வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல் திரட்டு – 25 மகாத்மா காந்தி ( மொழிபெயர்ப்பு நூல் ) ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா நூற் குறிப்பு நூற்பெயர் : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 25 ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2007 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10.5 புள்ளி பக்கம் : 16+ 264=280 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : cUgh.175/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ.மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள் தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெரு மக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூற வேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணி யாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ்த் தென்றல் திரு. வி. f.; மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப் பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப் பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையை தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது. இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது. போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட் களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால்திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழி பெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல். சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்க தரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனை களையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும். சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும். காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜி யினுடையதே! எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்று தலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே! ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி டோரதி கிருஷ்ணமூர்த்தி 6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை - 622 002. பதிப்புரை உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய் மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலகச் சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர். சர்மா வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த உலக நிகழ்வுகளை தமிழர் களுக்குப் படம் பிடித்துக் காட்டியவர். அரசியல் கருத்துகளின் மூலம் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் ஊட்டி வீறு கொள்ளச் செய்தவர். உலக அரசியல் சிந்தனைகளைத் தமிழில் தந்து தமிழிலேயே சிந்திக்கும் ஆற்றலுக்கு வழிகாட்டியவர். தாம் வாழ்ந்த காலத்து மக்களின் பேச்சு வழக்கையே மொழிநடையாகவும், உத்தியாகவும்கொண்டு நல்ல கருத்தோட்டங்களுக்கு இனிய தமிழில் புதிய பொலிவை ஏற்படுத்தியவர். தமிழ் மக்களுக்கு விடுதலை உணர்வையும்; தேசிய உணர்வையும்; சமுதாய உணர்வையும் ஊட்டும் வகையில் அரும்பணி ஆற்றியவர். தமிழ்ப்பண்பாட்டின் சிறப்புக்களை போற்றியவர்; பொருளற்ற பழக்க வழக்கங்களைச் சாடியவர். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களும் உலகளாவிய அரசியல் பார்வையைப் பெறுவதற்கு வழி அமைத்தவர். மேலை நாட்டுஅறிஞர்களின் தத்துவச் சிந்தனைகளை எளிய இனிய தமிழில் தந்தவர். வரலாற்று அறிவோடு தமிழ்மொழி உணர்வை வளர்த்தவர். அரசியல் தத்துவத்தை அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ் நாட்டுத் தலைவர்களுக்குக் கற்றுத் தந்தவர். தமிழகத்தின் விழிப்பிற்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர். தமிழர்கள் கல்வியில் வளர்ந்தால்தான் உலகில் உயர்ந்து நிற்க முடியும் என்பதை தம் நூல்களில் வாயிலாக உணர்த்தியவர். நன்மையும் தீமையும் இருவேறுநிலைகள்; தீமையை ஓங்கவிடாமல் நன்மையை ஒங்கச் செய்வதே மக்களின் கடமையென்று கூறியவர். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகின்றன. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல்களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்பதற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல் திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத்தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தேடியெடுத்து வெளியிடு கிறோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடா முயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரைகளை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். இவர் நூல்களைப் படிப்பவர்களுக்கு அந்தந்த நூல்களின் விழுமங்களோடு நெருக்கம் ஏற்படுவது உறுதி. இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ்க் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் அரசியல் வரலாற்று நூல்கள் 14. இந்நூல்களை 6 நூல் திரட்டுகளாக வெளியிட்டுள்ளோம். இவரின் தமிழ் நூல்கள் வெளிவந்த காலம் வடமொழி ஆளுமை ஒங்கியிருந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழி நடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடையிலும், மொழி நடையிலும், நூல் தலைப்பிலும் எந்த மாற்றமும் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக சர்மாவின் நூல்களைப் படைக்கருவிகளாகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுதிகளை முத்துமாலையாகத் தமிழர்தம் பார்வைக்குத்தந்துள்ளோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற இந்தியத் தேசியப் பெருங்கவிஞன் பாரதியின் குரலும், ஒற்றுமையுடன் தமிழர் எல்லாம் ஒன்று பட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும், என்ற தமிழ்த்தேசிய பெருங்கவிஞன் பாரதிதாசனின் குரலும் தமிழர்களின் காதுகளில் ஓங்கி ஒலிக்கட்டும். உணர்வுகள் ஊற்றாகப் பெருகி நல்ல செயல்களுக்கு வழிகோலட்டும். பதிப்பாளர் சர்மாவின் பொன்னுரைகள்.......  மாந்தப்பண்பின் குன்றில் உயர்ந்து நில். ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் கைவிடாதே.  பிறரிடம் நம்பிக்கையுடனும்; நாணயத்துடனும் நடந்து கொள். அது உன்னை உயர்த்தும்.  உழைத்துக் கொண்டேயிரு; ஓய்வு கொள்ளாதே; உயர்வு உன்னைத் தேடி வரும்.  பொய் தவிர்; மெய் உன்னைத் தழுவட்டும்; பெண்மையைப் போற்றி வாழ்.  மொழியின்றி நாடில்லை; மொழிப் பற்றில்லாதவன்,நாட்டுப் பற்றில்லாதவன். தாய்மொழியைப் புறந்தள்ளி அயல் மொழியைப் போற்றுவதைத் தவிர்.  தாய்மொழியின் சொல்லழகிலும் பொருளழகிலும் ஈடுபட்டு உன் அறிவை விரிவு செய். பெற்ற தாய்மொழியறிவின் விரிவைக் கொண்டு உன் தாய் மண்ணின் உயர்வுக்குச் செயல்படு.  உயர் எண்ணங்கள் உயர்ந்த வாழ்க்கைக்கு அடித்தளம் முயற்சி- ஊக்கம் - ஒழுக்கம் - கல்வி இவை உன் வாழ்வை உலகில் உயர்த்தும் என்பதை உணர்ந்து நட.  ஈட்டிய பொருளை அனைவருக்கும் பகிர்ந்தளித்து வாழக் கற்றுக்கொள். உதவா வாழ்க்கை உயிரற்ற வாழ்க்கை.  கடமையைச் செய்; தடைகளைத் தகர்த்தெறி; விருப்பு-வெறுப்புகளை வென்று வாழ முற்படு.  ஒழுக்கமும் கல்வியும் இணைந்து வாழ முற்படு; ஒழுக்கத் திற்கு உயர்வு கொடு.  எந்தச் செயலைச் செய்தாலும் முடிக்கும் வரை உறுதி கொள். தோல்வியைக் கண்டு துவளாதே;  உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் ஒரே நிலையில் வாழக் கற்றுக்கொள்.  நாட்டுக்குத் தொண்டு செய்வது தரிசுநிலத்தில் சாகுபடி செய்வது; கண்ணிழந்தவர்களுக்குக் கண் கொடுப்பது.  விழித்துக் கொண்டிருக்கும் இனத்திற்குத்தான் விடுதலை வாழ்வு நெருங்கிவரும். விடுதலை என்பது கோழைகளுக்கல்ல; அஞ்சா நெஞ்சினருக்குத்தான். நுழையுமுன்... கிரேக்கத்தின் (கிரீசின்) வடபகுதியில் திரே (Thrace) மாநிலத்தில் இருந்த தங்கச் சுரங்கங்கள் சிலவற்றில் உரிமையாளர்களாக இருந்த குடும்ப வழிமரபினன் துசிடீடி என்பவன். வரலாற்று ஆய்வாளர்களுக்கு இன்றளவும் வழிகாட்டியாக வாழ்பவன். கிரேக்க வரலாற்றில் மிக உயர்வான காலத்தில் வாழ்ந்தவன். கல்வியறிவும் படைப்பயிற்சியும் பெற்றவன். எட்டு நூல்கள் எழுதியவன். இதில் இராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள் எனும் இந்நூலும் அடங்கும். இந்நூல் அரசியலில் ஈடுபாடுகொண்ட ஒவ்வொருவர் கையிலும் இருக்கவேண்டிய நூல். அரசியலில் எதிர்கொள்ளும் பன்முகச் சிக்கல்கள் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. ஆளும் நிலையில் உள்ளவர்கள் மக்களை எப்படி நடத்தவேண்டும் என்பதைப் பற்றி அறிய உதவும் நூல். பேச்சுக்கலையில் தேர்ச்சி பெற விழைவோர் அனைவர் கைகளிலும் இருக்கவேண்டிய நூல். கிரேக்க மக்களின் மிகச் சிறந்த நாவலனாக போற்றப்பட்ட டெமாகனிசும், பிரான்சை ஆண்ட முதலாம் பிரான்சி என்ற மன்னனும் தூய ரோம் பேரரசரான ஐந்தாம் சார்லசும் திரும்பத் திரும்பப் படித்த நூல். பிரான்சு, செர்மன், இத்தாலி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல். உலக வரலாற்றின் நிலையான வரலாற்று இலக்கியங்களுள் ஒன்றென போற்றப்படும் நூல். வெளிப்பகையைக் காட்டிலும் உட்பகைதான் ஒரு நாட்டை அழிக்கும் என்ற உண்மையை உணர்த்தும் நூல். போரால் ஏற்பட்ட வலுக்குறைவை வருங்காலத் தலைமுறைக்குக் காட்டித் தன் நாட்டைப் வலுவுடையதாக்கும் உள்ளுணர்வால் எழுதப்பட்ட நூல். கோ. இளவழகன் பொருளடக்கம் சர்மாவின் சாதனைகள் iii சர்மாவின் பொன்னுரைகள் vi முன்னுரை vii நுழையுமுன் viii பதிப்புரை ix ராஜதந்திர-யுத்தகளப் பிரசங்கங்கள் வாசகர்களுக்கு - முதற் பதிப்பு xiii வாசகர்களுக்கு - இரண்டாம் பதிப்பு xiv ஆசிரியன் வரலாறு 1 முன்னுரை 20 முதல் அத்தியாயம் 33 இரண்டாவது அத்தியாயம் 48 மூன்றாவ அத்தியாயம் 74 நான்காவது அத்தியாயம் 84 ஐந்தாவது அத்தியாயம் 88 ஆறாவது அத்தியாயம் 101 ஏழாவது அத்தியாயம் 109 எட்டாவது அத்தியாயம் 114 ஒன்பதாவது அத்தியாயம் 137 பத்தாவது அத்தியாயம் 155 பதினோராவது அத்தியாயம் 164 பன்னிரண்டாவது அத்தியாயம் 170 பதின்மூன்றாவது அத்தியாயம் 175 பதினான்காவது அத்தியாயம் 180 பதினைந்தாவது அத்தியாயம் 183 பதினாறாவது அத்தியாயம் 186 பதினேழாவது அத்தியாயம் 195 பதினெட்டாவது அத்தியாயம் 212 பத்தொன்பதாவது அத்தியாயம் 224 இருபதாவது அத்தியாயம் 237 இருபத்தோராவது அத்தியாயம் 244 இருபத்திரண்டாவது அத்தியாயம் 250 பொருட்குறிப்பு 261 வாசகர்களுக்கு (முதற் பதிப்பு) துஸிடிடீஸின் பெலொப்பொனேசிய யுத்த சரித்திரத்திற்கு ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் பல வெளியாகியிருக்கின்றன. இவையனைத்தையும் வைத்துக் கொண்டுதான் பிரசங்கங்களைத் தமிழ்ப்படுத்தியிருக்கிறேன். பிரசங்கங்களை மொழி பெயர்க்கிறபோது துஸிடிடீஸின் கருத்தையே முக்கியமாகத் தழுவிக் கொண்டு போயிருக்கிறேன். குற்றங் குறைகள் இருந்தால் அவை என்னுடையனவே. படிக்கிறபோது சலிப்புத் தட்டாமலும் மொழி பெயர்ப்பு என்று தெரியாமலும் இருக்கிறதென்று வாசகர்கள் கருதுவார்களானால், அதுவே அவர்கள் எனக்கு அளிக்கிற நல்லாசியாகும். நூலின் ஆரம்பத்தில், ஆசிரியன் வரலாறு என்ற தலைப்பின்கீழ் (1) வாழ்க்கை (2) எழுதிய நூல் (3) நூலின் லட்சணம் (4) நூலுக்கு ஏன் மதிப்பு? (5) நூலின் பயன் என்ற ஐந்து பகுதிகளின் மூலம் துஸிடிடீஸையும் அவன் சிருஷ்டியையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். சிருஷ்டியை அறிந்து கொள்வதற்கு முன்னர், சிருஷ்டி கர்த்தனைப் பார்க்கவேண்டியது அவசியமில்லையா? முன்னுரை என்ற பகுதியில் பெலொப்போனேசிய யுத்தத்தின் காரணங்கள் சுருக்கமாகத் தரப்பட்டிருக்கின்றன. விரிவாக அறிந்து கொள்ள விழைவோர் கிரீ-வாழ்ந்த வரலாறு என்ற நூலைப் படிக்க வேண்டுகிறேன். கிரீஸின் அரசியல் போக்கு, எண்ணப்போக்கு முதலியவை களை அறிந்துகொள்ள வேண்டுமானால், பிளேட்டோவின் அரசியல், கிரீ-வாழ்ந்த வரலாறு, ராஜதந்திர-யுத்தகளப் பிரசங்கங்கள் என்ற இந்த நூல், அரிடாட்டல் எழுதிய அரச நீதி ஆகிய நான்கு நூல்களையும் சமுதாயச் சிற்பிகள் என்ற நூலின் முதல் மூன்று அத்தியாயங்களையும் தொடர்ந்தாற்போல் படித்தல் நல்லது. தியாகராய நகர், சென்னை 01.05.53 வாசகர்களுக்கு (இரண்டாம் பதிப்பு) இந்த நூலின் முதற்பதிப்பு வெளியான பிறகு, கிரேக்க நாட்டு வரலாற்றைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் தமிழன்பர்களிடையே அதிகரித்திருக்கிறது. அன்பர் சிலர், துஸிடிடீஸின் இந்தப் படைப்பை, தங்களுக்குகந்த முறையில் தமிழ்ப்படுத்தி வெளி யிட்டிருக்கின்றனர். இவை மகிழ்ச்சி தரக்கூடியனவேயாம். பேச்சுக்கலையில் தேர்ச்சிபெற விழைவோர் அனைவரும் இந்த நூலைப்பன்முறை படித்தல் அவசியம். இந்த இரண்டாம் பதிப்பில் எவ்வித மாற்றங்களும் செய்யப் படவில்லை. தியாகராய நகர், சென்னை. 01.09.64 நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் பெ.சு. மணி, ஞானாலயா கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், புலவர் கோ. njtuhr‹, Kidt® ïuhFyjhr‹, Kidt® ïuhk FUehj‹, K¤jÄœ¢ bršt‹ f.K., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு வ.மலர் மேலட்டை வடிவமைப்பு வ.மலர் அச்சுக்கோப்பு முனைவர் செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோ பாய் மெய்ப்பு வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மபிரியா, நா. இந்திரா தேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன் உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா, இல.தர்மராசு, ரெ. விஜயகுமார், எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . ஆசிரியன் வரலாறு 1.வாழ்க்கை ஒலிம்ப்பிய விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிரேக்க மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கிரேக்கர் பலரும், நெடுந் தூர மென்றும் கடுங்கோடை யென்றும் பாராமல் பல இடங்களிலிருந்து வந்து திரளாகக் கூடியிருக்கிறார்கள். சொந்தப் பகைமைகளையும் ராஜ்யப் பகைமைகளையும் தற்காலிகமாகவேனும் மறந்துவிட்டு, எல்லோரும் கிரேக்கர் என்ற உணர்ச்சியில் எல்லோரும் மூழ்கியிருக்கிறார்கள். அறிவுத் திறனும் உடல் வன்மையும் சேர்ந்து தம் முழுத்தன்மையை வெளிப்படுத்திக் காட்ட முயன்று கொண்டிருக்கின்றன. ஜனத்திரளின் மத்தியில், வாசகர்களே! உங்கள் தலையைச் சிறிது தூக்கி வைத்துக்கொண்டு பாருங்கள்! அதோ, ஒருவன், உயர்ந்ததோர் இடத்தில் நின்றுகொண்டிருக்கிறான். தெரிகிறதா அவனை? இருபத் தெட்டுக்கு மேல் முப்பது வயதுக்குள் இருக்குமென்று மதிக்கிறீர் களல்லவா அவனுக்கு? அவன் ஏதோ உரக்கப் படிக்கிறான். சற்றேறக் குறைய இரண்டாயிரத்து நானூறு வருஷங்களுக்கு முன் அவன் படித்த போதிலும், இப்பொழுதுகூட அவன் படிப்பது உங்கள் காதில் விழுந்து கொண்டிருக்கிறதில்லையா? உங்கள் அகத்திலும் முகத்திலும் என்னென்ன மாறுதல்கள்தான் நிகழ்கின்றன? இப்பொழுதே அப்படி யிருக்குமானால், அப்பொழுது அவன் முன்னர் அமைதியாக அமர்ந்து கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? தலையசைக்கிறார்கள் ஒரு சமயம்; கை கொட்டுகிறார்கள் மற்றொரு சமயம்; ஆனந்த பாஷ்பம் சொரிகிறார்கள் வேறொரு சமயம்; துக்கக் கண்ணீர் விடுகிறார்கள் பிறிதொரு சமயம். ஏன் அவர்களுடைய உணர்ச்சியில் இத்தனை மாறுதல்கள் நிகழ் கின்றன? அவன் என்ன படிக்கிறான்? சுவாரயமான கதைபோலல்லவா இருக்கிறது? ஆம்; கிரேக்க சரித்திரத்தைத்தான் படிக்கிறான். அவன் படிப்பதை யார் கேட்டுக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய முன்னோர்களின் வரலாறல்லவா அது? இதனால்தான் சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி அவர்களுக்கு உண்டாகின்றன. யாருமே, தங்கள் மூதாதையர்களைப் பற்றின செய்திகளைக் கேட்கிறபோது உணர்ச்சி வசப்படுவது சகஜ மல்லவா? படிப்பது யார்? உலகத்தின் பல பாகங்களையும் சுற்றிப் பார்த்தவன் என்று தெரிகிறது; பார்த்ததை யெல்லாம் மனத்திலே பதிய வைத்துக் கொண்டவன் என்றும் தெரிகிறது. bAnuhnlh£lÞ!1 மேலை நாட்டைப் பொறுத்தமட்டில் சரித்திரமென்னும் சாலையை முதன் முதலாக அமைத்துக் கொடுத்தவன் இவன்தான். இதனாலேயே, சரித்திரத்தின் தந்தையாகப் பிற்காலத்தவரின் உள்ளத்தில் பதிவாகியிருக்கிறான். ஹெரோடோட்ட படிப்பதைக் கேட்டுக்கொண்டு எத்தனையோ பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒரு சிறுவன் மீது மட்டும் ஏன் உங்கள் திருஷ்டி, வாசகர்களே! விழுகிறது? அவனை ஏன் அடிக்கடி உற்று நோக்குகிறீர்கள்? அவனும், தன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் தன் தந்தையின் முகத்தை அடிக்கடி பார்க்கிறான்; படிக்கிற புலவனையும் பார்க்கிறான். உரக்க அழுகிறான்; உரக்கச் சிரிக்கிறான். பதினைந்து வயதே யான சிறுவனல்லவா? உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. படிக்கிற அறிஞனும், சிறுவனைக் கூர்ந்து கவனிக்கிறான்: சிறுவன், உணர்ச்சி வசப்படுகிறவனாயிருந்தபோதிலும், அந்த உணர்ச்சிகளுக்கு அடியில் கூர்மையான அறிவு கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கிறதென்பதைத் தெரிந்துகொள்கிறான்; அந்த அறிவுதான், அந்த அறிவின் சிருஷ்டிதான், இளைஞனே! உன்னைச் சிரஞ்சீவியாக வாழ வைக்கப் போகிறது என்று சிறுவனை மனத்தினால் ஆசீர்வதிக் கிறான். அருகிலிருக்கும் சிறுவனின் தந்தையைப் பார்த்து‘ஓலோரஸ்!2 நீ பாக்கியசாலி! உன் மகனிடத்தில், அறிவை அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் கொழுந்து விட்டெரிகிறது என்கிறான். அதைக் கேட்டுத் தந்தையும் பூரிப்படைகிறான். அந்தப் பூரிப்பிலே, ஹெரோடோட்டஸின் நல்லாசியிலே பிறக்கிறான் ஒரு சரித்திராசிரியன்! அந்தச் சரித்திராசிரியன்தான் மேற்படி சிறுவன். அந்தச் சிறுவன்தான் துஸிடிடீஸ்!3 துஸிடிடீஸை எந்த மணிவயிறு பெற்றுக் கொடுத்துப் பெருமையடைந்ததோ தெரியாது.ஒரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா, வாசகர்களே? மேதைகளென்றும் மகான் களென்றும் இக்காலத்தில் புகழப்படுகின்ற முற்காலத்துப் பெரியோர் பலரும், தங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றி விவரமாக எதுவும் எழுதி வைத்துப் போகவில்லை. காரணம், அவர்கள், சொந்தத்திற்காக வாழவில்லை; சொந்தமென்று எதையும் கொள்ள வில்லை; பேணி வளர்த்த உடல், பண்பாடு பொதிந்த அறிவு, இனிமை கலந்த பேச்சு, கருத்து நிறைந்த எழுத்து, பயன் கருதாச் செயல் ஆகிய அனைத்தையும் பிறருக்காகவே பயன்படுத்தினார்கள். சொந்தமென்று ஒன்று இல்லாத போழ்து சொந்தத்தைப் பற்றி எழுதுவதற்கு என்ன இருக்கிறது? எழுத வேண்டுமென்ற எண்ணமே அவர்களுக்கு உதித்திராது; உதிக்கவுமில்லை. அது நிச்சயம். அவர்கள் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகளிலிருந்து, எழுதிவிட்டுப் போன எழுத்துகளிலிருந்து, செய்து விட்டுப் போன காரியங்களிலிருந்து, ஏதோ அப்படியும் இப்படியுமாகச் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறதே தவிர, அவர்களைப் பற்றின பூரா விவரங்களையும் தெரிந்துகொள்ள அவர்களுடைய சிருஷ்டிகள் ஏதும் இடங்கொடுப்பதில்லை. அப்படி ஏதேனும் தங்களைப்பற்றித் தங்களுடைய சிருஷ்டிகளில் தெரிவித்துக்கொள்ள வேண்டியதா யிருந்தால் தங்களை, தன்மை ஒருமையில் அழைத்துக்கொள்ளாமல், படர்க்கை ஒருமையிலேயே அழைத்துக்கொள்கிறார்கள். உதாரணமாக, துஸிடிடீ, தன் சரித்திரத்தை எப்படி ஆரம்பிக்கிறான், பாருங்கள்: ஓர் ஆத்தினியனாகிய துஸிடிடீ, பெலொப்பொனேசியர்களுக்கும் ஆத்தீனியர் களுக்கும் நடைபெற்ற யுத்தத்தின் சரித்திரத்தை எழுதினான். எனவே, மேதையான துஸிடிடீ, தன்னைப்பற்றித் தன்னுடைய சிருஷ்டியில் - யுத்த சரித்திரத்தில் விசேஷமாக எதுவும் சொல்ல வில்லை என்பதற்காக நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. அந்தச் சிருஷ்டியில் சிதறிக் கிடக்கும் சில செய்திகளைக் கொண்டுதான் இவனை - நேர்மையும் நிதானமுமுடைய இவனை - ஒருவாறு உருவகப்படுத்திப் பார்க்க வேண்டியவர்களா யிருக்கிறோம். ஓரிடத்தில் மட்டும், இவன், தன்னுடைய சரித்திரத்தில் உண்மையைத் தவிர வேறொன்றையும் எழுதவில்லை யென்பதை உறுதிப்படுத்திக்காட்டும் பொருட்டுச் சில வாக்கியங்களைப் பொறிக்கிறான். அப்பொழுது, தன்னை, தன்மை ஒருமையிலேயே அழைத்துக்கொள்கிறான். இங்ஙனம் நான், நான் என்று இவன் அழைத்துக்கொள்வது அகந்தையினாலல்ல என்று மட்டும் நாம் தெரிந்துகொண்டால் போதும்; இவனைப் பூரணமாக அறிந்தவர்களாவோம். இது குறித்துப் பின்னரும் குறிப்பிடுவோம். துஸிடிடீஸின் வாழ்க்கையைப் பற்றி, முற்கால ஆசிரியர் சிலர், சில குறிப்புக்கள் எழுதிவைத்துப் போயிருக்கிறார்கள். இவை, தக்க ஆதாரங் களுடன் எழுதப்பட்டவையென்று சொல்வதற்கில்லை. கற்பனைச் சரக்கை நிறையக் கலந்துவிட்டிருக்கிறார்கள். உண்மையைத் தவிர வேறொன்றையும் கூறி அறியாத துஸிடிடீஸை, உண்மைக்கு மாறு பட்ட சொல் மாலைகளால் அலங்கரித்து மகிழ்ந்திருக்கிறார்கள். எனவே இவைகளை மரியாதையாக விலக்கி வைத்துவிடுவது தான் நமக்கு மரியாதை. துஸிடிடீஸின் சிருஷ்டியில்தான் துஸிடிடீஸைக் காண வேண்டும். துஸிடிடீ, சரித்திரத்தின் தந்தையான ஹெரோடோட்டஸுக்குப் பதின்மூன்று வயது இளையவன்; மகானான ஸாக்ரட்டீஸுக்கு1 ஒரு வயது மூத்தவன். ராஜ ரிஷியான பெரிக்ளீ,2 வாழ்க்கைப் பாதையில் ஏறக்குறைய இருபத்தைந்தாவது மைற்கல்லை யடைந்திருக்கிறான். அனக்ஸா கோரஸுக்கு3ச் சுமார் முப்பது வயது; மகா மேதையென்று பிரபல மடைந்து இளைஞர் பலருக்கு நற்போதனைகள் செய்து கொண்டிருக் கிறான். சரித்திர மும்மூர்த்திகளில் மூன்றாமவனான ஜெனோபன்4 இன்னும் பிறக்கப் போகிறான். துஸிடிடீ பிறந்தான். பிறந்தது கி.மு. 471-ம் வருஷம்; ஆத்தென்ஸில். ஆத்தென்ஸில் பிறந்தான் என்பது ஊகந்தான்; பிறந்த வருஷமும் அப்படியே. ஆனால் இவன் ஓர் ஆத்தினீயன் என்பது மட்டும் நிச்சயம். இவனுடைய பரம்பரை. நல்ல பரம்பரை; குடும்பமும் பணக்கார குடும்பம். பிறக்கிறபோதே நிரந்தரமான வருவாய் பெறக்கூடிய ஓர் உரிமையோடு பிறந்தான். கிரீஸின் வடபாகத்திலுள்ள திரே5 மாகாணத்தி லிருக்கும் தங்கச் சுரங்கங்கள் சிலவற்றில் பொன்னெடுத்துப் பயனடையும் உரிமை இவன் குடும்பத்தினருக்கு இருந்தது. அந்தப் பகுதியில் இவர் களுக்கு ஓரளவு செல்வாக்கும் இருந்தது. வாழ்க்கை வசதி களனைத்தையும் பெற்றுப் பிறந்த இவன், அந்தக் காலத்தில், உயர் குடும்பத்து இளைஞர்கள், எந்த மாதிரியான கல்விப் பயிற்சி பெற்று வந்தார்களோ அந்த மாதிரியான கல்விப் பயிற்சியை இளமையில் பெற்றான் என்பதை நாம் சொல்ல வேண்டுவதில்லை. இவனுடைய ஆசிரியர்களில் முக்கியமானவன் அனெக்ஸாகோர என்பர். நாடகாசிரியனான யூரிப்பிடீ1 என்ன, பெரிக்ளீ என்ன, ஸாக்ரட்டீ என்ன, இவர்களெல்லோரும் இந்த அனக்ஸாகோரஸிடம் பயின்றவர்களே. கல்விப் பயிற்சி முடிந்ததும் ராணுவப் பயிற்சி பெற்றான் துஸிடிடீ. ஒவ்வோர் ஆத்தினீயப் பிரஜையும் ராணுவப் பயிற்சி பெற வேண்டு மென்ற கட்டாயம் அப்பொழுது இருந்தது. யுத்த சாதிரத்தில், அறிவும் அனுபவமும் நிறைய ஏற்பட்டன இவனுக்கு. இளமை கழிந்த பிறகு, இவன் வாழ்க்கை எப்படி நடைபெற்ற தென்று விவரமாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் ஆத்தென்ஸிலேயே வசித்தானென்றும், அப்பொழுது அங்குப் பிரபலமாக விளங்கிய அறிஞர் பலருடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந் தானென்றும், இந்தத் தொடர்பானது, உண்மையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற உறுதியை இவனுக்கு அளித்ததென்றும் நாம் நிச்சயமாகக் கொள்ளலாம். பெலொப்பொனேசிய யுத்தம் துவங்கி எட்டாவது வருஷம் நடக்கிறது. கி.மு. 424-ம் வருஷம். துஸிடிடீஸுக்கு ஏறக்குறைய நாற்பத்தேழு வயது. வடக்கே திரே மாகாணத்தில் லாஸிடீமோனியப் படைத் தலைவனாகிய பிராஸிடா,2 ஒவ்வொரு ராஜ்யமாகத் தனது செல்வாக்குக்குட்படுத்திக் கொண்டு வந்தான். இதைத் தடுக்கும் பொருட்டு ஆத்தென், ஒரு கடற்படையையும், ஒரு தரைப்படையையும் வடக்கு நோக்கி அனுப்பியது. கடற்படைக்கு துஸிடிடீ தலைவனாக நியமிக்கப் பட்டான். ஏனென்றால், அந்தப் பகுதியில் இவனுடைய குடும்பத் தினருக்குப் பரம்பரையான செல்வாக்கு இருந்ததல்லவா? மற்றும் அந்தப் பகுதி இவனுக்கு நன்கு அறிமுகமாயிருந்தது. அப்படியே இவன் சென்று தாஸோ3என்ற தீவில் முகாம் செய்துகொண்டான். தாஸோ தீவுக்கு மேற்கே தரைப் பகுதியில் உள்ளது ஆம்ப்பிபோலி4 என்ற நகரம். ஆத்தென்ஸின் முக்கியமான வியாபார தலங்களில் ஒன்று இது; அதன் பாதுகாப்பிலேயே இருந்தது. இதனைக் கைப்பற்றிக்கொள்ள முயன்றான் பிராஸிடா. ஆத்தீனிய தரைப்படைத் தலைவனுக்கு இது தெரிந்தது: சுமார் அரை நாள் பிரயாண தூரத்தில்-தாஸோ தீவில்-முகாம் செய்து கொண்டிருந்த துஸிடிடீஸை உதவிக்கு வரும்படி தகவல் விடுத்தான். துஸிடிடீஸும் உடனே தன் படையுடன் பிரயாணமானான். ஆனால் இவன் வந்து சேருவதற்குள் ஆம்ப்பிபோலி நகரம் பிராஸிடாஸின் வசப்பட்டு விட்டது. 1 இதற்குப் பிறகு ஆம்ப்பிபோலி நகரத்திற்குச் சுமார் இரண்டரை மைல் தெற்கே யிருந்த இயோன்2 என்ற நகரத்தைக் கைப்பற்றிக் கொள்ள முனைந்தான் பிராஸிடா. ஆனால் இது நிறைவேறாதபடி தடுத்துவிட்டான் துஸிடிடீ; மேற்படி இயோன் நகரத்தை யடைந்து அதனை நன்கு பந்தோபது செய்து விட்டான். பிராஸிடா முனைந்தது பலிக்கவில்லை. ஆம்ப்பிபோலி நகரம் பிராஸிடா வசப்பட்டது துஸிடிடீஸின் தவறல்ல. ஆனால் ஆத்தீனிய ஜன சபை வேறு விதமாக நினைத்தது. தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டானென்று சொல்லி இவனைத் தேசப் பிரஷ்டம் செய்து விட்டது. இருபது வருஷகாலம் தேசப் பிரஷ்டனாயிருந்தான் துஸிடிடீ. இந்தக் காலத்தை எங்கு கழித்தானென்று தெரியவில்லை. திரே மாகாணத்திலேயே கழித்தானென்பர். எங்குக் கழித்திருந்தாலும், இந்தக் காலத்தை உபயோகமாகச் செலவழித்தான் என்பது திண்ணம். ஏனென்றால் இந்தச் சரித்திரத்தை எழுதத் திட்டமிட்டதும் எழுதுவதற் கான தகவல்களைச் சேகரித்ததும் இந்தக் காலத்தில்தான். பெலொப்பொனேசிய யுத்தம் இருபத்தேழு வருஷ காலம் நடைபெற்று கி.மு. 404-ம் வருஷம் முடிவுற்றது. இதற்கடுத்த வருஷம் துஸிடிடீஸின் பிரஷ்ட காலமும் முடிவுற்றது. பிறகு இவன் ஆத்தென்ஸுக்குத் திரும்பி வந்தானாவென்பது தெரியவில்லை. வேறெங்கு மிகுதிக் காலத்தைக் கழித்தானென்பதும் தெரியவில்லை. பிரஷ்ட காலம் முடிந்த பிறகு, பெலொப்பொனேசியப் போரைப் பற்றி, தான் சேகரித்த தகவல்களையெல்லாம் திரட்டி, ஒழுங்கு படுத்தி ஒரு நூலாக எழுதத் தொடங்கினான் என்று மட்டும் நிச்சயாகத் தெரிகிறது. ஆனால் இதைப் பூரணமாக எழுதி முடித்தானோ இல்லையோ தெரியவில்லை. ஏனென்றால், யுத்தத்தின் இருபதாவது வருஷத்தில்-கி. மு. 411-ம் வருஷத்து நிகழ்ச்சிகளைச் சொல்லிக் கொண்டு வருகையில்-திடுதிப்பென்று நின்றுவிடுகிறது இவன் எழுதிய சரித்திரம். கி.மு. 400-ம் வருஷம் எழுபத்தோராவது வயதில் இவனது உலக வாழ்க்கை முடிந்து விட்டது. 2. எழுதிய நூல் துஸிடிடீஸின் யுத்த சரித்தரம், எட்டு புத்தகங்களாக வகுக்கப் பட்டிருக்கிறது. எட்டு புத்தகங்களென்பது எட்டு பெரிய அத்தியாயங்கள். இந்த எட்டு அத்தியாயங்களுக்கு மேல் இவன் எழுதவில்லையா? எழுதி முடிப்பதற்கு முன் இறந்துவிட்டானா? அல்லது இப்பொழுது அகப் பட்டிருப்பது இவ்வளவு தானா? இவைகளைப் பற்றித் தெளிவாக ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் முதல் ஏழு அத்தியாயங்களின் உரை நடைக்கும் எட்டாவது அத்தியாயத்தின் உரைநடைக்கும் வெகு வித்தியாசம் காணப்படுகிறது. முந்தியவை, நன்கு பரிசீலனை செய்யப் பெற்று செப்பனடைந்த பாதை மாதிரி இருக்கின்றன. பிந்தியது அப்படி யில்லை. மற்றும் பிந்திய அத்தியாயத்தில், பிரசங்கமாக எதுவும் குறிக்கப் படவில்லை. தவிர, இவன் எழுதிய சரித்திரம் பூராவும், இவனுடைய சரித்திர வாரிசென்று சொல்லத்தக்க ஜெனோபன் கையில் அகப்பட்டதாகவும், அவனே இதை முதன் முதலாக வெளிக் கொணர்ந்தானென்றும் கூறப் பட்டிருக்கின்றன. துஸிடிடீஸின் பிற்பகுதி வாழ்க்கையை நன்கு கண்டவன் ஜெனோபன்; இவனுடைய பரிச்சயத்தையும் பெற்றிருக்க வேண்டும். எனவே அவன் கையில்-ஜெனோபன் கையில்-பூரா நூலும் தான் கிடைத்திருக்க வேண்டும். கிடைத்ததில், பிற்பகுதியை மறைத்து விட்டானென்று சொல்வதற்கில்லை. அப்படிப்பட்ட பொறாமையோ துவேஷமோ துஸிடிடீஸிடம் கொள்ளக் காரணமில்லை. ஆதலின், ஜெனோபனிடம் கிடைத்ததே எட்டு அத்தியாயங்கள் வரைதான். இந்த எட்டு அத்தியாயங்களில் ஏழு அத்தியாயங்களைச் செப்பனிட்டு வைத்து விட்டு, எட்டாவது அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கையில் துஸிடிடீ, மரணவாயிலை அடைந்திருத்தல் கூடுமென்று நாம் ஒருவாறு ஊகிக்கலாம். ஆனால் ஏற்கனவே சொல்லியிருக்கிறபடி, யுத்த முடிவு வரை எழுத இவன் திட்டமிட்டிருந்தான், அதற்கான தகவல்களைச் சேகரித்து வைத்திருந்தான் என்று திட்டமாக நாம் முடிவு கட்டலாம். துஸிடிடீ, தன்னுடைய நூலுக்கு என்ன பெயர் கொடுத்தான், அல்லது என்ன பெயர் கொடுக்க உத்தேசித்திருந்தானென்பது தெரியவில்லை. மற்றும் இந்த நூலை எட்டு புத்தகங்களாக வகுத்தது யார், இவன்தானா அல்லது இவனது நூலைப் பிற்காலத்தில் பதிப்பித்தவர்களா என்பதும் தெரியவில்லை. வகுக்கப்பட்டுள்ள எட்டு புத்தகங்களில் முதற் புத்தகம், கிரேக்கர் களின் பூர்வ சரித்திரம், அவர்கள் பாரசீகர்களை வெற்றி கொண்டது, பெலொப்பொனேசிய யுத்தத்திற்கு மூலகாரணங்கள் என்ன, உடனடி யான காரணங்கள் என்ன, பாரசீகப் போருக்குப் பிறகு ஆத்தென், ஓர் ஏகாதிபத்தியமாக வளர்ந்த வரலாறு ஆகிய இவைகளைப் பற்றிச் சுருக்க மாகவும் தெளிவாகவும் கூறுகிறது. இரண்டாவது புத்தகத்திலிருந்து எட்டாவது புத்தகம் வரை ஏழு புத்தகங்களும், யுத்தத்தின் ஆரம்பத்தி லிருந்து இருபது வருஷம் வரையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கூறுகின்றன. துஸிடிடீ, வேறெந்த நூலையும் எழுதியதாகத் தெரியவில்லை. இந்த ஒரு நூல் எழுதுவதற்கே இவன் பொழுது சரியாகி விட்டது போலும். ஆனால் இந்த ஒரு நூல், இவனைச் சிரஞ்சீவி யாக்கிவிட்டிருக் கிறது. சரி: பெலொப்பொனேசிய யுத்த சரித்திரத்தை எழுத துஸிடிடீஸுக்கு என்ன தகுதி இருந்தது? இதை இவன் எவ்வாறு எழுதினான்? யுத்தம் நடைபெற்ற எல்லா இடங்களுக்கும் நேரில் சென்று பார்த்தானா? ஜன சபையில் வாதங்கள் நடைபெற்றன, தூதுகோஷ்டியினர் தங்கள் கட்சியை எடுத்துச் சொன்னார்கள் என்று இப்படியெல்லாம் நூலில் குறிப்பிடு கிறானே, இவைகளனைத்தையும் நேரில் சென்று கேட்டானா? தான் கண்டதையும் கேட்டதையும் அவ்வப்பொழுது குறித்துக் கொண்டு வந்தானா? இந்த மாதிரியான கேள்விகள் எழுவது சகஜம். பெரிக்ளீஸினுடைய நிருவாகத்தின் கீழ் ஆத்தென்ஸில் தோன்றி யிருந்த ஞானப்பிரகாசம் இவன் மீது நன்கு படிந்திருக்க வேண்டும். அஃதொன்றே இவனைச் சரித்திராசிரியனாயிருக்கத் தகுதிப் படுத்தியது என்று சுருக்கமாகக் கூறி விடலாம். இவன் கற்றதெவ்வளவோ தெரியாது; கேட்டது மிக அதிகமாகவே இருக்க வேண்டும். கேள்வி ஞானம் விசேஷமல்லவா? ஆம்ப்பிபோலி நிகழ்ச்சிக்கு முன்னர் இவன் போரில் என்ன பங்கெடுத்துக்கொண்டான் என்பது தெரியவில்லை. ஆனால் போரைப் பார்த்திருக்கிறான்; போரின் காரணங்களை அறிந்திருக்கிறான்; போரின் பயன்களை அனுபவித்திருக்கிறான். யுத்தத்தின் இரண்டாவது வருஷம் ஆத்தென்ஸில் பிளேக் நோய் பரவி, பலரை யமனுலகுக்கு அனுப்பி வந்தது. அந்த நோய் இவனையும் பற்றிக்கொண்டு துன்புறுத்தியது. ஆனால் யமனுலகு செல்லாமல் தப்பினான். பிளேக் நோயைப் பற்றியும் அதனால் ஜனங்கள் பட்ட அவதியைப்பற்றியும் நூலின் இரண்டாவது புத்தகத்தில் உருக்கமாக வர்ணித்திருப்பதைக் கொண்டு, இவன் அனைத்தையும் நேரில் கண்டு அனுபவித்திருக்கிறானென்பது நன்கு புலனாகும். இவனுக்கு எதையும் கூர்ந்து கவனிக்கிற சக்தியும் நல்ல ஞாபக சக்தியும் இருந்தனவென்று நாம் ஊகிக்கலாம். மற்றும் இவன் ஆத்திரமென்பதை அறிந்திருக்க மாட்டான். நிதான புத்தி, நிதான நடக்கை எல்லாம் இவனிடம் இருந்திருக்க வேண்டும். விருப்பு வெறுப்பு இல்லாத வனாகவும் இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுகின்றவனாகவும் வாழ்க்கையில் உண்மையைக் கடைப்பிடிப்பவனாகவும் இருந்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, தன்னுடைய தாய்நாட்டின் மீது, தன்னுடைய ஆத்தென்மீது இவன் தணியாக் காதல் கொண்டிருந் தானென்று நன்கு தெரிகிறது. காதல் என்ற வார்த்தையை இங்கே நாம் தெரிந்துதான் உபயோகித் திருக்கிறோம். பிரதிபலனை எதிர்பாராமல், கஷ்ட நஷ்டங்களைப் பொருட் படுத்தாமல் ஒன்றின் மீது வைக்கும் பற்றுக்கே காதல் என்று சுருக்கமாகச் சொல்ல வேண்டும். இத்தகைய காதலையே கொண்டிருந்தான் துஸிடிடீ, ஆத்தென்ஸினிடத்தில். தன்னைப் பிரஷ்டம் செய்த ஆத்தென்ஸைப் பற்றி ஒரு வார்த்தையாவது மனம் நொந்து சொல்ல வேண்டுமே இவன், தன்னுடைய நூலில்? அதற்கு மாறாக, பெரிக்ளீஸின் வாய்மொழி மூலமாக, தன்னுடைய நாட்டுப்பற்றை, ஆத்தென் மீது தான் கொண்டிருக்கும் பக்தியை வெளிப்படுத்துகிறான். இன்னோரன்ன பண்புகளே இவனை இந்தச் சரித்திரம் எழுது வதற்குத் தகுதிப் படுத்தின. இந்த நூலை இவன் எவ்வாறு எழுதினான்? என்னென்ன ஆதாரங்கள் மீது? இவனே கூறட்டும்:- யுத்த நிகழ்ச்சிகளைப் பற்றிக் கூறுகிறபோது, நான், அவ்வப்பொழுது கேள்விப்பட்ட செய்திகளையெல்லாம் அப்படியே கூறிவிட வில்லை. அப்படிக் கூறுவது சரியல்ல வென்று நான் கருதினேன். கண்ணால் பார்த்தவைகளையும், எனக்காக மற்றவர்களைப் பார்க்கச் சொன்னேனே அவைகளையுமே கூறியிருக்கிறேன். எனக்காக மற்றவர்கள் பார்த்தவைகளை ஒவ்வொன்றாக அலசி ஆராய்ந்து பார்த்தேன்; பலமுக பரிசோதனைகளுக்குட்படுத்தினேன்; சரியென்று தெரிந்தவைகளையே கூறி யிருக்கிறேன். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பரிசோதனை செய்து பார்ப்பதென்பது சிறிது சிரம சாத்தியமான காரியமாகவே இருந்தது. ஒரே நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் அல்லது அதில் கலந்து கொண்டவர்கள் அந்த நிகழ்ச்சியைப் பற்றி ஒரே மாதிரியாகக் கூறவில்லை; முரண்பாடுகள் பல இருந்தன. ஞாபகக் குறைவு காரணமாகவோ, பட்சபாதத்தினாலோ ஒருவர் சொன்ன மாதிரி மற்றொருவர் சொல்லவில்லை. என்னுடைய இந்தச் சரித்திர நூலில் , கட்டுக்கதை எதுவும் இல்லை யாதலின், வாசகர்களுக்கு ருசிக் குறைவு ஏற்படுமென்று அஞ்சுகிறேன். ஆனால், எதிர்காலம் இப்படியிருக்குமென்று ஒருவாறு வியாக்கியானஞ் செய்து காட்டுவதற்குச் சென்ற காலத்தைப் பற்றிய சரியான அறிவு தேவையென்று ஆசைப்படுகிறவர்கள், இந்த நூல், தங்களுக்கு உபயோக மாயிருக்கிறதென்று கருதுவார்களானால் அஃதெனக்கு திருப்தியளிப்ப தாயிருக்கும். எதிர்காலம் சென்ற காலத்தை அப்படியே பிரதிபலிக்கா விட்டாலும் அதனை ஏறக்குறைய ஒத்ததாகவே இருக்கும். நான் எழுதியுள்ள இந்தச் சரித்திரம், ஏதோ சிறிது நேரம் காது குளிர கேட்டு விட்டு மறந்துவிடுவதா யில்லாமல் என்றும் நிரந்தரமாயிருக்க வேண்டுமென்பது என் நோக்கம். பெலொப்பொனேசிய யுத்தம் நடைபெற்ற இருபத்தேழு வருஷ காலம் பூராவிலும் நான் இருந்து வந்திருக்கிறேன். நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்த்து அதனதன் உண்மையைத் தெரிந்து கொள்ளக் கூடிய பக்குவமடைந்திருந்தேன். ஆம்ப்பிபோலிஸில் நான் படைத் தலைமை வகித்த பிறகு இருபது வருஷ காலம் தேசப்பிரஷ்டனா யிருக்க வேண்டிய கதி எனக்கு ஏற்பட்டது. இரண்டு கட்சியினருடனும் நான் இருந்து வந்திருக்கிறேன். தேசப்பிரஷ்டனாயிருந்ததன் விளைவாக. பெலொப்பொனேசியர்களுடன் அதிகமாகப் பழகக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. நடைபெற்ற நிகழ்ச்சிகளை நெருங்கியிருந்து கவனிக்க எனக்குப் போதிய ஓய்வும் இருந்தது. இருதரப்பினரும் அவ்வப்பொழுது நிகழ்த்திய சொற்பொழிவு களாகச் சுமார் நாற்பதுக்கு மேல் நூலின் இடையிடையே கலந்து வருகின்றன. இவைகளைப் பற்றி துஸிடிடீ கூறுகிறான்:- இந்த நூலின் இடையிடையே சில பிரசங்கங்கள் வருகின்றன. இவற்றில் சில, யுத்தம் துவங்குவதற்கு முன் செய்யப்பட்டவை. சில, யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது செய்யப்பட்டவை. சிலவற்றை, நான் நேரில் கேட்டேன்; சிலவற்றை, வேறு பல வழிகளி லிருந்து பெற்றேன். அவரவரும் பேசியதைப் பேசிய பிரகாரம் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருப்பது கஷ்டம். எனவே, சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி அவரவரும் என்ன பேசியிருக்க வேண்டுமென்று நான் அபிப்பிராயப் பட்டேனோ அதையேஅவரவரைக் கொண்டு பேச வைத்திருக்கிறேன். ஆனால் அவரவரும் உண்மையில் என்ன பேசினார்களோ அதனின்று நழுவாமல் அதனைத் தழுவியே சொல்லியிருக்கிறேன். இந்தப் பிரசங்கங்களை இடையிடையே புகுத்தி, தன்னுடைய சரித்திரத்திற்கு நாடகக் களை கொடுத்துவிடுகிறான் துஸிடிடீ. பல்வேறு கருத்துக்களை, அவரவரைக்கொண்டே வெளியிடச் செய்கிறானல்லவா? இதில்தான் இவனுடைய திறமை வெளிப்படுகிறது. ஆனால் இவனை யறியாமலே இந்த நாடகக் களை இவனுடைய நூலில் புகுந்திருக்கிறதென்று சொன்னால் அதிலும் தவறில்லை. ஏனெனின், இவன் காலத்தில் ஆத்தென்ஸில் நாடகக் கலை செழித் தோங்கி நின்றது. பிரபல நாடகாசிரியர்களின் தொடர்பு இவனுக்கு ஏதோ ஒரு விதத்தில் இருந்தது. இவைகளெல்லாம் சேர்ந்து இவனுடைய நூலில் நாடகக் களையைப் புகுத்தி யிருக்கலாம். மற்றும் இவன் காலத்தில், பேச்சுக் கலைக்குப் பெரு மதிப்பு இருந்தது. திறம்பட பேசினவர்கள் பெரிதும் பாராட்டப்பட்டார்கள். இளைஞர்கள், இந்தப் பேச்சுக் கலையைப் பாடமாகப் பயின்று வந்தார்கள். எங்கும் பேச்சு மயமாகவே இருந்ததென்று சொல்லாம். இந்தச் சூழ்நிலையில் இருந்து கொண்டு எழுதிய துஸிடிடீ, தன்னுடைய நூலில் பிரசங்கங்களை நுழைத் திருக்கிறானென்றால், அதில் ஆச்சரியமொன்றுமில்லை. துஸிடிடீ, பெரிய பேச்சாளனோ என்னவோ தெரியாது. ஆனால் பேசவேண்டிய முறையை நன்கு தெரிந்து கொண்டிருந்தான் என்பது நிச்சயம். மற்றும் இந்தப் பிரசங்கங்கள், இந்த நூலுக்கு அணி கலன் களாக விளங்குகின்றன. மனித சுபாவத்தின் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதன் மூலம், இந்த அணிகலன்கள், இந்த நூலைப் பிரகாசப் படுத்திக்காட்டுகின்றன. இதனாலேயே, இந்த அணிகலன்களை மட்டும் பொறுக்கியெடுத்து இங்கே தமிழன்பர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். துஸிடிடீஸை அப்படியே தமிழுடை அணிவித்துக் காட்டக் கூடாதோவென்று அன்பர்கள் கேட்கலாம். அது தேவையில்லை யென்று கருதியே, பிரசங்கங்களை மட்டும் பொறுக்கியெடுத்துத் தனி நூலாக இங்கே தந்திருக்கிறோம். ஏனென்றால், பெலொப்பொனேசிய யுத்தப் பகுதியை எழுதுவதற்கு, துஸிடிடீஸின் நூல்தான் முக்கிய ஆதாரமா யிருந்து வந்திருக்கிறது. இதை யனுசரித்தேதான் அறிஞர்கள், கிரேக்க சரித்திரத்தின் இந்தப் பகுதியை எழுதியிருக்கிறார்கள். நாமும் இவர்களைப் பின்பற்றி, கிரீ- வாழ்ந்த வரலாறு என்ற நூலில், பெலொப்பொனேசிய யுத்தத்தைப்பற்றி விவரமாக எழுதியிருக்கிறோம். அதையே இந்த நூலில் திரும்பவும் கூறினால், கூறியது கூறல் என்னும் குற்றத்திற்குட் படுத்துவார்களல்லவா வாசகர்கள் எம்மை? கிரீ- வாழ்ந்த வரலாறு என்னும் நூலில் இந்தப் பிரசங்கங்கள் இடம் பெறவில்லை. பிரசங்கங்கள் அடங்கிய இந்த நூலில், கீரி-வாழ்ந்த வரலாறு என்னும் நூலிலுள்ள விவரங்கள் காணப்படமாட்டா. எனவே இரண்டையும் சேர்த்துப் படித்தல் அவசியம். அப்பொழுதுதான் கிரீஸை ஒருவாறு அறிந்து கொள்ள முடியும். அப்படி இரண்டையும் சேர்த்துப் படிக்க முடியாதவர்கள், பிரசங்கங்கள் மட்டும் அடங்கிய இந்த நூலைப் படித்தாலும், பெலொப் பொனேசிய யுத்தத்தைப் பற்றி மேலெழுந்தவாரியாகவேனும் தெரிந்து கொள்ள வேண்டியதற்கனுகூலமாகவும், பிரசங்கங்களின் தொடர் விட்டுப் போகாமலிருக்க வேண்டியும், இடையிடையே குறிப்புக்கள் மாதிரி கொடுத்திருக்கிறோம். இவை தவிர, நூலின் ஆரம்பத்திலும் முன்னுரை என்ற தலைப்பில் கீரிஸைப்பற்றிச் சுருக்கமாக, ஆம், மிகச் சுருக்கமாகத்தான் சொல்லியிருக்கிறோம். 3. நூலின் லட்சணம் சரித்திரத்தின் தந்தையான ஹெரோடோட்ட, தன்னுடைய ஜீவிய தசையிலேயே புகழடைந்துவிட்டான். துஸிடிடீஸுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை. இறந்த பிறகுதான் இவனுடைய புகழ் எங்கும்பரவியது; நிலைத்தும் நின்றது, அறிஞருலகத்தில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்; என்றும் வாழ்ந்து கொண்டிருப்பான்; வாழ்ந்து கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், சரித்திரம் எழுதுகிறவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டுமிருப்பான். இத்தனைக்கும் இவன் எழுதியதெல்லாம், பெலொப்பொனேசிய யுத்தத்தைப் பற்றிய இந்த ஒரு நூல்தான். இதுவும் முற்றுப்பெறாத நூல். தற்கால சரித்திராசிரியர்கள், ஒரு சரித்திரத்திற்கு என்னென்ன லட்சணங்கள் இருக்கவேண்டுமென்று கூறுகிறார்களோ அவற்றில் பல இந்த நூலுக்கு இல்லை. உண்மையில் இதனை ஒரு சரித்திரமென்று சொல்ல முடியாதென்று சொன்னால் அதில் தவறு ஒன்றுமில்லை. ஆத்தென்ஸுக்கும் ப்பார்ட்டாவுக்கும் நடைபெற்ற போர் இவனுடைய சரித்திரத்திற்கு விஷயமாயமைந்திருக்கிறது. இந்த யுத்தத்தைப் பற்றி எழுதுகிறபோது, ஆத்தென்ஸின் அல்லது ப்பார்ட்டாவின் அரசியல் நிலைமை, பொருளாதார நிலைமை, சமுதாய நிலைமை இவைகளைப் பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லை இவன்; ஆத்தென்ஸில் அப்பொழுது ஏற்பட்டிருந்த கலைப்பெருக்கம், இலக்கியச் செழுமை முதலியவை களைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. பார்க்கப் போனால், கிரேக்க சரித்திரத்தில் கி.மு. 480-ம் வருஷத்திலிருந்து கி. மு. 400-ம் வருஷம் வரையில் மிகவும் உன்னதமான காலமாயிருந்து வந்திருக்கிறது. இந்த உன்னதமான காலத்தில்தான் இவன் வாழ்ந்து வந்திருக்கிறான். ஆயினும் இந்தக் காலத்தின் முத்திரை இவன் சரித்திரத்தில் விழவில்லை; விழாதபடி வெகு கண்டிப்பாகக் கவனித்து வந்திருக்கிறான். எனவே இவனுடைய நூலை யுத்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு அல்லது பெலொப்பொனேசிய யுத்தத்தைப் பற்றிய வருஷ வாரி நிகழ்ச்சிகள் என்றுதான் நியாயமாக அழைக்க வேண்டும். சரி; இப்படி யுத்த நிகழ்ச்சிகளைப் பற்றித்தான் சொல்லியிருக் கிறானே, அதையாவது, சுவாரயமாக, கேட்கிறவர்களோ படிக்கிறவர்களோ ரசிக்கும்படியாகச் சொல்லியிருக்கிறானாவென்றால், அதுவுமில்லை. மேலே, கிரேக்க சரித்திரத்தில் மிகவும் உன்னதமான காலமென்று சொன்னோமே அந்தக் காலத்தை யொட்டி வாழ்ந்த சரித்திராசிரியர் மூவர். இவர்களைத்தான் சரித்திர மும்மூர்த்திகள் என்று முதலில் கூறினோம். இந்த மூன்று பேரும், கிரேக்க சரித்திரத்தை , பகுதி பகுதியாகப் பிரித்துக் கொண்டு எழுதினார்களோ என்று சொல்லும்படியாக எழுதியிருக் கிறார்கள். இவர்களில் முதலாமவனான ஹெரோடோட்ட, கதை சொல்லுவதுபோலச் சொல்லுகிறான். சொல்லுவதையும், கேட்பவர் களோ, படிப்பவர்களோ ரசிக்கும்படி சொல்லுகிறான். அவன் நடையிலே ஒரு வித அழகும் கம்பீரமும் காணப்படுகின்றன. மூன்றாமவனான ஜெனோபன், எளிமையும் இனிமையும் கலந்த பாஷையில் சொல்லு கிறான். கேட்டாலும் படித்தாலும் சலிப்புத் தட்டாது. இரண்டாமவனான துஸிடிடீஸின் சரித்திரப் போக்கோ ஆழமுடையதாயிருக்கிறது; சுழல்கள் நிறைந்ததா யிருக்கிறது; மேலே பார்ப்பதற்குக் கலங்கலாகத் தெரிகிறது. இதனால் இதனை உற்சாகத்தோடு படிக்க முடிவதில்லை. இவனுடைய நடை சிக்கலான நடை. கருத்துக்களைத் திணித்துக் கொண்டு சொற்கள் வெளிவருகின்றன. ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு வாக்கிய மென்று சொல்லிவிடலாம் போலிருக்கிறது. சில இடங்களில், சிந்திக்க வேண்டிய சிரமத்தை நிறையக் கொடுத்துவிடுகிறான். சிந்தனை செய்வ தென்பது கடினமான காரியமன்றோ? இந்த மும்மூர்த்திகளுள் யாருக்கு முதற் பரிசு கொடுப்பதென்று ஒரு போட்டி el.த்âdhš, படைத் தலைவர் களும் அரச தந்திரிகளும், துஸிடிடீஸுக்கு முதற் பரிசு கொடுப்பார்கள்; வாழ்க்கையில் நிதானமாகவும், மரியாதையாகவும் நடந்து கொள்ளும் பெரிய மனிதர்கள், ஹெரோடோட்டஸுக்கு முதற் பரிசு கொடுப்பார்கள்; படிக்குஞ் சக்தியும், விஷயங்களைக் கேட்டுக் கொள்ளுஞ் சக்தியுமுடைய பொதுமக்கள், ஜெனோபனுக்கு முதற் பரிசு கொடுப்பார்கள்; இப்படி ஒரு மேலைநாட்டு ஆசிரியன் கூறுகிறான். இப்படியிருந்தும் இவன்-துஸிடிடீ-அறிஞர் பலருடைய நன் மதிப்பையும் பாராட்டுதலையும் பெற்று வந்திருக்கிறான். இவனது நூலிலுள்ள பிரசங்கங்களைப் படித்துத் தங்கள் பேச்சுத்திறனை வளர்த்துக் கொண்டவர் பலர். மாஸிடோனிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்றவனும், கிரேக்கர்களுக்குள் சிறந்த நாவலன் என்று பெயர் வாங்கி யவனுமான டெமாத்தனீ, 1 துஸீடிடீஸின் நூலை எட்டு தடவை தன் கையாலேயே நகல் செய்து மகிழ்ந்தான்; தன் பேச்சுத் திறனையும் அபிவிருத்தி செய்து கொண்டான். பிரான்சில் ஆண்ட முதலாவது பிரான்சி2 என்ற மன்னன், போர்க்களத்திற்குச் சென்றபோதெல்லாம் இந்த நூலை கூடவே எடுத்துச் சென்றான். இவனுடைய உத்தரவின் பேரில் தான் இது பிரெஞ்சு பாஷையில் மொழி பெயர்க்கப்பட்டு கி. பி. 1527-ம் வருஷம் வெளியாயிற்று. புனித ரோம சக்ரவர்த்திகளில் ஒருவனாகிய ஐந்தாவது சார்ல 3 என்பவன் இதனைத் திருப்பித் திருப்பிப் படித்து மகிழ்ந்தான். இதில் இவன் காட்டிய சிரத்தையின் விளைவாக, கி, பி. 1533-ம் வருஷம் ஜெர்மன் பாஷைப் பதிப்பு வெளியாயிற்று. கி. பி. 1545-ம் வருஷம் இத்தாலிய மொழியிலும் கி. பி. 1550-ம் வருஷம் ஆங்கில மொழியிலும் இந்த நூல் தோற்றமளித்தது. இவைகளுக்குப் பிறகு பல பாஷைகளில் பல மொழி பெயர்ப்புகள் வெளியாயின. ஆங்கிலப் பெரும் புலவனும் சரித்திரா சிரியனுமான லார்ட் மெக்காலே1 என்பவன். இதுகாறும் வாழ்ந்த சரித்தி ராசிரியர்களுள் துஸிடிடீதான் தலைசிறந்தவன் என்று ஓரிடத்திலும் துஸிடிடீதான் பெரிய சரித்திராசிரியன்; அவனுக்குச் சமதையாக வர யாராலும் முடியாது என்று இன்னோரிடத்திலும் குறிப்பிடுகிறான். இங்ஙனம் பலருடைய நன்மதிப்பைப் பெற்றிருப்பதற்குக் காரண மென்ன? துஸிடிடீஸை ஏன் எல்லோரும் விரும்பிப் படிக்கிறார்கள்? 4 நூலுக்கு ஏன் மதிப்பு? உலகத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அவற்றுள் ஏதோ ஒன்றைப்பற்றிச் சொல்லுகிறான் ஒருவன். சொன்னதன் விளைவாக மேதை என்ற பெயரைப் பெற்றுக்கொண்டுவிடுகிறான். அப்படியே ஒரு மேதை ஏதோ ஒரு நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்லுகிறான். அவனால் சொல்லப்பட்டதன் விளைவாக அந்த நிகழ்ச்சி பிரபலமடைந்து விடுகிறது. அதாவது, சம்பவங்களைச் சொன்னதனால் சிலர் மேதைகளா கின்றனர். அப்படியே, மேதைகளால் சொல்லப்பட்டதால் சில சம்பவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. துஸிடிடீ விஷயத்தில் இரண்டும் பொருந்தும் என்று சொல்லலாமாயினும்,- ஏன்? எல்லா மேதைகளுக்கும் அவர்களுடைய சிருஷ்டிகளுக்கும் இப்படிப் பொருத்திக் காட்டலாம். - இவனால் சொல்லப்பட்டதன் விளைவாகவே பெலொப்பொனேசிய யுத்த சம்பவம் முக்கியத்துவம் பெற்றதாகி விட்டது, பிரபலமடைந்ததாகி விட்டது என்று கூறுவதுதான் இவனைச் சரியானபடி மதிப்புப் போட்டுச் சொன்னதாகும். பெலொப்பொனேசிய யுத்தமென்பது, தற்கால திருஷ்டியில் ஒரு சிறிய சண்டையாவே தென்படும். ஒரு நகரத்தினரும் மற்றொரு நகரத்தினரும் அல்லது ஒரு தாலுகாவினரும் மற்றொரு தாலுகா வினரும் தங்களைச் சார்ந்தாரைச் சேர்த்துக் கொண்டு சண்டை செய் கின்றனர். அவ்வளவுதான். கிரேக்கர்களின் சுதந்திரமும் நாகரிகமும் அழிந்து படுவதற்கான வித்துக்கள் இந்தச் சிறிய சண்டையில் முளைத்து விட்டன வென்பது வாதவமே யாயினும், வேறெந்த ஆசிரியனாலேனும் சொல்லப்பட்டிருந்தால், இஃது, இவ்வளவு பிரபலமடைந்திருக்குமா, முக்கியத்துவம் பெற்றிருக்குமாவென்பது சந்தேகந்தான். பெலொப் பொனேசிய யுத்தத்தை ஏன் படிக்கவேண்டுமென்றால், துஸிடிடீஸைப் பார்க்க என்று கூறுகிறான் ஒரு மேலைநாட்டு ஆசிரியன்: உண்மையான வாசகம்! துஸிடிடீஸின் பெருமையைச் சுருக்கமாகப் புலப்படுத்தி விட்டான். இந்தப் பெலொப்பொனேசிய யுத்த சரித்திரத்தைச் சொல்வதற்கு முந்தி, துஸிடிடீஸுக்கு மேதை யென்ற பெயர் இருந்ததா வென்பது சந்தேகந்தான். இதற்கு முந்தியோ பிந்தியோ இவன் எந்த நூலையும் எழுதியதாகத் தெரியவில்லை. அப்படியிருக்க, இவனை ஒரு மேதை யென்று சொல்லி, இவனால் சொல்லப்பட்டதனால்தான் பெலொப் பொனேசிய யுத்தம் பிரபலமடைந்தது என்று எப்படிச் சொல்லலா மென்று வாசகர்கள் கேட்கக்கூடும். துஸிடிடீ, இந்தச் சரித்திரத்தை எழுதுவதற்கு முந்தி, மேதை யாகப் பெயரெடுக்கவில்லையாயினும், மேதையாகப் பக்குவமடைந்திருந் தானென்பது நிச்சயம். இவனுடைய மேதை, அதாவது பேரறிவு, புறத்தே பிரகாசங் கொடுத்துக் கொண்டிராமல், குடத்திலிட்ட விளக்கைப்போல் அகத்தே ஒளிவிட்டுக் கொண்டிருந்திருக்கலாம். பெலொப்பொனேசிய யுத்தம் ஏற்பட்டது. இவனுடைய பேரறிவு வெளிப்பட சந்தர்ப்பமும் ஏற்பட்டது. இதைத்தான் நாம் கொள்ள வேண்டும். உலகத்திலே சிலர், பேரறிஞர்களாகப் பிறக்கிறார்கள். சிலர், பிறந்து சிறிது காலமான பிறகு பேரறிஞர்களாக மலர்கிறார்கள். முந்திய வருக்கத்தினரின் பேரறிவு, அவர்களையும் மீறி பீறிக்கொண்டு வருகிறது; சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதில்லை; அதற்காகக் காத்துக் கொண்டிருப்பதுமில்லை; சந்தர்ப்பத்தைத் தானே உண்டு பண்ணிக் கொள்கிறது. பிந்திய வருக்கத்தினரின் பேரறிவானது, சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது; சந்தர்ப்பம் கிடைத்ததும் மலர்கிறது. முந்திய வருக்கத்தினர், சந்தர்ப்பத்தைச் சிருஷ்டித்துக் கொள்கிறார்கள்; அல்லது தூண்டிவிடுகிறார்கள். பிந்திய வருக்கத்தினரோ, சந்தர்ப்பத்தினால் மலர் கிறார்கள்; அல்லது தூண்டிவிடப்படுகிறார்கள். துஸிடிடீ, பிந்திய வருக்கத்தினன் என்று நாம் கொண்டால், அஃது இவனுக்குச் செய்த அபசாரமாகாது. துஸிடிடீ, மேதையாகப் புகழ் பெற்றிருந்த நிலையில் எழுதிய இந்த யுத்த சரித்திரமானது, உலகத்து நிரந்தர இலக்கியங்களுள் ஒன்றாக இன்றளவும் போற்றப்பட்டு வருகிறதென்றால், இவனிடம் மேதையானது, பெலொப்பொனேசிய யுத்தம் வரையில், எப்படிச் செறிந்தும், குமுறிக் கொண்டும் இருந்திருக்க வேண்டும்? பீறிக் கொண்டு வெளியே வர எவ்வளவு ஆவலுடன் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்? நாம் கூறத் தேவையில்லை, இவனுக்குக் கிடைத்தது ஒரே ஒரு சந்தர்ப்பந்தான். அதை நன்கு பயன்படுத்திக் கொண்டுவிட்டான்: சரித்திராசிரியர் பரம்பரையின் முன்னணியில் நிற்கிறான். தனது மேதகு அறிவை வெளிப்படுத்துவதற்கு, பெலொப்பொனேசிய யுத்த விஷயத்தை ஒரு கருவியாக அமைத்துக் கொண்டானே அதில் தான் துஸிடிடீஸின் சிறப்பு இருக்கிறது. தற்கால திருஷ்டியில் இது மிகச் சிறிய யுத்தமென்பது ஒருபக்கமிருக்கட்டும். பாரசீகப் பெரும் போரோடு ஒப்பு நோக்குகையிலும் இது சிறிய யுத்தந்தான். ஆயினும் தற்காலத்தில் இரண்டு பெரிய ஏகாதிபத்தியங்கள் முட்டிக் கொண்டால் எவ்வளவு ஓசை ஏற்படுமோ அவ்வளவு ஓசை ஆத்தென்ஸும் பார்ட்டாவும் மோதிக் கொண்டதால் ஏற்பட்டது. இரண்டு ஏகாதிபத்தியங்கள் சண்டையிட்டுக் கொள்வது போலவே இருந்தது. உண்மையில் ஆத்தென்ஸும் ப்பார்ட்டாவும் வெவ்வேறான அடிப்படையின் மீது தங்கள் ஏகாதிபத்தியக் கட்டடத்தைக் கட்டி அதில் வாழ்ந்தன. இவையிரண்டும் மோதிக் கொண்டதால் உண்டான ஓசை செறிந்து குமுறிக் கொண்டிருந்த துஸிடிடீஸின் பேரறிவை வெளிப்படுத்திவிட்டது. இந்த ஓசையில் கிரீஸின் நாசத்தைக் கண்டான் துஸிடிடீ. மேதையல்லவா? மற்றவர் களுக்குப் புலனாகாதனவெல்லாம் மேதையர்களுக்குச் சுலபமாகப் புலனாகுமென்று சொல்வார்கள். வெளிப் பகையைக் காட்டிலும் உட்பகைதான் ஒரு நாட்டை அழித்துவிடுமென்ற உண்மையை உணர்ந்தான் இவன். பாரசீகப் பெரும் போர், கிரீஸின் பலத்தை வெளிப் படுத்தியது; பெலொப்பொனேசிய யுத்தம் கிரீஸின் பலவீனத்தை வெளிப்படுத்தியது. இதனை, நாடிப் பரீட்சை செய்யும் ஒரு வைத்தியன் போல் நன்கு தெரிந்துகொண்டான் துஸிடிடீ. எதிர்காலத்தில் தோன்றி வளரும் ராஜ்யங்கள் அல்லது ஏகாதிபத்தியங்கள், இந்த மாதிரி உட்பகை யினால் அழிந்துபடாமலிருக்க, இந்த பெலொப்பொனேசிய யுத்தம் ஒரு பாடமாயிருக்கட்டுமென்று கருதியும், எதிர்காலத்தின் மீது கொண்ட பரிவினாலும் இந்த யுத்தத்தைப் பற்றிய சரித்திரத்தை எழுதி வைத்தான். மற்றும் , தன் காலத்தவருக்கும் , தனக்கு அடுத்த தலைமுறை யினருக்கும் இந்த யுத்தத்தைப் பற்றி பூரா விவரங்களையும் தெரிவிப்பது தனது கடமையென்று இவன் கருதியிருக்கலாம். ஏனென்றால், அவர்கள் அப்படித் தெரிந்து கொள்வார்களானால், இந்த யுத்தத்தினால் தாய்நாட்டிற்கு-கிரீஸுக்கு - ஏற்பட்டிருக்கிற பலவீனத்தை முடிந்த மட்டில் போக்க முயற்சி செய்வார்களல்லவா? தவிர, துஸிடிடீ காலத்தில், தத்துவ ஆராய்ச்சிக்கும், பேச்சுக் கலைக்கும் அதிக மதிப்பு இருந்தது. இவ்விரு துறைகளிலும் பிரபல மடைந்திருந்தனர் பலர். விரைவிலே புகழெய்துவதற்கு இவ்விரண்டும் தேய்ந்த பாதைகள் போலிருந்தன. துஸிடிடீ, விரும்பியிருந்தால், இவ்விரண்டு பாதைகளில் ஏதேனுமொன்றில் சுலபமாகச் சென்று சீக்கிரத்தில் புகழ் அடைந்திருக்கலாம்: சம காலத்தவரால் போற்றப் பட்டும் இருக்கலாம். ஆனால் அப்படிச் செல்ல இவன் விரும்ப வில்லை. புதிய பாதையொன்றில் செல்லவே துணிந்தான். அதுதான் சரித்திரப் பாதை. ஏற்கனவே இந்தப் பாதையை வகுத்துக் காட்டியிருக் கிறான் ஹெரோடோட்ட. அதனை ஒழுங்குபடுத்தி அதில் சிறிது தூரமேனும் சென்று காட்ட ஒருவன் தேவையாயிருந்தது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் பணியை மேற்கொண்டான் துஸிடிடீ. இதற்காக இவன் எவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டுமென்பதைச் சரித்திரப் பேரறிஞர்கள்தான் ஒருவாறு ஊகித்துப் பார்க்கமுடியும். தற்காலத்தில், ஒரு சரித்திர நூல் எழுதுவதற்கு என்னென்ன துணைக் கருவிகள், என்னென்ன வசதிகள் இருக்க வேண்டுமென்று கருதப்படுகிறதோ அந்தத் துணைக் கருவிகளோ, வசதிகளோ துஸிடிடீஸுக்கு இல்லை. எல்லாவற்றையும் தானே புதிதாக அமைத்துக் கொள்ள வேண்டியவனாயிருந்தான். உதாரணமாக, இவனுக்கு முன்னால், கிரீஸில் காலத்தைக் கணித்துச் சொல்ல, சகாப்தமென்றும் நூற்றாண் டென்றும், வருஷமென்றும் இப்படி ஏதோ ஒரு கணக்கு உண்டல்லவா. இந்த மாதிரியான கணக்கு, கிரேக்கர்களெல்லோருக்கும் பொதுவாயுள்ள ஒரு கணக்கு இல்லை. கிரேக்கர்கள் பஞ்சாங்கம் கணித்து அதன் பிரகாரம் அனுஷ்டித்து வந்தார்களென்பது வாதவம். ஆனால் ஒவ்வொரு ராஜ்யத்தினருக்கும் ஒவ்வொரு விதமான பஞ்சாங்கம் இருந்தது. வருஷ ஆரம்பமும் முடிவும், ராஜ்யத்திற்கு ராஜ்யம் வித்தியாசப்பட்டன. இந்த நிலையில் எல்லா கிரேக்கர்களும் சம்பந்தப்பட்ட ஒருபோரைப் பற்றி எழுதுகிற போது எல்லா கிரேக்கர்களுக்கும் தெரிகிறமாதிரி எந்தக் காலத்தை ஆதாரமாகக் கொள்வது? இதற்காக துஸிடிடீ எவ்வளவு சிந்தித்திருக்க வேண்டும்? இந்த ஒரு சிரமம் போதாதா? கடைசியில் , எல்லா கிரேக்கர்களுக்கும் புரிகிற மாதிரி, ஆத்தென், ப்பார்ட்டா போன்ற முக்கியமான ராஜ்யங்கள், எந்த வருஷக் கணக்கைக் கையாண்டனவோ அந்த வருஷக் கணக்குப் பிரகாரமும், வருஷத்தை, இயற்கை நியதியை யொட்டி கோடை காலமென்றும் குளிர்காலமென்றும் பிரித்து அந்தப் பிரிவினைப் பிரகாரமும் யுத்த நிகழ்ச்சிகளைச் சொல்வதென்று தீர்மானித்து அப்படியே அனுஷ்டிக்கிறான். காலக் கிரமப்படி விஷயங் களைச் சொல்ல வேண்டுமென்ற முறையை முதன் முதலாகக் கையாண்டவன் துஸிடிடீ என்று துணிந்து கூறலாம். கால வரிசையில் இவன் விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போவது, தொடர்ந்து செல்லும் ஓர் ஊர்வலத்தைப் பார்க்கிறமாதிரி இருக்கிறது என்னும் கருத்துப்படக் கூறுகிறான் ஓர் ஆசிரியன். மற்றும், ஒரு சரித்திராசிரியன் ஆதாரமாகக் கொள்கிற ததவேஜு களோ, சாஸனங்களோ, தொலைதூரத்தில் நடைபெறும் செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளோ இந்த விதமான சாதனங்களெதுவும் துஸிடிடீஸுக்கு இல்லை. தான் நேரில் பார்த்தும், தனது நம்பிக்கைக்குரியவர்களைப் பார்க்கச் செய்தும், விசாரிக்கச் செய்தும் யுத்த நிகழ்ச்சிகளை அறிகிறான்.; அறிந்தன வற்றைச் சேகரிக்கிறான்; சேகரித்து வரிசைப்படுத்திக் கொள்கிறான்; பிறகு எழுதுகிறான். இதற்கு எவ்வளவு உழைப்பு, எவ்வளவு பணச்செலவு ஆகியிருக்கும்? அந்தக் காலத்து நிலையில் நின்று பார்த்தால்தான் துஸிடிடீஸின் சிரமம் நமக்கு ஒருவாறு புலனாகும். சென்ற கால சரித்திரத்தை எழுதுவதைக் காட்டிலும், நிகழ்கால சரித்திரத்தை, அதிலும் எல்லோராலும் ரசிக்க முடியாத யுத்தப் பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு அதைப்பற்றி எழுதுவது மிகவும் கடினமான காரியம். துஸிடிடீ எந்த யுத்தத்தைப் பற்றி எழுதுகிறானோ அதில் நேரடியாகச் சம்மந்தப்பட்டிருக்கிறான். தவிர, இவனைப் போல் யுத்தத்தில் சம்பந்தப்பட்ட வேறு பலர் உயிரோடிருக்கிறார்கள். யுத்தத்தின் விளைவுகள், ஜனங்கள் மனத்தில் புத்தம் புதியனவா யிருக்கின்றன. இந்த நிலையில் எழுதப் படுகின்ற சரித்திரத்தில், எழுதுகிறவனுடைய விருப்பு வெறுப்புக்கள் அவனையறியாமலே புகுந்துவிடுதல் கூடும். சம்பந்தப் பட்டவர்களுடைய புகழுரைகளோ இகழுரைகளோ எழுதுகிறவனை வந்தடைதல் கூடும். ஒரு கட்சியின் நியாயத்தை எடுத்துச் சொன்னால் மற்றொரு கட்சிக்கு மனதாபம் உண்டாகும். இப்படிப் பல சங்கடங்கள் இருக்கின்றன. ஆனால் துஸிடிடீ இவைகளை யெல்லாம் கடந்த நிலையில் நின்று, யுத்த சரித்திரத்தை எழுதி யிருக்கிறான். தான் யுத்தத்தில் சம்பந்தப்படாதவன் போலவும், தூரத்தில் நடைபெறும் நிகழ்ச்சி களை ஒரு சலனப் படத்தில் காட்டுவது போலவும் எழுதியிருக்கிறான். தன் சொந்த விருப்பு வெறுப்புக்களைச் சிறிது கூடக் காட்டவில்லை; யாரைப் பற்றியும் பட்ச பாதமாகப் பேசவில்லை; எந்த நிகழ்ச்சியைப் பற்றியும் உண்மைக்கு விரோதமாகக் கூறவில்லை; உண்மை, நேர்மை என்னும் இரண்டு வரம்புகளை அமைத்துக்கொண்டு சரித்திரப் பாதையில் சென்றிருக்கிறான். நடுநிலைமையுடன் சரித்திரத்தை எழுத முடியா தென்றும், அப்படி எழுதினாலும் அது ருசிக்காதென்றும் சொல்வார்கள். இப்படிச் சொல்வது சரியல்லவென்று நிரூபித்துக் காட்டியிருக்கிறான் துஸிடிடீ. இதற்கு எத்தகைய மனப்பண்பு இருக்க வேண்டுமென்பதை நாம் சொல்லத் தேவையில்லை. இவனுடைய சரித்திரத்தைப் பிற்காலத்தில் படித்தவர்கள்; இவன் கையாண்ட முறையை வியந்து பாராட்டியிருக் கிறார்கள்; சரித்திராசிரியர்கள், இந்த முறையைப் பின்பற்றவும் முயன்றிருக்கிறார்கள். துஸிடிடீ, தன்னுடைய யுத்த சரித்திரத்திற்கு முகவுரை மாதிரி, கிரேக்கர்களின் பூர்வ சரித்திரத்தைச் சுருக்கமாக எழுதியிருக்கிறான். இதற்கு ஆதாரமாக, கட்டுக்கதைகளையோ, புராண வரலாறுகள் என்று சொல்லப்படுபவைகளையோ, கர்ணபரம்பரைச் செய்திகளையோ இவன் கொள்ளவில்லை; பூகோள சாதிரம், மனித வளர்ச்சி சாதிரம், பொருளாதார சாதிரம் இப்படிப்பட்டவைகளையே கொண்டிருக்கிறான். சுருக்கமாக, இவன் நம்பிக்கைகளைப் பின்பற்றவில்லை; அறிவையே பின்பற்றி யிருக்கிறான். இவனே கூறுகிறான் ஓரிடத்தில்:- ஒரு சரித்திராசிரியன், கவிஞர்களுடைய மிகைப்பட்ட கற்பனைகளிலோ, உண்மையைச் சொல்ல வேண்டுமென்பதைக் காட்டிலும் காது குளிரச் சொல்ல வேண்டுமென்று கதை சொல்கிறார்களே அவர்களுடைய கதைகளிலோ வழிதவறிச் சென்று விடக் கூடாது. அவர்கள் கூறியிருப்பதை அவனால் பரிசோதித்துப் பார்க்கவும் முடியாது. உண்மையாக நடந்த விஷயங்கள் கூட, காலங் கடந்த காரணத்தினால், கட்டுக்கதைகளாக மாறி விடுகின்றன. இந்த மாதிரியான விஷயங்களில் அவன், தெளிவான ஆதாரங்களின் மீது தான் ஒரு முடிவு கட்ட வேண்டும். இதனால்தான், சரித்திரத்திற்கு முதன் முதலாக இலக்கணம் வகுத்துக் கொடுத்தவன் இவன் என்று அறிஞர்கள் இவனைப் போற்றி வருகிறார்கள். துஸிடிடீஸின் ஆரம்பப் பக்கங்களி லிருந்துதான் உண்மையான சரித்திரம் ஆரம்பமாகிறது என்றான் ஒரு மேலை நாட்டு அறிஞன். உண்மை வாக்கு, மேலைநாட்டைப் பொறுத்த மட்டில். 5. நூலின் பயன் சுமார் இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் துஸிடிடீ எழுதிய சரித்திரம், இந்தக் காலத்துக்கு எந்த வகையில் பிரயோஜன முடையதாக யிருக்கிறதென்று நண்பர்கள் கேட்கலாம். கி.மு. ஐந்தாவது நூற்றாண்டு கிரீதான் ஏறக்குறைய கி.பி இருபதாவது நூற்றாண்டு ஐரோப்பாவாயிருக்கிறது. எனவே, இன்றைய ஐரோப்பாவை அறிந்து கொள்வதற்கு, முன்னைய கிரீஸை அறிந்து கொள்ளவேண்டியது அவசிய மாகிறது. பெலொப்பொனேசிய யுத்தத்திற்கு எவை எவை காரணங்களா யிருந்தனவோ அதே காரணங்கள்தான், முதல் உலக மகா யுத்தத்திற்கும் (1914-1918) இரண்டாவது உலக மகா யுத்தத்திற்கும் (1939-1945) இருந்தன. பெலொப்பொனேசிய யுத்தத்தின் போது கையாளப்பட்ட ஆக்கிரமிப்பு முறைகள், போர்த் தந்திரங்கள் முதலியனவே. இரண்டு உலக மகா யுத்தங்களின் போதும் கையாளப்பட்டன. பெலொப்பொனேசிய யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் என்னென்ன பிரச்னைகள் எழுந்தனவோ, ஜனங்களுக்கு என்னென்ன கஷ்ட, நஷ்டங்கள் உண்டாயின வோ, அந்த யுத்தத்திற்குப் பிறகு ஜனங்களின் இருதயத்திலும் ஜன சமுதாயத்தின் மீதும் என்னென்ன மாசு மறுக்கள் படிந்தனவோ இவை பலவும் இரண்டு உலகமகா யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கை யிலும், இவைகளுக்குப் பிறகும் ஏற்பட்டன. யுத்தத்தின் பின் விளைவுகள், அப்பொழுதைய கிரீஸின் தனித்துவத்தை எப்படி நாளாவட்டத்தில் அழித்துவிட்டனவோ அப்படியே இரண்டு உலக மகா யுத்தங்களின் பின் விளைவுகள் இப்பொழுதைய ஐரோப்பாவின் தனித்துவத்தை அழித்து விடுமோ என்று அறிஞர்கள் அஞ்சிக்கொண்டிருக்கின்றனர். இந்த அழிவு ஏற்படாமல் தடுக்கவேண்டியது ஒவ்வொருடைய கடமையுமாகும். ஐரோப்பாவா யிருந்தாலென்ன அதன் அழிவைத் தடுப்பது ஆசிய மகனின் கடமையல்லவா? வெளுப்பனா யிருந்தாலென்ன. அந்த வெளுப்பன், சிவப்பர்களையும் கறுப்பர்களையும் நீண்ட காலம் அடிமைப்படுத்தி வைத்திருந்ததனால்தானென்ன, அந்த வெளுப்பன் மனத்தில் படிந்திருக்கும் மாசுமறுக்களைத் துடைப்பது, சிவப்பர்களோ கறுப்பர்களோ எல்லாருடைய கடமையுமாகும். இங்ஙனம் துடைப்பதற்கு முன்னர், இந்த மாசு மறுக்கள் யாவை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். தெரிந்து கொள்ளத் துணைசெய்வது துஸிடிடீ எழுதிய சரித்திரம். காரணங்களைத் தெரிந்து கொண்டால்தானே காரியத்தில் இறங்க முடியும்? ஆத்தென்ஸும் ப்பார்ட்டாவும் பகைமை கொண்டு யுத்தத்தில் இறங்கியதற்குக் காரணங்களென்னென்ன? பரபர அச்சம், பொறாமை, வியாபாரப் போட்டி, அரசியல் ஆதிக்கப் போட்டி இவைகள் தான். இதே காரணங்களினால் தானே ஐரோப்பிய வல்லரசுகள் இரண்டு உலக யுத்தங்களிலும் இறங்கின? இந்தக் காரணங்களினால் இறங்கிய போதிலும், இந்தக் காரணங்களைச் சொல்லிக்கொண்டு இறங்கவில்லை. இது குறிப்பிடத்தக்கது. முதல் உலக மகா யுத்தத்திற்கு ஸெர்வியா சம்பவம் காரணமாயமைந்தது. 1 இரண்டாவது உலக மகா யுத்தத்திற்குப் போலந்து காரணமாயமைந்தது. பெலொப்பொனேசிய யுத்தத்தில் என்ன? கார்ஸைராவும் பொட்டிடீயாவும் காரணங்களாயமைந்தன. இவை சூட்சமமான காரணங்களா யமைந்த போதிலும், சூட்சமமாகப் பார்க்கிறபோது, இந்த யுத்தங்கள், ஜன சக்திக்கும் சர்வாதிகார சக்திக்கும், கடலாதிக்கத்திற்கும் தரையாதிக்கத்திற்கும், ஓரினத்திற்கும் மற்றோரினத் திற்கும் அடிக்கடி நடைபெறுகிற மல்யுத்தங்களாகவே இருந்தன. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று சொல்வார்கள். இந்த அநீதியை மேற்படி யுத்தங்களில் கண்டோம். இன்னும், சத்துருக்களின் கையில் அகப்படுத்த விடாமல் பொருள்களைச் சுட்டுப் பொசுக்குதல், ஊரைக் காலி செய்தல், யுத்தக் காலத்தில் ஜனங்களிடையே நோய் பரவுதல், இந்த மாதிரியான பிரச்னைகளெல்லாம் பெலொப்பொனேசிய யுத்தத்தில் காணப் பட்டது போல் இரண்டு உலக மகா யுத்தங்களிலும் காணப்பட்டன. துஸிடிடீஸின் இந்தச் சரித்திர நூல்,அரசியல்வாதிகள் ஒவ்வோரிடத்திலும் இருக்கவேண்டிய கைப்புத்தகம்; அப்படித்தான் இதுகாறும் இருந்துகொண்டு வந்திருக்கிறது. அரசியல் வாதிகளை எதிர்நோக்கும் பல பிரச்னைகள் ஆராயப்படுகின்றன இதில். ஜன ஆட்சியின் லட்சணங்களென்ன ஓர் ஏகாதிபத்தியம், தன்னுடைய ஆட்சியை நிலைத்திருக்கச் செய்யவேண்டுமானால் எப்படிக் கடுமை யான முறைகளை அனுஷ்டிக்க வேண்டியதாயிருக்கிறது, ஓர் ஏகாதி பத்தியம் என்னென்ன காரணங்களினால் தேய்ந்து மாய்கிறது. இப்படிப்பட்ட பல விஷயங்களும் பிரசங்கங்களின்2 வாயிலாக எடுத்துக் காட்டப்படுகின்றன. அறிஞர்கள் என்று யாரைப் புகழ்ந்து பேசுகிறோமோ அவர்களிடத்தில் ராஜ்ய காரியங்களை ஒப்புவித்தால் அவர்கள் அந்தக் காரியங்களைத் திறம்படச் செய்வார்களா? திறமையான பேச்சாளர்கள் திறமையாகக் காரியங்களைச் சாதிப்பார்கள்? உடனே செயல்படுத்த வேண்டிய விஷயங்களைப்பற்றி, புத்தி ஒன்றையே பிரதானமாக வுடையவர்களா அபிப்பிராயம் சொல்வார்களானால் அந்த அபிப்பிராயம் சரியானபடி இருக்குமா அந்த அபிப்பிராயப்படி நடக்க முடியுமா? ஒரு சிந்தனையாளன் கர்ம வீரனாயிருக்க முடியுமா? அதிகமாகச் சிந்தனை செய்தால் காரியத்திற்குக் குந்தகம் ஏற்படாதா? அதிகார பதவியிலிருக் கிறவர்கள் பிரஜைகளை எப்படி நடத்த வேண்டும்? அன்பாக நடத்தினால் நல்லதா? கடுமையாக நடத்தினால் நல்லதா? அதாவது அதிகார பதவியிலிருக்கிறவர்களுக்கு நல்லதா? அரசியலில் விட்டுக் கொடுப்பதன் மூலம் வெற்றி காண முடியுமா? அல்லது பிடிவாதத்துடன் கடைசி வரையில் போராடினால்தான் வெற்றி கிடைக்குமா? யுத்தம் எப்பொழுது நியாயமாகிறது? யுத்தத்தின் நடுவில், சத்துரு, சமரஸமாகப் போக விரும்பினால் அந்தச் சமரஸத்தை ஏற்றுக்கொண்டு அவனுடன் சமாதானமாகப் போவது நல்லதா? அல்லது கடைசிவரையில் போராடி அவனுடைய வீழ்ச்சியின் பேரில் வெற்றிக்கொடி நாட்டுவது நல்லதா? அரசாங்கம் கட்டாயப் படுத்தாமலேயே ஒரு ராஜ்யத்தின் பிரஜைகள் அந்த ராஜ்யத்திற்கு நன்மையைச் செய்து வருவார்கள் என்று எதிர்பார்க்கலாமா? அரசாங்க நிருவாகத்தைத் திறம்பட நடத்தக்கூடியவர்கள் யார்? அரசியலில் மதத்திற்கும் நீதிக்கும் இடமுண்டா? இன்னோரன்ன பிரச்னைகள் பல பிரசங்கங்களினூடே தோன்றி அரசியல் வாதிகளின் சிந்தனையைத் தூண்டி விடக்கூடியனவாயிருக்கின்றன. இந்த ஒரு காரணத்திற்காகவே பிரசங்கங்களை மட்டும் பொறுக்கி எடுத்து இந்த நூலாகத் தந்திருக்கிறோம். சுதந்திர இந்தியாவின் ஆயுள் வளர வளர, பேச்சுக் கலையில் பயிற்சி பெறுதலின் அவசியமும் அதிகமாகும். குடியாட்சியில், பேசிப் பேசித்தான் எந்த ஒரு பிரச்னைக்கும் முடிவு காணவேண்டியிருக்கிறது. திறமையாகப் பேசுகிறவர்கள் சுலபமாகக் காரியத்தைச் சாதித்துக்கொண்டு விடுவார்கள். ஆனால், இந்தப் பேச்சுத் திறமை நாட்டின் நன்மைக்காக, நாட்டின் ஒற்றுமைக்காக உபயோகிக்கப்பட வேண்டும். இது மிக மிக முக்கியம். தமிழ் நாட்டில் இனி எல்லா அரசியல் விவகாரங்களும் தமிழிலேயே நடைபெறுவதா யிருக்கும். எனவே தமிழர்கள். சிறப்பாக இளைஞர்கள், பேச்சுக் கலையில் பயிற்சி பெறுதல் அவசியம். அதற்கு இந்த நூல் உதவியா யிருக்குமாக! முன்னுரை கிறிது சகத்திற்குச் சுமார் ஐந்து நூற்றாண்டுகள் முந்தி,கிரீ பல ராஜ்யங்களாகப் பிரிந்திருந்தது. ஒவ்வொரு ராஜ்யமும், தற்காலத்து ஒரு சிறிய தாலுகா மாதிரியென்று சொல்லலாம். ஆயினும் ஒவ்வொன்றிலும் சுய ஆட்சியே நடைபெற்று வந்தது. இந்தச் சிறிய ராஜ்யங்களில், இப்பொழுதைய பெரிய பெரிய ராஜ்யங்களில் காணப்பெறும் அரசியல் கட்சிகளென்ன, இந்தக் கட்சிகள் அரசாங்க நிருவாகத்தைக் கைப்பற்றிக் கொள்ளச் செய்யும் சூழ்ச்சிகளென்ன, பலாத்காரப் புரட்சிகளென்ன, சட்ட வரம்புக்குட்பட்ட கிளர்ச்சிகளென்ன, இவைபோன்ற பலவும் காணப் பெற்றன. மற்றும் இந்தச் சிறிய ராஜ்யங்களிடையே தற்காலத்துப் பெரிய ராஜ்யங்களிடையே, மாறி மாறி ஏற்பட்டு வருகின்ற உறவு பகைகள் ஏற்பட்டு வந்தன. இந்த உறவு பகைகள் காலத்தில், ஒரு ராஜ்யமும் மற்றொரு ராஜ்யமும் தூதர்கள் மூலம் பேசிக் கொண்டன. இந்தத் தூதர்களிலும், நிரந்தரத் தூதர்களென்றும், குறிப்பிட்ட ஓர் அலுவலை முடித்து வருவதற்காக அனுப்பப்பெறும் விசேஷ தூதர்களென்றும் இப்படி எத்தனை தரத்தினர் இப்பொழுது சொல்லப்படுகின்றனரோ அத்தனை தரத்தினரும் இருந்தனர். இவர்கள் எந்த ராஜ்யத்திற்குத் தூதர்களாக அனுப்பப்பட்டார்களோ அந்த ராஜ்யத்திற்குச் சென்று, அந்த ராஜ்யத்தின் பிரதிநிதி சபை முன்னராகட்டும், அரசாங்க அதிகாரிகளிடத்திலாகட்டும், தங்கள் ராஜ்யத்தின் கட்சியை, கண்ணியமான முறையிலும், நிதானந் தவறாமலும், நேர்மையாகவும் எடுத்துச் சொன்னார்கள். இவர்கள் அன்று பேசியதை இன்று படித்தாலும், இவர்களுடைய அரச தந்திரத்தில், நம்மையறியாமலே ஒரு வியப்பும் மதிப்பும் உண்டாகின்றன. இவர்களிட மிருந்து , இந்த இருபதாவது நூற்றாண்டு அரச தந்திரிகள் கற்றுக்கொள்ள வேண்டிய அமிசங்கள் எவ்வளவோ இருக்கின்றனவே என்று நினைக்க வேண்டி யிருக்கிறது. அதுமட்டுமா: இப்படிப்பட்ட திறமை வாய்ந்த அரச தந்திரிகளைக் கொண்ட கிரீ எப்படித்தான் வீழ்ந்து பட்டதோ என்று இதன் மீது இரக்கமும் உண்டாகிறது. இந்த இரக்கத்தின் விளைவாக, இது வாழ்ந்த வரலாற்றையும், வீழ்ந்த காரணங்களையும் அறிந்துகொள்ளத் தொடங்குகிறோம். கி.மு. ஐந்தாவது நூற்றாண்டுத் தொடக்கம். பல வகையிலும் சிறப்புற்றிருந்த பாரசீக சாம்ராஜ்யம், பெரும்படை கொண்டு கீரிஸைத் தாக்கியது. ஒரு முறையல்ல; இரண்டு முறை இந்த இரண்டு தடவை களிலும், பிரிந்து வாழ்ந்த கிரேக்க ராஜ்யங்கள் பலவும் ஒன்று சேர்ந்து கொண்டன; தாக்குதலை எதிர்த்து நின்றன; வெற்றியும் கண்டன. அகில கிரிஸுக்கும் என்றுமில்லாத ஒரு புகழும் செல்வாக்கும் ஏற்பட்டன. ஆனால் இந்தப் புகழொளியிலே, செல்வாக்கு நிழலிலே நீண்ட காலம் வாழக் கொடுத்து வைக்கவில்லை கிரீ. . வெளிப்பகையைச் சமாளித்துவிட்ட இறுமாப்பிலே உட்பகையை வளர்த்துக் கொண்டது, பெலொப்பொனேசிய யுத்தம்!1 இந்தப் பெலொப்பொனேசிய யுத்தம். கி.மு. 431-ம் வருஷம் ஏப்ரல் மாதம் தொடங்கி கி.மு. 404-ம் வருஷம் ஏப்ரல் மாதம் வரை சரியாக இருபத்தேழு வருஷ காலம் நடைபெற்றது. இதில், கிரீஸிலுள்ள ஏறக்குறைய எல்லா ராஜ்யங்களும் எதிரெதிர்க் கட்சிகளாகப் பிரிந்து நின்றன. ஒரு கட்சிக்குத் தலைமை வகித்தது ப்பார்ட்டா ராஜ்யம்; 2 மற்றொரு கட்சிக்குத் தலைமை தாங்கியது ஆத்தென் ராஜ்யம்.3 முன்னது தரைப்படையில் வலுப்பெற்றுஇருந்தது; பின்னது கடற்படையில் சக்தி வாய்ந்ததா யிருந்தது. இரு கட்சிகளும், தரையிலும் கடலிலும் போர்கள் பல நடத்தின. இந்தப் போர்களில், அந்தந்தக் கட்சியின் படைத்தலைவர்கள் தங்கள் படையினருக்கு உற்சாகமுண்டுபண்ணவேண்டி, அவ்வப்பொழுது நிகழ்த்திய சொற்பொழிவுகள் , தளர்ந்து கிடக்கிற நரம்புகளை முறுக்கி விடுவனவாகவும், தீர உணர்ச்சியைத் தூண்டி விடுவனவாகவும், போர்த் தந்திரங்கள் பலவற்றை விளக்குவனவாகவும் இருக்கின்றன. இந்தப் பெலொப்பொனேசிய யுத்தம் ஏற்பட்டதற்குக் காரணங்கள் பல. 1914-ம் வருஷம் ஆகட் மாதம் மூண்ட முதல் உலக மகாயுத்தத் திற்குக் காரணமென்ன? அடிப்படைக் காரணங்கள் எத்தனையோ இருந்தன. ஆனால், ஸெர்வியாவில் ஆதிரிய இளவரசன் சுட்டுக் கொல்லப் பட்டதுதான். உடனே யுத்தம் மூளுவதற்கு முதற்காரணமாயமைந்தது. ஆதிரியா, ஸெர்வியா மீது படையெடுத்தது. ஆதிரியாவை ஆதரித்து ருஷ்யாவும், பிரான்சும் படை திரட்டின. இந்த நாடுகளுக்கு விரோதமாக ஜெர்மனி போர் தொடுத்தது. ஜெர்மனிக்கு விரோதமாக பிரிட்டன் போர் தொடுத்தது. இப்படி ஒன்றுக்கொன்று பரிந்துகொண்டு போகின்ற முறை யிலேயே யுத்தம் மூண்டது. ஏறக்குறைய இதே முறையில்தான் பெலொப் பொனேசியப் பெரும் போரும் மூண்டது. இந்தப் போரின் ஆரம்பத்தை வாசகர்கள் சுபலமாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே, முதல் உலக மகா யுத்த சம்பவங்களை உதாராணமாக எடுத்துக் காட்டினோம். யுத்தப் பகை நீண்ட காலமாகப் புகைந்து கொண்டிருந்த போதிலும் அந்தப் புகை, பெரு நெருப்பாகப் பற்றி எரிவதற்கு ஒரு சிறு பொறி போதுமானதாயிருக்கிறதல்லவா? பெலொப்பொனேசிய யுத்தத்தின் ஆரம்பத்திற்குள் பிரவேசிப் பதற்குமுன், வாசகர்கள், ஓரிரண்டு விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. இந்த யுத்தம் துவங்குகிற காலத்தில், ஆத்தென்ஸில், பரிபூரண ஜன ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. படைத்தலைவர் களென்று பதின்மர் இருந்தனர். பிரதம படைத் தலைவனாகவும் அரசாங்கத்தின் மேலான அதிகாரியாகவும் இருந்தவன் பெரிக்ளீ என்பவன். நாவன்மை படைத்தவன். நாவன்மைக்குச் சமதையான செயல் வன்மையும் படைத்தவன். யுத்தம் துவங்கிச் சுமார் இரண்டு வருஷ காலம் வரை, ஆத்தென்ஸின் சார்பாக, யுத்தத்தைத் திறம்பட நடத்தினான். ஆனால், யுத்தத்தின் மூன்றாவது வருஷம், பல அவதூறுகளுக்காளாகி மனமுடைந்து இறந்து போனான். ஆத்தென்ஸை, பல வகையிலும் மேலான நிலைமைக்குக் கொண்டு வந்தவன் இவன். ப்பார்ட்டாவில், ஒரு வித கலப்பு ஆட்சி நடைபெற்று வந்தது. இங்கு, இரண்டு மன்னர்கள், ஒரே சமயத்தில் ஆண்டு வந்தார்கள். இவர்களுக்குத் துணையாக ஐந்து பேர் மந்திரிகளாக இருந்தனர். இவர்களுக்கு எப்ஹோர்கள்1 என்று பெயர். இவர்களிடத்தில்தான் அரசாங்க நிருவாகம் பூராவும் இருந்தது. அரசாங்கத்திற்கு ஆலோசனை சொல்ல மூத்தோர் சபையென்றும், ஜன சபையென்றும் இரண்டு சபைகள் இருந்தன. ஆத்தென், தனக்குச் சார்பாயுள்ள ராஜ்யங்களையெல்லாம் ஒன்று கூட்டி டெலோ சமஷ்டிக் கூட்டு 1 என்ற பெயரால் ஒரு சமஷ்டி யமைத்து அதன் மூலம், தன் செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருந்தது. இந்தச் செல்வாக்குக் காரணமாக ஓரளவு அகந்தையும் கொண்டிருந்தது. தனது செல்வாக்குக்குட் படாத ராஜ்யங்கள் மீது பலாத்காரத்தைப் பிரயோகித்துத் தன் ஆதிக்கத்தைத் திணித்தது. இதனால், இதன் மீது சில ராஜ்யங்களுக்கு அதிருப்தி இருந்து கொண்டிருந்தது. இதே பிரகாரம் ப்பார்ட்டாவும் பெலொப்பொனேசிய சமஷ்டி2 என்ற பெயரால் ஒரு கூட்டு அமைப்பை அமைத்துக்கொண்டு, அதன்மூலம் தன் செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருந்தது. இதனிடத்தும் சில ராஜ்யங்களுக்கு அதிருப்தி இருந்து வந்தது. ஆக ஆத்தென்ஸின் மீது அதிருப்தி கொண்ட ராஜ்யங்கள் ப்பார்ட்டாவின் பாதுகாப்பையும் பார்ட்டாவின் மீது அதிருப்தி கொண்ட ராஜ்யங்கள் ஆத்தென்ஸின் பாதுகாப்பையும் முறையே நாடின. ஆத்தென்ஸுக்கும் ப்பார்ட்டாவுக்கும் நெடுங்காலமாகவே உள்ளூரப் பகைமையுண்டு. இந்தப் பகைமையை மறந்துவிட்டுத்தான், இரண்டு ராஜ்யங்களும், பாரசீகப் படையெடுப்பின் போது ஒன்று சேர்ந்துகொண்டன. ஒன்று சேர்ந்து பாரசீகத்தை விரட்டியடித்துவிட்ட பிறகு, இரண்டுக்கும் பழைய மாதிரி பகைமை உணர்ச்சி வெளித் தோன்றியது. இரண்டும், பல போர்களில் ஈடுபட்டு ஒன்றை யொன்று அடக்க முனைந்தன. இரண்டுக்கும், இந்தப் போர்களின் விளைவாக கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டனவென்றாலும், ஆத்தென்ஸுக்கு ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் சிறிது அதிகமாகவே இருந்தன. எனவே, ப்பார்ட்டாவுடன் சமரஸம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இதற்கு ஏற்பட்டது. கி.மு. 446-ம் வருஷம் இரண்டு ராஜ்யங்களும் முப்பது வருஷ காலம் அமுலில் இருக்கக்கூடிய ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தச் சமாதான ஒப்பந்தம் அமுலுக்கு வந்த சில வருஷ காலத்திற்குள், ஆத்தென், முந்தி, தான் அடைந்த கஷ்ட நஷ்டங்களுக் கெல்லாம் பரிகாரந் தேடிக் கொள்கின்ற முறையில், பல துறைகளிலும் தன் செல்வாக்கை அபிவிருத்தி செய்துகொண்டது. ப்பார்ட்டாவுக்கு இது பொறுக்கவில்லை. ஆத்தென்ஸின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டது: அதன் மீது போர் தொடுப்பது அவசியமென்று உணர்ந்தது. முப்பது வருஷ சமாதான ஒப்பந்தத்தின் தவணை முடிய இன்னும் பதினைந்து ஆண்டுகள் இருக்கையிலேயே, அந்த ஒப்பந்தத்தை மீறி நடந்ததாக ஒன்றின் மீது மற்றொன்று குற்றஞ் சாட்டிக் கொண்டு இரண்டு ராஜ்யங்களும் யுத்தத்தில் இறங்கிவிட்டன. இந்த யுத்தத்தினால் கிரீஸுக்கு ஏற்பட்ட சேதம் கொஞ்ச நஞ்சமல்ல. இதற்கு முந்தி, பாரசீகத்துடன் போர் நடை பெற்றது: இரண்டு தடவை கடலிலும் இரண்டு தடவை தரையிலுமாகப் போர்கள் நடைபெற்று, விரைவிலே ஒருமுடிவு ஏற்பட்டுவிட்டது. ஆனால் இந்தப் பெலொப் பொனேசிய யுத்தமோ வெகுகாலம் நடைபெற்றது. இதற்கு முந்தி இவ்வளவு நீண்ட கால யுத்தம் எதுவும் நடைபெறவில்லை; இவ்வளவு சேதத்தை உண்டு பண்ணிய யுத்தமும் நடைபெறவில்லை. இந்த யுத்தத்தில்தான், எத்தனை நகரங்கள் கைப்பற்றப்பட்டு பாழாக்கப்பட்டன! எத்தனை பேர் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டனர்! போர்க்களங்களிலா கட்டும், உள்நாட்டுக் கலகங்களிலாகட்டும் சிந்தப்பட்ட ரத்தந்தான் எவ்வளவு! இதற்கு முந்தி நிகழாத அவ்வளவு கடுமையான பூகம்பங்கள் பல உண்டாயின. அடிக்கடி சூரிய கிரகணங்கள் பல தோன்றின. காலாகாலத்தில் மழை பெய்யாத காரணத்தினால், வறட்சி உண்டாகி, பஞ்சங்கள் , நோய்கள் முதலியன ஏற்பட்டன.1 முதல் அத்தியாயம் பெலொப்பொனேசிய யுத்தம் கி.மு. 431-ம் வருஷம் தொடங்கிய தல்லவா, இதற்கு நான்கு வருஷங்கள் முந்தியே - கி. மு. 435-ம் வருஷம் இந்த யுத்தம் ஏற்படுவதற்குக் காரணமான சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ ஆரம்பித்து விட்டன. ஐயோனிய வளைகுடாவில் நுழைவாயிலில் வலப் பக்கம் எப்பிடாம்ன என்பது ஒரு சிறு நகர ராஜ்யம். கார்ஸைராவினால் தாபிக்கப் பட்டது. அதாவது கார்ஸைராவின் குடியேற்றப் பிரதேசம் இது,1 நாளடைவில் செழுமையுற்றுச் செல்வாக்கும் பெற்றது. இருந்தாலும் கட்சிச் சண்டைகள் இங்கு வர வர அதிகமாகிக் கொண்டு வந்தன. மேற் சொன்ன கி.மு. 435-ம் வருஷம், அதிகாரப் பதவியிலிருந்த ஜனக்கட்சியினர், பணக்காரக் கட்சியினரை நாட்டை விட்டு வெளியே விரட்டிவிட்டனர்.2 விரட்டப்பட்ட இவர்கள், அக்கம்பக்கத்திலுள்ள பிரதேச வாசிகளுடன் சேர்ந்து கொண்டு, எப்பிடாம்னஸுக்குத் தொந்தரவு கொடுக்கத் தொடங்கினர். இந்தத் தொந்தரவினின்று தன்னை விடுவித்துக் கொள்ளும் பொருட்டு, எப்பிடாம்ன தன் தாய் நாடாகிய கார்ஸைராவின் உதவியை நாடியது. ஆனால் கார்ஸைரா உதவி செய்ய மறுத்துவிட்டது. vdnt, v¥ãlh«dÞ, bfhǪ¤âahÉl« KiwÆ£L¡ bfh©lJ.; தனக்குப் பாதுகாப்பளிக்க வேண்டுமென்று கோரியது. ஏற்கனவே கார்ஸைராமீது மனக்கசப்பு கொண்டிருந்ததல்லவா கொரிந்த்தியா? இதுதான் சமயமென்று கருதி எப்பிடாம்னஸுக்குப் பாதுகாப்பளிக்க ஒப்புக் கொண்டது. உடனே ஒரு படை திரட்டி அங்கு அனுப்பியது. இஃதறிந்த கார்ஸைரா ஆத்திரங் கொண்டது. இருபத்தைந்து கப்பல்களடங்கிய ஒரு கடற்படையை எப்பிடாம்னஸுக்கு அனுப்பி, விரட்டப்பட்ட பணக்காரக் கட்சியினரைத் திரும்பவும் வரவழைத்துக் கொள்ள வேண்டுமென்றும், கொரிந்த்தியாவிலிருந்து வந்திருக்கிற படையையும், குடியேறி யிருக்கிற கொரிந்த்தியர்களையும் உடனே வெளி யேற்றிவிட வேண்டுமென்றும், அதனைச் சிறிது அகம்பாவத்துடன் கேட்டது. எப்பிடாம்ன, இதற்குச் சரியானபடி பதில் சொல்லவில்லை. எனவே, கார்ஸைரா, அதனை முற்றுகையிட்டது. கொரிந்த்தியாவுக்கு இது விஷயம் தெரிந்தது. எப்பிடாம் , தன்னுடைய குடியேற்றப் பிரதேசமென்றும், அங்குச் சென்று குடியேற விரும்புகிறவர்கள் செல்லலாமென்றும், அப்படிச் செல்ல விரும்பாத வர்கள். (குடியேற்றச் செலவுகளுக்காக) ஐம்பது ட்ராக்மாக்கள்1 கொடுத்தால், குடியேற்றத்தினால் உண்டாகிற நன்மைகளில் பங்கு பெறலாமென்றும், செல்கிறவர்களுக்குக் கப்பல் வசதி, படைத்துணை முதலியன அளிக்கப் படுமென்றும், பிரகடனம் செய்தது. இந்தப் பிரகடனத்திற்கிணங்க, கொரிந்த்தியர் பலர் எப்பிடாம்னஸை நோக்கிச் சென்றனர்; கூட ஒரு கடற்படையும் சென்றது. இவர்கள் கார்ஸைராவினால் வழி மறிக்கப்படா திருக்கும் பொருட்டு, தங்கள் கடற்படையின் ஒரு பகுதியைத் துணையாக அனுப்புமாறு, தனக்குச் சாதகமாயிருந்த சில ராஜ்யங்களை, கொரிந்த்தியா கேட்டுக் கொண்டது. இது தெரிந்த கார்ஸைரா, கொரிந்த்தியாவுடன் சமரஸம் பேச ஒரு தூதுகோஷ்டியை அனுப்பியது. எப்பிடாம்ன பிரச்னையை, மத்தியதர் களைக் கொண்டு தீர்க்கவேண்டுமென்றும், அந்த மத்தியதர்களின் தீர்ப்புக்கு, தான் கட்டுப்படுவதாகவும், இதற்குச் சம்மதப்படாமல், கொரிந்த்தியா யுத்தந் தொடுக்குமானால், தான், எந்த ராஜ்யங்களின் நட்பைப் பெறவேண்டாமென்று நினைக்கிறதோ அந்த ராஜ்யங்களின் நட்பை, அதாவது அந்த ராஜ்யங்களின் உதவியைப் பெற நேரிடுமென்றும், இதற்காகப் பழைய நட்புகளைக் கூட முறித்துக்கொள்ள வேண்டி யிருக்குமென்றும் இந்தத் தூதுகோஷ்டியின் மூலம் தெரிவித்தது. இதற்குக் கொரிந்த்தியா கூறியதாவது: கார்ஸைரா, தன் கடற்படையை எப்பிடாம்னலிருந்து வாப பெற்றுக்கொள்ள வேண்டும்; அப்படி வாப பெற்றுக்கொள்ளாத வரையில் சமரஸம் பேசுவதென்பது இயலாத காரியம். எப்பிடாம்ன முற்றுகையிடப் பட்டிருக்கையில், அது சம்பந்தமான பிரச்னையை மத்தியதத்திற்கு விட வேண்டுமென்று சொல்வது அர்த்தமில்லாத பேச்சு. இதற்குக் கார்ஸைரா அளித்த பதிலாவது: முதலில் கொரிந்த்தியா, எப்பிடாம்னஸிக்கு அனுப்பியிருக்கிற தன் படையை வாப பெற்றுக் கொள்ளட்டும்; உடனே தானும், அதாவது, கார்ஸைராவும், தன் படையை வாப பெற்றுக் கொண்டுவிடும். இங்ஙனம் இரு கட்சிப் படைகளும் வாபஸானதும், எப்பிடாம்ன பிரச்னையை மத்தியதத்திற்கு விட்டு, அதன் தீர்ப்புக்கு இரு கட்சியினரும் உட்பட்டு நடக்கலாம். கொரிந்த்தியா, இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொள்ளவில்லை. எழுபத்தைந்து கப்பல்கள் கொண்ட ஒரு கடற்படையை கார்ஸைரா நோக்கி அதன் மீது யுத்தந் தொடுத்தது. கார்ஸைராவும் தன் கடற்படையைத் திரட்டி இதற்கு எதிராக அனுப்பியது. இரண்டு படைகளும் சந்தித்துச் சண்டையிட்டன. கொரிந்த்தியப் படை தோல்வியுற்றது. அதன் பதினைந்து கப்பல்கள் நாசமாயின. இது தெரிந்ததும், முற்றுகையிடப்பட்டிருந்த எப்பிடாம்ன, கார்ஸைராவுக்குப் பணிந்து விட்டது. அங்குவசித்துக் கொண்டிருந்த அந்நியர்களை அடிமைகளாக விற்றுவிடவும், கொரிந்த்தியர்களை மட்டும் யுத்தக் கைதிகளாக வைத்திருக்கவும் கார்ஸைரா தீர்மானித்தது. இப்படித் தீர்மானித்ததோடல்லாமல், தான் அடைந்த வெற்றியினால் வெறி கொண்டு, கொரிந்த்தியாவுக்கு உடந்தையாயிருந்த சில பிரதேசங்களை அழிக்க முற்பட்டது. கொரிந்த்தியா இனி சும்மாயிருக்க முடியுமா? கார்ஸைரா மீது பெரும்போர் தொடுக்கவேண்டி யுத்த சந்நாகம் செய்யத் துவங்கியது. கார்ஸைரா, கொரிந்த்தியாவின் இந்தப் பலமான யுத்தத் தயாரிப்பு களைக் கண்டு அச்சங்கொண்டு விட்டது; தன்னுடைய நேச ராஜ்யம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய ராஜ்யம் எதுவுமில்லை யென்பதை நன்கு உணர்ந்தது. எனவே ஆத்தென்ஸின் நட்பை நாடத் தீர்மானித்தது; இதற்காக ஒரு தூது கோஷ்டியை ஆத்தென்ஸுக்கு அனுப்பியது. இதையறிந்த கொரிந்த்தியா ஆத்தென்ஸின் உதவி கார்ஸைராவுக்குக் கிடைக்காதபடி தடுக்க, தானும் ஒரு தூதுகோஷ்டியை ஆத்தென்ஸுக்கு அனுப்பியது. இரு கட்சியினருடைய வாதங்களையும் கேட்க, ஆத்தென்ஸில் ஜன சபை கூடியது. முதலில் கார்ஸைராவின் பிரதிநிதிகள் பேசினார்கள்:1 ஆத்தினீயர்களே! ஒரு ராஜ்யத்தினர், அயலிலுள்ள மற்றொரு ராஜ்யத்தினரிடம் வந்து உதவி கோரி நிற்பார்களானால், அவர்கள், ஒன்று, அந்த அயல் ராஜ்யத்தினருக்கு முந்தி எப்பொழுதேனும் ஒரு முக்கியமான உதவியைச் செய்திருக்கவேண்டும்; அல்லது அந்த அயல் ராஜ்யத் தினருடன் பழைய நட்புத் தொடர்பு கொண்டிருந்திருக்க வேண்டும். அந்தப் பழைய உதவிக்கும் நட்புக்கும் பிரதியாக இப்பொழுது எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று அவர்கள் உரிமையோடு கேட்கலாம். அப்படிக்கின்றி, அதாவது முந்தி எவ்வித உதவியும் செய்யாமல் பழைய நட்பும் இல்லாமல் இப்பொழுது நாங்கள் உங்கள் உதவி நாடி நிற்பதுபோல் வந்து நிற்பார்களானால், அவர்கள் குறைந்தபட்சம் ஓரிரண்டு விஷயங் களிலாவது அந்த அயல் ராஜ்யத்தினரைத் திருப்தி செய்விக்க வேண்டும். முதலாவது, தங்களுக்கு உதவி செய்தல் நல்லது. நல்லதில்லா விட்டாலும் அதனால் கெடுதல் உண்டாகாது என்று நிரூபித்துக் காட்ட வேண்டும். அடுத்தபடியாக, செய்யும் உதவிக்கு எந்நாளும் நன்றி செலுத்து வோம் என்று எடுத்துக் காட்ட வேண்டும். இந்த இரண்டொரு விஷயங் களில் திருப்தி செய்துகாட்ட முடியாவிட்டால், தங்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டதே யென்று அவர்கள் வருத்தப்படக் கூடாது. ஆனால் கார்ஸைரீயர்கள், இந்த விஷயங்களில் உங்களைத் திருப்தி செய்விக்க முடியுமென்று நம்பி உங்களுடைய உதவியை நாடுகிறார்கள்; அதற்காகவே இப்பொழுது எங்களை இங்கு அனுப்பியிருக்கிறார்கள். இதுகாறும் நாங்கள் அனுசரித்து வந்த முறைகள் உங்களைப் பொறுத்தமட்டில், இப்பொழுது நாங்கள் எந்த கோரிக்கையுடன் வந்திருக்கிறோமோ அந்தக் கோரிக்கைக்கு நேர் முரணாகவும், எங்களைப் பொறுத்தமட்டில் எங்களுக்குத் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு ஒவ்வாதனவாகவும் இருந்திருக்கின்றன வென்பதை முதலிலேயே ஒப்புக் கொண்டு விடுகிறோம். இதுவரை, நாங்கள், அண்டை அயலிலுள்ள எந்த ராஜ்யத்துடனும் சிநேகஞ் செய்து கொள்ள விரும்பாமலிருந்தோம். இப்பொழுதோ, நாங்களே வலிய மற்றொரு ராஜ்யத்துடன் சிநேகஞ் செய்து கொள்ள விரும்பி வந்திருக்கிறோம். மற்ற ராஜ்யங்களுடன் சம்பந்தப் பட்டுக் கொள்ளாமல், அந்த ராஜ்யங்களின் விவகாரங்களில் தலையிட்டுக் கொள்ளாமல் ஒதுங்கியிருப்பதே புத்திசாலித்தனம் என்று கருதியிருந்த நாங்கள், இப்பொழுது கொரிந்த்தியாவுக்கும் எங்களுக்கும் ஏற்பட்டிருக்கிற போரில், தனிப்பட்டவர்களாயிருப்பதைக் காண்கிறோம். மற்ற ராஜ்யங் களுடன் சம்பந்தப்பட்டுக் கொண்டால், அந்த ராஜ்யங்களின் விருப்பத்தைத் தழுவி நடக்க வேண்டியிருக்கும். அதனால் நமக்கு ஆபத்தே உண்டாகும், அந்த ஆபத்தில் நாம் சிக்கிக்கொள்ளக்கூடாது. ஆதலின் தனித்திருத்தலே புத்திசாலித்தனம் என்று கருதி நடந்து வந்ததெல்லாம் தவறு, எங்களைப் பலவீனப்படுத்திக் கொண்டு விட்டோம் என்பதை இப்பொழுது நாங்கள் நன்கு உணர்கிறோம். சமீபத்தில் நடைபெற்ற கடற்போரில் நாங்கள் தனிப்பட இருந்தே கொரிந்த்தியர்களைத் தோற்கடித்து விட்டோமென்பது வாதவம். ஆனால் அவர்கள் இப்பொழுது பெலொப்பொனேசியாவிலிருந்தும்ஹெல்லாஸின்1 பிற பகுதிகளிலிருந்தும் பெரும்படை திரட்டியிருக்கிறார்கள்: ஆம், எங்களைத் திருப்பித் தாக்குவதற்குத்தான். பிறருடைய உதவியின்றி நாங்கள் தனியே அவர்களை எதிர்த்துச் சமாளிக்க முடியாதென்பதை அறிந்தும், அவர்களுக்கு அடிமைப்பட்டு விடுவதனால் உண்டாகக்கூடிய பேராபத்தை உணர்ந்தும், இப்பொழுது உங்களுடைய உதவியையும் பிற ராஜ்யத்தினருடைய உதவியையும் நாட வேண்டியவர்களா யிருக்கிறோம். அரசியல் விவகாரங்களில் அயல் ராஜ்யங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமல், தனித்திருத்தலே நல்லது என்று கருதி, அதனை ஒரு கொள்கையாகவும் அனுஷ்டித்து வந்தோமே, அதற்காக அந்தத் தவறுதலுக்காக எங்களை மன்னிப்பீர்களென்று நம்புகிறோம். தனித்து வாழ்வதை ஒரு கொள்கையாக அனுஷ்டித்து வந்தது ஏதோ ஒரு கெட்ட நோக்கங்கொண்டல்ல: பிழைபட எண்ணிவிட்டதுதான் காரணம். எங்கள் கோரிக்கைக்கு இணங்கி, நீங்கள் உதவி செய்வீர் களானால், உங்களுக்குப் பல விதங்களிலும் பெருமையுண்டு. முதலாவது, நிரபராதியாயிருந்தும், பிறருடைய அநீதிக்கு இரையாகி யிருக்கும் ஒரு ராஜ்யத்திற்கு உதவி செய்தவர்களாவீர்கள். இரண்டாவது, நாங்கள் எவை எவைகளைப் பெரிதாக மதித்து இருக்கிறோமோ அவைகளை யெல்லாம், அதாவது எங்களுடைய உயிர், சுதந்திரம் முதலியவைகளை யெல்லாம் இழந்துவிடக்கூடிய நிலைமையில் இருக்கிறோம்; இந்த நிலைமையில் நீங்கள் எங்களுக்கு உதவி செய்வீர்களானால், எங்களுடைய இருதயத்தில் எந்நாளும் நன்றிக்குரியவர்களாகி வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். மூன்றாவது, ஹெல்லாஸிலேயே, உங்களுக்கடுத்தபடியாக நாங்கள் தான் அதிகமான கடற்படை பலம் படைத்தவர்கள். bršt¤âdhY©lh»w gy¤ij¡ fh£oY«., சீல வாழ்க்கையினாலேற்படுகிற பலத்தைக் காட்டிலும், எந்த ராஜ்யத்தின் கூட்டுறவினால் கிடைக்கிற பலம் பெரிதாயிருக்குமோ அந்த ராஜ்யம். இப்பொழுது தானே வலிய வந்து உங்களுடைய உதவியை நாடி நிற்கிறது. எவ்வித ஆபத்து மில்லாமல், எவ்விதப் பணச் செலவுமில்லாமல், அந்த ராஜ்யத் தினுடைய கூட்டுறவைப் பெற இப்பொழுது உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இதைக்காட்டிலும் உங்களுக்குப் பெரிய அதிருஷ்டம் வேறென்ன கிடைக்கப் போகிறது? இதைக் காட்டிலும் உங்களுடைய சத்துருக்களுக்கு நடுக்கங் கொடுக்கக்கூடியது வேறேன்ன இருக்கப்போகிறது? இந்தச் சந்தர்ப்பமறிந்து நீங்கள் எங்களுக்கு உதவி செய்வீர்களானால், உலகத்தினர் முன்னிலையில் உங்கள் மதிப்பு உயரும்; எங்களுடைய நன்றியைப் பெறுவீர்கள்: உங்களுடைய பலத்தையும் அதிகரித்துக்கொண்டவர்களாவீர்கள். உலகசரித்திரத்தைப் புரட்டிப் பார்ப்பீர்களானால், ஒரே சமயத்தில் இந்த எல்லா அனுகூலங் களையும் பெறுகிற ராஜ்யங்கள் ஒரு சிலதான் உண்டு என்பதைக் காண்பீர்கள். மற்றும், இப்பொழுது உங்கள் உதவியை நாடி வந்து நிற்கிற எங்களுக்கு, உதவியளிக்கும் நீங்கள் எவ்வளவு பாதுகாப்பையும் கண்ணியத்தையும் கொடுப்பீர்களோ அவ்வளவு பாதுகாப்பையும் கண்ணியத்தையும் நாங்கள் உங்களுக்குத் திருப்பிக் கொடுப்போம்: இதுபோன்ற சந்தர்ப்பம், உலகத்திலேயே ஒரு சில ராஜ்யங்களுக்குத் தான் கிடைத்திருக்கின்ற தென்பதையும் தெரிந்துகொள்வீர்கள். ஆனால் (உங்களிலே) சிலர் கேட்கலாம். யுத்தம் ஏற்பட்டால் தானே நாங்கள் (கார்ஸைரீயர்கள்) உபயோகப்படுவோமென்று? யுத்தம் வெகு தொலைவில் இருக்கிறதென்று உங்களிலே யாராவது நினைத்துக் கொண்டிருப்பீர்களாயின் அது தவறு. லாஸிடீமோன், 1 உங்களைப் பொறாமைக் கண்களுடன் பார்க்கிறது: உங்களுடன் யுத்தந் தொடுக்க ஆவல் கொண்டிருக்கிறது. பெலொப்பொனேசியாவில், கொரிந்த்தியா ஒரு வலுவுள்ள ராஜ்யம். அஃது உங்களுடைய சத்துரு என்பது உங்களுக்கு ஞாபகமிருக்கட்டும். முதலில், எங்களைத் தாக்கி அழித்துவிட்டு, பிறகு உங்கள் மீது போர் தொடுக்க வேண்டுமென்பதே அதன் நோக்கம். இந்த நோக்கம் நிறைவேறுவதற்காக, நாமிருவரும், அதன் மீதுள்ள பகைமை காரணமாக ஒன்று சேர்ந்து கொண்டுவிடக் கூடாதென்று பார்க்கிறது. அப்படி நாமிருவரும் ஒன்று சேர்ந்து கொண்டுவிட்டால், எங்களைமட்டும் தனியாகத் தாக்கி அடக்கி விட முடியாதேயென்றும், தன்னுடைய பலத்தை விருத்தி செய்துகொள்ள முடியாதேயென்றும் அஞ்சுகிறது அது-கொரிந்த்தியா-. இதனை முன்கூட்டியே அறிந்துகொண்ட நாங்கள், அதனுடைய இந்த எண்ணம் நிறைவேறக்கூடாதென்பதற்காக, எங்களுடைய நட்பைக் கொடுத்து உங்களுடைய நட்பைப் பெற இங்கே வந்திருக்கிறோம். எனவே, அது-கொரிந்த்தியா-நமக்கு விரோதமாக வகுக்கும் திட்டங்கள் நிறைவேறாதபடி தடுக்கிறவரை காத்துக் கொண்டிராமல்,அதற்கு விரோதமாக நாம் முன் கூட்டியே திட்டங்கள் வகுக்கவேண்டும். அது-கொரிந்த்தியா-கூறலாம், அதனுடைய குடியேற்ற நாடாகிய எங்களை, உங்களுடைய அணைப்பில் சேர்த்துக்கொள்வது நியாயமல்ல வென்று. வாதவம். ஆனால் நல்ல விதமாக நடத்தப்படும் ஒரு குடியேற்ற நாடு. தன்னுடைய தாய்நாட்டை நிச்சயமாகக் கௌரவிக்கும்; அநீதியாக நடத்தப்படுகின்ற குடியேற்ற நாடோ, தன்னுடைய தாய் நாட்டி லிருந்து பிரிந்து போகவே விரும்பும். வெளிநாடுகளில் சென்று குடியேறுகிறவர்கள், தாய்நாட்டிலுள்ளவர்களுக்கு அடிமைகளாயிருக்க வேண்டுமென்ற ஏற்பாட்டின் பேரில் சென்று குடியேறவில்லை: தாய் நாட்டிலுள்ளவர்களுக்குச் சமமானவர்கள் என்ற ஏற்பாட்டின் பேரிலேயே சென்று குடியேறுகிறார்கள். கொரிந்த்தியா, எங்களுக்கு அநீதி இழைத்து வருகிறதென்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம். எப்பிடாம்ன பிரச்னையை மத்தியதத்திற்கு விட்டு அதன் முடிவுக்குக் கட்டுப்படு கிறோமென்று நாங்கள் சொன்னோம். ஆனால் அவர்களோ-கொரிந்த்தியர் களோ-எங்கள் மீது யுத்தந் தொடுத்தார்கள். அவர்கள், எங்கள் விஷயத்தில் -அவர்களுடைய ஒரு கிளையினராகிய எங்கள் விஷயத்தில்-நடந்து கொண்டது உங்களுக்கு ஓர் எச்சரிக்கையாயிருக்கட்டும். அவர்களிடம் ஏமாந்து போகாதீர்கள். அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்காதீர்கள் சத்துருக்களுக்குச் சலுகை காட்டினால், கடைசியில், நம்மை நாமே நொந்து கொள்ள வேண்டி வரும்; சலுகை காட்டாமல் எவ்வளவுக்கெவ்வளவு கண்டிப்பாயிருக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமான பாதுகாப்புடையவர்களாய் இருப்போம். எங்களை நீங்கள் உங்கள் ஆதரவில் அணைத்துக்கொள்வது, உங்களுக்கும் லாஸிடீமோனியர்களுக்கும் ஏற்பட்டிருக்கிற (முப்பது வருஷ) ஒப்பந்தத்தை மீறிய செயலாகுமென்று சொல்லப்படுமாயின், அப்படி இல்லவே இல்லை; ஒப்பந்தத்தை மீறிய செயலாகாது. ஏனென்றால், நாங்கள் எந்தக் கட்சியிலும் சேராத நடுநிலைமை ராஜ்யம். நடுநிலைமை வகிக்கிற எந்த ஒரு கிரேக்க ராஜ்யமும், தனக்கிஷ்டமான கட்சியில் அல்லது கூட்டுறவில் சேர்ந்துகொள்ள உரிமையுண்டு என்று மேற்படி ஒப்பந்தத்தின் ஒரு ஷரத்து கூறுகிறது. கொரிந்த்தியா, தனது கடற்படைக்குத் தேவையான ஆட்களை தன்னுடைய நேசக்கட்சி ராஜ்யங்களிலிருந்து மட்டுமல்ல, ஹெல்லாஸிலுள்ள மற்ற ராஜ்யங்களி லிருந்தும் சேர்த்துக்கொண்டிருக்கிறது; ஏன், உங்கள் பிரஜைகளிலேயே பலரைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்க நாங்கள் மட்டும், மேற்படி ஒப்பந்தத்தின் பிரகாரம் எங்களுக்குள்ள உரிமையை, அதாவது நாங்கள் விரும்புகிற கட்சியில் சேர்ந்துகொள்ளலாமென்கிற உரிமையை உபயோகிக்கக் கூடாதென்றும், மற்ற ராஜ்யங்களிலிருந்தும் உதவி பெறக் கூடாதென்றும் தடுக்கப்படுவோமாயின் அப்படியே உதவி செய்ய வேண்டுமென்ற எங்கள் கோரிக்கைக்கு நீங்கள் இணங்குவது அரச நீதிக்கு விரோதமென்று நீங்கள் குற்றஞ் சாட்டப்படுவீர்களாயின், இவைகளை யெல்லாம் நாங்கள் எங்ஙனம் சகித்துக்கொண்டிருப்பது? இதற்கு மாறாக, எங்களுடைய வேண்டுகோளை மறுத்து விடுவீர்களானால், ஆபத்திலே இருக்கிற எங்களை, உங்களுடைய விரோதிகளல்லாத எங்களைப் புறக்கணித்து விடுவீர்களானால், எங்களைச் சண்டைக்கிழுக்கிற, உங்களுடைய சத்துருவான கொரிந்த்தியாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை நீங்கள் தடுக்காமலிருப்பதோடு, உங்களுடையஆதீனத்திற்குட்பட்டிருக்கிற பிரதேசங்களிலிருந்து யுத்த தளவாடங்களை வரவழைத்துக்கொள்ள அதனை அனுமதித்துக் கொண்டிருப்பீர்களானால், பெரிய குற்றத்தைச் செய்தவர்களாவீர்கள். இப்படித்தான் நாங்கள் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் நீங்கள் இப்படிச் செய்யக் கூடாது. ஒன்று, உங்களுடைய ஆதீனத்திற்குட்பட்ட பிரதேசங்களிலிருந்து, படைக்கு ஆள் சேர்க்கக் கூடாதென்று கொரிந்த்தியாவை நீங்கள் தடுக்கவேண்டும்: அல்லது, உங்களுக்கு யுக்தம் என்று தோன்றுகிற விதத்தில் எங்களுக்கு உதவி செய்யவேண்டும். முக்கியமாக இப்பொழுது நீங்கள் அனுசரிக்கவேண்டிய கொள்கை யென்னவென்றால், பகிரங்கமாக உங்களுடைய ஆதரவில் எங்களை அணைத்துக்கொள்ள வேண்டும். உடனடியாக எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். இந்தக் கொள்கையை அனுசரிப்பதனால் பல அனுகூலங்கள் உண்டு என்பதை எங்கள் பேச்சின் ஆரம்பத்திலேயே எடுத்துக் காட்டி யிருக்கிறோம். முக்கியமான அனுகூலமென்னவென்றால், எந்த ராஜ்யம் உங்களுடன் விரோதங் கொண்டிருக்கிறதோ அந்த ராஜ்யம் எங்களுடன் விரோதங் கொண்டிருக்கிறது. அந்த ராஜ்யம்-கொரிந்த்தியா-தன் சார்பிலிருந்து விலகிக் கொள்ளும் ஒரு ராஜ்யத்தை நன்றாகத் தண்டிக்கக் கூடிய சக்தியுடையதாகவும் இருக்கிறது. நான்கு பக்கமும் கடல் தொடர்பு கொண்ட ஒரு ராஜ்யத்தின் கூட்டுறவை மறுப்பதற்கும், ஒரு பக்கம் மட்டுமே கடல்தொடர்பு கொண்ட உட்பிரதேசமாயிருக்கும் ஒரு ராஜ்யத்தின் கூட்டுறவை மறுப்பதற்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் உண்டு. இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டிய முதற் காரிய மென்னவென்றால், உங்களால் முடிந்தவரைவில், உங்களைத் தவிர்த்து வேறெந்த ராஜ்மும் கப்பற் படை பலத்தில் ஓங்கவிடாதபடி தடுக்க வேண்டும். அது சாத்தியமில்லை யென்றால், இருக்கப்பட்ட ராஜ்யங் களுள் எந்த ராஜ்யத்திற்குக் கடற்படை பலம் அதிகமா யிருக்கிறதோ அந்த ராஜ்யத்தின் கூட்டுறவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் சொல்கிற இந்த வாதங்களெல்லாம் யுக்தமாகத் தானிருக்கின்றனவென்று நீங்கள் நம்பலாம். இருப்பினும் அந்த நம்பிக்கையின் மீது, மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துக் கொண்டால் எங்கே (முப்பது வருஷ) சமாதான ஒப்பந்தத்திற்குப் பங்கம் ஏற்பட்டு விடுமோவென்று அஞ்சுவீர்களானால், உங்களுடைய அச்சம் எப்படியிருந்தபோதிலும், உங்களுடைய பலம் உங்களுடைய சத்துருக்களை அச்சம் கொள்ளும்படி செய்யும். m¥go¡»‹¿., எங்களை உங்களுடைய கூட்டுறவில் சேர்த்துக்கொள்ள மறுப்பீர்களானால், எந்த நம்பிக்கையுடன் மறுக்கிறீர்களோ அந்த நம்பிக்கை எப்படி யிருந்த போதிலும், உங்களுடைய பலவீனம், உங்களுடைய சத்துருக்களுக்கு எந்த விதத்திலும் அச்சத்தை உண்டுபண்ணாது. இவைகளை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். இன்னும், இப்பொழுது நீங்கள் செய்கிற முடிவு, கார்ஸைராவை மட்டுமல்ல, ஆத்தென்ஸையும் பாதிக்கும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில், யுத்தம் வெகு வேகமாக வந்து கொண்டிருக்கிற இந்தச் சந்தர்ப்பத்தில், எந்த ராஜ்யத்தின் கூட்டுறவை ஏற்றுக் கொள்வதனால் விசேஷ பலன்களும், நிராகரிப்பதனால் விபரீத பலன்களும் முறையே உண்டாதல் கூடுமோ அந்த ராஜ்யத்தின் கூட்டுறவை, அதாவது எங்கள் ராஜ்யத்தின் கூட்டுறவை வேண்டாமென்று மறுப்பீர்களானால், ஆத்தென்ஸுக்கு நன்மை செய்தவர்களாகமாட்டீர்கள். ஏனென்றால், எங்கள் ராஜ்யம், இத்தாலிக்கும் சிஸிலி தீவுக்கும் செல்கிற கடல் மார்க்கத்தில் இருக்கிறது. இந்த இடங்களிலிருந்து பெலொப்பொனேசி யாவுக்கும் பெலொப்பொனேசியாவிலிருந்து இந்த இடங்களுக்கும் கப்பற்படைகள் போகவர வொட்டாதபடி நாங்கள் தடுத்து விடக்கூடும். இதுகாறும் நாங்கள் கூறியவற்றைக் கொண்டு, எங்களுடைய கூட்டுறவை நிராகரிப்பது தவறு என்பதை நீங்கள் நன்கு உணர்ந்திருப்பீர் களென்று நம்புகிறோம். ஹெல்லாஸிலேயே, ஆத்தென், கார்ஸைரா, கொரிந்தியா ஆகிய மூன்று ராஜ்யங்கள் தான் கப்பற்படையில் வலுவுள்ளனவாயிருக்கின்றன வென்பதை நினைவு கொள்ளுங்கள். இவற்றுள் எங்களை முதலில் கொரிந்த்தியாவுக்குப் பலிகொடுத்து விடுவீர் களானால், அதாவது எங்கள் கூட்டுறவை நிராகரித்து விடுவீர்களானால், அதன் விளைவாக எங்கள் கப்பற்படையும் கொரிந்தியக் கப்பற்படையும் ஒன்று சேர்ந்துவிடுமானால், பெலொப்பொனேசியக் கப்பற்படை முழுவதையுமே நீங்கள் எதிர்த்து நிற்க வேண்டி வரும். எங்களுடைய கூட்டுறவை ஏற்றுக்கொள்வீர்களானால், வரப்போகிற யுத்தத்தில் எங்களது கப்பற்படை உங்களுக்குப் பெரிய பக்கபலமாயிருக்கும். இதற்கு, கொரிந்த்தியாவின் பிரதிநிதிகள் பதில் கூறியதாவது:- இப்பொழுது பேசிய கார்ஸைராவின் பிரதிநிதிகள் தங்களுக்கு (நீங்கள்) ஆதரவு கொடுக்கவேண்டுமென்பதைப் பற்றி மட்டும் பேசி நிறுத்திக்கொள்ளாமல், நாங்கள் ஏதோ இவர்களுக்குத் தீங்கிழைத்து விட்டதாகவும், தாங்கள் அநியாயமான ஒரு யுத்தத்திற்குப் பலியாக வேண்டி யிருக்கிற தென்றும் பேசினார்கள். இவர்கள் கூறிய இவ்விரண்டு விஷயங்களைப் பற்றி மட்டுமே சில வார்த்தைகள் முதலில் சொல்லி விட்டு, பிறகு நாங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்ல விரும்புகிறோம். அப்பொழுதுதான், எங்களது கோரிக்கையின் அடிப்படையான காரணங்கள் உங்களுக்குப் புலனாகும்; இவர்களுடைய வேண்டுகோளை நீங்கள் ஏன் நிராகரிக்க வேண்டுமென்பதையும் தெரிந்துகொள்வீர்கள். மற்ற ராஜ்யங்களுடன் தொடர்பு கொள்ளாமல் தனித்திருத்தலே புத்திசாலித்தனமென்று கருதியே தாங்கள் அப்படி நடந்து வந்ததாக, அதாவது தனித்திருக்கும் கொள்கையை அனுசரித்து வந்ததாக இவர்கள் கூறினார்கள். இது தவறு. உண்மையில் இவர்கள், இந்தக் கொள்கையை அனுசரித்து வந்தது கெட்டநோக்கத்துடனேயே தவிர நல்ல நோக்கத் துடனல்ல. தங்களுடைய அநீதச் செயல்களுக்கு யாரும் சாட்சிகளா யிருந்து பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது, அந்தச் செயல்களுக்கு மற்றவர் களுடைய அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது வெட்கக் கேடாயிருக்கும் என்பதற்காகவே இப்படி ஒதுங்கி யிருந்திருக்கிறார்கள். இவர்களுடைய ராஜ்யம்-கார்ஸைரா-ஒரு தீவாயிருப்பதால் மற்றவர்களுடன் சம்பந்தப் படாமல் தனித்திருப்பது இவர்களுக்குச் சாத்தியமாயிருக்கிறது. இதனால், இவர்கள் மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கிறபோது, அப்படிச் செய்தது சரியா தவறா என்பதைப் பற்றி முடிவு கட்டிக் கொள்ள வேண்டியவர்கள் இவர் களாகவே இருக்கிறார்கள்: மத்தியதத்திற்கு விட வேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு உண்டாவதில்லை. ஏனென்றால் இவர்கள், அண்டை அயலிலுள்ள நாடுகளுக்கு அடிக்கடி செல்வதில்லை. ஆனால் அண்டை அயலிலுள்ள நாட்டினரோ கப்பல்கள் மூலம் செல்கிறபோது கார்ஸைராவைத் தொட்டுக்கொண்டுதான் போகவேண்டி யிருக்கிறது. எனவே, மற்றவர்களுடைய அக்கிரமச் செயல்களில் தாங்கள் பங்கு கொள்ளக் கூடாதென்பதற்காக இவர்கள் தனித்திருக்கவில்லை: அக்கிரமச் செயல்கள் செய்வது பூராவும் தங்களுடைய ஏக போக உரிமையாயிருக்க வேண்டுமென்பதற்காகவே தனித்திருக்கிறார்கள். மற்றவர்களை பலாத்காரத்திற்குட்படுத்தியோ ஏமாற்றியோ சம்பாதிக்கிற லாபங் களையெல்லாம் தாங்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும், எவ்வித சங்கோஜமுமில்லாமல் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே இங்ஙனம் ஒதுங்கி யிருந்திருக்கிறார்கள். இவர்கள், தங்களைப் பரம யோக்கியர் களென்று சொல்லிக்கொள்கிறார்களே, அப்படியிருக்கும் பட்சத்தில், மற்றவர்கள் இவர்களைப் பற்றிக் கொண்டிருக்கிற தப்பபிப் பிராயத்தைப் போக்கி விடட்டும்; அதற்காக, தங்களுடைய கட்சியை மத்தியதத்திற்கு விட்டு , அதன் தீர்ப்புப்படி , தாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியதை எடுத்துக்கொண்டு, மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டியதை கொடுத்துவிடட்டும். ஆனால் இவர்கள், எங்கள் விஷயத்திலாகட்டும் மற்றவர்கள் விஷயத்திலாகட்டும் இப்படி நடந்து கொள்ளவில்லை. எங்கள் குடியேற்ற நாட்டினராகிய இவர்கள், எங்கள் விஷயத்தில் மித்திர பேதத்துடனேயே நடந்து வந்திருக்கின்றனர்: இப்பொழுது விரோதிகளாகவும் ஆகிவிட்டனர். துன்புறுத்தப்படுவதற்காக வெளிநாட்டுக்குத் தாங்கள் அனுப்பப்பட வில்லையென்று வேறே சொல்கின்றனர். வாதவம். ஆனால் எங்களை அவமானப்படுத்துவதற்காக இவர்கள் அனுப்பப்படவில்லையே? தாய் நாட்டினருக்குரிய மரியாதையை எங்களுக்குச் செலுத்தவேண்டாமா? எங்களுடைய மற்றக் குடியேற்ற நாட்டினர் பலரும் எங்களைப் பெரிதும் கௌரவிக்கிறார்கள்: எங்களைப் பெரிதும் நேசிக்கிறார்கள். அப்படியிருக்க, குடியேற்ற நாட்டினரிற் பெரும்பாலோர் எங்களிடம் திருப்தி கொண்டிருக்க, இவர்கள் மட்டும் எங்களிடம் அதிருப்தி காட்டுகின்றனரென்றால், இவர்கள் மீது நாங்கள் யுத்தந் தொடுப்பது அநியாயமாகாது. மற்றும் நாங்கள் கோப மூட்டப்பட்ட பிறகே இவர்கள் மீது யுத்தந் தொடுத்திருக்கிறோம். கோபத்தினால் நாங்கள் இவர்களுக்கு ஏதேனும் தீங்கிழைத்திருந்த போதிலும், அந்தச் சமயத்தில் இவர்கள் எங்களுக்குச் சிறிதும் விட்டுக் கொடுத்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்: அப்பொழுது இவர்களுடைய நிதானத்தை மதித்திருப்போம். அப்படி மதிக்காமல் நடந்திருப்போமானால் எங்களுக்கு வெட்கக் கேடா யிருந்திருக்கும். இங்ஙனமெல்லாம் இவர்கள் நடந்துகொள்ளாமல், பணச்செருக்கினால் எங்களுக்குப் பல தடவை தீங்கிழைத்து வந்திருக்கிறார்கள். அதிலும் எங்களுடைய குடியேற்றப் பிரதேசமாகிய எப்பிடாம்ன, உள்நாட்டுச் சண்டைகளினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கையில், அப்பொழுது அதற்கு எவ்வித உதவியும் செய்ய முன்வராமலிருந்துவிட்டு, பின்னர் நாங்கள் அதனுடைய உதவிக்குப் போனபோது, அதனைப் பலாத்காரமாகப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்களே அஃது எங்களுக்குச் செய்யப்பட்ட பெரிய தீங்காகும். இப்பொழுது இவர்கள் சொல்கிறார்கள், முதலிலேயே இந்தப் பிரச்னையைத் தாங்கள் மத்தியதத்திற்கு விடத் தயாரா யிருந்ததாக. ஆனால், பலாத்காரத்திலிறங்குவதற்கு முன்னர், சொல்லிலும் செயலிலும் தங்களைப்போல் சத்துருக்களை நடத்தி வந்திருக்கிறவர்கள், வாதத்திற் குரிய ஒரு பிரச்னையை மத்தியதத்திற்கு விடலாமென்று சொன்னால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். அப்படிக்கின்றி, தாங்கள் ஒரு சாதகமான நிலைமையில் இருந்துகொண்டு, வாதத்திற்குரிய பிரச்சனையை மத்தியதத்திற்கு விடலாமென்று சொல்கிறவர்களுடைய வார்த்தையை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்வது? இவர்கள், இந்தக் கார்ஸைரீயர்கள், எப்பிடாம்னஸை முற்றுகை யிடுவதற்கு முந்தி, மத்தியதப் பிரச்னையைக் கிளப்பவில்லை: நாங்கள் அதனை காப்பாற்ற முன்வந்த பிறகுதான் கிளப்பினார்கள். இதை நீங்கள் கவனிக்க வேண்டும். எப்பிடாம்ன விஷயத்தில் தவறுதலாக நடந்து கொண்டதோடு இவர்கள் திருப்தியடையாமல், இப்பொழுது, தங்களுடன் சேர்ந்து கொள்ளுமாறு உங்களை அழைக்கிறார்கள். எதற்காக? நட்புக் காகவல்ல: தங்களுடைய குற்றச் செயல்களில் உங்களையும் சேர்த்துக் கொள்வதற்காக, எங்களுடன் விரோதங்கொண்டிருந்தும், தங்களை உங்களுடைய ஆதரவில் அணைத்துக் கொள்ளுமாறு கேட்க வந்திருக் கிறார்கள். இவர்கள், வலுப்பெற்றிருந்த சமயத்தில் உங்களுடைய நட்பைக் கோரி வந்திருந்தால் நன்றாயிருக்கும். அதை விடுத்து, எங்களுக்குத் தீங்கிழைத்துவிட்டு, தங்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறபொழுது, உங்களிடம் வந்திருக்கிறார்கள். இவர்களை நீங்கள் சேர்த்துக்கொள்வீர் களானால், யார்,தங்களுடைய அதிகாரச் செல்வாக்கில் உங்களுக்குப் பங்கு கொடுக்கவில்லையோ, ஆனால் நீங்கள் அளிக்கும் பாதுகாப்பில் பங்கு பெற விழைகிறார்களே அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக் கொண்டவர் களாவீர்கள். அதுமட்டுமல்ல, யாருடைய குற்றச் செயல்களில் நீங்கள் பங்குகொள்ளவில்லையோ அவர்களுடன் – கார்ஸைரீயர்களுடன் நீங்களும் சேர்ந்து எங்களுடைய நிந்தைக்காளாவீர்கள். இது சரியல்ல; உங்களுடைய நல்ல தசையில் எங்களுக்குப் பங்கு கொடுங்கள் என்று இவர்கள் கேட்பதற்கு முந்தி, தாங்கள் அதிகாரச் செல்வாக்குடனிருந்த போது இவர்கள் உங்களுக்குப் பங்கு கொடுத்திருக்க வேண்டும். இதுகாறும் நாங்கள் கூறியவற்றிலிருந்து, எங்களுடைய கட்சியின் நியாயத்தையும் எங்கள் சத்துருக்களாகிய கார்ஸைரீயர்களின் அக்கிரமங்களையும் தெரிந்துகொண்டிருப்பீர்களென்று நம்புகிறோம். இவர்களுக்கு நீங்கள் ஏன் ஆதரவு கொடுக்கக்கூடாதென்பதைப் பற்றி உங்களுக்குச் சில வார்த்தைகள் சொல்ல வேண்டியது அவசிய மாகிறது. (முப்பது வருஷ) சமாதான ஒப்பந்தத்தில் குறிப்பிடப் பெறாத எந்த ஒரு ராஜ்யமும் தனக்கிஷ்டமான கட்சியில் சேர்ந்து கொள்ளலா மென்று மேற்படி சமாதான ஒப்பந்தத்தின் ஒரு ஷரத்து கூறுகிறதென்பது வாதவம். ஆனால், ஒரு கட்சிக்குத் தீங்கிழைக்க வேண்டுமென்ற நோக்கத் துடன் மற்றொரு கட்சியுடன் எந்த ராஜ்யமும் சேர்ந்துகொள்ளலாமென்று இந்த ஷரத்து கூறவில்லை. எந்த ராஜ்யம் உபய கட்சிகளையும் விரோதித்துக் கொள்ளாமல் பாதுகாப்பைக் கோரி நிற்கிறதோ,அந்த ராஜ்யம், பாதுகாப்புக்காக ஒரு ராஜ்யத்துடன் சேர்ந்து கொள்ளலாமென்றே மேற்படி ஷரத்து கூறுகிறது. மற்றும் எந்த ராஜ்யத்தைச் சேர்த்துக் கொள்வதனால், சேர்த்துக் கொள்கிற கட்சி, சமாதானத்திற்குப் பதில் சண்டையில் இறங்க வேண்டியிருக்குமோ அந்த ராஜ்யத்தையும் சேர்த்துக் கொள்ளக் கூடாதென்றும் மேற்படி ஷரத்து கூறுகிறது. நாங்கள் இப்பொழுது சொல்வதை (ஆத்தினீயர்களாகிய) நீங்கள் கேட்காமற் போனால் உங்களுக்கு இந்தக் கதி தான் நேரும்; அதாவது நீங்கள் வலுவில் சண்டையை வரவழைத்துக் கொண்டவர்களாவீர்கள். ஏனென்றால், இந்தக் கார்ஸைரீயர்களை உங்களுடைய துணைவர்களாக ஏற்றுக் கொள்வீர்களானால் ஒப்பந்தப் பிரகாரம் எங்களுடைய கூட்டாளியாயிருக்கும் நீங்கள் இனி எங்களுடைய பகைவர்களாவீர்கள். இவர்களோடு சேர்ந்து கொண்டு நீங்கள் எங்களைத் தாக்குவீர்களானால், இவர்கள் அனுபவிக்கிற தண்டனையை நீங்களும் சேர்ந்து அனுபவிக்க வேண்டிவரும். எங்களிரண்டு பேருடனும் சேராமல் ஒதுங்கி நடுநிலைமை யுடன் இருக்கவேண்டியவர்கள் நீங்கள். அப்படி யில்லையென்றால், இவர் களுக்கு விரோதமாக எங்களுடன் சேரவேண்டியவர்கள் நீங்கள். எங்களுக்கும் உங்களுக்கும் சிநேக ஒப்பந்தம் இருக்கிறது; கார்ஸைரீயர் களுக்கும் உங்களுக்குமோ ஒருயுத்த நிறுத்த ஒப்பந்தம் கூட ஏற்பட்டது கிடையாது. ஒரு கட்சியிலிருந்து பிரிந்து ஓடி வந்துவிட்டவர்களை ஆதரிக்கிற ஒரு புதிய வழக்கத்தைக்கொண்டு வராதீர்கள். ஸாமோ தீவு வாசிகள், உங்களுக்கு விரோதமாகக் கிளம்பிய போது. 1 பெலொப் பொனேசிய ராஜ்யங்கள் பலவும் அவர்களுக்கு உதவி செய்யலாமா கூடாதா? என்கிற விஷயத்தில் அபிப்பிராய பேதங் கொண்டிருக்கையில், நாங்கள் உங்களுக்கு விரோதமாக அவர்களுக்கு ஆதரவு கொடுத்தோமா? இல்லை. அதற்கு மாறாக, ஒவ்வொரு ராஜ்யத்திற்கும், அதனுடைய ஆதரவுக்குட்பட்டவர்களைத் தண்டிக்க உரிமையுண்டு என்று பட்டவர்த்தனமாகக் கூறுகிறோம். இந்த மாதிரி கட்சி பிரிந்து வந்தவர்களை யெல்லாம் ஆதரிப்பது என்று நீங்கள் ஏற்படுத்திக்கொண்டால், உங்கள் ஆதரவிலிருக்கிற பலரும் எங்களண்டை வந்து சேரக்கூடும். அதனால் எங்களைக் காட்டிலும் உங்களுக்குத்தான் அதிகமான சங்கடம் ஏற்படும். சர்வ கிரேக்க சட்டப்படி எங்களுக்கு என்ன உரியதோ அதையே இப்பொழுது நாங்கள் உங்களிடமிருந்து கேட்கிறோம். இது தவிர, உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் சில புத்திமதிகள் சொல்ல வேண்டியவர் களாகவும், எங்களுக்குச் செலுத்தவேண்டிய நன்றியை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறவர்களாகவும் இருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் உங்களுக்குத் தீமை செய்யக்கூடிய அவ்வளவு பெரிய சத்துருக்களல்ல: நம்மிடையே அடிக்கடி போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய அவ்வளவு பெரிய நண்பர்களுமல்ல. இதனாலே உங்களுக்குச் சில புத்திமதிகளைச் சொல்லலாமென்று கருதுகிறோம்: அதே சமயத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய நன்றியையும் செலுத்துங்கள் என்று கேட்கிறோம். பாரசீகப் படையெடுப்புக்கு முந்தி, எஜினா 1 தீவு வாசிகளும் நீங்களும் சச்சரவிட்டுக்கொண்டிருந்தபோது உங்களுக்கு (கொரிந்த்தியர்களாகிய) நாங்கள் இருபது கப்பல்கள் கொடுத்து உதவினோம்.2 இந்த உதவியினாலேயே எஜினா தீவை நீங்கள் வெற்றி கொள்ள முடிந்தது. இதே பிரகாரம் ஸாமோ தீவு வாசிகள் கலகத்திற்குக் கிளம்பியபோது நாங்கள் தலையிடாமலிருந்ததனாலேயே அந்தக் கலகத்தை உங்களால் அடக்க முடிந்தது. இந்த உதவிகளை நாங்கள் எப்பொழுது செய்தோம் உங்களுக்கு? எந்தச் சமயத்தில் கிரேக்கர்களுடைய எண்ணமெல்லாம், முயற்சியெல்லாம் (பாரசீகர்களாகிய) சத்துருக்களை வெற்றிகொள்வதி லொன்றிலேயே ஒன்றி நின்றதோ, எந்தச் சமயத்தில் பழைய பகைமை யோ நட்போ மறக்கப்பட்டு, தங்களுக்கு உதவி செய்தவர்களெல்லோரும் நண்பர்களாகவும் சத்துருக்களுக்கு உதவி செய்தவர்களெல்லோரும் பகைவர்களாகவும் முறையே கருதப்பட்டார்களோ, எந்தச் சமயத்தில் போராட்டமே பெரிதெனக் கருதி சொந்த நலன்களெல்லாம் மறக்கப் பட்டிருந்தனவோ அந்தச் சமயத்தில் இந்த உதவிகளை நாங்கள் உங்களுக்குச் செய்தோம். இவைகளையெல்லாம் நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இவைகளின் உண்மைகளை, உங்கள் இளைஞர்கள், உங்கள் பெரியவர் களிடமிருந்து தெரிந்துகொள்ளட்டும். நாங்கள் உங்களுக்குச் செய்த தற்குப் பிரதியாக நீங்கள் எங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்பதைத் தீர்மானிக்கட்டும். நாங்கள் சொன்னதெல்லாம் நியாயமென்று அவர்கள் அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டாம். யுத்தம் ஏற்பட்டால் என்னவாகும் என்பதை மனத்தில் கொண்டு, நாங்கள் சொன்னதை அவர்கள் ஆலோசித்துப் பார்க்கட்டும். எது நேர்மையான வழியோ அதுதான் புத்திசாலித்தனமான வழி. எந்த யுத்தம் ஏற்படப் போவதாகப் பயப்படுத்தி உங்களைத் தவறான வழிக்கு இழுக்கப் பார்க்கிறார்களோ இந்தக் கார்ஸைரீயர்கள், அந்த யுத்தம் நிச்சயமாக ஏற்படுமென்று சொல்ல முடியாது. அப்படியிருக்க இவர்களுடைய வேண்டுகோளுக்குச் செவி கொடுப்பீர்களானால் (கொரிந்த்தியர்களாகிய) எங்களுடைய உடனடியான விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டவர்களாவீர்கள். மெகாரா 3 விஷயத்தில் நீங்கள் எங்களுக்கு விரோதமாக நடந்து கொண்டதனால் எங்களுக்கேற்பட்டிருக்கிற தப்பபிப்பிராயத்தைப் போக்கிக் கொள்ள உங்களுக்கு இப்பொழுது நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. 4 சமய மறிந்து காட்டப்படுகிற அன்புக்கு பழைய குறைகள் என்ன இருந்தாலும் அவற்றைப் போக்கடித்து விடக்கூடிய சக்தியுண்டு. கடற்படையில் ஓரளவு வலுப்பெற்றிருக்கிற ஒரு ராஜ்யத்தின் நட்பு கிடைக்கிறதேயென்று மயங்கிப் போகாதீர்கள். முதல் தரமான ராஜ்யங்களுக்கு, அதாவது வல்லரசுகளுக்குத் தீங்கிழைக்காதிருந்தால் அதுவே பெரிய பலமாகும். தற்காலிகமாக ஏற்படக்கூடிய ஒரு நன்மைக்காக நிரந்தரமா யிருக்கக் கூடிய அமைதியைப் பலிகொடுத்து விடாதீர்கள். ஒவ்வொரு ராஜ்யத்திற்கும், அதனதன் ஆதீனத்திற்குட்பட்டிருக்கிற சிற்றரசுகளைத் தண்டிக்க உரிமையுண்டு என்று நாங்கள் முந்திச் சொன்னோம். அதனை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வர எங்களுக்குச் சந்தர்ப்பம் கொடுங்கள். ஏற்கனவே நீங்கள் அதனை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்திருக் கிறீர்கள். இப்பொழுது எங்களுக்கு மட்டும் மறுக்காதீர்கள். சமயத்தில் உதவுகிறவன்தான் நண்பன், உதவாதவன் பகைவன் என்பது உங்களுக்கு ஞாபகமிருக்கட்டும். எனவே இந்தக் கார்ஸைரீயர்களை உங்களுடைய ஆதரவுக்குட்படுத்திக் கொள்ளாதீர்கள்: அவர்களுடைய குற்றச் செயல் களுக்கும் உடந்தையா யிராதீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோமோ அதன் பரிகாரம் நடவுங்கள்: உங்களுடைய நலனையும் நன்றாக யோசித்துப் பாருங்கள். இரு தரப்பு வாதங்களையும் ஆத்தீனிய ஜன சபையானது (முப்பது வருஷ) சமாதான ஒப்பந்தத்திற்குப் பங்கம் வராமல் கார்ஸைராவுக்கு உதவி செய்யத் தீர்மானித்தது: கார்ஸைரா நேரடி யாகத் தாக்கப்பட்டால் அப்பொழுது அதற்கு உதவி செய்ய வேண்டுமென்ற ஏற்பாட்டின் பேரில் அங்கு ஒரு சிறு கடற்படையை அனுப்பியது. இதற்குப் பின்னர், கார்ஸைராவுக்கும் கொரிந்த்தியாவுக்கும், ஸைபோட்டா1 என்ற சிறு தீவுக்கருகில் ஒரு கடற்போர் நடைபெற்றது. இதில் இரு தரப்புக்கும் சேதங்கள் ஏற்பட்டன. ஆனால் இரு தரப்பினரும் தங்களுக்கே வெற்றி கிடைத்ததாகச் சொல்லிக் கொண்டனர்.  இரண்டாவது அத்தியாயம் இஃது இப்படியிருக்க , வடக்கே கால்ஸிடீஸி,1 தீபகற்பத்தில் ஓரளவு செல்வாக்குப் பெற்றிருந்த கொரிந்த்தியா, எங்கு தனக்கு விரோதமாக அங்குள்ள சில்லரை ராஜ்யங்களைத் தூண்டிவிடக் கூடுமோ என்று ஆத்தென் கருதி, அதற்கு முன் ஜாக்கிரதையாகச் சில ஏற்பாடுகளைச் செய்யத் துணிந்தது. பொட்டிடீயா2 அங்கு ஒரு சிறு நகர-ராஜ்யம். இது கொரிந்த்தியாவின் குடியேற்றப் பிரதேசம். இதன் நிருவாகத்தை மேற் பார்வையிட்டுக் கொண்டிருக்க, ஒவ்வொரு வருஷமும் சில அதிகாரி களை நியமித்து இங்கு அனுப்பி வருவது கொரிந்த்தியாவின் வழக்கம். இப்படியிருந்தும் இது-பொட்டிடீயா-ஆத்தென்ஸுக்குப் பிரதி வருஷமும் கப்பஞ் செலுத்தி வந்தது. ஸைபோட்டா போருக்குப் பிறகு, நகரத்திற்குத் தெற்குப் பக்கமுள்ள மதிற்சுவர்களை இடித்து வீழ்த்தி விடுமாறும், கொரிந்த்திய அதிகாரிகளை விலக்கிவிடுமாறும் பொட்டிடீயாவுக்கு தாக்கீதுவிடுத்தது ஆத்தென். இதற்கு இணங்க மறுத்துவிட்டது பொட்டிடீயா. பொட்டிடீயாவை ஆத்தென் தாக்குமானால் அட்டிக்காவை தான் தாக்குவதாக ப்பார்ட்டா, பொட்டிடீயாவுக்கு உறுதி கொடுத் திருந்தது. இந்த உறுதியின் பேரில்தான் பொட்டிடீயா ஆத்தென் தாக்கீதுக்கு இணங்க மறுத்தது. இங்ஙனம் பொட்டிடீயா மட்டுமல்ல, கால்ஸிடீஸி தீபகற்பத்திலுள்ள மற்றச் சில்லரை ராஜ்யங்களும் ஆத்த்ன்ஸுக்கு விரோதங் காட்டின. இவைகளைக் கிளப்பி விட்டவன் மாஸிடோனியா 3 வை அப்பொழுது ஆண்டுகொண்டிருந்த பெர்டிக்கா 4 என்ற அரசன். தனக்கு விரோதங் காட்டிய இந்த ராஜ்யங்களை அடக்க ஆத்தென் ஒரு படையை வடக்கு நோக்கி அனுப்பியது. இந்தப் படையின் ஒரு பகுதி பொட்டிடீயாவை முற்றுகையிட்டது. பார்த்தது கொரிந்த்தியா. இனியும் சும்மாயிருக்கக் கூடாதென்று தீர்மானித்து, பெலொப் பொனேசியாவிலுள்ள சில ராஜ்யங்களைத் துணை சேர்த்துக்கொண்டு ப்பார்ட்டாவுக்குச் சென்று அதனிடம் முறையிட்டுக் கொண்டது. கொரிந்த்தியாவின் இந்த முறையீட்டைக் கேட்க, ப்பார்ட்ட ஜனசபை கூடியது. கொரிந்த்தியாவின் பிரதிநிதிகளும், அவர்களுக்குத் துணையாக வந்திருந்த மற்ற பெலொப்பொனேசிய ராஜ்யங்களின் பிரதிநிதிகளும் அங்கு ஆஜராயிருந்தார்கள். ஒவ்வொருவரும் ஆத்தென்ஸின் மீது குறைகூறிப் பேசினார்கள். கடைசியில் கொரிந்த்தியாவின் பிரதிநிதி கள் பின்வருமாறு பேசினார்கள்:- லாஸிடீமோனியர்களே! உங்கள் அரசியலமைப்பிலும் சமுதாய அமைப்பிலும் நீங்கள் அதிகமான நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள். இதனாலேயே, மற்ற ராஜ்யங்களைப் பற்றி நாங்கள் ஏதேனும் அபிப்பிராயம் தெரிவித்தால் அதனைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறீர்கள். இதனால் உங்களுக்கு நிதானம் ஏற்பட்டிருக்கிறதென்பது வாதவம். ஆனால் அந்நிய ராஜ்யங்களின் விஷயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பது உங்களுக்குத் தெரியவில்லை.ஆத்தென் எங்களைத் தாக்கப்போகிற தென்று அடிக்கடி உங்களுக்கு நாங்கள் எச்சரிக்கை செய்து வந்திருக் கிறோம். எங்களுடைய எச்சரிக்கையை நீங்கள் சரியாக விசாரித்துப் பாராமல், ஏதோ சுயநலத்தினால் நாங்கள் இப்படிச் செய்கிறோமென்று எங்களையே சந்தேகித்து வந்திருக்கிறீர்கள். ஆத்தினீயர்களால் நாங்கள் தாக்கப்படுவதற்கு முந்தி, உங்களுடைய சகாக்களாக இங்கு வந்திருக்கும் அனைவரையும் வரவழைத்து விஷயமென்ன என்று கேட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல், ஆத்தினீயர்களுடைய தாக்குதல் களினால் நாங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில், மெதுவாக எங்கள் முறையீடுகளைக் கேட்க முன் வந்திருக்கிறீர்கள். இப்பொழுது எங்களோடு இங்கு வந்திருக்கிற சகாக்களில் நாங்கள்தான் அதிகமான குறைகளைச் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆத்தீனியர்கள் எங்களுக்குத் தீங்கிழைத்து வருகிறார்கள். லாஸிடீமோனியர்கள் எங்களைப் புறக்கணித்து வருகிறார்கள் என்பதுதான் எங்களுடைய பெரிய குறை. ஹெல்லெனீயர்களுடைய உரிமைகளுக்குப் பங்கம் உண்டு பண்ணக்கூடிய இந்தச் செயல்கள் ரகசியமாக நடைபெற்று வந்திருக்கு மானால், உங்களுக்கு அவைகளைப் பற்றித் தெரியாமலிருக்கலாம்; அவை களைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கவேண்டியது எங்கள் கடமை. ஆனால் என்ன பார்க்கிறீர்கள்? நம்மிலே - ஹெல்லெனீயர்களிலே-பலர் அடிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள்; நமது சகாக்களிலே பலரை அடிமைப் படுத்துவதற்கான யோசனைகள் நடை பெறுகின்றன: யுத்தம் ஏற்பட்டால் அதனைச் சமாளிக்க அநேக ஆயத்தங்களும் செய்யப்படுகின்றன. இவை களைப் பற்றி நீண்ட பிரசங்கங்கள் செய்துகொண்டிருக்க வேண்டிய தில்லையென்று கருதுகிறோம். ஆத்தினீயர்கள், கார்ஸைராவை வஞ்சித்துத் தங்கள் கூட்டுறவில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்: அது மட்டுமல்ல: அதனை பலாத்காரமாக, ஆம், எங்களுக்கு விரோதமாகத் தங்கள் ஆதீனத்திற்குட்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதன் அர்த்த மென்ன? பொட்டிடீயாவை முற்றுகையிட்டிருக்கிறார்கள். இதன் கருத் தென்ன? வடக்கே திரே பிரதேசத்திலுள்ள ராஜ்யங்களின் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டுமானால், அதற்கு பொட்டிடீயா சௌகரியமான அடித்தளமா யிருக்கு மென்பதற்காகவும், கார்ஸைராவின் கப்பற்படையை பெலொப்பொனேசியர்களுக்கு உதவவிடக் கூடாதென் பதற்காகவுமே இப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதைத் தவிர, இந்தச் செயல்களுக்கு வேறென்ன அர்த்தம் கொள்ள முடியும்? இவைகளுக்கெல்லாம் பொறுப்பாளிகள் நீங்கள்தான். பாரசீக யுத்தத்திற்குப் பிறகு நீங்கள்தான் அவர்களுக்கு-ஆத்தினீயர்களுக்கு-அவர்களுடைய நகரத்தைப் பந்தோபது செய்துகொள்ளவும், நீண்ட சுவர்கள் எழுப்பிக் கொள்ளவும் இடங் கொடுத்தீர்கள். மற்றும், அவர்கள் எந்த ராஜ்யங்களின் சுதந்திரத்தைப் பறிமுதல் செய்தார்களோ அந்த ராஜ்ஜியங் களின் சுதந்திரத்தைத் திருப்பி அவைகளுக்கு நீங்கள் வாங்கிக் கொடாமல் நீங்களே சமயம் வந்த போது அந்த ராஜ்யங்களை உங்களுக்கு அடிமைப் படுத்திக் கொண்டுவிட்டீர்கள். அது மட்டுமல்ல: உங்களுடைய கூட்டுறவில் வந்து சேர்ந்த ராஜ்யங்களையும் நீங்கள் அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். யார், ஒரு ராஜ்யத்தை அடிமைப்படுத்துகிற காரியத்தைச் செய்கிறார்களோ அவர்கள் அந்தக் காரியத்திற்கு நிஜமான காரணர்களல்ல: யார், அடிமைப்படுத்தப்படுவதைத் தடுக்குஞ் சக்தி யிருந்தும், தடுக்காமல் அதற்கு இடங்கொடுக்கிறார்களோ அவர்கள் தான் நிஜமான காரணர்கள். - அவர்கள் - அந்த நிஜமான காரணர்கள் (அதாவது லாஸிடீமோனியர்கள்) ஹெல்லாஸையே அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்து புகழ் பெறவேண்டுமென்று சொல்லிக்கொண்டே இப்படிச் செய்வார்களானால் அவர்களைத்தான் அடிமைப்படுத்துகிற குற்றம் அதிகமாகச் சாரும். நாமெல்லோரும் ஓரிடத்தில் கூடிப் பேசுவதென்பது சுலபமான காரியமல்ல. ஆயினும் இப்பொழுது, ஆம், சிறிது தாமதமாகத்தான் இங்கு ஒன்றுகூடி யிருக்கிறோம். இப்பொழுது கூட, நாம் கூடியிருப்பதன் நோக்கத்தை நம்மிலே யாரும் சரியாகப் புரிந்துகொள்ள வில்லையென்று தோன்றுகிறது. இனியும் நாம், நமக்குத் தீங்கிழைக்கப்பட்டது வாதவமா இல்லையா வென்பதைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கக் கூடாது: தற்காப்புக்கான வழிகளென்ன வென்பதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும். நாம் இது காறும் எவ்வித முடிவுக்கும் வராமலிருப்பதை ஆதாரமாகக் கொண்டு, சத்துருக்கள்-ஆத்தினீயர்கள்-நம்மைத் தாக்கப் போவதாகச் சொல்லிக்கொண்டிராமல் தாக்கவே ஆரம்பித்திருக்கிறார்கள். ஆத்தினீயர்களின் ஆக்கிரமிப்பு எந்த வழியில் செல்கிறதென்பது நம்மெல்லோருக்கும் நன்கு தெரியும். கபடமாக அவர்கள், தங்கள் ஆக்கிரமிப்பு முயற்சிகளை நிறைவேற்றிக் கொள்கிறார்களென்பதை நாம் அறிவோம். உங்களுக்கு-லாஸிடீமோனியர்களுக்கு-எதையும் நேரடியாகப் பார்த்தால் தான் தெரியுமென்பதை ஆதாரமாக வைத்துக் கொண்டு அவர்கள், எல்லாக் காரியங்களையும் ரகசியமாகவே செய்கிறார்கள்: அப்படிச் செய்வதில் அதிகமான நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய ஆக்கிரமிப்பு முயற்சிகளை நீங்கள் பார்த்து விட்டீர்கள், ஆனால் தலையிடாமலிருக்கிறீர்கள் என்று அவர்கள் தெரிந்து கொண்டு விட்டார்களானால், தங்களுடைய முயற்சிகளை முன்னைக் காட்டிலும் பலமாகச் செய்வார்கள். ஹெல்லெனீயர்களில் லாஸிடீமோனியர்களாகிய நீங்கள் மட்டுந்தான் இப்படி ஒன்றுஞ் செய்யாமல் சும்மாயிருக்கிறீர்கள்; ஆனால் ஏதோ செய்யப்போவதாகக் காட்டிக் கொள்கிறீர்கள். நீங்கள் மட்டுந்தான் சத்துருவின் எதிர்ப்புச் சக்தியை முளையிலேயே கிள்ளியெறியாமல் அஃது இரண்டு மடங்காக அதிகரிக்கிறவரை காத்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எதிலும் நிதானமாக நடந்துகொள்கிறவர்களென்றும் அதனால் உங்களை நம்பியிருக்கலாமென்றும் உலகத்தினர் கூறுகின்றனர். உலகத்தினர் கூறுகின்றனரே தவிர உண்மையில் நீங்கள் இப்படியில்லை. எங்களுக்குத் தெரியும். பாரசீகர்கள் வெகு தொலைவிலிருந்து பெலொப் பொனேசியாவுக்கு வந்து நம்மைத் தாக்கப் போதிய அவகாசம் பெற்றிருந்தார்களென்று; ஆனால் அவர்களை எதிர்நோக்கிச் சென்று தாக்கக்கூடிய படைபலம் உங்களிடமில்லாமலிருந்ததென்று. பாரசீகர்கள், வெகு தொலைவிலிருந்து வந்த சத்துருக்கள். ஆத்தினீயர்களோ சமீபத்தி லிருக்கிற சத்துருக்கள். ஆயினும் அவர்கள் விஷயத்தில் அலட்சியமா யிருக்கிறீர்கள். அவர்கள் விஷயத்தில், எதிர்சென்று தாக்கும் முறையைக் கையாளாமல் தற்காத்துக்கொள்ளும் முறையைக் கையாள்கிறீர்கள். அவர்கள் நன்றாக வலுக்கிறவரை, பார்ப்போம், பார்ப்போம் என்று அவர்களைத் தாக்குவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறீர்கள். பாரசீகர்கள் நம்மிடம் தோல்வியுற்றார்களென்று சொன்னால் அதற்கு அந்தப் பாரசீகர்களே காரணமென்று சொல்லவேண்டும். அது போல, எமது இன்றைய சத்துருக்களாகிய ஆத்தினீயர்கள் எம்மை மேலும் மேலும் தாக்கி அழிக்க முடியவில்லை யென்றால், அதற்கு, அவர்களுடைய தவறான போர் முறைகளே காரணமன்றி நீங்கள் அளித்து வருகின்ற பாதுகாப்பன்று. உங்களுடைய பாதுகாப்பை எதிர்பார்த்துப் பலர், தங்களை யுத்தத்திற்குத் தயார்ப்படுத்திக் கொள்ளாமலிருந்திருக்கிறார்கள்; அதனால் நாசமடைந்துமிருக்கிறார்கள். ஏதோ உங்கள்மீது விரோத எண்ணங்கொண்டு இப்படியெல்லாம் கண்டித்துப் பேசுகிறோமென்று நினைக்காதீர்கள். தவறிப் போகிற நண்பர் களைக் கண்டிப்பதும், தீங்கிழைத்த சத்துருக்களைக் குற்றஞ் சாட்டுவது சகஜம். மற்றும், அக்கம் பக்கத்திலுள்ளவர்களின் குற்றங்குறைகளை எடுத்துக்காட்ட எங்களுக்கு உரிமையுண்டென்று கருதுகிறோம். சிறப்பாக இங்கே ஆத்தினீயர்களுக்கும் லாஸிடீமோனியர்களாகிய உங்களுக்கு முள்ள வேறுபாடுகளை எடுத்துக்காட்ட விரும்புகிறோம் : ஏன் எடுத்துக் காட்ட விரும்புகிறோமென்றால், எப்படிப்பட்ட சத்துருக்களை – ஆத்தினீயர் களை நீங்கள் எதிர்த்து நிற்கவேண்டி வருமென்பதைப் பற்றி உங்களுக்குச் சிறிது கூட எண்ணங் கிடையாது. உங்களிலிருந்து எந்தெந்த வகையில் அவர்கள் மாறுபட்டவர்களென்பதைப் பற்றியும் நீங்கள் அறிந்துகொள்ள வில்லை. இவைகளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக இருவருக்குமுள்ள வேறுபாடுகள் சிலவற்றை எடுத்துக்காட்ட விரும்புகிறோம். அவர்கள் - ஆத்தினீயர்கள் - புதிது புதிதாகக் கண்டுபிடிப்பதில் ஆர்வ முள்ளவர்கள்; எந்தக் காரியத்தையும் சீக்கிரமாகச் சிந்தித்துச் சீக்கிரமாக அனுஷ்டானத்திற்குக் கொண்டுவருவதில் வல்லவர்கள். நீங்களோ-லாஸிடீமோனியர்களோ-இருப்பதை இருத்தி வைத்துக் கொண்டிருப்பதில் திறமைசாலிகள்: கண்டு பிடிக்கிற சக்தியென்பது அடியோடு உங்களுக்குக் கிடையாது; ஏதேனும் செயலாற்றும்படியான நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அதைப் பூர்த்தியாகச் செய்து முடிக்காமல் ஓரளவு செய்துவிட்டுத் திருப்தியடைந்து விடுகிறீர்கள். இன்னும் அவர்கள், தங்கள் சக்திக்கு மீறின துணிச்சலுடையவர்களாகவும், நிதானத்தைக் கடந்த அஞ்சாமை யுடையவர்களாகவும் ஆபத்திலே நம்பிக்கையுடையவர்களாகவும் இருக்கிறார்கள். நீங்களோ, சக்திக்குக் குறைவான முயற்சியுடையவர் களாகவும், சரியென்று படுகிற காரியத்தில்கூட அவநம்பிக்கை யுடையவர் களாகவும், ஆபத்து ஏற்பட்டுவிட்டால் அதிலிருந்து விடுதலையே யடைய முடியாது என்ற எண்ணமுடையவர்களாகவும் இருக்கிறீர்கள். மற்றும், அவர்கள் எந்தக் காரியத்தை எடுத்தாலும் துரிதமாகச் செய்து முடிக்கின்றார்கள். நீங்களோ எந்தக் காரியத்தையும் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறீர்கள். தவிர அவர்கள் தங்கள் ராஜ்யத்தை விட்டு வெளியிடங்களுக்குச் செல்வதில் ஆர்வமுடையவர்களா யிருக்கிறார்கள்; அப்படி வெளியிடங்களுக்குச் சென்று புதிய புதிய பிரதேசங்களைத் தங்கள் ராஜ்யத்துடன் சேர்த்து அதன் எல்லையை விதரிக்க வேண்டுமென்ற நோக்கமுடையவர்களாயிருக்கிறார்கள். நீங்களோ, உங்கள் ராஜ்யத்தை விட்டு வெளிக்கிளம்பவே மாட்டோமென்கிறீர்கள்: அப்படி வெளிக்கிளம்பிச் சென்றால், எங்கே இருப்பது போய்விடுமோ என்று அஞ்சுகிறீர்கள். அவர்கள், ஒரு வெற்றி ஏற்பட்டால் அதனைத் துரிதமாகத் தொடர்ந்து செல்கிறார்கள்; அதற்கு மாறாக ஒரு தோல்வி ஏற்பட்டால் அதிலிருந்து மெது மெதுவாகத்தான் திரும்புகிறார்கள். இன்னும் அவர்கள், தங்கள் உடலை ராஜ்யத்தின் நலனுக்காகவும், தங்கள் அறிவை ராஜ்யத்திற்குச் சேவை செய்வதிலும் உபயோகப்படுத்துகிறார்கள். போட்டபடி ஒரு திட்டம் நிறைவேறாவிட்டால், நஷ்டமென்றும், அப்படியே போட்ட திட்டம் நிறை வேறிவிட்டால், இனி நிறைவேற்ற வேண்டிய திட்டங்களைக் காட்டிலும் இஃது-இப்பொழுது நிறைவேறியது-குறைவென்றும் முறையே அவர்கள் கருதுகிறார்கள். எடுத்த ஒரு காரியம் நிறைவேறா விட்டால் அதற்காக அவர்கள் சோர்வு கொண்டு விடுவதில்லை: புதிய நம்பிக்கையே கொள்கிறார்கள். அவர்கள் ஒரு திட்டம் வகுப்பதிலும் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதிலும் அதிக சுறுசுறுப்புக் காட்டுகிறார்கள். அவர்கள், வாழ்நாள் பூராவும் துன்பத்தையும் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் உழைக்கிறார்கள்: சந்தோஷமாக இருக்க அவர்கள் சந்தர்ப்பமே பெறுவதில்லை; புதிது புதிதாக என்ன சேகரிக்கலாமென்பதில்தான் அவர் களுடைய நாட்டமெல்லாம் செல்கிறது. எந்தச் சமயத்தில் காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமோ அந்தச் சமயத்தில் அந்தக் காரியத்தைச் செய்து முடிப்பதில் தான் அவர்கள் திருவிழா கொண்டாடுகிறார்கள். எப்பொழுதும் ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்க வேண்டும், ஒரு வேலையும் செய்யாமல் நிம்மதியாயிருப்ப தென்பதைப் போன்ற துரதிருஷ்டம் வேறொன்றுமில்லை யென்பது அவர்கள் கொண்டிருக்கிற கருத்து. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், அவர்கள், தாங்களும் நிம்மதியாயிராமல் மற்றவர்களுக்கும் நிம்மதி கொடாமலிருப்பதற்காகவே இவ்வுலகத்தில் பிறந்திருக்கிறார்கள். இத்தன்மையவர்கள் உங்களுடைய சத்துருக்களாகிய ஆத்தினீயர்கள். இன்னமும் நீங்கள் தாமதங் காட்டலாமா? யார் அநீதிக்குப் பணிந்து போகாமல் அதனை எதிர்த்து நிற்கும் விஷயத்தில் தங்கள் சக்தியை நியாயமாகவும் ஜாக்கிரதையாகவும் உபயோகிக்கிறார்களோ அவர் களிடத்தில் தான் நிம்மதியென்பது நீடித்து நிற்கும். நீங்கள் நினைக் கிறீர்கள், நாம் மற்றவர்களுக்குத் தீங்கிழைக்காமலிருந்துவிட்டால், மற்றவர்கள் நமக்குத் தீங்கிழைக்காமலிருப்பதை நாம் ஏன் தடுத்துக் கொண்டிருக்க வேண்டுமென்று. இது தவறு. இதில் நீங்கள் வெற்றி யடையவே முடியாது. நாங்கள் இப்பொழுது எடுத்துக் காட்டினபடி, ஆத்தினீயர்களோடு ஒப்பிடுகையில், உங்களுடைய பழக்கவழக்கங்கள், கொள்கைகள் யாவும் காலத்திற்கொவ்வாதவை. கலையில் எப்படி மாற்றங்கள் நிகழ்கின்றனவோ அப்படியே அரசியலிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன; அபிவிருத்திகள் ஏற்படுகின்றன. அண்டைய அயலினருடைய தொந்தரவுகளில்லாமல் அமைதியான வாழ்க்கையை நடத்துகின்ற ஒரு ராஜ்யத்தினர், நீண்டகாலப் பழக்க வழக்கங்களை அப்படியே அனுசரித்து வருவார்களானால் அது நல்லதுதான். ஆனால், அண்டை அயலினரால் எந்தச் சமயத்திலும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படக் கூடுமென்ற நிலையிலுள்ளவர்கள், தங்களுடைய நடைமுறை களை காலத்திற்கேற்றவாறு, சந்தர்ப்பத்திற்குத் தகுந்தவாறு மாற்றிக் கொள்ள வேண்டும். இங்ஙனம் காலத்திற்கேற்றவாறும், சந்தர்ப்பத்திற்குத் தகுந்தவாறும் தன் முறைகளை மாற்றிக்கொண்டும் அபிவிருத்தி செய்து கொண்டும் போவதினால்தான் ஆத்தென் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இனியாவது பொறுத்துப் பார்ப்போம் என்ற உங்கள் கொள்கைக்கு முற்றுப்புள்ளி யிடுங்கள். இப்பொழுது, உங்களுடன் நேசம் பூண்டிருக்கிற உங்கள் சகாக்களுக்கு, சிறப்பாக பொட்டிடீயாவுக்கு நீங்கள் வாக்குக் கொடுத்த படி உதவி செய்ய முன்வாருங்கள். அட்டிக்காவின் மீது படை யெடுங்கள். உங்களுடைய சகாக்களை, அவர்களுடைய பரம சத்துருக் களுக்குப் பலிகொடுத்து விடாதீர்கள்; பலி கொடுத்து எங்களிற் பலரையும், வேறு கூட்டுறவை நாடிச் செல்லும்படி விட்டு விடாதீர்கள். அப்படி நாங்கள் செய்வோமானால், எங்கள் பிரதிக்ஞைகளை ஏற்றுக்கொண்ட தெய்வங்களோ, அவைகளுக்குச் சாட்சிகளாயிருந்த, மனிதர்களோ எங்களைக் கண்டிக்க மாட்டார்களென்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும். பழைய கூட்டுறவை முறித்துக்கொண்டு புதிய கூட்டுறவை நாடு கிறவர்கள், கூட்டுறவு ஒப்பந்தத்தை மீறி நடந்ததாகச் சொல்லப்படுவார் களானால், அதற்கு அவர்கள் பொறுப்பாளிகளல்ல: அவர்களுக்குத் தக்க சமயத்தில் உதவி செய்ய முன் வராதவர்கள்தான் பொறுப்பாளிகள். இப்பொழுது ஏதேனும் நடவடிக்கை எடுத்துக் கொள்வீர்களானால் உங்களுடன் நாங்கள் இசைந்திருப்போம்; உங்களை விட்டுப் பிரிந்து செல்லமாட்டோம். அப்படிப் பிரிந்து செல்வது எங்கள் சுபாவத்திற்கு விரோதம். உங்களைப் போன்ற சகா எங்களுக்குக் கிடைப்பது அரிது. ஆதலின் சரியான முடிவுக்குச் சீக்கிரம் வாருங்கள். உங்களுடைய முன்னோர்களின் கீழ் பெலொப்பொனேசியா அதிக கௌரவமுடையதா யிருந்தது; உங்களுடைய காலத்தில், அந்த கௌரவத்தைப் போக் கடித்துக்கொண்டு விடாதீர்கள். இங்ஙனம் கொரிந்த்தியப் பிரதிநிதிகள்,தங்கள் கட்சியை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தபோது, ஜன சபையில், வேறோர் அலுவலாக ப்பார்ட்டாவுக்கு வந்திருந்த ஆத்தினீயப் பிரதிநிதிகள் சிலர் ஆஜராயிருந் தார்கள். கொரிந்த்தியப் பிரதிநிதிகளின் பேச்சைக் கேட்டு இவர்களுக்கு ஆத்திரம் பொங்கியது. ஆத்தென்ஸின் கட்சியை எடுத்துச் சொல்வது தங்கள் கடமையென்று கருதி, ஜனசபையின் அனுமதி பெற்றுப் பின்வருமாறு பேசலுற்றார்கள்:- எங்கள் அரசாங்கம் குறித்தனுப்பி யிருக்கிற சில அலுவல்களைக் கவனிப்பதற்காக நாங்கள் இங்கு வந்திருக்கிறோமே தவிர, இப்பொழுது பேசி முடித்த உங்களுடைய சகாக்களான கொரிந்த்தியர்களுடன் வாதஞ் செய்ய வரவில்லை. ஆயினும் எங்களுக்கு விரோதமாக எழுப்பப்பட்ட கூக்குரலைக் கேட்டுச் சில வாத்தைகள் சொல்ல விரும்புகிறோம். இப்பொழுது இவர்கள் எங்கள் ராஜ்யத்தின்மீது சாட்டிய குற்றச்சாட்டுகளை மறுப்பது எங்கள் உத்தேசமல்ல. ஏனென்றால், எங்களுடைய கட்சியை யோ மற்ற ராஜ்யத்தினருடைய கட்சியையோ கேட்டுத் தீர்ப்பளிக்கக்கூடிய நீதிபதிகள் நீங்களல்ல. ஆனால் இப்பொழுது பேசிய உங்கள் சகாக்களின் வார்த்தைகளுக்கு எளிதில் வசப்பட்டுப் போய், முக்கியமான ஒரு பிரச்னையைப் பற்றித் தவறான முடிவுக்கு வந்துவிடாதபடி உங்களைத் தடுக்கும் பொருட்டுச் சில வார்த்தைகள் சொல்ல வேண்டியவர்களா யிருக்கிறோம். மற்றும், இவர்களுடைய குற்றச்சாட்டுகளையே ஆதாரமாக வைத்துக் கொண்டு, எங்களுடைய ஆதீனத்திலிருக்கும் ராஜ்யங்கள் எங்களுக்கு நியாயமாக உரியவையே, எங்களுடைய ஆத்தென் ராஜ்யம் மதிப்பிற்குரியது என்று நிரூபித்துக் காட்ட விழைகிறோம். இங்ஙனம் நிரூபித்துக் காட்டுவதற்காக நாங்கள் பழமைக்குச் செல்லப்போவதில்லை. ஏனென்றால், இங்குள்ளவர்களிற் பலர், பழைய சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார்களே தவிர நேரில் பார்த்திருக்க மாட்டார்கள். ஆதலின் பாரசீக யுத்தத்தைப் பற்றியும் அதற்குப் பிறகு நடைபெற்ற சில நிகழ்ச்சிகளைப்பற்றியும் சுருக்கமாகச் சொல்லிக் காட்டலாமென்று கருதுகிறோம். ஆனால் இவைகளைப்பற்றிச் சொல்லி சொல்லி எங்களுக்குச் சலிப்பு ஏற்பட்டுவிட்டதென்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். பாரசீக யுத்தத்தின் பொழுது நாங்கள் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளில், சில சாதகங்களைப் பெறும் பொருட்டு அநேக வித ஆபத்துக்களுக்காளானோம். யுத்தத்தினால் ஏற்பட்ட பலன்களில் எல்லோரையும் போல் நீங்களும் பங்கு கொண்டீர்கள். இப்பொழுது, எங்களுக்குக் கிடைத்த பங்கையும், அந்தப் பங்கினால் எங்களுக்கேற் பட்டிருக்கிற புகழையும் எங்களிடமிருந்து பறித்துக்கொண்டுவிடப் பார்க்காதீர்கள். இப்பொழுது நாங்கள் சில விஷயங்களை உங்களுக்குத் தெரி விக்க விரும்புகிறோம். ஏன்? எங்களுடன் யுத்தம் வேண்டாமென்று உங்களை வேண்டிக்கொள்வதற்காகவல்ல; பொதுவாக யுத்தத்தைக் கண்டிப்பதற்காக; ஆத்தென்ஸுடன் போராடியே தீர்வதென்று நீங்கள் தீர்மானித்து விடுவீர்களாயின், அந்த ஆத்தென் எத்தகைய சத்துருவாக இருக்குமென்பதை உங்களுக்கு விளக்கிக் காட்டுவதற்காக. மாரத்தானில்1 நாங்கள்தான் போர்முகத்தின் முன்னணியில் நின்றோம்; பாரசீகர்களைத் தனியே இருந்து எதிர்த்தோம். அவர்கள் -பாரசீகர்கள்-இரண்டாந்தடவை வந்த போது, அவர்களைத் தரையிலே சந்தித்து வெற்றிகொள்ள முடியாதென்று தெரிந்து, ஸாலாமிஸுக்கருகில் கடலிலே சந்தித்து வெற்றிகொண்டோம்1. இதனால் அவர்கள், பெலொப் பொனேசியாவிலுள்ள ராஜ்யங்களை ஒவ்வொன்றாக ஆக்கிரமித்து அழிக்க முடியாமல் தடுக்கப்பட்டார்கள்; தங்கள் கடற்படையை ஒன்று சேர்த்துக் கொண்டு தற்காத்துக் கொள்வதும் அவர்களுக்கு அசாத்தியமாகப் போயிற்று. கடற்போரில் தோல்வியுற்றதும் அவர்கள் - பாரசீகர்கள்-தங்கள் சக்தி முன்பு போல் இல்லையென்பதை உணர்ந்து, படையின் பெரும் பகுதியுடன் வேகமாகத் திரும்பிச் சென்றுவிட்டார்கள். மேற்படி யுத்தத்தில் கிரீ வெற்றியடைந்ததற்கு மூல காரணமா யிருந்தது எது? அதனுடைய கடற்படையே. இந்த உண்மையை யுத்தத்தின் முடிவு நமக்கு உணர்த்தியது. இந்த நல்ல முடிவு ஏற்படு வதற்கு நாங்கள் மூன்று விதத்தில் உதவி செய்திருக்கிறோம். முதலாவது அதிகமான கப்பல்களைக் கொடுத்தோம்; இரண்டாவது, சிறந்த சேனைத் தலைவனை அளித்தோம்; மூன்றாவது, சிறிதுகூட தயக்கமில்லாத தேசபக்தியைத் தந்தோம். (இந்த மூன்று அமிசங்களையும் சிறிது விளக்கிக் காட்டலாமென்று கருதுகிறோம்.) கிரேக்கக் கடற்படையைச் சேர்ந்த கப்பல்கள் மொத்தம் நானூறு. இவற்றுள் மூன்றில் இரண்டு பங்கு கப்பல்கள் எங்களுடையவை. சேனைத் தலைவன் யார்? தெமிட்டோக்ளீ.2 அவன் தான் ஸாலாமிஸில் கடல் நெருக்கமுள்ள இடத்தில் போர் நடைபெறுவதற்கு மூலகாரணமா யிருந்தவன்; வெற்றி வாங்கிக் கொடுத்தவன். இதனால்தான், வேறெந்த அந்நியனுக்கும் வழங்காத கௌரவங்களையெல்லாம் அவனுக்கு நீங்கள் வழங்கினீர்கள். துணிச்சலான தேசபக்தியில் எங்களோடு யாரும் போட்டி போட முடியாது. உதவிப்படை எதுவும் எங்களுக்கு வரவில்லை; கண் முன்னால் ஒவ்வொரு ராஜ்யமாக அடிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலைமையில் நாங்கள் என்ன செய்திருக்கலாம்? பாரசீகர்களை எதிர்த்து நிற்கவேண்டி நாம் ஒரு கூட்டாகச் சேர்ந்தோமல்லவா, அந்தக் கூட்டி லிருந்து விலகிக் கொண்டிருக்கலாம்; அல்லது எங்கள் சேவை அந்தக் கூட்டுக்குப் பயன்படாதபடி எங்கள் படையைக் கலைத்து விட்டிருக்கலாம். இப்படிக்கெல்லாம் செய்யாமல், தேசபக்கி மேலீட்டால், எங்கள் நகரத்தைத் துறந்துவிட்டு, நகரத்திலுள்ள எங்கள் சொத்து பற்றுக்களைத் துறந்துவிட்டு, சகலமான பேரும் கப்பல்களில் ஏறிக்கொண்டு ஆபத்தை, அதாவது சத்துருக்களைச் சந்திக்கச் சென்றோம். அப்பொழுது நீங்கள் எங்கள் உதவிக்கு வராதிருந்தும் உங்கள்மீது நாங்கள் சிறிது கூட வருத்தம் காட்டிக் கொள்ளவில்லை. ஆதலின் உங்களிடமிருந்து நாங்கள் எவ்வளவு பெற்றோமோ அவ்வளவு உங்களுக்கு அளித்திருக்கிறோமென்பதை உறுதியாகத் தெரிவிக்கிறோம். ஏதோ ஒன்றுக்காக, அந்த ஒன்றை இழந்துவிடக்கூடாதென் பதற்காகப் போராட வேண்டியது உங்களுக்கு அவசியமாயிருந்தது. யுத்தங் காரணமாக நீங்கள் எந்தெந்த இடங்களைக் காலி செய்தீர்களோ அந்த இடங்களில் உங்களுடைய வீடு வாசல்கள் வீழ்ந்துபடாமல் அப்படியே இருந்தன. அவைகளைத் திரும்பவும் அனுபவிக்கலாமென்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தது. நீங்கள் யுத்தத்தில் கலந்துகொள்ள முன்வந்தது, எங்களைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காக மட்டுமல்ல, உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவுங்கூட. பட்டவர்த்தனமாகச் சொல்லப்போனால், நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்ட பிறகு, இனி இழப்பதற்கொன்றுமில்லை யென்ற நிலைமையில் நீங்கள் போர் செய்ய முன்வந்தீர்கள். நாங்கள் ஆத்தென் நகரத்தைக் காலி செய்தபோது, அது, நகரம் என்று சொல்லக்கூடாதபடி அவ்வளவு பாழாகிவிட்டது. ஆயினும் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. அந்த நம்பிக்கையில் எங்கள் நகரம் வாழ்ந்து கொண்டுதான் இருந்தது. அந்த நம்பிக்கையில் எங்கள் உயிர்களைப் பணயமாக வைத்து உங்கள் விமோசனத்திற்காகவும் எங்கள் விமோசனத்திற்காகவும் போர் செய்தோம். நாங்களும் மற்றவர்களைப் போல் நடந்து கொண்டிருந்தால், அல்லது எங்கள் ராஜ்யம் பாழ்பட்டு விடப் போகிறதேயென்று அஞ்சி, நீங்கள் உதவிக்கு வருவதற்கு முந்தி பாரசீகர்களுக்கு இணங்கி கொடுத்திருந்தோமானால் அல்லது பயந்து போய் நகரத்தைக் காலி செய்யாமலும் கப்பல்களில் ஏறி (ஸாலாமிஸுக்கு)ச் செல்லாமலும் இருந்துவிட்டிருந்தோமானால்,உங்கள் கடற்படைக் குறைவினால், நீங்கள் தனியாக இருந்து பாரசீகர்களோடு போர் செய்திருக்க முடியாது. ஏன்? போரே நடைபெற்றிராது; பாரசீகர்களும் சண்டையில்லாமலே தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பார்கள். நிச்சயமாக லாஸிடீமோனியர்களே! அந்த நெருக்கடியான சந்தர்ப் பத்தில் நாங்கள் காட்டிய தேசபக்தி யென்ன, நாங்கள் கடைப்பிடித்த கொள்கையின் புத்திசாலித்தனமென்ன, இவைகளுக்காக, கிரேக்கர்கள் மத்தியில் செல்வாக்கிழந்துவிட்டோமென்று சொல்வது நியாயமல்ல; சிறப்பாக எங்கள் ஏகாதிபத்தியம் செல்வாக்கிழந்துவிட்டது என்று சொல்வது சிறிதுகூட நியாயமல்ல. பலாத்கார முறைகளைக் கையாண்டு நாங்கள் இந்த ஏகாதிபத்தியத்தைச் சம்பாதிக்கவில்லை. பாரசீகப் போரை கடைசிவரை நடத்தி ஒரு முடிவு காண நீங்கள் விரும்பாமையினாலும், கிரேக்க ராஜ்யத்தினர் பலரும் தாங்களே வலிய வந்து எங்களுடன் கூட்டாகச் சேர்ந்துகொண்டு, அவர்களுக்குத் தலைமை வகிக்கும்படி எங்களைக் கேட்டுக்கொண்டமையாலுமே எங்களுக்கு ஏகாதிபத்தியம் கிடைத்தது. அப்பொழுதைய நிலைமையில், எங்களுடைய ஏகாதிபத் தியத்தை இப்பொழுதைய அளவுக்கு விதரித்துக்கொள்ள வேண்டியது முதலில் அவசியமாயிருந்தது. பயந்தான் இதற்கு முதற்காரணம். பின்னர், எங்கள் கண்ணியத்தையும் எங்கள் நலத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியவர்களானோம். கடைசியில் ஏறக்குறைய எல்லோரும் எங்களைத் துவேஷிக்கத் தலைப்பட்டுவிட்டார்கள்; சிலர் எங்களுக்கு விரோதமாகக் கலகஞ் செய்தனர். அவர்கள் அடக்கவும் பட்டனர்; நீங்களோ முந்தி யிருந்ததைப்போல் நண்பர்களா யிருக்கவில்லை; பலருடைய சந்தேகத்திற்கும் வெறுப்புக்கும் பாத்திரர்களாகிவிட்டீர்கள்; இந்த நிலைமையில் எங்கள் ஏகாதிபத்தியத்தைக் கைசோர விடுவது உசிதமல்ல என்று எங்களுக்குப் பட்டது. முக்கியமாக, எங்களை விரோதப் படுத்திக்கொண்டு பிரிந்து சென்றவர்களெல்லோரும் உங்கள் கட்சியில் வந்து சேர்ந்துகொள்வார்களென்று நன்றாகத் தெரிந்திருந்தபொழுது நாங்கள் எப்படி ஏகாதிபத்தியத்தைக் கைவிட முடியும்? ஆபத்தான சூழ்நிலையிலிருக்கிற ஒரு ராஜ்யம், தன்னுடைய நலனைப் பாதுகாத்துக் கொள்ள ஏதேனும் ஏற்பாடுகள் செய்துகொள்ளுமானால் அதனை யார் குறைகூற முடியும்? லாஸிடீமோனியர்களே! உங்களுடைய விஷயமென்ன? பெலொப் பொனேசியாவில் நீங்கள் பெற்றிருக்கிற ஆதிக்கத்தை, பொலொப் பொனேசிய விவகாரங்களை உங்களுக்கு உசிதமான முறையில் தீர்த்து வைக்க உபயோகப்படுத்தி வந்திருக்கிறீர்கள். நாங்கள் சொல்கிற காலத்தில், அதாவது பாரசீக யுத்தத்தின் பொழுது, நீங்கள் கடைசிவரை முயற்சி செய்திருப்பீர்களானால், தலைமை வகித்து அது காரணமாக உங்கள் கீழிருக்கப்பட்டவர்களுடைய துவேஷத்தைச் சம்பாதித்துக் கொண்டிருப்பீர்களானால், உங்களோடு கூட்டுச் சேர்ந்த உங்கள் சகாக்களின் துவேஷத்தையும் சம்பாதித்துக் கொண்டிருப்பீர்களென்பது நிச்சயம்.. அப்பொழுது அரசாங்கத்தை வலிமையுள்ளதாகச் செய்து கொள்வதா அல்லது ஆபத்திலே சிக்கிக்கொள்வதா என்பதில் ஏதேனும் ஒரு முடிவுக்குத்தான் நீங்கள் வர வேண்டி யிருந்திருக்கும். ஒரு ராஜ்யம், வலுவிலே வரும் ஓர் ஏகாதிபத்தியத்தை ஏற்றுக் கொள்ளுமானால், பின்னர் அதனைக் கைவிட மறுக்குமானால் அதில் எவ்வித ஆச்சரிய முமில்லை; மானிட சமூகத்தின் நடை முறைகளுக்கு விரோதமுமல்ல. நாங்கள் இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறோம். எங்களுக் கேற்பட்டிருந்த அச்சமும், எங்களுடைய கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமும், எங்களுடைய நலத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் சேர்ந்து எங்களை இப்படி நடந்து கொள்ளும்படி செய்தன. பலசாலிகளுக்குப் பலவீனர்கள் உட் பட்டிருக்க வேண்டுமென்பது நாங்கள் ஏற்படுத்திய சட்டமல்ல: தொன்று தொட்டு இருந்துவரும் சட்டம். தவிர, எங்களுக்கேற்பட்ட ஏகாதிபத்திய அந்ததுக்கு நாங்கள் தகுதி யுடையவர்களென்று கருதினோம். நீங்களும் இதுவரை அப்படித்தான் கருதி வந்தீர்கள். இப்பொழுது சுயநலங் காரணமாக தரும நியாயத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள். பலாத்காரத்தினால் தங்கள் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியுமென்று தெரிந்துகொண்டிருக்கிற யாரும் இந்த தரும நியாயத்தைப் பற்றிப் பேசுவதில்லை. யாரொருவர், தங்களுக்குக் கிடைத்த ஏகாதிபத்தியத்தை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு அதனைக் கொண்டு செலுத்துகிற விஷயத்தில், தங்களுடைய அந்ததுக்கு மீறி தரும நியாயத்தைக் கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள் எல்லோருடைய புகழ்ச்சிக்குமுரியராவர். எங்களுடைய நிலைமையில் மற்றவர்கள் இருந்து பார்த்தால் அப்பொழுது நாங்கள் எவ்வளவு நிதானத்துடன் இருந்து வந்திருக்கிறோ மென்பது நன்கு தெரியும். அவ்வளவு நிதானமாகவும் நியாயமாகவும் நாங்கள் நடந்து கொண்டிருந்தும், பாராட்டுதலுக்குப் பதில் கண்டனத் திற்கே உட்பட்டிருக்கிறோம். எங்களுக்கும் எங்கள் கூட்டாளிக்கும் ஏதேனும் தகராறு ஏற்படுமானால் அப்பொழுது எங்களுடைய உரிமை களை அதிகமாக வலியுறுத்தாமல் ஆத்தென்ஸின் சட்டங்களினால் பட்சபாதமின்றி அஃது - அந்தத் தகராறு-தீர்க்கப் படட்டுமென்று சொல் கிறோம். அப்படிச் சொன்னாலும், வல்லடி வழக்குச் செய்கிறோமென்று நாங்கள் பழிசுமத்தப்படுகிறோம். எங்களைக் காட்டிலும் நிதானக் குறைவாகத் தங்கள் பிரஜைகளை நடத்தும் மற்ற ஏகாதிபத்திய அரசாங்கங்கள் மீது ஏன் இந்த மாதிரி பழி சுமத்தப்படுவதில்லையென்று யாரும் விசாரிப்பது கிடையாது. காரணமென்னவென்றால், எங்கே பலாத் காரத்தை உபயோகிக்க முடியுமோ அங்கே சட்டம் புறக்கணிக்கப்படுகிறது. இதுதான் ரகசியம். எங்களுடைய கூட்டாளிகள் பலரும் எங்களுடன் சமமாக நடத்தப்பட்டு வந்திருக்கிறார்களாதலின், அதே பழக்கமுடையவர் களாதலின், அவர்கள் நியாயமென்று கருதுவதற்கு விரோதமாக நாங்கள் ஏதேனும் ஒன்று செய்துவிட்டால், அப்படி நாங்கள் செய்வது, சட்டப்படி கூறப்பட்ட தீர்ப்பின் விளைவாக இருந்தாலுஞ்சரி, எங்களுடைய ஏகாதிபத்திய அதிகாரத்தின் பயனாக இருந்தாலுஞ்சரி, கூகூவென்று கூக்குரலிடுகிறார்கள்; அவர்களுடைய சொத்துப் பற்றுக்களிற் பெரும் பகுதியை அவர்களிடமே விட்டு வைத்திருப்பதற்காக எங்களுக்கு நன்றி பாராட்டாமல் ஒரு சிறு பகுதியை எடுத்துக்கொண்டுவிட்டால் அதற்காக எங்கள் மீது துவேஷம் பாராட்டுகிறார்கள்; ஏதோ பேராசையினால் உந்தப்பட்டு சட்டத்தைப் புறக்கணித்து நடக்கிறோமென்று கருதுகிறார்கள். அப்படியெல்லாம் நாங்கள் நடந்து கொள்ளவில்லை. அப்படி நடந்து கொண்டிருந்தாலும், பலசாலிகளுக்குப் பலவீனர்கள் உட்பட்டுப் போக வேண்டியதுதான் என்ற நியாயத்தை அவர்களால் மறுக்க முடியாது. பலாத்காரத்தைக் காட்டிலும் அநியாயத்தைத்தான் மனிதர்கள் அதிகமாக வெறுக்கிறார்கள்போல் தோன்றுகிறது. சம நிலையிலுள்ள இரண்டு பேருள், ஒருவர் மற்றொருவரைத் தனக்குச் சாதகமாக உப யோகித்துக் கொள்வாரானால் அதுதான் அநியாயமென்றும், மேலானவர் கீழானவரைக் கட்டாயத்திற்குட்படுத்துவதுதான் பலாத்கார மென்றும் முறையே கருதப்படுகின்றன. அந்நியர்களாகிய பாரசீகர்களால் கேவல மாக நடத்தப்பட்டால் அதை இவர்கள் பொருட்படுத்துவதில்லை; அதைச் சகித்துக்கொள்ளவும் தயாராயிருக்கிறார்கள்; ஆனால் எங்கள் கட்சி கடுமையானதென்று கருதுகிறார்கள். இதனை நாங்கள் எதிர்பார்க்க வேண்டியதுதான். ஏனென்றால் எப்பொழுதுமே ஒரு ராஜ்யத்தின் பிரஜைகள், தங்கள் சமகாலத்து நடைமுறைகளில் அதிருப்தி கொண்டவர் களா யிருக்கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம். எங்களை அப்புறப்படுத்தி விட்டு எங்கள் தானத்தில் நீங்கள் வந்து அமர்வீர்களானால், எங்கள் மீது கொண்ட பயத்தினால் யார் உங்களுடைய ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டார்களோ அவர்களிடம் உங்களுடைய செல்வாக்கை வெகு சீக்கிரத்தில் இழந்து விடுவீர்கள். சிறப்பாக, பாரசீகப் போரில் நீங்கள் தலைமை வகித்தபொழுது எப்படி நடந்துகொண்டீர்களோ அதற்கும், இப்பொழுதைய உங்கள் நடக்கைக்கும் எவ்வித வித்தியாசமுமில்லாதிருக்குமானால் நிச்சயம் உங்கள் செல்வாக்கு போய்விடும். உங்கள் ராஜ்யத்தில் நீங்கள் அமைத்துக் கொண்டிருக்கிற வாழ்க்கை முறைகளும் தாபனங்களும், மற்ற ராஜ்யங் களிலுள்ளவைகளுக்கு மாறுபட்டனவா யிருக்கின்றன. வெளிநாடு களிலுள்ள உங்கள் பிரஜைகள் உங்கள் ராஜ்யத்து நடைமுறைகளையும் பின்பற்றுவதில்லை; மற்றக் கிரேக்கர்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிற நடைமுறைகளையும் பின்பற்றுவதில்லை. எனவே அவகாசமெடுத்துக்கொண்டு ஒரு தீர்மானத்திற்கு வாருங்கள். ஏனென்றால் விஷயம் முக்கியமானது. மற்றவர்கள் சொல்லும் அபிப்பிராயங்களையும் சாட்டும் குற்றச்சாட்டுகளையும் கேட்டு, தொந்தரவை வரவழைத்துக் கொள்ளாதீர்கள். í¤j¤âš ïw§Ftj‰F K‹.,mªj யுத்தத்தின் வெற்றியைப்போல் தோல்வியும் ஏற்படக்கூடு மென்பதை நினைவுகொள்ளுங்கள். யுத்தத்தில் அதிருஷ்டமென்பது முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. நீங்களோ நாங்களோ அதற்கு விலக்கானவர்களல்ல. யுத்தத்தில் தோல்வி கிடைத்த பிறகு, ஏன் யுத்தத்தில் இறங்கினோமென்று ஆராய்வது பெருந்தவறு. நாங்கள் இந்த தவறுதலைச் செய்யமாட்டோம்; நீங்களும் செய்ய மாட்டீர்களென்று எதிர்பார்க்கிறோம். சரியான வழியைத் தெரிந்தெடுத்துக் கொள்ள நம்மிரு வருக்கும் அவகாசம் இருக்கிறது. (முப்பது வருஷ) சமாதான ஒப்பந்தத்தைப் புறக்கணித்துவிட வேண்டாமென்று உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் எடுத்துக்கொண்டுள்ள பிரதிக்ஞைகளை உடைத்து விடாதீர்கள். நம்மிருவருக்கும் ஏற்பட்டுள்ள மனதாபங்களை மத்தியதத் தின் மூலமாகத் தீர்த்துக்கொள்வோம். இதற்கு நீங்கள் இணங்காவிட்டால், உங்கள் பிரதிக்ஞைகளைக் கேட்ட தெய்வங்களையே சாட்சிகளாக வைத்துக்கொண்டு சொல்கிறோம்; சண்டை துவக்குவீர்களானால், எந்த வழியில் நீங்கள் யுத்தத்தை நடத்துகிறீர்களோ அந்த வழியிலேயே நாங்கள் உங்களைத் திருப்பித் தாக்கச் சிறிதுகூடப் பின்வாங்க மாட்டோம். இது நிச்சயம். கொரிந்த்தியப் பிரதிநிதிகளும் அவர்களுடைய சகாக்களும் ஆத்தென்ஸின் மீது சாட்டிய குற்றச் சாட்டுகளையும் அவைகளுக்கு ஆத்தினீயப் பிரதிநிதிகள் அளித்த பதிலையும் (ப்பார்ட்ட) ஜன சபையினர் கேட்டுவிட்டு, அவர்களனைவரையும் வெளியே இருக்கச் சொல்லி, தங்களுக்குள் இந்தப் பிரச்சினையைப்பற்றி நன்கு ஆலோசித் தனர்; ஆத்தினீயர்கள்தான் ஆக்கிரமிப்புக் குற்றத்தைச் செய்திருக்கின்றனர், எனவே அவர்கள் மீது உடனே யுத்தந்தொடுக்க வேண்டுமென்ற முடிவுக்குப் பெரும்பாலோர் வந்தனர். அப்பொழுது, சபையில் ஆஜரா யிருந்த ப்பார்ட்டாவின் இரண்டு அரசர்களில் ஒருவனும், சிறந்த அறிஞ னென்றும் நிதானதனென்றும் பெயர் படைத்திருந்தவனுமான ஆர்க் கிடாம1 என்பவன், எண்ணித் துணிந்து யுத்தத்தில் இறங்க வேண்டு மென்று எச்சரிக்கை செய்கிற முறையில் பின்வருமாறு பேசுகிறான்:- லாஸிடீமோனியர்களே! அநேக யுத்தங்களின் அனுபவமில்லாமல் நான் இவ்வளவு நீண்ட காலம் வாழ்ந்திருக்கவில்லை என்னைப்போல் வயதான பலர் இங்கிருப்பதைப் பார்க்கிறேன். இவர்கள், அனுபவமில்லை யென்று சொல்லியோ யுத்தத்தினால் அனுகூலமும் பாதுகாப்பும் உண்டாகுமென்று நம்பியோ யுத்த ஆசைகளோடு துரதிருஷ்டத்திற்குட்பட மாட்டார்கள். சிறிது நிதானமாக யோசித்துப் பார்ப்பீர்களானால், இப்பொழுது நீங்கள் எந்த யுத்தத்தைப்பற்றிப் பேசுகிறீர்களோ அந்த யுத்தம் மகத்தானதா யிருக்குமென்பது புலப்படும். பொலொப்பொனேசியர் களுடனோ அல்லது நமது அக்கம் பக்கத்திலுள்ளவர்களுடனோ போராடு வதென்றால் அது வேறு விதமா யிருக்கும். ஏனென்றால் அவர் களுடைய வலிமையும் நம்முடைய வலிமையும் ஏறக்குறைய சமமாக இருக்கின்றன. அவர்களை நோக்கி நாம் துரிதமாகச் செல்லக்கூடும். ஆனால் சிறிது எட்டினாற்போலிருக்கிற ஒரு ராஜ்யத்துடன் போராட வேண்டுமென்று இப்பொழுது நாம் பேசுகிறோம். அவர்கள்- அந்த ராஜ்யத்தினர்-கடற்பழக்கம் மிக்கவுடையவர்கள்; எல்லா விதங்களிலும் யுத்தத்திற்கு ஆயத்தமா யிருக்கிறவர்கள். சொந்தப் பணமும் பொதுப் பணமும் அவர்களுக்கு ஏராளமாக இருக்கின்றன. கப்பற்படை, குதிரைப்படை, காலாட்படை முதலிய பலவும் அவர்களுக்கு மிக உண்டு. இதர கிரேக்க ராஜ்யங்களுடன் ஒப்பிட்டுச் சொல்ல முடியாதபடி அவர் களுடைய ராஜ்யத்தின் ஐனத்தொகை அதிகம். கடைசியாக, அவர் களுக்குக் கப்பஞ் செலுத்தி அதன் மூலமாக அவர்களுடைய செல்வாக்குக் குட்பட்டிருப்போர் அநேகர். இத்தகையவர்களுடன் நாம் ஆத்திரப்பட்டு யுத்தம் துவங்குவது எப்படிப் பொருத்தமாயிருக்கும்? எவ்விதத்திலும் நம்மைத் தயார் செய்துகொள்ளாமல், எதை நம்பி அவர்கள் மீது யுத்தந் தொடுப்பது? நமது கப்பற்படையை நம்பியா? அதில் நாம் மிகவும் பலக் குறைவுடையவர்களா யிருக்கிறோம். அதில் நாம் பயிற்சி பெற்று அவர்களுக்குச் சமதையான பலம் பெறவேண்டுமானால் அதற்குப் போதிய அவகாசம் வேண்டும். அல்லது நம்மிடமுள்ள பணத்தை நம்பியா? அதிலும் நாம் மிகக் குறைவுடையவர்களாகவே இருக்கிறோம். நமது அரசாங்கப் பொக்கிஷத்திலாகட்டும், நமது சொந்தத்திலாகட்டும். போதிய பணமுமில்லை. நமது காலாட்படை வலுவுள்ளதாயிருக்கிறது. நமது ராஜ்யத்தின் ஜனத்தொகையும் அதிகம் என்ற இந்த இரண்டின்மீது நம்பிக்கை வைத்துப் படையெடுத்தலும், சத்துரு பூமியை நாசஞ் செய்தலும் சாத்தியமென்று உங்களிலே சிலர் நினைக்கலாம். ஆனால் ஆத்தீனியர்களுக்கு, அவர் களுடைய ஏகாதிபத்தியத்திற்குட்பட்ட ஏராளமான பிரதேசங்கள் இருக் கின்றன. அந்தப் பிரதேசங்களிலிருந்து அவர்கள் எதை வேண்டுமானாலும் வரவழைத்துக்கொள்ளலாம். அவர்களுடைய ஆதிக்கத்திற்குட்பட்ட சில்லரை ராஜ்யங்களை அவர்களுக்கு விரோதமாகக் கலகத்திற்குத் தூண்டி விடுவோமென்றால் அந்தச் சில்லரை ராஜ்யங்களில் பல, தீவு ராஜ்யங்களா யிருக்கிறபடியால் அவைகளுக்கு உதவி செய்ய நமக்குக் கப்பற்படை யல்லவோ அதிகமாக வேண்டியிருக்கிறது? அப்படியானால் நாம் அனுசரிக்க வேண்டிய யுத்த தந்திரம் என்னவென்று நீங்கள் கேட்கலாம். அவர்களோடு கடற்போர் தொடங்கி அதில் அவர்களைத் தோற்கடித்தாலன்றி, அந்தக் கடற்படைக்கு எங்கிருந்து வருவாய் வருகிறதோ அந்த வருவாயை அடைத்தாலன்றி நமக்கு அழிவு நிச்சயம். யுத்தத்தை முதன் முதலாக ஆரம்பித்தவர்கள் நாமே என்ற அபிப்பிராயம் ஏற்பட்டுவிடுமானால், யுத்தத்தின் மத்தியில் நாம் பின்வாங்குவது கண்ணியக் குறைவாகும். சத்துரு பூமியை நாசஞ் செய்துவிட்டால் யுத்தம் சீக்கிரத்தில் முடிந்துவிடுமென்று நம்பி நாம் சந்தோஷப்பட வேண்டாம். அப்படிச் செய்வோமானால், அதாவது சத்துரு பூமியை நாசஞ் செய்து அது காரணமாக வெற்றி காண்போமானால் நமது பிற்கால சந்ததியாருக்கு யுத்த ஆதியை வைத்து விட்டுப் போனவர் களாவோம். ஏனென்றால், ஆத்தினீயர்கள், தங்கள் நாட்டில் அடிமைகளாக இருப்பார்களென்றோ,யுத்தத்தைக் கண்டு மனச்சோர்வு கொள்வார் களென்றோ நினைக்க முடியாது. அஃது அசாத்தியம். இப்படியெல்லாம் நான் சொல்வதனால்அவர்கள்-அந்த ஆத்தினீயர்கள்-உங்கள் சகாக்களைத் துன்புறுத்துவதை நீங்கள் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க வேண்டுமென்றோ அல்லது அவர்களுடைய சூழ்ச்சிகளைப் பகிரங்கப்படுத்தாமல் மௌனமாயிருக்க வேண்டுமென்றோ சொல்வதாக இங்குள்ள யாரும் கருதக்கூடாது. உடனே படையெடுத்து விடாதீர்களென்றுதான் நான் சொல்கிறேன். ஒரு தூதுகோஷ்டியை அனுப்பி அதன் மூலமாக, யுத்தம் தொடுப்போம் என்ற சூசகமோ, பணிந்து கொடுக்கத் தயார் என்ற சூசகமோ இரண்டுமில்லாத தொனியில் எச்சரிக்கை விடுங்கள். அதன் முடிவு தெரிவதற்குச் சிறிது காலம் பிடிக்குமல்லவா அந்தக் காலத்தில், நாம் யுத்த முதீப்புகளைச் செய்து கொள்வோம். எந்தெந்த விதமாக முதீப்புகள் செய்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் கிரேக்கர்களோ கிரேக்கர்களல்லாதாரோ யாராயிருந்தாலும் சரி, அவர்கள் நமது கப்பற்படை பலத்தையோ பணபலத்தையோ அதிகப்படுத்திக் கொடுக்கக்கூடியவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களனை வரையும் நமது சகாக்களாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏன் கிரேக்கர்களையோ கிரேக்கர்களல்லாதாரையோ சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று சொல்கிறேனென்றால், ஆத்தினீயர்கள் தற்காப்பு நிமித்தம், கிரேக்கர்கள்-கிரேக்கர்களல்லாதார் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையுமே தங்கள் சூழ்ச்சிகளுக்கு இரையாக்கிக் கொண்டிருக் கிறார்களாதலினால் தான். அடுத்தபடி நமது சொந்த பலத்தையும் விருத்தி செய்துகொள்ள வேண்டும். ஆத்தினீயர்கள், நாம் விடுக்கும் எச்சரிக்கைக்கிசைந்து நடப்பார் களானால் நிரம்ப சரி; இல்லையென்றால், இரண்டு மூன்று வருஷங் களுக்குப் பிறகு நமது நிலைமை பலப்பட்டு விடும்; அப்பொழுது நமக்குச் சரியென்று தோன்றினால் அவர்களைத் தாக்கலாம். ஒருகால் அதற்குள் நாம் செய்யும் முதீப்புகளைப் பார்த்தும், நாம் பேசுகிற விதத்தைக் கேட்டும் அவர்கள் வழிக்கு வரக்கூடும். அவர்களுடைய நாடும் நாசமாகாம லிருக்கும். அவர்கள் இப்பொழுது பெற்றிருக்கிற அனுகூலங்களுக்குப் பழுதுண்டாகாதபடி தங்கள் கவனத்தைச் செலுத்தலாம். அவர்களுடைய நாட்டை நீங்கள் ஆக்கிரமித்துக்கொண்ட போதிலும் அதனை, உங்கள் வசப்பட்டிருக்கும் ஒரு பிணையாளியைப் போல்தான் கருதவேண்டும். அந்தப் பிணையாளியை அதாவது ஆத்தென் பூமியை எவ்வளவுக்கெவ்வளவு பண்படுத்திப் பயிரிடுகிறீர்களோ அவ்வளவுக் கவ்வளவு அந்தப் பிணையாளியின் மதிப்பு உயரும். ஆனால் அந்த மாதிரியான நிலைமை ஏற்படாதபடி எவ்வளவு தூரம் நீங்கள்தள்ளிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு நல்லது. அப்படிச் செய்யாவிட்டால் அவர்கள்-ஆத்தீனியர்கள்-எதற்கும் துணிந்தவர்களாகி விடுவார்கள். பிறகு அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதே கடினமாகிவிடும். நம்மை நாம் தயாரித்துக்கொள்ளாமலும், நமது சகாக்களின் முறையீடுகளைக் கேட்டு அவசரப்பட்டும் ஆத்தினீயர்களின் நாட்டை நாசமாக்க முற்படுவோமானால், பெலொப்பொனேசியாவுக்குப் பெரிய அபகீர்த்தியும் ஆழ்ந்த ஒரு திகைப்பும் ஏற்படாதபடி நாம் நடந்துகொள்ள வேண்டும். தனிப்பட்ட நபர்களோ, ஒரு சமூகத்தினரோ சாட்டும் குற்றச் சாட்டுகளை ஏதோ ஒரு விதமாகச் சரிக்கட்டிவிடலாம்; அது சுலபம். ஆனால் தனிப்பட்ட ஒரு சிலருடைய நலனுக்காக, பலர் ஒரு கூட்டாகச் சேர்ந்து யுத்தத்திற்குச் சென்றால், கௌரவமான ஒரு சமரஸத்திற்கு வருதல் சுலபமல்ல; அந்த யுத்தத்தின் போக்கு எப்படித் திரும்பும் என்பதை முன் கூட்டி நிதானிக்கவும் முடியாது. பல ராஜ்யங்கள் நம்முடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்றன; அப்படி யிருக்க, தனிப்பட்ட ஒரு ராஜ்யத்தைத் தாக்க யோசிப்பது கோழைத் தனமாகுமென்று இங்குள்ள யாரும் கருதவேண்டாம். நமக்கு எத்தனை கூட்டாளிகள் இருக்கிறார்களோ அத்தனை கூட்டாளிகள் ஆத்தினீயர் களுக்கும் இருக்கிறார்கள்; அந்தக் கூட்டாளிகளிற் பலர் கப்பஞ் செலுத்து கிறவர்களாகவும் இருக்கிறார்கள். யுத்தத்தில் ஆயுத பலத்தைக் காட்டிலும் பண பலம்தான் அதிகம் தேவையாயிருக்கிறது. பண பலத்தைக் கொண்டு தான் ஆயுத பலத்தை உபயோகத்திற்குக் கொண்டு வர முடிகிறது. அதிலும் தரைப் பக்கத்தில் ஆதிக்கம் பெற்றுள்ள ஒரு ராஜ்யம், கடலாதிக்கம் பெற்றுள்ள ஒரு ராஜ்யத்துடன் போர் செய்ய நேரிட்டால், அந்தத் தரை ஆதிக்க ராஜ்யத்திற்குப் பணபலம் மிகவும் இன்றியமையாததாயிருக்கிறது. அனுபவத்தில் கண்ட உண்மை இது. ஆதலின் முதலில் நாம் பண பலத்தைச் சம்பாதித்துக்கொள்வோம். நமது சகாக்கள்-கொரிந்த்தியர்கள்-இப்பொழுது குறை சொல்லிக் கொண்டார்களே அந்தக் குறைகளைக் கேட்டு ஆத்திரப்படவேண்டாம். யுத்தத்தின் விளைவு நல்லதா யிருந் தாலும் சரி, கெட்டதா யிருந்தாலுஞ் சரி, அதற்கு நாமே அதிகமான பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டியவர்களா யிருக்கிறபடியால், யுத்தத்தில் இறங்குவதற்கு முன் ஆர அமர யோசிப்பது நமது கடமையாகும். நாம் நிதானதர்களா யிருக்கிறோம், எந்த ஒரு காரியத்தையும் தள்ளிப் போட்டுக்கொண்டு போவதில் வல்லவர்களாயிருக்கிறோம் என்று கொரிந்த்தியப் பிரதிநிதிகள் நம்மீது குறை கூறினார்களல்லவா அதற்காக நாம் சிறிதுகூட வெட்கப்பட வேண்டியதில்லை. போதிய தயாரிப் பில்லாமல் யுத்தத்தைத் துரிதமாகத் துவங்கிவிட்டோமானால் துரிதமாக அந்த யுத்தத்தை முடிக்க முடியாது; தாமதமே ஏற்படும். தவிர, நமது ராஜ்யம், நெடுங்காலமாகச் சுதந்திரத்துடன் இருந்து வந்திருக்கிறது; பிரசித்தியுடையதாகவும் இருந்து வந்திருக்கிறது. நாம் நிதானதர்களா யிருக்கிறோமென்று கொரிந்த்தியர்கள் நம்மீது குறை கூறுகிறார்கள். உண்மையில் நாம் நிதானதர்களா யிருப்பது நம்முடைய புத்திசாலித்தனத்தையே காட்டுகிறது. நம்மிடத்திலே அந்த நிதானமிருப்பதால்தான், நாம், சந்தோஷத்தில் இறுமாப்புக் கொள்வ தில்லை; துக்கத்தில் சோர்ந்து போவதுமில்லை. நம்மை யாரேனும் தட்டிக்கொடுத்து உற்சாகப் படுத்துவார்களானால் அதற்காக நாம் நிதானந்தவறி எந்தவிதமான ஆபத்திலும் சிக்கிக்கொள்ள மாட்டோம். அப்படியே நம்மீது குறைகள் கூறி நமக்கு ஆத்திரமுண்டுபண்ண யாரேனும் முயற்சி செய்வார்களானால் அதற்காகக் கோபங்கொண்டு ஒரு காரியத்தில் இறங்கிவிட மாட்டோம். நம்மிடத்தில் இந்த நிதானம், இந்த ஒழுங்கு உணர்ச்சி முதலியவை இருப்பதனால்தான், போர் செய்ய வேண்டிய இடத்தில் வீரர்களாகவும், வாதஞ் செய்யவேண்டிய இடத்தில் புத்திசாலிகளாகவும் நடந்துகொள்கிறோம். தன்னடக்கத்தில் தன் மதிப்பு இருக்கிறதென்பதையும்,அந்தத் தன்னடக்கத்தின் முக்கிய அமிசமா யிருப்பதே வீரம் என்பதையும் நாம் நன்கு உணர்ந்தவர்களா யிருப்ப தனாலேயே போர்க்களத்தில் வீரங் காட்டுகிறோம். சட்டத்தை இகழ்ந்து பேசக்கூடிய அவ்வளவு பெரிய படிப்பு நமக்கு இல்லை; அப்படியே அந்தச் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்க மறுக்கக்கூடிய அவ்வளவு தன்னடக்கம் நமக்குக் கிடையாது. 1 பயனற்ற விஷயங்களைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ள நாம் முற்படுவதில்லை. உதாரணமாக, சத்துருக்களைப் போர்க் களத்தில் நேர்முகமாகத் தாக்கத்தான் நமக்குத் தெரியுமே தவிர அவர் களுடைய போர்த் திட்டங்களை ஏட்டிலே குறை கூறிக்கொண்டிருக்க நமக்குத் தெரியாது. சத்துருக்களின் போர்த் திட்டங்கள், நம்முடைய போர்த் திட்டங்களைப்போலவே இருக்கும்,போரில் யாருக்கு வெற்றி கிடைக்குமென்பதை வெறும் வாதத்தினால் நிர்ணயிக்க முடியாது என்ற பாடங்களை நாம் நன்கு கற்றுக்கொண்டிருக்கிறோம். சத்துருக்கள், தங்கள் போர்த் திட்டங்களைத் திறம்பட வகுத்திருக்கிறார்களென்ற அனுமானத் தின் பேரிலேயே நமது போர்த்திட்டங்களை வகுக்கிறோம். சத்துருக்கள் செய்யும் தவறுதல்களைக் கொண்டு நாம் வெற்றியடையப் பார்ப்ப தில்லை; நம்முடைய தயாரிப்பைக்கொண்டே நாம் வெற்றி யடையப் பார்க்கிறோம். மனிதனுக்கு மனிதன் வித்தியாசமில்லையென்று நாம் நம்புகிறோம். ஆனால் எவன் கஷ்டத்தை மேற்கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறானோ அவன் பெரியவன் என்று கருதுகிறோம். நமது மூதாதையர்கள் வழி வந்த இந்தப் பழக்க வழக்கங்களை நாம் அப்படியே கடைப்பிடித்து வருவதனால் நன்மையே அடைந்து வந்திருக்கிறோம். இவற்றை நாம் விட்டுவிடக் கூடாது. அநேகருடைய உயிரையும் நலனையும் பாதிக்கக்கூடிய, அநேக ராஜ்யங்களைப் பாதிக்கக் கூடிய இந்தப் பிரச்னையைப் பற்றி, நமது கீர்த்தி, கௌரவம் எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிற இந்தப் பிரச்னையைப்பற்றி ஒரு நாளில் தீர்மானித்துவிடக் கூடாது; சாவதானமாக ஆலோசித்துத்தான் தீர்மானிக்க வேண்டும். நமக்குப் போதிய பலமிருப்பதனால், சாவதானமாகத் தீர்மானிக்க நம்மால் இயலும். ஆதலின் ஆத்தென்ஸுக்குத் தூதனுப்பி பொட்டீடியா பிரச்னைக்குச் சமாதானம் கூறுமாறு கேளுங்கள். கொரிந்த்தியர் முதலாயினோர் தாங்கள் தீங்கிழைக்கப்பட்டதாகச் சொல்கிறார்களே அவைகளைப்பற்றி விசாரிக்கச் செய்யுங்கள். அவர்கள் - கொரிந்த்தியர் முதலாயினோர்-தங்கள் கட்சியை மத்தியதத்திற்கு விட்டு அதன் தீர்ப்புக்குட்படுவதாகச் சொல்கிறார்களென்பதையும், குற்றஞ் செய்தவர்கள் மீது போர் தொடுக்கலாமேயொழிய மத்தியதத்திற்குத் தயாராயிருப்பதாகச் சொல்கிறவர்கள் மீது யுத்தந் தொடுப்பது சட்ட விரோதமென்பதையும் எடுத்துக் காட்டுங்கள். இங்ஙனம் தூதனுப்பி விட்டுச் சும்மாயிருக்கக்கூடாது; யுத்தத்திற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்ய உடனே முற்பட வேண்டும். இதுதான் , இப்படிச் செய்வது தான் உங்களுக்கு நல்லது; உங்கள் சத்துருக்களுக்குக் கெட்டது. ஆர்க்கிடாம கூறிய கருத்தை மறுத்து, எப்ஹோர்கள் ஐவரில் ஒருவனாகிய த்தெனிலைடா1 என்பவன் பின்வருமாறு பேசலுற்றான்:- ஆத்தீனியர்களின் நீண்ட பேச்சை என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை. தற்புகழ்ச்சியாக வெகுதூரம் பேசினார்கள். ஆனால் நம்முடைய சகாக்களுக்கோ பெலொப்பொனேசியாவுக்கோ தீங்கு உண்டு பண்ண வில்லையென்று மட்டும் அவர்கள் சொல்லவில்லை. அப்பொழுது பாரசீகர்களுக்கு நல்ல தனமாக நடந்து கெண்டார்கள்; இப்பொழுது நமக்கு விரோதமாக நடந்துகொள்கிறார்கள். இதனால் இரட்டிப்புத் தண்டனைக் குரியவர்களாகிறார்கள். எப்படியென்றால் நல்லவர்களா யில்லாமற் போனதற்காக ஒரு தண்டனை; கெட்டவர்களா யிருப்பதற்காக ஒரு தண்டனை. நாம் எப்பொழுதும் போல் ஒரே மாதிரியாகவே இருக்கிறோம்; சிறிது கூட மாறவில்லை. நாம் புத்திசாலிகளாயிருந்தால், நமது சகாக் களுக்கிழைக்கப்பட்டிருக்கிற தீங்குகளைக் கண்டு சும்மாயிருக்கக்கூடாது. இன்றைய தினம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறவர்களுக்கு உதவி செய்யும் கடமையை நாளைய தினம் செய்யலாமென்று சொல்லக்கூடாது. மற்றவர்களுக்கு -ஆத்தீனியர்களுக்கு-பணமிருக்கலாம்: கப்பற்படை இருக்கலாம்; குதிரைப்படை இருக்கலாம். ஆனால் நமக்கு நல்ல சகாக்கள் இருக்கிறார்கள். இவர்களை நாம் ஆத்தீனியர்களுக்குக் காட்டிக்கொடுக்கக் கூடாது. வழக்காடியோ வாதஞ் செய்தோ இவர்களுக்கிழைக்கப்பட்ட தீங்குக்குப் பரிகாரங் காணக் கூடாது. நம்மைப் பொறுத்த மட்டில் நம்மை யாரும் வாய் மூலம் இகழ்ந்து பேசவில்லை. ஆதலின் நமது சகாக்களுக்கு உடனடியாக, காரியாமிசத்தில் உதவி செய்ய வேண்டும். அநீதி இழைக்கப் பட்டு வருகிற போது நாம் ஆலோசித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று நமக்கு யாரும் சொல்ல வேண்டாம். யார் அநீதி இழைக்க வேண்டுமென்று திட்டமிடுகிறார்களோ அவர்கள்தான் தீர்க்காலோசனை செய்து கொண்டிருக்கவேண்டும். ஆதலின் லாஸிடீமோனியர்களே! யுத்தத்திற்கு ஓட்டுப் போடுங்கள். ப்பார்ட்டாவின் கௌரவத்திற்கு இதுதான் ஏற்றது. ஆத்தீனியர்கள் இனியும் ஆக்கிரமிப்புச் செய்யாதபடி தடுப்போம்; நமது சகாக்கள் அழிந்து போகாதபடி காப்போம். தெய்வத் திருவருளைத் துணை யாகக் கொண்டு ஆத்தீனியர்களுக்கு விரோதமாகப் படையெடுத்துச் செல்வோம். த்தெனிலைடா பேசி முடித்ததும், ப்பார்ட்ட ஜன சபையானது, ஆத்தென், (முப்பது வருஷ) சமாதான ஒப்பந்தத்தை மீறிய குற்றத்தைச் செய்திருக்கிறதென்று தீர்மானித்தது. இதைத் தெரிந்துகொண்டு கொரிந்த்தியப் பிரதிநிதிகளும் ஆத்தீனியப் பிரதிநிதிகளும் முறையே தங்கள் தங்கள் ராஜ்யங்களுக்குச் சென்றார்கள். ப்பார்ட்டா, தான் செய்த இந்தத் தீர்மானத்தோடு திருப்தி யடைய வில்லை. தன்னுடைய சகா ராஜ்யங்களனைத்தையும் ஒன்று கூட்டி ஆலோசிக்கக் கருதியது. ஆத்தென் மீது யுத்தந் தொடுப்பதா யிருந்தால் எல்லா ராஜ்யங்களின் சகாயமும் தேவையல்லவா? உண்மையில் ப்பார்ட்டாவுக்கு, ஆத்தென் வர வர வலுப்பெற்று வருவதைக் கண்டு பொறாமை, அதனை எப்படியாவது அடக்கிப் போட வேண்டு மென்பது நோக்கம். இதற்காக, அதன்மீது (முப்பது வருஷ) சமாதான ஒப்பந்தத்தை மீறிவிட்டதான குற்றத்தைச் சாட்டி அதனையே காரணமாக வைத்துக்கொண்டு அதன் மீது யுத்தந் தொடுக்க முனைந்தது. ப்பார்ட்டாவின் விருப்பப்படி ப்பார்ட்டாவில் ஒரு மகாநாடு கூடியது. ப்பார்ட்டாவின் செல்வாக்குக்குட்பட்ட எல்லா ராஜ்யங்களிலிருந்தும் பிரதிநிதிகள் ஆஜராயிருந்தார்கள். கொரிந்த்தியப் பிரதிநிதி களும் ஆஜராயிருந்தார்களென்பதை நாம் சொல்லத் தேவையில்லை. இவர்கள் தான் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார்கள். மகாநாட்டில் பின்வருமாறு பேசினார்கள்:- சகாக்களே! லாஸிடீமோனியர்கள், தங்கள் கடமையில் தவறி விட்டார்களென்று இனி அவர்கள் மீது குற்றஞ் சுமத்த முடியாது. அவர்கள், தாங்கள் யுத்தந் தொடுக்க வேண்டுமென்று தீர்மானித்ததோடல்லாமல், அதைப்பற்றி ஆலோசிக்க நம்மையும் இங்கு வரவழைத்திருக்கிறார்கள். கடமையென்று கூறினோம். ஆம்; ஆதிக்கத்திற்குச் சில கடமைகள் உண்டு. ஆதிக்கத்திலிருக்கிறவர்கள், தங்கள் சொந்த நலன்களை நேர்மை யுடன் நிருவாகம் செய்து வருவதோடு பொது நலன்களையும் அதிக சிரத்தையுடன் கவனிக்க வேண்டும். அப்படிக் கவனிப்பதற்காகத் தானே அவர்களுக்கு எல்லோரும் விசேஷ கௌரவம் கொடுக்கிறார்கள்? நம்மைப் பொறுத்தமட்டில், ஆத்தீனியர்களுடன் சம்பந்தம் வைத்துக் கொண்டிருந்த அனைவருக்கும் அவர்கள் விஷயத்தில் ஜாக்கிரதையுடனிருக்க வேண்டுமென்ற எச்சரிக்கை வேண்டியதில்லை. எச்சரிக்கையுடனேயே இருப்போம். கடல் தொடர்பில்லாத ராஜ்யங்கள், கடல் தொடர்புடைய ராஜ்யங்களை ஆதரிக்க மறுக்குமானால், அந்தக் கடல் தொடர்பில்லாத ராஜ்யங்களின் பொருள் ஏற்றுமதியும் இறக்குமதியும் தடைப்பட்டுப் போகும். அவை-அந்தக் கடல் தொடர்பில்லாத ராஜ்யங்கள்-தாங்கள் பாதிக்கப்படவில்லையென்ற பாவனையில் நாங்கள் சொல்வதை அலட்சியஞ் செய்யக்கூடாது. கடலோர ராஜ்யங்கள் பாதுகாக்கப் படாமல் இன்று கைவிடப்படுமாகில் நாளை கடல் தொடர்பில்லாத ராஜ்யங்களுக்கும் ஆபத்து வந்து சேரும். இந்த ஆபத்தை அவை எப்பொழுதும் எதிர்பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். ஆகவே அவை களின் நலன்களும் இந்த விவாதத்தில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அவை இனி சமாதான முறைகளைக் கைவிட்டுவிட்டு யுத்த முறைகளைச் கைக்கொள்ள வேண்டும். புத்திசாலிகளா யுள்ளவர்கள், தாங்கள் தீங்கிழைக்கப்படாத வரையில் சும்மாயிருந்த போதிலும், வீரர்களா யுள்ளவர்கள், தீங்கிழைக்கப்பட்டால் சும்மாயிருப்பதை விட்டுவிட்டு சண்டைக்குக் கிளம்பிவிடுகிறார்கள்; இழைக்கப்பட்ட தீங்குக்குப் பரிகாரம் ஏற்பட்டவுடன் சமாதானமாகி விடுகிறார்கள். பட்டவர்த்தனமாகச் சொல்லப் போனால் அவர்கள்-வீரர்களாயுள்ளவர்கள்-யுத்தத்தில் வெற்றி கிடைத்துவிட்டால் அதற்காக வெறிபிடித்தாடுவதுமில்லை; அப்படியே தங்கள் சமாதான நிலை எங்கே குலைந்து விடப் போகிறதோ என்பதற்காக, தீங்கை மௌனமாக ஏற்றுக்கொள்வதுமில்லை. அமைதி, சமாதானம் என்று சொல்லிக்கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் சும்மாயிருந்தால் அந்த அமைதியினாலும் சமாதானத்தினாலும் நிகழக்கூடிய இன்பங்கள் நமக்குக் கிட்டமாட்டா; அந்த இன்பங்களை நாம் இழந்து விடுவோம். இங்ஙனமே வெற்றியினால் வெறிபிடித்தாடுவோமாகில், எந்த நம்பிக்கையின் மீது நாம் சந்தோஷப்படுகிறோமோ அந்த நம்பிக்கை ஆழமற்றது என்பதை மறந்து விட்டவர்களாவோம். எண்ணித் துணியாத திட்டங்கள் பல, சத்துருக்களின் பேதைமையினால் வெற்றிகரமாக நிறைவேறி விடுகின்றன; எண்ணித் துணிந்த திட்டங்கள் பல தோல்வி யடைந்து விடுகின்றன. நம்பிக்கையோடு சில திட்டங்களை வகுக்கிறோம். ஆனால் அந்தத் திட்டங்களை நிறைவேற்றவேண்டி வருகிறபோது, நம்பிக்கையை இழந்து விடுகிறோம். நல்ல பாதுகாப்புக்கு மத்தியில் இருந்துகொண்டு நாம் திட்டங்கள் வகுக்கிறோம்; அவற்றை அனுஷ்டானத் திற்குக் கொண்டு வருகிறபோது அச்சம் நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. இப்பொழுது நாம் நமது வாளாயுதங்களை ஏன் உருவுகிறோ மென்றால், நாம் தீங்கிழைக்கப் பட்டிருப்பதனால்தான்; குற்றஞ் சாட்டு வதற்கான நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்திருப்பதனால்தான். ஆத்தீனியர் களைத் தண்டித்துவிட்டு நமது வாளாயுதங்களை உறையுளே போட்டு விடுவோம். நமக்கு வெற்றி கிடைக்குமென்று நிச்சயமாக எதிர் பார்க்கலாம். இப்படி எதிர்பார்ப்பதற்கு அநேக காரணங்களுண்டு. முதலாவது நமக்குப் படை பலமும் படை அனுபவமும் அதிகம்: இரண்டாவது, படைத் தலைவர்கள் விடுக்கிற உத்தரவுகளுக்குத் தயங்காமல் கீழ்ப்படியும் தன்மை நமக்கு உண்டு. ஆத்தீனியர்களுக்குக் கப்பற்படை பலம் அதிகம். அதற்கு ஈடாக நாம் நமது சொந்தப் பணங்களையும் ஒலிம்ப்பியாவிலும் டெல்பியிலும் உள்ள கோயில்களின் பணங்களையும் எடுத்து உபயோகிப்போம். உபயோகித்து, ஆத்தீனீய மாலுமிகளுக்கு அதிக சம்பளம் கொடுப்பதாகச் சொல்லி அவர்களை நம் பக்கம் திருப்பிக் கொள்வோம். ஆத்தென்ஸின் பலமெல்லாம் தேசீய உணர்ச்சி மேலீட்டால் ஏற்பட்டிருக் கிற பலமல்ல; பண மிகுதியினால் ஏற்பட்டிருக்கிற பலம். நமக்கு அப்படி யில்லை. நமக்கு பண பலத்தைக்காட்டிலும் ஆள் பலம் அதிகம். கடற் போரில் அவர்கள் ஒரு தடவை தோல்வியடைந்து விடுவார்களேயானால் அதனோடு அவர்கள் அழிந்துபடுவார்கள். அப்படிஅழிந்துபடாமல் மீண்டெழுவார்களானால், மீண்டெழுவதற்குச் சிறிது காலம் பிடிக்கு மல்லவா, அந்தக் காலத்தை, கடற்போர் பயிற்சி பெறுவதில் நாம் உபயோகித்துக் கொள்வோம். அந்தப் பயிற்சியில் தேர்ச்சியடைந்து அவர்களுக்குச் சமதையான பலம் பெற்றுவிட்டோமானால், வீரத்தில் அவர்களைக்காட்டிலும் நாம் மேலானவர்களா யிருப்போமா என்ற கேள்வியை நாம் கேட்டுக் கொள்ள வேண்டியதில்லை. சுபாவத்திலேயே நாம் வீரர்களா யிருக்கிறோம். அவர்களோ பழக்கத்தின் பேரில் வீரர்களா யிருக்கிறார்கள். நூல் பயிற்சியில் அவர்கள் மேலானவர்களாயிருந்தால் நாம் அனுபவத்தில் மேலானவர்களாயிருக்கிறோம். இவைகளுக் கெல்லாம் பணம் தேவைப்படுமல்லவா? நாங்கள் கொடுக்கிறோம். ஆத்தீனியர்களுடைய சகாக்கள், தங்களை அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டிருப்பதற்காக, அவர்களுக்கு-ஆத்தீனியர்களுக்கு-கப்பஞ் செலுத்தச் சலித்துக் கொள்வதேயில்லை. அப்படியிருக்க, நாம், பழி தீர்த்துக் கொள்ளவும் தற்காப்புக்காகவும் பணஞ் செலவழிக்க மறுத்தோமானால், அப்படி மறுப்பதன் மூலம் ஆத்தீனியர்களுடைய பேராசைக்கு நாம் இரையாவதோடு, நம்முடைய அழிவையும் நாமே தேடிக் கொண்டவர் களாவோம். யுத்தத்தைத் தொடர்ந்து நடத்த வேறு வழிகளுமுண்டு. உதாரண மாக ஆத்தீனியர்களுடைய சகா ராஜ்யத்தினரைக் கலகத்திற்குத் தூண்டி விடலாம். அதன் மூலம் அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் கப்பத் தொகையைக் கிடைக்காமற் செய்து விடலாம். இந்தக் கப்பத் தொகைதான், அவர்கள் பலம் பெற்றிருப்பதற்கு மூல காரணமாயிருக் கிறது. இங்ஙனம் அவர்களுடைய சகா ராஜ்யத்தினர், கலகத்திற்குக் கிளம்பு கிற சந்தர்ப்பம் பார்த்து நாம் அவர்களுடைய பிரதேசங்களில் கோட்டை கொத்தளங்களைக் கட்டிக்கொண்டு விடலாம். இந்த மாதிரி இன்னும் அநேக காரியங்களைச் செய்யலாம். இவைகளை யெல்லாம் இப்பொழுது நாம் எதிர்பார்த்துச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. யுத்தமானது எப்பொழுதுமே குறிப்பிட்ட சில விதிகளின் பிரகாரம் நடைபெறு வதில்லை. சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, நெருக்கடி ஏற்படுகிறபோது, அந்த நெருக்கடியைச் சமாளித்துக் கொள்கிற முறையில் நடந்து கொள்வதுதான் யுத்த தந்திரம். நெருக்கடியான சந்தர்ப்பங்களில் பதற்ற மடையாமல் நிதானமாகக் காரியங்களைச் செய்கிறவர்களுக்குத் தான் வெற்றி கிடைக்கிறது; ஆத்திரப்பட்டுக் காரியங்களைச் செய்கிறவர்களுக்கு வீழ்ச்சிதான். பக்கத்துப் பக்கத்திலுள்ள இரண்டு ராஜ்யங்களுக்கிடையே ஏதோ சில பிரதேசங்கள் விஷயமாகத் தகராறு ஏற்பட்டிருக்கிறதென்று சொன்னால் அதை நாம் ஒரு விதமாகப் பொறுத்துக் கொண்டிருக்கலாம். ஆத்தென் விஷயத்தில் அப்படியில்லை. அதனுடைய பலம் நம்மெல்லோருடைய ஒன்றுபட்ட பலத்திற்குச் சமதையா யிருக்கிறது. அப்படியிருக்க நாம் தனித்தனியாகப் பிரிந்து நின்றால், நம் ஒவ்வொருவருடைய பலமும், அதனுடைய பலத்திற்கு முன் எம்மாத்திரம்? ஆகவே? நாம் தனித்தனி இனத்தினர், தனித்தனி ராஜ்யத்தினர் என்பதில்லாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து அதனை எதிர்த்து நிற்காமற் போனால், அது சுலபமாக நாம் ஒவ்வொருவரையும் தனித்தனியே வெற்றி கொண்டு விடும். இப்படிச் சொல்லி நாங்கள் ஏதோ உங்களைப் பயமுறுத்தி வைப்பதாக நீங்கள் நினைக்கலாம். அப்படியொன்றுமில்லை. தோல்வி ஏற்பட்டால், நிச்சயம் நாமனைவரும் ஒரே அடிமைத்தனத்திலிருக்க வேண்டியதுதான். அந்த மாதிரி நேரக்கூடுமென்று சொல்வதே பெலொப் பொனேசியாவுக்கு அவமானம். ஒரு ராஜ்யம் - ஆத்தென் - இத்தனை ராஜ்யங்களையும் ஆட்டி வைப்பதா? இதற்கு நாம் உட்படுவோமானால் நம்மைப் பார்த்து மற்றவர்கள் என்ன சொல்வார்கள்? இவர்களுக்கு இந்தக் கதி வேண்டியது தான்; இதற்குத்தான் இவர்கள் தகுதியுடையவர்கள்; இவர்களுடைய கோழைத்தனம், இந்தக் கதியைச் சகித்துக்கொண்டிருக்கும் படி செய்திருக் கிறது: இவர்களுடைய மூதாதையர்கள், அகில கிரீஸுக்கும் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தார்கள்; அதை இவர்கள், தங்களுக்கு வைத்துக் காப்பாற்றிக்கொள்ளாமல் இழந்துவிடக்கூடிய அவ்வளவு கேவல நிலையையடைந்துவிட்டார்கள்; இப்படியெல்லாம் பேசுவார்கள். ஆத்தென்ஸுக்கு இப்போது நாம் பணிந்து கொடுத்தோமானால், கிரீஸிலேயே ஒரு கொடுங்கோலாட்சியை ஏற்படுத்தியவர்களாவோம். நம் ஒவ்வொருவருடைய ராஜ்யத்திலும் கொடுங்கோலர்களை அடக்கி ஒடுக்குவது நமது கடமையென்று கருதிக்கொண்டே ,இப்படிச் செய்தோ மானால் அஃது எவ்வளவு கேவலம்! மூடத்தனத்தினாலும் கோழைத்தனத் தினாலும் அலட்சிய புத்தியினாலுமே இப்படிச் செய்தோமென்று தான் எல்லோரும் சொல்வார்கள். சத்துருக்களை அலட்சியமாகக் கருதுவ தனால் எத்தனையோ பேர் அழிந்துபட்டிருக்கிறார்கள். அந்த மாதிரியான ஒரு சுபாவத்தில் நீங்கள் தஞ்சம் புகுந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை.) நிகழ் காலத்திற்குச் சென்ற காலம் எந்த அளவுக்குப் பயனுடையதா யிருக்கிறதோ அந்த அளவுக்கு மட்டுமே சென்ற காலத்தைப்பற்றிப் பேசினால் நன்றாயிருக்கும். அதற்கு மேல் பேசுவதெல்லாம் அர்த்த மில்லாத பேச்சு. நிகழ் காலத்தில் நமக்கு கிடைத்திருக்கின்றனவற்றைக் காப்பாற்றியும் இரு மடங்காகப் பெருக்கியும் எதிர்கால சந்ததியினருக்கு வைத்துவிட்டுப் போகவேண்டும். உழைப்பினால் மேன்மையடைவது தான் நமது பரம்பரை வழக்கம். இந்த வழக்கத்தை நீங்கள் மாற்றக்கூடாது. செல்வத்தினாலும் மற்றப் பொருள்களினாலும் சில சாதகங்கள் இருக்கின்றனவென்றாலும் இந்த வழக்கத்தை நீங்கள் மாற்றக்கூடாது. ஒன்றுமே இல்லாத காலத்தில் சம்பாதித்ததை யெல்லாம், நிறைய இருக்கிற காலத்தில் இழந்துவிடக் கூடாது. நீங்கள் தைரியமாகப் படையெடுத்துச் செல்லவேண்டுமென்பதற்கு அநேக முகாந்திரங்கள் இருக்கின்றன. (டெல்பி 1 கோயிலுக்குச் சென்று நீங்கள் குறி கேட்டீர்களல்லவா, அதன்படியே அப்போலோ2) தெய்வம், நம்மைப் படையெடுத்துச் செல்லுமாறு ஆணையிட்டிருக்கிறது; நமக்கு உதவியாக இருப்பதாகவும் வாக்களித்திருக்கிறது. நாம் படையெடுத்துச் சென்றோமேயானால் கிரீஸிலுள்ள மற்ற ராஜ்யங்களும், அச்சங் காரணமாகவோ சுயநலங் காரணமாகவோ நம்மோடு சேர்ந்துகொள்ளும். படையெடுத்துச் செல்வதனால் சமாதான ஒப்பந்தத்தை மீறிய பழி உங்களைச் சாராது; மீறினவர்களைப் பழிவாங்கவே நீங்கள் படை யெடுத்துச் செல்வதாகவே கருதப்படுவீர்கள். ஆக்கிரமிப்பு முறை களினால்தான் சமாதான ஒப்பந்தங்கள் மீறப்படுகின்றனவே தவிர தற்காத்துக் கொள்ளும் முறைகளினாலல்ல. எவ்விதமாகப் பார்த்தபோதிலும் இப்பொழுது நீங்கள்யுத்த்திற்குப் புறப்படுவதுதான் உசிதமென்பது நன்கு புலப்படும். எல்லோருடைய நலனை முன்னிட்டும் நீங்கள் யுத்தத்திற்குப் புறப்பட வேண்டுமென்று நாங்கள் கூறுகிறோம். ராஜ்யங்களாகட்டும், தனிப்பட்ட நபர்களாகட்டும் ஒரே நலங் காரணமாக ஒன்றுபடுவார்களானால் அந்த ஒற்றுமைதான் அசைக்க முடியாத ஒற்றுமையா யிருக்கும். ஆதலின், ஐயோனியர்களால் முற்றுகையிடப் பட்டிருக்கிற டோரியர்களின் நகர-ராஜ்யமாகிய பொட்டிடீயாவுக்கு உடனே தாமதமின்றி உதவி யனுப்புங்கள்.3 இங்ஙனம் உதவியனுப்புவதன் மூலம், மற்ற ராஜ்யங்கள் சுதந்திரம் பெறுவதற்கும் உதவுங்கள். இனியும் எங்களால் காத்துக்கொண்டிருக்க முடியாது. காத்திருப் போமானால், நம்மிலே சிலர் உடனடியாக நாசமாக வேண்டியது தான். நாமெல்லோரும் இங்கு ஒன்று கூடி ஆலோசித்தோம். அதனால் காரியாம்சத்தில் இறங்கத் தயங்குகிறோமென்று தெரிந்தால், சமீப காலத்திற்குள் மற்றவர்களும் நாசமாக வேண்டியதுதான். எனவே, சகாக்களே! தாமதஞ் செய்யாதீர்கள். தற்போது நெருக்கடி ஏற்பட்டிருக் கிறதென்பதை நன்கு உணர்ந்தும், நாங்கள் கூறிய ஆலோசனையை ஏற்றும், யுத்தத்திற்கு ஓட்டுச் செய்யுங்கள். ஓட்டுச் செய்தால், உடனடி யாகச் சில ஆபத்துகள் ஏற்படக் கூடுமெயென்று தயங்காதீர்கள். நீண்ட நோக்குடன் பார்ப்பீர்களானால், அந்த ஆபத்துக்களைக் கடந்த ஒரு சமாதான நிலையைக் காண்பீர்கள். அந்தச் சமாதானத்தை உத்தேசித்து இப்பொழுது ஓட்டுச் செய்யுங்கள். யுத்தத்தின் மூலந்தான் சமாதானத்தை நிலைபெறச் செய்யக்கூடும். ஆபத்தைக் கடப்பதற்கு, சமாதானத்தைக் கைவிடாதிருக்க வேண்டுமென்று சொல்வது சரியல்ல. அதனால் ஆபத்தைக் கடக்கவும் முடியாது. எல்லோருடைய விருப்பத்திற்கும் விரோதமாக ஆத்தென், கிரீஸில், கொடுங்கோலாட்சியை நிறுவியிருக் கிறதென்பதை நாமனைவரும் நினைவு கொள்ள வேண்டும். உலக ஆதிக்கம் பெறவேண்டுமென்று அந்த ஆத்தென் திட்டம் போட்டிருக்கிறது. அந்தத் திட்டத்தில் ஓரளவு நிறைவேற்றியுமிருக்கிறது; மிகுதியை நிறைவேற்ற உத்தேசித்திருக்கிறது. ஆதலின் அதனைத் தாக்கி நாசப்படுத்துவோமாக! எதிர்காலத்தில் நமக்கு க்ஷேமத்தைத் தேடிக் கொள்வோமாக! அடிமைப்படுத்தப் பட்டிருக்கிற கிரேக்கர்களுக்குச் சுதந்திரத்தை வாங்கிக் கொடுப்போமாக! மகாநாட்டில் ஆஜராயிருந்த பெரும்பாலான பிரதிநிதிகள் யுத்தத் திற்குச் சாதகமாக ஓட்டுச் செய்தனர். மகாநாடும் கலைந்துவிட்டது. யுத்தத்திற்குச் சாதகமாக ஓட்டுச் செய்த ராஜ்யங்கள், யுத்தத்திற்குத் தயாராகத் தொடங்கின. இங்ஙனம் தயாரித்துக்கொள்வதற்கு ஏறக்குறைய ஒரு வருஷம் பிடித்தது.  மூன்றாவது அத்தியாயம் இந்த ஒரு வருஷ இடைக்காலத்தை ப்பார்ட்டா சும்மா கழிக்க வில்லை. தன்னை யுத்தத்திற்குத் தயார்படுத்திக் கொண்டு வந்த தோடு, ஆத்தென்ஸுக்கு, சமரஸம் பேசுகின்ற முறையில் தூதுகோஷ்டிகளை ஒன்றன்பின்னொன்றாக அனுப்பிக் கொண்டு வந்தது. ஆத்தென்ஸும் திருப்பிச் சில தூதுகோஷ்டிகளை அனுப்பி வந்தது. இந்தத் தூதுகோஷ்டி களின் பரிவர்த்தனைபற்றி வாசகர்கள் தெரிந்துகொள்வதற்கு முந்தி, ஆத்தென் மீது விரோதம் வளர்ந்ததற்கும் ப்பார்ட்டாவின் கை வலுப் பெற்றதற்குமான ஓரிரண்டு காரணங்களைத் தெரிந்துகொள்வது அவசியமாகும். ஆத்தென்ஸுக்குத் தென்மேற்கேயுள்ள எஜீனா என்பது ஒரு சிறிய தீவு ராஜ்யம். ஆத்தென்ஸுக்கும் இதற்கும் நீண்ட காலமாகப் பகைமை இருந்து வந்தது. கடைசியில் இது கி.மு 457- ம் வருஷம் ஆத்தீனிய ஏகாதிபத்தியத்திற்குட்பட்டு விட்டது. இதனால் இதற்கு ஆத்தென்மீது உள்ளூர துவேஷம் இருந்து வந்தது. இந்தத் துவேஷம் காரணமாக இது ப்பார்ட்டாவுக்கு உடந்தையாயிருந்தது. மெகாரா என்பது, அட்டிக்காவுக்கும் பெலொப்பொனேசியாவுக்கும் மத்தியிலுள்ளது; இரு பக்கங்களிலும் - வடமேற்கிலும் தென்கிழக்கிலு மாக-கடல் தொடர்புடையது. இதனால் இதற்கும் ஆத்தென்ஸுக்கும் கடல் வியாபார விஷயமாக எப்பொழுதும் ஒரு வித போட்டி இருந்து வந்தது. இது - மெகாரா- முதலில்பெலொப்பொனேசிய சமஷ்டியில் சேர்ந்திருந்தது. பின்னர் கி. மு. 459-ம் வருஷம், சமஷ்டியை விடுத்து ஆத்தென்ஸின் பாதுகாப்புக்குட்பட்டது. ஆனால் நீண்ட காலத்திற்கு இப்படி யிருக்க வில்லை. கி.மு. 447-ம் வருஷம் ஆத்தென்ஸுக்கு விரோதமாகக் கலகத் திற்குக் கிளம்பி, அதன் பாதுகாப்பினின்று விடுதலை பெற்றுக்கொண்டது. இஃது ஆத்தென்ஸுக்கு உறுத்தலாகவே இருந்து வந்தது; அதனை எப்படியாவது சீர்குலைத்து விட வேண்டுமென்று உறுதி கொண்டிருந்தது. கி. மு. 433-ம் வருஷம், ஸைபோட்டாவில் கார்ஸைராவுக்கும் கொரிந்த் தியாவுக்கும் நடைபெற்ற கடற்போரில், மெகாரா, கொரிந்த்தி யாவுக்கு உதவியா யிருந்தது, அஃது எப்படி யிருக்கலாம்? தனது ஆதரவுக்கும் அநுதாபத்திற்கும் உரித்தாயிருந்த கார்ஸைராவுக்கு விரோதமாகவும், தனது விரோதியான கொரிந்த்தியாவுக்குச் சாதக மாகவும் இருந்தது, தன் மீதுள்ள பகைமையினாலேயே என்று ஆத்தென் கருதி விட்டது. இதனால் மெகாரியர்கள், தன்னுடைய ஏகாதிபத்தியத் திற்குள் எங்கும் வந்து வியாபாரஞ் செய்யக்கூடாதென்று கி. மு. 432-ம் வருஷம் ஒரு தடையுத்தரவு பிறப்பித்தது. மெகாராவின் கடல் வியாபாரத்தைக் குலைத்து விட வேண்டுமென்பதே ஆத்தென்ஸின் நோக்கம். இந்த மெகாராவும் இப்பொழுது ப்பார்ட்டாவுக்கு உடந்தையா யிருந்தது. இனி தூதுகோஷ்டியின் பரிவர்த்தனைக்கு வருவோம். ப்பார்ட்டாவி லிருந்து சென்ற முதலாவது தூதுகோஷ்டியானது, ஆத்தென்ஸில் தெய்வ சாபத்திற்குட்பட்ட சிலர் இருக்கின்றனர் என்றும் அவர்களை நாடுகடத்தி விட வேண்டுமென்றும், அவர்களை நாட்டில் வைத்துக் கொண்டிருப்பது தெய்வ நிந்தையாகுமென்றும், கிரேக்கர் யாருமே இங்ஙனம் தெய்வ நிந்தனை செய்யக்கூடாதென்ற நல்லெண்ணத்தினாலேயே இதைத் தெரிவிப்பதாகவும் கூறியது. உண்மையில் ப்பார்ட்டாவின் நோக்கம், பெரிக்ளீஸை ஆத்தென்ஸிலிருந்து அப்புறப்படுத்தி விட வேண்டு மென்பது. அவனுடைய வமிசத்தார்தான் தெய்வ சாபத்திற்குட்பட்டிருக் கிறார்களென்பது அதன் கருத்து. பெரிக்ளீஸை நாட்டைவிட்டு வெளி யேற்றி விட வேண்டுமென்று நேரடியாகச் சொல்லாமல், நேரடியாகச் சொல்வதற்குத் தைரியமில்லாமல், இப்படி மறைமுகமாகக் கூறியது. இந்தக் காலத்தில் பெரிக்ளீஸுக்கு ஆத்தென்ஸில் அபரிமித செல்வாக்கு. அவன் இட்டது சட்டமாயிருந்தது; ப்பார்ட்டாவுக்குப் பரம விரோதி யான, அவனை அப்புறப்படுத்தி விட்டால் அவனுடைய செல்வாக்கு குன்றும்படி செய்துவிட்டால், ஆத்தென்ஸின் கை ஒடிந்தது போலாகும், அதற்குப் பிறகு தன் கை வலுத்துவிடும் என்று ப்பார்ட்டா கருதியது. இதற்கு ஆத்தென், ப்பார்ட்டாவிலும் தெய்வ சாபத்திற்குட்பட்டவர் இருக்கிறனரென்றும், முதலில் அவர்களை அஃது அப்புறப்படுத்தட்டு மென்றும் பதில் கூறி யனுப்பி விட்டது. இரண்டாவது தூது கோஷ்டியொன்று ப்பார்ட்டாவிலிருந்து சென்றது. பொட்டிடீயாவின் முற்றுகையை எடுத்துவிட வேண்டுமென்றும், எஜீனா சுதந்திரமான ராஜ்யமென்பதை அங்கீகரித்துக்கொள்ள வேண்டுமென்றும், மெகாரியர்கள் மீது பிறப்பிக்கப்பட்டிருக்கிற தடையுத்தரவை ரத்து செய்துவிட வேண்டுமென்றும் ஆத்தென்ஸைக் கேட்டது இந்தத் தூது கோஷ்டி. இந்தக் கோரிக்கைகள் எதற்கும் இணங்க முடியாதென்று பதில் சொல்லி யனுப்பிவிட்டது ஆத்தென். மூன்றாவது தூதுகோஷ்டியொன்று மீண்டும் ப்பார்ட்டாவிலிருந்து சென்றது. முந்திய இரண்டு தூது கோஷ்டியினரும் கிளத்திய கோரிக்கை களில் எதனைப்பற்றியும் இது பிரதாபிக்காமல் இப்பொழுதுள்ள படியே இரு ராஜ்யங்களும் நல்லுறவு பூண்டிருக்க வேண்டுமென்பதே ப்பார்ட்டாவின் விருப்பம்; அந்தந்தக் கிரேக்க ராஜ்யங்களையும் சுதந்திர மாக இருக்கும்படி நீங்கள் விட்டுவிட்டால் இந்த நல்லுறவு நீடித்திருக்கும், என்று இப்படிப் பொதுவான முறையில் ஒரு கோரிக்கையைக் கிளத்தியது. இந்தக் கோரிக்கை ஆத்தீனிய ஜனசபையில் ஆலோசனைக்கு வந்தது. முந்திய கோரிக்கைகளையும் சேர்த்து மொத்தமாக ஆலோசிப்ப தென்று முதலில் முடிவு செய்யப்பட்டது. பிறகு கோரிக்கைகளில் சிலவற்றை ஆதரித்தும் மற்றவற்றை நிராகரித்தும், யுத்ததிற்குச் சாதகமாகவும் பாதமாகவும் பலர் பேசினர். அப்பொழுது பெரிக்ளீ பின் வருமாறு பேசினான்:- ஆத்தீனியர்களே! எப்பொழுதும் போல் நான் ஒரே மாதிரியான அபிப்பிராயமே கொண்டிருக்கிறேன்; அதுதான் பொலொப்பொனேசியர் களுக்கு எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க கூடாதென்பது. யுத்தம் தொடுக்க வேண்டுமென்று எந்த உணர்ச்சி மனிதர்களைத் தூண்டுகிறதோ அந்த உணர்ச்சி அவர்களிடத்தில், அவர்கள் செயலில்,அதாவது யுத்தத்தில் இறங்குகிறபோது இருப்பதில்லையென்பதை நான் அறிவேன். நிலைமைக்குத் தகுந்தபடி நமது தீர்மானங்களும் மாறுபடுகின்றன. யுத்த சம்பந்தமாக முந்தி என்ன ஆலோசனை சொல்லி வந்தேனோ அதே ஆலோசனையைத் தான், எழுத்துப் பிசகாமல் அதே ஆலோசனையைத் தான், இப்பொழுதும் கூற வேண்டியவனா யிருக்கிறேன். என்னுடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்கிறவர்கள், நாம் போடுகிற திட்டங்களில் சில தவறிவிட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் நாமனைவரும் சேர்ந்து என்ன தீர்மானம் பண்ணுகின்றோமோ அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். அப்படிக்கின்றி நமது திட்டங்களிற் சில வெற்றிகரமாக நிறைவேறிவிட்டால், அப்படி நிறைவேறியதற்குத் தாங்களே காரணர் களென்று பெருமையடித்துக் கொள்ளக் கூடாது. மனிதன், திட்டங்கள் போடுகிறான்; ஆனால் அந்தத் திட்டங்களின்படி காரியங்கள் நடைபெறு வதில்லை. நாம் எதிர்பார்க்கிறபடி காரியங்கள் நடைபெறாவிட்டால் துரதிருஷ்ட மென்கிறோம். ப்பார்ட்டா, நமக்கு விரோதமான மனப்பான்மையைக் கொண்டிருக் கிறதென்பது ஏற்கனவே நமக்குத் தெரிந்தது தான்; இப்பொழுது அது பஷ்டமாக விளங்கிவிட்டது. ஆத்தென்ஸுக்கும் ப்பார்ட்டாவுக்கும் அபிப்பிராய பேதங்கள் ஏற்படுமானால் அவற்றைச் சட்ட ரீதியாக மத்தியதர்கள் முன்னிலையில் வைத்து அவர்கள் கூறும் தீர்ப்புக்கு இருதரப்பினரும் உட்படுவதென்றும், தீர்ப்புக் கூறப்படுகிற வரை அவரவரும் அவரவருக்குள்ளதை வைத்துக் கொண்டிருப்பதென்றும் (முப்பது வருஷ) சமாதான ஒப்பந்தத்தில் காணப்பட்டிருக்கின்றன. இது வரை ப்பார்ட்டா, எந்த விதமான மத்தியத கோரிக்கையையும் கிளத்த வில்லை. நாம் அந்தமாதிரி ஒரு கோரிக்கையைக் கிளத்தினாலும் அதை ஏற்றுக் கொள்ளவும் அது தயாராயில்லை. இந்த மத்தியத முறைக்கு மாறாக அது - ப்பார்ட்டா - தன் குறைகளுக்கு யுத்தத்தின் மூலமாகவே பரிகாரந் தேடிக்கொள்ள விழைகிறது. இப்பொழுது என்ன நிலைமைக்கு வந்திருக்கிறதென்றால், நியாயந் தீர்த்துப் பேசுகின்ற தோரணையை விட்டுவிட்டு, நமக்கு உத்தரவு போடும் தோரணையில் பேச ஆரம்பித்திருக்கிறது. பொட்டிடீயா முற்றுகையை எடுத்துவிடுங்கள்; எஜீனாவின் சுதந்திரத்தைக் கௌரவியுங்கள்; மெகாரியர்களுக்கு விரோதமான தடையுத்தரவை ரத்து செய்து விடுங்கள்; கடைசியாக கிரேக்க ராஜ்யங்களைச் சுதந்திரமாக இருக்க விடுங்கள்; இப்படி யெல்லாம் நமக்கு உத்தரவிடுகிறது அது, ப்பார்ட்டா. மெகாரா தடையுத்தரவை ரத்து செய்துவிட வேண்டுமென்பது ஒரு சின்ன விஷயந்தானே, அப்படியே அதனை ரத்து செய்துவிட்டாலென்ன, இதற்காக யுத்தத்திற்குப் போவானேன் என்று நீங்கள் எண்ணுவீர்களானால் அந்த எண்ணமே வேண்டாம்; சின்ன விஷயத்திற்காகச் சண்டைக்குப் போகிறோமே யென்று உங்களையே நீங்கள் நொந்துகொள்ள வேண்டாம். இந்தச் சின்ன விஷயத்தில்தான் உங்கள் உறுதி, பரிசோதனைக்குள்ளாக வேண்டியிருக்கிறது, இதற்கு நீங்கள் இணங்கிக் கொடுத்துவிட்டீர் களானால், உங்களை அச்சுறுத்தித் தாங்கள் சலுகை பெற்றுக்கொண்டு விட்டதாக ப்பார்ட்டர்கள் நினைப்பார்கள்; உடனே பெரியதொரு கோரிக்கையைக் கிளத்துவார்கள். இப்பொழுது நாம் இந்தச் சின்ன விஷயத்திற்கு இணங்கக் கண்டிப்பாக மறுத்துவிட்டோமானால், ஓஹோ! இவர்களை, அதாவது ஆத்தீனியர்களாகிய நம்மை, சம அந்ததில் வைத்து நடத்தவேண்டும் போலிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வார்கள். ஆதலின் உடனே ஒரு தீர்மானத்திற்கு வாருங்கள். ஒன்று, தீங்கிழைக்கப் படுவதற்கு முந்தி பணிந்து போக வேண்டும்; அல்லது யுத்தத்திற்குப் போகவேண்டும். யுத்தத்திற்குப் போவதற்கான காரணம் சிறியதா பெரியதா என்பதைப் பொருட்படுத்தாமல், எதையும் விட்டுக் கொடுப்பதில்லையென்ற உறுதியுடன், நமது ஆதிக்கத்துக்குட்பட்டிருக்கும் பிரதேசங்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடாதென்ற நிச்சயத்துடன் யுத்தத் திற்குப் போகவேண்டும். என்னைப் பொறுத்தமட்டில் யுத்தத்திற்குப் போவது அவசியமென்று நினைக்கிறேன். சிறிய விஷயமோ பெரிய விஷயமோ எதுவாயிருந்தாலும் அதை, சம அந்ததிலுள்ளவர்கள் கோரிக்கையாகத்தான் பரிவர்த்தனை செய்துகொள்ள வேண்டும்; உத்திரவிடுகிற தோரணையில் பேசக்கூடாது. அப்படிப் பேசுவார்களானால் அதற்கு ஒரே ஓர் அர்த்தந்தான் உண்டு. அதுதான் அடிமைப்படுத்த வேண்டுமென்ற உத்தேசம். யுத்தத்தைப்பற்றிச் சில வார்த்தைகள், ஆத்தென்ஸுக்கும் ப்பார்ட்டாவுக்குமுள்ள யுத்த சக்திகளை சிறிது விதாரமாக ஒப்பிட்டுப் பார்த்தோமானால், ஆத்தென் எந்த விதத்திலும் தாழ்வுற்றிருக்கவில்லை யென்பது நன்கு புலப்படும். பெலொப்பொனேசியர்கள், தங்கள் சொந்த நிலத்தில் உழுது பயிரிட்டுச் சாப்பிடுகிறவர்கள்; அவர்களுக்குச் சொந்தப் பணமோ பொதுப் பணமோ இல்லை. நீடித்து நடைபெறக்கூடிய கடற் போர்களில் அவர்களுக்கு அனுபவம் கிடையாது. அவர்களுக்கிடையே நடைபெறுகிற யுத்தங்கள், வறுமை காரணமாக அற்ப சொற்பமான யுத்தங்களாகவே இருக்கின்றன. இந்த நிலைமையிலுள்ள அவர்கள் ஒரு கப்பற் படையை நடத்திச் செல்லவோ, ஒரு பெரிய காலாட் படையைப் போர்க்களத்திற்கு அனுப்பவோ முடியாதவர்களா யிருக்கிறார்கள். வீடு வாசல்களை விட்டு வெளியே செல்வதென்பது அவர்களால் முடியாத காரியம். சொந்தப் பணத்திலிருந்து செலவழிக்கவும் அவர்களுக்கு வகை யில்லை. கடைசியாக அவர்களுக்குக் கடலாதிக்கமும் கிடையாது.அவ்வப் பொழுது நிர்ப்பந்தித்து வாங்குகிற பணத்தைக் கொண்டு யுத்தத்தை நடத்த முடியாது; நிரந்தரமான பணம் அதிகமிருந்தால்தான் யுத்தத்தை நடத்த முடியும். நிலத்தை உழுது பயிரிடுகிறவர்கள்,1 எப்பொழுதுமே, பணத்திற்குப் பதில் தேக உழைப்பையே கொடுக்கத் தயாரா யிருக்கிறவர்கள்; யுத்தத்தில், தேகத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்துக் களினின்று தப்பித்துக்கொண்டு விட்டாலும் விடலாம். ஆனால் பணமெல்லாம் கரைந்துபோகுமே, அதிலும் யுத்தம் நீடித்து நடைபெறுவதா யிருந்தால் - என்னைப் பொறுத்தமட்டில் யுத்தம் நீடித்து நடைபெறு மென்றே தோன்றுகிறது. - நிச்சயம் கரைந்துவிடுமே என்று கருது கிறவர்கள். பெலொப்பொனேசியர்களும் அவர்களுடைய சகாக்களும் சேர்ந்து ஒரே ஒரு யுத்தத்தில் மட்டும், அதாவது ஒரு தடவை மட்டும் அகில கிரீஸையும் எதிர்த்து நிற்றல் கூடும்; அந்தச் சக்தி அவர்களுக்கு உண்டு. ஆனால் அவர்களினின்று வேறுபட்ட சுபாவமுடைய ஒரு ராஜ்யத்துடன் போராடுவதென்பது அவர்களால் முடியாது. எப்படியென்றால், துரித மாகவும் தீவிரமாகவும் யுத்தத்தை நடத்துவதற்கு, ஒருமனப்பட்ட அங்கத்தினர்களைக் கொண்ட யுத்த சபையொன்று இன்றியமையாதது. இத்தகைய யுத்த சபை அவர்களுக்கு - பெலொப்பொனேசியர்களுக்கும் அவர்களுடைய சகாக்களுக்கும் - இல்லை. மற்றும் இந்தப் பெலொப்பொனேசியக் கூட்டில், அதாவது பெலொப்பெனேசியர்களும் அவர்களுடைய சகாக்களுமடங்கிய இந்தக் கூட்டில் பல்வேறு இனத்தினர் இருக்கின்றனர். எல்லோரும் சம ஓட்டுரிமை யுடையவர்கள். இதனால் அவரவரும் அவரவர் நலத்தையே வலியுறுத்துவர். விளைவு என்ன? ஒரு காரியமும் நடைபெறாது. இவர்களிலே சிலருக்கு, குறிப்பிட்ட ஒரு சத்துருவின் மீது மட்டும் பழி தீர்த்துக்கொண்டால் போது மென்றி ருக்கலாம்; பெரும்பாலோருக்கு, தங்கள் சொத்து பற்றுக்கள் பாதிக்கப்படாமலிருந்தால் போதுமென்றிருக்கலாம். அவர்கள் - இந்தப் பெலொப்பொனேசியக் கூட்டாளிகள் - மெது மெதுவாகத்தான் கூட்டமாகக் கூடுகிறார்கள். அப்படிக் கூடி, சிறு பொழுதைத்தான் பொதுக்காரியங்களுக்குச் செலவழிக்கிறார்கள்; பெரும் பொழுதைத் தங்கள் சொந்தக் காரியங்களுக்காகச் செலவழிக்கிறார்கள். இதற்கிடையில், தாங்கள் கவனிக்காத காரணத்தினால் எதுவும் கெட்டுப் போகாது என்று வேறு நினைக்கிறார்கள். எந்தக் காரியமானாலுஞ்சரி, அதனைத் தங்களுக்காக மற்றவர் கவனிக்கவேண்டுமென்று ஒவ்வொரு வரும் கருதுகிறார்கள். இப்படி எல்லோரும் கருதுவதால், பொதுநல மென்பது, கண்ணுக்குத் தெரியாத விதமாகச் சீரழிந்து போகிறது. முக்கியமாக, பணமுடைதான் அவர்களை அதிகமாகப் பாதிக்கும். அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய பணமும் மெது மெதுவாகத்தான் கிடைக்குமாதலால், யுத்தந் தொடங்குவதற்குத் தாமதமாகும். ஆனால் யுத்தந் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்கள் எந்த மனிதனுக்காகவும் காத்துக் கொண்டிருப்பதில்லை. அவர்கள், அட்டிக்காவுக்குள் வந்து கோட்டை கொத்தளங்களைக் கட்டிக்கொள்வார்களென்றோ, தங்கள் கப்பற்படையை வலுப்படுத்திக் கொள்வார்களென்றோ நாம் பயப்பட வேண்டியதில்லை. பெலொப்பொனேசியா, நம்மோடு சமாதானமாக இருந்த காலத்திலேயே நமது ராஜ்யத்தில் கோட்டை கொத்தளங்களைக் கட்டிக் கொள்ள அதனை அனுமதித்ததில்லை; அப்படியிருக்க இப்பொழுது, யுத்தத்திற்கான நிலைமை ஏற்பட்டிருக்கிற இப்பொழுது, அனுமதிப்போமா? நம்மையும் மீறி அது கட்டிக் கொள்ளுமானால், நாமும் அதனுடைய ராஜ்யத்தில் கோட்டை கொத்தளங்களைக் கட்டிக்கொள்ள முடியும். ஆதலின் இதனைப் பற்றிய அச்சம் வேண்டுவதில்லை. அப்படியே அது - பெலொப்பொனேசியா - ஓரிரண்டு கோட்டை கொத்தளங்களைக் கட்டிக் கொள்கிறதென்று வைத்துக்கொள்வோம். என்ன செய்ய முடியும்? அவற்றை அடித்தளமாகக் கொண்டு, நமது ராஜ்யத்தின் சில சில பகுதிகளைச் சூறையாடலாம்; அல்லது நமது படைகளிலிருந்து தப்பியோடிச் செல்லக் கூடியவர்களுக்கு அவை - அந்தக் கோட்டை கொத்தளங்கள் - அடைக்கல தலமாக இருக்கலாம்; அவ்வளவு தான். அந்தக் கோட்டை கொத்தளங்கள், நம்மைப் பெலொப்பொனேசியாவில் சில கோட்டை கொத்தளங்களைக் கட்டிக்கொள்வதினின்றுமோ, நம்முடைய கப்பற்படையைக் கொண்டு அதன் பிரதேசங்களைச் சூறை யாடுவதினின்றுமோ ஒருபோதும் தடுக்கமுடியாது. தரைப்போரில் அவர்களுக்கிருக்கும் வல்லமையானது, கடலில் அவர்களுக்கு உபயோக மாவதைக் காட்டிலும், கடற்போரில் நமக்கிருக்கும் வல்லமையானது தரையில் நமக்கு அதிகமாக உபயோகப்படும். கடற்பழக்கம் பெறுவ தென்பதை அவர்கள் சுலபமாகச் சம்பாதித்துக் கொண்டுவிட முடியாது. பாரசீகப் படையெடுப்புக் காலத்திலிருந்து அதில் பழக்கம் பெற்று வருகிற நீங்களே அதில் இன்னும் பூரணப் பழக்கம் பெறவில்லையென்றால், விவசாயத் தொழில் செய்து வருகின்ற, கடலிலே கலஞ் செலுத்தி யறியாத ஜனங்கள் ஏதேனும் பிரமாதமாகச் சாதித்துவிட முடியுமா? அதிலும், கண்காணிப்பு வேலையில் நியமிக்கப்பட்டிருக்கும் ஆத்தீனியக் கப்பற்படையானது, அவர்கள் பயிற்சி பெறுவதைத் தடுத்துவிடக் கூடிய நிலைமையிலிருக்கின்றபொழுது? கடல் அனுபவமில்லாவிட்டாலும், கப்பல்களின் எண்ணிக்கை அதிகமிருக்கிறதே யென்று எண்ணி அவர்கள் ஒரு சிறு கப்பற்படையுடன், துணிந்து ஒரு தடவை போராடலாம். ஆனால் அதைக்காட்டிலும் பெரிய கப்பற்படையொன்று அதனை அசையவிடாமல் தடுத்துவிடக் கூடும். அப்பொழுது அவர்கள் அனுபவமின்மையால் நிலைகுலைந்துபோவார்கள். அது காரணமாக அவர்களைக் கோழைத்தனம் பற்றிக் கொண்டுவிடும். கடலிற் கலஞ் செலுத்துவதென்பது, மற்றக் கலைகளைப்போல் ஒரு கலை. ஏகதேசமாக, ஓய்விருக்கிற போது பயிலக்கூடிய கலையல்ல அது. அதற்கு மாறாக, அதனைப் பயிலத் தொடங்கினால், வேறு விஷயங்களில் கவனஞ் செலுத்த அவகாசமே இராது. ஒலிம்ப்பியா1விலும் டெல்பியிலுமுள்ள பணங்களையெடுத்துக் கையாள்கிறார்களென்றும், அந்தப் பணங்களைக் கொண்டு, நமது சேவை யிலிருக்கும் அந்நிய நாட்டு மாலுமிகளை, அதிக சம்பளம் கொடுப்பதாக ஆசை காட்டி, தங்கள் பக்கம் இழுத்துக்கொள்கிறார் களென்றும் வைத்துக்கொள்வோம். அப்படிச் செய்தாலும் நம்முடைய பலம் குறைந்து போகாது. ஏனென்றால், மற்றக் கிரேக்க ராஜ்யங்களில் திறமையான மாலுமிகள் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேரைக் காட்டிலும் அதிகமான பேர் - திறமையான மாலுமிகள் - நமது சொந்தப் பிரஜை களிலேயே - ஆத்தீனியர்களிலேயே இருக்கின்றனர். ஆனால் அப்படி யெல்லாம் ஒன்றும் நிகழ்ந்து விடாது. நம்முடைய சேவையிலிருக்கும் அந்நிய நாட்டு மாலுமிகள், சொற்ப காலத்திற்கு மட்டும் கிடைக்கக்கூடிய அதிக சம்பளத்திற்காக நம்மை விட்டுப் போகமாட்டார்களென்பது நிச்சயம். பெலொப்பொனேசியர்களுடைய நிலைமை ஏறக்குறைய இதுதான் என்று நினைக்கிறேன். அவர்களிடத்தில் என்ன குறைகளிருப்பதாக நான் கூறினேனோ அந்தக் குறைகள் நம்மிடம் இல்லை. அது மட்டுமல்ல; நமக்குச் சில விசேஷ அனுகூலங்களும் இருக்கின்றன. அந்த அனுகூலங் களுக்கு ஈடான அனுகூலங்கள் மற்றவர்களுக்குக் கிடையாது தரை மார்க்கமாக அவர்கள் நம்மை நோக்கி வந்தால் கடல் மார்க்கமாக அவர் களை நோக்கி நாம் செல்வோம். அப்பொழுது தெரியும், அட்டிக்கா முழுவதும் பாழாவது போன்றதன்று பெலொப்பொனேசி யாவில் ஒரு சிறு பகுதி பாழாவது. ஏனென்றால், அவர்கள், புதிதாக எந்த ஒரு பிரதேசத்தை யேனும் சம்பாதிக்க வேண்டுமானால் அதற்குச் சண்டை போட்டுத்தானாக வேண்டும். நமக்கோ அப்படியில்லை. நமது ஆதிக்கத்திற்குட்பட்ட தீவு களும் தரைப் பகுதிகளும் நிறைய இருக்கின்றன. கடலாதிக்கத்தின் முக்கியத்துவம் தான் என்னே! நாம் ஒரு தீவில் வசித்துகொண்டிருந்தால் என்னென்ன பந்தோ பதுகளுடன் இருந்திருப்போமோ அதே பந்தோபதுகளுடன் இனியும் இருக்கவேண்டும். நமது வீடுவாசல்களைப்பற்றிய எண்ணத்தை விட்டு விட்டு, நமது கடற் பகுதியையும் நமது ஆத்தென் நகரத்தையும் தீவிரமாகப் பாதுகாத்து வரவேண்டும். நமது வீடு வாசல்களுக்கு நாசமுண்டு பண்ணப்பட்டால் அதற்காக நாம் ஆத்திரங்கொண்டு, எண்ணிக்கை பலம் பெற்றுள்ள பெலொப்பொனேசியர்களுடன் போர் தொடுத்துவிடக் கூடாது. அப்படிப் போர் தொடுத்து வெற்றி பெற்றோமானாலும், மறுபடியும் அதே எண்ணிக்கை பலமுள்ள பெலொப்பொனேசியர்களுடன் போர் செய்ய வேண்டியே வரும். வெற்றி பெறாமல் தோல்வியடைந்துவிட்டால், நமது மூல பலமாயிருக்கிற நமது சகாக்களை இழக்கவேண்டி யிருக்கும். அவர்கள் - அந்தச் சகாக்கள் - நமக்குப் பலக்குறைவு ஏற்பட்டுவிட்டது தெரிந்ததும் ஒரு நாள் கூட சும்மாயிருக்கமாட்டார்கள்; நமக்கு விரோத மாகக் கிளம்புவார்கள். வீடு வாசல்களை இழந்துவிட்டோமானால் அதற்காக நாம் துயரப்படக் கூடாது; மனிதர்களை இழந்துவிட்டோமானால் தான் வருத்தப்பட வேண்டும். வீடுவாசல்களினால் மனிதர்களைச் சம்பாதிக்க முடியாது; ஆனால் மனிதர்களால் வீடு வாசல்களைச் சம்பாதிக்க முடியும். பெலொப்பொனேசியாவுக்குச் சென்று உங்கள் கையினாலேயே அங்கு நாசத்தை உண்டுபண்ணுங்கள்; எந்தவிதத்திலும் பணிந்து கொடுக்கமாட்டோம் என்று பெலொப்பொனேசியர்களுக்குக் காட்டுங்கள். நாம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் நமக்குச் சாதகமாகவே முடியக் கூடுமென்று நம்புவதற்கு அநேக காரணங்களிருக்கின்றன. அப்படிச் சாதகமாக முடிய வேண்டுமானால், ஒரு பக்கத்தில் யுத்தத்தை நடத்திக் கொண்டு மற்றொரு பக்கத்தில் புதிய பிரதேசங்களை ஜெயிப்ப தற்குத் திட்டம் போடக்கூடாது. மற்றும், வேறு ஆபத்துக்களில் நாமே வலியச் சென்று சிக்கிக் கொள்ளக் கூடாது. சத்துருக்களின் யுத்த தந்திரங் களுக்காக நான் அஞ்சவில்லை; நம்மிடத்தில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்துவிடக் கூடுமோ என்று தான் அஞ்சுகிறேன். இந்த விஷயங்களைப் பற்றிச் சந்தர்ப்பம் வரும்போது சொல்லுகிறேன். இப்பொழுது லாஸிடீமோனிலிருந்து வந்திருக்கிற தூதர்களுக்குப் பின்வருமாறு சொல்லியனுப்புவோம்: மெகாரியர்கள், நமது துறைமுகங்கள், மார்க்கெட்டுகள் முதலிய வற்றில் வந்து வியாபாரஞ் செய்ய அனுமதிக்கிறோம். ஆனால், லாஸிடீமோனியர்கள், நம்மையும் நமது சகாக்களையும், அந்நியர்களாகக் கருதி தங்கள் நாட்டிற்குள் வரவொட்டாமல் தடுக்கக் கூடாது. ஒரு நாட்டினரை மற்றொரு நாட்டினர் தடுக்கலாமென்பது (முப்பது வருஷ) சமாதான ஒப்பந்தத்தில் கூறப்படவில்லை. மேற்படி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட காலத்தில் நம்முடைய எந்தெந்த நேச ராஜ்யங்கள் சுதந்திரமா யிருந்தனவோ அந்த ராஜ்யங்கள் யாவும் சுதந்திரத்தை அனுபவிக்கும்படி அனுமதிக்கிறோம். ஆனால் லாஸிடீமோனியர்களும், தங்கள் நேச ராஜ்யங்களுக்குச் சுதந்திரத்தை அனுபவிக்குமாறு அனுமதி யளிக்கவேண்டும். எந்த மாதிரியான சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டும்? தங்களுக்காட்பட்டிருக்கிற மாதிரி யான சுதந்திரத்தையல்ல; அந்தந் த ராஜ்யங்களும் என்ன மாதிரியான சுதந்திரத்தை விரும்புகின்றனவோ அந்த மாதிரியான சுதந்திரத்தை. சமாதான ஒப்பந்தத்தில் கண்டுள்ளபடி, அபிப்பிராய வேற்றுமைக் கிடமாயுள்ள எந்த ஒரு பிரச்னையையும் மத்தியதத்திற்கு விட்டு அதன் தீர்ப்புக்குட்படத் தயாராயிருக்கிறோம். முதன் முதலாக நாங்கள் படையெடுக்க மாட்டோம். ஆனால் யுத்தத்தை ஆரம்பிக்கிறவர்களை எதிர்த்து நிற்போம். இந்த மாதிரியான ஒரு பதில்தான் நியாயத்திற்கும் ஆத்தென்ஸின் கௌரவத்திற்கும் ஏற்றதாயிருக்கும். ஒன்று மட்டும் நிச்சயம் செய்துகொள்ளுங்கள். யுத்தம் நடந்தேயாக வேண்டும். யுத்தத்தில் ஈடுபட நாம் எவ்வளவுக்கெவ்வளவு தீவிரமாகத் தயாரா யிருக்கிறோமோஅவ்வளவுக் கவ்வளவு நமது சத்துருக்களின் உற்சாகம் குறையும். தனிப்பட்ட நபர்களோ, ராஜ்யத்தினரோ பேராபத்தை மேற்கொள்ளுவார்களானால் பெரும் புகழெய்துவார்கள். நமது மூதாதையர்கள், பாரசீகர்களை எதிர்த்து நின்று வெற்றி கண்டார்கள். நம்மிடமுள்ள வசதிகளைக் காட்டிலும் வேறுவிதமான வசதிகள் அவர்களுக்கிருக்கவில்லை. அது மட்டுமன்று; இருந்த வசதி களையும் இழந்துவிட்ட பிறகு அவர்கள் எதிர்த்து நின்றார்கள். அவர்கள் அதிருஷ்டத்தை நம்பவில்லை; தங்கள் அறிவையே நம்பினார்கள். பலத்தைக் காட்டிலும் துணிச்சல்தான் அவர்களுக்கு அதிகமாயிருந்தது. இவைகளைக் கொண்டுதான் அந்நியர்களாகிய பாரசீர்களை விரட்டியடித் தார்கள்; நாம் இப்பொழுது அனுபவிக்கும் பெரிய ஏகாதிபத்தியத்தை நிர்மாணஞ் செய்தார்கள். ஆதலின் நாம் அவர்களுக்கு எந்த விதத்திலும் பின் வாங்கினவர்களாயிருக்கக் கூடாது. நமது சத்துருக்களை எப்படியாவது, எந்த விதத்திலாவது எதிர்த்து நிற்க வேண்டும். நாம் அடைந்திருக்கிற அதிகாரம், செல்வாக்கு அனைத்தையும் பழுது படாமல் அப்படியே நமது பிற்கால சந்ததியாருக்கு ஒப்படைக்கவேண்டும். பெரிக்ளீ கூறியதை ஏற்றுக் கொண்டு அப்படியே லாஸிடீமோனிய தூதர்களுக்குப் பதில் சொல்லியனுப்பி விட்டது ஆத்தீனிய ஜன சபை. இதனோடு சமரஸப் பேச்சுக்கள் முறிந்துவிட்டன; தூதர்கள் மூலம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்ததும் நின்றுவிட்டது. இரு தரப்பினரும் - ஆத்தீனியர்களும் பெலொப்பொனேசியர்களும் - யுத்தத்திற்குத் தயாரானார்கள். யுத்தம் துவங்க வேண்டியதுதான். அதற்கு முன் ஒரு சிறு சம்பவம் நடைபெற்றது. மத்திய கிரீஸில் பியோஷ்யா1விலுள்ள தீப்2 ராஜ்யத்திற்கும் அதற்கு எட்டு மைல் தொலைவிலுள்ள பிளாட்டீயா3 ராஜ்யத்திற்கும் நீண்ட காலமாகப் பகைமை இருந்து வந்தது. பிளாட்டீயா, ஆத்தென்ஸின் சார்பு பற்றி நின்ற ராஜ்யம். ஆத்தென்ஸுக்கும் ப்பார்ட்டாவுக்கும் பெரிய யுத்தம் மூளப்போகிறதென்று தெரிந்து கிரீ முழுதும் ஒரு பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இந்தப் பரபரப்பில், தன் பழைய பகைமையை ஒருவாறு தீர்த்துக்கொள்ளக் கருதிய தீப், கி.மு. 431-ம் வருஷம் மார்ச் மாதம் ஒரு நாள் இரவு, திடீரென்று பிளாட்டீயாவைச் சென்று தாக்கியது. பிளாட்டீயா, முதலில் சிறிது கலக்கமடைந்ததாயினும் பிறகு தன்னைச் சமாளித்துக்கொண்டு, தாக்க வந்த தீபர்கள் பலரைச் சிறைப்படுத்திக் கொலையும் செய்துவிட்டது. பிளாட்டீயா தாக்கப்பட்டதற்குப் பிரதியாக, ஆத்தென் அட்டிக்காவிலுள்ள பியோஷ்யர் பலரைக் கைதியாக்கிவிட்டது; மற்றும் பிளாட்டீயாவுக்கு ஒரு துணைப்படையையும் அனுப்பியது. ப்பார்ட்டா இதைச் சும்மா பார்த்துக் கொண்டிருக்குமா? யுத்தந்தான். யுத்தமும் மூண்டுவிட்டது.  நான்காவது அத்தியாயம் ஆத்தென்ஸும் ப்பார்ட்டாவும், முறையே தங்கள் கட்சிக்கு பலம் தேடும் வகையில் வெளிநாடுகளுக்கு, பாரசீகத்திற்குக் கூட தூதுகோஷ்டி களை யனுப்பின. ப்பார்ட்டா, இத்தாலியிலும் சிஸிலி தீவிலும் தன் சார்பு பற்றி நின்ற ராஜ்யங்களுக்கு, கப்பற் படை திரட்டியனுப்புமாறு உத்தரவு அனுப்பியது. இங்ஙனம் இரு கட்சிகளும் யுத்த சந்நாகங்கள் செய்து கொண்டன. ப்பார்ட்டாவின் உத்தரவுக்கிணங்க பெலொப்பொனேசியாவிலுள்ள பல ராஜ்யங்களின் படைகளும் கி.மு. 431-ம் வருஷம் மே மாதம் இறுதியில் கொரிந்த்திய பூசந்தியண்டை ஒன்று திரண்டன. இதற்கு, ப்பார்ட்ட அரசர்களுள் ஒருவனான மேலே சொல்லப்பெற்ற ஆர்க்கிடாம என்பவன் தலைவன். இவன், படையைச் சேர்ந்த முக்கியதர் பலரையும் ஒன்று கூட்டி, யுத்தத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பது குறித்து அவர்களுக்கு ஒரு பிரசங்கம் செய்தான். அது வருமாறு:- பெலொப்பொனேசியர்களே! சகாக்களே! நமது முன்னோர்கள் பெலொப்பொனேசியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் பல போர் களை நடத்தி யிருக்கிறார்கள். இங்குக் கூடியுள்ளவர்களில் வயதான பலர் யுத்த அனுபவம் பெறாதவர்களல்ல. என்றாலும் இப்பொழுது நாம் பெரும்படை திரட்டிக் கொண்டு புறப்பட்டிருப்பதைப் போல் இதற்கு முன் புறப்பட்டதில்லை. நமது படையின் எண்ணிக்கையும் திறமையும் மிகவா யிருந்தபோதிலும், நாம் எந்த ராஜ்யத்தை நோக்கிப் படையெடுத்துச் செல்கிறோமோ அந்த ராஜ்யமும் சக்தி வாய்ந்ததென்பது நம் நினைவி லிருக்க வேண்டும். ஆதலின், நமது முன்னோர்களுக்கு நாம் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்களல்ல, நமக்கென்று ஒரு கீர்த்தி உண்டல்லவா, அந்தக் கீர்த்திக்குக் களங்கம் விளைவிக்கக் கூடியவர்களல்ல என்பதைக் காட்டிக் கொள்ளவேண்டும். நாம் இப்பொழுது எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சியின் மீதுதான் அகில கிரீஸும் கவனம் செலுத்தி வருகிறது; நம்பிக்கை வைத்திருக்கிறது. எல்லோருடைய வெறுப்புக்கும் ஆளாகியிருக்கிற எந்த ஆத்தென் உண்டோ அந்த ஆத்தென்ஸின் பரம விரோதியான நம்மீதுதான் கிரீஸின் அநுதாபம் பூராவும் இருக்கிறது. நமது படையின் எண்ணிக்கை அதிகமா யிருந்தபோதிலும், நமது சத்துருக்கள் நேருக்கு நேர் நம்மை யுத்த களத்தில் சந்திக்க மாட்டார்களென்று சிலர் நினைக்கலாமாயினும், நாம் அணி வகுத்துச் செல்வதில் சிறிதுகூட அசிரத்தைகாட்டக்கூடாது. இங்குக் கூடியுள்ள ஒவ்வொரு ராஜ்யத்துப் படையும், அந்தப் படையின் தலைவர்களும், எப்பொழுதும் ஆபத்தை எதிர்நோக்கி நிற்கத் தயாரா யிருக்க வேண்டும். யுத்தத்தின் போக்கை யாரும் முன் கூட்டிச் சொல்ல முடியாது; நிலைமைக்குத் தகுந்தபடி மாறக்கூடும். தங்களுடைய திறமையில் அளவுக்கு மிஞ்சின நம்பிக்கை வைக்கிறவர்கள், தாங்கள் எப்பொழுதும் தயாரிப்பில் இருக்கவேண்டுமென்பதில் கவனக் குறைவா யிருக்கிறார்கள். அதற்கு மாறாக, வரக்கூடிய ஆபத்தின்னதென்பதைத் தெரிந்து புத்திசாலித்தனமாக நடந்துகொள்கிறவர்கள், தங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையுடைய படைகளின் மீது வெற்றி கொண்டிருக்கிறார்கள். படையெடுத்துச் செல்லும் ஒரு படைக்குத் தன்னம்பிக்கை இருக்க வேண்டியதுதான்; ஆனால் அது மட்டும் போதாது; சத்துரு நாட்டிலிருக்கிற காலத்தில் எந்தக் கணத்திலும் ஆபத்து வரக் கூடுமென்ற கவலையுடனும் எச்சரிக்கையுடனும் அந்தப் படை இருக்க வேண்டும். இந்தத் தன்னம்பிக்கையும் கவலையும் இருந்தால்தான் சத்துருக்களுக்குப் பலமாக அடி கொடுக்கவும் முடியும்; அவர்கள் கொடுக்கும் அடியினின்று தற்காத்துக் கொள்ளவும் முடியும். இப்பொழுது நாம் எந்த ராஜ்யத்தினரை நோக்கிப் படை யெடுத்துச் செல்கிறோமோ அந்த ராஜ்யத்தினர் - ஆத்தீனியர்கள் - ஆச்சரியப்படத் தக்க விதமாக எல்லா வழிகளிலும் யுத்த சந்நாகத் துடன் இருக்கிறார்கள். அவர்கள் நமக்கு எதிராகப் போர்க்களத்தில் வந்து நிற்பார்களென்று நாம் எதிர்பார்க்கலாம். ஏற்கனவே அவர்கள் நம்மை எதிர் நோக்கிப் புறப்பட்டிருத்தல் கூடும். அப்படிப் புறப்பட்டிராவிட்டால், நாம் அவர்கள் ராஜ்யத்திற்குள் புகுந்து அவர்களுடைய சொத்து பற்றுக்களை நாசமாக்குவதைப் பார்த்தார்களானால், நிச்சயம் நம்மைப் போரில் எதிர்த்து நிற்பார்கள். எப்பொழுதுமே மனிதர்கள், ஏற்கனவே கண்டறியாத சில சேதங்களுக்கு அல்லது நஷ்டங்களுக்குட்படுத்தப் படுவார்களானால், அதிலும் தங்கள் கண் முன்னேயே அந்தச் சேதங்களோ நஷ்டங்களோ நிகழுமானால், ஆத்திரங் கொள்கிறார்கள்; அந்த ஆத்திரத்தில், முன்பின் யோசியாமல், அந்தச் சேதங்களுக்கோ நஷ்டங்களுக்கோ பரிகாரந் தேடு கின்ற முறையில் ஆக்ரோஷத்துடன் சில காரியங்களைச் செய்கிறார்கள். மற்றவர்கள் எப்படியோ, ஆத்தீனியர்கள் நிச்சயமாக இப்படிச் செய்யக் கூடியவர்கள். ஏனென்றால் அவர்கள், உலக ஆதிக்கம் பெறவேண்டு மென்ற நாட்டமுடையவர்கள்; தங்கள் நாடு நாசப்படுத்தப் படுமானால் அதைச் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அண்டை அயலவர் நாட்டைப் படையெடுத்து நாசப்படுத்துவதில் பழக்கமுடையவர்கள். ஆதலின் நாம் படையெடுத்துச் செல்கிற ராஜ்யத்தின் சக்தியை உணர்ந்தும், நமது முன்னோர்களும் நாமும் சம்பாதித்து வைத்திருக்கிற கீர்த்தியை மேலும் அதிகரிக்கச் செய்வோமா, அல்லது இழந்து விடு வோமா என்பது, இந்த யுத்தத்தில் நாம் நடந்துகொள்கின்ற விதத்திலேயே இருக்கிறதென்பதை மனத்தில் கொண்டும், நீங்கள் எங்கே அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் அங்கெல்லாம் ஒழுங்குடனும் விழிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். இது மிக முக்கியம். மற்றும், உங்களுக்கு அவ்வப்பொழுது விடப்படுகிற உத்தரவுகளுக்கு நீங்கள் உற்சாகத்துடன் கீழ்ப்படிய வேண்டும். எவ்வளவு பெரிய ராணுவமா யிருந்தாலும், அஃது ஓர் ஒழுங்குக்குட்பட்டிருக்குமானால் அதற்குப் பெருமையும் க்ஷேமமும் உண்டு. ஆர்க்கிடாம இங்ஙனம் படையினரை உற்சாகமூட்டி அனுப்பி விட்டு ஆத்தென்ஸுக்கு ஒரு தூதனை அனுப்பினான். பெலொப் பொனேசியப் படை, தன்னை நோக்கி வருவதைக் கண்டபிறகேனும் அது பயந்து பணிந்துவிடக் கூடுமென்பது இவன் எண்ணம். ஆனால் ஆத்தென் இந்தத் தூதனை முறைப்படி வரவேற்காமலேயே திருப்பியனுப்பிவிட்டது. திருப்பியனுப்பப்பட்ட இந்தத் தூதன் அட்டிக்காவின் எல்லையை யடைந்ததும் கிரேக்கர்களுக்கு இன்றிலிருந்து துரதிருஷ்டம் ஆரம்பித்து விட்டது என்று சாபம்போலக் கூறிச் சென்றான். இவனுடைய வாக்கு பலித்ததென்றே சொல்லவேண்டும்.  ஐந்தாவது அத்தியாயம் ஆத்தென்ஸின் அதிகார கடிவாளத்தைக் கைப்பற்றிக் கொண்டிருந்த பெரிக்ளீ, தன்னலத்தியாகி; தேச நலத்தையே பிரதானமாகக் கருதியவன். படையெடுத்து வருகின்ற ஆர்க்கிடாம இவனுடைய நெருங்கிய நண்பன். இதனால் அவன் - ஆர்க்கிடாம - படையெடுத்து வரும் வழியில், தனக்குச் சொந்தமாயுள்ள நிலபுலங்களை மட்டும் அப்படியே விட்டுவிட்டு, அட்டிக்காவிலுள்ள மற்ற நில புலங்களையெல்லாம் நாசமாக்கலாம், இதன் மூலம், ஆத்தீனியர்களுக்குத் தன் மீது சந்தேகத்தையும் துவேஷத்தையும் உண்டு பண்ணலாம் என்று கருதி, தனது சொந்த நில புலங்கள், ஆதி பாதிகளனைத்தையும் தேசீய சொத்தாக்கிவிட்டான். இங்ஙனம் செய்துவிட்டு, முன்னோக்கி வரும் பெலொப்பொனேசியப் படையை எதிர் நோக்கிச் செல்லவேண்டாமென்றும், ஆத்தென் நகரத்தைப் பந்தோபது செய்து வைத்துக்கொள்ள வேண்டுமென்றும், அப்படியே கப்பற்படையை யுத்தத் தயாரிப்பில் வைத்திருக்க வேண்டுமென்றும், அட்டிக்காவின் பல பகுதிகளிலிருக்கும் ஜனங்களனைவரும் தற்காப்பு நிமித்தம் ஆத்தென் நகரத்திற்குள் வந்து சேர்ந்துவிட வேண்டுமென்றும் இபப்டிப் பலவகையான உத்தரவுகளைப் பிறப்பித்தான். சத்துருக்களை நன்றாக உள்ளுக்கிழுத்து, தரைப்படையினாலும் கப்பற்படையினாலும் அவர்களைச் சூழ்ந்துகொண்டு நன்றாகப் புடைத்துவிட வேண்டு மென்பது இவன் யுத்த தந்திரம். இவன் விடுத்த உத்தரவுக்கிணங்க அட்டிக்கா வாசிகள், தங்கள் பயிர் பச்சைகளையெல்லாம் விட்டுவிட்டு, தங்களால் எடுத்துக்கொண்டு வரக்கூடிய சொத்து பற்றுக்களுடன் ஆத்தென் நகரத்திற்குள் வந்து சேர்ந்தனர். இதனால் நகரத்தில் ஒரே ஜன நெருக்கம். இஃது இப்படியிருக்க, ஆர்க்கிடாம தலைமையில் பெலொப் பொனேசியப் படைகள் அட்டிக்காவுக்குள் பிரவேசித்து பயிர் பச்சைகளை யெல்லாம் பாழாக்கி வந்தன. இங்கிருந்துதான் சரியான படி யுத்தம் துவங்கிவிட்டதென்று சொல்லவேண்டும். பெலொப்பொனேசியப் படைகள் முன்னேறி வந்தபோதிலும், பெரிக்ளீஸின் திட்டப்படி, ஆத்தீனியர்கள் எதிர்கொடுக்கவில்லை. பெரிக்ளீ, படைபலம், பண பலம் இவைகளைத் திரட்டுவதிலேயே கவனஞ் செலுத்தி வந்தான். பெலொப்பொனேசியப் படைகளோ, ஆத்தென்ஸுக்கு ஏழு மைல் தொலைவு வரை வந்துவிட்டன. ஆத்தீனியர்கள் பரபரப்படைந்தார்கள்; தங்கள் கண் முன்னாலேயே, தங்கள் அருமைச் சொத்துக்கள் பாழாவதைக் கண்டு ஆத்திரமடைந்தார்கள்; பெரிக்ளீ இன்னமும் நடவடிக்கை எதுவும் எடுக்காமலிருக்கிறானேயென்று பேசத் தலைப்பட்டார்கள். பெலொப் பொனேசியர்களும், சிறிது காலம் வரை நாச வேலைகளைச் செய்துவிட்டு ஊர் திரும்பிவிட்டார்கள். இதற்குப் பிறகு பெரிக்ளீ, நூறு கப்பல்களடங்கிய ஒரு படையை யனுப்பி, பெலொப்பொனேசியாவின் கடலோரப் பகுதிகளை நாசமாக்கி வரச் செய்தான். இந்தப் பரபர நாசவேலைகளில் ஆத்தீனியர் பலர் உயிரிழந்தனர். போரில் மாண்டுபோனவர்களைப் பகிரங்கமாக அடக்கஞ் செய்து அவர்களுடைய வீரத்தைப் புகழ்ந்து பேசுவது ஆத்தீனியர்களின் நீண்ட கால மரபு. இந்தச் சடங்கு எப்படி நடைபெறுமென்பதைச் சுருக்கமாகக் கூறுவோம். இறந்து போனவர்களுடைய எலும்புகளைப் பொறுக்கி, நகரத்தின் மத்தியிலுள்ள ஒரு மேடை மீது குவித்து வைப்பார்கள். மூன்று நாள் வரை இப்படி வைக்கப்பட்டிருக்கும். இந்த மூன்று நாட்களிலும் இறந்து போனவர்களின் உற்றார் உறவினர் முதலியோர் வந்து இறந்து போனவர் களுக்குச் செலுத்தவேண்டிய மரியாதைகளைச் செலுத்தி விட்டுப் போவர். ஆத்தீனியர்கள் பத்து குலத்தினராகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு குலத்தைச் சேர்ந்தவர்களுடைய எலும்புகள் வைப்பதற்கு ஒவ்வொரு பெட்டியென்று கணக்குச் செய்து பத்து சவப் பெட்டிகள் தயாரிப்பார்கள். இவற்றுள் எலும்புகள் பிரித்து வைக்கப்படும். பின்னர் இந்தப் பத்து பெட்டி களையும் வண்டிகளில் வைத்து ஊர்வலமாக மயானத்திற்கு இழுத்துச் செல்வார்கள். யுத்தத்தில் காணாமற் போய் விடுவார்களல்லவா சிலர், இவர்களுக்காகவென்று காலிப் பெட்டியொன்றும் கூடச் செல்லும். இறந்து போனவர்களின் உற்றார் உறவினர், பெண்டு பிள்ளைகள், நகர மாந்தர் ஆகிய எல்லோரும் ஊர்வலத்துடன் செல்வார்கள். மயானத்திற்குச் சென்றதும், சவப்பெட்டிகள் பூமியில் அடக்கம் செய்யப்படும். அடக்கம் செய்யப்பட்டதும், பொது ஜனங்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிற ஒருவனை, இறந்து போனவர்களைப் புகழ்ந்து சில வார்த்தைகள் சொல்லச் செய்வார்கள். இந்தச் சொற்பொழிவு முடிந்ததும் கூட்டம் கலைந்துவிடும். நீண்ட காலமாக அனுசரிக்கப்பட்டு வருகிற சடங்கு முறை இது. இந்த முறையைப் பின்பற்றி, பெலொப்பொனேசிய யுத்தத்தின் ஆரம்பத்தில் இறந்துபோனவர்களை பாராட்டுமுகத்தான் ஆத்தீனியர் களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிற பெரிக்ளீ, நீண்டதொரு சொற்பொழிவு நிகழ்த்தினான். உலகத்துச் சிறந்த சொற்பொழிவுகளில் இஃதொன்று என அறிஞர்கள் இன்றளவும் போற்றி வருகின்றனர். இந்தச் சொற்பொழிவில், ஆத்தென்ஸின் உயர்ந்த நோக்கம், ஜனநாயகத்தின் லட்சணங்கள், தேசபக்தியின் பெருமை முதலியவைகளை பற்றி அழகுறக் கூறுகிறான் பெரிக்ளீ. சொற்பொழிவு வருமாறு:- எனக்கு முன் இந்த இடத்தில் நின்று பேசிய பலரும், போர்க் களத்தில் வீழ்ந்துபட்டவர்களைப் பாராட்டிப் பேச வேண்டுமென்று ஏற்பட்டிருக்கிற இந்த வழக்கத்தைப் பாராட்டியே பேசியிருக்கின்றனர். வீழ்ந்துபட்ட நமது வீரர்களைக் குறித்துப் பயபக்தியுடன் சில வார்த்தைகள் சொல்ல வேண்டுமென்று அவர்கள் உணர்ந்தது நல்லதே. ஆனால் என்னால் அப்படி உணர முடியவில்லை. ஏனென்றால், இறந்து போனவர் களை வெறும் வாய் வார்த்தைகளினாலல்ல, அவர்கள் செய்து காட்டியது போலவே செய்து காட்டிக் கௌரவிக்க வேண்டும். என்னைப் பொறுத்த மட்டில், இப்பொழுது நீங்கள் காண்பதுபோல், இறந்து போனவர்களை அரசாங்கச் செலவில் அடக்கம் செய்தலே போதுமானதாயிருக்கும். இறந்து போன நமது சகோதரப் பிரஜைகள் பலருடைய யோக்கியதை அல்லது கீர்த்தி, ஒரு தனி மனிதனுடைய இனிமையான பேச்சைப் பொருத்ததா யிருக்கக் கூடாது. தவிர, பேசுகிறவனுடைய பேச்சின் உண்மையில் நம்பிக்கை கொள்ளாத மனோ நிலையுடன் கேட்க வந்திருக்கிறவர்களில் பெரும்பாலோர் இருக்கிறபொழுது, பொருத்தமாகப் பேசுவதென்பது கடினம். ஏனென்றால், இறந்து போனவர்களைத் தெரிந்தவர்கள், தங்கள் நண்பர்களின் வீரச் செயல்களைச் சரியானபடி பாராட்டிப் பேசவில்லையேயென்று நினைக்கக்கூடும்; தெரியாதவர்கள், தங்களால் சாதிக்க முடியாத சில காரியங்களை அவர்கள் - இறந்து போனவர்கள் - சாதித்தார்கள் என்று புகழ்ந்து சொல்லப்படுவதைக் கேட்டு, ஒரு சமயமில்லாவிட்டாலும் மற்றொரு சமயம், பொறாமை காரணமாக, அவர்களை அதிகமாகப் புகழ்ந்து பேசிவிட்டதாக எண்ணக்கூடும். சாதாரணமாகவே மனிதர்கள், மற்றவர்களைப் புகழ்ந்து பேசுவதை எதுவரையில் கேட்டுச் சகித்துக் கொண்டிருக்கிறார்களென்றால், எந்தக் காரியங்களுக்காக அந்த மற்றவர்கள் புகழ்ந்து பேசப்படுகிறார் களோ அந்தக் காரியங்களை மிஞ்சக் கூடிய மாதிரி தாங்களும் காரியங்களைச் செய்ய முடியுமென்று எண்ணிக்கொண்டிருக்கிற வரையில்தான்; அதற்கு மேற்பட்டு அந்த மற்றவர்களைப் புகழ்ந்து பேசுங்கள், அதாவது உங்களால் சாதிக்க முடியாத காரியங்களை மற்றவர்கள் சாதித்திருக்கிறார்களென்று சொல்லி அந்த மற்றவர்களைப் புகழ்ந்து பேசுங்கள், உடனே அந்த மற்றவர்கள் மீது பொறாமையும் அவர்கள் சாதித்த காரியங்களில் அவநம்பிக்கையும் கொண்டு விடு கிறார்கள். ஆயினும் நமது முன்னோர்கள், போர்முகத்திலிறந்து போனவர் களை இந்த முறையில் கௌரவிக்க வேண்டுமென்று ஏற்பாடு செய்துவிட்டுப் போயிருப்பதனால், நானும் அந்த ஏற்பாட்டை அனுசரித்து இங்கே கூடியுள்ளவர்களின் விருப்பத்தையும் உணர்ச்சியையும் கூடியமட்டில் தழுவிப் பேச முற்படுகிறேன். முதலில் நமது முன்னோர்களைப்பற்றிச் சில வார்த்தைகள். இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில், முதன் முதலாக அவர்களைப் பற்றிக் குறிப்பிடுதலே நியாயம்; அப்படிக் குறிப்பிட்டு அவர்களிடத்தில் நமக்குள்ள நன்றி விசுவாசத்தைத் தெரிவித்துக்கொள்வது நமது கடமை. ஏனென்றால், தலைமுறை தலைமுறையாக, சிறிதுகூட தொடர்ச்சி விட்டுப் போகாமல் அவர்கள் இந்த ராஜ்யத்திலே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்; அப்படி வாழ்ந்திருந்ததோடு மட்டுமல்லாமல், இதனை ஒரு சுதந்திர ராஜ்யமாகச் செய்து நமக்கு அளித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆதலின் அவர்கள் நம்மால் புகழப்பட வேண்டியவர்கள். ஆனால் அவர்களைக் காட்டிலும் நமக்கு முந்தியிருந்த தலைமுறையினர், அதாவது நமது தகப்பன் மார்கள், அதிகமாகப் புகழப்பட வேண்டியவர்களா யிருக்கிறார்கள். ஏனெனின், அவர்கள், பூர்வீகமாக வந்துகொண்டிருந்த ராஜ்யத்தை, அதிகப் பிரயாசைப்பட்டு ஓர் ஏகாதிபத்தியமாகப் பெருக்கி நம்மிடம் ஒப்புவித்துப் போனார்கள். நாமோ, நடுப் பருவத்திலுள்ள இந்தத் தலைமுறையினரான நாமோ, இந்த ஏகாதிபத்தியம் பூராவிலும் நமது ஆதிக்கத்தை ஊர்ஜிதம் செய்தோம்; சண்டைக் காலத்திலும் சமாதான காலத்திலும் நமது ராஜ்யம் பரிபூரண சுதந்திரத்துடனிருக்கும் வண்ணம் செய்தோம். நாமும் நமது தந்தைமாரும், வெளியிடங்களில் நமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் பொருட்டும், அந்நியர்களும் கிரேக்கர்களும் படையெடுத்து வந்ததை எதிர்த்தும் எத்தனையோ போர்களை நடத்தியிருக்கிறோம். அவைகளைப் பற்றி நான் இங்கு அதிகம் சொல்ல விரும்பவில்லை; ஏனென்றால் அவை யாவும் உங்களுக்கு நன்கு தெரிந்தனவே. அதற்குப் பதிலாக, எந்த வழியைப் பின்பற்றித் தற்போதைய நிலையையடைந்தோம், எந்த அரசாங்க அமைப்பின் கீழ் நமது பெருமை உயர்ந்தது, அப்படி உயர்வதற்கு மூல காரணமாயிருந்த நமது தேசீயப் பண்புகள் யாவை, இவைகளைப் பற்றி முதலில் சிறிது சொல்லிவிட்டு, பிறகு இறந்துபோனவர்களைக் குறித்துச் சில புகழுரைகள் கூற விரும்புகிறேன். இந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் இந்த மாதிரியான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும்; இதனால் இங்குக் கூடியுள்ளவர்கள் கிரேக்கப் பிரஜைகளாயிருக்கட்டும், அந்நியர்களாயிருக்கட்டும், அனைவருக்கும் பயனும் உண்டாகும். நமது அரசாங்கம், அக்கம்பக்கத்து நாடுகளிலுள்ள அரசாங்கங்களைப் பினபற்றி அமைக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் நாம் மற்றவர் களுக்கு வழிகாட்டியா யிருக்கிறோமே தவிர மற்றவர்களைப் பின்பற்றிய வர்களா யிருக்கவில்லை. நம்முடைய அரசாங்கம், ஒரு சிலருடைய அரசாங்கமா யிருக்கவில்லை; பலருடைய அரசாங்கமாயிருக்கிறது. இதனாலேயே இது ஜன ஆட்சி என்று அழைக்கப்படுகிறது. ஜனங் களுடைய சொந்த விவகாரங்களைப் பொறுத்தமட்டில் எல்லோருக்கும் ஒரே விதமான நீதி கிடைக்கக்கூடிய வண்ணமே நமது சட்டங்கள் இயற்றப் பட்டிருக்கின்றன. பொது வாழ்வைப் பொறுத்தமட்டில் திறமைக்குத்தான் நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம்; திறமைசாலிகளுக்கே சந்தர்ப்பங்கள் கொடுத்து அவர்களை முன்னுக்குவரச் செய்கிறோம். எந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை நாம் கவனிப்பதில்லை; எவ்வளவு திறமை யுடையவர்களென்பதைத்தான் கவனிக்கிறோம். மற்றும் நமது அரசாங்கத்தின் கீழ், வறுமையானது, தேசத்தொண்டு செய்வதற்குத் தடையாயிருப்பதில்லை. வறியவர்களானாலுஞ் சரி, கேவலமான நிலை யிலிருப்பவர்களானாலுஞ் சரி, யாருக்கும் நாட்டுக்குச் சேவை செய்ய உரிமையும் தகுதியும் உண்டென்று நாம் கொண்டிருக்கிறோம். பொதுவாழ்வில் நாம் எவ்வளவு சுதந்திரமுடையவர்களாக இருக் கிறோமோ அவ்வளவு சுதந்திரமுடையவர்களாக நமது தனிப்பட்ட வாழ்விலும் இருக்கிறோம். நமது அக்கம் பக்கத்திலுள்ளவர்கள், அவர் களிஷ்டப்படி நடப்பார்களானால், அதற்காக அவர்களை நாம் உறுத்துப் பார்ப்பதுமில்லை; அவர்களைக் கோபமாகப் பேசுவதுமில்லை, துடுக்கான சிறு சிறு காரியங்களைக்கூட, அவைகளினால் பெரிய தீங்கெதுவும் ஏற்பட்டு விடாதாயினும், மற்றவர்களுக்குத் தொந்தரவா யிருக்குமே யென் பதற்காக நாம் செய்வதில்லை. தனிப்பட்ட முறையில் நாம் ஒருவர்க் கொருவர் இவ்வளவு சௌஜன்யமாகப் பழகி வந்த போதிலும், பிரஜைகள் என்ற ஹோதாவில் சட்டத்துக்கு மீறினவர்களாக நாம் நடந்துகொள்வ தில்லை; சட்டத்துக்கும் அதிகாரிகளுக்கும் கீழ்ப்படிந்தவர்களாகவே நடந்துகொள்கிறோம். சிறப்பாக, தீங்கிழைக்கப்பட்டவர்களைப் பாதுகாப் பதற்கென்றிருக்கிற சட்டங்களை, அந்தச் சட்டங்கள், சட்டப் புத்தகத்திலே இருந்தாலுஞ் சரி, இராமல் நீண்ட நாள் அனுஷ்டானத்திலே இருந்தாலுஞ் சரி, நாம் மீறி நடப்பதில்லை. அப்படி மீறி நடப்பது வெட்கக் கேடான காரியமென்று நாம் கருதுகிறோம். மற்றும் நாம், எப்பொழுதும் உழைத்துக் கொண்டிருக்கிறோ மில்லை; ஓய்வு கொள்கிறோம். மனத்திற்கு உற்சாகந் தரக்கூடிய விளை யாட்டுப் போட்டிகளென்ன, விழாக்களென்ன, இவைபோன்ற பலவற்றை, வருஷம் பூராவும் நடைபெறக்கூடிய வண்ணம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். இன்னும், மனத்துக்குச் சந்தோஷமளிக்கக் கூடிய, கண்களுக்கு விருந்தா யிருக்கக்கூடிய அழகான அநேக கட்டடங்களைக் கட்டி வைத்திருக்கிறோம். தவிர, நமது ஆத்தென், உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களும் வந்து குவியக்கூடிய அவ்வளவு விசாலமுடையதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கிறது. இதனால், அட்டிக்காவில் உண்டாகிற பொருள்களை நாம் எவ்வளவு சுலபமாக அனுபவிக்கிறோமோ அவ்வளவு சுலபமாக வெளிநாட்டுப் பொருள்களையும் அனுபவிக்கிறோம். நாம் பெற்றிருக்கும் ராணுவப் பயிற்சியானது, நமது சத்துருக்கள் பெற்றிருக்கும் பயிற்சியினின்று வேறுபட்டதாயிருக்கிறது. உலகத் திலுள்ள அனைவருக்கும் நமது நகரத்தின் நுழைவாயில்கள் திறந்து விடப் பட்டிருக்கின்றன. அந்நியர்களை அவ்வப்பொழுது நாடுகடத்தி விடுகிற பழக்கம் நம்மிடத்தில் இல்லை. சத்துரு நாட்டிலிருந்து வருகிற ஒருவன், நுணுகிப் பார்த்தால் என்னென்ன விஷயங்கள் தனக்கு அனுகூலமா யிருக்கின்றன என்று தெரிந்துகொண்டு போகலாமோ, அந்த முறையில், யாரையும் நமது நகரத்திற்குள் வந்து நன்றாகப் பார்த்துப் போகும்படி நாம் அனுமதித்திருக்கிறோம். இதற்குக் காரணம், நாம் புறசாதனங்களில் அதிக நம்பிக்கை வைக்காமல், நம் அகத்தில் நிலவும் வீர உணர்ச்சி இருக்கிறதே அதில் அதிக நம்பிக்கை வைத்திருப்பதுதான். கல்வி விஷயத்திலும் இப்படியே, ப்பார்ட்டர்கள், வீரத்தையும் தைரியத்தையும் பெறுவதற்காகச் சிறு வயதிலிருந்தே சில கட்டுப் பாடான முறைகளைக் கையாள்கிறார்கள். நாமோ, எவ்வித கட்டுப்பாடான முறைகளையும் கையாளாமல் நம்மிஷ்டப்படி போய் வந்துகொண்டு வாழ்கிறோம். ஆயினும் எந்த விதமான ஆபத்தையும் எதிர்த்து நிற்கத் தயாரா யிருக்கிறோம். இதற்குத் திருஷ்டாந்தம் சொல்கிறேன் கேளுங்கள். ப்பார்ட்டர்கள், நம் நாட்டின்மீது படையெடுத்து வருங்காலையில், தனித்து வருவதில்லை; தங்கள் கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டுதான் வருகிறார்கள். நாமோ, வெளி நாடுகளின் மீது படையெடுத்துச் செல்கிற போதுகூட, தனித்துச் சென்று, சுலபமாகச் சத்துருக்களை முறியடித் திருக்கிறோம். தவிர, இதுவரை எந்தச் சத்துருவும், நம்மை, நாம் முழு பலத்துடனிருக்கையில் வந்து தாக்கவில்லை. நமது கப்பற் படை களையும் காலாட் படைகளையும் பல பல போர்முகங்களுக்குப் பிரித்து அனுப்ப வேண்டியிருப்பதால், நமது படைகளனைத்தையும் ஒன்று திரட்டிக் காட்ட முடியவில்லை. அப்படி யிருக்க, நமது படைகளின் ஏதேனும் ஒரு சிறு பகுதியைத் தாக்கித் தோல்வியுறச் செய்துவிட்டார் களானால், அவர்கள், அந்த ப்பார்ட்டர்கள், நமது முழுச் சேனையையும் விரட்டி யடித்துவிட்டதாகப் பெருமை யடித்துக் கொள்கிறார்கள். அவர்கள் தோல்வியடைந்துவிட்டாலோ, நாம் நமது முழுச் சேனை கொண்டு அவர்களைத் தாக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். அலட்சியமாகவும், சுபாவத்திலேயே அமைந்திருக்கிற வீரத்துடனும் நாம் எந்த விதமான ஆபத்தையும் சமாளித்து விடுவதனால் நமக்கு இரண்டு விதமான அனுகூலங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒன்று, வருங்காலத்தில் கஷ்டங் களை அனுபவிக்க வேண்டி வருமோ என்பதற்காக முன்கூட்டியே கஷ்டங்களைச் சகித்துக் கொள்வதாகிற பயிற்சியை நாம் பெறுவதில்லை. மற்றொன்று கஷ்டங்களுக்கு மத்தியில் நாம் அகப்பட்டுக் கொண்டுவிட்ட காலத்து, மற்றவர்களைப் போல் அச்சமில்லாதவர்களாய் அந்தக் கஷ்டங் களை எதிர்த்து நிற்கிறோம். இந்த மாதிரியான விஷயங்களிலெல்லாம், நாம் பிறருக்கு வழி காட்டியாகவே இருக்கிறோம். இன்னும் நாம், பகட்டில்லாத அழகையும், ஆண்மையோடு கூடிய அறிவையும் காதலிக்கிறோம். செல்வமானது உபயோகத்திற்குத் தானே தவிர, ஆடம்பரத்திற்காகவல்ல என்று நாம் கொண்டிருக்கிறோம். வறுமையை ஒப்புக்கொள்வதில் இழிவில்லை, ஆனால் அந்த வறுமை யைக் கடக்க முயற்சி செய்யாமலிருப்பதுதான் இழிவு என்பது நமது கருத்து. நம்மிலே பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கிறவர்கள், அரசியல் விவகாரங்களைத் தவிர, தங்கள் சொந்த விவகாரங்களையும் பொறுப்புடன் கவனித்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள், தங்கள் சொந்த அலுவல்களைக் கவனித்து வருவதோடு கூட பொது விவகாரங்களிலும் சிரத்தை யெடுத்துக்கொள்கிறார்கள். பொதுவாழ்வில் ஈடுபடாமல் ஒதுங்கி யிருக் கிறவர்களை, சாதுக்கள் அல்லது அடக்கமானவர்கள் என்று மற்ற ராஜ்யத்தினர் கருதுவதுபோல் நாம் கருதுவதில்லை. எந்த ஒரு முக்கிய மான பிரச்னையைப் பற்றியும் நேருக்கு நேர் சந்தித்து நன்றாக வாதித்து, பிறகே ஒரு முடிவுக்கு வருகிறோம். வாதஞ் செய்துகொண்டிருந்தால் காரியஞ் செய்ய முடியாது என்று சிலர் நினைப்பதுபோல் நாம் நினைப் பதில்லை. நன்றாக வாதிக்கப் பெறாமல் ஒரு காரியத்தைத் தொடங்கினால் அந்தக் காரியம் தோல்வியே யடையும் என்று நினைக் கிறவர்கள் நாம். எண்ணித் துணிந்து கருமஞ் செய்வதிலே நாம் பிரசித்தி பெற்றவர்கள். மனிதர்களில் பலர் அறியாமையினால் துணிச்சலுடையவர் களா யிருக்கிறார்கள்; சிறிது யோசித்துப் பார்த்ததும், சத்துருக்களைத் தாக்கச் செல்வதினின்று பின் வாங்கி விடுவார்கள். ஆனால் யார் உண்மையிலேயே துணிச்சலுடையவர்கள், வீரர்கள் என்று கேட்டால், யார், முன் வருவதை நன்கு தெரிந்து கொண்டிருக்கிறார்களோ, யார் வரக்கூடியது புகழா, ஆபத்தா என்பதைப் பொருட்படுத்தாமல் ஆபத்தை நோக்கிச் செல்கிறார்களோ அவர்கள்தான். நல்லது செய்கிற விஷயத்தில் கூட மற்றவர்களுக்கு மாறுபட்ட வர்களாகவே நாம் இருக்கிறோம். சலுகைகள் பெறுவதன் மூலம் நாம் நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்கிறோமில்லை; சலுகைகள் காட்டு வதன் மூலமே நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்கிறோம். இங்ஙனம் சலுகைகள் காட்டுவதன் காரணமாக நம்முடைய நட்பு பிறழா நட்பா யிருக்கிறது. சலுகைகள் காட்டிக் காட்டியே, சலுகை பெறுகிறவர்களை நமக்குக் கடமைப்பட்டவர்களாக்கி விடுகிறோம். ஆனால் அவர்கள் - சலுகை பெறுகிறவர்கள் - நம்மைப்போல் பிறழா நட்பு நம்மிடம் கொள்ள முடிவதில்லை. ஏனெனில் அவர்கள், நாம் கோருகிற உதவியை நமக்குச் செய்யும்படி நேரிட்டால், அஃது அவர்கள் நமக்குக் காட்டுகிற சலுகையாயிராமல், நாம் செய்த உதவிக்குப் பிரதி உதவியாக இருக்கிறதே யென்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. மனித சமூகத்திலே நாம்தான், சுயநலத்திற்காக இல்லாமல், நம் உள்ளத்தெழுந்த சுதந்திர உணர்ச்சியின் விளைவாக மற்றவர்களுக்கு உதவி செய்கிறோம். சுருக்கமாக, நம்முடைய ஆத்தென், ஹெல்லாஸின் பள்ளிக் கூடமாயிருக்கிறது. தன்னம்பிக்கையுள்ள, எந்த விதமான நெருக் கடியையும் சமாளிக்கக்கூடிய, சர்வ கலா வல்லமையுடைய ஆத்தீனியர் களைப் போன்ற மனிதர்கள் உலகத்தில் வேறெங்கேனும் தோன்ற முடியு மாவென்பது எனக்குச் சந்தேகமா யிருக்கிறது. ஏதோ சமயத்திற் கேற்ற மாதிரி தற்புகழ்ச்சியாக இப்படிச் சொல்கிறேனில்லை; வெறும் உண்மையைத்தான் சொல்கிறேன். தற்போதுள்ள ராஜ்யங்களில் நமது ஆத்தென் ராஜ்யம் ஒன்றுதான், மற்றவர்கள் கனவிலும் கருதக்கூட முடியாத அவ்வளவு தீரத்துடன் ஆபத்தைச் சமாளித்து நிற்கிறது; அதனை நோக்கிப் படையெடுத்து வருகிறவர்கள், அதனால் தோற்கடிக்கப்பட்ட பிறகுகூட அதன்மீது வெறுப்புக்கொள்ள முடியாத அவ்வளவு சக்தி யுடையதாக இருக்கிறது; அதன் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற ராஜ்யங்கள், ஆதிக்கத்துக்குட்பட்டிருக்கிறோமே யென்று வெட்கப்படாதபடி அவைகளை நடத்துகின்றது. நாம் அடைந்திருக்கும் மேலான நிலைமைக்குச் சாட்சிகளாகவும் அடையாளங்களாகவும் உள்ளவை பல. இவைகளைக் கண்டு இன்றைய மனித சமூகம் பூராவும் எப்படி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறதோ அப்படியே நமது வருங்கால சந்ததிகளும் ஆச்சரியப்பட்டுக் கொண்டி ருக்கும். நம்முடைய கீர்த்தியைப் பாடுவதற்கு ஒரு ஹோமரோ வேறு கவிஞர்களோ தேவையில்லை. அவர்களுடைய புகழ் மொழிகள் ஒரு கண நேரத்திற்குத்தான் மகிழ்ச்சியளிக்கக் கூடியனவாயிருக்கின்றன. ஆனால் நம்மைப்பற்றி உண்மை யென்னவோ அவர்களுடைய கற்பனை யனைத்தையும் கடந்ததாயிருக்கிறது. நம்முடைய முன்னோர்கள், பல கடல்களிலும், பல நாடுகளிலுமாக ஊடுருவிச் சென்று, ஆங்காங்கே, நல்லனவென்றோ கெட்டனவென்றோ சொல்லக்கூடிய மாதிரி சாசுவத மான ஞாபகச் சின்னங்கள் பலவற்றை தாபித்துவிட்டு போயிருக்கிறார்கள். இத்தகைய ராஜ்யத்திற்குத்தான், இத்தகைய ராஜ்யத்தை இழந்து விடக் கூடாதே யென்பதற்குத்தான் யாருடைய நினைவைக் கொண்டாட இங்கு நாம் கூடியிருக்கிறோமோ அவர்கள் வீர மரணமெய்தியிருக் கிறார்கள். அவர்கள் வழிபற்றி வந்திருக்கிற நாமும், இந்த ராஜ்யத்தின் நலனுக்காகத் தியாகஞ் செய்யச் சித்தமாயிருப்போமாக! நான் ஏன் இந்த ராஜ்யத்தின் தன்மையைப் பற்றி இவ்வளவு தூரம் புகழ்ந்து பேசுகிறேன்? இந்தப் போராட்டத்தில், நாம் இழந்துவிடக் கூடாதன வாய், நம்மால் காப்பாற்றிக் கொள்ளப்பட வேண்டியனவாயுள்ள அமிசங்கள் பல இருக்கின்றன. மற்றவர்களுக்கோ அப்படியில்லை யென்பதை எடுத்துக் காட்டுவதற்குத்தான். மற்றும், இறந்து போனவர் களைப் பற்றி நான் ஏதோ உபசாரமாகப் புகழ்ந்து பேசவில்லை. இந்தப் புகழ் மொழிகளுக்கு அவர்களைத் தகுதிப்படுத்தியிருக்கிற காரியங்கள் என்னென்ன என்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டு மென்பதுதான். ஆத்தென்ஸை இப்பொழுது நான் புகழ்ந்து பேசுகிறே னென்று சொன்னால் அப்படிப் புகழ்ந்துபேசுவதற்குரியதாக அதனை ஆக்கியவர்கள் இவர்கள்தான். இவர்கள் செய்த அருஞ்செயல்களை, வார்த்தைகளினால் வருணித்துக் காட்டமுடியாது. இவர்களைப்போல், கிரேக்கர்களில் ஒரு சிலரைத்தான் குறிப்பிட முடியும். இப்பொழுது இவர்கள் அடைந்திருக்கிற முடிவிலிருந்து நாம் தெரிந்து கொள்ளக் கூடியது என்ன? நல்வாழ்க்கை என்றால் என்ன, அதன் தோற்றமென்ன, இறுதியென்ன இவைகளைப்பற்றியெல்லாம் நாம் ஒருவாறு இவர்களுடைய வீர மரணத்திலிருந்து தெரிந்து கொண்டோம். இவர்கள், வாழ்க்கையின் முற்பகுதியில் என்ன குற்றங்களிழைத்திருந்த போதிலும் என்ன தவறுகள் செய்திருந்த போதிலும், அவைகளையெல்லாம், இவர்கள் கடைசி காலத்தில் தங்கள் தேசத்திற்காக வீரங்காட்டினார்களே அஃது, அந்த வீரம், மூடி போட்டு மறைத்துவிட்டது. இவர்கள், முந்திச் செய்த தீச்செயல்களை, பிந்திச் செய்த நற்செயல்களினால் துடைத்துவிட்டார்கள். தனி மனிதன் என்ற முறையில் இவர்கள் ராஜ்யத்திற்கு ஏதேனும் தீங்கு செய்திருந்தால், அதற்கு மாற்றாக, பிரஜை அல்லது வீரன் என்ற ஹோதாவில் ராஜ்யத்திற்கு அதிகமான நன்மையைச் செய்துவிட்டார்கள். இவர்களில் யாரும், செல்வத் திற்காக, அந்தச் செல்வத்தை அனுபவிக்க வேண்டுமென்பதற்காக, அப்படியே வறுமை காரணமாக, அந்த வறுமையிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்பதற்காக வீரங் குன்றியவர்களாகி விடவில்லை; தங்கள் சொந்த நலன்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, சத்துருக்களைப் பழிவாங்கவேண்டு மென்பதற் காக, அப்படிப் பழிவாங்குவது தான் துணிகரமான செயல்களில் சிறந்தது என்று கருதி, அவர்களை, அந்தச் சத்துருக்களைப் போர்க்களத்தில் சந்தித்தார்கள்; சந்தித்து, வெற்றி கிடைக்குமா என்பதைப்பற்றிக் கவலைப் படாமல் தங்களுடைய ஆண்டகைமையிலே நம்பிக்கை வைத்துச் சண்டை செய்தார்கள். பணிந்து வாழ்வதைக் காட்டிலும் போராடி மரிப்பதே மேல் என்பதே இவர்கள் கொண்ட கொள்கையா யிருந்தது. இங்ஙனம் இவர்கள் வீர மரணமெய்தியதன் மூலம், மனிதர்களுடைய பழிச் சொற்களினின்று தப்பித்துக்கொண்டு விட்டார்கள்; ஆபத்தை நேருக்குநேர் சந்தித்து, அதனைச் சமாளித்து, அச்சத்தினால் ஆட்கொள்ளப்படாமல் புகழொளியினால் மூடப்பட்டு கண்மூடிக் கொண்டுவிட்டார்கள். இத்தகைய வீரர்கள்தான் இங்கே வீழ்ந்து கிடக்கிறார்கள். இவர்களை இத்தகைய வீரர்களாக்கியது இந்த ஆத்தென்தான். இவர்களுடைய வழி வந்த நாம், இவர்களைப்போல் உறுதியுடன் சத்துருக்களை எதிர்த்து நிற்போமாக! ஆனால் இவர்களைப்போலவல்லாமல், நல்ல முடிவை, அதாவது வெற்றியை நாம் காணவேண்டுமென்று பிரார்த்தனை செய்வோமாக! ஆத்தென் மீது உங்கள் திருஷ்டியைச் செலுத்துங்கள்! நாளுக்கு நாள் அதன் பெருமை உயர்வதை உற்று நோக்குங்கள்! அதன் மீது காதல் கொள்ளுங்கள்! அப்பொழுதுதான் அதன் பெருமையை உணர் வீர்கள். இந்தப் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் யார்? யார் வீரர் களாய் வாழ்ந்தார்களோ, யார் கடமையை உணர்ந்து கருமத்தைச் செய்தார் களோ, யார் கருமத்தைச் செய்வதிலே கௌரவத்தைக் கண்டார்களோ, யார் ஒரு காரியத்தில் தோல்வி யடைந்துவிட்டோமே யென்பதற்காகப் பின்தங்கி விடாமல் மேலும் மேலும் தங்கள் சேவையை ராஜ்யத்திற்கு அளித்து வந்தார்களோ, யார் அந்த ராஜ்யத்திற்காகத் தங்கள் உயிரையே சிறந்த பலியாகக் கொடுத்தார்களோ, இவர்கள்தான் ஆத்தென்ஸுக்குப் பெருமையை ஏற்படுத்திக்கொடுத்தவர்கள். இவர்கள், ராஜ்ய நலனுக்காகத் தங்கள் உயிரைக் கொடுத்து அதற்குப் பிரதியாக ஒவ்வொருவரும் தனித்தனியே அழியாத புகழையும், மனிதர்களுடைய மனத்திலே எந்நாளும் நிலைபெற்றிருக்கக்கூடிய மாதிரி ஓர் இடத்தையும் சம்பாதித்துக் கொண்டார்கள். இவர்கள் அடைந்திருக்கிற புகழானது, புதுமை மணம் வீசிக்கொண்டு பேசவேண்டிய சந்தர்ப்பத்தில் பேச்சுக்களும், செயலாற்ற வேண்டிய சந்தர்ப்பத்தில் செயலுக்கும் தூண்டு கோலா யிருக்கிறது. வீரர்கள், உலகம் பூராவையும், தங்கள் மீது எழுப்பப் படுகின்ற நினைவுச் சின்னங்களாகப் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் செய்த அரிய செயல்கள், இவர்களுடைய சொந்த நாட்டின் கல்லறைகளில் மட்டுந்தான் பொறிக்கப்பட்டிருக்குமென்பதில்லை; தொலைதூரத்தி லுள்ள இடங்களில், வெளிப்படையான சின்னங்களாக இராமல், அங்கு வாழும் ஜனங்களுடைய இருதயத்தில் இடம் பெற்றிருக்கும்; அவர் களுடைய வாழ்க்கையோடு வாழ்க்கையாகப் பின்னிக்கொண்டிருக்கும். இப்பொழுது நீங்கள், இவர்களை மிஞ்சக்கூடிய வண்ணம் அரிய பல செயல்கள் செய்யவேண்டும். சந்தோஷமாயிருப்பதன் ரகசியம் சுதந்திரமா யிருப்பதுதானென்பதையும், சுதந்திரமா யிருப்பதன் ரகசியம் சத்துருக்கள் படையெடுத்து வருகிறபோது ஒதுங்கிச் சும்மா யிராமல் வீரத்துடன் எதிர்த்து நிற்பதுதான் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். ஏழைகள், அதிருஷ்டவீனர்கள் ஆகிய இப்படிப்பட்டவர்கள், தாங்கள் இறந்து போவதனால் யாருக்கும் நஷ்டமில்லையென்று கருதி, தங்கள் உயிரைக் கொடுக்கும் விஷயத்தில் தாராளமாக இருப்பார்களானால் அது பெரிதல்ல; செல்வர்கள், அதிருஷ்டசாலிகள் ஆகிய இப்படிப்பட்டவர்கள் உயிரைக் கொடுக்கும் விஷயத்தில் தாராளமாக இருப்பார்களானால் அதுதான் பெரிது. ஏனென்றால், செல்வம் சென்றுவிட்டால், அதிருஷ்டம் குன்றிவிட்டால், அந்த மாற்றத்தைப் பெரிதும் உணரக்கூடியவர்கள் இவர்கள். இந்த மாற்ற நிலையில் இறந்துபோவதைக் காட்டிலும், நல்ல தேக திடத்துடனிருக்கிற பொழுது, நல்ல உற்சாகத்துடனிருக்கிற பொழுது திடீரென்று இறந்து போவது சிறப்பல்லவா? ஆதலின் இங்குக் கூடியிருக்கிற இறந்துபோன வீரர்களின் பெற்றோர்களுடன் சேர்ந்து நான் துக்கங் கொண்டாடப் போவதில்லை. அதற்குப் பதிலாக அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன். ஏனென்றால், சந்தோஷமும் துக்கமும் கலந்த உலகத்திலேயே நாம் பிறந்திருக்கிறோ மென்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட உலகத்தில், யார் சிறந்த ஒன்றை அடைகிறார்களோ அவர்கள்தான் சந்தோஷ புருஷர்கள். நீங்கள், பெற்றோர்களாகிய நீங்கள், இன்று சிறந்த துக்கத்தை அடைந்திருக் கிறீர்கள்; இங்கு வீழ்ந்து கிடக்கிறவர்கள் சிறந்த மரணத்தை யடைந்திருக்கிறார்கள் இவர்கள், மரணத்தை யடைந்திருக்கிற இவர்கள், வாழ்ந்த வாழ்க்கையும் அனுபவித்த சந்தோஷமும் ஒரே அளவினதா யிருந்தன. பெற்றோர்களாகிய உங்களுக்கு ஆறுதலளிப்பதென்பது சுலப மல்ல. மற்றவர்கள் சந்தோஷமா யிருக்கிறபொழுது, நாமும் இந்த மாதிரி சந்தோஷமா யிருந்தோமே யென்று உங்களுக்கு ஞாபகமுண்டாகும். சாதாரணமாகவே மனிதர்கள், தாங்கள் அனுபவிக்காத ஒன்றை இழந்து விட்டால் அதற்காகத் துக்கப்படுவதில்லை; தாங்கள் அருமையாகக் கருதிவந்த ஒன்றை இழந்து விட்டால்தான் துக்கப்படுகிறார்கள். ஆனால் நீங்கள் அந்த மாதிரி துக்கப்படக்கூடாது உயிரோடிருக்கும் மற்றப் பிள்ளைகளுக்காகத் தைரியங் கொள்ளவேண்டும். இவர்கள், உயிரோடிருக்கும் இந்த இளைஞர்கள், இங்கே ஒருசிலர் வீர மரண மெய்தியதன் விளைவாக உங்கள் குடும்பத்தில் ஒருவித சூனியம் ஏற்பட்டிருக்கிறதே அந்தச் சூனியத்தை நீங்கள் மறக்கும்படி செய்வார்கள்; ராஜ்யத்திற்குச் சேவை செய்யக்கூடியவர்கள், போர்வீரர்கள், இப்படிப் பட்டவர்களின் எண்ணிக்கையில் ஒரு குறைவு ஏற்பட்டிருக்கிறதே அந்தக் குறைவையும் பூர்த்தி செய்வார்கள். ராஜ்யத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக் கிறபொழுது அதில் நமது குடும்பத்தையும் ஈடுபடுத்த வேண்டுமேயென்ற கவலை யில்லாதவன், அந்த ராஜ்யத்தின் நன்மைக்கான ஆலோசனைகளைச் சொல்ல அருகனல்லன். வயது முதிர்ந்த பலர் இங்கே இருக்கின்றனரல்லவா, அவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால், நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டீர்கள், அந்தக் காலம் சந்தோஷகரமாகவே இருந்தது, இது விஷயத்தில் நீங்கள் அதிருஷ்டசாலிகள்; இனி நீங்கள் கழிக்கவேண்டிய நாட்கள் கொஞ்சமே இருக்கின்றன, அதை, இறந்துபோனவர்களை நினைத்துத் துக்கப் பட்டுக் கொண்டே கழிக்காமல், அவர்களுக்கேற்பட்டிருக்கிற புகழை நினைத்துக் கொண்டே கழியுங்கள்; அதன் மூலம் உங்கள் துக்கச் சுமையைக் குறைத்துக் கொள்ளுங்கள். மானத்தின் மீதுள்ள அபிமானம் இருக்கிறதே அது முதுமையடைவதே கிடையாது. முதுமைப் பருவத்தில், ஆத ரவற்றிருக்கிறோமென்ற நிலையில் மனிதர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவது எது? பொன்னல்ல; பொருள்களல்ல; மானத்தோடு வாழ்ந்தோம் என்ற நினைப்புதான்; திருப்திதான். அந்த நினைப்பு, அந்தத் திருப்தி உங்களுக்கு உண்டாவதாக! இறந்து போனவர்களின் பிள்ளைகளுக்கும் சகோதரர்களுக்கும் ஒரு வார்த்தை. இனி நீங்கள் கடுமையான ஒரு மனப்போராட்டத்தை நடத்த வேண்டி யிருக்குமென்று அஞ்சுகிறேன். இறந்து போனவர்களைக் குறித்து நீங்கள் அடிக்கடி நினைக்கவேண்டி வரும். சாதாரணமாகவே, இறந்து போனவர்களைப்பற்றி எல்லோருமே புகழ்ந்து பேசுவார்கள். உங்களைப் பற்றி பேசுகிறபோதோ, அவர்கள் அடைந்திருக்கிற புகழைக்காட்டிலும் நீங்கள் குறைவான புகழையே அடைந்திருக்கிறீர்கள் என்றுதான் கூறு வார்கள். எப்பொழுதுமே, உயிரோடிருக்கிறவர்களுக்கு மற்றவர்களுடைய போட்டி இருந்துகொண்டிருக்கும். ஆனால் இறந்து போனவர்களுக்கோ அந்தப் போட்டி இல்லை; விசுவாசத்தோடு கௌரவிக்கப்படுகிற ஒரு நிலை அவர்களுக்குக் கிட்டிவிடுகிறது. விதவைகளாகி விட்டவர்களுக்கு நான் ஏதேனும் ஆறுதல் சொல்ல வேண்டுமானால் அதை ஒரே வாக்கியத்தில் சொல்லி முடிக்க விரும்பு கிறேன். உங்களிடம் இயற்கையாமைந்துள்ள பெண் தன்மையினின்று சிறிதுகூட இறங்கிவிடாதீர்கள். ஆண் மக்களால், நல்ல விதமாகவோ கெட்ட விதமாகவோ அதிமாகப் பேசப்படாதவர்கள் யாரோ அவர்கள்தான் உத்தமப்பெண்டிர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனோடு என் கடமை முடிந்தது. இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் ஏதேனும் பேசவேண்டுமென்ற நியதிப்படி, என் சக்திக்கியன்ற அளவு சில வார்த்தைகள் கூறினேன். காரியாமிசத்தில், இறந்து போனவர்களுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளைக் கிரமமாகச் செய்து முடித்தோம். இவர் களுடைய குழந்தைகளின் போஷணையை, அந்தக் குழந்தைகள் வயதடையும் வரை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். அரசாங்கம், தனக்காகப் பாடுபட்டவர்களுக்கு இத்தகைய ஆதரவையே காட்டுகிறது. எங்கே சீலத்திற்குச் சிறந்த சன்மானம் அளிக்கப் படுகிறதோ அங்கே அந்தச் சன்மானத்திற்குப் போட்டியிடக்கூடிய சிறந்த பிரஜைகள் இருப்பார்கள். இனி அவரவரும் அந்திமச் சடங்குகளை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் செல்லலாம்.  ஆறாவது அத்தியாயம் பெலொப்பொனேசிய யுத்தத்தின் இரண்டாவது வருஷம், பெலொப் பொனேசியர்கள், முந்திய மாதிரி அட்டிக்காவின் மீது படையெடுத்து நிலபுலங்களைப் பாழ்படுத்தி வந்தார்கள். இதற்கிடையே ஆத்தென்ஸில் ஜன நெருக்கடி காரணமாக பிளேக் நோய் தோன்றி அநேக உயிர்களைக் கொள்ளை கொண்டது. ஆத்தீனியர்கள் பீதியும் சோர்வும் கொண்டார்கள். பெரிக்ளீஸோ, இன்னமும் தற்காப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கொள்வதில் முனைந்திருக்கிறானே தவிர, தாக்குதல் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதில் முனையவில்லை. எனவே அவன்மீது ஆத்திரங் கொண்டார் கள் ஜனங்கள். ஆனால் அவன் சிறந்த ராஜ தந்திரி; ஜனங் களைச் சாந்தப்படுத்தவும், அவர்களுக்கு உள்ள நிலைமையை விளக்கிக் கூறவும் ஜன சபையைக் கூட்டினான்; கூட்டிப் பின்வருமாறு பேசினான்:- என் மீது உங்களுக்குக் கோபம் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கோபத் திற்கு நான் தயாராகவே இருந்தேன். ஏனென்றால் இதன் காரணங்கள் எனக்குத் தெரியும். இதனால்தான், உங்களுக்குச் சில விஷயங்களை நினைவூட்டவும், அகாரணமாக என்மீது ஆத்திரங் காட்டுகிறீர்கள் அல்லது கஷ்டங்களினால் தலைகுனிந்து கிடக்கிறீர்கள் என்பதை எடுத்துக்காட்டி உங்களைக் கண்டிக்கவுமே இந்தச் சபையைக் கூட்டச்செய்தேன். என்னுடைய அபிப்பிராயத்தில், ஒரு நாடு, பொதுவாக க்ஷேமத்துட னிருப்பது, அந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையினுடைய சொந்த க்ஷேமத்திற்குத்தான் நல்லது. அப்படிக்கின்றி, நாடு நலிவுற பிரஜைகள் சொந்தத்தில் நலமுற்றிருப்பது, இறுதியில் அந்தப் பிரஜைகளுக்கே கெடுதல். ஒரு மனிதன், சொந்தத்தில் சீரும் சிறப்புமாக வாழ்ந்து கொண்டி ருக்கலாம். இருப்பினும் அவன் நாடு அழிந்துபடுமாகில் அதனோடு அவனும் அழிந்துபட வேண்டியதுதான். ஒரு ராஜ்யம், சீரும் சிறப்புமான நிலையில் இருக்குமானால், அந்த ராஜ்யத்தில் தாழ்வுற்ற நிலையி லிருக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் முன்னுக்குவரச் சந்தர்ப்பங்கள் கிடைக்கும். மற்றும் ஒரு ராஜ்யம், சீரிழந்து கிடக்கும் தன் பிரஜைகளைக் காப்பாற்ற முடியும். ஆனால் அந்தச் சீரிழந்த பிரஜைகள் ராஜ்யத்தைக் காப் பாற்ற முடியாது. எனவே, ராஜ்யத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் முன்னுக்கு வரவேண்டியது பிரதியொரு பிரஜையினுடைய கடமையுமாகும். இப்பொழுது நீங்கள் உங்கள் குடும்பத்திற்கேற்பட்டுள்ள கஷ்ட நஷ்டங்களைப் பெரிதாகக் கருதிக்கொண்டு, ராஜ்யம் பாதுகாக்கப் பட வேண்டுமென்ற எண்ணத்தையே மறந்து விட்டிருக்கிறீர்கள்; யுத்தந் தொடுக்க வேண்டுமென்று யோசனை சொன்ன என்னையும், அதற்கு அங்கீகாரம் கொடுத்த உங்களையும் நொந்துகொண்டிருக்கிறீர்கள். என்மீது, இப்பொழுது கோபங் கொண்டிருக்கிறீர்களென்றால், எது சரியான முறை என்பதைத் தெரிந்து கொண்டு அதை விளக்கிக் காட்டு வதில் மற்றவர்களுக்குக் குறைந்தவனல்லாதவனாக எவன் இருக்கிறா னோ, எவன் தேச பக்தனாக மட்டுமில்லாமல் யோக்கியனாகவும் இருக் கிறானோ அப்படிப்பட்டவன் மீதே கோபங்கொண்டிருக்கிறீர்களென்று சொல்லவேண்டும். ஒருவன், முறை தெரிந்தவனாயிருக்கலாம்; ஆனால் அதை விளக்கிக் காட்டக்கூடிய சக்தியில்லாதவனாயிருந்தால் அவன் முறை தெரியாதவனைப் போன்றவன்தான். இந்த இரண்டு சக்திகளு மிருந்து அவன் தேசபக்தனாயில்லாவிட்டால், அவன் தேசநலனைப் பொருட்படுத்தாமல் தேசத்தைப் பற்றிப் பேசுவான்; மற்றும், அவனுடைய தேச பக்தியானது, லஞ்சத்தினால் பாதிக்கப்படுமாயின், அவன் எதையும் விலைகூறி விடுவான். எனவே, இந்தத் தன்மைகள், அதாவது அனுஷ்டிக்க வேண்டிய முறையைப்பற்றிய அறிவு, அந்த முறையை விளக்கிச் சொல்லும் ஆற்றல், தேசபக்தி, யோக்கியப் பொறுப்பு ஆகிய இந்தத் தன்மைகள் ஓரளவேனும் என்னிடம் இருக்கின்றன என்று எண்ணி, என்னுடைய ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, யுத்தத்திற்கு அங்கீகாரம் கொடுத்தீர்கள். அப்படி யிருக்க, இப்பொழுது நான் ஏதோ தவறு செய்து விட்டேனென்று என்மீது ஏன் குற்றஞ் சாட்டப்படவேண்டுமென்பது தெரியவில்லை. சுதந்திரமானாலுஞ் சரி, அடிமைத்தனமானாலுஞ் சரி என்று யார் கருதுகிறார்களோ, யாருக்கு இழந்துவிடாமல் பாதுகாத்துவைத்துக் கொள்ள வேண்டிய பொருள்கள் எதுவுமில்லையோ, அவர்கள், யுத்தந் தொடுப்பது தவறுதான். ஆனால், சுதந்திரத்தை இழந்துஅடிமைத்தனத் திற்குட் படுவதா, அல்லது அந்தச் சுதந்திரத்தைக் காப்பாற்ற ஆபத்தை ஏற்றுக் கொள்வதா, இவ்விரண்டில் ஏதேனுமொன்று என்ற நிலையில், யார் சுதந்திரத்தைக் காப்பாற்ற ஆபத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறானோ அவன்தான் குற்றஞ் சாட்டப்பட வேண்டியவன்; ஆபத்தை ஏற்றுக் கொள்ளத் துணிகிறவனல்ல. இதுவிஷயத்தில் நான் முந்தி என்ன அபிப்பிராயங்கொண்டிருந்தேனோ அதே அபிப்பிராயத்தைத்தான் இப் பொழுதும் கொண்டிருக்கிறேன். அதே மனிதன் தான் நான். சிறிதுகூட நான் மாறவில்லை. நீங்கள்தான் மாறியிருக்கிறீர்கள். சங்கடங்கள் எதுவும் வாராதிருக்கையில் என்னுடைய ஆலோசனையை ஏற்றுக் கொண்டீர்கள்; சங்கடங்கள் ஏற்படத் தொடங்கியதும் ஏன் ஏற்றுக் கொண்டோமென்று வருந்துகிறீர்கள். நீங்கள் செய்த தீர்மானத்தில் உறுதியற்றிருப்பதால் தான், என்னுடைய முறை தவறு என்று உங்களுக்குப் படுகிறது. அந்த முறையைப் பின்பற்றியதால் உங்களனைவருக்கும் சில கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அந்தக் கஷ்ட நஷ்டங்களினால் கிடைக்கக்கூடிய அனுகூலங்களோ உங்கள் கண்ணுக்குத் தெரியாமல் தொலைதூரத்திலிருக்கின்றன. இதனால் திடீரென்று ஒரு தோல்வி அல்லது ஒருமாறுதல் ஏற்படுகிறபொழுது, நீங்கள் மனம்சோர்ந்து போய், கொண்ட தீர்மானத்தை முயன்று நிறைவேற்ற முடியாதவர்களாகி விடுகிறீர்கள். திடீரென்று, எதிர்பாராத, நம்மால் கணித்திருக்க முடியாத ஒரு சம்பவம் நேரிட்டுவிட்டால், அதன் முன்னே நம்முடைய வீரம், தைரியம் எல்லாம் குன்றிவிடுகின்றன. இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் பிளேக் நோய்; எதிர்பாராமல் வந்து நம்மைத் தாக்கியது. இதனால் நீங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். பெருமை வாய்ந்த ஒரு ராஜ்யத்தின் பிரஜைகளாக நீங்கள் பிறந் திருக்கிறீர்கள்; அந்தப் பெருமைக்குத் தகுந்தபடியான பழக்க வழக்கங் களில் வளர்ந்து வந்திருக்கிறீர்கள். எனவே, மகத்தான ஆபத்துக்களையும் எதிர்த்து நிற்க நீங்கள் தயாரா யிருக்கவேண்டும்; அதே சமயத்தில் உங்கள் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். ஓரளவு கீர்த்தி ஏற்பட்டுவிட்ட பிறகு, அந்தக் கீர்த்தியைப் பாதுகாத்துக்கொள்ளும் விஷயத்தில் பலவீனங் காட்டுகிறவர்களையும், அதே பிரகாரம் அந்தக் கீர்த்திக்கு என்ன பெருமையுண்டோ அந்தப் பெருமையைக் காட்டிலும் அதிகமான பெருமையை நாடுகிறவர்களையும் கண்டிக்கும் விஷயத்தில் மானிட சமுதாயம் நிர்த்தாட்சண்யமாக நடந்துகொள்கிறது. ஆதலின் உங்கள் சொந்த கஷ்ட நஷ்டங்களுக்காகத் துயரப்பட்டுக்கொண்டிராமல், நமது ஏகாதிபத்தியத்தின் பாதுகாப்புக்கு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்ய முந்துங்கள். யுத்தங் காரணமாகச் சிறிது பிரயாசை எடுக்க வேண்டியது அவசியமாகும். அந்தப் பிரயாசை எடுத்துக் கொள்வதினின்று நீங்கள் பின்வாங்குவீர்களாயின் அதனால் நாம் காப்பாற்றப்படமாட்டோம் என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின், அந்த அச்சத்திற்கு ஆதாரமே இல்லை. ஏற்கனவே இதை நான் பல முகாந்தரங்களினால் உங்களுக்கு எடுத்துக் காட்டியிருக்கிறேன். அவை போதாவெனில், இப்பொழுது உங்களுடைய ஏகாதிபத்தியம் மகத்துவமுடையதா யிருப்பதன் அனுகூலத்தைப்பற்றிச் சிறிது கூற விரும்புகிறேன். இதைப் பற்றி நீங்கள் சிந்தித்திருக்க மாட்டீர் களென்றே நினைக்கிறேன். நானும் இதைப்பற்றி இதற்கு முந்தி பிரதாபித்த தில்லை. இப்பொழுதும் பிரதாபிக்கமாட்டேன். அப்படிப் பிரதாபிப்பது ஏதோ வீண் பெருமை பாராட்டிக்கொள்வது போலத் தோன்றும். ஆயினும் என்னைச் சுற்றி ஒரே சோர்வு மயமாக இருப்பதனால் இதைப்பற்றிப் பிரதாபிக்கவேண்டியது அவசியமா யிருக்கிறது. உங்களுடன் நேசம் பூண்டிருக்கிற ராஜ்யங்களினளவில் தான் உங்கள் ஏகாதிபத்தியம் பரந்து விரிந்திருக்கிறதென்று நீங்கள் நினைக் கிறீர்கள். உண்மையை உரைக்கிறேன் உங்களுக்கு. மனிதர்களுடைய செயலாற்றுமிடம், தரைப்பகுதியென்றும் கடற்பகுதி யென்றும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் ஒன்றில் பூராவும், கடற்பகுதி பூராவும் உங்களுடைய மேலான ஆதிக்கத்திற்குட் பட்டிருக் கிறது. அந்தப் பகுதியில், இப்பொழுது எதுவரை உங்கள் உபயோகத்தி லிருந்து வருகிறதோ அதுவரையில் மட்டுமல்ல, இன்னும் எதுவரை நீங்கள் உபயோகப்படுத்த முடியுமோ அதுவரையிலும் உங்களுடைய ஆதிக்கத்தை விதரித்துக்கொண்டு போகலாம். அறுதியிட்டுச் சொல்ல வேண்டுமானால், உங்களுடைய கப்பல்கள் எங்கு வேண்டுமானாலும் சொல்லலாம். உலகத்திலுள்ள எந்த ராஜ்யமும் அவைகளைத் தடுக்காது. நிலபுலங்களும் வீடுவாசல்களும் கைவிட்டுப் போவது பெரிய நஷ்ட மென்று நீங்கள் கருதலாம். வாதவம். ஆனால், கடலின் மீது நமக்குள்ள ஆதிக்கத்தைக் கொண்டு இந்த நஷ்டத்தை நீங்கள் பார்க்கவேண்டும். இந்த நஷ்டத்திற்காக நீங்கள் மனவேதனைப் பட்டுக் கொண்டிருக்கக் கூடாது. தோட்டந்துறவுகள், மற்ற அலங்காரப் பொருள்கள் முதலியன, எப்படி ஒருவனுடைய செல்வ நிலையைக் காட்டு வனவாயிருக்கின்றனவோ அப்படியே உங்கள் நிலபுலங்கள், வீடு வாசல்கள் முதலியனவற்றையும் நீங்கள் கருதவேண்டும்; இவைமிகச் சாதாரணமானவை யென்றே நீங்கள் கொள்ள வேண்டும். நம்மால் காப்பாற்றப்பட்டு வந்திருக்கிற சுதந்திரம் இருக்கிறதே அது, நாம் இழந்துவிட்ட அனைத்தையும் நமக்கு மீட்டுக் கொடுக்கும். ஆனால் ஒரு தடவை நீங்கள் முழந்தாளிட்டுப் பணிந்துவிட்டீர்களாயின், இப்பொழுது உங்களிடம் இருப்பதுகூட உங்களை விட்டு அகன்று போய்விடும். உங்களது முன்னோர்கள், சொத்து சுதந்திரங்களையெல்லாம் மற்றவர்களிடமிருந்து பெறவில்லை; தாங்களே முயன்று சம்பாதித்தார்கள்; சம்பாதித்து உங்களுக்கு அளித்துவிட்டுப் போனார்கள். நீங்களும் உங்கள் பின்சந்ததியார்களுக்கு அப்படியே அளிக்கவேண்டும். இது விஷயத்தில் அவர்களுக்குக் குறைந் தவர்களாக நீங்கள் இருக்கக்கூடாது. ஒரு பொருளைச் சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியடைவதைக் காட்டிலும், இருக்கிற பொருளை இழந்துவிடுவது மிகக் கேவலம். ஆதலின், சத்துருக்களை, வீர உணர்ச்சியுடன் மட்டுமல்ல, அவர்களைக் கேவலமாகக் கருதியும் எதிர்த்து நில்லுங்கள். அறியாமை யினாலுண்டாகிற அகந்தை காரணமாக ஒரு கோழைகூட தன்னம்பிக்கை கொண்டுவிடலாம். ஆனால் சத்துருக்களைக் கேவலமாகக் கருதுகின்ற மனப்பான்மை இருக்கிறதே அது, சத்துருக்களைக் காட்டிலும் தாங்கள் மேலானவர்களென்று யார் சிந்தித்துத் தெரிந்துகொண்டிருக்கிறார்களோ அவர்களிடத்திலேதான் காணமுடியும். நாம் இப்படித் தெரிந்து கொண்டிருக்கிறோம். இப்படித் தெரிந்து கொண்டிருக்கிறவர்கள், வீரத்தில் மேம்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இதனால்தான் இவர்கள் சத்துருக்களைக் கேவலமாகக் கருதுகிறார்கள். மற்றும் இவர்கள், தங்கள் வீரத்தில் அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கை, நிர்க்கதியான நிலையிலுள்ளவர்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையைப் போன்றதன்று; நிகழ்காலத்தில் தங்களுக்குள்ள சக்தி, வசதி முதலியவை களை அனுசரித்துக் கொண்டிருக்கிற நம்பிக்கை. நாம் இத்தகைய நம்பிக்கையுடையவர்களாகவே இருக்கிறோம். உங்களுடைய நாடு, மேலான ஒரு நிலையை யடைந்து அதற்கான புகழையும் பெற்றிருக்கிறது. இந்தப் புகழைக் காப்பாற்றிக்கொள்ள அஃது உங்களுடைய சேவையை எதிர் பார்க்கிறது. அப்படி எதிர்பார்க்க அதற்கு உரிமையுண்டு. அதற்கேற்பட்டிருக்கிற புகழ், உங்களெல்லோருக்கும் பெருமை தரக்கூடிய விஷயந்தானே? ஓர் ஏகாதிபத்தியத்தின் பொறுப்புக் களை ஏற்க மறுத்துவிட்டு, ஆனால் அந்த ஏகாதிபத்தியத்தினால் கிடைக் கிற கௌரவங்களில் மட்டும் பங்கு வேண்டுமென்று எதிர்பார்த்தல் சரியல்ல. இப்பொழுது உங்கள் முன்னேயுள்ள பிரச்னை, சுதந்திரமா அடிமைத்தனமா என்பதுமட்டுமல்ல; ஏகாதிபத்தியத்தை இழந்துவிடுவதா, அந்த ஏகாதிபத்தியத்தை, கொண்டு செலுத்தி வந்ததனால்தான் உங்கள் மீது ஒரு துவேஷம் ஏற்பட்டிருக்கிறதே அந்தத் துவேஷத்தினால் உண்டாயிருக்கிற ஆபத்தில் சிக்கிக்கொள்வதா என்பதுதான். மற்றும், இதுகாறும் நாம் சென்ற ஏகாதிபத்திய வழியிலிருந்து திரும்பி விடலாம். அப்படி திரும்பிவிடுவதன் மூலம் நாம் யோக்கியர்களென்று காட்டிக் கொள்ளலாம் என்று, இப்பொழுது உங்களுக்கேற்பட்டுள்ள பயம் காரணமாக நினைப்பீர்களாயின் அப்படித் திரும்பிவிடுவதும் முடியாத காரியம். பட்டவர்த்தனமாகச் சொல்லப் போனால் இப்பொழுது நீங்கள் நடத்தி வருவது கொடுங்கோலாட்சிதான். இப்படி ஆட்சி நடத்தத் தொடங்கியது தவறாயிருக்கலாம்; ஆனால் தொடங்கி நடத்தி வந்த பிறகு அதைக் கைசோர விடுதல் ஆபத்தாக முடியும். இங்ஙனம் எதிலும் பின்வாங்கிக் கொண்டுவிட வேண்டுமென்ற மனப்போக்குடையவர்கள் ஒரு நாட்டில் இருந்து அவர்கள் தங்கள் போக்குக்கு மற்றவர்களையும் இழுத்து விடுவார்களானால், அவர்களால் அந்த நாடு விரைவிலே அழிந்துபடும். அவர்கள் சுதந்திரமா யிருந்தாலும் இதே கதிதான். மற்றவர் களுடைய தீவிரமான பாதுகாப்பில்லாமல் அவர்களால் சுதந்திரமாக வாழ முடியாது. சிறப்பாக ஓர் ஏகாதிபத்தியத்திற்கு, எதிலும் பின்வாங்குகிற இந்த மனப்பான்மை கூடவே கூடாது; அடிமைத்தனத்திலே வாழ்ந்தாலுஞ் சரி, ஆபத்தில்லாமல் வாழ வேண்டுமென்று நினைக்கிற ஒரு நாட்டுக்குத் தான் இஃது ஏற்றது. இத்தகைய மனிதர்களால், அதாவது ஒதுங்கியிருக்க வேண்டு மென்ற மனப்பான்மையுடைய மனிதர்களால் நீங்கள் ஏமாந்துவிடக் கூடாது; என்மீதும் கோபங்கொள்ளக்கூடாது. நான் யுத்தத்திற்கு அங்கீகாரம் கொடுத்தேனென்றால், நீங்கள் எப்படி அங்கீகாரம் கொடுத்தீர் களோ அப்படியேதான் நானும் கொடுத்தேன். சத்துருக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு நாம் இணங்காவிட்டால் அவர்கள் என்ன செய்வார் களென்று நமக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்ததோ அதையே அவர்கள் செய்தார்கள்; அதாவது அவர்கள் உங்கள் நாட்டின்மீது படையெடுத்து வந்தார்கள். அதனால்தான் நீங்களும் நானும் யுத்தத்திற்கு அங்கீகாரம் கொடுத்தோம். இன்னது இன்னது இப்படி இப்படி நடைபெறக் கூடுமென்று எதிர்பார்த்தே நாம் எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம். ஆனால் நாம் எதிர்பாராமல் வந்தது ஒன்று. அதுதான் பிளேக் நோய். இந்த ஒரு விஷயத்தில் தான் நாம் திட்டமிட்டிருந்தது தவறிவிட்டது. நான் இப்பொழுது உங்களிடத்தில் செல்வாக்கிழந்து நிற்பதற்கு இஃதொரு காரணம். இப்படி நீங்கள் என்னைச் செய்திருப்பது அநியாயம். ஆனால் ஒன்று; நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக ஏதேனும் வெற்றி கிடைத் திருக்குமானால் அதற்குண்டான கௌரவத்தை எனக்குத்தான் அளிக்க வேண்டும். மற்றும், தெய்வச் செயலால் ஏற்பட்டதை நாம் அமைதியுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்; அப்படியே சத்துருவினால் ஏற்பட்டதைப் பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டும். இதுதான் ஆத்தென் அனுஷ்டித்து வரும் பரம்பரையான தருமம். இதுவே இனியும் அனுஷ்டானத்தில் இருந்து வருமாறு நீங்கள் பார்க்கவேண்டும். உலகத்திலேயே உங்களுடைய ராஜ்யம் பெரிய பெயரெடுத் திருக்கிறதென்று சொன்னால், இதற்குக் காரணமென்ன? ஆபத்திற்கு முன்னர் தலைகுனியாமல் இருந்து வந்ததுதான்; யுத்தத்தில் மற்ற ராஜ்யங்களைக் காட்டிலும் அதிகமான ரத்தத்தையும் முயற்சியையும் செலவழித்திருப்பதுதான். இவை உங்கள் நினைவிலிருக்கட்டும். மற்றும், இதுவரை மற்ற ராஜ்யங்களி லெதுவும் பெற்றிராத ஓர் அதிகார சக்தியை நமது ராஜ்யம் பெற்றிருக்கிறது. பிற்காலச் சந்ததியாரின் ஞாபகத்தில் இது சாசுவதமாக இருந்து கொண்டிருக்கும். இப்பொழுதுகூட, எந்த ஒன்றுக்கும் அழிவுண்டு என்ற நியதிப்படி, நாம் சத்துருக்களுக்குப் பணிந்து போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், அப்பொழுதும், வேறெந்த கிரேக்க ராஜ்யத்தைக் காட்டிலும் நாம் அதிகமான கிரேக்கர்கள் மீது ஆதிக்கஞ் செலுத்தினோம், கிரேக்க ராஜ்யங்கள் தனித்தோ சேர்ந்தோ படையெடுத்து வந்தபோது அவைகளை எதிர்த்துப் பெரிய பெரிய போர்கள் நடத்தினோம், பொருள் வளத்திலும் மகத்துவத்திலும் வேறெந்த ராஜ்யமும் போட்டியிட முடியாதபடி இருந்த ஒரு ராஜ்யத்தில் வாழ்ந்தோம் என்று இப்படியாக, பிற்காலத்தவரின் ஞாபகத்தில் நாம் இருந்து வருவோம். நாமடைந் திருக்கிற கீர்த்தியானது, நிதானதர்களுடைய, ஆசை யற்றவர்களுடைய கண்டனத்தைப் பெறுதல் கூடும்; ஆனால் ஆண்மையுள்ளவர்கள், தங்களுக்கும் இந்தமாதிரி கீர்த்தி கிடைக்கவேண்டுமென்று நம்மைப் பின்பற்றுவார்கள்; கீர்த்தி பெறத் தகுதியில்லாதவர்கள், நம்மைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள். மற்றவர்களை ஆளவேண்டுமென்று ஆசைப்படு கிறவர்கள், அந்த மற்றவர்களுடைய வெறுப்பையும் அபகீர்த்தியையும் சம்பாதித்துக்கொள்ள வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். அப்படி வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டால் நல்லறிவுடையவர்கள் உயர்ந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அந்த வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்வார்கள். பொதுவாக, வெறுப்பு ஏற்பட்டாலும் அந்த வெறுப்பு சிறிது காலந்தான் இருக்கும். ஆனால், நிகழ்காலத்தில் பிரகாசத்தையும் எதிர் காலத்தில் புகழையும் தரக்கூடியது எதுவோ அது நீடித்திருக்கும். ஆதலின், நிகழ்காலத்தில் கௌரவத்தைப் பெறக்கூடிய மாதிரி யாகவும் எதிர்காலத்தில் கீர்த்தியைப் பெறக்கூடிய மாதிரியாகவும் ஒரு தீர்மானத்தைச் செய்யுங்கள். அந்தக் கௌரவத்தையும் கீர்த்தியையும் பெறுவதற்கு, இப்பொழுதே, உடனடியாக, தீவிரமான முயற்சி செய்யுங்கள், லாஸிடீமோனுக்கு எந்த விதமான (சமாதான) தூது கோஷ்டியையும் அனுப்பாதீர்கள். இப்பொழுது துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக் கிறதே யென்று சோர்வு கொள்ளாதீர்கள். துரதிருஷ்டத்தினால் மனமுடைந்து போகாமலிருப்பதும், அந்தத் துரதிருஷ்டத்தைச் சமாளிக்கத் தீவிர முயற்சி எடுத்துக்கொள்வதுமே பெரிய மனிதர்களுக்கு அடையாளம்; பெரிய ராஜ்யங்களின் அடையாளமும் இதுதான். பெரிக்ளீஸின் உற்சாக மொழிகளைக் கேட்டு ஆத்தீனியர்கள் சோர்வு நீக்கினார்கள்; யுத்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்கள். அவனையே திரும்பவும் பிரதம சேனாதிபதியாகத் தெரிந்தெடுத்து, யுத்தத்தை நடத்தும் முழுப் பொறுப்பையும் அவனிடமே ஒப்படைத்தார்கள். ஆயினும் அவன் மீதிருந்த அதிருப்தி யென்னவோ அடியோடு அகலவில்லை; அவ்வப் பொழுது ஏதோ ஒருவகையில், வெளிப்பட்டுக் கொண்டுதான் வந்தது. கடைசியில், பொதுப் பணத்தை அனாவசியமாகச் செலவழித்து விட்ட தாகக் குற்றஞ்சாட்டி அவனை அபராதஞ் செலுத்தச் செய்தார்கள்; அவனுடைய மதிப்பிற்குரியவர்களா யிருந்த நண்பர் சிலரைத் தேசப் பிரஷ்டம் செய்வித்தார்கள். இவைகளினால் மனமுடைந்து போனான் பெரிக்ளீ; யுத்தந் தொடங்கிச் சரியாக இரண்டரை வருஷங் கழித்து இறந்து போனான். பெரிக்ளீ சிறந்த ராஜதந்திரி; யுத்த தந்திரியுங்கூட. யுத்தத்தை எந்த மாதிரியாக நடத்தினால் ஆத்தீனியர்கள் பக்கம் வெற்றி கிடைக்கு மென்பதற்குச் சில திட்டங்கள் வகுத்து வைத்திருந்தான். இந்தத் திட்டங் களைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் ஆத்தீனியர்கள் அவன்மீது குறை கூறினார்கள். ஆனால் அவன் இறந்துவிட்ட பிறகுதான் அவனுடைய திட்டங்களின் பெருமை நன்கு புலனாகியது. பெலொப்பொனேசியர்கள் தரைப்பக்கம் படையெடுத்து வந்தால், அவர்களைத் திடீரென்று எதிர்த்துத் தாக்க வேண்டாமென்றும், அதற்குப் பதில் கப்பற் படையைப் பலப்படுத்தி வரவேண்டுமென்றும், புதிய பிரதேசங்கள் மீது வெற்றி கொள்ளப் பிரயத்தனப்பட வேண்டாமென்றும், ஆத்தென் நகரத்தை மட்டும், எவ்வித பிரயாசை எடுத்தாவது நன்கு பாதுகாத்துவர வேண்டுமென்றும், இப்படியாகப் பல யோசனைகள் கூறி வந்தான் பெரிக்ளீ. ஆனால் அவன் இறந்த பிறகு அவனுடைய யோசனை களுக்கு நேர்மாறாகவே நடந்து வந்தார்கள் ஆத்தீனியர்கள். சுயநலம் இவர் களிடத்தில் மேலோங்கத் தலைப்பட்டது. பல திறப்பட்ட யோசனை களிலும் திட்டங்களிலும் இவர்கள் சிக்கிக்கொண்டு, கடைசியில் யுத்தத்தை இழந்து விட்டார்கள். இழந்து விட்டது ஏறக்குறைய இருபத்தைந்து வருஷங்களுக்குப் பிறகல்லவோ? அஃதிருக்கட்டும்.  ஏழாவது அத்தியாயம் யுத்தத்தின் மூன்றாவது வருஷம். ஆத்தீனியர்களுக்கும் பெலொப் பொனேசியர்களுக்கும் கடலிலும் தரையிலுமாகச் சில்லரைப் போர்கள், கிரீஸின் பல பகுதிகளிலும் நடைபெற்று வந்தன. இந்த மாதிரியான கடற்போர் ஒன்று, பெலொப்பொனேசியாவின் வடமேற்குப் பகுதியில், ஒரு குறுகிய ஜலபாகத்தில் நடைபெற்றது. இதில் பெலொப்பொனேசியர்கள் தோல்வியடைந்து விட்டார்கள்; இதனால் மனமுடைந்து போகாமல், மறுபடியும் ரியம்1 என்ற குறுகிய நீர்ப்பகுதியில், ஆத்தீனியர்களை எதிர்த்து நிற்க, எழுபத்தேழு கப்பல்களுடன் தயாரானார்கள். ஆத்தீனியர்களும் இதே பிரகாரம் ஒரு கப்பற்படையுடன் தயாராய் நின்றார்கள். இருவருக்கு மிடையிலிருந்த நீர்ப் பகுதி சுமார் முக்கால் மைல் அகலந்தான் இருந்தது. பெலொப்பொனேசியர்கள் முந்தித் தாக்கட்டுமே என்று ஆத்தீனியர்களும், ஆத்தீனியர்கள் முந்தித் தாக்கட்டுமே என்று பெலொப்பொனேசியர்களும் முறையே எண்ணிக்கொண்டு சும்மாயிருந்தார்கள். இப்படிச் சுமார் ஒரு வாரம் கழிந்தது. கடைசியில், பெலொப்பொனேசிய தளபதிகள், ஆத்தீனியர் களுக்கு உதவியாக மற்றொரு கப்பற்படை வருவதற்கு முன்னர் அவர் களைத் தாக்கி முறியடித்துவிட வேண்டுமென்று தீர்மானஞ் செய்தார்கள். ஆனால், தங்கள் படையினரிற் பெரும்பாலோர், முந்திய தோல்வியினால் மனச்சோர்வு கொண்டிருப்பதைக் கண்டார்கள். எனவே அவர்களை ஒன்று கூட்டி, ஊக்கப்படுத்தும் முறையில் பின்வருமாறு பேசினார்கள்:- பெலொப்பொனேசியர்களே! முந்திய போரின் விளைவினால், இப்பொழுது நடைபெறவிக்கிற போரைப்பற்றி நீங்கள் அச்சங் கொண்டிருக் கிறீர்கள். ஆனால் இப்படி அச்சங் கொள்வதற்கு ஆதாரமே யில்லை. முந்திய யுத்தத்தின்போது, நாம் போதிய தயாரிப்பில்லாமலிருந்தோம். தவிர, நாம் அப்பொழுது தரையிலே போர்புரிய வந்திருந்தோமே தவிர கடலிலே போர் புரிய வரவில்லை. மற்றும், அந்த யுத்தத்தில் நமக்கு விரோதமாகவே எல்லாம் இருந்தன; கடற்போர் நடத்துவதிலும் நமக்குப் போதிய அனுபவமில்லாமலிருந்தது. ஆதலின், கோழைத்தனத்தினால் அந்த யுத்தத்தில் நமக்குத் தோல்வி ஏற்பட்டதென்பதில்லை; சத்துருக்கள், தங்களுடைய மேலான சக்தியினால் நம்மைத் தோல்வியுறச் செய்து விட்டார்களென்பதுமில்லை; அகமாத்தாக ஏற்பட்டதே அந்தத் தோல்வி. அதற்காக நாம் சோர்வு கொண்டிருத்தல் சரியன்று. சரி; அதிருஷ்டக் குறைவினால் நமக்கு அந்தத் தோல்வி ஏற்பட்ட தென்றே வைத்துக்கொள்ளுங்கள். அதனால் நாம் தைரியத்தை இழந்து விடலாமா? தைரியமுடையவர்கள் எப்பொழுதும் தைரியத்துடனேயே இருப்பார்கள். அந்தத் தைரியம் இருக்கிறவரையில், அனுபவக் குறைவினால் தங்களுக்குத் தோல்வி ஏற்பட்டதாகவும் சொல்லமாட்டார்கள். உங்களைப் பொறுத்தமட்டில் சத்துருக்களைக் காட்டிலும் நீங்கள் அனுபவத்தில் குறைந்தவர்களென்று சொல்லமுடியாது. அப்படியே, அவர்களைக் காட்டிலும் அதிகமான தைரியத்தையும் வீரத்தையும் படைத்திருக்கிறீர்கள். உங்களுடைய சத்துருக்களின் யுத்தத் திறமையைக் கண்டு நீங்கள் அஞ்சுகிறீர்கள். ஆனால் அந்தத் திறமையோடு தைரியமும், நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உறுதியுடன் நடந்துகொள்ளக் கூடிய மனத் திண்மையும் இருக்கவேண்டும். மனத்திண்மை இல்லாதிருக்குமானால் யுத்தத் திறமை மட்டும் இருந்து பயனில்லை. அச்சமானது, மனத் திண்மையை அழித்துவிடுகிறது; அதைரியமானது யுத்தத் திறமையைப் பிரயோஜனமற்றதாக்கி விடுகிறது. ஆதலின், சத்துருக்களின் மேலான திறமைக்கு முன்னர் உங்களுடைய மேலான தைரியத்தைக் கொண்டு நிறுத்துங்கள்; முந்திய தோல்வியினால் உங்களுக்கேற்பட்டிருக்கிறஅச்சத் திற்கு முன்னர், அப்பொழுது நீங்கள் யுத்தத்திற்குத் தயாரில்லாமலிருந் தீர்களே அந்த உண்மையைக் கொண்டு நிறுத்துங்கள். மற்றும், அதிக எண்ணிக்கையுடைய படை உங்களுக்கு இருக்கிறது; இந்த அனுகூலத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். தவிர, உங்கள் எல்லையிலிருக்கிற கடலோரத்தில் தான் சத்துருக்களை எதிர்த்துப் போராட வேண்டியவர்களா யிருக்கிறீர்கள்; காலாட்படையின் உதவி வேறு இருக்கிறது. பொது வாகவே, எண்ணிக்கை பலமும் படை பலமும்தான் வெற்றிக்குத் துணை செய்கின்றன. எந்த முகாந்தரத்தைக் கொண்டு பார்த்தாலும் நமக்குத் தோல்வி கிட்டாது. முந்தி நாம் தோல்வி யடைந்திருக்கிறோமே யென்றால், அந்தத் தோல்வியே நமக்கு இனி நல்ல பாடாமா யிருக்கும். ஆதலின் மாலுமிகளும் பிறரும், நம்பிக்கையோடு தங்கள் கடமைகளைச் செய்து வரட்டும். படைத் தலைவர்களாகிய நாங்கள், முந்திய படைத் தலைவர்களைப் போல ஒழுங்காக யுத்தத்தை நடத்திக் கொடுப்போமென்று உறுதி கூறுகிறோம். யாரும் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளாதபடி பார்த்துக் கொள்வோம். அப்படி மிஞ்சி ஒழுங் கீனமாக நடந்துகொள்கிறவர்கள் தண்டிக்கப் படுவார்கள்; ஆண்மை யுடன் நடந்து கொள்கிறவர்கள் தக்க விதமாகச் சன்மானிக்கப் படுவார்கள். ஆத்தீனியர்களின் படைத் தலைவனாயிருந்தவன் போர்மியோ1 என்பவன். தனது படையினர், பெலொப்பொனேசியர்களின் எண்ணிக்கை பலத்தைக் கண்டு மருண்டுவிட மாட்டார்களென்பது இவனுக்கு நன்கு தெரியும். ஆயினும் கண்ணுக்கெதிரே பெலொப்பொனசியர்களின் கப்பல்கள் போர்க் கோலத்துடன் வரிசையாக நிற்பதைக் கண்டு, எங்கே தன்னுடைய படையாட்கள் ஊக்கமும் நம்பிக்கையும் குன்றிவிடப் போ கிறார்களோ என்று சிறிது அச்சங்கொண்டு, அவர்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அதிகப்படுத்திக் கொடுக்கின்ற முறையில் பின்வருமாறு பேசினான்:- படைவீரர்களே! சத்துருக்கள் அதிக எண்ணிக்கையுடையவர் களா யிருப்பதைக் கண்டு நீங்கள் பயந்திருக்கிறீர்களென்று தெரிகிறது. எது பயங்கர மில்லாததோ அதைக் கண்டு நீங்கள் பயப்படுகிறீர்கள். இதற்காகவே உங்களனைவரையும் ஒன்றுகூட்டிச் சில வார்த்தைகள் சொல்ல விரும்பினேன். முதலாவது, பெலொப்பொனேசியர்கள் ஏற்கனவே தோல்வி யடைந்திருக்கிறார்கள். நமக்குச் சமதையானவர்களாகத் தாங்கள் இருக்க முடியாதென்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இதனாலேயே இவ்வளவு அதிகமான கப்பல்களை நம்மெதிரே கொண்டுவந்து நிறுத்தி யிருக்கிறார்கள். அடுத்தபடி தாங்கள்தான் மேலான வீரர்கள் என்று கருதி அந்த வீரத்தில் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தரைப்போரில் தங்களுக்கிருக்கிற அதிகமான அனுபவத்தைக் கொண்டு, அதே பிரகாரம் கடற்போரையும் நடத்திவிடலாம், அதில் வெற்றியும் கண்டுவிடலா மென்ற எண்ணமே, அவர்களுடைய இந்த நம்பிக்கைக்குக் காரணம். ஆனால் நியாயமாகப் பார்த்தால், தரைப்போர் அனுபவத்தில் அவர்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறதோ அவ்வளவு நம்பிக்கை நமக்குக் கடற்போர் அனுபவத்தில் இருக்கிறது. தரைப் போர் அனுபவம் அவர் களுக்கு எவ்வளவு இருந்தபோதிலும், வீரத்தில் அவர்கள் நம்மைவிட எந்த விதத்திலும் மேலானவர்களல்ல. அப்படியே போர்த்திறமையில் அவர் களுக்கு எந்த விதத்திலும் நாம் குறைந்தவர்களல்ல. மற்றும், லாஸிடீமோனியர்கள், தாங்கள் கீர்த்திபெற வேண்டு மென்ற உத்தேசத்துடனேயே, தங்கள் கூட்டாளிகள் மீது ஆதிக்கஞ் செலுத்தி வருகிறார்கள். இதனால் அந்தக் கூட்டாளிகளை, அதாவது அந்தக் கூட்டாளி ராஜ்யத்தினரை, அவர்களுடைய விருப்பத்திற்கு விரோத மாகவே இந்த ஆபத்தில் கொண்டுவந்து சிக்க வைக்கிறார்கள். அப்படிக் கில்லாவிட்டால், முந்திய தோல்விக்குப் பிறகு, இப்பொழுது அவர்கள், அந்தக் கூட்டாளி ராஜ்யத்தினர் இங்கு வந்திருக்கமாட்டார்களல்லவா? மறுபடியும் இந்தப் போரில் இறங்கியிருக்க மாட்டார்களல்லவா? ஆதலின் அவர்களுடைய துணிவைக் கண்டு நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை. அதற்கு மாறாக அவர்கள்தான் உங்களைக் கண்டு அஞ்ச வேண்டியவர் களாயிருக்கிறார்கள். ஏனென்றால் ஏற்கனவே அவர்கள் மீது நீங்கள் வெற்றி கண்டிருக்கிறீர்கள். தவிர, ஒரு பெரிய வெற்றியையடைந்து, அதன் விளைவாக என்றும் ஞாபகத்திலிருக்கக் கூடிய மாதிரியான ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் நாம் இப்பொழுது போருக்குத் தயாராயிருக்கிறோம் என்று அவர்கள் நம்மைக் கண்டு அஞ்ச வேண்டியவர்களா யிருக்கிறார்கள். நம் எதிரில் நிற்கும் பெலொப்பொனேசியர்களைப் போல் எண்ணிக்கையில் அதிகமாயிருக்கும் சத்துருக்கள், மனவுறுதியைக் காட்டிலும் படைபலத்தில்தான் அதிக நம்பிக்கை கொள்கிறார்கள். மகத் தான எதிர்ப்புக்களை, தாமே வலிய யார் சந்திக்கிறார்களோ அவர்கள் அதிக மான மனவுறுதி படைத்தவர்களா யிருக்கிறார்கள். பெலொப் பொனேசியர்கள், நமது நெஞ்சுத் துணிவைக் கண்டே அஞ்சுகிறார்கள். மற்றும் திறமையின்மையாலோ தைரியமின்மையாலோ, படைபலம் மிகுதியாகப் படைத்திருக்கிறவர்கள் கூட, ஒரு சிறு கூட்டத்தினரிடத்தில் தோல்வியடைந்திருக்கிறார்கள். இந்த இரண்டு குறைகளும், அதாவது திறமையின்மையும் தைரியமின்மையும் நம்மிடமில்லை. இப்பொழுது நடக்கவேண்டிய யுத்தத்தை, என்னால் முடியுமானால், நெருக்கமான ஜலபாகத்தில் நடத்த விடமாட்டேன்; நமது கப்பல் களையும் அங்கு அழைத்துச் செல்லமாட்டேன். ஒரு விதமான ஒழுங்குமில்லாமல் ஒன்றுகூடியிருக்கும் கப்பல்களுக்கும், திறம்பட நடத்தப்பெறும் ஒரு சிறு கப்பற்படைக்கும் போர் நடைபெற வேண்டு மானால் அதற்குக் குறுகிய நீர்ப்பரப்பு போதாது. குறுகிய நீர்ப்பரப்பில் சத்துருக்களைத் துரத்திக் கொண்டு செல்லவும் முடியாது; சாவதானமாகப் பின்வாங்கவும் முடியாது. வேகமாக இயங்கக்கூடிய ஒரு கப்பற்படை, இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைச் செய்யவேண்டிய அவசியத்துக் குட்படுகிறது. இந்த அவசியத்துக்குட்படாவிட்டால், தரையில் படைகளை இறக்கிப் போரைத் தொடர்ந்து நடத்தவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. தரைப் போரில் எண்ணிக்கை பலந்தான் முக்கியமான அமிசமாக விளங்கு கிறது. இவைகளுக்கெல்லாம் என்னால் முடிந்தவரையில் ஏற்பாடு செய் கிறேன். நீங்கள் மட்டும் உங்கள் கப்பல்களிலேயே அவரவர் இடத்தில் இருங்கள்; தலைவர்களிடும் உத்தரவுகளைக் கேட்கத் தயாராயிருங்கள். சிறப்பாக, சத்துருக்களின் வெகு சமீபத்தில் நாம் இருக்கிறபடியால், தலைவர்களின் உத்தரவுகளுக்கு நீங்கள் தயாராயிருக்க வேண்டுவது மிகவும் அவசியமாகும். போர் நடைபெறுகிறபோது, சிறப்பாகக் கடற்போர் நடைபெறுகிறபோது, ஒழுங்கும் அமைதியுந்தான் முக்கியமானவை. ஆதலின் சத்துருக்கள் முன்னர் உங்களுடைய பழைய வீரச்செயல் களுக்குப் பங்கம் வராமல் நடந்துகொள்ளுங்கள். கடற்போரில் தாங்கள் வெற்றி காண முடியுமென்று பெலொப்பொனேசியர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களே அந்த நம்பிக்கைக்குப் பங்கம் உண்டு பண்ணிவிடுங்கள். இல்லாவிட்டால் ஆத்தீனியர்களின் கடலாதிக்கத் திற்கும் பங்கம் உண்டாகிவிடும். மறுபடியும் ஒரு விஷயத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்து கிறேன். பெலொப்பொனேசியர்களில் பெரும்பாலோரை ஏற்கனவே நீங்கள் தோற்கடித்துவிட்டிருக்கிறீர்கள். ஒரு முறை தோல்வியடைந்தவர்கள், மறுமுறை அதே மனோ தைரியத்துடன் ஆபத்தை எதிர்த்து நிற்கமாட்டார்களென்பது திண்ணம். ஆத்தீனியர்களுக்கும் பெலொப்பொனேசியர்களுக்கும் கடற்போர் நடைபெற்றது. முதலில் பெலொப்பொனேசியர்களுக்கும் பிறகு ஆத்தீனியர் களுக்கும் முறையே வெற்றி கிடைத்தது.  எட்டாவது அத்தியாயம் யுத்தத்தின் நான்காவது வருஷம். கிரீஸுக்குக் கிழக்கே எஜீயன் கடலில் லெபோ1 என்ற ஒரு தீவு. இதில் சிறு சிறு நகர ராஜ்யங்கள் பல. இவற்றுள் ஒன்று மிட்டிலீனி2 யென்பது; ஓரளவு முக்கியத்துவம் பெற்றதா யிருந்தது. இந்த மிட்டிலீனியும், ஓரிரண்டைத் தவிர மற்ற நகர ராஜ்யங் களும், அதாவது ஏறக்குறைய லெபோ தீவு பூராவும், மேற்படி வருஷத்தில் - கிமு. 428-ஆம் வருஷத்தில் - திடீரென்று ஆத்தென்ஸுக்கு விரோதமாகக் கலகக்கொடி தூக்கிவிட்டது. காரணம், சுருக்கமாகச் சொல்ல வேண்டு மானால், பரிபூரண சுதந்திரத்துடனிருக்க வேண்டுமென்ற அதன் ஆசைதான். உள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்தமட்டில், லெபோ தீவிலுள்ள பல சிறிய ராஜ்யங்களும் சுதந்திரத்துடனேயே இருந்தன. ஆனால் வெளிநாடுகளுடன் உறவு வைத்துக் கொள்கிற விஷயத்திலும், ஆத்தீனிய ஏகாதிபத்தியத்திற்குட்பட்ட, அதாவது, ஆத்தென், தன் தலைமையில், தனது நலனை முன்னிட்டு தாபித்துக்கொண்டிருந்த டெலோ சமஷ்டியைச் சேர்ந்த அங்கத்தினர் ராஜ்யங்களுடன் தொடர்பு கொள்கிற விஷயத்திலும், ஆத்தென் சொன்னபடியே நடந்துகொள்ள வேண்டியவைகளா யிருந்தன. மற்றும், ஆத்தென் கேட்கிறபோது தங்களிடமுள்ள கப்பல்களைக் கொடுத்துதவ வேண்டுமென்ற கட்டாயத் திற்குட்பட்டிருந்தன. இந்தக் கட்டுப்பாடுகளுக்குட்பட்டிருக்க மேற்படி ராஜ்யங்கள் விரும்பவில்லை. சிறிது காலமாகவே இவை முணு முணுத்துக் கொண்டிருந்தன. இந்த முணு முணுப்புக்குத் தலைமை வகித்தது மிட்டிலீனி. தன்னுடைய தலைமையில் லெபோ முழுவதையும் ஐக்கியப்படுத்தப் பார்த்தது; ஆத்தென்ஸுக்கு விரோதமாகக் கலகத்தைக் கிளப்ப முயன்றது; தற்காப்புக்கான சில ஏற்பாடுகளையும் செய்தது. இந்த ஏற்பாடுகள் முடிவு பெறுவதற்குள், அதாவது அரை குறையா யிருக்கும்பொழுது கலகம் ஆரம்பித்துவிட்டது. திடீரென்றுதான். யாரோ ஒற்றர்கள் இந்த விஷயத்தை ஆத்தென்ஸுக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டனர். ஆத்தென் உடனே ஒரு கப்பற் படையை மிட்டிலீனியை நோக்கி அனுப்பியது. லெபோ வாசிகள், மிட்டிலீனி நகரத்திற்கு வெளியே அப்போலோ தெய்வத்திற்குத் திருவிழா கொண்டாடிக் கொண்டிருக்கிற சமயம் பார்த்து, அங்குச் சென்று இறங்கி அவர்களைத் திகைக்கச் செய்ய வேண்டுமென்று இந்தக் கப்பற் படைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்தத் திட்டம் தவறிவிட்டால், மிட்டிலீனியர்கள், தங்கள் கப்பற்படையைச் சரண் படுத்திவிட்டு, தற்காப்புக்கான சில ஏற்பாடுகளைச் செய்திருந்தார்களே அந்த ஏற்பாடுகளைக் கலைத்துவிட வேண்டுமென்று அவர்களுக்கு - மிட்டிலீனியர்களுக்கு - உத்தரவிடுமாறும், இந்த உத்தரவுக்கு இணங்க மறுத்துவிட்டால் அவர்கள் மீது யுத்தந் தொடுக்குமாறும் மேற்படி கப்பற்படைத் தலைவர்களுக்கு அனுமதியளித்திருந்தது. ஆத்தீனியக் கப்பற் படையொன்று தங்களை நோக்கி வருவதை முன் கூட்டியே தெரிந்துகொண்டுவிட்ட மீட்டிலீனியர்கள், அப்போலோ திருவிழாவை, குறித்த நாளில் நடத்தாமல் நிறுத்திக்கொண்டு விட்டார்கள். எனவே, சென்ற ஆத்தீனியக் கப்பற்படைத் தலைவர்கள், கப்பல்களைச் சரண்படுத்தி விடுமாறும், தற்காப்புக்காகச் செய்திருந்த ஏற்பாடுகளைக் கலைத்துவிடுமாறும் மிட்டிலீனியர்களுக்குத் தாக்கீது பிறப்பித்தனர். மிட்டிலீனியர்களோ, மறுத்து, போர்க்கோலம் பூண்டனர். ஆயினும் என்ன? ஆத்தீனியக் கப்பற்படைக்கு முன்னே பின்வாங்கிவிட வேண்டியதாயிற்று. எனவே சமரஸம் பேச முனைந்தனர். ஆத்தீனியப் படைத் தலைவர்களும், லெபோ தீவு முழுவதும் சேர்ந்து எதிர்த்தால் தங்களால் சமாளிக்க முடியா தென்று தெரிந்து சமரஸத்திற்கு இசைந்தனர். மிட்டிலீனியர்களும் உடனே, ஆத்தீனியக் கப்பற் படையைத் திருப்பி வரவழைத்துக் கொள்ளுமாறு நேரில் தெரிவிக்க ஆத்தென்ஸுக்கு ஒரு சிலரை அனுப்பி வைத்தனர். ஆனால் ஆத்தென் இதற்குச் சம்மதிக்காதென்று இவர்கள் உணர்ந்தனர். எனவே ரகசியமாக லாஸிடீமோனுக்கு ஒரு தூது கோஷ்டியை அனுப்பி அதன் உதவியை நாடினர். உள்ளூர இவர்களுக்கு ஆத்தென்ஸுடன் சமரஸமாகப் போக விருப்பமில்லை. லெபோ அனைத்திற்கும் சேர்ந்தாற்போல் ஒரு பெரிய கப்பற்படை இருக்கிறது, இதனுடன், ஆத்தென்ஸுக்கு விரோதமாகவுள்ள சில ராஜ்யங்களின் உதவி கிடைத்தால், ஆத்தென்ஸின் ஆதிக்கத்திலிருந்து பரிபூரணமாக விடுதலை பெற்றுக் கொண்டுவிடலாம், தவிர ஆத்தென், யுத்தத்தினாலும் பிளேக் நோயினாலும் அதிக பலவீனப்பட்டுக் கிடக்கிறது, எனவே அதன் தளை யினின்று விடுவித்துக் கொள்ளுதல் இப்பொழுது சுலபமாக இருக்கும் என்று இப்படியெல்லாம் இவர்கள் கருதினர். இதற்குத் தகுந்தாற்போல் இவர்கள் எதிர்பார்த்தபடியே ஆத்தென், தனது கப்பற்படையைத் திருப்பி வரவழைத்துக்கொள்ளச் சம்மதிக்கவில்லை. இதன் விளைவாக ஆத்தீனியக் கப்பற்படைக்கும் மிட்டிலீனியக் கப்பற்படைக்கும் ஒரு சிறு போர் நடைபெற்றது. மிட்டிலீனியர்களால் சமாளிக்க முடியவில்லை; பின்வாங்கிக் கொண்டு விட்டனர். திரும்பவும் தாக்கத் திட்டங்கள் வகுக்கவுமில்லை. லாஸிடீமோனிலிருந்து ஏதேனும் உதவிப்படை வருமா என்று எதிர்பார்த்துச் சும்மா யிருந்தனர். ஆத்தீனியக் கப்பற்படை யினருக்கு இது தெரிந்தது. மிட்டிலீனியை இரண்டு பக்கங்களிலும் சுற்றி வளைத்துக் கொண்டனர்; அதனைக் கடல் தொடர்பு கொள்ள முடியாமற் செய்து விட்டனர். இஃது இப்படி யிருக்க, மிட்டிலீனிய தூது கோஷ்டியினர் மிகுந்த சிரமப்பட்டு லாஸிடீமோன் வந்து சேர்ந்தனர். அப்பொழுது ஒலிம்ப்பிய விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு மிட்டிலீனியர்கள் வந்து தங்கள் கட்சியை எடுத்துச் சொல்லலா மென்றும், விழாவுக்கு வந்திருக்கும் பெலொப்பொனேசிய நேச ராஜ்யங் களின் பிரதிநிதிகளும் இதைக் கேட்கக்கூடுமென்றும், அதுகாலை எல்லோரும் கலந்தாலோசித்து ஒரு தீர்மானத்திற்கு வருதல் சாத்திய மென்றும் லாஸிடீமோனியர்கள் கூறினார்கள். மிட்டிலீனிய தூதுகோஷ்டி யினரும் இதற்கிசைந்தனர். விழா நடைபெற்று முடிந்ததும், மிட்டிலீனியின் கட்சியைக் கேட்பதற்காகக் கூடியிருந்த கூட்டத்தில், தூதுகோஷ்டியின் தலைவன் பின் வருமாறு பேசலுற்றான்:- லாஸிடீமோனியர்களே! சகாக்களே! ஹெல்லனீயர்கள் ஏற்படுத்தி யிருக்கிற நியதியை நாங்கள் அறியாதவர்களல்ல. ஒரு சிலர் கூட்டாளி களாகச் சேர்ந்து ஒரு யுத்தத்தை நடத்துகிறார்களென்றும், யுத்தம் நடை பெற்றுக்கொண்டிருக்கையில், அந்த ஒரு சிலரில் ஒருவர்மட்டும், கூட்டாளிகளிடமிருந்து கலகஞ்செய்து விலகிக்கொண்டு, எதிர்க் கட்சி யினரிடம் சென்று அவர்களுடைய ஆதரவை நாடுகின்றனர் என்றும் வைத்துக்கொள்வோம். இவர்களுக்கு ஆதரவு அளிக்க முன் வரும் எதிர்க் கட்சியினர், இவர்கள் எந்த அளவுக்குத் தங்களுக்கு உபயோகமா யிருப்பார்களோ அந்த அளவுக்குத்தான் இவர்களை ஆதரவுக் கண் கொண்டு பார்ப்பர். இல்லாவிட்டால், இவர்கள், பழைய நண்பர்களுக்குத் துரோகஞ் செய்து விட்டு வந்தவர்களென்று சொல்லி இவர்களைக் குறைவாகவே மதிப்பர். கூட்டாளிகளும், கூட்டாளிகளிடமிருந்து பிரிந்து வந்தவர்களும் ஒரே மாதிரியான நோக்கமும் அநுதாப எண்ணமும் உடையவர்களா யிருந்தால், ஒரே மாதிரியான செல்வமும் செல்வாக்கும் படைத்தவர்களா யிருந்தால், கலகஞ் செய்து விலகிக்கொள்வதற்குப் போதிய காரணங்கள் இல்லாமலிருந்தால், ஆதரவு அளிக்க முன்வரும் எதிர்க்கட்சியினர், மேலே சொன்ன விதமாக அபிப்பிராயப்படுவது தவறு என்று சொல்லமுடியாது. ஆனால் ஆத்தீனியர்களும் நாங்களும் இந்த நிலைமையில் இல்லை. சமாதான காலத்தில் அவர்களால் – ஆத்தீனியர் களால் - கௌரவிக்கப்பட்டு வந்த நாங்கள், அவர்கள் ஆபத்தில் இருக்கிற பொழுது அவர்களிடமிருந்து கலகஞ் செய்துகொண்டு வந்துவிட்டோ மென்றால், அதற்காக எங்களை யாரும் கேவலமாக மதிக்க வேண்டிய தில்லை. இப்பொழுது நாங்கள் உங்கள் கூட்டுறவைக் கோரி வந்திருக் கிறோம். எனவே எங்கள் பேச்சில் நியாயமும் நேர்மையுமே முதன்மை யான விஷயங்களா யிருக்கும். இரு சாராருக்கிடையே இடையறா நட்பு இருக்கவேண்டுமானால், ஒருவருடைய நியாய புத்தியில் மற்றொருவர் நம்பிக்கை கொள்ளவேண்டும். இரு சாராரும் கூடியமட்டில் ஒத்த மனப்பான்மை யுடையவர்களா யிருக்க வேண்டும்; மனப்பான்மையில் வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் நடக்கையிலும் வித்தியாசம் இருக்கும். இந்த நியதி, தனிப்பட்ட நபர்களுக்காகட்டும், ராஜ்யங்களுக்காகட்டும், எல்லோருக்குமே பொருந்தும். எங்களுக்கும் ஆத்தீனியர்களுக்கும் எப்பொழுது கூட்டுறவு ஏற்பட்ட தென்றால், பாரசீக யுத்தத்திலிருந்து நீங்கள் விலகிக்கொண்டு விட்ட பிறகு அவர்கள் - ஆத்தீனியர்கள் - அந்த யுத்தத்தை முடிப்பதற்காக இருந்தார்களே அப்பொழுததான். ஆனால் கிரேக்கர்களை அடிமைப்படுத்துவதற்காக நாங்கள் ஆத்தீனியர்களோடு கூட்டுறவு கொள்ளவில்லை; பாரசீகர்களிட மிருந்து கிரேக்கர்களை விடுவிக்கும் பொருட்டு எல்லாக் கிரேக்கர்களும் ஒன்றுசேர வேண்டுமென்ற நிலையில் அவர்களோடு கூட்டுறவு கொண் டோம். அந்த விடுவிக்கும் முயற்சியில் அவர்கள் எங்களை ஒழுங்காக நடத்திச் சென்ற வரையில் நாங்களும் அவர்களை விசு வாசத்துடன் பின்பற்றினோம். பின்னர் அவர்கள், பாரசீகர்கள் மீதுள்ள பகைமையைக் குறைத்துக்கொண்டு, தங்களுடன் கூட்டாளிகளாகச் சேர்ந்த அனைவரை யும் தங்களுக்குக் கீழ்ப்படுத்த முயன்ற பொழுதுதான், அவர்களைப்பற்றி எங்களுக்கு அச்சம் உண்டாகத் தொடங்கியது. ஆத்தீனிய சமஷ்டியில் பல ராஜ்யங்கள் அங்கத்தினர்களா யிருந்த படியாலும், இந்த ராஜ்யங்களுள் ஒருமைப்பாடு இல்லாதிருந்தமையாலும், இந்த ஒருமைப்பாடு இல்லாத காரணத்தினால் இவை தங்களுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமற் போனதனாலுமே இவைகளை ஆத்தென் அடிமை கொண்டது. நாங்களும் கியோ1 வாசிகளும் மட்டும் பெயரளவுக்குச் சுதந்திர ராஜ்யத்தினராக இருந்து கொண்டு, ஆத்தென் கேட்டபோது படைகளை அனுப்பி வந்தோம். இனி அதன் தலைமையில் நாங்கள் நம்பிக்கை வைக்க முடியாது. அதனுடைய தற்போதைய நடவடிக்கைகளைக் கண்டுதான் இந்த முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம். ஆத்தீனிய சமஷ்டியில் சேர்ந்த எங்கள் சகாக்கள் பலரையும் அடிமைப்படுத்திவிட்டு எங்களை மட்டும் அது சுதந்திரமாக விட்டு வைக்குமா? சக்தியிருந்தால் எப்பொழுதோ எங்களை அடிமைப் படுத்திக்கொண்டிருக்கும். ஆத்தீனிய சமஷ்டியில் சேர்ந்த எல்லா ராஜ்யங்களும் சுதந்திரமா யிருந்திருக்கும் பட்சத்தில், இந்த ராஜ்யங்கள் சம்பந்தமாக அஃது - ஆத்தென் - எந்தக் கொள்கையை அனுஷ்டித்து வருகிறதோ அந்தக் கொள்கையினின்று மாறாது என்று நாங்கள் நம்பலாம். ஆனால் இந்த ராஜ்யங்களிற் பெரும்பாலன அதற்கு அடிமையாகி விட்டிருக் கின்றன. நாங்கள் மட்டுந்தான் அதற்குச் சமதையான அந்ததில் இருந்து வருகிறோம். இப்படி ஒரு ராஜ்யம் மட்டும் சுதந்திரமாயிருப்பதை, அதிலும் மற்றெல்லா ராஜ்யங்களும் அடிமைப்பட்டுக் கிடக்க, அது சகித்துக் கொண்டிருக்குமா? சிறப்பாக, அதனுடைய சக்தி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுவர, நாங்கள் நாளுக்கு நாள் பலவீனப் பட்டுக் கொண்டு வர, எங்களை அது தனியே விட்டு வைக்குமா? இரு கட்சியினருக்கிடையே ஏற்படுகிற கூட்டுறவுக்கு நிச்சயமான அடிப்படையா யிருப்பது, ஒருவரைப்பற்றி மற்றொருவர் ஒரே மாதிரியாக அச்சங் கொண்டிருப்பதுதான். இந்த அச்சங் காரணமாக ஒருவரை யொருவர் தாக்குவதற்கு முன்னர் நிரம்ப யோசிப்பார்கள். ‘ïJtiuÆš c§fis¢ Rjªâukhf É£L it¤âU¡ »wh®fns M¤ÔÅa®fŸ? என்று நீங்கள் கேட்கலாம். இதற்குக் காரணம் என்னவென்றால், பலாத்காரத்தைப் பிரயோகிக்காமல், இனிய மொழிகள் சொல்லியும் நல்லதனமாக நடந்தும் தங்கள் ஏகாதிபத்தியத்தை விதரித்துக் கொள்ளலாமென்றே அவர்கள் கருதி வந்திருக்கிறார்கள். மற்றும் அவர்கள், சிறிது பலமுள்ள ராஜ்யங்களைத் துணையாகக் கொண்டு பலவீனமான ராஜ்யங்களை முதலில் தாக்கி அவைகளை அடிமைப் படுத்திக் கொண்டு, பிறகு தங்களுக்குத் துணையாயிருந்த ராஜ்யங்களை ஒன்றன் பின்னொன்றாக அடிமைப்படுத்துவதை ஒரு முறையாகக் கையாண்டு வந்திருக்கிறார்கள். மற்ற ராஜ்யங்கள் ஓரளவு சக்தி வாய்ந்தனவா யிருந்த நிலையில், முதன் முதலாக எங்களை அவர்கள் தாக்கியிருந்தார் களானால், எங்களை மையமாகக் கொண்ட ஒரு பலமான எதிர்ப்புச் சக்தி அவர்களுக்கு விரோதமாகத் தோன்றியிருக்கும்; அப்பொழுது அவர் களுடைய அடிமைப்படுத்தும் வேலையும் கடினமா யிருந்திருக்கும். தவிர, எங்களுடைய கடற்படை அவர்களுக்குச் சிறிது அச்சத்தை உண்டு பண்ணியது. உங்களுடனாவது வேறெந்த ராஜ்யத்துடனாவது நாங்கள் சேர்ந்துகொண்டு அவர்களுக்கு - ஆத்தென்ஸுக்கு - ஆபத்து விளை வித்திருக்கலாமல்லவா? இன்னும், ஆத்தென்ஸின் ஜனநாயக ஆட்சி முறையையும் அதன் தலைவர்களையும் நாங்கள் போற்றிப் புகழ்ந்து கொண்டே வந்தோம். அதுவும் எங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள் வதற்குத் துணையாயிருந்தது. இந்த யுத்தத்தில் மற்ற ராஜ்யத் தினரிடம் அவர்கள் - ஆத்தீனியர்கள் - நடந்து வருவதைப் பார்த்து இனியும் இந்தமாதிரி செய்து கொண்டிருக்க முடியாதென்று உணர்ந்தோம். இத்தகைய இவர்களுடைய நட்பில், இத்தகைய எங்கள் சுதந்திரத்தில் நாங்கள் எப்படி நம்பிக்கை வைத்துக்கொண்டிருப்பது? எங்கள் விருப்பத்திற்கு விரோதமாகவே நாங்கள் ஒருவரையொருவர் ஏற்றுக் கொண்டோம். யுத்தத்தின் பொழுது அவர்கள் எங்கள் ஆதரவை நாடியதற்கும் சமாதான காலத்தில் நாங்கள் அவர்களுடைய ஆதரவை நாடியதற்கும் அச்சமே காரணம். ஒருவர் மீது மற்றொருவர் நம்பிக்கை வைப்பதற்கு ஆதாரமா யிருப்பது பரபர நல்லெண்ணம். இங்கே எங்கள் இருவர் விஷயத்திலும் அச்சமே ஆதாரமாயிருந்தது. இந்த அச்சத் தினாலேயே ஆத்தீனியர்களின் கூட்டுறவை இவ்வளவு காலம் நீடித்து வைத்துக்கொண்டிருந்தோம். எந்த ஒரு கட்சியினர் ஒரு கூட்டுறவி லிருந்து தாங்கள் முதன்முதலாக விலகிக்கொண்டால் மற்ற இடங்களி லிருந்து தங்களுக்கு ஆதரவு கிடைக்குமென்று நம்புகின்றனரோ அந்தக் கட்சியினர் நிச்சயமாக மேற்படி கூட்டுறவிலிருந்து விலகியே கொள்வர். எனவே நாங்கள் ஆத்தீனியக் கூட்டுறவிலிருந்து முதன் முதலாக விலகிக்கொண்டதற்காக எங்களை யாரேனும் கண்டித்துப் பேசுவார் களானால், அவர்கள் உள்ள நிலைமையை அறிந்து கொள்ளாமல் தவறாகப் பேசியவர்களாவார்கள்; எந்தக் கணத்திலும் ஆத்தீனியர்கள் எங்களைத் தாக்கக்கூடுமென்று நாங்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறோமே, அந்தத் தாக்குதலைத் தள்ளிப் போட்டவர்களாவார்கள். சூழ்ச்சிகள் செய் வதிலும், அனுகூலமான சந்தர்ப்பம் கிடைக்கும் வரையில் காரியத்தைத் தாமதப்படுத்தி வைப்பதிலும் ஆத்தீனியர்கள் வல்லவர்கள். இந்த வல்லமை எங்களுக்கிருக்கும் பட்சத்தில், நாங்கள், அவர்களுடன் சம அந்தது பெற்றவர்களாக இருப்போம்; அவர்களுடைய ஆதிக்கத்துக் குட்பட்ட வர்களாக இருக்கமாட்டோம். ஆனால், முதன்முதலாகத் தாக்கு கின்ற உரிமை அவர்களுடையதாகவே இதுகாறும் இருந்து வந்திருக்கிறது. எனவே, தற்காத்துக்கொள்ளும் உரிமை இனி எங்களுடையதாகவே இருக்கவேண்டும். லாஸிடீமோனியர்களே! சகாக்களே! ஆத்தீனியர்களுக்கு விரோத மாக நாங்கள் கலகஞ் செய்ததற்கு இவைதான் காரணங்கள். இந்தக் காரணங்களைக் கொண்டு, நாங்கள் நியாயமாகவே நடந்திருக்கிறோ மென்பது உங்களுக்குப் புலனாகும். இந்தக் காரணங்களினாலேயே நாங்கள் பயந்துபோய் உங்கள் பாதுகாப்பை நாடி வந்திருக்கிறோம். வெகு நாட்களுக்கு முன்பே, இங்ஙனம் உங்களிடம் வர விரும்பி னோம்; இது சம்பந்தமாக உங்களுக்குத் தூதும் விடுத்தோம். ஆனால் நீங்கள் எங்களை வரவேற்கக்கூட மறுத்துவிட்டீர்கள். பின்னர் பியோஷ்யர்கள், தங்களுக்குச் சகாயஞ் செய்யும்படி எங்களை அழைத் தார்கள். நாங்களும் அதற்கு இசைந்தோம். பொதுவாக ஹெல்லெனீ யர்களுக்கு விரோதமாகவும் குறிப்பாக ஆத்தீனியர்களுக்கு விரோத மாகவும், இப்படி இரண்டு தரப்பிலும் புரட்சி செய்யத் தீர்மானித்தோம். ஆனால் ஹெல்லெனீயர்களுக்குத் தீங்கு விளைவிக்கின்ற முறையில் ஆத்தீனியர்களுக்கு உதவி செய்வதென்று நாங்கள் தீர்மானிக்கவில்லை. அதற்கு மாறாக ஹெல்லெனீயர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கும் பொருட்டே ஆத்தீனியர்களுக்கு விரோதமாகப் புரட்சி செய்யத் தீர்மானித் தோம். மற்றும் ஆத்தீனியர்கள், எங்களை இறுதியில் நாசமாக்கிவிடா திருக்கும் பொருட்டு, தக்க சமயத்தில் நடவடிக்கை எடுத்துக்கொண்டுவிட வேண்டுமென்பதற்காகவே இந்தப் புரட்சிக்குத் தீர்மானித்தோம். இப்படியெல்லாம் நாங்கள் தீர்மானித்திருந்தபோதிலும், போதிய ஏற்பாடுகள் செய்துகொள்வதற்கு முந்தியே புரட்சி கிளம்பிவிட்டது. இதற்காகவேனும் நீங்கள் எங்களை உங்கள் ஆதரவில் அணைத்துக் கொண்டு, உடனடியாக எங்கள் ராஜ்யத்திற்கு உதவிப் படையை அனுப்புதல் அவசியமாகும். இங்ஙனம் அனுப்பி, நண்பர்களுக்கு ஆதரவு அளிக்கவும், அதே சமயத்தில் சத்துருக்களுக்குத் தீமை உண்டுபண்ணவும் நீங்கள் தயாராயிருப்பதாகக் காட்டிக்கொள்வதும் அவசியமாகும். இதற்கு முன் கிடைத்திராத ஒரு சந்தர்ப்பம் இப்பொழுது உங்களுக்குக் கிடைத் திருக்கிறது. யுத்தங் காரணமாகவும் நோய் காரணமாகவும் ஆத்தீனியர்கள் சோர்ந்து கிடக்கிறார்கள். அவர்களுடைய கப்பற்படை, உங்கள் கடலோரங் களில் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது; அல்லது எங்களுக்குக் கடல் தொடர்பு கிடைக்காதபடி தடை செய்து கொண்டிருக்கிறது. இச்சமயம் பார்த்து இந்தக் கோடையின் போது இரண்டாவது தடவையாகக் கடல் மார்க்கமாகவோ தரை மார்க்கமாகவோ அவர்கள் மீது படையெடுத்துச் செல்வீர்களானால், உங்களை எதிர்க்கத் தனியாக ஒரு படையைத் திரட்டி அவர்களால் அனுப்ப முடியாது. ஒன்று, உங்கள் படையை எதிர்க் காமலாவது இருந்துவிடுவார்கள்; அல்லது எங்களைத் தடுத்துக் கொண்டிருக்கிறார்களே அதிலிருந்து விலகிக்கொண்டாவது விடுவார்கள். நமக்குச் சம்பந்தமில்லாத ஒரு நாட்டிற்காக நாம் ஏன் ஆபத்தில் சிக்கிக்கொள்ளவேண்டும் என்று நினைக்காதீர்கள். அப்படிப்பட்ட விஷய மல்ல இது. லெபோ தீவு தொலை தூரத்திலிருப்பதாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அதன் உதவி தேவைப்படும் பொழுது அஃது உங்களுக்கு வெகு சமீபத்தில் வந்து நிற்கும். சிலர் நினைக்கிறபடி, யுத்தத்தின் முடிவை அட்டிக்காவில் நிர்ணயிக்க முடியாது; அட்டிக் காவுக்கு ஆதரவு அளிக்கும் ராஜ்யங்களில்தான் நிர்ணயிக்க முடியும். ஆத்தென்ஸுக்குக் கிடைக்கிற வருமானத்தில் பெரும்பகுதி, அதனோடு கூட்டுறவு கொண்டிருக்கிற ராஜ்யங்களிடமிருந்துதான் கிடைக்கிறது. எங்களையும் அவர்கள் அடிமைப்படுத்திக்கொண்டு விட்டார்களானால் அவர்களுடைய வருமானம் இன்னும் அதிகப்படும். அவர்களை எதிர்த்துக் கலகஞ் செய்யக்கூடிய ராஜ்யங்கள் வேறெதுவும் இல்லை; எங்களுடைய பொருள் வளமும் அவர்களைப் போய்ச்சேரும், இந்த நிலைமையில், ஏற்கனவே அடிமைப்பட்டிருக்கிற ராஜ்யங்களை விடக் கேவலமாக எங்களை நடத்த ஆரம்பிப்பார்கள். நீங்கள் எங்களுக்கு மனப்பூர்வமாக ஆதரவு கொடுப்பீர்களானால், பெரிய கப்பற்படையையுடைய ஒரு ராஜ்யத்தை உங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டவர்களாவீர்கள். உங்களுக் கோ இப்பொழுது கப்பற்படைதான் அவசியம் தேவையாயிருக்கிறது. எங்களைப் பின்பற்றி இன்னும் அநேக ராஜ்யத்தினர் உங்கள் பக்கம் வந்து சேருவர்; ஆத்தீனியர்களை வீழ்த்த உங்களுக்கு உதவி செய்வர். இங்ஙனம் எங்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம், உங்கள் சத்துருக் களுக்கு விரோதமாகத் தோன்றும் புரட்சிகளுக்கு நீங்கள் ஆதரவு கொடுப்ப தில்லை என்ற அவதூறு உங்களை விட்டு அகலும். சுருக்கமாக, மற்றவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கிறவர்களென்று பெயரெடுங்கள்; யுத்தத்தில் நிச்சயமாக உங்களுக்குச் சாதகம் உண்டாகும். ஹெல்லெனீயர்கள் உங்களிடம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கைக்கும், உங்களுடைய உதவி கோரி இப்பொழுது எந்தக் கோயிலில் வந்து நிற்கிறோமோ அந்தக் கோயிலில் வீற்றிருக்கும் ஜூ1 தெய்வத்திற்கும் மரியாதை கொடுங்கள். மிட்டிலீனியர்களைக் காப்பாற்று கிறவர்களாகவும் அவர்களுடைய சகாக்களாகவும் முன்வந்து நில்லுங்கள். ஆத்தீனியர்களுக்கு எங்களைப் பலிகொடுத்து விடாதீர்கள். ஒரு லட்சியத்திற்காகவே எங்கள் உயிரை ஆபத்தில் சிக்க வைத்திருக் கிறோம். அந்த லட்சியத்தில் நாங்கள் வெற்றி பெறுவோமானால் பொதுவாக எல்லோருக்கும் நன்மை உண்டாகும்; நீங்கள் உதவி செய்ய மறுத்து அது காரணமாகத் தோல்வியடைவோமானால் எல்லோருக்கும் தீமை யுண்டாகும். ஹெல்லெனீயர்கள் உங்களை எப்படிப்பட்ட மனிதர்களாக நினைக்கிறார்களோ அப்படிப்பட்ட மனிதர்களாக, எங்களுடைய அச்சமானது நீங்கள் எப்படிப்பட்ட மனிதர்களாக இருக்கவேண்டுமென்று விரும்புகிறதோ அப்படிப்பட்ட மனிதர்களாக நடந்துகொள்ளுங்கள். மிட்டிலீனியர்களுடைய இந்த வேண்டுகோளுக்கு லாஸிடீமோனி யர்கள் இணங்கி அவர்களைத் தங்கள் ஆதரவில் அணைத்துக் கொண்டார்கள்; ஆத்தென்ஸைத் தாக்க ஒரு படையை அனுப்பினார்கள். ஆனால் ஆத்தீனியர்கள் எதிர்ப்புக் காட்டவே இவர்களால் ஒன்றுஞ் செய்ய முடியாமற் போய்விட்டது. லாஸிடீமோனியர்களின் ஆதரவு தங்களுக்குக் கிடைத்துவிட்ட தென்று தெரிந்ததும், மிட்டிலீனியர்கள் சிறிது தைரியங்கொண்டு, லெபோஸில் தங்களுடைய ஆதிக்கத்திற்குட்படாதிருந்த ஓரிரண்டு ராஜ்யங்களையும் தங்களுடைய ஆதிக்கத்திற்குட்படுத்திக்கொள்ள முனைந்தார்கள். ஆனால் இதில் பூரண வெற்றி பெறவில்லை. மிட்டிலீனியர்கள் இங்ஙனம் லெபோ தீவு முழுவதையும் தங்களுடைய ஆதிக்கத்திற்குட்படுத்த முனைந்திருக்கிறார்களென்று தெரிந்ததும் ஆத்தீனியர்கள், ஆயிரம் பேரடங்கிய ஒரு காலாட் படையை பாக்கெ1 என்பவனுடைய தலைமையில் மிட்டிலீனிக்கு அனுப்பினார்கள். இந்த பாக்கெஸும், மிட்டிலீனியைச் சுற்ற ஒரு சுவர் எழுப்பி முற்றுகை யிட்டான். இந்த நிலைமையில், லாஸிடீமோனியர்கள், ஸாலீத்த2 என்பவனை மிட்டிலீனிக்கு ரகசியமாக அனுப்பினார்கள். அங்குச் சென்று மிட்டிலீனியர் களை உற்சாகங் குன்றாமலிருக்கச் செய்ய வேண்டுமென்பதும், அவர் களுடைய தற்காப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்யவேண்டு மென்பதும் அவனுக்கிடப்பட்ட கட்டளைகள். அவனும் அப்படியே சென்று, லாஸிடீமோனியர்கள் நிச்சயம் அட்டிக்கா மீது படையெடுக்கப் போகிறார்களென்றும், அது தவிர, மிட்டிலீனியை நோக்கி நாற்பது கப்பல்கள் அனுப்பியிருக்கிறார்களென்றும், அந்தக் கப்பல்களும் வந்து கொண்டிருக்கின்றனவென்றும் இப்படி பலபடியாகச் சொல்லி மிட்டிலீனியர்களை உற்சாகப்படுத்தி வந்தான். அவர்களும் இந்த உற்சாக மொழிகளை நம்பி ஆத்தீனியர்களின் முற்றுகையைத் தீவிரமாக எதிர்த்து நின்றனர். இப்படி யிருக்கையில், யுத்தத்தின் நான்காவது வருஷம் முடிந்து ஐந்தாவது வருஷம் தொடங்கியது. ஸாலீத்த கூறிய உதவிக் கப்பற்படை இன்னும் வந்து சேர வில்லை. மிட்டிலீனியர்கள், முற்றுகையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினார்கள். கடைசியில், ஆத்தீனியப் படைத் தலைவனான பாக்கெஸுக்குச் சரணடைந்துவிட்டார்கள். தங்களுடைய கட்சியை எடுத்துச் சொல்லி நியாயங்கோர ஆத்தென்ஸுக்கு ஒரு தூது கோஷ்டியை அனுப்ப அனுமதியளிக்க வேண்டுமென்றும், அந்தத் தூதுகோஷ்டி திரும்பி வருகிறவரையில், சரணடைந்தவர்களை, அடிமைப்படுத்தவோ, சிறைப் படுத்தவோ, மரிக்கச் செய்யவோ கூடாதென்றும் பாக்கெஸைக் கேட்டுக் கொண்டார்கள். இந்த வேண்டுகோளுக்கிணங்க பாக்கெஸும், மிட்டிலீனிய தூது கோஷ்டி யென்ற பெயரால் கலகத் தலைவர்களைத் தக்க பாதுகாப்புடன் ஆத்தென்ஸுக்கு அனுப்பி வைத்தான். கூட ஸாலீத்தஸையும் அனுப்பி வைத்தான். இந்தத் தூது கோஷ்டியினரும் கைதிகள் போலவே ஆத்தென் வந்தடைந்தனர். ஆத்தீனியர்கள் முதலில் ஸாலீத்தஸை மரண தண்டனைக் குட்படுத்தி விட்டனர். பிறகு, மற்றவர்களுடைய கதியை நிர்ணயிக்க ஜனசபை கூடியது; பலவாறாக யோசித்துக் கடைசியில், ஆத்தென்ஸுக்கு வந்திருக்கிற மிட்டிலீனியர்களை மட்டுமல்ல, மிட்டிலீனியிலுள்ள ஆண் களனைவரையும் கொலை செய்து விடுவதென்றும், பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக விற்றுவிடுவதென்றும் தீர்மானித்தது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு பாக்கெஸுக்கு தாக்கீது விடுத்தது. இந்தத் தாக்கீதை எடுத்துக்கொண்டு ஒரு கப்பலும் மிட்டிலீனியை நோக்கிப் புறப்பட்டு விட்டது. தீர்மானத்தை நிறைவேற்றிவிட்ட பிறகு ஜன சபையினர் ஆர அமர யோசித்தனர்; ஆத்திரத்தில் நிறைவேற்றி விட்டதாக உணர்ந்தனர். எனவே இந்தத் தீர்மானத்தைப் புனராலோசனை செய்ய ஜனசபை மறுநாள் கூட்டப்பெற்றது. முந்திய நாள் செய்த தீர்மானம் சரியென்றும், அதை ரத்து செய்யக்கூடாதென்றும், இல்லை அது தவறு, அதனை உடனே ரத்து செய்துவிட வேண்டுமென்றும் இப்படி இரண்டு விதமான அபிப்பிராயங்கள் தலைதூக்கி நின்றன. இருவித அபிப்பிராயத்தினரும் காரசாரமாக வாதஞ் செய்தனர். முந்திய நாள் தீர்மானத்தை நிறைவேற்றச் செய்தவன் கிளியோன்1 என்பவன். இவன் ஒரு தோல் வியாபாரி; ஜனக் கட்சியின் தலைவனா யிருந்தவன்; ஆத்தீனிய ஏகாதிபத்தியத்திற்கு அசைவு ஏற்பட்டுவிடக் கூடாதென்பதில் கண்டிப்பாயிருந்தவன். ஆத்தென், யுத்தத்தினாலும் பிளேக் நோயினாலும் அசதியடைந்திருக்கையில் மிட்டிலீனியர்கள் எதிர்பாராத விதமாகக் கலகஞ் செய்தார்களே என்று இவனுக்கு ஆத்திரம். எனவே மறுநாள் கூட்டத்திலும், மிட்டிலீனியர்களைக் கொலை செய்துவிட வேண்டுமென முந்தின நாள் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஊர்ஜிதம் செய்ய வேண்டுமென்று கோரி பின்வருமாறு பேசினான்:- ஒரு குடியரசு அரசாங்கத்தினால், ஓர் ஏகாதிபத்தியத்தைக் கொண்டு செலுத்த முடியாதென்ற அபிப்பிராயம் ஏற்கனவே எனக்கு உண்டாயினும், அந்த அபிப்பிராயத்தை இப்பொழுது நீங்கள் மிட்டிலீனி விஷயத்தில் மனம் மாறியிருப்பதைப் பார்த்து நன்றாக ஊர்ஜிதப் படுத்திக்கொள்ள வேண்டியவனா யிருக்கிறேன். நீங்கள் எப்படி உங்களுடைய அன்றாட விவகாரங்களில் ஒருவருக்கொருவர் அச்சமில்லாமலும் கள்ளங்கபடு இல்லாமலும் மனங்கலந்து பழகுகிறீர்களோ அப்படியே உங்கள் ஆதிக்கத் திற்குட்பட்டிருக்கும் நேச ராஜ்யத்தினரிடத்திலும் பழகலாமென்று நினைக் கிறீர்கள். அந்த நேச ராஜ்யத்தினரின் முறையீடுகளுக்குச் செவி கொடுப்பதன் மூலம் தவறான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வீர்களானால், அல்லது இரக்க சிந்தையுடையவர்களாக நடந்துகொள்வீர்களானால், உங்களுக்கே ஆபத்து உண்டாகும் என்பதை நீங்கள் சிறிதுகூடச் சிந்திப்பதில்லை. இங்ஙனம் இரக்க சிந்தை காட்டுவது உங்களுடைய பலவீனமென்றே கருதப்படும். உங்களுக்கு வந்தனங்கூடச் செலுத்தப்படமாட்டாது. உங்களுடைய ஏகாதிபத்தியம், கடுமையாக ஆதிக்கஞ் செலுத்துவதனால் தான் இயங்கி வருகிறதென்பதையும், அந்த ஏகாதிபத்தியத்திற்குட் பட்ட பிரஜைகள், எப்பொழுதும் பிணக்குற்ற நிலையிலிருக்கிற சதியா லோசனைக்காரர்களென்பதையும், உங்களிடமுள்ள விசுவாசங் காரண மாகவோ, அல்லது நீங்கள் காட்டும் சலுகைகள் காரணமாகவோ அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்பட்டிருக்கவில்லை, நீங்கள் பலத்திலே பெரியவர்கள் என்பதனாலேயே உங்களுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் மறந்துவிட்டிருக்கிறீர்கள். ஏதோ ஒரு நடவடிக்கை எடுத்துக்கொண்டோம், அதை உறுதி யாகக் கடைப்பிடித்தோ மென்பதில்லாமல், அடிக்கடி அதனை மாற்றிக் கொண்டு வருகிறோமே அதுதான் நம்மிடமிருக்கிற பயங்கரமான அமிசமாகும். அதிகார பூர்வமாக அமுலுக்குக் கொண்டுவர முடியாத நல்ல சட்டங்களைக் காட்டிலும், அடிக்கடி மாறுதலடையாத கெட்ட சட்டங்களே ஒரு ராஜ்யத்திற்கு நல்லது; அதிவிவேகம் காரணமாகக் கீழ்ப்படிந்து நடக்க மறுக்கிற பிரஜைகளைக் காட்டிலும், விவேகமில்லாமல் விசுவாசத் துடனிருக்கிற பிரஜைகளே மேலானவர்கள்; அதிமேதாவிகளைக் காட்டிலும் சாதாரண மனிதர்களே பொதுக் காரியங்களைத் திறம்பட நிருவாகஞ் செய்கிறார்கள்; இந்த உண்மைகளை நாம் தெரிந்து கொள்ளாதவர்களாகவே இருக்கிறோம். அதிமேதாவிகளா யிருக்கப்பட்டவர்கள், சட்டங்களைக் காட்டிலும் தாங்கள் புத்திசாலிகளென்று காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள்; கொண்டு வரப்படுகிற எந்த ஒரு பிரேரணையையும் நிராகரித்து விடுகிறார்கள்; வேறு முக்கியமான விஷயங்களில் தங்கள் சாமர்த்தியத்தைக் காட்டச் சந்தர்ப்பம் கிடைக்காதென்றே இப்படிச் செய்கிறார்கள்; இந்த மாதிரி நடந்து கொண்டு தங்கள் ராஜ்யத்திற்கு நாசத்தை உண்டு பண்ணுகிறார்கள். இவர்களுக்கெதிராக, சட்டங்களைக் காட்டிலும் தாங்கள் புத்திசாலிகளல்ல என்று எண்ணி அதில் திருப்தியடைகிறவர்களிருக்கிறார்களே அவர்கள், ஒரு பேச்சாளியினுடைய பேச்சில் குற்றங் குறைகள் காண்பதில்லை; எந்த ஒரு பிரச்னையையும் நடுநிலைமையுடன் கவனித்து, பொது விவகாரங் களைத் திறம்பட நடத்துகிறார்கள். இப்படிப் பட்டவர்களைத்தான் நாம் பின்பற்ற வேண்டும். ஜனங்களுடைய நிஜமான அபிப்பிராயத்திற்கு விரோதமாக ஆலோசனை சொல்வதன் மூலம் நம்முடைய புத்திசாலித் தனத்தைக் காட்டிக் கொள்வதும், அந்த புத்திசாலித்தனத்தில் போட்டி போடுவதும் கூடாது. என்னைப் பொறுத்தமட்டில், முந்தி நான் என்ன அபிப்பிராயம் கொண்டிருந்தேனோ அதே அபிப்பிராயத்தைத்தான் இப்பொழுதும் கொண்டிருக்கிறேன். மிட்டிலீனியர்களின் பிரச்னையைப் புனராலோசனை செய்யவேண்டுமென்று முன்வந்திருக்கிறவர்களைக் குறித்து ஆச்சரியப் படுகிறேன். மிட்டிலீனியர்கள் விஷயத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தைச் செயலில் நிறைவேற்றவொட்டாதபடி இவர்கள் நம்மைத் தாமதப்படுத்துகிறார்கள். இப்படித் தாமதப்படுத்துவதனால் மிட்டிலீனியர்கள் மீது நாம் கொண்டிருக்கிற கோபம் தணிந்துவிடுகிறது. கோபம் தணிந்த பிறகு நடவடிக்கை எடுத்துக் கொள்வது, குற்றமிழைத்திருக்கிற மிட்டி லீனியர்களுக்குச் சாதகஞ் செய்தது போலாகுமல்லவா? குற்றத்திற்குச் சரியான பரிகாரம், குற்றமிழைத்தவர்கள் மீது உடனே பழிவாங்குவதுதான், இதற்கு மாறாகச் சொல்லக்கூடியவர்கள் யாராவது இங்கே இருக் கிறார்களா? மிட்டிலீனியர்கள் இழைத்த குற்றங்கள் நமக்குச் சாதகமா யிருக்கின்றன வென்றோ, நாம் துரதிருஷ்டமான நிலைமையில் வைக்கப் பட்டிருப்பது நமது சகாக்களுக்குச் சாதகமா யிருக்கிறதென்றோ இவர்கள் சாதிக்கிறார்களா? அப்படி யாரேனும் இங்கு இருப்பார்களானால் அவர்கள், ஏற்கனவே முடிவு செய்யப்பெற்ற ஒரு பிரச்னையை முடிவு செய்யப் பெறாத பிரச்னையென்று தங்களுடைய நாவன்மையினால் சாதிக்க முடியுமென்ற நம்பிக்கை கொண்டுள்ளவர்களாகவாவது இருக்க வேண்டும்; அல்லது போலி வாதஞ் செய்து நம்மை மருளச் செய்வதற் கென்று பணங்கொடுத்து நியமிக்கப்பட்ட ஆட்களாகவாவது இருக்க வேண்டும். இந்த மாதிரியான வாதப் போட்டிகளில் அரசாங்கமானது மற்றவர் களைச் சன்மானிக்கிறது; ஆனால் இந்தப் போட்டிகளினால் விளையக் கூடிய ஆபத்துக்களை அதுவே ஏற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது. இதற்கு உங்களைத் தான் குற்றஞ் சொல்லவேண்டும்; இந்த வாதப் போட்டிகளை நீங்கள்தான் ஏற்படுத்தினீர்கள். ஏதேனும் ஒரு வேடிக்கைக் காட்சியைப் பார்க்கச் செல்வதுபோல் ஒரு பேச்சுப் போட்டியைப் பார்க்கச் செய்கிறீர்கள். அங்குப் பேசப்படுவதெல்லாம் உண்மையென்று கொண்டு விடுகிறீர்கள்; ஒரு திட்டத்தைப்பற்றி யார் உற்சாகமாகப் பேசுகிறார்களோ அவர்களுடைய பேச்சைக் கேட்டு அந்தத் திட்டம் அனுபவ சாத்திய மானதென்று நம்பிவிடுகிறீர்கள்; சென்ற கால நிகழ்ச்சிகளைப்பற்றிய உண்மையை அறியும் விஷயத்தில் உங்கள் செவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களே தவிர உங்கள் கண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறீர்கள். பொதுவாக நீங்கள், புதுப்புது கற்பனைகள் நிறைந்த வாதங்களுக்குச் சுலபமாகப் பலியாகக் கூடியவர்கள்; ஆனால் ஏற்கனவே செய்யப்பெற்ற முடிவுகளைப் பின்பற்ற மறுக்கிறவர்கள்; பொய்த் தோற்றங்களுக்கு அடிமைகள்; ஆனால் எது சகஜமோ அதை இகழ் கிறவர்கள். பேசவேண்டுமென்பது தான் உங்கள் ஒவ்வொரு வருடைய முதல் விருப்பமாயிருக்கிறது; மற்றவர்களைப் பேச்சில் வென்றுவிட வேண்டுமென்பது உங்களுடைய அடுத்த விருப்பமாயிருக்கிறது. மற்றும் நீங்கள், ஒருவருடைய வாதத்தைச் சீக்கிரமாகக் கிரகித்துக் கொண்டு விடுகிறவர்கள்; ஆனால் அதன் பலாபலன்களை நிதானமாக அறி கிறவர்கள்; நாம் எந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ அந்த நிலைக்கு வேறாயுள்ள ஒரு நிலை வேண்டுமென்று கேட்கிறவர்கள்; ஆனால் அந்த நிலையைச் சரிவர உணராதவர்கள்; செவிக்கின்பம் தருவது எதுவோ அதற்கு அடிமைகளாகி விடுகிறவர்கள். சுருக்கமாக நீங்கள், சாமர்த்தியமாகப் பேசுகின்ற ஒருவனுடைய பேச்சைக் கேட்க கூடியிருக்கிற கூட்டத்தினரைப் போன்றிருக்கிறீர்களே தவிர ஒரு ராஜ்யத்தை நடத்தும் சபையினராக இருக்கவில்லை. பேச்சிலே மயங்குகின்ற ஒரு கூட்டத்தினராக நீங்கள் இருக்கக் கூடா தென்பதற்காக, மிட்டிலீனியைப் போல் வேறெந்த ராஜ்யமும் உங்களுக்குத் தீங்கு செய்யவில்லையென்பதை இப்பொழுது எடுத்துக் காட்டப் போகிறேன். நமது ஏகாதிபத்தியத்திற்குட்பட்டிருக்க முடியவில்லை யென் பதற்காகவோ, நமது சத்துருக்களினால் நிர்ப்பந்திக்கப்பட்ட தன் காரண மாகவோ அவர்கள் - மிட்டிலீனியர்கள் - கலகஞ் செய்திருந்தால் அதை நான் ஒருவாறு ஒப்புக் கொண்டிருப்பேன். ஆனால் அவர்கள் ஒரு தீவு முழுவதையும் தங்களுடையதாக்கிக் கொண்டு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருக்கிறார்கள்; கடல் மூலமாக வரும் நமது சத்துருக்களுக்குத் தான் அவர்கள் பயப்படவேண்டும்; தற்காப்புக்கான போதிய கப்பற்படை அவர்களிடம் இருக்கின்றது; மற்றும் அவர்கள், சுதந்திரத்துடன் இருந்து வந்திருக்கிறார்கள்; உங்களால் கௌரவிக்கப் பட்டும் வந்திருக்கிறார்கள்; இப்படிப்பட்டவர்கள் இந்த மாதிரி செய்தால் என்னென்று சொல்வது? இதனை வெறுங் கலகம் என்று சொல்ல முடியுமா? கஷ்டப்படுத்தப் பட்டார்கள், அதனால் கலகஞ் செய்தார்கள் என்று தான் கலகத்திற்கு அர்த்தங் கொள்ள முடியும். ஆனால் அவர் களுடைய இந்தச் செயலை - கலகத்தை - வேண்டுமென்றே துவக்கப்பட்ட ஆக்கிரமிப்புச் செயல் என்றுதான் சொல்லவேண்டும்; நமது பரம விரோதிகளுடன் சேர்ந்து கொண்டு நம்மை நாசமாக்கச் செய்யப் படுகிற முயற்சி என்றுதான் கூறவேண்டும்; அதிகார பலத்தை விருத்தி செய்துகொள்வதற்காகத் தொடங்கப்பெறும் ஒரு யுத்தத்தைக் காட்டிலும் கடுமையான குற்றமென்றுதான் அழைக்கவேண்டும். ஏற்கனவே நமக்கு விரோதமாகக் கலகஞ் செய்தவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டது தங்களுக்கு ஒரு பாடமென்பதை மிட்டிலீனியர்கள் தெரிந்துகொள்ளவில்லை; தங்களுடைய க்ஷேமத்திற்காக, இந்த ஆபத்தி லிருந்து விலகியிருக்கவேண்டுமென்பதையும் அவர்கள் அறிந்துகொள்ள வில்லை. தங்களுடைய எதிர்காலத்தில் குருட்டுத்தனமான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, தங்களுடைய சக்திக்கு மீறின நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கையின் பேரில், நியாயத்திற்குப் பதில் வெறும் பலத்தை ஆதாரமாகக் கொண்டு, யுத்தமும் தொடுத்திருக்கிறார்கள். நம்முடைய கொடுமைகளைத் தாங்கமாட்டாமல் அவர்கள் யுத்தந் தொடுக்கவில்லை; யுத்தந் தொடுத்தால் தங்களுக்கு எவ்வித தண்டனையும் கிடைக்காதென்று கருதியே யுத்தந் தொடுத் திருக்கிறார்கள். திடீரென்று எதிர்பாரத விதமாக ஒரு ஜாதியினருக்கு அதிருஷ்டம் வந்துவிட்டால் அந்த அதிருஷ்டமானது அந்த ஜாதியினரை இறு மாப்புடையவர்களாகச் செய்துவிடுகிறது. நியாயத்தை மீறி வெற்றி காண்பதைக்காட்டிலும் நியாயத்திற்குட்பட்டு நடந்து வெற்றி காண முயலுவதே மானிட சமூகத்திற்குப் பெரும்பாலும் நல்லது. அப்படி நியாயத்திற்குட்பட்டு வெற்றி காண முயலுகிறவர்கள், வறுமையையோ துன்பத்தையோ சுலபமாகக் கடந்துவிடுகிறார்கள். மிட்டிலீனியர்கள் விஷயத்தில் நாம் செய்த தவறு என்ன வென்றால், அவர்களை, மற்றவர்களைப்போல் நடத்தாமல் வேறானவர் களாகக் கருதி நடத்தி வந்ததுதான். மற்றவர்களைப் போல் அவர்களையும் நடத்தியிருந்தால், அவர்கள் தங்களை மறந்திருக்கமாட்டார்கள். எப்பொழுதுமே மனிதர்கள், தயை காட்டுகிறவர்களிடத்தில் இறுமாப்புடன் நடந்துகொள்கிறார்கள்; கண்டிப்புக் காட்டுகிறவர்களிடத்தில் பயந்து நடந்து கொள்கிறார்கள். எனவே மிட்டிலீனியர்களை, அவர்கள் செய்த குற்றத் திற்குத் தகுந்தபடி தண்டியுங்கள். அவர்களில் சாதாரண ஜனங்களுக்கு மன்னிப்பளித்துவிட்டு பணக்காரர்களை மட்டும் தண்டிக்காதீர்கள். ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் அவர்களெல்லோருமே சேர்ந்து நம்மைத் தாக்கியிருக்கிறார்கள். சாதாரண ஜனங்கள், பணக்காரர்களோடு சேர்ந்துகொண்டால்தான் தங்களுக்கு நல்லது என்று கருதியே அந்தப் பணக்காரர்களுடன் சேர்ந்து கொண்டு கலகஞ் செய்திருக்கிறார்கள். இது நிச்சயம். சத்துருக்களினால் நிர்ப்பந்திக்கப்பட்டதன் காரணமாகக் கலகஞ் செய்தவர்களுக்கும், தாங்களே சுயேச்சையாகக் கலகஞ் செய்தவர் களுக்கும் ஒரே மாதிரியான தண்டனை விதிப்பது தவறு. அப்படி விதிப்பீர் களாயின், ஏதோ ஒரு சிறு காரணத்தை வைத்துக் கொண்டு யார்தான் உங்களுக்கு விரோதமாகக் கலகஞ் செய்யமாட்டார்கள்? நன்றாக யோசித்துப் பாருங்கள். கலகஞ் செய்து வெற்றி பெற்றால் சுதந்திரம், தோல்வியடைந்தால் பிரமாதமான தண்டனை யெதுவும் கிடைத்துவிடாது என்று ஏற்பட்டுவிடும் பட்சத்தில் யாருக்குமே கலகஞ் செய்யத் தைரியம் பிறந்துவிடும். இப்படி ஒவ்வொரு ராஜ்யமாகக் கலகத்திற்குக் கிளம்பி விடும் பட்சத்தில் நமது பணத்தையும் படைவீரர்களையும் இழந்து கொண்டிருக்க வேண்டியதுதான். கலகத்தை ஒடுக்கி வெற்றி பெறு வோமானால், அழிந்து போன ஒரு ராஜயத்தைக் கைப்பற்றிக் கொண்டவர் களாவோம்; அந்த ராஜ்யத்திலிருந்து நமக்கு எவ்வித வருமானமும் வராது. கலகத்தை ஒடுக்காமல் தோல்வியடைந்து விடுவோமானால், ஏற்கனவே யுள்ள சத்துருக்களோடு இன்னொரு சத்துருவைச் சம்பாதித்துக் கொண்டவர்களாவோம்; இப்பொழுது நம்மை எதிரிட்டுக் கொண்டுள்ள சத்துருக்களுடன், அதாவது லாஸிடீமோனியர்களுடன் சண்டை போடு வதில் செலவழிக்கிற காலத்தை, நம்முடைய சகா ராஜ்யத்தினருடன் சண்டை போடுவதில் செலவழிப்போம். ஆதலின் நீங்கள், சாதுரியமான பேச்சில் மயங்கியோ, பணத்திற்கு வசப்பட்டோ, மனிதத் தன்மையின் துர்ப்பல அமிசமாகிய இரக்கத்தினால் உந்தப்பட்டோ, மிட்டிலீனியர்களுக்கு நம்பிக்கை யளிக்கக்கூடாது; அதாவது, தங்கள் கலக முயற்சி கைகூடுமென்று அவர்கள் நம்பிக்கை கொள்ளும்படி செய்யக்கூடாது. அவர்களுடைய குற்றம், தெரியாமற் செய்த குற்றமல்ல; வேண்டுமென்றே, வன்மங் கொண்டு செய்யப்பட்ட குற்றமாகும். தெரியாமல் குற்றஞ் செய்தவர்களுக்குத்தான் கருணை காட்டவேண்டும். எனவே முந்தி நீங்கள் செய்த தீர்மானத்தை மாற்றிவிடக் கூடாதென்று வலியுறுத்திக் கூறுகிறேன். மூன்று குறைகளிருந்தால் ஓர் ஏகாதிபத்தியம் கை நழுவிப் போய் விடும். அவையென்ன வென்றால், இரக்கங் கொள்ளுதல், உணர்ச்சி வசப் படுதல், சலுகை காட்டுதல் ஆகியவேயாம். இந்த மூன்று குறைகளுக்கும் நீங்கள் இரையாகிவிடாதீர்கள். நம்மிடம் யார் இரக்கங் காட்டுகிறார்களோ அவர்களுக்குத்தான் நாம் இரக்கங் காட்டவேண்டும்; நம்மிடம் இரக்கங் காட்டாதவர்களுக்கு, நம்மிடம் பகைமை பூண்டிருக்கிறவர்களுக்கு இரக்கமே காட்டக்கூடாது. நம்மை உணர்ச்சிவசப்படுத்தும் நாவலர்கள், தங்கள் நாவன்மையை, முக்கியமில்லாத வேறெந்த இடத்திலேனும் காட்டிக்கொள்ளட்டும்; அவர்களுடைய அழகான அடுக்குத் தொடர்களைக் கேட்டு எல்லோரும் அவர்களைப் பாராட்டுவார்கள். இந்த இடத்தில், இந்தச் சபையில் வேண்டாம். அவர்களுடைய பேச்சைக் கேட்டு உண்டாகிற க்ஷண நேர இன்பத்தினால், நமது ராஜ்யத்திற்குப் பெரு நஷ்டம் உண்டாகும். எதிர்காலத்தில் நமக்கு நண்பர்களா யிருக்கக்கூடுமென்று யாரைக் கருதுகிறோமோ அவர்களுக்குத்தான் சலுகை காட்டவேண்டும்; இப்பொழுதிருப்பது போலவே இனியும் இருக்கக்கூடியவர்களுககு, அதாவது முந்தி இருந்ததுபோலவே இப்பொழுதும், சத்துருக்களாயிருக் கிறவர்களுக்குச் சலுகை காட்டவே கூடாது. தொகுத்துச் சொல்ல வேண்டுமானால், என்னுடைய ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்களாயின், மிட்டிலீனியர்கள் விஷயத்தில் என்ன செய்தால் நியாயமா யிருக்குமோ, யுக்தமாயிருக்கு மோ அதைச் செய்தவர்களாவீர்கள். இதற்கு மாறாக நடப்பீர்களாயின், மிட்டிலீனியர்களை உங்களுக்குக் கடமைப் படுத்தினவர்களாகவு மாட்டீர்கள்; உங்கள் மீதே நீங்கள் தண்டனை விதித்துக் கொண்டவர் களுமாவீர்கள். அவர்கள் கலகஞ் செய்தது சரியென்றால், நீங்கள் ஆள்வது தவறு. சரியோ தவறோ ஆள்வதென்று தீர்மானித்துவிட்டீர்களானால், உங்களுடைய கொள்கையைக் காரியத்தில் கொண்டு வர வேண்டும். உங்களுடைய நலனை முன்னிட்டு மிட்டிலீனியர்களைத் தண்டிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஏகாதிபத்தியத்தைக் கைசோர விட்டு விட்டு, உங்களுக்கு ஆபத்தில்லாமல் நாணயதர்களாக நடந்துகொள்ள வேண்டும். ஆதலின், மனத்தைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். மிட்டிலீனியர்கள் உங்களை எப்படித் தண்டித்திருப்பார்களோ அப்படி அவர்களைத் தண்டியுங்கள். அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் என்ன செய்திருப்பார்களென்று சிந்தித்துப் பாருங்கள். சத்துருக்களை அழிக்காமல் விட்டுவிட்டால் அவர்களால் பின்னாடி ஆபத்து உண்டாகும். அவர்களைத் தண்டிக்காமல் விட்டுவிடுவதன் மூலம் உங்களுக்கு நீங்களே துரோகிகளாகாதீர்கள். நமக்கு நல்ல நெருக்கடி ஏற்பட்டிருந்தபோது அவர்கள் கலகஞ் செய்தது பற்றி நமது உணர்ச்சி எவ்வாறிருந்தது, அவர் களை அழித்துவிட வேண்டுமென்பதை நாம் எவ்வளவு முக்கியமாகக் கருதினோம் என்பவைகளைப் பற்றியெல்லாம் சிறிது யோசித்துப் பாருங்கள். அவர்கள் துன்பப்படுவதைக் கண்டு மனமிளகி விடாதீர்கள். உங்களை ஒரு சமயம் எவ்வளவு பெரிய ஆபத்து சூழ்ந்து கொண்டிருந்த தென்பதை மறந்து விடாதீர்கள். அவர்கள் - மிட்டிலீனியர்கள் – தண்டிக்கப் படுதற்குரியர். அதனால் அவர்களைத் தண்டியுங்கள். அவர்களைத் தண்டித்து அதன் மூலம், கலகஞ் செய்தால். மரண தண்டனை கிடைக்கு மென்று உங்களுடைய மற்ற நேச ராஜ்யங்களுக்குப் பாடங் கற்பியுங்கள். இந்தப் பாடத்தை ஒரு முறை உங்கள் நேச ராஜ்யத்தினருக்குக் கற்பித்து விடுவீர்களானால், உங்கள் வைரிகளாகிய லாஸிடீமோனியர்களுடன் போர் புரிவதை நிறுத்திக்கொண்டு, உங்கள் நேச ராஜ்யத்தினருடனேயே போர்புரிந்து கொண்டிருக்க வேண்டிய நிலைமை உங்களுக்கு ஏற்படாது. கிளியோன் இங்ஙனம் பேசி முடித்தான். இவனுக்குப் பிறகு, டியோடோட்ட1 என்பவன் எழுந்து, மிட்டிலீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாதென்றும், அவர்களிடத்தில் கருணை காட்ட வேண்டு மென்றும் உலக அனுபவத்தையொட்டி எடுத்துக்காட்டிப் பின்வருமாறு பேசினான் :- மிட்டிலீனியர்கள் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்னையை மீண்டும் கிளத்தியவர்களை நான் குறை கூறமாட்டேன். அப்படியே, இந்த மாதிரியான பிரச்னைகளைப் பற்றித் திரும்பத் திரும்ப வாதஞ் செய்யக் கூடாதென்று கண்டனங்கள் எழுகின்றனவே அந்தக் கண்டனங்களையும் நான் ஆதரிக்கவில்லை. ஒரு பிரச்னையைப்பற்றி நன்கு ஆலோசிப்பதற்கு, அவசரப்படுதலும் கோபங் கொள்ளுதலும் கூடாது. அவசரப்படுவதனால் தவறு நேரிட்டுவிடுகிறது; கோபங்கொள்வதனால் முரட்டுத் தனமும் குறுகிய மனப்பான்மையும் உண்டாகிவிடுகின்றன. ஒரு காரியத்தைத் துணிவதற்குமுன், பேசித்தான் ஆக வேண்டியிருக்கிறது; அதாவது, காரியத்தின் பிரதிநிதியாகப் பேச்சு இருக்கிறது. அப்படி இருக்கக்கூடா தென்று வாதஞ் செய்கிறவன், ஒன்று அறிவிலியா யிருக்கவேண்டும்; அல்லது சுயநலவாதியாயிருக்க வேண்டும். பேச்சைத் தவிர வேறு சாதனத்தின் மூலம் வருங்காலத்தைப் பற்றி உணர்த்த முடியுமென்று நம்புவானாகில் அவன் அறிவிலிதான்; மானக்கேடான ஒரு திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள விரும்பி, ஆனால் அதைப்பற்றித் திறம்பட எடுத்துச் சொல்லும் ஆற்றல் தனக்குண்டா வென்பதில் சந்தேகங் கொண்டவனாய், எதிர்க்கட்சியினரையும், தன் பேச்சைக் கேட்கக் கூடியிருக்கும் பிறரையும் குறிப்பிட்டுக் குறிப்பிட்டு அவதூறாகப் பேசி அவர்களைப் பயமுறுத்திவிட நினைப்பானாகில் அவன் சுயநலவாதிதான். மற்றும் ஒருவன் பேசினால், அவன் பணம் பெறுவதற்காகத்தான் இப்படிச் சாமர்த்தியமாகப் பேசுகிறானென்று அவனைக் குறை கூறு வதிருக்கிறதே அது சகிக்கக் கூடாததாயிருக்கிறது. ஒருவன் திறம்படப் பேசவில்லை யென்பதற்குக் காரணம் அவனுடைய அறியாமையே யென்று சொல்லப்பட்டால், அவன், அறிவுடையவன் என்று பெயர் பெறாவிட்டாலும், யோக்கியன் என்ற பெயருடன், பேசுவதினின்று விலகிக் கொள்வான். ஆனால் அவன் அயோக்கியன் என்று பெயரெடுத்த பிறகு பேசுவானாகில், அப்படிப் பேசி வெற்றி பெறுவானாகில் அவனை எல்லோரும் சந்தேகிப்பர்; தோல்வியடைவானாகில் அவனை எல்லோரும் மூடனென்றும் கள்ளனென்றும் கருதுவர். இந்த மாதிரியான முறைகளை நாம் கையாள்வதனால் நமது ராஜ்யத்திற்கு லாபமில்லை. அதற்கு - ராஜ்யத்திற்கு - ஆலோசனை சொல்லக் கூடியவர்களும் அச்சத்தினால் பின்தங்கி விடுகிறார்கள்; அவர்களுடைய ஆலோசனையை அஃது இழந்துவிடுகிறது. சபையிலே பேசுகிறவர்கள் இந்த மாதிரியெல்லாம் பேசுவதைக் காட்டிலும் பேசாமலிருத்தலே நல்லது; ராஜ்யத்திற்கு க்ஷேமம்; அவர்களுடைய பேச்சைக் கேட்டு நாமும் ராஜ்ய விஷயத்தில் அதிக தவறுகளைச் செய்யமாட்டோம். ஒரு நல்ல பிரஜையா யிருக்கப்பட்டவன், தன் எதிரிகளைப் பயமுறுத்தி அவர்கள் மீது வெற்றி காணுதல் கூடாது; நியாயமான வாதஞ் செய்தே அவர்கள் மீது வெற்றி காணுதல் வேண்டும். புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளும் ஒரு ராஜ்யமானது, தனக்கு நல்லவிதமான ஆலோசனைகள் கூறுகிறவர்களை மிகைப்படுத்திப் பாராட்டாமல், அவர் களுக்கு என்ன மதிப்பு உரியதோ அந்த மதிப்பைக் கொடுக்கும். அப்படியே துரதிருஷ்டம் வாய்ந்த ஆலோசகர்களை தண்டிக்காமல் விட்டுவிடும்; அதுமட்டுமல்லாமல் அவர்களை அவமானப்படுத்தவும் செய்யாது. இப்படிச் செய்யுமானால், திறம்படப் பேசுகிறவர்கள், பொது ஜனங் களிடத்தில் செல்வாக்குப் பெறவேண்டுமென்பதற்காகத் தங்கள் கொள்கை களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்; அப்படி விட்டுக் கொடாததன் மூலம் இன்னும அதிகமான கௌரவங்களைப் பெற விழைவார்கள். திறம் படப் பேச வகையில்லாதவர்களோ, ஜனங்களை வசீகரிப்பதற்கு இதுவரை என்ன முறைகளைக் கையாண்டு வந்தார்களோ அதே முறைகளை இனியும் கையாளத் துணியார்கள். நாமோ இதற்கு மாறுபட்ட முறையை இப்பொழுது பின்பற்று கிறோம். ஒருவன், என்னதான் நல்லவிதமான ஆலோசனை கூறிய போதிலும், அந்த ஆலோசனையைக் கெட்ட எண்ணத்தினால் கூறுகிறா னென்று சந்தேகிக்கப்படுவானாகில் - அதனால் அவன் லாபமடை கிறானாவென்பது நமக்கு நிச்சயமாகத் தெரியாது. - அவன்மீது நமக்கு ஒருவித வெறுப்பு உண்டாகிவிடுகிறது. அந்த வெறுப்புக் காரணமாக, அவனுடைய நல்லவிதமான ஆலோசனையினால் ராஜ்யத்திற்கு ஏற்படக் கூடிய நன்மையை அதற்கு இல்லாமற் செய்து விட்டவர்களாகிறோம். இதனால் நல்ல ஆலோசனைகள் கூட, கெட்ட ஆலோசனைகளைப் போல் சந்தேகிக்கப்படுகின்றன. கெட்ட ஆலோசனை கூறுகிறவர்கள் ஏமாற்றும் வித்தையைக் கையாள வேண்டியிருக்கிறது; நல்ல ஆலோசனை சொல்கிறவர்கள் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. விளைவு என்ன? ராஜ்யத்திற்குப் பகிரங்கமாகச் சேவை செய்ய யாரும் முன்வருவதில்லை. பகிரங்கமாகச் சேவை செய்ய முன்வருகிறவர்கள், ரகசியத்தில் ஏதேனும் பிரதி பலனை எதிர்பார்ப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறார்கள். இப்படியெல்லாம் இருந்தபோதிலும், பாதிக்கப்படக் கூடிய நலன் களின் மகத்துவத்தை உத்தேசித்தும், உள்ள நிலைமையை அனுசரித்தும், சபையில், பேசுகின்றவர்களாகிய நாங்கள், கேட்கிறவர்களாகிய உங்களைக் காட்டிலும் சிறிது தீர்க்க திருஷ்டியுடன் எந்த ஒரு பிரச்னையையும் நோக்கக் கடமைப்பட்டவர்களா யிருக்கிறோம். ஏனென்றால் பிரச்னையின் விளைவுகளுக்கு நாங்கள் தான் பொறுப்பாளிகள்; நீங்களல்ல. ஆலோசனையைச் சொல்கிறவர்களும் கேட்கிறவர்களும் ஒரே மாதிரியான பலன் அனுபவிப்பதா யிருந்தால், நீங்கள் எந்த ஒரு பிரச்னையையும் சாவதானமாகப் பரிசீலனை செய்து பார்ப்பீர்கள். ஆனால் இப்பொழுதிருக்கிற நிலைமையைப் பார்க்கிறபொழுது, ஒரு தனி மனிதனுடைய ஆலோசனையைக் கேட்டு அந்த நிமிஷத்தில் என்ன தோன்றுகிறதோ அதன் பிரகாரம் நடந்து ஆபத்தை வருவித்துக் கொள்கிறவர்களா யிருக்கிறீர்கள். இவை யெல்லாம் எப்படி இருந்தபோதிலும், மிட்டிலீனி விஷயத்தைப் பற்றி எதிர்த்துப் பேசவோ, குறைகூறிப் பேசவோ இங்கு நான் வரவில்லை. நாம் புத்திசாலிகளாயிருந்து இப்பொழுது கவனிக்க வேண்டியது அவர்களுடைய - மிட்டிலீனியர்களுடைய - குற்றமல்ல; நம்முடைய நலன். அவர்கள் பல படக் குற்றமிழைத்திருக்கிறார் களென்பதை நான் ஒப்புக் கொள்கிறேனாயினும், அதற்காக அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று நான் ஆலோசனை கூற மாட்டேன். அவசியமிருந்தால் அப்படிச் செய்ய வேண்டியதுதான். அவர்கள் நமது இரக்கத்திற்குரியவர்களா யிருப்பினும் அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது ராஜ்யத்தின் நன்மைக்குகந்ததா யிருக்குமென்று நமக்குத் தெளிவாகப்படும் பட்சத்தில் அப்படிச் செய்ய வேண்டியதுதான். ஆனால் நாம் வருங்காலத்தைப் பற்றி ஆலோசிக்கிறோமே தவிர நிகழ் காலத்தைப் பற்றி ஆலோசிக்கவில்லையென்று எண்ணுகின்றேன். கலகஞ் செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதானது, மற்றவர் களைக் கலகஞ் செய்ய வொட்டாதபடி தடுத்துவிடுமென்று, கிளியோன், திட்டமான அபிப்பிராயங் கொண்டவனா யிருக்கிறான். நானோ, நமது ராஜ்யத்தின் எதிர்கால நலனில் அவனைப் போலவே சிரத்தை கொண்டுள்ள நானோ, வேறுவிதமான அபிப்பிராயங் கொண்டவனாயிருக் கிறேன். அவனுடைய பகட்டான வாதத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் என்னுடைய பிரயோஜனகரமான யோசனையை நிராகரித்துவிடவேண்டா மென்று கேட்டுக் கொள்கிறேன். மிட்டிலீனி விஷயமாக இப்பொழுது நீங்கள் கொண்டுள்ள ஆத்திரத்தில் அவன் சொல்வதுதான் உங்களுக்கு நியாயமாகப் புலப்படும். ஆனால் இப்பொழுது நாம் ஒரு நியாய மன்றத் தினராக இருக்கவில்லை; அரசியல் சபையினராக இருக்கிறோம். இப்பொழுது கவனிக்கவேண்டிய பிரச்னை, எது செய்தால் நியாயமா யிருக்குமென்பதல்ல; மிட்டிலீனியர்களை எப்படி ஆத்தென்ஸுக்கு உபயோகள்ளவர்களா யிருக்கும்படி செய்து கொள்ளலாமென்பது தான். அநேக சமுதாயங்களில், கலகஞ் செய்வதாகிற குற்றமென்ன, அதைக்காட்டிலும் மிகவும் லேசான குற்றங்களுக்குக் கூட மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்று சட்டமியற்றப்பட்டு அமுலில் இருந்து வருகிறதென்பது வாதவம். ஆனாலும், தாங்கள் எண்ணிய காரியம் கைகூடுமென்ற நம்பிக்கையின்பேரில் மனிதர்கள் கலக முயற்சிகளில் இறங்கத்தான் செய்கிறார்கள். தங்கள் நோக்கம் நிச்சயமாக நிறைவேறக் கூடுமென்ற திடநம்பிக்கை இல்லாமல், இதுவரை யாருமே தங்களை ஆபத்திற்குட்படுத்திக் கொண்டதில்லை. மற்றும் இதுவரை எந்த ராஜ்யமாவது, தன்னுடைய பலத்திலும் தன்னுடைய சகா ராஜ்யங்களின் பலத்திலும் பரிபூரணமான நம்பிக்கை வைக்காமல் கலகஞ் செய்திருக் கிறதா? ராஜ்யங்களாகட்டும், தனி மனிதர்களாகட்டும், தவறு செய்தல் இயல்பு; அவைகளையோ, அவர்களையோ தவறு செய்யக்கூடாதென்று தடுக்கக்கூடிய சட்டம் எதுவுமில்லை. இல்லாவிட்டால் ஏன் மனிதர்கள், கெட்டவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றும் பொருட்டு அநேக தண்டனை முறைகளை ஏற்படுத்தி, அவைகளினால் பிரயோஜனமில்லை யென்று கண்டு, புதிய சட்டங்களென்னென்ன இயற்றலாமென்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்? முற்காலத்தில் கடுமையான குற்றங்களுக்குக் கொடுமையற்ற தண்டனைகளே விதிக்கப்பட்டிருக்கலாம். இந்தத் தண்டனைகளைப் பொருட்படுத்தாமல் ஜனங்கள் மேலும் மேலும் குற்றங் களிழைக்கவே, நாளாவட்டத்தில் மரண தண்டனை கண்டுபிடிக்கப் பட்டது. ஆனால் இதுவும் இப்பொழுது பொருட்படுத்தப் படுவதில்லை. எனவே, மரணதண்டனையைக் காட்டிலும் பயங்கரமான ஒரு தண்டனைச் சாதனம் கண்டுபிடிக்கப்பட வேண்டும்; அல்லது இந்த மரண தண்டனை பயனற்ற தென்று ஒப்புக் கொள்ளப்படவேண்டும். வறுமையினால் துணிச்சலும், செல்வச் செழுமையினால் அகம் பாவமும் மனிதர்களிடையே நிலவியிருக்கிற வரையில், அவர்களுடைய வாழ்க்கையின் எந்த ஓர் அமிசமேனும ஒரு பேராசைக்கு அடிமைப் பட்டிருக் கிற வரையில், அவர்களை ஆபத்திலே கொண்டு தள்ளக்கூடிய உணர்ச்சிக்குக் குறைவே இராது. பெரு நம்பிக்கையும் பேராசையுந்தான் பெரு நாசத்தை உண்டு பண்ணுகின்றன. இவற்றுள் நம்பிக்கையானது முன்னே செல்கிறது; ஆசையானது பின்தொடர்கிறது. முன்னது, இன்னது செய்யவேண்டுமென்று எண்ணுகிறது; பின்னது, அதிருஷ்டம் துணை செய்யுமென்று ஆலோசனை கூறுகிறது. இவ்விரண்டும் - நம்பிக்கையும் ஆசையும் - கண்ணுக்குத் தெரியாதனவா யிருந்தபோதிலும், கண்ணுக்குத் தெரிகின்ற ஆபத்துக்களைக் காட்டிலும் பலமானவையா யிருக்கின்றன. இவ்விரண்டும் அடங்கிய பொய்த் தோற்றத்திற்கு அதிருஷ்டம் பலமாக உதவுகிறது. இந்த அதிருஷ்டம், சில சமயங்களில் எதிர்பாராத விதமாகக் கைகொடுத்து உதவி, குறைவான சாதனங்களுடன் பெரிய முயற்சிகளில் இறங்கும்படி மனிதர்களைத் தூண்டுகிறது. இப்படித் தூண்டுவதென்பது, ராஜ்யங்களைப் பொறுத்தமட்டில் முற்றிலும் உண்மை. ஏனென்றால், மிகப் பெரியதான சுதந்திரம் அல்லது ஏகாதிபத்தியம் என்று இரண்டிலொன்றை மையமாகக் கொண்டே இவை, தங்கள் முயற்சிகளைத் தொடங்குகின்றன. இவற்றுளொன்றிற்காக மனிதர்கள் ஒன்று சேர்கிறபோது, ஒவ்வொருவரும் அறியாத தனத்தினால் தங்கள் சக்தியை மிகைப்படுத்திக் காண்கின்றனர். சுருக்கமாக, மனிதர்கள், எந்த ஒன்றைச் செய்ய வேண்டுமென்று ஒருமுறை மனம் வைத்து விடுகிறார்களோ அந்த ஒன்றைச் செய்யக்கூடாதென்று அவர்களை, மனித சுபாவத்தை, சட்டத்தைக் கொண்டோ வேறு வித தண்டனைகள் விதித்தோ தடுக்க முடியாது; தடுக்க முடியுமென்று நம்புவது பேதமையாகும். ஆதலின், மரண தண்டனை விதிப்பதனால் நற்பயன் விளையு மென்று நம்பி, அதனால் தவறான ஒரு நடவடிக்கை எடுத்துக் கொள்வதில் ஈடுபடாதிருப்போமாக! அதே பிரகாரம், கலகஞ் செய்தவர்கள், செய் வினைக்கிரங்கி அதற்கு விரைவில் பரிகாரந் தேடிக் கொள்ளலாமென்று நம்பிக்கை கொண்டிருப்பார்களானால் அந்த நம்பிக்கையிலிருந்து அவர் களை விலக்காதிருப்போமாக! ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்! ஏற்கனவே கலகஞ் செய்துவிட்ட ஒரு ராஜ்யம், தன் கலக முயற்சி வெற்றி பெறாதென்று கண்டுகொண்டு, யாருக்கு விரோதமாகக் கலகஞ் செய்ததோ அவர்களுடன், கலகஞ் செய்ததற்காக உடனே நஷ்ட ஈடும், பிறகு கப்பமும் செலுத்தக்கூடிய சக்தி தனக்கு இருக்கின்ற நிலையில் சமரஸத்திற்கு வரும். அப்படிக்கின்றி வேறு விதமாக அந்த ராஜ்யத்தை நடத்தத் துணிவீர் களானால், அஃது - அதுமட்டுமென்ன, அதன் நிலையிலுள்ள வேறெந்த ராஜ்யமுந்தான் - இப்பொழுதைக் காட்டிலும் இன்னும் விசேஷமாகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளும்; முற்றுகையிடப்பட்டால், கடைசி வரையில் உறுதியாக நிற்கவே முனையும். அந்த நிலையில் அது, தாமதித்துச் சரணடைந்தாலென்ன? சிறிது முன்னாடியே சரணடைந் தாலென்ன? இரண்டும் ஒன்றுதான். ஒரு ராஜ்யத்தை முற்றுகையிடுவ தென்று சொன்னால், நமக்கு எவ்வளவு பணச் செலவு? எவ்வளவு நஷ்டம்? நஷ்டத்தைத் தவிர வேறென்ன கிடைக்கும்? சரி; முற்றுகையில் வெற்றி பெற்று ராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொண்டு விட்டோமென்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த ராஜ்யம் அப்பொழுது எந்த திதியில் இருக்கும்? அழிந்துபோன ஒரு நிலையி லிருக்கும். அதிலிருந்து எவ்வித வருமானத்தையும் பிறகு எதிர்பார்க்க முடியாது. இந்த வருமானந்தான், சத்துருக்களை – லாஸிடீமோனியர் களை - எதிர்த்து நிற்பதற்கு நமக்கு முக்கிய பலமாயிருக்கிறது. குற்றஞ் செய்தவர்களைத் தண்டிப்பதற்காக இருக்கின்ற கண்டிப்பான நீதிபதிகள் போலிருந்து நாம் இந்த மிட்டிலீனியர்கள் பிரச்னையை நோக்கக்கூடாது. அது நமக்குத்தான் கெடுதல். ஏதோ ஒரு நிதானமான தண்டனையை அவர்களுக்கு விதித்து, அதன் மூலம், நமது ஆதிக்கத்திற்குட்பட்டிருக்கிற, நமது வருமானத்திற்குக் காரணமாகவுள்ள ராஜ்யங்களிடமிருந்து எதிர் காலத்தில் எப்படி சாதகமடையலாம் என்ற கண்கொண்டே இந்தப் பிரச்னையை நோக்கவேண்டும். நாம், பாதுகாப்புடன், க்ஷேமமுடன் இருக்கவேண்டுமானால், பயங்கர முறைகளைச் சட்ட ரீதியாக அனுஷ்டிப்பதையல்ல, நிருவாகத்தைச் சாவதானமாக நடத்துவதையே நாடவேண்டும். இந்த வகையில் நமது மனத்தைத் திடப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆனால் இப்பொழுது நாம் இதற்கு நேர்மாறாகத்தான் செய்கிறோம். சுதந்திரத்துடனிருந்த ஒரு சமூகத்தினர், பலாத்காரத்தினால் அடக்கி வைக்கப்பட்டிருப்பார்களானால், அவர்கள் பழையபடி தங்கள் சுதந்திரத்தையடையக் கலகஞ் செய் கிறார்கள். அவர்கள் கலகஞ் செய்வது இயற்கை. ஆயினும் அவர்கள் உடனே கடுமையாகத் தண்டிக்கப்பட்டு அடக்கப்பட்டு விடுகிறார்கள். இது சரியல்ல. சரியான வழியென்னவென்றால், சுதந்திர புருஷர்களா யிருக்கப் பட்டவர்கள், அவர்கள் கலகத்திற்கு எழும்புகிறபோது அவர்களைக் கடுமையாகத் தண்டிக்காமல், கலகத்திற்கு எழும்புவதற்கு முன்னரிருந்து அவர்களைக் கண்காணித்து வருவார்கள்; கலக எண்ணங் கொள்ளாதபடி அவர்களைத் தடுப்பார்கள்; கலகத்திற்குக் காரணமாக ஒரு சிலரை மட்டும் பொறுப்பாளிகளாக்கிக் கலகத்தை அடக்கிவிடுவார்கள். கிளியோன் சொல்கிறபடி நீங்கள் செய்வீர்களானால் எவ்வளவு பெரிய தவறிழைத்தவர்களாவீர்களென்பதைச் சிறிது யோசித்துப் பாருங்கள். இப்பொழுதுள்ள நிலைமையில் எல்லா ராஜ்யங்களிலும் சாதாரண ஜனங்கள் உங்கள் சார்பாக இருக்கிறார்கள். அவர்கள், கலகம் ஏற்பட்டால், பணக்காரர்களோடு சேர்ந்துகொள்வதில்லை. அப்படிச் சேர்ந்துகொள்ளும்படி நேரிட்டாலும், யார் கலகஞ் செய்கிறார்களோ அவர்களுக்கு விரோதிகளாக உடனே ஆகிவிடுகிறார்கள். எனவே சத்துரு ராஜ்யத்துடன் நீங்கள் நடத்துகிற போராட்டத்தில் சாதாரண ஜனங்கள் உங்கள் பட்சமாகவே இருக்கிறார்கள். இப்படி யிருக்கிறபோது, மிட்டிலீனியிலுள்ள எல்லா ஜனங்களையும் நீங்கள் கொன்றுவிடுவீர் களாயின், உங்களுக்கு ஆதரவா யிருக்கக் கூடியவர்களையும் சேர்த்துக் கொன்றுவிட்டவர்களாவீர்கள். இவர்கள், மீட்டிலீனியிலுள்ள சாதாரண ஜனங்கள், தங்கள் கைக்கு ஆயுதங்கள் வந்தவுடனேயே, தாங்களாகவே நகரத்தை ஒப்புக் கொடுத்து விட்டார்களென்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. இங்ஙனம் செய்தவர்களைக் கொன்றுவிடுமாறு உத்தரவிடுவீர் களாயின், பணக்கார வகுப்பினருக்குச் சாதகம் செய்து கொடுத்தவர் களாவீர்கள். குற்றஞ் செய்தவர்கள், குற்றஞ் செய்யாதவர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான தண்டனையென்று நீங்கள் முன் கூட்டியே பிரகடனப் படுத்திவிட்டபடியால், ஒவ்வொரு ராஜ்யத்திலுமுள்ள பணக்கார வகுப்பினரும், தங்கள் ராஜ்யத்தைக் கலகத்திற்குத் தூண்டி விடுகிறபோது, சாதாரண ஜனங்கள், உடனே அவர்கள் பக்கம் போய்ச் சேர்ந்துகொண்டு விடுவார்கள். சாதாரண ஜனங்கள் குற்றமிழைத் திருந்தபோதிலும் அதை நீங்கள் கவனியாதுபோலிருந்து விட வேண்டும். அப்பொழுதுதான், உங்களிடம் இன்னமும் நட்பு கொண்டுள்ள ஒரு பிரிவினரைப் பகைத்துக் கொள்வதினின்று உங்களைத் தடுத்துக் கொண்டவர்களாவீர்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நம்முடைய நலனை உத்தேசித்துச் சிலரை உயிர் பிழைத்திருக்கும்படி செய்யவேண்டும். அவர்களைக் கொல்வது என்னதான் நியாயமா யிருந்த போதிலும் அவர்களைக் கொல்லக்கூடாது. அப்படி அவர்களைக் கொல்வதைக் காட்டிலும், அநியாயத்தை நாமே வலிய சகித்துக் கொள்வது நல்லது. அப்படி சகித்துக் கொள்வது, நமது ஏகாதிபத்தியத்தின் க்ஷேமத்திற்கு உபயோகமானது. மிட்டிலீனியர்களைத் தண்டிப்பதன் மூலம் எது சரியோ அதையும், எது நியாயமோ அதையும், இரண்டையும் திருப்தி செய்ததாகு மென்று கிளியோன் கருதுகிறான். ஆனால் இவ்விரண்டும் ஒன்று சேராவென்பது அனுபவ பூர்வகமான உண்மை. இரக்க உணர்ச்சியுடனோ சலுகை காட்டுகின்ற மனப்பான்மை யுடனோ மிட்டிலீனியர்கள் பிரச்னையைக் கவனிக்கக் கூடாதென்று கிளியோன் கருதுவது போலவே நானும் கருதுகிறேன். இவ்விரண்டுக்கும் - இரக்க உணர்ச்சிக்கும் சலுகை காட்டுகின்ற மனப்பான்மைக்கும் - அதிகமாக இடங்கொடுத்து விடாமல், உங்கள் முன்னிலையில் கிளத்தப் பட்டிருக்கும் பிரச்னையை அதன் தகுதிக்கேற்ப ஆலோசனை செய்யுங்கள்; பாக்கெ, யாராரைக் குற்றவாளிகளென்று தெரிந்தெடுத்தனுப்பியிருக் கிறானோ அவர்கள் மீது சாவதானமாக விசாரணை நடத்துங்கள்; மற்றவர் களைத் தொந்தரவு செய்யாதீர்கள்; இந்த என் கருத்துக்களுக்கு இசை யுங்கள். மிட்டிலீனியர்கள் விஷயத்தில் இப்படி நடந்துகொள்வதுதான் புத்தி சாலித்தனம். இப்படிச் செய்வதுதான், உங்களுடைய எதிர்காலத் திற்கு நல்லது; நிகழ்காலத்தில் உங்களுடைய சத்துருக்களுக்குக் கெடுதல். ஒரு சத்துருவை, பலாத்காரத்தின் துணை கொண்டு மூடத்தனமாகத் தாக்குவதைக்காட்டிலும், அந்தச் சத்துரு விஷயத்தில் நயமான முறைகளைக் கையாள்வதுதான் மேலானது. டியோடோட்ட கட்சி வென்றது. உடனே முந்தின தாக்கீதை ரத்து செய்துவிட்டதாகச் சொல்லி மற்றொரு கப்பல் வேகமாகச் செல்லும்படி அனுப்பப்பட்டது. இந்தக் கப்பலும் சமயத்தில் போய்ச் சேர்ந்தது. மிட்டிலீனியர்கள் அழிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டார்கள். இங்கே ஆத்தென்ஸில், பாக்கெ அனுப்பிய மிட்டிலீனியக் கலகத் தலைவர்களைக் கொலை செய்து விட வேண்டுமென்று கிளியோன் ஜனசபையில் ஒரு பிரேரணை கொண்டுவந்தான். அது நிறைவேறியது. சுமார் ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். பின்னர், மிட்டிலீனியர்கள், நகரத்தைச் சுற்றி யெழுப்பியிருந்த சுவர்கள் தரை மட்டமாக்கப்பட்டன. அவர்களுடைய கப்பல்களும் ஆத்தென்ஸின் சுவாதீனத்திற்கு வந்தன. அவர்களுடைய நிலபுலங்கள் பலவும் ஆத்தீனியர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. இவ்வாறாக மிட்டிலீனியின் கலகம் அடக்கப்பட்டது.  ஒன்பதாவது அத்தியாயம் யுத்தத்தின் ஐந்தாவது வருஷம். ஆத்தென்ஸின் சார்புபற்றி நின்ற பிளாட்டீயா ராஜ்யம் லாஸிடீமோனியர்களால் அழிக்கப்பட்டுவிட்டது. எப்படியென்று சிறிது விசாரிப்போம். யுத்தத்தின் மூன்றாவது வருஷத்தில் லாஸிடீமோனியர்களும் அவர்களுடைய சகாக்களும் சேர்ந்து, அட்டிக்காவைத் தாக்குவதற்குப் பதில், பிளாட்டீயாவைத் தாக்க முனைந்தார்கள். பிளாட்டீயா ஆத்தென்ஸின் ஆதரவு நிழலில் இருந்து வந்ததல்லவா? பிரதம சத்துருவைத் தாக்க முடியாதிருக்கிற சந்தர்ப்பத்தில், அந்தச் சத்துருவின் சகாக்களைத் தாக்குவதென்பது, இன்று நேற்று ஏற்பட்ட அரச தந்திரமோ யுத்த தந்திரமோ அல்ல. முற்கால கிரீஸில் இது சர்வ சாதாரணமாக நடைமுறையில் இருந்துவந்தது. பிளாட்டீயாவின் மீது படையெடுத்துச்சென்ற லாஸிடீமோனியக் கூட்டுப் படைக்குத் தலைவன், முந்திச் சொல்லப்பெற்ற ஆர்க்கிடாம என்பவன், இவனுடன், பிளாட்டீயர்களின் பரம விரோதிகளான தீபர்களும் சேர்ந்து கொண்டார்கள். ஆர்க்கிடாம படையுடன் பிளாட்டீயா சென்று முகாம் செய்து கொண்டதும், பிளாட்டீயர்கள், ஒரு தூதுகோஷ்டி மூலம், தங்கள் சிறு ராஜ்யத்தை நாசப்படுத்த வேண்டாமென்று கேட்டுக் கொண்டார்கள். இதற்குப் பதிலாக ஆர்க்கிடாம, ஆத்தென்ஸின் சார்பிலிருந்து விலகிக் கொண்டு எங்கள் கட்சியில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்; இது முடியா தென்று கருதுவீர்களாயின், இரண்டு கட்சியினருடனும் சேர்ந்து கொள்ளாமல் நடுநிலைமையுடனிருங்கள் என்று சொல்லியனுப்பினான். ஆத்தீனியர்களைக் கலந்து கொண்டுதான் தங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க முடியுமென்று பிளாட்டீயர்கள் தெரிவித்தார்கள். அப்படியே ஆத்தென்ஸுக்கு ஒரு தூது கோஷ்டியை அனுப்பி அதன் அபிப் பிராயத்தைக் கேட்டார்கள். நீங்கள் எங்கள் சார்புபற்றி நின்ற காலத்தி லிருந்து இதுவரையில் எப்பொழுதாவது உங்களை ஒரு சத்துருவுக்குக் காட்டிக் கொடுத்திருக்கிறோமா? இப்பொழுதும் உங்களைக் கைவிடமாட்டோம்; எங்கள் சக்திக்கியைந்தபடி உதவி செய்வோம், ஆதலின் இப்பொழுதுள்ள சிநேகத் தொடர்பை வெட்டிக் கொள்ள வேண்டாம் என்று சொல்லியனுப்பினார்கள் ஆத்தீனியர்கள். இது கேட்ட பிளாட்டீயர்கள் உற்சாகங் கொண்டார்கள்; லாஸிடீமோனியக் கூட்டுப் படையை, என்ன கஷ்டங்கள் வந்தாலும் எதிர்த்து நிற்பதென்று தீர்மானித்தார்கள். இது தெரிந்த ஆர்க்கிடாமஸும், பிளாட்டீயாவைச் சுற்றிச் சுவர்கள் எழுப்பி முற்றுகையிட்டான். சுமார் இரண்டு வருஷத்திற்கு அதிகமாக நடைபெற்றது முற்றுகை. ஆத்தென்ஸிடமிருந்து, அது கொடுத்த வாக்குறுதிப்படி எவ்வித உதவியும் பிளாட்டீயர்களுக்குக் கிடைக்கவில்லை. முற்றுகையின் இடைக்காலத்தில் உள்ளேயிருந்த பிளாட்டீயர்களிற் சிலர் துணிச் சலுடன் தப்பிச் சென்றுவிட்டனர். எஞ்சியிருந்தவர்கள் சமாளித்து நின்றனர். ஆனால் எவ்வளவு காலம்? மேலே சொன்னபடி யுத்தத்தின் ஐந்தாவது வருஷம் சரணடையும்படியான நிலைமைக்கு வந்து விட்டார்கள். ஆர்க்கிடாம, விரும்பியிருந்தால், இவர்களுடைய எதிர்ப்பை அடக்கிப்போட்டு இடத்தை அப்படியே கைப்பற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யக்கூடாதென்பது இவனுக்கிடப்பட்டிருந்த கட்டளை. ஏனென்றால், லாஸிடீமோனுக்கும் ஆத்தென்ஸுக்கும் பின்னாடி சமாதானம் ஏற்பட்டால், யுத்தத்தின்போது கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை அவரவர் வசம் ஒப்புவித்துவிட வேண்டி யிருக்கும். அப்படியானால் பிளாட்டீயாவை ஆத்தென் வசம் ஒப்புவித்துவிட வேண்டியிருக்குமல்லவா? பிளாட்டீயாவே வலிய லாஸிடீமோன் பக்கம் வந்து சேர்ந்துகொண்டதாக இருந்தால், ஆத்தென்ஸுக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டிய ராஜ்யங்களில் அஃது ஒன்றாயிராதல்லவா? ஆகவே, பிளாட்டீயா, தானே வலிய லாஸிடீமோன் கட்சிக்கு வந்து சேர்ந்து கொண்டதாக இருக்கும் வண்ணம் நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளும் படி ஆர்க்கிடாமஸுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அப்படியே ஆர்க்கிடாம, நகரத்தை - பிளாட்டீயாவை - தாங்களே வலிய ஒப்புக் கொடுத்துவிடச் சித்தமாயிருக் கிறார்களாவென்றும், சரணடைந்து விட்டவர்களில் யார் குற்றவாளிகளோ அவர்கள் விசாரிக்கப் பட்டுத் தண்டனை பெறுவதற்குச் சம்மதிக்கிறார்களாவென்றும், ஆனால் யாரும் சட்ட ரீதியாகத்தான் விசாரிக்கப்படுவார்களென்று உறுதி கூறுவ தாகவும், பிளாட்டீயர்களை ஒரு தூதன் மூலம் கேட்டுவிட்டான். பிளாட்டீயர்கள் என்ன செய்வார்கள்? மிகவும் பலவீனப்பட்டுக் கிடந்தார்கள். சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படியே சரணடைந்து விட்டார்கள்; நகரத்தையும் லாஸிடீமோனியர்கள் வசம் ஒப்புக்கொடுத்து விட்டார்கள். லாஸிடீமோனியர்களும், இவர்களுக்குச் சிலநாள் வரை சாப்பாடு போட்டுத் தங்கள் பாதுகாப்பில் வைத்திருந் தார்கள். இவர்களை விசாரிக்கவேண்டுமே? லாஸிடீமோனிலிருந்து ஐந்து பேர் நீதிபதிகளாக வந்து சேர்ந்தனர். விசாரணையும் துவங்கியது. இவர்கள் மீது எவ்வித குற்றமும் சாட்டப்படவில்லை. லாஸிடீமோனியர் களுக்காகட்டும், அவர்களுடைய சகாக்களுக்காகட்டும், இப்பொழுது நடைபெறுகிற யுத்தத்தில் ஏதேனும் உதவி செய்திருக்கிறீர்களா என்று மட்டும் கேட்கப்பட்டார்கள். பிளாட்டீயர்களும், தங்கள் கட்சியை எடுத்துச் சொல்வதற்கு அனுமதி கோரினார்கள். அனுமதி கொடுக்கப்பட்டது. இவர்களின் பிரதிநிதிகளாக இரண்டு பேர் முன்வந்து பின்வருமாறு பேசினார்கள்:- லாஸிடீமோனியர்களே! எங்கள் நகரத்தைச் சரண்படுத்திய போது உங்களை நம்பினோம்; நம்பியே அப்படிச் செய்தோம். எங்களைச் சட்டரீதியாக விசாரிப்பீர்களென்று எதிர்பார்த்தோம்; இப்பொழுது நடத்துகிற மாதிரியாக நடத்துவீர்களென்று எதிர்பார்க்கவில்லை. நீங்கள் எங்களை விசாரிப்பதற்குத்தான் ஒப்புக்கொண்டோம். உங்களிடமிருந்து நியாயம் கிடைக்குமென்று கருதினோம். ஆனால் வேறு சிலர் வந்திருக் கிறார்கள் லாஸிடீமோனிலிருந்து எங்களை விசாரிக்க. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுதிருக்கிறதைப் பார்த்தால் நாங்கள் இரண்டு விதங்களில் ஏமாற்றப்பட்டிருக்கிறோ மென்று அஞ்சுகிறோம். மிக முக்கியமான ஒரு முடிவுக்கு வரவேண்டிய இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் பட்சபாதமில்லாமல் நடந்துகொள்வீர்களாவென்று நாங்கள் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. மற்றும், நாங்கள் பதில் சொல்லக்கூடிய வகையில் எங்கள் மீது எவ்வித குற்றச்சாட்டும் கொண்டுவரப் படவில்லை. அதற்குப் பதிலாக நாங்களே பேசுமாறு கூறப்பட்டிருக் கிறோம். இன்னும் எங்களைப் பார்த்துச் சுருக்கமான ஒரு கேள்வி கேட்டிருக்கிறீர்கள். இதற்கு உண்மையான பதிலைக் கூறினால், அஃது எங்களுக்கு விரோதமாக முடியும்; பொய்யான பதிலைக் கூறினால், அதைப் பொய்யென்று மறுத்துவிடுவீர்கள். இந்தத் தடுமாற்ற நிலையில், நாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்திரமான வழி, ஒரே வழி, எங்கள் கட்சியை எடுத்துப் பேசவேண்டியதுதான்; அதனாலுண்டாகக்கூடிய பலனை அனுபவிக்க வேண்டியதுதான். நாங்கள் எந்த நிலைமையில் வைக்கப்பட்டிருக்கிறோமென்றால், நாங்கள் பேசாமலிருக்க முடியாது; பேசாமல் மௌனமா யிருந்தோமானால்,பேசியிருந்தால் நாங்கள் காப்பாற்றப்பட்டிருப் போமோ என்ற எண்ணம் எங்களை வதைத்துக்கொண்டே இருக்கும். எங்களுக்கேற்பட்டிருக்கிற மற்றொரு கஷ்டமென்னவென்றால், உங்கள் மனத்தில் படும்படியாக எங்களால் சொல்ல முடியாமலிருப்பதுதான். நாம் ஒருவருக்கொருவர் பரிச்சயமில்லாதவர் களா யிருந்திருக்கும் பட்சத்தில், உங்களுக்குத் தெரியாத சில விஷயங்களை நாங்கள் எடுத்துச் சொல்லலாம். ஆனால் இப்பொழுதோ, உங்களுக்குத் தெரியாத விஷயமெதையும் நாங்கள் எடுத்துச் சொல்வதற்கில்லை. உங்கள் விஷயத்தில் நாங்கள் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யத் தவறி விட்டோமென்று ஏற்கனவே உங்கள் மனத்திற்குள் எங்களைக் குற்றவாளிகளாகக் கருதிக்கொண்டு விட்டீர்கள், அதையே இப்பொழுது பகிரங்கத்தில் குற்றச்சாட்டாகக் கொண்டு வந்திருக்கிறீர்களென்று நாங்கள் சொல்லவில்லை; மூன்றாவது, மனிதர்களை, அதாவது தீபர்களைத் திருப்தி செய்யும் பொருட்டே எங்களை விசாரணைக்குக் கொண்டு வந்திருக்கிறீர்களென்று அஞ்சுகிறோம்; இந்த விசாரணையின் முடிவையும் தீர்மானித்து விட்டிருக்கிறீர்களென்று அஞ்சுகிறோம். இருந்த போதிலும் எங்கள் கட்சியை உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக் கிறோம். அப்படிச் சமர்ப்பிக்கிறபோது, தீபர்களுக்கு எங்கள் மீதுள்ள விரோதத்தைப் பற்றியும், உங்களிடமிருந்தும் இதர கிரேக்கர்களிட மிருந்தும் நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோமென்பது பற்றியும் சொல்ல விரும்புகிறோம், நாங்கள் செய்திருக்கிற நல்ல சேவைகளைப் பற்றியும் உங்களுக்கு நினைவூட்டி உங்களைத் திருப்தி செய்ய முயல்வோம். இந்த யுத்தத்தில், லாஸிடீமோனியர்களாகிய உங்களுக்கோ உங்களுடைய சகாக்களுக்கோ நாங்கள் ஏதேனும் உதவி செய்திருக் கிறோமாவென்று கேட்கிறீர்கள். சத்துருக்கள் என்ற முறையில் இந்தக் கேள்வியைக் கேட்பீர்களானால், உங்களுக்கு உதவி செய்யா மலிருந்ததனாலேயே உங்களுக்குக் கெடுதல் செய்தவர்களாக மாட்டோம்; நண்பர்கள் என்ற முறையில் கேட்பீர்களானால், எங்கள் மீது படையெடுத்து வந்ததனால் நீங்கள்தான் அதிக குற்றஞ் செய்தவர்களாகிறீர்கள். இந்த யுத்தத்திற்கு முந்தி சமாதானம் நிலவியிருக்கிற காலத்திலும், பாரசீகத்திற்கு விரோதமாகவும் நாங்கள் சரியாகவே நடந்துகொண்டோம். பாரசீகத்திற்கு விரோதமாக கிரீஸின் சுதந்திரத்தைக் காப்பாற்றுகிற முயற்சியில், பியோஷ்யர்களில் நாங்கள் மட்டுந்தான் கலந்து கொண்டோம். நாங்கள் உள்நாட்டு ராஜ்யத்தினராயிருந்தபோதிலும், ஆர்ட்டிமீஷியம் கடற்போரில்1 பங்கெடுத்துக்கொண்டோம். எங்கள் பிரதேசத்தில் நடைபெற்ற போரில் உங்களுடனும் பாஸேனியஸுடனும் சேர்ந்து கொண்டு போர் செய்தோம்.2 இன்னும் கிரேக்கர்கள் நடத்திய மற்றப் போர்களிலும் எங்கள் சக்திக்கு மிஞ்சி பங்கெடுத்துக் கொண்டிருக் கிறோம். தவிர, ப்பார்ட்டாவில் பூகம்பம் ஏற்பட்ட பிறகு, ஹெலட்டுகள் உங்களிடமிருந்து பிரிந்து இத்தோமி3க்குச் சென்றுவிட்டார்களல்லவா, அதன் விளைவாக உண்டான பெரிய குழப்பத்தின்போது, எங்களுடைய பிரஜைகளில் மூன்றில் ஒரு பங்கினரை உங்கள் உதவிக்கு அனுப்பினோம். லாஸிடீமோனியர்களாகிய நீங்கள் இதை மறந்துவிடக் கூடாது.1 இந்த மாதிரி முக்கியமான, சரித்திரத்திலே இடம்பெறக் கூடிய சந்தர்ப்பங்களில் நாங்கள் செய்த காரியங்கள் இவை. இவைகளுக்குப் பிறகே நாங்கள் உங்கள் விரோதிகளாகிவிட்டோம். இதற்குக் காரணம் நீங்கள்தான்; உங்களைத் தான் குற்றஞ் சொல்லவேண்டும். தீபர்கள் எங்களை நசுக்கி வந்தபொழுது, நாங்கள் உங்கள் கூட்டுறவை நாடினோம். ஆனால் நீங்கள் எங்கள் வேண்டுகோளை நிராகரித்துவிட்டீர்கள்; நாங்கள் தொலைதூரத்திலிருக்கிறோம்; அதனால் உங்களுக்கடுத்தாற்போலுள்ள ஆத்தீனியர்களின் உதவியை நாடிச் செல்லுங்கள் என்று எங்களுக்குக் கூறினீர்கள். யுத்தத்தில் உங்களுக்கு அநியாயமெதுவும் நாங்கள் செய்ய வில்லை; செய்திருக்கவும் முடியாது. ஆத்தீனியர்களிடமிருந்து விலகிக் கொண்டு வந்துவிடுங்கள் என்று நீங்கள் சொன்னபொழுது நாங்கள் விலகிக்கொள்ளாமலிருந்தது நாங்கள் செய்த குற்றமாகாது. தீபர்களுக்கு விரோதமாக நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டபொழுது அவர்கள் - ஆத்தீனியர்கள் - எங்களுக்கு உதவி செய்தார்கள். அப்படியிருக்க அவர்களைக் கைவிட்டுவிடுவது, சிறப்பாக, எங்களுடைய வேண்டு கோளின் பேரிலேயே அவர்களுடைய சகாக்களில் ஒருவராக எங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறபொழுது, அவர்களுடைய பிரஜைகளாக எங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறபொழுது, அவர்களிடமிருந்து நாங்கள் பலவிதமான உதவிகளைப் பெற்றிருக்கிற பொழுது, அவர்களைக் கை விட்டுவிடுவது எங்கள் கண்ணியத்திற்குகந்ததல்ல; அவர்களுடைய உத்தரவுகளுக்கு விசுவாசத்துடன் கீழ்ப்படிந்து நடப்பது எங்களுக்கேற்பட்ட தெளிவான கடமையாகும். ஆத்தீனியர்களோ, நீங்களோ, ஆதிக்கம் பெறவேண்டுமென்ற முயற்சியில் எத்தனையோ தவறுகள் செய்திருக்கலாம். அந்தத் தவறுகளின் பொறுப்பை, பின்பற்றி வரு கிறவர்கள் மீது சுமத்தக்கூடாது; பின்பற்றி வருகிறவர்களை வழி தப்பி அழைத்துச் செல்கிறார்களே அவர்கள் மீதுதான் சுமத்தவேண்டும். தீபர்களைச் சொல்கிறபொழுது, அவர்கள் எங்களுக்குத் திருப்பித் திருப்பித் தீங்கிழைத்து வந்திருக்கிறார்கள். அவர்கள் சமீபத்தில் எங்களை வந்து தாக்கியது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.2 அதனாலேயே இப்பொழுது நாங்கள் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம். சமாதான காலத்தில், அதிலும் புனிதமான ஒரு திருவிழாவின் போது, அவர்கள், எங்கள் நகரத்தைக் கைப்பற்றிக்கொள்ள முனைந்தார்கள்; அதற்காக எங்களால் வஞ்சந்தீர்க்கவும் பட்டார்கள். வஞ்சந்தீர்க்கப்பட்டதுதான் சரி. படையெடுத்து வந்தவர்களை எதிர்த்து நிற்கவேண்டுமென்ற உலகத் திற்குப் பொதுவான நியதியை அனுசரித்தே நாங்கள் அப்படிச் செய்தோம். ஆனால் இப்பொழுது, அவர்களுக்காக - எங்கள் மீது படையெடுத்துவந்த தீபர்களுக்காக - நாங்கள் துன்பமனுபவிக்க வேண்டுமென்பது சரியல்ல. உங்களுக்குண்டாகக் கூடிய உடனடியான நன்மையையும், தீபர்கள் எங்கள் மீது கொண்டுள்ள விரோதத்தையும் பிரதான அமிசங்களாகக் கொண்டு நியாயம் வழங்குவீர்களானால், எதைச் செய்தால் உசிதமாயிருக்குமென்று உங்களுக்குத் தோன்றுகிறதோ அதற்கு, அந்த உசிதத்திற்கு அடிமைகளாகிவிட்டவர்களாவீர்களே தவிர, எதைச் செய்தால் சரியோ அதைச் செய்யும் நீதிபதிகளாகமாட்டீர்கள். இப்பொழுது அவர்கள் - தீபர்கள் - உங்களுக்குப் பயன்படக் கூடியவர்களா யிருக்கிறார்களென்று சொன்னால், நாங்களும் இதர கிரேக்கர்களும், உங்களுடைய அதிகமான தேவையின்போது அதிகமான உதவியைச் செய்திருக்கிறோம். இப்பொழுது நீங்கள் முன்னேறித் தாக்குகிறவர்களாயிருக்கிறீர்கள்; மற்றவர்கள் உங்களுக்குப் பயப்படு கிறார்கள். ஆனால் நாங்கள் சொல்கிற நெருக்கடியான காலத்தில், கிரேக்கர்களெல்லோரையும் அடிமைத்தளையில் பூட்டிவிடுவ தாகப் பாரசீகர்கள் பயமுறுத்தியபொழுது, தீபர்கள், அவர்கள் பக்கமே - பாரசீகர்கள் பக்கமே - இருந்தார்கள். இப்பொழுது நாங்கள் ஏதேனும் தவறு செய்திருப்பதாக நீங்கள் கருதுவீர்களாயின் அந்தத் தவறுதலுக்கு, அதாவது இப்பொழுதைய தவறுதலுக்கு, அப்பொழுது நாங்கள் காட்டிய தேசபக்தியை ஈடாக வைத்துப் பார்க்கவேண்டும்; அதுதான் நியாயம். அப்படிப் பார்த்தால், எங்களுடைய பிழையைக்காட்டிலும் எங்களுடைய யோக்கியதை தூக்கி நிற்பது நன்கு தெரியும். ஜெர்க்ஸ மன்னன்1 படைபலத்திற்கு முன்னே ஒரு சில கிரேக்கர்கள்தான் எதிர்த்து நிற்கத் துணிந்தார்கள். அந்தச் சமயத்தில் நாங்கள் எதிர்த்து நின்றோம். மற்றும் அந்தச் சமயத்தில், பாரசீகப் படையெடுப்பு நிகழ்ந்த அந்தச் சமயத்தில், தங்களுடைய நலனையே பிரதானமாகக் கருதி அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவர் களைக் காட்டிலும், யார், கிரீஸின் மானத்தையே பெரிதாக எண்ணி ஆபத்தான வழியில் செல்லத் துணிந்தார்களோ அவர்களுக்கே எல்லாப் புகழ்மொழிகளும் உரியன. இந்தப் புகழ் மொழிகளுக்குரியவர்களாகவே நாங்கள் நடந்துகொண்டோம்; இதற்காக அப்பொழுது பாராட்டவும் பட்டோம். இப்பொழுதும், இந்த யுத்தத்திலும் அப்படியே நடந்து கொண்டோம். ஆனால் அதற்காக எங்கே அழிந்துபடுவோமே என்று அஞ்சிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் புத்திசாலித்தனமாக ப்பார்ட்டாவுடன் சேர்ந்துகொண்டிருக்கலாம்; ஆனால் ஆத்தென்ஸுடன் சேர்ந்திருப்பதுதான் நல்லதென்று கருதி அப்படியே இருந்தோம். நீதியென்கிற போது, ஒரேமாதிரியான வழக்குகளில் ஒரேமாதிரியான தீர்ப்பே அளிக்கப்படவேண்டும். அனுஷ்டான முறையென்கிறபோது, தன்னுடைய உடனடியான நலத்தையும் கவனித்துக்கொண்டு அதே சமயத்தில் ஒரு நல்ல கூட்டாளி செய்த சேவைக்கு என்றும் மாறாத நன்றி செலுத்துவதாகவும் இருக்கவேண்டும். நற்குணத்திற்கும் கண்ணியத்திற்கும் உங்களையே அகில கிரீஸும் முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறதென்பது உங்கள் நினைவிலிருக் கட்டும். இப்பொழுது நீங்கள் நடத்துகிற விசாரணை எங்கோ ஒரு மூலையில் நடைபெறுகிற விசாரணையன்று. நீங்களும் பிரசித்தி பெற்றவர்கள்; நாங்களும் இழிந்துபட்டவர்களல்ல. இப்பொழுது நீங்கள் தவறான முடிவைச் செய்வீர்களானால், நல்ல மனிதர்கள் விஷயத்தில், அவர்களைக் காட்டிலும் நல்ல மனிதர்கள் இப்படித் தீர்ப்புச் சொல்லி விட்டார்களேயென்று உலகமே திகைத்துப்போகும். அதற்காக மட்டுமல்ல, கிரீஸுக்கு நன்மையைச் செய்தவர்களான பிளாட்டீயர்களிடமிருந்து பொருள்களைப் பறித்து அவைகளை கிரீ அனைத்திற்கும் பொதுவாயுள்ள கோயில்களுக்கு அர்ப்பணம் செய்வீர்களானால் அதற்காகவும் அதிர்ச்சி யடையும். லாஸிடீமோனியர்களாகிய நீங்கள், பிளாட்டீயாவை, எந்த பிளாட்டீயாவை உங்களுடைய முன்னோர்கள் (பாரசீகர்களுக்கு விரோத மாக அது செய்த சேவையை மதித்து) வெற்றிச் சின்னத்தில் பொறித்து வைத்தார்களோ அந்த பிளாட்டீயாவை, கிரீஸின் பூகோள படத்திலிருந்து அழித்துவிடுவீர்களானால், என்ன கோரம் என்று உலகம் திடுக்கிட்டுப் போகும். பாரசீகர்கள் வெற்றி கொண்டிருந்தால் நாங்கள் அப்பொழுதே நாசமாயிருப்போம். அதிலிருந்து தப்பினோம். இப்பொழுது, எங்களுடைய நெருங்கிய நண்பர்களாயிருந்த உங்கள் கண் முன்னேயே தீபர்களால் அழிக்கப்பட இருக்கிறோம். எங்களுடைய துரதிருஷ்டமான நிலைமை தான் என்னே! இரண்டு விதமான ஆபத்துக்களுக்கு நாங்கள் உட்பட வேண்டி வந்து விட்டது. எங்கள் நகரத்தை உங்களுக்கு ஒப்புக்கொடுத்திராவிட்டால், நாங்கள் பட்டினியால் சாகும்படி நேரிட்டிருக்கும். இப்பொழுது எங்கள் உயிரைப் பெறுவதற்காக விசாரணைக்குட்படுத்தப் பெற்று வந்து நிற் கிறோம். சர்வ கிரேக்கர்களுடைய நன்மையை உத்தேசித்து பிளாட்டீயர் களாகிய நாங்கள், எங்களுடைய சக்திக்கு மிஞ்சி பாடுபட்டோம். இப்பொழுதோ, கதியற்றவர்களாய், எல்லோராலும் கைவிடப்பட்டவர் களாய், எல்லோராலும் நிராகரிக்கப்பட்டவர்களாய் நிற்கிறோம். எங்களுடைய சகாக்கள் யாரும் இப்பொழுது எங்களுக்கு உதவிசெய்ய முன்வரவில்லை. உங்களையே நம்பிக்கொண்டிருந்தோம். அதிலும் இப்பொழுது எங்களுக்குச் சந்தேகம் விழுந்துவிட்டது. எங்களுடைய கூட்டுறவை எந்தத் தெய்வங்கள் கண்காணித்து வந்தனவோ அந்தத் தெய்வங்களின் பெயரால், கிரேக்கர்களின் நன்மையை முன்னிட்டு நாங்கள் செய்திருக்கிற சேவையின் பெயரால், உங்களை ஆணையிட்டுக் கேட்டுக்கொள்கிறோம், எங்கள்மீது மனமிரங்குகள் என்று; தீபர்கள், எங்களைக் கொலை செய்வதற்கு உங்களுடைய சம்மதத்தைப் பெற்றிருப்பார்களானால், அந்தச் சம்மதத்தை வாப பெற்றுக் கொண்டு விடுங் களென்று; எங்களைக் கொன்று உங்களை அவமானப்படுத்தா திருக்குமாறு அவர்களுக்குச் சொல்லுங்களென்று; தீபர்களிடமிருந்து கறைப்பட்ட நன்றியைப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக எங்களிட மிருந்து பரிசுத்தமான நன்றியைப் பெற்றுக்கொள்ளுங்களென்று; மற்றவர் களைத் திருப்திபடுத்துவதற்காக நீங்கள் அவமானத்தை சன்மானமாகப் பெறவேண்டாமென்று. எங்களுடைய உயிர்களை வெகு சீக்கிரத்தில் போக்கிவிடலாம்; ஆனால் அப்படிப் போக்கிவிடுவதனாலேற்படக் கூடிய அபகீர்த்தி இருக்கிறதே அதனைத் துடைப்பது சிரமசாத்தியமரன காரியம். உங்களால் நியாயமாகத் தண்டிக்கப்படவேண்டிய சத்துருக்களல்ல நாங்கள். ஆனால் உங்களுக்கு விரோதமாக ஆயுதமெடுக்கும்படி நண்பர்களால் நிர்ப்பந்திக்கப் பட்டோம். ஆதலின், எங்களுக்கு உயிர் கொடுப்பதாகத் தீர்ப்புச் செய்வீர் களாயின் அதுதான் நியாயமான தீர்ப்பாயிருக்கும். நாங்களே உங்களிடம் வலிய வந்து தஞ்சமடைந்ததாகக் கொள்வீர்களாயின், அப்படிப்பட்டவர் களை - தஞ்சமடைந்தவர்களை - கொல்லக்கூடாதென்று கிரேக்க சட்டம் தடுக்கிறது. தவிர நாங்கள் எப்பொழுதும் உங்களுடைய உபகாரிகளாகவே இருந்து வந்திருக்கிறோம். உங்களுடைய மூதாதையர்கள், பாரசீகர்களால் கொல்லப்பட்டு இங்கே எங்களுடைய பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருக் கிறார்கள்: புதைக்கப்பட்ட அந்த இடங்களைப் பாருங்கள். வருஷா வருஷம், அவர்களுக்கு, உங்களுடைய மூதாதையர்களுக்குச் செலுத்த வேண்டிய மரியாதைகளை, காணிக்கைகளைச் செலுத்தி வந்திருக் கிறோம். எங்களுடைய நிலங்களிலிருந்து காலா காலத்தில் கிடைத்து வந்த முதற்பயன்களை அவர்களுக்கு நிவேதனமாகப் படைத்து வந்திருக் கிறோம். நேச நாட்டிலிருந்து வந்த நண்பர்கள், போர்க்களத்தில் எங்களது முன்னோர்களின் சகாக்களா யிருந்தவர்கள் என்ற கருத்துடனேயே இங்ஙனமெல்லாம் செய்துவந்தோம். இப்பொழுது எங்கள் விஷயத்தில் தவறான முடிவைச் செய்வீர்களானால், நாங்கள் செய்ததற்கு நேர்மாறாகச் செய்தவர் களாவீர்கள். இன்னும் யோசித்துப் பாருங்கள். உங்களுடைய முன்னோர் களை, பாஸேனிய இங்கே அடக்கம் செய்தபொழுது, நேச நாட்டில், நேசப்பான்மையுள்ள ஜனங்களின் மத்தியில் அடக்கம் செய்திருப்பதாக எண்ணியே செய்தான். இப்பொழுது நீங்கள் எங்களைக் கொன்று, பிளாட்டீ யாவை தீபர்களுடைய நாடாக்கி விடுவீர்களானால், உங்களுடைய முன்னோர்களையும், அந்த முன்னோர்களின் சகாக் களையும், சத்துரு நாட்டில், அவர்களைக் கொலை செய்தவர்களுக்கு மத்தியில்,1 இப்பொழுது அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டிருக்கிற மரியாதைகள், காணிக்கைகள் முதலியன ஒன்றுமில்லாமல் கிடத்தியவர்களாவீர்கள். அதுமட்டுமல்ல; எந்த ராஜ்யம், கிரேக்கர்களுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொடுத்ததோ அந்த ராஜ்யத்தை அடிமைப்படுத்திவிட்டவர்களாவீர்கள்; அந்த ராஜ்யத்தினர் - பிளாட்டீயர்கள் - பாரசீகர்களைத் தோல்வியடையச் செய்வதற்கு முந்தி, எந்தக் கோயில்களிலுள்ள தெய்வங்களுக்குப் பிரார்த்தனை செய்து கொண்டார்களோ அந்தக் கோயில்களை யெல்லாம் பாழாக்கி விட்டவர்களாவீர்கள்; அந்தக் கோயில்களில் நடைபெற்று வந்த சடங்குகளையெல்லாம் நிறுத்திவிட்டவர்களாவீர்கள். லாஸிடீமோனியர்களே! கிரேக்கர்களனைவருக்கும் பொதுவாயுள்ள சட்டத்திற்கு விரோதமாகவும், உங்களுடைய முன்னோர்கள் அனுசரித்து வந்த முறைக்கு விரோதமாகவும் இங்ஙனமெல்லாம் நீங்கள் செய்வீர் களாயின், அஃது உங்களுடைய புகழுக்கு ஏற்றதாகாது. உங்களுக்கு நாங்கள் எந்த விதத்திலும் தீங்கு செய்யவில்லை; உங்களுக்கு உபகாரி களாகவே இருந்து வந்திருக்கிறோம். அப்படிப்பட்ட எங்களை வேறொரு வருடைய - தீபர்களுடைய - துவேஷத்தைப் பூர்த்தி செய்வதற்காகக் கொன்றுவிடுவீர்களாயின் அஃது உங்களுடைய புகழுக்கு ஏற்றதாகாது, எங்கள் மீது ஓரளவு கருணை காட்டி எங்களை விட்டுவிடுவீர்களாயின் அதுவே உங்கள் புகழுக்கு ஏற்றது. உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம்; கெஞ்சிக் கேட்க எங்களுக்கு உரிமையுண்டு; கேட்கவேண்டியது இப்பொழுது அவசிய மாகவும் இருக்கிறது. எல்லாக் கிரேக்கர்களும் எந்தத் தெய்வங்களின் சந்நிதானத்தில் வணங்குகிறார்களோ அந்தத் தெய்வங்களை, எங்கள் பிரார்த்தனைக்குச் செவிசாய்க்குமாறு உரக்கக் கேட்டுக்கொள்கிறோம். உங்களுடைய மூதாதையர்கள் என்ன பிரதிக்ஞை செய்து கொண்டார் களோ அந்தப் பிரதிக்ஞையை நினைவு கொள்ளும்படியும் அதனைக் காப்பாற்றும்படியும் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். அவர்களுடைய நெருங்கிய நண்பர்களாயிருந்த எங்களை, எங்களுடய பரம விரோதி களிடத்தில் ஒப்புக்கொடுத்துவிட வேண்டாமென்றும், அந்தப் பரம விரோதிகள் கையில் நாங்கள் அகப்பட்டுக்கொள்ளாமல் எங்களைக் காப்பாற்ற வேண்டுமென்றும் உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் முன்னோர்கள் - பக்கத்தில் நின்று நாங்கள் புகழ்தரச் சண்டை யிட்டதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். அப்படிப் புகழ்தரப் போர்புரிந்த நாங்கள், இப்பொழுது, என்ன கதியேற்படுமோவென்று பயந்து நிற்க வேண்டியிருக்கிறது. கடைசியாகச் சொல்கிறோம்; நாங்கள், எங்கள் நகரத்தை - பிளாட்டீயாவை - தீபர்களுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை - அப்படி ஒப்புக் கொடுக்கும்படி நேரிட்டிருந்தால் அதைக்காட்டி லும்பட்டினி கிடந்து செத்திருப்போம் - உங்களை நம்பி உங்களிடந்தான் ஒப்புக்கொடுத்தோம். இதுகாறும் நாங்கள் சொல்லியதில் நீங்கள் திருப்தியடையவில்லை யென்றால், உங்களைத் திருப்தி செய்வதில் நாங்கள் தவறிவிட்டோ மென்றால், எங்களைப் பழைய நிலைமையிலேயே கொண்டு வைத்து விடுங்கள். என்ன கதி ஆகிறதோ ஆகட்டும். பிளாட்டீயர்களாகிய நாங்கள் உங்கள் கருணையை எதிர்பார்த்து நிற்கிறோம். எங்களுடைய பரம விரோதி களான தீபர்களிடம் எங்களைக் காட்டிக் கொடுத்து விடாதீர் களென்று உங்களை ஆணையிட்டுக் கேட்டுக் கொள்கிறோம். எங்களைக் காப்பாற்றுங்கள்; கிரேக்கர்களனைவருக்கும் விடுதலை வாங்கிக் கொடுக்கிற முயற்சியில், எங்களை அழிவுக்கு விட்டுவிடாதீர்கள். இந்த விசாரணையின்போது தீபர்களும் கூட இருந்தார்கள். பிளாட்டீயர்களின் பேச்சைக்கேட்டு, லாஸிடீமோனிய நீதிபதிகள் மன மிரங்கி விடுவார்களோ என்று இவர்களுக்கு யோசனை வந்துவிட்டது. தாங்களும், தங்கள் கட்சியை எடுத்துச் சொல்ல அனுமதி வேண்டுமென்று கேட்டார்கள் சொல்ல அனுமதி கொடுக்கப்பட்டது. பின்வருமாறு பேசினார்கள்:--- லாஸிடிமோனியர்களுக்காவது அவர்களுடைய சகாக்களுக்காவது இந்த யுத்தத்தில் ஏதேனும் சகாயம் செய்தீர்களா என்று நீங்கள் கேட்ட கேள்விக்கு இந்தப் பிளாட்டீயர்கள் சுருக்கமாகப் பதில் சொல்லியிருந் தார்களானால், நாங்கள் இப்பொழுது பேசியிருக்கமாட்டோம். அதற்குப் பதிலாக இவர்கள், எங்களையே திருப்பிக் குற்றஞ்சாட்டிப் பேசினார்கள்; தங்களுடைய குற்றத்திற்குப் பதில் சொல்லாமல், பிரதாப விசாரணைக்குப் புறம்பான விஷயங்களைப் பற்றி நீண்ட பிரசங்கம் செய்தார்கள்; பிறரால் கண்டனம் செய்யப்பெறாத விஷயங்களைப்பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். இப்படியெல்லாம் இவர்கள் பேசியபடியால், நாங்கள் இவர்களுடைய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லவேண்டியவர்களா யிருக்கிறோம்; இவர்களுடைய தற்புகழ்ச்சி உரைகளை மறுக்கவேண்டியவர்களா யிருக்கிறோம். நாங்கள் எடுத்திருக்கிற கெட்ட பெயரோ, இவர்கள் எடுத் திருக்கிற நல்லபெயரோ இவர்களுக்கு உதவியாயிருக்கக் கூடாதென் பதற்காகவும், இரண்டு கட்சிகளையும் கேட்டு நீங்கள் உண்மை தெளிந்து அதற்குத் தக்கபடி தீர்ப்புச் சொல்ல வேண்டுமென்பதற்காகவும் இந்தப் பதிலை நாங்கள் சொல்லவேண்டியிருக்கிறது. தீபர்களாகிய எங்களுக்கும் பிளாட்டீயர்களாகிய இவர்களுக்கும் ஏற்பட்ட பிணக்கின் மூலகாரணம் இதுதான். நாங்கள், பியோஷ்யாவில் வாசஞ்செய்து கொண்டிருந்த கலப்பு ஜாதியினரை வெளியேற்றிவிட்டு,1 அதன் பல பகுதிகளிலும் பியோஷ்யர்களைக் குடியேறச் செய்ததுபோல் பிளாட்டீயாவிலும் குடியேறச் செய்தோம். இந்தப் பிளாட்டீயர்கள், முதலில் எங்கள் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டார்கள்; பிறகு மறுத்துவிட்டார்கள்; இதர பியோஷ்யர்களிடமிருந்து பிரிந்து தனியே சென்றுவிட்டார்கள். இதனால் இவர்கள் விஷயத்தில் நாங்கள் பலவந்தத்தை உபயோகிக்க வேண்டியிருந்தது. அதனால் இவர்கள் ஆத்தீனியர்கள் பக்கம் போய்ச் சேர்ந்துகொண்டு, எங்களுக்கு அதிகமான இம்சைகளைச் செய்தார்கள். நாங்களும் பிரதிக்குப் பிரதி செய்தோம். கிரீஸின் மீது பாரசீகர்கள் படையெடுத்து வந்தபோது, பியோஷ்யர் களில் தாங்கள் மட்டுந்தான் அவர்களோடு சேர்ந்துகொள்ளாமலிருந்ததாக இவர்கள் கூறுகிறார்கள். இதற்காகத் தங்களைப் புகழ்ந்தும் கொள்கிறார்கள்; எங்களை நிந்திக்கவும் செய்கிறார்கள். இவர்கள் பாரசீகர்களோடு சேர்ந்து கொள்ளவில்லையென்றால், ஆத்தீனியர்கள் சேர்ந்துகொள்ளவில்லை; அதனால் இவர்களும் சேர்ந்துகொள்ளவில்லை. பாரசீகர்கள் தோல்வி யடைந்துபோன பிறகு, ஆத்தீனியர்கள், மற்றக் கிரேக்கர்களைத் தாக்க முற்பட்டபோது, பியோஷ்யர்களில் இந்தப் பிளாட்டீயர்கள் மட்டுந்தான் அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள். பாரசீகர்களோடு நாங்கள் சேர்ந்துகொண்டதாக இவர்கள் கூறுகிறார்களே அப்பொழுது எங்கள் அரசாங்க அமைப்பு எப்படி யிருந்த தென்பதைச் சிறிது யோசித்துப் பாருங்கள். அப்பொழுது எங்கள் ராஜ்யத்தில், பணக்கார ஆட்சியும் நடைபெறவில்லை; ஜன ஆட்சியும் நடைபெறவில்லை; ஒழுங்கான சட்டத்திற்கும் நல்ல அரசாங்கத்திற்கும் விரோதமான ஓர் ஆட்சியே நடைபெற்று வந்தது. ஏறக்குறைய ஒரு சர்வாதிகார ஆட்சி மாதிரியென்று சொல்லலாம். ஒரு சிலர் மட்டும் ஒரு கட்சியினராகச் சேர்ந்துகொண்டு ஆட்சி நடத்தினார்கள். இவர்கள், பாரசீகர்களை வெற்றி பெறச் செய்து அதன் மூலம் தங்கள் அதிகார பலத்தை அதிகரித்துக்கொள்ளலாமென்ற நோக்குடன், ஜனங்களை அடக்கி யாண்டு வந்தார்கள்; பாரசீகர்களையும் நகரத்திற்குள் - தீப்ஸுக்குள் - வரும்படி செய்தார்கள். இங்ஙனம் பாரசீகர்களை அனுமதித்தபோது, எங்கள் நகரம், தனக்குத்தானே எஜமானனா யிருக்கவில்லை; அதாவது, எங்கள் நகரத்தில் சுயவரசு - ஜனங்களுடைய ஆட்சி - நடைபெறவில்லை. ஒழுங்கான ஆட்சி நடைபெறாத காலத்தில், நகரத்தில் நடைபெற்ற தவறுகளுக்கு, நகரம் பூராவையும் பொறுப்பாளியாக்குதல் கூடாது. பாரசீகர்கள் சென்றுவிட்ட பிறகு, பழைய மாதிரி ஒழுங்கான ஆட்சி ஏற்பட்டதும் நாங்கள் எப்படி நடந்துகொண்டோமென்பதைப் பரிசீலனை செய்து பாருங்கள். ஆத்தீனியர்கள், கிரீஸின் பெரும்பகுதியைத் தாக்க முற்பட்டபோது, எங்கள் தேசத்தை அடிப்படுத்த முனைந்தபோது, எங்கள் தேசத்தின் பெரும் பகுதியினர் ஏற்கனவே அவர்களை எஜமானர்களாக ஏற்றுக் கொண்டு விட்டபோது, கொரானீயாவில்1 நாங்கள் சண்டை போட்டு வெற்றியடையவில்லையா? பியோஷ்யாவை விடுதலை செய்ய வில்லையா? கிரீஸின் பிறபகுதிகள் விடுதலை பெறும் பொருட்டு, நாங்கள், பெலொப்பொனேசிய சமஷ்டியைச் சேர்ந்த மற்ற ராஜ்யங்களால் உதவ முடிந்ததைக் காட்டிலும் அதிகமாகக் குதிரைப்படையையும் காலாட்படையையும் உதவவில்லையா? பாரசீகர்களோடு நாங்கள் சேர்ந்து கொண்டோமென்று சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கு இதுவரையில் கூறிய சமாதானம் போதுமென்று நினைக்கிறோம். இனி எங்களைக் காட்டிலும், பிளாட்டீயர்களே! நீங்கள் தான், கிரேக்கர்களுக்கு அதிகமான தீங்கை உண்டுபண்ணியிருக் கிறீர்கள், அதற்குத் தகுதியான தண்டனையைப் பெறுதற்குரியவர்களா யிருக் கிறீர்கள் என்று எடுத்துக்காட்ட முயற்சி செய்வோம். தற்காப்புக்காகவே ஆத்தீனியர்களுடன் நீங்கள் சேர்ந்துகொண்டதாகக் கூறுகிறீர்கள். அப்படியானால் எங்களுக்கு விரோதமாக அவர்களை மட்டுந்தான் நீங்கள் துணை சேர்த்துக் கொண்டிருக்கவேண்டும். அதைவிடுத்து, மற்றவர் களைத் தாக்குகிற முயற்சியில் அவர்களுடன் நீங்கள் சேர்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அவர்களைப் பின்பற்றிச் செல்ல விரும்பாத இடங்களுக்கு - படையெடுப்புகளுக்கு - அவர்கள் உங்களை அழைத்துச் செல்வதாக உணர்வீர்களாயின், நீங்கள் மேற்கண்ட விதமாகச் செய் திருக்கவேண்டியதுதான்; அதாவது, மற்றவர்களைத் தாக்குகிற முயற்சியில் மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டிருக்க வேண்டியதுதான். நீங்கள் வலியுறுத்திக் காட்டுவதுபோல், ஏற்கனவே லாஸிடீமோன், பாரசீகத்திற்கு விரோதமாக உங்களுடைய சகாவா யிருந்திருக்கிறது. நாங்கள் ஒதுங்கியிருந்ததற்கு இது போதுமான காரணமாக இல்லையா? தவிர, லாஸிடீமோனின் சகாவா யிருந்ததனால் நல்ல பாதுகாப்பின் கீழும் இருந்திருக்கின்றீர்கள். அப்படியிருந்தும் நீங்கள் உங்களிஷ்டத்திற்கே, கட்டாயப்படுத்தப்படாமலேயே ஆத்தீனியர்களுடன் போய்ச் சேர்ந்து கொண்டீர்கள். உபகாரஞ் செய்தவர்களைக் கைவிடுவது கேவலமென்று கூறுகிறீர்கள். கிரேக்கர்களை அடிமைப்படுத்திக் கொண்டிருந்த ஆத்தீனியர் களைப் பலி கொடுப்பதைக் காட்டிலும், எல்லாக் கிரேக்கர்களையும்,பெலொப் பொனேசிய சமஷ்டியைச் சேர்ந்த உங்கள் சகாக்களனைவரையும் பலி கொடுப்பது இன்னும் கேவலமல்லவா? அநீதமல்லவா? ஆத்தீனியர்கள் உங்களுக்குச் செய்ததற்குப் பிரதியாக நீங்கள் அவர்களுக்குச் செய்ததிருக் கிறதே அது சரிசமானமானதுமல்ல; கௌரவமானதுமல்ல. நீங்கள் நசுக்கப் பட்டு வந்ததனால் அவர்களை உதவிக்கு அழைத்ததாகக் கூறுகிறீர்கள். பின்னர், மற்றவர்களை அடக்கி ஒடுக்க அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியில் நீங்கள் அவர்களோடு சேர்ந்து கொண்டீர்கள். அவர்கள் தாக்கப்பட்டு அப்பொழுது அவர்களுக்கு உதவி செய்திருப்பீர்களானால் அஃது உங்களுக்குக் கௌரவமா யிருந்திருக்கும். அப்படிக்கின்றி, மற்றவர் களை அடக்க அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு நீங்கள் உதவி செய்ததிருக்கிறதே அஃது உங்களுக்கு அகௌரவம். பியோஷ்யாவில் நீங்கள் ஒருவர் மட்டுந்தான் பாரசீகர்களோடு சேராமலிருந்ததாகக் கூறினீர்கள். கிரேக்கர்களுடைய நன்மைக்காக நீங்கள் அப்படிச் சேராமலில்லை; ஆத்தீனியர்கள் சேராமலிருந்தார்கள்; அதனால் நீங்களும் சேராமலிருந்தீர்கள்; அவ்வளவுதான். அவர்களோடு சேர்ந்திருக்க விரும்பி மற்றவர்களுக்கு விரோதமாகவும் நிற்கத் துணிந் தீர்கள். இவற்றையெல்லாம் உங்கள் பேச்சிலிருந்தே தெளிவாகக் காட்டி விட்டீர்கள். ஆத்தீனியர்களைச் சந்தோஷப்படுத்த நாங்கள் செய்த நல்ல காரியங்களுக்கு இப்பொழுது எங்களுக்குப் பலன் கிட்ட வேண்டும் என்று கேட்கிறீர்கள். இதை எப்படி ஒப்புக்கொள்வது? முடியாது. ஆத்தீனியர் களுடன் எப்பொழுது நீங்கள் விரும்பிச் சேர்ந்து கொண்டீர்களோ, அப்பொழுதே, அவர்களுக்கேற்படுகிற அனுகூலங்களையோ பிரதிகூலங் களையோ நீங்களும் சேர்ந்து அனுபவிக்க வேண்டியதுதான். கடைசியாக, நீங்கள் முற்றுகையிடப்படுவதற்கு முன்னர் எந்தக் கட்சியிலும் சேரவேண்டாமென்றும், நடுநிலைமை வகிக்குமாறும் கூறப் பட்டீர்கள். அதற்கு இணங்க நீங்கள் மறுத்துவிட்டீர்கள். கண்ணியம் என்ற மூடியணிந்து கொண்டு கிரேக்கர்களுக்கு நாசத்தை உண்டுபண்ணிய உங்களைக் காட்டிலும் வேறு யார் அந்தக் கிரேக்கர்களுடைய அருவருப்புக்கு ஆளாகக்கூடியவர் இருக்கிறார்? உங்களிடத்தில் சில குணங்கள் இருந்ததாகச் சொல்கிறீர்களே அவை இன்றைய உங்கள் நடக்கைக்குப் பொருந்தியனவாக இல்லை. உங்களுடைய சுபாவம் இப்பொழுது நன்றாக ருஜுவாகிவிட்டது. ஆத்தீனியர் கள் அநியாய மார்க்கத்தில் சென்றபோது நீங்களும் அவர்களைப் பின்பற்றினீர்கள். இச்சையின்றி நாங்கள் பாரசீகர்களுக்கு ஆதரவு காட்டியதற்கும், சுயேச்சையாக நீங்கள் ஆத்தீனியர்களுக்கு ஆதரவு கொடுத்ததற்கும் இதுதான் எங்கள் சமாதானம். எங்கள்மீது சாட்டப்படுகிற கடைசி குற்றம், சமாதானம் நிலவி இருக்கிற காலத்தில், திருவிழாவின்போது, அநீதமாக நாங்கள் உங்கள் நகரத்தின்மீது படையெடுத்து வந்தோமென்பது. இதிலும் உங்களைக் காட்டிலும் நாங்கள் அதிகமாகக் குற்றஞ் செய்தவர்களென்று எங்களால் நினைக்கக்கூட முடியவில்லை. நாங்களே சுயமாக உங்கள் பிரதேசத்தைப் படைகொண்டுதாக்கி நாசப்படுத்தியிருந்தோமானால் நாங்கள் குற்றவாளிகள்தான்: ஆனால் உங்களிலே பெரியதனக்காரர்களா யிருக்கப் பட்டவர்கள், அந்நியத் தொடர்பினின்று உங்களை விலக்கி பியோஷ்ய சமஷ்டியில்1 சேர்க்கவேண்டுமென்பதற்காக எங்களை, உங்கள் பிரதேசத்தின்மீது படையெடுத்து வருமாறு அழைத்தார்கள். அவர்கள் அழைப்புக்கிணங்கியே நாங்கள் படையெடுத்தோம். அதில் எங்கள் குற்றம் என்ன இருக்கிறது? குற்றஞ் செய்வதற்கு யார் வழிகாட்டியாயிருக் கிறார் களோ அவர்கள்தான் குறைகூறப்படவேண்டியவர்களே தவிர அவர்களைப் பின்பற்றிச் செல்கிறவர்களல்ல. இதை நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். எங்களையழைத்த உங்கள் ராஜ்யத்துப்பெரியதனக்காரர்களையோ எங்களையோ நீங்கள் குற்றஞ் சொல்லமுடியாது. அவர்கள் - உங்கள் ராஜ்யத்துப் பெரியதனக்காரர்கள் ---- உங்களைப் போன்ற பிரஜைகள்; உங்களைக் காட்டிலும் அதிகமான சொத்து சுதந்திரங்களுடையவர்கள். அவர்கள், நகரத்துக் கோட்டை வாயில்களை எங்களுக்குத் திறந்து விட்டார்கள். சத்துருக்களாக அல்ல, நண்பர்களாக எங்களை வரவேற் றார்கள். ஏன்? உங்களிலே கெட்டவர்களாயுள்ளவர்களை, இன்னும் கெட்டுப் போகாமல் தடுக்க; கண்ணியமாக நடந்துகொள்கிறவர்களுக்கு உரிய மரியாதை செலுத்த; மனிதர்களைத் தாக்காமல் அவர்கள் கொண்டுள்ள கொள்கைகளில் திருத்தஞ் செய்ய. உங்களை நகரத்தி லிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டுமென்பது எங்கள் உத்தேசமல்ல; எல்லோருடைய நண்பர்களாகவும் உங்களை ஆக்கவேண்டு மென்பது தான் எங்கள் உத்தேசம். நாங்கள் நடந்துகொண்ட மாதிரியிலிருந்து, எங்களுக்கு விரோத மான எண்ணம் இல்லையென்பது நன்கு புலப்படும். நாங்கள் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. தேசீய பியோஷ்ய அரசாங்கத்தின்கீழ் வாழ விரும்புகின்றவர் அனைவரையும் எங்களுடன் வந்து சேருங்கள் என்று பகிரங்கமாக அழைத்தோம். இதற்கு, எங்களுடன் வந்து சேருவதற்கு, முதலில் நீங்கள் சந்தோஷமாக இசைந்தீர்கள்; எங்களுடன் ஓர் ஒப்பந்தமும் செய்து கொண்டீர்கள்; சிறிது காலம் அமைதியாகவும் இருந்தீர்கள்; நாங்கள் எண்ணிக்கையில் குறைவுடையவர்களாயிருக் கிறோமென்று தெரிந்ததும் மாறிவிட்டீர்கள். உங்களிலே, சாதாரண ஜனங்களுடைய சம்மதத்தைப் பெறாமல் நாங்கள் உங்கள் நகரத்தில் பிரவேசித்தது, ஓரளவு ஒழுங்கில்லாத முறையாயிருக்கலாம். எப்படியும், நாங்கள் உங்கள் விஷயத்தில் நடந்துகொண்டதைப்போல் நீங்கள் எங்கள் விஷயத்தில் நடந்துகொள்ளவில்லை. நாங்கள் எப்படி உங்கள் விஷயத்தில் பலாத்காரத்தை உபயோகிக்காமலிருந்தோமோ அதுபோல் நீங்களும் எங்கள் விஷயத்தில் பலாத்காரத்தை உபயோகியாமல், எங்களுடன் சமரஸமாகப் பேசி, எங்களை நகரத்தினின்று வெளியேறும்படி செய்திருக்கலாம். அப்படிச் செய்யாமல், செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு விரோதமாக எங்கள் மீது விழுந்து தாக்கி, எங்களிலே சிலரைக் கொன்றுவிட்டீர்கள். அதைக்கூட நாங்கள் குறையாகக் கூறவில்லை. ஏனென்றால் யுத்தத்தில் கொல்வதும் கொல்லப்படுவதும் சகஜம். ஆனால் யார் உங்களிடம் அடைக்கலம் பெற்றார்களோ, யாருடைய உயிரைப் போக்குவதில்லையென்று எங்களுக்கு வாக்களித்தீர்களோ அவர்களை அநியாயமாகக் கொலை செய்துவிட்டீர்கள். இஃது அருவருக்கத்தக்க செயலில்லை யென்று சொல்வீர்களானால் வேறு எதுதான் அருவருக்கத் தக்கது? முதலாவது, செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறினீர்கள்; இரண்டாவது, அடைக்கலம் புகுந்தவர்களைக் கொன்றுவிட்டீர்கள்; மூன்றாவது, அவர்களைக் கொலை செய்வதில்லையென்று கொடுத்த உறுதிமொழியினின்று பிறழ்ந்துவிட்டீர்கள். இப்படி ஒன்றன் பின்னொன்றாக மூன்று குற்றங்களை நீங்கள் செய்தபிறகும், உங்கள் சொத்துபற்றுக்களை நாங்கள் நாசஞ்செய்யாமலிருந்தோம். இருந்தும், நாங்கள் தான் குற்றவாளிகளென்று உறுதிப்படுத்தப் பார்க்கிறீர்கள்; உங்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாய தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறீர்கள். அது முடியவே முடியாது. இந்த நீதிபதிகள் சரியானபடி தீர்ப்புச் சொல்வார்களாயின், உங்களனைவரையும் சேர்த்துத் தண்டித்தேயாக வேண்டும். லாஸிடீமோனியர்களே! இவைதாம் நடந்த விஷயங்கள். உங்கள் பொருட்டும் எங்கள் பொருட்டும், இவைகளைப்பற்றிச் சிறிது சவிதார மாகக் கூறினோம். கைதிகளா யிருக்கும் இவர்களை - பிளாட்டீயர்களை - மரண தண்டனைக்குட்படுத்துவது நியாயமேயென்று நீங்கள் உணர வேண்டுமென்பதற்காகவும் இவர்கள்மீது வஞ்சந்தீர்த்துக்கொள்ள நாங்கள் விரும்புவதை உறுதிப்படுத்திக் காட்டுவதற்காகவுமே இவ்வளவு தூரம் சவிதாரமாகக் கூறினோம், இந்தப் பிளாட்டீயர்கள், தங்களிடம் முந்திச் சில நற்பண்புகள் இருந்தனவென்று கதை சொல்வார்களாயின் அதைக் கேட்டு மனமிளக்கம் கொண்டு விடாதீர்கள். அநீதிக்கு ஆளானவர்கள், தங்கள் பழைய நற்பண்புகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம். குற்றஞ் செய்த வர்கள் இங்ஙனம் விண்ணப்பித்துக் கொள்வார்களானால், தங்கள் குற்றத்தை அதிகப்படுத்திக் காட்டிக் கொண்டவர்களேயாவார்கள். ஏனென்றால் அவர்களுடைய மேலான பண்புகளை இது - விண்ணப்பித்துக் கொள்வது - பாதிக்கின்றதல்லவா? அழுது புலம்புவதனாலோ, உங்கள் மூதாதையர்களின் சமாதிகளுக்குவேண்டிக் கொள்வதனாலோ, நிர்க்கதி யான தங்கள் நிலைமையை எடுத்தச் சொல்வதனாலோ இவர்கள் எவ்விதமான சாதகத்தையும் பெறுதல் கூடாது. இவர்கள் இப்படிச் சொல்வார்களானால், நாங்களும், எங்கள் நாட்டு இளைஞர்கள் அடைந்த முடிவை எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கும். எந்த இளைஞர்களுடைய தகப்பனார்கள், பியோஷ்யாவை உங்கள் சகா ராஜ்யமாகச் செய்ய கொரோனீயாவில் போர்புரிந்து மடிந்தார்களோ, அல்லது சூனியமாகக் கிடக்கும் தங்கள் வீடுகளில் ஆதரவற்ற கிழவர்களாய் உட்கார்ந்திருக் கிறார்களோ அந்த இளைஞர்களை, எங்கள் நாட்டு இளைஞர்களை இவர்கள் படுகொலை செய்திருக்கிறார்கள். அதற்காக இவர்களுக்கு, கைதிகளாயிருக்கிற இவர்களுக்கு நீதி வழங்குங்கள், அதாவது தண்டனை விதியுங்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்ள எங்களுக்கு அதிகமான ஏதுவுண்டு. எங்கள் மீது இரக்கங் காட்டுங்கள் என்று இவர்கள் கேட்கிறார்கள். யார் துன்பம் அனுபவிக்கக்கூடாதவர்களோ அவர்களே இரக்கத்திற் குரியவர்கள்; இந்தப் பிளாட்டீயர்களைப்போல் துன்பத்தை அனுபவிக்க வேண்டியவர்கள் அனுபவிக்கும் பட்சத்தில் அது சந்தோஷப்படக் கூடிய விஷயமே. இவர்களுடைய தற்போதைய தனிப்பட்டநிலைமைக்கு, தங்களையேதான் இவர்கள் குறைகூறிக் கொள்ளவேண்டும். ஏனென்றால் நல்லதொரு கூட்டுறவை இவர்கள் வேண்டுமென்றே நிராகரித்து விட்டார்கள். நாங்கள் செய்த செயலுக்குப் பிரதியாக இவர்கள் அநீதச் செயல் புரிந்தார்களென்று சொல்லமுடியாது. எங்கள் மீதுள்ள துவேஷந் தான் இவர்களை அநீதச்செயல் புரியும்படி செய்தது. இப்பொழுதும் இவர்கள் கூறுகிற சமாதானம் எங்களுக்குத் திருப்தி தரவில்லை. யுத்தத்தில் இரக்கம் காட்டப்படவேண்டியவர்களாக இவர்களைக் கருதாமல், நியாய விசாரணைக்குட்படுவதான ஒப்பந்தத்திற்குட்பட்டு சரணாகதி யடைந்த கைதிகளாக இவர்களை விசாரிக்கவேண்டும்; சட்டரீதியான தண்டனைக்குட்படுத்த வேண்டும். லாஸிடீமோனியர்களே! கிரேக்கர்களுக்குப் பொதுவான சட்டத்தை இவர்கள் மீறிவிட்டார்கள்; அதற்காக இவர்களைத் தண்டித்து அந்தச் சட்டத்திற்கு மதிப்பிருக்கும்படி செய்யுங்கள். அந்தச் சட்டம் மீறப்பட்டதால் நாங்கள்தான் பாதிக்கப்பட்டிருக்கிறோம்; அந்தச் சட்டம் மதிப்பிழந்து போகாமலிருக்க வேண்டுமென்கிற விஷயத்தில் நாங்கள் காட்டிய உற்சாகத்திற்காக எங்களைச் சன்மானியுங்கள். இவர்களுடைய பேச்சை ஏற்றுக்கொண்டு எங்களை நிராகரித்துவிடாதீர்கள். வாய்ப்பேச்சிலல்ல, காரியத்தில் நியாயங் காணவே இவர்களை அழைத்திருக்கிறீர்களென்று அகில கிரீஸுக்கும் நிரூபித்துக் காட்டுங்கள். நல்ல காரியங்களைச் சுருக்கமான வார்த்தைகளில் சொல்லிவிடலாம்; கெட்ட காரியங் களைத்தான் அலங்கார பாஷையினால் மூடிக்காட்ட வேண்டியிருக் கிறது. கிரீஸிலுள்ள முக்கியமான ராஜ்யத்தினர் பலரும், நீங்கள் இப்பொழுது செய்கிறதைப்போல் செய்வார்களானால், ஒரே ஒரு கேள்வியைக் கேட்டு அதற்குக் கிடைக்கும் பதிலைக்கொண்டு முடிவு செய்வார்களானால், யாரும், தங்கள் கெட்ட செயல்களை மூடிக் காட்ட அழகிய வார்த்தைகளைத் தேடிக்கொண்டு செல்லமாட்டார்கள். தீபர்கள் இப்படிப் பேசி முடித்தார்கள். லாஸிடீமோனிய நீதிபதி களுக்கு. பிளாட்டீயர்கள் கூறிய சமாதானம் திருப்தி தரவில்லை. பிளாட்டீயர்கள் தங்களுக்கு - லாஸிடீமோனியர்களுக்கு - தீங்கிழைத் திருப்பதாகக் கருதிவிட்டார்கள். எனவே அவர்களை ஒவ்வொருவராக வரவழைத்து, லாஸிடீமோனியர்களுக்கும் அவர்களுடைய சகாக் களுக்கும் இந்த யுத்தத்தில் ஏதேனும் சகாயம் செய்திருக்கிறீர்களா என்று கேட்டார்கள். அவர்கள், இல்லையென்று பதில் சொன்னதும், ஒவ்வொரு வராகக் கொண்டுபோய் கொலை செய்வித்துவிட்டார்கள். இங்ஙனம் கொலை செய்யப்பட்டவர்கள் சுமார் இருநூறு பேருக்குக் குறைவிராது. இவர் களோடு, முற்றுகையில் அகப்பட்டுக்கொண்ட இருபத்தைந்து ஆத்தீனியர்களும் கொலையுண்டார்கள். பிளாட்டீயா, தீபர்கள் வசம் ஒப்புவிக்கப்பட்டது. சுமார் ஒரு வருஷத்திற்குப் பிறகு தீபர்கள், இந்த நகரத்தைத் தரையோடு தரையாக அழித்துவிட்டார்கள்; இந்த அழிவின்மீது ஹீரா1 என்ற தேவதைக்கு ஒரு கோயிலும், கோயிலுக்கு வரும் யாத்திரீ கர்களுக்கு உபயோகப்படக்கூடிய ஒரு சத்திரமும் கட்டுவித்தார்கள். நிலங்களையெல்லாம், பத்து வருஷ குத்தகையின் பேரில் தீபர் களுக்குப் பகிர்ந்து கொடுத்தார்கள். இங்ஙனம் பிளாட்டீயா விஷயத்தில் லாஸிடீமோனியர்கள் விரோத மனப்பான்மை கொண்டது, தீபர்களைச் சந்தோஷப்படுத்துவதற்குத் தான். இப்படிச் சந்தோஷப்படுத்தி, தீபர்களைத் தங்களுக்குச் சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்ளலாமென்ற எண்ணம் லாஸிடீமோனியர்களுக்கு இருந்தது. சரியாகத் தொண்ணூற்று மூன்று வருஷ காலம் ஆத்தென்ஸின் சார்பு பற்றி நின்ற பிளாட்டீயா ராஜ்யம் அழிந்துபட்ட வரலாறு இது.  பத்தாவது அத்தியாயம் யுத்தத்தின் ஐந்தாவது வருஷம், கார்ஸைரா தீவில் ஒரு பெரிய உள்நாட்டுக் கலகம் துவங்கியது. பணக்காரக் கட்சியினருக்கும் ஜனக்கட்சி யினருக்குந்தான் பிணக்கு. கிரேக்க ராஜ்யங்கள் பலவற்றிலும் இந்த மாதிரியான பிணக்குகள் அடிக்கடி ஏற்பட்டு வந்தன. ஆனால் கார்ஸை ராவில் தோன்றிய இந்தப் பிணக்கு பெருங் கலகமாக முற்றி, சுமார் இரண்டு வருஷ காலம், யுத்தத்தின் ஏழாவது வருஷம்வரை நடைபெற்றது; அநேக உயிர்களைப் பலி வாங்கிக்கொண்டது; அழகான கார்ஸைராவைப் பாழ்படுத்தியும்விட்டது. வெளிநாட்டுப் படையெடுப்பைக் காட்டிலும், உள்நாட்டுக் குழப்பத்தினால் தான், கட்சிச் சண்டைகளினால்தான் ஒரு நாடு அதிகமாகச் சீரழிகிறது; அப்பொழுதுதான் ஜனங்களுடைய கீழான உணர்ச்சிகளெல்லாம் மேலுக்கு வந்து தாண்டவம் செய்கின்றன. இவை களையெல்லாம் துஸிடிடீ மிகத் தெளிவாக வருணித்துக் காட்டுகிறான். இந்தக் கார்ஸைரா கலகத்தில் ஆத்தீனியர்கள், ஜனக்கட்சி யினருக்குச் சாதகமாகவும், பெலொப்பொனேசியர்கள், பணக்காரக் கட்சி யினருக்குச் சாதகமாகவும் முறையே இருந்தனர். இதனால் இவர்களுக் குள்ளேயே - ஆத்தீனியர்களுக்கும் பெலொப்பொனேசியர்களுக்கும் - சிறுசிறு கடற்போர்கள் நடைபெற்றன. பெலொப்பொனேசியப் பெரும் போரின் ஒரு சிறிய அமிசமே இந்தக் கடற்போர்கள். இரண்டு வருஷ காலம் நடைபெற்ற இந்தக் கார்ஸைரா கலகம் கடைசியில் ஜனக்கட்சியினருக்குச் சாதகமாக முடிந்தது; அவர்களே வெற்றி பெற்றனர். யுத்தத்தின் ஏழாவது வருஷம். இத்தலியின் தென்பாகத் திலும் சிஸிலி தீவிலும் யுத்தத்தின் எதிரொலி கேட்டது. இங்குச் சில நூற்றாண்டுகளுக்கு முந்தி தாபிதமாகி நடைபெற்று வந்த கிரேக்க ராஜ்யங்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டன. பெலொப் பொனேசியச் சார்பு பற்றி நின்ற ராஜ்யங்கள் ஒருகட்சி; ஆத்தீனியச் சார்புபற்றி நின்ற ராஜ்யங்கள் மற்றொரு கட்சி. முந்திய கட்சிக்குத் தலைமை வகித்தது ஸைரக்யூ.1 இது, கொரிந்த்தியாவிலிருந்து கி.மு. எட்டாவது நூற்றாண்டில் சென்று குடியேறிய டோரியர்களால் தாபிக்கப்பட்டது. இஃது ஐயோனியர்களால் தாபிக்கப்பட்டு ஆத்தென்ஸின் சார்புபற்றி நின்ற ராஜ்யங்களை ஆதிக்கம் கொள்ளப் பார்த்தது. இதனால், இந்த ராஜ்யங்களில் ஒன்றான லியோண்ட்டினி2 என்ற ராஜ்யம். ஆத்தென்ஸின் உதவியை நாடியது. இதற்கிணங்கி ஆத்தென், லாக்கெ3 என்பவனுடைய தலைமையில் ஒரு சிறு கடற்படையை அனுப்பியது. இதனால் அதிக பயன் விளையவில்லை. எனவே மறுபடியும், யுத்தத்தின் ஏழாவது வருஷம் - கி.மு. 425-ம் வருஷம் - யூரிமெடோன், ஸோப்போக்ளீ4 என்ற இருவருடைய தலைமையில் ஒரு கடற்படையை அனுப்பியது. கார்ஸைரா வழியாக இந்தப் படை செல்ல வேண்டுமென்பது உத்தரவு. மேற்சொன்ன இரண்டு தலைவர்களுடன் டெமாத்தனீ5என்பவனும் சேர்த்து அனுப்பப்பட்டான். எவ்விதப் பதவியும் இவனுக்குக் கொடுக்கப் படவில்லை. அப்பொழுது ஆத்தென்ஸில் பெற்றிருந்த ஜனக்கட்சியின் தலைவனான கிளியோனின் ஆதரவின்பேரில் இவன் இந்தப் படையுடன் சென்றான். இவனுக்கு ஓரளவு செல்வாக்கும் இருந்தது. இந்தக் கடற்படை, பெலொப்பொனேசியாவுக்கு மேற்குப் பக்கத்தி லுள்ள பைலோ6 என்ற துறைமுகத்திற்குச் சமீபம் வருகையில் ஒரு பெரிய புயற்காற்றெடுத்தது. இதனால் மேற்கொண்டு செல்ல முடியாமல் இந்தப் பைலோ துறைமுகத்திலேயே தங்கும்படி நேரிட்டது. இங்ஙனம் தங்கிய காலத்தில், படையினர், துறைமுகத்தை நன்றாக பந்தோபது செய்து வைத்தனர். சில நாட்கள் கழித்து, ஐந்து கப்பல்களுடன் டெமாத்தீனிஸை இங்கிருக்கும்படி செய்துவிட்டு, யூரிமெடோனும் ஸோப்போக்ளீஸும் மிகுதிப் படையுடன் கார்ஸைரா வழியாக சிஸிலி நோக்கிச் சென்றனர். ஆத்தீனியக் கடற்படையொன்று பைலோ துறைமுகத்தில் பந்தோபது செய்துகொண்டு தங்கியிருக்கிறதென்று தெரிந்ததும், பார்ட்டர்கள் கலக்கமடைந்தார்கள்; உடனே ஒரு கப்பற்படையைத் தயாரித்து அனுப்பினார்கள். இந்தப் படையானது, பைலோஸுக்குத் தெற்குப் பக்கத்திலுள்ள ப்பாக்ட்டீரியா1 என்னும் தீவில் வந்து முகாம் செய்துகொண்டு, தரையிலும் கடலிலுமாகப் பைலோஸைத் தாக்க முனைந்தது. இதனையறிந்த டெமாத்தனீ, வடக்கே கார்ஸைரா பக்கம் சென்று கொண்டிருந்த யூரிமெடோனுக்கும் ஸோப்போக்ளீஸுக்கும் செய்தி சொல்லியனுப்பினான்; உடனே ஒரு பகுதிப் படையைப் பிரித்தனுப்பும்படி கோரினான். இந்தப்படை, அதாவது யூரிமெடோன் - ஸோப்போக்ளீ படை, அப்பொழுது ஜாக்கிந்த்த1 என்ற தீவில் தங்கியிருந்தது. இப்படி ஒரு படை டெமாத்தனீஸின் உதவிக்கு வரக்கூடுமென்று ப்பாக்ட்டீரியாவில்2 முகாம் செய்து கொண்டிருந்த ப்பார்ட்டக் கடற்படைத் தலைவர்கள் ஊகித்துக் கொண்டு, இந்தப் படை வருவதற்கு முந்தியே டெமாத்தனீ படையைத் தாக்கி முறியடித்துவிட வேண்டுமென்று தீர்மானித்தார்கள். டெமாத்தனீஸும், தன் சிறு படையுடன் எதிர்த்து நிற்கத் துணிந்தான்; ப்பார்ட்டப் படையானது, கப்பல்களில் வந்து இறங்கிவிடாதபடி தடுக்க, கடற்கரையில் தனது படையினரை அணி வகுத்து நிற்கும்படி செய்தான்; செய்துவிட்டு அவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பின்வருமாறு பேசினான்:- படையினர்களே! துணிகரமான இந்தச் செயலில் துணைவர் களாக வந்திருக்கும் தோழர்களே! இப்பொழுது நமக்கு ஏற்பட்டுள்ள சங்கடமான நிலைமையில், நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கிற ஆபத்துகள் என்னென்னவென்று கணக்குச் செய்து பார்த்துக்கொண்டிருப்பதில், உங்களிலே யாரும் உங்களுடைய புத்திசாலித்தனத்தைக் காண்பிக்க மாட்டீர் களென்று நம்புகிறேன். அதற்கு மாறாக சத்துருக்களுடன் போர் கலக்க விரைவீர்களென்று எதிர்பார்க்கிறேன். அப்படி விரைந்து போர்கலப் பதில்தான் உங்களுடைய பாதுகாப்பு இருக்கிறது. நெருக்கடியான சந்தர்ப்பங்களில், கணக்குப் பார்த்துக் காரியங்களைச் செய்வதென்பது கூடாது; ஆபத்தை, எவ்வளவுக்கெவ்வளவு விரைவில் சந்திக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. சத்துருக்கள் அதிகம் பேராயிருக் கிறார்களே என்பதைக் கண்டு நாம் பயப்படாமல், நமக்குக் கிடைத்திருக்கிற அனுகூலங்களை உபயோகப்படுத்திக் கொண்டு சத்துருக்களுக்குச் சிறிதுகூட விட்டுக்கொடாமல் எதிர்த்து நின்றோமானால் வெற்றி நமக்கு நிச்சயமென்று என் மனத்தில் படுகிறது. நமக்குச் சாதகமாயுள்ள அமிசம் என்னவென்றால், சத்துருப் படை இறங்கக்கூடிய இடம் மிகவும் மோச மாயிருப்பது தான். நாம் இந்த இடத்தைவிட்டுப் பெயராமல் உறுதியுடன் நிற்கவேண்டும். அப்பொழுதுதான் நமக்குச் சாதகம். இந்த இடத்தைப் பாதுகாப்புச் செய்யாமல் விட்டுவிட்டோமானால், சத்துருக்கள் இங்கே இறங்குவது சுலபமாகிவிடும். அப்பொழுது அவர்களைத் தாக்கிப் பின்னடையச் செய்வது கடினமாகிவிடும். அவர்கள் கப்பல்களில் இருக்கிறபோது, அதாவது கரையில் வந்து இறங்குவதற்கு முன்னர், அவர்களைத் தாக்கித் துரத்துவதுதான் சுலபம்; கப்பல்களிலிருந்து இறங்கி, தரையில் நமக்குச் சரிசமானமான நிலையில் நின்று நம்மைத் தாக்கத் தொடங்குவார்களானால் நம் பாடு திண்டாட்டமாகிவிடும். சத்துருக்கள் அதிக எண்ணிக்கையுடையவர்களா யிருப்பதைக் கண்டு நீங்கள் அதிகமாக அஞ்ச வேண்டியதில்லை. எண்ணிக்கையில் அதிகம் பேராயிருந்தபோதிலும் அவர்கள் கொஞ்சம் கொஞ்சம் பேராகத் தான் கரையில் வந்திறங்க முடியும். ஏனென்றால், எல்லாக் கப்பல்களும் ஒரே சமயத்தில் கரையோரமாக வந்து நின்று துருப்புகளை இறக்கக்கூடிய வசதிகள் இங்கே கிடையாது. எனவே இந்த விஷயத்தில் அவர்களுக் கிருக்கிற கஷ்டங்கள், நமது எண்ணிக்கைக் குறைவுக்கு ஈடு செய்து விட்டது போலாகிவிடுகின்றன. பகைவர் நாட்டில் கப்பல்களிலிருந்து படைகளை இறக்குவது எவ்வளவு கஷ்டமென்பது உங்களுக்குத் தெரியும். அப்படி இறக்கிவிட்டாலும், இருக்குமிடத்தை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிற படையினரைப் பின்னடையச் செய்வது மிகக் கஷ்டம். ஆதலின், ஆத்தீனியர்கள் என்ற பெயருக்குப் பழுது வராமல், இந்த நெருக்கடியான சமயத்தில் இந்த இடத்தைவிட்டு அகலாது உறுதியுடன் நில்லுங்கள்; சத்துருக்கள் தரையைத் தொட்டுவிடாதபடி விரட்டி யடியுங்கள்; உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; இந்த இடத்தையும் காப்பாற்றுங்கள். டெமாத்தனீ விரும்பியபடியே ப்பார்ட்டப் படையினரை கரையில் இறங்க விடவில்லை ஆத்தீனியப் படையினர்; அவ்வளவு மும்முரமாக எதிர்த்து நின்றனர். இரண்டு நாட்கள் இங்ஙனம் சில்லரைப் பூசல்கள் நடைபெற்றன. மூன்றாவது நாள், டெமாத்தனீஸின் கோரிக்கைக்கிணங்க, ஜாக்கிந்த்த தீவிலிருந்து ஒரு கப்பற்படை, ஆத்தீனியர்களின் உதவிக்கு வந்தது; வந்ததும், ப்பார்ட்டக் கப்பற்படையைத் தாக்கித் தோல்வியுறச் செய்தது. ப்பார்ட்டக் கப்பல்கள் பல நாசமாயின. ப்பார்ட்டர்கள் பலர் ப்பாக்ட்டீரியாதீவிலேயே அகப்பட்டுக்கொண்டுவிட்டனர். பைலோஸில் நடைபெற்ற இந்தச் சம்பவம் ப்பார்ட்டாவுக்கு எட்டியது. அரசாங்க மேலதிகாரிகள் சிலர் பைலோஸுக்கு நேரில்வந்தனர்; மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுத்துக்கொள்வதென்பதைப்பற்றிப் படைத் தலைவர்களுடன் கலந்து யோசித்தனர்; ஆத்தீனியப் படைத் தலைவர்களுடன் தற்காலிகமாக ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதென்றும், ஆத்தீனிய அரசாங்கத்துடன் சமரஸம் பேச ஒரு தூதுகோஷ்டியை உடனே ஆத்தென்ஸுக்கு அனுப்புவதென்றும் தீர்மானித் தனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சாரமென்னவென்றால், ப்பார்ட்டர்கள், யுத்தத்தில் கலந்துகொண்ட கப்பல்களை பைலோ துறைமுகத்திற்குக் கொண்டுவந்து ஆத்தீனியர்கள் வசம் ஒப்புவித்துவிடவேண்டும்; ஆத்தீனியர்கள் பந்தோபது செய்துவைத்திருக்கும் இடங்களைத் தாக்கக் கூடாது; ப்பாக்ட்டீரியா தீவில் அகப்பட்டுக் கொண்டிருக்கிற ப்பார்ட்டர் களுக்கு, போதிய உணவுப் பொருள்கள் கொண்டுகொடுக்கப்பட ஆத்தீனியர்கள் அனுமதிக்கவேண்டும்; ஆத்தீனியர்களுடைய கண்காணிப்பிலேயே இவை அனுப்பப்படவேண்டும்; ஆத்தீனியர்கள், ப்பாக்ட்டீரியா தீவைக் கண்காணித்து வரவேண்டும்; ஆனால் ஆத்தீனியப் படைகள், அங்கு இறங்கக்கூடாது; கடல் வழியாகவோ தரை வழியாகவோ ப்பார்ட்டப் படை களைத் தாக்கக்கூடாது; ப்பார்ட்ட தூது கோஷ்டியொன்று ஆத்தென்ஸுக்குச் சென்று திரும்பி வரும் வரையில் இந்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும். இந்த ஒப்பந்தப் பிரகாரம் அறுபது ப்பார்ட்டக் கப்பல்கள் ஆத்தீனியர்கள் வசம் ஒப்புவிக்கப்பட்டன. ப்பார்ட்ட தூது கோஷ்டியொன்றும் ஆத்தென்ஸுக்குச் சென்றது. சென்றதும், தூதுகோஷ்டியின் தலைவன் ஆத்தீனியர்கள் முன்னிலையில் பின் வருமாறு பேசினான்:- ஆத்தீனியர்களே! (ப்பாக்ட்டீரியா) தீவிலுள்ள எங்கள் மனிதர்களைப் பற்றி ஏதேனும் ஓர் ஏற்பாட்டைச் செய்யவே லாஸிடீமோனியர்கள் எங்களை இங்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்த ஏற்பாடு, உங்களுடைய நலன்களைத் திருப்தி செய்யக்கூடிய முறையிலும், தற்போதைய எங்கள் துரதிருஷ்டமான நிலைமையில் - லாஸிடீமோனியர்களின் துரதிருஷ்ட மான நிலைமையில் - எங்களுடைய சுயமதிப்புக்குப் பொருந்துகிற வகையிலும் இருக்கவேண்டும். நாங்கள் சிறிது நீளமாகவே, ஆனால் எங்கள் நாட்டு வழக்கத்திற்கு விரோதமில்லாமல்1 பேச முற்படுகிறோம். அதிகமாகப் பேசவேண்டிய அவசியமில்லாதபொழுது குறைவாகவே பேசுவோம். ஆனால் முக்கியமான ஒரு விஷயத்தை உதாரணத்தின் மூலம் எடுத்துக்காட்ட நேரிடுகிறபொழுது, அப்படி எடுத்துக்காட்டு வதனால் நன்மையுண்டாகுமென்று தெரிகிறபொழுது சிறிது அதிகமாகப் பேசுதலும் கூடும். இடையிலே ஒரு வார்த்தை. நாங்கள் சொல்வதையெல்லாம் விரோத மனப்பான்மையுடன் எடுத்துக்கொள்ள வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறோம். உங்களுக்கு விஷயம் தெரியாது, அதனால் உங்களுக்குப் பிரசங்கம் செய்ய வந்திருக்கிறோமென்று நீங்கள் கருதக்கூடாது. எதையும் அலசி ஆராய்ந்து பார்க்கிற தன்மையுடையவர்களிடம், எந்த மாதிரி செய்தால் நன்றாயிருக்குமென்று யோசனை சொல்ல வந்திருக்கிறவர் களாகவே எங்களைக் கருத வேண்டும். நீங்கள் விரும்பினால் இப்பொழுது உங்களுக்குக் கிடைத்திருக்கிற வெற்றியை உங்களுக்கு அனுகூலந் தரும்படி உபயோகித்துக் கொள்ளலாம். அதாவது இப்பொழுது உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறதோ அதை அப்படியே வைத்துக்கொண்டு அதன் மூலம் கண்ணியத்தையும் கீர்த்தியையும் சம்பாதித்துக் கொள்ளலாம். அப்படிச் செய்வீர்களானால் விசேஷமான ஓர் அதிருஷ்டம் சிலருக்கு வந்துவிடுகிறதே, அவர்கள் செய்கிற தவற்றை நீங்கள் செய்யா மலிருக்கலாம். அடைந்த அதிருஷ்டத்தைக் கொண்டு திருப்தியடை யாமல் மேலும் மேலும் அடையவேண்டுமென்று பார்க்கிறார்களே அதுதான் அவர்கள் செய்கிற தவறு. இதற்குக் காரணம், அவர்கள் எதிர்பாரா மலிருக்கையிலேயே அவர்களுக்கு அதிருஷ்டம் வந்துவிட்டதுதான். நல்லது, கெட்டது இவற்றின் மாறுந்தன்மைகளை அறிந்துகொண்டிருக் கிறவர்கள், இவற்றின் செழுமையில், அதாவது இவை நீடித்து வளர்ந்து கொண்டு போகுமென்பதில் நம்பிக்கை கொள்ளாதவர்களே. இந்தப் பாடத்தை, நல்லதோ, கெட்டதோ எதுவும் பெருக்கமடையாது என்ற பாடத்தைக் கற்பிக்கக்கூடிய அனுபவம் எங்களுக்கும் உங்களுக்கும் நிறைய ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பாடத்தின் உண்மையை நீங்கள் உணர வேண்டுமானால், எங்களது தற்போதைய துரதிருஷ்டமான நிலையைப் பாருங்கள். எங்களுக்கிருந்த செல்வாக்கோ, மேலான அந்ததோ வேறெந்த கிரேக்க ராஜ்யத்திற்கு இருந்தது? அப்படியிருந்தும், இப்பொழுது உங்களை நாடி வந்திருக்கிறோம். எதைக் கேட்க உங்களிடம் இப்பொழுது வந்திருக் கிறோமோ அதை அளிக்கக்கூடிய சக்தி எங்களுக்கு உண்டு என்று நாங்கள் நம்பிக்கொண்டிருந்தோம். எங்களுடைய அதிகார சக்தி குறைந்து விட்டதனாலோ, எங்களுக்கு மேலான நிலைமையில் நாங்கள் தலைக் கிறுக்குக் கொண்டுவிட்டதனாலோ, எங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டதென்று சொல்லமுடியாது. அப்படியில்லை. எங்களுக்குச் சகாய மாயிருக்கக் கூடிய சக்திகள் எப்பொழுதும்போல் இருந்து கொண்டு தானிருக்கின்றன. ஆனால் சரியானபடி கணிக்கத் தவறிவிட்டோம்; அவ்வளவு தான். எல்லோருமே இந்த மாதிரியான தவறுதலுக்கு உட்படக் கூடும். உங்கள் ராஜ்யம் தற்போது ஆக்கம் பெற்றிருப்பதைக் கொண்டும், சமீப காலமாக அதற்கேற்பட்டிருக்கிற மேலான அந்ததைக்கொண்டும், அதிருஷ்டம் எப்பொழுதும் நம் பக்கலிலேயே இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். புத்திசாலிகளாயிருக்கப்பட்டவர்கள், தங்களுக்கு ஏதேனும் லாபம் கிடைத்தால், அஃது எந்த சமயத்திலும் கைநழுவிப்போய்விடக் கூடிய ஒன்று என்றே அதைக் கருதுகிறார்கள்; அப்படியே இடுக்கண் வந்துற்ற காலையில் சிறிதுகூட நிதானம் தவறாமலிருக்கிறார்கள்; போரை ஓர் எல்லைக்குட்படுத்தி நடத்த வேண்டுமென்று ஒருவர் என்னதான் விரும்பியபோதிலும், அது - போர் - அதிருஷ்டம் போகிறபோக்கில் போய் முடியுமென்று நினைக்கிறார்கள். இதனால் அவர்கள், போரில் வெற்றி கிடைத்தால் அதைக் கண்டு அதிக சந்தோஷப்பட்டு விடுவதில்லை. அப்படி அதிக சந்தோஷப்படாமலிருப்பதனால்தான் அவர்கள் அதிகமான துக்கத்தையடைவதில்லை. முடியுமானால் தங்களுக்கு நல்ல காலம் இருக்கிறபொழுதே சத்துருக்களுடன் சமாதானமாகப் போக இசைந்து விடுவார்கள். இங்ஙனம் சமாதானமாகப்போக, ஆத்தீனியர்களே! இப்பொழுது உங்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. சமாதானத்திற்கு இணங்குவீர்களானால், இணங்காமற்போனால் என்னென்ன கஷ்ட நஷ்டங்ள் உண்டாகக்கூடுமோ அந்தக் கஷ்ட நஷ்டங் களினின்று தப்பித்துக்கொண்டவர்களாவீர்கள்; ஏதோ அதிருஷ்ட வசத்தினால்தான் இப்பொழுதுள்ள சாதகமான நிலைமையில் இருந்து வருகிறீர்களென்ற அவச்சொல்லும் உங்களுக்கு ஏற்படாது; சக்தி வாய்ந்தவர்களென்றும் அறிவுடையவர்களென்றும் நற்பெயர் சம்பாதித்துக் கொண்டவர்களாவீர்கள். அந்த நற்பெயருக்கு எந்தவிதமான ஆபத்தும் உண்டாகாது. ஆதலின் லாஸிடீமோனியர்கள், போரை முடித்து, சமாதானத் திற்கு இசையுமாறு உங்களைக் கேட்கிறார்கள்; எல்லா வழிகளிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும், நேசப்பான்மையையும், நல்லுறவையும், சமாதானத்தையும் உங்களுக்கு அளிப்பதாக உறுதி கூறுகிறார்கள்; அதற்குப் பிரதியாக ப்பாக்டீரியா தீவிலுள்ள ப்பார்ட்டர்களை விடுதலை செய்து கொடுக்குமாறு கேட்கிறார்கள். இரண்டு கட்சியினரும் – ஆத்தீனியர் களும் ப்பார்ட்டர்களும் - கடைசி வரையில் பிடிவாதமாக இருக்க வேண்டாம். அப்படிப் பிடிவாதமாக இருக்கும் பட்சத்தில், (ப்பாக்ட்டீரியா) தீவிலுள்ளவர்கள், எப்படியாவது அந்தத் தீவிலிருந்து வெளியேறும் படியான நிர்ப்பந்தத்திற்குட்படுதல்கூடும்; அல்லது ஆத்தீனியப் படைகள், தீவைச்சுற்றிக் காவல் இருப்பதன் விளைவாக, அவர்கள் - தீவிலுள்ள ப்பார்ட்டர்கள் - அடியோடு மடிந்துபோதல் கூடும். பெரிய பகைமைகளை உண்மையிலேயே சமரஸமாக முடிவுபெறச் செய்ய வேண்டுமானால், பழிக்குப்பழி வாங்குவதனால் முடியாது; போர்க்களத்தில் வெற்றிபெறுவ தனால் முடியாது; சத்துருக்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்குப் பாதகமாயுள்ள ஓர் ஒப்பந்தத்திற்கு இணங்கும்படி செய்வதனாலும் முடியாது. இவைகளுக்கு மாறாக, போரிலே வெற்றி கண்டவர்கள், தங்களுக்குக் கிடைத்திருக்கிற அனுகூலங்களை விட்டுக் கொடுத்தல் வேண்டும்; இரக்க உணர்ச்சி கொள்ளவேண்டும். தாராள மனப்பான்மை காட்டுவதன் மூலம் எதிரிகளை வெற்றி கொள்ளவேண்டும்; சத்துருக்கள் எதிர்பார்த்ததைக்காட்டிலும் அதிக நிதானமான நிபந்தனைகளை அவர்களுக்கு விதிக்கவேண்டும். இந்த மாதிரியெல்லாம் பகைவர்கள் விஷயத்தில் நடந்துகொண்டால், அவர்கள், அந்தக் கணத்திலிருந்து, பலாத் காரமானது பழிவாங்கும் மனப்பான்மையை உண்டுபண்ணுகின்ற தல்லவா, அந்த மனப்பான்மையை விட்டொழித்து, தங்களிடம் காட்டப்பட்ட தாராள மனப்பான்மைக்குப் பிரதி செய்யவேண்டுமென்ற எண்ணங்கொண்டுவிடுகிறார்கள்; ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைக்க வேண்டுமென்பதில் சிரத்தை காட்டுகிறார்கள். பொதுவாக மனிதர்கள், மிகப் பெரிய பகைவர்களிடத்தில் இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள்; தங்களிடம் யார் முதலில் இணங்கி வருகிறார்களோ அவர்களுக்குத் தாங்களும் உடனே இணங்கிக் கொடுக்கிறார்கள். இந்த நியதிகளை எங்கள் விஷயத்தில் பொருத்திக் காட்டுவோம். உபய கட்சியினரும் சமாதானமாகப் போகவேண்டுமென்று சொன்னால் அதற்குச் சரியான சமயம் இதுதான். தவிர்க்கமுடியாத ஏதேனும் ஒரு சம்பவம் ஏற்பட்டு அதன் விளைவாக உங்கள்மீது முகமுகமாகவும் அரசியல் காரணமாகவும் எங்களுக்கு நிரந்தரமான வெறுப்பு ஏற்படத் தொடங்குவதற்கு முந்தி, உங்களுக்கு நாங்கள் இப்பொழுது அளிக்கிற சாதகமான சந்தர்ப்பத்தை இழப்பதற்கு முந்தி, சமாதானமாகப் போவது நல்லது. யுத்தத்தின் முடிவு தெரியாதிருக்கிற இந்த நிலையில், உங்களுக்கு, கீர்த்தியும் எங்களுடைய நட்பும் கிடைக்க இருக்கிறபொழுது, எங்களுடைய சுய மரியாதைக்குப் பங்கம் உண்டாகாமல் எங்களது சங்கடங்கள் ஒழுங்காகத்தீரக்கூடிய இந்த வேளையில் நாம் சமாதான மாகப் போய்விடுவோம். யுத்தத்திற்குப் பதில் சமாதானத்தை எங்களுக்குக் கொடுங்கள். கிரீ பூராவும் இப்பொழுது யுத்தத்தினால் சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சங்கடத்தினின்று கிரீஸை விடுதலை செய்யுங்கள். அப்படிச் செய்வீர்களானால் கிரேக்கர்களனைவரும் உங்களுக்கு வந்தனம் செலுத்துவார்கள். யுத்தத்தை யார் தொடங்கின ரென்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் சமாதானம் ஏற்படுமாயின் அதற்காக உங்களுக்கு நன்றி செலுத்துவார்கள். சமாதானம் ஏற்படுவது இப்பொழுது நீங்கள் செய்கிற முடிவிலே இருக்கிறது. சமாதானமாகப் போகவேண்டுமென்று முடிவு செய்வீர்களாயின், லாஸிடீமோனியர்களின் இணைபிரியா நண்பர்களாவீர்கள்; அவர்களுடைய நட்பைப் பலவந்த மாகப் பெறாமல், அவர்கள் அளிக்கும் நட்பைப் பெற்றுக் கொண்டவர் களாவீர்கள். லாஸிடீமோனியர்களின் நட்பினால் என்னென்ன சாதகங்கள் விளையக்கூடுமென்பதைச் சிறிது யோசித்துப் பாருங்கள். அட்டிக்காவும் ப்பார்ட்டாவும் ஒன்றுபடுவதனால் உண்டாகக்கூடிய பலம் இருக்கிறதே அதற்கு முன்னர், மற்ற கிரேக்க ராஜ்யங்களின் பலமெல்லாம் ஒன்று சேர்ந்தாலும், மிகக் குறைவாகவே இருக்கும். அப்பொழுது நமக்கு - அட்டிக்காவுக்கும் ப்பார்ட்டாவுக்கும் - கிரேக்க ராஜ்யங்கள் யாவும் அதிக மரியாதை செலுத்தும். தூதுகோஷ்டியின் சமாதானக் கோரிக்கைக்கு ஆத்தீனியர்கள் இணங்க மறுத்துவிட்டார்கள். எப்படியும் ப்பார்ட்டர்களிற் சிலர் ப்பாக்டீரியா தீவில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், இதனால் தம்மிஷ்டத்திற்கு நிபந்தனைகளை விதித்து ப்பார்ட்டாவுக்கு ஒரு நல்ல பாடங்கற்பிக்க வேண்டுமென்று இவர்கள் விரும்பினார்கள். இவர்கள் விதித்த நிபந்தனைக்கு ப்பார்ட்டா இணங்கவில்லை. எனவே ப்பாக்டீரியா தீவு முற்றுகை தொடர்ந்து நடைபெற்றது. சில்லரைப் போர்களும் இடை யிடையே நடைபெற்றுவந்தன. சிறிது காலங்கழித்து ஆத்தீனியர்களுக்கே முற்றுகையில் சலிப்பு ஏற்பட்டுவிட்டது. முற்றுகையிட்டவர்கள், முற்றுகையிடப்படுகிற நிலைக்கு வந்துவிடுவார்கள் போலிருந்தது. இந்தச் சலிப்பு, கிளியோனின் மீது வெறுப்பாக மாறத் தொடங்கியது. ஏனென்றால் இவன்தான், தூதுகோஷ்டியின் சமாதானக் கோரிக்கைக்கு இணங்கக்கூடாதென்று வற்புறுத்தியவன்; ஏற்கனவே சொன்னபடி, ஜனக்கட்சியின் தலைவனாக நல்ல செல்வாக்குடனிருந்தான். இவனுடைய பேச்சுக்கு ஜன சபையில் அதிக மதிப்பிருந்தது. இவன், தன்மீது ஏற்பட்ட வெறுப்பை மாற்ற வேண்டி, தானே ஒரு படையுடன் ப்பாக்ட்டீரியாவுக்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்தத் திற்குட்பட்டான். செல்லுமுன்னர், ப்பாக்டீரியாவிலுள்ள ப்பார்ட்டர்களை அப்படியே கைது செய்து வருகிறேன்; அல்லது அவர்களை அடியோடு நாசஞ் செய்துவிட்டு வருகிறேன் என்று சூளுரை பகர்ந்தான். அப்படியே சென்று, ப்பாக்ட்டீரியாவிலிருந்த ப்பார்ட்டர்களில் இறந்தவர்கள் போக இருந்தவர்கள் இருநூற்றுத்தொண்ணூற்றிரண்டு பேரைச் சிறைப்படுத்தி ஆத்தென்ஸுக்குக் கொண்டு வந்தான். இங்ஙனம் இவன் ப்பாக்ட்டீரியாவில் வெற்றி காண்பதற்குத் துணையாயிருந்தவன் டெமாத்தனீதான். இதற்குப் பிறகு சுமார் மூன்று வருஷங்கழித்து, கி.மு. 421-ம் வருஷம் ப்பார்ட்டாவுக்கும் ஆத்தென்ஸுக்கும் தற்காலிகமான ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கு நிக்கியா சமாதான ஒப்பந்தம்1 என்று பெயர். ஏனென்றால் நிக்கியா2 என்பவன், இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதற்குக் காரணமாயிருந்தவன். இந்த ஒப்பந்தப் படி ஆத்தென்ஸுக்குக் கொண்டு வரப்பட்ட ப்பார்ட்டக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.  பதினோராவது அத்தியாயம் யுத்தத்தின் ஏழாவது வருஷம், சிஸிலித் தீவிலுள்ள லியோண்ட்டினி ராஜ்யத்தின் வேண்டுகோளுக்கிணங்க, யூரிமெடோன், ஸோப்போக்ளீ இவர்களுடைய தலைமையில் ஆத்தீனியக் கடற்படையொன்று சென்ற தல்லவா, இஃது அங்குப் போய்ச் சேர்ந்தபொழுது, சிஸிலியின் அரசியல் நிலைமையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இந்த மாற்றம், ஆத்தென்ஸுக்குப் பெரிய ஏமாற்றத்தை உண்டு பண்ணிவிட்ட தென்று சொல்லவேண்டும். சிஸிலி தீவிலுள்ள ராஜ்யங்கள், ஒன்றுக் கொன்று சண்டை போட்டுக்கொண்டிராமல் ஐக்கியப்பட்டிருக்க வேண்டு மென்ற ஓர் இயக்கம் தோன்றியது. சிஸிலியிலுள்ள ராஜ்யங்கள் பலவும், தங்களுக்குள் ஏற்படும் அபிப்பிராயபேதங்களையோ, மனமாற்சரியங் களையோ தாங்களே சமரஸமாகத் தீர்த்துக் கொள்ளவேண்டும், அந்நியர் களைப் புகவிட்டு அவர்களுடைய ஆசைக்கோ, ஆதிக்கத்திற்கோ இரையாகிவிடக் கூடாதென்பதே இந்த இயக்கத்தின் கொள்கையா யிருந்தது. அந்நியர்களென்று சொன்னால், சிஸிலிக்குப் புறம்பாக வசிக்கும் கிரேக்கர்கள் கூட அந்நியர்கள்தான். சிஸிலியில் வசிக்கும் கிரேக்கர்களின் நலன்களும் அரசியல் விவகாரங்களும் வேறு, மற்ற கிரேக்க ராஜ்யங்களின் நலன்களும் அரசியல் விவகாரங்களும் வேறு; எனவே, சிஸிலியிலுள்ளவர்களே, சிஸிலியின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்; சிஸிலியின் அரசியல் விவகாரங்களை ஒழுங்குப் படுத்திக்கொள்ள வேண்டும்; இந்த மாதிரியான கருத்துக்களே, இந்த இயக்கத்தின் சார்பாக வெளியிடப்பட்டன. இதன் ஆதரவில், கேலா1 என்ற இடத்தில் கி.மு. 425-ம் வருஷம் ஒரு மகாநாடு கூடியது. இந்த மகாநாட்டில் பிரதான புருஷனாயிருந்தவன் ஹெர்மோக்கிராட்டீ2 என்பவன்; வைரக்யூ வாசி. இவன், மகாநாட்டில் பின்வருமாறு பேசினான்:- சிஸிலியர்களே! நான் இப்பொழுது பேச முன் வந்திருக்கிறேனென்று சொன்னால், என்னுடைய (ஸைரக்யூ) ராஜ்யம், சிஸிலியில் மிகச் சிறியது என்பதனாலல்ல; யுத்தத்தினால் அதிக கஷ்டத்தை அடைந்திருக்கிறது என்பதனாலுமல்ல; சிஸிலி தீவு பூராவுக்கும் ஏற்றதென்று எனக்குப் படுகிற கொள்கையைப் பகிரங்கமாகத் தெரிவிப்பதற்குத்தான். யுத்த மானது ஒரு தீமையென்பதை நீங்களெல்லோரும் அறிவீர்கள். இதைப் பற்றி விதரித்துக் கூறி உங்களுக்குச் சலிப்பு உண்டுபண்ண நான் விரும்ப வில்லை. யுத்தத்தின் விளைவுகளை அறியாமல் யாரும் யுத்தத்தில் இறங்குவதில்லை. அப்படியே யுத்தத்தினால் ஏதேனும் லாபங்கிடைப்ப தாயிருக்கும் பட்சத்தில், அதிலிருந்து பயங்காரணமாகப் பின்வாங்கிக் கொள்வதுமில்லை. போர் தொடுக்கிறவர்கள், தங்களுக்கு நேரிடக்கூடிய ஆபத்தைக்காட்டிலும் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய லாபத்தையே பெரிதாகக் கருதுகிறார்கள்; போர் தொடுக்கப்படுகிறவர்களோ, இருப்பதை விட்டு கொடுப்பதைக் காட்டிலும் ஆபத்தை எதிர்த்து நிற்பதே மேலான தென்று கருதுகிறார்கள். ஆனால் இரு கட்சியினரும் தவறான காலத்தில் தங்கள் நடவடிக்கைகளைத் தொடங்குவார்களானால், சமாதானமாகப் போய்விடுங்களென்று அவர்களுக்கு ஆலோசனை சொல்வது உபயோக மற்றதாகப் போகாது. தற்பொழுது நமக்குத் தேவையாயுள்ளது சமாதானமே. நம் பலருடைய சொந்த நலன்களை முன்னிட்டு நாம் யுத்தத்தில் ஈடுபட்டோம். இப்பொழுது அதே நலன்களுக்காகவே எப்படிச் சமாதான மாகப் போவது என்பதைப்பற்றி வாதித்துக்கொண்டிருக்கிறோம். நமது உரிமைகளென்று நாம் எவைகளை நினைக்கிறோமோ அவைகளை நாம் அடையாமல் நாம் பிரிவோமானால் மீண்டும் நாம் யுத்தத்தில் ஈடுபடவேண்டியதுதான். நாம் புத்திசாலிகளாயிருக்கும் பட்சத்தில், இந்த மகாநாட்டில், நம் ஒவ்வொரு ராஜ்யத்தினருடைய தனிப்பட்ட நலன்கள் மட்டும் ஆபத்தி லிருக்கின்றனவென்று பார்க்கக்கூடாது; சிஸிலித் தீவைக் காப்பாற்ற நமக்கு இன்னமும் அவகாசமிருக்கிறதா என்ற பிரச்னையும் இருக்கிறது; அதையும் கவனிக்க வேண்டும். சிஸிலித் தீவு முழுவதும், என்னுடைய அபிப்பிராயத்தில் ஆத்தென்ஸின் பேராசைக்கு இரையாகிவிடக்கூடிய பயத்திற்குட்பட்டிருக்கிறது. ஹெல்லாஸிலேயே முதன்மையான ராஜ்ய மாயிருக்கப்பட்ட ஆத்தென், தற்போது நமது கடற்பகுதியில் ஒரு சிறு கப்பற்படையுடன் வந்து நின்று நமது தவறுகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறது; நேச ஒப்பந்தம் என்ற நற்பெயரால், நம்மிடையேயுள்ள பரபரப் பகைமைகளைத் தனக்குச் சாதகமாக உபயோகித்துக்கொள்ளப் பார்க்கிறது இந்த ஆத்தென்ஸை சேர்ந்தவர்களும், ஆத்தீனியர்களும் சமாதானம் அவசியமென்பதற்கு நான் என்னென்ன ஆதாரங்களை எடுத்துக் காட்டக்கூடுமோ அவைகளைக்காட்டிலும் அதிகமான ஆதாரங் களைத் துடுக்குடன் எடுத்துக்காட்டக்கூடும். நாம் ஒருவர்க்கொருவர் சண்டை போட்டுக்கொள்ள வேண்டுமானால், அப்படிச் சண்டை போட்டுக்கொண்டு, அழைப்பில்லாமலேயே தங்களுடைய படை பலத்துடன் வரக்கூடியவர்களுடைய உதவியை, அதாவது ஆத்தீனியர் களுடைய உதவியை நாடுவோமானால், நம்மை நாமே ஊறுபடுத்திக் கொள்வோமானால், அதே சமயத்தில் அவர்களுடைய ஆதிக்கத்திற்கு வழிகோலிக் கொடுத்தவர்களாவோமானால், நமது பரபரச் சண்டைகளின் விளைவாக நாம் சோர்ந்து போனதும், அவர்கள் - ஆத்தீனியர்கள் - பெரும்படையுடன் வந்து நம்மனைவரையும் தங்கள் ஆதிக்கத்திற்குட்படுத்திக் கொள்வார்கள். நம்மோடு நேசமாயிருக்கிற ராஜ்யத்தினரை உதவிக்கு அழைத்து அவர்களோடு சேர்ந்து ஆபத்தை மேற்கொள்வதாயிருந்தால், அதன்மூலம், அப்படி ஆபத்தை மேற்கொள்வதன் மூலம், நமக்கும் அவர்களுக்கும் புதிய பிரதேசங்கள் கிடைப்பதாயிருக்கவேண்டும்; அப்படிக்கின்றி நமக்கோ அவர்களுக்கோ ஏற்கனவேயுள்ள பிரதேசங்கள் அழிவதாயிருக்கக்கூடாது; அழிவதற்காக ஆபத்தை மேற்கொள்ளக்கூடாது. இப்படி நடந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஒரு சமூகமும் மற்றொரு சமூகமும் பிணக்குக்கொள்ளும் பட்சத்தில், கடைசியாக இரண்டு சமூகங்களுமே அழிந்துபோகின்றன. அதுபோல், சிஸிலியப் பிரஜைகளாகிய நாம், நம்மனைவருக்கும் பொதுவாயுள்ள சத்துருவின்மீது கவனஞ் செலுத்தாமல் விட்டுவிட்டு, நமக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள் வோமானால் சிஸிலித் தீவுக்கே அழிவுதான். ஆதலின், நம்மிடையே, மனிதருக்கும் மனிதருக்குமுள்ள பகைமைகளை ராஜ்யத்திற்கும் ராஜ்யத்திற்குமுள்ள பகைமைகளை மறந்து, இந்தத் தீவு முழுவதையும் காப்பாற்றும் முயற்சியில் ஒற்றுமையுடன் முனையவேண்டும். ஆத்தீனியர்கள், டோரியர்களுக்குமட்டும் விரோதிகள் என்று யாரும் நினைக்கவேண்டாம்; ஓரினத்திற்கு மற்றோரினத்தினர்மீது கொண்ட பகைமையினால் இந்தப் படையெடுப்பு ஏற்பட்டிருக்கிறதென்றும் நினைக்க வேண்டாம். சிஸிலித் தீவில் நம்மெல்லோருக்கும் பொதுச் சொத்துக்களாயுள்ள நல்லனவற்றையெல்லாம் சுவாதீனப் படுத்திக் கொண்டு அனுபவிக்க வேண்டுமென்ற ஆசையே, இந்தப் படை யெடுப்புக்குத் தூண்டு கோலாயிருக்கிறது. ஆத்தீனியர்கள் இந்த மாதிரி ஆசைகொண்டிருப்பதும், இதனை நிறைவேற்றிக்கொள்ள முயல்வதும் மன்னிக்கக் கூடியவையே. ஆள வேண்டுமென்று ஆசைப்படுகிறவர்களை நான் குறைகூற மாட்டேன். ஆனால் அவர்களுக்குச் சேவகஞ் செய்யத் தயாராயிருக்கிறார்களே அவர் களைத்தான் குறைகூறுவேன். தங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவர்களை ஆள முற்படுவது எப்படி மனிதர்களுடைய சுபாவமாயிருக்கிறதோ அப்படியே ஆட்படுத்த முயல்கிறவர்களை எதிர்த்து நிற்பதும் மனிதர் களுடைய சுபாவமாயிருக்கிறது. ஒன்றுக்கொன்று மாறுபாடானதல்ல. இந்த ஆபத்துக்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறவர்கள், பார்த்துக் கொண்டிருந்தும் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யாதவர்கள், நம்மனை வருக்கும் நேர்ந்துள்ள பொதுவான ஆபத்தை ஒழித்துக்கட்ட நாமனை வரும் ஒன்றுபடவேண்டியது நமது முதற்கடமையென்று மனத்தை திடப் படுத்திக்கொள்ளாமல் இங்கு வந்திருக்கிறவர்கள், அனைவரும் நிலைமையைச் சரிவர உணராதவர்களே. இந்தப் பொதுவான ஆபத்தை நாம் விரைவிலே விலக்கிக்கொள்ள, சீக்கிரமான வழியென்னவென்றால், நாமனைவரும் ஒருவருக்கொருவர் சமாதானமாகப் போதலேயாம். ஏனென்றால், ஆத்தீனியர்கள், தங்கள் சொந்த நாட்டிலிருந்து நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கவில்லை; அவர்களை யார் அழைத்தார்களோ அவர்களுடைய நாட்டிலிருந்து நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக் கிறார்கள். ஆதலின் நம்மிடையே சமாதானம் நிலவுதல் அவசியமாயிருக் கிறது. யுத்தமானது, மற்றொரு யுத்தத்தைக் கிளறிவிடுகிறதே தவிர வேறொன்றுமில்லை. அப்படி நாம் சமாதானமாகப் போய்விட்டால், நன்னோக்கத்துடனின்றி வந்திருக்கும் ஆத்தீனியர்கள், தங்கள் காரியம் கைகூடாமலேயே திரும்பிப் போய்விடுவார்கள். ஆத்தீனியர்களைப் பொறுத்தமட்டில் நாம் இந்த மாதிரி நடந்து கொள்வதுதான் புத்திசாலித்தனமாயிருக்கும். இது தவிர, சமாதான மென்பது, உலகத்தினரனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு நல்வர மாகும். இதனை நமக்குள்ளேயே உண்டுபண்ணிக்கொள்ளாமலிருக்கலாமா? நாம் ஒருவர்மீது ஒருவர் சாட்டும் குற்றங்களுக்கெல்லாம் பரிகாரம் சமாதானமாகப் போவதுதானே தவிர யுத்தத்தில் ஈடுபடுவதல்ல. தவிர, சமாதானத்தினால் எத்தனையோ விதமான அனுகூலங்கள் உண்டென்றாலும், அவைகளைப்பற்றி நான் இங்கு விதரித்துச் சொல்ல விரும்பவில்லையானாலும், ஒன்றைமட்டும் கூறலாமென்று கருது கிறேன். யுத்தத்தினால் எவ்வளவு துன்பங்கள் ஏற்படக்கூடுமோ அவ்வளவு கௌரவங்களும் பெருமைகளும் சமாதானத்தினால் ஏற்படும்; அவைகளை அடைவதில் அதிக சிரமத்தையும் மேற்கொள்ள வேண்டுவதில்லை. இந்தக் காரணங்கள், என்னுடைய வார்த்தைகளை நீங்கள் அலட்சியப் படுத்தக்கூடாதென்று உங்களுக்குப் பாடங்கற்பிக்கப் போதுமானவை யாயிருக்கும். நாமனைவரும், நம் ஒவ்வொருவருடைய நன்மையை முன்னிட்டு, பாதுகாப்பை உத்தேசித்து, சமாதானமாக வாழ்தலே சிறப்பு. இங்குக் கூடியுள்ளவர்களில் யாரேனும், உரிமையை வற்புறுத்தி யோ, பலத்தை உபயோகித்தோ, தங்களுடைய நோக்கத்தை நிறை வேற்றிக்கொள்ளலாமென்று நினைத்திருந்தால், அவர்கள், எதிர்பாராத விதத்தில் சமாதானம் ஏற்படுமானால் அதைக் கண்டு ஆசாபங்க மடையவேண்டாம். குற்றஞ்செய்தவர்களைத் தண்டிக்க வேண்டுமென்று இதற்குமுன் எத்தனையோ பேர் முயற்சி செய்தார்கள். ஆனால் அந்த முயற்சியில் தவறிவிட்டார்கள்; தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக்கூட முடியாதவர்களாகப் போய்விட்டார்கள். ஒரு லாபத்தை அடையும் பொருட்டு, பலாத்காரத்தை நம்பினார்கள் எத்தனையோ பேர். ஆனால் அவர்கள், லாபத்தை அடையாமற்போனதோடு இருந்ததையும் இழந்து விட்டார்கள். வஞ்சந்தீர்ப்பதென்பது எப்பொழுதுமே வெற்றி பெறுவ தில்லை. எதிர்காலத்தில் என்ன நடைபெறுமென்று சொல்ல முடியாது. அதனுடைய செல்வாக்குத்தான், எதிர்காலத்தினுடைய செல்வாக்கு தான், நம்முடைய திட்டத்தில் அதிகமான செல்வாக்கைப் பெற்றிருக் கிறது. அதிகமான துரோகத்தைச் செய்யக்கூடியது அதுதான். ஆனால் எல்லாப் பொருள்களைக் காட்டிலும் அதுவே, எதிர்காலமே, அதிக பிரயோஜனத்தைத் தரக்கூடியதாயிருக்கிறது. ஏனென்றால், அது, நம்மெல்லோரையும் பயமுறுத்தி வைக்கிறது; அதனால் பிறரைத் தாக்குவதற்கு முன்னர் நன்கு ஆலோசிக்கும்படி நம்மைச் செய்கிறது. எதிர்காலத்தைப்பற்றிய பயம், ஆத்தீனியர்களுடைய வருகை யினால் நிகழ்காலத்தில் உண்டாயிருக்கிற பயம் ஆகிய இவ் விரண்டையும் நம் மனத்தில் கொள்வோமாக. இவ்விரண்டு பயங் களினாலேயே, நாம் ஒவ்வொருவரும் வகுத்துக்கொண்டிருக்கும் திட்டங்கள் நிறைவேறவில்லையென்பதைக் கருதுவோமாக. நம் அனுமதியில்லாமல் நம் நாட்டுக்குள் பிரவேசித்திருக்கிற அந்நியர்களை - ஆத்தீனியர்களை - அப்புறப்படுத்துவோமாக. நமக்குள்ளே நிரந்தரமான ஒரு சமாதானத்தைச் செய்துகொள்ள முடியாவிட்டால், எவ்வளவு காலத்திற்கு முடியுமோ அவ்வளவு நீண்ட காலத்திற்கு அமுலில் இருக்கும்வண்ணம் ஒரு சமாதான ஒப்பந்தத்தையேனும் நிறை வேற்றிக்கொள்வோமாக. நமது பரபர வேற்றுமைகளைப் பிறிதொரு நாளுக்குத் தள்ளிவைத்துக் கொள்வோமாக. என்னுடைய ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படுமாயின், நாம் ஒவ்வொருவரும் சுதந்திர நாட்டிலே சுதந்திரப் பிரஜைகளாக வாழ்ந்து கொண்டிருக்கலாம்; நல்லதோ, கெட்டதோ, நம்முடைய விதியை நாமே நிர்ணயித்துக்கொள்ளலாம். என்னுடைய ஆலோசனை நிராகரிக்கப்படுமாயின், மற்றவர்களின் சார்பு பற்றியே நாம் நிற்கவேண்டியிருக்கும்; மற்றவர்கள் நம்மை அவமானப் படுத்துவார்களானால் அந்த அவமானத்தைத் தடுக்க முடியாத அசக்தர் களாகிவிடுவோம்; நமது பரம விரோதிகளாயிருந்தவர் களின் நண்பர் களாகவும், ஏற்கனவே நண்பர்களாயிருந்தவர்களின் விரோதிகளாகவும் ஆகிவிடுவோம். என்னைப் பொறுத்தமட்டில், முதலிற் சொன்னபடி நான் ஒரு பெரிய ராஜ்யத்தின் பிரதிநிதியாயிருந்த போதிலும், தற்காத்துக்கொள்ளுஞ் சக்தியைக் காட்டிலும் தாக்குஞ் சக்தியை அதிகமாகவுடைய ராஜ்யத்தைச் சேர்ந்தவனாயிருந்தபோதிலும், பொதுவாக நம்மனைவருக்கும் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை ஒருவாறு என் மனக்கண்ணால் பார்க்க முடிகிறது. என்னுடைய சத்துருக்களுக்குத் தீங்கு உண்டு பண்ண வேண்டு மென்பதற்காக என்னை நான் அழித்துக் கொள்ள விரும்பவில்லை. நாம் வகுக்கும் திட்டங்கள் நிறைவேறுவதோ, அதிருஷ்டமோ நம் சுவாதீனத் திலில்லை. இது தெரிந்தும், சத்துருக்களின்மீது கொண்ட பகைமை யினால் இவை நம் வசத்திலிருக்கின்றனவென்று நினைக்கின்றவனல்லன் நான். பகைமையினால் குருடனாகி விடமாட்டேன். நியாயத்திற்குக் கட்டுப்பட நான் எப்பொழுதும் தயாராயிருக்கிறேன். இது விஷயத்தில் நீங்களெல்லோரும் என்னைப் பின்பற்ற வேண்டுமென்று கோருகிறேன். அப்படிப் பின்பற்றுவது, சத்துருக்களின் செயல்களினால் நிர்ப்பந்திக்கப் பட்டுப் பின்பற்றுவதாயிராமல் நீங்களே சுயமாகப் பின்பற்றுவதா யிருக்க வேண்டும். ஒரே இனத்தினர் போலிருக்கப்பட்டவர்கள், ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுப்பதென்பதில் கேவலமெதுவு மில்லை. இது தவிர, நாமனைவரும் அக்கம்பக்க வாசிகள்; ஒரே நாட்டில் வசிக்கிறவர்கள்; ஒரே கடலால் சூழப்பட்டவர்கள்; சிஸிலியர்கள் என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகிறவர்கள். காலம் வரின் நாம் ஒருவருக் கொருவர் சண்டை போட்டுக்கொள்ளலாம்; சமாதானமும் செய்து கொள்ளலாம்; ஆனால் வெளிச் சத்துருவுக்கு முன்னர் நாம் ஒற்றுமைப்பட்டிருக்கவேண்டும். நம்மிலே ஒருவருக்கு ஊறு உண்டாகு மானால் அஃது எல்லோரையும் பாதிக்கும். நேசக்கட்சியினர் என்று சொல்லிக்கொண்டு வருகிறவர்களையோ, மத்தியதம் செய்துவைப்ப தாகச் சொல்லிக்கொண்டு வருகிறவர்களையோ யாரையும் இனி இந்தத் தீவுக்கு வருமாறு அழைக்கமாட்டோம். அப்படி அழைக்காமலிருந் தோமானால், ஆத்தீனியர்களையும் அப்புறப்படுத்தினவர்களாவோம்; நாமும், நமது உட்பகைமைகளிலிருந்து விலகிக்கொண்டவர் களாவோம். அப்பொழுதுதான், எதிர்காலத்தில் நாம் நமது நாட்டில் சுதந்திரத்துடன் வாழமுடியும்; வெளிநாட்டினரால் தொந்தரவுபடுத்தப்படவும் மாட்டோம். ஹெர்மோக்கிராட்டீஸின் ஆலோசனை, மகாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆத்தென்ஸை உதவிக்கு அழைத்த லியோண்ட்டினி உட்பட சிஸிலி ராஜ்யங்கள் பலவும் தங்களுக்குள் சமாதானம் செய்து கொண்டன. ஆத்தீனியக் கப்பற்படையும் ஒன்றுஞ் செய்ய முடியாமல் திரும்பிவிட்டது.  பன்னிரண்டாவது அத்தியாயம் யுத்தத்தின் எட்டாவது வருஷம், கிரீஸின் வடபகுதியில் ஆத்தென்ஸின் செல்வாக்குக்குட்பட்ட ராஜ்யங்கள் பல இருந்தன. இவற்றை அதற்கு விரோதமாகக் கிளப்பிவிட்டு அதன் செல்வாக்கைக் குலைக்கக் கருதியது ப்பார்ட்டா; தகுந்த வாய்ப்பும் பெற்றது; பிராஸிடா என்பவன் தலைமையில் வடக்கு நோக்கி ஒரு படையை அனுப்பியது. இவன் பல ராஜ்யங்களைக் கடந்து சென்று கடைசியில், கால்ஸிடீஸி தீபகற்பத்திலுள்ள அக்காந்த1 என்ற ஒரு சிறு நகர ராஜ்யத்திற்குப் போய்ச் சேர்ந்தான். இஃது, ஆத்தென்ஸின் செல்வாக்குக்குட்பட்டிருந்தது. ஆத்தென்ஸிடம் இதற்கு அதிகமான அதிருப்தியும் இருக்கவில்லை. ஆனால் எல்லா ராஜ்யங்களிலும் இருந்ததுபோல் இங்கும் பணக்காரக் கட்சியென்றும் ஜனக்கட்சியென்றும் இரண்டு கட்சிகள் இருந்தன. பிராஸிடாஸை நகரத்திற்குள் அனுமதிப்பதைப்பற்றி இந்த இரு கட்சிகளுக்குள் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. பணக்காரக் கட்சியினர் இவனை அனுமதிக்க வேண்டுமென்றனர்; ஜனக்கட்சியினர் கூடா தென்றனர். தன்னை அனுமதிப்பதா, வேண்டாமா என்பதைப்பற்றி ஒரு முடிவுக்கு வருமுன்னர், தன்னைத் தனியே வரவிட்டு, தான் சொல்வதைக் கேட்குமாறு வேண்டிக்கொண்டான் பிராஸிடா. இவன் நல்ல பேச்சாளி; நேர்மையானவன்; எல்லோரையும் வசீகரிக்கும் தன்மையன். இவன் வேண்டுகோளுக்கு இசைந்தனர் அக்காந்த்தியர். இவனை மட்டும் வரவழைத்து ஜனசபை முன்னர் பேசச் செய்தனர். இவனும் பின்வருமாறு பேசினான்:- அக்காந்த்தியர்களே! லாஸிடீமோனியர்கள், இந்த (பெலொப் பொனேசிய) யுத்தத்தைத் துவங்குகிறபோது என்ன காரணங் கூறினார் களோ அதனை, அதாவது கிரேக்க ராஜ்யங்களை (ஆத்தீனிய ஆதிக்கத் தளையினின்று) விடுவிக்கும் பொருட்டே ஆத்தீனியர்களுடன் போருக்குச் செல்கிறோமென்று சொன்னதைக் காரியத்தில் நிறைவேற்றி வைப்பதற் காகவே என்னையும் என் படையினரையும் அனுப்பியிருக்கிறார்கள். உள்நாட்டில்---- அட்டிக்காவிலும் பெலொப்பொனேசியாவிலும் – நடைபெறு கிற யுத்தத்தின் போக்கைப்பற்றித் தவறுதலான நம்பிக்கைகொண்டு விட்டோம். பிறருடைய உதவியில்லாமலும், நீங்கள் எதையும் இழக்காமலிருக்கையிலும் ஆத்தீனியர்களை விரைவிலே வீழ்த்தி விடலாமென்று எதிர்பார்த்தோம். இதனால்தான் நாங்கள் இங்கு வருவதற்குத் தாமதம் ஏற்பட்டது. இதற்காக எங்களை நீங்கள் குறைகூறக்கூடாது. அவர்களைத் தோல்வியுறச் செய்ய, உங்களுடைய உதவிகொண்டு எங்களால் முடிந்ததைச் செய்ய முடியுமென்ற நம்பிக்கை எங்களுக்கேற்பட்டதும் இங்கு வந்திருக்கிறோம். அப்படியிருக்க, என்னை நீங்கள் சரியான முறையில் வரவேற்றிருக்கவேண்டும். அவ்விதம் செய்யாமலிருந்ததோடு என்னை வரவேற்கவே மறுக்கிறீர்கள். இதைக் குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன். லாஸிடீமோனியர்களாகிய நாங்கள், உங்களை எங்கள் சகாக்களாக எண்ணினோம். எங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ள ஆவலாயிருக்கிறீர் களென்றும் கருதினோம். அப்படிப்பட்டவர்களிடம் நேரடியாகச் சென்றடை வதற்கு முந்தி மனத்தைச் செல்லவிட வேண்டுமென்று நினைத்தோம். இங்ஙனமெல்லாம் எதிர்பார்த்தே, எங்களுக்குப் பரிச்சயமில்லாத ஒரு நாட்டின் வழியாகப் பல நாட்கள் பிராயணஞ் செய்வதாகிற ஆபத்தை மேற்கொண்டோம். எங்களுடைய உற்சாகம், இதுவரையில் இங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறது. இந்த நிலைமையில் நீங்கள் வேறு நோக்கங்கொண்டவர்களாயிருப்பின், உங்களுடைய சுதந்திரத்திற்கும் கிரேக்கர்களுடைய சுதந்திரத்திற்கும் முட்டுக்கட்டையாக நிற்பீர்களாயின் அது பயங்கரமான விஷயமாயிருக்கும். தவிர, நீங்கள் மட்டும் என்னை எதிர்த்து நிற்பது தகாது. மற்ற ராஜ்யத்தினரிடம் செல்வேனாகில், அவர்கள் என்னோடு சேர மனமிசைய மாட்டார்கள். ஏனென்று கேட்பேனாயின், முக்கியமான ராஜ்யமாகிய அக்காந்தஸிடம், புத்திசாலிகளான அக்காந்த்தியர்களிடம் முதலிற் சென்றாயே, அவர்களே உன்னை அனுமதிக்க மறுத்துவிட்டார்களே என்று பதில் கூறுவார்கள். என்னை அனுமதிக்க வேண்டுமென்பதற்கு நான் என்ன காரணங் கூறுகிறேனோ அஃது உண்மையென்று ருஜுப்படுத்தக் கூடிய ஆதாரமெதுவும் என்னிடமில்லை. நான் சுதந்திரம் அளிப்பதாகச் சொல்கிறேனே அதில் ஏதோ சூது இருக்கிறதென்று சொல்லப்படலாம்; அல்லது, ஆத்தீனியர்கள் படையெடுத்து வந்தால் அந்தப் படையெடுப் பினின்று உங்களைக் காப்பாற்றப் போதிய சேனாபலம் என்னிடமில்லை யென்று கூறப்படலாம். ஆனால் இப்பொழுது என்னிடம் என்ன படை இருக்கிறதோ அதே படையுடன் நிஸீயா துறைமுகத்தை நான் விடுவிக்கச் சென்ற சமயம்,1 ஆத்தீனியர்கள், என்னுடைய படையைக் காட்டிலும் அதிகமான படையை வைத்துக்கொண்டிருந்த போதிலும், என்னை எதிர்க்கத் துணியவில்லை. அப்படியிருக்க, (நீங்கள் எங்கள் பக்கம் சேர்ந்து கொள்ளும் பட்சத்தில், அதற்காக) அவர்கள், உங்களுக்கு விரோதமாக ஒரு பெரிய படையை, அதாவது நிஸீயாவில் எவ்வளவு பெரிய படையைக் கொண்டுவந்து நிறுத்தினார்களோ அவ்வளவு பெரிய படையைக் கடலுக்கப்பால் இங்கு அனுப்புவார்கள் என்பது அசாத்தியம். என்னைப் பொறுத்தமட்டில் நான் இங்கே வந்திருப்பது, கிரேக்கர் களுக்கு தொந்தரவு கொடுப்பதற்காக அல்ல; கிரேக்கர்களை விடுவிப் பதற்குத்தான். எந்தெந்த ராஜ்யத்தினரை நேசக்கட்சியினராகச் சேர்த்துக் கொண்டு வருகிறேனோ அவர்களனைவரையும் சுதந்திரத்துடனிருக்கும் படி செய்யவேண்டுமென்று எனது அரசாங்கத்தை, பிரதிக்ஞா பூர்வமாகப் பந்தப்படுத்தி யிருக்கிறேன். மற்றும் நான் இங்கே வந்திருப்பதன் நோக்கம், பலவந்தப்படுத்தியோ, வஞ்சகமாகவோ உங்களுடைய கூட்டுறவைப் பெறவேண்டுமென்பதல்ல; உங்களுடைய ஆத்தீனிய எஜமானர்களிட மிருந்து நீங்கள் விடுதலைபெற உங்களுக்கு உதவியாக என்னுடைய கூட்டுறவை அளிக்க வேண்டுமென்பதுதான். இவ்வளவு தூரம் நான் உறுதிகள் கூறிய பிறகு, என்னுடைய நோக்கத்தில் நீங்கள் சந்தேகங் கொள்வீர்களாயின் அதை நான் கண்டிக்கிறேன்; அப்படியே, என்னால் உங்களைக் காப்பாற்றமுடியுமா, முடியாதா என்று என்னுடைய சக்தியில் சந்தேகங்கொள்வீர்களாயின் அதையும் நான் கண்டிக்கிறேன். ஆதலின், தயக்கமின்றி என்னுடன் சேர்ந்துகொள்ளுமாறு உங்களை அழைக்கிறேன். உங்களிலே சிலர், சொந்த பகைமை காரணமாக, என்னுடன் சேர்ந்துகொள்ளத் தயங்கலாம்; குறிப்பிட்ட ஒரு கட்சியினரிடம் நான் நகரத்தை ஒப்புவித்துவிடுவேனோ என்று அச்சப்படலாம். இப்படி யெல்லாம் அச்சப்படவேண்டியதேயில்லை. இந்தக் கட்சிக்கோ அந்தக் கட்சிக்கோ உதவி செய்ய நான் இங்கு வரவில்லை. இதுகாறும் அனுஷ்டானத்தில் இருந்துவருகிற உங்களுடைய அரசியல் அமைப்பை அலட்சியப்படுத்திவிடுவேனாகில், உங்களிலே பலரைச் சிலருக்கோ, சிலரைப் பலருக்கோ அடிமைப்படுத்திவிடுவேனாகில், உங்களுக்கு உண்மையான சுதந்திரத்தைக் கொண்டுவந்து கொடுத்தவனாகமாட்டேன். அப்படிச் செய்வது, அந்நிய ஆதிக்கத்தைக் கொண்டு வந்து திணிப்பதைக் காட்டிலும் கேவலமானது. அதனால் லாஸிடீமோனியர்களாகிய நாங்கள் வந்திக்கப்படுவதற்குப் பதில் நிந்திக்கப்படுவோம்; மதிப்போ, புகழோ எங்களுக்குக் கிடைக்காது. மற்றும் இப்படி நாங்கள் நடந்து கொள் வோமாயின், ஆத்தீனியர்களிடத்தில் என்ன குற்றங்கள் இருக்கின்றன வென்று அவர்கள்மீது யுத்தந்தொடுத்திருக்கிறோமோ, அந்தக் குற்றங் களுக்கு நாங்களே உட்பட்டவர்களாவோம். நேர்மையைப்பற்றிக் கவலைப் படாதவர்கள் ஆத்தீனியர்கள். நாங்களோ அப்படியில்லை. நேர்மை யுடையவர் களென்று எப்பொழுதுமே சொல்லிக்கொண்டு வந்திருக் கிறோம். ஆதலின் சொன்னபடி நடக்காவிட்டால், ஆத்தீனியர்களைக் காட்டிலும் எங்களுக்குத்தான் கேவலம். எப்பொழுதுமே கண்ணிய முள்ளவர்கள், தாங்கள் விரும்புவதையடைய, நயவஞ்சகமான முறை களைக் காட்டிலும் பலாத்கார முறைகளைக் கையாள்வதே மேலென்று கருதுவார்கள். பலாத்கார முறையானது, அதிருஷ்டவசத்தினால் தனக்குக் கிடைக்கிற தூல பலத்தைக்கொண்டு, தான் விரும்புவதை அடைந்து விடுகிறது. நயவஞ்சக முறையானது, புத்திசாலித்தனமாகப் புரட்டுச் செய்து தன் காரியத்தைச் சாதித்துக்கொள்கிறது. எங்களுடைய கண்ணியம் சம்பந்தப்பட்ட இந்த முக்கியமான விஷயத்தில் நாங்கள் அதிக ஜாக்கிரதையுடையவர்களாகவே இருப்போம். மேலே நான் சொன்ன பிரதிக்ஞைகளுக்கு மேலாக, எங்களுடைய சொல்லும் செயலும் ஒன்றாயிருப்பதைக் கொண்டே எங்களுடைய நன்னோக்கத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அந்த நன்னோக்கம் உங்களுடைய நன்மையை நாடுவதுதான். உங்களுடைய நன்மையை நாடுவதுதான் எங்களுக்கும் நன்மை. என்னுடைய இந்த ஆலோசனைகளை நிராகரிப்பீர்களாயின், அப்படி நிராகரித்தாலும், நீங்கள் எங்களிடம் காட்டும் நட்பு உணர்ச்சி காரணமாக எவ்விதத் தீங்கும் நேரிடாவண்ணம் காப்பாற்றப்படவேண்டு மென்று கோருவீர்களாயின், எங்களுடைய அபிப்பிராயத்தில், சுதந்திரமென்பது பலவித ஆபத்துக்களோடு கூடியதுதான், அதை ஏற்றுக்கொள் கிறவர் களுக்குக் கொடுக்கவேண்டியதுதான், ஆனால் ஒருவருடைய விருப்பத் திற்கு மாறாக அதனைக்கொண்டு திணிக்கக்கூடாது என்றெல்லாம் கூறுவீர்களாயின், உங்கள் நாட்டுத்தெய்வங்கள் சாட்சியாகவும் உங்கள் நாட்டில் இறந்துபோன வீரர்களின் சாட்சியாகவும் சொல்கிறேன்; உங்களுடைய நன்மைக்காக நான் வந்தேன்; ஆனால் நிராகரிக்கப்பட்டேன்; உங்களுடைய நாட்டைப் பாழ்படுத்தி அதன் மூலம் எனக்கு இணங்கும்படி உங்களைக் கட்டாயப்படுத்துவேன். இந்த விஷயத்தில் நான் சிறிதுகூடத் தயங்க மாட்டேன். ஏனென்றால், நான் சொல்வதைக்கேட்டு, லாஸிடீமோனியர் களுடன் இணங்கிப்போக மறுக்கிறீர்கள்; அவர்களுடைய விரோதி களான ஆத்தீனியர்களுக்குக் கப்பத் தொகையை நிறுத்தாமல் செலுத்திக் கொண்டு வரவும் போகிறீர்கள். இவ்விரண்டின் மூலமாக லாஸிடீமோனியர்களுக்குக் கெடுதல் உண்டுபண்ணினவர்களாவீர்கள். அப்படிக் கெடுதல் உண்டுபண்ணவிடாமல் உங்களைத் தடுக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. மற்றும் கிரேக்கர்கள், தங்கள் அடிமைத்தனத்தை உதறியெறிய எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கு நீங்கள் முட்டுக்கட்டையா யிராத வாறு உங்களைத் தடுக்கவேண்டியதும் அவசியமாயிருக்கிறது. இவ்விரண்டு காரணங்களுக்காகவும், பொது நலத்தை உத்தேசித்தும், லாஸிடீமோனியர்களாகிய நாங்கள் இங்ஙனம் நடந்துகொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். இல்லாவிட்டால், விடுதலையை விரும்பாதவர்களுக்கு அதையளிக்கவேண்டிய அவசியம் எங்களுக் கென்ன? ஏகாதிபத்தியத்திற்கு நாங்கள் ஆசைப்படவில்லை. ஏகாதி பத்தியத்தை வீழ்த்தவே நாங்கள் பாடுபடுகிறோம். எல்லோருக்கும் நாங்கள் நல்கவிருக்கும் சுதந்திரத்திற்கு நீங்கள் குறுக்கே நிற்பதை நாங்கள் அனுமதித்துக் கொண்டிருப்போமானால் கிரேக்கர்களில் பெரும் பாலோருக்குத் தீங்கு செய்தவர்களாவோம். ஆதலின், புத்திசாலித்தன மான ஒரு தீர்மானத்திற்கு வர முயற்சி செய்யுங்கள்; கிரேக்கர் களுடைய சுதந்திர முயற்சியை ஆரம்பித்து வையுங்கள்; அதன் மூலம் எல்லை யில்லாக் கீர்த்தியைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள்; சொந்த நஷ்டத் தினின்று நீங்கள் தப்பித்துக்கொள்வதோடு, உங்களுடைய ராஜ்யத்திற்கும் புகழ் தேடிக்கொடுத்தவர்களாவீர்கள். பிராஸிடாஸின் இந்தப் பேச்சுக்குப் பிறகு, அக்காந்த்திய ஜன சபையில், ஆத்தென்ஸின் தொடர்பினின்று விலகிக்கொள்வதா வேண்டாமா என்பதைப்பற்றி நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடை பெற்றன. பிறகு ரகசியமாக ஓட்டெடுக்கப்பட்டது. ஆத்தென்ஸின் தொடர் பினின்று விலகிக்கொள்வதென்ற முடிவுக்கு வந்தனர் பெரும்பாலோர்.  பதின்மூன்றாவது அத்தியாயம் அட்டிக்காவுக்கு வடக்கே சிறிது மேற்குப் பக்கம் சாய்ந்தாற் போலுள்ளது பியோஷ்யா. இது, சிறு சிறு ராஜ்யங்கள் பலவற்றைக் கொண்ட ஒரு சமஷ்டியாக அமைந்திருந்தது. இந்தச் சமஷ்டியைப் பதினோரு பேரடங்கிய ஒரு சபை நிருவாகம் செய்தது. சபையினருக்கு பியோட்டார்க்குகள்1 என்று பெயர். சமஷ்டியைச் சேர்ந்த ராஜ்யங்களுள் முக்கியத்துவம் வாய்ந்தது தீப் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கும். கி.மு. 457-ம் வருஷம் ஈனோபிட்டா2 என்ற இடத்தில் நடை பெற்ற ஒரு போரின் விளைவாக, பியோஷ்யாவின் பெரும்பகுதி ஆத்தென்ஸின் செல்வாக்குக்குட்பட்டது. ஆனால் இந்தச் செல்வாக்கை, பத்து வருஷங்கழித்து கி.மு. 447-ம் வருஷம் கொரோனீயாவில் நடைபெற்ற யுத்தத்தில் இழந்துவிட்டது ஆத்தென். பெலொப் பொனேசிய யுத்தத்தின் எட்டாவது வருஷம் - கி.மு. 426-ம் வருஷம் - இழந்துவிட்ட இந்தச் செல்வாக்கை மீண்டும் பெற முயன்றது. இந்த முயற்சிக்கு முதன்மையாக நின்றவர்கள் ஹிப்போக்கிராட்டீ3 டெமாத்தனீ ஆகிய இருவர். இருவரும் தனித்தனிப் படையுடன் வெவ்வேறு திசை களிலிருந்து பியோஷ்யாவை ஒரே நாளில் தாக்குவதென்று திட்ட மிடப் பட்டது. ஆனால் இந்தத் திட்டம் பியோட்டார்க்குகளுக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது; ஆத்தீனியப்படைகள் ஆக்கிரமித்துக்கொள்ள இருந்த இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டனர். ஆத்தீனியப்படைகள், திட்டப்படி காரியங்கள் நடவாதது கண்டு பின்வாங்கிக் கொண்டன. பின்வாங்கி, பியோஷ்ய எல்லையைக் கடந்து ஆத்தீனிய ஆதிக்க எல்லைக்குள் வந்துவிட்டன. இருந்தாலும் பியோஷ்யர்கள், இந்தப் படைகளைத் தடுத்து நிறுத்திப் போர் தொடுக்கத் தீர்மானித்தனர். டானக்ரா4 என்ற இடம் போர்க்களமாக அமைந்தது. பியோஷ்யப் படைக்குத் தலைவனாயிருந்தவன் பாகோன்தா5 என்பவன்; பதினோரு பியோட்டார்க்குகளில் ஒருவன். போர் துவங்குவதற்கு முந்தி, தன் படையினரை அணிவகுத்து நிறுத்திவைத்துப் பின்வருமாறு உற்சாக மூட்டினான்:- பியோஷ்யர்களே! ஆத்தீனியர்களை, பியோஷ்ய எல்லைக்குள் நாம் சந்தித்தாலன்றி அவர்களுடன் போர் தொடுக்கக்கூடாதென்ற எண்ணம் நமது படைத்தலைவர்களுள்பட நம்மிலே யாருக்கும் தோன்றியிருக்கக் கூடாது.1 பியோஷ்யாவுக்கு இடைஞ்சல் உண்டுபண்ண வேண்டு மென்பதற்காகவே ஆத்தீனியர்கள் நம்முடைய எல்லைக்குள் வந்து நமது பிரதேசத்திலேயே ஒரு கோட்டையைக் கட்டினார்கள்.2 ஆதலின் அவர்களை நாம் எங்கே சந்தித்தபோதிலும், எந்த இடத்திலிருந்து எப்படி நடந்துகொண்டாலும் அவர்கள் நமக்குச் சத்துருக்களே. தற்காப்பை முன்னிட்டு நாம் இந்தப் போரைத்தொடுக்க வேண்டியதில்லையென்று இங்கு யாரேனும் அபிப்பிராயப்படுவார்களானால் அவர்கள் தங்கள் அபிப் பிராயத்தை விரைவில் மாற்றிக்கொண்டு விடுதல் நல்லது. யார், ஏற்கனவேயுள்ளதை நன்றாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களோ, அப்படி அனுபவித்துக் கொண்டிருப்பதோடு திருப்தியடையாமல் இன்னும் அதிகமாகப் பெற வேண்டுமென்பதற்காக அக்கம்பக்கத்திலுள்ள நாட்டினரைத் தாக்கவேண்டுமென்று எண்ணிக்கொண்டிருக்கிறார்களோ அவர்களைப்போல், ஒரு நாட்டார் ஆபத்திலிருந்துகொண்டிருக்கிற சமயம் பார்த்துத் தாக்கப்படுவார்களானால், அப்பொழுது, அவர்கள் - தாக்கப்படுகிற நாட்டார் - என்ன நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளலாமென்பதைப்பற்றிச் சாவதானமாகத் தர்க்கஞ் செய்துகொண்டிருத்தல் கூடாது. நீங்கள், உங்கள் சொந்தநாட்டிலேயிருந்தாலுஞ்சரி, அதற்கு வெளியேயிருந்தாலுஞ்சரி, அந்நியர்கள் படையெடுத்து வந்தால் அவர்களுக்கு ஒரேவிதமான எதிர்ப்பைக் காட்டுவது உங்களுடைய தேசீயப் பண்பாயமைந்திருக்கிறது. அந்த அந்நியர்கள், உங்களுடைய எல்லைப்புறத்தில் வசிக்கிற ஆத்தீனியர்களாயிக்கும் பட்சத்தில் உங்களுடைய எதிர்ப்புச் சக்தி மிகவும் அதிகரித்து நிற்பது அவசியமாகும். அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் சுதந்திரத்துடனிருக்கவேண்டுமென்று சொன்னால், அவரவர்களுக் குள்ளதை அவரவர்கள் வைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதுதான் அர்த்தம்; வைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற உறுதிக்குத்தான் அர்த்தம். சமீபத்திலிருக்கிறவர்களையும் தூரத்திலிருக்கிறவர்களையும் அடிமைப் படுத்தவேண்டுமென்று முயன்றுகொண்டிருக்கிற ஆத்தீனியர் களைப் போன்றவர்கள் பக்கத்தில் வசிக்கும் நாட்டாராயிருக்கும் பட்சத்தில் அவர்களுடன் கடைசிவரை போராடித் தீரவேண்டியதுதான்; வேறு வழியில்லை. யூபியர்களுடையவோ1 ஹெல்லாஸிலுள்ள மற்ற ராஜ்யத் தினருடையவோ நிலைமையைப் பாருங்கள். மற்றவர்களுடைய நிலைமை வேறு; நம்முடைய நிலைமை வேறு. மற்றவர்கள், அக்கம் பக்கத்திலுள்ள ராஜ்யத்தினருடன், இந்த எல்லைப்புறமா அந்த எல்லைப்புறமா என்று ஏதேனும் ஓர் எல்லைப்புறத்திற்காகச் சண்டை போட வேண்டியிருக்கிறது. நமக்கோ, வெற்றி கொள்ளப்பட்டால், ராஜ்யம் பூராவும் ஒரே எல்லைப்புறமாகத்தான் முடியும்; அதாவது எல்லாம் ஒரே நாசமாகிவிடும். இதைப்பற்றி எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டு வதில்லை. நம்மை வெற்றி கொள்வது என்று சொன்னால், நமக்கிருக்கப் பட்டதைப் பலாத்காரத்தினால் பறித்துக் கொண்டுவிடுவது என்பதாகவே முடியும். ஆதலின் மற்றவர்களிடத்தில் பயப்படுவதைக்காட்டிலும் ஆத்தீனியர்களிடத்தில்தான் நாம் அதிகமாகப் பயப்படவேண்டும். மற்றும் ஆத்தீனியர்களைப் போன்றவர்கள், அதாவது தங்களுக்குப் போதிய பலமிருக்கிறதென்ற கர்வத்தினால் அக்கம்பக்கத்திலுள்ளவர் களைத் தாக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறவர்கள், யார், அதாவது எந்த ராஜயத்தினர் சும்மாயிருக்கிறார்களோ அவர்கள்மீது தன்னம்பிக்கையுடன் படையெடுத்துச் செல்கிறார்கள்; ஆனால் யார், தங்கள் ராஜ்யத்தின் எல்லைக்கு வெளியே வந்து சந்தித்து, முதல் சந்தர்ப்பம் கிடைக்கிறபோது தாக்க முற்படுகிறார்களோ அவர்களுடன் கைகலக்க வேண்டியிருக்கிற பொழுது ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசிக்கிறார்கள். இந்த உண்மையை ஆத்தீனியர்களே நமக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். நமக்குள்ளேயிருந்த சண்டைகள் காரணமாக ஆத்தீனியர்கள் நமது ராஜ்யத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தபொழுது, நாம் அவர்களை கொரோனீயாவில் சந்தித்துப் போர் தொடுத்துத் தோல்வியுறச் செய்தோம். அப்படித் தோல்வியுறச் செய்ததன் பயன் என்ன? இன்று வரை பியோஷ்யா அதிக பத்திரத்துடன் இருந்து வந்திருக்கிறது. இவைகளையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு, இங்குள்ளவர்களில் வயது முதிர்ந்தவர்கள், தாங்கள் ஏற்கனவே புரிந்திருக்கிற வீரச்செயல்களுக்குச் சமதையான வீரச் செயல்களை இப்பொழுது புரியவேண்டும்; இளைஞர்கள், முந்தி வீரங்காட்டியவர்களின் மக்கள், பியோஷ்யர்களின் வீரத்திற்குப்பழுது உண்டாகாமல் நடந்து கொள்ளவேண்டும். எந்தத் தெய்வத்தின் கோயில் புனிதத்தன்மையற்ற முறையில் பந்தோபது செய்யப்பட்டதோ1 அந்தத் தெய்வத்தின் மீதும், நாம் கொடுத்த பலிகளின்மீதும் நம்பிக்கை வைத்து, சத்துருக் களை நோக்கிச் செல்லவேண்டும். யார் எதிர்ப்புக் காட்டமாட்டார் களோ அவர்கள்மீது படையெடுத்துச் சென்று வேண்டியதைப் பெறலா மென்றும், யார் தங்களுடைய தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகப் போர்தொடுக்க எப்பொழுதும் தயாராயிருப்பதையே பெரும் புகழாகக் கொண்டிருக்கிறார்களோ, யார் மற்றவர்களை அநியாயமாக அடிமைப் படுத்தமாட்டார்களோ அவர்கள் சும்மாவிடமாட்டார்களென்றும் சத்துருக் களுக்குப் பாடங்கற்பிக்கவேண்டும். பியோஷ்யர்கள் இங்ஙனம் போர்தொடுக்க முனைந்துவிட்டதைக் கண்ட ஆத்தீனியப் படைத்தலைவனான ஹிப்போக்கிராட்டீ, தன் படையினரையும் அணிவகுத்து நிறுத்திவைத்துப் பின்வரும் உற்சாக மொழிகளைக் கூறினான்:- ஆத்தீனியர்களே! உங்களுக்குச் சில வார்த்தைகள்தான் சொல்லப் போகிறேன். வீரர்களுக்கு அதிக வார்த்தைகள் சொல்லத் தேவையில்லை. உங்களுக்குச் சில விஷயங்கள் தெரியவேண்டுமென்பதற்காக இந்த வார்த்தைகளைச் சொல்கிறேனே தவிர நீங்கள் வீரமுடையவர்களா யிருக்க வேண்டுமென்பதற்காகச் சொல்லவில்லை. வேறொருவருடைய நாட்டில் போர்தொடுக்கிற இந்த ஆபத்தை மேற்கொள்வதன் மூலம் நாம் ஏதோ நியாயந்தவறி நடக்கிறோமென்று உங்களில் யாரும் நினைக்க வேண்டாம். அந்நியர் நாட்டில் சண்டை போடுகிறோமென்பது வாதவம். ஆனால் நமது நாட்டிற்காகச் சண்டை போடுகிறோமென்பது உங்கள் நினைவிலிருக்கட்டும். நாம் இந்தப் போரில் வெற்றிபெற்றால், பெலொப் பொனேசியர்களுக்கு பியோஷ்யக் குதிரைப்படையின் உதவியில்லாமற் போகும். அவர்களும் நமது நாட்டின்மீது படையெடுத்து வரமாட்டார்கள். ஒரே ஒரு போரிலேயே பியோஷ்யாவை நீங்கள் வெற்றிகொள்வீர்கள். ஒருவிதத்தில் அட்டிக்காவையும் விடுதலை செய்தவர்களாவீர்கள். ஆதலின், ஹெல்லாஸிலேயே முதன்மையா யிருக்கிறதென்று எந்த நாட்டைப் பெருமையுடன் கொண்டாடுகிறீர்களோ அந்த நாட்டின் - அட்டிக்காவின் - பிரஜைகள் என்ற ஹோதாவில், ஈனோபிட்டா யுத்தத்தில் பியோஷ்யர்களை முறியடித்து பியோஷ்யாவைச் சுவாதீனப்படுத்திக் கொண்டவர்கள் யாரோ அவர்களுடைய சந்ததியினர் என்ற முறையில் சத்துருக்களுடன் பொருத முன்னோக்கிச் செல்லுங்கள். இங்ஙனம் ஹிப்போக்கிராட்டீ ஊக்கமளித்துப் பேசியபோதிலும், ஆத்தீனியர்கள் இறுதியில் தோல்வியே யடைந்தார்கள்.  பதினான்காவது அத்தியாயம் பெலொப்பொனேசிய யுத்தத்தின்பொழுது மாஸிடோனியா பிரதேசத்தை ஆண்டு வந்தவன் பெர்டிக்கா1 என்ற அரசன். இவன் ஒரு சமயம் ப்பார்ட்டாவுக்குச் சாதகமாகவும் மற்றொரு சமயம் ஆத்தென்ஸுக்குச் சாதகமாகவும் அடிக்கடி கட்சி மாறிக்கொண்டிருந்தான். இவன், மாஸிடோனி யாவின் வடபகுதிப் பிரதேசமாகிய லிங்க்கெட்டி2 என்ற ராஜ்யத்தின் அரசனாகிய அர்ராபிய3 என்பவனைப் பரம வைரியாகக் கருதி வந்தான். வைரியைச் சும்மாவிட்டுவைக்கலாமா? இவனையடக்கி ஒடுக்க ஏற்கனவே ஒரு சமயம் பெர்டிக்கா, பிராஸிடாஸின் உதவியை நாடினான். ஆனால் அந்தச் சமயம் பிராஸிடா இவனுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. யுத்தத்தின் ஒன்பதாவது வருஷம். இரண்டாவது தடவையாக அர்ராபிய அரசன்மீது படையெடுக்கவேண்டுமென்று பெர்டிக்கா மன்னன், பிராஸிடாஸின் உதவியை நாடினான். பிராஸிடாஸும் ஒப்புக் கொண்டான். இருவரும் சேர்ந்து அர்ராபிய அரசன்மீது போர் தொடுத்தார்கள். ஓரளவு வெற்றியும் பெற்றார்கள்; ஆனால் பூரண வெற்றி பெறவில்லை. பெர்டிக்கா மன்னனுக்கு இல்லிரியர்4 என்ற ஒருவகை மலை ஜாதியார் உதவி செய்வதாக ஏற்பாடாயிருந்தது. இந்த மலை ஜாதியாருடைய வருகைக்காக இருவரும் காத்துக் கொண்டிருந்தார்கள். இப்படியிருக்கையில், இல்லியர்கள், பெர்டிக்காஸை விட்டுவிட்டு அர்ராபிய அரசனுடன் சேர்ந்து கொண்டுவிட்டார் களென்று செய்தி கிடைத்தது. இச்செய்தி கேட்டு, பெர்டிக்கா படையினர் கதிகலங்கிப் போய்விட்டனர். ஏனென்றால், இல்லியர்கள் மிகவும் முரடர்கள்; உயிரைத் துரும்பாக மதித்துப் போர்புரிகிறவர்கள். இவர்கள் எதிர்க்கட்சியில் சேர்ந்துகொண்டுவிட்டால், தோல்வியுறுவது நிச்சயமென்று பயந்து விட்டனர்; போர் தொடுக்காமல் இரவோடு இரவாக ஓடியும் போய் விட்டனர். பெர்டிக்கா மன்னனும், வேறுவழியின்றிப் படையினருடன் சென்று விட்டான். செல்கிறபோது, பிராஸிடாஸைப் பார்த்துச் சொல்லிக்கொள்ளக்கூட இல்லை. பொழுது புலர்ந்தது. என்ன கண்டான் பிராஸிடா? மாஸிடோனி யர்கள் ஓடிப்போய்விட்டார்கள்; அர்ராபியஸும் இல்லியர்களும் சேர்ந்து தன்னைத் தாக்கத் தயாராயிருக்கிறார்கள். என்ன செய்வான்? பின்வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. ஆயினும், சத்துருப் படையினர் முன்னோக்கி வருவதற்கு முன்னர், தன் படையினருக்குத் தைரியமளிக்கு முகத்தான் அவசரம் அவசரமாகப் பின்வருமாறு பேசினான்:- பெலொப்பொனேசியர்களே! சத்துருக்கள், எண்ணிக்கையில் அதிகம் பேராயிருக்கிறார்கள்; தவிர, காட்டுமிராண்டிகளாகவுமிருக்கிறார்கள். இவர் களுடைய தாக்குதலை நாம் தனியே இருந்து தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறதேயென்று நீங்கள் பயந்து போயிருப்பதாக நான் சந்தேகப்படுகிறேன். அப்படிச் சந்தேகப்பட்டிராவிட்டால், வழக்கம்போல் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே உங்களுக்குச் சொல்லியிருப்பேன். ஆனால் இப்பொழுதோ நமது நண்பர்கள் நம்மைக் கைவிட்டுவிட்டுப் போய்விட்டார்கள். சத்துருக்களோ அதிகம் பேராயிருக்கிறார்கள். இந்த நிலைமையில், சில ஆலோசனைகளையும் சில விஷயங்களையும் உங்களுக்குத் தெரிவிக்கவேண்டிய வனாயிருக்கிறேன். இவை சுருக்கமா யிருந்தபோதிலும் இந்தச் சந்தர்ப்பத்திற்குப் போதுமென்று நம்புகிறேன். போர்க்களத்தில் வழக்கமாக நீங்கள் காட்டி வருகிற வீரம், மற்ற ராஜ்யத்தினரின் படைகள் கூடவே இருந்து கொண்டிருப்பதனாலன்று; உங்கள் சுபாவத்திலேயே அந்த வீரம் அமைந்திருக்கிறது. சத்துருக்கள், எண்ணிக்கையில் அதிகம் பேராயிருக்கிறார்களே என்ற பயமும் உங்களுக்கு இருக்க முடியாது. ஏனென்றால், உங்களுடைய ராஜ்யத்தில், பலர், சிலரை ஆளவில்லை; சிலர்தான் பலரை ஆள்கிறார்கள். இதற்கு வேறொரு காரணமும் இல்லை; குறிப்பிட்ட துறையில் ஒரு சிலர்தான் திறமை வாய்ந்தவர்களா யிருக்கிறார்கள். இந்த மலை ஜாதியாருடன் - இல்லிரியர்களுடன் - போர் புரிந்து அனுபவம் பெறாமையினால் நீங்கள் பயப்படுகிறீர்கள் போலும். அப்படிப் பயப்பட வேண்டியதில்லை. இவர்களுடனிருந்த மாஸிடோனியர்களுடன் போராடி நீங்கள் அனுபவம் பெற்றிருப்பதைக்கொண்டும், நான் கேள்விப்படுவதைக் கொண்டும் இவர்கள், நீங்கள் பயப்படுகின்ற அளவு பெரிய சத்துருக்களாயிருக்க மாட்டார்களென்று நிச்சயமாகக் கூறுவேன். ஒரு சத்துரு, பார்வைக்குப் பலவானாயிருந்தபோதிலும், உண்மையில் பலவீனனாகவே இருப்பான். விஷயமறிந்தவர்கள், அவனோடு போராட முற்படுகிறபோது, அவனுடைய பலவீனத் தினால் பலசாலிகளாகிவிடுகிறார்கள். இந்தச் சத்துருக்களைப் பார்த்து அனுபவமில்லாதவர்கள் பயப்படலாம். இவர்கள் வெளித் தோற்றத்திற்குப் பயங்கரமுடையவர்கள் போல் காணப்படுகிறார்கள். இவர்கள் உரக்கக் கூச்சல் போடுவதோ சகிக்கமுடியாததாயிருக்கிறது; ஆயுதங்களைச் சுழற்றிக் காட்டுவதோ அச்சமுண்டு பண்ணக்கூடிய முறையில் இருக்கிறது. இப்படியெல்லாமிருந்தபோதிலும், உறுதியான ஒரு சத்துருவுடன் போராடமுற்படுகிறபோது, இவர்கள் வெளியில் காணப் படுகிறபடி சண்டை போடமாட்டார்கள். இவர்களிடத்தில் ஒழுங்கில்லை. சத்துருக்களால் நெருக்கப்படுகிறபோது, இருந்த இடத்தைவிட்டு ஓடிப் போவதை இவர்கள் அவமானமாகக் கருதுவதில்லை. மற்றவர் களைத் தாக்குவதும், மற்றவர்களால் தாக்கப்பட்டால் ஓட்டமெடுப்பதும், இரண்டும் ஒரே மாதிரிதான் இவர்களுக்கு. தாக்குவதும் ஓடிப்போவதும் வீரத்தின் உரை கல் என்ற எண்ணம் இவர்களுக்கு இல்லவே இல்லை. போர்க் களத்திலிருந்து யார் எப்பொழுது வேண்டுமானாலும் எவ்வித காரணமு மில்லாமல் ஓடிப்போகலாமென்கிற மாதிரி இவர்களுடைய போர்முறை இருக்கிறது. கையோடு கைகலந்து போரிடுவதற்குப் பதில் தூரத்திலிருந்து பயமுறுத்திக்கொண்டிருந்தால் வெற்றி பெற்று விடலாமென்று இவர்கள் நினைக்கிறார்கள். அப்படி நினைத்துக்கொண்டிராவிட்டால் நம்மோடு நெருங்கிவந்து போர்புரியத் துணிவுகொள்வார்கள். இவர்கள் பய முறுத்துவது, கண்ணினால் காணப்படுகிறபோதும் காதினால் கேட்கப் படுகிறபோதும் மிகப் பெரியதாகத் தோன்றியபோதிலும் உண்மையில் அப்படியல்ல; மிகச் சாதாரணமே. இதை நீங்கள் தெளிவாகப் பார்க்கலாம். ஆதலின் இவர்கள் முன்னேறி வருகிறபோது, உங்களிடத்தில் உறுதியாக நில்லுங்கள்; சமயம் பார்த்து ஒழுங்காகப் பின்வாங்கத் தயாரா யிருங்கள்; அப்பொழுதுதான், பாதுகாப்பான ஓரிடத்திற்குச் சீக்கிரமாகப் போய்ச் சேரமுடியும். இப்படிப்பட்ட ஒழுங்கற்ற கும்பலின் முதல் தாக்குதலை நீங்கள் சமாளித்துக்கொண்டுவிடுவீர் களாயின் அப்பொழுது இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், கிட்டே நெருங்காமல் தூரத்திலிருந்து கொண்டு தங்கள் வீரத்தைக் காட்டுவார்களென்ற உண்மையையும், அப்படிச் சமாளிக்காமல் பின்வாங்கிச் செல்கிறவர்களைத் துரத்திக் கொண்டு வருவார்களென்ற உண்மையையும் அறிந்துகொள்வீர்கள். பிராஸிடா, சத்துருக்களின் முதல் தாக்குதலைச் சமாளித்துக் கொண்டபோதிலும் பின்னர் ஒழுங்காகப் பின்வாங்கிக்கொண்டு சென்றான்.  பதினைந்தாவது அத்தியாயம் யுத்தத்தின் பத்தாவது வருஷம், கிளியோன், ஆத்தீனிய ஜனசபையின் சம்மதத்தின்பேரில், வடக்கே திரே மாகாணத்திலுள்ள சில ராஜ்யங்களை ஆத்தென்ஸின் செல்வாக்குக்குட்படுத்திக் கொண்டுவர ஒரு படையுடன் புறப்பட்டுச் சென்றான்; சில இடங்களையும் சுவாதீனப் படுத்திக் கொண்டான். பிறகு இயோன் என்ற நகரத்திற்குச் சென்று முகாம் செய்து கொண்டான். செய்து கொண்டு, பெர்டிக்கா மன்னனுக்கும், இன்னும் சிலருக்கும் உதவிப்படை அனுப்பி வைக்குமாறு தாக்கீது விடுத்தான். இந்த உதவிப்படைகள் வந்து சேரும்வரையில் மேற்படி இயோன் நகரத்திலேயே காத்துக்கொண்டிருந்தான். பிராஸிடாஸுக்கு இது விஷயம் தெரிந்தது. இயோன் நகரத்திற்குச் சமீபத்திலுள்ள மேட்டுப்பாங்கான ஓரிடத்தில் தன் படையைக் கொண்டு வந்து நிறுத்தினான். இவன், ஆத்தென்ஸின் செல்வாக்குக்குட் பட்டிருந்ததும், ஆத்தென்ஸினால் முக்கியமாகக் கருதப்பட்டு வந்ததுமான ஆம்ப்பிபோலி என்ற நகரத்தை, ஆத்தென்ஸுக்கு விரோதமாகத் தூண்டி விட்டு அதனைத் தன் சுவாதீனப்படுத்திக்கொண்டிருந்தான். இந்த ஆம்ப்பிபோலி நகரம், இயோன் நகரத்திற்கு நேர்வடக்கேயிருந்தது. இதனை - ஆம்ப்பிபோலி நகரத்தை - மீண்டும் ஆத்தென்ஸின் சுவாதீனத் திற்குக் கொண்டுவர வேண்டுமென்பதே கிளியோனின் நோக்கம். இதற்காகவே இவன் இயோன் நகரத்தில் முகாம் செய்து கொண்டிருந்தான். சில நாட்களுக்குப் பிறகு இவனுடைய படையினர், முகாமில் சும்மாயிருக்க விரும்பவில்லை. ஆம்ப்பிபோலிஸைத் தாக்கிக் கைப் பற்றிக்கொள்ள வேண்டுமென்று ஆத்திரங்கொண்டார்கள். கிளியோனும் இணங்கவேண்டியவனானான். படையுடன் ஆம்ப்பிபோலி நகரத்திற்குச் சமீபம் சென்று அங்குள்ள ஒரு குன்றின்மீது தன் படையை அணிவகுத்து நிறுத்தினான். நகரத்தைக் காத்து நிற்கின்ற படையெதுவுமில்லை யென்றும், எனவே அதனைச் சுலபமாகக் கைப்பற்றிக் கொண்டு விடலாமென்றும் இவன் கருதிக்கொண்டிருந்தான். பிராஸிடாஸும் இதனையே, அதாவது, ஆம்ப்பிபோலி நகரத்தைக் கைப்பற்றுவது சுலபமென்று கருதுவானென்பதையே எதிர்பார்த்தான். தன் படை பலத்தை அவனுக்கு - கிளியோனுக்கு - காட்டிக் கொள்ள இவன் விரும்பவில்லை. உண்மையில் இவனுடைய படை பலம் குறைவுதான். போரிடுஞ்சக்தியில் ஆத்தீனியப்படை மேன்மையுற்றதாகவே இருந்தது. ஆயினும், தந்திரத்தினால் அந்தப் படையை வெற்றிகொள்ள முனைந்தான் பிராஸிடா. தன் படையினரை ஒன்றுகூட்டி நிறுத்தி வைத்து, தனது போர்த் தந்திரத்தை வெளிப்படுத்துகின்ற முறையிலும், படையினருக்கு ஊக்கமூட்டும் வகையிலும் பின்வருமாறு பேசினான்:- பெலொப்பொனேசியர்களே! நாம் எந்த நாட்டிலிருந்து வந்திருக் கிறோமோ அந்த நாடு எத்தகையது என்பது உங்களுக்குத் தெரியும். நமது வீரத்தினால்தான் நமது நாடு சுதந்திரமுடையதாயிருக்கிறது. நாமனை வரும் டோரியர்கள். நாம் யாரோடு சண்டைபோடப் போகிறோமோ அவர்கள் ஐயோனியர்கள். இந்த ஐயோனியர்களைத் தோற்கடிப்பதில் நாம் பழகியிருக்கிறோம். இவைகளை யெல்லாம் பற்றி நான் அதிகம் விவரித்துக்கூறத் தேவையில்லை. ஆனால் நான் வகுத்திருக்கும் தாக்குதல் திட்டத்தை உங்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய வனா யிருக்கிறேன். நான் நமது முழுச்சேனையுடன் சத்துருவைத் தாக்கப்போவ தில்லை; சேனையின் ஒரு பகுதியைக் கொண்டுதான் தாக்கப்போகிறேன். அப்படித் தாக்குவதனால் சில அசௌகரியங்கள் ஏற்படக்கூடும். அதற்காக நீங்கள் தைரியம் குன்றினவர்களாதல் கூடாதென்பதற்காகவே இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன். சத்துருக்கள் நம்மைக் குறைவாக மதிக்கிறார்களென்று நினைக் கிறேன். தங்களை யாரும் தாக்க வரமாட்டார்களென்ற எண்ணத்தின் பேரில் தான் அவர்கள் சுற்றுமுற்றும் பார்க்கிறார்கள். அதோ பாருங்கள், அவர்கள் எவ்வளவு அலட்சியத்துடன் பார்க்கிறார்களென்று? ஆனால் நாம் இங்கிருந்து கொண்டிருப்பதை அவர்கள் பார்க்கவில்லை. இப்படிப் பாராமலிருப்பது அவர்களுடைய குற்றம். இந்த மாதிரியான ஒரு குற்றத்தைச் சத்துருக்களிடத்தில் எந்த ஒரு போர் வீரன் காண்கிறானோ அவன்தான் வெற்றியடைகிறான். அவன் - சத்துருக்களிடத்தில் இந்த மாதிரியான குற்றத்தைக் காண்கிற போர்வீரன் - தன்னுடைய சாதனங்களை நிதானித்துக் கொண்டு, சத்துருக்களை நேராகவும் பகிரங்க மாகவும் தாக்காமல், தனக்குக் கிடைக்கிற சந்தர்ப்பத்தை நன்றாக உபயோகப்படுத்திக் கொள்கிறான். இந்த மாதிரியான யுத்த தந்திரங்கள் தான், நம்முடன் சேர்ந்திருக்கும் சகாக்களுக்கு உபயோகப்படக்கூடியன வாகவும், சத்துருக்களுக்கு ஏமாற்றத்தையளிக்கக்கூடியனவாகவும் இருக்கின்றன; நல்ல பெயரும் கிடைக்கச் செய்கின்றன. ஆதலின் அவர்கள் - சத்துருக்கள் - அலட்சியமாக இருக்கிறபொழுது, உறுதியாக நில்லாமல் பின்வாங்கவேண்டுமென்ற எண்ணத்துடனிருக்கும்பொழுது - அவர்கள் பின்வாங்க வேண்டுமென்ற எண்ணத்துடன்தான் இருக்கிறார் களென்று நினைக்கிறேன் - அவர்கள் ஊக்கங்குன்றினவர்களாயிருக்கிற பொழுது, நான், எனது தலைமையின் கீழுள்ள படையுடன், அவர்களின் நடுப்பகுதியைத் திடீரென்று தாக்குவேன். m¥go¤ jh¡» mt®fis¡ fy§f it¤J¡bfh©oU¡»w rka« gh®¤J, V »ËahÇjhÞ!1 நீ, உன்னோடிருக்கும் ஆம்ப்பிபோலி படையினருடனும் மற்றச் சகாக்களின் படையினருடனும் வந்து நகரத்தின் நுழைவாயிலைத் திறந்துவிடு; அவர்களை எவ்வளவு சீக்கிரமாகத் தாக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகத் தாக்கு. அப்பொழுதுதான் அவர்களிடையே ஒரு கலக்கத்தை உண்டுபண்ண முடியும். ஏற்கனவே கைகலந்து போராடிக்கொண்டிருக்கும் ஒரு படை யினரால் என்ன பயம் ஏற்படுகிறதோ அதைக் காட்டிலும் அதிகமான பயம், திடீரென்று வந்து தாக்குகிற ஒரு படையினால் ஏற்படுகிறது. கிளியாரிதா! ஒரு ப்பார்ட்டன் நடந்துகொள்ள வேண்டிய முறைப்படி வீரனாக நடந்துகொள். சகாக்களே! மனிதர்களாக இவனைப் பின்பற்றிச் செல்லுங்கள். ஊக்கமுடனிருத்தல், கண்ணியமாக நடந்துகொள்ளுதல், தலைவனுக்குக் கீழ்ப்படிதல் ஆகிய இவையே ஒரு நல்ல போர் வீரனுடைய அடையாளங்களென்பது உங்களது நினைவிலிருக்கட்டும். இன்றுதான், நீங்கள் சுதந்திர மக்களாகவும், லாஸிடீமோனின் சகாக் களாகவும் இருக்கப்போகிறீர்களா, ஆத்தென்ஸின் அடிமைகளாகப் போகிறீர் களாவென்பதை நிர்ணயிக்கும் நாள். இந்தப் போரில் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ளாதிருப்பீர்களானால், உங்களுடைய சொந்த சுதந்திரம், உயிர் முதலியவற்றை இழந்துவிடாமலிருக்கலாமென்பது வாதவம். ஆனால் இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் கடுமையான நிபந்தனை களின் மீது பந்தப்படுத்தப்படுவீர்கள்; அதுமட்டுமல்ல; கிரேக்கர்கள் சுதந்திரம் பெறு வதற்குத் தடை செய்தவர்களுமாவீர்கள். நம்முன் நிற்கும் பிரச்னைகள் மிகப் பெரியனவாக இருப்பதை உத்தேசித்து, நீங்கள், கொஞ்சங்கூட கோழைத்தனத்தைக் காட்டக்கூடாது. என்னைப் பொறுத்தமட்டில், நான் என்ன சொல்கிறேனோ அதன்படி நடந்து காட்டுவேன். யுத்தம் நடைபெற்றது. ஆத்தீனியப்படை தோல்வியுற்றது. ஆனால் இந்த யுத்தத்தில் பிராஸிடாஸும் கிளியோனும் இறந்துபட்டனர். பதினாறாவது அத்தியாயம் யுத்தத்தின் பதினாறாவது வருஷம் - கி.மு. 416ம் வருஷம் - மெலோ1 என்ற தீவின்மீது பாய்ந்தது ஆத்தென். கிரீஸின் தென்கிழக்கிலுள்ள இந்தத் தீவு வாசிகள், லாஸிடீமோனிலிருந்து வந்து குடியேறியவர்கள். இவர்கள் வெகுகாலம் வரை சுதந்திர வாழ்க்கையையே நடத்தி வந்தார்கள். பெலொப்பொனேசிய யுத்தத்தில் இவர்கள், ப்பார்ட்டா பக்கமோ ஆத்தென் பக்கமோ சேராமல் ஒதுங்கியிருந்தார்கள். ஆத்தென்ஸுக்கு இது பிடிக்க வில்லை. தன் கட்சியில் சேரவேண்டுமென்பதற்காக, இவர்கள்மீது பலாத் காரத்தைப் பிரயோகித்தது; மெலோ தீவின் சில பகுதிகளைச் சூறை யாடியது. இவைகளை எவ்வளவு காலம் சகித்துக் கொண்டிருப்பார்கள். மெலோவாசிகள்? ஆத்தென் மீது பகிரங்கமாகவே விரோதங்கொண்டு விட்டார்கள். ஆத்தென்ஸுக்கு இது பொறுக்குமா? கிளியோமெடீ, டிஸியா2 என்ற இரண்டு படைத் தலைவர்களின் கீழ் ஒரு பெரும்படையை மெலோ நோக்கியனுப்பியது. இந்தப் படையும் அங்குப் போய்ச்சேர்ந்தது. படைத் தலைவர்கள், உடனடியாகத் தீவைத்தாக்கி நாசப்படுத்த விரும்பாமல், இரண்டு தூதர்களை, தீவின் அரசாங்க அதிகாரிகளிடம் அனுப்பி, தங்களுக்குப் பணிந்து போகுமாறு கேட்டார்கள். அப்படிப் பணிந்துபோகா விட்டால் நாசமே உண்டாகுமென்று எச்சரிக்கையும் செய்தார்கள். மெலோ அரசாங்க அதிகாரிகள், இந்த இரண்டு தூதர்களையும் கிரமப்படி தங்கள் ஜனசபை முன்னர் கொண்டுவந்து நிறுத்தி அவர் களுடைய கட்சியைச் சொல்லச் செய்யாமல், தங்களிடத்திலேயே சொல்ல வேண்டியதைச் சொல்லுமாறு கூறினர். அப்படியே தூதர்களும் வந்து பேசினர். இந்தத் தூதர்களுக்கும் மெலோ அரசாங்க அதிகாரிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தைகள் வருமாறு:- ஆத்தீனிய தூதர்கள் : உங்களுடைய ஜனசபையில் நாங்கள் வந்து பேசினால், ஒரே ஒரு பேச்சில், அழகான தர்க்க நியாயங்களுடன் எங்களுடைய கட்சியை எடுத்துச் சொல்லிவிடுவோம், அப்படி எடுத்துச் சொல்லி உங்கள் ஜனசபையினரை மயக்கிவிடுவோம் என்று கருதி யல்லவோ அரசாங்க அதிகாரிகளாகிய உங்கள் முன்னிலையில் எங்களைப் பேசச் செய்திருக்கிறீர்கள்? சரி; அப்படியானால் நீங்கள் எங்களைவிட அதிக ஜாக்கிரதையுடன் நடந்துகொள்ள வேண்டும். நீண்ட பிரசங்கங்களை நீங்கள் செய்யக்கூடாது. நாங்கள் சொல்லி வருகிற விஷயங்களில் எந்த விஷயம் உங்களுக்குப் பிடித்த மில்லா மலிருக்கிறதோ அந்த விஷயத்தை உடனுக்குடன் எடுத்துக்கொண்டு அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவோம். பிறகு அடுத்த விஷயத் திற்குப் போவோம். இப்படி ஒவ்வொரு விஷயமாகப் பரிசீலனை செய்துகொண்டு போகிற ஏற்பாடு உங்களுக்குச் சம்மதந்தானே? இதை முதலிற் சொல்லுங்கள். மெலோ அதிகாரிகள் : ஒருவருக்கொருவர் விஷயங்களைப் பரிமாறித் தெளிவுபடுத்திக் கொள்வதில் எவ்வித ஆட்சேபமும் இருக்க முடியாது. ஆனால் நீங்கள் யுத்த சந்நாகத்துடன் வந்திருப்பதானது, நீங்கள் சொல்வதற்கு நேர்மாறாயிருக்கிறது. உங்களுடைய கட்சிக்கு நீங்களே நீதிபதிகளாக வந்திருக்கிறீர்கள்போலும். இந்தச் சமரஸப் பேச்சிலிருந்து நாங்கள் எதிர்பார்க்கக்கூடியது என்ன? ஒன்று, எங்கள் பக்கம் நியாய மிருக்கிறதென்று நிரூபித்துக்காட்டிப் பணிய மறுத்தோமானால், எங்கள் மீது போர்தொடுக்கப் போகிறீர்கள்; பணிவோமானால் அடிமைகொள்ளப் போகிறீர்கள். இவ்வளவுதானே? ஆ. தூ : எதிர்காலத்தில் என்ன நடக்கக்கூடுமென்பதைப் பற்றி ஊகமாகப் பேசிக்கொண்டிருக்கவோ, உங்கள் கண் முன்னர் காணப் படுகின்ற நிலைமைகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு உங்கள் ராஜ்யத்தின் நலனை எப்படி நாடுவது என்பதைப் பற்றிக் கலந்தா லோசிப்பதைத் தவிர வேறெதற்காகவோ நாம் இங்கே சந்தித்திருக்கிறோ மென்றால், நமது பேச்சை நிறுத்திக் கொண்டுவிடுவோம். அப்படியில்லையென்றால் மேற்கொண்டு பேசுவோம். மெ. அ : எங்களைப் போன்ற நிலைமையிலுள்ளவர்கள், பலவிதமான கருத்துக்களை வெளியிடுவதும், பலவிதமான வாதங்களைக் கிளத்துவதும் சகஜமேயாம். ஆனால் நீங்கள் கூறுகிறபடி, நாங்கள் எங்கள் நாட்டின் நலனை நாட வேண்டியவர்களாயிருக்கிறோம். ஆதலின் நீங்கள் கூறுகிற முறையிலேயே பேச்சுவார்த்தைகள் நடக்கட்டும். ஆ. தூ : அப்படியானால் சரி. முதலில் ஒரு விஷயம். பாரசீகர் களை வென்றதனால் ஏகாதிபத்திய ஆட்சிக்கு நாங்கள் உரிமை யுடையவர்களா யிருக்கிறோமென்பதைப்பற்றியோ, நீங்கள் எங்களுக்குத் தீங்கிழைத்ததனால்தான் உங்கள்மீது படையெடுத்திருக்கிறோமென் பதைப்பற்றியோ, அழகான சொற்றொடர்களைப் புகுத்தி நீண்ட பிரசங்க மெதுவும் நாங்கள் இங்கே செய்யப்போவதில்லை. செய்தாலும் நீங்கள் நம்பப் போவதில்லை. அப்படியே நீங்களும்; நாங்கள் உங்களுக்கு எந்த விதமான தீங்கும் செய்யவில்லை; நாங்கள் லாஸிடீமோனின் குடியேற்ற நாட்டினராயிருந்தபோதிலும் அந்த லாஸிடீமோனின் கட்சியில் சேர வில்லை என்றெல்லாம் சொல்லி எங்கள் மனத்தை மாற்றிவிடலா மென்று நினைக்கமாட்டீர்களென்று நம்புகிறோம். நாமிருதரப்பினரும் மனத்தில் என்ன எண்ணிக்கொண்டிருக்கிறோமோ அதை வாய்விட்டுப் பேசுவோம்; அனுஷ்டானத்தில் கொண்டுவரக்கூடிய ஒரு முடிவுக்கு வருவோம். சமபலமுள்ள இரண்டு கட்சியினருக்குள்ளேதான் நீதி யென்பது எழுகிறது. பலமுள்ளவர்கள், தங்களிஷ்டத்திற்கு எதையும் செய்தல்கூடும்; பலமில்லாதவர்கள் பணிந்துதான் போகவேண்டும்; இப்படித்தான் உலகத்தில் நடைபெற்றுவருகிறது. இதை, அனுபவமுள்ள நீங்களும் அறிவீர்கள்; நாங்களும் அறிவோம். மெ. அ : நீதியை அலட்சியப்படுத்திவிட்டு, சுயநலம் ஒன்றையே அடிப்படையாகக்கொண்டு வாதத்தைத்தொடங்கியிருக்கிறீர்கள். அதனால் நாங்களும் அதே நிலையிலிருந்து பேசவேண்டியவர்களா யிருக்கிறோம்; அப்படியே பேசுகிறோம். எல்லோருக்கும் நன்மையளிக்கக்கூடிய ஒரு பொதுவான நியதியை நீங்கள் கடைப் பிடிக்கவேண்டும். அப்படிக் கடைப் பிடிப்பது உங்களுக்கே நல்லது. அந்தப் பொதுவான நியதி என்னவென்று கேட்கிறீர்களா? சொல்கிறோம். ஆபத்திலேயுள்ளவர்களை நியாயமாகவும் நேர்மையுடனும் நடத்தவேண்டும். அவர்கள் இணங்கிப்போகக் கூடிய வண்ணம் பேசினால் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கக்கூடாத அனுகூலங்களையும் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்தப் பொதுவான நியதியைக் கடைப்பிடிப்பீர்களாயின் உங்களுக்கும், எங்களுக்கும், மற்றெல்லோருக்கும் நல்லது. ஏனெனின், உங்களுடைய ஏகாதிபத்தியம் விழுந்துபடுமாயின், உங்களுக்குப் பெரியதொரு தண்டனை கிடைக்கும்; அஃது உலகத்திற்கு, சிந்திக்கக்கூடிய ஒரு பாடமாகவும் இருக்கும். ஆ. தூ : எங்களுடைய ஏகாதிபத்தியம் விழுந்துபடுமென்று சொன்னால் அதற்காக நாங்கள் கவலைப்படப் போவதில்லை. லாஸிடீ மோன், எங்களுடைய நேரடியான சத்துருவாயிருந்தபோதிலும்,எங்களைப் போன்றதோர் ஏகாதிபத்தியமா யிருந்தபோதிலும் அதைக் கண்டு நாங்கள் அஞ்சவில்லை; அதனால் ஆபத்து உண்டாகாது. ஆபத்தெல்லாம் ஆட்பட்டிருக்கும் ஜனங்களிடத்திலிருந்துதான். இந்த ஜனங்கள், தாங் களாகவே, தங்களை ஆள்கிறவர்களைத் தாக்கி வெற்றியடைதல்கூடும். ஆனால் இந்த ஆபத்தைச் சமாளிப்பது எங்கள் பொறுப்பு. இப்பொழுது தெளிவாகச் சொல்கிறோம். நாங்கள் இங்கே வந்திருப்பது எங்கள் ஏகாதிபத்தியத்தின் நலனை முன்னிட்டுத்தான். எங்களுடைய ஏகாதிபத்திய நலனில்தான் உங்களுடைய ராஜ்யத்தின் நலன் இருக்கிறது. அதை உத்தேசித்தே இப்பொழுது நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். எங்களுக்கு எவ்வித தொந்தரவும் கொடாமல் எங்களுடைய பிரஜை களாகிவிடுங்கள். எங்களுடைய நன்மைக்காகவும் உங்களுடைய நன்மைக்காகவும் உங்களைக் காப்பாற்றி வருவோம். மெ. அ : நீங்கள் எங்களுக்கு எஜமானர்களாயிருந்து ஆள்வது உங்களுக்கு அனுகூலமாயிருக்கலாம்; ஆனால் நாங்கள் உங்களுக்கு அடிமை களாயிருந்து வாழ்வது எங்களுக்கு எப்படி அனுகூலமா யிருக்கும்? ஆ. தூ : எங்களுக்குப் பணிந்துபோனால், மிகப்பெரிய துன்பத் தினின்று உங்களைக் காப்பாற்றிக் கொண்டவர்களாவீர்கள்; நாங்களும் உங்களை அழிக்காமலிருப்பதனால் லாபமடைந்தவர்களாவோம். மெ. அ : இந்த யுத்தத்தில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருக் கிறோம். அதே சமயத்தில் உங்களுடைய பகைவர்களாக இல்லாமல் நண்பர்களாக இருக்கிறோம். இந்தவிதமான ஓர் ஏற்பாட்டிற்கு நீங்கள் ஒப்புக்கொள்ள முடியாதா? ஆ. தூ : முடியாது. உங்களுடைய நட்பைக்காட்டிலும் உங்களுடைய பகைமை எங்களுக்குக் குறைவான தீங்கை உண்டுபண்ணும். நீங்கள் எங்களுடன் நட்புக் கொண்டிருந்தால், நாங்கள் பலவீனர் களாகி விட்டோ மென்று எங்கள் இதர பிரஜைகள் கருதிக்கொண்டுவிடுவார்கள்; அப்படியே நீங்கள் எங்கள்மீது பகைமை கொள்வீர்களாயின், அஃது எங்கள் பலத்தைப் புலப்படுத்துவதாகு மென்று கொள்வார்கள். மெ. அ : இப்படித்தான் அர்த்தப்படுத்திக் கொள்வார்களா உங்களுடைய பிரஜைகள்? உங்களுடன் எவ்வித சம்பந்தமும் வைத்துக் கொள்ளாத ராஜ்யத்தினரென்றும், உங்கள் நாட்டிலிருந்து சென்று குடியேறிய ஜனங்களென்றும், உங்களுக்கு விரோதமாகக் கலகத்திற்குக் கிளம்பி உங்களால் வெற்றி கொள்ளப்பட்டவர்களென்றும் இப்படி வித்தியாசப்படுத்திப் பார்க்கமாட்டார்களா? ஆ. தூ : ஒரு நாட்டுக்கு என்ன உரிமையுண்டோ அதே உரிமைதான் மற்றொரு நாட்டுக்கும் உண்டு என்பதே அவர்கள் கருத்து. ஆனால் ஒரு நாடு உரிமையோடு நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறதென்றால், அது பலம் பெற்றிருப்பதனாலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறது, அதனால் அதனைத் தாக்க நாங்கள் அஞ்சுகிறோமென்று இப்படி எண்ணிக்கொண்டு விடுகிறார்கள். தவிர, உங்களை ஆட்படுத்தி எங்களுடன் சேர்த்துக் கொள் வதனால் எங்களுடைய ஏகாதிபத்தியம் விதீரணத்தில் பெருகும்; கூட, எங்களுக்குப் பாதுகாப்பும் ஏற்படும். மற்றும், நீங்கள் தீவு வாசிகள்; மற்றவர்களைக் காட்டிலும் பலவீனர்களா யிருக்கிறீர்கள். எனவே, நீங்கள் கடலாதிக்கத்தில், எங்களைக்காட்டிலும் மேலானவர்களாக இருக்கக் கூடாது. மெ. அ : நாங்கள் இந்தப் போரில் சேராமல் நடுநிலைமையுடன் இருந்தோமானால், உங்களுக்குப் பாதுகாப்பு ஏற்படாதென்று நினைக் கிறீர்களா? நல்லது. நியாயத்தை விடுத்து உங்களுடைய நலத்திற்கு நாங்கள் பணியவேண்டுமென்று சொல்கிறீர்கள். அப்படியானால் நாங் களும் எங்களுடைய நலமின்னதென்று எடுத்துக்காட்டி உங்கள் மனத்தை மாற்ற முற்படுகிறோம். இப்பொழுது எங்களைத் தாக்கி ஆட்படுத்திக் கொள்வீர்களானால், நடுநிலைமையுடனிருக்கும் மற்ற ராஜ்யங்களை விரோதித்துக் கொண்டவர்களாவீர்களல்லவா? ஒருநாள், தாங்களும் இப்படித் தாக்கப்படலாமென்று யோசிக்குமல்லவா அவை? தற்போது நீங்கள் நடந்து கொள்வதைப் பார்த்து, ஏற்கனவே உங்கள் பகைவர் களாயிருக்கிறவர்கள், இன்னும் அதிகமாக உங்கள்மீது பகைமை காட்டுவார்களல்லவா? அப்படியே உங்களிடம் பகையில்லாதவர்கள்கூட உங்களிடம் பகைமை கொண்டு விடுவார்களல்லவா? ஆ. தூ : கொள்ளமாட்டார்கள். ஏனென்றால், தரைப் பக்கத்திலுள்ள ராஜ்யங்கள், சுதந்திரமுடையனவா யிருக்கிறபடியால், எங்களுக்கு விரோதமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளும் விஷயத்தில் நிதானங் காட்டும். எனவே, அவைகளைக் கண்டு நாங்கள் அஞ்சவில்லை. உங்களைப் போன்ற சுதந்திரமாயுள்ள தீவினரைக் கண்டும், எங்களுடைய ஆதீனத்திற்குட்பட்டிருக்கிற காரணத்தினால் முணு முணுத்துக் கொண்டிருக்கிற பிரஜைகளைக் கண்டுமே அஞ்சுகிறோம். இப்படிப் பட்டவர்கள்தான், முன்பின் யோசியாமல் எங்களுக்கு விரோதமான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு அதன் பயனாக எங்களையும் ஆபத்திற்குட்படுத்தி விடுவார்கள்; தாங்களும் ஆபத்திற்குள்ளாவார்கள். மெ. அ : உங்களுடைய ஏகாதிபத்தியம் நன்றாக நிலைத்திருக்கும் பொருட்டும், அந்த ஏகாதிபத்தியத்திலுள்ள ஜனங்கள் சுதந்திரமற்றவர் களா யிருக்க வேண்டுமென்பதற்காகவும் நீங்கள் இவ்வளவு தூரம் செல்லத் தயாராயிருப்பதனால், நாங்கள், சுதந்திரமாயுள்ள நாங்கள், அந்தச் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள எல்லாவித நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்வோம். அப்படி எடுத்துக்கொள்ளா மலிருந்தோமானால், அஃது எங்களுடைய குற்றமும் கோழைத்தனமுமாகும். ஆ. தூ : வேண்டாம்; ஆர அமர யோசித்துப் பாருங்கள். சம பலமுள்ள இருவர், தங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டி தங்கள் வீரத்தைக் காட்ட நடைபெறும் போட்டியல்ல இது. நீங்கள் உயிர் வாழ்வதா, இல்லையா என்பதைப் பொறுத்த விஷயமிது. உங்களைக் காட்டிலும் பலசாலியாயுள்ள ஒரு ராஜ்யத்துடன் சண்டையிட்டுக் கொள்ளாமல், உங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய விஷயமிது. மெ. அ : யுத்தத்தில் படை பலமுள்ளவர்கள் பக்கந்தான் அதிருஷ்டம் இருக்கிறதென்று சொல்ல முடியாது. அது பட்சபாதமற்றிருப்பது. உடனடியாக உங்களுக்கு நாங்கள் பணிந்துவிடுவோமாயின், எங்களுடைய நிலைமை வருந்தக் கூடியதாகிவிடும். அப்படிக்கின்றி, உங்களை எதிர்த்துப் போராடுவோமானால், இப்பொழுதுள்ள படி நிமிர்ந்து நிற்போமென்ற நம்பிக்கையாவது இருக்கும். ஆ. தூ : நம்பிக்கையென்பது, ஆபத்துக் காலத்தில் ஆறுதல் அளிக்குந் தன்மையது. சக்தி வாய்ந்தவர்கள்தான் அதனைப் பின்பற்றலாம். அப்படிப் பின்பற்றுவதனால் நஷ்டமுண்டாகலாமே தவிர அழிவு உண்டாகாது. ஆனால் மிகப் பெரிய ஊதாரியாகிய அதனிடத்தில் யார் தங்களுடைய சர்வத்தையும் ஒப்படைக்கிறார்களோ அவர்களுக்கு, அவர்கள் வீழ்ந்து விட்ட காலத்தில், தன்னுடைய உண்மை சொரூபத்தை அது காட்டுகிறது; அப்படிக் காட்டிவிட்டு அவர்களைவிட்டு அகன்றுவிடுகிறது. அவர்களும் தற்காப்பில்லாதவர்களாகி விடுகிறார்கள். உங்களைப் பொறுத்தமட்டில், நீங்கள் பலவீனர்கள். உங்களுடைய எதிர்காலம் தராசுமுனையிலே நிற்கிறது. பெரும்பாலான ஜனங்கள், மனித முயற்சிகளின் மூலம் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதை விட்டுவிட்டு, கண் காணாதவற்றின் மீது, அதாவது குறி கேட்டல் முதலியவற்றின்மீது, எப்படி நம்பிக்கை வைக்கிறார்களோ, அவற்றினால் ஏமாற்றமடைந்து கடைசியில் அழிந்து போகிறார்களோ அப்படி நீங்கள் நடந்துகொள்ள வேண்டாம். மெ. அ : சக்தி வாய்ந்த உங்களுடனும் அதிருஷ்டத்துடனும் போராடுவதனால் உண்டாகக்கூடிய சங்கடங்களை நாங்கள் உணர் கிறோம். ஆனால் அதிருஷ்டத்தினால் நாங்கள் அழிக்கப்பட்டுவிடாமல் தெய்வங்கள் எங்களைக் காப்பாற்றும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால், எங்கள் கட்சியில் நியாயமிருக்கிறது; உங்கள் கட்சியில் அநியாயமிருக்கிறது. தவிர, எங்களுடைய பலவீனத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க லாஸிடீமோனின் உதவியை எதிர்பார்க்கிறோம். ஒரே இனத்தினர், இனத்தின் மானத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற முறையில் அவர்கள் ---- லாஸிடீமோனியர்கள் --- எங்களுக்கு உதவி செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள். எனவே நாங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கை சரியல்லவென்று சொல்லமுடியாது. ஆ. தூ : தெய்வங்களின் திருவருள் உங்களுக்கு உண்டு என்று சொன்னால் எங்களுக்குந்தான் உண்டு. தெய்வங்களைப்பற்றி ஜனங்கள் என்னவிதமான நம்பிக்கைகள் கொண்டிருக்கிறார்களோ, அந்தத் தெய்வங் களிடமிருந்து தங்களுக்கு என்ன கிடைக்கவேண்டுமென்று எதிர்பார்க் கிறார்களோ அவைகளுக்கு விரோதமாக எங்கள் பேச்சோ செயலோ இல்லை. இயற்கை விதியை அனுசரித்து, தெய்வங்களிலாகட்டும், மனிதர் களிலாகட்டும், பலசாலிகளாயுள்ளவர்கள் தான் ஆள்கிறார்கள். இந்த இயற்கை விதியை நாங்கள் சிருஷ்டிக்கவில்லை; இதன்படி முதன் முதலாக நாங்கள் நடக்கவுமில்லை. எங்களுக்கு முந்தியிருந்தே இந்த விதி இருந்து கொண்டிருக்கிறது; இனியும் இருந்துகொண்டிருக்கும். எங்களைப்போல் பலசாலிகளா யிருந்தால் நீங்களும் இப்படித்தான், எங்களைப் போலவேதான் நடந்துகொண்டிருப்பீர்கள்; மற்றவர்களும் நடந்து கொண்டிருப்பார்கள். லாஸிடீமோன் உதவி செய்யும் என்று எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இனத்தின் மானத்தினைக் காப்பாற்ற அஃது உதவி செய்யும் என்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். பாவம்! உங்களுடைய கபடமின்மைக்காக உங்களைப் பாராட்டுகிறோம். ஆனால் நீங்கள், அவர் களுடைய உதவியை எதிர்பார்ப்பது தவறு. அதற்காக உங்களை நாங்கள் பாராட்ட முடியாது. லாஸிடீமோனியர்கள், தங்களைப் பொறுத்த மட்டில், தங்களுடைய பரம்பரையைப் பொறுத்தமட்டில் மிகவும் ஒழுக்க முடையவர்கள்தான். ஆனால் மற்றவர்கள் விஷயத்தில் அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்களென்பதைப் பற்றி அதிகம் சொல்லலாம். ஆனால் சுருக்கமாகச் சொல்லும் பட்சத்தில், அவர்கள் - லாஸிடீமோனியர்கள் - எது தங்களுக்கு நன்மை பயப்பதாயிருக்கிறதோ அதுதான் நியாயம் என்று கருதுகிறவர்கள்; அப்படியே, எது தங்களுக்கு உசிதமென்று தோன்று கிறதோ அதுவே கண்ணியமானது என்கிறபடி நடந்துகொள்கிறவர்கள். இப்படிப்பட்டவர்களிடமிருந்து உங்களுக்கு உதவிகிடைப்பதென்பது அரிது. மெ. அ: எந்தக் காரணங்களுக்காக லாஸிடீமோனியர்களின் உதவி கிடைக்காதென்று நீங்கள் கூறுகிறீர்களோ அதே காரணங்களுக்காகவே அவர்களிடமிருந்து உதவி கிடைக்குமென்று நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அவர்களுடைய சொந்த நன்மையை முன்னிட்டு அவர்களிடமிருந்து பிரிந்து வந்து குடியேறியுள்ள எங்களை, உங்களிடம் காட்டிக் கொடுக்கமாட்டார்கள். அப்படிக் காட்டிக்கொடுப்பது, அவர் களுடைய பகைவர்களாகிய உங்களுக்கு உதவி செய்ததுபோலாகு மல்லவா? அப்படிச் செய்வார்களானால், கிரேக்கர்கள், அவர்களிடம் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்களே அந்த நம்பிக்கை போய்விடும். ஆ. தூ : சுயநலத்துடனிருந்தால்தான் க்ஷேமமாயிருக்க முடியும், நியாயமாகவும் கண்ணியமாகவும் நடந்துகொண்டால் ஆபத்துதான் என்பதை நீங்கள் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லைபோலும். லாஸிடீமோனியர்களைப் பொறுத்தமட்டில், ஆபத்தில் அவர்கள் ஒருபொழுதும் அகப்பட்டுக் கொள்ளமாட்டார்கள். மெ. அ: எங்களுக்காக அவர்கள் ஆபத்தை மேற்கொள்வார் களென்பதே எங்கள் அபிப்பிராயம். ஏனென்றால், எங்களுடைய ராஜ்யம் பெலொப்பொனேசியாவுக்குச் சமீபத்தில் இருக்கிறது. அதனால் எங்களுக்கு உதவுவது அவர்களுக்குச் சுலபமாயிருக்கும். மற்றும், அவர் களும் நாங்களும் ஒரே இனத்தினரானபடியால், மற்றவர்களைக் காட்டிலும் அவர்களிடத்தில் எங்களுக்கு அதிகமான நம்பிக்கை இருக்கிறது. ஆ. தூ : இருக்கலாம். ஆனால் சாதாரணமாக, உதவி செய்கிறவர்கள், உதவி கோருகிறவர்களுடைய நன்மையை நாடாமல் தங்களுடைய அதிகார மேன்மையையே நாடுகிறார்கள். மற்றவர்கள் விஷயத்தில் எப்படியோ; லாஸிடீமோனியர்கள் விஷயத்தில் இது மிகவும் உண்மை. தங்களுடைய சொந்த சக்தியில் அவர்களுக்கு எப்பொழுதும் அவநம்பிக்கையுண்டு. இதனால், துணையாக சகா ராஜ்யத்தினர் பலர் சேர்ந்தால்தான் அக்கம்பக்கத்திலுள்ள ராஜ்யத்தினரைத் தாக்க முற்படு வார்கள். எனவே, நாங்கள் கடலாதிக்கம் பெற்றிருக்கிறவரை, அவர்கள், எங்களைக் கடந்துவந்து உங்களுக்கு உதவி செய்யத் துணியமாட்டார்கள். மெ. அ : மற்றவர்கள் யாரையாவது உதவிக்கு அனுப்பலாம். கிரீட் கடல் இருக்கிறதே அது மிகவும் விசாலமானது. அதன் எஜமானர் களென்று சொல்லிக்கொள்ளும் உங்களுக்குக்கூட அதில் வரும் பகைவர் களின் கப்பல்களைக் கைப்பற்றுவது கஷ்டம்.1 அதே பகைவர்களின் கப்பல்களுக்கு உங்களை ஏமாற்றிவிட்டுச் செல்வது சுலபம். அவர்கள்-லாஸிடீமோனியர்கள்-கடல் வழியாக வந்து எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும், உங்கள் ராஜ்யத்தையும், பிராஸிடாஸினால் தாக்கப் பெறாத உங்கள் நேச ராஜ்யங்களையும் தாக்குவார்களென்பது திண்ணம். அப்பொழுது நீங்கள் உங்கள் சொந்த நாட்டினுடையவும் உங்கள் நேச நாடுகளினுடையவும் பாதுகாப்புக்காகச் சண்டை செய்ய நேரிடும். ஆ. தூ : ஆத்தீனியர்கள், ஓரிடத்தை முற்றுகையிடத் தொடங்கி விட்டால், வேறு எந்த சத்துருவுக்காகவும் பயந்து அந்த முற்றுகையைக் கைவிட்டுவிடமாட்டார்கள். இதைப் போகப்போக அனுபவத்தில் அறிந்து கொள்வீர்கள். எங்கள் ராஜ்யத்தின் நலனை முக்கியமாகக் கருதியே பேச்சு வார்த்தைகளைத் தொடங்குவோம் என்று முதலிற் கூறினீர்கள். ஆனால் நீங்கள் பேசிவருவதிலிருந்து உங்கள் ராஜ்யத்தின் நலனை நாடுவதாகத் தெரியவில்லையே? எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் வைத்திருக்கிற நம்பிக்கைதான் உங்களுடைய பலமாயிருக்கிறது. இப்பொழுது நாங்கள் இங்கே கொண்டு வந்திருக்கும் படைகளைக் காட்டிலும் உங்களிட மிருக்கும் படைகள் மிகக்குறைவு. இந்தக் குறைந்த படைகளைக்கொண்டு நீங்கள் வெற்றியடைய முடியாது. நாங்கள் இந்தப் பேச்சு வார்த்தை களிலிருந்து விலகிக்கொண்ட பிறகு, உங்களுக்குள்ளேயே நன்றாகக் கலந்தாலோசித்து, அனுஷ்டானத்தில் கொண்டுவரக்கூடிய ஒரு முடிவுக்கு வாருங்கள். பணிந்து போவது கண்ணியக்குறைவு என்று கருதாதீர்கள். ஆபத்து உண்டாகும், அழிவு நிச்சயம் என்று தெரிந்திருந்தும் அநேகர், இந்தக் கண்ணியம் என்ற வார்த்தையின் அழகிலே சொக்கிப் போய், தங்களுக்கு அழிவைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் புத்திசாலி களாயிருக்கும் பட்சத்தில் இந்த மாதிரி அழிவை வருவித்துக் கொள்ள வேண்டாம். ராஜ்யங்களிலே மிகப்பெரிய ராஜ்யமாகிய ஆத்தென், நீங்கள் சுதந்திரமாயிருங்கள்; ஆனால் எங்களுக்குக் கப்பஞ் செலுத்திக் கொண்டு வாருங்கள் என்றுதான் உங்களைக் கேட்கிறது. இதற்கு இணங்குவது, எவ்விதத்திலும் கண்ணியக்குறை வில்லை. உங்களுடைய ராஜ்யத்தின் நலனை நாடுகின்றீர்களா? அல்லது எங்களுடன் போர் செய்யத் தயாராயிருக்கிறீர்களா? இரண்டிலே ஏதேனும் ஒரு முடிவுக்கு வாருங்கள். ஆனால் கேடுபயக்கும் முடிவுக்கு வரவேண்டாம். உலகத்தில் யார், சமமானவர்களிடத்தில் தலைவணங்காமலிருக்கிறார்களோ, மேலோரிடத்தில் மரியாதையாக நடந்துகொள்கிறார்களோ, கீழோரை நியாயமாக நடத்துகிறார்களோ அவர்களே வெற்றியடைகிறார்கள். எனவே, நாங்கள் இந்தச் சமரஸப் பேச்சிலிருந்து விலகிச் சென்ற பிறகு நன்றாக ஆலோசியுங்கள். உங்களுக்கிருப்பது ஒரு ராஜ்யந்தான். அது வாழ்ந்து கொண்டிருப்பதோ, வீழ்ந்துபடுவதோ, நீங்கள் இப்பொழுது செய்கிற ஒரு முடிவில்தான் இருக்கிறது. இங்ஙனம் பேசிவிட்டு ஆத்தீனிய தூதர்கள் திரும்பிச் சென்றார்கள். பிறகு மெலோ அரசாங்க அங்கத்தினர்கள், ஜனசபையைக்கூட்டி ஆலோசித்தார்கள்; ஆத்தென்ஸுக்குப் பணிவதில்லையென்றும், ஆனால் அதனுடன் கண்ணியமான ஒரு சிநேக ஒப்பந்தம் செய்துகொள்ளத் தயாரென்றும் தீர்மானித்து ஆத்தீனியர்களுக்குத் தெரிவித்தார்கள். ஆத்தீனியர்களும், தாங்கள் கொண்டுவந்த படையின் பெரும் பகுதியை ஆத்தென்ஸுக்குத் திருப்பி அனுப்பிவிட்டு, சிறுபகுதியைக்கொண்டு மெலோ தீவை முற்றுகையிட்டார்கள். தீவினரும் சிறிது காலம்வரை எதிர்த்து நின்றார்கள். ஆனால் எவ்வளவு காலம்? முடியவில்லை. பணிந்துவிட்டார்கள். பணிந்தவர்களுக்கு என்ன கதி கிடைத்தது? வயது வந்த ஆண் மக்கள் அத்தனைபேரும் கொல்லப்பட்டார்கள்; பெண் மக்களும் குழந்தைகளும் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். மெலோ தீவின் நீண்டகால சுதந்திர வாழ்வு முற்றுப்பெற்றது.  பதினேழாவது அத்தியாயம் யுத்தத்தின் பதினேழாவது வருஷம். சிஸிலி தீவின் பக்கம் தன் கவனத்தைச் செலுத்தியது ஆத்தென். சிஸிலி தீவில், ஸைரக்யூ ராஜ்யம் கைவலுத்து நின்ற ராஜ்யமா யிருந்ததென்பதும், இது ப்பார்ட்டாவின் சார்புபற்றி நின்றதென்பதும் வாசகர்களுக்கு நினைவிருக்கும். சிஸிலி தீவின் மேற்குப் பகுதியில் ஸெகெட்டா1 என்ற ஒரு சிறு ராஜ்யம். இங்கு ஐயோனியர்கள் குடியேறி வசித்து வந்தார்கள். இதனால் இந்த ராஜ்யம் ஆத்தென்ஸின் சார்புபற்றி நின்றது. யுத்தத்தின் ஏழாவது வருஷம், சிஸிலியை நோக்கி ஆத்தென் ஒரு படையை அனுப்பியிருந்த தல்லவா, அந்தக் காலத்தில், ஸெகெட்டாவுக்கு ஆபத்து நேரிடும் சமயம் அதற்கு உதவி செய்வதாகச் சொல்லியிருந்தது ஆத்தென். இது சம்பந்த மாக ஆத்தென்ஸுக்கும் ஸெகெட்டாவுக்கும் ஓர் ஒப்பந்தமும் நிறைவேறியிருந்தது. ஸெகெட்டாவுக்குத் தெற்கே ஸெலின2 என்ற ராஜ்யம். இங்கு டோரியர்கள் குடியேறி வசித்து வந்தார்கள். இதனால் இதற்கு ஸைரக்யூஸின் ஆதரவு நிறைய இருந்தது. ஸெகெட்டாவுக்கும் ஸெலினஸுக்கும் பெலொப்பொனேசிய யுத்தத்தின் பதினேழாவது வருஷம்- கி.மு. 415-ம் வருஷம்-போர் மூண்டது. ஸெலின, ஸைரக்யூஸின் உதவியையும், ஸெகெட்டா, ஆத்தென்ஸின் உதவியையும் முறையே நாடின. ஸெகெட்டாவின் உண்மையான நிலைமையை அறிந்துவர ஒரு தூதுகோஷ்டியை அனுப்பியது ஆத்தென் இந்தத் தூது கோஷ்டிக்குப் பலமான உபசரணைகள் செய்தனர் ஸெகெடியர்; ஆனால் தங்களுடைய உண்மையான நிலைமையைத் தெரிவிக்கவில்லை. உண்மையில் ஸெகெட்டாவுக்குப் போதிய பண பலமோ படை பலமோ இல்லை. ஆத்தீனிய தூதுகோஷ்டியினரும், தங்களுக்குச் செய்யப்பட்ட உபசரணையில் மயங்கிப்போய், ஸெகெட்டியர் கூறியதையெல்லாம் உண்மையென்று நம்பிக்கொண்டு ஆத்தென் திரும்பி வந்தனர்; ஸெகெட்டா கோரும் உதவியை அதற்கு உடனே அளிக்கவேண்டுமென்று ஜனசபைக்குக் கூறினர். ஸெகெட்டாவும், மிகச் சாமர்த்தியமாக, முதலில் உதவி கோரியபோதே, அறுபது கப்பல்கள் கொண்ட ஒரு படையை அனுப்பவேண்டுமென்றும், இந்தப் படையினரின் ஒரு மாதச் சம்பளத்தை முன் பணமாகக் கொடுத்து விடுவதாகவும் சொல்லி அறுபது டாலெண்ட்டுகளை அனுப்பியிருந்தது. இங்ஙனம் முன்பணம் அனுப்பியிருப்பதைக் கொண்டும், தூதுகோஷ்டியினர் கூறும் விவரங்களைக் கேட்டும், ஸெகெட்டாவுக்கு உடனே ஒரு படையை அனுப்ப வேண்டுமென்ற எண்ணம் ஆத்தென்ஸில் வலுத்து நின்றது. சிறப்பாக இளைஞர்கள் இது விஷயத்தில் உற்சாகங்காட்டினார்கள். ஜனசபையும், நிக்கியா, ஆல்ஸிபியாடீ,1 லமாக்க2 ஆகிய மூவர் தலைமையின்கீழ் அறுபது கப்பல்கள் அடங்கிய ஒரு படையை ஸெகெட்டாவுக்கு அனுப்பத் தீர்மானித்தது. இங்ஙனம் தீர்மானித்ததற்கு அடிப்படையான நோக்கம் சிஸிலி தீவு முழுவதையும், தனது ஆதிக்கத்திற்குட்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதுதான். ஸெகெட்டாவுக்கு உதவியென்பது ஒரு முகாந்தரமாகவே கொள்ளப்பட்டது. படைத்தலைவர் களுள் ஒருவனாக நிக்கியா தெரிந்தெடுக்கப்பட்டாலும், இவனுக்குப் படை நடத்திச் செல்வதில் விருப்பமில்லை. இவன் விருப்பத்திற்கு விரோதமாகவே இவன் தெரிந்தெடுக்கப்பட்டான். படை யனுப்புவதாகத் தீர்மானிக்கப்பட்ட ஐந்தாவது நாள், படையைத் துரிதமாக அனுப்ப என்னென்ன ஏற்பாடுகள் செய்யவேண்டும், படைத் தலைவர்களுக்கு இன்னும் என்னென்ன தேவை, இவைகளைப்பற்றியெல்லாம் ஆலோசிக்க ஜனசபை மறுபடியும் கூடியது. அப்பொழுது படைத்தலைவர்களுள் ஒருவனாகத் தெரிந்தெடுக்கப்பட்ட நிக்கியா, ஆத்தென்ஸின் தற்போதைய நிலையில் இங்ஙனம் படைகொண்டு செல்வது உசிதமல்ல வென்றும், இதனால் விபரீத பயன் விளையக்கூடுமென்றும் எச்சரிக்கை செய்கின்ற முறையில் பின் வருமாறு பேசினான்:- சிஸிலிக்குப் படை கொண்டுசெல்ல என்னென்ன ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்பதைப்பற்றி ஆலோசிப்பதற்காகவே ஜனசபை இந்தத் தடவை கூட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இங்ஙனம் ஒரு படையை அனுப்புவது உசிதமா என்னும் விஷயத்தைப்பற்றி இன்னமும் நன்கு ஆலோசிக்க வேண்டியவர்களா யிருக்கிறோம். மிகவும் முக்கியமான விஷயம் இது. இதை நாம் லேசாகக் கருதிவிடக்கூடாது. நமக்குச் சம்பந்தமில்லாத ஒரு யுத்தத்தில் இறங்குமாறு அந்நியர்கள் நம்மைத் தூண்டுகிறார்கள். இந்தத் தூண்டுதலுக்கு நாம் வசப்பட்டு விடக்கூடாது. படை கொண்டு செல்வதனால், என்னைப் பொறுத்தமட்டில் எனக்குக் கௌரவந்தான்; எனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று நான் அஞ்சவுமில்லை. ஒருவன், தன்னையும், தன் சொத்துபற்றுக்களையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்கிற விஷயத்தில் சிறிது சிந்தனை செலுத்துவானாயின், அதற்காக அவனை ஒரு கேவலமான பிரஜையாக நான் எண்ணமாட்டேன். அதற்கு மாறாக அவன், தனது சொந்த நன்மையை முன்னிட்டு, தனது நாடு நலம் பெற்றிருக்க வேண்டுமென்று விரும்புவான். என் விஷயத்தில், கௌரவம் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காக, நான் என்னென்ன உறுதியான அபிப்பிராயங்கள் கொண்டிருக்கிறோனோ அந்த அபிப்பிராயங்களுக்கு மாறுபடப் பேசியதில்லை. இப்பொழுதும் அப்படியே என் பேச்சைத் துவக்கப்போவதில்லை. எது சிறந்த வழியென்று எனக்குத் தோன்றுகிறதோ அதையே சொல்லுவேன். இப்பொழுது உங்களுக்கு என்ன இருக்கிறதோ அதை வைத்துக் காப்பாற்றுங்கள்; நிச்சயமில்லாத சில அனுகூலங்களுக்காக-அந்த அனு கூலங்களை நீங்கள் பெறமுடியுமோ முடியாதோ என்பது வேறு விஷயம்,-இப்பொழுதுள்ளதை ஆபத்திற்குட்படுத்திக் கொண்டுவிடாதீர்கள்; இப்படி யெல்லாந்தான் நான் ஆலோசனை கூறுவேன். ஆனால் தற்போதைய உங்கள் மனோநிலையில் என் வார்த்தைகள் வலுவிழந்து நிற்கும். ஆதலின் படையெடுப்பு விஷயத்தில் நீங்கள் கொண்டுள்ள உற்சாகம், தற்சமயத்திற்கு ஏற்றதல்ல, சிஸிலியின்மீது ஆதிக்கங்கொள்ள வேண்டு மென்று நீங்கள் ஆசை கொண்டிருக்கிறீர்களே அது சுலபமாக நிறைவேறக் கூடியதல்ல என்று உங்களுக்கு எடுத்துக்காட்டிவிட்டுத் திருப்தியடை கிறேன். இங்குள்ள பகைவர்களை அப்படியே விட்டுவிட்டு புதிய பகைவர் களைச் சேர்த்துக்கொண்டு வரவே நீங்கள் சிஸிலிமீது படையெடுத்துச் செல்கிறீர்களென்று நான் உறுதியாகக் கூறுவேன். நீங்கள் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை அப்படியே நம்பலாமென்று நினைக்கிறீர்கள்.1 நீங்கள் சும்மாயிருக்கிற வரையில் அது பெயரளவுக்கு அமுலில் இருந்து கொண்டிருக்கும். ஏன் பெயரளவுக்கு என்று சொல்கிறேனென்றால், இங்குள்ள சிலரின் நடவடிக்கையினாலும்2 ப்பார்ட்டாவிலுள்ள சிலரின் நடவடிக்கையினாலும் அஃது-அந்த ஒப்பந்தம்-பெயரளவுக்காகிவிட்டது. நமக்கு எங்கேனும் பெரிய விபத்து ஏற்படுமென்று தெரிந்தால், பகைவர்கள்-லாஸிடீமோனியர்கள்-நம்மைத் தாக்க ஒரு நிமிஷங்கூடத் தாமதிக்கமாட்டார்கள். தங்களுக்கு நிகழ்ந்த ஆபத்தின் காரணமாகத்தான் அவர்கள் அந்த ஒப்பந்தத்திற்கு இணங்கும்படியான நிர்ப்பந்தத்திற்குட் பட்டார்கள். இதனால் நம்மைக்காட்டிலும் அவர்களுக்குத்தான் கண்ணியக் குறைவு. மற்றும் அந்த ஒப்பந்தத்தில் ஆட்சேபகரமான அமிசங்கள் பல இருக்கின்றன. இன்னும், அந்த ஒப்பந்தத்தை, வலுவுள்ள பல ராஜ்யங்கள் அங்கீகரிக்கவில்லை.1 இவற்றுள் சில, நம்மிடம் பகிரங்க மாகவே பகைமை காட்டுகின்றன.2 இன்னுஞ் சில, (லாஸிடீமோனியர்கள் நம்மீது எவ்வித நடவடிக்கையும் எடுத்துக்கொள்ளாததினால்) பத்து நாட்களுக்கொருதரம் புதுப்பிக்கப்படுகிற யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் விளைவாக, நம்மீது யுத்தந் தொடுக்காமல் தடுக்கப்பட்டிருக்கின்றன. e«Kila gil gy¤ij eh« ájwÉLnthkhdhš-M«; m¥go¢ ájwÉLtj‰F¤ jh‹ eh« Éiu»nwh«.-mij¡கண்டதும் அவர்கள்-நமது பகைவர்கள்-சிஸிலியில் குடியேறியிருக்கும் கிரேக்கர்களோடு சேர்ந்து கொண்டு நம்மைத் தீவிரமாகத் தாக்க முற்படுவார்கள். எனவே இந்த விஷயங்களையெல்லாம் நாம் நன்கு ஆலோசிக்க வேண்டும். நமது ராஜ்யம் நெருக்கடியான நிலைமையிலிருக்கிறபொழுது, நாம், மேலும் மேலும் ஆபத்தை வருவித்துக்கொள்ளக் கூடாது; ஏற்கனவே நம் வசத்திலிருக்கும் பிரதேசங்களைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளாமல், வேறோர் ஏகாதிபத்தியத்தை ஆக்கிரமித்துக்கொள்ளப் பிரயத்தனப்படக் கூடாது. திரே பகுதியிலுள்ள கால்ஸிடீயர்கள் அநேக வருஷ காலமாக நம்மீது விரோதங்காட்டி வருகிறார்கள். அவர்களை நாம் இன்னும் அடக்கவில்லை. தரைப் பக்கமாகவுள்ள ராஜ்யங்களிற் சில, அரைகுறை மனத்துடன்தான் நமக்குப் பணிவு காட்டுகின்றன. அநீதி இழைக்கப்பட்ட நமது சகாக்களாகிய ஸெகெட்டியர்களுக்கு உதவி செய்ய நாம் விரைந்து செல்கிறோம்; ஆனால் நமக்கே அநீதி இழைத்திருக்கிற நமது விரோதிகள் பலரை இன்னமும் அடக்காமல் விட்டுவைத்திருக்கிறோம். அப்படி இவர்களை அடக்கி நமது ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தாலும் கொண்டுவந்துவிடலாம். ஆனால் சிஸிலியர்களை நாம் வெற்றி கொண்டாலும், அவர்கள் வெகு தொலைவில் இருப்பதனாலும் அதிகம் பேராயிருப்பதனாலும், கஷ்டமில்லாமல் அவர்களை ஆள முடியாது. யார்மீது படையெடுத்து வெற்றி காண்கிறோமோ அவர்களை நம் ஆதிக்கத்திற்குட்படுத்தி வைத்துக்கொண்டிருக்க முடியாதென்று தெரிந்தால் அவர்கள் மீது நாம் படையெடுத்துச் செல்லவே கூடாது. படை யெடுத்துச் சென்று வெற்றி காணாவிட்டால், அதற்குப் பிறகு நமது நிலைமை. படையெடுத்துச் செல்வதற்கு முந்தியிருந்த நிலைமை யினின்று வேறுபட்டதாகிவிடும். சிஸிலியர்களைக் கண்டு, அவர் களுடைய தற்போதைய நிலைமையில், நாம் பயப்படவேண்டியதில்லை. ஸைரக்யூஸினால் வெற்றி கொள்ளப்பட்டாலும் அவர்களால் நமக்கு விபரீத ஆபத்து ஒன்றும் விளைந்துவிடாது. இப்படித்தான் நான் நினைக்கிறேன். தற்போது, சிஸிலியிலுள்ள ராஜ்யங்கள், லாஸிடீமோனைத் திருப்தி செய்ய வேண்டி, தனித்தனியாக வந்து நம்மைத் தாக்கலாம். ஆனால் அவை, ஸைரக்யூஸின் கீழ் ஒன்று படுமானால், ஓர் ஏகாதிபத்தியம், மற்றோர் ஏகாதிபத்தியத்தை, அதாவது ஸைரக்யூஸிய ஏகாதிபத்தியம் ஆத்தீனிய ஏகாதிபத்தியத்தைத் தாக்கத் துணியாது. அப்படி நம்மைத் தாக்க அது-ஸைரக்யூஸிய ஏகாதிபத்தியம்-பெலொப்பொனேசியர்களுடன் சேர்ந்துகொள்ளுமானால், அதே பெலொப் பொனேசியர்கள் நம்மைத் தாக்கியதுபோல் தன்னையும் தாக்கி வீழ்த்தி விடக்கூடுமென்று அது-ஸைரக்யூ-யோசிக்குமல்லவா? சிஸிலிக்கு நாம் படையெடுத்துப் போகாவிட்டால்தான் அங்குள்ள கிரேக்கர்கள் நம்மைக்கண்டு அதிகமாக அஞ்சுவார்கள். அப்படிப் போகவேண்டுமென்று நீங்கள் நிச்சயித்துவிட்டால், அங்குப்போய் நமது படைபலத்தைக் காட்டிவிட்டுத் திரும்பிவிடவேண்டும். எப்பொழுதுமே மனிதர்கள், வெகுதொலைவிலிருக்கிற ஒன்றுக்குத்தான், அதனுடைய புகழ் பரிசோதிக்கப்படாமலிருக்கையில்தான் அதிக மரியாதை செலுத்து கிறார்கள். நாம் படையெடுத்துச் சென்று அங்கே பின்வாங்கினால்கூட, நம்மை அவர்கள்-சிஸிலியர்கள்-கீழ்க்கண்ணாலேயே பார்ப்பார்கள்; அது மட்டுமல்ல; இங்குள்ள நமது சத்துருக்களுடன் சேர்ந்தும் கொள்வார்கள். இந்த உண்மையை- தூரத்திலிருக்கிற ஒன்றுக்கு மனிதர்கள் மரியாதை செலுத்துகிறார்களென்ற உண்மையை-லாஸிடீமோனியர்கள் விஷயத் திலும் அவர்களுடைய சகாக்கள் விஷயத்திலும் நீங்கள் நன்கு அனுபவித் திருக்கிறீர்கள். அவர்களைக் கண்டு நீங்கள் முதலில் பயப்பட்டீர்கள். ஆனால் நீங்கள் எதிர்பாராதவிதமாக அவர்கள்மீது வெற்றி கண்டுவிட்ட பிறகு அவர்களைக் கேவலமாக மதிக்கத் தொடங்கிவிட்டீர்கள். அதனால் சிஸிலியை வெற்றி கொள்ளவேண்டுமென்ற ஆசையும் உங்களுக்கு உண்டாகியிருக்கிறது. உங்களுடைய பகைவர்களின் துரதிருஷ்டங்களைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சி பொங்கக்கூடாது. அதற்குப் பதில், அவர்கள் கொண்டிருக்கிற உற்சாகத்தை எப்படிக் குலைப்பது என்பதைப் பற்றிச் சிந்திக்கவேண்டும். பிறகுதான், அவர்களுடைய உற்சாகத்தைக் குலைத்துவிட்ட பிறகுதான், தன்னம்பிக்கை கொள்ளவேண்டும். தங்களுடைய வீரத்திற்குப் பழுது ஏற்பட்டுவிட்டதென்று லாஸிடீமோனியர்கள் உணர ஆரம்பித்துவிட்டால், இப்பொழுதுகூட, நம்மைத் தாக்கி வீழ்த்தி, தங்கள் வீரத்தின்மீது ஏற்பட்ட கறையை அகற்றிக்கொண்டு விடுவார்கள். ஏனென்றால், அவர்கள், நீண்ட காலமாக வீரத்திற்குத்தான் அதிக மதிப்பு வைத்து வந்திருக்கிறார்கள். நாம் புத்திசாலிகளா யிருக்கும் பட்சத்தில், சிஸிலியிலுள்ள அந்நியர்களாகிய ஸெகெட்டியர்களுக்காகப் போராடக்கூடாது; லாஸிடீமோனில் நடை பெற்றுவரும் ஒரு சிலர் ஆட்சியினின்று நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவே போராடவேண்டும். மற்றும், இப்பொழுதுதான் நாம், ஒரு பெரிய தொத்து நோயினாலும் யுத்தத்தினாலும் அவதிப்பட்டு சிறிது ஓய்வு கொண்டிருக்கிறோ மென்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஓய்வினால், நமது சொத்து பற்றுக்களுக்கும் ஜனங்களுக்கும் பெரிய அனுகூலம் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சொத்து பற்றுக்களையும் ஜனங்களையும் நமது நன்மைக்காக நமது நாட்டிலேயே உபயோகப்படுத்துவதை விடுத்து, வெளிநாட்டிலே சென்று குடியேறியிருக்கிறவர்களுடைய நன்மைக்காக உபயோகப்படுத்தக்கூடாது. வெளிநாட்டிலே சென்று குடியேறியிருக்கிற இவர்கள், தங்களால் கூடுமானவரை அழகாகப் பொய் சொல்வதில் சிரத்தையுடையவர்களா யிருக்கிறார்கள். இவர்கள், சுயமாக ஒன்றுஞ் செய்யாமல், பேசிக்கொண்டேயிருந்து, ஆபத்து வந்தால், அதை மற்றவர்கள் பொறுப்புக்கு விட்டுவிடுகிறார்கள். இவர்களுக்கே வெற்றி கிடைத்துவிட்டால், வெற்றி வாங்கிக் கொடுத்தவர்களுக்கு நன்றிகூட செலுத்தமாட்டார்கள். தோல்வியடைந்தாலோ, தங்களோடு தங்கள் நண்பர்களையும் நாசத்திற்கு இழுத்துக் கொண்டு போவார்கள். இங்குள்ளவர்களில் எவனேனும், படைத்தலைமைக்குத் தெரிந் தெடுக்கப்பட்டதனால் அதிக மகிழ்ச்சி கொண்டவனாய், தனது சொந்த நன்மையைக் கருதி, படைகொண்டு செல்லுங்கள் என்று உங்களை ஊக்கப் படுத்துவானாகில், சிறப்பாக அவன், படைத்தலைமை வகிப்பதற்குரிய வயதானவனாயிராதிருக்கும் பட்சத்தில், மற்றும் அவன், தான் அதிக குதிரைகள் வைத்துக்கொண்டிருப்பதை மற்றவர்கள் வியந்து பாராட்ட வேண்டுமென்று கருதுகிறவனாயிருக்கும் பட்சத்தில், அப்படி அதிக குதிரைகளை வைத்துக்கொண்டிருப்பது அதிக செலவாகுமாதலின், படைத்தலைமைப்பதவியை ஏற்று அதன் மூலம் சிறிது லாபத்தை எதிர்பார்க்கிறவனாயிருக்கும் பட்சத்தில், அப்படிப்பட்டவனை, நாடு ஆபத்திலிருக்க, ஆடம்பர வாழ்க்கையை நடத்தவிடாதீர்கள். அவனைப் போன்றவர்கள், நாட்டின் செல்வத்தை நாசப்படுத்துகிறார்கள்; தங்கள் சொந்தப் பணத்தை வீணாகச் செலவழிக்கிறார்கள். சிஸிலிக்குப் படை கொண்டு செல்வது மிகவும் முக்கியமான விஷயம். வயதிலே சிறியவனான ஒருவன் இதைப்பற்றித் தீர்மானிக்கவும் கூடாது; இதை நடத்திச் செல்லும் பொறுப்பையும் மேற்கொள்ளக்கூடாது.1 வயதிலே சிறியவனான அந்த ஒருவன் பக்கத்தில், அவனைப் போன்ற இளைஞர்கள், அவனுடைய ஆதரவாளர்களாக அமர்ந் திருப்பதைக் கண்டு நான் அஞ்சுகின்றேன். அந்த இளைஞர்களுக்குப் பக்கத்தில் வயதானவர்கள் உட்கார்ந்திருந்தால், அவர்களை, படை கொண்டு செல்வதற்குச் சாதகமாக ஓட்டுச் செய்யாவிட்டால் கோழைகள் என்று எங்கே நினைத்துக்கொண்டுவிடப் போகிறார்களோ என்று அஞ்ச வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். வெற்றி வேண்டுமென்று விரும்புவதனாலேயே வெற்றி கிடைத்துவிடாது. முன் யோசனைப்படி சில காரியங்களைச் செய்தால்தான் வெற்றி கிடைக்கும். ஆதலின், வெற்றிகொள்ள வேண்டுமென்ற பைத்தியக்காரக் கனவை அவர்களுக்கே-இளைஞர்களுக்கே-விட்டுவிடுங்கள். நமது நாட்டைப் பெரிய ஆபத்து சூழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நாட்டை நேசிக்கிறவர்கள் என்ற முறையில், படைகொண்டு செல்லவேண்டாமென்ற கட்சிக்கு ஓட்டுச் செய்யவேண்டுமென்று வயதான உங்களைக் கேட்டுக் கொள் கிறேன். சிஸிலியர்களை, அவர்களுடைய பிரதேசங்களை அவர்களே அனுபவித்துக்கொள்ளுமாறும், அவர்களுடைய விவகாரங்களை அவர் களே தீர்த்துக்கொள்ளுமாறும் விட்டுவிடுங்கள். ஆத்தீனியர்களைக் கலவாமலேயே, ஸெலின வாசிகளுடன் சமரஸமாகப் போங்கள் என்று ஸெகெட்டியர்களுக்குச் சொல்லிவிடுங்கள். யார், தங்களுடைய தேவைக் காலத்தில் நாம் உதவி செய்யவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்களோ, ஆனால் நம்முடைய தேவைக்காலத்தில் உதவி செய்யக்கூடாதவர் களாயிருக்கிறார்களோ அப்படிப்பட்டவர்களுடன் இது காறும் நாம் சிநேக ஒப்பந்தம் செய்துகொண்டு வந்தோம். இனி அப்படிச் செய்து கொள்வதில்லையென்று தீர்மானித்துக் கொள்வோமாக! சபைத்தலைவரே! நமது ஏகாதிபத்தியத்தின் நன்மையை நாடுவது நமது கடமையென்று நீங்கள் கருதுவீர்களாயின், நல்ல பிரஜையாக நடந்துகொள்ள வேண்டுமென்று நீங்கள் விரும்புவீர்களாயின், இந்தப் பிரச்னையை-படைகொண்டு செல்ல வேண்டுமா வேண்டாமா என்று இந்தப் பிரச்னையை-ஓட்டுக்கு விடுங்கள்; ஆத்தீனியர்களுடைய அபிப்பிராயத்தை இரண்டாவதுமுறை அறிந்துகொள்ளுங்கள். மீண்டும் இந்தப் பிரச்னையை ஓட்டுக்குவிட நீங்கள் விரும்பவில்லை யாயின், இத்தனை பேர் சாட்சிகளா யிருக்கிறபோது, ஏற்கனவே நிறை வேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை மீறி நடப்பதற்காக உங்களை யாரும் குறைகூற மாட்டார்கள். தவறான பாதையில் செலுத்தப்படும் உங்கள் ராஜ்யத்தின் வைத்தியராக மட்டுமே நீங்கள் இருக்கிறீர்கள். தங்களால் கூடுமான வரை ராஜ்யத்திற்கு நன்மையைச் செய்வது, அப்படிக்கில்லா விட்டாலும் தீமையைச் செய்யாமலிருப்பது, இப்படி நடந்து கொள்வது தான் அதிகாரத்திலிருக்கின்றவர்களுக்குச் சிறப்பாகும். சிஸிலிக்குப் படை கொண்டு செல்ல வேண்டுமென்று முனைந்து நின்றவர்களில் முக்கியதனான ஆல்ஸிபியாடீ, நிக்கியா கூறியதை மறுத்துப் பின்வருமாறு பேசலுற்றான்:- ஆத்தீனியர்களே! சிஸிலிக்குச் செல்லவிருக்கின்ற படையின் தலைவர்களிலே ஒருவனாக நான் தெரிந்தெடுக்கப்பட்டது குறித்து என்னைத் தாக்கிப் பேசினான் நிக்கியா இப்பொழுது. ஆதலின் அதைப்பற்றி முதலிற் பேச முற்படுகிறேன். படைத்தலைமை வகிக்க, மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு அதிகமான உரிமையுண்டு; அதே சமயத்தில், தலைவனாயிருக்கும் தகுதியும் எனக்கு உண்டு என்று நம்புகிறேன். நான் எவைகளுக்காகத் திட்டப்படுகின்றேனோ அவை, எனது மூதாதையர் களுக்கும் எனக்கும் புகழைக்கொண்டு கொடுத்திருக்கின்றன; அதுமட்டு மல்ல; நமது ராஜ்யத்திற்கு லாபத்தையும் அளித்திருக்கின்றன. இந்த யுத்தத்தினால் நமது ராஜ்யம் அழிந்துபடுமென்று கிரேக்கர்கள் எதிர்பார்த் தார்கள். ஆனால் அஃது உண்மையில் எவ்வளவு மேன்மையுடையதா யிருந்ததோ அதைக்காட்டிலும் அதிக மேன்மையுடையதா யிருக்கிற தென்று இப்பொழுது கருதுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? ஒலிம்ப்பிய விழாவில், நமது ராஜ்யத்தின் பிரதிநிதியாக, மிகச் சிறந்த முறையில் நான் சென்றேன்; ஏழு ரதங்களை, பந்தயத்தில் கலந்து கொள்ளும்படி செய்தேன். ஒரு தனிப்பட்ட நபர், இதற்குமுன் இத்தனை ரதங்களைக் கலந்து கொள்ளும்படி செய்ததேயில்லை. முதற் பரிசு பெற்றேன். இரண்டாவது பரிசு பெற்றேன்; நான்காவது பரிசும் பெற்றேன்; வெற்றி பெறுவதற்குத் தகுதியுடையவன் என்ற முறையிலேயே மற்றெல்லா விஷயங்களிலும் நடந்துகொண்டேன். அப்படியெல்லாம் நடந்துகொள்வதைக் கௌரவமாக கருதுவதே நமது வழக்கமா யிருந்து வந்திருக்கிறது. அப்படி நடந்துகொள்வது, நமது ராஜ்யத்தின் அதிகார சக்தியைப் பிரதிபலித்துக் காட்டுவதாகவுமிருக்கிறது. நாடகங்களில் இசை முழக்கும் சங்கீத கோஷ்டியினருக்கும், அவர்களுக்குப் பயிற்சி அளிக் கிறவர்களுக்கும் சன்மானம் செய்து எனது ஆடம்பரத்தைப் புலப்படுத்தினே னென்று சொல்லப்படுகிறது. வாதவம். அதனால் எனது சகோதரப் பிரஜைகளில் சிலருக்குப் பொறாமை ஏற்பட்டிருக்கிறதென்பது எனக்குத் தெரியும். ஆனால் அந்நியர்கள், அத்தகைய ஆடம்பரத்தை நமது பலத்தின் அறிகுறியென்றே கருதுகிறார்கள். ஒரு மனிதன், தன் சொந்தச் செலவில், தன் ராஜ்யத்திற்கு நன்மை செய்து தனக்கும் நன்மை செய்துகொள்வது தவறு என்று சொல்லப்படுமாகில் அந்தத் தவறு உபயோகமுள்ளதாகவே இருக்கிறதென்று சொல்லவேண்டும். மற்றும் ஒரு மனிதன், தான் மேலான நிலைமையிலிருப்பதன் காரணமாகப் பெருமை கொண்டவனாய் மற்ற மனிதர்களுடன் சரிசமானமாகப் பழக மறுப்பானாகில், அவன் நியாயத்திற்கு விரோதமாக நடந்து கொண்டவனாக மாட்டான். அவனே துரதிருஷ்ட நிலைமைக்கு இறங்கிவிடுவானாகில், அந்த நிலையில் அவனோடு பங்குகொள்ள யாரும் முன்வருவதில்லை; அவனும் தன்னுடைய துரதிருஷ்ட நிலையில் தனக்கு மற்றவர்கள் மரியாதை செலுத்தவேண்டுமென்று எதிர்பார்ப்பதில்லை. அப்படியிருக்க, தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள், தங்கள் மேலான நிலையிலுள்ளவர்கள் அலட்சிய மாக நடத்துகிறார்களென்று ஏன் குறைகூறிக்கொள்ள வேண்டும்? முதலில் இவர்கள், அதாவது தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள், தங்களைக்காட்டிலும் கீழான நிலையிலுள்ளவர்களைத் தங்களுக்குச் சமதையாக நடத்தட்டும்; பிறகு, தங்களைக்காட்டிலும் மேலானவர்கள், தங்களைச் சரிசமானமாக நடத்தவேண்டுமென்று சொல்லலாம். எனக்குத் தெரிந்ததென்னவென்றால், என்னைப்போல் மேன்மை யடைந்திருக்கிறவர்கள், தங்கள் வாழ்நாளில் தங்கள் சகோதர ஜனங் களிடத்தில், சிறப்பாகத் தங்களுக்குச் சமமானவர்களிடத்தில் செல்வாக் கற்றவர்களாய் இருக்கலாம். ஆனால் வருங்கால சந்ததியினர், அவர் களுடைய சம்பந்தம் தங்களுக்கு இருப்பதாகச் சொல்லிக்கொள்ள எவ்வித ஆதாரமுமில்லையென்றாலும், அப்படிச் சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறார்கள். அவர்களைப் பெற்றெடுத்த நாடோ, அவர்களை அந்நியர் களாகவோ, பாவிகளாகவோ கருதாமல், தேசீய வீரர்களாகக் கருதி அவர்களால் பெருமையடைகிறது. இப்படிப்பட்ட தேசீய வீரர்களில் ஒருவனாக நான் கருதப்பட வேண்டுமென்பதுதான் எனது ஆவல். அந்த ஆவல் கொண்டிருப்பதற்காக நான் தனிப்பட தூஷிக்கப்பட்ட போதிலும், பொது விவகாரங்களை, என்னைக்காட்டிலும் திறம்பட நடத்தக் கூடியவர்கள் வேறு யாரேனும் இருக்கின்றனரா என்பதுதான் கேள்வி. பெலோப்பொனேசியாவிலுள்ள பலமான ராஜ்யங்களை, உங்களுக்கு ஆபத்தில்லாமலோ, நீங்கள் சிரமப்படாமலோ ஒன்றுகூடுமாறு செய்தேன். அதன் விளைவாக, லாஸிடீமோனியர்கள், தங்கள் சர்வத்துக்காகவும் போராடவேண்டிய அவசியத்திற்குள்ளானார்கள். ஒரேநாள் போர்தான் மாண்ட்டினீயாவில்1 நடைபெற்றது. அந்தப் போரில் அவர்கள் - லாஸிடீமோனியர்கள் - வெற்றி பெற்றார்களாயினும், அதற்குப்பிறகு, அவர்கள் நாளது வரையில் இழந்துவிட்ட தன்னம்பிக்கையை மீண்டும் பெறவேயில்லை. இவ்வாறு எனது இளமையும், நான் ஏதோ பைத்தியக் காரத்தனமான தவறு செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே அந்தத் தவறும், பலம்பொருந்திய பெலோப்பொனேசியர்களுடன் ஈடு கொடுக்கக் கூடிய வன்மையுடையனவாக இருந்தன; அவர்களுடைய நம்பிக்கையையும் பெறக்கூடியனவாக இருந்தன. ஆதலின் எனது இளமையைக் கண்டு அஞ்சாதீர்கள். நான் நல்ல இளமைப் பருவத் திலிருக்கிறபோதும், வெற்றி வாங்கிக் கொடுப்பதில் சிறந்தவன் என்ற புகழை நிக்கியா பெற்றிருக்கிறபோதும், எங்கள் இரண்டு பேருடைய சேவைகளையும் நன்றாக உபயோகித்துக்கொள்ளுங்கள். ஏதோ ஒரு சக்தி வாய்ந்த ராஜ்யத்தைத் தாக்கப் போகிறோம், அது நம்மால் முடியுமா என்று சந்தேகப்பட்டு, சிஸிலிக்குப் படைகொண்டு செல்லவேண்டுமென்று முந்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரித்து விடாதீர்கள். சிஸிலியிலுள்ள ராஜ்யங்களில், பலவகைக் கீழ்மக்களே வசிக் கிறார்கள். அவர்கள், தங்கள் அரசியல் தாபனங்கள் முதலியவற்றை வெகு சுலபமாக மாற்றிவிட்டு, புதியனவற்றை ஏற்றுக்கொள்ளுகிறார்கள். இதனால் அவர்களுக்கு உண்மையான தேசபக்தியென்பது கிடையாது. பிரஜைகளிடத்தில் ஆயுத பலமில்லை. ராஜ்யத்திற்குப் பாதுகாப்புமில்லை. பிரதியொரு மனிதனும், நயமான பேச்சினாலோ, கட்சிப்பூசல்களில் பங்கெடுத்துக்கொண்டோ, பொதுநலத்திற்குப் பாதகம் உண்டாகக்கூடிய வகையில் தன்னலத்தைச் சாதித்துக்கொள்ளலா மென்று நினைக்கிறான். நாட்டிற்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் வேறொரு நாட்டில் சென்று குடியேறிவிடலாமென்று கருதி, அந்த வகையில் எப்பொழுதும் தயாரிப்புடன் இருக்கிறான். இப்படிப்பட்டவர்களடங்கிய ஒரு கும்பலிட மிருந்து, ஒருமுகப்பட்ட ஆலோசனையையோ, ஒருமுகப்பட்ட நடவடிக்கையையோ நீங்கள் எதிர்பார்க்கவேண்டாம். அவர்களிடத்தில் உட்பிணக்குகள் நிறைய இருக்கின்றன. இதனால் நாம் ஏதேனும் ஆசை வார்த்தைகள் காட்டினால் அவர்கள் எளிதிலே நம் வசத்திற்கு வந்து விடுவார்கள். தங்களிடத்தில் பலமான காலாட்படை இருப்பதாக சிஸிலியர்கள் பெருமை பாராட்டிக்கொள்கிறார்களே தவிர உண்மையில் அப்படியில்லை. கிரீஸிலுள்ள அநேக ராஜ்யங்கள், இப்படித்தான் தங்களிடத்தில் அதிகமான காலாட்படை இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தன. ஆனால் உண்மையில் இந்த (பெலொப்பொனேசிய) யுத்த நடவடிக்கைகளைப் பார்க்கிறபோது, எந்த ராஜ்யத்தினிடத்திலும் போதிய காலாட்படை இல்லையென்று தெரிகிறது. சிஸிலியிலுள்ள ராஜ்யங்கள் பலவும், நான் கேள்விப்பட்ட வரையில், மேலே நான் சொன்ன மாதிரிதான் இருக்கும். அங்குப் படைகொண்டு செல்வதனால் நமக்கு உண்டாகக்கூடிய சாதகங்கள் பலவற்றையும் நான் இங்கு விதரித்துக் கூற விரும்பவில்லை. நாம் படைகொண்டு சென்றோ மானால், ஸைரக்யூஸியர்களிடத்தில் துவேஷம் பாராட்டி வருகின்ற அந்நியர் பலரும் நம்மோடு சேர்ந்துகொள்வார்கள். சரிவரப் பார்ப்பீர் களானால், தரைப்பக்கத்திலுள்ள ராஜ்யங்கள் நம்மைத் தடை செய்ய மாட்டா. நாம் சிஸிலிக்குச் சென்றால், இங்கே பகைவர் பலரை விட்டு வைப்போமென்று சொல்லப்படுகிறது. ஆனால் நமது முன்னோர்கள் காலத்திலும் இதே பகைவர்கள்தான் இருந்தார்கள்; பாரசீகர்களும் பெரிய பகைவர்களா யிருந்தார்கள்; இவர்களனைவரையும் நமது முன்னோர்கள், கடலாதிக்கம் பெற்றிருந்ததன் காரணமாக வெற்றி கொண்டார்கள். நம்மைத் தாக்கி வெற்றிகொள்ள முடியுமென்ற நம்பிக்கையென்னவோ, பெலொப்பொனேசியர்களுக்கு எப்பொழுதும்போல் இப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது. அப்படியே இருக்கட்டும். நாம் சிஸிலிக்குச் செல்லாமல் இங்கேயே இருந்தாலுங்கூட அவர்கள் தரைப்பக்கமாக வந்து நம்மைத்தாக்கவே முடியாது. அப்படி வந்தால், அவர்களுடன் ஈடுகொடுக்கக் கூடிய அளவுக்கு நமது கடற்படையின் ஒரு பகுதியை இங்கு விட்டுவைத்துத்தான் போவோம். நிலைமை இவ்வாறிருக்கிறபோது நாம் படைகொண்டு செல்லா விட்டால், அதற்கு என்ன காரணத்தைச் சொல்லிக் கொள்வது? சிஸிலி யிலுள்ள நமது நேச ராஜ்யத்தினருக்கு, அவர்களுக்கு உதவி செய்யாமல் இருந்துவிட்டதற்காக என்ன சமாதானங் கூறுவது? அவர்கள் நமது சகாக்கள். அவர்கள், நமக்கு உதவி செய்தார்களா, இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் நாம் அவர்களுக்கு உதவி செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம். கிரீஸில் அவர்களுடைய உதவி கிடைக்குமென்று எதிர் பார்த்து அவர்களுடன் நாம் சிநேக ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை. அங்குள்ள நமது சத்துருக்கள் கிரீஸுக்கு வந்து நம்மைத் தாக்காவண்ணம் அவர்களை அங்கேயே உபத்திரவப்படுத்திக் கொண்டிருக்க வேண்டு மென்பதற்காகவே அவர்களுடன் சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டோம். கிரேக்கர்களோ, அந்நியர்களோ, யார் நம்முடைய உதவியைக் கோரு கிறார்களோ அவர்களுக்கு உதவி செய்ய நாம் தயாராயிருக்கவேண்டும். அப்படி இருந்ததனால்தான் நாம் இந்த ஏகாதிபத்தியத்தைக் கட்டியாள் கிறோம். எந்த ஓர் ஏகாதிபத்தியத்தைக் கட்டியாண்டவர்களும் இப்படித் தான் நடந்துகொண்டிருக்கிறார்கள். கோரிய சமயத்தில் உதவிசெய்யாமல் சும்மா இருந்து விட்டோமானால், அல்லது இன்னின்னாருக்குத்தான் உதவி செய்வது என்று வரையறுத்துக்கொண்டு விட்டோமானால், புதிதாக ஒரு சில வெற்றிகளைத்தான் நாம் காணமுடியும்; ஏற்கனவே நம்மால் வெற்றிகொள்ளப்பட்டவைகளையும் அபாயத்திற்குட்படுத்திக் கொண்டவர் களாவோம். எப்பொழுதுமே மனிதர்கள், தங்களைக் காட்டிலும் மேலானவர் களால் தாக்கப்பட்டால் அதைத் தடுத்துக்கொண்டிருப்பதோடு திருப்தி யடைவதில்லை; அவர்கள், தங்களைத் தாக்குவதற்கு முந்தி அவர்களைத் தாங்கள் தாக்கவே முற்படுகிறார்கள். நமது ஏகாதிபத்தியம், இந்த இடத்தில் தான் போய் முற்றுப்பெறும் என்று நிர்ணயித்துச் சொல்லமுடியாது. இப்பொழுதுள்ளதைக்கொண்டு திருப்தியடையக் கூடாத ஒரு நிலைக்கு இப்பொழுது நாம் வந்திருக்கிறோம். உள்ளதை விதரிக்கத் திட்டங்கள் வகுக்கவேண்டும். பிறர்மீது ஆதிக்கஞ் செலுத்துவதை நாம் நிறுத்திக் கொண்டு விட்டோமானால், பிறர் நம்மீது ஆதிக்கஞ் செலுத்தத் தொடங்கி விடுவார்கள். சும்மாயிருக்கிற நிலையை, அதாவது சமாதான நிலையை, மற்றவர்கள் எந்தக் கோணத்திலிருந்து நோக்குகிறார்களோ அதே கோணத்திலிருந்து நீங்கள் நோக்கக்கூடாது. அப்படி நோக்க வேண்டு மானால், அதற்கு முன்னர் உங்களுடைய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளவேண்டும். வெளிநாட்டுக்கு இப்பொழுது படையெடுத்துச் செல்வதன் மூலம் உள்நாட்டில் நாம் நமது அதிகாரபலத்தை விருத்தி செய்து கொண்டவர் களாவோம். ஆதலின் படையெடுத்தே செல்வோம். சிஸிலிக்குப் படை கொண்டு செல்வதன்மூலம் பெலோப்பொனேசியர்களுடைய கர்வத்தை அடக்குவோம். நாம் இப்பொழுது சமாதானத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோமல்லவா, அது விஷயத்தில் நாம் எவ்வளவு சிரத்தை யற்றவர்களா யிருக்கிறோமென்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். ஒன்று, சிஸிலியிலுள்ள கிரேக்கர்கள் அனைவரையும் நமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்துவிடுவதன் மூலம் கிரீ பூராவும் நாம் எஜமானவர் களாவோம்; அப்படி எஜமானர்களாவது மிகச்சுலபம்; அல்லது நமக்கும், நமது சகாக்களுக்கும் அனுகூலமுண்டாகக்கூடிய வகையில் ஸைரக்யூஸியர்களை அழித்துவிடுவோம். நாம் - அங்கே சிஸிலியில் - வெற்றி பெற்றோமானால், நமது கடற்படை பலத்தைக்கொண்டு அங்கேயே பத்திரமாய்ச் சிறிது காலம் தங்குவோம்; அல்லது, சிஸிலியர்களின் கடற்படை யெல்லாம் ஒன்று சேர்ந்தாலுங்கூட, அதைக் காட்டிலும் நமது கடற்படை வலுத்து நிற்குமாதலால், பத்திரமாகத் திரும்பி வந்துவிடுவோம். நிக்கியா ஒன்றுஞ்செய்யாமல் சும்மாயிருங்கள் என்று சொல் கிறானே அந்தச் சொல்லைக் கேட்டோ, இளைஞர்களுக்கும் முதியவர் களுக்கும் பகைமையுண்டு பண்ணக்கூடிய வகையில் பேசுகிறானே அந்தப் பேச்சைக் கேட்டோ, சிஸிலிக்குப் படைகொண்டு செல்லவேண்டு மென்று நிறைவேற்றிய தீர்மானத்தை மாற்றிவிடாதீர்கள். நமது முன்னோர்கள், முதியவர்களென்றும் இளைஞர்களென்றும் வித்தியாசம் பாராட்டாமல் எல்லோரும் ஒன்றுகூடி ஆலோசித்து நடவடிக்கைகள் எடுத்துக் கொண்ட தன் விளைவாகவே நாம் இந்த மேலான நிலைமைக்கு வந்திருக்கிறோம். இந்த நிலையிலிருந்து இன்னும் மேலான நிலைக்குச் செல்ல அவர்கள் மாதிரியைப் பின்பற்றுங்கள். இளைஞர்களாகட்டும், முதியவர்களா கட்டும், தனித்து நின்று ஒன்றுஞ் செய்யமுடியாது, ஒருவர் சகாய மில்லாமல் மற்றொருவர் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியாது. இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள், இந்த மூன்று தரத்தினரும் ஒன்று சேர்ந்தால் மிகவும் பலம் பெற்றவர்களாகிறார்கள். அவர்களால் எந்தக் காரியத்தையும் சாதிக்கமுடியும். நாம், ஒரு செயலும் புரியாமல் சும்மாயிருந்தோமானால், நமது ராஜ்யமும், மற்றப் பொருள்களைப் போல் சீரழிந்து போகும்; அதன் பலதிற சக்திகளும் குன்றிப் போகும். அவ்வப் பொழுது நாம் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோமானால், நமக்குப் புதிய புதிய அனுபவங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். அதனால், நமக்குச் சொல்லால் மட்டுமல்ல, செயலாலும் தற்காத்துக்கொள்ளுஞ் சக்தி யுண்டாகும். சுருக்கமாக, சுபாவத்திலேயே சுறுசுறுப்பாயிருக்கிற ஒரு ராஜ்யம், சும்மா யிருக்கவேண்டுமென்று திடீரென்று தீர்மானித்துவிடுமானால், அது சீக்கிரத்தில் அழிந்துபோய்விடுமென்பதே என் அபிப்பிராயம். எந்த ராஜ்யம், தன்னுடைய சட்டத்திட்டங்களையும், பழக்கவழக்கங்களையும் - அவை நல்லனவா யிருந்தாலுஞ்சரி, கெட்டனவா யிருந்தாலுஞ்சரி, அப்படியே பின்பற்றி வருகிறதோ அந்த ராஜ்யமே க்ஷேமமாக இருக்கமுடியும். ஆல்ஸிபியாடீஸின் இந்தப் பேச்சுக்குப் பிறகு, சபையினர், சிஸிலிக்கு படை அனுப்ப வேண்டுமென்பதில் முன்னைக்காட்டிலும் அதிக உற்சாகங் காட்டினர். பார்த்தான் நிக்கியா; சபையினரின் தீர்மானத்தை மாற்ற முடியாதென்று கண்டுகொண்டான். தான் படைத்தலைவர்களுள் ஒருவனாகச் செல்வதனால், தனக்கு இன்னின்ன மாதிரி போர்ச் சாதனங்கள் வேண்டுமென்று சொல்லி, தன்னுடைய தேவையை அதிகப் படுத்திக் காட்டினால், அப்பொழுதாவது சபையினருடைய தீர்மானத்தை மாற்ற முடியுமாவென்று பார்க்க விழைந்து, மறுபடியும் பின்வருமாறு பேசினான் :- ஆத்தீனியர்களே! சிஸிலிக்குப் படைகொண்டு செல்ல நீங்கள் முனைந்துவிட்டீர்கள். நிரம்ப சரி. நாம் விரும்புகிற வண்ணம் எல்லாம் நன்கு நிறைவேறுமென்று நம்புகிறேன். இப்பொழுதுள்ள நிலைமை யைப்பற்றி என்னுடைய அபிப்பிராயத்தைத் தெரிவிக்க முற்படுகிறேன். நான் கேள்விப்படுகிற வரையில், எந்த ராஜ்யங்களை நோக்கி நாம் இப்பொழுது படையெடுத்துச் செல்கிறோமோ அந்த ராஜ்யங்கள் சக்தி வாய்ந்தனவாகவும் சுதந்திரமுடையனவாகவும் இருக்கின்றன. தங்கள் நிலைமையில் மாறுதல் வேண்டுமென்று அவை ஆவலாயில்லை. அவை அடிமை வாழ்க்கையை நடத்தவில்லை. அப்படியிருந்தால், சுலபமாக வாழ்க்கையை நடத்தக்கூடிய ஒரு நிலையை அவை விரும்பியிருக்கும். இப்பொழுது அவை சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. அதை விட்டுக்கொடுத்துவிட்டு, நம்முடைய ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளுமென்று தோன்றவில்லை. சிஸிலியில் கிரேக்கர்கள் குடியேறி வசிக்கும் நகரங்களை மட்டும் கைப்பற்றிக் கொள்வோமென்றால் அவை ஏராளமாயிருக்கின்றன. ஸியோண்டினியுடன் சம்பந்தப்பட்டிருப்பதால், நாக்ஸோ, கட்டானா1 என்ற இரண்டு நகர ராஜ்யங்களும் நம்மோடு சேருமென்று நினைக்கிறேன். இவை தவிர, இன்னும் ஏழு நகர ராஜ்யங்கள் நம்மைப்போல் ஆயுத பலத்துடன் கூடியனவாய் இருக்கின்றன. இந்த ஏழினுள், ஸெலின, ஸைரக்யூ என்ற இரண்டு ராஜ்யங்களும் குறிப்பிடத் தக்கவை. இவை இரண்டை நோக்கித்தான் நாம் படையெடுத்துச் செல் கிறோம். இவை யிரண்டினிடத்திலும் காலாட் படையென்ன, விற்படை யென்ன, போர்க்கப்பல்கள் என்ன இவை பலவும் நிறைய இருக்கின்றன. போர்க்கப்பல்களைச் செலுத்தக்கூடிய ஆட்களும் அதிகம் பேர் இருக்கிறார்கள். மற்றும் ஏராளமான பணமும் அவர்களிடத்தில் இருக் கிறது. தனிப்பட்ட நபர்களிடத்தில் இருக்கிற பணம் தவிர, ஸெலினஸைப் பொறுத்தமட்டில், நிறைய பொதுப் பணமும் இருக்கிறது. ஸைரக்யூஸுக்கு, அதன் ஆதிக்கத்துக்குட்பட்டிருக்கும் பிரதேசங்களி லிருந்து வந்துகொண்டிருக்கும் திறைப்பணம் இருக்கிறது. இதைத் தவிர, அவைகளுக்கு - லெலினஸுக்கும் ஸைரக்யூஸுக்கும் - நம்மைக் காட்டிலும் அதிகமான சில சாதனங்கள் இருக்கின்றன. அவைகளிடத்தில், குதிரைப்படைக்கு உபயோகப்படக்கூடிய குதிரைகள் ஏராளமாக இருக்கின்றன. மற்றும், அவை, தங்களுக்குத் தேவையான தானிய வகைகளை வெளியிடங்களிலிருந்து இறக்குமதி செய்து கொள்வ தில்லை; தாங்களே விளைவித்துக்கொள்கின்றன. இத்தகைய ராஜ்யங்களுக்கெதிராக நாம், பலமில்லாத ஒரு கப்பற்படையைக்கொண்டு செல்வோமானால், அது போதாது. நம்மோடு ஒரு காலாட்படையும் கொண்டு செல்லவேண்டும். அப்பொழுதுதான், நம் நோக்கப்படி காரியத்தைச் சாதிக்கமுடியும். அவற்றின் குதிரைப் படையினால் நாம் தடுக்கப்படாமலிருப்போம். அதிலும், அந்த ராஜ்யங்கள் பயந்துபோய் ஒன்று சேர்ந்துகொண்டு விடுமானால், ஸெகெட்டாவைத் தவிர மற்ற ராஜ்யங்கள் நம்மிடத்தில் நட்பு பாராட்டாமலும் நமக்குக் குதிரைப்படைகள் கொடுத்து உதவாமலும்போனால் நம்பாடு திண்டாட்டமாகிவிடும். அங்குச் சென்ற பிறகு, பின்வாங்குவது கேவலமாகும். இங்கு ஆத்தென்ஸுக்கு உதவிப்படை வேண்டுமென்று சொல்லியனுப்புவதும், முன்யோசனையில்லாமல் இந்தப் படையெடுப்புத் திட்டத்தை வகுத்தோமென்பதை எடுத்துக்காட்டுவதாகும். ஆதலின், திறமையுள்ள ஒரு படையுடன் நாம் செல்வது அவசியமாகும். சிறப்பாக, நமது நாட்டைவிட்டு வெளியே செல்வதாலும், நாம் யாருடைய சகாயத்திற்காகப் போகிறோமோ அவர்களுடைய நிலைமையை உத்தேசித்தும் இந்த அவசியம் அதிகப்படுகிறது. கிரீஸிலேயே, ஒரு ராஜ்யத்தின் சகாயத்திற்கு நாம் செல்வோமானால், அது வேறுவிதமாக இருந்திருக்கும். அப்பொழுது, அக்கம்பக்கத்திலுள்ள சிநேக ராஜ்யங்களி லிருந்து நமக்கு உதவி கிடைத்துக்கொண்டிருக்கும். இப்பொழுதோ, நாம் நமது நாட்டிலிருந்து வெகுதூரம் செல்ல வேண்டியவர்களாயிருக் கிறோம், மிகவும் புதிய ஒரு நாட்டுக்குச் செல்கிறோம். அதிலும் குளிர்காலம். நான்கு மாதம் இது நீடிக்கும். இந்த நான்கு மாத காலத்திலும் நாம், ஆத்தென்ஸுக்கு ஒரு செய்தியைக் கூட அனுப்பமுடியாது. ஆதலின் நாம், நம்மோடுகூட ஆத்தென்ஸிலிருந்து மட்டுமல்ல, நமது நேச ராஜ்யங்களிடமிருந்து மட்டுமல்ல, யுத்தத்தில் ஈடுபட வேண்டுமென்று ஆசைப்பட்டோ, அல்லது பண ஆசைபிடித்தோ பெலோப்பொனேசியாவிலிருந்து வரக்கூடியவர்களையும் சேர்த்து ஒரு பெரிய காலாட்படையை அழைத்துச் செல்லவேண்டும். இன்னும், சிஸிலியர்களின் குதிரைப் படையை எதிர்த்து நிற்க, விற்படையினரையும், கவண்1 படையினரையும் அழைத்துப்போகவேண்டும். மற்றும் அதிகமான கப்பல்களும் நமக்கு வேண்டும். அப்பொழுதுதான் அங்கு நமக்குத் தேவையாயிருக்கும் உணவுப்பொருள்களை இறக்குமதி செய்துகொள்ள முடியும். நமக்கு வேண்டியதானிய வகைகளையும், உதாரணமாக, கோதுமை, வறுத்த பார்லி முதலியவற்றையும் எடுத்துப் போகவேண்டும். கூட, ரொட்டி சுடுவோர்களையும் அழைத்துப் போகவேண்டும். ஏனென்றால், சிஸிலியில், நமது படை முன்னேறிச் செல்கிற இடங்களில், சீதோஷ்ணநிலை வேறுபாடு காரணமாக எங்கேனும் சிறிது காலம் தங்கும்படி நேரிட்டால், அப்பொழுது அந்த இடத்திலுள்ளவர்கள் நம்மைப் போஷிப்பார்களென்று எதிர்பார்க்கமுடியாது. கோதுமை, பார்லி முதலிய உணவுப் பொருட்கள் மட்டுமல்ல, இன்னும் நமக்குத் தேவையான எல்லா வற்றையுமே நம்மோடுகூட எடுத்துப் போகவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நிறைய பணமும் எடுத்துச் செல்லவேண்டும். ஏனென்றால், ஸெகெட்டியர்கள், தங்களிடத்தில் பணம் தயாராயிருப்பதாகச் சொல்கிறார்களே, அஃது அவர்களுடைய வாய்வார்த்தையிலேதான் இருக்கிற தென்று நீங்கள் நிச்சயித்துக் கொள்ளலாம்; வேறுவிதமாக அவர் களிடத்தில் இல்லை. நாம் யாரை நோக்கிப் படையெடுத்துச் செல்கிறோமா அவர்களைக் காட்டிலும் அதிகமான படையுடன் இங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலுங் கூட, சிஸிலியில் வெற்றி காண்பது கடினம். நம்மை நாமே காப் பாற்றிக் கொள்ள முடியுமா என்பதும் சந்தேகம். அந்நியர்கள், சத்துருக்கள், இப்படிப்பட்டவர்கள் மத்தியில் புதிதாகக் குடியேறுகிறவர்களைப் போல் நாம் செல்கிறோம். அங்குச் சென்ற முதல் நாளிலேயே நாம் வெற்றி காண வேண்டும். அது முடியவில்லையென்றால், அங்குள்ள எல்லாமும் நமக்கு விரோதமாய் நிற்கும். இதனால்தான் நாம் தீர்க்காலோசனை செய்து நன்கு தயாரித்துக் கொண்டு புறப்படவேண்டுமென்று சொல்கிறேன். கூட நமக்கு அதிருஷ்டமும் இருக்கவேண்டும். அதிருஷ்டமென்பது, சாதாரண மனிதர் களுக்கு எளிதிலே கிட்டக்கூடியதன்று. ஆதலின் இந்த அதிருஷ்டத்தை நம்பிக்கொண்டு நான் புறப்படத் தயாராயில்லை. பலமான ஒரு படையுடன் செல்லவே நான் விரும்புகிறேன். இப்படிச் செல்வதுதான், நமக்கும் நமது ராஜ்யத்திற்கும் க்ஷேமத்தை உண்டுபண்ணுவதாகும். இந்த அபிப்பிராயத்திற்கு மாறாக இங்குள்ளவர் யாரேனும் அபிப் பிராயப்பட்டால், அவர்கள் எனக்குப் பதில் படைத்தலைமையை ஏற்றுக் கொள்ளட்டும். நிக்கியா இங்ஙனம் எச்சரிக்கை செய்தும், ஜனசபையினர், சிஸிலிக்குப் படைகொண்டு செல்ல வேண்டுமென்பதில் தீவிர உற்சாகமே காட்டினர். நேச ராஜ்யங்களுக்கும் தாக்கீது விடுத்து ஒன்று கூடுமாறு செய்தனர். யுத்த ஏற்பாடுகள் யாவும் சுறுசுறுப்பாகச் செய்யப்பட்டன. படையும் குறித்த நாளில் புறப்பட்டுவிட்டது. இனி சிஸிலியில் நிலைமை எப்படி இருக்கிறதென்று பார்ப்போம்.  பதினெட்டாவது அத்தியாயம் சிஸிலியில், ஸைரக்யூ முக்கியமான ராஜ்யமல்லவா? இங்கு, ஆத்தீனியர்கள் படை கொண்டு வருவதைப்பற்றிப் பலவிதமான வதந்திகள் பரவின. சிலர், ஆத்தீனியப் படை, சிஸிலியை, சிறப்பாக ஸைரக்யூஸை தாக்க வந்துகொண்டிருக்கிறதென்று கூறினர். வேறு சிலர், இவ்வளவு தொலை தூரம் அது வராதென்று கூறினர். இந்த நிலையில், ஜனசபை1 கூட்டப்பெற்றது. அப்பொழுது, முந்தி கேலா மகாநாட்டில், சிஸிலியர்களின் ஒற்றுமையை வற்புறுத்திப் பேசிய ஹெர்மோக்கிராட்டீ என்பவன் பின்வருமாறு பேசினான்:- ஆத்தீனியர்கள் படையெடுத்துவருவது உண்மையென்று பலர் கூறினர். நீங்கள் நம்பவில்லை. அதுபோல, நான் கூறினாலும் நீங்கள் நம்பப்போவதில்லை. நம்பக்கூடாதவை என்று கருதப்படுகின்ற விஷயங் களைச் சொல்கிறவர்கள், ஒருமுறை சொன்னாலுஞ் சரி, பன்முறை சொன்னாலுஞ் சரி அவர்கள் கட்சிக்கு ஆட்களும் சேர்வதில்லை; அவர் களும், உண்மையை அறிந்து சொன்ன சிரமத்தை மேற்கொண்டதற்காக, பைத்தியக்காரர்களென்று எண்ணப்படுகிறார்கள். ஆனால், என்னையும் அப்படிச் சொல்வீர்களேயென்று நான் அஞ்சப்போவதில்லை. நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறபோது நான் வாய் மூடிக்கொண்டிருக்க முடியாது. இந்த விஷயத்தைப்பற்றி, ஆத்தீனியர்கள் படையெடுத்து வருகிறார் களென்ற விஷயத்தைப்பற்றி, மற்றவர்களைக் காட்டிலும் நான் அதிக உறுதியுடன் சொல்லமுடியும். ஆத்தீனியர்கள் படையெடுத்து வருகிறார்களென்றால், உங்களுக்கு ஆச்சரியமா யிருக்கலாம். ஆனால் அவர்கள், பெரிய படையுடன் நம்மைத் தாக்க வந்துகொண்டிருக்கிறார்களென்பது உண்மை. ஸெகெட்டியர் களுக்கு உதவி செய்யவும், லியோண்ட்டினியை நிலைபெறச் செய்யவுமே தாங்கள் வருவதாகச் சொல்லிக்கொண்டு அவர்கள் வருகிறார்கள். ஆனால் உண்மையில், சிஸிலி முழுவதையும் வெற்றி கொள்ளவே அவர்கள் வருகிறார்கள். சிறப்பாக அவர்கள் நாட்டமெல்லாம் நமது ராஜ்யத்தின்மீதுதான்; அதாவது ஸைரக்யூ மீதுதான். நம்மை ஆட்படுத்தி விட்டால், மற்றவர்களும் நம்மைப் பின்பற்றி ஆட்பட்டுவிடுவார்களென்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆதலின், சீக்கிரத்தில் அவர்களை இங்கு எதிர்பார்க்கவேண்டுமென்று மனத்தைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். நம் வசத்திலிருக்கும் சாதனங்களைக்கொண்டு, அவர்கள் வருகையை எப்படித் தடுக்கலாமென்பதைப்பற்றி யோசியுங்கள். அசட்டையாயிருந்து விடாதீர்கள். பொது நலத்தைப் புறக்கணிக்காதீர்கள். என் வார்த்தைகளை நம்புகிறவர்கள், ஆத்தீனியர்களின் படை பலத்துக்கோ, அவர்களின் துணிச்சலுக்கோ பயப்படவேண்டாம். அவர்களுக்கு நாம் எவ்வளவு தொந்தரவு கொடுக்க முடியுமோ அதைக் காட்டிலும் அதிக தொந்தரவை அவர்கள் நமக்குக் கொடுக்க முடியாது. அவர்கள் அதிக படை பலத்துடன் வருவது நமக்கு ஒரு விதத்தில் அனுகூலமே. சிஸிலியர்களைப் பொறுத்த மட்டில், அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு அதிக படையுடன் வருகிறார் களோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. எப்படியென்றால், அப்பொழுதுதான், சிஸிலியர்கள் பயந்துபோய், நம்முடன் சேர்ந்துகொள்வார்கள். ஆத்தீனியர் களை நாம் தோற்கடித்துவிட்டால் அல்லது அவர்கள் வந்த நோக்கம் நிறைவேறவொட்டாதபடி துரத்திவிட்டால், அது, நமக்குப் புகழை யளிக்கக்கூடிய ஒரு பெரிய வெற்றியாகும். என்னுடைய கருத்தில் அந்த மாதிரியே நிகழுமென்று தோன்றுகிறது. கிரேக்கர்களோ, அந்நியர்களோ, பெரும்படைகொண்டு வெளி நாட்டுக்குச் சென்றதில்லை; அப்படிச் சென்று வெற்றிபெற்றதுமில்லை. அவர்கள், எந்த நாட்டின்மீது படையெடுத்துச் செல்கிறார்களோ அந்த நாட்டிலும், அந்த நாட்டுடன் நட்புக்கொண்டிருக்கிற நாடுகளிலுமுள்ள ஜனங்களைக் காட்டிலும் அதிகம் பேரா யிருக்கமுடியாது. அவர்கள், அயல் நாட்டிலே வந்து போதிய தளவாட சாமான்கள் கிடைக்காத காரணத் தினால், யுத்த நடவடிக்கைகளில் தவறிவிடுவார்களானால், அவர்கள் தோல்வியேயடைவார்கள். அப்படித் தோல்வியடைவதற்கு அவர்களே காரணர்களாயிருந்தபோதிலும், அவர்கள் யாரை நாசமாக்க வந்தார்களோ அவர்கள் அந்தத் தோல்வியினால் பெருமையே யடைகிறார்கள். உதாரணமாக, பாரசீர்கள் தோல்வியினால் ஆத்தீனியர்கள் மேன்மை யுற்றார்கள். பாரசீகர்களின் தோல்வி, தற்செயலாக ஏற்பட்டதென்றாலும், ஆத்தீனியர்களை நோக்கி அவர்கள் படையெடுத்து வந்ததனாலேயே அவர்களுக்கு - ஆத்தீனியர்களுக்கு - பெருமை ஏற்பட்டுவிட்டது. நம் விஷயத்திலும் இவ்வண்ணம் நிகழ்தல் கூடும். ஆதலின், நாம் இங்கு, யுத்தத்திற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம். சிஸிலியிலுள்ள பல ராஜ்யத்தினரின் நட்பையும் கூட்டுறவையும் நாடுவோம். இத்தலியின் பல பாகங்களுக்கும் தூதர்களை அனுப்பி, இப்பொழுது ஏற்பட்டிருக்கிற ஆபத்து எல்லோருக்கும் பொது வானது என்று சொல்லி, நம்முடன் சேர்ந்துகொண்டு அந்த ஆபத்தை எதிர்த்து நிற்குமாறும், அவ்வளவு தூரத்திற்கு முடியாவிட்டாலும் ஆத்தீனியர்களை வரவேற்காமலிருக்குமாறும் வற்புறுத்தவேண்டும். கார்த்தேஜுக்கும்1 ஒரு தூதுகோஷ்டியை அனுப்புவது நல்ல தென்று நினைக்கிறேன். அவர்களுக்கும் கார்த்தஜீனியர்களுக்கும் - பயம் ஏற்பட்டிருக்கிறது. ஆத்தீனியர்கள், தங்களை ஒரு நாள் தாக்கக்கூடு மென்று அவர்கள் பயப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆத்தீனியர்களை, சிஸிலியைத் தாக்கும்படி, விட்டுவிட்டால், பின்னாடி அது தங்களையும் பாதிக்கும் என்று அவர்கள் நினைக்கக்கூடும். எனவே அவர்கள் நமக்கு பகிரங்கமாக இல்லாவிட்டாலும் ரகசியமாக, ஏதோ ஒரு வழியில் உதவி செய்யக்கூடும். உதவி செய்யவேண்டுமென்று மனம் வைத்தார்களானால் அவர்கள்தான் மற்ற ராஜ்யத்தினரைக் காட்டிலும் அதிகமாக உதவி செய்யமுடியும். ஏனென்றால், அவர்களிடத்தில்தான், யுத்தத்திற்குத் தேவையான எல்லாப் பொருள்களும் இருக்கின்றன. சிறப்பாகப் பொன்னும் வெள்ளியும் ஏராளமாக இருக்கின்றன. லாஸிடீமோனுக்கும் கொரிந்த்தியாவுக்கும் உதவி கோரி தூதுகோஷ்டி அனுப்புவோம். எவ்வளவு சீக்கிரத்தில் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் வந்து உதவி செய்யுமாறு கேட்போம். அதே சமயத்தில், கிரீஸில் ஆத்தீனியர்களுடன் யுத்தத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்குமாறும் கூறுவோம். இப்பொழுது உடனடியாக நாம் செய்யவேண்டிய காரியம் ஒன்றுண்டு. அதன் அவசியத்தை நீங்கள் நிதானமாகத்தான் உணர்வீர்கள். ஏனென்றால் நீங்கள் சுபாவத்திலேயே சமாதானப் பிரியர்கள். என்றாலும் அதை நான் உங்களுக்குச் சொல்லித்தான் ஆகவேண்டி யிருக் கிறது. அஃதென்னவென்றால், சிஸிலியர்களாகிய நாமெல்லோரும், அல்லது நம்மில் பெரும்பாலோர், நமது கடற்படையனைத்தையும் ஒன்று திரட்டிக்கொள்ளவேண்டும்; இரண்டு மாதத்திற்கு வேண்டிய உணவுப் பொருள்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் படையுடன், ஆத்தீனியர்களை, டாரெண்ட்டம்2 என்ற இடத்தில் சந்திக்க வேண்டும். சந்தித்து, சிஸிலியுடன் போர் செய்வதற்குமுன், சிஸிலிக்கு வரும் வழியைக் கடக்கவே போர் செய்யவேண்டுமென்று அவர்களுக்குக் காட்ட வேண்டும். அப்படி வழியிலேயே சந்தித்துச் சண்டை செய்து அவர் களுடைய படையை கதிகலங்கச் செய்யவேண்டும். நமக்கும், தற்காப்புக்கு ஓர் அடித்தளம், அதாவது டாரெண்ட்டம் இருக்கிறதென்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இந்த டாரெண்ட்டம் ராஜ்யம் நம்மை வரவேற்கத் தயாராயிருக்கிறது. ஆத்தீனியர்கள், ஐயோனியக் கடலை1 வெகுதூரம் கடக்கவேண்டியிருப்பதால், அவர்கள், தங்கள் கப்பற்படையை ஒழுங்குபட செலுத்திக்கொண்டு வரமுடியாது. தனித்தனிக் கப்பல்களாகத் தான், அல்லது இரண்டு மூன்று கப்பல்கள் சேர்ந்தாற்போல்தான் வரமுடியும்; இன்னும் மெது மெதுவாகத்தான் வரமுடியும். இந்த நிலையில் அவர்களைத் தாக்குவது சுலபம். அவர்கள், கப்பல்களை லேசாக்கிக்கொண்டு, அதாவது கப்பல்களிலுள்ள உணவுப்பொருள்கள் முதலியவற்றின் பெரும்பகுதியை மெதுவாகப் பின்னாடி வரக்கூடிய கப்பல்களுக்கு மாற்றிவிட்டு, வேகமாக வந்து நம்மைத் தாக்குவார் களானால், அப்பொழுதும் அவர்களைத் தாக்கி முறியடித்து விடலாம். ஏனென்றால், கப்பல்களை வேகமாகச் செலுத்தி அதனால் அவர்கள் களைத்துப் போயிருப்பார்கள். அப்படி அவர்களை முறியடிக்க முடியா விட்டால், நாம் டாரெண்ட்டத்திற்குப் பின்னோக்கி வந்துவிடலாம். அவர்களோ, மிகச் சொற்பமான உணவுப் பொருள்களுடன் முன்னோக்கி வந்தால், தனிப்பட அகப்பட்டுக் கொண்டு மிகச் சிரமப்படுவார்கள். ஒன்று, இருந்த இடத்திலேயே அவர்கள் இருந்துகொண்டிருக்கவேண்டும்; அல்லது யுத்த தளவாடங்களை யெல்லாம் அப்படி அப்படியே விட்டு விட்டு, கடலோரமாகச் செல்லவேண்டும். அப்படிச் சென்றாலும், கடலோர மாகவுள்ள ராஜ்யங்களில் எவை எவை தங்களை வரவேற்குமென்று தெரியாது; தெரியாமலேதான் செல்லவேண்டும். அதனால் அவர்கள் நிச்சயம் மனச்சோர்வு கொண்டு விடுவார்கள். என்னுடைய அபிப்பிராயத்தில், இந்த ஒரு பிரச்னையே, அவர்களை கார்ஸைராவிலிருந்து புறப்பட விடாதபடி தடுத்துவிடக்கூடும். நமது படையின் எண்ணிக்கை, நமது இருப்பிடம், இவைகளை யெல்லாம் அவர்கள் விசாரித்துத் தெரிந்து கொள்வார்களானால், சிறிது காலம் போகட்டுமென்று காலங்கடத்துவார்கள். குளிர்காலமும் வந்துவிடும். பிறகு அவர்கள் என்ன செய்யமுடியும்? அல்லது, எதிர்பாராதவிதமாகத் தாங்கள் தடுக்கப்பட்டுவிட்டதைக் கண்டு அவர்கள் திகைப்படைந்துபோய், படையெடுத்து வருவதை நிறுத்திக்கொண்டு விட்டாலும் விடுவார்கள். அவர்களுடைய படைத்தலைவன், அவனுடைய விருப்பத்திற்கு விரோதமாகப் படைத்தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறா னென்று நான் கேள்விப் படுகிறேன். அப்படியிருக்க, நாம் பலமான எதிர்ப்புக் காட்டுவோமானால், அதையே சாக்காக வைத்துக்கொண்டு உடனே அவன் திரும்பிப் போய்விடுவான். மற்றும், நமது படையினர் உண்மையில் எத்தனை பேராயிருக் கின்றனரோ அதைக்காட்டிலும் அதிகம் பேரா யிருப்பதாக, அவர்கள் காதில்படும்படி ஒரு செய்தியைப் பரப்ப வேண்டும். சாதாரணமாக மனிதர்கள், தாங்கள் கேள்விப்படுவதை அப்படியே நம்புகிறார்கள். யார் முதலில் தாக்குகிறார்களோ, அல்லது தாக்கப்பட்டால் அதைத் தடுத்துக் கொள்ளத் தயாராயிருக்கிறார்களோ அவர்களைக் கண்டுதான், பொதுவாக எல்லோரும் பயப்படுகிறார்கள். ஏனென்றால், அவர்கள், அதாவது முதலில் தாக்குகிறவர்கள் அல்லது தாக்கப்படுகிறவர்கள் எந்தவிதமான ஆபத்துக்கும் தயாராயிருக்கிறார்கள். ஆத்தீனியர்களும் இப்பொழுது இந்தப் பயப்படுகிற நிலையில்தான் இருக்கிறார்கள். நாம் எதிர்த்து நிற்கமாட்டோமென்ற நம்பிக்கையின் பேரில்தான் அவர்கள் நம்மை நோக்கிப் படைகொண்டு வருகிறார்கள். அவர்கள் அவ்வண்ணம் நம்பிக்கை கொள்வது நியாயம். ஏனென்றால், அவர்களை அடக்கி ஒடுக்க லாஸிடீமோனியர்கள் முனைந்தபோது, அந்த லாஸிடீமோனியர்களுக்கு நாம் உதவி செய்யவில்லையல்லவா? நாம் அசாதாரணமான வீரத்தைக் காட்டுவோமென்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி எதிர்பாராத நிலையில் நாம் வீரங்காட்டுவோமானால் அவர்கள் ஆச்சரியத்தினால் திகைத்துப் போவார்கள்; நம்முடைய நிஜமான பலத்தைக் கண்டு எவ்வளவு திகைப்படைவார்களோ அதைக் காட்டிலும் அதிகமாகத் திகைப்படைவார்கள். நீங்கள் அந்த மாதிரியான வீரத்தைக் காட்டவேண்டுமென்பது தான் என் ஆவல். அது தற்போது முடியாதென்றாலும், யுத்தத்திற்குப் பொதுவாகத் தயார்படுத்திக் கொள்வதில் சிறிதுகூட காலங்கடத்தாதீர்கள். சத்துருக்களை நாம் கேவலமாக மதிக்கிறோமென்றால், அதைச் செயலில் தான் காட்டவேண்டும். இப்பொழுது நாம் செய்யவேண்டியது, யுத்தத்திற்கு நம்மைத் தயார்படுத்திக்கொள்வதுதான். நம்மைப் பாதுகாத்துக்கொள்ள அதுதான் வழி. உண்மையிலேயே ஆபத்து வந்துவிட்டதென்று கருதி நம்மைத் தயார்படுத்திக் கொள்வோமாக. நம்மைத் தாக்க ஆத்தீனியர்கள் வருகிறார்கள்; வந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் நம் கண்ணுக்குத் தென்படவில்லை. அவ்வளவுதான். ஹெர்மோக்கிராட்டீஸின் இந்தப் பேச்சை, சபையினர் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர், ஆத்தீனியர்கள் படையெடுத்து வரவாவது, அப்படி வந்தாலும் அவர்கள் என்ன சாதித்துவிட முடியும் என்றார்கள். சிலர், இப்படிப் பயமுறுத்துகிறானே என்று ஹெர்மோக்கிராட்டீஸைப் பரிகாசஞ் செய்தார்கள். இந்த நிலையில், சாதாரண ஜனங்களிடத்தில் அதிக செல்வாக்குப் பெற்றிருந்த அத்தெனாகோரா1 என்பவன் எழுந்து பின்வருமாறு பேசலுற்றான்:- ஆத்தீனியர்கள் இங்கு வந்து நம்முடைய ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய அவ்வளவு பைத்தியக்காரத்தனம் வாய்ந்தவர்களாக இருக்கக்கூடாதென்று தான் விரும்புவதாக எவனொருவன் கூறு கிறானோ அவன், ஒன்று கோழையாயிருக்கவேண்டும்; அல்லது தேசத்துரோகியாக இருக்க வேண்டும். இம்மாதிரியான செய்தியை, அதாவது, ஆத்தீனியர்கள் நம்மை நோக்கி படையெடுத்து வருகிறார் களென்ற செய்தியை, நம்மிடையே பரப்பி நமக்குப் பயத்தை உண்டு பண்ணுகிறார்களே அவர்களுடைய துணிவைக் கண்டு நான் ஆச்சரியப் படவில்லை; அவர்களுடைய அறிவீனத்தைக் கண்டுதான், அவர்களை நாம் சரியாகத் தெரிந்துகொள்ளவில்லையென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களே அந்த அறிவீனத்தைக் கண்டுதான் ஆச்சரியப் படுகிறேன். உண்மையென்னவென்றால், அவர்கள், சொந்தக் காரணங் களுக்காகப் பயப்படுகிறார்கள்; ராஜ்யத்திலும் கலக்கத்தை உண்டுபண்ண விரும்புகிறார்கள்; ராஜ்யத்தின் பயத்தில், தங்கள் சொந்த பயத்தை மறைத்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். சுருக்கமாக, இந்த வதந்திகள், சுயமாக எழுகின்றவையல்ல; சிஸிலியில் எப்பொழுதும் கிளர்ச்சியை உண்டுபண்ணிவருகின்ற சிலரால் சிருஷ்டி செய்யப்படுகின்றவை. இவ்வதந்திகளை இந்த அளவுக்குத்தான் மதிக்கவேண்டும். நீங்கள் சரியான ஆலோசனையைக் கேட்கிறவர்களாயிருக்கும் பட்சத்தில், இந்த மனிதர்கள் என்ன சொல்கிறார்களென்பதைக் கொண்டு என்ன நடைபெறக்கூடுமென்று கணித்துக் கொண்டிருக்கக்கூடாது; அதி புத்திசாலிகளும் அனுபவம் நிறைந்தவர்களுமான ஆத்தீனியர்கள் என்ன செய்யக்கூடுமென்று கவனிக்கவேண்டும். கிரீஸில் அவர்களுக்கும் - ஆத்தீனியர்களுக்கும் - பெலொப்பொனேசியர்களுக்கும் போர் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர்கள், பெலோப் பொனேசியர்களை அப்படியே விட்டு விட்டு இங்கு வருவார்களென்பது நடைபெறக்கூடாத காரியம்; அங்கே நடைபெறும் சண்டையை ஒருவிதமாக முடித்துக்கொள்ளாமல், இங்கே சிஸிலிக்கு, மிகக்கடினமான ஒரு போரை நடத்த வருவார்களென்று எதிர்பார்ப்பது அசம்பாவிதம். என்னுடைய அபிப்பிராயத்தில், நாம், நமது பெரிய நேச ராஜ்யங்களைச் சேர்த்துக்கொண்டு அங்குச் சென்று அவர்களைத் தாக்காமலிருக்கிறோமே யென்றுதான் அவர்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது சொல்லப்படுகிறபடி அவர்கள் வருவதாகவே வைத்துக் கொள்வோம். அப்படி வந்தாலும், பெலொப்பொனேசியாவைக் காட்டிலும் திறம்பட சிஸிலி அவர்களை எதிர்த்து நிற்க முடியுமென்று நினைக் கிறேன். நாம், எல்லா அமிசங்களிலும் நல்ல முறையில் தயாராயிருக் கிறோம். வருவதாகச் சொல்லப்படுகிற படை, நம்முடைய படையைக் காட்டிலும் இரட்டிப்பு மடங்கு பலம் பொருந்தியதாயிருந்த போதிலும், நமது ராஜ்யம், தனிப்பட இருந்து அந்தப் படையைச் சமாளிக்க முடியும். அவர்களிடத்தில் - ஆத்தீனியர்களிடத்தில் – குதிரைப்படைக்கான குதிரைகள் இல்லை; இங்கேயும் அதிகமான குதிரைகளைப் பெற முடியாது. கூடுமானால், ஸெகெட்டியர்களிடமிருந்து சில குதிரைகளைப் பெறலாம். மற்றும், நம்மிடமுள்ள காலாட்படையைக் காட்டிலும் அதிக மான காலாட்படையை அவர்களால் கொண்டுவர முடியாது. ஏனென்றால், தொலைதூரம் அவர்கள் வரவேண்டியிருக்கிறது. நம்மைப் போன்ற ஒரு பெரிய ராஜ்யத்தைத் தாக்க வருவதென்றால், ஏராளமான தளவாட சாமான்களைக் கொண்டுவர வேண்டும். இப்படிப் பட்ட நிலையில், அதிகமான காலாட்படைகளைக் கொண்டுவர, கப்பல்களில் எங்கே இடம் இருக்கும்? அப்படியே அவர்கள் ஒரு பெரும் படையைக்கொண்டு வந்து, நமது ஸைரக்யூஸைப் போன்ற ஒரு பெரிய நகரத்தையே கொண்டுவந்து, நமது எல்லைப்புறத்தில் நிறுத்தி வைத்துக்கொண்டு நம்மோடு தொடர்ந்து யுத்தஞ் செய்கிறார்களென்று வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு ஏற்படக்கூடியது என்ன? அழிவுதான். அழிவை அவர்கள் எப்படித் தடுத்துக்கொள்ளாமலிருக்க முடியுமென்பது எனக்குத் தெரியவில்லை. இது விஷயத்தில் நான் உறுதியான அபிப்பிராயமே கொண்டிருக்கிறேன். சிஸிலி பூராவும் அவர்கள்மீது விரோதங்காட்டும். இப்படிப்பட்ட சிஸிலியுடன், அவர்கள், கப்பல்களில் ஏற்றிக்கொண்டு வந்த கூடாரங் களை இறக்கி, ஓரிடத்தில் முகாம் அமைத்து, அதில் சாதாரண தேவைக்குரிய பொருள்களை மட்டும் வைத்துக்கொண்டு, நம்மோடு போர்புரிந்து வெற்றி காண்டல் எங்ஙனம்? முடியவே முடியாது. நமது குதிரைப்படைகளுக்கு அஞ்சி அவர்கள், தங்கள் முகாமிலிருந்து வெளிவரவே மாட்டார்கள். இந்த கஷ்டங்களையெல்லாம் ஆத்தீனியர்கள் நன்கு அறிந்திருக் கின்றனர். அவர்கள், தங்கள் நாட்டில், தங்கள் ஆதிக்கத்திற்குட்பட்டிருக்கிற பிரதேசங்களைக் கண்காணித்து வருவதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர் என்பதை நான் நன்கு அறிவேன். அப்படியிருக்க, இங்குள்ளவர்கள், அவர்களைப்பற்றி உண்மையாயிராத, உண்மையா யிருக்க முடியாத கதைகள் பலவற்றைக் கட்டிவிடுகின்றனர். இந்த மாதிரி இவர்கள் செய்வது இது முதல் தடவையன்று. தங்களால் ஒரு காரியமும் ஆகாதபோது, இந்த மாதிரியான கதைகளை, இன்னும் பயங்கரமான சம்பவங்களைக் கட்டிவிட்டு நமது ஜனங்களை பயப்படுத்தி, அரசாங்கத்தைத் தங்கள் சுவாதீனப்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள். இதைத்தான் நான் அடிக்கடி பார்க்கிறேன். இவர்கள் இப்படி விடாமல் முயற்சி செய்வார்களானால் ஒரு நாளில்லாவிட்டால் மற்றொரு நாள் வெற்றி பெற்றாலும் பெறக்கூடும். இவர்கள் விஷயத்தில் நாம் முன்னெச்சரிக்கையாயிருக்கக்கூடிய அவ்வளவு பலசாலிகள் இல்லை; அல்லது ஆபத்து வந்து நம்மைச் சூழ்ந்து விடுவதற்கு முன்னர் இவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்கக்கூடிய சக்தி வாய்ந்தவர்களாகவும் இல்லை. விளைவு என்ன? ராஜ்யத்தில் அமைதி என்பது அரிதாகிவிட்டது. அடிக்கடி தொந்தரவுகள் ஏற்பட்டுக் கொண்டே யிருக்கின்றன. வெளிநாடுகளுடன் போர்புரிய வேண்டியிருப்பதைப்போல் உள்நாட்டுக் குழப்பங்களிலும் நாம் அடிக்கடி ஈடுபடவேண்டி யிருக்கிறது. இன்னும் ஏகதேசமாக சுயேச்சாதிகார ஆட்சிமுறைகளுக்கும் உட்படவேண்டியிருக்கிறது. என்னை நீங்கள் ஆதரிக்கும் பட்சத்தில், நம்முடைய காலத்தில் இந்த மாதிரியொன்றும் நிகழாதபடி பார்த்துக் கொள்வேன். உங்களிடத்தில், அதாவது இந்த மாதிரியான காரியங்களுக்கு விரோதமாயிருக்கிற உங்களிடத்தில் இதமான வார்த்தைகளைச் சொல்லி எனக்கு ஆதரவு தேடிக்கொள்வேன். நாட்டுக்கு விரோதமாகச் சூழ்ச்சிகள் செய்கிற இவர்கள் விஷயத்திலோ மிகக் கடுமையாக நடந்து கொள்வேன். இவர்களைக் கையும்பிடியுமாகப் பிடிக்கிறபோது மட்டுமல்ல - இப்படி இவர்களைக் கையும் பிடியுமாகப் பிடிப்பது மிகவும் கடினம் - சூழ்ச்சி செய்ய வேண்டுமென்று விருப்பங்கொண்டிருக்கிறார்களே - அந்த விருப்பத்தை இவர்களால் நிறைவேற்ற முடியாதென்றாலும் – விருப்பங் கொண்ட தற்காக இவர்களைத் தண்டிப்பேன். நம்முடைய பகைவன் நமக்கு விரோதமாக என்ன செய்கிறானோ அதற்காக மட்டுமல்ல, என்ன செய்ய உத்தேசித்திருக்கிறானோ அதற்காகவும் அவனைத் தண்டிக்கவேண்டும். அவன் விஷயத்தில் நாம் முன்னெச்சரிக்கையா யிராமற்போனால் நாம்தான் முன்னாடி கஷ்டப்படுவோம். நாட்டுக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்கிறவர்கள் ஒரு சிலர்தான். இந்த ஒரு சிலரை முதலில் கண்டித்துப் பார்ப்பேன்; இவர்கள் செயலைக் கண்காணித்து வருவேன்; அவ்வப் பொழுது இவர்களை எச்சரிக்கவும் செய்வேன். இவர்களைக் கெட்ட வழிகளிலிருந்து திருப்புவதற்கு இப்படிச் செய்வதுதான் சிறந்தமுறை என்பது எனது அபிப்பிராயம். நான் அடிக்கடி கேட்பதுபோல் இப்பொழுதும் கேட்கிறேன், இளைஞர்களே! உங்களுக்கு என்ன வேண்டும்? இப்பொழுதே உங்களால் உத்தியோகம் பார்க்க முடியுமா? சட்டம் உங்களுக்கு இடங்கொடாது, உத்தியோகம் வகிக்கத் தகுதிபெறும் வரையில் நீங்கள் உத்தியோகம் ஏற்றுக்கொள்ளக்கூடாதென்று சட்டம் கூறுகிறது. இன்னும், உங்கள் சகோதரப் பிரஜைகளில் பெரும்பாலோருடன் சம அந்ததில் நீங்கள் வைக்கப்பட்டிருப்பதை ஆட்சேபிக்கிறீர்களா? m¥goahdhš, Ú§fŸ bgW« rYiffS¡F, bgU«ghnyhuhd c§fŸ rnfhju¥ ãui#fŸ jFâa‰wt®fŸ v‹W brhš»Ö®fns mJ k£L« v¥go ÃahakhF«?1 நீங்கள் சொல்லலாம், ஜன ஆட்சி யென்பது, அறிவிக்கும் நியாயத் திற்கும் பொருத்தமான ஆட்சியாகாது; செல்வம் படைத்தவர்கள் தான் திறம்பட ஆட்சி புரிவதற்குத் தகுதியுடைவர்களென்று. நான் சொல்கிறேன், ஜன ஆட்சியென்றால், ஒரு ராஜ்யத்திலுள்ள எல்லா ஜனங்களையும் சேர்த்துக் குறிப்பதாகும்; ஒரு சிலர் ஆட்சி, அதாவது பணக்காரர் ஆட்சி யென்பது, ஜனங்களில் ஒரு சிறு பகுதியினரை மட்டும் குறிப்பதாகுமென்று. மற்றும், பணம் படைத்தவர்கள்தான் அரசாங்கப் பொக்கிஷத்தைப் பாதுகாக்கக்கூடியவர்களென்றும், புத்திசாலிகள்தான் அரசாங்க விவகாரங் களில் நன்கு ஆலோசனை சொல்லக்கூடியவர்களென்றும் நீங்கள் சொல்வீர்களானால், அது வாதவம்; ஆனால் ஆலோசனைகளைக் கேட்டு முடிவுக்கு வரவேண்டியவர்கள் ஜனங்கள்தான். ஒரு ஜன ஆட்சி யானது, இவர்களெல்லோருக்கும், அதாவது பணக்காரர்கள், சாதாரண ஜனங்கள் ஆகிய எல்லோருக்கும் அவரவர் திறமைகளைக் காட்டச் சம சந்தர்ப்பம் அளிக்கிறது. ஒரு சிலர் ஆட்சி யெனப்படும் பணக்காரர் ஆட்சியோ, தேசத்திற்கு உண்டாகின்ற ஆபத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு, தேசத்திலிருந்து கிடைக்கின்ற சாதகங்களில் பெரும் பகுதியை, ஏன் பூராவையும் தானே அடையப் பார்க்கிறது. இந்த மாதிரி அடையவே, உங்களில் பணக்காரர்களாகவும் இளைஞர்களாகவுமுள்ள வர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் பெரிய ராஜ்யமாகிய ஸைரக்யூஸில் இது சாத்தியமற்றதா யிருக்கிறது. இப்பொழுதும் கூறுகிறேன், ஓ மூடர்களே! தீங்கு பயக்கக்கூடிய சூழ்ச்சிகளை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்களென்பதை இன்னமும் தெரிந்து கொள்ளவில்லையென்றால், கிரேக்கர்களில் உங்களைப் போன்ற அறிவீனர்கள் வேறு யாரும் இருக்கமுடியாது. அப்படித் தெரிந்துகொண்டு அதைத் தொடர்ந்து செய்யத் துணிவீர்களானால் உங்களைப் போன்ற குற்றவாளிகள் வேறு யாரும் இருக்கமுடியாது. இப்பொழுதும் பரவா யில்லை; உங்கள் செயலுக்கு இரங்குங்கள்; அறிவு பெறுங்கள்; தேசத்தின் நலனை நாடுங்கள்; எல்லோருடைய நலனையும் நாடுங்கள். தேசம் நலமுற்றிருக்குமானால், உங்களிலே - பணம் படைத்தவர்களிலே – திறமை யுடையவர்கள் அந்த நலத்தில் ஒரு பங்கு பெறலாம்; உங்களுடைய சகோதரப் பிரஜைகளாகிய சாதாரண ஜனங்கள் பெறுகிற நலனைக் காட்டிலும் அதிக நலனைப் பெறலாம். அதைவிடுத்து தேச நலனுக்கு விரோதமான சூழ்ச்சிகள் செய்யும் யோசனை இருந்தால், உங்களுடைய சர்வத்தையும் இழந்துவிடுவீர்கள். இந்த மாதிரியான வதந்திகளைப் பரவவிடாதீர்கள். அப்படிப் பரவவிடுவீர்களானால், உங்களுடைய நோக்க மின்னதென்று ஜனங்கள் தெரிந்துகொள்வார்கள்; அந்த நோக்கம் நிறை வேறவொட்டாதபடி இந்த ராஜ்யம் - ஸைரக்யூ உங்களை விரட்டியடிக்கும். இதைப்பற்றிக் கவனிக்க, நம்மிடையே திறமை வாய்ந்த படைத் தலைவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் சொல்வதெல்லாம், அதாவது ஆத்தீனியர்கள் படையெடுத்து வருகிறார்களென்று சொல்வதெல்லாம் உண்மையாயிராதிருக்கும் பட்சத்தில் - அப்படி உண்மையா யிராதென்று தான் நான் நம்புகிறேன் - உங்கள் சொல்லைக் கேட்டு நமது ராஜ்யம் பரபரப்படையாது; அல்லது உங்களை அரசாங்க நிருவாகிகளாகத் தெரிந் தெடுத்து அதன் மூலம், தானே வலிய அடிமைத்தனத்தை ஏற்றுக் கொள்ளாது. இந்த விஷயத்தில் நமது அரசாங்கம் தக்க நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளும். உங்களுடைய வார்த்தைகளுக்கு உரிய மதிப்புக் கொடுக்கும். உங்களுடைய வார்த்தைகளுக்குச் செவி கொடுத்து, தன்னுடைய சுதந்திரத்தை இழந்துவிடாது; அதற்குப் பதில், சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள, தன்னாலான முயற்சியைச் செய்யும்; அதற்கான எல்லாச் சாதனங்களையும், தன் கையில் எப்பொழுதும் வைத்துக் கொண்டிருக்கும். அத்தெனாகோரா இப்படிப் பேசி முடித்ததும், சபையிலிருந்த படைத்தலைவர்களில் ஒருவன் எழுந்து, வேறெவரையும் பேச விடாதபடி செய்து விட்டுப் பின்வருமாறு பேசினான் :- இங்குப் பேசுகின்றவர்களில் ஒருவருக்கொருவர் தூஷித்துக் கொண்டிருத்தலும் அந்தத் தூஷணைகளைச் சபையினர் கேட்டுக் கொண்டிருத்தலும் சரியன்று. நமக்குக் கிடைத்திருக்கிற தகவலைப் பற்றி நன்கு சிந்திக்கவேண்டும். சத்துருக்கள் படையெடுத்து வந்தால் அவர் களை விரட்டியடிக்க, நாம் தனித்தனியாகவும், மொத்தமாகச் சேர்ந்தும் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துக்கொள்வதென்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். அப்படி எடுத்துக்கொள்ளத் தேவையில்லையென்று சொல்லப் பட்டாலும், குதிரைகள், ஆயுதங்கள், யுத்தத்திற்கு வேண்டிய மற்றச் சாமான்கள் முதலியவைகளைத் தயாரித்து வைத்துக் கொள்வதில் தவறில்லையல்லவா? எனவே நாம் தயாரித்து வைத்துக்கொள்வோம். அண்டை அயலிலுள்ள மற்ற ராஜ்யங்களுக்கும் வேவு பார்த்துக் கொண்டிருக்கு மாறு செய்திஅனுப்புவோம். யுத்தமென்று தோன்றுகின்ற அனைத்தையும் செய்வோம். ஏற்கனவே சில ஏற்பாடுகளைச் செய் திருக்கிறோம். இனிச் செய்யப்போகிற ஏற்பாடுகளைப்பற்றி அவ்வப் பொழுது உங்களுக்குத் தெரிவிப்போம். படைத்தலைவன் இங்ஙனம் பேசியதும் சபை கலைந்தது. ஸைரக்யூஸியர்களும், யுத்தத்திற்கான ஏற்பாடுகளனைத்தையும் செய்து கொண்டிருந்தார்கள். நிக்கியா, ஆல்ஸிபியாடீ, லமாக்க ஆகிய மூவர் தலைமையிலும் புறப்பட்ட ஆத்தீனியப் படையானது, கார்ஸைரா வழியாக ஐயோனிக் கடலைக் கடந்து சிஸிலிக்கு அருகே வந்து சேர்ந்தது. படைத் தலைவர்கள், அங்குள்ள சில ராஜ்யங்களின் உதவியைக் கோரினர். ஆனால் இவர்கள் எதிர்பார்த்தபடி உதவி கிடைக்கவில்லை. ஓரிரண்டு ராஜ்யங்கள் இவர்கள் பக்கம் சேருவதாகக் கூறின. ஸெகெட்டாவிட மிருந்து இவர்கள் அதிகமான உதவியை எதிர்பார்த்தனர்; ஆனால் அதிலும் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில் ஆல்ஸிபியாடீ, அவன்மீது ஏற்கனவேயுள்ள சில குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லவேண்டுமென்பதற்காகஆத்தென்ஸுக்குத் திருப்பி வரவழைக்கப்பட்டான். அவனோ மகாதந்திரசாலி; கபடன்; நேர்மை யில்லாதவன். ஆத்தென்ஸுக்குச் செல்வதாகப் போக்குக் காட்டிவிட்டு நேரே பெலொப்பொனேசியாவுக்குப் போய் ப்பார்ட்டாவுடன் சேர்ந்து கொண்டான். ஆத்தீனியர்கள், அவன் அல்லாதிருந்தும், அவன்மீது குற்ற மிருப்பதாகத் தீர்ப்பு செய்து அவனுக்கு மரண தண்டனை விதித்து, அவன் சொத்துக்களையும் பறிமுதல் செய்துவிட்டனர். ஆல்ஸிபியாடீ சென்றபிறகு, நிக்கியாஸும் லமாக்கஸும் சேர்ந்து, சிறிது காலம் சில்லரைப் போர்கள் சில நடத்தினர். அடைந்த பயன் ஒன்றுமில்லை. கடைசியில் ஸைரக்யூஸையே நேரடியாகத் தாக்குவ தென்று தீர்மானித்தனர். அப்படியே ஸைரக்யூ சமீபம் சென்று முகாம் போட்டனர். ஸைரக்யூஸியர்கள் எதிர்பாராமலிருக்கையில் அவர்களைத் திடீரென்று தாக்கி வெற்றி காணவேண்டு மென்று நிக்கியா திட்ட மிட்டிருந்தான். இதன்படி, படையை அணி வகுத்து நிறுத்தினான். தாக்கத் தொடங்குவதற்கு முன்னர், படையினருக்குப் பின்வரும் மொழிகளால் உற்சாகமூட்டினான்:- போர் வீரர்களே! போர் செய்யவே இங்கு நீங்கள் வந்திருக் கிறீர்கள். உங்களைப் போன்றவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் அதிகம் பேசத்தேவையில்லை. வலுவில்லாத ஒரு படைக்கு அழகிய பேச்சு என்ன பயன்தரும்? நம்முடைய படையின் அணி வகுப்பைப் பார்த்தாலே எல்லோருக்கும் நம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். இந்த அணி வகுப்பில் ஆர்கோ1 வாசிகளென்ன, மாண்ட்டினீயர்களென்ன, ஆத்தீனியர்களென்ன, மற்றத் தீவுவாசிகளென்ன, இப்படி எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். எல்லோரும் ஆயுதபாணிகள்; வீரர்கள். இங்ஙனம் எல்லோரும் சேர்ந்து வெற்றி காணாவிட்டால் ஆச்சரியமாகவே இருக்கும். நமது படையினர் சுத்த வீரர்கள்; சிஸிலியப் படையோ வெறுங்கும்பல்தான். சிஸிலியர்கள் நம்மைக் கேவலமாகக் கருதிக் கொண்டிருக்கலாம். ஆனால் நமக்கு முன்னே அவர்களால் நிற்க முடியாது. அவர்களுக்கு முரட்டுத்தனமிருக்கலாம்; ஆனால் திறமை யில்லை. நமது நாட்டுக்கு வெகு தொலைவில் நாம் இருக்கிறோமென்பது உங்களுக்கு ஞாபகமிருக்கட்டும். சமீபத்தில், நம்மிடம் நட்புக் கொண்டுள்ள நாடு எதுவுமில்லை. உங்களுடைய வாளாயுதங்கள்தான் உங்களுக்கு வெற்றி வாங்கித்தர வேண்டும். சத்துருக்கள், தங்கள் நாட்டுக்காகப் போர்புரிவதாகக் கூறுகிறார்கள். நாமோ, நம்முடைய தல்லாத ஒரு நாட்டுக்காகப் போர் புரிகிறோம். இதில் நாம் நிச்சயம் வெற்றி காண வேண்டும். இல்லாவிட்டால் எளிதிலே திரும்பிப் போக முடியாது. ஏனெனின், அதிக எண்ணிக்கை கொண்ட அவர்களுடைய குதிரைப்படை நம்மை வந்து தாக்கும். ஆதலின், இதுவரை நீங்கள் பெற்றிருக்கிற புகழை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்; சத்துருக்களைத் தைரியமாகத் தாக்குங்கள்; சத்துருக்களைக் காட்டிலும், நமது தற்போதைய நெருக் கடியும் தேவையும் அச்சமுண்டாக்கத் தக்கனவா யிருக்கின்றன என்பதை உன்னுங்கள். நிக்கியாஸின் இந்த உற்சாக மொழிகளுக்குப் பிறகு ஆத்தீனியர்கள், ஸைரக்யூஸியர்களைப் பலமாகத் தாக்கினார்கள். எதிர்பாராம லிருக்கையில் தாக்கப்பட்டதால் ஸைரக்யூஸியர்கள் நிலைகுலைந்து போனார்கள். தவிர இவர்களிடத்தில் படையொழுங்கு இல்லை. ஆனால் குதிரைப்படை வலுவுற்றிருந்தது. இந்தக் குதிரைப்படைக்கு அஞ்சி, நிக்கியா, தான் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து செல்ல முடியாத வனானான். தவிர இவன் சுபாவமும், கடைசி வரையில் உறுதியாக நின்று ஒரு காரியத்தைச் சாதிக்கக்கூடாததா யிருந்தது. இதனால் இவன், தன் படையுடன் கட்டானே2 என்ற இடத்திற்குத் திரும்பிச் சென்று அங்கே முகாம் செய்துகொண்டான். பத்தொன்பதாவது அத்தியாயம் ஆத்தீனியர்கள் கட்டானேவில் முகாம் செய்ததும், குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. இந்தக் குளிர்காலத்தில் போர் நடத்த முடியாதா கையால், தனக்கு எந்தெந்த ராஜ்யங்கள் சாதகமாயிருக்கக் கூடுமென்று மேலும் மேலும் விசாரித்தறிவதில் முனைந்து நின்றான் நிக்கியா. ஸைரக்யூஸியர்களும் இங்ஙனம் பக்க பலம் தேடுவதில் முனைந்தனர்; லாஸிடீமோனுக்கும் கொரிந்த்தியாவுக்கும் உதவி கோரி தூதனுப்பினர்; தங்களுடைய படைத் தலைமையையும் ஒழுங்குபடுத்திக் கொண்டனர்; ஹெர்மோக்கிராட்டீ உள்பட மூன்று படைத்தலைவர்கள் வசத்தில் ராணுவ நடவடிக்கைகள் பூராவையும் ஒப்புவித்தனர். சிஸிலியின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது காமரினா1 என்ற ராஜ்யம். ஏற்கனவே இதற்கும் ஆத்தென்ஸுக்கும் சிநேக ஒப்பந்தம் இருந்து வந்தது. இந்த ஒப்பந்தத்தை ஆதாரமாக எடுத்துக்காட்டி, தனக்கு இந்தச் சமயத்தில் உதவி செய்யவேண்டுமென்று கோரி அங்கு ஒரு தூது கோஷ்டியை அனுப்பினான் நிக்கியா. ஸைரக்யூஸியர்களுக்கு இது விஷயம் தெரிந்தது. தாங்களும் ஒரு தூது கோஷ்டியை காமரினாவுக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். காமரினா வாசிகள், ஸைரக்யூஸியர்களுக்கு, முதல் யுத்தத்தின்போது சிறிது உதவி அனுப்பியிருந்தார்கள். ஆனால் அந்த உதவி மனப்பூர்வமாகச் செய்யப்படவில்லை, போதுமான அளவுக்கும் செய்யப்படவில்லை யென்பது ஸைரக்யூஸியர்களின் குறை. இப்பொழுது ஆத்தீனியர்கள் அந்த முதல் யுத்தத்தில் ஜெயித்து விட்டார் களல்லவா, எனவே தங்களுக்கு ஆதரவு தருவதை நிறுத்திக்கொண்டு, ஆத்தீனியர்கள் பக்கமே போய்ச் சேர்ந்துவிடுவார்களென்று நம்பினார்கள். அப்படிச் சேர்ந்துவிடாமல் தடுக்கும் பொருட்டே தூதுகோஷ்டியை அனுப்பத் தீர்மானித்தார்கள். ஹொமோக்கிராட்டீஸையே தூது கோஷ்டியின் தலைவனாகத் தெரிந்தெடுத்தார்கள். இவன் தலைமையில் ஸைரக்யூ தூதுகோஷ்டியும், யூப்பிம2 என்பவனுடைய தலைமையில் ஆத்தீனியர் தூது கோஷ்டியும் காமரினா வந்து சேர்ந்தன. இவற்றின் கட்சி நியாயங்களை முறையே கேட்க காமரினா ஜனசபை கூடியது. முதலில் ஹெர்மோக்கிராட்டீ பேசினான்:- காமரினீயர்களே! ஆத்தீனியர்கள் கொண்டு வந்திருக்கும் படைகளின் பெருக்கத்தைக் கண்டு நீங்கள் பயந்து போயிருக்கிறீர்களோ என்று நாங்கள் பயந்துபோய் இங்கு வரவில்லை; எங்களுடைய கட்சியைக் கேளாமல் அவர்களுடைய கட்சியை மட்டும் கேட்டுவிட்டு ஒருதலைப்பட்சமான அபிப்பிராயம் நீங்கள் கொண்டுவிடாமலிருக்க வேண்டுமென்பதற்குத்தான் இங்கு வந்தோம். ஆத்தீனியர்கள், என்ன காரணஞ் சொல்லிக்கொண்டு இங்கு சிஸிலிக்கு வந்திருக்கிறார்களென்பதும், அவர்கள் வந்திருக்கும் நோக்கத்தில் நாமெல்லோரும் சந்தேகங்கொண்டிருக்கிறோமென்பதும் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களே. கிரீஸில் எந்த முறையைக் கையாண்டு வெற்றி கண்டார்களோ அந்த முறையையே இங்கும் கையாளப்பார்க்கிறார்கள். பாரசீகர்களைத் தண்டிக்கும் பொருட்டு, ஆத்தீனியர்கள் ஐயோனிய இனத்தினருக்கும் அவரைச் சார்ந்தவருக்கும் தலைவர்களாகத் தெரிந்தெடுக்கப்பட்டார்கள்; தலைவர்களாயிருந்து பாரசீகர்கள்மீது வெற்றி கொண்டார்கள். பின்னர், சிலரை பாரசீக யுத்தத்தில் சரியானபடி ராணுவ உதவி செய்யவில்லையென்றும், சிலரை ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்களேயென்றும், இப்படி ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி ஒருவர் பின்னொருவராக எல்லோரையும் தங்கள் ஆதிக்கத்துக்குட்படுத்திக் கொண்டார்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால், பாரசீகர்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில், ஆத்தீனியர்கள், கிரீஸினுடைய சுதந்திரத்திற்காகப் போராடவில்லை; அப்படியே கிரேக்கர்களும், தங்களுடைய சுதந்திரத் திற்காகப் போராடவில்லை. ஆத்தீனியர்கள், பாரசீகத் தளைக்குப் பதில் தங்களுடைய தளையைக் கிரேக்கர்கள் பூட்டிக்கொள்ள வேண்டு மென்பதற்காகப் போராடினார்கள்; கிரேக்கர்களோ ஓர் எஜமானருக்குப் பதில் மற்றோர் எஜமானரை ஏற்றுக்கொள்ளப் போராடினார்கள். புதிய எஜமானர்கள் - ஆத்தீனியர்கள் - பழைய எஜமானர்களைக் காட்டிலும் - பாரசீகர்களைக் காட்டிலும் - புத்திசாலிகள்தான்; ஆனால் தீங்கிழைப்பதில்தான் புத்திசாலிகள். இந்தச் சபையிலுள்ள விஷயமறிந்தவர்களுக்கு ஆத்தீனியர்களின் அக்கிரமச் செயல்கள் நன்கு தெரியும். அவைகளைப்பற்றி யெல்லாம் இங்கே விதரித்துச் சொல்ல நாங்கள் வரவில்லை. நம்மிடமுள்ள குறை களை எடுத்துக் காட்டவே இங்கு வந்துள்ளோம். கிரீஸிலுள்ள பல ராஜ்யங் களும், பரபரம் உதவி செய்துகொள்ளாத காரணத்தினால், ஆத்தென்ஸின் ஆதிக்கத்துக்குட்பட்டன. அப்படி அவை ஆதிக்கத்துக்குட்பட்டது நமக்குப் பெரிய எச்சரிக்கை. அங்கே கிரீஸில் கையாளப்பட்ட முறைகள்தான் இங்கே சிஸிலியிலும் கையாளப்படுகின்றன. உதாரணமாக, ஐயோனிய இனத்தினராகிய லியோண்ட்டினி வாசிகளை அவர்களுடைய பழைய தானத்தில் நிலைபெறச் செய்வதாகவும், தங்களுடைய நேச ராஜ்யத்தினராகிய ஸெகெட்டியர்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும் சொல்லிக்கொண்டு அவர்கள் - ஆத்தீனியர்கள் - இங்கு வந்திருக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒற்றுமையுடனிருக்கவேண்டும். இங்கு வசிக்கிற நாமனைவரும், ஐயோனியர்களுமல்ல, ஹெல்லப் பாண்ட்டினீயர்களுமல்ல,1 எஜீயன் கடலிலுள்ள2 தீவுகளில் வசிக்கும் ஜனங்களுமல்ல. ஒரு சமயம் பாரசீகர்களுக்கும் இன்னொரு சமயம் பிறருக்கும் இப்படி எப்பொழுதும் யாராவது ஒருவருடைய ஆதிக்கத்துக் குட்பட்டிருக்கிறவர்களுமல்ல; பெலொப்பொனேசியாவின் கட்டுப் பாடுகளுக்குட்படாத சுதந்திர டோரியர்கள், சிஸிலியில் வசிக்கிற வர்கள் என்று அவர்களுக்குக் காட்டவேண்டும். அப்படிக் காட்டிக் கொள்ளாமல், நம்மில் ஒவ்வொரு ராஜ்யத்தினராக அவர்கள் ஆதிக்கத்திற்குட்படுத்திக் கொண்டுவர, அதை நாம் பார்த்துக் கொண்டிருப்பதா? எல்லோரும் அவர்களுடைய ஆதிக்கத்திற்குட்படுகிற வரை பொறுத்துக் கொண்டிருப்பதா? அவர்கள் நம்மை வேறு விதமாக வெற்றிக்கொள்ளமுடியாது. நம்மைப் பிரித்து வைத்து அதன் மூலமாகத் தான் வெற்றி கொள்ளமுடியும். நல்ல வார்த்தைகள் சொல்லிச் சிலரைப் பிரித்து வைக்கலாம்; இருவர் சண்டை போட்டுக்கொண்டிருந்தால் ஒருவர் பக்கம் உதவி செய்வதாகச் சொல்லிப் பிரித்து வைக்கலாம்; இப்படி ஏதோ ஒரு வழியில் எல்லோரையும் நாசப்படுத்திவிடலாம்; எல்லோரிடத்திலும் முகதுதியான வார்த்தைகளைச் சொல்லியே இங்ஙனம் செய்யலாம். நம்மிலே தொலைதூரத்திலுள்ள ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டால், அது நம்மொவ்வொருவரையும் நாளாவட்டத்தில் பாதிக்காதென்று நினைக்கிறீர்களா? அல்லது, நமக்கு முன்னே யார் சுதந்திரத்தை இழந்து துன்பத்தை அனுபவிக்கிறார்களோ அவர்கள் மட்டும் தனியே துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பார்களென்று எண்ணுகிறீர்களா? ஆத்தீனியர்களுக்கு ஸைரக்யூஸியர்கள்தானே பகைவர்கள், அவர்களுக்காக - ஸைரக்யூஸியர்களுக்காக - நாம் ஏன் ஆபத்தை மேற் கொள்ளவேண்டும் என்று நீங்கள் - காமரினீயர்கள் - கேட்பீர்களானால் நான் கூறுகிறேன். எங்களுக்காகவல்ல, உங்களுக்காகவும் நீங்கள் சண்டை போடவேண்டும்; நாங்கள் முதலில் ஆத்தீனியர்களால் அழிக்கப்பட்டு விட்டால், பிறகு உங்களுக்கு உதவி செய்யக்கூடியவர் யாரும் இருக்கமாட்டார்கள்; நீங்கள், தனித்துநின்று ஆத்தீனியர்களுடன் சண்டை போடமுடியாது; எங்களுடன் சேர்ந்துகொண்டால் தான் சண்டை போட முடியும்; ஸைரக்யூஸியர்களாகிய எங்களைத் தண்டிக்கவேண்டுமென்பது ஆத்தீனியர்களின் நோக்கமல்ல; உங்களுடைய நட்பைப் பெற எங்களை ஒரு கருவியாக உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதுதான் அவர்கள் நோக்கம். இந்த உண்மைகளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பெரிய ராஜ்யங்களைக் கண்டு எல்லோருமே பொறாமைப்படுவர்; பயப்படுவர். இது சகஜம். அதுபோல எங்களைக் கண்டும் உங்களிலே சிலர் பொறாமைப்படுதலும் பயப்படுதலுங்கூடும். அது காரணமாக, ஸைரக்யூஸுக்கு ஒரு பாடங் கற்பிக்க வேண்டியதுதான், அதன் கொட்டத்தைக் கொஞ்சம் அடக்கி வைக்கவேண்டியதுதான், ஆனால் காமரினாவின் பாதுகாப்பை முன்னிட்டு அஃது உயிரோடுமட்டும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்களாயின், அவர்கள் விருப்பம், மனித யத்தனத்திற்கு நிறைவேறாது. ஒரு மனிதன், தன் ஆசைகளைக் கட்டுப் படுத்தலாம்; ஆனால் சுற்றுச்சார்புகளைக் கட்டுப்படுத்த முடியாது. அந்தச் சுற்றுச்சார்புகளைக் கணிப்பதில் தவறு செய்துவிடுவானாயின், அவன், தன் துரதிருஷ்டத்தைக் குறித்து வருந்திக்கொண்டிருக்க வேண்டியதுதான்; மற்றவர்களுடைய நல்ல நிலைமையைக் குறித்துப் பொறாமைப் பட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான். இப்பொழுது எங்களுக்கேற் பட்டிருக்கிற ஆபத்து உங்களுக்குந்தான். நாங்கள் அதிகார சக்தி வாய்ந்த வர்களாயிருந்தால்தான் உங்களுக்கு விமோசனம் உண்டாகும். ஆதலின் ஆத்தீனியர்களுக்கு நாங்கள் பலியாகவிடாதீர்கள். காமரினீயர்களே! எங்களுக்கு அடுத்தாற்போலிருப்பவர்கள் நீங்கள். எங்களுக்கு முதலில் ஆபத்து ஏற்பட்டால், அடுத்தபடி உங்களுக்குத்தான் ஆபத்து ஏற்படும். இந்த ஆபத்தை - ஆத்தீனியர்களின் படையெடுப்பாகிய ஆபத்தை - ஏற்கனவே நீங்கள் எதிர்பார்த்திருக்கவேண்டும். எதிர்பார்த்துத் தயாராயிருப்பீர்களென்றுதான் நாங்கள் உங்களிடமிருந்து எதிர்பார்த்தோம். இதுவரை, அரை மனத்துடன் தான் உதவி செய்துவந்திருக்கிறீர்கள். இனியும் அப்படிச் செய்யாமல், நீங்களே சுயேச்சையாக வந்து, முழு மனத்துடன் உதவி செய்யவேண்டும்; ஆத்தீனியர்களை எதிர்த்து நிற்கக் கூடிய வண்ணம் எங்களுக்கு உற்சாகமளிக்கவேண்டும்; ஆத்தீனியர்கள், முதலில் உங்கள்மீது படையெடுத்திருந்தால், நீங்கள், ஸைரக்யூஸியர் களாகிய எங்களிடமிருந்து என்ன உதவி கோரியிருப்பீர்களோ அதே உதவியை இப்பொழுது எங்களுக்குச் செய்ய வேண்டும். உதவி செய்ய வேண்டுமென்ற இந்த மனப்பான்மை உங்களுக்காகட்டும், சிஸிலியி லுள்ள மற்றவர்களுக்காகட்டும் இன்னும் ஏற்படவில்லை. அச்சங்காரணமாக, எங்கள் பக்கமோ ஆத்தீனியர்கள் பக்கமோ சேராமல் ஒதுங்கியிருப்பதாக நீங்கள் கூறலாம்; ஆத்தீனியர்களுடன் ஏற்கனவே சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறோமென்று சொல்லலாம். உங்களுடைய நண்பர்களுக்கு விரோதமாக ஆத்தீனியர் களுடன் நீங்கள் சிநேக ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை; உங்களைத் தாக்கக் கூடிய பகைவர்களுக்கு விரோதமாகத்தான் செய்துகொண்டீர்கள். ஆத்தீனியர்களுக்கு யாரேனும் தீங்கிழைத்தால் அப்பொழுதுதான் நீங்கள் அவர்களுக்கு - ஆத்தீனியர்களுக்கு - உதவி செய்யவேண்டுமே தவிர, மற்றவர்களுக்கு அவர்கள் - ஆத்தீனியர்கள் - இப்பொழுது மாதிரி தீங்கிழைக்க முற்படுவார்களானால் அப்பொழுது நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்பது அவசியமில்லை. ரீகியம்1 ராஜ்யத்தினரும் லியோண்ட்டினி ராஜ்யத்தினரும், இருவரும் ஐயோனியர்களே. ஆயினும் லியோண்ட்டினியர்களை நிலை பெறுத்த ஆத்தீனியர்கள் எடுத்துக்கொண்டுள்ள முயற்சிக்கு ரீகியம் வாசிகள் உதவிசெய்ய மறுத்துவிட்டார்கள். அவர்களே அப்படி நடந்து கொண்டிருக்க, நீங்கள் உங்களுடைய பரம்பரை விரோதிகளுக்கு உதவி செய்ய முன் வந்திருக்கிறீர்கள்; உங்களுடன் ஒரே இனத்தினர்போல் பரம்பரையாக வாழ்ந்துகொண்டிருப்பவர்களை அழிக்க முற்பட்டிருக்கும் ஆத்தீனியர்களுடன் சேர்ந்துகொள்ளப் பார்க்கிறீர்கள். இது சரியன்று. ஆத்தீனியர்களுடைய படை பலத்திற்கு அஞ்சாமல் நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். நாம் ஒற்றுமையாயிருக்கும் பட்சத்தில் அவர்களுடைய படைபலம் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. அவர்கள் நம்மைப் பிரித்து வைக்கச் செய்யும் முயற்சியை வெற்றி பெறச் செய் வோமானால்தான் நமக்கு ஆபத்து. பிறருடைய உதவியின்றிப் போராடிய ஸைரக்யூ படைகளை அவர்கள் வெற்றி கொண்டபோதிலும், அந்த வெற்றியினால் அடையக்கூடிய சாதகங்களை அடையாமலேயே அவர்கள் திரும்பிவிட நேரிட்டது. நாம் ஒற்றுமையாயிருக்கும் பட்சத்தில் சஞ்சலப்பட வேண்டியதே இல்லை. ஒற்றுமைப்பட்டிருக்கவேண்டிய அவசியம் இப்பொழுது நேரிட்டிருக்கிறது. ராணுவ விவகாரங்களில் ஆத்தீனியர்களைக் காட்டிலும் திறமைசாலிகளாயுள்ள பெலோப்பொனேசியர்களிடமிருந்து நமக்கு உதவி கிடைக்கும். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒற்றுமைப் பட்டிருக்க வேண்டுவது முக்கியமாகும. ஸைரக்யூஸியர்களும், ஆத்தீனியர்களும், இரண்டு பேரும் வேண்டியவர்கள்தான்; ஆதலின் இருவர் கட்சியிலும் சேராமல் ஒதுங்கி யிருப்போம் என்று நீங்கள் சொல்வீர்களானால் அது சரியன்று. அதனால் உங்களுக்கு நன்மையும் உண்டாகாது; எங்களுக்கு நியாயமுமன்று. ஒரு கட்சியினர் தோல்வியடைகிறார்களென்றும் மற்றொரு கட்சியினர் வெற்றி பெறுகிறார்களென்றும் வைத்துக்கொள்வோம், நீங்கள் எந்தக் கட்சியிலும் சேராமல் ஒதுங்கியிருக்கிற காரணத்தினால், தோல்வியுற்றவர்களை, அவர்களுடைய கதிக்கே விட்டுவிட்ட குற்றத்தைச் செய்தவர்களாகவும், வெற்றி கொண்டவர்களின் குற்றச் செயல்களுக்கு உடந்தையாயிருந்தவர் களாகவும் ஆகமாட்டீர்களா? தீங்கிழைக்கப்பட்ட கட்சி யினருடன் சேர்ந்துகொள்வதுதான் உங்களுக்குக் கௌரவம். தீங்கிழைக்கப் பட்டவர்கள் யார்? உங்களுடைய சொந்த இனத்தினரே. அப்படிச் சேர்ந்து கொண்டால் சிஸிலியின் பொதுநலத்திற்குப் பங்கம் வராமல் பாதுகாத்தவர்களாவீர்கள்; அதே சமயத்தில், உங்கள் நண்பர்களாகிய ஆத்தீனியர்களைக் குற்றஞ்செய்யாதபடி தடுத்துக் காப்பாற்றினவர் களுமாவீர்கள். ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருக்கிற விஷயங்களைத் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பயனில்லை. உங்களை வேண்டுகின்றோம். எங்கள் வேண்டுதலுக்கு நீங்கள் இசையாவிட்டால், எங்கள் பரம்பரைச் சத்துருக் களான ஐயோனியர்களால் - ஆத்தீனியர்களால் - நெருக்கப்படுகிறோம்; எங்கள் டோரியர் இனத்தைச் சேர்ந்த உங்களால் காட்டிக்கொடுக்கப் படுகிறோம்; இப்படிச் சொல்லித்தான் எங்கள் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்ள வேண்டியவர்களா யிருக்கிறோம். ஆத்தீனியர்கள் எங்களைத் தோல்வியுறச் செய்துவிட்டால், அவர்கள் கொண்ட வெற்றிக்கு, நீங்கள் செய்கிற முடிவுதான் காரணமாயிருக்கும். வெற்றி கொண்ட புகழெல்லாம் அவர்களைத் தான் - ஆத்தீனியர்களைத்தான் - போய்ச்சேரும். வெற்றிப் பரிசாக, யார் வெற்றிபெற அவர்களுக்கு உதவி செய்தார்களோ அவர்களே போய்ச் சேருவார்கள்; அதாவது அவர்கள் வெற்றி பெறுவதற்குத் துணை செய்த நீங்களே அவர்களுடைய ஆதிக்கத்துக்குட்பட்டுவிடுவீர்கள். அப்படிக்கின்றி நாங்கள் வெற்றிபெறுவோமானால், எங்களை ஆபத்திலே கொண்டு வந்து சிக்கவைத்ததற்காக பின்னாடி எங்களால் தண்டனைக்குட் படுத்தப்படுவீர்கள். ஆதலின் நன்றாக யோசியுங்கள். ஆத்தீனியர்களுக்கு அடிமைப்பட்டு அமைதியாக வாழ்வதா, அல்லது எங்களுடன் சேர்ந்து வெற்றி கண்டு அழிவினின்று காப்பாற்றிக்கொள்வதா என்ற முடிவுக்கு வாருங்கள். ஆத்தீனிய எஜமானர்களுக்குப் பணிவதாகிற இழிவினின்று தப்பித்துக்கொள்ளுங்கள்; ஸைரக்யூஸின் சாசுவதமான பகைமை ஏற்படா வண்ணம் தடுத்துக் கொள்ளுங்கள். இதற்குப் பிறகு, ஆத்தீனிய தூதுகோஷ்டியின் தலைவனான யூப்பிம பின்வருமாறு பேசினான்:- நம்மிருவருக்குமிடையேயுள்ள சிநேக ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ள நாங்கள் இங்கு வந்தோம். ஆனால் ஸைரக்யூஸியர்கள் எங்களைத்தாக்கிப் பேசியிருக்கிறபடியால், எங்கள் ஏகாதிபத்தியத்தைப் பற்றியும், அந்த ஏகாதிபத்தியத்தை நிருவகிக்க எங்களுக்கு உரிமை யுண்டென்பதைப்பற்றியும் சில வார்த்தைகள் சொல்லவேண்டியவர் களாயிருக்கிறோம். ஸைரக்யூ பிரதிநிதி கூறியதே, நாங்கள் ஏன் ஏகாதிபத்தியத்தை நிருவகிக்க வேண்டியவர்களா யிருக்கிறோ மென்பதற்குச் சிறந்த அத்தாட்சியா யிருக்கிறது. ஐயோனியர்கள், டோரியர் களின் பரம்பரைச் சத்துருக்களென்று அவர் கூறினார். அது வாதவம். பெலொப்பொனேசிய டோரியர்கள், எண்ணிக்கையில் எங்களைக் காட்டிலும் அதிகம் பேராயிருக்கிறார்கள்; எங்களுக்கடுத்தாற் போலுமிருக் கிறார்கள். இதனால், அவர்களுடைய ஆதிக்கத்திற்குட்படாதிருக்க என்ன வழியென்று ஐயோனியர்களாகிய நாங்கள் யோசிக்கவேண்டியவர் களானோம். பாரசீகப் போருக்குப் பிறகு, கடற்படையில் நாங்கள் வலுப் பெற்றவர்களா யிருந்தோம். அதனால், லாஸிடீமோனியர்களுடைய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டோம். அவர்களுக்கு உத்தரவு போட எங்களுக்கு எப்படி உரிமையில்லையோ அப்படியே எங்களுக்கு உத்தரவுபோட அவர்களுக்கு உரிமையில்லை. அந்தச் சமயத்தில், எங்களைக் காட்டிலும் அவர்கள் சிறிது பலசாலிகளா யிருந்தார்கள். அவ்வளவுதான். பாரசீகப் போருக்குப் பிறகு, அந்தப் பாரசீக மன்னனுடைய பிரஜை களா யிருந்தவர்களனைவருக்கும் நாங்கள் எஜமானர்களானோம்; இப்பொழுது எஜமானர்களாக இருக்கிறோம். தற்காப்புக்காக நாங்கள் போதிய படைகளை வைத்துக் கொண்டிருந்தோமானால், பெலொப் பொனேசியர்களுடைய ஆதிக்கத்திற்குட்படாமலிருக்கலாமென்பது எங்கள் கருத்து. எங்கள் இனத்தினர்களாகிய ஐயோனியர்களையும் (எஜீயன் கடலிலுள்ள) தீவினரையும் நாங்கள் அடிமை கொண்டுவிட்டோமென்று ஸைரக்யூஸியர்கள் கூறுகிறார்கள். அப்படி அவர்களை ஆதிக்கத்திற்குட் படுத்திக்கொண்ட விஷயத்தில் நாங்கள் அநியாயமெதுவும் செய்து விடவில்லை. அவர்கள் - எங்கள் இனத்தினராகிய ஐயோனியர் முதலா யினோர் - தாய்நாட்டினராகிய எங்களுக்கு விரோதமாகப் பாரசீகர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். பாரசீர்கள் படையெடுத்து வந்தபோது, நாங்கள், எங்கள் சொத்து சுதந்திரங்களையெல்லாம் துறந்துவிட்டு, ஆத்தென் நகரத்தையே காலி செய்துகொண்டு வெளியே வந்தோம்.1 அதுபோல் அவர்கள் - ஐயோனியர் - முதலாயினோர் தங்கள் சொத்து சுதந்திரங்களின் நஷ்டத்தை பொருட்படுத்தாமல் பாரசீகர்களுக்கு விரோதமாகக் கலகஞ் செய்திருக்க வேண்டும். அந்தத் தைரியம் அவர்களுக்கு இல்லை. அதற்கு பதிலாக, தாங்களே வலிய பாரசீகர்களுக்கு அடிமையாயிருக்கச் சம்மதப்பட்டார்கள்; எங்களையும் அடிமைப்படுத்த முயன்றார்கள்.1 நாங்கள் பிறரை ஆளத் தகுதியுடைவர்கள், எப்படியென்று நீங்கள் கேட்கலாம். பாரசீகர்கள் படையெடுத்து வந்த காலத்தில், நாங்கள் எங்களுடைய பெரிய கடற்படையையும் குன்றாத தேசபக்தியையும் கிரீ வசத்தில் ஒப்புக் கொடுத்தோம். அப்பொழுது, எங்கள் பிரஜைகளான ஐயோனிய கிரேக்கர்கள் என்ன செய்தார்கள்? தாங்களே இஷ்டப்பட்டுப் பாரசீகர்களுக்கு அடிபணிந்து அதன்மூலம் எங்களுக்குத் தீங்கிழைத் தார்கள். இவையெல்லாம் போக, பொதுவாக, பெலொப்பொனே சியர்களுடன் ஈடுகொடுக்க எங்களுடைய பலத்தை அதிகரித்துக் கொள்ள விரும்புகிறோம். நாங்கள் அந்நியர்களை (பாரசீகர்களை)த் தனியாக எதிர்த்து நின்று போராடி வெற்றி கண்டோம்,2 அல்லது எங்களுடைய சுதந்திரத்திற்காகவும் எல்லோருடைய சுதந்திரத்திற்காகவும் ஆபத்தை மேற்கொண்டோம். என்றெல்லாம் அழகிய வார்த்தைகளால் சொல்லிக்காட்டி எங்களுடைய ஆளும் உரிமையை ஊர்ஜிதம் செய்து கொள்ள விரும்பவில்லை. யாரும், தங்களுடைய சொந்தப் பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்துகொள்வார்கள். இதற்காக யாரையும் குறை சொல்லமுடிவாது. இப்பொழுது நாங்கள் ஏன் சிஸிலிக்கு வந்திருக்கிறோமென்றால், எங்களுடைய சொந்தப் பாதுகாப்பை முன்னிட்டுத்தான், இங்ஙனம் எங்கள் பாதுகாப்பை நாடுவது உங்கள் நலனுக்கு முரண்பட்டதாயிருக்கிறது. இதற்கு என்ன அத்தாட்சியென்று நீங்கள் கேட்கலாம். ஸைரக்யூஸியர்கள், எங்கள் நடவடிக்கைகளைக் கண்டிக்கிறார்கள்; நீங்களும் பயந்து போய் எங்களைச் சந்தேகத்துடன் பார்க்கிறீர்கள். இவையிரண்டுமே போது மானவை. அச்சங்காரணமாக, யார் பிறரைச் சந்தேகத்துடன் பார்க்கிறார் களோ அவர்கள் சாதுரியமான பேச்சில் அந்தச் சமயம் மயங்கிப்போய் விடுகிறார்களென்றாலும், காரியத்தில் தங்கள் நலனையே நாடு கின்றார்கள். ஆதலின், பயம் காரணமாகத்தான் நாங்கள் கிரீஸில் ஏகாதிபத்திய ஆட்சி புரிகிறோம். அதே பயம் காரணமாக இப்பொழுது சிஸிலிக்கும் வந்திருக்கிறோம். இங்கே நண்பர்களுடைய உதவியைக் கொண்டு எங்களுடைய ஏகாதிபத்திய நிலைமையை ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். மற்றவர்களை, எங்களுக்கு அடிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது எங்கள் நோக்கமல்ல; மற்றவர்களை, அடிமைத்தனத்திலிருந்து காப்பாற்ற வேண்டு மென்பதுதான் எங்கள் நோக்கம். உங்களுடைய க்ஷேமத்தில் எங்களுக்கு அக்கரையில்லை யென்று இங்குள்ள யாரும் நினைக்கவேண்டாம். நீங்கள் தக்க பாதுகாப்புடன் இருந்துகொண்டு ஸைரக்யூஸியர்களை எதிர்த்து நிற்பீர் களானால், அவர்கள், பெலொப்பொனேசியாவுக்குத் துருப்புகள் அனுப்பி, அதன்மூலம் எங்களுக்குத் தீங்கு உண்டுபண்ணாதவர்களா யிருப்பார்கள். ஆதலின் உங்கள் விஷயத்தில் எங்களுக்கு அக்கரையுண்டு. லியோண்ட்டினியர்களைச் சுதந்திரத்துடனிருக்கச் செய்வதில் நாங்கள் சிரத்தை எடுத்துக்கொள்வோமானால் அது மிகவும் நியாயம். அவர்களைப் பலமுள்ளவர்களாகச் செய்துவைக்கவும் நாங்கள் விரும்புகிறோம். அப்பொழுதுதான் அவர்கள், ஸைரக்யூஸின் எல்லைப்புறத்தில் இருந்துகொண்டு, ஸைரக்யூஸியர்களுக்குத் தொந்தரவு விளைவித்துக் கொண்டிருக்கக் கூடும். சுயேச்சாதிகாரிகளும் ஏகாதிபத்தியவாதிகளும், தங்களுக்கு நன்மை பயக்கும் யாவும் நியாயமானவையே என்று கொள்கிறார்கள்; தங்களால் நம்பப்படுகிறவர்கள்தான் தங்களுடைய இனத்தினரென்று கருதுகிறார்கள். அவர்களுடைய நட்பும் பகைமையும் சந்தர்ப்பத்தையொட்டி மாறுதலடை கின்றன. இங்கே சிஸிலியில் எங்களுடைய நோக்கம், எங்கள் நண்பர் களை- நட்புடனிருக்கும் ராஜ்யங்களை-பலவீனப்படுத்தவேண்டு மென்ப தல்ல; எங்கள் சத்துருக்களை-சத்துரு ராஜ்யங்களை-ஒடுக்க அந்த நண்பர் களுடைய பலத்தை உபயோகித்துக்கொள்ள வேண்டுமென்பதுதான். இது விஷயத்தில் உங்களுக்கு ஏன் சந்தேகம்? கிரீஸில், எங்களுடைய சகாக்களை, அவர்கள் உபயோகமா யிருக்கிறபடிதான் நடத்துகிறோம். கியோ ராஜ்யமும் மெத்திம்னா ராஜ்யமும்,1 சுயஅரசு நடத்துகின்றன; எங்களுக்குத் தேவைப்படும்போது கப்பல்களைக் கொடுத்து உதவவும் செய்கின்றன. மற்றப் பெரும்பாலான ராஜ்யங்கள் இன்னும் கடுமையான நிபந்தனைகளுக்குட்பட்டு, எங்களுக்கு ரொக்கமாகக் கப்பஞ் செலுத்து கின்றன. இன்னும் தீவு ராஜ்யங்கள் பல இருக்கின்றன. இவைகளை ஆக்கிரமித்துக்கொள்வது எங்களுக்கு மிகவும் சுலபம். ஆயினும் அவை சுதந்திர ராஜ்யங்களாகவே இருக்கின்றன. ஏன் அவைகளைச் சுதந்திரமாக விட்டு வைத்திருக்கிறோமென்றால், அவை, பெலொப்பொனேசியாவைச் சுற்றி வளைத்துக்கொண்டாற்போலிருக்கின்றன. அதுபோல, சிஸிலி யிலுள்ள ராஜ்யங்களின் விஷயத்திலும், எங்களுடைய நலத்தையும் ஸைரக்யூஸியர்களிடத்தில் எங்களுக்குள்ள அச்சத்தையும் முக்கியமாகக் கருதியே நடந்து கொள்வோம். உங்கள்மீது ஆட்சி செலுத்தவேண்டுமென்பதே ஸைரக்யூஸியர் களின் ஆசை. முதலில் எங்கள்மீது உங்களுக்கு அவநம்பிக்கை உண்டாகு மாறு செய்வது, பிறகு உங்களுடைய தனிப்பட்ட நிலைமையைக் காரண மாகக் காட்டியோ அல்லது பலாத்காரத்தைப் பிரயோகித்தோ உங்களைத் தங்கள் வழிப்படுத்திக்கொள்வது, அதற்குப் பிறகு உங்களைப் பாதுகாக்க முடியாமல் நாங்கள் திரும்பிச் சென்றதும் இத்தலி பூராவுக்கும் எஜமானர் களாவது; இதுதான் அவர்கள் உத்தேசம். நீங்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டால் அவர்கள் அப்படி எஜமானர்களாவது நிச்சயம். அப்பொழுது அவர்களைத் தடை செய்யக்கூடிய பெரிய படையைச் சேகரிப்பது சுலபமான காரியமல்ல. நாங்கள் திரும்பிச் சென்ற பிறகு அவர்களுடன் உங்களால் ஈடுகொடுக்க முடியாது. அப்படியெல்லாம் ஒன்றும் நடைபெறாது என்று நீங்கள் அபிப் பிராயப்படுவீர்களானால் அந்த அபிப்பிராயத்திற்கு மாறுபட்ட விதமாகவே விவகாரங்கள் நடைபெற்று வருகின்றன. நாங்கள் இங்கே வரவேண்டுமென்பதற்கு என்ன காரணங் கூறினீர்கள்? நாங்கள் ஸைரக்யூஸியர்களின் ஆதிக்கத்துக்குட்பட்டுவிடும் பட்சத்தில், பின்னர் ஆத்தென்ஸுக்கும் ஆபத்து நேரிடும் என்று சொன்னீர்கள். அதே வாதத்தை மறுப்பதுபோல் இப்பொழுது, ஸைரக்யூஸுக்கு விரோதமாக நாங்கள் பெரும் படையுடன் வந்திருக்கிற இப்பொழுது நடந்துகொள்வீர்களாயின், எங்கள்மீது சந்தேகங் கொள்வீர்களாயின் அது நியாயமன்று. உண்மையில் நீங்கள் ஸைரக்யூஸியர்களிடத்தில்தான் அவநம்பிக்கை கொள்ள வேண்டும். உங்களுடைய ஆதரவில்லாமல் நாங்கள் இங்கே இருக்க முடியாது. உங்களை வஞ்சகமாக வெற்றிகொண்டு விடுகிறோமென்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட துரோகிகளாக நாங்கள் நடந்து கொள்வோமானால், உங்களைச் சாசுவதமாக எங்கள் ஆதிக்கத்திற் குட்படுத்தி வைத்துக் கொண்டிருக்கமுடியாது. ஏனென்றால், தொலை தூரத்திலிருந்து கொண்டு உங்களை ஆளமுடியாது. jÉu, Fâiu¥ gilfisí« fhyh£gilfisí« ÄFâahf¡ bfh©LŸs uh{a§fis v¥go bjhiyöu¤âÈUªJbfh©L f£o¡ fh¡f Koí«?1 ஸைரக்யூஸியர்களோ, உங்களுக்குச் சமீபத்தில் வசிக்கிறார்கள்; எங்களைப்போல் முகாம்போட்டுக் கொண்டு வசிக்கவில்லை; எங்களுடைய படை எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக ஜனத் தொகையுடைய ஒரு பெரிய நகரத்தில் வசிக்கிறார்கள்; எப்பொழுதும் உங்களுக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்; சந்தர்ப்பம் கிடைத்தால் உங்களைக் கவிழ்த்துவிடுவார்கள். லியோண்ட்டி னியர்கள் விஷயத்தில் அவர்கள் நடந்துகொண்ட மாதிரியைக் கொண்டே அவர்களுடைய நோக்கமின்னதென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படிப்பட்டவர்கள் இப்பொழுது உங்களிடம் வந்து, உங்களுக்கு ஒன்றும் தெரியாதென்று நினைத்துக் கொண்டு, எந்த அதிகார சக்தி, அவர்களுடைய நோக்கத்தை நிறைவேறவொட்டாதபடி தடுத்துக் கொண்டிருக்கிறதோ, எந்த அதிகார சக்தி சிஸிலியை இதுகாறும் சுதந்திரமாக இருக்கும்படி செய்து வைத்திருக்கிறதோ அந்த அதிகார சக்திக்கு விரோதமாக, அதாவது ஆத்தீனியர்களாகிய எங்களுக்கு விரோதமாக, தங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று உங்களைக் கேட்கிறார்கள். எந்த முகத்தை வைத்துக்கொண்டு கேட்கிறார்களோ தெரியவில்லை. நாங்களோ அவர்களுக்கு நேர்மாறாக, உங்களுக்கு உண்மையான பாதுகாப்பை அளிப்பதாகச் சொல்லி உங்களை எங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி அழைக்கிறோம். உங்களுடைய க்ஷேமத்தில் நாங்களும், எங்களுடைய க்ஷேமத்தில் நீங்களும் அக்கரை கொண்டவர்கள். இப்பொழுது நீங்கள் எங்களுடன் சேர்ந்து கொள்ளாவிட்டால், நம்மிரு வருடைய க்ஷேமத்திற்கும் துரோகம் செய்தவர்களாவீர்கள். ஸைரக்யூஸியர்கள், உங்களைக்காட்டிலும் எண்ணிக்கையில் பலம் பெற்றவர்கள். அதனால், மற்றவர்களுடைய சகாயமில்லாமலே அவர்கள் உங்களை வந்து தாக்கக்கூடும். அப்பொழுது உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் போய்விடும். எங்கள்மீது கொண்ட சத்தேகங் காரணமாக, எங்களையும், வந்த காரியத்தை நிறைவேற்றவிடாமலோ, தோல்வியுறச் செய்தோ திருப்பியனுப்பிவிட்டவர் களாவீர்கள். நாங்கள் திரும்பிச் சென்றுவிட்ட பிறகு, இவர்களிலே-ஆத்தீனியர்களிலே-ஒரு சிலராவது, எங்களுக்கு உதவி செய்யத் திரும்பி வரக்கூடாதா என்று நீங்கள் வருந்தவேண்டிவரும். காமரினியர்களே! ஸைரக்யூஸியர்கள், எங்களைப் பற்றிச் சொல்கிற அவதூறுகளெல்லாம் உங்களிடத்திலோ மற்றவர்களிடத்திலோ பலிக்காதென்று நம்புகின்றோம். சந்தேகக் கண்கொண்டு நாங்கள் பார்க்கப் படுவதைப் பற்றிய உண்மைகளை யெல்லாம் உங்களுக்குச் சொல்லி யிருக்கிறோம். என்றாலும் உங்களுக்கு அறிவுறுத்தவேண்டி சுருக்கமாகத் திரும்பவும் கூறுகிறோம். நாங்கள் சுதந்திரமாயிருக்க வேண்டு மென்பதற்காக, எங்களுடைய கிரேக்கப் பிரஜைகளின் மீது ஆதிக்கஞ் செலுத்துகிறோம். சிஸிலிக்கும் சுதந்திரத்தையளிக்க முன் வந்திருக் கிறோம். ஏன்? சிஸிலியர்களால் எங்களுக்குக் கெடுதல் நேரிடக்கூடா தென்பதற்காக. அநேக வழிகளில் நாங்கள் எங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டியவர்களாக இருப்பதால், அநேக விஷயங்களில் தலை யிடவேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்படுகிறது. சிஸிலி தீவில் கொடுமைக்குட்பட்டிருக்கிறவர்களுக்கு உதவி செய்யவே இங்கு வந்திருக்கிறோம். யாரும் அழைக்காமல் நாங்கள் இங்கு வரவில்லை; அழைப்பின் பேரிலேயே வந்திருக்கிறோம். ஆதலின், எங்கள் நடக்கையைப் பற்றித் தீர்ப்புக் கூறுகிறவர்களாகவோ, எங்கள் நடவடிக்கையைக் கண்காணிப்பவர்களாகவோ உங்களை ஆக்கிக் கொண்டுவிடாதீர்கள். நாங்கள் வந்த உத்தேசத்திலிருந்து எங்களைத் திருப்பி அனுப்பிவிடாதீர்கள். நாங்கள் திரும்புவதென்பது மிகவும் கடினம். மற்றவர்களுடைய விவகாரங்களில் நாங்கள் தலையிடுவதாகச் சொல்லப்படுகிறதல்லவா, அந்தத் தலையீட்டை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்; எங்களுடைய நடைமுறைகளை உங்களுடைய நலத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். எங்களுடைய நடைமுறைகள் எல்லோருக்கும் தீங்கு பயக்கமாட்டா; கிரீஸின் பெரும்பகுதிக்கு நன்மையை உண்டுபண்ணுவதாகவே இருக்கும். நாங்கள் கையாளும் முறைகளின் விளைவாக நல்ல பலனே ஏற்பட்டிருக்கிறது. ஆக்கிரமிப்புச் செய்யவேண்டுமென்று உத்தேசிக் கிறவர்கள், நாங்கள் அந்த ஆக்கிரமிப்பைத் தடுக்க வருவோமென்று தெரிந்தால், தங்கள் ஆக்கிரமிப்பு உத்தேசம் ஆபத்தாக முடியுமென்று உணர்ந்து அதனின்று பின்வாங்கிக் கொண்டு விடுகிறார்கள். ஆக்கிர மிப்புக்குப் பயப்பட்டுக்கொண்டிருக்கிறவர்கள், எங்களுடைய உதவி நிச்சயம் கிடைக்குமென்று நம்பி, ஆக்கிரமிப்பைத் தடுத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்குகிறார்கள். ஆக்கிமிப்புச் செய்கிறவர்கள், தங்களிஷ்டத்திற்கு விரோதமாக நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டியவர்களா யிருக்கிறார்கள். ஆக்கிரமிப்புக்குட்படுகிறவர் களோ, கஷ்டங்கள் அனுபவிக்காமலேயே, தங்களைக் காப்பாற்றிக் கொண்டவர் களாகிறார்கள். எங்கள் பாதுகாப்பை விரும்புகிறவர்களனைவருக்கும் நாங்கள் பாதுகாப்பளிப்போம். இப்பொழுது உங்களுக்குப் பாதுகாப்பளிக்க முன் வந்திருக்கிறோம். அதை நிராகரித்துவிடாதீர்கள். மற்றவர் களைப்போல நீங்களும் நடந்துகொள்ளுங்கள். ஸைரக்யூஸியர்களால் தாக்கப்படுவோமேயென்று எப்பொழுதும் தற்காப்புடன் இருக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். அப்படிக்கின்றி எங்களுடன் சேர்ந்து கொண்டு அவர்களை எப்பொழுதும் அச்சுறுத்திக் கொண்டிருங்கள். யூப்பிம இங்ஙனம் பேசி முடித்தான். காமரினீயர்களுக்கு யார் பக்கம் சேருவதென்று தெரியவில்லை. ஆத்தீனியர்கள் கட்சியில் நியாய மிருப்பதாக இவர்களுக்குப்பட்டது. ஆனால் அவர்களுடைய ஏகாதி பத்தியப் பார்வையைக் கண்டு மருண்டார்கள். ஸைரக்யூஸியர்களை யோ தங்கள் பரம விரோதிகளாகக் கருதினார்கள். ஆனால் அவர்களைப் பகிரங்கமாக விரோதித்துக்கொள்ள விரும்பவில்லை. எனவே, இரு கட்சியினரும் தங்கள் நண்பர்களென்றும், யார் பக்கமும் சேராமல் நடு நிலைமையுடனிருக்கவே தாங்கள் விரும்புவதாகவும் தூதுகோஷ்டி யினரிடம் தெரிவித்தனர். அவர்களும் இந்தப் பதிலைக் கேட்டுக்கொண்டு திரும்பிப்போய்விட்டனர். இனி, ப்பார்ட்டாவுக்குச் சிறிது சென்று வருவோம். அங்கே ஆல்ஸிபியாடீ சென்றிருக்கிறானல்லவா?  இருபதாவது அத்தியாயம் யுத்தத்தின் பதினெட்டாவது வருஷம். ஆல்ஸிபியாடீஸுக்கு ப்பார்ட்டாவில் நல்ல வரவேற்பு. தாய்நாட்டைக் காட்டிக்கொடுக்க வல்லவோ வந்திருக்கிறான்? வேற்று நாட்டில், அதிலும் சத்துரு நாட்டில் நல்ல வரவேற்பில்லாமற் போகுமா? இந்தச் சமயத்தில், ஸைரக்யூஸி லிருந்து உதவி கோரி ஒரு தூதுகோஷ்டியும் ப்பார்ட்டாவுக்கு வந்திருந்தது. இந்தத் தூதுகோஷ்டியின் கோரிக்கைக்கு இணங்கவேண்டுமென்று சொல்லி கொரிந்த்தியாவும் ஒரு தூதுகோஷ்டியை அனுப்பியிருந்தது. எல்லோரும் சேர்ந்து ஸைரக்யூஸுக்கு உதவியனுப்பவேண்டியதவசியம் என்று வற்புறுத்திக் கூறினார்கள். ப்பார்ட்ட அதிகாரிகள் சிறிது தயக்கங் காட்டினார்கள். இந்தச் சமயத்தில், ஆத்தீனியர்கள் மீது இன்னும் அதிகமான துவேஷத்தை உண்டுபண்ணக்கூடிய முறையில் பேச முற்பட்டான் ஆல்ஸிபியாடீ, ப்பார்ட்ட சபையில். தன்னிடத்தில் அவ நம்பிக்கையும் சந்தேகமும் ப்பார்ட்டர்கள் கொள்ளக் கூடு மென்பது இவனுக்குத் தெரியும். எனவே, அவைகளிலிருந்து-அவ நம்பிக்கையி லிருந்தும் சந்தேகத்திலிருந்தும்-தன்னை விடுவித்துக்கொள்ள முனைந் தான், தன் பேச்சின் துவக்கத்தில், ஆரம்பித்தான் பேச்சை:- என் விஷயத்தில் உங்களுக்கு ஒரு தப்பெண்ணம் ஏற்பட்டிருக் கிறது. எனவே அது குறித்துப் பேசுவது எனது முதற்கடமையாகும். ஏனெனின், என்மீதுள்ள சந்தேகத்தினால், பொதுநல சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி நான் கூறுவதை நீங்கள் கேளாமலிருக்கக் கூடாதல்லவா? எனது மூதாதையர்கள், உங்கள் ராஜயத்தின் பிரதிநிதி களா யிருந்தார்கள்; இடையில் ஏதோ பிணக்கு ஏற்பட்டு அந்தப் பிரதிநிதிப் பதவியைத் துறந்துவிட்டார்கள். நானோ அந்தத் தொடர்பை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ள முயன்றேன். சிறப்பாக, பைலோ என்ற இடத்தில் உங்களுக்கு நாசம் உண்டானபோது, உங்கள் நலத்தை நாடி அதன்மூலம் பழைய தொடர்பைப் புதுப்பித்துக்கொள்ளப் பார்த்தேன். நான் இப்படி உங்கள் விஷயத்தில் சிநேக மனப்பான்மை கொண்டிருந்தபோதிலும், நீங்கள் என்னைப் புறக்கணித்துவிட்டு, எனது விரோதிகள்மூலம் ஆத்தென்ஸுடன் சமாதான ஒப்பந்த சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நடத்தினீர்கள். இதனால் எனது சத்துருக்களின் கைவலுக்கும்படி செய்தீர்கள்; எனக்கும் மதிப்பில்லாமற் செய்தீர்கள். எனவே உங்களுக்கு இடையூறு விளைவிக்கவும் உங்களைச் சீர்குலைக்கவும், மாண்ட்டினீயர்கள், ஆர்கோ வாசிகள் ஆகிய இவர்களுடைய உறவை நாடினேனென்றால், வேறு சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக் கொண்டேனென்றால் அதற்காக என்னைக் குறை கூற உங்களுக்கு உரிமையில்லை.1 இங்குள்ளவர்களிற் சிலர், அப்பொழுது என்மீது கோபப்பட்டிருந்தாலும் இப்பொழுது விஷயத்தின் உண்மையை அறிந்து என்னைப்பற்றிக் கொண்டிருந்த அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். மற்றும், நான் ஜன ஆட்சிக்குச் சாதகமாயிருந்தேனென்பதற்காகச் சிலருக்கு என்மேல் வெறுப்பேற்பட்டிருந்தால், அந்த வெறுப்புக்கும் ஆதாரமில்லையென்பதை அவர்கள் அறியவேண்டும். எங்கள் பரம்பரையினர் எல்லோருமே சுயேச்சாதிகாரத்திற்கு விரோதிகளாயிருந் தவர்கள். சுயேச்சாதிகாரத்தை எதிர்த்து நிற்கிறவர்களெல்லோரும் ஜன ஆட்சிவாதிகள் என்றே அழைக்கப்படுகிறார்கள். இதனாலேயே எங்கள் பரம்பரையினர் ஜனங்களின் தலைவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். தவிர, ஆத்தென்ஸில் ஜன ஆட்சியை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கமும் நடைபெற்று வந்தபடியால் அதனுடன் இணங்கிப் போக வேண்டியது எங்கள் கடமையாயிருந்தது. இருந்தாலும், ஜனங்களிடையே தீவிர மனப்போக்கு நிலவியிருந்த போதிலும், நாங்கள் நிதானமாகவே நடந்துகொள்ள முயற்சி செய்து வந்திருக்கிறோம். இப்பொழு திருப்பதைப்போல் அப்பொழுது தீவிரவாதிகள் பலர் இருந்தனர். இவர்கள் ஜனங்களைத் தப்பான வழியில் அழைத்துச்செல்லவே முயன்றார்கள். இவர்களே இப்பொழுது என்னை நாடு கடக்கும்படி செய்திருக்கிறார்கள். இருந்தபோதிலும் எங்கள் கட்சியினருக்குத்தான் நாடு பூராவிலும் ஆதரவு இருந்து வந்தது. எந்த ஆட்சி முறை நிலவியிருந்ததோ, எந்த ஆட்சி முறையின்கீழ் ஆத்தென் மிக மேன்மையடைந்ததோ, பூரண சுதந்திரத்துடன் இருந்ததோ அந்த ஆட்சி முறையைக் காப்பாற்றிக் கொடுப்பதையே எங்கள் கட்சியின் கொள்கையாகக் கொண்டோம். எங்களிலே புத்திசாலிகளா யிருக்கிறவர்கள் ஜன ஆட்சி இன்னது என்பதை நன்கு தெரிந்துகொண்டிருக்கிறார்கள். எனக்கும் அஃது இன்னதென்று நன்கு தெரியும். அதைப் பற்றி அதிகமாகக் குறை சொல்லிக்கொள்ள வேண்டியவன் நான். ஜன ஆட்சியென்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப் பட்ட ஒரு தப்பான ஆட்சி. அதைப்பற்றிப் புதிதாக ஒன்றும் சொல் வதற்கில்லை. ஆயினும், உங்களுடைய பகைமைக்கு முன்பு அந்த ஆட்சி முறையை, அதாவது ஜன ஆட்சி முறையை மாற்றிக்கொள்வது உசிதமாயிராதென்று நாங்கள் கருதினோம். என்னைப்பற்றிய தப்பெண்ணத்தைப் போக்க இது காறும் கூறியது போதுமென்று நினைக்கிறேன். இப்பொழுது நீங்கள் கவனிக்க வேண்டிய பிரச்னைகளைப்பற்றிக் கூறுகிறேன். இவைகளைப்பற்றி எனக்கு ஓரளவு அதிகமாகத் தெரியும். அதனால்தான் இங்குத் துணிந்து பேச முற்படு கிறேன். நாங்கள், அதாவது ஆத்தீனியர்கள், சிஸிலியர்களை வெற்றி கொள்ளவே சிஸிலிக்குப் புறப்பட்டுச் சென்றோம். முடிந்தால் பிறகு இத்தலியையும் அதற்குப் பிறகு கார்த்தேஜ் சாம்ராஜ்யத்தையும் எங்கள் ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வர வேண்டுமென்பது எங்கள் திட்டம். இந்தத் திட்டம் அப்படியே, அல்லது பெரும்பகுதி நிறைவேறிவிட்டால், பிறகு பெலொப்பொனேசியாவைத் தாக்க உத்தேசித்திருந்தோம். எப்படி? வெற்றி கொண்ட மேற்படி பிரதேசங்களிலுள்ள கிரேக்கர்களையும், இபேரியர்1 போன்ற அந்நியர்களையும் சம்பளத்திற்குப் போர்ச் சேவகர்களாக அமர்த்திக்கொள்வது; இத்தலியில் மரங்கள் ஏராளம்; இந்த மரங்களைக் கொண்டு, ஏற்கனவேயுள்ள போர்க் கப்பல்களைத் தவிர புதிய போர்க் கப்பல்கள் கட்டிக் கொள்வது; இந்தக் கப்பற் படையைக்கொண்டு பெலொப் பொனேசியாவைச் சுற்றி வளைத்துக்கொண்டுவிடுவது; பிறகு காலாட் படையைக் கொண்டு தரை வழியாக அதனைத் தாக்கி, அதிலுள்ள ஒவ்வொரு ராஜ்யமாக வசப்படுத்திக்கொள்வது; இங்ஙனம் பெலொப் பொனேசியா முழுவதையும் சுவாதீனப்படுத்திக் கொண்டு, பின்னர் கிரேக்க உலகம் பூராவையும் ஆள்வது; இதுதான் நாங்கள் வகுத்திருந்த திட்டம். இந்தத் திட்டம் ஒழுங்காக நிறைவேற, புதிதாக எங்கள் ஆதீனத் திற்குட்பட்ட பிரதேசங்களிலிருந்து பணத்தையும் தானிய வகைகளையும் வரவழைத்துக்கொள்ள உத்தேசித்திருந்தோம். ஆத்தீனியர்களின் உத்தேசங்களை நன்கு தெரிந்து கொண்டிருக்கும் என்னிடமிருந்து, அவர்கள் இத்தலியை நோக்கிப் படையெடுத்துச் சென்றதன் நோக்கத்தை நன்கு அறிந்துகொண்டீர்கள். கூடச் சென்ற படைத்தலைவர்கள் இந்த நோக்கத்தை நிறைவேற்ற வல்லவர் களென்பதை நீங்கள் நன்கு உணரவேண்டும். சிஸிலியிலுள்ள ராஜ்யங்களுக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், அவை ஆத்தென்ஸின் ஏகாதிபத்திய ஆசைக்கு இரையாகி விடுமென்பதை இனி உங்களுக்கு எடுத்துக்காட்டுவேன். சிஸிலியர் களுக்கு யுத்த அனுபவம் கிடையாது. என்றாலும் அவர்கள் ஒற்றுமைப் பட்டிருந்தால் அவர்களைக் காப்பாற்றிவிடலாம். ஸைரக்யூஸியர்கள் மட்டும் அப்பொழுது தனித்து நிற்பார்கள். ஏற்கனவே அவர்கள் ஒருமுறை ஆத்தீனியர்களிடம் தோல்வியடைந்திருக்கிறார்கள். கடல் வழியும் அவர்களுக்கு அடைக்கப்பட்டிருக்கிறது. எனவே இப்பொழுது அங்கே தங்கியிருக்கும் ஆத்தீனியப் படைகளை அவர்களால் எதிர்க்க முடியாது. ஸைரக்யூ வீழ்ந்துவிட்டால் சிஸிலி பூராவும் வீழ்ந்துபட்ட மாதிரிதான். உடனே இத்தலி முழுவதும் விழுந்துபடும். பின்னர், நான் சொன்னபடி உங்களுக்கு ஆபத்து உண்டாகும். எனவே, சிஸிலிக்கு மட்டுந்தான் இப்பொழுது ஆபத்து என்று யாரும் கருதிக்கொண்டிருக்க வேண்டாம். நான் சொன்னபடி உடனே நீங்கள் செய்யாவிட்டால் பெலொப்பொனேசியாவுக்கும் ஆபத்துதான். கடலில் கப்பல் செலுத்தவும், தரையில் காலாட்படையினராகச் சேவை செய்யவும். இரண்டும் தெரிந்தவர்களைப் பொறுக்கி யெடுத்து ஸைரக்யூஸுக்கு அனுப்புங்கள். இப்படித் துருப்புகளை அனுப்புவது மட்டும் போதாது. இந்தத் துருப்புகளை ஒழுங்காக நடத்திச் செல்லவும் ஒழுங்குக்குக் கட்டுப்பட மறுக்கிறவர் களைக் கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வரவும், ஒரு ப்பார்ட்ட படைத்தலைவனையும் அனுப்பவேண்டும். அப்படி அனுப்பினால்தான். ஏற்கனவே உங்களுக்கு நண்பர்களாயிருக்கிறவர்கள் உங்களிடத்தில் இன்னும் அதிக நம்பிக்கை கொள்வார்கள்; யார் பக்கம் சேருவதென்று யோசித்துக் கொண்டிருக்கிறவர்கள், உங்கள் பக்கம் சேர்ந்து கொள்வதற்கு உற்சாகம் பெறுவார்கள். இப்படிச் செய்வதோடு இங்கும் நீங்கள், ஆத்தீனியர்களுடன் நடத்தி வருகிற போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும். ஸைரக்யூஸியர் களும், நீங்கள் அவர்களை மறக்கவில்லையென்பது தெரிந்து, ஆத்தீனியர் களை எதிர்த்து நிற்பதற்கு அதிக உறுதி கொள்வார்கள். ஆத்தீனியர்களும் அங்கு-ஸைரக்யூஸுக்கு-அதிக படைகளை உதவிக்கு அனுப்ப முடியாதவர்களாகிவிடுவார்கள். அட்டிக்காவிலுள்ள டீக்கேலியாவை நீங்கள் நன்கு பந்தோபது செய்யவேண்டும்.1 இந்தக் கோட்டை தலம் விழுந்துபடுமோ வென்று தான் ஆத்தீனியர்கள் அஞ்சிக் கொண்டிருக் கிறார்கள். இந்த யுத்தத்தில் அப்படி அஞ்சவேண்டிய அனுபவம் தங்களுக்கு ஏற்படவில்லையென்று அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். சத்துருக்களுக்குத் தீங்கு உண்டுபண்ணவேண்டுமானால், அவர்கள் எது குறித்து அஞ்சுகிறார்களென்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்; அதைக் கொண்டே அவர்களைத் தாக்க வேண்டும். யாருக்குமே தாங்கள் பயப்படவேண்டிய குறைபாடுகள் தங்களிடம் என்னென்ன இருக்கின்றன என்பது நன்கு தெரியும். எனவே, டீக்கேலியாவை பந்தோபது செய் வதனால், உங்களுக்குச் சாதகம் உண்டாகும்; உங்கள் சத்துருக்களுக்கு அநேக சங்கடங்கள் உண்டாகும். அந்தச் சங்கடங்களில் முக்கியமான ஒன்றைப்பற்றி இங்குக் குறிப்பிடுகிறேன். ஆங்காங்குள்ள பிரதேசங்களை நீங்கள் கைப்பற்றிக் கொள்வதன் மூலமாகவோ அல்லது அவையே உங்களுக்குச் சரணடைந்து விடுவதன் மூலமாகவோ, தேசத்திலுள்ள பொருள்கள் பலவும் உங்கள் கைக்கு வந்துவிடும். லாரியம் வெள்ளிச் சுரங்கங்களிலிருந்து2 ஆத்தீனியர் களுக்குக் கிடைத்துக்கொண்டிருந்த வருவாயும் நின்றுவிடும். இன்னும், நிலவரி யென்ன, நீதி தலங்கள் தண்டனையாக விதிக்கும் அபாரதத் தொகைகளென்ன, இவையெல்லாம் குறைந்துவிடும். மற்றும், ஆத்தென்ஸின் ஆதிக்கத்துக்குட்பட்டிருக்கும் காரணத்தால் அதற்குக் கப்பங் கட்டி வந்த ராஜ்யங்களும் அந்தக் கப்பத் தொகையைச் சரிவரச் செலுத்தமாட்டா. இதனால் அந்த வருமானமும் நாளாவட்டத்தில் நின்றுவிடும். நீங்கள் யுத்தத்தைத் தீவிரமாக நடத்த நடத்த, அந்த ராஜ்யங்கள், ஆத்தென்ஸிடம் கொண்டிருந்த பயமும் அகன்று கொண்டு வரும்.3 இவைகளையெல்லாம் நீங்கள் எவ்வளவு உற்சாகத்துடனும் சீக்கிரமாகவும் செய்யப்போகிறீர்களென்பது உங்களைப் பொறுத்தே இருக்கிறது. இவையெல்லாம் நடைபெறக்கூடுமா என்று கேட்டால், நடை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் சொல்வதில் தவறில்லையென்பதையும் பின்னர் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். இதுவரை நான் என் நாட்டை நேசிக்கிறவனாக நடந்து கொண்டு வந்தேன். இப்பொழுது அதனைத் தாக்க, அதன் பரம சத்துருக்களுடன் சேருகிறேன். இதனால் உங்களிலே யாரும் என்னைக் கேவலமாக மதிக்கமாட்டீர்களென்று நினைக்கிறேன். அப்படியே, நாடு துறந்து வந்த ஒருவனுடைய உற்சாக மொழிகளென்று சொல்லி என் வார்த்தைகளில் சந்தேகங்கொள்ளமாட்டீர்களென்று நம்புகிறேன். என்னை யார் நாட்டைவிட்டுத் துரத்திவிட்டார்களோ அவர்களுடைய கொடுமை யினின்று தான் நான் விலக்கப்பட்டவனாயிருக்கிறேனே தவிர, என்னுடைய ஆலோசனையை நீங்கள் கேட்கும் பட்சத்தில், உங்களுக்குச் சேவை செய்வதினின்று விலக்கப்பட்டவனாயில்லை. என்னுடைய பரம வைரிகள் நீங்களல்ல; நீங்கள் உங்களுடைய வைரிகளுக்கு மட்டுந்தான் தீங்கு செய்தீர்கள். யார், தங்களுடைய நண்பர்களையும் பகைவர் களாக்கிவிட்டார்களோ அவர்கள்தான் பரம சத்துருக்கள். நான் ஆத்தென்ஸின் பிரஜையாக சௌக்கியமாயிருந்தவரை அதனை நேசித்து வந்தேன். அந்த நேசம், என்னை அஃது அநியாயமாக நடத்தியதும் முடிந்துவிட்டது. இப்பொழுது நான் என்னுடைய ராஜ்யத்தைத் தாக்கப்போகிறேனென்ற எண்ணமே எனக்கு ஏற்பட வில்லை. எனக்கென்று சொந்தம் கொண்டாடிக் கொள்ளக்கூடிய ராஜ்யம் எதுவும் இப்பொழுதில்லை. என்னுடையதல்லாத ஒன்றை அடையவே நான் இப்பொழுது முயல்கிறேன். எவனொருவன் நாடு துறந்து வெளியே வந்துவிட்டபோதிலும் அதனைத் தாக்கிக் கைப்பற்றிக்கொள்ள முற்படாமல் அதன் கதிக்கே அதனை விட்டுவிடுகிறானோ, அநியாயமாக அதனை இழந்து விடச் சம்மதிக்கிறானோ அவன் உண்மையான தேச பக்தனல்லன்; எந்த முறைகளைக் கையாண்டேனும் அதனைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்று ஆவல் கொள்கிறானே அவன்தான் உண்மையான தேசபக்தன். ஆதலின் லாஸிடீமோனியர்களே! என்னை நன்றாக உபயோகித்துக் கொள்ளுங்கள். என்னால் ஆபத்தோ தொந்தரவோ ஏறபடுமென்று பயப் படாதீர்கள். உங்களுடைய சத்துருவாயிருந்து உங்களுக்கு அதிக தீங்கு செய்தேனென்றால், உங்களுடைய நண்பனாயிருந்து உங்களுக்கு அதிகமான நன்மையை நான் செய்யக்கூடும். உங்களுடைய போர்த் திட்டங்களென்னவென்பதை நான் ஊகமாகத்தான் தெரிந்து கொண்டிருந்தேன்; ஆத்தீனியர்களுடைய போர்த் திட்டங்களையோ நான் நன்கு தெரிந்துகொண்டிருக்கிறேன் மிக முக்கியமான விஷயங்களைப் பற்றியே நீங்கள் இப்பொழுது ஆலோசனை நடத்தி வருகிறீர்கள் என்று நான் சொன்னால் அதை நம்புமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எவ்வித தயக்கமுமில்லாமல் சிஸிலிக்கும் அட்டிக்காவுக்கும் உடனே படைகளை அனுப்புங்கள். உங்களுடைய படைகளில் ஒரு சிறு பகுதியை அங்குக் கொண்டுபோய் வைத்திருப்பீர்களானால், சிஸிலி தீவிலுள்ள முக்கியமான ராஜ்யங்களைக் காப்பாற்றினவர்களா வீர்கள்; ஆத்தென்ஸின் தற்போதைய பலத்தையும் வருங்காலத்தில் அதற்கு ஏதேனும் பலம் ஏற்படக்கூடுமானால் அதனையும் அழித்துவிட்டவர் களா வீர்கள். அதற்குப் பிறகு நீங்கள் பத்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கலாம்; பலாத்காரத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், மற்றவர்களுடைய சம்மதத்தையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்டு கிரீ முழுவதிலும் ஆதிக்கஞ் செலுத்தலாம். ஆல்ஸிபியாடீ கூறிய இந்தத் தகவல்களைக் கேட்டு ப்பார்ட்டர்கள் உற்சாகமும் தைரியமும் கொண்டார்கள். டீக்கேலியாவை பந்தோபது செய்யவும், சிஸிலியர்களுக்கு உடனே உதவிப் படையனுப்பவும் தீர்மானித்தார்கள். ஜில்லிப்ப1 என்பவனை, ஸைரக்யூஸுக்குச் சென்று படைத்தலைமை வகிக்கும்படி அனுப்பினார்கள்.  இருபத்தோராவது அத்தியாயம் யுத்தத்தின் பதினெட்டாவது வருஷம். சிஸிலியில், ஸைரக்யூஸைச் சுற்றி அரண்கள் எழுப்பி, அதற்குக் கடல் தொடர்பு இல்லாதபடி செய்யத் திட்டமிட்டான் ஆத்தீனியப் படைத்தலைவனான நிக்கியா. இதற்கு எதிராக, ஸைரக்யூஸியர்களும் அரண்கள் எழுப்பி, ஆத்தீனியர்கள், தங்கள் நகரத்திற்குள் வராமலிருக்கத் திட்டமிட்டார்கள். இங்ஙனம் இரு தரத்தினரும் பந்தோபது செய்து கொண்டதோடு சில்லரைப் போர்களும் நடத்தினார்கள். இவைகளுக்கிடையில், ப்பார்ட்டாவிலிருந்து ஜில்லிப்பஸும், ஆத்தீனியர்கள் கட்டியிருந்த அரண்களை எப்படியோ கடந்துகொண்டு ஸைரக்யஸுக்கு வந்து சேர்ந்தான். வந்து, ஸைரக்யூஸியர்களைப் பலவிதத்திலும் பலப்படுத்தினான். இன்னும், ஆத்தீனியர்களுக்குத் தெரியாமலே, ஸைரக்யூஸைவிட்டு வெளியே வந்து, சிஸிலி முழுவதும் சுற்றுப்பிரயாணஞ் செய்து படைதிரட்டினான்; தயங்கிக்கொண்டிருந்த ராஜ்யங்களை, ஸைரக்யூஸின் பக்கம் இணைத்தான். ப்பார்ட்டாவுக்கும் கொரிந்த்தியாவுக்கும், புதிய உதவிப்படைகள் அனுப்புமாறு தூது கோஷ்டிகள் சென்றன. இந்த ஏற்பாடுகள் நிக்கியாஸுக்குத் தெரிந்தன. இவனுடைய கஷ்டங்களோ நாளுக்குநாள் அதிகரித்து வந்தன. தன்னுடைய நிலைமை நெருக்கடியா யிருக்கிறதென்றும், உடனே உதவிக்குப் படைகள் அனுப்பவேண்டுமென்றும், அப்படி உதவிக்கு ஒன்றும் அனுப்ப முடியா விட்டால், தன்னைத் திருப்பி வரவழைத்துக் கொள்ளுமாறும், எல்லா வற்றையும் விவரமாகத் தெரிவித்து ஆத்தென்ஸுக்கு ஒரு கடிதம் அனுப்பத் தீர்மானித்தான். இந்த மாதிரி இதற்கு முன்னரும் இவன் சில கடிதங்களை அனுப்பியிருக்கிறான். தற்காலத்தில், போர் முகத்திலிருந்து, படைத்தலைவர்கள், யுத்த நிலவரங்களைப் பற்றி அவ்வப்பொழுது தங்கள் அரசாங்கத்திற்கு யாதாதுகள்1 அனுப்பிக்கொண்டு வருகிறார்களல்லவா, இவை மாதிரி இருந்தன இந்தக் கடிதங்களென்று சொல்லலாம். நிக்கியா, மேற்படிகடிதத்தைத் தயாரித்து, தனது நம்பிக்கைக் குரிய ஆட்கள் வசம் கொடுத்தனுப்பினான். இவர்களும் ஆத்தென் போந்து அரசாங்கத்தினிடம் கடிதத்தைச் சமர்ப்பித்தார்கள். ஜனசபை கூடியது. கடிதமும் படிக்கப்பட்டது. அது வருமாறு:- ஆத்தீனியர்களே! இதற்குமுன் நான் அனுப்பிய கடிதங்களில், முந்திய எனது யுத்த நடவடிக்கைகளைப்பற்றித் தெரிவித்திருக்கிறேன். தற்போதைய நிலைமையைத் தெரிந்து கொண்டு ஒரு முடிவுக்கு வரவேண்டிய அவசியம் இப்பொழுது உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஸைரக்யூஸியர்களுக்கு விரோதமாக நாங்கள் அனுப்பப்பட்டோம். அவர்களுடன் போர்கள் பல நடத்தினோம். பெரும்பாலான போர்களில் அவர்களை வெற்றியும் கண்டோம். ஸைரக்யூஸை வளைத்து அரண் களும் அமைத்துக்கொண்டோம். இவற்றில்தான் இப்பொழுது இருந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் அரண்கள் அமைத்துக் கொண்டிருந்த காலத்தில் லாஸிடீமோனிலிருந்து ஜில்லிப்ப வந்து சேர்ந்தான். பெலொப் பொனேசியாவிலிருந்தும் சிஸிலியிலுள்ள சில ராஜ்யங்களிலிருந்தும் படைகள் திரட்டிக்கொண்டே இவன் வந்தான். முதன்முதலாக இவனுடன் நடத்திய போரில் எங்களுக்கே வெற்றி கிடைத்தது. ஆனால் மறுநாள் இவன், பெரிய குதிரைப்படையுடனும் வேற்படையுடனும் வந்து எங்களைத் தாக்கினான். நாங்கள் எங்கள் இடத்திற்குப் பின்வாங்கிக் கொண்டுவிட வேண்டியதாயிற்று. சத்துருக்கள், எண்ணிக்கையில் அதிக பலம் பெற்றவர்களாயிருப்பதனால், ஸைரக்யூஸை வளைத்து அரண் அமைக்கும் வேலையை நிறுத்திக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத் திற்குட்பட்டிருக்கிறோம்; சும்மாயிருக்க வேண்டியவர்களாகவுமிருக் கிறோம். எங்களிடமுள்ள எல்லாப் படைகளையும் உபயோகித்துக் கொண்டு வரலாமென்றால் அதுவும் முடியவில்லை. ஏனென்றால், நமது காலாட்படையின் பெரும்பகுதி, நமது இடத்தைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. இதற்கிடையில், சத்துருக்கள், எங்களிடத்தைக் கடந்தாற்போல் ஒரு குறுக்குச் சுவர் போட்டுவிட்டார்கள். இதனால் அவர் களைச் சுற்றி அரண் அமைப்பதென்பது அசாத்தியமாகிவிட்டது. பலமான ஒரு படையைக்கொண்டு அதனைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டால்தான் அது சாத்தியம்; அதாவது நம்மால் அரண் அமைத்துக்கொள்ள முடியும். தரைப்பக்கத்தைப் பொறுத்தமட்டில் நாம் அவர்களை முற்றுகையிடுவது போய் நம்மை அவர்கள் முற்றுகையிடுகிற நிலைமைக்கு வந்திருக் கிறோம். அவர்களிடமுள்ள குதிரைப்படை நம்மைத் தடுத்துவிடக் கூடுமாதலால், உள்நாட்டிலும் நாம் அதிக தூரம் செல்லமுடியவில்லை. மற்றும், ஸைரக்யூஸியர்கள், இன்னும் யுத்த தளவாடங்களை உதவுமாறு கோரி பெலொப்பொனேசியாவுக்கு ஒரு தூதுகோஷ்டியை அனுப்பியிருக்கிறார்கள். ஜில்லிப்ப, சிஸிலியிலுள்ள ராஜ்யங்களில் நடுநிலைமை வகிக்கும் ராஜ்யங்களை தன் பக்கம் சேருமாறு தூண்டவும், ஏற்கனவே (ஸைரக்யூஸுடன்) நல்லுறவு பூண்டிருக்கிற ராஜ்யங்களிட மிருந்து காலாட்படைக்கு வேண்டிய ஆட்களையும், கப்பற்படைக்கு வேண்டிய தளவாடங்களையும் சேகரித்துக்கொண்டு வரவும், சிஸிலியில் ஆங்காங்குச் சுற்றுப்பிரயாணஞ் செய்து கொண்டிருக்கிறான். அவர்கள் - ஸைரக்யூஸியர்கள் - தரையிலும் கடலிலும் ஒரே சமயத்தில் தாக்கத் திட்டமிட்டிருக்கிறார்களென்று அறிகிறேன். கடலிலும் நம்மைத் தாக்க அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்களென்பதைக் கேட்டு நீங்கள் திடுக்கிட வேண்டாம். ஆரம்பத்தில் நமது கப்பற்படை நிரம்ப நல்ல நிலைமையில் இருந்தது. கப்பல்கள், கடலில் ஒழுங்காகச் செல்லக்கூடிய தகுதி வாய்ந் தனவாக இருந்தன; மாலுமிகளும் உற்சாகமுடையவர்களாக இருந்தார்கள். இப்பொழுதோ, கப்பல்கள் வெகு காலம் கடலில் இருந்துவிட்டபடியால் கெட்டுப்போயிருக்கின்றன; மாலுமிகளும் மனமுடைந்து போயிருக் கிறார்கள். ஸைரக்யூஸியர்களுக்கு இது நன்கு தெரியும். கப்பல்களைக் கரையிலே கொண்டுவந்து சீர்படுத்திக் கொள்வோமென்றால் அதுவும் சாத்தியமில்லாமலிருக்கிறது. ஏனெனின், சத்துருக்களின் கப்பல்கள், நமது கப்பல்களுக்குச் சமதையான எண்ணிக்கையுடையனவாக, ஏன்? அதிகமான எண்ணிக்கையுடையனவாக இருக்கின்றன. அவைகளால் நாம் எந்த நிமிஷத்திலும் தாக்கப்படுதல் கூடும். அவையென்னவோ அடிக்கடி பயிற்சி செய்து கொண்டுதானிருக்கின்றன. நம்மை வெளியே போகவிடாமல் வழியடைத்துக்கொண்டிருக்கவேண்டிய அவசியம் அவை களுக்கு இல்லை. இதனால், அவர்களுக்குக் கப்பல்களைச் சீர்படுத்திக் கொள்ள அதிக வசதிகள் இருக்கின்றன. நமக்கு அதிகமான கப்பல்கள் இருந்தாலுங்கூட, இப்பொழுது ஸைரக்யூஸியர்களை வெளியே வரவொட்டாமல் வழியடைத்துக் கொண்டிருக்கிறோமே அந்த அவசியத்தினின்று நாம் விடுதலை பெற்றாலுங்கூட, அவர்களைப்போல் கப்பல்களைச் சீர்படுத்த நம்மால் முடியாது. ஏற்கனவே நமக்கு, ஸைரக்யூஸைக் கடந்து சாமான்களைக் கொண்டு போவது கஷ்டமாயிருக்கிறது. இப்பொழுது நாம் செய்து வருகிற கண்காணிப்பைச் சிறிது குறைத்துக்கொண்டால்கூட, சாமான்களைக் கொண்டு போவதென்பது முடியாத காரியமாகவே ஆகிவிடும். நமது கப்பற்படை சிப்பந்திகள் அதிக கஷ்ட நஷ்டங்களையடைந் திருக்கிறார்களென்று சொன்னால், அதற்குக் காரணங்களென்ன வென்பதைக் கீழே கூறுகிறேன். விறகு, ஆகார வகைகள் முதலியவை களெல்லாம் தேடிக்கொண்டுவர கூட்டங் கூட்டமாகச் செல்ல வேண்டி யிருக்கிறது; இன்னும் தண்ணீர் கொண்டுவர வெகுதூரம் போகவேண்டி யிருக்கிறது. அப்படிப் போகிறபோது ஸைரக்யூஸியக் குதிரைப்படை யினர், இடைமறித்து நம்மவரைச் சிதற அடித்துவிடுகின்றனர். நம்முடைய மதிப்புக் குன்றியிருப்பதைக் கண்டு, வேலையாட்கள் நம்மைவிட்டு ஓடிப்போகின்றனர். நம்முடைய சேவையிலிருக்கும் அந்நிய நாட்டு மாலுமிகளோ, நம்மை எதிர்க்க எதிர்பாராதவிதத்தில் ஒரு கப்பற்படை வந்து நிற்பதைக் கண்டும், அந்தக் கப்பற்படையின் எதிர்ப்புச் சக்தியைக் கண்டும் திகைக்கின்றனர். பலவந்தத்தின்பேரில் நம்முடைய சேவையில் சேர்ந்து கொண்டவர்கள், தங்கள் தங்கள் ராஜ்யத்திற்குத் திரும்பிச் செல்ல எப்பொழுது சந்தர்ப்பம் ஏற்படுமென்று எதிர்பார்த்து அப்படியே சென்று விடுகிறார்கள். ஏதோ அற்ப சொற்பமாகச் சண்டைபோட வேண்டி யிருக்கும், ஆனால் நிறையச் சம்பளம் கிடைக்கும், லாபமும் சம்பாதிக்கலாம் என்ற தூண்டுதலின் பேரில் நம்முடைய சேவையில் சேர்ந்தவர்கள், அவை நிறைவேறாமையால், ஒன்று சத்துருக்கள் பக்கம் போய்ச் சேர்ந்துகொண்டு விடுகிறார்கள்; அல்லது சிஸிலி விதீரணமான பிரதேசமாயிருப்பதனால் பல வழிகளிலும் தப்பிச் சென்றுவிடுகிறார்கள். சிலர் வியாபாரஞ் செய்யத் துணிந்துவிடுகிறார்கள். இன்னுஞ்சிலர், தங்களுக்குப்பதில் அடிமைகளை அமர்த்திவிட்டு ஓடிப்போய் விடுகிறார்கள். நமது கப்பற்படையின் திறமை குன்றியதற்கு இவைதான் காரணங்கள். ஒரு கப்பற்படையைச் சேர்ந்தவர்கள் - ஏன்? எந்தப் படையைச் சேர்ந்தவர்களாகட்டும் - திறம்பட உழைக்கக் கூடிய காலம் மிகச் சொற் பந்தான். கப்பலில் திறம்பட்ட வேலைகளையும் செய்யக்கூடியவர் ஒரு சிலரே. நான் சேனாதிபதிதான். ஆயினும் எனக்கேற்பட்டிருக்கிற பெரிய கஷ்டம், இந்தக் கப்பல் சிப்பந்திகளினால்உண்டாகும் தொந்தரவுகளை நிறுத்தமுடியாமலிருப்பதுதான். பொது வாகவே ஆத்தீனியர்களுடைய சுபாவங்களைக் கட்டுப்படுத்தமுடியாது. கப்பல்களில் வேலை செய்ய ஆள் சேர்ப்பது நமக்குக் கஷ்டமாயிருக்கிறது. ஆனால் சத்துருக்களுக்கோ இந்த ஆள் சேர்க்கும் வசதிகள் அதிகமாயிருக்கின்றன. அங்கிருந்து - ஆத்தென்ஸிலிருந்து - அழைத்து வந்த ஆட்களைத்தான் எதற்கும் நாம் நம்பவேண்டியிருக்கிறது. நமது தற்போதைய கூட்டாளிகளான நாக்ஸோ ராஜ்யத்தினரும் கட்டானா ராஜ்யத்தினரும் போதுமான கப்பற் சிப்பந்தி களை உதவ முடியாதவர்களாயிருக்கிறார்கள். நமது சத்துருக்களுக்குக் கிடைக்கவேண்டிய அனுகூலம் இன்னும் ஒன்றுதான் பாக்கியிருக்கிறது. அஃதென்னவென்றால், சிஸிலியிலுள்ள சில ராஜ்யங்கள் நமக்கு உணவுப் பொருள்கள் உதவி வருகின்றன. அவை உதவ மறுத்துவிட்டால் அது சத்துருக்களுக்கு அனுகூலந்தானே? இப்பொழுது நீங்கள், எங்களுக்கு உதவ முன்வராவிட்டால், அப்படி உதவாமல் எங்களை நீங்கள் புறக்கணித்து விட்டீர்களென்பதை அவை - இதுகாறும் படைகளுக்கு உணவுப்பொருள்கள் உதவி வந்த ராஜ்யங்கள் - அறியுமானால், உடனே சத்துருக்கள் பக்கம் சேர்ந்துகொண்டுவிடும். பஞ்சமானது நம்மை ஆட்கொள்ள நாம் சிஸிலியைவிட்டுக் காலி செய்துவிட வேண்டிவரும். ஸைரக்யூ, ஓர் அடியும் பட்டுக் கொள்ளாமல் யுத்தத்தை தனக்குச் சாதகமாக முடித்துக் கொண்டுவிடும். உங்களுக்குச் சந்தோஷத்தைத் தரத்தக்கவிதமாக இந்தக் கடிதத்தை நான் எழுதியிருக்கக் கூடும். ஆனால் அதனால் என்ன பிரயோஜனம்? நீங்கள் தக்க நடவடிக்கைகள் எடுத்துக்கொள்வதற்கு முன்பு, இங்குள்ள நிலைமையைச் சரிவரத் தெரிந்துகொள்வது அவசியமாகும். சாதகமான, சந்தோஷத்தை உண்டுபண்ணத்தக்க அமிசங்களைமட்டும் கேட்க விரும்புவதும், நீங்கள் எதிர்பார்க்கிறபடி காரியங்கள் நடைபெறாவிட்டால் மற்றவர்கள்மீது குற்றங் காண்பதும் உங்கள் சுபாவமென்பது எனக்குத் தெரியும். இதனால்தான், உள்ள நிலைமையை உங்களுக்கு உரைத்து விடுவது நல்லதென்று நான் எண்ணினேன். உங்களுடைய படைத்தலைவர்களோ, படைவீரர்களோ, யாரை எதிர்க்க அனுப்பப்பட்டார்களோ அவர்களுக்குச் சமதையான பலமுள்ளவர்களல்லவென்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. நமக்கு விரோதமாக, சிஸிலியர்களனைவரும் அடங்கிய ஒரு கூட்டு அமைக்கப் பட்டு வருகிறதென்பதை நீங்கள் சிறிது சிந்தித்துப் பார்க்கவேண்டும். பெலொப்பொனேசியாவிலிருந்து ஒரு புதிய படை எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொழுது நம்மிடமுள்ள படையைக்கொண்டே நமது தற்போதைய சத்துருக்களைச் சமாளிக்க முடியாதவர்களாயிருக்கிறோம். ஆதலின் ஒன்று, எங்களை உடனே திருப்பி வரவழைத்துக் கொள்ளவேண்டும்; அல்லது, கப்பற்படையையும் காலாட்படையையும் சேர்ந்த ஒரு பெரும் படையை உடனே அனுப்பவேண்டும்; கூட, அதிகமான ஒரு தொகையையும் அனுப்பவேண்டும். மற்றும், எனக்குப் பதிலாக வேறொரு படைத்தலைவனையும் அனுப்பவேண்டும். ஏனென்றால் என்னுடைய பதவியைத் திறம்பட வகிக்க முடியாதபடி ஒரு நோய் என்னைத் தொந்தரவுக்குட்படுத்தி வருகிறது. என் விஷயத்தில் இரக்கம் காட்டவேண்டுமென்று உரிமையோடு உங்களைக் கேட்கலா மென்றே நினைக்கிறேன். நான் நல்ல தேகத்துடனிருந்தபொழுது, எனது சக்திக்கியன்ற அளவு உங்களுக்கு, அதாவது ஆத்தென் ராஜ்யத்திற்கு நல்ல சேவை செய்திருக்கிறேன். நீங்கள் என்ன செய்யவேண்டுமென்ற உத்தேசித்திருக்கிறீர்களோ அதை வசந்த காலம் தொடங்குவதற்கு முந்தி, தாமதமில்லாமல் செய்யுங்கள். ஏனென்றால், சத்துருக்களுக்கு, சிஸிலியின் பல பாகங்களி லிருந்தும் சீக்கிரத்தில் உதவி கிடைக்கக்கூடிய தாயிருக்கிறது. பெலொப்பொனேசியாவிலிருந்து சிறிது தாமதித்துத்தான் உதவி கிடைக்கு மென்று தெரிகிறது. உடனடியாக நீங்கள் உதவி அனுப்பும் விஷயத்தைக் கவனிக்காவிட்டால், உங்கள் உதவி வருமுன்பு, சிஸிலியர்கள் ஒன்று சேர்ந்துகொண்டு எங்களை எதிர்ப்பார்கள். பெலொப்பொனேசியர்களும் உங்களுக்குத் தெரியாமல் இங்கு வந்து ஸைரக்யூஸியர்களுக்கு உதவி செய்வார்கள். இந்தக் கடிதத்திற்கிணங்க, ஜனசபையானது, நிக்கியாஸுக்கு உதவிப் படைத்தலைவர்களாயிருக்க, ஏற்கனவே சிஸிலிக்குச் சென்று அனுபவம் பெற்றிருந்த யூரிமெடோன் என்பவனையும், பைலோஸில் வெற்றி கண்ட டெமாத்தனீ என்பவனையும் அனுப்பத் தீர்மானித்தது. மற்றும், நிக்கியா கேட்டபடி கப்பற்படை, காலாட்படை, பணம் எல்லாம் அனுப்பியது. ஆனால் நிக்கியாதான் பிரதம படைத்தலைவனா யிருக்க வேண்டுமென்று தீர்மானித்தது. உதவிப்படைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் யூரிமெடொன், உடனே அனுப்பப்பட்டான். டெமாத்தனீ இன்னும் சிறிது படை சேகரித்துக்கொண்டு சிறிது காலங் கழித்துப் புறப்பட்டான்.  இருபத்திரண்டாவது அத்தியாயம் யுத்தத்தின் பத்தொன்பதாவது வருஷம். ஜில்லிப்பஸின் திறமை யான தலைமையில், ஸைரக்யூ, தனது கப்பற்படையைப் பலப்படுத்திக் கொண்டது. ஹெர்மோக்கிராட்டீஸும் இதற்கு உதவியாயிருந்தான். இந்தக் கப்பற்படையைக் கொண்டு, ஆத்தீனியர்களை, அவர்கள் தங்கி யிருந்த இடத்தை விட்டு வெளியே வராதபடி செய்துவிட்டது ஸைரக்யூ. இந்தச் சமயத்தில், யூரிமெடோன், டெமாத்தனீ இவர்களுடைய தலைமையில், எழுபத்து மூன்று கப்பல்களும், பொறுக்கியெடுத்தாற் போல் ஐயாயிரம் காலாட்படையினரும், சில்லரைப்படையினராகப் பலரும் வந்து சேர்ந்தனர். இவர்கள் வந்து சேர்வதற்கு முன்னேயே நிக்கியா படையைத் தாக்கி நாசமாக்கிவிட வேண்டுமென்று ஸைரக்யூ படைத்தலைவர்கள் திட்டமிட்டார்கள்; அப்படியே தரையிலும் கடலிலுமாகத் தாக்கினார்கள்; வெற்றியும் கண்டார்கள். வெற்றி கண்ட மறுநாள், ஆத்தீனியப் படையினர், நிக்கியாஸின் முகாமை அடைந்தனர். அடைந்து, டெமாத்தனீ யோசனைப்படி, ஸைரக்யூஸியர்கள் கட்டியிருந்த அரணைத் தாக்கினர். இறுதியில் தோல்வியே கண்டனர். இந்தத் தோல்வியின் விளைவாக இரண்டாயிரம் ஆத்தீனியர்கள் உயிரிழந்தார்கள். பார்த்தான் டெமாத்தனீ; இருந்த இடத்திலிருந்து பின்வாங்கிக்கொண்டு விடுதல்தான் உசிதமென்று தீர்மானித்தான். ஆனால் நிக்கியா இதற்குச் சம்மதப்படவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில், ஜில்லிப்ப ஒரு பெரும்படையுடன் வந்து ஆத்தீனிய முகாமை நெருக்கினான். வேறுவழியின்றி, பின்வாங்கிச் செல்ல, நிக்கியா இணங்கினான். ஆனால் புறப்படவேண்டிய தினத்தன்று சந்திரகிரகணம். கிரகணத்தன்று எந்த ஒரு காரியத்தையும் தொடங்கமாட்டார்கள் கிரேக்கர்கள். ஆத்தீனியப் படை முகாமைவிட்டு வெளிக் கிளம்பவில்லை யென்று ஸைரக்யூஸியர்களுக்குத் தெரிந்தது. வெளிக்கிளம்ப வொட்டாமல் வழியடைத்துவிடவேண்டுமென்றும், அதன் மூலமாக ஆத்தீனியப்படை பூராவையும் பணியச் செய்து விட வேண்டுமென்றும் நிச்சயித்தனர். இதற்கிடையில், தரை வழியாகவும் கடல் வழியாகவும் ஆத்தீனியப் படையைத் தாக்கித் தோல்வியுறச் செய்தனர். யூரிமெடோன் கொல்லப்பட்டான். ஆத்தீனியப் படையின் உற்சாகம் மிகவும் குன்றியது. ஸைரக்யூஸியர்களோ, ஏற்கனவே நிச்சயித்தபடி, ஆத்தீனியப் படை வெளியேறவொட்டாதபடி வழியடைத்துவிட்டனர். துறைமுகம், அதன் உட்பகுதியில், அதாவது தரைப்பக்கம் ஆத்தீனியப்படை; வெளிப்பகுதியில், அதாவது கடலுக்குச் செல்கிற பக்கத்தில், ஸைரக்யூஸியர்கள், கப்பல்களை ஒன்றுக்கொன்று இடைவெளிவிடாமல் நெருக்கமாகக் கொண்டுவந்து நிறுத்திவிட்டனர்; ஏறக்குறைய கப்பல் களால் சுவர் போட்டமாதிரி செய்துவிட்டனர். ஆத்தீனியப் படையோ, சுற்றி வளைத்து முற்றுகையிடப்பட்ட மாதிரியாகிவிட்டது. அதனிடமிருந்த உணவுப் பொருள்களும் மிகவும் குறைந்துவிட்டன. ஸைரக்யூஸியர் களுக்கு அப்படியே சரணடைந்து விடுவது; அல்லது அவர்கள் நிறுத்தி வைத்திருந்த கப்பல் சுவரை உடைத்துக் கொண்டு கடற் பக்கம் சென்று விடுவது; இப்படி இரண்டு வழிகள் தானிருந்தன. சரணடைவதைக் காட்டிலும், போராடி, ஸைரக்யூஸியக் கப்பற்சுவரை உடைத்துக்கொண்டு வெளியே செல்வதென்று தீர்மானிக்கப்பட்டது. துறைமுகத்திற்குள்ளே ஆத்தீனியக் கப்பற்படை நிற்கிறது. வெளியே ஸைரக்யூஸியக் கப்பற்படை. இது தவிர, ஸைரக்யூஸியர்கள், தரைப் பக்கத்திலும் தங்கள் தரைப்படையை நிறுத்தி வைத்திருந்தனர். ஆத்தீனியப் படை, தரைப் பக்கமாகத் தப்பிச் சென்றுவிடக் கூடாதென்பது இவர்கள் நோக்கம். யுத்தம் துவங்கவேண்டியதுதான். துவங்குவதற்கு முந்தி, நிக்கியா, படையினரின் சோர்வைப் போக்கி உற்சாகப்படுத்துகின்ற முறையில் பின்வருமாறு பேசினான்:- ஆத்தென்ஸினுடையவும் அதன் நேச ராஜ்யங்களினுடையவும் போர் வீரர்களே! இப்பொழுது நடைபெறவிருக்கிற யுத்தத்தில் நம்மெல் லோருக்கும் ஒரே மாதிரியான சிரத்தை இருக்கிறது. நம்முடைய உயிருக் காகவும் நம்முடைய நாட்டுக்காகவுமே இந்த யுத்தம் நடைபெறுகிறது. இதுபோலவே நம்முடைய சத்துருக்களும், தங்களுடைய உயிருக்காகவும் நாட்டுக்காகவுமே போராடுகிறார்கள். இந்தப் போரில் நமது கப்பற்படை வெற்றி கொண்டால்தான், நம்மிலே ஒவ்வொருவரும் நம்முடைய தாய் நாட்டை - அந்தத் தாய்நாடு எவ்வளவு தொலைதூரத்திலிருந்த போதிலுஞ்சரி - திரும்பிச் சென்று பார்க்கலாம். ஆதலின் நீங்கள் மனச் சோர்வு கொள்ளக்கூடாது. புதிதாக ராணுவத்தில் சேர்ந்த ஒரு போர் வீரன், முதன்முதலாக ஈடுபடும் யுத்தத்தில் தோல்வியடைந்து விடுவானாகில், அதற்குப் பிறகு நடைபெறும் யுத்தங்களில் தனக்குத் தோல்வி ஏற்படுமோ என்று எண்ணும் கோழையாகிவிடுகிறான். அவனைப்போல நீங்கள் நடந்துகொள்ளக்கூடாது. சிறப்பாக, ஆத்தீனியர்களே! அநேக போர்களில் நீங்கள் சண்டை செய்திருக்கிறீர்கள். நேச ராஜ்யங்களின் படை வீரர்களே! எங்களோடு சேர்ந்து நீங்களும் பலதடவை ஆயுதமெடுத்திருக்கிறீர்கள். யுத்தத்தில் ஆச்சரியங்கள் பலவற்றைக் காண்டல் சகஜம். இதனை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அதிருஷ்டமென்பது எப்பொழுதும் நமக்கு விரோதமாயிருந்து கொண்டிராதென்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் காண்கிற இந்தப் பெருஞ்சேனையின் பெருமைக்கேற்ப, போர் புரியத் தயாராகுங்கள். நமது கப்பல்களை நடத்தும் மாலுமிகளுடன் கலந்தாலோசித்து, இந்தக் குறுகிய துறைமுகத்தில் நம்மை எதிர்க்கக் கூட்டமாகக் கூடி யிருக்கும் கப்பல்களுக்கு விரோதமாகவும், அந்தக் கப்பல்களிலுள்ள போர் வீரர்களுக்கு விரோதமாகவும் தக்க நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். விற்படையினரையும் வேற்படையினரையும் நமது கப்பல்களில் அதிகம் பேராக ஏற்றிக்கொண்டிருக்கிறோம். கடற்போராக மட்டும் இருந்தால் இத்தனை பேரை ஏற்றிக்கொண்டிருக்க மாட்டோம். ஏனென்றால் இவ்வளவு பளுவைத் தாங்கிக்கொண்டு கப்பல்கள் நகர முடியாது. ஆனால் இப்பொழுதோ கடலில் தரைப்போர் நடத்த வேண்டியவர் களாயிருக்கிறோம்.1 இதனால் அதிகம் பேரைக் கப்பல்களில் ஏற்றிக் கொண்டிருக்கிறோம். மற்றும், நமது சத்துருக்கள், கப்பல்களில் என்னென்ன மாற்றங்கள் செய்து ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறார்களோ அதே மாதிரி நாமும் மாற்றங்கள் செய்து ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறோம். கப்பல் தளங்களிலுள்ள நமது படை வீரர்கள், தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்தால் போதும். கடலிலிருந்துகொண்டு தரைப்போர் நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. ஆதலின், நாம் பின்னடைதல் கூடாது; சத்துருக்களையும் பின்னடையச் செய்யக்கூடாது; அதாவது, அவர்களை நமது பிடியில் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பிச் செல்லுமாறு விடக்கூடாது. நாம் பின்னடைவதாயிருந்தால், கரைப்பக்கந் தான் செல்லவேண்டும். கரைப் பக்கமோ, பெரும்பகுதி சத்துருக்கள் வசமிருக்கிறது. இதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு உங்களால் முடிந்தவரை சண்டை போடுங்கள். சத்துருக்கள், உங்களைக் கரைப்பக்கம் துரத்தி விடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். சத்துருக் கப்பல்களின் தளங்கள் மீதுள்ள படைஞரை நாசமாக்கி விடுகிற வரையில், உங்கள் கப்பல்கள், ஒன்றைவிட்டு மற்றொன்று பிரிந்துபோகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். சிறப்பாக, காலாட்படையினரைப் பார்த்துத்தான் இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன். ஏனென்றால், கப்பல் தளங்கள்மீதுள்ள காலாட்படையினர் தான், கப்பல்களைப் பிரியவிடாதபடி பார்த்துக்கொள்ளவேண்டியவர்களா யிருக்கிறார்கள். நமது காலாட்படையினர், மிகப் பலமுள்ள படை யினராயிருப்பது நமக்குத் திருப்தி தருவதாயிருக்கிறது. கப்பல்களை நடத்திச்செல்லும் மாலுமிகளைப் பார்த்துச் சொல்லு கிறேன், இதுவரையில் உங்களுக்கேற்பட்டிருக்கிற துரதிருஷ்டங்களைக் கண்டு மனச்சோர்வு கொள்ளாதீர்களென்று. இப்பொழுது நம்மிடம் அதிக கப்பல்கள் இருக்கின்றன. நமது கப்பல் தளங்களும் அதிக ஆயுதபல முடையனவா யிருக்கின்றன. ஆதலின் மனச்சோர்வு கொள்ளவேண்டா மென்று உங்களை மறுபடியும் கேட்டுக்கொள்கிறேன். போர் வீரர்களே! உங்களிலேயுள்ள ஆத்தீனியர்களல்லாதாரும் ஆத்தீனியர்களாக இதுவரை கௌரவிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். இந்தக் கௌரவம் எவ்வளவு சந்தோஷத்தையும் பெருமையையும் தருகிறதென்று நினைத்துப் பாருங்கள். அந்தச் சந்தோஷமும் பெருமையும் நம்மிடமே இருக்குமாறு செய்துகொள்வது அவசியம். கிரீ முழுவதிலும் நீங்கள் கௌரவிக்கப்படுகிறீர்கள். ஏன்? எங்களுடைய - ஆத்தீனியர்களுடைய - பாஷையைப் பேசுவதனால்; எங்களுடைய பழக்கவழக்கங்களை அனு சரிப்பதனால். ஓர் ஏகாதிபத்தியத்தினாலுண்டாகிற சாதகங்களில், எங்களோடு சேர்ந்து நீங்களும் பங்குகொண்டிருக்கிறீர்கள். அதுமட்டு மல்ல; அந்த ஏகாதிபத்தியத்தின் பிரஜைகளென்ற முறையில் அதிக மதிப்பையும் பெற்றிருக்கிறீர்கள்; கொடுமையிழைக்கப்படுவதினின்று காப்பாற்றப்பட்டு வந்திருக்கிறீர்கள். நீங்கள் மட்டுந்தான், சுதத்திர மாயிருந்துகொண்டு ஏகாதிபத்தியத்திலும் பங்கு கொண்டிருக்கிறீர்கள். அந்த ஏகாதிபத்தியம் மிகவும் ஆபத்திலிருக்கிற இப்பொழுது அதனைக் கைவிட்டுவிடக்கூடாதென்று உங்களைக் கேட்டால் அது நியாயமே யாகும். உங்களை இப்பொழுது எதிர்த்து நிற்கும் கொரிந்த்தியர்களை நீங்கள் பல தடவை வென்றிருக்கிறீர்கள். அவர்களைத் துச்சமாகக் கருதுங்கள். சிஸிலியர்களும் எதிரே நிற்கிறார்கள். அவர்களில் யாரும், நமது கப்பற்படை நல்ல பருவத்திலிருந்த காலத்தில், அதாவது திறம்பட்ட நிலைமையிலிருந்தபொழுது அதனை எதிர்த்து நிற்பதற்குச் சக்தியற்ற வர்களாயிருந்தார்கள். அப்படிப்பட்டவர்களை யெல்லாம் நீங்கள் பின்னடையச் செய்துவிடவேண்டும். நீங்கள் எவ்வளவு நோயாயிருந்த போதிலும், எவ்வளவு ஆபத்திலிருந்த போதிலும், எந்த ஒரு சத்துருவும் - அந்தச் சத்துரு, அதிருஷ்டசாலியா யிருந்தாலென்ன, திறமைசாலி யாயிருந்தாலென்ன - உங்களை எதிர்த்து நிற்கமுடியா தென்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். உங்களிலே ஆத்தீனியர்களா யிருக்கப்பட்டவர்களுக்கு மறுபடியும் விண்ணப்பித்துக் கொள்கிறேன். இங்கிருக்கப்பட்ட கப்பல்களைக் காட்டிலும் அதிகமான கப்பல்கள் நமது தாய்நாட்டுத் துறைமுகங்களில் இல்லையென்பதையும், யுத்த சேவைக்குத் தகுதியான ஆட்கள் இங்குள்ளவர்களைக் காட்டிலும் வேறு இல்லையென்பதையும் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இந்தப் போரில் நமக்குத் தோல்வி கிட்டுமானால், சத்துருக்கள், உடனே ஆத்தென் மீது படை கொண்டுசெல்வார்கள். அங்குள்ள நம்மவரோ, இப்பொழுதுள்ள சத்துருக் களோடு - பெலொப்பொனேசியர்களோடு - இந்தப் புதிய சத்துருக்களும் சேர்ந்துகொண்டுவிட்டால், இவர்களை எதிர்த்து நிற்கமுடியாதவர் களாகிவிடுவார்கள். இங்குள்ள நீங்கள், ஸைரக்யூஸியர்களின் கையில் அகப்பட்டுக் கொண்டுவிடுவீர்கள். தாய்நாட்டிலுள்ள உங்கள் சகோதரர்கள், லாஸிடீமோனியர்களின் கையில் அகப்பட்டுக் கொண்டுவிடுவார்கள். அவர்களுடைய தலைவிதியும் நம்முடைய தலைவிதியும் இந்த ஒரு யுத்தத்தில்தான் தொங்கி நிற்கிறது. ஆதலின் உறுதியாக நில்லுங்கள். கப்பல்கள் மீதிருக்கும் நீங்கள்தான் ஆத்தென்ஸின் கடற்படை யினருமாவீர்கள்; தரைப்படையினருமாவீர்கள். நீங்கள்தான், நமது தாய்நாட்டின் காப்பாளர்களாகவும், ஆத்தென்ஸினுடைய நற்பெயரின் காப்பாளர்களாகவும் இருக்கிறீர்கள். இவை உங்கள் நினைவிலிருக் கட்டும். இங்குள்ளவர்களில் யாராவது, தங்களிடத்தில்தான் போர்த் திறமையும் துணிச்சலும் தங்கி நிற்கின்றனவென்று எண்ணிக்கொண்டிருப் பார்களானால், அவர்கள், அந்தத் திறமையையும் துணிச்சலையும் காட்ட, தாய்நாட்டின் பாதுகாப்பை முன்னிட்டுக்காட்ட இதுதான் சமயம். அப்படிக் காட்டுவார்களானால், தங்களைக் காப்பாற்றிக் கொண்டவர்களாவார்கள்; நம்மெல்லோரையும் காப்பாற்றினவர்களாவார்கள். நிக்கியாஸின் இந்த உற்சாகமொழிகளைக் கேட்டு ஆத்தீனியப் படையினர் யுத்த சந்நத்தரானார்கள். பார்த்தான் எதிர்ப்பக்கத்திலிருந்த ஜில்லிப்ப1 இதனை; தன் படையினரையும் தயார்ப்படுத்தினான். அவர்களை நோக்கிப் பின்வருமாறு பேசினான்:- ஸைரக்யூஸியர்களே! நேச ராஜ்யத்தினர்களே! நாம் இதுவரை சாதித்திருக்கிற புகழ் நிறைந்த அரிய காரியங்களென்ன, நடைபெற விருக்கிற இந்த யுத்தத்தினால் ஏற்படக் கூடிய புகழ் நிறைந்த விளைவு களென்ன, இவைகளனைத்தையும், உங்களிற் பெரும்பாலோர் அறிந்திருக்கின்றனரென்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் இவ்வளவு உற்சாகத்துடன் இந்தப் போரில் இறங்கியிருக்க மாட்டீர்கள். அப்படி யாரேனும் அறிந்துகொண்டிராவிட்டால் - ஒவ்வொருவரும் அறிந்து கொண்டேயிருக்கவேண்டும் - அவர்கள் அறியும்படி சில வார்த்தைகள் கூறுகிறேன். ஆத்தீனியர்கள், சிஸிலியை வெற்றிகொள்ளவே முதலில் இந்த நாட்டுக்கு வந்தார்கள். வெற்றிகொண்ட பிறகு பெலொப்பொனேசி யாவையும், அதற்குப் பிறகு கிரீ முழுவதையும் வெற்றிகொள்ள வேண்டு மென்பதே அவர்கள் உத்தேசம். முற்காலத்திலாகட்டும், தற்காலத்திலா கட்டும் கிரீ கண்டிராத ஒரு பெரிய ஏகாதிபத்தியத்தை ஏற்கனவே அவர்கள் கட்டியாண்டு வருகிறார்கள். அவர்கள் எல்லா இடங்களிலும் ஆதிக்கம் பெற உதவி செய்தது அவர்களுடைய கடற்படைதான். ஆனால் அவர் களுடைய கடற்படையை எதிர்த்து நிற்கக்கூடியவர்களை முதன்முதலாக இங்குத்தான் அவர்கள் கண்டார்கள். இதற்கு முந்தி நடைபெற்ற கடற் போர்களில் நீங்கள் அவர்களைத் தோல்வியுறச் செய்திருக்கிறீர்கள்; இப்பொழுதும் அப்படித்தான் அநேகமாகத் தோல்வியுறச் செய்வீர்கள். குறிப்பிட்ட ஒரு துறையில் தாங்கள் மிகவும் மேம்பாடுற்றிருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறவர்கள், அந்தத் துறையில் ஒரு தடவை தடை செய்யப்படுவார்களாயின், உடனே தங்களைப்பற்றிக் குறைவான அபிப்பிராயங்கொண்டு விடுகிறார்கள்; அதாவது, தங்கள் மேம்பாடுற் றிருப்பதாகக் கருதிக்கொண்டிருக்கிறபொழுது தங்களைப்பற்றி என்ன அபிப்பிராயங்கொண்டிருந்தார்களோ அதைக்காட்டிலும் குறைவான அபிப்பிராயங்கொண்டு விடுகிறார்கள். அவர்கள் கொண்டிருந்த பெருமையில் எதிர்பாராதவிதமாக ஓர் அதிர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. இதனால் அவர்களிடத்தில் நிஜமாக இருந்த பலமும் குன்றிப்போய் விடுகிறது. ஆத்தீனியர்கள் தற்போது இந்த நிலைமையில்தானிருக் கிறார்கள். நம்முடைய நிலைமை வேறு. கடலில் கலஞ்செலுத்துவதில் நாம் திறமையற்றவர்களா யிருந்தபொழுது நம்மைப் பற்றி நாம் ஒருவித மதிப்புக்கொண்டிருந்தோம். அந்த மதிப்பினால் நமக்கு ஓரளவு தைரியம் ஏற்பட்டிருந்தது. அந்தத் தைரியம் இப்பொழுது அதிகப்பட்டிருக்கிறது. ஏனென்றால், கடலில் கலஞ் செலுத்துவதில் திறமைசாலிகளென்று பெயர் படைத்தவர்களை நாம் வென்றுவிட்டிருக்கிறோம். அதனால், நாம்தான் தற்காலத்தில் தலைசிறந்த மாலுமிகளாயிருக்கிறோமென்ற உறுதியான எண்ணங்கொண்டவர்களா யிருக்கிறோம். இந்த உறுதியான எண்ணம், நமது தன்னம்பிக்கையை இரட்டிப்பு மடங்காக்கியிருக்கிறது. எந்த இடத்தில் அதிகமான தன்னம்பிக்கை இருக்கிறதோ அந்த இடத்தில்தான் செயலாற்றுவதற்கான ஊக்கமும் அதிகப்பட்டிருக்கிறது. சத்துருக்கள், நம்முடைய மாதிரியைப் பின்பற்றிக் கப்பல்களில் தளவாடங்களை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள்; இப்படி அமைத்துக் கொண்டு நம்மை வெற்றி கொண்டுவிடப் பார்க்கிறார்கள். அது முடியாத காரியம். இந்த முறைகளை யெல்லாம் நாம் நன்கு அறிவோம். இவை களுக்குத் தக்கபடி எதிர்கொடுப்போம். கப்பல் தளங்களில் அதிகம் பேராகக் காலாட்படையினரையும் நிறுத்திவைத்து அவர்களுக்குப் பழக்கமில்லை. இட நெருக்கத்தினால், இந்தப் படையினர், தங்கள் ஆயுதங்களைத் தாராள மாக உபயோகிக்க முடியாது. இவர்கள் அங்குமிங்கும் போவதனால் கப்பல்கள் ஆட்டங்கொடுக்கும். இதனால் இவர்கள் கலவரமடைந்து போவார்கள். சத்துருக்கள் பக்கம் அதிக கப்பல்கள் இருப்பதைக் கண்டு யாரும் திகிலடையவேண்டாம். குறுகிய இடத்தில் நெருங்கியிருந்து சண்டை செய்ய வேண்டியிருப்பதால், அவை, வேகமாக அங்குமிங்கும் செல்ல முடியாது. இதனால் நம்முடைய தாக்குதல்களுக்கு எளிதிலே இரையாகி விடும். உண்மையென்று நான் ஆதார பூர்வமாக நம்புகின்றவைகளை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். சத்துருக்கள், அதிக துன்பத்தை அனுபவித்திருக்கிறார்கள்; மற்றும் தர்ம சங்கடமான நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்புற்றிருக்கிறார்கள். தங்களுடைய படை பலத்தில் அவர்களுக்கு நம்பிக்கை குன்றிவிட்டது. இதைக்காட்டிலும் கேவலமான நிலைமைக்கு அவர்களால் வரமுடியாது. இந்த நிலைமையிலிருந்து மீளவேண்டு மானால், அவர்கள், ஒன்று, நம்மைப்பிளந்துகொண்டு கடல் பக்கம் சென்று விடவேண்டும்; அல்லது தரை வழியாகப் பின்வாங்கிக் கொண்டுவிட வேண்டும். இந்த இரண்டு வழிகளில் ஏதோ ஒன்றில்தான் தங்கள் அதிருஷ்டத்தை அவர்கள் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். நமது பரம விரோதிகளான ஆத்தீனியர்கள் இவ்வளவு ஒழுங்கீன மான நிலைமையில் இருக்கிறார்கள். அவர்களுடைய அதிருஷ்டம் அவர்களைக் கைவிட்டுவிட்டு நம்மிடம் சரணாகதியடைந்துவிட்டது. அவர்களைக் கடுமையாகத் தாக்குவோம். சத்துருக்களைத் தாக்கித் தண்டித்து அவர்கள் மீதுள்ள கோபத்தைத் தீர்த்துக் கொள்வது நியாயமே யாம். சத்துருக்களைப் பழிவாங்குவதைக் காட்டிலும் இனிமையானது வேறொன்றுமில்லை, யென்று ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழிக் கேற்ப ஆத்தீனியர்களை இப்பொழுது நாம் பழிவாங்கவேண்டும். ஆத்தீனியர்கள் நமது விரோதிகள்; பரம விரோதிகள். உங்களெல்லோருக்கும் இது தெரியும். அவர்கள், நம்முடைய நாட்டை அடிமைகொள்ளவே இங்கு வந்திருக்கிறார்கள். அதில் வெற்றி பெற்று விட்டால், நாட்டிலுள்ள ஆண்மக்களையெல்லாம் இல்லாதபொல்லாத இம்சைகளுக்குட்படுத்துவார்கள்; பெண்மக்களையும் குழந்தைகளையும் பலவித அவமானங்களுக்குட்படுத்துவார்கள்; நமது ராஜ்யம் பூராவையும் கேவலமான அவமதிப்புக்காளாக்குவார்கள். ஆதலின் யாரும், அவர்கள் விஷயத்தில் மனவிரக்கங்கொள்ள வேண்டாம்; நம்மை மேலும் ஆபத்திற்குட்படுத்தாமல் திரும்பிப்போய்விடுவார்களாயின் நமக்கு லாபம் என்றும் கருதவேண்டாம். அவர்கள் நம்மீது வெற்றி கொண்டாலும் நம்மை ஆபத்திற்குட்படுத்த முடியாது. அவர்கள்மீது நாம் வெற்றி கொண்டால் - வெற்றியை நிச்சயம் நாம் எதிர்பார்க்கலாம் - வெற்றி கொண்டு அவர் களைத்தண்டித்தால், சிஸிலி பூராவுக்கும் அதன் பழமையான சுதந்திரத்தைப் பலப்படுத்தியும் உறுதிப்படுத்தியும் கொடுத்துப் போனவர் களாவோம். அப்படிச் செய்து முடித்தால், அதைக்காட்டிலும் பெரிய வெற்றி நமக்குக் கிட்ட முடியாது. தோல்வியில் குறைந்த நஷ்டத்தையும் வெற்றியில் அதிக சாதகத்தையும் விளைவிக்கக்கூடிய ஆபத்துக்கள் ஒரு சிலவே. இந்த ஒரு சில ஆபத்துக்களை மனிதர்கள் ஏகதேசமாகத்தான் சந்திக்கிறார்கள். இத்தகைய ஆபத்தை இப்பொழுது நீங்கள் சந்திக்கப்போகிறீர்களென்பது உங்கள் நினைவிலிருக்கட்டும். ஜில்லிப்பஸின் இந்தப் பேச்சுக்குப் பிறகு, யுத்தத் தயாரிப்பிலிருந்த இருதரப்புப் படைகளும் மோதிக்கொண்டன. ஸைரக்யூஸியர்கள் அமைத்திருந்த கப்பற்சுவரைத் தகர்த்துக்கொண்டு கடற்பக்கம் செல்ல முடியாதவர்களானார்கள் ஆத்தீனியர்கள். இனி வேறு வழியில்லை. தரைப்பக்கம் பார்க்கவேண்டியதுதான். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்கள். இது விஷயம் ஸைரக்யூஸியர்களுக்குத் தெரிந்தது. ஆத்தீனியர்கள், எந்தெந்த வழிகளில் திரும்பிச் செல்லக்கூடுமோ அந்த வழிகளை யெல்லாம் தங்கள் படைகளைகொண்டுவந்து நிறுத்தி அடைத்து விட்டார்கள். கப்பற்போர் நடைபெற்ற இரண்டாவது நாள், ஆத்தீனியர்கள், தரைப்பக்கமாகப் பின்வாங்கத் தொடங்கினார்கள். அது மிகவும் கோரமான காட்சியாயிருந்தது. கப்பல்களை யெல்லாம் இழந்துவிட்டார்கள்; என்னென்னவோ நம்பிக்கைகளெல்லாம் வைத்திருந்தார்களே அவை களையும் இழந்துவிட்டார்கள். தங்களுக்குமட்டுமல்ல, தங்கள் ஆத்தென் ராஜ்யத்திற்கும் பெரிய ஆபத்து ஏற்படவிருப்பதாக உணர்ந்தார்கள். இந்த மனநிலைமையில் சுற்றுமுற்றும் என்ன கண்டார்கள்? இறந்து போனவர்கள் அடக்கம் செய்யப்படாமல் ஒரு பக்கம் கிடக்கிறார்கள்; காயம் பட்டவர்களும் நோய் வாய்ப்பட்டவர்களும் கவனிக்கப்படாமல் மற்றொரு பக்கம் கிடத்தப்பட்டிருக்கிறார்கள்; அவர்கள் நிலையைப் பார்ப்பதும், அவர்கள் புலம்பலைக் கேட்பதும் சகிக்கமுடியாதபடி இருக்கின்றன. அவர்கள், தங்களையும் எப்படியாவது கூட அழைத்துச் செல்லுமாறு, புறப்படத் தயாராயிருக்கிறவர்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறார்கள். சுருக்கமாக, எல்லோரும் கண்ணீர்விட்டுக் கதறினார்கள். பஞ்சம், பிணி முதலியவைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நகரம் அழுவது போலிருந்தது. புறப்படத் தயாரானவர்களின் எண்ணிக்கை சுமார் நாற்பதினாயிரம். அவரவரும், தங்களால் முடிந்த அளவு உணவு, ஆயுதம் முதலியவற்றை எடுத்துக்கொண்டனர்; தோல்வி, அவமானம், சோர்வு முதலியவற்றை மனத்திலே கொண்டனர். புறப்படவேண்டியதுதான் பாக்கி. புறப்பட்டுவிடுவது பெரிதல்ல; போய்ச் சேர வேண்டுமே பத்திரமாக. இதற்கு ஓரளவு தேகசக்தியும் மனோசக்தியும் வேண்டுமல்லவா? இதை உணர்ந்தான் படைத்தலைவனான நிக்கியா. படையினரைப் பார்த்துப் பின்வருமாறு பேசினான்:- ஆத்தீனியர்களே! நேச ராஜ்யங்களைச் சேர்ந்தவர்களே! நமது தற்போதைய நிலைமையிலும் நாம் நம்பிக்கையுடனிருக்க வேண்டும். இதைக்காட்டிலும் சங்கடமான நிலைமையிலிருந்து மனிதர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். நமக்குச் சேதங்கள் பல ஏற்பட்டு விட்டனவேயென்றோ, தகாதவிதமாகத் துன்பங்களை அனுபவிக்கும் படி நேரிட்டதேயென்றோ உங்களை நீங்கள் அதிகமாக நொந்து கொள்ளக் கூடாது. உங்களில் எவரையும்விட நான் பலசாலியில்லை. நோய் காரணமாக நான் எவ்வளவு மெலிந்துவிட்டேன் என்பதை நீங்கள் நன்கு காணலாம். என் சொந்த வாழ்க்கையிலாகட்டும், வேறு விதத்திலாகட்டும், உங்களெல்லோரையும்போல் அதிருஷ்டசாலியென்று கருதப்பட்டு வந்தேன். ஆனால் இப்பொழுதோ, உங்களிலே மிகக் கேவலமானவர் களென்று கருதப்படுகிறவர்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டிருக்கிறதோ அந்த ஆபத்து எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும், நான் தெய்வ பக்தியுடையவனாக வாழ்க்கையை நடத்தி வந்திருப்பதனாலும், என் சகோதர மனிதர்களிடத்தில் நியாயமாகவும் குற்றமற்ற முறையிலும் நடந்துவந்திருப்பதனாலும், எதிர்காலத்தைப்பற்றி எனக்குத் திடமான நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. நமக்கு ஏற்பட்டிருக்கிற துரதிருஷ்டங்கள், பயப்படுத்தவேண்டிய அளவுக்கு என்னைப்பயப்படுத்தவில்லை. அந்தத் துரதிருஷ்டங்கள் இனிக் குறையும் என்று நம்புவோமாக! நமது சத்துருக்கள் போதுமான அளவு அதிருஷ்டத்தை அனுபவித்துவிட்டார்கள். நாம் படையெடுத்து வந்தது எந்தத் தெய்வத் திற்கேனும் கோபத்தை உண்டுபண்ணியிருக்குமானால், அதற்குப் போதிய தண்டனையை அனுபவித்து விட்டோம். நாம்தான் முதன் முதலாக மற்றவர்கள் ராஜ்யத்தின்மீது படையெடுத்து வந்தோமென் பதில்லை. நமக்கு முன்னாடியும் பலர், அக்கம்பக்கத்திலுள்ள ராஜ்யங் களின் மீது படையெடுத்திருக்கின்றனர். உணர்ச்சி வசப்பட்டு அநேக அநீதங்களையும் செய்திருக்கின்றனர். இதற்காகப் பொறுக்கக்கூடிய அளவுக்குத் தண்டனைகளையும் அனுபவித்திருக்கின்றனர். இப்பொழுது நம் விஷயத்தில் தெய்வங்கள் கருணை காட்டுமென்று நியாயமாக எதிர்பார்க்கலாம். ஏனென்றால், நாம் அந்தத் தெய்வங்களின் பொறாமைக்குரியவர்களாகவோ கோபத்துக்குரியவர்களாகவோ இருக்கவில்லை; இரக்கத்திற்குரியவர்களாகவே இருக்கிறோம்.1 இப்பொழுது நீங்கள் பின்வாங்கிச் செல்ல இருக்கிறீர்கள். இந்த நிலைமையிலும், உங்களை நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால், எண்ணிக்கையில் எவ்வளவு அதிகம் பேராயிருக்கிறீர்கள், ஆயுதபாணி களாய் எத்தனை பேர் வரிசையாக நிற்கிறீர்கள் என்பது நன்கு புலனாகும். ஆதலின் அதிக மனச்சோர்வுக்கு இடங்கொடுத்துவிடாதீர்கள். நீங்கள் எங்கே சென்று தங்கினாலும் அது ஒரு நகரமாகத் தோற்றமளிக்கும். அப்பொழுது நீங்கள் தாக்கினால், சிஸிலியர்களில் யாரும் உங்கள் தாக்குதலைத் தாங்கி நிற்கமுடியாது; நீங்கள் நிலைத்துவிட்டால் உங்களைப் பெயர்க்கவும் முடியாது. நீங்கள் ஒழுங்காகவும் பத்திரமாகவும் பின்வாங்கிச் செல்ல வேண்டியது உங்கள் பொறுப்பிலேயே இருக்கிறது. அதை நீங்கள் தான் பார்த்துக்கொள்ளவேண்டும். ஒன்று மட்டும் உங்கள் ஒவ்வொரு வருடைய ஞாபகத்திலும் இருக்கட்டும். எந்த இடத்தில் சண்டை போடும்படியான நிர்ப்பந்தம் உங்களுக்கு ஏற்படுகிறதோ அந்த இடத்தில் சண்டை போட்டு வெற்றி காணவேண்டும்; அந்த இடத்தை விடாப் பிடியாகக் கைப்பற்றிக்கொள்ளவேண்டும். அஃதொருபக்கமிருந்தாலும், நாம் இரவு பகல் பாராமல் வேகமாக நமது பிரயாணத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் நம்மிடத்தில் உணவுப் பொருள்கள் மிகக் குறைவாக இருக்கின்றன. ஸைரக்யூஸியர்களிடம் கொண்டுள்ள பயம் காரணமாக, நம்மிடம் இன்னமும் விசுவாசங்கொண்டிருக்கிற சிஸிலியர்கள் வசிக்கும் பிரதேசத்தை நாம் அடைந்தால்தான் நமக்கு இனிப் பயமில்லையென்று எண்ணிக் கொள்ளவேண்டும். அப்படி விசுவாசமுடையவர்களா யிருக்கக்கூடியவர்களுக்கு, உணவுப் பொருள் களுடன்வந்து நம்மைச் சந்திக்குமாறு செய்தி அனுப்பியிருக்கிறோம். எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்லுமிடத்து, படைவீரர் களே! நீங்கள் தைரியமா யிருக்கவேண்டும்; கோழைத்தனத்திற்குச் சிறிது கூட இடங்கொடாதீர்கள். இப்பொழுது நீங்கள் சத்துருக்களிடமிருந்து தப்பித்துக்கொண்டுவிட்டால், உங்கள் மனம் எவை எவைகளைப் பார்க்கவேண்டுமென்று ஆசைப்படுகிறதோ அவைகளைத் திரும்பவும் பார்க்கலாம்; உங்களிலே ஆத்தீனியர்களா யிருக்கப்பட்டவர்கள், ஆத்தென் ராஜ்யத்தின் பெருமையை - இப்பொழுது அஃது எவ்வளவு தாழ்வுற்றிருந்த போதிலும் - மீண்டும் உயர்த்திக் கொடுக்கலாம். மனிதர்கள்தான் ஒரு ராஜ்யத்தை ஆக்குகிறார்கள்; மனிதர்களில்லாத சுவர்களோ கப்பல்களோ அல்ல. இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நிக்கியாஸைப் பின்பற்றி டெமாத்தனீஸும் படையினரை ஊக்கப்படுத்தினான். இருவர் தலைமையிலும் படை புறப்பட்டது. ஆனால் அடைய வேண்டிய இடத்தைப்போய் அடையவில்லை. ஆங்காங்கு ஸைரக்யூஸியர்கள் வழி மறித்துப் பல சேதங்களை உண்டு பண்ணினார்கள். சொல்லொணாத கஷ்ட நஷ்டங்களை ஆத்தீனியப்படை அனுபவித்தது. கடைசியில் நிக்கியாஸும் டெமாத்தனீஸும் தங்கள் படையுடன் சரணடைந்துவிட்டனர். ஜில்லிப்பஸின் விருப்பத்திற்கு விரோதமாக இருவரையும் ஸைரக்யூஸியர்கள் கொலை செய்துவிட்டார்கள்; சரணடைந்த பிறகு உயிர்பிழைத்திருந்த படையினரைச் சிறைப்படுத்தினார்கள். இங்ஙனம் சிறைப்பட்டவர் சுமார் ஏழாயிரம் பேர். இவரில் பலர் சிறையிலேயே மடிந்தனர்; பலர் அடிமைகளாக விற்கப்பட்டனர்; மிக மிகச் சிலர் மட்டும் ஆத்தென்ஸுக்குத் தப்பி வந்தனர். சுருக்கமாக, சிஸிலி படையெடுப்பு, ஆத்தென்ஸுக்கு ஏற்பட்ட மகத்தான தோல்வி; பெரிய நஷ்டம். இந்த படையெடுப்புக்குப் பிறகு ஆத்தீனிய ஏகாதிபத்தியம் ஆட்டங்கொடுக்க ஆரம்பித்துவிட்டது. துஸிடிடீஸின் சரித்திரத்தில், நிக்கியாஸின் சொற்பொழிவே கடைசி சொற்பொழிவாகக் காணப்படுகின்றது. இதற்குப் பிறகு - சிஸிலி தோல்விக்குப் பிறகு - சுமார் இரண்டு வருஷ காலம், அதாவது யுத்தத்தின் இருபத்தோராவது வருஷம் வரை - கி.மு. 411-ம் வருஷம் வரை - நடைபெற்ற சம்பவங்கள் வழக்கமான வரலாற்று முறையில் சொல்லப்படுகின்றன. அப்படிச் சொல்லப்பட்டு வருகையில், திடீரென்று மௌனங்கொண்டு விடுகிறது துஸிடிடீஸின் சரித்திரம். பெலொப்பொனேசிய யுத்த சம்பந்தமான விவரங்களுக்கும், அதற்கு முன்னரும் பின்னரும் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கும் கிரீ - வாழ்ந்த வரலாறு என்ற நூலைப் பார்க்க. பொருட் குறிப்பு அக்காந்த்த 170 அத்தெனாகோரா 212 அத்தெனாகோரா பேச்சு 217,221 அப்போலோ 72,178 அர்ராபிய 180 அனக்ஸாகோர 4 ஆத்தீனியர் பேச்சு 54, 62 ஆத்தீனியர்- பார்ட்டர் தன்மைகள் 52, 53 ஆம்ப்பிபோலி 5, 185 ஆர்க்கிடாம 137,138 ஆர்க்கிடாம பேச்சு 61-67, 84-87 ஆர்கோ 223 ஆர்ட்டிமீஷியம் 140 ஆல்ஸிபியாடீ 196,22 ஆல்ஸிபியாடீ பேச்சு 202-208, 237 - 243 இத்தோமி 140 இயோன் 6 இல்லிரியர் 180 ஈனோபிட்டா 175 உலகமகாயுத்தம் - முதல் 24 உலகமகாயுத்தம் இரண்டாவது 24 எப்பிடாம்ன 33 எப்ஹோர்கள் 28,67 எஜினா 46 எஜீயன் கடல் 226 ஐயோனியக் கடல் 215 ஒலிம்ப்பியா 80 ஒலிம்ப்பிய விழா 1 ஒலோர 2 கட்டானா 208 கட்டானே 223,224 காட்மீயர் 147 காமரினா 224 கார்ஸைரீயர் பேச்சு 35-41 கால்ஸிடீஸி 48 கியோ 117 கிளியாரிதா 185 கிளியோன் பேச்சு 123-129 கிளியோமெடீ 186 கேலா 164 கொரிந்த்தியர் பேச்சு 41-47, 49-54, 68 -73 கோரோனீயா 148 சார்ல ஐந்தாவது 15 டார்டனெல் 226 டாரெண்ட்டம் 214 டானக்ரா 175 டியோடோட்ட பேச்சு 129-136 டிஸியா 186 டீக்கேலியா 241 டெமாத்தனீ பேச்சு 157-158 டெல்பி கோயில் 72-80 டெடோ சமஷ்டி 29 டேலியம் 176 தாஸோ 5 திரே 4 தீப் 83 தீபர் பேச்சு 146-153 துஸிடிடீ ஒரு சரித்திராசியரியன் 18-22 துஸிடிடீ ஒரு மேதை 18,19 துஸிடிடீ குடும்பம் 4 துஸிடிடீ சரித்திரம் 7-13 துஸிடிடீ சரித்திரப் போக்கு 14,15 துஸிடிடீ தேச பிரஷ்டன் 6 துஸிடிடீ படைத்தலைவன் 5,6 துஸிடிடீ பிறந்தது 2,4 துஸிடிடீஸும் அரசியல்வாதிகளும் 23,24,25 துஸிடிடீஸின் சரித்திரம் - ஆங்கில மொழியில் 16 துஸிடிடீஸின் சரித்திரம் - ஆங்கில மொழியில் இத்தாலிய 16 துஸிடிடீஸின் சரித்திரம் - ஆங்கில மொழியில் ஜெர்மன் 16 தெமிட்டோக்ளீ 56 நாக்ஸோ 208 நிக்கியா ஒப்பந்தம் 163 நிக்கியா கடிதம் 245-248 நிக்கியா பேச்சு 196-202, 208-211, 251 - 252, 254-255, 258,259 பாக்கெ 122,136 பாகோன்தா பேச்சு 176,177 பியோட்டார்க்குகள் 175,176 பியோஷ்யா 83 பியோஷ்ய சமஷ்டி 150 பிரான்சில் முதலாவது 16 பிராஸிடா முதலாவது 5-13, 180-181 பிராஸிட பேச்சு 170-174, 181-182,184-185 பிளாட்டீயா 83,138-139 பிளாட்டீயர் பேச்சு 139-146 பெர்டிக்கா 48,180 பெரிக்ளீ 4,75,108 பெரிக்ளீ பேச்சு 76-83,90-107 பெலொப்பொனேசிய சமஷ்டி 29 பெலொப்பொனேசிய யுத்தம், காரணங்கள் 24 பெலொப்பொனேசிய யுத்தம் சேதம் 29,30 (156-159) பைலோ 156,157,158,159 பொட்டிடீயா 48 போர்மியோ பேச்சு 111-113 மாரத்தான் 55 மிட்டிலீனியர் பேச்சு 116-121 மெக்காலே, லார்ட் 16 மெகாரா 46,74-75 மெலோ 186 மெலோஆத்தீனிய வாதம் 186-194 யூப்பிம பேச்சு 229-236 யூபியர் 177 யூரிப்பிடீ 5 யூரிமெடோன் 156,249,250,251 ரியம் 109 ரீகியம் 228 லமாக்க 196,222 லாக்கெ 156 லாரியம் 241 லிங்க்கெட்டி 180 லியோண்ட்டினி 156,228 லெபோ 114 த்தெனிலைடா பேச்சு 67,68 ப்பாக்ட்டீரியா 157,159 ப்பார்ட்டாவின் ஆட்சி முறை 28,29 ப்பார்ட்டர் பேச்சு 159-163 ஸாக்ரட்டீ 4 ஸாமோ 45 ஸாலாமி 56 ஸாலீத்த 122 ஸெகெட்டா 195,196 ஸெலின 195 ஸைபோட்டா 47 ஸைரக்யூ 156 ஸோப்போக்ளீ 156 ஜாக்கிந்த்த 157 ஜில்லிப்ப பேச்சு 254,257 ஜூ, வியாழக் கடவுள் 121 ஜெர்க்ஸ 142 ஜெனோபன் 4,15 ஹிப்போக்ராட்டீ 178,179 ஹீரா 153 ஹெர்மோக்ராட்டீ பேச்சு 164,169 ஹெரோடோட்ட 2,14,15 ஹெல்லா 37 ஹெல்லெப்பாண்ட் 226 ஹெலெட்டுகள் 141 1. Herodotus கி.மு. 484 - 410. 2. Olorus. Thucydides ».K. 471 - 400. Socrates ».K.470 - 399. Pericles ».K. 495 - 429. Anaxagoras ».K.500 - 428. Xenophon ».K.420 - 355. Thrace. Euripides ».K.482 - 407. Brasidas. Thasos. Amphipolis. இது சம்பந்தமான விவரங்களை கிரீ - வாழ்ந்த வரலாறு என்ற நூலில் பார்க்க. Eion. 1. Demosthenes ».K.385-322. Francis I ஆண்டது ».ã.1515-1547. Charles V ஆண்டது ».ã.1519-1556. Lord Macaulay ».ã.1800 - 1859. இந்திய அரசாங்கத்தின் நிருவாக சபை அங்கத்தினனாக நான்கு வருஷ காலம் (1834 - 1838) இருந்தவன். இந்த விஷயத்தை நூலின் முன்னுரைப் பகுதியில் சிறிது விரித்துக் கூறியிருக்கிறோம். பிரசங்கங்களில் ஒரு சம்பாஷணையும் யுத்த நிலவரத்தைத் தெரிவிக்கும் ஒரு நிருபமும் சேர்ந்திருக்கின்றன. Peloponnesian War. Sparta. ப்பார்ட்டா ராஜ்யம், லாஸிடீமோன் (Lacedaemon) பிரதேசத்திலுள்ளது. ப்பார்ட்டர்கள், லாஸிடீமோனியர் களென்றே பெரும்பாலும் இந்த நூலில் அழைக்கப்படுகிறார்கள். Athens. ஆத்தென் ராஜ்யம் அட்டிக்கா (Attica) பிரதேசத்திலுள்ளது. Ephors. Confederacy of Delos. வருகிற பக்கங்களில் இதனை சமஷ்டி என்ற ஒரே சொல்லில் அழைத்துக்கொண்டு சொல்வோம். Peloponnesian League. இது துஸிடிடீஸின் வாசகம். எப்பிடாம்ன (Epidamnus) என்பது, இப்பொழுது டுராஸோ (Durazzo) என்று அழைக்கப்படுகிறது; அட்ரியாட்டிக் கடலின் கிழக்குப் பக்க ஓரமாகவுள்ளது. கார்ஸைரா (Corcyra) என்பதுதான், தற்போதைய கார்பியு (Corfu) என்னும் தீவு. இந்த கார்ஸைரா, கொரிந்த்தியா (Corinth) வின் குடியேற்ற நாடு. கார்ஸைரா, தான் குடியேற்ற நாடாயிருந்தபோதிலும், தாய்நாடாகிய தன்னை மதிக்கவில்லை யென்றும், தன்னோடு கடல் வியாபாரத்தில் போட்டியிடு கிறதென்றும் கொரிந்தியா கருதி வந்தது; அதன் மீது மனக்கசப்பும் கொண்டிருந்தது. இந்தக் கடல் வியாபாரம் காரணமாக ஆத்தென்ஸுக்கும் கொரிந்த்தியாவுக்கும் ஒருவித போட்டியும் பொறாமையும் இருந்து வந்தன. கொரிந்த்தியா, பெலொப் பொனேசிய சமஷ்டியில் முக்கியத்துவம் பெற்ற ஒரு ராஜ்யம். சமஷ்டியின் பின்பலம் தனக்கு நிச்சயமாக உண்டு என்ற தைரியம் இதற்கு இருந்து வந்தது. கார்ஸைரா, எந்த சமஷ்டியிலும் சேராமல் ஒதுங்கியே இருந்தது. கிரேக்க ராஜ்யங்கள் பலவற்றுள்ளும் ஜனக் கட்சியென்றும் பணக்காரக் கட்சியென்றும் இரண்டு கட்சிகள் எப்பொழுதும் இருந்து கொண்டிருந்தன. சுமார் முப்பத்திரண்டு ரூபாயென்று சொல்லலாம். பேசினார்கள் என்று பன்மையாகச் சொல்லப்பட்ட போதிலும் ஒருவர் தான் பேசியிருக்க வேண்டும். ஹெல்லா (Hellas) - கிரீஸுக்கு மறு பெயர். அதாவது ப்பார்ட்டா ராஜ்யம். Samos. ஆத்தென்ஸின் செல்வாக்குக்குட்பட்டிருந்த ஸாமோ தீவு கி.மு. 440-ம் வருஷம் அதற்கு விரோதமாகக் கிளம்பிய சம்பவமே இங்குக் குறிப்பிடப்படுகிறது. Aegina. கி.மு. 487-ம் வருஷம். Megara. மெகாரா ராஜ்யத்திற்கும் கொரிந்த்தியா ராஜ்யத்திற்கும் கி.மு.459-ம் வருஷம் எல்லைத் தகராறு ஏற்பட்டது. அப்பொழுது, மெகாரா ஆத்தென்ஸின் உதவியை நாடியது. ஆத்தென்ஸும் கொரிந்த்தியாவுக்கு விரோதமாக மெகாராவுக்கு உதவி செய்தது. Sybota. Chalcidice. Potidaca. தற்காலத்தில் லாங்கோ (Longos) என்று அழைக்கப் படுகிறது. Macedonia Perdiccas. Marathon. மாரத்தான் யுத்தம் கி.மு. 490-ம் வருஷம் நடைபெற்றது. Salamis. Themistocles. உத்தேசம் கி.மு.527 - 460. Archidamus. ப்பார்ட்டர்கள், பரந்த கல்வியறிவு பெறாதவர்களென்றும் சட்டத்தை எழுத்துப் பிசகாமல் பின்பற்றுகிறவர்களென்றும் ஆத்தினீயர்கள் பரிகாசஞ் செய்வதுண்டு. அதையே இங்கு ஜாடையாக மறுத்துப் பேசுகிறான் ஆர்க்கிடாம. Sthenelaidas. Delphi. Apollo. இன வேற்றுமையைச் சுட்டிக்காட்டிப் பகைமையை மூட்டிவிடு கிறார்கள் கொரிந்த்தியப் பிரதிநிதிகள் இங்கே சூட்சமமாக. ப்பார்ட்டர்களைக் குறித்து சொல்லப்படுகிற வாசகம் இது. Olympia. 1. Boeotia. Thebes. Plataea. Rhium. Phormio. Lesbos. Mytilene. Chios. Zeus. வியாழக் கடவுள். Paches. Salaethus. Cleon. Diodotus. Artemisium - பாரசீகர்களுக்கு விரோதமாக கி.மு 480-ம் வருஷம் கிரேக்கர்கள் நடத்திய கடற்போர். கி.மு. 479-ம் வருஷம் பிளாட்டீயாவில் நடைபெற்ற தரைப்போரில்தான் பாரசீகர்கள் கடைசி தடவையாக முறியடிக்கப்பட்டார்கள். பாஸோனிய (Pausanius) என்பவன்தான் இந்தப் போரில் கிரேக்கப் படைக்குத் தலைவனாயிருந்தான். Ithome. கி.மு. 464-ம் வருஷம் ப்பார்ட்டாவில் ஹெலட்டுகள் (Helots) நடத்திய புரட்சியே இங்குக் குறிக்கப்படுகிறது. 2 கி.மு. 431-ம் வருஷம் மார்ச்சு மாதம் நடைபெற்ற சம்பவமே இங்குக் குறிக்கப்படுகிறது. 81-ம் பக்கம் பார்க்க. Xerxes. கி.மு. 486-ம் வருஷம் முதல் 465-ம் வருஷம் வரை பாரசீகத்தை ஆண்ட மன்னன். சத்துருக்களாகிய பாரசீகர்கள் எப்படிக் கொலைகாரர்களோ அப்படியே அவர்களோடு சேர்ந்துகொண்டு கிரேக்கர்களுக்கு விரோதமாக ஆயுத மெடுத்த தீபர்களும் கொலைகாரர்கள்தானே? பியோஷ்யர்கள் வருகைக்கு முன்பு பியோஷ்யாவில் வசித்துக் கொண்டிருந்த காட்மீயர் (Cadmaeans) எனப்படுவோரே இங்குக் குறிக்கப் படுகின்றனர் போலும். பியோஷ்யர்கள், முதலில் தீப்ஸைக் கைப்பற்றிக் கொண்டு அங்கிருந்துதான் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பினார்கள். கிரீஸின் மத்தியப் பகுதியில் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்ப ஆத்தீனியர்கள் பெருமுயற்சி செய்தார்கள். அப்பொழுது கி.மு 447-ம் வருஷம் கொரோனீயாவிலுள்ள (Coronea) நடைபெற்ற போரில் தோல்வி யுற்றார்கள். Boeotian Confederacy. Hera. Syracuse. சிஸிலி (Sicily) தீவின் கிழக்கிலுள்ளது. வசதியான துறைமுகம். தற்போதைய ஜனத்தொகை சுமார் முக்கால் லட்சம். Leontini. Laches. Eurymedon, Sophocles. Demosthenes - இந்த டெமாத்தனீ வேறு. 15-ம் பக்கம் அடிக் குறிப்பில் சொல்லப்பெற்ற டெமாத்தனீ வேறு. Pylos. Zacynthus. Sphacteria. எதையும் சுருக்கமாகச் சொல்வதுதான் ப்பார்ட்டர்களுடைய வழக்கம். அதுவே இங்குக் குறிப்பிடப்படுகிறது. 1. Peace of Nicias. Nicias. 1. Gela. Hermocrates. Acanthus. பிராஸிடா வடக்கு நோக்கிச் சென்றபொழுது வழியில் தெற்குப் பக்கத்தில் நடைபெற்ற ஒரு சிறிய போர்ச் சம்பவம். 1. Boeotarchs. Oenophyta. Hippocrates. 4. Tanagra. Pagondas. பதினோரு பியோட்டார்க்குகளில் பாகோன்தா தவிர மற்றவர்கள், ஆத்தீனியர்கள் பியோஷ்ய எல்லையைக் கடந்துவிட்டார் களென்றும் அதனால் அவர்களுடன் போர்தொடுக்க வேண்டிய தில்லையென்றும் கூறினார்கள். ஆனால் பாகோன்தாதான் போர்தொடுக்க வேண்டுமென்று வற்புறுத்தினான். ஹிப்போக்கிராட்டீ பியோஷ்யாவிலுள்ள டேலியம் (Delium) என்ற இடத்தில், அப்போலோ தெய்வத்தின் கோயிலைச்சுற்றி ஒரு கோட்டையைக் கட்டி பந்தோபது செய்தான். Euboeans. டேலியத்தில் அப்போலோ தெய்வத்தின் கோயில் பந்தோது செய்யப்பட்டதென்பதே இங்குச் சுட்டிக் காட்டப்படுகிறது. Perdiccas. Leyncestis. 3. Arrhabaeus. Illyrians. Clearidas. ஆம்ப்பிபோலி நகரத்தில் வைக்கப்பட்டிருந்த ப்பார்ட்டக் காவற்படையின் தலைவன். 1. Melos. Cleomedes and Tisias. Sea of Crete. கிரீட் தீவுக்கும் மெலோ தீவுக்கும் மத்தியிலுள்ளது. எஜீயன் கடலின் ஒரு பகுதி. Segesta. Selinus. Aeibiades. Lamachus. ப்பார்ட்டாவுக்கும் ஆத்தென்ஸுக்கும், யுத்தத்தின் பத்தாவது வருஷம் - கி.மு. 421-ம் வருஷம் - ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது. அதையே இங்குக் குறிப்பிடுகிறான் போலும். இதற்கு நிக்கியா சமாதான ஒப்பந்தம் (Peace of Nicias) என்று பெயர். நிக்கியாஸுடன் படைத்தலைவர்களில் ஒருவனாகத் தெரிந்தெடுக் கப்பட்ட ஆல்ஸிபியாடீ, ஆத்தீனியர்களின் யுத்த வெறியை முடுக்கிக் கொடுத்து வந்தான். அவனையும், அவனைப் போன்றவர்களையுமே இங்குச் சுட்டிக் காட்டுகிறான் நிக்கியா. கொரிந்த்தியா, மெகாரா, பியோஷ்யா முதலிய ராஜ்யங்கள் ஒப்பந்தத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. கொரிந்த்தியா, ஆத்தென் மீது பகிரங்கமாகவே பகைமை காட்டியது. ஆல்ஸிபியாடீஸையே, பெயர் சொல்லாமல் சுட்டிக்காட்டுகிறான் நிக்கியா, இந்த வாசகத்தின்மூலம், ஆத்தென்ஸில், குதிரைகளை வைத்துக் கொண்டிருப்பது செல்வத்திற்கு அடையாளமாகக் கொள்ளப்பட்டது. அதிகமான குதிரைகளையுடையவன் பெரிய தனவந்தனாகக் கருதப்பட்டான். ஆல்ஸிபியாடீ, இத்தகைய தனவந்தர்களிலே ஒருவன். ஆடம்பரப்பிரியன். அதிகாரப் பிரியன். ஆயினும் மகான் ஸாக்ரட்டீஸின் பக்தர்களில் ஒருவனா யிருந்தான். இவனைப்பற்றிய விவரங்களுக்கு கிரீ வாழ்ந்த வரலாறு என்ற நூலைப்பார்க்க. Mantinea. கி.மு. 418-ம் வருஷம் இந்தப் போர் நடைபெற்றது. Naxos, Catana. கவண் என்பது சிறு சிறு கற்களை வீசியெறிவதற்கு உபயோகப்படும் ஒரு கருவி. ஸைரக்யூஸில், இந்தக் காலத்தில் ஜன ஆட்சி நடைபெற்று வந்தது. ஹெர்மோக்கிராட்டீ பணக்காரக் கட்சியின் தலைவனாகவும், பின்னாடிப் பேசப்போகிற அத்தெனாகோரா (Athenagoras) என்பவன் ஜனக்கட்சியின் தலைவனாகவும் முறையே இருந்தனர். Carthage. Tarentum. இப்பொழுது இது, டார அல்லது டாரண்ட்டோ (Taras or Taranto ) என்று அழைக்கப்படுகிறது. இத்தலியை அடுத்தாற்போல் தென்கிழக்கிலுள்ள வளைகுடா இது. வளைகுடாவின் வடகரையிலுள்ள ஒரு நகர ராஜ்யத்தின் பெயருமாகும். Ionian Sea. 210 - ஆம் பக்கம் அடிக்குறிப்பைப் பார்க்க. பணக்காரக் கட்சியைச் சேர்ந்த இளைஞர்களைப் பார்த்து இந்த வார்த்தைகளைச் சொல்கிறான் அத்தெனாகோரா. ஸைரக்யூஸில் ஜனக்கட்சியினர் அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக்கொண்டதும், அதாவது ஜன ஆட்சி ஏற்பட்டதும், குறிப்பிட்ட ஒரு வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் அரசாங்க உத்தியோகங்களை ஏற்றுக் கொள்ளலாமென்று ஒரு சட்டம் இயற்றப்பட்டு அமுலுக்குக் கொண்டுவரப்பட்டதாகத் தெரிகிறது. இதைக் கண்டு, குறிப்பிட்ட அந்த வயதடையாத, ஆனால் அரசாங்க நிருவாகத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்ட, ஆசை யோடு திறமையுடையவர்களாகவு மிருந்த பணக்கார இளைஞர்கள் முணுமுணுத்துக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. Argos. Catane. ஸைரக்யூஸுக்கு வடக்கேயுள்ளது. நிக்கியா தூண்டுதலின் பேரில் ஆத்தென் கட்சியில் சேர்ந்துகொண்ட ராஜ்யம். Camarina. Euphemus. Hellespontines ஹெல்லெபாண்ட் என்பது ஒரு ஜலசந்தி. இப்பொழுது டார்டனெல் ஜலசந்தி (Strait of Dardanelles)v‹W அழைக்கப் படுவது இதுவே. இதன் இரு மருங்கிலுமுள்ள பிரதேசத்தினர் என்று பொருள். Aegean Sea. Rhegium. கி.மு. 480-ம் வருஷம் பாரசீகர்கள், அட்டிக்காவை நோக்கி வரக்கூடுமென்று தெரிந்ததும், தெமிட்டோக்ளீஸின் யோசனைப்படி ஆத்தீனியர்கள், ஆத்தென் நகரத்தைக் காலி செய்துகொண்டு ஸாலாமி முதலிய இடங்களுக்கு வந்துவிட்டதையே இங்குக் குறிப்பிடுகிறான் யூப்பிம. விவரங்களுக்கு கிரீ வாழ்ந்த வரலாறு என்ற நூலைப் பார்க்க. மேற்படி கி. மு. 480-ம் வருஷம் பாரசீகர்கள் கிரீ மீது இரண்டாவது தடவை படையெடுத்து வந்தபோது, சின்ன ஆசியாவிலுள்ள ஐயோனிய கிரேக்கர்கள் அவர்களுக்கு உதவி செய்யும்படியான நிர்ப்பந்தத்திற்குள்ளானார்கள்; சுயேச்சையாக, முழுமனத்துடன் உதவி செய்யவில்லை. யூப்பிம இதை இங்கே திரித்துக்கூறி தன் கட்சிக்கு நியாயந்தேடிக்கொள்ள முயல்கிறான். இதுவும் உண்மையைத் திரித்துக்கூறியதாகும். ஆத்தீனியர்கள் மட்டும் தனித்து நின்று பாரசீகர்களை எதிர்த்துப் போராடவில்லை. கிரேக்கர் பலரும் இவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். Chios and Methymna. அதாவது, ஆத்தீனியர்கள் குதிரைப்படைகளையும் காலாட்படை களையும் ஆத்தென்ஸிலிருந்துதான் சிஸிலிக்குக் கொண்டுவர வேண்டு மென்பது இங்கு எடுத்துக்காட்டப்படுகிறது. கிரேக்க ராஜ்யங்கள், அந்தந்த ராஜ்யத்துப் பிரஜைகளில் ஒருவரையே அந்தந்த ராஜ்யத்திலும் நிரந்தரப் பிரதிநிதியாக நியமித்து, தங்கள் நலனைப் பாதுகாத்து வரும்படி செய்தன. இதுவே பெரும்பாலும் வழக்கமாயிருந்தது. ஆல்ஸிபியாடீஸின் முன்னோர்கள், ஆத்தீனியப் பிரஜைகளாயிருந்தபோதிலும், ஆத்தென்ஸில், ப்பார்ட்டாவின் பிரதிநிதிகளா யிருந்து சேவை செய்து வந்தார்கள். ஆல்ஸிபியாடீஸின் பாட்டன், ப்பார்ட்டாவுடன் பிணக்குக் கொண்டு பிரதிநிதியா யிருப்பதினின்று விலகிக் கொண்டான். பைலோ என்ற இடத்தில் நாசம் ஏற்பட்டபோது ப்பார்ட்டர் களின் நலத்தை நாடினேனென்று சொல்வது, ப்பாக்ட்டீரியா தீவில் ப்பார்ட்டர்கள் கைதிகளாக அகப்பட்டுக்கொண்டபோது, அவர் களுக்குத் தீங்கு உண்டாகாதபடி இவன் பார்த்து வந்ததைக் குறிப்பிடுவதாகும். இவன் அப்படிப் பார்த்து வந்தானென்பதை இந்தச்சரித்திராசிரியனான துஸிடிடீஸும் குறிப்பிடுகிறான். யுத்தத்தின் பத்தாவது வருஷம் ஆத்தென்ஸுக்கும் ப்பார்ட்டாவுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டபோது, ஆல்ஸிபியாடீஸுக்குச் சுமார் முப்பது வயது. இதனால், இவனைக் காட்டிலும் மூத்தவனும் இவனுடைய அரசியல் விரோதியுமான நிக்கியாஸுடன் பேச்சு வார்த்தைகள் துவக்கியது ப்பார்ட்டா. இது தனக்குச் செய்யப்பட்ட அவமானம் என்று இவன் கருதினான். இதனால்தான், இவன், மேற்படி சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் வரவொட்டாதபடி செய்ய மாண்ட்டினீயா, ஆர்கோ இவைகளின் உறவை நாடினான். இந்த விவரங் களனைத்தையும் கிரீ - வாழ்ந்த வரலாறு என்ற நூலில் பார்க்க. ப்பானிஷ்காரர். யுத்தப் பிரியர்களென்று இவர்கள் அந்தக் காலத்தில் பெயர் படைத்திருந்தார்கள். Decelea. ஆத்தென்ஸுக்குச் சுமார் பதினான்கு மைல் தொலைவிலுள்ள ஒரு கோட்டை தலம். இதன் அருகிலுள்ள பாதை வழியாகத்தான். ஆத்தென், தனக்கு தேவைப்பட்ட தானிய வகைகளை யூபியா முதலிய இடங்களிலிருந்து தருவித்துக் கொண்ருந்தது. Laurium mines. ப்பார்ட்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக, மிகைபடச் சொல்லப் பட்ட வார்த்தைகளாகும் இவையென்பதை நாம் வாசகர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டுவதில்லை. Gilippus. War despatches. அதாவது தரையில் எதிரெதிராக நின்று சண்டை போடுவதற்குப் பதில் கப்பல்களில் எதிரெதிராக நின்று சண்டை போடவேண்டிய அவசியத் திற்குட்பட்டவர்களா யிருக்கிறோமென்று கூறுகிறான். ஜில்லிப்பஸும், கூட இருந்த உப தளபதிகளும் சேர்ந்து பேசினதாகவே துஸிடிடீ குறிப்பிடுகிறான். ஆனால் அஃது எப்படி சாத்தியம்? சிஸிலியின் மீது படையெடுத்து வந்தது நிக்கியாஸுக்குச் சம்மத மில்லையென்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். அநியாய மாகப் படையெடுத்து வந்தோம், அதற்குரிய தண்டனைகளை அனுபவித்துவிட்டோம் என்ற கருத்தை இங்கு வெளிப்படுத்து கிறான். சிஸிலி படையெடுப்புக்கு முன்னர் இவண் பேசிய இங்குப் பார்க்க 194 - 200