வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல் திரட்டு – 24 மகாத்மா காந்தி ( மொழிபெயர்ப்பு நூல் ) ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா நூற் குறிப்பு நூற்பெயர் : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 24 ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2007 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10.5 புள்ளி பக்கம் : 16+ 312= 328 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 205/- படிகள் : 500 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 அணிந்துரை எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை, எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையைத் தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார். ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன். அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார். ஆமாம், வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமை யாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக் கின்றன. இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது. 83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக் கின்றன. அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தம் நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம். காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033. பெ.சு. மணி வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள் தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூற வேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணி யாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ்த் தென்றல் திரு. வி. f.; மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப்பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையை தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது. இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது. போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட் களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழி பெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல். சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக் கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மைகளை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்க தரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனை களையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும். சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள், ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும். காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜி யினுடையதே! எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்றுதலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே! ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி டோரதி கிருஷ்ணமூர்த்தி 6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை - 622 002. பதிப்புரை உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலகச் சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர். சர்மா வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த உலக நிகழ்வுகளை தமிழர் களுக்குப் படம் பிடித்துக் காட்டியவர். அரசியல் கருத்துகளின் மூலம் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் ஊட்டி வீறு கொள்ளச் செய்தவர். உலக அரசியல் சிந்தனைகளைத் தமிழில் தந்து தமிழிலேயே சிந்திக்கும் ஆற்றலுக்கு வழிகாட்டியவர். தாம் வாழ்ந்த காலத்து மக்களின் பேச்சு வழக்கையே மொழிநடையாகவும், உத்தியாகவும்கொண்டு நல்ல கருத்தோட்டங்களுக்கு இனிய தமிழில் புதிய பொலிவை ஏற்படுத்தியவர். தமிழ் மக்களுக்கு விடுதலை உணர்வையும்; தேசிய உணர்வையும்; சமுதாய உணர்வையும் ஊட்டும் வகையில் அரும்பணி ஆற்றியவர். தமிழ்ப்பண்பாட்டின் சிறப்புக்களை போற்றியவர்; பொருளற்ற பழக்க வழக்கங்களைச் சாடியவர். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களும் உலகளாவிய அரசியல் பார்வையைப் பெறுவதற்கு வழி அமைத்தவர். மேலை நாட்டுஅறிஞர்களின் தத்துவச் சிந்தனைகளை எளிய இனிய தமிழில் தந்தவர். வரலாற்று அறிவோடு தமிழ்மொழி உணர்வை வளர்த்தவர். அரசியல் தத்துவத்தை அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்நாட்டுத் தலைவர்களுக்குக் கற்றுத் தந்தவர். தமிழகத்தின் விழிப்பிற்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர். தமிழர்கள் கல்வியில் வளர்ந்தால்தான் உலகில் உயர்ந்து நிற்க முடியும் என்பதை தம் நூல்களில் வாயிலாக உணர்த்தியவர். நன்மையும் தீமையும் இருவேறுநிலைகள்; தீமையை ஓங்கவிடாமல் நன்மையை ஒங்கச் செய்வதே மக்களின் கடமையென்று கூறியவர். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகின்றன. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல்களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்கு வதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்பதற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல் திறமையைக் குறிக்கோளாகக் கொண்ட - பகுத்தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தேடியெடுத்து வெளியிடுகிறோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரைகளை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். இவர் நூல்களைப் படிப்பவர்களுக்கு அந்தந்த நூல்களின் விழுமங்களோடு நெருக்கம் ஏற்படுவது உறுதி. இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ்க் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் அரசியல் வரலாற்று நூல்கள் 14. இந்நூல்களை 6 நூல் திரட்டுகளாக வெளியிட்டுள்ளோம். இவரின் தமிழ் நூல்கள் வெளிவந்த காலம் வடமொழி ஆளுமை ஒங்கியிருந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழி நடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடையிலும், மொழி நடையிலும், நூல் தலைப்பிலும் எந்த மாற்றமும் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக சர்மாவின் நூல்களைப் படைக்கருவிகளாகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுதிகளை முத்துமாலையாகத் தமிழர்தம் பார்வைக்குத்தந்துள்ளோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற இந்தியத் தேசியப் பெருங்கவிஞன் பாரதியின் குரலும், ஒற்றுமையுடன் தமிழர் எல்லாம் ஒன்று பட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும், என்ற தமிழ்த்தேசிய பெருங்கவிஞன் பாரதிதாசனின் குரலும் தமிழர்களின் காதுகளில் ஓங்கி ஒலிக்கட்டும். உணர்வுகள் ஊற்றாகப் பெருகி நல்ல செயல்களுக்கு வழிகோலட்டும். பதிப்பாளர் பொருளடக்கம் அணிந்துரை iii சர்மாவின் சாதனைகள் v முன்னுரை vii பதிப்புரை x நுழையுமுன் xii அரசியல் வரலாறு வாசகர்களுக்கு 3 1. அரசியல் என்பது யாது? 7 2. அரசியலும் வாழ்க்கையும் 13 3. சுதந்திரம் என்றால் என்ன? 18 4. அடிமை வாழ்வு 24 5. கடமையும் உரிமையும் 33 6. உரிமை இருவகை 38 7 ராஜ்யத்தின் லட்சணம் 43 8 அரசன் யார்? 51 9 குடிகள் யார்? 58 10 பலவித ஆட்சி முறைகள் 65 11 முடியரசு 70 12 குடியரசு 79 13 குடியரசின் குறைநிறைகள் 86 14 சர்வாதிகாரம் 92 15 பாசிஸமும், நாஜிஸமும் 97 16 பாசிஸத்தின் தன்மைகள் 103 17 சோஷலிஸம் 107 18 கம்யூனிஸம் 111 19 அனார்க்கிஸம் 116 20 காந்தீயம் 119 ஐக்கிய தேசதாபனம் வாசகர்களுக்கு 131 1. தோன்றிய விதம் 137 2. அமைப்பு முறை 144 3. ஜெனரல் அஸெம்ப்ளி 156 4. பாதுகாப்புக் கவுன்சில் 168 5. பொருளாதார-சமுதாயக் கவுன்சில் 176 6. டிரட்டி கவுன்சில் 190 7. சர்வ தேச கோர்ட்டு 200 8. காரியாலயம் 208 அனுபந்தம் 210 அரசாங்கத்தின் பிறப்பு வாசகர்களுக்கு 227 1. சுய ஆட்சி 233 2. ஜன ஆட்சி 237 3. பிரஜைகள் - பிரதிநிதிகள் 240 4. அரசாங்கம் 246 பிரஜைகளின் உரிமைகளும் கடமைகளும் 1. பிரஜைகளின் லட்சணம் 253 2. உரிமையின் சரித்திரம் 260 3. பிரஜைகளின் உரிமைகள் 266 4. பிரஜைகளின் கடமைகள் 274 பிரஜைகளின் உரிமைகளும் கடமைகளும் 1. எது கட்சி? 281 2. அனுகூலப் பிரதிகூலங்கள் 287 3. எப்படி இருக்க வேண்டும்? 295 4. அங்கத்தினர் முதல் தலைவர் வரை 301 நுழையுமுன்... அரசியல் வரலாறு அரசியல் ஆட்சிமுறைகளைத் தமிழ்மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்குடன் 20 கட்டுரைகளைத் தாங்கி வரும் நூல். கூற வரும் செய்திகளை தெளிந்த நடையில் அழுத்தமாகத் தொகுத்தும் வகுத்தும் பகுத்தும் படிப்பவர்களுக்குச் சோர்வு வராத நிலையில் எழுதப்பட்ட நூல். அரசியலால் வரும் நன்மை தீமைகளையும் , முரண்பட்ட அரசியல் தத்துவங்களையும் அழகுபடக் கூறும் நூல். ஒரு குடும்பத் தலைவன் அரசுப் பணியாளனாகவும் நாட்டின் குடிமகனாகவும் இருந்து கொண்டு செய்ய வேண்டிய கடமைகளையும் பெற வேண்டிய உரிமைகளையும் வலியுறுத்தும் நூல். அரசாங்கத்தின் பிறப்பு, அரசியல் கட்சிகள் அரசின் பிறப்புப் பற்றியும் மக்கள் ஒவ்வொருவரும் அரசைப் பற்றிய செய்திகளை நன்கு அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்குடனும், அரசுக்கும் - மக்களுக்கும் உள்ள தொடர்பை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பார்வையுடனும் எழுதப்பட்ட நூல். அரசும் மக்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த ஆற்றல்கள். அரசின்றி மக்களில்லை. அரசு மரத்தைப் போன்றது. மக்கள் வேரினைப் போன்றவர்கள். மரமின்றி வேரில்லை. வேரின்றி மரமில்லை என்று உணர்த்தும் நூல். மக்களாட்சியின் செயல்பாடுகளும் உணர்வுகளும் பேசப்படும் நூல். தன்னாட்சியின் இலக்கணமும் மக்களாட்சியின் மாண்பும் எத்தகையன? மக்கள் யார்? வேட்பாளர்கள் யார்? எப்படி அவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்? என்பவற்றுக்குரிய விடைகளை மக்கள் தெரிந்து கொள்ள உதவும் நூல். பிரஜைகளின் உரிமைகளும் கடமைகளும் ஆள்வோருக்கும் ஆளப்படும் மக்களுக்கும் பெரும் பயன் தரும் நூல். சுதந்திரம் சமத்துவம், சகோதரதத்துவம் எனும் மூவகைப் பிரிவுகளின் அடித்தளங்களை நடுவமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல். ஐக்கியதேச தாபனம் உலக நாடுகள் ஒன்றியத்தின் (ஐ.நா. வின்) அமைப்பு முறைகள், செயல்பாடுகள் தோன்றிய முறை பற்றிச் சுருக்கமாகத் தெரிந்துகொள்ள, எளிதில் மக்கள் புரிந்துகொள்ளும் நோக்குடன் எழுதப்பட்ட நூல். போர்ச்சூழலை விட்டொழித்து அமைதி நிறைந்த வாழ்க்கைப் பயணத்தை மக்கள் மேற்கொள்ள வேண்டும் எனும் நோக்குடன் எழுதப்பட்ட நூல். உலக நாடுகளில் வாழும் மக்கள் ஒருவொருக்கொருவர் நல்லுறவு கொண்டு வாழ்வதற்குத் துணை நிற்கும் நூல். பொது அவையின் அமைப்பு, உறுப்பினர்கள் கவனிக்க வேண்டிய சிக்கல்கள், நிகழ் முறைக் குழுக்களின் பணிகள் குறித்துத் தெளிவுபடக் கூறும் நூல். பாதுகாப்புக் கவுன்சில் தொடங்கப்பட்டதன் நோக்கம் பற்றியும் உறுப்பினர்கள் கவுன்சிலின் கடமைகள் பற்றியும் அறிய உதவும் நூல். கோ. இளவழகன் அரசியல் வரலாறு வாசகர்களுக்கு (முதற் பதிப்பு) இந்த நூலில் கூறப்பட்டுள்ள சித்தாந்தங்களில், பாசிஸமும் நாஜிஸமும் ஆழ்ந்த அதிவாரமில்லாதவை; ஒரு யுத்தத்திலே தோன்றி மற்றொரு யுத்தத்திலே மறைந்துவிட்டன. இவை மறுபடியும் உலகத்தில் ஆக்கம் பெறுதல் அசாத்தியம். ஆயினும் இவை, சிறிது காலமேனும் அரசியல் உலகத்தில் உலவி வந்தன என்பதற்காக, இவை இரண்டினைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். பாசிஸத்தைப் பற்றியும் நாஜிஸத்தைப் பற்றியும் வாசகர்கள் படிக்கிறபோது, இவை முஸோலினியும் ஹிட்லரும் உயிரோடிருந்த காலத்தில் எழுதப்பெற்றன என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு படித்தல் நல்லது. கடைசி அத்தியாயமாகிய காந்தீயத்தைத் தவிர, மற்ற அத்தியாயங்கள் யாவும் சக்தி பத்திரிகையில் கட்டுரைகளாக வெளி வந்தவை. அவைகளை, ஒரு நூலுக்கேற்ற வகையில் ஒழுங்குபடுத்தி இங்குக் கொடுத்திருக்கிறேன். இங்ஙனம் நூல் வடிவாக்கிக் கொள்ள அனுமதி தந்த சக்தி அதிபர் ஸ்ரீ வை. கோவிந்தன் அவர்கட்கும், இதனை நல்ல முறையில் வெளியிட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்தின் பொறுப்பாளர் ஸ்ரீ அரு. சொக்கலிங்கம் அவர்கட்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சிறிய நூல், அரசியலைப் பற்றி பூராவும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலை எனது தமிழ்ச் சகோதரர்களிடையே எழுப்பவேண்டு மென்பது என் பிரார்த்தனை. வந்தே மாதரம்! வாசகர்களுக்கு (இரண்டாம் பதிப்பு) இந்த இரண்டாம் பதிப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்பட வில்லை; அவசியமில்லை யென்பதுதான் காரணம். வாசகர்களுக்கு, படிக்கிறபோது திகைப்பு ஏற்படக்கூடாதென்பதற்காக இரண்டு இடங்களில் மட்டும் அடிக்குறிப்புக்கள் சேர்த்திருக்கிறேன். முந்திய பதிப்பைப் போலவே இந்தப் பதிப்புக்கும் அன்பர்கள் ஆதரவு தர வேண்டுகிறேன். தியாகராய நகர் சென்னை 10-8-53 வாசகர்களுக்கு (மூன்றாம் பதிப்பு) இந்த மூன்றாம் பதிப்பில் சில சில மாற்றங்கள் செய்திருக் கிறேன்; கருத்துக்களிலேயல்ல; எழுத்துக்களில். பொதுவாக, இந்த நூல், இந்தியா சுதந்திரமாக வாழத் தொடங்கியதற்கு மு))ந்தி, அதாவது 1947-ஆம் வருஷம் ஆகட் மாதத்திற்கு முந்தி எழுதப்பட்டதென்பதை மனத்தில் கொண்டு இதனைப் படிக்குமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். வேறு கூறுவதற்கு என்ன இருக்கிறது? தியாகராய நகர், சென்னை 30-11-57 1. அரசியல் என்பது யாது? அரசியல் என்பது ஒரு கலை; சாதிரமும் கூட. அக வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொடுப்பது கலை; புற வாழ்க்கையைப் பண்பட்ட நிலையில் வைத்திருப்பதற்குத் துணை செய்வது சாதிரம். பூரண வாழ்க்கைக்குக் கலையும் தேவை; சாதிரமும் தேவை. இரண்டும் உயிரும் உடம்பும் போல; மனமும் அறிவும் போல. பிரதியொரு மனிதனுடைய அக வாழ்க்கையையும் புற வாழ்க்கையையும் ஒன்றுபடுத்திச் செலுத்திக் கொண்டு போவது அரசியல். ஒரே மனிதன் குடும்பத்தில் எஜமானனாயிருக்கிறான்; காரியா லயத்தில் ஊழியனாயிருக்கிறான்; சமுதாயத்தில் பிரஜையாயிருக் கிறான். இப்படி ஒவ்வொரு துறையிலும் இவன் ஆற்ற வேண்டிய கடமைகளும் உண்டு; அனுபவிக்க வேண்டிய உரிமைகளும் உண்டு. இந்த இரண்டினையும் வலியுறுத்திக் காட்டுவது அரசியல் சாதிரம். விஞ்ஞான சாதிரம், வைத்திய சாதிரம், பூமி சாதிரம் முதலிய பலவகை சாதிரங்களும், ஆராய்ச்சியின் விளைவாகச் சில உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. உண்மைகள் வெளியான வுடன் அந்த ஆராய்ச்சி நின்று விடுகிறது. அந்த உண்மைகள், எந்தக் காலத்துக்கும் எந்த இடத்துக்கும் ஏற்றதான ஒரு திரத் தன்மையை அடைந்து விடுகின்றன. ஆனால் அரசியல் சாதிரமோ, சதா சலித்துக்கொண்டிருப்பது; புதுப்புது உண்மைகளை வெளியிட்டுக் கொண்டிருப்பது. மற்றும், மேற்படி சாதிரங்கள், அன்றாட வாழ்க்கைக்கு ஏதோ ஏகதேசமாகப் பயன்படுகிற மாதிரியான உண்மைகளையே வெளியிடுகின்றன. அப்படி வெளியாகிற உண்மைகளும் வாழ்க்கையின் ஏதோ ஒரு துறையை மட்டுந்தான் தழுவி நிற்கின்றன. அரசியல் சாதிரமோ, வாழ்க்கையின் எல்லாத் துறை களுக்கும் பயன்படக் கூடிய உண்மைகள், எப்பொழுதும் பயன்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய உண்மைகள் நிறைந்தது. அரசினுடைய இயல்பைப் பற்றிக் கூறுவது அரசியல் சாதிரம் என்று பொதுப்படையாகக் கூறிவிடலாமாயினும், அதுவே முழு அர்த்தமு மாகாது. அரசினுடைய இயல்பு சதா இயங்கிக் கொண் டிருப்பது. அப்படி இயங்குகிறபோது, அநேகம் தனிப்பட்ட சக்திகளோடு அது சம்பந்தப்பட வேண்டியிருக்கிறது. அதாவது, நாடு, குடி இவை இல்லாவிட்டால் அரசு இல்லை. இந்த இரண்டு மட்டும் இருந்தால், அரசு அமைந்துவிடுமா? அரசுக்கும் குடிக்கும், குடிக்கும் நாட்டுக்கும், இப்படிப் பரபர சம்பந்தத்தை நிர்ணயித்தும், அப்படி நிர்ணயித்ததை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தும் காட்டுகிற ஒரு தாபனம் தேவை. இந்த தாபனத்துக்கே அரசாங்கம் என்று பெயர். அரசுக்கு அங்கமாயிருப்பது அரசாங்கம். இந்த அங்கத்தின் மூலமாகவே அரசு இயங்க முடியும். அரசு, தன் ஆதிக்கத்தைச் செலுத்து வதற்கும், மக்கள் தங்கள் குடி உரிமையைக் கொண்டாடுவதற்கும் கருவியாயிருப்பது இந்த அரசாங்கமே. எனவே, நாடு, மக்கள், அரசாங்கம் ஆகிய இந்த மூன்றினைப் பற்றியும், இந்த மூன்றுக்கும் உள்ள பரபர சம்பந்தம், இவற்றின் தனித்தனி உரிமைகள், தனித்தனிக் கடமைகள் முதலியவைகளைப் பற்றியும் கூறுவதே அரசியல் சாதிரம். அரசியல் சாதிரத்துக்கும் சரித்திரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அரசியல் இல்லாமல் சரித்திரம் பூர்த்தியடையாது. அப்படியே, சரித்திரத்தோடு உறவு கொள்ளாத அரசியலும் இல்லை. சரித்திரத்தினின்று பழுத்த பழந்தான் அரசியல்; அரசியலின் ஆணி வேர் சரித்திரம் என்பது ஓர் அறிஞனுடைய வாக்கு. அரசர் களுடைய பிறப்பு இறப்பு, வெற்றி தோல்வி, காதல் சாதல் ஆகிய இப்படிப்பட்டவைகளை மட்டும் கூறிக்கொண்டு செல்வது சரித்திர மாகாது அந்தந்தக் காலத்தில் சமுதாயத்திலே ஏற்பட்ட சலசலப்புக்கள், அவைகளை எப்படி அரசும் பிரஜையும் ஈடு கொடுத்தன, அவைகளினால் ஏற்பட்ட பலாபலன்கள் ஆகிய அனைத்தையும் சொல்லிச் சொல்வதுதான் சரித்திரம். இறந்த காலத்தில் இதயத்தையும், நிகழ் காலத்தில் அறிவையும், எதிர் காலத்தில் பார்வையையும் ஒரே சமயத்தில் பொருத்துவது எதுவோ அதுதான் சரித்திரம். ஒழுங்கான ஒரு சமுதாயம், அந்தச் சமுதாயத்தை ஒருவித கட்டுப்பாட்டுக்குட்படுத்திக் கொண்டு செலுத்துகிற நிருவாக யந்திரம், இந்த யந்திரத்தை மின்சார சக்திபோல் கண்ணுக்குத் தெரியாமலிருந்துகொண்டு ஓட்டுகிற அரசு ஆகியவை இல்லா விட்டால், சரித்திரம் என்பது ஏது? இங்ஙனம் இரண்டும் பின்னல் போன்றதொரு சம்பந்தத்தை உடையனவேனும் இரண்டும் வேறு வேறானவை. வெறும் சம்பவங்களை அடுக்கிக்கொண்டு செல்கிற சரித்திரத்தில், அரசியல் அமைப்பின் நுணுக்கங்களை ஆராய்ச்சி செய்து கொண்டு செல்கிற அரசியல் சாதிரத்தில், சாத்திர ஆசிரியனுக்கு ருசி யிராது. ஆயினும், ஒன்றின் ருசியை அறிவதற்கு மற்றொன்றின் ருசியைப் பற்றிய அறிவு தேவையாகவே இருக்கிறது. சரித்திரத்தையும் அரசியல் சாதிரத்தையும் தனித் தனியாகப் பிரித்து எடை போட்டுப் பார்த்தோமானால், அரசியல் சாதிரத்தின் எடை கூடுதலாக இருப்பதையும், சரித்திரத்தின் எடை குறைவாக இருப்பதையும் நன்கு காணலாம். எப்படி? சரித்திரமானது இறந்த காலத்தில் தன் முழுச் சக்தியையும் செலவிட்டு விட்டு, நிகழ் காலத்துக்கு வருகிறபோது ஓய்ந்து போய் விடுகிறது. எதிர் காலத்தைப் பற்றி அஃது என்ன சொல்ல முடியும்? அதாவது, பழைய சம்பவங்களை விதரித்தும் அழகு படுத்தியும் கூறுவதில் தான் சரித்திரத்தின் பெருமை இருக்கிறது. ஆனால் அரசியல் சாதிரமோ, முக்காலத்தையும் தழுவி நிற்கிறது. அப்படி முக்காலத்தையும் ஒன்றுபடுத்திக் காட்டா விட்டால், அஃது அரசியல் சாதிரமில்லை. அதாவது, முற் காலத்தில் ஒரு ராஜ்யத்தின் அரசியலமைப்பு எப்படியிருந்தது. அந்த அமைப்பின் கீழ் பிரஜைகள் எந்த விதமான சுக சௌக்கியத்துடன் இருந்தார்கள். அதை உத்தேசிக்கிறபோது இப்பொழுதைய அரசியல் அமைப்பு எப்படி இருக்கிறது. இதன்கீழ் ஜனங்கள் எந்த திதியில் இருக்கிறார்கள். இனி எந்த மாதிரியான அரசியல் அமைப்பு இருந்தால் அதன் கீழ் ஜனங்கள் பரிபூரண சௌக்கியத்துடன் இருப்பார்கள் என்ற மூன்றையும் தொகுத்துச் சொல்வதுதான் அரசியல் சாதிரம். முக்காலத்துக்கும் பொருந்தியதாகவும், முக்காலத்திலும் வலுவுள்ள சக்தியாகவும் இருப்பதனாலேயே, அரசியல் சாதிரம் அதிக எடை உடையது என்று கூறினோம். அரசியல் சாதிரத்துக்கு இரண்டு முகங்களுண்டு; ஒன்று உண்மை; மற்றொன்று கற்பனை என்று இ.எச்.கார்1 என்ற ஓர் அறிஞன் கூறுகிறான். அதாவது நிகழ்காலத்தில் நம் கண் முன்னே காணப்படுகிற அரசியல் அமைப்புக்கள், அவற்றின் அசைவுகள், அந்த அசைவுகளினால் உண்டாகிற விளைவுகள். இவைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு எதிர் காலத்தில் அரசியல் அமைப்பு எப்படியிருக்க வேண்டும். எப்படியிருந்தால் அதிகமான நன்மைகள் உண்டாகும் என்று கற்பனை செய்து காட்ட வேண்டியதும் அரசியல் சாதிரத்தின் கடமையாகக் கருதப்படுகிறது. இப்படிக் கற்பனை செய்து காட்டுகிறவர்களும் அரசியல்வாதிகள் தான்; உள்ளதை உள்ளபடி பார்க்கிறவர்களும் அரசியல்வாதிகள் தான். இரு சாராரும் அரசியலுக்குத் தேவையானவர்களே. இவர்களைப் பற்றி ஸோரெல்2 என்ற ஓர் அறிஞன் பின்வருமாறு கூறுகிறான் :- தங்கள் கொள்கைகளுக்கிணங்க உலகத்தை அமைத்துப் பார்க் கிறார்களே, அவர்கள் கற்பனைவாதிகள்; உலகத்தின் உண்மை நிலைக்குத் தகுந்தபடி தங்கள் கொள்கைகளை வகுத்துக் கொள் கிறார்களே, அவர்கள் உண்மைவாதிகள். இவர்களை முறையே லட்சிய வாதிகள் என்றும் பிரத்தியட்சவாதிகள் என்றும் கூறினும் பொருந்தும். இந்த இரு சாராருடைய தன்மைகளையும் நாம் சிறிது ஒப்பு நோக்கிப் பார்த்தோமானால், அது, நமது சிந்தனைக்குப் பெரிய விருந்தாக இருக்கும். கற்பனைவாதிகள், அதாவது எதிர்காலத்தில் அரசிய லமைப்பும் அதையொட்டிய சமுதாய அமைப்பும் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று கூறுகிறவர்கள், 1. தீவிரவாதிகளா யிருப்பார்கள். 2. அறிவு உலகத்தில் சஞ்சரிப்பார்கள். 3. தர்க்க நியாயத்தோடு பேசுவார்கள். 4. நோக்கந்தான் இவர்களுக்கு முக்கியம். 5. ஒவ்வொரு பொருளையும் இயற்கையோடு ஒட்ட வைத்துப் பார்ப்பார்கள். 6. தாங்கள் வகுத்துக் காட்டுகிற சட்டம், திட்டம் எல்லா வற்றிற்கும் மையமாகத் தர்ம நியாயத்தை வைப்பார்கள். 7. மனச் சாட்சிக்காகப் போராடுவார்கள். 8. பொது ஜனங்களுடைய நன்மை இவர்களுக்குப் பிரதானம். 9. எதையும் வலியுறுத்திச் சொல்வார்கள். உண்மைவாதிகள், அதாவது உள்ள நிலைமையை அனுசரித்து இருக்கப்பட்ட அரசியல் அமைப்பையும், சமுதாய அமைப்பையும் நடத்திச் செல்ல வேண்டுமென்று கூறுகிறவர்கள், 1. மிதவாதிகளாயிருப்பார்கள். 2. அனுபவ உலகத்தில் வாழ்வார்கள். 3. அனுபவ ஞானத்தோடு பேசுவார்கள். 4. உள்ள நிலைமைதான் இவர்களுக்கு முக்கியம். 5. ஒவ்வொரு பொருளையும் மதிப்புப் போட்டுப் பார்ப்பார்கள். 6. தாங்கள் வகுத்துக் காட்டுகிற சட்டம், திட்டம் எல்லா வற்றிற்கும் மையமாக அதிகாரத்தை வைப்பார்கள். 7. தங்கள் ஆதிக்கத்தை ஊர்ஜிதம் செய்து கொள்வதற்காகப் போராடுவார்கள். 8. பொது ஜனங்களுடைய சம்மதம் இவர்களுக்குப் பிரதானம். 9. எதற்கும் கீழ்ப்படிந்து போவதாகப் பேசுவார்கள். இந்த இரண்டு வித தன்மைகளும் எந்த அரசியல் இயக்கத் திலும் பிரதிபலிப்பதைப் பார்க்கலாம். அரசியல் சாதிரமும் சரித்திரமும் எப்படிப் பின்னிக் கொண்டிருக் கின்றனவோ அது போலவே, அரசியலும் அதிகாரமும் பின்னிக் கொண்டிருக்கின்றன. அரசியல் என்று சொன்னாலே அதில் ஆள்கிற தன்மையும் ஆளப்படுகிற தன்மையும் அடங்கி யிருக்கின்றன. ஆள்வது அரசு; ஆளப்படுவது குடி. இந்த இரண்டும் சேர்வது தான் அரசியல். தர்ம நியாயமும் அதிகார பலமும் சேர்ந்தால்தான், அரசு நடைபெற முடியும்; குடிகள் க்ஷேமமாயிருக்க முடியும். இதனாலேயே வடநூலார் அரசியலுக்கு தண்டநீதி என்று பெயர் கொடுத்தார்கள். குடி தழுவவும் வேண்டும்; கோலோச்சவும் வேண்டும். கோலை ஓச்ச வேண்டுமென்று தான் திருவள்ளுவர் கூறினாரேயொழிய, கோலைப் பிரயோகிக்க வேண்டுமென்று கூறவில்லை. இது கூர்ந்து கவனிக்கத் தக்கது. கோல் என்று சொன்னாலே அது தண்டனையைச் செயலில் கொணர்வதற்கான கருவி என்றே அர்த்தப்படுகிறது. இந்த அர்த்தத்தை விபரீதப் படுத்திக் கொண்டு விடப் போகிறார்களே என்பதற்காகவே, செம்மை என்ற பண்பையும் சேர்த்துச் செங்கோல் என்று கூறினார்கள். அரசியலின் பிரயோஜனம் என்ன? அதிகமான பேருக்கு அதிகமான நன்மை ஏற்பட வேண்டுமென்பது தான். இப்படிச் சுலபமாகச் சொல்லிவிடலாமாயினும், இதில் அநேகம் சிக்கல்கள் இருக்கின்றன. அதிகமான பேருக்கு என்று சொன்னால், எண்ணிக்கையிலே அதிகமான பேரா, அரசுக்கு உறு துணையாயிருக்கிற படை பலத்தையும் பண பலத்தையும் உடையவர்களிலே அதிகமான பேரா, அறிஞர்களை மட்டும் பொறுக்கி யெடுத்து அவர்களிலே அதிகமான பேரா என்பன போன்ற பிரச்னைகள் எழுகின்றன. இதே பிரகாரம், அதிகமான நன்மைகள் என்று சொன்னால், எது நன்மை, எது நன்மையல்லாதது என்று நிர்ண யிப்பது யார், அரசா, குடியா, அரசுக்கு நன்மையாயிருப்பது குடிக்கு நன்மை யாயிருக்குமா, அல்லது குடிக்கு நன்மையாயிருப்பது அரசுக்கு நன்மையா யிருக்குமா, இந்த மாதிரியான பலபட்ட பிரச்னைகள் தோன்றி விடுகின்றன. இவைகளைப் பற்றி ஒவ்வொரு நாட்டுப் பண்டிதரும் அநேக விதமான நூல்கள் எழுதியிருக் கிறார்கள். இந்தியாவில் திருவள்ளுவன் சாணக்கியன் இப்படிப் பலரும், சீனாவில் கன்பூஷியஸும்1, கிரீஸில் பிளேட்டோவும்2, அரிட்டாட்டலும்3, பல சிக்கல்களையுடைய அரசியலைப் பற்றி ஆதிகாலத்திலேயே அரிய நூல்கள் பல எழுதியிருக்கிறார்கள். இவர்களை, அரசியல் சாதிரத்தின் ஆதி கர்த்தர்கள் என்று கூடச் சொல்லலாம். இவர்களுடைய ஆராய்ச்சிகள், எந்த நாட்டுக்கும் எக்காலத்துக்கும் பொதுவானவை. அரசியலையும் இலக்கியத்தையும் பொருத்தி வைத்து ஓர் ஆசிரியன் கூறியிருக்கிற அழகான வாசகத்தோடு இந்த அத்தியாயத்தை முடிக்க விரும்புகிறோம். எண்ணங்களைச் சம்பவங் களாக்குவது அரசியல்; சம்பவங்களை எண்ணங்களாக்குவது இலக்கியம். 2. அரசியலும் வாழ்க்கையும் பிரதியொரு மனிதனும் இரண்டுபட்ட அந்ததுடையவனாயிருக் கிறான். ஒன்று தனி மனிதன்; மற்றொன்று சமுதாய மனிதன். தாய்க்கு மகனாகவோ, பிள்ளைகளுக்குத் தகப்பனாகவோ, குடும்பத் திற்கு எஜமானனாகவோ ஒருவன் இருக்கிறான். இப்படியிருந்து கொண்டு இவன் செய்ய வேண்டிய கடமைகள் சில உண்டு. இங்ஙனமே, பல பேர் அடங்கிய ஒரு சமுதாயத்தின் ஒரு சிறு அமிசத்தினன் என்ற முறையில், அதாவது பிரஜை என்ற ஹோதாவில் வரி செலுத்துவது, அரசாங்கத்தை நடத்து விக்கிற பிரதிநிதிகளைத் தெரிந்தெடுப்பது, தன்னுடைய ராஜ்யத்திற்கு ஆபத்துண்டாகு மென்று தெரிந்தால் அந்த ஆபத்தினின்று அதனைக் காப்பது முதலிய பல கடமைகளும் இவனுக்கு உண்டு. இந்த இரண்டு வித கடமைகளையும், ஒன்றை மற்றொன்று பாதிக்காமல் இவன் செய்து கொண்டு போகிறபோது தான், இவனுடைய வாழ்க்கை வளர்ச்சியடை கிறது; முழு வாழ்க்கையாகிறது. இப்படி முழு வாழ்க்கையை நடத்து கிறவன் தான் முழு மனிதன். சில நாடுகளில், இன்னின்ன குற்றங்கள் செய்தவர்களுக்குப் பிரஜா உரிமை கிடையாது என்று சொல்லி விடுகிறார்களல்லவா, அதனுடைய தாத்பரியம் என்ன? முழு மனிதனாயிருக்கப்பட்டவனை அரை மனிதனாக்கி விடுகிறார்களென்பது தான். அந்த அரை மனிதனை, மனிதனாகவே இல்லாமற் செய்து விடுவதுமுண்டு. அதாவது, தாய்க்கு மகனாகவோ, பிள்ளைகளுக்குத் தகப்பனாகவோ, குடும்பத்திற்கு எஜமானனாகவோ இருந்து சில கடமை களைச் செய்து கொண்டிருக்கக் கூடிய உரிமையும் அவனுக்கு இல்லாமற் செய்து விடுவதுண்டு. சிறைவாசம், மரண தண்டனை முதலியவைகளின் மூலமாக. இந்த அரை மனிதனுடைய உரிமை களை. மேற்படி சிறைவாசம் அனுபவிப்பதற்கோ, அல்லது மரண தண்டனை அடைவதற்கோ லாயக்கான குற்றங்களை அவன் செய்திருந்தாலொழிய, வேறு காரணங்களுக்காக எந்த அரசாங்கமும் பறித்துவிட முடியாது. இந்த உரிமைகள், அதாவது தனி மனிதனுடைய உரிமைகள், பிரதியொரு மனிதனுடனும் கூடப் பிறந்தவை. இவைகளைப் பாதுகாத்துக் கொள்ளுதவற்கும், இவை களைக் கொண்டு சமுதாய மனிதனுடைய உரிமைகளை அடைந்து அனுபவிப்பதற்குந் தான் அரசியல் கிளர்ச்சிகள், அரசியல் போராட்டங்கள் முதலியன நடை பெறுகின்றன. அரை மனிதனாகப் பிறந்த மனிதன், முழு மனிதனாக வளர்ந்து வாழ வேண்டுமென்பது தான் அரசியலின் நோக்கம். ஆகையால், வாழ்க்கையி னின்று அரசியலைப் பிரிக்க முடியுமா? அல்லது அரசியலினின்று வாழ்க்கையைப் பிரிக்க முடியுமா? தனி மனிதனுடைய வாழ்க்கையானது ஒழுங்காக நடை பெறு வதற்கு வான சாதிரப் பயிற்சி முதல் மனோதத்துவ சாதிரப் பயிற்சி வரையில் பலவித பயிற்சிகள் எப்படி அவசியமாயிருக்கின்றனவோ அப்படியே சமுதாய மனிதனுடைய வாழ்வு சிறப்புற நடைபெறுவதற்கு அரசியல் சாதிரப் பயிற்சி அவசியமாயிருக்கிறது. மற்ற சாதிரங்களைப் பயிலுவதோடு அவைகளின் முடிவைக் கண்டுவிடலாம். ஆனால், அரசியல் சாதிரத்தைப் பயின்று அனுஷ்டானத்தில் கொண்டுவந்தால்தான், அதன் முடிவைக் காண முடியும். மற்ற சாதிரங்கள், என்றைக்கும், எல்லா நாடு களுக்கும் பொதுவான சில உண்மைகளை வெளியிடுகின்றன. அரசியல் சாதிரமோ காலத்திற்குத் தகுந்த, நாட்டிற்கு ஏற்ற உண்மைகளை வெளியிட்டு வளர்ச்சி யடைந்து கொண்டே வருகிறது. இந்த உண்மைகள் வெளியாகிற காலத்தில்தான், சில நாடுகளில் புரட்சிகள் உண்டாகின்றன; சில நாடுகளில் அரசியல் அமைப்புக்கள் மாறுகின்றன. இப்படிப் புரட்சிகளும் மாற்றங்களும் உண்டானபோதிலும், அரசியல் சாதிரத்துக்கு எவ்வித ஊறும் உண்டாவதில்லை; அதன் வளர்ச்சியும் குன்றுவதில்லை. மனிதன் எப்பொழுது தனித்தனியாக இருந்து வாழ்வதினின்று விலகி, நான்கு பேருடன் பழகத் தொடங்கினானோ, சமுதாயமாக வாழ ஆரம்பித்து விட்டானோ, அப்பொழுதே அவனுடைய அரசியல் வாழ்க்கையும் ஆரம்பித்துவிட்டது. இந்த அரசியல் வாழ்க்கையை எந்த அளவுக்கு அவன் ஒழுங்காக நடத்திக் கொண்டு வருகிறானோ அந்த அளவுக்கு அவனுடைய சொந்த வாழ்க்கையும் ஒழுங்காக நடைபெறும். மனிதன் ஏன் சமுதாயமாகச் சேர்ந்து வாழ விரும்புகிறான்? தன்னுடைய நன்மைக்காகத்தான். அவனுடைய சுயநலந்தான், பரநலத்தை நாடத் தூண்டுகிறது. ஆகவே பிரதியொரு மனிதனும், தன் சொந்த வாழ்க்கை ஒழுங்காக நடைபெறுவதற்கு, அரசியல் வாழ்க்கையிலே ஈடுபட வேண்டியது அவசியமாயிருக்கிறது. அரசு எப்படி யிருக்கிறதோ அப்படித்தான் குடிகளும் இருக் கிறார்கள். குடிகள் எந்த அரசுக்கு, அதாவது எந்த ஆட்சி முறைக்குத் தகுதியுடையவர்களாயிருக்கிறார்களோ அந்த ஆட்சி முறைதான் அவர்களுக்குக் கிடைக்கிறது; அதன் கீழ்த்தான் வாழ் கிறார்கள். இதனின்று, தனி மனிதனையும் சமுதாய மனிதனையும், அதாவது ஒருவனுடைய சொந்த வாழ்க்கையையும் அரசியல் வாழ்க்கையையும் வேறு வேறாகப் பிரிக்க முடியாதென்று ஏற்படு கிறது. அரசு ஒழுங்காக இயங்க வேண்டுமானால், அந்த அரசின் பிரஜை பாடுபட வேண்டும்; அப்படியே பிரஜை ஒழுங்காக வாழ வேண்டுமானால், அந்தப் பிரஜையின் அரசு பாடுபட வேண்டும். இப்படிப் பரபர ஒத்துழைப்பின் பேரில்தான், சமுதாய வாழ்க்கை நடைபெற வேண்டும். சமுதாய வாழ்க்கை எப்பொழுது சீர்குலைந்து போகிற தென்று கேட்டால், மேற்படி அரசும் பிரஜையும் பரபரம் ஒத்துழையாமற் போகிறபோதுதான். அரசு, பிரஜையின் நன்மையை நாடாமல் ஆள்கிற போதும், அப்படியே பிரஜை, அரசின் க்ஷேமத்தை உத்தேசித்து அதற்கு ஆட்படாமல் ஏதோ ஒருவித வலுக் கட்டாயத்திற்காக ஆட்படுகிறபோதும், அரசுக்கும் பிரஜைக்கும் மத்தியில் பெரிய பிளவு உண்டாகிறது. அதிலும் ஆள்வோர் வேற்று நிலத்தினராகவும் வேற்று நலத்தினராகவும் இருந்து, ஆளப்படுவோர் வேற்று நாட்டவராகவும் வேற்று நாட்டமுடையவராகவும் இருந்து விட்டால் கேட்க வேண்டியதேயில்லை. இந்தப் பிளவு இன்னும் அதிகமாக விரிவதற்குத்தான் சந்தர்ப்பங்கள் இருக்கின்றனவே தவிர, குறைவதற்கும் ஒன்று சேருவதற்கும் சந்தர்ப்பங்கள் அபூர்வமாகப் போய்விடுகின்றன. இந்தப் பிளவு இல்லாமற் செய்து கொள்ளு வதற்கு, ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்கும் அரசியல் சாதிர அறிவு அவசியம் தேவையாயிருக்கிறது. ஆள்வோர் ஆளும் உரிமை ஒன்றிலேயே குறியா யிராமலிருப்பதற்கும், ஆளப்படுவோர் ஆளப்படுவதற்குச் சம்மதிப்பதுதான் தங்கள் கடமையென்றிராமலிருப்பதற்கும், அரசியல் சாதிர அறிவு இரு சாராருக்கும் அவசியமாயிருக்கிறது. ஆள்வோருக்குக் கடமையையும், ஆளப் படுவோருக்கு உரிமையையும் முறையே, வலியுறுத்திக் காட்டுவது அரசியல் சாதிரம். ஜனங்களையும், ஜனங்களுடைய சொத்துக்களையும் காப்பாற்று வதே அரசாங்கத்தின் நோக்கம். ஜனங்களைக் காப்பாற்றுவது என்று சொன்னால், ஜனங்களுடைய, சுதந்திரத்தையும் - அதாவது தனி மனிதனுடைய வாழ்க்கையையும் - காப்பாற்றுவது என்பதுதான் அர்த்தம். அப்படியே ஜனங்களுடைய சொத்துக் களைக் காப்பாற்றுவது என்று சொன்னால், அந்தச் சொத்துக்கள் சம்பந்தமான உரிமைகளையும் காப்பாற்றுவது என்பதுதான் அர்த்தம். அதாவது ஜனங்களுடைய உரிமைகளுக்குப் பாது காப்பாளனாக இருப்பது அரசாங்கம். இந்தப் பாதுகாப்புப் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு விடுமானால், ஜனங்கள், தங்கள் நலனை நாடுவதன் மூலம் அரசாங்க நலனை நாடுகிற கடமையை எவ்விதக் குறைபாடுமின்றிச் செய்து கொண்டு போதல் சாத்தியம். அப்படி அரசாங்கம் தன் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ளாமல் போனால். அதற்கு அதன் பொறுப்பை உணர்த்துவது ஜனங்களின் கடமையாகும். இங்ஙனம் உணர்த்தி அதனை ஒழுங்குக்குக் கொண்டு வராமற் போனால், அது ஜனங்களுக்குத் தான் நஷ்டம். இந்த நஷ்டம் வராமலிருக்க, ஜனங்களுக்கு அரசியல் சாதிர அறிவு அவசிய மில்லையா? அரசியல் சாதிரத்திற்கு மூன்று கிளைகளுண்டு. முதலாவது சரித்திரம்; இரண்டாவது பொருளாதாரம்; மூன்றாவது பலவித ராஜ்ய அமைப்புக்களைப் பற்றியும், பலவித சட்ட திட்டங்களைப் பற்றியும் விதரித்துச் சொல்கிற சாதிரம். இந்த மூன்றும் ஒன்றை யொன்று தொட்டுக்கொண்டு ஒரு சங்கிலிபோல் இருக்கிறது. இந்தச் சங்கிலித் தொடருக்குத்தான் அரசியல் சாதிரம் என்று சொல்லவேண்டும். ஆனால், சிலர் முன்னவையாகிய சரித்திரத்தை யும் பொருளாதார சாதிரத்தையும் தனித்தனியாகப் பிரித்துவிட்டு, அரசியல் அமைப்புக்களைப் பற்றிக் கூறுகின்ற விஷயங்களை மட்டும் தனியாகப் பிரித்து அதனை அரசியல் சாதிரமென்று கூறுகின்றனர். இப்படிக் கூறுவோர் பொதுவாக ஆளும் நிலையி லிருப்பவர்களே. இப்படிக் கூறிக் கொண் டிருப்பதுதான் இவர் களுக்கு அனுகூலம். ஆனால் ஆளப்படும் நிலையிலேயே இருக்க வேண்டுமென்று சொல்லப் படுவோருக்கு இஃது ஏற்குமா? இவர்கள், அதாவது ஆளப்படுவோர், தாங்கள் ஏன் இந்த ஆளப்படும் நிலைக்கு வந்துவிட்டோம் என்ற காரணத்தைத் தெரிந்து கொள்வதற்குச் சரித்திர ஞானம் அவசியம். இப்பொழுது எந்த நிலையிலிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதற்குப் பொருளாதார சாதிர அறிவு தேவை. நமது நாகரிக பரம்பரைக்கும் கலாசாரப் பண்புகளுக்கும் ஏற்றாற்போல் எந்த விதமான அரசியல் அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்கு அரசியல் அமைப்புக்களைப் பற்றிய சாதிர அறிவு இன்றியமையாதது. எனவே, இந்த மூன்றைப் பற்றிய அறிவும் சமுதாய மனிதனுக்குத் தேவையாயிருக்கிறது. இவற்றில் ஒன்றைவிட்டு மற்றொன்றை நாடுவது சிறப்பாகாது. ஒரு நாட்டார் உண்பது, உடுப்பது, ஆடுவது, பாடுவது, பேசுவது, எழுதுவது, எல்லாம், அவர்கள் எந்த அரசியலின் கீழ் வாழ்கிறார்களோ அந்த அரசியலைப் பொறுத்தே இருக்கிறது. உதாரணமாக, 1925-ஆம் வருஷத்திற்கு முந்தி ருஷ்யர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இப்பொழுது அவர்கள் வாழ்கிற வாழ்க்கைக்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது. இந்த வித்தியாசத்திற்குக் காரணம் என்ன? அவர்களுடைய அரசியலில் ஏற்பட்ட மாற்றந்தான். இதே பிரகாரம் சீனர்களுடைய வாழ்க்கையைப் பற்றியும் கூறலாம். எனவே, நம்மை ஆளும் அரசானது, எந்தத் தரத்தில் இருக்கிறதோ அந்தத் தரத்தில்தான் நமது அன்றாட வாழ்க்கையும் இருக்கும். நமது அன்றாட வாழ்க்கையின் தரம் உயர வேண்டுமானால், நம்மை ஆளும் அரசின் தரம் உயர வேண்டும். அஃது உயரவேண்டும் என்பதற்காக நாம் பாடுபட வேண்டும். இங்கே நாம் ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது நல்லது. அதாவது அரசு என்று சொன்னால், அது சுய அரசைத்தான் குறிக்குமே தவிர அந்நிய அரசைக் குறிக்காது. பாஷை, மதம், நாகரிகம் முதலிய பலவற்றிலும் வேற்றுமைப்பட்ட ஓர் இனத்தாரை மற்றோர் இனத்தார் ஆள்கின்றாரென்று சொன்னால், அதை ஆதிக்கஞ் செலுத்து கிறாரென்று தான் சொல்லவேண்டுமே தவிர ஆள வேண்டிய லட்சணத் தோடு ஆள்கின்றாரென்று சொல்லக்கூடாது. ஏனென்றால், ஒரு நாட்டாரை மற்றொரு நாட்டார் ஆள்வதற்கு உரிமையே கிடையாது. நாகரித்திலோ மற்றத் துறைகளிலோ ஒரு நாட்டார் அல்லது ஒரு ஜாதியார் முன்னேற்ற மடைந்திருக்கலாம். அப்படி முன்னேறி யிருப்பது, அவர்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பொறுத்ததேயாகும். அதற்காக அவர்களுக்கு, மற்றவர்களை ஆளும் உரிமை வந்து விட்டதா என்ன? ஆள்கின்ற உரிமையே இல்லாத போது அவர்கள் ஆள்கின்றா ரென்று சொன்னால், அஃது உரிமைக்கு மீறின செயலேயாகும். சரி; அந்நியர் ஆளாமல் சுய நாட்டினரே ஆள்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆட்சியை, சகல லட்சணங்களோடும் கூடிய அரசு என்று சொல்லலாமா? அப்படியும் சொல்லிவிட முடியாது. ஆள் கின்றவர் யாரென்பது முக்கியம்; எந்த நோக்கத்தோடு ஆள்கின்றா ரென்பதும் முக்கியம். ஒரு நாட்டைச் சேர்ந்த சிலர், தங்களுடைய பண பலத்தினாலும் படை பலத்தினாலும், அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு தங்களிஷ்டப்படி தங்கள் நன்மைக்காக அந்த நாட்டின் பெரும்பாலான குடிஜனங்களை ஆள்வார்களானால், அதற்கு அரசு என்ற பெயர் பொருந்தாது. ஆள்கின்றவரும் ஆளப்படுகின்றவரும் ஒரே நாட்டினராகவும், ஒரே மதத்தினராகவும், ஒரே பாஷையினராகவும் இருந்த போதிலும் யாருடைய நன்மைக்காக ஆட்சி நடைபெறுகிறதென்பது தான் முக்கியம். அதிகமான ஜனங்களுக்கு அதிகமான நன்மையைச் செய்யக் கூடியது எதுவோ அதற்குத் தான் அரசு என்று பெயர். எனவே, அரசு என்றால் சுய அரசாகவும் இருக்க வேண்டும்; பெரும்பாலோருடைய நன்மையை முன்னிட்டதாகவும் இருக்க வேண்டும். சுய அரசினால் ஆளப்படாதவர்கள், பெரும்பாலோருடைய நன்மையை முன்னிட்டு நடைபெறாத ஆட்சிக்குட் பட்டிருப்பவர்கள், தங்கள் நிலையை உணர்ந்து, அரசு என்பதற்குரிய லட்சணங்களோடு கூடிய அரசினால் ஆளப்படுவதற்குத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தத் தகுதிப்படுத்திக் கொள்கிற தன்மையிலே தான் இவர்களுடைய இலக்கியம், கலை முதலிய பலவும் இருக்க வேண்டும்; ஏன், இவர்களுடைய வாழ்க்கை முழுவதுமே இந்தத் தன்மையிலே தான் அமைய வேண்டும். 3. சுதந்திரம் என்றால் என்ன? சுதந்திரம் என்பது சுலபமான ஒரு வார்த்தையல்ல; கடினமான ஒரு சக்தி. அதை உச்சரிப்பது எளிது; அடைவது அரிது. அரிது என்றால், முடியாது என்பது அர்த்தமல்ல; முடியும். யாருக்கு? அதனைச் சாதாரண ஒரு சொல்லாகக் கருதாதவர்களுக்கு; அதனைப் பற்றிச் சதா சர்வகாலமும் சிந்தித்திருப்போர்க்கு. சிந்தனையிலிருந்து செயல் பிறக்கிறது. சிந்தனை செய்வது கஷ்டம்; செயலாற்றுவது சுலபம். கஷ்டப்பட்டால் தான் சுகம் கிட்டும். வேதனையின்றிச் சாந்தி உண்டாகாது. அதுபோல, சுதந்திரத்தைப் பற்றிச் சிந்தனை செய்வதாகிற கஷ்டமான காரியத்தி ல் ஈடுபட்டவர்கள் தான், அந்தச் சுதந்திரத்தை அடைவதாகிற இன்பத்தை அனுபவிக்க முடியும். இல்லாவிட்டால், உலகத்தில் மிகக் கஷ்டமான காரியம் எது? சிந்தனை செய்வது என்று எமர்ஸன்1 என்ற அமெரிக்க அறிஞன் துணிந்து கூறுவானா? பிரெஞ்சுப் புரட்சிக்குத் தூண்டுகோல் போட்ட வால்ட்டேர்2 என்னும் மேதாவி, ஒரு தேசம் சிந்திக்கத் தொடங்கிவிடுமானால், அதன் வேகத்தை நிறுத்த யாராலும் முடியாது என்று அறுதியிட்டுச் சொல்வானா? இந்த இரண்டு வாசகங்களிலும் எவ்வளவோ அர்த்த புஷ்டி இருக்கிறது. நமது நாட்டிலே அரசியலைப் பற்றிப் பேசுகிற பலரும், சுதந்திரம் என்றால், அது பிறரால் கொடுக்கப்பட வேண்டிய பொருள் என்று கருதியே பேசுகிறார்கள். என்ன ஐயா, இன்னமும் பிரிட்டிஷார் நமக்குச் சுதந்திரம் கொடுக்கவில்லையே ! வேறு அந்நியர் யாரேனும் வந்தால் அவர்கள் எந்த மாதிரி சுதந்திரம் கொடுப்பார்கள்? - இந்த விதமான பேச்சுக்கள், நம் காதில் அடிக்கடி விழுகின்றன.3 ஒருவர் கொடுத்து மற்றொருவர் வாங்கிக் கொள்வது சுதந்திரமாகாது. சுதந்திரம் ஒரு நன்கொடைப் பொருள் அல்ல. நம்முடைய முயற்சி, உழைப்பு, தியாகம் ஆகிய இவற்றின் பரிணாமமாக, அது நம்மை வந்து அடைய வேண்டும்; அப்பொழுதுதான் அது நம்மிடத்தில் நீடித்து நிலைக்கும்; அதனை வைத்துக் காப்பாற்றும் ஆற்றலும் நமக்கு உண்டாகும். அப்படிக் கின்றி பிறருடைய தயவினால் கிட்டுகிற சுதந்திரம் நம்மிடத்தில் நிலைக்குமா? அந்தத் தயவு இருக்கிற வரையில், அது நம்மிடத்தில் இருக்கலாம். அது மாறி விட்டால் -? பிறருடைய தயவில் வாழ்கிற வாழ்வு உண்மையான வாழ்வாகாது; அது சுதந்திர வாழ்க்கையும் அல்ல. பக்குவம் அடைந்த பழந்தான் தின்பதற்கு லாயக்கானது. தகுதி யுடைய மாணாக்கனுக்குத்தான் ஆசானுடைய அருள் கிட்டு கிறது. அதைப் போலவே, எந்த ஜாதி அல்லது சமுதாயம், இடைவிடாத தன் சுய முயற்சி யினாலும், தளரா உழைப்பினாலும், மகத்தான தியாகத்தினாலும், சுதந்திரம் பெறுவதற்குத் தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்கிறதோ, அந்த ஜாதி அல்லது சமுதாயந்தான் சுதந்திரம் அடைகிறது. ஒரு மேனாட்டு அறிஞன் கூறுகிறான் : -சுதந்திரமானது, ஜனங்களிடத்தில் இறங்கி வராது. ஜனங்கள் தான் அந்தச் சுதந்திரத்தை நோக்கி மேலேறிச் செல்ல வேண்டும். சுதந்திர இன்பத்தை நாம் நுகர்வதற்குமுன், அதனை நாம் முயன்று சம்பாதிக்க வேண்டும். தவிர, உலகத்தில் யாருமே, தாங்கள் அனுபவித்து வரும் சுதந்திரத்தை, மனமொப்பி, தாங்களே வலிய பராதீனப்படுத்திக் கொடுக்க மாட்டார்கள். அப்படி எதிர் பார்ப்பது, மனித சுபாவத்தை அறிந்து கொள்ளாததே யாகும். ஏனென்றால், எந்த ஒரு ஜாதி, மற்றொரு ஜாதியின் சுதந்திரத்தைப் பறிமுதல் செய்து, பின்னர் அதனை அடிமைப்படுத்திக் கொண்டு அதன் மீது ஆதிக்கம் செலுத்துகிறதோ அஃது - அந்த ஜாதி - அப்படி ஆதிக்கம் செலுத்து வதனால் அநேக சாதகங்களைப் பெறுகிறது. அந்தச் சாதகங்களை அது மனமொப்பி இழந்துவிடச் சம்மதப்படுமா? சாதுவான பசுவும்கூட, தானே வலிய தன்பாலைச் சுரந்து கொட்டுவதில்லையே! மனிதனோடு ஒட்டியது சுதந்திரம். அதாவது, மனிதன் பிறக்கிற போது, சுதந்திரத்தோடு தான் பிறக்கிறான். பின்னரே அவன் அநேகம் கட்டுகளுக்கு உட்பட்டு, சங்கடப்படுகிறான். இந்தக் கட்டுகளுக்கு உட்பட்ட தன் காரணமாக, மனித நிலையிலிருந்து கீழ் நிலைக்கு அவன் இறங்கி விடுகிறான். அப்பொழுது மனமும் மானமும் இழந்தவனாய், ஒழுக்க வீனனாய், தனது அடிமைத் தனத்தையே இன்பநிலையெனக் கருதி மயங்கிக் கிடக்கிறான். சுதந்திர உணர்ச்சியே அவனுக்கு இல்லாமல் போய்விடுகிறது. அப்படிப் பட்டவனை, மனிதத் தன்மையுள்ள ஒரு மனிதன் என்று அழைக்க முடியுமா? முடியாது. மனித வடிவம் தாங்கிய ஒரு ஜடவது என்று தான் கூற வேண்டும். பட்சிகள், மிருகங்கள் முதலிய இனங்களுக்கும் அவன் கீழானவன். ஏனென்றால், ஊர்வன, பறப்பன, நடப்பன முதலிய பகுத்தறிவில்லாத பிராணி வர்க்கங்கள்கூட, சுதந்திர வாழ்வையே விரும்பி நிற்கின்றன. அவைகளைப் பொன்னான கூட்டில் அடைத்து வைத்து, இனிமையான தின்பண்டங்களைக் கொடுத்து, அன்பான வார்த்தைகள் பேசி வளர்த்துப் பாருங்கள்; அந்தக் கூட்டைவிட்டு வெளியே செல்லத்தான் அவை முயன்று கொண்டிருக்குமே தவிர, அந்தக் கூட்டிலேயே அமைதியாக இருக்க ஆசைப்பட மாட்டா. அடிமைத் தனத்திலே உள்ள அமைதியைக் காட்டிலும், சுதந்திரத்திலே உள்ள போராட்டத்தையே ஒவ்வொரு ஜீவஜந்துவும் விழைகிறதென்பது இதனால் பெறப்படுகிறதல்லவா? அப்படியிருக்க, பகுத்தறிவுள்ள மனிதன், அடிமைத் தனத்திலேயுள்ள அமைதியில் இன்பம் நுகர்ந்து கொண்டிருக்கலாமா? தவிர, சுதந்திரத்துக்காகப் போராடுகிறோம் என்கிற போது, அதிலே ஓர் இன்பம் இருக்கிறது. கார்ல் மார்க்1 கூறுகிறமாதிரி, போராட்டத்தில் தான் இன்பம் உண்டு. அடிமைத் தனத்தினால் உண்டாகிற அமைதி இருக்கிறதே அது, மனிதனுடைய பூரண வளர்ச்சியிலிருந்து, அவனிடத்தில் தங்கியிருக்கும் சக்தியிலிருந்து, சுய கட்டுப்பாட்டுக்கு வாழ்க்கையை உட் படுத்திக் கொண்டு வாழ்கிற ஒழுங்கான வாழ்விலிருந்து பிறக்கிற அமைதி யல்ல; நிர்க்கதியான நிலைமையில், செயலாற்றும் சக்தியில்லாமல் போகிறபோது ஏற்படுகிற அமைதி. இந்த மாதிரி அமைதியோடு கூடிய வாழ்க்கை உண்மையான வாழ்க்கையாகாது. இறவாமல் இருத்தல் என்று இதனைச் சொல்ல வேண்டும். இறவாமல் இருத்தல் வேறே; இருந்து வாழ்தல் வேறே. வாழ்வு என்று சொன்னாலே சலனந்தான்; எப்பொழுதும் ஜீவ களையோடு துடித்துக்கொண்டிருப்பது தான். அப்படிக் கின்றி அடிமைத்தனம் காரணமாகப் பிண்டம்போல் சோபையிழந்தும், சோர்வுற்றும் சும்மா கிடப்பது அமைதியாகாது. மரம் மௌனமா யிருக்கிறது. சுவர் சாதுவாயிருக்கிறது என்று சொன்னால் என்ன அர்த்தமோ அந்த அர்த்தத்தில்தான் ஓர் அடிமையும் அமைதியான வாழ்க்கையை நடத்துகிறான் என்று சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட வாழ்க்கையில் இன்பம் ஏது? சுதந்திரம் என்பது இயற்கை; அடிமைத்தனம் என்பது செயற்கை. மனிதன், சுதந்திரமாய் இருக்கிறபோது தான், அதாவது இயற்கையான நிலையில் இருக்கிற போதுதான், அவனிடத்திலே யுள்ள நல்ல தன்மை களெல்லாம் வெளியாகின்றன; பிரகாசிக்கவும் செய்கின்றன. செயற்கை யான அடிமை நிலைமையில் இருக்கிற போது, அவன் இழிவடைந்து போகிறான். அடிமை வாழ்வு நடத்துகிறவன், புழுப்போல் நெளிந்து கொடுக்கிறானே தவிர, மனிதனைப் போல் நடப்பதில்லை. அவனுடைய எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் - ஏன், சாதாரண தூலப் பார்வையிலுங் கூட - ஒரு வித சோர்வைக் காணலாம். அவனிடத்தில் தன்னம்பிக்கை என்பது இல்லாமலே போய்விடுகிறது. சுதந்திரமாயுள்ள ஒரு ஜாதியைச் சேர்ந்தவன் - அவனுடைய நாடு எவ்வளவு குறுகிய விதீரண முடையதாய் இருந்தபோதிலும், அவனுடைய ஜாதியினர் எவ்வளவு சிறுதொகையினராய் இருந்தபோதிலும் எப்படி நடந்து கொள்கிறான் என்பதைக் கவனியுங்கள். அவனது பார்வையிலே ஒரு பிரகாசம் ! பேச்சிலே ஓர் அழுத்தம் ! நடையிலே ஒரு மிடுக்கு ! சுதந்திரமாய் இருக்கவேண்டும் என்று ஆவல் கொள்ளவும், அதன் பிரகாரம் இயற்கை வாழ்வு. அதாவது சுதந்திர வாழ்வு நடத்தவும் ஒவ்வொரு மனிதனுக்கும் பூரண உரிமை உண்டு. இந்த உரிமை அவனோடு கூடவே பிறக்கிறது. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று லோகமான்ய திலகர் கூறியது இந்த மாதிரி யான ஒரு கருத்தை மனத்தில் வைத்துக் கொண்டுதான். இந்த உரிமை, தன்னிடமிருந்து விலகிக் கொள்ளாதபடி பார்த்துக் கொள்வது ஒவ்வொரு மனிதனுடையவும் முதல் கடமையாகும். இந்தக் கடமையை நிறைவேற்றுகிற விஷயத்தில் அவனுக்குப் பலவிதமான சோதனைகள் ஏற்படுவது சகஜம். எவனொருவன் இந்தச் சோதனை களுக்குப் பயந்து ஓடுகிறானோ, அவனைக் கண்டு சுதந்திரமும் ஓடிப்போய்விடும். ஒரு பிரெஞ்சுப் புலவன் கூறுகிற மாதிரி, எந்த ஒரு ஜாதி தன் சுதந்திரத்துக்காக இறக்கத் தயாரா யில்லையோ, அந்த ஜாதி வெகு சீக்கிரத்தில் தன் சுதந்திரத்தை இழந்து விடுகிறது. மனிதன், இயற்கைக்கு விரோதமான நிலையில் இருக்கிற காலத்தில், அதாவது சுதந்திரமாய் இல்லாத காலத்தில், அவனிடத் திலே யுள்ள கெட்ட சுபாவங்களெல்லாம் தலை தூக்கி ஆடத் தொடங்குகின்றன; அநேக நிர்ப்பந்தங்கள் சூழ்ந்து கொண்டு, அவனை வளர்ச்சியடைய வொட்டாதபடி தகைந்து விடுகின்றன. இவற்றினின்றும் விடுதலைபெற முயற்சி செய்வது அவனுடைய இரண்டாவது கடமை. அறிஞர் ராதா கிருஷ்ணன் ஓரிடத்தில் கூறுவதாவது:- சுதந்திர வாழ்க்கையில் தான், ஆணாகட்டும் பெண்ணாகட்டும் தங்களிடத்திலேயுள்ள சிறந்த திறனை யெல்லாம் வெளியிடுகிறார்கள்; அடிமை வாழ்க்கையில் அவர்கள் இழிவடைந்து போகிறார்கள். ஒரு சாதாரண மனிதனை, அகத்திலும் புறத்திலுமாக அநேக நிர்ப்பந்தங்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் அவனுடைய சுபாவம் மாறுபட்டுப் போகிறது. இப்படிப்பட்ட நிலைமையிலிருந்து அவனை விடுதலை செய்விப்பது தான் சுதந்திரத் தின் நோக்கமாய் இருந்து வந்திருக்கிறது.... இயற்கைக்கு விரோதமாக உள்ள நிலைமையை மாற்றப் போராடுவது ஒருவனுடைய புனித மான கடமையாகும். சுதந்திரம் என்று சொன்னால், மனிதனிடத்திலேயுள்ள மேலான தன்மைகளெல்லாம் பரிமளித்துப் பிரகாசிக்கக் கூடிய ஒரு நிலை என்று சொல்லலாம். இந்த நிலையில் மனிதனின் அறிவு, இதயம், ஆத்மா முதலியன எல்லாம் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் வளர்ச்சி அடைகின்றன. அவன் சீல புருஷனாகவும், அஞ்சாமைக்கு அணிகல னாகவும், சமுதாய நலனுக்காகத் தன்னுடைய க்ஷேமத்தை அர்ப்பணஞ் செய்யக்கூடிய ஆற்றலுடைய வனாகவும் விளங்குகிறான். அவன், தன் வாழ்க்கையை நடத்துகிறான். எண்ணுவதிலும், எழுதுவதிலும் பேசு வதிலும், பொதுவாக அவனுடைய வாழ்க்கைப் போக்குக்கள் அனைத் திலும், அவனுக்கு எவ்விதத் தடைகளும் இருப்பதில்லை. ஆனால் இப்படி எண்ணுகிற போதும், எழுதுகிறபோதும், பேசுகிறபோதும், இஷ்டப் படி வாழ்க்கையை நடத்துகிறபோதும், மற்றவர்களுக்கு எவ்விதத் தீங்கும் உண்டாகாதபடி அவன் பார்த்துக் கொள்ள வேண்டும். எவ்விதக் கட்டாயத்துக்கும் அல்லது நிர்ப்பந்தத்துக்கும் அல்லது பலாத்காரத்துக்கும் அவன் உட்படுவதில்லை; பிறரை உட் படுத்தவும் கூடாது. அவன் ஆசைகள் யாவும், பிறருக்குத் தீங்கு உண்டாகாதபடி பூர்த்தியடைய வேண்டும். இந்த மாதிரியான ஒரு சுதந்திர நிலையில் இருக்கிற. அதாவது சுதந்திர வாழ்வை நடத்துகிற மனிதனிடத்தில், பொறாமை, பகைமை, சுயநலம், பிறரைச் சுரண்டி வாழ வேண்டுமென்ற எண்ணம் முதலிய தீய தன்மைகள் இடம் பெறுவதற்கு மேற்படி சுதந்திர நிலை அல்லது வாழ்வு இடங் கொடுப்பதே இல்லை. அமெரிக்கக் குடியரசின் தலைவனாய் இருந்த அப்ரஹாம் லிங்கன்1 என்பவன், சுதந்திரம் என்பதற்குப் பின் வருமாறு வியாக்கியானம் கூறுகிறான்:- ஒவ்வொரு மனிதனும், தன்னிச்சைப்படி விவகாரங்களை நடத்தவும், தான் உழைத்த உழைப்பின் பலனை அனுபவிக்கவும் உரிமையுடையவனாய் இருக்க வேண்டும். ஆனால், அவன் அப்படி விவகாரங்களை நடத்துவதும், உழைப்பின் பலனை அனுபவிப்பதும் பிறருடைய உரிமைகளுக்குப் பாதகம் உண்டாக்காமல் இருக்க வேண்டும். இவ்விதமே ஒவ்வொரு சமுதாயமும், ராஜ்யம் என்ற தோரணையில், மற்றொரு ராஜ்யத்தின் உரிமைகளில் தலையிடாதபடி, தன்னிஷ்டப் பிரகாரம் காரியங் களைச் செய்யும் உரிமை பெற வேண்டும். எனவே, ஒரு மனிதனை மற்றொரு மனிதன் அடிமை கொள்வதும், ஒரு ஜாதி அல்லது நாடு மற்றொரு ஜாதியை அல்லது நாட்டை ஆள்வதும் சுதந்திரத்துக்கு விரோதம். இதைப்போல் ஓர் ஆளும் ஜாதி, மற்றோர் ஆளப்படும் ஜாதிக்குச் சுதந்திரம் கொடுப்பதாகச் சொல்வது போலித்தனம். எப்பொழுதுமே, ஆளும் ஜாதி மேலான அந்தது உடையதாகவும், ஆளப்படும் ஜாதி கீழான அந்தது உடையதாகவும் முறையே இருக்கின்றன. முன்னது கட்டளை இடுகிறது; பின்னது கட்டளைப்படி நடக்கிறது, கட்டளை இடுகிறவனுடைய சக்தி செல்வாக்கு எல்லாம் உயர்ந்திருப்பதும், அந்தக் கட்டளைக் கிணங்க நடக்கிறவனுடைய சக்தி செல்வாக்கு எல்லாம் தாழ்ந்திருப்பதும் அனுபவத்தில் கண்ட உண்மை. அப்படியிருக்க, ஆளும் ஜாதி தன் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கும் மற்றொரு ஜாதிக்குச் சுதந்திரத்தைக் கொடுத்து விடுகிறதென்று சொன்னால், அந்த ஆளும் ஜாதி, தன் உயர்ந்த தானத்திலிருந்து இறங்கி விடுகிறது என்று அர்த்தம். அப்பொழுது ஆளும் ஜாதி என்ற பெயர் அதற்குப் பொருந்தாது. அப்படியே ஆளப்படும் ஜாதி, சுதந்திரம் பெற்றுவிட்டவுடனே ஆளும் ஜாதியினுடைய ஆதிக்கத்தி லிருந்து விடுதலை அடைகிறது; அதன் காரணமாக அதற்கு ஏற்கனவே இருந்த கீழான அந்தது போய்விடுகிறது. அதாவது இரண்டு ஜாதிகளும் சம அந்தது அடைகின்றன; அதனால் சம உரிமைகள் அவைகளுக்கு ஏற்படுகின்றன. முறையே அடக்குவதும் அடங்குவதும் என்ற நிலை இல்லாமற் போய், இரண்டும் நேசப் பான்மையில் நடந்து கொள்கின்றன. எனவே, ஓர் ஆளும் ஜாதி, மற்றொரு ஜாதியைத் தன் ஆதிக்கத் தில் இருத்தி வைத்துக்கொண்டே அதற்குச் சுதந்திரம் கொடுப்பதாகச் சொல்வது அர்த்தமில்லாத வார்த்தை. அப்படிக் கொடுக்கப்படுவது சுதந்திரமல்ல; அதிகார வினியோகம் என்று வேண்டுமானால் சொல்லலாம். சுதந்திரம் என்பது, பண்டமாற்றுப் பொருளைப் போல் கைநீட்டிக் கொடுக்கப்படுவது மில்லை; கைநீட்டி வாங்கப்படுவதுமில்லை. அஃது அவரவர் முயற்சியி னாலும், உழைப்பினாலும், தியாகத்தினாலும் அடைய வேண்டிய ஒரு சித்தி. அப்படி அடைவது, ஒவ்வொரு மனிதனுடையவும் அல்லது ஜாதியினுடையவும் உரிமை மட்டுமல்ல; கடைமையுங்கூட. 4. அடிமை வாழ்வு ! உதை பந்தாட்ட மைதானத்திலே சிறுகச் சிறுக காலடியெடுத்து வைத்து விளையாடுகிறவர்களும், பிரசங்க மேடை களில் வளைத்து வளைத்து, நீட்டி நீட்டிப் பேசுகிறவர்களும் எந்த நாட்டில் அதிகமாயிருக் கிறார்களோ அந்த நாட்டுக்கும் சுதந்திரத்துக்கும் வெகு தூரமென்று அறிஞர்கள் சொல்வார்கள். அப்படியே, எந்த நாட்டில் மனிதர்களை விடத் தலைவர்கள் அதிகமாயிருக்கிறார்களோ, எந்த நாட்டில் தலைவர்களைப் பின்பற்றுவோரைக் காட்டிலும் அவர்களைப் போற்றுவோர் பெரும் பான்மை யோரா யிருக்கிறார்களோ, எந்த நாட்டில் தேச பக்தியை விற்று அதற்குப் பதிலாகத் தெய்வ பக்தியை வாங்கிக் கொண்டு அதிலே ஒரு பெருமையையும் இன்பத்தையும் ஜனங்கள் அடைகிறார்களோ அந்த நாட்டுக்கும் அடிமைத் தனத்துக்கும் வெகு நெருக்கம். அப்படி நெருங்கி யிருப்பதனால் உண்டாகக்கூடிய விளைவுகள் யாவை என்பதைக் கீழே வரிசைப்படுத்திக் காட்ட விரும்புகிறோம்:- 1. அந்த நாட்டின் வாழ்க்கைத் துறைகள் அனைத்திலும் பொதுவாக அடிமைப் பாசி படிந்திருக்கும். 2. அந்த நாட்டின் அகவாழ்வுக்கும் புறவாழ்வுக்கும் சம்பந்தமே இராது. அதாவது, அந்த நாட்டு ஜனங்களுடைய அக வாழ்வு வேறாகவும் புற வாழ்வு வேறாகவும் இருக்கும். வீட்டுக்கு ஒரு நியாயம், நாட்டுக்கு ஒரு நியாயம் என்கிற மாதிரியாகவே தங்க ளுடைய அன்றாட விவகாரங்களை அவர்கள் நடத்துவார்கள். 3. அவர்கள், அந்த அடிமை நாட்டு ஜனங்கள், சமுதாய நலன்களைக் காட்டிலும், தங்களுடைய நலனுக்கு அதிக முக்கியத் துவம் கொடுப்பார்கள். தவிர, சமுதாய விஷயங்களில் ஒருவித அசிரத்தை காட்டுவார்கள். 4. அவர்கள் வாய்ப்பந்தல் போட்டு அதன் நிழலிலே தூங்கிக் கொண்டிருப்பார்கள்; கர்ம க்ஷேத்திரத்தில் ஒரு க்ஷண நேரங்கூட நிமிர்ந்து நிற்கமாட்டார்கள். 5. அவர்கள் பெரும்பாலும் அறிவு உலகத்தில் சஞ்சரிக்க விரும்பு வார்கள்; இதய ஊற்றை எட்டிப் பார்ப்பதற்குக்கூடக் கூசுவார்கள். 6. அவர்கள், தங்களுடைய எதிர்காலக் கதவைத் திறப்பதற்கு இறந்தகாலச் சாவியைத் தேடிக் கொண்டிருப்பார்கள்; நிகழ் காலத்தைப் பற்றிக் கவலையே படமாட்டார்கள். 7. அவர்கள், பரலோக வாழ்க்கைக்காகத் தங்களுடைய இகலோக வாழ்க்கையை அர்ப்பணஞ் செய்து விடுவார்கள். காணற்கரிய கடவுளை, கண்மூடிக் கொண்டு காண்பதிலே தங்கள் முயற்சிகளை யெல்லாம் செலவழிப்பார்கள். ஆனால் தங்கள் பக்கத்திலேயே நடமாடிக் கொண்டிருக்கும் கண் கண்ட தெய்வங் களை கண்ணெடுத்தும் பார்க்கமாட்டார்கள். 8. அவர்கள், உருவத்தை வழிபட்டுக் கொண்டே உயிரை விட்டு விடுவார்கள் - ஆம்; உருவத்திலுள்ள உயிரையும் தங்களுடைய உயிரையும். 9. அவர்கள் எண்ணுகிற எண்ணத்துக்கு மற்றவர்களின் மத்தியில் மதிப்பு இராது. அயலாரின் மதிப்பு ஒரு பக்கமிருக்கட்டும்; அவர் களுக்கே தங்களுடைய எண்ணத்தில் நம்பிக்கை இருப்ப தில்லை. உதாரணமாக சிலர் பேசுகிறபோது, நடுநடுவே நான் உண்மை யாகவே சொல்கிறேன்; சத்தியமாகவே பேசுகிறேன் என்பவை போன்ற பீடிகைகளைப் போட்டுக் கொண்டே பேசு கிறார்களல்லவா? இஃது எதைக் காட்டுகிறது? தன்னம்பிக்கை யில்லாமையை. அதாவது, தாங்கள் சொல்வது உண்மையோ இல்லையோ என்ற அவநம்பிக்கை அவர்களிடத்தில் அவர்களை யறியாமலேயே ஊறியிருப்பதால்தான், அவர்களுடைய சொல்லுக்கு அவர்களே, அவர்களையறியாமல் அத்தாட்சிப் பத்திரம் கொடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த மாதிரி தன்னம்பிக்கை யில்லா தவர்களுடைய எண்ணத்துக்கும், சொல்லுக்கும், செயலுக்கும் மற்றவர்கள் எப்படி மதிப்புக் கொடுப்பார்கள்? 10. அவர்கள், அந்த அடிமை நாட்டு ஜனங்கள், சிந்தனை செய்வது முதல் உணவுப் பொருளை வாயிலே கொண்டு வந்து ஊட்டுவது வரையில், யாவற்றையும் தங்களுக்காகப் பிறர் செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். 11. அவர்கள், தங்களுடைய சொந்த மதம், கலை, நாகரிகம், ஆசாரம் முதலியவற்றில் ஒருவித வெறுப்பையடைவார்கள்; அவை களிடத்திலே ஒருவித இழிவையும் காண்பார்கள். அது காரணமாக, அவர்களுடைய உணவு, உடை, நடை, பார்வை, பேச்சு முதலிய எல்லாவற்றிலும் அந்நிய நாகரிகத்தின் சாயல் படிந்து விடுகிறது. இப்படி அந்நிய நாகரிகச் சாயலின் கீழ் அவர்களுடைய வாழ்க்கை நடைபெறுவதனால், அவர்கள் தங்கள் தாய்நாட்டிலேயே அந்நியர் களாயிருப்பார்கள்; தங்கள் தாய்மொழிக்கும் அந்நியர்களா யிருப்பார்கள்; பொதுவாக, தங்கள் நாகரிகத்துக்கே அந்நியர் களாயிருப்பார்கள். 12. அவர்கள் அனுபவிக்கிற சந்தோஷம், சுகசௌக்கியம் முதலியன எல்லாம் மனிதனுடைய கீழான இச்சைகள் பூர்த்தி யடைவதனா லுண்டாகிற சந்தோஷமாகவும், சுக சௌக்கியமாகவுமே இருக்கும்; அவர்களிடத்தில் மறைந்திருக்கும் மனிதத் தன்மையை வளர்க்கக் கூடியனவா யிருக்கமாட்டா. 13. அவர்கள், ஒழுங்கு, ஒழுக்கம் என்ற இரண்டு வார்த்தை களையும் ஏட்டிலே படித்து இன்புறுவார்கள். 14. அவர்கள், தங்கள் அரசியல் விவகாரங்களையெல்லாம், அதிகார சக்தியோடு சமரஸம் செய்து கொள்கிற முறையிலேயே நடத்துவார்கள். 15. அவர்கள் அற்ப சந்தோஷிகளா யிருப்பார்கள். அதிகார சக்தியினால் அலட்சியமாக வீசி எறியப்படுகிற பட்டம், பதவி முதலிய துண்டு துணுக்குகளைப் பொறுக்கியெடுத்துக் கொள்வதிலே அவர்கள் பேரானந்தம் அடைவார்கள்; அதற்காகப் போட்டியும் போடுவார்கள். இப்படிப்பட்ட லட்சணங்களோடு கூடிய ஜனங்களை, மனிதர் களென்று அழைக்க முடியுமா? மனமும் மானமும் உள்ளவர் களல்லவோ மனிதர்கள்? எப்பொழுது சுதந்திரத்தை இழந்து விட்டார்களோ அப்பொழுதே அவர்கள் மானத்தையும் இழந்து விட்டார்கள். அப்படி யிருக்க, அவர்களை மனிதர்களென்று எப்படிச் சொல்வது? சுவாமி விவேகானந்தர் ஓரிடத்தில் பின் வருமாறு கதறினார்:- நான் மனிதர்களை உற்பத்தி செய்ய வேண்டும். ஏனென்றால், இந்தியாவில் தற்போது பெண்களும் பேடிகளுமே இருக்கிறார்களென்பது எனக்குத் தெரியும். இப்படிக் கூறியபோது அவர் உள்ளத்தில் எவ்வளவு ஆத்திரம் பொங்கியிருக்க வேண்டும்? ஆனால் துரதிருஷ்டவசமாக, அவருடைய கதறல் இன்னமும் நம்மிடையே எதிரொலி கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு தனி மனிதனுக்கோ அல்லது ஒரு ஜாதிக்கோ வாழ்வும் தாழ்வும் முறையே ஏற்படுவது சகஜம். (1) வாழ்கிறபோது, அந்த வாழ்வுக்கு எவ்வித பங்கமும் ஏற்படாமலிருக்க என்னென்ன பாதுகாப்புக்களைச்செய்து கொள்ள வேண்டுமோ அவைகளை யெல்லாம் அந்த மனிதனோ, ஜாதியோ செய்து கொள்ள வேண்டும். (2) அப்படியே, தாழ்வு ஏற்பட்டுவிட்ட காலத்தில், வாழ்வுக்கு வழிகோல வேண்டும். அப்படி வழிகோலுவதற்கு முன்னர், தங்களுடைய தாழ்வை உணர வேண்டும். அந்த உணர்ச்சி ஏற்பட்டு விட்டால், வாழ்வுக்கு நிச்சயம் வழி பிறக்கும். (3) ஆனால், தாழ்வையே வாழ்வாகக் கருதிக் கொண்டு விட்டால், அதில்தான் ஆபத்து இருக்கிறது. இவர்களையே அடிமை வாழ்வு நடத்துகிறவர் களென்று நாம் கூறுகிறோம். அடிமை வாழ்வு என்ற சொற்றொடரே முரண்பட்ட தாயிருக் கிறதே; அடிமைத்தனத்துக்கும் வாழ்வுக்கும் சம்பந்தம் இல்லையே. அடிமைகளாயிருக்கிறவர்கள், வாழ்கிறார்களென்று எப்படிச் சொல்ல முடியும்? உயிரோடிருக்கிறார்களென்று தான் சொல்ல வேண்டும். வாழ்தல் வேறே, உயிரோடிருத்தல் வேறே யல்லவா? என்று நண்பர்கள் கேட்கலாம். உண்மை. ஆனால், மேலே சொன்ன மூன்றாவது பிரிவினர், தங்களுடைய அடிமைத் தனத்தையே விடுதலை நிலையாகக் கருதிக்கொண்டு மயங்கிக் கிடக்கிறார்கள். இந்த மயக்கமே அவர்களுக்கு வாழ்வாயிருக்கிறது. தர்க்க ரீதியாகப் பார்த்தாலும் சரி, சட்ட ரீதியாகப் பார்த்தாலும் சரி, அவர் களென்னவோ அடிமைகள் தான். வாழ்வு என்பதற்கு என்ன அர்த்தம் உண்டோ அந்த அர்த்தத்தில் அவர்களுக்கு வாழ்க்கை யென்பது இல்லைதான். ஆனால், வாழ்வல்லாததை அவர்கள் வாழ்வாகக் கொண்டு மயங்கியிருப்பதை எடுத்துக் காட்டு வதற்குத்தான், அவர்களுடைய நிலையை, பரிகாச தோரணையில் ஆச்சரியக்குறியிட்டு அடிமை வாழ்வு ! என்ற சொற்றொடரால் சுட்டிக்காட்டுகிறோம். இந்த அடிமை வாழ்வு நடத்துகிறவர்களுடைய நிலை மிகவும் பரிதபிக்கத் தக்கது. இவர்கள், தங்களுடைய சுய நிலையை உணர முடியாதவர்களாயிருக்கிறார்கள். இவர்களுடைய தேவை இவர் களுக்கே தெரிவதில்லை. தாங்கள் இன்னது செய்கிறோமென்று தெரியாமலே இவர்கள் தங்கள் விவகாரங்களை நடத்துகிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு சிறிய சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு காரியாலயத்தில் எஜமானன் ஒருவனும், குமாதாக்கள் பலரும் இருந்தார்கள். இந்தக் குமாதாக்களில் ஒருவன் மகா தீவிரவாதி. எப்பொழுதும் சுதேசியம் என்றும், சுதந்திரம் என்றும் பேசுவான். யாருக்கும் அடங்கி நடக்கக் கூடாதென்றும், எஜமானனுக்கு முன்னே பல்லிளிப்பது, அவன் வந்தால் எழுந்து நிற்பது, அவனை முகதுதி செய்வது இவை யெல்லாம் மிகக் கேவலமென்றும் ஆரவாரம் செய்வான். இப்படி யிருக்கையில், ஒரு நாள் பகல், ஏதோ தகவல் கேட்டுக் கொண்டு போவதற்காக எஜமானன், இவன் வேலை செய்து கொண்டிருந்த மேஜை யினருகில் வந்தான். உடனே இவன், குட்மார்னிங் ஸார் என்று சொல்லிக் கொண்டே எழுந்து நின்றான். ‘ஏது இவ்வளவு பெரிய மனது பண்ணி என் மேஜையினருகில் வந்து விட்டீர்களே! என்ற கேள்விக் குறிப்புத் தோன்ற பல்லையும் இளித்தான். இவைகளை யெல்லாம் கவனிக்கிறானா எஜமானன்? தகவலைக் கேட்டுக் கொண்டு போய்விட்டான். உடனே பக்கத்திலிருந்த குமாதாக்கள், இந்தத் தீவிரவாதியைப் பிடித்துக் கொண்டார்கள். என்ன, எங்களெல்லோரையும் உருட்டி மிரட்டிக் கொண்டிருந்தீர்களே ! நீங்கள் மட்டும் எஜமானன் வந்ததும் எழுந்து நிற்கிறீர்கள்; பல்லிளிக்கிறீர்கள். இப்படிச் செய்யலாமா? என்று கேட்டார்கள். எஜமானனைக் கண்டதும் எனக்குத் தெரியாமலே என் கால்கள் எழுந்து நிற்கின்றன. என் பற்கள் முன்னணிக்கு வருகின்றன. நான் என்ன செய்யட்டும்? என்றானாம் அந்தத் தீவிரவாதி. அதாவது தாங்கள் இன்னது செய்கிறோ மென்பது தெரியாமலே, ஓர் அடிமை ஜாதியினர் தங்கள் காரியங்களைச் செய்கிறார்கள் என்பதற்கு இது நல்ல உதாரணமில்லையா?ஓர் அடிமை ஜாதி, தன்னுடைய சொந்தப் பாதுகாப்புக்காக, அதாவது மற்றவர்களுடைய உபத்திரவம் ஒன்றுமில்லாமல் தான் நிம்மதியாக இருக்க வேண்டு மென்பதற்காக, தனது சொந்த க்ஷேமத்துக்காக, எதையும் இழந்துவிடத் தயாரா யிருக்கிறது; எல்லாவற்றையும் இழந்து விடுகிறது. இப்படி எல்லாவற்றையும் இழந்து விட்டாலும் இது க்ஷேமமா யிருக்கிறதா என்று பார்த்தால் அப்படியுமில்லை. சரி, நிம்மதியாவது இதற்குண்டா? அதுவுமில்லை. யாரொருவர் தங்களுடைய நிகழ்காலப் பாதுகாப்புக்காகச் சுதந்திரத்தை விட்டுக் கொடுத்து விடுகிறார்களோ அவர்கள் சுதந்திரத்துக்கும் உரியவர்களல்லர்; பாதுகாப்புக்கும் உரியவர்களல்லர் என்பது பெஞ்சமின் பிராங்க்லின்1 என்னும் அமெரிக்க அறிஞனுடைய சித்தாந்தம். அடிமைத்தனத்துக்கும் அச்சத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அடிமையாயிருக்கும் ஒருவன், ஒரு கண நேரமெனும் நிர்ப்பயமாயிருக்க முடியுமா? இருக்கவே முடியாது. ஏனென்றால், தான் யாருக்கு அடிமை யாயிருக்கிறானோ அவனுடைய, அந்த எஜமானனுடைய அதிகார ஆதிக்க நிழலில் இவனுடைய வாழ்வு நடைபெறுகிறது. சுயமாக இவன் ஒன்றையும் செய்ய முடியாது. எஜமானனுடைய தயவை எதிர்பார்த்து, எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டியிருக்கிறது. எங்கே அந்தத் தயவு குறைந்து விடுமோ என்ற அச்சத்தை முன்னிலைப்படுத்திக் கொண்டுதான், இவன் தன்னுடைய சகல விவகாரங்களையும் நடத்து கிறான். அது மட்டுமல்லாமல், அந்த எஜமானனுடைய தயவு, தன் விஷயத்தில் இன்னும் அதிகமாக விருத்தியடைய வேண்டுமென்பதற் காகவும் இவன் பாடுபடுகிறான். இதன் பொருட்டு, இவன் தனது அறிவு, ஆத்மா, உடைமை ஆகிய அனைத்தையும். அதாவது தன்னுடைய சர்வத்தையும், அந்த எஜமானனுடைய திருவடிகளில் சமர்ப்பணம் செய்து விடுகிறான். இதற்குப் பதிலாக, அந்த எஜமானனுடைய பாதுகாப்பு ஒன்றை மட்டும் பெறுகிறான். சரி, இந்தப் பாதுகாப்பைப் பெற்றுவிட்ட பிறகாவது இவன் நிம்மதியுடன் வாழ முடிகிறதா? இல்லை. ஏனென்றால், எப்பொழுது பிறருடைய பாதுகாப்பிலே வாழத் தொடங்கிவிட்டானோ அப்பொழுதே இவன் தற்காத்துக் கொள்ளும் சக்தியை இழந்துவிட்டான். சுயமுயற்சி, சுய சிந்தனை, சுய பலம் ஆகிய எல்லாம் இவனுக்குப் புறம்பான பொருள்களாகி விட்டன; அர்த்தம் விளங்காத வார்த்தைகளாகி விட்டன. இதனால் பிறருடைய பலத்திலே தான் இவன், தன் வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கிறது. தனக்குச் சொந்த பலம் இல்லையே யென்று இவன் வருத்தப்படுவதில்லை. தன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் எஜமானனுடைய பலம் குறைந்துவிடப் போகிறதே யென்று தான் இவன் கவலைப்படுகிறான். அது குறையாமலிருக்கும் பொருட்டு, தன் சக்தியனைத்தையும் செலவழிக்கிறான். அவனுடைய க்ஷேமத்துக்காக, தன்னுடைய க்ஷேமத்தைப் பலி கொடுத்து விடுகிறான். அதாவது, இவன் தன்னுடைய தனித் தன்மையை, பௌருஷத்தை, சுய மரியாதையை இழந்துவிட்டவனாகிறான். இவனுக்கு முகம் இருக்கும்; ஆனால் அதில் ஜீவகளை இராது. உடல் இருக்கும்; ஆனால் அதில் உணர்ச்சி இராது. இவனுடைய இதயம், பாலைவனம். இவனுடைய மூளை, விஷயத் துணுக்குகள் நிறைந்த குப்பைக் கூடை. இவனுடைய ஆத்மா - ஓ ! அஃது இவனிடத்தில் எங்கேயிருக்கிறது? - இப்படிப்பட்டவன், அகத்திலே நிம்மதியுடனும் புறத்திலே க்ஷேமமாகவும் இருக்க முடியுமா? உலகத்திலே இரண்டு விதமான சக்திகள் உண்டு. ஒன்று சுதந்திர சக்தி; மற்றொன்று அதிகார சக்தி. முன்னது இயற்கையானது; பின்னது செயற்கையானது. இந்த இரண்டு சக்திகளும், எதிருக்கெதிர்க் கட்சிகளாக நின்று கொண்டு, உலகம் தோன்றிய காலம் முதல் சதா சர்வ காலமும் போராடிக் கொண்டு வந்திருப்பதைச் சரித்திரம் நமக்கு நிரூபித்துக் காட்டுகிறது. ஏன், சரித்திரமே இந்தப் போராட்டந்தான். அதிகார சக்தி, இயற்கைக்கு விரோதமான சக்தியானதால், அதனிடத்தில் இயற்கைக்கு விரோதமான சுபாவங்கள் குடி கொண்டிருக்கின்றன. தான் சுக சௌக்கியத் துடன் இருக்க வேண்டுமென்பதற்காக, அஃது, இயற்கைக்கு விரோத மான முறைகளையே கையாள்கிறது. சுதந்திர சக்திக்கு எப்படி இயற்கை யான சில உரிமைகள் உண்டோ அப்படியே, அதிகார சக்திக்குச் செயற்கை யான சில சலுகைகள் உண்டு. இந்த சலுகைகளைக் கொண்டுதான் அது வாழ்கிறது; பிறரை அடக்கியாள்கிறது. தான் அனுபவித்து வரும் சலுகைகள், இயற்கைக்கு விரோதமானவை, அநியாயமானவை என்பதை அது, தன் அறிவினால் மட்டும் தெரிந்து கொண்டிருக்கிறது; ஆனால் உணர்வதில்லை. உணரும் சக்தி அதற்கு இல்லை. ஏனென்றால், அதற்கு இதயமில்லை. இதயம் என்ற உறுப்பு இருக்கலாம். ஆனால் அது கற்பாறைபோல் கடினமாயிருக்கிறது. அதிகார சக்தி இருக்கிறதே, அது சுபாவத்திலேயே மகா கடினமானது என்கிறான் ஒரு மேனாட்டு அறிஞன். அந்த அதிகார சக்தியானது. செயற்கையான சலுகைகளை அனுபவித்துக் கொண்டு வருவதன் காரணமாக. அதனிடத்தில் செயற்கைச் சுபாவமான அச்சம் குடி கொண்டிருக்கிறது. எந்த இடத்தில் சலுகை இருக்கிறதோ அந்த இடத்தில் அச்சம் இருக்கிறது. அநியாயக்காரன் சதா அச்சத்துடன் வாழ்வதை நாம் பார்க்கிறோ மில்லையா? அச்சம் என்பது சலுகையின் குழந்தை என்கிறான் ஹாரோல்ட் லாக்கி1 என்னும் ஆங்கில அறிஞன். இப்படி அச்சத்துடன் வாழ்கிற அதிகார சக்தியானது, தான் நிலைத்து வாழும் பொருட்டு, பிறரை எப்பொழுதும் பயமுறுத்திக் கொண்டே யிருக்கவேண்டி யிருக்கிறது. சிறப்பாக, தன் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்களிடத்தில், தன்னைப் பற்றிய ஒரு பிரமிப்பை உண்டுபண்ணி, அந்த பிரமிப்பையே அவர்களுடைய பலவீனமாக்கி, அந்தப் பல வீனத்தையே தன்னுடைய பலமாகக் கொண்டு வாழ்கிறது. எப்பொழுதுமே அதிகார சக்திக்குச் சுயபலம் கிடையாது. பிறருடைய பலவீனந்தான் அதனுடைய பலம்; பிறருடைய அச்சந்தான் அதனுடைய அஞ்சாமை. எனவே, ஓர் அடிமை ஜாதி, எதுவரையில் மற்றோர் அதிகார சக்தியின் ஆதிக்கத்துக்கு இடங் கொடுத்துக் கொண்டிருக்கிறதோ அது வரையில் அந்த ஜாதி பலவீனமாகத் தான் இருக்கமுடியும்; அச்சத்துடன்தான் வாழ முடியும். அடிமைத் தனத்திலிருந்து அச்சத்தை வேறு பிரிக்க முடியுமா? அச்சத்துடனிருப்பதனால்தான், அது மற்றொருவருடைய ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறது; அடிமைத் தனத்தைச் சகித்துக் கொண்டிருக் கிறது. தவிர, அதிகார சக்திக்கு மற்றொரு விதமான அச்சமும் உண்டு; அதாவது, தான் எந்த நிமிஷத்திலும், பிறரால் தாக்கப்படலாமென்ற அச்சத்துடனேயே அது வாழ்கிறது. ஏனென்றால் எதிர்ப்பு ஏற்படுகிற போது, அதிகார சக்தியின் பலவீனம் நன்றாகப் புலப்படும்; அதன் கோழைத் தனம் வெளியாகும். இந்தப் பலவீனம் தோன்றும் காலத்தில், அது பல்லைக் கடிக்கிறது; கண்ணை உருட்டுகிறது; உடம்பை அலங்கோலமாக ஆட்டிக் கொள்கிறது. இந்த மாதிரியான அனுபவங்களெல்லாம் தனக்கு ஏற்படக் கூடாதென்பதற்காகவும், தன்னுடைய பலவீனமும் கோழைத்தனமும் வெளியில் தெரியக்கூடாதென்பதற்காகவும், அஃது, அந்த அதிகார சக்தி, தனக்கு எதிர்ப்பு இருக்கக்கூடாதென்று பார்க்கிறது. இந்த எதிர்ப்பு இல்லாம லிருக்க, என்னென்னவோ முறைகளையெல்லாம் கையாள்கிறது. மண்டியிட வேண்டிய இடத்திலே மண்டியிட்டும், மிரட்ட வேண்டிய இடத்திலே மிரட்டியும் தன் காரியத்தைச் சாதிக்கிறது. ஆனாலும், உள்ளூர அச்சம் மட்டும் அதற்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது. எந்த நிமிஷத்திலும், யாரிடமிருந்தும், தனக்கு எதிர்ப்பு கிளம்பலாமென்ற அச்சம் அதை விட்டகல்வதில்லை. ஏனென்றால், மற்றவர்களுடைய துன்பத்தின் மீதுதான், தன் இன்பக்கோட்டை கட்டப்பட்டிருக்கிற தென்பதையும், நாசூக்காகத் தட்டினால்கூட அஃது இடிந்து விழும் பலவீனமுடைய தென்பதையும் அது தெரிந்து கொண்டிருக்கிறது. இப்படி அச்சத்தோடு வாழ்கிற அதிகார சக்தி, யாரையும் நம்புவதில்லை; நம்பவும் முடியாது. அதனுடைய நிலைமை அப்படி. நம்பிக்கையோடு அது வாழவே முடியாது. பிறர்மீது கொண்ட அவநம்பிக்கையினால்தான், அது தனக்கென விசேஷமான சில சலுகைகளைக் கோருகிறது. அந்தச் சலுகைகளைக் கொண்டு தனது அதிகார பீடத்துக்கு அரண் செய்து கொள்கிறது. அப்படி அரண் செய்து கொண்டு தான் பிறர்மீது தனது ஆதிக்கத்தைத் திணிக்கிறது. தான் யார்மீது ஆதிக்கம் செலுத்துகிறதோ அவர்கள் மீதும், இந்த அதிகார சக்திக்கு நம்பிக்கை கிடையாது. அவர்களை எப்பொழுதும் சந்தேகப் பார்வை யுடனேயே பார்க்கிறது. அவர்கள் செய்கிற ஒவ்வொரு நியாயமான காரியத்திலும் ஏதோ சூழ்ச்சியிருப்பதாக மருள்கிறது. அச்சம், அச்சத்தை உண்டாக்குகிறது; அவநம்பிக்கை அவநம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது. அச்சமும், அவநம்பிக்கையும் தொற்று வியாதிகள் மாதிரி. எனவே, ஆள்வோருடைய அச்சமும் அவநம்பிக்கையும் ஆளப்படுவோரையும் பிடித்து விடுகின்றன. இதனால், ஆள்வோருக்கும் ஆளப்படுவோர்க்கு மிடையில், அதாவது, அதிகார சக்திக்கும் சுதந்திர சக்திக்கும் மத்தியில், பரபர அச்சமும் அவநம்பிக்கையும் குடி கொண்டிருப்பதை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு யுகத்திலும் நாம் பார்த்து வருகிறோம். அச்சமும் அவநம்பிக்கையும் சேர்ந்த இடத்தில் துரோகம் பிறக்கிறது. அடிமைச் சேற்றிலே விழுந்து கிடக்கும் நாடுகளில் துரோகச் செயல்கள் மலிந்து கிடப்பதற்கு இதுதான் காரணம். இந்தத் துரோகச் செயல்களைப் புரிவோர் தாங்கள் இன்னது செய்கிறோமென்று தெரியாமலே செய்கிறார்கள். இவர்களை அதிகார சக்தியானது, தனக்குச் சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்கிறது. பொதுஜன மதிப்புப் பெறாத பட்டம், அதிகாரமில்லாத பதவி முதலியவைகளை இவர்களுக்குக் கொடுத்து இவர்களுடைய மனம், மானம், உரிமை முதலியவனவற்றை, தான் வாங்கிக் கொள்கிறது; இதன் மூலமாக, இவர்களை ஒழுக்கவீனர் களாக்கி விடுகிறது. ஒழுக்கமில்லாத மனிதன், எல்லாவிதமான துர்க்குணங்களுக்கும் இருப்பிடம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நாட்டில் பெருகுவார்களானால், அந்த நாட்டுக்கு விமோசனம் ஏது? அடிமை வாழ்வு நடத்துகிறவர்கள், செயற்கை வாழ்வு நடத்து கிறவர்கள். அவர்களால் இயற்கையை அனுபவிக்க முடியாது. இயற்கையிலே இன்பம் இருக்கிறதென்று அவர்களுக்குத் தெரியவும் தெரியாது. இயற்கையின் மீது மனத்தைச் செலுத்த முடியாதவர்கள், தாங்கள் மனிதர்கள், தங்களிடத்தில் மனிதத்தன்மை உண்டு என்பதை அறியாமலே, உலக விவகாரங்களை நடத்துவார்கள். அவர்களால் உண்மையை அறிய முடியாது; அழகைப் பருக முடியாது; இன்பத்தை அனுபவிக்க முடியாது. அப்படிப் பட்டவர்களிடத்தில், அச்சம், கோழைத் தனம், பகைமை, பொறாமை, தன்னம்பிக்கையின்மை, ஒழுக்கமின்மை முதலிய கீழான சுபாவங்களெல்லாம் ஒன்று திரண்டிருப்பதில் என்ன ஆச்சரியமிருக்கிறது? அடிமைவாழ்வு நடத்துகிறவர்கள் வசிக்கிற இடத்தை நாடு என்று சொல்ல முடியுமா? முடியவே முடியாது. நாடு என்று சொன்னால், மண்ணையும், மலையையும், ஆற்றையும், காட்டையும் குறிப்பதல்ல. அந்த மண்ணிலும் மலையிலும் ஆற்றிலும், காட்டிலும் வசிக்கிற மனிதர்களின் உள்ளக் கிடக்கையை, வாழ்க்கை நிலையை, பிரதிபலித்துக் காட்டுவது எதுவோ அதுதான் நாடு. அதாவது, சுருக்கமாகச் சொல்லப் பேனால், சுதந்திர புருஷர்கள் வசிக்கிற இடந்தான் நாடு. நாடு என்று அழைக்கப் படுவதற்கு அதுதான் தகுதியுடையது. எந்த இடத்தில் சுதந்திரம் இருக்கிறதோ அந்த இடந்தான் எனது நாடு என்கிறான். ஆங்கிலக் கவிஞனாகிய மில்ட்டன்1. நல்ல பண்பட்ட நாடு என்று ஒரு தேசத்தைப் பார்த்துச் சொல்கிறார்கள். அந்த நாட்டின் செழுமையான மண்ணைப் பார்த்து அப்படிச் சொல்கிறார்களா? இல்லை, இல்லை. அந்த நாட்டு ஜனங்கள் எவ்வளவு தூரம் சுதந்திரம் அடைந்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத் தான் சொல்கிறார்கள் என்கிறான் பிரெஞ்சு அறிஞனாகிய மாண்டெக்கு.2 எனவே ஒரு நாட்டுக்குரிய லட்சணம், சுதந்திரத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்பது பெறப்படுகிறது. ஓர் அடிமை நாட்டை, சவக்குழியோடு ஒப்பிட்டுப் பேசு கிறான் தற்காலப் புலவனொருவன். இவன், தனது தாய் நாட்டின் பரிதாப நிலையைப் பார்த்து, மனம் வெதும்பிப்போய் இப்படிச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், இத்தாலிய அறிஞனாகிய மாஜினி3 வீணர்களும் வம்பர்களும் நிறைந்துள்ள ஒரு நாட்டைக் காட்டிலும், மகான்களைக் கொண்ட ஒரு சவக்குழிக்கு அதிகமான ஜீவகளை இருக்கிறதல்லவா? என்று கேட்கிறான். 5. கடமையும் உரிமையும் கடமையும் உரிமையும் கொடியும் கொழுகொம்பும் மாதிரி. கடமையின்றி உரிமை இல்லை; உரிமையோடு ஒட்டியிருப்பது கடமை. கடமை, அதிவாரம்; உரிமை, அதன்மீது எழும்புகிற கட்டடம். கடமையைச் செய்யாமல் உரிமையை மட்டும் அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப் படுகிறவன், பசுவின் போஷணைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டு அதன் பாலை மட்டும் கறந்து குடிக்க வேண்டுமென்று ஆசைப்படு கிறவன். கடமையை அறிந்தவர்கள்தான், உரிமையின் பெருமையை உணர முடியும். அப்படிப்பட்டவர்கள் அந்த உரிமைக்குப் பங்கம் நேரிடுகிற காலத்தில் அதனைக் காப்பாற்றும் பொருட்டு, பங்கம் விளைவிக்கிற சக்திகளை எதிர்த்துப் போராடுவது தங்கள் கடமையென்று கொள்கிறார்கள். உரிமையைப் பெறுவதற்காகவோ, பெற்ற உரிமையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவோ போராடுவது கடமை. அந்தக் கடமையைச் செய்யா மலிருப்பது கோழைத்தனம் மட்டுமல்ல; பெரிய குற்றமுமாகும். கடமை யென்பதை நாம் மேலெழுந்த வாரியாகப் பார்க்கிற போது, அஃது ஒரு சாதாரண சொல்லாகவே தென்படுகிறது. கருமம், காரியம், செயல், வினை என்ற சொற்களைப் போல அதுவும் ஒரு சொல்லென்று மதித்து லேசாகச் சொல்லிச் சீக்கிரமாக மறந்து விடுகிறோம். ஆனால், அந்தக் கடமை என்ற வார்த்தைக்குள் நமது அறிவைச் சிறிது செலுத்திப் பார்த்தோமானால், அது நம்மைச் சந்தேகம் என்னும் காட்டுக்குள் அழைத்துக் கொண்டு போய்விடும். வழி தெரியாமல் சிக்கிக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் விடுதலைக்கு வழியுண்டு. எப்படி? கடன் என்பதும் கடமை என்பதும் ஒன்றே. ஒருவரிடமிருந்து ஒருபொருளைப் பெற்றுக்கொள்வோமானால், அதைக் கடன் என்று சொல்கிறோமில்லை. பெற்ற பொருளைத் திருப்பிக் கொடுக்கிற பொறுப்பு அதில் சம்பந்தப்பட்டிருக்கிற காலத்தில்தான் அதனைக் கடன் என்று சொல்கிறோம். அந்தப் பொறுப்பை நாம் நிறைவேற்றா விட்டால், அது குற்றம்; தண்டனைக்குரிய குற்றம். எந்த ஒரு மனிதனும் சமுதாயத்தினின்று பிரிந்து தனியாக வாழ முடியாது. அது வாழ்வும் ஆகாது. சமுதாயத்தின் மத்தியில் பிறந்த மனிதன் சமுதாயத்தின் ஆதரவு பெற்றே வளர்ச்சி யடைகிறான்; வாழ்கிறான். அவனுடைய அன்றாட வாழ்க்கையின் ஒவ்வோர் அமிசத்திலும் சமுதாயத்தின் உதவி கலந்து நிற்கிறது. அதாவது, பிரதியொரு மனிதனும், தன்னுடைய வளர்ச்சிக்காகச் சமுதாயத்தின் துணையைக் கடனாகப் பெறுகிறான். அதனை அவன் சமுதாயத்துக்கே திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமல்லவா? எப்படிக் கொடுப்பது? சமுதாயத்துக்குத் தொண்டு செய்து, அப்பொழுதுதான் அவன் சமுதாயத்தினின்று பெற்ற கடனைத் தீர்த்தவனாகிறான். அப்படிச் செய்யா விட்டால், அவன், தன் பொறுப்பை உணரவில்லை என்று அர்த்தம். அவன் கடனாளியாகவே காலத்தைக் கழித்துவிட்டுச் சாகிறான். கடனாளிக்குச் சமுதாயத்தில் மதிப்பு இருக்குமா? வாங்கின கடனைத் திருப்பிக் கொடாவிட்டால் அவமானம்; கொடுத்தால் அது விசேஷமில்லை. எனவே சமுதாயத்துக்குத் தொண்டு செய்கிறவன். விசேஷமான ஒரு காரியத்தைச் செய்துவிடவில்லை; எதைச் செய்யவேண்டுமோ, எதைச் செய்யா விட்டால் குற்றமோ, அதையே செய்கிறான். அஃது அவன் கடமை. இந்தக் கடமையோடு பொறுப்பும் சேர்ந்திருக்கிறது. தன்னுடைய பொறுப்பை உணர்ந்தல்லவோ அவன் சமுதாயத்திலிருந்து பெற்ற உதவியை, திரும்ப அதற்குத் தொண்டாக அளிக்கிறான்? அப்படிப் பொறுப்பு உணர்ந்து அந்தக் காரியத்தைச் செய்தால், அவன் நியாயமாக நடந்துகொண்டவனாகிறான். அவன் அநியாயமாக நடந்து கொள்ளக்கூடும்; அங்ஙனம் நடந்து கொள்ளாமல் நியாயமாக நடந்துகொள்கிறானே, அதுதான் அவனிடத்தில் காணப்படுகிற விசேஷம். அதாவது மனிதப் பிறவி தாங்கியவர்கள், சமுதாயப் பிராணி களாக வளர்ந்தவர்கள் செய்ய வேண்டிய கடமையை அவன் செய்கிறான். எப்படி உயிர் வாழ்வதற்குச் சாப்பிடுவது அவசியமோ அப்படியே சமுதாயத்தின் மத்தியில் தன் மதிப்புள்ள ஒரு புருஷனாக வாழ்வதற்குத் தொண்டு செய்வது அவசியம். இந்த அவசியத்தை அவன் உணர்ந்திருக்கிறான். அதுவரையில் அவனுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டியது தான். அதைத்தவிர அவனுக்கு விசேஷ மதிப்போ அந்ததோ கிடையாது. அவன், தன் சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதோடு, கூடவே சமுதாயத்தின் தேவைகளையும் கவனிக்கிறான். ஒழிவு நேரங்களில் ஓய்வு கொள்ளாமல் அல்லது வீணாகப் பொழுதைக் கழிக்காமல், தன்னாலியன்ற வரை, தன் சக்திக்கும் திறமைக்கும் ஏற்றவாறு ஏதோ ஒரு வகைச் சமுதாய சேவையில் ஈடுபடுகிறான். இன்னும் சிலர் இருக்கிறார்கள், லட்சத்துக்கு ஒருவர் அல்லது இருவர். இவர்கள், சமுதாயத்திலிருந்து பெற்ற கடனைத் திருப்பிக் கொடுத்துவிடுவதோடு திருப்தியடைவதில்லை. எந்தச் சமுதாயம் தங்களை உண்டாக்கி, வளர்த்து, வாழ்வு நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறதோ அந்தச் சமுதாயத்துக்கே தங்களுடைய சர்வத்தையும் அர்ப்பணம் செய்துவிடுகிறார்கள். சமுதாயம் இல்லாவிட்டால் தாங்கள் இல்லையென்ற உணர்ச்சி இவர்களிடத்தில் மேலோங்கி நிற்கிறது. தங்களுடைய வளர்ச்சிக்காகவும் வாழ்வுக்காகவும் சமுதாயம் உதவி செய்ததே அதனை இவர்கள் பெரிதெனக் கருதுவதில்லை; தங்களை உண்டு பண்ணியதே அதனையே இவர்கள் முக்கியமாகக் கொள்கிறார்கள். எங்கிருந்து வந்தோமோ அங்கேயே போய்ச் சேர்ந்துவிடுவோம் என்பதே இவர்கள் நோக்கம். யார் சிருஷ்டிக்கிறார்களோ அவர்களுக்கு அணைக்கவும் உரிமை உண்டு, அழிக்கவும் உரிமை உண்டு என்கிற நியாயத்தை இவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். தங்களை அழித்துக் கொண்டு சமுதாயத்திலே ஒன்றுபட்டு விடுகிறார்கள். அதாவது, தாங்கள் வேறு, சமுதாயம் வேறு என்ற உணர்ச்சியே இவர்களுக்கு இல்லாமற் போய்விடுகிறது. சமுதாயத்தின் இன்ப துன்பங்கள் இவர்களுடைய இன்ப துன்பங்கள்; சமுதாயத்தின் நிறை குறைகள் இவர்களுடைய நிறை குறைகள். இவர்கள், சமுதாயத்திலே தங்களையும், தங்களிலே சமுதாயத்தையும் காண்கிறார்கள். இப்படிப்பட்டவர் களையே மகான்கள் என்றும் மகா புருஷர்கள் என்றும் போற்றுகிறோம். இவர்கள் தங்கள் காலத்தில் இறந்துவிடுகிறார்கள்; ஆனால் பிற்காலத்தில் வாழ்கிறார்கள். இனி, கடமையென்றால் என்ன என்பதைப்பற்றிக் கவனிப்போம்: 1. எந்தக் காரியத்தைச் செய்தால் மற்றவர்களுடைய துக்கம் தீருமோ, ஆனால் அவர்களுக்கச் சந்தோஷம் உண்டாகாதோ அது கடமையா? 2. எந்தக் காரியத்தைச் செய்தால் மற்றவர்களுடைய துக்கம் தீர்ந்து அவர்களுக்குச் சந்தோஷம் உண்டாகுமோ அது கடமையா? 3. எந்தக் காரியத்தைச் செய்தால் மற்றவர்களுக்குச் சந்தோஷத்தை அளிக்குமோ, ஆனால் அதே சமயத்தில் அவர்களுக்குத் தீமையையும் உண்டு பண்ணுமோ அது கடமையா? 4. எந்தக் காரியத்தைச் செய்தால் மற்றவர்களுக்குத் துக்கத்தை விளைவித்தாலும் அவர்களுக்கு நன்மையை உண்டு பண்ணுமோ அது கடமையா? (அதாவது, பிறருக்குச் சந்தோஷத்தை அளிப்பது பெரிதா, அல்லது நன்மையைச் செய்வது பெரிதா என்ற பிரச்னை இங்கே எழுகிறது) 5. பிறருடைய சுக துக்கங்களையோ நன்மை தீமைகளையோ கவனியாமல், எது சரியென்று நமக்குப் படுகிறதோ, எது மற்றவர் களுக்கு அனுகூலம் என்று நமக்குத் தோன்றுகிறதோ, அதாவது மனச்சாட்சிப்படி என்று சொல்கிறார்களே அதனைச் செய்தல் கடமையா? 6. சரியோ தவறோ, நமக்கு அல்லது மற்றவர்களுக்கு அனுகூலமோ பிரதிகூலமோ, எதைச் செய்தால் தான் நமக்கு ஒரு மன நிம்மதி ஏற்படுமோ அதைச் செய்வது கடமையா? இந்த மாதிரியான பல சந்தேகப் பிரச்னைகள், கடமை என்ற வார்த்தைக்குள் அடங்கியிருக்கின்றன. இவைகளைக் கண்டு யாரும் திகைப்படைதல் இயல்பு. வேதாந்த விசாரணையில் எது நித்தியம், எது அநித்தியம் என்று நிர்ணயிப்பது எப்படிக் கடினமான காரியமாகி விடுகிறதோ அதைப் போலவே, உலக விவகாரங்களை நடத்திக் கொண்டு போகிற விஷயத்திலும், எது கடமை, எது கடமை யல்லாதது என்பதை நிர்ணயிப்பதும் கடினமான பிரச்னையாகி விடுகிறது. இந்தச் சிக்கலி லிருந்து விடுதலை பெற வேண்டுமானால், மனிதன், தன் அறிவை மட்டும் அழைத்துக் கொண்டால் போதாது; இருதயத்தையும் கூட அழைத்துக் கொள்ள வேண்டும். அறிவும் இருதயமும் ஒன்று சேர்ந்திருப்பதே அரிது. அப்படி ஒன்று சேர்ந்திருந்தாலும், அந்தச் சேர்க்கையைக் கொண்டு உலக விவகாரங்களை நோக்குவது அதனின்று அரிது. அப்படி நோக்கினாலும், அந்த நோக்கை, செயலில் கொணர்வது மிக மிக அரிது. அப்படிப்பட்ட அரிய மனிதர்கள், மனச்சாட்சி என்ற ஒரு தராசிலேயே தங்களுடைய ஒவ்வொரு செயலையும் நிறுத்துப் பார்க்கிறார்கள். எது தங்களுக்குச் சரியென்று படுகிறதோ, அதாவது எதைச் செய்யுமாறு தங்களுடைய மனச்சாட்சி ஏவுகிறதோ, எதைச் செய்யாதிருந்தால் தங்களுடைய மனம் வேதனைப் பட்டு அழுகிப் போகுமோ, அறிவு கூர் மழுங்கிப் போகுமோ, அதையே இவர்கள் கடமையாகக் கொண்டு, கர்ம க்ஷேத்திரத்தில் துணிந்து இறங்குகிறார்கள். தங்கள் கடமையாகக் கொண்டு இவர்கள் செய்கிற காரியம் அனைத்தும் மற்றவர்களுக்கு நன்மை பயப்பதாயிருக்குமே தவிர, தீமையை உண்டு பண்ணுவதாயிராது. எல்லோரும் இன்புற்றிருக்கிற ஒரு நிலையையே லட்சியமாகக் கொண்டு இவர்கள் தங்கள் கடமையைச் செய்து கொண்டு போவார்கள். இவர்களுடைய மதியின் நுட்பத்தையும் உள்ளத்தின் ஆழத்தையும் அறியாதவர்கள் இவர்களைத் துன்புறுத்தலாம்; ஏச்சுப் பேச்சுக்களால் அலங்கரிக்கலாம். ஆனால் இவர்கள் எதனையும் லட்சியம் செய்யாமல் மானிட சமுதாயத்தைக் கைதூக்கி விடுவதாகிற ஒரு லட்சியத்தை நோக்கியே தங்கள் கடமையைச் செய்து கொண்டு போவார்கள். லெனினும் காந்தியடிகளும் இத்தகைய அறிவும் மனமும் கலந்த மகா புருஷர்கள். இவர்கள் மற்றவர்களுடைய உரிமைக்காகப் போராடு வதையே தங்கள் கடமையாகக் கொண்டவர்கள். அந்தக் கடமையைச் செய்து கொண்டு போவதில்தான் தங்கள் உரிமையைக் கண்டார்கள். எது சரியான கடமை, எது நியாயமான கடமை என்ற சந்தேகம் இவர்களுக்கு உதிக்கவேயில்லை. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றையும் இவர்கள் அறியார். அதனால் மற்றவர் களுடைய கோபதாபங்களையும், போற்றுதல் தூற்றுதல்களையும் அறியார். இவர்களுக்குக் கடமையின்றி உரிமை இல்லை; உரிமையைத் தவிர்த்த கடமையில்லை. உரிமை என்பது வேகமாகச் செல்கிற ஒரு மோட்டார் வண்டி. அதை நிதானமாகவும், ஒழுங்காகவும் செலுத்திக் கொண்டு போகிற மோட்டார் ஓட்டி, கடமை. பிறருக்குப் பாதகம் உண்டாகாமல், தன் இஷ்டப்படி காரியங் களைச் செய்துக் கொண்டு போவதற்குத்தான் உரிமை என்று பெயர். இந்த வரம்பை மீறிக் கொண்டாடப் படுகிற உரிமைகளைத் தகைவது கடமை. இப்படித் தடுக்கிற கடமையைச் செய்கிறவர்கள், உரிமைக்குப் பங்கம் விளைவிக்கிறார்கள் என்று சொல்வது அர்த்தமில்லாத வார்த்தை. தெருவிலே தாராளமாக நடந்து செல்ல எனக்கு உரிமை உண்டு. ஆனால், மற்றவர்களுடைய நடமாட்டத்துக்கு இடைஞ்சல் இல்லாதபடி நான் செல்ல வேண்டும். இதற்காகத் தெருவின் மத்தியில் நடக்கக்கூடாதென்று தடுக்கப் பட்டு, இடப்பக்கமாகவே செல்ல வேண்டுமென்று கட்டளை இடப் படுவேனாகில் அதற்கு இணங்கி நடப்பது என் கடமை. அஃது, அதாவது இடப் பக்கமாகத்தான் நடக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தப் படுவது, என் உரிமைக்குப் பங்கம் விளைவித்தது ஆகாது. இன்னும் பெரும்பாலோருடைய நன்மைக்காக, அல்லது சமுதாயத்தின் வளர்ச்சி, க்ஷேமம் இவைகளுக்காக நமது உரிமையின் சில அமிசங்களை விட்டுக் கொடுப்பதும் நமது கடமை. உதாரண மாக, என் பிள்ளைகளை எப்படி வேண்டுமானாலும் வளர்க்கவோ, படிப்பிக்கவோ, அல்லது எழுத்து வாசனை யில்லாதவர்களாகவே வைத்திருக்கவோ எனக்குப் பூரண உரிமை உண்டு. ஆனால் அரசாங்கத்தார், கட்டாயக் கல்வி முறையை அனுஷ்டானத்துக்குக் கொண்டுவருவார்களானால், அந்தக் கட்டாயத்துக்கு இணங்குவது என் கடமை. என் உரிமைக்குப் பங்கம் ஏற்பட்டு விட்டதே என்று நான் அரசாங்கத்துடன் போராடலாமா? அப்படிப் போராடுவது குற்றம். எப்படி மேலே கடமையைச் செய்யாமலிருந்தது குற்றமோ அப்படியே இங்கு உரிமையை விட்டுக் கொடாமலிருப்பதும் குற்றம். அங்கே உரிமைக்காகப் போராடுவது கடமை; இங்கே உரிமையை விட்டுக் கொடுப்பது கடமை. எனவே, கடமையும் உரிமையும் ஒன்றை யொன்று தழுவிக் கொண்டே செல்கிற இரண்டு தனிப்பட்ட சக்திகள் என்பது பெறப்படுகிறது. 6. உரிமை இருவகை நான்கு பேராக ஒன்று சேர்ந்து வாழும் சுபாவம், மனிதனுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கிறது. இந்த சுபாவமில்லாதவன், அரிட்டாட்டல் கூறுகிற மாதிரி, ஒன்று கடவுளாகவாவது இருக்க வேண்டும்; அல்லது மிருகமாகவாவது இருக்கவேண்டும். சேர்ந்து வாழ்கிற இந்தச் சுபாவம் மனிதனுக்கு இயற்கையாகவே அமைந் திருக்கிறதனால்தான் அவன். ஒரு சமுதாயப் பிராணியென்றும், அரசியல் வியக்தி யென்றும் அழைக்கப்படுகிறான். இங்ஙனம் சமுதாயப் பிராணி யாக அல்லது அரசியல் வியக்தியாக இருப்பதற்கு அனுகூல மாகவே அவனுக்குப் பகுத்தறிவு என்பது அளிக்கப்பட்டிருக்கிறது. மனிதனுக்கும் மிருகத்துக்குமுள்ள வித்தியாசம் என்ன வென்றால், மனிதனுக்குப் பகுத்தறிவு உண்டு; ஆனால் தேக பலமில்லை. மிருகத்துக்குத் தேக பலம் உண்டு; ஆனால் பகுத்தறிவு இல்லை. மனிதன், தன் பகுத்தறிவைக் கொண்டு தன் பலவீனத்தைச் சமாளித்துக் கொள் கிறான். எப்படி? நான்கு பேரோடு சேர்ந்து வாழச் சம்மதிக்கிறான். அவனுடைய பகுத்தறிவு, அவனுடைய சமுதாய வாழ்வுக்குத் துணை செய்கிறது. தாமஅக்வினா1 என்ற அறிஞன் பின்வருமாறு கூறுகிறான் : பகுத்தறிவைக் கொண்டும், பலர் சேர்ந்து உழைக்கிற உழைப்பின் மூலமாகவும், எவை எவை உபயோக முள்ளவை. எவை எவை தீமை பயப்பவை, மானிட வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதெப்படி என்பவைகளை நாம் தெரிந்துகொள்ள முடியும். அவரவரும் தங்களுடைய விசேஷத் திறமைகளை வெளிப்படுத்தி உழைக்க முடியும். உண்மை யில், மனிதனுக்குப் பேசும் சக்தி அளிக்கப்பட்டிருப்பதன் நோக்கம் என்னவென்றால், அவன் தன் எண்ணங்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டுத்தான். எப்பொழுது மனிதன், ஒரு சமுதாயத்திலே சேர்ந்து வாழச் சம்மதித்து விட்டானோ அப்பொழுதே அவன் சில கட்டுப் பாடுகளுக்கு உட்படச் சம்மதித்து விட்டான் என்பது தான் அர்த்தம். அதாவது, அவன் தனி மனிதனாக வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் எங்ஙனம் தன்னிஷ்டப்படி உண்பது, உடுப்பது, வசிப்பது முதலிய விவகாரங்களை நடத்தி வந்தானோ அப்படியே அவன் இனியும் நடத்திக் கொண்டு வரமுடியாது; சில நியமங்களுக்கு அவன் உட்பட்டே ஆக வேண்டும்; உட்படச் சம்மதித்தால்தான் அவன் சமுதாயத்திலே ஓர் அங்கத்தினனாக இருந்து வாழ முடியும். இப்படி அவன், தான் இதுகாறும் அனுபவித்து வந்த சில உரிமைகளைப் பராதீனப்படுத்திவிட்டு, அவைகளுக்குப் பதிலாக சமுதாயத்தின் மொத்தமான பாதகாப்பைப் பெறுகிறான். தனி மனிதன் என்ற முறையில் அவனுக்கிருந்த பலவீனம் போய், சமுதாய அங்கத்தினன் என்ற முறையில் அவன் மிகுந்த வலுவுள்ளவனாகி விடுகிறான். இங்ஙனம் வலுவுள்ளவன் ஆவதற்கு, அவன் சில உரிமை களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது; சில கடமைகளைச் செய்ய வேண்டியும் இருக்கிறது. அப்பொழுது தான் அவன் உண்மையான ஒரு பிரஜை யாகிறான். தனி மனிதன் என்ற ஹோதாவில் அவன் சில உரிமைகளைப் பறிகொடுத்து விடுகிறானாயினும், சமுதாய அங்கத்தினன் என்ற ஹோதாவில் அவனுக்குச் சில உரிமைகளும் வந்தடைகின்றன. இந்த உரிமைகளை அரசியல் அறிஞர்கள் இரு வகையாகப் பிரித்திருக் கிறார்கள். இங்ஙனம் பிரித்துக் காட்டுவது சம்பிரதாயந்தான். ஏனென்றால் உரிமை என்பது, தொகுப்பாகப் பார்க்கிற போது, நீதி, தர்மம், உண்மை என்பவைகளைப் போல் ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், இடம், பொருள், ஏவலை முன்னிட்டு அது பல கிளைகளாகத் தோன்றுவதால், அந்தக் கிளைகளைப் பொதுவாக, இரு கூறுபடுத்தி யிருக்கின்றனர் அறிஞர்கள். இவையே (1) இயற்கை உரிமையென்றும், (2) செயற்கை உரிமை அல்லது சட்ட ரீதியான உரிமையென்றும் பெயர் பெறுகின்றன. இயற்கை உரிமையானது எல்லா மக்களுக்கும் பொதுவானது. மனிதன் பிறக்கிறபோது சில உரிமைகளோடு பிறக்கிறான் என்று ஹாப், லாக், ரூஸோ1, ஆகிய அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த உரிமைகள் யாவை என்பதைப் பற்றி 1776-ஆம் வருஷம் வெளியான அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம் பின்வரும் வாசகத்தினால் விளக்குகிறது : மனிதர்கள் பிறக்கிற போது சில உரிமைகளோடு பிறக்கிறார்கள். அவற்றை அவர் களினின்று பிரிக்க முடியாது. அவை தான், உயிர் வாழ்தல், இச்சைப்படி நடத்தல், சந்தோஷத்தை நாடிச் செல்லுதல் ஆகியவைகளாம். 1789-ஆம் வருஷம் வெளியான பிரெஞ்சு சுதந்திரப் பிரகடனமானது. இந்த உரிமைகளோடு சொத்துரிமையையும் சேர்த்துக் கொண்டது. ஒரு ராஜ்யத்தில் அரசாங்கம் ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருந் தாலும் இராவிட்டாலும், அந்த அரசாங்கத்தின் போக்கு எப்படி யிருந்தாலும், மேலே சொல்லப்பட்ட இயற்கை உரிமைகளை ஒழுங்கு படுத்திச் செல்லுவதற்காகவே, அரசாங்கமும் அதன் சட்டங் களும் இருக்கின்றன. அந்த அரசாங்கம் பழுது பட்டிருந்தாலோ அல்லது அதன் சட்டங்கள் சீர்கெட்டிருந்தாலோ அவை காரணமாக மேற்படி இயற்கை உரிமைகளினின்று மனிதர்கள் புறம்பானவர்களாகிவிட மாட்டார்கள். இந்த இயற்கை உரிமையாவது என்ன என்பதைப் பற்றி ஜான் டூவர்ட் மில்1 என்னும் அறிஞன் சொல்கிறபோது, ஒருவன், தன்னுடைய மனோ பரிபக்குவப்படி உணர்தல், சுவைத்தல், சிந்தித்தல், எந்த ஒரு விஷயத் திலும் தன்னிஷ்டப்படி அபிப்பிராயங் கொள்ளுதல், மற்றவர்களுக்குப் பாதகமில்லாமல் தன்னுடைய வளர்ச்சிக்குத் தகுந்தபடி தனது வாழ்க்கையை நடத்திக் கொள்ளுதல் ஆகிய இவையே இயற்கை உரிமையின் பாற்படுவது என்று சுருக்கிச் சொல்லுகிறான். இந்த இயற்கை உரிமைகளை அனுஷ்டானத்துக்குக் கொண்டு வரும் பொருட்டே சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இந்தச் சட்டங்களின் மூலம் மேற்படி உரிமைகள் புதிய உருவம் பெற்று, ஜனங்களுடைய நல்வாழ்வுக்கும் ராஜ்யத்தின் க்ஷேமத்துக்கும் அரண் மாதிரி இருக்கின்றன. அப்பொழுது இவை சட்ட ரீதியான உரிமைகள் என்ற பெயர் பெறுகின்றன. இயற்கை உரிமைகள் என்று அழைக்கப் படுகிற ஜீவாதாரமான உரிமைகளிலிருந்தே, செயற்கை உரிமைகள் என்கிற சட்ட ரீதியான உரிமைகள் பிறக்கின்றன என்பது இதனால் பெறப்படுகிறது. ஜனப் பிரதிநிதிகள் அடங்கிய சட்ட சபைகளினால் சிருஷ்டிக்கப் பட்டு, நிருவாக அரசாங்கத்தின் பின் பலத்தைக் கொண்டு, ஜனங்களுடைய நன்மைக்காக ஜனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற உரிமைகள் யாவும் சட்டரீதியான உரிமைகள் என்று பெயர் பெறும். இந்த உரிமைகளை, கால தேச வர்த்தமானங்களை யொட்டி, ஜனங்களுடைய நன்மையை உத்தேசித்து, இறுக்கிப் பிடிக்கவும், அல்லது தளர்த்திக் கொடுக்கவும் அரசாங்கத்துக்கு அதிகாரமுண்டு. சட்டரீதியான இந்த உரிமைகளையும் அறிஞர்கள் (1) சமுதாய உரிமைகளென்றும் (2) அரசியல் உரிமைகளென்றும் இரண்டு கூறுபடுத்தி யிருக்கிறார்கள். ஒரு ராஜ்யத்துக்கு உட்பட்ட பிரஜைகள், அந்த ராஜ்யத்துக்குள் இருந்து அனுபவிக்கிற உரிமைகள் அனைத் துக்கும் சமுதாய உரிமைகள் என்று பெயர். பொதுவாக, பிரஜை களின் உயிருக்கும் பொருளுக்கும் ஆபத்து ஏற்படாமல் இருப்பதற்கு என்ன உரிமைகள் தேவையோ அந்த உரிமைகளையே இவை குறிக்கின்றன. உதாரணமாக, அந்நியர்களின் படையெடுப்பு, கலகங்கள், குழப்பங்கள், கள்ளர் பயம் முதலியவைகளினின்று காப்பாற்றப்படுவதற்கு எல்லாப் பிரஜைகளுக்கும் உரிமையுண்டு. இந்தப் பாதுகாப்பை அரசாங்கத்தினிட மிருந்து பெற அவர்கள் உரிமையுடையவர்கள். அப்படியே பரம்பரையான குடும்பச் சொத்துக்களை அனுபவித்தல், இஷ்டப்படி விவாகம் செய்து கொள்ளுதல், தங்கள் வாசதலத்துக்குப் பாதகம் உண்டாகா திருத்தல், விருப்பப்படி விருப்பமுள்ளவர்களுடன் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளுதல், தங்கள் மனச் சாட்சிப்படி மத சம்பிரதாயங்களை அனுஷ்டித்தல், சுயமாகச் சிந்தித்தல், சிந்தித்தவைகளைப் பற்றி அபிப்பிராயங்களை வெளியிடுதல் ஆகிய இவை பலவும், சட்ட அங்கீகாரம் பெற்ற பிரஜா உரிமைகளாகும். சோவியத் ருஷ்யாவில் அரசாங்கத்திட மிருந்து கல்வி வசதிகள் பெறுவது, உத்தியோகம் எதிர்பார்ப்பது, வயோதிக காலத்தில் உபகாரச் சம்பளம் பெறுவது முதலியன, பிரஜா உரிமைகளாகச் சேர்க்கப் பட்டிருக்கின்றன. இந்த உரிமைகள் சோவியத் அரசாங்கச் சட்ட புத்தகத்தில் இடம் பெற்று அனுஷ்டானத்தில் இருந்து வருகின்றன. இந்த உரிமைகள் அளிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம், சோவியத் அரசாங்கம், தனது பிரதியொரு பிரஜையினுடைய பூரண வளர்ச்சியையும் நாடுவது தான். இந்த வசதிகளைக் கொடுத்தால் அவர்கள் - அந்தப் பிரஜைகள் - தங்களுடைய சிறந்தவற்றை, அதாவது அறிவு, ஆற்றல், உழைப்பு முதலியவற்றை அரசாங்கத்துக்கு அளிப்பர் என்பது சோவியத் தலைவர்களின் கருத்து. அரசாங்க நிருவாகத்தில் பங்கெடுத்துக் கொள்கிற உரிமைக்கே அரசியல் உரிமை என்று பெயர். இதற்குச் சில நிபந்தனைகள் உண்டு. வயது வந்தவர்களா யிருக்க வேண்டுமென்பது முக்கியமான நிபந்தனை. இந்த ஒரு நிபந்தனை யுடனேயே சில நாடுகளில் மேற்படி அரசியல் உரிமை, பிரஜைகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில நாடுகளில், ஆதி மதிப்பு, கல்வி அறிவு முதலிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்கிறவர்களுக்குத்தான் மேற்படி உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசியல் உரிமையைப் பின்வரும் அமிசங்களாகப் பிரித்துக் கூறுவர் :- 1. சட்ட சபைகள், தல தாபனங்கள் முதலியவற்றிற்குப் பிரதி நிதிகளைத் தெரிந்தெடுக்கிற உரிமை அதாவது, வாக்கு (ஓட்டு)ரிமை. 2. சட்ட நிர்மாணம் செய்யும் விஷயத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் உரிமை. 3. அரசாங்க உத்தியோகதர்களாக நியமனம் பெறுகிற உரிமை. 4. அரசாங்கச் சட்ட திட்டங்களைப் பற்றியும், அரசாங்க அதிகாரிகளின் நடவடிக்கைகளைப் பற்றியும் அபிப்பிராயம் கூறும் உரிமை. 5. ராஜ்ய எல்லைக்குள் நிரந்தரமாக வசிக்கும் உரிமை. 6. ராஜ்யத்தை விட்டு வெளியே போயிருக்கிற காலத்தில் ராஜ்யத்துக்குள்ளேயிருக்கிற தங்கள் சொத்து, சுதந்திரங்களுக்குப் பாதுகாப்புப் பெறும் உரிமை ஆகியவைகளாம். மேலே சொல்லப்பட்ட உரிமைகளை அனுபவிக்கிற விஷயத்தில், பிரதியொரு பிரஜையும் மற்றவர்களுடைய நலனுக்கோ, அல்லது ராஜ்யத்தின் க்ஷேமத்துக்கோ அல்லது சமுதாயத்தின் கட்டுப் பாட்டுக்கோ இடையூறு உண்டாகாமல் நடந்துகொள்ள வேண்டு மென்பது பொதுவான விதி. இந்த விதியை அனுசரித்து நடந்து கொள்வது பிரதியொரு பிரஜையினுடைய கடமையும் ஆகும். இந்தக் கடமையை நிறைவேற்றாமல் உரிமையை எதிர்பார்க் கிறவன், உண்மையான பிரஜையல்ல. ஏனென்றால், கடமையும் உரிமை யும் பிரிக்க முடியாதவை. எப்படி ஆட்படத் தெரிந்தவனுக்குத் தான் ஆளத் தெரியுமோ அதைப் போல், கடமையைச் செய்கிறவனுக்குத்தான் உரிமையை அனுபவிக்கத் தெரியும். 7. ராஜ்யத்தின் லட்சணம் சாதாரணமாக நாம் சொல் வழக்கில் ராஜ்யம் என்று எதைக் குறிப்பிட்டுப் பேசுகிறோமோ அதனுடைய அர்த்தம் என்ன? பூர்வீகத்தில், ரோம ராஜ்யம் செல்வாக்குடனிருந்தது என்கிறோம்; அல்லது சோழ ராஜ்யம் செழுமையுற்றிருந்தது என்கிறோம். இவைகளில் வருகிற ராஜ்யம் என்ற வார்த்தையின் தாத்பரியம் என்ன? ராஜனை யுடையது ராஜ்யம் என்று சொல்லிவிடலாம். அது சுலபமான அர்த்தம் - ஆனால் சரியான அர்த்தமல்ல; முழு அர்த்தமுமல்ல. மேலெழுந்த வாரியாகப் பார்க்கிற போது ராஜ்யம் என்ற சொல், விதீரணமான ஒரு நிலப்பரப்பைக் குறிப்பதாகவே தோன்றும். அப்படியுமில்லை. ராஜ்யம் என்று சொன்னால், அதற்கு முக்கியமாக மூன்று லட்சணங்கள் இருக்கவேண்டும். சில உப லட்சணங்களையும் சேர்த்து நான்கு என்றும், ஆறு என்றும் பலவிதமாக அரசியல் பண்டிதர்கள் கூறுவார்கள். அவைகளைப் பற்றி இங்கே நமக்குக் கவலையில்லை. முக்கியமான லட்சணங்கள் மூன்றுதான். இந்த மூன்று லட்சணங்களோடு கூடியதே ராஜ்யம். இவற்றில் ஏதேனும் ஒன்று குறைந்தால்கூட அது ராஜ்யமாகாது. மூன்று லட்சணங்கள் யாவை? 1. நாடு, 2. மக்கள்; 3. அரசு. இந்த ஒவ்வொன்றையும் பற்றிச் சுருக்கமாக ஆராய்வோம். நாடு : காயும் கனியுமாகக் குலுங்குகிற ஒரு விருட்சம் எப்படி வேரில்லாமல் இருக்க முடியாதோ அப்படியே ஒரு நிலப்பரப்பு இல்லாமல் ராஜ்யம் இருக்க முடியாது. பூப்பிரதேசம் என்கிற அதிவாரத்தின் மீதுதான் ராஜ்யம் என்கிற கட்டடம் அமைகிறது. ஒரு ராஜ்யத்தின் பெயர்கூட, அந்த ராஜ்யம் எந்தப் பிரதேசத்தில் இருக்கிறதோ அந்தப் பிரதேசத்தின் பெயரிலிருந்தே பிறக்கிறது. உதாரணமாக பிரான் தேசத்தில் பிரெஞ்சு ராஜ்யம் இருக்கிறது. விட்ஜர்லாந்து தேசத்தில் விராஜ்யம் இருக்கிறது. இப்படி நாட்டின் பெயரைக் கொண்டே ராஜ்யம் அழைக்கப்படுகிறது. நிலையாக ஓரிடத்தில் வசிக்காமல் நாடோடிகளாக அநேக ஜாதியார் உலகத்தின பல பாகங்களிலும் இப்பொழுது திரிகிறார்கள். இவர்கள், தங்களுக்கு விருப்பமான இடத்தில் விருப்பமுள்ள வரையில் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கிறார்கள். எல்லோரையும் போல் இவர்களிடத்தில் நேசப்பான்மை முதலியனவெல்லாம் இருக்கின்றன. தங்கள் மனோவி காசப்படி இவர்கள் வாழ்க்கையை இன்பமாகவே கழிக்கிறார்கள். இவர்களுக்குள் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. இவையெல்லாம் இருந் தாலும் இவர்களை ஒரு ராஜ்யத்தினர் என்று சொல்கிறோமா? இல்லை. ஏனென்றால், இவர்கள் திரமான ஓரிடத்தில் வாசம் செய்கிறார்களில்லை. அப்படி வாசம் செய்து அந்த இடத்தைச் செழிப்பான நிலைமைக்குக் கொண்டுவர வேண்டுமென்ற ஆவலும் இவர்களுக்குக் கிடையாது. யூதர்கள் எத்தனையோ இடையூறுகளைச் சமாளித்துக் கொண்டு இன்றைய அறிவு உலகத்திலாகட்டும், பொருளாதார உலகத்திலா கட்டும், தலைசிறந்து விளங்குகிறார்கள். இருந்தாலும் இவர்களுக் கென்று சொந்தமாக ஒரு நாடு கிடையாது. இதனால் இவர்களுக்கு ராஜ்யமு மில்லை. மற்ற ராஜ்ய அமைப்புக்களோடுதான் இவர்கள் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. சென்ற ஐரோப்பிய மகா யுத்தத்தின்போது இவர்களுடைய உதவியைப் பெறுவதற்காக, அப்பொழுதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தார் பாலதீனத்தில் யூத ராஜ்யம் ஒன்றை வகுத்துக் கொடுத்தார்கள். ஆனால், இதனால் யூதர்களுக்குக் கஷ்ட நஷ்டங்கள்தான் உண்டாயின; ஒரு ராஜ்ய அந்தது ஏற்படவில்லை. பூமியிலிருந்து அநேகம் பொருள்கள் உற்பத்தியாகின்றன. மனிதன் கூட பூமியிலிருந்து உற்பத்தியானவன் தான். மண்ணின் திரட்சிதான் மனித வடிவம் என்பது புராதன மதத்தினர் பலருடைய நம்பிக்கை. படைக்கும் கடவுளாகிய பிரம்மனை, குயவன் என்றே ஹிந்து மதத்தினர் அழைக்கின்றனர். இந்தச் சிருஷ்டிக்கிற சக்தியோடு கூட, தன்னிலிருந்து உற்பத்தியாகிற பொருள்களைக் கொண்டு, மனிதனைக் காப்பாற்றுகிற சுபாவமும் பூமிக்கு உண்டு. இதனாலேயே மண்ணையும், பெண்ணையும் ஒன்றாகக் கூறிப் போந்தனர் பெரியோர். பூமாதேவி, நிலமடந்தை என்பன போன்ற சொற்றொடர்கள் இந்தக் கருத்தையே குறிக்கின்றன. எனவே மனிதனுடைய நல்வாழ்வுக்கு பூமி இன்றியமையாத சாதனமா யிருக்கிறது. இந்தச் சாதனமின்றி, அவன் எந்தச் சாதகத்தையும் அடைய முடியாது; அதாவது, பூமிதான் மனிதனுக்கு மூலதனம். இதனைச் சம்பாதிப்பதற்காகவும், ஏற்கனவேயுள்ளதை விதரித்துக் கொண்டு செல்வதற்காகவும் அவன் உழைக்கிறான்; மற்றவர்களோடு போராடு கிறான். தன்னுடைய வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டு மென்ற முயற்சியிலே ஈடுபட்டு, அவன் கடைசியில் நிலப் பசிக்கு இரையாகி விடுகிறான். தனி மனிதனுக்கு எப்படி ஆகாரம் வேண்டுவது இயற்கையானதோ அப்படிப் போலவே அந்தத் தனி மனிதர் பலரடங்கிய ஒரு சமுதாயத்திற்கு நிலம் வேண்டுவது இயற்கையானது. சுவரை வைத்துக் கொண்டுதான் சித்திரம் எழுத முடியும் என்கிற மாதிரி, அந்த சமுதாயத்தினர், ஒரு நிலப் பரப்பின் மீது தான் தங்களுடைய ராஜ்யத்தை தாபித்துக் கொள்ள முடியும். நாடு என்றால், பூமியின் மேல் மட்டத்தில் இருக்கிற ஆறு, மலை, காடு முதலியவற்றை மட்டும் குறிக்காது; பூமியின் கீழ் மட்டத்திலுள்ள நீரோட்டங்கள், உலோகப் பொருள்கள் முதலியவற்றையும், மேலேயுள்ள ஆகாயப் பரப்பையும் சேர்த்தே குறிக்கும். நிலப் பரப்புக்கு எந்த ஓர் எல்லையுண்டோ அந்த எல்லைக்குட்பட்ட ஆகாயத்தில் சஞ்சரிக்கும் உரிமையும், அந்த எல்லைக்குள்ளிருக்கிற பூமியின் மேலும் கீழும் உற்பத்தியாகிற பொருள்களை அனுபவிக்கிற உரிமையும், தேவையான பொருள்களை உற்பத்தி செய்து கொள்கிற உரிமையும் சேர்ந்தே நாடு என்ற பெயரைப் பெறுகிறது. விதீரணமான நிலப்பரப்பு இருக்கிறது. அதில் ஆறுகளும், மலை களும், காடுகளும் இருக்கின்றன. ஆனால் அந்த நிலத்திலிருந்து ஒரு பொருளும் உற்பத்தியாவதில்லை. அதாவது வெறும் கரம்பு நிலமாயிருக் கிறது. அதனை நாடு என்று சொல்லலாமா? கூடாது. அதில் ராஜ்யத்தை தாபிக்க முடியுமா? முடியாது. எந்தப் பிரதேசத்தில் சாரமுள்ள மண் இருக்கிறதோ, அதாவது எந்த மண்ணுக்குப் பொருள்களை உற்பத்தி செய்யக் கூடிய சக்தி இருக்கிறதோ, அந்த மண்ணைக் கொண்ட பிரதேசத் துக்குத்தான் நிலம் என்று பெயர். அப்படிப்பட்ட நிலத்தை யுடையதே நாடு. பொருள்கள் விளைவதற்கு முக்கிய துணைக் கருவிகளாயிருப்பன நீர்ப்பாசன வசதி; சம சீதோஷ்ண திதி, இந்த இரண்டும் இல்லாத பிரதேசத்தில் ஒரு ராஜ்யத்தை தாபிக்க முடியாது. உதாரணமாக, ஸஹாரா பாலைவனம் இருக்கிறது. அது விசால மான நிலப் பரப்புடையதுதான். அங்கே மக்களும், அதிகமாக வசிக்காவிட்டாலும், அற்ப சொற்பமான பேராவது வசிக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையை நாடோடி வாழ்க்கை யென்றும் சொல்ல முடியாது. இருந்தாலும், அவர்களால் ஒரு ராஜ்யத்தை தாபிக்க முடியவில்லை. காரணம், பொருள்கள் விளையக் கூடிய பாசன வசதிகள் இல்லாத பிரதேசத்தில் அவர்கள் வசிப்பதுதான். அடுத்தபடி எக்கிமோ ஜாதியாரை எடுத்துக் கொள்வோம். அவர்கள் திரவாசிகள். நில விதீரணத் திற்குக் குறைவில்லை. என்றாலும் பொருள்கள் விளையக்கூடிய மாதிரியான சீதோஷ்ண திதி அவர்களுக்கு இல்லையாதலினால், அவர்களால் ஒரு ராஜ்யத்தை தாபித்துக்கொள்ள முடியவில்லை. உலகத்தின் சரித்திரத்தை நாம் ஆதியிலிருந்து ஆராய்ந்து பார்த்தோமானால், எந்த இடங்களில் வற்றாத நதிகள் ஓடுகின்றனவோ, குறையாத நீர் நிலைகள் இருக்கின்றனவோ, அதிகமான உஷ்ணமும் அதிகமான குளிரும் இல்லையோ, அந்த இடங்களில் தான் மக்கள் குடியேறி யிருக்கிறார்கள், ராஜ்யங்கள் தாபிக்கப் பட்டிருக்கின்றன என்பது தெரியவரும். காரணம், இந்த இடங்களில் செழுமையான மண்ணும் சமமான சீதோஷ்ண திதியும் இருந்ததுதான். மண்ணினுடைய செழுமையை யொட்டியே ராஜ்யத்தினுடைய பெருமையும் இருக்கிறது. அப்படிச் செழுமை குன்றியிருந்தால் அதனை வளம் பெறச் செய்ய வேண்டியது ராஜ்யத்திலுள்ளவர்களுடைய கடமை. உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம் விட்டே மென்பார்க்கு நிலை என்பது திருக்குறள். இதனாலேயே விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசினர் முன்னோர். விவசாயத்தைச் செழிப்புறச் செய்து அதனைக் காப்பாற்ற வேண்டுவது அரசனுடைய கடமை என்று, சாணக்கியன் தனது அர்த்த சாதிரத்தில் வலியுறுத்திக் கூறுகிறான். சுருக்கமாகச் சொல்லுமிடத்து, பொருள் விளைவுக்குத் தகுதி யுடையது எதுவோ அதுவே நாடு. மக்கள் : மக்களில்லாமல் நாடு இல்லை. ஒரு ராஜ்யத்தின் பிராண வாயு மாதிரி ஜனம். மனிதர்கள் தான் ராஜ்யமே தவிர, அவர்களில்லாத சுவர்களோ, கப்பல்களோ ராஜ்யமாகா என்பது ஒரு கிரேக்க அறிஞனுடைய வாக்கு. ஒரு பிரதேசம், அகல நீளத்தில் மிகப் பெரியதாயிருக்கலாம்; இயற்கை வளங்கள் நிறைந்ததாயிருக்கலாம்; செழுமையான மண்ணை யுடையதாயிருக்கலாம். ஆயினும் அங்கே ஜனங்கள் வசிக்காவிட்டால் என்ன பிரயோஜனம்? மணல் நிறைந்த பாலைவனத்தையோ, மரங்களடர்ந்த காட்டையோ, நிலம் அல்லது நாடு என்று நாம் அழைப்பதில்லை. மனிதனுடைய தொடர்பு எந்த மண்ணுக்கு இல்லையோ அது நிலமாகாது; நாடுமாகாது. தொடர்பு எப்படி உண்டாகிறது? உழைப்பினாலும் வாசத்தினாலும். ஒரு நிலப்பரப்பின் மீது மக்கள் ஆங்காங்கு, கிராமத்தின ராகவோ, நகரத்தினராகவோ சேர்ந்து வாழாமல், தனித்தனியாகச் சிதறிக் கிடப்பார்களானால், அவர்களைக் கொண்டு ஒரு ராஜ்யம் அமையாது. ஏனென்றால், சேர்ந்து வாழ்கிறபோதுதான், மக்களுக்குள்ளே நேசப்பான்மை உண்டாகிறது; அன்பு அரும்புகிறது; அனைவருடையவும்ஒத்துழைப்பின் மீதுதான், அவரவரும் தங்கள் சொந்த சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற எண்ணம் வலுக்கிறது. இப்படிப்பட்ட எண்ண வளர்ச்சியின் மீதுதான், ஒரு ராஜ்ய வளர்ச்சி இருக்கிறது. சரி; இங்ஙனம் மக்கள், தொகுதி தொகுதியாக, கும்பல் கும்பலாக வசித்துக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? போதாது. அவர்களை ஒரு ஜனம் என்றோ, சமுதாயம் என்றோ சொல்ல முடியுமா? முடியாது. அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு அடிப்படையாக ஏதோ ஒருவிதமான ஒற்றுமை இருக்க வேண்டும். அந்த ஒற்றுமை, உணர்ச்சி அளவிலாவது இருக்கலாம்; கொள்கையளவிலாவது இருக்கலாம்; புற வாழ்க்கையைப் பொறுத்த அளவிலாவது இருக்கலாம். மதம், பாஷை, கலாசாரம், பரம்பரை, பழக்க வழக்கம், நாகரிகம் ஆகிய பல அமிசங்களில் ஏதோ ஓர் அமிசத்திலாவது எல்லோரும் ஒன்றுபட்ட மனப்பான்மை யுடையவராக இருக்க வேண்டும். இந்த ஒற்றுமை, எந்த மனிதக் கூட்டத்தினிடம் இல்லையோ அந்த மனிதக் கூட்டத்தை, ஜனம் என்றோ, சமுதாயம் என்றோ சொல்ல முடியாது. இங்ஙனம் ஒரு கூட்டத்தாருக்கு ஜனம் அல்லது சமுதாயம் என்கிற அந்தது மட்டும் வந்து விட்டால் மட்டும் போதுமா? அவர்களைக் கொண்டு ஒரு ராஜ்யம் தாபிதமாகி விடுமா? ஆகாது. ஏனென்றால், அவர்களைக் கட்டியாளக்கூடிய ஓர் அரசு இல்லை. அதாவது, அவர்களுடைய புற வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொண்டு செல்கிற ஒரு சக்தி இல்லை. இதற்கு, மறுபடியும் யூதர்களையே உதாரணமாக எடுத்துக்காட்ட வேண்டி யிருக்கிறது. அவர்களுக்குள்ளே மத ஒற்றுமை இருக்கிறது; ஒரேவிதமான பரம்பரையிலிருந்து வந்தவர்களாகவும், ஒரே விதமான கலாசாரத்தை அனுஷ்டிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களைக் கட்டியணைத்துக் கொண்டு செல்லக்கூடிய, அவர்களிடத்திலேயுள்ள ஒற்றுமையான அமிசங்களை ஒன்று திரட்டி உருவப்படுத்திக் காட்டக் கூடிய ஓர் அரசு அவர்களுக்கு இல்லை. அந்த அரச சக்தி அவர்களிடத்திலே இல்லாத ஒரு காரணத்தினால், அவர்களுடைய மற்றச் சக்திகளெல்லாம் குன்றிக் கிடக்கின்றன. ஒரே பிரதேசத்தில் ஒரே ஜாதியார் வசித்துக் கொண்டிருந்த போதிலும், அவர்கள் பலவிதமான அரசியல் ஆதிக்கங்களுக்கு ஆட்பட்டுக் கிடப்பார்களானால், அவர்கள் வசிக்கிற அந்தப் பிரதேசம் ஒரு ராஜ்யமாகாது; அவர்களுக்கு ராஜ்ய அந்ததும் கிடையாது. உதாரணமாக, இந்தியாவிலே, சென்னை மாகாணம் அராபியர்களுடைய ஆட்சிக்கும், பம்பாய் மாகாணம் பாரசீகர்களுடைய ஆட்சிக்கும், ஐக்கிய மாகாணம் கிரேக்கர்களுடைய ஆட்சிக்கும் இங்ஙனம் பலவித ஆதிக்கங்களுக்கு உட்பட்டிருக்குமானால், இந்தியாவை ஒரு ராஜ்யம் என்று சொல்ல முடியுமா? முடியாது. எனவே ஒற்றுமையான பல அமிசங்களையுடைய ஒரு மக்கட் தொகுதியிலிருந்து தான் ராஜ்யம் பிறக்கிறது. அரசு :- அரசு வேறே; அரசாங்கம் வேறே. அரசு என்பது சக்தி; அரசாங்கம் என்பது தாபனம். அரசு என்கிற சூட்சும சக்தியானது, அரசாங்கம் என்கிற தூல வடிவத்தின் மூலமாகவே வேலை செய்கிறது. அரசு + அங்கம் = அரசாங்கம். ஆள்வது அரசு. ஆளுஞ் செயலுக்கே ஆட்சி என்று பெயர். யாரோ ஒரு சிலரேனும் இருந்தால் தானே அவர்களை ஆள முடியும்? அந்த ஒரு சிலர்தான் பிரஜைகள்; ஆளப்படுவோர். இந்த ஆளப்படுவோருக்கும் அரசுக்கும் உள்ள தொடர்பை நிர்ணயப்படுத்தியும் ஒழுங்குபடுத்தியும் கொண்டு செலுத்துவதுதான் அரசாங்கம். இதனால், ஒரு ராஜ்ய தாபிதத்திற்கு அரசாங்கமும் இன்றியமையாத ஓர் அமிசமாகி விடுகிறது; இதற்காக, இதனை, ராஜ்யத்தின் லட்சணங்களில் ஒன்றாக எடுத்துக் கூறுவர் அரசியல் பண்டிதர்கள். எந்தப் பிரதேசத்தில் ஆள்கிற அரசும், ஆளப்படுகிற குடியும் இல்லையோ, அங்கே ராஜ்யம் என்பது ஏற்படுவதற்கு எவ்வித முகாந்தரமும் கிடையாது. இதை இன்னும் சிறிது தெளிவான பாஷையில் சொல்வோமானால், எந்த இடத்தில் அதிகாரம் செய்வோரும், அந்த அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு நடப்போரும் இல்லையோ, எந்த இடத்தில் மேற்படி இரு சார்பினரும் பரபர நம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும் வாழவில்லையோ அந்த இடத்தில் ராஜ்யம் அமையாது. அரச சக்தியென்று சொன்னால், அது ஜன சக்தியின் தொகுப்பே யாகும். அரசு செலுத்துகிற அதிகாரம் ஜனங்களிடமிருந்தே பிறக்கிறது. இந்த அதிகாரம், ஜனங்களுக்காக ஜன சம்மதத்தின் பேரில் பிரயோகிக்கப்பட வேண்டும். அப்படிப் பிரயோகிக்கப்படாத காலத்தில்தான், அரசுக்கும் குடிகளுக்கும் பிணக்கு ஏற்பட்டு, புரட்சிகள் முதலியன உண்டாகின்றன. தவிர, ஜனங்களிடமிருந்து பிறக்கிற அரசே நியாயமான அரசு. ஜனங்களுக்காக அரசே தவிர, அரசுக்காக ஜனங்களில்லை. எந்த விதமான அந்நிய ஆதிக்கத்துக்கும் கட்டுப்படாமல் சுயமாக இயங்குவது தான் அரசு. மற்றவைகளெல்லாம் அரசுகளாகா; அந்நிய ஆதிக்கத்தின் அதிகார யந்திரங்களென்று தான் அவைகளைச் சொல்ல வேண்டும். சுயமாக இயங்குகிற அரசுதான், தன் பிரஜைகளுக்கு நியாயத்தையும் நன்மையையும் செய்ய முடியும். அப்படிச் செய்தால் தான் அதற்கு நன்மை. ஏனென்றால், ஜனங்களுடைய நன்மையைத் தவிர்த்து அதற்கென்று தனியானதொரு நன்மையில்லை. அது மட்டுமின்றி, ஜனங்களுக்கு நன்மை செய்யாவிட்டால், செய்யாதிருந்தால், அதற்குத் தீமை, அதனுடைய நிலையே குலைந்து போய் விடலாம். எந்த நாட்டில் சுய அரசு இயங்குகிறதோ அந்த நாட்டிலுள்ள பிரஜைகள் தான் சுய முயற்சியுடையவர்களாயிருப்பார்கள். அவர் களுடைய உடல் திண்மை யுடையதாகவும், உள்ளம் உறுதியுடைய தாகவும் இருக்கும். அவர்களுடைய சொந்த வாழ்வு, சமுதாய வாழ்வினின்று வேறுபட்டதா யிராது. அவர்களுக்குச் சிருஷ்டி சக்தி அதிகமாயிருக்கும்; அதாவது காவியம், ஓவியம் முதலிய நுட்பமான துறைகளில் அவர்கள் புதிய புதிய சிருஷ்டிகளைச் செய்துகொண்டே யிருப்பார்கள். வெளி நாட்டாரின் மத்தியில் அவர்களுக்கு எப்பொழுதும் ஒரு தனி மதிப்பு இருந்து கொண்டிருக்கும். சுய ஆட்சி நிலவுகிற நாட்டிலேயே அமைதி நிலவும். அமைதி என்பதற்கு, அர்த்த சாதிர பண்டிதனாகிய சாணக்கியன் அழகான ஒரு வியாக்கியானம் கூறுகிறான்:- தொந்தரவுகள் இல்லாமலும், ஜனங்கள் தங்கள் உழைப்பின் பயனை நுகர்ந்து கொண்டும் இருக்கிற நிலைமை எதுவோ அதுவே அமைதி. இதைவிட தெளிவான வியாக்கியானம், அமைதி என்ற வார்த்தைக்கு வேறு யாரும் சொல்ல முடியாது. இந்த வியாக்கியானத்தின் மூலமாக, உழைப்பினின்று தான் அமைதி பிறக்கிறதென்ற உண்மையை நாம் தெரிந்து கொள்கிறோம்; உடலைக் கொண்டும், உள்ளத்தினாலும் சுயமாக உழைப்பதற்குக் கூட, சுய அரசு தேவையாயிருக்கிற தென்னும் கருத்தும் நமது இருதயத்தில் லேசாகப் பதிந்து விடுகிறது. இங்ஙனம், நாடு, மக்கள், அரசு ஆகிய மூன்று அடிப்படையான லட்சணங்களோடு கூடிய ஒரு ராஜ்யத்தில் வாழ வேண்டுமென்று பிரதியொரு மனிதனும் இச்சைப்படுவது இயற்கை. அந்த இச்சை எந்த மனிதனிடத்தில் இல்லையோ அவன் இரண்டு கால் வடிவம்; மனிதனல்ல. எந்த மண்ணிலே ஒரு மனிதன் பிறந்தானோ அந்த மண்ணோடு அவனுடைய அந்தராத்மா கட்டுப்பட்டிருக்கிறது. அவன், எத்தகைய நீசனாயிருந்தாலும், குணமென்னும் குன்றின் அடிவாரத்திலேயே விழுந்து கிடப்பதற்குத் தகுதியுடையவனாக இருந்தாலும், தான் பிறந்த பூமியை மட்டும் மறப்பதேயில்லை. அந்தப் பூமியோடு அவன் போராடியிருக்கலாம். அந்தப் பூமி அவனை விரட்டியும், வறுமைக் குழியில் இறக்கியும் இருக்கலாம். அதனால் அவன் மனம் உடைந்தவனாகவும் போய்விடலாம். ஆனாலும் அவனுடைய அந்தராத்மா - உள்மனம் - அந்தப் பூமியோடு கட்டுப்பட்டே இருக்கிறது; அதனைப் பகிரங்கமாகக் கைகூப்பித் தொழா விட்டாலும், தூற்றாமலும் மறவாமலுமாவது இருக்கிறது. அப்படியே மண்ணும், மனிதனை மறப்பதில்லை. அப்படி மறவாமல் அஃது - அந்த மண் - அதன் இருதய பொக்கிஷத்தில் தன்னை வைத்துக் காப்பாற்றும் தண்ணருள் அதற்குண்டு என்பதை அவன் - அந்த மனிதன் - தெரிந்து கொள்ளாமலிருக்கலாம். அஃது அவ னுடைய குற்றம்; அவனைப் பெற்றெடுத்த மண்ணின் குற்றமல்ல. மண்ணும் மனிதனும் ஒன்றாகக் கட்டுப்பட்டு ஜடமாகக் கிடக்கலாமா? அப்படிக் கிடந்தால் மண்ணுக்கும் நஷ்டம்; மனிதனுக்கும் நஷ்டம். அப்படிக் கிடப்பதும் இயற்கைக்கு விரோதம். மண், மனிதனைத் துடிக்கச் செய்யவேண்டும்; மனிதன் மண்ணைத் துடிக்கச் செய்ய வேண்டும். செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்று பாரதியார் கூறினாரென்றால், அது, பிரதியொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய ஒரு துடிப்பையே எடுத்துக் காட்டுகிறது. எனவே, மண்ணும் மனிதனும் சேர்ந்து அநேக சிருஷ்டிகளை - ஜீவனுள்ள சிருஷ்டிகளை - செய்து கொண்டிருக்க வேண்டுமானால் அதற்கு ராஜ்யமில்லாமல் முடியாது. ஏனென்றால் ஒரு ராஜ்யத்தில்தான், மனிதன், வேற்றுமையிலே ஒற்றுமையைக் காணமுடியும்; பூரண வாழ்க்கையை நோக்கி முன்னேறிச் செல்ல முடியும். அது வாழ்ந்தால் அவன் வாழ்கிறான்; அஃது இறந்தால் அவனும் இறந்து விடுகிறான். 8. அரசன் யார்? அரசர்கள், தெய்வ சக்தியுடையவர்களென்றும், கடவுளின் பிரதிநிதிகளாக இருந்து இந்த நிலவுலகத்தை ஆண்டு வருகிறார் களென்றும் சொல்லப்பட்டு வந்த காலம் ஒன்றுண்டு. ஆனால் இப்பொழுது அந்த நம்பிக்கை போய் விட்டது. எங்காவது மூலை முடுக்குகளில் ஒரு சிலர், தங்களுடைய பரம்பரையைச் சூரியனுக்கும் சந்திரனுக்கும் அல்லது ஏதாவது ஒரு காணாத கடவுளுக்கும் பொருத்தி வைத்துக் கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கலாம். தங்களுடைய பெயருக்கு முன்னாலும் பின்னாலும் நூற்றெட்டு ஸ்ரீகளையோ அல்லது பிரதியொரு மனிதனிடத்திலும் நியாயமாக இருக்கவேண்டிய உயர்ந்த தன்மைகளைக் குறிக்கும் வார்த்தைகளையோ சேர்த்துக்கொண்டு, பாமர மக்களின் நிர்மல மான மனத்தில் ஒருவித பிரமிப்பை உண்டு பண்ணிக் கொண் டிருக்கலாம். ஆனால், இவர்களெல்லோரும் வெறும் நிழல்கள்தான்; கானல் நீர்தான். எப்பொழுது ஜனங்களுக்கு, இவர்கள் கடவுளின் பிரதி நிதிகள் அல்லர் என்ற எண்ணம் தோன்றிவிட்டதோ அப்பொழுதே இவர்கள், அந்த ஜனங்களுடைய மதிப்புக்கு உரியவரல்லராகி விட்டனர். அதாவது, ஜனங்கள், தங்களையறியாமலே இவர்களிடத்தில் ஒரு மதிப்பு அல்லது ஒரு பிரமை வைத்திருந்தார்களே அந்த மதிப்பு அல்லது அந்தப் பிரமை போய் விட்டது. ஜனங்கள், ஏன் ஒரு காலத்தில் அரசர்களைக் கடவுளின் பிரதிநிதிகள் என்று கருதிப் போற்றி வந்தார்கள்? இதைச் சிறிது ஆராய்வோம். கடவுள் நிறைவுடையவர்; நடுநிலைமையுடையவர்; தீயாரை ஒடுக்கி நல்லாரைக் காப்பாற்றும் நல்லியல்பு வாய்ந்தவர்; ஜீவராசி களை முன்னேற்ற மார்க்கத்தில் கொண்டு செலுத்தும் ஆற்றல் வாய்ந்த தலைவர். இந்த மாதிரியான தன்மைகளையெல்லாம் ஓர் அரசனிடத்தில் எதிர்பார்த்து அல்லது இந்தத் தன்மைகளையுடையவன் தான் அரசனா யிருக்கத் தகுதியுடையவன் என்று தீர்மானித்து, அரசனிடத்தில் கடவுள் தன்மையைப் புகுத்தினார்கள் ஜனங்கள். விரிந்த ஒரு நிலப் பரப்பில் வாழும் மக்களைக் கட்டியாள்வதற்கு அசாதாரணமான திறமையும் தகுதியும் தேவை. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய சக்தி, கடவுள் ஒருவருக்குத்தான் உண்டு. அந்தக் கடவுள் அமிசமுடையவர்தான். அரசர்களா யிருப்பதற்குத் தகுதியுடையவர்கள் என்ற ஒரு நம்பிக்கை, அரசர்கள் கடவுளின் பிரதிநிதிகள் என்ற எண்ணத்தை வேரூன்றச் செய்து விட்டது. தவிர, ஆரம்பத்தில் ஜனங்களுடைய ஆதரவைப் பெற்று அரச பீடத்தில் அமர்ந்துகொண்ட அறிஞர்கள், தங்களுடைய ஆணைக்கு ஜனங்கள் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் கீழ்ப்படிய வேண்டுமென் பதற்காகக் கடவுளின் பெயரை உபயோகித்துக் கொண்டார்கள். கடவுள் எப்படித் தவறே செய்யமாட்டாரோ, சரியானதைத் தவிர வேறொன்றையும் செய்ய அவருக்குத் தெரியாதோ அப்படியே, அந்தக் கடவுளின் பிரதிநிதிகளாயுள்ள அரசர்களும் தவறே செய்யமாட்டார்கள். அவர்கள் செய்வதெல்லாம் சரி என்ற எண்ணத்தையும் ஜனங்களிடையே வளர்த்து வந்தார்கள். இவர்களுக்குப் போட்டியாகத் தாங்களும் கடவுளின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு புராகிதக் கூட்டம் ஒன்று தோன்றிய காலத்தில், அதனைத் தங்களோடு அணைத்துக் கொண்டார்கள். முதலில் அரசர்களுக்கும் புரோகிதர்களுக்கும் சச்சரவு இருந்து கொண் டிருந்தது. பிறகு, இருசாரரும் சமரசம் செய்து கொண்டு, கடவுளின் வேலையைப் பங்கு போட்டுக் கொண்டார்கள். கடவுளின் இவ் வுலகத்திற்கு அரசர்கள் கர்த்தர்களென்றும் கடவுளின் மறு உலகத்திற்குப் புரோகிதர்கள் கர்த்தர்கள் என்றும் பிரிந்து கொண்டு, ஜனங்களின்மீது ஒரே விதமான ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். மனிதன், உயிரோடிருந்தபோது அரசனுக்கு அடிமையானான்; இறந்த பிறகு புரோகிதனுக்கு அடிமையாகி விட்டான். அவனை உயிரோடு கசக்கிப் பிழிந்தான் அரசன்; அவனை உயிரோடு மரணத்திற்குத் தயார்ப்படுத்தினான் புரோகிதன். மேலைநாட்டு நிலை இது. ஆனால், விஞ்ஞான சாதிரத்தின் வளர்ச்சியானது ஜனங்களுடைய எண்ணத்தையும் அரசர்களுடைய வேலையையும் மாற்றிவிட்டது. இடமும் காலமும் சுருங்கி விட்டதுபோல, அரசர்களைப் பற்றி ஜனங்கள் கொண்டிருந்த எண்ணமும், ஜனங்கள் விஷயத்தில் அரசர்கள் நடந்து கொண்ட மாதிரியும் சுருங்கி விட்டன. பரபர விசுவாசத்தின் பேரிலும் நம்பிக்கையின் பேரிலுமே ஆள்வதும் ஆளப்படுவதும் நடைபெற வேண்டுமென்ற எண்ணம் வளர்ந்தது. இதற்கிசைந்தாற்போல், அநேக அறிஞர்கள் ஆங்காங்குத் தோன்றி, ஜனங்களுடைய உரிமைகள் இன்ன இன்னவென்று விளக்கிச் சொன்னார்கள்; ஜன சக்தியின் மகத்துவத்தைப் புலப்படுத்தினார்கள். முடியாட்சியின் மீது ஜனங்களுக்கிருந்த மோகம் போய் விட்டது. எனவே, முடியாட்சியின் மகத்துவமும் மங்கிவிட்டது. அரசர்களாகக் கொலுவீற்றிருந்தவர்களும் ஜன சக்தியின் பிரதிநிதிகளாகக் கருதப்படவில்லை. இந்தக் கருத்துக்கு விரோத மாக நடக்க முற்பட்ட மன்னர்களும், அதாவது தாங்கள் தெய்வ சக்தியின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு தங்களுடைய சுயநலத்தைப் பாதுகாத்துக் கொள்ள முனைந்தவர்களும், ஜனங்களின் மீது பலாத்காரத்தை உபயோகித்துத் தங்களையும் தங்கள் நலனையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அதே சமயத்தில் ஜனங்களும் அவர்கள் மீது பலாத்காரத்தைப் பிரயோகித்தார்கள். விளைவு, ரத்தப்பெருக்கு. அரசர்கள் அல்லது ஆள்வோர், குடிகள் அல்லது ஆளப்படுவோர் மீது பிரயோகிக்கிற பலாத்காரத்திற்கு அடக்குமுறையென்று பெயர்; குடிகள் அல்லது ஆளப்படுவோர், அரசர்கள் அல்லது ஆள்வோர்மீது பிரயோகிக்கிற பலாத்காரத்திற்குப் புரட்சி என்று பெயர். சட்டங்கள், நீதிதலங்கள், வில்லைச் சேவகர்கள், புதிய புதிய ஆயுதங்கள் முதலியவற்றால் தன்னை அலங்கரித்துக் கொண்டு அடக்குமுறை காட்சியளிக்கிறது. ஆனால், புரட்சியோ, அதிகார சக்தியின் பிடிப்பினின்றும் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்ற ஒரே ஆவலுடனேயே காட்சியளிக்கிறது. அடக்கு முறையிலாகட்டும், புரட்சி முறையிலாகட்டும். இரண்டிலும் மடிகிற வர்கள் ஜனங்கள் தான். ஆனால் ஜனங்களுடைய இந்த மரணத்திலிருந்து நியாயம் இன்னதென்று புலப்படுகிறது; சுதந்திர சக்தி உதயமாகிறது. சுதந்திர சக்தி உதயமாகி விட்டதனாலேயே, அரசன் வீழ்ந்துபட வேண்டு மென்பது அர்த்தமில்லை; சுதந்திர சக்திக்கு, அரச பதவி விரோதமில்லை. ஆனால், அரசன், அந்தச் சுதந்திர சக்தியின் பிரதிநிதியாக இருக்க வேண்டும்; அதாவது ஜனங்களுடைய எண்ணங்களையும் ஆவல் களையும் பூர்த்தி செய்யக்கூடியவனாய் இருக்க வேண்டும். இந்தக் கடமையை அவன் எந்த நிமிஷத்தில் தவற விடுகிறானோ, அந்த நிமிஷத்திலேயே அவனுடைய அரச பதவி ஆட்டங் கொடுக்க ஆரம்பிக்கிறது. இந்தியாவின் அரசியல் சரித்திரமானது, முடியாட்சியைச் சார்ந்தே நிற்கிறது. அரசனுக்கு அடங்கின குடியென்றும், குடியோம்பிய காவலன் என்றுமே பேசப்பட்டு வந்திருக்கிறது. இதைக் கொண்டு, மேனாட்டு அரசியல் போக்கில் மிதந்து கொண்டிருக்கிற சில அறிஞர்கள், இந்தியாவில் தொன்று தொட்டுக் கொடுங்கோ லாதிக்கமே நிலவி வந்திருக்கிற தென்றும், மன்னர்கள், குடி மக்களைத் தங்கள் ஆடற் கருவிகளாகவே உபயோகித்து வந்திருக் கிறார்களென்றும் கூறி, மேனாட்டு அரசியல் முறைகளையே இந்தியா இனிப் பின்பற்றி நடத்தல் வேண்டுமென்ற திட்டமும் போட்டு விடுகின்றார்கள். இந்தியாவில் கொடுங்கோலாதிக்கமே என்றும் நிலவி வந்ததென்று சொல்ல முடியாது. ஓரே வழி கொடுங்கோன்மை நிலவியிருக்கலாம். ஆனால், அது புற நடையே தவிர, பொது நடையல்ல. இந்திய அரசியல் பரம்பரைப்படி, மன்னன் மக்களின் பிரதி நிதியே தவிர, கடவுளின் பிரதிநிதியல்ல. எல்லா ஜனங்களையும் கட்டி யாண்டு பரிபாலித்து வருகிறவன் எவனோ அவன், மற்றச் சாதாரண ஜனங்களைக் காட்டிலும் அதிகமான அறிவும் ஆற்றலும் படைத்தவனா யிருக்க வேண்டும். இந்த அசாதாரண திறமைகள் சாதாரண மனிதர் களுடைய திறமைகளுக்கு அப்பாற்பட்டவை. தங்களினின்றும் எட்டியிருக் கிற அல்லது அப்பாற்பட்டிருக்கிற சக்திகள் யாவும் அமானுஷிக சக்திகள் என்று கருதப்பட்டன; மனித சக்திகளுக்கு மீறினவை, தெய்வ சக்தி களென்று போற்றப்பட்டன. இந்த தெய்வீகப் பண்புகள் அரசனிடத்தில் குடி கொண்டிருக்கின்றன, இதனாலேயே அவன் எல்லோரையும் கட்டியாள் கிறான் என்பன போன்ற காரணங்களினாலேயே அரசன், கடவுளின் பிரதிநிதியென்று கருதப்பட்டான்; வேறு அர்த்தத்தில் இல்லை. சூரியனிடத்திலிருந்து அல்லது சந்திரனிடத்திலிருந்து வந்ததாகச் சொல்வதெல்லாம் வெறும் அலங்கார பாஷைதான். ஜனங்கள், தங்களுடைய அதிகாரத்தை யெல்லாம் ஒன்று திரட்டி அரசனிடத்தில் ஒப்புவிக்கிறார்கள். அரசன் அதே அதிகாரத்தை ஜனங்கள் மீது பிரயோகித்து அவர்களை ஆள்கிறான். ஆள்வதும் ஆளப்படுவதும் பரபர சம்மதத்தின் பேரில்தான். இதனை வேறொரு முறையாகச் சொல்வோம். ஜனங்கள், தங்களுடைய ஆளும் உரிமைகளைத் தாங்களே வலிய ஓர் அரச னிடம் ஒப்படைக்கிறார்கள். ஏன்? தங்களுடைய க்ஷேமத்திற்காக. இப்படித் தன்னிடத்தில் ஒப்படைக்கப் பட்டிருக்கிற உரிமைகளை, அரசனானவன் ஒருமுகப்படுத்தி கால தேச வர்த்தமானங்களை அனுசரித்து, அதே ஜனங்களுக்கு ஒழுங்காகத் திருப்பி அளிக்கிறான். ஜனங்களுடைய உரிமைகளை ஒழுங்காகக் காப்பாற்றி வருவதிலும், அவற்றை முறையாக அந்த ஜனங்களுக்குத் திருப்பி அளிப்பதிலுமே, அரசனுடைய உரிமையும் க்ஷேமமும் இருக்கின்றன. ஜனங்களுடைய உரிமைகளைக் காப்பாற்றிக் கொடுக்கிற கடமையைத் தவிர, வேறு கடமை அரசனுக்கு இல்லை. அப்படிப்பட்ட அரசனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதைத் தவிர, வேறு கடமை ஜனங்களுக்கு ஏது? அந்த ஜனங்கள்தான் வேறு கடமை ஒன்று இருக்கிறதென்று நினைப்பார்களா? முறை செய்து காப்பாற்றும் மன்னவன், மக்கட் கிறையென்று வைக்கப்படும்1 முறையோடு காப்பாற்றும் கடமையைச் செய்கிறவன், மக்களுக்குத் தெய்வம். முறை தவறினால் அவன் இறையல்ல. அவனுக்குக் கீழ்ப்படிவதும் ஜனங் களுடைய கடமையல்ல. ஜனங்களின் நன்மையைத் தவிர்த்து வேறு நன்மை அரசனுக்கு இல்லையாதலினால் தான், அரசனுடைய நன்மையைத் தவிர்த்து வேறு நன்மை தங்களுக்கு இல்லையென்று ஜனங்கள் கருதினார்கள். அரசன் தேச பக்தனாயிருந்தான்; ஜனங்கள் ராஜ பக்தர்களாயிருந்தார்கள். தேச பக்தியும் ராஜ பக்தியும் ஒன்றாகவே இருந்தன. இந்திய அரசியல் பரம்பரையின் சிறப்பு இது. இந்திய அரசியல் சாதிரத்தின்படி, அரசன், ஜனங்களுக்கு மேம்பட்டவனேயானாலும், அவன், தன் இஷ்டப்பிரகாரம் ஆட்சி செய்ய முடியாது. ஜனங்கள் தான் அரசனுக்குக் கீழ்ப்படிய வேண்டியவர்களே தவிர. அரசன், யாருக்கும் கீழ்ப்படிய வேண்டியதில்லையென்ற கோட்பாடு சொல்லளவில் தான் நின்றது. அரசனுக்கும் மேற்பட்ட சக்தியொன்றுண்டு. அதுதான் தருமம். அதைக் கடவுள் என்று சொன்னாலும் சரி, அரசு என்ற சொன்னாலும் சரி, ஒன்றுதான். அரசன், பிரஜைகளுக்குக் கட்டுப்படாத வனாயிருந்தாலும், தரும நியாயத்திற்குக் கட்டுப்பட்டவன். இந்தத் தரும நியாயத்தின் பிரதிநிதிகளாகவே, செங்கோல், சிங்காதனம் முதலியன இருந்தன. தன் பிரஜைகளுக்குத் தலை வணங்காத அரசன், செங்கோலுக்கும் சிங்காதனத்திற்கும் தலை வணங்க வேண்டியவன். இப்பொழுதுகூட. அநேக சுதேச சமதானங்களில், தர்பார் நடக்கிறபோது, அரசன், செங்கோலுக்கும் சிங்காதனத்திற்கும் பூசை போடுவதைப் பார்க் கிறோம். மற்றும், இந்திய அரசியல் நூல் வல்லார், பொதுவாக அரசையும் அரசனையும் ஒன்றுபடுத்தியே சொல்லிக் கொண்டு போயிருக்கின்றனர்; அரசு வேறே, அரசன் வேறே என்று பிரிவுபடுத்திப் பேசவில்லை. இதற்கக் காரணம், இந்தியாவில் பெரும்பாலும் கோனாட்சி நிலவியிருந்ததேயாம். எப்படி எங்கும் நிறைந்து நிற்கின்ற கடவுளை, உருவ வழிபாட்டின் மூலம் காண விழைந்தனரோ அப்படியே, அரசை அரசன் மூலமாகவே கண்டனர் இந்திய அரசியல் பண்டிதர். அரசின்றி அரசனில்லையென்பதை ஒப்புக் கொண்ட இவர்கள், அரசனின்றி அரசில்லையென்பதையும் வற்புறுத் தினர். ஒரு விதத்தில் இது சரி. எங்ஙனமென்றால், உயிரினால் உடல் இயங்குகிறது என்றாலும், உடலிலேதான் உயிர் இருக்கிறது. அந்த உடலின் அசைவைக் கொண்டுதான், உயிர் இருப்பதை அறிந்து கொள்கிறோம். அதைப் போலவே, அருவமாயுள்ள அரசின் பிரதி நிதியாக உருவமாயுள்ள அரசன் இருப்பதால், அரசனுக்கே முக்கியத்துவம் கொடுத்துப் பேசினர். இதனாலேயே, இந்திய அரசியல் நூல்கள் பலவும், அரசன் பயிலவேண்டிய விஷயங்கள் என்ன, அவன் அமைச்சை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும், அவனுடைய அன்றாட அலுவல்கள் யாவை முதலியவைகளைப் பற்றி அதிகமாகப் பேசுகின்றன. இனி மேனாட்டு அரசியல் பண்டிதர் சிலருடைய கருத்துக்களையும் சிறிது கவனிப்போம். மேனாட்டில் பெரும்பாலும் அரசும் அரசனும் வேறு வேறாகவே பிரித்துப் பேசப்பட்டிருக்கின்றன. ஏனென்றால் அங்கு அரசனில்லாமலே ஆட்சி நடைபெற்ற காலங்களும் உண்டு. அரசானது, கொடுங்கோலரிடத்தில் அகப்பட்டுத் திண்டாடிக் கொண்டிருந்த காலங்களில் ஜன சக்தியானது சீறியெழுந்து, அந்தக் கொடுங்கோலரை அப்புறப்படுத்தி விட்டு, அந்த அரசைத் தன்னுடைய சுவாதீனத்தில் வைத்துக்கொண்ட நிகழ்ச்சிகள் பல மேனாட்டில் நடைபெற்றிருக்கின்றன; அரசனுடைய ஆட்சிக்குப் பதிலாகக் குடிகளுடைய ஆட்சி நடைபெற்றிருக் கிறது. இதனாலேயே, அரசனுடைய உரிமைகள் இன்னவையென்றும், ஜனங்களுடைய கடமைகள் இன்னவையென்றும் வரம்பு கட்டி விட்டனர். இப்படி வரம்பு கட்டிவிட்டாலும், ஜன சமுதாயத்தில் அமைதி நிலவாத காலந்தான் மேனாட்டில் அதிகம். ஏனென்றால், அரசனுக்கும், குடிகளுக்கும் மத்தியில் சந்தேகம் என்னும் எரிமலை சதா புகைந்து கொண்டிருந்தது. அவ்வப்பொழுது இது வெடித்து இரு சாராரையும், பட்சபாதம் பாராட்டாமல் அழித்துவிட்டது. அரசன் யார்? இது சம்பந்தமாகச் சில பொதுவான கருத்துக் களைத் தெரிவிப்போம். அரசனை ஒரு மதகுக்கு ஒப்பிடலாம். அரசு என்பது ஏரி; அரசன் மதகு; அரசாங்கம் வாய்க்கால்; குடிமக்கள் நிலம். ஏரி நீரை நேரே நிலத்தில் பாய்ச்ச முடியாது. இதற்காக அந்த நீரை ஓர் அளவுக்குட்படுத்தி நிலத்திற்கு விட வேண்டியிருக்கிறது. இதற்கு மதகும் தேவை; வாய்க்காலும் தேவை. இதுதான் அரசனுடையவும் அரசாங்கத் தினுடையவும் கடமை. ஆனால், அரசனுக்கு இரண்டு விதமான கடமைகள் உண்டு. அவன் இரட்டை முகமுடையவனாயிருக்க வேண்டும் என்று கொண்டாலும் பொருந்தும். அரசன் எப்படி அரசின் பிரதிநிதியாக இருக்கிறானோ அப்படியே ஜனங்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறான். இதனால், அவன் அரசுக்கும் தன் கடமையைச் செய்ய வேண்டும்; குடிகளுக்கும் தன் கடமையைச் செய்ய வேண்டும். எப்படி ஒரு மனிதன், குழந்தைகளுக்குத் தகப்பனாகவும், குடும்பத்திற்கு எஜமானனாகவும் இருந்து தன் கடமை களை ஒழுங்காகச் செய்து கொண்டு வருகிறானோ அப்படியே, ஓர் அரசன், அரசின் சேவகனாகவும், ஜனங்களின் கருணையுள்ள எஜமானனாகவும் இருந்து கடனாற்ற வேண்டும்; அரசையும் குடிமக்களையும் சம நோக்குடன் பார்க்க வேண்டும். கோல்கோடாது ஆட்சி புரிதல் என்றால் என்ன அர்த்தம்? இரட்டைத் தட்டுகளுடைய ஒரு தராசின் கோல் எப்படி ஒரு பக்கம் ஏற்றமாகவும் மற்றொரு பக்கம் இறக்க மாகவும் இராமல் சம தூக்கமாக, நேராக இருக்க வேண்டுமோ, அப்படி இருந்தால்தான், அது சரியான நிறை என்று கூறுவோம். அதைப் போலவே அரசையும் குடிகளையும் ஒரே நிறையாக வைத்துப் பார்ப்பதுதான் அரசனின் முறையென்று அர்த்தம். அரசின் உரிமையை நிலைநாட்டுவதற்காக, ஜனங்களின் உரிமைக்குப் பங்கம் விளைவிக்கக் கூடாது; அப்படியே ஜனங்களின் உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு அரசை அலட்சியப் படுத்திவிடவும் கூடாது. இந்த இரண்டு கடமைகளையும் கோணாமல் நடத்திச் செல்வதற்கு அறிகுறியாகவே செங்கோல் இருக்கிறது. இந்தச் செங்கோலைத் தாங்குகிறவன், தன்னை மறந்த வனாய், விருப்பு வெறுப்பில்லாதவனாய் இருக்க வேண்டும். இந்தக் காரணத்தினாலேயே, பிளேட்டோ என்ற கிரேக்க அறிஞன். ஞானிகள்தான் அரசர்களாயிருக்க வேண்டும் என்று கூறினான். ஞானிகள் அரசர்களா யிருந்து நாட்டை ஆளாத வரையில், அல்லது இப்பொழுதுள்ள அரசர்கள், உண்மையும் நிறைவும் உடைய ஞானிகள் ஆகாத வரையில், அரசியல் அதிகாரமும் தத்துவ ஞானமும் ஒன்று சேர்க்கப்படாத வரையில், அரசியலுக்காக ஞானத்தையோ, ஞானத்திற்காக அரசியலையோ, ஒன்றுக்காக ஒன்றைத் துறந்துவிடாத வரையில், நாட்டிற்கு மட்டுமல்ல, மானிட ஜாதிக்கே க்ஷேமம் உண்டாகாது என்பது பிளேட்டோவின் வாக்கு. 9. குடிகள் யார்? அரசுக்கு என்ன உரிமைகளும் கடமைகளும் உண்டோ அதே உரிமைகளும் கடமைகளும், குடிகளுக்கும் உண்டு. எந்தெந்த லட்சணங்கள் அரசுக்கு இன்றியமையாதவை என்று நாம் கருது கிறோமோ அதே லட்சணங்கள் குடிகளுக்கும் இன்றியமையாதவை. அந்த லட்சணங்களை யுடையவர்கள்தான் குடிகள். ஒரு நாட்டிலே வசிக்கிற எல்லா மனிதர்களும் குடிகளல்லர். சிங்காதனத்திலே வீற்றிருக்கிறவர்கள் எல்லோரும் எப்படி அரசர்களாக மாட்டார்களோ அப்படியே ஒரு நாட்டில் வசிக்கிற எல்லோரும் குடிகளாக மாட்டார்கள். சில சில லட்சணங்களை யுடையவர்களைத்தான் அரசர்களென்று சொல்கிறோம். அதைப்போல் குடிகளுக்கும் சில லட்சணங்கள் உண்டு. அரச சக்தி எவ்வளவு பலம் பொருந்தியதோ, புனித முடையதோ, அவ்வளவு பலம் பொருந்தியது, புனிதமுடையது, பிரஜா சக்தியும். ஏனென்றால், பின்னதிலிருந்தே முன்னது பிறக்கிறது. ஒன்றில்லாவிட்டால் மற்றொன்று இல்லை. வித்தியாசம் என்னவென்றால் அரசசக்தி இயங்குவது பகிரங்கமாகத் தெரிகிறது; பிரஜா சக்தியோ சூட்சுமமாக இருக்கிறது. ஒரு கட்டடந்தான் மேல் பார்வைக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு ஆதாரமா யிருப்பது எது? அதிவாரம். அதிவார மில்லாவிட்டால் கட்டடம் இல்லை. எந்த மாதிரி திட்டம் போட்டுக் கொண்டு மேல் கட்டடத்தை அமைக் கிறோமோ அதே மாதிரி திட்டத்தில் தான் அதிவாரத்தையும் அமைக்கிறோம். அதிவாரத்தைப் பார்த்த மாத்திரத்தில், மேல் கட்டடம் எழும்பாவிட்டாலும் அதன் உருவம் இன்னபடிதான் இருக்கும் என்று ஒரு வகையாக நம் அகக்கண் முன்னர் அமைத்துக் கொண்டு விடுகிறோம். இந்த மாதிரியான பொருத்தங்களையே அரசுக்கும் குடிகளுக்கும் வைத்துப் பார்க்க வேண்டும். குடிகளைப் பார்த்து அரசை நிதானித்துவிடலாம். ஒரு நாட்டின் பூரணப் பிரஜா உரிமையையும் அனுபவித்துக் கொண்டிருக்கிற ஒருவனைக் கவனித்து நோக்கினால், அவனுடைய பேச்சுத் தோரணை, அவன் நடந்து கொள்கிற மாதிரி, பொது விவகாரங்களில் அவன் ஈடுபடுகிற வீதம் ஆகிய இவைகளைக் கொண்டு, அந்த நாட்டின் அரசைப் பற்றி, நாம் ஒருவாறு அளவு போட்டுக் கொண்டு விடலாம். எனவே, அரசை இயக்குவிப்பது குடிகள்; குடிகளை வாழ்விப்பது அரசு. அரசுக்கும் குடிகளுக்குமுள்ள தொடர்பை, கிரேக்க அறிஞனாகிய அரிட்டாட்டல் வெகு அழகாக எடுத்துச் சொல்கிறான் :- ஒருவன் ஊதுகுழலைச் செய்து கொடுக்கிறான்; இன்னொருவன் அதில் வாசிக்கிறான். இரண்டு பேருக்கும் ஊதுகுழலின் லட்சணங்கள் தெரிந்திருக்கின்றன. ஆனால் ஊதுகுழலில் வாசிக்கிறவனைத் தான் நாம் பார்க்கிறோம். செய்கிறவன் யாரென்பதைப் பற்றி விசாரிக்கிறோமா? இல்லை. என்றாலும், இனிய சங்கீதத்தை நாம் அனுபவிக்க வேண்டுமானால், இரண்டு பேருடைய ஒற்றுமையான முயற்சியும் நமக்குத் தேவையாயிருக்கிறது. அது போல் மனிதனுடைய நல்வாழ்வுக்கு அரச சக்தியும் பிரஜா சக்தியும் ஒன்றுபட்டிருப்பது அவசியமாகிறது. ஊது குழலைச் செய்து கொடுப்பது பிரஜா சக்தி; அதில் வாசிப்பது அரச சக்தி. அதிலிருந்து பிறக்கிற இனிய நாதமே சமுதாயத்தின் நல்வாழ்வு. விவசாயிகளைக் குடியானவர்கள் என்று சொல்கிறோம். ஒரு நாட்டின் பிரஜைகளையும் குடிகள் என்று அழைக்கிறோம். அப்படியானால் இரண்டுக்கும் ஏதோ ஒருவிதத் தொடர்பு இருக்கிறதென்று தெரிகிறதல்லவா? இதனைச் சற்று விவரிப்போம். நிலத்திலே ஒருவன் உழைக்கிறான்; அதிலிருந்து பலனையும் அனுபவிக்கிறான். உழைக்கிற கடமையை அவன் செய்தால் பலனை அனுபவிக்கிற உரிமை அவனுக்கு ஏற்படுகிறது. இந்தக் கடமையைச் செய்து உரிமையைச் சம்பாதிக்கிறவன் எவனோ அவன்தான் குடியானவன்; விவசாயி; உழவன். உழைப்பிலிருந்து பிறந்ததுதான் உழவு. இப்படியே, தனது நாட்டிலே, தனது நாட்டிற்காக உழைக்கிறவன் எவனோ, அப்படி உழைப்பதன் மூலம் அந்த நாட்டின் பாதுகாப்பைப் பெறுகிறவன் எவனோ, நல்வாழ்வு வாழ்வதற்குரிய வசதிகளைப் பெறுகிறவன் எவனோ, அவன் ஒரு குடி; பிரஜை. நிலத்தின் விவசாயி, நாட்டின் பிரஜை, இரண்டு பேரையும் குடியென்ற பெயராலேயே அழைக்கிறோம். இதனால் இந்த இரண்டு பேருடைய லட்சணங்களும் - அதாவது கடமைகளும் உரிமை களும் - ஒன்றே யென்பது சித்தமாகிறது. சொந்த நிலத்திலே உழைத்துப் பிழைக்கிறவன்தான் நாட்டின் நல்ல பிரஜையாக இருக்க முடியும் என்பதே முன்னோர்களின் கொள்கை. உழவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதெல்லாம் இந்த நோக்கத்துடனேயே. உலகத்திற்கு அச்சாணி போன்றவர்கள் உழவர்கள் என்று திருக்குறள் கூறியிருக் கிறதென்றால் அவர்களை நாட்டின் நல்ல பிரஜைகள் என்ற திருஷ்யிடிலே தான் பார்க்கிறது. நல்ல பிரஜைகளில்லாவிட்டால் நல்ல ராஜ்யம் ஏது? அச்சாணி இல்லாவிட்டால் ரதம் ஓடுமா? நற்குடியினர் அல்லது நற்குடிப் பிறந்தார் என்று சொன்னால் என்ன அர்த்தம்? பரம்பரைச் செல்வமுடையவர்கள் என்றோ அல்லது உயர்ந்த ஜாதியினரென்றோ இதற்கு அர்த்தமில்லை. பரம்பரை, ஜாதி, மதம் முதலிய பாகுபாடுகள் இந்தச் சொல்லில் பிரவேசிக்கவில்லை. யாரொருவர் விவசாயத்தை முக்கிய ஜீவனோபாயமாகக் கொண்டு, பரிபூரண சுதந்திரத்துடன் வாழ்கிறாரோ, தாம் எந்த நாட்டின் பிரஜையா யிருக்கிறாரோ அந்த ராஜ்யத்தின் நற்பெயருக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படாமல் தமது அன்றாட வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருகிறாரோ, அவர்தான் நற்குடியினர். அப்படிப்பட்டவருக்குத் தான், ஒரு ராஜ்யத்தினின்று சகல நன்மைகளையும் எதிர்பார்க்க உரிமையுண்டு. நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர், நல்ல விவசாயி, நல்ல பிரஜை ஆகிய மூன்று பேரும் ஒரு சொல்லிலேயே அடங்குகின்றனர். அந்த ஒரு சொல்தான் குடியென்பது. அதாவது, மேற்சொன்ன மூன்று பெருடைய பண்புகளும் எந்த ஒருவனிடத்தில் தங்கியிருக்கின்றனவோ அவன்தான் உண்மையான குடி. இந்த மூன்று பண்புகளும் சேர்ந்தது தான் குடிமை. குடிமை என்ற வார்த்தைக்கு நற்குடியிலே பிறந்தவர்கள் என்று சுருங்கிய ஒரு பொருளைக் கொண்டால் மட்டும் போதாது. குடிமை என்ற அதிகாரத்தில் ஆசிரியர் திருவள்ளுவர் ஒழுக்கமும் வாய்மையும், நாணும் இம்மூன்றும் இழுக்கார் குடிப்பிறந்தார் என்று கூறுகிறார். அதாவது உயர்ந்த குடியில் பிறந்தோர்கள் ஒழுக்கம், மெய்ம்மை, மானம் ஆகிய இவற்றில் தமது நிலை தவற மாட்டார்கள் என்பது இதற்கு அர்த்தம். சரி; இந்த மூன்று தன்மைகளும் யாரிடத்தில் இருக்கும்? அடிமைகளிடத்திலே இருக்குமா? இராது. எப்பொழுது ஒருவன் மற்றொருவனுக்கு அடிமையாகி விட்டானோ அப்பொழுதே அவன் ஒழுக்கவீனனாகவும், பொய்யனாகவும், மானமில்லாதவனாகவும் ஆகிவிட்டான். சுயநிலையிலிருந்து இறங்கினவன்தான் அடிமை. சுயநிலையாவது என்ன? சுதந்திர நிலை. சுதந்திர நிலை தான் இயற்கை நிலை. அதாவது சுதந்திரமாயிருப்பது தான் இயற்கை; அடிமையாயிருப்பது, மற்றவர்களுக்குப் பராதீனப்பட்டுக் கிடப்பது செயற்கை. செயற்கை வாழ்வு என்று சொன்னால் போலி வாழ்வு தானே? பொய்யான வாழ்வு தானே? பொய்யான வாழ்வில் ஒழுக்கத்தை எப்படிக் காண முடியும்? அதனை மானமுள்ள வாழ்வு என்று எப்படிச் சொல்ல முடியும்? இயற்கையான வாழ்வு அல்லது சுதந்திர வாழ்வு நடத்துகிறவன் யார்? விவசாயி. மண்ணோடு உறவாடுகிற அவன், உழைத்துப் பயனை நுகர்கிறான். அதாவது அவனுடைய பிழைப்பு அவனுடைய உழைப் பினால் நடைபெறுகிறது. அதனால் யாருடைய சலுகையையோ தயவையோ அவன் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவன் சுதந்திர புருஷனாயிருக்கிறான். அவனுடைய வாழ்வுதான் உண்மையான வாழ்வு. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற குறளின் ஓரடியை நாம் நுணுகி ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால் சுதந்திர வாழ்க்கைக்கும் உழவுக்கும் எவ்வளவு நெருங்கிய தொடர்பு இருக்கிறதென்பது நன்கு தெரியும். சுதந்திரமுள்ள இடத்தில்தான் ஒழுக்கம் பிறக்கிறது. ஒழுக்கம் என்பது என்ன? தத்தம் கடமையைச் செய்து உலக வாழ்க்கை நடத்துதல் என்றான் ஓர் அறிஞன். தனக்கும், தான் பிறந்த நாட்டிற்குமான கடமை களைச் செய்து கொண்டு போகிறவன் எவனோ அவன்தான் ஒழுக்க முடையவன். அவனுக்கு உயிர் பெரிதல்ல; தன் நிலையினின்று தாழா திருத்தலே பெரிது. அதாவது மானத்தோடு வாழ்தலைத் தான் அவன் பிரதானமாகக் கொள்கிறான். மானத்தோடு வாழ்தலே சுதந்திரத்தோடு வாழ்தல். எனவே, விவசாயத்தை முக்கிய ஜீவனோபாயமாகக் கொண்டிருக் கிறவன் எவனோ அவன் தான் உண்மையான சுதந்திர புருஷன்; அவனிடத் திலே தான் கடமையைச் செய்து கொண்டு போகிற பண்பு இயற்கையாக அமைந்திருக்கிறது. கடமை, உரிமையை நல்குகிறது; கடமையைச் செய்து உரிமையை அனுபவிக்கிறவர்கள்தான் உண்மையான பிரஜைகள்; உயர்ந்த குடிகள். மேனாட்டு அரசியல் பண்டிதர்கள், குடிகளுக்குச் சில லட்சணங் களைக் கூறியிருக்கிறார்கள். அவை என்ன என்பதைச் சிறிது கவனிப் போம். ராஜ்ய நிருவாகத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் உரிமை யாருக்கு உண்டோ அவர்தான் பிரஜை என்பது அரிட்டாட்டலின் கருத்து. ராஜ்ய நிருவாகத்தில் பங்கெடுத்துக் கொள்வதென்றால், எல்லாரும் அரசாங்க உத்தியோகதர்களா யிருக்கவேண்டுமென்பதில்லை. அரசாங்கத்தின் நீதி செலுத்தும் முறையும், நிருவாகம் செய்யும் முறையும் இன்ன இன்னபடி தான் இருக்க வேண்டுமென்று நேர்முகமாகவோ மறைமுகமாகவோ சொல்ல யாராருக்கு உரிமையுண்டோ அவர்களெல்லோரும் ராஜ்ய நிருவாகத்தில் பங்கெடுத்துக் கொள்கிறவர்கள் தான். ஏனென்றால், அவர்களுடைய விருப்பப்படிதானே அரசாங்கம் நடைபெறுகிறது? ஜனநாயகப் பேச்சிலே அழுந்திக் கிடக்கும் இப்பொழுதுள்ள நமக்கு, அந்த ஜனநாயக பாஷையிலேயே சொன்னால்தான் சுலபமாக விளங்கும். எப்படியென்றால் வாக்கு (ஓட்டு)ரிமை யாராருக்கு உண்டோ அவர்கள் எல்லோரும் உண்மையான பிரஜைகள் என்று நாம் கொள்ள வேண்டும். ராஜ்ய நிருவாகத்தில் பங்கெடுத்துக் கொள்கிற உரிமை மட்டும் இருந்தால் போதுமா? அந்த ராஜ்ய நிருவாகத்தினால் உண்டாகிற அனுகூலங்களை அடைகிற உரிமையும் இருக்க வேண்டும். கிரேக்க ஆசிரியன் ஒருவன் கூறுகிற மாதிரி, ராஜ்யத் தினுடைய கௌரவங் களில் பங்கு பெறுகிற உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. பிரஜையாயிருப்பது ஓர் உரிமை மட்டுமல்ல. அது ஒரு பெருமை; பதவி; அந்தது. நான் இன்ன நாட்டின் பிரஜை என்று ஒருவன் சொல்லிக் கொண்டால், அவன், தனது அரசியல் அந்ததை வெளிப்படுத்துகிறான் என்பதுதான் அர்த்தம். அரசன் என்பது எப்படி ஒரு பதவியோ அப்படியே குடியென்பதும் ஒரு பதவி. இரண்டுக்கும் பொறுப்புண்டு; சக்தியுண்டு. இந்த இரண்டு சக்திகளையும் மோதவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் அரசாங்கம். குடிகள் யார் என்பதற்கு ஓர் ஆங்கில அறிஞன் பின்வருமாறு லட்சணம் கூறுகிறான் :- ஒரு ஜன சமுதாயத்தின் அங்கத்தினர்களே குடிகள். அந்தச் சமுதாயத்திற்குச் சில கடமைகளைச் செய்ய இவர்கள் கட்டுப்பட்டிருக்கிறார்கள்; அந்தச் சமுதாயத்தின் ஆதிக்கத்துக்கும் கட்டுப் பட்டிருக்கிறார்கள்; அந்தச் சமுதாயத்தினால் உண்டாகிற சாதகங்களில் சம பங்கு பெறும் சம உரிமையும் உடையவர்களா யிருக்கிறார்கள். ஒரு சமுதாயத்தின் அங்கத்தினனா யிருந்து கொண்டு, எவனொருவன், தன்னுடைய மனிதத் தன்மையில் பூரண வளர்ச்சி யடைகிறானோ, அப்படி வளர்ச்சி யடைகிற அதே தருணத்தில் சமுதாயத்தின் உயர்வை நாடுகிறானோ அவன்தான் உண்மையான பிரஜை என்பது வேறொரு பண்டிதனுடைய கருத்து. ஒரு நாட்டில் வசிக்கிற பிரதியொரு பிரஜையும் இரண்டு பட்ட தன்மைகளை யுடையவனா யிருக்கிறான். ஒன்று தனி மனிதன்; மற்றொன்று சமுதாயத்தின் அங்கத்தினன். தனிப்பட்ட மனிதர்கள் பலர் சேர்ந்ததுதான் ஒரு சமுதாயம். சமுதாயம் என்ற தொகுப்பில் ஒரு சிறிய அமிசம் தனி மனிதன். தனி மனிதன் செய்கிற ஒவ்வொரு காரியமும் சமுதாயத்தில் அதிர்ச்சியை உண்டாக்குகிறது. அதுபோல் சமுதாயத்தில் நிகழ்கிற ஒவ்வொரு சம்பவமும் தனி மனிதனைப் பாதிக்கிறது. எனவே, இந்த இரண்டுபட்ட தன்மைகளையும் எவனொருவன் ஒன்றுபடுத்திக் கொண்டு செல்கிறானோ, அவன்தான் உண்மையான பிரஜை. அதாவது தனி மனிதனுடைய உரிமைகளுக்குப் பங்கம் வராமல் சமுதாயத்தின் அங்கத்தினனுடைய உரிமைகளை எவன் பாதுகாத்து வருகிறானோ, தனி மனிதனுடைய கடமைகளைச் செய்து கொண்டே சமுதாய அங்கத்தினனுடைய கடமைகளையும் எவன் நிறைவேற்றிக்கொண்டு வருகிறானோ அவன்தான் உண்மையான பிரஜை. தனி மனிதனுடைய சர்வாதிகார ஆட்சி முறையை ஆதரிக்கிற சிலர், பிரஜைக்கு ஒரே லட்சணம்தான் இருக்கவேண்டுமென்று கூறுகிறார்கள். அதுதான் ராஜ்யத்தின் க்ஷேமத்தை நாடுதல். இதை இன்னும் சிறிது பச்சையாக இவர்கள் சொல்கிறபோது, ராஜ்யத்தினுடைய க்ஷேமத்திற் காகத் தனி மனிதனுடைய க்ஷேமத்தைப் பலிகொடுத்து விடவேண்டு மென்று சொல்கிறார்கள். இதற்குப் பூர்விக கிரேக்க அறிஞர்களைச் சாட்சிகளாகக் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள். உதாரணமாக, அரிட்டாட்டல் என்பவன், ராஜ்யத்தை ஒரு கப்பலுக்கு ஒப்பிட்டுப் பேசுகிற போது, கப்பலிலே வேலை செய்கிற சிப்பந்திகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வேலையைச் செய்து கொண்டிருந்த போதிலும் எல்லாருக்கும் கப்பல் ஒழுங்காகச் செல்ல வேண்டுமென்பதிலே எப்படி ஒரே நோக்கம் இருக்கிறதோ அப்படியே, ஒரு ராஜ்யத்தினுடைய பிரஜைகள் எத்தரத்தினராய் இருந்த போதிலும், எவ்வேலையைச் செய்து கொண்டிருக்கிறவரா யிருந்தபோதிலும், ராஜ்யத்தின் க்ஷேமத்தையே நாடவேண்டுமென்று சொல்கிறானென்று சொல்லி தனி மனிதனுடைய உரிமையைச் சீர்குலைத்து, ஒரு தனி மனிதனுடைய சர்வாதிகாரத்தை ஊர்ஜிதம் செய்யப் பார்க்கிறார்கள். இங்ஙனம் தனி மனிதர்கள், தங்கள் சுய உரிமையைப் பறி கொடுத்துவிட்டு அரசாங்கத்தினால் ஆட்டி வைக்கப்படுகிற பொம்மைகள் மாதிரி இருப்பார்களானால் அவர்களை, உரிமையுள்ள பிரஜைகள் என்று எப்படிச் சொல்வது? ராஜ்யத்தின் க்ஷேமத்தை நாடுவது பிரதியொரு பிரஜையினுடைய கடமையென்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதே சமயத்தில் பிரதியொரு பிரஜையினுடைய உரிமையையும் அங்கீகரித்து அதனைப் பாதுகாத்து வருவது அரசின் கடமையென்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டுமல்லவா? அப்பொழுதுதான் அரசுக்கும் குடிகளுக்கும் உள்ள தொடர்பில் ஒரு சமத்துவம் நிலவும். குடி அல்லது பிரஜை என்று சொன்னாலே உரிமையுள்ள ஒரு நபரைத்தான் குறிக்கிறது. ஆங்கிலத்தில் சிட்டிஸன்1 என்றும் ஸப்ஜெக்ட்2 என்றும் இரண்டு வார்த்தைகள் உண்டு. இந்த இரண்டு வார்த்தைகளுக்கும், பொதுவாக, குடியென்றும், பிரஜையென்றும் சொல்கிறோம். ஆனால், சிட்டிஸனுக்கும் ஸப்ஜெக்ட்டுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உண்டு. ராஜ்யத்தின் நிருவாக விஷயத்தில், அந்த நிருவாகம் ஒழுங்காக நடைபெறுவதற்குத் துணையாகச் சட்டங்களை நிர்மாணிக்கிற விஷயத்தில் எவனொருவனுக்கு உரிமையுண்டோ அவன் சிட்டிஸன்; அந்த உரிமையில்லாதவன், சட்ட திட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக் கிறவன் ஸப்ஜெக்ட். நவீன அரசியல் பரிபாஷையில் சொல்வோமானால், வாக்கு (ஓட்டு) ரிமையுடையவன் சிட்டிஸன்; வாக்கு (ஓட்டு)ரிமை யில்லாதவன் ஸப்ஜெக்ட். கடமையைச் செய்து உரிமையை எதிர் பார்க்கிறவன் சிட்டிஸன்; கடமையை மட்டும் செய்து கொண்டு போக வேண்டுமென்று எதிர்பார்க்கப் படுகிறவன் ஸப்ஜெக்ட். இந்தப் பிந்தியவன், அரசாங்கத்தினிடமிருந்து ஏதேனும் சௌகரியங்களைப் பெறுவானாயின், அஃது, அந்த அரசாங்கத்தின் தயவைப் பொறுத்த விஷயமே தவிர, அவன் நியாயமாக எதிர் பார்க்க வேண்டிய உரிமையல்ல. ராஜ்யாதிகாரத் தில் பங்குடையவர்கள் சிட்டிஸன்கள்; ராஜ்யத்தின் சட்டங்களுக்கு அடங்கினவர்கள் ஸப்ஜெக்ட்டுகள் என்பது. பிரெஞ்சு அறிஞனாகிய ரூஸோவின் வியாக்கியானம். 10. பலவித ஆட்சி முறைகள் ஆள்வோர், ஒருவராகவோ அல்லது சிலராகவோ எப்படியிருந்த போதிலும், அவர்களுக்கும் ஜனங்களுக்கும் ஏதோ ஒருவித சம்பந்தம் இருந்துகொண்டே யிருக்கிறது. இந்தச் சம்பந்தத்திற்கே ஆட்சி முறை என்று பெயர். ஆளும் முறையைப் பற்றிக் கூறுவதற்கே ஆட்சி முறை என்று பெயராயினும், ஆட்படும் முறையும் இதில் அடங்கியிருக்கிறது. ஏனென்றால், ஆட்படுவோர் இல்லாமல் ஆளுகை இல்லை. ஆளுந் தன்மையையும் ஆட்படுந் தன்மையையும் பொருத்திக் காட்டுவதுதான் ஆட்சி முறை. இரண்டுக்கும் உரிமைகளுண்டு; கடமைகளுமுண்டு. இந்த ஆட்சி முறையைப் பலவிதமாக வகுத்துக் கூறுவர் அறிஞர். நாம் இங்கே பொதுவாக மூன்று பிரிவாக வகுத்துக் காட்ட விரும்புகிறோம். இவை முறையே 1. ஒருவர் ஆட்சி, 2. ஒரு சிலர் ஆட்சி, 3. பலர் ஆட்சி என்பனவாகும். நவீன அரசியல் பரிபாஷையினால் அழைக்கப்படுகின்ற எல்லாவித ஆட்சி முறைகளும், இந்த மூன்று பெரும் பகுதிகளிலே அடங்கும். நாஜிஸம், பாசிஸம், கம்யூனிஸம் முதலிய இஸம்களும், டெமாக்ரஸி, அரிட்டாக்ரஸி, தியாக்ரஸி முதலிய க்ரஸிகளும், மானார்க்கி, ஆலிகார்க்கி முதலிய அர்க்கிகளும் எல்லாம் இந்த மூன்று பெரும் பகுதிகளின் கிளைகளே.1 கி.பி. பதினெட்டாவது நூற்றாண்டு வரையில் கீழ் நாட்டிலே யாகட்டும், மேல் நாட்டிலே யாகட்டும், ஒருவர் ஆட்சி முறைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்று வந்தது. வேறு பலவித ஆட்சி முறைகள் அவ்வப்பொழுது தோன்றியும் மறைந்தும், ஓங்கியும் ஒடுங்கியும் வந்த போதிலும், அனைத்திற்கும் மையமாயிருந்தது ஒருவர் ஆட்சி முறையே. பின்னரே, அதாவது விஞ்ஞான அபிவிருத்தியின் காரணமாக இடம், காலம் முதலியன சுருங்கத் தொடங்கின பிறகே, ஒருவருடைய ஆட்சிக்கு மகத்துவம் போய்விட்டது; பலருடைய ஆட்சிக்கு மகத்துவம் ஏற்பட்டது. இந்தப் பலருடைய ஆட்சிக்கு மகத்துவமும் முக்கியத்துவமும் கொடுத்தவன் ரூஸோ என்ற பிரெஞ்சு அறிஞன். ஜன சக்தி புனிதமுடையது என்ற இவனுடைய கோட்பாடானது, இவன் காலத்திலே பரிகசிக்கப்பட்டது; இவனும் பல துன்பங்களுக்கு ஆளானான். ஆனால், இவன் இறந்த சில வருஷங்களுக்குள் பிரெஞ்சுப் புரட்சி கிளம்பி, ஒருவர் ஆட்சி முறையை அசைத்துக் கொடுத்துவிட்டது. ரூஸோவுக்கு முன்னே தோன்றிய அரசியல் பண்டிதர்கள் பலரும், ஒருவர் ஆட்சி முறையை ஆதரித்தே தங்கள் அரசியல் சித்தாந்தங்களை வகுத்திருக்கிறார்கள். தாந்தே1 என்ன, மாக்கியவெல்லி2 என்ன, இப்படி அநேகர் ஒருவர் ஆட்சியை மன்னராட்சி என்றழைத்து அதனையே வலம் வந்திருக்கிறார்கள். இந்தியாவிலே கூட, சுக்ராச்சாரி, கௌடில்யன், திருவள்ளுவன் முதலியவர்கள், ஒருவராலேயே ஜனங்கள் ஆளப்பட வேண்டுமென்ற கோட்பாட்டை அதிவாரமாகக் கொண்டே தங்கள் அரசியல் நீதிகளை வகுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். எனவே, குடியாட்சி என்றும் ஜனநாயகம் என்றும் இப்பொழுதைய பாஷையில் அழைக்கப்படுகின்ற பலர் ஆட்சி என்பது ஏறக்குறைய கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து தோன்றியதேயாகும். ஆதியில் ஒருவருடைய ஆட்சி நிலவி யிருந்ததாகவும், இடைக் காலத்தில் அதுவே சிலருடைய ஆட்சியாக மாறியதாகவும், பிற் காலத்தில் இந்தச் சிலருடைய ஆட்சி, பலருடைய ஆட்சியாகப் பரிணமித்து விட்ட தென்றும், சொல்வது அரசியல் மரபு. அரிட் டாட்டல் சொல்கிறான் :- ஆரம்பத்தில் சிறிய சிறிய ராஜ்யங்கள் இருந்தன. இவைகளை அரசர்கள் ஆண்டு வந்தார்கள். ஏனென்றால், திறமையுள்ள மேலான மனிதர், அதிகமான பேராக அகப்படுவது அருமையா யிருந்தது, பின்னர் திறமை சாலிகள் பலர் தோன்றத் தலைப்பட்டனர்; ராஜ்ய நிருவாகத்தில் பங்கெடுத்துக் கொள்ளவும் தொடங்கினர். இதனால், அறிஞர் சிலர் சேர்ந்து நடத்துகிற ஆட்சி முறை ஏற்பட்டது. இந்தச் சிலரில் சிலர், பொதுநலத்தை நாடாமல் சுயநலத்தை நாட ஆரம்பித்ததும், தேசத்தின் செல்வம், செல்வாக்கு எல்லாம் இந்தச் சிலரில் சிலரைப் போயடைந்தன. இவர்கள் கொடுங்கோலர்களாயிருந்து, ராஜ்யத்தை ஆட்டி வைத்தார்கள். ஜனங்கள், இதைச் சகித்துக் கொண்டிருக்க முடியாமல், எதிர்ப்பாகக் கிளம்பினார்கள்; ராஜ்ய நிருவாகத்தில் பங்கு கோரினார்கள். ஜன ஆட்சி தாபிதமாயிற்று. இதுவே பலர் ஆட்சி. ஒருவர் ஆட்சி, சிலர் ஆட்சி, பலர் ஆட்சி ஆகிய மூன்றுவித ஆட்சி முறைகளுக்கும் முறையே ஹாப் என்ற அறிஞன் பின்வருமாறு வியாக்கியானம் கூறுகிறான் :- ராஜ்யத்தின் சர்வ அதிகாரங்களும் ஒருவனிடத்தில் ஒப்படைக்கப்பட்டால், அதற்கு மன்னராட்சி என்று பெயர். சர்வ அதிகாரங்களும் ஒரு சபையினிடத்திலே ஒப்படைக்கப்பட்டு, அந்தச் சபையில் எல்லாப் பிரஜைகளுக்கும் வாக்கு (ஓட்டு)ரிமை இருக்குமானால், அதற்கு ஜனநாயக ஆட்சியென்று பெயர். ராஜ்ய நிருவாகத்தை நடத்தும் மேற்படி சபையில் ஒரு சிலருக்கு மட்டுமே வாக்கு (ஓட்டு)ரிமை இருக்கு மானால் அதற்குப் பிரபுத்துவ ஆட்சி என்று பெயர். மேலே சொன்ன மூன்றுவித ஆட்சி முறைகளில் ஏதேனும் ஒன்றுதான் ஒரு நாட்டில் ஒரு காலத்தில் இருக்க முடியும். ஜனங் களுடைய பக்குவத்திற்குத் தகுந்தபடி, ஓர் ஆட்சி முறை போய் மற்றோர் ஆட்சி முறை ஏற்படுதல் இயல்பு. ஆனால் ஒரே சமயத்தில் ஒரு ராஜ்யத்தில் பலவித ஆட்சி முறைகளும் சேர்ந்து நிருவாகத்தை நடத்த முடியாது. அப்படிப் பலவகை ஆட்சி முறைகளும் கலந்து இருக்குமானால் அஃது ஆட்சி முறையல்ல; குழப்ப நிலைமை. இந்தக் குழப்ப நிலைமையிலிருந்து ஒரு தெளிவான ஆட்சி முறை, எப்பொழுதாவது உண்டாகவே வேண்டும். குழப்ப நிலைமையோ, கலப்பு ஆட்சி முறையோ நீடித்திருக்க முடியாது. ஆனால், கலப்பு ஆட்சி முறை ஒரு ராஜ்யத்தில் திரமாக இருந்து கொண்டிருக்க முடியுமென்று அநேக அரசியல் அறிஞர்கள் சாதித் திருக்கிறார்கள். இவர்களிலே தலைசிறந்தவன் அரிட்டாட்டல். இவன், தனது அரச நீதி என்ற நூலில், முற்காலத்தில் கிரேக்க,ரோம சாம்ராஜ்யங்கள் பலவற்றுள்ளும் கலப்பு ஆட்சி முறைகள் ஒரே காலத்தில் இருந்தன வென்று ஆதார பூர்வமாக எடுத்துக் காட்டுகிறான். இவை யெல்லாம் பழைய விஷயங்கள் என்று ஒதுக்கித் தள்ளிவிட்டாலும், இப்பொழுது இங்கிலாந்திலே நடைபெறுகிற ஆட்சி முறையானது, கலப்பு ஆட்சி முறையென்று மேற்சொன்ன அறிஞர்கள் கூறுகின்றனர். எப்படி யென்றால், இங்கிலாந்திலே அரசர் இருக்கிறார்; பிரபுக்கள் சபை1 இருக்கிறது; ஜனப் பிரதிநிதிகள் அடங்கிய காமன் சபை2 இருக்கிறது. இந்த மூவரும் சேர்ந்துதான் அரசியல் நிருவாகத்தை நடத்துகின்றனர். இதனால் அங்கே மன்னராட்சியும், பிரபுத்துவ ஆட்சியும், ஜன ஆட்சியும் ஒரே சமயத்தில் ஒழுங்காக நடைபெறுகின்றனவென்று சொல்கின்றனர். ஆனால், இந்த முடிவைப் பலர் ஒப்புக் கொள்வதில்லை. மேலே சொன்ன மூன்று பேரும், அரசியல் நிருவாகத்தில் பங்கு எடுத்துக் கொள்கிறார்கள் என்று சொன்னால், அது பெயரளவுக்குத் தான். உண்மையில் அரச அதிகாரம், காமன் சபையினிடத்திலேதான் இருக்கிறது. அரசர் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னாலும் அவர் மேற்படி காமன் சபை செய்கிற முடிவுக்குக் கட்டுப்பட்டவரே. 1936 ஆம் வருஷம் இங்கிலாந்தின் எட்டாவது எட்வர்ட் மன்னன் முடி துறந்ததற்குக் காரணம் என்னவென்பதைப் பற்றி நாம் சிறிது யோசித்துப் பார்த்தோமானால், காமன் சபையின் உண்மையான சக்தி புலனாகும். இந்தக் காமன் சபையிலே உள்ள அங்கத்தினர்கள், உண்மையான ஜனப் பிரதிநிதிகள் அல்லர் என்றும், ஜனங்களின் உண்மையான அபிப் பிராயத்தை எடுத்துச் சொல்கிறவர்களில்லை யென்றும் கூறலாம். இஃது உண்மையாக இருக்கக்கூடும். ஆனால் இப்படிச் சொல்வது, காமன் சபையின் பிரதிநிதித்துவத்தில் உள்ள குறைபாடுகளை எடுத்துக் காட்டு வதாக இருக்குமே தவிர, அதனுடைய பிரதிநிதித்துவ சக்தியைக் கண்டித்ததாக ஆகாது. இங்ஙனமே, பாசி நாடுகள் சிலவற்றுள், பெயரளவுக்குப் பார்லிமெண்ட்1 என்றும் ஜனசபை என்றும் இருக்கின்றன. இவை சம்பிரதாயமாகக் கூடிக் கலைகின்றன. ஆனால், இங்கே ஒரு தனி மனிதருடைய ஆட்சியே நடைபெறுகிறது. ஜன சபையின் அபிப்பிராயங் களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அந்தத் தனி மனிதர் காரியங்களை நடத்துதல் கூடும். இப்படிப்பட்ட நாடுகளில் ஒருவருடைய ஆட்சியும் பலருடைய ஆட்சியும் கலந்து நடைபெறுகின்றன என்று சொல்ல முடியுமா? முடியாது. ஒரு மனிதருடைய சர்வாதிகாரமே நிலவுகிற தென்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்தக் கலப்பு ஆட்சி முறை, எப்படிச் சாத்தியமற்றதென்பதைப் பற்றி ஓர் அரசியல் பண்டிதன் கூறுவது இங்கே குறிப்பிடத்தக்கது :- மன்னராட்சி என்பது ஒருவருடைய ஆட்சி; பிரபுத்துவ ஆட்சியென்பது ஒருவருக்கு மேற்பட்ட சிலருடைய ஆட்சி. எனவே, ஒரு ராஜ்யத்தை ஒரே சமயத்தில் ஒருவரும் சிலருமாகச் சேர்ந்து ஆள முடியாது; அதாவது மன்னராட்சி யாகவும் பிரபுத்துவ ஆட்சியாகவும் ஒரே காலத்தில் இருக்க முடியாது. பிரபுத்துவ ஆட்சி முறையில் சமுதாயத்தைச் சேர்ந்த அரைவாசி பேருக்குக் குறைந்தவர், நிருவாகத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். ஜன ஆட்சியின் கீழ், ஜனங்களில் பாதி பேருக்கு மேற்பட்டவர் நிருவாகத்தில் கலந்து கொள்ள வேண்டும். எனவே, ஒரு ராஜ்யத்தில் பாதி பேருக்குக் குறைவானவரும் பாதி பேருக்கு அதிகமானவரும் ஒரே சமயத்தில் ஆட்சி செய்ய முடியாது. சிறுபான்மையோருடைய ஆட்சியும் பெரும்பான்மையோருடைய ஆட்சியும் ஒரே சமயத்தில் நிலவ முடியுமா? இனி, ஒருவர் ஆட்சி, சிலர் ஆட்சி, பலர் ஆட்சி ஆகிய மூன்று விதமான ஆட்சி முறைகளும், முற்காலத்திலாகட்டும், இப்பொழு தாகட்டும், முறையே என்னென்ன விதமான தோற்றங்கள் அளித்தன அளிக்கின்றன என்பதைச் சிறிது கவனிப்போம். ஒருவர் ஆட்சி :- மன்னர் ஆட்சி அல்லது கோனாட்சி, முடியாட்சி அல்லது குடிக்கோனாட்சி, சர்வாதிகார ஆட்சி அல்லது சுயேச்சாதிகார ஆட்சி முதலியன. அதாவது, இந்த ஆட்சி முறைகளிலே மையமாயிருக்கப் பட்டவன் ஒருவன்தான். இவன் தன் னொருவன் பெயரைச் சொல்லிக் கொண்டு ஆளலாம்; அல்லது ஜனங்களுடைய பெயரைச் சொல்லிக்கொண்டு ஆளலாம். எப்படி யிருந்த போதிலும் ராஜ்யத்தின் அதிகார சக்திகள் யாவும் இந்த ஒருவனிடத்திலிருந்தே உதிக்கின்றன; இந்த ஒருவனிடத்திலேயே சென்று அடைகின்றன. இந்தச் சக்திகளை ஜனங்களுடைய நன்மைக்காக உபயோகப்படுத்துகிறபொழுது, முடியாட்சி என்றும், குடிக்கோனாட்சி என்றும் பலவித பெயர்களிட்டு அழைக்கிறோம்; தன்னலத்திற்காக உபயோகப்படுத்துகிறபொழுது கொடுங்கோ லாட்சி என்றும் சுயேச்சாதிகார ஆட்சி என்றும் சர்வாதிகார ஆட்சி என்றும் பலவிதமாகச் சொல்கிறோம். சிலர் ஆட்சி :- இதுவே, பிரபுத்துவ ஆட்சியென்றும், நிலச்சு வான்தார் ஆட்சியென்றும், முதலாளிகள் ஆட்சியென்றும், புரோகிதர் ஆட்சியென்றும், மேன்மக்கள் ஆட்சியென்றும் பல தோற்றங்கள் அடை கின்றன. பிளேட்டோ என்ற கிரேக்க அறிஞன், ஆளுங்கலையிலே பயின்ற ஒரு கூட்டத்தார் நிருவாக யந்திரத்தை நடத்திச் செல்ல வேண்டுமென்று அபிப்பிராயப்படுகிறான். இவர்கள், அறிவும், அன்பும் அனுபவமுடைய ஞானிகளாய் இருக்க வேண்டு மென்றும், இவர்களால்தான் நாட்டுக்கு நலம் செய்ய முடியுமென்றும் கூறுகிறான். இவர்களுடைய ஆட்சி, சிலர் ஆட்சியின்பாற்படும். பலர் ஆட்சி :- ஜன ஆட்சி, ஜனநாயகம், குடியரசு முதலிய யாவும் இந்தப் பிரிவில் சேரும். பலர் ஆட்சி என்று சொன்னால் ஒரு ராஜ்யத்திலுள்ள எல்லாப் பிரஜைகளும் சேர்ந்து நிருவாகத்தை நடத்த வேண்டுமென்பது அர்த்தமல்ல. அப்படி நடத்தவும் முடியாது. ஆனால், அப்படி நடத்த முடியுமென்றும், ரோம சாம்ராஜ்யத்தின் போது அப்படி நடந்திருக்கிறதென்றும் ரூஸோ கூறுகிறான். இது சாத்தியமற்றது என்றே தற்கால அரசியல் நிபுணர்கள் ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்கள். பலரும், தங்களுடைய பிரதிநிதிகளாகச் சிலரைத் தெரிந்தெடுத்து அவர்களைக் கொண்டு ராஜ்ய நிருவாகத்தை நடத்துகிறார்கள். இந்தச் சிலருக்கே ஜனப் பிரதிநிதிகள் என்று பெயர். இவர்களுடைய நிருவாகத்திற்குப் பிரதி நிதித்துவ அரசாங்கம் என்றும், இவர்கள் கூறுகிற சபைக்குப் பிரதிநிதித்துவ சபை யென்றும் பெயர். இந்தப் பலருடைய ஆட்சியில், பொதுஜன நன்மைதான் முக்கியத்துவம் பெறுகிறது; ஜனங்களுடைய விருப்பம் எதுவோ அதுவே அரசாங்கத்தின் விருப்பமாக இருக்கிறது. இதனால், ஜன விருப்பத்திற்கு விரோதமாக நடக்கிற யாரும், அரசாங்க யந்திரத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்க முடியாது. 11. முடியரசு ஒருவர் ஆட்சியின் பாற்பட்டது முடியரசு அல்லது மன்னர் ஆட்சி.1 ஆட்சி முறைகளிலே மிகப் பழமையானது இது. அரசர்களின் கடவுள் தன்மையை வலியுறுத்திக் கூறுகிற பாவே2 என்ற பிரெஞ்சு அறிஞன் சொல்கிறான் :- உலகனைத்தும் முடியரசோடுதான் ஆரம்பித்தது; அப்படியே உலகமனைத்தையும், அதன் இயற்கையான தன்மையிலே வைத்துக் காப்பாற்றுவது முடியரசு தான். இங்ஙனமே பழைய அரசியல் பண்டிதர்கள் அத்தனைபேரும் முடியரசைச் சிலாகித்தே பேசியிருக் கிறார்கள். ஆட்சி முறைகளிலே, மன்னராட்சி முறையே சிறந்ததென்றும், அந்த ஆட்சி முறையின் கீழேயே சமுதாயமானது ஒழுக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்க முடியுமென்றும் அரிட்டாட்டல் என்ற கிரேக்க பண்டிதன் கூறுகிறான். கி.பி. பதின்மூன்றாவது நூற்றாண்டிலே வாழ்ந்த இத்தாலிய அரசியல் ஞானியாகிய தாம அக்வினா என்பவன், ஒரு சமுதாயத்தின் க்ஷேமத்தைத் தனியொரு மனிதனால்தான் நாட முடியுமென்றும், எனவே ஒரு சமுதாயத்தின் க்ஷேமத்தை உத்தேசிக்கையில் மன்னராட்சி முறையே சிறந்ததென்றும் சாதிக்கிறான். மன்னராட்சி முறை ஏன் சிறந்ததென்பதற்கு ஹாப் என்ற பண்டிதன் பின்வரும் காரணங்களைச் சொல்கிறான் :- ஓர் அரசன், தன் சொந்த நலனை உத்தேசித்தாவது பிரஜைகளின் நலனைக் கோர வேண்டியவனா யிருக்கிறான். ஏனென்றால், குடிகளின் நன்மையிலேயே அவனுடைய நன்மை இருக்கிறது. ராஜ்ய நிருவாகத்தைப் பிரஜைகள் பலரடங்கிய ஒரு சபையினிடத்தில் ஒப்புவித் தோமானால், அந்தச் சபையின் அங்கத்தினர்களுடைய சொந்த நலன் களுக்கும், ராஜ்யத்தின் நலன்களுக்கும் முரண்பாடுகள் பல உண்டாதல் கூடும். இதனால் ராஜ்யத்தின் க்ஷேமம் பாதிக்கப்பட்டுப் போகும். அரசன் எப்பொழுதாவது தவறு செய்வானாகில், அஃது அவனுடைய சுபாவத்திலேயுள்ள குறைபாடு; ராஜ்யப் பொதுவினுடைய குறைபாடா காது. அந்தக் குறைபாடு நீடித்தும் இராது. ஓர் அரசன், பொறாமை காரணத்தினாலோ, வேறு காரணத்தினாலோ தனக்குத் தானே பிணங்கிக் கொள்ள மாட்டான். ஆனால், ஒரு ஜன சபையானது, ஏதோ ஒரு காரணத் தினால் தனக்குத் தானே விரோதமாக நடந்து கொள்ளக்கூடும். இதனால் உள்நாட்டுக் குழப்பம் உண்டாகும். எனவே, ராஜ்யத்தின் சாசுவதத் தன்மையையும் தங்களுடைய நன்மையையும் நாடுகின்ற பிரஜைகள், மன்னராட்சி முறையை அங்கீகரிக்க வேண்டுமென்று இவன் சித்தாந்தப் படுத்துகிறான். மன்னராட்சி முறைக்கு அடிப்படையாயுள்ளது, பரம்பரை பாத்தியதை. அதாவது, தந்தைக்குப் பின் மகன் என்ற உரிமை கொண்டாடிக் கொண்டு அரியணை ஏறி ஆளுங் கடமையை ஒருவன் செய்கிறானே தவிர, ஜன விருப்பத்திற் கிணங்க சிங்காதனத் தில் அமர்ந்து மேற்படி ஆளுந் தொழிலை அவன் செய்வதில்லை. அவனுடைய திறமை முக்கியத்துவம் பெறுவதில்லை; அவனுடைய பரம்பரை பாத்தியமே முக்கியத்துவம் பெறுகிறது. ஆளும் உரிமையுடனேயே அவன் பிறக்கிறான். ஜன சக்தியானது, அவனுக்கு இந்த உரிமையை அளிக்க வில்லை. ட்ரைஷ்க்கே1 என்ற ஜெர்மானிய பண்டிதன் சொல்கிறான் :- மன்னராட்சியில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியதென்ன வென்றால், அரச அதிகாரங்கள் யாவும், அரசனிடத்திலேயே சுயமாகத் தங்கியிருக்க வேண்டும்; மற்றவர்களால் ஒப்படைக்கப் பட்டவையா யிருக்கக் கூடாது. அரசனிடத்தில் சுயமாகத் தங்கியுள்ள இந்த அதிகார சக்தியினால்தான், சமுதாயத்திற்கு நீதியை வழங்க முடியும். இதனுடைய தாத்பரியம் என்னவென்றால், அரசன் ஜனப் பிரதிநிதியல்ல; அதாவது, ஜனங்களால் தங்களை ஆள்வதற்கென்று தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு தனி நபரல்ல; ஆளும் உரிமையோடும் லட்சணத்தோடும் பிறந்த ஓர் எஜமானன். இதனால் அவன் ஜனங் களுக்கு மேலானவன். இந்த மேலான பதவியிலே இருப்பதால்தான் எல்லா ஜனங்களுக்கும் ஒரே மாதிரியான நீதியை அவனால் வழங்க முடிகிறது. அவன், ஒரு கட்சிக்காரனல்ல; நீதிபதி. தங்களுக்கு மேலான ஒருவனிடத்திலிருந்து தான், சரியான நியாயம் கிடைக்கும் என்று ஜனங்கள் எதிர்பார்ப்பது சகஜம். தங்களுடைய சொந்த நலனைப் பாதிக்கக் கூடிய விதமாகச் சில சமயங்களில் அரசனுடைய காரியங்கள் இருக்கு மானால்கூட, ஜனங்கள் அவற்றைச் சகித்துக் கொண்டு போய்விடு கிறார்கள். ஏனென்றால், ராஜ்யத்தின் நன்மைக்காகவே அரசன் இப்படிச் செய்திருக்கிறான் என்று அவர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். இதனால் அரசனுடைய நீதி முறையிலும் நிருவாக முறையிலும் ஜனங்களுக்குப் பூரண நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது. உலகத்திலுள்ள எல்லா நாட்டு மக்களும் நீண்ட காலமாக மன்னராட்சியைப் போற்றி வந்ததற்கு இதுதான் காரணம். மன்னராட்சியின் மற்றோர் அடிப்படையான அமிசம் என்ன வென்றால், சம்பிரதாயங்களை விடாமல் கைப்பற்றிக் கொண்டிருப்பது. எப்படிச் சிங்காதனம், செங்கோல் முதலிய அரச சின்னங்கள் பலவும் பரம்பரையாக வந்து கொண்டிருக்கின்றனவோ அப்படியே அரச வமிசத்தை யொட்டிய சடங்குகள், அரசனுக்கும் சமுதாயத்திற்கும் இருக்கவேண்டிய தொடர்பு முறைகள், மரியாதைகள் முதலிய பலவும் வமிச பாரம்பரியமாக அனுஷ்டிக்கப்படுகின்றன. எத்தனையோ அரசர்கள் வந்து போகலாம். ஆனால் அவர்கள் அமர்கிற பீடமும், பிடிக்கிற செங்கோலும் ஒன்றுதான். அதே பிரகாரம் அவர்கள் அனுஷ்டிக்கிற சடங்குகள், ஆசார நியமங்கள் முதலியனவும் ஒன்றாகவே இருக்கின்றன. பரம்பரைச் சம்பிரதாயங்களில் பற்று இருப்பது எல்லா மனிதர்களுக்கும் சகஜமான விஷயமே. ஆனால், அரச வமிசத்தினரிடத்தில் இது கொஞ்சம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது; ஆடம்பரத்தோடும் பிரகாசிக்கிறது. இங்ஙனம் சடங்குகள் முதலிய வற்றைத் தொடர்ந்து அனுஷ்டித்து வருவதன் மூலம் மன்னராட்சி முறை யானது, ஜனங்களிடத்திலே, தனக்குள்ள செல்வாக்கை திரப்படுத்திக் கொள்கிறது. தவிர, இந்தச் சடங்குகளின் அனுஷ்டான விஷயத்தில், தான் வழிகாட்டியாயிருந்து, ஜனங்களையும் அந்த வழியிலேயே மெது மெதுவாகத் திருப்பிக் கொண்டு விடுகிறது. இதனால் அரச குடும்பத் துக்கும், ஜன சமுதாயத்திற்கும் ஒருவிதமான தொடர்பு ஏற்பட்டு, இந்தத் தொடர்பானது, சமுதாய வாழ்க்கையின் மற்ற அமிசங்களிலும் பரவுகிறது. ஜனங்களுக்கு மன்னராட்சியில் பற்றுதல் ஏற்பட்டு அதனையே சிறந்ததாகப் போற்றுகின்றனர். இந்தச் சடங்குகள், சம்பிரதாயங்கள் முதலியவற்றிற்குக் கவசம் போன்றிருப்பது மதம். இதனால்தான் மன்னராட்சியின் கீழ் மதம் ஒரு முக்கிய தானத்தைப் பெறுகிறது. அரச பீடமும் மத பீடமும் கைகோத்துக் கொண்டு சமுதாய வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்திருப்பதை உலக சரித்திரத்தில் நாம் பலபடக் காண்கிறோம். இந்த மதப்பற்றுக் காரணமாக, மன்னராட்சியானது நின்ற நிலையிலேயே இருக்க விரும்புகிறது; எவ்வித மாற்றத்தையும் விரும்புகிறதில்லை. மன்னராட்சியின் கீழ், சமுதாயத்தின் சகலவிதமான சலனங் களும், அரசன் என்கிற தனி நபரிடத்திலிருந்தே உற்பத்தியாகின்றன. எப்படி மின்சார விளக்குகள் எரிவதற்கு எங்கோ ஒரு மூலையிலுள்ள விசையழுத்துங் கருவி மூல காரணமா யிருக்கிறதோ அதே போல, ஒரு ராஜ்யத்திற்கு அரசன், விசைழுத்துங் கருவியாயிருக்கிறான். அவன் அசைந்தால் ராஜ்யத்தின் சகல சக்திகளும் அசைகின்றன. அரசனுடைய எண்ணம் சமுதாயத்தின் எண்ண மாகவும், அரசனுடைய செயல் சமுதாயத்தின் செயலாகவும் தோன்றுகின்றன. இதனால்தான், மன்னராட்சியின் கீழ், சரித்திரமானது ஒரு புதிய திருஷ்டியில் பார்க்கப்படுகிறது. அதாவது, மனிதர்களாலேயே சரித்திரம் உண்டாக்கப் படுகிறதென்ற நம்பிக்கை மன்னராட்சியின் கீழ் வலுக்கிறது. சரித்திரம் மனிதர்களை உண்டுபண்ணவில்லை. மனிதர் பலருடைய தீவிரமான எண்ணங்களும், திறமையான செயல்களும் சேர்ந்தே ஒரு நாட்டின் வாழ்வையோ தாழ்வையோ நிர்ணயிக்கின்றன என்பதுதான் இந்த நம்பிக்கையின் முக்கிய அமிசம். ஏனென்றால் அரச பீடத்திலே அமர்ந்திருக்கிறவன் சுயமாக இல்லாவிட்டாலும், மற்றவர்களுடைய தூண்டுதலினாலோ அல்லது நிர்ப்பந்தத்தினாலோ சிந்திக்க வேண்டிய வனாயிருக்கிறான்; செயல்புரிய வேண்டியவனாயி ருக்கிறான். அப்படி அவன் சிந்திப்பதும் செயல் புரிவதும், தனது நலனை முன்னிட்டா, அல்லது சமுதாய நலனை முன்னிட்டா என்பது வேறு விஷயம்; எப்படியும் அவன் சிந்திக்கிறான்; செயல்புரிகிறான். இந்தச் சிந்தனையும் செயலும் சமுதாயத்தின் மீது கட்டாயம் படிகிறது. அரசனுடைய சிந்தனைக் கும் செயலுக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ சமுதாயத்திலுள்ள வர்கள் சிந்திக்கவும் செயல் புரியவும் தொடங்குகிறார்கள்; இவற்றினால் உண்டாகிற பலாபலன்களை நேரில் பார்க்கிறார்கள். ஆதலால், மனிதர்களுடைய காரியங்கள்தான் சரித்திரத்தை நிர்ணயிக்கின்றனவே தவிர, சரித்திரம் மனிதர்களுடைய காரியங்களை நிர்ணயிக்கவில்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள். அதாவது, சரித்திரம் என்பது தனியாக ஒன்றில்லை. மனிதர்களுடைய செயல்களின் தொகுப்புதான் சரித்திரம் என்பதே இவர்கள் நம்பிக்கை. இனி, மன்னராட்சியின் சில முக்கியமான லட்சணங்களை வரிசைப்படுத்திக் கூறுவோம் :- 1. மன்னராட்சியானது, ஒழுக்கத்தையே பிரதானமாகக் கொண்டிருக்கிறது. நமக்குப் புறம்பான அல்லது நமக்கு எட்டாத ஏதோ ஒரு சக்தி நம்மை ஆட்டுவிக்கிறதென்ற நம்பிக்கையை ஜனங்கள், தெரிந்தோ தெரியாமலோ கொண்டுவிடுகிறார்கள். அந்தச் சக்திக்கு அஞ்சினவர்களாய் அல்லது ஆட்பட்டவர்களாய், தருமம், நீதி என்பவைகளைத் தங்கள் வாழ்க்கைக்கு அரண்களாக வகுத்துக் கொள்கிறார்கள். 2. மன்னராட்சியானது, எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை; தன்மைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது. 3. மன்னராட்சியானது, தனது ஆடம்பர வாழ்க்கையினால் ஜனங்களிடத்தில் ஒருவித பிரமிப்பை உண்டு பண்ணி, அதன் மூலமாக அவர்கள் மீது, தான் கொண்டிருக்கும் ஆதிக்கத்தை ஊர்ஜிதம் செய்து கொள்கிறது. 4. மேற்படி ஆடம்பர வாழ்க்கைக்குத் துணைக் கருவிகளாக, காவியம், ஓவியம் முதலிய பல கலைகளும் வளர்க்கப் படுகின்றன. அதனது ஆதிக்கத்திற்குப் பாதகம் உண்டாகாத வகையில், இவை ஆதரிக்கப் படுகின்றன. சிறந்த கவிஞர்கள், உயர்ந்த சிற்பிகள், நுட்பமான தொழில்கள் செய்யும் திறமைசாலிகள் முதலிய பலர், மன்னராட்சியின் கீழ் அதிகமாகத் தோன்றுகிறார்கள். மன்னராட்சியின் மகத்துவத்தைப் பற்றி டேவிட் ஹ்யூம்1 என்ற ஆங்கில சரித்திராசிரியன் கூறுகிற வாசகம் இங்கே கவனிக்கத் தக்கது:- தற்காலத்தில் பலவித ஆட்சி முறைகள் வளர்க்கப்பட்டும் விருத்தி செய்யப்பட்டும் வருகின்றன. என்றாலும், மன்னராட்சி முறைதான், பூரணத்துவத்தை யடையக் கூடிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. இப்பொழுது நாகரிகம் அடைந்த எல்லா மன்னராட்சிகளும், ஒழுங்கான சட்டங்களுக்கு உட்பட்டிருக்கின்றன; தனி மனிதர்களுடைய ஆதிக்கத்துக்கு உட்பட்டனவா யிருக்கவில்லை. இப்பொழுதுள்ள முடியரசு நாடுகளில் அமைதி, ஒழுங்கு, சுறுசுறுப்பு முதலியவற்றை ஆச்சரியப் படத்தக்க விதமாகக் காண்கிறோம். சமுதாயத்தினரின் சொத்துக்கள் ஜாக்கிரதையுடன் காப்பாற்றப் படுகின்றன; தொழில்கள் பெருகுவதற்கு ஊக்கமளிக்கப் படுகின்றன; கலைகள் விருத்தியடைகின்றன. மன்னராட்சியினால் உண்டாகிற நன்மைகளையும் தீமை களையும் முறையே வரிசைக் கிரமமாக எடுத்துக் காட்டுவோம். நன்மைகள் :- 1. ராஜ்ய விவகாரங்கள் துரிதமாகவும் சுறுசுறுப்பாகவும் நடை பெறுகின்றன. 2. அரசனால் அனுஷ்டானத்திற்குக் கொண்டுவரப்படுகிற சட்டங் களைப் பற்றியோ மற்ற உத்தரவுகளைப் பற்றியோ மாறு பட்ட அபிப்பிராயங்கள் தோன்றுவதற்கு ஏது இல்லாமலிருக்கிறது. ஏனென்றால், மன்னராட்சியின் கீழ், பொதுஜன அபிப்பிராயம் என்பது அரசனிடத்திலிருந்தே உதிக்கிறது; ஜனங்களிடத்திலிருந்து உதிப்ப தில்லை. அரசனுடைய அபிப்பிராயத்தைத் தழுவினாற் போலவே, ஜனங்களுடைய அபிப்பிராயம் இருக்கிறது. 3. அரசனுடைய ஆலோசனைகள் யாவும் அந்தரங்கமாகவே இருக்கின்றன. இதனுடைய அனுகூலம் என்னவென்றால், ஒரு திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வருதற்கு முன்னாடி அதைப்பற்றி மாறுபட்ட கருத்துக்களோ தவறான எண்ணங்களோ பரவாதபடி பாதுகாக்கப் படுகிறது. காரியங்கள் நடைபெறுகிற போது இடையூறுகள் அதிகமாக உண்டாவ தில்லை. 4. அரசாங்க தாபனங்கள், சிக்கலாக இல்லாமல், சுலபமாகவும் துரிதமாகவும் காரியங்கள் நடைபெறக் கூடிய மாதிரி இருக்கின்றன. 5. திறமைசாலிகள் ராஜ்ய நிருவாகத்தில் பங்கெடுத்துக் கொள்வதற்கு அதிகமான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. 6. ராஜ்ய விவகாரங்களும் பொதுவான சட்டதிட்டங்களும் அடிக்கடி மாறுபடாமலும் நடுவில் விட்டுவிட்டுப் போகாமலும், ஒரே மாதிரி யாகவும், தொடர்ச்சியாகவும் அனுசரிக்கப்படுகின்றன. இதனால் சமுதாய வாழ்க்கையில் ஒருவித திரத்தன்மை ஏற்படுகிறது; அடிக்கடி சலசலப்புக்கள் உண்டாவதில்லை. தீமைகள் :- 1. ராஜ்ய விவகாரங்கள் துரிதமாக நடைபெற வேண்டுமென்ற ஆசையினால், தீர்க்கமாக ஆலோசிப்பதற்கு இடமில்லாமல் போகிறது. இதனால் அநேக காரியங்கள், விபரீத பலன்களை உண்டு பண்ணி விடுகின்றன. 2. அரசனுடைய அபிப்பிராயமே முக்கியத்துவம் பெறுவதால், திறமையானவர்களுடையவும், அனுபவசாலிகளினுடையவும் அபிப்பிராயத் திற்கு மதிப்பே இல்லாமல் போய்விடுகிறது. 3. ராஜ்ய விவகாரங்களிலும் மற்றச் சம்பிரதாயங்களிலும் ஒருவித தொடர்ச்சி இருக்க வேண்டுமென்ற ஆசையினால், புதிய எண்ணங் களுக்கும், புதிய காரியங்களுக்கும் இடமே கொடுக்கப்படுவதில்லை. இதனால் சமுதாய வாழ்க்கையில் ஒரு தேக்கம் ஏற்பட்டு விடுகிறது. இந்தத் தேக்கம் காரணமாக, ஜனங்கள் மந்த புத்தியுள்ளவர்களாகவும், சுறுசுறுப்பற்றவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். அவர்களுடைய சிருஷ்டி சக்தியானது, சோபையிழந்து நிற்கிறது. 4. முடியரசு, ஒழுக்கம் என்று சொல்லிக் கொண்டு ஒழுங்கைக் கைவிட்டு விடுகிறது. குடியரசோ, ஒழுங்கு என்று சொல்லிக் கொண்டு ஒழுக்கத்தைக் கைவிட்டுவிடுகிறது. 5. ராஜ்யத்தின் சர்வ அதிகாரங்களும் அரசன் என்னும் தனி மனிதனிடத்திலிருந்தே உதிப்பதால், அந்த அரசன் அறிவு பிறழா மலோ, மனம் மாறாமலோ இருக்கிற வரையில் சரி; ராஜ்யத்திற்கு அதிகமான தீமை உண்டாகாது. ஆனால் ஒரு பரம்பரையில் வருகிற எல்லா அரசர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தகப்பன் புத்திசாலி யாகவும் பலசாலியாகவும் இருக்கிறான். அவனுடைய மகன் அதற்கு நேர் விரோதமாக இருக்கிறான். அப்படிப்பட்டவன் என்ன செய்வான்? தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வான். தவிர, அரசனுடைய இச்சையே ஜனங்களுடைய இச்சை என்கிற ஒரு நியதி காரணமாக ஒரு நல்ல அரசன் கூட கெட்ட அரசனாக மாறிவிடுவதற்கு அநேக சந்தர்ப் பங்கள் ஏற்பட்டு விடுகின்றன. சுருங்கச் சொன்னால், மன்னராட்சியின் கீழ்கொடுங்கோன்மைக்கு அதிகமான சாதனங்கள் இருக்கின்றன. 6. மன்னராட்சியின் கீழ், சூழ்ச்சிக்காரர்கள், துரோகிகள் முதலியோர், தங்கள் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்கு அதிகமான சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. இவர்கள், ராஜ்யத்தின் தலைநகரிலும், அரசன் வசிக்கிற அரண்மனையிலும் ஒழுக்கவீனங்கள் பலவற்றைப் புகுத்தி, கடைசியில் நாட்டுக்கே தீமையை உண்டு பண்ணிவிடுகிறார்கள். 7. ஜனசக்தி அல்லது ஜன அபிப்பிராயம் என்பது லவலேசமும் தலை யெடுக்க வொட்டாதபடி செய்வதில் மன்னராட்சி கண்ணுங் கருத்துமா யிருக்கிறது. 8. ராஜ்ய விவகாரங்களில் பங்கெடுத்துக் கொள்கிற உரிமையோ சந்தர்ப்பமோ ஜனங்களுக்கு இல்லாதபடியால், அவர்கள், ராஜ்யத்தின் க்ஷேமத்திலும் அபிவிருத்தியிலும் சிரத்தை குன்றியவர்களாகி விடு கிறார்கள். மன்னராட்சியின் கீழ் ஒரே ஒரு தேசபக்தன் தான் இருக்க முடியும்; அவன்தான் அரசன் என்ற வாசகம் இங்கே சித்திக்கத்தக்கது. இதை வேறு விதமாகச் சொல்வோமானால், முடியரசின் கீழ், அரசன் வேறாகவும் தேசம் வேறாகவும் பிரிந்து விடுகின்றன. ஜனங்கள் ராஜபக்தர் களாக இருக்க வேண்டுமென்ற ஆசையினால், தேச பக்தி துரோகி களாகவும், தேச பக்தர்கள் ராஜத் துரோகிகளாகவும் ஆகிவிடுகிறார்கள். ட்ரைஷ்க்கே என்ற ஜெர்மானிய பண்டிதன், மன்னராட்சி முறையை ஆறு வகையாகப் பிரித்துக் காட்டுகிறான். இந்தப் பிரிவுகள் இப்பொழுது வழக்கிலே இல்லை. இதனால் இவற்றைப் பற்றிய விரிவு வேண்டுவ தில்லை. ஆனால், தற்காலத்து மேனாட்டு அரசியல் பண்டிதர்கள், மன்ன ராட்சி முறையை இரண்டு வகையாகப் பிரித்துக் காட்டுகிறார்கள். ஜனங்களுடைய நன்மைக்காகவும் ராஜ்யத்தின் க்ஷேமத்தை உத்தேசித்தும் சட்டங்களை இயற்றவும், அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரவும், எந்த ஓர் அரசனுக்குப் பரிபூரண அதிகாரம் இருக்கிறதோ அந்த அரசனுடைய ஆட்சி முறை ஒருவகை. மேற்படி சட்டங்களை இயற்றிக் கொடுக்கிற விஷயத்திலும், அனுஷ்டானத்திற்குக் கொண்டுவருகிற விஷயத்திலும் எந்த ஓர் அரசனுடைய அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு விடுகின்றனவோ அந்த அரசனுடைய ஆட்சி முறை மற்றொரு வகை. முன்னதை சர்வாதிகார மன்னராட்சி1 யென்றும், பின்னதை அதிகார வரம்புடைய மன்னராட்சி2 என்றும் கூறுவர். மேனாட்டு முறையை அனுசரித்து இதுகாறும் மன்ன ராட்சியைப் பற்றி விளக்கிக் கூறினோம். இனி இந்தியாவில் மன்ன ராட்சியைப் பற்றி என்ன மாதிரியான அபிப்பிராயங்கள் உலவி வந்தன என்பதைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவோம். இந்தியாவில் நீண்ட காலமாக மன்னராட்சி முறைதான் முதன்மை தானம் பெற்று வந்திருக்கிறது. அந்த ஆட்சி முறையும் சட்ட வரம்புகளைக் கடந்த சர்வாதிகார ஆட்சி முறையைப் போலவும், பரம்பரை பார்த்தியதையை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருந்து வந்திருக்கிறது. ஆனால், அரசன் நீதிக்கும் தருமத்திற்கும் அடங்கினவனாகவே நடந்து வந்தான். குடிகளை ரட்சிப்பதும், அவர்களைச் சந்தோஷத்திலே வைத்திருப்பதும் தன் கடமை களாகக் கொண்டான். அந்தக் கடமைகளை நிறைவேற்றுகிற விஷயத்தில் அவன் குடிகளின் அன்பையும் ஆதரவையும் பெற்று வந்தான். உடலுககு உயிர் போலவும், குழந்தைகளுக்குத் தந்தை போலவும் அரசன் இருந்தான். இதனால்தான் இந்தியாவில் ராஜபக்தி வேறாகவும் தேசபக்தி வேறாகவும் இல்லாமல் இரண்டும் ஒன்றாகவே இருந்தன. குடிகளை அரசன் ஆண்டான் என்று சொல்வதைக் காட்டிலும், குடிகளை அரசன் காப்பாற்றினான் என்று சொல்வதுதான், இந்தியாவைப் பொறுத்தமட்டில் பொருத்தமாகும். ராஜ்யத்தின் சகல அதிகாரங்களும் அரசனிடத்திலிருந்தே உதித்தன என்று சொன்னாலும், அவன் அந்த அதிகாரங்களைப் பிரயோகிக்கும் விஷயத்தில் தக்க அறிஞர்களின் ஆலோசனைப்படியே நடந்து வந்தான். பிளேட்டோ என்ற கிரேக்க அறிஞன், ராஜ்ய நிருவாகம் செய்வதற்கு, தன்னலமென்பது லவலேசமு மில்லாத, ராஜ்யத்தின் க்ஷேமம் என்பதொன்றையே குறியாகக் கொண்ட பாதுகாவலர்கள் (கார்டியன்கள்)3 வேண்டுமென்று கூறுகிறான். இப்படிப்பட்ட பாதுகாவலர்களே இந்தியாவில் அரசர்களுக்கு அமைச்சர்களாயிருந்தார்கள். கௌடில்யன் தனது அர்த்த சாதிரத்தில், மந்திரிகளுக்கு இருபத்திரண்டு விதமான லட்சணங்கள் இருக்க வேண்டுமென்று கூறுகிறான். இவற்றில் முக்கியமானவை. அவன் சுயதேசத்திலே பிறந்தவனா யிருக்க வேண்டும்; அறிவு, ஊக்கம், திண்மை, சீலம் அனுபவம் முதலியன உடையவனா யிருக்கவேண்டும். திருவள்ளுவன், மந்திரிகளின் லட்சணங்களை மிக அழகாகவும் சுருக்கமாகவும் கூறுகிறான் :- வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினை யோடைந் துடன் மாண்ட தமைச்சு என்ற குறளையும் அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான் எஞ்ஞான்றும் திறனறிந்தான் தேர்ச்சித் துணை என்ற குறளையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட அமைச்சர்களைக் கொண்ட அரசன், குடிகளை முறையாகக் காப்பாற்றி வந்தானென்பதிலும் அவனை அந்தக் குடிகள் இறையெனப் போற்றி வந்தார்களென்பதிலும் என்ன ஆச்சரியம் இருக்கிறது? 12. குடியரசு குடியரசு, ஜனநாயகம், ஜனஆட்சி முதலிய சொற்றொடர்கள் யாவும் ஒரே அர்த்தத்தையே குறிக்கின்றன. ஜனங்களே அரசியலை நடத்து கிறார்கள் என்பது இதன் அர்த்தம். ஆங்கில பாஷையில் இதை டெமாக்ரஸி1 என்றும் ரிபப்ளிக்2 என்றும் சொல்கிறார்கள். டெமாக்ரஸி க்கு ஜனநாயகம் என்றும் ரிபப்ளிக் குக்குக் குடியரசு என்றும் தமிழில் சொல்வது வழக்கமாயிருக்கிறது. குடியரசு என்று சொன்னால், அதற்கு முன்னும் பின்னும் கலகம், புரட்சி முதலிய வரம்பு மீறிய செயல்கள் உலவுவது போல் நமக்கு ஒருவித எண்ணம் உண்டாகிறது. அதனால் அதன்மீது ஒருவித வெறுப்புக்கூடத் தோன்றிவிடுகிறது. ஆனால், ஜனநாயகம் என்று சொன்ன மாத்திரத்தில், ஜனங்கள் ஒழுங்காக வாழ்ந்து கொண் டிருக்கிற மாதிரியும், பொதுஜன அமைதி, சொத்துக்களுக்குப் பாதுகாப்பு முதலியன அங்கே நிலைபெற்றிருப்பதாகவும் நமக்கு நினைவு வருகிறது. உண்மையில் முதலில் சொன்ன பயத்துக்கோ, பிந்திச் சொன்ன நிம்மதிக்கோ ஆதாரம் கிடையாது. குடியரசு என்பதும் ஜனநாயகம் என்பதும் ஒன்றுதான். ஒரு தேசத்தின் வயது வந்த எல்லாப் பிரஜைகளும் அந்தத் தேசத்தின் அரசியலிலே நேராகப் பங்கெடுத்துக் கொள்வார் களானால் அதனைக் குடியரசு என்றும், அப்படி நேராகப் பங்கெடுத்துக் கொள்ளாமல் பிரதிநிதிகளை நியமித்து அவர்கள் மூலமாக அரசியலை நடத்தச் செய்வார்களானால் அதனை ஜனநாயகம் என்றும் அழைப்பது ஒரு சிலருடைய சம்பிரதாயம். இந்தச் சம்பிரதாயக் காரர்கள், முற் காலத்தில் குடியரசு நடைபெற்று வந்ததென்றும், பிற்காலத்தில் ஜனநாயகமாக அது மாறிவிட்டதென்றும் கூறுகிறார்கள். அதாவது, முற்காலத்தில் ஒரு நாட்டின் விதீரணமும், அதன் ஜனத்தொகையும் குறைவாயிருந்த போது, அந்த நாட்டின் அரசியலை எல்லா ஜனங்களும் சேர்ந்து நடத்தினார்களென்றும், அப்படிப்பட்ட அரசியலையே குடியரசு என்று சொல்ல வேண்டுமென்றும், பின்னர் நாட்டின் எல்லையும் ஜனத்தொகையும் பெருகிவிட்டபோது, எல்லா ஜனங்களும் சேர்ந்து அரசியலை நடத்த முடியாமல்போய், பிரதிநிதிகளை நியமித்து அவர் களைக் கொண்டு அரசியலை நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்ட தென்றும் அதனையே ஜனநாயகம் என்று சொல்ல வேண்டுமென்றும் கூறு கிறார்கள். குடியரசு என்பதில், குடிகளின் அரசு, அதாவது குடிகளே நேர்முகமாக இருந்து நடத்துகிற அரசு என்ற அர்த்தம் தொனிக்கிறது. ஜனநாயகம் என்பதில், ஜனங்களுடைய நாயகத்துவம், அதாவது அவர்களுடைய ஆளும் உரிமை அங்கீகரிக்கப்படுகிறது; அந்த உரிமையை ஒப்புக் கொண்டு ஒருவரோ அல்லது சிலரோ அந்த நாட்டை ஆளலாம் என்கிற மாதிரியான அர்த்தம் தொனிக்கிறது. இப்படி நுட்பமான வேற்றுமைகளை நாம் பார்க்கலாமாயினும், இரண்டு சொற்றொடர்களுக்கும் அடிப்படையாயுள்ள தத்துவம் ஒன்றுதான். அதுதான் ஜனசக்தி. ஜனசக்தியின் இச்சைப்படிதான், அந்த நாட்டின் அரசியல் நடைபெறுகிறது. அது குடியரசு என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டிருந்தால் என்ன, ஜனநாயகம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டிருந்தால் என்ன? ஆனால், எந்தப் போர்வையைப் போர்த்திக் கொண்டிருந்தாலென்ன என்று நாம் சும்மா அலட்சியப்படுத்தி விடுவதற்கில்லை. ஏனென்றால், ஜனங்களுடைய நாயகத்துவத்தை அங்கீகரித்துக் கொண்டு, ஒரு சிலர் தங்களுடைய நன்மைக்காகவோ, தங்களுடைய வர்க்க நன்மைக்காகவோ ஆளுவதும் சில நாடுகளில் உண்டு. அதாவது சட்ட புத்தகத்தில் ஜனங்களுடைய ஆளும் உரிமை அங்கீகரிக்கப்பட்டிருக்கும். ஆனால், நடைமுறையில் பார்க்கிறபோது, அந்த ஜனங்கள் தங்களுடைய ஆளும் உரிமையை அனுபவியாமல் அல்லது அனுபவிக்கும் சந்தர்ப்பங்களைப் பெறாமல் இருப்பார்கள்; அவர்களுக்காக அல்லது அவர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஒரு சிலர் - சமுதாயத்தில் செல்வமும் செல் வாக்கும் பெற்றவர்கள் - அரசியலை நடத்திக் கொண்டு போவார்கள். இந்த அரசியலை என்ன என்று அழைப்பது? ஜனநாயகம் என்றுதான், மேற்படி அரசியலை நடத்துகிறவர்கள் சொல்வார்கள். ஆனால், உண்மையில் இது ஜனங்களுடைய அரசியல் அல்ல. இதனைத் தெளிவுபடுத்திக் காட்டுவதற்காக, அரசியல் அறிஞர்கள், இந்த மாதியான ஜனநாயக ஆட்சி முறைகளை, எந்தப் பிரிவாருடைய அல்லது வகுப்பாருடைய ஆதிக்கம் அதில் மிகுந்திருக்கிறதோ அந்தப் பிரிவாருடைய பெயரை முதல் மொழியாகச் சேர்த்தே அழைக்கிறார்கள். உதாரணமாக இங்கிலாந்திலே நடைபெறுகிற ஆட்சி ஜனநாயக ஆட்சியென்று தான் பொதுப்படையாக அழைக்கப்படுகிறது. ஆனால் நுணுகிப் பார்க்கிறபோது, அங்கே முதலாளிகள் தான் ஆட்சி முறையை நடத்துகிறார்கள் என்பது தெரிய வரும். இதனால் இதனை முதலாளித்துவ ஜனநாயகம்1 என்று அழைக் கிறார்கள். இங்ஙனமே, ஜனநாயக ஆட்சி முறையில் பல தோற்றங்கள் காணப்படுகின்றன. இனி, குடியரசின் சரித்திரத்தைச் சிறிது கவனிப்போம். ஒரு விஷயத்தைச் சிலாகித்துப் பேசுகிறவர்கள். அதற்கு ஒரு பழமையைக் கொடுத்துப் பேசுவது, உலகத்தில் சர்வ சாதாரணம். உதாரணமாக, முடியாட்சிதான் எல்லா ஆட்சி முறைகளைக் காட்டிலும் முந்தியது என்று முடியரசு வாதிகள் வலியுறுத்திக் கூறுவது போலவே. குடியரசு வாதிகளும், குடியரசுதான், எல்லா ஆட்சி முறைகளைக் காட்டிலும் முந்தியது. பழமையானது என்று சாதிக்கிறார்கள். இரண்டு பேருடைய கட்சியிலும் ஓரளவு உண்மை இருக்கிறது. ஆதியில் மனிதர்கள் நாடோடி வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த காலத்திலும், அதற்குப் பிறகு சிறிய தொகையினராகக் குறுகிய பிரதேசத்தில் ஒன்று சேர்ந்து வாழத் தொடங்கிய ஆரம்ப தசையிலும், குடியரசு முறைதான் நிலவி வந்ததென்று சொல்ல வேண்டும். அதாவது, சொற்பமான பேராயிருந்த ஜனங்கள், அதிக விதீரணமில்லாத பிரதேசத்தில் வாழ்ந்து, தங்களுடைய விவகாரங்களைத் தாங்களே நேரில் நடத்திக் கொண்டு சென்றார்கள். அப்பொழுது அஃது அவர்களுக்குச் சாத்தியமாகவே இருந்தது. ஏனென்றால் அவர்கள் கவனிக்க வேண்டிய விவகாரங்களும் சொற்பந்தான்; கவனித்த பேரும் சொற்பமான பேர்தான். பின்னர் அவர்கள் வசித்திருந்த பிரதேசம் விதீரணத்தில் பெருகியது. ஜனங்களும் அதிகமானார்கள்; கவனிக்கப்பட வேண்டிய விவகாரங்களும் அதிகமாயின. இதனால் சமுதாயம் என்றும், கட்டுப்பாடு என்றும், சட்டம் என்றும், அரசாங்கம் என்றும் பலவகையான தேவைகள் தோன்றின. இவற்றை நடத்திச் செல்வதற்குத் திறமையான ஒரு தலைவன் வேண்டி யிருந்தது. இங்கிருந்தே மன்னராட்சி முறை ஆரம்பிக்கிறது. எனவே, ஜனங்கள் கட்டுப்பாடுள்ள ஒரு சமுதாயத்தினராக வாழத் தொடங்கியதை ஆரம்பமாகக் கொண்டு பார்த்தால், மன்னராட்சி முறைதான் முந்தியது. மனிதர்கள் பூலோகத்தில் வாழ்க்கையை நடத்தத் தொடங்கியதையே ஆரம்பமாகக் கொண்டு பார்த்தால், குடியரசு முறைதான் முந்தியது. ஆனால், இதிலும் கருத்து வேற்றுமைகள் இல்லாமற் போக நாகரிகமடைந்த பிரஜைகளாகவும் வாழத் தொடங்கிய காலத்தில், மன்ன ராட்சி முறை ஏற்பட்டதென்று சொல்கிறீர்களே, ஆனால் சரித்திரம் அப்படி நமக்குச் சாட்சி கூறவில்லையே என்று சொல்லி, இரண்டாயிரத்தைந்நூறு வருஷங்களுக்கு முந்திய கிரேக்க இதிகாசம், ரோம இதிகாசம், இந்தியாவில் புத்தர் காலம், அதற்கு முந்திய வேத காலம் முதலியவை களை அன்பர்கள் உதாரணங்களாக எடுத்துக் காட்டக்கூடும். மேற்படி காலத்தில் மேற்படி நாடுகளில் குடியரசு முறை இருந்ததென்பது வாதவம். ஆனால் சிறிய சிறிய இடங்களில் சொற்ப சொற்ப காலங் களுக்குத் தான். இந்தச் சொற்பகாலக் குடியரசு வாழ்வின் போதும் குழப்பங்களும் அராஜகச் செயல்களும் நடைபெற்று வந்தன. தவிர, குடியரசு என்பது பெயருக்குத்தான் நடைபெற்று வந்தது; உண்மையில் அரசை நடத்தியது ஒருவர்தான். ராஜ்யத்தின் எல்லையும் ஜனத் தொகையும் அதிகரிக்க அதிகரிக்க, மேற்படி ஒருவரே மன்னராக முடி சூட்டிக் கொண்டதை மேற்படி நாட்டுச் சரித்திரங்களில் பார்க்கிறோம். சுருக்கமாகச் சொல்லப் போனால் ஜன சமுதாயமானது, திரப் படாமல் நெகிழ்வான நிலையில் இருந்த காலத்தில் குடியரசு நிலவி வந்ததென்றும், திரப்பட்டு அதன் எல்லை விசாலமடையத் தொடங்கியபோது மன்னராட்சி முறை ஏற்பட்டதென்றும் பொதுப்படையாகக் கூறலாம். பிற்காலத்தில் முடியாட்சி திரப்பட்டும் அதற்கு ஒரு மகத்துவம் ஏற்பட்டும் விட்ட பிறகு, குடியரசின் மாண்பு மங்கிப் போயிருந்தது; மறந்து விடப்பட்டும் இருந்தது. பின்னர் முடியரசானது, வரம்பு கடந்து சென்று வெவ்வேறு உருவங்களுடன் நாடுகளையும் ஜனங்களையும் சீரழிக்கத் தொடங்கிய காலத்தில்தான், குடியரசானது தலைதூக்கி நின்றது. இஃது ஏறக்குறைய கி.பி. பதினெட்டாவது நூற்றாண்டில். இந்தக் காலத்தில், ஜனங்கள், தங்களுக்கும் ஆளும் உரிமையுண்டு. ஆளுஞ் சக்தியுண்டு என்று வாய்விட்டுப் பேசத் தொடங்கினார்கள். இதற்குக் காரணமா யிருந்தவர்கள் பலர். இவர்களில் முக்கியமானவன் ரூஸோ என்ற பிரெஞ்சு அறிஞன். மனிதன் பிறக்கிறபோது சுதந்திரத்துடனேயே பிறக்கிறான் என்று சொன்னவன் இவன். இதற்குப் பிறகு குடியரசு முறைக்கு ஒரு வலுவு ஏற்பட்டது. ஆனால், இந்தத வலுவைச் சம்பாதித்துக் கொள்ள அது மகத்தான போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. முடிதரித்த மன்னர்கள், நிலச்சுவான்தார் களோடும் புரோகிதர்களோடும் சேர்ந்து கொண்டு அதனைக் குழிதோண்டிப் புதைத்துவிடப் பகீரதப் பிரயத்தனம் செய்தார்கள். ஆனால், அவர்களே அந்தக் குழிக்குள் அடைக்கலமாகிவிட்டார்கள். இந்தப் போராட்டங் களையெல்லாம் கடந்து மேலுக்கு வந்த குடியரசு முறையானது, நாட்டின் விதீரணம், ஜனத்தொகைப் பெருக்கம், விஞ்ஞான அபிவிருத்தி, மனிதர் களுடைய அறிவு வளர்ச்சி, அவர்களுடைய சுதந்திர உணர்ச்சி ஆகிய இவைகளையெல்லாம் அனுசரித்துத் தன்னை மாற்றியமைத்துக் கொண்டது. இந்தப் பிற்காலக் குடியரசு முறைக்கும் முற்கால (கிரீ, ரோமாபுரி முதலிய நாடுகளில் காணப்பட்ட) குடியரசு முறைக்கும் அடிப்படையான வித்தியாசம் ஒன்று உண்டு. இதனைப் ப்ளுண்ஷ்லி1 என்ற அரசியல் பண்டிதன் பின்வருமாறு சொல்கிறான் : முற்காலத்தவர் ராஜ்யத்திலிருந்து ஆரம்பித்தார்கள். எல்லாருக்கும் அரசியல் அதிகாரத்தைச் சமமாகப் பங்கீடு செய்து எல்லாருடைய சுதந்திரத்தையும் காப்பாற்றிக் கொடுத்தார்கள். பிற்காலத்துக் குடியரசு முறையிலோ, தனி மனிதனுடைய சுதந்திரத்தி லிருந்து ஆரம்பிக்கிறார்கள். அந்தச் சுதந்திரத்திலிருந்து எவ்வளவு குறைவான பங்கை ராஜ்யத்துக்குக் கொடுக்க முடியுமோ அவ்வளவு குறைவாகக் கொடுத்து, அந்த ராஜ்யத்தின் உத்தரவுகளுக்கு எவ்வளவு குறைவாகக் கீழ்ப்படிந்து நடக்க முடியுமோ அவ்வளவு குறைவாகக் கீழ்ப்படிந்து நடக்கப் பார்க்கிறார்கள். முற்காலத்துக் குடியரசு முறையானது, அஃது எந்த அமைப்போடு கூடியதாக இருந்தாலும், நேர்முகமான குடியரசாக இருந்தது. தற்காலக் குடியரசானது, பிரதிநிதித்துவக் குடியரசா யிருக்கிறது. முந்திய முறை, சிறிய அளவுள்ள ராஜ்யத்தில்தான் இருக்க முடியும்; பிந்திய முறை, விதீரணமான பிரதேசங் களையுடைய ஒரு பெரிய ராஜ்யத்தில்தான் இருக்க முடியும். இந்த மேற்கோளின் தாத்பரியம் என்னவென்றால், முற் காலத்துக் குடியரசு முறையில் ஜனங்கள் நேர்முகமாகக் கலந்து கொண்டார்கள், பிற்காலத்துக் குடியரசு முறையில் பிரதிநிதிகளை நியமித்து அவர்கள் மூலமாக அரசியலில் கலந்து கொண்டார்கள் என்பதுதான். முந்தியதை நேர்முகமான குடியரசுஎன்றும்2, பிந்தியதைப் பிரதிநிதித்துவக் குடியரசு என்றும்3 அழைப்பது வழக்கம். இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சொன்ன பிரகாரம், முந்தியதை வெறும் குடியரசு என்றும் பிந்தியதை ஜனநாயகம் என்றும் சிலர் அழைக்கின்றனர். ராஜ்ய விதீரணமும் ஜனத்தொகையும் சிறிதாயிருந்த காலத்தில், வயது வந்த எல்லா ஜனங்களும் அரசியலில் கலந்து கொள்வது சாத்தியமா யிருந்தது. இடமும் ஜனத்தொகையும் பெருகிவிட்ட பிற்காலத்தில் இது சாத்திய மில்லாமல்போய், பிரதிநிதிகளை நியமனம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆட்சி முறைகளிலே குடியரசு முறையைத் தான் சாதாரண ஜனங்கள் சுலபமாகப் புரிந்து கொண்டு விடுகிறார்கள்; அதனிடத் தில், தங்களை யறியாமல் ஒரு பற்றுதல் கொண்டு விடுகிறார்கள். இதற்குக் காரணமென்ன என்று சிறிது ஆராய்ந்து பார்ப்போம். குடியரசின் அடிப்படையான தத்துவம் எல்லா ஜனங்களும் சம மானவர்கள், சம உரிமையுடையவர்கள் என்பது. பணக்காரர்கள், சொத்துடையவர்கள், படித்தவர்கள் முதலிய எல்லோரும் தங்களுக்குச் சமமானவர்களே, அவர்களைப் போலவே தங்களுக்கும் உரிமையுண்டு என்று சாதாரண ஜனங்கள் எண்ணுவதற்கும் நம்புவதற்கும் குடியரசு முறை இடங் கொடுக்கிறது. இதனால் குடியரசு என்ற சொற்றொடரே அவர்களுக்கு விசேஷ உற்சாகத்தைக் கொடுக்கிறது. இந்த உற்சாக மேலீட்டினால், எல்லா மனிதர்களும் ஒரே மாதிரிதான் என்பது பொதுவான உண்மை யானாலும் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படுகிறான். அறிவு, திறமை முதலிய பல விஷயங்களிலும் ஒருவனுக்கொருவன் மாறுபடுகிறான் என்ற மூல உண்மையை அவர்கள் மறந்தே விடுகிறார்கள். இதனால் தங்களுடைய அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்ளும் விஷயத்தில் அதிகமான சிரத்தை எடுத்துக் கொள்ளாமல், சம உரிமையைப் பற்றிய விஷயத்திலே மட்டும் அதிக கவனம் செலுத்து கிறார்கள். இதனால் ராஜ்யத்துக்குக் கேடுதான் உண்டாகிறது. இதற்காகவே ஒரு குடியரசு முறையின் கீழ் வாழும் ஜனங்கள் அதிகமாகப் பண் பட்டிருக்க வேண்டுமென்று அறிஞர்கள் கருதுகிறார்கள். உரிமையையே அனுபவிக்க வேண்டுமென்ற ஆசைமட்டும் கொண்டு, கடமையைச் செய்யாமல் இருக்கிற பிரஜைகளைக் கொண்ட நாடு சீக்கிரத்திலும் சுலபமாகவும் அழிந்து போகுமல்லவா? ஜனங்களே ஆட்சி நடத்துவதுதான் குடியரசு என்று நாம் மேலே சொன்னோமல்லவா? ராஜ்ய விவகாரங்கள் ஒழுங்காகவும் தொடர்ச்சி விடாமலும் நடைபெறுவதற்கான சட்ட திட்டங்களை ஜனங்களே செய்து கொள்கிறார்கள் என்பதல்லவா இதன் அர்த்தம்? சரி, இப்படிச் சட்ட திட்டங்களைச் செய்து கொள்கிற இவர்களே அந்தச் சட்ட திட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள். அதாவது ஜனங்களே அரசர்களாகவும் குடிகளாகவும் இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு இரண்டு விதமான கடமைகள் ஏற்படுகின்றன. இந்த இரண்டு கடமைகளையும் ஒன்றுக்கொன்று முரண்பட விடாமல் ஒழுங்காகச் செய்து கொண்டு போவதற்கு, அதிகமான பயிற்சியும் நிதானமும் தேவை. மாண்டெக்கு என்ற அறிஞன் சொல்லுகிறான் :- குடிமக்களின் ஒழுக்கந் தான் ஒரு நாட்டில் குடியரசு முறையைக் காப்பாற்றி வைத்திருக்க முடியும். ஒழுக்கம் என்றால் என்ன? அரசியலிலே களங்கமற்ற நடவடிக்கைகள், நாட்டுப்பற்று, எல்லோரும் சமம் என்று கருதுதல் ஆகிய மூன்று அமிசங்களும் பிரஜைகளிடத்தில் சேர்ந்திருக்குமானால், அவர்களை ஒழுக்கமுள்ளவர்கள் என்று சொல்லலாம். ஒரு குடியரசு நாட்டில், ஜனங்கள் அரசர்களாகவும் பிரஜைகளாகவும் இருக்கிறார்கள். அவர்கள் சட்டத்தை இயற்றவும் அமுலுக்குக் கொண்டு வரவும் செய் கிறார்கள். தங்களுக்குத் தாங்களே வரிச்சுமை முதலியவற்றை விதித்துக் கொள்கிறார்கள். இதனால் பிரதியொருவரும், மற்றவர்கள் எப்படி நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்களோ அப்படியே தாங்களும் நடந்து கொள்ள வேண்டும். எந்த நிமிஷத்தில் ஜனங்கள், தாங்கள் இயற்றிய சட்டங்களுக்குத் தாங்களே கீழ்ப்படிய மறுக்கிறார்களோ. அந்த நிமிஷத்திலேயே குடியரசு முறைக்கு அழிவு காலம் ஆரம்பித்து விடுகிறது. ஒரு குடியரசு நாட்டில், ஜனங்கள், தாங்கள் இயற்றிய சட்டங்களைத் தாங்களே அலட்சியப்படுத்துவார்களானால், அஃது எதனைக் காட்டுகிறது? அவர்கள் ஒழுக்கவீனர்களாக இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. நிருவாக வேற்றுமைகளை அனுசரித்து, குடியரசு முறையைப் பல பிரிவுகளாகப் பிரித்துக் காட்டுகிறார்கள் அறிஞர்கள். உதாரணமாக, அரிட்டாட்டல் என்பவன் ஐந்துவகைக் குடியரசு முறைகளுண் டென்று கூறுகிறான். ஒரு டச்சு அறிஞன், தற்காலக் குடியரசு முறையை மூன்று பிரிவாக்கிக் கூறுகிறான். ஆனால் இவையெல்லாம் நிருவாக முறையிலே ஏற்படுகிற மாற்றங்களே தவிர குடியரசு முறையிலே நிகழ்கிற மாற்றங்களல்ல. 13. குடியரசின் குறை நிறைகள் குடியரசு என்பது மேல் பார்வைக்குச் சுலபமாகவும் அதிக உற்சாகத்தைத் தரக்கூடியதாகவும் இருக்கிறது. ஆனால், இதன் கீழ் வாழும் பிரஜைகளுக்குத்தான் அதிகமான பொறுப்பும், கல்விஞானமும், சில சுபாவமும் இருக்க வேண்டும். ஏற்கனவே கூறியுள்ளபடி, இவர் களுக்கு ஆளும் உரிமையும் ஆட்படும் கடமையும் இருக்கின்றன. இந்த இரண்டு பொறுப்புக்களையும், ஒன்றுக்கொன்று முரண்பட விடாமல் நிறைவேற்றிக் கொண்டு செல்வதற்கு அதிகமான அறிவும் திறமையும் தேவையல்லவா? ஓரளவு நெறி பிசகிவிட்டாலும், ஒழுக்கவீனங்கள் மலிந்து போய் ராஜ்ய சக்தியே அரிக்கப்பட்டு அழிந்து போகும். குடியரசின் கீழ் ஜனங்களுடைய சமத்துவம் முக்கியமாகக் கருதப்படுகிறதல்லலவா? அதைப் போலவே ஜனங்களுடைய சுதந்திரமும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்தச் சமத்துவமும் சுதந்திரமும் தங்களுக்கு உண்டு என்ற காரணத்தினால்தான், ஜனங்கள் குடியரசை அதிகமாக விரும்புகிறார்கள். இப்படி விரும்புவது இயற்கை. ஏனென்றால், உலகத்திலே தொன்றி மடிகிற எந்த ஜீவராசியும், எவ்வளவு கஷ்டப்பட்டாவது சுதந்தரத்தோடு தான் வாழ விரும்புகிறதே தவிர, எவ்வளவு சுகத்துடனும் பாதுகாப்புடனும் இருந்து அடிமையாக உயிர் வைத்துக் கொண்டிருக்க விரும்புவதில்லை. இதனாலேயே முடியாட்சியின் கீழோ அல்லது வேறு எந்த ஆட்சியின் கீழோ ஜனங்கள் மிகவும் சௌக்கியத்துடனும் க்ஷேமத்துடனும் இருந்த போதிலும் அதிலிருந்து விடுதலைபெற்று, தங்களுக்குப் பூரண சுதந்திரம் இருக்கக்கூடிய ஓர் ஆட்சி முறையை விரும்புகிறார்கள்; அதனை யடைவதற்காகச் சகலவிதமான போராட்டங்களிலும் ஈடுபடுகிறார்கள். எந்த ஆட்சி முறையின் கீழ் ராஜ்ய நிருவாக அதிகாரமானது, ஒரு சிலரிடத்திலோ அல்லது குறிப்பிட்ட ஒரு வகுப்பினரிடத்திலோ ஒப்படைக்கப்படாமல், ஜனப்பொதுவினிடத்தில் ஒப்படைக்கப் படுகிறதோ, அதற்கே குடியரசு அல்லது ஜனநாயகம் என்று பெயர் என ஒரு கிரேக்க ஆசிரியன் கூறுகிறான். ஜன சுதந்திரத்துக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு பேசுகிற ஜான் டூவர்ட் மில் என்பவன், ஆட்சி முறைகளிலே மிகச் சிறந்தது எதுவென்றால், அரச சக்தியானது, அதாவது எல்லா வற்றிற்கும் மேற்பட்டிருக்கிற ராஜ்ய நிருவாக அதிகாரமானது, ஜனப்பொதுவினிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்; இந்த அதிகாரத்தைப் பிரயோகிக்கிற உரிமையில் ஒவ்வொரு பிரஜைக்கும் பங்கிருக்க வேண்டும். இந்த உரிமையைப் பிரயோகிக்கிற அளவோடு அந்தப் பிரஜை திருப்தியடைகிறவனாகவும் இருக்கக் கூடாது. அதிகாரப் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டிய சந்தர்ப்பம் நேரிட்டால், அதற்கும் அவன் தயாராயிருக்க வேண்டும் என்கிறான். எனவே குடியாட்சியின் கீழ், பிரதியொரு பிரஜைக்கும் எந்த அளவுக்கு உரிமையுண்டோ அந்த அளவுக்குக் கடமையும் உண்டு என்று ஏற்படுகிறது. எல்லாப் பிரஜைகளும் சேர்ந்து ராஜ்ய நிருவாகத்தில் பங்கெடுத்துக் கொள்வது என்று சொன்னால், தகுதியுள்ள எல்லாப் பிரஜைகளும் என்றே அர்த்தம். இந்தத் தகுதிகள் யாவை? 1. வயது வந்தவர்களாயிருக்க வேண்டும். அதாவது 18 வயது அல்லது 21 வயது ஆகி இருக்க வேண்டும். 2. சித்த சுவாதீன முள்ளவரா யிருக்கவேண்டும். 3. கல்வி யறிவுடையவரா யிருக்கவேண்டும். 4. குற்றஞ் செய்து தண்டனையடைந்தவரா யிருக்கக் கூடாது. இவையே அடிப்படையான அல்லது முக்கியமான தகுதிகள். இவை தவிர, ஆதி மதிப்பைக் கொண்டும், கல்வியறிவின் அளவைக் கொண்டும் இந்தத் தகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக அனுஷ்டிக்கப் படுகின்றன. பின்னால் சொல்லப்பட்ட இந்த இரண்டு தகுதிகளும் அவசியமாக வற்புறுத்தப்படுகிற அநேக நாடுகளில் அநேகம் பிரஜைகள், ராஜ்ய நிருவாகத்தில் பங்கெடுத்துக் கொள்ள முடியாதவர்களாகி விடுகிறார்கள். இப்படிப் பங்கெடுத்துக் கொள்ள முடியாதவர்களைப் பெரும்பாலோராகவுடைய ஓர் ஆட்சியைக் குடியாட்சி என்று எப்படிச் சொல்வது? இதனாலேயே, ஒரு நாட்டின் மொத்த ஜனத்தொகையில் எத்தனை பேர் மேற்படி தகுதி யுடையவர்களா யிருக்க வேண்டுமென்பதைச் சில அரசியல் பண்டிதர்கள் நிர்ணயித்திருக்கிறார்கள். எந்த விகிதாசாரத்துக்கு மேற்படி தகுதியுள்ள பிரஜைகள் இருந்தால் அந்த ஆட்சியைக் குடியாட்சி என்று சொல்லலாம் என்பதையும் திட்டப்படுத்தி யிருக்கிறார்கள். ஜனநாயக சித்தாந்தத்தின் தலைசிறந்த பண்டிதனாகிய லார்ட் ப்ரை1 என்பவன் கூறுகிறான் :- தகுதியுள்ள பிரஜைகளில் பெரும்பான்மையோரின் இச்சைப்படி நடைபெறுகிற ஆட்சிக்கே ஜன ஆட்சி என்று பெயர். மொத்த ஜனத்தொகையில் இந்தத் தகுதியுள்ள பிரஜைகள் பெரும்பாலோராயிருக்க வேண்டும்; அதாவது நான்கில் மூன்று பங்கு பேராவது இருக்க வேண்டும். இதை இன்னும் விளக்கப்படுத்திச் சொல்ல வேண்டுமானால், இந்தத் தகுதியுள்ளவர்களுடைய வாக்கு (ஓட்டு) பலத்துக்குச் சமதையாக இவர்களுடைய தேக பலம் இருக்க வேண்டும். இங்கே தேக பலம் என்றது. எண்ணிக்கையைப் பொறுத்த அளவுக்குத் தான் சொன்னதே தவிர, தனிப்பட்டவர்களுடைய தேக பலத்திற்கல்ல. இந்த வியாக்கியானத்தினுடைய சாரம் என்னவென்றால், குடியரசு அல்லது ஜனநாயகத்தின் கீழ் பெரும்பான்மையோரான பிரஜைகளுக்கு வாக்கு (ஓட்டு)ரிமை இருக்க வேண்டுமென்பதாகும். குடியரசானது, ஜனங்களுடைய சுதந்திரத்தையும் சமத் துவத்தையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதால், அந்தக் குடியரசின் கீழ் வாழும் வயது வந்த எந்த ஒரு பிரஜைக்கும், தன் எண்ணத்தையோ அபிப்பிராயத்தையோ, தன்னிஷ்டப்படி தாராளமாகத் தெரிவிக்க உரிமையுண்டு. இப்படித் தெரியப்படுத்துகிற உரிமையை, அந்தப் பிரஜை, சொல்லினாலும் பிரயோகிக்கலாம்; எழுத்தினாலும் பிரயோகிக்கலாம். எண்ண உரிமைவேண்டும். எழுத்துரிமை வேண்டும், பேச்சுரிமை வேண்டும் என்று சொல்லப்படுவனவெல்லாம், ஒரு குடியரசு முறையின் கீழ் வாழும் சாதாரண பிரஜையினுடைய நியாயமான உரிமைகளேயாகும். ஆனால், அந்த உரிமைகளை அனுபவிக்கிற விஷயத்தில் பிரதியொரு பிரஜையும் ஒரே ஒரு நிபந்தனைக்கு உட்பட்டாக வேண்டும். அஃதென்ன வென்றால், எந்த ஒரு பிரஜையும் தனக்குள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை முதலியவற்றை அனுஷ்டிப்பதன் மூலமாக மற்ற எந்த ஒரு பிரஜைக்கும் தீங்கு உண்டு பண்ணக் கூடாது. மற்றவர்களைத் தம் கருத்துக்குத் திருப்பலாம்; ஆனால் திரும்புமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. குடியரசின் மற்றோர் அமிசம் என்னவென்றால், தனிப்பட்ட ஒரு சிலருக்கோ அல்லது ஒரு வகுப்பாருக்கோ எந்தவிதமான விசேஷ சலுகை களும் இருக்கக்கூடாது. அப்படியே எந்த ஒரு பிரிவினருடைய உரிமைக்கும் பங்கம் ஏற்படக்கூடாது. எல்லா நபர்களுக்கும், அவரவர்களுடைய சக்திக்கும் சூழ்நிலைக்கும் இயைந்த முறையில் பூரண வளர்ச்சி பெறுவதற்கு உரிமை இருக்க வேண்டும்; சந்தர்ப்பங்களும் கொடுக்கப்பட வேண்டும். ஒரு சிலருடைய உரிமைகளைப் பறிமுதல் செய்து, அந்த உரிமைகளை வேறு சிலரிடம் ஒப்படைக்கக்கூடாது. இவை யாவும் ஒரு குடியரசின் இன்றியமையாத லட்சணங்கள். எந்த ஓர் ஆட்சி முறையிலும் குறைகளும் இருக்கும்; நிறை களும் இருக்கும். லட்சியம் வாய்ந்த அரசியல் என்று சொல் கிறார்களே, அதாவது குறைகள் இல்லாத அரசியல், அஃது சிலருடைய கற்பனையில்தானிருந்து வந்திருக்கிறது. அரசியல் முறைகளிலே மிகச் சிறந்ததென்று பெரும்பாலான அரசியல் பண்டிதர்களால் கருதப்படுகிற குடியரசு அல்லது ஜனநாயகம் என்கிற ஆட்சி முறையிலுங்கூட, எவ்வளவு சாதகங்கள் உண்டோ அவ்வளவு பாதகங்களும் உண்டு என்று அரசியல் அறிஞர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இந்தச் சாதகங்கள், பாதகங்கள் இரண்டையும் வரிசைப்படுத்திக் காட்ட விரும்புகிறோம். சாதகங்கள் : 1. குடியரசின் கீழ், எந்த ஒரு பிரிவினருடைய தனிப்பட்ட நன்மையும் நாடப்படுவதில்லை. சமுதாயப் பொதுவுக்கு நலம் பயப்பது எதுவோ அதுவே விசேஷமாகக் கருதப்படுகிறது. சிறப்பாக, ஜனத்தொகையில் பெரும்பான்மையோராயுள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் முதலிய சமுதாயத்தின் கீழ்ப்படியிலுள்ளவர்களுடைய நன்மையே அதிகமாகக் கருதப்படுகிறது. 2. குடியரசின் கீழ், ஜனங்களுக்கு நன்மை தருவது எதுவோ, அதனையே குறிக்கோளாகக் கொண்டு ராஜ்ய விவகாரங்கள் நடை பெறுகின்றன. இதனால் ஜனங்கள் சந்துஷ்டியுடன் வாழ முடிகிறது. 3. ராஜ்ய நிருவாகத்தில் பங்கெடுத்துக் கொள்வதற்கு எல்லோருக்கும் ஒரே மாதிரியான சந்தர்ப்பம் கிடைக்கிறது; திறமையுள்ளவர்கள் முன்னுக்கு வரலாம். 4. குடியரசானது ஆடம்பரத்தை வெறுக்கிறது. ஜனங்கள் எளிய வாழ்க்கையை, அதாவது இயற்கையான வாழ்க்கையை நடத்துகிறார்கள். 5. அரசியலில் எவ்வித ஆடம்பரத்துக்கும் இடமில்லை யாதலினால், ஜனங்கள் ஒழுக்கமுள்ளவர்களா யிருக்கிறார்கள். 6. ராஜ்ய நிருவாகத்தில் எல்லாருக்கும் பங்கு உண்டு என்ற காரணத்தினால், எல்லாப் பிரஜைகளும், ராஜ்யத்தைத் தங்களுடைய ராஜ்யமென்றும், அதன் க்ஷேமத்துக்குப் பாடுபடுவது தங்கள் பொறுப் பென்றும் உணர்ந்து நடக்கிறார்கள். இந்தப் பொறுப்பு உணர்ச்சியானது, பிரதியொரு பிரஜையினுடைய சொந்த வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை முதலியவைகளிலும் பிரதிபலிக்கிறது. இதனால் ராஜ்யத்திலுள்ள ஆண், பெண், குழந்தை ஆகிய சகல பேரும், பொறுப்பு உணர்ந்து காரியங்களைச் செய்து கொண்டு போவதைக் கடமையாகக் கொண்டு விடுகிறார்கள். 7. குடியரசின் கீழ், அரசாங்கத்துக்கு விரோதமான சூழ்ச்சிகள், கிளர்ச்சிகள், புரட்சிகள் ஆகிய எதுவும் நடைபெறுவதற்கு ஏது வில்லை. ஏனென்றால் ஜனங்களுடைய ஆட்சி நடைபெறுகிறதல்லவா? அப்படி அவர்கள் கிளர்ச்சியோ, புரட்சியோ செய்வார்களானால், தங்களுக்கு விரோதமாகத் தாங்களே நடந்து கொண்டவர்களாகிறார்கள். 8. சமுதாயத்திலுள்ள பலதிறப்பட்டவரும் ராஜ்ய நிருவாகத் தில் பங்கெடுத்துக் கொள்கிறார்களாதலினால், பலதிறப்பட்ட சக்திகளும் ராஜ்ய நிருவாகத்திற்குத் துணை செய்கின்றனர் இதனால் நிருவாக யந்திரம், ஜனங்களுடைய எண்ணங்களைச் சரியாகப் பிரதிபலித்துக் கொண்டு ஒழுங்காக ஓடுகிறது. பாதகங்கள் : 1. குடியரசானது திரமான ஓர் அரசாகாது. எந்த நிமிஷத் திலும், அதனை விவரமறியாத பாமர ஜனங்களும், ராணுவத்தினரும் சேர்ந்து கவிழ்த்துவிடுதல் கூடும். 2. எல்லோருக்கும் ராஜ்ய நிருவாகத்தில் சமத்துவமான பங்குண்டு என்ற காரணத்தினால், திறமையுள்ளவர்கள் அரசாங்க உயர் பதவிகளுக்கு வரமுடியாமல் போகிறது. 3.. மற்றும், பலர் சேர்ந்து நடத்துகிற ஆட்சிமுறை யாதலினால், யாருக்கும் சொந்தப் பொறுப்பு என்பதில்லாமல் போகிறது. பிரதியோர் அதிகாரியும் தன் பொறுப்பைக் கழித்து விடுவதிலேயே குறியாயிருப்பர். 4. குடியரசானது எண்ணிக்கைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக் கிறது. ஒரு நாட்டில் பெரும்பாலான ஜனங்கள் அறிவுக் குறைவுள்ளவர் களாகவே இருக்கிறார்கள். எனவே பெரும்பாலோரின் ஆட்சியென்றால், அஃது அறிவுக் குறைவுள்ளவர்களின் ஆட்சியென்றே ஏற்படுகிறது. பெர்னார்ட்ஷா1 போன்ற சில அறிஞர்கள் இந்த மாதிரியே அபிப்பிராயப் படுகிறார்கள். 5. குடியரசின் கீழ், பரம்பரை முக்கியம் பெறுவதில்லை யாதலினால், அரசாங்கத்தின் அன்றாட நடைமுறைகளில் ஒரு தொடர்ச்சி இல்லாமல் போகிறது. இதனால் நிருவாக யந்திரமானது ஒழுங்காக ஓடாமல் அடிக்கடி தடைப்படும். 6. குடியரசின் கீழ், வாய்ச் சமத்காரமுள்ளவன் வெற்றியடை கிறான்; சுலபமாகத் தலைவனாகி விடுகிறான். அவன் சுயநலவாதியாக இருக்கும் பட்சத்தில், தேச மக்களைத் தன் வழியில் இழுத்துக் கொண்டு போய், படுகுழியில் அழுத்திவிடுதல்கூடும். 7. குடியரசின்கீழ், எந்தவிதமான ஒரு ராஜ்ய விவகாரமும், துரிதமாக நடைபெற முடியாது; அந்தரங்கமாகவும் நடைபெற முடியாது. 8. குடியரசின்கீழ், கலை, இலக்கியம் முதலியவை பூரண விகாசமடைய முடியாது. இவ்விதம் சாதகங்களும் பாதகங்களும் ஏறக்குறைய சமமாகக் கலந்திருந்த போதிலும், குடியரசுதான், மற்றெல்லா ஆட்சி முறை களைக் காட்டிலும், சிரேஷ்டமான தென்ற அபிப்பிராயம் இப்பொழுது அதிகமாக வலுத்து வருகிறது. 14. சர்வாதிகாரம் சர்வாதிகார ஆட்சியை டிக்ட்டேட்டர்ஷிப்1 என்று சொல்கிறார்கள். சென்ற 1918 - ஆம் வருஷம் முடிந்த ஐரோப்பிய யுத்தத்திற்குப் பிறகு, அதாவது வார்சேல் சமாதான ஒப்பந்தத்திற்குப் பிறகு, இந்தச் சர்வாதிகார ஆட்சி முறைக்கு ஒரு பிரபலமும் சக்தியும் ஏற்பட்டிருக்கின்றன; ஆனால், அதே சமயத்தில் அதன் மீது ஒரு வெறுப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த ஆட்சி முறை, யுத்த ஆரவாரத்தோடு, யுத்த முதீப்புகளோடு, கடைசியாக யுத்தத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதுதான். பரம்பரை பாத்தியத்தோடு கூடிய ஓர் அரசன், ஜனங்களுக்கு நன்மை செய்வதாகக் கருதி, ராஜ்யத்தின் சர்வ அதிகாரங்களையும் தன் சுவாதீனப் படுத்திக் கொண்டு ஆட்சி புரிவானாகில், அவனைக் கொடுங்கோலன் என்று அழைக்கிறோம். அப்படியானால் சர்வாதிகாரி யார்? எவனொருவன் ஜனங்களிலே ஒருவனாகப் பிறந்து வளர்ந்து, தன்னுடைய அசாதாரணமான திறமையால் பலவித சூழ்ச்சிகள் செய்து, அவசியமானால் பலாத்காரத்தை உபயோகித்து அதிகார பதவியைப் பெறுகிறானோ, அப்படிப் பெறுவதோடல்லாமல் மற்றவர் யாருக்கும் எவ்வித அதிகாரமும் இல்லாமற் செய்துவிடுகிறானோ, பலாத்கார சக்தியின் துணை கொண்டு, தான் பெற்ற அதிகாரத்தை தன்னிடமே நிலைத்திருக்கும்படி செய்து கொள்கிறானோ, அவனையே சர்வாதிகாரி என்று அழைக்கிறோம். இதற்கு முஸோலினியையும் ஹிட்லரையும்2 உதாரண புருஷர்களாக எடுத்துக் காட்டுகிறோம். இவ்விருவருடைய நடவடிக்கைகளைக் கொண்டே, ஜனங்களுக்குச் சர்வாதிகாரத்தின் மீது ஒருவித வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த இருவரின் நடவடிக்கை களையும் புறக்கணித்துவிட்டு, சர்வாதிகாரம் என்ற அரசியல் முறையை மட்டும் இங்கே கவனிப்போம். அரசியல் சாதிரத்தில், சர்வாதிகார ஆட்சி முறைக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது; ஆனால் தற்காலிகமாகத்தான். அதாவது, ஒரு தனி மனிதனுடைய சர்வாதிகார ஆட்சியே சாசுவதமாக நிலைத்திருக்கத் தகுந்ததென்று எங்கும் சொல்லப்படவில்லை. ஒரு தேசத்திற்கோ, ஜன சமுதாயத்திற்கோ விபரீதமான ஆபத்து ஏற்பட்டுவிடும் பட்சத்தில், அந்த ஆபத்தினின்று தேசத்தையும் ஜன சமுதாயத்தையும் மீட்க, ஜனங்களே தங்களுடைய ராஜ்யாதிகாரங்களனைத்தையும், தங்களிலே ஒரு சிறந்தவனைத் தெரிந்தெடுத்து, அவனிடம் ஒப்படைக்கிறார்கள். அந்த ஒப்படைப்பு, சாசுவதமான ஒப்படைப்பல்ல. அந்த ஆபத்தைச் சமாளிக்கிற வரையில்தான் அவனுக்குச் சர்வாதிகாரங்களும் உண்டு. அது வரையிலேயே அவன் சார்வாதிகாரி. அவனுக்கு ஜனங்களும் கீழ்ப்படிந்து நடக்கிறார்கள். அந்த ஆபத்து கடந்து போய்விட்டால், அவன், அந்தச் சர்வாதிகாரி, ஜனங்களுடைய நன்மையைப் பெற்றுக் கொண்டு, தன் பதவியிலிருந்து விலகிக் கொண்டு விடுகிறான். இந்த மாதிரியான ஒரு சர்வாதிகார முறையை, ரூஸோ கூட, தனது சமுதாய ஒப்பந்தத் தில் ஒப்புக் கொள்கிறான் : ராஜ்யத்திற்கு மகத்தானதோர் ஆபத்து ஏற்பட்டு, சாதாரண சட்டங்களைக் கொண்டு அந்த ஆபத்தைக் கடக்க முடியாத நிலைமையில்தான், அந்தச் சாதாரண சட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, விசேஷ சட்டமொன்றை நிறைவேற்றி, அதனை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரும் பொறுப்பை, ஒருவனிடமோ அல்லது இரண்டு மூன்று பேரிடமோ ஒப்படைக்கலாம்.... இத்தகையவனுக்குச் சர்வாதிகாரி என்று பெயர். இவன் எல்லாச் சட்டங்களையும், ஜனாதிக்கத்தையும்கூட வாயடக்கி விடலாம். இவன் ஜனாதிக்கத்தை அடக்கிவிட்டாலும், ஜன அபிப்பிராயத்தைத் தழுவியே நடக்கிறவனாகிறான்; ஜன விருப்பத்தைப் பூர்த்தி செய்தவனாகிறான். எப்படி யென்றால், ராஜ்யத்தை ஆபத்தினின்று காப்பாற்ற வேண்டுமென்பது தான் ஜன அபிப்பிராயம்; ஜன விருப்பம். இந்த அபிப்பிராயத்தையும் விருப்பத்தையும் சர்வாதிகாரி பூர்த்தி செய் கிறானல்லவா? எனவே, ஜனநாயக சித்தாந்தத்தில் கூட, சர்வாதிகாரத் திற்கு ஓர் இடம் உண்டு, ஆனால் தற்காலிகமாக என்பது தெரிகிறது. சுமார் இரண்டாயிர வருஷங்களுக்கு முன்னர், அதிகார ஆடம்பரத்துடன் வாழ்ந்து வந்த ரோம ஏகாதிபத்தியத்தின் கீழ், இத்தகைய சர்வாதிகாரிகள் அவ்வப்பொழுது நியமிக்கப்பட்டு வந்தார்கள். அவர் களுடைய உத்தியோக காலம் ஆறுமாதமென்று வரையறுக்கப் பட்டிருந்தது. பிற்காலத்திலே சர்வாதிகாரிகளாக நியமிக்கப்பட்ட சிலர், தங்களுடைய பதவியைச் சாசுவதமாக்கிக் கொண்டு விட்டனர். இதனால் இந்தப் பதவி, கொடுங்கோன்மையின் மறுபுறமென்று கருதப்பட்டுவிட்டது. இதற்கு ஒரு கெட்ட பெயரும் உண்டாயிற்று. சர்வாதிகாரமானது, அதிகாரத்தையே பிரதானமாகக் கொண்டது. அந்த அதிகாரத்தைப் பிரயோகிக்கும் விஷயத்தில், அது பலாத்கார முள்பட சகல முறைகளையும் கையாள்கிறது. ஏனென்றால் அதனுடைய நோக்கம். நிலைகுலைந்துபோன அதிகாரத்தை ஒழுங்குபடுத்த வேண்டு மென்பதுதானே? அதிகாரம் நிலைகுலைந்து போன காலத்தில்தானே, தேசத்தில் குழப்பம் முதலியன ஏற்படுகின்றன? தேசத்திற்கு ஆபத்து உண்டாகிறது? சர்வாதிகாரம் நிலவுகிற காலத்தில், ஜனங்களுடைய உரிமைகள் தற்காலிகமாகப் பறிமுதல் செய்யப்படுகின்றன; ஆனால் அவர்களிடமிருந்து அதிகமான கடமைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. நிரந்தரமான நன்மையை முன்னிட்டுத் தற்காலிகமான சில தொந்தரவுகளைச் சகித்துக் கொள்ள ஜனங்கள் சம்மதிக்கிறார்கள். இதுகாறும் கூறியவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தென்னவென்றால், சர்வாதிகார முறையானது 1. பரம்பரை பாத்தி யதையை அடிப்படையாகக் கொண்டதல்ல; 2. அதிகார நிலைநிறுத்தத்தை முக்கிய லட்சியமாகக் கொண்டது; 3. குறிப்பிட்ட ஒரு காலம் வரைக்குமே அமுலில் இருக்கக்கூடியது என்பவையாம். சர்வாதிகார ஆட்சிமுறை ஏன் தோன்றுகிறது அல்லது ஏன் அவசியமாகிறது என்பதைப் பற்றிச் சிறிது கவனிப்போம். ஒருவர் ஆட்சியோ அல்லது பலர் ஆட்சியோ அதாவது முடியரசோ அல்லது குடியரசோ நடைபெற்று வருகிறதென்று வைத்துக் கொள்வோம். அந்த அரசு எடுத்துக் கொள்கிற நடவடிக்கைகளினால் ஜனங்களுக்குப் பலவிதமான கஷ்டங்கள் ஏற்படுமேயானால், அவர்கள் அந்த அரசியலிலே ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். மாற்றம் ஏற்பட்டால்தான், தங்களுடைய அன்றாட வாழ்க்கை எவ்வித முட்டுப்பாடுமின்றி நடை பெறும் என்று ஜனங்கள் உறுதியாகக் கருதக்கூடிய அளவுக்கு நிலைமை மோசமாகி விடுகிறது. பழைய அரசாங்கத்தின் மீது ஜனங்களுக்கு அதிருப்தி அதிகரிக்கிறது. அப்பொழுது ஜனங்களிலே திறமைசாலி யாயுள்ள ஒருவன், ஜனங்களுடைய இந்த அதிருப்தியைத் தனக்குச் சாதக மாக உபயோகித்துக் கொள்கிறான். அதாவது பழைய அரசாங்கத்தை அப்புறப்படுத்திவிட்டு, தான் ஒரு புதிய அரசாங்கத்தை தாபித்து அதன் மூலமாக ஜனங்களுக்கு விமோசனத்தைத் தேடித் தருவதாகச் சொல் கிறான். அரசாங்க மாற்றத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜனங்கள், இவனுடைய பேச்சுக்குச் செவி சாய்க்கிறார்கள்; இவனை அப்படியே நம்புகிறார்கள்; பின்பற்றுகிறார்கள். பழைய அரசாங்கம் மறைவதற்கும் புதிய அரசாங்கம் தோன்றுவதற்கும் துணை செய்கிறார்கள். இப்படித் தான் சர்வாதிகார ஆட்சி ஆரம்பிக்கிறது. 1914-ஆம் வருஷ ஐரோப்பிய மகா யுத்தத்திற்குப் பிறகு, இத்தலி, துருக்கி, ருஷ்யா, ஜெர்மனி முதலிய நாடுகளில் சர்வாதிகார ஆட்சி முறைகள் ஏற்பட்டதன் வரலாற்றை நாம் சிறிது ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால், அரசியல் வாதிகளின் தடுமாற்றம், பொருளாதாரக் குழப்பம், ஜனங்களின் திகைப்பு ஆகிய இவைகளுக்கு மத்தியில் சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டிருப்பதைத் தெரிந்து கொள்கிறோம். சர்வாதிகாரிகள் அநேகமாக மத்தியதர வகுப்பிலிருந்தே தோன்று கிறார்கள். இதனால்தான், இவர்களுடைய பேச்சுக்கும் ஆட்சிக்கும், மேல்தரத்துப் பணக்காரர்களும் கீழ்தரத்துத் தொழிலாளர்களும் கட்டுப்படு கிறார்கள். மத்தியதர வகுப்பிலிருந்து வருகிறவர்களாதலினால் தான், இந்தச் சர்வாதிகாரிகள், மேல் வகுப்பினருடைய ஆவலையும் கீழ் வகுப்பினருடைய தேவையையும் நன்றாகத் தெரிந்து கொண்டு, அவற்றிற்கு ஆவன செய்கிறார்கள். இவர்களுடைய ஆட்சிமுறை, முதலாளி களையும் தொழிலாளிகளையும் சரிக்கட்டிக் கொண்டு போகிற ஆட்சி முறையாக இருக்கிறது. சர்வாதிகாரிகள், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள் வதிலேயே கண்ணுங் கருத்துமுடையவர்களா யிருப்பதனால், அந்த அதிகார ஊர்ஜிதத்திற்கு என்னென்ன அரண்கள் போட்டுக் கொள்ள வேண்டுமோ அவைகளையெல்லாம் போட்டுக் கொள்கிறார்கள். உதாரணமாக, இவர்கள் தங்களைப் பற்றி எப்பொழுதும் உயர்வாகவே சொல்லிக் கொள்கிறார்கள். அப்படிச் சொல்வதை அழுத்தமாகவும் அதிகார தோரணையுடனும் சொல்கிறார்கள். பெரும்பாலும் சர்வாதிகாரிகள், தங்கள் நாவன்மையையே காரியசாதனைக்குத் துணையாகக் கொள்கிறார்கள். மற்றும் சர்வாதிகாரிகள், அதிகாரத்தைத் தங்கு தடையின்றிச் செலுத்த வேண்டியதற்காக, எவ்வித எதிர்ப்பையும் விரும்புவதில்லை; எதிர்ப்பு இல்லாமலே செய்து கொள்கிறார்கள். எதிர்ப்புக் காட்டு கிறவர் களை நிர்த்தாட்சண்யமாக அடக்கிப் போடுகிறார்கள். வேறு கருத்துடைய கட்சிகளை தாபித்துக் கொள்ள இடம் கொடுப்பதில்லை. தாங்கள் செய்கிற காரியங்கள், எடுத்துக் கொள்கிற நடவடிக்கைகள் ஆகிய இவைகளை அப்படியே அங்கீகரித்திருக்கிற ஒரு கட்சியை மட்டும் வைத்துக் கொண்டு மற்றக் கட்சிகளையெல்லாம் அடக்கி ஒடுக்கி விடுகின்றனர். இங்ஙனம் ஒரு கட்சியின் பலத்தைக் கொண்டே இவர்கள் ஆட்சி முறையை நடத்துகிறார்களாயினும், ஜன நாயகமே தங்களுடைய ஆட்சி முறைக்கு ஆணி வேராயிருக்கிறதென்று சொல்லிக் கொள்கிறார்கள். இதற்காகச் சட்ட சபைகள் அல்லது பார்லிமெண்ட்டுகள் என்கிற ஜனப்பிரதி நிதி தாபனங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், இந்த தாபனங்கள், இவர்களுடைய சொற்களையும் செயல்களையும் பதிவு செய்து கொள்கிற அல்லது எதிரொலி கொடுக்கிற கருவிகளாகவே இருக்கின்றன. சர்வாதிகார ஆட்சியின் கீழ், சில சாதகங்களும் உண்டு. அரசாங்கக் காரியங்கள் துரிதமாக நடைபெறுகின்றன. ஜனப் பிரதிநிதிகளென்று சொல்லிக்கொண்டு ராஜ்ய விவகாரங்களில் யாரேனும் குந்தகம் விளைவித்தால், அதற்கு இடமே அளிக்கப்படுவதில்லை. உள்நாட்டுக் குழப்பங்கள் முதலிய எதற்கும் சந்தர்ப்பமே கிடையாது. நாட்டிலே பலவிதப்பட்ட அபிப்பிராயங்கள் தோன்றி, அவை காரணமாக ஜனங்களுடைய அறிவிலே ஒரு கலக்கம் ஏற்படுவதில்லை. அரசியல் விவகாரங்கள், மத அனுஷ்டானங்கள், சமுதாயப் பழக்க வழக்கங்கள் முதலிய பலவும் ஏறக்குறைய ஒரு மாதிரியாகவே நடைபெறுகின்றன. பொதுவாக, சர்வாதிகார ஆட்சியானது ஏதோ சில விசேஷ சந்தர்ப்பங்களில் தான் நடைபெறுவதற்குத் தகுதியுடையதே தவிர சாசுவதமாக நடைபெறுவதற்குத் தகுதி யுடையதல்ல வென்பதே அரசியல் அறிஞர்களின் அபிப்பிராயம். 15. பாசிஸமும் நாஜிஸமும் பாசிஸமும் நாஜிஸமும் தனித்தனியான அரசியல் தத்துவங்கள் அல்ல. சர்வாதிகாரத்தின் இரண்டு பெயர்கள் இவை. இத்தலியில் பாசிஸம் என்றும், ஜெர்மனியில் நாஜிஸம் என்றும் முறையே அழைக்கப் படுகின்றன. இரண்டினுடைய பார்வை, பேச்சு, லட்சியம் எல்லாம் ஒன்றே. காலக் கண்ணாடியிலே பார்க்கிறபோது, பாசிஸம் மூத்ததாகவும் நாஜிஸம் இளையதாகவும் தென்படும். ஏனென்றால், பாசிஸம் 1923-ஆம் வருஷத்திலேயே அதிகார பீடத்தில் அமர்ந்து கொண்டது. நாஜிஸம் இதற்குப் பத்து வருஷம் கழித்த பிறகே அதிகார பீடத்தில் அமர்ந்தது. மற்றும், ஹிட்லர் அநேக இடங்களில் முஸோலினியைத் தன் ஆசாரியனாகவும், வழிகாட்டியாகவும் மதித்துப் பேசியிருக்கிறான். ஆனால், பிற்காலத்தில் இந்த வழி காட்டிக்கு அவன் வழிகாட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது ! அது வேறுகதை. பாசிஸம் மூத்தது என்ற காரணத்தினாலேயோ என்னவோ, சர்வாதிகாரத்தைப் பற்றிப் பேசுகிறபோது, நாஜிஸத்தையும் சேர்த்து ஆகவே, பாசிஸம் என்றால், நாஜிஸத்தையும் சேர்த்தே அர்த்தப் படுத்திக் கொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். பாசிஸம் என்றாலும் நாஜிஸம் என்றாலும் ஒன்றுதான். பாசிஸம், சமீப காலத்துச் சிருஷ்டி. 1914-ஆம் வருஷ ஐரோப்பிய யுத்தத்திற்குப் பிறகுதான் இதன் வாழ்வு ஆரம்பிக்கிறது. பாசிஸத்தின் எண்ணப் போக்கு, பெரும்பாலும் பிக்டே1 நீஷே2 என்ற இரண்டு ஜெர்மானிய அறிஞர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருக் கிறதாயினும், இது - பாசிஸம் - ஓர் அதிகார சக்தியாக, அரசியல் தத்துவமாக உருப்பெற்றதெல்லாம் மேற்படி ஐரோப்பிய யுத்தத்திற்குப் பிறகுதான். வார்சேல் சமாதான ஒப்பந்தத்தில் இத்தலி ஏமாற்றமடைந்தது; ஜெர்மனி அவமானமடைந்தது. இந்த ஏமாற்றத்தினின்றும், இந்த அவமானத்தினின்றும் பிறந்தவைதான் பாசிஸமும் நாஜிஸமும். இத்தலிக்கு ஏமாற்றமும், ஜெர்மனிக்கு அவமானமும் ஏற்பட்டிராவிட்டால், பாசிஸமும் நாஜிஸமும் இப்போதைப்போல், அரசியல் சாதிரத்தில் இரண்டு ஏடுகளாக இடம் பெற்றிருக்குமா என்பது சந்தேகம். கார்ல் மார்க், சமதர்மத்தை ஒரு தத்துவமாக வகுத்துவிட்டுப் போனான். இதை, ஆராய்ச்சி என்னும் உலைக்களத்தில் ஏறக்குறைய மூன்று தலைமுறைகளாக வைத்திருந்தார்கள் அறிஞர்கள். ஒழுங் கான உருவம் பெற்றது. பின்னர் லெனின்1 இதனை அனுஷ்டான சாத்திய மாகும்படி செய்தான். அதாவது, தத்துவத்திற்குப் பிறகுதான் அனுஷ்டானம் வந்தது; காரணத்தைச் சொல்லியே காரியம் நடைபெற்றது. ஆனால், பாசிஸமோ அப்படியில்லை. அனுஷ்டானத்திற்கு வந்த பிறகு தான் அதன் தத்துவம் தோன்றியது. பாசிட் கட்சிக்குப் பிறகுதான் பாசிஸம்; நாஜிக் கட்சிக்குப் பிறகுதான் நாஜிஸம். வார்சேல் ஒப்பந்தத்தின் பயனாக இத்தலியிலும் ஜெர்மனியிலும் பல திறப்பட்ட எண்ணப் போக்குகளையும், பல திறப்பட்ட சக்திகளையும், ஏன், பலதரத்து மனிதர்களையுங்கூட ஒன்றுகூட்டிச் சில காரியங்களைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்காக ஒரு கட்சி தேவையாயிருந்தது. இதுவே இத்தலியில் பாசிட் கட்சி; ஜெர்மனியில் நாஜி கட்சி. கட்சி என்று ஏற்பட்டுவிட்டால், அதற்கென்று திட்டம், கொள்கை, தத்துவம் எல்லாம் வேண்டுமல்லவா? இவைகளின் தொகுப்புத்தான் பாசிஸமும் நாஜிஸமும். இங்ஙனம் செயலுக்குப் பின்னர் தத்துவம் தோன்றியதனால்தான், ஆராய்ச்சி உலைக்களத்தில் வைக்கப்படாததனால் தான், பாசிஸமும் நாஜிஸமும் அநேக சிக்கல்களுடையனவாகவும், முரண்பாடுகளுடையனவாகவும் இருக்கின்றன. ஆயினும் இந்தச் சிக்கல் களிலிருந்தும் முரண்பாடுகளிலிருந்தும் ஒரு தெளிவைக்காண முயன்றிருக் கிறார்கள் அறிஞர்கள். பாசிஸம், பாசிட் என்ற பெயர்கள் எப்படித் தோன்றின? முஸோலினியே இதற்குக் காரணம் கூறியிருக்கிறான் :- ரோம ஏகாதிபத்தியம் செல்வாக்குடனிருந்தபோது, கான்ஸல்கள்2 என்ற அதிகாரிகளுக்கு முன்னால், அவர்களுடைய அதிகாரத்தின் அறிகுறியாக லிக்ட்டர்கள்3 என்ற உத்தியோகதர்கள் ஒருவகைத் தடி ஏந்திச் செல்வார்கள். இதற்குப் பாச4 என்ற பெயர். இந்தக் கழிகள் தனித் தனியாக இருந்தால் சுலபமாக முறித்துவிடலாம். ஆனால், இவற்றை ஒன்று சேர்த்து ஒரு கட்டாகக் கட்டிவிட்டால், யாராலும் முறிக்கச் சாத்தியமாகாது. அதுபோல் நாம் ஒற்றுமையாக இருப்போமானால், நம்மை அழிக்க யாராலும் முடியாது. நமக்கு இந்த உறுதி இருக்கிற தென்பதைத் தெரிவிப்பதற்காக இந்தச் சங்கத்திற்கு - இந்தக் கட்டுப்பாட்டுக்கு - பாசியோ1 என்று பெயரிடுவோமாக. இந்தக் கட்சியின் முழுப்பெயர் பாசி - இத்தாலியானா - டி- கம்பாட்டி மெண்டோ2 என்பது. அதாவது, கட்டுப்பாடுள்ள இத்தாலிய வீரர் சங்கம் என்று சொல்லலாம். கோடரியும், கழிகள் அடங்கிய கட்டும் இந்தக் கட்சியின் சின்னங்களாகக் கொள்ளப்பட்டன. கோடரி, அதிகாரத்தின் அறிகுறியென்றும், கட்டு, ஒற்றுமையின் அறிகுறியென்றும் சொல்லப் படுகின்றன. ஜெர்மனியில் 1919-ஆம் வருஷம் நாஜி கட்சி காணப்பட்டது. இதன் ஏழாவது எண் அங்கத்தினன் ஹிட்லர். உண்மையில் இந்தக் கட்சியை தாபித்தவன் ட்ரெக்லர்3 என்ற ஒருவன். ஆனால் பின்னாடி ஹிட்லரின் ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு, இவன் கட்சியினின்று விலக்கப்பட்டு மறைந்து விட்டான். ஆரம்பத்தில் இந்தக் கட்சிக்கு ஜெர்மன் தொழிலாளர் கட்சி4 என்று பெயர். ஹிட்லர் தலைவனாக வந்த பிறகு, பெயரையே மாற்றிவிட்டான்; தேசீய அபேதவாத ஜெர்மன் தொழிலாளர் கட்சி5 என்று பெயர் கொடுத்தான். பின்னர் நாளாவட்டத்தில் இது தேசீய அபேதவாதக் கட்சி6 யாகச் சுருங்கியது. 1933-ஆம் வருஷம் ஹிட்லர் அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டபோது, அபேதவாதக் காற்றுக்கூட ஜெர்மனியில் வீசாதபடி செய்துவிட்டான். தொழிலாளர் கட்சியென்றும் அபேதவாதக் கட்சி யென்றும் சொல்லிக்கொண்டு, தொழிலாளர்களுக்கும் அபேதவாதி களுக்கும் நேர்விரோதமாகக் காரியங்களை நடத்தினான். இது ஜெர்மன் சரித்திரத்தில் ஒரு கறைபடிந்த கதை; இஃது இருக்கட்டும். இந்த நேஷனல் சோஷலிட் கட்சிதான் நாஜிகட்சியாகச் சுருங்கியது. ஜெர்மன் பாஷா உச்சரிப்புச் சம்பிராதயப்படி பார்த்தால், முதல் வார்த்தையின் முதலிரண்டு எழுத்துக்களும், இரண்டாவது வார்த்தையின் இரண்டாவது இரண்டு எழுத்துக்களும் சேர்கிறபோது நாஜி7 என்பது வரும். இந்தப் பெயராலேயே கட்சி, கட்சியின் கோட்பாடு எல்லாம் அழைக்கப் படுகின்றன. முதலாளித்துவமானது தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் தன்மையது. அதனை அழிக்கும் வித்து அதனிடத்திலேயே முளைத்து வளர்கிறது என்ற கருத்தை மார்க் வெளியிட்டுப் போனான். அந்த அழிவு, இந்த இருபதாவது நூற்றாண்டில் முதலாளித்துவத்திற்குத் தொடங்கி விட்ட தென்றும், அதனின்றும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டே, பாசிஸம் என்ற கோலம் பூண்டு அது போராடுகிறதென்றும் பாசிஸத்திற்குச் சிலர் வியாக்கியானஞ் சொல்கிறார்கள். அதாவது முதலாளித்துவத்தின் இறங்குமுக வாழ்வுக்குத்தான் பாசிஸம் என்று பெயர் என்பது இவர்கள் கருத்து. இப்படிச் சொல்கிறவர்கள் அநேகமாகப் பொதுவுடமைவாதிகள். ஆனால் இத்தலியிலும் ஜெர்மனியிலும் பாசிஸம் எப்படி வளர்ந்து வந்திருக்கிறதென்பதை நாம் ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால், அது மத்திய வகுப்பாரிடமே தோன்றி வளர்ந்து வந்திருக்கிறதென்பது நன்கு தெரியும். மத்திய வகுப்பு இளைஞர்களின் ஆத்திரம், ஆவல் இவையிரண்டினையும் பிரதிபலிப்பதுதான் பாசிஸம் என்று சிலருடைய கருத்து. இதைச் சிறிது ஆராய்வோம். விஞ்ஞான அபிவிருத்தி காரணமாகத் தொழில் பெருக்கம் ஏற்பட்டது. தொழில் பெருக்கம் காரணமாக முதலாளித்துவம் வளர்ந்தது. இதே வேகத்தில், ஆனால் முதலாளித்துவத்திற்கு நேர் எதிராக, தொழிலாளர் இயக்கமும் வளர்ந்தது. முதலாளித்துவம், தான் அனுபவித்து வரும் சலுகைகளை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் போராடுகிறது; தொழிலாளித்துவம் தன் உரிமைகளுக்காகப் போராடுகிறது. இந்தப் போராட்டத்திற்கு மத்தியில், மத்திய வகுப்பார் நசுக்குண்டு அவதிப்படு கின்றனர். இவர்கள், தொழில் பெருக்கத்தினால் உண்டாகிற எல்லா அனுகூலங்களையும் அடையப் பார்க்கிறார்கள்; ஆனால் அடையக்கூடாத படி, சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு இருக்கிறது. முதலாளிகள், இவர்களைத் தங்களோடு சேர்த்துக் கொள்ள மறுக்கிறார்கள். அப்படி யானால் இவர்கள் தொழிலாளர்களோடு சேர்ந்து கொள்வது தானே என்று கேட்டால், அதற்கு இவர்கள் மனம் கூசுகிறது. அது தங்களுடைய கௌரவத்திற்குக் குறைவென்று கருதுகிறார்கள். இதனால் இவர்கள் மேல்படிக்கு அனுமதிக்கப்படாமலும் கீழ்ப்படிக்கு இறங்க மன மில்லாமலும் நடுவேயிருந்து தவிக்கிறார்கள். முதலாளிக்குச் சுரண்டும் திறமை இருக்கிறது; தொழிலாளிக் குப் போராடுஞ் சக்தி இருக்கிறது. மத்திய வகுப்பானுக்குச் சுரண்ட மனமில்லை; போராடச் சந்தர்ப்பம் இல்லை. நாகரிக வசதிகளை அனுபவிக்க வேண்டுமென்ற ஆசை மட்டும் நிறைய இருக்கிறது. முதலாளி, இகலோக வாழ்க்கையில் இன்பம் அனுபவிக்க வசதிகள் ஏற்படுத்திக் கொள்கிறான்; தொழிலாளி, அந்த வசதி பெறாமை யினால், பரலோக வாழ்க்கையில் நம்பிக்கை கொள்கிறான். மத்திய வகுப்பானோ, இந்த இரண்டு உலகங்களுக்கும் நடுவே, நாகரிக வசதி களைப் பெற முடியாமலும் பரலோக வாழ்க்கையில் நம்பிக்கைக் கொள்ள முடியாமலும் தத்தளிக்கிறான். சுயேச்சையாக ஒரு காரியத்தைச் செய்யவும், அதில் வெற்றி காணும் பொருட்டுத் தைரியமாகப் போராடவும் இவனுக்குச் சந்தர்ப்பங்களே கிடைப்பதில்லை. ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தை யென்னவோ இவன் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறான். பாசிஸம், அந்தச் சந்தர்ப்பத்தை இவனுக்கு அளிக்கிறது. இத்தலியிலும் ஜெர்மனியிலும் முறையே பாசிட் கட்சியிலும் நாஜி கட்சியிலும் பெரும்பாலோரான அங்கத்தினர்களாகச் சேர்ந்தவர்கள் யாரென்று பார்த்தால், குறைந்த சம்பளம் வாங்கும் குமாதாக்கள், சில்லரை வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள், அற்ப சொற்பமான பூதிதி யுடையவர்கள் முதலியோரே. இன்றைய ஐரோப்பிய நாகரிகத்தில் இரண்டு வித கலப்புகள் இருக்கின்றனவென்றும், ஒன்று கிரேக்க கலாசாரமென்றும், மற்றொன்று ரோம கலாசாரமென்றும் அறிஞர்கள் சொல்கிறார்கள். கிரேக்க கலாசார பரம்பரையானது, மனிதனுடைய சிந்தனாசக்தியைத் துரிதப்படுத்தி வந்ததோடு அவனுடைய தனித்துவத்தையும் வளர்த்து வந்தது. ரோம கலாசார பரம்பரையோ, சமுதாயக் கட்டுப்பாடு, ஒழுங்கு முதலியவை களை வளர்த்து வந்தது. மனிதனுடைய சிந்தனா சக்தி அதிகப்பட்டதன் காரணமாக விஞ்ஞான அறிவு பெருகியது; மதத்திலே நம்பிக்கை குன்றியது; அரசியலில் ஜனநாயக தத்துவம் வளர்ந்தது; தனிப்பட்டவர் களுடைய சுகசௌக்கியத்தை வளர்ப்பதற்குத் துணையாயிருப்பதே அரசாங்கம் என்ற எண்ணம் வலுத்தது. ஆனால் இந்த அளவோடு நிற்க வில்லை. வரவர விபரீத பயன்களும் உண்டாயின. அரசியலிலே குழப்பம், அறவாழ்க்கையிலே அவநம்பிக்கை, நாதிகம் எல்லாம் தோன்றின. இவைகளின் தொகுப்புத்தான் பொதுவுடமை இயக்கம். இந்த இயக்கம், அதாவது மேலே சொன்ன விபரீத பயன்கள், இன்னும் அதிகமாக வளர வொட்டாதபடி தடுப்பதற்கு, ஓர் இயக்கம் அவசியமாயிருந்தது. இதுதான் பாசிஸம். பாசிஸம், பழைய ரோம கலாசாரப் பண்புகளையெல்லாம் மறுபடியும் மேலுக்குக் கொணர்ந்து சமுதாயத்திலே புகுத்துகிறது. அதாவது இப்பொழுது சமுதாயத்தில் கட்டுப்பாடு, ஒழுங்கு, பரம்பரைக்கு ஒரு மரியாதை இவையெல்லாம் தேவையாயிருக்கின்றன. இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் பாசிஸம். பாசிட்டுகள், பாசிஸம் தோன்றியதற்கு, மேலே சொன்ன காரணத்தையே சொல்கிறார்கள். பாசிஸமானது, தனி மனிதனுடைய வளர்ச்சியைக் காட்டிலும் சமுதாயக் கட்டுப்பாட்டையே அதிகமாக வலியுறுத்துகிறது. பாசிஸத்தின்படி லட்சிய புருஷன் யாரென்றால், அறிஞனல்ல; விஞ்ஞான சாதிரியல்ல; பண்பட்ட யுத்த வீரன்தான். அவன் வைராக்கிய சித்தமுடையவன்; தற்பெருமையுள்ளவன்; ஆனால் அடக்க முடையவன்; ஆழ்ந்த மதப்பற்றுடையவன்; மற்றவர்களுடைய நலத் திற்காகத் தொண்டு செய்யும் விஷயத்தில் தன்னையே கொடுத்துவிட வல்லவன்; ஏழைகள், பலவீனர்கள் முதலியோரைப் பாதுகாக்கிறவன்; நியாயத்திற்காகப் போராடுகிறவன்; தனது ஜாதீயப் பெருமையைக் காப்பாற்றுகிறவன் இப்படிப்பட்ட ஒரு லட்சிய புருஷனாகப் பிரதியொரு மனிதனும் இருக்க வேண்டும் என்று பாசிட்டுகள் கூறுகிறார்கள். பிரதியொரு பாசிட்டினிடமிருந்தும் இந்த மாதிரியான பண்புகளே எதிர்பார்க்கப்படுகின்றன. 16. பாசிஸத்தின் தன்மைகள் பாசிஸமானது அமைதியான வாழ்க்கையை அடியோடு நிராகரிக் கிறது; போரைப் புகழ்ந்து பாடுகிறது. பலவீனப்பட்டு வருகிற அல்லது உட்பிணக்குகளால் சீர்கெட்டுப் போகிற ஒரு ராஜ்யம். பழைய மாதிரி சிறப்படைய வேண்டுமானால் அதற்கு யுத்தமே தக்க மருந்து என்பது பாசிட்டுகளின் வாதம். அமைதி, செழுமை, சுகம் முதலியன ஒரு ராஜ்யத்தில் அளவுக்கு மிஞ்சிவிடுமானால் அந்த ராஜ்யத்திற்கு அழிவு ஏற்படுவது நிச்சயம் என்று பாசிட்டுகள் நம்புகிறார்கள். இதனாலேயே சமுதாய வாழ்க்கையில் கட்டுப்பாடு, வைராக்கியம் முதலியன தேவையென்று வற்புறுத்துகிறார்கள். போர்க்குணத்தைப் புகழ்ந்து பாடுகிற பாசிட்டுகள், அதிகார பலத்தை லட்சியமாகக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை. பணம் படைத் தவனோ, புத்திசாலியோ, பொருளுற்பத்தி செய்கிறவனோ பாசிட் ராஜ்யத்தில் முக்கியதனல்ல; அதிகாரம் யாரிடத்தில் இருக்கிறதோ அவன்தான் முக்கியதன். ஆனால், எல்லோருமே அதிகாரிகளாக இருக்க முடியுமா? முடியாது. ஒரு சிலர் தான் இருக்க முடியும். அந்த ஒரு சிலரே ஆளுஞ் சாதியினர்; மற்றவர் எல்லோரும் ஆளப்படும் கூட்டத்தினர். இத்தகைய கருத்துக்கள் பாசிஸத்தின் அடிப்படையில் இருப்பதனாலேயே, பாசிட்டுகள் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் பரிகசித்துப் பேசுகிறார்கள். இதனைச் சிறிது விளக்குவோம். பாசிஸத்தின் கொள்கைப்படி எண்ணிக்கை முக்கியமல்ல. அதாவது ஒரு ராஜ்யத்தின் அதிகார பலம் முழுவதும் பெரும்பாலோரான ஜனங்களிடத்தில் இருக்கிறது அல்லது இருக்க வேண்டுமென்ற ஜனநாயக சித்தாந்தத்தை பாசிஸம் அடியோடு நிராகரிக்கிறது. முஸோலினி ஓர் இடத்தில் கூறியிருக்கிறான் :- பெரும்பாலான எண்ணிக்கையினாலேயே, அப்படிப் பெரும் பாலான எண்ணிக்கையாக இருக்கிறதென்ற ஒரு காரணத்தைக்கொண்டே, மானிட சமுதாயத்தை நடத்திக் கொண்டு செல்ல முடியுமென்பதை பாசிஸம் மறுக்கிறது. பலர் அவ்வப்பொழுது கூடி ஆலோசித்து விட்டதன் மூலமாகவே ராஜ்யத்தை ஆளமுடியுமென்பதை அது மறுக்கிறது. மானிட சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதை மாற்ற முடியாது. அதுதான் நல்லது; பலன் தரத்தக்கது எல்லோருக்கும் வாக்குரிமை யென்கிற ஒரு முறையினால் இந்த ஏற்றத் தாழ்வுகளை ஒழுங்குபடுத்த முடியாது. எல்லோருக்கும் வாக்கு (ஒட்டு)ரிமை கொடுத்துவிடுவதென்பது, எல்லோருக்கும் பொறுப்பற்ற தன்மையில் நடந்து கொள்ளலாம் என்ற உரிமை கொடுத்துவிட்ட மாதிரி என்பது பாசிட்டுகள் கருத்து. எல்லோருக்கும் உரிமை கொடுத்துவிடுவதனாலேயே, எல்லோரும் கடமையைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா? செய்ய வேண்டுமென்று வற்புறுத்தவும் முடியாது. வற்புறுத்தினால் ஆளப் படுவோரின் சம்மதத்தைப் பெற்று ஆட்சி நடைபெறுகிறதென்ற அடிப்படையே தகர்ந்து விடுகிறது. ஆகவே, ஜனநாயகத்தினால் அதாவது பெரும்பாலோர் ஆட்சியினால், ஒழுக்கவீனங்களும் ஒழுங்குத் தவறு களுமே அதிகப்படுமென்று பாசிட்டுகள் கூறுகிறார்கள். பாசிஸத்தின்படி, ஜனசக்தியென்பது, ஜனங்களுடைய தூய எண்ணத்தைப் பொறுத்திருக்கிறதே தவிர, எண்ணிக்கையைப் பொறுத் திருக்கவில்லை. ஒரு சிலர் மட்டுமே, ராஜ்யத்தின் க்ஷேமத்திற்காகவும், மற்றவர்களுடைய நன்மைக்காகவும் உழைக்க முடியுமென்றும், அவர்களுடைய சக்திதான் ஜனசக்தியென்றும் பாசிட்டுகள் சாதிக்கிறார்கள். குறித்த ஒரு பிரச்னையை எடுத்துக் கொண்டு அது நியாயமா அல்லது நல்லதா என்று தீர்மானிக்க வேண்டுமானால், அதற்குப் பெரும் பாலோருடைய வாக்கு (ஓட்டு) பலம் மட்டும் இருந்தால் போதுமா? அப்படிப் பெரும்பாலோருடைய வாக்கு (ஓட்டு) பலம் இருக்கிறதென்ற ஒரு காரணத்தினாலேயே அந்தப் பிரச்னை நியாயமாகி விடுமா? நல்லதாகி விடுமா? ஆகி விடாது. எனவே அதிகார பலம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள், நியாயமென்றும் நல்லதென்றும் எதைச் சொல்கிறார்களோ அதுதான் நியாயம். அதுவே நல்லது என்கிறார்கள் பாசிட்டுகள். ஹிட்லர் எது சரியென்று தீர்மானிக்கிறானோ அதுதான் சரி; சாசுவதமாக அதுவே சரியாயிருக்கும் என்பது ஒரு ஜெர்மானிய அரசியல்வாதியின் வாக்கு. ராஜ்யத்தின் எல்லாப் பிரஜைகளும் சமஉரிமை உடையவர் களென்ற ஜனநாயகத்தின் மற்றோர் அடிப்படையையும் பாசிஸம் தகர்த்தெறிகிறது. சட்டத்தின் முன் எல்லாரும் சமம் என்ற கோட் பாடு கூட பாசிஸ நாடுகளில் எள்ளி நகையாடப் படுகிறது. உதாரணமாக, ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியின்போது, யூதர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதைக் கொண்டே பாசிஸத்தின் போக்கை நாம் தெரிந்து கொள்ளலாம். பாசிஸமானது, தனி மனிதனுடைய வளர்ச்சிக்கோ உரிமைக்கோ முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ராஜ்யத்தின் க்ஷேமத்திற்கும் வளர்ச்சிக்குந்தான், அந்த ராஜ்யத்திலுள்ள பிரஜை இருக்கிறானென்று அது கருதுகிறது. அந்தப் பிரஜையின் க்ஷேமத்திற்கோ உரிமைக்கோ வளர்ச்சிக்கோ பங்கம் வராமல் பாதுகாப்பது ராஜ்யத்தின் கடமை என்பதை பாசிஸம் அடியோடு மறந்து விடுகிறது. சுருக்கமாகச் சொல்கிறபோது, ராஜ்யத்திற்காகத்தான் பிரஜை இருக்கிறானே தவிர, பிரஜைக்காக ராஜ்யம் இல்லை. இதனால் ராஜ்யத்தின் க்ஷேமத்தை முன்னிட்டு எந்த அளவுக்குப் பிரஜைகளுக்கு உரிமைகள் கொடுக்க வேண்டுமோ அந்த அளவுக்குத்தான் அளிக்க வேண்டுமென்று பாசிஸம் கூறுகிறது. இதனை முஸோலினி பின்வருமாறு விளக்குகிறான் :- பாசிட் ராஜ்யத்திலுள்ள பிரஜைகளுக்கு பயனற்றதும் தீமை பயப்பது மான எல்லா உரிமைகளும் மறுக்கப்படுகின்றன; எவை அவசியமோ, முக்கியமோ அவை மட்டுமே அளிக்கப்படுகின்றன. ஆனால் எது அவசியம், எது முக்கியம் என்று தீர்மானிப்பது பிரஜையல்ல; ராஜ்யந்தான். இந்தத் தீர்மானிக்கும் உரிமை ராஜ்யத்தினிடம் ஏன் இருக்க வேண்டுமென்றால், ராஜ்யத்தின் தேவைகள் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு விதமாக மாறுபடுகின்றன. அந்தத் தேவைகளுக்குத் தகுந்தாற் போலவே பிரஜைகளின் உரிமைகளும் மாற வேண்டியிருக்கின்றன. அப்படி மாறாவிட்டால், அதாவது பிரஜைகளுக்குச் சில உரிமைகளைச் சாசுவதமாக அளித்துவிட்டால், ராஜ்யத்தின் க்ஷேமமல்லவோ பாதிக்கப் பட்டு விடும்? உதாரணமாக, ஜனங்களுக்கு யுத்த காலத்தில் ஒருவிதமான உரிமை, சமாதான காலத்தில் இன்னொரு விதமான உரிமை, புரட்சி காலத்தில் வேறொரு விதமான உரிமை, பொருளாதாரச் செழுமையுள்ள காலத்தில் மற்றொரு விதமான உரிமை. வெள்ளத்தினாலோ - பஞ்சத்தினாலோ ராஜ்யம் வறுமையுற்றுத் தவிக்கிறபோது பிறிதொரு விதமான உரிமை என்று இப்படிப் பலவிதமாக, காலத்திற்கும் சந்தர்ப்பத் திற்கும் தகுந்தாற்போல் உரிமைகள் மாறுவதை, எல்லோருக்கும் சாசுவதமான உரிமை வழங்கியுள்ளோம் என்று பெருமையடித்துக் கொள்கிற ஜனநாயக நாடுகளில் காண்கிறோமில்லையா என்று பாசிட்டுகள் கேட்கிறார்கள். சுருக்கமாக, பாசிஸமானது தனி மனிதனுடைய வாழ்க்கை இன்ன படிதான் இயங்குதல் வேண்டுமென்று நிர்ணயிக்கிறது. இது தனி மனிதனுடைய வளர்ச்சியையும், உரிமையையும் தகைகிறதென்று ஜனநாயகவாதிகள் சொல்கிறார்கள். ஆனால் பாசிட்டுகளோ, தனி மனிதனுடைய உரிமையை ஒழுங்குபடுத்தி விடுகிறோமென்று சொல்கிறார்கள். தனி மனிதர்களுடைய உரிமைகளை ஒழுங்குபடுத்தி விடுகிறோ மென்பதை அனுசரித்தே, பாசிஸமானது, வேறு அபிப்பிராயங்களுக்கு, மாறுபட்ட அரசியல் கொள்கைகளுக்கு இடங் கொடுப்பதில்லை. பாசிட்டுகள், அரசாங்க ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற நாடுகளில், வேறு அரசியல் கட்சிகளுக்கு இடங்கொடாமலிருப்பதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். பாசிஸத்தின் பிரகாரம், தனிப்பட்டவர்கள் முக்கியதர்கள் அல்ல; தனிப்பட்டவர் சிலர் அடங்கிய தாபனங்கள் அல்லது சங்கங்கள் தான் முக்கியம். அதாவது தனிப்பட்ட ஒரு பிரஜை, நேராக வாக்கு (சீட்டு)ரிமை பெற்று ராஜ்ய நிருவாகத்தில் கலந்து கொள்ள முடியாது. மேற்படி தாபனத்தின் அல்லது சங்கத்தின் அங்கத்தினன் என்ற முறையில்தான் அவன் அரசியலில் கலந்து கொள்ள முடியும். இந்த தாபனங்கள் தொழில்வாரியாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் முதலாளி தொழிலாளி வேற்றுமை கிடையாது. ஒரே தொழிலில் சம்பந்தப்பட்ட எல்லோரும் ஒரு தாபனமாகச் சேர்க்கப்படுகிறார்கள். இந்த தாபனந்தான் தொழிலை எப்படி நடத்த வேண்டும் என்பதையும், கூலி விகிதம், வேலை நேரம் முதலியவைகளையும் நிர்ணயிக்கிறது. இதுவே சட்டசபை முதலிய தாபனங்களுக்கு அங்கத்தினர்களை நியமிக்கிறது. அதாவது, ராஜ்யத்தின் வாழ்வு, இந்த தாபனங்களின் மூலமாக நடைபெறு கிறதென்று சுருக்கமாகச் சொல்லலாம். ராஜ்ய சக்தியானது, தேசமெங் கணும் பாய்வதற்கு இந்த தாபனங்கள் கால்வாய்கள் மாதிரி இருக்கின்றன என்று பாசிட்டுகள் கூறுகிறார்கள். இறுதியாக, பாசிஸமானது, பேச்சுத் தத்துவமல்ல; செயல் தத்துவம். அதில் சிந்தனையைவிடச் செயலுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாசிஸ தத்துவமான, சிந்தனாவுலகத்தில் மட்டும் சஞ்சரித்துக் கொண்டிருந்தால் போதாதென்றும், அது செயலாகப் பரிணமிக்க வேண்டுமென்றும், அப்பொழுது தான், பாசிஸம், அதன் லட்சணத்தோடு அமைந்திருப்பதாகச் சொல்ல முடியுமென்றும் பாசிட்டுகள் கூறுகிறார்கள். 17. சோஷலிஸம் சாதாரணமாகத் தமிழ் நாட்டுக் கிராமங்களில் சமுதாயப்பொது என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும். சமுதாயத் தோப்பு, சமுதாயக் கொல்லை என்றெல்லாம் அழைப்பார்கள். எந்த ஒரு தனி நபருக்கும் சொந்தமல்லாமல், எல்லா நபர்களுமடங்கிய சமுதாயத்திற்குச் சொந்தமாயிருப்பது எதுவோ, எதனுடைய உற்பத்தியைச் சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரும், குடும்ப வாரியாகவோ, தனிப்பட்டவர் வாரியாகவோ சரி சமானமாகப் பகிர்ந்து கொள்கின்றனரோ அதற்கு - அந்தப் பொதுச் சொத்துக்கு - சமுதாயப் பொது என்று பெயர். இது நமது நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இந்தச் சமுதாயப் பொதுவான சொத்து இருப்பதன் காரணமாக, தனிப்பட்டவருடைய சொத்துரிமை, பொருளுற் பத்தி உரிமை, அதை விற்கும் உரிமை முதலியன எவ்விதத்திலும் பாதகமடைவதில்லை. இந்தச் சமுதாயப் பொது என்பதுதான், விரிந்த பொருளில் நவீன பாஷையில் சோஷலிஸம்1 எனப்படுகிறது. ஒரு சமுதாயத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பொருள்கள் உற்பத்தியாவதற்கும், உற்பத்தியான அந்தப் பொருள்கள் எல்லோருக்கும் ஒழுங்காகக் கிடைப்பதற்கும் மூலகாரணமாயுள்ள நீர், நிலம், காடு, சுரங்கம், போக்குவரத்து முதலியன யாவும் சமுதாயப் பொதுச் சொத்தாக இருக்க வேண்டுமென்று சொல்வதுதான் சோஷலிஸம். எவ்வித பேத முமில்லாமல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய மாதிரி இருப்பதனால் அபேத வாதம் என்றும், சமுதாய வாழ்க்கை நடைபெறு வதற்கு மூலமாயுள்ள பொருள்கள் தனிப்பட்டவருடைய உடைமை யாயில்லாமல், பொதுவுடைமையாக இருப்பதனால் பொதுவுடைமை என்றும் இஃது அழைக்கப்படுகிறது. எனவே சோஷலிஸம் என்பது அடிப்படையில் ஒரு பொருளாதாரத் திட்டந்தான். இந்தத் திட்டத்தை நடைமுறையில் கொணர்வதற்காக இஃது அரசியல் கொள்கையாகக் கொள்ளப்பட்டது; இந்தத் திட்டத்தையும் கொள்கையையும் வலியுறுத்திக் கொண்டு செல்கிற முறையில் இஃதொரு தத்துவமாகவும் நாளாவட்டத்தில் வளர்ந்து விட்டது. ஆனால் பிற்காலத்தில் இதைப் பற்றிப் பல வியாக்கியானங்களும் பல கட்சிகளும் தோன்றி, ஒவ்வொரு சாராரும் தாங்கள் சொல்வதுதான் அசல் சோஷலிஸம் என்றும், தாங்கள்தான் உண்மையான சோஷலிட்டுகள் என்றும் சொல்லிக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்; அவரவருடைய திருஷ்டிக்குத் தோன்றியபடி புதுப்புது நூல்களும் எழுதி வெளி யிட்டார்கள். ஆக, சோஷலிஸம் என்றால் இன்னதுதான் என்று நிர்ணயமாக வரையறுத்துச் சொல்ல முடியாத அளவுக்கு இந்த சோஷலிஸம் வளர்ந்தும் ஆனால் சிதைந்தும் இப்பொழுது இருக் கிறது. ஓர் அறிஞன் கூறுவதுபோல் சோஷலிஸம் என்பது எல்லோர் தலைக்கும் பொருந்தக் கூடிய தொப்பி மாதிரி ஆகிவிட்டது. எனவே சோஷலிஸம் என்ற வார்த்தையைச் சொல்வது சுலபம்; ஆனால் அதைத் திட்டமாக விளக்குவது கடினம். உலக சரித்திரத்தில் அவ்வபோது பல அறிஞர்கள் தோன்றி, சமுதாயத்திலே காணப்பெறும் சீர்கேடுகள், பொருள் உள்ளார்க்கும் பொருள் இல்லார்க்கும் இடையில் காணப்பெறும் வேற்றுமைகள் முதலிய பலவற்றிற்குப் பரிகாரம் தேட வேண்டி, ஒரு சமுதாயம் இன்னபடிதான் இருக்க வேண்டும். இன்னபடிதான் இயங்க வேண்டும் என்று சில அபிப்பிராயங்களைத் தெரிவித்துவிட்டுப் போயினர். இவர்களில் பலர், ஒரு லட்சிய சமுதாயத்தைக் கற்பனையாகச் சிருஷ்டித்து விட்டும் போயிருக் கிறார்கள். இந்த லட்சிய சமுதாயத்தில் அல்லது கற்பனை ராஜ்யத்தில் சொத்தெல்லாம் பொதுச் சொத்தாக்கப்பட்டது. அநீதியே ஏற்படாமல் செய்யப்பட்டு விட்டது. இப்படிக் கற்பனையாகச் சிருஷ்டித்துவிட்டு இந்த அறிஞர்கள் மனச்சாந்தியடைந்தார்கள். சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முந்தி இருந்த பிளேட்டோ என்ற கிரேக்க அறிஞன் தனது அரசியல் என்ற நூலில் மேற்சொன்ன மாதிரியான ஒரு லட்சிய சமுதாயத்தையே சிருஷ்டித்துவிட்டுப்போனான். ஸர்தாம மூர்1 என்பவன், சமுதாயப் பொதுவான தாபனங்களடங்கிய ஒரு கற்பனை ராஜ்யத்தைத் தனது உட்டோப்பியா2 என்ற நூலில் வகுத்து விட்டுப் போனான். பூர்யே3 என்ற பிரெஞ்சு அறிஞன், சமுதாயத்தைப் பல குழுக்களாகப் பிரித்து அந்தந்தக் குழுவும் அதனதன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறமுறையில் ஒரு திட்டம் வகுத்துவிட்டுப் போனான். ஸர் ராபர்ட் ஓவன்4 என்ற ஓர் ஆங்கிலேய நெசவு மில் முதலாளி, பொதுவுடைமை முறையில், இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் சில தாபனங்களைப் பரீட்சார்த்தமாக நடத்திப் பார்த்தான். ஓவன் கோலிய இந்த தாபனங்கள் தான், பின்னர் வளர்ந்த கூட்டுறவு இயக்கத்துக்கும் தொழிலாளர் இயக்கத்துக்கும் வழிகாட்டிகளா யிருந்தன. இங்ஙனம் பல அறிஞர்கள் தோன்றி, பொதுமையை அடிப்படையாகக் கொண்ட லட்சிய சமுதாயத்தை நிர்மாணித்துவிட்டுப் போனார்களா யினும், இவர்களில் யாரும் - ஓவனைத் தவிர்த்து - இதனை எப்படி நடைமுறையில் கொணர்வது, அப்படிக் கொணர்ந்தால் அதனை நீடித்து நிலைக்கச் செய்வதெப்படி என்பவைகளைப் பற்றி ஒழுங்கான ஒரு திட்டம் வகுத்துக் கொடுத்தார்களில்லை. தங்களுடைய கருத்துக்களை வெளி யிட்ட மாத்திரத்தில் மானிட சமுதாயம் அவைகளை ஏற்று அனுஷ்டிக்கத் தொடங்கிவிடும் என்ற திருப்தியுடனிருந்து மறைந்து விட்டார்கள். கார்ல் மார்க்தான் முதன் முதலாக சோஷலிஸத்தை சாதிர ரீதியாக ஒரு தத்துவமாக, நடைமுறையில் கொணரக்கூடிய ஒரு திட்டமாக வகுத்தவன். இதனாலேயே இவன் சோஷலிஸத்தின் பிதா என்று அழைக்கப்படுகிறான். இவனுடைய திட்டம் சாதிரீய சோஷலிஸம்1 என்றும், மற்றவர்களுடையது உட்டோப்பியன் சோஷலிஸம்2 அதாவது கற்பனையிலே கண்டு மகிழக்கூடிய சோஷலிஸம் என்றும் முறையே அழைக்கப் பெறுகின்றன. சாதிரீய சோஷலிஸம் என்பதுவே பின்னர் மார்க்ஸியம் என்றும் கம்யூனிஸம்3 என்றும் பல பெயர்களை அடைந்தது. இதுவும் மார்க்ஸின் பிற்காலத்தில் பல கிளைகளாகவும் பல கட்சிகளாகவும் பிரிந்திருக் கின்றது. சோஷலிஸத்தின் அடிப்படையான கோட்பாடுகள் மூன்று. அவை முறையே, 1. உற்பத்தி சாதனங்களை, அதாவது எவை எவை, சமுதாயத் திற்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்வதற்குக் காரண மாயிருக்கின்றனவோ, உதாரணமாக நீர், நிலம், காடு, சுரங்கம், போக்கு வரத்து முதலியவற்றைத் தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமாக்காமல் பொதுவுடைமைகளாக்குதல்; இந்த நோக்கத்துடன் முக்கியமான தொழில் தாபனங்கள், போக்குவரவு சாதனங்கள் முதலியவற்றைப் பொதுஜன நிருவாகத்திற்குக் கொண்டு வருதல். 2. ஒரு சிலருக்கு லாபம் கிடைக்கும்படியாக பொருள்களை உற்பத்தி செய்யாமல் எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய விதமாகப் பொருள்களை உற்பத்தி செய்தல். 3. எந்தத் தொழில் நடைபெறுவதற்கும் சமூக சேவையே முக்கிய தூண்டுதலாக இருக்க வேண்டுமே தவிர ஒரு சிலருடைய நலனோ, அந்தச் சிலருடைய லாபமோ தூண்டுதலாயிருக்கக் கூடாது. இந்த மூன்று கோட்பாடுகளைப் பொறுத்தமட்டில் எல்லா சோஷலிட்டுகளும் ஒன்றுபட்டவர்களே. இவைகளை நடை முறையில் கொண்டு வருகிறபோதுதான் கட்சி வேற்றுமைகள் தோன்று கின்றன. சென்ற பத்தொன்பதாவது நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து சமுதாயமானது முதலாளித்துவ ஆதிக்கம் பெற்றே இயங்கி வருகிறது. இந்த முதலாளித்துவ சமுதாயத்தைப் பொதுவுடைமைச் சமுதாயமாக மாற்ற வேண்டுமானால் அது பிரசாரத்தின் மூலமாகவும் படிப்படியாகச் சீர்திருத்தங்கள் செய்து கொண்டு போவதன் மூலமாகவுமே முடியும், இப்படித்தான் செய்ய வேண்டும், ஒரு நிலையிலிருந்து மற்றோரு நிலைமைக்குச் சமுதாயம் மாற வேண்டுமானால் அதற்கு நீண்ட காலமே செல்லும், அதனைத் துரிதப்படுத்துவதனால் சமுதாயத்தில் பல சீர்கேடுகள் உண்டாகும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். இவர்களுடைய இந்தக் கோட்பாட்டுக்கு பரிணாமவாத சோஷலிஸம்1 என்று பெயர். புரட்சி செய்துதான் சமுதாயத்தை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு அழைத்துச் செல்ல முடியுமென்று இன்னொரு சாரார் கூறுகின்றனர். இவர்கள்தான் மார்க்ஸீயர்கள்; அதாவது மார்க்ஸைப் பின்பற்றுகிறவர்கள். இவர்களுடைய கோட்பாட்டுக்குப் புரட்சிவாத சோஷலிஸம்2 என்று பெயர். அதாவது முன்னவர் சமுதாயத்தைச் சீர்திருத்த வேண்டுமென்று கூறுகின்றனர். பின்னவர் சமுதாயத்தை மாற்றியமைக்க வேண்டுமென்று சொல்கின்றனர். முன்னவருடைய கோஷ்டிகள் பிரிட்டிஷ் தொழிற்கட்சி3 பேபியன் சொஸைட்டி4 முதலியன. பின்னவராகிய புரட்சிவாத சோஷலிட்டுகள்தான், அதாவது சாதிரீய சோஷலிட்டுகள் தான், லெனின் தலைமையில் ருஷ்யாவில் புரட்சி நடத்தி அரசாங்க ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொண்டவர்கள். இவர்களுக்குள்ளே கூட பின்னாடி கருத்து வேற்றுமை ஏற்பட்டு ட்ரோட்க்கி5 என்பவனுடைய தலைமையில் தனியாக ஒரு கட்சி பிரிந்து விட்டது. 18. கம்யூனிஸம் சோஷலிஸத்தின் வளர்ச்சியே கம்யூனிஸம்; அல்லது அதன் மறுபுறம் என்று சொல்லலாம். சோஷலிஸத்தைச் சாதிரீய திருஷ்டி கொண்டு, அதாவது கார்ல்மார்க் வகுத்த முறைகளைக் கொண்டு பார்க்கிற போது, அது கம்யூனிஸமாகப் புலப்படுகிறது. ஆனால் லெனின் தான், கம்யூனிஸம் என்ற பெயரைப் பிரபலப்படுத்தியவன்; தத்துவ அளவோடு இருந்த இதனை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தவன். இதனாலேயே இப்போது கம்யூனிஸத்தை ஒரு லட்சியமாகவும் அந்த லட்சியத்தை யடையும் சாதனமாகவும் வைத்து அறிஞர்கள் பேசுகிறார்கள். பொருள்கள் உற்பத்தியாவதற்கு மூலமாயுள்ள நீர், நிலம், காடு, சுரங்கம் முதலியவைகளையும், இவைகளிலிருந்து பொருள்களை உற்பத்தி செய்வதற்கு வேண்டிய சாதனங்களையும், அதாவது யந்திர வகைகள், மின்சார சக்தி முதலியவைகளையும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய மாதிரி செய்ய என்னென்ன சாதனங்கள் உண்டோ அவைகளையும், அதாவது ரெயில், கப்பல் முதலிய போக்குவரத்துச் சாதனங்களையும், சமுதாயத்திற்குப் பொதுவான சொத்துக்களாக்கிவிட்டால் இவைகளையுடையவரென்றும் இல்லாதவ ரென்றும் வேற்றுமையே இராது. இதனால் சொத்துடையவர்கள் சுரண்டுகிறார்களென்பதும், சொத்தில்லாதவர்கள் அதிகமான உழைப்பைக் கொடுத்துக் குறைவான கூலிபெற்று வாழ்க்கை நடத்துகிறார்களென்பதும் அற்றுப் போகின்றன. அதாவது வர்க்கப் பிரிவினைகளற்ற, ஏற்றத் தாழ்வுகளில்லாத சமுதாயம் அமைகிறது. இப்படிப்பட்ட சமுதாயத்தை அமைப்பதுதான் லட்சியம். இந்த லட்சியத்தை எப்படி அடைவது? சமுதாயத்தை இப்பொழு துள்ள நிலையிலிருந்து, அதாவது முதலாளித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலை செய்து, அவரவருடைய தேவைகளும் பூர்த்தியடைவதற்கு மூலாதாரமாயுள்ள பொதுவுடைமை நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமானால், அது பலாத்காரத்தினால்தான் முடியும்; ஒரு பெரிய புரட்சி ஏற்பட வேண்டும்; அப்படிப் புரட்சி ஏற்பட்டு, சமுதாயமானது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுகிற இடைக்காலத்தில், சமுதாயத்தின் அரசியல் விவகாரங்கள், அதாவது அரசாங்க நிருவாகம், தொழிலாளர்களின் ஆதிக்கத்துக்குட்பட்டே இருக்கும்; இந்தத் தொழி லாளர்கள் ஆதிக்கத்தின் மூலமாகத்தான் மேற்படி மாற்றத்தைச் செய்ய முடியும்; என்றெல்லாம் பல முறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இவை களின் தொகுப்பே சாதனம். இந்த லட்சியமும் சாதனமும் சேர்ந்தாற் போல் கம்யூனிஸம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. உலகத்தில் ஆதிகாலந் தொட்டு மானிட சமுதாயமானது எப்படி இயங்கிக் கொண்டு வருகிறதென்பதைப் பற்றியும், அப்படி இயங்கிக் கொண்டுவரும் சமுதாயத்தில், பொருள்களை உற்பத்தி செய்து அதன் மூலமாக ஒரு சிலர் பணக்காரர்களாகிக் கொண்டு போவதற்கும், பெரும் பாலோர் ஏழைகளாகிக் கொண்டு வருவதற்கும் அடிப்படையான காரணம் என்ன என்பதைப் பற்றியும், மார்க் ஆராய்ச்சி செய்து சில உண்மைகளை வெளியிட்டான். இவற்றுள் முக்கியமானவை இரண்டு : ஒன்று, சரித்திரத்தை லௌகிக திருஷ்டியில் பார்ப்பதென்பது; மற்றொன்று மிஞ்சிய மதிப்பு என்பது. இவையிரண்டும், கம்யூனிஸத்திற்கு மையமா யுள்ள கோட்பாடுகள். இவையென்ன வென்பதைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். மானிட சமுதாயத்தில் அவ்வப்பொழுது பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு தலைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வந்த பழக்க வழக்கங்கள் இன்னொரு தலைமுறையில் அடியோடு மறைந்து விடுகின்றன; அல்லது மாறுதல் அடைகின்றன. இதற்குக் காரணம் என்ன? மனித சக்திக்கு எட்டாத ஒரு காரணம் அல்ல; அதாவது ஏதோ தெய்வீக சக்தியென்று சொல்கிறார்களே அந்தத் தெய்விக சக்தி, மனிதனுடைய முயற்சிகளுக்கெல்லாம் பின்னேயிருந்து கொண்டு சமுதாயத்தை இயக்கிக் கொண்டு வருகிறது, மாறுதல்களை உண்டுபண்ணிக் கொண்டு வருகிறது என்பதல்ல. சமுதாயத்தின் பொருளுற்பத்தி முறையைப் பொறுத்தே அந்தச் சமுதாயத்தின் சகல விவகாரங்களும் நடைபெறு கின்றன என்று மார்க் ஆராய்ச்சி பூர்வமாக நிரூபித்துக் காட்டுகிறான். குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஒரு சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பொருள்கள் எந்த வகையில் உற்பத்தி செய்யப்படு கின்றனவோ, அந்த வகையிலேயே அந்தச் சமுதாயத்தின் அரசியல், மதம், சட்டம் முதலிய அனைத்தும் இருக்கின்றன; அந்தப் பொருளுற்பத்தி முறை மாறினால், இந்த அரசியல், மதம் முதலியன யாவும் மாறு பாடடைகின்றன என்பது மார்க்ஸின் சித்தாந்தம். சமுதாயம் இயங்கிக் கொண்டு வருவதற்கும், அதில் அவ்வப்பொழுது ஏற்படும் மாறுதல் களுக்கும் அடிப்படையாயுள்ளது அதன் பொருளாதார அமைப்பே. இதையே, சரித்திரத்தை லௌகிக திருஷ்டியில் பார்ப்பது1 என்று கூறுகின்றனர். சமுதாயமானது பல மாறுதல்களை யடைந்து கொண்டு வருகிற தல்லவா? அப்படி மாறுதலடைந்து கொண்டு வருகிற ஒரு நிலையில், தொழில் செய்து பிழைப்பதைத் தவிர வேறு வழியில்லாமலிருக்கிற ஒரு கூட்டத்தார் தோன்றுகிறார்கள். இவர்கள் பழைய காலத்து அடிமைகளைப் போன்றவர்களல்ல ராயினும், தாங்களே சுயமாகப் பொருள்களை உற்பத்தி செய்து வினியோகிக்கிற சக்தி இவர்களுக்கு இல்லை. அதாவது இவர்களுக்குப் பொருள்களை உற்பத்தி செய்யக்கூடிய சக்தி இருக்கிறது; ஆனால் அதற்குரிய சாதனங்கள் - கருவிகள் முதலாயின - இல்லை. எனவே இவர்கள் தங்களுடைய உழைப்புச் சக்தியை வேறொருவனுக்கு விற்றுத்தான் ஆக வேண்டியிருக்கிறது; அப்படி விற்பனை செய்துதான் பிழைப்பு நடத்த வேண்டியிருக்கிறது. பொருளுற்பத்திக்கான கருவிகள் முதலிய சாதனங்களையுடைய முதலாளி, மேற்படி உழைப்புச் சக்தியை விலை கொடுத்து வாங்குகிறான். இந்த விலைக்குத்தான் கூலியென்று சொல்கிறோம். அப்படி வாங்கித் தன்னிடத்திலேயுள்ள கருவிகள் மீது உபயோகப்படுத்துகிறான். இந்த உபயோகத்தினால் உண்டாகிற பொருள்களை, தன்னிடத்திலேயுள்ள கருவிகளின் கிரயம், தான் தொழிலாளர்களுக்குக் கொடுத்த கூலி ஆகிய இவைகளைக் காட்டிலும் அதிகமான விலைக்கு விற்கிறான். அதாவது, தொழிலாளர்களுடைய உழைப்புச் சக்தியானது, முதலாளிக்கு அதிகமான லாபத்தைச் சம்பாதித்துக் கொடுக்கிறது. தன்னிடத்திலேயுள்ள கருவிகளைக் கொண்டு மட்டும் இவன் - இந்த முதலாளி - பொருள்களை உற்பத்தி செய்ய முடியாதல்லவா? தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை அவைகளின் மீது பிரயோகியாவிட்டால், அந்தக் கருவிகள் பிரயோஜனப்பட மாட்டா; அவைகளுக்கு மதிப்பே கிடையாது. ஒரு பொருளின் உற்பத்திச் சக்தியைக் கொண்டுதானே அதற்கு மதிப்பு ஏற்படுகிறது. ஆகவே, இந்த மதிப்பு என்பது மனித உழைப்பின் அளவைப் பொறுத்தே இருக்கிறது. ஆனால் இந்த மனித உழைப்புக்குக் கிடைக்கிற கூலி குறைவாகவும், இஃது உற்பத்தி செய்து கொடுக்கிற பொருளின் விலை அதிகமாகவும் இருக்கிறது. இந்த வித்தியாசத்தை மிஞ்சிய மதிப்பு1 என்கிறான் மார்க். சுருக்கமாக லாபத்தையே குறிக்கிறான். இந்த லாபத்தைச் சிருஷ்டித்துக் கொடுத்தது எது? தொழிலாளர்களின் உழைப்புச் சக்தி. ஆனால் இந்த லாபத்தில் அவர்களுக்குப் பங்கு இல்லை. இந்தப் பங்கு இல்லாமற் செய்து அவர்களுடைய உழைப்பைக் குறைவான கூலி கொடுத்து உபயோகப்படுத்திக் கொள்கிறோமே அதற்குத்தான் சுரண்டுதல் என்று சொல்கிறோம். இந்த லாபஞ் சம்பாதிக்கிற முறை எதுவரையில் அங்கீகரிக்கப் படுகிறதோ அதுவரையில் சமுதாயத்தில் ஏழை - பணக்காரன் என்றும், உள்ளார் - இல்லார் என்றும், உயர்ந்தோர் - தாழ்ந்தோர் என்றும் பலவித மான வேற்றுமைகள் இருந்து கொண்டிருக்கும். இந்த வேற்றுமைகள் காரணமாகச் சச்சரவுகளும் இருந்து கொண்டிருக்கும். வேற்றுமைகளும் சச்சரவுகளும் நீங்க வேண்டுமானால் மேற்படி லாபஞ் சம்பாதிக்கிற தூண்டுதலே இல்லாமற் செய்துவிட வேண்டும்; அதாவது முதலாளித்துவம் மறைய வேண்டும். இந்த முதலாளித்துவமானது, தன்னிடத்தே கொண்டுள்ள முரண் பட்ட பல சக்திகளின் காரணமாக, தானே அழிந்து போகுமென்று மார்க் நிரூபித்துக் காட்டியிருக்கிறான். முதலாவது, முதலாளித்துவம் வளர வளர அதற்கு விரோதமாகத் தொழிலாளர் இயக்கமும் வளர்கிறது. இரண்டாவது, நவீன யந்திர சாதனங்களைக் கொண்டு முதலாளித்துவ மானது அதிகமான பொருள்களை உற்பத்தி செய்த போதிலும், அவற்றை வாங்கும் சக்தி ஜனங்களுக்குக் குறைந்து போகிறது. அதாவது பெரும்பாலோரிடத்தில் பணம் இல்லாமற் போய் ஒரு சிலரிடத்தில் மட்டும் அது சென்று குவிகிறது. இங்ஙனம் ஜனங்களுடைய வாங்குஞ் சக்தி குறைவதால், முதலாளித்துவமானது, தான் உற்பத்தி செய்த பொருள் களை எப்படியாவது விற்பனை செய்துவிட வேண்டுமென்று முயற்சி செய்கிறது; புதிய மார்க்கெட்டுகளைத் தேடுகிறது; புதிய நாடுகளைக் கைப்பற்றுகிறது; அவற்றின் மீது அரசியல் ஆதிக்கத்தைத் திணிக்கிறது. இதையே ஏகாதிபத்தியம் என்று சொல்கிறோம். முதலாளித் துவத்தின் வளர்ச்சிதான் ஏகாதிபத்தியம். மற்ற நாடுகளைக் கைப்பற்றுவது, அவைகளின் மீது ஆதிக்கஞ் செலுத்துவது என்கிற நிலை ஏற்படுகிறபோது, ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் சண்டை உண்டாகிறது. இது கடைசியில் உலக யுத்தத்தில் கொண்டு விடுகிறது. 1914-ஆம் வருஷத்து ஐரோப்பிய மகா யுத்தத்தை முதலாளித்துவ அழிவின் ஒரு பரிணாமமாகவே கம்யூனிட்டுகள் சொல்கிறார்கள். உலக யுத்தம் ஏற்பட்டு முதலாளித்துவமானது தன்னையே தான் அழித்துக் கொள்ளுகிற நிலைக்கு வந்து விடுகிறது. இதைத் துரிதப்படுத்துகிற வகையில், தொழிலாளர் சக்தியும் வளர்கிறது. தாங்கள் சுரண்டப்படுவதினின்று எப்படியாவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற நிலைக்குத் தொழிலாளர்கள் வருகிறார்கள். தங்களைச் சுரண்டுவோர் யாரோ அவர்களை அப்புறப்படுத்தினால்தான், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று தீர்மானிக்கிறார்கள். இதற்குப் பலாத்காரத்தின் துணையை நாடுகிறார்கள். புரட்சி நடைபெறு கிறது. முதலாளித்துவம் முடிகிறது. தொழிலாளர் ஆதிக்கம் தோன்று கிறது. இங்ஙனம் முதலாளித்துவத்தை அழித்து விடுவதோடு, தொழி லாளர்கள் சும்மா இருந்து விடுகிறார்களா? இல்லை; மறுபடியும் முதலாளித்துவம் தலையெடுப்பதற்கு வழியே இல்லாமற் செய்து விடுகிறார்கள். அதாவது முன்னே சொன்னபடி, பொருளுற்பத்திக்கான சாதனங்களை யெல்லாம் பொதுவுடைமையாக்கி விடுகிறார்கள்; பொருளுற்பத்தி முறையில் லாபம் சம்பாதிப்பது என்கிற தூண்டுதலே இல்லாமற் செய்து விடுகிறார்கள். இவைகளுக்குத் தகுந்தபடி அரசாங்கத்தையும் அமைத்துக் கொள்கிறார்கள். அதாவது தொழிலாளர் நலத்தை நாடுகிற, தொழிலாளர் ஆதிக்கத்தையுடைய அரசியல் அமைப்பு ஏற்படுகிறது. இந்தத் தொழிலாளர் ஆதிக்கத்தையுடைய அரசியல் அமைப்பை ஏற்படுத்துவது கம்யூனிட்டுகளின் லட்சியமல்ல. வர்க்கப் பிரிவினைகளே இல்லாத, அதாவது ஆள்வோர் - ஆளப்படுவோர் என்ற வேற்றுமை கூட இல்லாத ஒரு சமுதாயத்தை நிர்மாணம் செய்ய வேண்டுமென்பதே அவர்கள் லட்சியம். இந்த லட்சியத்தை அடைவதற்கான ஒரு சாதன மாகவே, தொழிலாளர் ஆதிக்கங் கொண்ட அரசாங்க அமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். புதுமையைச் சிருஷ்டிப்பதற்காகப் பழமையை அழிக்க வேண்டுமென்ற முறையிலேயே இந்த அரசாங்க அமைப்பு இருக்கிறது. இதனால் இஃது ஒரு சிறிது காலம் வரையிலாவது சர்வாதிகார ஆட்சியாகவே இருக்கும். அப்படித்தான் இருக்க முடியுமென்று மார்க், லெனின் முதலியவர்கள் சொல்லிப் போயிருக்கிறார்கள். சோவியத் ருஷ்யாவின் ஆட்சி முறை, ஆரம்பத்தில் இந்த மாதிரி தான் இருந்ததென்பதை நேயர்கள் அறிவார்கள். 19. அனார்க்கிஸம் அனார்க்கிஸம்1 என்ற சொல்லுக்கு அராஜகம் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். அப்படி இல்லை. அராஜகம் என்றால் சாதாரண அர்த்தத்தில், பலாத்காரம் நிறைந்த, அரசியல், பொருளாதார, சமுதாய சம்பந்தமான பலவற்றிலும் பலவகைக் குழப்பங்கள் மலிந்த ஒரு நிலைக்கே பெயராயிருக்கிறது. ஆனால் அனார்க்கிஸம் என்பது, அன்பினாலும், பரபர சம்மதத்தின் பேரிலும், அரசியல், பொருளாதார சமுதாய விவகாரங்கள் நடைபெறுகிற ஒரு நிலையைக் குறிப்பிடுகிறது அனார்க்கியா2 என்ற வார்த்தையினடியாகப் பிறந்தது அனார்க்கிஸம். அனார்க்கியா என்றால் ஆளுகையின்மை என்று பொருள். ஆளுகை யின்மை என்று கேட்டவுடன் கலகமும் குழப்பமுமே நமது எண்ணத்தின் முன்னணியில் வந்து நிற்கின்றன. இதனாலேயே இந்த வார்த்தையைக் கண்டு அஞ்சுகிறோம். ஆளுஞ் சக்தி இல்லாமலே, அந்த ஆளுஞ் சக்தி, பிரஜைகளிடமிருந்து என்னென்ன கடமைகளை எதிர்பார்க்கிறதோ அந்தக் கடமைகளை அந்தப் பிரஜைகள் சுயமாக, பரபர நம்பிக்கையின் பேரில் செய்து கொண்டு போவார்களானால், ஆளுஞ்சக்தி எதற்கு? தன் கடமையை உணர்ந்து ஒழுங்காக வேலை செய்து கொண்டு போகிற ஒரு தொழிலாளிக்கு, அவனை மேற்பார்வை செய்கிற மேதிரி எதற்கு? அந்தத் தொழிலாளி தனக்குத்தானே மேதிரி. அதைப்போல் ஒரு நாட்டின் பிரஜைகள், எப்பொழுது தங்களுக்குத் தாங்களே அரசர்கள் என்று உணரும் படியான நிலைக்கு வருகிறார்களோ அப்பொழுது எல்லோருக்கும் மேலான ஒர் அரசன் அல்லது அரச சக்தி தேவையில்லாமலே போகிறது. இந்த நிலைக்குத்தான் அனார்க்கிஸம் என்று பெயர். இதனை இந்திய அரசியல் நூலாரிற் சிலர் வைராஜ்யம் என்று சொல்வர். கம்யூனிஸத்தின் லட்சிய நிலை இதுவே. கம்யூனிஸத்தின் முதற்படியாக, தொழிலாளர்களின் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. இதன்மூலம், முதலாளித்துவம் முடிந்து விடுகிறது. அதாவது சுரண்டுவோர் என்ற ஒரு தனி வர்க்கத்தினர் இல்லாமலே போய்விடுகிறார்கள். பின்னர் ஜனங்களுடைய தேவையை அனுசரித்தும், லாபத்தைக் குறியாகக் கொள்ளாமலும் ஒரு திட்டப்படி பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இப்படி உற்பத்தி செய்யப்பட்டு வருவதன் காரணமாக சமுதாய சம்பந்தங்களும் அரசியல் விவகாரங் களும் அதிகமான பேருக்கு அதிகமான நன்மையை அளிக்கக்கூடிய மாதிரி ஒழுங்குபடுகின்றன. சட்டத்தின் தூண்டுதலோ, அரசாங்கத்தின் நிர்ப்பந்த மோ இல்லாமலே, ஜனங்கள் பிரஜா உரிமையை அனுபவிக்கிறார்கள்; பிரஜையின் கடமைகளைச் செய்கிறார்கள். இந்த நிலையில், அரசாங்கம், சட்டம், ஆள்வோர் முதலிய சொற்கள் அர்த்தமில்லாமல் போகின்றன. ஆளப்படுகிற அவசியம் இல்லாமற் போனால், ஆட்சி எதற்கு? ஆட்சி தேவையில்லாத இந்த நிலையைத்தான் ராஜ்யத்தின் ஒடுக்கம் என்று கம்யூனிட்டுகள் கூறுகிறார்கள். இந்த நிலை எப்பொழுது ஏற்படும்? ஒரு படியிலிருந்து மற்றொரு படிக்குச் சுலபமாகத் தாண்டிவிடுவதைப்போல் சுலபமாகவும் சீக்கிரத்திலும் இந்தப்படியை அடைய முடியாதென்பதை கம்யூனிட்டுகள் ஒப்புக்கொள்கிறார்கள். எப்பொழுது அடைய முடியும், அப்படி அடைந்தால் அந்தப்படி, அதாவது ஆட்சியற்ற நிலை எப்படி இருக்குமென்பவைகளைப் பற்றியும் திட்டமாகக் கம்யூனிடுகள் ஒன்றுங் கூறவில்லை. அப்படிக் கூறவும் முடியாததுதானே? பொதுவாக அவர்கள் என்ன சொல்கிறார் களென்றால், ஆள்வோரில்லாத இந்தச் சமுதாயத்தில், அவரவரும் அவரவர் சக்திக்குத் தகுந்தபடி உழைப்பர்; தேவைக்குத் தகுந்தபடி ஊதியம் பெறுவர். தொழிலாளிகளின் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிற காலத்தில், அதாவது கம்யூனிஸத்தின் முதற்படி நிலையில், சக்திக்குத் தகுந்தபடி உழைப்பு; உழைப்புக்குத் தகுந்த ஊதியம். இரண்டாவதுபடி நிலையில், அதாவது லட்சிய நிலையில், மேலே சொன்ன மாதிரி சக்திக்குத் தகுந்தபடி உழைப்பு, தேவைக்குத் தகுந்த ஊதியம். முன்னதில் உழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. பின்னதில் தேவை முக்கியத்துவம் பெறுகிறது. இந்த இரண்டாவது நிலையை எப்பொழுது அடைய முடியு மென்பதைப்பற்றி லெனின் பின்வருமாறு கூறுகிறான் :- சமுதாய வாழ்வின் அடிப்படையான தத்துவங்களை, ஜனங்கள், தாங்களாகவே இயல்பாக அனுஷ்டிக்க எப்பொழுது பழக்கப்படுத்திக் கொண்டு விடுகிறார் களோ, தங்களுடைய சக்திக்குத் தகுந்தபடி தாங்களாகவே உழைக்க முன் வந்து, அந்த உழைப்பின் விளைவாகச் சமுதாயத்திற்குத் தேவையான பொருள்கள் உற்பத்தியாகின்றனவோ அப்பொழுதுதான் இந்தப் புதிய சமுதாயம் அமையும். அப்படி அமைந்துவிட்ட பிறகு, சமுதாயத்தின் பிரதியோர் அங்கத்தினருக்கும் எவ்வளவு எவ்வளவு பொருள்கள் வினியோகிக்கப்பட வேண்டும் என்ற கணக்குப் போட்டுத் திட்டம் வகுக்க வேண்டிய அவசியமே இராது. அவரவரும் அவரவருக்குத் தேவையான பொருள்களைத் தாங்களாகவே தாராளமாக எடுத்துக் கொள்வார்கள். குரோபோட்கின்1 என்ற மற்றோர் அறிஞன், இந்த இரண்டாவது நிலையைப் பின்வருமாறு அழகாக வருணிக்கிறான்:- அனார்க்கிஸம் என்பது, வாழ்க்கையின் தத்துவத்தைப் பற்றியும், அந்த வாழ்க்கை எப்படி நடைமுறையில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றியும் கூறுகிறது. இதன்படி அரசாங்கமில்லாமலே சமுதாயம் அமைகிறது. இந்தச் சமுதாயத்தில், சட்டத்திற்கு இணங்கிப் போவதன் மூலமாகவோ, அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவதன் மூலமாகவோ ஒழுங்கு நிலைபெறுவ தில்லை. அதற்குப் பதிலாக, பொருள்களை உற்பத்தி செய்து எல்லோருக்கும் கிடைக்குமாறு செய்வதற்கும், ஒரு நாகரிக புருஷனுடைய பலவகைப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாக, பிரதேச வாரியாகவோ, தொழில் வாரியாகவோ அமைத்துக் கொண்டுள்ள பல பிரிவினரும், தாங்களே சுயமாகச் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் மூலமாகவே ஒழுங்கு நிலவுகிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், சுயநலமில்லாத, பற்றுவிட்ட, கர்மயோகிகள் நிறைந்த ஒரு சமுதாய அமைப்பையே இது குறிக்கிறது. அனார்க்கிஸ தத்துவத்தின் பிரசாரகர்கள் பலராயிருந்த போதிலும் முக்கியமாக ஓரிரண்டு பேரை மட்டும் குறிப்பிடலாம். மைக்கேல் பக்குனின்2 என்பவன் மார்க்ஸின் சமகாலத்தவன். அவனோடு பிணக்குக் கொண்டு, தனியாக ஒரு கட்சியை தாபித்தான். இன்னொருவன் மேலே சொல்லப்பெற்ற குரோபோட்கின் என்பவன். இவன் யந்திரங்களின் மூலமாகப் பெருவாரியான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதைக் கண்டித்து, பழைய மாதிரி சிறு சிறு கைத்தொழில்களே இருக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறான். லியோ டால்ட்டாயும்3 ஒருவித அனார்க்கிட்டே. சட்டத்தின் மூலமாகவல்ல, அன்பின் மூலமாகவே ஜனங்களை ஆட்சி புரிய வேண்டுமென்று இவன் கூறுகிறான். இந்த வகையில் மகாத்மாகாந்தியும் ஓர் அனார்க்கிட்டே. 20. காந்தீயம் காந்தீயமென்பது புதிய ஒரு தத்துவமல்ல. இந்தியாவினுடைய பழைய பண்பாடுகளின் தொகுப்புத்தான் இந்தப் பெயரைப் பெற்றிருக்கிறது. காந்தியடிகளின் வாயிலாக இந்தப் பண்பாடுகள், தற்காலத்திற்குகந்தவாறு விளக்கம் பெறுவதால், இவற்றின் தொகுப்பை காந்தீயம் என்ற பெயரால் அழைக்கிறார்கள். ஆகவே காந்தீயமென்பது பழமையின் புதுமை. அதாவது பழமையை அடிப்படையாகக் கொண்ட புதுமை; அப்படியே புதுமையைத் தழுவிக் கொண்டு செல்கிற பழமை. பழைய எண்ணத்தின் புதிய ஒலிதான் காந்தீயம். காந்தீயத்தின் அதிவாரமாகவும், மையமாகவும், லட்சியமாக வும் உள்ளவை இரண்டு. ஒன்று சத்தியம்; மற்றொன்று அஹிம்ஸை. இந்த இரண்டும் தனித்தனியாக இருக்கிறபோது தனித்தனிப் பெயர்களுடையன வாயிருக்கின்றன. இரண்டும் ஒன்று சேர்ந்து காட்சியளிக்கிறபோது, காந்தீயம் என்ற நவீனமான பெயரைப் பெறுகிறது. சத்தியத்தைப் பற்றியும் அஹிம்சையைப் பற்றியும் இதுகாறும் எத்தனையோ மகான்கள் எவ்வளவோ சொல்லிவிட்டும் எழுதி விட்டும் போயிருக்கிறார்கள். அவர்கள் சொன்னவைகளையும்எழுதியவை களையும் அநேகமாக அவர்கள் பெயரிட்டு அழைப்பதில்லை. அப்படி யிருக்க, சத்தியத்தைப் பற்றியும் அஹிம்ஸையைப் பற்றியும் காந்தியடிகள் சொல்லியும் எழுதியும் வருகின்ற1 கருத்துக்களின் தொகுப்பை மட்டும் அவர் பெயரால் ஏன் அழைக்க வேண்டும். சத்தியமும் அஹிம்ஸையும் சேர்ந்ததே காந்தீயமென்று ஏன் கொள்ள வேண்டும் என்று சிலர் கேட்கலாம். சத்தியத்தைப் பற்றியும் அஹிம்ஸையைப் பற்றியும் ஏற்கனவே விளக்கிக் கூறியுள்ள பெரியோர்களில் பலர், தாங்கள் தனியாக இருந்து அந்தச் சத்தியத்தையும் அஹிம்ஸையையும் பார்த்தார்கள்; தாம் பார்த்து அனுபவித்தவைகளை எழுதி வைத்தார்கள். ஆனால் காந்தி யடிகளோ, சத்தியமும் அஹிம்ஸையுமாகவே வாழ்கிறார். அவர் சத்தியத்தைப் பற்றியும் அஹிம்ஸையைப் பற்றியும் சொல் கின்றவையும் எழுதுகின்றவையும் அவர் வாழ்ந்து காட்டுகின்ற அனுபவத்தின் ஓசையும் வடிவமுமே. இதனாலேயே சத்தியமும் அஹிம்ஸையும் சேர்ந்த சேர்க்கையை அவர் பெயரிட்டழைக் கின்றனர். காந்தீயத்தின் பொதுவான சில லட்சணங்களை இங்கு வரிசைப்படுத்திக் கூற விரும்புகிறோம் : 1. காந்தீயத்திற்கு எண்ணிக்கையைக் காட்டிலும் தன்மைதான் முக்கியம். இதனாலேயே அது, மனிதர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், மனிதத் தன்மையை வளர்ப்பதையே முக்கிய நோக்க மாகக் கொண்டிருக்கிறது. 2. லட்சியம் எவ்வளவு தூயதாயிருக்க வேண்டுமோ அவ்வளவு தூயதாய் அதனை அடைகின்ற மார்க்கமும் இருக்க வேண்டும். 3. உரிமையைக் காட்டிலும் கடமையே பெரிது. கடமையினின்று பிறக்கிற உரிமைதான் அனுபவிக்கத் தகுந்தது; நீடித்து நிற்பது. 4. தேக உழைப்பை இழிவாகக் கருதக் கூடாது. அதற்கு மாறாக அதனைப் பெரிதும் போற்ற வேண்டும். தேக உழைப்பினால் பெறுகிற ஊதியமே நியாயமானது; அனுபவித்தற்குரியது. 5. வெறும் ஆரவாரம் கூடாது. அமைதியான தொண்டிலே தான் இனிமை உண்டு. 6. பிறப்பிலே மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்பட்டவனில்லை. உரிமைகளை அனுபவிக்கிற விஷயத்திலும் கடமைகளைச் செய்கிற விஷயத்திலும் எல்லோரும் ஒன்றுபட்டவர்களே. இதில் பால், வகுப்பு, சமூக, நிற வித்தியாசங்கள் எதுவும் பாராட்டப் படக்கூடாது. ஆனால் மேற்படி உரிமைகளை அனுபவிப்பதும், கடமைகளைச் செய்வதும் அவரவருடைய சுபாவம், செயலாற்றும் திறன், சூழ்நிலை இவைகளைப் பொறுத்திருக்கிறது. 7. கடவுள் ஒருவரே, அவரைப் பல பெயர்களிட்டு அழைக் கின்றனர் அறிஞர். கடவுளின் குழந்தைகளே மனிதர்கள். ஆதலின் அந்தக் கடவுளின் பெயரால் மனிதர்கள், ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டுதல், அந்தக் கடவுளுக்கே துரோகம் செய்வதாகும். 8. கடவுளினால் படைக்கப் பெற்ற சர்வமும் ஒரு குடும்பம். எனவே, பகுத்தறிவு படைத்த மனிதன், பிராணிவர்க்கம், தாவர வர்க்கம் ஆகிய சர்வத்தினிடமும் ஒரே மாதிரியான அன்பு செலுத்தி அவற்றின் நல்வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட வேண்டும். இனி, நாம் எடுத்தக் கொண்ட விஷயத்திற்குப் பொருத்தமாக, காந்தீயத்தின் அரசியல் அமிசத்தை மட்டும் சிறிது கவனிப்போம். காந்தீயமானது, அரசியலை, மனிதனுடைய அன்றாட வாழ்க்கையி னின்று தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. எங்ஙனம் மதமானது அன்றாட வாழ்க்கையோடு ஒட்டியதாயிருக்கிறதோ அங்ஙனமே அரசியலும் மனிதனுடைய அன்றாட வாழ்க்கையோடு ஒட்டியது. மனிதன், மனிதத் தன்மையில் வளர்வதோ தேய்வதோ, அவன் எந்த அரசியல் அமைப்பின் பிரஜையாயிருக்கிறானோ அந்த அரசியலைப் பொறுத்திருக்கிறது. அதே பிரகாரம் அரசியல், எந்த விகிதாசாரத்தில் ஒழுங்காக இயங்கிக் கொண்டிருக்கிறதோ அந்த விகிதாசாரத்தில், அந்த அரசியலில் வாழும் பிரதியொரு பிரஜையும் ஒழுங்கான வாழ்க்கையை நடத்துகிறான். ஆகவே, தனி மனிதனுடைய நலன் வேறு, அரசியலின் நலன் வேறு அல்ல. ஒழுங்கான வாழ்க்கையை, அதாவது சுதந்திர வாழ்க்கையை நடத்த விரும்பும் பிரதியொரு மனிதனும் அரசியலிலே சிரத்தை கொள்ள வேண்டும்; அதில் பங்கு கொள்ள வேண்டும். எந்த ஓர் அரசாங்கமும் பலாத்காரத்தை - ஹிம்ஸையை - அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகிறது. அந்த ஹிம்ஸையை எந்த விகிதாசாரம் அரசாங்க விவகாரங்களில் உபயோகப் படுத்தலாமென்பதில், வேண்டுமானால் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் பலாத்கார மென்னவோ வேண்டியதுதான் என்பதே அரசியல் பண்டிதர் பெரும் பாலோருடைய கருத்து. அதாவது அரசாங்கத்தினின்று பலாத்காரத்தைப் பிரிக்க முடியாது என்பதே இவர்கள் சித்தாந்தம். ஆனால் காந்தீயம் இதனை அடியோடு நிராகரிக்கிறது. பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கத்தினால் ஆளப்படுகின்ற பிரதியொரு பிரஜையும், அந்த அரசாங்கத்திற்கு, அச்சம் காரணமாகக் கீழ்ப்படிகிறானே தவிர, சுயேச்சையாக அல்ல. அச்சமானது, தன்னம்பிக்கையைக் குன்றச் செய்கிறது. தன்னுடைய நல்ல சுபாவங்களிடத்திலேயே அவன் நம்பிக்கை இழந்துவிடுகிறான். வெளிச் சக்தியின் உந்துதல் எதுவுமின்றி, தானே சுயமாக நல்லவனாயிருக்க முடியும். நல்வாழ்க்கையை நடத்த முடியும் என்ற நம்பிக்கையே அவனுக்குப் போய்விடுகிறது. அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அஞ்சி அவன் நல்லவனாயிருக்கிறானே தவிர, நல்லதுக்காக அவன் நல்லவனாயிருப்பதில்லை. இதனால் அவன் மனிதத் தன்மை நிறைந்த மனிதனாக வாழ முடியாமல் போய் விடுகிறது. மற்றும், அச்சமானது சந்தேகத்தை வளர்க்கிறது. அச்சுறுத்தி ஆள்கின்ற ஓர் அரசாங்கத்தை, அதன் பிரஜை, எப்பொழுதும் சந்தேகக் கண்களுடனேயே பார்க்கிறான். அரசாங்கமும் அவனைச் சந்தேகிக்கிறது. இந்தப் பரபர சந்தேகமானது, பகைமையாக முற்றி, அவ்வப்பொழுது பிரஜைகளின் சார்பில் புரட்சியாகவும், அரசாங்கத்தின் சார்பில் அடக்கு முறையாகவும் பரிணமிக்கிறது. இதனால் சமுதாயம் அமைதியற்றே இருக்கிறது. அரசாங்கத்திடமுள்ள பலாத்காரமானது, அதன் பிரஜை களிடத்திலும் பிரதிபலிக்குமல்லவா? இதனால் அவர்கள், தங்கள் சொந்த விவகாரங்களில்கூட பலாத்காரத்தைக் கையாண்டு காரியத்தைச் சாதித்துக் கொள்ள முனைகிறார்கள். வலியார், மெலியாரை அடக்கி யாள்வது சமுதாயத்தில் சகஜமான சம்பவமாகி விடுகிறது. அறிவிலோ, பொருளிலோ இப்படி ஏதோ ஒருவகையில் பலமுள்ள வர்கள், பலமில்லாதவர்களை, அவர்களுடைய நன்மையைக் கருதாமல், தங்கள் நன்மையை மட்டும் கருதி உபயோகிப்பதைச் சுரண்டல் என்கிறோம். இப்படிச் செய்வது - இந்தச் சுரண்டல் - பலாத்காரமாகும்; அதாவது ஹிம்ஸையின் பாற்படும். இந்த ஹிம்ஸை முறையை, ஹிம்ஸையை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கம் ஆதரிக்கிறது; இதற்கனுசரணையான சட்ட திட்டங்களை இயற்றிக் கொடுக்கிறது. இந்தச் சட்ட திட்டங்களின் ஆதரவு பெற்று, பலமுள்ளவர்கள் இன்னும் அதிக பலமில்லாதவர்களாகிறார்கள். சமுதாயத்தில் சாசுவதமான பிளவு உண்டாகிறது. சமுதாயத்தின் ஒற்றுமையிலே வாழ வேண்டிய அரசாங்கம் அதன் வேற்றுமையிலே வாழ வேண்டிய நிலைமைக்கு வந்து விடுகிறது. வேற்றுமையிலே வாழ்ந்து கொண்டிருக்கும் அரசாங்கம் என்றைக்காவது ஒரு நாள் நிச்சயம் ஆட்டங்கண்டு வீழ்ந்துபடும். இன்னும் சுரண்டுதல் என்பது தணியாத பசி மாதிரி. ஒரு நாட்டில் இந்தச் சுரண்டும் மனப்பான்மை ஆதரவு பெறுமேயானால், இந்த ஆதரவைக் கொண்டே இது மற்ற நாடுகளிலும் பரவுகிறது. ஒரு நாட்டிலுள்ள ஜனங்கள் ஒருவரையொருவர் சுரண்டுகிற நிலைமையானது வளர்ந்து, ஒரு நாட்டார் மற்றொரு நாட்டாரைச் சுரண்டுகிற நிலைமையாக முற்றுகிறது. இதன் விளைவாக ஒரு நாட்டார் மற்றொரு நாட்டார் மீது ஆதிக்கங் கொள்ளப் பார்க்கின்றனர். இது யுத்தமாக மூளுகிறது. தவிர, பலாத்காரம் ஒரு தொத்து நோய் மாதிரி. ஒரு நாட்டில் பலாத்கார சக்தி மிகுந்திருக்குமேயானால் அதனைக் கண்ட மற்ற நாடுகள், தற்காப்பு நிமித்தமோ, அந்த பலாத்கார சக்தியை அடக்கி ஒடுக்கி வெற்றி காண வேண்டுமென்ற ஆவலினாலோ, தங்கள் தங்களுடைய பலாத்கார சக்தியை அதிகரித்துக் கொள்கின்றன. இங்ஙனம் பலாத்கார அதிகரிப்புப் போட்டி ஏற்பட்டு கடைசியில் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளுகின்றன. இந்த மோதுதல்தான் உலக யுத்தம். இன்னோரன்ன காரணங்களால், பலாத்காரத்தை - ஹிம்ஸையை - அடிப்படையாகக் கொண்ட அரசாங்க முறையை காந்தீயம் அடியோடு நிராகரிக்கிறது; அஹிம்ஸையை அடிப்படையாகக் கொண்ட அரசாங்க முறை ஏற்படவேண்டுமென்று கோஷிக்கிறது. அஹிம்ஸையை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கத்தின்கீழ் சுரண்டுகிறவர்களும் சுரண்டப்படுகிறவர்களும் இருக்கமாட்டார்கள். இப்படிச் சொன்னதால், பணக்காரர்கள், ஏழைகள் இருக்கமாட்டார் களென்பது அர்த்தமில்லை. பணக்காரர்களும் ஏழைகளும் இருப்பார்கள். ஆனால் பணக்காரர்கள் சுரண்டுகிறவர்களாகவும் ஏழைகள் சுரண்டப்படு கிறவர்களாகவும் இருக்கமாட்டார்கள். மற்றும் பணக்காரர்கள், தங்களிட முள்ள பணத்தை, தங்கள் சொந்த நலத்திற்கு மட்டும் உபயோகப்படுத்த மாட்டார்கள்; பொதுநலத்திற்கும் உபயோகப்படுத்துவார்கள். இங்ஙனமே ஏழைகளும், பணக்காரர்களைத் தங்கள் எஜமானர்களாகவோ, தங்களைக் காட்டிலும் மேலானவர்களாகவோ கருதமாட்டார்கள்; தங்களுடைய சொத்துக்களின் தர்மகர்த்தர்களாகவே கருதுவார்கள். சுரண்டுதல் - சுரண்டப்படுதல் என்கிற நிலைமை இருக்கக் கூடாதென்பதற்குத்தான், காந்தீயமானது, குடிசைத் தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்தக் குடிசைத் தொழில்கள் நாடெங்கணும் பரவினால், அவரவரும் அவரவர் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுவது சாத்தியமாகிவிடும். பலர் உழைக்க, அந்தப் பலருடைய உழைப்பின் மீது ஒரு சிலர் ஊதியம் பெற்று, அந்த ஊதியம் பெறுவதன் காரணமாக, சமுதாயத்தில் மேலான அந்தது பெறுதல் என்கிற நிலைமை இல்லாமற் போய்விடும். உழைப்புக்கு ஒரு மகத்துவம் ஏற்படும். குடிசைத் தொழில்களின் மூலம் தேவைக்கதிகமான பொருள்கள் உற்பத்தி செய்யப்பட மாட்டா. இதனால், அதிகமான பொருள்கள் உற்பத்தியா கின்றனவே, இதனை விற்பனை செய்ய வேண்டுமே, இதற்காக வெளிநாடு களில் மார்க்கெட்டுகள் தேட வேண்டுமே என்கிற நிலைமை ஏற்படாது. அதாவது வியாபாரப் போட்டி இராது. இன்னும் குடிசைத் தொழில்களின் மூலம் எல்லோருக்கும் வேலை கிடைக்குமாதலால், எல்லோரும் வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுமாதலால், வேலையில்லாத் திண்டாட்டம் என்பது இராது. தேவைக்கதிகமான பொருள்களை உற்பத்தி செய்யாமல், தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதோடு எப்பொழுது ஒரு சமுதாயம் திருப்தியடைகிறதோ, அப்பொழுதே அந்தச் சமுதாயம் மற்றச் சமுதாயங் களோடு போட்டியிட முற்படாது. ஆகவே காந்தீய அரசாங்கத்திற்கு ஏகாதிபத்திய எண்ணம் இராது. அதாவது மற்ற நாடுகளை ஆக்கிரமித்து ஆள வேண்டுமென்ற எண்ணம் அதற்கு இராது. அப்படி ஆளவேண்டிய அவசியம் அதற்கு இல்லையல்லவா? காந்தீயம், குடிசைத் தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுக் கிறபடியால், அது யந்திரங்களை வெறுக்கிறது என்பது அர்த்தமில்லை. யந்திரங்களால் உண்டாகிற தீமைகளையே அது வெறுக்கிறது. யந்திர மானது, மனிதனுடைய அறிவையும் இதயத்தையும் சூனியமாக்கிவிடுகிற தென்றும், அவனுடைய சுயசக்தியை அடியோடு மழுங்கச் செய்து விடுகிறதென்றும் காந்தீயம் கருதுகிறது. இந்தியாவின் நாகரிகம் கிராம நாகரீகம் என்று சொல்வதுண்டு. அதாவது கிராம வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனைப் போற்றி வளர்த்தனர் நமது முன்னோர். ஒவ்வொரு கிராமமும் தனது வாழ்க்கைத் தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொண்டு வந்த தோடல்லாமல், தனது நிருவாகத்தையும் தானே நடத்திக்கொண்டு வந்தது. கிராம சபைகளுக்கு, அந்தக் கிராமத்தைப் பொறுத்தமட்டில் சகல அதிகாரங்களும் இருந்தன. இந்த முறை, அந்நியர் ஆட்சி ஏற்பட்ட பிறகு மாறிவிட்டது; கிராம வாழ்க்கை சீர்குலைந்து விட்டது. இங்ஙனம் சீர்குலைந்து போயிருக்கிற கிராம வாழ்க்கையைப் புனர் நிர்மாணம் செய்வதும், பழைய மாதிரி இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் காந்தீயத்தின் நோக்கமாகும். காந்தீய திட்டப்படி அரசாங்கம் எப்படி நடைபெறுமென்பதைக் கவனிப்போம். கிராமங்கள் பல சேர்ந்த தாலுகா, பல தாலுகாக்கள் சேர்ந்த ஜில்லா, பல ஜில்லாக்கள் சேர்ந்த மாகாணம், பல மாகாணங்கள் சேர்ந்த இந்தியா ஆகிய இந்த வரிசைக் கிரமத்தில், எப்படிப் பிரதியொரு கிராமமும் தனது நிருவாகத்தைத் தானே நடத்திக் கொண்டு போகுமோ அப்படியே தாலூகா, ஜில்லா, மாகாணம் ஆகிய இவைகளும் தங்கள் தங்கள் நிருவாகத்தைத் தாங்களே நடத்திக் கொண்டு போகும். இதனால் கிராம நிருவாகத்தைத் தாலுகாவும், தாலுகா நிருவாகத்தை ஜில்லாவும், ஜில்லா நிருவாகத்தை மாகாணமும், மாகாண நிருவாகத்தை அகில இந்தியாவும் முறையே கவனிக்க வேண்டிய பொறுப்பு குறையும். அவை அவையும் தங்களுக்கு மேற்பட்ட அதிகார தாபனத்தினுடைய தலையீடு அதிகமாக இராது என்று உணர்ந்து, சுதந்திரமாகத் தங்கள் காரியத்தைச் செய்து கொண்டு போகும். சுதந்திரமாக இருப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தால், யாருமே தங்கள் கடமைகளையும் பொறுப்புக்களையும் உணர்ந்து காரியங்களைச் செய்வார்களல்லவா? இந்த நிருவாக தாபனங்களின் அதிகாரம், கோபுரம் மாதிரி மேலே செல்லச் செல்லக் குறுகிவிடுகின்றது; அகில இந்தியாவுக்கும் பொதுவா யுள்ள மத்திய அரசாங்ககத்தின் அதிகாரம் சுருங்கிவிடுகிறது. குறைவான அதிகாரம் செலுத்தி ஆளுவதுதான் ஆளுகையின் லட்சணம். இந்த லட்சணத்தோடு கூடிய அரசாங்கமே இந்தியாவில் அமைய வேண்டு மென்பது காந்தீயத்தின் நோக்கம். நிருவாக அதிகாரங்களை மேலான வரிசையிலுள்ள மத்திய அரசாங்கத்தினிடம் மொத்தமாகத் தேக்கி வைத்துக் கொண்டு, பின்னர் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கீழ்வரிசையிலுள்ள மாகாண அரசாங்கம் முதலியவைகளுக்கு விநியோகம் செய்யாமல், கீழான வரிசை யிலுள்ள கிராம அரசாங்கத்திலிருந்து படிப்படியாக மேலேயுள்ள தாலுகா, ஜில்லா, மாகாண அரசாங்கங்களுக்குப் பகிர்ந்து கொடுத்துவிடுகிற முறையை இன்றைய சோவியத் அரசியல் அமைப்பில் காணலாம். இன்று உலகத்தின் பல நாடுகளிலும் நிலவுகின்ற ஜனநாயக முறையில் அநேக தீமைகள் காணப்படுகின்றன. இதை யாரும் மறுக்க முடியாது. இந்தத் தீமைகளொன்றும் இல்லாத பரிசுத்தமான, உண்மை யான ஜனநாயகம் நிலவவேண்டுமென்பதே காந்தீயத்தின் லட்சியம், இதற்காகவே அது, கோபுரம் மாதிரியான அரசியலமைப்பைக் கோருகிறது. பூலோகத்தில் கடவுள் ராஜ்யத்தை தாபிக்க வேண்டுமென்று காந்தீயம் கூறுகிறது. கடவுள் தன்மையாவது என்ன? மனிதத் தன்மையின் நிறைவுதான் கடவுள் தன்மை. இந்தத் தன்மையுடையவர்களை பிரஜைகளாகக் கொண்ட ஒரு ராஜ்யத்தில், அரசாங்கம், தன்னுடைய அதிகார பலத்தைக் கொண்டு ஆட்சி புரியாது; அன்பு பலத்தைக் கொண்டே பரிபாலனம் செய்யும். பிரஜைகள் தாங்களே தங்களை ஆண்டுகொள்கிற தன்மையுடையவர்களாயிருப்பார்களாதலினால் அவர்களைப் பிறர் ஆள வேண்டிய அவசியம் இராது. இனி, காந்தீயத்தை வேறொரு கோணத்திலிருந்து பார்ப்போம். காந்தீயத்தைப் போற்றிக் கொண்டிருக்கலாமே தவிர அதனைப் பின்பற்ற முடியாதென்பது ஒரு சிலருடைய கருத்து. இவர்களுடைய கருத்துப்படி காந்தீயத்தின் முக்கிய அமிசமாகிய அஹிம்ஸை, ஒரு மனிதனுடைய சொந்த வாழ்க்கையில் அனுஷ்டிக்கப்படுவதற்குரியதே தவிர, தேசத்தின் பொது வாழ்க்கையில் அனுஷ்டிக்கப்படுதற்குரியதன்று. அப்படி அனுஷ்டிப்பதாயிருந்தால் அந்தத் தேசம் ஒன்று, அடிமையாகவாவது போக வேண்டும்; அல்லது அழிந்தாவது போக வேண்டும். இதற்கு எந்த நாடும் சம்மதிக்காது. மற்றும், அடிமைக் குகையிலிருந்து வெளியேறி சுதந்திரக் கோயிலுக்குள் பிரவேசிக்க வேண்டுமென்று துடிதுடித்துக் கொண்டிருக்கிற ஒரு ஜாதியார், அஹிம்ஸை முறையை அனுசரித்துக் காரியங்களைச் செய்வார்களானால், அவர்கள், சாதுக்கள் என்று பெயரெடுக்கலாம். ஆனால், அடிமைக் குகையிலிருந்து வெளியேறவோ, சுதந்திரக் கோயிலுக்குள் நுழையவோ மாட்டார்கள். தனி மனிதனுடைய தர்மம் வேறே; சமுதாய மனிதனுடைய தர்மம் வேறே. அஹிம்ஸை யென்பது, தனி மனிதனுடைய தர்மமே தவிர சமுதாய மனிதனுடைய தர்மமல்ல. சமுதாய மனிதன், ஹிம்ஸையை ஹிம்ஸையினால் தான் எதிர்க்கவேண்டும். அப்படி எதிர்க்காவிட்டால் ஹிம்ஸைகள்தான் அதிகமாகும். அடுத்தது சத்தியம். சத்தியமும் தனி மனிதனுடைய தர்மந் தான். சமுதாய மனிதன் எப்பொழுதும் அதனைக் கடைப்பிடிக்க முடியாது. ராஜ்யத்தினுடைய நன்மையை முன்னிட்டுச் சில சந்தர்ப்பங்களில் அசத்தியமாகவும் நடக்க வேண்டியிருக்கும். அப்படி நடப்பது தவறாகாது. ஏனென்றால், அந்த இடத்தில் ராஜ்யத்தினுடைய நன்மைதான் முக்கியமே தவிர, சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பது முக்கியமல்ல. கிரேக்க அறிஞனாகிய பிளேட்டோ, தன்னுடைய அரசியல் என்ற நூலில், ராஜ்யத்தின் ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறவர்கள், அந்த ராஜ்யத்தின் க்ஷேமத்தை உத்தேசித்து, பொய்யை மருந்து மாதிரி உபயோகிக்க வேண்டுமென்று சொல்கிறான். மகாபாரதம் சாந்தி பர்வம், உயிருக்கு ஆபத்து ஏற்படுகிற காலத்திலும், மற்றவர்கள் சொத்துக்களைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறபோதும் பொய் சொல்லலாமென்று அனுமதிக்கிறது. பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின் என்பது திருக்குறள்.1 காந்தீயம், யந்திரத் தொழில்களை அடியோடு நிராகரிக்கவில்லை யென்றாலும், யந்திரத் தொழில்கள் பெருகுவதையும், அவைகளின் மூலமாக மனிதர்களின் அன்றாடத் தேவைகள் பூர்த்தியாவதையும் ஆதரிக்கவில்லை. மனிதர்கள் யந்திரங்களுக்கு அடிமையாகக் கூடா தென்பது வாதவம். ஆனால் அந்த யந்திரங்களை, மனிதர்கள் தங்களுக்கு அடிமைப்படுத்திக் கொண்டு, அவைகளைத் தங்களுடைய முன்னேற்றத் திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாமல்லவா? விஞ்ஞான அபிவிருத்தி ஏற்பட்டிருக்கிற இந்தக் காலத்தில் யந்திரத் தொழில்களுக்கு அதிகமான ஆதரவு கொடுத்து, ஒரு நாட்டின் பொருளுற்பத்தி சக்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும். சிறப்பாக இந்தியாவுக்கு இது மிகவும் அவசியம். இந்தச் சக்தியை இந்தியா அதிகரித்துக் கொள்ளாமல் பின் தங்குமானால், அஃது அரசியல் சுதந்திரத்தைப் பெற்றும் பயனில்லை; பொருளாதாரத்துறையில் அந்நியர்களுடைய தயவை எதிர்பார்க்க வேண்டியிருக்கும். இதற்குக் காந்தீயம் இடங் கொடுக்கிறது. காந்தீயம், பொதுவுடைமைக் கொள்கைக்கு, தான் விரோதியில்லை யென்று சொல்கிறது. ஆனால் அதே சமயத்தில் முதலாளித்துவத்தை எதிர்க்கவும் மறுக்கிறது. நிருவாக அதிகாரங்களை மேலான அரசாங்கத் தினிடம் தேக்கி வைத்துக் கொள்ளக் கூடாதென்று கூறுகிறது. ஆனால், சகல அதிகாரங்களையும் தங்களிடமே வைத்துக் கொண்டுள்ள சுதேச சமதானங்களை எதிர்க்க மறுக்கிறது.1 காந்தீய அரசாங்கத்தில் அஹிம்ஸா முறையிலேயே காரியங்கள் நடைபெறுமென்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த அரசாங்கத்தில் ஆயுதந் தரித்த போலீஸும் ராணுவமும் இருக்குமென்றும், ஆனால் அந்த ஆயுதங்களை உபயோகியாது என்றும் கூறப்படுகின்றன. இஃதெப்படி சாத்தியம்? ஆயுதம் வைத்திருப்பதே ஹிம்ஸைக்கு அடையாளமும் அஹிம்ஸைக்கு விரோதமும் ஆகுமல்லவா? காந்தீயத்தில் இவை போன்ற இன்னும் பல குறைபாடுகளை எடுத்துக் காட்டலாம். அப்படி இந்தக் குறைபாடுகளைக் களைந்து விட்டாலும், அஃது ஒருகால் இந்தியாவுக்கு மட்டும் பொருந்துகிற ஒரு முறையாயிருக்கலாமே தவிர அகில உலகத்திற்கும் பொருந்து கிற ஒரு முறையாயிருக்க முடியாது. இங்ஙனம் பலவிதமான ஆட்சேபங்கள் காந்தீயத்திற்கு விரோதமாகச் சொல்லப்படுகின்றன. காந்தீயத்தைப் பற்றி நாம் ஆராய்ச்சி செய்கிறபோது, காந்தீயம் என்ற அந்தப் பெயர் தோன்றுவதற்குக் காரணமான காந்தி என்ற தனி மனிதரை விட்டுவிட வேண்டும். காந்தி வேறு; காந்தீயம் வேறு. காந்தியைக் காட்டிலும் காந்தீயம் பெரிது. காந்தீயத்தை வெறும் அரசியல் திருஷ்டி கொண்டு மட்டும் பார்க்க முடியாது; பார்க்கவும் கூடாது. அப்படிப் பார்த்தால் காந்தீயத்தின் ஒரு பகுதி மட்டுந்தான் தெரியும். அந்த ஒரு பகுதிக் காட்சியில், அரசியலினால் சாதாரணமாக, அதாவது உலக ரீதியாக அடையக்கூடிய பிரயோஜனங்கள் எதுவும் இராது. அதில் - அந்த ஒரு பகுதிக் காட்சியில் - சாசுவதமாயுள்ள சக்திகள் அடங்கிக் கிடப்பதையும், இன்றிருந்து நாளை அழியக்கூடிய சக்திகள் கொக்கரித்துக் கொண்டிருப்பதையும் காணலாம். இப்படி ஒரு பகுதிக் காட்சியைப் பார்த்தலினால், காந்தீயத்தைப் பற்றியே தவறான எண்ணம் ஏற்பட்டுவிடும். காந்தீயம் அநாகரிகத்தின் அடையாளம், அது நம்மைப் பின்னுக்கு இழுத்துச் செல்கிறதே தவிர முன்னுக்கு அழைத்துச் செல்லவில்லையென்று சிலர் ஏன் கூறுகிறார்களென்றால், காந்தீயத்தை அரசியல் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்ப்பதனாலுண்டாகிற தோஷந்தான். மற்றும், காந்தீயம் சாசுவதமாயுள்ளது; அரசியலோ அடிக்கடி மாறுவது. அப்படி மாறுவதில்தான் அதற்குப் பெருமை இருக்கிறதென்று சொன்னாலும், அந்தப் பெருமை காரணமாக காந்தீயத்தில், மாறுந் தன்மையாகிற அரசியல் ஓர் அமிசமாக மட்டுமே இருக்கிறது; ஆகவே காந்தீயமே அரசியலல்ல. அப்படியானால் காந்தீயமென்பது என்ன என்ற கேள்வி பிறக்கிறது. அது, பல நதிகள் வந்தடைகின்ற ஒரு சமுத்திரம்; தனி மனிதனையும் சமுதாய மனிதனையும் பிணைத்து வைக்கும் சங்கிலி; அற வாழ்க்கையையும் அரசியல் வாழ்க்கையையும் ஒன்று சேர்க்கும் பாலம்; தேசீயத்தை அதிவாரமாகக் கொண்ட சர்வ தேசீயக் கட்டடம்; உலகத்திலே ஆன்ம பலந்தான் பெரிது என்று கோஷமிடும் சங்கு. காந்தீயம், சொல்லழகுடையதல்ல; சொல்வன்மை யுடையது. அஃது அறிவின் வெளிச்சம் மட்டுமல்ல; இருதயத்தின் ஒலியுங்கூட.  ஐக்கியதேசதாபனம் வாசகர்களுக்கு (முதற்பதிப்பு) ஒரு தாபனத்தின் வளர்ச்சி. அதன் அங்கத்தினர்கள், அந்த தாபன விஷயத்தில் காட்டும் சிரத்தையைப் பொறுத்திருக்கிறது. ஐக்கிய தேச தாபனத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்துள்ள எல்லா நாடுகளிலும், பள்ளிக் கூடத்துப் பிள்ளைகளுக்கு, இந்த தாபனத்தின் அமைப்பு, நடைமுறை முதலியவைகளைப் பற்றிப் போதிக்க வேண்டுமென்றும், இதனிடத்தில் ஜனங்களை அதிக சிரத்தை கொள்ளுமாறு செய்ய வேண்டுமென்றும், மேற்படி தாபனத்தின் முதல் பொதுக்காரியதரிசியாகிய டிரிக்வேலை (Trygve Lie) ஒரு சுற்றறிக்கை விடுத்திருக்கிறார். ஏன் இந்த ஐக்கிய தேச தாபன விஷயத்தில் ஜனங்கள் சிரத்தை காட்ட வேண்டுமென்று கேட்டால், உலகத்தில் சாசுவதமான சமாதானம் நிலவுவதற்கு ஒரு கருவியாக இது நிர்மாணம் செய்யப்பட்டிருக்கிற காரணத்தினால்தான். இந்தக் கருவியைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இந்தச் சிறுநூல், தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில் ஒரு சிறு கருவியாயிருக்குமென்று நம்புகிறேன். ஒரு தாபனத்தை நிர்மாணம் செய்து விடுவதனால் மட்டும் அதன் மூலமாக நன்மை ஏற்பட்டு விடாது. அது செய்கிற வேலையைப் பொறுத்திருக்கிறது அதனாலுண்டாகக் கூடிய நன்மை. ஐக்கிய தேச தாபனத்தினால் உலகத்திற்கு என்ன நன்மை உண்டாகப்போகிறதென்பது பொறுத்துப் பார்க்கவேண்டிய விஷயம். ஆனால் முதல் உலக மகா யுத்தத்திற்குப் பின்னர்த் தோன்றிய சர்வதேச சங்கத்தைப் போல், இரண்டாவது உலக மகா யுத்தத்திற்குப் பின்னர்த் தோன்றி யிருக்கிற இந்த ஐக்கிய தேச தாபனம் ஆகிவிடக் கூடாதென்பதே எல்லோருடைய பிரார்த்தனையும். ஐக்கிய தேச தாபனத்தின் வரலாறு பின்னல் போன்றது. விஷயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாயிருக்கின்றன. முன்னதை விளக்கப் பின்னதையும், பின்னதை விளக்க முன்னதையும் முன்னும் பின்னுமாகத் திருப்பித் திருப்பிச் சொல்லவேண்டியிருக்கிறது. ஆதலின் இதனைப் படிக்கிறபோது வாசகர்கள் சிறிது பொறுமை காட்ட வேண்டுகிறேன். ஐக்கிய தேச தாபனத்தின் சார்பில் நடைபெறும் பல்வகைக் கூட்டங் களின் நடவடிக்கைகளைத் திரட்டித் தருவது இந்த நூலின் நோக்கமன்று. அந்த நடவடிக்கைகளைச் சுலபமாகப் புரிந்து கொள்வதற்கு ஒரு துணையாக இருக்க வேண்டுமென்பதே நோக்கம். அந்தக் கண் கொண்டு இந்த நூலைப் பார்க்க வேண்டுமென்று வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். சுதந்திர இந்தியா, ஐக்கிய தேச தாபனத்திற்கு நல்வழி காட்டுவதாகுக! வாசகர்களுக்கு (இரண்டாம் பதிப்பு) இந்த இரண்டாம் பதிப்பில் ஐக்கிய தேச தாபனத்தைப் பற்றி நாளது வரையுள்ள சில முக்கியமான தகவல்களை, உரிய இடங்களில் சேர்த்திருக்கிறேன். இதனால் முதற்பதிப்பிலுள்ள சிற்சில பகுதிகளை நீக்கவேண்டியது அவசியமாயிற்று. இங்ஙனம் நீக்கியதால், எந்த நோக்கோடு இந்த நூல் எழுதப் பெற்றதோ அந்த நோக்கு, சிறிதும் நிலை பிறழவில்லை யென்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நூலில் ஆங்காங்கு ஐம்பெரும் வல்லரசுகளில் ஒன்றாக சீனா குறிக்கப்பட்டிருப்பதை அன்பர்கள் காணலாம். இந்த இரண்டாம் பதிப்பைப் பொறுத்த மட்டில், பீகிங்கைத் தலைநகராகக் கொண்டு நடைபெறும் அரசாங்கத்தின் ஆதிக்கத்துக்குட்பட்ட சீனாவை இது குறிக்காது; போர் மோஸா தீவிலிருந்து கொண்டு சியாங்கை ஷேக் தலைமையில் நடைபெறும் அரசாங்கத்தின் நிருவாகத்திற்குட்பட்ட சீனாவையே இது குறிக்கும். இதனை தேசீய சீனாவென்று அழைப்பர். உண்மையில் இத்தகைய சீனா இல்லையென்றே சொல்லலாம். இதனாலேயே இந்நூலின் முதலாவது அனுபந்தத்தில், அங்கத்தினராயுள்ள நாடு களின் வரிசையில் தேசீய சீனா என்று சொல்லி, அதன் விதீரணம், ஜனத்தொகை இரண்டையும் காட்டாமல் விட்டிருக்கிறேன். ஐக்கிய தேச தாபனம் தோன்றுகிற காலத்தில், பீகிங் அரசாங்கம் ஏற்படவில்லை; சியாங்கை ஷேக் அரசாங்கமே சர்வ சீனாவுக்குமாக நின்று நிலவி வந்தது. இந்த அரசாங்கத்தின் ஆதிக்கத்துக்குட்பட்டிருந்த சீனாவே ஐம்பெரும் வல்லரசுகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் நிலைமை மாறிவிட்டது. ஆயினும், சியாங்கை ஷேக் அரசாங்கத்தின் பிரதிநிதிகளே ஐக்கிய தேச தாபனத்தில் சீனாவின் பிரதிநிதிகளாக இன்னமும் இருந்து வருகிறார்கள். இது பலமாக ஆட்சேபிக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டாம் பதிப்பில் நான் சேர்க்க வேண்டுமென்று விரும்பிய சில தகவல்களை, என் வேண்டுகோளுக்கிணங்க, டெல்லியிலுள்ள ஐக்கிய தேச தாபனத்தின் செய்தி நிலையத்தினர் அனுப்பி உதவினர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தியாகராய நகர் சென்னை 15-9-53 வாசகர்களுக்கு (மூன்றாம் பதிப்பு) ஐக்கிய தேச தாபனம் என்ற இந்த நூல், என்றும் நிலைத் திருக்கக்கூடிய நூலாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் முந்திய பதிப்புக்களில் இடம் பெறச் செய்திருந்த சில புள்ளி விவரங்களையும் ஓரிரண்டு தகவல்களையும் இந்த மூன்றாம் பதிப்பில் நீக்கியிருக் கிறேன். அந்தப் புள்ளி விவரங்களும் தகவல்களும் அடிக்கடி மாற்ற மடையக் கூடியவை. அப்படி மாற்ற மடையக் கூடியவைகளை மட்டுமே நீக்கியிருக்கிறேன். மற்றபடி, இந்தப் பதிப்பு, முந்திய பதிப்புக்களைப் போலவே எல்லா அமிசங்களிலும் அமைந்திருக்கிறதென்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தியாகராய நகர் சென்னை - 17 1-4-60 1. தோன்றிய விதம் உலகத்திலுள்ள பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் ஒரு கூட்டமாகக் கூடிப் பேசுவது போலல்லவோ இருக்கிறது இங்கே? ஆம்! அப்படித்தான். இங்குக் கூடியிருக்கிறவர்கள் தனிப்பட்ட மனிதர்கள் அல்லர். இவர்கள், அந்தந்த நாட்டின் பாஷை, கலாசாரம், நாகரிகம் இவைகளின் சிறப்புக்குச் சாட்சிகளாயிருக்கிறவர்கள்; அந்தந்த நாட்டில் ஜன விருப்பத்தைத் தழுவி நடைபெறும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள்: அதாவது சுதந்திர நாடுகளின் பிரதிநிதிகள். இவர்கள் மூலம், உலகத்து மொத்த ஜனங்களில் நூற்றுக்குச் சுமார் எண்பத்தைந்து பேர் இந்தக் கூட்டத்தில் பிரசன்னமா யிருக்கிறார்கள். இத்தனை ஜனங்களினுடைய சமாதான விருப்பத்தைப் பிரதிபலித்துக் காட்டுவதுபோல இந்தக் கூட்டம் இருக்கிறது. ஐக்கிய தேச தாபனத்தைப்பற்றி அடிக்கடி நீங்கள் கேள்விப் படுகிறீர்களல்லவா, அதனுடைய பொதுச்சபையின் கூட்டந்தான் இது. பிரதி வருஷமும் செப்டம்பர் மாதம் இரண்டாந் தேதிக்குப் பிறகு வருகிற முதல் செவ்வாய்க்கிழமையன்று இந்தப் பொதுச்சபை கூடவேண்டு மென்பது நியதி. இந்த நியதிப்படியே இங்குக் கூடியிருக்கிறது. அப்படியானால் இந்தச் சபை ஏன் இங்குக் கூடியிருக்கிறது, இதன் அமைப்பு முறைகளென்ன, இஃது எப்படித் தோன்றியது, இவைகளைப் பற்றிய பூரா விவரங்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள் என்று வாசகர்களே, நீங்கள் கேட்கிறீர்களல்லவா? வாதவம்; நீங்கள் கேட்பது நியாயந்தான்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமே. இரண்டாவது உலக மகா யுத்தத்தில் (1939-45) இரண்டு பிரிவினர் எதிரெதிராக இருந்து போர் புரிந்தனரல்லவா, அவர்களில் ஒரு பிரிவினர் நேச நாட்டினர் அல்லது ஐக்கிய தேசத்தினர்; மற்றொரு பிரிவினர் அச்சு நாட்டினர். ஐக்கிய தேசத்தினர் யார்? அச்சு நாட்டினர் யார்? இத்தலிக்கும் எத்தியோப்பியாவுக்கும் 1935-ஆம் வருஷம் அக்ட்டோபர் மாதத்திலிருந்து 1936-ஆம் வருஷம் மே மாதம் வரை யுத்தம் நடைபெற்ற காலத்தில் இத்தலிக்குப் பெரிய ஆதரவாயிருந்தது ஜெர்மனி. ஏனென்றால் இத்தலியின் ஆதரவு அப்பொழுது ஜெர்மனிக்குத் தேவையாயிருந்தது. இங்ஙனம் பரபர நலனை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட அரசியல் உறவை ரோம் - பெர்லின் அச்சு1 என்று வழங்குவர். இது முதற்கொண்டு ஒரே மாதிரியான கொள்கையுடைய பல நாடுகள் ஒன்று சேர விரும்பினால், அதற்கு அனுகூலமாயிருக்க வேண்டுமென்பதற்காக, இரண்டு நாடுகளோ அதற்கு மேற்பட்ட நாடுகளோ மையமா யிருந்துகொண்டு, அதாவது அச்சுப்போல் இருந்து கொண்டு, தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்கிற உறவு முறைக்கு அச்சு உறவு என்று வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வழக்கு நீடித்திருக்குமா என்பது சந்தேகம். ஏனென்றால் ரோம்-பெர்லின் அச்சு என்பது, எவ்வளவு சமீப காலத்திலே ஏற்பட்டதோ அவ்வளவு சீக்கிரத்திலேயே முறிந்து போய்விட்டதல்லவா? ஆனால் அது வேறு விஷயம். 1936-ஆம் வருஷம் முளைத்த இந்த ரோம்-பெர்லின் அச்சானது, அடுத்த மூன்று நான்கு வருஷங்களில், முஸோலினியும் ஹிட்லரும் சேர்ந்து செய்த உருட்டல் மிரட்டல்களினால் கொஞ்சம் பிரபலமடைந்தது. கொஞ்சமென்ன, உலக வல்லரசுகளில் அப்பொழுது முதல் தானம் வகித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கூட மருண்டுவிடக்கூடிய அளவுக்குப் பிரபலமடைந்தது. ஆனால் இந்தப் பிரபலம், மின்மினிப் பூச்சி காட்டும் பிரகாசம் என்பதை அப்பொழுது யாராலும் ஊகிக்கக்கூட முடியவில்லை. இங்ஙனம் ரோம்-பெர்லின் என்று இரண்டு கூறாக வளர்ந்த இந்த அச்சானது, 1940-ஆம் வருஷம் ஜப்பானுடைய சேர்க்கை காரணமாக ரோம்-பெர்லின்-டோக்கியோ அச்சு என்ற முக்கோண அச்சாக விரிந்தது. 1940-ஆம்வருஷம் செப்ட்டம்பர் மாதம் இருபத்தேழாந்தேதி இந்த மூன்று நாடுகளும்- இத்தலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும்- ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன. இதற்கு முப்பிரிவு ஒப்பந்தம்2 என்று பெயர். ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், அங்கே வசிக்கிற ஜனங்களின் நன்மையை உத்தேசித்து, புதியதோர் ஒழுங்கை தாபிக்க வேண்டு மென்றும், இந்த விஷயத்தில் இந்த மூன்று வல்லரசுகளும் ஒத்துழைக்க வேண்டுமென்றும், இதற்கு - இந்தப் புதிய ஒழுங்கை தாபிப்பதற்கு - ஐரோப்பாவைப் பொறுத்த மட்டில் இத்தலியும் ஜெர்மனியும் சேர்ந்து தலைமை வகிப்பதென்றும், ஆசியாவைப் பொறுத்த மட்டில் ஜப்பான் தலைமை வகிப்பதென்றும் இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் கூறின. இதற்கு அனுபந்தம் போல் 1943-ஆம் வருஷம் ஜனவரி மாதம் பத்தொன்பதாந்தேதி மேற்படி மூன்று வல்லரசுகளும் பொருளாதார விஷயங்களிலும் ஒத்துழைக்க வேண்டுமென்று ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன. இஃதொரு புறமிருக்கட்டும். மேலே முப்பிரிவு ஒப்பந்தம் என்று சொன்னோமல்லவா, இது கையெழுத்தான சில மாதங்களுக்குள், ஹங்கேரி, ருமேனியா, லோவேகியா, பல்கேரியா, குரோஷியா ஆகிய நாடுகளும் இதற்குத் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தன. அதாவது ரோம்-பெர்லின்-டோக்கியோ அச்சுக்குத் தாங்கள் துணைக்கருவிகளாயிருக்க ஒப்புக்கொண்டன. இதற்குப் பிறகு இவையாவும் பொதுவாக அச்சு நாடுகள்1 என்று அழைக்கப் பெற்றன. இந்த அச்சு நாடுகளுக்கு விரோதமாக உலகத்திலுள்ள பெரும் பாலான நாடுகள் ஒன்று சேர்ந்து கொண்டன. இவை களைத்தான் ஒரு தொகுப்பாக நேச நாடுகள் அல்லது ஐக்கிய தேசங்கள் என்று2 அழைக்கிறோம். இப்படி அழைப்பதனால், இவை யாவும் ஒரே மாதிரியான அரசியல், சமுதாய, பொருளாதார அமைப்புக்களுடையவை என்பது அர்த்தமல்ல; ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டவைதான். ஆனால் மேலே சொல்லப்பெற்ற முப்பிரிவு ஒப்பந்தத்திற்கு யாரார் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்திருக்கிறார்களோ அவர்களனைவரையும் எதிர்த்துப் போராடுவதற்காகத் தங்கள் சக்தியனைத்தையும் ஒன்று திரட்டி உபயோகிக்கிற விஷயத்தில், அந்த ஒரு காரியத்திற்காக ஐக்கியப் பட்டிருக்கிற நாட்டினர் என்பதே அர்த்தம். இந்தக் காரியம் பூர்த்தியானதும், இவர்கள், தங்கள் ஐக்கியத்தைக் கலைத்துவிட்டிருக்கலாம். ஆனால் இவர்கள் அப்படிச் செய்யவில்லை. யுத்த காலத்திலே, யுத்த காரணத்திற்காக ஏற்பட்ட இந்த ஐக்கியத்தை, சமாதான காலத்திலே, சமாதானத்திற்காக, உலகத்தில் நிரந்தர அமைதி ஏற்பட வேண்டு மென்பதற்காக, ஒரு தாபனமாக உருவகப்படுத்தி உபயோகிக்கத் தீர்மானித்தனர். இதுதான் ஐக்கிய தேச தாபனம்.3 இந்த தாபனத்தில் எந்தெந்த நாடுகள் அங்கத்தினர்களாகச் சேர்ந்திருக்கின்றன என்ற விவரங்களை முதலாவது அனுபந்தத்தில் பார்க்க. பிரிவு அல்லது கட்சியென்றிருந்தால் அதில் சில முக்கிய தர்கள் இருப்பார்களல்லவா, அதுபோல் அச்சு நாடுகளிலும் நேச நாடுகளிலும் சில முக்கிய நாடுகள் இருந்தன. இவற்றைத்தான் வல்லரசுகள்4 என்று அழைப்பது. இவை சொன்னபடிதான் மற்ற நாடுகள் கேட்கும். அச்சு நாடுகளில் இத்தலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய மூன்றும் வல்லரசுகளாகக் கருதப்பட்டன. அப்படியே நேச நாடுகளில் பிரிட்டன், அமெரிக்கா, ருஷ்யா ஆகிய மூன்றும் வல்லரசுகளாகக் கருதப்பட்டன. பின்னர் சீனாவும் பிரான்சும் இந்த வல்லரசுக் கோஷ்டியில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. யுத்தம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், யுத்தத்தை எப்படி இன்னும் திறம்பட நடத்துவது, எதிரிகளை முறியடிப்பதற்கு என்னென்ன முறைகளைக் கையாள்வது, அப்படி முறியடித்து எதிரிகளைச் சரணடையுமாறு செய்துவிட்ட பிறகு அவர்களை என்னென்ன நிபந்தனைகளுக்கு உட்படுத்துவது, இனியும் இந்த மாதிரி யுத்தம் நிகழாதபடி தடுப்பதற்கும் உலகத்தில் சாசுவதமான சமாதானம் ஏற்படுவதற்கும் எத்தகைய திட்டங்களை வகுப்பது, இந்த மாதிரியான விஷயங்களைப்பற்றி ஆலோசிப்பதற்காக நேச வல்லரசு களின் பிரதிநிதிகள் அடிக்கடி ஒன்று கூடினார்கள். இந்தக் கூட்டங்கள், சந்தர்ப்பத்திற்கேற்றாற்போல் பல இடங்களில் நடைபெற்றன. சில சமயங்களில் ராணுவ நிபுணர்கள் மட்டும் கூடுவார்கள். இன்னும் சில சமயங்களில் அந்நிய இலாகா மந்திரிகள் மட்டும் கூடி, தங்கள் உறவு முறைகளை மெருகிட்டுக் கொள்வார்கள்; வேறு சில சமயங்களில் அரசாங்கத் தலைவர்கள் மட்டும் கூடி நிகழ்காலப் போர் முறைகளையும் வருங்காலச் சமாதான திட்டங்களையும் இணைத்து வைத்துக்கொண்டு, இதிலிருந்து ஒரு புதிய சகாப்தத்தை எப்படிச் சிருஷ்டி செய்வது என்று ஆலோசிப்பார்கள்; மற்றச் சமயங்களில் இவர்களெல்லோருமே ஒன்று கூடிக் கலந்து பேசுவார்கள். இந்தக் கூட்டங்களில் பகிரங்க ஆலோசனை களோடு ரகசியச் சூழ்ச்சிகளும் நடைபெற்றன. உள்ளே நெருப்பு எரிந்துகொண்டிருக்கும்; ஆனால் வெளியே எல்லோரும் சிரித்துக் கொண்டிருப்பார்கள். ஏன் இப்படி, இப்படிச் செய்ய வேண்டியது அவசியமா, செய்தது சரியா என்ற பிரச்னைகளை நாம் இப்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. ராஜதந்திரத்தின் சரித்திரத்தை எழுது கிறவர்கள் செய்யவேண்டிய வேலை அது. இத்தகைய கூட்டங்களில், எந்த ஒரு கூட்டத்தில் ஐக்கிய தேச தாபனம் கருக்கொண்டதோ அந்தக் கூட்டத்திலிருந்து இங்கே தொடங்குவோம். அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகரமாகிய வாஷிங்க்ட்டனில் டம்பர்ட்டன் ஓக் என்பது ஒரு பகுதி. இங்கு 1944-ஆம் வருஷம் ஆகட் மாதம் இருபத்தோராந் தேதியிலிருந்து அக்ட்டோபர் மாதம் ஏழாந் தேதி வரையில், பிரிட்டிஷ், அமெரிக்க, ருஷ்ய, சின அரசாங்கப் பிரதிநிதிகளின் மகாநாடொன்று நடைபெற்றது. இதற்குத்தான் டம்பர்ட்டன் ஓக் மகாநாடு1 என்று பெயர். யுத்தம் முடிந்த பிறகு உலகத்தில் அமைதியை ஏற்படுத்து வதற்கு என்ன வழியென்பதைப் பற்றி இந்த மகாநாட்டில் பேசப் பட்டது. பழைய சர்வ தேச சங்கம் மறைந்து போக வேண்டுமென்கிற விஷயத்தில் பிரதிநிதிகள் அனைவரும் ஒருமுகமாக அபிப்பிராயமே கொண்டார்கள். அதற்குப் பதில், புதியதொரு தாபனத்தை அமைப்ப தென்றும், இதற்கு ஐக்கிய தேச தாபனம் என்று பெயர் கொடுப்பதென்றும் பேசினார்கள். இந்த தாபனத்தின் நோக்கங்கள் பின்வருமாறு கூறப்பட்டன:- 1. சர்வதேச அமைதியையும் க்ஷேமத்தையும் நிலைபெறச் செய்வது. இந்த உத்தேசத்துடன், சமாதானத்திற்குப் பங்கம் விளைவிக்கக் கூடியவைகளை வராமல் தடுக்கவும், வந்தால் விலக்கவும் எல்லா நாடுகளும் ஒன்று சேர்ந்து தக்க நடவடிக்கைகள் எடுத்தக் கொள்வது; ஆக்கிரமிப்புச் செயல்களையோ, சமாதானத்தைக் குலைக்கக்கூடிய செயல்களையோ அடக்குவது; சமாதானத்திற்குப் பங்கம் ஏற்படுகிற வகையில் ஒரு தேசத்திற்கும் மற்றொரு தேசத்திற்கும் மனதாபங்கள் ஏற்படுமானால் அந்த, மனதாபங்களைச் சமரஸ முறையில் தீர்த்து வைப்பது, 2. தேசங்களிடையே நல்லுறவை வளர்ப்பது; இன்னும் உலக சமாதானத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வது, 3. சர்வ தேசங்களுக்கும் பொதுவான பொருளாதார, சமுதாயப் பிரச்னைகளுக்குப் பரிகாரம் தேடுவதற்காக எல்லாத் தேசங்களையும் ஒத்துழைக்கும்படி செய்வது; 4. இந்தக் காரியங்கள் சித்தி பெறுவதற்காக, எல்லாத் தேசங்களும் எடுத்துக் கொள்கிற நடவடிக்கைகளை ஒருமுகப்படுத்தும் பொருட்டு ஒரு மத்திய தாபனமா யிருப்பது. இந்த தாபனத்தில் சமாதானத்தை விரும்பும் எல்லா நாடு களும் அங்கத்தினர்களாகச் சேர்ந்து கொள்ளலாமென்றும், சேர்ந்து கொள்ளும் எல்லா அங்கத்தினர்களும் சம உரிமை யுடைய வர்களென்றும் மேற்படி மகாநாட்டில் பேசப்பட்டன. இன்னும், இந்த தாபனம், இன்னின்ன அங்கங்களோடு கூடியதா யிருக்கவேண்டு மென்றும், ஒவ்வோர் அங்கத்தினுடைய வேலையும் இன்னின்னபடி இருக்க வேண்டுமென்றும் தற்காலிகமான சில திட்டங்கள் வகுக்கப் பட்டன. இந்த டம்பர்ட்டன் ஓக் மகாநாட்டுப் பிரதிநிதிகள், முடிவாக எந்த ஒரு தீர்மானத்தையும் செய்ய அதிகாரம் பெற்றிருக்கவில்லை. உலகத்தில் நிரந்தரமாகச் சமாதானம் ஏற்படுவதற்கு என்ன செய்யலாம் என்பதைப்பற்றி யோசிக்க இவர்கள் கூடினார்களே தவிர, இன்னபடிதான் செய்ய வேண்டுமென்று தீர்மானிக்க இவர்கள் கூடவில்லை, எனவே இவர்கள். தாங்கள் ஒன்றுகூடிக் கலந்து பேசியவற்றை ஒரு திட்டமாகத் தயாரித்துத் தங்கள் தங்கள் அரசாங்கத்திற்கு அனுப்பினார்கள். இதற்குப் பிறகு கிரிமியா தீப கற்பத்திலுள்ள யால்ட்டா1 என்னுமிடத்தில் அமெரிக்காவின் ரூவெல்ட்டும், பிரிட்டனின் சர்ச்சினும், ருஷ்யாவின் ட்டாலினும் 1945-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் பதினோராந் தேதி சந்தித்தார்கள். இதற்குத்தான் யால்ட்டா மகாநாடு அல்லது கிரிமியா மகாநாடு என்று பெயர்.2 இந்த மூவர் மகாநாட்டில், உலகத்தில் நிரந்தரமான சமாதானம் நிலவும் பொருட்டு ஒரு சர்வதேச தாபனம் அமைப்பதென்றும், இந்த தாபனத்தின் நோக்கங்களையும் நடைமுறை களையும் தெளிவாக எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு சாஸனத்தைத் தயாரிப்பதென்றும், இதைப்பற்றி ஆலோசித்து ஒரு முடிவுக்கு வர, 1945-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் அமெரிக்காவிலுள்ள காலிபோர்னியோ3 மாகாணத்திலிருக்கும் ஸான்பிரான்சிக்கோ நகரத்தில் ஐக்கிய தேசங்களின் மகாநாடொன்று கூட்டுவதென்றும் தீர்மானிக்கப்பட்டன. இங்ஙனமே, அமெரிக்கா, பிரிட்டன், ருஷ்யா, சீனா ஆகிய நான்கு அரசாங்கங்களின் பெயரால், அச்சு வல்லரசுகளை எதிர்த்து நின்ற எல்லா நாடுகளுக்கும் அழைப்பு அனுப்பப் பெற்றது. இந்த அழைப்பிற்கிணங்க ஸான்பிரான்சிக்கோ நகரத்தில் 1945-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் இருபத்தைந்தாம் தேதி முதல் ஜுன் மாதம் இருபத்தாறாந்தேதி வரை சரியாக இரண்டு மாத காலம் ஐம்பத்தோரு தேசங்களின் பிரதிநிதிகள் ஒன்று கூடிப் பேசினார்கள். இதற்குத்தான் ஸான் பிரான்சிக்கோ மகாநாடு அல்லது பிரிக்கோ மகாநாடு4 என்று பெயர். இந்த ஐம்பத்தோரு தேசங்களின் பிரதிநிதிகள் தான், ஐக்கிய தேச தாபனத்தின் மூல புருஷர்கள்; அதாவது தாபனத்தை ஆரம்பித்து வைத்தவர்கள். மேற்படி பிரிக்கோ மகாநாட்டில், டம்பர்ட்டன் ஓக் திட்டம் நன்கு பரிசீலனை செய்யப்பட்டு என்னென்ன அமிசங்கள் விடுபட்டிருந்தனவோ அவை யாவும் பூர்த்தி செய்யப்பட்டன. பல வகை வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு சர்வ தேச தாபனத்தின் நோக்கங்களையும், அஃது என்னென்ன அங்கங்களோடு கூடியதாயிருக்க வேண்டு மென்பதையும், அந்த அங்கங்களின் கடமைகளையும், இவை போன்ற இன்னும் பல அமிசங்களையும் விளக்கி ஒரு சாஸனம் தயாரிக்கப்பட்டது. இந்தச் சாஸனத்தை வந்திருந்த எல்லாப் பிரதிநிதிகளும் ஏக மனதாக அங்கீகரித்துக் கையொப்பமிட்டார்கள். இதற்குத்தான் ஐக்கிய தேச சாஸனம்1 என்று பெயர். இது பத்தொன்பது அதிகாரங்களையும் அவைகளுக்குட்பட்ட நூற்றுப் பத்துப் பிரிவுகளையுமுடையது. இங்ஙனம் அங்கீகரிக்கப்பட்ட இந்தச் சாஸனம், பின்னர், அந்தந்த நாட்டு அரசாங்கத்தினரால் ஊர்ஜிதம் செய்யப்படுவதற்கு அனுப்பப் பெற்றது. அப்படியே அவை ஊர்ஜிதம் செய்தன. இதற்கு நாலைந்து மாதங் களாயிற்று. கடைசியில் 1945-ஆம் வருஷம் அக்ட்டோபர் மாதம் இருபத்து நான்காந் தேதி இஃது அமுலுக்கு வந்துவிட்டதாக உலகத்திற்கு அறிவிக்கப்பட்டது.2 இப்படி அறிவிக்கப்பட்ட பிறகு சுமார் இரண்டரை மாதங் கழித்து, 1946-ஆம் வருஷம் ஜனவரி மாதம் பத்தாந் தேதி ஐக்கிய தேச தாபனத்தினுடைய பொதுச்சபையின் முதற்கூட்டம் லண்டன் மாநகரில் கூடியது. இது முதற்கொண்டு ஐக்கிய தேச தாபனமும் அதன் அங்கங்களா யமைக்கப்பெற்ற மற்ற சில தாபனங்களும், தங்கள் தங்கள் வேலையைச் செய்ய ஆரம்பித்துவிட்டன. 2 அமைப்பு முறை ஐக்கிய தேச தாபனத்தின் அதிகாரங்கள், அதன் நடை முறைகள், அஃது எடுத்துக்கொள்கிற நடவடிக்கைகள் ஆகிய யாவும் அதன் அங்கத்தினர்களான நாடுகளிடமிருந்தே பிறக்கின்றன. அதாவது அங்கத்தினர்களான நாடுகள், தங்களுடைய அதிகாரங்களைத் தாங்களே நிர்ணயித்துக் கொண்டிருக்கின்றன. தங்களுடைய காரியக் கிரமங்களைத் தாங்களே வகுத்துக் கொண்டிருக்கின்றன என்பதே தாத்பரியம். இந்த அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொள்வதற்கோ, குறைத்துக் கொள் வதற்கோ, காரியக் கிரமங்களை மாற்றிக் கொள்வதற்கோ, வேறு விதமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வதற்கோ அங்கத்தினர்களான எல்லா நாடுகளுக்கும் பரிபூரண உரிமை உண்டு. இந்த எல்லா நாடுகளின் பிரதிநிதியாக ஐக்கிய தேச தாபனத்தின் பொதுச்சபை இருக்கிறது. இதுவே தாபனத்தை இயக்குவிக்கிறது. இந்த எல்லா நாடுகளும் எதன் மூலமாகத் தங்கள் அதிகாரத்தை நிர்ணயித்துக் கொண்டன, தங்கள் காரியக் கிரமங்களை வகுத்துக் கொண்டன என்ற கேள்வி எழுகிறதல்லவா? அந்த மூலந்தான் ஐக்கிய தேச சாஸனம் எனப்படுகிற ஸான் பிரான்சிக்கோ சாஸனம். இந்தச் சாஸனத்தில் கையொப்பமிட்ட நாடுகள் தான், ஐக்கிய தேச தாபனமாகத் தங்களை முதலில் அமைத்துக் கொண்டன. தாபனத்தில் இனிச் சேர விரும்பும் நாடுகளும் இந்தச் சாஸனத்தை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்தச் சாஸனத்தில் கூறப்பட்டுள்ள கடமைகளை ஒழுங்காகச் செய்யக்கூடியவர்கள் யாரோ, அவர்கள் தான் அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இங்ஙனம் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு முக்கியமான நிபந்தனையென்னவென்றால், அவை சமாதானத்தில் விருப்பமுடைய நாடுகளாயிருக்க வேண்டுமென்பதேயாம். அங்கத்தினர் களா யுள்ளவர்களில் யாரேனும், மேற்படி ஸான்பிரான்சிக்கோ சாஸனத்தின் முதற்பகுதியில் கூறப்பட்டுள்ள கொள்கைகளுக்கு1 விரோதமாகத் தொடர்ந்தாற்போல் நடந்து வருவார்களானால், அவர்கள், தாபனத்திலிருந்து விலக்கப்படுவார்கள். 1 ஆகவே ஐக்கிய தேச சாஸனத்தை மூலமாகக் கொண்டுதான் ஐக்கிய தேச தாபனம் இயங்குகிறது என்பது நன்கு புலனாகும். எப்படி அரசாங்கமானது அரசியல் திட்டத்தை மூலமாகக் கொண்டு நடைபெறுகிறதோ அதுபோல என்று கூறலாம். பல்வேறு அரசாங்க அமைப்புக்களுடைய நாடுகள் ஐக்கிய தேச தாபனத்தில் அங்கத்தினர்களாயிருக்கின்றன. இவைகளுக்குள் அடிக்கடி அபிப்பிராய பேதங்கள் எழுவதுண்டு. ஆனால் உலக சமாதானம் என்ற லட்சியத்தை முன்னிட்டுக் காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறபொழுது இந்தப் பேதங்கள் தலைதூக்குவதில்லை. அபிப்பிராய வேற்றுமைகள் உண்டாகுமென்பதை ஸான்பிரான்சிக்கோ சாஸன கர்த்தர்கள் அறியாத வர்களல்ல. இருந்தாலும் உலக க்ஷேமத்திற்காக, உலக அமைதிக்காக எடுத்துக் கொள்ளப்படுகிற நடவடிக்கைகளில் இந்த வேற்றுமைகள் குறுக்கிடக்கூடாது என்பதே அவர்கள் கொண்ட நோக்கம். இந்த நோக்கத்திற்கு எப்பொழுதும் பங்கம் ஏற்படக் கூடாதென்பதே எல்லோருடைய விருப்பமும். எந்த ஓர் அங்கத்தினர் நாட்டினுடைய உள் நாட்டு விவகாரங் களிலும் ஐக்கிய தேச தாபனம் தலையிடக் கூடாதென்பது ஒரு முக்கியமான நியதி. இந்த தாபனத்தில் அங்கத்தினராகச் சேர்ந் துள்ள ஒவ்வொரு நாடும் பரிபூரண சுதந்திரமுடைய நாடு. சுதந்திர நாடுகளுக்குத்தான் இதில் அங்கத்தினராயிருக்க உரிமையுண்டு. ஆதலின் அவற்றின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது அவற்றின் சுதந்திரத்தில் தலையிடுவதாகுமல்லவா? அப்படித் தலை யிட்டால் ஒற்றுமை குலைந்து உலக சமாதானத்திற்குப் பங்கம் ஏற்படும். சரி, ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடாதென்று சொல் கிறீர்கள்; ஒரு நாடு, மற்றொரு நாட்டை அக்கிரமமாகச் சுவாதீனப்படுத்திக் கொள்ள முயற்சி செய்தால் அதனை ஐக்கிய தேச தாபனம் தடுக்குமா? தடுக்காதா? தடுக்குமாயின், அந்த நாட்டின் உள் விவகாரங்களில், அதாவது அந்த நாட்டின் சுதந்திரத்தில் தலையிட்டதாகும்; தடுக்காதிருக்குமாயின் உலக சமாதானத்தைக் காப்பாற்றுகிற கடமையைச் செய்வதினின்று தவறியதாகும்; ஏன், உலக சமாதானத்திற்குப் பங்கம் ஏற்படுவதற்குத் துணை செய்ததுமாகும்; இப்படி நிகழுமாயின் ஐக்கிய தேச தாபனத்தின் அடிப்படையே தகர்ந்து விடுகிறதல்லவா? மற்றும், ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் மனதாபங்கள் ஏற்பட்டாலோ அல்லது சமாதானத் திற்குப் பங்கம் உண்டாகக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டாலோ, அவற்றைச் சமரஸ முறையிலேயே தீர்த்து வைக்க வேண்டுமென்பது ஐக்கிய தேச தாபனத்தின் நோக்கங்களுள் ஒன்றாகக் கூறப்பட்டிருக்கிறது. எழுத்தளவிலே இது நன்றாகத்தான் இருக்கிறது; ஆனால் இதனை எப்படி அனுஷ்டானத்திற்குக் கொண்டு வர முடியும்? சமரஸத்திற்கு இணங்காத ஒரு நிலைமையில்தானே ஒரு நாடு, மற்றொரு நாட்டின் மீது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்கிறது? அல்லது சமாதானத் திற்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய காரியங்களைச் செய்கிறது? அப்படிப் பட்ட ஒரு நாட்டை சமாதான பாதையில் திருப்புவதற்கு ஐக்கிய தேச தாபனம் ஏதேனும் நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுமா? அப்படி எடுத்துக் கொள்வதற்கு அதற்கு அதிகாரமிருக்கிறதா? இப்படியெல்லாம், ஐக்கிய தேச தாபனத்தை அமைத்துவிட்டதனால் மட்டும் உலகத்தில் சமாதானம் ஏற்பட்டுவிடாது என்று கூறுகிறவர்கள் வாதம் செய்கிறார்கள். ஆனால் பிரிக்கோ சாஸனத்தை ஆதரிக்கிறவர்களும், ஐக்கிய தேச தாபனத்தினால் உலக சமாதானம் ஏற்படக்கூடுமென்று நம்புகிறவர்களும், இதற்குப் பின்வருமாறு சமாதானம் கூறுகிறார்கள்:- ஐக்கிய தேச தாபனம் என்பது எல்லா நாடுகளுக்கும் மேற்பட்ட ஒரு நாடல்ல: எல்லா அரசாங்கங்களுக்கும் மேற்பட்ட ஓர் அரசாங்கமல்ல; பல தேசங்கள் அடங்கிய ஒரு சமஷ்டியுமல்ல. இப்படி ஏதேனும் ஓர் அந்ததில் இருக்குமானால், ஆக்கிரமிப்புச் செயலிலே இறங்கும் ஒரு நாட்டை, அதிகார பலத்தைக் கொண்டோ ஆயுத பலத்தைக்கொண்டோ அது தடுத்து விடக்கூடும். ஆனால் அதற்கு - ஐக்கிய தேச தாபனத்திற்கு - அப்படிப்பட்ட அந்தது எதுவும் இல்லை. சுதந்திர நாடுகள் பலவற்றின் சேர்க்கைதான் அது. சுதந்திர நாடுகள் பலவற்றையும், உலக சமாதானம் என்ற ஒரு லட்சியத்திற்காக ஐக்கியப்படுத்தியிருக்கிற தாபனமே அது. அது செய்யக்கூடியதெல்லாம் என்னவென்றால், தன்னுடைய பொதுவான நோக்கங்களை எல்லோருக்கும் அதாவது எல்லா நாடுகளுக்கும் தெரிவிப்பது, எல்லா நாடுகளினுடைய பரபர ஒத்துழைப்புக்கு வேண்டிய சட்ட திட்டங்களை வகுப்பது, இந்தச் சட்ட திட்டங்களை அனுசரித்து அங்கத்தினர்கள் நடப்பதற்கு அவர்களுக்கு வழி காட்டுவது, இப்படி இப்படி நடக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சிபார்சு செய்வது, இவ்வளவுதான் அது செய்யக்கூடும். தாபனத்தின் நோக்கங்களை நிறைவேற்றி வைக்க வேண்டியது அந்தந்த நாடுகளே. அந்தந்த நாட்டு ஜனங்கள் தான், தங்கள் அரசாங்கமானது, ஐக்கிய தேச தாபனத்தின் கொள்கைகளுக் கிணங்க நடந்துகொள்கின்றதாவென்று கவனித்து வரவேண்டும். அதாவது உலகத்தில் சாசுவதமான சமாதானம் நிலவ வேண்டு மென்கிற விஷயத்தில் சர்வ தேச மகாஜனங்களும் எந்த அளவுக்குச் சிரத்தை எடுத்துக் கொள்கிறார்களோ அந்த அளவுக்கு ஐக்கிய தேச தாபனத்தின் வெற்றி இருக்கிறது என்பதே இதன் கருத்து. ஐக்கிய தேச சாஸனத்தில் கண்டிருக்கிற கொள்கைக்கு விரோத மாக, ஐக்கிய தேச தாபனத்தில் அங்கத்தினராயுள்ள எந்த ஒரு நாடேனும் தொடர்ந்தாற்போல் நடந்து வருமானால், அதனை அங்கத்தினர் பதவியிலிருந்து விலக்கிவிடலாம்.1 ஐக்கிய தேச சாஸனத்தின் ஆறாவது பிரிவு பின் வருமாறு கூறுகிறது:- பிரதாப சாஸனத்தில் கண்டிருக்கிற கொள்கைகளை, ஐக்கிய தேச தாபனத்தின் எந்த ஓர் அங்கத்தினரேனும் தொடர்ந்தாற்போல் மீறி நடந்து வருமானால், அதனை, பாதுகாப்புக் கவுன்சிலின் சிபார்சின் பேரில், பொதுச்சபையானது, தாபனத்திலிருந்து விலக்கிவிடலாம். எந்த ஒரு நாடேனும், சாஸனத்தில் கண்டிருக்கிற கொள்கை களுக்கு விரோதமாக நடந்து கொள்வதோடு, உலக சமாதானத் திற்குப் பங்கம் உண்டாகிற வகையிலும் நடந்து கொள்ளுமானால், அப்பொழுது, பாதுகாப்புக் கவுன்சிலானது, அந்த நாட்டின் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கடைசி பட்சமாகத் தான், சமரஸ முறைகள் யாவும் பிரயோஜனப்படாமற் போன பிறகுதான் இந்த நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இது சம்பந்தமாகச் சாஸனத்தின் நாற்பத்திரண்டாவது பிரிவு பின் வருமாறு கூறுகிறது:- நாற்பத்தோராவது பிரிவில் கூறப்பட்டிருக்கிற நடவடிக்கைகள் (அதாவது பொருளாதாரத் தொடர்புகளை ஓர் அளவுக்குட்பட்டோ அல்லது பரிபூரணமாகவோ நிறுத்துவது, ரயில், கப்பல், ஆகாய விமானம், தபால் தந்தி, ரேடியோ ஆகிய சகல விதமான போக்குவரத்து வசதிகளையும் தடைப்படுத்துவது, தானீகர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டுவிடுவது ஆகிய இப்படிப்பட்ட நடவடிக்கைகள்) போதுமானவையல்ல என்று பாதுகாப்புக் கவுன்சில் கருதினாலும் சரி, அல்லது போதுமானவையல்ல என்று நிரூபிக்கப்பட்டாலும் சரி, அது - பாதுகாப்புக் கவுன்சில் - சர்வதேச அமைதியையும் க்ஷேமத்தையும் காப்பாற்றுவதற்காகவும், அந்த அமைதியோ க்ஷேமமோ நிலைகுலைந்து போயிருந்தால் அவற்றைத் திரும்ப தாபிப்பதற்காகவும், ஆகாய, கடல், தரைப்படைகள் மூலமாக அவசியமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளலாம். எனவே கடைசி பட்சமாக, பலாத்காரத்தைக் கையாண்டேனும் உலக சமாதானத்தைக் காப்பற்ற ஐக்கிய தேச தாபனத்திற்கு அதிகாரமிருக்கிறது. பிரிக்கோ சாஸனத்தை ஆதரிக்கிறவர்கள் இப்படிச் சமாதானம் கூறுகிறார்கள். இவர்களுடைய ஆட்சேப சமாதானங்கள் எப்படி இருந்தபோதிலும், பொதுவாகப் பார்க்கிறபோது, உலகத்திலுள்ள பிரதியொரு நாடும், அந்தப் பிரதியொரு நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையும், தாங்களே வலிய ஏற்படுத்திக் கொள்கிற ஒரு கட்டுப்பாட்டிலேதான், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்துவதிலேதான் உலக சமாதானம் நிலை பெற்றிருக்க முடியுமே தவிர எந்த விதமான ஒரு தாபனத்தினுடைய செயலினாலும் முடியாதென்பது நிச்சயமாகிறது. தாபனமென்பது ஒரு கருவி மாத்திரமே தவிர, உண்மையில் சமாதான சக்தியானது பிரதியொரு நாட்டிலிருந்தும் பிரதியொரு பிரஜையினிடமிருந்துமே பிறக்க வேண்டும். இனி, ஐக்கிய தேச தாபனத்தின் நோக்கங்களென்னவென்பதைக் கவனிப்போம். இவை, பிரிக்கோ சாஸனத்தின் முதற்பகுதியில் விளக்கப் பட்டிருக்கின்றன. ஏறக்குறைய டம்பர்ட்டன் ஓக் திட்டத்தில் கூறியிருப் பதையே சிறிது விதரித்து இங்குச் சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும் பிரிக்கோ சாஸனம் என்ன கூறுகிறதென்பதை வாசகர்கள் நேரடியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்கு அதனை இங்கு எடுத்துக் காட்ட விரும்புகிறோம். 1. சர்வ தேச அமைதியையும் க்ஷேமத்தையும் நிலைபெறச் செய்தல். இதற்காக சமாதானத்திற்குப் பங்கம் விளைவிக்கக் கூடியவைகளைத் தடுக்கவும் விலக்கவும், ஆக்கிரமிப்புச் செயல்களையோ அல்லது சமாதானத்திற்கு விரோதமான செயல்களையோ அடக்கவும், காரியாமி சத்தில் நிறைவேறக்கூடிய பொதுவான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுதல்; ஒரு தேசத்திற்கும் மற்றொரு தேசத்திற்கும் உண்டாகிற மனதாபங்களையோ சமாதானத்திற்குப் பங்கம் விளைவிக்கக் கூடிய நிலைமைகளையோ, சமாதான முறையிலும், நியாயத்தையும் சர்வதேச சட்டத்தையும் அனுசரித்தும் சரிப்படுத்தி விடுதல் அல்லது தீர்த்து வைத்தல், 2. ஜனங்களுடைய சமத்துவ உரிமை, சுயநிர்ணய உரிமை இவற்றிற்கு மதிப்புக் கொடுப்பது என்பதை அடிப்படையாகக் கொண்டு தேசங்களுக்கிடையே நல்லுறவை வளர்த்தல்; உலக சமாதானத்தை வலுப்படுத்துவதற்குத் தக்க நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுதல்; 3. சர்வ தேசங்களுக்கும் பொதுவான பொருளாதார, சமுதாய, கலாசார, ஜீவகாருண்ய சம்பந்தமான பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்கும், மனித உரிமைகளுக்கு (அதாவது மனிதர்களாகப் பிறந்தவர்களுக்கு இயற்கையாக என்னென்ன உரிமைகளுண்டோ அந்த உரிமைகளுக்கு) மதிப்புக் கொடுக்க வேண்டுமென்பதை வளர்ப்பதற்கும் ஆதரிப்பதற்கும், இனம், பால், பாஷை, மதம் ஆகிய எந்த விதமான வித்தியாசமும் இல்லாமல் எல்லோருக்கும் ஜீவாதார உரிமைகள் இருக்க வேண்டுமென்பதற்கும் சர்வ தேச ஒத்துழைப்பை நாடுதல், 4. மேலே சொன்ன இந்தப் பொது நோக்கங்களை அடைவதற்கு அந்தந்த தேசங்களும் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுமோ அவற்றையெல்லாம் இயைபு படுத்திக்கொண்டு போவதற்கு ஒரு மத்திய நிலையமாக இருத்தல். ஆக, உலக சமாதானமென்கிற லட்சியத்தை யடைய, ஐக்கிய தேச தாபனம், சமாதான வழியிலேயே செல்ல விரும்புகிறதென்பது இதிலிருந்து தெரிகிறதல்லவா? ஐக்கிய தேச தாபனத்தின் தலைமை தானம் தற்போது, அமெரிக்கா ஐக்கிய நாட்டிலுள்ள நியூயார்க் நகரத்தில் இருக்கிறது. தலைமை தானத்தை உலகத்திலுள்ள எந்த இடத்திற்கு வேண்டுமானாலும், எந்தச் சமயத்திலும் மாற்றிக்கொள்ள, தாபனத்தின் பொதுச்சபைக்கு உரிமை உண்டு. நியூயார்க் நகரத்தின் எல்லைக்குட்பட்ட ஒரு விதீரணமான பிரதேசம் ஐக்கிய தேச தாபனத்தின் நிரந்தர தலைமை தானத்திற்கென்று பிரத்தியேகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பிரதேசம் ஒரு பிரத்தியேக ராஜ்யம் மாதிரி; அதாவது தனிப்பட்ட ஒரு ராஜ்யத்திற்கு என்னென்ன உரிமைகள், சலுகைகள், அந்ததுகள் எல்லாம் உண்டோ அவை யாவும் இந்தப் பிரதேசத்திற்கு உண்டு. அமெரிக்கா ஒரு சுதந்திர ராஜ்யமல்லவா, அதற்குள்ளே அதனால் அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு சுதந்திர ராஜ்யம் இருக்கிற மாதிரி இந்தப் பிரதேசம். இதற்கு உபமானமாக வேறொரு பிரதேசத்தைச் சொல்ல வேண்டுமானால், இத்தலியில் போப்பாண்டவர் வசிக்கும் பிரதேசம் எப்படிஒரு தனி ராஜ்யமாகக் கருதப்பட்டு அதற்குரிய மதிப்புக் கொடுக்கப்படுகிறதோ அதுபோல என்று சொல்லலாம். இந்தப் பிரதேசத்தில் வசிக்கிறவர்கள் விஷயத்திலோ, இங்கு யாரார் வரலாம், யாரார் வரக்கூடாது என்று கட்டுப்பாடு பண்ணுகிற விஷயத்திலோ அமெரிக்க அரசாங்கத்திற்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. அமெரிக்க அரசாங்கத்தின் எந்த ஓர் அதிகாரியும் இந்தப் பிரதேசத்திற்குள் பிரவேசிப்பதாயிருந்தால், தாபனத்தின் பொதுக் காரியதரிசியினுடைய முன் அனுமதி பெறவேண்டும். இந்தப் பிரதேசத்திற்குள் தனியான போலி படை அமைத்துக்கொள்ளவோ, தபால், தந்தி, முதலிய போக்குவரத்துக் கான ஏற்பாடுகள் செய்து கொள்ளவோ, ரேடியோ, ரெயில், ஆகாய விமான நிலையங்கள் நிர்மாணித்துக் கொள்ளவோ, இப்படி ஒரு சுதந்திர ராஜ்யத்திற்குள்ள ஏறக்குறைய சகலவித உரிமைகளும் ஐக்கிய தேச தாபனத்திற்கு உண்டு. மற்றும் இந்தப் பிரதேசத்தில், நாடு, மொழி, இனம், நிறம், மதம், பால் ஆகிய இவற்றுள் எந்த ஒன்றின் காரணமாகவும் எந்த விதமான வித்தியாசமும இருக்கக் கூடாதென்பது கண்டிப்பான விதி. இந்தப் பிரதேசத்தில், தாபனத்தின் தலைமைக் காரியாலயம், ஜெனரல் அஸெம்பிளி முதலிய மகாநாடுகள் கூடுமிடம், இப்படி அநேக கட்டடங்கள் கட்டப்பெற்று, பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருக்கின்றன. இவைகளைக் கட்டி முடிக்க அமெரிக்கா ஐக்கிய நாடுகள் அரசாங்கம், தாபனத்திற்கு 65,000,000 டாலர் கடனாகக் கொடுத் திருக்கிறது. இதனை வருஷமொன்றுக்கு பத்து லட்சம் டாலர் முதல் இருபத்தைந்து லட்சம் டாலர் வரை, அந்தந்த வருஷத்துப் பண நிலைமைக்குத் தகுந்தாற்போல், முப்பத்திரண்டு வருஷத்திற்குள் தாபன மானது திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமென்பது நிபந்தனை. இதன் பிரகாரம், 1951-ஆம் வருஷம் ஜூலை மாதம் முதல், வருஷவாரி ஒரு தொகை விகிதம் கொடுக்கப்பட்டு வருகிறது. 1982-ஆம் வருஷம் ஜூலை மாதம் முதல் தேதிக்குள் கடன் பூராவும் தீர்க்கப்பட்டுவிடும். தலைமைக் காரியாலயம், பிரம்மாண்டமானதொரு கட்டடத்தில் அமைந்திருக்கிறது. இந்தக் கட்டடத்தின் நீளம் 287 அடி; அகலம் 73 அடி; உயரம் தெரு மட்டத்திற்கு மேல் 505 அடி. மொத்தம் 5,400 ஜன்னல்கள் இருக்கின்றன. காரியாலயம் முழுவதும் விரிக்கப்பட்டிருக்கும் மூன்றடி அகலமுள்ள மிதியடிமட்டும் பதினைந்து மைல் நீளமுள்ளது. தலைமைக் காரியாலயம் எப்பொழுதுமே சுறுசுறுப்பா யிருக்கிறது. அங்கு ஓய்ச்சல் ஒழிவு என்பது கிடையாது. வருஷத்தில் சில நாட்கள் அல்லது வாரத்தில் ஒருநாள், காரியாலயத்தின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் என்பது இல்லவே இல்லை. இரவு நேரங்களில் கூட சில உத்தியோகதர்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள். உலகத்தின் பல பாகங்களுக்கும் கடிதங்களும் தந்திகளும் சென்று கொண்டே யிருக்கும்; அப்படியே பல பாகங்களிலிருந்தும் வந்து கொண்டுமிருக்கும். பிரதியொரு வருஷமும் செப்ட்டம்பர் மாதம் முதல் வாரம் அநேகமாக பொதுச்சபை கூடுகிறதல்லவா அப்பொழுது காரியாலயத்தில் அதிக பரபரப்பு காணப்படும். சில சந்தர்ப்பங்களில், சர்வ தேச மகாநாடுகளில் சில, ஐக்கிய தேச தாபனத்தின் தலைமை தானத்திலே கூடாமல், வேறு இடங்களிலே கூடுவதுண்டு. அப்பொழுது காரியாலயத்தின் முக்கியமான உத்தியோகதர் களில் சிலர், அதாவது மகாநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கவனிக் கிறார்கள், மகாநாடு நடைபெறுமிடத்திற்குச் செல்வார்கள்; மகாநாடு முடிந்ததும், திரும்பவும் தலைமைக் காரியாலயத்திற்கு வந்து விடுவார்கள். ஐக்கிய தேச தாபனத்தின் கூட்டங்களுக்குப் பல நாடு களிலிருந்தும் பிரதிநிதிகள் வருகிறார்களல்லவா, இவர்கள் எல்லோரும் கூடிப் பேசுகிறபோது எந்தப் பாஷையில் பேசுவது? உலகத்திலுள்ள எல்லா நாட்டினருக்கும் தெரிந்திருக்கக்கூடிய ஒரு பாஷை இன்னும் ஏற்படவில்லை. எனவே, இப்பொழுது வழக்கிலுள்ள ஏதேனும் ஒரு முக்கிய பாஷையை எடுத்துக்கொண்டு, அதுவே ஐக்கிய தேச தாபனத்தின் உத்தியோக ரீதியான பாஷை, அந்தப் பாஷையிலேயே தாபனத்தின் நடவடிக்கைகள் யாவும் நடைபெறவேண்டும் என்று நிர்ணயிக்கலாம். அப்படிச் செய்வது ஒரு பாஷைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தது போலாகும்; மற்றப் பாஷைகளைப் புறக்கணித்தது போலவுமாகும். இவைகளையெல்லாம் நன்கு ஆலோசித்து, ஐக்கிய தேசசாஸன கர்த்தர்கள்,1 ஐக்கிய தேச தாபனத்தின் உத்தியோக ரீதியான பாஷைகள் ஐந்து என்று அங்கீகரித்திருக்கின்றனர். அவை முறையே இங்கிலீஷ், பிரெஞ்சு, ருஷ்ய, சீன, பானிஷ் பாஷைகளாகும். ஆனால் தாபனத்தின் சார்பில் நடைபெறும் மகாநாடுகளில் பிரதிநிதிகள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் இந்த ஐந்து பாஷைகளிலும் மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டுமென்றால் அது சாத்தியமா? எனவே, இரண்டு பாஷைகளை மட்டும் பொறுக்கியெடுத்திருக்கிறார்கள். ஒன்று இங்கிலீஷ்; மற்றொன்று பிரெஞ்சு. மகாநாடுகளில் பேசப்படுகின்ற யாவும் இந்த இரண்டு பாஷை களிலும் மொழிபெயர்த்துச் சொல்லப்பட வேண்டும். அதாவது இங்கிலீஷிலே பேசினால் அது பிரெஞ்சிலே மொழி பெயர்த்துச் சொல்லப் படுகிறது. அப்படியே பிரெஞ்சிலே பேசினால் அஃது இங்கிலீஷிலே மொழி பெயர்த்துச் சொல்லப்படுகிறது. இவையிரண்டையும் விடுத்து. மேலே சொன்ன மற்ற மூன்று பாஷைகளிலே பேசினால் அவை, இங்கிலீஷிலும் பிரெஞ்சிலும் மொழி பெயர்த்துச் சொல்லப்படுகின்றன. இதற்காக துவிபாஷிகள் பலர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு வரும் இரண்டுக்கு மேற்பட்ட பாஷைகளில் நிபுணர்கள். இவர்களுடைய பொறுப்பு மகத்தானது. மேற்படி ஐந்து பாஷைகளைத் தவிர பிற பாஷைகளிலும் புலமை பெற்றவர்களும் பலர் காரியாலயத்தில் அலுவல் பார்க்கிறார்கள். பதினைந்து பாஷைகளில் டைப் செய்யக்கூடிய 2,300 டைப் அடிக்கும் யந்திரங்கள் காரியாலயத்தில் இருக்கின்றன; தாபனத்தில் ரேடியோ நிலையத்திலிருந்து இருபத்தைந்து பாஷைகளில் ஒலிபரப்பப்படுகின்றது. ஐக்கிய தேச தாபனத்திற்கு ஆறு அங்கங்கள் உண்டு, எப்படி கை கால் முதலிய உறுப்புக்கள் அனைத்தும் சேர்ந்து தேகமோ அதுபோல் இந்த ஆறு அங்கங்களும் சேர்ந்தது ஐக்கிய தேச தாபனம். இந்த ஆறு அங்கங்களும் வருமாறு:- 1. பொதுச்சபை (ஜெனரல் அஸெம்ப்ளி);1 2. பந்தோபதுக் கவுன்சில் என்றழைக்கப்படுகிற பாதுகாப்புக் கவுன்சில் (ஸெக்யூரிட்டி கவுன்சில்);2 3. பொருளாதார - சமுதாயக் கவுன்சில்;3 4. டிரட்டி கவுன்சில்; 4 5. சர்வதேசக் கோர்ட்டு; 5 6. காரியாலயம்.6 இந்த ஆறு அங்கங்களைப் பற்றியும் ஒவ்வொன்றாக அடுத்த அத்தியாயங்களில் தெரிந்து கொள்வோம். இந்த ஆறு அங்கங்களைத் தவிர, அவசியமானால் வேறு சில அங்கங்களையும், அதாவது வேறு சில சபைகள் அல்லது கமிட்டி களையும் அஸெம்ப்ளியானது தனக்கு உதவியாக நியமித்துக் கொள்ளலா மென்று ஐக்கிய தேச சாஸனத்தின் இருபத்திரண்டாவது ஷரத்து கூறுகிறது. இந்த ஷரத்தை அனுசரித்து 1947-ஆம் வருஷத்து அஸெம்ப்ளி கூட்டத்தில், அஸெம்ப்ளி கூடாத காலத்தில் அது செய்யவேண்டிய சில காரியங்களைச் செய்ய, அஸெம்ப்ளியின் அங்கத்தினர்களடங்கிய ஒரு சிறு சபை நியமிக்கப்பட்டிருக்கிறது. இஃது இடைக்காலக் கமிட்டி அல்லது குட்டி அஸெம்ப்ளி என்று அழைக்கப்படுகிறது. இங்ஙனம் இந்தக் கமிட்டியை நியமிப்பதாகிற தீர்மானம், மேற்படி அஸெம்ப்ளி கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்படவில்லை; பெரும் பான்மையான ஓட்டுக் களைக்கொண்டே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனை, அதாவது இத்தகைய கமிட்டி ஒன்று நியமிக்கப்படுவதை. ருஷ்யா பலமாக ஆட்சேபித்திருக்கிறது. அஸெம்ப்ளியின் பிரதிநிதிபோல் பந்தோபதுக் கவுன்சில் நிரந்தரமாக இருக்க, இந்தக் குட்டி அஸெம்ப்ளி எதற்கு என்றும், இதனை அமைப்பது பந்தோபதுக் கவுன்சிலைப் புறக்கணித்தது போலாகு மென்றும் ருஷ்யா கேட்டிருக்கிறது. இந்தக் குட்டி அஸெம்ப்ளி செய்து வரும் வேலைகளைப்பற்றி வருங்காலந்தான் அபிப்பிராயம் சொல்ல வேண்டும். 3. ஜெனரல் அஸெம்ப்ளி ஐக்கிய தேச தாபனத்தின் பிரதான உறுப்பு பொதுச்சபை. இதனை, இந்த அத்தியாயத்திலிருந்து அஸெம்ப்ளி என்றோ ஜெனரல் அஸெம்ப்ளி என்றோ சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல் அழைப்போம். இந்த அஸெம்ப்ளியில் ஐக்கிய தேசங்கள் யாவும், அதாவது ஐக்கிய தேச சாஸனத்தை ஒப்புக்கொண்ட தேசங்கள் யாவும் அங்கத்தினர்கள். தற்போது எண்பத்திரண்டு நாடுகள் அங்கத்தினர்களா யிருக்கின்றன. இவற்றின் விவரங்களை ஏற்கனவே கூறியுள்ளது போல் முதலாவது அனுபந்தத்தில் பார்க்க. சமாதானத்தில் விருப்பமுள்ள எந்த ஒரு சுதந்திர நாடும், ஐக்கிய தேச தாபனத்தில் தன்னை அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளும்படி மனுச் செய்து கொள்ளலாம். இப்படி மனுச் செய்து கொள்கிற நாடு, ஏற்கனவே, ஐக்கிய தேச சாஸனத்தை ஏற்றுக் கொண்டிருக்கவேண்டும். அதாவது அதன் ஷரத்துக்களுக்கு உடன்பட்டுத்தான், அந்த நாடு தன்னை அங்கத்தினராகச் சேர்த்துக்கொள்ளும்படி மனுச் செய்து கொள்கிறது. இந்த மனுவானது முதலில் பாதுகாப்புக் கவுன்சிலின் பரிசீலனைக்கு வரும். அது பரிசீலனை செய்து, அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளலாமென்று ஜெனரல் அஸெம்ப்ளிக்குச் சிபார்சு செய்யும். அந்தச் சிபார்சை ஜெனரல் அஸெம்ப்ளி ஏற்றுக் கொள்ளவேண்டும். இதற்குப் பிறகுதான் மனுச் செய்து கொண்ட நாடு அங்கத்தினர் பதவியில் அமர முடியும். அஸெம்ப்ளியானது வருஷத்திற்கொருமுறை கூட வேண்டு மென்பது நியதி. அதாவது பிரதி வருஷமும் செப்டம்பர் மாதம் இரண்டாந் தேதிக்குப் பிறகு வருகிற முதல் செவ்வாய்க்கிழமையன்று கூட வேண்டும், எத்தனை நாட்கள் நடைபெறவேண்டுமென்பது கணக்கில்லை. அஃது, ஆலோசித்து முடிவு கட்ட வேண்டிய விஷயங்களைப் பொறுத்திருக்கிறது. ஒவ்வொரு வருஷக் கூட்டத்திலும், அடுத்த வருஷக் கூட்டம் எங்கே கூடுவதென்று ஒருவாறு நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. இந்த வருஷக் கூட்டத்தைத் தவிர, அங்கத்தினர் நாடுகளில் பெரும்பாலான நாடுகள், அதாவது பாதிக்கு மேற்பட்ட நாடுகள், விசேஷக் கூட்டமொன்று கூட்டவேண்டியது அவசியமென்று கருதினாலும் சரி, அல்லது பாதுகாப்புக் கவுன்சிலே, ஒரு விசேஷக் கூட்டம் கூட்ட வேண்டுமென்று நினைத்தாலும் சரி, அஸெம்ப்ளி அல்லது பாதுகாப்புக் கவுன்சிலின் உத்தரவின் பேரில், தாபனத்தின் பொதுக்காரியதரிசியானவர் பதினைந்து நாள் முன்னறிக்கை கொடுத்து ஒரு விசேஷக் கூட்டம் கூட்டலாம். சமாதானத்திற்குப் பங்கம் ஏற்படுமென்று கருதி அதைப்பற்றி ஆலோசிக்க ஒரு விசேஷக் கூட்டம் கூட்டவேண்டுமென்று எந்த ஒரு நாடும் மனுச்செய்து கொள்ளலாம். இந்த மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுத்துக் கொள்வதென்று பொதுக்காரியதரிசியானவர் எல்லா நாடுகளுடனும் உடனடியாகக் கலந்தாலோசிப்பார். பெரும்பாலான நாடுகள் விசேஷக் கூட்டம் கூட்டவேண்டியது அவசியம் என்று அபிப்பிராயப்பட்டால் உடனே விசேஷக் கூட்டம் கூட்டப்படும். ஏற்கனவே சொன்னபடி இதற்குப் பதினைந்து நாள் முன்னறிவிப்பு கொடுக்கப்படும். அஸெம்ப்ளியில் அங்கத்தினராகவுள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு ஓட்டுத்தான் உண்டு, இதனால் சிறிய நாடு, பெரிய நாடு அல்லது ஏழை நாடு, பணக்கார நாடு என்ற வித்தியாசங்களுக்கு இங்கு இடமில்லை. மற்றும், தான் முக்கியமானது என்று கருதுகிற எந்த ஒரு விஷயத்தையும் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு, அதாவது அந்த விஷயத்தை நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்ளுமாறு கூற, ஒவ்வோர் அங்கத்தினருக்கும் உரிமை உண்டு. ஆனால் அப்படி ஆலோசிக்கப் படவேண்டிய விஷயம், சாஸனத்திலுள்ள ஷரத்துக்களுக்கு உட்பட்ட தாயிருக்கவேண்டும். சாஸனத்தில் கூறப்படாத சர்வதேச விஷயம் என்ன இருக்கிறது? ஒன்றுமில்லையென்றே சொல்லவேண்டும். ஆகவே சர்வ தேசங்களுக்கும் பொதுவான பிரச்னைகளைப்பற்றி அஸெம்ப்ளியானது கவனிக்க வேண்டுமென்று சொல்ல ஒவ்வொரு நாட்டுக்கும் உரிமை யுண்டு. எந்த ஒரு நாட்டினுடைய உள் விவகாரங்களிலும் தலையிடு வதற்கோ அவைகளைப்பற்றி ஆலோசிப்பதற்கோ அஸெம்ப்ளிக்கு அதிகார மில்லை. உதாரணமாக, இந்தியா, எந்த விதமான அரசியல் திட்டத்தை வகுத்துக் கொள்ளவேண்டுமென்று சொல்ல அஸெம்ப்ளிக்கு அதிகாரம் கிடையாது. ஆனால் ஒரு நாட்டினுடைய ஆட்சிமுறை அல்லது அந்த நாட்டிலே நடைபெறும் அரசியல் விவகாரங்கள், சமாதானத்திற்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய மாதிரி இருந்தால் அதைப்பற்றி அஸெம்ப்ளி ஆலோசிக்கும். அப்படி ஆலோசித்து, தக்க நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்று முடிவுக்கு வருமானால், அந்த முடிவானது, சமாதான பங்கம் ஏற்படக்கூடாதென்பதை நோக்கமாகக் கொண்டிருக்குமே தவிர, வேறு எவ்வித நோக்கமும் கொண்டிராது. ஐக்கிய தேச சாஸனத்தின்படி, ஜெனரல் அஸெம்ப்ளி கவனிக்க வேண்டிய பிரச்னைகளை இரண்டு பிரிவாக வகுத்துச் சொல்லலாம். ஒன்று, சமாதானத்தைப் பொறுத்த பிரச்னைகள்; மற்றொன்று, மானிட சமூதாயத்தின் க்ஷேமம், சர்வ தேசங்களுக்குமிடையே யுள்ள நல்லுறவு இவைகளைப் பொறுத்த பிரச்னைகள். சமாதானத்தைப் பொறுத்த பிரச்னைகளில், தேசங்களினுடைய ஆயுதபலத்தை நிர்ணயிக்கிற பிரச்னையும் சேர்ந்ததாகும். இந்தப் பிரச்னைகளை அஸெம்ப்ளியின் கவனத்திற்குக் கொண்டுவர எந்த ஓர் அங்கத்தினர் நாட்டுக்கும் உரிமையுண்டு; அப்படியே பாதுகாப்புக் கவுன்சிலுக்கும் உரிமையுண்டு. இந்தப் பிரச்னைகளைப் பற்றி ஏற்கனவே பாதுகாப்புக் கவுன்சில் கவனித்துக்கொண்டு வருகிற தென்று தெரிந்தால், அப்பொழுது இவைமீது அஸெம்ப்ளியானது எந்த நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளாது. எந்தெந்த பிரச்னைகளை, பாதுகாப்புக் கவுன்சில் கவனித்துக் கொண்டு வருகிறதென்பதைப் பொதுக்காரியதரிசியானவர் அஸெம்ப்ளிக்கு அறிவிப்பார். பாதுகாப்புக் கவுன்சிலானது, தான் பரிசீலனை செய்த ஒரு பிரச்னையின் மீது ஏதேனும் ஒரு முடிவு சொல்ல வேண்டுமென்று அஸெம்ப்ளியைக் கேட்டுக் கொண்டால், அல்லது குறித்த ஒரு பிரச்னையின் மீது பாதுகாப்புக் கவுன்சில் நடவடிக்கை எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டால், அதற்குப் பிறகே, அஸெம்ப்ளியானது, குறித்த அந்தப் பிரச்னையைப் பற்றி ஒரு முடிவு சொல்லும். சமாதானமென்பது அகில உலகத்தையும் பொறுத்த விஷயம். இதனால், சமாதானத்தைப் பாதிக்கக்கூடிய எந்த ஒரு பிரச்னையை யும், உலகத்திலுள்ள எந்த ஒரு நாடும் அஸெம்ப்ளியின் கவனத்திற்குக் கொண்டுவரலாம். அந்த நாடு, ஐக்கிய தேச தாபனத்தின் அங்கத்தினரா யிருக்க வேண்டுமென்பது அவசியமில்லை அப்படி அங்கத்தினரா யில்லாத காரணத்தினால் ஐக்கிய தேச தாபனுத்தினுடைய பாதுகாப்பு அதற்கு அளிக்கப்படாது என்பதும் இல்லை. ஆனால் ஒரே ஒரு நிபந்தனைக்கு மட்டும் அஃது - அந்த அங்கத்தினராயில்லாத நாடு - உடன்படவேண்டும். அஃதென்ன வென்றால், ஐக்கிய தேச சாஸனத்தில் கூறப்பட்டுள்ள சமரஸ முறைகளுக்கு, தான் இணங்குவதாக ஒப்புக் கொள்ளவேண்டும். தேசங்களின் பரபர நல்லுறவை எப்படி எப்படி அபிவிருத்தி செய்யலாம். மானிட சமுதாயத்தின் பொதுவான க்ஷேமத்திற்கு என்னென்ன செய்யலாம் என்பவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும், யோசனைகள் சொல்லவும், அஸெம்ப்ளியானது, தானே நேராகவோ அல்லது பொருளாதார - சமுதாயக் கவுன்சில் மூலமாகவோ அல்லது காரியாலயத்தின் மூலமாகவோ நிபுணர் கமிட்டிகளை ஏற்படுத்தலாம்; ஆராய்ச்சிக் கழகங்களை நிறுவலாம். உதாரணமாக, ஒரு நாட்டை எடுத்துக் கொண்டு, அந்த நாட்டிலுள்ள ஜனங்களின் வாழ்க்கை அந்தது என்ன, அல்லது கல்வி முறை எப்படி இருக்கிறது, அல்லது மனிதர்களின் உரிமைகள் எங்ஙனம் கௌரவிக்கப்படுகின்றன. அல்லது சுகாதாரம் எப்படி இருக்கிறது, இப்படி ஏதேனும் ஒரு பிரச்னையைப் பற்றி ஆராய்ச்சி செய்யச் சொல்லலாம்; இவற்றில் என்னென்ன குறைகள் இருக்கின்றன. அந்தக் குறைகளுக்கு என்ன பரிகாரங்கள் என்பவைகளைப் பற்றிச் சிபார்சு செய்யுமாறு கூறலாம். இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக, உலகத்திலுள்ள சகல நாடுகளின் சகல விஷயங்களும் அஸெம்ப்ளிக்குக் கிடைத்துவிடுகின்றன. உலகத்திலுள்ள எந்த ஒரு நாட்டினுடைய அரசியல் நிலைமை யைப் பரிசீலனை செய்யவோ அது சம்பந்தமாக என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படலாமென்று சிபார்சு செய்யவோ அஸெம்ப்ளிக்கு அதிகார முண்டு. ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்கு ஜனங்கள் பெருவாரியாகக் குடியேறுதல், சமுத்திரங்களிலும் ஆகாயத்திலும் தேசங்களுக்குள்ள உரிமைகள், விஞ்ஞான ஆராய்ச்சி களின் பரிவர்த்தனை, மற்றச் செய்திகளின் பரிவர்த்தனை, ஜனங்களுக்குக் குடியிருப்பு வசதிகள், வேலை வசதிகள் முதலியன ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகிய இந்த மாதிரியான பிரச்னைகளைப் பற்றி, அதாவது மானிட சமுதாயத்தின் க்ஷேமத்தையும் ஒத்துழைப்பையும் வளர்க்கக் கூடிய எல்லாப் பிரச்னைகளைப் பற்றியும் அஸெம்ப்ளியானது சிபார்சுகள் செய்யலாம். இன்னும் சர்வதேச சட்டத்தை, இப்பொழுதிருக்கிறதைக் காட்டிலும நல்ல முறையில் ஒழுங்கு படுத்துவதற்கும், அந்தச் சட்டம் படிப்படியாக அபிவிருத்தியடைவதற்கும் வேண்டிய ஆதரவுகள் கொடுக்கலாம். மற்றும், சர்வதேச நிலைமையை அவ்வப்பொழுது பரிசீலனை செய்யவோ, நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியிருந்தால் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப் படலாமென்று சிபார்சு செய்யவோ அஸெம்ப்ளிக்கு அதிகாரமுண்டு. சிலர் கருதலாம், அஸெம்ப்ளியின் அதிகாரங்களெல்லாம், சிபார்சுகள் செய்கின்ற அளவோடு நிற்கின்றனவேதவிர, நேரடியான, உடனடியான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்கிற அளவுக்குச் செல்ல வில்லையேயென்று. ஆனால் அரசியல் கண்கொண்டு பார்த்தால், அஸெம்ப்ளியின் சிபார்சுகளுக்கு அதிக பலனுண்டு என்பது நன்கு தெரியவரும். அஸெம்ப்ளியின் எந்த ஒரு தீர்மானமும் அல்லது எந்த ஒரு சிபார்சும், சம்பந்தப்பட்ட நாட்டை நிச்சயம் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு தூண்டும். ஏனென்றால் தனிப்பட்ட பல நாடுகளின் சேர்க்கை யல்லவா அஸெம்ப்ளி? இதனால் தனிப்பட்ட நாடுகளுக்கிருக்கிற அந்தது, மதிப்பு, செல்வாக்கு இவைகளைக் காட்டிலும் அஸெம்ப்ளியின் அந்தது, மதிப்பு, செல்வாக்கு இவை மேற்பட்டதாயிருக்கின்றன. இந்தப் பலத்தைக் கொண்டு செய்யப்படுகிற தீர்மானங்கள் சிபார்சுகள் முதலியவற்றை, அதிகார பலத்தைக் கொண்டு விடுக்கிற உத்தரவுகளைக் காட்டிலும் கௌரவமாகவும் நல்லெண்ணத்துடனும், சம்பந்தப்பட்ட நாடுகள் வரவேற்கும். வரவேற்பதோடல்லாமல் நிச்சயம் அவைமீது நடவடிக்கை களும் எடுத்துக் கொள்ளும். உலக சமாதானத்திற்கு ஐக்கிய தேச தாபனமொன்றையே கருவியாகக் கருதிக்கொண்டிருக்கிறவர்களுடைய நம்பிக்கை இது. அஸெம்ப்ளியைத் தவிர்த்த மற்ற அங்கங்களுக்கு அங்கத்தினர் களைத் தெரிந்தெடுக்கிற அதிகாரம் அஸெம்ப்ளிக்கு உண்டு. இந்த அதிகாரம் ஒவ்வோர் அங்கத்திற்கும் ஒவ்வொரு விதமாக நிர்ணயிக் கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, பாதுகாப்புக் கவுன்சிலின் அங்கத்தினர் பதினோரு பேரில் ஆறுபேரையும், பொருளாதார சமுதாயக் கவுன்சில் அங்கத்தினர் பதினெட்டு பேரையும், சர்வதேச கோர்ட்டு நீதிபதிகள் பதினைந்து பேரையும், டிரட்டி கவுன்சில் அங்கத்தினரில் சிலரையும் அஸெம்ப்ளி தெரிந்தெடுக்கும். இன்னும் பாதுகாப்புக் கவுன்சிலினுடைய சிபார்சின் பேரில் தாபனத்தின் பொதுக்காரியதரிசியையும் அஸெம்ப்ளியே நியமிக்கும். இவற்றின் விவரங்களை, அந்தந்த அங்கங்களைப் பற்றிச் சொல்கிற அத்தியாயங்களின் கீழ் பார்க்க. அஸெம்ப்ளி முன்னர் ஆஜர்படுத்தப்படுகிற அல்லது வாதத் திற்கு வருகிற எந்த ஒரு பிரச்னையும் ஓட்டுக்கு விடப்பட்டே தீர்மானிக்கப்படும். அஸெம்ப்ளியின் ஒவ்வோர் அங்கத்தினருக்கும், அதாவது ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வோர் ஓட்டுத்தான் உண்டு. தீர்மானிக்கப்படவேண்டிய பிரச்னைகளை முக்கியமானவை யென்றும் மற்றவையென்றும் இரண்டு பிரிவாகப் பிரித்திருக்கிறார்கள். பின்வரும் பிரச்னைகள் முக்கியமானவை யென்று கருதப்பட்டிருக்கின்றன:- 1. சர்வதேச அமைதி, க்ஷேமம் இவைகளைப் பொறுத்த சிபார்சுகள். 2. பாதுகாப்புக் கவுன்சிலுக்கு அங்கத்தினர்களாக ஆறு பேரை- அதாவது நிரந்தரமல்லாத அங்கத்தினர்களை தெரிந்தெடுப்பது. 3. பொருளாதார - சமுதாயக் கவுன்சிலுக்கு அங்கத்தினர் களைத் தெரிந்தெடுப்பது. 4. டிரட்டி கவுன்சிலுக்கு அங்கத்தினர்களைத் தெரிந்தெடுப்பது. 5. ஐக்கிய தேச தாபனத்திற்குப் புதிய அங்கத்தினர்களைச் சேர்த்துக் கொள்வது. 6. அங்கத்தினர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் தற்காலிக மாக விலக்கி வைப்பது. 7. அங்கத்தினர்களை தாபனத்திலிருந்து அடியோடு விலக்கி விடுவது. 8. ஒரு நாட்டை மற்றொரு நாடு டிரட்டியாக இருந்து நிருவாகம் செய்கிறதல்லவா, அந்த நிருவாக முறை சம்பந்தமான பிரச்னைகள். 9. தாபனத்தின் வரவு செலவு திட்டத்தைப் பற்றிய பிரச்னைகள். இவை தவிர இன்னும் என்னென்ன பிரச்னைகள் முக்கிய மானவை யென்று கருதப்பட்ட வேண்டு மென்பதை, அஸெம்பளியே, பெரும்பாலான ஓட்டுகளின் மூலம் நிர்ணயித்துக் கொள்ளலாம். இந்த முக்கியமான பிரச்னைகள் சம்பந்தமாக, எந்த விதமான தீர்மானம் நிறைவேற்றப்படுவதா யிருந்தாலும், எந்த விதமான முடிவு செய்யப்படுவதா யிருந்தாலும், அதற்கு, அஸெம்ப்ளி கூட்டத்தில் ஆஜராயிருக்கப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு மடங்கு பேர் சாதகமாக ஓட்டுக் கொடுக்கவேண்டும். அதாவது, இந்த முக்கியமான பிரச்னை களைப் பொறுத்த மட்டில், பெரும்பான்மையோருடைய ஓட்டுகள் என்றால், ஆஜராயிருக்கிறவர்களில் மூன்றில் இரண்டு மடங்கு பேருடைய ஓட்டுகள் என்பதே அர்த்தம். இந்த முக்கிய பிரச்னைகளைத் தவிர மற்றப் பிரச்னைகள் யாவும், பெரும்பான்மை ஓட்டுகளினால் - அவைகளுக்கு மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மை வேண்டுமென்பது அவசிய மில்லை - தீர்மானிக்கப்படலாம். ஓட்டு போடுவது ரகசியமாகவே இருக்கும். அஸெம்ப்ளி கூடுவதற்கு முன்னர், அங்கு என்னென்ன விஷயங்கள் வாதத்திற்கு வருமென்பதைப் பற்றி, தாபனத்தின் பொதுக்காரியதரிசி, தற்காலிகமாக ஒரு நிகழ்ச்சி நிரல் (அஜெண்டா)1 தயாரிப்பார். அதில் பின்வரும் விஷயங்கள் அடங்கியிருக்கும்:- 1. தாபனத்தின் வருஷாந்த அறிக்கையைச் சமர்ப்பித்தல். (இது பொதுக் காரியதரிசியினால் தயாரிக்கப் படுவதாகும்.) 2. பாதுகாப்புக் கவுன்சில், பொருளாதார - சமுதாயக் கவுன்சில். டிரட்டி கவுன்சில், சர்வ தேச கோர்ட்டு, அஸெம்ப்ளியி னால் நியமிக்கப்பட்டிருக்கிற இதர சபைகள் ஆகிய இவற்றின் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல். 3. அஸெம்ப்ளியின் முந்தின கூட்டத்தில், என்னென்ன விஷயங்கள் ஆஜர் படுத்தப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருந்ததோ அந்த விஷயங்கள். 4. தாபனத்தின் மற்ற அங்கங்கள் ஆஜர் படுத்தும் விஷயங்கள். 5. தாபனத்தின் அங்கத்தினர்கள் ஆஜர் படுத்த விரும்பும் விஷயங்கள். 6. சென்ற வருஷத்து வரவு செலவு அறிக்கை, அடுத்த வருஷத்து வரவு செலவுத் திட்டம். 7. அஸெம்ப்ளியின் முன்னர் ஆஜர் படுத்த வேண்டுமென்று பொதுக்காரியதரிசி கருதுகிற இதர விஷயங்கள். அஸெம்ப்ளி கூட்டத்திற்குக் குறைந்த பட்சம் அறுபது நாட் களுக்கு முந்தி இந்தத் தற்காலிக நிகழ்ச்சி நிரல் எல்லா அங்கத்தினர் நாடுகளுக்கும் அனுப்பப் பெறும், இதன் மூலம், என்னென்ன விஷயங்கள் சேர்க்கப்படலா மென்று சொல்ல அங்கத்தினர் நாடுகளுக்குப் போதிய அவகாசம் கொடுக்கப்படுகிறது. கூட்டத்தின் ஆரம்பதினத்திற்கு இருபத்தைந்து நாட்கள் முந்தி வரை, இன்னின்ன விஷயங்கள் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவேண்டுமென்று சொல்லி அந்த விஷயங்களைக் குறித்து அனுப்ப அங்கத்தினர் நாடுகளுக்கு உரிமையுண்டு. ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் தன் பிரதிநிதிகளை அனுப்பு கிறபோது, அவர்கள், தன் சார்பாகப் பேச உரிமையுடையவர்கள், தகுதி யுடையவர்கள் என்று தெரிவிப்பதற்காகவும், எந்தக் கூட்டத்திற்கு மேற்படி பிரதிநிதிகள் அனுப்பப்படுகிறார்களோ அந்தக் கூட்டத்தின் பொறுப்பாளிகள், அவர்கள் நம்பிக்கை கொள்ளத்தக்க பிரதிநிதிகளென்று கருதி அவர்களைக் கண்ணியமாக நடத்துவதற்கு அனுகூலமாக இருக்கும் பொருட்டும், அவர்களிடம் அறிமுகப் பத்திரமொன்று கொடுத்தனுப்பும். பொதுவாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பிரதிநிதிகள் செல்கிறபோது, அவர்கள் இந்த அறிமுகப் பத்திரத்துடனேயே செல்வார்கள், இதற்கு ஆங்கிலத்தில் க்ரெடென்ஷியல்1 என்று பெயர். பிரதியொரு வருஷக் கூட்டத்தின் ஆரம்பத்திலும், விசேஷ காரணங்களுக்காகக் கூட்டப்படுகிற விசேஷக் கூட்டங்களின் ஆரம்பத்திலும், அஸெம்ப்ளியானது, பிரதிநிதிகளின் அறிமுகப் பத்திரங் களைப் பரிசீலனை செய்வதற்கென்று ஒரு கமிட்டியை நியமிக்கிறது. இந்தக் கமிட்டியானது, ஒவ்வொரு பிரதிநிதியினுடைய அறிமுகப் பத்திரத்தையும் பரிசீலனை செய்து எல்லாப் பிரதிநிதிகளும் சரியான பிரதிநிதிகள் தானா, சரியான முறையில் ஆஜராயிருக்கிறார்களா வென்று அஸெம்ப்ளிக்கு உடனே அறிவிக்கிறது. இதன் பிறகுதான் அங்கத்தினர்கள் அஸெம்ப்ளியின் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளப் பூரண உரிமை பெற்றவர்களாகிறார்கள். அஸெம்ப்ளி கூடுவதற்கு ஒரு வாரம் முந்தியே, பிரதிநிதிகளின் அறிமுகப் பத்திரங்கள், அந்தந்த நாட்டுத் தலைவராலோ அல்லது அந்நிய நாட்டு மந்திரியாலோ கையெழுத்திடப்பெற்று தாபனத்தின் பொதுக்காரியதரிசியிடம் வந்து சேர்ந்து விடவேண்டும். இந்த அறிமுகப் பத்திரங்களோடு எந்தெந்த கூட்டத்திற்கு யாரார் பிரதிநிதிகள் என்ற விவரங்களும் அனுப்பப்பெறவேண்டும், பிரதியொரு நாடும் ஐந்து பேரடங்கிய ஒரு பிரதிநிதிக் கோஷ்டியை அனுப்பலாம். இந்தக் கோஷ்டிக்கு, ஐவரில் ஒருவர் தலைவராயிருப்பார். இந்தப் பிரதிநிதிகள் அந்தந்த நாட்டின் மந்திரிச் சபையினால் நியமிக்கப் படுகிறார்கள். இவர்கள், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்லும் தூதர்கள் மாதிரி, தூதர்களுக்கு எப்படி அறிமுகப் பத்திரங்கள் அளிப்பதுண்டோ அப்படியே இவர்களுக்கும் அறிமுகப் பத்திரங்கள் அளிக்கப்படுகின்றன. எப்படி தூதர்கள், அரசாங்கப் பிரதிநிதிகளாக மட்டுமில்லாமல், அந்தந்த நாட்டில் வசிக்கும் ஜனங்களுடைய மேலான தன்மைகளின் பிரதிநிதி களாகவுமிருக்கிறார்களோ அதுபோல ஐக்கிய தேச தாபனத்திற்கு அனுப்பப்படும் பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். உண்மையிலேயே இருக்கிறார்களா இல்லையா என்பது வேறு கேள்வி; இருக்க வேண்டு மென்பது நியதி; இருப்பார்களென்பது நம்பிக்கை. அஸெம்ப்ளி கூட்டத்தின் ஆரம்பத்தில், முந்திய கூட்டத்தின் தலைவரே தலைவரா யிருப்பார். இவருடைய தலைமையின் கீழ்தான் புதிய தலைவர் தெரிந்தெடுக்கப்படுவார். இப்படித் தெரிந்தெடுக்கப்படுகிற தலைவர், வந்திருக்கிற பிரதிநிதிக் கோஷ்டிகளில் ஏதோ ஓரு கோஷ்டியின் தலைவரா யிருக்கவேண்டுமென்பது ஒரு சம்பிரதாயம். இந்தத் தலைவரைத் தவிர, உபதலைவர்களென்று ஏழு பேரை அஸெம்ப்ளி நியமிக்கிறது. தலைவராகத் தெரிந்தெடுக்கப் படுகிறவருக்கு அவருடைய நாட்டின் பிரதிநிதியாக இருந்து ஓட்டுக் கொடுக்கும் உரிமை கிடையாது. அஸெம்ப்ளியின் ஆலோசனைக்கென்று எத்தனையோ தீர்மானங்கள் கொண்டுவரப்படுகின்றன; எத்தனையோ திட்டங்கள் ஆஜர் படுத்தப்படுகின்றன; எத்தனையோ கோரிக்கைகள் கிளத்தப்படுகின்றன; இவைகளையெல்லாம் அஃது எப்படி பைசல் செய்கிறது? ஒவ்வொன்றையும், தானே, அதாவது அஸெம்ப்ளியின் எல்லா அங்கத்தினர்களும் சேர்ந்த பொதுக்கூட்டமே பைசல் செய்வதென்றால் அது முடியாத காரியம். வாதப் பிரதிவாதங்கள் அதிகரிக்கும். இதனால் காலம் வீணாகும். தவிர, எந்த ஒரு பிரச்னையையும் ஆழ்ந்து சர்ச்சை செய்ய முடியாது. இவைகளையெல்லாம் தவிர்க்கும் பொருட்டும், உடனுக்குடன் பிரச்னைகளைப் பைசல் செய்ய வேண்டியும், அஸெம்ப்ளியானது, விஷயவாரியான சில கமிட்டிகளைத் தனக்குத் துணையாக நியமித்துக் கொள்ளுகிறது. பிரதியொரு வருஷத்து அஸெம்ப்ளி கூட்டத்தின் போதும், இந்தக் கமிட்டிகள் புதிதாக நியமிக்கப்பட்டு, அந்த வருஷத்துக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் காணப்பட்டிருக்கிற விஷயங்கள் யாவும் பைசலாவதற்குத் துணை செய்கின்றன. இந்தக் கமிட்டிகள், தங்களிடம் ஒப்படைக்கப்படும் விஷயங் களை நன்கு பரிசீலனை செய்து இவை இன்னபடி பைசல் செய்யப்படலாமென்று அஸெம்ப்ளிக்கு யோசனையாகவோ சிபார்சாகவோ தெரிவிக்கின்றன. இந்த யோசனைகளை அல்லது சிபார்சுகளை அனுசரித்து அஸெம்ப்ளியானது தன் பொதுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றுகின்றது. அஸெம்ப்ளியின் வேலையைச் சுலபப்படுத்திக் கொடுக்கிற இந்தக் கமிட்டிகள் என்னென்னவென்று பார்ப்போம். 1. அரசியல் - பந்தோபது கமிட்டி: 1அஸெம்ப்ளிக்கு புதிய அங்கத்தினர்களைச் சேர்த்துக் கொள்ளுதல், இருக்கப்பட்ட அங்கத்தினர்களைத் தற்காலிகமாக விலக்கி வைத்தல் அல்லது நிரந்தரமாக விலக்கிவிடுதல், ஆயுதப் பரிகரணம், யுத்த தளவாடங்கள் உபயோகிக்கப்படுவதை ஒழுங்கு படுத்துதல், தேசங்களுக்கிடையே அரசியல் ஒத்துழைப்பை வளர்த்தல், பொதுவாக சமாதானத்தையும் பந்தோபதையும் ஏற்படுத்தக்கூடிய பிரச்னைகள் ஆகிய இவை களை இந்தக் கமிட்டி பரிசீலனை செய்யும். 2. பொருளாதார பண வரவு செலவு கமிட்டி:2 பொருளாதாரத் துறையில் தேசங்களுக்கிடையே ஒத்துழைப்பை வளர்க்கக்கூடிய பிரச்னைகள், ஜனங்களுடைய வாழ்க்கை அந்ததை உயர்த்துதல். எல்லோருக்கும் வேலை கிடைக்கும்படி செய்தல், பொருளாதார - சமுதாயக் கவுன்சிலின் வேலைகள் உள்பட பொதுவாக எல்லாப் பொருளாதார, பணவரவு செலவுப் பிரச்னைகளை இந்தக் கமிட்டி பரிசீலனை செய்யும். 3. சமுதாய, ஜீவகாருண்ய, கலாசார கமிட்டி: 1 சமுதாய நலன், கல்வி அபிவிருத்தி, கலாச்சார முன்னேற்றம், சுகாதாரம் ஆகிய இவை சம்பந்தமான பிரச்னைகளையும், இதர ஜீவகாருண்ய சம்பந்தமான பிரச்னைகளையும் இன்னும் உலகத்துச் சர்வ ஜனங்களும், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அடையவேண்டிய உரிமைகளையும் மற்ற ஜீவாதாரமான உரிமைகளையும் அவர்கள் அடையும்படி செய்கிற விஷயத்தில் எல்லாத் தேசங்களும் எந்தெந்த அமிசங்களில் ஒத்துழைக்க வேண்டுமென்பதன் சம்பந்தமான பிரச்னைகளையும் இந்தக் கமிட்டி பரிசீலனை செய்யும். 4. தர்மகர்த்தா முறையைப் பற்றிய கமிட்டி:2 ஒரு நாட்டை மற்றொரு நாடு, தர்மகர்த்தாவாக இருந்து, அதாவது டிரட்டியாக இருந்து நிருவாக மேற்பார்வை செய்கிறதல்லவா, அது சம்பந்தமான பிரச்னைகளையும், சுய அரசு இல்லாத நாடுகள் சம்பந்தமான பிரச்னைகளையும் இந்தக் கமிட்டி பரிசீலனை செய்யும். 5. நிருவாக வரவு செலவுக் கமிட்டி: 3 ஐக்கிய தேச தாபனத் தின் வரவு செலவுத் திட்டம், இந்த தாபனத்திற்கு அங்கத்தினர் நாடுகள் செலுத்தவேண்டிய சந்தாத் தொகை, பொருளாதார - சமுதாயக் கவுன்சிலோடு இணைக்கப் பட்டிருக்கும் விசேஷ தாபனங்களின் வரவு செலவுத் திட்டங்கள் ஆகிய இவை சம்பந்தமான பிரச்னைகளையும், ஐக்கிய தேச தாபனத்தின் காரியாலயத்தின் சம்பந்தமான பிரச்னை களையும் இந்தக் கமிட்டி கவனிக்கும். 6. சட்ட சம்பந்தமான கமிட்டி:4 ஐக்கிய தேச சாஸனத்தின் ஷரத்துக்களுக்கு ஏதேனும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால் அவற்றின் சட்ட நுணுக்கங்களைப் பற்றியும், சர்வதேச கோர்ட்டானது சட்ட சம்பந்தமாக ஏதேனும் ஆலோசனை கேட்குமாயின் அதைப் பற்றியும், இங்ஙனமே ஐக்கிய தேச தாபனத்தின் மற்ற அங்கங்கள், சட்ட சம்பந்தமாக அபிப்பிராயங்கள் கோருமாயின் அவைகளைப் பற்றியும், சர்வதேச சட்டத்தை எந்தெந்த வகையில் ஒழுங்கு படுத்தலாம், அபிவிருத்தி செய்யலாம் என்பதைப்பற்றி வரும் யோசனைகளையும் இந்தக் கமிட்டி ஆராயும். அஸெம்ப்ளியின் கூட்டத்திற்கு வந்திருக்கிற பிரதிநிதிக் கோஷ்டி ஒவ்வொன்றுக்கும், இந்த ஆறு கமிட்டிகளிலும் அங்கத்தினராயிருக்க இடம் அளிக்கப்படுகிறது. இதனால் எல்லா அங்கத்தினர் நாடுகளும், அஸெம்ப்ளியின் ஆலோசனைக்கு வருகிற விஷயங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கும், அவைகளைப் பற்றித் தீவிரமாக ஆலோசித்து முடிவுகள் செய்து கொள்வதற்கும் அவகாசமும் சந்தர்ப்பமும் உண்டா கின்றன. இந்த ஒவ்வொரு கமிட்டியும், தன்னுடைய தலைவரையும் உபதலைவரையும் தானே தெரிந்தெடுத்துக் கொள்கிறது. இந்த ஆறு கமிட்டிகளைத் தவிர வேறு இரண்டு கமிட்டிகள் தெரிந்தெடுக்கப்படுகின்றன. இவற்றிலே ஒன்று, பிரதிநிதிகளின் அறிமுகப் பத்திரங்களைப் பரிசீலனை செய்கிற கமிட்டி.1 இதைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். மற்றொன்று பொதுக் கமிட்டி.2 இதில், அஸெம்ப்ளியின் தலைவர், உபதலைவர் ஏழு பேர், மேலே சொன்ன ஆறு கமிட்டிகளின் தலைவர்கள் ஆறுபேர், ஆக பதினான்கு பேர் அங்கத்தினர்கள். இந்தக் கமிட்டியானது, அஸெம்ப்ளியின் ஆலோசனைக்கு வரும் எல்லா விஷயங்களையும் பரிசிலனை செய்கிறது. அஸெம்ப்ளியின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவேண்டிய விஷயங்கள் இருபத்தைந்து நாட்கள் முந்திவரை அனுப்பப்படலாமென்று ஒரு கெடுவு வைக்கப்பட்டிருக்கிறதல்லவா, அந்தக் கெடுவு தப்பி வருகிற விஷயங்களையும் இந்தப் பொதுக்கமிட்டி ஆலோசித்து நிகழ்ச்சி நிரலில் சேர்க்கலாமா கூடாதா என்று தீர்மானிக்கும், இன்னும், அஸெம்ப்ளியின் நடவடிக்கைகளை ஒழுங்காகவும், விதிகளை அனுசரித்தும் நடத்திச் செல்ல தலைவருக்குத் துணையாக இந்தக் கமிட்டி இருக்கும். இவை தவிர, தேவையானபோது, அதாவது விசேஷமான விஷயம் ஏதேனும் ஆலோசனைக்கு வருகிறபோது, அந்த விஷயத்தைப்பற்றி மட்டும் பரிசீலனை செய்வதற் கென்று தற்காலிகமான சில கமிட்டிகளை அஸெம்ப்ளியானது நியமித்துக்கொள்கிறது. உதாரணமாக, ஐக்கிய தேச தாபனத்தின் தலைமை தானமானது எங்கு அமைப்பது என்பதைப் பற்றிப் பரிசீலனை செய்ய ஒரு விசேஷக் கமிட்டி நியமிக்கப்பட்டது. இங்ஙனமே, மறைந்துபோன சர்வதேச சங்கத்தின் தளவாட சாமான்கள், ததவேஜுகள் முதலியவைகளை ஐக்கியதேச தாபனத்திற்கு ஒழுங்காக மாற்றிக் கொடுப்பதைக் கவனிக்க ஒரு விசேஷக் கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்த மாதிரியான கமிட்டிகள், தங்களுக்கிடப்பட்ட வேலையை முடித்துக் கொடுத்துவிட்டுக் கலைந்து விடுகின்றன. ஐக்கிய தேச தாபனத்தை நடத்திச் செல்ல பணம் வேண்டு மல்லவா? இதற்கு, தாபனத்தில் அங்கத்தினராயுள்ள ஒவ்வொரு நாடும், சந்தாவாக ஒரு தொகையைப் பிரதி வருஷமும் கொடுக்க வேண்டுமென்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்தந்த நாட்டின் பண நிலைமையை அனுசரித்தே இந்தச் சந்தாத் தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தாபனத்தின் ஆரம்பச் செலவுக் கென்று எல்லா நாடுகளும் சேர்ந்து இரண்டரைகோடி டாலர் முன் பணமாகக் கொடுத்திருக்கின்றன. அந்தந்த நாடும் வருஷந்தோறும் செலுத்துகின்ற சந்தாத் தொகையிலிருந்து, இந்தத் தொகை, வருஷத்திற்கு இவ்வளவு என்று கழித்துக் கொள்ளப்படுகிறது. தேசங்கள் செலுத்தும் சந்தாத் தொகை வருஷந்தோறும் வேறு படுகிறது. ஏனென்றால் பிரதி வருஷமும் புதிய அங்கத்தினர்கள் சேர்ந்துகொண்டு வருகிறார்களல்லவா? தாபனத்தின் மொத்தச் செலவை எல்லாத் தேசங்களுக்கும் ஈவு செய்கிறபோது, தேசங்களின் எண்ணிக்கைக்குத் தக்கபடி சந்தாத்தொகை வித்தியாசப் படுகிறது. 4. பாதுகாப்புக் கவுன்சில் ஐக்கிய தேச தாபனத்தின் பிரதான உறுப்பாக ஜெனரல் அஸெம்ப்ளி இருந்த போதிலும், அந்த உறுப்பை இயக்குவது, அந்த உறுப்பின் ஜீவ சக்தி போல் இருப்பது பந்தோபதுக் கவுன்சில் என்று அழைக்கப்படுகிற பாதுகாப்புக் கவுன்சில்தான், இதனைப் பொதுவாகக் கவுன்சில் என்றே இந்த அத்தியாயத்திலிருந்து அழைப்போம். ஐக்கிய தேச தாபனத்தின் அச்சாணி போன்றது இந்தக் கவுன்சில். உலகத்திலுள்ள நாடுகள் பரபரம் நல்லுறவு பூண்டு வாழ்வதற்குத் துணையாயிருக்கிறது இந்தக் கவுன்சில். அதே சமயத்தில் சமாதானத் திற்குப் பங்கம் விளைவிக்கிற நாட்டை, தன்னிடமுள்ள சக்திகளனைத் தையும் பிரயோகித்து அடக்கிவிடுகிற அதிகாரமும் இதற்கு இருக்கிறது. எனவே இந்தக் கவுன்சில், சமாதான தூதனாகவும் உலகத்துக் காவற்கார னாகவும் ஒரே சமயத்தில் இருந்து தன் கடமைகளைச் செய்கிறது. உலகத்தில் சமாதானம் நிலவுவதோ, சண்டை உண்டாவதோ, இரண்டும், இந்தக் கவுன்சிலின் வெற்றி தோல்விகளைப் பொறுத்திருக்கிறது. எனவே இது செய்கிற முடிவுகளையும் எடுத்துக்கொள்கிற நடவடிக்கைகளையுமே உலகத்திலுள்ள நாடுகள் யாவும் ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொண்டு வருகின்றன. பாதுகாப்புக் கவுன்சில் மொத்தம் பதினோரு அங்கத்தினர்களைக் கொண்டது. இவர்களில் ஐவர் நிரந்தரஅங்கத்தினர்கள்; ஆறு பேர் நிரந்தர மல்லாத அங்கத்தினர்கள். அமெரிக்கா, பிரிட்டன், ருஷ்யா, பிரான், சீனா ஆகிய ஐந்து வல்லரசுகளும் நிரந்தர அங்கத்தினர்கள். இவர்களை ஐம்பெருங்குழு என்று சொல்லலாம். இந்த ஐம்பெருங் குழுவுக்குள்ளும் முப்பெருங் குழு ஒன்று உண்டு. அதுதான் அமெரிக்கா, பிரிட்டன், ருஷ்யா ஆகிய மூன்றும் சேர்ந்த சேர்க்கை. பொதுவாக இந்த ஐம்பெருங் குழுதான், சிறப்பாக முப் பெருங் குழுதான், ஐக்கிய தேச தாபனத்தை ஆட்டி வைக்கிறதென்பது, அந்த தாபனத்தைப் பற்றி அதிக நம்பிக்கை கொள்ளாதவர்களுடைய கருத்து. நிரந்தர அங்கத்தினர்களைப் பொறுத்த மட்டில் தேர்தல் முதலிய எந்த விதமான சம்பிரதாயங்களும் கிடையாது. இவர்கள் சாசுவதமாக இருக்கப்பட்டவர்களல்லவா? மற்றும், அமைதிக்குப் பங்கம் ஏற்படுகிற போழ்து, கவுன்சிலானது ஏதேனும் தீவிர நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுமானால், அதாவது சாமான் பகிஷ்காரம், போக்குவரத்துத் தடை முதலியவற்றை ஏற்படுத்துமானால், அந்த நடவடிக்கைகள் இந்த நிரந்தர அங்கத்தினர்களைப் பாதிக்காது. அதாவது கவுன்சிலானது, தனது நிரந்தர அங்கத்தினர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுத்துக்கொள்ளாது. தீவிர நடவடிக்கைகள் என்று சொன்னால், இந்த ஐந்து வல்லரசுகளைத் தவிர்த்த மற்ற நாடுகளின் மீது எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்பதே தாத்பரியம். ஏனென்றால், இந்த ஐந்து வல்லரசுகள் தான் ஐக்கிய தேச தாபனத்தைத் தோற்றுவித்தன. இவை, தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டால் தாபனமே குலைந்து போய் விடும். அப்படிக் குலைந்து போக இவை விடமாட்டா. அதற்காக இவை ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக் கொள்ளாது. இதனால் இவைமீது எந்த விதமான நடவடிக்கையும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசிய மில்லை. இந்த அடிப்படைக் கருத்தின் மீதுதான் மேற்சொன்ன ஐந்து வல்லரசுகளும் தங்களை நிரந்தர அங்கத்தினர்களாக நியமித்துக் கொண்டிருக் கின்றன. நிரந்தரமல்லாத அங்கத்தினர் ஆறுபேர் என்று சொன்னோ மல்லவா, இவர்கள் இரண்டு வருஷத்திற்கொருமுறை தெரிந்தெடுக்கப் படுகிறவர்கள். ஆனால் முதல் தேர்தலின்போது மட்டும் மூன்று பேர் ஒரு வருஷ காலத்திற்குத் தெரிந்தெடுக்கப்படுவர். இந்த ஒரு வருஷ கெடு முடிந்தவுடன் அந்த மூன்று பேருடைய தானங்கள் காலியாகிவிடும். அவைகளுக்கு, இரண்டாவது வருஷத் தொடக்கத்தில் தேர்தல் நடை பெறும். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற மூவரும், முறைப்படி இரண்டு வருஷ காலத்திற்கு அங்கத்தினர்களாயிருப்பார்கள். முதல் தேர்தலின் போது இரண்டு வருஷ காலத்திற்குத் தெரிந்தெடுக்கப்பட்டவர் மூன்று பேர் இருக்கிறார்களல்லவா, இவர்களுடைய தானங்கள் இரண்டாவது வருஷக் கெடுவு முடிந்தவுடன் காலியாகிவிடும். மூன்றாவது வருஷத் தொடக்கத்தில் இந்த மூன்று தாபனங்களுக்கு மறுபடியும் தேர்தல் நடைபெறும். இப்படியாக வருஷந்தோறும் தேர்தல் நடைபெற்று புதிய அங்கத்தினர்கள் வருவதற்குச் சந்தர்ப்பம் உண்டாகிறது. உடனுக்குடன், அதாவது தொடர்ந்தாற்போல் வருஷா வருஷம் ஒருவரே அங்கத்தினர் தேர்தலுக்கு நிற்கக் கூடாதென்பது ஒரு நியதி. கவுன்சில் செய்கிற எந்த ஒரு முடிவும், தாபனத்தின் எல்லா அங்கத்தினர்களையும் கட்டுப்படுத்துவதாகும். அஸெம்ப்ளிக்கும் கவுன்சிலுக்குமுள்ள வித்தியாசம் இங்குதான் இருக்கின்றது. அஸெம்ப்ளி நிறைவேற்றுகிற தீர்மானங்கள் யாவும் சிபார்சு ரூபமாகவே இருக்கின்றன. இந்தச் சிபார்சுகளை, ஏற்றுக்கொள்ளவோ, நிராகரிக்கவோ அங்கத்தினர் களுக்கு உரிமையுண்டு. ஆனால் கவுன்சிலின் தீர்மானங்களோ, எல்லாரையும், கட்டுப்படுத்து வனவாய் இருக்கின்றன. கவுன்சில் வருஷத்திற்கு இத்தனை தடவை, அல்லது மாதத்திற்கு இத்தனை தடவை கூடவேண்டுமென்பதில்லை. அஃது எப்பொழுதும் கூடியிருப்பதாகவே கருத்து. அதாவது கவுன்சிலின் அங்கத்தினர் பதினோரு பேரும் எப்பொழுதும் ஐக்கிய தேச தாபனத்தின் தலைமை தானத்தில் இருந்து கொண்டிருப்பார்கள். இன்னும் விளக்கிச் சொல்ல வேண்டுமானால், அங்கத்தினராயுள்ள பதினோரு நாடுகளும், தங்கள் பிரதிநிதிகளை சாசுவதமாகத் தலைமை தானத்தில் இருக்கச் செய்யும். இவர்கள், தேவையான போதும், அவசியத்தை முன்னிட்டும் அவ்வப் பொழுது கூடுவார்கள். இவர்களுடைய கூட்டங்கள் பெரும்பாலும் ஐக்கிய தேச தாபனத்தின் தலைமை தானத்திலேயே நடைபெறும். ஆனால் அங்கேதான் நடைபெற வேண்டுமென்ற கட்டாயமில்லை. எங்கெங்கே அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டிருக்கிறதோ, எங்கெங்கே தாங்கள் சென்றால் அமைதிக்குப் பங்கம் எற்படாதென்று தோன்றுகிறதோ அங்கெல்லாம் இவர்கள் கூட்டமாகச் சென்று தக்க நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வார்கள். கவுன்சிலின் ஒவ்வோர் அங்கத்தினருக்கும் ஒவ்வோர் ஓட்டு உண்டு. இப்படியாக மொத்தம் பதினோரு ஓட்டுகள் கவுன்சிலின் முன்னர் கொண்டுவரப்படுகிற எந்த ஒரு பிரச்னையைப் பற்றி முடிவு செய்யப்பட வேண்டுமானாலும் அதற்குச் சாதகமான ஓட்டுகள் ஏழு இருக்க வேண்டும். அதாவது ஒரு தீர்மானத்திற்கு ஏழு பேர் சாதகமாக ஓட்டுக் கொடுத்தால் தான் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாகக் கருதப்படும்; அதன் மீது நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படும். எல்லாத் தீர்மானங்களுக்கும் ஏற்பட்ட பொதுவான நியதி இது. ஆனால் இதில் ஒரு வித்தியாசமுண்டு. கவுன்சிலுக்கென்று சில காரியக்கிரமங்கள் வகுக்கப்பட்டிருக் கின்றன வல்லவா, அந்தக் காரியங்களைப் பொறுத்த தீர்மானங்கள் மீது ஓட்டெடுக்கிற போது, மேற்படி ஏழு ஓட்டுகளில் ஓர் ஓட்டேனும் நிரந்தர அங்கத்தினருடைய ஓட்டாயிருக்க வேண்டும். நிரந்தர அங்கத்தினருடைய இந்த ஓர் ஓட்டு இல்லாவிட்டால் அந்தத் தீர்மானம் செல்லுபடியாகாது. பதினோருபேர் அடங்கிய ஒரு சபையில், ஆறு பேர் சேர்ந்து ஓட்டுக் கொடுத்தாலே போதுமே, அந்த ஆறு ஓட்டுகளே பெரும்பான்மையான ஓட்டுகளாகக் கருதப்படலாமே, அப்படியிருக்க, ஏழுபேர் என்று ஏன் நிர்ணயிக்கவேண்டும் என்று வாசகர்கள் கேட்கலாம். இது நியாயமான கேள்வி. ஆனால் கவுன்சிலின் அமைப்பைச் சிறிது கூர்ந்து கவனித்தால் இந்த ஏற்பாட்டுக்குக் காரணம் விளங்கும். கவுன்சிலின் பதினோரு அங்கத்தினர்களில் ஐந்து பேர் நிரந்தர அங்கத்தினர்கள், ஆறுபேர் நிரந்தரமல்லாத அங்கத்தினர்களல்லவா? ஒரு தீர்மானத்தின் மீது ஆறுபேரே ஓட்டுக் கொடுத்தால் போதும், அந்த ஆறு ஓட்டுகளே பெரும்பான்மையான ஓட்டுகளாகக் கருதப்படலாம் என்று வரையறுத்துவிட்டால், நிரந்தர மல்லாத அங்கத்தினர் ஆறு பேரும் சேர்ந்து, எந்த ஒரு தீர்மானத்தையும் அங்கீகரிக்கவோ நிராகரிக்கவோ செய்யலாம். அப்படிச்செய்துவிட்டால், நிரந்தர அங்கத்தினரான ஐவருடைய நிலைமை என்னாவது? அவர்கள் எப்பொழுதுமே சிறு பான்மையோராக இருக்கவேண்டி இருக்கும். இந்த நிலைமை ஏற்படா மலிருக்கும் பொருட்டே, பெரும் பான்மையான ஓட்டுகள் ஏழு என்றும், அந்த ஏழு ஓட்டுகளில் ஓர் ஓட்டு நிரந்தர அங்கத்தினருடைய ஓட்டாயிருக்கவேண்டுமென்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. கவுன்சிலின் காரியக் கிரமங்களுக்குப் புறம்பான பிரச்னைகள், அதாவது கவுன்சிலின் சமரஸ முயற்சிகளைப் புறக்கணித்து வருகின்ற, அல்லது ஐக்கிய தேச தாபனத்தின் நோக்கம் நிறைவேறாமற் செய்து வருகின்ற ஒரு நாட்டின் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளலாமென்பது போன்ற எத்தனையோ விசேஷமான பிரச்னைகள் விசேஷமான சந்தர்ப்பங்களில் எழலா மல்லவா, அந்த மாதிரியான பிரச்னைகள் மீது ஓட்டெடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால், நிரந்தர அங்கத்தினர் ஐவருடைய ஓட்டுகளும் சேர்ந்திருக்கவேண்டும். ஐவருடைய ஓட்டுகளில் ஒருவருடைய ஓட்டு குறைந்தாலும், கொண்டு வரப் படுகிற பிரச்னையின் மீது எந்த விதமான முடிவும் செய்ய முடியாது. ஆக, நிரந்தர அங்கத்தினர் ஐவரில் ஒவ்வொரு வரும், தமது ஓர் ஓட்டின் மூலமாக, கவுன்சில் முன்னர் ஆஜர் படுத்தப் படுகின்ற காரியக் கிரமங்களை யொட்டிய பிரச்னைகளா யிருந்தாலும் சரி, காரியக் கிரமங்களுக்குப் புறம்பான விசேஷ விஷயங்களா யிருந்தாலும் சரி, எந்த ஒரு பிரச்னையையும் அங்கீகரிக்கவும் செய்யலாம்; நிராகரிக்கவும் செய்யலாம்; நிரந்தர அங்கத்தினர்களுக்கிருக்கிற இந்த விசேஷ ஓட்டுரிமையை ரத்து அதிகாரம் என்று அழைப்பர்.1 பாதுகாப்புக் கவுன்சில், தனக்கு உதவியாக, தற்போது, இரண்டு கமிட்டிகளை நியமித்துக் கொண்டிருக்கிறது. ஒன்று, ராணுவ உத்தியோகதர்கள் கமிட்டி;1 மற்றொன்று, அணுச்சக்திக் கமிஷன்.2 இவை தவிர, தன்னுடைய தேவையையும் சௌகரியத்தையும் அனுசரித்து வேறு கமிட்டிகளை நியமித்துக் கொள்ள கவுன்சிலுக்கு அதிகாரமுண்டு. ராணுவ சம்பந்தமான சகல விஷயங்களைப் பற்றியும் கவுன்சிலுக்கு ஆலோசனை சொல்வது ராணுவ உத்தியோகதர்கள் கமிட்டி. கவுன்சிலின் நிரந்தர அங்கத்தினர்களான ஐந்து வல்லரசுகளின் உயர்தர ராணுவ உத்தியோகதர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் இதில் அங்கத்தினர்கள். ஆகாயப்படை, கடற்படை, தரைப்படை ஆகிய மூன்று படைகளைச் சேர்ந்தவர்களும் இதில் இருப்பார்கள். ஐக்கிய தேச சாஸன வாக்கியத்தின்படி, சர்வதேச அமைதியையும் க்ஷேமத்தையும் நிலைபெறச் செய்வதற்காக, பாதுகாப்புக் கவுன்சிலுக்கு ராணுவ சம்பந் தமான என்னென்ன தேவைகள் உண்டோ அந்தத் தேவைகளில் ஆலோசனை சொல்லவும், உதவி செய்யவும், கவுன்சிலின் ஆதீனத்தில் ஒப்படைக்கப் பட்டிருக்கும் ராணுவத்தை வேலை வாங்கவும், உத்தர விடவும், யுத்த தளவாடங்களை ஒரு வரையறைக்குட்படுத்தவும், ஆயுதப் பரிகரணத்திற்கு வழி கோலவும் இந்த ராணுவ உத்தியோகதர்கள் கமிட்டி நிறுவப் பட்டிருக்கிறது. சமாதானத்திற்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய முறையில் எந்த ஒரு நாடேனும் நடந்து கொண்டால், அந்த நாட்டின் மீது, கவுன்சிலின் உத்தரவுப் படி, இந்த ராணுவக் கமிட்டியானது, தக்க ராணுவ நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளும். இந்தக் கமிட்டியானது, தனது வேலைகளை ஒழுங்காகச் செய்வதற்கு, எந்தச் சந்தர்ப்பத்திலேனும், நிரந்தரமல்லாத அங்கத்தினர் நாட்டினுடைய ஆலோசனையோ உதவியோ தேவையா யிருக்குமென்று கருதினால், அப்பொழுது அந்த நாட்டை, கமிட்டியின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுமாறு அழைக்கலாம். இன்னும் எந்த தலத்தில் அமைதிக்குப் பங்கம் உண்டாகிறதோ அந்த தலத்திலேயே இருந்துகொண்டு நிலைமையைச் சமாளிக்க தலக் கமிட்டி யொன்றை நியமித்து அதன் ஆலோசனையை அனுசரித்தும் ஒத்துழைப்பைப் பெற்றும் தேவையான நடவடிக்கைகள் எடுத்தக் கொள்ளலாம். ஐக்கிய தேச தாபனத்தில் அங்கத்தினராயுள்ள பிரதி யொரு நாடும், பாதுகாப்புக் கவுன்சிலுக்குத் தேவைப்படுகிறபோது, தனது ராணுவ பலத்தை அதன் வசம் ஒப்படைக்கவும், துருப்புகளின் போக்குவரத்துக்கு அனுமதி யளித்தல் முதலிய சகல விதமான உதவிகளைச் செய்யவும், ஐக்கிய தேச சாஸனத்தின்படி கடமைப் பட்டிருக்கிறது. எந்த அளவுக்கு ராணுவ உதவி தேவை, என்ன வகை ராணுவம் தேவை, எங்கே தேவை என்பன போன்ற எல்லா விவரங்களுக்கும், சம்பந்தப்பட்ட நாட்டுடன் பாதுகாப்புக் கவுன்சில் ஓர் ஏற்பாடு செய்து கொள்ளும். ராணுவக் கமிட்டிக்கு இரண்டுவிதமான கடமைகள் உண்டு. மேலெழுந்த வாரியாகப் பார்க்கிறபோது, இவை முரண்பட்ட கடமை களாகத் தோன்றும். ஒன்று, தன்வசத்திலே இருக்கும் சர்வதேசப் படை களை பலப்படுத்தி வைத்துக் கொண்டிருப்பது; மற்றொன்று, ஆயுதப் பரிகரணத்தை லட்சியமாகக் கொண்டு, சர்வதேசங்களின் ஆயுத பலத்தை ஒரு வரையறைக்குட்படுத்திக் கொண்டு செல்வது. ஆனால் சிறிது கூர்ந்து கவனித்தோமானால், இந்த இரண்டு கடமைகளும் முரண்பட்டவையல்ல, ஒரே சமயத்தில் செய்து கொண்டு போகப்பட வேண்டியவைதான் என்பது விளங்கும். பரிபூரணமான ஆயுதப் பரிகரணம் ஏற்படாத வரையில், உலகத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்து கொண்டு தானிருக்கும். அவற்றை அடக்கி, சமாதானத்தை நிலைநாட்ட ராணுவ பலம் இன்றியமையாத தாகவே இருக்கிறது. அடுத்தது அணுச் சக்திக் கமிஷன். 1945-ஆம் வருஷம் முற்பகுதியில் இரண்டு அணு குண்டுகள் ஜப்பானின் இரண்டு நகரங்களை அழித்து விட்டன என்பதும், ஜப்பான் சரணடைவதற்கு இந்தச் சம்பவம் ஒரு முக்கிய காரணமாயிருந்ததென்பதும் வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். இந்த அணு குண்டுகள் தயாரிக்கப்படுவதற்குச் சிறிது காலத்திற்கு முந்திதான் அணுச்சக்தி கண்டு பிடிக்கப்பட்டது. இந்த நூதன சிருஷ்டியை துர்விநியோகப் படுத்தினால் பயங்கரமான விளைவுகள் உண்டாகு மென்பதை, மேலே சொன்ன ஜப்பானிய நகரங்கள் இரண்டும் அழிபட்ட தற்குப் பிறகு உலகத்து விஞ்ஞானிகளும் ராஜதந்திரிகளும் நன்கு தெரிந்து கொண்டார்கள். மற்றும் இந்தச் சக்தியை நல்வழிக்கும் உபயோகப் படுத்த முடியுமென்றும், அப்படி உபயோகப் படுத்தினால் பல நன்மைகள் உண்டாகுமென்றும் அறிந்துகொண்டிருந்தார்கள். இதனால் இந்த அணுச்சக்தியை ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்படுத்த வேண்டியது அவசிய மென்றும், இந்தப் பொறுப்பை உலகப் பொதுவான ஒரு தாபனத்திடம் ஒப்படைப்பதென்றும், அமெரிக்கா, பிரிட்டன், ருஷ்யா ஆகிய மூன்று வல்லரசுகளும் (1945-ஆம் வருஷம் டிசம்பர் மாதம்) தீர்மானித்தன. இந்தத் தீர்மானத்தின் விளைவாகவே மேலே சொன்ன அணுச் சக்திக் கமிஷன் 1946-ஆம் வருஷம் ஜனவரி மாதம் முதன்முதலாக அமைக்கப்பட்டது. ஐக்கிய தேச தாபனமானது, இந்தக் கமிஷன், உலக சமாதானத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிற பாதுகாப்புக் கவுன்சிலினுடைய நிருவாகத்தின்கீழ் இருக்கவேண்டுமென்று தீர்மானித்தது. இந்த அணுச் சக்திக் கமிஷனில், பாதுகாப்புக் கவுன்சிலின் பதினோரு அங்கத்தினர்களும் கானடாவும் அங்கத்தினர்களாயிருப்பார்கள். அணுச் சக்தியின் உற்பத்தி சம்பந்தமான ரகசியங்கள், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளைத் தவிர கானடாவுக்கும் தெரிந்திருப்பதனால், அந்த நாடும் இந்தக் கமிஷனில் அங்கத்தினராகச்சேர்த்துக் கொள்ளப் பட்டிருக்கிற தென்று சொல்லப்படுகிறது. இந்த அணுச் சக்தியை எந்தெந்த வகையில் சமாதான லட்சியங் களுக்காக உபயோகப் படுத்தலாமென்பது, இது சம்பந்தமான சகல விஷயங்களையும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குப் பரிவர்த்தனை செய்வது, ஒரு நாட்டின் யுத்த தளவாடங்களிலிருந்து அணு ச்சக்தி ஆயுதங்களையும், பெருவாரியான முறையில் சேதமுண்டு பண்ணக்கூடிய மற்ற ஆயுதங்களையும் எப்படி அகற்றுவதென்பது, இந்தக் கட்டுப்பாடுகளை மீறி நடக்கும் நாடுகளின் அக்கிரமச் செயல்களிலிருந்து கட்டுப்பாடுகளுக்குட்படும் நாடுகளை, தக்க முறையில் காப்பாற்றும் பொருட்டு, ஒவ்வொரு நாடும் அணுச் சக்தியை எப்படி உபயோகப் படுத்துவதென்பதை அவ்வப்பொழுது பரிசோதனை செய்தல் முதலிய தடுப்பு முறைகளை எப்படி எப்படிக் கையாளலாமென்பது, ஆகிய இந்த மாதிரியான விஷயங்களைப் பற்றி இந்த அணுச் சக்திக் கமிஷன், பாதுகாப்புக் கவுன்சிலுக்குச் சில திட்டங்களைச் சமர்ப்பிக்க வேண்டு மென்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கமிஷனின் வேலை நாளாவட்டத்தில் விரிந்துகொண்டு போகுமென்பது நிச்சயம். உலக சமாதானத்தை முன்னிட்டுப் பாதுகாப்புக் கவுன்சில் எடுத்துக் கொள்கிற எல்லா நடவடிக்கைகளையும் பொதுவாக மூன்று படிகளாக வகுத்துச் சொல்லலாம். முதலாவது, இரண்டு நாடுகளுக்குள் மனதாபம் ஏற்படுமானால் அந்த மனதாபத்தை, அவைகளுக்குள்ளேயே சமரஸமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளுமாறு பாதுகாப்புக் கவுன்சில் கூறும். இரண்டாவது, அந்த இரண்டு நாடுகளும் தங்களுக்குள்ளேயே சமரஸமாகப் போக முடியாவிட்டால், சமரஸமாகப் போக இன்னின்ன வழிகள் இருக்கின்றன என்று பாதுகாப்புக் கவுன்சில் கூறும். அதிலும் சரிப்பட்டு வராவிட்டால், தானே சில சமரஸ நிபந்தனைகளைக் கூறும். மூன்றாவது, இந்தச் சமரஸ நிபந்தனைகளை மனதாபப்பட்டுக் கொண்டிருக்கிற இரண்டு நாடுகளும் ஏற்றுக்கொள்ள மறுத்து, அதன் காரணமாக சமாதான பங்கம் ஏற்படுமென்று தெரிந்தால் அப்பொழுதுதான் பாதுகாப்புக் கவுன்சில் சில நடவடிக்கைகள் எடுக்க முன்வரும். இப்படி நடவடிக்கைகள் எடுக்கிறபோது கூட, அது மிகவும் ஜாக்கிரதையாகவே செல்லும். முதலில் ராணுவ சம்பந்தமில்லாத இதர நடவடிக்கைகளே எடுத்துக்கொள்ளப்படும். அதாவது, சமரஸத்திற்கு இணங்கி வராத அல்லது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய நாடு களை, பொருளாதார விஷயமாகவோ, போக்குவரத்து விஷய மாகவோ பகிஷ்கரித்துவிடும். எப்படியென்றால், அந்த நாடுகளுக்கு, தபால், தந்தி, சாமான்கள் முதலிய எதுவும் போகாதபடி செய்துவிடும். அந்தந்த நாட்டு தானீகர்களையும் திரும்பி வந்துவிடுமாறு கூறும். இந்த முறைகள் பலிக்காவிட்டால்தான், கடைசி பட்சமாக, தனது ராணுவ உத்தியோ கதர்கள் கமிட்டி மூலம் நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளும். 5. பொருளாதார - சமுதாயக் கவுன்சில் உலகத்தில் சமாதானம் நிலவுவதற்கும், எல்லா நாடுகளும் பரபரம் நல்லுறவு பூண்டு வாழ்வதற்கும் சரியான நிலைமை வேண்டும். இந்த நிலைமையை ஏற்படுத்திக்கொடுப்பது ஐக்கிய தேச தாபனத்தின் கடமையாகும். எந்தெந்த வகையில் இந்த நிலைமையை ஏற்படுத்திக் கொடுப்பது? ஜனங்களுடைய வாழ்க்கை அந்தது உயருமாறு செய்ய வேண்டும்; எல்லோருக்கும் வேலை கிடைக்குமாறு செய்யவேண்டும்; பொருளாதார விஷயத்திலோ சமுதாய விஷயத்திலோ எல்லா நாடுகளும் முன்னேற்றமடைவதற்கான நிலைமைகளை உண்டுபண்ணவேண்டும்; சர்வ தேசங்களுக்கும் பொதுவான பொருளாதார, சமுதாய, சுகாதார பிரச்னைகளுக்கும், இவை சம்பந்தமான மற்றப் பிரச்னைகளுக்கும் பரிகாரம் தேடிக் கொடுக்கவேண்டும்; கலாசார விஷயத்திலும் கல்வி விஷயத்திலும் சர்வ தேசங்களும் ஒத்துழைக்குமாறு செய்யவேண்டும்; இனம், பால், பாஷை, மதம் ஆகிய எந்தவிதமான வேற்றுமையும் இல்லாமல் எல்லோரும் மனித உரிமைகளையும் ஜீவாதாரமான உரிமை களையும் அனுபவிக்குமாறு செய்யவேண்டும்; அந்த உரிமைகளுக்கு எல்லோரும் மதிப்புக் கொடுக்குமாறுசெய்யவேண்டும். இப்படிப்பட்ட காரியங்களை மேற்போட்டுக்கொண்டு நடத்தும் பொருட்டு, ஐக்கிய தேச தாபனமானது, தனக்குத் துணையாக ஒரு சபையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அது தான் பொருளாதார - சமுதாயக் கவுன்சில். இந்தக் கவுன்சிலில் மொத்தம் பதினெட்டு பேர் அங்கத்தினர்கள். இவர்களுடைய பதவி காலம் மூன்று வருஷம். கவுன்சிலுடைய முதற் கூட்டத்தின்போது பதினெட்டுப் பேரும் தெரிந்தெடுக்கப் படுவார்கள். ஆனால் இந்தப் பதினெட்டு பேரில் ஆறு பேருடைய பதவி காலம் ஒரு வருஷமாகவும், மற்றோர் ஆறு பேருடைய பதவி காலம் இரண்டு வருஷமாகவும், இன்னோர் ஆறு பேருடைய பதவி காலம் மூன்று வருஷமாகவும் முறையே இருக்கும். ஒரு வருஷத்திற்கு மட்டும் தெரிந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர் அறுவருடைய தானங்களுக்கு இரண்டாவது வருஷ ஆரம்பத்தில் தேர்தல் நடைபெறும். இரண்டு வருஷத்திற்கு மட்டும் தெரிந்தெடுக்கப் பட்ட ஆறு பேருடைய தானங் களுக்கு மூன்றாவது வருஷ ஆரம்பத்திலும், மூன்று வருஷத்திற்குத் தெரிந்தெடுக்கப்பட்டவர் களுடைய தானங்களுக்கு நான்காவது வருஷ ஆரம்பத் திலும், இந்த முறைப்படி வருஷந்தோறும் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்; வருஷந்தோறும் புதிய அங்கத்தினர்களாக ஆறுபேர் வந்து கொண்டிருப்பார்கள். அங்கத்தினர் என்று சொன்னால் அங்கத்தினர் நாடு என்பதே அர்த்தம் என்று வாசகர்களுக்கு அடிக்கடி ஞாபகப் படுத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை யல்லவா? இந்தக் கவுன்சில் வருஷத்தில் குறைந்த பட்சம் மூன்று தடவை யாவது கூட வேண்டுமென்பது நியதி. இதைத் தவிர, தேவையான போதும் கூடும். ஜெனரல் அஸெம்ப்ளியானது, சில பிரச்னைகளைக்குறிப்பிட்டு, இந்தப் பிரச்னைகளைப் பற்றிப் பொருளாதார - சமுதாயக் கவுன்சிலின் அபிப்பிராய மென்ன வென்பதை அறிய விரும்பினாலும் சரி, அல்லது இந்தக் கவுன்சிலின் சாதாரணக் கூட்டங்களில் ஆஜராயிருக்கும் அங்கத்தினர்களில் பெரும்பாலோர் விரும்பினாலும் சரி, விசேஷக் கூட்டங்கள் நடைபெறும். அமைதிக்குப் பங்கம் விளைவிக்கிற ஒரு நாட்டை, பொருளாதார நிர்ப்பந்தங்களுக்குட்படுத்தி வழிக்குக்கொண்டுவர வேண்டுமென்று பாதுகாப்புக் கவுன்சில் விரும்பினால் அப்பொழுது, இந்தப் பொருளாதார - சமுதாயக் கவுன்சிலின் விசேஷக் கூட்டமொன்றைக் கூட்டுவித்து இதன்ஆலோசனையைக் கேட்கும். இன்னும், ஐக்கிய தேச தாபனத்தின் எந்த ஓர் அங்கத்தினரோ, அல்லது டிரட்டி கவுன்சிலோ, இந்தப் பொருளாதார - சமுதாயக் கவுன்சிலின் விசேஷக் கூட்டமொன்று கூட வேண்டுமென்று கேட்கலாம். சாதாரணக் கூட்டம், விசேஷக் கூட்டம் ஆகிய எல்லாக் கூட்டங்களிலும் ஆஜர் படுத்தப் பெறும் எந்த ஒரு பிரச்னையும் பெரும்பான்மையான ஓட்டுகளைக் கொண்டு முடிவு செய்யப்படும். இந்தப் பொருளாதார - சமுதாயக் கவுன்சில், குறிப்பிட்ட ஒரு துறையைப் பற்றி ஆராய்ச்சி செய்து தனக்கு ஆலோசனை சொல்ல அவ்வப்பொழுது சில விசேஷ கமிஷன்களை நியமித்துக் கொள் கிறது. இந்தக் கமிஷன்கள், எந்தத் துறையைப் பற்றி ஆராய்ச்சி செய்து சிபார்சு செய்யுமாறு கூறப்படுகின்றனவோ, அந்தத் துறை சம்பந்தமான சகல விஷயங்களையும் முதலில் ஒன்று சேகரிக்கின்றன. பிறகு இவற்றைப் பரிசீலனை செய்கின்றன; அதே துறையில் வேலை செய்து கொண்டிருக்கும் மற்ற தாபனங்களோடு எந்தெந்த வகையில் ஒத்துழைக்கலாமென்று சிபார்சு செய்கின்றன; கடைசியில், தாங்கள் ஆராய்ச்சி செய்து முடிவு கண்ட விஷயங்கள் மீது, இன்னின்ன நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்று சிபார்சு செய் கின்றன. இந்த முறையில் தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் கமிஷன்கள் வருமாறு:- 1. ஜனங்களுடைய பொருளாதார நிலைமையை ஒழுங்கு படுத்துவது, அவர்களுக்கு வேலை கிடைக்குமாறு செய்வது என்ற இரு விஷயங்களைப் பற்றியும் பரிசீலனை செய்கிற கமிஷன்.1 2. பல விஷயங்கள் சம்பந்தமாகப் புள்ளி விவரங்கள் சேகரிக்கும் கமிஷன்.2 3. போக்குவரத்து வசதிகளைப் பற்றிப் பரிசீலனை செய்யும் கமிஷன்.3 4. சமுதாய சம்பந்தமான விஷயங்களைப் பற்றிப் பரிசீலனை செய்யும் கமிஷன்.4 5. லாகிரி வதுக்கள் சம்பந்தமாக ஆராய்ச்சி செய்யும் கமிஷன்.5 6. மனித உரிமைகளைப் பற்றி விசாரணை செய்யும் கமிஷன்.6 7. திரீகளின் அந்தது பற்றி விசாரிக்கும் கமிஷன்.7 எந்த உத்தேசத்துடன் இந்தக் கமிஷன்கள் நியமிக்கப்பட்டிருக் கின்றன, இவை என்ன மாதிரியான வேலை செய்கின்றன என்பதற்கு உதாரணமாக ஒரு கமிஷனைப் பற்றி மட்டும் இங்குச் சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகிறோம். திரீகளின் அந்தது பற்றிய கமிஷனை எடுத்துக் கொள்வோம். இந்தக் கமிஷன், பல வகை ஆராய்ச்சிகளுக்குப் பிறகு சில சிபார்சுகளைச் செய்திருக்கிறது. இந்தச் சிபார்சுகள், சர்வ தேசங் களினாலும் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் கொணரப்பட வேண்டிய ஒரு சம்பிரதாயமாக ஏற்படுவதற்கு முன்னர் பலநிலைகளைக் கடக்க வேண்டும்; பல மாற்றங்களையும் அடையலாம். அவை ஒரு புறமிருக் கட்டும். இந்தக் கமிஷன் என்னென்ன சிபார்சுகள் செய்திருக்கின்றன வென்பதைப் பார்ப்போம். ஏனென்றால் இந்தச் சிபார்சுகளைக் கொண்டு, இந்தக் கமிஷனும் இதைப்போன்ற கமிஷன்களும் என்ன உத்தேசத்துடன் நியமிக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒருவாறு தெரிந்து கொள்ளலா மல்லவா? திரீகளின் அந்தது சம்பந்தமான கமிஷன் பின்வரும் சிபார்சுகளைச் செய்திருக்கிறது:- 1. அரசியல் துறையில் ஓட்டுரிமை, பிரதிநிதிகளாகத் தெரிந் தெடுக்கப்படும் உரிமை, உத்தியோகம் வகிக்கிற உரிமை ஆகிய யாவும் புருஷர்களைப் போலவே திரீகளுக்கும் இருக்கவேண்டும். 2. விவாக விஷயத்தில், இஷ்டப்பட்டவரை கணவனாக வரிக்கவும், மனைவியென்ற கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், ஒருவனை மணந்து அந்த ஒருவனோடவே வாழவும், விவாக ரத்து செய்து கொள்ளவும் சம உரிமை வேண்டும். அதாவது ஆண்களுக்கு இருக்கிற உரிமைகள் பெண்களுக்கும் இருக்கவேண்டும். தன்னுடைய குழந்தைகளுக்கோ மற்றவர்களுடைய குழந்தை களுக்கோ கார்டியனாக இருக்க ஆண்களைப் போலவே பெண் களுக்கும் உரிமை இருக்கவேண்டும். தனக்கிஷ்டப்பட்டபடி ஒரு தேசத்தின் பிரஜையாயிருக்கவோ, ஒரு தாயாரின் குழந்தைகள், வயது வந்த பிறகு, அதாவது மெஜாரிட்டி யடைந்த பிறகு, தங்கள் தாயார் எந்தத் தேசத்தின் பிரஜையாயிருக்கிறாளோ அதேதேசத்தின் பிரஜையாயிருக்கவோ உரிமை வேண்டும். சொத்துக்களை வைத்துக் கொள்ளவோ, சேகரிக்கவோ, நிருவாகம் செய்யவோ, வாரிசாக இருந்து அடையவோ, புருஷர்களைப்போலவே திரீகளுக்கும் சமஉரிமை இருக்கவேண்டும். 3. சமுதாய அந்தது, பொருளாதார அந்தது, பழக்க வழக்கங்கள் இவைகளில் திரீகளென்று எவ்விதப் பாகுபாடும் இருக்கக்கூடாது. விபசாரத்தை அங்கீகரிக்கிற சட்டங்கள், பழக்க வழக்கங்கள் இவற்றை நீக்கிவிடவேண்டும். திரீகளையும் குழந்தைகளையும் வியாபாரம் செய்வதென்பது அகற்றப்படவேண்டும். எந்த நிலைமையில் சிலர் விபசாரத்தை ஜீவனோபாயமாகக் கொள்கிறார்களோ அந்த நிலைமையே இல்லாதபடி செய்யவேண்டும். விபசாரத் தொழில் நடத்தி வந்தவர்களுக்கு எவ்வித வித்தியாசமும் காட்டாமல் வேலை கொடுத்து அவர்களை ஒழுங்கான வாழ்க்கை நடத்துமாறு செய்யவேண்டும். வேலை கொடுக்கிற விஷயத்திலோ, சமுதாய உரிமைகளையும் தொழிலாளர் உரிமைகளையும் அனுபவிக்கிற விஷயத்திலோ, சமுதாயக் கடமைகளையும் தொழிலாளர் கடமைகளையும் செய்கிற விஷயத்திலோ, ஆண் பெண் என்ற வித்தியாசம் இருக்கக் கூடாதா யினும், உடல் நலத்தை முன்னிட்டுப் புருஷர்களுக்கும் திரீகளுக்கும் ஒரே மாதிரியான சில சலுகைகள் காட்டப்படலாம்; திரீகளுக்கு, அவர்களுடைய தாய்மையை உத்தேசித்துத் தனியாகச் சில சலுகைகள் காட்டப்படவேண்டும். திரீகளின் சமுதாய அந்தது, சுகாதாரம் இவைகளை முன்னிட்டு இன்ஷ்யூரன் சட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும். 4. கட்டாய, இலவச, பூரணக் கல்வி பெற புருஷர்களைப்போல திரீகளுக்கும் சம சந்தர்ப்பங்கள் அளிக்கப்படவேண்டும். மானிட சமுதாயத்தின் முன்னேற்ற சம்பந்தமாகக் கண்டு பிடிக்கப்பட்டிருக் கிற எல்லா விஞ்ஞான விஷயங்களிலும் புருஷர்களைப்போல் திரீகளும் சமபங்கு கொள்ளும் உரிமை இருக்கவேண்டும். இங்ஙனம் ஒவ்வொரு துறை பற்றிய கமிஷனும் அவ்வப் பொழுது கூடி ஆராய்ச்சி நடத்தியும் சிபார்சுகள் செய்தும் வருகிறது. இந்தக் கமிஷன்கள் தவிர, தேவையான போது வேறு கமிஷன்களை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நியமித்துக் கொள்ள இந்தப் பொருளாதார - சமுதாயக் கவுன்சிலுக்கு உரிமையுண்டு. பொருளாதார - சமுதாயக் கவுன்சில் என்னென்ன நோக்கங் களுடன் தாபிக்கப்பட்டதோ அதே நோக்கங்கள் உலகத்திலுள்ள பல அரசாங்கங்களுக்கும் இருக்குமல்லவா? இத்தகைய அரசாங் கங்களை, அவற்றின் பிரதிநிதிகள் மூலம் ஒன்றுபடுத்தி, அந்தந்தத் துறையில் விசேஷகவனஞ் செலுத்துமாறு செய்யவேண்டுமென்பது ஐக்கிய தேச சாஸனத்தைத் தயாரித்தவர்களுடைய நோக்கம். இதற்காகப் பல தேச அரசாங்கப் பிரதிநிதிகளடங்கிய தாபனங்கள் சில நிறுவப் பட்டிருக்கின்றன. அவை வருமாறு:- 1. உணவு, விவசாயம் இவைகளைப் பற்றின தாபனம்.1 2. சர்வதேச பணநிதி.2 3. புனர் நிர்மாணம், அபிவிருத்தி இவைகளுக்கான சர்வ தேச பாங்கி.3 4. ஐக்கிய தேச கல்வி, விஞ்ஞான, கலாச்சார தாபனம்.4 5. சர்வதேசத் தொழிலாளர் காரியாலயம்.5 6. ஐக்கிய தேச கஷ்ட நிவாரண புனர் நிர்மாண நிருவாக தாபனம்.6 இவை ஒவ்வொன்றைப் பற்றியும் வாசகர்கள் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமல்லவா? 1. உணவு, விவசாய தாபனம்.1 யுத்தம் நடைபெறுகிற காலத்தில் உண்டாகிற கஷ்டங்களைக் காட்டிலும் யுத்தத்திற்குப் பிறகு உண்டாகிற கஷ்டங்கள் தான் அதிகம். இவைகளைச் சமாளிப்பதில்தான் ராஜதந்திரி களின் சாமர்த்தியம் வெளிப்படுகிறது. இதனால் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற காலத்திலேயே யுத்தத்திற்குப் பிறகு என்னென்ன செய்யவேண்டுமென்பதைப் பற்றி ராஜதந்திரிகள் யோசனை செய்வார்கள்; திட்டங்கள் வகுப்பார்கள். இரண்டாவது உலக மகாயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் உலகத்து ராஜதந்திரிகள் இத்தகைய யோசனை செய்தார்கள். திட்டங்கள் வகுத்தார்கள். இவற்றின் விளைவாகவே மேற் சொன்ன தாபனங்கள் தோன்றின. ஐக்கிய தேச தாபனம் உருவானதுகூட யுத்தத்தின் மத்தியில்தானே? யுத்தத்தின்போது விவசாயம் சீரழிகிறது. இதனால் யுத்தத்திற்குப் பிறகு உணவுப் பஞ்சம் ஏற்படுகிறது; உணவுக் குறைவினால் ஜனங்கள் பலவகை நோய்களுக்கு இரையாகிறார்கள். இவைகளையெல்லாம் சமாளிக்க வேண்டுமானால் சர்வதேச அரசாங்கங்களும் கூடிய மட்டில் ஒருமுகமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வது அவசியமாகும். இந்த நடவடிக்கைகளில் ஒன்றாகவே மேற்சொன்ன உணவு - விவசாய தாபனம் தோன்றியது. உலகத்தின் பொதுவான உணவு நிலைமையைப் பற்றியும் விவசாய நிலைமையைப் பற்றியும் ஆலோசிக்க அமெரிக்க ஜனாதிபதி ரூவெல்ட்டினுடைய முயற்சியின்பேரில் 1943-ஆம் வருஷம் மே மாதம் பதினெட்டாந் தேதியிலிருந்து ஜுன் மாதம் மூன்றாந்தேதி, அமெரிக்கா விலுள்ள வர்ஜீனியா மாகாணத்தில் ஹாட் ப்ரிங்க் என்ற இடத்தில் ஒரு சர்வதேச மகாநாடு கூடியது. நாற்பத்து நான்கு தேசங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டார்கள்.2 ஜனங்களின் உணவுத் தேவைகளைப் பற்றி விசாரணை செய்யவும், உணவுப் பொருள்களைப் புதிய முறையில் வினியோகம் செய்வதற்காகத் தயாரிக்கப்படும் திட்டங்களுக்கு உதவி செய்யவும், இந்தத் திட்டங்களைப் பற்றி ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லவும், இந்தத் துறையில் செய்யப்படும் எல்லா முயற்சிகளையும் ஒன்றுபடுத்தவும், ஒரு நிரந்தர தாபனம் நிறுவுவதென்று இந்த மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. இது தான் உணவு விவசாய தாபனம். தேகாரோக்கியத்திற்கும், தேக பலத்திற்கும் தகுதியானதும் தேவையானது மான உணவு, உலகத்திலுள்ள சர்வ ஜனங்களுக்கும் கிடைக்கச் செய்வதே இந்த தாபனத்தின் நோக்கம் என்று மேற்படி மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டமுதல் தீர்மானம் கூறுகிறது. இந்த உணவு - விவசாய தாபனமானது என்னென்ன காரியங்களைச் செய்யுமென்றால், உணவுப் பொருள்கள், உடை வகையராக்கள், வீடுகள் முதலியன கட்டுவதற்குத் தேவையான மரச் சாமான்கள் ஆகிய இவை களை உற்பத்தி செய்கிறவர்கள், இவைகளை வாங்கி உபயோகிக் கிறவர்கள், இவர்களுக்குப் பிரதி நிதியாகச் சர்வ தேச மகா நாடுகளிலும் ஐக்கியதேச தாபனத்தின் ஜெனரல் அஸெம்ப்ளியிலும் ஆஜராகி இவர் களுக்குத் தேவையானவற்றைச் செய்யும்; உலகத்திலே உற்பத்தியாகும் உணவுப் பொருள்களின் மொத்தம் எவ்வளவு, அடுத்த மகசூல் எப்படி இருக்கும், எந்தெந்த உணவுப் பொருள்களில் எவ்வளவு எவ்வளவு சத்து இருக்கிறது, எந்தெந்த மார்க்கெட்டுகளில் எந்தெந்த உணவுப் பொருள்கள் செலவாகும், இவை போன்ற சகல தகவல்களையும் சேகரிக்கும்; விரும்பும் அரசாங்கங்களுக்கு இந்தத் தகவல்களை அளிக்கும்; வேறு ஆலோசனைகள் கேட்டால் அவைகளைச் சொல்லும்; இந்த தாபனத்தில் அங்கத்தினராயுள்ள அரசாங்கங்கள், தங்கள் நாட்டில் உணவுப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், அப்படி உற்பத்தியானதை சரியானபடி வினியோகிக்கவும், உணவுப் பொருள்களின் சத்தை அதிகரிக்கச் செய்யவும் யோசனை சொல்வதற்கு, தக்க நிபுணர்களை அனுப்ப வேண்டுமென்று கேட்டால் அப்படியே அனுப்பும்; பயிர்களுக்குப் பூச்சி புழுக்கள் வராமல் தடுப்பதற்கும், விளைபொருள்களின் தராதரங் களைக் கணிப்பதற்கும் எல்லாத் தேசங்களும் சேர்ந்து அனுசரிக்கக் கூடிய முறைகளை வகுக்கும். தாபன்ததில் அங்கத்தினராயுள்ள அரசாங்கங்கள், தங்கள் தங்கள் பிரதேசங்களில் உற்பத்தியாகும் பொருள்களைப் பற்றின விவரங்களை இந்த தாபனத்திற்கு அனுப்பக் கடமைப் பட்டிருக்கின்றன. இந்த தாபனத்தின் கூட்டம் வருஷத்திற் கொரு முறை கூடும். இந்தக் கூட்டத்தில், தாபனத்தின் நிருவாகத்தை அடுத்த வருஷக் கூட்டம் வரையில் கவனிப்பதற்கென்று, ஒன்பது பேருக்குமேல் பதினைந்து பேருக்குள் ஒரு காரியக்கமிட்டி நியமிக்கப்படும். இந்தக் கமிட்டிதான், வருஷம் பூராவும், தாபனத்தின் காரியங்களை ஒரு பிரதம உத்தியோகதர் மூலம் நடத்துவிக்கிறது. இவருக்கு டைரெக்ட்டர்-ஜெனரல்1 என்று பெயர். இவருக்கு உதவியாக வேறு உத்தியோகதர் பலர் நியமிக்கப்பட்டிருக் கிறார்கள். இந்த உத்தியோகதருடைய காரியாலயம் தற்காலிகமாக அமெரிக்காவிலுள்ள வாஷிங்க்ட்டன் நகரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. 2. சர்வ தேச பண நிதி: யுத்தத்தின் விளைவாக, பல தேசங்களின் நாணய மதிப்பு, நிலைகுலைந்து போய்விடுகிறது; ஒரு சமயம் இருப்பது போல் இன்னொரு சமயம் இவைகளின் மதிப்பு இருப்பதில்லை. இதனால் ஒரு தேசத்திற்கும் மற்றொரு தேசத்திற்கும் நடைபெறுகிற வியாபாரம் தடைப்படுகிறது. இந்தத் தடையைப் போக்கிப் பல தேசங்களுக்குமிடையே சரளமான வியாபாரம் நடைபெறுவதற்கு அந்தப் பல தேசங்களின் நாணய மதிப்புகளை ஒரே விகிதாசாரத்திற்குக் கொண்டுவர வேண்டியது அவசியமாகிறது. இதற்காகவே இந்த நிதி தாபிக்கப்பட்டது. 1944-ஆம் வருஷம் ஜூலை மாதம் அமெரிக்காவிலுள்ள வர்ஜீனியா மாகாணத்தில் ப்ரெட்டன் வுட் என்ற இடத்தில் நாற்பத்து நான்கு தேசங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு மகாநாடு கூடியது.1 இதில்தான் மேற்படி நிதி தாபிக்கப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இந்த நிதியில் அங்கத்தினர்களாகச் சேர்ந்துள்ள நாடுகள், அந்தந்த நாடுகளின் சக்திக்குத் தகுந்தாற்போல் ஒரு தொகையைச் சந்தாவாகச் செலுத்த வேண்டும். இதுவே இந்த நிதியின் மூலதனம். இங்ஙனம் செலுத்தப் படுகிற தொகையானது, ஒரு பகுதி தங்கமாகவும் மற்றப்பகுதி அந்தந்த நாட்டு நாணயமாகவும் இருக்கவேண்டும் எந்த ஓர் அங்கத்தினர் நாடேனும், தான் வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிற மற்றொரு நாட்டுக்கு வியாபார நிமித்தம் அந்த நாட்டு நாணயமாகச் செலுத்தவேண்டியிருந்தால், எந்த அளவுக்கு அந்நிய நாட்டு நாணயம் தேவைப்படுகிறதோ அதற்கு ஈடாக, தனது நாட்டின் நாணயத்தை இந்த நிதியினிடம் செலுத்தி, மேற்படி அந்நிய நாணயத்தை அந்த நிதியின் மூலம் அனுப்பலாம். இதற்காக ஒரு சிறு தொகையைக் கமிஷனாக நிதிக்குக் கொடுக்கவேண்டும். சுருக்கமாக, தேசங்களுக்கிடையே வியாபாரம் சரளமாக நடைபெறுவதற்கு, பல தேசங்களின் வித்தியாசமான நாணய மதிப்பு ஒரு தடையாயிருக்கக் கூடாதென்பதற்காகவே இந்த நிதி தாபிக்கப் பட்டிருக்கிறது. இந்த நிதியானது, எல்லா அங்கத்தினர் நாடுகளின் பிரதி நிதிகள் அடங்கிய பல சபையினால் நிருவகிக்கப் படுகிறது. இந்தச் சபை, கவர்னர்களின் போர்ட்2 என்று அழைக்கப்படுகிறது. இந்த போர்டில் ஒவ்வொரு நாட்டுக்கு ஒவ்வொரு பிரதிநிதி விகிதம் அங்கத்தினர் இருப்பார்கள். எல்லா அங்கத்தினர்களுமடங்கிய இந்தக் கவர்னர்களின் போர்ட் அடிக்கடி கூடிக் கொண்டிருக்க முடியாதல்லவா? இதற்காக, பன்னிரண்டு பேர் அடங்கிய ஒரு நிருவாக டைரெக்ட்டர்கள் போர்ட் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த நிருவாக டைரெக்ட்டர்களின் போர்ட்,1 நிதியின் அன்றாட நிருவாகத்தைக் கவனிக்க ஒரு மானேஜிங் டைரெக்ட்டரை நியமிக்கும். இந்த மானேஜிங் டைரெக்ட்டர், கவர்னர்களில் ஒருவராகவோ, நிருவாக டைரெக்ட்டர்களில் ஒருவராகவோ இருக்கக்கூடாது. 3. சர்வதேச பாங்கி: மேற்படி ப்ரெட்டென் வுட் மகாநாட்டில் தான், இந்தச் சர்வதேச பாங்கி தாபிக்கப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப் பட்டது. யுத்தத்தினால் சீர்குலைந்துபோன அநேகநாடுகளில் புனர் நிர்மாண வேலைகள் பல நடைபெற வேண்டுமல்லவா? இந்த வேலைகள் நடைபெறுவதற்கு மூலதனம் தேவைப்படுமே. இந்தத் தேவையைக் கூடிய மட்டில் பூர்த்தி செய்வதற்காகவே இந்தப் பாங்கி தாபிக்கப் பட்டிருக்கிறது. இந்தப் பாங்கியில் தனிப்பட்ட நபர்கள் பங்கு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். அரசாங்கங்கள்தான் பங்கு எடுத்துக் கொள்ளலாம். ஒரு பங்குக்கு ஒருலட்சம் டாலர் விகிதம் ஒரு லட்சம் பங்குகள் முதலில் வெளியிடப் பெறும். இதுவே பாங்கியின் மூலதனமாகும். சர்வதேசப் பணநிதியைப் போலவே இந்த பாங்கியின் நிருவாக முறையும் அமைக்கப்பட்டிருக்கிறது. கவர்னர்கள் போர்டென்றும் நிருவா கடை ரெக்ட்டர்கள் போர்டென்றும் இதற்கும் உண்டு. டைரெக்ட்டர்கள் போர்டானது, பாங்கிங் விஷயத்தில் நிபுணர்களாயிருக்கப் பட்டவர் களடங்கிய ஓர் ஆலோசனைக் கமிட்டியைத் தனக்கு உதவியாக நியமித்துக் கொள்ளும். இது தவிர, கடன் கோரி மனுக்கள் வந்தால் அவைகளைப் பற்றி ஆலோசித்து அபிப்பிராயஞ் சொல்ல, அவ்வப்பொழுது சில கமிட்டிகளை இந்த போர்ட் நியமித்துக் கொள்கிறது. அரசாங்கங்களுக்கு மட்டுந்தான் இந்த பாங்கி கடன் கொடுக்கு மென்பதில்லை. நகர சபைகள், ஜில்லா சபைகள் முதலியவற்றிற்கும், வேறு தொழில் தாபனங்கள் முதலியவற்றிற்கும், அந்தச் சபைகள், தாபனங்கள் முதலியன எந்த அரசாங்கப் பிரதேசத்தில் இருக்கின்றனவோ அந்த அரசாங்கங்களின் ஜாமீன் பேரில் கடன் கொடுக்கும். கடன்கள் யாவற்றிற்கும் நியாயமான ஒரு வட்டி வாங்கும். 4. ஐக்கியதேச கல்வி, விஞ்ஞான, கலாசார தாபனம்:1 1945-ஆம் வருஷம் நவம்பர் மாதம் இந்த தாபனம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் நோக்கம் பின் வருமாறு விவரிக்கப்பட்டிருக்கிறது,- மனிதர்களுடைய மனத்திலிருந்துதான் யுத்தங்கள் தோன்று கின்றன; ஆதலின் அந்த மனத்திலே தான் சமாதானத்திற்கான பாதுகாப்புகள் நிர்மாணம் செய்யப்படவேண்டும். உலக சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால், மனிதர்களுக்கிடையே ஒருவருடைய பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை நியதிகளையும் மற்றொருவர் அறியாத காரணத்தினால் பரபர சந்தேகமும் அவநம்பிக்கையும் உண்டாகி சண்டைகள் மூளுவதற்குக் காரணமா யிருக்கின்றனவென்பது நன்கு தெரியவரும். சமீபத்தில் நடந்து முடிந்த கொடூர யுத்தித்திற்குக் காரண மென்னவென்பதை ஆராய்ந்து பார்ப்போமானால், மனிதர்களுக்கு நியாயமாக வழங்கப்படவேண்டிய ஜனநாயக உரிமைகள் வழங்கப் படாமையாலும், அதற்குப் பதில் மனிதர்களுக்கிடையிலும் சமூகங்களுக் கிடையிலும் ஏற்றத் தாழ்வுகள் கற்பிக்கப்பட்டமையாலுமே என்பது நன்கு விளங்கும். அரசியல் ஏற்பாடுகளையும் பொருளாதார ஏற்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்ட சமாதானம் நீடித்த சமாதானமாயிராது. மானிட சமுதாயத்தின் அறிவையும் சீலத்தையும் அடிப்படையாகக் கொண்ட சமாதானமே நிலைத்து நிற்கும். ஆதலின், கல்வி, விஞ்ஞானம், கலாசாரம் இவைகளின் மூலமாக சர்வதேச ஜனங்களிடையே ஒற்றுமையை உண்டு பண்ணி, அதன் விளைவாக உலக சமாதானத்தைப் பாதுகாக்க வேண்டும். இதனால் இன, சமூக, பால் வித்தியாசமில்லாமல் எல்லாரும் நியாயமாக அனுபவிக்கவேண்டிய ஜீவாதார உரிமைகளுக்கும் சட்ட திட்டங்களுக்கும் அதிக மதிப்பு உண்டாகும். இந்தக் கலாசார தாபனமானது, எந்த அரசாங்கத்தின் உள் நாட்டு விவகாரங்களிலும் தலையிடாது. அந்தந்த அரசாங்கமும் தானே முன் வந்து இந்த தாபனத்துடன் ஒத்துழைப்பதில்தான் இதன் வெற்றியிருக் கிறது. கல்வி யறிவு இல்லாத இடங்களில் கல்வியறிவைப் பரவச் செய்வதும், உலகத்து அரிய நூல்கள், கலைச் சின்னங்கள் முதலியவை களைப் பாதுகாப்பதும், அறிவு வளர்ச்சிக்காக ஒரு தேசத்திலிருநது மற்றொரு தேசத்திற்கு மாணக்கர்களை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்வதும் இந்த தாபனத்தின் முக்கிய வேலைகளாகும். 5. சர்வ தேசத் தொழிலாளர் காரியாலயம்:-2 முதல் உலக மகா யுத்தத்திற்குப் பிறகு தோன்றிய சர்வதேச சங்கத்தின் கிளையாக இந்தத் தொழிலாளர் காரியாலயம் தாபிக்கப்பட்டது. இதுவே இப்பொழுது ஐக்கிய தேச தாபனத்தின் கிளையாக நடைபெறுகிறது. தொழிலாளர்களின் வேலை நேரம், கல்வி, சுகாதார வசதிகள், நோயாக விழுந்துவிட்டால் அவர்களுக்குக் காட்டவேண்டிய சலுகைகள் முதலிய தொழிலாளர் நலனைக் குறித்த எல்லா விஷயங்களிலும், உலகத்து எல்லா நாட்டு அரசாங்கங்களும் கூடிய மட்டில் ஒரே மாதிரியான சட்டதிட்டங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர வேண்டுமென்பதே இந்தக் காரியாலயத்தின் நோக்கம். 6. கஷ்ட நிவாரண - புனர் நிர்மாண தாபனம்: 1 இரண்டாவது உலக மகாயுத்தம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், 1942-ஆம் வருஷம் ஜூலை மாதம் இருபத்து மூன்றாந் தேதி அமெரிக்க அரசாங்கத்தைச் சேர்ந்த கார்டெல் ஹல்2 என்பவர் ரேடியோ மூலம் பின் வருமாறு கூறினார்:- வெற்றியடைந்த பிறகு நாம் முதலில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சகிப்புத்தன்மைக்கு மீறின கஷ்டங்களை அனுபவித் தவர்களுக்கு நிவாரணம் தேடிக்கொடுப்பதுவேயாகும். அநேக நாட்டு ஜனங்கள் ஆகாரம் கிடைக்கப்பெறாமல் பட்டினியாக இருத்தல் கூடும்; வீடில்லாமல் தவிக்கக் கூடும். அவர்களுடைய நிலங்கள் பொசுக்கப் பட்டுவிட்டன: கால்நடைகள் கொலை செய்யப்பட்டுவிட்டன: அவர் களுடைய தளவாட சாமான்கள் இல்லா தொழிந்தன; அவர்களுடைய தொழிற்சாலைகளென்ன, பாதைகளென்ன, இவை யெல்லாம் நாசமாகி விட்டன. லட்சக் கணக்கான பேர். தங்கள் வீடு வாசல்களுக்கு அப்புறப் பட்டவர் களாய் தொலை தூரத்தில் யுத்தக் கைதிகளாகவோ, கட்டாய வேலை வாங்கப்பட்டோ, பசி, பிணி இவைகளினால் அவதைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். வியாதிகளும் மற்ற ஆபத்துகளும் எங்கும் பரவுதல் கூடும். இவைகளையெல்லாம் சமாளிக்க, யுத்தத்தில் வெற்றி கண்டதும், உடனடியாக நடவடிக்கைகளை நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதற்குத் தான் மேற்படி புனர் நிர்மாண தாபனம் அமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள வாஷிங்க்ட்டன் நகரத்தில் 1943-ஆம் வருஷம் நவம்பர் மாதம் நாற்பத்து நான்கு தேசங்களின் பிரதிநிதிகள் கூடி இந்த தாபனத்தைத் தோற்று வித்தார்கள். உணவுப் பொருள்கள் கிடைக்காத இடங்களில் உணவுப் பொருள்களையும், உடுக்கவும், வசிக்கவும் வசதிகள் இல்லாத இடங்களில் அந்த வசதிகளையும் அளிப்பதே இந்த தாபனத்தின் முக்கியவேலைகள். இந்த வேலைகள் நடைபெறுவதற்குப் பணம் வேண்டுமல்லவா? இதற்காக யுத்தத்தினால் அதிகமாகப் பாதிக்கப்படாத தேசங்கள், பிரதி வருஷமும் தங்கள் தேசீய வருமானத்தில் நூற்றுக்கு ஒரு சத விகிதம் கணக்காகிற ஒரு தொகையைக் கொடுக்க வேண்டுமென்று ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் முப்பது தேசங்களுக்குமேல் இந்தத் தொகையைச் செலுத்துகின்றன. இங்ஙனம் செலுத்தப்படுகிற தொகை ரொக்கமாகவே இருக்க வேண்டுமென்பதில்லை; சாமான்களாகவும் இருக்கலாம்; தக்க உத்தியோகதர்களை அனுப்பி அவர்களுடைய செலவு வகையராக்களை ஏற்றுக் கொள்ளலாம். இந்த தாபனத்தை ஒரு கவுன்சில் நிருவாகம் செய்யும். இந்த தாபனத்தின் அங்கத்தினராகச் சேர்ந்துள்ள ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பிரதிநிதி விகிதம் இந்தக் கவுன்சிலுக்கு அனுப்பும். இந்தக் கவுன்சில் அவசியமான போது கூடி, தான் செய்யவேண்டிய காரியங்களை நிர்ணயித்துக் கொள்ளும். கவுன்சிலின் பிரதிநிதியாக இருந்து அன்றாடக் காரியங்களை கவனிப்பதற்கென்று ஒரு டைரெக்ட்டர் ஜெனரல்1 உண்டு. இவர்கீழ் சுமார் பதினாயிரம் சிப்பந்திகள் வேலை செய்கிறார்கள். இவர்களுடைய வேலையானது உலகத்தின் பல பாகங்களுக்கும் பரவியிருக்கிறது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கஷ்ட நிவாரண வேலையும் புனர் நிர்மாண வேலையும் ஓரளவு நிறைவேறியதும், இந்த தாபனத்தின் வேலையும் முற்றுப்பெற்று விடுகிறது. அதாவது இந்த தாபனம் தற்காலிகமானதுதான். இவைபோல் இன்னும் பல சர்வதேச அரசாங்க தாபனங்களை அவசியமானபோது அல்லது குறிப்பிட்ட ஒரு காரியத்திற்காக ஏற்படுத்திக் கொள்ளலாம். இவை யனைத்தும் பொதுவாக விசேஷ காரிய சபைகள்2 என்று அழைக்கப்படுகின்றன. அதாவது குறிப்பிட்ட ஒரு துறையில் நிபுணர்களா யுள்ளவர்களடங்கிய சபை என்பது அர்த்தம். குறிப்பிட்ட ஒரு பிரச்னையைக் கொடுத்து அதைப் பற்றி ஆராய்ச்சி செய்து அபிப்பிராயம் சொல்லுமாறு இந்த விசேஷ தாபனங்களைக் கேட்க ஜெனரல் அஸெம்ப்ளிக்கு உரிமையுண்டு. அதேபோல் இந்த விசேஷ தாபனங்களும், குறிப்பிட்ட ஒரு பிரச்னையைக் கவனிக்க வேண்டுமென்று அஸெம்ப்ளிக்குச் சொல்லலாம். பொதுவாக இந்த விசேஷ தாபனங்கள் யாவும், பொருளாதார-சமுதாயக் கவுன்சிலோடு ஒத்துழைக்கக் கடமைப் பட்டிருக்கின்றன. இந்த விசேஷ தாபனங்களின் நடைமுறைகள், பொருளாதார-சமுதாயக் கவுன்சிலின் நடைமுறைகளை அனுசரித்தே இருக்கின்றன. இந்த தாபனங்கள் அவ்வப்பொழுது பிரதேச மகாநாடுகளைக் கூட்டுவிக் கின்றன.1 அதாவது குறிப்பிட்ட ஒரு பிரதேச சம்பந்தமான பிரச்னைகளைப் பற்றி நன்றாக ஆராய்ச்சி செய்து திடமான அபிப்பிராயம் சொல்லக் கூடியவர்கள், அந்தப் பிரதேச வாசிகளான நிபுணர்களன்றோ? இத்தகையவர்கள் கூடி தங்கள் பிரதேச சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் பற்றி அபிப்பிராயம் சொல்வதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. தேற்சொன்ன தாபனங்கள் யாவும் சர்வதேச அரசாங்க தாபனங்கள். ஐக்கிய தேச தாபனத்தில் அங்கத்தினராயுள்ள அரசாங்கங்கள் பலவும் இவைகளில் அங்கத்தினரா யிருக்கின்றன. இவை தவிர தனிப்பட்டவர் களடங்கிய, தனிப்பட்ட ஹோதாவில் நடைபெறுகிற அநேக தாபனங்கள் உலகத்தின் பல பகுதிகளிலும் இருக்கின்றனவல்லவா? உதாரணமாக, தொழிலாளர் சங்கங்களின் அகில உலக சமஷ்டி2 சர்வதேசக் கூட்டுறவுச் சங்கங்களின் ஐக்கியம்,3முதலிய சில சங்கங்கள் இருக்கின்றன. இவை, உலகத்தின் பொதுநலனை முன்னிட்டு, தங்களுடைய ஒத்துழைப்பைக் கொடுக்க முன்வந்தால் அந்த ஒத்துழைப்பை ஏற்றுக் கொள்வது. பொரு ளாதார-சமுதாயக் கவுன்சிலின் கடமையாகும். இந்தத் தனிப்பட்ட தாபனங்களின் ஒத்துழைப்பு, ஆலோசனை அளவோடுதான் நிற்கிறது. அதாவது, பொருளாதார சமுதாயக் கவுன்சிலுக்கு இந்தத் தனிப்பட்ட தாபனங்கள், தங்கள் ஆலோசனைகளைச் சொல்லலாம்; அப்படியே, இவற்றின் ஆலோசனைகளைப் பொருளாதார-சமுதாயக் கவுன்சில் கேட்கலாம்; அவ்வளவுதான். பொருளாதார-சமுதாயக் கவுன்சிலின் நோக்கங்கள் நிறைவேற அது பின்வரும் நான்குவித நடைமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்:- 1. தனது நோக்கங்களில், குறிப்பிட்ட சிலவற்றைப் பற்றி ஆலோசனை கேட்க சர்வதேச மகாநாடுகள் கூட்டலாம். 2. விசேஷதாபனங்களைப் புதிதாக ஏற்படுத்தலாம்; அல்லது இருக்கப்பட்ட தாபனங்களுடன் ஏற்பாடு செய்துகொண்டு, அவை யனைத்தும் ஒத்துழைப்பதற்குத் தன்னை மத்திய தாபனமாக அமைத்துக் கொள்ளலாம். 3. ஜெனரல் அஸெம்ப்ளிக்கோ, ஐக்கிய தேச தாபனத்தின் அங்கத்தினர்களுக்கோ, தனது நோக்கங்களுக்கு அனுசரணையான சிபார்சுகளை நேரடியாகச் செய்யலாம். 4. ஜெனரல் அஸெம்ப்ளி முன்னர் ஆஜர் படுத்தப்படுவதற்காக, சர்வதேச ஒப்பந்தங்கள் தயாரித்துக் கொடுக்கலாம். பொதுவாக, பொருளாதார - சமுதாயக் கவுன்சிலின் உரிமை களும் கடமைகளும் விரிந்தவையென்று சொல்லவேண்டும். 6. டிரட்டி கவுன்சில் சுதந்திரமும் சமத்துவமும், சமாதானத்தின் அடிப்படைகள். உலகத்தில் நிலையான சமாதானம் ஏற்படவேண்டுமானால், உலகத்தி லுள்ள எல்லா நாடுகளும் சுதந்திரமுடையனவாகவும், அதன் காரணமாகச் சமத்துவமுடையனவாகவும் இருக்கவேண்டும். ஆனால் அப்படியில்லை. உலகத்தின் மொத்த விதீரணத்தில் ஏறக்குறைய நாலில் ஒரு பங்கு விதீரணமுடைய நாடுகள் சுய அரசு இல்லாத நாடுகளாயிருக்கின்றன. சுமார் இருபது கோடி ஜனங்கள் அந்நிய ஆதிக்கத்துக்குட்பட்டவர்களா யிருக்கிறார்கள். சுய அரசு இல்லாத நாடுகளிற் பெரும்பாலன, அமெரிக்கா, பிரிட்டன், பிரான், ஹாலந்து, பெல்ஜியம் முதலியவற்றின் நேரான ஆதிக்கத்துக்குட் பட்டவை. இவை எப்படி உட்பட்டனவென்பது வேறு கதை. ஆம், ரத்தத்திலோ, கண்ணீரிலோ எழுதுகோலைத் தோய்த்துக் கொண்டு எழுத வேண்டிய கதை. முதல் உலக மகாயுத்தத்திற்கு முந்திய காலத்தி லிருந்தே இந்த நாடுகள்- சுய அரசு இல்லாத நாடுகள் - மேற்படி ஆதிக்கங் களுக் குட்பட்டிருக்கின்றன என்று மட்டும் தற்போது தெரிந்து கொண்டால் போதுமானது. முதல் உலக மகா யுத்தித்தின் விளைவாக ஜெர்மனியும் துருக்கியும் சில நாடுகளை இழந்துவிட்டன. இவற்றை என்ன செய்வது என்ற பிரச்னை அப்பொழுது எழுந்தது. இதற்காக, மேற்படி யுத்தத்திற்குப் பிறகு தோன்றிய சர்வதேச சங்கம் ஓர் ஏற்பாடு செய்தது. அஃதென்ன வென்றால், தன்னுடைய சார்பாக இருந்து, இந்த நாடுகளை நிருவாகம் செய்ய, வெற்றி கொண்ட சில நாடுகளுக்கு அதிகாரம் அளித்தது. இந்த அதிகாரத்திற்கு மாண்டேட்1 என்று பெயர். இந்த மாண்டேட் அதிகாரம் பெற்று பிரிட்டனாலும் பிரான்சினாலும் முறையே நிருவாகம் செய்யப்பட்டு வந்த ஈராக், சிரியா, லெபனான், ட்ரான்ஜார்டன் ஆகிய நாடுகள், ஏற்கனவே, அதாவது ஐக்கிய தேச தாபனம் தோன்றுவதற்கு முன்னரே, சுதந்திர நாடுகளாகிவிட்டன. ஐக்கிய தேச தாபனம் தோன்றிய காலத்தில், பிரிட்டன் - பாலதீனத்தையும், ஆப்பிரிக்கா கண்டத்தி லுள்ள டோகோலாண்டின் ஒரு பகுதி, காமரூன்ஸில் ஒரு பகுதி, தாங்கநிக்கா ஆகிய பிரதேசங்களையும், பிரான் - மேற்படி டோகோலாண்டின் மற்றொரு பகுதியையும் காமரூன்ஸில் மற்றொரு பகுதியையும், தென்னாப்பிரிக்கா யூனியன் - தென்மேற்கு ஆப்பிரிக்காவையும், நியூஜீலந்து - பசிபிக் மகா சமுத்திரத்திலுள்ள ஸாமோவா தீவுக் கூட்டங்களில் சிலவற்றையும், ஆதிரேலியா - நியூகினியாவையும், பசிபிக் மகா சமுத்திரத் தின் தெற்குப் பகுதியிலுள்ள சில தீவுகளையும், ஜப்பான் - பசிபிக் மகா சமுத்திரத்திலுள்ள இன்னும் சில தீவுகளையும், பெல்ஜியம் - ஆப்பிரிக்காவிலுள்ள ருவாண்டா - உரூண்டி என்ற பிரதேசத்தையும், மாண்டேட் அதிகாரம் பெற்று நிருவாகம் செய்து வந்தன. இவை இப்படி இருக்கட்டும். இரண்டாவது உலக மகா யுத்தத்தின் விளைவாக இத்தலியும் ஜப்பானும் விழுந்துபோயினவல்லவா, இவற்றின் ஆதிக்கத்திலிருந்த பிரதேசங்களை என்ன செய்வதென்ற பிரச்னை எழுந்தது. தவிர, மேலே சொல்லப்பெற்ற மாண்டேட் அதிகாரத்தின் மூலம் நிருவாகம் செய்யப் பட்டு வந்த பிரதேசங்களின் பிரச்னையும் இருந்தது. ஏனென்றால், இவைகளை நிருவாகம் செய்யுமாறு மாண்டேட் அதிகாரம் அளித்த சர்வ தேச சங்கமென்னவோ இருந்தஇடம் தெரியாமல் மறைந்து விட்டன. அதனுடைய தானத்தில்தான் இப்பொழுது ஐக்கிய தேச தாபனம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இந்த ஐக்கிய தேச தாபனந்தான், மேலே சொன்ன இரண்டு பிரச்னைகளையும், அதாவது மாண்டேட் அதிகாரத்தின் மூலம் நிருவகிக்கப்பட்டு வந்த பிரதேசங்களைப் பற்றிய பிரச்னை, இத்தலியினுடையவும் ஜப்பானுடையவும் ஆதிகத்திலிருந்த பிரதேசங் களைப் பற்றிய பிரச்னை ஆகிய இரண்டு பிரச்னைகளையும் கவனிக்க வேண்டு மென்று ஐக்கிய தேச சாஸன கர்த்தர்கள் தீர்மானித்தார்கள். இங்ஙனம் தீர்மானித்த தோடல்லாமல், உலகத்தின் பொதுவான எண்ணப் போக்குகளை அனுசரித்து, கூடிய மட்டும் தாராள முறையில், ஜனநாயக அமிசங்கள் பிரதி பலிக்கும்படியாக இந்த இரண்டு பிரச்னைகளையும் கவனிக்க வேண்டுமென்று உறுதி பூண்டார்கள். இதற்கென்று ஐக்கிய தேச தாபனத்தில் ஓர் அங்கமாக தனிப்பட்ட ஒரு தாபனத்தை நிறுவினார்கள். இதுவே டிரட்டிஷிப் கவுன்சில் என்று முழுசாகச் சொல்லப்பட வேண்டிய டிரட்டி கவுன்சில்.1 ஐக்கிய தேச தாபனத்தின் சார்பாக, சுய அரசு இல்லாத நாடுகளின் நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத்தும் அரசாங்கங்களை அங்கத்தினராகவுடைய சபை என்று இதற்கு ஒருவாறு வியாக்கியானம் கூறலாம். ஆனால் இதுவே முழு வியாக்கியானமும் ஆகாது. ஏனென்றால், நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத்தாத நாடுகளும் இதில் அங்கத்தினராயிருக்கின்றன. இதைப் பின்னர்க் கவனிப்போம். சாதாரண பாஷையில் சொல்ல வேண்டுமானால் இந்த டிரட்டி கவுன்சிலை, தர்மகர்த்தர்களின் சபை என்று கூறலாம். சுய அரசு இல்லாத நாடுகளின் நிருவாக விஷயத்தில் ஐக்கிய தேச தாபனம் அனுசரிக்கும் கொள்கைகள் இரண்டு வகையாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன் முதலியவற்றின் ஆதிக்கத்தில் நீண்ட காலமாகவே சில நாடுகள் இருந்து வருகின்றன என்று முதலிற் சொன்னோமல்லவா, அந்த நாடுகளைப் பற்றின கொள்கை ஒருவகை; ஏற்கனவே, அதாவது முதல் உலகமகா யுத்தத்தின் விளைவாக மாண்டேட் அதிகாரத்தின் மூலம் நிருவகிக்கப்பட்டு வந்தவை, இனிமேல் ஐக்கிய தேச தாபனத்தின் மேற்பார்வைக்குட்படக் கூடியவை ஆகிய இப்படிப்பட்ட நாடு களைப் பற்றின கொள்கை மற்றொரு வகை. முதலாவது கொள்கையைப் பொறுத்த மட்டில், எந்த ஆதிபத்திய நாடுகள் ஐக்கிய தேச தாபனத்தில் அங்கத்தினரா யிருக்கின்றனவோ அந்த நாடுகள், தங்கள் ஆதீனத்திலிருக்கும் நாட்டாருடைய நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற முறையில் ஆட்சி செலுத்துவதாக ஒப்புக் கொள்ளவேண்டும். இந்த லட்சியத்தை முன்னிட்டு மேற்படி நாடுகள் இன்னின்ன வகையில் நடந்துகொள்ளவேண்டுமென்று ஐக்கிய தேச சாஸனம் கூறுகிறது. அவை என்னவென்றால், 1. ஆதிபத்தியத்திற்குட்பட்டிருக்கிற ஜனங்களின் கலாசாரம், பண்பாடு இவைகளை அனுசரித்து, அவர்களுடைய அரசியல், பொருளாதார, சமுதாய, கல்வி முன்னேற்றம் இருக்குமாறு செய்ய வேண்டும். அவர்களை நியாயமாக நடத்தவேண்டும்; அவர்களைத் தீமைகளினின்று காப்பாற்றவேண்டும். 2. அந்தந்த நாட்டுநிலைமை, ஜனங்களுடைய நிலைமை, அரசியல் விஷயத்தில் அந்த ஜனங்கள் கொண்டிருக்கிற அபிலாஷை ஆகிய இவைகளையெல்லாம் அனுசரித்து அவர்கள் சுய ஆட்சி பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும். 3. சர்வதேச அமைதி, க்ஷேமம் ஆகியவற்றை, அந்த நாடுகளைப் பொறுத்த மட்டில் அதிகரிக்கச் செய்ய வேண்டும். 4. மேலே சொல்லப்பெற்ற சமுதாய, பொருளாதார, கல்வி முன்னேற்றத்திற்கு அனுகூலமாக, எல்லா நாடுகளும் பரபரம் ஒத்துழைக்க வேண்டும்; இவை சம்பந்தமான ஆராய்ச்சிகளுக்கு ஊக்கங் கொடுக்க வேண்டும். மேற்படி அங்கத்தினர் நாடுகள், தங்கள் ஆதிபத்தியத்தின் கீழிருக்கும் நாடுகளைப் பற்றின பொருளாதார, சமுதாய, கல்வி சம்பந்தமான புள்ளி விவரங்களையும், இன்னும் மற்ற விவரங்களையும் அவ்வப்பொழுது ஐக்கிய தேச தாபனத்தின் பொதுக்காரிய தரிசிக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கக் கடமைப்பட்டிருக்கின்றன. இந்த விவரங்கள் கூட, அந்தந்த நாட்டின் பாதுகாப்பு, அரசியல் நிலைமை இவை யிரண்டினையும் பொறுத்த மட்டில் இருந்தாலே போதுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. ïªj Étu§fŸ mD¥òtij¤ jÉu., ஆதிபத்திய நாடுகள், தங்கள் ஆதீனத்திலிருக்கும் நாடுகளைப் பொறுத்தமட்டில், ஐக்கிய தேச தாபனத்திற்கு எவ்வித கடமைகளையும் செய்ய வேண்டியதில்லை. அவைகளுக்கு அவைகளின் ஆதீனத்திலிருக்கும் நாடுகளின் விஷயத்தில் பரிபூரண உரிமை உண்டு. இரண்டாவது வகைக் கொள்கையை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரும் பொருட்டுத்தான் ஐக்கிய தேச தாபனமானது, டிரட்டி முறையை, அதாவது தர்மகர்த்தா முறையை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த முறையின்கீழ் நிருவகிக்கப்படுகின்ற நாடுகளின் விஷயத்திலும், மேலே சொன்ன மாதிரியே ஐக்கிய தேச தாபனமோ அல்லது அதன் அதிகாரம் பெற்ற ஒரு நாட்டு அரசாங்கமோ நடந்துகொள்ள வேண்டுமென்று ஐக்கிய தேச சாஸனம் கூறுகிறது. அதாவது, அந்த ஜனங்களின் பொருளாதார, சமுதாய, கல்வி, அரசியல் முன்னேற்றங்களுக்கு அனுகூலமாக நிருவாகம் நடைபெறவேண்டும்; அவர்களைச் சுய ஆட்சிக்குப் பக்குவப்படுத்த வேண்டும்; எவ்வித வேற்றுமையும் பாராட்டாமல் எல்லோருடைய ஜீவாதாரமான உரிமைகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்தை அவர்களிடத்தில் வளர்க்க வேண்டும்; உலகத்திலுள்ள சர்வ ஜனங்களுக்கும் பரபர உதவியும் ஒத்துழைப்பும் இன்றியமையாததாயிருக்கிறதென்பதை அவர் களுக்கு உணர்த்த வேண்டும். எந்த நாடு, மற்றொரு நாட்டின் நிருவாகப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறதோ அந்த நாடு, முதலாவது ஐக்கிய தேச தாபனத்தின் அங்கத்தினராயிருக்கவேண்டும். அதாவது தாபனத்தின் அங்கத் தினருக்குத்தான், மற்றொரு நாட்டின் டிரட்டியாக இருக்க உரிமையுண்டு. டிரட்டியாக நியமிக்கப்படுவதற்கு முன், அந்த நாடு ஐக்கிய தேச தாபனத்தினால் தயாரிக்கப்படுகிற ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத் திடவேண்டும். இந்த ஒப்பந்தத்தில், எந்த நாட்டுக்கு டிரட்டியாக இருந்து நிருவாகம் செய்கிற அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது, என்னென்ன நிபந்தனைகள் மீது அந்த அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பன போன்ற ஷரத்துகள் அடங்கியிருக்கும். இந்த ஷரத்துகளில் அவ்வப் பொழுது ஏதேனும் திருத்தங்களோ மாற்றங்களோ செய்யப்பட வேண்டி யிருந்தால் அவற்றை, ஐக்கிய தேச தாபனமும், டிரட்டியாக இருந்து நிருவாகம் செய்கிற அரசாங்கமும் முன்கூட்டியே ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். அதாவது இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பின்னரே மேற்படி ஒப்பந்தத்தில் திருத்தங்களோ மாற்றங்களே செய்யப் படலாம். ஒரு நாட்டுக்கு ஒரு நாடு மட்டுமே டிரட்டியாக இருக்கவேண்டு மென்பதில்லை; ஒரு நாட்டைப் பல நாடுகளும் சேர்ந்து டிரட்டியாக இருந்து நிருவாகம் செய்யலாம். டிரட்டி நிருவாகத்திற்குட்படுத்தப் படுகிற நாடுகளில், உட்படுத்தப்படுகிற காலத்திற்கு முன்னர் எந்த மாதிரியான நிருவாகம் நடைபெற்று வந்ததோ அந்த மாதிரியே தொடர்ந்து நடைபெறும். ஐக்கிய தேச தாபனம், தன் இஷ்டப்படி இந்த நிருவாக முறையை மாற்றி விடாது. அப்படி ஏதேனும் மாற்றம் செய்யவேண்டுமென்று ஐக்கிய தேச தாபனம் கருதுமானால், டிரட்டியாக இருக்க ஒப்புக் கொண்டிருக்கிற நாட்டின் அங்கீகாரத்தைப் பெற்றே செய்யவேண்டும். அதாவது ஐக்கிய தேச தாபனமானது எந்த ஒரு பிரதேசத்தையும், அவை முந்தி சத்துருக் களாயிருந்தவர்களுடைய பிரதேசங்களாயிருந்தாலும் சரி, அவற்றைத் தன் இஷ்டப்படிக்கு சுவாதீனப்படுத்திக் கொண்டுவிட்டது, அவற்றின் நிருவாக முறையை அடியோடு மாற்றியமைத்துவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லாமற் செய்யப்பட்டிருக்கிறது. சர்வ தேச அமைதியையும் க்ஷேமத்தையும் உத்தேசித்து, டிரட்டி நிருவாகத்திற்குட்பட்டிருக்கும் நாடுகளில், குறிப்பிட்ட ஒரு பிரதேசம் ராணுவ தலமாக இருக்கவேண்டுமென்று ஐக்கிய தேச தாபனம் கருதுமானால், அப்படியே ஒரு பிரதேசத்தையோ பல பிரதேசங்களையோ ஒதுக்கி வைக்க ஏற்பாடு செய்யலாம். இப்படி எந்தப் பிரதேசம் அல்லது எந்தெந்தப் பிரதேசங்கள் ராணுவ தலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக் கின்றன வென்று, ஐக்கிய தேச தாபனமும் டிரட்டியாக இருந்து நிருவாகம் செய்ய ஒப்புக் கொள்ளும் நாடும் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமென்று மேலே சொன்னோமல்லவா அந்த ஒப்பந்தத்தில் காணப்படவண்டும். இந்த ராணுவப் பிரதேச சம்பந்தமான நிருவாகம் பூராவும் பாதுகாப்புக் கவுன்சில் வசம் இருக்கும். பாதுகாப்புக் கவுன்சில், ஐக்கிய தேச தாபனத்தின் சார்பாக இந்தப் பிரதேச நிருவாகத்தை நடத்தவேண்டுமென்பது நியதி. ஐக்கிய தேச தாபன அங்கங்களில், டிரட்டி கவுன்சில் ஒன்றில்தான், இத்தனைபேர் அங்கத்தினர் என்ற நிர்ணயம் கிடையாது. அங்கத்தினர்களின் எண்ணிக்கை, டிரட்டியாக இருந்து நிருவாகம் செய்யும் நாடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அவ்வப்பொழுது மாறுபடும். இஃதெப்படி என்பதை பின்னாடி தெரிந்து கொள்வோம். டிரட்டி கவுன்சில் அங்கத்தினர்களை, டிரட்டி அங்கத்தினர் களென்றும், டிரட்டிகளல்லாத அங்கத்தினர்களென்றும் இரு பிரிவினராகப் பிரித்துச் சொல்லலாம். யாரார் மற்ற நாடுகளுக்கு டிரட்டிகளாயிருந்து நிருவாகம் செய்து வருகிறார்களோ அவர்களெல்லோரும் டிரட்டி அங்கத்தினர்கள்; அப்படி மற்ற நாடுகளுக்கு டிரட்டிகளாயிருந்து நிருவாகம் செய்யாதவர்கள் டிரட்டிகளல்லாத அங்கத்தினர்கள். இது தெளிந்த விஷயமே. டிரட்டி கவுன்சிலில், டிரட்டி அங்கத்தினர் எத்தனைபேர் இருக்கின்றனரோ எத்தனை பேருக்குச் சமதையான எண்ணிக்கை யுடைய டிரண்ட்டிகளல்லாத அங்கத்தினரும் இருக்கவேண்டுமென்று ஐக்கிய தேச சாஸன கர்த்தர்கள் நிர்ணயித்திருக்கிறார்கள். டிரட்டிகளல்லாத அங்கத்தினரை மூன்று வருஷத்திற்கொரு முறை ஜெனரல் அஸெம்ப்ளியானது தெரிந்தெடுக்கும். டிரட்டி அங்கத்தினர் களுக்குத் தேர்தல் கிடையாது. அவர்கள் எப்பொழுதும் அங்கத்தினர் களாயிருக்கக் கூடியவர்கள். இதனால்தான், டிரட்டி அங்கத்தினர்களை நிரந்தர அங்கத்தினர்களென்றும், டிரட்டிகளல்லாத அங்கத்தினர்களை நிரந்தரமல்லாத அங்கத்தினர்களென்றும் சிலர் அழைப்பர். இப்படிப் பிரித்துச் சொல்லியபோதிலும், நிரந்தரமல்லாத அங்கத்தினரிலும் நிரந்தர அங்கத்தினர் சிலர் உண்டு. இஃது ஒரு புதிர் மாதிரி இருக்கும். இதனைச் சிறிது விளக்கிச் சொன்னால்தான் தெரியும். பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர அங்கத்தினர்களான ஐம்பெரும் வல்லரசுகளில் யாரார் மற்ற நாடுகளுக்கு டிரட்டிகளா யில்லாம லிருக்கிறார்களோ அவர்கள், பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர அங்கத்தினர் என்ற ஹோதாவில், டிரட்டி கவுன்சிலில், நிரந்தரமல்லாத அங்கத்தினராக அதாவது டிரட்டிகளல்லாத அங்கத்தினராக இடம் பெற வேண்டுமென்று கட்டாய விதியாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக, டிரட்டி நாடுகளான அங்கத்தினர் ஆறுபேர் இருக்கிறார்களென்று வைத்துக் கொள்வோம். இவர்களுடைய எண்ணிக்கையைச் சமதையாக டிரட்டி நாடு களல்லாத ஆறுபேரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவா? ஆனால் ஜெனரல் அஸெம்ப்ளி அப்படிச் செய்யாது; நான்கு பேரை மட்டுமே தெரிந் தெடுக்கும். ஏனென்றால் பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர அங்கத்தினர் களான ஐம்பெரும் வல்லரசுகளில், ருஷ்யா சீனா ஆகிய இரண்டும் எந்த நாட்டுக்கும் டிரட்டிகளில்லையல்லவா? இவர்கள் பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர அங்கத்தினர் என்ற ஹோதாவில் தேர்தல் முதலிய எந்த சம்பிரதாயங்களுமில்லாமல், தாமே சுயமாக டிரட்டி கவுன்சிலின் நிரந்தரமல்லாத அங்கத்தினராகி விடுகின்றனர். இதனை இன்னும் தெளிவாக்க டிரட்டி கவுன்சிலின் 1951-ஆம் வருஷத்து அமைப்பைக் கூறுவோம். அப்பொழுதைய டிரட்டி கவுன்சிலில், மொத்தம் பன்னிரண்டுபேர் அங்கத்தினர்கள். இவர்களில் நிரந்தர அங்கத்தினர்களென்று அழைக்கப்பட்ட டிரட்டி அங்கத்தினர்கள், அதாவது, வேறு சில நாடுகளின் தர்மகர்த்தா பொறுப்பை ஏற்று நிருவாகம் நடத்திய நாடுகள் ஆறுபேர். இவர்கள் முறையே பிரிட்டன், பிரான், பெல்ஜியம், நியூஜீலந்து, ஆதிரேலியா, அமெரிக்கா; டிரட்டிகளல்லாத, அதாவது நிரந்தரமல்லாத அங்கத்தினர் ஆறுபேர். இவர்கள் முறையே, சீனா, ருஷ்யா, ஈராக், அர்ஜண்ட்டைனா, டாமினிக்கன் குடியரசு, சையாம். இந்த அறுவரில் சீனா, ருஷ்யா, ஆகிய இருவரும், பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர அங்கத்தினர் என்ற ஹோதாவில் இங்கு-டிரட்டி கவுன்சிலில் - .இடம் பெற்றனர். தேர்தல் மூலம் தெரிந்தெடுக்கப்பட்டவர் நான்கு பேர் தான். இவர்கள் முறையே ஈராக், அர்ஜண்ட்டைனா, டாமினிக்கன் குடியரசு, சையாம் ஆகிய நான்கு நாடுகள், ஆக, ஐம்பெரும் வல்லரசுகள், எப்படிப் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர அங்கத்தினர்களா யிருக்கின்றனவோ அப்படியே இந்த டிரட்டி கவுன்சிலிலும், டிரட்டி அங்கத்தினர்களாகவோ, டிரட்டிகளல்லாத அங்கத்தினர்களாகவோ, அதாவது நிரந்தர அங்கத்தினர் களாகவோ, நிரந்தரமல்லாத அங்கத்தினர்களாகவோ, ஏதோ ஒரு வகையில் இடம் பெறும். ஐக்கிய தேச தாபனத்தில் அங்கத்தினராயுள்ள சில நாடுகளின் வசம், வேறு சில சுய அரசு இல்லாத நாடுகளின் தர்மகர்த்தா பொறுப்பு ஒப்படைக்கப்படுமானால், அப்பொழுது டிரட்டி கவுன்சிலின் அங்கத்தினர் எண்ணிக்கையும் அந்த விகிதாசாரப்படி அதிகப்படும். இங்கே வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம், இரண்டாவது உலக மகா யுத்த முடிவில் வீழ்ந்து போன ஜெர்மனியும், ஜப்பானும், அமெரிக்கா, பிரிட்டன், ருஷ்யா ஆகிய வல்லரசுகளின் நிருவாக மேற்பார்வைக்குட்பட்டனவே, அது, மேற்படி டிரட்டி முறையை அனுசரித்துத்தானா, அதாவது, ஐக்கிய தேச தாபனத்தின் அங்கீகாரத்தைப் பெற்று, அமெரிக்கா, பிரிட்டன், ருயா ஆகிய வல்லரசுகள், தர்மகர்த்தர் களாக இருந்து ஜெர்மனியையும் ஜப்பானையும் நிருவாக மேற்பார்வை செய்தனவா என்று வாசகர்கள் கேட்கலாம். அப்படியில்லை. ஐக்கிய தேச தாபனத்தின் டிரட்டி ஏற்பாட்டுக்கும், அதாவது தர்மகர்த்தா முறைக்கும், வல்லரசுகளின் இந்த மேற்பார்வைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. மேலே சொன்ன வல்லரசுகள் வெற்றிகொண்ட நாடுகள் என்ற ஹோதாவில் தங்களுக்குள் ஒரு முடிவு செய்துகொண்டு ஜெர்மனியையும் ஜப்பானையும் நிருவாகம் செய்தனவே தவிர, ஐக்கிய தேச தாபனத்தின் அங்கத்தினர் என்ற ஹோதாவில் அல்ல. டிரட்டி கவுன்சிலின் அங்கத்தினர் நாடு ஒவ்வொன்றும், டிரட்டி கவுன்சில் கூட்டங்களுக்கு, எல்லா விதங்களிலும் தகுதியுடைய ஒருவரை பிரதிநிதியாகத் தெரிந்தெடுத்தனுப்ப வேண்டும். ஒவ்வொரு பிரதிநிதிக்கும் ஒவ்வோர் ஓட்டு உண்டு. கவுன்சிலின் முன்னர் கொண்டுவரப்படும் எந்த ஒரு தீர்மானமும் பெரும்பான்மையான ஓட்டுகள் மூலம் நிறைவேற்ற ப்படும். ஜெனரல் அஸெம்ப்ளியின் மேற்பார்வைக்குட்பட்டே இந்த டிரட்டி கவுன்சிலின் விவகாரங்கள் யாவும் நடைபெறுவதாலும், டிரட்டி கவுன்சிலில் நிறைவேற்றப்படுகிற எந்த ஒரு தீர்மானமும் ஜெனரல் அஸெம்ப்ளியின் அங்கீகாரத்தைப் பெறவேண்டுமென்றிருப்பதாலும், குறைந்தபட்சம் இத்தனை சதவிகித ஓட்டுகள் இருந்தால்தான் பெரும் பான்மையான ஓட்டுகளாகக் கருதப்படும் என்ற நிர்ணயம் ஏற்படுத்தப் படவில்லை; கூட்டத்தில் ஆஜராயிருக்கப் பட்டவர்களில்- பெரும்பான்மை யோர் - அதாவது பத்துபேர் ஆஜராயிருந்தால் அவர்களில் ஆறுபேர் - ஒரு தீர்மானத்திற்குச் சாதகமாக ஓட்டுக் கொடுத்தாலே, அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படலாமென்று நிர்ணயிக்கப் பட்டிருக் கிறது. இப்படிக்கின்றி ஒரு தீர்மானத்திற்குச் சாதகமாகவும் பாதகமாகவும் சரிசமானமான ஓட்டுகளே - அதாவது ஐந்து ஓட்டுகள் சாதகமாகவும் ஐந்து ஓட்டுகள் பாதகமாகவும் - கிடைத்தனவென்று வைத்துக் கொள்வோம்; அப்பொழுது அந்தத் தீர்மானத்தின் கதியென்னாவது என்ற சந்தேகம் வாசகர்களுக்குத் தோன்றலாம். அப்படிச் சரிசமமாக ஓட்டுகள் கிடைத்தால் அந்தத் தீர்மானம் நிறைகவற்றப்பட்டதாகக் கருதப்பட மாட்டாது; நிராகரிக்கப்பட்டதாகவே கருதப்படும். கூட்டத்தின் தலைவர், தமது விசேஷ ஓட்டைப்போட்டு, ஒரு தீர்மானத்தை அங்கீகரிக்கவோ நிராகரிக்கவோ செய்துவிட முடியாது. அதாவது தலைவருக் கென்று விசேஷமான ஓட்டுரிமை எதுவும் கிடையாது. டிரட்டி கவுன்சில், தன்னுடைய கூட்டங்களை எப்படி எப்படி நடத்துவது என்பதன் சம்பந்தமான விதிகள், நடைமுறைகள் முதலியவற்றையெல்லாம் தானே வகுத்துக் கொள்கிறது. கவுன்சிலின் கூட்டங்கள் பெரும்பாலும் ஐக்கிய தேச தாபனத்தின் தலைமை தானத்திலேயே நடைபெறும். ஆனால் கூட்டங்கள், இன்னின்ன காலத்தில் தான் கூடவேண்டுமென்ற நிர்ணயம் எதுவும் கிடையாது. அவசியம் ஏற்பட்டால், அல்லது அங்கத்தினரில் பெரும் பாலோர் விரும்பினால் கூட்டங்கள் நடைபெறும். காரியாமிசத்தில் பார்க்கப் போனால், இது வரை ஆறுமாதத்திற் கொரு தடவை கூட்டங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. டிரட்டி கவுன்சில், தன்னுடைய காரியங்கள் நடைபெற வேண்டு மென்பதற்கு அனுகூலமாக, தேவையான பொழுது, பொருளாதார - சமுதாயக் கவுன்சிலின் ஒத்துழைப்பையோ அல்லது அதனோடு இணைக்கப் பட்டிருக்கும் சர்வதேச அரசாங்க தாபனங்களின் ஒத்துழைப்பையோ நாடலாம். இனி, டிரட்டி கவுன்சில் செய்து வரவேண்டிய கடமைகளென்ன வென்பதைக் கவனிப்போம். இவை, இந்தக் கடமைகள், ஐக்கிய தேச சாஸனத்தின் 87, 88வது பிரிவுகளில் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன. 1. டிரட்டிகளாக இருந்து நிருவாகம் செய்யும் அரசாங்கங்கள், அவை நிருவாகம் செய்யும் நாடுகளைப் பற்றி அவ்வப்பொழுது அனுப்பும் அறிக்கைகளைப் பரிசீலனை செய்யும். 2. அந்த நாடுகளிலிருந்து, அதாவது டிரட்டி நிருவாகத்திற்குட் பட்டிருக்கிற நாடுகளின் ஜனங்களிடமிருந்து வரும் மனுக்கள், கோரிக்கைகள் முதலியவற்றை நிருவாகம் செய்யும் டிரட்டி அரசாங்கங் களுடன் கலந்து கொண்டு பரிசீலனை செய்யும்; அவசியமானால் அந்தந்த தலங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தும். 3. டிரட்டி ஒப்பந்தங்களை அனுசரித்து அவ்வப்பொழுது உசிதமான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளும். இவை தவிர டிரட்டி நிருவாகத்திற்குட்பட்டிருக்கிற நாடுகளில் வசிக்கும் ஜனங்களின் பொருளாதார, சமுதாய, அரசியல், கல்வி முன்னேற்றத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள, டிரட்டி கவுன்சிலானது ஒரு வினாப்பத்திரம் தயாரித்து அதை எல்லா டிரட்டி அரசாங்கங்களுக்கும் அனுப்பும். அதை அனுசரித்து, பிரதியொரு டிரட்டி அரசாங்கமும், வருஷவாரி ஓர் அறிக்கை தயாரித்து ஜெனரல் அஸெம்ப்ளிக்கு அனுப்பவேண்டும். 7. சர்வ தேச கோர்ட்டு ஒரு தேசத்திற்கும் மற்றொரு தேசத்திற்கும் சட்ட சம்பந்தமான தகராறு ஏற்படுமானால் அதனைத் தீர்த்து வைக்க ஒரு நீதிதலம் தேவை யல்லவா? இதற்காக ஒரு நீதிதலம் தாபிக்கப்பட்டிருக்கிறது. இஃது, ஐக்கிய தேச தாபனத்தின் ஓர் அங்கமாயுள்ளது. இதற்கு சர்வதேச கோர்ட்டு என்று பெயர். இதன் நிரந்தர தலைமை தாபனம் ஹாலந்திலுள்ள ஹேக் நகரம்.1 இந்த சர்வ தேச கோர்ட்டு, அடியோடு புதிதாகத் தோற்றுவிக்கப் பட்ட ஓரு தாபனமென்று சொல்ல முடியாது. மேற்படி ஹேக் நகரத்தில் 1899-ஆம் வருஷத்திலும் 1907-ஆம் வருஷத்திலும் நடைபெற்ற சர்வதேச மகாநாடுகளின் விளைவாக, சர்வதேச மத்தியத கோர்ட்டு ஒன்று தாபிக்கப்பட்டது. இதற்கென்று சில சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதற்குப் பிறகு முதல் உலக மகாயுத்தத்தின் இறுதியில் தோன்றிய சர்வ தேச சங்கத்தின் சார்பாக ஒரு சர்வதேச நிரந்தர கோர்ட்டு தாபிக்கப்பட்டது. இதற்கென்றும் சில சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டன. இவ்விரண்டு கோர்ட்டுகளை அதிவாரமாகக் கொண்டும், இவைகளின் தொடர்ச்சி யாகவும் இந்த ஐக்கிய தேச தாபனத்தின் சர்வ தேச கோர்ட்டு ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. ஐக்கிய தேச சாஸனத்தைப்போல் இதற்கென்று தனியாகச் சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டுப் பல நாட்டினராலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சட்டதிட்டங்கள் மேலே சொன்ன இரண்டு கோர்ட்டுகளின் சட்ட திட்டங்களை அனுசரித்தாற்போலவே இருக்கின்றன. இந்த சர்வதேச கோர்ட்டில் மொத்தம் பதினைந்து பேர் நீதிபதிகள், உலகத்திலேயே மிகச் சிறந்த சட்ட நிபுணர்களாகவும் சீல புருஷர் களாகவும் இருக்கப்பட்டவர்களே இந்தப் பதவிக்கு நியமிக்கப்படு கிறார்கள். ஒரே நாட்டைச் சேர்ந்த இரண்டுபேர் இதில் நீதிபதிகளாயிருக்கக் கூடாது. இந்த நீதிபதிகள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்? சர்வதேசக் கோர்ட்டின் சட்ட திட்டங்களை அங்கீகரித்துக் கொண்டிருக்கிற நாடு களிலுள்ள முக்கிய இனத்தினர், நீதிபதி தானத்திற்குத் தகுதியுடையவர் என்று தாங்கள் கருதுகின்ற நபர்களடங்கிய ஒரு ஜாபிதாவை, தாபனத்தின் காரியாலயத்திற்கு அனுப்புவர். தாபனத்தின் பொதுக் காரியதரிசியானவர், இந்த ஜாபிதாக்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து அகர வரிசையில் புதிய ஒரு ஜாபிதா தயாரித்து, அந்த ஜாபிதாவில் இரண்டு பிரதிகள் எடுத்து, ஒன்றை ஜெனரல் அஸெம்ப்ளிக்கும் மற்றொன்றை பாதுகாப்புக் கவுன்சிலுக்கும் அனுப்புவார். இந்த ஜாபிதாவிலிருந்து பதினைந்து பேரைத் தெரிந்தெடுப்பதற்காக, இரண்டு சபைகளும் - அதாவது அஸெம்ப்ளியும் கவுன்சிலும் - ஒரே சமயத்தில் தனித்தனியாகக் கூடும். இரண்டு கூட்டங்களிலும் அதிகமான ஓட்டுகள் பெறுகிறவர்கள் நீதிபதிகளாகத் தெரிந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்குப் பிறகு சில தானங்கள் பூர்த்தி செய்யப்படாமல் காலியாயிருக்குமானால் அவைகளுக்காக மறுபடியும் இரண்டாந்தடவை, அவசியமானால் மூன்றாந் தடவை கூட, மேற்கண்ட மாதிரி கூட்டங்கள் கூடி காலி தானங்களைப் பூர்த்தி செய்யும், மூன்றாவது கூட்டத்திற்குப் பிறகு கூட ஓரிரண்டு தானங்கள் காலியாயிருக்குமானால், ஜெனரல் அஸெம்ப்ளியிளிருந்து மூன்று அங்கத்தினர்களும், பாதுகாப்புக் கவுன்சிலிலிருந்து மூன்று அங்கத்தினர்களும் சேர்ந்து ஓரு கூட்டு மகாநாடு நடத்துவார்கள். அதில், பெரும்பான்மையான ஓட்டுகளின் மூலம் மிகுதி தானங்களையும் பூர்த்தி செய்வார்கள். நீதிபதிகளைத் தெரிந்தெடுக்கிற முறை, பொதுவாகச் சிக்கலாயிருந்தாலும், சிறந்த நபர்கள் மேற்படி தானங்களில் அமர வேண்டுமென்பதற்காகவும், உலகத்திலுள்ள முக்கியமான நாகரிகங்களும், சட்ட முறைகளும் பிரதிநிதித்துவம் பெற வேண்டுமென்பதற்காகவும், இந்த வடிகட்டுகிற முறை கையாளப்படுகிறது. நீதிபதிகளின் உத்தியோக காலம் ஒன்பது வருஷம், ஆனால் முதன் முதலாக நடைபெறும் தேர்தலில் ஓர் ஐந்து பேர் மூன்று வருஷ காலத்திற்கும், மற்றோர் ஐந்து பேர் ஆறு வருஷ காலத்திற்கும், இன்னோர் ஐந்து பேர் ஒன்பது வருஷ காலத்திற்குமாகத் தெரிந்தெடுக்கப்படுவர், மொத்தம் பதினைந்து பேரில், எந்த ஐந்து பேர் மூன்று வருஷத்திற்கும் ஆறு வருஷத்திற்கும் முறையே தெரிந்தெடுக்கப்பட வேண்டுமென்பதை நிர்ணயம் செய்து கொள்வதற்காகச் சீட்டுகள் குலுக்கிப் போடப்படும். ஒரு நீதிபதியினுடைய உத்தியோக காலம் முடிந்தவுடன் அவர், தமது பதவியிலிருந்து விலகிவிடக்கூடாது. வேறொருவர் வந்து அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டபிறகுதான் அவர் விலகவேண்டும். அப்படி விலகினாலும், தாம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்கை ஒரு வகையாக முடித்துக் கொடுக்க வேண்டும். உத்தியோக காலம் முடிவடைகிற காரணத்தினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ சில தானங்கள் காலி விழுமானால், அந்த தானங்களைப் பூர்த்தி செய்வதற்கு, முதன் முறையாக நீதிபதிகள் தெரிந்தெடுக்கப் படுகிறபோது என்னென்ன முறைகள் கையாளப்பட்டனவோ அதே முறைகளை அனுஷ்டித்து அந்த தானங்கள் பூர்த்தி செய்யப்படவேண்டும். நீதிபதிகளாக நியமிக்கப் படுகிறவர்கள், தங்கள் உத்தியோக காலத்தில், எந்த விதமான அரசியல் விவகாரங்களிலும் தலையிடக் கூடாது; எந்த விதமான நிருவாக அதிகாரத்தையும் மேற்கொள்ளக் கூடாது; எந்த விதமான வழக்கிலும் வக்கீலாக ஆஜராகக் கூடாது. பதினைந்து நீதிபதிகளும் தெரிந்தெடுக்கப்பட்ட பிறகு, இவர்கள் ஒன்றுகூடி, தங்களில் ஒருவரைத் தலைவராகவும், இன்னொருவரை உபதலைவராகவும் தெரிந்தெடுத்துக்கொள்வர்; இன்னும், கோர்ட்டு சம்பந்தமான நிருவாகத்தைக் கவனித்துக் கொள்ளத் தேவையான உத்தியோகதர்களையும் நியமித்துக் கொள்வர். தலைவர், உபதலைவர் ஆகிய இருவரும் மூன்று வருஷத்திற்கு மட்டுமே அந்தப் பதவிகளை வகிக்கலாம். இதற்குப் பிறகு அந்தப் பதவிகளுக்கு மறுபடியும் தேர்தல் நடைபெறும். பிரதியொரு நீதிபதியும் வருஷத்திற்கு இருபத்தோராயிரம் டாலர் விகிதம் சம்பளம் பெறுவர். தலைவர் மட்டும் இந்தச்சம்பளத் தோடு, விவேஷ படிச் செலவென்று ஒரு தொகையை அதிகமாகப் பெறுவார். ஏதோ விசேஷ சந்தர்ப்பங்களில் தலைவர் தானத்தில் உப தலைவர் அமர்ந்து வேலை பார்க்க நேரிடுமாயின், அப்படிப் பார்த்த ஒவ்வொரு நாளுக்கும், தலைவரைப் போல் அவருக்கும் படிச் செலவு கொடுக்கப்பெறும். கோர்ட்டு நடைபெறுவதற்கான சகல செலவுகளும் ஐக்கிய தேச தாபனத்தைச் சேர்ந்தது. இதற்கென்று - அதாவது சர்வதேசக் கோர்ட்டுக்கென்று,- எவ்வளவு தொகை ஒதுக்கப்பட வேண்டுமென்பதை ஜெனரல் அஸெம்ப்ளி நிர்ணயிக்கும். கோர்ட்டின் நிரந்தர தலைமை தானம் ஹேக் நகரமாகவே இருக்கும். ஆனால் கோர்ட்டார் அவசியமென்று கருதினால், வேறு இடங்களிலும் கூடி வழக்குகளை விசாரணை செய்யலாம். ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் சட்ட சம்பந்தமாக ஏற்படும் விவகாரத்தை விசாரணை செய்து தீர்ப்புச் சொல்வதற்குத் தான் இந்தச் சர்வதேசக் கோர்ட்டே தவிர, தனிப்பட்ட நபர்களுடைய வழக்குகளை விசாரணை செய்வதற்காகவல்ல. அதாவது, கோர்ட்டின் முன்னர் ஆஜராகக்கூடியவர்கள் தேசங்களே தவிர, தனிப்பட்டவர்களல்ல. தேசங்களென்றால், தேசங்களின் பிரதிநிதிகளென்பதே அர்த்தமென்று நாம் சொல்ல வேண்டியதில்லையல்லவா? தங்கள் முன்னர் விசாரணைக்கு வரும் வழக்குச் சம்பந்தமான தகவல்களை, எந்த சர்வதேச அரசாங்க தாபனங்களிலிருந்தேனும்- உதாரணமாக உணவு விவசாய தாபனம் முதலிய தாபனங் களிலிருநது - வரவழைத்துப் பரிசீலனை செய்ய கோர்ட்டாருக்கு அதிகாரமுண்டு. சர்வதேச கோர்ட்டின் சட்ட திட்டங்களை ஏற்றுக் கொண் டிருக்கிற நாடுகள் மட்டுமே, தங்கள் வழக்குகளைத் தாக்கல் செய்து தீர்ப்புக்கோரலாம். மேற்படி சட்ட திட்டங்களை ஏற்றுக்கொள்ளாத நாடுகள், பாதுகாப்புக் கவுன்சில் விதிக்கிற நிபந்தனைகளுக்குட்பட்டு, தங்கள் வழக்ககளை தாக்கல் செய்து தீர்ப்புக் கோரலாம். மேற்படி சட்ட திட்டங்களை ஏற்றுக்கொள்ளாத நாடுகள் என்ற காரணத்தினால் அவை எந்த விதத்திலும் வித்தியாசமாக நடத்தப்படமாட்டாது. சர்வதேச கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் எந்த ஒரு வழக்கிலேனும், ஐக்கிய தேச தாபனத்தில் அங்கத்தினராயில்லாத ஒரு நாடு வாதியாகவோ பிரதிவாதியாகவோ சம்பந்தப்பட்டிருக்குமானால், அந்த நாடு, மேற்படி கோர்ட்டுக்கு நிர்ணயிக்கிற ஒரு செலவுத் தொகையைக் கொடுத்துவிடவேண்டும். கோர்ட்டு எந்த வழக்கில் தீர்ப்புச் சொல்கிறதோ அந்தத் தீர்ப்பு, அந்த வழக்கு சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தும். அப்படி எந்த ஒரு தரப்பு நாடேனும் கட்டுப்பட சம்மதிக்காது போலிருந்தால் அதன் மீது, பாதுகாப்புக் கவுன்சில், உசிதமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளும். கோர்ட்டு செய்கிற தீர்ப்புக்கு அப்பீல் கிடையாது. கோர்ட்டு அளிக்கிற தீர்ப்பில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை நிவர்த்திக்கும்படி ஒரு தரப்பினரோ இரண்டு தரப்பினருமோ கோர்ட்டாரைக் கேட்கலாம். ஆனால் இந்தச் சந்தேக நிவர்த்திக் கோரிக்கை, சந்தேகத்திற்குக் காரணமான விஷயம் கண்டு பிடிக்கப்பட்ட ஆறுமாதத்திற்குள் தெரிவித்துக் கொள்ளப் படவேண்டும். எப்படியும், தீர்ப்புச் சொன்ன பத்து வருஷத்திற்குப் பிறகு, சந்தேக நிவர்த்தி சம்பந்தமான எந்தக் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. தேசங்களுக்குள் ஏற்பட்டிருக்கிற உடன்படிக்கைகளைப் பற்றிய வியாக்கியானம், சர்வதேச சட்டங்களைப் பற்றிய வியாக்கியானம், சர்வதேசங்களுக்கும் பொதுவான சில பொறுப்புகள் உண்டல்லவா அவற்றைப் பற்றிய வியாக்கியானம், அவற்றில் எவை எவைகளை நிறைவேற்றாமல் போனால் என்ன பரிகாரம் செய்யப்படவேண்டும் என்பன போன்ற சர்வதேசப் பொதுவான விவகாரங்களையே இந்தச் சர்வதேச கோர்ட்டு விசாரிக்கும். குறிப்பிட்ட ஒரு வழக்கை விசாரிக்க கோர்ட்டுக்கு அதிகார முண்டா என்பதைப் பற்றித் தகராறு ஏற்படுமானால் அது விஷயத்தில் கோர்ட்டு சொல்லும் தீர்ப்பே முடிவானது. ஜெனரல் அஸெம்ப்ளியோ, பாதுகாப்புக் கவுன்சிலோ, ஜெனரல் அஸெம்ப்ளியின் அதிகாரம் பெற்ற விசேஷ தாபனங்களோ - அதாவது உணவு, விவசாய தாபனம் போன்றவை - தங்கள் தங்கள் வரம்புக்குட்பட்ட சட்ட சம்பந்தமான எந்த ஒரு விவகாரத்தையும் சர்வதேச கோர்ட்டு முன்னர் ஆஜர்படுத்தி, அதனைப் பரிசீலனை செய்து அபிப்பிராயம் சொல்லுமாறு கேட்கலாம். கோர்ட்டு நடவடிக்கைகள் யாவும் இங்கிலீஷ் பாஷையிலோ பிரெஞ்சு பாஷையிலோ நடைபெறும். வழக்கு சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் இங்கிலீஷ் பாஷையிலேயே வழக்கை நடத்தவேண்டு மென்று கோரினால் அப்படியே நடத்தி, தீர்ப்பையும் அதே பாஷையில் நீதிபதிகள் சொல்லவேண்டும். பிரெஞ்சு பாஷைக்கும் இதே மாதிரிதான். இருதரப்பினரில் எந்த ஒரு தரப்பினருடைய வேண்டுகோளின் பேரிலும், இங்கிலீஷையும் பிரெஞ்சையும் தவிர்த்து வேறெந்த பாஷையிலாவது அந்தத் தரப்பினரை வாதம் நடத்துவதற்குக் கோர்ட்டார் அனுமதிக்கலாம். 8. காரியாலயம் ஐக்கிய தேச தாபனத்தின் நிருவாக அங்கமாயிருப்பது அதன் காரியாலயம். மற்ற அங்கங்களைச் சேர்ந்தவர்கள் அவ்வப்பொழுது மாறக் கூடும். ஆனால் காரியாலயத்தைச் சேர்ந்தவர்கள் நிரந்தரமாக இருக்கக் கூடியவர்கள்; நிரந்தரமாக இருந்து அதில் சேவை செய்வதற்காகவே வந்திருக்கிறவர்கள். மற்ற அங்கங்கள் தனித்தனியாக இருந்து தங்கள் கடமைகளைச் செய்கின்றன. காரியாலயமோ, எல்லா அங்கங்களையும் இணைத்து வைக்கிற பாலம் மாதிரி இருக்கிறது. மற்ற அங்கங்களின் கூட்டங்களுக்குப் பிரதிநிதிகளாக வருகிறவர்கள், தங்கள் தங்கள் தேசத்தின் பிரஜைகளாகவும் பிரதிநிதிகளாகவும் இருக்கிறார்கள்; எந்த அரசாங்கம், தங்களைப் பிரதிநிதியாகத் தெரிந்தெடுத்தனுப்பியதோ அந்த அரசாங்கத்தினிடம் பக்தி விசுவாசம் பூண்டவர்களாகவும், அதன் கட்டளைகளுக்குக் கீழ்ப் படிந்து நடக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். காரியாலயத்தின் உத்தியோகதர்களோ, அதன் சேவையில் அமர்ந்தவுடன், உலகப் பிரஜைகளாகி விடுகிறார்கள். அவர்கள் எல்லா நாடுகளுக்கும் பொதுவானவர்கள். எல்லா நாடுகளின் நன்மையையும் நாடுகிறவர்கள்; அவர்களுக்கு, எந்த ஒரு நாட்டைப் பற்றியும் விருப்பு வெறுப்பு என்பது கிடையாது; அப்படி இருக்கவும் கூடாது. அவர்கள் காரியாலயத்தின் சேவையில் அமர்வதற்கு முன்னர், ஒரு விசுவாசப் பிராமணம் எடுத்துக் கொள்ளவேண்டும். அதன்படி, ஐக்கிய தேச தாபனத்தின் நலனை முன்னிட்டே தங்கள் கடமைகளைச் செய்ய உடன்படுவதாகவும், எந்த ஓர் அரசாங்கத்தினுடைய உதவியையோ உத்தரவையோ எதிர்பார்த்து ஒரு காரியத்தைச் செய்வதில்லை என்றும் ஒப்புக் கொள்ளவேண்டும். ஒரு பெட்டிக்குச் சாவி எப்படியோ அப்படித்தான் ஐக்கிய தேச தாபனத்திற்கு அதன் காரியாலயம். உண்மையில், ஐக்கிய தேச தாபனத்திடம் பதிவு செய்யப்பட்டிருக்கிற சர்வதேச ஒப்பந்தங்கள் முதலிய சகல ததவேஜுகளும் இந்தக் காரியாலயத்தின் வசத்திலேயே இருக் கின்றன; இந்தத் ததவேஜுகள் வைக்கப்பட்டிருக்கிற இரும்புப் பெட்டகங் களின் சாவிகள் யாவும் காரியாலயத்தினிடந்தான் இருக்கின்றன. ஐக்கிய தேச தாபனத்தைச் சேர்ந்த மற்ற அங்கங்களின் பலவகைக் கூட்டங்களும் சரளமாக நடைபெறுவதற்குக் காரியாலயமே முக்கிய காரணமாயிருக்கிறது. இதனால் இதன் பொதுவான நடைமுறைகள், தினசரி அலுவல்கள் யாவும் எவ்விதத் தங்கு தடையின்றியும், சுறுசுறுப் பாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. காரியாலயத்திலுள்ள கடிகாரங்கள் இருபத்து நான்கு மணியையும் வேலை நேரமாகவே காட்டுகின்றன. காரியாலயத்தின் பிரதம நிருவாக அதிகாரிக்கு பொதுக் காரியதரிசி1 என்று பெயர். ït® xU Þjhgd¤â‰F k£L« fhÇajÇá ïšiy.; ஜெனரல் அஸெம்ப்ளி, பாதுகாப்புக் கவுன்சில், பொருளாதார சமுதாயக் கவுன்சில், டிரட்டி கவுன்சில் ஆகிய நான்குக்கும் இவரே காரியதரிசி சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஐக்கிய தேச தாபனத்திற்கே இவர்தான் காரியதரிசி. இதனாலேயே பொதுக் காரியதரிசி என்று அழைக்கப் படுகிறார். ஐக்கிய தேச தாபனத்தின் சகல விதமான கடிதப் போக்குவரத்துகளும் இவர் மூலமாகவே நடைபெறுகின்றன. பொதுக் காரியதரிசிப் பதவி மிகவும் பொறுப்பு வாய்ந்தது. இவர் எல்லாத் தேசங்களின் நன்மையையும் நாடவேண்டியவர்; ஆனால் எந்தத் தேசத்தினிடமும் பாரபட்சம் காட்டக்கூடாது. ஐக்கிய தேச தாபனத்தினுடைய எல்லா அங்கங்களின் வரவு செலவு இனங்களைத் தயாரித்து அவற்றை ஒழுங்காக நடைபெறச் செய்வது, அந்தந்தத் தேசங்களிடமிருந்து வரவேண்டிய கட்டணங்களை வசூலிப்பது, காரியாலயத்தின் உத்தியோகதர்களை நியமனம் செய்வது, காரியாலயத்தின் சகல வேலைகளையும் மேற்பார்வை செய்வது, இப்படிப் பல பொறுப்பான காரியங்கள் இவருடையவை. இன்னும் இவர், ஐக்கிய தேச தாபனத்தினுடைய அங்கங்களின் கூட்டங்களில் என்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப்பட வேண்டுமென்பதற்கு விஷயாலோசனை ஜாபிதாவைத் தயாரிக்க வேண்டும்; அந்தக் கூட்டங்களில் நிறைவேற்றப் படுகிற தீர்மானங்கள் அமுலுக்கு வருமாறு செய்ய வேண்டும்; பிரதியொரு வருஷமும் நடைபெறகிற ஜெனரல் அஸெம்ப்ளி கூட்டத் திற்கு, ஐக்கிய தேச தாபனத்தின் வருஷாந்த அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். வருஷாந்த அறிக்கையைத் தயாரிப்பதென்பது சுலபமான காரியமில்லை. சர்வ தேசங்களினுடைய பொருளாதார, சமுதாய, அரசியல் ஆகிய சகல விஷயங்களைப் பற்றியும் அதில் சுருக்கமாகச் சொல்லி, அவை சம்பந்தமாக ஐக்கிய தேச தாபனம் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறதென்பதை விளங்க வைக்க வேண்டுமல்லவா? இந்தப் பொறுப்பான பதவிக்கு மிகத் திறமையானவரே நியமிக்கப்பட வேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும். பாதுகாப்புக் கவுன்சிலினுடைய சிபார்சின் பேரில் ஜெனரல் அஸெம்ப்ளியானது பொதுக் காரியதரிசியை நியமிக்கிறது. யாரை நியமிப்பது என்கிற பிரச்னை. பாதுகாப்புக் கவுன்சிலில் ஆலோசனைக்கு வருகிறபோது, ஐம்பெரும் வல்லரசுகள் உள்ளிட்ட கவுன்சிலின் பெரும்பான்மையோர் எந்த நபருடைய நியமனத்திற்கு அங்கீகாரம் கொடுக்கிறார்களோ அந்த நபரே ஜெனரல் அஸெம்ப்ளிக்குச் சிபார்சு செய்யப்படுகிறார். இவருடைய நியமனம், நியமனத்திற்கு முந்தி நடைபெறும் பேச்சு வார்த்தைகள் யாவும் ரகசியமாகவே நடைபெற வேண்டுமென்பது நியதி. பொதுக் காரியதரிசியின் உத்தியோக காலம் ஐந்து வருஷம். ஐந்து வருஷத்திற்குப் பிறகு புது நியமனம் செய்யப்படுகிறபோது, பழைய நபரே - அதாவது ஏற்கனவே காரியதரிசியாயிருந்தவரே - மறுபடியும் நியமிக்கப்படலாம். காரியதரிசியின் வருஷ சம்பளம் இருபதினாயிரம் டாலர். இது தவிர படிச் செலவென்று இருபதினாயிரம் டாலர் கொடுக்கப் படுகிறது. இன்னும் இவருடைய இருப்பிடம் முதலிய வசதிகளுக்காகும் செலவுகளை ஐக்கிய தேச தாபனமே ஏற்றுக் கொள்கிறது. ஐந்து வருஷ உத்தியோக காலம் முடிந்தவுடன் காரியதரிசிப் பதவியிலிருந்து விலகுகின்ற நபர், பதவியிலிருந்து விலகியவுடனே வேறோர் அரசாங்கத்தின் சேவையில் சேர்ந்துகொள்ளக்கூடாது; எந்த அரசாங்கமும் அவரைத் தன் சேவையில் இருக்குமாறு கேட்கக்கூடாது. ஐக்கிய தேச தாபனத்தின் காரியாலயமானது, எட்டு முக்கிய இலாகாக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் இலாகாவின் கீழ் சில கிளை இலாகாக்களும் உண்டு. ஒவ்வோர் இலாகாவையும் நிருவாகம் செய்வதற்கு ஒவ்வோர் அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் உதவிப் பொதுக் காரியதரிசி1 என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். பொதுக் காரியதரிசியானவர் இந்த உதவிக் காரியதரிசிகளை நியமனம் செய்கிறபோது, பல அரசாங்கங்களையும் கலந்தாலோசிக்கிறார். ஒவ்வோர் இலாகாவின் கீழும் சில கிளை இலாகாக்கள் இருக்கின்றன வென்று சொன்னோமல்லவா, இந்தக் கிளை இலாகாக்களின் நிருவாக அதிகாரிகள் டைரக்டர்கள்2 என்று அழைக்கப்படுகிறார்கள். எட்டு இலாகாக்கள் வருமாறு:- 1. பாதுகாப்புக் கவுன்சில் சம்பந்தமான விவகாரங்களைக் கவனிக்கிற இலாகா.1 2. பொருளாதார சம்பந்தமான விவகாரங்களைக் கவனிக்கிற இலாகா.2 3. சமுதாய சம்பந்தமான விவகாரங்களைக் கவனிக்கிற இலாகா.3 4. டிரட்டி கவுன்சில் சம்பந்தமான விவகாரங்களைக் கவனிக்கிற இலாகா.4 5. சட்ட சம்பந்தமான விவகாரங்களைக் கவனிக்கிற இலாகா.5 6. மகாநாடுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது. ஐக்கிய தேச தாபனத்தின் புத்தக சாலையை நிருவாகம் செய்வது, காரி யாலயத்திற்கு வேண்டிய சாமான்களை வாங்குவது,காரியாலயத்தின் தபால், தந்தி முதலிய போக்குவரத்துக்களைக் கவனிப்பது. இந்த மாதிரியான வேலைகளைக் கவனிக்கிற இலாகா.6 7. ஐக்கிய தேச தாபனம் செய்கிற வேலைகளை விளம்பரம் படுத்துதல், பிரசாரம் செய்தல் முதலியவைகளைக் கவனிக்கிற இலாகா.7 8. ஐக்கிய தேச தாபனத்தின் வரவு செலவு இவைகளைத் தயாரிப்பது, காரியாலயத்தின் சிப்பந்திகளை நியமிப்பது, அவர்களைப் பராமரிப்பது முதலிய காரியாரிய சம்பந்தமான விவகாரங்களைக் கவனிக்கிற இலாகா.8 ஐக்கிய தேச தாபனத்தின் காரியாலயத்தில் வேலை செய்யும் உத்தியோகதர்களை, அவர்கள் பெறும் சம்பளவாரியாகப் பிரித்தால் ஆறு தரத்தினராகப் பிரிக்கலாம். 1. 10,000 டாலரிலிருந்து 20,000 டாலர் வரை வாங்குவோர் 2. 8,200 டாலரிலிருந்து 10,900 3. 5,900 டாலரிலிருந்து 8,700 4. 3,770 6,600 5. 2,160 4,120 6. 1,380 2,140 மேலே சொல்லப்பெற்ற சம்பள விகிதங்கள் யாவும் வருஷ வாரிச் சம்பளமென்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. சம்பளத்தில் ஒரு சிறு பகுதியை உத்தியோகதர்கள் தாபனத்தின் செலவு வகைகளுக்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். தாபனத்திற்குச் செலுத்தப் படுகிற வருமான வரி யென்று இதனைச் சொல்லலாம். ஆனால் இவர்கள், அமெரிக்க அரசாங்கத்திற்கு எவ்வித வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை. இனம், பால், நிறம் ஆகிய எவ்விதமான வேற்றுமைகளையும் பாராமல் திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து உத்தியோக தர்கள் நியமிக்கப்படுகிறார்களென்று சொல்லப்படுகிறதாயினும், உத்தியோகதர்களில் பெரும்பாலோர் அமெரிக்கர்களாயிருக் கிறார் களென்பதில் ஆச்சரியமில்லை. உத்தியோகதர்களில் சிலர் நிரந்தரமாகவும், சிலர் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு ஒப்பந்தத்தின்மீதும் நியமிக்கப்படுகிறார்கள். அந்தந்த இலாகாக்களின் வேலைகளைப் பொறுத்து இந்த நியமனங்கள் செய்யப் படுகின்றன. நிரந்தர உத்தியோகங்களுக்கு நியமிக்கப் படுகிறவர்கள், பொதுக் காரியதரிசியால் நிர்ணயிக்கப்படுகிற காலம் வரை உமேத வாரிகளாக இருந்து வேலை பழகிக்கொள்ள வேண்டும். இந்த உமேதவாரிக் காலம் முடிந்து, அந்தந்த இலாகாக்களின் வேலைகளைப் பொறுத்துப் பரீட்சைகள் நடத்தப்பெறும். இந்தப் பரீட்சைகளில் தேர்ச்சி பெற்றவர்களே காயமாக்கப்படுவார்கள். ஒப்பந்தத்தின் மீது நியமிக்கப் படுகிறவர்கள், ஒப்பந்த காலம் முடிந்த பிறகு, மீண்டும் நியமிக்கப்படலாம். அவர்களுடைய சேவையின் அவசியத்தைப் பொறுத்த விஷயமிது. உத்தியோகதர்கள் அனைவருக்கும், மற்ற அரசாங்கங்களின் உத்தியோகதர்களைப் போல நோய்கால ரஜா, வருஷாந்த ரஜா முதலிய எல்லா விடுமுறைகளும் உண்டு. எல்லா உத்தியோகதர்களும், மற்ற அரசாங்கங்களினால் எவ்வித நிர்ப்பந்தங்களுக்கும் உட்படுத்தப் பெறாமல் பாதுகாக்கப்படுகின்றனர். பொதுவாக ஐக்கிய தேச தாபனத்தின் உத்தியோகதர்கள், உலகப் பிரஜைகளாக இருந்து கொண்டு, உலக நன்மைக்காக, உலக சமாதானத் திற்காகப் பாடுபடக் கடமைப்பட்டிருக்கின்றனர்.  அரசாங்கத்தின் பிறப்பு வாசகர்களுக்கு யாருக்குமே சொந்தம் கொண்டாடுவதில் ஒரு சந்தோஷம் உண்டு. என் சொந்த வீடு, என் சொந்தத் தோட்டம் என்று சொல்லிக் கொள்வதில் நாம் ஒவ்வொருவரும் எவ்வளவு பெருமையடைகிறோம்? சொந்த முயற்சியில், சொந்த உழைப்பில், நமக்கு அதிகமான திருப்தி ஏற்படுகிறது; அதிகமான இன்பத்தை அனுபவிக்கிறோம். நமது தோட்டத்தில் நாம் நீர் பாய்ச்சி விளைந்த ஓரிரண்டு கத்தரிக்காயைத் திருப்பிப் திருப்பிப் பார்த்து எவ்வளவு திருப்தியடைகிறோம்? அதனைச் சமைத்துச் சாப்பிடுகிறபோது எவ்வளவு ருசியை அனுபவிக்கிறோம்? இங்ஙனமே சொந்தமாயுள்ள பொருள்களைப் பேணிப் பாதுகாப்பதிலே நாம் அதிகமான சிரத்தை காட்டுகிறோம். நமது வீடு; சிறிய மண் குடிசைதான். ஆனாலும் அதனைச் சுத்தமாக வைத்திருக்கப் பாடுபடுகிறோம். அதனை அடிக்கடி பழுது பார்த்து அதன் ஆயுளை நீடிக்க வைக்கிறோம். அந்தச் சிறிய குடிசையில் படித்தாலோ, படுத்தாலோதான் நமக்கு நிம்மதி உண்டாகிறது. இவற்றிற் கெல்லாம் காரணம், சொந்தமாயுள்ளவற்றின்மீது நாம் கொண்டுள்ள பற்றுதான். நம்மீது நமக்கு எப்படி நல்லமுறையில் இருக்க வேண்டு மென்று ஆசைப்படுகிறோமோ அப்படியே நம்முடையனவும் நல்ல முறையில் இருக்கவேண்டுமென்று ஆசைப்படுகிறோம். நம்முடையவை, நமக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ளக் கூடியவை வீடு, தோட்டம் முதலியவை மட்டுந்தானா? இல்லை. இவற்றைக் காட்டிலும் பெரியவையும், ஆனால் சூட்சுமமாயிருக்கப் பட்டவையும், சூட்சுமமாயிருந்தாலும் நீண்ட காலமாக இருந்தும், இனி இருக்கப் போகின்றவையும், அப்படி இருப்பதோடு மட்டுமல்லாமல் வளர்ந்து கொண்டு போகக்கூடியனவுமான பல, நமக்குச் சொந்தமா யிருக்கின்றன. இவை நம்மை விட்டுப் பிரிந்திருக்க மாட்டா. நாமும் இவற்றை விட்டுப் பிரிந்திருக்க முடியாது. இவை என்னென்ன? முதலாவது நாடு; இரண்டாவது பாஷை; மூன்றாவது நாகரிகம். சொந்தம் என்று நாம் சொல்லிக் கொள்ளுகின்ற மற்ற யாவும் இந்த மூன்றினுள் அடங்கும். இவை மூன்றையும் பற்றி நினைக்கிறபோதே, நம்மையறியாமல் நமக்கு இவற்றின்மீது ஒருவித அன்பு ஏற்படுகிறது. இவற்றின் மூலம் நம்மை நாம் சுலபமாக அறிந்துகொள்ள முடிகிறது. இவற்றிற்கு நாம் மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம் என்ற உணர்ச்சி உண்டாகிறது. ஆகவே, நமது வீட்டு விஷயங்களில் நாம் எப்படி கவனஞ் செலுத்தி வருகிறோமோ அதைப்போல், அதைக்காட்டிலும் அதிகமாக, நமது நாடு, நமது பாஷை, நமது நாகரிகம் இவற்றின் மீது கவனஞ் செலுத்தவேண்டும். இவை சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றைப் பற்றியும் நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். இப்படி நமது நாட்டைப் பற்றியோ, பாஷையைப் பற்றியோ, நாகரிகத்தைப் பற்றியோ தெரிந்து கொள்வதற்கு முன்னர், இவற்றைப் பற்றிய பொதுவான உண்மைகள், பொதுவான லட்சணங்கள் சிலவற்றை யேனும் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, நமது நாட்டின் அரசியலைப் பற்றித் தெரிந்த கொள்வதற்கு முன்னர், அரசியலின் பொதுவான லட்சணங்கள், பொதுவான அனுஷ்டான முறைகள் முதலிய வற்றைப் பற்றி ஒரு சிறிதேனும் தெரிந்துகொள்ள வேண்டாமா? தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசையை நமது சகோதரர் களுக்கு உண்டுபண்ணவே இச்சிறு நூல் எழுதப்பட்டிருக்கிறது. அரசியல் முன்பின் பரிச்சயமில்லதவர்கள் கூட, கூடியமட்டில் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் இதனை எழுத முயற்சி செய்திருக்கிறேன். ஆம்; முயற்சிதான் செய்திருக்கிறேன். எழுதியிருக் கிறேன் என்று துணிந்து கூற எனக்குத் தைரியமில்லை. ஏனென்றால், அரசியல் ஒரு சிக்கலான சாதிரம். அதனைப் புரிந்துகொள்வதே கடினம்; புரிய வைப்பது மிகவும் கடினம்; இதில் எவ்வளவு தூரம் வெற்றி யடைந்திருக்கிறேனென்பது எனக்குத் தெரியாது; இதனைப் படித்தவர்கள்தான் கூறவேண்டும். இதைத் தொடர்ந்து இன்னும் சில நூல்கள் இதே வரிசையில் வெளியிட உச்தேசம். அன்பர்களின் ஆசி தேவை. 1. சுய ஆட்சி இப்பொழுது நம்மை ஆளுகின்ற அரசாங்கம் நம்முடைய அரசாங்கம். அது சரியாக நடந்து கொண்டாலும் தவறாக நடந்து கொண்டாலும், நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும், அதனை உலகத்திலுள்ள மற்ற அரசாங்கங்கள் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும், எல்லாவற்றிலும் நமக்குப் பங்குண்டு. ஏனென்றால் அரசாங்கத்தினுடைய சிறிய அமிசம் நாம். நம்முடைய பெரிய அமிசம் அரசாங்கம். அதாவது அரசாங்கத்தை வகுத்துப் பார்த்தால் ஈவு நாமாகிறோம்; நம்மைப் பெருக்கிப் பார்த்தால் மொத்தம் அரசாங்கமாகிறது. இதை வேறுவிதமாகவும் சொல்லலாம். அரசாங்கம் ஒரு மரமானால் அதில் நாம் ஒரு சிறு வேர். மரமின்றி வேரில்லை; வேரின்றி மரமுமில்லை. மரம், பூத்துக் காய்த்துப் பழுத்துப் பலன் தருகிறதென்று சொன்னால் அதற்கு வேர்தான் காரணமாயிருக்கிறது. வேர் அழுகிப் போனால் மரம் பட்டுப் போகிறது. அதுபோல அரசாங்கமில்லா விட்டால் நாமில்லை; நாமில்லாவிட்டால் அரசாங்கமில்லை. அப்படியே அரசாங்கம் எப்படி இருக்கிறதோ அப்படித் தான் நாமிருக்கிறோம். நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் அரசாங்கம் இருக்கிறது. நாம் நமது கடமையை ஒழுங்காகச் செய்து கொண்டிருப்பதைப் பொறுத்துத்தான் அரசாங்கம் தனது கடமையை ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கிறது. ஆகவே அரசாங்கம் வேறு, நாம், அதாவது ஜனங்கள் வேறு அல்ல; ஒன்றே. இப்படி நம்முடைய அரசாங்கமென்று பரிபூரண பாத்தியதையோடும் மிகப் பெருமையோடும் சொல்லிக் கொள்வது எப்பொழுதிலிருந்து சாத்தியமாயிற்று? 1947-ஆம் வருஷம் ஆகட் மாதம் பதினைந்தாந் தேதியிலிருந்து. நமது நாட்டுச் சரித்திரத்திலேயே இது மிகவும் முக்கியமான நாள். பிரதியொரு வருஷமும் ஆகட் மாதம் பதினைந்தாந் தேதியை நாம் ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகிறோம்; கொண்டாடி வருவது நமது கடமை. கொண்டாட்டம் என்று சொன்னால், வேடிக்கை விளையாட்டுகளிலும், பந்தி பந்தியாக உட்கார்ந்து விருந்து சாப்பிடுவதிலும், அன்றைய பொழுதைப் போக்கிவிடக் கூடாது. அன்று, நமது அரசாங்கமும் நாமும் எந்நாளும் ஒன்றாயிருந்து கொண்டிருக்கக் கூடிய வகையில் நமது கடமையைச் செய்து கொண்டு வருவதாக நாம் ஒவ்வொருவரும் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்; ஒவ்வொரு வருஷமும் இதைச் செய்துவர வேண்டும். நம்முடைய அரசாங்கத்தைப் பற்றியும் அதன் அமைப்பைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு முன்னர், சுய ஆட்சி என்றால் என்ன, ஜன ஆட்சி என்பது எது, அந்த ஜன ஆட்சியைப் பிரதிபலித்துக் காட்டும் பிரதிநிதி சபையென்கிற சட்டசபை எவ்வாறு அமைகிறது. அந்தப் பிரதிநிதி சபையிலிருந்து அரசாங்கம் எங்ஙனம் பிறக்கிறது முதலிய பொதுவான சில விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முற்படுவோம். அரசாங்கம் வேறு, ஜனங்கள் வேறு அல்ல, ஒன்றேயென்று சொன்னீர்களே அதன் அர்த்தம் என்ன என்று நீங்கள் கேட்கலாம். ஒன்று என்றால் நோக்கத்தில் ஒன்று, அதாவது ஒரே நோக்கமுடைய வரா யிருத்தல் என்றே அர்த்தம். அந்த ஒரே நோக்கம் என்னவென்றால், ஒரே மாதிரியான நன்மையை நாடுதல் தான். அரசாங்கமும் ஜனங்களும் பாபரம் ஒருவருடைய நன்மையை மற்றொருவர் நாட வேண்டும். இருவரும் சேர்ந்து, இருவரும் அல்லாத மற்றவர்களுடைய, அதாவது உலகத்தினருடைய நன்மையை நாட வேண்டும். இப்படி அரசாங்கமும், ஜனங்களும் ஒன்றாயிருப்பதற்கு, ஒரே நோக்கமுடையவராயிருப்பதற்கு முடியுமா? முடியும்; நிச்சயமாக முடியும். எந்த நிலைமையில்? முதலாவது, அரசாங்கத்தை நடத்துகின்றவர்களும் ஜனங் களும் ஒரே நாட்டில் வசிக்கின்றவர்களாயிருக்கவேண்டும். இரண்டாவது, ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களா யிருக்கவேண்டும். மூன்றாவது, ஒரே நாகரிகத்தைப் பின்பற்றுகிறவர்களா யிருக்க வேண்டும். நான்காவது, ஒரே பாஷையைப் பேசுகிறவர்களாயிருக்க வேண்டும். இவை நான்கும் முக்கியமானவை. இந்த நான்கு லட்சணங் களும் கூடியிருந்தால், அரசாங்கத்தை நடத்துகின்றவர்களும் ஜனங்களும், ஒருவரையொருவர் நன்றாக அறிந்து கொள்வார்கள்; அதாவது ஒருவருடைய சுக துக்கங்களும், கஷ்ட நிஷ்டூரங்களும் மற்றொரு வருக்குச் சுலபமாகத் தெரியும். இதனால் இருவருக்குமிடையே சகோதர உணர்ச்சி உண்டாகி வளரும். இரு சாராரும் சேர்ந்து நாட்டின் க்ஷேமத்திற்காக உழைப்பார்கள்; அதாவது மேலே சொன்னபடி, ஒரே நோக்கமுடையவர்களாக, ஒரே மாதிரியான நன்மையை நாடுபவர்களாக இருப்பார்கள். அரசாங்கத்தை நடத்துகின்றவர்களும், ஜனங்களும் இங்ஙனம் ஒரே நோக்கமுடையவர்களாகவும் ஒரே மாதிரியான நன்மையை நாடுபவர் களாகவும் இருந்தால் மட்டும் போதாது, இவர்கள் எந்த விதத்திலும் மற்றவர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாயிருக்கக் கூடாது. வேறு ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லது வேறு அரசாங்கத்தினர், இவர்கள் மீது அதிகாரம் செலுத்தக்கூடாது. இவர்கள், தங்கள் இஷ்டப்படி தங்கள் விவகாரங்களை நடத்திக் கொண்டு போக வேண்டும். அரசாங்கத்தை எப்படி நடத்த வேண்டும், ஜனங்களுக்கு அனுகூலமாக என்னென்ன செய்ய வேண்டும், சிறுவர் சிறுமியர்களுக்கு எந்த விதமான கல்வி போதிக்க வேண்டும், இப்படிச் சகல விஷயங்களும் இவர்களுடைய விருப்பப் படியே நடைபெற வேண்டும். இப்படித் தங்களுக்கு இஷ்டமான வகையில் காரியங்களைச் செய்து கொண்டு போகிறபோது, இவர்கள் சில தவறுகள் செய்ய நேரிடலாம். அதற்குக்கூட, தவறுகள் செய்வதற்குக்கூட இவர்களுக்கு உரிமை இருக்க வேண்டும். தவறுகள் உண்டாவது சகஜம். இந்தத் தவறுகளைத் திருத்திக் கொள்ள இவர்களுக்குச் சந்தர்ப்பம் இருக்க வேண்டும். அதற்கு, இவர்களே இவர்கள் விவகாரங்களை நடத்திக் கொண்டு போனால்தானே முடியும்? போதிய அனுபவமில்லாததனாலோ, அஜாக்கிரதையினாலோ சில சமயங்களில் ஒருவர் தவறு செய்து விட்டால், அதற்காக அவரை, திறமையில்லாத வரென்றோ அவருடைய விவகாரங்களை அவரே நடத்திக் கொண்டு போக முடியாதவ ரென்றோ சொல்லிவிட முடியாதல்லவா? எந்த நாட்டில் அரசாங்கத்தை நடத்துகின்றவர்களும் ஜனங்களும் ஒரே மாதிரியான நோக்கமுடைய வர்களாகவும், ஒரே மாதிரியான நன்மையை நாடுகிறவர்களாகவும், தங்களுடைய சகல விவகாரங் களையும் தங்களிஷ்டப்படி நடத்திக் கொண்டு போகிறவர் களாகவும் இருக்கிறார்களோ அந்த நாட்டில் நடைபெறுகிற ஆட்சிக்குத்தான் சுய ஆட்சி என்று பெயர். இந்த ஆட்சிதான் இயற்கையானது; நியாயமானது. இதனைப் பெறவும், இதன் கீழ் வாழவும், மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு வருக்கும் உரிமையுண்டு. இதனாலேயே திலகர் பெருமான் சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று கூறினார். இந்தப் பிறப்புரிமையைப் பெறுவதற்காக உலகத்தில் எத்தனை போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன? எத்தனை பேர் எத்தனை விதமான தியாகங்களைச் செய்திருக்கிறார்கள்? அவர்களுடைய வரலாறு களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்; அவர்கள் சொன்ன மொழி களையும், செய்த தியாகங்களையும் நாம் அடிக்கடி சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய சுயராஜ்யத்தை நாம் எப்படிக் காப்பாற்றிக் கொண்டு வரவேண்டுமென்பது நன்கு தெரியும். சுயஆட்சி ஏன் தேவை, எதற்காக இத்தனை போராட்டங்கள் நடைபெற்றன என்று நீங்கள் கேட்கிறீர்களா? சுய நிலையிலிருக்க என்று இதற்குச் சுருக்கமாக ஒரு வரியில் விடை கூறிவிடலாம். சுயநிலைதான் சுதந்திர நிலை; இயற்கை நிலை. சுதந்திர நிலையில், அதாவது சுயஆட்சியின் கீழுள்ள ஜனங்கள் தான், எல்லா விதத்திலும் நன்றாக வாழமுடியும். அவர்களுடைய சொந்த சக்திகள் வெளிப்படுவதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்கும். கலை, இலக்கியம் முதலியவை செழுமை யடையும். நம்முடைய நாகரிகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே நாம் சுயராஜ்யம் கேட்கிறோம் என்று மகாத்மா காந்தி ஒரு சமயம் கூறினார். ஆகவே ஒரு நாட்டில் சுய ஆட்சி நடைபெறுகிறது என்று சொன்னால், அந்த நாட்டு ஜனங்கள் தங்கள் இஷ்டப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் அதிகாரம் செலுத்தவும் சந்தர்ப்பங்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதே அர்த்தம். கிரீதேசத்தில் முன்னொரு காலத்தில் எப்பிக்ட்டீட்ட1 என்ற ஓர் அறிஞன் இருந்தான். அவன் என்ன கூறியிருக்கிறானென்பதைக் கேளுங்கள்:- எவனொருவன் தன்னிஷ்டப்படி வாழ்க்கையை நடத்துகிறானோ, எவன் கட்டாயத்திற்கும், நிர்ப்பந்தத்திற்கும், பலாத்காரத்திற்கும் உட்படுத்தப் படாமலிருக்கிறானோ, எவனுடைய போக்குகள் தடைப்படாம லிருக்கின்றனவோ, எவனுடைய ஆசைகள் பூர்த்தியடைகின்றனவோ, எவனுடைய துவேஷங்கள் சேகரிக்கப்பட ஏதுமில்லாமற் போகிறதோ அவன்தான் சுதந்திர புருஷன். சுய ஆட்சியின் கீழ், ஜனங்கள், இந்த மாதிரியான சுதந்திர புருஷர்களாகவே இருப்பார்கள். 2. ஜன ஆட்சி சுய ஆட்சி என்பது பொதுவானது. இது நடைமுறையிலே வருகிறபோது பல கிளைகளாகப் பிரிகின்றது. இந்தக் கிளைகளுக்கு ஆட்சி முறைகள் அல்லது அரசாங்க அமைப்புகள் என்று பெயர். இந்த ஆட்சி முறைகள் பலவானாலும் முக்கியமானவை மூன்றுதான். ஒன்று, ஜனங்களுக்காக ஒருவர் நடத்தும் ஆட்சி; இரண்டு, ஜனங்களுக்காக ஒரு சிலர் நடத்தும் ஆட்சி; மூன்று, ஜனங்களுக்காக ஜனங்களே நடத்தும் ஆட்சி. முதலாவதை, மன்னர் ஆட்சி அல்லது முடியாட்சி என்று அழைப்பர்; இரண்டாவதை, பிரபுத்துவ ஆட்சி அல்லது மேன் மக்களாட்சி என்று அழைப்பர்; மூன்றாவதை, குடியாட்சி அல்லது ஜன ஆட்சி என்று அழைப்பர். இவற்றை வேறு விதமாகவும் சொல்லலாம். 1. ஒருவர் ஆட்சி; 2. ஒரு சிலர் ஆட்சி; 3. பலர் ஆட்சி. இன்னும் பல ஆட்சி முறைகளைச் சொல்வதுண்டு. ஆனால் அவை யாவும் இந்த மூன்று முக்கியமான பிரிவு களுக்குள்ளேயே அடங்கும். இந்த மூன்று வித ஆட்சி முறைகள் ஒவ்வொன்றிலும் நன்மை களுமுண்டு; தீமைகளுமுண்டு. ஒரு நீருற்று பரிசுத்தமாயிருந்தாலும், அதிலிருந்து பிறக்கிற நதிகள் போகப்போக எப்படி பலவித அழுக்குகளைச் சேர்த்துக் கொண்டு விடுகின்றனவோ, அப்படி அழுக்குகள் சேர்ந்திருந் தாலும், அந்த நதிகளினால் அநேக நன்மைகள் உண்டாகின்றனவோ, அது போல, சுய ஆட்சியிலிருந்து பிறக்கிற மேற் சொன்ன மூன்று வித ஆட்சி முறைகளும் நாளாவட்டத்தில் களங்கப்பட்டு விடுகின்றன. இருந்தாலும் அவற்றினால்நன்மைகளும் ஏற்பட்டிருக்கின்றன. எல்லாம் ஆட்சி செய்கிறவர்களைப் பொறுத்தும், அந்த ஆட்சிக்குட்பட்டிருக்கிறவர்களைப் பொறுத்தும் இருக்கின்றன. மூன்று வித ஆட்சி முறைகளில் ஏதேனும் ஒரு விதமான ஆட்சி முறைதான் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுதல் கூடும். இந்த ஒரு வித ஆட்சி முறையே, வேறுவேறு உருவங்கொண்டோ அல்லது வேறு பெயருடனோ நடைபெறலாம். அது வேறு விஷயம். அடிப்படையில் மேற்சொன்ன மூன்றில் ஏதோ ஒன்றுதான் இருக்கும், ஆனால் சில நாடுகளில், இந்த மூன்று வித ஆட்சி முறைகளும் கலந்த ஓர் ஆட்சி முறை நடைபெறுவதுண்டு. இதற்குக் கலப்பு ஆட்சி முறையென்று பெயர். உதாரணமாக, இங்கிலாந்தில் இத்தகைய கலப்பு ஆட்சி முறையே நடைபெறுகின்றது. அங்கு மன்னராட்சிக்கு அடையாளமாக அரசர் இருக்கிறார்; பிரபுத்துவ ஆட்சியைக் குறிக்க பிரபுக்கள் சபை இருக்கிறது; ஜன ஆட்சிக்காக காமன் சபை என்று அழைக்கப்படுகிற பொதுமக்கள் சபை இருக்கிறது. உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் ஆதியில் மன்ன ராட்சியே நடைபெற்று வந்தது. இதற்குத் தான் அதிக சிறப்பு இருந்தது. ஜனங்கள் இதனையே பெரிதும் மதித்து வந்தார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு இதன் செல்வாக்கு குறைந்து விட்டது. இதற்குப் பதில் பிரபுத்துவ ஆட்சி அல்லது மேன்மக்களாட்சி ஏற்பட்டு நடைபெற்று வந்தது. இதுவும் காலக்கிரமத்தில் மறைந்து விட்டது. தற்போது ஜன ஆட்சியே நடை பெறுகிறது. இதற்குத்தான் இப்பொழுது அதிக மதிப்பு. இதிலும் மற்ற ஆட்சி முறைகளிலுள்ளதைபோல் தீமைகள் உண்டு. ஆனால் இந்தத் தீமைகளை, ஜனங்கள் மனம் வைத்தால், சுலபமாகப் போக்கிக் கொண்டு விடலாம்; மற்ற ஆட்சி முறைகளில் முடியாது. தவிர, இந்த ஜன ஆட்சியின் கீழ், ஜனங்கள், தங்கள் சுய நிலையை உணர முடியும்; தங்கள் சக்திகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களையும் சாதனங்களையும் அதிக மாகப் பெற முடியும். இதனால் சுய ஆட்சியென்பது ஜன ஆட்சியில் தான் சாத்தியமென்பது பெறப்படுகிறது. அதாவது ஜன ஆட்சிதான் உண்மையான சுய ஆட்சி. இத்தகைய காரணங்களினாலேயே இந்த ஜன ஆட்சிக்கு அதிக மதிப்பு. ஜன ஆட்சியென்றால் ஜனங்களுடைய ஆட்சி; அதாவது ஜனங்களே ஆளுகிறார்கள் என்று அர்த்தம். என்ன வேடிக்கை இது, ஜனங்களே ஜனங்களை எப்படி ஆள முடியும், இது சாத்தியமா என்று நீங்கள் கேட்கலாம். இப்பொழுது சாத்தியமில்லா விட்டாலும், முன்னொரு காலத்தில் சில நாடுகளில் இது சாத்தியமாகவே இருந்தது. உதாரணமாக, இரண்டாயிரம் வருஷங்களுக்கு முந்தி கிரீ தேசத்திலும், பிறகு இத்தலியில் சில சிறிய நாடுகளிலும் ஜனங்களே ஜனங்களை ஆண்டு வந்தார்கள். அதாவது ஜனங்கள், ஒரே சமயத்தில் ஆளுகின்றவர்களாகவும், அந்த ஆளுகைக்குட் பட்டிருக்கிறவர்களாகவும் இருந்தார்கள். இந்த ஆளுகை நடைபெற்ற பிரதேசங்களின் விதீரணமெல்லாம் ஒரு சில சதுர மைல்களே; ஜனத்தொகை ஒரு சில ஆயிரம் பேரே. இப்படிக் குறுகிய எல்லையும் குறைந்த ஜனத்தொகையுமுடைய இடங்களில் எல்லா ஜனங்களும் எல்லா ஜனங்களையும் நன்றாக அறிந்து கொள்வதற்கும், ஒருவருக்கொருவர் கலந்து பழகுவதற்கும் சந்தர்ப்பங்கள் இருந்தன; அவகாசமும் இருந்தது. இதனால் எல்லா ஜனங்களும் அரசாங்கத்தை நடத்துவதில் பங்கு கொள்ள முடிந்தது. அது சுலபமாகவும் இருந்தது. இப்படி எல்லா ஜனங்களும் சேர்ந்து நடத்துகின்ற ஆட்சிக்கே நேர்முகமான ஜன ஆட்சியென்று பெயர். இதுதான் உண்மையான, கலப்படமில்லாத ஜன ஆட்சியென்று கூறுவர் அறிஞர். இப்பொழுது, நாடுகள் விதீரணத்தில் பெருகி விட்டன. ஜனத்தொகை அதிகரித்துவிட்டது. ஒரே நாட்டில் வசிக்கிற ஜனங்கள் ஒருவரையொருவர் நேரில் அறிந்து கொள்வது சுலபமான காரியமில்லை. அதற்கு வேண்டிய அவகாசமுமில்லை. இதனால், ஒரு நாட்டில் வசிக்கும் எல்லா ஜனங்களும் அந்த நாட்டின் ஆட்சி முறையில் நேர்முகமாகப் பங்கு கொள்ள முடிவதில்லை. இதற்காக இவர்கள், தங்கள் சார்பாக ஆட்சி செய்ய, ஆளும் பொறுப்பை ஏற்று நடத்த, ஒரு சிலரைத் தெரிந்தெடுக்கிறார்கள். ஆகவே, ஜனங்களே ஆளுகிறார்களென்று சொன்னால், ஆளும் உரிமையுடையவர்களா யிருக்கிறார்கள். ஆளும் அதிகாரத்தையும் சந்தர்ப்பத்தையும் பெற்றிருக்கிறார்கள் என்பதே இப்பொழுது அர்த்தம். இந்த அர்த்தத்தில் பார்க்கிறபோது, இப்பொழுது உலகத்துப் பெரும்பாலான நாடுகளில் நடைபெறுகிற ஜன ஆட்சியை, சுத்தமான ஜன ஆட்சியென்று சொல்ல முடியாது. இதைப் பற்றிப் பின்னரும் பேசுவோம். 3. பிரஜைகள் - பிரதிநிதிகள் ஜனங்கள், தங்கள் ஆளும் உரிமையையும் அதிகாரத்தையும் செலுத்த ஒரு சிலரைத் தெரிந்தெடுக்கிறார்களல்லவா, இந்தச் சிலருக்குப் பிரதிநிதிகள் என்று பெயர். இவர்கள் ஜனங்களுடைய அபிப்பிராயத்தைப் பிரதிபலித்துக் காட்டுகிறவர்கள். இந்தப் பிரதிநிதிகளைத் தெரிந்தெடுப்பது ஓர் உரிமை; முக்கியமான உரிமை; புனிதமான உரிமை. இந்த உரிமையுடையவர்கள், தங்கள் நாட்டில் எந்த விதமான ஆட்சி முறை இருக்க வேண்டும். அதனை எந்தெந்த வகையில் ஒழுங்காக நடத்தி வர வேண்டும் என்பவைகளை யெல்லாம் நிர்ணயிப்பதற்குத் தகுதியுடையவர்களாகிறார்கள். இவர் களுடைய தகுதிக்கு அடையாளமாக இருப்பதுவே இந்த உரிமை. ஆனால் இந்த உரிமை எல்லோருக்கும் கிடையாது. ஜனங்கள், தங்களுடைய பிரதிநிதிகளாகச் சிலரைத் தெரிந்தெடுக்கிறார்களென்று சொன்னால், ஒரு நாட்டில் வசிக்கும் எல்லா ஜனங்களும் என்று அர்த்த மல்ல; வயது வந்த ஜனங்கள் என்றே அர்த்தம். சமீப காலம் வரை இந்த உரிமை பெண்களுக்கு இல்லாமல் இருந்தது; ஆண்களுக்கு மட்டுமே இருந்தது. சில நாடுகளில் குறிப்பிட்ட ஓரளவு சொத்துடையவர்கள், கல்வியறிவு படைத்தவர்கள் முதலிய இப்படிப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த உரிமை இருந்தது. இவை எல்லாம், இந்த வித்தியாசங்கள், வரம்புகள் எல்லாம் பெரும்பாலான நாடுகளில் நீக்கப்பட்டு விட்டன. இப்பொழுது, ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், வயது வந்த எல்லோருக்கும் இந்த உரிமையுண்டு. வயது வந்தவர்கள் என்றால் எத்தனை வயது வந்தவர்கள்? சில நாடுகளில் பதினெட்டு வயதானவராயிருக்க வேண்டும்; பெரும்பாலான நாடுகளில் இருபத்தோரு வயதானவராயிருக்க வேண்டும். இன்னும் சில நாடுகளில், சித்தசுவாதீனமுடையவரா யிருக்க வேண்டும்; கடுமையான குற்றங்கள் செய்து தண்டிக்கப் பெறாதவராயிருக்க வேண்டும். அதாவது, பதினெட்டு வயதானவராயிருந்தாலும் இருபத்தோரு வயதானவராயிருந் தாலும், சித்தசுவாதீனமில்லாதவர்களாகவும் கடுமையான குற்றங்கள் செய்து தண்டிக்கப்பட்டவர்களாகவும் இருந்தால் அவர்களுக்கு இந்த உரிமை கிடையாது. பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் இந்த உரிமை யுடைய வர்களே பிரஜைகள். இந்தப் பிரஜைகளில் பெரும்பாலோரின் விருப்பப் படியே ஆட்சி முறை நடைபெறுகின்றது. பெரும்பாலோரால் இயற்றப் படுகின்ற அல்லது அங்கீகரிக்கப்படுகின்ற சட்டதிட்டங்களே அமுலுக்கு வருகின்றன. எனவே, ஜன ஆட்சி என்று சொன்னால், அது பெரும்பாலோர் ஆட்சியையே குறிப்பதாயிருக்கிறது. ஆங்கிலத்தில் இதற்குப் பொதுவான பெயர் டெமாக்ரஸி1 என்பது. பிரதிநிதிகளைத் தெரிந்தெடுக்கிற இந்த உரிமையை உபயோகிப் பதற்கு ஒரு கருவியாயிருப்பது ஓட்டு. எங்களுடைய பிரதிநிதிகளாக இன்னின்னாரைத் தெரிந்தெடுக்கிறோம் என்ற தங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க, ஜனங்களுக்கு, அதாவது பதினெட்டு வயதோ, இருபத்தோரு வயதோ அடைந்தவர்களுக்கு ஒரு சாதனம் வேண்டுமல்லவா, அந்தச் சாதனந்தான் இந்த ஓட்டு. பார்க்கப் போனால் ஒரு காகிதந்தான் இது. ஆயினும் இதற்குள்ள மதிப்பு மிக அதிகம். எப்படி, பிரதிநிதிகளைத் தெரிந் தெடுக்கிற உரிமையானது முக்கியமான தென்றும் புனிதமானதென்றும் மேலே சொன்னோமோ அதைப்போல், அந்த உரிமையை உபயோகிப் பதற்குக் கருவியாயிருக்கிற ஓட்டும் மதிப்புடையதாகக் கருதப் படுகிறது. இந்தக் கருவியின் பெயராலேயே இந்த உரிமையும் அழைக்கப்படுகிறது. இந்த ஓட்டுரிமையுடையவர்கள் ஓட்டர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பிரஜைகள் என்றால், ஏற்கனவே சொன்னபடி, இந்த ஓட்டர்களையே குறிக்கும். பிரநிதிகளைத் தெரிந்தெடுப்பதற்காக, ஒரு நாடு அல்லது ஒரு மாகாணம், பல பகுதிகளாகப் பிரிக்கப்படும். இப்படிப் பிரிக்கப்படுகிற பகுதிகள், ஏற்கனவே பூகோள ரீதியாகவும், நிருவாக சௌகரியத்தை அனுசரித்தும் பிரிக்கப்பட்டுள்ள பகுதிகளையொத்தனவாகவே இருக்கும். உதாரணமாக, நமது இந்தியா, பல மாகாணங்களாகவும், ஒவ்வொரு மாகாணமும் பல ஜில்லாக்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றனவல்லவா, இந்தப் பிரிவினைகளில், ஒவ்வொரு மாகாணத்திற்கும், அதேபோல் ஒவ்வொரு ஜில்லாவுக்கும் இத்தனை இத்தனை பிரதிநிதிகள் என்று நிர்ண யிக்கப்படும். இப்படி நிர்ணயிக்கப்படுகிற பிரதிநிதிகளின் எண்ணிக்கை, எல்லா மாகாணங்களுக்கும் அல்லது எல்லா ஜில்லாக்களுக்கும் ஒரே மாதிரியாக இராது; இருக்கவும் முடியாதல்லவா? ஏனென்றால், ஒவ்வொரு மாகாணமும், ஒவ்வொரு ஜில்லாவும், விதீரணத்திலும் ஜனத்தொகை யிலும் வித்தியாசப்பட்டிருக்கும். இதனால், இத்தனை ஆயிரம் பேருக்கு ஒரு பிரதிநிதி, அல்லது குறிப்பிட்ட ஓர் எல்லைக்குட்பட்ட ஒரு பிரதேசத்திற்கு ஒரு பிரதிநிதி என்று ஒரு விகிதாசாரம் இருக்கும். இப்படி ஜன வாரியாகவும் பிரதேச வாரியாகவும் பிரதிநிதிகள் தெரிந் தெடுக்கப்படுவதோடு, தொழில் வாரியாகவும் சில நாடுகளில் பிரதிநிதிகள் தெரிந்தெடுக்கப்படுவதுண்டு, இன்னும், விசேஷ நலன்களுக்கென்று, உதாரணமாக, விவசாயம், வர்த்தகம், கல்வி, மதம் முதலியவற்றிற் கென்றும், சிறுபான்மையோராயுள்ள சமூகத்தினருக்கென்றும் இப்படிச் சில சில பிரதிநிதிகள் தெரிந்தெடுக்கப்படுவர்; அல்லது அரசாங்கத்தினால் நியமிக்கப்படுவர். இப்படி நியமிக்கப்படுகிறவர்களுக்கு நியமன அங்கத்தினர் என்று பெயர். ஆனால் எல்லா நாடுகளிலும் இந்த நியமன முறை கிடையாது; சில சில நாடுகளில் மட்டுமே உண்டு. இப்படி நியமிக்கப்படுகிறவர்களும் மிக மிகச் சிலராகவே இருப்பர். இந்த நியமன முறையே பொதுவாக இப்பொழுது தள்ளுபடியாகிக் கொண்டு வருகிறது. இதற்கு அவ்வளவு மதிப்பும் கிடையாது. பிரதிநிதிகளைத் தெரிந்தெடுப்பதற்காக, ஒரு நாடு அல்லது ஒரு மாகாணம், பிரதேச வாரியாகவும் வேறுவிதமாகவும் பிரிக்கப்படுமென்று மேலே சொன்னோமல்லவா, இந்தப் பிரிவினைகளுக்குத் தேர்தல் தொகுதிகள் என்று பெயர். ஒவ்வொரு தொகுதியிலும், பிரதிநிதிகளாக இருக்க வேண்டு மென்று பலர் விரும்புவர். இவர்கள், தங்களுடைய விருப்பத்தை ஓட்டர் களிடம் தெரிவித்து, தங்களையே பிரதிநிதிகளாகத் தெரிந்தெடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வர். அதாவது ஓட்டர்களுடைய ஓட்டை அபேட்சிப்பர். இப்படி அபேட்சிக்கிற காரணத்தினால் இவர்களுக்கு அபேட்சகர்கள் என்று பெயர். ஓட்டுரிமை யுடைவர்களெல்லோருக்குமே அபேட்சகர்களாக நிற்க உரிமையுண்டு. ஆனால் குறிப்பிட்ட ஒரு வயது அடைந்திருக்க வேண்டும். இந்த வயது வரம்பு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சில நாடுகளில் பதினெட்டு வயது என்றும், இன்னும் சில நாடுகளில் இருபத்தைந்து வயது என்றும், மற்றும் சில நாடுகளில் முப்பது வயது என்றும் இப்படி ஒவ்வொரு விதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலான நாடுகளில் முப்பது வயது அடைந்தவரே அபேட்சகராக நிற்கலாம் என்பதே நியதியாயிருந்து வருகிறது. இந்த அபேட்சகர்கள், ஒரு தொகுதிக்கு எத்தனை பிரதிநிதிகள் உண்டோ அத்தனை பேர் மட்டுமே இருந்தால் அத்தனை பேரும் தெரிந் தெடுக்கப்பட்டு விடுவர். எதிர்ப்பின்றித் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் இவர்கள். இப்படிக்கின்றி, அதிகமான பேர் அபேட்சகர்களாக நிற்கும் பட்சத்தில் பெரும்பான்மையான ஓட்டுகள் யாருக்குக் கிடைக்கிறதோ அவர்கள் மட்டுமே தெரிந்தெடுக்கப்படுவர். இப்படித் தெரிந்தெடுக்கிற முறைமைக்குத் தேர்தல் என்று பெயர். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தான் ஒருவர் பிரதிநிதியாகிறார்; அதுவரையில் அவர் அபேட்சகரே. தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், நூற்றுக்கணக்கிலே இருப்பர். இவர்கள் ஒரு சபையாகக் கூடுவர். இந்தச் சபை, ஜனப் பிரதிநிதி சபை என்று பொதுவாக அழைக்கப் பெறும். இந்தச் சபையானது, தினந்தோறும்கூடி, நாட்டின் அன்றாட அரசியல் விவகாரங்களைக் கவனிப்பதென்பது முடியாதல்லவா? இதற்காக இந்தச் சபையானது, தனது அங்கத்தினராயுள்ள ஒரு சிலரிடத்தில் ஆளுங் கடமையை ஒப்புவிக்கிறது. ஆளுங் கடமையை ஒழுங்காகச் செய்து கொண்டு வர அதிகாரங்கள் வேண்டுமல்லவா? இந்த அதிகாரங்களையும் மேற்படி ஒரு சிலருக்குக் கொடுக்கிறது. இந்த ஒரு சிலர் சேர்ந்த சேர்க்கை அல்லது கூட்டு அல்லது குழுவுக்கு அரசாங்கம் என்று பெயர். இதைப் பற்றிச் சிறிது விரிவாக அடுத்த அத்தியாத்தில் அறிந்து கொள்வோம். ஜனப் பிரதிநிதி சபையானது, தான் அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகளையும், செலுத்த வேண்டிய அதிகாரங்களையும், அரசாங்கமாக அமைகிற மேற்படி ஒரு சிலரிடத்தில் ஒப்படைத்து விட்டுச் சும்மா யிருப்பதில்லை. அவ்வப்பொழுது கூடி, அரசாங்கத்தின் சகலவிதமான செயல்களையும் கண்காணித்து வருகிறது; இதுகாறும் அரசாங்கம் செய்து வந்த காரியங்களைப் பரிசீலனை செய்து, இனி, இன்னின்ன விஷயத்தில் இன்னின்ன விதமாக நடந்து கொள்ள வேண்டுமென்று அதற்கு-அரசாங்கத் திற்கு - வழி காட்டுகிறது; அரசாங்கத்திற்கும் ஜனங்களுக்கும் இருக்க வேண்டிய சம்பந்தம், ஜனங்களுக்குள்ளேயே பரபரம் ஒருவருக் கொருவர் இருக்க வேண்டிய சம்பந்தம், இவைகளை நிர்ணயிக்கிற சட்ட திட்டங்களை இயற்றிக் கொடுக்கிறது. இப்படிச் சட்ட திட்டங்களை இயற்றிக் கொடுப்பதனால் இது சட்ட நிர்மாண சபையாகவும் ஆகிறது. ஜனப் பிரதிநிதி சபையென்றாலும் சட்ட நிர்மாண சபை அல்லது சுருக்கமாக சட்ட சபையென்றாலும், ஒன்றையே குறிப்பதாக நாம் கொள்ள வேண்டும். இந்த ஜனப் பிரதிநிதி சபை அல்லது சட்டசபை, ஜனங் களுக்கும் அரசாங்கத்திற்கும் நடுவில் இருக்கிற ஒரு காவலாளி மாதிரி. இரண்டு பேருடைய நன்மைகளையும் இது பாதுகாக்க வேண்டும். இரண்டு பேருக்குமிடையேயுள்ள நல்லுறவை இது வளர்த்துக் கொடுக்க வேண்டும். ஜனங்களுடைய நம்பிக்கையைப் பொறுத்திருக்கிறது இந்தப் பிரதிநிதி சபையின் வாழ்வு; அப்படியே, இந்தப் பிரதிநிதி சபையின் நம்பிக்கையைப் பொறுத்திருக்கிறது அரசாங்கத்தினுடைய வாழ்வு. சாதாரணமாக, பிரதிநிதி சபையின் ஆயுட்காலம், இரண்டு வருஷம் முதல் ஏழு வருஷம் வரை என்று ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காலவரையறை முடிகிற ஒவ்வொரு தடவையும் தேர்தல் நடைபெறும்; பிரதிநிதிகள் தெரிந் தெடுக்கப்படுவார்கள்; அரசாங்கமும் அமையும். அசாதாரணமான காலங்களில், அசாதாரணமான காரணங்களுக்காக, மேற்சொன்ன காலவரம்பு முடிவதற்கு முந்தியே, பிரதிநிதி சபையும் அரசாங்கமும் கலைந்து போகலாம்; அப்படியே கால எல்லை முடிந்த சிறிது காலம் வரை நீடித்தும் இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி அடிக்கடி நிகழ்ந்து கொண்டிராது; எப்பொழுதோ ஒரு சமயந்தான். பிரதிநிதி சபையானது, ஒரு சில நாடுகளில் ஒன்று மட்டு மாகவே இருக்கிறது. அநேக நாடுகளில், ஏறக்குறைய எல்லாப் பெரிய நாடுகளிலும், இரண்டு கிளைகளாகப் பிரிகின்றது. ஒரு கிளையை மேல் சபையென்றும், இன்னொரு கிளையை கீழ்ச் சபையென்றும் பொதுவாக அழைப்பர். ஆனால் இவைகளுக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான பெயர் உண்டு. இந்த இரண்டு சபைகளும் சேர்ந்தே பிரதிநிதி சபை என்ற பொதுப் பெயரைப் பெறுகிறது. இந்தப் பொதுப் பெயரும் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமாக அழைக்கப்படுகிறது. உதாரணமாக, இங்கிலாந்தில் பார்லிமெண்ட்1 என்று சொன்னால், காமன் சபை2 என்று அழைக்கப்படுகிற கீழ்ச்சபை, லார்ட் சபை3 அல்லது பிரபுக்கள் சபை என்று அழைக்கப்படுகிற மேல் சபை ஆகிய இரண்டையும் சேர்த்துக் குறிப்பதாகவே இருக்கிறது. ஆனால் எல்லா நாடுகளிலும் பெரும்பாலும் கீழ்ச்சபையே உண்மையான பிரதிநிதி சபையாகக் கருதப்பட்டும் அழைக்கப்பட்டும் வருகிறது. ஒரு சில நாடுகளில் இரண்டு சபைகளுக்கும் ஒரே விதமான அதிகாரங்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான நாடுகளில் மேல் சபையைக் காட்டிலும் கீழ்ச் சபைக்குத்தான் அதிகாரங்கள் அதிகம். உதாரணமாக, அரசாங்கத்தின் வருஷாந்த வரவு செலவு திட்டத்தைப் பரிசிலனை செய்து அங்கீகரித்தல், புதிய சட்டங்களை இயற்றல் முதலிய பலவும் கீழ்ச்சபையின் அதிகாரத்திற்குட்பட்டனவாகவே இருக்கின்றன. கீழ்ச் சபைக்கு அதிகமான அதிகாரங்கள் இருப்பது போலவே, அதிகமான அங்கத்தினரும் இருப்பர், எந்த ஒரு நாட்டிலும் இதனை சகஜமாகப் பார்க்கலாம். மேல் சபையின் அங்கத்தினரின் எண்ணிக்கை எப்பொழுதும் குறைவாகவே இருக்கும். பிரதிநிதி சபை அங்கத்தினர்களுக்குப் பெரும்பாலான நாடுகளில், வருஷத்திற்கு இவ்வளவு என்று ஒரு தொகை சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. சில நாடுகளில் படிச்செலவும், பிரயாணச் செலவும் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. இதுகாறும் கூறியவற்றிலிருந்து ஜனப் பிரதிநிதி சபையானது, ஆளும் அதிகாரத்தை ஜனங்களிடமிருந்து பெற்று, அந்த அதிகாரத்தை மீண்டும் தன்னுடைய நம்பிக்கைக்கு உரியவர்களான ஒரு சிலரிடம் ஒப்படைக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டோம். அப்படியானால், இப்பொழுது உலகத்துப் பெரும்பாலான நாடுகளில் ஜன ஆட்சி என்ற பெயரால் நடைபெறுகிற ஆட்சியை நேர்முகமான அல்லது பூரணமான ஜன ஆட்சியென்று சொல்ல முடியாது என்பது தெளிவாகிறது. பின் இதனை என்ன பெயரிட்டழைப்பது? ஜனப் பிரதிநிதித்துவ ஆட்சி என்ற பெயரிட்டே அழைக்க வேண்டும்; ஜன ஆட்சியின் பல அமிசங்களைக் கொண்ட ஓர் ஆட்சியென்றே சொல்ல வேண்டும். இந்த ஜனப் பிரதிநிதித்துவ ஆட்சிமுறைதான், மற்ற ஆட்சி முறைகள் எல்லாவற்றிலும் சிறந்தது, எல்லா நாடுகளுக்கும் ஏற்றது என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். 4. அரசாங்கம் ஜனப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, தங்களிலே ஒரு சிலரிடம் ஆளும் அதிகாரத்தை ஒப்படைக்கிறார்கள். அந்த ஒரு சிலரே அரசாங்கமாக அமைகிறார்கள் என்று மேலே சொன்னோமல்லவா, இந்த ஒரு சிலர் எப்படி அரசாங்கமாக அமைகிறார்கள் என்பதை இனிச் சிறிது கவனிப்போம். ஜன ஆட்சி நிலவுகின்ற எந்த ஒரு நாட்டிலும் அரசியலில் பல கட்சிகள் உண்டு. எந்தக் கட்சிக்கு ஜனங்களிடமிருந்து அதிகமான ஓட்டுகள் கிடைக் கின்றனவோ அந்தக் கட்சிக்கே பிரதிநிதி சபையில் அதிகமான தானங்கள் கிடைக்கின்றன. அதாவது அந்தக் கட்சியினரே பிரதிநிதி சபையில் அதிகமான பேராயிருக்கின்றனர். பிரதிநிதி சபையில், பெரும்பான்மைக் கட்சியென்று சொன்னால் அதிகமான பேரைக் கொண்ட கட்சியையே குறிக்கும். எந்த ஒரு கட்சிக்கும் தலைவர் இருப்பதுபோல் இந்தப் பெரும்பான்மைக் கட்சிக்கும் ஒரு தலைவர் இருப்பார். இவரிடத்திலேயே, அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படும். இவர், தமது சகாக்களாக, பிரதிநிதி சபையிலிருந்து சிலரைத் தெரிந்தெடுத்துக் கொள்வார். ஏனென்றால் ஒருவரேயிருந்து அரசாங்கத்தை நடத்த முடியாதல்லவா? பெரும்பான்மைக் கட்சித் தலைவர், அரசாங்கத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும், அரசாங்கத்தின் தலைவராகி விடு கின்றார். அப்பொழுது இவருக்குப் பிரதம மந்திரியென்று பெயர். இவரால் தெரிந்தெடுத்துக் கொள்ளப்படும் இவருடைய சகாக்களுக்கு மந்திரிகள் என்று பெயர். மந்திரிகள் இத்தனைபேர்தான் இருக்க வேண்டுமென்று ஒரு நிர்ணயம் கிடையாது. அந்தந்த நாட்டின் தேவைக்குத் தகுந்தபடி மூன்று பேர் முதல் இருபது பேர் வரையில் இருப்பர். சில நாடுகளில், சில காலங்களில் இருபதுக்கு மேற்பட்ட மந்திரிகள் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதுண்டு. இவர்களனைவரும், பிரதம மந்திரியும் மற்ற மந்திரிகளும் சேர்ந்திருக்கிற கூட்டுக்கு மந்திரிசபை என்று பெயர். ஆங்கிலத்தில் காபினெட்1 என்று அழைப்பர். ஆகவே, ஒரு நாட்டில் அரசாங்கம் நடைபெறுகிறதென்று ] சொன்னால் அந்த நாட்டின் பிரதிநிதி சபையில் பெரும்பான்மை யோரா யுள்ள கட்சியினரின் அரசாங்கம் நடைபெறுகிறதென்றே இப்பொழுது, ஜன ஆட்சிக்கு முக்கியத்துவமும் மகத்துவமும் ஏற்பட்டிருக்கிற இந்தக் காலத்தில் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ஜன ஆட்சியானது எப்படிப் பெரும்பான்மையோர் ஆட்சியாகிறது என்பது இப்பொழுது நன்றாக விளங்குகிறதல்லவா? பெரும்பான்மைக் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலரே அரசாங்கத்தை அமைக்கின்றார்களாயினும், இவர்கள், இந்த ஒரு சிலர், அரசாங் கமாக அமைந்து விட்ட பிறகு, அதாவது அரசாங்கத்தினராகி விட்ட பிறகு, கட்சிப் பற்றுடன் காரியங்களைச் செய்யக் கூடாது; தங்கள் கட்சி நலனை மட்டும் நாடக் கூடாது. எல்லோருக்கும் நடுநிலைமையாயிருந்து எல்லோர் நலனையும் நாட வேண்டும். அரசாங்கத்தை நடத்தும் பொறுப்பு இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதென்று சொன்னால், நாட்டின் க்ஷேமம் பூராவும் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதென்று தான் அர்த்தம். மந்திரிகள் கட்சிப்பற்றுடன் காரியங்களைச் செய்யக் கூடாது, கட்சி நலனை மட்டும் நாடக்கூடாது என்று சொன்னாலும், கட்சியின் கொள்கைகளை நடைமுறையில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளலாம்; எடுத்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றனர். ஏனென்றால், கட்சியின் கொள்கைகளை ஜனங்கள் முன்னிலையில் கிளத்தித்தானே அந்த ஜனங்களில் பெரும்பாலோரின் ஓட்டை இவர்கள் பெற்றனர். மற்றும் ஜனங்களில் பெரும்பாலோருக்கு அந்தக் கொள்கைகளில் பிடித்த மிகுந்ததனாலும், இவர்களைத் தெரிந்தெடுத்தால் அந்தக் கொள்கைகளை நிச்சயம் நடைமுறையில் கொண்டு வருவர் என்ற நம்பிக்கை இருந்ததனாலுமல்லவோ இவர்களைப் பிரதிநிதிகளாகத் தெரிந்தெடுத்தனர்? அப்படியானால் அந்தக் கொள்கை களை நடைமுறையில் கொணரச் செய்வது பிரதிநிதிகளின் கடமை யல்லவோ? கொண்டு வருவது, அந்தப் பிரதிநிதிகளிற் சிலரான மந்திரி களின் கடமையல்லவோ? இங்கே ஜனங்களென்று சொன்னால் ஓட்டுரிமைபெற்ற ஜனங்கள், அதாவது ஓட்டர்கள் என்றே அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டும். மந்திரிகள், பிரதிநிதி சபைக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டி யவர்கள்; பிரதிநிதிகள், ஓட்டர்களுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டிய வர்கள். இதுதான் பிரதிநிதித்துவ ஆட்சியின் வரிசைக் கிரமம். இதை வேறுவிதமாகவும் சொல்லலாம். ஜனங்கள் தங்களுடைய ஆளும் அதிகாரத்தை, பிரதிநிதிகளிடம் சிறிது காலத்திற்கு, முந்திச் சொன்னபடி இரண்ட வருஷமோ, மூன்று வருஷமோ, ஏழு வருஷமோ, அந்தந்த நாட்டில் நிர்ணயித்திருக்கிற காலம் வரை இரவல் கொடுக்கின்றனர்; இந்த பிரதிநிதிகள், தங்களிலே ஒரு சிலரான மந்திரிகளிடம் ஆளும் பொறுப்பை, அந்த மந்திரிகள், தங்களுடைய நம்பிக்கையைப் பெற்றிருக்கிற காலம் வரையில், இரண்டு வருஷத்திலிருந்து ஏழு வருஷத்திற்குட்பட்டு, இரவல் கொடுக்கின்றனர். இப்படி இரவல் கொடுத்த பிறகு, ஓட்டர்களோ, பிரதிநிதிகளோ, மந்திரிகளின் அன்றாட நிருவாகத்தில் தலையிடுதல் கூடாது. மந்திரிகளுக்குச் சம்பளம், படிச்செலவு முதலியன உண்டு என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. அரசாங்கமென்பது, சிறியனவும் பெரியனவுமான பல பாகங்கள் சேர்ந்த ஒரு மொத்தம். பல அறைகளைக் கொண்ட வீடு, பல கிளை களையுடைய ஒரு மரம், பல கருவிகள் சேர்ந்த ஒரு யந்திரம், இப்படி ஏதேனும் ஒன்றைப் போல என்று சொல்லலாம். பலர் வேலை செய்கிற, பல கிளைக்காரியாலயங்களையுடைய ஒரு தொழில் தாபனம் என்று சொல்வதுமுண்டு. ஆக, அரசாங்கமென்பது சிக்கல் நிறைந்தது; ஒன்றோ டொன்று இணைத்துக் கொண்டிருக்கும் சங்கிலி போன்றது. அரசாங்கத்தின் குறை நிறைகளை நாம் எடுத்துக்காட்டுகிற போது இந்த உண்மையை மனத்தில் வைத்துக் கொள்வது நல்லது. பொதுவாக அரசாங்கத்தை இரண்டு பெரிய கூறுகளாகப் பிரிப்பர். ஒன்று நீதிப் பிரிவினை; மற்றொன்று நிருவாகப் பிரிவினை. சட்ட திட்டங்களை ஒழுங்காக நிறைவேற்றச் செய்தல், இவற்றை மீறி நடப்பவருக்கு, அந்தச் சட்டதிட்டங்களில் கூறியிருக்கிறபடி தண்டனை விதித்தல் முதலியன நீதிப் பிரிவினையின் கடமைகள். ஒரு தோட்டத்திற்குப் போட்டிருக்கிற வேலி போன்றது இந்த நீதிப் பிரிவினையென்று கூறலாம். ஹைகோர்ட், ஜில்லாகோர்ட் முதலிய நீதி வழங்கும் அல்லது ஜனங்களுக்கு நியாயம் கிடைக்குமாறு செய்யும் தாபனங்கள் பலவும் இந்தப் பிரிவினையைச் சேர்ந்தவையே. ஜனங்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வதோடு அரசாங்கத் தின் கடமை முடிந்துவிடாது. அவர்களுடைய தினசரி வாழ்க்கை நல்ல முறையில் நடைபெறுமாறு செய்ய வேண்டும்; அவர்களுக்குக் கல்வி வசதி, சுகாதார வசதி, பொருளாதார வசதி முதலியவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மற்றும் அஃது அரசாங்கம் - பிறநாட்டு அரசாங்கங்களுடன் நல்ல முறையில் பழகி அவற்றின் நட்பைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்; அந்த நட்பைக் காப்பாற்றிக் கொண்டு வரவும் வேண்டும். இப்படிப் பலவற்றைக் கவனிப்பதுவே நிருவாகப் பிரிவினை. இதற்காக, இந்த நிருவாகப் பிரிவினையானது பல உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. இந்த உட்பிரிவுகளுக்கே இலாகாக்கள் என்று பெயர். இந்த இலாகாக்களில் ஒன்றையோ, சிலவற்றையோ மேற்பார்வை செய்கிறவர், பொறுப்பாக இருந்து நடத்திக் கொடுக்கிறவர், இவரே மந்திரி. ஒவ்வொர் இலாகாவின் கீழும் பல கிளை இலாகாக்கள், சில்லரை இலாகாக்கள் இருக்கும். இந்த இலாகாக்களில் வேலை செய் கிறவர்களே உத்தியோகதர்கள். ஒவ்வொரு மந்திரியின் கீழும் இத்தகைய உத்தியோகதர்கள் பலர் இருப்பார்கள். அரசாங்கமானது, நீதிப்பிரிவினை, நிருவாகப் பிரிவினை என்று இரண்டாகப் பிரிவதோடு வேறுவிதமாகவும் பிரிவதுண்டு. எப்படி யென்றால், ஓர் அரசாங்கம், தன் எல்லைக்குட்பட்ட பிரதேசம் பூராவையும் தானே நேரில் நிருவாகம் செய்ய முடியாது. இதற்காக அந்தப் பிரதேசத்தைச் சில பெரிய பகுதிகளாகவும், அந்த ஒவ்வொரு பெரிய பகுதியையும் பல சிறு பகுதிகளாகவும் பிரிக்கிறது. இந்தப் பிரிவினையை யொட்டித்தான் தேர்தல் தொகுதிகள் நிர்ணயிக்கப் படுகின்றன என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோமல்லவா? இப்படிப் பிரித்து, தன் அதிகாரங்களில் சிலவற்றை அவைகளுக்கு பகிர்ந்து கொடுத்து நடத்துமாறு செய்விக்கிறது. உதாரணமாக, நமது இந்தியாவை, சில மகாணங்களாகவும், ஒவ்வொரு மாகாணத்தையும் பல ஜில்லாக் களாகவும், ஒவ்வொரு ஜில்லாவையும் அநேக கிராமங்களாகவும் பிரித் திருக்கிறார்களல்லவா? இவை ஒவ்வொன்றுக்கும் அரசாங்கத்தின் அதிகாரங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த அதிகாரங்களை அமுல் நடத்துவதற்கான தாபனங்களே மாகாண அரசாங்கம், ஜில்லா போர்ட், கிராம பஞ்சாயத்து முதலியன. இந்த தாபனங்களின் அதிகாரங்கள், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக வரையறுக்கப் பட்டிருக்கின்றன. ஓர் அரசாங்கம் ஜனங்களுக்கு அனுகூலம் உண்டாகிற முறையில், தன் அதிகாரங்களிற் பலவற்றை இப்படிப் பங்கிட்டுக்க வேண்டியது அவசியமாகிறது. பொதுவாகச் சொல்லப்போனால் உண்மையான ஓர் அரசாங்க மானது, ஜனங்களிடமிருந்தே பிறக்கிறது; ஜனங்களாலேயே நடத்தப் படுகிறது; ஜனங்களுக்காகவே நடைபெறுகிறது. இப்படிப்பட்ட ஓர் அரசாங்க அமைப்புக்குத்தான் இப்பொழுது உலகத்தில் மதிப்பு இருக்கிறது. இதனைக் குடியரசு, ஜனஆட்சி, ஜனநாயக ஆட்சி என்று பல பெயர்களிட்டு அழைப்பர். ஒரு நாட்டில் சுயஆட்சி நடைபெறுகிறது. என்றால், அங்கு இத்தகைய அரசாங்க அமைப்பு இருப்பதையே குறிக்கும். இங்ஙனம் ஜனங்களிடமிருந்து பிறந்து, ஜனங்களுக்காகவே ஓர் அரசாங்கம் இருந்தபோதிலும் அது தனியான ஒரு சக்தி. அதற்கென்று சில உரிமைகளும் கடமைகளும் உண்டு. இந்த உரிமைகளுக்குப் பங்கம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளவும், கடமைகளைச் செய்யவும் அது முன்வருகிறபோது, அதனை ஜனங்கள் தடை செய்யக்கூடாது; அதனுடன் ஒத்துழைக்க வேண்டும். தவிர, ஏற்கனவே சொல்லியிருக்கிறபடி, ஜனங்கள், தங்களால் தெரிந்தெடுக்கப்படுகிற பிரதிநிதிகள் மூலம் தங்களுடைய ஆளும் அதிகாரத்தை, குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு அரசாங்கத்திடம் ஒப்புவிக் கிறார்கள், ஒப்புவித்துவிட்ட பிறகு, அதனுடைய காரியங்களில் தலை யிடவே கூடாது. தலையிடுவார்களானால், அரசாங்கமானது, அதன் உரிமைகளை நிலைநாட்டவோ, கடமைகளை நிறைவேற்றவோ முடியாது. இதனை ஜனங்கள் நன்கு உணர வேண்டும். ஆனால் இப்படி உணர்ந்துகொண்டு விட்டதாகச் சொல்லி ஜனங்கள் சும்மாயிருக்கலாமா? அரசாங்கம் என்ன செய்கிறது என்பதில் கவனஞ் செலுத்தாமலிருக்கலாமா? அரசியல் விவகாரங்களில் சிரத்தை கொள்ளா மலிருக்கலாமா? கூடவே கூடாது. அப்படிக் கவனக் குறைவாகவும் சிரத்தையில்லாமலும் ஒரு நாட்டு ஜனங்கள் இருப்பார்களானால், அந்த நாடு சீரழிந்து போகும்; அந்த ஜனங்களும் சுயமாக, அதாவது சுய அந்ததுடனும் சுயமதிப்புடனும் வாழ முடியாது. அரசியலில் சிரத்தை கொள்வதாவது என்ன? அரசாங்கத்திற்கு எப்படித் தனியான சில உரிமைகளும் கடமைகளும் உண்டோ அப்படியே ஜனங்களுக்கும் சில உரிமைகளும் கடமைகளும் உண்டு. இந்த உரிமை களையும் கடமைகளையும் உணர்ந்து நடத்தலே அரசியலில் சிரத்தை கொள்வதாகும். தங்களுடைய உரிமைகளையும் கடமைகளையும் உணர்ந்து நடக்கின்றவர்களே சரியான பிரஜைகள்; முழுப்பிரஜைகள். நாம் ஒவ்வொருவரும் இத்தகைய முழுப்பிரஜையாயிருந்து வருவோமாக !  பிரஜைகளின் உரிமைகளும், கடமைகளும் 1. பிரஜைகளின் லட்சணம் ஒருவர் ஆட்சி, ஒரு சிலர் ஆட்சி, பலர் ஆட்சி ஆகிய இந்த மூன்று வகை ஆட்சி முறைகளுக்குட்பட்டிருக்கும் வயது வந்த எல்லா ஜனங்களையும் பொதுவாக பிரஜைகள் என்ற பெயரிட்டே அழைக்கிறோம். எல்லோருக்கும் புரிகிறமாதிரி, தெரிந்த வார்த்தையில் சொல்ல வேண்டு மென்பதற்காகவே இப்படி அழைக்கிறோம். சரியாகச் சொல்லப் போனால், ஜன ஆட்சிமுறைக்குட்பட்டிருப்பவர்கள் தான் பிரஜைகள்; அவர் களைத்தான் பிரஜைகள் என்று அழைக்க வேண்டும். எப்படி என்று விசாரிப்போம். பிரஜா பாத்தியதை, பிரஜா உரிமை, பிரஜா அந்தது, பிரஜா சக்தி என்றெல்லாம் சொல்கிறோம். இதனால், பிரஜையாயிருப்பவருக்கு, பாத்தியதை, உரிமை, அந்தது, சக்தி ஆகிய இவையாவுமோ அல்லது இவற்றில் ஏதோனுமொன்றோ உண்டு என்பது தெளிவாகிறது. இந்த பாத்தியதை அல்லது உரிமை அல்லது அந்தது அல்லது சக்தி, ஒருவர் ஆட்சி என்று அழைக்கப்படுகிற மன்னராட்சிக்குட்பட்டிருக்கும் மக்களுக்கோ, ஒரு சிலர் ஆட்சி என்று அழைக்கப்படுகிற பிரபுத்துவ ஆட்சிக்குட்பட்டிருக்கும் மக்களுக்கோ உண்டா? இல்லவே இல்லை. இவர்களுக்கு ஆளுகையில் எவ்வித பாத்தியதையும் கிடையாது. தங்களுடைய உரிமையென்று சொல்லிக் கொண்டு எவ்வித உரிமையையும் இவர்கள் கொண்டாட முடியாது. ஆளுகின்றவர்களைக் காட்டிலும் இவர்களுக்குத் தாழ்வான அந்ததே தவிர சம அந்தது இல்லை. இந்த நிலைமையில் இவர்களுக்கு, தனிப்பட்ட ஒரு சக்தி, ஆளு கின்றவர்களால் மதிக்கப்படக் கூடிய ஒரு சக்தி எப்படி இருக்க முடியும்? நிச்சயமாக இல்லை. சுருக்கமாக, இவர்கள் வேறாகவும், இவர்களை ஆளுகின்றவர்கள் வேறாகவும் இருக்கிறார்கள்; நோக்குநிலை முதல் வாழ்க்கைப் போக்குவரையில் யாவுமே வேறு வேறாக இருக்கின்றன. ஆளுகின்றவர்களுக்கு எல்லா வகையிலும் அடங்கி நடப்பது, தங்கள் கடமையென்று இவர்கள் கருதுகிறார்கள். அப்படியே ஆளுகின்றவர்களும், இவர்களை எல்லா வகையிலும் அடக்கி நடத்துவது தங்கள் உரிமை யென்று கருதுகிறார்கள். ஜனங்களைப் பற்றி ஆளுகின்றவர்களுக்கு அக்கரை இருப்பதில்லை. இதே பிரகாரம் ஜனங்களுக்கு ஆளுகையில் சிரத்தை இருப்பதில்லை. இந்த சிரத்தை ஏற்படக்கூடா தென்பதுதான் ஆளுகின்றவர் களுடைய கவலை. இதற்காக இவர்களுடைய - ஜனங்களுடைய - கவனத்தை வேறு வேறு வழிகளில் திருப்பி விடுகிறார்கள். ஜனங் களும் இந்த வழிகளில் ஈடுபட்டு, சுய நிலையை இழந்து, ஆட் பட்டிருப்பதிலே திருப்தியடைகிறார்கள். ஆட்பட்டிருப்பதுதான் தங்கள் கடமையென்ற உணர்ச்சி இவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. இப்படியெல்லாம் நாம் கூறுவதனால், மன்னராட்சியென்கிற முடியாட்சியின் கீழோ, பிரபுத்துவ ஆட்சியென்கிற மேன்மக் களாட்சியின் கீழோ வாழும் மக்கள் நன்மையே அடைய முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். நன்மை யடையலாம்; சுகப்படலாம்; வாழ்க்கையை இன்பகரமாக நடத்தலாம். ஆனால் இந்த நன்மை, சுகம், இன்பம் ஆகியாவும் ஆளுகின்றவர்களுடைய தயவைப் பொறுத்தனவாகவே இருக்கும்; உரிமையினின்று பிறந்தனவாயிரா. இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசமென்றால், கடையிலே வாங்கித் தின்கின்ற பலகாரத்திற்கும், வீட்டிலே செய்து தின்கிற பலகாரத்திற்கும் எவ்வளவு வித்தியாசமோ அவ்வளவு வித்தியாசம் என்று சொல்லலாம். ஜன ஆட்சிக்குட்பட்டிருக்கும் மக்களோ, ஆளுகையில் பாத்தியதை கொண்டாடுகிறவர்களாயிருக்கிறார்கள்; ஆளகின்றவர் களைத் தெரிந் தெடுக்கிற உரிமையுடையவர்களா யிருக்கிறார்கள்; சுய அந்ததும், அதே சமயத்தில் சம அந்ததும் பெற்றவர்களா யிருக்கிறார்கள்; ஆளுகின்ற வர்கள், ஆளுங்கடமையைச் சரிவரச் செய்யாவிட்டால், அவர்களுக்கு அந்தக் கடமையை உணர்த்தும் சக்தி வாய்ந்தவர்களா யிருக்கிறார்கள். மற்ற ஆட்சி முறைகளின் கீழ் வாழும் மக்களைப் போல், இந்த ஜன ஆட்சிக்குட்பட்டிருப்பவர்களும், அரசாங்கம் பிறப்பிக்கிற உத்தரவு களுக்கும், அமுலுக்குக் கொண்டு வருகிற சட்ட திட்டங்களுக்கும் கீழ்ப்படியத்தானே செய்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். வாதவம்; கீழ்ப்படியத்தான் செய்கிறார்கள். ஆனால் அந்த உத்தரவுகளைப் பிறப்பிப்பதிலும், சட்டதிட்டங்களை இயற்றுவதிலும் இவர்களுக்குப் பங்கு உண்டு. அதாவது தாங்கள் பிறப்பிக்கிற உத்தரவுகளுக்கும், இயற்றுகிற சட்டதிட்டங்களுக்கும், தாங்களே கீழ்ப்படிகிறார்கள். இப்படிக் கீழ்ப்படிவது சுயேச்சையாகவே தவிர, யாருடைய கட்டாயத்திற்காகவுமன்று; யாருக்குப் பயந்துமன்று. இதை நாம் நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். மற்றைய ஆட்சி முறைகளுக்குட்பட்டிருப்பவர்களுக்கும், இந்த ஜன ஆட்சி முறைக்குட்பட்டிருப்பவர்களுக்குமுள்ள முக்கியமான வித்தியாசங்கள் என்னென்னவென்றால், முந்தியவர்கள், பிறருக்கு ஆட்பட்டவர்களா யிருக்கிறார்கள்; பிந்தியவர்கள், தங்களுக்குத் தாங்களே ஆட்பட்டவர்களா யிருக்கிறார்கள். முந்தியவர்கள் ஆட்பட்டிருப்பது, அவர்களுடைய விருப்பத்தினாலல்ல; ஏன், அவர்களுடைய விருப்பத்திற்கு விரோதமாகக்கூட என்று சொல்லலாம்; பிந்தியவர்கள் ஆட்பட்டிருப்பதோ, அவர்களுடைய விருப்பத்தினால்; அவர்களே சம்மதித்து. முந்தியவர்கள், ஆட்படுங் கடமையை மட்டுந்தான் அறிவார்கள்; பிந்தியவர்கள், ஆளும் உரிமையையும், ஆட்படுங் கடமை யையும், இரண்டினையும் அறிவார்கள். முந்தியவர்கள், தங்கள் நலத்தை மற்றவர்கள் வசம் ஒப்புவித்து விடுகிறார்கள்; பிந்தியவர்கள், தங்கள் நலத்தைத் தாங்களே நிர்ணயித்துக் கொண்டு, அதைக் காப்பாற்றி வருவதில் கண்ணுங்கருத்துமாயிருக்கிறார்கள். சுருக்கமாக, முந்திய வர்கள் சொந்த நிலத்தை குத்தகைக்கு விட்டிருக்கிறவர்கள் மாதிரி; பிந்தியவர்கள், சொந்தப் பயிர் வைத்து நடத்துகிறவர்கள் மாதிரி. ஆக, ஜன ஆட்சிக்குட்பட்டிருக்கும் வயது வந்த ஜனங்கள், தங்களுக்குத் தாங்களே எஜமானர்களாயிருக்கிறார்கள்; ஆளும் உரிமையை அனுபவிக்கிறவர்களாகவும், அதே சமயத்தில் ஆட் படுங்கடமையைச் செய்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் தான், பிரஜைகள் என்று அழைக்கப்படுவதற்குரியவர்கள். முழுப் பிரஜை களென்று சொன்னால் இவர்களுக்குத்தான் பொருந்தும். மற்ற ஆட்சி முறைகளுக்குட்பட்டிருப்பவர்களை, பிரஜைகளென்று அழைப்பது ஒரு சம்பிரதாயமென்றே சொல்ல வேண்டும். பிரஜையாயிருப்பது ஓர் உரிமை; ஓர் அந்தது; பொறுப்புள்ள ஒரு பதவியென்றுகூடச் சொல்லலாம். வயது வந்ததிலிருந்து, அதாவது பதினெட்டு வயதோ இருபத்தோரு வயதோ ஆனதிலிருந்து, ஆயுள் பூராவும் ஒருவனோ ஒருத்தியோ வகித்து வர வேண்டிய பதவி இது. ஆனால் இதற்கு ஊதியம் கிடையாது. ஒரு பிரஜை, ஆளும் உரிமையை அனுபவிக்கிற காலத்தில்தான் ஏதேனும் ஒரு தொகையைச் சம்பளமாக எதிர்பார்க்கலாம். ஆட்படுங்கடமையைச் செய்து கொண்டு வருகிறபோது, அந்தக் கடமையை ஒழுங்காகச் செய்து வருவதிலே உண்டாகிற திருப்திதான் சம்பளம். ஒரு பிரஜை, சம்பளமாக ஒரு தொகையைப் பெற்று ஆளுந் தொழிலைச் செய்துவருகிற காலத்தில், அந்தப் பிரஜையை, மந்திரி யென்றும், உத்தியோகதரென்றும், இப்படிப் பலவாறாக அழைக் கிறோம். அதே பிரஜை, ஆளுந்தொழிலைச் செய்வதிலிருந்து விலகி, ஆட்படுங்கடமையைச் செய்து வருகிற காலத்தில் அவரை வெறும் பிரஜையென்றுதான் அழைக்கிறோம். இப்படி வெறும் பிரஜையா யிருக்கிற காரணத்தினால், அவருடைய பொறுப்போ, கௌரவமோ சிறிதும் குறையவில்லை யென்பது இங்கு நினைவில் வைத்துக் கொள்ளத்தக்கது. ஆளும்போது அதிகாரி; ஆட்படும்போது பிரஜை; அவ்வளவுதான். ஆளும் அதிகாரி, தனது ஆளுந்தொழிலைச் சரிவரச் செய்யா விட்டால், அந்த அதிகாரிக்கு மட்டுமோ, அந்த அதிகாரியைச் சேர்ந்த ஒரு சிலருக்கு மட்டுமோ கெடுதல் உண்டாகிறது. அந்தக் கெடுதலைச் சொற்ப காலத்திற்குள் திருத்திக்கொண்டுவிட முடியும். ஆட்படும் பிரஜை, தனது கடமையை ஒழுங்காகச் செய்து வராவிட்டாலோ, நாடு பூராவுமே பாழாகிவிடக் கூடும்; சமுதாய உடலில் மாறாத வடு ஏற்பட்டு விடக்கூடும். அப்படியானால் ஒரு பிரஜையினுடைய பொறுப்பு எவ்வளவு மகத்தானது? இப்படி மகத்தான பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய பிரஜை எப்படிப்பட்டவனாயிருக்க வேண்டும். அவனுடைய லட்சங்கள் என்னென்ன என்று நீங்கள் கேட்கிறீர்களல்லவா? முதலாவது, அவன், சொந்த நாட்டிலே பிறந்து, வளர்ந்து, வசிக்கிறவனாயிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன், தன்னுடைய நாட்டின் நலத்தில் நாட்ட முடையவனாயிருக்க முடியும்; தனது அரசாங்கத்தினிடத்தில் விசுவாச முடையவனா யிருக்கமுடியும்; இருக்க முடியும் என்ன, இருக்கவே வேண்டும். எவனொருவன், தனது நாட்டின் நன்மைக்காக நாளும் உழைத்து வருகிறானோ, தனது அரசாங்கத்தின் நற்பெயருக்குக் கேடு உண்டாகாமல் நடந்து வருகிறானோ அவன்தான் உண்மையான பிரஜையென்று கூறலாம். அப்படியானால் ஒரு நாட்டிலே வசிக்கும் அந்நியர்களுடைய நிலைமை என்ன? அவர்கள் பிரஜைகளல்லர். அவர்களுக்கு ஓட் டுரிமை முதலிய அரசியல் உரிமைகள் கிடையாது. முற்காலத்தில், நேர்முகமான ஜன ஆட்சி நடைபெற்று வந்த கிரி தேசத்தில், கிரேக்கரல்லாதவர்களுக்குப் பிரஜா உரிமை கிடையாதென்பதே சட்டமாயிருந்து வந்தது. இப்பொழுதும் பெரும்பாலான நாடுகளில் இதுவே விதியா யிருந்துவருகிறது. இரண்டாவது, பதினெட்டு வயதோ இருபத்தோரு வயதோ அடைந்தவர்கள்தான் பிரஜைகள். இவை யிரண்டும் பிரஜைகளின் பொதுவான, முக்கியமான லட்சணங்கள். இவை மட்டும் இருந்தால் போதுமா? சில சில அவலட்சணங்களும் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த அவ லட்சணங்கள் என்னென்ன வென்பது, அதாவது பிரஜையாயிருப்ப தற்குத் தகுதியில்லாத தன்மைகள் என்னென்னவென்பது, ஒவ்வொரு நாட்டு அரசியல் திட்டத்திலும் ஒவ்வொரு விதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சில நாடுகளில், பைத்தியம் பிடித்துப் போனவர்கள், குற்றஞ் செய்து சிறைப்பட்டவர்கள், இப்படிப்பட்டவர்களுக்குப் பிரஜா உரிமை கிடையாது. இன்னுஞ் சில நாடுகளில், குருடர், செவிடர், ஊமையர் இப்படிப்பட்டவர் களுக்குப் பிரஜா உரிமை கிடையாது. வேறு சில நாடுகளில், குருடர், செவிடர், ஊமையர் இப்படிப்பட்டவர்களுக்குப் பிரஜா உரிமை கிடையாது. வேறு சில நாடுகளில், வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்கச் சக்தி யற்றவர்களென்று கோர்ட்டுகளினால் தீர்ப்பளிக்கப் பட்டவர்கள், வேறு ஏதேனும் காரணங்களிலிருந்து அத்தக் காரணங்களுக்காகப் பிரஜா உரிமையை அனுபவிக்கத் தகுதியற்றவர்களென்று கோர்ட்டுகளினால் உத்தரவிடப்பெற்றவர்கள், இப்படிப்பட்டவர்களுக்குப் பிரஜா உரிமை கிடையாது. ஆக, பிறர் உதவியின்றி, தன்னுதவியினாலேயே காரியங் களைச் செய்யக்கூடியவன், ஒழுங்கான முறையில் வாழ்க்கையை நடத்தக்கூடியவன் எவனோ அவன் தான் சரியான பிரஜை. எனவே, மேற்சொன்ன லட்சணங்களோடு கூடிய, அவ லட்சணங்கள் இல்லாத ஒரு நாட்டில் வசிக்கும் சகலமான பேரும் பிரஜைகளே. இதில் பால், நிறம், மதம், வகுப்பு முதலிய எந்த விதமான வித்தியாசங்களும் கிடையாது. எப்படிப்பட்டவர்கள் பிரஜைகள் என்பதைப் பற்றிச் சில அறிஞர்கள் கூறிய கருத்துக்களைக் கேளுங்கள்:- எவனொருவன், தேசத்தினுடைய அரசாங்கத்தில் பங்குடையவனாயிருக்கிறானோ, அந்த அரசாங்கத்தினால் ஏற்படக் கூடிய கௌரவங்களை அனுபவிக்கும் உரிமையுடைவனா யிருக் கிறானோ அவன்தான் பிரஜை. * * * பிரஜைகளென்போர், ஒரு ஜன சமுதாயத்தின் அங்கத் தினர்கள்; அந்தச் சமுதாயத்திற்குச் சில கடமைகளினால் கட்டுப் பட்டவர்கள்; அந்தச் சமுதாயத்தின் அதிகாரத்திற்குக் கீழ்ப் பட்டவர்கள்; அந்தச் சமுதாயத்தினால் உண்டாகிற அனுகூலங் களில் சம பங்கு பெறுபவர்கள். * * * ஒரு ராஜ்யத்தின் அங்கத்தினன்; அந்த ராஜ்யத்திற்குட்பட்டு, தான் பூரண வளர்ச்சி பெற முயற்சி செய்கிறவன்; அதே சமயத்தில் ஒரு சமுதாயத்திற்குச் சீலமே பெரிதென அறிந்து, அந்தச் சமுதாய சீலத்தை நாடுகிறவன்; அவன் தான் பிரஜை. ஒரு பிரஜை, சொந்த வாழ்க்கையில் சுதந்திரமுடையவன்; சமுதாய வாழ்க்கையில் எல்லோருக்கும் சகோதரன்; அரசியல் வாழ்க்கையிலோ எல்லோருடனும் சம பங்காளி. ஆகவே ஒரு பிரஜையினுடைய மொத்த வாழ்க்கை, சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய மூன்று அடித்தளங்களைக் கொண்டதாயிருக்கிறது. ஆட்படும் கடமையை மட்டும் செய்து கொண்டு வந்த ஜனங்கள், எப்பொழுதிருந்து, ஆளும் உரிமையை அனுபவிக்கக்கூடிய பிரஜை களானார்கள்? அதாவது ஜனாதிக்கம் அல்லது பிரஜாதிபத்தியம் என்பது எப்பொழுது ஏற்பட்டது? எல்லாம் பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசி பகுதியிலிருந்து தான். அதற்கு முந்தி, உலகத்தின் பெரும்பாலான நாடுகளில், சமுதாயத்தின் சாதாரண நிலையிலிருந்த ஜனங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு வித ஆட்சி முறையே நிலவி வந்தது. இந்த ஆட்சி முறை, சில சில நாடுகளில், சிறப்பாகக் கீழ் நாடுகளில், ஜனங்களுக்கு அனுகூலமாயிருந்திருக்கலாம்; அப்படி அனுகூல மாயிருந்ததும் சில சில காலங்களுக்குத்தான். பொதுவாக ஜனங் களுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டே வந்திருக்கிறது. அரசாங்கத் திற்காக ஜனங்களே தவிர, ஜனங்களுக்காக அரசாங்கம் இல்லை யென்பது தான் பொதுவான கொள்கையாயிருந்து வந்தது. அரசுரிமை இல்லாதிருந்தது ஒரு புறமிருக்கட்டும்; மனிதராகப் பிறந்து விட்ட காரணத்தினால், மனிதராக வாழ வேண்டியதற்கான சில உரிமைகள் உண்டல்லவோ, அந்த உரிமைகள் கூட ஜனங்களுக்கு இல்லாமலிருந்தன. சுருக்கமாக, ஜனங்கள், மனிதர்களாகக் கருதப்பட வில்லை; ஆளுகை நடத்துவோரின் ஆடற்கருவிகளாகவே கருதப் பட்டனர்; அப்படியே நடத்தவும் பட்டனர். இதை நிரூபிக்க, மேனாட்டுச் சரித்திரத்திலிருந்து பல உதாரணங்களை எடுத்துக் காட்டலாம். ஆனால் இங்கே அது தேவையில்லை. இங்ஙனம் ஜனங்களுடைய பொறுமை, பல தடவை பரிசோதிக்கப்பட்டு வந்த காலத்தில், சில அறிஞர்கள் தோன்றி, ஜனங்களுக்கு உரிமையுணர்ச்சியை ஊட்டினார்கள். இவர்களில் முக்கியமாக ரூஸோ1 என்பவனைக் குறிப்பிட வேண்டும். இவனுடைய வாழ்க்கை வரலாறும், இவனுடைய எழுத்துக்களும், இன்றளவும் சுதந்திர பாதைக்கு வழி காட்டும் விளக்குகளாக எரிந்து கொண்டிருக்கின்றன. உரிமை யுணர்ச்சி ஊட்டப்பெற்ற ஜனங்கள், அந்த உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முயற்சி செய்தார்கள். இந்த முயற்சி, பல இடங்களில் புரட்சிகளாகத் தோன்றின. இவற்றுள், 1774 - ஆம் வருஷம் அமெரிக்காவில் நடைபெற்ற புரட்சியையும், 1789-ஆம் வருஷம் பிரான்சில் நடைபெற்ற புரட்சியையும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஏனென்றால் இந்தப் புரட்சிகளின் விளைவாகத்தான், ஜனங்களுக்கும் சில உரிமைகள், அதாவது மனித உரிமைகள் உண்டென்பது அங்கீகரிக்கப் பட்டது. இந்த உரிமைகளின் தொடர்ச்சியாக அரசியல் உரிமைகளையும் பெற்றார்கள் ஜனங்கள். எந்த வகையில் ஜனங்களுடைய உரிமைகள் அங்கீகாரம் பெற்றன என்பதை வாசகர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, 1776-ஆம் வருஷம் வெளியான அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்திலிருந்து சில வாசகங்களை எடுத்துக்காட்ட விரும்புகிறோம்:- மனிதர்கள் பிறக்கும்போதே, கடவுளால் அருளப்பட்ட சில உரிமைகளுடன் பிறக்கிறார்கள். இந்த உரிமைகள் பராதீனப் படுத்த முடியாதவை. இவற்றில் சில என்னவென்றால், உயிர்வாழும் உரிமை, சுதந்திரமாயிருக்கும் உரிமை, சந்தோஷத்தை அனுபவிக்கும் உரிமை முதலியனவாம். இந்த உரிமைகளை மனிதர்கள் அனுபவிக்க வேண்டு மென்பதற்காகவே, அரசாங்கங்கள் செலுத்துகிற நியாயமான அதிகாரங்கள் யாவும் ஜனங்களிடமிருந்து பிறப்பவையே. எனவே, ஜன உரிமைக்கு ஆக்கம் ஏற்பட்டதெல்லாம் சுமார் நூற்றெழுபத்தைந்து வருஷங்களுக்கு மேல் இருநூறு வருஷங் களுக்குள்ளாகத்தான் என்பது தெளிவாகிறது. 2. உரிமையின் சரித்திரம் உரிமை, உரிமையென்று கூறுகிறீர்களே, அதன் அர்த்தமென்ன? அதன் சரித்திரமென்ன? இவையல்லவோ வாசகர்களே, உங்களுடைய கேள்விகள்? கேளுங்கள். உரிமையின் அர்த்தத்தையும் சரித்திரத்தையும் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னர், உரிமையைப் பற்றின சில அடிப்படையான உண்மைகளைத் தெரிந்து கொள்வோம். மனிதன், எப்படிப் பிறக்கிறபோது சில அங்க அவயவங்களுடன் பிறக்கிறானோ அப்படியே சில உரிமைகளோடும் பிறக்கிறான். அங்க அவயவங்களில்லாமற்போனால் அவன் எப்படி சரியான மனிதன் இல்லையோ, அப்படியே, உரிமைகளில்லாமற் போனாலும் அவன் சரியான மனிதன் இல்லை. என்ன வித்தியாசமென்றால், அங்க அவய வங்கள், கண்களுக்கு நன்றாகத் தெரிகின்றன; உரிமைகள் தெரிவதில்லை. அதாவது முன்னவை தூலமாயிருக்கின்றன; பின்னவை சூட்சுமமா யிருக்கின்றன. சூட்சுமமாயிருந்தாலும் இவையின்றி அங்க அவயவங்கள் இருந்து பிரயோஜனமில்லை. ஏனென்றால் இஷ்டப்படிக்கு அங்க அவயவங்களை உபயோகப்படுத்த முடியாதல்லவா? எனவே, மனிதன், மனிதனாக வாழவேண்டுமானால் அவனுக்கு உரிமைகள் அவசியம். இந்த உரிமைகளை அவனிடமிருந்து பிரிக்க முடியாது. உன்னுடைய நிறம் சிவப்பு; என்னுடைய நிறம் கறுப்பு. உன்னுடைய நிறத்தை உன்னிட மிருந்தோ, என்னுடைய நிறத்தை என்னிடமிருந்தோ பிரிக்க முடியுமா? முடியாது. அப்படியே உன்னுடைய நிறத்தை எனக்கோ, என்னுடைய நிறத்தை உனக்கோ மாற்றிக் கொள்ள முடியுமா? அதுவும் முடியாது. அதுபோலவே, மனிதனிடமிருந்து உரிமையைப் பிரிக்க முடியாது; அதை வேறொருவருக்கு மாற்றிவிடவும் முடியாது. மனிதனிடமிருந்து பிரிக்க முடியாதது எதுவோ, மற்றவருக்குப் பராதீனப் படுத்த முடியாதது எதுவோ அதுதான் உரிமை. இப்படிப் பிரிக்க முடியாத ஒன்றை, மற்றவருக்குப் பராதீனப் படுத்த முடியாத ஒன்றை, ஒருவன், தெரிந்தோ, தெரியாமலோ, பயத்தினாலோ, கட்டயாத்திற்காகவோ, வேறொருவரிடம் ஒப்படைத்து விடுகிறானென்று வைத்துக் கொள்ளுங்கள். அவனை எப்படி மனிதன் என்று அழைக்க முடியம்? அவன் மனிதனே இல்லாதபோது அவன் மனிதனாக எப்படி வாழ முடியும்? முந்தின அத்தியாயத்தில் சொல்லப்பெற்ற அறிஞன் ரூஸோ ஓரிடத்தில் கூறுகிறான்:- ஒரு மனிதன், தன்னுடைய சுதந்திரத்தைத் துறந்து விட்டா னென்று சொன்னால், அவன், தன்னுடைய மனிதத் தன்மையையும் துறந்து விட்டானென்பதுதான் அர்த்தம். அதுமட்டுமல்ல; மானிட சமூகத்தின் ஓர் அமிசத்தினன் என்ற முறையில் அவனுக்கு ஏற்பட்டிருக்கிற உரிமைகளையும் கடமைகளையுங்கூடத் துறந்து விட்டான் என்று கொள்ள வேண்டும். அவனிடத்தில் எந்த விதமான நற்குணங்களையும் கொண்டு புகுத்தி அவனுடைய மனிதத் தன்மையை நிரப்ப முடியாது. சுருக்கமாகச் சொல்லப் போனால் அவன் மனிதனேயல்ல. உரிமை, நல்லதொன்றையே சுபாவமாகவுடையது; நல்ல தொன்றையே நாட்டமாகவுடையது. மனிதன் நல்லவனாக இருக்க வேண்டும். நல்லதைச் செய்ய வேண்டும். பிறரையும் நல்வழிப் படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்த உரிமை அவனோடு பிறந்து அவனோடு வளர்கிறது. உரிமை, எப்பொழுதும் சுறுசுறுப்பாயிருக்கிற சுபாவமுடையது. இதற்குச் சும்மாயிருக்கத் தெரியாது. சும்மாயிருப்பது உரிமையல்ல. இதனுடைய சுறுசுறுப்பானது, மனிதனிடத்தில் நல்ல தன்மையை வளர்ப்பதோடல்லாமல், அவனிடத்தில் கெட்ட தன்மை வந்து புகா வண்ணமும் தடுக்கிறது. எனவே இந்த உரிமையை ஒரு சக்தியென்றும், ஒரு சாதனமென்றும் சொல்லலாம். இந்தச் சக்தியோ சாதனமோ இல்லாத மனிதன் அழுகிப்போன பழம் மாதிரி. இப்படிச் சக்தியாகவும் சாதனமாகவும் இருந்தபோதிலும் இந்த உரிமைக்கு எல்லையுண்டு. எல்லை மீறிச் செல்வது உரிமையல்ல. உரிமையானது, தனித்து இருப்பதன்று; கடமையோடு ஒன்று பட்டிருப்பது. உரிமை வேறு, கடமை வேறு என்று ஆராய்ச்சிக்காகப் பிரித்துப் பார்க்கலாமே தவிர அனுபவத்தில் பிரித்துப் பார்க்க முடியாது. உண்மையில் இரண்டும் ஒன்றுதான். ஒன்றையே, ஒரு பக்கம் பார்த்தால் உரிமையாகவும், மற்றொரு பக்கம் பார்த்தால் கடமையாகவும் தெரிகிறது. பள்ளிக்கூடங்களில் பிள்ளைகள் உபயோகிக்கிற கரும்பலகையை எடுத்துக் கொள்வோம். அதில் ஒரு பக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு மற்றொரு பக்கத்தை விட்டுவிட முடியுமா? இதைப்போலத் தான் உரிமையும் கடமையும். இது சம்பந்தமாக மகாத்மா காந்தியின் வாசகங்கள் வருமாறு:- கடமைகளைச் செய்வதிலிருந்து தான் உரிமைகள் புறப்படுகின்றன. நாம் செய்கிற ஒவ்வொரு கடமையும் ஒவ்வொர் உ;ரிமையை நமக்கு நல்குகிறது. அப்படியே நாம் அனுபவிக்கிற ஒவ்வொர் உரிமையோடுங்கூ ஒவ்வொரு கடமை சேர்ந்திருக்கிறது. மனிதன், சில உரிமைகளோடு பிறக்கிறானென்பது வாதவம். ஆனால் அந்த உரிமைகள், அவன் தனியாக இருக்கிறபோது பிரயோஜன முடையனவாயிருப்பதில்லை; நான்கு பேரோடு1 சேர்ந்து வாழத் தலைப்படுகிற போதுதான் பிரயோஜனமுடையனவாயிருக்கின்றன. இப்படி நான்கு பேர் சேர்ந்து வாழத் தொடங்குவதுதான் சமுதாயத்தின் ஆரம்பம். ஆகவே, மனித சமுதாயம் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதே உரிமையின் வாழ்வும் தொடங்கிவிட்டதென்று சொல்ல வேண்டும். இங்ஙனம் மனித சமுதாயத்தோடு வாழ்வு தொடங்கிய உரிமை யானது. மனித சமுதாயத்திற்குட்பட்டே நடமாடுகின்றது. அதாவது மனிதன், சமுதாயத்தில் ஒருவனாக இருக்கிறபோது தான் அவனுக்கு உரிமையுண்டு; சமுதாயத்திலிருந்து விலகி விட்டால் அவனுக்கு உரிமை கிடையாது. ஏனென்றால், சமுதாயத்திலிருக்கிற வரையில்தான் அவன் - மனிதன்- கடமையை உணர்கிறான். கடமையுள்ள இடத்தில்தானே உரிமை இருக்கும்? கடமை உணரப்படுகிற இடத்தில்தானே உரிமை செல்லுபடியாகும்? நான்கு பேரென்றால், கணக்காக நான்கு பேர் என்று அர்த்த மல்ல, ஒரு சிலர் என்று சொல்வதற்குப் பதிலாக இப்படிச் சொல்வது ஒரு சம்பிரதாயயம். மனிதன் யார்? பகுத்தறிவு படைத்தவன், இந்தப் பகுத்தறிவு படைத்திருப்பதன் காரணமாகவே அவன் சமுதாயத்தில் சேர்ந்து வாழ முற்படுகிறான். இப்படி முற்படுகிறபோது, சமுதாய நலனை நாட வேண்டியவனாயிருக்கிறான். சமுதாய நலனை நாடினால்தான் அவன் நலனடைய முடியும். சமுதாய நலனை நாடும் பொருட்டுச் சில கடமைகளைச் செய்கிறான். அதே சமயத்தில் தனது நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுச் சில உரிமைகளை அனு பவிக்கிறான். கடமையென்பது என்ன? கொடுப்பது, அதாவது சமுதாயத் தின் க்ஷேமத்திற்காகத் தன்னுடைய சக்தியையோ, உழைப்பையோ, அறிவையோ, இப்படித் தன்னாலியன்ற ஏதேனுமொன்றைக் கொடுப்பது. உரிமை யென்பது என்ன? கொள்வது. அதாவது, தன்னடைய க்ஷேமத் திற்காக, சமுதாயத்தினிடமிருந்து சில அனுகூலங்களை அல்லது சில பாதுகாப்புகளைப் பெற்றுக் கொள்வது. எந்த ஒரு விவகாரத்திலும் எப்படிக் கொள்வதென்பதும் கொடுப்பதென்பதும் சேர்ந்தாற் போலவே இருக்கின்றனவோ அதுபோல, ஒரு சமுதாயத்திலும், கொள்வதாகிய உரிமையும், கொடுப்பதாகிய கடமையும் சேர்ந்தே இருக்கின்றன. இந்த இரண்டும் சேர்ந்திராவிட்டால் அந்தச் சமுதாயம் சரியான சமுதாய மில்லை. அதாவது கடமையைச் செய்யாமலும் உரிமையை அனுபவி யாமலும் இருக்கிற மனிதர்கள், சமுதாயமாகச் சேர்ந்து வாழ முடியாது; அவர்களைச் சமுதாயத்தினர் என்று சொல்லவும் முடியாது. ஆகவே, மனிதன், சமுதாயத்திற்குட்பட்டிருக்கிற வரையில்தான், சமுதாயத் திற்குட்பட்டிருக்கிற காரணத்தினால்தான், உரிமையுடையவனாக இருக்கிறான். சமுதாயத்தை மீறின உரிமை அவனுக்குக் கிடையாது. கடமை உணரப்படுகிற இடத்தில்தான் உரிமை செல்லு படியாகும் என்று மேலே சொன்னோமல்லவா, இதனால் கடமை உணரப்படாத இடத்தில் உரிமை செல்லுபடியாகாது என்பது தெளிவா கிறது. உதாரணமாக, ஒரு காட்டுக்குள் நான் போகிறேன். காட்டுக்குள் போக எனக்கு உரிமையுண்டு. நிரம்ப சரி. ஆனால் அந்தக் காட்டுக்குள் வசிக்கும் கொடிய மிருகங்கள், என்னைக் கொல்லாதிருக்கக் கடமைப்பட்டிருக் கின்றனவா? அவைகளுக்குத் தங்கள் கடமை இன்னதென்று தெரியுமா? இப்படித் தங்கள் கடமையை உணராத விலங்குகள் மத்தியில் சென்று அவை என்னை வந்து தாக்குகின்றனவே, காட்டுக்குள் செல்லும் என் உரிமைக்குப் பழுது ஏற்பட்டு விட்டதே என்று நான் கூக்குரலிடு வேனாகில், என் கூக்குரலுக்கு யாரேனும் செவி சாய்ப்பார்களா? அதற்கு ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? என்னுடைய அறியாமைக்காக எல்லோரும் இரங்குவார்கள்; ஏளனமும் செய்வார்கள். எனவே, பகுத்தறிவு படைத்திருக்கிற, பகுத்தறிவு படைத்திருக்கிற காரணத்தினால் கடமையை உணர்ந்திருக்கிற மனிதர்கள் மத்தியில்தான் மனிதன், உரிமை கோர முடியும்; உரிமையை நிலைநாட்ட முடியும். எந்த ஓர் உரிமையும் சமுதாய நன்மையையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். சுய நன்மையை நோக்கமாகக் கொண் டிருப்பது உரிமையாகாது. என்னுடைய தேவையை மட்டும் பூர்த்தி செய்து கொள்ள நான் ஒன்றை அடைய விரும்புகிறேனென்று சொன்னால் அஃது உரிமையாகாது. அரசாங்கத்தினிடமிருந்து குடிநீர் வசதி பெற எனக்கு உரிமையுண்டு. வாதவம். ஆனால் அந்த வசதியை எனக்கு மட்டும் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அந்த உரிமையை நான் கோருவேனாயின், அதற்கு உரிமையென்ற பெயர் பொருந்தாது. என்னுடைய ஆசை அல்லது என்னுடைய கோரிக்கையென்று தான் அதனைச் சொல்ல வேண்டும். உரிமை வேண்டுமென்று ஆசைப்படுவது இயற்கை. அப்படி ஆசைப் படவும் வேண்டும். ஆனால் அந்த ஆசை சுயநல ஆசையா யிருக்கக் கூடாது; பொதுநல ஆசையா யிருக்க வேண்டும். இங்ஙனம் பொதுநல எண்ணத்திலிருந்து, பொறுப்பு உணர்ச்சியிலிருந்து பிறப்பதுதான் உரிமை. அப்படியே எல்லோருக்கும் உபயோகப்படக்கூடியதாகவும் எல்லோருக்கும் அனுகூலம் தரத்தக்கதாகவும் இருப்பதுதான் உரிமை. மற்றும், நான் கோரும் உரிமையானது, எனது சொந்த விருப்பத் தினின்று எழுந்ததாக மட்டும் இருந்தால் போதாது; சமுதாயத்தின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்க வேண்டும். சமுதாயத்தினால் நிராகரிக்கப் படுகிற எந்த ஓர் உரிமையும், அந்தச் சமுதாயத்திற்கு நன்மையை வாங்கித்தர முடியாதல்லவா? நான் ஓர் உரிமையைக் கோருவதன் மூலம் சமுதாயத்திற்குச் சேவை செய்தவனாகின்றேன். சேவையென்ற கண்கொண்டுதான் உரிமையைப் பார்க்க வேண்டுமே தவிர வேறெந்தக் கண் கொண்டும் பார்க்கக்கூடாது. அப்படிப் பார்க்கப்படுவது உரிமையாகாது. உரிமையானது ஜீவ சக்தியுடையது; சதா சலித்துக் கொண்டிருப்பது. இதனால் அது வாழ்வையே நாடுகின்றது; வளர்ச்சியடைந்து கொண்டே போகிறது. ஆக்கத்திற்குத்தான் உரிமையே தவிர தேக்கத்திற்கு அல்ல. அப்படியே வாழத்தான் உரிமையே தவிர சாவதற்கல்ல. இங்கே வாசகர்கள் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிரதியொரு மனிதனுக்கும் அவனவன் உயிர்மீது உரிமையுண்டு. இதை யாரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் எந்த அளவுக்கு உயிர்மீது உரிமையுண்டு? அதனை வைத்துக் கொண் டிருக்கிற அளவுக்கு. அதாவது, உயிரை வைத்துக் கொண்டிருக்க, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எனக்கு உரிமையில்லை. அப்படிப் போக்கிக் கொள்வேனாயின் அஃது உரிமை மீறின செயல்; தண்டனைக்குரிய குற்றம். என்னுடைய உயிரைப் போக்கிக் கொள்ளவே எனக்கு உரிமை யில்லாதிருக்கிறபோழ்து, மற்றவர்களுடைய உயிரைப்போக்க எனக்கு உரிமையேது? தற்கொலை செய்து கொள்வதே குற்றமாகிறபோது, மற்றவர்களைக் கொலை செய்வது, அதைக்காட்டிலும் பெரிய குற்ற மல்லவா? இதற்கு என்ன தண்டனை? கொலை செய்தவனுடைய உயிரைப் போக்கி விடுவதுதான். ஒருவனைக் கொலை செய்து விட்டதன் மூலம் அவனுடைய உயிர்வாழும் உரிமையை எப்பொழுது ஒருவன் பறிமுதல் செய்து விட்டானோ அப்பொழுதே அவன், தன் உயிர் வாழும் உரிமையையும் பறிகொடுத்து விட்டான். சமுதாயத்தில் ஓர் அங்கத்தின னாயிருந்து உயிர்வாழ்ந்து கொண்டிருக்க அவனுக்கு உரிமை கிடையாது. இதனால்தான், கொலை செய்தவர்களை நியாயமான விசாரணைக்குட் படுத்தி, கொலைக்குற்றம் ருஜுவான பிறகு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. உரிமைக்கும் உயிருக்குமுள்ள தொடர்பை வேறொரு கோணத்தி லிருந்தும் பார்க்கலாம். மனிதனாகப் பிறந்த பிரதியொருவனும் வாழக் கடமைப் பட்டிருக்கிறான். வாழ்வது ஒரு கடமை. இந்தக் கடமையைச் செய்யவே, அவனுக்கு உயிரை வைத்துக் கொண்டிருக்கிற உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த உரிமையை எப்பொழுது அவன் காப்பாற்றிக் கொள்ள விரும்பவில்லையோ அப்பொழுதே அவன் வாழுங் கடமையைச் செய்ய விரும்பவில்லையென்று ஏற்படுகிறது. வாழ விரும்பாதவனுக்கு வாழ யோக்கியதை ஏது? தகுதி யில்லாதவனுக்கு எப்படி உத்தியோகம் கொடுக்கப்படுவதில்லையே அப்படியே வாழத் தகுதியில்லாத வனுக்கு வாழ அனுமதி அளிக்கப்படுவதில்லை. மரண தண்டனை விதிக்கப்படு வதற்குக் காரணம் இதுதான். உரிமைகள், ஏற்கனவே சொன்னபடி வளருந் தன்மையன. புதிய புதிய உரிமைகள் ஏற்பட்டு நிலை பெறுதலுண்டு. குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு மட்டும் காட்டப்பட்டு வந்த சலுகைகள், நாளா வட்டத்தில் நிரந்தர உரிமைகளாதலும் கூடும். அப்படியே சில பழக்க வழக்கங்களும் காலக்கிரமத்தில் உரிமைகளாகி விடுகின்றன. காலதேச வர்த்தமானங்களை யொட்டி உரிமைகள் சுருங்குதலும் விரிதலும் இயல்பு. இந்த உரிமைகள் சுருங்கலாம்; விரியலாம். ஆனால் உரிமைகளே இல்லாமல் ஒரு மனிதனோ அல்லது சமுதாயமோ வாழ முடியாது. அப்படி வாழ்ந்தால் அது வாழ்வாகாது. 3. பிரஜைகளின் உரிமைகள் ஜன ஆட்சியின் கீழ் வாழும் மக்களுக்கு இரண்டு விதமான உரிமைகள் உண்டு. ஒன்று, சமுதாய அங்கத்தினர் என்ற முறையில் அனுபவிக்கிற உரிமைகள். மற்றொன்று, அரசியல் அங்கத்தினர் என்ற முறையில் அனுபவிக்கிற உரிமைகள். முன்னதை ஜன உரிமைகள் அல்லது சிவில் உரிமைகள் என்று அழைப்பர். பின்னதை அரசியல் உரிமைகள் என்று அழைப்பர். இரண்டையும் சேர்த்துப் பொதுவாக பிரஜா உரிமைகள் என்று அழைப்பதுமுண்டு. சிவில் உரிமைகள் என்பன பிராணவாயு மாதிரி. இவை யிருந்தால் தான், மனிதன், தன்னிடம் இயற்கையாயமைந்துள்ள சக்திகளை வெளிப்படுத்த முடியும்; எல்லா வகையிலும் மேலான வாழ்க்கையை நடத்த முடியும்; சமுதாயத்தின் உபயோகமுள்ள அங்கத்தினனாயிருக்க முடியும். சுருக்கமாக, மனிதனுடைய உயிர் வாழ்க்கைக்கும் நல் வாழ்க்கைக்கும் இந்த உரிமைகள் இன்றியமையாதவை. இதனால்தான் இவை, அடிப்படை உரிமைகள் அல்லது ஜீவாதார உரிமைகள் என்று அழைக்கப்பெறுகின்றன. இந்த உரிமைகள் இருப்பதனால், மனிதன், தன் இஷ்டப்படிக்குக் காரியங்களைச் செய்யலாமென்பது அர்த்தமில்லை. மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டும். அந்த வரம்புக்குட்பட்டு, இஷ்டப்படி காரியங்களைச் செய்ய அனுமதி யளிப்பனவே இந்த உரிமைகள், உரிமைக்கு எல்லையுண்டு என்று முந்தின அத்தியாயத்தில் சொன்னது இந்த அர்த்தத்தில்தான். உரிமையென்று சொன்னால், கட்டுதிட்டமில்லாதது என்று அர்த்தமில்லை. கெடுதலை உண்டு பண்ணாதிருக்க வேண்டுமென்ற கட்டுப்பாட்டுக்குட்பட்டதுதான் உரிமை. இதைப் போகப் போக விதரித்துக் கொண்டு போவோம். என் விஷயத்தில் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டு மென்று நான் விரும்புகிறேனோ அப்படியே மற்றவர்கள் விஷயத்திலும் நான் நடந்து கொள்ள வேண்டும். இதே பிரகாரம், என்னுடைய உரிமைகளில் பிறர் தலையிடக்கூடாதென்று நான் எதிர்பார்ப்பதைப்போல் பிறர் உரிமையிலும் நான் தலையிடக்கூடாது. சுருக்கமாக, என்னைப் போல் மற்றவர்களையும் நான் கருத வேண்டும். இப்படிக் கருதுகின்ற அளவுக்குட்பட்டு என் இஷ்டப்படி காரியங்களைச் செய்ய எனக்கு உரிமையுண்டு. இதுதான் உரிமையின் சாரம். ஒருவனுடைய உரிமையில் மற்றொருவர் தலையிடா வண்ணம் பாதுகாப்பதற்கும், அவரவரும் அவரவருடைய உரிமைகளை அனுபவிக்கு மாறு செய்வதற்கும் ஒரு தாபனம் அவசியம்; இந்த தாபனத்திற்குச் சில அதிகாரங்களும் தேவை. தாபனந்தான் அரசாங்கம்; அதிகாரங்கள் தான் சட்டதிட்டங்கள். பிறர் தலையீடின்றி அவரவரும் அவரவருடைய உரிமைகளை அனுபவிக்கலாமென்று ஒவ்வோர் அரசாங்கமும் தன் பிரஜைகளுக்கு உறுதியளிக்கிறது; உறுதியளிக்கக் கடமைப்பட்டிருக்கிறது. இதை முன்னிட்டுதான், ஒவ்வொரு நாட்டு அரசியல் திட்டத்திலும், ஜீவாதார உரிமைகள் முக்கியமான இடம் பெற்றிருக்கின்றன. இந்த ஜீவாதார உரிமைகள் என்னென்ன வென்பதை இனி வரிசைப்படுத்திக் காட்டுவோம். 1. நபர் உரிமை : அதாவது மனிதனாக நடமாடும் உரிமை. இந்த உரிமை, மனிதனை, தூலமாகப் பார்க்கிறது; அவனடைய தூல வடிவத்திற்குப் பாதுகாப்பாய் நிற்கிறது. எப்படி? நான் வீதி வழியே போய்க் கொண்டிருக்கிறேன். என்னை வந்து தாக்கவோ, என் தேகத்தைத் தங்களிஷ்டப்படிக்கு உபயோகப்படுத்தவோ, என் இஷ்டத்திற்கு நான் போய்க் கொண்டிருப்பதைத் தடுக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. மற்றவர்களுடைய போக்குவரத்தில் நான் தலையிடாத வரையில், அல்லது என்னுடைய போக்குவரத்தினால் சமுதாயத்தின் ஒழுங்குக்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படாத வரையில், என் விருப்பப்படி போகவோ வரவோ எனக்கு உரிமையுண்டு. இந்த உரிமையை நான் அனுபவிக்கிற விஷயத்தில் சமுதாயத்தின் மற்ற அங்கத்தினர்களிடமிருந்தும், அரசாங்கத்தினிடமிருந்தும் பூரணப் பாதுகாப்பை எதிர்பார்க்க எனக்கு உரிமையுண்டு. இங்ஙனமே அரசாங்க அதிகாரியாயிருந்தாலும், அவர், அரசாங்கத்தின் உத்தரவில்லாமலோ அல்லது சட்ட ரீதியான காரணங் காட்டமலோ என்னைக் கைதியாக்கிக் கொண்டு போக உரிமை கிடையாது. அப்படி அகாரணமாகக் கைதியாக்கப்படுவேனாயின், அதற்குச் சட்டத்தின் மூலமாகப் பரிகாரம் பெற எனக்கு உரிமையுண்டு. பலாத்காரத்தை உபயோகித்தோ அல்லது பலாத்காரத்தைக் குறிக்கும் சமிக்ஞைகள் செய்தோ என்னை அடக்கவோ, தங்கள் வசப் படுத்தவோ யாருக்கும் உரிமை கிடையாது. பலாத்காரஞ் செய்யப் படாமலிருக்க எனக்கு உரிமையுண்டு. அப்படி பலாத்காரஞ் செய்யப் பட்டால், அந்தப் பலாத்காரத்தினின்று காப்பாற்றிக் கொள்ள எனக்கு உரிமையுண்டு. இதற்குத் தற்காப்பு உரிமையென்று பெயர். தேகாரோக்கியத்திற்காகவோ, மன நிம்மதி பெறுவதற் காகவோ, என் தாய் நாட்டின் எல்லைக்குள், என் இஷ்டப்பட்ட இடத்திற்குச் சென்று வசிக்க எனக்கு உரிமையுண்டு. அதை யாரும் தடை செய்ய முடியாது. நபர் உரிமை என்ற தலைப்பின் கீழ்ச் சொல்லப்பட்ட இந்த உரிமைகள் யாவும், மனிதனுடைய தனித்தன்மை காப்பாற்றப் படுவதற்குத் துணையாயிருக்கின்றன. 2. எண்ண உரிமை : பகுத்தறிவு படைத்த மனிதன், எண்ணா மலோ, சிந்தனை செய்யாமலோ இருக்க முடியாது. என் அறிவுக் கேற்ற வகையில், என் மனப் பக்குவத்திற்குத் தகுந்தபடி எண்ணவோ, சிந்திக்கவோ எனக்குப் பூரண உரிமையுண்டு. ஆனால் நீங்கள் கேட்கலாம். உங்கள் வீட்டுக்குள்ளேயே நீங்கள் இருந்து கொண்டு உங்கள் மனம் போனபடி எண்ணினாலோ சிந்தனைசெய்தாலோ, அதனால் யாருக்குச் சாதகமோ, பாதகமோ உண்டாகப் போகிறது? உங்கள் மனத்திற்குள்ளேயே நிகழ்வதை யார் பார்க்க முடியும்? யார் தடைசெய்ய முடியும்? ïj‰F cÇikba‹w bga® v¥go¥ bghUªJ«? என்று. எண்ண உரிமையென்பது எண்ண அளவோடு நிற்பதில்லை. எண்ணியதை, ஏதோ ஒரு வகையில் சொல்ல வேண்டும்; சொன்னதைச் செய்கையில் கொண்டு வர வேண்டும். அப்பொழுதுதான் அந்த எண்ணத்திற்குச் சக்தி ஏற்படுகிறது. இந்தச் சக்தி, பிரதியொரு மனிதனுக்கும் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. இதனை யாரும் பறிக்க முடியாது. மனிதனிடமிருந்தும் பிரிக்கவும் முடியாது. எண்ண உரிமையின் தாத்பரியம் இதுதான். 3. பேச்சுரிமை : எண்ண உரிமையின் தொடர்ச்சிதான் இந்தப் பேச்சுரிமை. ஏன், அந்த வெளித்தோற்றம். அதன் ஒலி வடிவம் என்று கூறலாம். எந்த ஒரு பிரச்னையைப் பற்றியும் எந்த விதமான அபிப்பிராயங் கொள்ளவும், அந்த அபிப்பிராயத்தை வாய்ப் பேச்சால் வெளியிடவும், அந்த அபிப்பிராயத்தைப் பற்றி மற்றவர்களோடு தர்க்கஞ் செய்யவும், அதனை மற்றவர்களுக்குப் போதிக்கவும் பிரதியொரு மனிதனுக்கும் உரிமை யுண்டு. இந்த எண்ண உரிமை, பேச்சுரிமை இரண்டும் மற்றெல்லா உரிமை களுக்கும் அதிவாரம் போன்றவை. ஆதி காலத்திலிருந்து, இந்த உரிமை களுக்காகத் தங்கள் உயிரையும் பறி கொடுத்திருக்கிறார்கள் எத்தனையோ மகான்கள்? ஏனென்றால், உயிரைக் காட்டிலும் இந்த உரிமைகள் முக்கியமானவையென்று கருதப்பட்டு வந்திருக்கிறது. 4. எழுத்துரிமை : எண்ண உரிமையையும் பேச்சுரிமையையும் தொடர்ந்ததுதான் இந்த எழுத்துரிமை. என்னுடைய எண்ணங் களை, என்னுடைய கருத்துக்களை எழுத்திலே கொண்டுவர எனக்குப் பூரண உரிமையுண்டு. அதாவது, பத்திரிகைகளில் எழுதுதல், பிரசுரங்கள் வெளியிடுதல் ஆகிய உரிமைகள் பிரதியொரு மனிதனுக்கும் உண்டு. 5. சங்கமாகச் சேர்ந்து கொள்ளும் உரிமையும் கூட்டமாகக் கூடும் உரிமையும் : பொதுஜன அமைதிக்கு விரோதமில்லாமல், எந்த ஒரு சங்கத்தையும் அல்லது எந்த ஒரு தாபனத்தையும் ஆரம்பிக்கவோ, நடத்தவோ, ஏற்கனவேயுள்ள ஒரு சங்கத்தில், அங்கத்தினனாகச் சேர்ந்து உழைக்கவோ எனக்கு உரிமையுண்டு. அதே பிரகாரம், நான்கு பேரைச் சேர்த்து வைத்துக் கொண்டு ஒரு கூட்டம் நடத்தவோ, நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளவோ எனக்கு உரிமையுண்டு. 6. சொத்துடைமை உரிமை : பிரதியொரு மனிதனும், தனது அன்றாட வாழ்க்கையை ஒழுங்காகவும், கண்ணியமாகவும், நிம்மதியாகவும், பிறருக்கு பளுவாயில்லாமலும் நடத்திவரக் கடமைப்பட்டிருக் கிறான். இந்தக் கடமையைச் செய்துவர ஓரளவு சொத்துக்கள் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்தச் சொத்துக்கள், நிலபுலங்களாகவோ, வீடு வாசல்களாகவோ, ஆடுமாடுகளாகவோ, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இவை எப்படியிருந்த போதிலும், ஓரளவுக்குட்பட்ட சொத்துக்களுடையவனாயிருக்க, பிரதியொருவனுக்கும் உரிமையுண்டு. சொத்துக்களுக்குடையவனா யிருப்பதோடு மட்டுமல்ல. இவை, பறிமுதல் போகாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உரிமையுண்டு. இது மேலே சொன்ன தற்காப்பு உரிமையின் பாற்படும். 7. நம்பிக்கை யுரிமை : எனக்கு இஷ்டமான மதத்தின் மீது நம்பிக்கை கொள்ளவோ, அந்த மதத்திலே ஒருவனாயிருக்கவோ எனக்கு உரிமையுண்டு. இங்ஙனமே எனக்கு இஷ்டமான தெய்வங்களை, எனக்கு இஷ்டப்பட்ட முறையில் வணங்க எனக்கு உரிமையுண்டு. 8. உழைப்பு உரிமை : எனது அறிவு வளர்ச்சி, மனப்பாங்கு இவைகளுக்கேற்றாற்போலவும், எனது தேகசக்தி, தொழில் திறமை இவைகளுக்குத் தகுந்தாற்போலவும் உழைக்க எனக்கு உரிமையுண்டு. இந்த உழைப்புக்குத் தகுந்தபடி தினசரி கூலியாகவோ, மாதவாரிச் சம்பளமாகவோ ஏதோ ஒரு விதத்தில் ஊதியம் பெற எனக்கு உரிமையுண்டு. 9. நியாய உரிமை : நியாய தலங்களில் சட்ட முறைப்படி விசாரணை கோரவோ, நியாயம் பெறவோ எனக்கு உரிமையுண்டு. இவை யாவும் முக்கியமான ஜீவாதார உரிமைகள். ஜன ஆட்சிக்குட் பட்ட ஒவ்வொரு நாட்டு அரசியல் திட்டத்திலும் இவை இடம்பெற வேண்டியது அவசியமாகும்; அப்படியே இடமும் பெற்றிருக்கின்றன. இவை தவிர, வேறு சில உரிமைகளும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக, அதாவது ஜனங்களின் தகுதி, அரசாங்கத்தின் சக்தி, ஜனங்களுக்கும் அரசாங்கத்துக்குமுள்ள உறவு ஆகிய இவைகளை அனுசரித்து, இந்த ஜீவாதார உரிமைகளின் வரிசையில் சேர்க்கப்பட்டிருக் கின்றன. உதாரணமாக, சில நாடுகளில், இலவசக் கல்வி பெற ஜனங்களுக்கு உரிமையுண்டு. இன்னுஞ் சில நாடுகளில், கிழவர்கள், நோயாளிகள், வேலை செய்யச் சக்தியற்றுப் போனவர்கள் ஆகிய இப்படிப்பட்டவர்கள், தங்கள் வாழ்க்கைச் செலவுக்காக ஒரு தொகையை அரசாங்கத்திடமிருந்து பெற உரிமையுடையவர்களாயிருக்கிறார்கள். வேறு சில நாடுகளில் இலவசமாக வைத்திய உதவி பெற ஜனங்களுக்கு உரிமை அளிக்கப் பட்டிருக்கிறது. இவை போன்ற இன்னும் பல உரிமைகளும், ஏற்கனவே சொன்னபடி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக ஜனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர அவ்வப் பொழுது புதிய புதிய உரிமைகளையும் சட்ட புத்தகத்தில் சேர்ப்பித்து அரசாங்கத்தை அமுலுக்கு கொண்டு வரச் செய்ய, ஜன ஆட்சிக் குட்பட்ட பிரதியொரு நாட்டுப் பிரஜைகளுக்கும் உரிமையுண்டு. இனி, அரசியல் உரிமைகளைப் பற்றிச் சிறிது கூறுவோம். ஆளுகையில் பங்கு கொள்கின்ற உரிமைகளைத் தான் பொதுவாக அரசியல் உரிமைகள் என்று அழைப்பர். பங்கு கொள்வதென்பது ஒரு விதமாகவல்ல; பல விதங்களாக. இதனால்தான் அரசியல் உரிமைகள் என்று பன்மையாக அழைக்கப்படுகின்றன. இந்த அரசியல் உரிமைகள் என்னென்ன? 1. பிரதிநிதி சபையென்று அழைக்கப்படுகிற சட்ட சபைக்குப் பிரதிநிதிகளைத் தெரிந்தெடுக்கிற உரிமை; அதாவது ஓட்டுரிமை. 2. சட்ட சபையில் பிரதிநிதியாயமர்ந்து சட்டங்களியற்று வதில் பங்கு கொள்ளும் உரிமை. 3. அரசாங்க நிருவாகத்தில் பங்கு கொள்ளும் உரிமை. அதாவது அரசாங்க உத்தியோகதராயிருந்து அலுவல் பார்க்கும் உரிமை. 4. அரசாங்கத்தின் குறைநிறைகளைப் பகிரங்கமாகப் பரிசீலனை செய்யும் உரிமை; அதாவது, ஜனங்களுக்கு நன்மை தருவது எது, தீமை பயப்பது எது என்பதை, சொந்த விருப்பு வெறுப்பு இல்லாம லும், சொந்த நலனைக் கருதாமலும், வாய்மொழி மூலமாகவோ எழுத்து மூலமாகவோ எடுத்துச் சொல்லி அரசாங்கத்திற்கு வழி காட்டும். அரசாங்கத்தைத் திருத்தும் உரிமை. 5. அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்குட்பட்டு நடக்கிற வரையில், அரசாங்கத்திற்கு விரோதமாக நடந்து கொள்ளாத வரையில், தேசத்திலேயே நிரந்தர வாசம் செய்ய, அதாவது தேசப் பிரஷ்டம் செய்யப்படாதிருக்க ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமையுண்டு. 6. தொழில் நிமித்தமாகவோ, வேறு காரணங்களுக்காவோ ஒரு பிரஜை. தனது நாட்டை விட்டு வெளி நாட்டில் சென்று வசிக்கும்படி நேரிட்டால், அப்பொழுது தனது அரசாங்கத்தின் பாதுகாப்பைப் பெற அந்தப் பிரஜைக்கு உரிமையுண்டு. அதாவது ஒருவன், எந்த நாட்டுப் பிரஜையோ அந்த நாட்டுப் பிரஜையாகவே வெளி நாட்டில் இருக்கிறபோதும் கருதப்பட்டு, அதற்குரிய பாதுகாப்பைப் பெற உரிமையுடையவன் என்பது அர்த்தம். ஏற்கனவே சொல்லியிருக்கிறபடி, ஓட்டுரிமையுடையவர் களெல்லோரும் இந்த அரசியல் உரிமைகளுடையவர்களே. இந்த உரிமைகளை அடைகிற விஷயத்திலும் அனுபவிக்கிற விஷயத் திலும் சம அந்ததும் சம சந்தர்ப்பமுமுடையவர்களே. எந்த விதமான பாகுபாடும் இது விஷயமாக இருத்தல் கூடாது. முந்திச் சொன்ன ஜீவாதார உரிமைகளும், பிந்திச் சொன்ன அரசியல் உரிமைகளும், ஒரு ராஜ்யத்தின் சட்டதிட்டங்களால் அங்கீகரிக்கப் பட்டிருப்பதாலும், அந்தச் சட்ட திட்டங்களினால் பாதுகாக்கப் பெறுவ தாலும், இவற்றைப் பொதுவாக சட்ட ரீதியான உரிமைகளென்று அழைப்பர். முந்திய உரிமைகள், ஆளுகைக்குட்பட்டவர்கள் என்ற ஹோதாவில் ஜனங்களால் அனுபவிக்கப்படும் உரிமைகள்; பிந்திய உரிமைகள், ஆளுகையை நடத்துகின்றவர்கள் என்ற ஹோதாவில் அதே ஜனங்கள் அதே சமயத்தில் அனுபவிக்கின்ற உரிமைகள். ஒரு பிரஜைக்கு ஒரே சமயத்தில் இரண்டு விதமான உரிமைகளுண்டு என்பதை இங்கு வாசகர்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறோம். இந்த இரண்டு வித உரிமைகளைத் தவிர, ஜனங்களுக்கு மற்றொரு விதமான உரிமையும் உண்டு. இது கடைசி பட்சமாகக் கையாளப்பட வேண்டிய உரிமை. இதனை எதிர்ப்பு உரிமையென்று சொல்லலாம். ஓர் அரசாங்கத்தினால் அதிகமான தீமைகள் ஏற்பட்டு, அந்தத் தீமைகள் சகிக்க முடியாத அளவை அடைந்து விடுமானால், வேறு முறைகளினால் அந்தத் தீமைகளுக்குப் பரிகாரங் காண முடியா விட்டால், அந்த அரசாங்கத்தை அப்புறப்படுத்திவிட்டு, அதற்குப் பதில் நன்மை பயக்கும் வேறோர் அரசாங்கத்தை தாபிக்க ஜனங்கள் முயற்சி செய்கிறார்கள். அரசாங்கத்தை மட்டுமென்ன, ஆட்சி முறை கெடுதலாயிருந்தால் அதனைக்கூட அகற்றிவிட்டு வேறோர்ஆட்சி முறையை அமைக்க முயற்சி செய்கிறார்கள். இந்த முயற்சிக்குத்தான் புரட்சியென்று பெயர். இப்படிப் புரட்சி செய்ய ஜனங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் புரட்சி செய்து, இருக்கப்பட்டதை அழித்துவிடுவதோடு திருப்தியடையக்கூடாது. அது புரட்சியுமாகாது. புரட்சியானது அழிவை நோக்கமாகக் கொண்டதல்ல; ஆக்கத்தையே நோக்கமாகக் கொண்டது. அழிக்கப்பட்டதற்குப் பதில் நல்லதாக ஒன்றை தாபிக்க வேண்டும். இது ஜனங்களுடைய கடமை. இந்தக் கடமையைச் செய்யும் சக்தி இல்லாதவர்கள், புரட்சியைப் பற்றி நினைக்கவே கூடாது. இந்தப் புரட்சி, பெரும்பாலும் ஆயுத பலத்தையே துணையாகக் கொண்டிருக்கிறது. இது பலாத்காரப் புரட்சி. உலக சரித்திரத்தின் நெடுகிலும் இத்தகைய பலாத்காரப் புரட்சிகள் நடைபெற்றிருப்பதையே பார்க்கிறோம். பலாத்காரப் புரட்சி யினால் உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் அதிகம் உண்டா கின்றன. ஜனங்களுக்கு நல்லெண்ணம் இல்லாமற் போய்விடுகிறது; அதற்குப் பதில் குரோத புத்தி வளர்கிறது. கடைசியில் புரட்சி செய்தவர்களே, மற்றொரு புரட்சியினால் அழிக்கப்பட்டு விடுகிறார்கள். இந்தப் பலாத்காரப் புரட்சிக்கு நேர்மாறானது மற்றொரு புரட்சி. இதற்குச் சாத்விகப் புரட்சியென்று பெயர். ஆயுத பலத்தை இது துணையாகக் கொள்வதில்லை; தன்னுடைய பலத்தையே, அதாவது ஆத்ம பலத்தையே துணையாகக் கொள்கிறது. இதற்கு, அதிகாரத்தைக் காட்டிலும் அன்பே பிரதானம்; சொல்லைக் காட்டிலும் செயலே முக்கியம்; தன்னுடைய நலத்தைக் காட்டிலும் மற்றவர்களுடைய நலத்தையே இது நாடுகிறது. அதற்காக, மற்றவர்களுடைய நலத்திற்காக, தான் எல்லாவித துன்பங்களையும் அனுபவிக்கிறது. இந்தத் துன்பங்களை, கொஞ்சம் கூட முகஞ் சிணுங்காமல் சிறிது கூட கோபதாபமில்லாமல், புன் சிரிப்புடன் அனுபவிக்கிற வயிரமுடைய நெஞ்சம் இதற்கு உண்டு. இது பார்வைக்கு அணுவளவாயிருந்தாலும் சக்தியிலே மகத்தானது. இத்தகைய சாத்விகப் புரட்சிகள், உலகத்தின் பல பாகங்களில் அவ்வப்பொழுது சிறு சிறு அளவில் நடைபெற்று வந்திருக்கின்றன. பெரிய அளவில் நடைபெற்றது இந்தியாவில்தான். இது, சத்தியாக்கிரகம் என்றும், ஒத்துழையாமை என்றும், சாத்விக எதிர்ப்பு என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதனை ஆரம்பித்து நடத்தியவர் காந்தியடிகள்; வெற்றியும் கண்டார். இப்பொழுது நாம் சுய ஆட்சியின் கீழ் சுய அந்ததுடையவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு இந்தச் சாத்விகப் புரட்சி ஒரு முக்கியமான காரணம். இங்ஙனம் புரட்சி செய்யும் உரிமை, ஜனங்களுடைய அடிப் படையான உரிமைகளுள் ஒன்றாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. முதல் அத்தியாயத்தின் கடைசியில் எடுத்துக் காட்டப்பெற்ற அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தினுடைய ஒரு பகுதி வாசகம் வருமாறு:- ....... அரசாங்கங்கள் (ஜனங்களுடைய) உரிமைகளை அழிக்க முற்படுமானால், மேற்படி அரசாங்கங்களை மாற்றவும், அழிக்கவும் ஜனங்களுக்கு உரிமையுண்டு. அப்படி மாற்றியோ அழித்தோ ஆன பிறகு, தங்களுக்குப் பாதுகாப்பையும் சந்தோஷத்தையும் அளிக்கக்கூடிய ஓர் அரசாங்கத்தை எற்படுத்த அவர்களுக்கு உரிமையுண்டு. 4. பிரஜைகளின் கடமைகள் பிரஜைகளின் கடமைகளைப் பற்றி நாம் அதிகம் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால், உரிமையின் மறுபுறந்தானே கடமை? உரிமைகளுக்குச் சொன்னதெல்லாம் கடமைக்கும் பொருந்தும். உரிமையை நியாயமான முறையில் கோருவதும், அனுபவிப்பதுமே கடமையல்லவா? தன்னுடைய நலன் வேறு, அரசாங்கத்தினுடைய நலன் வேறு என்று கருதக்கூடாது. ஒரு பிரஜையின் தலையாய கடமை இது. தன்னுடைய நலனுக்கும் அரசாங்கத்தினுடைய நலனுக்கும் முரண்பாடு ஏற்படு மானால், அரசாங்கத்தினுடைய நலனுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; அதனைத் தான் நாட வேண்டும். தன்னுடைய நலனை விட்டுக் கொடுப்பதே ஒரு கடமை. இங்ஙனமே ஒரு பிரஜை கொண்டாடும் ஓர் உரிமை, அரசாங்கமோ, சமுதாயத்தின் மற்ற அங்கத்தினர்களோ செய்ய வேண்டிய ஒரு கடமைக்கு இடையூறாயிருக்குமானால், அந்தப் பிரஜை, தன் உரிமையை வற்புறுத்தாதிருக்க வேண்டும்; ஏன், தன் உரிமையைப் புறக்கணித்துவிட்டு, மற்றவர்கள் கடமையைச் செய்வதற்குத் துணையாயிருக்க வேண்டும். ஓர் ஊரில் தொத்து நோய் பரவியிருக்கிறது. இதனால் வெளியிடங்களிலிருந்து அங்கு யாரும் செல்லக் கூடாதென்றும், இதே பிரகாரம், அந்த ஊரிலிருந்து வெளியிடங்களுக்கு யாரும் செல்லக்கூடாதென்றும் அரசாங்கம் ஓர் உத்தரவு பிறப்பிக்கிறது. இந்த உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடப்பது, உள்ளூர், வெளியூர் வாசிகளின் கடமை. என் தாய் நாட்டுக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்ல எனக்கு உரிமையுண்டு என்று சொல்லிக் கொண்டு, மேற்படி உத்தரவை மீறி நடப்பேனாயின், என் உரிமையை வற்புறுத்தின பெருமை எனக்கு உண்டாகாது; உரிமையை துஷ்பிரயோகம் செய்த குற்றந்தான் என்னைச் சாரும். தன்னுடைய பிரஜைகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதை முன்னிட்டே மேற்படி தடை யுத்தரவை அது பிறப்பிக்கிறது. நான் என் உரிமையை வற்புறுத்துவதன் மூலம், அரசாங்கத்தை, அதன் கடமையினின்று தடுத்தவனாகிறேன். ஆகவே, கடமைக்குத் தடை போட்ட குற்றமும் என்னைச் சாரும். நான்கு பேரைச் சேர்த்துக் கொண்டு ஒரு சங்கத்தை ஆரம்பித்து நடத்த எனக்கு உரிமையுண்டு. ஆனால் அந்தச் சங்கத்தை, அரசாங்கத் திற்கு விரோதமாக உபயோகப்படுத்தாதிருப்பது என் கடமை. அப்படி உபயோகப்படுத்துவேனாயின், எனது அரசாங்கத்திற்கே, எனது ஓட்டு மூலம் நிர்மாணமான அரசாங்கத்திற்கே நான் விரோதஞ் செய்த வனாவேன். இன்னும், பொதுஜனக் கூட்டமொன்றைக் கூட்ட எனக்கு உரிமையுண்டு. ஆனால் அந்தக் கூட்டம், பொதுஜன அமைதியைக் குலைக்கும் என்று அரசாங்கம் கருதி அதைத் தடுத்து விடுமானால் அந்தத் தடைக்கு உட்பட வேண்டியது எனது கடமை. ஆகவே, பொது நன்மைக்காக, தன்னுடைய உரிமையை வலியுறுத்தாதிருப்பதும், விட்டுக் கொடுப்பதும், மற்றவர்களுடைய கடமையைச் செய்வதற்குத் தடையாயில்லாமலிருப்பதும் பிரதியொரு பிரஜையினுடைய கடமையுமாகும். இதனை எதிர்மறைக் கடமை யென்று கூறலாம். அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது ஒரு பிரஜையின் முக்கியமான கடமை. கீழ்ப்படியாமல் அவரவரும் அவரவர் இஷ்டப்படி நடப்பாரானால் நாட்டில் கலகமும் குழப்பமுமே உண்டாகும். இதனால், நாடு சுய அந்ததை இழந்து அந்நியர் ஆட்சிக்குட்படுதல் கூடும். இது மிகவும் கேவலமன்றோ? நாட்டின் க்ஷேமத்திற்காக அரசாங்கம் யுத்தத்தில் இறங்கும்படி நேரிட்டால், அப்பொழுது அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டியது பிரஜையினுடைய கடமை. ராணுவத்தில் சேர்ந்து உழைக்கலாம்; வேறு விதங்களிலும் தன் சேவையை அரசாங்கத்திற்கு உதவலாம். நாட்டு நலனை முன்னிட்டு எல்லாவித தியாகங்களையும் செய்ய ஒவ்வொரு பிரஜையும் சித்தமாயிருக்க வேண்டும். உள்நாட்டில் அமைதி நிலவும் பொருட்டு அரசாங்கம் எடுத்துக் கொள்கிற சகல நடவடிக்கைகளிலும் ஒரு பிரஜை ஒத்துழைக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்தப் பிரஜையினுடைய அன்றாட வாழ்க்கை அமைதியாக நடைபெறும். தனது சொந்த வாழ்க்கையை ஒழுங்குள்ள வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள வேண்டியது ஒரு பிரஜையின் அவசியமான கடமை. ஒரு பிரஜை, எவ்வளவுக் கெவ்வளவு கல்வியறிவு நிரம்பியவ னாயிருக்கிறானோ, சீலமுள்ளவனாயிருக்கிறானோ, அன்றாட வாழ்க்கையை நிம்மதியாக நடத்துகின்றவனா யிருக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அந்தப் பிரஜையைக் கொண்ட ராஜ்யம் மேன்மையுடையதாயிருக்கிறது. ஒரு பிரஜை, தனது நாட்டின் கலை, இலக்கியம், பண்பாடு, பரம்பரை இவற்றினைப் போற்றிப் பாதுகாக்கின்றவனாகவும், இவற்றை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு போகிறவனாகவும் இருக்க வேண்டும். இன்னும் சமுதாயத்தின் கட்டுக்கோப்பு உடைந்து போகாமல் பாதுகாக்க வேண்டும். அதன் நிலையான அமைப்புக்குப் பாடுபட வேண்டும். இவையாவும் ஒரு பிரஜை. சமுதாயத்தில் ஓர் அங்கத்தினன் என்ற முறையில் செய்ய வேண்டிய கடமைகள். இவைபோல் ஆளுகையில் பங்கு கொள்கிறவன் என்ற முறையில் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் சில உண்டு. அரசியல் உரிமைகள் என்று சொல்வது போல் இவற்றை அரசியல் கடமைகள் என்று சொல்லலாம். முதலாவது ஓட்டுச் செய்யுங் கடமை. தேர்தல் நடை பெறுகிறது. பொறுப்புள்ள ஒரு பிரஜை ஏனோ தானே என்று இருக்கக் கூடாது. அபேட்சகர்களாக நிற்கின்றவர்கள் யார் யாரென்று நன்கு ஆய்ந்து பார்த்து, யாரால் அதிகமான நன்மையுண்டாகுமென்று தெரிகிறதோ அவருக்கு ஒட்டுச் செய்ய வேண்டும்; அதாவது அவரைப் பிரதிநிதியாகத் தெரித்தெடுக்க வேண்டும். சரியான பிரதிநிதிகளைத் தெரிந்தெடுப்பதென்பது சுலபமான காரியமன்று. இதற்கு, நாட்டின் அரசியல் அமைப்பு, சமுதாயத்தின் நிலைமை முதலியவைகளைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டிருக்க வேண்டும்; ஜனங்களோடு பழகி அவர்களுடைய குறை நிறைகளை உணர்ந்திருக்க வேண்டும்; அபேட்சகர்களின் தகுதிகளையும் அறிந்திருக்க வேண்டும். ஓட்டுப்போடுவதென்பது, பொறுப்புடன் செய்ய வேண்டிய ஒரு காரியம். இதில் நாம் சிறிது கவனக்குறைவுடன் நடந்து கொண்டால் நமக்கு நாமே தீங்கிழைத்துக் கொண்டவர்களாவோம். சரி; இப்படித் தவறாக இந்த ஓட்டுப் போடும் கடமையைச் செய்வதைவிட, செய்யாமலே இருந்து விட்டால், அதாவது ஓட்டை உபயோகிக்காமல் இருந்து விட்டால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். இது மிகவும் தவறு. ஒரு முறை தவறு செய்து விட்டால் மறுமுறை திருந்திக் கொள்ளலாம். செய்யாமலே இருந்து விட்டால், நமது வாழ்க்கையின் ஒரு துறையை, முக்கியமான அரசியல் துறையை, நாமே தூர்த்து விட்டவர்களாவோம். தன்னுடைய உறுப்புக்களிலே ஒன்றை, தானே ஊறுபடுத்திக் கொள்கிறவனை என்னென்று சொல்வது? ஓட்டுரிமையை உபயோகியாதவன் அரசியலில் சிரத்தை கொள்ளாதவன். அப்படிப்பட்டவனுக்கு, அரசியலினால் ஏற்படுகிற பயன்களை அனுபவிக்க என்ன உரிமையுண்டு? நாம், நமது கடமையைச் செய்யாமலிக்கிற பொழுது, மற்றவர்கள் மட்டும் அவர்கள் கடமையைச் செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆதலின், நம்முடைய நலத்திற்காக வேனும், நம்முடைய குடும்ப வாழ்க்கை முதலியன எவ்வித குறை பாடுகளும் இல்லாமல் நடைபெற வேண்டுவதற்காகவேனும் நமது ஓட்டுரிமையை உபயோகிக் வேண்டும். ஆனால் ஓர் அரசாங்கம், தனது பிரஜையினிடமிருந்து, இந்தக் குறைந்த பட்சக் கடமையை மட்டும் எதிர்பார்க்கவில்லை. குறைந்த பட்சக் கடமையாவது என்ன? தனது நலத்தை நாடுவதன் மூலம் நாட்டின் நலத்தை நாடுவது. ஆனால் நாட்டிற்காகவே நாட்டின் நலத்தை நாடவேண்டுமென்று தனது பிரஜைகளிட மிருந்து எதிர்பார்க்க ஓர் அரசாங்கத்திற்கு உரிமையுண்டு. நாட்டின் நலத்தை முன்னிட்டு, பொறுப்புள்ள ஒரு பதவியை வகிக்க வேண்டுமென்று ஓர் அரசாங்கம். தனது பிரஜை யொருவனுக்கு ஆணையிடுகிறது. அந்தப் பிரஜை மனங்கோணாமல் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனால் அந்தப் பிரஜைக்கு, இடமாற்றம், வருமானக் குறைவு முதலிய சில அசௌகரியங்கள் ஏற்படலாம்; அவனுடைய சொந்த நலன்கள் பாதிக்கப்படலாம். ஆயினும் அவன், பொதுநலத்தை முன்னிட்டு அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளக் கடமைப்பட்டவன். எந்த ஓர் அரசாங்கமும் பணமில்லாமல் நடைபெற முடியாது. இதற்காக அது ஜனங்களிடமிருந்து பலவிதமான வரிகளை வசூலிக் கிறது. இந்த வரிகளை ஒழுங்காகச் செலுத்திக் கொண்டுவர வேண்டியது ஒரு பிரஜையின் கடமை. வரிகளைக் குறைக்கவோ மாற்றவோ வேண்டுமென்று சொல்ல, கிளர்ச்சி செய்ய, பிரஜைக்கு உரிமையுண்டு. ஆனால் அந்தச் சொல்லினாலும் கிளர்ச்சியினாலும் பயன் ஏற்படுகிறவரை, அந்தப் பிரஜை, தனக்கு விதிக்கப்பட்ட வரிகளைச் செலுத்திக் கொண்டு வரவே வேண்டும். பொதுவாக அரசாங்கம், ஜனங்களுடைய நன்மையை முன்னிட்டும் நாட்டின் க்ஷேமத்திற்காகவும் அவ்வப்பொழுது பிறப்பிக்கிற உத்தரவு களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதும், அளிக்கிற கௌரவ பதவிகள் முதலிய வற்றை ஏற்றுத் திறம்பட நடத்துவதும் பிரதியொரு பிரஜையின் கடமையுமாகும். அரசியல் கட்சிகள் 1. எது கட்சி? எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும், அதைப் பற்றி குறைந்த பட்சம் இரண்டுவித அபிப்பிராயங்களாவது இருக்கின்றன. ஒரு வித அபிப்பிராயமுடையவர்கள் ஒரு பிரிவினராகவும், வேறொரு வித அபிப்பிராயமுடையவர்கள் வேறொரு பிரிவினராகவும் பிரிந்து கொள்கிறார்கள். நமது குடும்ப விவகாரங்களில் இதைச் சர்வ சாதாரண மாகப் பார்க்கிறோமில்லையா? இப்படி எத்தனை வித அபிப்பிராயங்கள் இருக்கின்றனவோ அத்தனை வித பிரிவுகள் ஏற்படுகின்றன. இந்த ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு கட்சியென்று பெயர். மற்ற விஷயங்களில் இருப்பது போலவே ஒரு நாட்டின் அரசியல் விஷயத்திலும் கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. இப்படி இருப்பது சகஜம். இதுபோலவே ஒருமித்த கருத்துடையவர்கள் ஒன்றுபடுதலும் சகஜம். இங்ஙனம் அரசியலை அடிப்படையாகக் கொண்டு அரசியல் காரியங்களைச் செய்வதற்காக ஒருமித்திருக்கிறவர்களடங்கிய ஒரு குழுவினையே அரசியல் கட்சி என்று அழைக்கிறோம். மற்ற அடிப்படைகள் மீது எழுகின்ற கட்சிகளுக்கும் அரசியல் அடிப்படைமீது எழுகின்ற கட்சிக்கும் வித்தியாசங்கள் பல இருக்கின்றன. ஆனால், எல்லாவற்றையும் பொதுவாக, கட்சிகள் என்ற பெயரிட்டே அழைக்கிறோம். இப்படி அழைப்பது ஒரு சம்பிரதாயமே. நியாயமாக, அரசியலை அடிப்படையாகக் கொண்டிருக்கிற கட்சியையே கட்சி என்று அழைக்கவேண்டும். ஏன்? கட்சி என்ற வார்த்தையானது, குறுகிய ஒன்றைக் குறிப்பது போலவே இருக்கிறது. ஓரளவுக்கு இது சரியே. ஆனால், ஒரு நாட்டின் எல்லா ஜனங்களுடைய பொதுவான நன்மையை நோக்கமாகக் கொண்டுள்ளது எதுவோ அதுதான் சரியான கட்சி. அதனையே கட்சி என்று சொல்ல வேண்டும். அவசியமானால் முழுக்கட்சி என்று சொல்லிக் கொள்வோம். முழுப் பிரஜை என்பதுபோல. அப்படிப்பட்ட முழுக்கட்சி, அரசியலை அடிப்படையாகக் கொண்ட கட்சியே. வேறு அடிப்படைகளின் மீதும் ஒரு நாட்டில் பிரிவினைகள் ஏற்படுவதுண்டு. இவையும் கட்சி என்ற பெயரால்தான் அழைக்கப் படுகின்றன. உதாரணமாக மதம், இனம், வகுப்பு இப்படி ஏதேனு மொன்றை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற கட்சிகளைக் கூறலாம். இவை, ஒரு சிறு வட்டத்திற்குள்ளேயே இயங்கக் கூடியவை; நாட்டு மக்களில், ஒரு பிரிவாருடைய நன்மையை மட்டும் நாடுகின்றவை. இவற்றிற்கு, நாட்டின் பொது நலனைக் காட்டிலும், ஒரு மதத்தினருடைய அல்லது ஓர் இனத்தினருடைய அல்லது ஒரு வகுப்பினருடைய, இப்படி ஏதேனும் ஒரு பிரிவினருடைய நலன்தான் பெரிது; முக்கியம். இவை, சில சமயங்களில், தங்களுடைய பிரிவு நலனுக்காக, நாட்டு நலனைக் கைவிடவும் செய்கின்றன. இவற்றால், சமுதாயத்தின் கட்டுக்கோப்பு தளர்ந்து விடுகிறது; வேற்றுமைகள் அதிகரிக்கின்றன. இப்படிப்பட்ட பிரிவுகளை, கட்சிகள் என்றழைத்தல் எங்ஙனம் பொருந்தும்? பிளவுகள், பிரிவினைகள், இப்படி ஏதேனும் ஒரு பெயர்தான் பொருந்தும். ஆனால் மேலே சென்னபடி, இவற்றைக் கட்சிகள் என்றழைப்பது ஒரு வழக்கமா யிருக்கிறது. அரசியல் காரணத்திற்காகக் கட்சிகள் ஏற்படுவது இயற்கை; மற்றக் காரணங்களுக்காக ஏற்படுவது செயற்கை. இதனாலேயே அரசியல் கட்சிகளை இயற்கைக் கட்சிகளென்றும் மற்றக் கட்சிகளைச் செயற்கைக் கட்சிகளென்றும் அறிஞர்கள் அழைக்கின்றனர். சில சமயங்களில், இந்தச் செயற்கைக் கட்சிகள், அரசியல் போர்வையைப் போர்த்திக் கொண்டு நடமாடுதலும் உண்டு. ஆனால், இவை நீடித்து வாழ மாட்டா. இவற்றால் நிரந்தரமான பலனும் உண்டாகாது. இவை, தற்காலிகமாகச் சில சலுகைகளை ஜனங்களுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டு, அதே சமயத்தில் அந்த ஜனங்களுடைய மனத்தில் பொறாமை, பகைமை முதலிய சில விஷ விதைகளையும் விதைத்து விட்டு, விரைவில் மறைந்து விடுகின்றன. தவிர, இந்த மாதிரியான கட்சிகள், ஓர் அமெரிக்க அறிஞன் கூறுகிறபடி, தங்களுக்கு எதிராயுள்ள மற்றக் கட்சிகள், தேர்தல் முதலியவற்றில் வெற்றிபெறுவதை விரும்புவதில்லை. ஏனென்றால், அவைகளின் வெற்றி, தங்களின் அழிவு என்று இவை அஞ்சகின்றன. இதனால், தாங்கள் அழிந்து போகிறவரை எதிர்க்கட்சிகளை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன. விளைவு என்ன? ஜனங்களிடையே மனமாற்றங்கள் உண்டாகின்றன; வன்ம புத்தி வளர்கிறது. இந்த வன்ம புத்தி, சமுதாயம் பூராவிலும் புரைப்புண் மாதிரி படர்கிறது. இந்த நிலைமையில், அரசாங்கம், தன் கடமை களை எப்படி ஒழுங்காகச் செய்து கொண்டு வர முடியும்? ஒன்றும் செய்ய முடியாமல் தம்பித்துப் போய்விடுகிறது. ஆனால் ஒரு வேடிக்கை. அரசியல் போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கிற குறுகிய நலக் கட்சிகள் யாவும், உலகத்தோடு ஒட்டி ஒழுகுதலே தங்கள் நோக்கம் என்று முழக்கம் செய்கின்றன; பெரும்பாலோருடைய நன்மைக்கு விரோதமாக வேலை செய்து வந்தாலும், எல்லோருடைய சார்பாகவும் எல்லோருடைய நன்மைக் காகவுமே தாங்கள் உழைத்து வருவதாகப் பறைசாற்றுகின்றன. என்ன முரண்பாடு ! ஆனால் இவற்றின் அமைப்பே முரண்பட்ட அமைப்புத்தானே? பொதுவாக, இத்தகைய குறுகிய நலக் கட்சிகள், ஒரு நாட்டின் அரசியல் வாழ்க்கையில் இடம் பெறுதல் கூடாது; இவைகளுக்கு ஜனங்கள் ஆதரவும் அளிக்கக்கூடாது. சில விசேஷ சந்தர்ப்பங்களில், சில விசேஷ காரணங்களுக்காக ஒரு நாட்டில் கட்சிகள் ஏற்படுவதுண்டு. உதாரணமாக, ஆட்சி முறையில் மாற்றம் ஏற்படுத்தல், தேசத்தை பாஷை வாரியாகவோ வேறு விதமாக வோ பிரிவினை செய்வித்தல், அடிமை வழக்கம் போன்ற சில நீண்ட காலத்திய வழக்கங்களை ஒழித்தல், இப்படி ஏதேனுமொன்றுக்காக கட்சிப் பிரதி கட்சிகள் ஏற்படலாம். இவை கொண்ட நோக்கம், வெற்றியாகவோ தோல்வியாகவோ, ஏதேனும் ஒரு விதமாக முடிந்தவுடன் இவை மறைந்து விடுகின்றன; அல்லது செல்வாக்குள்ள வேறொரு கட்சியுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டு விடுகின்றன. இனி, அரசியல் கட்சிகளைப் பற்றி ஆராய்வோம். அப்படி ஆராய்கிறபோது, கட்சி என்ற வார்த்தையை மட்டுமே பெரும்பாலும் உபயோகித்துக் கொண்டு போக விரும்புகிறோம். கட்சி என்றால் அரசியல் கட்சிதான் என்று ஏற்கனவே கூறியிருக்கிறோ மல்லவா? இப்படிக் கூறுவது, இந்த நூலுக்கு மட்டுமல்ல, ஜன ஆட்சியின் மதிப்பு மிகவும் உயர்ந்திருக்கிற இந்தக் காலத்துக்கும் பொருந்தும். ஏனென்றால், ஜன ஆட்சிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதைப்போகப் போகக் காண்போம். நடைமுறையிலுள்ள அரசியலை மையமாகக் கொண்டு, ஒரு நாட்டில் கட்சிகள் பல தோன்றுதல் இயல்பு. ஆனால், தோன்றுகின்ற கட்சிகள் யாவும் நீடித்து நிலைத்திருக்க வேண்டுமென்பது நியதியல்ல. உலகத்திலே தோன்றும் யாவுமே இந்த நிலைத்திருக்கின்ற நியதிக்கு உட்பட்டிருக்கவில்லையே? அப்படியிருக்க, கட்சிகள் மட்டும் நிலைத் திருக்குமென்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ஒரு சில, பிறந்தவுடனே இறந்து விடுகின்றன. வேறு சில, எந்தக் காரணத்திற்காகத் தோன்றினவோ அந்தக் காரணம் காரியமானவுடனே மறைந்து விடுகின்றன. மற்றும் சில, ஜனங்களுடைய சோர்விலிருந்து தோன்றி, ஒரு தலைவன் அளிக்கிற உற்சாகத்திலே வளர்ந்து, கடைசியில் சர்வாதிகார வீக்கங்கண்டு வெடித்துப் போகின்றன. ஒரு சில கட்சிகள் தான், ஜனங்களுடைய ஆதரவில் வளர்ந்து வாழ்கின்றன. இவை, ஜனங்களுடைய ஆதரவு அதிகமாயிருக்கிறபோது, அரசாங்கத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றன; ஆதரவு குறைவாயிருக்கிறபோது, அரசாங்கத்தின் எதிர்தரப்பில் இருந்து, அதன் குறைநிறைகளை அவ்வப்பொழுது எடுத்துக்காட்டி அதை ஒழுங்காக நடந்து கொள்ளுமாறு செய்கின்றன. இங்ஙனம் அரசாங்கத்தோடு ஒட்டியிருந்தாலும், அரசாங்கத்திடமிருந்து எட்டியிருந்தாலும், இவை நீடித்த வாழ்வு நடத்தும் தன்மையன வாயிருக்கின்றன; அதாவது அற்பாயுளுடையனவல்ல என்று சொல்லலாம். அப்படியானால் சிரஞ்சீவிகளோ இவை என்று கேட்டு விடாதீர்கள். சிரஞ்சீவிகளாக இருந்தால், மேலே நீடித்த வாழ்வு என்ப தற்குப் பதில் நிலையாய வாழ்வு என்று சொல்லியிருப்போ மல்லவா? இத்தகைய கட்சிகள் - நீடித்த வாழ்வினையுடைய கட்சிகள் - ஒரு நாட்டில் இரண்டோ மூன்றோதானிருக்கும்; அவ்வளவுதானிருக்க முடியும். ஒரு கட்சியில், குறைந்த பட்சம் இத்தனை பேராவது அங்கத் தினராயிருக்க வேண்டும், அப்படி யிருந்தால்தான் அதனைக் கட்சியென்று சொல்ல முடியும் என்ற நிர்ணயமோ விதியோ கிடையாது. பத்துக் கணக்கிலிருந்து லட்சக் கணக்கு வரையில் இருக்கலாம். அந்தந்தக் கட்சியின் செல்வாக்கைப் பொறுத்திருக்கிறது இது. பிற்காலத்தில் பிரபலமாக விளங்கிய அநேக கட்சிகள், ஆரம்பத்தில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரை மட்டுமே அங்கத்தினர்களாகக் கொண்டிருந்தன. ஒரு நாட்டில் வசிக்கும் எல்லாப் பிரஜைகளும், அந்த நாட்டில் அமைந்துள்ள ஏதேனும் ஒரு கட்சியில் சேர்ந்தவர்களாயிருப்பார் களென்று எதிர்பார்க்க முடியாது. அந்த நாட்டிலுள்ள பல கட்சி அங்கத்தினர் களையும் கூட்டிப் பார்த்தால்கூட, அவர்கள், நாட்டின் மொத்த ஜனத் தொகையில் ஒரு சிறு பின்னமாகவே இருப்பார்கள். அரசியலில் அதிகமான சிரத்தையுடையவர்கள், அந்தச் சிரத்தையை, இயன்றவளவு செயலாகக் காட்ட வேண்டுமென்ற மனப்பான்மையுடையவர்கள், இப்படிப்பட்டவர்கள் தான், ஏதேனும் ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு உழைக்க முன்வருவார்கள். ஜனத்தொகையில் பெரும்பாலோர், எந்தக் கட்சியிலும் சேராதவர்களாகவே இருப்பார்கள். இது சர்வ சாதாரணம். எந்த ஒரு நாட்டிலும் இதைப் பார்க்கலாம். இதற்குக் காரணங்கள் பல. அநேகருக்கு அரசியலில் சிரத்தை உண்டாகக்கூடிய அளவு படிப்போ, அனுபவமோ இருப்பதில்லை. படிப்பும் அனுபவமும் இருந்தாலும் பலருக்கு ஓய்வு கிடைப்பதில்லை. இன்னும் பலர், தேர்தல் காலத்தில், தங்களுக்கிஷ்டப்பட்ட நபருக்கு ஓட்டுப் போடுதல், பத்திரிகைகள் படித்தல், கூட்டங்களுக்குச் செல்லுதல், அவகாசம் கிடைக்கிறபொழுது அல்லது பொழுதைப் போக்க வேண்டுமென்பதற்காக, நண்பர்களோடு, அரசியல் பிரச்னைகளைப் பற்றி உற்சாகமாக வாதஞ் செய்தல், இப்படிப் பட்டவைகளோடு தங்கள் அரசியல் கடமை முடிந்து விட்டதாகக் கருது கிறார்கள். சிலருக்கு, கட்சியில் சேர்ந்தால் சொந்த நலன்கள் பாதிக்கப்படு மோ என்ற பயம். சிலர், எந்தக் கட்சியிலும் நேரடியாகக் கலந்து கொள்ள விரும்பாமல், தங்களிஷ்டப்பட்ட கட்சிக்கோ அல்லது எல்லாக் கட்சி களுக்குமோ மறைமுகமாக உதவி செய்து கொண்டிருப்பதோடு திருப்தியடைகிறார்கள். சிலருக்கு, கட்சி மனப்பான்மையே இருப்ப தில்லை. ஏதேனும் ஒரு கட்சியில் சேர்ந்துழைக்க வேண்டுமென்ற மனப் பான்மை யுள்ளவர்களுக்கு, ஆவலுடையவர்களுக்கு, உடல்நோய். பொருளாதார வசதியின்மை, குடும்பச்சுமை, இப்படி ஏதேனுமொன்று தடையாக நிற்கின்றது. இன்னோரன்ன காரணங்களினால், எந்த ஒரு கட்சியிலும் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள விரும்பாமல் தனித்திருக்கிறவர்களையே ஒரு நாட்டில் அதிகம் பேராகக் காணலாம். ஒரு கட்சியில் சேர்கிறவர்கள், சுயேச்சையாகத் தான் அந்தக் கட்சியில் சேர்ந்து கொள்கிறார்கள்; யாருடைய கட்டாயத்தின் பேரிலு மல்ல. இது முக்கியமான விஷயம். தன்னிச்சையாகச் சேரும் அங்கத்தினர் பலரைக் கொண்டிருப்பதனால்தான் அரசியல் கட்சிகள் மதிப்புடையன வாயிருக்கின்றன. தனக்குப் பிடித்தமான கட்சியில் சேர்ந்து கொள்ளவோ, பிடித்தமில்லாத கட்சியிலிருந்து விலகிக் கொள்ளவோ எந்த ஒரு பிரஜைக்கும் எப்பொழுதும் உரிமையுண்டு. சாதாரணமாக, பிரஜா உரிமையுள்ளவர்கள் மட்டுந்தான் ஏதேனும் ஓர் அரசியல்கட்சியில் சேர்ந்து கொள்வர். ஆளுகையை நடத்தவோ, அந்த ஆளுகை எப்படி நடைபெற வேண்டுமென்று சொல்லவோ யாருக்குத் தகுதியுண்டு? ஆளும் உரிமையுடையவர்களுக்கே. அப்படியானால் இந்த உரிமையுடையவர்கள், புதிதாக ஒரு கட்சியை தாபித்துக் கொண்டால் அதில் என்ன ஆச்சரியமிருக்கிறது? அப்படியே, ஏற்கனவேயுள்ள ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டால் அதை யார் தடை செய்ய முடியும்? பொதுவாக, அரசியல் கட்சிகள் எதற்காகத் தோன்றுகின்றன? சிறப்பாக ஜன ஆட்சியின் கீழ்? ஒன்று, ஆளுகையை நடத்துவதற்காக; அல்லது ஆளுகை எப்படி நடைபெற வேண்டுமென்று சொல்வதற்காக. பிரஜா உரிமையில்லாதவர்களடங்கிய கட்சிகளும் ஒரு நாட்டில் ஏற்படுதலுண்டு. பிரஜா உரிமைகளைப் பெறுதலே இவைகளின் நோக்கம், உதாரணமாக, அநேக நாடுகளில் திரீகளுக்கு ஓட்டுரிமை இல்லாதிருந்தது. இவர்கள் அந்த உரிமையைப் பெறுவதற்காக ஒரு கட்சியனராகத் திரண்டு கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றனர். இன்னுஞ் சில நாடுகளில் இந்தக் கட்சிகள் இருந்து கொண்டிருக்கின்றன; கிளர்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. சில நாடுகளில் இன வேற்றுமை, நிற வேற்றுமை முதலியவை காரணமாக, ஒரு பகுதியினருக்குப் பிரஜா உரிமைகளிற் பல மறுக்கப்படுகின்றன. அவர்கள் ஒரு கட்சியினராகச் சேர்ந்து, உரிமைகளைப் பெற முயற்சி செய்கிறார்கள். இதற்கு உதாரணமாக அமெரிக்காவில் நீக்ரோவர் இயக்கத்தைக் குறிப்பிடலாம். இவ்வளவெல்லாம் சொல்லியான பிறகு, அரசயில் கட்சியென்றால் என்னவென்பதைப் பற்றி அறிஞர்கள் கூறியுள்ள கருத்துக்களில் சில வற்றை, அவர்கள் வாக்கு மூலமாகவே இங்கு எடுத்துக்காட்ட விரும்பு கிறோம்:- குறிப்பிட்ட ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, தேச நலனை நாடுவதற்காக, அந்தக் கொள்கையினால் ஒன்றுபட்டிருக் கிறவர்கள் அடங்கிய ஓர் அமைப்பே அரசியல் கட்சி. தனிப்பட்டதோர் அரசியல் பிரிவாக இருந்து வேலை செய்யக் கூடிய பிரஜைகளடங்கிய ஒரு குழுவுக்கே அரசியல் கட்சியென்று பெயர். இந்தக் குழுவினர், தேசத்தின் பொதுவான பிரச்னைகளில் ஒரே விதமான அபிப்பிராயமுடையவரா யிருக்கின்றனர். இவர்கள், பொதுவான ஒரே நோக்கத்திற்காகத் தங்கள் ஓட்டுரிமையை உபயோகித்து, அதன் மூலம் அரசாங்க நிருவாகத்தைக் கைப்பற்றப் பார்க்கின்றனர். தேசத்தின் அரசியல் வாழ்க்கையைப் பொறுத்து, குறிப்பிட்ட சில கொள்கைகளுடைய, சில முறைகளைப் பின்பற்றுகிற, அந்தக் கொள்கை களினாலும் முறைகளினாலும் தேசத்தின் பொதுவான நன்மையை வளர்க்கப் பார்க்கின்ற நபர்களடங்கிய ஒழுங்கானதோர் அமைப்பே அரசியல் கட்சியென்பது. அரசாங்கத்தின் பொதுவான முறைகளையும் கொள்கைகளையும் ஆதரிக்கவும், அவற்றை மேலும் மேலும் விருத்தி செய்யவும் ஏற்படுகின்ற ஒரு தாபனமே அரசியல் கட்சி. இந்த வியாக்கியானங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளக் கூடியது என்ன? எந்த ஒரு கட்சியும், நாட்டிலுள்ள ஒரு பிரிவின் நலனை நாடாமல் நாட்டுப் பொதுவின் நலனையே நாட வேண்டும். மற்றும், நாட்டுப் பொது நலனை முன்னிட்டுச் சில கொள்கைஇவ்விரண்டு மில்லாத கட்சி, கட்சியென்று அழைக்கப்படுவதற்குத் தகுதியுடையதன்று. 2. அனுகூலப் பிரதிகூலங்கள் ஜன ஆட்சிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று முந்திச் சொன்னோமல்லவா, ஏன் இப்படிச் சொன்னோ மென்றால், ஜன ஆட்சி வெற்றிகரமாக நடைபெற வேண்டுமானால் அதற்கு அரசியல் கட்சிகள் அவசியம் வேண்டியிருக்கின்றன. ஜன ஆட்சி என்று சொன்னாலே அது பெரும்பாலோர் ஆட்சிதானல்லவா? பெரும்பாலோர் ஆட்சியென்றால், ஓட்டர்களில் பெரும்பான்மையோரால் தெரிந்தெடுக்கப் பட்டு, அது காரணமாக, பிரதிநிதி சபையில் பெரும்பாலான தானங் களை அடைந்திருக்கிற ஒரு குழுவினருடைய ஆட்சி; அதாவது பெரும் பான்மைக் கட்சியினருடைய ஆட்சி. இந்தப் பெரும்பான்மைக் கட்சியினருடைய ஆட்சியே ஜன ஆட்சியென்ற பெயரைத் தாங்கி நிற்கிறது. அப்படியானால் ஜன ஆட்சி நடைபெறுவதற்கு, ஆம், திறம்பட நடைபெறுவதற்கு, அரசியல் கட்சிகள் எவ்வளவு இன்றியமையாதவை யென்பது நன்கு புலனாகும். ஓர் அறிஞன் குறிப்பிடுகிறான்:- கட்சிகள் இன்றியமையாதவை. சுதந்திரமாயுள்ள எந்த ஒரு பெரிய நாடும் இவையின்றி இல்லை. இவை யில்லாமல் ஒரு பிரதிநிதித்துவ அரசாங்கத்தை எப்படி நடத்தக்கூடுமென்று யாரும் எடுத்துச் சொல் வில்லை. ஜன ஆட்சியில், அரசியல் கட்சிகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருந்த போதிலும், அந்த ஆட்சியின் அரசியல் அமைப்பைச் சேர்ந்தவை யல்ல இவை; அதாவது அரசாங்கத்தின் சட்ட திட்டங்களில் இடம் பெற்றிருக்கிற தாபனங்களல்ல இவை. இவைதான் அரசாங்கத்தை நடத்துகின்றன; இவை தான் அரசாங்கத்தை ஆட்டி வைக்கின்றன. ஆனால் அரசாங்க உறுப்புக்களல்ல இவை. புதிர் மாதிரி இருக்கிறதல்லவா? ஆனால் இதுதான் உண்மை. தன்னிச்சையாக வந்து சேரும் நபர்களை அங்கத்தினர்களாகக் கொண்டிருக்கிற காரணத்தினால் ஒரு கட்சி பெருமையுடையதாயிருக்கிறதென்று ஏற்கனவே கூறியிருக்கிறோம். அதுபோலவே, அரசாங்கத்தின் கட்டுத்திட்டங்களுக்குட்படாமல் சுயேச்சை யாக இயங்குகின்ற தன்மையினால் ஒரு கட்சி மதிப்புடையதாகவும் இருக்கிறது. ஜன ஆட்சியில்தான், அரசியல் கட்சிகளுக்கு இடமுண்டு; ஆதரவு கிடைக்கும்; நன்மை தரும் முறையில் அவை இயங்குதல் சாத்தியம். முடியாட்சியிலோ, சர்வாதிகார ஆட்சியிலோ, அந்த ஆட்சியை ஆதரிக்கிற ஒரு கட்சியைத் தவிர வேறு கட்சிகளுக்கு இடமே கிடையாது. வேறு கட்சிகளே இருக்கக் கூடாதென்பதுதான் அந்த இரண்டு வித ஆட்சி முறைகளின் கருத்து. அப்படி ஏதேனும் ஒரு கட்சி தலைதூக்குமானால் உடனே அது நசுக்கப்பட்டு விடுகிறது. ஜன ஆட்சியில் கீழ் முக்கியத்துவம் பெற்றிருக்கிற இந்த அரசியல் கட்சிகள், ஜன ஆட்சியின் உடன் பிறந்தவைகளா, அதாவது, கி.பி. பதினேழாவது நூற்றாண்டுக்குப் பிறகு உலகத்துக்குப் பெரும்பாலான நாடுகளில் ஜன ஆட்சி என்ற பெயரால் பிரதிநிதித்துவ ஆட்சி ஏற்படத் துவங்கிய காலத்தில், கூடவே இந்த அரசியல் கட்சிகளும் தோன்றத் தலைப்பட்டு விட்டனவா என்று வாசகர்கள் கேட்கலாம். நியாயமான கேள்வி. ஏனென்றால் அரசியல் கட்சிகளின் ஆரம்பத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியந்தானே? ஜன ஆட்சிக்கு முந்தியே, அதாவது பதினேழாவது நூற்றாண்டுக்கு முந்தியே அரசியல் கட்சிகள் ஏற்பட்டிருந்தன. இரண்டாயிரம் வருஷங்களுக்கு முந்தி கிரீஸிலும் அதற்குப் பிறகு ரோம சாம்ராஜ்யத் திலும் அரசியல் கட்சிகள் தோன்றி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள முயன்ற வரலாற்றை சரித்திரத்தில் பல படக்காண்கிறோம். ஒரு சிலர் ஆட்சி எங்கெங்கு நிலவியிருந்தோ அங்கெல்லாம் அரசியலில் கட்சிப் பிரதி கட்சிகள் ஏற்பட்டு, அந்த ஆட்சி முறையிலேயே ஜனங்களுக்கு வெறுப்புண்டாகும்படி செய்து வந்திருக்கின்றன. கி.பி. பதினைந்தாவது நூற்றாண்டுக்கு முந்தி, ஐரோப்பாவில் மதமும் அரசியலும் பின்னிக் கொண்டிருந்தபொழுது, மதத்தைப் பழமையாகற பெட்டகத்தில் பத்திரமாகப் பூட்டி வைக்க வேண்டுமென்று சொல்லி, அதற்காக அரசயிலின் ஆதரவை நாடிய கட்சிகள் எத்தனை? அதே மதத்தை அதே பழைய பெட்டகத்திலிருந்து எடுத்து அதன் மீது படிந்திருந்த மாசுமறுக் களைத் துடைக்க வேண்டுமென்று சொல்லி, அது காரணமாக அரசியலின் கொடுமைகளுக்குட்பட்ட கட்சிகள் எத்தனை? இவையெல்லாம் ஐரோப்பிய இதிகாசத்தின் கறை நிறைந்த படலத்தைச் சேர்ந்தவை. இவை பற்றிய விவரங்கள் இங்கு நமக்குத் தேவையில்லை. பொதுவாக ஜன ஆட்சி தலையெடுப்பதற்கு முந்தியே அரசியல் கட்சிகள் பல, அநேக நாடுகளில் நிலவி யிருந்தன என்று தெரிந்து கொண்டு மேலே செல்வோம். ஜன ஆட்சியைத் தவிர்த்த மற்ற ஆட்சி முறைகளில் பெரும்பாலான ஜனங்களுக்கு அரசாங்க நிருவாகத்தில் எவ்வித பங்கும் இல்லாம லிருந்தது. அரசாங்க நிருவாகத்தைப் பற்றி ஜனங்கள் ஏதேனும் அபிப் பிராயம் சொல்லத் துணிவார்களானால், அப்படிச் சொல்வது கலகமென்று கருதப்பட்டு கடுமையாக அடக்கப்பட்டது. சுருக்கமாக, பொதுஜன அபிப்பிராயத்தை அரசாங்கம் மதிக்கவுமில்லை; விரும்பவுமில்லை. ஜன ஆட்சி ஏற்பட்டது. அரசாங்க நிருவாகத்தில் பங்கு கொள்ளும் உரிமை. அதாவது ஓட்டுரிமை ஜனங்களுக்குக் கிடைத்தது. இந்த உரிமையைத் தொடர்ந்து, எண்ண உரிமை, பேச்சுரிமை, எழுத்து உரிமை முதலிய உரிமைகளையும் ஜனங்கள் பெற்றார்கள்; இதன் விளைவாக அரசாங்கத்தை எப்படி நடத்த வேண்டுமென்பதைப் பற்றித் தங்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடத் தொடங்கினார்கள். கருத்து வேற்றுமைகள் தோன்றின. நாட்டின் கல்வி முறை, வரிவிதிப்பு முறை, இப்படிப் பல பிரச்னைகளைப் பற்றி மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்கள் வேறு பட்ட கட்சியினராகப் பிரியலானார்கள். எந்தக் கட்சியினர், ஜனங்களுடைய ஓட்டு பலத்தை அதிகமாகப் பெற்றிருந்தார்களோ அவர்கள் அரசாங்கத்தை நடத்த முற்பட்டார்கள். ஜனங்களுடைய ஓட்டு பலத்தைக் குறைவாகப் பெற்றிருந்தவர்கள் அடுத்த தடவை அந்தப் பலத்தைப் பெற்று அரசாங்கத்தை நடத்த வேண்டுமென்று முனைந்தார்கள். அரசியல் கட்சிகள், ஜன ஆட்சியில் ஆக்கம் பெற்று வளர்ந்த வரலாறு இதுதான். அரசியல் கட்சிகளினால் அனுகூலங்களும் உண்டு; பிரதி கூலங்களும் உண்டு. ஏன், அனுகூலங்களைக் காட்டிலும் பிரதி கூலங்கள் தான் அதிகமென்று சொல்ல வேண்டும். இருந்தாலும் இவை, ஜன ஆட்சியின் அவசியமான அமிசங்களாயிருக்கின்றன. அரசியல் சாதிரத்தைப் பற்றி ஆராய்ந்து எழுதியிருக்கின்ற அறிஞர் பலரும், கட்சிகளைக் கண்டித்தே இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாரும், கட்சிகள் ஏற்படா வண்ணம் செய்வதெப்படி, அப்படி ஏற்பட்டால் அவற்றை ஒழிப்பதெப்படி என்பவைகளுக்கு வழி கூறவில்லை. இஃதொரு வேடிக்கை. ஆனால் இதிலிருந்து நாமொன்றை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். அஃதென்னவென்றால், கட்சியென்பது ஜன ஆட்சியினின்று பிரிக்க முடியாத ஒன்று என்பதேயாம். இனி, கட்சியினால் ஏற்படக்கூடிய அனுகூலங்களையும் பிரதிகூலங்களையும் முறையே வரிசையாகக் கூறுவோம்:- அனுகூலங்கள் : 1. பொதுஜன அபிப்பிராயத்தை எந்த அளவுக்கு மதிக்கிறதோ அந்த அளவுக்கே ஜன ஆட்சியானது வெற்றியடைகிறது. இந்தப் பொதுஜன அபிப்பிராயம் திரண்டு ஓர் உருவம் பெறுவதற்கு உதவி செய்வது கட்சி. 2. பொதுவான அபிப்பிராயத்தை, ஜன ஆட்சியின் முதுகெலும்பு என்று சொல்வார்கள். இந்த முதுகெலும்பை நிமிர்த்திக் கொடுப்பது, நிமிர்த்தி வைத்திருப்பது கட்சி. 3. பொதுஜன அபிப்பிராயத்தை நிமிர்த்தி வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், இந்த அபிப்பிராயத்தை அரசாங்கம் கேட்குமாறு செய்வது கட்சி. 4. ஒரு ஜன அரசாங்கம் கவனிக்க வேண்டிய பிரச்னைகள் பல. அதிலும் தற்காலத்தில் இந்தப் பிரச்னைகள் சிக்கல் நிறைந்தவையாகி விட்டன. இவற்றில் எவை முக்கியமானவை, அதனால் உடனடி யாகக் கவனிக்கப்படவேண்டியவை. எவை அவ்வளவு முக்கியமல்ல, அதனால் பிந்தி கவனிக்கப்படலாமென்று சாதாரண ஜனங்களுக்கு, அதாவது ஓட்டுரிமையுள்ள ஜனங்களுக்குத் தெரிவதில்லை. அவர்கள், பிரச்னைகளின் சிக்கலைப் பார்த்து மலைத்துப் போகிறார்கள். அவர்களுக்கு மேற்படி பிரச்னைகள் முறையே பகுத்தும் தொகுத்தும் காட்டுவது கட்சி. 5. இப்படிப் பகுத்தும் தொகுத்தும் காட்டுவதனால் ஓட்டர்கள் உண்மை நிலையைச் சுலபமாக உணர்ந்து கொள்ள முடிகிறது. 6. ஒரு நாட்டில் இரண்டு மூன்று கட்சிகள் இருந்து, ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதமான திட்டத்தைக் கிளப்புகிறபோது, ஓட்டர்கள், தங்களுக்குப் பிடித்தமான திட்டத்தைப் பொறுக்கி யெடுத்துக் கொள்வது சுலபமாகி விடுகிறது. ஓட்டர்களின் பொறுக்கி யெடுக்கிற சிரமத்தைக் குறைப்பது கட்சி. 7. கட்சியானது, தரகன் மாதிரியென்று ஓர் அறிஞன் கூறினான். அதாவது, ஜனங்களுக்கும், அரசாங்கத்திற்கும் மத்தியில் நின்று கொண்டு, ஒருவருடைய எண்ணங்களையும் சக்திகளையும் மற் றொருவருக்குத் தெரிவித்து, அதன் மூலம் இரண்டு பேரும் இணைந்து போவதற்கு உதவியாக நிற்கிறது கட்சியென்பதே இதன் தாத்பரியம். 8. நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்கிறவர்கள். தங்களுடைய கருத்துக்களை ஒழுங்காகவும் திறமையாகவும் எடுத்துச் சொல்ல நியாயவாதிகளை நியமித்துக் கொள்கிறார்கள். அதுபோல் அரசி யலில், குறிப்பிட்ட சில கருத்துக்களைக் கொண்டவர்களின் சார்பாக, அந்தக் கருத்துக்களை ஒழுங்குப்படுத்தி திறம்படச் சொல்லக்கூடியது கட்சி. அதாவது ஓட்டர்கள், கட்சிக்காரர்கள் மாதிரி; கட்சி, வக்கீல் மாதிரி. 9. அரசாங்கம், ஜன விருப்பத்தைத் தழுவி நிருவாகத்தை நடத்துவதற்குத் துணை செய்வது கட்சி. இங்ஙனம் ஜன விருப்பத்தைத் தழுவி நடைபெறுகிற அரசாங்கந்தான் வலுவுள்ளதாகவும் நீடித்த வாழ்வினையுடையதாகவும் இருக்கும். எனவே, அரசாங்கத்தின் வலிமைக்கும் நீண்ட ஆயுளுக்கும் காரணமாயிருப்பது கட்சி. இந்த அனுகூலங்களைப் படித்துப் பார்க்கிறபோது, ஒன்றையே திருப்பித் திருப்பிச் சொல்வது போல வாசகர்களுக்குத் தோன்றும். அது வாதவமே. பிரதிகூலங்களைப் போலவே அனுகூலங்களும் இருக்கின்றன என்பதை வலியுறுத்திக் காட்டுவதற்காகவே, இப்படி அனுகூலங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் காட்டுகிறார்கள் அறிஞர்கள். இவற்றையெல்லாம் சேர்த்து ஒரே அனுகூலமாகவும் சொல்லி விடலாம். ஒரே மாதிரியான அபிப்பிராயமுள்ள ஓட்டர்களின் குரலாக இருந்து பேசுவதும், அந்தக் குரலை அரசாங்கம் கேட்குமாறு செய்வதுமாகிற அனுகூலத்தை ஒரு கட்சியானது செய்கிறது என்று சொன்னால், அதிலேயே மேற்கூறிய எல்லா அனுகூலங்களும் அடங்கியதாகிவிடும். பிரதிகூலங்கள் : 1. கட்சியென்று சொன்னாலே வேற்றுமை எண்ணம் தோன்றுகிறது. கட்சியானது, ஜனங்களிடத்திலேயுள்ள வேற்றுமையான அமிசங்களை வளர்த்துக் கொடுக்கிறது; அவர்களிடத்தில் நியாயமாக நிலவவேண்டிய ஒற்றுமையான அமிசங்களைச் சீர்குலைத்து விடுகிறது. 2. ஒரு கட்சியினுடைய நோக்கமென்ன? எப்படியாகிலும் வெற்றி யடைய வேண்டுமென்பதே. இந்த எப்படியாகிலும் என்ற சொற்றொடரில், ஒரு கட்சி அனுசரிக்கக்கூடிய கீழான முறைகள் பலவும் அடங்கியிருக் கின்றனவென்று கூறலாம். வெற்றிதான் முக்கியமே தவிர, அந்த வெற்றியையடைவதற்கான வழிகளைப் பற்றி ஒரு கட்சி கவலைப்ப டுவதில்லை; நயம், பயம், பணம், இப்படி ஏதேனுமொன்றை உபயோகிக்கத் துணிகிறது. இதனால் ஜனங்கள் நேர்மையற்ற விதமாக நடந்து கொள்ள வேண்டியவர் களாகிறார்கள். 3. தேர்தல் காலத்தில்தான் பார்க்கிறோமே, எதிர்க்கட்சிகளைப் பற்றி எவ்வளவு கேவலமான பிரசாரம் ! அடங்கியிருந்த துவேஷங் களெல்லாம் கிளப்பி விடப்படுகின்றன. தற்புகழ்ச்சி, பிறரை இகழ்தல், உண்மையைத் திரித்துக் கூறுதல் இவை பலவும் ஓட்டர்களின் செவியில் சர்வ சாதாரணமாக வந்து விழுகின்றன. மனத்திண்மை படைத்தவர்கள் சலிப்படைகிறார்கள்; திண்மையற்றவர்கள், பகைமை, பொறாமை, பொய்ம்மை, இப்படிப்பட்டவைகளுக்கு இரையாகி விடுகிறார்கள். அரசியல், நாற்றமெடுத்துப் போவதற்குக் கட்சிகள் காரணமாயிருக்கின்றன என்று ஒர் அறிஞன் கூறுவது இங்குக் கவனிக்கத் தக்கது. 4. தேர்தல் காலத்தில், ஒரு கட்சியானது, வெற்றியடைய வேண்டுமென்பதற்காக, தன்னால் சாதிக்க முடியாததை யெல்லாம் சாதித்துத் தருவதாகக் கூறுகிறது; நிறைவேற்ற முடியாத வாக்குறுதி களைக் கொடுக்கிறது. இறுதியில் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லாமற் போய்விடுகிறது. இப்படியிருந்தால்தான் அரசியலில் வெற்றி பெற முடியும் என்ற மனப்பான்மை ஓட்டர்கள் முதல் அரசாங்க அங்கத்தினர் வரை எல்லோருக்கும் ஏற்படுகிறது. 5. ஒரு கட்சியில் சேர்ந்திருக்கிறவர்கள், தங்களுடைய தனித் துவத்தை இழந்து விடுகிறார்கள்; எந்த ஓர் அரசியல் பிரச்னையைப் பற்றியும், தங்களுக்கிஷ்டமான முடிவுக்கு வரவோ, இஷ்டமானபடி ஓட்டுக் கொடுக்கவோ முடியாதவர்களாகி விடுகிறார்கள். சட்ட சபை களில், ஒரு மசோதாவோ, தீர்மானமோ ஓட்டுக்கு விடப்படுகிற பொழுது, ஒரு கட்சியின் அங்கத்தினர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களென்பதைப் பார்த்தால் இது நன்கு தெரியும். 6. அங்கத்தினரின் சொந்த அபிப்பிராயம் ஒன்றாகவும், கட்சியின் அபிப்பிராயம் வேறொன்றாகவும் இருக்கிறபொழுது, அங்கத்தினர், கட்சியின் அபிப்பிராயத்தையே எடுத்துச் சொல்ல வேண்டியவரா யிருக்கிறார். அதுதான் கட்சிக் கட்டுப்பாட்டுக்குரிய செய்கை. ஆனால் அவர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று சொல்கிறவராகிறாரல்லவா? இந்த இரண்டுபட்ட தன்மையை அங்கத்தினரிடையே வளர்க்கிறது கட்சி. 7. அரசாங்க நிருவாகத்தை ஏற்று நடத்துகின்ற ஒரு கட்சி யானது, அரசாங்க உயர் பதவிகளை அளிக்கிற விஷயத்தில், தகுதிய யுடையவர்களைப் புறக்கணித்துவிட்டு, கட்சிப் பற்றுடையவர்களுக்கே அதிகமான சலுகை காட்டுகிறது. இதனால் நிருவாகத்தின் திறமை குன்றிப் போகிறது. 8. அரசாங்கத்தை நடத்தும் கட்சியானது, சட்டசபையிலாகட்டும், ஓட்டர்களின் மத்தியிலாகட்டும், சர்வாதிகார தோரணையிலேயே நடந்து கொள்கிறது. அதாவது, தன் இஷ்டத்திற்கே எல்லாம் நடைபெற வேண்டுமென்று விரும்புகிறது; அதிகாரத்தின் மூலம் வற்புறுத்தவும் செய்கிறது. கட்சி ஆட்சியினால், ஜனங்கள் சர்வாதிகார ஆட்சியின் பலனை, சில சமயங்களில் அனுபவிக்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள். 9. பார்க்கப் போனால் ஒரு கட்சியை, சுயநலமும் பதவி மோகமு முடைய சிலர் சேர்ந்து ஆட்டி வைக்கிறார்கள். இவர்கள், கட்சியிலுள்ள புத்திசாலிகளையும் திறமைசாலிகளையும் மெது மெதுவாக அப்புறப் படுத்திவிடப் பார்க்கிறார்கள். எல்லோரையும் விலக்கிவிட முடிகிறதா? சிலர் பிடிவாதமாகக் கட்சியிலிருந்து கொண்டே முன்னேறப் பார்க் கிறார்கள். இதன் விளைவாக, கட்சியானது ஒரு சூழ்ச்சிக் களமாகி விடுகிறது. மேலே அனுகூலங்களுக்குச் சொன்னது போல, இந்தப் பிரதிகூலங்களத்தனையையும் சேர்த்து, சமுதாயத்தில் வேற்றுமை உணர்ச்சி அதிகரிப்பதற்குக் கட்சியானது ஒரு துணைக் கருவியா யிருக்கிறதென்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம். கட்சியின் அவசியத்தை வற்புறுத்திக் கூறுகிறவர்கள், மேற் சொன்ன பிரதிகூலங்களத்தனைக்கும் பின் வருமாறு சமாதானம் சொல்கிறார்கள்:- சட்ட சபைக்குத் தெரிந்தெடுக்கப் பெறும் பிரதிநிதிகளனை வருக்கும், எந்த ஒரு பிரச்னையைப் பற்றியும் சுயமாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரக்கூடிய ஆற்றல் இருப்பதில்லை. பெரும்பாலோர், மற்றவர்கள் செய்கின்ற முடிவை அப்படியே ஏற்றுக் கொண்டு அதனைப் பின்பற்றத் தயாராயிருக்கின்றனர். இத்தகையவர்களுக்கு கட்சியானது பெரிதும் உதவியாயிருக்கிறது; அவசியமாகவும் இருக்கிறது. கட்சியில் சேர்ந்து கொண்டால், தனித்துவம் போய்விடுகிறதென்று சொல்லப்படுகிறது. ஆனால் அதிகமான தனித்துவமும் கூடாதல்லவா? அதிகமான தனித்துவம் அகங்காரமல்லவோ, இந்த அகங்காரம் அங்கத்தினர் களுக்கு ஏற்படாதபடி செய்கிறது கட்சி. கட்சியில் சேர்ந்து கொண்டு விட்டதனாலேயே, ஒருவருடைய தனித்துவம் போய்விடுமா என்ன? திறமையுள்ளவர்கள் கட்சியிலிருந்து கொண்டே, கட்சியின் மூலம் அநேக செயல்களைச் செய்ய முடியும்; கட்சிக்கு வெளியிலும் செல்வாக்குப் பெற முடியும்; கட்சியையும் தங்கள் நோக்கத்திற்கு இணங்கச் செய்ய முடியும். தலைவர்களாக வருவோர் தனித் தன்மையுடையவர்கள் தானே? அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுகிற அநேகருக்கு ஆசைகள் அதிகமாகி விடுகின்றன; எதையும் சாதித்து விடலாமென்ற துணிச்சலும் உண்டாகிறது. இவற்றிற்குத் தடை கல் மாதிரி இருக்கிறது கட்சி, எதிலும் நிதானமா யிருக்கும்படி செய்கிறது கட்சி. நல்லதோ கெட்டதோ, அனுகூலமோ பிரதிகூலமோ, கட்சி யானது, ஜன ஆட்சியின் நிலையான ஓர் அமிசமாகி விட்டது. ஜன ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிற வரை கட்சிகளும் இருந்து கொண்டு தானிருக்கும். ஆதலின், கட்சியினால் ஏற்படக்கூடிய அனுகூலப் பிரதிகூலங்களைப் பற்றி அதிகமாக சர்ச்சை செய்து கொண்டு போவதில் அர்த்தமில்லை; பிரயோஜனமுமில்லை. ஒரு ஜெர்மானிய அரசியல் பண்டிதன் கூறுகிறான்:- சுதந்திர ஜனங்களின் அரசியல் வாழ்க்கைக்குக் கட்சியானது அவசியமான ஒன்றாயிருக்கிறது. அது, தனிப்பட்டவர்களின் எண்ணிறந்த அபிப்பிராயங்களை ஒன்றுகூட்டி ஒரே சராசரி அபிப்பிராய மாகச் செய்கிறது; குழம்பிக் கிடக்கிற ஒவ்வொருவருடைய அபிப்பிராயத்தையும் தெளியச் செய்து அதற்கு ஓர் உருவம் கொடுக்கிறது. 3. எப்படி இருக்கவேண்டும்? அரசாங்கமென்று எப்பொழுது ஒன்று ஏற்பட்டதோ அப் பொழுதே அதற்குத் தனியான ஒரு சக்தி ஏற்பட்டு விட்டது. படை பலமென்ன, பண பலமென்ன, அதிகார பலமென்ன, இப்படிப் பலவும் அதற்கு இருக்கின்றன. அதனால் ஆளப்படுகின்ற ஜனங்களுக்கோ மேற்படி பலம் ஒன்றுமே இல்லை. இந்தப் பலமற்ற நிலைமையில் அவர்கள், அரசாங்கத்தைத் தங்கள் விருப்பத்திற்கிணங்கி நடக்குமாறு எப்படிச் செய்ய முடியும்? ஒன்றுபட்டிருப்பதன் மூலமாகத்தான். சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை என்பது ஆளப்படுகின்றவர்களுக்கு முற்றிலும் பொருந்தும். ஆள் கின்றவர்களுக்கு, மேலே சொன்ன படை, பணம், அதிகாரம் முதலியன ஆயுதங்களாயிருக்கின்றன. ஆளப்படுகின்றவர்களுக்கோ தாபனம் ஒன்று தான் ஆயுதமாயிருக்கிறது. இந்த தாபனமே கட்சி எனப்படுவது, பலமுள்ளவர்களுடன் போராட நேரிடுகிறபோது, பலமற்றவர்களுக்கு ஆயுதமாயிருப்பது தாபனம் என்பது ஓர் அறிஞனுடைய வாக்கு. சரி, இந்த ஆயுதம் - கட்சி ஆயுதம் - எப்படி எப்படி இருக்க வேண்டும், எப்படி எப்படி இருக்கக் கூடாது என்பவைகளைப் பற்றிச் சிறிது கவனிப்போம். எந்த ஒரு காரியத்தையும் கூட்டு முயற்சியினால் சாதித்து விடலாமென்பதற்கு ஒரு கட்சியானது சிறந்த உதாரணமா யிருக்க வேண்டும். அப்படிச் சிறந்த உதாரணமாயிருக்க வேண்டுமானால், ஒரு கட்சிக்குள்ளேயே உட்பிரிவுகள் ஏற்படுதல் கூடாது. வகுப்பு, பால், மதம், இடம், பொருள், இப்படி ஏதேனும் ஒன்றைக் காரணமாகக் கொண்டு, கட்சிக்குள்ளேயே சில்லரைக் கட்சிகள் ஏற்பட்டு விடுமானால் அந்தக் கட்சி, உருப்படியான ஒருகாரியத்தைச் செய்ய முடியாது; நீண்ட காலமும் வாழ்ந்திருக்க முடியாது. ஆளப்படுகின்றவர்களுடைய ஆயுதம் கட்சியினால், அந்தக் கட்சியினுடைய ஆயுதம் என்னவாயிருக்க வேண்டும்? அன்பு ஒன்று தான்; சமாதானமுறை ஒன்றுதான். கட்சியின் கொள்கைகளை, மற்றவர்கள் மனத்தில் நன்கு பதியும்படி விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்; அந்தக் கொள்கைகளில் நம்பிக்கையுண்டு பண்ண வேண்டும். நம்பிக்கையினால் ஒருவர் கட்சியில் சேரவேண்டுமே தவிர, கட்டாயத்திற்காகவோ, தாட்சண்யத்திற்காகவோ, வேறு பயன்களை எதிர்பார்த்தோ சேரக்கூடாது; சேரவிடவும் கூடாது, அரை மனத்துடன் நூறுபேர் கூடியிருப்பதைக் காட்டிலும் முழுமனத்துடன் பத்துபேர் சேர்ந்திருப்பது மேலல்லவா? ஒரு கட்சியானது, தன் கொள்கைகளைப் பரப்ப, கூட்டங்கள், கூட்டுவிக்கலாம்; பிரசுரங்கள் வெளியிடலாம்; ஊர்வலங்கள் நடத்தலாம்; நாடகங்கள், சினிமாக்கள் முதலியவற்றை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்; இப்படிப்பட்ட பல முறைகளைக் கையாளலாம். ஆனால் இவை எதிலும் பலாத்காரம் புகுதல் கூடாது; பொய்ம்மை பிரவேசிக்கக் கூடாது. கட்சியினின்று பிறக்கிற ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் அன்பு மணம் கமழ்தல் வேண்டும்; உண்மையொளி வீச வேண்டும். மற்றவர் கொள்கையைப் பழித்துப் பேசுவதால் நமது கொள்கை நிலைத்து விடாது. மற்றவர்களைப் பொய்யர்களென்று சொன்னதாலேயே நாம் மெய்யர் களாகி விடமாட்டோம். எந்த ஒரு கட்சியும், சொந்தமாக ராணுவம் வைத்துக் கொள்ளக் கூடாது; வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுவதுமில்லை. அப்படி அனுமதிக்கப்படுமானால் அஃது அரசாங்கத்திற்கே ஆபத்தாகி விடும்; இறுதியில் நாடும் பாழாகிவிடும். இத்தலியில் பாசிட் கட்சியும், ஜெர்மனியில் நாஜி கட்சியும், தங்கள் படை பலத்தைக் கொண்டு முறையே அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதென்பது வாதவம். ஆனால் அந்தப் படை பலத்தினாலேயே அந்தக் கட்சிகள் அழிந்து விட்டனவல்லவா? இரண்டு நாடுகளும் பாழாகிவிட்டனவல்லவா? பொதுவாக, எந்த நாட்டிலும், கட்சிகளுக்கு ஆயுதந் தரித்த படைகளை வைத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படுவதில்லை. ஒரு கட்சிக்கு, ஆயுதப்படை வைத்துக் கொள்ளத் தான் அனுமதி யில்லையே தவிர, தொண்டர் படை வைத்துக் கொள்ள உரிமையுண்டு. கட்சி அங்கத்தினர் சிலரைக் கொண்டு அமைக்கப்படுகின்ற இந்தத் தொண்டர்படை, கட்சியின் பிரசார வேலைகளைக் கவனிக்க வேண்டும்; கட்சிக் கூட்டங்களில் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும்; கட்சி அங்கத்தினர்களுக்குள் பூசல்கள் ஏற்படுமானால் அவற்றைத் தடுக்க வேண்டும். பொதுவாக, கட்சி யந்திரம் சரளமாக ஓடிக் கொண்டிருக்கும்படி பார்த்துக் கொள்வது இந்தத் தொண்டர் படையின் கடமையாகும். ஆனால் ஒரு விஷயம். இந்தத் தொண்டர்படை, கட்சி அங்கத்தினர் களைக் கொண்டதா யிருப்பினும், கட்சிப் பற்றுடன் தொண்டு செய்தல் கூடாது. கட்சி வேற்றுமையின்றி, வேண்டுவோர்க்கு வேண்டுகின்ற உதவியைச் செய்ய வேண்டும். மற்றும், இந்தத் தொண்டர் படையானது, அஹிம்ஸை வழியிலேயே செல்ல வேண்டும்; எந்த ஒரு முகாந்தரத்தைக் கொண்டும் ஹிம்ஸைப் பாதையில் போகக்கூடாது, இன்னும் இந்தத் தொண்டர்படையானது, கட்சியின் நோக்கத்தை எடுத்துக் காட்டக்கூடிய மாதிரி, தனியாக ஓர் உடையை அணிந்து கொள்ளலாம்; ஏன், அணிந்து கொள்ளவே வேண்டும். ஒரு ராணுவத்திற்குள்ள ஒழுங்கு, கட்டுப்பாடு முதலிய எல்லாவற்றையும் இந்த தொண்டர்படை அனுசரிக்க வேண்டும். தக்க காரணங்களில்லாமலும், அவசியமின்றியும் புதிதாக ஒரு கட்சி தோன்றுதல் கூடாது. அப்படித் தோன்றினால், ஏற்கனவேயுள்ள கட்சிகளின் திட்டங்கள், முறைகள், இவற்றைக் காட்டிலும் முன்னேற்றகரமான, ஜனங்களுக்கு அதிகமான நன்மையை அளிக்கக்கூடிய திட்டங்களையும் முறைகளையும் கொண்டதா யிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதற்கு ஒரு நாட்டின் அரசியல் வாழ்க்கையில் இடமுண்டு; பொதுமக்களின் ஆதரவும் கிடைக்கும். அப்படிப் புதிதாகத் தோன்றுகின்ற ஒரு கட்சியானது, பொது ஜனங்களின் ஆதரவையும் அங்கீகாரத்தையும் உடனடியாக எதிர் பார்க்க முடியாது; எதிர்பார்க்கவும் கூடாது. தனது திட்டங் களையும் முறைகளையும் செயலில் கொண்டு வந்து காட்டி, ஜனங்களை நம்பச் செய்ய வேண்டும். குறைந்த பட்சம் மூன்று வருஷமோ நான்கு வருஷமோ ஆன பிறகு தான், ஒரு கட்சியானது, ஜனங்களால் கவனிக்கப் படுகிற ஒரு நிலைமையை அடைகிறது. அது வரையில் அந்தக் கட்சி பொறுமையுடன் தன் கடமைகளைச் செய்து வரவேண்டும். மற்றக் கட்சிகளை அழித்துவிட்டு, தானொன்று மட்டுமே வாழ வேண்டும். தன் கட்சி பலத்தைக் கொண்டு சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென்று ஒரு கட்சி முனையுமானால் அந்தக் கட்சியை ஓங்கவிடக்கூடாது; ஜனங்கள் அதனை நிராகரிக்க வேண்டும். தேசத்தில் நெருக்கடியான நிலைமை ஏற்படுகிற பொழுது, எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்துழைக்க முன்வரவேண்டும்; ஒன்று சேர்ந்து அந்த நெருக்கடியைச் சமாளிக்க வேண்டும். அந்தச் சமயத்தில் எந்தக் கட்சி ஒத்துழைக்க முன் வரவில்லையோ அந்தக் கட்சி, நாட்டிற்குத் துரோகஞ் செய்ததாகவே கருதப்பட வேண்டும். ஒரு கட்சியினுடைய பெருமை, அவசியம் ஏற்படுகிறபொழுது மற்றக் கட்சிகளுடன் ஒத்துழைப்பதிலேயே இருக்கிறது. அதுபோலவே, ஒரு கட்சியானது தேர்தலில் தோல்வியடைந்து விட்டால், அந்தத் தோல்வியைப் பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்; வெற்றி கொண்ட கட்சியின் மீது வன்மங்காட்டக் கூடாது. அடுத்த தேர்தலில் தனக்கு வெற்றி கிடைக்கக்கூடிய வகையில் வேலை செய்ய வேண்டும். வெற்றியையும் தோல்வியையும் சரி சமானமாகக் கருதுகின்ற மனப்பான்மை எந்த ஒரு கட்சி அங்கத்தினருக்கும் இருக்க வேண்டும். தேர்தலில் யார் வெற்றியடைந்தவர்களோ அவர்கள், வெற்றியடையத் தகுதியயுடைவர்கள், அவர்களுக்கும் நாட்டு முன்னேற்றத்தில் அக்கரை உண்டு. அவர்களுடைய கொள்கைகளைப் பொறுத்த மட்டில் அவர்கள் உண்மையானவர்கள் தான் என்று தோல்வியடைந்தவர்கள் ஒப்புக் கொள்ளவேண்டும்; ஒப்புக் கொள்வதோடு மட்டுமின்றி அவர்களை - வெற்றியடைந்தவர்களைப் - பாராட்டவும் வேண்டும். கட்சியானது உயிருள்ள ஒரு தாபனம். காலதேச வர்த்த மானங்களை அனுசரித்துத்தன் கொள்கைகளை முறைகளையும் மாற்றியமைத்துக் கொள்ள அதற்கு உரிமையுண்டு. அப்படியே சந்தர்ப்பத்திற்கேற்றாற்போல், நிமிர்ந்து நிற்க வேண்டிய இடத்தில் நிமிர்ந்து நின்றும், வளைந்து கொடுக்க வேண்டிய இடத்தில் வளைந்து கொடுத்தும், தன் காரியங்களைச் சாதித்துக் கொள்ள ஒரு கட்சி முனையுமானால் அதில் தவறொன்றுமில்லை. ஒரு கட்சியின் காரியங்களில் உறுதியும் இரக்கமும் கலந்திருக்க வேண்டும். நல்லது எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்கின்ற சுபாவம், நல்லதைச் செய்ய வேண்டுமென்பதில் போட்டி போடுந்தன்மை, இவ்விரண்டும் ஒரு கட்சிக்கு இருக்குமாயின், அந்தக் கட்சி நிச்சயம் நீடித்த ஆயுளுடையதாயிருக்கும். ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு, அறிவு உரம் மட்டும் போதாது; உணர்ச்சி நீரும் தேவை. போராடுஞ்சக்தி, போராட்டத்தைச் சமாளிக்குஞ் சக்தி, இரண்டினையும் அளிப்பது உணர்ச்சிதான். இந்த உணர்ச்சி எப்பொழுதும் ஊற்றெடுத்து ஓடிக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இதற்காக அவ்வப்பொழுது ஊர்வலங்கள் நடத்த வேண்டும்; கூட்டங்கள் போட வேண்டும்; விழாக்கள் கொண்டாட வேண்டும்; இவற்றில் அழகும் இனிமையும் கலந்திருக்க வேண்டும். அழகையளிப்பன, மகர தோரணங்கள், உருவப் படங்கள், கொடிகள் முதலியன; இனிமையைத் தருவன கோஷ்டி கானங்கள் முதலியன. ஒரு கட்சியானது, ஒழுங்குக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்; ஒரே தலைமைக்குட்பட்டிருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் உடனுக்குடன் முடிவுக்கு வர வேண்டும். இந்த மூன்று அமிசங்களிலும் ஒரு கட்சியும் ஒரு படையும் ஒன்றெனக் கூறுவார்கள் அறிஞர்கள். ஒரு கட்சிக்கு ஒரு குரல்தான் இருக்க வேண்டும். அந்தக் குரல்தான் கட்சித் தலைவரின் குரல்; அல்லது அவரால் நியமிக்கப்படுகிறவரின் குரல். கட்சியின் கொள்கைகளுக்கு வியாக்கியானம் செய்தல், கட்சியின் முடிவுகளை வெளியிடுதல், இவைபோன்றவற்றை, கட்சியின் தலைவரே செய்ய வேண்டும். கட்சிக்குப் புறம்பானவர்களிடம் கட்சியின் சார்பாகப் பேச, தலைவர் ஒருவருக்கே அனுமதி இருக்க வேண்டும். கட்சிக்குள், கட்சிக் கூட்டங்களில், அங்கத்தினர்கள், தங்கள் கருத்துக்களைத் தாராளமாக வெளியிடலாம்; தலைவரின் நடவடிக்கைகளைப் பரிசீலனை செய்யலாம்; தலைவர் இன்னின்னபடி நடந்து கொள்ள வேண்டுமென்று யோசனை கூறலாம்; ஆனால் கட்சிக்கு வெளியே, ஒரு தளகர்த்தனின் ஆணைக்குட்பட்டிருக்கும் போர் வீரர்கள் போலவே நடந்து கொள்ள வேண்டும். கட்சிக் கூட்டங்களில் வாதப்பிரதிவாதங்களெல்லாம் நடந்து கடைசியில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுமானால், அந்தத் தீர்மானத்தை அமுலுக்குக் கொண்டுவரச் செய்வது தலைவரின் கடமை; தீர்மானப்படி நடக்க வேண்டியது அங்கத்தினர் கடமை. ஒரு கட்சி, தேர்தலில் பெரு வெற்றியடைந்து, அதன் விளைவாக அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக் கொள்கிறதென்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது, அஃது, அந்தக் கட்சி அரசாங்கம், எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதைப் பற்றிச் சிறிது கூறுவோம். முதலாவது, அரசாங்க நிருவாகத்தைக் கட்சியின் செல்வாக்குக்கு எந்த விதத்திலும் உட்படுத்தக்கூடாது. கட்சி அங்கத்தினர்கள், அரசாங்கத்தின் அன்றாட நிருவாகத்தில் தலையிட இடங்கொடுக்கக் கூடாது. உத்தியோகதர்களை நியமனஞ் செய்கிற விஷயத்தில், கட்சி அங்கத்தினர்களுக்கு எவ்வித சலுகை களும் காட்டக்கூடாது. கட்சியைச் சேர்ந்தவர்களோ, சேராதவர்களோ, யார் திறமையுள்ளவர்களோ, யோக்கியதை யுடையவர்களோ அவர்களையே உத்தியோகதர்களாகத் தெரிந்தெடுக்க வேண்டும். கட்சி, வகுப்பு, மதம் முதலிய வேற்றுமைகள், உத்தியோகதர்களின் நியமன விஷயத்தில் இடம்பெறுதல் கூடாது. நியமிக்கப்படுகின்ற உத்தியோகதர்களும், அரசாங்கத்தின் தயவைப் பெறவேண்டி, அரசாங்கக் கட்சியினருக்கு எவ்வித சலுகைகளும் காட்டக்கூடாது; அப்படியே தம் வகுப்பினர், தம் மதத்தினர், இப்படிப்பட்டவர்களிடத்தில் பாரபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது. அப்படிச் சலுகைகள் காட்டினாலோ, பாரபட்சமாக நடந்து கொண்டாலோ அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தை நடத்துகின்ற கட்சியைச் சேர்ந்தவர்கள், மற்றக் கட்சிகளைச் சேர்ந்தவர்களிடத்திலாகட்டும், பொது ஜனங்களிடத்திலா கட்டும், கண்ணியமாகவும் பெருந்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் உண்மையும் ஒழுக்கமும் பிரகாசிக்க வேண்டும். அவர்கள் உழைப்பிலே இன்பமும், ஊதியத்திலே திருப்தியும் அடைய வேண்டும். ஒரு கட்சி அங்கத்தினர் களிடத்தில் எந்த அளவுக்கு சீலம், சேர்மை, ஊக்கம், உறுதி முதலியன வெல்லாம் இருக்கின்றனவோ அந்த அளவுக்கே அந்தக் கட்சியினால் நடத்தப்படுகின்ற அரசாங்கம் வெற்றியடைகிறது. ஆகையால் இந்த அளவை அதிகப்படுத்திக் கொண்டு வரவேண்டியது கட்சியின் பிரதியோர் அங்கத்தினருடைய கடமையுமாகும். 4. அங்கத்தினர் முதல் தலைவர் வரை ஒரு கட்சியைச் சேர்ந்தவர்களை மூன்று பிரிவினராகப் பிரித்துப் பேசுவதுண்டு. முதலாவது அங்கத்தினர்கள்; இரண்டாவது பக்தர்கள்; மூன்றாவது தலைவர்கள். இந்த வரிசையை மாற்றி முதலில் தலைவர் களை வைத்துச் சொல்வதுமுண்டு. ஒரு கட்சியில் சேர விரும்புவோர், முதலில், அந்தக் கட்சியின் கொள்கைகளை நன்கு அறிந்து கொள்ள வேண்டும், அடுத்தபடி, கட்சியின் விதிகளை ஒரு முறைக்குப் பல முறை படித்துப் பார்த்து அவற்றின்படி தாம் ஒழுங்காக நடந்துவர முடியுமாவென்று நிதானித்துக் கொள்ள வேண்டும். பின்னர், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற சந்தாவைத் தவறாது நெடுகிலும் செலுத்திக் கொண்டு வர முடியுமாவென்று தமது பொருளாதார நிலைமையையும் சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வளவிலும் தம்மை திடப்படுத்திக் கொண்ட பிறகே ஒருவர், கட்சியின் அங்கத்தினராதல் வேண்டும். கட்சியின் நிருவாக சபையோ, காரிய சபையோ அங்கீகரித்துக் கொண்ட பிறகுதான் ஒருவர் உரிமையுள்ள அங்கத்தினராகின்றார். இதுவே பொதுவான சம்பிரதாயம். ஒரு கட்சியில், சாதாரண அங்கத்தினரே பெரும்பாலோராயிருக் கின்றனர். கட்சியின் மற்றப் பிரிவினராகிய தலைவர்களும் பக்தர்களும் கூட, சாதாரண அங்கத்தினராகத்தான் முதன் முதலில் கட்சியில் சேர்ந்து கொள்கிறார்கள். திறமைக்காகவும் உழைப்புக்காகவும் முறையே தலைவர்களாகவோ பக்தர்களாகவோ அங்கீகரிக்கப் பட்ட பிறகுகூட, இவர் களுடைய அங்கத்தினர் பொறுப்பு இவர்களிடமிருந்து விலகுவ தில்லை. தலைவர்களோ, பக்தர்களோ, தனிப்பட்ட பிறவிகளல்ல; நேரடியாக அந்தப் பதவிகளில் கொண்டு வைக்கப்பட்டவர்களுமல்ல; அங்கத்தினர்களிலிருந்து வந்தவர்களே. எனவே மேற்சொன்ன மூன்றுபிரிவினரும் ஒரு பிரிவினரே யென்று கொள்ளல் பொருந்தும். அங்கத்தினர்கள், எடுத்தவுடனே, பொறுப்புள்ள பதவிகளை வகிக்க வேண்டுமென்று ஆசைப்படக் கூடாது. உமேதவாரிகள் மாதிரி சிறிது காலம் இருந்து, கட்சியின் கொள்கைகள், நடைமுறைகள் முதலிய அனைத்திலும் பரிச்சயம் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படிப் பரிச்சயம் பெற்றுக் கொள்கிறபோது அநுதாப நோக்கு வேண்டும்; குற்றங் கண்டு பிடிக்க வேண்டுமென்ற மனப்பான்மை கூடாது. திறமையினாலும் உழைப்பினாலும் கட்சியில் முன்னுக்கு வர முயல வேண்டுமே தவிர, வேறு வகைகளில் முயலக்கூடாது. பொதுவாக, கட்சியின் தீர்மானங் களுக்குக் கட்டுப்பட்டும், கட்சியின் கௌரவத்திற்கும் பழுது வராமலும் நடந்து கொள்வது பிரதியோர் அங்கத்தினருடைய கடமையாகும். அங்கத்தினர்களுக்கு அடுத்தபடி பக்தர்கள். தங்கள் சொந்த நலத்தைப் பொருட்படுத்தாமல், கட்சி நலத்திற்காக அல்லும் பகலும் பாடுபடுகிற அனைவரும் பக்தர்களே. இவர்கள், கட்சியின் தொண்டர் படையைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்; சேராதவர்களாகவும் இருக்கலாம். ஆனால் கட்சியின் ஒவ்வொரு காரியத்தையும் தங்கள் சொந்தக் காரியம் போல், சொந்தக் காரியத்தைவிட அதிக சிரத்தையுடன் கவனிக்கிறவர்கள் இவர்கள். சுருக்கமாக இவர்களைக் கட்சி வெறியர்கள் என்று கூறலாம். இவர்கள், தங்கள் கட்சி ஒன்றையே மேலானதாகக் கருது வார்கள்; எந்த ஒரு பிரச்னையையும் கட்சிக் கண் கொண்டுதான் பார்ப்பார்கள். இவர்களுடைய கட்சிப் பற்றானது. சில சமயங்களில் இவர்களை நிதானமிழக்கச் செய்வதுமுண்டு. அப்பொழுது பிற கட்சி களைக் குறைகூறி அதன் மூலம் தங்கள் கட்சியை உயர்த்திக் காட்டப் பார்ப்பார்கள். ஆனால் இவர்கள் சிறந்த தியாகிகள். கட்சியின் நோக்கம் நிறைவேற வேண்டுமென்பதற்காக, எந்தவிதமான துன்பங்களையும் இவர்கள் முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள். தங்கள் தியாகத் திற்காக இவர்கள் எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டார்கள். இவர்களுடைய எண்ணிக்கை சிறிதாயிருந்தாலும், இவர் களுடைய சேவை பெரிதாயிருக்கிறது. ஒரு கட்சியின் முன்னேற்றம், இவர்களுடைய சேவையில் தானிருக்கிறது. பக்தர்களுக்குப் பிறகு தலைவர்கள். மற்ற தாபனங்களைப் போலவே ஒர கட்சிக்கும் காரிய சபையென்றும் நிர்வாக சபையென்றும் இப்படிச் சில உட்சபைகள் உண்டு. இன்னும் தலைவரென்றும், காரியதரிசிகளென்றும், பொக்கிஷதார்களென்றும் சில உத்தியோகதர்கள் உண்டு. இந்த உத்தியோகதர்களையும், மேற்படி உட்சபைகளின் அங்கத்தினர்களையும், இங்ஙனமே சட்டசபை அங்கத்தினர்களையும், மந்திரிமார்களையும், ஆக எல்லோரையும் சேர்த்துத் தலைவர்களென்று பொதுப்பட அழைப்பது ஒரு வழக்கம்; ஒரு மரியாதை முறை. ஆனால் இஃதொரு மரியாதை முறைதான்; உண்மையுரையல்ல. இதை வாசகர்கள் நன்றாக மனத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கட்சியில், பதவியோ, உத்தியோகமோ வகிக்கிற எல் லோரையும் தலைவர்களென்று கொள்ள முடியாது; அப்படியே, பதவியோ, உத்தியோகமோ வகிக்காதவர்களைத் தலைவர்களில்லை யென்று தள்ள முடியாது. ஒரு தலைவர் என்று சொன்னால், அவரிடம் சில யோக்கி யதைகள் இருக்க வேண்டும்; சில லட்சணங்கள் இருக்க வேண்டும். இந்த யோக்கியதைகளும் லட்சணங்களும் யாராரிடத்தில் இருக்கின்றனவோ அவர்களெல்லோரும் தலைவர்கள்தான். அவர்கள், பதவியிலோ, உத்தியோகத்திலோ இருந்தாலுஞ் சரி, இல்லாவிட்டாலுஞ் சரி, தலைவர்கள் தலைவர்களே. அவர்கள் எப்பொழுதும் தலைவர்களாகவே கௌரவிக்கப் படுகிறார்கள். இத்தகைய தலைவர்கள் ஒரு கட்சியில் வெகு சிலராகவே இருப்பர். அப்படியானால், ஒரு தலைவரின் யோக்கியதைகள் என்னென்ன, லட்சணங்கள் என்னென்னவென்று வாசகர்கள் கேட்கலாம். இந்தக் கேள்விக்கு விடை காணுமுன்னர், வாசகர்கள், கட்சியின் முக்கியமான உத்தியோகதர்களை வரிசைக் கிரமமாக அறிமுகப்படுத்திக் கொள்வது அவசியமாகும். எந்த ஒரு கட்சிக்கும் ஒரு தலைவருண்டு. இவரை பிரசிடெண்ட்1 என்றும் சேர்மன்2 என்றும் ஒவ்வொரு கட்சியினர் ஒவ்வொரு விதமாக அழைப்பர். சாதாரண பாஷையில் இவரைக் கட்சியின் உத்தியோக ரீதியான தலைவர் அல்லது கட்சியின் பொதுவான தலைவர் என்று கூறலாம். இவர் சாதாரணமாக வருஷத்திற்கொரு முறை தெரிந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்த ஒரு வருஷ காலம் வரையில், இவரே, கட்சிக் கூட்டங்களில் தலைமை வகிக்க வேண்டும்; கட்சிக் காரியங்களை நடத்திக் கொடுக்க வேண்டும். தலைவருக்கு அடுத்தபடி, ஒரு கட்சியின் முக்கியமான உத்தி யோகதர் காரியதரிசி. ஒரு கட்சிக்கு, ஒரு காரியதரிசியோ, ஒருவருக்கு மேற்பட்ட காரியதரிசிகளோ இருக்கலாம். கட்சியின் காரியங் களனைத்தையும் கவனிக்க வேண்டியவர்கள் காரியதரிசிகளே, கட்சிக் காரியத்தை நிருவாகஞ் செய்தல், கிளை தாபனங்களை மேற்பார்வை யிடுதல், பிரசாரம் நடத்துதல், இவை போன்ற பலவும் காரியதரிசிகளின் பொறுப்புக்களேயாகும். அரசாங்க தாபனத்தைப் போலவே ஒரு கட்சிக் காரியாலயமும், பல இலாகாக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வோர் இலாகாவும் ஒவ்வோர் உத்தியோகதர் பொறுப்பில் ஒப்படைக்கப்படலாம். ஆனால் இவ்விலாகாக்கள் அனைத்திற்கும் மேற்பார்வையாளர் களாக இருக்கிறவர்கள் காரியதரிசிகளே. காரியதரிசிகளுக்கு அடுத்தாற்போல் பொக்கிஷதார். கட்சியின் வரவு செலவுகளைக் கவனிப்பது, கட்சியின் நிதியைப் பெருக்குவது, சந்தாக்களை நிலுவையில்லாமல் வசூலிக்கச் செய்வது இவை பலவும் இவருடைய அலுவல்கள். தலைவர், காரியதரிசிகள், பொக்கிஷதார் ஆகிய இந்த உத்தியோகதர்கள் தவிர, காரிய சபை, நிருவாக சபை, அங்கத்தினர் ஆகியோர் இருக்கின்றனர். இவர்களனைவரையும் சேர்த்து, கட்சியின் மேல் வரிசையென்று கூறலாம். இவர்கள், தேர்தல் காலங்களில், காற்றாடிபோல் பறந்து பறந்து சுற்றுப் பிரயாணஞ் செய்து, கட்சியின் கொள்கைகளையும், அந்தக் கொள்கைகளை நிறைவேற்ற வகுப்பட்டிருக்கும் திட்டங்களையும் ஓட்டர்களுக்கு விளக்கிச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள். கட்சிக்குத் தேர்தலில் வெற்றி கிட்டுவதோ, தோல்வி கிடைப்பதோ இரண்டும், இவர்கள் செய்யும் பிரசாரத்தைப் பொறுத்திருக்கிறது. ஒரு கட்சியின் பொதுவான அமைப்பு இது. இதைத் தவிர, கட்சிக்குள்ளேயே ஒரு கட்சியுண்டு. அதுதான் சட்டசபைக் கட்சி. அதற்கும் மேற்சொன்ன மாதிரி, தலைவர், உபதலைவர், காரியதரிசிகள், பொக்கிஷதார் ஆகிய உத்தியோகதர்கள் உண்டு. இதைச் சிறிது விளக்கிச் சொன்னால்தான் புரியும். தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறுகிறதென்று வைத்துக் கொள் வோம். அந்தக் கட்சியின் அங்கத்தினர்கள் சட்ட சபைக்குச் சென்றதும், அங்கு அந்தக் கட்சியினராகவே இருந்து பணியாற்றக் கடமை ப்பட்டிருக்கிறார்கள். அப்படிப் பணியாற்றுவது சுலபமாயிருக்கும் பொருட்டு அவர்களுக்குச் சட்ட சபையில் பிரத்தியேகமாக, அதாவது ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து அமர்கிற வகையில், இடம் அளிக்கப்படுகிறது. அவர்களும் கட்டுக்கோப்பான ஓர் அமைப்பாக இருந்து சட்டசபை சம்பந்தமான அலுவல்களைக் கவனிக்கிறார்கள். இதற்காக மேற்சொன்ன மாதிரி தலைவரென்றும் காரியதரிசிகளென்றும் இப்படிச் சில உத்தியோகதர்களை நியமித்துக் கொள்ள வேண்டியது அவசிய மாயிருக்கிறது. இவர்கள் எந்தக் கட்சியின் பெயரால் சட்ட சபைக்கு வந்திருக்கிறார்களோ அந்தக் கட்சியின் பெயராலேயே சட்ட சபையிலும் அழைக்கப்படுகிறார்கள். உதாரணமாக, காங்கிர கட்சியென்று சொல்கிறோம். இது பொது, சட்ட சபைக்குள்ளிருக்கிறவர்களோ வெளி யிலிருக் கிறவர்களோ, காங்கிரஸைச் சேர்ந்த பிரதம அங்கத்தினர் முதல் தலைவர்கள் வரை எல்லோரையும் சேர்த்து இப்படி அழைக்கிறோம். இவர்களில், சட்ட சபையிலுள்ள காங்கிர பிரதிநிதிகளை மட்டும் தனியாகப் பிரித்து, சட்டசபை காங்கிர கட்சியென்று அழைக்கிறோம். அவ்வளவு தான். இதுபோலவே ஒவ்வொரு கட்சியிலும் உண்டு. சட்ட சபைக் கட்சி உத்தியோகதர்களில் தலைவர், காரிய தரிசிகள் முதலியவர்களைத் தவிர மற்றொரு முக்கியமான உத்திய யோகதர் உண்டு. இவரை ஆங்கிலத்தில் விப்1 என்று அழைப்பர். தமிழில் கொறடா என்று கூறுவர். ஒரு கட்சிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கொறடாக் களும் இருத்தல் உண்டு. சபையின் கூட்டங்களில் கட்சி அங்கத்தினர்களை ஆஜராயிருக்குமாறு செய்வது இந்தக் கொறடாவின் பொறுப்பு. சபையில், முக்கியமான பிரச்னைகள் ஓட்டுக்கு விடப்படுவதுற்கு முந்தி இவர் மிகவும் சுறுசுறுப்பாயிருப்பார். ஏனென்றால், ஆங்காங்குக் கலைந்து கிடக்கும் அங்கத்தினர்களை ஒன்று திரட்டி ஓட்டுச் செய்யுமாறு செய்வது இவர் கடமையாயிருக்கிறது. கட்சி அங்கத்தினர்களில் எத்தனை பேர் சபையில் ஆஜராயிருக்கிறார்கள், இன்னும் எத்தனை பேர் ஆஜராக வேண்டும். இன்னும் எத்தனை பேர் ஆஜராகியிருந்தால் கட்சிக்குப் பெரும்பான்மையான ஓட்டுகள் கிடைக்கும் என்பவைகளை யெல்லாம் இவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்; அவ்வப்பொழுது தமது கட்சித் தலைவருக்குத் தகவல் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இவர், ஏகதேசமாகத்தான் சபையில் வாதங்களில் கலந்து கொள்வார். ஆனால் சபையின் எல்லாக் கூட்டங்களுக்கும் இவர் ஆஜராயிருக்க வேண்டும். சபையில் நடைபெறும் வாதத்தின் போக்கை இவர் நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். சாதாரணமாக இந்த உத்தியோகத்திற்கு, எல்லோரையும் கட்டியணைத்துக் கொண்டு போகிற தன்மையுடையவர்களே தெரிந்தெடுக்கப்படுவார்கள். சபையின் இன்னின்ன கூட்டங்களுக்குக் கட்டாயம் ஆஜரா யிருக்க வேண்டுமென்று கட்சித் தலைவர், கட்சி அங்கத்தினர்களுக்கு விடுக்கும் தாக்கீதுக்கும் கொறடா என்றே பெயர். சம்மன்2 என்று நீதி தல பாஷையில் இதனைக் கூறலாம். ஆகவே, கொறடா என்பது, ஒரு நபரின் உத்தியோகப் பெயராகவும், ஓர் உத்தரவுச் சீட்டின் பெயராகவும் முறையே இருக்கிறது. ஒரு கட்சியின் அங்கத்தினர்கள், பக்தர்கள், உத்தியோக தர்கள் ஆகிய பலரையும் பற்றி இது காறும் கூறி வந்தோம். இனி, இவர்களனைவரையும் முன்னின்று அழைத்துக் கொண்டு போகின்ற, ஏற்கனவே சொன்னபடி அணைத்துக் கொண்டு போகின்ற தலைவர் களைப் பற்றிச் சில வார்த்தைகள் கூறுவோம். யாரும் திடீரென்று ஒரு கட்சியின் தலைவராகி விட முடியாது. பணமோ, பிறவியோ, ஒருவரைத் தலைமைப் பதவியில் கொண்டு அமர்த்தாது. அப்படி ஏதேனும் ஒரு வெளி பலத்தைக் கொண்டு தலைமைப் பீடத்தை எட்டி முட்டிப் பிடித்தாலும், அதில் நீண்ட காலம் இருக்க முடியாது. அது, சூழ்ச்சிகள் மலிந்த சிறைக்கூடமாகவே இருக்கும். சுய பலத்தைக் கொண்டுதான் யாரும் தலைமை தானத்தை அடைய முடியும்; அப்படித்தான் அடைய வேண்டும். இதற்குச் சில வருஷங்களாவது பிடிக்குமல்லவா? படிப்படியாக முன்னுக்கு வந்த தலைவர்களால் தான் ஒரு கட்சிக்கு அதிகமான நன்மையைச் செய்ய முடியும், ஏனென்றால், அவர்கள், கட்சியின் பல துறைப் போக்குகளையும் நன்கு அறிந்து கொண்டிருப் பார்கள்; எதை எப்பொழுது செய்தால் கட்சிக்குச் சாதகமுண்டாகு மென்பதைத் தெரிந்து கொண்டிருப்பார்கள்; கட்சியினரின் மனோ திடத்தையும் செயலாற்றும் திறனையும் எளிதிலே உணர்ந்து, அதன்படி திட்டங்கள் வகுத்து அனுஷ்டானத்திற்குக் கொண்டுவரச் செய்வார்கள். கட்சிக்கு நன்மையுண்டாக வேண்டும். கட்சியினால் நாட்டுக்கு நன்மையுண்டாக வேண்டுமென்பதே ஒரு தலைவரின் கலையாத உறுதியாயிருக்க வேண்டும். அதற்காக, எல்லாவித துன்பங்களையும் இனிய முகத்துடன் ஏற்றுக் கொள்கின்ற கலங்காத உள்ளம் அவரிடம் இருக்க வேண்டும். அந்த உள்ளத்தில், இன்னா செய்தார்க்கும் இனியவே செய்ய வேண்டுமென்ற ஈரம் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்க வேண்டும். அவர்தான் தலைவர்; உண்மையான தலைவர். அவரிடத்தில் கட்சியினருடைய அபிமானம் மட்டுமல்ல, கட்சியைச் சேராத மற்றவர்களுடைய அபிமானமும் மண்டியிட்டுக் கிடக்கும். ஒருவர், தலைவராக வரவேண்டுமானால், தலைவராயிருந்து, நிலைத்திருக்கும்படியான நன்மைகளைச் செய்து கொண்டிருக்க வேண்டுமானால், அவர், உடல்வலிமை, உள்ளத்தூய்மை, ஆழ்ந்த நூலறிவு, பரந்த உலக அனுபவம், கேட்டாரைப் பிணிக்கும் நாவன்மை, நல்ல ஞாபக சக்தி, படபடப்பில்லாத சுறுசுறுப்பு, கருணையோடு கலந்த கண்டிப்பு, சொல்லிலும் செயலிலும் ஒருமைப்பாடு, எல்லோரிடத்திலும் சமநோக்கு, எவ்விஷயத்திலும் நேர்மை, இவை பலவும் உடையவரா யிருக்க வேண்டும். மூன்று விதமான நம்பிக்கைகள் அவருக்கு இருக்க வேண்டும். முதலாவது, தன்னம்பிக்கை; இரண்டாவது, தனது கட்சியின் நோக்கத்தில் நம்பிக்கை; மூன்றாவது, தனது கட்சியினரிடத்தில் நம்பிக்கை. இந்த மூன்று நம்பிக்கைகளும் ஒரு தலைவரை மேலே உயர்த்தி விடுகின்றன. இன்னும், ஒரு தலைவர், கட்சியிலுள்ள திறமைசாலிகளைத் தெரிந்தெடுத்து அவர்களைத் தலைமைப் பதவிக்குத் தகுதிப்படுத்த வேண்டும். ஒரு கட்சியில், தலைவர்களுக்குப் பஞ்சமே இருக்கக்கூடாது. எந்த நிலைமையிலும் எந்த விதமான பொறுப்பையும் ஏற்று நடத்தக்கூடிய தலைவர்கள் ஒரு கட்சியில் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்க வேண்டும். ஜன ஆட்சி நடைபெறும் ஒரு நாட்டில் செல்வாக்குள்ள எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் இரண்டு விதமான பொறுப்புக்கள் இருக்கின்றன. ஒன்று, அரசாங்கத்தின் எதிர் தரப்பில் இருந்து, அதன் குறைநிறைகளை அவ்வப்பொழுது எடுத்துக் காட்டி அதனை நல்வழிப்படுத்துவது; மற்றொன்று, அரசாங்கத்தை நடத்துவது. இந்த இரண்டுவித கடமை களையும் நன்கு தெரிந்திருக்கக்கூடிய தலைவர்கள் ஒரு கட்சியில் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான பேராயிருக்கின்றனரோ அவ்வளவுக்கவ்வளவு அந்தக் கட்சியின் செல்வாக்கு ஜனங்களிடத்தில் பரவுகிறது; அதன் ஆயுளும் நீடிக்கிறது. தலைவர்களை, ஒரு கட்சியின் உயிர்நாடி யென்று கூறு வார்கள் அறிஞர்கள். ஒரு கட்சி, ஓங்குவதும், ஒடுங்குவதும், எத்தகைய தலைவர்களை அது பெற்றிருக்கிறது என்பதைப் பொறுத்திருக்கிறது.  வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல்கள் தலைவர்கள் வரிசை திரட்டு 1 1. மகாத்மா காந்தி திரட்டு 2 2. பண்டித மோதிலால் நேரு 3. லோகமான்ய பாலகங்காதர திலகர் 4. காந்தி யார் 5. காந்தியும் ஜவஹரும் 6. காந்தியும் விவேகானந்தரும் திரட்டு 3 7. நான் கண்ட நால்வர் 8. ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு தீர்க்கதரிசி திரட்டு 4 9. ஐசக் நியூட்டன் 10. எடிசன் 11.. சர்.சி.வி. இராமன் 12. ஜெகதீ சந்திரபோ 13. பிரபுல்ல சந்திர ரே 14. டார்வின் திரட்டு 5 15. மாஜினி 16. மாஜினியின் மனிதன் கடமை 17. மாஜினியின் மணிமொழிகள் திரட்டு 6 18. உரூசோ 19. உரூசோவின் சமுதாய ஒப்பந்தம் திரட்டு 7 20. இட்லர் 21. முசோலினி திரட்டு 8 22. கார்ல் மார்க் 23. சன்யாட்சன் திரட்டு 9 24. அபிசீனிய சக்ரவர்த்தி 25. கமால் அத்தாத் துர்க் 26. சமுதாய சிற்பிகள் கடித வரிசை திரட்டு 10 27. மகனே உனக்கு 28. அவள் பிரிவு 29. பிளேட்டோவின் கடிதங்கள் 30. வரலாறு கண்ட கடிதங்கள் 31. பாரதமாதாவின் கடிதங்கள் நாடக வரிசை திரட்டு 11 32. பாணபுரத்து வீரன் 33. அபிமன்யு 34. மனோதருமம் 35. உத்தியோகம் 36. உலகம் பலவிதம் சுதந்திரம் வரிசை திரட்டு 12 37. மானிட ஜாதியின் சுதந்திரம் 38. சுதந்திர முழக்கம் 39. சுதந்திரத்தின் தேவைகள் யாவை? நாட்டு வரிசை திரட்டு 13 40. பெயின் குழப்பம் 41. நமது ஆர்யாவர்த்தம் 42. ஆசிய உலக சமாதானம் திரட்டு 14 43. ஜெக்கோலோவாகியா 44. பாலதீனம் திரட்டு 15 45. சோவியத் ருஷ்யா திரட்டு 16 46. பர்மா வழி நடைப்பயணம் 47. பிரிக்கப்பட்ட பர்மா திரட்டு 17 48. புதிய சீனா திரட்டு 18 49. ருஷ்யாவின் வரலாறு திரட்டு 19 50. சீனாவின் வரலாறு திரட்டு 20 51. கிரீ வாழ்ந்த வரலாறு அரசியல் வரலாறு திரட்டு எண். 21 52. 1919 (அ) பஞ்சாப் படுகொலை திரட்டு எண். 22 53. பெடரல் இந்தியா 54. சமதான இந்தியா 55. இந்தியாவின் தேவை 56. பார்லிமெண்ட் 57. நமது தேசிய கொடி திரட்டு எண். 23 58. பிளேட்டோவின் அரசியல் திரட்டு எண். 24 59. அரசியல் வரலாறு 60. ஐக்கிய தேசதாபனம் 61. அரசாங்கத்தின் பிறப்பு 62. பிரஜைகளின் உரிமைகளும் கடமைகளும் 63. அரசியல் கட்சிகள் திரட்டு எண். 25 64. ராஜதந்திர- யுத்த களப் பிரசங்கங்கள் திரட்டு எண். 26 65. புராதன இந்தியாவில் அரசியல் பொது திரட்டு எண். 27 66. கௌரிமணி 67. தலை தீபாவளி 68. Essentials of Gandhism கட்டுரை இலக்கியம் (வாழ்வியல் நூல்கள்) திரட்டு எண். 28 69. நமது பிற்போக்கு 70. எப்படி வாழ வேண்டும் 71. நாடும் மொழியும் 72. சுதந்திரமும் சீர்திருத்தமும் திரட்டு எண். 29 73. நகைத்தல் நல்லது 74. பெண்மையிலேதான் வாழ்வு 75. மனிதன் யார்? 76. இக்கரையும் அக்கரையும் திரட்டு எண். 30 77. கட்டுரைக் களஞ்சியம் 78. உலகக் கண்ணாடி 79. நாடாண்ட நங்கையர் திரட்டு எண். 31 80. வெ.சாமிநாத சர்மா வாழ்க்கை வரலாறு * * * * *