மித்திர மிச்ரனுடைய ராஜநீதிப் பிரகாசிகை, நீலகண்டனின் ராஜநீதி மயூகம். லட்சுமீதர பட்ட னுடைய கிருத்ய கல்பதரு என்னும் நூலின் பதினோராவது பகுதியாகிய ராஜதர்ம காண்டம் முதலியன குறிப்பிடத்தக்கன. இங்ஙனமே மொகலாய சக்ர வர்த்தியாகிய அக்பரின் மந்திரிகளில் ஒருவனாயிருந்த அபுல் பேசில் என்பவன் இயற்றிய ஆயீன் அக்பாரி என்ற நூலிலும், புராதன அரசியலைப் பற்றின கருத்துக்கள் பல தொகுத்துக் கூறப்பட்டிருப்பதைக் கண்டு, அதன் - புராதன அரசியலின் - ஆழ்ந்த தன்மையை ஒருவாறு உணரமுடிகிறது. இன்னும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டினதென்று கருதப் படுகின்ற பஞ்ச தந்திரம், அரசியலறிவைக் கதைகள் மூலமாகப் புகட்ட எழுந்த ஒரு நீதி நூலேயாகும். புத்தர் பிரானுடைய முற்பிறப்புக்களைப் பற்றிக் கூறும் ஜாதகக் கதைகளில் அரசியல் நுணுக்கங்கள் பல அடங்கியிருக்கின்றன. காளிதாசன் என்ன, (கி. பி. ஐந்தாவது அல்லது ஆறாவது நூற்றாண்டு) பட்டபாணன் என்ன, (கி. பி. ஆறாவது அல்லது ஏழாவது நூற்றாண்டு) பாஸன் என்ன, (கி. பி. மூன்றாவது நூற்றாண்டு) தண்டி என்ன? (கி. பி. ஆறாவது நூற்றாண்டு)1 இவர்கள் போன்ற பெரும்புலவர்களின் சிருஷ்டிகள், அரசியல் கருத்துகள் பலவற்றைத் தெரிவிப்பனவா யிருக்கின்றன. இவைகளைக் கண்டு, இந்த மகா பண்டிதர்களின் பரந்த அரசியலறிவுதான் என்ன என்று வாசகர்கள் வியப்புக் கொள்ளலாம். ஆனால் வியப்புக் கொள்வதற் கொன்றுமில்லை. ஏனென்றால், முற்காலத்தில் இலக்கியப் புலமை வேறாகவும் அரசியலறிவு வேறாகவும் பிரிந்து நிற்கலில்லை. மொழிப்பற்று, நாட்டுப் பற்றுக்கு முரண்பட்டது என்று யாரும் சொல்லவில்லை. பண்டிதர்களென்றும் சொன்னால் அவர்கள் வெறும் இலக்கிய பண்டிதர்களாக மட்டும் இருக்கவில்லை; அரசியல் பண்டிதர்கள்கவும் இருந்தார்கள், இலக்கிய அறிவோடு அரசிய லறிவும் சேர்ந்தால்தான் புலமையென்பதும் நிறைவுடையதாகிற தென்பதே எல்லோருடைய அபிப்பிராயமாகவும் இருந்தது. இது மட்டுமா? நிறைந்த நூற்புலமை இருந்ததற்காக மட்டும் ஒருவன் பண்டிதனாகக் கருதப்படவில்லை; அந்தப் புலமைக்குத் தக்க நடக்கையும் அவனிடம் இருக்கவேண்டும், அவன்தான் பண்டித னாகக் கருதப்பட்டான்; சமுதாயத்தில் மதிப்பும் பெற்றான். ஒரு பண்டிதனுடைய லட்சணம் இன்னதென்று மகாபாரதம் பின் வருமாறு விளக்குகிறது: - பண்டிதன் மேலான காரியங்களையே செய்வான்; நிந்திக்கப்பட்டவை களைச் செய்யமாட்டான் . . . . . எவன், குளிரினாலோ வெப்பத்தினாலோ, அச்சத்தினாலோ விளையாட்டி னாலோ, செல்வத்தினாலோ, வறுமை யினாலோ தடைப்படாமல் தன்காரியத்தைச் செய்துகொண்டு போகிறானோ அவனே பண்டிதன். எவனுடைய பரந்த அறிவு, அறம் பொருள்களை அனுசரித்ததாயிருக்கிறதோ, எவன் இம்மைக்காகவும் மறுமைக் காகவும் பொருளைச் சம்பாதிக்கிறானோ அவனே பண்டிதன் . . . . . எவன் ஒரு காரியத்தை உற்சாகத்துடன் ஆரம்பித்து மத்தியில் சோர்வடைந்து கைவிட்டுவிடாமலிருக்கிறானோ, எவன் காலத்தை வீணாகக் கழிக்காமலிருக்கிறானோ, எவன் மனத்தைத் தன்வசப் படுத்திக் கொண்டிருக்கிறான அவனே பண்டிதன் . . . . . . . எவன் கௌரவப்படுகிற பொழுது மகிழ்ச்சியடையாமலும், அதே பிரகாரம் அவமானப்படுத்தப் படுகிற பொழுது தாபங் கொள்ளாமலும் இருக்கிறானோ அவன்தான் பண்டிதன். இத்தகைய பண்டிதர்களே அரசர்களுக்கு ஆலோசகர்களாக இருந்தார்கள். இவர்களுடைய ஆலோசனையை அரசர்கள் விரும்பிக் கேட்டார்கள்; அதன்படி நடந்தும் வந்தார்கள். இங்ஙனம் அரசர்களுக்கு ஆலோசனைகள் சொல்லி வந்த அறிஞர்களே அரசியல் நூல்கள் இயற்றினார்கள். இவர்களுடைய அரசியலறி வானது ஏட்டளவோடு நின்றதன்று; அனுபவத்தை அடிப்படை யாகக் கொண்டிருந்தது. சுருக்கமாக, அரசாங்க யந்திரத்தைத் திறம்பட ஓட்டிக் காட்டியவர்களே அரசியல் நூல்களின் ஆசிரியர்களாயிருந்திருக் கிறார்கள். அரசியல் சாதிரத்தின் ஆதிகர்த்தர்களெனத் தகும் பிரகபதியும் சுக்கிரனும் தேவர் களுக்கும் அசுரர்களுக்கும் முறையே குருமார்களாக இருந்ததோடு அமைச்சர்களாகவும் இருந்தார்களென்பதே வழக்கு. அர்த்த சாதிர ஆசிரியனாகிய கௌடில்யன், சந்திரகுப்தனுக்கு அரசு பெற வழிகாட்டிக் கொடுத்ததோடு அவனுக்கு மந்திரியாகவும் இருந்தான். சுக்கிர நீதியை இயற்றிய ஆசிரியன் யாரென்பது நமக்குத் தெரியா விட்டாலும், அவன் நிச்சயமாக நிருவாக அனுபவம் பெற்றவனாக இருந் திருக்கவேண்டும்; அல்லது நிருவாக அனுபவம் பெற்றவர்களுடைய உதவியையும் ஒத்துழைப்பையும் நூலெழுதுவதற்குப் பெற்றிருக்க வேண்டும். அரசிளங் குமாரர்களும், அரசியலில் ஈடுபட்டு முன்னுக்கு வர வேண்டுமென்று விரும்புகின்ற மற்றவர்களும் நான்கு விதமான வித்தைகளைப் பயிலவேண்டுமென்று விதித்தனர் பெரியோர். அவை முறையே (1) ஆன்வீக்ஷிகீ (2) த்ரயீ (3) வார்த்தா (4) தண்ட நீதி என்பன. ஆன்வீக்ஷிகீ என்பது சாங்க்யம், யோகம் முதலியவைகளைப் பற்றிய அறிவு; தத்துவ ஞான மென்று சொல்லலாம். த்ரையீ என்பது, ருக், யஜுர், சாம வேதங்களைப் பற்றிய அறிவு. வார்த்தா என்பது, விவசாயம், பசுப் பாதுகாப்பு, வியாபாரம் முதலியவைகளைப் பற்றிய அறிவு; தற்கால பாஷையில் பொருளாதார சாதிர அறிவு என்று சொல்லலாம். தண்டநீதி யென்பது, அரசியலைப் பற்றிய அறிவு. முதலாவது, சுகத்திலோ துக்கத்திலோ, அயர்விலோ தாழ்விலோ எந்த ஒன்றிலும் வரம்பு மீறிச் சென்றுவிடாமல் மனத்தை ஒருநிலையில் வைத்திருக்கத் துணை செய்வது. இரண்டாவது, தர்மம் இன்னது, அதர்மம் இன்னது என்று பகுத்துணரத் துணை செய்வது, மூன்றாவது, நல்வாழ்க்கை நடத்தத் துணை செய்வது. நான்காவது, தீமையை அகற்றி நன்மையை வளர்க்கத் துணை செய்வது. இந்நான்கனுள் எது முக்கியமானது, எதற்கு முதல் தானம் கொடுக்கவேண்டுமென்பதைப் பற்றித் தனக்கு முந்தியிருந்த ஆசிரியர் சிலருடைய கருத்துக்களை ஆராய்கிறான் கௌடில்யன், அர்த்த சாதிரத்தின் ஆரம்பத்தில். ஒருசாரார், த்ரையீ, வார்த்தா, தண்ட நீதி ஆகிய மூன்றும் முக்கியமானவையென்றும், இன்னொரு சாரார், வார்த்தா, தண்ட நீதி ஆகிய இரண்டு மட்டுமே முக்கிய மானவை யென்றும், பிறிதொரு சாரார், தண்டநீதி ஒன்று தான் முக்கியமான தென்றும் கூறுவதாகச் சொல்லி,இந்நான்குமே தேவையென்று தன் கருத்தைத் தெரிவிக்கிறான். இதிலிருந்து கௌடில்யனுக்கு முற்பட்ட அறிஞர்கள் அனைவரும் அரசியலறிவின் அவசியத்தை உணர்ந்திருந்தனர் என்பது நன்கு புலனா கின்றது. யாருமே, தண்டநீதி தேவையில்லை யென்று சொல்ல வில்லை. கௌடில்யனும், நான்கும் தேவைதான் என்று சொன்ன போதிலும், தண்டநீதியே மற்ற மூன்றின் க்ஷேமத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமா யிருக்கிறதென்று கூறுகிறான் பிந்தியதோர் அத்தியாயத்தில். மற்ற மூன்றுவகை வித்தைகளைப் பயின்றத னாலாய பயனை அடைய வேண்டுமானால், தண்டநீதி ஒழுங்காக இயங்கிக் கொண்டுவந்தால்தான் மேற்சொன்ன மூன்று வித்தைகளின் பயனை அனுபவிக்க முடியும்? அந்த அரசு ஒழுங்காக இயங்குவதற்கும் அதனை ஒழுங்காக இயக்கி வைப்பதற்கும் அதனைப் பற்றிய அறிவு - அரசியலறிவு – அவசிய மல்லவா? இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டுமானால், முதல் மூன்று வகை வித்தைகளைச் சாத்தியமாகச் செய்வதற்கு அரசியல் வித்தை சாதனமாயிருக்கிறது. அரசியல் வித்தையில் மற்ற மூன்று வித்தைகளும் அடங்குகின்றன என்றும் சொல்லலாம். இதனாலேயே, அரசிளங் குமரரும், அரசியலில் ஈடுபட விழைவோரும் அரசியல் சாதிரத்தைப் பயில வேண்டுமென்று கூறிப் போந்தனர் முன்னோர். இவர்கள் கூறியதோடு மட்டுமல்ல, அரசிளங் குமரரும் பிறரும் இந்தச் சாதிரத்தில் நல்ல பயிற்சியும் பெற்றிருந்தனர்; பெற்ற பின்னரே தத்தமக்கு ஏற்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்றத் தொடங்கினர். அரசியல் சாதிரத்தை நன்கு அறியாதார் யாரும் அரசியல் துறையில் பிரவேசிக்க வில்லையென்பதை இங்கு வற்புறுத்திச் சொல்ல விரும்புகிறோம். அப்படியானால் ஆளுந்தொழிலிலும் அரசியலிலும் ஈடுபடு கிறவர் களுக்கு மட்டுந்தான் அரசியலறிவு இருந்ததா, அவர்கள் மட்டுந்தான் அரசியலில் சிரத்தை கொண்டிருந்தார்களா வென்று வாசகர்கள் கேட்கலாம். இல்லை, இல்லை; எல்லோருக்குமே அரசியலில் பரிச்சயமும் சிரத்தையும் இருந்தன. அப்படிப் பரிச்சயமும் சிரத்தையும் கொள்ளவேண்டுமென்று அறிஞர்களும் அடிக்கடி வலியுறுத்தி வந்தனர். ஏனென்றால் எல்லோருக்கும் பிரஜா உணர்ச்சி இருக்க வேண்டுமென்று அவசியமென்று கருதப்பட்டது. இந்த உணர்ச்சிக்கு உணவு போன்றிருப்பது எது? அரசியலறிவு. இதனாலேயே இதன் இன்றியமையாத் தன்மையை வலியுறுத்தினர் ஆன்றோர். நமது நாட்டில் முற்காலத்தில் எல்லோரும் பிரஜா உணர்ச்சி உடையவர்களாயிருந்தார்களென்பதை நாம் சொல்லத் தேவையில்லை. ஆண்மக்கள் மட்டுமல்ல; பெண் மக்களுங்கூட. அரசியலறிவு பெறுவதற்கான அரசியல் சாதிரம் முதன் முதலாக எப்படி ஏற்பட்டது? இதைப் பற்றிச் சிறிது கூறுவோம். வியாழனும் வெள்ளியும் இந்தச் சாதிரத்தின் ஆதிகர்த்தர் களென்றும் சொல்லப்பட்ட போதிலும் இவர்களே சிருஷ்டி கர்த்தர்களல்ல. அர்த்த சாதிரமென்றும் தண்டநீதி யென்றும் இதற்கு முறையே பெயர் கொடுத்து, மனிதர் களெல்லோருக்கும் எளிதில் பயன்படுகின்ற விதமாக இதனைச் சுருக்கித் தந்தவர்கள் என்ற அர்த்தத்தில்தான் இவர்களை ஆதிகர்த்தர்களென்று சொல்லலாம். இவர்களுக்கு முந்தியே இந்தச் சாதிரம் தோன்றி நிலவியிருந்தது; ஆனால் விரிந்த முறையில் எல்லாம் கடவுளிட மிருந்து தோன்றியதுபோல் இதுவும் அந்தக் கடவுளிடமிருந்தே தோன்றிது. ஏன் தோன்றியது? எப்படித் தோன்யது? இவை சம்பந்தமாகக் கூறப்பட்டுள்ள வரலாறுகளைச் சிறிது கவனிப்போம். உலகத்தில் ஒரு காலத்தில் அராஜகம் நிலவியிருந்தது. இதனால் ஜனங்கள் பெரிதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இதைக் கண்டு தேவர்கள் மனக்கலக்கமடைந்தார்கள்; தங்கள் வாழ்க்கைக்கு எங்கு ஊனம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி னார்கள். எனவே உலகத்தைப் படைத்த பிரம்மனிடம் போய் முறையிட்டுக் கொண்டார்கள். அவன் கருணை மிகுந்தவனாய், உங்களுக்குத் தகுந்த நன்மையைச் சிந்திக்கிறேன் என்று தேவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, லட்சம் அத்தியாயங்களுள்ள இந்த அரசியல் சாதிரத்தை இயற்றினான். இதுதான் முதன் முதலாக ஏற்பட்ட அரசியல் சாதிரம். பிரம்மன், தானியற்றிய லட்சம் அத்தியாயங்களுடைய இந்த அரசியல் சாதிரத்தை விசாலாக்ஷன் (அகன்ற கண்களை யுடையவன்) என்னும் சிலபெருமானுக்கு உபதேசித்தான். சிவ பெருமான் இதனைப் பதினாயிரம் அத்தியாயங்களுள்ள நூலாகச் சுருக்கினான். இதற்கு வைசாலாக்ஷம் என்று பெயர். இதனைச் சிவபெருமானிடமிருந்து இந்திரன் கற்று, ஐயாயிரம் அத்தியாங் களுடையதாகச் சுருக்கி பாஹு தந்தகம் என்று பெயரிட்டான். இந்திரனிடமிருந்து பிரகபதி கிரகித்து மூவாயிரம் அத்தியாங் களுடையதாகச் சுருக்கி பாரஹபத்தியம் என்று பெயர் கொடுத்தான். பிரகபதியினிடமிருந்து சுக்கிரன் கற்று ஆயிரம் அத்தியாயங்களுடைய நூலாகச் சுருக்கி உலகினர்க்கு உபயோக முள்ளதாக அளித்தான். இது, மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள வரலாறு. இன்னொரு வரலாறு கூறுகின்றது; ஜனங்களைப் படைத்த பிரம்மன், அவர்கள், அறம் பொருள் இன்பங்களை முறையே அறிந்து அடைந்து அனுபவிப்பதற்கு உதவியாக ஒரு லட்சம் அத்தியாயங்களுடைய அரசியல் சாதிரத்தை அவர்களுக்கு உபதேசித்தான். இதில் அறத்தைப் பற்றிச் சொன்ன பகுதியை மனுவும், பொருளைப் பற்றி அதாவது அரசியலைப் பற்றிச் சொன்ன பகுதியை பிரகபதியும், இன்பத்தைப் பற்றி அதாவது கலைகளைப் பற்றிச் சொன்ன பகுதியை நந்தியும் முறையே பிரித்துக் கொண்டு தொகுத்தார்கள். தற்போது வழக்கில் இருந்து வரும் சுக்கிர நீதி என்னும் நூல், உலக நன்மையை முன்னிட்டு பிரம்மன் நூறு லட்சம் சுலோகங்களைக் கொண்ட அரசியல் சாதிரத்தை முதன்முதலாகத் தயாரித்தானென்று கூறுகிறது. ஆக, அரசியல் சாதிரமானது தெய்வ சிருஷ்டியென்பதை இந்த வரலாறுகள் யாவும் ஒப்புக் கொள்கின்றன. ஆனால் மகாபாரதத்தின் வேறோர் இடத்தில், இந்தச் சாதிரம் மனித சிருஷ்டியேயென்பதற்கு ஆதாரமாக ஒரு வரலாறு காணப் படுகிறது. அதாவது ஆரம்பத்தில் எட்டு ரிஷிகள் ஒன்று கூடி ஒரு லட்சம் அத்தியாயங்களுடைய அரசியல் சாதிரத்தைத் தயாரித்து மகா விஷ்ணுவிடம் சமர்ப்பித்தார்கள். இதைப் பார்த்து அந்தக் காக்கும் கடவுள் பெரிதும் மகிழ்ச்சியடைந்து, வாயம்புவ மனு என்பவன் இதனைப் பின்பற்றுவான், உபரிசர மன்னன் காலம் வரை இது நிலைத்திருக்கும், பிறகு மறைந்து போகும் என்று கூறினான். இங்ஙனம் மனித சிருஷ்டியென்று சொன்னதிலும் தவறில்லை. இஃதென்ன விபரீதம்? ஒரே சாதிரம் ஒரே சமயத்தில் தெய்வ சிருஷ்டியாகவும் மனித சிருஷ்டியாகவும் இருக்க முடியுமா வென்று வாசகர்கள் திகைப்படையலாம், சிறிது சிந்தித்துப் பார்த்ததால் திகைப்புக்கே இடமே ஏற்படாது. நமது முன்னோர்கள் எந்த ஒன்றையும் தெய்வ சிருஷ்டியாகக் கருதினர் என்பதைப் பற்றி நாம் திரும்பவும் சொல்லத் தேவை யில்லை, ஆனால் சிருஷ்டியான பிறகு, அந்த ஒன்று, மனித முயற்சியி னாலும் உழைப்பினாலுமே வளர்ந்து வாழவேண்டி யிருக்கிறது. இந்த முயற்சியும் உழைப்பும் இல்லாவிட்டால், தெய்வ சிருஷ்டி என்ற ஒரு காரணத்தினால் மட்டும் எந்த ஒன்றும் வளரவோ வாழவோ முடியாது. இங்ஙனம் வளர்க்கின்றவனும் வாழ்விக்கின்றவனுமாகிய மனிதனும், அந்த ஒன்றின் சிருஷ்டி கர்த்தன்தானே? தாய் மட்டும் சிருஷ்டிக்கிறாள் என்று சொல்ல முடியுமா? தந்தையும் சிருஷ்டிகர்த்தன்தான். தாய் தெய்வ மானால் தந்தை மனிதன். இங்ஙனம் தெய்வத்தையும் மனிதனையும இணைத்து வைத்து அந்த இணைப்பிலேதான் எந்த ஒன்றையும் கண்டனர், எந்த ஒன்றைப் பற்றியும் கூறினர் நமது முன்னோர்; தெய்வத்தையோ, மனிதனையோ தனித்தனியாகப் பிரித்து வைத்துப் பேசவில்லை. மனித முயற்சியினால் ஒரு காரியம் நடைபெற்ற போதிலும், அது தெய்வத்தின் திருவருளினாலேயே என்று கருதப் பட்டது; அந்தக் காரியத்திற்குத் தெய்வத்தின் நல்லாசி கோரப் பட்டது. அரசியல் சாதிரத்தைத் தயாரித்தஎட்டு ரிஷிகளும், அதனை மகா விஷ்ணுவிடம் கொண்டுபோய்ச் சமர்ப்பித்தார்களே யொழிய தாங்களே சுயமாக பூலோகத்தில் பிரசாரம் செய்ய வில்லையென்பது ஈண்டுக்கவனிக்கத் தக்கது. அப்படி அவர்கள் செய்திருந்தால் அந்தச் சாதிரத்திற்குப் பூலோகத்தில் மதிப்பே ஏற்பட்டிராது. தெய்வத் தொடர்பு பெறாத எந்த ஒன்றையும் நமது முன்னோர்கள் மேலானதாகக் கருதவில்லை; புனிதமானதாகப் போற்ற வில்லை; அதற்கு உரிய மதிப்பும் கொடுக்கவில்லை. அரசர்களைத் தெய்வத்தோடு தொடர்புபடுத்திச் சொன்னதெல்லாம் அவர்களுடைய ஆளுகைக்கு மதிப்பு ஏற்பட வேண்டுமென்றுதான்; அவர்கள் ஆணைக்கு எல்லோரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டு மென்பதற்குத்தான். இதைப் பற்றிப் பின்னர்ப் பேசுவோம். இந்த அடிப்படை உண்மையை நாம் தெரிந்து கொண்டு விட்டோமானால், அரசியல் சம்பந்தமான சாதிரங்களும், அரசியலை நடத்துகின்ற அரசர்களும் தெய்வசிருஷ்டிகளே யென்று ஒருவித மாகவும் மனித சிருஷ்டிகளே யென்று இன்னொரு விதமாகவும் நமது முன்னோர்கள் சொல்லியிருப்பதைக் கண்டு திகைப்புக் கொள்ள மாட்டோம். முதலில் அரசியல் சாதிரம் ஏற்பட்டு பிறகு அதனை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர அரசர்கள் தோன்றினார்களா அல்லது முதலில் அரசர்கள் தோன்றின பிறகு அவர்களுக்கு வழி காட்டியாயிருக்க அரசியல் சாதிரம் ஏற்பட்டதா, எது முந்தியது, எது பிந்தியது என்ற கேள்வி எழலாம். இதைப் பற்றி நமது முன்னோர்கள் எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை ஆனால் அரசியல் சாதிரந்தான் முந்தி ஏற்பட்டிருக்க வேண்டுமென்று மகாபாரதத்திலிருந்து ஒருவாறு ஊகிக்கவேண்டியிருக் கிறது. அரசியல் சாதிரம் எக்காலத்திற்கும் எல்லா அரசர்களுக்கும் பொதுவானது. அதனைக் கடைப்பிடிக்கின்ற தனி மனிதர்களே அரசர்கள். அரச தருமத்தைப் பின்பற்றுகின்ற காரணத்தினாலேயே ஒருவன் அரசனா யிருக்கிறான்; பின்பற்றாவிட்டால் அரச பதவி யிலிருந்து விலக்கப் படுகிறான். அப்பொழுது அவன் சாதராண ஒரு மனிதனே. அவனுக்கு அந்தது எதுவும் கிடையாது. எனவே சாசுவதாயிருக்க வேண்டிய அரசியல் சாதிரந்தான் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும். பிறகு இதனை நடத்திக்காட்டுவதற்காக அரசர்கள் தோன்றியிருக்க வேண்டும். இந்தச் சர்ச்சையே தேவை யில்லையென்று வைத்துக் கொண்டாலும், அரசியல் சாதிரம் என்று ஒன்று இருந்தது, அதனை வழிகாட்டி யாகக் கொண்டு அரசர்கள் உலகத்தைப் பரிபாலித்து வந்தார்கள் என்று முடிவு செய்து கொள்ளலாமல்லவா? ஆக அரசியல் சாதிரமானது யாருடை சிருஷ்டியாயிருந்த போதிலும், எப்படி எப்பொழுது ஏற்பட்டிருந்தபோதிலும், அது வெகு காலத்திற்கு முந்தியிருந்தே - கௌடில்யனுடைய காலத்திற்கு அநேக நூற்றாண்டுகள் முந்தியிருந்தே அனுஷ்டானத்தில் இருந்து வந்ததென்பது நிச்சயம்; அதனை ஏற்படுத்தியவர்களோ அனுஷ் டானத்தில் கொண்டு வரச் செய்தவர்களோ மகாமேதாவி களென்பதும், லட்சியத்தையும் அதனை யடைவதற்கான சாதனங்களையும் நன்கு தெரிந்தவர் களென்பதும் நிச்சயம். இங்கே வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றக் கூடும். அரசியல் சாதிரம் சாசுவாதமானதென்று சொன்னீர்களே, அப்படியானால் நமது நாட்டில் சாசுவதமான, அதாவது காலத்தினால் மாறுபடாத ராஜ்யங்களும் ஆட்சி முறைகளும் இருந்தனவென்றால்லவோ ஏற்படுகின்றது; சாசுவத மாயிருந்த இவைகளைப் பற்றிக் கூறுகின்ற காரணத்தினாலா அரசியல் சாதிரத்தையும் சாசுவதமான சாதிரமென்று கூறுகிறீர் களென்று கேட்கலாம், அப்படியில்லை; அந்த அர்த்தத்தில் கூற வில்லை. ஆள்கின்ற அரச சக்தியும் ஆளப்படுகின்ற பிரஜா சக்தியும் சாசுவதமானவை. இவற்றின் லட்சணங்கள், நியமங்கள், கடமைகள் முதலியவைகளும் சாசுவதமானவை. இவற்றில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு ஏதுவில்லை. இவைகளைப் பற்றிப் பொதுவான முறையில் கூறுவதுதான் அரசியல் சாதிரம். சாசுவதமா யுள்ளவைகளைப் பற்றிக் கூறுகின்ற சாதிரமும் சாசுவதமானது தானே? இந்த அர்த்தத்திலேயே கூறினோம். ஆனால் காலக்கிரமத்தில் ராஜ்ய விதீரணம், ஆட்சி முறை முதலியவற்றில் மாற்றங்கள் ஏற்படாமலில்லை. சிறிய ராஜ்யங்கள் பெரிய ராஜ்யங்களாயின; பெரிய ராஜ்யங்கள் சிறிய ராஜ்யங் களாயின; குடியரசுகள் முடியரசுகளாகவோ முடியரசுகள் குடியரசுகளாகவோ மாறின. இங்ஙனமே ஆதியில் இருந்த அரசியல் தாபனங்கள் பின்னர் உருவிலும் பெயரிலும் மாறிப்போயின. ஆரம்பத்தில் அரசன் சம்பந்தமாகச் சுருங்கிய முறையில் நடைபெற்ற சடங்குகள் பிற்காலத்தில் விரிவடைந்தன. இந்த மாதிரியான மாற்றங்கள் பல ஏற்பட்டன. இப்படி ஏற்பட்டதில் ஆச்சரிய மொன்றுமில்லை. இது சகஜமே. ஆனால் இந்த மாற்றங்களுக்கு அடிப்படையில் மேலே சொன்ன லட்சணங்கள் முதலியன சாசுவதமாக, எந்தச் சூழ்நிலைக்கும் பொருந்துவனவாக இருந்தன. அந்தந்தக் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், அந்தந்தக் காலத்து நூல்களில் இடம் பெற்றன. நமது முன்னோர்கள், காலப் போக்கை உணர்ந்தவர்களாகவும், அனுசரித்தவர்களாகவும் இருந்தனர் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். புதுமையை அவர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள்; ஆனால் அவர்கள் அந்தப் புதுமை, பழமையை யொட்டியதாக இருக்க வேண்டுமென்று விரும்பினார்கள்; வற்புறுத்தவும் செய்தார்கள். அரச கடமைகளென்று எவை எவை நூல்களில் சொல்லப் பட்டிருக்கின்றனவோ அவைகளில் ஒரு சிலவேனும் நடைமுறையில் இருந்தனவென்பதற்கு ஆதாரங்கள் காட்டமுடியுமா என்று வாசகர்களே, கேட்பீர்களானால் ஒரு சிலவென்ன, பெரும்பாலும் நடைமுறையில் இருந்தனவென்று துணிந்து பதில் கூறுகிறோம். அசோகனுடைய சாஸனங்களைப் பாருங்கள்; சந்திரகுப்தனுடைய ஆதானத்தில் ஸெல்யூக என்ற கிரேக்க அரசனுடைய தூதனாகச் சிறிது காலம் இருந்த மெகதனீ என்பவனுடைய குறிப்புக்களைக் காணுங்கள்; சீனாவிலிருந்து இந்தியாவுக்கு கி. பி. ஐந்தாவது நூற்றாண்டுத் தொடக்கத்தில் வந்த பேஹியான் என்ன, ஏழாவது நூற்றாண்டினிடையில் வந்த ஹ்யூன்த்ஸாங் என்ன, இந்த யாத்திரிகர்களுடைய நூல்களை நோக்குங்கள்; பதினோராவது நூற்றாண்டு சரித்திராசிரியனான ஆல்பெரூனி என்பவன் எழுதி வைத்துப் போயிருப்பதைக் கவனியுங்கள்; ஏட்டிலே கூறப்பட்டிருப்பதற்கும் நாட்டிலே நடைபெற்றதற்கும் பெரும்பாலும் ஒற்றுமை இருந்து வந்த தென்பதை நன்கு அறிந்து கொள்வீர்கள். இவைகளைப் பற்றி உரிய இடங்களில் கூறுவோம். அரசியல் சாதிரத்தை அனுஷ்டானத்தில் கொண்டு வருவதற்கு ராஜ்யம் அவசியமல்லவா? அப்படியானால் இந்த ராஜ்யத்திறகுச் செல்வோம் 3. அரசு இந்த அத்தியாயத்திற்கு என்ன தலைப்பு கொடுப்ப தென்பதைப் பற்றி வெகுவாக யோசிக்கவேண்டி வந்துவிட்டது. ஏனென்றால் இதில் அரசு, ராஜ்யம், பல்வகை ராஜ்ய அமைப்புக்கள், ஆகிய மூன்று விஷயங்களைப் பற்றிக் கூற விரும்புகிறோம். இம்மூன்றும் வெவ்வேறென்றாலும், ஒன்றைவிட்டு மற்றொன்றைப் பிரிக்க முடியாது. அரசு என்பது ஆளுஞ் சக்தி; ஏற்கனவே சொன்ன படி இதற்கு உருவம் கிடையாது. ராஜ்யம் என்பது அந்தச் சக்தி நிலவுகின்ற இடம். இடம் என்று சொன்ன மாத்திரத்தில், தூல வடிவில் இதனைப் பார்க்கலாம் போலும் என்ற எண்ணம் உண்டாகிறதல்லவா? பார்க்கலாந்தான். ஆனால் சூட்சுமமா யுள்ள ஆளுஞ் சக்தியைத் தன்னகத்தே கொண்டிருந்தால் தான் பார்க்கலாம். அதாவது எந்த இடத்தில் ஆளுகையென்பது இல்லையோ அந்த இடம் ராஜ்யமாகாது; வெறும் நிலப்பரப்பு; பகுத்தறிவு படைத்த மக்கள் வாழத் தகுதியில்லாதது. எப்படி உயிரில்லாத உடலை, உடலென்று சொல்வதில்லையோ, அதுபோல அரசு நடவாத இடத்தை ராஜ்யமென்று சொல்வதில்லை; சொல்லத் தகுதியுடைய தன்று. சரி; ராஜ்யத்தை இடமாகவுடைய அரசு ஏதோ ஒருவித ஒழுங்குடன் இயங்கவேண்டுமல்லவா, அந்த ஒழுங்குதான் ராஜ்ய அமைப்பு; அதாவது அரசியலமைப்பு என்று சொன்னால் வாசகர்களுக்கு நன்கு விளங்கும். நாம் விடுகின்ற மூச்சு ஒழுங்காக இல்லாவிட்டால் நம் உடலுக்கு ஊனம் உண்டாவது போல் ஒரு ராஜ்யத்தில் நடைபெறுகின்ற அரசு, ஒழுங்காக, கட்டுதிட்டமான ஓர் அமைப்புக்குப்பட்டதாக இல்லாமற்போனால் அந்த ராஜ்யமே உருக்குலைந்து போகும். ஏன்? ராஜ்யம் என்ற பெயரையே இழந்து விடும். இந்த மூன்றனுள் எது முக்கியம்? மூன்றும் முக்கியந்தான். மூன்றும் ஒன்று சேர்ந்தால்தான் ஒன்றாகிறது; அதாவது லட்சணம் வாய்ந்த ராஜ்யமாகிறது. அடித்தளமும் இடைச்சுவர்களும் மேற் கூரையும் சேர்ந்தால் தானே வீடாகிறது? இருந்தாலும் பின்னி ரண்டும் நிலைபெறு வதற்கு முன்னொன்று அவசியமாகிறது. அதாவது அதிவாரமில்லாமல் எந்த அகல நீளத்தில் நீங்கள் சுவர்கள் எழுப்பிய போதிலும் எந்த மாதிரி கூரை வேய்ந்தபோதிலும் அவை. பிரயோஜனப்படா. அது போல் அரசு நிலைவாத ஒரு நிலைப்பரப்பு எவ்வளவு விதீரணமுடையதாயிருந்த போதிலும் அதனால் பயனுண்டாகாது; அங்கு ஒழுங்கானதோர் ஆட்சியும் நடைபெற முடியாது. எனவே, ஒரு நிலப்பரப்பு, ராஜ்ய அந்ததைப் பெறு வதற்கும், அங்கு ஏதோ ஒரு விதமான ஆட்சி ஒழுங்காக நடைபெறு வதற்கும் காரணமாயிருப்பது அரசு. அதிவாரத்தைப் போல் இது கண்ணுக்குப் புலப்டாததுதான். ஆனால் இஃதில்லாமல் மற்ற இரண்டும் சாத்தியமில்லை. இந்தக் காரணத்திற்காகவே இதன் பெயரை - அரசு என்ற தலைப்பை - இந்த அத்தியாயத்திற்குக் கொடுக்கத் துணிந்தோம். தனித்தியங்கும் தகுதியில்லாத இதைப் பற்றி - அரசைப் பற்றி - தனிப்படப் பரித்துச் சொல்லக் கூடியது குறைவுதான் என்பதையும், எவன் மூலமாக இஃது இயங்குகிறதோ அவனைப் பற்றி- அரசனைப் பற்றி - சொல்கிறபோது இது, தானே சேர்ந்து வருமென்பதையும் நாம் அறியாமலில்லை. ஆனால் உயிர் தனிதானே? அதிவாரம் தனிதானே? இவைபோன்ற அரசும் தனி தானே? இதைப்பற்றித் தனியாகச் சில வார்த்தைகள் சொல்வதில் தவறில்லையே? இந்த அரசு, எப்பொழுது, எப்படி ஏற்பட்டது? ஜனங்கள் சமுதாயமாகச் சேர்ந்து வாழத் தலைப்பட்டு வெகுகாலம் வரை, வெளிக்கட்டுப்பாடு ஒன்றுமில்லாமல், நியாயம் இன்னது, தர்மம் இன்னது என்பதைத் தாங்களாகவே அறிந்து அதன் பிரகாரம் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். பரபர அனுசரணையின் பேரிலேயே எல்லா விவகாரங்களும் நடைபெற்று வந்தன. அரசனும் ராஜ்யமும், தண்டமும் தண்டிப்பவனும் இல்லாமல் பிரஜைகளெல்லோரும் தர்மத்தாலேயே ஒருவரையொருவர் ரட்சித்து வந்தார்கள் என்று மகாபாரதம் கூறுகிறது. இந்தக் காலந்தான் கிருதயுகம் என்பர் ஒரு சில அறிஞர். பின்னர் ஜனங்களிடத்தில் எப்படியோ காமம், குரோதம், லோபம் முதலிய கீழான தன்மைகள் குடிபுக ஆரம்பித்துவிட்டன. இதனால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டும் ஒருவரை யொருவர் அழித்துக் கொண்டும் வந்தனர். பலவானே நியாயவான் என்ற நியதி தலைதூக்கி நின்றது. நீரிலுள்ள பெரிய மீன்கள், சிறிய மீன்களை இரையாக்கிக் கொள்வது போல் சமுதாயத்தில் பலசாலி களாயுள்ளவர்கள் பலமில்லாதவர்களை அடக்கி யாண்டும் இம்சித்தும் வந்தார்கள். தர்மத்திற்கும் நியாயத்திற்கும் மதிப்பே இல்லாமற் போய்விட்டது. ஜனங்கள் பெரிதும் கஷ்டப்பட்டார்கள். இதிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அரசு ஏற்பட்டது. அதாவது ஆளுஞ் சக்தியானது ஒரு மனிதன் மூலமாக வெளிப்படத் துவங்கியது. முதல் அரசன் தோன்றினான். பலவானே நியாயவான் என்ற நியதிக்கு மத்ய நியாயம் என்று பெயர் கொடுத்தனர் நமது நாட்டு அரசியல் பண்டிதர்கள். மத்யம்- மச்சம் - மீன். பெரிய மீன்கள், சிறிய மீன்களை இரையாக்கிக் கொள்வதுதான் மத்ய நியாயம் என்பது. இந்த மத்ய நியாய நிலையை, மகாபாரதமும் மனு மிருதியும், மத்ய புராணமும், ராமாயணம் அயோத்தியா காண்டமும், இன்னும் சில நூல்களும் மிகப் பயங்கரமாக வருணிக்கின்றன. மகாபாரதத்திலிருந்து சில வாக்கியங்களைக் கேளுங்கள்:- மனிதர்கள், மேலும் மேலும் ஆசை யால் பீடிக்கப் பட்டவர்களாய், செய்யத்தக்கது இன்னது, செய்யத் தகாதது இன்னது என்னும் பகுத்தறிவில்லாதவர்களானார்கள். . . . . . கண்டபடி பேசுவது, உண்பது, காரியங்களைச் செய்வது, இப்படி அனைத்தையும் பின்பற்றினார்கள். மத்ய நியாய நிலையை அராஜகம் என்றும் சொல்வதுண்டு. ஆளுகையற்றதென்று அர்த்தம். அதாவது ஒழுங்கான ஆட்சி நடைபெறாத காரணத்தினால் விளைகிற குழப்ப நிலையையே இது குறிக்கிறது. இதுதான் பொருத்தமான அர்த்தமாக இருக்கிறது. ஆனால் ஒரு சில அறிஞர், நமது நாட்டில் பண்டைக் காலத்தில் நிலவியிருந்த ஒருவித ஆட்சி முறையையே இந்த அராஜகம் என்ற சொல் குறிக்கிறதென்று கூறுவர். அரசனும் ராஜ்யமும், தண்டமும் தண்டிப்பவனும் இல்லாமல் பிரஜைகளெல்லோரும் தர்மத்தாலேயே ஒருவரையொருவர் ரட்சித்து வந்தார்கள் என்று மேலே மகா பாரதத்திலிருந்து எடுத்துக்காட்டினோ மல்லவா, அந்த நிலைதான், கிருதயுகம் என்று அழைக்கப்படுகிற அதுதான் அராஜகம் என்பர். இந்த அராஜகத்தில், அரசு இல்லாமல் இல்லை; இருந்தது; ஆனால் எல்லோரிடத்திலும் பரவியிருந்தது, எல்லோரும் ஆள்கின்ற அரசர் களாயிருந்தார்கள். பிரஜைகளிருந்தால்தானே அரசர் கள்? எல்லோருமே ஆட்படுகின்ற பிரஜைகளாகவுமிருந்தாகள். தற்கால அரசியல் பரிபாஷையில், பரிபூரணக் குடியரசு நிலவியிருந்ததென்று சொல்லலாம். இங்ஙனம் பொருள் கொள்வது பொருத்தமோ இல்லையோ. குடியரசுத் தத்துவமென்பது நம்மவர்களுக்குப் புதிதன்று. வெகு காலத்திற்கு முந்தியிருந்தே - சிறப்பாக பௌத்த காலத்தில் - குடியரசு ராஜ்யங்கள் பல நமது நாட்டில் இருந்து வந்திருக்கின்றன. இந்த அரசு முறையைப் பற்றி பின்னர்க் கூறுவோம். அரசு ஏற்படுவதற்கு முந்தியிருந்த நிலையை இயற்கை நிலை யென்பர் அறிஞர். இந்த இயற்கை நிலை மத்ய நியாயமாக இருந்ததென்பதை மேலை நாட்டு அறிஞர்களாகட்டும் நமது நாட்டுப் பண்டிதர்களாகட்டும் எல்லோரும் ஒப்புக் கொண்டிருக் கின்றனர். ஆனால் இந்த மத்ய நியாயந்தான் ஆதிநிலையா, அல்லது இதற்கு முந்தி கிருதயுகம் என்ற ஒரு நிலை இருந்து அதற்குப் பிறகுதான் மத்ய நியாயம் தலைதூக்கியதா என்பதைப் பற்றி வேறு வேறு அபிப்பிராயங்கள் கூறியிருக்கின்றனர். ஆக, முதலில் தெளிவா யிருந்து, பிறகு கலக்கம் உண்டாகி, கடைசியில் அரசு ஏற்பட்டதன் மூலம் தெளிவு ஏற்பட்டதா அல்லது ஆரம்பத்திலேயே கலக்க மாயிருந்து பின்னர் அரசு ஏற்பட்டு அதன்மூலம் தெளிவு உண்டா யிற்றா என்பதைப் பற்றியே அபிப்பிராய பேதம். ஆனால் இந்த அபிப்பிராய வேற்றுமையிலும் ஓர் ஒற்றுமையைப் பார்க்கலாம். அதாவது அரசு ஏற்படுவதற்கு முன்கலக்கமே இருந்த தென்பதை யாரும் மறுக்கவில்லை. மத்ய நியாயத்திலிருந்துதான் தர்ம நியாயமான அரசு ஏற்பட்டதென்பதை அனைவரும் ஒப்புக் கொள் கின்றனர். இதுவே நமக்கு முக்கியம். நமது தாய்நாட்டைப்போல் புராதனப் பெருமை வாய்ந்த சீனாவிலும் இந்த மாதிரியான ஒரு கொள்கையே நிலவி வந்தி ருக்கிறது. கி. மு. ஐந்தாவது நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஒரு சீன அறிஞன் அரசு ஏற்படாத நிலையில் உரிமையைப் பற்றி ஒவ்வொருவனும் ஒவ்வொரு விதமான கருத்துக் கொண்டுவிடுவான், இங்ஙனமே பத்துபேர் இருந்தால் பத்துவிதமான கருத்துக்கள் உண்டாகும். கடைசியில் என்ன? எத்தனை பேர் இருக்கின்றனதோ அத்தனை விதமான கருத்துக்கள்! இதனால் ஒவ்வொருவனும, உரிமையைப்பற்றி தான் கொண்டிருக்கிற கருத்துதான் மேலானது, எல்லோராலும் அங்கீகரித்துக் கொள்ளப்பட வேண்டுமென்று நினைக்கிறான்; மற்றவர்களுடைய உரிமையைத் தாக்குகிறான். முடிவில் எல்லோரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கிறார்கள் என்று கூறுகிறான். இதனுடைய தாத்பரியம் என்னவென்றால், அரசு நடைபெறாத இடத்தில், கடமைகள் மறக்கப்பட்டு அரிமைகள் தலையோங்கி நிற்கும்: என்னுடையது என்னுடையது என்று சொல்லிக் கொண்டு எல்லோரும் போராடி இறுதியில் எல்லோருமே அழிந்துபடு வார்கள் என்பதேயாகும். கடமையை அடிப்படையாகக் கொள்ளாத உரிமை, தற்கொல்லியேயன்றோ? இதனை விளக்கி வைக்கின்ற முறையில், மகாபாரதம் ஆதி பர்வத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற ஒரு வரலாற்றை இங்கு எடுத்துச் சொல்வது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறோம். சுந்தன், உபசுந்தன் என்று இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். இருவரும் சம பலசாலிகள்; இணைபிரியாமல் வெகு காலம் வரை வாழ்ந்து வந்தார்கள். கடைசியில் இவர்களுடைய போதாத காலத்திறகு, திலோத்தமை என்கிற அப்ரசதிரீயிடம் இருவரும் மோகங் கொண்டார்கள். சுந்தன் இவள் எனக்கே உரியவள்; இவளை நானே அனுபவிக்க வேண்டும் என்றான். உபசுந்தனும் இப்படியே கூறினான். இருவருக்கும் பிணக்கு உண்டாகாம லிருக்குமா? வெறும் தேக பலத்தை மட்டும் கொண்டிருந்தார்களாதலின், வெகு சீக்கிரத்தில் கை கலந்து விட்டார்கள். முடிவு என்ன? இவர்களுடைய முடிவுதான். தங்களைப் போல் பிறரை எண்ணாமலும், தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமலும் எனது, எனது என்று உரிமை மட்டும் கொண்டாடு கின்ற இதற்கு சுந்தோபசுந்த நியாயம் என்று பெயர்; அதாவது ராட்சத நியாயம். மனிதர்கள், மனிதர்களாகயிருக்கிறவரை அரசு தேவை யில்லை; இல்லாமலே இருந்தது. ஆனால் அவர்கள் மிருக நிலைக்கோ அரக்க நிலைக்கோ இழிந்து விட்டார்கள். சமுதாயம் நிலைகுலைந்து நின்றது. இதனை நிலைப்படுத்த ஒரு சக்தி, ஒரு சாதன தேவையாயிருந்தது. அதுதான் அரசு. சமுதாயத்தின் க்ஷேமத்திற்காக ஏற்பட்ட இந்தச் சாதனம், அந்தச் சமுதாயத்தின் சாசுவதமான க்ஷேமத்தையே லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டுமென்று திட்டமிட்டார்கள் நமது முன்னோர்கள். இந்த லட்சியத்தைக் கொண்டிருக்கிற வரையில்தான் இதற்குப் பெருமை யென்றும் நிர்ணயம் செய்தார்கள். மற்றும் தற்காலிகத்வைப் பூர்த்தி செய்வதற்காக ஏற்பட்ட இந்த அரசை சாசுவதமான தாபன மாகவும் ஆக்கிக் கொண்டுவிட்டார்கள். சாசுவதமான க்ஷேமத்தை உண்டுபண்ணிக் கொண்டிருக்க வேண்டுமல்லவா? இன்னும் ஜனங்களைச் சங்கடத்தி லிருந்து விடுவிப்பதற்காகத் தோன்றிய இதனை, அந்த ஜனங் களுடைய வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் வழி காட்டுகின்ற ஒன்றாக்கிக் கொண்டுவிட்டார்கள். மேலும், அரசை, தீமையைப் போக்குகிற எதிர்மறைப் பண்புடையதாக மட்டும் கொள்ளவில்லை; நன்மையை வளர்க்கின்ற உடன்பாட்டுப் பண்புடையதாகவும் கொண்டார்கள். அந்த எதிர்மறைப் பண்பு ஏன் இருக்கவேண்டுமென்றால், உடன்பாட்டுப் பண்பை வளர்ப்பதற்குத்தான்; புல்லைக் களைவது, நெற்பயிரின் வளர்ச்சிக்கு அவசியமாயிருப்பதுபோல. அரசு, சாசுவதமான ஒரு தாபனமாக இருக்க வேண்டு மென்கிற விஷயத்தில் நமது முன்னோர்கள் கண்ணுங்கருத்து மாயிருந் திருக் கிறார்கள். அரசு இல்லாமல் ஒரு கணமும் ராஜ்யம் இருக்கக் கூடாது. அப்படி இல்லாமலிருந்தால் மத்ய நியாயம் அல்லது ராட்சத நியாயம் தலைகாட்டுமல்லவா? இது நிகழாத படியிருக்கச் சில ஏற்பாடுகளைச் செய்து வைத்துப் போயிருக் கிறார்கள். ஓர் அரசன், தன் ஆட்சிக் காலத்திலேயே, தனக்குப் பின்னால் ஆளும் பொறுப்பை வகித்தற்குரிய ஒருவனை நியமித்து விட வேண்டும். இதன் மூலம் அவன், தனக்குப் பின்னால் அரசு தொடர்ந்து நடைபெறுமென்பதை ஜனங்களுக்கு ஊர்ஜிதம் செய்து காட்டியவனாகவே அரச பதவிக்கு நியமிக்கப்பட்டிருக் கிறவன் ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுவிடவேண்டும். இடைக்கால மென்பது சிறிது கூட இருக்கக்கூடாது. ஆளும் பொறுப்பை ஏற்று நடத்துவதற்குத் தகுதியுடையவன் என்பதை உறுதிப்படுத்தும் சடங்குகள் வேண்டுமானால் மெதுவாக நடைபெறலாம். அதற்கு இடம், காலம், சந்தர்ப்பம் எல்லாம் சரிப்பட்டுவர வேண்டுமல்லவா? அதற்காக ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொளவது சிறிதும் தாமதிக்கக்கூடாது; அரசபதவி அரைக்கணம் கூட காலியாயிருக்கக் கூடாது. அரசன் இறந்துவிட்டான்; நீடுவாழ்க அரசன் என்று ஒரு வாசகம் உண்டு. அரசு இடையறாதது, தொடர்ச்சியுடையது, என்றும் வாழ்ந்திருக்கவேண்டியது என்ற கருத்துக் களை உணர்த்துவதே இந்த வாசகம். அரசை ஆளுஞ் சக்தியென்று சொன்னோமல்லவா, இந்தச் சக்தி, ஒரு மனிதனிடம் சென்று அவனை அரசனாக்கி விடுகிறபோது ஐசுவரியம் என்ற பெயரைப் பெறுகிறது. ஈசுவரத் தன்மையென்று அர்த்தம். இறைமை என்பர் தமிழ் நூலார். அரசனுக்கு ஈசுவரன் என்ற ஒரு பெயருண்டு. இன்னும் இந்த ஐசுவரியத்தை 1 ராஜத்துவம் என்றும் சுவாமித்துவம் என்றும் அழைப்பர். சுவாமி என்றால் மேலோன், தலைவன் என்று நாம் சொல்லத் தேவையில்லை யல்லவா? ராஜத்துவம் என்கிற அரசத் தன்மையானது, ஒருவனை மட்டுந் தான் சென்றடையும், அந்த ஒருவன் மூலமாகத்தான் அஃது இயங்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கட்டாய விதி ஏற்படுத்த வில்லை; ஒரு சிலரையோ, பலரையோ போயடைந்து அவர்கள் மூலமாக இயங்குவதற்கும் இடங்கொடுத்திருக்கிறார்கள். ஒருவன் மூலமாக இயங்குவது மன்னராட்சி; ஒரு சிலர் மூலமாக இயங்குவது பிரபுத்துவ ஆட்சி. பலர் மூலமாக இயங்குவது ஜன ஆட்சி. இவைகளைத் தற்கால பாஷையில் அழைக்கிறோம். முற்காலத்தில் இவைகளுக்கு வேறு பெயர்கள் இருந்தன; வேறுவித ஆட்சி முறைகளும் இருந்தன. இவை களை யெல்லாம் பற்றி இந்த அத்தியாயத்தின் கடைசியில் கூறுவோம். எதற்காக இதை இங்கே பிரதாபிக்கிறோமென்றால், அரசியலில் எந்த ஒன்றையும் இரும்புச் சட்டம்போட்டு இறுக்கி விடவில்லை நமது முன்னோர்கள் என்பதைத் தெளிவுப்படுத்திக் காட்டுவதற்காகத்தான். ஜனங்களுடைய நன்மையை முன்னிட்டு, சமுதாயத்தின் கட்டுக் கோப்பு தளராதிருக்கும் பொருட்டு, அரசியலில் பல்வேறு அமிசங் களையும் வளைந்து கொடுக்குந் தன்மையனவாக அமைத்திருக் கிறார்கள். ஆனால் இப்படி வளைந்து கொடுப்பதில் ஓர் ஒழுங்கு இருக்க வேண்டுமென்றுதான் வலியுறுத்தி யிருக்கிறார்கள். ஒழுங்கிற்கும் ஒழுக்கத்திற்கும் அவர்கள் வைத்திருந்த மதிப்பும், அவைகளை அனுசரிக்க வேண்டிய விஷயத்தில் காட்டிய கண்டிப்பும் மிக அதிகம். ஒரு சிறிய உதாரணம். ஜன ஆட்சியில், ஜனங்களெல்லோரும் ஆளுந்தகுதி பெற்று விட்டதை உறுதிப் படுத்துகின்ற சடங்குகளில் எல்லோரும் பங்கு கொள்ளவேண்டு மென்று விதி செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இது சாத்தியமா யிருந்திருக்குமா என்று இப்பொழுது நமக்குத் தோன்றுகிறது. ஆனால் இங்ஙனம் நடைபெற்றதாக நமது பூர்விக நூல்கள் சாட்சி கூறுகின்றன. இந்தச் சாட்சி விசாரணையைப் பிறகு நடத்துவோம். ராஜத்துவம் எனப்படும் சுவாமித்துவம், அதாவது அரசு நிலவுவதற்கு ஓர் இடம் தேவையல்லவா? இந்த இடம், ஏற்கனவே சொன்னபடி, எவ்வளவு விதீரணமுடையதாயிருந்தபோதிலும் வெறும் நிலப்பரப்பா யிருத்தல் கூடாது; சில லட்சணங்களோடு கூடி யிருத்தல் வேண்டும். அவை என்னென்ன? கூறுகிறான் கௌடில்யன்: மையத்திலும் எல்லைப்புரங்களிலும் பிரதான நகரங்களைக் கொண்டதாயிருத்தல் வேண்டும்; சுய ஜனங்களின் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, அந்நியர்கள் அவதியுறுங்காலத்தில் அவர்களுடைய வாழ்க்கைக்கும் தேவையான பொருள்களை உற்பத்தி செய்து கொடுக்கக் கூடியதாயிருத்தல் வேண்டும்; சத்துருக்களைத் துவேஷிக்கக் கூடிய தாயிருக்கவேண்டும்; அக்கம் பக்கத்திலுள்ள அரசர்களைச் சமாளிக்கக் கூடியதாயிருக்கவேண்டும்; சதுப்பு நிலங்கள், கற்பாறைகள், மேடு பள்ளங்கள், வெறும் மணற் பாங்குகள் ஆகியவையும், இன்னும் விஷமக் காரர்கள், புலிகள் முதலிய காட்டு மிருகங்கள், விசாலமான வனாந்திரப் பிரதேசங்கள் ஆகியவையும் இல்லாத பூமியாக இருக்கவேண்டும்; செழுமையான நிலங்கள், (பல்வேறு உலோகப் பொருள்களை அள்ளித் தரும்) சுரங்கங்கள், மரங்கள் அடர்ந்த காடுகள், யானைகள் நிறைந்த காடுகள், மேய்ச்சல் தரைகள் இவைகளைக் கொண்டாயிருக்க வேண்டும்; ரகசிய வழிகள் பலவற்றை யுடையதாயிருக்க வேண்டும்; கால்நடைகள் நிறைந்ததாயிருக்க வேண்டும்; ஜல வசதிக்கு மழையையே நம்பிக் கொண்டிராததாயிருக்க வேண்டும்; நிலத்திலும் நீரிலும் போக்குவரவுக் கான வழிகளை யுடையதாயிருக்கவேண்டும்; வியாபாரத்திற்குரிய விசித்திரமான பண்டங்களை அதிகம் கொண்டதாயிருக்க வேண்டும் பெரும் படையையும் அதிக வரியையும் தாங்கக் கூடியதாயிருக்க வேண்டும்; உழைப்பாளிகளும் சீலமுள்ளவர்களுமான விவசாயிகள் வசிப்பதா யிருக்கவேண்டும்; புத்திசாலிகளான எஜமானர்களையும் ஊழியர்களையும் நிறையப்பெற்றிருக்க வேண்டும்; பக்தி யுடையவர் களென்றும் நல்ல சுபாவங்களுடையவர்களென்றும் பெயரெடுத்திருக்கிற மனிதர்களைக் கொண்டதாயிருக்க வேண்டும். இந்த லட்சணங்களொடு கூடியிருக்கிற நிலப்பரப்புதான் தேசம்; தேசம் என்ற பெயரால் அழைக்கப்படுதற்குரியது. தேசம் என்று சொன்னாலே அசையும் பொருள்கள், அசையாப் பொருள்கள் முதலிய வற்றைக் கொண்ட பூமிக்குத்தான் பெயர்; வெறுங்கட்டாந்தரைக் கல்ல; பசுமையை இல்லாத பாலை வனத்திற் கல்ல. சுக்கிர நீதி கூறுகிறது: மரம், மலை முதலிய அசையாப் பொருள்களும், மனிதர்கள், கால்நடைகள் முதலிய அசையும் பொருள்களும் சேர்ந்ததுவே தேசம். இந்தத் தேசமானது, ஜனபதம் என்ற பெயரால் அழைக்கப் பட்டது, கௌடியன், மேலே காட்டபட்ட மேற்கோளில் ஜனபதம் என்ற சொல்லையே உபயோகித்திருக்கிறான். கௌடில்யன் கூறுவதிலிருந்து சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள முற்படுவோம். ஒரு தேசம், பொருளாதாரச் செழுமையுடன் இருப்பதற்கான வசதிகளைப் பெற்றிருக்க வேண்டும்; அந்த வசதிகள் இல்லா விட்டால் அங்கு, அரசு நிலைத்திராது; ஏன்? எந்த விதமான ஆட்சியும் ஒழுங்காக நீடித்து நடைபெறாது. தற்காலத்தில் அரசியலும் பொருளாதாரமும் இணைந்து சென்றால் தான் எந்த ஒரு நாடும் சுபிட்சமாக இருக்க முடியும் என்று சொல்லப் படுகிறதல்லவா, அதற்குக் காரணம் இதுதான்; ஒரு நாடு, நாடாயிருக்க வேண்டுமென்பதற்குத்தான். இதனை நமது நாட்டு அறிஞர்கள் வெகு காலத்திற்கு முன்னமேயே உணர்ந்து திட்டம் போட்டு வைத்தார்கள். அடுத்தபடி, ஜனங்கள், குடிதண்ணீர் முதலியவைகளுக்கோ, பாசனத் திற்கோ, மழையையே நம்பிக் கொண்டிராதபடி செய்ய வேண்டுமென்று கௌடில்யன் கூறுகிறான். மகனே! மழைக்காக தெய்வத்தின் திருவருளை எதிர் பார்த்துக் கொண்டிராதே; அது கிட்டுறபோது கிட்டட்டும்; உனது முயற்சியினால் நீர் நிலைகளை ஆக்கி வைத்துக் கொள்; இயற்கை யாகவே ஆங்காங்கு நீர்நிலைகள் அமைந்திருக்குமானால் அவைகளை அவ்வப்பொழுது பழுது பார்த்துப் பாதுகாத்துவா என்று தற்காலத்தில் நம் ஒவ்வொருவருக்கும் இடித்துச் சொல்வது போலில்லையா இது? தேசத்திற்கு ஜனபதம் என்று பெயர். இதிலிருந்து ஒருதேசத்திற்கு ஜனங்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது நன்கு புலனாகின்றது, அந்த ஜனங்கள் எப்படிப்பட்டவர்களாயிருக்க வேண்டும்? உயிரோடு உலவு கின்ற பிண்டங்களாயிருக்கலாமா? அப்படியிருந்தால் தேசமும் அசை யாத பிண்டமாய்த்தானிருக்கும். எனவே, ஜனங்கள், உழைப்பாளிகளாவும் சீலமுடையவர்களாகவும் இருக்கவேண்டும். அப்பொழுது தான் தேசமும் ஜீவசக்தியோடு கூடியதாயிருக்கும். இந்த இரண்டு பண்புகளையும் - உழைப்பையும் சீலத்தையும் - விவசாயிகளுக்குப் பொருத்திப் பேசுகிறான் கௌடில்யன். இவ்விரண்டிலிருந்தும் அவர்கள் இழிந்துவிடாத படியிருக்க, அரசாங்கம் என்னென்ன செய்ய வேண்டும் மென்பதைப் பற்றியும் கூறுகிறான். தற்காலத்திற்கு இந்த இரண்டு பண்புகளும் எவ்வளவு அவசியம் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. ஒரு நாட்டு மக்கள், பக்தியுடையவர்களாயிருக்க வேண்டுமென்று குறிப்பிடுகிறான் கௌடில்யன். எதனிடத்தில், யாரிடத்தில் பக்தி? தேசத்தி னிடத்தில்; ஆளுங்கடமையைச் செய்து கொண்டிருப்போரிடத்தில். தேசபக்தியும் ராஜபக்தியும் வேறுவேறாகப் பிரிந்திருக்கவில்லை நமது நாட்டில் என்று ஏற்கனவே சொல்லி யிருக்கிறோமல்லவா? இவ்விரண்டுக்கும் மேலாகத் தர்மத்தினிடம் பக்தியுடையவர்களாயிருக்க வேண்டும். அதாவது சுய தர்மத்தை அனுஷ்டிக்கிறவர்களாகவும் பிறர் தர்மத்தை மதிக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். இந்தத் தர்மம் என்ற வார்த்தைக்கு மறுபடியும் நாம் வியாக்கியானம் செய்து காட்ட வேண்டியதில்லையல்லவா? இங்ஙனம் சில லட்சணங்களோடு கூடியதைத்தான் நாடு என்கின்றனர் தமிழ் நூலாரும். அஃதிருக்கட்டும். இந்த லட்சணங் களுள்ள இடத்தில்தான் அரசு நிலவும்; நிலைக்கும். அதில்தான் ராஜ்யமென்பது உருக்கொள்ளும், ஒரு ராஜ்யத்திற்கு, தேசமும் அரசும் முக்கியமான உறுப்புக்கள்; இவையிரண்டுமின்றேல் ராஜ்யமென்பது உருக்கொள்வ தற்கு ஏதுவுண்டாகாது. இதனால் தான், எந்த இடத்தில் ஆளுகையென்பது இல்லையோ அந்த இடம் ராஜ்யமாகாது என்று இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் கூறினோம். ஆனால் இவ்விரண்டும் மட்டுமே - ஆளுகையும் இடமும் - ராஜ்யமாகிவிடாது. தலையும் கால்களும் முக்கியமான உறுப்புக்கள்தான். ஆனால் இவை மட்டுமே உடம்பாகி விடாதல்லவா? உறுப்பு என்ற வார்த்தையை ஏன் இங்கே உபயோகிக்கிறோ மென்றால், ராஜ்யத்தைச் சில உறுப்புக்களோடு கூடிய உருவமாக, உடலாக நமது முன்னோர்கள் வருணித்துப் பேசியிருக்கிற காரணத்தி னால்தான். வருணித்து மட்டுமல்ல, இதனை ஒரு கோட்பாடாகவே வைத்துப் பேசியிருக்கின்றனர். ராஜ்யமானது ஏழு உறுப்புக்களைக் கொண்ட ஓர் உடலம். இந்த உறுப்புக்கள், அங்கங்கள் என்ற பெயராலும், பிரகிருதிகள்1 என்ற பெயராலும் அழைக்கப்பட்டன. சப்தாங்கம் அல்லது சப்த பிரகிருதிகள் என்றே கூறுவர். அங்கங்கள் ஏழு என்று நிர்ணயித்துக் கூறுவானேன் என்று கேட்கப் படலாம். உடல் என்று சொன்னால் ஏழு பொருள்கள் சேர்ந்திருக்க வேண்டும். இவற்றை சப்ததாதுக்கள் என்று கூறுவர். இவை முறையே (1) ரசம் (2) ரத்தம் (3) சுக்கிலம் (4) மூளை (5) தசை (6) எலும்பு (7) தோல் என்பன. இந்த ஏழு பொருள்களின் சேர்க்கைதான் உடல். ராஜ்யத்தை உடலாகச் சொன்னவர்கள், உடலுக்கு ஏழு தாதுக்கள் உண்டென்பது போல் ராஜ்யத்திற்கு ஏழு அங்கங்கள் உண்டென்று கூறினர். இந்த ஏழு அங்கங்கள் யாவை? கௌடில்யனுடைய அர்த்த சாதிரப்படி (1) சுவாமி (2) அமாத்தியன் (3) ஜனபதம் (4) துர்க்கம் (5) கோசம் (6) தண்டம் (7) மித்துரு. இந்த வரிசையை மாற்றிச் சொல்வதுமுண்டு. அப்படியே பல நூல்கள் சொல்லியருக்கின்றன. எந்த நூல் எந்த வரிசையில் சொல்லியிருக்கிறதென்று விதரித்துச் சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் இங்கு அது தேவையில்லை. எந்த நூல் எந்த வரிசையில் கூறியபோதிலும், ராஜ்யத்திற்கு ஏழு அங்கங்கள் உண்டென்பதை எல்லா நூல்களுமே ஒப்புக் கொள்கின்றன. இதுவே நமக்கு முக்கியம்.1 இந்த ஏழு அங்கங்களுள் சிலவற்றின் பெயர்களை மட்டும் சில நூல்கள் மாற்றிக்கூறுகின்றன. உதாரணமாக, மூன்றாவது அங்கமாகிய ஜனபதம் என்பதற்குப் பதில், ஜனம் என்று சில நூல்களும், ராஷ்டிரம் என்று சில நூல்களும் கூறுகின்றன. ஒரு தேசத்தை நிலையான வாசதலமாகக் கொண்டிருக்கிறவர்கள்தான் ஜனங்கள்; அப்படியே நிலையாக வசிக்கிற ஜனங்களைக் கொண்டதுதான் தேசம். எனவே மேற்சொன்ன மூன்று சொற்களும் ஒரே அர்த்தத்தையே குறிக்கும். அடுத்தாற்போல் துர்க்கம். இதற்குப் பதில் புரம் என்று கூறுகின்றன சில நூல்கள். துர்க்கம் என்று சொன்னால், கோட்டை என்றுதான் நாம் சாதாணமாக அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். இது சரியான அர்த்தமே. ஆனால் அரசன் வசிக்கின்ற இடமும், அதாவது ராஜ்யத்தின் தலை நகரமும் துர்க்கம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. புரம், நகரம், துர்க்கம் ஆகிய மூன்று சொற்களும் ராஜ்யத்தின தலைநகரத்தையே குறிப்பதாகக் கொள்ளப்பட்டன. நகரம் என்று சொன்னால் தலை நகரந்தான். அப்படியே புரமும். பிற்காலத்தில்தான் இந்த நகர மென்பதும் புரம் என்பதும் தலைநகரமல்லாத பிற நகரங்களையும் பிற பட்டணங்களையும் குறிக்கின்ற பொதுச் சொற்களாக மாறின. சிறு சிறு ராஜ்யங்கள் பல இருந்த காலத்தில், தலை நகரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அரசன் வசிக்கவேண்டிய இடமாக மட்டும் இஃது இல்லை; ஆபத்து நேர்ந்த காலத்தில், தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்குரிய இடமாகவும் இருந்தது. அதாவது, தலைநகரம் ஒரு கோட்டைக்குள், இருந்ததென்று சுருக்கமாகக் கூறலாம். எனவே, துர்க்கம் என்பது கோட்டையையும், அதற்குள்ளிருந்த நகரத்தை யும் சேர்த்துக் குறிப்பதாயிற்று. மகா பாரதம் அனுசாஸன பர்வம், ஏழு அங்கங்களின் தன்மைகளைப் பற்றிக் கூறுகிறபோது, பகைவரால் வெல்ல முடியாத சிறந்த நகரம் என்று கூறி யிருப்பது இங்குக் குறிப்பிடத் தக்கது. இந்தக் கோட்டை- நகரம், பெரும்பாலும் ஒரு குன்றின்மீது அல்லது மேட்டுப் பாங்கானதோரிடத்தில் கட்டப்பெற்றது. துர்க்கம் என்று சொன்னாலே மலைமீதுள்ள கோட்டை யென்றே பொருள் கொள்ளப்பட்டது. மலைக்கோட்டை யென்று இப்பொழுது நாம் சொல்கிறோமில்லையா? ஒரு ராஜ்யத்தின் தலைநகரம், பெரும்பாலும் அந்த ராஜ்யத்தின் மையமான இடத்திலேயே அமைக்கப்பட்டிருந்தது. ஒரு வட்டத்திற்குள், சுற்றுப்புறமும் முக்கியம்; நடுமுனையும் முக்கியம். சுற்றுப்புறந்தான் ராஷ்டிரம் அல்லது ஜனபதம்; நடுமுனைதான் புரம் அல்லது நகரம். இவ்விரண்டும், ராஜ்யத்தின் இரண்டு உறுப்புக்களாகக் கொள்ளப்பட்டன. இவ்விரண்டையும் தமிழ் நூலார், நாடும் நகரமும் என்று கூறுவர், திருக்குறள், துர்க்கம் அல்லது கோட்டையென்றோ, நகரம் என்றோ சொல்லாமல் அரண் என்று பொதுவாகச் சொல்லியிருக்கிறது. நாட்டுக்கும் அரண், நகரத்திற்கும் அரண் என்று இரண்டுக்கும் கொள்ளலாம் படி இருக்கிறதல்லவா இது? நிற்க. சிறிய சிறிய ராஜ்யங்கள், காலக்கிரமத்தில் ஒரு சில பெரிய ராஜ்யங்களாக உருக்கொண்டன. இந்தப் பெரிய ராஜ்யங்கள் ஒவ்வொன்றும், தற்காப்பு நிமித்தம் ராஜ்யத்தின் பல பகுதிகளிலும், சிறப்பாக எல்லைப்புறங்களில் கோட்டைகள் கட்டிக்கொண்டன. அந்நியர் படையெடுப்புகள், உள்நாட்டுக் குழப்பங்கள் முதலியவைகளைச் சமாளிக்க இங்ஙனம் கோட்டைகள் கட்டிக்கொள்ளவேண்டியது இவை களுக்கு அவசியமாயிருந்தது. கோட்டையென்று சொன்னால், குடிவள மில்லாத தனிக்காட்டில் கட்டப்பெற்ற கோட்டையல்ல, ஒவ்வொரு கோட்டையும் ஒவ்வொரு நகரம் என்று சொல்லலாம். இங்ஙனம் ராஜ்யத்தின பாதுகாப்புக்குக் காரணமாயமைந்த கோட்டை (கள்) அந்த ராஜ்யத்தின் ஓர் அங்கமாகக் கொள்ளப்பட்டது. இப்படிச் சொன்னதனால், தலை நகரத்தின் முக்கியத்துவம் போய்விட்டதென்று அர்த்தமல்ல. இதனுடைய தனித்துவம் முன்னைக் காட்டிலும் அதிகமாக மதிப்புப் பெற்றது. ராஜ்ய விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பில், நாட்டுக்கு என்ன பங்கு ஏற்பட்டிருந்ததோ அதற்குச் சமதையான பங்கு தலைநகரத்திற்கும் ஏற்பட்டிருந்தது. நாட்டின் பிரதிநிதிச் சபையாக ஜான பதசபை எந்த சபை இருந்ததென்றால், தலைநகரத்தின் பிரதிநிதிச் சபையாக பௌரசபை என்ற சபை இருந்தது. இங்ஙனம் தலைநகரத்தின் முக்கியத்துவம் போய் விடவில்லை யென்பதைக் காட்டும் பொருட்டுத்தான் துர்க்கம் என்ற பொதுவான பெயரை இட்டனர் போலும். துர்க்கம் எனபது, கோட்டைக்குள்ளிருக்கிற தலைநகரம் உட்பட எல்லாக்கோட்டை நகரங்களையும் சேர்த்துக் குறிப்பதாகுமல்லவா? அடுத்தது கோசம்; அதாவது பொக்கிஷம். கஷ்டத்தில் தாங்கத்தக்க பொக்கிஷம் என்கிறது மகாபாரதம். எல்லா நூல்களும் கோசம் என்ற சொல்லையே உபயோகித்திருக்கின்றன. இதனைப் பொருள் என்பர் தமிழ்நூலார். ஆறாவது அங்கம் தண்டம்; சேனையென்று அர்த்தம். பலம் என்று சொல்வதுமுண்டு, அமரகோசம் என்கிற வடமொழி நிகண்டும், காமந்தக நீதியும் பலம் என்ற சொல்லையே உபயோகிக்கின்றன. அன்புள்ள சேனை யென்கிறது மகாபாரதம், படையென்பர் தமிழ் நூலார். ஏழாவது மித்துரு. ஹ்ருத் (சுகிர்த்து) என்கின்றன அமர கோசமும் காமந்தக நீதியும். சினேகம் என்று அர்த்தம். தற்கால பாஷையில் பேச ராஜ்யங்கள் என்று சொல்லலாம். ஒரு ராஜ்யத்தின் நாற்புற எல்லைகளை ஒட்டியிருக்கும் ராஜ்யங்கள் நேச ராஜ்யங்களாகக் கருதப்படவில்லை; அவைகளுக்கடுத்தாற் போலுள்ள ராஜ்யங்களே நேச ராஜ்யங்களாகக் கருதப்டட்டன. சாதாரணமாக இப்பொழுது நமக்கு, அக்கம் பக்கத்திலுள்ள ராஜ்யங்களைத்தான் மித்துரு ராஜ்யங்களாகக் கருத வேண்டு மென்று தோன்றும். ஆனால் நமது முன்னோர்கள் இப்படிக் கருதவில்லை, அக்கம் பக்கத்திலுள்ள ராஜ்யங்களைத்தான் சத்துரு ராஜ்யங்களாகக் கருதவேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல; அவைகளை எப்படி நடத்தவேண்டுமென்பதைப் பற்றியும், நேச ராஜ்யங்கள் விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதைப் பற்றியும் விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள். மித்துரு என்பதைத் தான் நட்பு என்கிறது திருக்குறள். இனி, எல்லா நூல்களும் ஒரே மாதிரியாகக் கூறுகின்ற முதல் இரண்டு அங்கங்களைப் பற்றிப் சிறிது கவனிப்போம். முதலாவது சுவாமி. அரசன் என்ற அர்த்தத்தில்தான் இந்த வார்த்தை உபயோகிக்கப் பட்டிருக்கிறது என்று சொன்னால் அதில் தவறில்லை. முடியாட்சியை மையமாக வைத்துத்தானே அரசியல் சித்தாந்தங்களனைத்தையும் வகுத்திருக்கின்றனர் நமது பெரியோர்? ஆனால் நமது நாட்டில் முடியாட்சியல்லாத வேறு பலவித ஆட்சி முறைகளும் நடைபெற்று வந்திருக்கின்றன; அவைகளுக்கு இடமும் கொடுத்திருக்கின்றனர் நமது முன்னோர். இந்த எல்லாவித ஆட்சி முறைகளுக்கும் பொருந்துகின்ற ஒரு பொதுப்பெயராக இருக்க வேண்டுமென்பதற்காகவே சுவாமி என்று கூறினர். ராஜன் என்று சொன்னால், அது முடியாட்சியை மட்டும் சுட்டிக் காட்டு கின்ற சிறப்புப் பெயராகிவிடும். சுவாமி என்று சொல்லிவிட்டால், அது முடியாட்சியின் தலைவனான அரசனையும் குறிக்கும்; மற்ற ஆட்சி முறைகளின் தலைவர்களையும் குறிக்கும். சுவாமி என்பதற்கு, மேலோன் அல்லது தலைவன் அல்லது எஜமானன் என்று அர்த்தம். இங்ஙனம் ராஜன் என்ற வார்த்தையை வெளிப்படையாக உபயோகித்து, முடியாட்சி யிடந்தான் தங்கள் படசமெல்லாம் இருக்கிறதென்று காட்டிக் கொள்ளாமல், பொதுப்படையான சுவாமி என்ற சொல்லை உபயோகித்துத் தங்கள் பொது நோக்கை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் நமது முன்னோர். இது நன்கு சிந்திக்கத் தக்கது. ராஜ்யத்தை இங்ஙனம் அங்கங்களாகப் பிரித்துச் சொல்கிற போது, சுவாமி என்ற சொல்லை உபயோகித்திருக்கின்றன ரென் றாலும், ஆளும் பொறுப்பை ஏற்று நடத்துகிறவன் யாராயிருந் தாலும், அவன் எந்தவிதமான ஆட்சி முறைக்குத் தலைவனாயிருந்த போதிலும், அவனைப் பொதுவாக அரசன் என்று அழைப்பதே சம்பிரதாயமாகி விட்டது. முடியாட்சித் தத்துவம் அவ்வளவு ஆழமாக வேரூன்றியிருந்தது நமது நாட்டில். நாமும் இந்தச் சம்பிரதாயத்தை யொட்டி, அரசன் என்றே பொதுவாகச் சொல்லிக் கொண்டு போகிறோம் இந்த நூலில். இரண்டாவது அமாத்தியன். சுவாமிக்கு அடுத்து படியாகவே இது சொல்லப்பட்டிருக்கிறது. எந்த நூலும் இதை வரிசை மாற்றிச் சொல்ல வில்லை. அமாத்தியன் என்றால் மந்திரி. மந்திரி ஒருவனல்லன்; மந்திரிகள் என்றே நாம் கொள்ள வேண்டும். இவர்கள் - மந்திரிகள் – சுவாமி யுடன் எப்பொழுதும் இருக்க வேண்டியவர்கள். இவர்களைக் கலந்தாலோசியாமல், சுவாமி யானவன் எந்த ஒரு ராஜ காரியத்தையும் சுயமாகச் செய்யகூடாது என்பதை எடுத்துக் காட்டுகிறது. சுவாமிக்கு அடுத்தபடியாக அமாத்தியினை வைத்திருப்பது. மந்திரிகளனை வரும் அமாத்தியர் என்ற பொதுப்பெயரால் அழைக்கப்பட்டனர் ஒரு காலத்தில். பின்னொரு காலத்தில் இந்த அமாத்தியன் என்ற சொல், குறிப்பிட்ட சில பொறுப்புக்களை வகிக்கும் ஒரு மந்திரிக்குரிய பெயராக வழங்கப்பட்டது. 1 அமாத்தியன் என்பதை அமைச்சு என்பர் தமிழ் நூலார். இந்த ஏழு அங்கங்களும், எந்த வரிசையில் கூறப் பட்டபோதிலும், எந்தப் பெயரால் அழைக்கப்பட்டபோதிலும், ஒரு ராஜ்யத்திற்கு - அது சிறிதாயிருந்தாலும் பெரிதாயிருந்தாலும், அங்கு என்னவிதமான ஆட்சி நடைபெற்றபோதிலும் - இன்றியமையாதவை. இவற்றுள் ஏதோனு மொன்று குறைந்தால் கூட, ராஜ்யமென்பதில்லை; இடிந்த சுவர் மாதிரி தான், இடிந்த சுவரில் எப்படிச் சித்திரம் எழுத முடியாதோ அதுபோல அங்கக் குறைவுள்ள ராஜ்யத்திலிருந்து எவ்வித நன்மையையும் எதிர்ப்பார்க்க முடியாது; நன்மையைச் செய்யக் கூடிய சக்தியும் அதற்கு உண்டாகாது. இந்த ஏழு அங்கங்களும் ஒன்று சேர்ந்திருந்தால் மட்டும் போதாது; ஒன்றையொன்று விரோதித்துக் கொள்ளாமல் பரபரம் ஒத்துழைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஓர் அங்கம் ஒத்துழைக்க மறுத்துவிட்டால் கூட மற்ற அங்கங்கள் பாதிக்கப்படும். கையின் உதவியின்றி வாய் உணவை ஏற்றுக் கொள்ள முடியுமா? உணவு உள்ளே செல்லாவிட்டால் மற்ற அங்கங்கள் சோர்ந்து போகின்றன; தேகமே ஊனமடைகிறது. ஒருவனது தேகத்தைப் பார்த்து இவன் தேகம் நல்ல தேகம் என்று எப்பொழுது சொல்கிறோம்? அவனது அங்க அவயங்கள் ஒன்றுக்கொன்று முரணிக்கொள்ளாமல் அதனதன் கடமைகளைச் செய்து கொண்டு போகிறபோது அதுபோல, ஒரு ராஜ்யம் நல்லராஜ்ய மாயிருக்கவேண்டு மானால் அதன் மேற்சொன்ன ஏழு அங்கங்களும் ஒன்றுபட்டு வேலை செய்யவேண்டும். இந்த ஏழு அங்கங்களில் ஏதேனும் ஒன்றுக்கு ஊறு ஏற்பட்டால் கூட மற்றவை பாதிக்கப்படுகின்றன. ஆதலின் எந்த ஒன்றுக்கும் ஊறு நேரிடாமலும், ஒன்றை யொன்று ஊறு செய்யவிடாமலும், அதனதன் தானத்தில் அதனதனை இருத்தியும் அனைத்தையும் ஒன்று படுத்தியும் கொண்டு செலுத்தவேண்டும். கொண்டு செலுத்துகிறவன்தான் சுவாமி; அதாவது அரசன், இவனே மேற்படி ஏழு அங்கங்களில் ஓர் அங்கமா யிருந்து, மற்றவற்றைக் கொண்டு செலுத்துகிறான். எனவே இவன், தானியங்கியாகவும், மற்ற அங்கங்களை இயக்குவிக்கிறவனாகவும் இருக்கிறான். அவ்வளவு மகத்தான பொறுப்பு இவனுடையது? இதனால் தான் இவனைத் தலையாக வைத்துப் பேசினர் நமது முன்னோர். ஒரு தேகத்தினுடைய இன்னின்ன அங்கங்களைப் போல் ஒரு ராஜ்யத்தின் இன்னின்ன அங்கங்கள் இருக்கின்றனவென்பதை சுக்கிரநீதி பின்வருமாறு வருணிக்கிறது- சுவாமி - தலை; அமாத்தியன் - கண்கள்; மித்துரு - காதுகள்; கோசம் - வாய்; தண்டம் (படை) - மனம்; துர்க்கம்-கைகள்; தேசம்- கால்கள். இந்த ஏழு அங்கங்களையும் பிரதான அங்கங்கள் என்று சொல்ல வேண்டும். இவை ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு உப அங்கங்கள் அல்லது உட்பிரிவுகள் உண்டு. கை என்று பொதுவாகச் சொல்லிவிடு கிறோம். ஆனால் அது, தோள், முழங்கை, மணிக்கட்டு, விரல்கள் இப்படிப் பல பிரிவுகளுடைய தாயில்லையா? அது போல, ராஜ்யத்திற்குப் படையென்பது பிரதான அங்கமாகச் சொல்லப் பட்டபோதிலும், அது, தேர்ப்படை, யானைப் படை, குதிரைப் படை, காலாட்பாடை இப்படிப் பல உட் பிரிவுகளுடையதா யிருக்கிறது. இங்ஙனம் ராஜ்யத்தின் ஒவ்வொரு முக்கிய அங்கத்தினையும் பல உட்பிரிவுகளாகப்பிரித்து, ஒவ்வொர் உட்பிரிவின் லட்சணங்களையும் விதரித்துச் சொல்லியுள்ளனர் நமது முன்னோர். ராஜ்யம், முக்கியமான ஏழு உறுப்புக்களுடைய தென்று சொன்னது. ராஜ்யத்தின் எல்லா லட்சணங்களையும் அடையாள மிட்டுச் சொன்ன தாகும். எப்படி? (1) ராஜ்யமானது பல பின்னங்களுடையதன்று, அது முழுசாகவே இருக்கிறது, ஒன்றாகவே இருக்கிறது என்பதன் அடை யாளமாக, ராஜ்ய மொத்தத்தின் பிரதிநிதியாக இருக்கிறான் சுவாமி அல்லது அரசன். (2) ராஜ்யம் ஒழுங்கான நிருவாகத்திற்குட்பட்டிருக்கிற தென்பதற்கு அடையாளம் மந்திரிகள். (3) ராஜ்யம் வளமுடைய தாயிருக்கிறதென்பதற்கு அடையாளம் நாடு. (4) ராஜ்யம் எப்பொழுதும் விழிப்புடனிருந்து கொண்டிருப்பதற்கு அடையாளம் கோட்டைகள். (5) ராஜ்யம் ஒழுங்கான வருமான முடையதாயிருக்கிறதென்பதற்கு அடையாளம் பொக்கிஷம். (6) ராஜ்யம் பலமுடையதாயிருக்கிற தென் பதற்கு அடையாளம் படை. (7) ராஜ்யம் பிற ராஜ்யங்களின் நல்லுறவில் வாழ்ந்து கொண்டிருக்கிறதென்பதற்கு அடையாளம் மித்துரு. தற்காலக் கண்கொண்டு பார்க்கிறபோது, ராஜ்யத்திற்கு இங்ஙனம் ஏழு அங்கங்கள் உண்டென்று சொல்வது அவ்வளவு பொருத்த மில்லைபோல் தோன்றலாம். உதாரணமாக, பிற ராஜ்யங்களை, ஒரு ராஜ்யத்தின் அங்கமாக எப்படிக் கொள்வது என்று கேட்கலாம். ஆனால் இதில்தான் நமது முன்னோர்களின் பரந்த மனப்பான்மையும் அனுபவத் தோடு ஒட்டிய அறிவும் நன்கு புலப்படுகின்றன. எந்த ஒரு ராஜ்யமும் தனித்து வாழ முடியாது. அப்படி வாழ ஆசைப்படுவது, தற்கொலை செய்து கொள்ள முற்படுவதேயாகும். பரபர உதவியின் பேரில்தான் ஒரு ராஜ்யம் வாழ முடியுமென்பதை இந்தக் காலத்து வல்லரசுகள் யாவும் நன்கு உணர்ந்து கொண்டிருக்கின்றன. அக்கம் பக்கத்திலுள்ள நாடுகளின் பகைமை, தனக்கு எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறதென்று கருதி, சிறிது தொலைவாயுள்ள, அதாவது அக்கம் பக்கத்து நாடுகளுக்கு அப்பாற்பட்டுள்ள நாடுகளின் நல்லுறவை ஒவ்வொரு நாடும் நாடி நிற்பது நன்கு தெரிந்த விஷயமே. அடுத்தாற் போலிருக்கின்ற ராஜ்யத்தின் மீது சுலமபமாகப் படையெடுப்பதையும், அந்த ராஜ்யத்தினால் திடீரென்று படையெடுக்கப் படுவதையும் இப்பொழுது பார்த்தும் கேட்டும் இருக்கிறோம். இவைகளை யெல்லாம் நன்குணர்ந்த நமது முன்னோர்கள், அக்கம் பக்கத்து ஆபத்துகளைச் சமாளிக்க, பிற ராஜ்யங்களின நட்பைச் சம்பாதித்து வைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதை ஒரு முறையாகக் கையாண்டு வந்திருக்கின்றனர். மற்ற ராஜ்யங்களின் நட்பை எப்படிச் சம்பாதித்துக் கொள்வது? அவைகளின் க்ஷேமத்தை நாடி; அவைகளுக்கு நன்மையைச் செய்து. மற்றவர்களுடைய நன்மையை நாம் கோரினால்தான். நம்முடைய நன்மையை மற்றவர்கள் கோருவார்கள். பிறர் க்ஷேமத்தில் அக்கரை கொள்வது நம்முடைய க்ஷேமத்திற்குத்தான். எனவே, நம்முடைய நன்மை வேறு, மற்றவர்களுடைய நன்மைவேறு என்று பிரிக்க முடியாது. ஒன்றிலே மற்றொன்று ஐக்கியப் பட்டிருக்கிறது; ஒன்றின் அங்கமாக மற்றொன்று இருக்கிறது. இங்ஙனம் நேச ராஜ்யங்களை, ஒரு ராஜ்யத்தின் அங்கமாகக் கருதி, அவைகளுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று ஏட்டிலே சொல்லி விடுவது சுலபந்தான். ஆனால் இஃது அனுஷ்டான சாத்தியமா, எந்த அரசனேனும் இப்படிச் செய்திருக்கிறானா என்று வாசகர்கள் கேட்கலாம். அசோக மகாராஜன் செய்திருக்கிறான். அவனது பதினான்கு பாறைச் சாஸனங்களுள் இரண்டாவது சாஸனம் கூறுகிறது. தேவப் பிரியனான பிரியதர்சி மகாராஜனுடைய ராஜ்யத்தின் எந்தப் பகுதியிலும், அயலார்களாகிய சோழர்கள், பாண்டியர்கள், சத்திய புத்திரர்கள், கேரள புத்திரர்கள் முதலியோருடைய ராஜ்யங்களிலும், இலங்கையிலும், யவன அரசனாகிய அண்ட்டியோக்க1 ராஜ்யத்திலும், அந்த ராஜ்யத்தின் எல்லையிலுள்ள மற்ற அரசர்களின் ராஜ்யங்களிலும், இரண்டு விதமான சிகிச்சை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஒன்று, மனிதர்களுக்கென்று; மற்றொன்று, மிருகங்களுக்கென்று, மனிதர் களுக்கும் மிருகங்களும் பயன்படக்கூடிய மூலிகைகள் எங்கெங்குக் குறை வாயிருக்கின்றனவோ, அங்கெல்லாம் அவை இறக்குமதி செய்யப் பட்டுப் பயிர் செய்யப்பட வேண்டும். இங்ஙனமே வேர்களும் பழங் களும் எங்கெங்குக் குறைவா யுள்ளனவோ அங்கெல்லாம் இறக்குமதி செய்யப்பட்டுப் பயிர் செய்யப்பட வேண்டும். (இன்னும் மேற்படி ராஜ்யங் களில்) மனிதனுக்கும் மிருகத்திற்கும் சௌகரியந் தேடித் தரவேண்டி, பாதைகளில் (ஆங்காங்கு) கிணறுகள் தோண்டப்பட்டிருக்கின்றன; மரங்கள் நடப்பட்டிருக்கின்றன. இன்னும் பதின்மூன்றாவது பாறைச் சாஸனம் பின்வருமாறு கூறுகிறது- வெற்றிகளில் தர்ம வெற்றிதான் முக்கியமானது என்பது சக்ரவர்த்தியின் அபிப்பிராயம். இந்த வெற்றியை அவர் பலதடவை, (தமது ராஜ்யமாகிய) இங்கும், ராஜ்யத்தின் வடக்கே எல்லைப் புறத்தில் வசிக்கும், எல்லா ஜனங்களிடையிலும், அதாவது எந்தப் பிரதேசத்தில் அண்ட்டி யோக்க என்ற யவன மன்னன் ஆட்சி செலுத்துகின்றானோ அந்தப் பிரதேசம் உள்பட சுமார் அறுநூறு யோஜனை தூரம் வரையிலும், அந்த அண்ட்டியோக்க மன்னனுடைய பிரதேசத்திற்கு அப்பாலுள்ள டாலமி என்ன1 அண்டிகோனஎன்ன,2 மாகாஎன்ன,3 அலெக்ஸாந்தர் என்ன,4 இந்த அரசர்களுடைய ராஜ்யங்களிலும், தெற்கே சோழ பாண்டிய தேசங்களிலும், தாம்பிரபரணி (நதி) வரையிலும் அடைந் திருக்கிறார்.. . . இன்னொரு விஷயம் இங்கே. நமது முன்னோர்கள் திருஷ்டியில், நாட்டுப்பற்று என்பது பிற நாடுகள் மீது கொண்ட துவேஷமாக மாறவில்லை. எனது நாடு, நற்றவ வானினும் நனி சிறந்ததுதான்; அதற்கு நான் பக்தி செலுத்தவேண்டியதுதான்; அது வாழ, நான் வாழ வேண்டியது தான். ஆனால் அதற்காக நான் மற்ற நாடுகளைத் தாழ்வாகக் கருத வேண்டு மென்பதில்லையே? மற்ற நாடுகளின் தாழ்விலே எனது நாட்டின் வாழ்வைக் காண வேண்டு மென்பதில்லையே? எந்த நாட்டினர் மற்ற நாட்டினரைத் தாழ்த்தியோ வீழ்த்தியோ, தங்கள் வாழ்க்கையை வளம்படுத்த முனைந்தார்களோ அந்த நாட்டினர் கடைசியில் வீழ்ந்தே பட்டிருக்கின்றனர். இதை உலக சரித்திரத்தில் சர்வ சாதாரணமாகப் பார்த்திருக்கிறோம். நமது முன்னோர்கள், இந்தப் பேருண்மையை நன்குணர்ந்து, நமது தாய்நாடு வீழ்ச்சியையே காணுதல் கூடாது, என்றும் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்ற பெருநோக்குடன், எல் லோருடைய நல்வாழ்வையும் கோரியிருக்கிறார்கள்; எல்லோருடைய க்ஷேமத்திற்காகவும் பாடுபட்டிருக்கிறார்கள். உலகத்தில் அவர்கள் செல்லாத இடமில்லை. அமெரிக்காவிலுள்ள மெக்ஸிக்கோ என்ன, பெரு என்ன. இப்படிப்பட்ட தொலை நாடுகளுக்கெல்லாம் கூட தரை மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் சென்றிருக்கிறார்கள். எப்படி? மித்திரர்களாக. ஏன்? அந்த நாடுகளை வளம்படுத்த; அந்த நாட்டினரை வாழ்விக்க. இப்படிப்பட்டவர்கள். மற்ற ராஜ்யத்தினரை மித்திரர்களாக மதித்து வந்ததில், அந்த மித்திரர்களைத் தங்களிலே ஒருவராகக் கருதி வந்ததில் என்ன ஆச்சரியமிருக்கிறது? ராஜ்யத்தை, பரம சாதுவான ஒரு பசுவுக்கு ஒப்பிட்டுச் சொல்கிறான் காளிதாச மகாகவி, தனது ரகுவம்சம் என்னும் காவியத்தில், பசுவுக்கு ஒரு புனிதத் தன்மை கொடுத்து அதனை எப்பொழுதுமே போற்றி வந்திருக் கின்றனர் நமது பெரியோர். இந்த ராஜ்யப் பசுவைப் பாதுகாக்கிறவன் அரசன். இதன் மூலம் போஷிக்கப்படுகிறவர்கள் பிரஜைகள். பிரஜைகளுக் காகவே அரசன் இந்தப் பசுவைப் பாதுகாத்து வர வேண்டும். எனவே அவன் - அரசன் - இந்தப் பசுவுக்குச் சொந்தக்காரனல்லன்; தர்மகர்த்தா. வமிச பாரம்பரியமாக வந்து கொண்டிருக்கும் இந்தப்பசுவை நன்கு பாதுகாத்து, தனக்குப் பின்னால் வரும் சந்ததியிடம் அப்படியே, இல்லை, இல்லை, அதிகப் பொலிவுடன் ஒப்படைக்க வேண்டும். ஒருபொருளுக்குச் சொந்தக் காரனாயிருப்பது சுலபம்; தர்மகர்த்தாவாயிருப்பது கடினம். சொந்தக் காரனுக்கு உரிமைகள் அதிகம்; தர்மகர்த்தாவுக்கோ கடமைகள்தான் அதிகம். இன்னும் ராஜ்யத்தை, பூவும் காயுமாகக் கனிந்து குலுங்கும் ஒரு மரத்திற்கு ஒப்பிட்டுச் சொல்வது முண்டு. சுக்கிர நீதி கூறுகிறது:- ராஜ்யமாகிய விருட்சத்திற்கு அரசன் வேர்; மந்திரிகள் அடிப் பெருங்கிளைகள்; சேனாதிபதிகள் கிளைகள்; சேனைகள் தளிர்கள்; பிரஜைகள் புஷ்பங்கள்; பூமியிலிருந்து கிடைக்கும் பொருள்கள் பழங்கள்; பூமிதான் வித்து. இங்ஙனம் உயிருள்ள உருவமாகவும், உயிர் வளர்க்கும் பாலைக் கொடுக்கின்ற பசுவாகவும், அழகுடைய மரமாகவும் காட்சியளிக் கின்ற இந்த ராஜ்யம், எல்லோருடைய வணக்கத்திற்கு முரியதாகிறது. சோமதேவசூரியென்கிற ஜைன பண்டிதன், ராஜ்யத்திற்கு வணக்கஞ் செலுத்திவிட்டே, தன்னுடைய நீதிவாக்கி யாமிருதம் புலமை, நாட்டுப் பற்றுக்கு முரண்பட்டதாயிராது; இருக்கவும் முடியாது. சரி; ராஜ்யத்தின் நோக்கமென்ன? எதுவாயிருக்க வேண்டும்? ஜனங்களுக்கும் நன்மை செய்வதுதான்; ஜனங்களைச் சந்தோஷப் படுத்துவதல்ல. சந்தோஷப்படுத்தவேண்டியதுதான். ஆனால் அந்தச் சந்தோஷம் நன்மையினால் விளைவதாயிருக்க வேண்டுமே தவிர வெறுஞ் சந்தோஷமாயிருத்தல் கூடாது. எந்த ராஜ்யம், ஜனங் களுடைய கவனத்தை ராஜ்ய விவகாரங்களினின்று திருப்பி வைத்திருக்க வேண்டுமென்பதற்காக, அவர்களைக் களியாட்டுகளிலே ஈடுபடுத்தி அவர்களுக்கு அற்ப சந்தோஷத்தை அவ்வப்பொழுது ஊட்டி வருகிறதோ அந்த ராஜ்யம், காலக்கிரமத்தில் அழிந்து போகிறது, அதுவே அழிந்து போகிறதா? இல்லை; எந்த ஜனங்களைச் சந்தோஷப்படுத்தி வந்ததோ அந்த ஜனங்களாலாளேயே அழிக்கப்பட்டுவிடுகிறது. உலக சரித்திரம் இதற்கு அநேக சாட்சிகளைக் கொண்டு வந்து நம்முன்னே நிறுத்துகிறது. இப்படியெல்லாம் நிகழ்தல் கூடாதென்று நமது நாட்டு அரசியல் பண்டிதர்கள், ஜனங்களுக்கு நன்மை செய்வதே ராஜ்யத்தின் நோக்கமாயிருக்க வேண்டுமென்று திட்டமிட்டிருக் கின்றனர். இன்னும் ஒரு ராஜ்யம், தனது பிரஜைகளின் புற வாழ்க்கை செம்மையாக நடைபெறுவதற்கு ஏதுவாயிருக்க வேண்டும்; அப் பொழுதுதான் அவர்களுடைய அக வாழ்க்கை மலர்ச்சி தந்து மணம் வீசும். எந்த ஒரு மனிதனும், தன்னுடைய உயிருக்கும் பொருளுக்கும் ஆபத்தில்லையென்று உணர்கின்ற நிலையில் தான் மன நிம்மதியடை கிறான். நிம்மதியான மனந்தான், உயர் குணங்களுக்கும் உயர் சிருஷ்டிகளுக்கும் விளைபுலனாயிருக்கிறது. இத்தகைய விளை புலனாக ஒவ்வொரு பிரஜையினுடைய மனமும் இருக்கப் பாடுபடுவதே ராஜ்யத்தின் நோக்கமாயிருக்க வேண்டும். மனிதன், பலனை மட்டும் அனுபவிக்க ஆசைப்படுகிறான்; ஆனால் அந்தப் பலனைப் பெறுவதற்கான உழைப்பை மேற்கொள்ள மறுக்கிறான். இந்த மனப்பான்மை சுய நலத்தை வளர்க்கிறது; பரநலத்தை அலட்சியஞ் செய்கிறது. விளைவு என்ன? சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள்; பிணக்குகள்; எல்லாந்தான். முடிவில், சமுதாயமே நிலைதடுமாறிச் சாய்ந்து விடுகிறது. இப்படி நேரிடாதபடி தடுத்துக் காப்பதற்காகவே ராஜ்யம் இருக்கிறது. ஜனங்கள், அவரவருக்குரிய தர்மத்தை அவரவரும் உணர்ந்து அனுஷ்டித்து வருமாறு செய்வது ராஜ்யத்தின் கடமையாகும். தன்னுடைய சொந்தக் கடமை இன்னதென்று உணர்ந்து செய்யாதவன், மற்றவர்களுக்கு அவர்களுடைய கடமையை உணர்த்த முடியாது; சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்ய முடியாது. சுருக்கமாக, அவனால் சமுதாயத்திற்கு எவ்வித பிரயோஜனமும் இராது. ஒவ்வொரு மனிதனும், சமுதாயத்திறகுப் பிரயோஜனமுள்ளவனா யிருக்க வேண்டுமென்பதற்காக, சுயதர்மத்தை அதிகமாக வலிவுறுத்தி யிருக்கின்றன நமது புராதன நூல்கள் பலவும். ஒருவன் அனுசரிக்கின்ற தர்மம். மற்றொருவனுக்கு எந்த விதத்திலும் இடையூறாயிருக்கக் கூடாது. ஒருவனுடைய வளர்ச்சி, மற்றொருவனைக் குன்றச் செய்யக் கூடாது. ஒருவன் பெற்றிருக்கின்ற அறிவோ, அடைந்திருக்கின்ற பொருளோ, மேற்கொண்டிருக்கின்ற உழைப்போ, எதுவும் சமுதாயத்தின் கட்டுக்கோப்பைக்குலைப்பதா யிருக்கக் கூடாது. சமுதாயத்தைக் கட்டுக்குலையாமல் வாழவைத்துக் கொண்டிருப்பதே ராஜ்யத்தின் நோக்கமாயிருக்கவேண்டும். இந்த உலகத்திற்கு மிசிர உலகம் என்று பெயர். அதாவது நன்மையும் தீமையும் கலந்த உலகம் என்று அர்த்தம். இதில் நன்மையை வளர்க்கவும், தீமையை வளரவிடாமல் தடுக்கவுமே ராஜ்யம் ஏற்பட்டது. நன்மையை வளர்ப்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் தீமையை வளர விடாமல்தடுப்பதும். இந்த இரண்டு கடினமான காரியங்களை ஒரே சமயத்தில் சாதிக்க வேண்டியது ராஜ்யத்தின் பொறுப்பு. இந்தப் பொறுப்பை நிறைவேற்றுகிற விஷயத்தில் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறமோ அந்த அளவுக்குத்தான் ஒரு ராஜ்யத்தின் ஆயுள் இருக்கிறது. எனவே, ஒரு ராஜ்யம், தன் நீண்ட ஆயுளுடன் கூடியதாயிருக்க வேண்டுமென்பதைப் பெருநோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். ஒரு ராஜ்யம், எந்த வகையைச் சேர்ந்ததாயிருந்த போதிலும் அதற்கு இன்னோரன்ன நோக்கங்கள் இருத்தல் அவசியமாகும். ஒரு ராஜ்யம் எந்த வகையைச் சேர்ந்ததாயிருந்த போதிலும் என்று சொல்கிறீர்களே, அப்படியானால் ராஜ்யங்களில் பலவகையுண்டோ என்று வாசகர்கள் கேட்கலாம். ஆம்; உண்டு. ராஜ்யம் என்று பொதுவாகச் சொன்னால், அது விதீரணம், ஜனத் தொகை முதலியவற்றில் சுருங்கியுள்ள ஒரு பிரதேசமென்று கொள்ள வேண்டும். இதைப் பற்றி அதிக வியாக்கியானம் தேவை யில்லை. இதற்கடுத்தது மகா ராஜ்யம். விதீரணம், ஜனத் தொகை முதலிய வற்றில் விரிந்துள்ள ஒரு பிரதேசத்தை இது குறிக்கும். இப்படி விரிந்துள்ள காரணத்தினால், சுற்றுமுற்று முள்ள சிறிய ராஜ்யங்களின் மதிப்பைப் பெற்றிருந்தது போலும் இது. இந்தச் சிறிய ராஜ்யங்கள், பெரிய ராஜ்யத்திற்கு எந்தவிதத்திலும் கட்டுப்பட்டிருக்க வில்லையா யினும், அதற்கு மரியாதை காட்டி வந்தனவென்று கூறலாம். அடுத்தது ஆதிபத்தியம். அநேக சிறிய ராஜ்யங்களைத் தன் ஆதிக்கத்திற்குட்படுத்திக் கொண்டிருந்த ஒரு வல்லரசுக்கு இது பெயராயிருந்தது. தற்கால பாஷையில் இதனை ஒரு சிறிய ஏகாதிபத்தியமென்று சொல்லலாம். அடுத்தது சார்வ பௌமம்; அதாவது சர்வ பூமி ஆட்சி. சர்வ பூமியென்றால், உலகம் முழுவதும் என்று அர்த்தமல்ல.1 இயற்கை யாகவே அமைந்துள்ள எல்லைகளுக்குட்பட்ட பிரதேசம் என்றே அர்த்தம். அதாவது கடல் வரையென்று கூறுவர். அப்படிப் பார்த்தால், வடக்கே இமயத்தையும் தெற்கே குமரி முனையையும் எல்லைகளாகக் கொண்ட பிரதேசமே சர்வபூமியாகின்ற தல்லவா? ஆம்; இப்படித்தான் கொண்டனர். இதனையே சக்ரவர்த்தி க்ஷேத்திரமென்று கூறினர். இந்த எல்லை களுக்குட்பட்ட சர்வ பூமியில் ஆட்சி நடத்துகிறவன்தான் சக்ரவர்த்தி. சக்ரவர்த்தியென்று அழைக்கப்படுதற்குரியவன் இவனே. இவன்தான் அசுவமேதயாகம் செய்யத்தகுதியுடையவன். சக்ரவர்த்திகள் பலர் நமது நாட்டில் ஆண்டிருக்கின்றனர் என்பதை ஏற்கனவே தெரிவித்திருக்கிறோ மல்லவா? சாம்ராஜ்யம் என்பது ஒருவகை. உரிமையிலோ, அந்ததிலோ சமமாயுள்ள ராஜ்யங்கள் பல, தங்களுடைய பொது நன்மையை முன்னிட்டு ஒன்று சேர்ந்து தங்களுக்குள்ளேயே ஒரு ராஜ்யத்தைத் தங்களுக்கு மேற்பட்டதாக ஏற்றுக்கொண்டு அதன் வழியே நடை பெறு கின்ற ஆட்சி என்று இதற்கு வியாக்கியானம் செய்யலாம். தற்கால பாஷையில் இதனைச் சமஷ்டியென்று கூறுவர். இந்த ஆட்சிக்குத் தலைவன், அதாவது சாம்ராஜ்யத்தின் தலைவன் சம்ராட் என்று அழைக்கப்பட்டான். சமஷ்டியில் சேர்ந்த ராஜ்யங்களின் அரசர்கள் பலரும் ஒன்று கூடி இந்தச் சம்ராட்டைத் தெரிந்தெடுத்து, இவனுக்கு ராஜ்யா பிஷேகம் செய்து, அதன் மூலம், தங்களுக்கு மேற்கொண்டவனாக இவனை ஏற்றுக் கொண்டனர் என்று அறிகிறோம். முதல் அத்தியாயத்தில் சொல்லப்பெற்றபரதன். மாந்தாதா, கார்த்தவீரியார் ஜுனன், பகீரதன் இவர்களெல்லோரும் இத்தகைய சம்ராட்டுகளாகவே இருந்திருக் கிறார்கள். மகாபாரதம் சபாபர்வத்தில் நாம் சந்திக்கின்ற ஜராசந்தன் என்பவன் ஒரு சம்ராட்டாகவே இருந்தானென்றும், ஆனால் இவன், தன் பதவிக்குக் களங்கமுண்டு பண்ணுகின்ற முறையில், சமஷ்டி ராஜ்யங்கள் பலவற்றைத் தனக்கு அடிமைப்படுத்திக் கொண்டுவிட்டானென்றும் தெரிகின்றன. அதே சபாபர்வத்தின் மூலம், லோகிதன் என்பவன், பத்து சிற்றாசர்களுக்கு மேற்பட்ட ஒரு சம்ராட்டாக இருந்தானென்று அறிகிறோம். இந்தச் சாம்ராஜ்ய முறை, வேத காலத்தில் அதிக சொல்வாக்குப் பெற்றிருந்தாகச் சொல்லப்படுகிறது. துவைராஜ்யம் என்பது மற்றொரு வகை. இரண்டு அரசர்கள் சேர்ந்து நடத்துகின்ற ஆட்சியை இது குறிக்கிறது. இதற்கு இரண்டு விதமான பொருள் கூறப்படுகிறது. ஒரு ராஜ்யத்தை இரண்டு பிரிவாகப் பிரித்துக் கொண்டு ஒரு பிரிவை ஓர் அரசனும், மற்றொரு பிரிவை மற்றோர் அரசனும் ஒரே சமயத்தில் நடத்திய ஆட்சியையே இது குறிக்கிறதென்று கூறுவர் சிலர். கௌடில்யன் இந்தப் பொருளிலேயே இதைப் பிரதாபித்து, இதனால் இரண்டு அரசர்களுக்குள்ளும் பொறாமையும் பகைமையும் ஏற்பட்டுக் கடைசியில் இரண்டுபேருமே அழிந்து படுவர் என்று கூறுகிறான். இதனால் தீமையே விளையுமென்பது இவன் கருத்தென்று தெரிகிறது. ஒரு ராஜ்யத்தில் இரண்டு அரசர்கள், அதிகாரத்தை மட்டும் பகிர்ந்து கொண்டு நடத்துகின்ற ஆட்சியையே இந்தத் துவைராஜ்யம் குறிக்கிறதென்று வேறு சிலர் கூறுவர். இதற்கு ஆதாரமாக, மகாபாரதத்தில் வரும் விந்தன், அனுவிந்தன் என்ற இரண்டு அரசர்கள், அவந்தி ராஜ்யத்தை ஆண்டு வந்த வரலாற்றை எடுத்துக்காட்டுவர். இரண்டு அரசர்கள் ஆண்டார்களென்பதை வலியுறுத்திக் காட்டுகின்ற மாதிரி இதற்கு அவந்தி ராஜ்யத்திற்கு - இரண்டு தலை நகரங்கள் இருந்தன. இந்த இரட்டை அரசர் ஆட்சி, எந்தெந்த இடங்களில் நடை பெற்றது, எவ்வளவு காலம் நடைபெற்றது என்பன போன்ற விவரங்கள் சரியாகத் தெரியவில்லை. ஆனால் இந்த ஆட்சி, நடைமுறையில் இருந்து வந்த தென்னவோ நிச்சயம். காளிதாஸனால் இயற்றப்பட்ட மாளவி காக்கினிமித்திரம் என்ற நாடகத்தில் இந்தத் துவைராஜ்யம் பிரதாபிக்கப் படுகிறது. இரண்டு குதிரைகள் ஒன்று சேர்ந்து ஒரு ரதத்தை எப்படி இழுத்துச் செல்கின்றனவோ அப்படியே ஒரு ராஜ்யத்தை இரண்டு அரசர்கள் ஆள்கிறார்களென்று இந்த நூல் கூறுகிறது. புளிந்தர்கள் என்னும் ஜாதியாரை சுகுமாரன், சுமித்திரன் என்ற இரண்டு அரசர்கள் ஆண்டு வந்தார்களென்றும், அவ்விருவரையும் பீமசேனன் வெற்றி கொண்ட தாகவும் மகாபாரதம் கூறுகிறது. இந்த இலக்கிய ஆதாரங்கள் ஒரு புறமிருக்க, நேபாளத்தில், கி. பி. ஆறாவது ஏழாவது நூற்றாண்டு களில், இரண்டு அரசர்கள் இருந்து அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு ஆண்டு வந்தார்களென்பதற்குச் சாஸன ஆதாரங்கள் இருக்கின்றன. இத்தகைய ஆட்சி சாத்தியமா வென்று வாசகர்கள் கேட்கலாம். கிரீஸில் ப்பார்ட்டாவில்1 இரண்டு அரசர்கள் ஆண்ட வரலாற்றைக் கிரேக்க சரித்திரத்தில் படிக்கிறோம். அப்படியே ரோமாபுரியில் இரண்டு அதிகாரிகள் ஒரே சமயத்தில் ஆண்டு வந்தார்களென்பதை ரோம சரித்திரம் விளக்கிக் கூறுகிறது. மேலே சொல்லப்பெற்ற இவைபோல இன்னும் சிலவகை ராஜ்ய அமைப்புக்கள் நமது நாட்டில் இருந்து வந்தன வென்று தெரிகிறது. 4. ஜன ராஜ்யங்கள் மன்னராட்சிக்கு, அதாவது முடியரசுக்கு அடுத்தபடி மதிப்புப் பெற்று நின்றது, அதிக காலம் நடை முறையில் இருந்து வந்தது, ஜன ஆட்சி; அதாவது குடியரசு. எனவேதான், தனியானதோர் அத்தியாயத்தில் இடம் பெற்றுவிளங்க வேண்டுமென்று அது - ஜன ஆட்சி - விரும்பு மானால், அந்த விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது நமது கடமையே யாகும், இதற்காக இந்த அத்தியாயத்தில் ஜன ஆட்சியைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லி முடித்துவிடுகிறோம். அப்பொழுதுதான் அடுத்தடுத்த அத்தியாயங்களில், மன்னராட்சியைப் பற்றி விளக்கமாகத் தொடர்ந்து சொல்லிக் கொண்டுபோகச் சௌகரியமாயிருக்கும். வாசகர் களுக்கும் இந்த முறை அனுகூலமாயிருக்கு மென்று கருதுகிறோம். ஜன ஆட்சியென்று சொன்னால், அதில் எத்தனையோ விதங் களுண்டென்று இப்பொழுது நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம், இங்கிலாந்தில் நடைபெறுவதும் ஜன ஆட்சிதான்; சீனாவில் நடை பெறவதும் ஜன ஆட்சிதான்; இந்தியாவில் நடைபெறுவதும் ஜன ஆட்சிதான். ஆனால் ஒன்றுக்கொன்று வித்தியாசமிருக்கின்றதில்லையா? மற்றும் ஜனங்களின் நேர்முகமான ஆட்சியென்கிறோம்; ஜனப்பிரதி நிதித்துவ ஆட்சியென்கிறோம்; பலர் ஆட்சி என்கிறோம்; பலருக்காக ஒரு சிலர் ஆட்சி யென்கிறோம். அனைத்தையும் ஜன ஆட்சியென்ற முத்திரையிட்டுத்தான் அழைக்கிறோம். அது போல், நமது நாட்டிலும் முற்காலத்தில், ஜன ஆட்சியென்ற முத்திரையுடன், ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்ட பல ஆட்சிகள் - குடியரசுகள் - நடைபெற்று வந்திருக் கின்றன. வாராஜ்யமென்றும், பௌஜ்ய மென்றும், வைராஜ்ய மென்றும், அழைக்கப்படுவன வெல்லாம், இந்தப் பல்வேறு குடியரசு அமைப்புக்களையே குறிக்கின்றன போலும். இவற்றின் விவிதமான காரியக் கிரமங்களைக் கண்டு நாம் பிரமிப்படைகிறோம்; அவ்வளவு ஒழுங்காகவும் கட்டுப்பாட்டுடனும் இவை நடைபெற்று வந்திருக் கின்றன. வேத காலத்தில் மன்னராட்சியே மதிப்புப் பெற்று நின்றது. பின்னர் ஜன ஆட்சிக்கு மதிப்பு ஏற்பட்டது. பௌத்த காலத்தில் ஜன ராஜ்யங்ககள் - குடியரசுகள் - பல செம்மையாக நடைபெறலாயின. இவற்றுள், விதேகர், லிச்சவிகள், சாக்கியர், மல்லர், கோலியர், மோரியர் ஆகிய இவர்களுடைய ராஜ்யங்கள் குறிப்பிடத்தக்கன. புத்தர்பிரான் பிறந்து வளர்ந்தது இந்த ராஜ்யங்களொன்றில்தான்; சாக்கியர் ராஜ்யத்தில்தான்; தமது மதத்தைப் பிரசாரஞ் செய்யத் தொடங்கியது இந்த ஜன ராஜ்யங்களுக்கு மத்தியி லிருந்து கொண்டுதான். புத்தர் பிரானின் தந்தையான சுத்தோதனன், சாக்கியக் குடியரசின் தலைவனே. இந்தக் காலத்து ஜனராஜ்யங்களின் நடைமுறைகளை அறிந்து கொள்ள. புத்தமமத கிரந்தங்கள் நமக்குப் பெரிதும் துணை செய்கின்றன. சந்திரகுப்த மௌரியனுடைய ஏகாதிபத்திய ஆட்சி தொடங்கியதும், கௌடில்யன், தனது அறிவுத்திறனையும் செயல் திறனையும் நன்கு உபயோகித்து மன்னராட்சி (முறை)க்கு மெருகு கொடுத்துவிட்டதும், அதற்கு - மன்னராட்சிக்கு - பழை மாதிரி மதிப்பு உண்டாயிற்று. அது முதற்கொண்டு மன்னராட்சியே, ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. இப்படிச் சொன்னதனால், முடியரசு (முறை)க்கு மதிப்பு ஏற்பட்டிருந்தபோது குடியரசுகளே இல்லையென்றோ, அப்படியே குடியரசு (முறை) மதிப்புடன் வாழ்ந்தபோது முடியரசுகளே இல்லையென்றோ வாசகர்கள் கருதிவிடக்கூடாது. ஒன்று உயர்ந்திருந்தது என்று சொன்னால், மற்றொன்று அடியோடு இல்லையென்று அர்த்தமல்ல; தாழ்ந்திருந்தது என்று தான் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். வேதகாலத்தில் முடியரசுக்கு மகத்துவம் ஏற்பட்டிருந்தாயினும், குடியரசுகள் இல்லாமல் இல்லை; ஆங்காங்கு நிலவியே வந்தன; முடியரசைப்போல் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை; அவ்வளவுதான். இந்த வேதகாலத்தில் நிலவி வந்த ஒவ்வொரு குடியரசுக்கும் - ஜன ராஜ்யத்திற்கும் - ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவன் இருந்தான். இவன் ஜன ராஜன் என்று அழைக்கப்பட்டான். இங்ஙனமே பௌத்த காலத்தில் குடியரசுகள் பல அதிக செல்வாக்குடன் விளங்கி வந்தபோதிலும் முடியரசுகள் இல்லாமல் இல்லை; இருந்தன; ஒரு சில வலுப்பெற்றும் இருந்தன. புத்தர்பிரானின் காலத்திலிருந்த மகத ராஜ்யமென்ன, கோசல ராஜ்யமென்ன, வத்ஸ ராஜ்யமென்ன அவந்தி ராஜ்யமென்ன முதலியவைகளைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். இதே பிரகாரம், சந்திரகுப்த மௌரியனுடைய ஏகாதிபத்திய ஆட்சி தொடங்கியதும், குடியரசுகள் அடியோடு மறைந்து விடவில்லை; ஆங்காங்கு நடை பெற்றுக்கொண்டுதான் இருந்தன. கௌடில்யன், தன்னுடைய அர்த்த சாதிரத்தில், இரண்டு வகையான குடியரசு ராஜ்யங் களைப் பற்றிப் பிரதாபிக்கிறான். காம்போஜர்களுடைய ராஜ்யமென்ன, சுராஷ்டிரர்களுடைய ராஜ்யமென்ன, இவைபோன்ற இன்னும் சில ராஜ்யங்கள் ஒரு வகை; லிச்சவிகள், விரிஜிகள் மல்ல (க) ர், மத்ர (க)ர், குகுரர், குருக்கள், பாஞ்சாலர் ஆகிய இவர் பலருடைய ராஜ்யங்கள் மற்றொரு வகை. இவ்விருவகை ராஜ்யங்களைத் தவிர வேறு பல குடியரசு ராஜ்யங்கள் கௌடில்யன் காலத்தில் இருந்தன வென்று நிச்சயமாகக் கூறலாம். எப்படியென்றால், மகா அலெக்ஸாந்தர் படையெடுத்து வந்த காலத்தில், இந்தியாவில், ஜனங்களால் ஆளப்பட்டு வந்த ராஜ்யங்கள் பல இருந்தன வென்றும், இவற்றுள் அநேகம், அலெக்ஸாந்தருக்கு எதிர்ப்புக் காட்டினவென்றும் கிரேக்க ஆசிரியர் சிலர் கூறியிருக்கின்றனர். மெகதனீஸும், அநேக இடங்களில் முடியாட்சி கலைக்கப்பட்டு, குடியாட்சி தாபிக்கப்பட்டது எறு கூறுகிறான். இவைகளைக் கொண்டு, கௌடில்யன் காலத்தில், அநேக குடியரசு ராஜ்யங்கள் இருந்தனவென்று நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். கௌடியல்யன் வாழ்ந்ததும், அலெக்ஸாந்தர் படையெடுத்து வந்ததும் ஒரே காலத்தில்தானே? கிரேக்க ஆசிரியர் எழுதி வைத்துப் போயிருக்கிற குறிப்புக் களில், கடர், அரிஷ்டர், ஸௌபூதிகள், யௌத்தேயர், க்ஷுத்ரகர், மாளவர், சிவிகள், அம்பஷ்டர், மூஷிகர், இப்படி அநேக குடியரசு ராஜ்யத்தினரைச் சந்திக்கிறோம்; இவர்களைப் பற்றின சில விவரங்கள் தெரிகின்றன. இவற்றைப் பற்றிப் பின்னர்க் கூறுவோம். அசோகனது காலத்தில், யவனர், காம்போஜர், நாபகர், போஜர், பிதிநிகர், (வட) ஆந்திரர், பாலதர், இப்படிப்பட்டவர் களுடைய குடியரசு ராஜ்யங்கள் பல இருந்தாக அவனுடைய சாஸனங்கள் மூலம் அறிகிறோம். இந்தக் குடியரசுகள், அவனுடைய ஏகாதிபத்தியத்திற்குள் இருந்தன; ஆயினும் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்ந்து வந்தன. மௌரியர் ஆட்சிக்குப் பிறகு வந்த சுங்கருடைய ஆட்சியிலும்,1 குப்தருடைய ஆட்சியிலும்,2 ஏற்கனவே சொல்லப்பெற்ற யௌத்தேயர் என்ன, மத்ரர் என்ன, மாளவர் என்ன, க்ஷுத்ரகர் என்ன, சிவிகள் என்ன, இவர்களுடைய குடியரசு ராஜ்யங்களும், ஆர்ஜுனாயனர், வாமரதர், ஆபீரர், பிரார்ஜுனர், இப்படிப் பலருடைய குடியரசு ராஜ்யங்கள் நடைபெற்றுக் கொண்டு வந்தன. இவையெல்லாம்போக, மகாபாரதத்தின் மூலமாகவும், பாகவதம் முதலிய புராணங்கள் மூலமாகவும், முன்னே சொல்லப்பெற்ற அம்பஷ்டர், சிவிகள், மாளவர் முதலியோருடைய குடியரசுகளைத் தவிர, திரிகர்த்தர், தார்வர், கோகநகர், உத்ஸவ ஸங்கேதர், கிரீடி பஞ்சகணத் தினர், அந்தகர், விருஷ்ணிகள் இங்ஙனம் அநேகருடைய குடியரசு ராஜ்யங்கள் நமக்கு அறிமுகமாகின்றன. இந்தக் குடியரசுகளின் பட்டியில், ஒரு சில பெயர்கள் திரும்பத் திரும்ப வருவதை நண்பர்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம், இந்தப் பெயர்களையுடைய ராஜ்யங்கள், காலத்தினால் மறைந்து படாமலும், சூழ்நிலைக்கு இரையாகிவிடாமலும் நெடுகிலும் தொடர்ந்தாற்போல் ஒரே மாதிரியாக, அதாவது குடியரசு முறையைத் தழுவி நடைபெற்று வந்திருப்பதேயாகும். ஆக, வேத காலத்திலிருந்து கி. பி. ஆறாவது நூற்றாண்டு வரை, குடியரசுகள் பல, ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வந்தனவென்று துணிந்து கூறலாம். கி. பி. ஆறாவது நூற்றாண் டுடன் இந்தக் குடியரசுகள் மறைந்துவிட்டன. அட்சி முறைகளுள் குடியரசு முறைக்கு இருந்த மதிப்பு அடியோடு போய்விட்டது; முடியரசு முறையே தலைதூக்கி நின்றது. குடியரசுகள் பலவும், நாட்டின் பெயரைத் தாங்கிக் கொண்டிராமல் ஜனங்களின் பெயரைத் தாங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணம், குடியரசு முறையில், எண்ணிக்கைதான் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் ஜனங்களின் பெயரைச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. தவிர, இந்தக் குடியரசு ராஜ்யங்களிற் பெரும்பாலன, வல்லமை வாய்ந்த ஒருவனாலோ, ஒரு சிலராலோ ஆதியில் தாபிக்கப்பட்டனவென்றும், அவர்களுடைய பெயர்களையே பின்னர் இந்த ராஜ்யங்களுக்கு வைத்து அழைப்பது ஒரு சம்பிர தாயமாகி விட்டதென்றும், இதற்கு உதாரணமாக, உத்ஸவன், ஸங்கேதன் என்ற இரண்ட சகோதரர்களால் தாபிக்கப்பட்டு உத்ஸவ ஸங்கேதர்களுடைய ராஜ்யமென்று அழைக்கப்பட்ட தென்றும் கூறுவர். இன்னும், இந்தக் குடியரசு ராஜ்ஸ்ரீயங்கள் பலவுள்ளும், அரசாங்க நிருவாகம், குறிப்பிட்ட ஓரினத்தினர் வசமே இருந்து வந்ததென்றும், அது காரணமாக, அந்த இனத்தினர் பெயராலேயே இந்த ராஜ்ங்கள் அழைக்கப்பட்னவென்றும் வேறு சிலர்கூறுவர். என்ன காரணமோ, குடியரசு ராஜ்யங்கள் பலவும், ஜனங்களின் பெயரைத் தாங்கி நின்றனவே தவிர, நாட்டின் பெயரைத் தாங்கி நிற்கவில்லை. இந்தக் குடியரசுகள், கணம் என்ற பெயரால் அழைக்கப்பட்டன. கணம் என்றால், எண்ணிக்கையென்றும், கூட்டமென்றும் பொருள்படும், குடியரசு முறையில் எண்ணிக்கை முக்கியத்துவம் பெறுகிறதென்பதை நாம் சொல்லத் தேவையில்லை. கண ஆட்சி என்று சொன்னால், எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகின்ற ஆட்சி; அதாவது பலர் ஆட்சியென்று பொருள் கொள்ளுதல் பொருந்தும். இந்தப் பலரும் ஆளுந்தொழிலைச் செய்யும் பொருட்டு அவ்வப்பொழுது ஒரு கூட்டமாகக் கூடுகின்றனரல்லவா. அந்தக் கூட்டமும் கணம் என்ற பெயரைப் பெறும். ஆகவே கணமென்பது, ஆளுகையையும் குறிக்கும்; ஆளுகையை நடத்துகின்றவர்களுடைய கூட்டத்தையும் குறிக்கும்; அதாவது ஜன ஆட்சியையும் குறிக்கும்; ஜன சபையையும் குறிக்கும். இந்த ஜன சபையானது, தகுதி வாய்ந்த ஜனங்களெல்லோருமே சேர்ந்த சபை யாகவும் இருக்கலாம்; ஜனப் பிரதிநிதிகளைக்கொண்ட சபையாகவும் இருக்கலாம். சிறிது நுணுகி ஆராய்ந்தால், கண ஆட்சியென்பது ஜனப் பிரதி நிதித்துவ ஆட்சியையே குறிப்பதாகப் புலப்படும். ஜன ஆட்சி வேறு, ஜனப் பிரதிநிதித்துவ ஆட்சி வேறல்லவா? ஜன ஆட்சியையுடையது ஜனராஜ்யம்; ஜனப் பிரதிநிதித்துவ ஆட்சியையுடையது கண ராஜ்யம்,. தற்கால அரசியல் பாஷையில், கண ஆட்சிக்குச் சுருக்கமான வியாக்கி யானம் கூறவேண்டுமானால், பார்லிமெண்ட் ஆட்சியென்று கூறலாம். நமது நாட்டில் நடைபெற்ற குடியரசுகளிற் பெரும்பாலன, கண ராஜ்யங்களாகவே இருந்தன. ஆயினும் இவை பொதுவாக ஜனராஜ்யங் களென்று அழைக்கப்பட்டன; ஜனப் பிரதிநிதித்துவ ஆட்சியை ஜன ஆட்சியென்று இப்பொழுதுசொல்கிறோமில்லையா, அது மாதிரி. சங்கம் என்ற பெயராலும் குடியரசுகள் அழைக்கப்பட்டன, சங்கமென்பது குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காகப் பலர் ஒன்று சேர்ந்திருக்கிற அமைப்பைப் குறிக்கும், வியாபாரிகள், தங்கள் நன்மையை முன்னிட்டு ஓர் அமைப்பாகச் சேர்ந்து கொள்கிறார்கள். இதற்கு வியாபாரிகள் சங்கமென்று பெயர். அப்படியே தொழிலாளர்கள். தங்கள் நன்மையை முன்னிட்டு ஒரு தாபனமாகச் சேர்ந்து கொள்கிறார்கள்; இதற்கு தொழிலாளர்கள் சங்கமென்று பெயர். இந்த மாதிரி பலதுறைச் சங்கங்கள் நமது நாட்டில் இருந்திருக்கின்றன. இவை போலவே, ஒழுங்கான அரசியலை நடத்தவேண்டுமென்ற நன்னோக்கத்துடன் ஜனங்கள் ஒரு கூட்டாகச் சேர, அந்தக் கூட்டும் சங்கமென்ற பெயரைப் பெற்றது. அரசியல் சங்கமென்று இதனைக் கூறலாம். ஜனங்கள், அரசியல் நடத்த ஒரு கூட்டாகச் சேருவார்களானால், அந்தக் கூட்டு, குடியரசுதானே? இங்ஙனம் கணமென்பதும் சங்கமென்பதும் குடியரசுகளுக்கும் பொதுப் பெயர்களாயிருந்த போதிலும் கணமென்பது, தனிப்பட்ட குடியரசுகளின் சிறப்புப் பெயராகவும், சங்கமென்பது குடியரசுகளுடைய கூட்டின் (இணைப்பின்) சிறப்புப் பெயராகவும் முறையே வழங்கப்பட்டன. அதாவது ஜனங்களுடைய கூட்டு, கணம்; கணங்களுடைய கூட்டு, சங்கம். தனிப்பட்ட குடியரசுகள் பல ஆங்காங்கு நடைபெற்றன. இவை பெரும்பாலும் விதீரணத்திலும் வல்லமையிலும் பெரிதாயிருந்தன. இவ்விரண்டிலும் குறைவாயிருந்த சிறிய சிறிய குடியரசுகள், தங்களுடைய பொது நலனை முன்னிட்டு, வெவ்வேறு கூட்டுகளாகச் சேர்ந்து கொண்டன. சமஷ்டி என்று சொல்கிறோமில்லையா இப்பொழுது, அந்த மாதிரி குடியரசு சமஷ்டிகள் இவை. இவ்வொரு சமஷ்டியும் ஒவ்வொரு சங்கம். முடியரசுகளின் சமஷ்டி சாம்ராஜ்யம். அதிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, குடியரசுகளின் சமஷ்டி, சங்கமென்று அழைக்கப்பட்டது போலும். புத்தர் பிரான் காலத்தில் இத்தகைய சமஷ்டிகள் பல இருந்தன. இவற்றுள் குறிப்பிடத்தக்கது விரிஜிகளுடைய (வஜ்ஜியர்) சமஷ்டி, இதனைக் கௌடில்யனும் குறிப்பிட்டுச் சொல்கிறானல்லவா? இந்தச் சமஷ்டியில் எட்டுக் குடியரசுகள் கூட்டாகச் சேர்ந்திருந்தன வென்று தெரிகிறது. இவற்றுள் மேலோங்கி நின்றவை லிச்சவிகள் குடியரசும் விதேகர்கள் குடியரசுமேயாம். விச்சவிகள் தலைநகர மாகிய வைசாலியில், சமஷ்டியின் விவகாரங்கள்யாவும் நடைபெற்றன. மகாபாரதத்தில் பிரதாபிக்கப்படும் அந்தகவிருஷ்ணிகள் சங்கனும் இத்தகைய ஒரு சமஷ்டியே. இதில் யாதவர், குகுரர், போஜர், அந்தகர், விருஷ்ணிகள் முதலியவர்களுடைய குடியரசுகள் இணைந் திருந்தன. இவற்றுள் அந்தகர் குடியரசும், விருஷ்ணிகள் குடியரசுமே முக்கியத்துவம் பெற்றிருந்தமையால், இவற்றின் பெயராலேயே இந்தச் சமஷ்டி அழைக்கப்பட்டது. அந்தகர் தலைவனும் விருஷ்ணிகள் தலை வனும் சமஷ்டிடியின் தெரிந்தெடுக்கப்பட்ட கூட்டுத் தலைவர் களாயிருந்தார்கள். இந்தக் கூட்டுத் தலைவர்களின் தேர்தல் எவ்வெப் பொழுது நடைபெற்றதென்பது தெரியவில்லை. ஆனால் தேர்தலின் விளைவாகத் தலைவர்கள் மாறினார்கள்ளென்றுமட்டும் தெரிகிறது. விருஷ்ணிகள் சார்பாகப் பாண்டவர் சகாயனான கண்ணபிரான் திரும்பத் திரும்பத் தெரிந்தெடுக்கப்பட்டான். அந்தகரின் சார்பாகத் தெரிந் தெடுக்கப்பட்ட தலைவர்களோ அடிக்கடி மாறினார்கள். ஒரு சமயம் பப்ரு உக்ர சேனன்; மற்றொரு சமயம் அக்ரூரன்; இன்னொரு சமயம் சினி; இப்படி. சமஷ்டி விவகாரங்களைக் கவனிப்பதற் கென்று அமைந்திருந்த சபையில் - சமஷ்டி பார்லிமென்ண்ட்டில் - அந்தகரைப் பின்பற்றிய ஒரு கட்சியும் விருஷ்ணிகளைப் பின் பற்றிய ஒரு கட்சியும் ஆக இரண்டு கட்சிகள் இருந்தனவென்றும், இவைகளுக்குள், அதிகாரத்தில் ஆதிக்கம் பெற எப்பொழுதும் போட்டி இருந்து வந்ததென்றும், இது காரணமாகச் சமஷ்டி சபையில் காரசாரமான வாதங்கள் நடைபெற்றனவென்றும் தெரிகின்றன. அந்தக விருஷ்ணிகள் சமஷ்டிக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு சமஷ்டிக்கும் ஒவ்வொரு பொதுச்சபை இருந்தது. இந்தச்சபை, சமஷ்டி யின் பொது விவகாரங்களைக் கவனித்து வந்தது. சம்பந்தப் பட்ட குடியரசுகள் பலவும், சிறிது பெரிது என்ற பாகுபாடு இல்லாமல், இந்தச் சபையில் சம உரிமையும் சம அந்ததும் பெற்றிருந்தன. சபையின் பிரதிநிதிகள் பெரும்பாலும் தேர்தல் மூலம் வந்தவர்களாகவே இருந்தார்கள். இந்தச் சமஷ்டிகள், தங்கள் ஒற்றுமை குலையாதிருக்க வேண்டு மென்பதில் உறுதியாக நின்றன; ஒற்றுமை குலைந்தால் தாங்கள் தனித்தனியாக ஆபத்தில் சிக்கிக்கொள்ள வேண்டி வந்துவிடும், அழிவு நிச்சயம் என்பதை நன்கு உணர்ந்திருந்தன. ஒற்றுமையினால் வலுப் பெற்று நிற்கும் குடியரசு (சமஷ்டி) களை ஒன்றுஞ் செய்ய முடியாது; இவற்றின் உதவியைப் பெற முயற்சி செய்தல் சாலச்சிறந்தது; அப்படி உதவியளிக்காமல் இவை விரோதங்காட்டுமானால், இவற்றினிடையே வேற்றுமை விதைகளைத் தெளித்து அதன் மூலம் இவற்றை நாசப்படுத்த வேண்டும்; இந்த மாதிரியான கருத்துக்களை வெளியிடுகிறான் கௌடில்யன், இந்தச் சமஷ்டிகள் வளம் பெற்று நலமுற வாழ வேண்டு மானால் என்னென்ன முறைகளைக் கையாள வேண்டும்? புத்த பிரான் வாக்கிலிருந்து கேட்போம். (1) சமஷ்டி சபைகள் அடிக்கடி கூட வேண்டும்; இந்தக் கூட்டங்களுக்கு (அங்கத்தினராயுள்ள) எல்லோரும் வரவேண்டும். (2) மன ஒற்றுமையுடன் கூட வேண்டும்; மன ஒற்றுமையுடனேயே கூட்டம் முடிந்த பிறகும் எழுந்திருக்கவேண்டும்; மன ஒற்றுமை யுடனேயே கூட்ட நடவடிக்கைகளை நடத்த வேண்டும். (3) ஏற்கனவே இல்லாதவற்றை தாபிக்கக்கூடாது; இருப்பனவற்றை அடியோடு மாற்றக் கூடாது; நீண்ட காலமாக இருந்து வரும் முறைகளையே பின்பற்ற வேண்டும். (4) மூத்தோர்களைக் கௌரவிக்கவேண்டும்; அவர்களை ஆதரிக்க வேண்டும்; அவர்கள் சொல்கேட்டு நடப்பதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். (5) பெண் மக்கள் விஷயத்தில் பலாத்காரத்தை உபயோகிக்கக் கூடாது. (6) மத தாபனங்களைப் போற்ற வேண்டும். புத்தர்பிரான் விரிஜிகளைக் குறித்துச் சொன்னவை இவை. இவைகளைக் கடைப்பிடித்து வருகிற வரையில் அவர்கள - விரிஜிகளி - நலங்குலையாதிருப்பார்கள், சீராகவாழ்வார்கள் என்று கூறுகிறார். விரிஜிகளைக் குறித்துச் சொல்லப்பட்டனவாயினும், இவை எல்லாச் சமஷ்டிகளையும் குறித்துச் சொன்னவையேயாகும்; எல்லாச் சமஷ்டி களுக்கும் பொருந்துவனவேயாகும். ஏன்? ஒவ்வொரு குடியரசுக்கும் ஏற்றனவேயாகும். இவை, வெறும் நோக்க அளவிலே, உபதேச அளவிலே இராமல், கூடிய மட்டில் நடைமுறையிலே இருந்து வந்தனவென்று நாம் திண்ணமாகக் கொள்ளலாம். அந்தக விருஷ்ணிகள் சங்கத்துத் தலைவர்களில் ஒருவனான கண்ணபிரான், சங்கத்தை (சமஷ்டியை) ச் சேர்ந்தவர்களிடத்தில் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று கூறப்படுகிறான். பொறுமை, நேர்மை, நிதானம் இவைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும், தகுதிக்குத் தக்கபடி அவரவரையும் கௌரவிக்க வேண்டுமென்றும், இன் சொல்லால் அனைவரையும் வசப்படுத்த வேண்டுமென்றும், இன்னோரன்ன முறைகள் சொல்லப் பட்டிருக்கின்றன. ஒரு சமஷ்டிக்குத் தலைமை வகித்து நடத்துகிறவர்களிடத்தில் என்னென்ன பண்புகள் இருக்கவேண்டு மென்று எதிர்பார்க்கப் பட்டதென்பது இதனால் தெரிகிறது இனி, குடியரசு ராஜ்யங்களின் பொதுவான நடைமுறைகளிற் சிலவற்றைக் கவனிப்போம். ஒவ்வொரு குடியரசுக்கும் தெரிந்தெடுக்கப் பட்ட ஒரு தலைவன் இருந்தான். இவன், எப்படித் தெரிந்தெடுக்கப்பட்டான், எவ்வளவு காலத்திற்கு இந்தப் பதவியை வகித்தான் என்ற விவரங்கள் தெரியவில்லை. தெரிந்தெடுக்கப்பட்ட இந்தத் தலைவன், பிரதானன் என்றும், ராஜன் என்றும் இப்படிச் சில பெயர்களால் அழைக்கப்பட்டான். பெயரளவுக்குத்தான் இவன் ராஜ்யத்தின் தலைவனாயிருந்தா னென்று சொல்லவேண்டும். உண்மையில் ராஜ்யவிவகாரங்ளைக் கவனித்து வந்தது, அரசாங்கத்தை நடத்தி வந்தது ஜனசபையே. ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் இத்தகைய ஜனசபையொன்று இருந்தது. தற்காலத்து ராஜ்ய (மாகாண) சட்டசபை மாதிரி என்று இதனைச் சொல்லலாம். சில ராஜ்யங்களில் மூத்தோர் சபை (மேல்சபை) யென்றும், ஜனசபை (கீழ்ச்சபை) என்றும் இரண்டு சபைகள் இருந்தன. மூத்தோர் என்றால், அதிகம் வயதடைந்தவர்களென்று மட்டும் கொள்ளப்பட வில்லை. வயதுக்கு மரியாதை செலுத்தப் பட்டு வந்ததென்பது வாதவம். ஆனால் அறிவு, அனுபவம், ஆற்றல் இவற்றோடு கூடியவர்களே - இவற்றைறோடு வயதானவர்களாகவும் இருந்தால் விசேஷந்தான். - மூத்வர்களென்று மதிக்கப்பட்டார்கள். இப்படிப்பட்ட மூத்தவர்களைத்தான் புத்தர்பிரான் மேலே குறிப்பிடுகின்றார். ஞான விருத்ர்கள் என்கிறது மகாபாரதம் இவர்களை. சில ராஜ்யங்களில், இந்த ஜனசபையே அரசாங்க நிருவாகத்தை நேரடியாக நடத்தி வந்தது. அதாவது ஜன சபையினர் அத்தனை பேரும் ஆளுங்கடமையைச் செய்துவந்தார்கள். எப்படிச் செய்து வந்தார் களென்பது தெரியவில்லை. இதனால், அதாவது ஆளுங்கடமையைச் செய்து வந்ததனால் இவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் பெயரோடு ராஜன் என்ற சொல்லை இணைத்துக் கொண்டார்கள். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற உணர்ச்சி கொண்டிருந்ததோடு இவர்கள் திருப்தியடைய வில்லை; அதனைத் தங்கள் பெயராலும் புலப்டுத்திக் கொண்டார்கள். மற்றும், ஆளும் பொறுப்பை ஏற்று நடத்தும் தகுதி பெற்றிருப்பதற்கறி குறியாக இவர்கள் ராஜ்யாபிஷேகம் செய்து கொண்டார்கள்; சில ராஜ்யங் களில் சிறு சிறு மகுடங்களும் தரித்துக் கொண்டார்கள். சில ராஜ்யங்களில், ஜனசபையினரில் ஒருசிலர் மட்டும் அரசாங்க நிருவாகத்தை நடத்தி வந்தார்கள். இவர்களுக்குக் கண முக்கியர்கள் என்று பெயர். மன்னராட்சியில் மந்திரிகள் போன்றவர்கள் இவர்கள் என்று சொல்லலாம். இவர்கள் பொறுப்பு மிகவும் அதிகமாயிருந்தது. ஏனென்றால் இவர்கள், அரசாங்கத்தை நடத்தி வந்ததோடு, ஜனசபைக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களாயிருந்தார்கள். இருந்தாலும் தாங்கள் செய்வதையும் செய்யத் திட்டமிட்டிருப்பதையும் ஜன சபையில் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்ற கட்டாயம் இவர்களுக்கு இருக்கவில்லை. ராஜ்யத்தின் நன்மையை முன்னிட்டு சில காரியங்களை இவர்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளள வேண்டுமென்று மகாபாரதம் கூறுகிறது. ஜனங்களுடைய நன்மைக்காக, ராஜ்யகாரியங்களிற் சில வற்றை, அரசாங்கத்தை நடத்துகின்றவர்கள், ரகசியமாக வைத்துக் கொள் வதும், செய்வதும் தவறில்லை, அவசியமுமாகும் என்பதை நமது நாட்டு அரச தந்திரிகள் வெகு காலத்திற்கு முன்னரேயே உணர்ந்து கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். இன்னொரு விசேஷமென்னவென்றால், இந்தக் கண முக்கியர்கள், தங்களுடைய பதவியை வெகு பயபக்தியுடன் வகித்து வந்தார்கள். எந்த ஒன்றையும், ராஜ்யத்திற்கு நன்மை பயக்குமா என்ற நிறுவையிலே வைத்துப் பார்த்தார்கள். சுருக்கமாக இவர்கள், கண முக்கியர்களாகப் பதவி வகித்த போதிலும், கணதாசர்களாகவே நடந்து கொண்டார்கள். இந்தக் கண முக்கியர்கள், சில ராஜ்யங்களில் அவ்வப் பொழுது தெரிந்தெடுக்கப்பட்டவர்களாயிருந்தார்கள்; சில ராஜ்யங்களில் பரம்பரை பாத்தியதையினால் வந்தவர்களா யிருந்தார்கள். ஜன சபையானது, அதற்கென்று அமைக்கப்பட்ட மண்டபத்தில் கூடியது. சபையில் அங்கத்தின் ராயிருந்து பணியாற்ற யாராருக்கு உரிமை இருந்ததோ அவர்களெல்லோருக்கும் தனித் தனி ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. அவரவரும் அவரவருக்னூகென்றுள்ள ஆசனத்தில் தான் அமரவேண்டுமென்ற நியதி இருந்தது. இந்த நியதி பிசகிவிடாமல் பார்த்துக் கொள்ள, தனியான ஓர் உத்தியோகதன் இருந்தான். சபையில் குறைந்த பட்சம் இத்தனை அங்கத்தின்ர்களாவது ஆஜராயிருக்க வேண்டுமென்று விதி இருந்தது. கோரம்1 என்று இப்பொழுது சொல்கிறோமில்லையா அதுவே இது. அப்படி ஆஜராயில்லா தனிலையில் சபை கூடி ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்யுமானால் அந்தக் காரியம் செல்லுபடியாகாது. இந்தக் குறைந்த பட்ச எண்ணிக்கை யுள்ள அங்கத்தினர்கள், சபையில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது, சபையின் அங்கத்தினர்களில் ஒருவனுடைய பொறுப்புக்கு விடப்பட்டது. இவன் கண பூரகன் என்று அழைக்கப்பட்டான்; தற்போதைய சட்டசபை களில் கொறடா1 மாதிரி, சபையில் எந்த ஒரு பிரச்னையும் தீர்மான ரூபமாகக் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்திற்குச் சாதகமாயிருக்கிறவர்கள். அநேகமாக மௌனமாயிருந்தார்கள்; பாதகமாயிருக்கிறவர்களே பேசினார்கள். இஃதொரு நியதியாகவே கடைப்பிடிக்கப்பட்டு வந்ததென்று சொல்லலாம். கருத்து வேற்றுமைகளுக்கு எவ்வளவு மதிப்புக் கொடுக்கப்பட்டு வந்ததென்பது இதனால் நன்கு புலனாகும். மற்றும், சபையில்யாரும் கண்டபடி பேசுவதற்கு இடங்கொடுக்கப் படவில்லை. தீர்மானத்தை யொட்டியே பேசவேண்டுமென்பது கட்டாய விதியாயிருந்தது. சபைத் தலைவன் இதை வெகு ஜாக்கிரதையாகக் கண்காணித்து வந்தான். தீர்மானம், எல்லோரும் அங்கீகரிக்கிற முறையில் இருக்கு மானால் அதைப்பற்றி அதிக பிரதாபமே இராது; ஏக மனதாக நிறை வேற்றப்பட்டதென்று சொல்லி, அடுத்த விஷயத்தைக் கவனிக்கு மாறு செய்வான் சபைத் தலைவன். அப்படிக்கின்றி, தீர்மானத்தைப் பற்றி அபிப்பிராய வேற்றுமை இருக்குமானால், ஓட்டு எடுக்கப்படும். ஓட்டுக்கு சந்த் என்று பெயர்; விருப்பம் என்று அர்த்தம், விருப்பத்தைத் தெரிவிப்பதுதானே ஓட்டு? ஓட்டுகளைக் கணக்குச் செய்ய வெவ்வேறு நிறமுடைய சிறு குச்சிகள் உபயோகிக்கப்பட்டன. இந்தக் குச்சிக்கு சலாகை என்று பெயர். தற்காலத்து ஓட்டுச் சீட்டு மாதிரி. ஓட்டுகளைக் கணக்குச் செய்வதற்கென்று ஓர் உத்தியோகதன் இருந்தான். இவன் சபையின் அங்கத்தினனே; சபையே இவைனை நியமித்தது. ஓட்டெடுப்பதற்கு முன்னர், குச்சிகளின் நிறப்பாகுபாட்டைப் பற்றிச் சபையினருக்கு விளக்கிக் கூறுவான் இவன். பிறகு சபையினர் ஓட்டுப் போடுவார்கள், அதன் பிறுகு இவன் ஓட்டுகளைக் கணக்கெடுத்துச் சபையினருக்கு அறிவிப்பான். பொறுப்பான இந்தக் காரியத்தைச் செய்ய, பாரபட்சம் காட்டாதவனும், யாரிடத்திலும் வெறுப்புக் கொள்ளாதவனும், தவறு செய்யமாட்டாதவனும், அச்சமென்ப தில்லாதவனுமான ஒருவனையே சபையானது நியமித்தது. தீர்மானம் அங்கீகரிக்கப்படுவதோ, நிராகரிக்கப்படுவதோ எதுவும் பெரும்பான்மையோர் எப்படி ஓட்டுச் செய்கின்றனரோ அதைப் பொறுத் திருந்தது. பெரும்பான்மையோரின் அபிப்பிராயப் படியே சபையின் எல்லாக் காரியங்களும் நடைபெற்றன. சபையின் அன்றாட நடவடிக்கைகளை அப்படி அப்படியே பதிந்து கொண்டுவர சில உத்தியோகதர்கள் இருந்தார்கள். சபை அங்கத்தினர் களின் எண்ணிக்கையைப் பொறுத்திருந்தது இந்த உத்தியோகதர்களின் எண்ணிக்கை. ஆனால் எவ்வளவு சிறிய சபையாயிருந்த போதிலும், குறைந்த பட்சம் நான்கு உத்தியோ கதர்களாவது இருக்கவேண்டுமென்று கருதப்பட்டது. ஒவ்வொரு குடியரசு ராஜ்யத்திற்கும் தனித்தனியாகக் கொடி யென்ன, முத்திரையென்ன, இப்படிப் பலவும் இருந்தன. நாணயச் செலாவணி முறையும் தனித்தனியாகவே இருந்தது. நாணங்கள் மீது சில ராஜ்யங்களில், குடியரசின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது; சில ராஜ்யங் களில், குடியரசின் பிரதானன் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது; சில ராஜ்யங் களில் ஆளுஞ் குழுவினர் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இன்னும் ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் தனித்தனியாகச் சட்டதிட்டங்கள் இருந்தன. இவற்றின் பிரகாரமே நீதி பரிபாலனம் ஒழுங்காக நடைபெற்று வந்தது. பொதுவாக எல்லாக் குடியரசு ராஜ்யங்களும், ஏறக்குறைய எல்லா விஷயங்களிலும் சுயநிர்ணய உரிமையை அனுபவித்து வந்தன. இந்தக் குடியரசு ராஜ்யங்கள் பலவற்றுள்ளும் செல்வச் செழுமை மிகுந்திருந்தது; நீதி நிருவாகம் திறம்பட நடைபெற்று வந்தது; படைபலம் ஓங்கியிருந்தது. மற்றும் ஜனங்கள் விடாமுயற்சியுடையவர்களா யிருந் தார்கள்; அரசியலைப் பொறுத்த மட்டில் எல்லோரும் ஒரே விதமான உரிமையை அனுபவித்து வந்தார்கள். இனி ஒவ்வொரு குடியரசுக்குள்ளும் சிறிது நுழைந்து பார்த்து வருவோம். லிச்சவிகள் ராஜ்யம் : வைசாலியைத் தலைநகராகக் கொண்டிருந்த இந்த ராஜ்யத்தில் ஆளுந்தகுதி பெற்றிருந்தவர்கள் ஏழாயிரத்து ஏழுநூறு ஏழுபேரென்றும், இவர்கள், சிறு சிறு குழுவினராகப் பிரிந்து, மாறிமாறி அரசாங்க நிருவாகத்தை ஏற்று நடத்தி வந்தனரென்றும் தெரிகின்றன. கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் கிரீ தேசத்து ஆத்தென் ராஜ்யத்தில் நடை பெற்று வந்த அரசாங்க நிருவாக முறையை இஃதொருவாறு ஒத்திருந்ததுபோலும்.1 அரசாங்கத்தை நடத்தி வந்த குழுவினருள் முக்கியமானவர், தலைவன், உபதலைவன், சேனாதிபதி, நிதிப்பாது காப்பாளன் ஆகிய நால்வரே. ஆளுந் தகுதி பெற்றிருந்த ஏழாயிரத்து ஏழுநூற்று ஏழுபேரும், ராஜயாபிஷேகம் செய்து கொண்டனர். இதற்கென்று ஒரு புஷ்கரிணி (தாமரைக்குளம்?) இருந்தது. இதிலிருந்து கொண்டுவரப்பட்ட ஜலத்தாலேயே எல்லோருக்கும் அபிஷேகம் செய்யப் பட்டது. இந்தக்குளம் வெகு புனிதமாகக் கருதப்பட்டு வந்தது. இந்தக் இதில் யாரும் நீர் எடுத்து அசுத்தம் செய்துவிடாம லிருக்கும் பொருட்டு, தக்க காவல்களும் வைக்கப்பட்டிருந்தன. தவிர, குளம் பூராவூக்கும், ஒரு பட்சிகூட புகாதபடி நெருக்கமான இரும்பு வலையென்று போட்டு மூடப்பட்டிருந்தது. லிச்சவிகள், உடல் வன்மைக்கும் அழகுக்கும் பெயர் பெற்றவர் களாயிந்தார்கள். இவர்களுடைய ராஜ்யம், மிக்க வலுவுடன் நீண்ட காலம் - குறைந்தபட்சம் எண்ணூறு வருஷ காலம் - வாழ்ந்திருந்தது. அம்பஷ்டர்கள் ராஜ்யம் : இங்கு நேர்முக ஜன ஆட்சி நடை பெற்றதாகத் தெரிகிறது; ஜனசபையென்றும் மூத்தோர் சபையென்றும் இரண்டு சபைகள் இருந்தன. மூத்தோர் சபையின் அங்கத்தினர்கள் தெரிந் தெடுக்கப்பட்டவர்களாயிருந்தார்கள். படைத்தலைவர்களும் அப்படியே. அரசாங்க நிருவாகத்தை ஏற்று நடத்தி வந்தவர்கள், மூத்தோர்கள் சபையின் ஆலோசனையை அடிக்கடி நாடியும், பெரும்பாலும் அந்த ஆலோசனைப் படி நடந்தும் வந்தார்கள். அலெக்ஸாந்தரின் படைகள், இவர்களைச் சந்தித்தன. எண்ணிக்கையிலோ, வீரத்திலோ, இந்தியாவிலுள்ள மற்ற இனத் தவருக்கு இவர்கள் குறைந்தவர்களல்லவென்று இவர்களுக்கு நற்சாட்சிப் பத்திரம் கொடுத்திருக்கிறார்கள் கிரேக்க ஆசிரியர்கள். காலாட்படையில் அறுபதினாயிரம், குதிரைப்படையில் ஆறாயிரம், தேர்ப்படையில் ஐந்நூறு, இந்த மூன்று படைப்பகுதிகளுக்கும் மூன்று தலைவர்கள், இந்தப் போர்கோலத்துடன் தான் இவர்கள் அலெக்ஸாந்தரின் படைகளைச் சந்தித்தார்கள். ஆயினும் இவர்கள் சண்டை செய்யவில்லை; சமாதான மாகப் போய் விடுமாறு மூத்தோர் சபையினர் ஆலோசனை கூறுனார்கள். அதன்படி சமாதானம் பேச ஐம்பது பேர் அலெக்ஸாந்தரிடம் வந்தார்கள். அலெக்ஸாந்தரும் இவர்களோடு சமாதானமாகப் போய்விட வேண்டு மென்றே ஆவல் கொண்டிருந்தான். சமாதானம் ஏற்பட்டது. இவர்களுடைய சுதந்திரமும் காப்பாற்றப்பட்டது. க்ஷுத்ரகர் - மாளவர் ராஜ்யம் : இவ்விருவரும் வெவ்வேறு பிரிவினராயிருந்தபோதிலும், அரசியல் விவகாரங்களைப் பொறுத்த மட்டில் பிரியாதவராய் ஒரே இனத்தினர் போலவே வாழ்ந்து வந்தனர். க்ஷுத்ரக - மாளவ சமஷ்டியென்று சேர்த்தே இவர்கள் பெரும்பாலும் பிரதாபிக்கப்படுகிறார்கள். இவர்கள் உடல் வனப்பு வாய்ந்தவர்களாகவும் போர்த்திறம் வல்லவர்களாகவும் இருந்தார்கள். மகா அலெக்ஸாந்தரின் படைகள், இவர்களைக் கண்டு பெரிதும் அஞ்சியதாகத் தெரிகிறது. எனவே இவர் களோடு போர் செய்ய விரும்பாமல் சமாதானமாகப் போகவே விழைந் தான் அலெக்ஸாந்தர்; சமாதானம் பேச இவர்களை வரவழைத்தான். நூறுபேர், சமஷ்டியின் பிரதிநிதிகளாக அலெக்ஸாந்தரிடம் வந்தார்கள். இந்த நூறு பேரும் தனித்தனி ரதத்தில் ஏறி வந்தார்களென்றும், ஒவ்வொருவரும் நல்ல உயரமும் அதற்குத் தகுந்த பருமனுமுடையவர் களாய், கம்பீரத் தோற்றமுடையவர்களாய் இருந்தார்களென்றும், ஒவ்வொருவரும் தங்கச் சரிகையினால் பூவேலை செய்யப்பட்ட உடையணிந் திருந்தார்களென்றும், இவர்களுடைய முகத்தோற்றம், பேச்சுதோரணை முதலியவை, இவர்களுடைய சுதந்திரப் பற்றையும், அதனைக் காப்பாற்றிவர வேண்டுமென்பதில் இவர்கள் கொண்டிருந்த சிரத்தையையும் நன்கு புலப்படுத்தினவென்றும் கிரேக்க ஆசிரியர்கள் இவர்களைப் பற்றி வருணித்திருக்கிறார்கள். சமாதானப் பேச்சுகள் நடத்த வந்த இந்த நூறு பேரையும் அலெக்ஸாந்தர் மிக மரியாதையோடு வரவேற்றான்; பொன்னாலாய ஆசனங்களில் அமர்வித்து உபசரித்தான்; ஆடம்பரமாக விருந்து செய்வித்தான்; விருந்தின்போது தாராளமாக மது வழங்கச் செய்தான். இவ்விதமெல்லாம் திருப்தி செய்வித்து இவர்களுடைய நல்லுறவைப் பெற்றான் அலெக்ஸாந்தர். இந்த க்ஷுத்ரகர் - மாளவர்கள், தங்களுக்குப் பொதுவாக, ஒரு தலைவனையும் சேனாதிபதியையும் தெரிந்தெடுத்துக் கொண்டார்கள். இவர்களுக்கு வரம்பிட்ட சில அதிகாரங்களையே அளித்து, முக்கிய மான அதிகாரங்களையெல்லாம் தங்கள் வசத்திலேயே வைத்திருந் தார்கள். இவர்களுடைய சமஷ்டி, கட்டுக்குலையாமல், மௌரியர் ஆட்சி முடிந்த பிறகு வெகு காலம் வரையில் இருந்ததாகத் தெரிகிறது. க்ஷுத்ரகர்களிற் பலர் கூர்த்த மதியினராகவும் பரமஞானி களாகவும் இருந்தார்கள். கடர் ராஜ்யம் : வேத காலத்திலிருந்து குடியரசினராக வாழ்ந்து வந்தவர்கள் இந்தக் கடர்கள். இவர்களுடைய வீரத்தைக் கிரேக்க ஆசிரியர்கள் பெரிதும் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். இவர்கள், சகட வியூகம் வகுத்துக் கொண்டு அலெக்ஸாந்தரின் படைகளை எதிர்த்து நின்றார்களென்றும். இதைக் கண்டு கிரேக்கப் படைகள் பெரிதும் திணறிப் போய்விட்டனவென்றும், கடைசிவரையில் இவர்கள் கிரேக்கர்களுக்குப் பணிந்து கொடுக்கவே இல்லையென்றும் தெரிகின்றன. இங்கு, ராஜ்யத்தின் நன்மைக்காகவே பிரஜைகள் இருக்கிறார் களென்ற கொள்கை அனுஷ்டானத்தில் இருந்தது. எப்படியென்றால், ஒரு குடும்பத்தில் குழந்தை பிறந்ததும், அதன் இரண்டாவது மாதத்தில் அதனை அரசாங்க உத்தியோகதர் சிலர் வந்து பரிசோதனை செய்து பார்ப்பர். குழந்தை, அங்கப் பழுதில்லாமலிருக்கிறது, அரோக திடகாத்திரத் துடன் ராஜ்யத்திற்கு உபயோகமுள்ள பிரஜையாக நீண்ட காலம் வாழக்கூடும். என்று பரிசோதனையில் தெரிந்தால் அதைப் பெற்றோர் களின் பொறுப்பில் வளரும் படிவிட்டு விடுவர்; இல்லையென்றால், அதன் உயிரைப் போக்கிவிடச் செய்வர். 1 இதனால் இந்த ராஜ்யத்தில் வசித்து வந்த அனைவரும் நல்ல திடசாலிகளாகவும் மிகுந்த அழகுடையவர் களாகவும் இருந்தார்கள். தங்கள் உடலைப் பேணி வளர்ப்பதிலே, அதனை அழகுற வைத்திருப்பதிலே, இவர்கள் அதிக கவனஞ் செலுத்தினார்கள்; இவற்றோடு அறிவைப் பெருக்கிக் கொள்வதிலும் அதிக கவனஞ் செலுத்தி வந்தார்கள். இவர்களில் அநேகர் சிறந்த ஞானிகளாயிருந்திருக்கிறார்கள். ஸௌபூதிகள் ராஜ்யம் : இவர்கள் எல்லா அமிசங்களிலும் கடர் களைப் போன்றவர்களே. ராஜ்யத்திற்காகவே பிரஜைகள் இருக்கிறார்கள் என்ற கொள்கை இவர்களிடத்தில் வேரூன்றியிருந்தது. இவர்களுடைய அரசியலமைப்பையும் சட்ட திட்டங்களையும் கிரேக்க ஆசிரியர்கள் பெரிதும் வியந்து பாராட்டியிருக்கிறார்கள். சிவிகள் ராஜ்யம் : இவர்களைப் பயங்கரத் தோற்ற முடையவர்களாக வருணித்திருக்கிறார்கள் கிரேக்க ஆசிரியர்கள். இவாகள் க்ஷுத்ரகர் - மாளவர்களோடு சேர்ந்து அலெக்ஸாந்தரை எதிர்த்து நின்றார்கள்,. காம்போஜர், சுராஷ்டிரர் ராஜ்யங்கள் : இந்த இரண்டு ராஜ்யங் களிலும், பிரஜைகளனைவரும் ராணுவப் பயிற்சி பெற வேண்டுமென்ற கட்டாயம் இருந்ததாகத் தெரிகிறது. அதாவது பிரஜைகளெல்லோருமே போர் வீரர்களாயிருந்தார்கள். இதனால் இவர்கள் விவசாயத்தையோ மற்றத்தொழில்களையோ புறக்கணித்துவிட வில்லை; அவற்றிலும் வல்லவர்களாயிருந்தார்கள். இவர்களுடைய ராஜ்யத்தில் செல்வம் கொழித்திருந்தது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. யௌத்தேயர்கள் ராஜ்யம் : குடியரசாக நீண்டு நடைபெற்று வந்த ராஜ்யங்களுள் இதுவும் ஒன்று. இங்கு ஐயாயிரம் பேரைக் கொண்ட ஒரு ஜனசபை இருந்த ததாகவும் இதுவே அரசாங்கத்தை நடத்தி வந்ததென்றும் தெரிகின்றன. இவர்களிடையே வழங்கி வந்த நாணயங்கள் சிலவற்றில் முருகக் கடவுளின் உருவம் பொறிக்கப் பட்டிருக்கிறது. இன்னும் பல வகையான குடியரசு ராஜ்யங்கள் இருந்திருக் கின்றன. ஒரு ராஜ்யத்தில், ஜனங்கள் ஒரே இடத்தில் சேர்ந்து உண்பதை அன்றாட வழக்கமாகக்கொண்டிருந்தனர் என்று தெரிகிறது. இன்னொரு ராஜ்யத்தில், வெவ்வேரு குலத்துதித்த இரண்டு அரசர்கள், பரம்பரை பாத்தியங் கொண்டாடிக்கொண்டு சேனாதிபதிகளாக இருந்து வந்தார் களென்றும், இவ்விருவருமே போர்க்களத்தில் தலைமை தாங்கி நின்றார் களென்றும், அரசாங் நிருவாகத்தை மூத்தோர் சபையென்று மேலே சொன்னேமே அதுவே நடத்தி வந்ததென்றும் சொல்லப்ப பட்டிருக் கின்றன. பொதுவாக எல்லாக் குடியரசு ராஜ்யங்களிலும், செல்வம், கலை, அறிவு, ஆண்மை இவையாவும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்து செழுமையுடன் திகழ்ந்தன. 5. அரசன் அரசன் ஏன் தோன்றினான்? ஜனங்களைக் காப்பாற்ற. காப்பாற்றப் பட வேண்டிய நிலையிலே இருந்தார்கள் ஜனங்கள். இதுதான் மத்ய நியாய நிலை. இதனைப்பற்றி மூன்றாவது அத்தியாயத்தில் விளக்கிக் கூறியிருக்கிறோம். காப்பாற்றப் படாவிட்டால் அழிந்து படுவோமென்ற ஜனங்களுடைய அச்சமானது, காப்பாற்றப்பட வேண்டுமென்னும் இச்சை யாக முதிர்ந்தது. முதிர்ந்து , காப்பாற்றக் கூடிய ஒருவனை அரசனாகத் தெரிந்தெடுத்துக் கொள்ளும் செயலாகப் பரிணமித்தது. இங்ஙனம் தெரிந்தெடுக்கப்பட்ட அவன், தெரிந்தெடுத்த ஜனங்களைக் காட்டிலும் எல்லா வகையிலும் மேம்பட்டவனாயிருந்தான். மேம்பட்டவனாயிருந்த காரணத்தினால் தான், அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டானென்பதை நாம் சொல்லத் தேவையில்லை. துன்புற்ற ஜனங்கள் ஒன்று கூடி, தங்களுக் குள்ளே மிக அழகனும், அருளாளனும், சக்தி வாய்ந்தவனுமான ஒருவனை அரசானகத் தெரிதெடுத்துக் கொண்டார்கள் என்று புத்த மதகிரந்தங்கள் கூறுகின்றன. மத்ய நியாய நிலையென்பது என்ன? போராட்ட நிலைதானல்லவா? அழித்தலும் அழிபடுதலும் இங்கே நடைபெறுகினற்ன. அழித்தலை வெற்றியென்றும் அழிபடுதலைத் தோல்வியென்றும் கூறுவர். தோல்வி யடைந்து வந்தவர்கள், அழிபடுதலினின்றும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, அறிவிலும் ஆண்டகைமையிலும் வல்ல ஒருவனைத் தலைவனாகத் தெரிந்தெடுத்துக் கொண்டார்கள். இவனே பின்னர், அழிவினின்று காப்பாற்றப்பட்டவர்களுக்கு அரசனானான். அதாவது தற்காலத் தேவையைப் பூர்த்தி செய்யத் தோன்றிய ஒரு தலைவன், நிரந்தரமான அரசனானான். இப்படிக் கருதுவதற்கு ஆதாரமாக, ஐதரேய, தைத்திரீய பிராம்மணங்களில் கூறப்பட்டிருக்கிற தேவாசுரயுத்த வரலாற்றை எடுத்துக்காட்டுவர் அறிஞர் சிலர். தேவர்களுக்கும் அசுரர் களுக்கும் ஒரு காலத்தில் யுத்த நடைபெற்றது. தேவர்கள், தொடர்ந்தாற் போல் தோல்வியே கண்டுவந்தார்கள்; காரணமென்ன வென்று சிந்தித்தார்கள்; தங்களுக்கு ஓர் அரசனில்லாததுதான் என்று உணர்ந்து உடனே ஒருவனை அரசனாக (தலைவனாக)த் தெரிந்தெடுத்துக் கொண்டார்கள். இந்த வரலாற்றில் கூறப்படுகின்ற தேவர்கள் யார், அசுரர்கள் யார் என்று ஆராய்ச்சி செய்து கொண்டுபோக நாம் விரும்பலில்லை. மனிதத் தன்மை நிறைந்தவர்கள் தேவர்கள், அதில் குறைந்தவர்கள் அசுரர்கள் என்று நாம் கொள்வோமானல் அது தவறாகாது, மனிதத் தன்மை நிறைந்தவர்கள், முதலில் ஓர் அரசனின்றி தங்களுடைய விவகாரங் களைத் தாங்களே கவனித்து வந்தார்களென்றும், அதாவது கிருதயுகம் நடைபெற்று வந்ததென்றும், அந்தத் தன்மையில் குறைந்தவர்களுடைய எண்ணிக்கையும் சக்தியும் அதிகமாகிவிட்ட நிலையில்தான், அதாவது ராட்சத நியாயம் தலைதூக்கி நின்ற காலத்தில்தான் அரசன் தோன்றினா னென்றும் கருதலாம். மற்றும் இந்தத் தேவாசுர யுத்த வரலாறு, போரிலே பிறந்தான் அரசன் என்ற பிறநாட்டு நல்லறிஞர் சிலருடைய கொள்கைக்கு அரண் செய்வதாயிருக்கிறது. ஆதி காலத்தில் ஜனங்கள் தனித்தனிப் பிரிவினராக வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் நடைபெற்று வந்தன. இந்தச் சண்டைகளில் வெற்றி காண விழைந்தவர்கள், ஒரு தலைவனைத் தெரிந்தெடுத்து அவனுக்குக் கட்டுப்பட்டு நடக்க இசைந்தார்கள். போர்கள் தொடர்ந்து நடைபெற்ற காலத்து, முதலில் வெற்றி வாங்கிக் கொடுத்தவன் எவனே அவனே தலைவனாகத் தெரிந்தடுக்கப் பட்டான். அவனுடைய செல்வாக்கும் வளர்ந்தது. போரைத் தவித்து மற்ற சமுதாய விவகாரங்களையும் அவனையே தலைவனா யிருந்து நடத்தி வைக்கும்படி ஜனங்கள் கேட்டுக் கொண்டார்கள். நிரந்தரமான அரசன் தோன்றினான். ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் சரித்திரம் இந்தக் கொள்கைக்குச் சான்று பகர்வதாயிருக்கிறது. நமது நாட்டைப் பொறுத்த மட்டில், அரசர்கள் சிறந்த வீரர்களாகவும் போர்த்திறம் படைத்தவர்களாகவுமிருந்தார்கள்; படைத்தலைவன் என்று ஒருவன் இருந்தபோதிலும், தாங்களும் போர்முகத்திற்குச் சென்று வெற்றிக் கொடி நாட்டினார்கள். சுருக்கமாக, ராஜ்ய நிருவாகத்திற்குப் போர்த்திறம் இன்றியமையாத தாகக் கருதப்பட்டது. இதனால், போரிலே பிறந்தான் அரசன் என்ற கொள்கை, நமது நாட்டு அரசியல் பண்டிதர்கள் கிளத்தியிருக்கின்ற பல்வேறு கருத்துக்களுக்கு முரண்பட்டதாயிருக்க வில்லை யென்று துணிந்து கூறலாம். ஆனாலும் இந்தக் கொள்கை, அவர்கள் இயற்றித் தந்திருக்கிற அரசியல் நூல்களில் சரியானபடி பிரதாபிக்கப்படவில்லை யென்றேசொல்லவேண்டியிருக்கிறது. காரண மென்ன வென்று நாம் ஏன் ஊகித்துக் கொண்டு போக வேண்டும்? நமது நாட்டுத் தற்கால அறிஞர் சிலர், வேத காலத்தின் முதற் பகுதியில் இந்த நாட்டிற்குப் புதிதாக ஒரு பெருங்கூட்டத்தினர் வந்தன ரென்றும், இவர்கள் குடியரசு முறைக்குட்பட்டிருந்தார்க ளென்றும், இவர் களுக்கு முன்னாடியே இங்கு வெகுகாலமாக ஒரு பெருங்கூட்டத்தார் குடியரசு முறையின் கீழ் வாழ்ந்து வந்தார்களென்றும், இவ்விரு சாராருக்கும் நடைபெற்று வந்த ஓயாச் சண்டையே தேவாசுர யுத்தமாகச் சொல்லப்படுகிறதென்றும், குடியரசு முறை மறைந்து முடியரசு முறை தலை தூக்குவதற்கு இந்தத் தேவாசுர யுத்தம் ஒரு நிலமாயமைந்த தென்றும், புதிதாக வந்த பெருங்கூட்டத்தார், குடியரசு முறையால் நன்மை விளையாதயது கண்டு, முடியரசு முறையைப் பழங்குடிகளிட மிருந்து பற்றினரென்றும், அப்படிப் பற்றினதிலிருந்தே அரசன் தோன்றினா னென்று கூறத்தொடங்கினரென்றும், இப்படி யெல்லாம் கூறுவர், இவர் களுடைய கூற்றை, எதையும் சரித்திர நிறுவையிலே வைத்துப் பார்க்கின்ற அறிஞர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை யென்று சொல்லி நிறுத்திக் கொள்வோம். ஆதி காலத்தில் ஜன சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக் குள்ளும் சண்டை நடைபெற்றிருக்க வேண்டுமென்றும், அதில் தோல்வி யுற்றவர்களை வெற்றி கொண்டவர்கள் அடிமைப்படுத்தித் தங்களுடைய பிரஜைகளாக்கிக் கொண்டிருக்க வேண்டுமென்றும், வெற்றி கொண்டவர் களில் வலியனாயிருந்தவன், எல்லோருக்கும் தலைவனாகி நாளா வட்டத்தில் அரசனென்ற பெயரைத் தானே சூட்டிக் கொண்டிருக்க வேண்டு மென்றும், இப்படிப்பட்ட ஒருவனே முதல் அரசனாயிருந்திருக்க வேண்டு மென்றும் இவர்கள் கருதுகின்றனர். இந்தக் கருத்து பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்டது. பலாத்காரசித்தாந்தமென்றே இதற்குப் பெயர் கொடுத்திருக்கின்றனர். அரசாங்கமானது, பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்டது, அது தவிர்க்க முடியாத ஒரு தீமை யென் றெல்லாம் நிலவிவரும் கருத்துக்கள் யாவும் இந்தச் சித்தாந்தத்தினின்று முளைத்தவைதான் பலாத்காரத் தினின்று தோன்றியது, பலாத்காரத்தின் துணை கொண்டே வாழ முடியும் என்பதே இவர்களின் சாதனை. நமது முன்னோர்களோ, பலாத்காரத்தினின்று அரசன் தோன்றிய தாகக் கொள்ளவில்லை. அவன், தன் கடமையை ஒழுங்காக நிறை வேற்றிவர, பலாத்காரசக்தி அவனுக்கு ஒரு துணையென்றே கொண்டார்கள். இதற்குத் தண்டம் என்ற பெயர் கொடுத்து, இதன் மூலம் தீமையை அழித்து நன்மையை வளர்ப்பதே அவர்கள் நோக்கமாயிருந்தது. மேலை நாட்டார், ஜனங்களை அடிமைப்படுத்தவும், சில சமயங்களில் அழிக்கவும் தண்டத்தை உபயோகித்திருக்கின்றனர். ஆனால் நமது நாட்டில் தண்டானது ஜனங்களைக் காப்பாற்றுவதற்காகவே உபயோகிக் கப்பட்டு வந்திருக்கிறது. மற்றும் இந்தத் தண்டமானது, மேலை நாட்டாருக்கு எதிர்மறைச் சக்தியாயிருந்திருக்கிறது; நமது நாட்டாருக்கோ உடன்பாட்டுச் சக்தியாயிருந்து ஆள்வோருக்கும் ஆளப்படு வோருக்கும் ஓர் ஒற்றுமையை உண்டு பண்ணி வந்திருக்கிறது. தண்ட நீதியைச் சிறப்பித்துக் கூறும் மகாபாரதம் சாந்தி பர்வத்தின் வசனங்கள் இங்குக் கவனிக்கத் தக்கவை:- அறிவுள்ள அரசன், தண்ட நீதியை முன்னிட்டு, அடையப்படாததை அடையவும், அடைந்ததை ரட்சிக்கவும் வேண்டும் ......... தண்ட நீதி, தாய்தந்தைபோல உலகத்தினுடைய மரியாதையின் எல்லையை ரட்சிப்பதுடன் சகல உலகங்களையும் பரிசுத்தப் படுத்தும். நிற்க. பிரதியோர் அரசனும் ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்டு வந்தா னென்பதற்கு ருக்வேதமும் அதர்வணவேதமும் சாட்சி கூறுகின்றன:- ஜனங்கள் உன்னை அரசனாகத் தெரிந்தெடுக் கட்டும் - எங்களோடு இருப்பாயாக; உன்னை (அரசனாக)த் தெரிந்தெடுக்கிறோம்; அசையாமல் உறுதியாக நிற்பாயாக; எல்லா ஜனங்களும் உனது நன்மையைக் கோரட்டும்; உனது அரசு வீழ்ச்சியுறா திருப்பதாக. ஜனங்கள், ஒருவனை அவ்வப்பொழுது அரசனாகத் தெரிந்தெடுத்து வந்தார்கள் ஆரம்பத்தில், அதிகமாகப் போனால் ஒருவன் அவன் ஆயுள் பூராவுக்கு மட்டுமே அரசனாகத் தெரிந் தெடுக்கப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் என்பதில்லாமல், எவன் ஏற்கனவே சொல்லப்பட்டது போல், எல்லாரைக் காட்டிலும் எல்லா வகையிலும் மேம்பட்ட வனா யிருந்தானோ அவன் அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான். பரம்பரை பாத்தியதையின் மீது அரசனாதல் என்பது ஆரம்பத்தி லிருந்து வெகு காலம் வரை இல்லாமலிருந்தது; பின்னரே ஏற்பட்டது. இப்படி ஏற்பட்டது கி .மு. 1700 - ஆம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து என்று, கால நிர்ணயமும் செய்திருக்கின்றனர் அறிஞர் சிலர். இஃதெப்படியோ, வேத காலத்தில் பரம்பரையாக அரசு புரிந்து வந்த மன்னர் பலர் நமக்கு அறிமுகமா கின்றனர். பரம்பரை பாத்தியதையின் மீது அரச பதவி திரப்பட்டு விட் போதிலும், பிரதியோர் அரசனும், ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட வேண்டுமென்னும் பழைய நியதி கைவிடப் படவில்லை; தொடர்ந்து அனுஷ்டிக்கப்பட்டது. அதாவது, ஒவ்வொரு புதிய அரசனும் மகுடா பிஷேகச் சடங்குகளுக்கு உட்படுவதன் மூலம் ஜனங்களுடைய சம்மதத்தைப் பெற வேண்டியவனாகச் செய்யப்பட்டான்; ஜன சம்மதனான பிறகே அவன் அரசனாக மதிக்கப் பெற்றான். புத்த மத கிரந்தங்கள், அரசனை மகாஜன சம்மதன் என்று அழைத்திருப்பது இங்குச் சிந்திக்கற் பாலது. இங்கே ஒரு சிறிய விஷயம். எந்த அடிப்படையின் மீது அரசன் தோன்றினானோ அந்த அடிப்படை, அதாவது அவன் ஜனங்களால் தெரிந் தெடுக்கப்பட வேண்டுமென்னும் நியதி. அவன் பரம்பரை பாத்தியதை யுடையவனான பிறகு கூட கைவிடப்படாமல் தொடர்ந்து அனுஷ்டிக்கப் பட்டு வந்திருக்கிறது. நமது முன்னோர்களிடம் காணப்பட்ட அரிய பண்பு களில் இஃதொன்று. அவர்கள் நல்லதொன்றை வளர்த்து வருகையில், எந்த வேரிலிருந்து அது வளர ஆரம்பித்ததோ அந்த வேரை அறுத்து விடவில்லை; அதனைப் போற்றிக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். அவர்கள் நீந்திக் கடந்திருக்கிற பல்வேறு துறைகளிலும் இந்த நியதியைக் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்; அரசியல் துறையிலும் அப்படியே. ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட அரசன் ஜனங்ககளைக் காப்பாற்ற ஒப்புக் கொள்கிறான். அவனுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்க ஜனங்களும் ஒப்புக் கொள்கிறார்கள். ஜனங்களைக் காப்பாற்றுவது அரசன் பொறுப்பு, காப்பாற்றுகின்ற அரசனைக் காப்பாற்றுவது ஜனங்களின் பொறுப்பு, எப்படி? அவனுக்குத் தங்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியை வரியாகச் செலுத்துவதன் மூலம், இதற்குப் பலி1 யென்று பெயர் இந்தப் பலியே - வரியே - அரசனுக்கு, அவன் வாழும் பொருட்டுக் கிடைக்கும் ஊதியம். இதற்கு வேதனம் என்றும் பெயர். இந்தப் பரபர ஒப்பந்தத்தை ஆதாரமாகக் கொண்டுதான் அரசன் பரிபாலிக்கத் தொடங்குகிறான்; ஜனங்களும் பரிபாலிக்கப்படுவதற்கு இசைகிறார்கள். இதனை ஒரு சித்தாந்தமாகவே வகுத்துக் கூறியிருக்கின்றனர் மேலை நாட்டுப் பண்டிதர் சிலர், சமுதாய ஒப்பந்த சித்தாந்தமென்று இதற்குப் பெயர். ஹாப், லாக், ரூஸோ2 ஆகியோர் இதன் சிருஷ்டி கர்த்தர் களாகவும் போஷகர்களாகவும் கூறப்படுவர். கி. பி. பதினாறாவது நூற்றாண்டிலிருந்துதான் இந்தச் சித்தாந்தத்திற்கு மேலை நாட்டைப் பொறுத்த மட்டில் ஒருவித செல்வாக்கு ஏற்பட்டதென்று சொல்ல வேண்டும். ஆனால் நமது நாட்டில் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முந்தி இந்தச் சித்தாந்தம் செயலாகப் பரிணமித்து நின்றது. வேதங்கள் முதல் பிற்காலத்தில் தோன்றிய தர்ம சாதிரங்களென்ன, இதிகாச புராணங்களென்ன இவை பல வற்றிலும் இந்தப் பரபர ஒப்பந்த சித்தாந்தம் சுருக்கமாகவோ விளக்கமாகவோ ஏதோ ஒரு வகையில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். உதாரணமாகக் கௌடிலீயம் கூறுகிறது :- மத்ய நியாயத்தினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஜனங்கள், முதலில், வைவசுவத மனுவைத் தங்கள் அரசனாக இருக்கும்படி தெரிந் தெடுத்து, விளையும் தானியங்களில் ஆறில் ஒரு பங்கையும், வியாபாரப் பொருள்களில் பத்தில் ஒரு பங்கையும் அவனுக்குரிய பகுதியாகக் கொடுத்தார்கள். இதனை ஊதியமாகப் பெற்றுக் கொண்டு (மனுவழி வந்த) அரசர்கள், ஜனங்களுடைய யோகக்ஷேமத்திற்காகப் பாடுபடும் பொறுப்பையும், அவர்களுடைய பாவத்தைப் போக்கிவைக்கின்ற பொறுப்பையும் மேற் கொண்டார்கள். இதனால் தவ முனிவர்களும், தங்களால் சேர்க்கப்படுகிற தானியங்களில் ஒரு பங்கை நம்மைக் காப்பாற்றுகின்றவனுக்குச் செலுத்த வேண்டி வரியாகுமிது என்றெண்ணி அரசனுக்குக் கொடுக்கிறார்கள் இதற்கு விரிவுரைபோல், மகாபாரதம் சாந்தி பர்வத்தில் பின்வரும் வரலாறு காணப்படுகிறது : - முன்னொரு காலத்தில் பூமியில் அரசனில்லாத காரணத்தினால், ஜனங்கள் மிகவும் நலிவுற்றிருந்தார்கள். இவர்களிற் சிலர், பிரம்ம தேவரிடம் சென்று சிருஷ்டி கர்த்தரே ! அரசனில்லாத காரணத்தினால் நாங்கள் பெரிதும் அவதியடைந்திருக்கிறோம். எங்களைக் காப்பாற்ற வல்ல ஓர் அரசனைக் கொடுப்பீராகில் நாங்கள் அவனைப் போற்றி வருவோம் என்று வேண்டிக் கொண்டார்கள். பிரம்மதேவரும் அவர் களுடைய குறைகளுக்கு இரங்கினவராய், மனுவை அவர்களுக்கு அரசராயிருக்கும் படி கட்ளையிட்டார். ஆனால் அந்த மனுவானவர் ராஜ்யத்தை ஆள்வது மிகக் கடினம் என்று சொல்லி அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். இதனைக் கண்ட பூலோகத்து ஜனங்கள் ஓ மனுவே ! அரச பொறுப்பை நீவிர் அவசியம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எவ்விதத்திலும் உமக்குக் கவலை வேண்டுவதில்லை. உம்முடைய தேவைகளை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். எங்களிடத்திலேயுள்ள பசு, பொன் இவைகளில் ஐம்பதில் ஒரு பாகத்தையும் நாங்கள் உற்பத்தி செய்கிற தானிய வகைகளில்பத்தில் ஒரு பங்கையும் உமக்குக் கொடுக் கிறோம். எங்களிலே முக்கியதர்களாயுள்ளவர்கள் உமக்குத் துணையாட்க ளாயிருக்கிறோம். நாங்கள் செய்யும் தர்ம காரியங்களின் பலனில் நாலில் ஒரு பங்கு உம்மைச் சேரட்டும், இவைகளுக்கு ஒப்புக் கொண்டு, தாங்கள் எங்களுக்கு அரசராயிருந்து துஷ்டர்களை அடக்கிதர்மத்தை நிலை நாட்டவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இதற்குப் பிறகு மனுவானவர் அரசராயிருந்து ராஜ்யத்தைப் பரிபாலித்து வர ஒப்புக் கொண்டார்.1 புத்த மத கிரந்தங்கள் கூறுவதன் சாரமென்னவென்றால் :- ஆரம்பத்தில் மனிதர்கள் தர்மத்திற்குக் கட்டுப்பட்டு நடந்து வந்தார்கள். பின்னர் மெதுவாக, பல வழிகளிலும் பாவம் பரவத் தொடங்கியது, களவு, பொய், சூதுவாதுகள், பலாத்காரச் செயல்கள் முதலியன மலிந்துவிட்டன. இவைகளினால் கஷ்டமடைந்து மனிதர்கள் ஒன்று கூடி ஆலோசித்து, தங்களுக்குள்ளே மிக அழகனும் அருளாளனும் சக்தி வாய்ந்தவனுமான ஒருவனைத் தெரிந்தெடுத்து அவனைப் பார்த்து ஓ மனிதனே ! தண்டிக்க வேண்டியவர்களை விலக்கியும் எங்களை ரட்சித்து வருவாயாக; இந்தக் கடமையை நீ செய்து வருவாயானால், அதற்குப் பிரதியாக எங்களுக்குக் கிடைக்கும் பொருள்களில் ஒரு பகுதியை உனக்குக் கொடுக்கிறோமென்று கூறினார்கள். அவனும் ஒப்புக் கொண்டான். இப்படி ஒவ்வொரு நூலும் என்ன கூறுகிறதென்று எடுத்துக் காட்டிக் கொண்டு போகலாம். ஆனால் அது தேவையில்லை. வாசகங்கள் வெவ்வேறானாலும் அடிப்படைக் கருத்து ஒன்றுதானே? மற்றும் மகுடாபிஷேகச் சடங்குகளின் போது, ஜனங்களின் சார்பாகச் சொல்லப்படுகிற மந்திரங்கள், அரசன் எடுத்துக் கொள்கின்ற பிரதிக்ஞை முதலியன; இந்த ஒப்பந்தசித்தாந்தத்தை வலியுறுத்திக் காட்டுவன வாயிருக்கின்றன. இவற்றைப் பற்றி மகுடாபிஷேகம் என்ற அத்தியாயத்தில் பிரதாபிப்போம். மேலே எடுத்துக் காட்டப்பெற்ற கௌடிலீயமும் மகாபாரதம் சாந்தி பர்வமும், அரசனுக்குச் சேரவேண்டிய ஊதிய விஷயத்தில் வித்தியாசப் படுவதைக் கண்டுவாசகர்கள் திகைப்படைய வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறோம். இந்த விகிதாசாரம், காலத்திற்குத் தகுந்தபடி மாறி யிருக்கலாம்; அல்லது அரசியல் பண்டி தர்களுடைய வேறுபட்ட நிர்ணமா யிருக்கலாம். பொதுவாக, தர்ம சாதிரங்களாகட்டும், அரசியல் சாதிரங் களா கட்டும், ஆறில் ஒரு பங்கே அரசனுக்குரியதென்று நிர்ணயம் செய்திருக் கின்றன. இதைப் பற்றிச் சந்தேகமோ வாதப் பிரதிவாதமோ வேண்டு வதில்லை. ஆறில் ஒரு பங்கு என்பது நமது நாட்டில் நீண்ட காலமாக ஒரு பழமொழி போல் வழங்கி வருவதை நேயர்கள் அறிந்திருக்கலாம். எல்லா வகையிலும் மேம்பட்டிருக்கிற ஒருவன், பரபர ஒப்பந்தத்தின் மீது அரசனாகத் தெரிந்தெடுக்கப் பட்டபோதிலும், அவனிடம் அந்த மேம்பாடுகள்யாவும் நிலைத்து நிற்க, அவன் தெரிந்தெடுக்கப்பட்ட காலத்தில், பல தெய்வங்களின் நல்லாசி கோரப்பட்டது. பின்னர், எந்தெந்த தெய்வத்திற்கு என்னென்ன சக்தி யுண்டென்று கருதப்பட்டும் நம்பப்பட்டும் வந்ததோ அந்தச் சக்திகள் யாவும் அவனிடம் குடிபுகுமாறு பிரார்த்திக்கப் பட்டது. அவனும் தெய்வ சக்தியுடையவனான. தெய்வம் போலவே போற்றப்பட்டான். மன்னராட்சிககு மகத்துவம் கொடுத்துப் பேச முன் வந்தமேலை நாட்டுப் பண்டிதர் சிலர் - இவர்களில் ஸர்ராபர்ட் பில்மர் என்ற ஆங்கில பண்டிதனையும் போவே என்ற பிரெஞ்சு பண்டிதனையும்1 சிறப்பாகக் குறிப்பிடலாம். - இதனையும் ஒரு சித்தாந்தமாக வகுத்துக் கூறியிருக்கின்றனர். தெய்விக உரிமைச் சித்தாந்தமென்று இதற்குப் பெயர். இதற்கு கி. பி. பதினெட்டாவது நூற்றாண்டு வரை பலமான ஆதரவு இருந்தது. இந்த ஆதரவு பெற்று ஆதிக்கஞ்செலுத்திய அரசர்களும் பலர். நமது நாட்டைப் பொறுத்த மட்டில் இந்தத் தெய்விக உரிமைச் சித்தாந்தமானது, கௌடில்யன் காலத்திலிருந்து தான். அதாவது அவன் மன்னராட்சி முறையை மேல்நிலைக்குக் கொண்டுவர முனைந்து நின்றதன் விளைவாகப் பிரசித்தியடைந்த தென்றும், அதற்கு முன்னர், அதாவது வேதகாலத்தில், அரசன் சாதாரண மனிதனுக்கு கருதப்பட்டும் நடத்தப்பட்டும் வந்தா னென்றும் தற்கால பண்டிதர் சிலர் கூறுவர். இப்படிக் கூறுவதைக் காட்டிலும், வேத காலத்தில், மன்னர்களுக்குத் தெய்வங்களின் நல்லாசி கோரப்பட்டதென்றும், அந்த நல்லாசி அவர் களுடைய நல்லாட்சிக்கு அவசியமெனக் கருதப்பட்டதென்றும், காலக்கிர மத்தில் அரசர்களுடைய ஆணைக்கு ஜனங்களெல்லோரும் கட்டுப் பட்டு நடக்க வேண்டுமென்பதற்காக அவர்களிடத்தில் தெய்வசக்தி இருப்பதான நம்பிக்கை புகுத்தப்பட்டதென்றும், இப்படிப் புகுத்தப்பட்டது ஜனங் களுடைய க்ஷேமத்திற்காகவே தவிர அரசர்கள் கொடுங்கோலர் களா வதற்காக அல்லவென்றும் கூறுவது பொருத்தமாயிருக்குமென்று கருதுகிறோம். தெய்விக உரிமைச் சித்தாந்தமானது, கௌடிலீயத்தின் பின் வரும் வாசகத்தில் பிரதிபலிக்கிறது : - .இந்திரனுடைய கடமைகளும் யமனுடைய கடமைகளும் அரசனிடத்தில் ஒன்று சேர்ந்திருக்கின்றன. அவன் - அரசன் - ரட்சிப்பதிலும் சிட்சிப்பதிலும் இந்திரன், யமன் இவ்விரு வருடைய பிரத்தியட்சப் பிரதிநிதியாயிருக்கின்றான். அரசர்களை அலட்சியப் படுத்துகிறவர்கள் தெய்வ தண்டனைக்குள்ளாவார்கள். எனவே அரசர்களை எப்பொழுதும் இழிவாகப் பேசக்கூடாது. சுக்கிர நீதி கூறுகிறது : - உலகமானது அரசனில்லாத காரணத்தினால் பயந்துபோய் கலக்கமுற்றிருந்தது. அப்பொழுது அதனைக் காப்பாற்றும் பொருட்டு, பிரம்மதேவர், இந்திரன், வாயு, யமன், சூரியன், அக்கினி, வருணன், சந்திரன், குபேரன், ஆகிய இவர்களுடைய நித்தியமாயுள்ள அமிசங் களைக் கொண்டு அரசனைச் சிருஷ்டித்தார். இவ்விரண்டு மேற்கோள்களும், மகாபாரதம் சாந்தி பர்வத்தில் பின் வருமாறு விளக்கம் பெற்றிருக்கின்றன : - பூவுலகில் மத்ய நியாயம் நிலவி இருப்பதைக் கண்ட தேவர்கள், உலகங்களைப் பரிபாலிப்பவரான மகா விஷ்ணுவிடம் சென்று துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்யக் கூடிய ஒருவனைச் சிருஷ்டித்து தரும்படி கேட்டு கொண்டார்கள் இதற்கிணங்க மகா விஷ்ணுவும், விரஜ என்ற அரசனைச் சிருஷ்டித்துக் கொடுத்தார், இவன், ஆளுந் தொழிலை மேற்கொள்ள மனமில்லாதவனாய்த் துறவு பூண்டான். இவனுக்குக் கீர்த்திமான் என்ற ஒரு மகனும், கீர்த்திமானுக்குக் கர்த்தமர் என்ற ஒரு மகனும் முறையே தோன்றினார்கள். ஆனால் இவர்களும் விரஜஸைப் போலவே, ஆளுந்தொழிலைச் செய்ய மனமில்லாமல் சந்நியாசத்தை மேற்கொண்டனர், கர்த்தமருக்கு அனங்கன் என்ற ஒரு மகன். இவன், அரசியல் சாதிரத்தை நன்கு பயின்று அதில் புலமையும் பெற்று ஜனங்கள் நீதியுடன் ஆண்டு வந்தான். இவனுக்கு வேனன் என்ற ஒரு மகன் இருந்தான். இவன் கீழான இச்சைகளுக்கு வசப்பட்டு அறநெறி தவறி நடந்து கொண்டான். ராஜ்யம் சீர்கெட்டுவிட்டது. ஜனங்கள் இவனைக் கொன்று விட்டார்கள். வேனனுக்கு பிருது என்ற ஒரு குமாரன் பிறந்தான். இவன் சிறந்த அரசியல் அறிஞன். இவன், ஜனங்களில் பெரியோர் களாயிருக்கப் பட்டவர்களை அணுகி நீங்கள் கட்டளையிடும் பயனுள்ள காரியத்தைச் செய்ய நான் சித்தமாயிருக்கிறேன் என்று கூறினான். அந்தப் பெரியோர்களும் - இவர்களை நமது முன்னோர்கள். ரிஷிகளென்றும் தேவர்களென்றும் அழைத் தார்கள். - பிருதுவைப் பார்த்து நீ எல்லா ஜனங்களையும் ஒரே மாதிரியாகப் பார்ப்பதாகவும், துஷ்டர்களைத் தண்டித்துக்ச் சிஷ்டர்களைக் காப்பாற்றுவதாகவும், பொதுவாக தர்மப்படி எல்லாக்காரியங்களையும் நடத்தி வருவதாகவும் வாக்குறுதி கொடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். இவனும் அப்படியே உறுதிமொழி கொடுத்தான். இதன் பிறகு அந்தப் பெரியவர்கள் இவனை அரசனாக ஏற்றுக்கொண்டு இவனுடைய ஆட்சி நிலைத்திருப்பதற்கான உதவி களைச் செய்தார்கள். இந்தப் பிருது அரசன் பூமியிலுள்ள மேடு பள்ளங்களையெல்லாம் சமப்படுத்தி, அநேக பொருள்கள் உற்பத்தியாவதற்கு வேண்டிய ஏற்பாடு களைச் செய்தான். இவன் ஆட்சியின் கீழ் ராஜ்யத்தின் ஜனத்தொகை அதிகமாயிற்று; விவசாயம் விருத்தியடைந்தது; பிரஜைகள் பயமின்றி வாழ்ந்தார்கள். பிருது மன்னனால் ஆளப்பட்டு அவனால் செழிப்படைந்த காரணத்தினால் இந்தப் பூமிக்குப் பிருதிவி என்று பெயர் வழங்க லாயிற்று.1 மற்றும் ஜனங்களை தர்மத்தின் மூலம் ரஞ்சிக்கச் செய்த காரணத்தினால் ராஜன் என்று, பூமியிலுள்ள பெரியோர்களுக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தைப் போக்கி அவர்களை ரட்சித்த காரணத் தினால் க்ஷத்திரியன் என்றும்1 முறையே இவன் அழைக்கப்பட்டான். விஷ்ணுவானவர் இவனை ஆசீர்வதித்து தமது அமிசத்தால் இவனிடம் பிரவேசஞ் செய்தார். அந்தக் காரணத்ல் இவ்வுலகம், அரசர்களைத் தேவர்களுக்கொப்பாக வணங்குகிறது மகாபாரத வரலாறுகள் இரண்டையும், அவற்றில் காணப்படும் ஒரிரண்டு வேற்றுமைகளை, அதாவது முதல் அரசன் மனுவா, விரஜஸா, அப்படியே முதல் அரசனைச் சிருஷ்டித்தது பிரம்மனா, விஷ்ணுவா என்ற வேற்றுமைகளைப் புறக்கணித்துவிட்டுத் தொகுப்பாகப் பார்த்தோ மானால், இரண்டுக்கும் அடிப்படையில் ஒற்றுமையான இரண்டு அமிசங்கள் இருப்பது நன்கு புலப்படும். ஒன்று, மத்ய நியாய நிலைக்கு முந்தியிருந்த நிலையை கிருத யுகமாகவே இரண்டு வரலாறுகளும் வருணித்திருக்கின்றன.மற்றொன்று, மனு அரசனும், அப்படியே விரஜ மன்னனும் அவனுடைய வழித் தோன்றல்களாகிய கீர்த்திமானும் கர்த்தமரும், தங்களுக்கு அரச பதவி வேண்டாமென்று முதலில் மறுக்கிறார்கள். ஆள்வதை ஓர் உரிமை யாகவும் பெருமையாகவும் கருதாமல் அதனைப் பெரிய பொறுப்பாகக் கருதி, அந்தப் பொறுப்பை வகிப்பது கடினமென்று கூறி அதனை ஏற்க பயப்படுகிறார்கள். அதாவது அரச பதவியானது முக்கியத்துவமும் மகத்துவமும் வாய்ந்தது, அதனை மற்றவர்களுடைய நன்மைக்காக ஏற்று நடத்துகிற ஒரு பொறுப்பாகவும் செய்கிற ஒரு கடமையாகவும் கொள்ள வேண்டுமென்ற கருத்து இவர்களுடைய பயத்திலே தொனிக்கிறது. மெய்யறிவு படைத்த பெரியோர்கள் இப்படித்தான் பயப்படுவார்கள். இவர்கள் ஆளப்படவேண்டியவர்களுடைய கட்டாயத்திற்காக ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்களே தவிர, தாங்களே ஆசைப் பட்டு அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்களில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இவர்கள், அரசனாக இருப்பது ஒரு பொறுப் பென்று கருதுகிறார்களே தவிர, பதவியாக, கௌரவமாகக் கருதுவதில்லை. இதே மாதிரியான கருத்தை, கிரேக்க அரசியல் ஞானியாகிய பிளேட்டோ, தனது அரசியல் என்னும் நூலில் தெரிவிக்கிறான் : - ஆளப்படவேண்டிய அவசியத்தை உணர்ந்தவர்கள், யாரொருவர் தகுந்தபடி ஆளக்கூடியவரோ அவரிடம் சென்று தங்களை ஆளுமாறு கேட்டுக் கெள்ளவேண்டும். அரசனாயிருக்கப் பட்டவன், தன்னுடைய பிரஜைகளுக்கு ஏதாவது பிரயோஜன முள்ளவனாயிருக்க வேண்டு மானால், அந்தப் பிரஜைகளைப் பார்த்து உங்களை நான் ஆள வேண்டியவன் என்று சொல்லக் கூடாது . . . . . - ஞானிகள், ராஜ்யத்தின் ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டாலன்றி எந்த ராஜ்யமும் அல்லது எந்தச் சட்டத்திட்டமும் அல்லது எந்தத் தனி மனிதனும் ஒழுங்காக இருக்க முடியாது. அரசர்களைப் பற்றிய பிளேட்டோவின் கற்பனை, அவனுடைய வெகு காலத்திற்கு முந்தியே நமது நாட்டில் அனுஷ்டானத்தில் இருந்திருக்கிறதென்று தெரிகிறபோது உண்மையில் நமக்குப் பெருமையே உண்டாகிறது.. சமுதாய ஒப்பந்த சித்தாந்தம், தெய்விக உரிமைச் சித்தாந்தம் என்ற இரண்டானுள், மேலைநாட்டைப் பொறுத்த மட்டில், தெய்விக உரிமைச் சித்தாந்தத்தையே மூத்தென்று சொல்ல வேண்டும். இந்தச் சித்தாந்தம், கொடுங்கோன்மைக்குத் தாயகமாகிவிட்ட விபரீதத்தைக் கண்டே சமுதாய ஒப்பந்த சித்தாந் தத்தைக் கிளத்தினர் ஒரு சில அறிஞர். ஆனால் இதுவும் பல்வேறு புரட்சிகளுக்குத் தாயாகிவிட்டது. இரண்டினாலும் விபரீத பலன்கள் விளைந்ததன் காரணம், இரண்டும் அதிதீவிரத்திற்குக் கொண்டுபோகப்பட்டதுதான். இங்ஙனம் அதிதீவிரத்திற்குக் கொண்டு போகக் கூடாதென்று எச்சரிக்கை கொடுத்து வந்த நல்லறிஞர்கள் அவ்வப் பொழுது தோன்றாமலில்லை. ஆனால் அவர்களுடைய குரல் தீவிரவாதி களின் செவியில் விழவில்லை. தெய்விக உரிமைச் சித்தாந்தமானது, அரசர்கள், சாதாரண மனித ரகத்தைச் சேர்ந்தவர்களல்லர், அவர்கள் தெய்வத்தின் அமிசம், தெய்வத்தின் பிரதிநிதிகளாக இருந்தே அவர்கள் ஆள்கிறார்கள், எப்படி தெய்வத்தினிடத்தில் எவ்வித குறைகளும் காண முடியாதோ அப்படியே அரசர்களிடத்திலும் குறைகள் காண முடியாது, காணவும் கூடாது, ஜனங்கள் எந்தச் சட்டங்களினால் ஆளப்படுகிறார்களோ அந்தச் சட்டங் களுக்கெல்லாம் அரசர்கள் விலக்கானவர்கள், அவர்கள் செய்கிற ஒவ்வொரு காரியமும் சரியாக இருக்குமே தவிர தவறாக இருக்க முடியாது, அவர்களை அரச பதவியிலிருந்து அப்புறப்படுத்த ஜனங்களுக்கு உரிமை இல்லையென்கிற மாதிரியான எண்ணங்களைப் பரவச் செய்துவிட்டது. இங்கிலாந்தில் ஆண்ட இரண்டாவது ஜேம்1 என்ற மன்னன், பார்லிமெண்ட் கூட்டமொன்றில் என்ன பேசினானென்பதைக் கேளுங்கள் : - அரசர்கள் நியாயமாகவே கடவுளர்களென்று அழைக்கப்படு கிறார்கள். ஏனெனில், அவர்கள் இந்நிலவுலகில் கடவுள் அமிசமாக விளங்குகிறார்கள். கடவுட்தன்மைகள் பலவும் ஓர் அரசனிடத்தில் குடி கொண்டிருப்பதை நீங்கள் நன்கு காணலாம். கடவுளுக்குத் தன்னிஷ்டப்படி ஒன்றை ஆக்கவும் அழிக்கவும், உயிர் கொடுக்கவும் போக்கவும், யாரைப் பற்றியும் தீர்ப்புச் சொல்லவும் ஆனால் யாராலும் தீர்ப்புச் சொல்லப்படா மலிருக்கவும் சக்தியுண்டல்லவா, அதுபோல அரசர்களுக்கும் உண்டு. அரசர்கள் தங்கள் விருப்பபடி பிரஜைகளை ஆட்டி வைக்கலாம்; உயர்த்வும் வீழ்த்தவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு; அப்படியே உயிர் கொடுக்கவும் வாங்கவும் அதிகாரமுண்டு. தங்களுடைய பிரஜைகளின் சகல விவகாரங் களைப் பற்றியும் அவர்கள் தீர்ப்புக் கூறலாம். ஆனால் அவர்கள், கடவுளைத் தவிர வேறுயாருக்கும் உத்தரவு சொல்ல வேண்டியதில்லை. கீழானவற்றை மேலாக்கவும் மேலானவற்றைக் கீழாக்கவும் அவர்கள் அதிகாரம் படைத்திருக் கிறார்கள். சதுரங்க விளையாட்டில் எப்படிக் காய்களை வைத்து ஆடுகிறோமோ அப்படியே அரசர்கள், பிரஜைகளை ஆட்டி வைக்கலாம். தெய்விக உரிமைச் சித்தாந்தம் எப்படி அதீதத்திற்குக் கொண்டு போகப்பட்டதோ அப்படியே சமுதாய ஒப்பந்த சித்தாந்தமும் அதீதத் திற்குக் கொண்டுபோகப்பட்டுவிட்டது. அரசாங்க நிருவாகத்தை ஏற்று நடத்த ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள், சர்வாதிகாரங்களும் பெற்று, கொடுங்கோன்மையின் பிரதிநிதிகளாவதற்கு அநேக ஏதுக்கள் ஏற்பட்டன. அப்படியே அநேகர் சர்வாதிகாரிகளாக இருந்து, ஜனங்களிட மிருந்து பெற்ற அதிகாரத்தை ஜனங்கள் மீதே பிரயோகித்தார்கள். அரசர்களுடைய தெய்விக உரிமையை மறுப்பதனால் என்னென்ன தீமைகளெல்லாம் அகலும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ அந்தத் தீமைகளெல்லாம், சமுதாய ஒப்ந்த சிந்தாந்தத்தை அமுலுக்குக் கொண்டு வந்ததனால் உண்டாயின. இங்ஙனம் இந்த இரண்ட சித்ந்தங்களும் முடிவில் ஒரே மாதிரியான விளைவுகளை உண்டுபண்ணியதோடு கூட, இந்த இரண்டு சித்தாந்த வாதிகளும், தங்களை வேறுவேறு இனத்தின ராகவும் பரபர விரோகி ளாகவும் கருதிக்கொண்டு விட்டனர். இதனால் விளைந்த விபரீதங்களும் பல. நமது நாட்டில், சமுதாய ஒப்பந்த சித்தாந்தமோ, தெய்விகக உரிமைச் சித்தாந்தமோ எதுவுமே அதிதீவிரத்திற்குக் கொண்டுபோகப் படவில்லை. ஏற்கனவே சொன்னதுபோல்,1 நமது முன்னோர்கள், எந்த ஒன்றையும் அதிதீவிரத்திற்குப் போகவிட்டு அதனால் அந்த ஒன்றையும் சங்கடத்திற்காளாக்கி, தாங்களும் சங்கடத்திற்காளாகவில்லை. என்றென்றும் பெருமை கொள்ள வேண்டிய விஷயமிது. மற்றும், இந்த இரண்டு சித்தாந்தங்களும் இணைந்தே காட்சியளித்தன; மேலை நாட்டைப் போல் வேறு வேறாகப் பிரிந்து நிற்கவில்லை. இதனால் அந்தச் சித்தாந்திக ளென்றும் இந்தச் சித்தாந்திகளென்றும் பிணக்குற்ற இரு பிரிவினர் நமது நாட்டில் தோன்றுவதற்கு ஏதுவே இல்லாமற் போயிற்று. பரபர ஒப்பந்தத்தின் மீது ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அரசன், அதிகாரங்களின் தேக்கமாகிவிடவில்லை. அப்படியே ஆளப் டுவதற்கு இசைந்த ஜனங்கள், கட்டுதிட்டங் களுக்குட்படாத ஒரு கும்ப லாகிவிடவில்லை. ஜனங்கள், தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை அரசனுக்குக் கொடுத்து வந்த காரணத்தினால், அவனைத் தங்கள் வேலையாளாகக் கருதவில்லை; அவனுக்குத் தெய்வ மரியாதைகளைக் கொடுத்து மிகக் கௌரவமாக நடத்தி வந்தார்கள். ஆனால் அரசன், ஜனங்களிடமிருந்து பொன்னையோ பொருளையோ வரியாகப் பொறு கிறேமெயென்று, அவர்களுடைய வேலையாளாகத் தன்னைக் கருதிக் கொண்டு அவர்களுடைய நன்மைக்காக உழைத்து வந்தான். இந்த இடத்தில் வாசகர்கள் சிறிது சிந்தித்துப்பார்க்க வேண்டும். எஜமானத்துவம் என்பது, அதாவது அரசனை நியமிப்பதோ விலக்குவதோ இரண்டு அதிகாரங்களும் முடிவில் ஜனங்களிடத்தில்தான் இருந்ததென்றாலும், அவர்கள் எஜமானர் களாக நடந்து கொள்ளவில்லை; அதே பிரகாரம் அரசன், ஜனங்க ளுடைய வேலையாளாக உழைத்து வந்தபோதிலும், வேலையாள் போல் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. ஜனங்களுக்கு வரி கொடுக்ககிறோமென்ற எண்ணமில்லாமலிருந்தது; ஆனால் அரசனுக்கு, வரி வாங்குகிறோமென்ற எண்ணம் நிறைய இருந்தது. இந்த வரி மூலம், தன்னைக் காப்பாற்றிக் கொள்வது, ஜனங்களைக் காப்பாற்றுவதற்காகவே என்பதை அவன் நன்றாக உணர்ந்திருந் தான். காப்பாற்றப்படாத நிலையில், அதாவது களவு முதலியவற்றின் விளைவாக ஜனங்கள், தங்கள் சொத்து பற்றுக்களை இழந்து விடுவார் களானால், அவற்றிற்குத் தன்சொந்தப் பணத்திலிருந்து ஈடு செலுத்த வேண்டியது அரசனது கடமையாகக் கூறப்பட்டிருக்கிறது. இஃதொன்றைக் கொண்டே, அரசன் மீது எத்தகைய மகத்தான பொறுப்பு சுமத்தப் பட்டிருந்ததென்பதை ஒருவாறு தெரிந்து கொள்ளலாம், ஆக சமுதாய ஒப்பந்த சித்தாந்தமென்பது, நமது நாட்டைப் பொறுத்தமட்டில், அரசனையும் ஜனங்களையும் பிணைத்து வைக்கின்ற பாலமாயமைந் திருந்தது. இனி, தெய்விக உரிமைச் சித்தாந்தத்திற்கு வருவோம். முதலில் ஒரு விஷயம். அரசனை, தெய்வத் தன்மையுடையவனாகக் கருதிப் போற்றி வந்தது. நமது நாட்டிற்குப் புதிதல்ல; பிரத்தியேகமானது மல்ல. உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலும், எல்லா ஜாதியாரி டையிலும் இந்த வழக்கம் அல்லது நம்பிக்கை இருந்து வந்திருக்கிறது. கிழக்கே ஜப்பானில், அரசன் சூரியனுடைய வழித்தோன்றலாகவே போற்றப்பட்டு வந்திருக் கிறான். சாதாரண ஜனங்களுடைய கண்பார்வைகூட அவன் மேல் விழுதல் கூடாதென்று கண்டிப்புச் செய்யப்பட்டிருந்தது. மேற்கே பெரு நாட்டில் சிறப்புற ஆண்டுவந்த இன்காக்கள் என்று அழைக்கப்பட்ட அரசர்கள், சூரியனுடைய மக்களாகக் கருதப்பட்டு வந்தனர்,. இன்னும், வடக்கே நியூஜீலந்திலிருந்து தெற்கே பிஜி தீவு வரையுள்ள எல்லாச் சிறிய பிரதேசங்களிலும் பெரிய நாடுகளிலும் அரசன், கடவுளாகவே வந்தனை செய்யப்பட்டு வந்திருக்கிறான். நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்திருந்த எகிப்தியர்களென்ன, பாபிலோனியர்களென்ன, கிரேக்கர்களென்ன, ரோமர் களென்ன இப்படிப்பட்டவர்களும், உடம்பிலே பச்சை குத்திக்கொண்டு நாடோடி வாழ்க்கையை நடத்தி வந்த ஜாதியார் பலரும் அரசனுக்குக் கடவுள் மரியாதையையே செலுத்தி வந்திருக்கின்றனர். எகிப்தியர்கள், தங்கள் கைகளால் முகத்தை மூடிக் கொண்டுதான் அரசனை வணங்குவார்கள். ஏனெனின், சூரியனை உற்றுப்பார்த்தால் எப்படிக் கண்கூசுமோ அதுபோல், அந்தச் சூரியனின் மனித வடிவமான அரசனைப் பார்த்தாலும் கண்கூசிப்போகும் என்று அவர்கள் நம்பினார்கள். பாபிலோனியாவை ஆண்ட ஹாம்முராபி1 என்ற அரசன், தன்னைச் சூரிய தேவன் என்றே சொல்லிக் கொண்டான். மகா அலெக்ஸாந்தர்,2 தன்னை ஜூ தெய்வத்தின்3 (வியாழக் கடவுளின் ) மகனென்று அழைத்துக் கொண்டான். இந்த மாதிரியான உதாரணங்களை ஒன்றன் பின்னொன் றாக அடுக்கிக் கொண்டு போகலாம். ஆனால் அது தனி நூலாக விரியும். பிற நாட்டினர் அரசனைக் கடவுளாகவே வணங்கி வந்திருக் கின்றனர்; நம்மவரோ, கடவுளைப் போன்றவனாகப் போற்றி வந்திருக் கின்றனர். ஒரு சில நாட்டினர், இறந்துபோன அரசர் மீது கோயில்கள் எழுப்பினர். நமது நாட்டிலோ, அரசர்களே, தங்களுக்கு மேற்பட்ட தெய்வங் களுண்டென்று நம்பி அவைகளுக்குக் கோயில்கள் கட்டினர். பிற நாட்டினர், அரசனைக் கடவுளாகக் கருதியதன் விளைவாக அவனுடைய சக்திக்கோ, அதிகாரங்களுக்கோ எல்லையில்லையென்று நம்பினர். நம்மவரோ, அரசனின் சக்திக்கும் அதிகாரங்களுக்கும் வரம்புகட்டி வைத்தனர். இந்த வித்தியாசங்களை நேயர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறோம். அரசனாயிருப்பது பெரிய பொறுப்பு என்று மேலே சொன்னோ மல்லவா, இந்தப் பொறுப்பை ஒருவன் ஒழுங்காக நிறைவேற்றிவர வேண்டுமானால் அவனிடம் சில மோலான சக்திகள் - தெய்வ சக்திகள் - குடிகொண்டிருக்க வேண்டியது அவசியமென்று கருப்பட்டது. இதை முன்னிட்டு, அவன் அரசனாகத் தெரிந்தெடுக்கப்படுகிற காலத்தில், அவனுக்குப் பல தெய்வங்களின் நல்லாசி கிடைக்கவேண்டு மென்று கோரப்பட்டது. ருக் வேதத்திலும், அதர்வண வேதத்திலும், அரசனாகத் தெரிந் தெடுக்கப்படுகிறவனைப் பார்த்து (அரச பதவியில் இந்திரனைப் போல் உறுதியாக நிற்பாயாக - ராஷ்டிரத்தை (ராஜ்யத்தை) தரிப்பாயாக; ராஜாவான வருணனும், தேவனான பிரகபதியும், இந்திரனும், அக்கினியும், ராஜ்யதை உன்னிடம் நிலைபெறச் செய்வார்களாக - இந்திரனால் (அரசபதவியில்) அமர்த்தப்பட்ட இவனை ஸோமனும் பிராம்மணபதியும் ஆசீர்வதிக்கட்டும் - இவனுக்குப் பிரபு சக்தி (ஆளுஞ் சக்தி) உண்டாகட்டும் - சர்வதிசைகளும் இவைனைச் சம்மானிக்கட்டும் என்று இப்படி யெல்லாம் சொல்லப்பட்டிருப்பதைக் கேட்கிற போது, அரசனுடைய நல்லாட்சிக்குச் சகல தெய்வங்களின் நல்லாசி கோரப்பட்டதென்பது நன்கு தெரிய வருகிறது. தெய்வங்களின் நல்லாசி மட்டும் கிடைத்துவிட்டால் போதுமா? அந்தத் தெய்வங்களின் சக்திகளும் அவனுக்கு ஏற்பட வேண்டு மல்லவா? இதற்காக அரசபதவியில் அவனை ஊர்ஜிதம் செய்ய மகுடாபிக்ஷேகச் சடங்குகள் நடைபெறுகிற காலத்தில், எந்தெந்தத் தெய்வத்திற்கு என்னென்ன சக்தியுண்டென்று கருதப்பட்டும் நம்பப் பட்டும் வந்ததோ அந்தந்தத் தெய்வமும் அதனதன் சக்தியை அவனுக்கு அளிக்கவேண்டுமென்று பிரார்த்திக்கப்பட்டது. உற்சாகசக்திக்கு ஸவிதாவும், குடும்ப தர்மத்திற்கு காருகபத்திய அக்கினியும், வனபதி களைக் காக்கும் சக்திக்கு ஸோமனும், நாவன்மைக்கு பிரகபதியும், பிரபு சக்திக்கு இந்திரனும், கால்நடைகளைப் பாதுகாக்கும் சக்திக்கு ருத்ரனும், சத்தியத்திற்கு மித்திரனும், தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு வருணனும் முறையே பிரார்த்திக்கப்பட்டார்கள். சரி; பிரார்த்தனை பலன் கொடுக்கிறது. அரசனாகத் தெரிந் தெடுக்கப்பட்டவன், மேற்படி தெய்வங்களின் சக்திகளனைத்தையும் பெற்றவனாகிறான். பிறகு அந்தத் தெய்வங்கள், என்னென்ன காரியங் களை ஒழுங்காகச் செய்து வருகின்றனவோ அந்தக் காரியங்கள் பலவும் அவனது கடமைகளாகின்றன. அவன், சூரியனைப்போல் சத்துருக் களையும் தர்ம விரோதிகளையும் எரிக்கிறான்; இந்திரனைப் போல் காலாகாலத்தில் மழை பொழியச் செய்து சுபிட்சத்தை உண்டு பண்ணுகிறான்; வாயுவைப் போல் ராஜ்யம் பூராவிலும் ஒற்றர்கள் மூலம் பரவியிருக்கிறான்; யமனைப்போல் எல்லோரையும் பட்சபாத மில்லாமல் நடத்துகிறான்; இப்படி, இப்படி. பல்வேறு தெய்வங்களின் தொழில்களுக்கும் அரசனது பல்வேறு கடமைகளுக்கும் எத்தனை விதமான ஒற்றுமைகளைக் கண்டு சொல்லியிருக்கின்றன நமது நூல்கள்! உதாரணமாக, மகாபாரதம் சாந்தி பர்வம் கூறுகிறது : - அரசன், சமீபத்திலிருக்கும் தீய நடக்கையுள்ள பாபிகளைத் தனது தேஜஸினால் சுட்டுவிடுங்கால் அக்கினியாகிறான்; ஒற்றர்கள் மூலமாக ஜனங்களில் நிலைமையைப்பார்த்து அவர்களுக்கு நன்மையைச் செய்யுங்கால் சூரியனாகிறான்; நல்லவர்களை ரட்சித்தும் கெட்டவர் களைச் சிட்சித்தும் வருங்கால் யமனாகிறான்; ராஜ்யத்தில் செல்வத்தை வளர்க்குங்கால் குபேரனாகிறான். சுக்கிர நீதி தெரிவிக்கிறது: - இந்திரன், வேள்விகள் மூலம் தனக்குரிய பாகத்தைப் பெற்று உலகத்தைக் காத்து வருவது போல் அரசன், ஜனங்களிடமிருந்து ஆறில் ஒரு பகுதியை வரியாகப்பெற்று அவர்களை ரட்சிக்கிறான். வாயு, நல்லகாற்றை எங்கணும் பரவச் செய்வதுபோல் அரசன் கெட்ட செயல் களை அழித்து நல்ல செயல்களைச் செய்விக்கிறான். சூரியன், இருளைய கற்றி வெளிச்சம் கொடுப்பதுபோல் அரசன், மறத்தைப் போக்கி அறத்தை நிலைபெறச் செய்கிறான். யமனைப்போல் அரசன், துஷ்டர்களைத் தண்டிக்கிறான். அக்கினியைப் போல் அரசன் தூய்மையுடையவனாயிருக் கிறான். வருணன், மழை பெய்வித்து உலகத்தைச் செழுமையுறச் செய்வதுபோல் அரசன், தான் கொடுக்கும் பொருள்களால் செழுமையுறச் செய்கிறான். சந்திரன், தன் கிரணங்களால் எல்லோரையும் இன்புறுத்துவது அரசன், தன் நற்குண நற்செயல்களால் இன்புறுத்துகிறான். குபேரன், செல்வத்தைப் பாதுகாப்பதில் திறமையுடையவனாதல்போல் அரசன், ராஜ்யத்தின் செல்வத்தைக் காப்பதில் திறமையுடையவனாயிருக்கிறான். இப்படி ஒவ்வொரு நூலும், ஒவ்வொரு தெய்வத்தின் தொழிலை ஒவ்வொரு விதமாகச் சொல்லி, அந்த ஒவ்வொரு தொழிலையும் அரசனுடைய ஒவ்வொரு கடமையிலும் ஏற்றியிருக்கின்றது. இதனை அரசயில் பண்டிதர்களின் கற்பனையென்று ஒரு சிலர் கருதலா மாயினும், அந்தக் கற்பனையின் திரண்ட நோக்கம், அரசனின் பல்வேறு கடமைகளையும், அந்தக் கடமைகளின் மகத்துவத்தையும உணர்த்து வதற்கே என்பதை நாம் கவனிக்கவேண்டும். எவன் தன் கடமைகளை உணர்ந்து ஒழுங்காகச் செய்து வந்தானோ அவன், அந்த அரசன் தெய்வாமிசங்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்ட ஒருவனாக, தெய்வ சக்திகள் பலவும் நிரம்பப் பெற்ற ஒருவனாக, தெய்வம் போன்றவனாகப் போற்றப்பட்டா னென்றால் அதில் ஆச்சரிய மென்ன இருக்கிறது? தெய்வம் போன்ற அரசனை தெய்வ மாகவே சில நூல்கள் வருணித்திருக்கின்றனவே யென்றால், அதனை ஓர் உபசார வழக்காகவே கொள்ள வேண்டும். ஆனால் இப்படி வருணித்திருப்பதிலும் அர்த்தமில்லா மலில்லை; உட்கருத்துக்கல் பல உண்டு. அரசனைக் கடவுளென்றோ, கடவுட் தன்மையனென்றோ சொல்லி விட்டால் அவனுடைய ஆளுகையில் யாருக்கும் அவநம்பிக்கை ஏற்படாது. அவநம்பிக்கை உள்ள இடத்தில் அதிருப்தி தோன்றுமல்லவா? அதிருப்தி தோன்றினால் அமைதிக்கு இடமேது? ராஜ்யத்தில் எப்பொழுதும் அமைதி நிலவியிருக்கவேண்டு மென்ற அடிப்படைக் கருத்தைக் கொண்டுதான், ஏற்கனவே சொன்னபடி ஜனங்களுடைய க்ஷேமத்திற்காகத்தான், அரசனைக் கடவுளோடு தொடர்பு படுத்தி வைத்தனர். கடவுள் நம்பிக்கை நிறைந்த நமது நாட்டில், கடவுளுக்கு விரோதமாக எண்ணுவதோ, பேசுவதோ, செய்வதோ பாவமென்று கருதப்பட்டு வந்திருக்கிறது. கடவுளோடு அரசனை இணைத்து விட்டால், ராஜ்யத்தில் அவனுக்கு விரோதமாக எண்ணவோ, பேசவோ, செய்யவோ ஜனங்கள் துணியார்கள்; துணிதல் பாவமாகி விடுமல்லவா? ராஜத் துரோகத்திற்கு வழி ஏற்படாமலிருக்க, இதைக் காட்டிலும் சிறந்த முறை வேறு என்ன இருக்கிறது?1 அரசன் இயற்றும் சட்டதிட்டங்கள், அவ்வப்பொழுது பிறப்பிக்கும் உத்தரவுகள், பிரம நீதிபதியாக இருந்து செய்யும் தீர்ப்புக்கள் ஆகியவை களைப் பற்றி ஜனங்கள் விமர்சனம் செய்யத் தொடங்குவார்களானால் அதற்கு முடிவே இராது. ஒவ்வொன்றின் மீதும் வாதப் பிரதிவாதங்கள், கட்சிப் பிரதிகட்சிகள் எழுந்து கொண்டிருக்கும். அப்பொழுது சட்ட திட்டங்களுக்கோ, உத்தரவுகளுக்கோ, தீர்ப்புக்களுக்கோ மதிப்பில்லாமற் போகும். அரசாங்க நிருவாக யந்திரமும் ஒழுங்காக ஓடாது. எந்த விவகாரமும் திரத் தன்மையற்றதாகிவிடும். எனவே அரசனை, விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் - கடவுள் நிலையில் - வைத்து விட்டால் அவனிடமிருந்து பிறக்கும் எதனையும் ஜனங்கள் மதித்து நடப்பார்கள். மற்றும், குற்றங் குறைகள் எங்கும் உண்டு; எதிலும் உண்டு. அவைகளை மட்டும் கண்டுகொண்டுபோனால், நல்வைகளைக் காண் கின்ற தன்மையே மழுங்கிப்போய் நாளாவட்டத்தில் மறைந்தும்போகும். இதனால் ஜனங்களும் குற்றங் குறைகள் நிறைந்தவர்களாகி விடுவார்கள்; ராஜ்யமும் சீர்கெட்டுவிடும். இந்த நிலைமைக்கு இடந்தராதிருக்க வேண்டுமென்பதற்காக, குற்றங் குறைகளற்ற கடவுள் நிலையில் அரசனை வைத்துப் பேசினார்க ளென்று செல்லலாம். இந்த மாதிரியான கருத்துக்களை மனத்தில் வாங்கிக் கொண்டு தான், அரசனைப் பற்றித் தர்ம சாதிரங்களிலுள்ள சில வாசகங்களைப் பார்த்தல் வேண்டும். அரசன் சிறுவனாக இருந்தால், சிறு பையன்தானே என்று அவனை இகழக்கூடாது. ஏனெனின் அவன் மனித உருவத்திலே யுள்ள ஒரு மேலான தெய்வம். - அரசன் அளிக்கிற தீர்ப்பு நியாய மாயிருக்கிறதோ அநியாயமாயிருக்கிறதோ அதையே, விவகாரத்தில் ஈடுப்பட்டிருக்கிறவர்கள் சட்டமாக ஏற்றுக் கொண்டுவிட வேண்டும். - கணவன்மார், குணசாலிகளாயில்லாதிருந்த போதிலும் அவர்களை எப்படி மனைவிமார் பூஜிக்கின்றனரோ அப்படியே அரசர்கள் குணசாலிகளா யில்லா திருந்தாலும் அவர்களிடத்தில் பிரஜைகள் விசுவாசத்துடன் நடந்து கொள்ள வேண்டும். - இவைபோன்ற சில வாசகங்களை வார்த்தைக்கு வார்த்தையாக அர்த்தப்படுத்திப் பார்த்தோமானால் விபரீத மாகவேபடும்; அரசனுடைய சர்வாதிகாரத்திற்கு ஆக்கங் கொடுத்திருப்பது போலவே தோன்றும். ஆனால் அப்படியில்லை; இல்லவே இல்லை. இங்ஙனம் அரசனைக் கடவுள் நிலையிலே வைத்துச் சொன்ன தெல்லாம் ஜனங்கள் அவனை எந்தக் கோணத்தில் வைத்துப் பார்க்க வேண்டுமென்பதற்காகவேயாம்; அவர்களுடைய பார்வையில் அவன் மேலானவனாக இருக்கவேண்டு மென்பதற்குத்தான். ஆனால் அவனைப் பொறுத்தமட்டில் அவன் எந்த விலையில் நிற்க வேண்டும்? தன்னைப்பபார்த்துக் கொள்ளவேண்டும்? இங்குதான் நமது முன்னோர் களின் அனுபவ அறிவு நன்கு வெளிப்படுகிறது. அரசன், ஜனங்களுக்கு மேம்பட்டவன்தான்; ஆனால் தர்மத் திற்க் கீழ்ப்பட்டவன். தர்மத்தை அனுசரித்து நடக்கிற வரையில் தான் அவன் அரசன். எந்த நிமிஷத்தில்அவன் தர்மத்தினின்று வழுவி விடுகிறானோ அந்த நிமிஷத்திலேயே அவன் அரசனாயிருக்கப்தினின்று நழுவி விடுகிறான். தர்மத்தைக் கடைப்பிடிக்கிற அரசனைத்தான் தெய்வாமிசம் என்று சொல்ல வேண்டும்; அப்படியில்லாதவன் ராட்சத அமிசமே என்ற சுக்கிர நீதி வாசகம் இங்குக் கவனிக்கத்த தக்கது. அரசனுடைய தர்மம் என்ன? ஜனங்களை, தர்மத்தை அனுசரிக்கும் படி செய்வதுதான். இதற்காக அவனுக்குத் தண்டம் என்ற கருவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவும், தெய் சிருஷ்டியே; தர்மத்தின் உருவமே. இதனைத் தரித்திருப்பதனாலேயே அவன் தெய்வத்தன்மை யுடைய வனாகிறான். இதனை நேர்மையாகப்பிரயோகிக்காத அரசன், தர்மம் தவறியவனாகிறான். அவனை இந்தத் தண்டமே நாசஞ் செய்து விடுகிறது. அரசன், கடவுள் அமிசம், கடவுட் சக்தி பெற்றவன் என்பதெல்லாம் எதற்காக? ஜனங்களுக்கு விரோதமான காரியங்களைச் செய்வதற்காகவா? தீமையைச் செய்ய, கடவுள் அமிசமோ, கடவுட் சக்தியோ வேண்டுமா என்ன? இல்லை, இல்லை. ஜனங்களுடைய நன்மையை நாடவே, அந்த ஜனங் களுக்கு நன்மையைச் செய்யவே அவன் கடவுள் அமிசமாயிருக்கிறான்; கடவுட் சக்தி நிரம்பியவனாயிருக்கிறான். அப்படி நன்மையை நாடாத, செய்யாத அரசன், கடவுள் அமிசமான, கடவுட் சக்தியுடைய அரசணல்லன்; ஜனங்களுடைய மதிப்பினின்று விழுந்து பட்டவனாகிறான். அரசன், தன் சொந்த விருப்புவெறுப்புக்களை முன்னிட்டுக் கொண்டு எந்த ஒரு சட்டத்தையும் இயற்றக் கூடாது; எந்த ஒர் உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது.தர்மத்தை அனுசரித் தனவாகவே அவன் இயற்றுகிற சட்டங்களோ, பிறப்பிக்கிற உத்தரவுகளோ இருக்க வேண்டும். தர்மத்தை மாற்றியமைக்க எந்த அரசனுக்கும் அதிகாரம் கிடையாது. இந்தத் தர்மத்தை விளக்கிச் சொல்லுவதாகவோ, இதை எப்படி அனுஷ்டானத்தில் கொண்டு வருவது என்பதை தெளிவு படுத்திக் காட்டுவதாகவோ அவன் இயற்றுகிற சட்டங்கள், பிறப்பிக் கிற உத்தரவுகள் இருக்கவேண்டும். இந்தச் சட்டங்களுக்கு, இந்த உத்தரவுகளுக்கு ராஜசாஸனங்கள் என்று பெயர். இவற்றையும் அரசன், தர்மத்தை நன்கறிந்த பெரியோர்களின் ஆலோசனையைக் கேட்டுத்தான் செய்ய வேண்டும். அரசு, சாசுவதமானதென்று ஏற்கனவே மூன்றாவது அத்தி யாயத்தில் சொல்லியிருக்கிறோம். இங்ஙனம் சாசுவதமாயிருக்கிற காரணத்தினால் அது சாசுவதமானயுள்ள கடவுளைப் போன்றது; அடிக்கடி மாறக்கூடியதன்று. அதனின்று பிரிக்க முடியாத, அதனைச் சார்ந்தே இருக்க வேண்டிய அரசனோ அடிக்கடி மாறக்கூடியவன். இருந்தாலும், கடவுளைப்போல் சாசுவதமாயுள்ள அரசைச் சார்ந்திருப்பதனால் அவனும் கடவுட் தன்மையுடையவனாகிறான்; ஆனால் அரசைச் சார்ந்திருக்கிற வரையில் தான். அதாவது, அரசனென்னும் மனித உருவம், தெய்வத் தன்மையுடையதாக மதிக்கப்படவில்லையென்றும், அவன், எதைச் சார்ந்தவனாயிருக்கிறானோ, எது இல்லாமற்போனால் அவன் அரசனில்லையோ, அஃது, அந்த அரசு தான், அளுஞ் சக்திதான் தெய்வத் தன்மையுடையதாக மதிக்கப்பட்டதென்றும், அந்தச் சக்கியைத் தன்னகத்தே கொண்டிருக்கிற அரசனே, கொண்டிருக்கிற வரையில் தெய்வத் தன்மையுடையவனாகப் போற்றப்பட்டா னென்றும் நாம் கொள்வோமானால், அது பொருத்தமாயிருக்கு மென்று சொல்லி இந்த அத்தியாயத்தை முடிப்போம். 6. மகுடாபிஷேகம் பரம்பரை பாத்தியங் காரணமாகவோ, வேறு தகுதிகள் இருப்பத னாலோ, ஒருவன் அரசனாகத் தெரிந்தெடுக்கப்படலாம்; அதனாலேயே அவன் அரசனாகிவிடமாட்டான்; ஆளுந்தகுதி அவனுக்கு ஏற்பட்டுவிடாது. அவன் தெரிந்தெடுக்கப்பட்டது, பலருடைய முன்னிலையில், பலருடைய ஒத்துழைப்பின் மீது உறுதிப்பட வேண்டும். உறுதிப்படுத்துவதே ராஜ்யாபிஷேகம்; பட்டாபிஷேகம் என்றும் கூறுவர். தற்காலச் சொல் வழக்கை யொட்டி மகுடாபிஷேகமென்று இங்குச் சொல்லிக் கொண்டு போகிறோம். இந்த மகுடாபிஷேகம், ஆதிகாலத்தில எல்லா நாடுகளிலும் நடை பெற்று வந்திருக்கிறது; இப்பொழுதும் முடியாட்சி நிலவும் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான சடங்குகளும். இந்தச் சடங்குகளுக்கு அடிப்படையிலுள்ள கருத்துக்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்து வந்திருக்கின்றன. ஒன்றோ டொன்றை ஒப்பிட்டுக் காட்டினால் வாசகர்கள் ஆச்சரியப்படு வார்கள். ஆனால் இங்கு அது நமது வேலையல்லவே; நமது நாட்டின் மீதல்லவோ நாட்டஞ் செலுத்த முற்பட்டிருக்கிறோம். இந்த மகுடாபிஷேகம், வேத காலத்தின் ஆரம்ப தசையில், காரியத்தையே பிரதானமாகக் கொண்டு மிகவும் சுருங்கிய முறையில் நடைபெற்று வந்தது. ஜனங்கள் ஒரு சபையாகக் கூடி, அரசனாக ஒருவனை ஏகமனத்துடன் தெரிந்தெடுந்து, அவனிடம் விசுவாசத்துடன் நடந்து கொள்வதாகத் தெரிவிப்பார்கள். நீ ராஜ்யத்தை இழந்து விடா திருக்க வேண்டி எல்லா ஜனங்களும் உன்னிடம் விசுவாசம் வைப்பார் களாக என்று ஓர் அரசனைப் பார்த்துக் கூறுகிறது ருக்வேதம். ஜனங் களுடைய விசுவாசத்தை இழந்துவிட்ட அரசன், ராஜ்யத்தை இழந்து விடுதல் கூடுமென்பது இதன் மூலம் வலியுறுத்தப்பட்டது. ஜனங்கள், ஒருவனை அரசனாகத் தெரிந்தெடுத்தார்களென்று சொன்னாலும், அந்த ஒருவனைத் தெரிந்தெடுக்கும்படி செய்தவர்கள் ஒரு சிலராகத் தானே இருக்க முடியும்? அப்படித்தான் இருந்தார்கள், இந்த ஒரு சிலர் யார்? அரசனாக ஒருவன் தெரிந்தெடுக்கப்பட்டுவதற்கு முன்னரி ருந்தே அரசாங்கமென்பது நடைபெற்று வந்ததல்லவா, அதனை - அந்த அரசாங்கத்தை - நடத்தி வந்த மந்திரிப் பிரதானிகள் முதலியோர். இவர்கள், தகுதியுள்ள ஒருவனைத் தெரிந்தெடுத்து, இவனை அரசனாக்குங்கள் என்று சபையினருக்குச் சொல்ல, அவர்களும் தங்கள் சம்மதத்தைத் தெரிவிப்பார்கள். எனவே ஒருவனை அரசனாக்கியது உண்மையில் மந்திரிப் பிரதானிகளே. இதனால் இவர்கள் ராஜகர்த்தர் களென்று அழைக்கப்பட்டார்கள். இந்த ராஜ கர்த்தர்கள், ஆரம்ப தசையில் ஒரு சிலராகவே இருந்தார்கள்; ஐந்தாறு பேருக்கு மேல் இல்லையென்று சொல்லலாம். இருந்தாலும் இவர்கள் ஜனங்களிடத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர் களாகவும், ஜனங்களுடைய விருப்பு வெறுப்புக்களைக் கூடிய மட்டில் அனுசரித்து நடக்கிறவர்களாகவும் இருந்தார்கள். மற்றும் இவர்கள், ஜன சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்களாக மட்டு மில்லாமல், எல்லா வகுப்புக்களிலிருந்தும் வந்தவர்களாயிருந் தார்கள். அதாவது இவர்கள், அரசாங்கத்தை நடத்தி வந்த நேர்மையான அதிகாரி களாக மட்டுமில்லை; ஜனங்களின் உண்மையான பிரதிநிதிகளாகவும் இருந்தார்கள். இது நிற்க. அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டவனை உயராமான ஓர் ஆசனத்தில் அமரச் செய்து, மந்திரிப் பிரதானிகள் உள்பட சபையினர் அனைவரும், பலாச மரத்தினால் தயாரிக்கப்பட்ட ஒரு கங்கணத்தை அவனுக்குக் கொடுப்பார்கள். இதற்கு மணியென்று பெயர்; பலாச மணியென்றும் சொல்வார்கள். இதன் மூலம், ஆளும் அதிகாரத்தை அவனுக்குக் கொடுக் கிறார் களென்பது தாத்பரியம். இதிலிருந்து, ஆளும் அதிகாரத்தை அரனுக்குக் கொடுக்கிற அதிகாரம் ஆதி காலத்திலிருந்து ஜனங்களிடமே இருந்து வந்ததென்பது தெரியவரும். மணியைப் பெற்றுக் கொண்டதும் அவன் - அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டவன் - அந்த மணியை நோக்கி கூடியிருக் கிறவர்கள் அனைவரையும், ராஜ்ய நிருவாகத்தில் எனக்குச் சகாக்களாக இருக்கும் படி செய்வாயாக என்று பிரார்த்தித்துக் கேட்டுக்கொள்வான். பிறகு சுத்த ஜலத்தினால் அவனுக்கு அபிஷேகம் நடைபெறும், இதிலிருந்து அவன் அரசன்; அவன் ஆணை செல்லுபடியாகத் தொடங்கும். மகுடாபிஷேகமும் ஒருவாறு முடிவுறும். ஆரம்ப தசையில் இங்ஙனம் சுருங்கிய முறையில் நடைபெற்று வந்த மகுடாபிஷேகமானது, பின்னர் பிராம்மணங்கள் காலத்தில் - இதுவும் வேத காலமேயென்பதை நாம் ஞாபகப்படுத்தப்படுத்தத் தேவை யில்லையல்லவா? - விரிந்த முறையில் ஆனால் முந்திய அடிப்படையின் மீதே நடைபெறத் துவங்கியது. இது சம்பந்தமான சடங்குகளும் அதிகரித்தன. இன்னின்ன சடங்குகள் செய்யப்பட வேண்டுமென்றும், இன்ன சடங்குக்குப் பிறகு இன்ன சடங்கு என்றும், இவைகளை எப்படி எப்படிச் செய்ய வேண்டுமென்பதைப் பற்றிய விதிகளும் இந்தக் காலத்தில் ஒருவாறு நிர்ணயம் பெற்றன. இவைகளைப் பின்பற்றியே பிற்காலத்து மகுடாபிஷேகங்கள் நடைபெற்றன. காலத்திற்கேற்ற சிற்சில மாறுதல்கள் செய்து கொள்ளப்பட்டனவென்றாலும், முக்கிய அமிசங்கள் பலவும் பிராம்மணங்கள் காலத்தில் நிர்ணயிக்கப்பெற்ற வண்ணமே இருந்தன. மகுடாபிஷேக சம்பந்தமான சடங்குகளை ராஜசூயம் என்றனர் நமது முன்னோர். இதனை ஒரு யாகமாகவே கூறினர். யாகமென்ற மாத்திரத்தில் ஏதோ சமயச் சார்புடையது போலும் என்று எண்ணி விடக்கூடாது. அரசியல் சார்புடையதேயாகும் இது. இந்த ராஜசூயத்தில், பூர்வாங்கமாகச் சில சடங்குகள் நடை பெறும்; பின்னர் அபிஷேகம்; அதற்குப் பிறகு சில சடங்குகள்; இவற்றோடு முடியும். இவற்றுள், நடுவே நடைபெறுகினற அபிஷேகந்தான் முக்கியம். இதனால்தான் ராஜ்யாபிஷேகமென்று அழைத்தனர். சடங்குகள் அனைத்தையும் சேர்த்து. அபிஷேக நீர்தான், தெரிந்தெடுக்கப் பட்டவனைப் புனிதப்படுத்தி, மகுடந்தரித்துக் கொள் வதற்குரியவனாக்கு கிறது: அவனுடைய தனித்துவத்தைப் போக்கி, ராஜத்துவமென்றும், சுவாமித்துவ மென்றும் முந்திச் சொன்னோமே,1 அதனை, அந்த ஆளுஞ்சக்தியை அவனுக்கு அளிக்கிறது. ராஜ்ய லட்சுமி அவனை வந்தடைகிறாள். மந்திரிப் பிரதானிகளைச் சம்பிரதாயமாக நியமிக்கிற அதிகாரம், அப்பொழுதான் அவனுக்கு ஏற்படுகிறது. அதாவது, அவனுடைய நிஜமான ஆட்சி அப்பொழுதிருந்தே ஆரம்பிக்கிறது. இதனாலேயே, ஓர் அரசனுடைய ஆட்சிக் காலத்தை, அவன் மகுடாபிஷேகம் செய்து கொண்டதிலிருந்தே கணிக்கப்படவேண்டுமென்ற நியதி ஏற்பட்டது. அபிஷேக நீரினால் நனையப் பெறாதவன் க்ஷத்திரியனாயிருந் தாலும் சரி, வேறு பல யோக்கியதைகளையுடையவனாயிருந் தாலும் சரி, அரசனாக அங்கீகரிக்கப்பட்ட தில்லை, நமது நாட்டில் எப்பொழுதுமே. ஓர் உதாரணம். மகாராஷ்டிர திலகமாகிய சிவாஜி, எத்தனையோ வெற்றிகளை யடைந்தான். அநேக பிரதேசங்களில் அவனுடைய ஆதிக்கம் நிலவியது. ஆயினும் அவனுடைய சர்தார்கள் அவனுக்கு அரச மரியாதைகளைச் செலுத்த மறுத்துவிட்டார்கள். ஏனென்றால் அவன் மகுடாபிஷேகம் செய்துகொள்ளவில்லை, அதனால் அரசனில்லை. எனவே அவன், ஏறக்குறைய தனது நாற்பத்தேழாவது வயதில் (கி. பி. 1674 -ம் வருஷம்) மகுடாபிஷேகம் செய்துகொண்டான்; சத்ரபதி சிவாஜி யானான். மற்றும், அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டவன். அபிஷேகம் செய்யப் படுவதற்கு முந்திவரை, மற்றப் பிரஜைகளைப் போன்ற ஒருவனே: தனி மனிதனே, பூர்வாங்கமாக நடைபெறுகிற சடங்குகளில் அவன் இவன் என்றே அழைக்கப்படுகிறான் அபிஷேகத்திறகுப் பின்னரே பொது மனிதனாகி அரசன் என்று அழைக்கப்படுதற்குரியவனா கிறான். அவனுடைய பெயர் கூட மாறிவிடுகிறது. ராஜ்யாபிஷேகம் செய்து கொண்ட அரசன் புதிய பிறவி எடுத்தவனாகிறான் என்று நூல்கள் கூறி யிருப்பது இந்தக் கருத்தில் தான். அபிஷேகத்திற்குப் பின்னர் அவனுடைய முகமே மாறுதலடைகிறது. ராஜகளையென்று சொல்கிறார்களே அஃது உண்டாகிறது. புதிஷ்டிரன் ராஜ்யாபிஷேகம் செய்து கொண்டதும் அமிருதத்துக்கொப்பான் முகமுள்ளவனானான் என்று மகாபாரதம் கூறுவது கவனிக்கத் தக்கது. இங்ஙனம் முதன்முறையாக ராஜ்யாபிஷேகம் செய்து கொண்ட அரசன் பிருது என்பர். அறநெறிபிறழாது ஆட்சி நடத்தி ஜனங்களை ரஞ்சிக்கச் செய்து அது காரணமாக ராஜன் என்ற பெயரைப் பெற்றது இவனேயென்பதை நாம் ஏற்கனவே தெரிந்துகொண்டிருக்கிறோம்.1 அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டதும் கூடவே மகுடாபிஷே கமும் நடைபெறுமென்பதில்லை. இதற்கு நாள், நட்சத்திரம் முதலியன பார்ப்ர்கள். சுப முகூர்த்தத்தில் தான் சடங்குகள் தொடங்கப் பெறும். இதற்காகச் சில சந்தர்ப்பங்களில் வருஷக் கணக்கில் கூட காக்கும் படி யாகிவிடும். உதாரணமாக, அசோக சக்ரவர்த்தி ( கி. மு. 304 - 232) அரசுக் குரிய வனாகி நான்கு வருஷங் கழித்துத்தான் மகுடாபிஷேகம் செய்யப் பெற்றான். விஜய நகரத்தை யாண்ட கிருஷ்ணதேவராயனுக்கு (கி. பி. 1509 - 1529) சுமார் ஆறு மாதத்திற்குப் பின்னரே மகுடாபிஷேகம் நடைபெற்றது. இனி, பிராம்மணங்கள் காலத்தில் நிர்ணயிக்கப் பெற்று, பின்னர் தொடர்ந்து அனுஷ்டிக்கப்பட்டுவந்த மகுடாபிஷேகச் சடங்குகளில் முக்கியமானவற்றை வரிசைக்கிரமமாகப் பார்த்துக் கொண்டு வருவோம். அதற்கு முந்தி ஒரு விஷயம். பலாச மணியென்று சொன்னோமே இதனை ஓர் ஆபரணமாகவும் ஆளுகைக்குரிய சின்னமாகவும் கொண்டனர். இது பின்னர் ரத்னம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது; இதனையுடையவர்கள் ரத்னிகள் என்று அழைக்கப்பட்டார்கள். இந்த ரத்னிகள்தான் ஏற்கனவே சொல்லப்பெற்ற ராஜகர்த்தர்கள்; அதாவது மந்திரிப் பிரதானிகள். இந்தச் சொல் வழக்குகளை வாசகர்கள் மனத்தில் கொள்ள வேண்டுகிறோம். அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டவன், மந்திரிப் பிரதானிகள் முதலியோர் உள்பட சபையினர் அனைவரிடமிருந்தும் பலாச மணியைப் பெற்று வந்தானல்லவா, இந்த முறை பின்னர் மாறிவிட்டது. ராஜ்ய விதீரணம். ஜனப்பெருக்கம் முதலியவை காரணமாக, எல்லா ஜனங்களும் ஒன்று கூடுவதென்பது சாத்தியமில்லாமற்போய்விட்டது போலும். எனவே ரத்னிகளுடைய, அதாவது மந்திரிப் பிரதானிகள் முதலியவர் களுடைய இருப்பிடங்களுக்கு மட்டும் சென்று ஒவ்வொருவரையும் தனித் தனியாக உபசரித்து, அவர்கள் ஒவ்வொருவரிமிருந்தும், தான் அரசனா வதற்கான அங்கீகாரத்தைப் பெற வேண்டுமென்ற நியதி ஏற்பட்டது. ரத்னிகளுடைய அங்கீகாரத்தைப் பெறுவது ஜனங்களுடைய அங்கீகாரத்தைப் பெறுவதாகவே கொள்ளப்பட்டது. ஏனென்றால் இவர்கள் ஜனப் பிரதிநிதிகளாகவும் இருந்தார்களல்லவா? இதை இன்னும் சிறிது விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், மந்திரிப் பிரதானிகள் முதலியோர், இரண்டு விதமான பொறுப்புக்களை யுடையவர்களாயிருந்தார்கள். ஒன்று, ஜனப் பிரதிநிதிகளாயிருந்து, ஒருவனை அரசானாகத் தேர்ந்தெடுக்கச் செய்தும், அவனுக்கு மகுடா பிஷேகம் செய்வித்தும், அவன் அரசனாக ஆள்வதற்குத் தங்கள் பரிபூரண அங்கீகாரத்தைக் கொடுத்தார்கள். மற்றொன்று, அவன் அரசனான பிறகு அவனுடைய ஆட்சி நன்கு நடைபெறுவதற்குத் துணையா யிருந்தார்கள். முந்திய பொறுப்பை நிறை வேற்றுகிறபோது ராஜகர்த்தர்கள்; ரத்னிகள்; பிந்திய பொறுப்பை நிறைவேற்று கிறபோது மந்திரிப் பிரதானிகள் முதலியோர். ஆரம்ப தசையில், இந்த ராஜகர்த்தர்கள், அதாவது பிந்திய ரத்னிகள் ஐந்தாறு பேருக்குமேல் இல்லையென்று சொன்னே மல்லவா, இவர்கள் காலக்கிரமத்தில் அதிகம் பேராயினரென்றால், அதில் ஆச்சரியமெதுவு மில்லை. இவர்களில் பதினோரு பேர் முக்கியதர்களாகக் கொள்ளப் பட்டார்கள். அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டவன், பின் வரும் பதினோரு ரத்னிகளின் இருப்பிடங்களுக்கு வரிசைக் கிரமமாகச் சென்று மரியாதை செலுத்த வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது; - (1) சேனைத் தலைவன் (2) புரோகிதன் (3) பட்டத்து மனைவி (4) ஆதானக் கவிஞன்;1 இவனே ராஜ்யத்தில் அவ்வப்பொழுது நடைபெறும் நிகழ்ச்சிகளைக் குறித்து வருபவனுமாயிருந்தான். (5) கிராமத் தலைவன் (6) அரண்மனைத் தலைவன் (7) நிதி மந்திரி (8) வரிமந்திரி (9) ராஜ்யத்தின் வரவு செலவுக் கணக்குகளை ஒழுங்காக வைத்துக் கொண்டிருக்கிறவன் (10) வனவிலங்குகள் முதலியவைகளால் பயிர் பச்சைகள் அழிபடாமல் பாதுகாக்கின்றவன் (காட்டிலாகா தலைவனென்று இவனைக் கூறலாம்.) (11) தூதன். இவர்களில் சிலருக்குப் பதில் வேறு சிலரைக் கூறுகின்றன சில நூல்கள். தவிர, இவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர்களும், இந்தப் பெயர் களுக்குச் சொல்லப்பட்ட பொருள்களும் காலக்கிரமத்தில் சில மாற்றங் களையடைந்திருக்கின்றன. இவைகளைப் பற்றிய ஆராய்ச்சிக்குள் இப்பொழுது நாம் நுழைய வேண்டுவதில்லை. பொதுவாக, அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டவன், தன்னைச் சூழ்ந்திருந்து, தனது ஆளுகைக்குத் துணை புரிய வேண்டிய பதினோரு பேரையும் அவரவருடைய இல்லங் களில் உரியமுறையில் உபசரித்து, தான் ஆள்வதற்கு அவர்களுடைய அங்கீகாரத்தை - அனுமதியைப் பெறுவான் என்று தெரிந்துகொண்டு மேலே செல்வோம். மந்திரிப் பிரதானிகளின் அனுமதியை முதலில் பெறுவானேன் என்று இங்கே கேட்கப்படலாம். இவர்கள், ஒருவன் அரசனாவதற்கு முந்தி யிருந்தே அரசாங்கத்தை நடத்தி வந்தவர்கள்; அரசனாக ஒருவனைத் தெரிந்தெடுத்து சபையைச் சேர்ந்தவர்கள். - இந்தச் சபை ஸமிதி என்று அழைக்கப்பட்டதென்பதைப் பின்னர்த் தெரிந்துகொள்ளப் போகிறோம். - இவர்களுடைய அனுமதியைப் பெறுவதென்பது இவர்களுடைய விசுவாசத்தையும் ஒத்துழைப்பையும் கோருவதேயாகும். அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டவன், இவர்களுடைய இல்லங்களுக்குச் சென்று இவர்களை உபசரிக்கிற போது, ராஜகாரியத்தில் தன்னை அனுசரித்து நடக்கவேண்டு மென்றே பிரார்த்தித்துக் கேட்டுக்கொள்ள வேண்டுமென்று விதிக்கப்பட்டது. அரசன் என்கிற அங்கமானது, தனித்து இயங்க முடியாதென்பதையும், மந்திரிப்பிரதானிகளாகிய மற்ற அங்கங்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் அஃது இயங்க முடியுமென்பதையுமே இந்தச் சடங்கு எடுத்துக்காட்டுகிறது. அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டவன், இங்ஙனம் மந்திரிப் பிரதானிகளின் அனுமதியைப் பெற்றுக் கொண்ட பிறகு, தான் ஆளப் போகும் தாய்த்திரு நாட்டின் அனுமதியையும் சூட்சுமமாகப் பெறுவான். பிறகு ஒவ்வொரு தெய்வமாக, அதனதன் சக்தியை, அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டவனுக்கு அளிக்க வேண்டுமென்று பிரார்த்திக் கப்படும். முந்தின அத்தியாயத்தில் தெரிவித்திருக்கிறபடி உற்காச சக்திக்கு ஸவிதாவும், குடும்ப தருமத்திற்குக் காருகபத்திய அக்கினியும், வனபதி களைக் காக்கும் சக்திக்க்கு ஸோமனும், நாவன்மைக்கு பிரகபதியும், பிரபு சக்திக்கு இந்திரனும், கால்நடைகளைக் காக்கும் சக்திக்கு ருத்ரனும், சக்தியத்திற்கு மித்திரனும், தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு வருணனும் முறையே பிரார்த்திக்கப்படுவார்கள். பிறகு அபிஷேகம். இரு முறையாகச் செய்யப்பட வேண்டிய திது. இதற்காக, பலாச மரத்தினால் செய்யப்பட்ட தனித்தனிப் பாத்திரங்களில், சமுத்திரம், ஆறு, வெள்ளப்பெருக்கு, குளம், கிணறு, தேங்கிக் கிடக்கும் சிறு குட்டை, இப்படிச் சில இடங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் நீரும், மழை நீரில் கொஞ்சம், பனியாக விழும் நீரில் சிறிதும் திரட்டிக்கொண்டு வரப்படும். இதே பிரகாரம், தேனென்ன, பாலென்ன, நெய்யென்ன, இப்படிச் சில திரவ பதார்த்தங்களில் கொஞ்சம் திரட்டப்படும். ஆக மொத்தம் பதினேழு நீர் வகைகள். திரட்டப்பட வேண்டுமென்பது விதி. இவை யாவும் சேர்ந்தால்தான் அபிஷேக நீராகும். இதில் தேன், பால் முதலியன கலந்திருந்தாலும் நீரென்றுதான் அழைப்பது வழக்கம். காரணம், பெரும்பகுதி நீர் வகைகளேயல்லவா? ஒவ்வொரு நீரையும் திரட்டுகிற போது ஓ! ராஜத்துவத்தை அளிக்கக் கூடியவர்களே! (அரசனாகத் தெரிந் தெடுக்கப்பட்டவனுடைய பெயரைச் சொல்லி) . . . . .க்F ராஜத்துவத்தை அளியுங்கள் என்ற வாசகம், முறையாக ஒவ்வொன்றுக்கும் சொல்லப் படும். இங்ஙனம் திரட்டித் தயாராக வைக்கப் பெற்றதும், அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டவன் ஒரு புலித்தோல் மீது நிற்குமாறு செய்யப் படுவான். சமுதாயத்தின் முக்கியமான நான்கு வகுப்புக்களின் பிரதிநிதிகளும் ஒருவர் பின்னொருவராக முன் வந்து மேற்படி நீரை அவன் மீது அபிஷேகம் செய்வர். அப்பொழுது வாத்தியங்கள் முழங்கும்; கூடியிருக்கிறவர்கள் வாழ்த்துக் கூறுவார்கள், முதல்முறை அபிஷேகம் முடிவுறும். இங்குச் சில விஷயங்களை வாசகர்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம். அபிஷேகத்திற்கென்று நீர்கள் திரட்டப்பட்டன வல்லவா, இவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சக்தியின் பிரதிநிதியாகக் கொள்ளப்பட்டது. உதாரணமாக, பிரபு சக்திக்கு சமுத்திர நீரும், உற்சாக சக்திக்கு ஓடுகின்ற நதியின் நீரும், வளமைக்கு வெள்ளப் பெருக்கிலிருந்து எடுக்கப்பட்ட நீரும், பிரஜைகளுடைய ராஜ விசுவாசத்திற்குத் தேங்கிக் கிடக்கும் குட்டை நீரும் முறையே பிரதிநிதிகளாகக் கருப்பட்டன. இவற்றுள் குட்டை நீர் விசேஷ மாகக் குறிப்பிடத்தக்கது, இந்த நீர் எப்படி ஒரே நிலையில் நிற்கிறதோ, அதனால் யாருக்கும் எவ்வித தீமையும் உண்டாவ தில்லையா, அது போல, பிரஜைகள் அரசனிடத்தில் வைக்கிற விசுவாசமும் இருக்க வேண்டும். அப்படியிருக்கச் செய்வது, அரசனுடைய சிறந்த கடமைகளுள் ஒன்று. இதுவே இங்கு நினைவுறுத்தப்படுகிறது. இப்படிப் பல இடங்களிலிருந்து எடுத்துவரப்பட்ட நீரினால் அபிஷேகம் செய்யப்படுவதன் திரண்ட கருத்து, அரசனாகத் தெரிந் தெடுக்கப்பட்டவன், தனது ஆளுகையில், உயர்ந்தோர், தாழ்ந்தோர், பணக்காரர்கள், ஏழைகள் என்று எவ்வித வித்தியாசமும் பாராட்டாமல் எல்லாப் பிரஜைகளையும் சரிசமானமாகக் கருத வேண்டுமென்பதேயாம். அப்படியே சமுதாயத்தின் பல பிரிவுப் பிரதிநிதிகளும் அபிஷேகத்தில் கலந்து கொண்டதன் திரண்ட நோக்கம், ஆளப்போகிற அரசன், எல்லோருக்கும் பொதுவானவன், எல்லோருடைய சம்மதத்தின் மீதுதான் அவன் அரச பதவியை ஏற்றுக்கொள்கிறான், எல்லோருடைய ஒத்துழைப்பும் அவனுக்குக் கிடைப்பது உறுதி என்பவைகளை அறிவுறுத்துவதற் கேயாம். இருக்கட்டும். முதல் முறை அபிஷேகம் முடிந்ததும், அரசனாகத் தெரிந் தெடுக்கப்பட்டவன், பட்டாடை உடுத்தி மேலாடை அணிந்து, தலையில் மகுடமும்1 தரித்துக் கொள்வான். மேலாடை அவ்வளவு அவசிய மில்லையென்பது சதபத பிராம்மணத்தின் கருத்து. உடலழகையும் அமைப்பையும் இந்த மேலாடை மறைத்து விடுகின்றதாம். பிறகு, புரோகிதன், இவனை இரண்டாவது முறை அபிஷேகத்திற்குத் தயார்ப்படுத்துகின்ற முறையில், இவன் கையில் உறுதியான ஒரு வில்லைக் கொடுத்து, கூடவே மூன்று அம்பு களையும் கொடுப் பான். ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிற வன், பலத்தோடு கூடியவனா யிருக்க வேண்டுமல்லவா, அந்தப் பலத்திற்கு அறிகுறியாயிருப்பது, அதாவது க்ஷத்திரிய பலத்திற்கு அறிகுறியாயிருப்பது அம்புகளோடு கூடிய வில். இதைக் கொடுப்பதன் மூலம், அரசனாகத் தெரிந்தெடுக்கப் பட்டவனிடம் ஆள்வதற்கான பலத்தைக் கொடுப்பதாக தாத்பரியம். சத்துருக்களை நாசஞ்செய்யவும், சத்துருக்களுடைய அம்புகளிலிருந்து காப்பாற்றப் படவும் இந்த வில்லும் அம்புகளும் உபயோகப்படட்டுமென்ற கருத்தடங்கிய மந்திரம் அப்பொழுது சொல்லப்படும். இதற்குப் பிறகு, ஜனங்களென்ன, அக்கினி, இந்திரன், வருணன் முதலிய தெய்வங்களென்ன, பூமாதேவியென்ன, இப்படி எல்லோரும் இவன் தான் அபிஷேகம் செய்யப்படப் போகிறவன் என்று அறிய பிரகடனம் செய்யப்படும். அறிவிக்கப்படுகிற எல்லோருடைய அனுமதி யையும் பெற்றே இவன் அபிஷேகம் செய்யப்படுகிறான் என்பதே இந்தப் பிரகடனத்தின் உட்கருத்து. பிரகடனம் முடிந்ததும், அரசனாகத் தெரிந்தெடுக்கப் பட்டவன் பிரமாணம் எடுத்துக் கொள்வான், நான் ஜன நன்மைக்கு விரோதமாக நடப்பேனாகில், பிறந்தது முதல் இறக்கிற வரை என்னென்ன புண்ணிய காரியங்களைச் செய்திருக்கிறேனோ அவையனைத்தையும், எனது இகலோக வாழ்க்கையையும் பரலோக வாழ்க்கையையும் இழந்து விடுவேனாகவும் என்பதே பிரமாண வாசகத்தின் சாரம். இதனைச் சிரத்தையோடு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லப்பட்டிருக் கிறது. பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு இவன் திடவிரதனாகிறான், அதாவது, ஜனங்களைக் காப்பாற்றுவதாகத் தான் எடுத்துக் கொண்ட பிரமாணத்தை நன்கு நிறைவேற்றுவதாக உறுதி பூண்டவனாகிறான். பிராம்மணங்கள் காலத்து இந்தப் பிரமாணவாசகம், காலக் கிரமத்தில் சிற்சில மாறுதல்களையடைந்ததென்பதை இங்கு எடுத்துக் காட்ட வேண்டியிருக்கிறது. மாற்ற மடைந்த வாசகம், இன்னும் அர்த்த புஷ்டியுடையதாகவும் அரசனுடைய கடமை களைத் தெளிவுபடுத்திக் கூறுவதாகவும் இருந்ததென்றே சொல்ல வேண்டும். மகா பாரதத்தில் காணப்படுகின்ற பிரமாண வாசகம் வருமாறு: - நான் ராஜ்யத்தைத் தெய்வமாகவே கருதி, அதிலுள்ள சகலமானவற்றின் வளர்ச்சிக்காக எப்பொழுதும் பாடுபடுவேன்; தர்மத்தினால் அங்கீகரிக்கப்பட்டதும் அரசியலுக்கு விரோத மில்லாததுமான காரியங்களை உறுதியுடன் செய்வேன்; தன்னிச்சையாக நடக்க மாட்டேன். இந்தப் பிரமாணத்தைப் பிரதிக்ஞை என்றும், இதனை மனப் பூர்வமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், அப்பொழுது கூடியிருக்கிற ஜனங்கள் அப்படியே ஆகுக என்று ஒரு வாய்ப்படச் சொல்லி, தங்கள் சம்மதத்தைத் தெரிவிப்பதோடு ஆசீர்வாதமும் செய்வார்களென்றும் மகாபாரதம் கூறுகிறது. பிரமாணம் எடுத்துக் கொண்டதும், அரசனாகத் தெரிந்தெடுக்கப் பட்டவன், கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு இப்படி வரிசைக் கிரமமாக நான்கு திசைகளையும் நோக்கி நிற்பான். ஒவ்வொரு திசையாக நோக்கி நிற்கிறபோது, சமுதாயத்தின் ஒவ்வொரு முக்கியமான வகுப்பினரையும் நோக்கி இவனை ஒரு பெரிய பொக்கிஷமாகக் கருதிக் காப்பாற்றுங்கள் என்ற கருத்தடங்கிய மந்திரங்கள் சொல்லப்படும். அதாவது, சமுதாயம் பூராவுக்குமே இவன் அரசனாகிறான், ஒரு வகுப்பினருக்கோ ஒரு பிரிவினருக்கோ அல்ல; இவனுடைய ஆளுகைக்குட் பட்டிருப்பதும், அந்த ஆளுகையை நலம்பெறச் செய்வதும் சமுதாயத்தைச் சேர்ந்த எல்லோருடைய கடமையுமாகும் என்பதே இங்கு உணர்த்தப் படுகிறது. இதற்குப் பிறகு அபிஷேகம். அரசனாகத் தெரிந்தெடுக்கப் பட்டவன், புலித்தோலின் மீது வைக்கப்ட்டிருக்கும் ஒரு தங்கத் தாம்பாளத்தில் கிழக்கு நோக்கி நிற்குமாறு செய்யப்படுவான். இவன் தலைக்குமேலே சிறிது உயர்ந்தாற்போல், நூறு அல்லது ஒன்பது கண்களைக் கொண்ட ஒரு தங்கச் சல்லடைபிடிக்கப்படும். இதன் வழியாகப் புரோகிதன், ஏற்கனவே மிகுத்தி வைக்கப்பட்டிருந்த அபிஷேக நீரை - பிற்காலத்தில் இதில் பல வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்பட்டததாகத் தெரிகிறது. - ஸோமன் முதல் இந்திரன் வரையுள்ள சில தெய்வங்களின் தேஜஸினாலும் வீரியத்தினாலுமே உனக்கு அபிஷேகம் செய்கிறேன்; நீ க்ஷத்திரியத் தன்மைகளைக் காப்பாற்றி வருவாயாக! தெய்வங்களே ! ஆளுகையில் இவனை இணையற்றவனாகச் செய்யுங்கள்! ஜனங்களே ! இன்னவனுக்கும் இன்னவளுக்கும் பிறந்த இவன்தான் உங்கள் அரசன் என்பன போன்ற கருத்துக்களடங்கிய சில மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே இவனுக்கு அபிஷேகம் செய்வான், இப்பொழுதும் முன் போலவே வாத்தியங்கள் கோஷிக்கும். கூடியிருக்கிறவர்கள் வாழ்த்துக் கூறுவார்கள். பிற்காலத்தில் பட்டத்து மனைவிக்கும் சேர்ந்தாற்போல் அபிஷேகம் நடைபெற்று வந்ததாகத் தெரிகிறது. முதல் முறை அபிஷேகத்தை லௌகிகமென்றும், இரண்டாவது முறை அபிஷேகத்தை வைதிகமென்றும் சொல்லலாம், பிந்திய அபிஷேகமே முக்கியமாகக் கொள்ளப்பட்டது பிற்காலத்தில், தற்கால பாஷையில் இதனைத் தைலாபிஷேகமென்று சொன்னால் பொருத்தமா யிருக்குமென்று கருதுகிறோம். இங்கிலாந்து முதலிய ஒரு சில நாடு களில் அரசர்களுக்குச் செய்யப்படுவது இந்தத் தைலாபிஷேகமே. செய்வது புரோகிதர்களேயென்று நாம் தெரிந்து கொண்டிருக் கிறோமல்லவா? மற்றும், இரு முறையாகச் செய்யப்பட்டு வந்தது, ஏறக்குறைய ராமாயண மகாபாரத காலத்திலிருந்து முறை மாற்றி, அதாவது முந்தியது பிந்தியும், பிந்தியது முந்தியும் செய்யப்பட்டதாகக் கருத வேண்டியிருக் கிறது. ஏனென்றால், ராமபிரானுடைய பட்டா பிஷேகத்தை ராமாயணம் பின் வருமாறு வருணிக்கிறது: - தேவேந்திரனை அஷ்ட வசுக்கள் அபிஷேகஞ்செய்தது போல், வசிஷ்டர், வாமதேவர், ஜபாலி, காச்யபர், காத்தியாயனர், சுயக்ஞர், கௌதமர், விஜயர் என்ற எட்டு மகாத்மாக்களும் வேத மந்திரங்களை ஜபித்து, ராமனுக்கு வாசனைத் திரவியங்கள் கலந்த புண்ணிய தீர்த்தத்தினால் விதிப்படி அபிஷேகம் செய்தார்கள், பிறகு சகல ஓஷதிகளும் ரசங்களும் கலந்த புண்ணிய ஜலத்தால் பிராம்மணர்களும், கன்னிகைகளும், மந்திரிகளும், யுத்த வீரர்களும், வர்த்தகத் தலைவர்களும் ரகுவீரனை அபிஷேகம் செய்தார்கள். இன்னும், வெகு காலம் வரையில், ஆண்மக்கள் மட்டுமே, லௌகிக அபிஷேகமென்று மேலே சொன்னோமே, அதில் கலந்து கொள்ளும் உரிமை பெற்றிருந்தனர். பிற்காலத்தில், ஏறக்குறை ராமாயண காலத்தி லிருந்து பெண்மக்களும் இந்த உரிமையை, இந்தக் கௌரவத்தைப் பெற்றனர். இது நிற்க. புரோகிதன் அபிஷேகம் செய்து முடித்ததும், அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டவன், அந்த அபிஷேக நீரிலுள்ள சக்தியனைத்தும், தன் உடல் பூராவும் புகுந்து பரவ வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொண்டே, கறுப்பு மானின் கொம்பினால், அந்த நீரை உடல் பூராவிலும் படியும் படியாகத் தேய்த்துக் கொள்வான். இஃதானதும்,புலித்தோலிலேயே மூன்று அடிகள் எடுத்து வைப்பான். மூவுலகங்களையும் அளந்து ஆட்படுத்திக் கொண்டதாக ஐதிகம். பிறகு சிங்காதனத்தில் அமர வேண்டும். இந்தச் சிங்காதனம் அத்திமரத்தினால் செய்யப்பட்டதாயிருக்கும். பிற்காலத்தில், தங்கத்தினாலோ, வெள்ளியினாலோ, தந்தத்தினாலோ செய்யப்பட்டதும், நவரத்தினங்களாலிழைக்கப் பட்டதும், வேறு பல ஆடம் பரப் பொருள்களால் அழகுபடுத்தப் பெற்றதுமான சிங்காதனங்கள் அரசர்களால் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி உபயோகிக்கப்பட்டு வந்தன என்றாலும், மகுடாபிஷேக காலத்தில் மட்டும் அத்திமரத்துச் சிங்காதனமே உபயோகிக்கப்பட வேண்டுமென்ற விதி கண்டிப்பாக அனுஷ்டிக்கப்பட்டதென்றே சொல்லவேண்டும். இந்த அத்தி மரத்துச் சிங்காதனத்தின் மீது புலித்தோல் பரப்பப் பட்டிருக்கும். புலியைப்போன்ற பௌருஷம் இதில் அமர்கிறவனுக்கு உண்டாக வேண்டுமென்பது கருத்து. வேத காலத்தின் ஆரம்ப தசையில் நடைபெற்ற மகுடாபிஷேகங்களிலும் அரசர்கள் அமர்ந்த ஆசனங்கள் இங்ஙனம் புலித்தோலினாலேயே மூடப்பட்டிருந்தன. பிற்காலத்திலும் இந்த வழக்கம் பின் பற்றப்பட்டு வந்தது. இத்தகைய சிங்காதனத்தில் அரசனாகத் தெரிந்தெடுக்கப் பட்டவன் ஏறியதும், இவனிடம் ராஜ்யம் ஒப்படைக்கப்படும். இந்த ராஜ்யம் இதோ உன்னிடம் ஒப்படைக்கப்படுகிறது. நீ, இதன் கர்த்தன்; இதனை ஒழுங்கு படுத்துகிறவன்; உறுதியுடனும் ஊக்கத்துடனும் இந்தப் பொறுப்பை ஏற்று நடத்தவேண்டும். விவசாய அபிவிருத்திக்காகவும். ஜனங்களுடைய க்ஷேமத்திற்காகவும், ஐசுவரிய அபிவிருத்திக்காகவும் இந்த ராஜ்யம் உன்னிடம் ஒப்படைக்கப்படுகிறது என்ற கருத்துக்களடங்கிய மந்திரங்கள் அப்பொழுது சொல்லப்படும். முதல் வாக்கியம், அதாவது இந்த ராஜ்யம் இதோ உன்னிடம் ஒப்படைக்கப்படுகிறது என்ற வாக்கியம் சொல்லப்பட்டதும் இவன் சிங்காதனத்தில் அமர்ந்து கொள்வான். இந்த முதல் வாக்கியந்தான் மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. இதைச் சொல்கிற போது, இவன் ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிற பாவனையில் தலை வணங்கியிருப்பான். மேற்படி மந்திரங்கள் தாய்நாட்டுக்கு வணக்கம் என்றே தொடங்கும், இது குறிப்பிடத்தக்கது, நமது முன்னோர்களுக்கிருந்த தாய்நாட்டுப் பற்றைச் சொல்லி முடியா தென்பதை இங்குப் பிறிதொரு முறை சொல்லிக் காட்டிப் பெருமை கொள்ள ஆசைப்படுகிறோம். இங்ஙனம் ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகுதான் இவன் அரசன்; அரசனென்று அழைக்கப்படுவதற்குரியனாகின்றான். நம்மைப் பொறுத்த மட்டில் கூட, அவன், இவன் என்ற சொற்களும், அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டவன் என்ற சொற்றொடரும் இவனைவிட்டு அகன்று போகட்டும். அரசன் என்றே இனி அழைத்துக்கொண்டு போவோம். அரசன் சிங்காதனத்தில் அமர்ந்ததோடு மகுடாபிஷேகம் சம்பந்தப்பட்ட முக்கியமான சடங்குகள் ஒருவாறு முடிவு பெற்றன வென்றே சொல்லவேண்டும். இதற்குப் பிறகு சம்பிர தாயமான சில சடங்குகள் நடைப்பெறும். சிங்காதனத்தில் அமர்ந்த அரசன் சிறிது நேரத்திற்குப் பிறகு அதிலிருந்து இறங்கி, காட்டுப்பன்றித் தோலினால் தயாரிக்கப்பட்ட மிதியடியைப் போட்டுக் கொண்டு, நான்கு குதிரைகள் பூட்டிய ரதத்தின் மீது அமர்ந்து ஊர்வலம் வருவான். இந்த ஊர்வலக் காட்சியானது ஆரம்பத்தில் சுருக்கமாகவும் ஒரு சடங்காகவும் நடைபெற்றது; பின்னர், ராமாயண, பாரத காலங்களில் மிகவும் ஆடம்பரமாக விரிந்த முறையில் நடை பெற்றது. ஊர்வலத்திலிருந்து திரும்பியதும் அரசன் மீண்டும் சிங்கா தனத்தில் அமர்வான். அப்பொழுது, இவன் கையிலேந்த வேண்டிய செங்கோலினால், இவன் முதுகுப்பக்கத்தைப் புரோகிதன் தடவுவான். அரசன், தண்டத்திற்கு அதாவது தர்மத்திற்குக் கீழ்ப்பட்டவனே தவிர, மேற் பட்டவனல்லன் என்பதைக் காட்டுவதற் காகவே இங்ஙனம் செய்யப் படுகிறதென்று கூறுவர் சிலர், அப்படியல்ல; அரசன் தண்டத்திற்கப் பாற்பட்டவன், அதாவது சாதாரண சட்டதிட்டங்களினால் தண்டிக்கப் படுதற்குரியனல்லன் என்பதைக் காட்டுவதற்காகவே இப்படிச் செய்யப் படுகிறதென்று கூறுவர் வேறு சிலர். இரண்டும் பொருத்தமே. இரண்டும் நடை முறையில் இருந்தன. இது முடிந்ததும், தற்காலத்தில் தர்பார் என்று சொல்கிறோமே அது நடைபெறும். மந்திரிப் பிரதானிகளென்ன, சமுதாயத்தின் பல்வேறு பிரதிநிதிகளென்ன, இப்படி எல்லோரும் வரிசைக் கிரமமமாக தர்பாரில் வீற்றிருப்பார்கள். முதலில், அரசன், தான் ஆளப்போகும் ராஜ்யத்தைத் தாயாகக் கருதி அதற்கு வணக்கஞ் செலுத்துவான். தாயே ! பூமாதேவியே! எனக்குத் தீங்கு செய்யாதே ! நானும் உனக்குத் தீங்கு செய்யமாட்டேன் என்று பிரார்த்தனை செய்து கொள்வான். இந்தப் பிரார்த்தனையின் உட்கருத்து, அரசனாக ஆளப்போகிறவனும், அவனால் ஆளப்படப் போகிற ராஜ்யமும் மகனும் தாயும் போல உறவுகொள்ள வேண்டுமென்பதேயாம். மகன், தாயை அன்போடு காப்பாற்றுகிறான்; அப்படிக் காப்பாற்றுவது தன் கடமையென்று கருதுகிறான். அதைப்போல அரசன், ராஜ்யத்தை அன்போடு ஆள வேண்டும்; அப்படி ஆள்வதைத் தன் கடமையாகவும் கொள்ள வேண்டும். பிறகு தர்பாரிலுள்ளவர்கள், அவரவருடைய அந்ததுக்குத் தகுந்தபடி ஒருவர் பின்னொருவராக முன்வந்து அரசனுக்கு வணக்கஞ் செலுத்து வார்கள். பிறகு புரோகிதன், பூஜையினால் புனிதமடைந்த மரவாள் ஒன்றை அரசன் கையில் கொடுப்பான். அப்பொழுது இஃது இந்திரனுடைய வஜ்ராயுதத்திற் கொப்பானதென்றும், சத்துருக்களை வெல்வதற்கு இது துணையாயிருக்குமென்றும் சொல்லுவான். அரசனும் இதனை மரியாதை யாகப் பெற்றுக்கொண்டு, திருப்பி, குழுமியிருக்கும் மந்திரிப் பிரதானி களுக்கும் மற்ற அரசாங்க உயர்தர உத்தியோகதர்களுக்கும் வரிசைக் கிரமமாகக் கொடுத்து வாங்கிக் கொள்வான். எவ்லோருடைய ஒத்துழைப்பையும் இதன் மூலம் பெறுகிறான் என்பதே தாத்பரியம். பின்னர், மந்திரிப் பிரதானிகளுடன் சிறிது நேரம் சொக்கட்டான் ஆடுவான். இந்த ஆட்டத்தை எப்படி ஒருவன் மட்டும் இருந்து ஆட முடியாதோ அது போல நான் ஒருவனாக மட்டும் இருந்து அரசாங்க நிருவாகத்தை நடத்த முடியாது; மந்திரிப் பிரதானிகளே ! உங்களுடைய ஒத்துழைப்பும் வேண்டும் என்பதைத் திரும்பவும் வற்புறுத்திக் காட்டு வதற்காகவே இந்தச் சம்பிரதாயமான ஆட்டம் நடைபெறும். இப்படிச் சொல்லப்பட்ட போதிலும், எந்த உட்கருத்துடன் இந்த ஆட்டம் ஆரம்ப காலத்தில் ஒரு சடங்காக ஏற்படுத்தப்பட்டதென்பது சரியாகத்தெரிய வில்லை. இந்தச் சொக்கட்டான் ஆட்டத்தோடு மகுடாபிஷேகச்சடங்குகள் ஒருவாறு பூர்த்தியடையும். இந்தச் சடங்குகளுக்குப் பின்னணியாகக் காலக்கிரமத்தில் சில வழக்கங்கள் புகுத்தப்பட்டன. அரசன், தர்பார் நடத்துகிறபோது, ராஜ்யத்தின் முக்கியதர்கள் வழங்கும் காணிக்கைகளையும் அயல் ராஜ்யங்களிட மிருந்து வந்திருக்கும் சன்மானங்களையும் முறையே பெறுவான்; திரும்ப, எல்லோருக்கும் ஆடையாபரணங்களாலும், பொன்னாலும், பொருளாலும் அவரவருடைய தகுதிக்கேற்ப மரியாதைகள் செய்வான்; இன்னும் சிறைச் சாலைகளைத் திறந்துவிடச் செய்வான்; பொதுவாக மக்களுக்கு மகிழ்ச்சி யளிக்கக் கூடிய பல நற்காரியங்களைச் செய்வான். யானை மீது ஊர்வலம் வருவான்; வாண வேடிக்கைகள் நடைபெறும். மகுடாபிஷேக மென்பது ஒரு மகோற்சவந்தானே? சிற்றரசுக்குரியவனோ, பேரரசுக்குரியவனோ யாரும் இந்த மகுடாபிஷேகத்தைச் செய்து கொண்டுதானாக வேண்டும். அப்பொழுது தான் அவன் அரசு என்னும் கப்பலை இயங்குவதற்குத் தகுதி யுடையவனாவான். அப்படிச் செய்து கொள்கிறபோது, அபிஷேகத்தைத் தவிர மற்றவற்றைச் சுருங்கிய முறையிலோ விரிந்த முறையிலோ ஏற்பாடு செய்து கொள்ளலாம். அவனவனுடைய பொருள் நிலையைப் பொறுத்த விஷயமிது. ஆனால் அபிஷேகத்தை மட்டும் கட்டாயம் செய்து கொண்டுதானாகவேண்டும். 7. அரசனது கடமைகளும் உரிமைகளும் இந்த அத்தியாயத்தின் தலைப்பில் கடமைகளுக்கு முதலிடம் கொடுத்து, அடுத்தாற்போல் உரிமைகளை வைத்திருப்பதன் நுணுக்கத்தை நாம் கூறாமலே வாசகர்கள் உணர்ந்து கொள்வார்களென்று நம்புகிறோம். நமது முன்னோர்கள் வகுத்து வைத்துப் போயிருக்கிற வாழ்க்கைத் திட்டத்தில், அரண்மனைகளிலாகட்டும், குடிசைகளிலாகட்டும், கடமை யென்பது தான் முதலிலேயமைந்திருக்கிற நுழைவாயிலா யிருக்கிற தென்பதை நாம் திரும்பவும் சொல்லிக் காட்டத் தேவையில்லை. அரசனுக்கு அளிக்கப்பட்ட உரிமைகளோ, அதிகாரங்களோ யாவும், ஜனங்களைக் காப்பாற்றுதலென்னும் கடமையாகிற முளையைச் சுற்றியே இயங்கின. ஒருவன் எதுவரையில் அரசனாக மதிக்கப்பட்டா னென்றால் காப்பாற்றுங்கடமையை ஒழுங்காகச் செய்து வருகிற வரையில் தான். அப்படிச் செய்து வருவதற்கு இடையூறாயுள்ள வற்றை அவ்வப்பொழுது விலக்கிக் கொண்டு வரவே அவனுக்குச் சில உரிமைகளும் அதிகாரங்களும் அளிக்கப் பட்டன. இதனாலேயே அரசனை, ஆளும் ஆண்டையாகவோ, அதிகாரஞ் செலுத்தும் பிரபுவாகவோ நமது முன்னோர்கள் வருணிக்கவில்லை; ஜனபரிபாலகனாகவே வருணித் திருக் கிறார்கள். மகுடாபிஷேகத்தின்போது அவன் எடுத்துக் கொண்ட பிரமாணத்திலேயே இதைப் பார்த்தோமல்லவா? அரசனுடைய காப்பாற்றுங் கடமையானது, கள்ளர், கயவர் இவர் களிடமிருந்து ஜனங்களைக் காப்பாற்றுகின்ற அளவோடு நிற்கவில்லை; அப்படி நின்றுவிடக் கூடாதென்றே விதி செய்திருக் கின்றனர் முன்னோர். தற்கால பாஷையில் சொல்ல வேண்டுமானால், வெறும் போலீ வேலையைச் செய்து கொண்டு போவது மட்டும் அரசனுடைய கடமை யாகிவிடாது; பசி, பிணி, அறியாமை, அநீதி, அதருமம், நாதிகம் இப்படிப் பட்டவை களிலிருந்தும் ஜனங்களைக் காப்பாற்றவேண்டும். அதாவது ஜனங்களுடைய புற வாழ்க்கைக்கு மட்டுமல்ல, அகவாழ்க்கைக்கும் அரசன் பொறுப்பாளி; அந்த அகவாழ்க்கையையும் பண்படுத்திப் புனித நிலையிலே வைத்திருக்க வேண்டியது அவனுடைய கடமை. இங்ஙனம் ஜனங்களுடைய புற வாழ்க்கையும் அக வாழ்க்கையும் சேர்ந்த முழு வாழ்க்கைக்கும் அரசனே பொறுப்பா யிருக்கிறபடியால், அவர்கள் நல்ல காரியங்களைச் செய்தாலும் சரி, கெட்ட காரியங் களைச் செய்தாலும் சரி, அவற்றின் பலனில் ஒரு பங்கு அரசனைச் சேரும், ஆறில் ஒரு பங்கு என்று சில நூல்களும், நாலில் ஒரு பங்கு என்று சில நூல்களும் கூறுகின்றன. எவ்வளவு பங்காயிருந்த போதிலும், ஜனங் களுடைய ஒழுக்கத்திற்கு அரசன் பொறுப்பாளியென்பது நிச்சயமாகிறது. அப்படியானால் அவனுடைய பொறுப்பு எவ்வளவு மகத்தானது ! இந்தப் பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்றிவரக் கூடிய வகையிலேயே அவனுக்கு இளமையில் கல்விப் பயிற்சி அளிக்கப் பட்டது. இளவரசனாயிருந்து அவன் படிக்க வேண்டிய பாடங்கள், செய்ய வேண்டிய காரியங்கள் இவை பலவற்றையும் பற்றி நமது நாட்டு அரசியல் பண்டிதர்கள் நிர்ணயமான திட்டங்கள் வகுத்துக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இளவரசன் என்ற அத்தியாயத்தில் இவற்றின் விரிவைக் காண்க. அவன் - அரசன் - இளமையில் கல்வி பயின்றதோடு திருப்தி யடையக்கூடாது; சிங்காதனமேறிச் செங்கோலேந்திய பிறகும் பயின்று கொண்டிருக்க வேண்டும். பயிற்சிக்கு முடிவேது? இந்தப் பயிற்சிக்கு அவன், பெரியோரின் துணையை நாடவேண்டும். அதாவது நல் லோரிணக்கம் ஓர் அரசனுக்கு இன்றியமையாதது. அவர்களோடு தினசரி பழகுவதே அவனுக்குச் சிறந்த பயிற்சி. இதையும் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள் முற்கால அறிஞர்கள். ஜனங்களைக் காப்பாற்றுவதற்காக ஏற்பட்ட அரசன், முதலில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்திருக்கவேண்டும். தற்காத்துக் கொள்ளுஞ் சக்தியில்லாதவன் பிறரைக் காத்தல் எங்ஙனம் சாத்தியம்? தன்னை ஜயிக்காத அரசன் சத்துருக்களை ஜயிப்பது எப்படி? என்று மகாபாரதம் கேட்கிறது. அரசன், எத்தனையோ விதமான பகைவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியவனாயிருந்த போதிலும், உள்ளுக் குள்ளேயே இருந்து அரிக்குந்தன்மையனவான காமமாதி பகைவர் களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல் மிகமிக அவசியம் இதற்காக அவன், தனது ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டுபோகத் தெரிந் திருக்க வேண்டும். இது தெரியாமற்போனால், மேலே சொன்ன உட்பகைவர்களுக்கு - இவர்கள் ஒருவரா? இருவரா? ஆறுபேர் ! - இரையாக வேண்டியது தான். அப்படி இரையாகி, தாங்கள் அழிந்துபட்ட தோடல்லாமல், தங்கள் ராஜ்யத்தையும் உருக்குலைத்துவிட்ட அரசர் களிற் சிலரை, பிற்காலத்தவருக்கு எச்சரிக்கையா யிருக்கட்டுமென்று எண்ணியோ என்னவோ, கௌடில்யன், தனது அர்த்த சாதிரத்தின் ஆரம்பத்திலேயே ஆறாவது அத்தியாத்தில் அறிமுகப்படுத்தி வைக்கிறான். அரசியலைப் பற்றி எழுந்த எந்த ஒரு நூலும், அரசர்களுக்குப் புலனடக்கம் இன்றியமையாததென்பதை அழுத்தந்திருத்த மாகக் கூற மறக்கவேயில்லை. அடுத்தாற்போல் அரசன், தன் புதல்வர்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும். இது விஷயத்திலும் எல்லா அரசியல் நூல் களும் ஒரு முகமான அபிப்பிராயத்தையே வெளியிட்டிருக்கின்றன. அரச குமாரர்கள் நண்டுகளைப் போன்ற வர்கள். நண்டு எப்படித் தன்னைப் பெற்றெடுத்த நண்டையே கொன்று விடுகிறதோ அதுபோல் அரச குமாரர்களும், தங்கள் பிதாவான அரசனைக் கொல்லவே பார்ப்பார் களென்றும், ஆகையால் அரசன், அவர்களை எப்பொழுதும் சர்வ ஜாக்கிரதை யுடன் கண்காணித்து வரவேண்டுமென்றும் ஒரு நூல் எச்சரிக்கை செய்கிறது. அரச குமாரர்களுள் எவன் ஒழுங்காக நடந்து கொள்ள வில்லையோ, அவனுக்கு அரசன் முதலில் நல்ல புத்தி சொல்லிப் பார்க்கவேண்டும்; அதில் பயனில்லையென்று தெரிந்தால், ஆபத்தை விளைவிக்கக் கூடிய படையெடுப்புக்களுக்குத் தலைமை வகிக்கும்படி செய்து வேற்றிடங் களுக்கு அனுப்பிவிடலாம்; அது முடியாதகாரியமாயிருந்தால் சிறைப் படுத்தி விடலாம்; அதிலும் பயனுண்டாகவில்லையென்று தெரிந்தால், கடைசி பட்சமாகக் கொன்றுவிடலாமென்று கௌடிலீயம் கூறுகிறது. ஆனால் இந்தக் கடைசி பட்ச பரிகாரம் கையாளப்பட்டதாகத் தெரிய வில்லை. பொதுவாக, அரசனுடன் முரணிக்கொண்ட அரச குமாரர்கள். ராஜ்யத்தின் எல்லைப்புறப் பிரதேசங்களுக்கு, ஏதோ ஒரு பொறுப்புக் கொடுத்து அனுப்பப்பட்டார்கள். பிற்காலத்தில், மொகலாய ஆட்சியின் போது, இந்த முறையே கையாளப்பட்ட தென்பதைச் சரித்திரத்தில் படிக்கிறோம். அரச குடும்பத்தைச் சேர்ந்த சிலர், அரசனுக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்து, அதன் விளைவாகச் சில சாதங்களைப் பெற முயற்சி செய்தல் கூடும். இவைகளுக்கு அரசன் இடங்கொடுத்தலாகாது. அரசன், பரம்பரையாக மடைத்தொழில் செய்து வந்தவனால் தயாரிக்கப்பட்ட உணவையே உட்கொள்ள வேண்டும்; உட் கொள் வதற்கு முன்னர், நெருப்பிலே கொஞ்சமும் பட்சிகளுக்குக் கொஞ்சமும் போட்டுப் பார்த்துவிட்டுப் பின்னரே உட்கொள்ள வேண்டும்; ஏதேனும் மருந்து சாப்பிடவேண்டுமானால், ஆதான வைத்தியன் சாப்பிட்டுப் பார்த்த பின்னரே சாப்பிட வேண்டும். பரம்பரையான சாரதிகளால் செலுத்தப் பெறும் வாகனங்களிலேயே செல்லவேண்டும். அரசன், அந்தப்புரத்துச் சூழ்ச்சிகள் எதிலும் சிக்கிக் கொள்ளாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்; அந்தப் புரத்து திரீகள், மன மொழி மெய்களில் தூய்மையுடையவர்களாயிருக்கிறார்களாவென்று அடிக்கடி பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளவேண்டும்; அந்தப்புரத்தை ஆயுதந்தரித்த திரீகள் காவல் புரியுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும். அரசன், துறவிகள் முதலாயினோருக்குப் பேட்டியளிக்கிற போது, ஆயுதந் தரித்த மெய்க்காவலர்கள், தன்னைச் சூழ்ந்திருக்கு மாறு செய்ய வேண்டும்; அந்நிய நாட்டுத் தூதர்களை வரவேற்கிற போது, ஆலோசனை மிகுந்த மந்திரிகளால் சூழப்பட்டிருக்க வேண்டும். இங்ஙனம் பலவகையாலும் தன்னைக்காப்பாற்றி கொள்ள வேண்டியது ஓர் அரசனுடைய இன்றியமையாத கடமையாகும். எல்லா விடத்திலிருந்தும் உன்னைக் காப்பாற்றிக் கொண்டு பூமியைக் காப்பாற்று என்று அரசனுக்கு உபதேசம் செய்கிறது மகாபாரதம். கௌடில்யன், தன்னுடைய அர்த்த சாதிரத்தின் ஏழாவது அத்தியாயத்தில் பின்வருமாறு கூறுகிறான் :- அரசன், எப்பொழுதும் சான்றோருடைய சேர்க்கையில் இருந்து, தனது அறிவை அதிகரித்துக் கொணடுவர வேண்டும்; ஒற்றர் மூலம் நாடு முழுவதையும் காண வேண்டும்; எப்பொழுதும் முயற்சி யுடையவனாயிருந்து நாட்டின் க்ஷேமத்தை நாடவேண்டும்; பிரஜைகள் அனைவரும் தத்தம் கடமையைச் செய்து கொண்டு போகுமாறு தனது அதிகாரத்தைப் பிரயோகிக்க வேண்டும்; அவ்வப்பொழுது சாதிரங்களைப் பயின்று, தனது சொந்த வாழ்க்கையை ஒழுங்குடன் நடத்தி வர வேண்டும்; ஜனங்களிடையே பொருள்வள முண்டாகும்படி செய்தும், அவர்களுக்கு நல்லதைச் செய்தும், அவர்களுடைய அன்புக் குரியனாதல் வேண்டும்; புலனடக்கம் பெற்றவனாய், திரீகளுக்கோ, பிறருடைய பொருள்களுக்கோ தீங்கு செய்வதினின்று ஒதுங்கியிருக்க வேண்டும்; கனவிலே கூடகாம வசத்தனாதல் கூடாது: பொய், அகந்தை, தீய சூழ்ச்சிகள் இவற்றை விலக்க வேண்டும்; நேர்மையற்றதும் பயனில்லாததுமான விவகாரங்களிலிருந்து எட்டியிருக்க வேண்டும்; அப்படி எட்டியிருந்து, தன் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அவன் சுகத்தை அனுபவிக்காமலிருக்கவே கூடாது. ஒன்றையொன்று சார்ந்திருக்கிற அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றினையும் அவன் சமநிலையிலே வைத்து அனுபவிக்க வேண்டும். இவற்றுள் ஏதேனும் ஒன்றை அளவுக்கு மிஞ்சி அனுபவித்தால், மற்ற இரண்டுக்கும் ஊறு நேரிடுவதோடு அந்த ஒன்றும் ஊறு பட்டுவிடும். இந்த மேற்கோளில், ஓர் அரசனுடைய கடமைகள் பலவும் திரண்டு காட்சியளிக்கின்றன வென்று கூறலாம். அரசனுக்கும் பிரஜைகளுக்குமிடையே புனிதமான சில உறவு முறைகளை ஏற்படுத்தி வைத்து, அதன் மூலமாக அரசனுடைய கடமைகளை உணர்த்தியிருக்கின்றனர் நமது முன்னோர். முதலாவது, தாய்க்கும் மக்களுக்குமுள்ள உறவு. அரசன் தாய்; பிரஜைகள் மக்கள். என்ன இனிமையான உறவு ! அரசன் எப்பொழுதும் ஒரு கர்ப்ப திரீயைப் போலிருக்க வேண்டும். இது மகாபாரதம் கூறுகிற தீர்ப்பு. ஒரு தாய், தன் வயிற்றிலே இருக்கும் குழந்தையின் க்ஷேமத் திற்காக எப்படிக் கவலை யுடையவளா யிருக்கிறாளோ, அதனுடைய வளர்ச்சிதான் தன்னுடைய வாழ்வு என்று எப்படிக் கருதுகிறாளோ, தனக்கென்று பிரத்தியேகமான ஒரு வாழ்வை வகுத்துக் கொள்ளாமல், குழந்தையினுடைய வாழ்விலே தன்னுடைய வாழ்வை, எப்படி ஐக்கியப்படுத்திக் கொண்டு விடுகிறாளோ அதைப் போல், அரசனானவன், தன்னுடைய பிரஜை களின் க்ஷேமத்தை நாட வேண்டும்; அவர்களைப் போஷித்துக் காப்பாற்றவேண்டும். வயிற்றிலே இருக்கிற குழந்தைக்கு, தன் தாயார், தனக்காக என்னென்ன கஷ்ட நிஷ்டூரங்களை அனுபவிக் கிறாள், உண்பதிலும் உறங்குவதிலுங்கூட என்னென்ன கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாள் என்பன போன்ற விவரங்கள் தெரியா. அது தெரிந்து கொள்ள வேண்டுமே யென்று தாயாரும் ஆவல் கொள்வதில்லை. அதுபோல், ஒரு ராஜ்யத்தின் பிரஜைகளுக்கு, தாங்கள் ஆளப்படுவதாகவே தெரியக்கூடாது. அப்படி ஓர் அரசன் ஆளவேண்டும். அடுத்தது, தந்தைக்கும் பிள்ளைகளுக்குமுள்ள உறவு. தங்களுடைய பிரஜைகளின் தந்தையென்று சொல்லிக்கொள்வதிலே அநேக அரசர்கள் பெருமையடைந்திருக்கிறார்கள். விதேக நாட்டை ( தற்போதைய பீஹார் ராஜ்யத்தின் ஒரு பகுதியை ) ஆண்ட மன்னர்கள், தங்களை ஜனகன் என்ற அடைமொழி யினாலேயே அழைத்துக் கொண்டார்கள். ஜனகன் என்ற இந்தச் சொல்லுக்குத் தந்தை யென்றே பொருள். சீதா பிராட்டியின் தந்தையான ஜனகன், இந்த வரிசையிலே வந்த இரண்டாவது ஜனகன் என்பர் அறிஞர். கௌடில்யனும், அரசன், பிரஜைகளைத் தன் மக்களாகக் கருத வேண்டுமென்று கூறுகிறான். இப்படி இவன் கூறியது ஏட்டளவோடு நிற்கவில்லை, இவனுடைய சீடனின் (சந்திரகுப்தனின்) பேரனான அசோகன், இதனைச் செயலிலே கொண்டுவந்து காட்டி, உலகத்தில் அழியாப்புகழெய்தியிருக்கிறான். தன்னுடைய சாஸனங்கள் வாயிலாக முழக்கம் செய்கிறான் : - எல்லா ஜனங்களும் என்னுடைய குழந்தைகளே. எனக்குப் பிறக்கும் குழந்தைகள், இம்மையிலும் மறுமையிலும் நன்மையையும் சந்தோஷத்தையும் அடையவேண்டுமென்று நான் விரும்புவதைப் போல் எல்லா ஜனங்களும் அடைவேண்டுமென்று விரும்புகிறேன். இன்னும் அரசன், ஆசானாயிருந்து தனது பிரஜைகளை நல் வழிப்படுத்தி வரவேண்டும். மாணாக்கனின் அறியாமையை விலக்கு வதும், அவன் தவறு செய்தால் அதைத் திருத்துவதும், அவனைச் சீல புருஷனாக்குவதும் ஆசானின் கடமைகளன்றோ? இந்தக் கடமைகள் ஓர் அரசனுக்கும் பொருந்தா நிற்கும். ஜனங்களைக் குற்றங் கடிந்து நல்வழிப் படுத்துவதற்காகவே அவன் தண்டதரனாயிருக்கிறான். ஓர் அரசன், தன் பிரஜைகளைப் பொறுத்த மட்டில், தாய், தந்தை, ஆசான், உடன் பிறந்தான், சுற்றத்தான், குபேரன், யமன் ஆகிய ஏழு வகை அறவு பூண்டவனாய், அந்தந்த உறவு முறைக்கேற்ற கடமையைச் செய்து வர வேண்டுமென்னும் கருத்தைச் சுக்கிர நீதி வெளிப்படுத்துகிறது. அரசனுடைய கடமைகளை இங்ஙனம் பலவித உறவுமுறைகளில் புகுத்திக் கூறியிருப்பதன் திரண்ட நோக்கம் என்ன? குடிநலன் தான்: அரசனுடைய சொந்த நலமல்ல. மகுடாபிஷேகம் செய்து கொண்ட பிறகு, அவனுக்கென்று சொந்தமான நன்மையோ, சுகமோ எதுவும் கிடையாதென்பதை ஏற்கனவே வாசகர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். கௌடிலீயம் கூறுகிறது : - பிரஜைகளுடைய சுகமே அரசனுடைய சுகம். பிரஜைகளுக்கு நன்மை செய்வதில் தான் அவனுடைய நன்மை இருக்கிறது. தனக்கு எது பிரியமாயிருக்கிறதோ அதிலே அவன் சுகத்தைக் காணாமல், ஜனங்கள் எதில் சுகமிருக்கிறதென்று கருதுகிறார்களோ அதிலேயே அவன் சுகத்தைக் காணவேண்டும்1 அரேபியாவில் முதன்முதலாக பிளேட்டோவையும் அரிட்டாட்டலையும் அறிமுகப்படுத்தி வைத்தவன் பாராபி2 என்ற பேரறிஞன். இவன், ஓர் அரசனுடைய லட்சியம் என்னவா யிருக்க வேண்டுமென்று வரையறுத்துக் கூறியுள்ள பின் வரும் வாசகம் இங்கு ஒப்புநோக்கிச் சிந்திக்கற் பாலது : - எந்த அரசன், தனது ராஜ்யத்துப் பிரஜைகளை, சுதந்திரத்தையும், சுபிட்சத்தையும், திருப்தியையும் அடையும்படி செய்கிறனோ, அதே சமயத்தில், தனக்கென்று அதிகமாக எதையும் விரும்பாமலிருக்கிறானோ, சுயநலமில்லலாதவனாயிருக்கிறானோ, தன்னுடைய சொல்லையும் செயலையும் ஜனங்கள் பாராட்டினால் போதும் என்று திருப்தி யடை கிறானோ, அவனே அரசர்களில் தலைசிறந்தவன். தான் சொல்லு கிறவார்த்தைகளையும் செய்கிற காரியங்களையும், தனது ஜீவிய தசையிலோ அல்லது தனக்குப் பிற்காலத்திலோ, ஜனங்கள் பாராட்டு கிறார்கள் அல்லது பாராட்டுவார்கள் என்று தெரிந்தால் அதுவே அவன் அடைகிற பரம திருப்தி, பிரஜைகளின் நன்மையையே நோக்கமாகக் கொண்ட அரசன், அந்தப் பிரஜைகளிடமிருந்து வரிபெறுவதைத் தவிர்த்து வேறு எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடாதென்று கண்டிப்புச் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள் நமது நாட்டு அறிஞர்கள். அந்தப் பிரஜைகள், எவ்விதக் குறைவுமின்றிச் சௌக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பார் களானால் அதுவே அவன் அடைகிற பலனாகும். அப்படியானால், பிரஜைகள், அரசன் பிறப்பிக்கிற எல்லா உத்தரவு களுக்கும் கீழ்ப்படிந்து நடக்கச் செய்வதனால் அரசன் ஒருவித சந்தோஷத்தை, ஒருவித பெருமையை யடைகிறான், வரிபெறுவதன் மூலம் தனது சொந்த வாழ்க்கையை நிம்மதியாக நடத்துகிறான், இவை அவன் அடைகிற பிரதிபலன்களல்லவாவென்று வாசகர்கள் கேட்கலாம், வாதவம். பிரஜைகள் ஆட்பட்டுநடப்பதும், வரி செலுத்துவதும், தாங்கள் செய்யவேண்டிய கடமைகளகாகக் கருதியே செய்கிறார்கள்; தங்களுடைய நன்மைக்காகவே செய்கிறார்கள்; அரசனுடைய கட்டாயத் திற்காகவல்ல; அவனுடைய நன்மைக்ககாகவுமல்ல. தன்னுடைய நன்மைக்காகத் தனக்கு ஆட்பட்டு நடக்க வேண்டுமென்றும், வரிசெலுத்த வேண்டுமென்றும் ஓர் அரசன், தன் பிரஜைகளுக்கு உத்தரவிடுவானாகில், அவர்களைக் கட்டாயப் படுத்துவானாகில், அவனுடைய ஆட்சி ஆட்டங்கொடுக்க ஆரம்பித்துவிடும். அரசன் பிரஜைகளிடமிருந்து வரி பெறுகிறபோது, தன்னை, அவர்களுக்கு மேற்பட்ட ஓர் எஜமானனாகக் கருதிக் கொள்ளக் கூடாது; வரி பெறுவது தன்னுடைய உரிமை, அந்த உரிமைக்கு வரம்பு கிடையா தென்றும் எண்ணக்கூடாது. பிரஜைகள் கொடுக்கிற வரியானது, காப்பாற்றும் வேலையைச் செய்கிற அரசனுக்குக் கொடுக்கிற கூலியேயாகும். ஒழுங்காக வேலை செய்தால் ஒழுங்காகக் கூலி கிடைக்கும். ஒழுங்கு தவறி வேலை செய்வானாகில்,ஆட்சி நடத்துவானாகில், ஒழுங்காகக் கூலி கொடுக்க வேண்டுமென்ற கட்டாயம், சரிவர வரி செலுத்த வேண்டுமென்ற அவசியம் பிரஜைகளுக்குக் கிடையாது, வரிமறுப்பு உரிமை பிரஜை களுக்கு எப்பொழுதும் உண்டு. அப்படியே அரசனுக்கும் கூலி பெறும் உரிமை கிடையாது. எந்தக் கணத்தில் அவன் காப்பாற்றுங் கடமையில் பிசகிவிடுகிறானோ அந்தக் கணத்திலேயே அவன் வரிபெறும் உரிமையை இழந்துவிடுகிறான். எனவே பிரஜைகள் , கூலி கொடுக்கிற எஜமானர்களாகவும், அரசன் அந்தக் கூலிக்காகக் காப்பாற்றும் வேலையைச் செய்கிற வேலைக் காரனாகவும் ஆகிறார்கள். மேலே அரசனையும் பிரஜைகளையும் தாய், தந்தை முதலிய சில உறவு நிலைகளிலே வைத்துச் சொன்னது போல் இந்த வேலைக்காரன் - எஜமானர்கள் என்ற நிலையிலும் வைத்துச் சொல்லியிருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.1 முன்னோர்கள் இப்படிச் சொல்லியிருப்பது மட்டுமல்ல; தங்களை, ஜனங்களுடைய தொண்டர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை யடைந்தவர்களும், அப்படியே வாழ்வதில் திருப்தி கண்டவர்களுமான அநேக அரசர்கள் நமது நாட்டில் இருந்திருக்கிறார்கள். தட்சசிலை யென்னும் பிரதேசத்தை ஆண்டு வந்த ஓர் அரசன், ஒரு பெண்ணின் மீது அபார மோகங்கொண்டு விட்டான். இதனை அறிந்து அந்தப் பெண், ராஜ்ய நிருவாகப் பொறுப்பைத் தன்னிடம் ஒப்புவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாள். அதற்கு அரசன் பின்வரும் பதிலைக் கூறினான் : - பெண்ணே ! எனது ராஜ்யத்துப் பிரஜைகளின் மீது எனக்கு அதிகாரம் கிடையாது. நான் அவர்களுடைய பிரபுவோ, எஜமானனோ அல்ல. யார் கலகம் செய்கிறார்களோ, யார் தவறிழைக்கிறார்களோ அவர்கள் மீது மட்டுமே எனக்கு அதிகாரம் உண்டு. ஆதலின் ஆளும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்க முடியாது. அரசன், காப்பாற்றுங்கடமையைச் செய்வதற்குக் கூலியாக வரி பெறுகின்றனாயினும், அந்தக் கூலியைத் தன் சொந்தத்திற்கு, தன்னிஷ்டப் படி செலவழித்துக் கொள்ள அவனுக்கு உரிமை கிடையாது. காப்பாற்றுங் கடமையை ஒழுங்காகச் செய்துவர அவனுக்குச் சில வாழ்க்கை வசதிகள் வேண்டுமல்லவா, அவைகளுக்காக மட்டும் அவன், மேற்படி வரியில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்ளலாம்;1 அதுவும், ஜனப்பிரதிநிதிகள், மந்திரிப் பிரதானிகள் ஆகியோருடைய சம்மதத்தின் பேரில்தான். வரியின் பெரும்பகுதியை அவன் பிரஜைகளுக்காகவே செலவழிக்க வேண்டும். நிகரமாகப் பார்த்தால், அரசன், பயன் கருதாமல் பணியாற்றும் கர்ம யோகியாகத் திகழ வேண்டும். இத்தகைய கர்ம யோகியை அரசனாக அடைந்திருக்கிற ராஜ்யத்திற்குத்தான் நல்ல காலம். அரசன் எப்பொழுது வெறும் போகியாகிவிடுகிறானோ அப்பொழுதே அந்த ராஜ்யத்திற்குக் கெட்டகாலம் பிறந்துவிடுகிறது. எனவே, ஒரு ராஜ்யத்தின் நல்ல காலத்திற்கும் கெட்ட காலத்திற்கும் அரசனே காரணமாயிருக் கிறான். இந்தக் கருத்தை, மகாபாரதம், மனுநீதி, சுக்கிர நீதி இப்படிப் பல நூல்களும் வலியுறுத்திக் காட்டுகின்றன. காலத்திற்குக் காரணமாயுள்ள அரசன், அன்றாடம், தன்னுடைய காலத்தை எப்படிச் செலவழிக்கவேண்டும்? ஒரு கால அட்டவணையையே போட்டுக் கொடுத்திருக்கிறார்கள் நமது அரசியல் பண்டிதர்கள். இதன்படி பகலும் இரவும் முறையே எட்டு எட்டு பாகங் களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாகமும் ஒன்றரை மணி நேரமுடையது, பகலென்பது, சூரியோதயம் முதல் சூரியாதமனம் வரையில்; அப்படியே இரவென்பது, சூரியாதமனம் முதல் சூரியோதயம் வரையில், தற்காலக் கணக்குப்படி, காலை ஆறு மணிவரை இரவென்றும் சொல்லலாம். கௌடில்யன் என்ன மாதிரி அட்டவணை போட்டுக் கொடுத்திருக்கிறான், பார்ப்போம். பகல் முதற்பாகம் ( 6 - 7. 30 ) - சுற்றிக் காவலர்களை நியமித்துவிட்டு, ராஜ்யத்தின் வரவு செலவுகளைக் கவனித்தல். இரண்டாம் பாகம் (7. 30 - 9) காணவந்திருக்கும் நாட்டு மக்கள், நகரமாந்தர் முதலியோருக்கு எளிதில் காட்சியளித்து அவர்களுடைய குறைநிறை களைக் கேட்டு, தக்கன செய்தல்.1 இவையிரண்டும் ஆதான மண்டபத்திலிருந்து கொண்டு கவனிக்க வேண்டிய அலுவல்கள், மூன்றாம் பாகம் ( 9 - 10. 30 மணி ) நீராடல், உணவு கொள்ளல், நல்ல நூல்களைப் படித்தல் முதலியன. நான்காம் பாகம் ( 10. 30 - 12) ரொக்கமாக வந்திருக்கும் வரிப்பணத்தை வாங்கிக் கொள்ளுதல், நிருவாக இலாகாக்களின் தலைவர்களுடனிருந்து அரசாங்கக் காரியங்களைக் கவனித்தல் முதலியன. ஐந்தாம் பாகம் ( 12 - 1. 30 மணி ) மந்திரி சபையினரிடமிருந்து வந்திருக்கும் குறிப்பேடுகளை2யும் ராஜ்யத்தின் மூலை முடுக்குகளிலிருந்து ஒற்றர்கள் மூலம் வந்திருக்கும் ரகசியச் செய்திகளையும் கவனித்தல். ஆறாம் பாகம் (1. 30 - 3மணி ) இந்த நேரத்தில் அரசன், ராஜ காரியங்களைப் பற்றிச் சிந்திக்கலாம்: அல்லது தனக்குப் பிடித்தமான வகையில் பொழுது போக்கலாம். மன ஓய்வுக்காகவும் மனமாறுதலுக்காகவும் உபயோகிக்க வேண்டிய காலம் இது. ஏழாம் பாகம் ( 3 - 4. 30 மணி ) நால்வகைப்படைகளைப் பார்வையிடல். எட்டாம் பாகம் (4.30 - 6 மணி) ராணுவ சம்பந்தமான நடவடிக்கைகளைப் பற்றிப்பிரதம சேனாதிபதியுடன் கலந்தாலோசித்தல்; பின்னர் நித்தியானுஷ்டானம் முதலியன. இரவு முதற்பாகம் ( 6 - 7. 30 மணி) ஒற்றர்களை வர வழைத்துப் பேசுதல் முதலியன. இரண்டாம் பாகம் ( 7. 30 - 9 மணி ) நானம், சாப்பாடு, படிப்பு முதலியன. மூன்று, நான்கு, ஐந்தாம் பாகங்கள் ( 9 - 1. 30 மணி ) இன்னிசை முழங்கப் படுக்கைக்குச் சென்று துயிலுதல். ஆறாம் பாகம் ( 1. 30 - 3 மணி ) வாத்திய கோஷங்களுக்கு மத்தியில் எழுந்திருந்து, சிறிது நேரம் சாதிர விசாரம் செய்தல்; பிறகு மறுநாள் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றிச் சிந்தித்தல். ஏழாம் பாகம் ( 3 - 4. 30 மணி ) அரசாங்க நிருவாக சம்பந்தமாக இன்னின்ன படி செய்ய வேண்டுமென்று தீர்மானித்தல், ஒற்றர்களுக்கு ஆணையிடுதல் முதலியன. எட்டாம் பாகம் (4 . 30 - 6 மணி) புரோகிதன், ஆசாரியன் இவர்களை முறைப்படி வணங்கி அவர்களது ஆசியைப் பெற்றுக்கொண்டு, பிறகு ஆதான வைத்தியன், ஜோசியன் இவர்களையும், மடைப்பள்ளித் தலைவனையும் கண்டு பேசுதல் : அதற்குப் பிறகு, கன்றோடு கூடிய ஒரு பசுவையும் ஒரு விருஷபத்தையும் முறையே வலம் வந்து தொழுதுவிட்டு ஆதான மண்டபத்திற்கு வருதல். அரசனது கடமைகளைப் பற்றிச் சொல்லப் புகுந்த பிற்கால அறிஞர் பலரும், கௌடில்யனுடைய இந்தக் கால அட்டவணையையே பெரும் பாலும் பின்பற்றியிருக்கிறார்கள். ஆனால் சுக்கிர நீதி இதனைச் சிறிது மாற்றிக் கொடுத்திருக்கிறது. அதனையும் பார்ப்போம்:- விடியற்காலை 3 மணி முதல் 4 . 30 மணி வரை - அரசாங்கத்தின் வரவு செலவுகளைக் கவனித்தல். 4. 30 மணிமுதல் 7. 30 மணி வரை - நானம், தெய்வ வழிபாடு, தேகப் பயிற்சி முதலியன. 7. 30 மணி முதல் 11. 15 மணி வரை - அரசாங்கக் காரியங்களைக் கவனித்தல். 11. 15 மணி முதல் 12. 45 மணி வரை - பகல் சாப்பாடு, ஓய்வு கொள்ளுதல், புராண படனம் முதலியன. 12. 45 மணி முதல் 2. 15 மணி வரை - மந்திரி சபையினரோடு கலந்தாலோசித்தல், நியாய விசாரணை முதலியன. 2. 15 மணி முதல் 3. 45 மணி வரை - வேட்டை விளையாட்டுகளில் பொழுது போக்கு. 3. 45 மணி முதல் 4. 30 மணி வரை - படைகளைப் பார்வையிடல். 4. 30 மணி முதல் 6 மணி வரை - நித்தியானுஷ்டானம், சாப்பாடு முதலியன. 6 மணி மணி 7. 30 மணி வரை - ஒற்றர்கள் கொண்டு வந்திருக்கும் செய்திகளைப் பரிசீலனை செய்தல். 7. 30 மணி முதல் 3 மணி வரை - நித்திரை. இந்தக் கால அட்டவணைப்படியே அரசன் மணிக்கணக்கில் தன் காரியத்தைக் கவனித்து வருதல் சாத்தியமாவென்று வாசகர்கள் கேட்கலாம். சாத்தியமென்று எப்படிச் சொல்ல முடியும்? குறித்த காலத்தில் குறித்த காரியத்தைச் செய்ய வேண்டும், செய்கிற காரியத்தில் ஒருவித ஒழுங்கு இருக்க வேண்டுமென்பதற் காகவே, கால அட்டவணை ஒன்றை அரசியல் பண்டிதர்கள் வகுத்துக் காட்டினார்களே தவிர, அதை அப்படியே பின்பற்ற வேண்டுமென்று கட்டளையிடவில்லை; பின் பற்ற முடியுமென்று எதிர் பார்க்கவுமில்லை. கௌடில்யனே அரசன், தன் சக்திக்குத் தகுந்தபடி மேற்படி கால அட்டவணையை மாற்றி யமைத்துக் கொண்டு தன் காரியங்களைக் கவனிக்கலாம் என்று கூறியிருக்கிறான். தவிர, அரசன் தலைநகரத்திலிருக்கிற போது தான், இந்தக் காரியக் கிரமம் சாத்தியமானதென்பதை அரசியல் பண்டிதர்கள் உணராமலில்லை. மேற்படி அட்டவணையை யொட்டி அரசன் கவனிக்க வேண்டிய மேலும் சிலவற்றைக் கீழே வரிசையாகக் கூறுவோம். 1. அரசன், தினந்தோறும் அரச உடையணிந்து ஆதான மண்டபத்திற்கு வந்து ராஜ்ய விவகாரங்களைக் கவனிப்பதோடு, தன் பிரஜைகளுக்கும் காட்சியளிக்க வேண்டும். இதனைத் தற்கால பாஷையில் தர்பார் நடத்துதல், என்னலாம். அப்படித் தன்னைக் காணவரும் பிரஜைகள் எவ்வாற்றானும் கஷ்டப்படாமல் வந்து தன்னைக் காணக்கூடிய வண்ணம் எல்லா ஏற்பாடுகளையும் செய்யவேண்டும். 2. குறைகளைச் சொல்லிக் கொள்ளவேண்டுமென்று வருகிறவர் களை அதிக நேரம் காக்க வைக்கக் கூடாது. அவர் களுடைய குறை களைப் பொறுமையுடன் கேட்டு உடனுக்குடன் அவர்களுக்குப் பரிகாரம் கிடைக்குமாறு செய்ய வேண்டும். வகுப்பு வித்தியாசமோ, அந்தது வித்தியாசமோ, ஆண் பெண் வித்தியாசமோ இல்லாமல் எல்லாப் பிரஜைகளும் அரசனிடம் நேரே சென்று தங்கள் குறைகளைச் சொல்லிக் கொள்ள உரிமையுடையவர்களென்று ராமாயணம் கூறுகிறது. எந்த அரசன், தன் பிரஜைகளால் பார்க்கப்படாமலிருந்து கொண்டு, தான் கவனிக்க வேண்டிய காரியங்களைத் தனக்கு அடுத்தபடியாயுள்ள உத்தியோகதர்களைக் கவனிக்குமாறு செய்கிறானோ அவன், ராஜ்ய விவகாரங்களில் குழப்பத்தை உண்டு பண்ணியவனாகிறான்; அதனால் பிரஜைகளுக்கு அதிருப்தி ஏற்படுகிறது, அவனும் சத்துருக்களுக்கு இரையாகிறான் என்கிறது கௌடிலீயம். 3. பிரஜைகளின் குறைகளைக் கேட்டு அவர்களுக்கு நியாயம் வழங்குகிறபோது, அரசனுடன் சில மந்திரிமார்களும், தர்ம சாதிரத்தில் தேர்ச்சி பெற்றவர்களும் இருக்கவேண்டும். ஏனென்றால் நியாயம் வழங்குவதற்கு முன்னர், அரசன் அவர்களைக் கலந்தாலோசிப்பது அவசியமாகும். நியாயம் வழங்குகிற விஷயத்தில், வகுப்பு, அந்தது முதலிய எந்த விதமான வித்தியாசமும் பாராட்டப் படக்கூடாது. 4. தெய்வ காரியங்கள், துறவிகள் முதலாயினோருடைய விஷயங்கள், கால் நடைகள், யாத்திரை தலங்கள் ஆகிய இவைசம்பந்தப் பட்ட விஷயங்கள், வயது வராத சிறுவர்கள் (மைனர்கள் ), வயோதிகர்கள், நோயாளிகள், அநாதைகள், திரீகள் ஆகியோருடைய விஷயங்கள், இவைகளை யெல்லாம் வரிசைக்கிரமமாகவோ அல்லது அவசர மானதை முதலிலேயோ அரசனே நேரில் கவனிக்க வேண்டும். 5. அவசர காரியங்களை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தள்ளிப் போடாமல் உடனே கவனிக்க வேண்டும்; வேளை சமயம் பார்க்கக்கூடாது. அப்படித் தள்ளிப் போட்டால் பின்னர் அந்தக் காரியங்களைக் கவனித்தலே அசாத்தியாமாகிவிடும். எப்பொழுதும் காரியத்திற்குத் தயாராயிருப்பது தான் அரசன் அனுஷ்டிக்க வேண்டிய விரதம்; தன் கடமைகளைத் திருப்திகரமாகச் செய்து கொண்டு போவதுதான் அவன் செய்கிறயக்ஞம்; எல்லோரையும் ரட்சிப்பதுதான், தன்னை அரசனாக்கியதற்குப் பிரதியாக அவன் செலுத்தும் கட்டணம் என்கிறது கௌடிலீயம். அரசன், எப்பொழுதும் விழிப்புடனிருக்க வேண்டுமென்று சொல்லப் பட்டிருக் கிறது; அதாவது சுறுசுறுப்புடன் இருக்கவேண்டும்; சோம்பலென்பது அறவே கூடாது. 6. அரசன், பிரதி வருஷமும். தனது ராஜ்யத்தைச் சுற்றிப் பார்த்து, பிரஜைகளின் குறைநிறைகளை நேரில் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுது அரசாங்க உத்தியோகதர்களுக்காக அதிகம் பரிந்து பேசாமல், பிரஜைகள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டு, பரிகாரம் செய்து கொடுக்க வேண்டிய இடத்தில் உடனடியாகப் பரிகாரந் தேடித்தரல் வேண்டும். பிரஜைகளைத்துன்புறுத்தும் அதிகாரிகளை, உடனுக்குடன் விசாரணைசெய்து, தண்டிக்க வேண்டிய அவசியமிருந்தால் தண்டிக்க வேண்டும். 7. அரசன் யாரிடத்திலிருந்தும், எந்தவிதமான நன் கொடையும் வாங்கக் கூடாதென்று ராமாயணம் கட்டளை யிடுகிறது. அவன் நன்கொடை கொடுக்கத் தான் தகுதியுடையவனே தவிர வாங்கத் தகுதி யுடைய வனல்லன். இந்த நியதியினால் அவன் அநீதமான முறையில் பிரஜைகளிடமிருந்து பணம் பறிக்காமல் தடுக்கப்பட்டான். கௌடில்யன் வகுத்துக் கொடுத்த அன்றாட வேலைத் திட்டத்தை அவன் காலத்திலாகட்டும், பிற்காலத்திலாகட்டும், அரசர்கள் கூடிய மட்டில் பின்பற்றி வந்திருக்கிறார்களென்று அறிந்து நாம் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். சந்திரகுப்த மௌரியனுடைய அன்றாட அலுவல்களை நேரில் கவனிப்பதற்குச் சந்தர்ப்பம் பெற்றிருந்த மெகாதனீ கூறுகிறான் : - அரசன் ( சந்திரகுப்தன்) பகலில் தூங்கவேமாட்டான். அவன், யுத்த காலத்திலும், ஜனங்களிடையே சென்று நீதி வழங்க வேண்டியிருக்கிற பொழுதும், அரண்மனையை விட்டு வெளியே செல்கிறான். மற்றச் சமயங்களில் அவன், நாள் பூராவும் ஆதான மண்டபத்திலேயே இருந்து அரச காரியங்களைக் கவனிக்கிறான். உடல் நலத்தைக் கூட அவன் பொருட்படுத்துவதில்லை . . . . . . அரண்மனையானது, எல்லோருக்கும் எப்பொழுதும், அரசன் ஆடை முதலியவற்றால் தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கிற சமயத்தில் கூட திறந்துவிடப் பட்டிருக்கிறது. அப்பொழுதும் அவன், வந்திருக்கும் தூதர்களுக்குப் பேட்டியளிக்கிறான்; தன் பிரஜைகளுக்கு நீதி வழங்குகிறான். சந்திரகுப்தனின் பேரனாகிய அசோகன், ராஜ்ய நன்மைக்காக எப்படி அல்லும் பகலும் உழைத்து வந்தானென்பதை அவனது சாஸனங்கள் அறிவிக்கின்றன. அவனே கூறுகிறான் ஆறாம் பாறைச் சாஸனத்தில் : - எல்லா நேரங்களிலும் , எல்லா இடங்களிலும், நான் சாப்பிட்டுக் கொண் டிருந்தாலும் சரி, அரண்மனையைச் சேர்ந்த உத்தியான வனத்திலிருந் தாலுஞ் சரி, எங்கிருந்தபோதிலும், ஜனங்களுடைய காரியங்களைப் பற்றி அரசாங்க உத்தியோகதர்கள் எனக்கு அறிவிக்கவேண்டும். ஜனங் களுடைய காரியங்களைக் கவனிக்க நான் எல்லா இடங்களிலும் தயாரா யிருக்கிறேன் . . . . . . எனது முயற்சிகளிலும், காரியங்களைத் துரிதமாகச் செய்வதிலும் நான் திருப்தியடைவதே கிடையாது. எல்லோருடைய நன்மைக்காகவும் நான் தொண்டு செய்யவேண்டும். இதற்கு ஆணிவேர் போலிருப்பது இடையறா முயற்சி; காரியங்களைத் துரிதமாகச் செய்தல். ஜீவராசிகளனைத்திற்கும் எனது கடமையைச் செய்ய வேண்டுமென்ற லட்சியத்தையே எனது முயற்சிகளெல்லாம் கொண்டிருக்கின்றன. எந்த அரசன், தன்னுடைய அன்றாட அலுவல்களை ஒழுங்காகக் கவனித்துக் கொண்டு வருகிறானோ அவன் என்னுடைய ராஜ்யத்தில், கள்ளர்களோ, கோழைகளோ, குடிகாரர்களோ, நித்திய கன்மங்களைச் செய்யாதவர்களோ, கல்வியறிவு பெறாதவர்களோ, விபசாரஞ் செய்கிற ஆண்களோ, பெண்களோ இல்லை யென்று மனத்திருப்தியோடு, தன்னம்பிக் கையோடு சொல்லிக் கொள்ளலாம். மகா பண்டிதனும், கேகய நாட்டு அரசனுமான அசுவபதி என்பவன் இங்ஙனம் சொல்லிக் கொண்டானென்று சாந்தோக்ய உபநிஷதம் கூறுகிறது. இங்ஙனம் சொல்லிக் கொண்ட அரசர்கள் எத்தனையோ பேர் நமது நாட்டில் ஆண்டு வந்திருக்கிறார்கள். இவர்களுடைய வரலாறுகளை, சரித்திரப் பெட்டகமே! நீ எப்பொழுது தமிழ் நாட்டுக்குத் திறந்து காட்டப்போகிறாய்? இதுகாறும் அரசனது கடமைகளைப் பற்றிக் கூறினோம், இனி உரிமைகளைப் பற்றிக் கூறுவோம். இவை அதிகமில்லை யென்றே சொல்லவேண்டும். தவிர, இவற்றை உரிமைகளென்று சொல்வதைக் காட்டிலும் சலுகைகளென்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். 1. அரசன், சமுதாயத்தின் முதற்புருஷன். இந்த முறையில், சமுதாயத்தைச் சேர்ந்த அனைவருடைய மரியாதையையும் பெறு தற்குரியன், 2. அவனுடைய பிரஜைகளில் யாரும் அவன் மீது வழக்குத் தொடர முடியாது; எந்த ஒரு நியாய தலத்திலும் அவனை ஒரு சாட்சியாகக் கொண்டு வரக் கூடாது. 3. சுற்றுப் பிரயாணஞ் செய்கிற காலத்தில் அவன் எந்த விதமான பிரயாணக்கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. 4. ராஜ்யத்தில் சந்ததி இல்லாமல் இறந்து போனவர்களுடைய சொத்து பற்றுகள் அரசனையே சாரும். 5. பூமியில் கிடக்கும் புதையல்கள், சுரங்கப் பொருள்கள் முதலியன, குறிப்பிட்ட ஒரு பெறுமானத்திற்கு மேற்பட்டிருப்பின், அவை அரசனையே சேரும். இன்னோரன்ன சில சலுகைகள் அரசனுக்குக் காட்டப்பட்டன. 8. இளவரசன் இளவரசன் என்று சொன்னால், ஆள்கின்ற அரசனுக்குப் பிறகு ஆளப்போகிறவன் யாரோ அவனையே குறிக்கும். ஆளப் போகிறவன் யாரென்பதை ஆள்கின்ற அரசன், தான் ஆண்டு கொண்டிருக்கிற காலத்திலேயே நியமித்துவிட வேண்டும்; நியமித்து அவனுக்கு இளமையிலிருந்தே, ஆளுங் கடமையை ஒழுங்காகச் செய்து வருவதற் கான சகல பயிற்சிகளையும் கொடுக்கவேண்டும். ஓர் அரசனின் முக்கியமான கடமைகளுள் இது முக்கியமானதாகும். இதிலிருந்து அறியக் கிடப்பது என்னவென்றால், ஓர் அரசன் தன்னுடைய ஆட்சி காலத்தில் ராஜ்யம் க்ஷேமமாயிருந்தால் போது மென்பதோடு திருப்தியடையக் கூடாது; தனக்குப் பின்னாலும் வழி வழியாக அந்த ராஜ்யம் க்ஷேமமாக இருக்க வேண்டுமென்று எண்ணவும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுப் போகவும் வேண்டுமென்பதே யாம். தனக்குப் பின்னால் ராஜ்யம், சரியன ஆளுகையின்றிச் சீர்கெடு மானால் அதற்குக் காரணமாக, ஜனங்கள், தன்னையே சுட்டிக் காட்டுவார் களென்பதை அவன் உணர வேண்டும், அப்படியே ஒவ்வொரு அரசனும் உணர்ந்திருந்தார்களென்றும், தனக்குப் பின்னால் தன்னுடைய இடத்தில் அமர்ந்து, தனக்குப் பின்னால் தன்னுடைய இடத்தில் அமர்ந்து, தான் நடத்தி வருகிற நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்துவர ஒருவனை நியமித்துவிட்டுப் போனானென்றும் நமது பண்டைய நூல்கள் வாயிலாக அறிகிறோம். கோசல ராஜ்யத்து வேந்தனாகிய தசரதன், தன்னுடைய மகனில்லாக் குறையை எவ்வண்ணம் தெரிவித்துக் கொள்கிறான்? தனக்குப் பின்னால், இந்த ராஜ்யம், அரசனில்லாமல் வருந்துமே யென் கிறான். மகனில்லாக் குறையத் தன் குறையாக இவன் கருத வில்லை; ராஜ்யத்தின் குறையாகவே கருதுகிறான். மற்றும், தன்னுடல் புளகிக்கவும் உள்ளம் பூரிக்கவும் மகன் வேண்டுமென்று இவன் கோரவில்லை; ராஜ்யத்தைப் பரிபாலனம் செய்யவே, அந்தப் பரிபாலனத்தின் விளைவாக ஜனங்களின் உடல் புளகிக்கவும் உள்ளம் பூரிக்கவுமே மகன் வேண்டுமென்று கோருகிறான். ராஜ்யத்தின் நிரந்தரமரன க்ஷேமத்திலே இவனுக்கிருந்த கவலை இதிலிருந்து வெளிப்படுகிறது. சரி; அரசன் மட்டும் ராஜ்யத்தின் நிரந்தர க்ஷேமத்திலே கவலை யுடையவனாக இருந்தால் போதுமா? அந்தக் கவலை ஜனங்களுக்கும் இருக்க வேண்டாமா? ஆம்; இருக்க வேண்டும்; அப்படியே இருந்தது நமது நாட்டில். ஆளுகையொன்று நடைபெறுகிறதென்று தெரியாமல் தாங்கள் இப்பொழுது ஆளப்பட்டு வருவதைப் போல் தங்கள் சந்ததியினரும் ஆளப்பட வேண்டுமென்று ஜனங்கள் ஆவல் கொண்டிருந்தார்கள்; அதற்கான ஏற்பாடுகளை இப்பொழுதைய அரசன் செய்துவிட்டுப் போக வேண்டுமென்று விரும்பினார்கள்; செய்யாமலிருந்துவிடு வானோ வென்று கவலை கொண்டார்கள்; அரசனுக்கு, காலத்தில் ஒரு மகன் பிறக்காவிட்டால் இன்னமும் பிறக்கவில்லையேயென்று ஏக்கப் பட்டார்கள், இந்த ஏக்கம், எவ்வளவு ஆழ்ந்ததாயிருந்த தென்பது, ஒரு மகன் பிறந்துவிட்ட பிறகு அவர்கள் அடைந்த மகிழ்ச்சியின் போதுதான் வெளிப்பட்டது. அந்த மகிழ்ச்சி எல்லையற்றிருந்ததாகப் பழைய நூல்கள் வருணித்திருக்கின்றன. மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் அவனுடைய - அந்த மகனுடைய - வளர்ச்சியிலும் கருத்துச் செலுத்தினார்கள். அரசனுக்கு மகன் பிறந்தான் என்று தெரிந்ததும், பால் பணம் என்று சொல்லி, அவர வருடைய சக்திக்குத் தகுந்தபடி ஒரு சிறு தொகையை அரண் மனையில் கொண்டு போய்க் கொடுப்பார்கள். கொடுத்த தொகை முக்கியமல்ல; காட்டிய அன்புதான் முக்கியம். ஜனங்களுடைய அன்பிலே வருங்கால அரசன் வளர்ந்து வந்தான். இளவரசனாக நியமிக்கப்பட வேண்டியவன் யார்? அரசனுடைய மூத்த மகன். இது பொது விதி. அரச பதவி பரம்பரை பாத்தியதையாகி விட்டதல்லவா? ஆனால் மூத்த மகனே நியமிக்கப்படவேண்டு மென்பது கட்டாயமல்ல. அந்த மூத்த மகன் ஆள்வதற்கான தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். உடல் ஊனம், நோயுடைமை, கூர்மையான அறிவின்மை, செயலாற்றுந் திறமையின்மை, ஒழுக்கக்கேடு, இப்படி மனிதர்களுக்கு இயற்கையாக இருக்கக் கூடியதும், சேர்க்கை தோஷத் தினால் ஏற்படக் கூடியதுமான எத்தனையோ குறைபாடுகள் உண்டல்லவா, இவற்றுள் ஏதேனும் ஒன்றுடையவனாக இருக்கும் பட்சத்தில் கூட அவன் இளவரசனாக நியமனம் பெறுதற்குரியனல்லன், மூத்த மகனா யிருந்தாலும் மிக்க கர்வமுள்ளவனாயிருந்தால் அவன் ராஜ்யத்தை அடைகிறதில்லை என்ற மகாபாரத வாசகம் இங்குக் கவனிக்கத்தக்கது. மூத்த மகனென்பதொன்றே அவனுக்கு ஆளும் உரிமையைக் கொடுத்துவிடாது; ஆள்வதற்குரிய தகுதியையும் அவன் பெற்றிருக்க வேண்டும். மூத்த மகன் தகுதியற்றவனாக இருந்தால், அரசன், அவனை இளவரசனாக நியமனம் செய்யமாட்டான். ஜனங்கள் அந்த நியமனத்தை விரும்பமாட்டார்கள்; ஏன், நிராகரிக்கவும் செய்வார் களென்பது அவனுக்குத் தெரியுமல்லவா? தங்களுக்கு வேண்டாத அரசனை விரும்பாத உரிமை, நிராகரிக்கிற அதிகாரம் ஜனங்களுக்கு இருந்தது. இதைக் கடைசி அத்தியாயத்தில் காண்போம். அரசன் விஷயத்தில் இருந்த உரிமையும் அதிகாரமும் இளவரசன் விஷயத்திலும் இருந்தன வென்பதை நாம் சொல்லத் தேவையில்லை. இதை உணர்ந்திருக்கிற அரசன், தனது சொந்த விருப்பு வெறுப்புக்களையொட்டி இளவரச நியமனத்தைச் செய்ய மாட்டானல்லவா? செய்யவுமில்லை எந்த ஓர் அரசனும் நமது நாட்டில், கங்கையைக் கொணர்ந்த பகீரதனுடைய மூதாதையர்களில் ஒருவனான சகரன்என்ற அரசன், தன் மூத்த மகன் அசமஞ்சன் என்பவன் எவ்விதத்திலும் திறமையற்றவனாயிருப்பது கண்டு அவனை இளவரசனாக நியமிக்கவில்லை; அது மட்டுமல்ல; அவனை நாட்டினின்று வெளியேற்றியும் விட்டான். இன்னும், மகாபாரதம் உத்தியோக பர்வத்தில் கூறப்பட்டுள்ள ஒரு வரலாற்றின் படி, பிரதீபன் என்ற ஓர் அரசன், தன் மூத்த மகனான வாதாபி யென்பவனுக்கு அபிஷேகம் செய்விக்க விழைகிறான். அந்த வாதாபியோ, ஆளுங் கலையில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தான். ஜனங்களும் அவனிடம் அன்பு பாராட்டினார்கள். ஆயினும் அவனுக்கு அபிஷேகம் செய்விக்கக் கூடாதென்று தடுத்து விட்டார்கள். காரணம் அவனுக்குக் குஷ்ட நோய். இந்த ஒரு காரணத்திற்காக அவன் நிராகரிக்கப்பட்டுவிட்டான். மூத்த மகன் தகுதியற்றவன் எனறு தீர்மானித்து விட்டதும், அரசன், தனது மற்றப் பிள்ளைகளில் ஒருவனையோ, பிள்ளைகளில்லாவிட்டால் தன் தம்பியையோ, சிறிய தந்தை வயதில் சிறியவனாயிருந்தால் அவனையோ, தமையன் மகனையோ, தன்னால் சுவீகாரம் எடுத்துக் கொள்ளப்பட்ட மகனையோ, பிள்ளை வயிற்றுப் பேரனையோ, பெண் வயிற்றுப் பேரனையோ, இப்படி ஒருவரும் இல்லாவிட்டால் தன் அன்புக் குரியவனான ஒருவனையோ ,இளவரசனாக நியமனம் செய்யவேண்டும். நியமன விஷயத்தில் இந்த வரிசைக்கிரமம் பின்பற்றப் பட வேண்டும். அரசன், இளவரசனாக யாரை நியமனஞ் செய்த போதிலும், மூத்த மகனாயிருந்தாலும், அந்த மூத்த மகன் எல்லா அமிசங்களிலும் தகுதி யுடையவனாயிருந்தாலும், அவனை இளவரசனாக ஊர்ஜிதம் செய் வதற்கு முன்னர் ஜனங்களுடைய சம்மதத்தைப் பெற வேண்டும். இந்தச் சம்மதம் பெறுவதிலும் அவன் சாதுரியமாக நடந்து கொள்ள வேண்டும். எப்படியென்றால், ஆளக்கூடியவன் யாரென்பதைப் பற்றித் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவிப்பதற்குமுன்னர் ஜனங்களுடைய விருப்பமின்ன தென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். தன் விருப்பத்திற்கு மாறாக ஜன விருப்பம் இருக்கு மானால், தன் விருப்பத்தை அரசன் வற் புறுத்தக்கூடாது. தன்னுடைய விருப்பமும் ஜனங்களுடைய விருப்பமும் ஒன்றா யிருக்கிறது என்று தெரிந்து கொண்ட பிறகே, அரசன் தனது நியமனத்திற்கு அங்கீகாரம் கோரவேண்டும்; ஜனங்களும் அங்கீகாரம் கொடுக்கவேண்டும். இப்படி ஜனங்கள் கொடுப்பது அரசனுடைய தாட்சண்யத்திறகாக இருக்கக்கூடாது; இளவரசனுக்குக் காட்டுகின்ற சலுகையாகவுமிருக்கக் கூடாது; தாங்கள் மனமொப்பிச் செய்கிற காரியமாகவே இருக்கவேண்டும். இதுதான் ஜன சம்மதத்தைப் பெறவேண்டுமென்பதன் அடிப்படை நோக்கம். ஜனங்கள் அங்கீகாரம் கொடுத்த பிறகுதான் இளவரச நியமனம் ஊர்ஜிதமடையும். ஊர்ஜிதப்படுத்துகிற சடங்குதான் யுவராஜ பட்டா பிஷேகம். யுவராஜன் - இளவரசன். அரசனாவதற்கு எப்படி மகுடா பிஷேகம் அவசியமோ அப்படியே இளவரசனாவ தற்கும் பட்டாபிஷேகம் அவசியம். இந்தப் பட்டாபிஷேகம், மகுடாபிஷேகம் நடைபெற்ற ஏறக் குறைய அதே முறையிலேயே சில சில மாறுதல்களுடன் நடைபெறும். இது நடைபெற்ற பிறகுதான் அவனுக்கு - இளவரசனுக்கு - த் தனி மதிப்பும் அந்ததும் ஏற்படும. அரசனுடைய வலது பக்கத்துத் தோள்களும், செவிகளும், கண்களுமாவான் இளவரசன் என்றும், இளவரசன் இல்லாத அரசன் மேற்படி உறுப்புக்கள் இல்லாதவன் என்றும் சுக்கிரநீதி கூறுகிறது. இந்த யுவராஜ பட்டாபிஷேகம், இளவரசனுடைய எத்தனை யாவது வயதில் நடைபெற வேண்டுமென்பதற்கு நிர்ணயமான விதி யொன்றும் இருந்தாதாகத் தெரியவில்லை. தசரதன் மகன் ராமனுக்கு, அவனுடைய இருபத்தெட்டாவது வயதில் நடைபெற ஏற்பாடாகி இருந்ததென்று ராமாயணத் திலிருந்து அறிகிறோம். ஆக, ஆண்டு கொண்டிருக்கும் அரசனுடைய உடல்நிலை, மனோநிலை இவைகளைப் பொறுத்து இது நிர்ணயிக்கப் பட்டதுபோலும். எப்படியும் அவன் உயிரோடிருக் கையிலேயே இது நடைபெற்றுவிட வேண்டும். ஏனென்றால் அவனுடைய பிற்காலத்தில், அரச பதவிக்குப் போட்டி இருக்கக் கூடாதல்லவா? போட்டி இருக்குமானால் ராஜ்யம் முழுவதும் பாதிக்கப்படுமல்லவா? இந்த நிலைக்கு இடங்கொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, ஆண்டு கொண்டிருக்கும் அரசனுடைய இன்றி யமையாத கடமையாகும். இனி, இளவரசனாக நியமிக்கப்பட்டவனுக்கு எத்தகைய கல்விப் பயிற்சி அளிக்கப்பட்டதென்று பார்ப்போம். பொதுவாக, அரசிளங் குமரர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்விப் பயிற்சியே அளிக்கப்பட்டது; இளவரசுக்குரியவன் விஷயத்தில் சிறிது விசேஷ கவனம் செலுத்தப்பட்டது. இவ்வளவு தான் வித்தியாசம். அரசிளங் குமரர்களுக்கு, மூன்றாவது வயதிலிருந்தே முறையான கல்விப் பயிற்சி தொடங்கப் பெற்றது. தக்க ஆசிரியர்கள் மூலம் எண்ணும் எழுத்தும் கற்றுக் கொடுக்கப்பட்டன. பதினோராவது வயதிலிருந்து உயர்தரக் கல்வி ஆரம்பமாயிற்று, அன்றாடம் இன்ன நேரத்தில் இன்ன பாடம் கற்க வேண்டுமென்று ஒரு பாடக்கிரமம் வகுக்கப் பெற்று அதன் பிரகாரம் அனுஷ்டிக்கப் பட்டது. வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், தர்க்க சாதிரம், பொருளாதார சாதிரம், கணித சாதிரம், அரசியல் சாதிரம் ஆகிய பலவகைத் துறைகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வோர் ஆசிரியன் இருந்ததாகத் தெரிகிறது. இவை தவிர, க்ஷத்திரியர்களுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டிய யானையேற்றம், குதிரையேற்றம் முதலியவைகளும் கற்றுக் கொடுக்கப்பட்டன. தசரதன் மகன் ராமனுக்கு, யானையேற்றம், குதிரையேற்றம், ரதமோட்டுதல், வில்வித்தை, குதிரை மீதிருந்து வேட்டையாடுதல், கத்தி கேடயங்களைப் பிரயோகித்தல், பல்வகை தேகப் பயிற்சிகள், பலவித விளையாட்டுகள், போர்த்தந்திரங்கள், வேத வேதாங்கங்களில் பயிற்சி, அரச நீதி, சங்கீத சாதிரம் ஆகிய பல துறைகளிலும் பயிற்சி அளிக்கப் பட்டதாகத் தெரிகிறது. இப்படிக் குறிப்பாகச் சிலசில வித்தைகளைச் சொல்லிவிட்டு, பொதுவாக நிகழ்காலத்து எல்லாச் சாதிரங்களும் எல்லா இலக்கியங்களும் ராமனுக்குப் போதிக்கப்பட்டன என்று ராமாயணம் கூறுகிறது. ரகுவமிசம், தசகுமார சரித்திரம், காதம்பரி போன்ற சில வடமொழி நூல்களில், அரச குமாரர்களுக்கு எத்தகைய கல்விப் பயிற்சி அளிக்கப் பட்டதென்பதைப் பற்றிசில விவரங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக தசகுமார சரித்திரம் கூறுகிறது: - அந்தந்தத் துறையில் நிபுணர்களான ஆசிரியர்களின் கீழ், அரச குமாரர்கள், சர்வ தேச பாஷைகளையும் ( நிகில தேசீய பாஷா பண்டித்தியம் ) ஆறு அங்கங்களோடு கூடிய வேதங் களையும், காவிய நாடகங்களையும், பலவிதகதைகளையும், இதிகாச புராணங்களையும், ஜோதிஷம், தர்க்கம், மீமாம்சை முதலிய சாதிரங் களையும், கௌடியன், காமந்தகன் முதலியோர் இயற்றிய நீதி சாதிரங் களையும், வீணை முதவிய வாத்தியங்களில் வாசிக்கிற பயிற்சியையும், சங்கீத சாகித்தியங்களையும், மணிமந்திர ஔஷதப் பிரயோகங்களையும், யானையேற்றம் குதிரையேற்றம் முதலியவை களையும், விவித ஆயுதங்களின் பிரயோகத்தையும், களவு, சூது முதலிய கபடமான கலைகளையும் கற்றார்கள். ஒரு ராஜ்யத்தில் நன்மையும் தீமையும் கலந்தேயிருக்கும், தீமையை அழித்து நன்மையை வளர்க்க வேண்டியது அரசனது கடமை.1 தீமையை அழிக்க வேண்டுமானால், அந்தத் தீமை எந்தெந்த விதமாக உருவெடுத்து உலவுகிறதென்பதை அவன் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். இதனாலேயே களவு, சூது முதலியவைகளிலும் ஓர் அரச குமாரன் பரிச்சயம் பெற்றிருக்க வேண்டுமென்றுசொல்லப் பட்டது, களவும் கற்றுமற பழமொழி அரச குமாரர்களை நோக்கியே எழுந்தது போலும். சுக்கிர நீதியில் திட்டமிட்டிருக்கிறபடி, அரசன், தனது மந்திரி மார்கள், பண்டிதர்கள் முதலியவர்களைக் கொண்டு அரசிளங் குமரர் களுக்கு நீதி நூல்களில் புலமையும், வில்வித்தை முதலியவற்றில் திறமையும் உண்டாகும் வண்ணம் செய்ய வேண்டும். இன்னும், துன்பம் ஏற்படுகிற காலத்தில் சோர்வுறாத் தன்மை தீமையைக் களைவதில் அனுபவம். போர் நேரிடில் அப்போது தனது வீரத்தைக் காட்ட வேண்டு மென்ற ஆர்வம், எப்போதும் சுறுசுறுப்புடன் இருத்தல், பணிவு, இன்னோரன்ன பண்புகள் அவர்களுக்கு உண்டாகுமாறு செய்யவேண்டும். கற்க வேண்டியன போக, கேட்க வேண்டியனவும் உண்டு. பாடக் கிரமத்திலேயே, கற்கும் பாடங்களென்றும் கேட்கும் பாடங்களெனறும் இரு வகையாகப் பிரித்து வைத்தனர். கற்பதிலே ஒருவித வெறுப்பும் சலிப்பும் ஏற்படக்கூடாதென்பதற்காகவே இந்த ஏற்பாடு. பெரும்பாலும் பிற்பகல் நேரம் பாடங்களைக் கேட்பதிலேயே செலவழிக்கப்பட்டது. கேட்க வேண்டியவற்றில் முக்கியமானது இதிகாசம். இதைப் படிப்பதைக் காட்டிலும் கேட்பதே சிறந்ததென்று கருதப்பட்டது. ஏனென்றால், முற் காலத்தில் ஆண்ட மன்னர்களின் வரலாறுகள், அவர்கள் ராஜ்யத்தின் நன்மைக்காக என்னென்ன காரியங்களைச் செய்தார்கள் என்பன போன்ற விவரங்களை அறிஞர்கள் சொல்லக்கேட்டால் தான் அவை லேசுலேசாக மனத்தில் படியும். அப்படி படிகிறபோது தாங்கள் ஆளும் பொறுப்பை ஏற்றதும் ஜனங்களுக்கு எந்தெந்த வழிகளில் நன்மை செய்யலாம், எப்படிச் செய்தால் முந்தி ஆண்ட மன்னர்கள் செய்ததைக் காட்டிலும் சிறப்பா யிருக்கும் என்கிற மாதிரி பல நல்லெண்ணங்கள் தோன்றக்கூடும். இதனால் ஆளுந் தொழிலில் ஒரு சிரத்தையும் ஊக்கமும் உண்டாகும். பாடக்கிரமத்தில், மனப்பாடம் செய்தலும் ஒன்றாயிருந்தது. முக்கியமான சில விஷயங்கள் மனத்தில என்றும் நிலைத்திருக்க வேண்டுமென்பதற்காகவே இந்த ஏற்பாடு. இப்படி மனப்பாடம் செய்தலும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுதலும் அநேகமாகக் காலை நேரத்து அலுவல்களாயிருந்தன. மற்றும் ஏட்டிலே படித்தவற்றைச் செயலிலே கொண்டு வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உதாரணமாக, யானை யேற்றம், குதிரையேற்றம், வில் வித்தை முதலியவைகளிலும், பொருளாதார சாதிரம், அரசியல் சாதிரம், முதலியவைகளிலும் அனுபவப் பயிற்சி அளிக்கப் பட்டது. அரசிளங் குமரர்கள், கல்வி பயிலுங் காலத்தில், தாங்கள் அரச வமிசத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் மற்றவர்களைக் காட்டிலும் மேலானவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு லவலேசமும் உண்டாகாத படி நடத்தப்பட்டார்கள். அரண்மனையிலோ. பெற்ற றோர்களின் அன்பு நிழலிலோ, ஆடம்பரச் சூழலின் மத்தியிலோ அதன்வர்கள் வைக்கப்பட்டுக் கல்வியளிக்கப்படவில்லை; பொன்னையும் பொருளையும் பொருட் படுத்தாமல், அறிவையும் சீலத்தையும் பெரிதாகக் கருதிய சான்றோர் களிடம் அனுப்பப் பெற்று, அவர்களோடு கூடவே இருந்து பயிலவும் பழகவும் செய்யப் பட்டார்கள். இதனால் அந்தச் சான்றோர்களின் நிறைந்த புலமை, ஆடம்பரமற்ற வாழ்க்கை, உயர்ந்த எண்ணம், சீலம் எல்லாம் அவர்களுக்குப் படிந்தன. பொதுவாகவே, நமது நாட்டில் ஆரம்ப காலத்திருந்தே சீலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இளைஞர் களுக்குக் கல்வி போதிக்கப்பட்டு வந்திருக்கிறது. அரசிளங் குமரர்கள் விஷயத்தில் இந்தச் சீலம் எவ்வளவு அதிகமாக வலியுறுத்துப்பட்டிருக்க வேண்டு மென்பதைப் பற்றி நாம் சொல்லத் தேவையில்லை. சுருங்கக் கூறுமிடத்து, அரசிளங் குமரர்கள் கல்வி பயிலுங் காலத்தில், அவர்களிடத்திலேயுள்ள மேலான தன்மைகளெல்லாம் மேலுக்குக் கொண்டுவரப்பட்டன; அதே சமயத்தில் கீழான தன்மை களெல்லாம் இடங்கி ஒடுங்கிப் போகுமாறு செய்யப்பட்டன. எந்த விதமான ஆபத்தையும் சமாளித்துக் கொள்ளக்கூடிய சக்தி, தன்னம்பிக்கை, சுக துக்கங்களைச் சமமாகப் பாராட்டுந் தன்னை, அஞ்சாமை, செருக் கின்மை, அருளை அடிப்படையாகக் கொண்ட வீரம் இப்படிப் பல தன்மை களும் அமையக்கூடிய வண்ணம் அவர்களுடைய கல்வி முறை இருந்தது. இந்த இடத்தில், கிரேக்கக ஞானியாகிய பிளேட்டோ தனது அரசியல் என்னும் நுலில், ஆளுந் தொழிலில் ஈடுபடப் போகிறவர் களுக்கு எத்தகைய பயிற்சியளிக்கப்பட வேண்டுமென்பதைப் பற்றிக் கூறியுள்ளதில் ஒரு பகுதியை வாசகர்களுக்கு எடுத்துக்காட்ட ஆசைப்படுகிறோம். இவர்கள் (அரசர்கள்) சிறந்த தேச பக்ததர்களாயிருக்க வேணடும். சுகதுக்கங்களிலும் கஷ்டநிஷ்டூரங்களிலும், இவை போன்ற பல நெருக்கடி யான சந்தர்ப்பங்களிலும் இவர்களுடைய தேச பக்தியைப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். இந்தப் பரிசோதனைகளில் வெற்றி பெறாதவர்களை நிராகரித்துவிட வேண்டும். யார் நெருப்பிலே காய்ச்சப்பெற்ற பொன்னைப்போல் இந்தப் பரிசோதனைகளிலிருந்து பரிசுத்தமாக வெளிவருகிறார் களோ, அவர்களையே அரசர்களாக நியமிக்க வேண்டும் . . . . . . உத்தமமான அரசர்கள், சிறந்த ஞானிகளாகவும் இருக்க வேண்டும். அரசிளங் குமரர்களுள், இளவரசனாக நியமிக்கப் பட்டவன், கற்கவேண்டியதையோ கேட்கவேண்டியதையோ எல்லாவற்றையும் பதினாறு வயது முடிவதற்குள் முடித்துக் கொண்டுவிட வேண்டும். இதற்குப் பின்னர்தான் விவாகம். இதை அவன் இஷ்டத்திற்குச் செய்து கொள்ள முடியாது. அரசனுடைய விருப்பத்தைத் தழுவியும், மந்திரி சபையினுடைய அங்கீகாரத்தைப் பெற்றுமே செய்து கொள்ளவேண்டும். குலம், அந்தது, அழகு, பெண்மைக்குரிய பண்புகள் எல்லாம் சேர்ந்த ஒரு பெண்ணையே அரசன் ஏற்பாடு செய்வான்; செய்துகொண்டு மந்திரி சபையின் சம்மதத்தைக் கேட்பான். அதன் சம்மதம் கிடைத்த பிறகே விவாகம் நடைபெறும். ராமனுக்குச் சீதையை மணம் புரிந்துகொள்ள தசரதன் ஒப்புக் கொண்டுவிட்டான். உடனே விவாகம் நடைபெறவில்லை. தசரதன், தன் மந்திரிசபையைக் கூட்டி அதன் அங்கீகாரத்தைப் பெற்ற பிறகே விவாகம் நடைபெற்றது. இங்ஙனம் மநதிரி சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதென்பது ஒரு சம்பிரதாயமாகவே இருந்த போதிலும், அதன் அங்கீகாரத்தைப் பெறாமல் விவாகத்தை நடத்தக் கூடாதென்ற நியதி இருந்தது. ஆளப் போகின்றவனுடைய இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமைய வேண்டுமென்பதில் ஆள்கின்ற அரசனுக்கு எவ்வளவு கவலை இருந்ததோ, எவ்வளவு பொறுப்பு இருந்ததோ அவ்வளவு கவலையும் பொறுப்பு மந்திரிகளுக்கும் இருந்தன. அரசனுடைய இல்வாழ்க்கை இனிதாக அமையாவிட்டால், அவன் நாட்டைச் சரியாகப் பரிபாலனஞ் செய்ய முடியாது. குடும்பத்தின் விரிவுதானே ராஜ்யம்? 1 குடும்பத்திற்குத் தந்தையும் தாயும் எப்படியோ அப்படியே ராஜ்யத்திற்கு அரசனும் அரசியினுடைய பூரணமான ஒத்துழைப்பு இன்றியமையாதது. இதனாலேயே, அரசனாகத் தெரிந்தெடுக்கப் பட்டவன், மகுடாபிஷே கத்தின் போது, தான் ஆள்வதற்கான அனுமதியை மந்திரிப் பிரதானி களிடமிருந்து பெறுவது போல் பட்டத்து மனைவியிடமிருந்து பெற வேண்டுமென்ற நியதி ஏற் பட்டது. அவனால் உபசரிக்கப்பெற்ற பதினோரு ரத்னிகளில் இவளும் ஒருத்தியாய் இருந்தாளன்றோ? தவிர, பிற்காலத்தில், அரசனோடு அரசிக்கும் சேர்ந்தாற்போல் மகுடாபிஷேகம் நடை பெற்றது. இதனால் அரசனுக்குச் சமதையான பொறுப்பு அரசிக்கும் இருந்ததென்பது தெற்றென விளங்கும். எனவே, பரிபூரணமாக ஒத்துழைக்கக் கூடிய ஒருத்தி இளவரசனுக்கு வாழ்க்கைத் துணைவி யாக அமைய வேண்டுமென்கிற விஷயத்தில், மந்திரிகள் சிரத்தை கொண்டனர் என்பதிலோ, அந்த வாழ்க்கைத் துணைவியை நிச்ச யிக்கிற விஷயத்தில் பங்கு கொண்டனர் என்பதிலோ ஆச்சரிய மென்ன இருக்கிறது? பங்கு கொள்ளாவிட்டால்தான் ஆச்சரியப்படி வேண்டும். ராஜ்யத்தின் நிரந்தர க்ஷேமத்தில் இவர்களுக்கும் பொறுப்புண்டல்லவா? இளவரசனுடைய கல்விப் பயிற்சி பூர்த்தியடைந்து விட்டது; விவாகமும் ஆகிவிட்டது. இனி என்ன? சுயமாக அதிகாரம் செலுத்த அவனுக்குச் சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அப்படிக் கொடுக்கப்படவில்லை. அதாவது எடுத்த எடுப்பிலேயே அவனிடம் எந்த விதமான அதிகாரப் பொறுப்பும் ஒப்படைக்கப் படவில்லை. அரசாங்க இலாகாக்கள் ஒவ்வொன்றிலும் அவனுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. எந்த இலாகாவில் வேலை செய்கிறானோ அந்த இலாகாவின் மேல் அதிகாரிக்குக் கீழ்ப்படிந்தே அவன் நடக்க வேண்டும்; அந்த அதிகாரி விடுக்கிற உத்தரவுகளை மனம் கோணாது நிறைவேற்ற வேண்டும்; மற்ற உத்தியோகதர்களைப் போலவே அநத் அதிகாரியினிடத்தில் நடந்து கொள்ள வேண்டும்; விசேஷமான சலுகை எதனையும் எதிர்பார்க்கக் கூடாது. ஆளத் தெரிவதற்குமுன் ஆட்படத் தெரிய வேண்டும். கீழ்ப் படியத் தெரிந்து கொண்டிருக்கிறவன்தான் சரியான எஜமான னாயிருக்க முடியும். அதிகாரத்திற்கு அடங்குகிறவன்தான் அதிகாரத் தினால் அடக்கமுடியும். இங்ஙனம் அரசாங்க நிருவாக இலாகாக் களில் இளவரசன் பயிற்சி பெறுவதன் விளைவாக, அரசாங்கத்தின் நடை முறைகள் யாவும் அவனுக்கு நன்கு பழக்கமாகிவிடுகின்றன. அரசாங்க யந்திரத்தின் சக்கரங்கள் எத்தனை, எந்தெந்தச் சக்கரம் எப்படி எப்படிச் சுழல்கிறது, எங்கெங்குச் சுள்ளாணிகள் இருக் கின்றன என்கிற சகல விவரங்களையும் அவன் தெரிந்து கொள்கிறான். அரசாங்கத்திற்கும் பிரஜைகளுக்குமிடையே எத்தகைய தொடர்பு இருந்து வருகிறதென்பதை அவனால் விவர மாக அறிந்துகொள்ள முடிகிறது. இந்த அனுபவங்கள் யாவும் அவனுக்கு, அரசனாகி ஆள்கின்றபொழுது மிகவும் உதவி யாயிருக்கு மல்லவா? இங்ஙனம் அனுபவப் பயிற்சி பெற்ற பிறகு இளவரசன், ஒரு பகுதிப் படைத்தலைவனாக நியமிக்கப்படுவான்; அல்லது ராஜ்யத்தின் ஒரு பகுதித் தலைவனாக, அதாவது தற்கால பாஷையில் பிரதேச கவர்னராக அனுப்பப்படுவான். சுயமாக நிருவாகம் செய்கிற சக்தியையும், தன்னம்பிக்கையும் ஏற்பட வேண்டுமெனபதற்காகவே இப்படிச் செய்யப் படும். இளவரசனுக்கு மட்டுமல்ல, மற்ற அரச குமாரர்களுக்கும் நிருவாக அனுபவம் ஏற்படச் சந்தர்ப்பங்கள் அளிக்கப்படும். பிந்துசார மௌரியன் ஆண்ட காலத்தில், அவன் மகன் அசோகன் இளவரசன் என்ற முறையில் முதலில் உஜ்ஜயினியில் (மத்தியப் பிதேசம்) சிறிது காலமும், பின்னர் தட்ச சிலையில் (வடமேற்கு எல்லைப் பிரதேசம்) சிறிது காலமும், பிரரேசத் தலைவனாக - கவர்னராக - இருந்திருக்கிறான். அதே பிரகாரம் அசோகன் ஆண்ட காலத்தில், அவன் மகன் குணாலன் என்பவன் தட்ச சிலையில் கவர்னராக இருந்திருக்கிறான். இன்னும் அவனுடைய - அசோகனுடைய - சாஸனங்களிலிருந்து, அரச குமாரர்களில் ஒருவன் சுவர்ணகிரியிலும் (தெற்குப் பிரதேசம்) இன்னொருவன் தோஸாலியிலும், (கலிங்கம்) மற்றொருவன் உஜ்ஜயினியிலும் முறையே கவர்னர்களாக இருந்திருக்கிறார்களென்று அறிகிறோம். மொகலாயர் ஆட்சியிலும், அரச குமாரர்கள் இங்ஙனம் பிரதேசத் தலைவர்களாக அனுப்பப்பட்டு வந்தார் களென்பதை நாம் விவரித்துச் சொல்லிக் கொண்டு போக வேண்டியதில்லை. இளவரசன், இங்ஙனம் படைத்தலைவனாகவோ பிரதேசத் தலைவனாகவோ சிறிது காலம் அலுவல் பார்த்துத்தானாக வேண்டு மென்பது கட்டாயமில்லை. தலைநகரிலேயே அரசனோடு கூட இருந்து நிருவாக அனுபவம் பெறுவதற்குப் போதிய சந்தர்ப்பங்கள் பெறக்கூடு மாயின், அவன் வெளியே செல்லவேண்டிய அவசியம் ஏற்படாது. அப்படித் தலைநகரத்திலேயே இருந்தாலும் சரி, வெளியே சென்று திரும்பி வந்தாலும் சரி, பிறகு அவன் எல்லா ராஜ்ய விவகாரங்களிலும் அரசனுக்குச் சகாயமாயிருந்து அவனுடன் ஒத்துழைக்க வேண்டும். இதனால் அரசனுடைய சகாயகன் என்றே அவன் அழைக்கப்பட்டான். இந்த ஹோதாவில் அவனுக்கென்று தனியாக முத்திரைகள், பரம்பரையை யொட்டிய பெயர்கள் முதலிய அரச சின்னங்கள் உண்டு. இந்தப் பெயர்களாலேயே எல்லா அரசாங்கக் குறிப்பேடுகளும் அவன் பார்வைக்கு வரும். சுருக்கமாக, ராஜ்ய நிருவாகத்தில் மந்திரிகளுக்கிருந்த பொறுப்பு அவனுக்கும் இருந்ததென்று சொல்லலாம். அரசாங்க நிருவாகத்தை நடத்திவந்த மந்திரிகள் உள்ளிட்ட பிரதம அதிகாரிகள் தீர்த்தர்கள் என்று ஒரு காலத்தில் அழைக்கப் பட்டார்கள். இவர்கள் மொத்தம் பதினெட்டுபேர் என்று கௌடிலீயம் வரையறுத் திருகிறது. ராமாயணம், மகாபாரதம் முதலிய நூல்களும் தீர்த்தர்கள் பதினெண்மர் என்றே சொல்லி இருக்கின்றன. இவர்களிலே ஒருவனாயிருந்தான் இளவரசன். அவனுக்கு வருஷத்தில் நாற்பத் தெட்டாயிரம் வெள்ளி, செலவுத் தொகையாகக் கொடுக்கப்பட்டு வந்தது.1 அரசனுடைய நன்மதிப்பைப் பெற, இளவரசனுக்குச் சில உபாயங்களைச் சுக்கிர நீதி சொல்லிக் கொடுக்கிறது. அவை என் னென்ன? அரசன் என்ன உத்தரவிடுகின்றனோ அதைச் செய்ய வேண்டும். எதைச் செய்தால் அவனுக்குச் சந்தோஷமாயிருக்குமோ அதையே செய்ய வேண்டும். அவனுக்கு வருத்தந்தரக் கூடிய எச் செயலிலும் பிரவேசித் தலாகாது. அவன் யாரிடத்தில் அன்பா யிருக்கிறானோ அவர்களிடம் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும். அப்படியே அவனால் வெறுக்கப் படுகிறவர்களைப் புறக்கணிக்க வேண்டும். அன்றாடம் தான் செய்த காரியங்களை அரசனிடம் தெரிவித்து அவனுடைய அங்கீகாரத்தையும் ஆசியையும் பெறுதல் வேண்டும். இன்னும் ராஜயத்திலுள்ள மேன்மக் களை அவமதிக்கக் கூடாது; அவர்களுக்குத் தீங்கு செய்யவும் கூடாது. தன்னுடைய செல்வநிலை குறித்துச் செருக்குறலாகாது. ராஜ்யத்திலுள்ள எல்லாப் பிரஜைகளும் தன்னிடம் பிரியங்காட்டும் படியாக எல்லா வகை யிலும் நடந்து கொள்ள வேண்டும். இத்தகைய பிரியத்தை தசரத ராமன் பெற்றி ருந்தாதென்பதை ராமாயணத்தின் மூலம் அறிந்து இன்றும் நாம் மகிழ்ந்து கொண்டிருக்கிறோமல்லவா? 9. மந்திரிகள் அரசனுக்குக் கண்போன்றவர்கள் மந்திரிகள். கண்ணில்லாமல் எப்படிப் பார்க்க முடியாதோ அப்படியே மந்திரிகளில்லாமல் அரசன் ஆள முடியாது; ஆளவுங் கூடாது. இது விஷயத்தில் அறநூல்களாகட்டும், அரசியல் நூல்களாகட்டும் ஒருமுகமான அபிப்பிராயத்தையே தெரிவித் திருக்கின்றன. உதார ணமாக, மனுநீதியானது, குடும்பத்தையே ஒருவனாக இருந்து நிருவாகம் செய்ய முடியாதிருக்கிறபொழுது, ராஜ்யத்தை ஒருவனாக இருந்து எப்படி நிருவாகம் செய்ய முடியுமென்று கேட்டுவிட்டு, அப்படி ஓர் அரசன் செய்ய முற்படுவானாயின், அவன் நீண்ட காலம் அரச பதவியில் வீற்றிருக்க முடியாதென்று எச்சரிக்கை செய்கிறது. இன்னும் சுக்கிர நீதி கூறுகிறது : ஓர் அரசன், எல்லா சாதி ரங்களிலும் நிபுணனாயிருந்த போதிலும், ராஜ்ய நிருவாக விஷயத்தில் தேர்ச்சி பெற்றவனாயிருந்த போதிலும், மந்திரிகளில்லாமல் அவன் எந்தவிதமான ராஜ்ய காரியங்களைப் பற்றியும் ஆலோசிக்கக் கூடாது. மந்திரி சபையினர், ஜனங்கள் ஆகிய இவர்களுடைய அபிப்பிராயத்தைத் தழுவியே நடக்க வேண்டும்; தன் சொந்த அபிப்பிராயத்தை யொட்டி எப்பொழுதுமே நடக்கக் கூடாது; அப்படி நடந்தால், அதன் அழிவுக்கே வழி தேடிக் கொண்டவனாவான்; நாளாவட்டத்தில் ராஜ்யத்தையும் பிரஜைகளையும் இழந்து விடுவான். கௌடில்யன், உதவி பெற்றுத்தான் அரசு நடைபெறுதல் சாத்தியம். ஒரு சக்கரம் மட்டும் செல்லாது. ஆகவே, அரசன் மந்திரிகளை நியமித்து அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்க வேண்டும் என்று சொல்லி விட்டு, இந்திரனுடைய உதாரணத்தை எடுத்துக் காட்டுகிறான். இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் உண்டென்று சொல்லப்படுகிறதல்வா, அப்படியொன்றுமில்லை நம்மெல் லோரையும் போல் அவனுக்கும் இரண்டு கண்கள்தான். ஆனால் அவனுடைய மந்திரி சபையில் ஆயிரம் ரிஷிகள் - சுயநலமற்ற பெரியோர் - இருந்தார்கள். அவர்கள் உதவி கொண்டு ஆட்சி நடத்தி வந்ததனாலேயே ஆயிரஞ் கண்ணன் என்ற பெயர் அவனுக்கு ஏற்பட்டது. இந்த உபமானத்தின் மூலம், மந்திரிகளின் சகாயத்துடன் தான் வேண்டுமென்ற நியதியை வலியுறுத்திக் காட்டுகிறான் கௌடில்யன். மந்திரிகளென்றால், நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத்துகிற ஒரு சிலரை மட்டும் குறிப்பதாக இப்பொழுது நாம் கொள்கிறோம். ஆனால் நமது நாட்டில் முற்காலத்தில், நிருவாகம் நன்கு நடைபெற ஆலோசனை சொல்லி வந்த அறிஞர்களையும் மந்திரிகளென்றே அழைத்திருக் கிறார்கள். ஆக, நிருவாகத்தை நடத்தி வந்த மந்திரிக ளென்றும், ஆலோசனை சொல்லி வந்த மந்திரிகளென்றும் இரு பிரிவினர் இருந்தனர். இந்த இரு பிரிவினர் அடங்கிய சபைக்கு மந்திரி பரிஷத் என்று பெயர்; மந்திர பரிஷத் என்றும் கூறுவர். மந்திரம் - ஆலோசனை; பரிஷத் - கூட்டம் அல்லது சபை; ஆலோசனை சபையென்று அர்த்தம். வெறும் பரிஷத் என்றும் இதனைக் கூறுவதுண்டு. அசோகன், தன் சாஸனங்களில் பரிஷத் என்றே கூறியிருக்கிறான். இந்திரனுடைய ஆயிரவர் சபை இந்த பரிஷத்தே யாகும். சந்திரகுப்தன் காலத்தில், இது, சந்திரகுப்த சபையென்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில், சுங்கர், காண் வாயனர் இவர்களுடைய ஆட்சியின் போது, இந்த பரிஷத் அடிக்கடி கூட்டப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்த பரிஷத்தைச் சேர்ந்த எல்லோரும் - நிருவாக மந்திரிகள், ஆலோசக மந்திரிகள் ஆகிய இரு பிரிவினரும் - பொதுவாக ப()ரி ஷாத்யர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்; சபையினர் என்று அர்த்தம். இந்தப் பெயரைத் தவிர, இவர்களுக்கு அமாத்தியர் களென்ற ஒரு பெயரும் உண்டு. இதுவே பெரும்பாலும் வழக்கி லிருந்ததாகத் தெரிகிறது. பாரஹபத்தியம், அமாத்தியர்களென்றே அழைக்கிறது. அசோகனுடைய தந்தையான பிந்துசாரனுக்கு ஐந்நூறு பேர் அமாத்தியர்களாயிருந் தார்ளென்று திவ்யாவதானம் என்ற புத்த மத கிரந்தம் கூறுகிறது. அமாத்தியர் என்றால், அரசனுக்குத் துணையாயிருக்கிற வர்கள் என்று அர்த்தம்.1 சகாயகர்களென்றே இவர்கள் சொல்லப் பட்டிருக் கிறார். இளவரசனுக்கும் சகாயகன் என்ற ஒரு பெயருண்டு என்பதை இங்கு வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறோம். இவர்களைக் கொண்ட சபை, அதாவது மேலே சொல்லப் பெற்ற பரிஷத், அமாத்திய சபையென்று அழைக்கப்பட்டு வந்தது. அரசின் ஏழு அங்கங்களுள் இரண்டாவதாகச் சொல்லப்பட்டிருக்கிற அமாத்தியர் என்பது, இந்த அமாத்திய சபையைச் சேர்ந்த அனைவரையும், அதாவது நிருவாக மந்திரிகளையும் ஆலோசக மந்திரிகளையும் சேர்த்தே குறிப்பதாகும்.2 இவர்களில், ஆலோசக மந்திரிகளாயிருக்கப்பட்டவர்கள், ஆலோசனை சொல்வதில் மட்டும் வல்லவர்களாயிருக்கவில்லை; சமயம் நேரிட்டால் நிருவாகத்தை நடத்துவதிலும் வல்லவர்களா யிருந்தார்கள். அதாவது, சிந்தனையாளர்களாக மட்டும் இருக்க வில்லை; செயலாளர்களாகவும் இருந்தார்கள். இவர்களே, அவ்வப் பொழுது, அரசன் விருப்பத்தையொட்டியோ, அவசியத்தை முன்னிட்டோ நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத்திவந்தார்க ளென்றும், அப்படியே நீதி வழங்கும் நீதிபதிகளாகவும் அலுவல் பார்த்தார்களென்றும் தெரிகின்றது. இவர்கள், உத்தியோகப் பொறுப்பை ஏற்று நடத்திய பொழுது, அந்த உத்தியோகத் திற்குரிய ஊதியத்தைப் பெற்றார்கள்; வெறும் ஆலோசகர்களாக மட்டும் இருந்தபொழுது, அதாவது அமாத்திய சபையின் அங்கத்தினரா யிருந்த பொழுது எந்தவிதமான ஊதியத்தையும் பெறவில்லை. மந்திரிகளில் இரு பிரிவினர் இருந்தனரென்பது, கிரேக்க அறிஞர் சிலர் எழுதி வைத்துப் போயிருக்கிற குறிப்புக்களினாலும் உறுதியாகிறது. எண்ணிக்கையைப் பொறுத்த மட்டில் இவர்கள் குறைவான பேர்தான். ஆனால் இவர்கள் சீல புருஷர்களகாவும் சிறந்த அறிஞர்களாகவும் இருப்பதால் பெரிதும் கௌரவிக்கப் படுகிறார்கள் என்றும், உத்தியோக நியமனங்கள் பலவும் இவர்கள் வசத்திலேயே இருந்ததாகவும் இவைகளி லிருந்து அறிகிறோம். இதனால் இவர்கள் ராஜ்யத்தின் முக்கியமான உறுப்பினரா யிருந்தனரென்பதில் சந்தேகமில்லை. அமாத்திய சபையில் - இனி இதனை ஆலோசனை சபை யென்றே கூறிக்கொண்டு செல்வோம் - எத்தனை பேர் அங்கத்தினர் களாயிருந் தார்கள்? இந்திரன் சபையில் ஆயிரம் பேர்; பிந்துசாரன் சபையில் ஐந்நூறு பேர். இத்தனை பேர் இருந்திருக்க முடியுமா, தேவையா என்று கேட்கும் படியாகவே தோன்றுகிறது. ஏனென்றால், அரசியலைப் பற்றிப் பிரதாபித் திருக்கின்ற அறிஞர்களில் யாரும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையைச் சொல்லியிருப்பதாகத் தெரிவில்லை; குறைந்த எண்ணிக்கையையே கூறியிருக்கின்றனர். பன்னிரண்டு பேரென்பர் சிலர்; பதினாறு பேரென்பர் சிலர்; இருபது பேரென்பர் சிலர். இப்படிப் பலவிதமாகத் தனக்கு முந்தியிருந்த அறிஞர்கள் கூறியிருக்கிறார்களென்றும், ஆனால் இது விஷயத்தில் நிர்ணயமான எண்ணிக்யைக் கூறுதல் பொருந்தாதென்றும், தேவைக்குத் தகுந்தபடி நிர்ணயித்துக் கொள்ள வேண்டுமென்றும் கௌடில்யன் கூறுகிறான். ராமாயணத்தின் பிரகாரம், தசரத னுடைய சபையில் பதினாறு பேர் இருந்திருக்கின்றனர். மகா பாரதத்தின்படி முப்பத்தேழுபேர். ஆக, ஒரு ராஜ்யத்தினுடைய வி தீரணம், ஜனத்தொகை, அரசாங்க அமைப்பு இவைகளையொட்டி ஆலோசனை சபையின் அங்கத் தினர்கள் இருந்தார்களென்று நாம் முடிவுகட்டிக் கொள்ளலாம். இந்தச் சபையில், சமுதாயத்தின் முக்கியமான நான்கு வகுப்பினரும் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தார்கள். தற்காலத்தில் அதிகமாகப் பிரதாபிக்கப்படுகிற வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ மென்பது, அந்தக் காலத்திலேயே அனுஷ்டானத்தில் இருந்து வந்திருக்கிற தென்பதைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியவர் களாயிருக்கிறோம். முப்பத்தேழு பேர் இருக்க வேண்டுமென்று மகாபாரதம் கூறியிருக் கிறதல்லவா, இவருள் முதலாவது வகுப்பினர் நான்கு பேர்; இரண்டாவது வகுப்பினர் எட்டு பேர்; மூன்றாவது வகுப்பினர் இருபத்தோரு பேர்; நான்காவது வகுப்பினர் மூன்று பேர்; சூதபுராணிகன் என்ற ஒருவன்; ஆக மொத்தம் முப்பத்தேழு பேர். ஜனத்தொகை, கல்வியறிவு, பொருளாதார நிலைமை ஆகிய மூன்றையும் அனுசரித்துப் பிரதிநிதித்துவம் இருந்திருக்கிறது. சூத புராணிகன் என்பவனைப் பற்றிச் சில வார்த்தைகள். வேத காலத்திலிருந்தே இப்படிப்பட்ட ஒருவன் இருந்திருக்கிறான். மகுடாபிஷேக காலத்தில் அரசனாகப் போகிறவனுடைய மரியாதை களைப் பெற்ற பதினோரு ரத்னிகளில் இவன் ஒருவன்; சூதன் என்று மட்டுமே முதலில் அழைக்கப்பட்டான். பிற்காலத்தில் இவனுடைய பதவி கௌரவம் குறைந்துவிட்டது; ஆதானக் கவிஞனாக இருந்த பொறுப்பும் இவனை விட்டகன்றது; ஆதானச் சரித்திரக்காரனாக மட்டும் இருந்தான். ராஜ்யத்தில் அவ்வப் பொழுது நடைபெறும் நிகழ்ச்சிகளைக் குறித்து வைப்பது இவன் பொறுப்பாயிருந்தது. தவிர இவன், அரசிளங் குமாரர் களுக்குப் புராதன சரித்திர நிகழ்ச்சிகளைக் கதைகள் போல் சொல்லிக் காட்டி, அவர்களுடைய சரித்திர திருஷ்டியைக் கொண்டிருக்கிற அரசனுக்குச் சென்ற காலத்தில் ஆண்டு வந்த அரசர்களைப் பற்றிய வரலாறுகளை எடுத்துச்சொல்லி, அவர்களுடைய வாழ்க்கையில் காணப் பெற்ற நல்ல அமிசங்களை இந்த மன்னன் பின்பற்ற வேண்டுமென்று நேர்முகமாகவோ மறைமுகமாகவோ சொல்லி வந்தான். இவனுடைய சம்பளம் ஆயிரம் வெள்ளியென்று கௌடில்யன் நிர்ணயம் செய்திருக் றான். இவன் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருக்க வேண்டுமென்றும், இப்படிப்பட்டவன்தான் ஆலோசனை சபையில் அங்கத்தினனாயிருக்கத் தகுதியுடையவனென்றும் மகாபாரதம் நிர்ணயம் செய்திருக்கிறது. 1 ஆதானச் சரித்திரக்காரன் என்ற ஹோதாவில், ஆலோசனை சபையின் நடவடிக்கைகளை, நடந்தது நடந்தபடியே எழுதி வைக்க வேண்டிய பொறுப்பு இவனுக்கு ஏற்பட்டிருந்தது போலும். இதற்கனுகூல மாயிருக்கும் பொருட்டே இவன் சபையின் அங்கத்தினனாக நியமனம் பெற்றிருத்தல் கூடும் தற்காலத்துச் சட்ட சபைகள் முதலியவற்றில், நடவடிக்கைகளைச் சுருக்கெழுத்தில் குறிப்பெடுக்கும் உத்தியோகதர் களும், இவர்களுக்கு மேலாக ஒருவனும் இருக்கிறார்களல்லவா, இந்த மேலான உத்தியோகதனாக, பிரதம ரிப்போர்ட்ராக2ச் சபையின் நடவடிக்கைகளைப் பொறுத்த மட்டில் இந்த சூதபுராணிகன் இருந் தானென்று நாம் கருதலாம். ஆலோசனை சபைக்கு, ஒரு தலைவன், காரியதரிசி, பிற உத்தி யோகதர்கள் எல்லோரும் இருந்தனர்; தனியாக ஒரு காரியா லயமும் இருந்தது. இந்தச் சபை, தலைநகரத்தின் நடுவண் அமைந்திருக்கும் பிரத்தியேகமானதொரு மண்டபத்தில் கூடும். இதற்கு நாற்புறமும் வாயில்கள் இருக்கவேண்டுமென்றும், உள்ளே, நல்ல காற்றும் வெளிச்சமும் கொடுக்கக்கூடிய யந்திரக் கருவிகள் அமைக்கப் பட்டிருக்கவேண்டு மென்றும், காலங்காட்டும் கடிகாரம். அழகிய பதுமைகள், முகம் பார்க்கும் கண்ணாடிகள் முதலியனவும் வைக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும். பொதுவாக, அமைதி யுடனிருந்து ஆலோசனை செய்வதற்கான சூழ்நிலை இருக்க வேண்டுமென்றும் சுக்கிர நீதி கூறுகிறது. மண்டபத்திற்கு முன்னே செயற்கை ஊற்றுகள் அமைக்கப்பட்டிருந்தன வென்று தெரிகிறது. மண்டபமும், சுற்றியுள்ள இடமும் சேர்ந்து மந்திர பூமியென்று அழைக்கப் பட்டது; ஆலோசனைக்கான இடம் என்று அர்த்தம். இந்த ஆலோசனை சபையைத் தற்கால பாஷையில் ராஜ்ய சபை அல்லது மூத்தோர் சபை 2என்று கூறலாம். இங்கிலாந்தின் அரசியல் அமைப்பில் பிரிவிகவுன்சில் 3 என்ற ஒரு தாபனம் உண்டல்லவா அதனோடும் இந்த ஆலோசனை சபையை ஒப்பிட்டுச் சொல்லலாம். ஆனால் பிரிவி கவுன்சிலைக் காட்டிலும் இந்த ஆலோசனை சபை முக்கியத்துவம் வாய்ந்ததாயிருந்ததென்பதை இங்குக் குறிப்பிட வேண்டும். ராஜ்ய சபையிலும் பிரிவி கவுன்சிலிலும் எப்படி நிருவாகம் நடத்தும் மந்திரிகளும் அங்கத்தினர்களாயிருக் கிறார்களோ அப்படியே இந்த ஆலோசனை சபையிலும் நிருவாகம் நடத்தும் மந்திரிகள் அங்கத்தினர்களாயிருந்து வந்தார்கள். ஆலோசனை சபையின் அங்கத்தினர்கள், நற்குடியில் பிறந்தவர் களாகவும், சகல கலைகளிலும் புலமை பெற்றவர்களாகவும், தீர்க்க திருஷ்டி, நல்ல ஞாபக சக்தி, தைரியம், நாவன்மை, ஊக்கம், பெருந் தகைமை, பொறுமை, அகத்தூய்மை, அன்பு, மனவுறுதி, யாரிடமும் துவேஷம் பாராட்டாமை ஆகிய குணங்களுடையவர் களாகவும், அரசியல் அனுபவமுடையவர்களாகவும், எஜமான விசுவாசமுடையவர்களாகவும் இருக்க வேண்டுமென்று கௌடில்யன் கூறுகிறான். இந்தத் தன்மை யுடையவர்களே அங்கத்தினர்களா யிருந்தார்களென்று நாம் நிச்சயப் படுத்திக் கொள்ளலாம். மற்றும் இவர்கள் சுயநாட்டினராக இருக்க வேண்டியது அவசியம். இது குறிப்பிடத்தக்கது. மேதாவியான பண்டிதனும், தன் தேசத்திலுண் டானவனும், எல்லாக் காரியங்களையும் ஒழுங்காகச் செய்கிறவனு மான மனிதனே ஆலோசகனாயிருக்கத் தகுதியுடையவன் என்கிறது மகாபாரதம். அமாத்திய சம்பத்துக்களிலே ஒன்று, சொந்த நாட்டிலே பிறந்திருக்கவேண்டுமென்பது கௌடில்யன் கருத்து, இவைகளிலிருந்து, அந்நிய நாட்டினரை ஆலோசனைக்கு அமர்த்திக் கொள்வது உசிதமன்றென்பதை நமது முன்னோர்கள் நன்கு உணர்ந்திருந்தார்களென்று தெரிகிறது. ராஜ்யமென்றிருந்தால், எதிர்பாராத சம்பவங்கள், விபரீத விளைவுகளை உண்டுபண்ணக் கூடிய நிகழ்ச்சிகள், இப்படி அநேகம் அடிக்கடி ஏற்படக்கூடுமல்லவா, இந்த மாதிரியான விசேஷ சந்தர்ப்பங் களில், அரசன், நிருவாக மந்திரிகளோடு கூடின இந்த ஆலோசனை சபையைக் கூட்டி விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும்; கூட்டத்தில் பெரும்பான்மையோர் என்ன செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கிறார் களோ அதன் பிரகாரம் செய்ய வேண்டும்; இப்படி கௌடிலீயம் கட்டளை யிடுகிறது. பொதுவாகச் சொல்லப்பட்ட விதியேயாகும் இது. நடை முறையில் அரசன், சபையின் ஏக மனதான தீர்மானத்தையே எதிர் பார்த்தான்; விரும்பினான். எந்த ஒரு பிரச்னையையும், பெரும்பான்மை யோர், சிறுபான்மையோர் என்ற தராசுத் தட்டுகளில் வைத்துப் பார்ப்பதை நமது நாட்டு மன்னர்கள் அனுஷ்டானத்தில் கொண்டுவரவில்லை. பெரும்பான்மையோர் கருத்தைத் தழுவி நடத்தலென்றால், சிறு பான்மையோர் கருத்தைப் புறக்கணித்ததாகுமல்லவா? இதனால் கட்சி மனப்பான்மை வளருமல்லவா? இந்த நிலைமைக்கு நமது அரசர்கள் இடங் கொடுக்கவேயில்லை. சிறுபான்மையோரைப் பெரும்பான்மை யோருடைய கருத்துக்கு மாற்ற முயன்றார்கள்; அல்லது பெரும் பான்மை யோரைச் சிறுபான்மையோருடைய கருத்துக்கு மாற்ற முயன்றார்கள்; இதற்காகத் தங்கள் வாக்கு வன்மையைப் பெரிதும் உபயோகித்தார்கள்; சபைக்கு வெளியே மூதறிஞர்களாக எத்தனையோ பேர் இருப்பார் களல்லவா, அவர்களில் சிலரை யேனும் கலந்தாலோசித்து, அவர்கள் சொன்ன அபிப்பிராயத்தையும் சபையினருக்குத் தெரிவித்து, எது சரியோ, எது ராஜ்யத்தின் நன்மைக்குகந்ததாயிருக்குமோ அந்த வழிக்குச் சபை யினரை ஒரு முகமாகத் திருப்பினார்கள். சுருக்கமாக, ஆலோசனை சபையின் ஏக மனதான தீர்மானப்படிதான் எந்த ஓர் அரசனும், எந்த ஒரு காரியத் தையும் துணிந்து செய்தானென்று கூறலாம். இனி, நிருவாகம் நடத்தி வந்த மந்திரிகளைப் பற்றி பேசுவோம். இவர்கள், ஆலோசனை சபையினரைக் காட்டிலும் குறைவான பேராகவே இருந்தார்களென்பதை நாம் சொல்லத் தேவையில்லை. ராஜ்யத்திற்குத் தலைவனாக அரசன் இருந்த போதிலும், அந்த அரசனை நல்வழியில் நடத்திச் செல்கிறவர்கள் இந்த மந்திரிகளே. ஒரு ராஜ்யம் வளர்ச்சி யடைவதோ, சீரழிவதோ இவர்களுடைய வசத்தில்தான் இருக்கிறது. இவர்கள், அரசனுக்கு ஆலோசனை சொல்வதன் விளைவாகவோ, நிருவாகத்தைத் திறம்பட நடத்துவதன் பயனாகவோ ராஜ்யம் பல துறைகளிலும் அபிவிருத்தியடைய வேண்டும். அப்படி அபிவிருத்தியடை யாவிட்டால், இவர்கள் உண்மையான மந்திரிகளில்லை; அழகான அணிகலன்களே. மந்திரிகள் செலுத்துகிறபடியே அரசன் செல்ல வேண்டு மென்பது விதி. செல்ல மறுக்கிறவன், வெறும் அணிகலனாகக் கூட வைத்துக் கொள்ளப்படமாட்டான்; தூக்கியெறியப்படுவான். இது விஷயத்தில் அவன் சுதந்திர புருஷனல்லன்; மந்திரிகளுக்குக் கட்டுப் பட்டவனே. மந்திரிகளின் அங்கீகாரத்தைப் பெறாமல் அரசன் எந்த ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது; மீறிச் செய்தால் அது செல்லுபடி யாகாது. தற்கால அரசியல் அமைப்புக்கள் பலவற்றிலும் ராஜ்யத்தின் தலைவர்களா யிருக்கிறவர்களுக்கு, மந்திரி சபையின் மொத்த அபிப்பிராயத்தை நிராகரிக்கிற விசேஷ அதிகாரம்1 ஏட்டளவிலேனும் கொடுக்கப் பட்டிருக்கிறதல்லவா, இந்த அதிகாரங் கூட நமது நாட்டு மன்னர்களுக்குக் கொடுக்கப்பட வில்லை. இது கூர்ந்து கவனிக்கத்தக்கது. தான தருமங்கள் செய்கிற விஷயத்தில் கூட, அவை எவ்வளவு உயர்ந்த தன்மையுடையவர்களுக்காக இருந்தாலுஞ் சரி, உயர்ந்த காரியங்களுக்காக இருந்தாலுஞ் சரி, அரசன், மந்திரிகளின் அங்கீ காரத்தைப் பெற்றே ஆக வேண்டும்; மந்திரிகள் மறுத்து விட்டால் அவற்றை நிறுத்திவிட வேண்டும். அசோகன், குக்குடா ராம விஹாரம் என்னும் பௌத்த மடத்திற்கு வழக்கமாக ஒரு தொகையை நன்கொடையாகக் கொடுத்து வந்தான். இப்படித் தொடர்ந்து கொடுத்து வருவதை அவனுடைய மந்திரிகள் விரும்பவில்லை. எனவே பிரதம மந்திரியான ராதாகுப்தன் என்பவன், மேற்கொண்டு கொடுக்கபடக் கூடாதென்று நன்கொடை நிறுத்திவிட்டான். அசோகனால் மீறி ஏதும் சொல்லவோ செய்யவோ முடியவில்லை. இன்னும் அசோகன், தன்னுடைய சாஸனமொன்றில், தான் செய்ய உத்தேசிக்கும் தானதருமங்கள் விஷயமாகவோ, வெளியிடும் பிரகடனங்கள் சம்பந்தமாகவோ, மந்திரி சபையில் வாதப் பிரதி வாதங்கள் நிகழ்வதாயிருந்தாலும் சரி, செயலில் வரவொட்டாது தள்ளி வைக்கப்படுவதாயிருந்தாலும் சரி, தனக்கு உடனே தெரிவிக்கப் படவேண்டுமென்றும் கூறுகிறான். இதிலிருந்து அசோகனுக்கும் அவனுடைய மந்திரி சபைக்கும் சில சில சந்தர்ப்பங்களில் அபிப்பிராய வேற்றுமைகள் ஏற்பட்டு வந்தனவென்று தெரிகிறது. கி. பி. இரண்டாது நூற்றாண்டில் சௌராஷ்டிரம் என்னும் பிரதேசத்தை ஆண்டு வந்த ருத்திரதாமன் என்ற அரசன், சுதர்சனம் என்ற ஏரியை அரசாங்கச் செலவில் பழுது பார்க்க முற்பட்டான். இதை அவனுடைய மந்திரிகள் அங்கீகரிக்கவில்லை. எனவே, அவன் தன் சொந்தப் பணத்தைப் போட்டுப் பழுதுபார்க்கும் வேலையை முடிக்கச் செய்தான். இஃது அவனுடைய சாஸனத்தினாலேயே தெரிகிறது. மந்திரிகள் எத்தகையவர்களாயிருக்க வேண்டும்? இது விஷயத்தில் எல்லா நூல்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கருத்தை வெளி யிட்டிருக்கின்றன. ராமாயணத்தின் பிரகாரம் மந்திரிகள், புத்தி கூர்மையுடையவர்களாகவும், நம்பிக்கை வைக்கத் தகுந்தவர்களாகவும், சுயமுயற்சியுடையவர்களாகவும், ராஜ விசுவாச முள்ளவர்களாகவும், பொருளுக்கோ புகழுக்கோ ஆசைப்பட்டு ஒரு காரியத்தைச் செய்யா தவர்களாகவும், தைரியமுடையவர்களாகவும், பிறருடைய மனோபாவங் களை எளிதிலே உணர்ந்து கொள்ளக் கூடியவர்களாகவும், ராஜ்ய ரகசியங்களைக் காப்பாற்றக்கூடியவர் களாகவும், உண்மையையே பேசுகிறவர்களாகவும், உண்மை தெரிந்தவிடத்து அதைத் தைரியமாக வெளியிடக் கூடியவர் களாகவும், பணக்காரர்களென்றும் ஏழை களென்றும் வித்தியாசம் பாராட்டாமல் நியாயத்தைச் செய்கிறவர் களாகவும் இருக்க வேண்டுமென்று அது - ராமாயணம் - கூறுகிறது. பணக்காரர்களாயிருக்கவேண்டுமென்று சொன்னது, அவர்கள் எந்த விதமான ஆசைக்கும் வசப்படாமல் இருப்பார்கள் என்பதற்காக. மந்திரி பரம்பரையைச் சேர்ந்தவர்களாயிருக்க வேண்டுமென்று சொன்னது, ராஜ்ய காரியங்களைத் திறம்படி நடத்துகிற சக்தி சுபாவிகமாகவே அவர்களிடத்தில் அமைந்திருக்கும் என்பதற்காக. இந்தப் பரம்பரை பாத்தியதையை மகாபாரதமும் வற்புறுத்துகிறது. எந்த ராஜ்யத்தில், மந்திரிகள், ஆலோசகர்கள், வைத்தியர்கள் ஆகியோர், அரசனுக்கு உண்மையை எடுத்துச் சொல்லாமல், அவனுக்கு எது பிடித்தமாயிருக்குமோ, எதைச் சொன்னால் அவன் சந்தோஷப் படுவானோ அதை, அந்த மாதிரியான ஆலோசனையைச் சொல்வார் களானால் அந்த ராஜ்யம் அழிந்துபோகும் என்கிறான் ஒரு பண்டிதன். அரசனுக்குப் பிடித்தமானதைச் சொல்லக் கூடியவர் பலரைச் சுலபமாகக் காணலாம். ஆனால் பிடித்த மில்லாமற்போனாலும் உண்மையையே எடுத்துச் சொல்லக் கூடிய ஒருவனையும், அந்த உண்மையைப் பொறுமையுடன் கேட்கிற அரசனையும் காண்டல் கடினம் என்கிறது ராமாயணம். விஷத்தின் ரசமானது, ஒருவனை கொல்லும்; ஆயுதத் தினால் ஒருவன் கொல்லப்படுவான்; (மந்திரிகளின்) தவறான ஆலோசனை யானது, ராஜ்யத்தோடும் பிரஜைகளோடும் அரசனைக் கொல்லும் என்கிறது மகாபாரதம். சுய தேசத்தில் பிறந்தவர்கள்தான் ஆலோசனை சபையின் அங்கத்தினர்களாயிருக்கத் தகுதியுடையவர்களென்று ஏற்கனவே கூறியுள்ளோம். நிருவாகம் நடத்துகிற மந்திரிகளுக்கு இந்தத் தகுதி மிகவும் அவசியமென்பதை நாம் சொல்லத் தேவையில்லை. நாட்டிலே பிறந்தவன் தான், நாட்டின் நன்மைக்குகந்தது எது என்பதை நன்கு அறிய முடியும். அப்படிப் பட்டவன் தானே நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும்? மந்திரிகள், கிடைக்கிற சம்பளத்தைக் கொண்டு திருப்தி யடைகிறவர்களாகவும், சம்பளத்தளவில் செலவு செய்கிறவர்களாக வும் இருக்க வேண்டுமென்று சுக்கிரநீதி கூறுகிறது. இது, மந்திரிகளை நோக்கி விசேஷமாகச் சொல்லப்பட்டதாயினும், அரசாங்க உத்தியோகதர்களனை வருக்கும் வழங்கப்பட்ட அறிவுரையேயாகும்; எக்காலத்திற்கும் பொருந்து கின்ற அறிவுரையு மாகும். மந்திரிகளை நியமிக்கிறபோது அவர்களைப் பலவித பரிசோதனை களுக்குட்படுத்திப் பார்க்கவேண்டுமென்பது விதி. பொன்னை உருக்கி ஆராய்வது போல், மந்திரிகளை ஆராய்ந்து பார்க்க வேண்டுமென் கிறது சுக்கிர நீதி. பொதுவாக, மந்திரிகளாகட்டும், ஆலோசகர்களாகட்டும், ஒத்த தன்மையினராயிருந்தார்களென்று சொல்லலாம். இதனால் தான், அரசன் இரு பிரிவினருக்கும் ஒரே மாதிரியான மரியாதையைச் செலுத்தி வந்தான்; பின்னவர், முன்னவர் பொறுப்பை விசேஷ சந்தர்ப்பங்களில் ஏற்று நடத்துவது சுலப சாத்தியமாயிருந்தது. மந்திரிகளனைவரும் சேர்ந்தது மந்திரிசபை; மந்திரி கணம் என்றும் கூறுவர். மந்திரி சபையென்றே நாம் இங்கு அழைத்துக் கொண்டு போவோம். ஆங்கிலத்தில் காபினெட்1 என்று சொல்லப் படுகிறதல்லவா, அதுதான் இந்த மந்திரி சபை. மந்திரி சபையில் மொத்தம் எத்தனைபேர் இருத்தல் வேண்டும்? மனுநீதி, ஏழு அல்லது எட்டு பேருக்குமேல் இருக்கக் கூடாதென்று அறிவிக்கிறது : தசரதனுக்கு எட்டு மந்திரிகள் என்கிறது ராமாயணம். எட்டு மந்திரிகளின் நடுவில் அரசன் ஆலோசனையைத் தீர்மானிக்க வேண்டும் என்கிறது மகாபாரதம். எட்டு மந்திரிகள் இருக்கவேண்டு மென்பது ஒரு சிலர் கருத்தென்று சுக்கிர நீதி சொல்கிறது. பொது வாக, ஒரு ராஜ்யத்தின் நிருவாகத்திற்கு, அந்த ராஜ்யம் சிறியதாயிருந்த போதிலும், பெரியதாயிருந்த போதிலும், குறைந்த பட்சம் எட்டு மந்திரி களாகவது இருக்கவேண்டுமென்பதே நமது முன்னோர்களின் கருத்தாயிருந்ததென்று நாம் முடிவு கட்டலாம். ஒரு சிலர் கருத்தென்று சுக்கிர நீதி எட்டு பேரைச் சொல்லியிருக் கிறதல்லவா. அந்த எட்டு பேரும் யார் யார் என்றால், 1. சுமந்திரன் - நிதிமந்திரி. 2. பண்டிதன் - சட்ட மந்திரி. 3. மந்திரி - உள்நாட்டு மந்திரி. 4. பிரதானன் - மந்திரி சபையின் தலைவன். 5. சசிவன் - யுத்த மந்திரி. 6. அமாத்தியன் - வரி, விவசாய இலாகா மந்திரி. 7. பிராட்விவாகன் - பிரதம நீதிபதி. 8. பிரதிநிதி - இவன் பொறுப்பு இன்னதென்று சரியாக நிச்சயிக்க முடியவில்லை. எந்தக் காரியத்தை எந்தச் சமயம் செய்யவேண்டு மென்று அரசனுக்கு அறிவிக்கிற பொறுப்பு இவனுடையதென்று சுக்கிர நீதி கூறுகிறது. அரசனுக்கும் மந்திரிகளுக்குமிடையே அவ்வப்பொழுது தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கிற மந்திரியென்று சிலர் கருதுகின்றனர். ஜனசபையின் பிரதிநிதியாக ஒரு மந்திரி இருந்தானென்றும் அவனே இவனென்றும் சிலர் ஊகிக் கின்றனர். எப்டி இருந்தபோதிலும் இவன் மந்திரிகளில் முக்கியமானவனாகக் கருதப்பட்டு வந்தானென்று நிச்சய மாகத் தெரிகிறது. இந்த எண்மரோடு, புரோகிதனும் தூதனும் சேர்ந்து மொத்தம் பத்து மந்திரிகள் இருத்தல் நல்லதென்பது சுக்கிர நீதியின் சொந்தக் கருத்து. இந்தப் பதின்பருடைய அந்தது வரிசையையும் பின் வருமா தெரிவிக்கிறது : - (1) புரோகிதன் (2) பிரதிநிதி (3) பிரதானன் (4) சசிவன் (5) மந்திரி (6) பிராட்விவாகன் (7) பண்டிதன் (8) சுமந்திரன் (9) அமாத்தியன் (10) தூதன். இவர்களில், பின்னுள்ளவனைக் காட்டிலும் முன்னுள்ளவன் வரிசைக்கிரமமாக அந்ததில் மேலானவன். தற்கால அரசாங்கங்கள் பலவற்றுள்ளும், மந்திரி சபையைச் சேர்ந்தவர்ளென்றும், மந்திரி சபையைச் சேராதவர்களென்றும் இரு வகையினரான மந்திரிகள்1 இருப்பதைப் பார்க்கிறோம். இது போலவே நமது நாட்டிலும் இருந்திருக்கிறார்கள். இவ்விரு வகை யினரும் நேர்ந்தாற்போல் தீர்த்தர்கள் என்று அழைக்கப் பட்டார்கள்.2 புரோகிதன், தூதன், இளவரசன் ஆகிய மூவரும் மேலான நிலையில் வைத்துப் பேசப்பட்ட போதிலும், அரசன், இவர்களுடைய அபிப்பிராயத்திற்கு மதிப்புக் கொடுத்தானெனினும், மந்திரி சபையில் இவர்களுக்கு இடங்கொடுக்கப்படவில்லை. சுமந்திரன், பண்டதன், மந்திரி, பிரதானன், சசிவன், அமாத்தியன், பிராட்விவாகன், பிரதிநிதி ஆகிய எண்மரும் ஒரே மாதிரியான சம்பளத்தைப் பெறுதற்குரியரென்று சுக்கிர நீதி கூறுகிறது. எனவே எண்மரைக் கொண்டதே மந்திரி சபையென்று நாம் உறுதியாகக் கொள்ளலாம்.அப்படியே புரோகிதன், இளவரசன்,தூதன் முதலியோர் மந்திரி சபையைச் சேராத மந்திரிகளென்று முடிவு கட்டலாம். மந்திரி சபையில் இடம் பெறவிட்டாலும் இவர்கள், ஆலோசனை சபையின் அங்கத்தினர்களாயிருந்தார்களென்று நாம் தீர்மானிப்பது தவறாகாது. மந்திரி சபையில் இடம் பெறாத மந்திரிகள் எத்தனை பேர் இருந்தன? நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. தீர்த்தர்கள் பதி னெண்மர் என்று சொல்லப்பட்டிருப்பதால், மந்திரிகள் எண்மர் போக, பதின்மர் இவர்களா யிருந்தார்களென்று கூறலாம். ஆனால் நிலைமைக்கும் தேவைக்கும் தகுந்தபடி இவர்களின் எண்ணிக்கை இருந்ததென்று கொள்வதுதான் பொருத்தமாயிருக்கும். இப் பொழுது கூட அநேக ராஜ்யங்களில் சிறப்பாக ஜனநாயக நாடுகளில் - ஒவ்வொரு புதி மந்திரி சபை அமைகிறபோதும், மந்திரி சபையில் இடம் பெறாத மந்திரிகளின் எண்ணிக்கை, தேவைக்குத் தகுந்தபடி நிர்ணயிக்கப்படுவதைக் காண்கிறோமல்லவா? இவர்கள் எத்தனை பேராயிருந்தபோதிலும், மந்திரி சபையானது எண்மரைக் கொண்டதாகவே இருக்கவேண்டுமென்ற நியதி, நமது நாட்டில் சிவாஜி மகாராஜன் காலம் வரை கண்டிப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததென்று சொல்லவேண்டும். சிவாஜியின் மந்திரி சபை, அஷ்டப் பிரதானம் என்றே அழைக்கப்பட்டது. எட்டு மந்திரிகளும் வருமாறு : (1) பேஷ்வா (2) சேனாபதி (3) அமாத்தியன் (4) சசிவன் (5) மந்திரி (6) சுமந்திரன் (7) பண்டிதராயன் (8) நியாயதீசன். இஃதிருக்கட்டும். பழமைக்குச் செல்வோம். மந்திரி சபைக்குள்ளேயே மற்றொரு சபை இருந்தது. இதனை உள்மந்திரி சபை 1 யென்று சொல்லலாம். அரசன், எட்டு பேரையும் ஒருங்கே அடிக்கடி கூட்டிப் பேச முடியாதல்லவா? இதற்காக, மந்திரிகளில் பெரியவர்களும், தனது நம்பிக்கைக்கு மிகவும் உரியவர்களுமான மூன்று அல்லது ஐந்து பேரை மட்டும் அடிக்கடி ஒருங்கு கூட்டிக் கலந்து பேசுவான். இவர்களைக் கொண்டதே உள்மந்திரி சபை. இவன் அங்கத்தினர்கள், ஒற்றைப்படை எண்ணிக்கையிலேயே இருக்க வேண்டுமென்பது பொது நியதி. புரோகிதன், இதில் ஓர் அங்கத்தினனாயில்லாமற் போனபோதிலும் இதன் கூட்டங்களில் கட்டாயம் பிரசன்னமாயிருப்பான். இவன் ஆலோசனைகள் தனிமதிப்புப் பெற்று நிற்கும். எதிலுமே புரோகிதனுக்குத் தனி மதிப்பு இருந்ததென்பதை நாம் சொல்லத் தேவையில்லை. உள் சபையைச் சேர்ந்த மந்திரிகள் மந்திரதரர்கள் என்று அழைக்கப் பட்டார்கள். ராஜ்யம் அனுஷ்டிக்க வேண்டிய கொள்கையை நிர்ணயம் செய்கிற பொறுப்பை மேற்கொண்டிருக் கிறவர்கள் என்று இதற்குப் பொருள் கூறலாம். அரசன், முக்கியமான நிருவாகப் பிரச்னை எதனையும் முதல் முதல் இந்த உள் சபை முன் கிளத்துவான்; பிறகு எண்மர் அடங்கிய மந்திரி சபையைக் கலப்பான்; அதற்குப் பின், அவசியமென்று தோன்றினால், ஆலோசனை சபையைக் கூட்டி அதன் அபிப்பி ராயத்தைக் கேட்பான்; அதன்படியே நடப்பான். நிருவாக சம்பந்தமான முக்கிய பிரச்னைகளுக்குத்தான் இந்த வரிசைக் கிரம ஆலோசனை. ராஜ்யத்திற்குப் பொதுவாயுள்ள விஷயங் களா யிருந்தால், அதாவது இளவரச நியமனத்தை அங்கீகரித்தல், கொடுங்கோலனான அரசனை நீக்கிவிடுதல், செய்வினைக்கிரங்கிய அரசனைத் திருப்பி அழைத்துக் கொள்ளுதல், பிரதம மந்திரி நியமனம் முதலியன ஜனசபையின் ஆலோசனைக்கு வரும். ஜனசபை என்ன முடிவு செய்கிறதோ அதன்படியே மேற்சொன்ன காரியங்கள் நடைபெறும். ஜன சபைக்கு மந்திரிகளின் விஷயத்திலும், அதிகாரமுண்டென்று சொல்லலாம். எப்படி யென்றால், இவர்கள் -மந்திரிகள் - அரசனால் நியமிக்கப்படுகின்றர் களாயினும் இவர்கள் உத்தியோகத்தில் நீடித் திருப்பது, ஜனசபை இவர்களிடத்தில் வைக்கும் நம்பிக்கையைப் பொறுத் திருக்கும். அரசனோடு கூடிய மந்திரி சபையானது ஒரு பிரச்னையைப் பற்றி ஆலோசிக்கிறபோது அந்தப் பிரச்னையின் சாதக பாதகங் களையெல்லாம் பரிசீலனை செய்யவேண்டியிருக்குமில்லையா? ராஜ்யமென்றிருந்தால் சத்துருக்களும் இருப்பார்கள்; மித்துருக் களும் இருப்பார்கள். சத்துருக் களுக்கு, ஆலோசிக்கப்படுகிற பிரச்னை இன்னது, அதன் விளைவாக நடைபெறப் போகிற காரியம் இன்னது என்பவைகளைப் பற்றி வைலேசமும் தெரியக்கூடாது. ஆனால் சத்துருக்களோ தெரிந்து கொள்ளவே விரும்புவார்கள். அந்த விருப்பம் நிறைவேறாதபடி மந்திரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும். காம வெறியிலோ ரகசியங்கள் வெளிப் படக்டுமல்லவா, இவை எதற்கும் மந்திரிகள் இடங்கொடுத்தல் கூடாது; சர்வ ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இதற்கு முன்னெச்சரிக்கைபோல், மந்திரி சபையின் கூட்டங்கள் ரகசியமாகவே நடைபெறல் வேண்டுமென்று கட்டாய விதி செய்யப் பட்டது. கூட்டம் ரகசியமாக நடைபெறுவது மட்டுமல்ல, கூட்டத்தில் நடைபெற்ற விஷயங்களும் ரகசியமாகவே இருக்க வேண்டும். கௌடிலீயம் சொல்வதைக் கேளுங்கள்: மந்திரி சபையைப் பொறுத்த நடவடிக்கைகள், பட்சிகள் கூட பார்க்க முடியாதபடி ரகசியமாக நடைபெற வேண்டும். ஏனென்றால், கிளிகள், மைனாக்கள், நாய்கள் முதலிய கீழான ஜந்துக்களால் அநேக ரகசியங்கள் வெளிப்பட்டன என்று சொல்லப் படுகின்றது. ஆலோசிக்கப்படுகிற விஷயம் எந்த வகையிலும் வெளி யாகாதபடி போதிய பந்தோபதுகள் செய்து கொண்டு அரசன் மந்திரா லோசனையைச் செய்ய வேண்டும். இன்னும் மகாபாரதம் கூறுகிறது: மந்திராலோசனை நடக்கும் இடத்தில் குள்ளரும், கூனரும், மெலிந்த வரும், முடவரும், குருடரும், அசடரும், மபும்சகரும் இருத்தல்கூடாது; இவர்கள், குறுக்காகவும், முன்னும் பின்னும், மேலுங்கீழும் எவ்விதத்திலும் சஞ்சரிக்கவும் கூடாது. மந்திரி சபையானது, எந்த ஒரு பிரச்னையையும் ஐந்து பாகங் களாகப் பிரித்துக்கொண்டு ஆலோசனை செய்ய வேண்டுமென்பது விதி. முதலாவது, காரியத்தைத் தொடங்கலாமா, தொடங்குவதற்கான வழியென்ன இருக்கிறது என்பது; இரண்டாவது, அந்தக் காரியத்தை நிறைவேற்றுவதற்கான ஆள் பலத்தையும் பண பலத்தையும் சேகரிக்க வேண்டுமென்பது; மூன்றாவது, காரியத் தொடக்கத்திற்கான இடத்தையும் காலத்தையும் நிர்ணயிப்பது; நான்காவது, காரியம் நிறைவேறுகிற வரையில் இடையே எவ்வித தடையும் ஏற்படாமலிருக்க வழிசெய்து கொள்வது; ஐந்தாவது, காரியத்தை வெற்றிகரமாக முடிப்பது. இப்படிப் பகுதி பகுதியாகப் பிரித்துக் கொண்டே ஒவ்வொரு பிரச்னையும் ஆலோசிக்கப்பட வேண்டுமென்றும், காரியத்தை நிறைவேற்றக் காலம் வந்துவிட்டது போது, எந்தக் காரணத்திற்காகவும் தாமதம் செய்யக் கூடாதென்றும் கௌடிலீயமும் மகாபாரதமும் கட்டளையிடுகின்றன. அரசன், குறிப்பிட்ட ஒரு பிரச்னையைப் பற்றி, மந்திரிகளை ஒவ்வொருவராக வரவழைத்தோ அல்லது ஒன்று கூட்டியோ ஆலோசிக்கலாம். இந்த உரிமை அவனுக்குண்டு. ஆனால் முடிவு செய்யப்படுகிற நிலையில் மந்திரி சபையின் மொத்த அங்கீகாரத்தைப் பெற்றேயாக வேண்டும். மந்திரி சபையின் கூட்டங்கள் தினந்தோறும் நடைபெற வேண்டுமென்பதில்லை. அப்படி நடைபெறுதலும் முடியா ரல்லவா? கலந்து பேசி முடிவு செய்யப்படி வேண்டிய பிரச்னைகள் எழுகிற போதுதான், அரசனோ, உள்மந்திரி சபையினரோ விரும்பினால்தான் இந்தக் கூட்டங்கள் நடைபெறும். இந்தக் கூட்டங்களில், நிருவாக சம்பந்தமாக அனுஷ்டிக்க வேண்டிய முறைகள், அந்த முறைகளை அனுஷ்டிப்பதால் உண்டாகும் விளைவுகள், அந்த முறைகளை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருதல், வரவு செலவுகளைப் பற்றிக் கவனித்தல், ராணுவத்தின் பாதுகாப்பு, யுத்த முறைகள், சத்துருக்கள், காட்டு ஜனங்கள் முதலியவர்களிடமிருந்து பிரஜைகளைக் காப்பாற்றுகிற வகை, தேசீய வாழ்வில் சீர்குலைவு ஏற்படாமல் பாதுகாத்தல், அரச குமாரர்களை அவரவர்களுக்கேற்ற பதவிகளில் அமர்த்தல் ஆகிய இப்படிப்பட்ட முக்கியமான விஷயங்களே ஆலோசனைக்கு வந்தன. அரசாங்கத்தில் அன்றாட நிருவாகம் சம்பந்தப்பட்ட சம்பி ரதாயமான காரியங்களை அந்தந்த இலாகா தலைவர்களே கவனித்து நடத்தி வந்தார்கள். அரசாங்கக் காரியாலயத்தில், எல்லா விஷயங்களுக்கும் ஒழுங்கான குறிப்பேடுகள் - ததவேஜுகள் - வைக்கப்பட்டிருந்தன. இந்த ஏடுகளின் ஆதாரமில்லாமல் எந்த ஒரு விஷயமும் தீர்மானிக்கப் படமாட்டாது. மந்திரிகள் ஒன்றுகூடி ஆலோசிக்க வேண்டிய விஷய மாயிருந்தாலுஞ் சரி, தனித்தனியாகப் பார்த்து முடிவு செய்ய வேண்டிய விஷயமாயிருந்தாலும் சரி, எல்லா வற்றிற்கும் இந்த ஏடுகளே ஆதார மாயிருந்தன. மந்திரி சபையில் என்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப் படவிருக்கின்றனவோ இவை பற்றின சகல விவரங்களையும், அரசாங்கக் காரியாலயத்தினர், முன் கூட்டியே தனித்தனிக் குறிப்பேடுகளாகத் தயாரித்துச் சபை முன் வைப்பர். இவற்றை வைத்துக் கொண்டுதான் மந்திரிகள் ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்வர்; வாய்மொழியாக ஒரு முடிவுக்கும் வருவர். ஆனால் முடிவு செய்யப்பட்ட ஒவ்வொன்றும் ஏட்டிலே கொணரப்பட்டு மந்திரிகளின் கையெழுத்தையும், இறுதியாக அரசனுடைய கையெழுத்தையும் பெறவேண்டும். இப்படிப் பெறாதவை செல்லுபடியாகா. இதே மாதிரிதான் மந்திரிகளின் தனிப்பார்வைக்கு வருகின்ற குறிப்பேடுகளின் சம்பந்தமாகவும் அனுஷ்டிக்கப்பட்டது இந்தக் குறிப்பேடு களில், சம்பந்தப்பட்ட காரியாலயத்தினர், இதை இப்படிச் செய்யலாம் என்றோ, இந்த விஷயத்திற்கு இந்தப் பரிகாரம் ஏற்றது என்றோ இப்படித் தங்கள் கருத்தைத் தக்க ஆதாரங்கள் காட்டி எழுதி அனுப்புவர். இவைமீது, மந்திரிகள் தங்கள் முடிவை எழுத்து மூலமாகவே தெரிவிப்பர். பொதுவாக, எந்த ஒரு முக்கியமான காரியமும் அரசனு டையவோ மந்திரிகளினுடையவோ எழுத்து மூலமான உத்தர வில்லாமல் செய்யப்படக்கூடாது. சில சந்தர்ப்பங்களில் அரசனோ மந்திரிகளோ, வாய்மொழி மூலமாக உத்தரவிட்ட போதிலும் அதனைப் பின்னால் எழுத்து மூலமாக ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டியது அரசாங்க அதிகாரிகளின் கடமை. முக்கியமான அரசாங்கக் குறிப்பேடுகள், மந்திரிகளின் அங்கீகாரத்தையும், அரசனின் அங்கீகாரத்தையும் முறையே எவ்வாறு பெற்றனவென்பதைச் சுக்கிர நீதி நன்கு விளக்குகிறது: எந்த ஒரு குறிப்பேடும் முதலில் உள்நாட்டு மந்திரி, பிரதம நீதிபதி, சட்ட மந்திரி, தூதன் ஆகிய இவர்களுக்கு வரிசைக்கிரமமாக அனுப்பப்படும். இவர்கள் ஒவ்வொருவரும் எமக்கு ஆட்சேப மில்லை என்று ஒரே மாதிரியாக இந்தக் குறிப்பேடுகளில் எழுதுவார்கள். பிறகு வரி விவசாய இலாகா மந்திரியிடம் செல்லும்; அவன் நன்றாக எழுதப் பட்டிருக்கிறது; எனக்குச் சம்மதம் என்ற வாசகத்தைப் பொறிப்பான். பின்னர் நிதிமந்திரிக்குப் போகும். அவன் நன்கு ஆராயப்பட்டிருக் கிறது என்று எழுதுவான். அப்புறம், மந்திரி சபையின் தலைவனிடம் சென்றதும் அவன், மிகவும் சரியாயிருக்கிறது என்று வரைவான். அதற்கு மேலே பிரதிநிதி பார்வையிட்டு அரசனது அங்கீகாரத்தைப் பெறுதற்குரியது என்று எழுதுவான். பிறகு இளவரசன் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று வரைவான். புரோகிதன் எனக்குச் சம்மதம்என்பான். இங்ஙனம் ஒவ்வொரு மந்திரியும் முறையே எழுதி, தத்தம் முத்திரையையிடல் வேண்டும்; இடப்பெற்ற குறிப்பேடு அரசன்பால் செல்லும். அவன், அங்கீகரிக்கப் பட்டது என்று எழுதித் தன் முத்திரையை யிடுவான். இதனோடு முற்றுப்பெற்றுவிடாது. மீண்டும் இந்தக் குறிப்பேடானது மந்திரி சபையின் கூட்டத்தில் வைக்கப்பெறும். மந்திரிகள் அனைவரும், மந்திரி சபையினர் என்ற ஹோதாவில் மறுபடியும் கையெழுத்திட்டு, மந்திரி சபைக்கென்று தனியாயுள்ள முத்திரையையும் இடச் செய்வர். இப்படி இடப்பெற்ற குறிப் பேடானது, திரும்பவும் அரசன் பார்வைக்குப் போகும். அவன் பார்க்கப்பட்டது என்று குறிப்பான். இதற்குப் பிறகுதான் எந்த ஒரு பிரச்னையும் காரியாமிசத்தில் வரும். மந்திரி சபையில் பதின்மர் இருக்க வேண்டுமென்பது சுக்கிர நீதியின் சொந்தக் கருத்தல்லவா, இதனாலேயே குறிப்பேடுகளில் அங்கீகாரம் தரவேண்டியவர் வரிசையில் புரோகிதனையும், தூதனையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறது. மந்திரி சபையைச் சேர்ந்த ஒவ்வொரு மந்திரிக்கும், இரண்டு உதவி மந்திரிகள் இருந்தார்கள். மந்திரிகளுக்கோ, உதவி மந்திரி களுக்கோ, மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது பத்து வருஷத்திற்கொரு முறை சந்தர்ப்பத்தை அனுசரித்து, இலாகாக் களின் நிருவாகப் பொறுப்பு மாற்றி மாற்றிக் கொடுக்கப்பட்டது. ஒரே இலாகா, ஒருவனுடைய நிருவாகப் பொறுப்பிலேயே எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கக் கூடா தென்றும், அப்படி யிருந்தால் நிருவாகத் திறமை குன்றிப் போய்விடுவ தோடு, அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்பும் ஏற்படுதல் கூடுமென்றும் கருதப்பட்டன. அசோகன் ஆட்சியில், மந்திரிகள் இங்ஙனம் மூன்று வருஷத்திற்கொரு தடவையும் ஐந்து வருஷத்திற் கொடு தடவையும் மாற்றப்பட்டு வந்ததாக அவனுடைய சாஸனங்களி லிருந்து அறிகிறோம். மந்திரி சபை முழுவதுமே சில சமயங்களில் மாற்றியமைக்கப்பட்டதுண்டு. ஆனால்இஃது ஏக தேசமாகத்தான் நடை பெற்றதென்று சொல்ல வேண்டும். மந்திரிகள், பெரும்பாலும் தலைநகரிலிருந்து கொண்டு தங்கள் அலுவல்களைக் கவனித்து வருவார்கள். அவசியம் நேரிடுகிற பொழுது. தனியாகவோ, அரசனுடனோ ராஜ்யத்தில் சுற்றுப் பிரயாணஞ் செய்வார்கள். ஆனால் எல்லா மந்திரிகளும் அரசனுடன் செல்ல மாட்டார்கள்; அந்தந்த நிலைமையையும் தேவையையும் அனுசரித்து, யாரார் செல்ல வேண்டுமோ, யாரார் சென்றால் உசிதமாயிருக்குமோ அவர்கள் மட்டுமே செல்வார்கள். தலைநகரில் எப்பொழுதும் சில முக்கிய மான மந்திரிகள் இருந்து கொண்டிருப்பார்கள். நிருவாக யந்திரம் ஒழுங்காக ஓடிகொண்டிருக்க வேண்டுமல்லவா? 10. ஜனங்கள் ஜன இச்சையிலிருந்து பிறந்த அரசன் 1, அந்த ஜன இச்சையைத் தழுவியே நடக்கவேண்டியவனாயிருந்தான். எந்தக் கணத்தில் அவன், அதற்கு மாறாக நடக்கத் துணிகின்றானோ அந்தக் கணத்திலிருந்தே அவன் அரசனாகக் கணிக்கப்டமாட்டான். அது மட்டுமல்ல, எந்த ஜன இச்சை அவனைக் கைலாகு கொடுத்து அரச பதவியில் ஏற்றி வைத்ததோ அந்த ஜன இச்சையே அதே பிரகாரம் கைலாகு கொடுத்து அவனை அப்பதவியிலிருந்து இறக்கிவிடும். மகா பாரதத்தில் காணப்படுகின்ற ஒரு வரலாற்றின் படி, கனீநேத்திரன் என்ற ஓர் அரசன், கொடுங்கோலாட்சி நடத்தி வந்தான். ஜனங்களால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. அரச பீடத்திலிருந்து அவனை இறக்கி நாட்டிற்கு வெளியே அனுப்பிவிட்டாகள். அவனுடைய மகன் சுவர்ச்ச என்பவனுக்கு ராஜ்யா பிஷேகம் செய்வித்து அரசபீடத்தில் அமர்த்தி வைத்தார்கள். இன்னும் வேனன் என்ற அரசன், ஜனங்களுடைய அதிருப்திக்கு ஆளாகிக் கடைசியில் அவர்களுடைய கோபத்திற்கு இரையாகிவிட்டா னென்பதை ஐந்தாவது அத்தியாயத்தில் பார்த்தோம். 2 இதிலிருந்து ஜன இச்சைக்கு எவ்வளவு சக்தி இருந்ததென்பதை நாம் ஒருவாறு ஊகித்துக் கொள்ளலாம். இதனால்தான் முந்தின அத்தியாயங்களில் ஜனசக்தி யென்றே கூறி வந்திருக்கிறோம். இப்படிச் சக்தி வாய்ந்ததாயிருந்தபோதிலும், இது, தன்னுடைய சக்தியைத் துஷ்பிரயோகஞ் செய்யவில்லை. எந்த அரசன் தர்மத் திற்குக் கட்டுப்பட்டு நடந்து வந்தானோ, ஜனங்களையும் கட்டுப் படுத்தி நடத்தி வந்தானோ, எவனுடைய ஆளுகையில் ராஜ்யம் எல்லாத் துறைகளிலும் அபிவிருத்தி யடைந்து வந்ததோ அவனைத் தெய்வத்திற்குச் சமதையாகப் போற்றி வந்திருக்கிறது; தவறாக நடந்த அரசன் விஷயத்திலும் தயை காட்டியே வந்திருக்கிறது; முதலில் அவனைச் சீர்திருத்தப் பார்த்து, பலன் காணாத நிலையில்தான் அவனை அரச பீடத்திலிருந்து இறக்கியோ, நாட்டிலிருந்து விலக்கியோ விட்டிருக்கிறது; செய்வினைக்கிரங்கிய அரசனைத் திரும்பவும் வரவழைத்து அரியணையில் அமர்த்தியிருக் கிறது. என்ன ஆச்சரியம்! மற்றும், இந்த ஜன இச்சையானது எந்த ஒன்றையும் ஆத்திரப் பட்டுச் செய்யவில்லை; எதிலும் நிதானத்தையே கடைப்பிடித்து வந்தது; அந்த நிதானத்தில் நேர்மையும் கண்டிப்பும் கலந்திருந்தன. இன்னும், இந்த ஜன இச்சையானது, அறவேலி போட்டுக்கொண்டு அதில் அரசியல் பயிரை வளர்த்து வந்தது. இவ்வளவுக்கும் காரணமென்ன? ஜனங்களெல்லோரும் அரசிய லறிவு பெற்றிருந்ததுதான். 1 இந்த அறிவு, வேகாத சோறு மாதிரியில் லாமல், ஜீரணிக்கத்தக்க ஆகாரம் போலிருந்தது; தவிர, ஏட்டறிவாக மட்டுமில்லாமல் அனுபவ அறிவாகவுமிருந்தது. பெரும்பாலோருக்கு அனுபவ அறிவுதான் அதிகமாயிருந்ததென்று சொல்லவேண்டும். ஏட்டறிவோ, அனுபவ அறிவோ, ஈரமான இதயத்தை வாசதலமாகக் கொண்டிருந்தது. அறிவும் உணர்ச்சியும் சேர்ந்தே வாழ்ந்தன. இதனால் நமது நாட்டு அரசியல் அறிஞர்கள், ஜனங்களை, அசைந்து கொடுக்கின்ற ஒரு பிண்டமாகவோ, ஆட்டு வித்தால் ஆடுகின்ற ஒரு கைப்பாவை யாகவோ கருதிப் பேசாமல் ஒரு சக்தியாகப் பெருமைப்படுத்திப் பேசிவந்திருக்கிறார்ள். இதற்குத் தகுந்தாற்போல், ஜனங்களும், எது நல்லது எது கெட்டது என்று நிர்ணயித்துக் கூறும் திறல் வாய்ந்தவர் களாகவும் நல்லதற்கு வழி காட்டுகிறவர்களாகவும் இருந்து வந்திருக் கிறார்கள். இதனாலேயே அரசன் இவர்களுடைய அபிப்பிராயத்திற்கு மதிப்புக் கொடுத்துச் செவிசாய்க்க வேண்டியவனாயிருந்தான். தன்னுடைய அன்றாட நிருவாகத்தைப்பற்றி ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள்; தன்னுடைய செயல்களை அங்கீகரிக்கிற முறையில் பேசுகிறார்களா இல்லையா; தான் எப்படி நடந்து கொண்டால் ஜனங்களுக்குத் திருப்தி கரமாயிருக்கும்; ஜனங்களிடையே தனக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்பவைகளை ரகசிய ஒற்றர்கள் மூலம் அரசன் அறிந்துவர வேண்டு மென்று மகாபாரதம் கூறுகிறது. எந்த ஓர் அரசனும், ஜனங்களுடைய மதிப்பில் உயர்ந்து நிற்கவேண்டுமென்றே ஆசைப்பட்டான்; அதற்காக எந்த விதமான தியாகத்தையும் செய்யச் சித்தமா யிருந்தான். இந்தக் கண்கொண்டுதான் ராமாயணம் உத்தர காண்டத்தில், ராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பிய சம்பவத்தைப் பார்க்க வேண்டும். சீதையைப் பற்றிய பொது ஜன அபிப்பிராயம் தவறாயிருக்கலாம்; ராமனும் இதை உணர்ந்திருக்கலாம். ஆயினும், இதற்கு - இந்தப் பொதுஜன அபிப்பி ராயத்திற்குத் - தலை வணங்கிக் கொடுப்பதன் மூலம் இதன் மதிப்பில் உயர்ந்து நிற்கவே விரும்பினான் ராமன். எதற்கும் ஒரு புறநடை உண்டல்லவா? அதுபோல், பொதுஜன அபிப்பிராயம் எப்பொழுதுமே சரியாயிருக்கு மென்று சொல்ல முடியாது. சில சந்தர்ப்பங்களில் தவறான பாதையில் சென்று விடலாம். அப்பொழுது அரசனோ அவனைச் சார்ந்த மந்திரிகளோ, தக்க அபிப்பிராயத்தை நேரிய பாதையில் திருப்பிவிட்டார்களே யொழிய அதனைப் புறக்கணித்து விடவோ நசுக்கிவிடவோ இல்லை. இது கூர்ந்து கவனிக்கத் தக்கது. ஜன ஆட்சியின் கீழ்தான் பொதுஜன அபிப்பிராயமானது மதிப்புப் பெற்று நிற்கிறதென்றும், முடியாட்சியின் கீழ் அது சீந்தப் படுவதே யில்லையென்றும் தற்காலத்து அரசியல் பண்டிதர் சிலர் கருதுகின்றனர். முடியாட்சி என்பது ஒருவனுடைய சர்வதிகார ஆட்சியாயிருக்கும் பட்சத்தில் இஃது ஒப்புக்கொள்ளக்கூடியது தான். ஆனால், நமது நாட்டில் சர்வாதிகார ஆட்சி ஏற்படுவதற்கு இடமே கொடுக்கப்படவில்லை. பெயரளவுக்கு ஒருவனுடைய ஆட்சி நடைபெற்றதென்று சொல்லலா மாயினும் உண்மையில் அந்த ஒருவன் குடிமக்களின் பிரதிநிதியாக இருந்து அவர்கள் விருப்பத்தைத் தழுவியே ஆட்சி நடத்தினான். இதைப் பற்றி முந்தியும் கூறியிருக்கிறோம். ஜனங்களுடைய அபிப்பிராயமின்னதென்று ரகசிய ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொள்வது அரசனுடைய கடமையென்றாலும், ஜனங்களுக்குத் தங்கள் அபிப்பிராயத்தைத் தாராளமாக எடுத்துச் சொல்ல உரிமை இருந்தது. இந்த உரிமை, அரசனுடைய மேற்படி கடமைக்கு முரண்பட்டதாயிருக்கவில்லை. ஜனங்களுடைய அபிப்பிராயம் எப்படி வெளிப்பட்டது? ஒன்று, தனிப்பட்ட சிலர் மூலமாக; மற்றொன்று, பிரதிநிதி சபைகள் மூலமாக. தனிப்பட்ட சிலர் யார்? அறிவிலும், அனுபவத்திலும், சீலத்திலும் பெரியோர். இவர்கள், சமுதாயத்தினின்று விலகி வாழ்ந்தார்கள்; ஆனால் சமுதாயத்திற்காகவே வாழ்ந்தார்கள். இதனால் சமுதாயத்தில் இவர்களுக்கு அதிக செல்வாக்கு இருந்தது. ஜனங்கள், தங்கள் அபிப்பிராயத்தையோ, குறையையோ, தேவை யையோ இவர்களிடம் வலுவில்போய் தெரிவித்து கொள்ளவில்லை; இவர்களும் அதை எதிர்பார்க்கவில்லை. இவர்களே தெரிந்து கொண்டார்கள். அந்தச் சக்தி இவர்களுக்கு இருந்தது, தெரிந்து, தெரிவிக்க வேண்டிய முறையிலே தெரிவித்து என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்விக்கச் செய்தார்கள். இன்னதற்கு இன்னது பரிகாரமென்று இவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. இவர்கள், யாருடைய தயவுக்கும் காத்துக் கொண்டிருக்க வில்லை; ஏனென்றால் இவர்கள் யாருடைய தயவிலும் வாழ வில்லை, இவர்கள், சில சந்தர்ப்பங்களில், அரசனுடைய அதிருப்திக்கு ஆளாகலாம்; அல்லது ஜனங்களுடைய மதிப்பிலே இறங்கிவிடலாம். அப்படியே அரசனோ குடிகளோ சில சந்தர்ப்பங்களில் இவர்களை வானளாவப் போற்றிப் புகழலாம். எல்லாம் ஒன்றுதான் இவர்களுக்கு. கொண்ட கருமம்தான் இவர்களுக்கு முக்கியம். அதுவோ சமுதாய க்ஷேமத்தையே குறிக் கோளாகக் கொண்டது. இத்தகையவர்களுடைய ஆலோசனையை அரசனோ குடிகளோ நாடினார்களென்பதிலும், இவர்களுடைய அபிப் பிராயத்திற்குப் பெருமதிப்பு வைத்தார்களென்பதிலும் ஆச்சரியமென்ன இருக்கிறது? முந்தின அத்தியாயத்தில், ஆலோசனை சபைக்கு வெளியே இருந்த சில மூதறிஞர்கள், அரசன், அவசியம் நேரிடுகிறபொழுது கலந்தாலோ சித்தானென்று சொன்னோமல்லவா, அந்த மூதறிஞர் கள்தான் இவர்கள். இந்த மூதறிஞர்கள் எத்தனையோ பேர் நமது நாட்டில் இருந்திருக் கிறார்கள். மகா அலெக்ஸாந்தர் படையெடுத்து வந்த காலத்தில்;, இவர் களில் பலரைச் சந்தித்துப் பேசியிருக்கிறான்; இவர்களுடைய அறிவுக் கூர்மையையும் மனத் திண்மையும் கண்டு துணுக்குற்றே போயிருக்கிறான். அவனுடைய படையெடுப்பின் விளைவாகத் தங்கள் தாய்நாடு எங்கே சுதந்திரத்தை யிழந்து அந்நிய ஆதிக்கத்திற்கு இரையாகிவிடப் போகிறதோ என்று இவர்களில் அநேகர் அஞ்சி, அவனுடைய படையெடுப்பைத் தகைந்து நிற்கும் படி ஜனங்களைத் தூண்டி விட்டிருக்கிறார்கள்; அவனுக்குத் தலை வணங்கிக் கொடுத்த அரசர்களை இழிவுபடுத்தியிருக்கிறார்கள். இதற்காகக் கோபங்கொண்ட அலெக்ஸாந்தர் இவர்களிற் சிலரைத் தூக்கிலிட்டிருக்கிறான். எதற்காக இந்தச் சம்பவத்தை இங்கே எடுத்துச் சொல்லுகிறோ மென்றால், முனிவர்களென்றும் தவசிகளென்றும் பழைய நூல்கள் வாயிலாக நமக்கு அறிமுகமாகிற அனைவரும், ஜன சந்தடிக்கப் பாலிருந்து கொண்டு கண்மூடி வாழ்க்கையை நடத்தி வந்தார் களென்று நம்மில் சிலர் கருதிக் கொண்டிருப்பார்களானால் அது தவறு என்ற நிரூபிப்பதற்குத்தான். இவர்கள், இந்த முனிவர்களும் தவசிகளும், ஜனங்களுடைய அற வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும் ஒழுங்குபடி அமைந்திருக்க வேண்டுமென்பதில் சிரத்தை காட்டியவர்கள்; நாடு நலம் பெற எப்பொழுதும் விழிப்பு டனிருந்தவர்கள்; அவசியம் ஏற்படுகிற பொழுது நாட்டுக்கு நாடு சென்று மன்னருக்கும் மன்பதைக்கும் நல்வழி காட்டியவர்கள். இத்தகையவர்களே. இதிகாச புராணங்களில் அடிக்கடி நாம் சந்திக்கின்ற நாரத முனிவரும், சிவாஜி காலத்து ராமதாஸ சுவாமி களும். இப்படிப்பட்டவர்களில் ஒருசிலர்தான் அரசர்களது அவைக் களங்களில் புரோகிதர்களாக வீற்றிருந்தார்கள். இது நிற்க; ஜனங்களுடைய அபிப்பிராயத்தை வெளிப்படுத்திய பிரதிநிதி சபைகள் இரண்டாக இருந்தன. ஜனங்களுடைய இச்சையென்றும், ஜனங்களுடைய அபிப்பிராயமென்றும், ஜனங்களுடைய காரிய மென்றும் இப்படியெல்லாம் முந்தின அத்தியாயங்களில் சொன்ன வற்றை இந்தப் பிரதிநிதி சபைகளின் இச்சையென்றும், அபிப்பிராய மென்றும், காரியமென்றும் முறையே கொள்ளவேண்டும். ஜனங் களெல்லோரும் ஒன்றுகூட முடியாத நிலையில்தான் இந்தப் பிரதிநிதிசபைகள் தோனிறின வென்பதை நாம் சொல்லத் தேவை யில்லை. ருக் வேதத் திலும், அதர்வ வேதத்திலும் இவற்றைப் பற்றிய பிரதாபங்கள் அநேக இடங்களில் வருகின்றமையால் இவை வேத காலத்திலேயே மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தனவென்று நாம் நிச்சயமாகக் கூறலாம். இரண்டு சபைகளில், ஒன்று ஸமிதி என்று அழைக்கப் பட்டது; மற்றொன்று சபையென்றே அழைக்கப்பட்டது. இரண்டும், பிரம்ம தேவனின் பெண் குழந்தைகளென்றும் நித்தியமாயுள்ளவையென்றும் வருணிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் இவை தனித்தனி தாபனங் களென்பது இரண்டும் ஒரே காலத்தில் ஏற்பட்டனவென்பதும் பெறப்படும். இவ்விரண்டின் அமைப்பு, அந்தது முதலியவை பற்றியும், ஒன்றோடொன்று என்ன மாதிரியான தொடர்பு கொண்டிருந்தன வென்பது பற்றியும் ஏதும் நிச்சயமாகக் கூறு முடியவில்லை. ஆனால், இரண்டைப் பற்றியும் ஆங்காங்குப் பிரதாபிக்கப் பட்டிருக்கிற சில விஷயங்களி லிருந்து, ஸமிதி என்பதை ஜனசபை யென்றும், சபை என்பதை மேன்மக்கள் சபையென்றும், அதாவது தற்கால பாஷையில் முன்னதைக் கீழ்ச்சபை (அஸெம்ப்ளி) என்றும், பின்னதை மேல்சபை (கவுன்சில்) என்றும் சொல்லலாம் போலிருக்கிறது.1 பொதுவாக வேத காலத்தில், இரண்டு சபைகள், ஸன சமுதாயத்தின் திரண்ட அபிப்பிராயத்தைப் பிரதிபலித்க்கொண்டு, அரசனுடையவும் ஜனங்களுடையவும் நன் மதிப்பைப் பெற்று விளங்கினவென்றும் நாம் நிச்சயப் படுத்திக்கொண்டு மேலே செல்வோம். முதலில் ஸமிதி, எல்லா வகையிலும் மேம்பட்ட ஒருவனை அரசனாகத் தெரிந்தெடுத்து இதுவே; அவன் கொடுங்கோலனாகி விடும் பட்சத்தில், அவனை அரியணையிலிருந்து அப்புறப்படுத்தி விட்டதும் இதுவே; அவன், பின்னர், தன் செயலுக்கு வருத்தந் தெரிவித்துக் கொண்டு பழையபடி அரச பதவியில் அமர விரும்பு வானாகில் அப்படியே அவனை அமர்வித்ததும் இதுவே. எனவே ஒருவன் அரச பதவியில் நிலைத் திருப்பது இந்த ஸமிதியின் நல்லெண்ணத்தைப் பொறுத்திருந்தது. அவ்வளவு அதிகாரம் படைத்திருந்தது இது. இதனைப் பிரதியோர் அரசனும் உணர்ந் திருந்தான்; இதற்குத் தக்கவாறு நடந்தும் கொண்டான். ஸமிதி கூடுகிறபோதெல்லாம் பிரசன்னமாயிருக்க வேண்டியது அரசனது கடமை. இதில் அவன் தவறக்கூடாது. தவறுவது உண்மையான அரசனுக்கு லட்சணமாகாது. தவறும் அரசனை ஸமிதியினரும் லட்சியஞ் செய்யமாட்டார்கள். அரசன், பிரசன்னமாயிருந்ததோடு கூட்டதிற்குத் தலைமையும் வகித்ததாகத் தெரிகிறதென்று கூறுவர் சிலர். இருக்க லாம். இதில் வியப்பேது மில்லை. அரசன், பிரசன்னமாயிருந்தானோ, தலைமை வகித்தானோ, ஸமிதியினரை நோக்கி, அவசியம் என்று தான் கருதுகிறபோது நல்லுரைகள் சில பகர்ந்தானென்பது நிச்சயம். ஸமிதியினர், எந்த ஒரு பிரச்னையைப் பற்றியும் ஏகமனதான முடிவுக்கு வரவேண்டு மென்பதில் அவன் ஆவலாயிருந்தான். இந்த ஆவலை வெளிப்படுத்து கின்ற முறையில், ஸமிதியினரை நோக்கிக் கூறுவான்: ஒரு மனதாகச் செல்லுங்கள்; ஒரு குரலுடன் பேசுங்கள். தெய்வங்கள், எப்படித் தங்களுக்கு அளிக்கப்படும் அவிர்ப்பாகங்களை ஒரு மனத்துடன் ஏற்றுக் கொள்கின்றனவோ அதுபோல நீங்களும் ஒருமனப்பட்டவ ராயிருங்கள். நீங்கள் கூறும் ஆலோசனைகள் ஒரே மாதிரியாயிருக் கட்டும். ஸமிதியில் ஒருமை உணர்ச்சி நிலவட்டும். ஒரே கொடியின் கீழ் ஒருவரோடொருவர் இணைந்து நில்லுங்கள். ஸமிதியினரும் பெரும்பாலும் ஏகமனதாகவே எல்லாப் பிரச்னைகளுக்கும் முடிவு கண்டனர். இப்படி முடிவு கண்ட வற்றின் மீதே நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள அரசாங்க அதிகாரிகள் உற்சாகங் காட்டினார்கள். ஏக மனதான முடிவுகு வருமுன்னர், ஸமிதியின் கூட்டங்களில் தீவிரமான வாதப் பிரதிவாதங்கள் நிகழும். வாதத்தின்போது ஒவ் வொருவரும் தங்கள் தங்கள் வாக்கு வன்மையைக் காட்ட முயல் வார்கள். தலைசிறந்த நாவலன் என்று பெயர் வாங்க வேண்டு மென்பதிலே ஒவ்வொருவருக்கும் ஆசை. தாங்கள் பேசுகிறபோது ஒவ்வொரு வருக்கும் ஆசை. தாங்கள் பேசுகிறபோது வேறெவரும் மறுத்துப் பேசக் கூடாதென்று ஒவ்வொருவரும் விரும்புவர். இதற்காகத் தெய்வங்களைப் பிரார்த்தித்துக் கொள்வார்கள். ஸமிதியானது சில சந்தர்ப்பங்களில் கலைக்கழகமாகவும் பணி யாற்றியதாகத் தெரிகிறது. பலதுறைப் புலவர்கள் இங்கு வந்து, தங்கள் புலமையைக் காட்டி, இதன் பாராட்டுதலைப் பெற விழைந் தார்கள்; பெற்றவர்களுக்கு நாட்டில் பெருமதிப்பு இருந்தது. இதனால், புலவர்களைப் பரிசோதித்து, தக்கவர்களைப் பாராட்டுகின்ற தகுதி வாய்ந்தவர்களே இந்த ஸமிதி அங்கத்தினர்களாயிருந்தார்களென்று நாம் நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். இங்ஙனம் இது பண்டித சபையாகப் பணியாற்றியபோது, பரிஷத் என்று அழைக்கப்பட்டதாகக் கூறுவர் அறிஞர். இனி, சபைக்குச் சென்று காண்போம். சான்றோர் சிலரை மட்டும் கொண்டது இது. பெரியோர்களில்லாதது சபையன்று என்கிறது மகாபாரதம். இதன் கூட்டங்களை ஒழுங்காக நடத்திக் கொடுக்க, இதன் அங்கத்தினர்களிலேயே ஒருவன் தலைவனா யிருந்தான். ஏகதேசமாக அரசன், தன் பரிவாரங்களுடன் இதன் கூட்டங்களுக்கு விஜயஞ் செய்வான். சபையின் அங்கத்தினனாயிருப்பது பெரிய கௌரவமாகக் கருதப்பட்டது. இதில் அங்கம் வகித்துப் புகழடையக் கூடிய மக்கள் தங்களுக்குப் பிறக்கவேண்டுமென்பது சில பெற்றோர்களின் பிரார்த் தனையாக இருந்தது. அப்படியே, தான் சொல்வது ஒரு முகமாக அங்கீகரிக்கப்படி வேண்டுமென்பதும், தனக்கு மிஞ்சி யாரும் பேசிவிடக்கூடாதென்பதும் ஒவ்வோர் அங்கத்தினருடைய பிரார்த்தனை யாகவும் இருந்தது. சபையின் கூட்டங்களின் ஒழுங்கு தவறி நடந்து கொள்ளுதல் பாவமென்று எல்லா அங்கத்தினர்களும் நன்கு உணர்ந் திருந்தனர். ஸமிதியைப் போலவே சபையிலும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஏகமனதான முடிவே காணப்பட்டது. ஏகதேசமாக விஜயஞ் செய்த அரசனும், சபையின் தலைவனும் இதையே வற்புறுத்தினார்கள். அங்கத்தினர்களும் பொறுப்பு உணர்ந்து நடந்து கொண்டார்கள். அரசியல் விவகாரங்களைக் கவனித்ததோடு, சபையானது, ராஜ்யத்தின் நீதி பரிபாலனத்திலும் பங்கெடுத்துக் கொண்டது. ஸமிதியானது, புதிய அரசனைத் தெரிந்தெடுப்பது முதலிய சில காரியங்களைச் செய்ததாக மேலே கூறினோமே, இவைகளைத் தவிர, இதில் குறிப்பாக என்னென்ன பிரச்னைகள் ஆராயப்பட்டன. இதற்கு என்னென்ன அதிகாரங்கள் இருந்தன; அப்படியே சபையில் குறிப்பாக என்னென்ன பிரச்னைகள் ஆராயப்பட்டன; இதற்கு என்னென்ன அதிகாரங்கள் இருந்தன என்பவைகளைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ராஜ்யத்திற்குப் பொதுவாயுள்ள பல பிரச்னைகளும் இந்த இரண்டு சபைகளில் ஆராயப்பட்டனவென்று சொல்லலாம். அதாவது, ஏற்கனவே சொன்னபடி, புதிய அரசனை நியமித்தல், இளவரச நியமனத்தை ஊர்ஜிதம் செய்தல், மந்திரிகளின் நியமனத்தை அங்கீகரித்தல் முதலியனவும், ஓர் அரசன் இறந்து போனதற்குப் பின்னரும், புதிய அரசன் ஏற்படுவதற்கு முன்னரும் உள்ள இடைக்காலம் சிறிது நீடிக்கும் போலிருந்தால் அப்பொழுது ஒரு சிறு குழுவினை நியமித்து ஆட்சி நடத்தச் செய்தல், புதிய வரி விதிக்கப்படுவதற்குச் சம்மதங் கொடுத்தல், ராஜ்யத்திற்கு எதிர் பாராத ஆபத்துக்கள் ஏற்படுமானால் அவைகளைச் சமாளிக்க தக்க ஆலோசனைகள் சொல்லுதல் இப்படிப் பல பிரச்னைகள் இந்த இரண்டு சபைகளிலும் ஆராயப்பெற்று முடிவு காணப்பெற்றன வென்று சொல்லலாம். ஸமிதியும் சபையும் வேத காலத்திற்குப் பிறகு மறைந்து போயின. வேறு பெயரால் இரண்டு சபைகள் தோன்றின. ஒன்று, பௌர சபை; மற்றொன்று, ஜானபத சபை. இனவாரியாக ராஜ்யங்கள் பிரிந்திருந்த போது, ஸமிதியும் சபையும் நிலவியிருந்தன வென்றும், பின்னர், பல இனங்கள் சேர்ந்த பிரதேசவாரியான ராஜ்யங்கள் ஏற்பட்டதும், பௌர சபையும் ஜானபத சபையும் தோன்றினவென்றும் அறிஞர் கூறுவர். இனவாரி ராஜ்யங்களில், இனத்தின் நலன், இனத்தின் பாதுகாப்பு இவைதான் முக்கியத்துவம் பெற்றன. பிரதேசவாரி ராஜ்யங்களில், பல இனங்களின் பொது நலனும், இந்த இனங்கள் வதிந்த நிலப்பகுதியின் பாதுகாப்பும் முக்கியத்துவம் பெற்றன. இந்த நிலைமைக்குத் தகுந்தாற் போல் பிரதிநிதி சபைகளும் ஏற்பட்டன போலும். பிரதேசவாரியாக அமைந்த ராஜ்யம் ஒவ்வொன்றும், நாடு என்றும் நகரம் என்றும் இரண்டு கூறுகளைக் கொண்டதா யிருந்தது. நாடு என்பதுதான் ஜனபதம்; ராஷ்டிரம் என்றும் தேசம் என்றும் கூறுவர். நகரம் என்பதுதான் புரம். துர்க்கம் என்றும் இதனை அழைப்பர். நகரம் அல்லது புரம் என்று சொன்னால், அது ராஜ்யத்தின் தலைநகரையே - ராஜதானியையே - குறிக்கும். நகரத்தான், நாகரிகன் என்ற சொற்கள், தலைநகரத்தில் வசிக்கின்றவனையே சுட்டிக்காட்டின. இந்தத் தலைநகரத்தைத் தவிர்த்த மற்றப் பகுதியெல்லாம் நாடு; ஜனபதம். இந்த ஜனபதம் அநேக கிராமங்களைக் கொண்டது. தலைநகர மல்லாதமற்ற ஊர்கள், சிறியனவோ பெரியனவோ யாவற்றையும் கிராமங்க ளென்றே அழைத்தனர். அதாவது, நகரம், கிராமங்கள் என்ற இரண்டு பிரிவுகள் மட்டுமே ஆரம்ப தசையில் கொள்ளப்பட்டன. கிராமங்கள் பலவற்றின் தொகுப்புதான் ஜனபதம். இதில் வசிக் கின்றவன் ஜானபதன்; கிராமவாசி என்று அர்த்தம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நகர மாந்தர்களே பௌரர்கள்; நாட்டு மக்களே ஜானபதர்கள். இரு சாராரையும் சேர்த்துச் சொல்கிற போது, பௌரஜானபதர்கள். பௌரர்களின் பிரதிநிதி சபை பௌரசபை; ஜானபதர்களின் பிரதிநிதி சபை ஜானபத சபை. இதனை இன்னும் விளக்கிக் கூறவேண்டுமானால், தலை நகரத்திற்கென்று தனிச்சபையொன்றிருந்தது; இதுவே பௌரசபை. தலைநகரமல்லாத மற்றப் பகுதிகளுகென்று தனிச்சபை யொன்றிருந்தது; இதுவே ஜானபத சபை. நாடு பூராவுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ அவ்வளவு முக்கியத்துவம் தலைநகரத்திற்குக் கொடுக்கப்பட்டதென்பது இதனால் விளங்கு கிறதல்லவா? 1 ஒரு ராஜ்யம் சிறிதாயிருந்த வரையில், ஒரு தலைநகர மென்றும் பல கிராமங்களென்றும் பிரித்துக் கொண்டு ஆட்சி நடத்துவது சுலபமாயிருந்தது; அனுஷ்டான சாத்தியமானதாகவும் இருந்தது. ஆனால் ராஜ்யங்கள் இதே அளவில் நிற்கவில்லை; வரவர விரிந்தன; சிறிய ராஜ்யங்கள் பெரிய ராஜ்யங்களில் ஒடுங்கின; ஏகாதிபத்தியங் களும் தோன்றின. சந்திரகுப்தன், அசேகன், ஹர்ஷன் முதலியவர்கள் ஏகாதிபத்தியத்தையே கட்டியாண்டார்களென்பது சரித்திரப் பிரசித்தம். இந்த நிலையில், ராஜ்யத்தை, நிருவாக சௌகரியத்தின் பொருட்டு, சில பகுதிகளாக, அதாவது தற்காலத்து மாகாணங் களாகப் பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மாகாணத் திற்கொரு தலைநகர மாயிற்று. மௌரிய ஏகாதிபத்தியம் நான்கு மாகாணங்களாகப் பிரிக்கப் பட்டு, ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு தலைவன், அதாவது தற்கால கவர்னர் இருந்தானென்றும், இவன் பெரும்பாலும் அரசிளங் குமாரர்களில் ஒருவனாகவே இருந்தா னென்றும், ஏற்கனவே நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம்.1 இந்த மாகாணத் தலைநகரமும் புரம் என்றே அழைக்கப்பட்டது. இதில் வசிக்கிறவர்களும் பௌரர்களானாரகள். இங்கு அமைந்த சபையும் பௌரசபையாயிற்று. ராஜ்யத்தின் தலைநகரம், மாகாணங்களின் தலைநகரங்கள் இவைபோக, காலக்கிரமத்தில் வேறு பல நகரங்களும் ஆங்காங்குத் தோன்றின. இந்த நகரங்கள் பெரும்பாலும் ராஜ்யத்தின் பாது காப்புக்குரிய இடங்களாகவும் வியாபார வசதிகளுள்ள இடங் களாகவும் இருந்தன. இந்த ஒவ்வொரு நகரத்தையும் நிருவாகம் செய்ய ஒவ்வொரு சபை இருந்தது. அப்படியே ஒவ்வொரு கிராமத்தையும் நிருவாகம் செய்ய ஒவ்வொரு சபை இருந்தது. பொதுவாகவே நமது நாட்டில், நிருவாக அதிகாரங்கள் பலவும் மத்திய அரசாங்கத்திடம் தேங்கிவிடாமல் நகரங்களிலும் கிராமங் களிலும் பரவலாயிருந்தது. தல சுய ஆட்சி என்று இப்பொழுது சொல் கிறோமே அது பரிபூரணமாக அனுஷ்டானத்தில் இருந்து வந்தது. இது நிற்க. நகர சபைகளோ, கிராம சபைகளோ, தங்கள் தங்கள் எல்லைக் குட்பட்ட பிரதேசத்தின் நிருவாகத்தைத் திறம்பட நடத்தி வருவதோடு திருப்தியடைந்தன; ராஜ்யத்தின் பொது விவகாரங்களில் தலையிட வில்லை. மாகாணத் தலைநகரங்களில் அமைந்த பௌரசபைகள் மட்டும் சில சந்தர்ப்பங்களில், தங்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை மத்திய அரசாங்கம் அமுலுக்குக் கொண்டுவர முற்படுமானால் அதை எதிர்த்து நின்றன. மத்திய அரசாங்கமும் இவற்றின் விருப்பத்திற்கு விரோதமாக நடக்கத் துணியவில்லை. இப்படிச் சில்லரையாகத்தான் இவை ராஜ்யப் பொது விவகரங்களில் தலையிட்டனவே தவிர மேற்கொண்டு செல்லவில்லை. ராஜ்யத்தின் தலைநகரத்தைத் தவிர மற்ற எல்லா நகரங்களுக்கும் எல்லாக் கிராமங்களுக்கும் பொதுவான பிரச்னைகள் பலவும் ஜானபத சபையின் கவனத்திற்கு வந்தன. இப்படி ராஜ்யம் பூராவுக்கும் இது பொதுசபையாக இருந்த போதிலும் இதன் கூட்டங்கள் ராஜ்யத்தின தலைநகரத்திலேயே நடைபெற்றன. இது கூடுவதற்கென்று தனியாக ஒரு மண்டபம் இருந்தது. இந்த மன்டபத்திலேயே இதன் காரியாலயமும் அமைந்திருந்தது. ராஜ்யத்தின் தலைநகரத்தில் பௌரசபை இருந்ததென்று சொன்னோமல்லவா, இதனைத் தற்கால பாஷையில் நகர பரிபாலன சபை அல்லது கார்ப்போரேஷன் என்று சொல்லலாம். ஆனால் இது நகர பரிபாலன சபையாக மட்டும் இருக்கவில்லை; ராஜ்ய மனைத்திற்கும் பொதுவாயுள்ள பிரச்னைகளில் முக்கிமானவை பற்றி ஒரு முடிவு காணவேண்டிய அவசியம் நேரிடுகிறபொழுது, ராஜ்யத்தின் பிரதிநிதி சபை யாகவும் இருந்து பணியாற்றியது. அப்பொழுது இது தனித்தியங்க வில்லை; ஜானபத சபையோடு சேர்ந்தே இயங்கியது. சேர்ந்து இயங்குகிற பொழுது ஒரு சபை யாகவே, பௌர ஜானபத சபையென்ற பெயரால் அழைக்கப் பட்டது. அப்படியே, ஒரு சபையாகவே, ராமாயணம், மகாபாரதம், அர்த்தசாதிரம் முதலிய எல்லா நூல்களிலும் பிரதாபிக்கப் பட்டு வந்திருக்கிறது. அது மட்டுமல்ல; சில சந்தர்ப்பங்களில் ஒரு சபையின் பெயராலேயே இரண்டு சபைகளும் சேர்த்து அழைக்கப் பட்டிருக்கின்றன. இங்கே நாம் இரண்டு சபைகளையும் சேர்த்து, சுருக்கமாக ஜனசபையென்று அழைத்திருக்கிறோம். முந்தின அத்தி யாயங்களில் ஜனசபையென்று சொன்ன இடங்களிலெல்லாம் இந்த இரண்டு சபைகளையும் சேர்த்தே குறிப்பிட்டதாகக் கொள்ள வேண்டும். அப்படியே பௌரசபை என்கிற இடங்களில், ராஜ்யத்தின் தலைநகரத்துப் பௌரசபை யென்றே கொள்ள வேண்டும். பௌரசபை, ஜானபதசபை இவ்விரண்டின் அங்கத்தினர் எத்தனை பேர், இவர்கள் ஜனங்களால் நேரடியாகத் தெரிந்தெடுக்கப் பட்டவர்களா முதலிய விவரங்கள் குறைவாகவே கிடைக்கின்றன; நிர்ணயமாகத் தெரியவில்லை. கிராம சபைகள், நகர சபைகள் இவற்றின் தலைவர்கள், ஜானபதசபை அங்கத்தினர்களில் பலரா யிருந்தார்களென்றும், அப்படியே ராஜ்யத்தின் தலைநகரத்திலுள்ள வியாபார சங்கங்களின் தலைவர்கள், செல்வாக்கு மிகுந்தவர்கள் முதலியோர் பௌர சபையின் அங்கத்தினர் களில் பலராயிருந்தார் களென்றும் நாம் ஊகிக்கலாம். எப்படியும், இரண்டு சபை அங்கத் தினர்களும், அறிவு, அனுபவம், செல்வம், செல்வாக்கு இவற்றில் மேலானவர்களாயிருந்தார்களென்பது நிச்சயம். இங்கே ஒரு சிறிய விஷயம், வியாபார வசதிகள் அதிகமாக வுள்ள இடங்களே பெரும்பாலும் நகரங்களாக அமைந்தனவென்று மேலே சொன்னோமல்லவா, இதனால் இந்த நகரங்களில் வியா பாரிகளின் எண்ணிக்கையும் இவர்களுடைய செல்வாக்கும் சிறிது கூடுதலாகவே இருந்தன. இவர்கள், தங்களுடைய நலனைப் பாதுகாத்துக் கொள்வதற் கென்று தனிச்சங்கங்கள் அமைத்துக் கொண்டிருந்தார்கள். சாதாரண நகரங்களிலேயே இப்படியிருந்த தென்றால், ராஜ்யத்தின் தலைநகரத்தில் சொல்லவேண்டுவதில்லை. வியாபாரிகளின் சங்கங்கள் பல இங்கிருந்தன. இந்தச் சங்கங்கள், மற்ற நகரங்களிலுள்ள சங்கங்களுக்குத் தலைமை தாபனங்களாயிருந்தனவென்று நாம் கொள்ளலாம். இந்தத் தலைமை தாபனங்களின் தலைவர்களே, பௌர சபையில் பெரும் பாலோரான அங்கத் தினர்களாயிருந்தார்கள். இதனால் இவர்களுடைய இஷ்டத்திற்கே அநேகமாக பௌர சபையின் விவகாரங்கள் நடைபெற்றன. பௌர சபையில் இவர்கள் பெற்றிருந்த செல்வாக்கானது, ஜனசபையில் பிரதிபலிக்காமலிருக்குமா? ஆம்; பிரதிபலிக்கவே செய்தது. அரசனும் இவர்களுடைய சொல்லுக்கு அதிக மதிப்பு வைத்தி ருந்தான். ராஜ்யத்தில் பொருட்செல்வம் குன்றாதிருக்க இவர் களுடைய ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியமாகயிருந்தன. பணம் படைத்தவர்களைப் பானத்தினாலும் ஆடைகளினாலும் போஜனத் தினாலும் (அரசன்) மரியாதை செய்வதுடன் என்னுடன் கூடி பிரஜைகளிடம் அன்புள்ளவர்களாயிருங்கள் என்று சொல்லவும் வேண்டும். பணமுள்ளவர்கள், ராஜ்யத்திற்குப் பெரிய அங்கம் என்பது பிரசித்தம் என்று மகாபாரதம் கூறுகிறது. புதிதாகத் தெரிந் தெடுக்கப்பட்ட அரசனுக்கு நடைபெறுகிற ராஜ்யா பிஷேகத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் உரிமை இவர்களுக்கு அளிக்கப் பட்டிருந்தது. வெற்றி வீரனாகத் சீதையுடன் அயோத்தி மாநகர் திரும்பிய ராமனுக்கு நடைபெற்ற மகுடாபிஷேகத்தில் வர்த்தகத் தலைவர்களும் பங்கெடுத்துக் கொண்டார்களென்றும் ராமாயணம் கூறுவது இங்குக் கவனிக்கற்பாலது. இந்த வர்த்தகர்கள், சமுதா யத்தின் முக்கியமான நான்கு பிரிவினருள் மூன்றாவது பிரிவினர் என்பதை நாம் விளக்கிச் சொல்லத் தேவையில்லை யல்லவா? பௌர சபையிலாகட்டும், ஜானபத சபையிலாகட்டும், உள் சபையென்றும் வெளிச்சபையென்றும் இரண்டு பிரிவுகள் இருந்த தாகத் தெரிகிறது. உள்சபையென்பது நிருவாக சபையாகவும், வெளிச் சபையென்பது பொதுச்சபையாகவும் முறையே இருக்கலாம். இரண்டு நிருவாக சபைகளிலும் எத்தனை பேர் அங்கத்தினர்களாயிருந்தார் களென்பது தெரியவில்லை. ஆனால் பொதுச் சபை அங்கத்தினர்களைக் காட்டிலும் இவர்கள் குறைவான பேராகவே இருந்திருக்க வேண்டும். சந்திரகுப்தன் ஆட்சியின் போது பாடலி புத்திரத்தில் நிலவி வந்த பௌர சபையில் நிருவாக சபை அங்கத்தினர்களாக முப்பது பேர் இருந்தார் களென்றும், இவர்கள் ஐந்து ஐந்து பேர் விகிதம் ஆறு குழுவினராகப் பிரிந்து கொண்டு நிருவாகத்தை நடத்தி வந்தனரென்றும் தெரிகின்றன. பௌர சபையின் எல்லா அங்கத்தினர்களும் தலை நகரத்தில் நிரந்தர வாசஞ் செய்கிறவர்களாயிருந்தார்களென்பதை நாம் சொல்லத் தேவை யில்லை. ஜானபத சபையின் எல்லா அங்கத்தினர்களும் அப்படியிருக்க முடியாதல்லவா? இது, பொதுச் சபை யாகத் தனித்துக் கூடுகிறபொழுதோ அல்லது பௌர சபையுடன் சேர்ந்து கூடுகிறபொழுதோ தான் வெளியூர்களிலிருந்து அங்கத்தினர்கள் வருவார்கள்; வந்து, அலுவலை முடித்துக்கொண்டு திரும்பிப் போய்விடுவார்கள். ஆனால் நிருவாக சபையின் அங்கத் தினர்கள் மட்டும், தலைநகரத்திலேயே வசித்து வந்தார்கள். வெளியூர்களிலுள்ளவர்கள், நிருவாக சபையின் உறுப்பின ராகி விட்டால், உறுப்பினராயிருக்கும் வரை தலைநகரத்திலேயே வசிக்க வேண்டுமென்ற நிபந்தனை இருந்தது போலும். எப்படியோ ஜனப் பிரதிநிதிகளடங்கிய இரண்டு குழுவினர், ராஜ்யத்தின் தலைநகரத்தில் நிரந்தரமாக இருந்து வந்தனரென்றும், இவர்கள் ஜனங்களின் உரிமை களையும் நலன்களையும் கண்ணுங்கருத்துமாகப் பாது காத்து வந்தார்களெனறும், இவர்கள் அரசனைத் தினந்தோறும் கண்டு பேசி வந்தார்களென்றும் நிச்சயமாகக் கூறலாம். அரசன், அன்றாடம் கவனிக்கவேண்டியதுள்ள திட்டதில், காலை 7. 30 மணி முதல் 9 மணி வரை காணவந்திருக்கும் நாட்டு மக்கள், நகர மாந்தர் முதலியோருக்கு எளிதில் காட்சியளித்து, அவர்களுடைய குறை நிறைகளைக் கேட்டு, தக்கன செய்ய வேண்டுமென்று கூறப் பட்டிருக்கிறதல்லவா,1 இதில், நாட்டு மக்கள், நகர மாந்தர் என்பது மேலே சொன்ன இரண்டு நிருவாகசபை அங்கத்தினர்களையே குறிக்கும். நாட்டு மக்களிலோ, நகர மாந்தரிலோ, கண்டவருக்கும் அரசன் பேட்டி கொடுத்துப் பேசினானென்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. அப்படி அரசன் செய்ய இசை வானாகில், அவனுடைய பதவிக்கு இழுக்கு நேரிடுவதன்றி, நடைமுறையில் சாத்தியமாகவும் இராதல்லவா? இது நிற்க. பௌரசபை, நகர பரிபாலன சபையாக - கார்ப்போரேஷனாக - எப்படிப் பணியாற்றி வந்ததென்று பார்ப்போம். இதற்குத் தலைவன் ஒருவனிருந் தான். இவதான் சிரேஷ்டி; தற்காலத்து மேயர். இவன் பெரும்பாலும் ஒரு வியாபாரியாகவோ, மிகுதியான பணப்புழக்கமுடையவனாகவோ இருந்தான். இவன் தலைமை யிலேயே உள்சபை என்று சொன்னோமே, அதாவது நிருவாக சபை, அஃது அடிக்கடி கூடி நகர நிருவாகத்தைத் திறம்பட நடத்தி வந்தது. நிருவாக சபை அங்கத்தினர்கள், பௌர முக்கியர்கள் அல்லது நகர விருத்ர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.1 சந்திரகுப்தன் காலத்தில் பாடலிபுத்திரத்தில் பௌர முக்கியர் களாக முப்பதின்மர் இருந்தனரென்றும், இவர்கள் ஐந்து ஐந்து பேர் கொண்ட ஆறு குழுவினராகப் பிரிந்துகொண்டு நிருவாகஞ் செய்து வந்தார்களென்றும் மேலே கூறினோமல்லவா, இதனை, கிரேக்க தூதனாக வந்திருந்த மெகதனீஸும் வேறொரு கிரேக்க ஆசிரியனும் ஊர்ஜிதம் செய்திருக்கிறார்கள். இவர்கள் கூற்றுப்படி, முதற்குழுவினர், தொழில் சம்பந்தமான எல்லா விஷயங்களையும் கவனித்து வந்தனர். இரண்டாவது குழுவினர், வியாபார நிமித்தமாகவோ, வேறு அலுவலாகவோ தலைநகரத்திற்கு வரும் அந்நியர்களை, இடவசதி முதலியன ஏற்படுத்திக் கொடுத்து உபசரித்தல், அவர்கள் தங்கியிருக்கிற வரை அவர்களுக்கு எவ்வித இடையூறும் நேராவண்ணம் பாதுகாத்தல், அவர்களில் எவரேனும் திடீரென்று மரணமடைந்துவிட்டால், அவர் விட்டுப் போன சொத்து பற்றுக்களை உரியவருக்கு அனுப்பி வைத்தல், இப்படி அந்நியர் சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கவனித்து வந்தனர். மூன்றாவது குழுவினர், ஜனன மரணக் கணக்குப் பதிவைக் கவனித்து வந்தனர். நான்காவது குழுவினர், வியாபாரம், மற்றத் தொழில்கள் முதலியன ஒழுங்காக நடைபெறுமாறு கவனித்து வந்தனர்,. ஐந்தாவது குழுவினர். செய்பொருள்களின் விற்பனையைக் கவனித்து வந்தனர். ஆறாவது குழுவினர், விற்பனை வரி வசூலைக் கவனித்து வந்தனர். இப்படி ஒவ்வொரு குழுவினருக்கும் ஒவ்வொரு விதமான பொறுப்பு இருந்து வந்ததோடு, அனைவருக்கும் சேர்ந்தாற்போல் சில பொறுப்புக்கள் இருந்தன. இந்தப் பொறுப்புக்கள், சுருக்கமாக, நகரத்தின் நலனையே நோக்கமாகக் கொண்டன. உதாரணமாக, பொதுஜனங்களின் உபயோகத் திற்குரியனவாயிருக்கின்ற கட்டடங் கள், சத்திரங்கள், குளங்கள் முதலியன பழுதுறாமல் பாதுகாத்தல், விலைவாசிகள் அதிகமாக ஏறி விடாமலும் அதிகமாக இறங்கிவிடாமலும் ஒரு நிதானத்திலிருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல், கடைவீதிகளென்ன, படகு துறைகளென்ன, கோயில் களென்ன, இவை எப்பொழுதும் செம்மையாயிருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல், இப்படிப் பலவும் இவர்கள் பொறுப்பிலிருந்தன. இவர்கள் கீழ் பல உத்தியாகதர்க்ள் இருந்தார்கள். பௌர சபைக்கென்று தனியாகக் காரியாலயம் இருந்தது. ஜானபத சபை, தனித்தியங்கியபோது எப்படிப் பணியாற்றிய தென்பதைப் பற்றி விவரமாக ஏதும் சொல்லமுடியவில்லை. ஏற்கனவே சொன்னபடி, தலை நகரத்தைத் தவிர்ர்த்த ராஜ்யத்தின் மற்றப் பகுதிகளனைத்திற்கும் பொதுவான பிரச்னைகளை இது கவனித்து வந்ததென்று மட்டுமே தெரிகிறது. உண்மையில், முக்கியமான பிரச்னைகள், ராஜ்யம் முழுவதையும் பாதிக்கின்ற பிரச்னைகள், பௌர ஜானபதசபை முன்னரே, அதாவது ஜனசபை முன்னரே வந்தன. இதுவே ஒவ் வொன்றையும் நன்கு பரிசீலனை செய்து ஒரு முடிவு கூறியது; அரசனுக்காகட்டும் அரசாங்கத்திற்காகட்டும், இன்னதை இன்னபடி செய்யலாமென்று வழி காட்டியது. என்னென்ன பிரச்னைகள் இதன் ஆலோசனைக்கு வந்தன வென்று நோக்குவாம். சுருக்கமாக, ஸமிதிக்கும் சபைக்கும் சேர்ந்தாற்போல் என்னென்ன பொறுப்புக்கள் இருந்தனவோ ஏறக்குறை அந்தப் பொறுப்புக் களே இந்தச் சபைக்கும் இருந்தன வென்று சொல்லலாம். ஆனால் இப்படிச் சொல்லிவிடுவது அந்தச் சபைக்குச் செய்த மரியாதையாகாது. எனவே, கூறியது கூறல் என்னும் குற்றத்திற்குட்பட்டேனும் இதன் கவனத்திற்கு வந்த விஷயங்களைக் கவனிப்போம். ஆள்கின்ற அரசன், இளவரசனாக ஒருவனை நியமிக்கலாம். ஆனால் அந்த நியமனம், இந்த ஜனசபையின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னரே ஊர்ஜிதமடையும். இதை இளவரசன் என்ற அத்தியாயத் திலும் குறிப்பிட்டிருக்கிறோம்.1 அங்கே ஜன சம்மதத்தைப் பெற வேண்டுமென்று சொன்னது, இந்தச் சபையின் சம்மதத்தைப் பெற வேண்டுமென்ற அர்த்தத்திலேயேயாகும். ஜனங்களுடைய திரண்ட அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியது இந்தச் சபைதானே? தசரதன் இந்தச் சபையைக் கூட்டி, ராமனை இளவரசனாக அங்கீகரிக்க வேண்டுமென்று கேட்பதை, ராமாயணம் அயோத்தியா காண்டன் வெகு அழகாக வருணிக்கிறது. ராமனை இளவரசனாகச் சிபார்சு செய்கிறான் தசரதன். சபையினர் சம்மதங் கொடுக்கிறார்கள். இப்படிச் சம்மதம் பெற்றதில் திருப்தியடையாமல், தசரதன், ஆச்சரியத்தை வெளிப்படுத்திக்கொண்டு, இப்படிச் சம்மதங்கொடுத்து விட்டீர்களே, எனக்கு ஒரு சந்தேகம் உண்டாகிறது. நான் இத்தனை வருஷங்களாக அறநெறி வழுவாமல் ஆண்டு வந்திருக்கிறேனே; அப்படியிருக்க என் மகன் ராமன் யுவராஜனாக இருக்க வேண்டு மென்று நீங்கள் விரும்புவதற்கு என்ன காரணம்? அதாவது என்னுடையஆட்சியில் உங்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக் கிறதா? என்ற பொருள் தொனிக்க, சபையினரைத் திருப்பிக்கேட்கிறான். சபையினர், அப்படியில்லையென்று சொல்லாமற்சொல்லி, ராமனிடம் தாங்கள் கண்ட சிறப்பியல்புகளை வரிசைக்கிரமமாக வருணித்தும், தங்களுடைய நன்மதிப்புக்கு அவன் உரியவனா யிருக்கிறானென்று கூறியும், அவன் இளவரசனாவதில் தங்கள் முழு விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். அப்படியானால் உங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறேன் என்று சொல்லி தசரதன், யுவராஜ பட்டா பிஷேகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு தன் மந்திரி பிரதானிகளுக்கு உத்தரவிடுகிறான். இங்ஙனம் இந்த ஜன சபைக்கு, இளவரசனாக ஒருவனை அங்கீகரிக் கிற அதிகாரம் இருந்ததுமட்டுமல்லாமல், அவனுடைய பட்டா பிஷேகத்தில் பங்கு கொள்ளும் உரிமையும் இருந்தது. அதாவது, இந்தச் சபையின் முக்கியதர்கள், யுவராஜ பட்டா பிஷேகத்தில் பிரசன்னமா யிருந்து நடத்தி வைத்தார்கள். இவர் களில்லாமல் மேற்படி பட்டாபிஷேகம் நடைபெறாது. இளவரசனாக ஒருவனை அங்கீரிக்கிற அதிகாரம் இருந்தது போல், நிராகரிக்கிற அதிகாரமும் இந்தச் சபைக்கு இருந்தது. இதற்கு உதாரணமாக, மகாபாரதம் உத்தியோக பர்வத்தில் கூறப் பட்டுள்ள பிரதீபன் மகன் வாதாபியின் வரலாற்றை வாசகர்களுக்கு ஞாபகப் படுத்துகிறோம்.1 ஆள்கின்ற அரசன், ராஜ்யத்தின் க்ஷேமத்தில் அக்கரை கொள்ளாமல், தன்மனம் போனபடி நடப்பானாகில், அவனால் ராஜ்யம் விரைவில் சீர்குலைந்து போகுமென்று தெரிந்தால், அவனை அரச பீடத்திலிருந்து அப்புறப்படுத்தி விடுகிற அதிகாரம் இந்தச் சபைக்கு இருந்தது. அது மட்டுமல்ல; அந்தப் பீடத்தில் வேறொருவனை அமர்த்தும் அதிகாரமும் இதற்கு இருந்தது. இன்னும், ஓர் அரசன் இறந்து மற்றோர் அரசன் வருவதற்கிடையில் ஆளும் பொறுப்பை ஏற்று நடத்த ஒரு பிரதிநிதிக் குழுவை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்படுமானால், அப்படி நியமிக்கிற அதிகாரமும் இந்தச் சபையிடமே இருந்தது. இந்தச் சபையின் முக்கியதர்கள், யுவராஜ பட்டாபிஷேகத்தில் பங்கு கொள்ளும் உரிமை பெற்றிருந்தது போல், அரசனாக ஒருவனை ஊர்ஜிதப் படுத்துகின்ற மகுடாபிஷேகத்திலும் பங்குகொள்ளும் உரிமை பெற்றிருந்தார்கள். இவர்களில்லாமல் மகுடாபிஷேகம் பூர்த்தி யடையாது. பிரதம மந்திரியையோ மற்ற மந்திரிகளையோ அரசன் நியமித் தானென்றாலும், அவர்கள், தங்கள் பதவியில் நீடித்திருப்பது இந்தச் சபையின் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் பொறுத்திருந்தது. அரசன் மந்திரிகளை நியமிப்பதற்கு முன்னர், அவர்களைப் பலவித பரிசோதனைகளுக்குட்படுத்திப் பார்க்க வேண்டுமென்று சொல்லப் பட்டதல்லவா2 அவற்றுள், அவர்கள் இந்த ஜனசபையின் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் பெற்றவர்களாயிருக்கிறார் களாவென்று பார்ப்பதென்றாகும். புதிதாக ஏதேனும் ஒரு திட்டத்தை, அரசனோ மந்திரிகளோ அமுலுக்குக் கொண்டுவர விரும்புவார்களானால் அதை முதலில் ஜன சபை முன்னர்கிளத்தி இதன் அங்கீகாரத்தைப் பெறுதல் அவசியமாகும். வழக்கமான வரியைத் தவிர, சில சந்தர்ப்பங்களில் விசேஷவரி விதிக்க வேண்டிய அவசியம் நேரிடக் கூடுமல்லவா? அப்பொழுது அரசன் இந்த ஜனசபையைக் கூட்டி, விசேஷ வரி விதிக்க வேண்டியதற்கான காரணங்களை எடுத்துச் சொல்லி இதன் அனுமதியைக் கோர வேண்டும்; அனுமதி கிடைத்த பிறகே விசேஷ வரியை வசூலிக்க ஏற்பாடு சொய்ய வேண்டும். இங்ஙனம் அனுமதி கோருகிறபோது அரசன் மிகவும் பணிவாக நடந்துகொள்ள வேண்டுமென்றும் இங்கிதமான பாஷையில் பேச வேண்டுமென்றும் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில், அரசன், ஜனங்களிடம் எப்படி வரி வாங்க வேண்டு மென்பதைப் பற்றி மகாபாரதத்தில் காணப்படும் சில உதாரணங்களை எடுத்துக்காட்டுவது பொருத்தமாயிருக்குமென்று கருதுகிறோம். கொஞ்சம் கொஞ்சமாக வரியை அதிகப்படுத்திக் கொடுக்கச் செய்ய வேண்டும். முதலில் கொஞ்சமும், பிறகு அதிகமும், அதனின் பிறகு அதிகமுமாக முறையே வரியைப் பெருகச் செய்யவேண்டும். அடக்க வேண்டிய காளைகளை அடக்குகிறவன் போல, கிரமமாகச் சுமையை அதிகப்படுத்திக் கொண்டு போக வேண்டும் .......... மாலை கட்டுகிறவன், மரத்திற்கு உபத்திரமில்லாமல் எப்படிப் புஷ்பங்களைக் கொய்வானோ அப்படி ஜனங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் வரிவாங்கவேண்டும் ......... அட்டையைப் போல் எளிய உபாயத்தாலேயே ராஜ்யத்தைப் பானஞ் செய்யவேண்டும். பெண் புலியானது, தன் குட்டியை எடுப்பது போல், ஜனங்களைப் பீடிக்காமல் வரி கொள்ளவேண்டும். இப்படிப் பல உதாரணங்கள் மூலம் அரசன் நடந்து கொள்ளவேண்டிய உபாயம் சொல்லப்பட்டிருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் வெளிப்பகைவர்களால் ராஜ்யத்திற்கு ஆபத்து ஏற்படக்கூடியதாயிருக்கும். அப்பொழுது அரசன், ஜனசபையைக் கூட்டி, ராஜ்யத்திற்கு ஏற்படவிருக்கிற ஆபத்தை எடுத்துச் சொல்லி, அதைத் தடுப்பதற்கான செலவு வகைகளுக்குப் பணம் தேவையென்று கேட்க வேண்டும். எப்படிக் கேட்கவேண்டுமென்று மகாபாரதம் பின் வருமாறு சொல்லிக் கொடுத்திருக்கிறது : - இதோ துன்பம் உண்டாயிருக்கிறது; பிறர் படையின் பயம் பெரிதா யிருக்கிறது; பகைவர்கள் நம்மை நாசஞ் செய்ய முயலுகிறார்கள் கொடுமையான ஆபத்திலிருந்து உங்களைக் காப்பாற்ற வேண்டியது எனது கடமை. இதற்காக உங்களிடமிருந்து பொருள் வேண்டுகிறேன். ஆபத்து நீங்கினவுடன் நீங்கள் தந்த பொருளையெல்லாம் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் இப்படிச் சொல்வதோடு மட்டுமல்லாமல், பகைவர்கள், பலாத்காரமாக இங்கிருந்து பொருள்களை எடுத்துப் போவார் களானால் திருப்பிக் கொடுக்க மாட்டார்கள். உங்கள் பெண்டு பிள்ளை களும் மற்ற யாவும் அழிந்துபோகும் என்று பயத்தையும் காண்பிக்க வேண்டும். இன்னும் ராஜ்யத்திற்கும் உங்களுக்கும் கஷ்டமின்றிச் சக்திக்குத் தகுந்தபடி பெற்றுக் கொள்கிறேன். ஆபத்துக் காலங்களில்தான் நீங்கள் ஒன்று சேர்ந்து பொறுக்கவேண்டும். ஆபத்துள்ள சமயத்தில் நீங்கள் பொருளில் அதிக ஆசை வைக்கக்கூடாது என்று இனியதும் எளியதும் மரியாதையுள்ளதுமான சொற்களைச் சொல்லவேண்டும். இங்ஙனம் அரசன், ஆபத்து நேர்ந்த காலங்களில் விசேஷவரி விதித்து வசூலித்துக் கொள்ள ஜனசபையின் அனுமதி கோருவான், ஜனசபையும் அனுமதி கொடுக்கும். ஆனால் இதற்குப் பிரதியாக, ஆபத்து நீங்கிசுபிட்சம் ஏற்பட்ட பிறகு, ஜனங்களுக்குச் சில சலுகைகள் காட்ட வேண்டுமென்று அரசனைக் கேட்கும். இந்தச் சலுகைகளுக்கு அனுக்ரஹங்கள் என்று பெயர். தீர்வைவஜா, பாசன வசதிகளைச் சீர்படுத்திக் கொடுத்தல், இப்படிச் சில உருவங்களாகத் தோன்றி ஜனங்களுக்கு அனுகூலம் செய்து கொடுத்தன இந்த அனுக்ரஹங்கள். ராஜ்யத்தில் கொலை, கொள்ளை முதலியன அதிகப்பட்டு அதனால் ஜனங்களுக்குச் சகிக்க முடியாத இம்சை ஏற்படுமானால், இதற்குக் காரணம், அரசாங்க யந்திரம் சரியாக இயங்காததுதான்; அரசன் ஆளுங் கடமையைச் சரிவரச் செய்யாததுதான் என்று ஜன சபையானது முடிவுகட்டி, மேற்படி கொலை, கொள்ளை முதலி யவைகளினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யுமாறு அரசனிடம் ஒரு கோரிக்கையைக் கிளத்தும். இதற்கு அவன் இணங்கியே யாகவேண்டும். தவறிவிடும் அரசனை நல்வழியில் திருப்ப இதனை ஓர் ஆயுதமாக உபயோகித்தது ஜனசபை. ஆனால் இப்படி உப யோகித்தது ஏகதேசமாகத்தான். அரசன், காப்பாற்றுந் தொழிலைச் செய்வதற்குக் கூலியாக, ஜனங்கள் அவனுக்கு வரி செலுத்து கிறார்கள். அந்தத் தொழிலை அவன் எந்த அளவுக்குச் சரியாகச் செய்யவில்லையோ அந்த அளவுக்கு அவனுடைய கூலியி லிருந்து கழித்துக் கொள்ள வேண்டியதுதானே? இந்தக் கண் கொண்டு மேற்படி கோரிக்கையைப் பார்த்தோமானால் இதன் நியாயம் புலனாகும். உடலூனமுடையவர்கள், உழைக்குஞ் சக்தியை இழந்தவர்கள், வயோதிகமடைந்த ஏழைகள், நோய்வாய்ப் பட்டவர்கள், வறுமை யால் பீடிக்கப்பட்டவர்கள், இவர்களைக் காப்பாற்றி வரும் வேலையை அரசாங்கம் சரியாகச் செய்து வருகிறதாவென்று ஜன சபையானது அடிக்கடி கண்காணித்து வந்தது, இந்தக் கண் காணிப்பு வேலையில் இது சிறிது அயர்ந்துவிடுமானால், ராஜ்யத்திற்கு ஆபத்து நிச்சயம்; அரசனுடைய பதவியும் ஆட்டங் கொடுத்துவிடும். ஜனசபையின் கூட்டங்களுக்கு அரசனே பெரும்பாலும் தலைமை வகித்தான்; அங்கத்தினர்களைக் கண்ணியமாக நடத்தினான். இப்பொழுது சட்டசபை அங்கத்தினர்கள், கனம் என்ற கௌரவப் பெயர் கொடுத்து அழைக்கப்படுகிறார்களல்லவா, அது போலவே நமது நாட்டுப் பூர்விக ஜனசபை அங்கத்தினர்கள், ஆர்ய என்ற கௌரவப் பெயர்கொடுத்து அழைக்கப்பட்டார்கள். சபையின் தலைவன், அதாவது அரசன், அங்கத்தினர்களை இப்படியே அழைத்தான். சுருக்கமாக, தற்காலத்துச் சட்ட சபை களில் சபைத்தலைவருக்கும் அங்கத்தினர்களுக்கு மிடையே என்னென்ன விதமான மரியாதைகளும் சம்பிரதாயங்களும் இருக் கின்றனவோ இதே மாதிரியன மரியாதைகளும் சம்பிரதாயங்களும் நமது நாட்டு ஜன சபையிலும் நிலவிவந்தனவென்று சொல்லலாம். சபை கூடுவதற்கு முன்னர் அங்கத்தினர்களெல்லோரும் வந்து தங்கள் தங்கள் ஆசனத்திலமர்ந்திருந்த போதிலும், அரசன், சபைத் தலைவன் என்ற ஹோதாவில் சபைக்குள் பிரவேசித்ததும், எல்லா அங்கத்தினர்களும் எழுந்து நிற்பார்கள். அரசன், தன் ஆசனத்தமர்ந்த பிறகே எல்லோரும் அமர்வார்கள். தலைவன் சுலபமாகப் பார்க்கக் கூடிய வண்ணம் அங்கத்தினர்களின் ஆசனங்கள் அமைக்கப் பட்டிருந்தன. இதனால் தலைவனைப் பார்த்துப் பேசுவதற்குச் சௌகரியமாயிருந்தது; தலைவனைப் பார்த்தே பேசவேண்டுமென்ற நியதியும் இருந்தது. அரசிளங்குமாரர்களோ, கௌரவம் வாய்ந்த இதரர்களோ, சபையின் நடவடிக்கைகளைக் கவனிக்க விரும்பினால், விசேஷப் பார்வையாளராக அனுமதிக்கப் பட்டார்கள். சபைக் கூட்டங்களுக்கு வெளியூர்களிலிருந்து வரும் அங்கத் தினர்களுக்கு அரசாங்கச் செலவில் இடவசதி, சாப்பாட்டு வசதி முதலியன செய்துகொடுக்கப்பட்டன. அங்கத்தினர்கள் சபைக் கூட்டங்களுக்கு வருகிற போது பிரத்தியேகமான உடையணிந்து வந்தார்கள். ஜனசபையின் நடவடிக்கைகளில், நிருவாக மந்திரிகள், ஆலோசக மந்திரிகள் ஆகிய இருபிரிவினரும் பூரண பங்கெடுத்துக் கொண்டார்கள். சில சமயங்களில் அரசனுக்கும் மந்திரி சபை யினருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு விடுதல் கூடும். அப் பொழுது அரசன், மந்திரி சபையை மீறி நடக்க முடியாது; அந்த அதிகாரம் அவனுக்கு இல்லை யென்று ஏற்கனவே சொல்லி யிருக்கிறோம்.1 இதற்குப் பதிலாக அவன், ஜனசபைக்கு விண்ணப் பித்துக் கொள்ளலாம்; தன் கருத்தை எடுத்துச் சொல்லி அதற்கு ஆதரவு தருமாறு கேட்கலாம். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில், மந்திரிகள் முதலாயினோர் சபையில் பிரசன்ன மாயிருந்து தங்கள் கருத்தை எடுத்துச் சொல்ல வேண்டியது அவசிய மில்லையா? இஃதில்லாவிட்டாலும், ஜனசபை கூடுகிறபோதெல்லாம், மந்திரிகள் முதலாயினோர் அரசாங்கச் சார்பில் ஆஜராயிருக்க வேண்டியது அவசியமாகவே கருதப்பட்டது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் ஒரு ராஜ்யத்தின் நன்மையோ தீமையோ, அந்த ராஜ்யத்து ஜன சபையின் திருப்தி அதிருப்தியைப் பொறுத்திருந்தது. அரசாங்க யந்திரத்தை ஒழுங்காக இயங்க வைப்பதும் அல்லது அதனை இயங்கவிடாமற் செய்வதும் இந்தச் சபையினால் சாத்தியமாயிருந்தது. எனவே அரசன், இந்தச் சபையின் நம்பிக்கைக்குரியவனாக நடந்து கொள்ள வேண்டு மென்று வற்புறுத்தப்பட்டிருப்பதில் என்ன ஆச்சரியமிருக்கிறது? பின்னுரை இப்பொழுது நமது நாட்டில் அரசாங்க நிருவாகத்தை யொட்டின பெயர்கள், பகுதிக்குப் பகுதி வேறுபட்டிருப்பதைப் பார்க்கிறோம். ஒரு பகுதியில், ஜில்லா அதிகாரியை கலெக்டர் என்கிறார்கள்; இன்னொரு பகுதியில் டெபுடி கமிஷனர் என்கிறார்கள். தாலுகா அதிகாரியை தாசீல்தார் என்கிறார்கள். ஒரு பிரதேசத்தில்; அமில்தார் என்கிறார்கள் இன்னொரு பிரதேசத்தில். இப்படி அநேக உதாரணங்களைக் கூறலாம். இதே பிரகாரம், சில பெயர்கள், காலத்திற்குக் காலம் மாறுபாடடைவதைக் காண் கிறோம். இந்தியா சட்ட சபை, முதலில் இம்பீரியல் லெஜிலேடிவ் கவுன்சில் எனறு அழைக்கப்பட்டது; பிறகு இம்பீரியல் லெஜி லேடிவ் அஸெம்ப்ளி என்று மாறியது; இப்பொழுது ஹவு ஆப் பீபில் ( ஜனசபை) என்று அழைக்கப்படுகிறது. இன்னும், புதிதாகச் சில தானங்களோ தாபனங்களோ தோற்றுவிக்கப்படுகின்றன; அவைகளுக்குப் புதிதாகப் பெயர்க் கொடுக்கவேண்டியிருக்கிறது. அல்லது இருக்கின்ற சில தானங் களையோ, தாபனங்களையோ, ஏதோ காரணத்திற்காக எடுத்துவிட வேண்டியிருக்கிறது. இவற்றோடு, இவற்றிற்கிடப்பட்டிருந்த பெயர்களும் வழக்கொழிந்து விடுகின்றன. முதலில், அதாவது இம்பீரியல் லெஜிலேவ் கவுன்சில் என்ற ஒரு சபை மட்டும் இருந்தபொழுது கவுன்சில் ஆப் டேட் என்ற ராஜ்ய சபை (மேல் சபை) இல்லை; பின்னர் அது தோன்றியது. நமது தாய்நாடு சுதந்திரம் பெறுவதற்கு முந்தி. அயல் நாடுகளில் இந்திய தானீகர்கள் இல்லை; இப்பொழுது இருக்கிறார்கள். முன்பு மாகாணம் என்று இருந்தது; இப்பொழுது ராஜ்யம் என்று அழைக்கிறோம். முந்தி கவர்னர் - ஜெனரல் என்ற பெயர் எல்லோருக்கும் தெரிந்த ஒரு பெயரா யிருந்தது. இப்பொழுது அது வழக்கொழிந்து கிடக்கிறது. இப்படி அநேக உதாரணங்கள் சொல்லிக் கொண்டு போகலாம். இவைகளுக்கெல்லாம் என்ன காரணம் கூறுவது? கால தேசவர்த்தமானங்களை யொட்டி இந்த வேறுபாடுகள் இருக்கின்றன. மாறுபாடுகள் நிகழ்கின்றன என்று தான் கூறவேண்டும். முற்காலத்திலும் நமது நாட்டில் இதே மாதிரி வேற்றுமைகள் இருந்திருக்கின்றன; மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றை இந்த நூலில் ஆங்காங்கு லேசாகக் கண்டோம்; அரசியலைப் பற்றியுள்ள நமது புராதன நூல்கள் பலவற்றுள்ளும் நன்கு காணலாம். அரசாங்க உத்தியோகங்களின் பெயர்களோ, உத்தி யோகதர்களின் பெயர்களோ ஒரு நூலில் கூறப்பட்டிருப்பது போல் இன்னொரு நூலில் கூறப்பட்டிராது; வகிக்கின்ற பொறுப்பு ஒன்றாயிருந்தாலும் வழங்கப் படுகின்ற பெயர் வேறுவேறாயிருக்கும்; அல்லது வழங்குப்படுகின்ற பெயர் ஒன்றா யிருக்கும்; வகிக்கின்ற பொறுப்பு வேறுவேறாயிருக்கும். இவைகளைக் கண்டு வாசகர்கள் திகைப்புற வேண்டியதில்லை. ராஜ்யங்கள் பலவா யிருந்தன; ராஜ்ய அமைப்புக்களும் பலவாயிருந்தன. இவையும் அடிக்கடி மாற்ற மடைந்து கொண்டு வந்தன. இந்த நிலையில்அரசியல் சம்பந்த மான சொல்வழக்குகள் வேற்றுமை கொண்டிருந்ததிலும், மாற்றமடைந்து வந்ததிலும் என்ன ஆச்சரியமிருக்கிறது? அந்தந்தக் காலத்தெழுந்த நூல்களில் அந்தந்தக் காலத்துச் சொல் வழக்குகள் பிரதிபலித்துக் காட்டின. இந்த வேற்றுமைகளும் மாற்றங்களும் தவிர, ஒரு சொல்லுக்குப் பல பொருள்களும், அப்படியே ஒரு பொருளுக்குப் பல சொற்களும் முறையே கொள்ளப்பட்டதுமுண்டு. இன்னும், ஒரு சொல்லுக்கு ஒரு காலத்தில் கொள்ளப்பட்ட பொருள், பிறிதொரு காலத்தில் விபரீதமாக மாறுபாடடைவதுமுண்டு. உதாரணமாக, அசோகன் சாஸனங்களில், தேவானாம்பிரியன் என்ற ஒரு சொற்றொடர் வருகிறது. தேவர்களுக்குப் பிரியமானவன் என்ற அர்த்தத்திலேயே இந்தச் சொற்றொடர் வழங்கப் பட்டு வந்தது. இப்பொழுது இதற்கு மூடன் என்று அர்த்தம் கொள்ளப் படுகிறது. இங்ஙனம் சொற்கள், கால வேறுபாட்டினால் பொருள் மாறு பாடடைவதை எம் மொழியிலும் காணலாம். இவைகளைப் பற்றி மொழி வல்லுநர்கள் நன்கு ஆராய்ந்திருக்கிறார்கள். இவைகளுக் கெல்லாம் காரணம் மேலே சொன்ன பிரகாரம், காலதேச வர்த்தமானமென்றே சொல்லவேண்டும். மந்திரிகளில் இரு பிரிவினர் இருந்தனரென்றும், ஒரு பிரிவினர் நிருவாகத்தை நடத்தி வந்தார்களென்றும், இன்னொரு பிரிவினர் நிருவாகம் நன்கு நடைபெறுவதற்கு ஆலோசனை சொல்லி வந்தார் களென்றும், இரு பிரிவினரும் சேர்ந்தாற்போல் அமாத்தியர் என்று பொதுவாக அழைக்கப்பட்டார்களென்றும் ஒன்பதாவது அத்தியா யத்தில் கூறினோம்.1 இவ்விரு பிரிவினருக்கும் வழங்கப்பட்ட பெயர்கள் எல்லா நூல்களிலும் ஒரே மாதிரியா யிருக்கவில்லை. நிருவாக மந்திரிகளை, சுக்கிர நீதி, பஞ்ச தந்திரம் முதலிய சில நூல்கள் பிரகிருகிள்2 என்றும், மனுநீதி முதலிய சில நூல்கள் சசிவர் என்றும், ராமாயணம் முதலிய சில நூல்கள் அமாத்தியர் என்றும் முறையே கூறுகின்றன. புத்த மதம் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்திலும் இடங்களிலும், மந்திரிகள், மகாமாத்திரர்கள்1 என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இங்ஙனமே ஆலோசக மந்திரிகளுக்கும் வேறு வேறு பெயர்கள் வழங்கப் பட்டதாகத் தெரிகிறது. மந்திரிகள், சசிவர், அமாத்தியர் முதலியன, நிருவாக, மந்திரி களனைவரையும் குறிப்பதான பொதுப் பெயர்களாக வழங்கப் பட்ட போதிலும், சில இடங்களில், குறிப்பிட்ட ஓர் இலாகாவையோ, சில இலாகாக்களையோ நிருவாகஞ் செய்யும் ஒரு மந்திரியை மட்டும் குறிப்பதாக வழங்கப்பட்டிருக்கின்றன. மந்திரி: பிரதம மந்திரிக்கு மட்டுமே இந்தப் பெயர் வழங்கப் பட்டதாக அர்த்த சாதிரத்திலிருந்து அறிகிறோம். ஆனால் சுக்கிர நீதியோ, உள்நாட்டிலாகா மந்திரியென்று இப் பொழுது யாரைச் சொல்கிறோமோ அவனை மட்டுமே மந்திரி யென்ற பெயரால் அழைக்கிறது. சசிவன்: யுத்த மந்திரிக்குத்தான் இந்தப் பெயரென்று சுக்கிர நீதி தெரிவிக்கிறது. அமாத்தியன்: மனுநீதியானது, பிரதம மந்திரியை மட்டுமே அமாத்தியன் என்று அழைக்கிறது. திவ்யாவதானம் என்னும் புத்தமத கிரந்தத்தில், அசோகனுடைய பிரதம மந்திரியான ராதாகுப்தன், அமாத்தியன் என்று அழைக்கப்பட்டிருக்கிறான். சுக்கிர நீதியோ, வரி, விவசாய இலாகாக்களை நிருவாகம் செய்யும் மந்திரியை அமாத்தியன் என்று அழைத்திருக்கிறது.2 சிவாஜி காலத்தில் கூட, இந்த வரி, விவசாய இலாகா மந்திரி, அமாத்தியன் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டிருக் கிறான். பிரதம மந்திரி: இவன் பலவிதமாக அழைக்கப் பட்டிருக்கிறான். அர்த்த சாதிரம் இவனை, ஏற்கனவே சொன்ன பிரகாரம் மந்திரியென்று மட்டுமே அழைத்திருக்கிறது. புத்தமதக் கிரந்தங்களில் சில, அக்ர மகா மாத்திரன் என்று கூறுகின்றன. அக்ர என்றால் தலையாய என்று அர்த்தம். குப்தர் ஆட்சியில், மகாதண்ட நாயகன் என்ற பெயலராலேயே பிரதம மந்திரி அழைக்கப் பட்டிருக்கிறான். பிரதம படைத் தலைமைப் பொறுப்பும் இவனிடம் இருந்தது போலும். அமாத்தியர் என்பது, அரசாங்க நிருவாகத்தில் ஈடுபட்டுள்ள ( உயர்தர ) உத்தியோகதர்கள் அனைவரையும் சேர்த்துக் குறிக்கும் பொதுச் சொல்லாகச் சில நூல்களில் வழங்கப்பட்டிருக்கிறது. அதிகார வர்ககம், அதிகார வர்க்கத்தினர் என்ற சொற்றொடர்களை இப்பொழுது எந்தப் பொருளில் உபயோகித்து வருகிறோமோ அதே பொருளில் அமாத்திய கணம், அல்லது ஓரிடத்தில் வழங்கப்பட்டி ருக்கலாம். தற்கால ராஜ்ய கவர்னர்கள், முற்காலத்தில், ராஷ்டிரிகர் என்றும் ராஜூகர் என்றும் பலவிதமாக அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். அசோகனுடைய சாஸனங்கள், ராஜூகர் என்ற வார்த்தையையே உயோகித்திருக்கின்றன. லட்சக்கணக்கான ஜனங்களின் மேற் பார்வையாளர்களாக இவர்கள் - இந்த ராஜூகர்கள் - இருக்கிறார் களென்றும், இவர்களுக்கு, ரட்சிக்கவும் சிட்சிக்கவும் அதிகாரம் அளிக்கப் பட்டிருக்கிறதென்றும் மேற்படி சாஸனங்களில் கூறப்பட்டிருக் கின்றன. ஆனால் ஒரு சில அறிஞர், ராஜூகர் என்பது, நிருவாக மந்திரிகளையே குறிக்குமென்பர். நிருவாக மந்திரிகளிலே, மந்திரி சபையைச் சேர்ந்தவர் களென்றும், சேராதவர்களென்றும் இருவகையினர் இருந்ததாகவும், இவர்கள் சேர்ந்தாற்போல் தீர்த்தர்கள் என்று அழைக்கப்பட்ட தாகவும், இவர்கள் பதினேட்டு பேராக இருந்ததாகவும் ஒன்பதாவது அத்தியாயத்தில் கூறினோமல்லவா. 1 இவர்கள் பதினெட்டு பேரே யென்பதை, ராமாயணம், கௌடிலீயம், பாரஹபத்தியம் முதலிய நூல்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றன. இவர்கள் யார் யாரென்பதை கௌடிலீயத்தின் மூலமாகவே தெரிந்துகொள்வோம். 1. மந்திரி - பிரதம மந்திரி. 2. புரோகிதன் - அரசனது பிரதம ஆலோசகனென்றும் இவனைச் சொல்லலாம். 3. சேனாபதி - யுத்த மந்திரி; சமாதான காலத்தில், தற்காப்பு மந்திரி என்று இவன் அழைக்கப்பட்டிருக்கலாம் 4. யுவராஜன் - இளவரசன். 5. தௌவாரிகன் - அரசனைக் காண வருகிறவர்களை அனுமதிக்கிறவன்; அல்லது அரண்மனைக் காவல் தலைவன். 6. அந்தர்வம்சிகன் - அந்தப்புரத் தலைவன். 7. பிரசாதிரி - பிரதேசத் தலைவர்கள் பலருக்கும் தலைவன். சிறைச்சாலை இலாகா மந்திரியென்று சிலரும், படை வீடுகளின் தலைவனென்று சிலரும் கூறுவர். 8. சமாஹர்த்ரி - வரி மந்திரி. 9. சந்நிதாத்ரி - நிதி மந்திரி . 10. பிரதேஷ்ட்ரி - ராஜ சாஸனங்களை வெளியிடும் அதிகாரி; தற்கால பாஷையில் விளம்பர மந்திரியென்று இவனைக் கூறலாம். 11. நாயகன் - பிரதம சேனாதிபதி. 12. பௌரன் - தலைநகரின் தலைவன்; தற்கால பாஷையில் மேயர். 13. வியாவஹாரிகன் - பிரதம நீதிபதி. 14. கார்மாந்திகன் - தொழில் மந்திரி. 15. மந்திரி பரிஷத் அத்தியட்சன் - மந்திர (ஆலோசனை) சபைத் தலைவன். 16. தண்டபாலன் - ராணுவத் தேவைகளைக் கவனிக்கிற அதிகாரி. 17. துர்க்கபாலன் - கோட்டை கொத்தளங்களைப் பாது காக்கிற அதிகாரி. 18. அந்தபாலன் - ராஜ்யத்தின் எல்லைப் புறங்களைப் பாது காக்கும் அதிகாரி. இந்தப் பதினெண்மரையும், பெயர் மாற்றியும் வரிசை மாற்றியும் சில நூல்கள் கூறியிருக்கின்றன. மகாபாரதம் சாந்திபர்வத்தின் பழைய உரையொன்று பின் வருமாறு கூறியிருக்கிறது : 1. மந்திரி. 2. புரோகிதன். 3. யுவராஜன். 4. சேனாதிபதி. 5. துவாரபாலகன். 6. அந்தப்புர அதிகாரி. 7. சிறைச்சாலை அதிகாரி. 8. திரவியத்தை வாங்கி வைப்பவன். 9. திரவியத்தைச் செலவழிப்பவன். 10. ஆக்ஞையை நடத்துபவன். 11. நகர அதிகாரி. 12. காரியங்களை விதிப்பவன் 13. தர்மாதிகாரி. 14. சபாத்தியட்சன். 15. தண்டபாலன். 16. துர்க்கபாலன். 17. ராஷ்ட்ராந்த பாலகன் என்னும் எல்லைக் காவலாளி. 18. அடவிபாலகன் என்னும் காட்டதிகாரி. இந்தப் பதினெண்மரில் சிலர் அரண்மனை உத்தி யோகதர்கள். இதனால், அரண்மனை உத்தியோகதர்களும் அரசாங்கஉத்தியோகதர் களாகக் கருதப்பட்டு வந்தார்களென்பது பெறப்படுகிறது. இங்கிலாந்து முதலிய சில நாடுகளில், ஆரம்ப தசையில் இப்படித்தான் இருந்திருக்கிறது. மற்றும் 146-ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ள மந்திரிகளின் பெயர்களுக்கும், இந்தப் பதினெண்மர் வரிசையிளல் கூறப்பட்டுள்ள மந்திரிகளின் பெயர்களுக்கும் வெகுவித்தியாசம் இருப்பதைக் காணலாம். சுமந்திரன் என்று அழைக்கப்பட்ட நிதி மந்திரி இங்கு சந்நிதாத்ரி என்று அழைக்கப்படுகிறான். அமாத்தியனாகிய வரி மந்திரி இங்கு சமாஹர்த்ரியாகிறான். இங்ஙனம் பெயர்கள் யாவும் மாறிக் காண் கின்றான். முந்திய எட்டு மந்திரிகளின் வரிசை சுக்கிர நீதியில் காணப்படுகிறது; ஆனால் அர்த்த சாதிரத்தில் காணப்பட வில்லை. பதினெட்டு தீர்த்தர்கள், அர்த்த சாதிரதில் கூறப் பட்டிருக் கின்றனர்; ஆனால் சுக்கிர நீதியில் கூறப்பட வில்லை. அர்த்த சாதிரத் திலும் சில பெயர்கள், வேறுவேறு பொருளில் கூறப்பட்டிருக்கின்றன. எனவே, எந்த ராஜ்யத்தில் எந்தக் காலத்தில், எந்தப் பெயர், எவ்வளவு காலம் வழக்கிலிருந்தது என்று துணிந்து கூறல் இயலாதென்பது தெளிவாகிறது. அர்த்த சாதிரம், காலத்தில் முற்பட்டதாதலால், அதில் காணப்படும் பெயர்களே முதலில் பெரும்பாலும் வழக்கிலிருந் திருக்க வேண்டுமென்றும், சுக்கிர நீதியில் காணப்படும் பெயர்கள் பிற்காலத்தில் வழங்கப்பட்டன வாயிருக்கலாமென்றும் சிலர் கூறக் கூடும். ஆனால் சுக்கிர நீதி, காலத்தில் பிற்பட்டதேயென்றாலும் கருத்தில் முற்பட்டதென்று ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.1 அர்த்த சாதிரமானது, பதினெட்டு தீர்த்தர்களையும், இவர்கள் பெறும் சம்பளத்தைக் கொண்டு மூன்று வகையினராகப் பிரித்திருக் கிறது. 1 முதல் 4 வரையுள்ளவர்கள் (மந்திரி, புரோகிதன், சேனாபதி, யுவராஜன் ஆகியோர் ) வருஷத்தில் 48 ஆயிரம் வெள்ளி பெறுகிறவர்; 5 முதல் 9 வரையுள்ளவர்கள் 24 ஆயிரம் வெள்ளி பெறுகிறவர்; 10 முதல் 18 வரையுள்ளவர்கள் 12 ஆயிரம் வெள்ளி பெறுகிறவர்; ஆக மூவகையினர். சுக்கிர நீதி, நிருவாக மந்திரிகளை, பிரகிருதிகள் என்று அழைத் திருக்கிறதல்லவா, இந்த ஒவ்வொரு பிரகிருதிக்கும் நிருவாகத்தில் உதவிசெய்ய இரண்ட அதிகாரிகள் இருக்கவேண்டியது அவசிய மென்று கூறி, இருவருக்கும் தரிசகர் என்று பெயர் சூட்டியிருக்கிறது. இவர்களைத் தற்கால பாஷையில், அரசாங்கக் காரியதரிசிகள் 1 என்று சொல்லலாம். அத்தியட்சன் என்ற ஒரு சொல் அதிகமான வழக்கில் இருந்து வந்திருக்கிறது. தலைவன் என்று இதற்கு அர்த்தம். எதற்குத் தலைவனோ அதனோடு சேர்த்து இந்த அத்தியட்சன் என்ற சொல் வழங்கப்பட்டது. உதாரணம்: சபாத்தியட்சன் - சபைத் தலைவன்; லவணாத்தியட்சன் உப்பளஇலாகாதலைவன்; சுராத்தியட்சன் - கலால் இலாகா தலைவன். இங்ஙனம் அர்த்த சாதிரம் அநேக இலாகா தலைவர்களைப் பற்றிக் கூறி யிருக்கிறது. எனவே, தற்கால இலாகா தலைவர்கள், 2 முற்காலத்தில் அத்தியட்சர்கள் என்று அழைக்கப்பட்டதாகக் கொள்ளலாம். ஆனால் ஒரு சிலர் இலாகா தலைவர்கள், தீர்த்தர்களென்று அழைக்கப்பட்டார் களென்றும், ஓர் இலாகாவின் ஒரு பகுதித் தலைவர்கள்தான்3 அத்தியட்சர்கள் என்று அழைக்கப்பட்டார்களென்றும் கூறுவர். பரிஷத், சபை என்ற சொற்கள், மந்திரி சபை, ஆலோசனை சபை, அறிஞர்களைக் கொண்ட சபை, நீதி மன்றம் என்று இப்படிப் பல பொருள்களில் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. ஸமிதி என்ற சொல்லும் இப்படித்தான். இங்ஙனம் ஒவ்வொரு சொல்லாகவும், ஒவ்வொரு நூலும் என்ன கூறியிருக்கிறதென்றும் விரிவாக ஆராய்ந்து கொண்டு போகலாம். ஆனால் இங்கு அது தேவையில்லை. பொதுவாக, அரசியல் சம்பந்த மான சொல் வழக்குகள் பல, காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம் மாறுதலடைந்து கொண்டும், பொருள் வேறுபாடு கொண்டும் வந்திருக் கின்றனவென்று சொல்லி இந்தப் பின்னுரையை முடித்துக் கொள்வோம். அனுபந்தம் வேதங்கள் - 4 1. ருக் வேதம் 2. யஜுர் வேதம் 3. சாம வேதம் 4. அதர்வ வேதம் வேதாங்கங்கள் - 6 1. சீக்ஷை 2. வியாகரணம் 3. சந்த 4. நிருக்தம் 5. ஜோதிஷம் 6. கல்பம் உபநிஷதங்கள் (முக்கியமானவை) - 10 1. ஈசாவாய உபநிஷதம் 2. கேன உபநிஷதம் 3. கட உபநிஷதம் 4. பிரச்ன உபநிஷதம் 5. முண்டக உபநிஷதம் 6. மாண்டூக்ய உபநிஷதம் 7. ஐதரேய உபநிஷதம் 8. தைத்திரீய உபநிஷதம் 9. பிருகதாரண்யக உபநிஷதம் 10. சுவேதா சுவதர உபநிஷதம் உபநிஷதங்களின் முக்கியமானவை 12 என்று சிலரும், 108 என்று சிலரும் கூறுவர். புராணங்கள் - 18 1. பிரம்ம புராணம் 2. பத்ம புராணம் 3. விஷ்ணு புராணம் 4. சிவ அல்லது வாயு புராணம் 5. பாகவத புராணம் 6. நாரத புராணம் 7. மார்க்கண்டேய புராணம் 8. அக்கினி புராணம் 9. பவிஷ்ய புராணம் 10. பிரம்மவைவர்த்த புராணம் 11. லிங்க புராணம் 12. வராக புராணம் 13. கந்த புராணம் 14. வாமன புராணம் 15. கூர்ம புராணம் 16. மத்ய புராணம் 17. கருட புராணம் 18. பிரம்மாண்ட புராணம் இவற்றை வரிசை மாற்றிச் செல்வதுமுண்டு. வித்தைகள் - 32 4 - வேதங்கள் 6 - வேதாங்கங்கள் 1 - ஆயுர் வேதம் 1 - வில்வித்தை 1 - கந்தர்வ வித்தை 1 - யந்திர வித்தை (மந்திர வித்தை யென்றும் தந்திர வித்தை யென்றும் மாற்றிக் கூறுவது முண்டு) 1 - மீமாம்சை 1 - தர்க்கம் 1 - சாங்கியம் 1 - வேதாந்தம் 1 - யோகம் 1 - இதிகாசம் 1 - புராணம் 1 - தர்ம சாதிரம் 1 - ஆத்ம வித்தை 1 - அர்த்த சாதிரம் 1 - காம சாதிரம் 1 - சிற்ப சாதிரம் 1 - அலங்கார சாதிரம் 1 - சங்கேத பாஷா ஞானம் 1 - சமய பாஷா ஞானம் ( அதாவது சமயத்திற்குத் ததக்கவாறு பேசும் ஆற்றல்) 1 - பிற மதங்களைப் பற்றிய ஞானம். 1 - லௌகிக ஞானம். (உலகியலறிவு) 32 வேதங்கள் 4, வேதாங்கங்கள் 6, மீமாம்சை 1, தர்க்கம் 1, தர்ம சாதிரம் 1, புராணம் 1, ஆக மொத்தம் வித்தைகள் 14 என்பர் சிலர். இவற்றோடு, ஆயுர் வேதம், தனுர் வேதம், காந்தர்வ வேதம், அர்த்த சாதிரம் ஆகிய நான்கும் சேர்ந்து மொத்தம் வித்தைகள் 18 என்று மகாபாரதம் கூறும். இப்படிப் பல விதமாக இந்த வித்தைகள் சொல்லப்படும். கலைகள் - 64 1. சங்கீதம். 2. வாத்தியங்களில் வாசித்தல். 3. ஆடல். 4. சித்திரம் வரைதல் 5. உருவங்கள் அமையுமாறு இலைகளைக் கத்தரித்தல், இவை களை நெற்றியில் அணிந்து கொள்ளும் வழக்கம் பண்டைக் காலத்தில் உண்டு. 6. அரிசி, புஷ்பம் இவைகளைப் பல உருவங்களாக அமைத்தல். இவை பூஜா காலங்களில் செய்யப் படுவதுண்டு. 7. பொது மண்டபம் அல்லது தனி வீடு இப்படிப் பட்டவை களைப் பூக்களினால் அலங்கரித்தல். 8. பற்கள், துணிகள், உடல் முதலியவைகளுக்குச் சாய மேற்றுதல். 9. தரையின் மீது வைரம் முதலிய நவரத்தினங்களை அழகுறப் பதிப்ப்பித்தல். வீட்டின் சில பகுதிகளை இங்ஙனம் அலங்கரிக்கும் வழக்கம் முற்காலத்தில் உண்டு. 10. படுக்கையை ஒழுங்குற அமைத்தல். 11. தண்ணீர் மீது அடித்து இசைக் கருவியினின்றெழும்பும் ஒலியை உண்டாக்குதல். தற்காலத்து ஜலதரங்கம் போலும். 12. நீரால் பிறரைத் தாக்குதல். 13. பலவித மூலிகைகளை ஒன்று கலத்தல்; அல்லது சத்துருக் களை அங்கவீனர்களாக்க வசிய மருந்துகள் தயாரித்தல். 14. பூமாலை தொடுத்தல். 15. சேகரம், ஆபீடம் என்பன இரண்டு தலையணிகள். இவை மாதிரி புஷ்பங்களைத் தொடுத்துத் தலையில் அணிவித்தல். 16. ஆடைகளாலும் ஆபரணங்களாலும் அலங்கரித்தல். 17. தந்தம், சங்கு இவைகளினால் காதணிகள் செய்யல். 18. வாசனைச் சாமான்கள் தயாரித்தல். 19. புதிய நகைகளைச் செய்தல்; அல்லது பழைய நகைளைப் புதுப்பித்தல்; அல்லது ஆபரணங்கள் அணியும் வகை தெரிதல். 20. ஜால வித்தை. 21. உடலுக்கு பலம் தரும் மருந்துகள் தயாரித்தல். 22. கைக்காரியங்களைச் சீக்கிரமாகவும் சுலபமாகவும் செய்து கொள்ளும் திறமை பெறுதல். 23. ஆகார வகைகள் தயாரித்தல். 24. மதுபான வகைகள் தயாரித்தல். 25. தையல் வேலை முதலியன. 26. பொம்மலாட்டம், 27. வீணை, தமருகம் முதலிய வாத்தியங்களில் வாசித்தல். 28. புதிர்கள் போடுதல்; விடுவித்தல். 29. அந்தாதி பாடக் கற்றுக் கொள்ளுதல். 30. கடின உச்சரிப்பு, கடின அர்த்தம் இவைகளையுடைய சுலோகங்களை நெருடாமல் சொல்லத் தெரிதல். 31. நூல்களை ஒழுங்காகப் படிக்கத் தெரிதல். 32. நாடகம், கதை இவைகளைப் பற்றிய அறிவு. 33. ஈற்றடி பெற்று மற்ற அடிகளைப் பாடுதல். 34. பிரம்பு முதலியவற்றால் பல வகை ஆசனங்கள், கட்டில்கள் முதலியன செய்யத் தெரிதல், 35. மரத்தினாலும் உலோக வகைகளினாலும் பல வகை உருவங்கள் தயாரித்தல் 36. தச்சு வேலை. 37. வீடுகள் அமைக்கும் முறை. 38. நவரத்தினங்களை மதிப்பிடல். 39. ரசவாதம் 40. நவரத்தினங்களுக்குச் சாய மேற்றல், சுரங்கங்களைக் கண்டு பிடித்தல் முதலியன. 41. மரங்கள், செடி கொடிகள் முதலியவைகளைப் பற்றிய அறிவு 42. ஆடு, கோழி முதலியவைகளைச் சண்டைக்குப் பயிற்றல். 43. கிளிகளுக்குப் பேசக் கற்றுக் கொடுத்தல்; அவை மூலமாகச் செய்திகள் அனுப்பித்தல். 44. தேகத்தினின்று அழுக்கெடுத்தல், தேகத்தைப் பிடித்தல், தலைமயிரை ஒழுங்கு படுத்தல். 45. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல். 46. சங்கேத பாஷையில் பேசுதல். 47. பிறநாட்டு மொழிகளைக் கற்றல். 48. சகுனம் பார்த்தலைப் பற்றிய அறிவு. 49. புஷ்பங்களினால் வண்டி, பல்லக்கு, யானை, குதிரை போன்ற உருவங்களைச் சமைத்தல். 50. யந்திரங்களைப் பற்றியஅறிவு. 51. ஞாபக சக்தியை அதிகரித்துக் கொள்ளல். 52. ஒருவன், ஒரு கவியை ஒப்புடிவக்க, அந்தக் கவியை முன் பின்னறியாத மற்றொருவன் அவன் கூடவே ஒப்பு வித்துக் கொண்டுவரல். 53. ஒரு கவியிலே, வாக்கியத்திலோ விடுபட்டுப் போன இடங் களைப் பூர்த்திசெய்தல். 54. செய்யுள் பாடக் கற்றுக் கொள்ளுதல். 55. அகராதி, சந்தம் முதலியவைகளைப் பற்றிய அறிவு. 56. காவியம், அலங்காரம், யாப்பு இவைகைப் பற்றிய அறிவு. 57. பிறரைப் போல் குரலையும் வேடத்தையும் மாற்றிக் கொள்ளல். 58. அங்கங்களைத் தெரிய வொட்டாமல் மறைக்கும் பயிற்சி. 59. சூதாட்டங்களைப் பற்றிய அறிவு. 60. சொக்கட்டானாட்டம். 61. குழந்தை விளையாட்டுகளைப் பற்றிய அறிவு. 621. நன்னடக்கைகளில் பயிற்சி. 63. சத்துருக்களின் மீது வெற்றி கொள்வதைப் பற்றிய அறிவு. 64. தேகப் பயிற்சியைப் பற்றிய அறிவு. இந்த அறுபத்து நான்கு கலைகளையும் வேறு வேறு விதமாகப் பிரித்துக் கூறுவது முண்டு. தேசங்கள் - 56 1. அங்கம் 2. வங்கம் 3.. கலிங்கம் 4. ஆந்திரம் 5. திராவிடம் 6. சோழம் 7. கேரளம் 8. கர்நாடகம் 9. சௌரஷ்டிரம் 10. கேகயம் 11. நிஷதம் 12. சூரசேனம் 13. சௌவீரம் 14. சிந்து 15. காந்தாரம் 16. குளிந்தம் 17. கிராதம் 18. விதேகம் 19. கச்சம் 20. ஒண்ட்ரம் 21. குந்தலம் 22. கொங்கணம் 23. மாளவம் 24. குகுரம் 25. உத்ஸவஸங்கேதம் 26. திரிகர்த்தம் 27. சால்வம் 28. புளிந்தம் 29. மூஷகம் 30. தங்கணம் 31. காஷ்மீரம் 32. காம்போஜம் 33. மல்லம் 34. பப்பரம் 35. கோசலம் 36. மகதம் 37. விதர்ப்பம் 38. அவந்தி 39. கூர்ஜரம் 40. சிங்களம் 41. ஆபீரம் 42. கன்யகம் 43. அபீசாரம் 44. சைவலம் 45. பாஹ்லீகம் 46. ஜாங்கலம் 47. கசகம் 48. அங்காரம் 49. போடம் 50. அபராந்தம் 51. பாஞ்சாலம் 52. மிலேச்சம் 53. யவனம் 54. சீனம் 55. ஹூணம் 56. பாரசீகம் இந்தத் தேசங்களைப் பல வகையாக மாற்றிச் சொல்வது முண்டு. இவை தவிர இன்னும் பல தேசங்கள் பாரதவர்ஷத்தைச் சேர்ந்தவை யென்று மகாபாரதம் பீஷ்ம பர்வம் விரிவாகக் கூறியிருக்கிறது. பொருட்குறிப்பு அக்பர் 17,34 அசமஞ்சன் 128 அசுவமேதம் 17 அசோகன் 102,124,134,173 அசோகன் சாஸனங்கள் 45,58 அண்ட்டிகோன 59 அண்ட்டியோக்க 58 அத்தியட்சன் 176 அந்தகர் 68 அந்தக-விருஷ்ணிகள் சங்கம் 70,71 அபுல்பேசில் 34 அம்பஷ்டர் 67 அம்பஷ்டர் ராஜ்யம் 76 அமாத்தியன் 52,55,56 அமாத்தியர் 138,174 அமாத்திய சபை 138,139 அமாத்திய சபை அங்கத்தினர் 139 அரசன்,அன்றாடக் கடமைகள் 119-124 அரசன் உரிமைகள் 125 அரசன் குடிகள் உறவு 115,116,117 அரசன் தேர்தல் 83 அரசன் பரம்பரை பாத்தியம் 83 அரசனுக்காகப் பிரார்த்தனை 94 அரசியல் சாதிரம் 8 அரிட்டாட்டல் 133 அரிஷ்டர் 67 அர்த்த சாதிரம் 16-32 அலெக்ஸாந்தர் I 59 அலெக்ஸாந்தர் மகா 3,4,5,67,93,156 அறுபத்து நான்கு கலைகள் 8,12,182-184 அவந்தி 66 அவுரங்கசீப் 17 அஸெம்ப்ளி 157 அஷ்டப் பிரதானம் 147 ஆதிபத்தியம் 62 ஆந்திரர் 67 ஆபீரர் 67 ஆர்ஜுனாயனர் 67 ஆல்பெரூனி 42 இந்தியா - பெயர்க் காரணம் 18 இளவரசன், தகுதிகள் 127,128 இளவரசன் கல்விப் பயிற்சி 129-132 இளவரசன் சம்பளம் 135 உத்ஸவ ஸங்கேதர் 68 உபநிஷதங்கள் 3-6,179 உஜ்ஜயினி 134 ஐசுவரியவான் 48 ஐம்பத்தாறு தேசங்கள் 17,185 ஔசனஸம் 34 சுடர் 67 சுடர் ராஜ்யம் 77 கண ஆட்சி 69 கண பூரகன் 74 கப்பல்கள் 13,14 கர்த்தமர் 89 கவுன்சில் 157 கனிஷ்கன் 17 காண்வாயனர் 138 காதம்பரி 130 காபினெட் 145 காமநதக நீதி 34 காமன் சபை 157 காம்போஜர் 67 காம்போஜர் - சுராஷ்டிரர் ராஜ்யங்கள் 78 கார்த்தவீரியார்ஜுனன் 17 காளிதாசன் 35,60 கிரீடி பஞ்ச கணத்தினர் 68 கிரீ 9,64 கிருதயுகம் 44,45,84 கிருத்ய கல்பதரு 34 கிருஷ்ணதேவராயன் 102 கிளைவ் 4 கீர்த்திமான் 88,89 குகுரர் 67 குணாலன் 134 குப்தர் 67 குருக்கள் 67 கூலி வேலை 15 கோக நகர் 68 கோசம் 52,54 கோசலம் 66 கௌடிலீயம் 34,141,142 கௌடில்யன் 16, 32,34,115,137,140,142 சகரன் 128 சக்ரவர்த்தி ஷேத்திரம் 16 சங்கம் 69,70 சந்திரகுப்தன் 17,42,124, 138,165 சபை 157 சபை விளக்கம் 158,159,160 சப்த பிரகிருதிகள் 51 சப்தரங்கம் 51 சமஷ்டிகள் வளம் பெற 71,72 சமுதாய ஒப்பந்த சித்தாந்தம் 84,90,91 சமுத்திர குப்தன் 17 சாக்கியர் 66 சாந்தோக்ய உபநிஷதம் 66 சாப்பாட்டு வகை 125 சாம்ராஜ்யம் 63 சார்வபௌமம் 62 சிவாஜி 101,147,156,174 சிவிகள் 67 சிவிகள் ராஜ்யம் 78 சீதை 154 சீனா 24 சுக்கிரன் 33,34 சுக்கிர நீதி 33,60,95,122,129,131,135,177 சுங்கர் 67,138 சுத்தோதணன் 66 சுந்தோபசுந்த நியாயம் 47 சுராஷ்டிரர் 67 சுவர்னகிரி 135 சுவாமி 52,55 சூதன் 103 சோமதேவசூரி 34,60 ஞான வாசிஷ்டம் 12 டாலமி 59 தசகுமார சரித்திரம் 130 தசரதன் 12,126,130,133, தண்டம் 30,31,36,37 தட்சசிலை 134 தர்மத்தின் அர்த்தம் 28,29 தார்வர் 68 தானேசுவர யுத்தம் 4 திரிகர்த்தர் 68 திரிவர்க்கம் 29 திலீபன் 17 திவ்யாவதானம் 174 தீர்த்தர்கள் 135,175 துர்க்கம் 52,56 வைராஜ்யம் 63 தெய்விக உரிமைச் சித்தாந்தம் 87,90,91,92 தேச லட்சணம் 49,50,51 தேவாசுர யுத்தம் 82 தேவானாம்பிரியன் பொருள் 173 தோஸாலி 135 நாபகர் 67 நிபந்தங்கள் 34 நீதி வாக்கியாமிருதம் 34,60 பகீரதன் 128 பஞ்சதந்திரம் 35 பட்டபாணன் 35 பண்டிதன் யார்? 35,36 பரதன் 17,18 பலாசமணி 100,102 பலி 84 பாகவதம் 67 பாஞ்சாலர் 67 பாடலிபுத்திரம் 165 பாரதவர்ஷம் 18 பாரஹபத்தியம் 33,34 பாராபி 117 பாலதர் 67 பால்பணம் 127 பாஸன் 35 பாஹூதந்தகம் 38 பிதிநிகர் 67 பிந்துசாரன் 134,138 பிரகபதி 33,39 பிரதீபன் 128 பிரார்ஜுனர் 67 பிரிவி கவுன்சில் 141 பிருதிவி 88 பிருதிவிராஜன் 4 பிருது 88 பிளாசி யுத்தம் 4 பிளேட்டோ 89,90,117 புதிய இந்தியா, பிறந்தது 5 புராணங்கள் 180 புராதன இந்தியா எது? 5 புராதன இந்தியா பிற்பகுதி 6 புராதன இந்தியா முற்பகுதி 6 புரூருவன் 17 பேஹியான் 42 போர மன்னன் 4 போவே 86 போஜர் 67 பௌர சபை 160-165 பௌஜ்யம 65 ப்ருஹத்ரதன் 17 மகத்துவம் 66 மகாமாத்திரர்கள் 174 மகாராஜ்யம் 62 மத்ரர் 67 மத்ய நியாயம் 45,46,47 மத்ய சீனாவில் 46 மத்ய புராணம் 45 மந்திரிகள் எண்மர் 145,147 மந்திரி கணம் 145 பரிஷத் 138 மல்லர் 67 மௌரியர் 67 யந்திர வகைகள் 14 யவணர் 67 யௌத்தேயர் 67 ராஜ்யம் 78 ரகுவமிசம் 130 ரத்னிகள் 103 ராட்சத நியாயம் 46,47 ராபர்ட் பில்மர் 86 ராமன் 12 ராஜகர்த்தர்கள் 100,103 ராஜசூயம் 17,101 ராஜதர்மம், விளக்கம் 27 ராஜநீதிப் பிரகாசிகை 34 ராஜநிதி மயூகம் 34 ராஜநீதி ரத்னாகரம் 34 ராஜ்யத்தின் நோக்கம் 60,61 ரூஸோ 84 வாக் 84 லார்ட் சபை 157 லிச்சவிகள் 67 ராஜ்யம் 75,76 வசிஷ்டன் 12 வத்ஸம் 66 வாதாபி 128,167 வாமரதர் 67 வாஜபேயம் 17 விதேகர் 65 வித்தைகள், நான்குவிதம் 36 விரஜ 88,89 விரிஜிகள் 67,70 விருஷ்ணிகள் 68 விஷ்ணுபுராணம் 19 வேதகாலம் 6,16 வேதங்கள் 3,6,179 வேதாங்கள்கள் 179 வேனன் 88 வைசாலாக்ஷம் 38 வைமானிக சாதிரம் 14 வைராஜ்யம் 65 ஸமிதி விளக்கம் 158,159,160 ஸாக்ரட்டீ 9 ஸெல்யூக 42 ஸௌபூதிகள் 67 ஸௌபூதிகள் ராஜ்யம் 78 ப்பார்ட்டர் 64 வாராஜ்யம் 65 ஜம்புத்வீபம் 19 ஜனபதம் 50,52 ஜனமேஜயன் 17 ஜானபதசபை 162-165 ஜீலம் நதிக்கரைப் போசாட்டம் 4 ஜேம் II பேச்சு 90,91 க்ஷுத்ரகர் 67 க்ஷுத்ரகர் மாளவர் ராஜ்யம் 76,77 ஹர்ஷன் 17 ஹாப் 84 ஹாம் முராபி 93 ஹ்யூன்த்ஸாங் 42