வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல் திரட்டு - 16 பர்மா வழி நடைப்பயணம் பிரிக்கப்பட்ட பர்மா ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 16 ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2006 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10.5 புள்ளி பக்கம் : 16+ 200= 216 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 140/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள் தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணியாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ்த் தென்றல் திரு. வி. f.; மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில்தோற்று விக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்க தரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர் களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒரு போதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும். சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும். காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே! எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்றுதலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே! 6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டை - 622 002. டோரதி கிருஷ்ணமூர்த்தி பதிப்புரை ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற இந்திய தேசியப் பெருங் கவிஞன் பாரதியின் உணர்வுகளை நெஞ்சில் தாங்கி உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங் களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலகச் சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர். அவர் காலத்தில் நிகழ்ந்த உலக நிகழ்வுகளை தமிழர்களுக்குப் படம் பிடித்துக் காட்டியவர். அரசியல் கருத்துகளின் மூலம் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் ஊட்டி வீறு கொள்ளச் செய்தவர். உலக அரசியல் சிந்தனைகளைத் தமிழில் தந்து தமிழிலேயே சிந்திக்கும் ஆற்றலுக்கு வழிகாட்டியவர். தாம் வாழ்ந்த காலத்து மக்களின் பேச்சு வழக்கையே மொழிநடையாகவும், உத்தியாகவும்கொண்டு நல்ல கருத்தோட்டங் களுக்கு இனிய தமிழில் புதிய பொலிவை ஏற்படுத்தியவர். தமிழ் மக்களுக்கு விடுதலை உணர்வையும்; தேசிய உணர்வையும்; சமுதாய உணர்வையும் ஊட்டும் வகையில் அரும்பணி ஆற்றியவர். தமிழ்ப்பண்பாட்டின் சிறப்புக்களை போற்றியவர்; பொருளற்ற பழக்க வழக்கங்களைச் சாடியவர். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களும் உலகளாவிய அரசியல் பார்வையைப் பெறுவதற்கு வழி அமைத்தவர். மேலை நாட்டுஅறிஞர்களின் தத்துவச் சிந்தனைகளை எளிய இனிய தமிழில் தந்தவர். வரலாற்று அறிவோடு தமிழ்மொழி உணர்வை வளர்த்தவர். அரசியல் தத்துவத்தை அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ் நாட்டுத் தலைவர்களுக்குக் கற்றுத் தந்தவர். தமிழகத்தின் விழிப்பிற்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர். கல்வியில் வளர்ந்தால்தான் தமிழர்கள் உலகில் உயர்ந்து நிற்க முடியும் என்பதை தம் நூல்களில் வாயிலாக உணர்த்தியவர். நன்மையும் தீமையும் இருவேறுநிலைகள்; தீமையை ஓங்கவிடாமல் நன்மையை ஒங்கச் செய்வதே மக்களின் கடமையென்று கூறியவர். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகின்றன. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல்களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்பதற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல் திறமையைக் குறிக்கோளாகக் கொண்ட - பகுத்தறிவுச் சிந்தனையை அறிவியல் கண் கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தந்துள்ளோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரைகளை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். இவர் நூல்களைப் படிப்பவர்களுக்கு அந்தந்த நூல்களின் விழுமங்களோடு நெருக்கம் ஏற்படுவது உறுதி. இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ்க் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் நாட்டு வரலாற்று நூல்கள் 12 இப்பன்னிரண்டையும் 8 நூல் திரட்டுகளில் அடக்கி வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம். இவரின் தமிழ் நூல்கள் வெளிவந்த காலம் வடமொழி ஆளுமை ஒங்கியிருந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழி நடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடையிலும், மொழி நடையிலும், நூல் தலைப்பிலும் எந்த மாற்றமும் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக சர்மாவின் நூல்களைப் படைக்கருவி களாகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தவழ விடுகிறோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற இந்தியத் தேசியப் பெருங் கவிஞன் பாரதியின் குரலும், ஒற்றுமையுடன் தமிழர் எல்லாம் ஒன்று பட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும், என்ற தமிழ்த்தேசிய பெருங் கவிஞன் பாரதிதாசனில் குரலும் தமிழர்களின் காதுகளில் ஓங்கி ஒலிக்கட்டும். உணர்வுகள் ஊற்றாகப் பெருகி நல்ல செயல்களுக்கு வழிகோலட்டும். நாட்டு வரலாற்றுத் தொகுதிகளுக்கு தக்க நுழைவுரை வழங்கி பெருமைப்படுத்தியவர் ஐயா. பி. இராமநாதன் அவர்கள். இப்பெருந்தகை எம் தமிழ்ப்பணிக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறார். அவருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் உரித்தாக்கக் கடமைப்பட்டுயுள்ளேன். பதிப்பாளர் சர்மாவின் பொன்னுரைகள்.......  மாந்தப்பண்பின் குன்றில் உயர்ந்து நில். ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் கைவிடாதே.  பிறரிடம் நம்பிக்கையுடனும்; நாணயத்துடனும் நடந்து கொள். அது உன்னை உயர்த்தும்.  உழைத்துக் கொண்டேயிரு; ஓய்வு கொள்ளாதே; உயர்வு உன்னைத் தேடி வரும்.  பொய் தவிர்; மெய் உன்னைத் தழுவட்டும்; பெண்மையைப் போற்றி வாழ்.  மொழியின்றி நாடில்லை; மொழிப் பற்றில்லாதவன்,நாட்டுப் பற்றில்லாதவன். தாய்மொழியைப் புறந்தள்ளி அயல் மொழியைப் போற்றுவதைத் தவிர்.  தாய்மொழியின் சொல்லழகிலும் பொருளழகிலும் ஈடுபட்டு உன் அறிவை விரிவு செய். பெற்ற தாய்மொழியறிவின் விரிவைக் கொண்டு உன் தாய் மண்ணின் உயர்வுக்குச் செயல்படு.  உயர் எண்ணங்கள் உயர்ந்த வாழ்க்கைக்கு அடித்தளம் முயற்சி- ஊக்கம் - ஒழுக்கம் - கல்வி இவை உன் வாழ்வை உலகில் உயர்த்தும் என்பதை உணர்ந்து நட.  ஈட்டிய பொருளை அனைவருக்கும் பகிர்ந்தளித்து வாழக் கற்றுக்கொள். உதவா வாழ்க்கை உயிரற்ற வாழ்க்கை.  கடமையைச் செய்; தடைகளைத் தகர்த்தெறி; விருப்பு-வெறுப்புகளை வென்று வாழ முற்படு.  ஒழுக்கமும் கல்வியும் இணைந்து வாழ முற்படு; ஒழுக்கத் திற்கு உயர்வு கொடு.  எந்தச் செயலைச் செய்தாலும் முடிக்கும் வரை உறுதி கொள். தோல்வியைக் கண்டு துவளாதே;  உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் ஒரே நிலையில் வாழக் கற்றுக்கொள்.  நாட்டுக்குத் தொண்டு செய்வது தரிசுநிலத்தில் சாகுபடி செய்வது; கண்ணிழந்தவர்களுக்குக் கண் கொடுப்பது.  விழித்துக் கொண்டிருக்கும் இனத்திற்குத்தான் விடுதலை வாழ்வு நெருங்கிவரும். விடுதலை என்பது கோழைகளுக்கல்ல; அஞ்சா நெஞ்சினருக்குத்தான். சில செய்திகள்........ பிரிக்கப்பட்ட பர்மா இந்நூல் வெ. சாமிநாத சர்மா பர்மாவில் வாழ்ந்த காலத்தில் வெளியிடப்பட்ட சிறுநூல். 1937இல் இந்தியாவிலிருந்து பர்மா பிரிக்கப்பட்டது. பர்மாவின் அக்கால அரசியல் நிலையையும், பிரிவினைக்கு முந்தைய- பிந்தைய பர்மாவின் நிலையையும் விளக்கும் நூல். இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்ட பர்மா வரலாற்றையும், பர்மாவின் வரலாறு ஆங்கிலேயர் ஆதிக்கத்தால் அடிமைப்பட்ட முறையும், பிரிக்கப்பட்ட பர்மாவின் அரசியல் அமைப்பும் இன்னும் பல செய்திகளும் பேசப்படும் நூல். பிரிக்கப்பட்ட பர்மாவில் வாழ்ந்த இந்தியர்களின் வாழ்க்கை எரிமலையின் மீது செழித்திருந்த சோலையில் வாழ்வது போன்றது என்பதை சர்மா குறிப்பிடுகிறார். இந்தக் குறிப்பு அன்றைய சூழலை விளக்குவது. படிப்பார் அனைவரும் எண்ணத்தக்கது. பர்மா வழி நடைப்பயணம் அமுதசுரபி இதழில் வெ.சாமிநாத சர்மா அவர்கள் எழுதி தொடர்கட்டுரையாக வெளிவந்தவற்றை திரு.பெ.சு.மணி அவர்கள் தொகுத்து 1979இல் முதல் பதிப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இது ஒரு பயண இலக்கியம். 1942இல் இரண்டாம் உலகப் போர் உலகை உலுக்கிய காலம். உறுதியையும், நம்பிக்கையையும் வழித்துணையாகக் கொண்டு பாமர மக்களோடு தாமும் தம் மனைவியும் பர்மாவிலிருந்து கால்நடையாக தாய்மண்ணை நோக்கி, நடைப்பயணம் வந்த போது, காட்டுப் பூச்சி களாலும், காலரா, வாந்திபேதி, ரத்தவாந்தி, பிளேக் நோய் போன்ற நோய் களாலும், நடைபயணக் களைப்பாலும் மடிந்த தமிழ்மக்களின் துன்பம் நிறைந்த சூழல்களையும் நெஞ்சில் சுமந்து வந்த செய்திகளையும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பயண இலக்கியமாகப் படைத்துள்ளார். அவரோடு பயணம் செய்வதைப் போன்ற ஒரு உணர்வை இந்நூல் உருவாக்கு கிறது. 12.2.42 இல் தொடங்கி 24.4.42 கல்கத்தா வந்தடைந்ததும், பின்னர் 13.5.1942இல் சென்னை வந்தடைந்தது வரை ஒவ்வொரு இடத்திலும் தங்கியிருந்த முகாம்களில் பட்ட துன்பங்களும், தரை வழி, காட்டு வழி, படகு வழி, தொடர்வண்டிப் பயணங்களும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பதிவுகள் படிப்பவர் நெஞ்சத்தை உருக்கும் செய்திகளாகும். பயண நூல்கள் பலவற்றைப் படித்துள்ளேன். நானும் இரண்டு நூல்களை எழுதி இருக்கிறேன். அந்த வகையில் சேர்ந்த தல்ல இது. மரண யாத்திரையைக் கூறும் நூல் இது. இதற்கு இணை சொல்ல இன்னொரு நூல் எனது நினைவிற்கு வரவில்லை. கண்ணீரால் வரைந்த கருத்தோவியம் - ம.பொ.சி. மியான்மர் ( 1989க்கு முன்னர் பர்மா) பர்மா நாட்டு மக்களில் பெரும்பான்மையினர் மிராம்மா (Miramma ) இனத்தவர். இவர்கள் திபேத்திய-மங்கோலிய இனத்தவர். கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்கு முன் வடக்கிலிருந்து வந்து குடியேறியவர்கள். பிற சிறு பான்மையினர் கிழக்குப் பகுதியில் உள்ள மான் (mon) இனத்தவர், வடகிழக்குப் பகுதியில் உள்ள ஷான் (shon) இனத்தவர் சயாம்கரேன்கள் ஆகியோர் ஆவர். 2. கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே பர்மாவுக்கும் இந்தியா விற்கும் பண்பாட்டு, சமய, வணிகத் தொடர்புகள் இருந்து வந்துள்ளன. ( காண்க. க.த. திருநாவுக்கரசு (1987) தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப்பண்பாடு (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பக்.25 -83 பர்மா) கி.பி.13ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ்க் கல்வெட்டு ஒன்று பாகாங் என்னும் இடத்தில் உள்ளது: வதிஸ்ரீ புக்கம் ஆன அரிவர்த்தனப் புரத்து நானாதேசி விண்ணகர் ஆழ்வார் கோயில் திருமண்டபமும் திருக்கதவும் இட்டேன், மலை மண்டலம் சாய மகோதையர் பட்டினத்து ஈராயிரான சிறியனான சீகுரசேகர நம்பியேன் (Eigrapical Indica Vol 7 பி 197-8) பின்வருமாறு சுருக்கமாகப் பட்டியலிடலாம். கி.பி.1044-1077 அனவ்ரதன் ஆட்சி - பகான் நகதில் (இவன் தேரவாத புத்தசமயத்தைத் தழுவினான்) 1084 - 1112 கியான் சித்தன் ஆட்சி; (அனவ்ரதனுக்கும் (இந்தியாவில்) வைசாலி அரசு குலத்தைச் சார்ந்த பட்டத்தரசிக்கும் பிறந்தவன். இவன் சோழ அரச குடும்பப் பெண்ணை மணந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 1287 - சுமார் 1500 வரை சீன நாட்டு மங்கோலிய அரசன் குப்ளாய் கான் படையெடுத்ததால் பர்மிய அரசு அழிந்து சிற்றரசுகள் (ஆவா, பெகு, தவுங் அரக்கான்) தோன்றின. 1551-1569 பயின்னங் ( Bayinnanung) தலைமையில் பர்மாப் பகுதிகள் ஒரே அரசனின் கீழ் வந்தன. 1755 - அலாங்பயா (Alaung pya) ஆட்சி தொடக்கம் 1824 -6 ஆங்கிலேயருடன் முதல் பர்மா போர் 1852 ஆங்கிலேயருடன் இரண்டாவது பர்மா போர் 1885 - 6 ஆங்கிலேயருடன் மூன்றாவது பர்மா போர் 1880 பர்மாவின் மொத்த மக்கள் தொகை 37 லட்சம். இந்தியர்கள் தமிழர்கள் உட்பட) 1850 முதல் குடியேறி வந்ததால் 1880லேயே பர்மாவில் 1,50,000 இந்தியர் இருந்தனர். அவ்வெண்ணிக்கை 1900இல் 5 இலட்சமாக உயர்ந்தது (அப்பொழுது ரங்கூன் மக்கள் தொகை 2,48.000 பேரில் 1,20,000 பேர் இந்தியர்கள்) 1931இல் மொத்த மக்கள் தொகை 1.68 கோடியில் இந்தியர் 11 லட்சம் பேர். - 4 லட்சம் தமிழர் உட்பட. 1937: பர்மாவின் மீது சப்பானியர் மீது படையெடுத்த பொழுது 5 லட்சம் இந்தியர் ( 3 லட்சம் தமிழர் உட்பட) ஏதிலிகளாக இந்தியா வந்தனர். 1941 ஆம் ஆண்டு அளவில் பர்மாவில் மூன்று இலட்சம் ஏக்கர் விளைநிலம் நாட்டுக் கோட்டைச் செட்டிமார் சொத்தாக இருந்தது. 1940இல் அவர்கள் நடத்திய காசுக்கடைகள் 1665 (மொத்த முதலீடு ஏறத்தாழ பத்துகோடி ரூபாய்) 1950ஆம் ஆண்டில் இந்தியர் எண்ணிக்கை 5,50,000. 1962: அயல்நாட்டவரை வெளியேற்றும் திட்டத்தின் கீழ் இரண்டு இலட்ச்த்துக்கு மேற்பட்ட ஏதிலிகள் இந்தியா வந்தனர். 1969இல் இந்தியர் எண்ணிக்கை 2.50 இலட்சம். 1948 பர்மா விடுதலை ஆங்சாங் அமைச்சரவையினர் கொலை; யூ நு தலைமையில் மக்களாட்சி. 1962 மார்ச்: போர்ப்படையினர் ஆட்சி - தளபதி நெ.வின் தலைமையில் 1988 ஆகடு 8 முதல் மீண்டும் போர்ப்படை தளபதிகள் ஆட்சி. 1989 பர்மாவின் பெயர் மியான்மர் என மாற்றம். சில ஆண்டு களாக போர்ப்படை தளபதிகள் ஆட்சிக்கு எதிராக ஆங் சான் சூ கியூ தலைமையில் கிளர்ச்சி நடந்து வருகிறது. (1948க்குப் பின்னர் பர்மா வரலாற்றை செல்பி டக்கர் Shelby Tucker 2002 இல் Burma, the Curse of Independence பெங்குயின் பதிப்பகம்) என்னும் நூல் தருகிறது. பர்மாவில் மக்களாட்சி முறை மீண்டும் துளிர்க்குமா, எப்பொழுது, எண்பது அமெரிக்கா, சீனா முதலிய வல்லரசுகள் எந்த அளவுக்கு இதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதைப் பொறுத்ததே ஆகும். பி. இராமநாதன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் பெ.சு. மணி, ஞானாலயா கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், புலவர் கோ. njtuhr‹, Kidt® ïuhFyjhr‹, Kidt® ïuhk FUehj‹, K¤jÄœ¢ bršt‹ f.K., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செ. சரவணன் செல்வி. வ. மலர் மேலட்டை வடிவமைப்பு இ. இனியன் அச்சுக்கோப்பு முனைவர் செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், சு. கீதாநல்லதம்பி குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோ பாய் மெய்ப்பு வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மபிரியா, நா. இந்திரா தேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன் உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா, இல.தருமராசு, ரெ. விசயக்குமார் எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . பொருளடக்கம் சர்மாவின் சாதனைகள் iii பதிப்ரை x வாசகர்களுக்கு 3 1. ஜப்பானியர் தந்த கிரும பரிசு! 5 2. அடுத்தடுத்து விமானத் தாக்குதல் 9 3. விதியின் வழியில் . . . 13 4. நன்றிக்குரிய நண்பர்கள் 18 5. பரிவுகாட்டிய உறவினர்கள் 22 6. புறப்பாடு 27 7. புரோம் நகரத்தில் 29 8. பர்மிய உழவர்களின் உதவி 32 9. உண்டி கொடுத்து உயிர் கொடுத்தவர் 34 10. மாந்தளை சேர்தல் 37 11. மாந்தளை வாசம் 41 12. ரங்கூன் நிலைமை 45 13. இந்தியர்கள் அவதி 48 14. விமானத்திலும் கால்நடையாகவும் 51 15. அதிகாரிகள் அளித்த ஆறுதல் 53 16. அமைதி தந்த நூல்கள் 60 17. நடுவில் வந்த யோசனை 62 18. காலத்தில் கிடைத்த உதவி 65 19. நகர்ந்து சென்ற ரெயில் . . . 68 20. மொனீவாவில் 71 21. நீராவிப் படகுகள் 77 22. கலேவாவுக்கு 83 23. கூலியாட்களின் உபசரணை 86 24. ஹிட்லர் மூலம் அறிமுகம் 89 25. டாமுவுக்குத் திறந்த லாரியில் 94 26. தபால் நிலையத்தில் வாசகம் 100 27. டாமு முகாம் அளித்த காட்சி 105 28. கறுப்பு - வெளுப்பு வழிகள் 109 29. காட்டுத் தீ அனுபவம் 112 30. நாகர்களும் மணிப்பூரிகளும் 117 31. டோலிகள் கிடைத்தன 121 32. கடைசி யாத்திரைக்கு ஒத்திகையா? 126 33. ஒன்று படுத்திய ராம காதை 131 34. ஏணையில் அமர்ந்து வருகை 133 35. ஒரு சட்டைக்குள் இருவர் 136 36. இயற்கைக் காட்சி 140 37. வறுத்த கேழ்வரகு கொடுத்த வேதனை! 142 38. மணிப்பூரிகளின் கலையுணர்ச்சி 145 39. அன்பின் பிணைப்பு 148 40. மேலதிகாரியின் மேலோட்டமான பார்வை 150 41. இம்பால் முகாமில் 153 42. இலவசச் சவாரி 157 43. லாரியில் நாற்காலி தண்டனை 159 44. தாய் நாட்டு மண்ணிலே 163 45. டிமாபூர் முகாமில் 165 46. கல்கத்தா நோக்கி 168 47. கடைசியில் சென்னைக்கு 171 பிரிக்கப்பட்ட பர்மா I சரித்திரச் சுருக்கம் 175 II பிரிவினைக்கு முன்னர் 179 III பிரிவினைக்குப் பிறகு 183 பர்மாவைப் பற்றிய சில புள்ளி விவரங்கள் 193 பர்மா வழி நடைப்பயணம் 1. ஜப்பானியர் தந்த கிரும பரிசு! எனது நீண்ட நடைப் பயணத்தைப்பற்றி, வெகுநாட்களுக்குப் பிறகு, இப்பொழுது நினைத்தால்கூட என் இருதயம் நொறுங்கி விடும் போலிருக் கிறது. என் உடம்பிலிருந்து வியர்வை கொட்ட ஆரம்பிக்கிறது. என்னைப் பற்றிய நினைவில்லாமலேயே வழியில் நான் சந்தித்த ஆபத்துக்களுக்கு ஈடு கொடுத்தேன் என்று சுமார் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்து போன பாஹியான் என்ற சீன யாத்திரிகன் சொன்னான். 1942-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஜப்பானியர்களுடைய ஆகாய விமானத் தாக்குதலின் விளைவாகப் பர்மாவிலிருந்து இந்தியாவுக்கு நடந்து வந்தவர்கள், தங்களுடைய நடைப்பய ணத்தைப் பற்றி இப்பொழுது பல ஆண்டுகளுக்குப் பிறகு நினைத்துக் கொண்டால் கூட, பாஹி யானுடைய மேற்சொன்ன வாசகம் அந்த நினைவிலேயே மிதந்து வரும். அவன் தன்னைப் பற்றிய நினைவில்லா மலேயே வந்ததாகக் கூறுகிறான். பர்மாவிலிருந்து நடையாக வந்தவர் களில் அநேகர் தங்கள் உயிரைப் பற்றிய நினைவில்லாமலேயே வந்தவர்கள். அப்படிப்பட்டவர்கள் எப்படியோ உயிர் பிழைத்து வந்து சேர்ந்துவிட்டார்கள். உயிர்மீது அதிகமான பற்று வைத்து, அந்த நினைவாகவே வந்தவர்கள் உயிரை வழியிலேயே விட்டு விட்டார்கள். மரணத்தைக் காட்டிலும் மரண பயம் கொடியது என்று சொல்வார்கள். இந்த மரண பயமே இவர்கள் உயிரை விழுங்கிவிட்டது என்று சொல்லலாம். மற்றும் உடைமைகள் மீது மிதமிஞ்சிய பற்று வைத்தவர்கள், அந்த உடைமைகளை இழந்துவிடும் நிர்ப்பந்த நிலைமைக்காளாகி இழந்து விட்டோமே என்ற ஏக்கத்திலேயே தங்கள் உயிரை இழந்துவிட்டார்கள். இன்னும் அநேகர், தங்களிடமுள்ள அற்ப சொற்பமான உடைமைகளை, அந்த உடைமைகள் மீது கொண் டிருந்த பற்றுக் காரணமாக, தலையிலோ, தோளிலோ சுமந்து கொண்டு வந்து, வழியிலேயே அந்த உடைமைகளை ஒவ்வொன்றாகத் துறந்து விடும்படியான கட்டாய நிலைக்குட்பட்டார்கள். இப்படி, ஆயிரக்கணக்கான பேர் இந்தியாவுக்குப் புறப்பட்டு வரவேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டது? சுருக்கமான கதை இதுதான். இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பிற்பகுதியில், அதாவது, 1941-ஆம் வருடக் கடைசியில் ஜப்பானின் ஏகாதிபத்திய வெறி ஜாவா, சுமத்ரா, மலேயா முதலிய நாடுகளை ஒவ்வொன்றாக இரை யாக்கிக் கொண்டு வந்தது. பர்மா மட்டும் தப்ப முடியுமா? 1941-ஆம் வருடம் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம், ஒரு நாள் முற்பகல், ஜப்பானிய ஆகாய விமானங்கள் பர்மாவின் தலைநகரான ரங்கூனுக்கு மேலே வட்டமிட்டுவிட்டுச் சென்றன. ஆனால் குண்டுகள் ஏதும் போடவில்லை. இருந்தாலும் ஆபத்து நெருங்கி வருவதாக ஜனங்கள் உணரத் தலைப்பட்டுவிட்டார்கள். போதாக் குறைக்கு விமானங்கள் வட்டமிட்டுச் சென்ற தினத்திலிருந்து தினந் தோறும் ஜப்பானியர்கள் தங்கள் ரேடியோ மூலம் ராணுவ தளங்கள், பெட்ரோல் கிடங்குகள் போன்றவைகளே தாக்குதலுக்கு இலக்காயிருக்கு மென்றும், அந்த மாதிரியான இடங்களில் வசிப்பவர்கள் விலகிச் சென்று விடுதல் நல்லதென்றும் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டு வந்தார்கள். டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி கிரும பரிசு ஒன்று ரங்கூன் வாசிகளுக்கு வழங்கப் போவதாகவும் அறிவித்தார்கள். இந்த ரேடியோச் செய்திகள், ரங்கூன் நகரத்திலும் சரி, அதன் சுற்றுவட்டாரத்திலும் சரி, வசித்துக் கொண்டிருந்த எல்லா வகை ஜனங் களிடையிலும் ஒருவிதக் கவலையை உண்டுபண்ணிவிட்டன; குறிப்பாக இந்தியர்கள் அதிகமாகக் கவலைப்படத் தொடங்கி னார்கள். பர்மாவில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வந்த இந்தியர்கள் அந்த நாட்டின் பொருளாதாரச் செழுமைக்குத் தாங்கள் எவ்வளவு தான் உதவி புரிந்திருந்தாலும் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவாக, பர்மியர்கள், தங்களை வேண்டாதவர் களாகவே கருதி வருவதையும், இந்தச் சூழ்நிலையில் ஜப்பானின் ஆக்கிரமிப்பு ஏற்படுமானால், தங்கள் உயிருக்கும் பொருளுக்கும் உத்தரவாதம் சொல்லக் கூடியவர்கள் யாரும் இருக்க மாட்டார் களென்பதையும் தெரிந்து கொண்டார்கள். வெளிநாடு களில் எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் எவ்வளவு செல்வச் செழுமை யுடனும் செல்வாக் குடனும் இருந்தாலும் ஆபத்துக் காலத்தில் கைகொடுக்கக் கூடியது தாய் நாடுதான் என்ற உண்மையைத் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள். கிரும பரிசு வழங்கப் போவதாக அறிவித்திருந்த ஜப்பானியர் களுக்கு அந்த கிரும தினம் வரையில் பொறுத்து கொண் டிருக்க முடியவில்லைபோலும். அதற்கு இரண்டு நாள் முன்ன தாகவே சரியாக 1941-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி செவ்வாய்க் கிழமை முற்பகல் 10.45 மணிக்கு ஜன நடமாட்டம் மிகுந்திருந்த நேரத்தில் அவரவரும் அலுவலகங்களுக்கு அவசரம் அவசரமாகச் சென்று கொண்டிருந்தத் தருணத்தில் அபாய அறிவிப்புச் சங்கு ஊதியது. சில வினாடிகளுக்குள் எண்பதுக்கு மேற்பட்ட ஜப்பானிய விமானங்கள் ரங்கூன் நகரத்தைப் பலமாகத் தாக்க முற்பட்டன; அனற்பிழம்புகள் போன்ற குண்டுகளைப் பொழிந்தன; நகரமே குலுங்கிவிட்டது. ஜனங்கள் ஆங்காங்கு அகப்பட்ட கட்டிடத் திற்குள் சென்று பதுங்கிக் கொண்டார்கள். ஆனாலும் என்ன? சுமார் 2000க்கு அதிகமான பேர் கை வேறு, கால் வேறு, தலை வேறாகத் துண்டித்துப் போய்த் தெருக்களில் பிணமாகக் கிடந்தார்கள். இவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் இந்தியர்கள்; தெரு வெல்லாம் இரத்தப் பெருக்கு; பெரிய கட்டிடங்கள் சில நெருப்புப் பற்றிக் கொண்டன; சில விழுந்து தரைமட்டத்திற்கு வந்து விட்டன. ஒரே கோரக் காட்சி. இதற்கு மேல் எப்படி வருணிப்பது? பிற்பகல் சுமார் இரண்டரை மணிக்கு மேல் அபாயம் விலகிய சங்கு ஊதியது. அலுவலகங்களுக்குச் சென்றிருந்தவர்கள் அவரவர் வீடு நாடி ஓடி வந்தார்கள். பெண்டு பிள்ளைகள் கண் கலங்கி கிடப்பதைக் கண்டார்கள். எல்லோரையும் ஒரு வித அச்சம் ஆட்கொண்டு விட்டது. குறிப்பாக நகரத்தின் நடுப்பகுதியில் வசித்து வந்த மத்தியதரக் குடும்பத்தினரை இந்த அச்சம் அதிகமாய்ப் பீடித்தது. ஆனால், இந்த அச்சத்தில் இவர்கள் அமிழ்ந்து கிடக்கவில்லை. மேலும் மேலும் ஜப்பானிய ஆகாயத் தாக்குதல்கள் ஏற்படக் கூடுமென்று எதிர் பார்த்து அதிலிருந்துக் காப்பாற்றிக் கொள்ள, தற்காலிக ஏற்பாடாக அடுத்தடுத்த நாட்களில், நகரத்தின் சுற்றுப் பகுதியில் வசித்து வந்த அறிந்தவர் தெரிந்தவர் வீடு களுக்கு முக்கியமான சில சாமான்களை எடுத்துக் கொண்டு குடிபுகுந்தனர் பலர். அந்தச் சுற்றுப் பகுதிகளி லுள்ளவர்களும் இப்படி வந்தவர்களை இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தார்கள். பொதுவாகப் பர்மாவில், சிறப்பாக ரங்கூனில் இந்தியர் களிடையே அதிலும் தமிழர்களிடையே ஒருவித சகோதர உணர்ச்சி நிலவியிருந்தது. சம்பிரதாயங்களுக்கு அதிகமாகக் கட்டுப்படாமல் சம நிலையில் இருந்து சரளமாகப் பழகினார்கள். ஆபத்துக் காலத்தில் மனிதர்களிடையே வேற்றுமைகள் ஒடுங்கி ஒற்றுமை ஓங்குமென்று சொல்வார்கள். 23-ந் தேதி விமானத் தாக்குதலுக்குப் பிறகு இந்த ஒற்றுமை உணர்ச்சி தலைதூக்கி நின்றது. இருபத்தி மூன்றாந் தேதிக்குப் பிறகு 25-ந் தேதி, ஜப்பானி யர்கள் ரங்கூன் நகரத்திற்கு கிரும பரிசு வழங்கினார்கள். சொன்ன படிச் செய்து விட்டார்கள்! அன்று பகல் சுமார் 11 மணிக்கு ரங்கூனின் ஒரு பகுதியாகிய அல்லம் என்ற இடத்தில் சுமார்80-க்கு மேற்பட்ட ஜப்பானிய விமானங்கள் குண்டுகள் பொழிந்தன. இந்தத் தாக்குதலில் உயிர் சேதத்தைக் காட்டிலும் பொருட்சேதம் அதிகம். இந்தத் தாக்குதலின் விளைவாக ஜப்பானியர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. பிரிட்டிஷ் விமானங்களும் அமெரிக்க விமா னங்களும் சேர்ந்து ஜப்பானிய விமானங்களை இரண்டு தடவை எதிர்கொண்டு தாக்கி மொத்தம் 52 விமானங்களைக் கீழே வீழ்த்தி விட்டன. பிரிட்டிஷ் விமானங்களில் 2 மட்டுமே சேதமடைந்தன. இந்த இரண்டாவது தாக்குதலுக்குப் பிறகு ரங்கூனிலும் சுற்று வட்டாரத்திலும் இருந்த இந்தியர்களில் வியாபாரிகள், அரசாங்க ஊழியர்கள், இப்படி ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலோர், தங்கள் குடும்பத்துடன் தாய் நாடு செல்ல முற்பட்டனர். தாய்நாடு செல்வ தென்பது அப்பொழுது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. கப்பல் போக்குவரத்து நிச்சயமில்லாமலிருந்தது. எந்தக் கப்பல் எப் பொழுது புறப்படும் என்பது சரிவரத் தெரியவில்லை. அப்படித் தெரிந்தாலும், டிக்கட்டுகள் கிடைப்பது அரிதாகயிருந்தது. எப்படியோ ஓரளவு வசதியுடன் இருந்தவர்கள் வசதி செய்து கொண்டு, அகப் பட்ட கப்பல்களில் புறப்பட்டார்கள். 1941ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 27-ந் தேதியிலிருந்து அடுத்தடுத்துப் புறப்பட்ட கப்பல்கள், அளவுக்கு மிஞ்சிய பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு இந்தியா நோக்கிச் சென்றன. கப்பல்களில் செல்ல முடியாதவர்கள் அல்லது விரும்பாத வர்கள் அல்லது இன்னும் சிறிது காலம் பர்மாவிலேயே இருந்து சமாளித்துப் பார்ப்போம் என்று கருதியவர்கள் ஆகிய இப்படிப் பட்டவர்கள் பர்மாவின் வடக்குப் பகுதியிலுள்ள ஊர்களுக்கு ரெயில் மார்க்கமாகவோ, ஆற்று மார்க்கமாகவோ புறப்பட்டுச் சென்றார்கள். இரண்டு மார்க்கங்களிலும் நெருக்கடிதான். அகப்பட்ட இடங்களில் தொத்திக் கொண்டு சென்றனர் என்று கூற வேண்டும். கடல் வழியாகவோ ரெயில் வழியாகவோ, ஆற்று வழி யாகவோ செல்ல வகையில்லாதவர்கள், அதாவது துறைமுகத்திலும் ரெயில் நிலையங்களிலும் கூலி வேலை செய்து பிழைத்து வந்த வர்கள், ரிக்ஷா வண்டி இழுத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந் தவர்கள் 23-ந் தேதி முதல் விமானத் தாக்குதல்கள் ஏற்பட்ட தினத்திலிருந்தே, கால் நடையாகப் புறப்பட்டு விட்டனர். இவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேலிருக்கும். இந்தியாவை நோக்கிச் செல்வதாக எண்ணிக் கொண்டு இவர்கள் புறப்பட்டார்களாயினும் எந்த வழியாகச் செல்வது, எந்தவழி எப்படி இருக்கும், என்னென்ன வற்றைக் கடந்து செல்ல வேண்டும் என்ற விவரங்கள் ஒன்றையுமே அறிய மாட்டார்கள். ரங்கூனை விட்டு வெளியேறி விட வேண்டும் என்ற ஒரே நோக்கந்தான் இவர்களுக்கு இருந்தது. பண்டு நடந்ததனைப் பாடுகின்ற இப்பொழுதும் மண்டு துயரெனது மார்பெல்லாம் கவ்வுதே - பாரதியார்  2. அடுத்தடுத்து விமானத் தாக்குதல் டிசம்பர் மாதம் இருபத்தைந்தாந் தேதி அல்லம் பகுதித் தாக்குதலுக்குப் பிறகு சுமார் பத்து நாட்கள் வரை, ஜப்பானிய விமானங்கள் ரங்கூன் நகரத்தை எட்டிப் பார்க்கவில்லை. ஆனால் ஜப்பானியக் காலாட் படைகள், பர்மாவின் தென் கோடிப் பகுதி வழியாகவும் மத்தியப் பகுதி வழியாகவும் ரங்கூனை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என்ற செய்திகள் எட்டிக் கொண்டிருந்தன. ரங்கூன் நகரமோ நாளுக்கு நாள் சோபை இழந்துக் கொண்டு வந்தது; எங்கும் வெறிச்சோட ஆரம்பித்தது. 1942-ஆம் வருஷம் ஜனவரி மாதம் நான்காம் தேதி ஞாயிற்றுக் கிழமை மீண்டும் தாக்குதல் தொடங்கியது. அன்றைய தினத்திலிருந்து தினந்தோறும் தாக்குதல்தான். சாதாரணமாக, பத்து அல்லது பதினைந்து விமானங்களுக்குக் குறையாமல் வரும். சில நாள்களில் நூற்றுக்கும் அதிகமான விமானங்கள் வந்துபோவதுமுண்டு. இந்தத் தாக்குதல்களுக்கு வேளை நேரமில்லை. ஆனால், இராக் காலங்களில், குறிப்பாக நிலவு நாட்களில் இவை தீவிரமடைந்தன. சில நாட்களில் பகல் நேரத்தில் அரை மணி ஒரு மணி விட்டுவிட்டு இந்தத் தாக்கு தல்கள் நடைபெற்றன. உதாரணமாக 1942-ஆம் வருஷம், பிப்ரவரி மாதம் ஏழாந் தேதி முன்னாள் இரவு 2-15 மணியிலிருந்து மறுநாள் பகல் 12 மணி வரை விட்டு விட்டு ஏழு தடவை தாக்குதல்கள் நடை பெற்றன. சில நாட்களில், சில குண்டுகளை எறிந்து விட்டுச் செல்லும்; சில நாட்களில் வேவு பார்க்கின்ற முறையில் வந்து விட்டுப் போகும்; பொதுவாகவே இந்தத் தாக்குதல்கள், விமான நிலையம், அரசாங்க கட்டடம், மின்சார உற்பத்தி நிலையம், குழாய்த் தண்ணீர் விநி யோகத்திற்கு ஆதாரமாயிருந்த விசை தாபனம் - இப்படிப் பொது நலத்திற்காக இருந்தவற்றையே குறியாகக் கொண்டன. தாக்குதல்கள் நடைபெற்று வந்த காலத்தில் ரங்கூன் நகரம் இரவு நேரத்தில் பயங்கரமாகக் காட்சியளித்தது. இருட்டடிப்பு உத்தரவு அமுலுக்கு வந்திருந்ததன் விளைவாக, நகரம் முழுவதும் ஒரே இருள் கவிந்து கொண்டிருந்தது. ஏ.ஆர்.பி. தொண்டர்கள், வீட்டுக்கு வெளியே தலைகாட்டாதீர்கள் என்று சீழ்க்கைக் குழல் (விசில்) மூலம் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள். ஜன நடமாட்டம் இராது. ஜப்பானிய விமானங்கள் ஆகாயத்தில் வட்ட மிட்டுக் குண்டுகளைப் பொழிந்து கொண்டிருக்க அவற்றை பிரிட்டிஷ் பீரங்கிகள் கீழே இருந்து தாக்க, இவற்றினால் உண் டாகும் சப்தம் ஜனங்களைக் கதி கலங்கச் செய்யும். ஜனங்களை யென்ன, மிருகங்களைக்கூட விதிர்ப்புறச் செய்யும். அபாய அறிவிப்புச் சங்கின் சப்தத்தைக் கேட்ட மாத்திரத்தில், பசுக்கள் அம்மா என்று கதறுவதைக் கேட்கும் போது நம் வயிற்றில் ஏதோ ஒரு வேதனை வந்து புகுந்து குடைவது போலிருக்கும். நாய்கள் அழத் தொடங்கும். அந்த அழுகையைக் கேட்கிற போது ஐயோ, நன்றியுள்ள நாய்க் குலமே, உன்னுடைய இந்த அழுகை, உன் பிறவியோடு ஒட்டி வரும் நன்றி யுணர்ச்சியை எங்கே கொன்று தீர்த்து விடுமோ? நீயும் மனித குலத்தோடு சேர்ந்து விடுவையோ? என்று நாய்க் குலத்தின் மீது இரக்க உணர்ச்சி உண்டாகும். நகரத்தின் மையத்திலிருந்து சுமார் பத்து மைல் தொலைவில் உள்ளது, மிங்கலாடோன் என்ற விமான நிலையம். இதைக் குறியாக வைத்தே ஜப்பானிய விமானங்கள் அவ்வப்பொழுது குண்டுகளைப் பொழியும். குண்டுகள் வீழ்கிற போது ஏற்படும் அதிர்ச்சியினால் நகரத்தின் மையத்திலும் சுற்றுப் பகுதிகளிலும் உள்ள வீடுகளின் சுவர்கள் தரை பெயர்வது போல் ஆட்டங் கொடுக்கும். ஜன்னல் கம்பிகள் முறிந்து கொடுக்கிற மாதிரி சப்தம் உண்டாகும். அநேக வீடுகளில் சுவர்கள் பாளம் பாளமாக வெடித்துப் போயின. சுருக்க மாக பூமி அதிர்ச்சி ஏற்பட்டால், எப்படி அசையா பொருள்கூட அசைந்து கொடுக்குமோ அப்படியே இந்தக் குண்டுகள் வீச்சினால் உண்டான விளைவும் இருந்தது. யுத்தகாலத் தேவையை அனுசரித்து அரசாங்கத்தார் ஆங் காங்கு ஆள் பதுங்கிக் கிடங்குகள் அமைத்திருந்தனர். வீதிகளில் போய் வந்து கொண்டிருக்கிற ஜனங்கள் அபாய அறிவிப்புச் சங்கு ஊதிய வுடன், இந்தக் கிடங்குகளில் சென்று பதுங்கிக் கொள்வது, அபாயம் விலகிய சங்கு ஊதியவுடன் இவைகளிலிருந்து வெளியே வந்து அலுவல் களைக் கவனிக்கச் செல்வதும் சகஜமான காட்சிகளாயிருந்தன. வீட்டில் தங்கியிருக்கிறவர்கள் வீட்டுத் தோட்டத்தில் ஆள் பதுங்கிக் குழிகளைத் தோண்டி வைத்திருப்பார்கள். அந்தந்தக் குடும்பத்தினர் எண்ணிக்கையைப் பொறுத்து இவற்றின் அகல நீளம் இருக்கும். நான்கு அல்லது ஐந்து அடி ஆழத்திற்குக் குறையாம லிருக்கும். மேலே பூமி மட்டத்தில் துத்தநாகத் தகடுகளையோ, பலகைகளையோ வேய்ந்து அவற்றின்மீது மண்ணைப் போட்டு பச்சை இலைத் தழைகளைப் பரப்பிவிடுவார்கள். மேலாகப் பார்த்தால், தரையோடு தரையாக, செடி கொடிகள் படர்ந்திருக்கும் பூமியாகத் தெரியும். இந்தக் குழிக்குள் செல்ல ஒரு சிறிய நுழைவாயில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் உடம்பைக் கூனிக்ககுறுகி வளைந்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். அபாய அறிவிப்புச் சங்கு ஊதியதும், வீட்டிலுள்ளவர்கள் அவரவரும் அப்பொழுது செய்து வந்த காரியங்களை அப்படி அப்படியே நிறுத்திவிட்டு அவசரம் அவசரமாக இந்தக் குழிக்குள் புகுந்து கொண்டு விடுவார்கள். புகுந்து கொண்டால் என்ன? அமைதியாக இருக்க முடி கிறதா? சுமார் ஏழெட்டு மைல் தொலைவில், ஜப்பானிய விமானங் களிலிருந்து விழும் குண்டுகளின் அதிர்ச்சியினால், குழியின் பக்க வாட்டிலிருந்து மண் உதிர்ந்து கொண்டிருக்கும். சில சமயங்களில் மொத்தமாகவும் சரிந்து விழும். எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு தான், அபாயம் விலகிய சங்கு ஊதும் வரையில் இதில் அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும். முதலில் சில நாட்கள் வரை, இந்தக் குழி களில் புகுந்திருந்து, பிறகு வெளியே வருவதென்பது சிறிது சங்கட மாக இருந்தது. பிறகு சகஜமாகி விட்டது. இந்தக் குழிகளில் அடிக்கடி புகுந்து வெளிவருவதில் சலிப்பும் வெறுப்பும் கொண்டு விட்ட சிலர், சில நாட்களுக்குப் பிறகு, வந்தது வரட்டும் என்ற மனப்பான்மையுடன் வீட்டுக்குள்ளேயே தங்கியிருந் தனர். இவர்கள் உயிரின் மீது வைத்த பாசத்தினால் இப்படி இருக்க வில்லை. உயிர் மீது கொண்ட வெறுப்பினாலேயே இப்படி இருந்தனர். இந்தக் குண்டு வீழ்ச்சியின்போது, மனிதர்களுடைய பயந்த சுபாவம் பல விதமாக வெளிப்பட்டது. சிலர், அபாய அறிவிப்புச் சங்கு ஊதுவதைக் கேட்டதும், பரபரப்புக் கொண்டு அங்குமிங்கும், ஓடுவார்கள். சிலர், என்ன செய்வதென்று தெரியாமல் திக்பிரமை பிடித்தவர்கள் போலாகி விடுவார்கள். சிலருடைய நடையிலே தளர்ச்சி; பார்வையிலே சூனியம். சிலருக்கு உடம்பெல்லாம் வியர்த்து விறுவிறுத்துப் போகும். சிலர், வழக்கமான ஒரு சடங்கை நிறை வேற்றுகிற மாதிரி, காதுகளில் பஞ்சை அடைத்துக் கொள்வார்கள். மேல் வரிசை, கீழ்வரிசைப் பற்களுக் கிடையில் பென்சிலையோ வேறு குச்சியையோ இடுக்கிக்கொள்வார்கள். பயத்தினால் பற்கள் ஒன்றோ டொன்று உராய்ந்து சேதமடையாதிருக்கும் பொருட்டு இந்தப் பாது காப்பு. சிலர், கண்களை இறுக மூடிக் கொண்டு தரையில் குப்புற படுத்துக் கொண்டு கடவுள் பெயரை முணுமுணுப் பார்கள். சிலர், கேவிக் கேவி அழுவர். சிலர், ஜப்பானியர்களைச் சாபமிட்டுக் கொண்டிருப்பர். இப்படி உயிரின் மீது வைத்த பாசத்தினால் ஒவ் வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தற்காத்துக் கொள்வதில் முனைந்தனர். 23-12-41 முதல் 22-2-42 வரை சுமார் இரண்டு மாத காலத்தில், மொத்தம் எண்பத்தொன்பது தடவை ஜப்பானிய விமானங்கள் ரங்கூன் நகரைத் தாக்கின. அதாவது நூற்றெழுபத்தெட்டுத் தடவை அபாயச் சங்கின் அழுகைக் குரலைக் கேட்க வேண்டிய துர்பாக்கி யத்திற்குட்பட்டார்கள் ரங்கூன் வாசிகள். இந்தத் தாக்குதலில், பிரிட்டிஷ் பீரங்கிகள் கீழேயிருந்து தாக்கியதன் விளைவாக சுமார் இருநூறு ஜப்பானிய விமானங்கள் கீழே விழுந்து நாசமாயின. விமானத் தாக்குதல் ஏற்பட்ட ஒவ்வொரு நாளும் ரங்கூன் வாசிகள் செத்துப் பிழைத்து வந்தார்களென்று சொல்லவேண்டும். எனக்கும், என்னைச் சேர்ந்த சிலருக்கும் ஏற்பட்ட ஒரு நாள் அனுபவத்தை இங்குக் கூறுதல் பொருத்தமாயிருக்கும். 1942-ஆம் வருஷம் ஜனவரி மாதம் இருபத்தேழாம் தேதி செவ்வாய்க் கிழமை, இரவு சுமார் எட்டரை மணி. நல்ல நிலவு. ஜப்பானிய விமானமொன்று, மிகுந்த உயரத்தில் வட்டமிட்டுக் கொண்டு வந்தது. அதைத் தாக்கி வீழ்த்த பிரிட்டிஷ் விமான மொன்று மேலே பறந்து சென்றது. மல்யுத்தக்காரர்கள் எட்டிப் பிடித்து மேலும் கீழுமாகப் புரள்வது போல் இந்த இரு விமா னங்களும் கீழும் மேலுமாக மாறி மாறிப் பறந்து ஒன்றையொன்று தாக்கின. நடு ஆகாயத்தில் நடைபெறும் இந்த விமானச் சண்டை நாய்ச் சண்டை என்று அழைப்பார்கள். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சண்டையின் கடைசியில் பிரிட்டிஷ் விமானம் ஜப்பானிய விமானத்தைக் கீழே வீழ்த்தி விட்டது. வீழ்ந்த வேகத்தில் அந்த விமானத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்தன. வெடித்த அதிர்ச்சியினால், சுமார் இரண்டரை மைல் தொலைவி லிருந்த எங்கள் வீடு வாசல்களெல்லாம் ஆடிப்போயின. எங்கள் தலைமீதுதான் குண்டுகள் வீழ்ந்துவிட்டது போலிருந்தது. எங்கள் கண்கள் தாமாகவே மூடிக் கொண்டன. முடிவு காலம் வந்து விட்ட தாகவே உணர்ந்தோம். சில வினாடிகளுக்குப் பிறகு கண்ணைத் திறந்து பார்த்தால் எல்லோரும் உயிரோடேயே இருக்கிறோம்! அக்கம் பக்கத்திலிருந்தவர்கள், எங்கள் வீட்டின் மீது குண்டுகள் வீழ்ந்ததாகவும் தாங்கள் கும்பலோடு கோவிந்தன் திருவடிகளைக் காணச் சென்றுவிட்டிருப்போமென்று கருதி விட்டார்கள். அபாயம் விலகிய சங்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஊதியது. ஊதியதும், எல்லோரும் எங்கள் கதியை அறிந்து கொள்ள எங்களை நாடி ஓடி வந்தார்கள். நாங்கள் தெருப்பக்கமாக வந்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்து. ‘Ú§fŸ cÆnuhoU¡ »Ö®fsh?, என்று கேட்டு ஆச்சரியப்பட்டார்கள். உடனே விமானம் விழுந்த இடத்திற்கு ஓடினார்கள். அங்கு, விமானம் நொறுங்கிக் கிடப்பதையும், அதிலிருந்து நான்கு பேர், பிணமாகக் கீழே விழுந்து கிடப்பதையும் பார்த்தார்கள். இவர்கள் சென்று பார்ப்பதற்கு முன்ன தாகவே, சுற்றுப் பக்கத்திலிருந்த ஜனங்கள், வீழ்ந்து பட்டிருந்த அந்த விமானிகளின் கைக்கடிகாரம், பணப்பை, சில்லறைச் சாமான்கள் ஆகிய அனைத்தையும், தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருந்தார்கள்! ஈவு, இரக்கம் என்பதெல்லாம் பொருளாசைக்கு எவ்வளவு தொலைவில் இருக்கின்றன!  3. விதியின் வழியில் . . . நான், ரங்கூனில் 1937-ஆம் வருஷம் ஆகட் மாதம் தொடங்கி, 1942-ஆம் வருடம், பிப்ரவரி மாதம் வரை நடைபெற்று வந்த ஜோதி என்ற மாதப் பத்திரிகையின் நிருவாக ஆசிரியப் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தேன். இலக்கியம், அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் இப்படிப்பட்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்தப் பத்திரிகை, எத்தனையோ கஷ்டங்களுக் கிடையில் நடந்து வந்தது. இதன் அலுவலகம் முப்பத் தோராவது எண் வீதியில் அதாவது நகரத்தின் மையமான பகுதியில் இருந்தது. ஜப்பானிய விமானங்களின் தாக்குதல் தொடங்கிய சில நாட் களுக்குப் பிறகு, இந்த மையமான பகுதி எந்த நிமிஷத்திலும் ஆபத்துக்குட்படக் கூடுமென்று தோன்றியது. எனவே, நானும் அலு வலகத்து நண்பர்களும் யோசித்து, அச்ககத்தின் சாமான்கள், யந்திர வகை முதலியவைகளை இரண்டு பகுதிகளாக்கி, ஒன்றை நகரத்தின் மையத்திற்குச் சற்று எட்டினாற் போலுள்ளதும், தமிழர்கள் பெரும் பாலோர் வசிப்பதுமான காலாபதி என்ற இடத்திற்கு மாற்றினோம். மற்றொரு பகுதியை இருந்த இடத்திலேயே இருக்கட்டுமென்று விட்டு வைத்தோம். ஏனென்றால், பத்திரிகாலயத்தின் பதிவு செய்யப் பட்ட அலுவலகம் அதுவாக இருந்தபடியால் அப்படிச் செய்ய வேண்டியது அவசியமாயிற்று. தவிர எந்தவித இக்கட்டான நிலைமையிலும் பத்திரிகை தொடர்ந்து வெளிவர வேண்டுமென்று நாங்கள் கருதினோம். காலாபதிக்கு அச்சகத்தின் ஒரு பகுதி மாறிய பிறகு நான், பத்திரிகையின் ஆசிரியன் என்ற முறையில், அங்கேயே என் அலுவல் களைச் செய்து வர வேண்டியவனானேன். நான் வசித்துக் கொண்டி ருந்தது, காலாபதிக்குச் சுமார் மூன்று மைல் தொலைவிலுள்ள பக்டோ என்ற பகுதியில். அமைதி நிறைந்த ஒரு கிராமம் என்று இதனைச் சொல்லலாம். பெரிய உத்தியோகதர்கள் சிலரும், வியாபாரிகள் சிலரும் இங்கே வசித்துக் கொண்டிருந்தார்கள். தவிர, என்னுடைய உறவினர்கள் சிலரும் இங்கேயே சொந்த வீடுகள் அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். சிலருக்குக் கார் வசதிகள் இருந்தன. இதனால் ரங்கூன் நடுப்பகுதியில் அமைந்திருந்த அவரவர் அலுவலகங்களுக்குச் சென்று திரும்புவது சுலபமாயிருந்தது. தவிர, ரங்கூனுக்கும், இந்த பக்டோ என்ற பகுதிக்கும், ரெயில் போக்குவரத்து இருந்தது. தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், சென்னையை யொட்டினாற் போல் தியாகராயநகர், காந்தி நகர் போன்ற பகுதிகள் இல்லையா, மதுரையைச் சேர்ந்தாற்போல் சொக்கிக் குளம், தல்லாக் குளம் என்ற பகுதிகள் இல்லையா, அந்த மாதிரி ரங்கூன் நகரத்திற்கு இந்தப் பக்டோ. பொது நலப்பணிகள், பத்திரிகைத் தொண்டு முதலியவைகளினால் ஏற்படக்கூடிய பலவிதத் தொல்லை களுக் கிடையே நான், ஓரளவு மன அமைதி பெறுவதற்கு இந்த பக்டோ வாசம் உதவியாயிருந்தது. பக்டோவிலிருந்து காலாபதிக்கு நான் தினந்தோறும் நடந்தே போய் வந்து கொண்டிருந்தேன். சில நாட் களுக்குப் பிறகு நான் மேற்கொண்ட நீண்ட நடைப் பயணத்திற்கு இந்தச் சிறிது தூர நடை நல்ல பயிற்சியாயமைந்தது. பக்டோவில் வசித்து வந்த என் உறவினர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள், டிசம்பர் மாதம் இருபத்தைந்தாந் தேதி அவ்வப் பகுதி தாக்கு தலுக்குப் பிறகு இனியும் தாக்குதல் ஏற்பட்டால், தங்களால் தாக்குப்பிடிக்க முடியாதென்று தீர்மானித்து இருபத் தேழாந் தேதி இந்தியா நோக்கிப் புறப்பட்ட கப்பலில் பிரயாண மாயினர். எஞ்சியிருந்த உறவினர்களில் என் வாழ்க்கைத் துணைவி தவிர மற்றவர்கள் ஆண் பிள்ளைகள். இவர்களில் ஒருவர் திரு. வ. கு. சா. என்பவர். அரசாங்க உயர்தர உத்தியோகதராயிருந்தவர். பென்ஷன் பெற்றுக் கொண்டு வந்தார். எனக்குப் பல வகையிலும் ஆதரவாயிருந்தார். இவர் வீடும் நான் வசித்து வந்த வீடும் பக்கத்துப் பக்கத்தில் இருந்தன. இவருடைய வீட்டில் பெண்டு பிள்ளைகள் இருபத்தேழாந் தேதி கப்பலில் சென்றுவிட்ட பிறகு இவரும், இவருடைய மருகரான வி. வே. ரா. என்ப வரும் இருந்தனர். என் வீட்டில் நானும் என் வாழ்க்கைத் துணைவியும் இருந்தோம். ஆபத்துக் காலத்தில், தனித்தனி வீடுகளில் வசிப்பது உசிதமில்லையென்று கருதி, 1942-ஆம் வருஷம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில், இவருடைய வீட்டிலேயே - வ. கு. சா. வீட்டிலேயே - நாங்கள் இருவரும் சென்று வசிக்கத் தொடங் கினோம். ஒரே குடும்ப மாக எங்கள் வாழ்க்கை நடைபெற்று வந்தது. அநேக நாட்கள், பகல் நேரத்தில், வீட்டிலிருந்து ஆண் பிள்ளை களாகிய வ. கு. rh., வி. வே. uh., நான் மூவரும் அலுவல் நிமித்தம் வெளியே சென்று விடுவோம். என் வாழ்க்கைத் துணைவி மட்டும் வீட்டில் தனியே இருப்பாள். அக்கம் பக்கத்தில் பேச்சுத் துணைக்குக் கூட யாருமில்லை. எல்லா வீடுகளும் தாழிட்டுக் கிடந்தன. தெருவில் ஜன நடமாட்டம் மிகக் குறைவு. நடமாடிய வர்களும், இந்தியர்கள்மீது விரோத மனப்பான்மை கொண்டுவிட்ட பர்மிய இளைஞர்கள்; கும்மாளமிட்டுக் கொண்டுச் செல்வார்கள். இவைகளுக்கு மேலாக அவ்வப்பொழுது ஜப்பானிய விமானங்கள் வட்டமிட்டு விட்டும், குண்டுகளை வீசி விட்டும் செல்லும்; பிரிட்டிஷ் பீரங்கிகள் அவற்றைத் தாக்கிச் சில விமானங்களைக் கீழே வீழ்த்தும். இவற்றால் ஏற்படும் சப்தம், கோடைக் கால இடியைத் தோல்வி யுறச் செய்யும். இத்தகைய நிலைமையில் என் வாழ்க்கைத் துணைவி நெஞ்சுறுதிக் குலையாமல் அமைதியுடன் தனியொருத்தி யாக வீட்டில் இருந்தாள். எப்படி இருந்தாளோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. 1942-ஆம் வருஷம், ஜனவரி மாதம், நான்காந் தேதிமுதல் ஜப்பானிய விமானங்கள் தொடர்ந்து தாக்க முற்பட்ட பிறகு, நாளுக்கு நாள் ரங்கூனுக்கு ஆபத்து அதிகரித்து வந்து, பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரக் கடைசியில் உச்ச நிலையை எட்டியது. ரங்கூன் பகுதி எந்த நேரத்திலும் ஜப்பானியர்களின் ஆக்ரமிப்புக்குட்படக் கூடுமென அச்சம் அனைவரையும் ஆட்கொண்டது. இப்படிப் பட்ட சந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பென்ஷன் தார ராகிய வ. கு. சா. இனியும் பர்மாவில் தங்கியிருக்க விருப்பமில்லா தவராய், அகப்பட்ட கப்பலில் இந்தியா நோக்கிப் புறப்பட்டு விடத் தீர்மானித்தார். பிப்ரவரி மாதம் இருபதாந் தேதி காலை ஒரு கப்பல் புறப்பட்டது. அதில் சென்றுவிட்டார். புறப்படுவதற்கு முன்னால், என் வாழ்க்கைத் துணைவியைத் தம்மோடு அழைத்துச் செல்வதாகவும், அவள் தனியாக இருப்பது உசிதமில்லையென்றும், அவளுக்கும் சேர்த்து கப்பல் டிக்கட் வாங்கி யிருப்பதாகவும் என்னிடம் கூறினார். நானும், அவள் செல்வதுதான் நல்லது என்று கருதி, ‘போகிறாயா? என்று அவளைக் கேட்டேன். அவள் என்னைத் தனியாக விட்டுவிட்டு, தான் முந்திச் செல்ல விரும்ப வில்லை. ‘உங்களை விட்டுவிட்டா? என்று கண்ணீர் உகுக்கத் தொடங் கினாள். நான் எதையும் சகித்துக் கொள்வேன். பெண்கள் கண்ணீர் விட்டால் மட்டும் என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. அவர்கள் மனம் எந்த விதத்திலும் புண்ணாகும்படி ஆண் பிள்ளைகள் நடந்து கொள்ளக் கூடாதென்பது என் உறுதியான கருத்து. என் வாழ்க்கைத் துணைவி கண்ணீர் உகுத்ததைக் கண்டதும் நான், அப்படியானால் நீ முந்திப் போக வேண்டாம். என்னுடனேயே இரு என்று ஆறுதல் மொழிகள் சில சொல்லிவிட்டு, வ. கு. சா. விடம் அவள் வர விரும்ப வில்லையென்று தெரிவித்தேன். அவரும், நாங்கள் இருவரும் பிரிந்திருப்பதை விரும்பாதவராய், அவள் விருப்பப் படியே உங்களோடு இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார். என் வாழ்க்கைத் துணைவிக்கு இது பெரிய ஆறுதலாயிருந்தது. வ. கு. சா. சென்ற பிறகு, வி. வே. uh., நான், என் வாழ்க்கைத் துணைவி ஆகிய மூவர் மட்டுமே வீட்டில் இருந்தோம். அன்றைய என் நாட்குறிப்பு பின்வருமாறு கூறுகிறது: மனிதனுக்கு ஏற்படுகிற துன்பங்கள் மூன்று வகையென்றும், அவை முறையே ஆதியாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதி தெய்விகம் என்றும் கூறுவார்கள். என் வாழ்க்கையில் ஆதியாத்மிக சம்பந்தமான துன்பங்கள் பலவற்றை அநுபவித்திருக்கிறேன். தெய்விக சக்திகளோ, பௌதிக சக்திகளோ என்னை அதிகமாகத் தாக்கியதில்லை. ஆனால் 1942-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் பத்தொன்பதாந் தேதியிலிருந்து எல்லாச் சக்திகளும் சேர்ந்து என்னைத் தாக்க ஆரம்பித்து விட்டன. உலகம் முழுவதும் கோரமானதோர் அவதையில் சிக்கிக் கொண்டிருக்கிறபோது அற்ப ஜீவனாகிய நான் எம்மாத்திரம்? சமுத்திர அலையினின்றெழும் ஒரு திவலை மாதிரி. இதுவரையில் யுத்த நிகழ்ச்சிகளைப் பற்றியும், யுத்த கோரங்களைப் பற்றியும் பேசியும் படித்தும் வந்தேன். இப்பொழுது அநுபவிக்க வேண்டிய காலம் வந்து விட்டது போலும்! 1942-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் பத்தொன்பதாந் தேதி இரவு பத்தரை மணிக்கு மேல் மறுநாள் வெள்ளிக்கிழமை (20-2-42) வ.கு.சா. சென்னைக்குப் பிரயாணமாக வேண்டுமென்று தீர்மான மாயிற்று. அவரும், அவருடைய மாப்பிள்ளை வி.வே.ரா.வும், சாமான் களைக் கட்டு வதிலும் மற்ற ஏற்பாடுகளைச் செய்வதிலும் அன்று இரவு முழுவதையும் கழித்தார்கள். நானும் அன்று இரவு முழுவதும் தூங்கவேயில்லை. கண் இமைகள் மூடினால்தானே? என் தனிமையை உணரத் தொடங்கினேன். மறுநாள் (20-2-42) காலை சுமார் எட்டு மணிக்கு வ. கு. சா. சில சாமான்களுடன் ஒரு பஸில் கப்பலடிக்குச் சென்றார். அவருடைய மோட்டார் வண்டி அவருக்கு உபயோகப் படவில்லை; அது கெட்டிருந்தது . . . ? வ. கு. சா. சென்ற பிறகு, என் தனிமையை உணர்ந்தேனாயினும், அங்குத் தனிமையிலேயே என்னை நான் இழந்துவிடவில்லை. எப் போதும் போல, கடமையுணர்ச்சியானது என்னை அரவணைத்துக் கொண்டது. அந்த அரவணைப்பு எனக்கு நெஞ்சுறுதியை அளித்தது. எந்த விதமான நெருக்கடி ஏற்பட்டாலும் நான் ரங்கூனி லேயோ, சுற்று வட்டாரத்திலேயோ இருந்து கொண்டு, ஜோதி பத்திரிகையைக் குறைந்த பல தினங்களாவது தொடர்ந்து வெளி யிட்டு வர வேண்டு மென்று எண்ணிக் கொண்டிருந்தேன். 1942-ஆம் வருஷ பிப்ரவரி மாத இதழும் குறைவான பக்கங்களுடன், அந்த மாதம் பத்தொன்பதாந் தேதி தயாராகிவிட்டது. மறுநாள் இருபதாந் தேதி தபாலில் அனுப்ப வேண்டியவர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் மறுநாள் அனுப்ப முடியவில்லை. மற்ற அரசாங்க அலுவலகங்களைப் போல், தபால் நிலையங்களும் செய லற்றுப் போயின. பல்லாண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த இரண்டு பிரபல ஆங்கில தினசரிப் பத்திரிகைகளும் அன்றோடு நின்று விட்டன. நாம் ஒன்று நினைத்துச் செயலாற்ற முற்படுகிறோம். ஆனால் விதி, வேறு வழியாக நம்மைத் திருப்பி விடுகிறது. என்னைப் பொறுத்த மட்டில், விதியானது, பல தடவை, பல வகையில் பரிசோதனை செய்து வந்திருக் கிறது. இதனால் அதன் மீது எனக்குக் கோபமோ தாபமோ ஏற்படுவ தில்லை. கோபப்பட்டோ தாபப் பட்டோ என்ன பயன்? யாருமே விதி அழைத்துக் கொண்டு போகிற வழியில் செல்ல வேண்டியவர்கள்தானே?  4. நன்றிக்குரிய நண்பர்கள் வ. கு. சா. புறப்பட்டுச் செல்வதற்கு முந்தின நாளே, அதாவது 1942-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் பத்தொன்பதாந் தேதியன்றே ரங்கூன் நிலைமை மோசமாகி வருவதை நான் ஒருவாறு உணர்ந்தேன். அன்று மாலை நானும் என் நண்பர் ஒருவரும் நிலைமையைச் சமாளிக்க என்ன செய்யலாமென்பதைப் பற்றிக் கலந்தாலோ சித்தோம். ரங்கூனுக்குச் சுமார் நாற்பது மைல் தொலைவில் ஆற்று மார்க்கத்தில் உள்ள மூப்பின் என்ற ஊருக்கு நானும் என் வாழ்க்கைத் துணைவியும் சென்று சிறிது காலம் தங்குவதென்றும், ரங்கூனில் திருப்திகரமான நிலைமை ஏற்பட்ட பிறகு திரும்பி வருவதென்றும் பேசினோம். ஏற்கனவே சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் - 1933-ஆம் வருஷம் - நான் ஒரு சங்கத்தின் ஆண்டு விழா நிமித்தம் மூப்பினுக்குச் சென்று வந்திருப்பதாலும், ஏற்கனவே ரங்கூனிலிருந்து சில நண்பர்கள் அங்குச் சென்று தங்கியிருந்ததாலும், அந்த ஊரில் சிறிது காலம் தங்குவது ஓரளவு சௌகரியமாகவே இருக்குமென்று நான் நினைத்தேன். இருபதாந்தேதி காலை, வ. கு. சா. கப்பலடிக்குச் சென்ற பிறகு, நான், வழக்கம் போல் காலாபதியிலுள்ள ஜோதி அலுவல கத்திற்குச் சென்றேன். அங்கு நான் எதிர்பார்த்தபடி அலுவலகத்து முக்கியமான சிப்பந்திகள் யாருமில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு வந்தார்கள்; அவர்களும் திக்பிரமை பிடித்தவர்கள் போலிருந் தார்கள். ஏதோ ஒருவித பீதி உருவாகி வருவதாக நான் உணர்ந்தேன். எந்தச் சூழ்நிலை எப்படியிருக்குமென்று என்னால் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளக்கூட முடியவில்லை. இந்த நிலைமையில் அரசாங்க அலுவலகமொன்றில் உத்தி யோகம் பார்த்து வந்தவரும், எனக்கு நன்கு அறிமுகமானவருமான ஓர் இளைஞர் இரைக்க இரைக்க ஓடிவந்து, ரங்கூன் போலீ கமிஷனர் அன்றைய தேதியிட்டு ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறா ரென்றும், அதில், ரங்கூன் நகரத்தில் சொந்தமாகக் கார் வைத்துக் கொண்டிருக்கின்றவர்கள் நாற்பத் தெட்டு மணி நேரத்திற்குள் நகரத்தை விட்டு வெளியேறிவிட வேண்டு மென்றும், அப்படி வெளி யேறாவிட்டால் அவர்களுடைய கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு நாசப்படுத்தப் பெறுமென்றும் சொல்லப்பட்டிருப்ப தாகவும் தெரிவித்தார். இதிலிருந்து இன்னும் ஓரிரண்டு நாட்களில் ரங்கூன் நகரத்தைப் பிரிட்டிஷார் கைவிட்டுவிடக் கூடுமென்று நான் ஊகித்துக் கொண்டேன். என் ஊகத்தை வெளியிடுவதற்கு முன்பே, அந்த ஊகத்தை ஊர்ஜிதப்படுத்துகின்ற முறையில், அந்த இளைஞர், ஜனங்கள் நிரம்ப பயந்துபோய் நகரத்தை விட்டு வெளியே கிளம்பிக் கொண்டிருக் கிறார்களென்றும், அரசாங்கக் காரியாலங்களி லெல்லாம், பர்மாவின் வடக்குப் பகுதியினுள்ள மாந்தளை முதலிய ஊர்களுக்கு மாற்றிக் கொண்டு போய்விடுமாறு உத்தரவு பிறந்திருக் கிறதென்றும், அரசாங்க உத்தியோகதர்கள் பலர், காரோ, ரெயிலோ அகப்பட்ட வாகனங்களில் அவசர அவசரமாகப் புறப் பட்டுக் கொண்டிருக்கிறார்களென்றும் சொல்லிவிட்டு, நீங்கள் இனியும் ரங்கூனில் தாமதித்திருக்க வேண்டாம் என்று எனக்கு எச்சரிக்கையும் கொடுத்துவிட்டுப் போனார். அவர் சென்றதும் அச்சகத்து ஆள் ஒருவனை மொகல் தெரு வுக்குச் சென்று, உள்ள நிலைமையை அறிந்து வரும்படி அனுப்பி னேன். மொகல் தெரு என்பது ரங்கூனில் பிரபலமான தெரு. இங்கு நாட்டுக் கோட்டை நகரத்தார்களுடைய லேவாதேவிக் கடைகளும், குஜராத்தியர்களுடைய தங்கம் வெள்ளிக் கடைகளும் மொத்த வியாபாரம் செய்யும் மார்வாரிகளின் தாபனங்களும் இருந்தன. பணப் புழக்கம் இங்கு அதிகம். ஊர்ச் செய்தி, உலகச் செய்தி எல்லாம் இங்கு அடிபடும். இதனாலேயே அச்சகத்து ஆளை இங்கு அனுப்பினேன். அவனும் சிறிது நேரத்திற் கெல்லாம் திரும்பி வந்து நிலைமை மோசமாகி வருகிறதென்றும் ஆற்று மார்க்கத்தில் நீராவிப் படகுகளின் போக்குவரத்து நாளைய தினத்தி லிருந்து நின்று விடக் கூடுமென்று சொல்லிக் கொள்கிறார்களென்றும் தெரிவித்தான். அவன் இப்படித் தெரிவித்த சிறிது நேரத்திற்கெல்லாம் மூப்பி னுக்குத் தற்காலிகமாகச் சென்றிருந்து, அகமாத்தாக அன்று காலை ரங்கூனுக்குத் திரும்பி வந்த எனது நண்பர்கள் இருவர் ஜோதி அலுவலகத்திற்கு வந்து, மறுநாள் (21-2-42) பகல் வரையிலாவது ஆற்று மார்க்கத்தில் போக்குவரத்து இருக்குமென்றும், ஆதலால் அன்று (21-2-42) காலையிலேயே, என்னை வந்துவிடு மாறும், அங்கு நான் தங்குவதற்கு வேண்டிய வசதிகள் செய்து வைத்திருப்பதாயும் சொல்லி, என் கைச்செலவுக்கு முப்பது ரூபாய் கொடுத்துவிட்டு, அன்று பிற்பகலே மூப்பினுக்குத் திரும்பிச் செல்வதாகச் சொல்லி விட்டுப் போனார்கள். அப்பொழுது அச்சகத்தில் பணமுடை அதிகம். ஆம்; மிக அதிகம். அது என் சொந்த வாழ்க்கையை எவ்வளவு தூரம் பாதித்தது என்பதைப் பற்றி இங்குச் சொல்வது என் சுய புராணத்தைப் படிப்ப தாகும். அது இங்குத் தேவையில்லை. நண்பர்கள் இருவரும் வந்துபோன பிறகு அலுவலகச் சிப்பந்தி களில் முக்கியமான சிலரிடம் மறுநாள் (21-2-42) காலை நான் மூப்பினுக்குச் செல்ல உத்தேசித்திருப்பதைத் தெரிவித்தேன். அவர் களும், அதுதான் சரியான திட்டம் என்று ஆமோதித்தார்கள். நான் எப்படியாவது உயிர் பிழைத்துச் சௌகரியமாய் இருக்க வேண்டு மென்பதுதான் தங்கள் கருத்து என்பதை அன்பு சொட்டும் மொழி களால் தெரிவித்தார்கள்; பத்திரிகை அலுவலகத்தைத் தங்களால் முடிந்த மட்டில் பாதுகாப்பதாகவும் உறுதி கூறினார்கள். இவற்றைக் கேட்டு எனக்குச் சிறிது ஆறுதல் ஏற்பட்டது. ஆனாலும் மனக்குழப்பம் கணத்திற்குக் கணம் அதிகரித்து வந்தது. அலுவலகத்து அறை யிலேயே அப்படியும் இப்படியுமாக உலவிக் கொண்டிருந்தேன். பிற்பகல் சுமார் மூன்று மணி இருக்கும். பிரிட்டிஷ் இராணு வத்தில் உயர்தர அதிகார பதவி வகித்து வந்தவரும், என்னிடத்தில் அபிமானமும் மதிப்பும் கொண்டிருந்தவருமான ஹரி என்பவர், மோட்டார் சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்தார். அவர் முகத்தில் கவலை தோய்ந்திருந்தது. வந்ததும் என்னைப் பார்த்து, என்ன, நீங்கள் இன்னுமா இங்கே இருக்கிறீர்கள்? இன்று மாலை நான்கு மணிக்குள் ரங்கூனைவிட்டு ஜனங்கள் வெளியேறிவிட வேண்டு மென்று ராணுவம் உத்தரவு பிறப்பித் திருக்கிறது. கூடிய சீக்கிரத்தில் இராணுவமும் காலி செய்துவிடும் போலிருக்கிறது. ராணுவம் சென்று விட்ட பிறகு, ரங்கூன் நிலைமை எப்படியாகுமென்று சொல்ல முடியாது. ஆகையால், நீங்கள் எங்காவது, எப்படியாவது உடனே சென்று விடுங்கள். இந்த எழுத்து வேலைகளையெல்லாம் பிழைத் திருந்தால் பின்னாடி பார்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு நான் என்ன சொல்வது? எங்காவது புறப்பட்டுப் போய்விடுங்கள் என்று பரிதாபகரமான குரலில் கூறினார். பிறகு மோட்டார் சைக்கிளில் பின்புறத்தில் என்னை அமர்த்தி வைத்துக் கொண்டு, பக்டோவிலுள்ள என் வீட்டிற்கு அழைத்து வந்தார். உடனே வந்து என் வாழ்க்கைத்துணைவியிடமும் அம்மா, ஐயாவை எப்படியாவது காப்பாற்றி அழைத்துப் போய்விடுங்கள், அவருடைய மூளையைக் கொண்டு எங்காவது பிழைத்துக் கொள்வார். அவரை ஜாக்கிரதையாகக் காப்பாற்றி வரவேண்டியது உங்கள் கடமை. இதைக் காட்டிலும் நான் உங்களுக்கு என்ன சொல்ல முடியும்? என்று பரிவுடன் கூறிவிட்டு, மேலும், நான் இங்கு வந்து போனதை யாருக்கும் தெரியப் படுத்த வேண்டாம். ஐயாவின் மீது கொண்ட மதிப்பினால் ரகசியமாக வந்திருக்கிறேன். நான் இங்கு வந்துபோனது மேலதிகாரிகளுக்குத் தெரிந்தால், எனக்குத் தண்டனை கிடைக்கும் என்று எச்சரிக்கை கொடுத்து விட்டுப் போனார். இந்த அன்பரை நான் எப்படி மறக்க முடியும்? இவர் அந்தச் சமயத்தில் எச்சரிக்கை கொடுத்துவிட்டுப் போகாதிருந்தால் நான் காலாபதி அலுவலகத்திலேயே சிக்கிக் கொண்டிருந்திருப் பேனோ என்னவோ? வ.கு.சா.வுக்குச் சொந்தத்தில் ஒரு பெரிய கார் உண்டு. அது என்னுடைய தேவைக்கும் அடிக்கடி உபயோகப்பட்டு வந்தது. அவர், அன்று (20-2-42) காலை கப்பலடிக்குப் போக அதனை உப யோகித்துக் கொள்ள முடியவில்லை. அப்பொழுது அது பழுது பட்டிருந்தது. அவர் சென்ற பிறகு அதை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தோம். ஹரி என்னை வீட்டில் கொண்டுவிட்ட சிறிது நேரத்திற் கெல்லாம், வி.வே.ரா. வந்தார். இவர் அப்பொழுது ஓர் இன் யூரன் கம்பெனியில் அதிகாரியாயிருந்தார். இப்பொழுது இந்திய அரசாங்கத்துக்குப் பாதுகாப்பு இலாகாவில் ஒரு முக்கியமான பதவி வகித்து வருகிறார். இவர் வீடு வந்ததும் தம் காரியாலயத்தை மாந்தளைக்கு மாற்றிச் செல்ல நினைத்ததாகவும், ஆனால் அது இயலவில்லை யென்றும் சொன்னார். இவர் முகத்தில் கவலை தோய்ந்திருந்தது. ஆனால் அந்தக் கவலையில் இவர் மூழ்கிவிடவில்லை; செயலாற்றிக் கொண்டிருந்தார்! எதற்கும் மோட்டார் காரை ஒழுங்குபடுத்த முடிந்தால் முயன்று பார்ப்போம் என்று எண்ணி ஒரு சீனனை வரவழைத்து ஒழுங்குபடுத்தச் செய்தார். வண்டியும் ஒருதினுசாகச் சரியாக்கப் பட்டது. அப்பொழுது மாலை சுமார் ஆறு மணி இருக்கும். சூழ்ந்து கொண்டு வந்த இருளைப் போல் எங்கள் மனத்தில் ஒருவித பயங்கரம் படர ஆரம்பித்தது. இதற்காக அந்த மனம் சூனியமாகி விடவில்லை. அதில், எல்லாம் வல்ல இறைவனுடைய அருளில் எங்களுக்கிருந்த நம்பிக்கை ஒளிவிட்டுக் கொண்டிருந்தது. அந்த ஒளிதான் எங்கள் நடைப் பயணத்தின்போது வழிகாட்டியும் வந்தது. 5. பரிவுகாட்டிய உறவினர்கள் இருள் மூடி வருகின்ற நேரத்தில் ஏ.வி.ம. என்ற அன்பர், எங்கள் வீட்டுக்கு வந்து, மறுநாள் காலைக்குள் எங்காவது போய் விடுவது நல்ல தென்று ஆலோசனை கூறினார். இவர் அரசாங்க அலுவலக மொன்றில் பொறுப்பான உத்தியோகம் வகித்து வந்தார். ஆனால் உண்மையான காந்தி பக்தர். கதரே உடுத்துவார். சுதேசி சாமான்களையே உபயோகிப்பார். சுதேசி பிரச்சாரமும் செய்து வந்தார். நான் ரங்கூனிலிருந்து புறப்பட்டு மொனீவா என்ற ஊருக்குச் சென்று அங்குத் தங்க நேரிட்ட பொழுது, எனக்குப் பேருதவிகள் செய்தார். அதைப் பின்னர்க் கூறுவேன். ஏ.வி.ம. வந்து போனதும், ப. என்ற நண்பர் வந்து, ஆற்று மார்க்கத்தில் நீராவிப் படகுகளின் போக்குவரத்து அடியோடு நின்று விட்டதென்று தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து என் உறவினரில் ஒருவரும், சட்ட நிபுணரும், பர்மாவிலிருந்து வந்த பிறகு இந்திய அரசாங்கத்தின் சட்ட இலாகாவில் பெரும் பதவி வகித்துவிட்டுத் தற்போது ஓய்வு பெற்றிருப்பவருமான கோ.ரா.ரா. வந்து, தாம் மாந்தளைப் பக்கம் போக முயற்சிப்பதாகவும் எல்லோரும் சேர்ந்து போவது நல்லதென்று சொன்னார். இவரோடு நான் சிறிது தர்க்கம் செய்தேன். மாந்தளையி லிருந்து எப்படியோ இந்தியாவுக்குப் போய்ச் சேருகிறோமென்று வைத்துக் கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தமட்டில் நான் அங்குப் போய் என்ன செய்வது? புதிய வாழ்க்கையைத் தானே தொடங்க வேண்டும்? இங்கேயே ஒருவிதமாக சமாளித்துக் கொண்டு இருந்து விட நினைக்கிறேன். இங்கேயே தங்கினால் எனக்கு உதவி செய்யக் கூடிய நண்பர்கள் பலர் இருக்கிறார்கள்? என்றெல்லாம் சொன்னேன். இவர், எனக்குச் சமாதானம் கூறுகின்ற முறையில் உங்களுக்கு மட்டுமென்ன, இங்கிருந்து போகிற எல்லோருக்குமே இந்தியா வுக்குப் போய் என்ன செய்வதென்ற பிரச்னைதான். நாமெல்லோரும் ஒரே நிலைமையில் தானிருக்கிறோம். எல்லோருக்கும் ஆகிய கதி உங்களுக்கும் ஆகிறது! ஆகையால் யோசனை செய்யாமல் புறப்படு வதற்குத் தயாராயிருங்கள். நாளைக் காலைப் புறப்படுவதாக இருக்கிறோம் என்று சொல்லிவிட்டுச் சென்றார். சென்று,இ..uh. என்ற மற்றோர் உறவினரிடம், நான் சொன்னதைச் சொன்னார் போலும். அவர் உடனே வந்து அதிகாரமும் கடுமையும் கலந்த குரலில், இப்படியெல்லாம் நீங்கள் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. நீங்களென்ன பச்சைக் குழந்தையா, உங் களுக்கு நாங்கள் புத்தி சொல்ல? அத்தையை (அதாவது என் வாழ்க்கைத் துணைவியை) வைத்துக்கொண்டு இங்கேயே இருக்க நினைக்கிறீர்களே, உங்களுக்கு எவ்வளவு iதரியம்?இந்த ஆபத்துக் காலத்தில் இந்தத் தைரியம் கை கொடுத்துக் காப்பாற்றாது. நாங் களெல்லோரும் புறப்பட்டுப் போன பிறகு நீங்கள் மட்டும் இங்கே என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் எழுத்து வேலையை எங்கு வேண்டுமானாலும் சென்று செய்யலாம். ஆகையால் சண்டித்தனம் செய்யாமல் புறப்படுங்கள் என்றெல்லாம் சொல்லி விட்டுச் சென்றார். என்னிடம் எவ்வளவு சுவாதீனம் இவருக்கு? எவ்வளவு அன்பு இவருக்கு? இவரைப் பற்றிச் சில வார்த்தைகள். நான் 1932-ஆம் வருஷம் மே மாதம் ரங்கூனுக்குச் சென்ற புதிதில் இவர், எனக்கு அநேக நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தார். நான்கு பேரோடு பழகும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இவருக்கு நான் பெரிதும் கடப்பாடுடையவன். ஆனால் நாங்கள் வேறு வேறு நிலையில் நின்றே பழகினோம். இவர் விளம்பரத்திற்கும் படாடோபத்திற்கும் உட்பட்டவர். நானோ இரண்டுக்கும் அப்பாற்பட்டவன். இதற்காக நாங்கள் வடகோடி, தென்கோடியாயிருக்க வில்லை. அந்நியோந் நியத்திற்குச் சிறிதும் பழுது ஏற்படாமல் பழகி வந்தோம். காரணம் ஒருவர் நிலையை ஒருவர் புரிந்து கொண்டிருந்தது தான். இவர் இப்பொழுது மூச்சோடு இருந்திருந்தால் இந்த வரிகளைப் பார்த்து எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பார் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அந்த மூச்சு நின்று பல ஆண்டுகளுக்கு மேலாயின. இ.ரா. இவ்வளவு வலியுறுத்திச் சொன்ன பிறகும் நானென் னவோ புறப்படுவதற்குத் தயக்கமே காட்டினேன். இ. ரா. சென்ற பிறகு வி. வே. ராவும் நானும், அடுத்தாற்போல் செய்ய வேண்டுவதென்ன என்பதைப் பற்றி வெகுவாக யோசித்தோம். முடிந்தால், பக்டோவிலேயே இருந்து விடுவதென்றும், நாலைந்து பேர் சேர்ந்து ஒரு வீட்டில் இருக்கலாமென்றும், ராத்திரி இன்னும் சிலரைக் கலந்து பார்ப்பதென்றும் ஒருவாறு தீர்மானித்துக் கொண்டோம். எதற்கும் காரில் நிறையப் பெட்ரோல் போட்டுக் கொண்டு வந்துவிட எண்ணி வெளியே புறப்பட்டோம். கூட, என் வாழ்க்கைத் துணையும், வி. என்ற நண்பரும் காரில் வந்தார்கள். அப்பொழுது இரவு சுமார் ஏழு மணியிருக்கும். ஜப்பானியர்களின் விமானத் தாக்குதலுக்குட்பட்டுவிடக் கூடாதென் பதற்காக பெட் ரோலை, இரும்புப் பீப்பாய்களில் நிரப்பி மூடியிட்டு, ஒரு பெரிய மைதானத்தில், பூமியில் பள்ளந்தோண்டி அதில் புதைத்து வைத்தி ருந்தார்கள், அதிகாரிகள். சத்துருக்களின் பெட்ரோல் கிடங்கு களைத் தாக்கி, அதன் விளைவாக, அவர்களுடைய போக்குவரத்து சாதனங்கள் பயன்படாதபடி செய்வதென்பது தற்காலப் போர்த் தந்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறதல்லவா? மைதானத்திற்குச் சென்று காரில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டோம். அதிகப்படியாக இருக்கட்டுமென்று எண்ணி இரு பத்தைந்து காலன் கொண்ட பீப்பாயை வாங்கி, வண்டியில் ஏற்றி வைத்துக் கொண்டோம். எவ்வளவு பெட்ரோல் தேவைப் பட்டாலும் கொடுக்கலா மென்று அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இது ஓரளவுக்கு நல்ல ஏற்பாடாயிருந்தது. கார் வசதி படைத்திருந்தவர்கள் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு எவ்வளவு சீக்கிரத்தில் நகரத்தை விட்டு வெளிக்கிளம்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் வெளிக் கிளம்புவதில் முனைந் தார்கள். கார்கள் நெரிசலில், போக்குவரத்து விதிகளெல்லாம் புறக்கணிக்கப்பட்டன. விதிகளை அமுல் நடத்த போலீசும் இல்லை. போலீ படை கலைக்கப் பட்டுவிட்டது. இதைப் பற்றி, பெட்ரோல் மைதானத்தில் பலரும் பரபரப்புடன் பேசிக் கொண்டார்கள். காரில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு பக்டோவுக்குத் திரும்புகிற போது காலாபதி வழியாக வந்தோம். அங்கு ஜோதி அலுவலகத்திற்கு முன்பு, நான் காரை நிறுத்தச் செய்தேன். தெருப் பக்கத்தில், அலுவலகத்து தர்வான், எங்கெங்கோ சுற்றி அலைந்து விட்டு வந்து, சோர்வுடன் தலை மீது கை வைத்துக் கொண்டு உட்7கார்ந்திருந்தான். நான் காரிலிருந்து இறங்கியதும், என்னைப் பார்த்து - அவனால் அடையாளங் கண்டு கொள்ள முடியவில்லை. நல்ல இருட்டு; எட்டு மணிக்கு மேலாகியிருந்தது. நான் காரிலிருந்து இறங்கி அவனருகில் சென்று நின்ற பிறகுதான், நான் வந்திருப்பது அவனுக்குத் தெரிந்தது. என்னைக் கண்டதும், தான் மொகல் தெருப் பக்கம் மீண்டும் சென்று விசாரித்ததாகவும், ஆற்று மார்க்கத்திலும், ரெயில் மார்க்கத்திலும் எல்லாப் போக்குவரத்துக்களும் நின்று விட்டன வென்றும், நான் எப்படியாவது எங்காவது வெளியூருக்குச் சென்று விடுதல் நல்லதென்றும் வருத்தந்தோய்ந்த குரலில் கூறினான். நான் விசாரித்த வரையில் எல்லாம் அப்படித்தானாகியிருக்கிற தென்றும், எனக்கொன்றும் புரியவில்லையென்றும் ஊரிலேயே இருப்பதா, அல்லது வெளியூருக்கு எங்கேனும் போவதா என்பதைப் பற்றி ஒன்றும் முடிவு செய்யவில்லை யென்றும் பதில் கூறினேன். அப்பொழுது ஜோதி அலுவலகத்தைச் சேர்ந்த க. என்ற ஒரு தொழிலாளி, என் அருகில் வந்து, எங்காவது ஓடிப்போய் விடுங்க ளேன், சாமி! என்று பரிவோடு கூறினான். மு. என்ற மற்றொரு தொழிலாளி ஒன்றுஞ் சொல்லத் தெரியாமல் மிரள மிரள விழித்துக் கொண்டு நின்றான். தர்வானோ, என் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு, கோவென்று கதற ஆரம்பித்துவிட்டான். என் மனம் மிகவும் குழம்பி விட்டது. ஆண்டவன் அருளிருந்தால் நாம் மீண்டும் சந்திப்போம். நாளை நான் பக்டோவிலேயே இருப்பே னாகில் இங்கு அலுவலகத்திற்கு வரப்பார்க்கிறேன். யாரும், எனக்காக பக்டோவுக்கு வந்து அலைய வேண்டியதில்லை. அப்படி நான் நாளை வரவில்லையென்றால், எங்காவது போயிருப்பேன் என்று நினைத்துக் கொண்டு கவலைப்படாம லிருங்கள் என்று ஆறுதல் மொழிகள் சில சொல்லிவிட்டு, அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு காரில் ஏறிக் கொண்டேன். வீடு வந்து சேர்ந்த போது, ஒன்பது மணிக்கு மேலாகியிருந்தது. பசி, எங்களை விட்டு எங்கோ பறந்து போயிருந்தது. ஒரே கலக்கம். இந்த நிலையில், பக்டோவிலுள்ள முக்கியதர்கள் அனைவரும், மறுநாள் காலை மாந்தளை நோக்கிப் புறப்படப் போவதாகத் தீர் மானித்து விட்டார்கள் என்ற செய்திவந்தது. அப்படியானால் நான், என் வாழ்க்கைத் துணைவி, வி.வே.ரா. ஆகிய மூவர் மட்டும் பக்டோவிலேயே தங்கி விடுவதா? தங்கினாலும், ஊர் காலியான பிறகு மூவரின் நிலைமை என்ன ஆகும்? fhÇ‹ r¡fu§fis¡ fH‰¿, CU¡F v⮥òwkhf îŸs ‘nghfhiy’ v‹w ïl¤âš ngh£L É£L, _tU« m§nfna ïUªJ Élyhkh? இப்படிப் பலவாறாக எண்ணி எண்ணிக் குழம்பி, கடைசியில் விடியற்காலை ஒரு முடிவுக்கு வரலாமென்று கருதி, தரையில் தலையைச் சாய்த்தோம். நித்திரா தேவி எங்களை அணைத்துக் கொண்டால்தானே? நள்ளிரவு நேரம். தூக்கம் வராத காரணத்தினால், வி. வே. ரா. ஒருகால் ஊரை விட்டு வெளியே செல்லும்படி நேரிட்டால், கார், எந்த அளவுக்குத் தகுதியுடையதாயிருக்குமென்று பார்ப்பதற்காக ஷெட்டுக்குள் சென்று காரை வெளியே கொண்டுவர முயன்றார். ஆனால் டார்ட் கிடைக்கவில்லை! சில மணி நேரத்திற்கு முன்பு, பெட்ரோல் போட்டுக் கொண்டுவர ஒழுங்காகச் சென்ற கார், சில மணி நேரத்திற்குப்பிறகு - நள்ளிரவில் - இருந்த இடத்திலிருந்து நகர மறுத்து விட்டது! எங்கள் மனக்குழப்பத்திற்குக் கேட்க வேண்டுமா? விடியற்காலை சுமார் நான்கு மணி இருக்கும் வி. வே. ரா. ஊரி லுள்ள சில முக்கியதர்களைச் சந்திக்கச் சென்றார். விசாரித்ததில் பக்டோவில் முக்கியதர்களில் யாரும் இருக்கப் போவதில்லை யென்றும், எல்லோருமே புறப்பட்டுச் செல்லப் போகிறார்களென்றும் தெரிய வந்தது. மேலும் பைத்தியக்கார ஆபத்திரியையும், மத்திய சிறைச்சாலையையும் திறந்து அங்கிருந்தவர்கள் வெளியே அனுப்பப் பட்டு விட்டார்கள். அரசாங்க ஆபத்திரியில் படுக்கையில் கிடந்த நோயாளிகள் அவரவர் விரும்புகின்ற இடங்களுக்குச் செல்ல அனு மதிக்கப்பட்டுவிட்டார்கள். சமுதாய விரோதிகள் என்று அழைக்கப் படுகின்ற கீழ்மக்கள், நகரத்தைக் காலி செய்துவிட வேண்டுமென்று ராணுவம் உத்தரவு பிறப்பித்திருக் கிறதென்று தெரிந்த கணத்தி லிருந்து, வீதிகளில் கும்பல் கும்பலாகக்கூடி, கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலர், வீடுகளில் நுழைந்து அகப்பட்ட பொருள்களை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். பெண் மக்கள் கதி கலங்கிப் போயிருக்கிறார்கள். சில இடங்களில் பயங்கர மான சில செய்திகள் கிடைத்தன. இந்த நிலையில் நான், என் வாழ்க்கைத் துணைவி, வி. வே. ரா. ஆகிய மூவர் மட்டும் பக்டோவில் தங்கியிருத்தல் எங்ஙனம் சாத்தியம்? ஊருடன் ஒத்து வாழ் என்ற வாசகப் படி நாங் களும் பக்டோவை விட்டுப் புறப்படுவதென்றும், ஒரு கோஷ்டியாகப் போவது நல்லதென்றும் தீர்மானித்துக் கொண்டோம். ஆனால் எப்படிப் போவது? கார், நொண்டிப் பிள்ளை மாதிரி இருக்கிறதே? mij e«ã, bjhiyöu« ãuahz« brŒa Koíkh? இப்படிப் பலவாறாக யோசித்து, யோசித்து கடைசியில் எதற்கும், மீண்டும் ஒரு முறை கார் டார்ட் கிடைக்குமா என்று பார்ப்போம். கிடைத்தால் புறப்படுவது; கிடைக்காவிட்டால் இருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டு, என்ன கதி நேரிடுகிறதோ அதை அனுபவிப்பது என்று முடிவு செய்து கொண்டு, வி. வே. ரா. காரை ஷெட்டிலிருந்து வெளிக்கொணர முயன்றார். என்ன ஆச்சரியம்! டார்ட் கிடைத்தது! நள்ளிரவில் நகர மறுத்த கார் விடியற் காலை புறப்படத் தயாராயிருந்தது! ஆண்டவனின் அருட்சக்தி, எந்தெந்த விதமாக இயங்குகிற தென்பதை சாதாரண மனிதர்களால் ஊகித்துக் கூடச் சொல்ல முடிவ தில்லை. நாங்கள் உயிர் பிழைத்து இன்னும் சிறிது காலம் இருக்க வேண்டுமென்பது அவன் விருப்பம் போலும். அவன் எப்படி எப்படி யெல்லாம் மனிதப் பிறவிகளாகிய நம்மை ஆட்டி வைக் கிறான்? அவன் ஆட்டுவிக்கிறபடி ஆட வேண்டிய பாவைகளாகவே நாம் இருக்கிறோம். கார் டார்ட் கிடைத்ததும் ஆண்டவனே கார் வடிவமாக எங்களைக் காப்பாற்ற வந்திருக்கிறானென்ற உணர்ச்சி எங்களுக்கு ஏற்பட்டது. எங்களையறியாமல் கரங்கள் குவிந்தன. கண்கள் பனித்தன. கார் டார்ட் கிடைக்காது போயிருந்தால் எங்கள் கதி யாதாயிருக்குமோ? அநேக ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது நினைத்தால்கூட உடலில் ஒரு வித நடுக்கமெடுக்கிறது.  6. புறப்பாடு கார், தன்னுடைய ஒத்துழைப்பை எங்களுக்குக் கொடுக்கு மென்று நிச்சயம் தெரிந்தவுடன், நாங்கள் புறப்படுவதற்குத் தயாரானோம். புறப்படுவதென்பது அவ்வளவு சுலபமாயிருக்க வில்லை. காரில், என்னென்ன சாமான்களை எடுத்துப் போட்டுக் கொள்வதென்பது ஒரு பிரச்னையாயிருந்தது. ஏற்கெனவே, மதிப்புள்ள சில பொருள்களைக் கப்பல்களில் சென்ற எங்கள் உறவினர்களிடம் கொடுத்து அனுப்பியிருந் தோம். ஆயினும், அன்றாடம் புழக்கத்தில் இருந்த சாமான்கள் பல இருந்தன. அவற்றை என்ன செய்வது! திரும்பி வந்து விடுவோம் என்ற எண்ணத்தில் அவற்றை வீட்டின் பல பகுதிகளிலும் பத்திரப்படுத்தி வைத்தோம். வழிப்பயணத்தில் உபயோகமாகுமென்று எங்களுக்கு அப்பொழுது தோன்றிய சில சாமான்களை மட்டும் அவசர அவசர மாகக் காரில் அள்ளிப் போட்டுக் கொண்டோம். முன் ஜாக்கிரதை யாக என் வாழ்க்கைத் துணைவி தயாரித்து வைத்திருந்த ஆகாராதி களையும் எடுத்துக் கொண்டோம். நான் ரங்கூனில் இருந்த பத்து வருஷ காலத்தில் அநேக நூல்களை விலை கொடுத்து வாங்கிச் சேகரித்தேன். நண்பர்கள் சிலர் அன்பளிப்பாகக் கொடுத்த நூல்கள் பல சேர்ந்தன. தவிர, நூல்களாக வெளிவருவதற்குத் தயார்ப்படுத்தி வைத்திருந்த கையெழுத்துப் பிரதிகள், நான் அவ்வப் பொழுது பல இடங்களில் நிகழ்த்தி வந்த சொற்பொழிவுகளின் குறிப்புக்கள், நூல்களைப் படித்து வரும் போது எடுத்துக்கொண்டு வந்த குறிப்புக்களடங்கிய நோட் புத்தகங்கள் இப்படிப் பலவும் இருந்தன. இவை அனைத்தையும் எப்படியாவது எடுத்துக் கொண்டு செல்ல வேண்டுமென்பது என் ஆசை. ஆனால் முடியவில்லை, கையெழுத்துப் பிரதிகளையாவது எடுத்து வர முயன்றேன். அதுவும் முடியாது போயிற்று. மற்றப் பொருள்களை விட்டு வந்தற்காக நான் வருந்தவில்லை. இராப் பகலாகச் சிந்தித்துச் சிந்தித்து எழுதிய கையெழுத்துப் பிரதிகளை எடுத்து வர முடியாமற் போனதுதான் என் உள்ளத்தை இன்னமும் அரித்துக் கொண்டிருக்கிறது. ஆயினும் நான் என்ன செய்ய முடியும்? இப்பொழுது இந்த நூலின் மூலமாக பர்மாவிலுள்ள நண்பர்கள் பலரையும், கரங்கு வித்துக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய கையெழுத்துப் பிரதிகள் எங்காவது உங்கள் கண்களுக்குத் தென்பட்டால், அவைகளைத் தயை செய்து எனக்கு அனுப்பி வையுங்களென்று. வழியில் படித்துக் கொண்டு போவதற்கென்று, சில நூல்களை எடுத்து வைத்தேன். ஆனால் அனைத்தையும் எடுத்து வர முடிய வில்லை. உபநிஷதங்களின் பிரதிகள், ரகின் பெருமகனுடைய ஒரு நூல், பிளேட்டோவின் குடியரசு என்ற நூல் ஆகிய இவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள முடிந்தது. சூரியோதய சமயம், நடு வீட்டில் என் வாழ்க்கைத் துணைவி, குத்துவிளக்கை ஏற்றி வைத்தாள். வீட்டிலிருந்த பாலை நன்றாகக் காய்ச்சி அந்தக் குத்துவிளக்குக்கு முன்னால் வைத்தாள். அதுவே அன்று ஒளி மயமான ஆண்டவனுக்கு நிவேதனமாக அமைந்தது. அந்த ஆண்டவனின் பிரதிநிதிபோல், ஆடாமல் அசையாமல் எரிந்து கொண்டிருந்த குத்து விளக்குக்கு நமகாரம் செய்தோம். வீட்டிலிருந்த பீரோக்கள், அலமாரிகள் ஆகியவற்றின் சாவி களை அவை அவற்றின் வாயிலேயே வைத்து விட்டோம். வீட்டின் முன்புறத் திலும், பக்கவாட்டிலும் இருந்த இரும்புக் கிராதிகளாலான நுழைவாயில் களைப் பூட்டாமல் வெறுமனே சாத்தி வைத்தோம். வீட்டிலுள்ள பொருள்களை விட்டு விட்டுப் போகிறோமே என்ற மனச் சஞ்சலம், எங்களுக்குச் சிறிது கூட உண்டாகவில்லை. இருந்ததைப் பற்றியோ இனி இருக்கப் போவதைப் பற்றியோ நாங்கள் எண்ணிப் பார்க்கவில்லை. எண்ணமிட்டுக் கொண்டி ருப்பதற்கு அவகாசம் ஏது? ஊரில் புறப்பட இருந்தவர்கள் தயாராகி விட்டார்களென்று தெரிந்தது. நாங்களும் தயாராகி, தெருப்படிகளில் அடியெடுத்து வைத்தோம். வைத்ததுதான் தாமதம். அபாய அறிவிப்புச் சங்கு குரலெடுத்து விட்டது! இது அபசகுனமா? சுபசகுனமா? எந்தச் சகுன மாயிருந்தாலும் புறப்படுவதிலிருந்து இனிப் பின்வாங்க முடியுமா? ஜப்பானிய விமானங்கள் வட்டமிட்டுச் சிறிது நேரத்திற்குப் பிறகு திரும்பிவிட்டன. அபாயம் விலகிய சங்கும் ஊதியது; புறப் பட்டோம்.  7. புரோம் நகரத்தில் 1942-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம், இருபத்தோராந் தேதி சனிக்கிழமை காலை சுமார் ஏழேமுக்கால் மணிக்கு பக்டோவி லிருந்து நாங்கள் (பக்டோ வாசிகள் சிலர் சேர்ந்து) பன்னிரண்டு பேர் மூன்று கார்களில் ஒரு கோஷ்டியாய்ப் புறப்பட்டோம். ஒவ்வொரு காரிலும் நான்கு பேர் விகிதம் அமர்ந்திருந்தோம். ஒரு காரை, கோ. ரா. ராவும், மற்றொரு காரை வி.வே.ரா. வும் இன்னொரு காரைப் பா. என்ற நண்பரும் முறையே ஓட்டி வந்தார்கள். அனைவரும் பக்டோவுக்கு விடை கொடுத்து விட்டு, ஊர் எல்லையைத் தாண்டிய போது மணி எட்டு. சூரியன் தன் கடமையைச் சற்று சீக்கிரமாகவே செய்ய முற்பட்டு விட்டான். நாங்கள் முதலாவதாகச் சேரவேண்டிய இடம் பர்மாவின் வடக்குப் பகுதியிலுள்ள மாந்தளை என்ற நகரம். ரங்கூனிலிருந்து சுமார் நானூறு மைல் தொலைவிலுள்ளது. ஆற்று மார்க்கமாகவும் ரெயில் மார்க்க மாகவும் செல்லலாம். தவிர நல்ல முறையில் அமைக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலை வழியாகவும் செல்லலாம். ரெயில் மார்க்கமானாலும், நெடுஞ்சாலை வழியானாலும் ரங்கூனுக்குச் சற்று வட கிழக்கே சுமார் நாற்பத்தைந்து மைல் தொலைவிலுள்ள பெகு (பக்கோ) என்ற நகரத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்தப் பெகு நகரம் ஒரு காலத்தில் வியாபாரச் செழுமையுடன் கூடிய ஒரு துறைமுகப் பட்டினமாயிருந்தது. தமிழகத்திலிருந்து அநேக வியாபாரிகள் இங்கு வந்து பொருள் பரிவர்த்தனை செய்து கொண்டு போனார்களென்றும், இவர்களுக்குப் பர்மிய அரசவை யில் மிகுந்த செல்வாக்கு இருந்ததென்றும் பர்மாவின் சரித்திரம் கூறுகிறது. நாங்கள் ரங்கூனை விட்டுச் சிறிது தூரம் வந்து கொண்டி ருக்கையில், பெகு வழியாகச் செல்ல வேண்டாமென்றும் ஜப்பானிய படைகள் இந்த வழியாக வரக்கூடுமென்றும், ஆதலால் நாங்கள் நேரே பெகுவுக்குச் சிறிது வடமேற்கேயுள்ள புரோம் நகருக்குச் சென்று அங்கிருந்து மாந்தளைக்குச் செல்லுதல் நல்லதென்றும் எங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. இதற்குத் தகுந்தாற் போல், வழி நெடுக பிரிட்டிஷ் ராணுவ முதீப்புகள் பலமா யிருந்தன. இந்த எச்சரிக்கையைக் கேட்டு நாங்கள் தம்பித்துப் போய் அங்கேயே நின்று விடவில்லை. அதிகப்படியாகச் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டி யிருக்குமேயென்று யோசித்துக் கொண்டிருக்கவு மில்லை. புரோம் பக்கம் கார்களைத் திருப்பி விட்டோம். எப்படி யாவது அன்றிரவுக்குள் புரோமுக்குப் போய்ச் சேரவேண்டுமென்று உறுதிக் கொண்டோம். கார்களின் இஞ்சின்கள் உறுமின. சக்க ரங்கள் புழுதியைக் கிளப்பின; பறந்தன கார்கள் புரோமை இலக் காகக் கொண்டு. பகல் சுமார் ஒரு மணிக்கு லெட்படான் என்ற ஊருக்கு வந்தோம். இது ரங்கூனுக்கு சுமார் எழுபத்து மூன்று மைல் தொலை விலுள்ளது. இங்கு நாட்டுக்கோட்டை நகரத்தார் மடமும், கோயிலும் உண்டு. பொதுவாக, நகரத்தார், பர்மாவில் தாங்கள் லேவாதேவித் தொழில் செய்து வந்த முக்கியமான எல்லா ஊர் களிலும் மடங்களும், கோயில்களும், நந்தவனங்களும் அமைத்து வைத்திருந்தார்கள். கோயில்கள் யாவும் முருகக் கடவுளுடைய கோயில்களே. சம்பிரதாயமான திருவிழாக்கள் நடைபெறும். சில கோயில்களுக்கு வெள்ளி ரதங்கள், தங்க வாகனங்கள் - இப்படிப் பலவும் இருந்தன. திருவிழாக் காலங்களில் நடைபெறும் விமரிசை களைப் பார்க்கின்ற யாருக்கும் தமிழ்நாட்டில் இருக்கின்றோ மென்ற உணர்ச்சியே உண்டாகும். இங்ஙனமே மடங்களும் நூற்றுக் கணக்கான பேர் வசதியாகத் தங்கக் கூடிய வகையில் அமைக்க பட் டிருந்தன. சில மடங்களில் அன்னதானத்திற்கான ஏற்பாடுகளும் இருந்தன. பர்மாவில் மட்டுமல்ல, தொழில் நடத்தச்சென்ற இலங்கை, மலேசியா, சைகோன் முதலிய எல்லா இடங்களிலும் இந்த மாதிரி யான ஏற்பாடுகளை நாட்டுக் கோட்டை நகரத்தார் செய்து வைத்தி ருந்தார்கள். இப்பொழுதும் இவை நடைபெற்று வருகின்றன. லெட்படான் நகரத்தார் மடத்தில் தங்கி, கையில் கொண்டு வந்திருந்த ஆகார வகைகளை உட்கொண்டு சிறிது நேரம் களைப் பாறினோம். மடத்துக் காரியக்காரர்கள், எங்களுக்கு வேண்டிய உபசரணை களைச் செய்தார்கள். அவர்களுடைய ஊர், பெயர் களைக் கூட நாங்கள் விசாரித்துத் தெரிந்து கொள்ளவில்லை. அனை வருக்கும் நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். எங்களுடைய அடுத்த இலக்கு புரோம் அல்லவா? இந்த நகரம், புரோம் மாவட்டத்தின் தலைநகரம். அதற்குரிய வசதிகளு டையது, ரங்கூனிலிருந்து ரெயில் மார்க்கமாக சுமார் நூற்றைம்பது மைல் தொலைவில் இருப்பது. ஆற்று மார்க்கமாகவும் செல்லலாம். ஒரு காலத்தில், அதாவது கிறிது சகத்திற்குச் சில நூற்றாண்டுகள் முந்தி, இது, பர்மாவின் தலைநகரமாயிருந்ததாகச் சொல்வர். கி. பி. எட்டாவது நூற்றாண்டில் தலெய்ங் என்ற ஒரு ஜாதியார் இதனை அழித்துவிட்டனர். அந்த அழிவின் மீதுதான் புதிய புரோம் நகரம் ஏற்பட்டது. சிறப்பு வாய்ந்த இரண்டு புத்தர் கோயில்கள் இங்கு இருக்கின்றன. இந்த புரோம் நகருக்கு நாங்கள் போய்ச் சேருகிறபோது இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது. அங்குள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராயிருந்த நா. ச. வீட்டில் இறங்கினோம். இரவு வெகுநேரமாகி விட்டிருந்தாலும் வீட்டிலுள்ளவர்கள் முகஞ் சுளிக்காமல் எங்களை அன்போடு வரவேற்றார்கள். எங்கள் வயிறு காலியாயிருந்தாலும், அவர்கள் காட்டிய அன்பு எங்கள் உள்ளத்தைக் குளிர்வித்தது. எங்களிலே ஒருவர், எங்களுக்கு ஆகாரம் தேடிக் கொண்டு வர எங்கெங்கோ அலைந்து பார்த்தார். ஆனால் அந்த அகாலத்தில் எங்கே என்ன கிடைக்கும்? வெறுங்கையோடு திரும்பி வந்தார். மறுநாள் (22-2-42) காலை சுமார் பத்தரை மணிக்கு மேற் கொண்டு எங்கள் பயணத்தைத் தொடங்கவேண்டியவர்களானோம். அதற்குள் வீட்டிலுள்ளவர்கள் எங்களுக்குச், சாப்பாடு செய்வித்த தோடு வழியில் உபயோகித்துக் கொள்ளும் பொருட்டு சாதமும் கொடுத்தனுப்பினார்கள். உணவுப் பொருள்கள் சரிவர அகப்படாத அந்த நெருக்கடியான நேரத்தில் கூட அந்த வீட்டினர் செய்த உபசரணை, விருந்தோம்பலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாயிருந்தது. நாங்கள் புறப்படுவதற்குச் சற்று நேரம் முன்பு நாங்கள் வந்திருப்பது தெரிந்து ரங்கூனில் எங்களுக்குப் பழக்கமான ஒருவர் மேற்படி நா.ச. வீட்டிற்கு வந்தார். அவர் அரசாங்க உயர்தர உத்தி யோகதர்; ராவ்சாஹிப் பட்டம் பெற்றவர்; வீட்டில் சமையல் ஆள் முதல் வைத்துக்கொண்டு தோரணையாக வாழ்க்கை நடத்தி வந்தவர். பார்ப்பதற்கும் எடுப்பான தோற்றமுடையவர்; பரமசாது; வாயி லிருந்து துடுக்காக ஒரு வார்த்தை கூட வராது. எங்களுக்கு முன்னாடியே அவர் ரங்கூனிலிருந்து புரோமுக்கு வந்திருக்கிறார். ஆனால் தங்குவதற்கோ ஆகாரத்திற்கோ வசதி கிடைக்காமல் சங்கடப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறார். ïjdhš jh‹ nghY« eh§fŸ j§»ÆU¡F« ïl¤â‰F¤ njo tªJ cl«bgšyh« Tá¡Fiya, ifÚ£o, ‘xU fts« m‹d« »il¡Fkh? என்று கேட்டார். அவர் கைநீட்டிக் கேட்டது, எங்கள் உள்ளத்தை உருக்கிவிட்டது. இதற்குமேல் அந்தக் காட்சியை எப்படி வருணிப்பது? வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லி அவருக்குச் சாப்பாடு செய்வித்துவிட்டு, மேற்கொண்டு பயணத்தைத் தொடங் கினோம்.  8. பர்மிய உழவர்களின் உதவி புரோமிலிருந்து காலை சுமார் பத்தரை மணிக்குப் புறப்பட்ட நாங்கள் பகல் பன்னிரண்டு மணிக்குமேல் அல்லன்மியோ என்ற ஊருக்கு வந்தோம். இது ஐராவதி ஆற்றங்கரையிலுள்ளது. பர்மா வின் வடக்குப் பகுதி எல்லையும், தெற்குப் பகுதி எல்லையும் இங்குச் சந்திக்கின்றன. அழகான ஊர். இங்குப் பகல் நேரத்தில் தங்கி, புரோமி லிருந்து கொண்டு வந்த கட்டுச்சாதத்தைத் தீர்த்துக் கட்டினோம். உடனே புறப்பாடுதான். மாலை தவுண்டிஞ்சி என்ற ஊருக்குப் போய்ச் சேர்ந்தோம். இங்கு ராவ்சாஹிப் பட்டம் பெற்ற ஓர் அன்பர் எங்களை வரவேற்று உபசரித்தார். அவருடைய சிரித்த முகமும், அன்பு கனிந்த வார்த்தைகளும் எங்கள் பிரயாணக் களைப்பை ஒரு நொடியில் நீக்கிவிட்டன. சீக்கியர் மடம் ஒன்று அங்கு இருக்கிறது. அந்த மடத்தில் எங்களுக்கு ரொட்டியும் கறி காய்களும் உதவி னார்கள். அன்றிரவு அங்குக் கழித்து விட்டு மறுநாள் (23-2-42) காலை பயணத்தைத் தொடங்கி பகல் ஏனாஞ்சாங்குக்கு வந்தோம். இது ஐராவதி நதியின் கிழக்குக் கரையிலுள்ளது. இங்கு எண்ணெய்க் கிணறுகள் பல உண்டு என்பது உலகப் பிரசித்தம். பெட்ரோலும், கிரோசினும், வேறு பல உபபொருள்களும் இங்கிருந்துதான் பர்மா வுக்கும், இந்தியாவுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இங்குத் தமிழர்கள் பலர் வசிக்கிறார்கள். இந்த ஊரில் சுமார் ஒரு மணி நேரம் தங்கி ஒரு ஹோட்டலில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு மெக்டீலா என்ற ஊரை நோக்கிப் புறப்பட்டோம். கார்ப்பயணமாக இருந்த போதிலும் இந்தப் பகுதி யில் நாங்கள் வந்தபோது எங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுவர வேண்டியதாக இருந்தது. எத்தனை பள்ளத் தாக்குகள், இவற்றில் இறங்கி மேட்டில் ஏறுகிற போது கார்கள் பெருமூச்சு விட்டன; முணுமுணுத்தன; உறுமின; கார்களை ஓட்டிச் சென்றவர் களைத் தவிர மற்றவர்கள் இறங்கு பள்ளத்திலும், ஏறு மேட்டிலும் நடந்தே செல்லும்படியிருந்தது. இருந்தாலும், ஓட்டிச் சென்றவர் களைக் கூட்டிக்கொண்டு கார்கள் குப்புறக் கவிழ்ந்து விடுமோ? பின் னுக்குச் சாய்த்து விடுமோ? என்ற பயம் எங்களை அரித்துக் கொண்டே இருந்தது, நல்ல வேளையாக விபரீதம் ஏதும் நிகழ வில்லை. இந்த மாதிரியான பள்ளத் தாக்குகளைக் கடக்கிற போது ஆங்காங்கு உழவுத் தொழில் நடத்திக் கொண்டிருந்த பர்மியர்கள் வந்து எங்களுக்கு உதவினார்கள். எங்கள் கார்களை மேட்டிலே ஏற்றிக் கொடுத்தார்கள். அப்படிச் செய்கிறபோது பையா, பையா என்று கூறுவார்கள். பையா என்றால் பர்மிய மொழியில் கடவுள் என்று பொருள். கடவுள் கிருபையினால்தான் மேட்டிலே கார்கள் ஏற்ற முடியும் என்பதில் அவர்கள் பூரண நம்பிக்கை கொண்டிருந்தார் கள். அவர்களைப் படிக்காத வர்கள் என்று உலகம் அழைக்கக்கூடும். ஆனால் அவர்களிடத்தில் காணப்படும் தெய்வ நம்பிக்கையும், தன்னம்பிக்கையும், பிறர்க்கு உதவும் மனப்பான்மையும் படித்தவர் களென்று தம்பட்டமடித்துக் கொண்டிருக் கிறவர்களிடத்தில் எந்த விகிதாசாரத்தில் இருக்கின்றன? அந்தப் படிப்பில்லாத பர்மிய சகோதரர்களுடைய உதவியில்லாமற் போனால் எங்களுடைய கார்களும் நாங்களும் எவ்வித ஆபத்துமில்லாமல் மெக்டீலாவுக்குப் போய்ச் சேர்ந்திருக்க முடியுமா என்பது சந்தேகம். மாலை சுமார் ஆறரை மணிக்கு மெக்டீலா போய்ச் சேர்ந் தோம். அங்கு ஓர் அன்பர் வீட்டில் தங்கி, அவ்வீட்டினர் அளித்த உணவை உட்கொண்டு இரவைக் கழித்தோம். மறுநாள் (24-2-42) காலை மேற்கொண்டு பயணத்தைத் தொடங்க முற்பட்டோம். ஆனால் நாங்கள் புறப்படுந் தறுவாயில் அபாய அறிவிப்புச் சங்கு ஊதியது. ஒரு தடவை யல்ல; இரண்டு தடவை. இந்தச் சங்கொலி எங்களுக்கு மிகவும் பழக்கப் பட்டு விட்டதாயினும் அவ்வூர் ஜனங்கள் இதைக் கேட்டு அலறிப் புடைத்துக் கொண்டு மூலைக்கொருவராய் ஓடியதைப் பார்க்க எங்களுக்கு மிகவும் பரிதாபமாயிருந்தது.  9. உண்டி கொடுத்து உயிர் கொடுத்தவர் அபாயம் விலகிய சங்கு ஊதிய பிறகு, காலை சுமார் ஒன்பது மணிக்குப் புறப்பட்டோம். சிறிது தூரம் சென்றதும் எங்களுடைய கார்கள் ஒன்றின் பின் பக்கம் கட்டியிருந்த படுக்கை முதலியவை சரிந்து விழுந்து விடும்போல் இருந்தது. உடனே காரை நிறுத்தி அதைச் சரிப்படுத்தினோம். பெட்ரோல் போட்டுக் கொண்டு வந்த பீப்பாய் காருக்குச் சுமையாயிருப்ப தாகத் தெரிந்தது. எனவே, அதிலிருந்து அற்ப சொற்பமான பெட்ரோலை வண்டியிலுள்ள டாங்கியில் ஊற்றி விட்டு மேற்கொண்டு தேவையான அளவு பெட்ரோலை நிரப்பிக் கொண்டோம். காலியான பீப்பாயைக் கீழே இறக்கி, வழிப் போக்கன் ஒருவனிடம் ஒப்படைத்து, அதனை அவனுடைய உரிமைப் பொருளாக்கிக் கொள்ளுமாறு சொன்னோம். எங்களுக்குப் பயன் படாத ஒன்றைப் பிறருக்குத் தானங்கொடுப்பதில் நாங்கள் தாராள மனப்பான்மையுடையவர்களா யிருந்தோம்! மெக்டீலாவிலிருந்து காலை ஒன்பது மணிக்குப் புறப்பட்ட நாங்கள். பகல் ஒரு மணிக்கு செளஸே என்ற ஊருக்கு வந்தோம். பர்மாவிலுள்ள பெரும்பாலான ரயில்வே டேஷன்களில், தமிழர் களுக்குத் தேவையான ஆகார வகைகள் கிடைப்பது அரிது என்பது எங்களுக்குத் தெரிந்திருந்த தாயினும், பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்ற வாசகத்திற்கிணங்க, கார்களை ரெயில்வே டேஷனுக் கருகில் நிறுத்திவிட்டு, எங்களையும் மறந்து, அந்த டேஷனில் ஏதேனும் ஆகாரம் கிடைக்குமா என்று பார்த்தோம். ஆனால் அந்த டேஷனோ, மனிதாபிமானம் என்பது சிறிதும் இல்லாமல், அங்கு நின்று கொண்டிருந்த ஓர் இஞ்ஜின் மூலம் கரும்புகையை எங்கள் மீது உமிழத் தொடங்கியது. வெயிலோ கொளுத்திக் கொண்டிருந்தது. டேஷனில் ஒன்றும் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும், கார்களில் வந்த சகோதரர்கள், ஊருக்குள் எங்கேனும் ஆகாரம் கிடைக்குமா என்று பார்த்து வரச் சென்றார்கள். நானும், என் வாழ்க்கைத் துணைவியும் ஒரு காரில் ஏக்கத்துடன் உட்கார்ந் திருந்தோம். அந்தச் சமயத்தில் தேவதூதன் மாதிரி ஓர் அன்பர் நாங்கள் அமர்ந்திருந்த கார் அருகில் வந்து, முகம் சுண்டிக்கிடந்த எங்களைப் பார்த்தார். அவர் ரங்கூனில் எங்கள் அனைவருக்கும் அறி முகமானவர். அரசாங்க அலுவலராக அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருந்தார். அவர் பெயர் எல். எம். Ó.; இந்தப் பெயரை நன்றி யுணர்வோடு இங்குக் குறிப்பிடுகிறேன். tªjJ« ‘v§nf ï¥go tªâU¡»Ö®fŸ? என்று கேட்டார். எங்கள் நிலைமையைச் சுருக்கமாகக் கூறினேன். இன்னும் யார் யார் வந்திருக்கிறார்கள்? வேறு இரண்டு கார்கள் நிற்கின்றனவே என்றார். இன்னின்னார் வந்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் ஆகாரம் தேட அதோ கூப்பிடு தூரத்தில் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொன்னேன். ‘m¥goah? என்று சொல்லி அவர்களைக் கை தட்டி அழைத்தார். அவர்களும் உடனே வந்தார்கள். எல்லோரும் என் வீட்டிற்கு வாருங்கள். சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்று அவர் கனிவோடு சொன்னபோது அது தேவ வாக்கோ என்று எண்ணி உள்ளம் பூரித்தோம். அவருடைய அழைப்பைத் தயக்கமில்லாமல் ஏற்றுக் கொண்டோம். மூன்று கார்களும் அவர் வீட்டின் முன்சென்று நின்றன. பர்மாவில் பெரும்பாலான வீடுகள் மரத்தினால் கட்டப் பெற்றிருக்கும். இரண்டு மூன்று மாடிகளைக் கொண்ட வீடுகள் கூட இப்படித்தான். இவை சம சீதோஷணத்தை அளிக்கவல்லவை. இத்தகைய ஒரு மாடி வீட்டில்தான் எம்.எல்.சீ. குடியிருந்தார். கார்களிலிருந்து நாங்கள் இறங்கி மாடிக்குச் செல்ல முற்பட் டோமாயினும் காலமில்லாத காலத்தில், எவ்வித முன்னறிவிப்பும் கொடாமல், பத்துப் பன்னிரண்டு பேர் விருந்தாளிகளாகச் செல் கிறோமே என்ற கூச்சம் எங்களுக்கு இருக்கத்தான் செய்தது. ஆயினும் எங்கள் வயிற்றுப் பசி எங்களை முன்னே தள்ளிக் கொண்டு சென்றது. மாடிப் படிகளில் ஏறி உள்ளே நுழைந்ததும், வீட்டிலுள்ள பெண்மணிகள் எங்களை இன்முகத்தோடு வரவேற்றார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் இன்முகம் காட்டியது எங்களுக்கு எவ்வளவு ஆறுதலாயிருந்தது, தெரியுமா? இத்தனைக்கும் அந்த வீட்டு மரு மகப் பிள்ளை காய்ச்சலோடு படுத்துக் கிடந்தார். அதனால் அவர்கள் எவ்வளவு மன வேதனை அடைந்திருந்தார்களோ? ஆனால் அதைத் தங்கள் பார்வையிலோ பேச்சிலோ லேசாகக் கூடக்காட்டிக் கொள்ளாமல் அவர்கள் எங்களை உபசரித்த பண்பை என்னென்று சொல்வது! அரை மணி நேரத்திற்குள் இலை போட்டுவிட்டார்கள். அந்த நேரத்தில் நுனி வாழை இலை அவர்களுக்கு எப்படிக் கிடைத்ததோ? மொச்சைப் பருப்புப் போட்ட வற்றல் குழம்பு, பொரித்த அப்பளம், மோர் இவைதான் எங்களுக்கு அளிக்கப்பட்ட விருந்து. பசியாலும், பிரயாணத்தினாலும் வற்றிப் போயிருந்த எங்களுக்கு அந்த வற்றல் குழம்பு தேவாமிருதமாயிருந்தது. அவர் களும் கை கொண்ட மட்டும் பரிமாறினார்கள். நாங்களும் வயிறு கொண்ட மட்டும் சாப்பிட்டோம். இன்னொரு வேளைக்கும் சேர்த்துச் சாப்பிட்டு விட வேண்டும் என்ற ஆசைதான் எங்களுக்கு. ஆனால் அதற்காக நாங்கள் ஒட்டகமாக வல்லவோ மாற வேண்டும்? எங்களுக்கு அது சாத்தியமில்லை. மனிதர் களாகவே இருந்து விட்டோம். ஆம். இந்த பர்மா நடைப் பயணத்தின் போது எத்தனை மனிதர்கள், மனிதப் பிராணிகளாக இறங்கி விட்டார்கள்! எத்தனை மனிதப் பிராணிகள் மனிதர்களாக உயர்ந்து விட்டார்கள்! சூழ் நிலைக்கு ஆட்பட்டவர்கள் எத்தனை பேர்! சூழ்நிலையை ஆட் படுத்திக் கொண்டவர்கள் எத்தனை பேர்! இவற்றை எல்லாம் கணக் கிட்டுப் பார்த்தால், முழு மனிதர்களாக உயர்ந்து நின்று காட்சியளித் தவர்கள் ஒரு சிலர்தான். இந்தக் கணக்கு எப்படியிருந்த போதிலும் செளஸேயில் எங்களுக்கு வற்றல் குழம்போடு விருந்து செய்வித்தவர்கள், முற்றிய மனிதர் களாகவே எங்கள் உள்ளத்தில் இடம் பிடித்துக் கொண்டு விட்டார்கள். அந்த உள்ளம் துடித்துக் கொண்டிருக்கிற வகையில் அவர்கள் அங்கேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். செளஸேயிலிருந்து பிற்பகல் மூன்று மணி சுமாருக்கு மாந் தளையை நோக்கி எங்கள் கார்கள் புறப்பட்டன.  10. மாந்தளை சேர்தல் மாந்தளை, ரங்கூனுக்கு அடுத்தபடி பர்மாவில் முக்கிய நகரம். பர்மிய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இது 1860 முதல் 1885-ஆம் வருஷம் வரை தலைநகரமாயிருந்தது. இங்கு அரண்மனையும், அதைச் சுற்றிப் பன்னிரண்டு நுழைவாயில்களையுடைய கோட்டை யும், கோட்டையைச் சுற்றி சுமார் இருநூற்றிருபத்தைந்து அகல முள்ள அகழியும் முறையாக அமைக்கப்பட்டிருந்தன. அகழியில் எப்பொழுதும் நீர் நிறைந்திருக்கும்; வண்ண வண்ண மலர்கள் பூத்துக் கிடக்கும். நகரத்து மக்களில் பலர், இந்த அகழி நீரைக் குளிப் பதற்கும், குடிப்பதற்கும் உபயோகப்படுத்தி வந்தனர். புத்தர் பிரானுக்கென்று இங்கு அழகான கோயில்கள் பல காட்சியளித்தன. கோட்டைக்குச் சிறிது வட கிழக்கில் ஒரு குன்று இருக்கிறது. இதனை மாந்தளைக் குன்று என்று சொல்லியிருக்கிறார்கள். இதன் உயரம் சுமார் தொள்ளாயிரத்து ஐம்பது அடி. மலை உச்சியை அடையப் படிகள் இருக்கின்றன. சில இடங்களில் செங்குத்தாக ஏற வேண்டியிருக்கிறது. மலை உச்சியில் பெரிய மண்டபங்கள், சிற்றறை கள் பலவும் அழகான முறையில் அமைக்கப் பெற்றிருக்கின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு சர்வகலா சாலை நடை பெறுவதற்கான எல்லா வசதிகளும் இருக்கின்றன. தண்ணீர் குழாய், மின்சாரம் முதலிய நவீன வசதிகளையும் இதில் அமைத்திருக் கிறார்கள். நகரத்தின் மத்தியில் உள்ள ஜிக்யோபஜார் மிகவும் பிரசித்த மானது. பர்மாவில் உற்பத்தியாகின்ற விளைபொருள்களையும், தயாரிக்கப்படு கின்ற செய்பொருள்களையும் இங்குக் காணலாம். சிறப்பாகப் பலவகை பட்டுத் துணிகளைத் தரமறிந்து வாங்க விரும்பு வோர்க்கு இந்த பஜார் மிகவும் உதவியாயிருக்கும். பொதுவாகவே இந்த நகரம் வியாபாரச் செழிப்புடையது. இத்தகைய மாந்தளை நகரத்திற்கு நாங்கள் 1942-ஆம் வருஷம், பிப்ரவரி மாதம், இருபத்து நான்காம் தேதி, செவ்வாய்க் கிழமை மாலை சுமார் ஆறு மணிக்கு வந்து சேர்ந்தோம். ரங்கூனிலிருந்து ஏறக் குறைய நானூறு மைல் தூரம் கார்ப் பிரயாணத்திற்கு நான்கு முழு நாட்கள் பிடித்தன. இந்த நான்கு நாட்கள் பிரயாணத்தின் போது, எங்கள் கார்கள் அநேக இடங்களில் சிறு சிறு ஆபத்துக்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. எங்களுக்குப் பின்னால் வந்த லாரிகளும், தனிப்பட்ட கம் பெனிகளின் சாமான் லாரிகளும், தனிப்பட்டவர்களின் கார்களும் அநேக இடங்களில் எங்கள் கார்களை முட்டின. முன்னால் வந்து கொண்டிருந்த லாரிகள் சில எங்கள் கார்களின் முகப்பை மோதின. சில இடங்களில் எங்களைப் பின்னே தள்ளி விட்டு முன்னே செல்ல முயன்ற கார்கள், பக்கவாட்டில் எங்கள் கார்களை உராய்ந்து கொண்டு சென்றன. நல்ல வேளையாக எங்களுக்கோ, எங்கள் கார்களுக்கோ பெரிய விபத்து ஒன்றும் ஏற்படவில்லை. கார்களின் வேகமான போக்குவரத்தின் விளைவாக எழுந்த தூசிப் படலம் எங்கள் மீது படிந்து படிந்து எங்களை கன மனிதர்களாக்கிவிட்டது! எங்கள் மூக்கு, கண், தொண்டை - இப்படி எல்லா இடங்களிலும் புழுதி மண் வந்து புகுந்து கொண்டு எங்களுக்குச் சங்கடத்தைக் கொடுத்தது. ஆனாலும் இந்தச் சங்கடத்தை நாங்கள் சகஜமாகவே கடந்தோம். நகைச்சுவை எங்களை விட்டு அகலாம லிருந்ததுதான் இதற்குக் காரணம். நாங்கள் வழியில் ஆங்காங்குச் சிறிது நேரம் கார்களை நிறுத்தி விட்டு ஓய்வு எடுத்துக் கொள்கின்ற முறையில் தமாஷாகப் பேசிக் கொண்டிருப்போம். போவோர் வருவோரை க்ஷேமலாபங்கள் விசாரிப்போம். அவர்களுடைய அனுதாபத்தோடு எங்கள் அனு தாபத்தை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வோம். சென்றதைப் பற்றிய கவலையோ, வருவதைப் பற்றிய சிந்தனையோ எங்களுக்கு ஏற்பட வில்லை. நிகழ்காலம் ஒன்று மட்டுமே எங்கள் உள்ளத்தில் குடி கொண்டிருந்தது. மாந்தளை வரும் வழியில் எங்களோடு வந்த ஏ. வி. ம. என்ற அன்பருக்கு வயிற்றுப் போக்கு கண்டு விட்டது. இரண்டு நாள் அவதைப் பட்டார். எங்களுக்கும் கவலையாய் இருந்தது. ஆனால் மூன்றாவது நாள் எப்படியோ அவருக்குக் குணமாகிவிட்டது. எல்லாம் ஈசன் அருள்! மாந்தளை வந்து சேர்ந்த நாங்கள் பர்மா பால் நிலையம் என்று அமைக்கப்பட்ட ஒரு கட்டிடத்தில் தங்கினோம். அது மரத்தினா லான பெரிய மாடி வீடு. எங்களைப் போல வேறு சிலரும் இங்கு வந்து தங்கியிருந்தார்கள். மாந்தளையில் அமைதிக்குப் புறம்பான ஒரு சூழ்நிலையே நிலவியிருந்தது. நாங்கள் வருவதற்குச் சுமார் ஒரு வாரம் முந்தி (19-2-42) சில ஜப்பானிய விமானங்கள் வேவு பார்த்துச் செல்கின்ற முறையில் சில குண்டுகளை வீசி விட்டுச் சென்றிருந்தன. இதனால் சில சேதங்களும் ஏற்பட்டிருந்தன. ஜனங்கள் மிகவும் பீதியடைந் திருந்தார்கள். போதாக்குறைக்கு ரங்கூனிலிருந்த அரசாங்க அலு வலகங்கள், வியாபார நிலையங்கள், பாங்கிகள் இப்படிப் பலவும் மாந்தளைக்கு மாற்றப்பட்டு வந்துகொண்டிருந்தன. இவற்றோடு இவற்றின் சிப்பந்திகளும் வந்து சேர்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் வந்த இரண்டு மூன்று நாட்கள் கழித்து மாந்தளையை ஒருவாறு சுற்றிப் பார்க்க நேரிட்டது. அப்பொழுது பார்த்தால், ரங் கூனிலிருந்த தென்னிந்திய சமூகம் பூராவும் திரண்டு மாந்தளைக்கு வந்து விட்டதோ! என்று எண்ணும் படி இருந்தது. சாப்பாடு ஹோட்டல்களில் ஒரே நெருக்கடி. ஜாகைகள் கிடைப்பது அரிதாகி விட்டது. எங்குச் சென்றாலும் ஹோட்டல்களிலே, மார்க் கெட்டிலே, தெருமுனைகளிலே - இப்படி நான்கு பேர் சேரக் கூடிய எல்லா இடங்களிலும், ஜப்பானியப் படையெடுப்பைப் பற்றிய பேச்சுதான். இந்தப் பேச்சுக்களுக்கு நடுநடுவே அவரவருடைய சொந்த விவகாரங்களும் வந்து போயின. ரங்கூனில் போட்டது போட்டபடியே விட்டுவிட்டு வந்து விட்டோமே! அவை என்ன கதி யாயிற்றோ என்ற கவலை சிலருக்கு; ரங்கூனில் வசதியாக வாழ்ந்த வாழ்க்கை என்ன! இப்பொழுது அகதியாக இடம் விட்டு இடம் பெயர்ந்து திரிகின்ற நிலைமை என்ன! என்ற ஏக்கம் சிலருக்கு; முன் கூட்டியே புத்திசாலித்தனமாகக் குடும்பத்தை இந்தியாவுக்கு அனுப்பி விட்டோம். அது சரிதான்; ஆனால் அவர்கள் அங்கு எங்கே இருக்கிறார்களோ? யாருடைய தயவை எதிர்பார்த்து நிற்கிறார்களோ? செலவுக்கு என்ன செய்கிறார்களோ என்ற வேதனை சிலருக்கு; நமது அலுவலகம் இந்தியாவுக்கே நிரந்தர மாகப் போய்ச் சேர வேண்டி நேருமோ? அப்படி நேர்ந்தால், இப் பொழுது கிடைத்து வருகிற சம்பளம் அலவன் - முதலியன இதே அளவில் கிடைத்து வருமா? பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் கிட்டுமா? – சிலர் எண்ணமிட்டனர் வாழ்க்கையின் லட்சியம் உத்தி யோகம் செய்வதே என்ற கருத்துக் கொண்டிருந்த சிலர்; இந்தியா வுக்குப் போன பிறகு ஒழுங்காக பென்ஷன் கிடைத்து வருமா? கிடைக்காமலேயே நின்றுவிடுமா? என்று மனத்தை அலைபாய விட்டனர். பென்ஷன் பெற்ற பிறகு ரங்கூனிலேயே குடும்ப சகிதம் நிரந்தர வாசம் செய்து கொண்டிருக்க வேண்டுமென்று ஆசைப் பட்டுக் கொண்டிருந்தனர் சிலர்; தாய் நாட்டுக்குச் சென்றால் மட்டும் என்ன! ரங்கூன் வாழ்க்கையைப் போல் அங்கு வாழ்க்கை நடத்த முடியுமா? என்று பெருமூச்சு விட்டனர். அந்நிய நாட்டு வாசம் ஆபத்தில் கை கொடுக்காது என்ற உண்மையை அறியாத சிலர்; இப்படி எத்தனையோ விதமான பேச்சுக்கள் மாந்தளையில் அடிப் பட்டன. இந்த மாதிரியான பேச்சுக்களை நீங்கள் காது கொடுத்துக் கேட்டீர்களா? என்று இதைப் படிக்கிறவர்கள் என்னைக் கேட் டாலும் கேட்கக் கூடும். கேட்பது தவறில்லை. நான் பத்திரிகால யங்களில் செய்தி திரட்டும் பணியாற்றி ஓரளவு அனுபவம் பெற்றவன். எங்கு, எப்பொழுது சென்றால் என்ன மாதிரி செய்தி கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும். இதனால் மாந்தளையில் தங்கியிருந்த போது, ஊர் சுற்றிப் பார்க்கின்ற முறையில் காலை யிலும் மாலையிலும் வெளியே சென்று வருவேன். ஆங்காங்கு நான்கு பேர் சேர்ந்து பேசும் இடங்களில் சென்று, சிறிது ஒதுங்கினாற் போல் இருந்து அங்குப் பேசப்படுவதைக் கேட்பேன். கேட்ட சிலவற்றைத் தான் இங்குக் குறிப்பிட்டிருக்கிறேன். இங்ஙனம் இவர்கள் பேசியதில் வியப்பொன்றுமில்லை. வருஷக் கணக்கில் ஏதோ ஒரு விதமான சூழ்நிலைக்கு மத்தியில் வாழ்ந்து விட்டு, எதிர்பாராத வகையில் அந்தச் சூழ்நிலை கழன்று போக, அதன் தானத்தில் முன்பின் பரிச்சயமில்லாத சூழ்நிலை அமைந்து விட்டால், அப்பொழுது அந்தப் புதிய சூழ்நிலையில் சிக்கிக் கொண்டவர்கள் பலவிதமாக எண்ணுவதும், பலவிதமாகப் பேசு வதும் சகஜமே. இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?  11. மாந்தளை வாசம் மாந்தளைக்கு நாங்கள் வந்த பிறகு அங்கு நீடித்திருக்க முடியா தென்ற நிலைமை உருவாகிக் கொண்டு வந்தது. ரங்கூன் படுமோச மாகிக் கொண்டு வருவதாகச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. அங்கு சகஜமான நிலைமை மீண்டும் ஏற்பட்டு விட்டுவிட்டால் பழைய மாதிரி அங்கே திரும்பிப் போய்விடலாம் என்று ஒரு சிலருடைய உள்ளத்தில் ஊசலாடிக் கொண்டிருந்த நம்பிக்கை ரேகை அடி யோடு மறைந்துவிட்டது. மேற்கொண்டு பயணத்தைத் தொடங்கி இந்தியாவுக்குப் போய்ச் சேர வேண்டியதைத் தவிர வேறு வழி யில்லை என்ற எண்ணம், எல்லோர் மனத்திலும் ஏற்பட்டுக் கொண்டு வந்தது. இந்த நிலையில் ரங்கூனி லிருந்து ஒரு குழுவினராக வந்த நாங்கள், அப்படியே ஒரு குழுவினராக ஒரே காலத்தில் இந்தியா வுக்குப் போக முற்படுவது அசாத்தியமென்று தெரிந்தது. மற்றும் ஒருவருக்காக ஒருவர் காத்திருந்தோ தங்கியிருந்தோ மேல் பயணத்தைத் தொடங்க வேண்டுமென்பது நடைமுறைக்கு ஒத்து வராது என்று உணர்ந்தோம். எனவே, அவரவரும் அவரவருக்குக் கிடைக்கும் வாகன வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு அவர வருக்குகந்த மார்க்கத்தில் ஒருவராகவோ, இரண்டு மூன்று பேர் களாகவோ செல்ல வேண்டியது அவசியமாகி விட்டது. தவிர, மாந்தளையில் எவ்வளவு காலம் தங்கியிருக்க வேண்டும் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. இந்த நிலைமையில் வந்தவர் அனைவரும் ஒரே இடத்தில் தங்கியிருப்பது தங்க இடம் கொடுத்த வருடைய அன்பைப் பரிசோதனைக்குட்படுத்திப் பார்ப்பது போலாகும் அல்லவா? வந்தவர் எல்லோரும் ஒரே மனப்போக்குடையவர்களாக இருக்க முடியாதல்லவா? அப்படித்தான் இருக்க வேண்டுமென்ற நிர்ப் பந்த நிலைமையை நீடிக்கச் செய்வது அவரவர் எண்ணச் சுதந் திரத்திற்கும், செயல் சுதந்திரத்திற்கும், விலங்கிட்டு வைப்பது போலாகும். ஆதலின், தனித்தனிக் குழுவினராகப் பிரிந்து அவரவரும் அவர வருடைய சௌகரியப்படி மாந்தளையில் தங்கியிருப்பதைப் பற்றியோ, மேற் கொண்டு பிரயாணம் செய்வதைப் பற்றியோ தீர்மானித்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தோம். இதன் படி, நான், என் வாழ்க்கைத் துணைவி, வி. வே.ரா. ஆகிய மூவரும் மாந்தளையிலேயே இருபத்து நான்காவது எண் வீதியி லுள்ள ஓர் இடத்திற்கு, பிப்ரவரி மாதம் இருபத்தெட்டாம் தேதி இரவு குடிசென்றோம். மாதம் ஒன்பது ரூபாய் வாடகை; மறுநாள் மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து இங்கே சமையல், சாப்பாடு எல்லாம் வைத்துக் கொண்டோம். இங்கு எங்கள் உறவினருள் ஒரு வரான மோ. ரா. என்பவர் எங்களோடு வந்து சேர்ந்து கொண்டார். இவர் ஓர் அரசாங்க உத்தியோகதர். இவருடைய காரியாலயம் எங்களுக்கு முந்தியே மாந்தளைக்கு மாற்றப்பட்டிருந்தது. அப் பொழுதே இவர் மாந்தளைக்கு வந்திருந்தார். இவர் அமர்த்திக் கொண்டிருந்த இடத்தைத்தான் எங்களுக்கு மாற்றிக் கொடுத்து விட்டு எங்களுடன் இருந்தார். நல்ல உபகாரி. இந்தப் புதிய இடத்திற்கு வந்த பிறகு, எனக்கும், என் வாழ்க்கைத் துணைவிக்கும், ஒன்று போனால் ஒன்று என்று ஏதோ ஒரு நோய் பற்றிக் கொண்டு தொந்தரவு கொடுத்தது. போதாக் குறைக்குக் கொசு உபத்திரவம் அதிகம். பகல் நேரத்திலேயே கூட்டம் கூட்டமாகப் படையெடுத்து வந்து தாக்கும். இரவு நேரத்தில் கேட்க வேண்டிய தில்லை. நல்ல வேளையாக இரண்டு கொசு வலைகள் கொண்டு வந் திருந்தோம். இவைகளை உபயோகப் படுத்தினோமோ, பிழைத்தோமோ! இந்தக் கொசுத் தொல்லைப் போதாதென்று, ஏறக்குறைய தினந்தோறும் அபாய அறிவிப்புச் சங்கு ஊதி எங்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தது. இதற்காகப் பயந்து எங்கே போய்ப் பதுங்கிக் கொள்வது? ரங்கூனில் செய்து கொண்டிருந்த மாதிரி ஆள் பதுங்கிக் குழியை வெட்டிக் கொண்டிருக்க முடியுமா? தற்காலிக மாகக் குடி வந்திருக்கும் வீட்டில் இது சாத்தியமா? ஆகையால், சாகத் துணிந்தவனுக்கு முழங்கால் ஆழ மானால் என்ன? ïL¥ gsî MHkhdhš v‹d? என்ற பழமொழிக்கிணங்க சங்கு முழங் கும் காலங்களில் வீட்டிலேயே வருவது வரட்டும் என்ற மனப் பான்மை கொண்டு இருந்துவிட்டோம். எங்களுக்கும் சங்கொலி கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்விட்டது; பயமும் போய் விட்டது. சங்கு அடிக்கடி ஒலித்துக் கொண்டிருந்ததாயினும், நாங்கள் இருந்த வரை விமானத் தாக்குதல் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், நாங்கள் மாந்தளையை விட்டுப் புறப்பட்ட இரண்டு வாரத்திற்குப் பிறகு சரியாக ஏப்ரல் மாதம், மூன்றாந் தேதி, பலமான விமானத் தாக்குதல் ஏற்பட்டது. சுமார் இரண்டாயிரம் பேர் உயிரிழந்தனர். நகரத்தின் பெரும்பகுதி, தீயினால் நாசமாயிற்று. அன்று நாங்கள் கலேவா என்ற ஊரில் தங்கியிருந்தோம். மாந்தளைக்கு வந்த அடுத்த வாரம், ரங்கூனில் தங்கிவிட்ட ஓரிரண்டு நண்பர்களுடன் நெடுந்தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொள்ள முயன்றேன்; பயனில்லை. தந்தி கொடுக்கலா மென்றால், தந்தி போய்ச் சேராது என்று சொல்லிவிட்டார்கள். அந்த நண்பர்களுடைய நிலைமை என்ன ஆயிற்றோ? என்ற கவலை என்னைத் தினந்தோறும் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. மாந்தளைக்கு வந்த இரண்டாவது வாரம், அதாவது மார்ச் மாதம், நான்காம் தேதி ஏற்கனவே சொல்லப் பெற்ற மாந்தளைக் குன்றுக்கு என் வாழ்க்கைத் துணைவி, வி.வே.ரா., நான், ஆகிய மூவரும் சென்று வந்தோம். என்னைப் பொறுத்தமட்டில் அங்கேயே தங்கி விடலாம் என்ற எண்ணம் தோன்றியது. அவ்வளவு மனோ ரம்மிய மான இடம். இந்த மாதிரி நடந்து வந்த பல இடங்களிலும் எனக்கு எண்ணம் தோன்றியதுண்டு. மனிதன் சுபாவத்திலேயே இயற்கையோடு உறவு பூண்டு வாழ்வதில் விருப்பமுடையவன். அந்த விருப்பம் அவன் பிறவியோடு ஒட்டி வருவது. அந்த விருப்பம் இருக்கிற வரையில், அவன் தெய்வ நிலைக்குச் சமீபத்தில் இருக்கிறான். ஆனால் அவனுக்கு அமையும் சூழ்நிலை, இயற்கைக்கு மாறுபட்டதாய் இருக்கிறது. உலகியலோடு ஒட்டி வாழ வேண்டுமானால் அவன் அந்தச் சூழ்நிலையில்தான் உழல வேண்டியவனாயிருக்கிறான். இப்படி உழல, உழல அவன், தெய்வ நிலைக்கு வெகு தொலைவில் தள்ளப்படுகின்றான். கடைசி யில் மிருக நிலையை எட்டிப் பார்க்கும் துர்ப்பாக்கியம் அவனுக்கு ஏற்படுகிறது. பிறகு அவனுக்கு விமோசனம் எங்கே? ஆகவே கூடிய மட்டில் தெய்வ நிலையிலிருந்து நழுவாதிருக்க விரும்பும் எந்த ஒரு மனிதனும், ஒரு நாளின் சிறு பொழுதாவது இயற்கை அன்னையின் திருவடிகளில் தன்னை ஒப்புக் கொடுத்து அமைதி காண முற்பட வேண்டும். இத்தகைய அமைதி பெற வேண்டுமென்று எப்பொழுதுமே எனக்கிருந்த ஆசைதான் வழி நெடுக இயற்கை வனப்புச் செறிந்த இடங்களில் தங்கித் தங்கி வருமாறு என்னைத் தூண்டிக் கொண்டு வந்தது. மாந்தளைக்குன்றும் இயற்கை யன்னையின் வாசதல மாகவே எனக்குப் புலப்பட்டது. மாந்தளையில் தங்கி இருந்த நாட்கள் வரை தினந்தோறும் இந்தக் குன்றின் மீது சிறிது நேரமாவது இருந்து அமைதி காண வேண்டுமென்ற ஆசைதான் எனக்கு. ஆனால் தளர்ந்து போயிருந்த என் நாடி நரம்புகள், இந்த ஆசை வீண் என்று எனக்குச் சொல்லிவிட்டன. மாந்தளை வாசத்தின்போது அநேகமாகத் தினந்தோறும் ஜீக்யோ பஜாருக்குப் போய் வருவேன். தனிக் குடித்தனம் நடத்தினோ மல்லவா? மொத்தமாகச் சாமான்களை வாங்கிப் போட்டோமென்பது கிடையாது. எத்தனை நாட்களுக்குத் தங்கி இருக்க வேண்டு மென்பது தெரியாதல்லவா? தவிர, போதுமான பாத்திரங்கள் ஏது? அன்றாடக் காய்ச்சி என்பார்கள், அந்த நிலைதான் என்றாலும் பஜாருக்குப் போய் வருவதில் எனக்கு அலாதியான மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தது. பச்சைப் பசேலென்ற கறிகாய்கள், தினுசு தினுசான கீரை வகைகள், கூடை கூடையாகத் தக்காளி, மங்குதான் முதலிய பழ வகைகள், கொத்துக் கொத்தாய்ப் பச்சைக் கடலை வேர்க் கடலை முதலியன குவியல் குவியலாக அரிசி, பருப்பு வகை யராக்கள்; இவைகளை நயமான முறையில் பேசி விற்கும் பர்மியப் பெண்கள்; இவைகளையெல்லாம் பார்க்கும்போது, பர்மியப் பெண்களின் வியாபாரத் திறமை, பொருள்களை அடுக்கியோ, குவித்தோ, வகைப்படுத்தியோ வைப்பதில் அவர்களிடம் காணப் பெறும் அழகுணர்ச்சி ஆகிய பலவும் எனக்குப் புலனாயின. பஜாரை வெகு நேரம் சுற்றிப் பார்ப்பதில் நான் சலிப்பே கொண்டதில்லை. சாமான்கள் தாம் எவ்வளவு மலிவு? அதுவும் யுத்த நெருக்கடி காலத்தில்! ரவை ½ வீசை . . . 0-4-0 கோதுமை மாவு ½ வீசை . . . 0-3-0 பால் 1 வீசை . . . 0-5-0 நெ. எண்ணெய் ¼ வீசை . . . 0-5-0 இவ்வளவு என்ன? ஜப்பானிய விமானங்கள் தாக்கிக் கொண்டிருந்த காலத்தில் கூட ரங்கூனில் உயர்ந்த ரகப் பச்சரிசி ரூபாய்க்கு நாலரைப் படி விற்றது. இந்த விலைவாசிகளைத் தற்காலத்து விலைவாசிகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா?  12. ரங்கூன் நிலைமை மாந்தளையில் சிக்கனமாக வாழ்க்கை நடத்துவது சாத்திய மாயிருந்த தென்றாலும், அங்கு அதிக நாட்கள் தங்கியிருக்க முடியா தென்ற பயங்கர நிலைமை 1942-ஆம் வருடம் மார்ச் மாதம், இரண்டாவது வாரத் தொடக்கத்தில் ஏற்பட்டு விட்டது. ஏனென்றால், ரங்கூன் நகரம் ஜப்பானியர் வசப்பட்டு விட்டதென்றும், அவர் களுடைய அடுத்த இலக்கு மாந்தளையாகவே இருக்குமென்றும் பலவிதமான வதந்திகள் உலவத் தொடங்கின. வெறும் வதந்திகள் என்று அலட்சியமாக இருக்க முடியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் ரங்கூன் நிலைமை என்னவென்று பார்ப்போம். பிப்ரவரி மாதம், இருபதாந் தேதியன்று ரங்கூன் நகரம் காலி செய்யப்பட வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஜனங்களும் வெளியேறத் தொடங்கினார்களல்லவா? இதற்குப் பிறகு, கவர்னர் ஸர் ரெஜினால்ட் மித்தும் அவரோடு அரசாங் கத்து அதிகாரிகள் சிலரும் ரங்கூனிலேயே தங்கியிருந்தனர். தாங்கள் கடைசி பட்சமாக நகரத்தை அடியோடு காலி செய்ய நேரிட்டால், அதற்கு முன்பு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதைத் தீர்மானித்து ஆவன செய்வதற்காகவே இவர்கள் இருந்தார்கள். பிறகு ரங்கூன், ஜப்பானியர் வசமாகுந் தறுவாயில் பர்மாவின் வடகோடியிலுள்ள மிச்சீனா என்ற ஊருக்குச் சென்று மே மாதம் நான்காம் தேதி வரை தங்கி, பர்மாவிலிருந்து புறப்பட்ட கடைசி பிரிட்டிஷ் விமானமொன்றில் இந்தியாவை அடைந்தார்கள். அன்று நள்ளிரவுக்கு மேல் (20-2-42) ரங்கூன் துறைமுகத்தில் சில பிரிட்டிஷ் படைகள் வந்திறங்கின. தங்களுடைய படைபலத்தை அதிகரித்து வைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே இந்தப் படை களைக் கொண்டு வந்திறக்கினர், பிரிட்டிஷ் ராணுவ அதி காரிகள். இந்தப் படைகளோடு சுமார் நூற்றைம்பது டாங்கிகளும் போக்குவரத்துக்குத் தேவையான பெரிய பெரிய லாரிகளும், யுத்த தளவாட சாமான்களும் வந்திறங்கின. ரங்கூன் நகரம் ஒரு ராணுவ முகாம் போல இருந்தது. ஜப்பானியப் படைகள், ரங்கூனை நோக்கி முன்னேறி வந்து தாக்கினால், முடிந்த வரையில் தாக்குப் பிடித்துப் பார்ப்பது, முடியாத நிலைமை ஏற்படுமானால், இந்தியாவை நோக்கிப் பின் வாங்கிச் செல்வது என்று பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் திட்ட மிட்டு, இதற்காக இரண்டு வேறு வழிகளையும் வகுத்து வைத்தி ருந்தனர். ஜப்பானிய ராணுவ அதிகாரிகள் இதை எதிர்பாராமல் இருப்பார்களா? ரங்கூனைச் சுற்றி வளைத்துக் கொண்டு, அங்கு முகாம் செய்திருக்கும் பிரிட்டிஷ் படைகளின் எதிர்ப்பை அடக்கி விட்டு, ரங்கூனைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்று திட்ட மிட்டனர். ஆனால் பிரிட்டிஷ் படைகள் இதற்குச் சுலபமாக இடங் கொடுக்குமா? முடிந்த வரையில் எதிர்த்துப் போராடும்! இனிச் சமாளிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டால், உடனே ரங்கூனை விட்டு வெளியேறி இந்தியாவை நோக்கிச் செல்லும்; அப்படிப் பின்வாங்கிச் சென்றால் எந்தெந்த வழிகளை உபயோகப்படுத்துமோ அந்த வழிகளை அடைத்து விட வேண்டும்; இதற்காக அந்த வழிகளில் ஆங்காங்குத் தற்காலிகமான குறுக்குச் சுவர்கள் எழுப் பியும், பெரிய பெரிய பாறாங் கற்களையும் மரங்களையும் அடுக்கி வைத்தும் விட வேண்டும்; இந்த அடைப்புக்களை உடைத்துக் கொண்டு பிரிட்டிஷ் படைகள் பின்வாங்கிச் செல்ல முற்படுமா னாலும் அதற்குக் கால தாமத மாகும். அதற்குள் அவைகளைத் துரத்திச் சென்று பின் பக்கத்திலிருந்தோ, சுற்றி வளைத்து முன்னே வந்து எதிர்ப்பக்கத்தில் நின்று கொண்டோ அவைகளைத் தாக்கிப் பிடித்து விடலாம் இப்படியெல்லாம் ஜப்பானிய ராணுவ அதிகாரிகள் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். திட்டமிட்ட படியே ஜப்பானியப் படைகள் 1942-ஆம் வருஷம் மார்ச் மாதம் முதல் வாரம் ரங்கூனுக்கு வடகிழக்குப் பகுதியிலுள்ள பெகு நகரத்தைக் கடந்து ரங்கூனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தன. அதனோடு பிரிட்டிஷார் வகுத்து வைத்திருந்த இரண்டு வழிகளில் ஒன்றை அடைத்துவிட்டன. மற்றொரு வழியும் அடைபட்டுப் போகும் போலிருந்தது. இனி ரங்கூனைக் காப்பாற்ற முடியாதென்று பிரிட்டிஷாருக்குத் தெரிந்து விட்டது. ஜப்பானியர் களால் சூழ்ந்து கொள்ளப் படுவதற்கு முன் ரங்கூனிலிருந்து வெளியேறி வடக்குப் பக்கமாகப் பின் வாங்கிச் செல்ல முற்பட்டனர். இதற்கு முன்பு, அதாவது 1942-ஆம் வருஷம், மார்ச் மாதம், ஏழாந் தேதி பிற்பகல் இரண்டு மணிக்கு, அரசாங்க அலுவலகங்கள், துறைமுகம், மின்சார விசை நிலையம், தபாலாபீ தொழிற் சாலைகள் முதலிய அனைத்தையும் வெடி மருந்து வைத்துத் தகர்த்து விட்டனர். ரங்கூன் துறைமுகத்திற்குக் கிழக்குப் பக்கத்தில் சிரியம் என்ற இடத்தில் பர்மா ஆயில் கம்பெனியைச் சேர்ந்த எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகள் இருந்தன. இவற்றில் தீ வைத்துவிட்டனர். ரங்கூன் முழு வதையும் கரும்புகை கப்பிக் கொண்டது. கட்டிடங்கள் தகர்ந்து விழுந்த சப்தம் நகரத்தை அதிரச் செய்தது. பாழடைந்த நிலையில் தான் ரங்கூன் நகரம் ஜப்பானியர் வசமாயிற்று. நாச வேலையை முடித்துக் கொண்டு பிரிட்டிஷ் படைகள் ரங்கூனுக்கு வடக்குப் பக்கமாகப் பின்வாங்க ஆரம்பித்தன. இருபத் திரண்டாவது மைலில் ஜப்பானியர்கள் இந்த பிரிட்டிஷ் படை களை வழிமறித்து விட்டனர். சுமார் இருபத்து நான்கு மணி நேரம் கடுமையான சண்டை நடைபெற்றது. கடைசியில் ஜப்பானியர்கள் விட்டுக் கொடுக்கும் படியான நிலைமைக்குட்பட்டார்கள். பிரிட்டிஷ் படைகளும் மயிரிழையில் தப்பிக் கொண்டு பின் வாங்கி வடக்கு நோக்கி வந்து கொண்டிருந்தன. மார்ச் மாதம் ஏழாம் தேதி ரங்கூன் விழுந்து பட்ட செய்தி, மாந்தளையில் எங்களுக்கு ஒன்பதாந் தேதியன்று எட்டியது. வீழ்ந்துபட்ட அன்று அங்கிருந்தவர்களில் சிலர் எப்படியோ தப்பி மாந்தளை வந்து சேர்ந்தார்கள். இவர்கள், பிப்ரவரி மாதம், இருபதாந் தேதி பிரிட்டிஷ் நிர்வாகம் நிலைகுலைந்து போனதி லிருந்து மார்ச் மாதம் ஏழாந் தேதி ஜப்பானியப் படைகள் வந்து கைப்பற்றிக் கொள்ளும் வரை சுமார் பதினைந்து நாட்களுக்கு மேல் ரங்கூனில் அராஜகம், தலைவிரித்தாடி யதைப் பற்றியும் மேற்படி ஏழாந் தேதியன்று ரங்கூனின் முக்கியமான இடங்கள் நெருப்புக் கிரையானது பற்றியும், இவைகளுக்கு மத்தியில் அங்குத் தங்கிவிட்ட இந்தியர்களின் அவல நிலையைப் பற்றியும் கதை கதையாகச் சொன்னார்கள்.  13. இந்தியர்கள் அவதி ரங்கூன் வீழ்ச்சிக்குப் பிறகு மாந்தளையில் தற்காலிகமாகத் தங்கியிருந்த இந்தியர்கள் இனி அங்குத் தங்கி இருப்பது ஆபத் தென்று உணரத் தலைப்பட்டனர். தவிர, மாந்தளையில் ஜன நெரிசல் காரணமாக வியாதிகள் பரவக்கூடும் என்று அஞ்சி அங்கு நிரந்தரமாக வசித்துக் கொண்டிருந்த பர்மியர்கள் சுற்றுப்புறக் கிராமங்களுக்குத் தற்காலிகமாகச் செல்ல முற்பட்டனர். ஜப்பானியத் தாக்குதலுக்குப் பயந்து, தெற்குப் பகுதி களிலிருந்து வந்து கொண்டி ருந்த இந்தியர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தங்கள் இருப்பி டத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்ததை இந்தியர்களின் அதிகப் படியான வருகை நிலைகுலையச் செய்து விட்டதேயென்று கிராமங்களுக்குச் சென்ற பர்மியர்கள் எண்ணி, இதனால் இந்தி யர்கள் மீது துவேஷம் கொண்டு அந்தத் துவேஷத்தை வெளியே காட்டத் தொடங்கி விட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் பலருக்கு ஏற்பட்டது. பொது வாகவே, பர்மாவின் வடக்குப் பிர தேசங்களில் இன வெறுப்பு என்பது அதிகமாகத் தலைகாட்ட வில்லை. இந்தியர்களும் பர்மியர்களும் பரபரம் அன்பு காட்டி வாழ்ந்து வந்தவர்களென்று சொல்ல வேண்டும். தெற்குப் பிர தேசங்களில்தான் இந்த வெறுப்புணர்ச்சி பர்மியர்களிடையே ஓரளவு இருந்தது. இதற்கான காரணங்களை இங்கு ஆராயத் தேவை யில்லை. காரணம் எதுவாயிருந்தாலும், தெற்குப் பகுதிகளில் ஓரளவு நிலவி வந்த வெறுப்புணர்ச்சி வடக்கு பகுதிகளில், அதாவது மாந்தளையை மையமாகக் கொண்ட பகுதிகளில் பரவாமல் இருக்க வேண்டுமேயென்று இந்தியர்கள் கவலைப்பட்டனர். இந்த நிலையில் இந்தியர்கள் மாந்தளையில் நீண்ட நாட்கள் தங்கியிருக்க முடியுமா? எவ்வளவு சீக்கிரத்தில் வெளியேற முடி யுமோ அவ்வளவு சீக்கிரத்தில் வெளியேற வேண்டியது இவர்களுக்கு அவசிய மாகி விட்டது. எப்படி வெளியேறுவது? வெளியேறி எங்கே போவது? இந்த இரண்டு கேள்விகளும் பெரிய பிரச்சனைகளாகி விட்டன. ஆண்டுகள் கணக்கில் ஏன், இரண்டு மூன்று தலைமுறைகளாக பர்மாவில் ஏதோ ஒருவிதமான வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டு, கூடிய மட்டில் நிம்மதியாக வாழ்ந்து வந்த இந்தியர்களுக்கு இந்தியா புத்தம் புதிய நாடாகவோ, அந்நிய நாடாகவோ தோன்றியது. தங்களுடைய பாட்டன் மார்களோ, பூட்டன்மார்களோ இந்தியர்கள் என்ற அளவுக்குத்தான் இந்தியாவைப் பற்றி இவர்களில் பலர் அறிந் திருந்தனர். தங்களுடைய சொந்த ஊர் அநேகருக்குத் தெரியாது. இப்படித் தெரியாதவர்களில் பெரும் பாலோர் தமிழர்களாகவே இருந்தனர். இவர்கள் பர்மாவில் விவசாயத்திலும், சில்லறைத் தொழில்களிலும் ஈடுபட்டிருந்தவர்கள். இப்படிப் பட்டவர்கள் இந்தியாவுக்குச் சென்று, நிலவரம் புரியாத ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கி அல்லல்படுவதைக் காட்டிலும் வளர்ந்து வாழ்ந்த மண்ணிலேயே பர்மாவிலேயே எங்காவது கிராமப் பகுதி களுக்குச் சென்று, ஜப்பானியத் தொல்லை தீரும் வரையில் கஷ்டமோ, நிஷ்டூரமோ எதுவானாலும் அனுப வித்துக் கொண்டு இருப்பது என்று தீர்மானித்து அப்படியே காட்டுப் பகுதிகளிலும் மலைப் பகுதிகளிலுமுள்ள சிறு சிறு கிராமங் களுக்குச் சென்று, அங்குப் பரம்பரை பரம்பரையாக வசித்துக் கொண்டிருந்த பர்மியக் குடிமக்களின் அன்பில் தஞ்சம் புகுந் தார்கள். இவர்களைத் தவிர மற்றவர்கள், ஜப்பானியத் தொல்லை தீர்ந்து பர்மாவை பிரிட்டிஷார் மீண்டும் கைப்பற்றிக் கொண்டு விட்ட போதிலுங் கூட, அங்கு முன்பு போல் உயிருக்கும், பொரு ளுக்கும் பயமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்க முடியாதென்று தீர்மானித்து, தாய் நாட்டிற்குச் செல்ல வேண்டுமென்பதில் நாட்ட முடையவர் களாயிருந்தார்கள். வெளிநாட்டில் எவ்வளவுதான் செல்வத் துடனும் செல்வாக்குடனும் இருந்தாலும் மன நிம்மதியுடன் வாழ முடிவதில்லை. ஏதோ ஒருவித அச்சம் அல்லது குறை உள்ளூர இருந்துக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டு மக்களின் பொறா மைக்கோ அலட்சியத்திற்கோ எந்தக் கணத்திலும் பலியாகிவிடக் கூடிய ஆபத்தை எப்பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டே காலங் கடத்த வேண்டியிருக்கிறது. தாய்நாட்டில் எந்த விதமான சௌ கரியமும் இல்லாமற் போனாலும், ஏன், பலவித அசௌகரியங்கள் இருந்த போதிலும், மனத்தில் ஒருவித நிம்மதி, அல்லது நிறைவு உண் டாகிறது. நம்முடைய தாய் நலிந்து போயிருக்கலாம். அழுக்குப் படிந்தவளாக இருக்கலாம். ஆனாலும் அவளுடைய அன்பான அரவணைப்பில் தனியான இன்பத்தை நுகர முடிகிறதல்லவா? எரிமலையின் மீது அமைந்திருக்கும் பூந்தோட்டம் எவ்வளவுதான் பசுமையுடையதாகவும், வாசம் வீசும் வண்ண மலர்கள் செறிந்த தாகவும் இருந்த போதிலும் அதில் மன நிம்மதியுடன் தலை வைத்துப் படுத்துக் கண்மூட முடிகிறதா? எரிமலை எப்பொழுது வெடிக்குமோ என்ற நினைப்பிலேயே அதில் இருக்க வேண்டி யிருக்கிறது. வெளி நாட்டில் வசிப்பதற்கும் தாய் நாட்டில் வசிப்பதற்கும் இதுதான் வித்தியாசம். குறிப்பாக, 1937-ஆம் வருஷம் இந்தியாவிலிருந்து பர்மா பிரிக்கப்பட்டுப் போன பிறகு, அங்கு வசித்துக் கொண்டிருந்த இந்தியர்கள் எரிமலையின் மீது செழித்திருந்த சோலையில் வசிப்பது போலவே இருந்தார்கள். அந்த ஆண்டிலிருந்தே இந்தியர்கள் மீது துவேஷம் வளர்ந்து வந்தது. 1942-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம், மூன்றாவது வாரம் பிரிட்டிஷ் அரசாங்கம் நிலைகுலைந்து போனதிலிருந்து, மார்ச் மாதம் முதல் வார முடிவில் ஜப்பானியப் படைகள் வந்து ரங்கூனில் நிலை கொண்ட வரையில், சுமார் இரண்டு வாரம் அராஜகம் நிலவியிருந்த காலத்தில், இந்த துவேஷம் பல மாதிரியாகத் தலைவிரித்தாடியது.  14. விமானத்திலும் கால்நடையாகவும் மாந்தளையில் தற்காலிகமாகத் தங்கியிருந்த இந்தியர்களில் பெரும்பாலோர், 1942-ஆம் வருஷம் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தி லிருந்து இந்தியாவை நோக்கிப் பயணம் தொடங்கினர். ஓரளவு பண வசதி படைத்தவர்கள் ஆகாய விமானங்களில் சென்றனர். பொதுவாகவே, ஐரோப்பியர்கள், ஆங்கிலோ இந்தி யர்கள் ஆகிய இவர்களுக்கு மட்டுமே இந்த விமானப் பயணச் சலுகை அளிக்கப்பட்டது. ஆனால் இந்தியர்களிற் சிலரும் எப்படியோ ஏதோ செய்து, இந்தச் சலுகையைப் பெற்றனர். சிலர் ஆங்கிலோ இந்தியர்கள் போல, உடை, பெயர் எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு சென்றனர். ராமசாமி, ராம்ஸேயானார்; மூர்த்தி, மர்ட்டியானார்; ஆறுமுகம் ஏ.காம் ஆனார். இப்படிப் பெயர் மாற்றம் செய்து கொண்டதோடல்லாமல், இவர்கள், தங்கள் பெண்டு களுக்குக் கவுனையும் சடைத் தொப்பியையும் அணிவித்து அழைத்துச் சென்றனர். லக்ஷ்மி, லூசியானாள். காவேரி, கரோலின் ஆனாள்; நாராயணி, நான்னி ஆனாள். இப்படி எத்தனையோ வேடிக்கையான வேஷங்கள், வேடிக்கையான பெயர்கள். மற்ற வர்களைப் போல் கஷ்டப்படாமல் சிறிது சௌகரியத் துடனேயே இவர்கள் இந்தியா போய்ச் சேர்ந்தார்கள். என்றாலும், இந்த அற்ப சௌகரியத்திற்காகத் தங்களுடைய பரம்பரையையே அடகு வைத்து விட்டார்கள். இதற்காக இவர்களிடம் இரக்கமே காட்ட வேண்டும். ஆனால் ஒரு சிலர் பெயர் மாற்றிக் கொள்ளாமல் வழக்கமாகத் தரித்துக் கொள்ளும் உடையுடன் இந்தியர்களாகவே விமானத்தில் பிரயாணம் செய்தனர். மேலதிகாரியின் சிபாரிசு பெற்ற ஒரு சிலருக்குத்தான் இந்தச் சலுகை கிடைத்தது. நடுத்தரக் குடும்பத்தினர் சிலர், மாந்தளைக்குச் சிறிது வட மேற்கே சுமார் எண்பத்தைந்து மைல் தொலைவில் உள்ள மொனீவா என்ற ஊர்வரை ரெயிலில் சென்றனர். இவர்களுடைய ரெயில் பிரயாணம் அவ்வளவு சௌகரியமாயிருக்கவில்லை. ஏனென்றால், ரயில் போக்குவரத்து ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குட் பட்டிருந்தது. ரெயில் எந்த நேரத்தில் புறப்படும், எந்த நேரத்தில் போய்ச் சேரும் என்று நிச்சயமில்லை. ராணுவத்தினரின் தேவையை அனுசரித்தே ரெயில்கள் போய் வந்து கொண்டிருந்தன. இப்படிப் பல அசௌகரியங்கள் இருந்த போதிலும், இவைகளைச் சமா ளித்துக் கொண்டு மொனீவா சென்று அங்கிருந்து இந்தியா நோக்கிச் சென்றனர் பலர். சிலர், மாந்தளையிலிருந்து நேர் வடக்காக உள்ள கத்தா, மோகாங், மிச்சீனா முதலிய ஊர்களுக்கு ரெயிலில் சென்றனர். பிர யாணிகளை ஏற்றிச் செல்லப் போதுமான ரெயில் பெட்டிகள் இல்லை. சாமான் களையும் ஆடு மாடுகளையும் ஏற்றிச் சென்ற பெட்டிகளில், அந்தப் பெட்டி களிலிருந்து கிளம்பும் துர்நாற்றத்தைச் சகித்துக் கொண்டு நூற்றுக் கணக்கான பேர் மேற்படி ஊர்களுக்குச் சென்றனர். எவ்வளவு காலம் இந்த ஊர்களில் தங்கியிருக்க முடியுமோ அவ்வளவு காலம் தங்கியிருப்பது, அப்படித் தங்கியிருக்க முடியாத நிலைமை ஏற்பட்டாலோ, ரங்கூனுக்குத் திரும்பிச் செல்வது அசாத்தியம் என்று நிச்சயமாகத் தெரிந்தாலோ, இந்தியாவுக்குப் புறப்பட்டு போய் விடுவது என்ற எண்ணத்துடன் தான் இவர்கள் மேற்படி ஊர் களுக்குச் சென்றனர். ஆனால் சென்ற சில காலத்திற்குள்ளாக, இவர் களுடைய நிலைமை திரிசங்கு சொர்க்கமாகி, பெரிதும் அவதி யுற்றார்கள் என்று பின்னர் நாங்கள் தெரிந்து கொண்டோம். இவர்களில் அநேகர் இந்தியாவுக்குக் கால்நடையாகப் புறப்பட்டு வந்து, இடை வழிகளிலேயே இறந்து விட்டனர் என்றும் கேள்விப்பட்டோம்,. கடினமான உழைப்பை மேற்கொண்டு அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்த சாதாரண ஜனங்கள் என்று அழைக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், இந்தியாவை நோக்கி மாந்தளையிலிருந்தே நடை கட்டினர். நடைப் பயணத்தைத் தங்களால் தாக்குப்பிடிக்க முடியுமா என்பதைப் பற்றி இவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. இந்தியாவில் தங்களுடைய எதிர்கால வாழ்க்கை எப்படி அமையுமோ என்பதைப் பற்றியும் இவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வில்லை. வாழ்க்கை வசதிகளை ஓரளவு பெற்றிருப்பவர்கள், நிரந்தர வருவாயுடையவர்கள், உடல் நலுங்காமல் உத்தியோகம் பார்ப்ப வர்கள், இப்படிப்பட்டவர்களுக்குத்தான் அதைரியமும், அவ நம்பிக்கையும் உண்டாகின்றன. உடலை ஒடித்து அன்றாட ஜீவனத்தை நடத்துகிறவர்கள், இப்படி அதைரியமோ, அவ நம்பிக்கையோ கொள் வதில்லை. தைரியத்தையும் நம்பிக்கையையும் வழித்துணையாகக் கொண்டு இந்தச் சாதாரண ஜனங்கள், மாந்தளையிலிருந்தே நடைப் பயணத்தை மேற் கொள்ளத் துணிந்தார்கள்.  15. அதிகாரிகள் அளித்த ஆறுதல் எங்களுடைய நிலைமை என்ன? எப்படியும் மாந்தளையை விட்டுப் புறப்பட்டாக வேண்டும். எப்படிப் புறப்படுவது? ரங்கூனி லிருந்து நாங்கள் கொண்டு வந்திருந்த காரும் மேற்கொண்டு இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல உதவாது என்று தெரிந்தது. மாந் தளையிலிருந்தே நடைகட்டுவது என்பது முடியாத காரியம். வேறு வழி என்ன? இதைப் பற்றி நாங்கள் அதிகமாகச் சிந்தித்துக் கொண் டிருக்க அவகாசம் கொடாமல் தக்க தருணத்தில் அன்பர்கள் உதவிக்கு வந்தார்கள். ரங்கூனில் தபால் தணிக்கை இலாகாவில் (போடல் ஆடிட் ஆபீ) அலுவல் பார்த்து வந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். சென்னையி லிருந்து மாற்றப்பட்டு அங்குச் சென்றவர்கள். இவர்களில் அநேகர் என்னுடைய நண்பர்கள். சிறப்பாக இந்த இலாகாவில் மேல் பதவி வகித்து வந்த சிலர் என்பால் மிகவும் அன்பு கொண்ட வர்கள். இந்த இலாகா பிப்ரவரி மாதம் இருபதாந் தேதி ரங்கூனைக் காலி செய்யுமாறு அரசாங்க உத்தரவு பிறந்தவுடன் ஈத்தட்டா (ஹென்ஸாடா) என்ற ஊருக்கு மாறி, அங்குச் சில நாட்களுக்கு மேல் இருக்க முடியாத நிலை ஏற்பட்ட பிறகு மாந்தளைக்கு மாறியது. ஒரு சில சிப்பந்திகள் தவிர, இந்திய சிப்பந்திகள் அனைவரும் இங்கு - மாந்தளைக்கு வந்து சேர்ந்திருந்தனர். இங்கும் நீண்ட நாட்கள் இருக்க முடியாது என்று தெரிந்ததும், இந்த இலாகா மொனீவா வுக்கு மாறிச் செல்ல வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை இலாகா நண்பர்கள் சிலர் எனக்கு முன்னதாகத் தெரி வித்தனர். ஒரு பெரிய அலுவலகம் ஓரிடத்திலிருந்து மற்றோரி டத்திற்குப் பெயர்ந்து செல்வதாயிருந்தால், எத்தனையோ முன்னேற் பாடுகள் செய்ய வேண்டியிருக்கிறதல்லவா? சிப்பந்திகள், அவர் களுடைய குடும்பங்கள், ததாவேஜுகள் இப்படி யாவற்றையும் ஒருமுகமாகப் பெயர்த்துக் கொண்டு செல்வதென்பது லேசான காரியமா? நீராவிப் படகோ, ரெயிலோ எதில் இடங் கிடைத்தாலும் அதில் செல்ல, இந்த இலாகா மேலதிகாரிகள் முயற்சி செய்தனர். எதில் சென்றாலும் ராணுவ அதிகாரிகளின் அனுமதி தேவையா யிருந்தது. ஏனென்றால், போக்குவரத்துச் சாதனங்கள் யாவும் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. அவர்களோ தங்கள் தேவைக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார்கள். அந்தத் தேவைக்குப் பிறகுதான் அரசாங்க நிலையங்கள் இடம் பெயர்ந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியவர்களா யிருந்தனர். இதனால் தபால் தணிக்கை இலாகா அதிகாரிகள், தினந்தோறும் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அன்றாட நிலைமையை அறிந்து வர வேண்டியவர்களா னார்கள். இன்றைக்கு, நாளைக்கு என்று சொல்லிக் கொண்டு நாட்கள் நகர்ந்து சென்றன. இப்படி நிலவரம் தெரியாதிருக்கையில், இந்த இலாகாவைச் சேர்ந்த நண்பர்கள் சிலர், தங்கள் இலாகாவின் மேலதிகாரியான பா. சு. என்பவரை நான் சந்தித்து அவரிடம் ஒரு வார்த்தை சொல்லி வைத்தால் நல்லதென்று யோசனை கூறினார்கள். அந்த மேலதிகாரி எனக்கு நன்கு அறிமுகமானவர். தமிழிலக்கியத்தில் பற்றுடையவர்; சிறப்பாகக் கம்ப ராமாயணத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவரும் அவருடைய சகோதரர்களும் அரசாங்கத்தில் உயர்தர உத்தியோகம் வகித்து வந்த போதிலும், தேசபக்தி மிக்கவர்கள். கதரே உடுத்துபவர்கள். கூடியமட்டில் இந்தியப் பொருள்களையே உப யோகிப்பார்கள். நான் ஜோதி பத்திரிகை தொடங்குவதற்கு முன்பு, ரங்கூனிலேயே பாரத பண்டார் என்ற பெயரால் சுதேசிக்கடை ஒன்று நான் நடத்தி வந்தேன். அதற்கு இவர்களுடைய ஆதரவு இருந்தது. மேற்படி மேலதிகாரியான பா.சு.வைச் சந்திப்பதற்கு நான் வெகுவாகத் தயங்கினேன், என்னதான் அவர் நமக்குத் தெரிந்தவரா யிருந்த போதிலும், அரசாங்க உத்தியோகதர்தானே? அரசாங்கத் தினிடம் விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டியவர்தானே? அரசாங்கத் தொடர்பு சிறிதும் இல்லாத நான், அவரிடம் சலுகை கோருவது நியாயமாக இருக்குமா? அவரைத் தர்மசங்கடமான நிலையில் வைத்து, அவர் என் மீது கொண்டுள்ள விசுவாசத்தையும், அரசாங் கத்திடம் விசுவாசமாயிருக்க வேண்டிய அவருடைய கடமையையும் சோதித்துப் பார்ப்பது போலல்லவா ஆகும். நானோ அரசாங்கத் தொடர்பு இல்லாதவனாக மட்டும் அல்ல; அரசாங்கத்தின் கண்காணிப்புக்குட்பட்டவனாகவும் இருந்தவன். என்னுடைய பொது நலப்பணி, அரசாங்கத்தின் கவனத்தை அதிக மாக ஈர்க்கவில்லை. என்னுடைய நூல்கள்தாம் அதன் கவனத்திற் குட்பட்டன. இந்த விந்தையான கதை, 1936-ஆம் வருடம் ஜனவரி மாதம் என்னுடைய முஸோலினி என்ற நூல் வெளிவந்தது. அதையடுத்து அபிசீனிய சக்ரவர்த்தி என்ற நூலும், அதை யடுத்து ஹிட்லர் என்ற நூலும் முறையே வெளிவந்தன. இவர்களுடைய பெயர்கள்தாம் அப்பொழுது அடிபட்டுக் கொண்டிருந்தன. என்னுடைய ஹிட்லர் நூலில் பல வகைப் புகைப்படங்களையும், ஜெர்மனியைப் பற்றிய வேறு பல தகவல்களையும் சேர்த்துக் கொடுத்திருந்தேன். இவை களை எனக்கு உதவியவர், ரங்கூனில் ஜெர்மன் தாபனமொன்றில் அலுவல் பார்த்து வந்த எர்வின் ஈவன் என்பவர், என்று நூலின் முகவுரையில் குறிப்பிட்டிருந்தேன். 1939-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் முதல் வாரம் பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்கும் போர் மூண்ட தல்லவா? அதுவரையில் என்னுடைய ஹிட்லர் நூலோ, அதன் முகவுரையில் எர்வின் ஈவன் உதவியதைப் பற்றி நான் குறிப்பிட்டி ருந்ததோ, பர்மா அரசாங்கத்தின் கண்ணுக்குப் படவில்லையோ, கவனத்துக்கு வரவில்லையோ தெரியாது. போர் மூண்ட சில வாரங்களானதும், அரசாங்கத்தின் உத்தரவுப்படியோ என்னவோ, சி. ஐ. டி. நண்பர்கள் என்னைப் பற்றித் தகவல் அறியவிரும்பினார்கள். அடிக்கடி வந்து என்னை விசாரிப்பார்கள். எர்வின் ஈவனைப் பற்றி ஹிட்லர் நூலில் குறிப்பிட்டிருக்கிறீர்களே! அவருக்கும் உங்களுக் கும் என்ன சம்பந்தம்? எத்தனை வருடங்களாக உங்களிருவருடைய நட்புறவு இருந்து வருகிறது? அவர் இந்த நூலை எழுதுவதற்காக எந்தெந்த வகையில் உதவி செய்தார்? இப்படிப் பலவிதமான கேள்விகளைக் கேட்டுத் துளைத்து விடுவார்கள். நூல் நல்லவிதமாக அமைய வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் அவரிடம் சில தகவல்களைக் கேட்டுப் பெற்றுக்கொண்ட அளவுக்குத்தான் அவருக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டிருந்ததே தவிர அதற்கு முன்போ, பின்போ எந்தத் தொடர்பும் ஏற்பட்டதில்லையென்று நான் சமாதானம் சொல்லி வந்தேன். சி. ஐ. டி நண்பர்கள் என்னிடம் தனிப்பட்ட அபிமானமும் மதிப்பும் கொண்டவர்களாயிருந்ததால், என்னுடைய உண்மையான நிலையைப் புரிந்து கொண்டார்கள். அரசாங்கத்திற்கு என்னைப் பற்றி என்ன ரிப்போர்ட் கொடுத்தார் களோ தெரியாது. ஆனால் ஓரிரண்டு சி. ஐ. டி. நண்பர்கள் மட்டும் 1942ஆம் வருடம் பிப்ரவரி மாதம் ரங்கூனிலிருந்து நான் புறப்படும் வரையில் அடிக்கடி வந்து என் சௌக்கியத்தை விசாரித்துக் கொண்டு போனார்கள்! அது மட்டுமா? அவ்வப்பொழுது வெளியான என்னுடைய நூல்களில் ஒவ்வொரு பிரதியை அன்பளிப்பாகப் பெற்றுக் கொண்டு போனார்கள். அப்படிப் பெற்றுக்கொண்டு போனதும் எப்படி? ஒரு நூல் வெளியானதும் அதைத் தெரிந்துகொண்டு என்னிடம் வருவார்கள். முதலில் என் க்ஷேமத்தை விசாரிப்பார்கள். பிறகு, ‘வீட்டில் எல் லோரும் சௌக்கியந்தானே? என்பார்கள். என் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் கண்டறிந்தார்களா என்ன? பிறகு எங்காவது எப்பொழுதாவது நான் சொற்பொழிவு நிகழ்த்தி யிருந்தால், அதைக் குறிப்பிட்டு என்னுடைய பேச்சுக்குப் புகழ் மாலை சூட்டுவார்கள். இப்படிச் சுமார் இருபது நிமிஷம் கழியும் பிறகு லேசாகப் பற்கள் தெரிய, புதிதாக நூல் வந்திருப்பதாகவும், அது நன்றாகயிருக்கிறதென்றும் கேள்விப் பட்டோம். அதற்காகப் பார்த்து விட்டுப் போகலாமென்று வந்தோம் என்பார்கள். என்னைப் பார்ப்பதற்கா? என் நூலைப் பார்ப்பதற்கா? சீக்கிரத்தில் இவர்களைக் கழித்து விட வேண்டு மென்பதற்காக அதிகமாக வாய் கொடுக்காமல், ஒரு பிரதியை அன்பளிப்பு என்று எழுதிக் கொடுத்து விடுவேன். சில சமயங்களில் இரண்டு அல்லது மூன்று பேர் வரு வார்கள். ஆளுக்கொரு பிரதி வீதம் கொடுத்து அனுப்பி விடுவேன். இதோடு விடுகிறார்களா? அடுத்த நூல் வெளியானதும், தெரிந்துக் கொண்டு வருவார்கள். முந்திக் கொடுத்த நூலைப் படித்தோம். எவ்வளவு அழகாக எழுதி யிருக்கிறீர்கள்? உங்கள் நடையே நடை! எவ்வளவு விஷயங்களைத் திணித்து வைத்திருக் கிறீர்கள்? இப்படிச் சொல்லெலாம் சொல்லிக் காட்டி, கடைசியில், உங்களுடைய ஒவ்வொரு நூலையும் படிக்க வேண்டு மென்று ஆசை. முந்திய நூலை என் தாயார் படித்தாள், என் சகோதரி படித்தாள். உங்களைப் பாராட்டினார்கள் என்று அடுக்கடுக்காக வார்த்தை களை உதிர்ப்பார்கள். உதட்டிலிருந்து உதிரும் இந்த வார்த்தைகளைக் கேட்டு என் உள்ளம் நகைக்கும். அன்பளிப்பு என்று எழுதி ஒரு பிரதியைக் கொடுத்து அனுப்பி விடுவேன். ஒவ்வொரு நூல் வெளி யாகும் போது இந்த அன்பளிப்புச் சடங்கு ஒழுங்காக நடைபெற்று வந்தது. எப்படியோ சி. ஐ. டி. இலாகாவின் கவனத்திற்குட்பட்டவன் நான் என்பது என் நண்பர்கள் பலருக்குத் தெரியும். அப்படியி ருக்கையில், தபால் தணிக்கை இலாகா மேலதிகாரியான பா. சு. வைச் சந்திப்பது நன்றாயிருக்குமா? என்பதற்குத்தான் நான் வெகுவாகத் தயங்கினேன். ஆனால் இப்படித் தயங்கிக் கொண்டிருந்தால், மாந்தளையிலிருந்து கூடிய மட்டில் கஷ்டமில்லாமல் சில மைல்கள் தூரமாவது பயணம் செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததும் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் போய்விட்டதாக நானே பின்னர் என்னை நொந்து கொள்ளும்படியாகி விடுமோ என்று தோன்றியது. என் சுபாவமான கூச்சத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டு, ஒரு நாள் பிற்பகல் அந்த மேலதிகாரியை அவருடைய தற்காலிக அலுவலகத்தில் காணச் சென்றேன். கூச்சத்தை அடக்கிக் கொண்டு சென்றேனாயினும், ‘அந்த அதிகாரி, இந்தச் சந்தர்ப்பத்தில் முகங்கொடுத்துப் பேசுவாரோ, அவர் இப்பொழுது எந்த இக் கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறாரோ, எந்த விதமான உதவியும் செய்ய முடியாதென்றுசொல்லி விடுவாரோ? என்று இப்படிப் பலவிதமான சந்தேகங்கள் என்னைப் பின் தொடர்ந்து வந்தன. எப்படியோ அந்த மேலதிகாரியைச் சந்தித்து விட்டேன். அவர் என்னை இன்முகங்காட்டி வரவேற்றதும், எனக்கிருந்த கூச்சம், சந்தேகங்கள் எல்லாம் எங்கோ பறந்து போய்விட்டன. தைரியமும், தன்னம்பிக்கையும் உண்டாயின. நான் சென்று பார்த்தபோது அவர், அரைக்கால் காக்கி நிஜாரும், அரைக் கை ஷர்ட்டும் அணிந்துக் கொண்டு ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். மற்றச் சிப்பந்திகள் அனைவரும் தரையிலே அமர்ந்து துடையையே மேஜையாக உபயோகித்துக் கொண்டு, ஏதோ அலுவல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் உருப்படியான வேலை எதுவும் செய்து கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. அப்பொழுதைய சூழ்நிலையில் அவர்கள் என்ன வேலை செய்ய முடியும்? என்னை வரவேற்று முகமன் கூறிய அந்த மேலதிகாரி, நான் மாந்தளைக்கு வந்த விவரத்தைக் கேட்டார். சுருக்கமாகக் கூறினேன். இங்கு என்னைப் பார்க்க வந்ததற்கு நன்றி. நான் என்ன செய்யட்டும் உங்களுக்கு? உங்களுடைய அலுவலகம் மொனீவாவுக்கு மாறிச் செல்வ தாகக் கேள்விப்பட்டேன். அப்படிச் சென்றால் என்னையும், என் வாழ்க்கைத் துணைவியையும் கூட்டிக்கொண்டு போக முடியுமா என்று கேட்டுப் போவதற்காகவே வந்தேன். அதற்கென்ன ஆட்சேபம்? உங்களுக்கு இடமில்லாமலா? ரெயிலில் போவதற்குத்தான் ஏற்பாடு நடக்கிறது. சு. ஆ. தான் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். எதற்கும் நீங்கள் அவரிடம் ஒரு வார்த்தை சொல்லி வைத்தால் நல்லது. நீங்கள் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு நிச்சயமாக இடம் கிடைக்கும். நிரம்ப நன்றி அவருடைய இந்த உறுதிமொழி எனக்கு அந்தச் சந்தர்ப்பத்தில் எவ்வளவு ஆறுதலாயிருந்தது தெரியுமா? மேற்படி மேலதிகாரி குறிப்பிட்ட சு. ஆ. என்பவர், அவருக்கு அடுத்த அந்தது வகிக்கும் அதிகாரி; உயர்ந்த மனிதர். அவரைப் பார்க்க, நானும், வி. வே. ராவும் ஒரு நாள் மார்ச் மாதம் ஏழாந் தேதி - இரவு அவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றோம். கூடவே, எங்களை அறிமுகப்படுத்தி வைப்ப தற்காக அந்த இலாகாவிலேயே பொறுப்பான பதவி வகிக்கும் என்னுடைய நண்பர்கள் இருவரை அழைத்துச் சென்றோம். விளக்கணைப்புத் திட்டத்தின் விளைவாக மாந்தளை நகரம் முழுவதும் ஒரே இருட்டில் மூழ்கிக் கிடந்தது. மேற்படி சு.ஆ.வைக் கண்டுபிடிப்பதே மிகவும் சிரமமாகி விட்டது. கடைசியில் அவரைக் கண்டு விட்டோம். அவர் அப்பொழுது ஒரு மர வீட்டின் மாடியில் ஜாகை வைத்துக் கொண்டிருந்தார். தட்டித்தடுமாறிப் படிக் கட்டுகள் ஏறி மாடிக்குப் போனோம். ஒரே ஒரு சிறிய மெழுகுவர்த்தி எரிந்துக் கொண்டிருந்தது. அதன் மங்கலான வெளிச்சத்தில் அவர், அலுவலகத்துத் ததாவேஜுகளை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்களுடைய காலடிச் சப்தம் கேட்டதும் தலை நிமிர்ந்து பார்த்தார். வணக்கங் கூறி எங்களை அமரச் செய்தார். அந்த மங்கலான ஒளியில் எங்களை அடையாளம் கண்டு கொள்வது அவருக்குச் சுலபமாக இருக்கவில்லை. உடனே பக்கத்தி லிருந்த மெழுகுவர்த்தியை எடுத்து, எங்கள் முகத்தருகே கொண்டு வந்து ஒவ்வொருவரையும் பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டார். அப்பொழுது, கூடவந்த இரண்டு நண்பர்களில் ஒருவர், என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைக்கின்ற முறையில், இவர் யார் தெரியுமா? இவருடைய பிரசங்கத்தைக் கேட்டிருக்கிறீர்களா? இவருடைய நூல்களைப் படித்திருக்கிறீர்களா? நாமெல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காக வேலை செய்கிறோம்; இவர் நமக்காக வேலை செய்கிறார்” என்று இப்படி என்னைப் புகழ்ந்து பேச ஆரம்பித்தார், கூட வந்த நண்பர்கள் இருவரும் ‘நாம் இவரை (என்னை) அறிமுகம் செய்து வைப்பது போக, இவரையல்லவோ நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்! என்று சிறிது பிரமித்துப் போனார்கள். பிறகு அந்த அதிகாரி, என்னைப் பார்த்து, அந்த இருட்டில் இவ்வளவு தூரம் வந்தது ஏன்? என்று கேட்டார். நண்பர் களில் ஒருவர், நமது அலுவலகம் மொனீவாவுக்குப் போனால் தம்மையும், தமது வாழ்க்கைத் துணைவியையும் அழைத்துக் கொண்டு போக முடி யுமா? ரெயிலில் இடம் இருக்குமா? என்று கேட்கவே வந்திருக் கிறார் என்று சொன்னார். இதற்கு அந்த அதிகாரி, இவருக்கு இடம் இல்லாமலா? என்று அந்த நண்பர்களிடம் சொல்லி விட்டு, பிறகு என்னைப் பார்த்து இதைக் கேட்க இவ்வளவு தூரம் இந்த நேரத்தில் இங்கு வருவானேன்? ஒரு வார்த்தை சொல்லி அனுப்பினால் போதுமே. பரவாயில்லை. எங்கள் அலுவலகம் அநேகமாக ரெயிலில்தான் போக ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறது. எப்பொழுது போவது என்பதுதான் நிச்சயமாகத் தெரியவில்லை. நிச்சயமாகத் தெரிந்ததும் உங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன். நீங்கள் தயாராயிருங்கள். கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். பிறகு அவருடைய அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டி ருந்த அவரது உறவினரான இளைஞர் ஒருவர் அடுத்த அறையில் இருந்தார். அவரை, தம்பி என்று கூப்பிட்டு, எனக்கு அறிமுகம் செய்து வைக்கின்ற முறையில் தம்பிக்கு நல்ல சாரீரம் உண்டு. தேவாரம், திருவாசகம் முதலியவற்றை நன்றாகப் பாடுவான். தமிழில் நல்ல ஆர்வமுடையவன் என்று சொல்லிவிட்டு, அந்த இளைஞரைப் பார்த்து, ஐயாவுக்கும் பாடிக் காட்டு. அவருடைய ஆசீர்வாதம் உனக்கு நிறைய இருக்க வேண்டும் என்று கூறினார். அந்த இளைஞரும் சிறிதும் தயங்காமல் தேவாரத்தில் இரண்டு பதிகங்களைப் பாடினார். கனத்த சாரீரம். அந்தக் காரிருளில் நிசப்தம் நிலவிய நேரத்தில், அந்தக் கனத்த சாரீரத்திலிருந்து வெளிவந்த பதிகங்கள், என்னுடைய உடற்சோர்வையும், மனச்சோர்வையும் போக்கவல்ல டானிக்காக இருந்தன. ஆண்டவனுடைய அருள்திறத்தை நினைந்து நினைந்து என் மனம் உருகியது. இளைஞருடைய இன்னிசை முடிந்ததும், நாங்கள் அந்த அதிகாரிக்கு நன்றி செலுத்திவிட்டு விடைபெற்றுக் கொண்டோம். கூடவந்த நண்பர்கள் இருவரும், அவர்கள் ஜாகைக்குச் செல்ல, நானும் வி.வே.ராவும், எங்கள் ஜாகைக்கு வந்தோம். வரும் வழியில் வி.வே.ரா. தபால் தணிக்கை இலாகா அதிகாரிகள் பலரும் உங்களை நன்றாகத் தெரிந்து கொண்டு மதிப்பு வைத்திருக்கிறார்கள். நீங்கள் என்னடா என்றால், அவர்களிடம் சென்று ஒரு சிறிது உதவியைக் கோரத் தயங்குகிறீர்களே? ஆபத்து நெருங்கி வந்து கொண்டி ருக்கிற இந்தச் சந்தர்ப்பத்தில் இப்படியெல்லாம் கூச்சப்பட்டுக் கொண்டு இருக்கலாமா? தன்னல மறுப்பு என்று சொல்லிக் கொண்டு சும்மா இருக்கலாமா? என்று முணுமுணுக்கும் குரலில் சொல்லிக் கொண்டு வந்தார். இவருக்கிருந்த பரிவை வார்த்தைகளால் சொல்லிக் காட்ட முடியுமா? எப்படியோ, ஜாகைக்கு வந்ததும், எனக்கு ஒருவிதமன அமைதி ஏற்பட்டது. பயணத்தைப் பற்றிய நம்பிக்கையும் உண்டாயிற்று.  16. அமைதி தந்த நூல்கள் பயணத்தைப் பற்றி நம்பிக்கை உண்டானாலும், எப்பொழுது புறப்படுவது என்பது தெளிவாகத் தெரியவில்லையானாலும், நாங்கள் பயணத்திற்காக எங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள முனைந்தோம். இந்தியாவை நோக்கிப் பயணம் செய்ய முற்படுகிறவர்கள், வாந்தி, பேதி, வைசூரி முதலிய நோய்களினின்று பாதுகாப்பளிக்கும் ஊசி போட்டுக் கொள்ள வேண்டுமென்று பர்மா அரசாங்க அதிகாரிகள் உத்தரவு போட்டிருந்தார்கள். இதை முன்னிட்டு வி. வே. uh., நான், என் வாழ்க்கைத் துணைவி ஆகிய மூவரும் மார்ச்சு மாதம் எட்டாந்தேதி காலை முனிசிபல் ஆபத்திரிக்குச் சென்றோம். ஒரே கூட்டம். கியூ வரிசையும் இல்லை. வெகுநேரம் வரையில் காத் திருந்தோம். கடைசியில் ஊசி மருந்து தீர்ந்து விட்டதென்றும், மூன்று நான்கு நாட்கள் கழித்து வருமாறும் சொல்லி அனுப்பி விட்டார்கள். மறுபடி பதிமூன்றாந் தேதி காலை நாங்கள் மூவரும் சென்றோம். இன்றும் ஊசி மருந்து தீர்ந்து விட்டது என்று தெரிவித்து விட்டார் கள். மறுநாள் பதினான்காம் தேதி காலை மீண்டும் சென்று, முனிசிபல் சுகாதார அதிகாரியை நேரில்கண்டு, இரண்டு தடவை வந்து போனதைப் பற்றிக் குறையாகச் சொல்லிக் கொண்டோம். அவரும் இரக்கப்பட்டு, தம் கையாலேயே எங்களுக்கு ஊசி குத்தி அனுப்பிவிட்டார். ஊசி குத்திக் கொண்டதன் விளைவாக அன்று (14-3-42) பிற் பகலிலேயே எங்களுக்கு லேசாகக் காய்ச்சல் வந்தது. கை வலியும் அதிகம். இவைகளைப் பொருட்படுத்திக் கொண்டிருக்க முடியுமா? சமையல், சாப்பாடு எல்லாம் சாங்கோபாங்கமாக நடைபெற்று வந்தன. எனக்கு நிரம்பப் பலவீனம் ஏற்பட்டிருந்தது. இந்தியாவுக்குச் செல்வ தாயிருந்தால் அது சாத்தியமாயிருக்குமா? நடைப்பயண மல்லவோ? எப்படிச் சமாளிப்பது? இப்படிப் பலவிதமாக எண்ணி எண்ணி ஏக்கமிட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் என் வாழ்க்கைத் துணைவி எப்பொழுதும் போல் மன உறுதியோடிருந்தாள். அந்த உறுதியை அவளுக்குச் சுபாவ மாயமைந்திருந்த புன்சிரிப்பு கவிந்து கொண்டிருந்தது. உண்மையில் அவள் கொண்டிருந்த மன உறுதிதான், ஏக்கத்திலும் மன வேதனையிலும் நான் மூழ்கிப் போய்விடாமல் என்னைக் காப்பாற்றியது என்று சொல்ல வேண்டும். மற்றும் மாந்தளைக்கு வந்த பிறகு ஏறக்குறைய தினந்தோறும் ஊசி போட்டுக் கொண்ட பிறகு கூட, அகப்பட்ட நேரங்களில் நான் கையோடு கொண்டு வந்திருந்த பிளேட்டோவின் குடியரசு (ரிபப்ளிக்) என்ற நூலைத் தமிழாக்கி வந்தேன். ஏற்கனவே இதன் முதற்பகுதி ரங்கூனில் 1942-ஆம் வருடம் பிப்ரவரி மாதம், அதாவது நாங்கள் ரங்கூனைவிட்டுப் புறப்படுவதற்குச் சில நாட்கள் முந்தி வெளியாகி இருந்தது. இதன் இரண்டாம் பகுதியை, இந்தியா போய்ச் சேர்வதற்குள் முடிந்த வரையில் தமிழ்ப்படுத்திவிடவேண்டு மென்பது என் ஆவல். இந்த மொழி பெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிற நேரம் மனத்தில் ஒரு நிறைவு உண்டாகி வந்தது. இதனால் பின்னர் மேற்கொண்ட நடைப் பயணத்தின்போது ஆங் காங்குத் தங்கிய இடங்களில் சிறிது நேரமாவது இந்தப் பணியில் ஈடுபட்டு மன அமைதி பெற்று வந்தேன்.  17. நடுவில் வந்த யோசனை மாந்தளையில் இருந்த வரையில் இப்படி ஏதோ ஒரு வகையில் என் மனம் அமைதி பெற்றதென்றாலும், உடல் அந்த மனத்தோடு ஒத்துழைக்க மறுத்து வந்தது. ஏற்கனவே பலவீனமடைந்திருந்த நானும் என் வாழ்க்கைத் துணைவியும், ஊசி போட்டுக் கொண்ட பிறகு ஏற்பட்ட காய்ச்சலினால் இன்னும் பலவீனமடைந்து, கோரைத் தண்டு மாதிரியாகி விட்டிருந்தோம். இந்த நிலையில், பயணத்தை மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் தோன்றத் தொடங்கியது. எனவே வி. வே. uh., நான், என் வாழ்க்கைத் துணைவி ஆகிய மூவரும் மாந்தளைக்குச் சுமார் பதினோரு மைல் வட மேற்கிலுள்ள ஸகாயிங் என்ற ஊரில் சென்று யுத்தம் ஒரு வகையாக முடியும் வரையில் தங்கியிருப்பதென்றும், பிறகு ரங்கூனுக்குத் திரும்பிச் செல்ல முடியுமானால் செல்வதென்றும், அது சாத்திய மில்லையானால் இந்தியா நோக்கிப் புறப்படுவதென்றும் யோசித்தோம். இந்த ஸகாயிங் அழகான ஊர். ஐராவதி நதியின் மேற்குக் கரையில் உள்ளது. கிழக்குக் கரையில் ஆவா என்ற ஊர். இரண்டும் பர்மிய சரித்திரத்தில் பிரசித்திப் பெற்றவை. பதினேழாவது நூற்றாண்டின் இடைக் காலத்திலிருந்து பதினெட்டாவது நூற் றாண்டின் இடைவிட்டு, பர்மிய அரசர்களின் தலைநகரங்களா யிருந்தன. ஆவாவுக்குச் சுமார் ஆறு மைல் தொலைவில் அமரபுரம் என்ற ஓர் ஊர் இருக்கிறது. இதுவும் சரித்திரப் பிரசித்தி பெற்றது. சிறிது காலம் பர்மிய அரசர்களின் தலைநகரமாகவும் இருந்தது. இப்பொழுது இந்த மூன்று ஊர்களும் களையிழந்து நிற்கின்றன. பழைய பெருமையின் அடையாளங்கள் ஆங்காங்குக் காணப்படு கின்றன. ஆனால் இந்த மூன்று ஊர்களிலும் இயற்கையின் வனப்பும் செழுமையும் பொலிந்து நிற்கின்றன. இங்குச் சென்று பார்க்கிற யாருக்கும், சிறிது காலமாகிலும் இந்த ஊர்களில் தங்கி யிருக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். ஐராவதியின் இரு கரைகளையும், அதாவது ஸகாயிங்கையும் ஆவாவையும் ஒரு பாலம் இணைத்துக் கொண்டிருக்கிறது. ஆசியா கண்டத்தின் மிகப் பெரிய பாலங்களுள் ஒன்றான இதன் நீளம் மூவாயிரத்து முந்நூற்று நாற்பது அடி. ரெயில் போக்குவரத்துக்கும், நடந்து செல்வோருக்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. பர்மாவின் பல பகுதிகளிலிருந்தும் பின்வாங்கிக் கொண்டுவந்த பிரிட்டிஷ் படையினர் தங்களைத் துரத்திக் கொண்டு முன்னேறி வரும் ஜப்பானியப் படைகளுக்கு உபயோகப்படக் கூடாதென்பதற்காக இந்தப் பாலத்தின் இரண்டு கண்களை 1942-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் முப்பதாந் தேதி வெடிமருந்து வைத்துத் தகர்த்து விட்டனர் என்று நாங்கள் இந்தியா வந்து சேர்ந்த பிறகு தெரிந்து கொண்டோம். வி. வே. ரா. வின் அலுவலகம் மாந்தளையிலிருந்து தற்காலிக மாக ஸகாயிங்குக்கு மாற்றப் பட்டிருந்தது. ஏனென்றால் அலுவல கத்து மேலதிகாரி ஒருவர் அங்கு வசித்துக் கொண்டிருந்தார். அவருடைய ஜாகையின் ஒரு பகுதி அலுவலகமாக இருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் வி. வே. ரா. அலுவலக ததாவேஜு முதலியவைகளை எடுத்துக்கொண்டு மார்ச்சு மாதம் பதிமூன்றாம் தேதி பிற்பகல், அதாவது மருந்தில்லை யென்ற காரணத்தினால் ஊசி போட்டுக்கொள்ளாமல் இரண்டாவது தடவை ஏமாற்றம் அடைந்து திரும்பி வந்த அன்று பிற்பகல் ரங் கூனிலிருந்து நாங்கள் கொண்டு வந்த காரில் அங்குப் புறப் பட்டார். அவருடன் நானும் என் வாழ்க்கைத் துணைவியும் சென்றோம். அந்த மேலதிகாரி பண்பு நிறைந்த ஒரு பர்மிய கனவான். இந்தியர் களிடத்தில் நல்லெண்ண முடையவர். அவருடைய பராமரிப்பில் அல்லது அவருடைய உதவிப்பெற்று ஸகாயிங்கில் சில காலம் தங்கி யிருக்க முடியுமா என்று அவரை விசாரித்துப் பார்க்கலா மென்பதற் காகவே நாங்கள் சென்றோம். அந்த பர்மிய கனவானின் வீடு ஒரு மாளிகை போலிருந்தது. அவரும் அவர் வீட்டுப் பெண்டிரும் எங்களை இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தார்கள். வி. வே. ரா. எங்களைப் பற்றி அவரிடம் விவரமாகச் சொல்லி, நாங்கள் வந்திருக்கும் உத்தேசத்தையும் தெரி வித்தார். ஆனால், அந்த ஊரில் தங்கியிருப்பது ஆபத்து என்றும், எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தால், பின்னர் எங்களுடைய உயிர்க்கு மட்டுமல்ல தமது குடும்பத்தினருடைய உயிருக்கும் ஊறு நேரக்கூடும் என்றும், ஆகையால் நானும் என் வாழ்க்கைத் துணைவி யும் சீக்கிரத்தில் இந்தியா போய்ச் சேருவது நல்லதென்றும் சொல்லி, வி.வே.ரா. மட்டும் சில நாட்கள் வரை இருந்து அலுவலக வேலை களை ஒருவாறு ஒழுங்குபடுத்தி வைத்து விட்டுப் புறப்படட்டும் என்று குறிப்பாலுணர்த்தினார். இதைத் தெரிந்து கொண்டு நாங்கள் மூவரும் சென்ற காரி லேயே, மாலை மாந்தளைக்குத் திரும்பி வந்துவிட்டோம். அன்று இரவு, எங்களுக்குத் தூக்கம் வரவில்லை. இனம் தெரியாத ஒரு கலவரம், மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தது. ஏதாவது ஒரு முடிவு செய்ய வேண்டுமல்லவா? மறுநாள் காலை, நாங்கள் இருவரும் முன்னாடிப் புறப்படுவதென்றும் வி. வே. ரா. பின்னாடி வருவதென்றும் தீர்மானித்துக் கொண்டோம். ஆனாலும் வி. வே. ரா வுக்கு எங்களைப் பற்றிக் கவலை. ஏனென்றால் எங்களிருவருடைய உடல்நிலை அவ்வளவு திருப்திகரமாயில்லை யல்லவா? தவிர எங்களிடத்தில் அவருக்குத் தனிப்பட்ட பாசம். எங்களுடைய உறவு முறையைக் காட்டிலும் எங்களிடையில் நிலவிய பாசம் வலுவடைய தாயிருந்தது. எங்களுக்கு அவரைப் பற்றிக் கவலையில்லாமல் இருக்குமா? ரங்கூனில் ஒரு குடும்பமாக வசித்து வந்த நாங்கள் ஒன்றாகவே ரங்கூனிலிருந்து வந்து மாந்தளையில் ஒன்றாகவே குடித்தனம் நடத்தி வந்தோம். அப்படியிருக்க, அவரை தனியாக விட்டுவிட்டு, நாங்கள் இருவரும் புறப்படுவது நியாயமாயிருக்குமா? எங்கள் மனச்சாட்சி புறப்படு வதற்கு இடம் கொடுக்க வில்லை, மூவரும் ஒன்றாகவே புறப்பட்டு விடுவோம், அவசியமானால் சில தினங்கள் தாமதித்துப் புறப்படலாம் உங்களுக்காக நாங்கள் இருவரும் இங்கேயே மாந் தளையில் காத்திருக்கிறோம். இதற்கு அவர் சம்மதப்படவில்லை. எனவே நாங்கள் இருவரும் முன்னாடிப் புறப்படுவதென்று தீர்மான மாயிற்று.  18. காலத்தில் கிடைத்த உதவி தபால் தணிக்கை இலாகா, மொனீவாவுக்குப் புறப்படுகிற போது, கூடவே நாங்கள் இருவரும் புறப்படுவதென்று முடிவு செய்து கொண்டோம். அந்த இலாகாவும் நாலைந்து நாட்களுக்குள் புறப்பட்டு விடும் என்று தெரிந்தது. அது வரையில் மாந்தளையில் இருந்து கழிப்பதைத் தவிர வேறு வழியில்லை. மார்ச்சு மாதம் ஏழாந்தேதி இரவு தபால் தணிக்கை இலாகா வின் உதவிப் பிரதம அதிகாரியான சு. அ. விடம் என்னை அழைத்துப் போன இரண்டு நண்பர்களில் ஒருவரான சு. என்பவர் பதினாறாந் தேதி பிற்பகல் என் ஜாகைக்கு வந்து, நாளை, (17 - 3 - 42) காலை மொனீவாவுக்குப் புறப்படத் தயாராயிருக்குமாறு சொல்லி விட்டு அவசரமாகப் போய் விட்டார். அப்பொழுது வி.வே.ரா. இல்லை. அன்று காலை அலுவலகத்து வேலையாக ஸகாயிங் சென்றி ருந்தார். இரவு ஏழு மணிக்கு மேல் திரும்பி வந்தார். வந்த பிறகு, ‘மொனீவா வுக்குப் புறப்படுவதா, அல்லது வந்தது வரட்டுமென்று மாந்தளை யிலேயே இருந்து விடுவதா? என்று திரும்பத் திரும்பக் கேள்வி களைப் போட்டு மனத்தை ஒரே குழப்பத்திற்குள்ளாகிக் கொண்டோம். இதற்கு அடிப்படையான காரணம் ஏற்கனவே சொன்னபடி எங்களிருவருடைய தேகம் பலவீனப்பட்டுக் கிடந்தது தான். அன்று இரவு மூவரும் தூங்கவே இல்லை. எப்படியோ பொழுது விடிந்தது. கடைசியில் நாங்கள் இருவரும் புறப்படுவ தென்று நிச்சயமாயிற்று. அவசரம் அவசரமாக மூட்டை முடிச்சு களைக் கட்டினோம். எதை எடுத்துக் கொள்வது எதை, எதை விட்டுப் போவது என்பதைப் பற்றிச் சரியாக நிர்ணயித்துக் கொள்ள முடிய வில்லை. ஏனென்றால், மொனீவாவுக்கு அப்புறம் வழி எப்படிப்பட்டது, போக்குவரத்து சாதனங்கள் என்னென்ன கிடைக்கும் என்பன போன்ற விவரங் களைச் சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை. பொதுவாக, பல மைல்கள் தூரம் நடைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கு மென்று மட்டும் தெரிந்து கொண்டோம். அப்படி நடைப் பயணத்தை மேற்கொள்கிறபோது ஒவ் வொருவரும் அறுபது பவுண்ட் எடையுள்ள சாமான்களுக்கு மேல் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படமாட்டார்களென்று சொல்லப் பட்டது. ஆனால் யாருக்கும் எதுவும் விவரமாகத் தெரியவில்லை. எதற்கும் நாங்கள், குறைந்த பட்சத் தேவையுள்ள சாமான்களை மட்டும் எடுத்துக்கொள்ள முற்பட்டோம். ஆனால் அது அவ்வளவு சுலபமாயிருக்கவில்லை. எது தேவை, எது தேவையில்லை என்பதை நிர்ணயிப்பது பெரிய சங்கடமாகி விட்டது. எங்கள் தீர்க்கா லோசனை சக்தியைப் பரிசோதனைக்குட் படுத்தி, இதில் ஓரளவு வெற்றியும் கண்டோம். என் உடைகள் யாவும் கதர். என் வாழ்க்கைத் துணைவிக்கு இரண்டு மூன்று பட்டுச் சேலைகளும், கைத்தறி நெசவுத் சேலைகள் இரண்டு மூன்றும் இருந்தன. சமையலுக்கான சில பாத்திரங்களும், அரிசி, பருப்பு போன்ற உணவுச் சாமான்களும் இருந்தன. இவற்றில் இரண்டு மூன்று நாளைக்குப் போதுமான உணவுப் பொருள் களை எடுத்துக் கொண்டோம். கதர் வேஷ்டி சட்டை களில் ஒரு ஜதை எடுத்துக் கொண்டோம். பட்டுச் சேலைகளை எடுத்துக் கொண்டு மற்றச் சேலைகளை விலக்கிவிட்டோம். ஏனென் றால், பட்டுச் சேலைகள் இலேசாக இருப்பதோடு குளிர்க்கும் தாக்குப் பிடிக்கும். பாத்திரங்களில் நான்கு ஐந்து அடுக்குகள் கொண்ட எடுப்புச் சாப்பாட்டுப் பெட்டியும், தூக்குச் சட்டிகள் இரண்டும் எடுத்துக் கொண்டோம். சாப்பாட்டுக்கும் சமையலுக்கும் உபயோ கிக்கலாம்; தூக்குச் சட்டிகளைத் தண்ணீர் சேந்தப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொன்றையும் தேவை நிறை இவை களைப்பற்றி யோசித்து யோசித்து எடுத்துக் கொண்டோம். வேண்டாதவைகளை நீக்கி விட்டோம். உணவுப் பொருள்களை எடுத்துக்கொள்வதில் கூட எது அதிக முக்கியம் எது குறைந்த முக்கியம் என்று நாங்கள் பார்க்க வேண்டியிருந்தது. அரிசி, துவரம் பருப்பு இவை இரண்டும் மட்டும் இருந்தால் போதுமென்று தீர் மானித்து, எடுத்துக் கொண்டோம். மற்ற மிளகு, சீரகம், வெந்தயம் போன்றவைகளை வேண்டாமென்று வைத்து விட்டோம். இப்படி எல்லாவற்றையும் எடுத்து வைத்து கொள்ள வி.வே.ராவும் எங் களுக்கு இடம்பேசிக் கொடுத்த உறவினர் மோ.ரா.வும் பெரிதும் உதவி செய்தனர். நான் ரங்கூனை விட்டுப் புறப்படுகிறபோது, என் கையில் ஐம்பது ரூபாய் சொச்சம் இருந்தது. இதில் மாந்தளையில் இருந்த சுமார் இருபது நாட்களில் என் பங்காகப் பதினோரு ரூபாயும் சில் லறையும் செலவழிந்து விட்டது. மிகுதியுள்ள சொற்பப் பணத்தைக் கொண்டு நான் புறப்பட இது போதுமா என்ற ஏக்கம் என்னை ஆட் கொண்டது இந்த ஏக்கம் என் முகத்தில் பிரதிபலித்தது போலும். இதை அறிந்துகொண்ட வி.வே.ரா. தமது பணப் பெட்டி யைச் சுட்டிக்காட்டி. பெட்டியில் இருக்கிற பணத்தில் எவ்வளவு தேவையோ அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். நீங்கள் எடுத்துக் கொடுங்கள் என்று நான் சொன்னேன். பரவா யில்லை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி, சாவிக் கொத்தை என் கையில் திணித்தார். பெட்டியைத் திறந்தேன். பணத்தை எடுக்க முற்பட்ட போது, என் கைகள் நடுங்கின. ஒருவர் என்னதான் நமக்கு நெருங்கியவராக இருந்த போதிலும். அவருடைய பெட்டியை அவருடைய பார்வையில்லாமலேயே திறந்து பணத்தை எடுத்துக்கொள்வதென்பது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் எதைப் பற்றியும் யோசிக்க முடியவில்லை. நோட்டுக்களாக நூற்றறுபது ரூபாய் எடுத்துக் கொண்டேன். பிறகு வி.வே..uh. விடம் எடுத்துக் கொண்ட தொகைக்கு ஒரு சீட்டு எழுதிப் பெட்டியில் வைத்து விடுகிறே னென்று சொன்னேன். சீட்டு எதற்கு? ஒன்றும் வேண்டாம் என்று அவர் சொல்லி விட்டார். பெட்டியைப் பூட்டிச் சாவிக் கொத்தை அவரிடம் சேர்த்து விட்டேன். இந்தத் தொகையை நான் சென்னை சேர்ந்த சிறிது காலத்திற்குப் பறிகு திருப்பிக் கொடுத்து விட்டேனாயினும் அந்தச் சமயத்தில், நான் கேளாமலேயே என் மன ஏக்கத்தை அறிந்து, அதைத் திருப்தியான முறையில் உதவியப் பண்பை நான் மறக்க முடியுமா? காலத்தில் செய்தி உதவி ஞாலத்தின் மாணப் பெரி தல்லவா?  19. நகர்ந்து சென்ற bரயில். . . பதினேழாந் தேதி காலை சுமார் எட்டரை மணிக்கு நங்கள் இருவரும் மந்தளை ரெயில்வே ஸ்டேஷனுக்கு‘ கோடாகடியில் சென்றோம். கோடா காடி என்றால் குதிரை வண்டி என்று அர்த்தம். இது சென்னைப் பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு காணப் பட்ட கோச் வண்டி - தற்போதைய ஜட்கா வண்டி - மாதிரி. இந்தக் கோச் வண்டி தான் பர்மாவின் முக்கியமான நகரங்களில் சர்வ சாதாரணப் புழக்கத்தில் இருந்தது. டேஷன் முகப்பில் எங்கள் குதிரை வண்டி நின்றதும், அங்குத் தபால் தணிக்கை இலாகாவின் பிரதம உதவி அதிகாரியான சு.ஆ. எங்கள் வருகையை எதிர்பார்த்திருந்தார். எங்கள் வருகைக்கு முன்பே, அவருடைய இலாகா சிப்பந்திகள், தங்கள் பெண்டு பிள்ளைகள் சகிதம் ராணுவ அதிகாரிகளால் பிரத்தியேகமாகக் கொடுக்கப்பட்டிருந்த ஒரு (ரெயில்) பெட்டியில், ஒருவரோடொருவர் இடித்துக் கொண்டு நெருக்கமாக உட்கார்ந்திருந்தனர். இவர்கள் தவிர, சிப்பந்திகளின் குடும்பச் சாமான்கள் அலுவலகத்துத் த தாவேஜுகள் ஆகிய யாவும் அந்தப் பெட்டியில் திணிக்கப்பட்டி ருந்தன. இந்த ஏற்பாடுகளையெல்லாம் முன்கூட்டிச் செய்துவிட்டு, அந்தப் பிரதம உதவி அதிகாரி எங்களை எதிர்பார்த்து டேஷன் முகப்பில் காத்திருந்தாரென்றால், அவருடைய அன்பை எந்த வார்த்தைகளால் வருணிப்பது? அவர் எங்களை வரவேற்று டேஷன் பிளாட்பாரத்திற்கு அழைத்துப் போய் ரெயில் பெட்டியில் எங்களிரண்டு பேருக்கும் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பலகையில் அமரச் செய்தார். இலாகா சிப்பந்திகள், உரிமையோடு புழங்க வேண்டிய அந்தப் பெட்டியில், அந்த இலாகாவுக்கு அந்நியர்களாயுள்ள எங்கள் இருவருக்கும் பிரத்தியேகமாக உட்கார்ந்து கொள்ள இடம் அளிக்கப்பட்டது. எங்களைப் பொறுத்தமட்டில் இந்த ஏற்பாடு சௌகரியமாயிருந்த தென்றாலும் ‘மற்றவர்கள் தாராளமாக உட்கார முடியாதபடி செய்து விட்டோமோ, நாங்கள் அமர்ந்திருப்பது அவர்களுக்கு இடைஞ்சலாயிருக்குமோ? என்று இப்படிச் சில எண்ணங்கள் என் மனத்தைத் தாக்கின. ஆனால், பெட்டியிலிருந்த அனைவரும் எங்களிடம் அன்பும், மரியாதையும் காட்டி, தங்களால் எங்களுக்கு எவ்வித இடைஞ்சலும் இராதென்றும் நிம்மதியாக அமர்ந்து வரலாம் என்றும் ஆறுதல் மொழிகள் கூறினார்கள். அந்தப் பிரதம உதவி அதிகாரி, எங்கள் இருவரையும் பெட்டியில் அமர்த்தி விட்டு, என்னை அவர் மார்ச் மாதம் ஏழாந்தேதி இரவு யாரிடம் அறிமுகப்படுத்த அழைத்துச் சென்றாரோ அந்த நண்ப ரான உத்தியோகதரிடம், இவர்களிருவரையும் பத்திரமாக மொனீவாவில் கொண்டு சேர்த்துவிட வேண்டும். வழியில் இவர் களுக்குத் தேவையான ஆகாரம் கொடுத்து அழைத்து வாருங்கள். இவர்களுடைய சௌகரியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு என்று அன்புக் கட்டளையிட்டு விட்டு வேறு அலுவல்களைக் கவனிக்க அப்பால் சென்றுவிட்டார். எங்களை வழியனுப்ப டேஷனுக்கு எங்களோடு வி.வே.ரா. வும். மோ. ரா. வும் வந்திருந்தனர். எங்களுக்குச் சௌகரியமான இடம் கிடைத்ததையும், நண்பர்கள் எங்களிடம் காட்டிய அன்பையும் பார்த்து அவர்களுக்கு, எங்களைப் பற்றிய கவலை சிறிது குறைந்தது. நாங்கள் கூடிய மட்டில் சௌகரியமாகவே போய்ச் சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு உண்டாயிற்று. ஆனால், எங்களுக்கு அவ்விருவரையும் அங்கேயே விட்டு விட்டுப் புறப்பட்டுப் போகிறோமே என்ற வேதனை. எங்களிரு வரைக் காட்டிலும் அவ்விருவரும் வயதில் சிறியவர்களாகவும் அதனால் எவ்விதச் சங்கடங்களையும் தாங்கக் கூடிய சக்தியுடை யவர்களாகவும் இருந்த போதிலும், அவர்கள் எப்படியும் சிறிது பின்னாடி இந்தியா வந்து சேர்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்ததென்றாலும், கூடவே, அவர்களை அண்டி அணைத்துக் கொள்கிறவர்களோ, இல்லாத ஒரு சூழ்நிலையில் அவர்களை விட்டுவிட்டுப் போகிறோமே என்ற குற்ற உணர்ச்சி எங்கள் உள்ளத்தை உறுத்தியது. ஆயினும் வேறு வழியின்றி புறப் படவேண்டியவர்களானோம். ரெயில், பெட்டியில் நாங்கள் காலை சுமார் எட்டே முக்கால் மணிக்கே வந்து அமர்ந்து விட்டோமாயினும், ரெயில், பகல் பதினொன்றரை மணிக்கு மேல்தான் புறப்பட்டது. டேஷன் பிளாட்பாரம் ஒரு இராணுவ முகாம் போலவே இருந்தது. கூர்க்க சிப்பாய்கள் ஆங்காங்கு காவல் புரிந்து வந்தார்கள். அவர்களுடைய கெடுபிடியைப் பார்த்து, ரெயிலேற வந்த சாதாரண ஜனங்கள் மருண்டு போய் பிளாட்பாரத்திலே அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். இந்த அமளிதுமளியில் சிலருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. ரெயில் எங்குப் புறப்படாமல் நின்றுவிடுமோ என்று எங்கள் பெட்டியிலிருந்த அனைவரும் பயந்துவிட்டார்கள். ஆனால் விபரீதமாக ஏதும் நிகழாமல் ரெயில் புறப்பட்டு விட்டது. ரெயில் ஓடியது என்று சொல்வதைக் காட்டிலும் நத்தை வேகத்தில் நகர்ந்தது என்று சொல்வதுதான் பொருத்தமாயிருக்கும். மாந்தளைக்கு அடுத்த மியோஹாங் டேஷனில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக ரெயில் நின்றுவிட்டது. அடுத்த யவடாங் என்ற டேஷனில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போட்டுவிட்டார்கள். இப்படி ஒவ்வொரு டேஷனிலும் தாமதித்துத் தாமதித்துத்தான் வண்டி சென்றது. தவிர, வழி நெடுக ஒவ்வொரு டேஷனிலும் பிரிட்டிஷ் படையினர் பாராக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கு ரெயில் பெட்டிகளும் தண்டவாளங்களும் பரிசோதனைக் குள்ளாயின. இப்படி வண்டி நகர்ந்து செல்கிறதே என்று யாரும் சலிப்புக் கொள்ளவில்லை. எங்கள் பெட்டியில் இருந்தவரெல் லோரும் குதூகலமாக இருந்தார்கள். உரத்தக் குரலெடுத்துப் பாடினர் சிலர்; தங்களுடைய இசை அறிவை, உதடுகளின் மூலம் வெளிப்படுத்தினர் சிலர்; உலகம் எந்தப் போக்கிலே போய்க் கொண்டிருந்தாலென்ன என்கிற பாவனையில் கண்மூடி மௌனி களாய் அசையாது அமர்ந்திருந்தனர் சிலர்; குறட்டை விட்டுத் தூங்கினர் சிலர். நடுநடுவே பலதரப்பட்ட சம்பாஷணைகள், கேலிப் பேச்சுக்கள் எல்லாம் நடைபெற்றன. வண்டியிலிருந்த அன்பர்களனைவரும் எங்களிருவரிடமும் மிகவும் அன்பு காட்டி உபசரித்தார்கள். அவ்வப்பொழுது எங் களுக்குத் தயிரன்னம், புளியோதரை முதலிய ஆகாராதிகளைக் கொடுத்து உதவினார்கள். இதனால் சுமார் எட்டு மணி நேர ரெயில் பிரயாணமானாலும் எங்களுக்கு அலுப்புத் தட்டவில்லை.  20. மொனீவாவில் பகல் சுமார் பதினொன்றரை மணிக்கு மாந்தளையை விட்ட வண்டி இரவு ஏழுமணி சுமாருக்கு மொனீவா டேஷனை யடைந்தது. தபால் இலாகா அன்பர்கள், அவர்களுடைய அலுவலக மாகத் தற்காலிகத் திட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓரிடத்திற்கு எங்களிருவரையும் அழைத்துச் சென்றனர். அந்த இடம் மூங்கிற் பாய்களைக் கொண்டு வேயப் பட்ட ஒரு பெரிய கொட்டகை. இட மென்னவோ விசாலமாகத்தான் இருந்தது. ஆனால், தரை ஒரே ஈரம். சுற்று முற்றிலும் மூங்கிற் பாய் களைக் கொண்டு மறைவு கட்டியி ருந்தனர். அன்று காலைதான் கொட்டகை தயாரானது போல் தெரிந்தது, எப்படியோ இராப் பொழுதைக் கழிக்க ஓர் இடம் கிடைத்ததேயென்று நாங்களிருவரும் ஆறுதலடைந் தோம். அலுவ லகத்து அன்பர்கள் அவரவருடைய குடும்பத்தினருடன் தனித் தனியாக இடம் வகுத்துக் கொண்டு அமர்ந்தார்கள். அப்பொழுது, சென்னைக்கும் ரங்கூனுக்கும் இடையே போய் வந்து கொண்டிருந்த கப்பல்களில் பிரயாணம் செய்யும் மூன்றாவது வகுப்புப் பிரயாணிகள், மேல் தளத்தில் இடம் பிடித்துக் கொண்டு உட்கார்ந் திருக்கும் காட்சி என் நினைவுக்கு வந்தது. நாங்களிருவரும், எங்கள் பெட்டிப் படுக்கைகளுடன் சிறிது ஒதுக்கமான ஓரிடத்தில் அமர்ந்தோம். அப்பொழுது எங்கள் இதயம் சூனியமாக இருந்தது. ஆகாரத்தைப் பற்றியோ, தூக்கத்தைப் பற்றியோ, எந்த விதமான சிந்தனையும் எங்களுக்கு உண்டாக வில்லை. திக்பிரமை பிடித்தது போல் என்று சொல்வார்களே, அந்த மாதிரி இருந்தோம். ஆனால் மற்றவர்கள் பரபரப்புடன் அங்குமிங்குமாகப் போவது வருவதுமாக இருந்தார்கள். ராத்திரி ஆகாரத்திற்கு வழி தேடத்தான் இந்தப் பரபரப்பு என்று நாங்கள் தெரிந்து கொண்டோம். அப்பொழுது,. பிரதம உதவி அதிகாரியான சு.ஆ. எங்களிருப் பிடத்துக்கு வந்து, ரெயில் பிரயாணம் எப்படி இருந்தது? என்று விசாரித்தார். சிரமமில்லாமல் இருந்தது என்று நான் பதில் சொன்னேன். அந்த மட்டில் சௌக்கியமாக வந்து சேர்ந்ததைப் பற்றி நிரம்ப சந்தோஷம். இந்த இடம் சௌகரியமோ, அசௌகரியமோ, இராப் பொழுதை இங்கே கழித்து விடுங்கள். நாளைக் காலை பார்த்துக் கொள்ளலாம் என்றார். அப்படியே ஆகட்டும் என்றேன் நான். ‘ராத்திரி ஆகாரத்திற்கு என்ன செய்யப் போகிறீர்கள்? என்ற அவர் கேள்விக்கு நான் மௌனம் சாதித்தேன். இவர்களெல்லோரும் எங்கோ ஹோட்டல் இருக்கிறதென்று கேள்விப்பட்டுப் போய்க் கொண்டும் வந்துகொண்டும் இருக் கிறார்கள். உங்களுக்கு அது சரிப்படாது; உங்களால் முடியவும் முடியாது. நீங்கள் ஆகாரத்திற்காக எங்கும் போகவேண்டாம். பழமும் பாலும் கொண்டுவந்து தரச் சொல்கிறேன். அதை உட் கொண்டு இராத்திரிப் பொழுதைக் கழித்துவிடுங்கள் என்று கனிவுடன் கூறினார். எங்களுடைய உடல் நிலையையும் மன நிலையையும் இவர் எப்படித் தெரிந்து கொண்டார் என்பதை நினைத்து நான் வியப் படைந்தேன். அவர் சொல்லிப் போனபடி, அவரால் எங்களுக்குப் பழமும், பாலும் தரச் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அவர் தருவிப் பதற்கு முன்பே அவையிரண்டும் கடைகளில் தீர்ந்து போயிருந்தன. ஹோட்டல் சாப்பாட்டை எதிர்பார்த்துச் சென்றவர்கள் அது போதிய அளவிற்குக் கிடைக்காமற் போகவே, அவை யிரண்டையும் சொன்ன விலை கொடுத்து வாங்கி உட்கொண்டு, தங்கள் வயிற்றுப் பசியை ஒருவாறு தீர்த்துக் கொண்டு விட்டிருந்தார்கள். இது தெரிந்ததும் அவர் - சு.ஆ- எங்களிடம் வந்து தம்மால் ஏதும் தருவித்துக் கொடுக்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்தார். அதற் காக நாங்கள் வருந்தவில்லை. அவர் எங்களிடம் காட்டிய பரிவு, எங்கள் வயிற்றுப் பசியைத் தீர்த்து விட்டது. பத்தையும் பறக் கடிக்கச் செய்யும் பசிகூட அன்புக்கு ஆட்பட்டு அடங்கிவிடுகிறது! அன்று இராப் பொழுதை எப்படியோ கழித்து விட்டோம். மொனீவா ஊருக்குச் சமீபத்தில், சிந்த்வின் என்ற ஒரு நதி ஓடுகிறது. நீராவிப் படகுகளின் போக்குவரத்துக் கேற்ற ஆழமும் அகலமும் உடையது. மறுநாள் 18-3-42 காலை ஆற்றுக்குச் சென்று நீராடி விட்டு வருவோம் என்று நான் புறப்பட்டேன். சில கெஜ தூரம் சென்றதும் யாரோ கை தட்டிக் கூப்பிடும் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். தபால் தணிக்கை இலாகா மேலதிகாரியான பா. சு. தான்! எனக்கு ஆச்சரிய மாயிருந்தது. இவருடைய அலுவலகச் சிப்பந்திகள் ரெயிலில் வந்து சேர்வதற்கு முன்பே இவர் காரில் வந்து விட்டிருந்தார். இவரும், அரசாங்கத்து வேறு சில இலாகாக்களைச் சேர்ந்த உத்தியோகதர் சிலரும், இரவு நான் தங்கியிருந்த தபால் தணிக்கை இலாகா கொட்டகைக்கு மிக அருகில் ஒரு தனி வீடு பிடித்துக் கொண்டு அதில் தங்கியிருந்தார்கள். மொத்தம் ஏழெட்டுப் பேர். இவர்கள் தங்களுக்குள்ளாகவே சமையல் வேலையைப் பகிர்ந்து செய்துகொண்டு, சாப்பாட்டுப் பிரச்னையைத் தீர்த்துக் கொள்வதென்று ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள். இந்த ஏற்பாடு எனக்குப் பின்னர் தெரிய வந்தது. கைதட்டிக் கூப்பிட்ட அந்த அதிகாரியிடம் சென்றேன். இன் முகம் காட்டி வரவேற்றார். நேற்று இராத்திரி எங்கள் ஆபி பெஷல் ரெயிலில் வந்து சேர்ந்தீர்களா? நிரம்ப சந்தோஷம். இராத்திரி எங்கே தங்கியிருந் தீர்கள்? ஆபீ என்ற அந்தச் சந்தை இரைச்சலுக்கு மத்தி யிலா? இங்கே வந்துவிட்டிருக்கக் கூடாதோ? ஆபீ சிப்பந்திகளில் யாரிடமாவது சொல்லியிருந்தால் இங்கே கொண்டு வந்து விட்டிருப்பார்களே! பரவா யில்லை என்று இப்படிச் சொல்லிக் கொண்டே, தமது ஆபீ பணியாட்கள் இருவரை அழைத்து ஆபி கொட்டகைக்குச் சென்று அம்மாவை - அதாவது என் வாழ்க்கைத் துணைவியை - பெட்டி. படுக்கைகளுடன் இங்கே அழைத்து வாருங்கள். ஐயா - நான் - இங்கே இருப்பதாகச் சொல்லுங்கள்! என்று உத்தரவு போட்டார். அவர்களும் ஐந்து நிமிஷத்திற்குள் உத்தரவை நிறை வேற்றி விட்டார்கள். மேற்படி வீட்டில் கூட்டுச் சமையல் நடத்தி வந்தவர் அனைவரும் என் நண்பர்களே. இங்குச் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் களில் ஒருவர், பக்டோவில் எந்த வீட்டில் குடியிருந்தேனோ அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்; அரசாங்க உத்தியோகதர். இவரை ம. என்று அழைக்கிறேன். மற்றொருவர் முந்திச் சொல்லப்பட்ட ஏ. வி. மா. வீட்டுச் சொந்தக்காரரான ம. எங்களிருவரைக் கண்டதும், தம்மை அதுகாறும் அரித்து வந்த மனவேதனை நீங்கி விட்டது போல் உணர்வதாகக் கூறி, மேலும், நீங்கள் வந்தது எனக்குத் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது; உங்களுடனேயே நானும் இந்தியாவுக்கு வந்து விடுகிறேன். வழித்துணையைப் பற்றி நான் இனிக் கவலைப்படப் போவதில்லை என்று சொன்னார். சுபாவத் திலேயே இவர் பயந்தவர். அரசாங்க உத்தியோகதராய் இருந்த தனால், நிலையான வருமானத்துடன் நிம்மதியான வாழ்க்கையை நடத்தி வந்தவர். அப்படிப்பட்டவர் எந்த நிமிஷத்திலும் எந்தவித மான ஆபத்தும் நேரக்கூடும் என்ற எண்ணத்துடனேயே மொனீவா வில் காலங்கடத்தி வந்தார் என்று இவர் பேச்சிலிருந்து நான் தெரிந்து கொண்டேன். மேற்படி வீட்டில் பெட்டிப் படுக்கைகளுடன் என் வாழ்க்கைத் துணைவியை இருக்கச் செய்து விட்டு நான் நீராடி வர, சிந்த்வின் ஆற்றுக்குச் சென்றேன். ஆற்றங் கரையையடைந்ததும் வெகு நாள் பழக்கப்பட்ட ஓரிடத்திற்கு வந்திருப்பது போன்ற உணர்ச்சியே எனக்கு ஏற்பட்டது. ஏனென்றால், என்னுடைய சொந்தக் கிராமம் பாலாற்றங் கரையின் மீதுள்ளது. கிராமத்தில் தங்கி வந்த நாட்களில் ஆற்றில் நீராடி வருவது என் வழக்கம். அது போலவே இருந்தது இந்த சிந்த்வின் ஆறும். இந்த ஆற்றில் துணி துவைத்துக் கொண்டு நீராடியது எனக்குப் புதிய சக்தியைக் கொடுத்தது. நீராடி அனுஷ் டானத்தை முடித்துக் கொண்டு பா. சு. ஜாகைக்கு வந்தேன். அன்று பகலும் இரவும் என் வாழ்க்கைத் துணைவியும், நானும் கூட்டுச் சாப்பாட்டில் பங்கு கொண்டோம். அன்று மாலையே, மறு தினத்தி லிருந்து நாங்கள் தனியாகச் சமையல் சாப்பாடு வைத்துக் கொள் வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். ஏ.வி.ம. நான் சங்கோஜப் பேர் வழியென்பதும், நுண்ணுணர்ச்சி படைத்தவன் என்பதும் இவருக்குத் தெரியும். தவிர, என் போக்கு வேறே, மற்றவர்கள் போக்கு வேறே யென்பதும் இவருக்குத் தெரியும். எனவே மேற்படி வீட்டிலேயே முன் பக்கம் தனிப்பட இருந்த ஓர் அறையே எங்களுக்கு ஒழித்துக் கொடுக்கச் செய்து மொனீவாலிருந்து புறப்படும் வரையில் அதில் எங்கள் சமையல், சாப்பாடு சௌகரியங்களைக் கவனித்துக் கொள்ளும் படி சொன்னார். இவர் சிறிது கண்டிப்பான பெயர்வழி. பேச்சில் அன்பு நிறைந்திருக்குமாயின், அந்தப் பேச்சென்னவோ தோரணை யாக இருக்கும். முதன்முதலாக இவரிடம் பழகுகிறவர்கள். இவரைப் புரிந்துக் கொள்வது கடினம். பழக்கம் ஏற்பட்ட பிறகுதான் இவருடைய நேர்மையும் சரள சுபாவமும் வெளிப்படும். இவர் மறு தினத்தி லிருந்து, தினந்தோறும் காலையில் எங்கள் அறைக்கு வந்து, சமைய லுக்கும் குடிப்பதற்கும் வேண்டிய நீரை சிறிது எட்டினாற் போலிருந்த தெருக் குழாயிலிருந்து இரண்டு தகர டப்பாக்களில் நிரப்பி, தாமே தூக்கிக் கொண்டு வந்து கொடுப்பார். இவர் பார்ப்பதற்கு என்னைக் காட்டிலும் நோஞ்சலாக இருப்பார். ஆனால் மன உறுதி அதிகம். நீங்கள் ஏன் சிரமப்பட்டுத் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுக் கிறீர்கள்? நான் கொண்டு வருகிறேன் என்பேன் நான். உங்களால் முடியாது. நீங்கள் சும்மாயிருங்கள் என்று ஓர் அதட்டுப் போட்டு என்னைச் சும்மா இருக்கச் செய்து விடுவார். குளிப்பதற்கும், மற்ற தேவைக்கும் வேண்டிய நீரை எடுத்து வர, ஒரு கூலியாளை நியமித் திருந்தேன். மண்ணெண்ணெய் டப்பாவில் ஒரு தண்ணீருக்கு முக் காலணா வீதம் கொடுத்தேன். போதுமான அளவு எங்களுக்குத் தண்ணீர் கிடைத்து வந்தது. எங்களுக்குத் தண்ணீர் கிடைக்கச் செய்துவிட்டு, பிறகு ஏ. வி. ம. கூட்டுச் சாப்பாட்டு விடுதிக்குச் தேவையான கறிகாய்கள் வாங்கி வர மார்க்கெட்டுக்குச் செல்வார். வாங்கி வந்து கொடுத்து விட்டு, பிறகு எங்கள் அறைக்கு வந்து, ‘இன்று என்னென்ன கறிகாய்கள் வேண்டும்? என்று என் வாழ்க்கைத் துணைவியைக் கேட்பார். அவளும் ஏதோ சொல்லுவாள். அப்பொழுது நானும் கூட வருவ தாகச் சொல்வேன். வேண்டாம். உங்களால் அவ்வளவு தூரம் நடக்க முடியாது என்று கட்டளையிட்டு விட்டு வேகமாகச் சென்று விடுவார். திரும்பி வந்து, வாங்கின கறிகாய்களைக் கொடுத்து விட்டு உரிய பணத்தைப் பெற்றுக் கொள்வார். கணக்கில் கறார் பெயர் வழி! கறிகாய்கள் வாங்கிவர இரண்டு தரம் மார்க்கெட்டுக்குச் செல்கிறீர்களே? என்னையும் கூட வர வேண்டாமென்று சொல்லி விடுகிறீர்கள். கூட்டுச் சாப்பாட்டு விடுதிக்காக வாங்கி வரும்போது எங்களுக்கும் சேர்த்து வாங்கிக் கொண்டு வந்து விடுவதுதானே? ஒரு தடவை நடைகுறையுமல்லவா? என்று நான் சொன்னால், அதற்குப் பதிலாக, மனிதர்களின் சுபாவம் உங்களுக்குத் தெரியாது. கூட்டுச் சாப்பாடு விடுதியிலுள்ளவர்கள் பலதரத்தினர். அவர்களுக்கு வாங்கும் கறிகாய் களோடு உங்களுக்குச் சேர்த்து வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தால், அவர்களுடைய பணத்திலிருந்து உங்களுக்கும் வாங்கிக் கொண்டு வந்ததாகச் சந்தேகப்படுவார்கள். அப்படிச் சந்தேகப்பட்டு முணு முணுத்தால் அது உங்கள் காதில் விழும் பட்சத்தில் உங்கள் மனம் சங்கடப் படும். நீங்களோ தொட்டான் சிணுங்கிப் பெயர்வழி. பிறர் சலுகையில் வாழ விரும்ப மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். விடுதி யிலுள்ளவர்களுக்குத் தெரியா தல்லவா? இரண்டு தரம் மார்க்கெட்டுக்குப் போய் வருவது எனக் கொன்றும் சிரமமில்லை என்று சொல்லி மேற் கொண்டு என்னைப் பேசவொட்டாமல் செய்து விடுவார். என் உணர்ச்சிக்கு அவர் எவ்வளவு மதிப்புக் கொடுத்திருந்தார் என்பதற்கு இதைக் காட்டிலும் வேறு என்ன உதாரணம் வேண்டும்? மொனீவாவில் கறிகாய்களாகட்டும், மற்ற மளிகைச் சாமான் களாட்டும் கொள்ளை மலிவு என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அந்த ஊர்வாசிகள், யுத்த நெருக்கடியினால், விலைகள் ஏறிவிட்டன என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அப்படியானால், யுத்தம் தொடங்கு வதற்கு முந்தி இன்னும் மலிவாகவே இருந்திருக்க வேண்டுமென்பதைத் தெரிந்து கொண்டேன். விலை மலிவோடு காய்கறிகள் மிகவும் ருசியாயிருந்தன. ஆற்றுப் பாய்ச்சலில் விளைந் தனவல்லவா? மொனீவாவில் தங்கியிருந்த நாட்களில் ஒரே ஒரு நாள் தவிர மற்ற நாட்களில், உஷ்ண மிகுதியால் தடுமன் பிடித்துக் கொண்டு தொந்தரவு கொடுத்து வந்ததைப் பொருட்படுத்தாமல் ஆற்றில்தான் நீராடி வந்தேன். பொதுவாகவே நான் என்னுடைய சுமார் முப்பத் தைந்தாவது வயதி லிருந்து வெந்நீரில்தான் குளிப்பது வழக்கம். ஆனால் அந்த வசதியை இப்பொழுது எதிர்ப்பார்க்க முடியுமா? உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடிவந்து கொண்டிருக்கிற நிலையில் உடம்பைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா? உடம்பு ஒருவகையில் சோர்வுற்றிருந்தாலும் மனம் என்னவோ தெம்புடனேயே இருந்தது. மொனீவாவில் தங்கிய நாலைந்து நாட்களும் நல்ல பொழுதாகவே கழிந்ததென்று சொல்ல வேண்டும். கூட்டுச் சாப்பாட்டு முறையில் பங்குகொண்ட அன்பர்கள் வேறு துறைகளில் அலுவல் பார்த்து வந்தவர்களாயினும் தமிழிலக்கியங்களில் பற்றுக் கொண்டிருந்தவர் களாகவும், ஓரளவு பரிச்சயமுடையவர்களாகவும் இருந்தார்கள். இதனால் இவர்களுடன் தினந்தோறும் அளவளாவுவது எனக்குப் பெருமகிழ்ச்சி யளித்து வந்தது. மாலை நேரங்களில் கம்பனுடைய காவியத்திலிருந்து பாடல்களைச் சொல்லி அவற்றில் செறிந்து கிடக்கும் நயங்களை எடுத்துக் காட்டுவேன். அன்பர்கள் ரசித்ததோடு, தங்களுக்குத் தோன்றியவேறு சில கருத்துக்களையும் வெளியிடு வார்கள். இதைக் கண்டு நான் ஆச்சரியமடைந்தேன். அவர்களுடைய கருத்துக்கள் என் சிந்தனையைக் கிளறி விடும். அந்தச் சிந்தனையில் என் உடல் சோர்வு மறைந்து போகும்.  21. நீராவிப் படகுகள் பிரிட்டிஷ் படையினர் இந்தியாவை நோக்கிப் பின் வாங்கிச் செல்வதற்கனுகூலமாக, பாதை அமைக்கும் பணியை மேற்கொண் டிருந்த பர்மா அரசாங்கத்து நெடுஞ்சாலை இலாகாவின் மேலதி காரியும், அவருடைய சிப்பந்திகள் சிலரும் பாதையமைக்கும் வேலையைச் செய்ய ஒலிஸா மாகாணத்திலிருந்து வருவிக்கப் பட்டிருந்த கூலியாட்களும் 1942-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் நான்காவது வாரத் தொடக்கத்தில் மொனீவாவுக்கு வந்தார்கள். இவர்களை, அடுத்தாற்போல் சேரவேண்டிய சிந்த்வின் ஆற்று மார்க்கத்திலுள்ள கலேவா என்ற ஊருக்கு ஏற்றிச் செல்ல ஒரு விசேஷ நீராவிப் படகு ராணுவ அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. மேற்படி இலாகா மேலதிகாரியின் பிரதம உதவியாளராக ந. என்பவர் அலுவல் பார்த்து வந்தார். அடக்கமும் நிதானமுமுடை யவர். எதையும் சொல்லாமல் செய்யும் திறம் படைத்தவர். இவர் எனக்கு ஒரு வகையில் தூர உறவினர். இவர் தனது மனைவி யையும் மூன்று குழந்தைகளையும் முன்கூட்டியே ரெயில் மார்க்க மாக ரங்கூனிலிருந்து மொனீவாவுக்கு அனுப்பிவிட்டிருந்தார். இந்த அம்மையாரும், குழந்தை களும், நானும் என் வாழ்க்கைத் துணைவி யும் கூட்டுச் சாப்பாட்டு விடுதியைச் சேர்ந்த ஓர் அறையில் தனிக் குடித்தனம் நடத்தத் தொடங்கிய மறுநாள் எங்களோ வந்து சேர்ந் தார்கள். இவர்கள் வந்த நான்காவதுநாள் (20-3-42) காலை, இவர்களுக்கு உரியவரான ந. என்பவர், தமது அலுவலகத் தாருடன் வந்தார். வந்த அன்று மாலையே, முன்னேற்பாட்டின் படி, இவர் நீராவிப் படகில் கலேவாவுக்குப் புறப்படுவதாய் இருந்தது. இதில், தம் குடும்பத்தினரைத், தம்மோடு கூட்டிச் செல்ல இவர் ஏற்பாடு செய்திருந்தார். இது தெரிந்ததும் எனக்குப் பெரிதும் உதவி செய்துவந்த ஏ. வி. ம. என்பவர், இவரிடம் என்னைப் பற்றி விவரமாக எடுத்துச் சொல்லி, எப்படியாவது என்னையும் என் வாழ்க்கைத் துணைவி யையும் தம் குடும்பத்தோடு சேர்த்துக் கலேவாவுக்கு அழைத்துப் போக வேண்டு மென்றும், முடிந்தால் அதற்குப் பிறகு, இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வழிவகை செய்யுமாறு கூறினார். ந. வுக்கு தர்ம சங்கடமான நிலை. ஏனென்றால் அலுவலகத்துச் சிப்பந்திகள், அவர்களுடைய குடும்பத்தினர், கூலியாட்கள் ஆகிய இவர்களுக்கு மட்டுமே இந்த விசேஷப் படகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்படியிருக்க, எங்களைக் கூட்டிச் செல்வது சாத்தியமா யிருக்குமா? மேலதிகாரி ஆட்சேபம் தெரிவித்தால் என்ன செய்வது? இப்படிப் பல சிக்கல்கள் இருந்தன. ஆனால் ந.இவைகளைப் பற்றியெல்லாம் அதிகம் யோசித்ததாகத் தெரியவில்லை. ஏ.வி.ம. வின் வேண்டுகோளுக்கிணங்க எங்களிருவரையும் கூட்டிப் போவதற்கு ஒப்புக் கொண்டார். என் சுபாவத்தை நன்கறிந்த ஏ. வி. ம. என்னைப் பற்றி இவரிடம் சொல்லி அழைத்துப் போக வற்புறுத்தி யிராவிட்டால், நானாக இவரிடம் சென்று, என்னை அழைத்துப் போகுமாறு கேட்டிருக்க மாட்டேன்; சங்கடப்பட்டி ருப்பேன். அதிகம் பரிச்சயமில்லாதவர்களிடம் அதிக உரிமை கொண்டாடிப் பேசுவதென்பது என்னால் முடியாததாகவே இருந்து வருகிறது. நான் எங்களைக் கூட்டிக் கொண்டு போக ஒப்புக் கொண்டதும், நான் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டு, என்னையும், என் வாழ்க்கைத் துணைவியையும் மொனீவா வரையில் சௌகரிய மாகக் கொண்டு சேர்த்த தபால் தணிக்கை இலாகா நண்பர்களிடம் சென்று நன்றி தெரிவித்து விடைபெற்றுக் கொண்டேன். அவர் களுடைய அன்பையும் உதவியையும் நான் மறக்க முடியுமா?. மார்ச்சு மாதம் இருபத்திரண்டாந் தேதி மாலை சுமார் ஐந்து மணிக்கு ந. வுடன் அவர் குடும்பத்தினரும், நாங்கள் இருவரும், எடுத்துக்கொள்ள முடிந்த சாமான்களுடன் படகுத் துறைக்குப் புறப்பட்டோம். புறப்படுந் தறுவாயில் ஏ.வி.ம. பத்து ரூபாய் நோட்டு களாக நூறு ரூபாயை ஓர் உறையிலிட்டு என் சட்டைப் பையில் திணித்துக் கொண்டே உங்களிடத்தில் எவ்வளவு பணம் இருக்கிற தென்பது எனக்குத் தெரியாது அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வும் நான் விரும்பவில்லை. எப்பொழுது ஊர் போய்ச் சேர்வீர் களென்பதும் சொல்ல முடியாது. வழியில் உங்கள் செலவுக்குப் பணம் தேவைப்படலாம். அப்பொழுது இந்தப் பணத்தைத் தாராள மாக உபயோகித்துக் கொள்ளுங்கள். பணமில்லாமல் கஷ்டப்பட வேண்டாம். அப்படி இந்தப் பணத்தை உபயோகிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லையானால், ஊர் போய்ச் சேர்ந்த பிறகு இதை என் மனைவி பெயருக்கு மணியார்டர் செய்து விடுங்கள். நீங்கள் பாக்கி வைத்துக் கொண்டிருக்க மாட்டீர்களென்பது எனக்குத் தெரியும். ஒருகால் வழியிலேயே செத்துப் போய் விட்டீர்களானால் ஐயோ ஏ. வி. ம. விடமிருந்து பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடா மற் போகிறோமே? என்று கவலை யுடன் சாகவேண்டாம். இருப்ப தும், இறப்பதும் அவன் வசத்திலிருக்கிறதல்லவா? என்று கூறினார். இந்த வார்த்தைகளை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் சிறிது கடுமையாகவே தோன்றும். ஆனால் இவற்றின் அடிப்படையில் எத்தகைய ஆழ்ந்த அன்பும், பிறருடைய உணர்ச்சிக்கு மதிப்புக் கொடுத்துச் செயல் புரிகின்ற தன்மையும் படர்ந்து நிற்கின்றன! இந்த வார்த்தைகளுக்கு நான் என்ன பதில் கூறுவது? நன்றியுணர்வு நிறைந்த மௌனந்தான் என் பதிலாயிருந்தது. நான் சென்னை வந்து சேர்ந்ததும், முதற் காரியமாக, இவர் கொடுத்த நூறு ரூபாயையும் இவர் மனைவியாருக்கு மணியார்டர் மூலம் அனுப்பி விட்டேன். வழியில் இந்தப் பணம் எனக்குத் தேவை யாயிருக்கவில்லை. படகுத் துறைக்குச் சுமார் ஐந்தரை மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கு ராணுவ முதீப்புப் பலவாயிருந்தது. படகையும் கரையையும் இணைக்கும் செயற்கைப் பாலத்தின் இரு மருங்கிலும், பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் நின்றுகொண்டு உள்ளே செல்வோரை ஒவ்வொரு வராகப் பார்வையிட்டு அனுப்பினர். நெடுஞ்சாலை இலாகா சம் பந்தப்படாத அந்நியர் யாரேனும் உள்ளே நுழைந்து விடப் போகிறார்களே என்பதற்குத் தான் இந்தக் கண்காணிப்பு. ஏனென்றால், அப்பொழுது, அகப்பட்ட படகில் எப்படியாவது இடம் பிடித்துக் கொண்டு போக வேண்டுமென்ற பரபரப்பு மொனீவாவில் வந்து தங்கியிருந்த இந்தியர்களிடையே நிலவியிருந்தது. இது ராணுவ அதிகாரிகளுக்குத் தெரியாமலிருக்குமா? ந. எங்களிருவரையும் தமது குடும்பத்தினரோடு சேர்த்துப் பாலத்தைக் கடந்து படகுக்குள் அழைத்துச்சென்று சௌகரியமான ஓரிடத்தில் அமரச் செய்தார். இவர் உபயோகத்திற்கென்று படகில் தனியறை ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் எங்களுடைய சமையல் சாப்பாடு எல்லாம் நடைபெற்றன. இங்ஙனம் மொனீவாவிலிருந்து கலேவாவுக்கு நீராவிப் படகில் செல்லும் வாய்ப்பு ஒருசிலருக்கே கிடைத்தது. பெரும் பாலோர் ஆற்று மார்க்கங்களில் சர்வ சாதாரணமாகச் செல்லும் சிறிய படகுகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு அவற்றில் செல்ல வேண்டியவர்களா யிருந்தார்கள். இந்தச்சாதாரணப் படகுப் பிரயாணம் துன்பம் நிறைந்த ஓர் அநுபவம். இந்தச் சாதாரணப் படகுகளை ஆற்றில் செலுத்துகிறவர்கள் சாதாரண மனிதர்கள். நாகரீகம், நேர்மை முதலிய பண்புகள் இவர் களுக்குப் புறம்பானவை. இப்படிப்பட்டவர்களுடைய படகு கள்தான் வாடகைக்குக் கிடைத்தன. மொனீவாவிலிருந்து கலேவா வுக்குச் செல்ல, ஒரு படகுக்கு நூற்றிருபது முதல் இருநூறு ரூபாய் வரை வாடகை. பிரயாணிகளில் பத்து அல்லது பன்னிரண்டு பேர் கூட்டாகக் சேர்ந்து, ஒரு படகை அமர்த்திக் கொள்வார்கள். முன் பணமாக ஒரு தொகையைக் கொடுத்துவிட்டுப் பெண்டுபிள்ளை களையும், மூட்டை முடிச்சுகளையும் ஏற்றிவிட்டு பிறகு ஆண் பிள்ளைகள் ஏறி அமர்ந்து கொள்வார்கள். படகுக்காரர்கள் முன் பணம் பெற்றுக்கொண்டு, எல்லோரும் படகில் அமர்ந்து கொள்ளும் வரை, சிரித்த முகங் காட்டுவார்கள். பிரயாணிகளிற் பெரும் பாலோருக்கு இவர்கள் பேசுகிற பர்மிய பாஷை சரிவரப் புரியாது. ஏனென்றால், ரங்கூனில் சுற்றுப் புறங்களிலும் பேசப்பட்ட பர்மிய மொழிக்கும் இவர்களுடைய பேச்சுக்கும் வித்தியாசம் இருந்தது. இவர்கள் பேசுவது புரிகிறதோ இல்லையோ, இவர்கள் சொல்வதற் கெல்லாம் பிரயாணிகள் தலையசைத்துக் கொடுப்பார்கள். எப்படி யாவது எங்களைக் கலேவாவில் கொண்டு சேர்த்துவிடவேண்டும் என்று கெஞ்சுகின்ற பாவனையில் இவர்கள் தங்களுக்குத் தெரிந்த அரைகுறை பர்மிய மொழியில் ஓரிரண்டு வார்த்தைகளைச் சொல் வார்கள். படகுக் காரர் களுக்கும் நம்மை விட்டால் இவர்களுக்கு வேறு வழியில்லை என்பது நன்றாகத் தெரியும். இப்படி விவர மில்லாத பேச்சுக்கள், பெண்டு பிள்ளை களின் அவலக்குரல், படகுக் காரர்களின் கேலிச் சிரிப்பு, இவைகளுக்கு மத்தியில் படகுகள் ஒன்றன்பின் ஒன்றாக நகரத் தொடங்கும். இவை செல்வதை ஆமை வேகமென்றோ, நத்தை வேகமென்றோ எப்படி வேண்டுமானாலும் ஒப்பிட்டுச் சொல்லலாம். கோயில் தெப்பங்களைக் கயிறுபோட்டுக் கட்டி இழுத்துப் போவார்களல்லவா? அந்த மாதிரி இந்தப் படகுகளுக்குக் கனமான கயிற்றை இணைத்து ஆற்றோரமாகக், கரையிலேயே இழுத்துச் செல்வார்கள் படகுக்காரர்கள். சுமார் ஒரு மைல், மிஞ்சினால் இரண்டு மைல் தூரம் படகுகள்செல்லும். இவற்றில் அமர்ந்தி ருக்கும் பிரயாணி களும் நிம்மதிப் பெருமூச்சுவிடத் தொடங்குவார் கள். இந்த நிலையில், படகுகள் கரையோரமாக இழுத்துக் கொண்டு வரப் பட்டுத் திடுதிப்பென்று நின்றுவிடும். பிரயாணிகள் திருதிரு வென்று விழிப்பார்கள். படகுக்காரர்கள் செயற்கையான பெருமூச்சு விட்டுக் கொண்டும், லேசாகச் சிரித்துக்கொண்டும், பிரயாணி களைப் பார்த்து, நீங்கள்தான் இனிப் படகுகளை இழுக்க வேண்டும். எங்களால் முடியாது என்று சொல்லிய வண்ணம் வாயில் நீண்ட சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டு விடுவார்கள். இதனோடு மட்டுமில்லை; இவர்களில் சிலர், படகுகளில் ஏறி அமர்ந்து கொண்டு, பிரயாணிகளைப் பார்த்து நீங்கள் இழுங்கள் எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம் என்று சொல்லிக் கேலி செய் வார்கள். இந்த நிலையில் பிரயாணிகள் என்ன செய்ய முடியும்? பெண்டு பிள்ளை களையும் சாமான்களையும் சுலேவா வரையிலா வது கொண்டுபோய்ச் சேர்த்துவிட வேண்டுமேயென்ற கவலையில், ஆண் பிள்ளைகள், படகுகளி லிருந்து இறங்கி, கயிற்றைப் பிடித்துக் கொண்டு இழுத்துச் செல்லத் தொடங்குவார்கள். படகுக்காரர்கள், இவர்கள் இழுப்பதைப் பார்த்துப் பரிகசித்துக் கொண்டிருப்பார்கள். இந்தப் படகுப் பிரயாணிகள் பெரும்பாலோர், வசதியான வாழ்க்கை நடத்தி வந்தவர்கள். ஊர் போய்ச் சேர வேண்டுமென்ற ஆவலில் இவர்கள் இந்தச் சாதாரணப் படகுகளை அமர்த்திக் கொள்ளும்படியான நிர்ப்பந்தத் திற்குட்பட்டார்கள். ஒழுங்கான பாதை இருக்கும் பட்சத்தில் இவர்கள் கார்களிலோ, வேறு வாகன வசதிகளை ஏற்படுத்திக்கொண்டோ செல்லக் கூடியவர்கள். கடின மான உழைப்பில் சிறிதும் அனுபவமில்லாதவர்கள். இப்படிப் பட்டவர்கள், சுமை நிறைந்த படகை இழுத்துச் செல்வதென்றால், அதிலும் ஆற்று மணலில் நடந்து கொண்டு இழுத்துச் செல்வ தென்றால், இவர்களால் தாக்குப்பிடிக்க முடியுமா? சிலர் மார்பு வெடித்து ரத்தம் கக்கி அப்படியே குப்புற விழுந்து இறந்து போனார் கள். இந்தக் கோரக் காட்சியைப் பார்த்துப் படகு களிலுள்ள இவர் களுடைய பெண்டு பிள்ளைகள் கதறு கதறு என்று கதறுவார்கள். இந்தக் கதறலுக்காகப் படகுகள் செல்வது நிற்குமா? அவை மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டுதானிருக்கும். மொனீவாவின் சிறிது தூரத்திலிருந்து கலேவா வரை ஆற்றங்கரையில் இப்படி ரத்தம் கக்கி விழுந்து இறந்து கிடந்தவர்கள் பலர். நாங்கள் நீராவிப் படகில் சென்றபோது, இந்தக் கண்ராவிக் காட்சியைப் பார்த்தோம். இந்தப் படகுகளை இரவு நேரத்தில் செலுத்தமாட்டார்கள். பொழுது சாய்ந்ததும், ஆங்காங்கு நிறுத்தி விடுவார்கள். பிரயாணிகள், வானமே கூரையாக, மணற்பரப்பே படுக்கையாக இராப் பொழுதைக் கழிக்க வேண்டியதுதான். பகல் நேரத்தில் வெயில் கொளுத்தும்; தலை காய்ந்து போகும். படகுகள் யாவும் திறந்த படகுகளே. மேல் கூரை ஏதும் கிடையாது. இப்படித் திறந்த படகுகளில் மொனீவாவி லிருந்து கலேவாவுக்குச் செல்லப் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் பிடிக்கும். மொத்தம் நூற்றிருபது மைல் தூரம் எப்படியோ அவதிப்பட்டுக் கொண்டு கலேவா போய்ச் சேர்ந்தாலும் படகுக் காரர்கள் பிரயாணிகளை லேசில் இறங்க விடமாட்டார்கள். வழி யில் யார் இருந்தாலும் இறந்தாலும் இவர்களுக்கு என்ன கவலை? பேசிய பணம் பூராவையும் இறந்து போனவர்களுடைய குடும்பத் தினரிடமிருந்தோ கூட வந்தவர்களிட மிருந்தோ கட்டாயப்படுத்தி வாங்கி விடுவார்கள். வழியில் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களைச் சொல்லி, பணத்தை கொடுக்கச் சிறிது தயங்கினால் படகிலுள்ள சாமான்கள் கரைக்கு வந்து சேர மாட்டா. இதற்காகப் பிரயாணிகள், பேசிய பணத்தைக் கொடுத்துத் தொலைப்பார்கள். படகுக் காரர்கள் இதனோடு விடுகிறார்களா? ஜாக்கிரதையாகக் கொண்டுவந்து சேர்த்தோம் என்று காரணம் சொல்லிக் கொண்டே பல்லைக் காட்டி இனாம் வேறு கேட்பார்கள். இதையும் கொடுத்துத்தானாக வேண்டும். இல்லாவிட்டால் மேற் கொண்டு கரையில் இறங்க வொட்டாமல் வழிமறித்து விடுவார்கள். இப்படிப் பல சங்கடங்களுக் குள்ளானார்கள் சாதாரணப் படகுகளில் பிரயாணஞ் செய்தவர்கள். எங்களை ஏற்றி வந்த நீராவிப் படகும் சாதாரணப் படகு களைப் போல் இரவு நேரங்களில் செல்லாது; தங்க இடம் பார்த்து நங்கூரம் போட்டு விடுவார்கள். பிரயாணிகள் இறங்கி, கரையின் மணற் பரப்பில் இராப் பொழுதைக் கழிப்பார்கள். எங்களைப் பொறுத்த மட்டில் இந்த இராப் பொழுது இன்பமாகவே கழிந்த தென்று சொல்ல வேண்டும். இராப்பொழுது மட்டுமென்ன. பிரயாண நான்கு நாட்களிலும் பகற்பொழுது முழுவதையும், ஆற்றின் இருமருங்கிலும் காணப்பெற்ற பசுமையான தோப்பு களைக் கண்டு களிப்பதில் செலவழித்தோம். மார்ச் மாதம் இருபத்திரண்டாந் தேதி மாலை மொனீ வாவிலிருந்து புறப்பட்ட நாங்கள் இருபத்தைந்தாந் தேதி மாலை சுமார் நான்கு மணிக்குக் கலேவா படகுத் துறைக்கு வந்து சேர்ந்தோம். இந்தியாவை நோக்கி மேலும் மேலும் போய்க் கொண்டிருக்க வேண்டுமென்ற ஆவலில் இந்தச் சாதாரணப் படகு ஒன்றில் மற்ற நபர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு கலேவாவுக்குப் போய் விடலாமா என்ற சபலம் ந. என்பவர் (22 - 3 - 42 - ல்) மொனீவா வரு வதற்கு முன்பு எனக்கு இருந்தது இந்தச் சபலத்தை உண்டு பண்ணி யவர் பா. என்ற ஒரு நண்பர். இவர் எனது நூல்களைப் படித்து ரசித்தவர், என்னை மொனீவாவில்தான் முதன்முதலாகச் சந்தித்தார். இவரும் ஓர் அகதியாகவே அங்கு வந்திருந்தார். நானும் சில நண்பர் களும் சேர்ந்து ஒரு தனிப் படகுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக் கிறோம்; அதில் தங்களையும் அம்மாவையும் கூட்டிக் கொண்டு போகிறேன்; எப்படியாவது உங்கள் இருவரையும் இந்தியா கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறேன்; இதைத் தாங்கள் உறுதியாக நம்பலாம், என்று ஒரு நாள் பிற்பகல் என்னிடம் வந்து உருக்கமாகக் கூறினார். அவர் காட்டிய அன்பு மறக்க முடியாத ஒன்று. ஆனால் அவருடன் படகில் செல்லக் கூடிய வாய்ப்பு ஏற்படவில்லை. அதைப் பற்றி ஒரு தீர்மானத்திற்கு வருமுன்னர் ந.வின் தொடர்பு ஏற்பட்டு அதன் விளைவாக நீராவிப் படகில் செல்ல வேண்டிய நிலைமை உருவாகிவிட்டது. விதி, எங்களிருவரையும் சாதாரணப் படகில் செல்ல வொட்டாதபடித் தடுத்தது என்று இப்பொழுது நினைத்துக் கொள்கிறேன். அப்படித் தடுக்காமலிருந்தால் சிந்த்வின் ஆற்றுக்கு நாங்களிருவரும் பலியாகி விட்டிருப்போமோ என்னவோ?  22. கலேவாவுக்கு மாலை சுமார் நான்கு மணிக்கு, கலேவா படகுத் துறையை அடைந்து விட்டோமாயினும், இரவு ஏழு மணி வரையில் கரைக்குப் போய்ச் சேர முடியவில்லை. பர்மா அரசாங்கத்துச் சுகாதார அதிகாரி கள், பிரயாணிகள் அனைவரும் பிளேக், காலரா முதலிய நோய்த் தடுப்பு ஊசி போட்டு கொண்டிருக்கிறார்களா வென்று பரிசோதனை செய்தார்கள். போட்டுக் கொள்ளாதவர்களுக்கு ஊசி போட்டார் கள். இந்தச் சடங்கு முடிந்த பிறகுதான் எங்களைக் கரையில் இறங்க விட்டார்கள். நாங்களும், எங்களைப் போன்ற ஒரு சிலரும், ஊர்ப் பக்க மாகவுள்ள கரையில் இறங்கினோம். எதிர்க் கரையில் அகதிகள் முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இங்குதான் படகுகளி லிருந்து இறங்குகிறவர்கள் அனைவரும் தங்க வேண்டும் மென்று அதிகாரிகள் உத்தரவிட்டிருந் தார்கள். இந்த முகாமின் பெரும் பகுதி திறந்த வெளியாயிருந்தது. நடுநடுவே ஒரு சில கொட்டகைகளும் கூடாரங்களும் இருந்தன. பொதுவாக இந்த அகதிகள் முகாம் என்பது ஒரு சந்தைக் கூடமாகவே இருந்தது. சந்தை இரைச்சல் என்று சொல்வார்களே அதை இங்குச் காதாரக் கேட்க முடிந்தது. இரைச்சல், கட லோசையை விஞ்சி நின்றது. இங்குத் தங்கியவர்களைப் பொதுவாக இந்தியர்கள் என்று அழைக்கலாமாயினும், பேசும் மொழியிலும், உடை நடைகளிலும், பழக்க வழக்கங்களிலும் வாழ்க்கைத் தரத் திலும், வேறுபட்டவர்களாய் இருந்தார்கள். இதனால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியாமல் சில்லறைச் சச்சரவுகளில் ஈடுபட்டனர். தவிர, தங்குகின்ற இடம் தற்காலிகமானதாயிருந் தாலும் அதைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற நியதியை இவர்களில் பலர் இம்மியும் கடைப்பிடிக்க வில்லை. இந்தியர்களில் பெரும் பாலோருக்குச் சுத்த உணர்ச்சி என்பது மிகக் குறைவு என்று மேனாட்டார் சிலர் குறை கூறுவார்களானால் அதை நாம் வெட்கத் துடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தம்மைப் பொறுத்த மட்டில் சுத்தமாயிருக்க வேண்டுமென்று நினைக்கி றார்களே தவிர, சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்று நினைப்பதில்லை. குடிதண்ணீரில் கால் கழுவு வதும், கண்ட இடத்தில் எச்சில் துப்புவதும், குப்பைக் கூளங்களை அக்கம் பக்கத்திலேயே வீசியெறிவதும் அநேகருக்குச் சர்வ சாதாரணப் பழக் கங்களாயிருக் கின்றன. இதில் தென்னாட்ட வரைக் காட்டிலும் வட நாட்டவரைப் பெரிய குற்றவாளிகளென்று சொல்ல வேண்டும். வழியில் ஆங்காங்கு அமைக்கப் பட்டிருந்த அகதி முகாம்கள் பெரும்பாலும் இந்த நிலைமையில்தான் இருந்தன. நல்ல வேளையாக எங்களுக்கு இந்த முகாமுக்குச் சென்று தங்க வேண்டிய நிலைமை ஏற்படவில்லை. ஊருக்குள்ளே சென்று ஒரு வீட்டில் தங்கினோம். அந்த மாடியில்தான் எங்கள் ஜாகை அமைந்தது. ந. இந்த ஜாகைக்கு ஏற்கனவே ஏற்பாடுசெய்து வைத் திருந்தார் என்று பின்னர் எனக்குத் தெரிய வந்தது. கலேவா, இயற்கைச் சூழ்நிலையின் மத்தியில் அமைந்திருக்கும் ஒரு சிற்றுர். இங்கு, சிந்த்வின் நதியோடு மித்தா என்ற ஓர் உபநதி வந்து கலக்கிறது. இப்படிக் கலக்கின்ற இடத்தையொட்டியே இந்தச் சிற்றூர் அமைந்திருக்கிறது. இங்கு ஏற்ற இறக்கங்கள் அதிகம். அமைதியான காலத்தில் நிம்மதியாகவும் ஆடம்பரமில்லாமலும் வாழ்க்கை நடத்து வதற்கு ஏற்றதாகக் காணப்பட்டது. மேட்டுப் பாங்கான இடங்களில் கட்டப் பட்டிருந்த மர வீடுகள், அவற்றைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த சிறிய தோட்டங்கள் முதலியவை களைச் சமதரையிலிருந்து பார்த்தால். பார்க்கும் யாருக்கும், அவர்கள் உள்ளத்தில் உயர்ந்ததோர் உணர்ச்சி, அதாவது மேலுக்கு நோக்க வேண்டும், முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற ஓர் உணர்ச்சி உண்டாகும். அமைதியான காலத்தில் இந்தச் சிற்றுர் சுத்தமாயிருந்திருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது. ஆனால் இந்தியாவை நோக்கிக் கால்நடையாக வந்து கொண்டிருந்த அதிகப் பிரயாணி களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வர, நாங்கள் இங்குத் தங்க வேண்டி நேரிட்ட இரண்டு வார காலத்தில் அசுத்தமும் அதிகரித்துக் கொண்டு வந்தது. பிரயாணிகள் பலர், தங்குமிடங்கள் அதிகமாக இல்லாத காரணத்தினால் பாதை யோரங்களையே வாசதலமாக்கிக் கொண்டு விட்டார்கள். பாதைகள் பலவற்றிலும் கழிவுநீர் தேங்கிக் கிடந்தது. மூலை முடுக்குகளிளெல்லாம் குப்பைக் கூளங்கள் மேடிட்டு வந்தன. கொசுக்களும் ஈக்களும் இவற்றில் உற்சவம் கொண்டாடின. ஜனப் பெருக்கத்தின் காரணமாக உணவுப் பொருள்கள், கறிகாய்கள் முதலியன போதுமான அளவு கிடைப்பது அரிதாகி விட்டது; விலையும் கூடி வந்தது. நாங்கள் மேல் மாடியில் ஜாகை வைத்துக் கொண்டிருந்த படியால் எங்களுக்கு அதிகமான அசௌகரியம் ஏற்படவில்லை யென்றே சொல்லவேண்டும். நான் தினந்தோறும் இரண்டு வேளையும் மித்தா நதியில் நீராடி வந்தேன். உடம்பில் உஷ்ண அதிகரிப்பினால் ஒரே எரிச்சல்; சுவாசக் குழாயில் அனற் காற்று போய் வந்து கொண்டிருக்கிற மாதிரி இருந்தது. என் வாழ்க்கைத் துணைவிக்கோ மண்டைக் காய்ந்து கடுமையான ஜலதோஷம் காய்ச்சலும் லேசாக இருந்தது. எங்களைப் போன்ற சக பிரயாணிகள் ஒரு சிலர், கையிருப்பாகக் கொண்டு வந்திருந்த கொய்னா மாத்திரைகளை அவளுக்குக் கொடுத்து உதவினர். தற்கால சாந்தியேயானாலும் அவற்றை அவள் உட் கொண்டதன் பயனாகப் படுக்கையில் விழாமல் தப்பித்துக் கொண்டாள். கலேவாவில் சுமார் இரண்டு வாரத்திற்கும் அதிகமாகத் தங்கும்படியாகி விட்டது. நடுவில் ஒரு நாள் ஊருக்கு எதிர்ப் புறத் திலுள்ள அகதிகள் முகாமுக்குச் சென்று பார்த்தேன். ஒரே ஆபாச மாயிருந்தது; இதைப் பொருட்படுத்தாமல் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவிகள் சிலர் இங்கேயே இரவு பகலாகத் தங்கி, பிரயா ணிகளுக்குத் தேவைப்பட்ட சௌகரியங்களைச் செய்து கொடுத்து வந்தனர். இவர்களுடைய சேவையைப் பாராட்டாதவர் இல்லை. ஆனால் பிறருடைய பாராட்டுதலை எதிர்பார்த்து இவர்கள் சேவை செய்யவில்லை யென்பதை எடுத்து சொல்லவேண்டுமா என்ன?  23. கூலியாட்களின் உபசரணை கலேவாவுக்கு அடுத்தபடி டாமு என்ற ஊருக்குச் செல்ல வேண்டும், ஒரு நாள், இந்த டாமுவுக்குச் செல்லும் வழி எப்படி இருக்கிற தென்று பார்த்து வர எண்ணிச் சக பிரயாணிகள் இருவருடன் சுமார் மூன்று மைல் தூரம் கால்நடையாகச் சென்று வந்தேன். பாதையின் நடுப்பக்கத்தில் ஆழ்ந்த பள்ளத்தாக்கு. இதை யொட்டி மித்தா ஆறு ஓடுகிறது மற்றொரு பக்கத்தில் செங்குத்தான மலைப் பாறைகள்; இவற்றின் நடுவே, சுமார் பத்து அடி அகலத்தில் பாதையை அமைத்திருக்கிறார்கள். இதில்தான், வாரத்தில் இரண்டு நாள் தனிப் பட்டவர்களுக்குச் சொந்தமான பகள், வாடகைக்கு ஓடிக் கொண்டிருந்தன. தலைக்கு நான்கு ரூபாய் கட்டணம். ஆனால் நாங்கள் கலேவாவில் தங்கியிருந்த சமயத்தில் இந்த ப போக்கு வரத்துக்குத் தடை விதித்திருந்தார்கள். ராணுவ லாரிகள் மட்டுமே போய்வர அனுமதிக்கப்பட்டிருந்தது. இவற்றின் அடிக்கடிப் போக்குவரத்தினால், பாதையின் நடு நடுவே குழிகள் வருவோரின் பாதங்களைப் பதம் பார்க்க, ஆங்காங்கு ஆவலாகக் காத்து நின்றன. இப்படிப்பட்ட வழியில், எப்படி டாமு வரையில் செல்லப் போகிறோமென்று அப்பொழுதே எனக்கு ஒரு வித அச்சம் உண்டாகி விட்டது. ஆனால் அச்சப்பட்டுக் கொண்டு கலேவாவிலேயே தங்கியிருக்க முடியுமா? எப்படியாவது இந்தப் பாதையைக் கடந்துதானே ஆக வேண்டும்? கடந்து விட முடியும் என்ற ஒரு நம்பிக்கை அப்பொழுது எனக்கு ஏற்பட்டது. நானும் என் சக பிரயாணிகளும் சென்ற தினத்தில், ஒரிஸா மாகாணத்துக் கூலியாட்கள் சிறுசிறு கூட்டத்தினராகப் பாதையைச் செப்பனிட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களில் சிலருடன், நான், ஹிந்தி மொழியில் பேச்சுக் கொடுத்தேன்; டாமுவுக்குப் போகும் வழியைப் பற்றி விசாரித்தேன். அவர்களும், டாமு வரையில், பாதை நெடுகிலும் குறுகலாகவும் வளைவுகளுடையதாகவும் இருக்கு மென்றும், பல இடங் களில் மலைப்பாறைகளை உடைத்தெடுத்து விட்டுப் பாதை அமைக்கப் பட்டிருகிற தென்றும், எந்த விதமான வாகன வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டாலும், நின்று நிதான மாகவே செல்லுதல் நல்லதென்றும், எச்சரிக்கையாகச் சொன்னார்கள். இங்ஙனம், இவர்கள் எங்களை முன் ஜாக்கிரதை படுத்திய தோடு, தேநீர்ப் பானம் தயாரித்துச் சுடச்சுட எங்களுக்குக் கொடுத்து உபசரிக்கவும் செய்தார்கள். வேலை செய்யும் போது சிறிது களைப்பு ஏற்பட்டால் இந்தத் தேநீர்ப் பானத்தைத் தயாரித்துப் பருகி உற்சாகம் பெறுவது தங்கள் வழக்கமென்று எங்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். இவர்கள் இந்தப் பானத்தில் சர்க்கரை சேர்ப்ப தில்லை. ஏனென்றால் அவர்களைப் பொறுத்த மட்டில் சர்க்கரை அரிய பொருளாகவும் விலை மதிப்புடையதாகவும் இருந்தது. எனவே சர்க்கரைக்குப் பதில் உப்பைச் சேர்த்து உபயோகித்து வந்தார்கள். இந்த உப்புத் தேநீர் எங்களுக்குப் பழக்கமில்லை யாயினும் அந்தச் சமயத்தில் எங்களுக்கு மிகவும். ருசியாக இருந்தது. ஆனால் இவர்கள் கொடுத்த உப்புத் தேநீரைக் காட்டிலும் இவர்கள் காட்டிய அன்பு எங்களுக்குப் பெரிதாக இருந்தது. பின்னர் நாங்கள் நடந்து வந்த போது இந்த உப்புத் தேநீரைப் பருகிப் பழக்கப்படுத்திக் கொண்டோம். கலேவாவிலிருந்து டாமுவுக்குச் செல்வது எப்படி? எங்கள் இருவரைப் பொறுத்தமட்டில், அதாவது என் வாழ்க்கைத் துணைவி யையும் என்னையும் பொறுத்தமட்டில், இது பிரச்சி னையாக ஆகி விட்டது. பண வசதி படைத்த சிலர் ராணுவ லாரிகளை ஓட்டிச் சென்றவர் களை - டிரைவர்களை - இவர்கள் அனைவரும் இந்தியர் களே – வசப் டுத்திக் கொண்டு, அந்த லாரிகளில் சென்றார்கள். இப்படிச் சென்றவர்களில் சிலரை, வழியில் ராணுவ அதிகாரிகள் தடுத்து லாரியிலிருந்து இறக்கி விட்டு விட்டார்கள். இவர்கள் நிலைமை பரிதாபத்திற்குரியதாயிருந்தது. லாரி ஓட்டிக்குக் கொடுத்த பணமும் போய் மேற்கொண்டு நடந்தும் செல்ல வேண்டியவர் களானார்கள். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் ஆகிய இப்படிப் பட்டவர்கள் மட்டும் கலேவாவிலிருந்து இருபத்து நான்கு மைல் தொலைவிலுள்ள கலேமிபோ என்ற ஊர் வரையில் செல்லும் ஒரு சிற்றாறு வழியாகப் படகுகளில் வசதி செய்து கொடுக்கப்படு மென்றும், உடல் வலுவுள்ள மற்ற ஆண்கள் அனைவரும் கலேவா விலிருந்து நடந்தே செல்ல வேண்டுமென்றும், அப்படிச் செல்கிற வர்களும், தங்கள் சாமான்களைத் தாங்களே தூக்கிச் செல்ல வேண்டு மென்றும், கூலியாட்களை அமர்த்திக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள். இப்படித் தெரிவித்திருந்தும், ஒரு சிலர், தங்கள் பெண்டு பிள்ளை களைத் தனியாகப் படகுகளில் அனுப்ப மனமில்லாமல் தங்களை நோயாளிகள் என்று சொல்லி டாக்டர்களிடம் சர்டி பிகேட் பெற்றுக்கொண்டு, குடும்பத்துடன் படகுகளில் சென்றார்கள். ஆனால் போதிய படகுகள் இல்லாமையால், இந்தப் படகு வசதி எல்லாருக்குமே கிடைக்கவில்லை. அப்படிக் கிடைக்காதவர்கள், மேற்படி கலேமியா வரையில், வாடகை மாட்டு வண்டிகளை அமர்த்திக் கொண்டு சென்று, அங்கிருந்து டாமுவுக்கு மாட்டு வண்டிகள் கிடைத்தால் அவற்றிலும், அவை கிடைக்காவிட்டால் நடந்தும் சென்றார்கள். கலேவாவிலிருந்து நடந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற் குட்பட்டவர்கள், கூலியாட்களை அமர்த்திக்கொண்டு செல்லக் கூடா தென்று அதிகாரிகள் தெரிவித்ததற்குக் காரணம் நல்ல கூலிக் கொடுத்துக் கூலியாட்களை இவர்கள் அழைத்துக் கொண்டு போய்விட்டால், பாதையமைக்கும் வேலைக்குப் போதிய ஆட்கள் கிடைக்கமாட்டார்கள் என்பதுதான். ஆனாலும் சிலருக்குக் கூலி யாட்கள் கிடைக்கவே செய்தனர். அவர்களை அமர்த்திக் கொண்டு முடிந்த மட்டில் சாமான்களை எடுத்துச் சென்றனர். இப்படிப் புறப்பட்டவர்கள், வழியில் படிப்படியாகத் துறவு பூணவேண்டிய நிலைமைக்குட்பட்டு, கடைசியில் இந்தியா போய்ச் சேருகிறபோது, முழுத் துறவிகளாகிவிட்டார்கள்! புறப்படுகிற போது, உடம்பில் தெம்பும், மனத்தில் உற்சாகமும் இருப்பதன் காரணமாக, எல்லாச் சாமான்களையும் கையோடு எடுத்துக் கொண்டு போய்விட வேண்டும் என்று தீர்மானித்து, தலையில் பெட்டி - படுக்கை இரண்டு; தோள்களிலும் இரண்டு மூட்டைகள்; இரண்டு கைகளிலும் சமையல் சாப்பாட்டுக்கு உபயோகப்படக் கூடிய சில பாத்திரங்கள் ஆகிய இந்தக் கோலத்துடன் புறப்படு வார்கள். சில மைல் தூரம் சென்றதும், தலை கனக்கத் தொடங்கும். பெட்டியிலுள்ள ஓரிரண்டு பொருட்களை ஒரு தோளிலுள்ள ஒரு மூட்டையில் திணித்து வைத்துக் கொண்டு, பெட்டியைப் பாதையோரமாகப் போட்டுவிட்டு மேற்கொண்டு நடக்கத் தொடங் குவார்கள். சிறிது தூரம் சென்றதும், படுக்கை பளுவாகத் தோன்றும். முதலில் தலையணையை வீசி எறிவார்கள். பிறகு சிறிது தூரம் சென்றதும், பாயை எடுத்துவிட்டு அதில் உள்ள விரிப்பை எடுத்து உடம்பின் மீது போர்த்திக்கொண்டு செல்வார்கள். மேலும் சிறிது தூரம் சென்றதும், பாத்திரங்களில் ஏதோ ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை அலட்சியமாக எறிந்துவிட்டுச் செல்வார்கள். ஒவ்வொன்றாகப் பாதையோரத்தில் தஞ்சம் புகும். கடைசியில் மிஞ்சி நிற்பது உடம்பில் ஓட்டிக் கொண்டிருக்கும் உயிர்; அந்த உயிரையும் வழியில் விட்டுவிட்டவர் அநேகர். பின்னர், நாங்கள் கலேவாவிலிருந்து டாமுவுக்குச் சென்ற போது வழி நெடுகப் பாதையின் இரு பக்கங்களிலும், படுக்கைகள், பாத்திரங்கள் முதலியவை சிதறிக் கிடப்பதைப் பார்த்தோம்.  24. ஹிட்லர் மூலம் அறிமுகம் எங்களை மொனீவாவிலிருந்து கலேவாவுக்கு நீராவிப் படகில் கூட்டிக் கொண்டு வந்த அன்பர் ந. எங்களைக் கலேவாவிலிருந்து டாமுவுக்குக் கால் நடையாகச் செல்ல விடாமல் எப்படியாவது ஒரு லாரியில் அனுப்பி வைக்க வெகு முயற்சி செய்தார். அவர் பணி யாற்றி வந்த நெடுஞ்சாலை இலாகாவைச் சேர்ந்த சிப்பந்திகளை, கலேவாவி லிருந்து டாமு வரையில் கொண்டுவிட இரண்டு பெரிய லாரிகள் அமர்த்தப் பட்டிருந்தன. ஆனால் அவற்றில் சிப்பந்திகளும் அவர்களுடைய குடும்பத்தினரும் மட்டுமே செல்ல அனுமதிக்கப் படுவர் என்று மேற்படி இலாகா மேலதிகாரி உத்தரவு பிறப்பித் திருந்தார். குடும்பத்தினர் என்றால், மனைவி மக்கள் மட்டுமே என்று அந்த அதிகாரி விளக்கம் கொடுத் திருந்தார். இது ந. வுக்குத் தெரிந்ததுதான். ஆயினும் லாரியில் செல்ல வேண்டியவர்களின் ஜாபிதாவில், தமது குடும்பத்தினரோடு என் வாழ்க்கைத் துணைவியைத் தமது சகோதரியாகவும் என்னைச் சகோதரியின் கணவனாகவும் சேர்த்து அந்த மேலதிகாரி வசம் கொடுத்தார். ஆனால் அந்த அதிகாரி எங்கள் இருவர் பெயரையும் ஜாபிதாவிலிருந்து நீக்கி விட்டார். அது தெரிந்து, மேற்படி இலாகாவிலேயே பணியாற்றி வந்த வேறொருவரான ம. என்னும் இளைஞர், எங்களிருவரையும் அவர் சகோதரியாகவும் அவர் கவனாகவும் ஜாபிதாவில் சேர்த்துக் கொடுத்தார்! இந்த இளைஞர், எங்களிருவரிடம் காட்டிய அன்பும், மரியாதையும் வியக்கத் தக்கதாயிருந்தது. இளைஞரா யிருந்தாலும், மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுத்து நடந்து கொள்கிற பண்பு இவரிடம் குடி கொண்டிருந்தது. இவர் கொடுத்த ஜாபிதாவிலும் எங்களிருவர் பெயரும் நீக்கப்பட்டு விட்டது. உங்கள் ஒருவருக்கு மட்டும்தான் இடமுண்டு என்று மேலதிகாரி இவரிடம் சொல்லி விட்டார். இதற்காக இவர் மனச் சோர்வு கொள்ளவில்லை. எப்படியாவது உங்களிருவரையும், ஏதாவதொரு லாரியிலோ, வேறு வாகனத்திலோ அனுப்பிவிட ஏற்பாடு செய் கிறோம் என்று ந. வின் சார்பாகவும் தமது சார்பாகவும் எனக்கு உறுதி கூறினார். நெடுஞ்சாலை இலாகா சிப்பந்திகளையும் அவர்கள் குடும்பத் தினரையும் ஏற்றிச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு லாரிகள் ஏப்ரல் மாதம் எட்டாந் தேதி, முற்பகல், கலேவாவுக்கு அடுத்தாற் போல் தங்குமிடமாக நிர்ணயிக்கப்பட்டுருந்த இண் டாஞ்சி என்ற ஊருக்குப் புறப்பட்டன. இவற்றுள் ஒரு லாரியில், ந. தமது மனைவி மக்களை அனுப்பிவிட்டு, தாம் மட்டும் அலுவலக வேலையாக கலேவாவிலேயே தங்கிவிட்டார். இந்த இரண்டு லாரிகளும் புறப்படுவதற்கு முந்திய நாள் இரவு, ந. ஒரிஸா மாகாணத்துக் கூலியாட்களை ஏற்றிக்கொண்டு மறுநாள் மேற்படி இண்டாஞ்சி வரையில் செல்லவிருக்கும் ஒரு லாரியில் எங்களிரு வரையும் அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு என்னிடம் வந்து மிகப் பரிவோடு, பிரயாணத்தின் முதற்படியாக இண்டாஞ்சி வரையில் சென்று விடுங்கள். அங்கு எங்கள் இலாகா வில் உதவி இன்சினீயராகப் பணி புரியும் மு. என்பவருக்கு ஓர் அறிமுகக் கடிதம் கொடுகிறேன். அங்குபோய்த் தங்குங்கள். அதற்கு மேல் செல்ல அவர் உங்களிருவருக்கும் ஏற்பாடு செய்வார். என்னு டைய குடும்பத்தினரும், சிறிது முன்னது பின்னதாக இண்டாஞ்சி போய்ச் சேர்ந்து உங்களோடு கலந்து கொள்வார்கள் என்று சொல்லி, உடனே, மு. என்பவருக்கு ஓர் அறிமுகக் கடிதம் டைப் அடித்துக் கொடுத்தார். மறுநாள் (8 - 4 - 42) இலாகா லாரிகள் புறப் படுவதற்கு முந்தி விடியற்காலை நாங்கள் இருவரும் கூலியாட் களோடு லாரியில் புறப்பட்டோம் லாரியை ஓட்டி வந்த ஜோ. என்ற இளைஞர், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த கிறிதுவர்; என்ன காரணத்தினாலோ எங்கள் இருவரைப் பார்த்தும் எங்களிடம் விசேஷமான அன்பு காட்டினார். இந்த அன்பில் மரியாதையும் கலந்திருந்தது. அவர் அமர்ந்திருந்த இடத் திற்குப் பக்கத்திலேயே எங்கள் இருவருக்கும் இடம் அளித்தார். புறப்பட்டுச் சிறிது தூரம் சென்றதும் அவர் எங்களைப் பார்த்து, நீங்கள் இரண்டு பேரும் எவ்வளவு சௌகரியமாக உட்கார முடியுமோ அவ்வளவு சௌகரியமாக உட்கார்ந்து கொள்ளுங்கள்; உங்களைக் கூட்டிச் செல்வதில் என் பெற்றோர்களைக் கூட்டிச் சென்றால் எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகுமோ அவ்வளவு மகிழ்ச்சி உண்டாகிறது. இன்று நான் என்ன புண்ணியம் செய்தேனோ என்று மனம் நெகிழக் கூறினார். இதைக் கேட்டு நான் பூரித்துப் போய் விட்டேன். அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்பில் எங்கள் பயணம் இனிது நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டாயிற்று. ஆனால் இந்த நம்பிக்கை, லாரி சுமார் மூன்று மைல் தூரம் சென்றதும், சிறிது தளர்ந்து கொடுத்தது. அதிர்ஷ்ட தேவதை தன் அரவணைப்பிலிருந்து எங்களைச் சிறிது நேரம் விடுவித்து வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். மூன்றாவது மைலில் லாரி உறும ஆரம்பித்தது; சில கெஜ தூரத்திற்குப் பிறகு நின்றும்விட்டது. காரணம் பெட்ரோல் இல்லை! நாங்களும், கூடவந்த கூலியாட் களும், லாரியிலிருந்து இறங்கி, பாதையோரமாக இருந்த ஓர் அடர்ந்த தோப்புக்குள் சென்று தங்கினோம். அப்பொழுது காலை சுமார் ஒன்பது மணி இருக்கும். விடியற்காலை ஐந்து மணி சுமாருக்குப் புறப்பட்ட லாரி காலை ஒன்பது மணிக்கு மூன்று மைல் தூரம் வர முடிந்ததென்றால் பாதை எவ்வளவு கடினமான தாயிருக்குமென்பதை வாசகர்கள் ஊகித்துக் கொள்ளலாம். லாரி ஓட்டியான ஜோ. முன்ஜாக்கிரதையாக பெட்ரோல் போதுமான அளவு இருக்கிறதா என்று பாராமல் புறப்பட்டதற்குப் பெரிதும் வருத்தப்பட்டார். ஆனால் இந்த வருத்தத்தில் அவர் அமிழ்ந்துவிட வில்லை. உடனே லாரியைப், பாதையோரமாகத் தள்ளி நிறுத்தி விட்டு, பெட்ரோல் வாங்கிவர, ஒரு தகர டப்பாவுடன் வந்த வழியே கலேவாவுக்குத் திரும்பிச் சென்றார். விடியற்காலை ஐந்துமணிக்கே நாங்கள் புறப்பட்டுவிட்ட படியால் ஆகாரம் ஏதும் கொள்ளவில்லை. அதற்கான அவகாசமோ, வசதியோ ஏது? லாரியிலிருந்து இறங்கி தோப்புக்குள் சென்று அமர்ந்ததும் இடும்பைகூர் எங்கள் வயிறானது, ஆகாரத்திற்கு நச்சரிக்க ஆரம்பித்துவிட்டது. நல்ல நீரைக் கொடுத்து அதனைச் சிறிது நேரம் சும்மாயிருக்கும் படி செய்யலாமென்றால், நல்ல குடிநீரும் அங்கு இல்லை. நீரென்னவோ அருகில் இருந்தது. ஆனால் அது குடிநீரா என்பது எங்களுக்குச் சந்தேகம். கண்ட நீரையும் கொடுத்து வயிற்றை மேலும் நச்சரிக்கவிட நாங்கள் விரும்பவில்லை. குளிர்ந்த நிழலையும் குளிர்ந்த காற்றையும் அதற்குக் கொடுத்துப் பார்த்தோம். ஆனால் அது ஏமாறுகிற பெயர் வழியாயில்லை. அதன் நச்சரிப்பு எரிச்சலாக வளரத் தொடங்கியது. அந்த எரிச்சலை அணைக்க அப்பொழுது எங்கள் வசம் ஒன்றுமில்லை. லாரி ஓட்டி ஜோவும் சிறிது நேரத்திற்குப் பிறகு பெட் ரோலுடன் திரும்பி வந்தார். சுமார் பன்னிரண்டு மணிக்கு மேல் லாரி திரும்பவும் நகரத் தொடங்கியது. சுமார் இரண்டு மைல் தூரம் சென்றதும், மறுபடியும் சத்தியாக்கிரகம் செய்ய ஆரம்பித்து விட்டது. போதுமான பெட்ரோல் இல்லாத குறைதான். மீண்டும் லாரி ஓட்டி, எங்கேயோ சென்று போதுமான அளவு பெட்ரோலுடன் வந்து லாரியைக் கிளம்பச் செய்தார். எப்படியோ மாலை சுமார் ஐந்தரை மணிக்கு இண்டாஞ்சி போய்ச் சேர்ந்தோம்! இத்தனைக்கும் கலேவா விலிருந்து இண்டாஞ்சிக்கு இருபத்தைந்து மைலுக்குக் குறைந்த தூரம்தான். இண்டாஞ்சி என்ற ஊர், அரசாங்க அதிகாரிகளிற் சிலருடைய, அதாவது சப் அசிடெண்ட்சர்ஜன், சப் டிவிஷனல் ஆபீஸர் போன்ற சிலருடைய தலைமை தானமாயிருந்தது. ஊரையொட்டியுள்ள ஒரு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில், நெடுஞ் சாலை இலாகா உத்தியோகதர் சிலர், அதாவது அசிடெண்ட் இஞ்சினீயர், ஓவர்சியர் போன்றவர்கள், தங்கள் தங்கள் குடும்பத் தோடு வசித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கூடாரங்கள் நிறைந்த பகுதி, ஒரு தனி நகரம் போலவே காட்சியளித்தது. மின்சார விளக்குகள், குடிநீர்க் குழாய்கள் முதலிய எல்லா வசதிகளும் இங்கு இருந்தன. எங்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி இந்தக் கூடார நகரத் திற்கு வந்து நின்றது. நாங்கள் லாரியிலிருந்து இறங்கிய சமயம், அப்பொழுது தான் மழை பெய்து சிறிது நின்றிருந்தது. சுற்றும் முற்றும் ஒரே ஈரமாயிருந்தது. நாங்கள் இறங்கியதும், லாரி ஓட்டி யான ஜோ எங்களிரு வரையும், மண்ணிலே உடம்பு பதிய வணங்கிவிட்டு, கண்களில் நீர் கசிய உங்களைச் சேமமாகக் கொண்டு வந்து சேர்த்து விட்டேன். என்னுடைய பாக்கியம் இது. இங்கிருந்து ஆண்டவன் உங்களுக்கு வழி காட்டுவார். சௌக்கியமாக மதரா போய்ச் சேருங்கள். நானும் உங்களைப் பின்பற்றி, சில நாட்களுக்குப் பிறகு வர வேண்டியவன்தான் என்று கூறினார். இதற்கு நான் என்ன பதில் சொல்வது? என் உள்ளத்தில் ஊற்றெடுத்த நன்றிப் பெருக்கு என் இரு கண்களின் வழியே வழிந்தோடியது. அவரிடம் ஓர் ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுக்கப் போனேன். நோட்டைப் பார்த்ததும் அவர் முகம் சிறிது மாறியது. என்ன இது? ஓட்டிவந்த தற்குக் கூலியா? நன்றாயிருக்கிறது நீங்கள் செய்வது! இதை நான் கண்டிப்பாகப் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று கண்டிப்புத் தோரணையில் சொன்னார். உடனே நான் இந்தச் சிறிய தொகை யைக் கூலியாகக் கருதி நான் கொடுக்கவில்லை; அன்பளிப்பாகவே கொடுக்கிறேன். நீங்கள் கட்டாயம் பெற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். இதில் என் மனம் நிறைந்த நல்லாசி சேர்த்திருக்கிறது என்றேன் அப்படியானால் பெற்றுக் கொள்கிறேன். இதை நான் செலவழிக்காமல் பத்திரப்படுத்தி வைப்பேன். உங்கள் ஆசீர்வாதத் தினால் இதுவே பன்மடங்காகப் பெருகும் என்று சொல்லி நோட்டைப் பெற்றுக் கொண்டான். எனக்கும் மன நிம்மதி ஏற்பட்டது. பிறகு நாங்கள் இருவரும், எந்த உதவி இஞ்சினீயருக்கு ந. அறிமுகக் கடிதம் கொடுத்திருந்தாரோ, அந்த அதிகாரி வசித்துக் கொண்டிருந்த கூடாரத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். எங்களுக்கு முன்னாடியே, சிப்பந்திகளை ஏற்றிக்கொண்டு வந்த இரண்டு லாரி களும் வந்து சேர்ந்திருந்தன. ந. வின் மனைவியும் குழந்தைகளும் வந்து ஆகாராதிகளை முடித்துக் கொண்டு எங்கள் வருகையை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் போய்ச் சேர்ந்தபோது, உதவி இஞ்சினீயரான மு. ஐகையில் இல்லை; அலுவல் மேல் சென்றிருந்தார். ஆனால் அவர் இல்லையே என்ற குறை எங்களுக்கு இல்லாமல், அவருடைய சமையல் ஆள் எங்களைக் கண்டதும், வெந்நீர் போட்டுக் கொடுத்து, நீராடச் செய்து, சூடாகக் காபியும் கொடுத்தார். லாரியில் வந்த அலுப்பு சிறிது தீர்ந்தது. சற்று நேரத்திற் கெல்லாம் இலை போட்டுப் பரிமாறி விட்டு எங்களைச் சாப்பிட அழைத்தார். வியப்பும் நன்றியும் கலந்த உணர்ச்சியோடு சாப்பிட உட்கார்ந் தோம். முருங்கைக்காய் சாம்பார்; வாழைக்காய் பொறியல் இவை யிரண்டும் அப்பொழுது எங்களுக்கு எவ்வளவு ருசியாயிருந்தது தெரியுமா? காலையிலிருந்து சோற்றைக் கண்ணால் பார்க்காதவர் களாகையால், அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டோம் என்றே சொல்ல வேண்டும். சமையல் செய்து போட்டவர், தமது எஜமானருடைய விருப்பத் திற்கும், உத்தரவுக்கும் இணங்கியே எங்களுக்கு இந்த உபசரணையைச் செய்தாரென்றாலும், அதை இன்முகத்தோடும் சுறுசுறுப்போடும் செய்தது எங்களுக்கு முக்கியமாகப் பட்டது. அன்போடு இட்ட அமுது அமிர்தமல்லவா?  25. டாமுவுக்குத் திறந்த லாரியில் உதவி இஞ்சினியரான மு. தம் அலுவலை முடித்துக் கொண்டு இரவு எட்டு மணிக்கு மேல் வந்தார். வந்தவுடன் எங்களை முன்பின் அறியாமலிருந்தும், யாரென்று கூடக் கேளாமல், இந்தியா நோக்கிச் செல்ல ரங்கூனிலிருந்து வந்திருக்கிறவர்களென்று ஒருவாறு ஊகித்துக் கொண்டு எப்பொழுது வந்தீர்கள் என்று கேட்டார்! மாலை சுமார் ஐந்தரை மணிக்கு வந்தோம். சாப்பிட்டீர்களா? சாப்பிட்டோம். வயிறு நிரம்ப - ? நிரம்பச் சாப்பிட்டோம். அப்படியானால் சிறிது இளைப்பாறுங்கள். நான் என் ஆகாரத்தை முடித்துக் கொண்டு வந்து விடுகிறேன். அந்தத் தொலைதூர ஊரிலும், இண்டாஞ்சியிலும் - இருட்ட டிப்பு உத்தரவு அமுலில் இருந்தது. மாலை ஆறு மணிக்கு மேல் மின்சார விளக்குகள் எரிவது நின்று விட்டிருந்தது. சிறிய சிறிய மெழுகுவர்த்திகள் தான் ஆங்காங்கு மினுக்மினுக்கென்று ஒளி விட்டுக் கொண்டிருந்தன, மு. வின் கூடார வீட்டிலும் இத்தகைய மெழுகுவர்த்திகள் இரண்டு மூன்று எரிந்து கொண்டிருந்தன. தாம் சொன்னபடி மு. ஒரு பத்து நிமிஷத்திற்குள் ஆகா ராதிகளை முடித்துக்கொண்டு, ஒரு மெழுகுவர்த்திக்குப் பக்கத்தில் வந்து உட்காந்து கொண்டார். அந்த மெழுகு வர்த்தியின் மங்கலான வெளிச்சத்தில் என்னை உற்று நோக்கினார்; நானும் அவரை அப்படியே பார்த்தேன். அவர் முகத்தில் அதிகார தோரணை தாண்டவ மாடியது? கண்டிப்புக்காரப் பேர்வழியாயிருப்பார் போல் தோன்றியது. அவர் பேச்செடுக்கும் முன்பே நான் ந. எழுதிக் கொடுத்திருந்த அறிமுக கடிதத்தை அவரிடம் நீட்டினேன். சிறிது தயக்கத்துடன் தான். ஆனால் இந்தக் தயக்கம், அச்சத்தின் விளைவாக ஏற்பட்ட தன்று; சங்கோசத்தின் விளைவே. அவரும் அந்தக் கடிதத்தை ஊன்றிப் படித்துவிட்டு, சட்டென்று அருகிலிருந்த மெழுகுவர்த் தியைக் கையிலெடுத்து என் முகத்தருகே கொண்டு வந்து நிறுத்தி, என்னை உற்றுப் பார்த்துக் கொண்டே ஹிட்லர் சர்மாதானே என்றார், ஹிட்லரோடு என்னை இணைத்துப் பேசுவதை அப் பொழுதுதான் முதன்முதலாகச் செவியுற்றேன். நீங்கள் எழுதியுள்ள ஹிட்லர் புத்தகத்தை நான் ஊன்றிப் படித்திருக்கிறேன். அருமையான புத்தகம் என்று அவர் கூறிய பிறகு தான், ஹிட்லர் புத்தகத்தை எழுதிய சர்மாதானே என்ற அர்த் தத்தில் அவர் என்னைக் கேட்டார் என்று தெரிந்து கொண்டேன். அவர் கேள்விக்கு ஆம் என்று பதில் சொல்லுகிற அர்த்தத்தில் லேசாகத் தலை அசைத்தேன். உடனே அவர் மேற்கொண்டு செல்ல வேண்டி யதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். உங்களை டாமு வரையில் கொண்டுபோய்ச் சேர்க்கச் சொல்வது என் பொறுப்பு. உங்களைப் போன்றவர்களுக்கு இந்தக் தருணத்தில் உதவி செய்யாம லிருந்தால் அது பெருங்குற்றமாக வல்லவோ ஆகும்? இன்று ராத்திரி, நிம்மதியாகத் தூங்குங்கள். நாளை எங்கள் நெடுஞ்சாலை இலாகா சிப்பந்திகளுடன் இரண்டு லாரிகள் புறப்படுகின்றன. அவற்றில் உங்களை ஏற்றி அனுப்பி விடுகிறேன் என்று உறுதி கலந்த குரலில் கூறினார். நானும் அதிகமாகப் பேசாமல் நன்றி என்று மட்டும் சொல்லிவிட்டுப் படுத்துறங்கப் போய்விட்டேன். இந்த லாரிகள் வேறு, கலேவாவிலிருந்து எங்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரிகள் கலேவாவுக்கே திரும்பிச் சென்று விட்டன. மறுநாள் (9 - 4 - 42) காலை சுமார் எட்டு மணிக்குச் சொன்ன படி சாமான்கள் ஏற்றிச் செல்வதற்காகப் பயன்படுத்தப் பெற்று வந்த இரண்டு பெரிய லாரிகள் கூடாரங்களை ஒட்டிருந்த மைதானத்தில் வந்து நின்றன. காத்துக் கொண்டிருந்த சிப்பந்திகள், தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் விழுந்தடித்துக் கொண்டு இரண்டு லாரிகளிலும் ஏறிக்கொண்டனர். அந்தச் சமயத்தில் மு. வந்து என்னை, ஆண் மக்களை அதிகம் பேராகக் கொண்ட ஒரு லாரியிலும் என் வாழ்க்கைத் துணைவியையும் ந. வின் மனைவி மக்களையும், பெண் மக்களை அதிகப்பேராகக் கொண்ட லாரியிலும் ஏற்றி விட்டார். ஏற்றிவிட்டு, என்னிடம் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தமது கிராமத்திலுள்ள நெருங்கிய உறவினர் ஒருவருக்கு விலாசமிட்ட ஒரு கவரைக் கொடுத்து கல்கத்தா போய்ச் சேர்ந்தும் இதை ரிஜிதர் தபாலாக அனுப்பி விடுங்கள் என்று சொன்னார். அப்படியே அதைக் கல்கத்தா சென்றடைந்ததும் ரிஜிதர் தபாலில் அனுப்பி விட்டேன். இரண்டு லாரிகளும் புறப்படுவதற்குச் சில நிமிஷங்கள் முன்பு மு. வுக்கு மேற்பட்ட அந்ததிலுள்ள ஓர் ஐரோப்பிய அதிகாரி வந்து, லாரிகளின் இஞ்சின்கள், டையர்கள் எல்லாம் சரியாயிருக் கின்றனவா என்று லேசாகப் பரிசோதித்துப் பார்த்தார். பிறகு, லாரிகளில் ஏறிக் கொண்டிருக்கிற நபர்கள் எல்லோரும் சிப்பந்தி களும் அவர்கள் குடும்பத்தினர்கள் மட்டுந்தானா, வேறு அயலார் ஒருவருமில்லையா என்று ஒரு கண்ணோட்டம்விட்டார். என் மார்பு திக் திக் கென்று அடித்துக் கொண்டது. நான் சிப்பந்தி வருக்கத்தைச் சேர்ந்தவனில்லையல்லவா? நீ யார் இலாகாவில் என்ன வேலை செய்கிறாய் என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? பொய் சொல்லவோ எனக்குத் தெரியாது. நான் சிப்பந்திகளில் ஒருவனில்லை யென்றும், கலேவாவில் ந.வும் இங்கு இண் டாஞ்சி யில் மு. வும் எனக்கு ஏற்கெனவே சொல்லிக் கொடுத்திருந்த படி ந. இந்த லாரியில் என்னைப் போகும்படி அனுப்பியிருக்கிறார் என்னும் உண்மையயைச் சொன்னால் சிப்பந்திகளைத் தவிர வேறு யாருக்கும் இந்த லாரிகளில் இடம் கிடையாது என்று நிர்த்தாட் சண்யமாகச் சொல்லிக் கீழே இறங்கி விட்டுவிட்டால் என்ன செய் வது? இப்படிப் பல எண்ண அலைகள் என் உள்ளத்தில் மோதிக் கொண்டிருந்தன. இதற்குத் தகுந்தாற் போல, யாரோ விவரம் தெரியாத ஒரு பர்மியன் நான் ஏறியிருந்த லாரியில் வந்து அமர்ந்து கொண்டான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த ஐரோப்பிய மேலதிகாரி உன்னைப் போன்ற வர்களுக்கு இடமில்லை யென்று சொல்லி அவனைக் கீழே இறக்கி விட்டுவிட்டார். நல்லவேளையாக என்னை ஏதும் கேட்கவில்லை. சிப்பந்திகளில் ஒருவனாக என்னைக் கருதிக்கொண்டு விட்டாரோ என்னவோ? எப்படியோ அந்த நிமிஷத்திற்கு அதிருஷ்ட தேவதை தோன்றாத் துணையாக என் பக்கத்தில் வந்து நின்றாள். சரியாக எட்டே கால் மணிக்கு, இரண்டு லாரிகளும், அளவுக்கு மிஞ்சின பாரத்தை ஏற்றி விட்டிருக்கிறார்களே என்று எரிச்சலி னாலோ என்னவோ, முனகிக் கொண்டே புறப்பட்டன. வழியில் எங்கே பழி தீர்த்துக் கொண்டு விடப்போகிறதோ என்று நான் சிறிது அதைரியப்பட்டேன், ஆனால் அது உங்கள் மனித வருக்கத்தைச் சேர்ந்தவனல்லவே நான் என்று எனக்குச் சொல்லிக் காட்டுவது போல், வழி நெடுக, ஒரே நிதானத்துடன் சென்று டாமுவைப் போய டைந்தது. திறந்த லாரி; கோடை வெயில்; கரடுமுரடான பாதை; எப்படியிருந் திருக்கும் பிரயாணம் என்பதை வாசகர்கள் ஊகித்துக் கொள்ளலாம். என்னுடைய லாரியில் ஏறிக் கொண்டிருந்தவர்களில் இரண்டு மூன்று பெண் மக்களைத் தவிர மற்றவர்கள் ஆண் மக்கள்; அனை வரும் உத்தியோகதர்கள்தான்; படித்தவர்கள்தான்; ஆனால் இந்த லாரி பயணத்தின்போது ஒழுங்கு, நிதானம், இங்கிதம் ஆகிய நல்ல பண்புகளை யெல்லாம் இழந்து விட்டவர்களாகவே நடந்து கொண்டார்கள். சுயநலமானது இப்படி மனித உருவங்களாகப் பயணஞ் செய்கிறதோ என்று நான் எண்ணினேன். ஒவ்வொருவரும் தனக்குச் சௌகரியமான இடம் வேண்டுமென்ற ஒரே நோக்குடன், இடம் பிடித்துக் கொண்டனர். இப்படி இவர்கள் தங்கள் சௌகரி யத்தைப் பார்த்துக் கொள்வதோடு நிற்க வில்லை. மற்றவர்களுக்கு இடைஞ்சல் உண்டாகும்படி நடந்து கொண்டனர். இரு கால் களையும் நீட்டிக் கொண்டு அமர்ந்தனர் சிலர்; தம்மைச் சுற்றித் தம்முடைய சாமான்களை அரண்போல் வைத்துக் கொண்டு நடுவில் உட்கார்ந்தனர் சிலர்; இருவர் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவரே கால்களைப் பரப்பிக் கொண்டு வீற்றிந்தனர் சிலர்; மற்றவர் களுடைய மூட்டை முடிச்சுகளின் லேசு கனத்தைப் பாராமல் அவற்றின் மீது தங்களுடைய மூட்டைகளை அழுத்தி வைத்துவிட்டு, அவற்றிற்குக் காவல் புரிந்தனர் சிலர். இவையெல்லாம் ஓசைப்படாமல் நிகழ்ந்தன என்று நினைக் கிறீர்களா? அதுதான் இல்லை. ஒரே கூச்சல். லாரி போகிற வேகத்தில் உண்டாகிற சப்தத்தை இவர்கள் போடுகிற கூச்சல் அடக்கிவிட்டது. வங்காளி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் இந்தக் கூச்சலில் கலந்து ஒலித்தன. ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாத நிலையில், சிலர் உரக்கச் சிரித்தனர்; சிலர் முகத்தைச் சுளித்தனர்; சிலர் கை களினால் சமிக்ஞை செய்து, தங்கள் கருத்தைத் தெரிவித்தனர். அவை மட்டுமா? லாரி வளைந்தும் நெளிந்தும் செல்கிற போது, ஒருவர் மேல் ஒருவர் மோதினர். இடிபட்டன சில தலைகள்; மிதி பட்டன சில கால்கள்; சிலருடைய மூட்டைகள் இடம் விட்டு இடம் பெயர் வதில் சாமர்த்தியம் காட்டின. இன்னுஞ் சிலர் முன்னாடி சென்று கொண்டிருந்த லாரியிலுள்ள தங்கள் பெண்டு பிள்ளைகளின் க்ஷேம லாபங்களைப் பின்னாடிச் சென்று கொண்டிருந்த தங்கள் லாரிகளிலிருந்து விசாரித்தனர். இவர்கள் கேட்பது அவர்களுக்குப் புரியாது. அவர்கள் பதில் சொல்வது இவர்களுக்குப் புரியாது. ஜாடைகள் பல செய்து காட்டுவர். இவற்றைக் கண்டு மற்றவர்கள் சிரிப்பார்கள். அதிருஷ்டவசமாகவோ துரதிருஷ்ட மாகவோ இந்த அனுபவங்கள் ஏதும் எனக்கு ஏற்படவில்லை. நான் லாரியின் ஓர் ஓரத்தில் கற்சிலை மாதிரி உட்கார்ந்திருந்தேன். தாய்நாடு ஒன்றுதான் என் சிந்தனையில் ஒன்றிக் கொண்டிருந்தது. அந்தச் சிந்தனை காரணமாக, லாரிகள் சென்ற பாதையின் இரு பக்கங்களிலும் என் பார்வை செல்லவில்லை. கண்மூடி மௌன மாக இருந்தேன். மேடு பள்ளங்கள், திருப்பங்கள் ஆகிய இப்படிப் பட்ட இடங்களில் செல்லும் போது, என் உடல் குலுங்கும்; ஒரு பக்கம் சாய்ந்து கொடுக்கும்; இருந்த இடத்திலிருந்து சிறிது நகர்ந்து போகும். முன்னுக்குப் போவேன்; பின்னுக்கு வருவேன். இப்படிப் பல சாதனைகளைச் செய்து கொண்டு சென்றேன். போதாக் குறைக்கு, சூரியன் உடம்பை வறுத் தெடுத்தான். வாயு தேவன் அனற் காற்றையும் புழுதி மண்ணையும் சேர்த்து வீசினான். அக்னிக் கடவுள் பசி என்னும் போர்வையைப் போர்த்திக் கொண்டான். நா உலர்ந்தது; கண்கள் சிவந்தன. இப்படிச் சென்று கொண்டிருந்த போது, இரண்டு லாரிகளும் திடுதிப்பென்று ஓரிடத்தில் நின்றன. ஆண் மக்கள் அனைவரும் குதித்து இறங்கி, பாதையின் ஒரு பக்கத்தை நோக்கி ஓடினார்கள். எனக்கு ஏதும் புரியவில்லை. பிறகு அருகில் இருந்த ஒருவரை விசாரித்ததில் பாதைக்குச் சற்று எட்டினாற் போலுள்ள ஓரிடத்தில் யாரோ இருவர் ஒரு சிறிய குடிசை அமைத்துக் கொண்டு, அதில் ரொட்டி சுட்டு, பிரயாணி களுக்கு விற்கிறார்களென்று தெரிய வந்தது. காய்ந்த வயிற்றுக்குக் காய்ந்த ரொட்டியையாவது கொடுத்து வைப்போம் என்று எண்ணியே லாரியிலிருந்தவர்கள் அங்குச் செல்கிறார்களென்று அறிந்து, நானும் மெள்ள இறங்கி அந்தப் பக்கம் சென்றேன். என் வயிறும் காய்ந்துதானே இருக்கிறது? நான் அந்த இடத்திற்குப் போனதும் விற்றுத் தீர்ந்துவிட்ட தென்று அங்கிருந்தவர்கள் - ரொட்டி விற்பவர்கள் கையை விரித்தார்கள். இப்படி மானபங்கத்துடன் திரும்பி வந்து லாரியில் ஏறி அமர்ந்து கொண்டேன். லாரியும் பெட்ரோல் நாற்றத்தை வீசி விட்டுக் கிளம்பியது. கிளம்பிய பிறகு, ரொட்டியை வாங்கி வந்தவர்கள் அதைத் தின்ன ஆரம்பித்தார்கள். அவர்கள் தின்ற காட்சியை நான் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிலர் பசி ஆத்திரத்தில், பெரிய துண்டமாக வாயில் போட்டுக் கொண்டு, தொண்டை அடைத்துக் கொள்ள திக்குமுக் காடினார்கள். சிலருக்கு இரண்டு துண்டுகளை விழுங்கிய உடனேயே விக்கல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. அதை நிறுத்த, குடி தண்ணீர் இல்லாமல் மூச்சை நிறுத்திப் பார்க்கத் தொடங்கினார்கள். சிலர் ஓரிரண்டு துண்டுகளை வாயில் போட்டுக் கொண்டு அதைக் குதப்பிக் கொண்டிருப் பதில் ருசி கண்டார்கள். சிலர் சை, என்ன ரொட்டி இது? மண்ணையும் மாவையும் கலந்து பிசைந்து காய்ச்சி இருக்கிறார்கள் என்று அருவருப்புடன் சொல்லிக் கொண்டே, விலை கொடுத்து வாங்கியதை ரோட்டு மண்ணுக்குக் காணிக்கை செலுத்தி விட்டார்கள். ரொட்டிக்காகப் பிரயாணிகள் இறங்கி ஏறிய இடத்திலிருந்து சிறிது தூரத்திற்குப் பிறகு அடர்ந்த ஒரு காட்டிற்குள் லாரிகள் பிரவேசித்தன. சுமார் பன்னிரண்டு மைல் தூரத்திற்கு ஒரே காடுதான். நல்ல வெயில் நேரத்தில் கூட, சூரிய கிரணங்கள் வெள்ளிக் கம்பிகள் போல் இழை யோடிக் கொண்டிருந்தன. இவைதான், லாரிகள் தடம் புரளாமல் செல்வ தற்கு வழி காட்டின என்று சொல்ல வேண்டும். லாரி ஓட்டியவர்களும் நிதானமாகவே சென்றார்கள். இந்தப் பன்னிரண்டு மைல் தூரத்தினும் மனித சஞ்சாரமே கிடையாது. வண்டுகளும், காட்டுப் பறவைகளும் ஆங்காங்கு க்ரீச் சிட்டுக் கொண்டிருந்தன. இந்த மாதிரிக் காட்டுப் பிரதேசங்களை மேற் கொண்டு நடந்து வந்த அநேக இடங்களில் சந்திக்க வேண்டி யிருந்தது. பன்னிரண்டு மைல் தூர காட்டைக் கடந்து சில மைல்கள் சென்ற பிறகு நாங்கள் அன்று சேர வேண்டிய ஊர் தென்பட்டது. டாமு!  26. தபால் நிலையத்தில் வாசகம் இண்டாஞ்சியிலிருந்து டாமுவுக்குச் சுமார் நூறு மைல் தூரம் இருக்கும். இந்த நூறு மைல்களைக் கடக்க ஏறத்தாழப் பத்து மணி நேரம் பிடித்தது. இண்டாஞ்சியிலிருந்து காலை எட்டேகால் மணிக்குப் புறப்பட்டு மாலை ஐந்தரை மணி சுமாருக்கு டாமு வந்து சேர்ந்தோம் என்றால் மணிக்கு எத்தனை மைல் வேகத்தில் லாரிகள் வந்தன என்று கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். எங்கள் லாரிகள் இரண்டும் டாமுவில் அகதிகளுக்கென்று நிறுவப் பட்டிருந்த முகாமில் வந்து நின்றன. அகதிகளாக வரும் யாவரும் இந்த முகாமில் வந்திறங்க வேண்டுமென்பது பொது விதியாக இருந்தது. கலேவாவிலும் இப்படித்தானே? இந்த அகதிகள் முகாம்கள் இந்தியாவின் எல்லைப் புறப் பிரதேசம் வரை, வழி நெடுக எட்டு மைல் பத்து மைல் தொலைவுக்கு ஒன்றாக ஆங்காங்கு அமைக்கப்பட்டிருந்தன. இந்த முகாம்கள் எப்படி அமைக்கப் பட்டிருந்தன, என்று நினைக் கிறீர்கள்? தென்னங் கீற்றுக் கூரையிட்ட சிறு சிறு குடிசைகளைக் கொண்ட ஓரிடமே முகாம் என அழைக்கப்பட்டது. இந்தக் குடிசைகளில் மண் தரை தான்; ஈரம் படிந்திருக்கும்; தரையை லேசாக சமன்படுத்தியிருப் பார்கள். சில முகாம்களில் ஈரத் தரை மீது முங்கிற் பாய்களை விரித்தி ருப்பார்கள். சில முகாம்களில் மூங்கில்களை இணைத்துக் கட்டி மேடையாக அமைத்திருப்பார்கள். பெரும்பாலும் முகாம்கள் சில சிற்றருவியின் கரையோரமாக அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் வந்து தங்கிப் போகிறவர் களுக்குத் தண்ணீர் வசதி தேவைப்படுமல்லவா? இந்த அருவிகள் கூடியமட்டில் சுத்தமாக இருக்க வேண்டுமென்பதற்காக ஆங்காங் குள்ள முகாம் அதிகாரிகள் வேண்டிய பந்தோபது செய்திருந் தார்கள். ஆனால் முகாமுக்கு வந்து போகிறவர்கள், இந்தப் பந்தோ பதுக்குக் கட்டுப்படாதவர் களாகவே நடந்து கொண்டார்கள். எவ்வளவு அசுத்தப் படுத்த முடியுமோ அவ்வளவுக்கு அசுத்தப் படுத்திவிட்டுப் போவதில் திறமை காட்டி தூய்மையே கடவுள் தன்மை என்ற வாசகத்தின் உச்சரிப்பைக் கூடக் கேள்விப் பட்டிரா தவர்களாகவே அநேகர் நடத்து கொண்டனர். இப்படி அசுத்த மாயிருப்பதும் அசுத்தப்படுத்துவதும் இவர்களுக்கு நீண்டகாலப் பழக்கமா? அவ்வாறு தற்காலிகமாக ஏற்பட்ட ஒரு வியாதியா? நிர்ணயித்துக் கொள்ள முடியவில்லை. இப்படித்தான் சுருக்கமாக வெட்கத்துடன் கூற வேண்டிருக்கிறது. இந்த முகாம்கள் அனைத்தும் ஐரோப்பியர்களின் மேற் பார்வைக்குட்பட்டிருந்தன. இவர்களுக்கு உதவியாக இந்திய அதிகாரிகள் சிலர் இருந்தனர். சில முகாம்களில், பெயரளவுக்கு டாக்டர் இருந்தார்கள். இவர்களுக்கு, பிரயாணிகளைப் பரி சோதித்துச் சிகிச்சை செய்வதற்கான வசதிகள் எந்த அளவுக்குக் கொடுக்கப்பட்டிருந்தன என்று ஒரு கேள்வி எழுமானால் அதற்குச் சரியான விடை காண்பது அரிது. முகாம்களின் மேற்பார்வையாளர்களாக இருந்த ஐரோப்பி யர்கள் பலரும், அஸாம் பகுதியிலுள்ள தேயிலை காபி தோட்டங் களில் ஊழியம் புரிந்துவந்தார்கள். தோட்டக் கூலிகளை ஆடு மாடுகள் போல் நடத்துவதொன்றையே அறிந்தவர்கள். நாசூக்கு, இங்கிதம், இனிய பேச்சு, மரியாதை கொடுத்து மரியாதை வாங்குதல் முதலிய பண்புகள் இவர்கள் கேள்விப்பட்டிராதவை. மேனாட்டு உடையணிந்து வந்தவர்கள், ஆங்கில மொழியில் இவர்களைப் புகழ்வது போல் பேசியவர்கள் இப்படிப்பட்டவர் களுக்குச் சிறிது பல்லைக் காட்டினார்கள். சிரிக்கக்கூட இவர்களுக்குத் தெரிந்தி ருக்கிறது என்று ஆச்சரியப்பட வேண்டியிருக்கும். இவர்கள் பார்வையில் அகதிப் பிரயாணிகள் அனைவரும் தோட்டக் கூலி களாகவே தென்பட்டார்கள். இவர்கள் நடந்துகொண்ட மாதிரி இப்படி யெல்லாம் இவர்களைப் பற்றிச் சொல்ல வைக்கிறது. முகாம்களின் பிரயாணிகளுக்கு உணவுப் பொருள்கள் இல வசமாக விநியோகிக்கப்பட்டு வந்தன. இந்த விநியோகப் பணி பெரும்பாலும் ஐரோப்பிய அதிகாரிகள் வசமே இருந்தது; அல்லது அவர்களுடைய நேரான மேற்பார்வையில் நடைபெற்றது. உணவுப் பொருள்கள் என்றால் மலைத்து விடாதீர்கள். அரை ஆழாக்கு மைதா மாவு அல்லது அரிசி; ஒருபிடி ரத்தச் சிவப்பான துவரம் பருப்பு; கழற்சிக்காய் அளவு எண்ணெய் போன்றிருந்த டின் பால் இவ்வளவுதான். இவற்றை எந்த முறையில், பக்குவம் செய்து சாப்பிடுவது என்பது யாருக்கும் விளங்காத ஒரு புதிராகவே இருந்தது. பலர் இவற்றை உபயோகிக்கவே இல்லை. உபயோகித்த சிலர், ரத்தப் போக்கால் அவதியுற்றனர். அவரவர்கள் சாத்தியப்பட்ட வரையில், கையோடு கொண்டு வந்திருந்த பொருள்களை உபயோகப்படுத்திக் கொண்டனர். எங்களை ஏற்றி வந்த இரண்டு லாரிகளும் டாமுவில் அகதிகள் முகாம் முன்பு வந்து நின்றன என்றாலும், நானும் என் வாழ்க்கைத் துணைவியும் ந. வின் குடும்பத்தினரும் அங்கு இறங்கவில்லை; மற்றவர்கள் இறங்கினார்கள். அதிருஷ்டவசமாக லாரிகள் டாமு ஊருக்குள் வந்து கொண்டிருந்த போது, இரண்டு நண்பர்கள், எங்களைப் பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டு, முகாமில் சென்று இறங்க வேண்டாமென்று சமிக்ஞையால் எங்களுக்கு எச்சரிக்கை கொடுத்தார்கள். எச்சரிக்கை கொடுத்த தோடல்லாமல், லாரிகளை வேகமாகப் பின் தொடர்ந்து கொண்டு முகாமுக்கு வந்து, தாங்கள் இந்த ஊர் தபால் நிலையம் இருக்கும் விசாலமான இடத்தில் தங்கிருப்பதாகச் சொல்ல, லாரி ஓட்டி, வந்தவர்களை, அங்கு எங்களைக் கொண்டு விடுமாறு கூறினார்கள். அவர்களும் இதற் கிசைந்து மற்றப் பிரயாணிகளை இறக்கிவிட்டுவிட்டு, எங்களைத் தபால் நிலையத்திற்குக் கொண்டு வந்துவிட்டார்கள். இந்த இரண்டு நபர்களில் ஒருவர் மா. என்பவர், ஆங்கிலப் புலமையோடு தமிழறிவும் நிரம்பியவர். ரங்கூனில் ஜோதி பத்திரிகையில் தொடர்ந்தாற் போல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல எழுதி வந்தவர். இன்னொருவர் ரா. என்பவர், இன்ஷூரன் தொழிலிலும் வியாபாரத்திலும் ஈடுப்பட்டிருந்தார். இன்முகத்தினர்; இனிய மொழியினர். இவ்விரு நண்பர்களும் ரங்கூனில் நன்கு பழக்க மானவர்கள். இவர்களில் மா. என்பவர் மொனீவாவிலும். ரா. என்பவர் கலேவாவிலும் எங்களோடு வந்து சேர்ந்து கொண் டார்கள். கலேவாவிலிருந்து நாங்கள் புறப்படுவதற்கு முந்திய தினத்தில், இவர்களிருவரும் ஏதோ அகப்பட்ட லாரிகளைப் பிடித்துக் கொண்டு தனித்தனியாக டாமுவுக்கு எங்களுக்கு முன்னாடியே வந்து சேர்ந்தி ருந்தார்கள். கலேவாவிலிருந்து எங்களை நெடுஞ்சாலை இலாகாவைச் சேர்ந்த லாரிகளில் ஏற்றியனுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தது இவர்களுக்குத் தெரியும். எப்படியும் நாங்கள் இவர்கள் புறப்பட்ட மறுநாள் கலேவாவிலிருந்து புறப்பட்டு அதற்கு மறுநாள் (9 - 4 - 42) மாலை இஞ்சுடாஞ்சு வழியாக டாமு வந்து சேர்ந்து விடுவோமென்று நம்பிக்கையுடனேயே டாமுவில் எங்கள் வரவை ஆவலோடு எதிர்பார்த்து நின்றார்கள்; எங்கள் லாரிகள் வரக்கூடிய சமய மறிந்து வழியில் நின்று கொண்டிருந்தார்கள். இந்த அன்பர்கள் இருவரும், நாங்கள் இருவரும் கல்கத்தா வந்துசேரும் வரையில் எங்களுக்குப் பெரிய உதவியாயிருந்தார்கள். இவர்களுடைய அன்பும் ஒத்தாசையும் இல்லாமற் போயிருந்தால், எங்களுடைய நடைப்பயணம் அதிகக் கடினமுடையதாயிருந் திருக்கும். வழி நெடுக இவர்கள் எங்களுக்காக வாகன வசதிகள் ஆகார வசதிகள் இப்படி பலவற்றிற்கும் முன்னின்று ஏற்பாடு செய்து கொடுத்து எங்களைத் தங்களின் பெற்றோர்கள்போல் கவனித்து வந்தார்கள். இவ்விரு அன்பர்களும் என்றென்றும் என் நினைவில் இருந்து கொண்டிருப்பார்கள். டாமு தபால் நிலையத்திற்கு நாங்கள் வந்தபோது முன் பின் தெரியாத இடம், பரிச்சயமில்லாத மனிதர்கள், இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தங்கவேண்டியிருக்குமோ என்று எனக்குச் சிறிது கூச்சமாக இருந்தது. ஆனால் இந்தக் கூச்சம், நிலையத்தின் நுழை வாயிலில் அடியெடுத்து வைத்ததும், அகன்றும் விட்டது. நிலையத்தின் அதிகாரி, அதாவது போட் மாடர், ரங்கூனில் எனக்கு நன்கு பழக்கமான கி. என்பவரைக் கண்டேன். அவரும் நானும் ரங்கூனில் அமெச்சூர் நாடக சங்கமொன்றில் அங்கத்தினர் களாயிருந்தோம். தவிர ரங்கூனிலேயே ஒரு கிளை தபால் நிலையத்தில் இவர் அலுவல் பார்த்து வந்தார். ரங்கூனி லிருந்த எங்கள் உறவினர் அனைவருக்குமே இவர் அறிமுகமானவர். இவர் டாமுவுக்கு எப்போழுது மாற்றலாகி வந்தார் என்பது எனக்குத் தெரியாது. இவருடன் இவருடைய இல்லக் கிழத்தியாரும் இருந்தார். தபால் நிலையத்தின் காம்பவுண்டில் தனியாகக் கட்டப் பெற்றிருந்த ஒரு மர மாடி வீடு இவர்களுடைய ஜாகையாக இருந்தது. எங்களிருவரைக் கண்டதும், ஆச்சரியம் மேலிட்டவராய், உங்களுக்குக் கூடவா இந்த நடைப்பயணம் விதித்திருக்கிறது என்று கனிவுடன் கூறிக்கொண்டே, எங்களைத் தமது ஜாகையின் உட்புறத்திற்கு அழைத்துப் போனார். உள்ளே போனதும் இவருடைய இல்லக்கிழத்தியார் எங்களை முகமன் கூறி வரவேற்றார். உடனே, பெண்மைக்குரிய பண்பாட்டுடன் வெந்நீர் போடச்செய்து எங்களை நானம் செய்யச் சொல்லி, சுடச்சுட சாப்பாடு போட்டார். லாரிப் பயணத்தினாலும், காலையிலிருந்து ஆகாரம் ஏதும் இல்லாததனாலும் ஏற்பட்டிருந்த உடல் வலி, வயிற்றும் பசி எல்லாம் எங்களிடமிருந்து பறந்து போயின. இந்தத் தம்பதிகள் செய்த உபசரணைக்கு எந்த வார்த்தைகளால் நன்றி தெரிவிப்பது? நாங்கள் என்னதான் இவர் களுக்கு அறிமுகமானவர்களாயிருந்தாலும் அந்தச் சமயத்தில், இவர்கள் முன்னிலையில் நாங்கள் அகதிகள்தாமே? ஆனால் இவர்கள் அந்தக் கண்கொண்டு எங்களைப் பார்க்கவில்லை. தங்களுடைய அன்பைப் புலப்படுத்திக் காட்டுவதற் கேற்ற சந்தர்ப்பத்தை அளித்த விருந்தாளிகளாகவே எங்களைக் கருதி உபசரித்தார்கள். நாங்களும் கூச்சம் அகன்று எங்கள் நெருங்கிய உறவினருடைய வீட்டுக்கு வந்திருப்பதாகவே உணர்ந்தோம். எங்களுடன் ந. வின் மனைவியும் மூன்று குழந்தைகளும் வந்திருந்தார்களல்லவா? அவர்களுக்கும், எங்களுக்கு என்ன மாதிரியான உபசரணை நடந்ததோ அதே மாதிரியான உபசரணை நடந்ததென்பதைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. இல் வாழ்க்கையின் இயல் பறிந்து நடக்கும் தம்பதிகள், வரும் விருந் தினரில் தெரிந்தவர் இவர், தெரியாதவர் இவர் என்று வேறுபடுத்திப் பார்க்க மாட்டார்கள். போட்மாடர் கி. அரசாங்கம் வேறுவிதமாக உத்தர விடாதவரையில் அலுவல் தலத்திலேயே இருக்க வேண்டிய நியதிக் குட்பட்டிருந்தபடியால், தமது மனைவியாரை, தக்க துணையுடன் இந்தியாவுக்கு அனுப்பிவிட உத்தேசித்திருந்தார். ஆனால், எந்த வழியாக அனுப்புவது? கப்பலேற்றி அனுப்புவதென்றால் டாமுவி லிருந்து கலேவா, கலேவாலிருந்து மொனீவா, மொனீவா விலிருந்து மாந்தளை, மாந்தளையிலிருந்து ரங்கூன், இப்படி ஆற்று மார்க்க மாகவும் ரெயில் மார்க்கமாகவும் அனுப்ப வேண்டும். இதற்குத் தக்க துணை வேண்டும். அந்த அம்மையார், தனித்து தைரிய மாகச் செல்லக் கூடியவரல்லர். தவிர, ஆற்றுப் படகுகளின் போக்கு வரத்தும், ரெயில்களின் போக்குவரத்தும் யுத்தம் காரணமாக நிலவர மற்றிருந்தன. இவைகளைச் சமாளித்துக் கொண்டு ரங்கூன் போய்ச் சேர குறைந்தது ஒரு வாரமாவது பிடிக்கும். போய்ச் சேர்ந்தாலும் அங்கே டிக்கெட் எடுத்துக் கப்பலேற்றி விடுகிறவர் யார்? கப்பல் போக்கு வரத்தும் ஒழுங்காக இல்லையல்லவா? எனவே தரை மார்க்கமாக அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை. இதற்கும் தகுந்த துணை வேண்டும். இந்தக் துணை, நாங்கள் வருவதற்கு முன்பு வரையில் இவருக்கு - போட் மாடருக்கு - கிடைக்கவில்லை. என்ன செய்வ தென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் திகைப்பு நீங்கியவரானார். எங்களுக்குச் சாப்பாடு முதலியன போட்டுச் சிறிது இளைப் பாறும்படிச் செய்த பிறகு சாவதானமாக எங்களிருவரிடமும் வந்து, தமக்கு அதுவரையில் ஏற்பட்டிருந்த திகைப்பைச் சொல்லி, இனி எனக்குக் கவலை விட்டது; என் மனைவியை உங்களோடு அனுப்பு கிறேன்; கூட்டிக் கொண்டுபோக வேண்டுகிறேன். உங்களைக் காட்டிலும் வேறு பெரிய துணை அவளுக்கு எங்கே கிடைக்கப் போகிறது? உங்களோடு அனுப்பி விட்டால் பிறகு அவளைப் பற்றி எனக்குக் கவலையிராது. எப்படியும் நானும் உங்களுக்குப் பின்னாடி வரவேண்டியவன்தான்? என்று மனம் விட்டுப் பேசினார். இந்த அம்மையாரும் எங்களோடு வருவதில் மகிழ்ச்சி தெரிவித்தார். நாங் களும் அழைத்துப் போவதாக மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டோம். இப்படி ஒப்புக் கொண்டதை, நாங்கள் உதவியாகக் கருத வில்லை; கடமையாகவும் பெருமையாகவும் கருதினோம். அந்த அம்மையார், எங்களைப்போல் பழமையான சம்பிரதா யங்களையும் ஆசார அனுஷ்டானங்களையும் பின்பற்றுகிறவர்; தெய்வ பக்தி நிரம்பியவர். இதனால் அவரும் என் வாழ்க்கைத் துணைவியும் வெகுசீக்கிரத்தில் கூடப்பிறந்த சகோதரிகளாகப் பழகத் தொடங்கி விட்டார்கள். நடைப் பயணத்தின் போது, இது மிகவும் அனுகூல மாயிருந்தது. டாமுவில், எங்கள் குழுவோடு, ராமு என்ற இளைஞரும், பா என்ற இளைஞரும் வந்து சேர்ந்து கொண்டார்கள். ஆக, மாந்தளை யிலிருந்து இருவராகப் புறப்பட்ட நாங்கள், மொனீவாவில் அறுவராகி, பிறகு கலேவாவில் எண்மராகிக் கடைசியில் டாமுவில் பதினொருவரானோம்.  27. டாமு முகாம் அளித்த காட்சி நாங்கள் சென்ற சமயம், டாமுவில் எங்களைப் போன்ற அகதிகள் நிரம்பியிருந்தார்கள். இதனால் சில இடங்களில் குப்பைக் கூளங்கள் குவிந்து கிடந்தன. ஆனால் சாதாரண காலத்தில் இப்படி இருந்திருக்க முடியாதென்றும், மிகவும் சுத்தமாக இருந்திருக்க வேண்டுமென்றும் எங்களுக்குத் தோன்றியது. பொதுவாக, பர்மியர்கள், வடக்குப் பகுதியிலுள்ளவர்களா கட்டும், தெற்குப் பகுதியிலுள்ளவர்களாகட்டும், தூய்மையைப் பேணிக் காப்பவர்கள். சாதாரண நிலையில் உள்ளவர்வர்கள் உட் பட யாவரும் தினம் இரண்டு தரம் நீராடுவார்கள். மணிக் கணக்கில் தண்ணீர்த் தேக்கங் களில் தங்கியிருப்பதில் மகிழ்ச்சி கொள்வார்கள். தாங்கள் சுத்தமாயிருப்ப தோடு மட்டுமல்லாமல், தங்கள் சுற்றுப் புறத்தையும் கூடிய மட்டில் சுத்தமாக வைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள். டாமுவில் நாங்கள் இரண்டு நாட்கள் தங்கும்படி நேரிட்டது. இந்த இரண்டு நாட்களிலும் காலை நேரத்தில் நான் ஊர் சுற்றிப் பார்த்தேன். தெருக்கள் அகலமாகவும் சுத்தமாகவும் இருந்தன. வீடுகள் சிறிதாக இருந்தாலும் கச்சிதமாக அமைந்திருந்தன. அநேக தெருக்களில் இரு பக்கங்களிலும் முருங்கை மரங்கள் பூத்துக் காய்த்துப் பொலிந்தன. ஒவ்வொரு முருங்கைக் காயும் சுமார் இரண்டடி நீளம் இருக்கும். இரண்டாவது நாள் ஊரைச் சுற்றிப் பார்த்து வந்து கொண்டி ருக்கையில் ஒரு வீட்டின் முன்பு ஓங்கி வளர்ந்திருந்த ஒரு மரத்தில் இலைகள் தெரியாமல் காய்கள் நிறைந்திருந்தன. சிறிது உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றேன். அதைக் கவனித்த, வீட்டு எஜமானராகிய பர்மிய கனவான் உள்ளேயிருந்து வெளியே வந்து, என்ன வேண்டும்? என்று கொச்சை ஹிந்தியில் என்னைக் கேட்டார். என்ன பார்க்கிறீர்கள் என்று அவர் கேட்கவில்லை. என்ன வேண்டும் என்றுதான் கேட்டார். இந்தக் கேள்வி யொன்றே அவருடைய பண்பாட்டைக் காட்டுவதா யிருந்தது. நான் அவருக்குப் புரிகிற மாதிரி ஹிந்திலேயே ஒன்றும் தேவையில்லை, முருங்கை மரத்தைப் பார்க்கிறேன் என்று பதில் சொன்னேன். உடனே அவர் உள்ளே சென்று ஒரு துறடு எடுத்துக் கொண்டு வந்து, பத்துப் பன்னிரண்டு முருங்கைக் காய்களைப் பறித்து ஒரு கட்டாகக் கட்டி என் கையில் திணித்தார். இது எனக்கு ஆச்சரியமாகயிருந்தது. அவர் கொடுத்ததை நிர்த்தாட்சண்யமாக எனக்கு இது தேவையில்லை என்று எப்படிச் சொல்வது. சிறிது தயங்கினேன். பிறகு சமாளித்துக் கொண்டு இதற்கு என்ன விலை கொடுக்கவேண்டும் என்று கேட்டேன். விலை கிடையாது என்று சைகையால் சொல்லி விட்டு லேசாகச் சிரித்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார். இந்தச் செயல் இவருடைய பெருந் தன்மைக்கு எடுத்துக் காட்டாயிருந்த தோடு இந்த ஊரின் செழுமையை எனக்கு அறிவிப்பதாகவும் இருந்தது. பெற்றுக்கொண்ட முருங்கைக் காய்களை, தபால் நிலைய விடுதியில் கொண்டு சேர்ப்பித்தேன். டாமுவில் எல்லாக் கறிகாய்களும், பார்ப்பதற்குச் செழுமையா யிருந்ததோடு வாய்க்கு ருசியாகவும் இருந்தன. ஊர் ஓரத்தில் ஒரு கால்வாய் ஓடிக் கொண்டிருந்தது. ஊரார் இதனைக் கழிவு நீராக்கி விடாமல் வெகு அக்கறையோடு பராமரித்து வருகிறார்கள் என்பதை இதன் இரு பக்கத்துக் கரைகளும் சுத்தமாக இருப்பதைக் கொண்டு நான் ஒருவாறு தெரிந்துகொண்டேன். டாமுவுக்கு நாங்கள் வந்த மறுதினத்திலிருந்து, நண்பர்கள் மா. வும், ரா. வும் மேற்கொண்டு பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யும் முயற்சியை மேற்கொண்டனர். இந்த முயற்சியில் என்னை அதிகமாக ஈடுபடுத்தவில்லை. எனக்குச் சில்லறை கஷ்டங்கள் ஏதும் ஏற்படக் கூடாது என்ற பெருநோக்கத்துடன் தாங்களே எல்லா வற்றையும் மேற் போட்டுக் கொண்டு செய்தனர். என்னையும் என் வாழ்க்கைத் துணைவியையும், ந. வின் குடும்பத்தினரையும் முடிந்த மட்டில் சௌகரியத்துடன் இந்தியாவுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட வேண்டுமென்பதில் இவர்கள் காட்டிய சிரத்தை, எடுத்துக்கொண்ட சிரமம் ஆகியவை இவர்கள் பிறர் நலம் பேணும் பண்பாட்டைப் பிரதிபலித்துக் காட்டின என்று நன்றியுணர்வோடு மீண்டும் சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன். பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், வயதுமுதிர்ந்தவர்கள் ஆகிய இப்படிப்பட்டவர்களுக்கு, டாமுவிலிருந்து சுமார் பதினாறு மைல் தொலைவிலுள்ள வக்ஸூ என்ற கிராமம் வரை, அரசாங்கச் செலவில் வாடகை மாட்டு வண்டிகளும், சாமான்களைத் தூக்கிச் செல்லத் தேவையான கூலியாட்களும் அமர்த்திக் கொடுக்கப்படு மென்று அகதிகள் முகாம் அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள். ஆனால் வண்டி வசதி விரும்பும் நோயாளிகள், டாக்டர் சர்டிபிகேட் பெற்று வரவேண்டுமென்று ஒரு நிபந்தனையும் விதித்திருந்தார்கள். என்னைப் பொறுத்தமட்டில் நோயாளி வருக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவனா யிருந்தேன். டாமுவுக்குப் போய்ச் சேர்ந்த பிறகு எனக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஆரம்பித்து விட்டது. இதனால் அதிக தூரம் நடக்கத் தகுதியற்றவனானேன். எனவே, நண்பர்கள் மா. வையும், ரா. வையும் துணைகூட்டிக் கொண்டு, உள்ளூர் ஆபத்திரி டாக்டரிடம் சென்றேன். அவர் ஒரு சீக்கியர்; வயதில் சிறியவராயிருந்தாலும் அநுபவத்தில் பெரிய வராகக் காணப்பட்டார். இன் முகத்தோடு எங்களை வரவேற்றார். நண்பர்கள், வந்த காரியத்தைச் சொன்னார்கள். அவர் உடனே என்னைப் பரிசோதித்துப் பார்த்தார். ரத்தப் போக்கு நீங்க ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் பயணத்தை மேற் கொள்ள இருக்கிறீர்கள். வழியில் ஊசி போட்டுக்கொள்வதென்பது முடியாது. எனவே பன்னிரண்டு (கண்ணாடி) குப்பிகள் அடங்கிய ஓர் அட்டைப் பெட்டியைக் கொடுக்கிறேன். வழியில் தினம் இரண்டு வேளை அந்தக் குப்பி யிலுள்ள திரவ ரூபமான மருந்தைத் தண்ணீரில் கலந்து சாப்பிட்டுக் கொண்டு போங்கள். பயணத்திற்குக் குந்தக மில்லாமல் இந்த மருந்து உங்களுக்குத் துணைசெய்யும் என்று சொல்லிக் கொடுத்தார். கூடவே, இவருக்கு வண்டி வசதி தேவை என்று சர்டிபிகேட்டும் எழுதிக் கொடுத்தார். ‘சர்டிபிபேட்டுக்கு ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா? என்று கேட்டேன். தேவை யில்லை என்று கூறியதுடன், நடைப் பயணம் இனிது நிறைவேறும். சௌக்கியமாக ஊர் போய்ச் சேருவீர்கள்; கவலை வேண்டாம் என்று ஆறுதலாகவும் சொன்னார். டாக்டர் சர்டிபிபேட் பெற்ற பிறகு, எனக்கு நோயாளி அந்தது ஏற்பட்டது. டாமு முகாம் அதிகாரிகள் முகாமுக்கு வந்திருக்கும் அகதிப் பிரயாணிகளில் யாருக்கு வண்டி தேவைப்படுமென்பதற்கு அன் றாடம் ஒரு ஜாபிதா தயாரித்து வெளியிட்டு வந்தார்கள். இந்த ஜாபிதாவை அடிப்படையாகப் கொண்டு வாடகை வண்டிகள் முகாமுக்குத் தருவிக்கப் பட்டன. இந்த ஜாபிதாவில், எங்கள் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எனக்கும் வண்டி கிடைக்கச் செய்ய மேற்படி நண்பர்கள் இருவரும் தளர்ச்சி யடையாமல் முயற்சி செய்தனர். அகதிகள் முகாமுக்கு நடையாக நடந்து வெற்றியும் அடைந்தனர். ஆனால் இதற்காக எங்கள் குழுவினர் அனைவரும் இரண்டு நாள் முகாமில் காத்துக் கிடக்க வேண்டியிருந்தது. ஏனென்றால், மறுநாளைக்கு இத்தனை வண்டிகள் தேவை என்று முந்திய நாளே அதிகாரிகள் தெரிவித்த போதிலும் அத்தனை வண்டிகளும் சில சமயங்களில் மறுநாளே கிடைப்ப தில்லை. நாலைந்து வண்டிகள் கிடைக்காமல் போகும். சில நாட்களில் அதிகப்படியான வண்டிகள் முகாமில் வந்து நிற்கும். எல்லாம், வண்டிக்காரர்களின் அன்றாட மனப்பான்மையைப் பொறுத்திருந்தது. அதிகாரிகளால், அவர்களை ஒரு கட்டுத் திட்டத்திற்கு உட்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை நிலவியிருந்தது. இதனால் எங்கள் குழுவினர் அனைவரும் முதல் நாள், அதாவது நாங்கள் டாமுவுக்கு வந்து சேர்ந்த மறுநாள் (10 - 4 - 42) முற்பகல் தபால் நிலைய ஜாகையில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு மூட்டை முடிச்சுக்களுடன் அகதிகள் முகாமுக்குச் சென்றோம். சென்று அங்கு, கொளுத்தும் வெயிலில் வண்டிக் கிடைக்குமா என்று தவங் கிடந்தோம், என்றால், கண்களை மூடிக் கொண்டு அல்ல; திறந்த கண்கள் திறந்த படிதான் இருந்தன. அப்பொழுது இந்த முகாம் எங்களுக்கு எப்படிக் காட்சி யளித்ததென்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? முகாமின் ஒரு பக்கத்தில் சிற்றருவியொன்று, மனக்கலக்க மடைந் தவர்கள் தளர்ந்து நடப்பதுபோல், கலங்கிய நீரைத் தாங்கிக் கொண்டு நிதானமாகச் சென்று கொண்டிருந்தது. ஆங்காங்கு மரங்கள், ஆயுதமிழந்த போர் வீரர்கள் தம்பித்து நிற்பது போல், ஆடாமல் அசையாமல் நெட்ட நெடிய நின்று கொண்டிருந்தன. பணமிருந்தும் மனமில்லாதவர்கள் எப்படித் தயங்கித் தயங்கிப் பிறர்க்குக் கொடுப்பார்களோ அப்படி இந்த மரங்களினுடைய அளவிலும் எண்ணிக்கையிலும் குறைவாயிருந்த இலைகள் லேசாக அசைந்து அசைந்து நிழல் கொடுத்துக் கொண்டிருந்தன. மரங் களுக்கும் நடு நடுவே, அகதிகள் குடும்பம் குடும்பமாக அல்லது தனித் தனிக் குழுவினராகத் தங்களிடம் அதிகப்படியாயிருந்த துணி களினால். மேலுக்கும் சுற்றுப்புறத்திற்கும் மறைப்பு அமைத்துக் கொண்டு உண்ணல், உறங்கல் முதலிய எல்லா அலுவல்களையும் இங்கேயே நடத்தி வந்தனர். இவர்களிடையே அவ்வப் பொழுது நடைபெற்ற சல்லாபங்களும் சில்லறைச் சண்டைகளும், இவற்றின் விளைவாக எழுந்த சிரிப்பொலியும் அழுகைக் குரலும், தரையில் ஆங்காங்குச் சிதறிக் கிடந்த சோற்றுப் பருக்கைகளையும், தின் பண்டங்களின் துண்டங்களையும் கண்டு வட்டமிட்ட வண்ண மிருந்த காக்கைகளின் இரைச்சலோடு அந்தப் பருக்கைகளையும் துண்டங்களையும் தத்திக் தத்தி வந்து கொத்திக் கொண்டுபோக முயன்ற பல ஜாதிக் குருவிகளின் கீச்சுக் கீச்சு சப்தத்தோடும் முறையே போட்டியிட்டுக் கொண்டிருந்தன. பலவித துர்நாற்றங்கள் ஒன்று சேர்ந்து எழுந்து அங்கிருந்தவர்களுடைய நாசித் துவாரங்களின் நுண்ணுணர்வைப் பரிசோதித்துக் கொண்டிருந்தன. தவிர, காலரா தேவதை, இந்த முகாமைத் தனது இருப்பிடமாக அமைத்துக் கொண்டிருந்தாள். இவள் பலி கொண்ட அநேகருடைய சவங்கள், நாங்கள் அங்குத் தங்கியிருந்த சமயத்தில் எடுத்துச் செல்லப்பட்டன. இவற்றை எரிப்பார்களா, புதைப்பார்களா என்ற விவரங்கள் எங்களுக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலும் எங்களுக்கு உண்டாக வில்லை.  28. கறுப்பு - வெளுப்பு வழிகள் முதல் நாள் (10 - 4 - 42) முற்பகல் முகாமுக்குச் சென்ற நாங்கள், மாலை வரை அங்கேயே காத்துக் கிடந்து, அன்று புறப்படுவது அசாத்தியம் என்று தெரிந்ததும் தபால்நிலைய விடுதிக்குத் திரும்பி வந்தோம். அன்றிரவு எங்களில் யாரும் தூங்கவில்லை. மே மாதத் தொடக்கத் திலேயே மழை தொடங்கி விடக்கூடுமென்றும், அப்படித் தொடங்கி விட்டால் பயணம் செய்வது கடினமாயிருக்கு மென்றும்; ஏனென்றால், மலைவழி சறுக்கலாய் இருக்குமென்றும், எங்களுக்குச் சொல்லப்பட்ட படியால், அதற்குள், அதாவது மழை தொடங்கு வதற்குள் இந்தியா போய்ச் சேர்ந்துவிட வேண்டுமே யென்று எங் களுக்குக் கவலையாயிருந்தது. இந்தக் கவலையினாலோ என்னவோ எங்களுக்குத் தூக்கம் வரவில்லை. மறுநாள் (11 - 4 - 42) விடியற் காலையிலேயே மேற்படி மா. வும், ரா. வும் முகாமுக்குச் சென்று, முகாம் அதிகாரிகளைச் சந்தித்து எங்கள் நிலைமையை விளக்கிக் கூறினர். அந்த அதிகாரியும் மனமுவந்து அன்று மாலைக்குள் வண்டிக்கும் கூலியாட்களுக்கும் ஏற்பாடு செய்வதாக ஒப்புக் கொண்டார். இதைக் தெரிந்து கொண்டு நண்பர்கள் இருவரும் தபால் நிலைய விடுதிக்குத் திரும்பி வந்து, விரைவில் சமையல் சாப்பாட்டை முடித்துக் கொண்டு முகாமில் ஆஜர் கொடுப்பதற்கு அனைவரையும் துரிதப்படுத்தினர். நாங்களும் அப்படியே பகலுக்கு மேல் முகாமுக்குச் சென்று நேற்றுப் போல் காத்துக் கிடந்தோம். நல்ல வேளையாகச் சாமான் களைக் கூடவே எடுத்துச் செல்ல வில்லை. அன்றைய தினம் பிரயாணப் படுவது சாத்தியமாயிருக்குமா என்பது எங்களுக்குச் சந்தேகமாயிருந்தது. நாங்கள் சென்றதும் எங்களைப் பார்த்த முகாம் அதிகாரிகளில் ஒருவர் எங்களிடம் வந்து, வண்டியில் செல்ல வேண்டியவர் யாரார் என்று கணக்கெடுத்துக் கொண்டார். பெண்கள் மூவர்; குழந்தைகள் மூவர்; நோயாளி சர்டிபிகேட் பெற்ற நான் ஒருவன்; ஆக ஏழு பேர். இவர் களத்தனை பேருக்கும் ஒரு வண்டிதான் அனுமதிக்க முடியு மென்றும், எங்கள் சாமான்களைத் தூக்கிச் செல்ல ஆறு கூலி யாட்கள் தரப்படுவார்களென்றும், அன்று மாலையே புறப்படு வதற்குத் தயாரா யிருக்க வேண்டுமென்றும் அதிகார தோரணையில் சொல்லிவிட்டுச் சென்றார். இதைத் தெரிந்து கொண்டு நாங்கள் அனைவரும் தபால் நிலைய விடுதிக்குத் திரும்பி வந்து அவசர அவசரமாக மூட்டை முடிச்சுக்களைக் கட்டினோம். லேசாக ஆகாரம் செய்து கொண்டோம். குழந்தைகள் ராத்திரி ஆகாரம் கேட்குமோ என்று எண்ணி ஒரு சிறிய பாத்திரத்தில் மோரில் கலந்த சோற்றை நிரப்பிக் கொண்டோம். இப்படி முன்னேற்பாடுகள் சிலவற்றைச் செய்து கொண்டு மாலை ஐந்தரை மணி சுமாருக்கு முகாம் போய்ச் சேர்ந்தோம். எங்களுக்கென்று பிரத்தியேகப் பட்டிருந்த வண்டியைப் போல் சுமார் ஐம்பது வண்டிகள் தயாராக இருந்தன! கூலியாட்களும் தயாராகி இருந்தனர். இந்த இடத்தில், வேறொரு விஷயத்திற்குத் திரும்புவோம். டாமுவில் நாங்கள் தங்கியிருந்த பொழுது, அங்கிருந்த இந்தியாவின் கிழக்குப் பக்க எல்லைப் பிரதேசத்தைச் சேர்ந்த வான் சிங் என்ற ஊர் வரையில் இரண்டு வழிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று கேள்விப் பட்டோம். ஒன்று கறுப்புவழி; மற்றொன்று வெளுப்பு வழி. கேட்பதற்கு விசித்திரமாக இல்லையா? வழிகளிலே கூட கறுப்பு வழியென்றும், வெளுப்பு வழியென்றும் இரண்டு வழிகள் உண்டா? என்று யாருக்குமே கேட்கத் தோன்றும். அதாவது சுதேசிகளாகிய இந்தியர்கள் செல்வதற்கு ஒரு வழி, கறுப்பு வழி; விதேசிகளாகிய ஐரோப்பியர்கள் செல்வதற்கு ஒரு வழி, வெளுப்பு வழி. இப்படி இரண்டு வழிகளுக்கும் பொருள் சொல்லப் பட்டது. ஆனால் இந்தப் பிரிவினை முறையில் வழிகள் அமைக்கப்பட வில்லை. அப்படி அமைக்கப்பட்டிருந்தால் யார் எந்த வழியில் செல்லலா மென்பது தெளிவாகத் தெரிந்து விடுமல்லவா? அப்படிக்கின்றி சாதாரண ஜனங்கள் செல்வதற்கான வழியென்றும், கனவான்கள் செல்வதற் கான வழியென்றும் நடைமுறையில் பிரிக்கப்பட்டிருந்தன. கனவான்கள் யார்? அரசாங்க கெஜட்டில் இடம் பெறத் தகுதி படைத்த உயர்தர உத்தியோகதர்கள், மேனாட்டு முறையில் வைத்தியத் தொழில் நடத்தும் டாக்டர்கள், வக்கீல்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஆகிய இப்படிப் பட்டவர்கள் மட்டுமே கனவான்கள். இவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சாதாரண ஜனங்கள். இந்தச் சாதாரண ஜனங்களென்போர், எவ்வளவு செல்வம் படைத் தவர்களாயிருந்தாலும் சரி, சமுதாயத்தில் எவ்வளவு செல்வாக்கு டையவர்களாயிருந்தாலும் சரி, எத்தனை தான தருமங்களைச் செய்தவர்களாயிருந்தாலும் சரி, எத்தகைய மேலான குண நலன்கள் பெற்றவர்களாயிருந்தாலும் சரி, சாதாரண ஜனங்களின் வருக்கத்தில் சேர்ந்தவர்களாகவே கணிக்கப்பட்டார்கள். கனவான் களென்று கணிக்கப்பட்டவர்கள், எவ்வளவு இழிகுணம் படைத்தவர்களா யிருந்தாலும் சரி, பிறர் வயிற்றை அடித்துத் தம் வயிற்றை நிரப்பிக் கொள்கிறவர்களாயிருந்தாலும் சரி, கனவான்கள்தான். ஆங்கிலோ இந்தியர்களில் காக்கை நிறமுடையவர்களாயிருந்தாலும் சரி, பிச்சை எடுக்கிறவர்களாயிருந்தாலும் சரி, வெள்ளைக்கார வருக்கத்தில் சேர்ந்தவர்கள்தாம். இவர்களனைவருக்கும் வெளுப்பு வழி, இப்படிப் பிரித்து வழிகளை வகுத்த பெருமகனுக்கு என்ன சம்மானம் கொடுப்பது? கருப்பு வழியென்பது, சுற்றி வளைத்துச் செல்வது; சுமார் ஐம்பது மைல் தூரம் ஏற்றமும் இறக்கமுடையது. வழியில் தங்கு மிடங்களாக முகாம்களாக அமைக்கப்பட்டிருந்தவை வசதிக் குறை வானவை. வெளுப்பு வழி யென்பது சுமார் முப்பது மைல் தொலை வுடையது மட்டுமே. கூடிய மட்டில் நிரவலான வழி. முகாம்களும் வசதியாக அமைக்கப்பட்டிருந்தன. கூட்டமும் அதிகம் இல்லை. நல்ல விதமான உணவும் அளிக்கப்பட்டது. கறுப்பு வழி பிரயாணி களிற் சிலரும் பின்ன கல்கத்தாவிலோ அதற்கு முன்போ ஒன்றுகூடிய பொழுது, இரண்டு வழிகளிலும் ஏற்பட்ட அநுபவங்களைப் பரி மாறிக் கொண்டார்கள். வெளுப்புவழியாக வந்தவர்கள், தங்களுக்கு இந்த வழி கிடைத்தது, தலையத்தனை பாவத்தில் கடுகத்தனை புண்ணியம் என்று சொல்லித் திருப்திப் பட்டுக் கொண்டார்கள். எங்களுக்குக் கொடுக்கப்பட்ட வண்டியைப் போல் டாமுவி லிருந்து புறப்பட்ட எல்லா மாட்டு வண்டிகளும் கூண்டு வண்டிகள். இவற்றின் சக்கரங்கள் தேர்ச் சக்கரங்கள் மாதிரி இருந்தன. ஆரைக் கால்கள் கிடையா. இந்த வண்டிகளில் பூட்டப் பெற்ற மாடுகள், மிகக் குட்டையாகவும் இளைத்தும் இருந்தன. கசாப்புக் கடைக்கு அழைத்துச் செல்லப்படும் மாடுகளைப் பார்த்தால் எவ்வளவு பரிதாபமாயிருக்குமோ அதைப் போல் இவைகளைப் பார்க்கும் போது எங்களுக்குப் பரிதாப உணர்ச்சியே உண்டாயிற்று. ஆனால் கரடு முரடான மலைப் பாதையில் பாரத்தை இழுத்துச் செல்ல இவைகளால்தான் முடியும் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது.  29. காட்டுத்தீ அனுபவம் மூன்று பெண்டுகளையும் மூன்று குழந்தைகளையும் ஏற்றிக் கொண்டு எங்கள் வண்டி, மற்ற வண்டிகளுடன் பதினோராந் தேதி (11 - 4 - 42) மாலை, இருள் கவித்து வரும் நேரத்தில் புறப்பட்டது. புறப்பட்டுச் சிறிது தூரம் சென்றதும், வண்டியிலிருந்த பெண்டு களும், கூட வந்த நண்பர்களும், என்னையும் வண்டியிலேறி உட்காரச் சொன்னார்கள். வண்டியோ சிறிய வண்டி. தாரளமாக மூன்று பேருக்கு மேல் உட்கார முடியாது. இதில் ஏழு பேர் எப்படி அடைத்துக் கொண்டு உட்காருவது? பெண்டுகளுக்குச் சங்கடமாக இருக்குமல்லவா? எனவே வண்டியிலேறிக் கொள்வதற்கு நான் முதலில் சிறிது தயங்கினேன். ஆனால் பெண்டுகளின் வற்புறுத்தலுக் கிணங்க ஏறிக் கொண்டேன். சிறிது தூரம் சென்றதும் வண்டியில் அமர்ந்து அனுபவித்த சுகத்தைக் காட்டிலும் வண்டிச் சக்கரங்களின் அடி பெயர்ந்து அதன் பின்னாலேயே நடந்துசென்று அனுபவித்த கஷ்டமே இனிதாயிருக்கும் போல் தோன்றியது. செப்பனிடப் பெற்ற பாதையாயில்லாமலிருந்ததால், வண்டியில் அமர்ந்து கொண்டிருந் தவர்கள் தலையோடு தலை மோதிக் கொண்டார்கள். முதுகுப் பக்கம் இடித்துக் கொண்டார்கள். இவற்றின் விளைவாக ஐயோ, அப்பா என்று அடிக்கடி துன்பக் குரல் எழுப்பினார்கள். நான் மட்டும் இந்தத் துன்பங்களுக்கு விலக்காகயிருக்க முடியுமா? அனுபவித்தது போது மென்ற சலிப்புடன், வண்டியிலிருந்து இறங்கி நடக்கத் துணிந்தேன். ஒரே கும்மிருட்டு. வண்டிச் சக்கரங்கள் செல்லும் தடத்தை தவிர்த்து, மத்தியிலும் இரு மருங்கிலும் ஒரே முட்புதர்கள். சிறிது ஒதுங்கினால் கூட இந்தப் புதர்களில் இடுப்பு வேஷ்டி சிக்கிக் கொள்ளும்; கிழிந்தும் போகும்; கால்களிலும் குத்தும்; இருந்தாலும் பரவாயில்லை யென்று தீர்மானித்துக் குருடன் ஏதோ ஒன்றைப் பற்றிக் கொண்டு நிதானமாகச் செல்வது போல், நான் வண்டியின் பின்னால் ஒரு பக்க விளிம்பைப் பிடித்துக் கொண்டு நடந்து சென்றேன். கூட வந்த நண்பர்களும் எனக்கு அவ்வப்பொழுது ஜாக்கிரதை கொடுத்து வந்தார்கள். ஒன்றன்பின் ஒன்றாகச் சென்ற இந்த வண்டித் தொடருக்கு முன்னால் வட இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் - இவர்களும் அகதிப் பிரயாணிகள்தான் - டார்ச் விளக்குப் போட்டுக் கொண்டு வழிகாட்டிக் கொண்டு சென்றார்கள். பின்வருகிறவர்கள் அதைரியப்படாமலிருக்கவும் அக்கம் பக்கத்திலுள்ள காட்டு மிருகங்கள் நெருங்கி வராமலிருக்க வேண்டுமென்பதற்காகவும் அடிக்கடி, பம் மகாதேவ ஹரஹரமகா தேவ என்று குரல் கொடுத்துக் கொண்டும் போனார்கள். இருளடர்ந்த மலைக்காட்டில் நள் ளிரவில் அப்போழுது நடந்து சென்றதைப் பல ஆண்டுகளுக்கு பிறகு நினைத்தால் கூட குலை நடுங்குகிறது. சில மைல்கள் தூரம் வண்டிகள் சென்றிருக்கும். இரவு சுமார் பன்னிரண்டு மணி. எங்களுக்கு எதிர்ப்பக்கத்தில் பெரிய காட்டுத் தீ தோன்றிவிட்டது. வண்டிகளைச் சூழ்ந்து கொள்கிற மாதிரி வேகமாய்ப் பரவவும் ஆரம்பித்தது. வண்டிகளை ஓட்டி வந்தவர்கள். மீ மீ என்று கூக்குரலிட்டுக் கொண்டு வண்டிகளை வேறு வழியில் திருப்பி விட்டார்கள். பர்மிய மொழியில் மீ என்றால் நெருப்பு என்று அர்த்தம். பொய் வதந்திகள் வேகமாகப் பரவுதற்குக் காட்டுத் தீயை உதாரணமாகச் சொல்வார்கள். நேரில் பார்த்த பிறகுதான் இதன் உண்மை எனக்குத் தெரிந்தது. நாங்கள் சென்று கொண்டிருந்தப் பாதைக்குச் சுமார் மூன்று மைல்களுக்கு அப்பால் அந்தக் காட்டுத் தீ தோன்றியது. ஆனால் அது பரவி வருகிற வேகத்தினால் ஏற்பட்ட அனல் எங்களைத் தாக்கியது. அந்த நெருப்பு ஜூவாலையைப் பார்க்க எங்கள் கண்கள் கூசின. அவ்வளவு ஒளி! அவ்வளவு வேகம்! ஒரு குதிரைப் படை எப்படி வேகமாக முன்னேறி வருமோ அதைப் போல் இருந்தது. வண்டிகளில் வந்தவர்களும் கதி கலங்கிப் போனார்கள். ஆண் மக்களிற் சிலர், ஆண்டவனை வேண்டிக் கொண்டார்கள். ஒரு சிலர், என்னதான் ஆகிவிடும், உயிர்தானே போகப் போகிறது என்று விரக்தி தோய்ந்த குரலில் பெண்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். விரக்தியிலிருந்தும் ஏக்கத்திலிருந்தும் பிறந்த இந்த வார்த்தைகள் பெண்டுகளுக்கு ஆறுதல் அளிக்குமா? மேலும் மேலும் கூப்பாடு போடத் தொடங்கினார்கள். வண்டிகளோ வழியில்லாத வழியில் சென்று உள்ளிருந்தவர்களுடைய உடம்புகளை உலுக்கி விட்டுக் கொண்டிருந்தன. எனக்கென்னவோ எந்த விதமான பீதியும் ள வண்டியைப் பிடித்துக்கொண்டு சென்றேன். ஒரு கம்பளிப் போர்வையைப் போர்த்திக் கொண்டிருந்தேன். காட்டுத் தீயினால் உண்டான அனல், உடம்பின் மீது அதைப் போர்த்திக் கொள்ளாமற் செய்துவிட்டது. தவிர பக்கத்திலுள்ள முட்புதர்களில்அது அடிக்கடி சிக்கிக்கொண்டு தொல்லை கொடுத்து வந்தது. எனவே, எரிச்சல் மேலீட்டினால் அதை வண்டியில் வீசிப் போட்டு விட்டு மேல் சட்டையுடன் நடந்தேன். வண்டி ஓட்டிகள் அனைவரும் காட்டுத் தீயை நன்கு அறிந்த வர்கள். அடிக்கடி பார்த்து அநுபவம் கண்டவர்கள் அல்லவா? அது, எந்தப் பக்கம் திரும்பும்; எந்தப் பக்கம் திரும்பாது என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. இந்த அநுபவத்தை யொட்டி, வண்டிகளைக் காட்டுத் தீயைக் கடந்து கொண்டு போய் விட்டார்கள். சிறிது தூரத்திற்குப் பிறகு திரும்பிப் பார்க்கிறபோது அந்தக் காட்டுத் தீ அணைந்து வரும் அறிகுறிகள் தென்பட்டன. எங்கள் பீதியும் ஒருவாறு அணைந்து வந்தது. சுமார் ஒருமணி நேரந்தான் இந்தக் காட்டுத் தீ அனுபவம். ஆனால் இந்த ஒரு மணி நேரம் எங்களுக்கு ஒரு வருஷம் போலிருந்தது. இரவு ஒன்றரை மணி சுமாருக்கு வண்டிகள் ஓரிடத்தில் வந்து நின்றன. அங்குச் சிறிது நேரம் தங்கிக் களைப்பாறி மேற்கொண்டு பயணத்தைத் தொடங்குவதென்று வண்டிக்காரர்களுடைய திட்டம் போலும். எங்களுக்கு அது தெரியாது. அவர்களிடம் காரணத்தைக் கேட்பதற்குமில்லை. ஏனென்றால் அவர்கள் பேசும் பாஷை எங்களிற் பலருக்குப் புதிர்போல் இருந்தது. ஆகவே, வண்டிகள் நிற்கிற இடத்தில் நிற்பது மேற்கொண்டு புறப்பட்டால் புறப்படுவது என்ற திட்டத்தில் சென்றோம். எப்படியும் நடுவழியில் எங்களை இறக்கி விட்டு விட்டு, திரும்ப டாமுவுக்குச் செல்ல மாட்டார்கள் என்ற தைரியம் மட்டும் எங்களுக்கு இருந்தது. பொதுவாக அவர்கள் முகத்தில் ஒருவித பச்சாதாபக் குறி காணப்பட்டது. அவலநிலை யிலுள்ள பிரயாணிகளிடம் அவர் களுடைய கண்கள் பேசின. இரக்க உணர்ச்சி என்பது மட்டும் இருந்து விட்டால், அது வெளிப்படு வதற்கு வழிகள் தாமா இல்லை? எங்கள் வண்டியை ஓட்டி வந்தவன், நெற்பயிர் செய்யப்பட்டு வந்த ஒரு நிலத்தில், தன் வண்டியைத் தனியாகக் கொண்டுவந்து நிறுத்தினான். அந்த நிலத்தில், சுமார் ஒரு வாரத்திற்கு முன்புதான் அறுவடையாயிருக்க வேண்டும். நெல் தாளின் அடிக்கட்டைகள் பூமியில் குத்தி நீட்டி நின்றன. பூமி, பாளம் பாளமாக வெடித் திருந்தது. சந்து பொந்துகளுக்குச் சொல்ல வேண்டுமா? பனியோ, மழை மாதிரி பொழிந்து கொண்டிருந்தது. இதனால் தரை, ஒரே ஈரம். எங்கள் வண்டிக்காரன் பூட்டை அவிழ்த்துவிட்டு எருதுகளைச் சிறிது காலாற விட்டு விட்டு, ஒரு பக்கமாக உறங்கப் போய் விட்டான். எங்களுக்குத் தூக்கம் கண்ணைச் சுற்றியது. வண்டியில் வந்த குழந்தைகள் வண்டி யிலேயே உறங்கிவிட்டன. அவர்களுக்குக் கொண்டு வந்த ஆகாரத்தைத் கொடுப்பதற்குக் கூட முடியவில்லை. மோரில் கலந்த அந்தச் சோறு கொட்டிப் போய்விட்டது. அப்படிக் கொட்டிப் போனதில் பெரும் பகுதி, நான் வண்டிக்குள் வீசிப் போட்டிருந்த கம்பளிப் போர்வை யில் அடைக்கலம் புகுந்து கொண்டது போலும். பிறகுதான் இது எனக்குத் தெரிந்தது. பெண்டுகள் மூவரையும், வண்டியின் அடியில் பூமி மீது படுத்துக் கண்ணயருமாறு சொன்னோம். ஆண்களாகிய நாங்கள் ஐவரும் அவர்களுக்குக் காவல் காத்து நிற்க முடியுமா? எங்கள் தேகம், எங்கள் சுவாதீனத்தில் இல்லை. எங்கள் தலை எங்களை யறியாமலே சாய்ந்து கொடுத்தது. உறக்கம் கீழே தள்ளியது; படுத் தோம். வெடித்துக் கிடந்த பூமி எங்களுக்குப் பயமாக அமைந்தது. வெடிப்புக்களில் பூச்சி பொட்டுகள் இருக்குமோ என்ற எண்ணம் கூட உண்டாகவில்லை. குத்திட்டு நின்ற நெல் தாளின் அடிக் கட்டைகள் எங்கள் முதுகுப் பக்கத்தில் சொரணை இருக்கிறதா என்று அடிக்கடி பதம் பார்த்தன. பனியோ, எங்கள் உடலின் உஷ்ணத்தைத் தணிப்பதில் சிரத்தைக் காட்டியது. போதாக் குறைக்குச் சில் என்று காற்று வேறே. இந்த நிலையில் நான், என் உடம்பைப் போர்த்திக் கொள்ள விரும்பி வண்டியில் வீசியெறிந்து விட்டிருந்த கம்பளிப் போர்வையை எடுத்தேன். அது மோர்ச் சாதம் பட்டு நனைந் திருந்தது. சோற்றுப் பருக்கைகள் நிறைய ஒட்டிக் கொண்டிருந்தன. என்ன செய்வது? போர்வையில்லாமல் படுக்க முடியாது போலிருந்தது. எனவே அதை - போர்வையை நன்றாக உதறி போர்த்துக் கொள்வதற்குத் தகுதியுடையதாகச் செய்துகொண்டு, படுப்பதற்காக ஓரிடத்தில் சென்று தரையில் இரு கைகளை ஊன்றிக் கொண்டு அமர்ந்தேன். கடவுளே! இரண்டு உள்ளங் கைகளிலும் மலம் ஒட்டிக் கொண்டுவிட்டது. அதிவிருந்து ஊரார், அறுவடை யாகி முடிந்திருந்த இந்த நிலங்களை மலங் கழிக்கும் இடமாக உபயோகித்து வந்திருக்கிறார்கள். அந்த இருட்டில் - அக்கம் பக்கத் திலிருக்கிறவர்களைக் கூடச் சரியாகப் பார்க்க முடியாத இந்தக் கும்மிருட்டில் - தரை மீது என்ன இருக்கிறதென்று பார்க்க முடிகிறதா? கைகளைக் கழுவிக் கொள்ளலாமென்றால் தண்ணீர் ஏது? தரையிலே நன்றாகத் தேய்த்து உதறிவிட்டு, சுத்தப்படுத்திக் கொண்டு விட்ட தாகத் திருப்தி யடைந்தேன். கம்பளியைப் போர்த்திக் கொண்டு வரப்பில் தலைவைத்துப்படுத்ததுதான் தெரியும். சிறிது நேரங் கழித்துக் கண் விழித்துப் பார்க்கிறபோது அருணோதயமாகி விட்டி ருந்தது. வண்டிக்காரனும் எங்களைத் துரிதப்படுத்தினான். மற்ற வண்டிகளோடு எங்கள் வண்டி, பெண்டுகள், குழந்தைகள் சகிதம் புறப்பட்டது. இந்த இடத்திலிருந்து அடுத்த முகாம் வரை பாதை மேடு பள்ளங்கள் அதிகமில்லாமல் கூடியமட்டில் சம தரையாக இருந்தது. இதனால் வண்டியில் அமர்ந்திருந்த பெண்டுகள் அதிக சிரமத்தை வெளிப்படுத்த வில்லை. நடந்து சென்ற ஆண் பிள்ளைகளாகிய எங்கள் ஐவருக்கும் சிரமம் தெரியவில்லை. அடுத்த முகாம் வரையில் ஒரே தேக்க மரக் காடு. ஒவ்வொரு மரமும் எவ்வளவு உயரம்! எவ்வளவு பருமன்! இரண்டு பேர் கைகளை நீட்டிக் கோத்துக் கொண்டு அணைத்தால் கூட அணைப் பிற்குள் அடங்காத அவ்வளவு பருமன்! எல்லாம் வைரம் பாய்ந்த மரங்கள். இவைகளை ஒரு பிரிட்டிஷ் கம்பெனி குத்தகைக்கு எடுத்து நல்ல லாபம் சம்பாதித்து வந்தது. இந்தக் கம்பெனியார், ஒவ்வொரு மரத்திற்கும் முத்திரை போட்டிருந் தார்கள். உலகத்திலுள்ள பல நாடுகளும், கப்பல் கட்டுவதற்காக இந்த பர்மா தேக்கையே பெரிதும் உபயோகித்து வந்தன என்பது இங்குக் குறிப்பிடத் தக்கது. இந்தக் தேக்க மர இலைகள்தாம் எவ்வளவு பெரியவை! ஓர் இலையை நான்காகத் துண்டித்துப் போட்டுக் கொண்டு நான்கு பேர் தாராளமாகச் சாப்பிடலாம். வழியில் சாப்பிடுவதற்கு இந்த இலை களைத்தான் நாங்கள் பெரும்பாலும் உபயோகப்படுத்திக் கொண்டோம். இந்த இலைக்கு ஒரு புனிதத் தன்மை உண்டென்று சொல்லலாம். சித்திரகூடப் பர்வதத்தில் ராமனும் சீதையும் தங்கு வதற்கென்று லட்சுமணன் அமைத்த பர்ணசாலைக்கு, இந்தத் தேக்க மர இலை யல்லவோ மேற்கூரையின் அடித்தளமாயமைந்தது? அறத்திற்கும், அன்பிற்கும் அச்சாணியாக அவதரித்த அந்தப் புண்ணிய தம்பதிகளுக்கும் நிழல் கொடுத்துப் புண்ணியம் சம்பாதித்துக் கொண்டதல்லவா அது?  30. நாகர்களும் மணிப்பூரிகளும் 1942 - ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் பன்னிரண்டாந் தேதி முற்பகல் சுமார் பத்து மணிக்கு வக்ஸு என்ற கிராமத்தையொட்டி அமைக்கப் பட்டிருந்த முகாமுக்கு வந்து சேர்ந்தோம். இந்த இடத்திற்குச் சுமார் இரண்டு மைல் முந்தியே இந்தியாவின் எல்லை ஆரம்பித்து விடுகிறது. அதாவது இந்தியாவின் எல்லைக்குள் இரண்டு மைல் தூரம் வந்தால் இந்த வக்ஸு இருக்கிறது. நாங்கள் இந்த வக்ஸு கிராமத்திற்குள் சென்று பார்க்கவில்லை. பார்ப்பதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிட்டவில்லை. இந்தக் கிராமத்திலிருந்துதான் நாகலாந்து என்ற பிரதேசம் ஆரம்பிக்கிறது. இந்த வக்ஸு முகாமில் நாகர்கள், மணிப்பூரிகள் முதலிய இனத்தினரைப் பார்த்தோம். நாகர்களில் பல பிரிவினர் உண் டென்றும், ஒவ்வொரு பிரிவினருடைய பழக்க வழக்கங்கள், நடை உடைகள் முதலியன வேறுபட்டவையென்றும் தெரிந்து கொண்டோம். முகாமில் நாங்கள் பார்த்த நாகர்களிற் பலர் பிறந்த வடி வத்துடனேயே காட்சியளித்தார்கள். இவர்களுக்குப் பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரிகள், இடுப்பின் கீழ் முன் பாகத்தை மட்டும் மறைத்துக் கொள் வதற்காக ஒரு சாண் அகலமுள்ள சிவப்புத் துண்டுகளை அளித்திருந் தார்கள். அத்துண்டுகளைச் சரியாக உப யோகித்துக் கொள்ள கூட இவர்களுக்குத் தெரியவில்லை. பொதுவாக இந்த நாகர்கள் நரமாமிச பட்சணிகள்; முரட்டுச் சுபாவமுடையவர்களாகக் காணப்பட்டார்கள். இவர்களால் அகதிப் பிரயாணிகளுக்கு எவ்விதத் தொந்தரவும் ஏற்படக்கூடா தென்பதற் காக அரசாங்க அதிகாரிகள் வழி நெடுக இருந்த இவர்களுடைய கிராமங்களைச் சுற்றி வேலி போட்டு வைத்திருக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார்கள். தவிர அந்தக் கிராமத் தலைவர்களிடமிருந்து பிரயாணிகளுக்கு எந்த விதமான தொல்லையும் உண்டாகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டுமென்று உறுதிமொழியும் வாங்கி இருந்தார்கள். இந்த நாகர்கள் முரட்டுச் சுபாவமுடையவர்களாகக் காணப் பட்டபோதிலும் நெருங்கி லேசாகப் பரிச்சயம் செய்து கொண்டு பார்த்தால் ஒருவகைக் கட்டுப்பாட்டுக்குட்பட்டவர்களென்பது தெரியும். நாகரிக வேஷத்தை இவர்கள் போட்டுக் கொள்ளவில்லை யானாலும் நாகரிகப் பண்புகள் சில இவர்களிடம் காணப்பட்டன. இவர்களிற் பலரும் நடுத்தர உயரந்தான்; ஆனால் நல்ல தேகக்கட்டு டையவர்கள். எவ்வளவு தொலைவானாலும் எவ்வளவு பெரிய சுமையானாலும் அலுப்பின்றித் தூக்கிச் செல்லக் கூடியவர்கள். இந்த நாகர்கள், நவீன நாகரிகத்திற்கு எவ்வளவு தொலைவில் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதற்கு, ஒரு வேடிக்கையான உதாரணம். வக்ஸு முகாமை விட்டுப் புறப்படவிருந்த தினத்தன்று காலை, நான் முக க்ஷவரம் செய்து கொள்வதற்காக, கையோடு எடுத்து வந்திருந்த முகம் பார்க்கும் கண்ணாடி, சோப்பு முதலிய உப கரணங்களை என் முன்னாடி பரப்பி வைத்துக் கொண்டு உட் கார்ந்தேன். கண்ணாடியில் பார்த்துக் கொண்டே முகத்திற்கு சோப்பு தடவிக் கொண்டேன். நுரை வந்தது. அதைப் பார்த்துக் கொண்டி ருந்த நாகர்கள் சிலர் என்னைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். கண்ணாடியில் என் முகம் தெரிவதைப் பார்க்கிறார்கள்; கூடவே என்னைப் பார்க்கிறார்கள், சோப்பு நுரையை என் கன்னங்களி லிருந்து வழித்தெடுத்து, தங்கள் முகத்திலும் கைகளிலும் தடவிக் கொள்கிறார்கள். அதன் வாசனையை முகர்ந்து முகர்ந்து பார்க் கிறார்கள். எல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது அவர்களுக்கு. ஒருவன் துணிந்து முன்வந்து தனக்குச் சோப்புக் கட்டியைக் கொடுக்கும்படி என்னைக் கேட்டான். மறுக்க மனம் வரவில்லை. கொடுத்துவிட்டேன். ஆனால் இவற்றை இலவசமாகத் தரும்படி அவர்கள் கேட்கவில்லை. பணம் தருவதாக சமிக்ஞைகள் மூலம் தெரிவித்தார்கள். இந்த ஒன்றைக் கொண்டு அவர்கள் எவ்வளவு தன்மான உணர்ச்சியுடை யவர்கள் என்பதை நான் ஒருவாறு தெரிந்து கொண்டேன். நான் பணம் வாங்குவேனா? பணம் வாங்கிக் கொண்டால் என்னை அவர்கள் எப்படி மதிப்பார்க ளென்பது எனக்குத் தெரியாதா? நானும் பணம் வேண்டாமென்று சமிக்ஞை மூலம் தெரிவித்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சியைச் சொல்லவா வேண்டும்? இந்த மாதிரி, சில மலிவான பொருள்களைக் கொடுத்துப் பாதிரிமார்கள் நாகர்களைக் கிறிதுவ மதத்தில் சேர்த்து விடு கிறார்கள் என்று நாங்கள் அப்பொழுது கேள்விப்பட்டோம். இதற்குச் சாட்சி கூறுவதுபோல், நாகர்களிற் சிலர் கழுத்தில் சிலுவை கட்டிக் கொண்டிருந்தார்கள். மணிப்பூரிகள், முழங்கால்வரை வரும்படியாக முரட்டுத் துணியைக் கச்சமாகக் கட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லாம் கையினால் நூற்று நெய்யப்பட்டவை. இந்தியாவில் காந்தியடி களுக்குப் பிறகுதான் கதருக்கு அரசியல் முக்கியத்துவம் ஏற்பட்டது. பிரபலமுமடைந்தது. இந்த மணிப்பூரிகளோ நெடுங்காலமாகக் கதரைத் தவிர வேறொன்றையும் உடுத்தாதவர்களாக இருந்திருக் கிறார்கள். இவர்களில் அனேகர் பூணூல் அணிந்து கொண்டிருந் தார்கள். மற்றும் இந்த மணிப்பூரிகள் நாகர்களைப் போல அவ்வளவு முரட்டு சுபாவ முடையவர்களாகக் காணப்படவில்லை, பிறரிடத்தில் தயை காட்டும் பண்புடையவர்களென்று இவர் களுடைய முகத் தோற்றம் கட்டியங் கூறிக் கொண்டு நின்றது. தெய்வ பக்தி மிக்கவர் களாகவும், தூய்மைக்கும் அழகுக்கும் ஓரளவு மதிப்புக் கொடுத்து வருகிறவர் களாகவும், பிறருக்குத் தங்களாலான உதவியைச் செய்ய வேண்டு மென்பதில் விருப்பமுடையவர்களாகவும் காணப் பட்டார்கள். நல்ல திடகாத்திர முடையவர்களாயிருந்த படியால் கடினமான வேலைகளுக்கு அஞ்சாதவர்களென்று இவர்களை மேலோட்டமாகப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். அகதிகளாக வரும் பிரயாணிகளையும் அவர்களுடைய சாமான் களையும் தூக்கிச் செல்ல இந்த மணிப்பூரிகளையும் நாகர் களையும் ஒப்பந்தக் கூலிகளாகப் பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரிகள் ஏற்பாடுசெய்து வைத்திருந்தார்கள். வக்ஸு முகாமை யொட்டி ஒரு சிறு வாய்க்கால் ஓடிக் கொண் டிருந்தது. இதன் இருமருங்கிலும், நெடிய மரங்களும் படர்ந்த செடிகளும் பசுமையைப் பொழிந்து கொண்டிருந்தன. வாய்க்காலில் சுத்தமான நீர் ஓடிக் கொண்டிருந்தது. இதனை முகாமுக்கு வரு கிறவர்கள் அசுத்தமாக்கி விடாதபடிப் பார்த்துக் கொள்ள கூர்க்க சிப்பாய்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். முகாம் வாசிகள் குடி தண்ணீருக்கு இதனை உபயோகித்துக் கொள்ளட்டும் என்பதற் காகவே இந்த ஏற்பாடு. ஆனால் இந்த ஏற்பாட்டை எவ்வளவு தூரம் அலட்சியப்படுத்துகின்ற முறையில் முகாம்வாசிகள் நடந்து கொண்டார்களென்று வெட்கத்துடன் இங்குக் குறிப்பிட வேண்டி யிருக்கிறது. முகாமில், பிரயாணிகள் தங்குவதற்கென்று, பெரிய கொட்ட கைகள் அமைத்து, தரைக்கு மேலே சுமார் இரண்டரை அடி உயரத் திற்கு மூங்கில் கழிகளை நிறுத்தி அவற்றின்மீது மூங்கில் பிளாச்சு களை வரித்துக் கட்டிப் பரப்பியிருந்தார்கள். தென்னங் கீற்றை மேல் கூரையாக வேய்ந்திருந்தார்கள். அதற்கு மேல் நெட்ட நெடிய வளர்ந்திருந்த தேக்கு, பாலை முதலிய பல வகை மரங்கள் விதானமிட்டுக் கொண்டிருந்தன. மூங்கிற் பரப்பு, சிறிது ஏற்றக் குறைச்சலாக அமைந்திருந்ததனால், படுப்பதற்கோ உட் கார்ந்து இளைப்பாறுவதற்கோ அதிக சௌகரியமாக இருக்க வில்லையானாலும், சமனாக்கப்படாத தரை மீதிருந்து பொழுதைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாமலிருந்தது. இந்த ஏற் பாட்டைச் செய்த முகாம் அதிகாரிகளுக்கு மனத்திற்குள்நன்றி செலுத்திக் கொண்டு வந்து சேர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் சமையல் சாப்பாட்டுக்கான முதீப்புகளைச் செயத் தொடங் கினோம். எல்லாம் திறந்த வெளியில்தான். கொட்டகைக் குள் சமையல் சாப்பாடுகளை வைத்துக்கொள்ளக் கூடாதென்று முகாம் அதிகாரிகள் உத்தர விட்டிருந்தார்கள். ஆண்பிள்ளைகளாகிய நாங்கள் மூலைக்கொருவராகச் சென்று சுள்ளிகளைப் பொறுக்கி வந்தோம். பெண்டுகள் ஓர் இடம் பார்த்து அதைத் துப்புரவு செய்து பள்ளம் பறித்து அதையே அடுப்பாக உபயோகித்தார்கள். சமையல் தொடங்க நண்பகலாகி விட்டது. அப்பொழுது ஒருவிதப் பேய்க் காற்றெடுத்து, புழுதி மண்ணை வாரி இறைத்துக் கொண்டிருந்தது. சூரியன் உஷ்ணத்தைக் கக்கிக் கொண்டிருந்தான். தரையில் கால் வைத்தால் தணற் பரப்பில் வைக்கிற மாதிரி இருந்தது. முகாமில் தங்கியிருக்கும் பிரயாணிகள், மேற்கொண்டு பயணத்தைத் தொடங்குவதற்காக, அங்கு மிங்கும் ஓடியாடிக் கொண்டிருந்தார்கள், சிலர், நோய் வாய்ப்பட்டவர் களாய் முணங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த இடத்திலேயே மற்றவர் களுக்கு ஏற்படக் கூடிய அருவருப்பைப் பொருட்படுத் தாமல், நாணமோ, கூச்சமோ இன்றி மலஜலங் கழித்துக் கொண்டி ருந்தார்கள் சிலர். மற்றொரு பகுதியில் ஐயோ, என்று சொல்லி அழுவதற்குக்கூட ஆளில்லாமல், இறந்து போனவர்களைத் தூக்கிச் சென்றார்கள். சவங் களைத் தூக்கிச் செல்வதற்கென்று நியமிக்கப் பட்டிருந்த கூலியாட்கள். இந்தக் கதம்பக் காட்சிக்கு மத்தியில் எங்கள் சமையல் சாப்பாடு எல்லாம் நடைபெற வேண்டியிருந்தது. என்ன செய்வது? கூசிக் குலைந்து கொண்டிருந்தால் பட்டினி கிடக்க வேண்டியதுதான். அப்படிக் கிடக்க எங்கள் வயிறு மறுத்துவிட்டது. ஏதோ ஒருவகையாக அன்றையச் சாப்பாட்டை முடித்துக் கொண்டோம்.  31. டோலிகள் கிடைத்தன வக்ஸுவோடு வண்டிப் பயணம் முடிந்துவிட்டது. இனி நடைதான். ஆனால் அதுவரை யாரார் வண்டியில் வந்தார்களோ அவர்களுக்கு மட்டும் அரசாங்கச் செலவில் டோலி வசதி செய்து தரப்படுமென்றும், கூடவே, சாமான்களைத் தூக்கச் சில கூலி யாட்கள் தனியாக அனுமதிக்கப் படுவார்களென்றும் அறிவிக்கப் பட்டிருந்தது. இது தெரிந்து, என் நண்பர்கள், பகல் சாப்பாட்டுக்கும் பிறகு டோலி பயணத்திற்கு ஏற்பாடு செய்வதில் முனைந்தார்கள். டோலி என்றால், கட்டுக் கோப்பாயமைந்த சிவிகை என்று எண்ணி விடாதீர்கள். மூங்கில் கழிகளைக் கொண்ட ஒரு சப்பரம் என்று சொல்லலாம். வக்ஸுவிலிருந்து சுமார் பத்துப் பன்னிரண்டு மைல் வரையில் நெருக்கமான மூங்கில் காடு. பகல் நேரத்தில் கூட இந்தக் காட்டில் சூரிய வெளிச்சத்தைக் காண்பது அரிது. சிள் வண்டுகள் சதா கிறீச் சிட்டுக் கொண்டிருக்கும். சில சமயங்களில் மூங்கில்கள் ஒன்றோ டொன்று உராய்ந்து அதன் விளைவாக நெருப்புப் பற்றிக் கொண்டு விடும். அதிர்ஷ்ட வசமாக, நாங்கள் சென்ற போது நெருப்பு ஏதும் உண்டாகவில்லை. வக்ஸுவுக்குப் பத்துப் பன்னிரண்டு மைல்களுக்கு அப்பாலி ருந்து மணிப்பூர் சமதானத்தைச் சேர்ந்த வான்சிங் என்ற ஊர் எல்லை வரையில் இடையிடையே மூங்கிற் காடுகளைத் தவிர, தேக்க மரக்காடுகளையும் பார்த்தோம். இந்தத் தேக்க மரக் காடுகள் அஸாம் பிரதேசத்தில் ரெயில் மார்க்கமாக வரும்பொழுது பல பகுதிகளிலும் தொடர்ந்து காணப்பட்டன. ஆனால், பர்மா தேக்குக்கும் அஸாம் தேக்குக்கும் எவ்வளவோ வித்தியாசம். முன்ன தன் பருமன், உயரம், உறுதி ஆகிய இவைகளை உத்தே சிக்கையில், பின்னது ஒரு பிஞ்சு அல்லது சிறு குழந்தை என்றே சொல்ல வேண்டும். இது இருக்கட்டும். டோலி தூக்க அமர்த்தப்பட்டவர்கள் அருகிலுள்ள மூங்கிற் காட்டிற்குள் சென்று சிறிது பருமனாயுள்ள அதாவது சுமார் மூன்று அல்லது நான்கு அங்குலம் சுற்றளவுள்ள மூங்கிற் கழிகளை அலட்சியமாக வெட்டி எடுத்துக் கொண்டு வருவார்கள். ஓர் ஆள் உட்காருவதற்குப் போதுமான அளவு ஏறக்குறைய ஒரு சதுர கஜ பரப்பு இடம்விட்டு இந்த மூங்கிற் கழிகளைக் குறுக்கும் நெடுக்கு மாக, மூங்கில் நாரினால் அலட்சியமாக இணைத்துக் கட்டுவார்கள். உட்கார வேண்டிய இடத்தில் சிறிது நெருக்கமாக இருக்கிறபடி சிறிது மூங்கில் துண்டுகளைச் சேர்த்துக் கட்டுவார்கள். மெல்லிய சில மூங்கில் கழிகளைக் கூண்டு வண்டிகளுக்குப் போகிற மாதிரி, மேலே வளைத்துக் கட்டுவார்கள். இதுதான் டோலி. வளைவுக்கு மேல் மறைவு ஏதும் இராது. நமக்குத் தேவையானால் ஒரு துணியைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் அப்பொழுது வறுத்தெடுத்த வெயிலுக்கு, இந்தத் துணி விதானம் எந்த விதத்திலும் பாதுகாப்பு அளிப்பதாயில்லை. நம் மனத் திருப்திக்காகத்தான் போட்டுக் கொள்ள வேண்டும். ஒரு டோலியைத் தூக்க நான்கு பேர் விகிதம் நியமிக்கப் பட்டிருந்தார்கள். நண்பர்களின் முயற்சியினால் எங்களைத் தூக்க ஐந்து டோலிகளுக்கும் எங்கள் சாமான்களைச் சுமந்து வர எட்டு கூலியாட்களுக்கும் அனுமதி கிடைத்தது. ஏற்கனவே நாங்கள் கேள்விப்பட்டிருந்தபடி ஒரு நபர் தன்னோடு அறுபது பவுண்டு நிறையுள்ள சாமான்களை மட்டுமே எடுத்துச் செல்லலாம் என்றும், இதற்கான ஒரு கூலியாளைக் கொடுக்க முடியுமென்றும் அதிகாரிகள் நிர்ணயம் செய்திருந்தார்கள். ஆனால் இந்த நிர்ண யத்துக்குட்பட்டுச் சாமான்களை எடுத்துச் செல்ல வேண்டு மென்பதில் எல்லோராலும் கண்டிப்பாக இருக்க முடிகிறதா? அநேகர், தங்களுக்கு அனுமதிக்கப் பட்ட கூலியாளிடம், அதிகப்படி இனாம் தருவதாக நயமான பல வார்த்தைகளைச் சொல்லி, அதிகப்படியான சாமான்களைச் சுமக்கச் செய்தனர். பணத்திற்காசைப் பட்ட கூலியாட்களில் அநேகர் முக்கி முணங்கிக் கொண்டு, கூடு தலாகச் சாமான்களைச் சுமந்து வந்தனர். எங்கள் குழுவைப் பொறுத்தமட்டில், அறுபது பவுண்டு நிர்ணயத்துக்குட்பட்டே சாமான்களை எடுத்துவரச் செய்தோம். ரங்கூனிலிருந்து புறப்பட்ட பிறகு ஆங்காங்குத் தங்கிய இடங் களில், சாமான்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கழித்து விட்டு வந்திருந்ததனால் எங்களுடைய சாமான்களின் எண் ணிக்கையும் நிறையும் குறைந்தே இருந்தன. ஆக எங்கள் குழுவுக்கு மொத்தம் அனுமதிக்கப்பட்ட கூலியாட்கள் 5 X 4 = 20 + 8 = 28 பேர். இவர் களுக்கு இவர்களிலேயே ஒருவன் மேதிரி. அதாவது மேலாள் அல்லது தலைவன். அதிர்ஷ்ட வசமாக எங்களுக்குக் கிடைத்த மேதிரி மணிப்பூரிகளில் ஒருவன். ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் சில சில வார்த்தைகள் இவனுக்குத் தெரிந்திருந்தன. இவன் சொன் னால்தான் மற்றவர்கள் கேட்பார்கள். இவன் மூலமாகத்தான் மற்ற வர்களோடு நாங்கள் பேச முடிந்தது. ஒருவர் பாஷை ஒருவருக்குத் தெரியாததுதான் காரணம். டோலிகளுக்கும் கூலியாட்களுக்கும் அனுமதி கிடைத்து விட்டபடியால், மறுநாள் எப்படியும் முகாமை விட்டுப் புறப்பட்டு விடலாமென்ற தைரியம் எங்களுக்கு ஏற்பட்டது. சிறிது நிம்மதி யாகப் படுத்து இராப் பொழுதைக் கழிக்கலாமென்று எண்ணி, உறுத்துகின்ற மூங்கிற் பரப்பின் மீது தலை சாய்த்தோம். படுக்கை கொண்டால்தானே? ஏதோ இனந்தெரியாத ஒரு பீதி எங்கள் மனத்தில் புகுந்து குடைந்து கொண்டிருந்தது. இதற்கேற்றாற்போல் நள்ளிரவுக்குச் சிறிது நேரம் முன்பு, முகாமே அதிர்ந்து போகும் படியாக ஒரு கூச்சல் எழும்பியது. அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்தோம். நாகர்களில் ஒரு கூட்டத்தினர், முகாமைக் கொள்ளை யடிக்கும் நோக்கத்துடன் ஆயுத பாணிகளாய் வந்திருக்கிறார்க ளென்று அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் நடுங்கிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தது எங்கள் காதில் எழுந்தது. இனி என்ன? வக்ஸு முகாம், மண்ணுக்கு இரையாக வேண்டியதுதான் என்று தீர்மானித்தோம். எங்கள் நாடி நரம்புகளெல்லாம் எங்களை விட்டு எங்கோ ஓடிப் போய்விட்டதாக உணர்ந்தோம். தம்பித்துப் போய், இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு வெறிக்க வெறிக்கச் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டிருந்தோம். சில நிமிஷங்களில் கூச்சல் அடங்கிவிட்டது. என்ன விஷயம் என்று எனக்கே புரியவில்லை. பிறகு விசாரித்ததில், யாரோ ஒரு பிரயாணி, கொள்ளை கூட்டத் தினர் சிலர், தன்னைத் தாக்க வருவதாகக் கனவு கண்டு கொள்ளைக் காரர்கள் என்று வாய் உளறிக் கொண்டாராம். அவர் கனவிலே போட்ட கூச்சலை, அண்டை அயலிலிருந்தவர்கள் நிஜமென்று, நம்பி தாங்களும் சேர்ந்து கூச்சல் போட ஆரம்பித்தார்கள். இதுதான் விஷயம். மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானே? இதைக் கேட்டு நாங்கள் சிரித்துவிட்டு மீண்டும் தலைசாய்த்தோம். மறுநாள், அதாவது வக்ஸுவுக்கு வந்த மறுநாள் (11-4-42) பகல் இரண்டு மணிக்கு மேல் முகாமை விட்டுக் கிளம்புவதென்று ஏற் பாடாயிற்று. அன்று பகல் (13-4-42) சமையல் சாப்பாட்டை அவசர அவசரமாக முடித்துக் கொண்டோம். அந்த விந்தையை இப்பொழுது நினைத்துக் கொண்டால் கூடச் சிரிப்பு வருகிறது. முந்திய தினம் மாதிரி அன்று கடுமையான வெயில் புழுதிக் காற்று; இந்தக் காற்றில் அடுப்பு சரியாகப் பற்ற வில்லை. குழம்பு சாதம் என்று சொல்வார் களே அந்த ஒன்றை மட்டும் செய்து முடிக்கப் பெண்டு களுக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. சமையல் நடந்து கொண்டிருந்த போது, ஒருவன் அடுப்பு நெருப்பில் சுருட்டு பற்ற வைத்துக் கொண்டு போனான். அவனைத் தடுக்க முடியுமா? தீக்குச்சி இருக்கிறதா என்று எங்களைக் கேட்பதற்குக் கூட அவனுக்கு அவகாசமில்லை போலும்! சமையல் நடந்து கொண்டிந்த இடத் திற்கு வெகு சமீபத்தில், வட இந்தியாவைச் சேர்ந்த ஓர் அம்மையார், ஒரு குடையை மறைவாக வைத்துக் கொண்டு இயற்கைக் கடன் களைக் கழித்துக் கொண்டிருந்தார். யாரை என்னச் சொல்ல முடியும்? ஒருவாறு சமையலும் முடிந்தது. ஏற்கனவே தேக்க இலையைப் பறித்துத் தயாராக வைத்திருந்தோம். குந்தின வாக்கில் உட்கார்ந்து ஆளுக்கொருவராகக் கையிலே இலையை வைத்துக் கொண்டு அதில் குழம்புச் சாதத்தைப் பரிமாறிக் கொண்டோம். ஆஹா! மேலே எரிக்கின்ற வெயில்; கீழே கொதிக்கின்ற தரை; கையிலே சுடுகின்ற சாம்பார் சாதம். இந்த லட்சணத்தில் கூலியாட் களின் மேதிரி வந்து ஆச்சா ஆச்சா, ஜல்தி ஜல்தி என்று அரை குறை ஹிந்தியில் உத்தரவிட்டுச் சென்றான். எப்படியிருந்தது தெரியுமா எங்கள் நிலைமை? சிரிப்பாக இருந்தது. ஆம்! சிரித்தோம். அழ மாட்டாத குறையாகச் சிரித்தோம். இடுக்கண் வருங்கால் நகுக என்று எங்களுக்காகத்தானே சொல்லியிருக்கிறார் வள்ளுவர்! எப்படியோ சோற்றுக் கடனைத் தீர்த்துக் கொண்டோம். புறப் படுவதற்குத் தயார் என்று மேதிரிக்குத் தெரிவித்தோம். சற்று நேரத்திற்குமுன் எங்களை அவசரப்படுத்திய அவன், இப்பொழுது தயங்கித் தயங்கி எங்கள் அருகில் வந்து நின்று லேசாகப் பல்லையும் காட்டி, தலையையும் சொறிந்தான். என்ன சமாசாரம்? ஆட்களில் இரண்டு பேர் குறைகிறார்கள். மொத்தம் இருபத்தெட்டு பேர் வேண்டுமே? ஆம்; தெரியும். ஆனால் இருபத்தாறு பேர்தான் கிடைத்திருக் கிறார்கள். இவர்களை வைத்துக் கொண்டு இப்பொழுது புறப்பட வேண்டியதுதான். பாக்கி இரண்டு பேருக்காகக் காத்திருந்தோ மானால் இன்று பயணத்தைத் தொடங்க முடியாது போலிருக்கிறது. என்ன செய்வது? இப்படி அவன் சொல்லிக் கொண்டே, என்னை மட்டும் ஏற இறங்கப் பார்த்தான். என்ன செய்வது என்று இவன் கடைசியாக கேட்ட கேள்விக்கு விடை கண்டு விட்டது போல் அவன் உதட்டில் லேசாகப் புன்சிரிப்பு விளையாடியது. உடனே என்னைப் பார்த்து சார், இவர் பத்லா (ஒல்லியான) ஆசாமி. இவரை இரண்டு பேர் தூக்கினால் போதும் என்று தீர்மானமாகவே சொல்லிவிட்டான். அப்புறம் வாதப் பிரதிவாதங்களுக்கு இடமேது? பிரயாணத்தைத் தொடங்கினோம். ஆள் பற்றாக்குறை என் தலைமீது தானா வந்து விடிய வேண்டும் என்று நான் ஏக்கப்பட்டு அங்கேயே தங்கியிருக்க முடியுமா? மேதிரி, உடனே ஐந்து டோலிகளைக் கொண்டு வரச் செய்தான். மூன்று டோலிகளில் பெண்டுகளும், நான்காவது டோலியில், நோயாளியாக அத்தாட்சிப் பத்திரம் பெற்றிருந்த நானும் முறையே அமர்ந்தோம். ஐந்தாவது டோலியில் மூன்று குழந்தைகளும் அமர்ந்தனர். நான்கு டோலிகளுக்குப் பதினாறு பேர்; நான் அமர்ந்த ஒரு டோலிக்கு இரண்டு பேர் தூக்குவதற்குத் தயாராக நின்றார்கள். டோலி தூக்கின பதினெட்டு பேரும் மணிப்பூரிகள். சாமான்களைத் தூக்குவதற்கென்று நியமிக்கப்பட்ட எட்டு பேரும் நாகர்கள். இவர் களும் சாமான்களை முதுகிலே சுமந்து கொண்டு நின்றார்கள். கூட வந்த நண்பர்கள் நால்வரும் நடைக்குத் தயாரா னார்கள். மேதிரி சமிக்ஞை காட்டினான். மலைப்பயணம் தொடங்கியது; இனி மலைவழிதானே? அப்பொழுது பிற்பகல் சுமார் இரண்டு மணி.  32. கடைசி யாத்திரைக்கு ஒத்திகையா? எங்கள் டோலிகளுக்கு முன்னும் பின்னுமாகப் பல டோலிகள்; பிரயாணிகளும் பலர். ஊர்வலம் மாதிரி இருந்தது இந்தக் காட்சி. கடைசி யாத்திரையின் போது நான்கு பேர் சுமந்து செல்கின்ற காட்சிக்கு இந்த டோலி யாத்திரை, ஒத்திகை மாதிரி இருந்ததென்று சொல்லலாம். யாரும் ஒரு காலத்தில் இறக்க வேண்டியவர்கள்தான். அதற்காகப் பயந்து பயனில்லை. ஆகவே இந்த டோலிப் பயணத்தைக் கடைசி யாத்திரைக்கு ஒத்திகை என்று நான் சொன்னால் அதை யாரும் அசுபமாகக் கொள்ள வேண்டாம். டோலியில் உட்கார்ந்து செல்வதற்கு ஒரு சாகஸம் வேண்டும். சிறிது தூரம் சென்ற பிறகுதான் இதில் பயிற்சி ஏற்படும். இரண்டு கைகளையும் பக்கவாட்டிலுள்ள மூங்கில் கழிகளில் நன்றாக ஊன்றிக் கொள்ள வேண்டும். மேட்டுப் பகுதிகளில் ஏறிச் செல்லும் போது முன் பக்கமும், பள்ளப் பகுதிகளில் இறங்கிச் செல்லும் போது பின் பக்கமும் முறையே சாய்ந்து கொடுத்து, தூக்குகிறவர் களுக்குச் சிரமம் இல்லாத படி உதவ வேண்டும். நிமிர்ந்தாற்போல் ஒரே பாங்கில் உட்கார்ந்திருந்தால், சிறிது நேரத்திற்குப் பிறகு முதுகு வலிக்கும். சிறிது சாய்ந்தாற்போல் உட்கார்ந்தாலோ, படுத்தாலோ சௌகரியமாயிருக்குமென்று தோன்றும். ஆனால் அந்தச் சௌகரி யத்தை விரும்பாமலிருக்க வேண்டும். அடிக்கடி உடம்பை நெளிந்துக் கொடுக்கக் கூடாது. அக்கம் பக்கங்களில் அதிகமாகக் கவனஞ் செலுத்தக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக தூக்குகிறவர்கள், அவ்வப்பொழுது வெளியிடும் அனுபவங்களிலும் உணர்ச்சிகளிலும் நம்மால் முடிந்த வரையில் பங்கு கொள்ள வேண்டும். மேட்டுப் பாங்கில் ஏறுகிறபோது, நத்தை நகர்ந்து செல்கிற மாதிரி ஏறுவார்கள். மேல்மூச்சு வாங்கும். பள்ளமான பகுதிகளில் இறங்குகிறபோது வேக மாக இறங்கு வார்கள். அதில் மகிழ்ச்சியும் அடைவார்கள். பொது வாகத் தூக்கமுடியாத ஒரு சுமையைத் தூக்கிச்செல்வதாக அவர்கள் உணராதபடி நாம் அமர்ந்துகொள்ள வேண்டும். இந்த வித்தைகளை நான் டோலியில் சென்ற சிறிது நேரத்திற் குள் கற்றுக் கொண்டு விட்டேன். ஆனால் அந்த வித்தையை உடனேயே கைவிட வேண்டியதாகி விட்டது. பயன்படுத்த வாய்ப்புக் கிட்ட வில்லை. காரணம், என் துரதிருஷ்டம், என்னோடு தொடர்ந்து வந்ததுதான்! புறப்பட்டுச் சுமார் ஒரு மைல் தூரம் வந்திருப்போம். என்னுடைய டோலியின் இடது பக்கத்து மூங்கில் கழி கட்டவிழ்ந்து வீழ்ந்து விட்டது. டோலியோடு நான் இடது பக்கமாகச் சரிந்து விழுந்தேன். இடது பக்கத்துக் கையிலும் கன்னத்திலும் லேசாகச் சிராய்ப்பு ஏற்பட்டது. சட்டை (கதர் ஜிப்பா) போட்டுக் கொண்டி ருந்ததனால் விலாப் பக்கம் காயம் ஏதும் ஏற்படவில்லை. சட்டை யில் தூசி படிந்திருந்தது. விழுந்தது தெரியாமல் உடனே விறைப் பாக எழுந்து, சட்டையைத் தட்டி விட்டுக் கொண்டேன். ரத்த காயம் ஒன்றும் ஏற்படவில்லையென்று அறிந்து சிறிது ஆறுதல டைந்தேன். டோலிக்காரர்கள் எனக்கு அநுதாபம் தெரிவித்தார்கள். உடனே அருகில் மண்டிக்கிடந்த மூங்கில்களில் ஒன்றை வெட்டி யெடுத்து வந்து, பழைய மாதிரி இறுக்கமாகக் கட்டி, ஏறி உட் கார்ந்து கொள்ளும்படி சொன்னார்கள். மறுக்க முடியுமா? அல்லது வலுவாகக் கட்டியிருக் கிறீர்களா? மீண்டும் விழும்படி நேரிடாதே என்று கேட்க முடியுமா? பலவந்தமாகப் புன்சிரிப்பை உதட்டில் ஏற்றிக்கொண்டு டோலியில் ஏறி அமர்ந்தேன். சுமார் முக்கால் மைல் தூரம் சென்ற பிறகு டோலியின் வலது பக்கத்து மூங்கில் கழி கட்ட விழ்ந்துவிட்டது. வலது பக்கம், இடப் பக்கம் மாதிரி சிராய்ந்து விட்டது. சட்டையைத் தூசி தட்டி விட்டுக் கொண்டு கற்சிலை போல் நின்றேன். டோலிக்காரர் இருவரும் என்னை அநுதாபத் துடன் பார்த்தார்கள். அவர்களுக்கு ஒன்றும் தோன்றவில்லை. இந்தச் சமயத்தில், வேறோரு டோலியைத் தூக்கிச் சென்று கொண்டிருந்த மேதிரி, அந்த டோலியைக் கீழே இறக்கி வைத்து விட்டு, என் அருகில் ஓடி வந்தான். நிலைமையைச் சட்டென்று புரிந்து கொண்டான். விழுந்து கிடந்த டோலியின் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவனுக்கு. அதைத் தூர வீசி எறிந்தான். தூக்கி வந்த ஆட்களில் ஒருவனை தனக்குப் பதிலாகத்தான் தூக்கி வந்த டோலியைத் தூக்கிச் செல்லும் வேலைக்கு மாற்றினான். என்னை மேற்கொண்டு அழைத்துச் செல்லும் பொறுப்பைத் தானே மேற் கொண்டான். அவனுக்குத் தெரிந்த அரைகுறை இங்கிலீஷிலும் ஹிந்தியிலும், பாபு கவலைப் படாதீர்கள். இன்று பயணம் சிறிது கடினமாய் இருக்கும். ஏற்றத்திலேயே செல்ல வேண்டும். ஒரு மூங்கில் கழியை வெட்டி ஊன்று கோலாகக் கொடுக் கிறேன். அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். நான் உங்கள் முதுகுப் பக்கத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு வருகிறேன். இன்றையப் பயணத்தைக் கடத்தி விடலாம். நாளை வேறு ஏற்பாடு செய்கிறேன் என்று கனிவோடு கூறினான். இவனை நான் முதலில் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கூலியாட்களை மேய்க்கும் ஒரு மேதிரி என்ற அளவில்தான் மதித்திருந்தேன். இவனுக்கு எழுத்து வாசனையோ, படிப்பு வாசனையோ எவ்வளவு இருக்கிறதென்பது எனக்குத் தெரியாது. அதைத் தெரிந்து கொள்ளவும் நான் விரும்பவில்லை. இவன் முழங் காலுக்கு மேல்தான் துணி உடுத்தியிருந்தான். உடம்பின்மீது ஒட்டுப் போட்ட சட்டைதான். ஆனாலும் இவனிடம் தூய்மையான, பரந்த கனிந்த உள்ளம் குடி கொண்டிருந்தது. சூதுவாதுகளை அறியாத வனாய் இருந்தான். மணிப்பூர் நாட்டியக் கலையில் ஓரளவு பயிற்சி யும் இவனுக்கு இருந்தது. இவற்றையெல்லாம் போகப் போகத்தான் தெரிந்து கொண்டேன். அடுத்த முகாம் லும்லிங், கடல் மட்டத்திற்கு மூவாயிரம் அடி உயரத்திலுள்ளது. வக்ஸு முகாமிலிருந்து சுமார் பத்து மைல் தூரம் தான். இருந்தாலும் ஏற்றத்திலேயே செல்ல வேண்டியிருந்ததால் பிரயாணிகள் சீக்கிரத்தில் களைப்படைந்து போனார்கள். இத் தனைக்கும் நான் சுமார் இரண்டு மைல் தூரத்தை டோலியி லேயே கடந்து விட்டேன். தான் சொன்னபடியே, மேதிரி ஒரு பச்சை மூங்கிலை வெட்டி எடுத்து வந்து எனக்கு ஊன்றுகோலாகக் கொடுத்தான். என் நடை யும் தொடங்கியது. மேதிரி, என் முதுகின் மீது கைவைத்து நெட்டித் தள்ளிக் கொண்டு வந்தான். வழி ஒற்றையடிப் பாதையாகவே இருந்தது. ஏற்றங்கள் அதிகம். சறுக்கல்கள் வேறே. நல்ல கோடை யிலும், தங்கள் பசுமையை விட்டுக்கொடாமல் பாதுகாத்து வந்த செடி கொடிகளும் மரங்களும் வழி நெடுகச் செறிந்திருந்தன. மேதிரி இவைகளை அவ்வப்பொழுது சுட்டிக்காட்டிக் கொண்டு வருவான். தவிர, இரண்டு அல்லது இரண்டரை மைல் தூரம் சென்றதும் பசுமை நிறைந்த ஓரிடத்தில் என்னை உட்காரச் சொல்லி விட்டு மணிப்பூர் நாட்டிய மாடுவான். பின்னால் வந்து கொண்டிருக்கிற பிரயாணிகள். நாட்டியக் கச்சேரி நடக்கும். நடையில் எனக்குக் களைப்புத் தட்டக் கூடாதென்பதற்காக இந்த வித்தையைப் பயன்படுத்திய மேதிரியின் பரிவை எந்த வார்த்தைகளால் வியந்து பேசுவது? மேதிரி சொன்னபடிப் பயணம் சிறிது கடினமாகவே இருந்தது. டோலிக்கு விடை கொடுத்த பிறகு, ஏறக்குறைய முக்கால்வாசி தூரம் எப்படியோ சமாளித்துக் கொண்டு நடந்து விட்டேன். லும்லிங் முகாமைப் போய்ச் சேர இன்னும் ஒரு மைல் தூரமோ அதற்குக் குறைவாகவோதான் இருக்கும். முகாமின் கீற்றுக் கொட்டகைகள், அங்கு ஜனங்கள் நடமாடுவது ஆகிய எல்லாம் நன்றாகத் தெரி கின்றன. ஆனால் அந்த இடத்திற்குப் போய்ச் சேர இன்னும் மூன்று சிறு குன்றுகளையும் மூன்று கணவாய்களையும் கடந்தாக வேண்டும். சூரியன் மலை வாயிலில் விழுகிற தருணம் எனக்கு முன்னும் பின்னுமாக வந்து கொண்டிருந்த டோலிகளும் எங்கள் குழு வினரும், மற்ற பிரயாணிகளும் இருள் மூடு வதற்குள் முகாமுக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்ற ஆவலில் வேகமாக முன்னேறிச் சென்றுவிட்டார்கள். என்னோடு வந்த மேதிரியும் அதோ, முகாம் தெரிகிறது. இனி நீங்கள் சுலபமாக வந்துவிடலாம். நான் முன்னாடி சென்று முகாமின் நிலவரத்தைத் தெரிந்து கொள்கிறேன் என்று சொல்லிக் கொண்டு மற்ற டோலி களோடு சேர்ந்து சென்று விட்டான். நான் மட்டும் தனியாகத் தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந் தேன். உடம்பில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்ற உணர்ச்சி மட்டும் இருந்தது. இந்த நிலையில், என் வாழ்க்கைத் துணைவி, டோலி பய ணத்தில் சலிப்பு ஏற்பட்டதனாலோ, சிறிது காலாற நடக்க வேண்டு மென்ற விருப்பத்தினாலோ, தான் ஏறி வந்த டோலியை முன்னாடி அனுப்பிவிட்டு, நடந்து வந்து என்னோடு சேர்ந்து கொண்டாள். இருவரும் சிறிது தூரம் நடந்து வருகையில் ஓரிடத்தில் நான் திடீ ரென்று தம்பித்து நின்று விட்டேன். என் வாழ்க்கைத் துணைவி யைப் பார்த்து இனி என்னால் நடக்க முடியாது போலிருக்கிறது. இங்கேயே நான் மடிய வேண்டியதுதான். நீயாவது சௌக்கியமாகப் போய்ச் சேர் என்று சொல்லிக்கொண்டே மூர்ச்சையாகிக் கீழே விழுந்துவிட்டேன். சிறிது நேரங் கழித்துக் கண் திறந்து பார்க்கிறேன். நல்ல இருட்டாகிவிட்டிருந்தது. சிள் வண்டுகளின் கிரீச் சப்தம் காதைத் துளைத்துக் கொண்டிருந்தது. வாழ்க்கையில் என்னை விட்டுப் பிரிய மனமில்லாமலிருந்த என் துணைவி, அந்த நிலையில் என்னை விட்டுப் பிரிய மனமில்லாமல் என் பக்கத்தில் உட்கார்ந் திருந்தாள். அவளைப் பார்த்ததும் எனக்கு ஆத்திரம்தான் வந்தது. அவள் மீது எனக்கிருந்த பாசந்தான் இதற்குக் காரணம். அந்த ஆத்திரத்தில் அவளை அங்கேயே விட்டு விட்டு நான் வேகமாகச் சென்று முகாமில் எங்கள் குழுவினர் தங்கியிருந்த இடத்தையடைந்து தேகந் தெரியாமல் கீழே விழுந்துவிட்டேன். முன்னாடி வந்திருந்த எங்கள் குழுவினர், அப்பொழுது தீ மூட்டி வெந்நீர் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வெந்நீரை எடுத்து விழுந்து கிடந்த என் முகத்தில் அறைந்து தெளிவு பெறச் செய்தார்கள். உடனே சிறிது தேநீர்ப் பானமும் கொடுத்தார்கள். உயிர் பிழைத்திருப்ப தாகிற உணர்வு எனக்கு வந்தது. பின்னாடி தனியாக அந்தக் கும்மிருட்டில் வந்து கொண்டிருந்த என் வாழ்க்கைத் துணைவியை, என்னோடு வந்த அன்பர்கள் எதிர் கொண்டு சென்று அழைத்து வந்து முகாமில் சேர்ப்பித்தார்கள். அவர்கள் அவ்வப்பொழுது செய்து வந்த உதவிகளை அடிக்கடி நான் நினைத்துக்கொள்ள வேண்டியவனாயிருக்கிறேன். லும்லிங் பயணம் கடினமானதாயிருந்தாலும் இதற்கு ஈடு செய்கின்ற முறையில் அந்த - லும்மிங் - முகாம், இயற்கை யழகு செறிந்த சூழலில் அமைக்கப்பட்டிருந்தது. தவிர முகாமில் பிரயாணிகள் சௌகரிய மாகத் தங்கியிருக்கக்கூடிய வண்ணம் எல்லா ஏற்பாடு களையும் அதிகாரிகள் செய்திருந்தார்கள். இதனால் இரவுச் சாப் பாட்டை எங்களிஷ்டத்திற்குத் தயாரித்துக் கொள்வதற்கான வசதிகள் கிடைத்தன. டோலிகள் தூக்கி வந்த மணிப்பூரிகள் சமையல் செய்வதற்கு வேண்டி, மண்ணைக் கிண்டி அடுப்பாகத் தயாரித்துக் கொடுத்ததோடு, சுள்ளிகள் பொறுக்கிக் கொடுப்பது, தண்ணீர் கொண்டு வருவது ஆகிய பல உதவி களையும் செய்து கொடுத் தார்கள். பெண்டுகளும் ஏதோ ஒருவகைச் சாப்பாடு தயாரித்தார்கள். வியஞ்சன வகைகள் ஏதுமில்லாத சாப்பாடா யிருந்தாலும் அந்தச் சமயத்தில் அது எங்களுக்கு அமுதம் போலிருந்தது. முகாமை யடைந்த சிறிது நேரத்திற்குள் எங்கள் பிரயாண அலுப்புத் தீர்ந்து, மறுநாள் பயணத்திற்குத் தேவையான அளவு உற்சாகத்தைப் பெற்றோம். எங்கள் உணவில் ஒரு சிறு பகுதியை, உதவி செய்த மணிப் பூரிகளுக்குக் கொடுக்க முற்பட்டோம். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். காரணம் எங்கள் சாப்பாடு அவர் களுக்குப் பிடிக்காது என்பதன்று. எங்களுக்கே பற்றாக் குறையாக இருக்க, அதில் ஒரு பகுதியைத் தாங்கள் பெற்றுக் கொள்வது நியாயமன்று என்றும், தங்களுடைய சாப்பாட்டைப் பற்றி நாங்கள் எந்த விதத்திலும் கவலைப் படக்கூடாதென்றும், தங்களால் எப்படியும் சமாளித்துக் கொள்ள முடியு மென்றும் சமாதானம் கூறினார்கள். அவர்களுடைய பெருந்தகை மையைக் கண்டு நாங்கள் வியப்படைந்தோம்.  33. ஒன்று படுத்திய ராம காதை சாப்பாடு முடிந்ததும், உடம்பைச் சிறிது உஷ்ணப் படுத்திக் கொள்ள விரும்பினோம். இதை ஜாடையாகத் தெரிந்து கொண்டே மணிப்பூரிகள் சமையலுக்குச் செலவழிந்தது போக மிச்சமிருந்த சுள்ளிகளை ஒன்றுசேர்த்துக் குவித்து வைத்து நெருப்புப் பற்ற வைத்தார்கள். அதைச் சுற்றி வளைத்துக் கொண்டாற்போல், அவர் களுக்கு எதிர்பக்கமாகவும் ஒருவரை ஒருவர் நன்றாகப் பார்த்துக் கொள்கிற மாதிரி உட்கார்ந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தோம். உடம்புக்கு மிகவும் இதமாய் இருந்தது. அவர்களோடு நாங்கள் என்ன பேசுவது? சிறிது நேரம் மௌனம். பிறகுதான் மௌனத்தைக் கலைத்துவிட்டு, என்னுடைய வழிபடு கடவுளாகிய ராமனுடைய திருநாமத்தை ஜெபிக்க ஆரம்பித்தேன். ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே. உரக்கச் சொல்லிக் கொண்டு இடையிடையே ராமனைப் பற்றிய சில வடமொழி சுலோகங்களும் என் உள்ளத்தி லிருந்து வெளிவருகின்றன என்பதை அந்த மணிப்பூரிகள் அறிந்து கொண்டு அவற்றை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்ததோடு என்னை உற்றுப் பார்த்துக் கொண்டு மிருந்தார்கள். மீண்டும் சிறிது நேரம் மௌனம். பிறகு அவர்களில் ஒருவன் - ஓரளவு விவரம் அறிந்தவன் என்னைப் பார்த்து ஹிந்தியில், ‘பாபு தாங்கள் ஹிந்துவா? என்று கேட்டான். ஆம்; நிச்சயமாக நான் ஹிந்துதான் என்றேன். ஆனால் அவனுக்குச் சந்தேகம். ஏனென்றால் அவனுடைய அபிப்பிராயத்தில், ஹிந்துவாயிருக்கின்றவன் உச்சிக் குடுமி வைத்திருக்க வேண்டும்; பூணூல் தரித்துக் கொண்டிருந்தால் மிக விசேஷம். நானோ அப் பொழுது கிராப் வைத்துக் கொண்டிருந்தேன். மேலே கதர் சட்டை போட்டுக் கொண்டிருந்த படியால் எனக்குப் பூணூல் இருப்பது அவன் கண்களுக்குத் தெரியவில்லை. இதனால் நான் ஹிந்து அல்லாதவனோ என்ற சந்தேகம் அவனுக்கு. ஆனால் நான் ராம நாமத்தை உச்சரிப்பதைக் கேட்கிற போது சுத்தமான ஒரு வைதீக ஹிந்துவின் வாக்காக இருந்தது. அவனுக்குப் புதிராக இருந்தது போலும். அவன் என்ன செய்வான்? தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளத் துணிந்து விட்டான். எப்படித் தீர்த்துக் கொண்டான் என்று நினைக்கிறீர்கள்? அதுதான் விசேஷம். நாகரிகம் தெரிந்த வர்களென்று தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிற நாம் பொய் சொல்லாதே; உண்மையைச் சொல்; நீ ஒரு ஹிந்துதானா? கிராப் வைத்துக் கொண்டிருக்கிறாயே? என்றெல்லாம் சரமாரியாக இங்கிதமறியாமல் கேள்விகளைத் தொடுத்திரும்போம். முன்பின் பழக்கமில்லாதவனைப் பார்த்து பொய் சொல்லாதே. உண்மையைச் சொல் என்று கேட்பது நாகரிகக் குறைவு என்று நமக்குப் படுவ தில்லை. படித்தவர்களென்று நாம் கொண்டிருக்கும் அகந்தைதான் இதற்குக் காரணம். ஆனால் அந்த மணிப்பூரியோ, படிப்பு வாசனையை நுகராதவன்; முரட்டுத் துணியைத்தான் உடுத்திக் கொண்டிருந்தான். பேசுகின்ற பாஷை உச்சரிப்பு சுத்தமில்லாமலும் நயமில்லாமலும் இருந்தது. ஆனாலும் அவனிடத்தில் பண்பாடு நிறைந்திருந்தது. அந்த ஒன்றின் மூலம்தான் அவனை நான் பார்த்தேன். அவன் என்னைப் பார்த்து ‘தங்களுடைய கோத்திரம் என்ன? என்று நாசூக்காகக் கேட்டான். கோத்திரத்தைச் சொன்னால் ஹிந்து அல்ல என்று தீர்மானித்துக் கொண்டுவிடலாமென்பது அவன் கேள்வி கேட்டதன் நோக்கம். நான் உடனே மௌத்கல்ய கோத்திரம் என்றேன். அப்படியா பாபு; நிரம்ப சந்தோஷம்; நான் பாரத்வாஜ கோத்திரம் என்றான் அவன், உற்சாகத்துடன். அதனோடு நில்லாமல், ராம நாமத்தை மேலும் மேலும் சொல்லிக் கொண்டிருக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டான். நான் சொல்லச் சொல்ல, அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் மெய்மறந்து தாளம் போட ஆரம் பித்தார்கள். சுருக்கமாக, ராம பஜனை சிறிது நேரம் நடந்தது. அந்த மணிப்பூரிகள் வசிப்பது பாரத நாட்டின் வடகிழக்குக் கோடி; நாங்கள் வசிப்பது தென் கோடி; ஆயினும் எங்களை இணைத்துக் கொடுத்தது; சகோதரர்களாக உறவு கொண்டாடும்படி செய்தது ராம நாமம். ஹிந்துக்களனைவரையும் ஒன்றுபடுத்துவது ராம காதையன்றோ? அனைவரையும் சகோதரர்களாகக் கருத வேண்டுமென்று நடை முறையில் காட்டியவன் கோசலை பயந்த குரிசிலல்லவா? அவனுக்கு ஆயிரங்கோடி வணக்கங்கள். உண்மையில் என்னுடைய ராமன்தான். ஆம்; என்னுடைய ராமன் என்று உரிமையோடு அழைக்கிறேன். இந்த பர்மா வழி நடைப் பயணத்தின் போது என்னைக் கைவிடாது காப்பாற்றி வந்தான் என்பது என் உறுதியான நம்பிக்கை. வழிநெடுக நான் ராம நாமத்தைத்தான் ஜெபித்துக்கொண்டு வந்தேன். ராம பஜனைக்குப் பிறகு அந்த மணிப்பூரிகள், என்னைத் தங்கள் மதிப்புக்குரியவனாக ஆக்கிக் கொண்டார்கள். எங்களு டைய குருநாதராகி விட்டீர்கள் தாங்கள் என்றெல்லாம் சொல்லி வாயாரப் புகழ்ந்தார்கள். மேற்கொண்டு என்னுடைய பயணத்தை இனிதாகச் செய்ய, தங்களுடைய பூரண ஒத்துழைப்பையும் தருவ தாக முகத்தோற்றத்தினால் தெரிவித்தார்கள்.  34. ஏணையில் அமர்ந்து வருகை மறுநாள் (14-4-42) பொழுது புலர்ந்ததும், அடுத்த முகாமுக்குப் புறப்படத் தயாராகுமாறு டோலிக்காரர்கள் எங்களைத் துரிதப் படுத்தினார்கள். எனக்கு இன்னும் சிறிது தாமதித்துப் புறப்பட வேண்டுமென்று தோன்றியது. ஏனென்றால் சூரியோதயக் காட்சி யைச் சிறிதுநேரம் கண்டு அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப் பட்டேன். உயர்ந்த மேட்டுப் பாங்கான இடம்; சுற்று முற்றும் பசுமையின் செழிப்பு; உடம்புக்குத் தெம்பூட்டும் குளிர்ந்த காற்று; வண்ண வண்ணப் பறவை களின் அணிவகுப்பு; நோக்குந் திசை யெங்கணும் குன்றுகளின் முகட்டில் மேகத் திரளின் படிமானம்; செங்கதிர்ச் செல்வன் தோன்றுகிறான். தன் ஆயிரமாயிரம் கிரணங் களைத் தரையென்றும் தருவென்றும், பசிய இலையென்றும் உலர்ந்த சருகென்றும், பாறையென்றும், புற்றரை யென்றும், அசை பொரு ளென்றும் அசையாப் பொருளென்றும் எந்தவித வேற்றுமையும் பாராட்டாமல் எல்லா இடத்தும் எல்லார் மீதும் பாய்ச்சுகின்றான்; பாய்ச்சி எல்லாவற்றிற்கும் உர மூட்டுகின்றான். பார்க்கின்றேன். உளம் பூரிக்கிறது, மெய் மறந்து நிற்கின்றேன். சோதியே இருட்டைப் பொசுக்கும் அனற் பிழம்பே, நித்திரையின் சத்துருவே, சோம்பலைச் சாடும் சாட்டையே, என்றெல்லாம் கரங் குவித்து, சிரங்கவித்து ஏத்திப் போற்றினேன். மனம் மலர்ந்தது. கவலையும் சோர்வும் மருண்டு ஓடின; ஊக்கத்தைத் தோளிற் சாத்திக் கொண்டேன்; மனத்தில் மகிழ்ச்சியை நிரப்பிக்கொண்டேன்; புறப்பட்டேன். புறப்படுவதற்குக் காலை பத்து மணிக்கு மேலாகிவிட்டது. வக்ஸுவி லிருந்து என்னை டோலியில் சுமந்து வந்த மணிப்பூரிகள் இருவரில் ஒருவன், மேதிரியின் விருப்பப்படி கை பருமனுள்ள ஒரு மூங்கில் கழியை எடுத்து வந்து ஒழுங்கு படுத்தி அதில் தான் மேலே போர்த்தியிருந்த ஈரிழைத் துப்பட்டியை ஏணையாகக் கட்டித் தயாராக வைத்திருந்தான். அதில் நான் அமர்ந்து கொண்டேன். குழந்தைப் பருவத்தில் என்னை என் தாயார் ஏணையில் படுக்க வைத்துத் தாலாட்டித் தூங்க வைத்தாரோ என்னவோ எனக்குத் தெரியாது. அனால் என்னுடைய நாற்பத்தேழாவது வயதில் ஏணை யில் அமர்ந்து செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. உண்மையில், எனக்கு அது புதிய அனுபவம். இரண்டு முழங்கால் களையும் இணைத்து வைத்துக் கொண்டும், இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து மார்பில் அணைத்து வைத்துக் கொண்டும், சாய்வு நாற் காலியில் படுத்திருக்கிற மாதிரி இருந்து கொண்டும் வர வேண்டி யிருந்தது உட்கார்ந்திருக்கும் நிலையும் இல்லை; படுத் திருக்கும் நிலையும் இல்லை; இரண்டுங் கெட்டான் என்பார்களே அந்த நிலை. லேசாக ஒருக்களித்தாற் போல் புரளக் கூட முடியாது. தலை யைச் சிறிது தூக்கினால் போதும்; மேலேயுள்ள மூங்கிற்கழி முட்டி விடும். இப்படி மணிக்கணக்காக பிரயாணம் செய்து வந்த தன் பின் விளைவு? நான் சென்னை போந்த சில நாட்களுக்குப் பிறகு மாதக் கணக்காகப் படுக்கையில் கிடத்திவிட்டது. கால்களை நீட்டவோ மடக்கவோ முடியாம லாகி விட்டது. இது பின்னர் பேச வேண்டிய கதை. இப்படி ஒருவன் தன் துப்பட்டியை எனக்கு ஏணையாகக் கட்டிவிட்டதைப் பார்த்த மற்றொருவன், அவனை விட நான் என்ன குறைந்தவனா என்று சொல்லாமற் சொல்லிக் கட்டுகிற மாதிரி, தன் மேற்போர்வையை எடுத்துக் குளிருக்கு அடக்கமாக இருக்கு மென்று எனக்குச் சொல்லிக் கொண்டே, ஏணை மேலே போர்த்தி விட்டு வெற்றுடம்போடு புறப்பட்டான். இங்ஙனம் இருவர் சுமக்க ஏணையில் அமர்ந்து பிரயாணம் செய்ய முற்பட்டேனாயினும் என் மனம் என்னவோ வேதனைப்பட்டுக் கொண்டு தானிருந்தது. தங்கள் துப்பட்டிகளை ஏணைக்குப் போர்வையாகவும் ஆக்கி விட்டு என்னைத் தூக்கி வந்த மணிப்பூரிகள் திறந்த உடம்போடு இருக்கிறார்கள். அவர்கள் ஒற்றை வேஷ்டி மட்டும் இருக்கிறது. அவர்களுக்குக் குளிரினின்று பாதுகாப்பு தேவையில்லையா? நம்முடைய உடம்பைப் போலத்தானே அவர்கள் உடம்பும். அவர்கள் உடம்பு கட்டு மதாய் இருக்கலாம். குளிருக்கோ வெயிலுக்கோ தாக்குக் பிடிக்கக் கூடிய சக்தியுடையதாயிருக்கலாம். ஆனாலும் மனித சரீரம் தானே? அதிலும், கை கால்களை வீசிக் கொண்டு வரு கிறார்களா? ஓர் ஆளையல்லவா சுமந்து வருகிறார்கள்? ஆள் பளுவும் மூங்கில் கழியின் பளுவும் சேர்ந்து அவர்களுடைய இரண்டு தோள் பட்டைகளைத் தழும்பேறச் செய்துவிடுமல்லவா? என் சுகத்திற்காக அவர்கள் தங்கள் சுகத்தையல்லவா தியாகம் செய்துவிட்டிருக் கிறார்கள். அப்படித் தாங்கள் தியாகம் செய்திருப்பதாக அவர்கள் நினைக்கவாவது செய்கிறார்களா? தியாகம் என்ற சொல்லே அவர் களுக்குப் பொருள் விளங்காத சொல்லாயிருக்கலாம். ஆனாலும் அவர்கள் தியாகிகள். தங்கள் தியாகத்தை அலங்கார பாஷை மூலம் வெளிப்படுத்த அவர்களுக்குத் தெரியாது. ஆனால் செயலின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் இப்படி வெற்றுடம்போடு தாங்கள் வர வேண்டி யிருப்பதைப் பற்றிச் சிறிதேனும் வருத்தப்படுகிறார்களா? அவர்கள் முகத்தில் சிணுக்கமுண்டா? மற்றவர்கள் செய்யாத ஒரு காரியத்தைத் தாங்கள் செய்கிறதான பெருமிதமுண்டா? அவைகளுக்குப் பதில் அவர்கள் முகத்தில் புன்சிரிப்பல்லவோ விளையாடுகிறது? நியாய மாகச் செய்ய வேண்டிய ஒரு கடமையைச் செய்வதாகிற ஒருவித திருப்தி அல்லது மனநிறைவல்லவோ அவர்களிடத்தில் காணப் படுகிறது? பிறவித் தியாகிகளோ அவர்கள்? ஏணையில் அமர்ந்து சென்று கொண்டிருக்கையில் இப்படி யெல்லாம் என் சிந்தனை ஓடியது. இதனால் சிறிது தூரம் வரையில் மௌனமாக இருந்து வந்தேன். ஆனாலும், இரண்டு வார்த்தைகளாவது அவர்களோடு பேச வேண்டு மென்ற துடிப்பு எனக்கு ஏற்பட்டது. அவர்களுக்குப் புரிகிற மாதிரி, கொச்சை ஹிந்தியில் எனக்காக, நீங்கள் போர்த்திக் கொண்டிருக்கிற துப்பட்டிகளைக் கொடுத்து விட்டீர்களே? இதனால் உங்கள் உடம்பு பாதிக்காதா? எனக்காக நீங்கள் ஏன் இப்படிக் கஷ்டப்பட வேண்டும் என்று கேட்டேன். அவர்களில் ஒருவன் இது என்ன பெரிய காரியமா? எங்களுக்கு எந்த விதத்திலும் கஷ்டமில்லை. எங்களைப் போலொத்தவர்களுக்குக் குளிரும் வெயிலும் ஒன்றுதான். நாங்கள் தாக்குப்பிடித்துக் கொள்வோம். உங்களைப் போலொத்தவர்களால் முடியாது. நீங்கள் மனக் கஷ்டப்படாமல் வாருங்கள் என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி விட்டு, நீங்கள் வழிபூராவும் ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு வாருங்கள். நீங்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது. நீங்கள் சொல்லிக்கொண்டுவந்தால், எங்களுக்குத் தெம்பு உண்டாகும். உங்களைத் தூக்கிச் செல்வதில் எங்களுக்குச் சிரமமே தோன்றாது என்ற வேண்டுகோளையும் விடுத்தான். நான் மறுப்பேனா? வழி நெடுக ராம நாமத்தை உரக்கச் சொல்லிக்கொண்டு வந்தேன். அவர்களும் கூடவே சேர்ந்து சொல்லிக்கொண்டு வந்தார்கள்.  35. ஒரு சட்டைக்குள் இருவர் அடுத்துப் போய்ச் சேரவேண்டிய முகாம் சிட்டா; கடல் மட்டத்திற்கு ஐயாயிரத்தறுநூறு அடி உயரமுள்ளது. லும்லிங்கி லிருந்து எட்டரை மைல் தூரந்தான். ஆனாலும் முந்திய நாள் போலவே கடினமான பிரயாணம். செங்குத்தான மலைப் பாதை யிலேயே செல்ல வேண்டும். உயரமான சில இடங்களில், ஓர் ஆள் மட்டும் நடந்து செல்லக்கூடிய அகலத்துக்கே பாதையின் இரு பக்கங்களிலும் நாலாயிரம் ஐயாயிரம் அடி ஆழமுள்ள பள்ளத் தாக்குகள். பாதையிலிருந்து இவற்றைப் பார்க்கிற போது தலை சுற்றும். மணிப்பூரிகளுக்கு இந்த வழி பழக்கமான வழியா யிருந்த போதிலும் இந்தக் குறுகலான பாதையில் மிகவும் நிதானத்துடனும் ஜாக்கிரதையுடனும் வந்தார்கள். ஓரிடத்தில் வந்து கொண்டிருந்தபோது, பேய்க் காற்று எடுத்து விட்டது. என் ஏணையும் வேகமாக ஊசலாட ஆரம்பித்தது. ஏணை யோடு பூமியின் அடித்தளத்திற்குப் போய்விட்டதாகவே உணர்ந்தேன். என்னை யறியாமலே என்னிரு கண்களும் மூடிக் கொண்டன. நானென்ன? தூக்கி வந்த மணிப்பூரிகளே பயந்துவிட்டார்கள். தட்டுக் தடுமாறிக் கொண்டு ஏணையைத் தூக்கி வந்தார்கள். ராம நாமத்தை உரக்கச் சொல்லிக் கொண்டுவருமாறு என்னை உஷார் படுத்தினார்கள். நானும் அப்படியே சொல்லிக் கொண்டு வந்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு காற்றும் நின்றது; வழியும் லேசாகத் திரும்பியது. ஆபத்துக் காலத்தில் கை கொடுத்துக் காப்பாற்று கிறவன் ஆண்டவன் ஒருவன்தான் என்ற அசையாத நம்பிக்கை கள்ளங் கபடற்ற அந்த மணிப்பூரிகளின் உள்ளத்தில் எவ்வளவு ஆழ மாகப் பதிந்திருக்கிற தென்பதை அப்பொழுது கண்டு கொண்டேன். இந்தக் குறுகலான பாதைக்குக் கீழ் மட்டத்தில் மேகங்கள் சஞ்சரித்துக் கொண்டிருந்தன. இந்த மேகங்கள் தான் எத்தனை எத்தனை வடிவங்களெடுத்து உலவின! யானை போல்வன சில; கை கால்களை வீசிக் கொண்டு செல்லும் வாட்டசாட்டமான மனிதனைப் போல்வன சில; மலர்ந்திருக்கும் தாமரை போல்வன சில; தோகை விரித்துக் கொண்டு நிற்கும் மயில் போல்வன சில; சில மேகங்கள் கடல் அரசன் மீது காதல் கொண்டதனாலோ என்னவோ அவனை நாடி வேகமாகச் சென்றன. ஊடலுக்குப் பிறகு கூடும் காதலர்களைப் போல், சில மேகங்கள் முதலில் சிறிது தூரம் இரண்டாகப் பிரிந்து சென்று; பிறகு ஒன்றாகச் சேர்ந்து கொண்டு போயின. இந்த மாதிரியான காட்சிகளைப் பார்த்துக் கொண்டு செல்லச் செல்ல, என் மனத்தில் ஒருவித சாந்தி ஏற்பட்டது. ஏணையில் கூனிக் குறுகி உட்கார்ந்து வருவதனால் ஏற்பட்ட வலியை மறந்திருந்தேன். அந்தச் சமயத்தில் இந்த மேகங்கள் எந்த விதமான கைமாற்றையும் எதிர்பாராமல் உலகத்திற்குச் செய்துவரும் உபகாரத்தை நினைத்துப் பார்த்தேன். இவை கருணை மழையைப் பொழியாவிட்டால் ஜீவராசி களோ, தாவர வர்க்கங்களோ உயிர் பிழைத்திருக்க முடியுமா? மேகமே, உலகத்தைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிற திருமால் உன்னுடைய உபகார சிந்தையும் கருணை உள்ளமும் தனக்கு என்றென்றும் இருந்து கொண்டிருக்க வேண்டு மென்பதற் காகத்தான் உன் நிறத்தைத் தன் நிறமாக்கிக் கொண்டான் போலும். நீ பரோபகாரி என்று தெரிந்துதான் காளிதாஸ மகாகவி உன்னைத் தூதனாக நியமித்து பாரத தேசமெங்கனும் அனுப்பினான் போலும்! இங்ஙனம் மேகத்திற்கு மேற்பட்ட குறுகலான பாதையில் ஏணையில் வந்து கொண்டிருக்கும் போது, ஒரு சக்கிலியர் குடும்பம் நாலைந்து குழந்தைகளுடன் கூடவே வந்து கொண்டிருந்தது. கடைசி யாகப் பிறந்தவை இரட்டைக் குழந்தைகள். சில மாதங்கள் தான் ஆகியிருக்கும். குடும்பத்தின் தலைவன், அவ்விரண்டு குழந்தை களையும் ஒரு காலடியில் சதுரமான இரண்டு பலகைகளை வைத்து, தோள் மீது தூக்கிக்கொண்டு வந்தான். குடும்பத் தலைவி தட்டு முட்டுச் சாமான்களை ஒரு கோணிப் பையில் கட்டி அதை இடுப்பில் சுமந்து வந்தாள். குழந்தை களில் மூத்தது ஒரு பெண், சுமார் எட்டு வயதிருக்கும். இடுப்பில் இரண்டு முழுத் துண்டும் கிழிந்திருந்த ரவிக்கையும் அதன் உடை. மேலே ஒரு தாவாணிகூடக் கிடையாது. அதற்கடுத்தவை இரண்டு ஆண் குழந்தைகள். ஒருவனுக்கு ஆறு வயது, மற்றொருவனுக்கு நான்கு வயது; இப்படி அவ்விரண்டு பேரும் பிறந்த வடிவத்தோடு வந்து கொண்டிருந்தார்கள். குளிரி னின்று பாதுகாத்துக் கொள்ள மூன்று குழந்தைகளும் தங்கள் மார்பை, இரண்டு கைகளாலும் மூடிக்கொண்டிருந்தார்கள். மற்றப் பெரியவர்களோடு சேர்ந்து வரவேண்டுமென்பதற்காக இவர்கள் நான் அமர்ந்து வந்த ஏணையைத் தொடர்ந்தாற்போல் ஓட்டத்திலேயே வந்து கொண்டிருந்தார்கள். நான் ஏணையில் உட்கார்ந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்து இவர்கள் என்ன நினைத்துக் கொண்டார் களோ? உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடிய பருவமோ பக்குவமோ இவர்களுக்கு இன்னும் ஏற்படவில்லை அல்லவா? ஆனாலும் முகத்தில் எவ்விதச் சோர்வோ, சலிப்போ காட்டாமல் வந்து கொண்டிருந்தார்கள். இந்த மூவரையும் பார்த்துக்கொண்டு வந்த எனக்கு ஓரே வேதனை! என்ன அநியாயம் இது? யாருக்கும் யாருக்குமோ போர் நடைபெற்றுக் கொண்டிருக்க, அந்தப் போருக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்படாத அந்தப் போரின் காரண காரியங்களைப் பற்றிச் சிறிதும் அறிந்து கொள்ள முடியாத பாமர ஜனங்கள், வருணிக்க முடியாத துன்பங்களை அனுபவிக்க வேண்டி யிருக்கிறதே? எத்தனை குடும் பங்கள் நாதனற்றுப் போயிருக் கின்றனவோ? உழைத்துப் பிழைக்க முடியாத வகையில் எத்தனை பேர் உடலூன முடையவர் களாகி விட்டிருக்கிறார்களோ? இவற்றைப் பற்றி யெல்லாம் நினைக்க நினைக்க என் கண்களில் நீர் பெருகத் தொடங்கியது. ஆனாலும் அப்பொழுது நான் என்ன செய்யக்கூடும்? சிறிது தூரம் வரை இந்த மூன்று குழந்தைகளும் ஓட்டத்தில் வருவதைப் பார்த்துப் பார்த்துக் கொண்டு வந்தேன். இதற்குமேல் என்னால் சும்மாயிருக்க முடியவில்லை. என் மேல் சட்டையை (கதர் ஜிப்பாவை)க் கழற்றி மூத்த பையனிடத்தில் கொடுத்தேன். அதை அவன் ஆவலோடு வாங்கி உடம்பில் போட்டுக் கொண்டபோது, அவனுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. இளங் கன்று போல் துள்ளிக் குதித்தான். அவனுக்கு அந்தச் சட்டை பெரியதாயிருந்தது. அதைப் பார்த்த அவனுக்கு அடுத்த நான்கு வயதுச் சிறுவன் அந்தச் சட்டைக்குள் நுழைந்து கொண்டான். இருவருக்கும் அது போது மானதாகவே இருந்தது. குளிருக்குப் பாதுகாப்பு கிடைத்து விட்ட தாக மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் ஒரு கண நேரந்தான் அந்த மகிழ்ச்சி. ஒரு சட்டையை இரண்டு பேர் போட்டுக் கொண்டு எப்படி நடந்து வரமுடியும் தட்டுத் தடுமாறி இரண்டு மூன்று அடி எடுத்து வைத்த பிறகு இளைய பையனுக்கு ஆத்திரம் வந்து விட்டது. சட்டையிலிருந்து வெளி வந்து விட்டான். மூத்தவனைப் பார்த்து நீயே இந்த சுகத்தை அனுபவி என்று சொல்லுகிற மாதிரி அவனுக்குச் சமிக்ஞை செய்துவிட்டுப் பின்னாடி சிணுங்கிச் சிணுங்கி வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. என்னிடம் இன்னொரு சட்டை இருந்திருந்தால் அவனுக்குக் கொடுத்திருக்கலாமே என்று தோன்றியது. ஆனால் அந்தச் செல்வம் அப்போழுது என்னிடத்தில் இல்லை. எனக்கிருந்த ஒரு சட்டையைக் கொடுத்த பிறகு நான் வெற்றுடம் போடுதான் இருந்தேன். ஆனால் மணிப்பூரிகளின் துப்பட்டி எனக்குப் போதுமான பாதுகாப்பாயிருந்தது. அடுத்த முகாம் போய்ச் சேர்ந்த பிறகு, வேறொரு சட்டையை உபயோகித்துக் கொண்டேன். ஆனாலும் சிறிது தூரம் சட்டையில்லாமல் வந்தது, என் உடம்பை லேசாகப் பாதித்து விட்டது. மார்ச்சளி கட்டிக் கொண்டு இரண்டு மூன்று நாட்கள் அவதிப்பட்ட பிறகு சரியாகிவிட்டது. இதற்காக நான் சிறிதும் வருந்தவில்லை. மேலும் இரண்டு சட்டைகள் இருந் திருந்தால் அந்தக் குழந்தைகளுக்குக் கொடுத் திருக்கலாமே, அப்படிக் கொடுக்க முடியவில்லையே. என்ற வருத்தமே எனக்கு ஏற் பட்டது. காவடியில் தூக்கி வரப்பட்ட இரட்டைக் குழந்தைகள் குளிர் தாங்க முடியாத காரணத்தினாலோ என்னவோ அடுத்த முகாமுக்கு அந்தக் குடும்பம் வந்து சேருவதற்கு முன்பு இறந்து விட்டன. இந்த உயர்ந்த மலைப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, பிரயாணி களில் பலர் குளிர் தாங்க முடியாததனாலோ நடை தாள முடியாத தாலோ உயிரிழந்து விட்டனர். இவர்களுடன் கூட வந்து கொண்டிருந்த உற்றார் உறவினர் இவர்களுக்காக அங்கேயே தங்கி அழுது கொண்டிருக்க முடியுமா? பெயரளவிலாவது ஈமச்சடங்குக ளென்று ஏதாவது செய்ய முடியுமா? போனவர்களை உருட்டிக் கீழே தள்ளி விட்டு மேலே போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான். அப்படித்தான் செய்தார்கள். மனிதன் எப்போழுதுமே, தனக்கு மிஞ்சின ஆபத்திற்கோ, துக்கத்திற்கோ உட்படுகிறபோது, அவன் உள்ளத்திலுள்ள அற்ப சொற்ப மான ஈரங்கூட உலர்ந்து போய்விடுகிறது. கல் நெஞ்சனாகி விடுகிறான். பனிக் குளமாக வேண்டிய அவன் கண்கள் பாழுங் கிணறுகளாகின்றன. வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம் என்று யாரோ ஒருவர் எப்பொழுதோ பாடினது அவனுக்குத் தெரிந்திருக்குமோ தெரியாதோ, அந்த வாசகத்தின் உண்மையை நேரடியான அனுபவத்தின் மூலம் உணர்ந்து கொண்டு விடுகிறான். ஆனால் இந்த அனுபவம் சிறிது நேரந்தான், அவனிடம் தங்கி யிருக்கிறது. உணர்ந்த உண்மையைச் சீக்கிரத்தில் மறந்து விடுகிறான். ஊருஞ்சதம், உற்றருஞ் சதம், தானும் தான் பெற்ற பேரும் பொருளும் சதம், எல்லாம் சதம், என்ற எண்ணத்தின் மீது ஊர்ந்து சென்று பழையபடி சம்சாரச் சூழலில், பந்த பாசங்களில் சிக்கிக் கொண்டு நெளிய ஆரம்பித்துவிடுகிறான்.  36. இயற்கைக் காட்சி கைக் கெட்டியது வாய்க் கெட்டவில்லை என்று சொல் வார்கள். இந்த வாசகத்தின் உண்மையை இந்த மலைப் பயணத்தின் போது, பிரயாணிகள், அனுபவத்தின் மூலம் அறிந்துகொள்ள வேண்டியவர் களானார்கள். வழி நெடுக, ஏறக்குறைய வக்ஸு முகாமை விட்ட சிறிது தூரத்திலிருந்து கடைசி முகாம் வான்சிங் என்ற இடத்திற்குச் சிறிது முன்பு வரையில், பாதையின் இரு பக்கங் களிலும் கண்ணுக்குத் தெரிகிற தூரத்தில் மலைச் சரிவு களிலும் மலை ஏற்றமான பகுதிகளிலும் மா, பலா, வாழை, தென்னை, நாவல், விளா முதலிய மரங்களிலிருந்து காய்களும் கனிகளும் கொத்துக் கொத்தாக, குலைகுலையாகத் தொங்கிக் கொண்டிருக்கும். பிரயாணிகளுக்கு இவற்றைப் பார்க்கும்போது நாவில் ஜலம் ஊறும். பறித்துத் தின்றால் பசி யடங்கும் என்ற எண்ணமும் தோன்றும். ஆனால் இந்த எண்ணத்தைச் செயல்படுத்த முடியாது. ஏனென்றால் இந்த மரங்கள், சுட்டிக்காட்ட மட்டும் முடிகின்ற முந்நூறு நானூறு அடி தூரத்தில் சரிவிலோ, ஏற்றத்திலோ இருக்கும். கிட்டச்செல்ல முடியாது. கீழே இறங்கிச் செல்ல முயன்றால், ஒன்று, குப்புற கவிழ்ந்து உருண்டு உருண்டு கீழே போக வேண்டும். அல்லது மேலே ஏறிச் செல்ல முயன்றால், கால் சறுக்கிச் சறுக்கித் தலைகீழாக விழவேண்டும். தவிர சில இடங்களில், நெருக்கம் நெருக்கமாக இருக்கும் மலர்ச் செடிகள், இவற்றில் பல வண்ண மலர்கள் பூத்துக் கிடக்கும், இவை அளிக்கும் வாசனையை நாம் நன்கு நுகர்ந்து கொண்டு போகலாம். இந்த வாசனை வயிற்றுப் பசியைத் தீர்க்காது போனாலும் மனத்திற்குச் சிறிதளவு இன்பத்தை அளிக்கும். இன்னும் சில இடங்களில், பூச்செடிகள் நெடிய மரங்களைத் தழுவிக் கொண்டு மேலே படர்ந்து சென்று உச்சாணிக் கிளைக்குப் போன பிறகு காற்றினால் அசைந்து ஆடிக் கொண்டிருக்கும். அவற்றைப் பார்க்கும் போது, சுய பலமில்லாத மெலியார் சிலர், தம்மினும் வலியாரோடு சேர்ந்து கொண்டுவிட்ட, தமக்கு மிஞ்சினவர் யாருமில்லையென்று தலையை ஆட்டி ஆட்டிப் பேசுவார்களே அவர்களை நினைக்கத் தோன்றும். பசுமைக்கும் எளிமைக்கும் எடுத்துக்காட்டுப் போல் இருக்கும் இந்த மலர்ச் செடிகளையும் காய் கனி மரங்களையும் பார்த்துக் கொண்டே போகிறபோது, ஐயோ யாருக்கும் பிர யோஜனப் படாமல் இவ்வளவும் வீணாகப் போகிறதோ என்று நமக்குத் தோன்றும். மற்றும் இவை - பிறர்க்குப் பிரயோஜனப் படாமல் செழித்து கொழித்திருக்கும் இவை - பாசி படிந்திருக்கிற அளவுக்குப் பொருட்செல்வம் படைத்த சிலர், அந்தச் செல்வத்தில் சிறு பகுதியைக் கூடப் பிறர்க்குப் பயன்படுத்த மனமில்லாதவர் களாய், அதே சமயத்தில், அந்தச் செல்வத்தைப் பிறர் மெச்ச, பரப்பிக் காட்டுகிறார்களே அப்படிப்பட்ட உலுத்தர்களை நமக்கு நினைவு படுத்தும். பொதுவாக, காட்டில் தன்னிசையாக உற்பத்தி யாகி வளர்கிற பொருள்கள் செழுமையாயிருக்கு மென்று சொல் வார்கள். நேரில் பார்த்தால்தான் இது எவ்வளவு உண்மை என்பது தெரியும். இயற்கை வளமை மிகுந்த இந்த இடங்களை நான் பார்த்துக் கொண்டு வரும்பொழுது, ஒவ்வோர் இடமும் அழகும் அமைதியும் இங்கிருந்துதான் பிறந்தனவோ என்று எண்ணுவேன். ஒவ்வோர் இடத்திலும் சிறிது நேரம் தங்கித் தங்கித்தான் வருவேன். ஏணை தூக்கி வந்த மணிப்பூரிகளும் என் உள்ளக் கிடக்கையை அறிந்து எனக்கு உதவியாயிருந்தார்கள். அந்தந்த இடத்தில் தங்கி ஆயுள் பூராவையும் அங்கு கழித்துவிட்டாலென்ன என்று நினைப்பேன். ஆனால் நினைப்போடு சரிதான். நினைப்பைச் செயலாக்குவதற் கான பக்குவம் உனக்கு இன்னும் ஏற்படவில்லை யென்று யாரோ ரகசியமாகக் காதில் சொல்லிவிட்டுப் போவது போல இருக்கும். மேற் கொண்டு பயணப்பட வேண்டியதுதான். இந்த இயற்கைக் காட்சிகளைத் தவிர, வழி நெடுக, அதாவது வக்ஸு முகாமுக்குப் பிறகு வான்சிங் முகாம்வரை மலைஜாதியினர் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களைப் பயிரிட்டுக் கொண்டிருக்கும் காட்சிகளையும் பார்த்து வந்தேன். மேலிருந்து கீழே நெடுக்க வாட்டில் வகுக்கப்பட்ட பாத்திகளில் பயிர்கள் பச்சைப் பசே லென்று வளர்ந்து ஆடி அசைவது பச்சைப் பாம்புகள் நெளிந்து கொடுப்பது போல் இருக்கும். சில இடங்களில் இந்தப் பாத்திகளில் கருமை படர்ந்திருக்கும். பயிர்கள் முற்றிப் பக்குவ மடைந்த பிறகு கதிர்களை அறுத்துக் கொண்டு, தாள்களை நெருப் பிலிட்டுக் கொளுத்தி விடுவார்கள். தாங்கள் எரிந்து அந்த நிலத் திலேயே படிந்து நல்ல எருவாகிவிடும். அடுத்துப் பயிரிடுவதற்கு நிலம் பண்பட்டதாகி விடும்.  37. வறுத்த கேழ்வரகு கொடுத்த வேதனை! காலை பத்து மணிக்கு சுமாருக்கு லும்லிங் முகாமிலிருந்து புறப்பட்ட நாங்கள் மாலை சுமார் ஐந்து மணிக்கு சிட்டா முகாமுக்கு வந்து சேர்ந்தோம். எட்டரை மைல் தூரத்திற்கு ஏழு மணி நேரம் பிடித்தது. வசதிக் குறைவான இடத்தில் இந்த முகாம் அமைக்கப் பட்டிருந்தது. உயர்ந்த மலைப்பகுதியானபடியால், குளிர் அதிகம். பிரயாணிகள் தங்குவதற்கென வேயப்பட்டிருந்த கீற்றுக் கொட்டைகள் குளிரினின்று பாதுகாப்பு அளிக்கக் கூடிய வகையில் இருக்க வில்லை. ஈரமான தரை; அதுவும் சமனாக்கப்படவில்லை. உடம்பில் ஊசி குத்துவதுபோல், சில்லென்று காற்று சுழன்று சுழன்று அடித்துக் கொண்டிருந்தது. நாங்கள் வந்து சேர்ந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே மையிருட்டுக் கப்பிக்கொண்டு விட்டது. கையோடு கொண்டு வந்திருந்த சின்னஞ் சிறு மெழுகுவர்த்தி களில் ஒன்றை ஏற்றினால் அது உடனே அணைந்துவிடும்; தீக்குச்சியும் சீக்கிரத்தில் பற்றாது. மூன்று நான்கு தடவை மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக்கொள்ள முயன்று தோல்வியடைந்தோம். சலிப்பு ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் ஆகாரம் என்னவேண்டிக் கிடக்கிறது? என்ன முயன்றாலும் தயாரித்துக் கொள்ள முடியாதென்பது நிச்சயம். எனவே உண்ணா விரதம் எங்களை வலிய வந்தடைந்தது. நித்திரா தேவியும் கூடவே வந்துவிட்டாள். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் எங்களை விட்டு விலகிச் சென்று விட்டாள். உண்ணா நோன்பு இருக்கிறவர்களை அரவணைத்துக் கொள்ள அவள் விரும்ப வில்லையோ என்னவோ? ஆனாலும் பிரயாண அலுப்பு எங்கள் கண்களை மூடச்செய்தது. இப்படிக் தூங்காமலே கண்களை மூடிக் கொண்டு இராப்பொழுதைக் கழிக்க வேண்டியவர்களானோம். நடு நிசியிருக்கும். என் வாழ்க்கைத் துணைவி, தன் உள்ளங் காலை ஏதோ ஒரு பிரயாணி நக்குவதுபோல் உணர்ந்து, மெழுகு வர்த்தியை ஏற்றிப் பார்த்தாள். அது சிறிது வெளிச்சம் கொடுத்தது. அந்த வெளிச்சத்தில் ஒரு முள்ளம்பன்றி தன் முட்களை விரித்துக் கொண்டு ஓடியது தெரிந்தது. நல்ல வேளையாக அதன் முட்கள் அவள் உடம்பில் படவில்லை. அவள் உள்ளங்காலில் அது என்ன ருசி கண்டதோ? எப்படியோ அன்றிரவைக் கழித்துவிட்டு மறுநாள் (15 - 4 - 42) காலை எட்டு மணிக்கு மேல் நும்டாக் என்ற அடுத்த முகாமுக்குப் புறப்பட்டோம். இது கடல்மட்டத்திற்கு நாலாயிரம் அடி உயரத்தில் உள்ளது. சிட்டாவிலிருந்து இது எட்டரை மைல் தூரம், ஆனாலும் கடினமான பயணம், ஏனென்றால் மலை இறக்கத்திலேயே வர வேண்டியிருந்தது. சாதாரணமாக மலைப்பகுதியில் ஏறு முகத்தில் செல்வதைக் காட்டிலும் இறங்கு முகத்தில் செல்வதுதான் கடினம். ஒழுங்கான படிகளில்லை. கால் சறுக்கி விழக்கூடிய இடங்கள் பல. உடம்பின் மேல் பாகத்தைப் பின் பக்கம் லேசாகத் தள்ளி விட்டுக் கொண்டு நிமிர்ந்தாற் போல் நடந்தால்தான் சறுக்கி விழாமல் இருக்கலாம். உடம்பை முன் பக்கம் சிறிது வளைத்துக் கொடுத்தாற் போல் நடக்க முற்பட்டால் தலைகீழாக உருண்டு போக வேண்டி யதுதான். என் கூட வந்த நண்பர்கள் மிகுந்த பிரயாசையுடனேயே இந்தப் பயணத்தைச் சமாளித்தார்கள். இந்த விஷயத்தில் டோலியில் வந்த பெண்டுகளும், ஏணையில் வந்த நானும் ஓரளவு அதிருஷ்ட சாலிகள் என்றே சொல்ல வேண்டும். இந்த வழிநெடுக ஆங்காங்கு மலையருவிகள் காட்சியளித்தன. மேலே இருந்து கீழே இவை நுரையுடன் கூடி இழிந்து வருகிற போது அகதிகளின் அவல நிலை கண்டு இந்த மலைகள், நெஞ்சம் கரைந்து துக்கக் கண்ணீர் வடிக்கின்றனவோ என்று தோன்றியது. பல இடங்களில் இந்த அருவிகளைப் பார்த்துக் கொண்டு வந்தோ மாயினும், இவை பிரயாணிகளின் உபயோகத் திற்குத் தகுதியுடை யன வாயில்லை. குளிப்பதற்கோ குடிப்பதற்கோ இவற்றை உப யோகித்தால் மலேரியா காய்ச்சல் வருமென்று எங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. இருந்தும் ஈயாதாரை நினைவுறுத்தின இந்த அருவிகள். குடி நீர் கிடைக்கப் பெறாமல் பிரயாணிகள் பலர் தவியாகத் தவித்துப் போயினர். இந்தக் தவிப்பை ஆங்காங்கு இருந்த மலைவாசிகள், பணம் சம்பாதிப்பதற்கு ஒரு வாய்ப்பாகப் பயன் படுத்திக் கொண்டனர். மலைப்பகுதிகளில் விளையும் ஒருவகை அரிசியைப் பக்குவப்படுத்திச் சாராயமாகக் காய்ச்சி சிறு சிறு குப்பி களில் நிரப்பி, ஒரு குப்பி ஆறணா வீதம் விற்பனை செய்ய முற் பட்டனர். தாகத்தினால் தவித்துக் கொண்டு வந்தவர்கள், வாங்கிக் குடித்தார்கள். தாகம் தீர்ந்ததோ என்னவோ, ஒருவிதமான மயக்கத் திற்குட்பட்டார்கள். இந்த மயக்கத்தினால் தள்ளாடித் தள்ளாடி நடந்தார்கள். எனக்கு நா வறட்சி இல்லாமலில்லை. ஆனாலும் இந்தக் குடிக்கு நான் ஆளாகவில்லை. என் முன்னோர்கள் செய்த புண்ணியம் என்றே சொல்ல வேண்டும். மற்றவர்களைப் போல் நான் ஒரு குப்பியை வாங்காமல் வந்ததைப் பார்த்து ஏணை தூக்கி வந்த மணிப்பூரிகள், என்னிடம் அதுகாறும் காட்டி வந்த மரியாதையை மேலும் அதிகப்படுத்திக் கொண்டார்கள். ஏணையில் கால்களை முடக்கி வைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்த எனக்கு, சிறிது தூரம் நடந்தால் நல்லது என்று தோன்றியது. ஏணையிலிருந்து வெளிபட்டு நடந்து வந்து கொண்டி ருந்தேன். ஓரிடத்தில், ஒரு நாகன், கேழ்வரகை லேசாக வறுத்து வைத்துக் கொண்டு, ஒரு செரங்கை (கைப் பிடி அளவு) இரண்டணா என்று விற்றுக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்து எனக்குப் பரிதாபம் உண்டாயிற்று. முதுமைப் பருவத்தின் முதிர்ந்த நிலைக்கு வந்து விட்டிருந்தான். வறுமையோடு போராடிப் கொண்டிருக் கிறான் என்று தெரிந்தது. எனக்கும், வாயை அசைத்துக் கொடுத்துக் கொண்டு போனால் தாகத்தை மறந் திருக்கலாம் போல் தோன்றியது. எனவே அவனுக்கும் உதவி செய்தாற் போலிருக்கும், எனக்கும் தாகந் தணிந்தாற் போலிருக்கும் என்று எண்ணி ஒரு கைப்பிடி கேழ்வரகை இரண்டணா கொடுத்து வாங்கிக் கொறித்துக் கொண்டு நடந்தேன். அப்பொழுது டோலியில் வந்த பெண்களும் கூட வந்த என் நண்பர் களும் சற்று முன்னோக்கிச் சென்று விட்டிருந்தார்கள். ஏணையோடு வந்த மணிப்பூரிகள் இருவரும் நானும் மட்டுமே வந்து கொண்டி ருந்தோம். சில கெஜ தூரம் வந்திருப்பேன். விக்கல் எடுத்தது பாருங்கள்; மூச்சை அடக்கிக் பார்த்தேன். மூச்சே போய்விடும் போலிருந்தது. கடைசி காலத்தில் விக்கல் எடுக்குமென்பார்கள். அந்த விக்கல் தானோ என்று எண்ணி, கடைசி மூச்சுக்காகக் காத்திருந்தேன்.  38. மணிப்பூரிகளின் கலையுணர்ச்சி மணிப்பூரிகள் இருவரும் பயந்து போயினர். ஆனால் ஆண்ட வனுடைய கட்டளை நான் இன்னும் சில காலம் உயிரோடு இருக்க வேண்டுமென்றிருந்தது போலும். சுமார் அரைமணி நேரத்திற்குப் பிறகு விக்கல் தானாகவே நின்றது; தாகமும் மறைந்து விட்டது. இந்த அரைமணி நேர அநுபவத்தை என்னால் மறக்க முடியாது. நும்டாக் முகாம் ஆற்றோரமாக அமைக்கப்பட்டிருந்தது. மனோரம் மியமான சூழ்நிலை. ஆனால் பேய்க்காற்று வீசிக் கொண்டே இருந்தது. இதனால் முதலில் ஓரிடத்தில் அமைத்துக் கொண்ட ஜாகையை வேறோரிடத்திற்கு மாற்றிக் கொண்டோம். இந்தப் புதிய இடத்தில் சமையல் செய்து கொள்வதற்கான வசதிகளிருந்தன. சமையலுக்கு ஆற்று நீரையே உபயோகித்துக் கொண்டோம். நல்ல வேளையாக அதனால் எங்கள் உடம்பு பாதிக்கப்படவில்லை. தவிர, பச்சைக் காய்கறிகள் இங்குக் கிடைத்தன. இவற்றைப் பார்த்ததும் எங்களுக்கு நல்ல பசி எடுத்துவிட்டது. நன்றாக இருட்டுவதற்கு முன்பு சமையல் சாப்பாட்டை முடித்து கொண்டோம். முந்திய இரவு நல்ல தூக்கம் இல்லாமலிருந்ததற்குப் பரிகாரமாக அன்றைய இரவில், களைப்புத் தீரத் தூங்கினோம். மற்றும் இந்த முகாமில்தான், வெகு நாட்களுக்குப் பிறகு பத்திரிகைகளைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சில நாட் களுக்கு முற்பட்ட பத்திரிகையானாலும் அவற்றைப் புரட்டிப் பார்ப் பதில் எங்களுக்கு அலாதி மகிழ்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக, என்னைப் பொறுத்த மட்டில், பத்திரிகை பாராத நாளெல்லாம் பிறவா நாளே என்ற ரீதியில் அன்றாடக் காலைப் பொழுதைச் செலவழித்து வந்த பழக்கத்தினால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைக் காட்டி லும் என்னுடைய மகிழ்ச்சி கூடுதலாகவே இருந்ததென்று சொல்ல வேண்டும். மறுநாள் (16 - 4 - 42) காலை, சுமார் ஏழு மணிக்கு முந்தின நாள் மாலை சமையல் செய்ததில் மிகுந்திருந்ததைக் கட்டுச் சாதமாகக் கட்டிக் கொண்டு, வான்சிங் என்ற அடுத்த முகாமுக்குப் புறப் பட்டோம். சுமார் ஏழரை மைல் தூரம் இருக்கும். பத்து மணி சுமாருக்கெல்லாம் இங்கு வந்து சேர்ந்து விட்டோம். பாதை அதிக ஏற்ற இறக்கங்கள் இல்லாதிருந்த படியால் பயணம் கடினமில்லாமல் இருந்தது; சீக்கிரத்தில் வந்து சேர்ந்து விடவும் முடிந்தது. வான்சிங்குக்கு வந்து சேரு முன்பு, நும்டாக் முகாமிலிருந்து சுமார் ஒன்றரை மைல் வந்த பிறகு ஹீரோக் என்ற ஒரு சிற்றூர் இருக்கிறது. மணிப்பூர் ராஜ்யத்தின் எல்லைக்குட்பட்டது. மணிப்பூர் ராஜ்யம் அப்பொழுது (1942 - ஆம் வருஷம்) ஒரு சுதேச சமதானமாயிருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு 1949 - ஆம் வருஷம் இது, இந்திய அரசாங்கத்தின் நேரடியான நிர்வாகத்திற்குட் படுத்தப் பெற்றது. ஹீரோக் வந்த பிறகுதான், ஜன நடமாட்டத்தையும் நாகரிகச் சின்னங்களையும் எங்களால் பார்க்க முடிந்தது. இந்தச் சிற்றூரில் வீடுகளெல்லாம் எவ்வளவு சுத்தமாயிருந்தன! சின்னஞ்சிறு குடில்கள் போல் இருந்தன. என்றாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலைக் கோயிலாகவே திகழ்ந்தது. எளிமை, இனிமை, அழகு ஆகிய வெல்லாம் ஒவ்வொரு குடிலிலும் குடியிருப்பது போல் எனக்குத் தோன்றியது. ஒவ்வொரு வீட்டுக்கு முன்பும், திறந்த வெளி, அது, வீட்டிலுள்ளவர் களுடைய பரந்த மனத்திற்குக் கட்டியங் கூறுவது போல் இருந்தது. ஒரு வீட்டில் நுழைந்து பார்க்க ஆசைப்பட்டேன். ஏணை யிலிருந்து இறங்கி உள்ளே சென்றேன். உட்புறம் ஆண்களும் பெண் களுமாக நாலைந்து பேர் இருந்தனர். என்னைப் பார்த்தவுடன் கை கூப்பி வரவேற்று, நான் வந்த காரணத்தை அறிய விரும்பினார்கள். வெளியிலிருந்து பார்க்கும் போது வீட்டிற்குள் நுழைந்து பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. அதனால் வந்தேன் என்று சுருக்கமாகச் சொன்னேன். வீட்டின் உட்புறத்துத் தரையும் சுவர் களும் எவ்வளவு மழப்பாயிருந்தன! சுவர்களின் உட்புறத்திலும் வெளிப் புறத்திலும் எத்தனை வண்ண வண்ண ஓவியங்கள்! ஓவியக் கலை இவர்களுடன் பிறந்த ஒன்று போலும் என்று கருதினேன். அவர்களும் அன்போடு, புழங்கும் உட்பகுதியையும், கையாளும் பாத்திரங்களையும் ஒளிவு மறைவின்றிக் காட்டினார்கள், வீட்டின் அமைப்பையும் அழகையும் நான் பாராட்டிப் பேசிய போது அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. ‘eh§fŸ VjhtJ bfhL¤jhš Ú§fŸ rh¥ãLå§fsh? என்று அவர்கள் என்னைப் பார்த்துக் கேட்ட போது, அந்தக் கேள்வியிலே எவ்வளவு பணிவு! பார்வையிலே எவ்வளவு கனிவு! எனக்கு இப்பொழுது ஒன்றும் தேவையில்லை. உங்கள் அன்பே எனக்குப் போதும் என்று சொல்லி அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு, வெளியே வந்தேன். நான் மேற்படி வீட்டிற்குள் சென்ற போது, என்னோடு ஏணை தூக்கி வந்த மணிப்பூரிகள் இருவரும் வந்தார்கள். அவர்களுக்கு, அவர்களுடைய இனத்தவரோடு ஒரு சில நிமிஷங்கள் நான் கலந்து பழகியது மிகப் பெருமையாயிருந்தது. என்னிடத்தில் அவர்கள் செலுத்திய அன்பும் மதிப்பும் மேலும் அதிகப்பட்டன. ஹீரோக்கிலிருந்து வான்சிங் வரையில் ஆங்காங்கு மரத்தடி களிலோ சிறிய சிறிய குளங்களின் கரைகளிலோ சிவபிரானுடைய கற்சிலைகள் பல இருந்தன. பாதை வழியே செல்லும் ஒவ்வொரு மணிப்பூரியும் ஒவ்வொரு சிலை முன்பும் மிதியடியைக் கழற்றி வைத்து விட்டு ஒரு முறையாவது வலம் வந்து, கண் மூடிய வண்ணம் கை கூப்பித் தொழுது விட்டுத்தான் மேற்கொண்டு செல்வான். ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய எல்லோருமே இந்தப் பழக்கத்திற்கு உட்பட்டிருந்தார் களென்பதை நான் பார்த்து வந்தேன்.  39. அன்பின் பிணைப்பு வான்சிங் முகாம், வக்ஸு முகாமைப்போல் அமைக்கப் பட்டி ருந்தது. தங்குவதற்கென்று கட்டப்பட்டிருந்த கொட்டகைகளில் பிரயாணிகள் தரைமட்டத்திற்குச் சுமார் ஓர் அடிக்கு மேல் மூங்கில் கழிகளைப் பரப்பி, குறுக்கும் நெடுக்குமாகக் கயிறுகளைப் போட்டுக் கட்டியிருந்தார்கள். இவற்றின் மீது உட்கார்ந்தாலோ, படுத்தாலோ உறுத்தும். ஆனால், கீழே ஈர மண்ணின் மீது இருப்பதைக் காட் டிலும் இது சற்று வசதியாகவே இருந்ததென்று சொல்ல வேண்டும். இந்தக் கொட்டகைகள் ஒன்றில் நாங்கள் இடம் பிடித்துக் கொண்டு, சாமான்களைப் போட்டு விட்டு, முதல் வேலையாக, கையோடு கொண்டு வந்திருந்த கட்டுச் சாதத்தைச் சாப்பிட்டுப் பசியாற்றிக் கொண்டோம். பிறகு டோலிகளையும், ஏணையையும், தூக்கி வந்தவர்கள், சாமான் களைச் சுமந்து வந்தவர்கள் ஆகிய இருபத்தாறு பேரும் பெறவேண்டிய கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளச் செய்ய முற்பட்டோம். ஓர் ஆளுக்கு ஒன்பது ரூபாய் விழுக்காடு கொடுக்கப்படுமென்றும் இதற்கு இவர்களை அமர்த்திக் கொண்டு வந்தவர்கள் அத்தாட்சிச் சீட்டுக் கொடுக்க வேண்டு மென்றும், இந்த அத்தாட்சிச் சீட்டு பெற்றுக் கொண்டு வருகிறவர் களுக்கு, வான்சிங்கில் தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ள கஜானாவி லிருந்து பணம் பட்டுவாடா செய்யப்படுமென்றும் அரசாங்க அறிக்கையொன்று கூறி யிருந்தது. இதை அனுசரித்து, இருபத்தாறு பேருக்கும் அத்தாட்சி சீட்டுக் கொடுத்தோம். ஒரு டோலிக்கு நான்கு பேர் விகிதம் மொத்தம் 4 x 9 = 36 ரூபாயாகிறது. அதாவது டோலியில் வந்த ஒவ்வொருவருக்கும் இந்திய அரசாங்கம் முப்பத்தாறு ரூபாய் விகிதம் செலவழித்தது. சாமான்கள் தூக்கி வந்தவர்களோடு சேர்த்து மொத்தம் இருபத்தாறு பேருக்கு, (ஆளொன்றுக்கு ஒன்பது ரூபாய் விகிதம் 26 x 9 = 234) இருநூற்று முப்பத்து நான்கு ரூபாய் எங்கள் குழுவினருக்காகப் பட்டுவாடா செய்யப்பட்டது. டோலிகாரர்களும் மற்றக் கூலியாட்களும், நாங்கள் கொடுத்த அத்தாட்சி சீட்டுடன் கஜானாவுக்குச் சென்று பணம் பெற்றுக் கொண்டு திரும்பி வந்து எங்களிடம் விடை பெற்றுச் சென்றார்கள். ஆனால், மேதிரி மட்டும் அவர்களுடன் செல்லாமல் தயங்கித் தயங்கி நின்றான். எங்களிடம் அதிகப்படியான இனாம் எதிர்பார்த்து அவன் தயங்கி நின்றான் என்று சொல்வதற்கில்லை. அப்படிப்பட்ட மனிதன் என்று அவனைச் சொல்ல முடியாது. எங்களைவிட்டுப் பிரிய மனமில்லாமல் நிற்கிறான் என்று அவன் முகக்குறி கூறியது. அப்படியானால் அவனை எங்களுடன் அழைத்துக் கொண்டு வரமுடியுமா? அவன்தான் வருவானா? அவன், குறிப்பாக என்னைப் பற்றி அவன் என்ன மதிப்புப் போட்டிருந்தானோ எனக்குத் தெரி யாது. áy ÃÄõ§fS¡F¥ ãwF mtid¥ gh®¤J ‘k‰wt®fŸ nghŒ É£lh®fns; Ú mt®fSl‹ nghfÉšiyah? என்று கேட்டேன். அவன் கண்ணீர்விட ஆரம்பித்தான். எனக்கொன்றும் புரியவில்லை. என்ன வேண்டும் உனக்கு என்றேன். எனக்கென்ன வேண்டும் பாபூ? c§fis É£L v¥go¥ ãǪJ nghnt‹? என்று தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டான். என் மனம் மெழுகாகியது. அவனை எப்படிச் சமாதானப்படுத்தி அனுப்புவது? ஒரு கண நேரம் சிந்தனையில் ஆழ்ந்தேன். பிறகு, உடுத்திக் கொண்டிருந்த கதர் வேஷ்டி, அணிந்து கொண்டிருந்த கதர் ஜிப்பா, குல்லாய், அங்கவதிரம் ஆகிய எல்லாவற்றையும் அவனிடம் கொடுக்க வேண்டும் போல் தோன்றியது. வேற்றுடை மாற்றிக் கொண்டு, அப்படியே எல்லாவற்றையும் கழற்றி அவனிடம் கொடுத்தேன். அவனும் பணிவோடு பெற்றுக் கொண்டான். தான் அதுகாறும் உடுத்தியிருந்த வேஷ்டி முதலியவற்றைக் களைத்து விட்டு நான் கொடுத்தவற்றை அணிந்து கொண்டு, கீழே விழுந்து வணக்கஞ் செலுத்தினான், இதை வைத்துக் கொள் என்று சொல்லி இரண்டு ரூபாய் கொடுக்கப் போனேன். ஆனால் அவன் பெற்றுக் கொள்ள மறுத்தான். உங்கள் பணம் எனக்குத் தேவையில்லை, உங்கள் அன்பும், ஆசியும்தான் எனக்குத் தேவை, உங்களைப் போன்ற சாதுக்களை நான் எப் போழுது பார்க்கப் போகிறேன் என்று கம்மிய குரலில் கூறினான். என்னுடைய ஆசி உனக்கு எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும். நீ உபகாரச் சிந்தையுள்ளவன்; உனக்கு ஒரு குறைவும் வராது என்றும், இந்த இரண்டு ரூபாயையும் என் அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்; ஆம், நீ பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்றும் சொல்லி, அவன் கையில் திணித்தேன். அவனால் மறுக்க முடிய வில்லை. பெற்றுக் கொண்டான். மீண்டும் ஒரு முறை வணக்கஞ் செலுத்திவிட்டுச் சென்றான். அவன் யாரோ? நான் யாரோ? இருந்தாலும் அன்பானது அவனையும் என்னையும் பிணைத்து விட்டது. வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டதன்றோ அன்பு!  40. மேலதிகாரியின் மேலோட்டமான பார்வை வான்சிங்கோடு நடைப் பயணம் ஒருவாறு முற்றுப் பெற்றது. இனி லாரி பயணம்; இந்தப் பயணத்திற்கு ராணுவ லாரிகள் பயன் படுத்தப் பெற்றன. வான்சிங் முகாம் வந்து சேர்ந்த அன்றே, லாரி பயணத்திற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டியவர்களானோம். இந்த ராணுவ லாரிகள் இந்தியாவை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்த ஜப்பானியப் படைகளை, முடிந்த வரையில் தடுத்து நிறுத்த முயன்று கொண்டிருந்த பிரிட்டிஷ் இந்தியப் படைகளுக்கு, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து ரெயில் மார்க்கமாக டிமாபூர் டேஷன் வரை கொண்டு வரப்பட்ட உணவுப் பொருள்கள், பெட் ரோல் முதலியவற்றை வான்சிங்கிற்குச் சில மைல்களுக்கு முன்னால் கொண்டு கொடுத்து விட்டுத் திரும்பி வந்து கொண்டி ருந்தன. இவை டிமாபூர் டேஷனில் முழுச் சுமையோடு புறப்படும். திரும்பும் போது காலியாக வரும்; இப்படி வரும் லாரிகள் அகதிகளாக வந்திருக்கும் பிரயாணிகளை, அடுத்த முகாம் இம்பாலுக்கும் அதற்குப் பிறகு டிமாபூர் டேஷனுக்கும் படிப்படியாகக் கொண்டு போய்ச் சேர்ப்பிப்பதென்று அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந் தார்கள். ஆனால் இந்தக் காலி லாரிகள் வான்சிங் முகாமுக்கு எப் பொழுது வரும்? எத்தனை வரும் என்பது யாருக்கும் தெரியாது. வரும்போது ஏறிக் கொள்ள வேண்டும். இதற்காக, ஆயிரக் கணக்கான பிரயாணிகள் இந்த லாரிகள் வரும் பாதையோரமாக மணிக்கணக்கில் காத்துக் கிடந்தார்கள். இந்த ஜன நெரிசலைப் பார்த்த போது எங்களுக்குப் பிரமை தட்டிவிட்டது. நாள் கணக்கில் காத்துக் கிடந்தால் கூட இடம் கிடைக்காது போல் தோன்றியது. ஆனால், அங்கேயே தங்கியிருக்க முடியுமா? முகாம் வந்து சேர்ந்த தினத்தன்றே (16 - 4 - 42) மூட்டை முடிச்சுகளுடன் பாதை யோரத்தில் ஜனங்களோடு ஜனங்களாக உட்கார்ந்து கொண்டோம். அப்பொழுது பகல் சுமார் இரண்டு மணி. மண்டை காய்ந்து போகிற அளவுக்கு வெயில் தகித்து கொண்டிருந்தது. லாரிகள் போக்கு வரத்தினாலும் எழுப்பிய புழுதிப் படலம் எங்களைத் திணறச் செய்து கொண்டிருந்தது. ஆயினும் நாங்கள் இவற்றைப் பொருட்படுத்த வில்லை. லாரிகள் வந்து போவதே ஒரு வேடிக்கை. ஒரு லாரி வந்து நிற்கும். அதில் எப்படியாவது தொத்திக் கொண்டு விடலாமென்று ஜனங்கள் நூற்றுக்கணக்கில் இடித்துக் கொண்டும், மோதிக் கொண்டும், மிதிப்பட்டுக் கொண்டும் அதனிடம் நெருங்குவார்கள். எல்லோருக்கும் இடங் கிடைக்குமா? போலீஸார் வருவார்கள். நல்ல வார்த்தைகளால், பெண்டு பிள்ளைகள் முதலில் ஏறிக்கொள்ள வழிவிடுமாறு சொல்லிப் பார்ப்பார்கள். கேட்பார் யார்? பிறகு நாக்கில் நரம்பில்லாமல் திட்டுவார்கள். அதனாலும் பயனிராது. பிறகு தடிப்பிரயோகம், பூட் காலால் உதை எல்லால் நடைபெறும். கடைசியில் முப்பது. மிஞ்சினால் நாற்பது பேரை, புளி மூட்டை மாதிரி லாரியில் அடைப்பார்கள். லாரியும் உறுமிக் கொண்டு புறப் பட்டுவிடும். ஒவ்வொரு லாரி வந்து போகும்போதும் இதே கோலந்தான். நாங்கள் (16 - 4 - 42) மாலை வரை காத்துப் பார்த்தோம். அன்று போக முடியாதென்று தெரிந்தது. முகாமில் நாங்கள் அமர்த்திக் கொண்டிருந்த ஜாகைக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இதற்குள் எங்களுக்கு நல்ல பசி எடுத்து விட்டது. காலையில் சாப்பிட்டதுதானே? இனி ஜாகைக்குச் சென்று பண்டம் பாத்திரங்களைத் தேடி சமையல் செய்து சாப்பிட முடியாதென்று உணர்ந்தோம். பாதையோரத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டி ருந்த சிறு சிறு கடைகளில் பூரி விற்கப்பட்டு வருவதைப் பார்த் தோம். எங்கள் பசி, எங்களை ஒரு கடைக்கு இழுத்துச் சென்றது. கடு கெண்ணெயில் பொரித்தெடுக்கப்பட்ட பூரி, ஒன்றின் விலை ஓரணா என்று சொன்னார்கள். பேரம் பேச முடியுமா? கடுகெண் ணெய் உடம்புக்கு ஒத்துக் கொள்ளுமா, என்று சிந்தித்துக் கொண்டி ருக்க முடியுமா? பாதையி லிருந்து லாரி இறைத்துக் கொண்டிருக்கும் புழுதி மண்ணை பூரிகளின் மீது படியாதே, வாணலியின் மீது விழாதே என்று தடைபோட்டுத் தடுக்க முடியுமா? வியஞ்சன வகைகள் ஏதும் இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்க முடியுமா? எதைப் பற்றியும் சிந்திக்காமல், ஏதும் பேசாமல் பூரிகளை வாங்கி வாய்க்குள் திணித்தோம். அந்தச் சமயத்தில் அவை எவ்வளவு சுவை யுடையன வாயிருந்தன தெரியுமா? குடிப்பதற்குத் தண்ணீர் இலவச மாகக் கிடைத்தது. நல்ல வேளையாக அதற்கு யாரும் காசு கேட்க வில்லை. ஏதோ ஒரு வகையாக வயிற்றை நிரப்பிக் கொண்டு, எங்கள் ஜாகைக்குச் சென்று இராப்பொழுதைக் கழித்தோம். நாங்கள் பூரிக்கடையில் அமர்ந்து எங்கள் வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, கஜானா அமைக்கப்பட்டிருந்த பக்கத்தில் ஒருவிதப் பரபரப்பு காணப் பட்டது. போலீஸாரும், முகாமை நிருவகித்து வந்த அதிகாரிகளும் சுறுசுறுப்புடன் அப்படியும் இப்படியுமாகப் போய்க்கொண்டு வந்துகொண்டு இருப்பதைப் பார்த்தோம். என்னவென்று விசாரித் ததில் அப்பொழுது இந்திய அரசாங்கத்தின் நிர்வாக சபை அங்கத் தினருள் ஒருவராயிருந்த எம். எ. ஆனே என்பவர், முகாமைப் பார்வையிட வந்திருக்கிறாரென்று தெரிய வந்தது. பர்மாவிலிருந்து அகதிகளாக வந்தவர்களைக் கவனிக்கும் பொறுப்பு இவருடைய இலாகாவைச் சேர்ந்ததாயிருந்தது. இவரும் வந்து கஜானா அலுவல கத்தில் சிறிது நேரம் தங்கி விட்டுத் திரும்பிச் சென்று விட்டார். வந்தார்; இருந்தார்; சென்றார். அவ்வளவுதான் என்ன காரியம் சாதித்தாரோ? மணிக்கணக்கில், நாள் கணக்கில் கூடக் காத்துக் கிடக்கும் அகதிகளுக்கு இவர் வருகையினால் என்ன அநுகூலம் ஏற்பட்டதோ? இவையெல்லாம் எங்களுக்கு மறை பொருள் களாகவே இருந்தன. பாதையோரத்தில் வரிசை வரிசையாக அமர்ந்திருக்கும் அகதிகள் பக்கம் இவர் தமது திருப்பார்வையைத் திருப்புவாரோ என்று நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டி ருந்தோம். ஆனால் முகாம் அதிகாரிகள், அவர் பார்வையை வந்த வழியிலேயே திருப்பிவிட்டார்கள் போலும். அவரும் வந்த வழி யாகவே திரும்பிப் போய்விட்டார். மேலதிகாரிகள், மேலோட்ட மாகத்தானே எதையும் பார்ப்பார்கள்?  41. இம்பால் முகாமில் மறுநாள் (17 - 4 - 42) பொழுது விடிந்ததும் மூட்டை முடிச்சு களுடன் நேற்று மாதிரி வான்சிங் முகாம் பாதையோரமாக கியூ வரிசையில் உட்கார்ந்து கொண்டோம். அதிருஷ்டவசமாக எங்கள் வயிறு எங்களோடு ஒத்துழைக்கின்ற முறையில், ஆகாரம் எதையும் கேட்கவில்லை. நேற்று மாலை ஏற்றுக்கொண்ட பூரியோடும் தண்ணீரோடும், போராடுவதில் அது முனைந்திருந்தது. தான் நடத்தும் போராட்டத்தை எங்களுக்குத் தெரிவிக் கின்ற முறையில் அடிக்கடி ஏப்பத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தது. கிழக்கைப் பார்த்தாற் போல் நாங்கள் உட்கார்ந்திருந்த படியால், சூரியன் தன் கிரணங்களை எங்கள் மீது வீசி எறிந்து கொண்டி ருந்தான். போய் வந்து கொண்டிருந்த லாரிகளும், ராணுவ ஜீப்பு களும் புழுதி மண்ணைக் கிளப்பி விட்டுப்போய்க் கொண்டிருந்தன. வாயு பகவான், அப்படிச் கிளம்பிய புழுதி மண்ணை எல்லோர் உடம்பின் மீதும் சமமாகப் படிய வைக்கும் பணியில் ஈடுபட்டான். இடையிடையே போலீசார் குறுந் தடியும் கையுமாக உட்கார்ந்திருந் தவர்கள் முன்னால் நடை பயின்று காட்டினார்கள். கூடவே தாங்கள் அதிகார சக்தியின் வாரிசுதாரர்கள் என்பதை உட்கார்ந்திருப் பவர்கள் எங்கே மறந்து விட்டிருக்கப் போகிறார் களோ யென்பதற் காக பின்னாடி தள்ளி உட்கார், நெருங்கி உட்கார், மூட்டை முடிச்சு களை அங்கே வை, இங்கே வை, என்று இப்படி அதட்டல் போட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களுடைய பூட் காலின் பரிசமும் சிலருக்குச் கிடைத்தது. நாங்கள் இந்தக் காட்சிகளை யெல்லாம் பார்த்துக் கொண்டு பொறுமையாக உட்கார்ந்தோம்; ரசித்துக் கொண்டுமிருந்தோம். ஒன்பது மணி சுமாருக்கு ஒரு லாரி வந்தது. அதில் எங்கள் குழுவினர் அனைவருக்கும் இடம் கிடைத்தது. அடுத்த முகாமுக்குப் பன்னிரண்டு மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். அடுத்த முகாமென்பது மணிப்பூர் ராஜ்யத்தின் தலைநகராகிய இம்பால் என்ற ஊருக்குச் சுமார் ஆறு மைல் வடக்கே டிமாபூர் டேஷனுக்குப் போகிற வழியில் ஒரு சிறு கிராமத்தின் அருகில் ஓடிக் கொண்டிருந்த ஒரு சிற்றருவி ஓரமாக அமைக்கப்பட்டி ருந்தது. இது இந்தியர்களுக்கென்று அமைக்கப்பட்ட முகாம். இது தவிர, இம்பால் நகரத்திற்கருகில் ஐரோப்பிய பிரயாணிகளுக் கென்று ஒரு முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த இந்தியர் முகாமில் பிரயாணிகள் தங்குவதற்கென்று விசாலமான கொட்ட கைகள் போடப்பட்டிருந்தன. வக்ஸு முகாமைப் போலவே, இங்கும் தரை மட்டத்திலிருந்து சுமார் மூன்றடி மேலே மூங்கில் கழிகளைப் பரப்பி கயிற்றினால் கட்டிப் பிணைத்திருந்தார்கள். உட்கார்ந் தாலும் படுத்தாலும் உறுத்தியதென்ற ஒரு குறையைத் தவிர, மற்ற படி சௌகரியமாகவே இருந்தது. மற்ற முகாம்களைக் காட்டிலும் இந்த முகாமில் ஜன நடமாட்டமும் பரபரப்பும் அதிகமாகக் காணப்பட்டன. தற்காலிகமாக நிறுவப்பட்ட சிறு நகரமாகவே இது காட்சியளித்தது. கறிகாய்க் கடைகளும், மணிப்பூர் சமதானத்தில் தயாரிக்கப்பெற்ற பலவிதமான கைவினைப் பொருள்கள் நிறைந்த கடைகளும் நிரம்பியிருந்தன. மணிப்பூர் வாசி ஒருவர் நடத்திவந்த ஒரு சாப்பாடு ஹோட்டலும் இருந்தது. நாங்கள், முகாமில் ஒருசிறு ஜாகையைப் பிடித்து, அதில் மூட்டை முடிச்சுகளை இறக்கி வைத்து விட்டு மேற்படி சாப்பாட்டு ஹோட்டலை நாடிச் சென்றோம். நல்ல - வேளையாக எங்கள் குழுவினர் அனைவருக்கும் சாப்பாடு கிடைக்குமென்று தெரிந்தது. நபருக்கு ஆறணா வீதம் கொடுத்துக் சாப்பிட்டோம். என்ன சாப்பாடு! நன்றாக பதமாகாத புழுங்கலரிசிச் சோறு: வாழைப் பட்டை பொரியல்; பயத்தம் பருப்புப் போட்ட குழம்பு. மணிப் பூரிகளின் சமையலில் தாளிதம் இடம் பெறுவ தில்லை போலும். வாழைப்பட்டை வேகுமா என்று கேள்வியை நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. வெந்தி ருப்பதாக நினைத்துக் கொண்டு அதை வாய்க்குள் செலுத்தினோம். அதுவும் தொண்டையில் சிக்கிக் கொள்ளாமல் வயிற்றுக்குள் புகுந்து விட்டது. எப்படியோ அந்தப் பசி வேளைக்கு இந்தச் சாப்பாடு சுவையுடையதாகவேயிருந்தது; வயிறும் நிரம்பியது. இந்தப் பகல் சாப்பாட்டோடு அன்றைய பொழுதைக் கழித்தோம். மேற்கொண்டு பயணம் செய்ய வேண்டியதைப் பற்றி விசா ரிக்கையில், ஒரு வாரம் பத்து நாட்களாகப் பிரயாணிகள் வந்து காத்துக் கிடக்கிறார்களென்றும், அவர்களுக்கு இடம் கிடைத்துப் போன பிறகுதான் பின் வந்தவர்களுக்கு இடங் கிடைக்கு மென்றும் சொன்னார்கள். ஆகவே, இன்னும் இரண்டு மூன்று நாட்களாவது இந்த முகாமில் தங்க வேண்டியிருக்குமென்று தீர்மானித்துக் கொண்டோம். மறு நாள் (18 - 4 - 42) காலை அன்றைய ஆகாரத்திற்குச் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருக்க வில்லை மூன்று பேர் எங்கள் அருகில் வந்தார்கள். நாங்கள் தமிழில் பேசிக் கொண்டிருந்தது அவர்கள் செவிக்கு விருந்தாயிருந்தது போலும். அவர்கள் தமிழர்கள். வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த முகாமில் சுகாதார இன்பெக்டர்களாக அலுவல் பார்த்து வருகிறவர்கள். தமிழில் பேச வேண்டுமென்றும், தமிழ்ப் பேச்சைக் கேட்க வேண்டுமென்றும் அவர் களுக்கு வெகு நாட்களாக ஆவல் இருந்தது போலும். எங்களிடம் வந்து, தாங்கள் இந்த முகாமுக்கு மாற்றப்பட்டு வந்திருப்பதைப் பற்றியும், இங்குத் தங்களுக்குப் பொருளாதார விஷயத்தில் ஓரளவு அனுகூலம் இருந்த போதிலும் மற்ற விஷயங்களில் அநேக அசௌகரியங்கள் இருக் கின்றனவென்றும், குறிப்பாகத் தங்கள் குடும்பத்திலிருந்து பிரிந்து இவ்வளவு தொலைதூரத்திற்கு வந்திருப்பது, மனத்திற்கு எந்த விதத்திலும் அமைதியைத் தருவதாயில்லையென்றும் சொன்னார்கள். ஆனால் மேற்கொண்டு லாரியில் பிரயாணம் செய்வதற்கான அதி காரமோ, செல்வாக்கோ ஏதும் தங்களுக்கில்லையென்றும் முகாம் நிருவாகம் பூராவும் ஆங்கிலேயர் வசம் இருக்கிறதென்றும், அவர்கள் தேயிலைத் தோட்டங்களில் அதிகாரம் செலுத்திப் பழக்கப்பட்டவர் களான படியால் தங்களிடம் மட்டுமல்ல, முகாம் சிப்பந்திகள் அனைவரிடத்திலும் இங்கிதம் தெரியாமல் நடந்து கொள்கிறவர் களாயிருக்கிறார்கள் என்றும், ஓரளவு மனக்குறையுடன் கொண்டார்கள். தங்கள் சிப்பந்திகளிடத்தில் இப்படி நடந்து கொள்கிறவர்கள் அகதிகளாக வந்திருக்கும் பிரயாணி களிடத்தில் எப்படி நடந்து கொள்வார்களென்பதை ஒருவாறு ஊகித்துக் கொண்டோம். இவர்கள் பார்வையில், முகாமுக்கு வந்தடையும் பிரயாணிகள், அவர்கள் எந்த அந்த திலுள்ளவர்களாயிருந்தாலும், எவ்வளவு செல்வமோ, செல்வாக்கோ படைத்தவர்களாயிருந்தாலும், அனைவரும் கதியற்ற வர்கள்தாமே? அகதிகள்தாமே? அன்று (18 - 4 - 42) மாலை நானும், கூட நண்பர்கள் இருவரும் இம்பால் நகரத்தைச் சுற்றிப் பார்த்து வர நடந்து சென்றோம். இந்த நகரம் இயற்கை வளம் செறிந்த ஒரு கணவாயில், கடல் மட்டத் திற்குச் சுமார் இரண்டாயிரத்தறுநூறு அடி உயரத்தில் அமைந் திருந்தது. நகரம் சிறிது தான். ஆனால் அழகாகவும் ஒழுங்காகவும் இருந்தது. பெரும்பாலான ரோடுகளுக்கு சிமெண்ட் போடப்பட்டி ருந்தது. ரோடுகளும் சுத்தமா யிருந்தன. மார்க்கெட்டு பெரியதாயி ருந்தது. கறிகாய்கள் முதற்கொண்டு துணிமணிகள் வரை யாவும் இந்த மார்க் கெட்டில் கிடைக்க கூடிய மாதிரி ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. கறிகாய்கள்தான் எத்தனை செழுமை! கத்திரிக் காய்கள் புடலங் காய்கள் மாதிரி நீண்டு வளைத்திருந்தன, என்றால் மற்ற வகைகள் எப்படியிருக்குமென்பதைச் சொல்லத் தேவை யில்லை யல்லவா? மறு நாள் (19 - 4 - 42) மேற்கொண்டு பயணப்படுவதற்கான வாய்ப்பு கிடைக்காதென்று தெரிந்தது. அன்றைய ஆகாரத்திற்கு என்ன வழி? எங்கள் குழுவினர் அனைவருக்கும் மணிப்பூரி ஹோட்டல் சாப்பாடு கட்டோடு பிடிக்கவில்லை. சுயமாகச் சமைத்துக் கொள்வோமென்றால், அதற்கான பண்டப் பாத்திரங்கள் போது மான அளவு எங்களிடம் இல்லை. இதனால் நான் ஹோட்டலின் முதலாளியான மணிப்பூரியிடம் சென்று, உங்கள் ஹோட்டலின் ஒரு பகுதியில் சிறிது இடங் கொடுங்கள், நாங்கள்அங்குச் சமைத்துச் சாப்பிட்டுக் கொள்கிறோம், உங்களிடம் அதிகப்படியாயுள்ள இரண்டு மூன்று பாத்திரங்களைக் கொடுத்து உதவுவீர்களாயின் மிகவும் நன்றி என்று நயமாகக் கேட்டேன். அவரும் தயங்காமல் இது என்ன பிரமாதம்? தாராளமாக இடம், பாத்திரம் எல்லாம் கொடுக் கிறேன் என்று சொன்னபோது நான் உண்மையில் வியப்படைந் தேன். அவர் படித்துப் பட்டம் பெற்றவரல்லர்; நாகரிக வாசனையை அதிகம் நுகராதவர். இதனால்தான் அவரிடம் பரந்த உள்ளம் குடி கொண்டிருந்தது போலும். நான் உடனே மார்க்கெட்டுக்குச் சென்று தேவையான அளவு புளி, மிளகாய் முதலிய மளிகைச் சாமான்களையும் காய்கறிகளையும் வாங்கி வந்து சமையல் செய்யத் தொடங்கினேன். கத்திரிக்காய் பொரியலும், ரசமும்தான் தயாரிக்க முடிந்தது. ஆனாலும் அனைவரும் நன்றாகச் சுவைத்துச் சாப்பிட்டார்கள். குறிப்பாக, கூட வந்த குழந்தைகள் வெகுவாக அனுபவித்தார்கள். மாமா, மாமா, இனி மேல் நீங்களே எங்களுக்குச் சமையல் செய்து விடுங்கள்; நாங்கள் வயிறு நிரம்பச் சாப்பிடுகிறோம் என்று குதூகலத்துடன் உத்தர விட்டார்கள். இதைக் கேட்ட மற்ற நணபர்களும் பெண்களும், மாமாவை, வேலை வாங்குகிறீர்களா? என்று அவர்களை அதட்டி னார்கள். ஆனால் நான் அந்த அதட்டலுக்குத் தடைவிதித்தேன். குழந்தைகள் எந்த மனப்பான்மையோடு சொல்கிறார்கள் என்பது தான் எனக்கு முக்கியமாகப்பட்டது. அவர்கள் இப்படி எனக்குப் போட்ட உத்தரவில் என்மீது அவர்களுக்குள்ள நம்பிக்கை, விசு வாசம் எல்லாம் அடங்கியிருப்பதையே நான் பெரிதாகக் கருதினேன். அவர்களுடைய கட்டளைக்கிணங்க அன்று இரவும் சமைத்து, குழந்தைகளுக்கு என் கையாலேயே பரிமாறினேன். ஹோட்டல் முதலாளி, என் கூட இருந்து வேண்டிய உபசரணைகளைச் செய்தார். அன்றைய பொழுது ஓரளவு நிம்மதியாகவே கழிந்தது. அன்று மாலை முகாமையொட்டியிருந்த கிராமத்தைச் சுற்றிப் பார்த்தேன். கிராமமென்றால், வரிசையான வீடுகளைக் கொண்ட தென்று சொல்ல முடியாது. கிராமவாசிகள் அனைவரும் சொந்தப் பயிர்செய்து வந்த விவசாயிகள். அழகானதொரு சிறு குடில் அமைத்துக் கொண்டு அதில் வசித்து வந்தார்கள். இதனால் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இந்தக் குடிசைகள் காணப் பட்டன. இவர்களுடைய வாழ்க்கை இயற்கை யோடியைந்ததாகவும், எல்லா வகையிலும் நிறைவுடையதாகவும் காணப்பட்டன. இவர் களுடைய பார்வையில் சகோதர உணர்ச்சி நிரம்பி யிருந்தது. ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் இப்படிப்பட்டவர்களுடைய வாழ்க்கை தானே நிஜமான வாழ்க்கை.  42. இலவசச் சவாரி மறு நாள் (20 - 4 - 45) சூரியோதய சமயம் டிமாபூர் ரெயில் நிலையத்தில் ராணுவ லாரிகள் ஒன்றில் இடம் பெற வான் சிங் முகாமில் இருந்தது போல், ரோடு ஓரத்தில் போய் உட்கார்ந்து கொண்டோம். ஒன்பது மணி வரை எங்களுக்கு இடம் கிடைக்க வில்லை. இனி கிடைக்கா தென்றும், காத்திருப்பதில் பலனில்லை என்றும் தெரிந்து கொண்டு எங்கள் ஜாகைக்குத் திரும்பினோம். பழையபடி மணிப்பூரி ஹோட்டல் சாப்பாடுதான். முந்தின நாள் மாதிரி என்னால் சமையல் செய்ய முடிய வில்லை. குழந்தை களென்னவோ என்னை நச்சரிக்கத்தான் செய்தார்கள். ஆனால் என் முடியாமையைத் தெரிவித்ததும் என்னிடம் அநுதாபம் காட்டி னார்கள். அன்று இரண்டு வேளையும் ஹோட்டல் விருந்தாளி களாகவே இருந்தோம். அன்று மாலை நானும், என் நண்பர்களும் காற்று வாங்க முகாமை விட்டுச் சிறிது வெளியே சென்றுவர முற்பட்டோம். ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது, இம்பால் நகரத்தை நோக்கிக் காலியாகச் சென்று கொண்டிருந்த ஒரு ப, எங்களுக்குச் சற்று முன்னால் சென்று திடுதிப்பென்று நின்றது. அதில் பிரயாணிகள் யாருமில்லை. ப ஓட்டி வந்தவனுக்கு, எங்களைப் பார்த்து என்ன தோன்றியதோ, இம்பாலுக்கு வருகிறீர்களா? ஏற்றிக் கொண்டு போகிறேன். பணம் ஏதும் வேண்டாம் என்று அரைகுறை ஹிந்தியில் சொன்னான். மறுப்போமா? இலவசச் சவாரியல்லவா! உடனே ஏறிக் கொண்டோம். பஸும் காற்றாகப் பறக்க ஆரம்பித்தது. ஆனால் சிறிது தூரம் சென்றதும் எங்கள் உயிரும் எங்கள் உடம்பிலிருந்து பறந்துவிடும் போலிருந்தது. பஸுக்கு நியூமாடிக் டையர் இல்லை. கட்டை டையர், தவிர, ஆள் பளு வுமில்லை. ரோடோ கச்சா ரோடு; ரோடு பூராவும் சிறிய சிறிய கருங்கற்கள் குத்திட்டுக் கிடந்தன. எப்படியிருக்கும் பிரயாணம்? சொல்லவா வேண்டும்? எங்களை உலுக்கி உலுக்கி எடுத்து விட்டது. எங்கள் கண் இமைகள் முதல் நரம்பு நாடிகள் வரை எல்லாம் துள்ளித் துள்ளிக் குதித்தன. நடுவழியில் இறங்கி விடுகிறோம் என்று ப ஓட்டுகிறவனிடம் சொல்ல முடியவில்லை. அவன்தான் பஸை வேகமாக ஓட்டுவதில் தனக்குள்ள சாமர்த்தியத்தை எங்களுக்கு நிருபித்துக்காட்ட முற்பட்டு விட்டானே? எப்படியோ உயிருடன் இம்பாலுக்குப் போய்ச் சேர்ந்தோம். அவனுடைய சாமர்த்தியத்தை மெச்சுகின்ற முறையில் எங்கள் உடல் உபாதையை மறைத்துக் கொண்டு முகத்தில் புன்னகையை வருவித்துக் காட்டினோம். அவனும் தன்னுடைய சவாரியில் எங்களுக்குத் திருப்தியென்று சந்தோஷப்பட்டுக் கொண்டு, விடைபெற்றான். நானும் என் நண்பர்களும் முந்தின தடவை மாதிரி இம்பால் நகரத்தை லேசாகச் சுற்றிப் பார்த்தோம். ஒரு பலகாரக் கடையில் நுழைந்து சில திண்பண்டங்களை விலை கொடுத்து வாங்கி ருசி பார்த்தோம். கூடவே வயிற்றுச் சங்கடத்தையும் சம்பாதித்துக் கொண்டோம். அந்தப் பகுதியில் பலகாரக் கடைகள் பெரும்பாலும் சுத்தம் என்பதைக் கண்டறியாதனவாகவே காணப்பட்டன. பலகாரம் தயாரிக் கிறவர்கள், பரிமாறுகிறவர்கள், ஆகிய இவர் களுடைய உடைகளைப் பார்த்தாலே நமக்கு ஒருவித அருவருப்பு உண்டாகும். வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான பலகாரக் கடைகள் இந்த வகையில்தான் இருக்கின்றன என்று சொல்லலாம். இவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், தமிழ் நாட்டிலுள்ள பலகாரக் கடைகள் எவ்வளவோ தேவலை என்று சொல்ல வேண்டியிருக்கிறது. பலகாரக் கடை அநுபவத்திற்குப் பிறகு நாங்கள் கடைத் தெருவிற்குச் சென்று பார்த்தோம். பெரும்பாலான வியாபாரம் மணிப்பூரிகளல்லாதார் வசமே இருந்தது. இவர்களும் சுறுசுறுப்பு இல்லாதவர்களாகவே காணப் பட்டார்கள். ஏன் இப்படி இருக் கிறார்களென்று ஆராய்ச்சியில் நாங்கள் இறங்காமல் அப் பொழுதைய அவசரத் தேவையை முன்னிட்டுச் சில துணிமணிகளை வாங்கிக் கொண்டு முகாமுக்கு நடந்தே திரும்பி வந்து சேர்ந்தோம். பஸை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வில்லை. இலவசச் சவாரி கிடைத்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரா யில்லை. ஒரு தடவை அநுபவப்பட்டது போதாதா?  43. லாரியில் நாற்காலி தண்டனை மறுநாள் (21 - 4 - 41) காலை டிமாபூருக்குச் செல்ல லாரி கிடைக்கக் கூடுமென்று முந்தின நாள் இரவே எங்களுக்கு லேசாகச் செய்தி எட்டியது. ஆகவே அன்று (21 - 4 - 42) பொழுது விடிந்ததும் மூட்டை முடிச்சுகளுடன் முன் மாதிரி ரோட் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டோம். இப்படி உட்கார்ந்து கொண்டு வெயிலில் எரிக்கக் காத்துக் கிடப்பது, என்பது கடுமையான பரி சோதனைக்குட் படுவது போலாகும். பிரயாணிகளை ஒழுங்காக லாரிகளில் அனுப்பி வைக்கின்ற பொறுப்பு தேயிலைத் தோட்டங்களைச் சேர்ந்த ஐரோப்பிய அதிகாரிகள் சிலரிடம் விடப்பட்டிருந்தது. இவர்கள் இங்கிதம் என்பதை இம்மியும் அறியாதவர்களென்பதை ஏற்கனவே நாங்கள் தெரிந்து கொண்டிருந்தோம் அல்லவா? பிரயாணிகள் ஏழெட்டு பேர் கொண்ட வரிசைகளில் ஒரு வரிசைக்குப் பின்னால் மற்றொரு வரிசையாக மூட்டை முடிச்சுக்களை இறுக்கப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். ஓர் ஐரோப்பிய அதிகாரி வருவான். அவன் பார்வையிலே கடுகடுப்பு? புன்சிரிப்புக்கும் அவன் உதடுகளுக்கும்தான் எவ்வளவு கடுமையான பகைமை? அவன் கையில் நீண்டதொரு கழி இருக்கும். இந்தக் கோலத்துடன் லாரியில் இடங்கிடைக்குமா என்று ஏங்கி உட்கார்ந் திருக்கும் பிரயாணிகளிடம் வருவான். ஒரு லாரியில் எத்தனை பேருக்கு இடம் கிடைக்குமென்று உத்தேசமாக மனக் கணக்குப் போட்டுக் கொள்வான். லாரியொன்று ரோட்டில் வந்து நிற்கும். அவன் உடனே தன் கழியை ஐந்தாறு வரிசைகளுக்கு மத்தியில் குறுக்காக வைத்து, கழிக்கு முன் பக்கமுள்ளவர்கள் லாரியில் ஏறிக் கொள்ளலாம் என்று ஓர் அதட்டுப் போடுவான். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஏழெட்டு பேர் இருப்பார்கள். அவர்களில் முன் வரிசையில் மூன்று நான்கு பேர்களும். பின் வரிசையில் நான்கைந்து பேரும் அமர்ந்திருப்பார்கள். முன் வரிசையில் உள்ளவர் களுக்கும் பின் வரிசையில் உள்ளவர்களுக்கும் மத்தியில் அவன் கழி விழும். முன்வரிசையிலுள்ளவர்கள் லாரியைப் பிடிக்கப் போவோர்கள்; தங் களைச் சேர்ந்த பின் வரிசையிலுள்ளவர்கள் தங்களோடு வரட்டும், ஒரே குடும்பத்தினராகப் போகிறோம், என்று சொன்னாலோ, அல்லது பின் வரிசையில் தங்கிவிட்டவர்கள் முந்தியவர்களோடு தாங்களும் போக விரும்புவதாக அனுமதி கேட்டாலோ, அந்த அதிகாரி சீறி விழுவான். தனக்குத் தெரிந்த வசைமொழிகளைத் தாராளமாக வழங்குவான். கழியைத் தூக்கிக்காட்டி பயமுறுத்தவும் செய்வான். இதனால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிரிந்து பிரிந்து வெவ்வேறு லாரிகளில் செல்ல வேண்டியவர்களானார்கள் முந்திச் சென்றவர்களுக்கும் பிந்தி வருகிறவர்களைப் பற்றிக் கவலை. அப்படியே பிந்திச் செல்கிறவர்களுக்கு முந்திச் சென்றவர்களைப் பற்றிக் கவலை. குடும்பத்தினர் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூட வேண்டுமே; தடம் தப்பிவிட்டால் என்ன செய்வது? என்ற விசாரத்துடன்தான் அநேக குடும்பத்தினர் டிமாபூர் வரையில் பிரயாணம் செய்தனர். எங்கள் குழுவைப் பொறுத்த மட்டில் அதிருஷ்டவசமாக எங்களுக்குக் குறுக்கே அதிகாரியின் கழி விழவில்லை; இரண்டு மூன்று வரிசைகளுக்குப் பின்னால் விழுந்தது. நாங்கள் அனைவரும் ஒரே லாரியில் செல்லும்படி நேரிட்டதே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு லாரி நிற்குமிடத்திற்குச் சென்றோம். இரண்டு மூன்று லாரிகள் வந்து நின்றன. அங்கு ஓர் ஐரோப்பிய அதிகாரி, பிரயாணிகள் ஏறுவதை மேற்பார்வை செய்து கொண்டிருந்தான். எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் அவனை அணுகி ஆங்கிலத்தில் ஒரு லாரியைச் சுட்டிக் காட்டி ‘இந்த லாரியில்தான் நாங்கள் ஏறிக் கொள்ள வேண்டுமா? என்று கேட்டு விட்டார். அவன் உங்களுக்கு ரோல் ராய் கார் வேண்டுமா என்ன என்று வள்ளென்று விழுந்தானே பார்க்கலாம்! வள்ளென்று விழுகின்ற சுபாவமுடைய பிராணிக்கு நன்றி யுணர்ச்சியாவது இருக்கும். அவனுக்கு அது இருக்குமா இராதா என்ற ஆராய்ச்சியில் நாங்கள் இறங்காமல், அவன் சுட்டிக்காட்டிய லாரியில் ஏறிக் கொண்டோம். ஏறிக் கொள் வதென்பது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை. ஒரு வரோடொருவர் மிதித்துக்கொண்டும், ஒருவரையொருவர் தொத்திக் கொண்டும், இப்படித்தான் ஏறிக்கொள்ள வேண்டி யிருந்தது. எப்படியோ ஒருவிதமாக ஏறிக்கொண்டிருக்கும்போது கழியின் துணையுடன் மேற்பார்வை செய்து கொண்டிருந்த ஐரோப்பிய அதிகாரி ஜல்தி ஜல்தி என்று விரட்டினான். இப்படி இடங் கிடைத்து ஏறுவதென்பது வேதனை தரத்தக்க அநுபவமாக இருந்தது. ஏதோ ஒரு வகையாகப் பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு, சுமார் பத்து லாரிகள் ஒன்றின்பின் ஒன்றாக, காலை ஏழு மணிக்கு முகாமிலிருந்து புறப்பட்டன. நாங்கள் எங்களுக்குக் கிடைத்த லாரியில் ஏறிக் கொண்டதும் எல்லோருக்கும் இருமல், தும்மல் பிடித்துக் கொண்டு விட்டது. ஒரே பெட்ரோல் நெடி. கீழே வைக் கோலைப் பரப்பி அதன்மீது பெட்ரோல் டின்களை அடுக்கி வைத்துக் கொண்டு சென்று, டின்களை ராணுவ தளத்தில் இறக்கி விட்டு காலியாகத் திரும்பி வந்த லாரிகளில் ஒன்று இது என்று நாங்கள் தெரிந்து கொண்டோம், வைக்கோல் மீது பெட்ரோலும் தெளித்துக் கிடந்தது. கேட்க வேண்டுமா இருமல் தும்மலுக்கு! ஒருவாறு சமாளித்துக் கொண்டு நெருக்கி உட்கார்ந்து கொண்டோம் என்று சொல்வதைக் காட்டிலும் அடைத்துக் கிடந்தோம் என்று சொல்லுவது பொருத்தமாய் இருக்கும். மூட்டை முடிச்சுக்களுக்குமேல் ஆட்கள்; ஆட்களுக்கு மேல் மூட்டை முடிச்சுக்கள்; இப்படித்தான். துரதிர்ஷ்டவசமாக எனக்கு, நின்று கொள்ளத்தான் இடம் கிடைத்தது. சிறிது தூரம் நின்று கொண்டே சமாளித்துப் பார்த்தேன். லாரி செல்லும் வேகத்தில் நீண்ட நேரம் நிற்க முடியுமா? சில்லறை சாமான்களுடன் ஒரு கோணி மூட்டை இருந்தது. அதன் மீது உட்காரப் போனேன். எங்களோடு ஒரு சக்கிலியக் குடும்பம் வந்து கொண்டிருந்தது அல்லவா? அந்தக் குடும்பத்தின் சாமான்கள் அடங்கிய கோணி மூட்டையே அது. அதில் ஒரு சில மண்பாண்டங்கள் இருந்தன போலும். நான் மூட்டை மீது அமர்ந்ததும், மூட்டைக்குரிய பெண்மணி சாமி, சாமி அதன் மீது உட்காராதீர்கள்; என் வீட்டுச் சட்டிப்பானை எல்லாம் அதிலிருக்கிறது. நீங்கள் உட்கார்ந்தால் அது உடைந்து போகும்? என்று எச்சரிக்கை செய்தாள். பிறகு நான் என்ன செய்வது? லாரியின் உட்பக்கவாட்டில் இருக்கும் சுமார் ஓர் அங்குல அகல முள்ள வரிச்சட்டத்தின் மீது உட்கார்ந்த நிலையுமில்லாமல், நிற்கும் நிலையுமில்லாமல் இருந்து கொண்டு வந்தேன். முற்காலத்து கிராமத்துத் திண்ணைப் பள்ளிக் கூடங்களில் ஒழுங்காகப் படிக்காத அல்லது அடங்கலுக்குப் புறத்தியான பிள்ளைகளுக்கு நாற்காலியில் உட்காரும் தண்டணை கொடுப்பதுண்டு. அதாவது சுவர் மீது முதுகுப் பக்கத்தைச் சாத்தி வைத்துக் கொண்டும், நாற்காலி யில்லாமல் ஆனால் இரண்டு கால்களையும் தொங்க விட்டுக் கொண்டும் நாற்காலியில் உட்காருகிற மாதிரி உட்கார்ந்து கொள்ள வேண்டும். நான் சிறுவயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது இந்தத் தண்டனையை அநுபவித்ததில்லை. இந்தத் தண்டனை முறை அப்பொழுது ரத்தாகிவிட்டது. ஆனால் என்னுடைய நாற்பத் தேழாவது வயதில் இம்பால் முகாமிலிருந்து டிமாபூர் ரெயில் நிலையத் திற்கு வந்த லாரியில் இந்தத் தண்டனையை நன்றாக அநுபவிக்கும் படி நேரிட்டது. இதற்காக அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி நான் வருந்தவில்லை. அந்தச் சக்கிலியக் குடும்பத்தின் சொத்துப் பற்றுக்கள் அடங்கிய கோணிப்பை எவ்விதப் பழுதும் அடையாமல் லாரியில் பிரயாணம் செய்ததற்காக திருப்தியே கொண்டேன். சென்னை சேர்ந்த பிறகு சில காலம் கால் நடக்க முடியாமல் அவதிப் பட்டதற்கு இந்த நாற்காலிப் பயணமும் ஒரு காரணம். ஒவ்வொரு ராணுவ லாரிக்கும் இரண்டு டிரைவர்கள் நியமனம் செய்யப்பெற்று, மாறி மாறி ஓட்டினார்கள். இவர்களில் பெரும்பாலோர் சீக்கியர்கள். வழிநெடுக, (இம்பால் முகாமிலிருந்து டிமாபூர் டேஷன் வரை) பாதை முழுவதும் செப்பனிடப் படாத தாகவும், கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்ததாகவும் இருந்தது. அநேக இடங்களில், காட்டு மரங்களை இணைத்துத் தற்காலிக மான பாலங்கள் அமைக்கப் பட்டிருந்தன. ஜெர்மானிய யுத்தக் கைதிகள், பாதையைச் செப்பனிடும் வேலையில் ஈடுபடுத்தப் பெற்றிருந்தார்கள். உண்மையில் இம்பால் முகாமிலிருந்து டிமாபூர் ரெயில் நிலையம் வரை அமைக்கப்பட்டிருந்த பாதை, இஞ்சினியர் களின் மகத்தான சாதனைக்கு எடுத்துக்காட்டாக இருந்ததென்று சொல்ல வேண்டும். தவிர பாதை நெடுக கோவேறு கழுதைகள், துருப்பு களுக்குத் தேவைப்படுகின்ற உணவுப் பொருள்கள் முதலியவற்றை ஏற்றிக்கொண்டு உரிய இடத்தில் இறக்கிவிட்டு, சாரிசாரியாகப் போவதும் வருவதுமாயிருந்தன. இவற்றின் போக்குவரத் தினால் அநேக இடங்களில் லாரிகளின் வேகம் தடைப்பட்டதுடன் லாரி களைத் திருப்பி விட்டுக் கொண்டும், வளைத்துக் கொடுத்துக் கொண்டும் செலுத்த வேண்டியிருந்தது. இந்தக் காரணங்களி னாலேயே ஒவ்வொரு லாரிக்கும் இரண்டு டிரைவர்கள் நியமிக்கப் பட்டிருந்தார்கள். இவர்களும் உடல் வலுவும் மன உறுதியும் படைத்தவர்களென்பதை இவர்களுடைய தோற்றம் அறிவித்தது.  44. தாய் நாட்டு மண்ணிலே இந்த லாரி பிரயாணம் கடினமாயிருந்த போதிலும், வழி நெடுக இயற்கைக் காட்சிகள் மலிந்து கிடந்தமையாலும், இந்தக் காட்சிகளை அநுபவிக்கும் பக்குவம் எங்கள் குழுவினரைப் பொறுத்த மட்டில் அதிகமாக ஏற்படவில்லை. ஆனால் லாரிகள் செல்லும் வேகத்தில், பாதையின் இரு பக்கங்களிலிருந்தும் புழுதி மண் கிளம்பி, பிரயாணிகளை வேகமாக வந்து தாக்கி, அனை வரையும் திக்கு முக்காடச் செய்து கொண்டிருந்தது. டிமாபூர் ரெயில் நிலையத்திற்குப் போய்ச் சேர்ந்தபோது பிரயாணிகள் அனைவரும், புழுதி மண்ணில் புரண்டெழுந்தவர்கள் போலானார்கள். இதற்கு எங்கள் குழுவினர் விலக்காக இருக்கவில்லை. இம்பால் முகாமிலிருந்து காலை சுமார் ஏழு மணிக்குப் புறப் பட்ட லாரிகள், பிற்பகல் சுமார் இரண்டரை மணிக்கு கோஹிமா என்ற நகரத்தில் வந்து நின்றன. இந்த ஊரைக் கடந்துதான் டிமாபூர் ரெயில் நிலையத்திற்குப் போய்ச் சேர வேண்டும். இங்கு லாரிகள் வந்து நின்றதும், ராணுவ அதிகாரிகள் ஒவ்வொரு லாரியையும் பரிசோதனை செய்து பார்த்து விட்டு மேற்கொண்டு போகலா மென்பதற்குச் சமிக்ஞை கொடுத்தார்கள். இதற்காகப் பிரயாணிகள், லாரிலேயே ஒன்றரை மணி நேரம் காத்துக் கிடக்கவேண்டியிருந்தது. இப்படிக் காத்துக் கிடந்தாலும் அதனால் கோஹிமா நகரத்தில் செறிந்து கிடந்த இயற்கை அழகை நன்றாக அநுபவிக்கும் வாய்ப்பு பிரயாணிகளுக்குக் கிடைத்தது. என்னைப் பொறுத்த மட்டில் கோஹிமாவின் அழகை மனங்கொண்டவரை பருகினேன். கோஹிமா நகரம் கடல் மட்டத்திற்குச் சுமார் நாலாயிரத்து எழுநூற்றைம்பது அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. சுருக்கமாக இதனை வண்ணக் களஞ்சியம் என்று சொல்லலாம். நகரத்திற்குள் நுழைந்து பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசை. ஆனால் அது நிறை வேற அப்பொழுது வாய்ப்பு எங்கே? இந்த நகரத்தின் இயற்கை வனப்பைச் சீர்குலைக்கின்ற முறையில் இங்கு 1944 -ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் பிரிட்டிஷ் படைகளுக்கும் ஜப்பானியப் படைகளுக்கும் கடுமையான போர் நடைபெற்றது. தவிர, சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்திற்கும் பிரிட்டிஷ் ராணுவத்திற்கும் நடைபெற்ற சண்டையும் இங்குதான். ராணுவ அதிகாரிகளின் சோதனைக்குப் பிறகு லாரிகள் டிமாபூர் முகாமை நோக்கிப் புறப்பட்டு மாலை ஏழு மணி சுமாருக்கு அங்குப் போய்ச் சேர்ந்தன. லாரியிலிருந்து இறங்கிப் பூமியில் என் கால்கள் பதிந்ததும் என்னை யறியாமல் ஒருவிதப் புல்லரிப்பு எனக்கு ஏற்பட்டது. தாய் நாட்டு மண்ணை மிதித்து விட்டோம் என்ற பெருமித உணர்ச்சி, என் உடலுக்குள் மின்சாரம் போல் பாய்ந்ததனால்தான் அந்தப் புல்லரிப்பு ஏற்பட்டதென்று நான் சொல்லவா வேண்டும்? அது மட்டுமன்று. என் கண்கள் பனித்தன; உடற்சோர்வும் அகன்றன; அதுவரையில் அடங்கி ஒடுங்கிக் கிடந்த தன்னம்பிக்கை, நிமிர்ந்து நிற்கத் தொடங்கியது; பேச்சிலே அழுத்தம் தோன்றத் தலைப் பட்டது. கூட வந்த நண்பர்கள் சர்மாவுக்கு இது வரையில் இல்லாத தெம்பு ஏற்பட்டிருக்கிறது; எவ்வளவு உற்சாகத்தோடு இருக்கிறார், என்று பேசிக் கொண்டது என் செவிகளில் விழா மலிருக்குமா?  45. டிமாபூர் முகாமில் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் கடைசியாக உள்ள ரெயில்வே டேஷன் டிமாபூர் இதனை மணிப்பூர் ரோட் என்றும் அழைப்பதுண்டு. பர்மாவின் பல பகுதிகளிலிருந்தும் புறப்பட்டு, மாந்தளை, மொனீவா, கலேவா, டாமு, நாகா மலைத்தொடர், இம்பால் ஆகிய ஊர்களின் வழியாக இங்கு வந்து சேரும் பிரயாணிகள் இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் ரெயில் மார்க்கமாக அனுப்பப்பட்டனர். இங்ஙனம் இந்த நிலையத்திற்கு வந்து சென்ற பிரயாணிகள்தாம் பெரும்பாலோர். சிலர் ரங்கூனி லிருந்து புறப்பட்டு புரோம் வந்து அங்கிருந்து டாங்கப், அக்யாப் வழியாக இந்தியாவுக்கு வந்துசேர்ந்தனர். இவர்கள் சிறுபான்மை யோர். இவர்கள் புரோமிலிருந்து பெரும்பாலும் நடந்தே வர வேண்டியிருந்தது. ஒரு சில இடங்களில் ஆழ்ந்த நீரோட்டங் களைக் கடக்க வேண்டி யிருந்தது. வாகன வசதிகள் கிடையாது. இந்த வழியில் குடிதண்ணீர் கிடைப்பது அரிதாயிருந்தது. காட்டுப் பூச்சிகளின் தொந்தரவும் அதிகம். இவை காரணமாக உயிரிழந்தவர் அநேகர். நடைப் பயணத்தின் களைப்பு மிகுதியினால் மாண்டவரும் பலர். டிமாபூர் ரெயில் நிலையத்திற்கு வெகு சமீபத்தில் அகதிகள் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் பரந்த மைதானம். இந்த மைதானத்தில்தான் லாரிகளில் வந்த பிரயாணிகள் இறக்கப்பட்டனர். முகாம் மிகவும் விசாலமாயிருந்தது. அலுத்துச் சலித்து வந்த பிர யாணிகளுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய சூழ்நிலை இங்குத் காணப் பட்டது. பிரயாணிகளுக்கு உணவு கொடுத்துத் தேவையான உதவிகளைச் செய்வதற்கென்று இங்குப் பொதுநல தாபனங்கள் சில, தற்காலிகமாக ஏற்பட்டு நற்பணியாற்றிக் கொண்டிருந்தன. இவற்றுள் ராமகிருஷ்ண மடத்தையும், மார்வாரி கஷ்ட நிவாரண சங்கத்தையும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். இந்த தாபனங் களைச் சேர்ந்த தொண்டர்கள், அவ்வப்பொழுது வந்து கொண்டி ருந்த லாரிகளிலிருந்து பிரயாணிகளை இறக்கி, அவர் களுடைய மூட்டை முடிச்சுக்களை முகாமில் கொண்டு சேர்ப்பித்து, அவரவர் களுக்குத் தேவையான அரிசிச் சோறோ, வியஞ்சனத்தோடு கூடிய ரொட்டியோ எவையும் தேவையான அளவுக்குக் கொடுக்கப் பட்டன. குடிப்பதற்கு வெந்நீரோ கிடைத்தது. குழந்தைகளுக்குப் பாலும் வழங்கப்பட்டது. எல்லாவற்றிக்கும் அனுமதிச் சீட்டு பெற வேண்டுமென்று ஏற்பாடு செய்திருந்தனர். எங்கள் குழுவினரில் ஆண்கள் ரொட்டிக்கும், பெண்கள் அரிசிக் சோற்றுக்கும் அனுமதிச் சீட்டைக் கேட்டுப் பெற்றுக் கொண்டோம். சீட்டு வழங்கிய பெருமகனார் ஆளுக்குப் பத்து ரொட்டி விகிதம் அனுமதிச் சீட்டுக் கொடுத்தார். நீண்ட பயணத் தினால் களைத்துப் போயிருக்கிறவர்களுக்கு நிறையப் பசிக்கும் என்று கருதினார் போலும். ஆனால், கொடுக்கப்பட்ட ரொட்டிகள் மிகக் கனமாகவும் அகன்ற வட்ட முடையதாகவும் இருந்தபடியால் ஆளுக்கு ஒன்றரை அல்லது இரண்டு ரொட்டிகளுக்கு மேல் எங்களால் உட்கொள்ள முடியவில்லை. பரிமாறிய தொண்டர் ‘நீங்களென்ன மதராஸிகளோ? என்று பரிகாசமாகக் கேட்டார். ஆம் என்று தலையசைத்தோம். அதனால்தான் குறைவாகச் சாப் பிடுகிறீர்கள்; புத்திசாலிகளாகவும் இருக்கிறீர்கள் என்று சொல்லி மேற்கொண்டு பரிமாறுவதை நிறுத்திக் கொண்டார். ஆகாரத் திற்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிற தென்பதை இந்தக் தொண்டர் நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தார். பொது வாக, தென்னிந்தியர் களனைவரையும் மதராஸிகள் என்று அழைப்பது வட நாட்டார் வழக்கம். மேற்சொன்ன பொதுநல தாபனங்கள் ஆகார வகைகளை வழங்க ஏற்பாடு செய்திருந்தது சிறப்பானதுதான். ஆனால் அதை விட வழங்கிய முறைதான் என்னைப் பொறுத்த மட்டில் சிறப்பாக இருந்தது. எல்லா வற்றையும் விட்டுவிட்டு ஓடிவந்த அகதிகள் தாமே என்று யாரையும் அலட்சியம் செய்யாமல், எல்லோரிடத்திலும் ஒரே மாதிரி இன்முகங் காட்டி, நயமான சொற்களைச் சொல்லி இந்த தாபனங்களின் தொண்டர்கள் உபசரித்த பாங்கு என் ஒருவன் உள்ளத்தை மட்டுமல்ல, பண்புடையார் அனைவரின் உள்ளத் தையும் கவர்ந்துவிட்டது. இந்தத் தொண்டர்களிற் சிலர் இப் பொழுது அரசியல் வாழ்க்கையிலும், சமுதாய அந்ததிலும் மேம் பட்டவர்களாகத் திகழ்கிறார்களென்று அறிந்து மகிழ்கின்றேன். டிமாபூர் முகாமுக்கு வந்த பிரயாணிகள் அவரவர் சொந்த ஊருக்குச் செல்ல இலவசமாக ரெயில்வே பிரயாணஅனுமதிச் சீட்டு கொடுக்கப் பட்டார்கள். முகாமில் பிரயாணிகள் நாட் கணக்கில் தங்கித் தவிக்காம லிருக்கும் பொருட்டு அவ்வப்பொழுது வரும் பிரயாணிகளின் எண்ணிக்கையை அனுசரித்து அவ்வப்பொழுது விசேஷ ரெயில்களும் விடப்பட்டன. நாங்கள் டிமாபூருக்கு வந்த அன்று இரவு (21 - 4 - 42) பண்டித ஜவாஹர்லால் நேரு வந்து முகாமைப் பார்வையிட்டார். பிரயாணி களுக்குச் செய்யப்பட்டிருக்கும் சௌகரியங்களை விசாரித்துத் தெரிந்து கொண்டு, மேற்கொண்டு சில யோசனைகளையும் தெரி வித்தார். அவருடைய வருகை, பிரயாணிகளுக்கு அதிக உற் சாகத்தைத் தருவ தாகவும் ஆறுதல் அளிப்பதாகவும் இருந்தது. அவரைச் சென்று காண வேண்டுமென்று எனக்கு ஆவல். கூட வந்த நண்பர்களும், பார்க்கும்படி தூண்டினார்கள். ஆனால் எனக்குக் கூச்சமாக இருந்தது. நான் இப்பொழுது நலிந்து மெலிந்து கிடந் தேன். நீராடி ஒரு வாரத்திற்கு மேலாயிருந்தது. அழுக்குப் படிந்த உடைகளையே அணிந்து கொண்டிருந்தேன். தாடி, மீசை வளர்ந் திருந்தது. இந்தக் கோலத்தில் என்னை அவர் அடையாளங் கண்டு கொள்வாரோ, என்று எனக்குச் சந்தேகம். 1937 - ஆம் வருஷம் ஜூலை மாதம் அவர் தமது மகள் இந்திராவுடன் பர்மாவில் சுற்றுப் பிரயாணம் செய்தபோது, நான் அவருடன் சில ஊர்களுக்குச் சென்றிருக்கிறேன். சில ஊர்களில் அவருடைய சொற் பொழிவுகளைத் தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. பிரயாணத்தின்போது அவருடன் நெருங்கிப் பேசும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. 1937 - ஆம் வருஷம் ஆகடு மாதம் என்னுடைய ஆசிரியப் பொறுப்பில் தொடங்கப்பட்ட ஜோதி மாதப் பத்திரிகைக்கு என் வேண்டு கோளுக்கிணங்கி, ஆசிச் செய்தியும் வழங்கியிருந்தார். இவ்வளவு தூரம் அவருடன் பரிச்சயம் ஏற்பட்டிருந்தும், டிமாபூர் முகாமில் அவரைப் பார்க்க எனக்குச் சங்கோஜமாகவே இருந்தது. அவரும் வந்த சீக்கிரத்திலேயே திரும்பிச் சென்று விட்டார்.  46. கல்கத்தா நோக்கி எங்கள் குழுவினருக்கு, டிமாபூர் முகாம் வந்து சேர்ந்த அன்று (21 - 4 - 42) இரவே கல்கத்தா செல்ல இலவச அனுமதிச் சீட்டு கிடைத்தது. சுமார் பதினோரு மணிக்கு அகதிகளுக்கான விசேஷ ரெயில் டிமாபூர் டேஷனை விட்டுப் புறப்பட்டது. மறுநாள் பிற்பகல் சுமார் இரண்டு மணிக்குப் பிரம்மபுத்ரா நதிக்குத் தென் கரையி லுள்ள பாண்டு என்ற டேஷனை வந்தடைத்தது. வழி நெடுக ஆங் காங்கு டேஷன்களில் அக்கம்பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த வர்கள் சுண்டல், வடை, ரொட்டி முதலியவை களைத் தயாரித்துக் கொண்டு வந்து பிரயாணிகளுக்கு இலவசமாகக் கொடுத்து உபசரித் தார்கள். இவர்கள் காட்டிய அன்பு ஆழ்ந்ததாகவும் அப்பழுக்கு இல்லாததாகவும் இருந்தது. பாண்டு டேஷனில் விசேஷ ரெயில் வந்து நின்றபோது கடுமையான வெயில். பிரயாணிகள் தாகத்தினால் தவித்தார்கள். நல்ல வேளையாக, பிளாட்பாரத்தில் இளநீர்க் காய்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் வண்டியிலிருந்து இறங்கியதும் முதல் வேலையாக ஆளுக்கு மூன்று நான்கு இளநீர்க் காய்கள் விகிதம் வெட்டிக் கொடுக்கச் சொல்லிப் பருகினோம். பிறகுதான் எங்கள் களைப்பு ஒருவாறு தீர்ந்தது. டேஷனை ஒட்டினாற் போல், ஒரு பெரிய கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஆங்கிலோ - இந்தியப் பெண் மணிகள், ரெயிலில் வரும் பிரயாணிகளுக்கு ஆகாராதிகள் கொடுத்து உபசரித் தார்கள். வங்காளி முறையில் தயாரிக்கப்பட்ட மீனும் கலந் திருந்ததோ என்று வாசகர்கள் சந்தேகிக்க வேண்டாம். அப்படிக் கலந்திருந்தால் சுத்த சைவர்களாகிய நாங்கள் உட்கொண்டிருக்க மாட்டோமல்லவா? ஐரோப்பிய முறையில் மேஜை, சாப்பாடு முதலியன எல்லாம் இருந்தன. அப்பொழுது பிரிட்டிஷ் ஆட்சி நிலவியிருந்த காலமல்லவா? ரெயில்வேக் களில் கூட ஆங்கிலோ இந்தியர்களுக்கு என்று பிரத்தியேகமாகப் பெட்டிகள் ஒதுக்கப்பட் டிருந்ததைப் பலரும் அறிவர். ஆனால் பாண்டு டேஷனில் உபசரித்த ஆங்கிலோ இந்தியப் பெண்மணிகள் இந்த வேற்றுமை களைக் கடந்தவர்களாய் இருந்து அனைவரையும் ஒரே கண் ணோட்டத்துடன் உபசரித்தார்கள். அப்போதைய சூழ்நிலையில் இது பாராட்டக் கூடிய விதமாகவே இருந்தது. ஆங்கிலோ - இந்தியப் பெண்மணிகளைத் தவிர ராமகிருஷ்ண மடத்துத் தொண்டர்களும், இங்குப் பிரயாணிகளுக்குப் பல வகையிலும் உதவி செய்தார்கள். பாண்டு டேஷனிலிருந்து பிரம்மபுத்ரா நதியைக் கடந்து வடக்குக் கரையிலுள்ள அமிங்கோன் என்ற டேஷனை அடைய வேண்டும். நதியைக் கடக்க அப்பொழுது பாலம் அமைக்கப்பட வில்லை. நீராவிப் படகுகள் மூலமாகத்தான் பிரயாணிகள் ஒரு கரை யிலிருந்து மற்றொரு கரைக்குக் கொண்டு சேர்க்கப்பட்டார்கள். பிரம்மபுத்திரா நதிக்குதான் எத்தனை வேகம்! சுழல்கள்தான் எத்தனை! மலைபடு பொருள்களை வாரி எடுத்துக் கொண்டு போய் சமுத்திர ராஜனிடம் சேர்ப்பிக்க இதற்கு ஏன் இவ்வளவு அவசரமோ தெரியவில்லை. நாங்கள் பாண்டு டேஷனில் வந்திறங்கிய அன்று மாலை ஐந்து மணிக்கு நீராவிப் படகின் மூலம் பிரம்மபுத்ரா நதியைக் கடந்து அமிங்கோன் டேஷனுக்குப் போய்ச் சேர்ந்தோம். இங்கு வந்த பிறகு எங்கள் குழுவினர் இரண்டு பகுதியினராகப் பிரிந்து ஒரு பகுதியினர் நேரே காசிமா நகருக்குச் சென்றனர். இவர்களை ஏற்றிக் சென்ற விசேஷ ரெயில் மாலை ஆறு மணிக்கெல்லாம் புறப்பட்டு விட்டது. நான், என் வாழ்க்கைத் துணைவி, இன்னுஞ் சிலர் அடங்கிய மற்றொரு பகுதியினராகிய நாங்கள் கல்கத்தா நோக்கிப் புறப் பட்டோம். எங்கள் விசேஷ ரெயில் இரவு இரண்டு மணிக்கு மேல்தான் புறப்பட்டது. மறுநாள் (23-4-42) பகல் இரண்டு மணி சுமாருக்கு கோலக்கஞ்ச் டேஷனுக்கு வந்து நின்றது. இங்கு, கூட வந்த நண்பர்கள், டேஷனை ஒட்டினாற்போலிருந்த மாந் தோப்புக்குள் நுழைந்து வளமான நான்கைந்து மாங்காய்கள் கொண்டு வந்தார்கள். அவற்றை ஊறுகாயாகப் பரிணமிக்கச் செய்து டேஷனில் விற்ற பூரி, முதலிய திண்பண்டங்களுக்கு வியஞ் சனமாக உபயோகித்து எங்கள் பசியைத் தீர்த்துக் கொண்டோம். கோலக்கஞ்ச் டேஷனை விட்டு மறுநாள் (24-4-42) காலை சாந்தஹார் என்ற டேஷனுக்கு வந்து சேர்ந்தோம். வண்டி நின்ற எல்லா டேஷன் களிலும். பொதுநல தாபனங்கள் சிலவற்றைச் சேர்ந்த தொண்டர்களும், சுற்றுப்புறமுள்ள கிராமவாசிகளும் பிரயாணிகளுக்கு அரிசிப் பொரி, தேயிலைப் பானம் முதலிய வற்றைக் கொடுத்து உபசரித்தனர். எங்களைப் பொறுத்தமட்டில், பசி தெரியாமலே கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்தோம். இந்த ரெயில் பிரயாணத்தின் போது வழி நெடுக வண்டி நின்ற டேஷன்களில் எல்லாம் பிரயாண அலுப்புத் தாங்க முடியாமல் இறந்துபோன அநேகருடைய சவங்கள்பிளாட்பாரத்தில் துணியால் மூடப்பட்டுக் கிடந்ததைப் பார்த்துக் கொண்டு வந்தோம். சாந்த ஹார் டேஷனில் எங்கள் விசேஷ ரெயில் வந்து நின்றதும், வயதான ஒரு முலீம் கனவான், வண்டியிலிருந்து இறங்கி பிளாட் பாரத்தில் அடியெடுத்து வைத்தார். உடனே கீழே விழுந்து விட்டார். அவ்வளவு தான்! என்ன வென்று அவருடன் வந்தவர்கள் அருகில் சென்று பார்க்கும் போது, மூச்சுநின்று விட்டிருந்தது. இந்த மாதிரியான காட்சிகளைப் பார்த்துக் கொண்டு மனவேதனையுடன், கல்கத்தா வந்து சேர்ந்தோம்.  47. கடைசியில் சென்னைக்கு சீல்டா டேஷனில் இறங்கி கல்கத்தா நகரத்திற்குள் செல்லாமல் நேரே ஹௌரா டேஷனுக்கு வந்து சென்னைக்குச் செல்லும் வண்டியில், முடிந்தால் அன்றே புறப்பட்டுவிடுவதென்று தான், நானும் என் வாழ்க்கைத் துணைவியும் எண்ணினோம். ஏனென்றால் எங்கள் உடல் நிலை அவ்வளவு மோசமாயிருந்தது. தவிர எங்கள் துணிமணிகள், மூட்டை முடிச்சுக்கள் எல்லாமே ஒரே அழுக்கு மயமாய் இருந்தன. நகரத் திற்குள் சென்றால், அறிந்தவர், தெரிந்தவரைப் பார்க்க வேண்டியிருக்கும். அவர்களை இந்த அலங் கோல வேஷத்துடன் சந்திக்க கூச்சமாயிருந்தது. என்னைக் காட்டிலும் என் வாழ்க்கைத் துணைவி அதிகமாகக் கூச்சப்பட்டாள். ஆனால் எதிர்பாராத விதமாக ரங்கூனில் என்னுடன் நெருங்கிப் பழகி வந்த வீர, என்ற நண்பரும் வேறு சிலரும் சீல்டா டேஷனுக்கு வந்து எங்கள் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். வண்டியி லிருந்து இறங்கிய எங்களைப் பார்த்ததும் இந்த நண்பர்கள் ஓடோடி எங்களிடம் வந்து உற்சாகத்துடன் வரவேற்று காளி கட்டிடத்தி லுள்ள நாட்டுக் கோட்டை நகரத்தார் மடத்திற்கு அழைத்துப் போயினர். வெகு நாட்களுக்குப் பிறகு சுடு நீர் நானமும் சூடான காபியும் கிடைத்தன. சாப்பாட்டைப் பற்றி சொல்லவா வேண்டும்? எங்களுக்கு நடைபெற்ற உபசாரத்தை ராஜோபசாரம் என்றே சொல்லவேண்டும். கல்கத்தாவுக்கு வந்த எங்கள் கோஷ்டியில் நான், என் வாழ்க்கைத் துணைவி, ரா. என்ற நண்பர் ஆகிய மூவரைத் தவிர மற்றவர்கள், சென்னை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்கள். நாங்கள் மூவர் மட்டும் கல்கத்தாவில் மூன்று நாட்கள் தங்கி நகரத்து முக்கியமான இடங்களை யெல்லாம் பார்த்துக் கொண்டோம். பிறகு சீல்டா டேஷனில் வரவேற்ற நண்பர் வீர, அவர்களுடைய உதவியுடனும் (27-4-42 இரவு) கல்கத்தாவிலிருந்து புறப்பட்டு காசி, அலகாபாத், கயை ஆகிய புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று, வைதீகக் கிரியைகளை முடித்துக்கொண்டு (8-5-42 பகல்) கல் கத்தாவுக்குத் திரும்பி வந்தோம். பதினோராந் தேதி (11-5-42) மாலை ஹௌராவில் மெயில் வண்டியில் புறப்பட்ட நாங்கள் அதாவது, நான், என் வாழ்க்கைத் துணைவி, ரா. என்ற நண்பர் ஆகிய நாங்கள் மூவரும் பதின்மூன்றாந் தேதி (13-5-42) காலை சென்னை வந்து சேர்ந்தோம். சென்ட்ரல் டேஷனில் இறங்கியதும் கூட வந்த நண்பர் ரா. எங்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தமது உற்றார் விறவினர் வீட்டிற்குச் சென்றார். நாங்கள் இருவரும் தியாகராயநகர் உமான் ரோட்டில் இருந்த எங்கள் சொந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் வந்து சேர்ந்த சமயம், சென்னையில் யுத்த பயம் நிலவியிருந்தது. நகரம் சூனியமாகக் கிடந்தது. என்னுடைய எதிர் காலமும் சூனியமாகவே எனக்குத் தென்பட்டது. ஆயினும் நான் உள்ளம் தளரவில்லை. சர்வானுகூல நம்பிக்கையோடு புனர் வாழ்வு தொடங்க முற்பட்ட பிறகு சுமார் ஒன்றரை வருஷத்திற்கு மேல் நீண்ட நடைப் பயணத்தின் விளைவாக நடக்க முடியாமல் படுக்கை யிலே கிடந்தேன். இப்படிக் கிடந்த நிலையிலும் என் எழுதுகோலை விடாமல் பற்றிக் கொண்டிருந்தேன். அதுவும் சுறுசுறுப்பாகவே நகர்ந்தது. சில நூல்களும் வெளியாயின. ரங்கூனிலிருந்து புறப்பட்டது முதல் சென்னை வந்து சேரும் வரையிலும், அதற்குப் பிறகும் எனக்குப் பல வகையிலும் உதவி புரிந்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்த நடைப்பயணக் கட்டுரையை முடிக்கிறேன். முற்றும்.  பிரிக்கப்பட்ட பர்மா I சரித்திரச் சுருக்கம் சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னரிருந்தே இந்தியா, சீனா, மங்கோலியா முதலிய நாடுகளிலிருந்து பலர் பர்மாவில் வந்து குடியேறினர். இவர்களுக்கும், ஏற்கெனவே பர்மாவில் வசித்து வந்த புராதன ஜாதியினருக்கும் நாளா வட்டத்தில் ரத்தக் கலப் புண்டாகி, பிறகு, தனித்தனி சமூகத்தினராகவும், வெவ்வேறு பாஷை பேசுவோராகவும் பிரிந்து கொண்டனர். பர்மாவின் வடபாகத்தில் நிலைத்தவர்கள் பர்மியர் களென்றும், தென் பாகத்தில் நிலைத்த தவர்கள் மானர் (தலெய்ங்கர்) என்றும் தங்களைச் சொல்லிக் கொண்டனர். முன்னவருக்கு வட இந்தியாவின் தொடர்பு தரை மார்க்கமாகவும், பின்னவருக்குத் தென்னிந்தியாவின் தொடர்பு கடல் மார்க்கமாகவும் அதிகமாக ஏற்பட்டது. இவர்களில் மானர்கள் அதிக நாகரிகம் வாய்ந்தவர்கள். இவர்கள் இந்தியாவின் நாகரிகத்தையும், கலை ஞானத்தையும், உண்மையான பௌத்த மதத்தையும் திறம்பட பர்மாவில் கொண்டு வந்து புகுத்தி விட்டார்கள் என்று சொல்லப் படுகிறது. சிறப்பாகத் தமிழ் நாட்டுக்கும் தென் பர்மாவுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருந்து வந்தது. சோழ மன்னர்கள், இந்த நாட்டில் தங்களுடைய அரசியல் செல்வாக்கை அதிகமாக உபயோகப்படுத்தி யிருக்கிறார்கள். இப்பொழுதும் தென்பர்மாவிலேயே தமிழர்களின் குடியேற்றம் அதிகமாயிருப்பதைக் காணலாம்.1 வட பர்மாவில் ஆண்டு வந்த அரசர்களில் முக்கியமானவன் அனவ்ருதன் என்பவன். இவன் பகான் என்ற ஊரைத் தனது ராஜ தானியாக்கிக்கொண்டு கி.பி. 1017-ம் வருஷம் சிம்மாசனம் ஏறினான். இவன் பல பௌத்தாலயங்களைக் கட்டினான். குடிகளுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று விரும்பினான். இவன், தட்டோனைத் தலை நகராகக் கொண்டு ஆண்டு வந்த மானர்களின் அரசனான மனுஹா என்பவன் மீது படையெடுத்தான். அவனைத் தோற்கடித்துச் சிறை பிடித்துக் கொண்டு வந்ததோடு கூட மானர்களின் நாகரிகம், மதக் கோட்பாடுகள், மத நூல்கள் முதலியவற்றையும் தனது ராஜ தானிக்குக் கொண்டு வந்தான். இவனுடைய செல்வாக்கு சில வருஷ காலம் பர்மா முழுவதும் பரவியிருந்தது. இந்த பகான் அரச பரம் பரையினர், வெளிநாடுகளோடு போக்கு வரவு சம்பந்தம் வைத்துக் கொண்டிருந்தனர். 13 - வது நூற்றாண்டின் கடைசியில் சீனர்கள், பர்மாவின் மீது படையெடுத்தனர். இதன் காரணமாக பகான் அரசவமிசம் அழிந்து பட்டது. இதற்குப் பிறகு சுமார் 350 வருஷங்கள் வரை, பர்மாவின் சரித்திரம் ஒரே குழப்பமா இருந்திருக்கிறது. இந்தக் காலத்தில் ஆவா, பெகு, டாங் முதலிய ஊர்களைத் தலை நகரங்களாகக் கொண்டு பல சிற்றரசர்கள் பரபர போராட்டங்களிடையே காலங் கடத்தி வந்தனர். 16 - வது நூற்றாண்டில் பேயின்னவுங் என்ற அரசன் பெகுவைத் தனது தலை நகராகக் கொண்டு சில காலம் பர்மா முழு வதையும் பெயரளவில் தனது ஆதிக்கத்திற்குட் படுத்திக் கொண்டி ருந்தான். இந்தக் காலத்திலே தான், டச்சுக்காரரும் இங்கிலிஷ் காரரும் இந்நாட்டுக்கு வந்து இந்நாட்டின் செழுமையினால் கவரப்பட்டு, தத்தம் நாடுகளுடன் வியாபார சம்பந்தங்கள் வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்தனர். இவர்களுடைய வியாபார நிலையங் களும் பர்மாவின் சில பாகங்களில் தோன்றலாயின. பேயின்னவுங்குக்குப் பிறகு சில காலம் நாடு முழுவதும் அல்லோல கல்லோலமாயிருந்தது. கடைசியில் 1752 - ம் வருஷம் அலவுங்பையா என்ற அரசன் தோன்றித் தனது அதிகாரத்தை விதரித்து வந்தான். இவன் வடக்கே ஷான் பிரதேசம், கிழக்கில் சையாம், மேற்கே அஸாம் முதலிய தேசங்களின் மீது படை யெடுத்துச் சூறையாடி வரலாயினான். இந்த அலவுங்பையா என்பவன் தான், மானர்களின் மீது படையெடுத்து அவர்களைத் துரத்தி யடித்து விட்டு யாங்கோன் என்ற ரங்கூன் நகரத்தை தாபித்தவன். இவனுடைய வமிசத்தினானாகிய பாக்யிடா என்ற அரசன் காலத்தில், அதாவது 1823-ம் வருஷத்தில், இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தாருக்கும் பர்மியர்களுக்கும் பிணக்கு ஏற்பட்டது. அரக்கானியர் சிலர், பிரிட்டிஷ் எல்லைப் புறத்தில் இருந்து கொண்டு, பர்மிய அரசாங்கத்திற்குட்பட்ட பிரதேசங்களில் அடிக்கடி புகுந்து கொள்ளையடித்து வந்ததே இதற்குக் காரணம். மற்றும், இங்கிலீஷ் காரர்களுக்கு, அவர்கள் கோரிய மாதிரி வியாபார சௌகரியங்கள் செய்து கொடுக்கப்படவில்லை யென்று சொல்லப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கமும் பர்மிய அரசாங்கமும் சிறிது காலம் சமாதானப் பேச்சுக்கள் நடத்திப் பார்த்தன. பயன் உண்டாகவில்லை. கடைசி யில் 1824-ம் வருஷம் பிரிட்டிஷார் பர்மாவின் மீது படையெடுத் தனர். இதுவே முதல் பர்மிய யுத்தம், இந்த யுத்தத்திலேயே, பர்மியர்களின் வீர திலகமாகிய பண்டூலா என்பவன் உயிர் துறந்தான். கடைசியில் 1826ம் வருஷம் இந்த யுத்தம் முடிவடைந்தது. இதன் விளைவாகப் பிரிட்டிஷாருக்கு அரக்கான் பிரதேசமும் டெனாசரீம் துறைமுகப் பிரதேசமும் கிடைத்தன.1 இதன் பிறகு பிரிட்டிஷார், ரங்கூன் முதலிய துறைமுகப் பட்டினங்களில் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டு வரத் தொடங்கினர். ஆனால் இதனைப் பர்மியர்கள் விரும்பவில்லை போலும். ரங்கூனிலிருந்த பர்மிய கவர்னர், வியாபாரஞ் செய்து வந்த பிரிட்டிஷாரைச் சரியாக நடத்தவில்லை யென்றும், அவர்களுக்குப் போதிய சலுகை காட்டவில்லை யென்றும் சொல்லப்பட்டன. எனவே 1852-ம் வருஷம் இரண்டாவது பர்மிய யுத்தம் தொடங்கியது. இதன் விளைவாக லோயர் பர்மா என்கிற தெற்கு பர்மா முழுவதும் பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்குட் படுத்தப் பெற்றது.2 இதனால் பிரிட்டி ஷாருடைய உள் நாட்டு வியாபாரத்துக்குப் பல சௌகரிங்கள் ஏற்பட்டன. யுத்தத்திலே இழந்துவிட்ட பிரிதேசங்களை, சமரஸ முறை களினால் மீண்டும் பெற்றுக் கொள்ள பர்மியர்கள் முயன்றார்கள். 1855-ம் வருஷம், இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு ஒரு தூது கோஷ்டி அனுப்பினர். அப்பொழுது கவர்னர்-ஜெனரலாயி ருந்தவன் லார்ட் டல்ஹவுஸி. அவன் இந்தத் தூது கோஷ்டிக்குச் சிறிதும் இடங்கொடுத்துப் பேசவில்லை. சூரியன் ஆகாயத்தில் பிரகா சிக்கின்ற வரையில், கைப் பற்றப் பெற்ற பிரதேசங்களில் பிரிட்டிஷ் கொடி பறக்கும் என்று சொல்லிவிட்டான். இதனால், பர்மிய தூது கோஷ்டியினர் மனமுடைந்து திரும்பினர். லோயர் பர்மாவை பிரிட்டிஷ் ராஜ்யத்துடன் சேர்த்துக் கொண்டு விட்டபோதிலும், அதனை, பர்மிய அரசனுடன் செய்து கொள்ளும் ஓர் உடன்படிக்கையினால் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று லார்ட் டல்ஹவுஸி விரும்பினார். எனவே, தளபதி பேயர்3 என்பவனுடைய தலைமையில் ஒரு பிரிட்டிஷ் தூது கோஷ்டியை அனுப்பினான். அப்பொழுது பர்மிய அரசாங்கத்தின் தலைநகராயிருந்தது அமராபுரா என்பது. தளபதி பேயர், உடன் படிக்கை செய்துகொள்ளுமாறு பர்மிய அரசனுக்குப் பலவிதமாகச் சொல்லிப் பார்த்தான். பர்மிய மன்னன், எவ்விதமான உடன்படிக் கைக்கும் இசைய முடியாதென்று மறுத்துவிட்டான். 1862-ம் வருஷம் பர்மிய அரசாங்கம் தனது தலைநகரத்தை அமராபுராவிலிருந்து மாண்டலேக்கு மாற்றிக் கொண்டது. அப் பொழுது அரசனாயிருந்தவன் மீண்டோன் என்பவன். இவனுக்கும், பிரிட்டிஷாருக்கும் முதலில் ஒருவித சமரஸம் ஏற்பட்டது. ஆனால் இது நீடித்து நிற்கவில்லை. மீண்டோன் அரசனுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்த தீபா மன்னன், தனது அரச பதவியை திரப் படுத்திக் கொள்ளும்பொருட்டு பலரைக் கொலை செய்தான் என்று சொல்லப்படுகிறது. தவிர வட பர்மாவில் ஒழுங்கான அரசாங்கம் நடைபெறாமையினால், தென் பர்மாவிலிருந்த பிரிட்டிஷ் வியாபாரிகள் தங்களுடைய வியாபாரம் பாதிக்கப் படுவதாகத் தெரிவித்தார்கள். மற்றும், பர்மிய அரசன், பிரெஞ்சு அரசாங்கத்தாருடன் சிநேக உடன் படிக்கை செய்து கொண்டிருப்பதாகப் பிரிட்டிஷ் அரசாங்கத் தாருக்குத் தகவல் எட்டியது. இதனால் தங்களுடைய செல்வாக்கு குறைந்துவிடுமென்று பிரிட்டிஷார் கருதினர். ரங்கூனில் தேக்கு முதலியவைகளில் வியாபாரஞ் செய்துவந்த பம்பாய்-பர்மா டிரேடிங் கார்ப்போரேஷன் என்னும் கம்பெனியார், சரியான தீர்வை செலுத்தி வடபர்மாவிலிருந்து தேக்கு மரங்களைக் கொண்டுவர வில்லை என்று காரணங்காட்டி, மேற்படி கம்பெனிக்கு தீபா அரசன் அபராதம் விதித்தான். இவையெல்லாம் காரணங்களாகக் கொண்டு பர்மிய அரசாங்கத்திற்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் யுத்தம் தொடங்கியது. இதுவே மூன்றாவது பர்மிய யுத்தம். 1885-ம் வருஷம், ஒரு பிரிட்டிஷ் படையானது, மாண்டலேயை நோக்கிச் சென்று, தீபா மன்னனைச் சிறைப்படுத்தியது.1 1886-ம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து வட பர்மா, பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் சேர்த்துக் கொள்ளப் பெற்றது. II பிரிவினைக்கு முன்னர் பிரிட்டிஷாருடைய சுவாதீனத்திற்கு வந்த பர்மாவின் பிர தேசங்கள் முதலில், இந்தியா கவர்னர்-ஜெனரலின் நிருவாகத்துக்குட் பட்டிருந்தன. 1826-ம் வருஷம், முதலாவது பர்மிய யுத்தம் முடிந்ததும் அரக்கான் பிரதேசத்திற்கு ஒரு கமிஷனரும், டெனாசரீம் பிரதேசத் திற்கு ஒரு கமிஷனருமாக இருந்து, கவர்னர்-ஜெனரலுடைய மேற்பார்வையில் நிருவாகம் செய்து வந்தார்கள். 1852-ம் வருஷம் இரண்டாவது பர்மிய யுத்தம் ஏற்பட்டதன் காரணமாக, பெரு மாகாணம் சேர்த்துக் கொள்ளப் பெற்று ரங்கூனில் ஒரு கமிஷனர் நியமிக்கப் பெற்றார். இந்த முறை 1862-ம் வருஷம் வரை அநுஷ் டானத்தில் இருந்து வந்தது. பிரிட்டிஷாரின் ஆதீனத்திற்குட்பட்ட பர்மா பிரதேசங்கள், பல வகையிலும் செழிப்படையத் தொடங்கின. ஜனத்தொகை பெருகியது. வியாபாரம் அபிவிருத்தியடைந்தது. ஆதலின், கல்கத்தாவைத் தலைநகராகக் கொண்ட இந்தியா அரசாங்கம், தனது நேரான மேற்பார்வையில் பர்மா பிரதேசங்களை வைத்து நிருவாகம் செய்தல் இயலாது போயிற்று. எனவே இவை களுக்கென்று தனியாக ஒரு பிரதம கமிஷனர் நியமனம் செய்யப் பெற்றார். இந்த ஏற்பாடு 1897-ம் வருஷம் வரை, வட பர்மா சேர்க்கப் பட்ட பிறகு கூட அமுலில் இருந்தது. பிரதம கமிஷனருடைய நிருவாகத்தின் கீழ் பர்மா மாகாணம் இருந்த காலத்தில், அரசியல் விவகாரங்களில் ஜனங்களோ, அவர்களுடைய பிரதிநிதிகளோ எவ்விதமாக ஈடுபடுவதற்கும் சந்தர்ப் பங்கள் இல்லாமலே இருந்தன. அரசாங்க நிருவாக சபையோ, சட்ட சபையோ ஒன்றும் இல்லை. முக்கியமான சில நகரங்களில் முனிசிபல் கமிட்டிகள் மட்டும் இருந்தன. இவைகளுக்கு அந்தந்த டெபுடி கமிஷனர்களே தலைவர்களா யிருந்தார்கள். இவைகளில் அங்கத் தினர்களாயிருந்தவர்களில் பெரும்பான்மையோர் உத்தி யோக தர்களே. 1897-ம் வருஷம், பர்மா மாகாணம் ஒரு மாகாண அந்த துக்கு உயர்த்தப்பட்டது. பிரதம கமிஷனருக்குப் பதில் லெப்டி னெண்டு கவர்னர் நியமிக்கப் பெற்றார். மாகாண சம்பந்தமான சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள அதிகாரம் பெற்ற ஒரு சட்ட சபையும் நிறுவப்பெற்றது. ஆனால் இது ஜனப்பிரதிநிதி சபையா யில்லை. இதில் அங்கத்தினராயிருந்த ஒன்பது பேரும் அரசாங்கத் தினரால் நியமனம் பெற்றவர்களே. இந்த ஒன்பது பேரில் ஐந்து பேர் உத்தியோகதரல்லாதவராக இருந்தனர். இந்தச் சட்ட சபையானது 1898-ம் வருஷம் பர்மா முனிசிபல் சட்டம் என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றி அதன் மூலமாக தல தாபனங்களில் தேர்தல் முறையைப் புகுத்தியது. 1909- வருஷம் மிண்டோ-மார்லி சீர்திருத்தச் சட்டம் இந்தியாவில் அமுலுக்கு வந்த காலத்தில், பர்மா சட்ட சபைக்கும் ஓரளவு தேர்தல் சுதந்திரம் கிடைத்தது. அதாவது, 9 பேரோடு கூடி யிருந்த சட்ட சபையானது 17 பேர் கொண்டதாக விதரிக்கப் பட்டது. இந்த 17 பேரில் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பர்மா ஐரோப்பிய வியாபார சங்கங்களின் பிரிதிநிதிகளாகவே இந்த இருவரும் இருந்தார்கள். இதனால் தேச ஜனங்களுக்கு எவ்வித தேர்தல் சுதந்திரமும் கொடுக்கப் பெறவில்லை. இந்தியா சட்ட சபையில் பர்மா சட்ட சபை அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஒரே ஓர் அங்கத்தினர் மட்டும் தானம் வகித்துக் கொண்டிருந்தார். 1915-ம் வருஷம் பர்மா சட்ட சபையானது, 30 அங்கத்தினர்கள் கொண்டதாக விதரிக்கப்பட்டது. ஆனால் தெரிந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர் தொகை பழைய மாதிரி இரண்டாகவே இருந்தது. 1919-ம் வருஷம் இந்தியாவில் மாண்டேகு-செம்போர்ட் சீர்திருத்தம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதில் பர்மா சேர்க்கப் படவில்லை. நிருவாக சௌகரியத்திற்காக, இந்திய மாகாணங்களில் பர்மாவும் ஒன்றெனக் கருதப்பட்டு வந்த போதிலும், அரசியல் முன்னேற்றத்தில் ஒரு படி கீழேயே இருத்தி வைக்கப் பட்டது. இதற்குக் காரணங்கள் பல. பிரிட்டிஷ் அரசாங்க நிரு வாகத்தின் கீழ், சமீப காலத்திலேயே பர்மா வந்தமையால், அது நிருவாக அநுபவம் பெற இன்னும் சிறிது காலம் பிடிக்கும் என்று அரசாங்கத்தார் கருதியிருக்கலாம். அல்லது பர்மியர்களே, அதைப் பற்றி எவ்விதமான கிளர்ச்சியும் செய்யா மலிருக்கிற பொழுது, நாமே வலியச் சீர்திருத்தங்களைக் கொடுப்பானேன் என்றும் நினைத் திருக்கலாம். அழுத பிள்ளைக்கன்றோ வாழைப்பழம் கிடைக்கும்! எப்படியும் 1917-ம் வருஷம் வரையில், அதாவது காலஞ் சென்ற ஸ்ரீமான் மாண்டேகு, இந்தியாவைப் பொறுப்பாட்சிக்குப் பக்குவப் படுத்துவதே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் லட்சியம் என்னும் கருத்துப் பட 1917-ம் வருஷம் ஆகட் மாதம் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் பேசியவரை, பர்மாவில் ஒழுங்குபட்ட ஓர் அரசியல் இயக்கமோ கிளர்ச்சியோ நடைபெறவில்லை யென்று திண்ணமாகக் கூறலாம். அது முதற் கொண்டே அரசியல் இயக்கத்தில் பர்மியர்களுக்கு ஒருவித பற்றுதல் உண்டாயிற்று. அப்பொழுது பௌத்த இளைஞர் சங்கம் $1 என்ற தாபனம், அரசியல் விஷயங்களில் கவனஞ் செலுத்த ஆரம்பித்தது. இச்சங்கத்தினர், இந்தியாவில் அமுலுக்குக் கொண்டு வரப்பட இருக்கும் சீர்திருத்தச் சட்டத்தில் பர்மாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று இங்கிலாந்துக்கு ஒரு தூது கோஷ்டியை அனுப்பினர். இவர்களுடைய கோரிக்கை நிறைவேற வில்லை. ஆனால் அதற்குப் பதிலாக இச்சங்கத்தில் கட்சிப் பிளவுகள் ஏற்பட்டன. மூத்தவர் கட்சியென்றும், இளைஞர் கட்சியென்றும் முதலில் இரண்டு கட்சிகள் பிரிந்தன. இளைஞர் கட்சியைத் தலைவர்களாயிருந்து நடத்தியவர்கள் ஊ பா பே, ஊ தின் மாங், ஊ சிட் லேங் முதலியோராவர். இவர்கள் மாண்டேகு-செம் போர்ட் சீர்திருத்தத் திட்டத்தில் பர்மாவைச் சேர்த்துவிட வேண்டுமென்று வற்புறுத்தி வந்தார்கள். மூத்தவர் கட்சி, அப்பொழுது பர்மாவின் லெப்டினெண்டு கவர்னராயிருந்த ஸர் ரெஜினால்ட் கிராடாக் கினால் பர்மாவுக்கென்று தனியாகத் தயாரிக்கப்பட்ட அரசியல் திட்டத்தை ஆதரித்தது. பின்னர், இந்தத் திட்டமும் அமுலுக்கு வரவில்லை. இந்தக் கட்சியும் செல்வாக்கிழந்து நாளா வட்டத்தில் மறைந்து விட்டது. இளைஞர் கட்சியானது, 1920-ம் வருஷத்தில் பர்மிய சங்கங் களின் பொதுச் சபையாக உருவுகொண்டது.2 ஆனால் இதுவும் பின்னர் பல சில்லரைக் கட்சிகளாகப் பிரிந்தது.. ஒன்று 21 கட்சி யென்று தன்னை அழைத்துக் கொண்டது. இதுவே ஊ பா பே தலைமையில் ஜனக் கட்சி3யாகத் திரும்பியது. இக்கட்சியினர், இந்தியாவினின்று பர்மா பிரிக்கப் பட்டு, பிரிட்டிஷ் ராஜ்யத்திற்குட் பட்ட பொறுப்பாட்சி கொடுக்க படவேண்டுமென்று கோரினர். ஊ சிட் லேங்கைத் தலைமையாகக் கொண்ட மற்றொரு கட்சியினர், பர்மாவுக்குச் சுயராஜ்யம் வேண்டு மென்று கூறினர். இவை போல் இன்னும் சில கட்சிகளும் தோன்றத் தொடங்கின. இந்தியாவினின்று பர்மா பிரிக்கப்படுகிற பிரச்னை உண்டான காலத்திலிருந்து, இந்தக் கட்சிகள் பலவாகவும், அபிப்பிராயங்கள் தினுசுதினுசாகவும் முளைத்தன. பர்மா பிரிவினை சம்பந்தமாக, பர்மியக் கட்சியினரில் எவரும் ஒரே போக்கான அபிப்பிராயத்தை எப்பொழுதும் கொண் டிருக்கவில்லை. 1919-ம் வருஷம் மாண்டேகு-செம் போர்ட் சீர்திருத்தச் சட்டம் இந்தியாவில் அமுலுக்கு வந்த காலத்தில், பர்மாவுக்குத் தனியாக ஓர் அரசியல் திட்டத்தை ஸர் ரெஜினால்ட் கிராடாக் வகுக்க அது நிராகரிக்கப்பட்டதென்று முன்னர்க் கூறினோ மல்லவா? அதற்குப் பிறகு மற்றொரு திட்டமும் தயாரிக்கப் பட்டது. இதனையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசாங்கத்தார் அங்கீரிக்க வில்லை. கடைசியில், மாண்டேகு-செம்போர்ட் திட்டத்தின் கீழ், இந்திய மாகாண அரசாங்கங்கள் எங்ஙனம் அமைக்கப்பட்டனவோ அங்ஙனமே பர்மாவிலும் அமைக்கத் தீர்மானித்தனர். இதனால், இந்தியாவிலுள்ள மாகாணங்களைப்போல் பர்மாவும் சம அந்தது பெற்றது. இரட்டையாட்சி முறையும் பர்மாவில் புகுந்தது. 1923-ம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து இந்த இரட்டை யாட்சி அரசாங்கத் திட்டம் அமுலுக்கு வந்தது. இதன்படி சட்ட சபையானது பெருக்கப்பட்டது. அங்கத்தினர்களின் தொகை 103 ஆக உயர்ந்தது. இதற்கு விவரம் வருவாறு:- ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற அங்கத்தினர்கள் 80 உத்தியோக அங்கத்தினர்கள் 14 நிருவாக சபை அங்கத்தினர்கள் 2 கவர்னரால் நியமிக்கப்பெற்ற உத்தியோகதரல்லாதார் 7 103 மற்றும் ஜனங்களுக்கு வாக்களிக்கும் உரிமை விசாலமாக்கப் பட்டது. வாக்காளர்கள் அதிகமாயினர். இந்த 1923-ம் வருஷத்துத் திட்டப்படி, பர்மா மாகாண அரசாங்க மானது ஒரு கவர்னரையும் இரண்டு நிருவாக சபை அங்கத்தினர்களையும் இரண்டு மந்திரிமார்களையும், கொண்டதாக இருந்தது. ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் (போலீ, வரவுசெலவு, ரெவினியு, நீதி இலாகா நிர்வாகம் முதலியன) நிருவாக சபை அங்கத் தினர் வசத்திலும், மாற்றப்பட்ட இலாகாக்கள் (தல தாபனங்கள், கல்வி, சுகாதாரம், விவசாயம், கைத்தொழில், கலால் முதலியவை) மந்திரிமார் வசத்திலும் இருந்தன. இவர்களில் மந்திரிமார்கள் இருவரும், சட்டசபையில் எந்தக் கட்சியினர் பெரும்பான்மை யோராக இருந்தனரோ அவர்களிலிருந்து கவர்னரால் தெரிந் தெடுக்கப்பெற்றனர். இவர்கள் சட்ட சபைக்குப் பொறுப்பான வர்கள். சட்டசபையின் பெரும்பான்மையான வாக்குகளால் இவர்கள் விலக்கப்படலாம். ஆனால் நிருவாக சபை அங்கத்தினரோ அப்படி யில்லை. அவர்களை நியமிக்கவோ, விலக்கவோ சட்டசபைக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. பரீட்சார்த்தமாக ஏற்படுத்தப் பெற்ற இந்த இரட்டையாட்சி முறை, எதிர்பார்த்தவளவு பலனை இந்தியாவிலோ, பர்மாவிலோ கொடுக்கவில்லை என்று சுருக்கமாகச் சொல்லலாம். III பிரிவினைக்குப் பிறகு 1919-ம் வருஷத்து இந்திய அரசியல் சட்டத்திலேயே, இந்தச் சட்டமானது நடை முறையில் எவ்வாறு வேலை செய்கிறதென்பதைப் பற்றிப் பத்து வருஷங்களுக்குப் பிறகு பரிசீலனை செய்ய வேண்டு மென்று குறிப்பிடப் பட்டிருந்தது. அப்படியே ஸர் ஜான் ஸைமனு டைய தலைமையில் ஒரு கமிஷன் நியமிக்கப் பெற்றது. இது, பார்லி மெண்டுக்குச் சமர்ப்பித்த யாதாதில், இந்தியாவினின்று பர்மாவைப் பிரித்துவிட வேண்டுமென்று சிபார்சு செய்திருந்தது. அது முதல் பர்மா, தனிப்பட்ட ஒரு பிரச்னையாகவே வாதிக்கப் பட்டு வந்திருக்கிறது. பர்மா விஷயத்தைப் பற்றி ஆலோசிப்பதற் கென்று வட்டமேஜை மகாநாடும் தனியாகவே கூடியதல்லவா? இந்தப் பிரிவினை எண்ணத்தை முதலில் கிளப்பியது யார் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. அது வாதத்திற்கிடமான பிரச்னை யாகவே முடியும். ஆனால் பர்மியர் அனைவரும் பிரிவினையை ஆதரிக் கிறார்களென்றோ இந்தியர்கள் அனைவரும் எதிர்க்கிறார் களென்றோ சொல்ல முடியாது. இந்தப் பிரிவினைப் பிரச்னை தற்பொழுது முடிந்து விட்ட ஒரு பிரச்னையாகி விட்டபடியால், இது சம்பந்தமான ஆராய்ச்சியில் நாம் இப்பொழுது தலையிட வேண்டியதில்லை. ஆனால் ஒரு விஷயம். இந்திய அரசியலமைப்பில் பர்மாவும் சென்ற ஐம்பது வருஷ காலமாக ஒன்றாகச் சேர்ந்திருந்ததனாலேயே, இந்தியர்கள், பர்மாவில் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டார்கள். பல சொத்து சுதந்திரங்களையும் பர்மாவில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பர்மாவின் செழிப்புக்கு இவர்களுடைய உழைப்பும், ஏராளமான முதலும் காரணங்களாயிருந்தன. எனவே, பிரிவினை காரணமாக இவை யாவும் பாதிக்கப்படக் கூடாதென்று இந்தியர் கோருவது சகஜந்தானே. பர்மாவைப் பிரிக்க வேண்டுமென்ற சைமன் கமிஷன் சிபார்சானது, 1935-ம் வருஷத்து பர்மா அரசாங்கச் சட்டமாகப் பரிணமித்தது. இந்தச் சட்டப்படி பர்மாவானது, 1937-ம் வருஷம் ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து இந்தியா அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் இராது. அப்படி பிரிந்த பர்மாவின் அரசியல் அந்தது என்னவென்பது நிர்ணயிக்கப் படாமலே இருக்கிறது. ஆனால் பொதுவாகப் பார்க்கும்போது, 1935-ம் வருஷத்து இந்தியா அரசாங்கச் சட்டத்தின் கீழ் இந்தியாவிலுள்ள மாகாணங்களுக்கு என்ன உரிமைகளும் பொறுப்புக்களும் இருக்குமோ அவையே தான் பர்மாவுக்கும் இருக்கும் என்று சுருக்கமாகக் கூறலாம். பர்மா சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குப் பிரிட்டிஷ் பார்லி மெண்டில் பொறுப்பாக இருக்க வேண்டியவர் இந்தியா மந்திரியே யாகும். இவர் பர்மா விஷயமாகத் தமக்கு ஆலோசனை கூற மூன்று பேரைத் தமது ஆலோசனை சபையில் நியமித்துக் கொள்ளலாம். இந்த ஆலோசனை கர்த்தர்களுடைய உத்தியோக காலம் ஐந்து வருஷம். இவர்களுடைய வருஷச் சம்பளம் ஒவ்வொருவருக்கும் 1350 பவுன். இவை சம்பந்தமாக ஏற்படும் செலவுகள் பர்மாவின் வருமானத்தினின்றே கொடுக்கப்பெற வேண்டும். இனி, பிரிக்கப்பட்ட பர்மாவின் அரசாங்க அமைப்பு எத்தன்மையது என்பதைச் சிறிது கவனிப்போம். அரசாங்கத்தின் தலைவராயிருப்பவர் கவர்னர். இவருடைய உத்தியோக காலம் ஐந்து வருஷம். இவருடைய மாதச் சம்பளம் பதினாயிரம் ரூபாய். தவிர சம்ரட்சணைச் செலவென்றும், சிப்பந்திச் செலவென்றும், மோட்டார் வகையில் செலவென்றும் பலவிதமான படிச் செலவுகளும் இவருக்குக் கொடுக்கப்பெறும் மற்றும், கவர்னர் உத்தியோகத்திற் கென்று நியமிக்கப்படும் ஒருவர், உத்தியோக நியமன காலத்தில் ஐரோப்பாவில் இருந்தால் அவருடைய பிரயாணச் செலவுக்கென்று 1500 பவுன் கொடுக்கபெறும். இவர், தமது உத்தியோக காலத்தில் ஒரு முறை, நான்கு மாதத்திற்கு மேற்படாமல் ரஜா எடுத்துக் கொள்ளலாம். அக்காலத்தில் இவருக்கு மாதம் 4000 ரூபாய் வீதம் அலவன் கொடுக்கப்பெறும். சில சந்தர்ப்பங்களில் விசேஷ காரணங்களுக்காக இந்தியா மந்திரி, இந்த அலவன்ஸை மாதம் 5500 ரூபாயாகவும் உயர்த்தலாம். கவர்னர், தமது குடும்ப உபயோகத்திற்காக வரவழைக்கும் சாமான்களுக்குச் சுங்க வரி விதிக்கப்பட மாட்டாது. அரசாங்க நிருவாகத்தில் கவர்னருக்குத் துணை செய்ய, பத்து மந்திரிகள் வரை நியமிக்கப் பெறலாம் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் பிரிவினையான சில காலம் வரை பொருளாதார நிலையை உத்தேசித்து, ஆறு மந்திரிகளே போதுமானவர்களாக இருப்பார்கள். சட்டசபை அங்கத்தினர்களிலிருந்தே இந்த மந்திரிகள் நியமிக்கப் பெறல் வேண்டும். சட்டசபையில் எந்தக் கட்சி, பெரும்பான்மைக் கட்சியாக இருக்கிறது. அந்தக் கட்சிக்கு திரமாகப் பெரும் பான்மை வாக்குகள் கிடைக்குமா வென்பவைகளைக் கவனித்து, அந்தக் கட்சியிலிருந்து, நம்பிக்கை பெற்ற ஒருவரை முதல் மந்திரி யாகக் கவர்னர் தெரிந்தெடுக்க வேண்டும். இவருடன் கலந்தாலோ சித்துக் கொண்டு மற்ற மந்திரிகளைப் பொறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இங்ஙனம் தெரிந்தெடுக்கப்பட்ட மந்திரிச் சபையானது, சட்ட சபையில் பெரும்பான்மையோருடைய ஆதரவைப் பெற்றிருக் கிறதா வென்பதைக் கவர்னர் கவனிக்க வேண்டும். கூடிய வரையில், இந்த மந்திரிச்சபை கூட்டுப் பொறுப்பின் பேரிலேயே காரியங் களை நடத்தும். இந்த மந்திரிச் சபையும் இவற்றின் நிருவாகத்திலுள்ள இலாகாக்களும் சட்டசபைக்குப் பொறுப்புள்ளவை. மந்திரிகளின் சம்பளம், அவ்வப்பொழுது சட்டசபையினால் சட்டபூர்வமாக நிர்ணயிக்கப்பெறும். அரசாங்க நிருவாகம் பூராவும் இந்த மந்திரிகள் பொறுப்பில் இராது. கவர்னருக்கென்று சில விசேஷ நிருவாகப் பொறுப்புக்கள் அளிக்கப் பட்டிருக்கின்றன. தேசப் பாதுகாப்பு, கிறிதவ மத தாபனங்களின் நிர்வாகம், விலக்கப்பட்ட பிரதேசங்களின்1 நிருவாகம், பணநிருவாகம், நாணயச் செலாவணி, வெளிநாட்டு விவகாரங்கள் முதலியன யாவும் கவர்னருடைய விசேஷ நிருவாகப் பொறுப்பிலேயே நடைபெறும். இந்த இலாகாக்களைப் பொறுத்த மட்டில், கவர்னருக்கு ஆலோசனை கூற மந்திரிகளுக்குச் சட்ட ரீதியாக உரிமை கிடையாது. இந்த விசேஷ நிருவாகப் பொறுப்பை நிறைவேற்ற, கவர்னர், தனக்கு உதவியாக மூன்று பேருக்கு அதிகப் படாத ஆலோசனைகர்த்தர்களை நியமித்துக் கொள்ளலாம்.2 இந்த ஆலோசனைகர்த்தர்கள் சட்டசபை அங்கத்தினர் களாயிருக்க மாட்டார்கள். சட்டசபையில் ஒட் கொடுக்கும் உரிமையும் இவர்களுக்குக் கிடையாது. ஆனால் இவர்கள் சட்ட சபைகளின் கூட்டங்களில் அவ்வப்பொழுது ஆஜராகி வாதங்களுக்குப் பதில் சொல்லவோ மற்றபடி பேசவோ செய்யலாம். இவர்களுடைய மாதச் சம்பளம் 4,500 ரூபாய். இவர்கள் ஐந்து வருஷத்திற்கு மேல் உத்தி யோகம் வகிக்கமாட்டார்கள். இந்த ஆலோசனை கர்த்தர்களுடைய உதவிகொண்டு நடத்தும் மேற் கூறப்பட்ட நிருவாகப் பொறுப்பு தவிர, கவர்னருக்கு இன்னும் சில விசேஷ பொறுப்புக்களும் உண்டு. தேசத்தின் அமைதியைப் பாதுகாப்பது, அரசாங்கத்தின் பொக்கிஷ அந்தது நிலைகுலையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வது, சிறு பான்மைச் சமூகத்தினரின் நியாயமான உரிமைகளைக் காப்பது, உத்தியோகதர்களுடைய உரிமைகள் பாதிக்கப் படா வண்ணம் கவனிப்பது, பொதுவாக வியாபார சம்பந்தமாகவும் சிறப்பாக பிரிட்டிஷ் ராஜ்யத்திலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இறக்குமதி யாகும் பொருள்களின் மீது சுங்கவரி விதித்துப் பட்சபாதமாக நடத்தாமல் பாதுகாத்துக் கொள்வது, மற்றும் ஜாதி காரணமாக எழும் பட்சபாத நடவடிக்கைகளைத் தடுத்தல், அரசாங்கச் சட்டம் அமுலில் வராதபடி முட்டுக் கட்டைகள் ஏற்படுமானால் அரசாங்க நிருவாகத்தைத் தானே ஏற்றுக் கொண்டு நிருவாகத்தை நடத்துதல் முதலியன யாவும் இந்த விசேஷப் பொறுப்பு வர்க்கத்தில் சேர்ந்தவை. மேலே கூறப்பட்ட மூன்று ஆலோசனை கர்த்தர்களைத் தவிர, அரசாங்கத்தின் பண நிருவாக சம்பந்தமாகத் தானே ஆலோசனை சொல்ல ஒருவரை1 கவர்னர் நியமித்துக் கொள்ளலாம். வரவு செலவு மந்திரி யென்ற ஒருவர் இருந்தபோதிலும், இந்த ஆலேசனை கர்த்தர், அரசாங்க வரவு செலவு நிருவாக விஷயத்தில் அதிகமான செல்வாக்கை உபயோகித்தல் கூடும். இவர், கவர்னருக்கு ஆலோசனை கர்த்தராக இருப்பாரே தவிர, அரசாங்கத்திற்கு ஆலோசனை கர்த்தராக இருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்குச் சட்டசபைகளில் ஆஜராகிப் பேச உரிமை கிடையாது. இவருடைய உத்தியோக காலம், சம்பளச் செலவு முதலியவைகளை கவர்னரே நிர்ணயிக்க வேண்டும். தற்போதுள்ள கவர்ன்மென்ட் அட்வோகேட், பிரிவினையான பர்மாவில், அட்வோகேட்-ஜெனரல் என்ற புதிய பெயரால் அழைக் கப்படுவார். சட்டசம்பந்தமான ஆலோசனைகளை அரசாங்கத் திற்குக் கூறுவது இந்த உத்தியோகதரின் வேலையாக இருக்கும். இவருடைய உத்தியோக காலம், சம்பள வகையரா முதலியவை களை கவர்னர் நிர்ணயம் செய்வார். இவருக்குச் சட்டசபைகளில் பேச உரிமையுண்டு. ஆனால் ஒட்கொடுக்கும் உரிமை கிடையாது. பர்மா அரசாங்கத்தின் வரவு செலவு கணக்குகளை வைத்துக் கொள்ளவும், தணிக்கைசெய்யவும் ஆடிட்டர்-ஜெனரல் என்ற ஓர் உத்தியோகதர் நியமிக்கப்படுவார். இவருடைய காரியாலயம், தற்போதுள்ள அக்கவுண்டெண்ட்-ஜெனரல் ஆபீஸுடன் ஐக்கிய மாகிவிடும். இவருடைய மாதச் சம்பளம் 3500 ரூபாய். இது தவிர, இவருக்கு பர்மா அலவன் என்றும், ரங்கூன் அலவன் என்றும் சில தொகைகள் மாதச் சம்பளத்தோடு சேர்த்துக் கொடுக்கப் பெறும். பர்மாவின் ரெயில்வே நிருவாகத்தைக் கவனிக்க ஒரு ரெயில்வே போர்ட் ஏற்படுத்தப்பெறும். இதில் ஒரு தலைவரும் எட்டு அங்கத்தினர்களும் இருப்பார்கள். இந்த எட்டுப் பேரில் அறுவர் உத்தியோகதரல்லாதாராக இருப்பர். இப்பொழுதுள்ளது போலவே, ரங்கூனில் பர்மா ஹைகோர்ட் இருக்கும். பிரதம நீதிபதி உள்பட மொத்தம் 13 நீதிபதிகள் இருப்பார்கள். பிரதம நீதிபதிக்கு மாதம் 5000 ரூ. சம்பளம். மற்ற நீதிபதிகளுக்கு மாதம் 4000ரூ. மொத்தம் 11 1/2 வருஷம் உத்தியோகம் பார்த்தாலும் சரி, அல்லது 60 வயது அடைந்து அதற்குள் 6 3/4 வருஷம் உத்தியோகம் பார்த்தாலும் சரி, அவர்களுக்கே பென்ஷன் கொடுக்கப் பெறும். அதாவது 60 வயதுக்கு மேல் உத்தியோகம் பார்க்க முடியாது. பர்மாவில் பாதுகாப்புக்கென்று இதுகாறும் வைக்கப்பட்டிருந்த ராணுவப்படையானது இந்திய ராணுவத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. இனி, பிரிக்கப்பட்ட பர்மாவில், பர்மாவுக்கென்று தனியாக ராணுவம் அமைக்கப்படும். இதற்கு பர்மா பாதுகாப்புப் படை என்று பெயராயிருக்கும். இதன் சேனாதிபதி, சக்ரவர்த்தியினால் நிய மிக்கப்படுவார். இந்த ராணுவம், கவர்னரின் விசேஷ நிருவாகத் திற்குட்பட்டிருக்கும். ஆனால் இந்த ராணுவ செலவு சம்பந்தமாக பொக்கிஷ மந்திரியோடு கவர்னர் கலந்து கொள்வார். இப்படியாக அமையும் நிருவாக அரசாங்கத்திற்கு உதவி செய்ய, ஏற்கெனவே இருப்பதுபோல் அரசாங்கக் காரியாலயம் இருக்கும். ஆனால் இது பல வகைகளிலும் திருத்தியமைக்கப்படும். ஏனென்றால், பிரிவினை யாவதற்கு முன்னால் வரை, இந்தியா அரசாங்கத்தின் நிருவாகத்திற்குட் பட்டிருந்த சுங்கவரி இலாகா, வருமான வரி இலாகா, ரெயில்வே, தபால் முதலிய இலாகாக்களெல் லாம், பிரிவினையான பிறகு பர்மா அரசாங்கத்தின் நிருவாகத் திற்குட்பட்டுவிடுமல்லவா? இவைகளுக்குத் தகுந்தாற் போல் அர சாங்கக் காரியாலயம் திருத்தியமைக்கப்படும். இனி புதிய சட்ட சபைகளில் இவர்களுக்கு தானம் கிடையாது, புதிய சட்டசபைகளின் அமைப்பைச் சிறிது கவனிப்போம். பிரிக்கப்பட்ட பர்மாவில் இரண்டு சட்ட சபைகள் இருக்கும். ஒன்று ஜனப்பிரதிநிதி சபை1 (லோயர் ஹவு) என்றும், மற்றொன்று செனெட்2 (அப்பர் ஹவு) என்றும் அழைக்கப்பெறும். ஜனப் பிரதிநிதி சபையில் 132 அங்கத்தினர்கள் இருப்பார்கள். ஒப்பு நோக்குவதற்காக, பழைய சட்ட சபையின் அமைப்பையும், புதிய பிரதிநிதி சபையின் அமைப்பையும் கீழே தருகிறோம். அங்கத்தினர் எண்ணிக்கை பிரிவினைக்கு பிரிவினைக்கு தொகுதி விவரம் முன்னர் பின்னர் சட்ட ஜனப்பிரதிநிதி சபையில் சபையில் பர்மியர்கள்-கிராமத்தொகுதி 58 91 காரென்காரர் 5 12 இந்தியர்-நகரத்தொகுதி 8 8 ஆங்கிலோ பர்மியர் 1 2 ஐரோப்பியர் 1 3 சர்வ கலாசாலை 1 1 பர்மிய வியாபார சபை 1 1 இந்திய வியாபார சபை 1 2 ஐரோப்பிய வியாபார சபை 2 5 சீன வியாபார சபை 1 1 ஐரோப்பிய வியாபாரிகள் சங்கம் 1 1 பர்மா நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் சங்கம் --- 1 இந்தியத் தொழிலாளர் --- 2 பர்மியத் தொழிலாளர் --- 2 80 132 செனெட் (அப்பர் ஹவு) சபையில் 36 பேர் அங்கத்தினர் களாயிருப்பார்கள். இவர்களில் 18 பேர், ஜனப் பிரதிநிதிசபை அங்கத்தினர் களால் தெரிந்தெடுக்கப்படுவோராகவும் மற்ற 18 பேரும் கவர்னரால் நியமனம் பெறுவோராகவும் இருப்பார்கள். ஜனப் பிரதிநிதி சபையின் ஆயுட் காலம் ஐந்துவருஷமாகவும், செனெட் சபையின் ஆயுட் காலம் ஏழு வருஷமாகவும் இருக்கும். செனெட் சபை அங்கத்தினர்களும், ஜனப்பிரதிநிதி சபை அங்கத்தினர் களும், தங்களுக்குள்ளேயே ஒருவரைத் தலைவராகவும், மற்றொருவரை உப தலைவராகவும் முறையே தெரிந்தெடுத்துக் கொள்ள வேண்டும். செனெட் சபையின் தலைவருக்கு பிரசிடெண்ட் என்றும் ஜனப்பிரதிநிதி சபையின் தலைவருக்கு பீகர் என்றும் பெயர். இந்த உத்தியோகதர் களுடைய சம்பள விகிதம் முதலிய வைகளை, மேற்கூறிய இரு சபைகளும் சட்ட மூலமாக நிர்ணயிக்கும். செனெட் சபையின் தலைவருக்கும் ஜனப் பிரதிநிதி சபைத் தலை வருக்கும் மாதம் 2500 ரூபாய் சம்பளமென்றும், மேற்படி சபைகளின் உப தலைவர்களுக்கு மாதம் 250 ரூபாய் முறையே சம்பள மென்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பிரிக்கப்பட்ட பர்மாவில் ஜனங்களின் வாக்குரிமையானது பெரிதும் விதரிக்கப் பட்டிருக்கிறது. புதிய திட்டத்தின்படி சுமார் 30 லட்சம் ஆண்களும் 7 லட்சம் பெண்களும் ஓட் உரிமை பெற்றுள்ளார்கள். கிராமத் தொகுதிகளில் ஓட் கொடுக்கும் தகுதியுடைய ஆண்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கவேண்டும். வருமான வரியோ, அல்லது மூன்று வருஷத்திற்குக் குறையாமல் ஆள் வரியோ, அல்லது வருஷத்திற்கு ஐந்து ரூபாய்க்குக் குறையாமல் நிலவரியோ செலுத்து வோராக இருக்கவேண்டும். 18 வயது நிரம்பிய எந்த ஆண்மகனும், மேலே கூறப்பட்ட தகுதிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருந்தால் அவன் தனக்கிஷ்டப்பட்ட அபேட்ச கருக்கு ஓட் போடலாம். நகரத் தொகுதிகளில், நூறு ரூபாய்க்குக் குறையாத தாவர சொத்துடையவராக இருந்தாலும், அல்லது முனிசிபல் வரி செலுத் தினாலும், அல்லது நான்கு ரூபாய்க்குக் குறையாமல் மாதந்தோறும் வீட்டு வாடகை செலுத்தி வந்தாலும் அவர்கள் ஓட் போடலாம். கிராமங்களிலோ நகரங்களிலோ வசிக்கும் பெண்களில் 21 வயதுக்கு மேற்பட்டு, பர்மாவில் பொதுவாக வழங்கப்படுகிற ஏதேனும் ஒரு பாஷையில் எழுதத் தெரிந்திருந்தால் அவர்கள் ஓட் கொடுக்கலாம். ஜனப்பிரதிநிதி சபைக்கு அபேட்சகராக நிற்கும் எவரும் 25 வயதுக்கு மேற்பட்டவராகவும் மேலே சொன்ன ஓட் போடும் தகுதியுடையவராகவும் இருக்கவேண்டும். ஜனப் பிரதிநிதி சபை அங்கத்தினர்களால் தெரிந்தெடுக்கப் பட்ட 18 பேர் செனெட் சபையில் தானம் வகிப்பார்கள் என்று சொன்னோமல்லவா? இந்த 18 தானங்களுக்கும் அபேட்சகர் களாக நிற்பதற்குத் தகுதிகள் என்னவென்றால் 1. 35 வயதுக்கு மேற்பட்டிருக்கவேண்டும். 2. வருஷத்திற்கு 12,000 ரூபாய்க்குக் குறையாத வருமானத்தின் மீது வருமான வரி செலுத்துகிற வராயிருக்க வேண்டும்; 3. அல்லது, லோயர் பர்மாவில் 1000 ரூபாய்க்குக் குறையாமலும் அப்பர் பர்மாவில் 500 ரூபாய்க்குக் குறையாமலும் நிலவரி செலுத்துகிறவரா யிருக்க வேண்டும்; 4. அல்லது ஒரு ஜில்லா ஜட்ஜ், அல்லது டெபுடி கமிஷனருக்குக் குறையாத உத்தியோகம் வகித்து இப்பொழுது உபகாரச் சம்பளம் பெற்றுள்ளவராயிருக்க வேண்டும்; 5. அல்லது உயர்தரப் பட்டதாரியாக இருக்க வேண்டும். இந்த செனெட் சபையையும் ஜனப் பிரதிநிதிசபையையும் ஒன்று கூட்டி கவர்னர் பேசலாம். வேறு சில சந்தர்ப்பங்களிலும் இரு சபைகளும் ஒன்று கூடி வாதிக்க இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சபைகளில், அங்கத்தினர்கள் கொண்டுவர விரும்பும் ஏதேனும் ஒரு மசோதாவில், பர்மாவில் வெளியார் குடியேறுவதைப் பாதிப்பதான அமிசங்கள் இருக்கிறதென்று கவர்னர் கருதினால், அதனைச் சட்டசபையில் ஆஜர் படுத்துவதற்கு அநுமதி கொடுக்க மறுக்கலாம். பர்மாவில் இந்தியர்கள் குடியேறுகிற விஷயத்தைப் பற்றி திடீரென்று எவ்வித மாறுதலும் ஏற்பட்டுவிடாது. பிரிக்கப் படுகிற தேதியிலிருந்து மூன்று வருஷம் வரையில், இப்பொழுதுள்ள மாதிரிதான், பர்மாவில் இந்தியர்கள் வந்து குடியேறலாம். அப்படியே பர்மியர்களும் இந்தியாவில் வந்து குடியேற லாம், ஆனால் இந்த ஏற்பாடு, பர்மியர்கள் இந்தியாவில் குடியேறுகிற விஷயத்தைப் பற்றி இந்தியா அரசாங்கத்தார் ஏதேனும் தடையுத்திரவு பிறப்பித்தால் அப்பொழுது ரத்தாகிவிடும். அப்படி இந்த ஏற்பாட்டை ரத்து செய்து கொள்ள வேண்டுமென்று இந்தியா அரசாங்கமோ பர்மா அரசாங்கமோ விரும்பினால் ஒரு வருஷம் நோட்டீ கொடுக்க வேண்டும். இந்தியாவுக்கும் பர்மாவுக்கும் உள்ள வியாபார சம்பந்தம், பிரிவினையான மூன்று வருஷங்கள் வரை எவ்வித மாறுதலையும் அடையாது. அப்படி ஏதேனும் செய்ய வேண்டுமானால், இந்தியா அரசாங்கமோ பர்மா அரசாங்கமோ பரபரம் ஒரு வருஷ நோட்டீ கொடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவிலிருந்து பர்மாவுக்கும் பர்மாவிலிருந்து இந்தியா வுக்கும் ஏற்றுமதி அல்லது இறக்குமதியாகிற சாமான்கள் மீது இப்பொழுது என்னவிதமான கட்டணங்கள் விதிக்கப்பெறு கின்றனவோ அதே மாதிரி தான் பிரிவினையான பிறகும் விதிக்கப் பெறும். பர்மாவுக்கும் இந்தியாவுக்கும் நடைபெறுகிற கரையோரக் கப்பல் வியாபாரம், உள்நாட்டுக் கரையோரக் கப்பல் வியாபார மாகவே கருதப்பெறும். இந்தியாவும் பர்மாவும் ஒன்று சேர்ந்திருந்த காலத்தில், மொத்தமிருந்த ஆதி மதிப்பு, கடன் தொகை இரண்டினையும் ஈவுபடுத்தி, .இறுதியாக இந்தியாவுக்கு, பர்மா செலுத்தவேண்டிய தொகை 53 கோடி ரூபாய் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கடனுக்காக, வருஷந் தோறும் 3,23,01,000 ரூபாய் பர்மா அரசாங்கம் இந்தியா அரசாங்கத்திற்குக் கொடுத்துவரும். இந்தக் கடனை 3 ½% வட்டியுடன் 45 வருஷத்திற்குள் தீர்த்துவிட வேண்டும். 1937-38-ம் வருஷத்து பர்மா அரசாங்க வரவுசெலவுத் திட்டத்திலேயே மேற்கண்ட கடன் தொகையில் முதல் தவணையைச் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. பிரிக்கப்பட்ட பர்மாவில் புதிய செலவினங்கள் பல ஏற்பட இருப்பதால், இன்னும் இரண்டரை கோடி ரூபாய் இந்தியா அரசாங் கத்தாரிடமிருந்து அதிகக் கடன் வாங்க பர்மா அரசாங்கத்தார் தீர்மானித்திருக்கின்றனர். எனவே பர்மாவின் மொத்தக் கடன் தொகை 55 1/2 கோடி ரூபாயாகும். இதனை 46 வருஷத்திற்குள் திருப்புவ தென்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பிரிவினையான பர்மாவில் பிரத்தியேகமான உயர்தர உத்தி யோகதர்கள் நியமிக்கப்படவேண்டியிருப்பதால், அதற்காக 782,000 ரூபாய் அதிகச் செலவு ஏற்படும். இந்தியா அரசாங்கத்திற்குச் சேர்ந்து கொண்டிருந்த சுங்க வரி, வருமான வரி முதலியவை சம்பந்தமான தொகைகள் இனி பர்மா அரசாங்கத்தையே சேரும். இனி, ஜில்லா நிருவாகத்தைப் பற்றிச் சிறிது பேசுவோம். இந்த அமிசம், புதிய பர்மாவில் எவ்விதமான மாறுதலையும் அடையாது. பர்மாவை நிருவாக சௌகரியத்திற்காக 8 டிவிஷன்களாகவும், (ரங்கூன் நகரத்தைச் சேர்த்து) 41 ஜில்லாக்களாகவும் பிரித்திருக் கிறார்கள். இவற்றில் முதலிற் கூறியபடி சில ஜில்லாக்கள் விலக்கப் பட்ட பிரதேசங்கள் என்ற முறையில் கவர்னரின் விசேஷ நிருவாகத் திற்குட் பட்டிருக்கும். மற்ற ஜில்லாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு டெபுடி கமிஷனரின் நிருவாகத்தில் எப்பொழுதும் போல் இருக்கும். டெபுடி கமிஷனர் ஜில்லா மாஜிட்ரேட்டாகவும், ரெவினியு கலெக்டராகவும் இருக்கிறார். ஜில்லாக்களுக்கு உட் பிரிவுகள் டவுன் ஷிப்புகளாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இவைகளின் அதிகாரிகள் முறையே சப் டிவிஷனல் ஆபீஸர்களென்றும் டவுன்ஷிப் ஆபீஸர்களென்றும் அழைக்கப்படுகிறார்கள் இவர்களுக்குக் கீழான உத்தியோகதன், ஆனால் முக்கியமானவன் கிராமத் தலைவன் (தஜ்ஜி). இவன் சில்லரை வழக்குகளைத் தீர்க்கவும், வரி வசூல் செய்யவும், ஜனன மரணக் கணக்குப் பதிந்து கொள்ளவும், பொது வாகத் தனது அதிகார எல்லைக்குள் அமைதியை நிலைநாட்டவும் அதிகாரம் பெற்றிருக்கிறான். இவனுக்கு மாதச் சம்பளம் கிடையாது. ஆனால் இவன் வசூல் செய்யும் வரித் தொகையில் நூற்றுக்கு இவ்வள வென்று கணக்கிட்டு கமிஷனாகக் கொடுக்கப்பட்டு விடுகிறது. இந்தக் கிராமாதிகாரி உத்தியோகம் சமீபகாலம் வரை பரம்பரையாக இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது இந்த உத்தியோகதனை கிராம ஜனங்கள் தெரிந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு கிராம சபை உண்டு. முக்கியமான விஷயங்களை இந்தக் கிராம சபையைக் கலந்தாலோசித்தே கிராமாதிகாரி செய்துவர வேண்டுமென்பது சம்பிரதாயம். விலக்கப்பட்ட பிரதேசங்களென்று சொல்லி, கவர்னரின் விசேஷ நிருவாகத்திற்குட் படுத்தப்பெற்றிருக்கும் பிரதேசங்களைப் பற்றிச் சிறிது கவனிப்போம். இவைகளை ஐக்கிய ஷான் டேட் என்றும், பர்மாவின் வட பாகத்திலுள்ள மலைப் பிரதேசங் களென்றும் இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். ஷான் பிரதேசங்கள் தனித்தனி சிற்றரசர்களுடைய ஆதீனத் திற்குட்பட்டிருக்கின்றன. பெரிய சமதானாதிபதிகளுக்கு ஸோபுவா என்றும், சிறிய சம தானாதிபதிகளுக்கு ம்யோஸா என்றும் ஙவேகுங்மு என்றும் அவரவர்களுடைய அந்ததுக்குத் தக்கபடி பெயர் கொடுக்கப்பட் டிருக்கின்றனர். இந்தச் சமதானாதிபதிகள், சுயேச்சையுள்ளவர் களானாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்தாருடைய மேற்பார்வை யிலேயே நிருவாகம் செய்து வருகிறார்கள். இந்தச் சமதானங்கள் 1922-ம் வருஷம் ஓர் ஐக்கிய திட்டத்திற்குட்படுத்தப்பெற்று, ஒரு கமிஷனரின் மேற் பார்வையில் விடப் பெற்றன. வருஷத்திற்கு ஒரு முறை, சமதானாதிபதிகளின் கூட்டம் ஒன்று கூடி, ஐக்கிய திட்ட சம்பந்தமான பிரச்னைகளைப் பற்றிக் கமிஷனருக்கு ஆலோசனை சொல்வார்கள். மற்ற கச்சின் பிரதேசங்களும் சின் பிரதேசங்களும், தனித்தனி டெபுடி கமிஷனர்களுடைய நிருவாகத்திற் குட்பட்டிருக்கின்றன. இந்தப் பிரதேசங்களில் ஜனத்தொகை சொற்பம். விவசாய உற்பத்தி யும் அதிகம் இல்லை. தவிர, ஜனங்களும் முரட்டுச் சுபாவ முடை யவர்கள். இங்குச் சாதாரண சட்டங்களை அமுலுக்குக் கொண்டு வருவதில் பிரயோஜன மில்லையென்று கருதியே, இவை விலக்கப் பட்ட பிரதேசங்களாக வகுக்கப்பட்டிருக்கின்றன. பர்மாவில் மொத்தம் 1,017,825. இந்தியர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சுமார் 1 1/2 லட்சம் பேர் தமிழர்கள். இவர்களில் பெரும் பாலோர் விவசாயிகளாகவும் சில்லரை வியாபாரிகளாகவும் இருக் கிறார்கள். சிலர் அரசாங்க உத்தியோகத்தில் ஈடுபட்டு நிரந்தரமான வருமானத்தோடு காலங்கழிக்கிறார்கள். ரங்கூனில் 38,450 தமிழர்கள் இருக்கிறார்கள். இந்தியாவுடன் ஆயிரக்கணக்கான வருஷங்களாகச் சரித்திரத் தொடர்பும், சென்ற ஐம்பது வருஷங்களாக அரசியல் தொடர்பும் பெற்றிருந்த பர்மா, 1937-ம் வருஷம் ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இரண்டு நாடு களுக்கும் உள்ள ஒற்றுமையானது எவ்விதத்திலும் பாதகமடை யாமல் பர்மியர்களும் இந்தியர்களும் ஒன்றுபட்டு வாழவேண்டிய தவசியமல்லவா? பர்மாவைப் பற்றிய சில புள்ளி விவரங்கள் எல்லைகள்: வடக்கே திபேத்து, சைனா முதலிய நாடுகள். கிழக்கே சையாம், பிரெஞ்சு சைனா முதலியவை. தெற்கும் மேற்கும் வங்காள விரிகுடா. விதீரணம்: ஷான் பிரதேசங்கள் உள்பட 261,610 சதுர மைல். ஜனத்தொகை: இந்தியர்கள் 1,017,825 இந்தோ-பர்மியர்கள் 182,166 சீனர்கள் 193,594 ஐரோப்பியர்கள் 11,651 ஆங்கிலோ இந்தியர்கள் 19,200 பர்மியர்கள் 9,510,884 பூர்விகக் குடிகளும் மற்றவர்களும் 3,731,826 --------------- மொத்தம் 14,667,146 --------------- முக்கிய நதிகள்: ஐராவதி, சிண்ட்வின், சிட்டாங், சால்வீன், மீங்கே முதலியன. ஐ. எப். கம்பெனிக்குச் சொந்தமாக சுமார் 550 சிறு கப்பல்கள் இருக்கின்றன. விளை பொருள்கள்: நெல், கரும்பு, தேக்கு, பெட்ரோல், தகரம், ரத்தின வகைகள். தொழில்: பாய் முடைதல், மரச் சாமான்கள் செய்தல், துணி நெய்தல் முதலியனவாம். சுமார் 1010 யந்திரத்தொழிற் சாலைகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலன அரிசி மில்கள். ரங்கூன் ஜனத்தொகை விவரம்: 1 பர்மியர்கள் 121,998 2 காரென்காரர் 3,226 3 மற்ற பூர்விகக் குடிகள் 2,358 4 சீனர்கள் 30,626 5 இந்தோ-பர்மியர் 12,560 6 ஐரோப்பியர் 4,426 7 ஆங்கிலோ இந்தியர் 9,977 8 தமிழர் 38,450 9 தெலுங்கர் 68,591 10 ஒரிஸாக்காரர் 8,034 11 வங்காளியர் 13,067 12 சிட்டகாங்காரர் 16,991 13 ஹிந்துதானிக்காரர் 32,731 14 மற்ற இந்தியர்கள் 35,065 15 பிற சமூகத்தார் 2,315 ----------- மொத்தம் 400,415 ----------- மற்ற முக்கிய நகரங்களின் ஜனத்தொகை: 1 புரோம் 371,575 2 மாந்தளை 147,932 3 மோல்மீன் 61,301 4 பெகு 18,769 ஜில்லாக்கள்: பர்மாவை நிருவாக சௌகரியத்திற்காக, பிரிட்டிஷ் அரசாங்கத்தார் எட்டு டிவிஷன்களாகவும், இந்த எட்டு டிவிஷன்களையும் நாற்பத்தோரு ஜில்லாக்களாகவும் பிரித்திருக் கிறார்கள். இவை ஜனத் தொகையுடன் வருமாறு:- எண் ஜில்லா ஜனத்தொகை டிவிஷன் 1 மிச்சீனா 171,524 2 அப்பர் சிண்ட்வின் 204,982 3 கத்தா 254,170 4 ஷ்வேபோ 446,799 (1) சகாயிங் 5 லோயர் சிண்ட்வின் 383,434 6 சகாயிங் 335,965 7 பாமோ 121,193 8 வட ஷான் பிரதேசம் 636,107 (2) பிடரேடெட் 9 தென் ஷான் பிரதேசம் 870,230 ஷான்டேட் 10 காரென்னி 58,761 11 மாந்தளை 371,636 12 சவுக்ஸே 151,320 13 மெக்டீலா 309,999 (3) மாந்தளை 14 மீஞ்சான் 472,557 15 யமதீன் 390,820 16 சின் பிரதேசம் 171,237 17 பக்கோகூ 499,181 18 மின்பு 277,876 (4) மாக்வே 19 மக்வே 499,573 21 புரோம் 410,651 22 தாராவாடி 508,319 23 பெகு 489,969 (5) பெகு 24 இன்சீன் 331,452 25 ஹந்தவாடி 408,831 26 ஹென்ஸடா 613,280 27 பாசீன் 571,043 28 மௌபின் 371,509 (6) ஐராவதி 29 மியாங்மியா 444,784 30 பியாப்பம் 334,158 31 டாங்கோ 428,670 32 சால்வின் 53,186 33 தட்டோன் 532,628 (7) 34 ஆம்ஹர்ட் 516,233 டெனாசரீம் 35 டவாய் 179,964 36 மெர்க்குயி 161,987 37 அரக்கான் மலைப்பிரதேசம் 21,418 38 அக்யாப் 637,580 39 சவுக்பியு 220,292 (8) அரக்கான் 40 சாண்டோவே 129,245 41 ரங்கூன் 400,415 (1) இவற்றில் முதல் 19 ஜில்லாக்கள் அப்பர் பர்மா வென்றும், 20-லிருந்து 36- வரையிலுள்ள ஜில்லாக்களும் 41-வது ஜில்லாவும் லோயர் பர்மா வென்றும் மற்ற நான்கு ஜில்லாக்கள் அரக்கான் என்றும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கடல் மார்க்கமாக மற்ற இடங்களிலிருந்து ரங்கூனுக்கு உள்ள தொலைவுகள்: சென்னையிலிருந்து 997 மைல் கல்கத்தாவிலிருந்து 737 ,, அகயாப்பிலிருந்து 465 ,, பினாங்கிலிருந்து 738 ,, சிங்கப்பூரிலிருந்து 1078 ,, கொழும்புவிலிருந்து 1234 ,, நாகையிலிருந்து 1060 ,, அந்தமானிலிருந்து 386 ,, கோபால்பூரிலிருந்து 744 ,, லண்டனிலிருந்து 7905 ,, சைகோனிலிருந்து 1708 ,, பாங்காக்கிலிருந்து 1883 ,, ரெயில்வே: பர்மாவில் ரெயில் முதல் முதல் ஏற்பட்டது 1877-ம் வருஷத்தில். இப்பொழுதுள்ள ரெயில்வே நீளம் 2055 மைல். ரங்கூன்: பர்மாவின் தலை நகரம் ரங்கூன். 1இதற்கு 13 மைல் தொலைவில் மிங்கலாடோன் கண்டோன் மெண்டு இருக்கிறது. இது பர்மாவின் ராணுவ தாபனமாகவும் ஆகாய விமான நிலைய மாகவும் இருக்கிறது. பர்மாவில் நிருவாகத் தலைவராயிருந்தவர்கள் சீப் கமிஷனர்கள் பெயர் உத்தியோக நியமன வருஷம் ஏ.பி. பேயர் 1862 ஏ. பிட்ச் 1867 ஆர்.டி. ஆர்டாக் 1870 ஆஷ்லி ஈடன் 1871 ஏ.ஆர். தாம்ப்ஸன் 1875 சி.யு. ஏட்சிஸன் 1878 சி.இ. பெர்னார்ட் 1880 சி.எச்.டி. கிராத் வெயிட் 1887 ஏ.பி. மக்டான்னல் 1889 அலெக்ஸாந்தர் மெக்கன்ஸி 1890 டி.எம். மீடன் 1892 ஸர் எப். டப்ளியு. ஆர். ப்ரையர் 1895 லெப்டினெண்டு கவர்னர்கள் ஸர் எப். டப்ளியு. ஆர். ப்ரையர் 1897 ஸர் எச். எ. பார்ன 1903 ஸர் எச். டி. ஒயிட் 1905 ஸர் ஹார்வி ஆடம்ஸன் 1910 ஸர் ஹார்கோர்ட் பட்லர் 1915 ஸர் ரெஜினால்ட் கிராடாக் 1917 கவர்னர்கள் ஸர் ஹார்கோர்ட் பட்லர் 1922 ஸர் சார்ல இன்னி 1927 ஸர் ஹ்யூ டீபன்ஸன் 1932 ஸர் ஆர்ச்பால்ட் காக்ரேன் 1936 சில பெயர்கள்: ஜனப்பிரதிநிதி சபை - House of Representatives. செனெட் சபை - Senate. ஜனப் பிரதிநிதி சபையின் தலைவர் - Speaker. செனெட் சபையின் தலைவர் - President. 