வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல் திரட்டு - 10 அபிசீனிய சக்ரவர்த்தி, கமால் அத்தாதுர்க், சமுதாய சிற்பிகள் ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 10 ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2005 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10.5 புள்ளி பக்கம் : 16 + 480 = 496 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 310/- படிகள் : 500 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 அணிந்துரை எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை, எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையைத் தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார். ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன். அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார். ஆமாம், வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமை யாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக் கின்றன. இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது. 83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக் கின்றன. அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தம் நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம். காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033. பெ.சு. மணி வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள் தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூற வேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண் டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணி யாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ்த் தென்றல் திரு. வி. f., மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப்பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையைத் தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது. இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது. போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட்களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்க வேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற் கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல். சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும். சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரண வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும். காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே! எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்றுதலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் திரு கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே! 6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டை - 622 002. டோரதி கிருஷ்ணமூர்த்தி பதிப்புரை ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக்கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங் களைத் தாய்மொழியாம் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத்தக்கது. தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலை முறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண் கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர்களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும் வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடா முயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலை முறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத் தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மை களை இனிப்புப் பொங்கலாகத் தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கியங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம். தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல் களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்ததாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். அடிமை உணர்வையும், அக்கறையற்றப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம். பதிப்பாளர் பொருளடக்கம் அணிந்துரை iii சர்மாவின் சாதனைகள் v பதிப்புரை ix நுழையுமுன் xi மகனே உனக்கு பிரசுராலயத்தின் வார்த்தை 2 மகனே! உனக்கு 3 1. மகனே! உன் கடமையைச் செய் 5 2. உறுதி கொள்; மகனே 12 3. தன்னம்பிக்கை - ஒரு சக்தி 17 4. ஓய்வு கொள்வதா? 24 5. சத்தியத்தைச் சொன்னால் நித்தியம் வாழலாம் 28 6. உன் மனச்சாட்சியை விற்று விடாதே! 32 7. சொல்லாதே - செய் 37 8. முயற்சியைக் கைவிடாதே 40 9. ஊக்கமாக வேலை செய் 44 10. ஒழுக்கத்திற்கு உயர்வு கொடு 47 11. எண்ணினால் மட்டும் போதாது-செய்யவும் வேண்டும் 50 12. சோர்வு கொள்ளாதே 52 13. உனக்கும் அச்சமா? 54 14. நல்ல காரியத்துக்கு நாலாயிரம் விக்கினம் 57 15. மகான்கள் யார்? 61 16. போர் வீரனாயிரு 64 17. இரக்கங் கொள் 67 18. தன் கையே தனக்குதவி 70 19. பெரிய மனிதனாயிரு 73 20. அன்பினால் வெற்றிகொள் 77 21. எல்லாரும் உன் சகோதரர்கள் 81 22. நில்-ஓடாதே! 84 23. ஏன் அஞ்சுகின்றாய்? 86 24. கொடுக்கிறவனே வாழ்கிறவன் 87 அவள் பிரிவு பிரசுராலயத்தின் வார்த்தை 90 1. ஒளி விளக்கு 97 2. நல்ல பரம்பரை 104 3. முறையான கல்வி 111 4. விந்தையான விவாகம் 117 5. குடித்தனப் பாங்கு 126 6. திண்ணிய நெஞ்சம் 134 7. குடும்பம் ஒரு பந்தமா? 143 8. பரந்த அன்பு 151 9. கருத்தொருமித்த வாழ்க்கை 156 10. சங்கற்பம் 164 எங்கள் உறவும் சில நினைவுகளும் 169 எங்கள் உறவும் சில நினைவுகளும் 171 பிளேட்டோவின் கடிதங்கள் பிரசுராலயத்தின் வார்த்தை 194 வாசகர்களுக்கு 195 முன்னுரை 201 1. முதற் கடிதம் 216 2. இரண்டாவது கடிதம் 218 3 மூன்றாவது கடிதம் 223 4. நான்காவது கடிதம் 230 5. ஐந்தாவது கடிதம் 233 6. ஆறாவது கடிதம் 236 7. ஏழாவது கடிதம் 239 8. எட்டாவது கடிதம் 286 9. ஒன்பதாவது கடிதம் 294 10. பத்தாவது கடிதம் 296 11. பதினோராவது கடிதம் 297 12. பன்னிரண்டாவது கடிதம் 299 13. பதின்மூன்றாவது கடிதம் 300 14. பிளேட்டோவின் உயில் 304 வரலாறு கண்ட கடிதங்கள் பதிப்புரை 308 வாசகர்களுக்கு 309 1. துறவிக்கு வேந்தன் துரும்பு 313 2. மிடுக்கும் துடுக்கும் 315 3. துக்கம் தவிர் 320 4. கெடுவார் கேடு நினைப்பார் 324 5. பணிய மறுத்த பேரரசி 328 6. நாட்டுப் பற்று மிகுந்த ஞானி 331 7. நன்றி நவிலல் 335 8. கண்ணியம் காத்த கவிஞன் 339 9. வறுமையில் நிறைவு கண்ட புலமை 345 10. கொலம்ப எழுதிய முதற்கடிதம் 348 11. வேண்டுதலும் வேண்டாமையும் 353 12. தந்தையின் பரிவுக்கு அஞ்சிய மகன் 357 13. தண்ணீருக்குத் தவித்த சக்ரவர்த்தி 363 14. செய்வினைக்கு இரங்கல் 367 15. தலைவரிக்கு சிவாஜி எதிர்ப்பு 373 16. வீரத்தில் வளர்ந்த காதல் 379 17. போற்றி பாடாத புலவன் 386 18. பண்பாட்டின் இலக்கணம் 393 19. விடுதலைக்கு வித்திட்ட கடிதம் 398 20. பாரத மக்களின் நிலைமை 403 பாரதமாதாவின் கடிதங்கள் முன்னுரை 410 1. தேச சேவை 413 2. உன்னை நீ அறி 418 3. தேச பக்தி 423 4. முயற்சியும் பயிற்சியும் 427 5. ஸ்தாபனத்தின் அவசியம் 434 6. பிரச்சாரம் 441 7. பொதுக்கூட்டம் 447 8. பிரசங்கம் 454 9. கட்சிக் கட்டுப்பாடு 460 10. தலைவனுக்குரிய தன்மைகள் 464 11. தனி வாழ்வும் பொது வாழ்வும் 471 12. பொது ஜனங்கள் 476 நுழையுமுன்...  ஒரு நாட்டின் விடுதலைப்போக்கையோ, குமுகாயத்தின் வாழ்க்கைப் போக்கையோ மாற்றுவதற்குப் பல நேரங்களில் மடல்கள் கரணியமாக அமைவதுண்டு. ஒருவருடைய உள்ளத்தில் ஏற்படுகிற உணர்வுகள், எண்ணங்கள், இருவருடைய உள்ளங் களை இணைக்கும் மடல்கள். செயலில் இறங்க துணிந்தவர்களின் மனத்தில் உருவாகியிருக்கும் திட்டங்களை அறிவிக்கும் முன்னோடிகள் மடல்களாகும்.  தன்னலம் - பிறர்நலம் தொடர்புடைய மடல்கள், புண்பட்ட உள்ளத் திற்கு மருந்தாக உள்ள மடல்கள், அறிவிழந்து நிலை குலைந் தவர்களுக்கு அறிவூட்டும் மடல்கள், மறநெறியில் செல்வோரை அறநெறிக்குத் திருப்பும் மடல்கள், ஆளுமை வெறியில் எழுதப்படும் மடல்கள், ஆளுமை வெறிக்குப் பணிந்து போக மறுக்கும் மடல்கள், முகம் பார்த்து பேச முடியாத நிலையில் அகத்திலுள்ளதை அறிவிக்கும் உள்ளத்து உணர்வுகளையே கருவியாகக் கொண்ட மடல்கள், பலவகைச் சூழலில் இருந்து எழுதும் மடல்கள். காந்தியடிகளும், அறிஞர் டால்டாயும் ஒருவரையொருவர் அறிந்துக் கொண்டது மடல்கள் மூலமே. இன்னும் பல.  மகனே உனக்கு, அவள் பிரிவு, பிளேட்டோவின் கடிதங்கள், வரலாறு கண்ட கடிதங்கள், பாரத மாதாவின் கடிதங்கள் என்னும் தலைப்புகளில் கடந்த அரைநூற்றாண்டுக்கு முன்பு இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தையும், அன்றைய இந்திய குமுகாயச் சூழலையும், உலகத்தின் நிலைக ளையும் நடுவமாகக் கொண்டு எழுதப் பட்டவையே இந் நூலாகும்.  மகனே உன் கடமையைச் செய் முதலாக கொடுக்கிறவனே வாழ்கிறவன் ஈறாக 24 தலைப்புகளை உள்ளடக்கிய நூல். சொன்னதைச் செய்; முயற்சியைக் கைவிடாதே; ஊக்கமாக வேலை செய்; ஒழுக்கத்திற்கு உயர்வு கொடு; எண்ணினால் மட்டும் போதாது செய்யவும் வேண்டும்; சோர்வு கொள்ளாதே; அச்சம் தவிர்; நல்ல செயலைச் செய்; போர்வீரனாக இரு; மற்றவருக்கு இரக்கம் காட்டு; தன் கையே தனக்குதவி; பெரியமனிதனாக இரு; அன்பினால் வெற்றிகொள்; எல் லோரும் உடன்பிறந்த சகோதரர்கள்; பிறருக்கு உதவி செய்வதில் பின் வாங்காதே முதலியன வாழ்வியல் தத்துவங்களை வேண்டும் இடங்களில் வரலாற்றுச் செய்திகளின் பிண்ணனியோடு நேருக்கு நேர் பரிவுடன் உணர்த்தும் பாங்கு உடைய நூலே மகனே உனக்கு என்னும் இந்நூல்.  ஒளிவிளக்கு முதல் எங்கள் உறவும் சில நினைவுகளும் ஈறாக 11 தலைப்புகளை உள்ளடக்கியதே இந்நூல். அழுதழுது என் துக்கத்தை தணித்துக்கொள்வதற்குப் பதில், எழுதி எழுதி என் துக்கத்தைத் தணித்துக்கொள்கிறேன் என்கிறார். கருத்தொருமித்து பண்பட்ட கொள்கைக் குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்ட கணவன் - மனைவி இடையே உள்ள இல்லற உறவுக்கு விளக்கமாக அமைந்திருந்த தன் மனைவியின் மறைவிற்குப் பிறகு சர்மா எழுதிய நூலே அவள் பிரிவு.  முதல் மடல் முதல் 13 ஆம் மடல் ஈறாகவும் மற்றும் பிளேட் டோவின் உயிலை உள்ளடக்கியும் கி. மு. 4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மடல்களே இந்நூலின் கருப்பொருளாகும். பிளேட்டோ காலத்திய குமுகாய வாழ்க்கை அறங்களையும், ஒழுக்கங் களையும், பிளேட்டோவின் பிற கருத்தோட்டங் களையும் விளக்கும் நூல்.  இந்நூல் வள்ளுவப் பேராசான் எழுதிய மெய்யுணர்தல், குற்றங் கடிதல், பெரியாரைத் துணைக்கோடல், நட்பு, மன்னரைச் சேர்ந்தொழுகல், இன்னாச்செய்யாமை, சான்றாண்மை முதலிய உலகப் பொதுமறைக்குப் பெருமைச் சேர்க்கும் வகையில் பிளேட்டோவின் கடிதங்கள் அமைந்துள்ளமை தமிழர்களுக்குப் பெருமைத் தரும் செய்திகளாகும்.  துறவிக்கு வேந்தன் துரும்பு முதல் பாரத மக்களின் நிலைமை ஈறாக 20 மடல்கள் இந்நூலுள் இடம்பெற்றுள்ளன. ஒவ் வொரு மடலும் தமிழர்களின் மேன்மைக்கு வித்திடும் விதைகளாகும். வீரத்தில் வளர்ந்த காதல் என்னும் 16ஆம் மடலில் இத்தாலிய மண்ணின் விடுதலைக்குத் தன் வாழ்வின் முழுப்பொழுதையும் செல விட்ட மாமறவன் கரிபாலிட்டியின் வீரமும், காதலும் உள்ளத்தைத் தொடும் நிகழ்வுகளாகும். தன் காதலியாகவும், மனைவியாகவும் தன் வாழ்வின் இன்பத் துன்பங்களில் இரண்டறக் கலந்த வீரமகளைப் பற்றிய செய்தி படிப்பவர் உள்ளத்தை உருகவைக்கும் செய்தியாகும். கணவனின் விடுதலைப்போருக்குத் தோன்றாத் துணையாகயிருந்த மனைவியின் பண்பு நலன்களைப் பற்றிப் பெருமை பேசும் மடலினையும், அவள் வீரத்தையும், இரக்கத்தையும் காட்டும் இந்த மடல் கண்களைக் குளமாக்கும். இந்த நெகிழ்வுகளை வரலாறு கண்ட கடிதங்களில் பாருங்கள்.  நாட்டுத்தொண்டு முதல் பொதுமக்கள் ஈறாக 12 தலைப்புகள் இந்நூலுள் மடல்களாக அடங்கியுள்ளன. நாட்டுத் தொண்டு என்பது பயிர் நடுவே முளைக்கும் களைகளைப் பிடுங்குவது. அழுக்கடைந்த உடலைக் குளிப்பாட்டுவது. தரிசு நிலத்தில் பயிரிட முயல்வது. கண்களை இழந்தவர்களுக்கு கண்களைக் கொடுப்பது. அந்தக் கண்களைக் கொண்டு மக்களைப் பார்ப்பது.  தாய் மொழிப்பயிற்சி இல்லாதவன் தாய் நாட்டுக்குத் தொண்டு செய்யமுடியாது. மொழியின்றி நாடில்லை. மொழிப் பற்று இல்லாதவன் நாட்டுப்பற்று இல்லாதவன். எந்த நாட்டிலும் அந்த நாட்டின் விடுதலைக்காக உழைத்த அறிஞர்கள் அந்த நாட்டின் மொழிவிடுதலைக்காகவே முதலில் பாடு பட்டார்கள் என்பது பாரதமாதாவின் கடிதங்கள் உணர்த்தும் செய்திகள்.  நாட்டுப் பற்றும், பொதுவாழ்வில் பங்களிப்பும் இளம் தலைமுறைக்கு வரவேண்டும் என்பதை மையமாகக் கொண்ட நூல். நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ஞானாலயா கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி, புலவர் கோ. njtuhr‹, Kidt® ïuhFyjhr‹, Kidt® ïuhk FUehj‹, K¤jÄœ¢ bršt‹ f.K., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செ. சரவணன் மேலட்டை வடிவமைப்பு இ. இனியன் அச்சுக்கோப்பு முனைவர் செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோபாய் மெய்ப்பு முனைவர் செயக்குமார், வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மப்பிரியா, நா. இந்திராதேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன் உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு வெங்கடேசுவரா மறுதோன்றி அச்சகம் (Venkateswara Offset Printers) ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . மகனே உனக்கு பிரசுராலயத்தின் வார்த்தை இரங்கூனில் நடைபெற்று வந்த ஜோதி என்ற மாதப் பத்திரிகையில் எங்கள் ஆசிரியர் சர்மாஜி, வ. பார்த்தசாரதி என்ற புனை பெயரில், 1938ஆம் ஆண்டு முதல் 1941ஆம் ஆண்டு வரை இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குகின்ற முறையில் சில கடிதங்கள் எழுதி வந்தார்கள். அவற்றோடு அவர்கள் ஆக்கித்தந்த இரண்டு கடிதங்களைச் சேர்த்து இந்நூல் வடிவாக வெளியிட்டிருக்கிறோம். இந்நூலின் தலைப்புக்குப் பொருந்துகின்ற முறையிலுள்ள எமது ஆசிரியர் வேறு புனை பெயர்கள் தாங்கி எழுதிய மூன்று கட்டுரைக் கவிதைகளையும் இறுதியில் சேர்த்திருக்கிறோம். புனை பெயருக்கேற்றாற்போல் ஆசிரியர், தமது நடையைச் சிறிது மாற்றிக் கொண்டிருக்கிறாரென்பது, இந்நூலைப் படித்தவர் களுக்கு ஒருவாறு புலனாகும். அரு. சொக்கலிங்கம் பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் மகனே! உனக்கு மகனே! உனக்கு வெகு நாட்களுக்கு முன்னர் இந்தக் கடிதங் களை எழுதினேன். இப்பொழுது அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரு புத்தக வடிவாக்கி உனக்கு அனுப்பியுள்ளேன். ஏற்றுக்கொள். அடிக்கடி எடுத்துப் படி. உனது நண்பர்களையும் படிக்கச் செய். இந்தக் கடிதங்கள் உன்னை மனிதத் தன்மைக்கு அழைத்துச் செல்லும் படிகளாக அமையுமானால் அதைக்காட்டிலும் வேறு மகிழ்ச்சி எனக்கு இருக்க முடியாது. எப்பொழுதுமே உலகத்தில் நம்மோடு நெருங்கிப் பழகுகின்ற வர்கள் சொல்லும் நல்ல வார்த்தைகள் நமது செவிகளில் சீக்கிரத்தில் நுழைவ தில்லை. சிறிது எட்டினாற் போலிருக்கின்றவர்கள் என்ன சொன்னாலும் அதைக்கருத்து வைத்துக் கேட்கிறோம். இது நம்மில் பலருடைய சுபாவம். இந்தச் சுபாவத்திற்கு நீ புறம்பானவனில்லை யென்று கருதி எனது இயற் பெயரை அப்புறத்தில் வைத்துவிட்டு வ. பார்த்தசாரதி என்ற புனைப் பெயரில் இந்தக் கடிதங்களை உனக்கு எழுதிவந்தேன். ஆனால் இந்தச் சுபாவத்திற்கு நீ புறம்பானவன் என்பதை இப்பொழுது எனக்குப் பலவகை யாலும் தெரிவித்திருக் கிறாய். நல்லது எங்கிருந்து வந்தாலும், யாரிட மிருந்து வந்தாலும் அதைத் தலை குனிந்து ஏற்றுக்கொள்கிற பண்பாடுடையவன் நீ என்பதை அறிந்து கொண்டேன். எனவே இப்பொழுது இந்தப் புத்தகத்தில் இயற்பெயரைப் பொறித்திருக்கிறேன். இதைக்கண்டு நீ சிறிது ஆச்சரியப்படலாமோ என்னமோ? ஏனென்றால், இந்தக் கடிதங்களைப் படித்துவிட்டு, அவ்வப்பொழுது என்னிடம் வந்து எனக்குப் பிடித்தமான முறையில் எழுதி வரும் வ. பார்த்தசாரதி என்பவர் யாரென்று கேட்பாயல்லவா? அப்பொழுதெல்லாம் நான் மௌனமாகவே இருப்பேன்; புன்சிரிப்புதான் எனது பதிலாக வரும். அந்தப் புன்சிரிப்பு, எனது சுய தன்மையை மறைத்துக் கொண் டிருந்த மூடிமட்டுமல்ல, இந்தக் கடிதங்களை நீ விரும்பிப் படித்து வருகின்றா யென்பதில் எனக்கு ஏற்பட்டு வந்த மகிழ்ச்சியின் ரேகை. அப்பொழுதெல்லாம் எனது சுய தன்மையை வெளிப்படுத்தா திருந்தேனல்லவா, அதற்காக இப்பொழுது வ. பார்த்தசாரதி யாரென்று தெரிந்துகொண்ட பிறகு நீ ஆச்சரியப்படலாமோ என்னமோ என்று கேட்டேன். இனி ஆச்சரியப்படமாட்டா யல்லவா? எப்படியிருந்தபோதிலும், மகனே! மனிதத்தன்மையின் சிகரத்தில் நீ ஏறி நிற்பதைப் பார்க்க வேண்டுமென்பதுதான் என் ஆசை. இந்த ஆசையை நிறைவேற்றி வைப்பாய் என்ற திடநம்பிக்கை யுடன் இந்த முகவுரைக் கடிதத்தை முடிக்கிறேன். உனது நலன் விழையும் தியாகராயநகர், சென்னை 15 - 8 - 56 1. மகனே! உன் கடமையைச் செய் மகனே! இந்த உலகத்திலே நீ பிறந்து விட்டாய்; இறக்கவும் போகிறாய். நீ பிறந்தது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயம் நீ இறக்கப் போவதும். ஆகையால், கடவுள் உனக்குக் கொடுத்திருக்கிற ஞான விளக்கை, கொஞ்சம் உன் பக்கமே திருப்பி வைத்துக்கொண்டு பார். கடவுள் பட்சபாத மில்லாதவர். அவர், எல்லாருக்கும் ஒரே மாதிரியான விளக்கைத்தான் கொடுத்திருக் கிறார். அதை நாம் வைத்துக் கொண்டிருப் பதிலும், அதனை உபயோகப்படுத்தும் மாதிரியிலும், அதன் பிரகாசம் இருக்கிறது. சில சமயங்களில் திரியை நந்தாமல் அப்படியே விட்டு விடுகிறோம். அது தானாக எரிந்து கருகிப்போய் சாம்பலாகி விடுகிறது. இன்னும் சில சமயங்களில் எண்ணெயே ஊற்றுவதில்லை. விளக்கு எப்படி எரியும்? எண்ணெயும் திரியும் நிறைய இருக்கும். ஆனால் விளக்கைச் சுத்தப்படுத்துவதே யில்லை; அதிலுள்ள அழுக்குகளைத் துடைப் பதே இல்லை. இந்த அழுக்கின் காரணமாக விளக்கின் வெளிச்சம் கூட அநேகமாக மங்கலடைந்து போகிறது. ஆகையால் மகனே! எண்ணெய், திரி, விளக்கு ஆகிய மூன்றையும் எப்பொழுதும் உபயோகத்தில் வைத்துக் கொண்டிரு. அப்பொழுதுதான் நீ பிறந்திருக்கிறாய் என்று உலகம் உன்னைக் கவனிக்கும். நீ இறந்து விட்டா யானால், உலகம், உன் பொருட்டு ஒரு பொட்டு கண்ணீராவது சிந்தும். உனக்குச் சில வார்த்தைகள் சொல்லப் போகிறேன். கொஞ்சம் கவனமாகக் கேள். நான் சொல்வது உனக்குப் பிடித்தமில்லா திருக்கலாம்; அல்லது உன்னால் அனுஷ்டானத்திற்குக் கொண்டு வர முடியா திருக்கலாம். ஆனால் உன் சந்ததியார்களுக்காவது இவை பயன்படு மல்லவா? மனிதன், தனக்காக மட்டும் வாழ்வதில்லை; மற்றவர்கள் நன்மையடைய வேண்டுமென்பதற்காகவும் வாழ்கிறான். அப்படி வாழ்வதிலே தன்னுடைய வாழ்க்கையையும் சேர்த்து நடத்துகிறான். ஒவ்வொருவனுக்கும் அவனவன் கடமை யென்பதுண்டு. இதனையே நமது பெரியோர்கள் வதர்மம் என்று சொன்னார்கள். இந்தக் கடமை யென்பது இன்னாருக்குத்தான் என்பது இல்லை. ஏழை களுக்கும் பணக்காரர்களுக்கும் எல்லாருக்கும் கடமை யென்ப தொன்றுதான். வாழ்க்கை, சிலருக்குத் துக்ககரமாகத் தென்படுகிறது; சிலருக்குச் சந்தோஷமாகத் தென்படுகிறது. ஆனால் உத்தம புருஷர்கள் எப்பொழுதும் வாழ்க்கையில் சந்தோஷத்தைத்தான் காண்கிறார்கள். இவர்கள், தாங்கள் சுகம் அனுபவிக்க வேண்டு மென்பதற்காகவோ கீர்த்தி சம்பாதிக்க வேண்டுமென்பதற்காகவோ வாழ்க்கையை நடத்துவதில்லை; தங்கள் கடமையைச் செய்து கொண்டு போவதன் மூலமாகத்தான் இவர்கள் வாழ்க்கையில் சந்தோஷம் காண்கிறார்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் எப்பொழுதும் நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையில்லாவிட்டால் எந்த ஒரு நல்ல காரியத்தையும் இவர்கள் செய்ய முடியாதல்லவா? நாம் ஒவ்வொருவரும் ஒரு வட்டத்தின் மையம் என்றும், நம்மைச் சுற்றி அடுக்கடுக்காகப் பல வட்டங்கள் சூழ்ந்திருக்கின்றன வென்றும் ஒரு கிரேக்க ஆசிரியன் கூறுகிறான். நம்மைச் சுற்றியுள்ள முதலாவது வட்டம் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள் முதலியோர். இதற்கடுத்த வட்டம் உற்றார் உறவினர். இதற்கடுத்தது நமது நாட்டு மக்கள். இதற்குப் பிறகு மானிட ஜாதி யனைத்தும். இப்படி ஒவ்வொரு வட்டமாக விரிந்துகொண்டு செல்லும் அனைத் திற்கும் மையத்திலே இருக்கிற நாம் நம்முடைய கடமையைச் செய்துகொண்டிருக்க வேண்டும். மனித சமூகத்திற்கும் அதன் மூலமாகக் கடவுளுக்கும் நாம் நமது கடமையை விடாமலும், ஒழுங்காகவும் செய்யவேண்டு மானால், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற எல்லாச் சக்திகளையும் உபயோகத்திற்குக் கொண்டுவர வேண்டும். பரம கருணா நிதியான கடவுள் நமக்கு எல்லா வற்றையும் கொடுத்திருக்கிறார். அவைகளை உபயோகப்படுத்துவதிலே தான் நம்முடைய உபயோகமும் இருக் கிறது. கடமைக்கு எல்லை இல்லை; காலமும் இல்லை; இடமும் இல்லை. நமது வாழ்க்கைப்படிகள் ஒவ்வொன்றிலும் கடமை யென்பது நம்மை அறை கூவி அழைக்கிறது. அதற்கு நாம் செவி கொடுத்துக் கேளாமற் போனால் அது நம்முடைய தவறே தவிர, கடமையின் தவறாகுமா? நாம் பணக்காரர்களா யிருப்பதும் ஏழைகளா யிருப்பதும் நமது கைவசத்திலில்லை. அப்படியே தான் சந்தோஷமும் துக்கமும் நமது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதா யில்லை. ஆனால் எங்குப் பார்த்தாலும் எப்பொழுதும் நம்மைச் சூழ்ந்திருக்கும் கடமையைச் செய்து கொண்டு போவது நமது கடமை. நாகரிகமுள்ள மனிதன் என்றால் என்ன அர்த்தம்? எவனொருவன் கடமைக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறானோ அவன் தான் நாகரிகமுள்ளவன். இந்த நாகரிக வாழ்க்கையில் என்ன இடையூறுகள் நேர்ந்தாலும், என்னவிதமான ஆபத்துக்கள் சம்பவித்தாலும் அவற்றை யெல்லாம் லட்சியம் செய்யாமல், நமது கருமத்திலேயே - அதாவது பிறருக்காக நாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துகொண்டு போவதிலேயே நாம் கண்ணா யிருக்க வேண்டும். இதற்காக நாம் வாழ வேண்டும்; நம்பிக்கை கொள்ள வேண்டும்; இறக்கவும் வேண்டும். ராணுவத்திலே சேர்ந்திருக்கிற ஒரு சிப்பாயை எடுத்துக் கொள்வோம். அவனுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிற முதல் உபதேசம் என்ன? உன் கடமையைச் செய். அப்படிச் செய்து கொண்டு போவதிலே ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதனை அசட்டை செய்துவிட்டு உன் கடமையைச் செய் என்பதுதான். இது மேற்பார்வைக்கு மிகவும் சுலபமாகத் தோன்றுகிறது. ஆனால் இதனை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருவதில் எவ்வளவோ சிரமம் இருக்கிறது. சுமார் 1850 வருஷங்களுக்கு முன்பே ரோம ராஜ்யத்தில் பாம்பே1 என்ற நகரம் மிகவும் உன்னத திதியிலிருந்தது. அது வெசூவிய2 என்ற எரிமலையின் அடிவாரத்தில் இருந்தது. இந்த எரிமலை திடீரென்று நெருப்பும் சாம்பலுமாகக் கக்க ஆரம்பித்தது. ஜனங்களெல்லாரும் பயந்து ஓடிப்போய்விட்டார்கள். ஆனால் நகரக் காவலன் மட்டும் ஓடவில்லை. நகரத்தைப் பாதுகாவல் செய்வது என்ற தன் கடமையைச் செய்தவனாய், நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். அவனையும் நகரத்தையும் சேர்த்து,எரிமலைச் சாம்பல் மூடிவிட்டது. நகரத்தைப் பாதுகாக்கவன்றோ அவன் நியமிக்கப்பட்டான்? அந்தக் கடமையிலிருந்து அவன் நழுவலாமா? அவன் தேகம் சாம்பலோடு சாம்பலாகி விட்டது. ஆனால் அவனுடைய ஞாபகம், அந்தச் சாம்பலின் பேரில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அவன் தரித்திருந்த தலையணி, கவசம், ஈட்டி முதலியனவற்றை இப்பொழுது கூட நேபிள்3 என்ற நகரத்திலே யுள்ள பொருட்காட்சி சாலையில் பார்க்கலாம். பத்தொன்பதாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன் கேள். மைசூரிலே ஆண்டு கொண்டிருந்த திப்பு சுல்தானோடு போர் புரிந்த வெல்லிங்க்டன்4 பிரபு என்பவனைப் பற்றி நீ பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறா யல்லவா? இவன் ஒரு பெரிய கப்பற் படைத்தலைவன். ஒரு சமயம் இவனுடைய படையைச் சேர்ந்த பர்க்கன் ஹெட் என்ற ஒரு கப்பல், ஆப்ரிக்காவுக்கு வடக்கேயுள்ள சமுத்திரத்தில் சத்துருக்களால் மூழ்கடிக்கப்பட்டு விட்டது. மாலுமிகள் அத்தனைபேரும், சந்தோஷ மாகச் சமுத்திர ராஜனுக்குப் பலியானார்கள். அப்பொழுது வெல்லிங்க்டன் பிரபுவுக்கு லண்டனிலே ஒரு விருந்து நடந்து கொண்டிருந்தது. இவ்விருந்தின் போது கப்பல் மூழ்கிய சமாசாரம் இவனுக்குத் தெரிந்தது. அப்பொழுது மாலுமிகளின் தைரியத்தைப் பாராட்டி ஒரு வார்த்தையாவது இவன் பேச வேண்டுமே? அவர்களுடைய கடமைக்குக் கீழ்ப்படியும் சுபாவத்தைப்பற்றித் தான் சில வார்த்தைகள் பேசினான். மாலுமிகள் தைரியமாக இருப்பது இயற்கைதானே என்று இவன் நினைத்தான் போலும். கடமை என்பதை எப்பொழுதும் எதிர்மறைப் பொருளில் அர்த்தம் செய்யாதே. உதாரணமாக, உன்னிடத்திலே எதற்கும் பயப்படாத ஒரு சுபாவம் இருக்கலாம். ஆனால் அப்படியிருப்பதே உன் கடமை ஆகாது. அச்சப்படாமல் உனக்கிட்ட வேலையை நீ செய்துகொண்டுபோவது தான் விசேஷம். அதுதான் உன் தர்மம்; உன் கடமை. நீ பெரியவனாக வேண்டுமென்று விரும்புகிறாயா? அப்படியானால் ஆரம்பத்தில் சிறியவனாயிரு. விசாலமானதும் உயரமுள்ளதுமான ஒரு கட்டடத்தைக் கட்ட ஆசைப்படுகிறாயா? அப்படியானால் அடக்கம் என்ற அதிவாரத்திலிருந்து ஆரம்பி. எவ்வளவுக்கெவ்வளவு உயரமான கட்டடத்தைக் கட்ட வேண்டு மென்று விரும்புகிறாயோ, அவ்வளவுக் கவ்வளவு ஆழமாக நீ அதிவாரத்தைப்போட வேண்டும். அடக்கந்தான் கடமையின் மகுடம். உன் கடமையை இரகசியமாகச் செய்; பொதுஜனங்கள் பார்க்க வேண்டுமென்று செய்யாதே. இரகசியத்திலேதான் கடமை சிறப்படை கிறது. கடமை, தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள எப்பொழுதுமே பிரியப்படுவதில்லை. நம்முடைய பொது வாழ்க்கை மிகவும் பகிரங்கப் பட்டதாயிருக்கலாம். ஆனால் நம்முடைய ஆத்மாவை யாருமே பார்க்க முடியாதல்லவா? இந்த ஆத்மாவுக்குச் செய்ய வேண்டிய கடமைக்கு விளம்பரமேன்? நாம் புகழின் சிகரத்தில் ஏறுவதும், அதிலிருந்து சறுக்கி வீழ்வதும், ஆத்மாவுக்கு நாம் செய்கிற கடமையைப் பொறுத்திருக்கிறது. ஆத்மா அழிவுபடாதது என்பதை நினைவில் கொள். நம்மைச் சுற்றியுள்ள ஒரு சிலரையேனும் கொஞ்சம் உயரத் தூக்கி விடுவோமானால், அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு புனிதத் தன்மையைப் புகுத்தி வைப்போமானால், உண்மையிலேயே நாம் உபயோகமுள்ளவர்களாக வாழ்ந்தவர்களாவோம். பணத்தினால் உபகாரம் செய்கிறவன் பெரிய மனிதனாக மாட்டான். எவன் தன்னையே பிறருக்கு ஒப்புக்கொடுத்து விடுகிறானோ அவன்தான் பெரிய மனிதன். பணத்தைக் கொடுக்கிறவன் விளம்பரப்படுத்தப் படுகிறான். தன்னுடைய காலத்தை, தேக பலத்தை, ஆத்மாவைக் கொடுக்கிறவன் நேசிக்கப்படு கிறான். முன்னவன் சீக்கிரத்தில் மறக்கப்படுகிறான்; பின்னவன் எப்பொழுதுமே ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப்படுகிறான். ஆனால் இருவர் விதைத்த நல்விதைகள் மட்டும் அழிவுபடாமல் இருக்கின்றன. முற்காலத்திலே கிரேக்கர்கள், தங்கள் கடமையில் கண்ணுங் கருத்துமாயிருந்தார்கள். இவர்களில் சரித்திரப் பிரசித்தி பெற்றவன் ஸாக்ரட்டீ1 என்பவன். இவன், கிரேக்கர்களின் தத்துவ ஞானத் திற்குப் பிதாமகன் என்று இன்னும் கௌரவிக்கப்படுகிறான். இவன், ஜனங் களிடத்தில் ஒழுக்கத்தை அபிவிருத்தி செய்வதே தனது வாழ்க்கையின் குறிக்கோள் என்று கொண்டான். அந்தக் காலத்தில் கிரீ தேசத்திற்கு, ஆத்தென்2 முக்கியமான நகரமாயிருந்தது. அப்பொழுது கிரீ தேசத்தில் அடிக்கடி யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டு வந்தன. இதனால் ஆத்தென் வாசிகளெல்லாரும் யுத்தத்தில் சேர்ந்து உழைக்க வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது. அப்படியே ஸாக்ரட்டீஸும் ஒரு யுத்த வீரனாகப் போய்ச் சேர்ந்தான். எனது நாட்டவரால் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங் களுக்கு நான் இழிவு தேடித்தர மாட்டேன். பாதுகாவல் செய்யுமாறு எந்த இடம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டதோ அந்த இடத்தி லிருந்து பெயரவும் மாட்டேன் என்று இவன் அப்பொழுது பிரதிக்ஞை செய்துகொண்டான். பிறகு நடைபெற்ற யுத்தங்களில் இவன் பல வீரச் செயல்கள் செய்திருக்கிறான். ஜெனோபன்3 என்ற ஒரு போர்வீரன் யுத்த களத்தில் படுகாயமடைந்து விழுந்து விட்டான். அவனை ஸாக்ரட்டீ தோளிலே தூக்கிப் போட்டுக் கொண்டு வழி நெடுகச் சத்துருக்களுடன் போரும் புரிந்து கொண்டு தன் பாட்டி வீட்டிற்கு வந்து சேர்ந்தான். யுத்த களத்திலே இவன் எப்படித் தைரியமாகத் தன் கடமையைச் செய்து வந்தானோ அது போலவே, பொது ஜன சேவையிலும் இவன் தன் கடமையைத் தைரியமாகச் செய்து வந்தான். பின்னர் இவன் உபதேசகனாக வந்து, அக்காலத்திற்குப் புதிதெனத் தோன்றிய பல கொள்கைகளைத் தைரியமாக எடுத்துச் சொல்லிவந்தான். கடைத் தெருக்களிலும், தொழிற்சாலைகளிலும், இன்னும் பொது ஜனங்கள் கூடுகிற மற்ற இடங்களிலும் இவன் தைரியமாகச் சென்று, வெறுமனே கடவுளர்களுக்குப் பூசை செய்வதைக் காட்டிலும், மனிதன் ஒழுக்க நிலையில் தன்னை உயர்வுபடுத்திக் கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்திப் பேசி வந்தான். அந்தக் காலத்தில் இவனுக்கு எதிர்ப்பு பலமாக இருந்தது. ஒரு சிலர் இவனுக்கு ஆதரவு காட்டி வந்தார்கள். அரிடிப்ப4 என்ற ஒரு பெரிய சீமான், இவனுடைய உபதேசத்தில் ஈடுபட்டு இவனுக்கு நிறைய பணம் கொடுப்பதாகச் சொன்னான். ஆனால் ஸாக்ரட்டீ, பணத்திற்காகத் தான் உபதேசஞ் செய்யவில்லை யென்று சொல்லி மறுத்து விட்டான். அரசாங்கம் இவனுக்கு விரோதமாக இருந்தது. ஜனங்களுக்குப் பொய்யொழுக்கத்தை உபதேசித்துக் கெடுத்து விடுகிறானென்று இவன் மீது குற்றம் சாட்டி விசாரணைக்குக் கொண்டு வந்தனர் சிலர். அப்பொழுது இவனுக்கு எழுபத்திரண்டு வயது. விசாரணை நடந்தது. விசாரணையின் போது, கொஞ்சங்கூட அஞ்சாமல் தன் கொள்கைகளை வலியுறுத்தினான். கடைசியில் நீதிபதிகள் மரண தண்டணை விதித்தார்கள். முப்பது நாள் சிறையிலே இருந்தான். அப்பொழுது இவன் தன் சீடர் களுக்குப் பல நல்ல உபதேசங்களைச் செய்தான். இந்தச் சமயத்தில் இவனிடத்திலே பெரிதும் இரக்கங்கொண்ட நண்பன் ஒருவன், இவனைச் சிறையினின்று தப்புவித்து வைப்பதாகக் கூறினான். ஆனால் ஸாக்ரட்டீ இதற்கு இணங்கவில்லை. கடைசியில் நீதிபதிகள் உத்தரவுப்படி, சிறைக்காவலன் விஷத்தைக் கொண்டு வந்து கொடுக்க அதை அப்படியே கொஞ்சங்கூட முகஞ் சிணுங் காமல் குடித்து விட்டான். சிரித்த முகத்துடன் மரணமடைந்தான். மகனே! ஸாக்ரட்டீ, மரணத்தைக் கூட எதிர்த்து நின்று தன் கடமையைச் செய்தான் பார்த்தாயா? நீ செய்ய வேண்டிய கடமைகள் எத்தனையோ உன் கையி லிருக்க, அவைகளை யெல்லாம் விட்டு விட்டு, புதுக்கடமைகளை எதிர்பார்த்துக் கொண்டிராதே. உன் கை என்னென்ன செய்ய முடிகிறதோ அதை உடனே செய் என்பது விவிலிய நூலில் ஒரு வாக்கியம். சிறிய விஷயந்தானே என்று நாம் நமது கடமையைப் புறக் கணித்து விடமுடியாது. அது கூடவும் கூடாது. சிறிய விஷயத்திலே எப்படி இருக்கிறோமோ அப்படியே பெரிய விஷயங்களிலும். தனியாக இருந்தாலும் பலரோடு சேர்ந்து போனாலும், நமது மனச் சாட்சிப்படி நாம் நமது கடமையைச் செய்து தானாகவேண்டும். கடைசி வரை நமது லட்சியத்திலிருந்து நாம் சிறிது கூடப் பிறழக் கூடாது. நன்மை உண்டானாலுஞ் சரி, இல்லையானாலுஞ் சரி நமது கடமைதான் நமக்கு முக்கியம். ஓர் அடிமை வியாபாரி, தான் விலைக்கு வாங்கப்போகிற ஓர் அடிமையைப்பார்த்து ‘ நான் உன்னை விலைக்கு வாங்கினால், நீ உண்மையாக நடப்பாயா? என்று கேட்டான். நீ வாங்கினாலும் வாங்காவிட்டாலும் உண்மையாக நடப்பது தான் என் வழக்கம் என்றான் அடிமை. இவன் கடமையை உணர்ந்தவனல்லவா? அடிமையா யிருந்தாலும் உத்தம புருஷனல்லவா? ஒழுக்கம் என்பது என்ன? கடமையின் மற்றொரு பகுதி தானே? அன்பு கனிந்த செயல்கள், அவை எவ்வளவு சிறியனவே யானாலும், பெரியனவல்லவா? அவைகளுக்காக நாம் எவ்வளவு கஷ்டப்பட்ட போதிலும் அது பெரிதல்லவே. அதுதான் கடமை. அதுதான் ஒழுக்கம். அன்பு விதைத்தால் அன்பு விளைகிறது. நீ நம்பிக்கையுடனும் நாணயத் துடனும் நடந்துகொண்டால், மற்றவர் களும் உன்னிடத்தில் நம்பிக்கையுடனும் நாணயத்துடனும் நடந்து கொள்வார்கள். இப்படி நடந்து கொள்வதால் நீ ஏதோ விசேஷ மானதொரு காரியத்தைச் சாதித்து விட்டாய் என்று கருதிவிடாதே; உன் கடமையைத்தான் செய்தாய். நல்ல காரியம் எப்பொழுதுமே வீணாவதில்லை. இதை நீ எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக்கொள். உன் கடமையைச் செய். 2. உறுதி கொள்; மகனே மகனே! உனக்குக் கடமையைப்பற்றிச் சொன்னேன். இப்பொழுது, அது பிரகாசிக்கிற விதம் எப்படி என்பதைப்பற்றியும், அதன் மூலமாகவே, மானிட ஜன்மம் எடுத்தவர்களெல்லாரும் மனிதர்களாகிறார்களென்பதைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். குழந்தாய்! கடமை, ஒரு செப்பனிட்ட பாதையல்ல. எத்தனையோ எதிர்ப்புக்களையும் கஷ்ட நிஷ்டூரங்களையும் எதிர்த்துக்கொண்டுதான் இந்தப் பாதையில் செல்லவேண்டும். இந்த எதிர்ப்புக்களையும் கஷ்ட நிஷ்டூரங்களையும் கண்கூடாகப் பார்க்கிற சக்தி உனக்கு இருக்கலாம். ஆனால் அவற்றைச் சமாளித்துக் கொண்டு போகக் கூடிய மனோதிடம் உன்னிடம் இல்லாமல் இருக்கலாம். இங்கேதான் நீ பரிசோதிக்கப் படுகிறாய். மனோதிடம் இல்லாதவன், ஒவ்வோர் அடிக்கும் ஒரு சிங்கத்தை எதிர்த்துக் கொண்டு போராட வேண்டியதுதான். இவன் மனக் கோட்டை களைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கலாமே தவிர வேறொன்றையும் செய்ய முடியாது. கடமையைச் செய்கிறபோது உனக்கு விருப்பு வெறுப்பு என்பதே இருக்கக்கூடாது. இப்படி இல்லாமல் கூட இருந்துவிடலாம்! ஆனால் உன்னை எதிர்த்துப் போராடும் சக்திகளோடு போராடுவதுதான் கடினம். நீ செய்ய வேண்டியதிதுவென்று, ஒரு கடமை உன் கண் முன்னே வந்து நிற்கிறது என்று வைத்துக்கொள். ‘நான் இந்தக் காரியத்திலே இறங்கினால் ஜனங்கள் என்ன நினைப்பார்கள்? என்று நினைக்கத் தொடங்கிவிடுவாயானால் உன்னால் ஒன்றுமே செய்ய முடியாது. இது நான் செய்ய வேண்டிய கடமை என்று உன் மனச்சாட்சி சொல்லி விடுமானால் உடனே அதில் நீ இறங்க வேண்டியதுதான். மற்றவர்கள் உன்னைத் தூஷிக்கட்டும்; பரிகசிக் கட்டும். அவை பற்றிக் கவலையில்லை. ஒரு குழந்தை தன் கடமையை எங்கே கற்றுக்கொள்கிறது? குடும்பத்திலேதான். பிறக்கிறபோது, எல்லாருடைய உதவியையும் அஃது எதிர்பார்க்கிறது. சரியானபடி பழக்கம் பெற்றுப் பிறருக்குக் கீழ்ப்படியவும், தன் கடமையை உணரவும் ஆரம்பிக்கிறது. இதற் கென்று ஒரு மனோதிடமும் ஏற்படுகிறது. அஃது எப்படிச் செலுத்தப்படுகிறதோ அதைப் பொறுத்தே அதன் பிற்கால வாழ்க்கை அமைகிறது. ஒரு கொடுங்கோலனிடத்தில் இந்த மனோ திடம் என்பது அமைந்து விடுமானால் அவன் ஒரு நர பிசாசந்தான். எல்லையற்ற இந்த மனோதிடந்தான் ஒரு மகா அலெக்ஸாந் தரையோ1 ஒரு நெப்போலியனையோ2 உற்பத்தி செய்கிறது. ஹனுமான்கூட, தன்னுடைய மனோபலத்தைக் கொண்டுதான், கடலைக் கடந்து இலங்கையை அடைந்தான். சீதா பிராட்டியை, அசோக வனத்தில் சத்துருக்களின் மத்தியில் ஒழுக்கந் தவறாமல் இருக்கச்செய்தது அவளுடைய மனோதிடந்தான். இந்த மனோதிடத்தை, குழந்தைப் பருவத்திலிருந்தே பக்குவப் படுத்திக் கொண்டு வரவேண்டும் இந்த மனோ விதையை இளமைக் காலத்தில்தான் பயிர் செய்யவேண்டும். இந்தக் காலத்தில் இதை நாம் செய்யாவிட்டால், காலக்கிரமத்தில் கீழான இச்சைகளெல்லாம் நம்மை ஆட்கொள்ள ஆரம்பித்துவிடும். நாம் ஒழுக்கந் தவறினவர் களாகி விடுகிறோம். ஞானம் என்பது எங்கே இருக்கிறது? மூளையிலேயா? இல்லை; இல்லை. நமது இதயத்திலேதான் இருக்கிறது. நமது வாழ்க்கையில், நமது செயல்களில் பல குறைபாடுகளைக் காண்கி றோம். இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன? நமது அறிவுக் குறைவா? இல்லை. மனோதிட மில்லாமைதான். படிப்புக்கும் சந்தோஷத்திற்கும் சம்பந்தமே இல்லை. அப்படியே தான் நல்ல சுபாவங்கூட. நம்முடைய அதிக படிப்பு, நம்மை அடக்கத் தினின்று விடுதலை செய்து, கர்வத்திற்குள் கொண்டு போய்விடலாம். மானிட சரித்திரத்திலே பிரசித்தி பெற்ற பலர், அதிக படிப்பில்லாதவர்கள். படித்தவர்கள் சிந்தனை உலகத் தில் மிகவும் முக்கியத்துவம் பெற்றவர்களா யிருக்கலாம்; ஆனால் செயலளவில் அப்படி உன்னதத்தை யடைந்ததாகத் தெரியவில்லை. ஆகையால், படிப்பதோடு திருப்தி யடைந்து விடாதே. உன்னுடைய மனத்தையும் திடப்படுத்திக்கொண்டு வா; பக்குவப் படுத்தி வை. அப்பொழுதுதான் உன்னால் மேன்மையான காரியங்களைச் செய்ய முடியும். இன்னொரு விஷயத்தையும் உனக்குச் சொல்ல விரும்புகிறேன். நல்லெண்ணம் உன்னிடத்தில் நிறைய இருக்கலாம். அதனால் மட்டும் நீ நல்ல காரியங்களைச் செய்யமுடியாது. மனோதிடம் உன்னிடத்தில் நிறைய இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நீ அதிகமான காரியங்களைச் செய்யமுடியும். ஒரு மனிதனுடைய வாழ்க்கையை அளக்குங் கருவி எது? அவன் செய்த காரியங்கள், அவன் பொறுமையோடு சகித்த துன்பங்கள் ஆகிய இவைதான். சோம்பேறித்தனத்திலே வாழ்க்கையைக் கழிப்பது இருக்கிறதே, அது வியாதியால் அவதைப் படுவது போல. உழைப்பதுதான், மனிதனுக்கு உண்மையான ஆசான். உலகத்திலே தோன்றும் பெரும்பாலான துயரங்களுக்கெல்லாம் காரணம் சோம்பேறித் தனந்தான். உழைப்பில்லாமல் மனித சமூகம் முன்னேற முடியாது. அநேக கஷ்டங்கள் உன்னை வந்து அவதைப் படுத்துகின்றனவா? அப்படி யானால் வேலை செய்து அவைகளைச் சமாளி. சோம்பிக் கொண்டிருந்தால் உன் மனமும், அறிவும், ஆத்மாவும் துருப்பிடித்துப் போகும். நான் வேலை செய்து இறந்து போவேனே தவிர, வேலை செய்யாமல் துருப்பிடித்து இறந்துபோக மாட்டேன் என்று ஒரு கர்ம வீரன் சொல்லவேண்டும். கஷ்டமான சம்பவங்கள் நேரிடுகிறபோது, நம்மைப் பரிசோதிக்கத்தான் அவை வருகின்றன வென்று நாம் கொள்ள வேண்டும். அந்தப் பரிசோதனை காலத்தில் நாம் உறுதியாக நின்றோமானால் மனத்துக்கு நிம்மதி ஏற்படுவதோடுகூட நமது கடமையும் எளிதில் முடிந்து விடுகிறது. வறுமைதான் மனிதனுடைய வாழ்க்கையைப் புனிதப்படுத்து கிறது. கஷ்டம் நேரிடுகிறபோது, சந்தோஷமாக அதனை வரவேற்க வேண்டும். நமது உழைப்பிலேதான் இன்பம் இருக்கிறதே தவிர, நமது லட்சியத்திலே இல்லையென்று ஒரு தத்துவ ஞானி கூறு கிறான். ஆகையால் கஷ்டங் களோடு போராடுந் திறன் உன்னிடத்தில் இருந்தால் நீ அவைகளைச் சுலபமாகச் சமாளித்து விடலாம். நமக்குச் சொத்து சுதந்திரங்களை வைத்துக்கொண்டு அனுபவிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. ஆனால் அவற்றைச் சம்பாதிக்கக் கூடிய முயற்சி யொன்றுஞ் செய்வதில்லை. அதனை வைத்து நிருவகிக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு வேண்டா மென்று தோன்றுகிறது. இது பெரிய பலவீனமாகும். ஆகையால் நாம் அனுபவத்திலே இன்பங் காணவேண்டுமானால் முதலில் உழைப்பிலே இன்பங் காண வேண்டும். இதுதான் உண்மையான பலத்தின் ரகசியம். இந்த உலகத்திலே நம்மால் ஒன்றுஞ் செய்ய முடியாதென்று சிலர் நினைக்கிறார்கள். இது சுத்தத்தவறு. உலகம் அவர்கள் முன்னிலையில் இருக்கிறது. நல்லதையோ கெட்டதையோ எதை வேண்டுமானாலும் பொறுக்கி எடுத்துக் கொள்வது அவர்கள் கடமை. அவர்களிடத்திலே ஒப்படைக்கப்பட்ட காலத்தையும், சாதனங்களையும் அவர்கள் எந்த விதமாக உபயோகப் படுத்தி யிருக்கிறார்கள்? தாங்கள் பிறந்தது, ஏதேனும் பிரயோஜனத்திற் கென்று அவர்கள் நிரூபித்துக் காட்டினார்களா? அவர்களுடைய வாழ்க்கை, சுயநலமும் சோம்பேறித்தனமும் நிறைந்த தாகவே போய் விட்டதா? அவர்கள் சந்தோஷத்தை எதிர்பார்த்துக் கொண் டிருக்கிறார்களா? ஆனால் சோம்பேறித்தனத்தைக் கண்டு, சந்தோஷம் ஓடிவிடுமே? இரண்டுக்கும் நீண்ட தூரம் அல்லவோ? 1868ஆம் வருஷம் ஆகடு மாதம் அமெரிக்காவில் ஒரு விநோத சம்பவம் நடந்தது. ஓர் இளைஞன், இந்த உலகத்தில் தான் இருப்பது எவ்விதத்திலும் பிரயோஜனமில்லையென்று நிச்சயப் படுத்திக்கொண்டு, பகிரங்கமாகத் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அறிவித்தான். இவன் தன் அறிவை மட்டும் விருத்தி செய்துகொண்டிருந்தான். கடமை, மதம், ஒழுக்கம் முதலியவை களைப் பற்றி இவனுக்கு ஒன்றுமே தெரியாது. தான் ஒரு பிரசங்கம் செய்துவிட்டு, பிறகு துப்பாக்கியால் தன்னைச் சுட்டுகொள்ளப் போவதாகத் தெரிவித்தான். இந்தச் சம்பவத்தைப் பார்க்கச் செல்வோர் ஒரு டாலர் விகிதம் கட்டணம் செலுத்த வேண்டு மென்று தெரிவித்தான். இந்தப் பணத்தைக்கொண்டு தன் இறுதி காலச் சடங்குகளை நடத்தவேண்டுமென்றும், மிகுதியாயுள்ள பணத்தில் மூன்று பிரபல நாதிகர்களுடைய நூல்களை வாங்கி, தனது ஊர்ப் புத்தகச்சாலையில் வைக்க வேண்டு மென்றும் கேட்டுக் கொண்டான். சொன்னபடியே ஒரு பிரசங்கம் செய்து விட்டு, துப்பாக்கியால் தற்கொலையும் செய்து கொண்டு விட்டான். புனித மான ஒருவனுடைய உயிர் எவ்வளவு வீணாகப் போய்விட்டது பார்த்தாயா? இதை நீ தைரிய மென்று சொல்கிறாயா? இல்லை. இது கோழைத்தனம். வாழ்க்கையோடு எதிர்த்துப் போராட முடியாமல் இப்படிச் செய்து கொண்டான் இந்தச் சிறுவன். கோழைத்தனம், வாழ்க்கையில் மகா கொடுமையானது. மனிதனுக்குத் தைரியம் மிகவும் தேவை. நல்ல தருணத்தில் சொற்ப தைரியத்தோடு நாம் நடந்துகொண்டு விட்டோமானால், நம்மால் எவ்வளவோ காரியங்களைச் சாதிக்க முடியும். ஒரு குக்கிராமத்திலே, ஜனங்களுக்கு உபகாரம் செய்து கொண்டிருக்கிற ஒரு சமூகத் தொண்டனை எடுத்துக்கொள்வோம். அவன் செய்கிற தொண்டுகள், மனோதிடத்தையும் தைரியத்தையும் அடிப்படையாகக் கொண் டவை. அவனைவிட, உலகத்தையே திக்விஜயஞ்செய்து விடவேண்டு மென்று விரும்பிய மகா அலெக்ஸாந்தர் மன்னன் எந்த விதத்தில் பெரியவன்? உன்னோடு அன்றாடம் நட்பு முறையிலோ, உத்தியோக முறையிலோ பழகுகிறவர்களுடன் மனப்பூர்வமான தொடர்பு வைத்துக் கொள். அவர்களிடத்தில் அன்புகாட்டு. அப்பொழுது நீ சிறந்த ஞானியாக முடியும். ஓர் அறிஞன் மோட்சத்திற்கு மார்க்கம், உலகத்தைத் துறப்பதிலே இல்லை; உலகத்தின் நடுவில் இருந்து கொண்டு வேலை செய்வதிலே இருக்கிறது என்று கூறுகிறான். இது முற்றிலும் உண்மையல்லவா? ஆகையால் மகனே! சூழ்ந்திருக்கும் துன்பங்களைக் கண்டு அவைகளுக்குப் பரிகாரந் தேடும் வகையில் நீ மேற்கொள்ள வேண்டிய உழைப்பைக் கண்டு மலைத்துப்போகாதே. உலகத்தைத் துறந்து காட்டிற்கு ஓடிப்போய் விடவேண்டுமென்று எண்ணாதே. உலகத்திலே இன்பம் நிறைய இருக்கிறது. உழைத்தால் அதனைக் காண்பாய். அதற்காக உன் மனத்தைத் திடப்படுத்திக்கொள். 3. தன்னம்பிக்கை - ஒரு சக்தி இந்த உலகத்திலேயே பெரிய சக்தி எது? பிரமிக்கத் தக்க காரியங்களை எந்தச் சக்தி செய்து முடித்திருக்கிறது? அதுதான் தன்னம்பிக்கை என்னும் சக்தி. பெரிய பெரிய மலைகளையும் அசைக்கும் வல்லமை அதற்குண்டு. உலகத்திலே உள்ள எல்லாச் சக்திகளுக்கும் பிறப்பிடம் அந்தத் தன்னம்பிக்கைதான். நீ பிரவேசிக்கும் எந்த ஒரு வேலையும், அஃது எவ்வளவு பெரிதா யிருந்தாலுஞ் சரியே, உன்னுடைய சக்தியில் பூரணமான நம்பிக்கை வைத்து அதில் பிரவேசிப்பாயேயானால் அது கட்டாயம் பூர்த்தியாகும். நான் இந்தக் காரியத்தைச் செய்தே முடிப்பேன்; என்னால் முடியும் என்ற உறுதி கொண்டு நீ பிரவேசிக்கும் போது உலகத்திலுள்ள மற்ற எந்தச் சக்திகளும் அதைத் தடை செய்ய முடியாது. தன்னம்பிக்கை என்பதற்கு அவ்வளவு வல்லமை உண்டு. எந்த எல்லை வரை தன்னம்பிக்கையெனும் சக்தி உனக்கிருக்கிறதோ அதுவரை நீ எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும். அதுதான் உண்மை. இந்தத் தன்னம்பிக்கையின் அளவு எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக வளர்ந்து கொண்டு போகிறதோ அவ்வளவுக் கவ்வளவு பெரிய பெரிய காரியங்களையும் நீ சாதித்து வெற்றி காண முடியும். ஆனால் இந்த வேலையா? இதை நான் எப்படிச் செய்து முடிப்பேன்? என்ற எண்ணத்தோடு நீ பிரவேசிப்பாயேயானால் அந்தக் காரியத்தில் உனக்கு எப்படி வெற்றி ஏற்படும்? அந்த வேலையின் முடிவில் நீ தோற்கவில்லை; அதை ஆரம்பிக்கும் போதே நீ தோற்றுவிட்டாய். ஆதலால் எந்த ஒரு காரியத்திலும் பிரவேசிக்கும்போது பூரணமான தன்னம்பிக்கையோடு அந்தக் காரியத்தில் இறங்கு. அப்பொழுது யாரேனும் வந்து உன்னிடம், ஐயோ, பைத்தியமே, இஃது உன்னால் சாத்தியமாகுமா? வீணான முயற்சியல்லவா என்று கூறுவார் களானால் அவர்களை நீ உன்னுடைய பரம விரோதியாகக் கருது. அப்படிப் பட்டவர்களின் சகவாசம்கூட உனக்கு வேண்டாம். ஏன்? அவர்கள் உனக்கு உற்சாகம் ஊட்ட வேண்டியதற்குப் பதிலாக உன்னை பலவீனனாக்கு கின்றனர். அதுமட்டுமில்லை; அவர்கள் உன்னுடைய வழியை மறிக்கின் றார்கள். இன்னும் அவர்கள் உன் பின்னால் இருந்து கொண்டு உன் கால்களைப் பற்றி இழுக்கின்றார்கள். மனித சமூகம் எத்தனையோ மாற்றங்களைத் தாண்டி இன்றைய உன்னத நிலைமையை அடைந்திருப்பது உனக்குத் தெரியும். இந்த நிலைமையை அடைந்திருப்பது உண்டுபண்ணியவர்கள் யார்? இவை களுக்குக் காரணதர்கள் யார்? தன்னம்பிக்கை நிறைந்த மகா புருஷர் களாலேயே இந்த உன்னத நிலையை மனித சமூகம் அடைந்திருக்கிறது. அவர்கள் இந்தக் காரியங்களில் பிரவேசித்த காலத்தில், அவர்களைக் கேலி செய்தவர் பலர். நிந்தித்தவர் பலர். அயோக்கியன் என்று பட்டம் சூட்டினார்கள் ஜனங்கள். ஆனால் இந்தக் கேலிக் கூத்தையெல்லாம் அந்த மகா புருஷர்கள் லட்சியம் செய்தார்களா? இதற்காக அவர்கள் வருந்தினார்களா? இல்லை, இல்லை; தங்கள் மார்க்கத்திலேயே சென்று கொண்டிருந்தார்கள். தன்னம்பிக்கையுடைய அவர்கள் தங்கள் சக்தியை நன்றாக அறிந்தவர்கள். தாங்கள் காணும் கற்பனையைக் காரிய ரூபத்தில் ஆக்குவதற்கு அவர்கள் விடாமுயற்சி செய்தார்கள். முடிவில் அவர்கள வெற்றி பெற்றார்கள். அந்த மகா புருஷர்கள் இந்தக் காரியங்களில் பிரவேசித்திராவிட்டால் இன்றைய மனித சமூகம் எந்த நிலையிலிருக்கும்? பழைய நிலையிலேயே அதாவது காட்டு மிராண்டித்தனமான நிலையிலேயே காட்சி யளிக்குமல்லவா? ஜனங்கள் உன்னைக் கேலி செய்யட்டும்; நன்றாகச் செய்து கொள்ளட்டும். ஆகாயக் கோட்டை கட்டுபவன் என்று உன்னைக் கூறட்டும். அதைப்பற்றி உனக்கென்ன கவலை? உன்னுடைய சக்தியை அவர்கள் உணராததுதான் அதற்குக் காரணம். தங்களுக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது என்பதை உணராதவர்களன்றோ அவர்கள்? பூரணமான தன்னம்பிக்கையோடு நீ காரியத்தில் பிரவேசி. ஆகாயத்தில் கோட்டையையும் கட்டி முடிப்பாய். உன்னைக் கேலி செய்த அவர்கள் வெட்கித் தலை குனிவார்கள். ஆனால் உன்னுடைய சக்தியையே நீ தெரிந்துகொள்ள வில்லை யானால் எந்தக் காரியத்தையும் உன்னால் சாதிக்க முடியாது. அதாவது உன்னை நீயே தெரிந்து கொள்ளாதது மட்டுமில்லை; உன்னைப்பற்றியே நீ அவநம்பிக்கை கொள்கிறாய். இதனால் உனக்குள்ளிருக்கிற சக்தி பூராவையும் நாசமாக்கி விடுகிறாய். உன்னுடைய சம்பத்துக்கள் ஒழிந்து போனாலும் போகட்டும்; உன்னுடைய சரீர ஆரோக்கியம் கெட்டாலும் கெடட்டும்; உன்னை யாரும் அவமதித்தால்தான் என்ன? இவற்றை யெல்லாம் நீ பொருட்படுத்த வேண்டாம். ஏன்? உனக்குத் தன்னம்பிக்கை இருக்கு மானால் இந்த உலகத்திலேயே அரிய காரியங்களை நீ செய்து காட்ட முடியும். நீ உன்னையறிந்து நடக்க ஆரம்பித்தாயானால், உன்னைக் கேலி செய்தவர்களே உன்னைப் பின்பற்றி வருவதைக் காண்பாய். நெப்போலியனைப்பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயல்லவா? அவனிடத்தில் ஒரு கடிதத்தைச் சேர்ப்பிக்கும் பொருட்டு ஒரு ராணுவ வீரன் கனவேகமாக ஒரு குதிரை மீது வந்தான். ஆனால் அவன் அந்தக் கடிதத்தை நெப்போலியனிடம் சேர்ப்பிக்கும் முன்னரேயே அவனுடைய குதிரை கீழே விழுந்து இறந்து விட்டது. கடிதத்தைப் பெற்றான் நெப்போலியன். படித்தான். அதற்குப் பதிலெழுதினான். பதில் கடிதத்தை அந்த ராணுவ வீரனிடம் கொடுத்து, இதோ, என்னுடைய குதிரைமீது ஏறிப்போய் சீக்கிரம் சேர்ப்பித்துவிடு என்றான். நெப்போலியனுடைய குதிரையினருகிற் சென்ற அந்த ராணுவ வீரன், கொஞ்சம் பின் வந்து, எங்கள் தலைவரே, இந்த அருமையான குதிரை மீது சவாரி செய்யத் தகுந்த யோக்கியதை எனக்கு இல்லையே என்றான். இதைக் கேட்ட நெப்போலியன் எந்த ஒரு பிரெஞ்சு ராணுவ வீரனாலும் முடிக்க முடியாத காரியம் இந்த உலகத்திலே கிடையாது என்று சொன்னான். இதில் அதிசயமில்லை அந்தப் பிரெஞ்சு ராணுவ வீரனைப் போன்றவர்கள்தான் உலகத்தில் அதிகம். இந்த உலகத் திலே எல்லாரும், எல்லாக் காரியங் களையுமே செய்ய முடியாது; அதற்குச் சில மகான்கள் அவதரிக்கிறார்கள் என்று இவர்கள் நினைத்து ஆத்ம திருப்தியடைகிறார்கள்! இந்தப் பெரும் பான்மையோரோடு நீ சேர வேண்டாம். ஒன்று கவனி. நான் அயோக்கியன்; அந்தக் காரியத்தைச் செய்யத் தகுதியற்றவன் என்று நீ ஏன் நினைக்க வேண்டும்? உன்னை நீயே ஏன் முட்டாளாக்கிக் கொள்ளவேண்டும்? இந்த உலகத்திலே மனிதர்களால் ஆகக்கூடாத காரியம் ஒன்றுமே கிடையாது. இஃது உண்மை. தன்னம்பிக்கையுள்ள புருஷன் இதைக் கட்டாயம் அறிகிறான். எந்தக் காரியத்தையும் செய்து முடிக்கத் தகுதி வாய்ந்த சிலர், சில காரியங் களைத் தங்கள் சக்திக்கு மீறியவை என்று தள்ளிவிட்டு, சின்னக் காரியங் களில் பிரவேசித்து தங்கள் சக்தியை நஷ்டமாக்குகிறார்கள். ஐயோ, இவர்கள் தங்களுடைய அற்புத சக்தியை எப்படி உபயோகிக்கிறார்கள். பார்த்தாயா? ஏன்? இவர்கள் தங்கள் சக்தியின் எல்லையை உணராதது தான் காரணம். இன்னும் கூறப்போனால், தங்களுக்கிருக்கும் சக்தியில் பாதியைக் கூட இவர்கள் தெரிந்து கொள்ளவில்லை என்று சொல்லலாம். தங்களுக்குத் தாங்களே கீழாக நினைப்பவர்கள். அற்ப காரியங் களிலே ஈடுபட்டு விட்டு இந்த உலகத்திலிருந்து மறைந்து விடுகி றார்கள். ஆம், தன்னம்பிக்கையற்ற இவர்கள், தங்களுக்குமட்டு மில்லை; இந்த உலகத்துக்கே நஷ்டம் விளைத்தவர்களாவார்கள். உன்னுடைய மன உறுதி, சரீர பலம் இவைகளுக்கெல்லாம் சேனா நாயகன் யார் தெரியுமா? தன்னம்பிக்கை என்ற வீரன்தான். அந்தத் தன்னம்பிக்கை எனும் வீரன் தனக்குத் தானே வேலை செய்ய ஆரம்பித்து விட்டால், மன உறுதி, சரீர பலம் என்ற மற்றச் சக்திகளும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடும். தன்னம்பிக்கை என்னும் அந்தச் சேனா நாயகன் முன்னேறிச் செல்லாதபோது மற்றச் சக்திகள் மௌனமாகத் தங்கள் தலைவனையே உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. அந்தத் தலைவன் முன்னேறத் தொடங்கினால் உடனே மற்றச் சக்திகள் இரண்டு பங்கு பலத்தோடு உன்னை அவைகளோடு செலுத்திக் கொண்டு போய் வெற்றி என்னும் உயர்ந்த சிகரத்தில் ஏற்றுவிக்கின்றன. மனிதர்களாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்துகொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் இவர் களில் மன உறுதிபடைத்தவர்கள் ஒரு சிலராகத்தானிருக்கிறார்கள். மனம் ஒடிந்து போயிருப்பவர்களே பெரும் பாலராய்த் தெரிகிறது. இதற்குக் காரணமென்ன? ஏன் இவர்கள் மன மொடிந்து கிடக் கின்றனர்? ஆம், இவர் களுடைய எண்ணத்திலே உறுதியில்லை. அப்படியானால் இவர்கள் எவ்விதம் எடுத்த காரியத்தில் வெற்றி பெற முடியும்? எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் சரி, என்ன நேரினும் சரி, வெற்றியை நிலை நாட்டாது நான் அமைதியடைய மாட்டேன் என்று எவனொருவன் நினைத்து திடசித்தத்தோடு காரியத்தில் பிரவேசிக்கிறானோ, அவன் அந்த மகா புருஷன் வெற்றி மாலை சூடியே வெளி வருகிறான். அவன் முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லை. ஏன்? அவனுக்குப் பின் வைக்கத் தெரியாது. மன உறுதி, நம்பிக்கை இவைகள், மனிதனுடைய எத்தனையோ கஷ்டங்களையும் எதிர்த்து முன்னோக்கிச் செல்வதற்கு உதவி செய்கின்றன. ஆனால் அந்த உறுதியிலோ, நம்பிக்கையிலோ கொஞ்சம் தளர்ந்தாலும் சரியே, எடுத்த எல்லாக் காரியங்களுமே சீரழிந்து மண்ணாகப் போகும். வெற்றி தோல்வி என்பவைதான் என்ன? இரண்டும் இரண்டு நேர்மாறான மூலைகள். இவ்விதம் கூறுவது நிரம்பவும் லேசான விஷயந்தான். ஆனால் இவற்றின் முடிவு மிக மிக விசாலமானதல்லவா? மன உறுதியும், திட நம்பிக்கையும் உள்ளவன் அந்த வெற்றியென்னும் மூலையை அடை கிறான். அஃதில்லாதவன் நேர்மாறான தோல்வி மூலையைத்தானே அடைவான்? சந்தேகம், கோழைத்தனம், அவநம்பிக்கை, பயம் இவை உன்னுடைய பரம விரோதிகள். இவை வசிப்பதும் உன்னுடைய இதயத்திலேதான். நீ முதலில் இந்த எதிரிகளை அடியோடு ஒழித்து விடு. பூரணமான தன்னம்பிக்கையோடு காரியத்தில் பிரவேசி. அப்போது வெற்றி யென்பது, எவ்வளவுசுலபமாக தானே வந்து உன்னை ஆலிங்கனம் செய்கிறது என்பதைக் காண்பாய். தன் னம்பிக்கை என்ற சக்தியின் இந்தப் பலனைப் பார்த்து நீ ஆச்சரியம் அடைவாய். எடுத்த காரியம் யாவினும் வெற்றி என்பது அப்போது உனக்கு நன்கு புலப்பட்டுவிடும். சரித்திர ஏடுகளைக் கொஞ்சம் கூர்ந்து நோக்குவாயானால், நூற்றுக் கணக்கான மகான்களை உலகம் தோற்றுவித்திருக்கிற தென்பதை நீ காண்பாய். அவர்கள், தங்கள் விடாமுயற்சியாலும், மன உறுதியாலும் முடிக்க முடியாத காரியங்களை முடித்திருக் கிறார்கள். ஏன், தன்னம்பிக்கை என்னும் சக்திக்கு முன்னே, முடியாது என்ற ஒன்று உலகத்திலேயே ஜீவித்திருக்க முடியுமா? மன உறுதியும் தன்னம்பிக்கையும் இல்லாதவன் எப்படி மகா புருஷனாக முடியும்? ஒரு புதிய சரித்திரத்தை எவனொருவன் சிருஷ்டிக்கி றானோ அவனல்லவா சரித்திர புருஷன்? ஆனால் பெரும்பாலான மனிதர்கள் ஏன் இந்த உலகத்திலே இவ்வளவு கீழான நிலையில் இருக்கின்றனர்? இதற்குரிய காரணத்தை நீ வெளியிற் சென்று தேட வேண்டியதில்லை. இதற்குப் பல காரணங்கள் கூற வேண்டிய அவசியமும் இல்லை. அவர்கள் தங்களை இன்னாரென்று உணர்ந்து கொள்ளவில்லை. தங்க ளுடைய சக்திக்கும் அவர்களுக்கும் அறிமுகமே இல்லை. இதனால் அவர்கள் தங்களைத் தாங்களே மிகவும் கீழாக மதிக்கிறார்கள். தனக்குத் தானே கீழானவனாக நினைப்பதைப் பார்க்கிலும் முட்டாள் தனமான செய்கை இந்த உலகத்திலே வேறு எதுவுமே இருக்க முடியாது. எல்லா மனிதர்களுமே, உன்னதமான கற்பனைகள் செய்வதோ, பெரிய எண்ணங்களை எண்ணுவதோ சாத்தியமான தில்லைதான். ஆனால் உன்னதமான கற்பனைகளோ, உயர்ந்த எண்ணங்களோ இல்லாதவர்கள், மன உறுதியற்றவர்கள் எப்படி மகாபுருஷர்களாக முடியும்? எதுவரை ஒருவன் உன்னதமான கற்பனைகளைச் செய்ய வில்லையோ அவற்றைக் காரிய ரூபத்தில் கொண்டு வருவதற்கு மனஉறுதி படைக்கவில்லையோ அதுவரை அந்த மனிதன் முன்னேறவே முடியாதே. ஆதலால் நீ உன்னதமான கற்பனைகள் செய். உயர்ந்த எண்ணங்களையே எண்ணு. நீ ஒரு மகா புருஷனாவதற்கு இவைகள்தான் முதற்படிகள். கூடவே நான் நினைத்த காரியத்தை முடிப்பேன் என்ற திட சங்கல்பமும் தன்னம்பிக்கையும் இருக்கட்டும். போதும்; வெற்றிதான் உனது எல்லை. இந்த உலகத்திலே உன்னதமான கற்பனைகளையும் எண்ணங்களையும் படைத்த கடவுள், கூடவே அவற்றைப் பூர்த்தி செய்வதற்கான சாதனங்களையும் படைத்திருக்கிறார். அவர் உன்னை இங்கும் அங்கும் அலைய வைத்து உன் சக்தியை வீணாக்கு வதற்காகப் படைக்கவில்லை. ஒரு முக்கியமான காரியத்தைச் செய்யும் பொருட்டாகவே உன்னை அவர் படைத்திருக்கிறார். உன்னைப் படைத்தனுப்பிய கடவுளினுடைய எண்ணம் பூர்த்தி யாகிற வரை உன்னுடைய ஜன்மம் புனிதமடையும்வரை அந்தக் காரியத்தைச் செய். மனிதன் எதை நினைக்கிறானோ அதைச் செய்து முடிக்கிறான். ஆனால் இதில் சில மாற்றங்கள் உனக்குத் தெரியலாம். ஒருவன் ஒரு பெரிய காரியத்தைச் சாதித்து விட்டான் என்றால் அவனுடைய கற்பனை பெரிதாயிருந்தது . அவனுடைய எண்ணம் விசாலமா யிருந்தது. அதைக் காரிய ரூபத்தில் சித்தியாக்குவதற்கு அவன் விடா முயற்சி செய்தான். வெற்றி பெற்றான். இதுதான் காரணமாகும். ஆதலால் உனக்கும் உன்னைப் போன்ற என் தேச சகோதர சகோதரி களுக்கும் ஒரு யோசனை கூறுகிறேன். திரும்பவும் கூறுகிறேன். எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் உங்களைப் பற்றி அதிகமாக நினையுங்கள். தன்னம்பிக்கை கொள்ளுங்கள். அதாவது இந்த உலகத்திலே உங்களுடைய சகல க்ஷேம லாபத்திற்கும் காரணதர்கள் நீங்கள்தான் என்பதை உணருங்கள். அபூர்வமான தெய்விக சக்திகள் உங்களிடையே மலிந்து கிடக்கின்றன. அவற்றை நீங்கள் தூண்டிவிட வேண்டியதுதான் தாமதம். எத்தனையோ அரிய பெரிய காரியங்களை நீங்கள் செய்து முடிப்பீர்கள்; மனிதர்களாகப் பிறந்ததன் பலனை அடைவீர்கள். இந்த உலகத்திலே நம்பிக்கை என்பது பெரிய சக்தி வாய்ந்தது என்பதை மேலே உனக்குப் பல விதமாகத் துலக்கியிருக்கிறேன். நம்முடைய சுகம், க்ஷேமம், கலைஞானம், வெற்றி யாவற்றிற்கும் அதுதான் சாவி. அதன் மூலமாகத்தான் நம்மை எல்லாச் சக்திகளும் வந்தடைகின்றன. தன்னம்பிக்கை என்ற ஒன்றினால், தொட்ட மண்ணெல்லாம் பொன்னாவதை நீ காண்பாய். தன்னம்பிக்கை நிரம்பவுள்ள நீ, ஒரு காரியத்தில் பிரவேசித்து வெற்றி பெற்ற பின்னும் சும்மா யிருப்பதில்லை. அதற்கு மேலும் ஓர் உன்னத காரியத்தில் பிரவேசிக்கிறாய். தன்னம்பிக்கையுள்ள நீ ஓய்வு கொள்வது உன்னத வேலைகளிலேதான். அதாவது நீ உன்னுடைய மார்க்கத்தில் மேலும் மேலும் முன்னேறிக் கொண்டு செல்கிறாய் என்பதே இதன் பொருள். இதுதான் மனித வாழ்க்கையின் உண்மையான முன்னேற்ற மார்க்கம். ஒவ்வொரு மனிதனும் இதை உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டுவது அவசியமாகும். இந்த முன்னேற்றப் பாதையிலே மன உறுதியும் தன்னம்பிக்கையும் கொண்டு செல்லும் மகா புருஷர்கள், அதோ பார், அவர்கள் எத்தனை அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்கள். பெரிய பெரிய மலைகளைத் துளைத்துப் பாதை உண்டாக்கியிருக் கிறார்கள். பயங்கரமான நதிகள் மீது பாலங் கட்டியிருக்கிறார்கள். சமுத்திரங்களின் அடியிலே சுரங்கங்கள் தோண்டியிருக்கிறார்கள். சாதாரணமாகப் பூமியில் செல்வதைப் போன்று, ஆகாயத்திலும் செல்வதற்கு வழி செய்திருக்கிறார்கள். தன்னம்பிக்கை யிருக்கிறதே அஃது எப்பொழுதும் உன்னை ஏமாற்றாது. அஃது ஒரு பெரிய சக்தி வாய்ந்த பொருள். எந்த ஒரு தடையும் அதைக் கட்டுப்படுத்த முடியாது. முன்னேறிச் செல்வதற்கு அபூர்வமான சாதனம் அது. உன்னுடைய எல்லா க்ஷேம லாபங் களுக்கும் சிகரமானது. சதா அதைப்பற்றியே சிந்தி. அதைப் பெறுவதற்கு எந்த நேரமும் முயற்சி செய். உன்னுடைய இச்சைகள் யாவும் பூர்த்தியாகும். இந்த உலகம் மாத்திரமில்லை, பரலோகத் திலும் நீ யோக்கியனாயிருப்பாய். இந்த உலகத்திலே இந்தச் சக்தியைப் பார்க்கிலும் ஒரு மித்திரன் கிடைக்கமாட்டான். ஆதலால் நீ தன்னம்பிக்கை நிரம்பியவனாய் இரு. 4. ஓய்வு கொள்வதா? மகனே! ஒரு நாள் பூராவும் வேலை செய்து விட்டு நீ என்ன நினைக்கிறாய்? இனி ஓய்வு கொள்ளலாமென்று நிம்மதியாகத் தூங்கத் தொடங்குகிறாய். உன் தேகத்திற்கு ஓய்வு வேண்டியதுதான். ஏனென்றால் குனிந்தும் நிமிர்ந்தும் வேலை செய்கிறபோது, உன் நரம்புகள் அதிக தளர்ச்சி பெற்றிருக்கும். அவற்றிற்குச் சற்று ஓய்வு கொடுத்தால்தான், மறுநாள் அவை மறுபடியும் வேலை செய்வ தற்குச் சாத்தியமாகும். ஆகையால் உன் தேகத்திற்கு நீ ஒய்வு கொடுக்க வேண்டியதுதான். ஆனால் மனத்திற்கு ஓய்வு கொடுத்து விடாதே. அஃது ஆபத்து. நாளாவட்டத்தில் அது துருப்பிடித்துப் போகும். அதனால் உனக்கு மட்டும் ஆபத்தில்லை, நீ பிறந்துள்ள சமூகம், நீ வாழ்கிற நாடு எல்லாவற்றிற்குமே ஆபத்துதான். உன்னால் நன்மை ஏற்படாமற் போனாலும் தீமையாவது ஏற்படாமலிருக்க வேண்டாமா? அதிகமாக வேலை செய்வதனால் சீக்கிரத்தில் கிழப்பருவம் அடைந்து விடுவாய் என்றோ அல்லது விரைவிலே யமதேவனுடைய வாயிற் படியிலே போய் நிற்க வேண்டுமென்றோ யாராவது சொன்னால் அந்த வார்த்தையைக் கொஞ்சங்கூட நம்பாதே. உழைப்பினால் எவனாவது சாவானா? உழைப்பினால் களைப்பு ஏற்படலாம். மரணம் ஏற்படுமா? இப்படிச் சொல்வது எந்த மாதிரி யிருக்கிற தென்றால், ஒரு செடி வளர்ந்துகொண்டு வருமானால் அது சீக்கிரத்தில் பட்டுப்போய் விடுமென்று சொல்வதைப் போல் இருக் கிறது. காந்தியடிகள் எத்தனை வயது வரை வாழ்ந்து கொண் டிருந்தார்? ஏறக்குறைய எண்பது வயது வரை. இவற்றுள் இருபத்து நான்கு மணி நேரம்கொண்ட ஒரு நாளில் எத்தனை மணி நேரம் தூங்கினார்? பண்டித மதன மோகன மாளவியா எண்பது வயதுக்கு மேல் வாழ்ந்தாரில்லையா? ஆயினும் இன்னும் அதிகமாக வேலை செய்ய வேண்டுமென்பதற்காக, காயகல்ப சிகிச்சை செய்து கொண்டார். உழைக்க வேண்டுமென்பதிலே எவ்வளவு ஆசை? பெஸண்டம்மையார் எண்பது வயது வரை காற்றாடிபோல் சுற்ற வில்லையா? எவ்வளவு பேச்சு? எழுத்து? எத்தனை மைல்சுற்றுப் பிரயாணம்? இவர்களுக்கெல்லாம் ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு மாறுவதுதான் ஓய்வு. இவர்களால் சும்மாயிருக்க முடியாது. சில சமயங்களில், மேற்பார்வைக்கு இவர்கள் சும்மா யிருப்பது போலத் தோன்றும். ஆனால் இவர்கள் மனம் எங்கெங்கேயோ சுற்றிக் கொண்டிருக்கும்; எத்தனையோ உலகங் களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும். சில பேருக்கு வேலை செய்யாமல் இருக்கவே முடியாது. சாப்பாட்டுக்கு வழி இராது. அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் வேலை செய்ய வேண்டுமென்ற ஆவல் மட்டும் இவர்களை அக்கினிபோல் தகித்துக் கொண்டிருக்கும். மேனாட்டுச் சரித்திரங்களிலிருந்து சில உதாரணங்களை எடுத்துச் சொல்கிறேன், கேள். பதினைந்தாவது நூற்றாண்டில் இத்தலியில் லியானார்டோ- டா-வின்ஷி1 என்ற ஒரு சித்திரக்காரன் இருந்தான். இவனுடைய சித்திரங்கள், உலகத்து அழகுப்பொக்கிஷத்திலே முக்கியமானவை. இவன் பூகோளப் படம் வரைவான்; பிளான் போட்டுக்கொடுப்பான்; கற்பதுமைகள் செய்வான்; வர்ணப்படங்கள் எழுதுவான்; இயந்திரங்களை ஓட்டுவான்; ரசாயன சாதிரி; ஒரு நூலாசிரியன்; ஒரு இஞ்சினீயர்; இன்னும் என்னென்னவோ? இவனுக்குத் தெரியாத விஷயமே கிடையாது. இவனுக்கு எண்பத்தொன்பதாவது வயது நடக்கிறது. அப்பொழுது ஒரு நாள் வாஸாரி2 என்ற நண்பன் இவனைப்போய்ப் பார்த்தான். வின்ஷி என்ன செய்து கொண் டிருந்தான்? பென்சிலும் கையுமாக ஒரு சித்திரம் வரைந்து கொண் டிருந்தான். இதற்குப் பிறகு பத்து வருஷம் வரையில் - அதாவது தொண்ணூற்றொன்பது வயது வரையில் - இவன் வாழ்ந்து கொண்டிருந்தான். மார்ட்டின் லூதர்3 என்பவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறாயா? இவன் ஐரோப்பாவில் கிறிதுவ மதத்தில் சீர்திருத்தத்தை உண்டாக்கினவன். ஜெர்மானியன். மதச் சீர்திருத்தத்தில் இறங்கிய தால் இவனுக்கு ஏற்பட்ட எதிர்ப்புக்கள் சொல்ல முடியாது. ஆனாலும் ஒரு கணங்கூட இவன் சோர்வு கொண்டிருந்தது கிடையாது; ஓய்ந்திருந்ததும் கிடையாது. இவன் பல பாஷைகள் தெரிந்தவன்; தர்க்கவாதி; நாவலன்; அரசியல்வாதி. இவன் காலத்திலே தோன்றிய முக்கிய இயக்கங்கள் அனைத்தும் இவனைச் சுற்றியே இருந்தன. இவன் பைபிளின் பழைய ஆகமத்தையும் புதிய ஆகமத்தையும் மொழி பெயர்த்தான். மதானுஷ்டானத்தில் மனிதர்களுக்குச் சுதந்திரம் வேண்டுமென்பதைப் பற்றிப் பத்திரிகை களுக்கு ஓயாமல் எழுதிக் கொண்டு வந்தான்; துண்டுப் பிரசுரங்கள் கணக்கின்றி வெளியிட்டான். தன்னுடைய கடிதப் போக்குவரத்துக் களைக் கவனிப்பதற்கென்று இவன் இரண்டு காரியதரிசி களை வைத்துக் கொண்டிருந்தான். பதினோரு பாதிரி மடங்களுக்குத் தலைவனாயிருந்து அவற்றின் நிருவாகத்தைக் கவனித்து வந்தான். முப்பத்தைந்து வயதுக்கு மேலே, மூன்று வருஷத்திற்குள் சுமார் முந்நூற்றைம்பது நூல்கள் வரை எழுதி வெளியிட்டான். இந்த நூல்களிலே வரும் சித்திரங்கள் யாவும் இவனாலேயே வரையப் பட்டவை. தவிர, புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளில் இவனுக்கு நன்றாக வாசிக்கத்தெரியும். கொஞ்சம் ஓய்வு கிடைக்கிற போது, கடிகாரங்களைப் பழுது பார்க்க உட்கார்ந்து விடுவான். மனத்திற்குள் ஏதேனும் சஞ்சலம் ஏற்பட்டால், தனியாக உட்கார்ந்து தலைமேல் கை வைத்துக் கொண்டிருக்க மாட்டான். கையிலே கழி எடுத்துக் கொண்டு, தன்னுடைய பாதுகாப்பின் கீழிருக்கும் பன்றி களை மேய்க்க ஆரம்பித்து விடுவான். இவையெல்லாம் போக, பாமர ஜனங்களிடையே கல்வி ஞானத்தைப் பரப்ப வேண்டுமென்று இவன் எடுத்துக்கொண்ட பிரயாசை அபாரம். கிறிதுவ மதத்திலேயே பல கிளைகளைக் கண்ட அநேக பாதிரிமார்கள் இப்படித்தான் உழைத்திருக்கிறார்கள். கால்வின்1 என்ன, ஜான் வெலி2 என்ன, நாக்3 என்ன இவர்களெல்லாரும் மகா உழைப்பாளிகள்! ஒரு சில நூலாசிரியர்கள் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒரு நூல் எழுதுவதென்றால் அது லேசான காரியமல்ல. அதற்கு எவ்வளவோ சிந்தனா சக்தியைச் செலவழிக்க வேண்டி யிருக்கிறது. தவிர, அவை களை அச்சு வாகன மேற்றுவதும் அவர்கள் கடமையாயிருக்கிறது. அப்படி யிருந்தும் ஒவ்வொருவரும் எவ்வளவு நூல்களை எழுதி யிருக்கிறார்கள் என்பதை நினைக்கிற போது நமக்குப் பிரமிப்பு ஏற்படுகிறது. ரிச்சர்ட் பாக்ட்டர்4 என்ற ஒருவன் எத்தனையோ ஜோலி களைக் கவனித்துக்கொண்டு இருந்தான். இவைகளுக்கு இடையில் இவன் நூற்று நாற்பத்தைந்து நூல்களை எழுதி இருக்கிறான். ப்ரின்5 என்ற ஒரு நூலாசிரியன் இருந்தான். இவன் தினந்தோறும் எட்டுப் பக்கங்களுக்குத் தானே விஷயங்கள் எழுதுவான்; தானே அதை அச்சடிப்பான். இவனுடைய எழுத்துக்கு ஒரு காலத்தில் எவ்வளவு மகிமை இருந்தது? டாக்டர் காம்பெல் என்ற ஒரு நூலாசிரியன் இருந்தான். இவனை ஒரு நண்பன் ஒரு நாள் சந்தித்து உங்களுடைய நூல்களில் ஒவ்வொரு பிரதி தேவை என்று சொன்னான். மறுநாள் அந்த நண்பனுடைய வீட்டுக்கு ஒரு வண்டி வந்து நின்றது. அந்த வண்டி நிறைய டாக்டர் காம்பெல்லின் நூல்கள் இருந்தன. கூடவே ஓர் ஆள், எழுபது பவுனுக்கு புதகக் கிரயப் பட்டியையும் நீட்டினான். பெயின் தேசத்தைச் சேர்ந்த கால்டெரான்1 என்ற ஒரு நாடகாசிரியன் நானூறு நாடகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறான். லோபே - டி - வேகா2 என்ற ஒரு பானிஷ் நூலாசிரியன் சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறான்! ஸர் வால்ட்டர் காட்3 என்ற பிரபல ஆங்கில ஆசிரியனைப் பற்றி நீ படித்திருக்கலாமே? ஆங்கில இலக்கிய உலகத்திலே இவனுக்கு ஒரு நிரந்தரமான தானம் உண்டல்லவா? இவன் எவ்வளவு உழைப்பாளி தெரியுமா? இவன் மொத்தம் எழுபத்து நான்கு நாவல்களும், இருபத்தோரு காவியங்களும், முப்பது சரித்திர நூல்களும் எழுதியிருக்கிறான். இவை தவிர க்வார்ட்டர்லி ரெவ்யூ4 என்ற பத்திரிகைக்குத் தொடர்ந்து வியாசங்கள் எழுதிக்கொண்டு வந்தான். இவன் ஒரு நூலாசிரியனாக மட்டும் இல்லை. இவன் வசித்த நகரத்தின் ஷெரிப்பாகவும், செஷன் கோர்ட்டு குமாதா வாகவும், ஓர் அச்சாபீஸில் டைரெக்டராகவும், உலகத்தின் நானா பக்கங்களிலும் உள்ள நண்பர்களிடமிருந்து கிடைக்கும் கடிதங் களுக்குத் தவறாமல் பதிலெழுதக் கூடியவனாகவும் இருந்தான். இது போகட்டும். மானிட சமூகத்தின் நன்மைக்காக எவ்வளவோ அற்புதமான சிருஷ்டிகளைச் செய்த மேதாவிகள் ஓய்வென்பதையே அறியமாட்டார்கள். ரெயில் இஞ்ஜின் ஓடுவ தற்குக் காரணமாயிருந்த ஜேம் வாட்5 என்பவன் தனது தொண்ணூறாவது வயதில் ஜெர்மன் பாஷையைக் கற்றுக்கொண்டு அதில் பெரும் புலவனானான். மின்சார சக்தியின் சிருஷ்டி கர்த்த னான தாம எடிசன்6, சராசரி தினம் பதினெட்டு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்து வந்திருக்கிறான். இவன் புதிதாகக் கண்டு பிடித்தவை சுமார் ஆயிரத்து முந்நூறுக்கு மேற்பட்டவையென்று சொன்னால் நீ ஆச்சரியப் படமாட்டாயா? இந்த உதாரணங்களையெல்லாம் கேட்ட பிறகு, மகனே! நீ ஓய்ந்திருக்கலாமா? 5. சத்தியத்தைச் சொன்னால் நித்தியம் வாழலாம் மகனே! நீ ஓய்ந்திருக்கலாகாது என்று முன்னே நான் சொன்னே னல்லவா? ஓயாமல் உழைப்பதிலே மட்டும் பெருமையில்லை; உண்மையாகவும், கண்ணியமாகவும் உழைக்கவேண்டும். உண்மை தான் கண்ணியம்; கண்ணியந்தான் உண்மை. ஒரு பெரிய மனிதனை நீ எப்படி அளந்து பார்ப்பாய்? அவனுடைய உண்மையான காரியங் களைக் கொண்டு மட்டும் அவனை அளந்து பார்த்தால் போதுமா? உண்மை யென்பது அவனுடைய குணத்தில் ஓர் அமிசம். அவன் உண்மையோடு கண்ணிய முள்ளவனாகவும் இருக்க வேண்டும். உண்மையாயிருப்ப வனிடத்தில் எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை உண்டாகிறது. அவன் கீழே வேலை செய்கிறவர்களுக்கு ஒரு திருப்தியும் சந்தோஷமும் உண்டாகின்றன. உண்மையுள்ளவன்தான் சுதந்திரமா யிருக்கமுடியும். ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்க வேண்டுவது இந்த உண்மைதான். நீ ஒரு வேடிக்கை பார்த்திருக்கிறாயா இந்த உலகத்தில்? பொய் சொல்கிறவன் கூட பொய்யை வெறுக்கிறான்! தான் சொல்வ தெல்லாம் பொய்யென்று அவனுக்குத் தெரியும். ஆனாலும் அவன் என்ன சொல்கிறான்? தான் நிஜத்தைத் தவிர வேறொன்றும் சொல்வதில்லை யென்று சொல்கிறான். அப்படிப் பொய் சொல்வது கோழைத்தனம் என்று அவன் கொஞ்சங் கூட சிந்திப்பதில்லை. தன் கோழைத்தனத்தை அவன் தன் பொய் வார்த்தைகளினால் மூடப் பார்க்கிறான். தற்காலத்தில், சில சந்தர்ப்பங்களில் பொய் சொல்வது அவசிய மாகவும் நாகரிகமாகவும் கருதப்படுகிறது. நமது அன்றாட விவகாரங் களை நடத்திக் கொண்டு செல்ல, பொய் சொல்வது அவசியமாயிருக்கிற தென்று சிலர் கருதுகின்றனர். என்ன மூடத்தனம்! ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய்; அதை மறைக்க மற்றொரு பொய்; இப்படிப் பொய்க் களஞ்சியமாகப் போய்க் கொண்டு வருவதை நாம் எவ்வளவு பெருமையாகக் கருதுகிறோம்! சிலர் நினைக்கிறார்கள், தங்கள் தேசத்திற்காகப் பொய் சொல்வதனால் தவறில்லை யென்று. ஆனால் எவனும், அவன் உயர்ந்த லட்சிய புருஷனாயிருக்கும் பட்சத்தில் தன் உயிரை விட சத்தியத்தையே பெரிதென மதித்தல் வேண்டும். துக்க நிவாரணத் திற்கு மார்க்கமென்ன? சத்தியந்தான் என்கிறான் ஒரு கிரேக்க ஞானி. ஒரு மனிதன் மட்டுமல்ல, தேச முழுவதும் துன்பத்தினின்று விடுதலையடைய வேண்டுமானால், அது சத்திய மார்க்கத்தையே அனுஷ்டிக்க வேண்டும். இதனால் கைமேல் பலன் கிட்டாமலிருக் கலாம். ஆனால், நிரந்தரமான நன்மையை உலகத்தின ரெல்லாரும் வியந்து பாராட்டப்படக் கூடிய விதமாக அடைவ தோடு, பிறருக்கும் அதை உபயோகப் படுத்தலாம் என்பது நமக்கு ஆரம்பத்தில் தெரிவதில்லை. மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரக இயக்கம் இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். தற்கால வியாபாரத்திலே, கைத்தொழிலிலே பொய் எவ்வளவு கலக்கப்படுகிற தென்பதை நீ நன்றாக அறிந்திருக்கிறாயல்லவா? துணிகளை அளந்து காட்டுவதிலே எவ்வளவு பொய்? பொருள்களை விற்பனை செய்வதிலே எவ்வளவு பொய்? வியாபாரி, மட்டச் சரக்குகளைக் கொடுத்து, உயர்ந்த சரக்குகளின் விலையைப் பெற்றுப் பணக்கார னாக எவ்வளவு ஆர்வமுள்ளவனா யிருக்கிறான்? பார்வைக்குப் பளபளப்பாயிருப்பதற்காக ஒரு பொருளை உற்பத்தி செய்கிற போது எவ்வளவு போலிச் சரக்குகளைச் சேர்க்கிறார்கள்? இவை பகட்டான புட்டிகளிலோ, நல்ல அட்டைப் பெட்டிகளிலோ நமது கண் முன்னர். கொண்டுவைக்கப்படுகின்றன. வாயாலே கொட்டுகிற வார்த்தைகளுக்கு மட்டுந்தான் பொய்யென்று சொல்வதோ என்று நீ கேட்கலாம். அப்படியல்ல; பொய்யான செய்கைகளுமுண்டு. எல்லாக் கெட்ட செய்கைகளும் பொய்ச் செய்கைகள்தான். நீ செய்கிற வேலைக்குக் கூலியோ சம்பளமோ பெறுகிறாயல்லவா? அந்தக் கூலிக்கோ, சம்பளத்திற்கோ தகுந்தபடி நீ வேலை செய்ய வேண்டாமா? அந்த வேலை செய்யாமற் போனால் அது பொய்யல்லவா? இவ்வளவு செய்தால் போது மென்ற திருப்தியை, அந்தப் பொய் வேலையின் மீது நீ மெருகிட லாம். ஆனால் கொஞ்ச காலத்தில் அந்த மெருகு போனதும், உன்னுடைய பொய் வேலை நன்றாகப் பிரகாசித்துவிடும். அந்தப் பொய் வேலைக்கு நீ பொறுப்பு ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும். ஒரு கண்ட்ராக்ட்டர் இருந்தான். அவன் ஓர் அணை கட்டிக் கொடுத்தான். ஆனால் துரதிருஷ்ட வசமாக அது கட்டி முடிந்த சில நாட்களுக்குள் இடிந்து விழுந்து விட்டது. இதனால் உண்டான சேதம் நாலரை லட்சம் ரூபாய். இதைப் பரிசீலனை செய்த மேலதிகாரிகள், கண்ட்ராக்ட்டர் மேல் ஒரு தவறு மில்லை யென்று சொன்னார்கள். ஆனால் மேற்படி கண்ட்ராக்ட்டர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த அணையைப்போட்டு உபயோகப்படுத்தக் கூடிய நிலையில் கொடுப்பதாகவே பேச்சென்றும். ஆகையால் தன் சொந்தச் செலவில் அதைக் கட்டித் தருவதாகவும் கூறி மீண்டும் அந்த அணையைப் புதுப்பித்துக் கட்டிக் கொடுத்தான். இவனல்லவோ சத்தியவாதி! நகரங்களிலே வசிக்கிற இளைஞர்கள் கெடுவதற்கு அநேக மார்க்கங் களிருக்கின்றன. இவர்கள் பெரிய பணக்காரர்களையும் அவர்களுடைய ஆடம்பர வாழ்க்கையையும் பார்க்கிறார்கள். இந்த ஆடம்பர வாழ்க்கையை இவர்கள் நடத்துவதற்கு என்ன காரணம் என்பதைச் சிறிது சிந்தித்துப் பார்க்கிறார்கள். வியாபாரத்திலும் கைத் தொழிலிலும் சம்பாதித்ததாக இவர்களுக்குப் புலப்படுகிறது. உடனே தாங்களும் ஏன் கொஞ்சம் முதல் போட்டு ஒரு வியாபாரத்தைத் தொடங்கி, நிறைய பணஞ் சம்பாதித்து ஆடம்பரமாக வாழக் கூடாதென்று யோசிக்கிறார்கள். அவ்வளவுதான், வியாபாரத்தை ஆரம்பிப்பதென்றால் அதற்குச் சிறிது அனுபவம் தேவையில்லையா? ஒன்றுமில்லாமல் ஆரம்பித்தால் அது நஷ்டத்தில்தானே கொண்டு விடும் வெகு சீக்கிரத்தில் இவர்கள் மனச்சோர்வு கொண்டு விடுகி றார்கள். சில சமயங்களில் ஆரம்பத்தில் இவர்களுக்கு லாபங் கிடைக்கிறது. இதன் மேல் பணத்தாசை பெருகி, அதிகமான வியாபாரம் செய்ய ஆரம்பித்துக் கடைசியில் பெரு நஷ்டமடை கிறார்கள். சில சமயங்களில் பணமானது, மனிதனைக் கீழே இழுத்துக் கொண்டு சென்று விடுகிறது. பணத்தினால் எதையும் சாதித்து விடலாமென்று இவன் கருதுகிறான். இந்தத் தைரியம் இவனைப் பல பொய்ச் செய்கைகளிலும் இறங்கச் செய்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன வென்று நீ நினைக்கிறாய்? மனிதனுடைய சுய நலந்தான். இந்த சுயநலக்காரர்கள், பிறருடைய துயரத்திலே வாழக் கொஞ்சங் கூட தயங்கமாட்டார்கள். தற்கால நாகரிகமானது நம்மை எங்கே கொண்டு போய் விட்டிருக் கிறது? இயற்கை வாழ்வு, எளிய வாழ்வு வாழ நமக்குத் தெரிய வில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் சில சில தேவைகள் உண்டு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அந்தத் தேவைகளை அடைய அவன் முயற்சி செய்ய வேண்டியதும் அவசியந்தான். ஆனால் பிறர் வயிற்றிலடித்துத் தான் மட்டும் வாழ வேண்டுமென்று நினைத்தல் சரியாகுமோ? ஏராளமான பொருள்களை ஒருவன் வைத்துக் கொண்டிருந்ததனாலேயே அவன் பெரிய மனிதனாகி விடுவானா? அளவுக்கு மிஞ்சி எவனொருவன் தன் முன்னர் ஆகாரத்தைப் பரப்பி வைத்துக் கொண்டிருக்கிறானோ, அவனைக் கண்டு தேவ தூதர்கள் நடுங்கிப் போகிறார்கள் என்கிறான் ஒரு ஞானி. நீ உனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள். ஆனால் அளவுக்கு அதிகமாக எதையும் உன்னுடைமையாக வைத்துக்கொள்ளாதே. ஏழை எளியவர்களிடத்தில்தான் இந்த விசாலமான மனப் பான்மையையும், நாணயத் தன்மையையும் நீ சர்வ சாதாரணமாகக் காணலாம். ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன் கேள். சுமார் இருநூறு வருஷங்களுக்கு முன்னர் பிரான்ஸுக்கும் ஜெர்மனிக்கும் சண்டை நடைபெற்றது. அப்பொழுது ஜெர்மானியப்படையினர் ஒரு கிராமத்தருகில் வந்து தங்கள் ராணுவத்திற்கு வேண்டிய ஆகார வகைகளைத் தேடிக் கொண்டிருந்தனர். சேனாதிபதி, ஒரு வயோதிகக் குடியானவனுடைய குடிசைக்குள் நுழைந்து எங்கள் படைக்கு வேண்டிய ஆகாரத்தை இந்த ஊரார் கொடுக்க வேண்டும் என்று கடுமையான குரலில் கேட்டான். உடனே அந்தக் கிழக் குடியானவன், அருகிலுள்ள ஒரு நிலத்தைக் கொண்டு காட்டி இதிலுள்ள கதிர்களை யெல்லாம் நீங்கள் அறுத்து எடுத்துக் கொண்டு போகலாம் என்றான். பரம சந்தோஷமடைந்தான் சேனாதிபதி. ஏழையின் விசால இருதயத்தைப் பார்த்தாயா? மகனே! இதுதான் உன் லட்சியமாயிருக்க வேண்டும். ஓயாமல் உழை. ஆனால் சத்தியமாகவும் கண்ணியமாகவும் உழைப்பாயாக! 6. உன் மனச்சாட்சியை விற்று விடாதே! மகனே! ஓயாமல் உழைப்பதென்று உறுதி கொண்டு விட்டா யல்லவா? அப்படியானால் இன்னொரு முக்கியமான விஷயத்தை உனக்குச் சொல்கிறேன், கேள். இந்த உலகத்திலே சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர் களைச் சுலபமாக நீ விலை கொடுத்து வாங்கிவிடலாம். வாங்கி விடலா மென்றால், அவர்களுக்குப் பணங் கொடுத்து அவர்களை அடிமையாகக் கொள்ளலாம் என்ற அர்த்தத்தில் நான் சொல்ல வில்லை. மனிதர்களை வாங்கிவிடுவதென்றால் அவர்களுடைய மனச்சாட்சியை, அவர் களுடைய மனிதத் தன்மையை வாங்கிவிடுவ தென்பது அர்த்தம். செலவுக்குக் கொஞ்சம் பணமும், குடிக்கக் கொஞ்சம் மதுபானமும் கொடுத்தால், இவற்றிற்காகத் தங்கள் தேகத்தையும் ஆத்மாவையும் விற்று விடுகிற எத்தனையோ பேர்வழிகள் உலகத்தில் இருக்கிறார் களல்லவா? சாதாரணமாகத் தேர்தல்கள் நடக்கின்றன. அது சட்டசபைத் தேர்தலாகட்டும், ஜில்லா போர்ட் தேர்தலாகட்டும், கிராம சபைத் தேர்தலாகட்டும், எந்தத் தேர்தலிலும் இந்த மாதிரியான கழிசறைகள் எத்தனை பேரை நாம் காண்கிறோம்? இப்படியெல்லாம் செய்து அரிதில் சம்பாதித்த சுதந்திரத்தை நாம் நீண்ட நாள் வைத்துக் காப்பாற்ற முடியுமா? மகாத்மா காந்தி தமது ஹரிஜன் பத்திரிகையில் இதைப்பற்றி எவ்வளவு பலமாகக் கண்டித்திருக்கிறார்? யாரொருவர் பணத்திற் காகத் தம்மை விற்று விடுகிறாரோ அவர் ஒரு மனிதனுக்கு மட்டும் அடிமையாகப் போவதில்லை; பணத்திற்கும் அயோக்கியத்தனத் திற்கும் அடிமையாகி விடுகிறார். இவர்களைப் பணங் கொடுத்து வாங்குகிறவர்களும் அயோக்கியர்கள்தான்; ஒழுக்க வீனர்கள்தான். இதில் சந்தேகமோ ஆட்சேபமோ ஒன்றும் இருக்க வேண்டிய தில்லை. சுதந்திரம் என்று சொன்னால் அதில் கூட எத்தனையோ ஹம்பக்குகள் இருக்கின்றன இந்த உலகத்தில். ஒரு சமயம் ஓர் அரசியல்வாதி மேடை மீதேறிப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தான். பிரசங்கம் செய்து கொண்டிருக்கிற போது நடுவில் நான் சுதந்திர மண்ணின் மீது நிற்கிறேன் என்றான். கூட்டத்திலே செருப்புத் தைக்கிற சக்கிலியன் ஒருவன் இருந்தான். அவனுக்கு என்ன தோன்றியதோ என்னவோ, திடீரென்று இல்லை; நீ சுதந்திர மண்ணின் மீது நிற்கவில்லை. நான் தைத்துக் கொடுத்த செருப்பின் மீது நின்று கொண்டிருக்கிறாய். அதற்கு இன்னும் எனக்குக் கூலிக் கூடக் கொடுக்க வில்லையே என்றான். ஜனங்களுடைய - அதாவது சாதாரண ஜனங்களுடைய - சுபாவ மென்னவென்றால் பெரும்பாலோர் சொல்கிற வழி போக வேண்டியது தான்; அவர்களோடு சேர்ந்து கூச்சல் போட வேண்டி யதுதான். இதைத் தான் பெரும்பான்மையோர் ஆட்சி யென்றும் ஜனநாயக ஆட்சியென்றும் பிரமாதமாகப் பேசுகிறார்கள் அரசியல் வாதிகள். ஷில்லர்1 என்ற ஓர் அறிஞன் என்ன கூறுகிறான் தெரியுமா? மெஜாரிட்டி! அப்படி யென்றால் என்ன அர்த்தம்? உலகத்திலே அறிவு என்பது ஒரு சிலரிடத்தில்தான் தங்கி நிற்கிறது. ஓட்டுகளை எண்ணக் கூடாது; நிறுக்க வேண்டும். எந்த ராஜ்யத்தில் எண்ணிக்கைக்கு அதிக மகத்துவம் ஏற்பட்டிருக்கிறதோ, அந்த இடத்தில் அறியாமைக்கு அதிக செல்வாக்கு இருக்கும். அப்படிப் பட்ட ராஜ்யம் சீக்கிரத்தில் அழிவை நோக்கி செல்லும். இந்த வாக்கியங்களிலே எவ்வளவு உண்மை இருக்கிறது? மேலே சொன்ன படி உலகத்தில் பெரும் பான்மையான ஜனங்கள் அறியாமையில் தானே மூழ்கியிருக்கிறார்கள்? இந்த ஜனங்கள், ஒழுக்கவீனமுள்ள ஆனால் பணம் நிறைந்த ஜனங்கள் வசம் சிக்கிக்கொண்டு அவர் களால் உபயோகப் படுத்தப் பெறும் கருவிகளாகி விடுகிறார்கள். நீ பெரியவனான பிறகு, இந்த உலகத்திற்குள் பிரவேசித்துப் பார்த்தால் அதாவது நீ ஒரு தொழிலை மேற்கொண்டாலும் அல்லது ஓர் உத்தியோகத்தை ஏற்றுக் கொண்டாலும் அப்பொழுது தெரியும் உனக்கு இந்த உலகத்தின் ரீதி? எங்குப் பார்த்தாலும் லஞ்சப் பேய் நடமாடுவதை நீ பார்க்கலாம். லஞ்ச உணர்ச்சி எல்லாரிடத் திலும் இருப்பதை நீ காணலாம். மனிதர்கள் சுய மரியாதையுள்ள வர்களாகவும், மனித உணர்ச்சி நிரம்பியவர் களாகவும் இருந்தால், இந்த லஞ்சம் முதலிய விஷயங்களில் ஈடுபடவே மாட்டார்கள். இதனால்தான், அரசாங்க உத்தியோக சாலை களிலே சில சாமான்கள் எவ்வளவு கேவலமானவையாயிருந்தாலும் நல்ல சாமான்களாகவே அனுமதிக்கப்பட்டு உபயோகத்திற்கு வந்து விடுகின்றன. ராணுவத் திற்குச் சப்ளை செய்யப்படுகிற பூட் முதலியவை களைப் பார். சில சமயங்களில் இந்த பூட்கள், அல்லது உடைகள், வெகு சீக்கிரத்தில் பழுதுபட்டுப் போய் விடுகின்றன. ராணுவத்தினருக்குக் கிடைக்கிற ஆகார வகைகளில் எவ்வளவோ கோளாறுகள்! இவைகளுக் கெல்லாம் என்ன காரணமென்று ஊகிக்கிறாய்? லஞ்சப் பேயின் நடமாட்டந்தான். இவைகளைப் பற்றி நான் விதரித்துக் கொண்டு போக விரும்பவில்லை. நாகரிகத்தில் தலை சிறந்து நிற்கிறதென்று சொல்லப்படுகிற மேனாடுகளிலே இந்த லஞ்சம் பகிரங்கமாகவே உலவிக்கொண்டிருக் கிறது. நீ எந்த ஹோட்டலுக்குச் சென்று, எவ்வளவு சொற்பத் தொகைக்கு ஆகாரம் அருந்தியபோதிலும், ஹோட்டல் பரிசாரக னுக்கு ஒரு சிறு தொகை கொடுத்தாக வேண்டும். சில இடங்களில், நூற்றுக்கு இத்தனை சதவிகிதம் என்று திட்டம் கூடப் போட்டிருக் கிறார்கள். இதற்கு டிப்1 என்று பெயர். இதில் ரகசியமில்லை; மரியாதைக் குறைவுமில்லை. எல்லாம் பகிரங்கமாகவே நடைபெறு கின்றன. இதனை லஞ்சம் என்று சொல்லாது வேறு என்ன பெயர் சொல்லியழைப்பது? அரசியல் விஷயங்களிலே நீ எடுத்துக் கொண்டு பார்த்தாலும் சரிதான்; இந்த லஞ்சப் பேய் எத்தனையோ உருவங்களாக உலவு கிறது! அரசாங்கம், ஜனநாயகமாயிருக்கட்டும், முடியரசாயிருக் கட்டும், எந்தவிதமாக இருந்த போதிலும் அதைப்பற்றி யாருமே கவலைப்படுவ தில்லை ஆனால் இந்த அரசாங்கத்தை நிருவாகம் செய்கிற மனிதர்களைப் பொறுத்திருக்கிறது எல்லாம். அரசியல் அதிகாரத்தைத் தன்னலத்திற்காக உபயோகித்துக் கொண்டால் அஃது என்றும் ஆபத்துதான். ஆனால் அதைப் புத்திசாலித்தன மாகவும், பிறர் நலத்திற்காகவும் உபயோகப்படுத்தினால் அதில் எத்தனையோ அனுகூலங்கள் இருக்கின்றன. அரசாங்க நிருவாகத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறவர்களிடத்திலேயே தன்னலம் புகுந்து விடுமானால் அந்தத் தேசத்திற்கு என்றும் ஆபத்துதான். மேலிருந்து கீழ்வரையில் இந்தச் சுயநலம் சுலபமாக வும் பரவுகிறது. கடைசியில் ஜனங்களின் அன்றாட வாழ்க்கையில் கூட சுயநலப் போட்டி ஏற்பட்டுவிடத் தொடங்குகிறது. கொள்கை, லட்சியம் எல்லாம் காற்றிலே பறந்து போய் விடுகின்றன. ஜனங் களுக்குத் தன்னம்பிக்கையும் போய் விடுகிறது. எதற்கும் பணம், பட்டம், பதவி இவைதான் முக்கியத்துவம் பெற்று விடுகின்றன. இதற்கெல்லாம் காரணம் என்ன வென்று நினைக் கிறாய் மகனே! எல்லாம் லஞ்சம் என்கிற ஒழுக்க வீனந்தான். ஆனால் எந்த காலத்திலும், எந்த நாட்டிலும் இந்த மாதிரி யான ஒழுக்கவீனங்களினால் பாதிக்கப்படாமல் தங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிற மகா புருஷர்கள் இருந்திருக் கிறார்கள். ஒருவன் பரம தரித்திரனாயிருக்கலாம். ஆனால் அவன் தன் கடமையை நன்கு உணர்கிறான். இதனால் தன்னைப் பணத்திற் காக விற்றுக் கொள்ள அவன் சித்தமாயிருப்பதில்லை. அமெரிக்கா வின் வட பாகத்தில் சில இந்திய ஜாதியார் இருக்கின்றனர். இவர்கள் மிகப் புராதன ஜாதியின ரென்றும் அநாகரிகர்களென்றும் சொல்லப்படுகிறார்கள். ஆனால் இவர்களிலே முக்கியமான பழக்க மொன்றுண்டு. அதாவது வீர புருஷனாயுள்ளவன், பணத்தின் மீது ஆசை வைக்கக் கூடாது. பணத்தைச் சேமித்து வைக்க வேண்டு மென்ற எண்ணமும் இவனுக்கு இருக்கக்கூடாது. அப்படிப் பட்டவன்தான் உண்மையான வீரன் என்று மதிக்கப்படுகிறான். முற்காலத்தில் கிரேக்க நாகரிகம், ரோம நாகரிகம் முதலியன உச்ச நிலையில் இருந்தபோது, இந்த நாகரிகங்களை உச்ச நிலைக்குக் கொண்டு வந்தவர்களில் பெரும்பான்மையோர் பரம ஏழைகளாகத் தான் இருந்தார்கள். புராதன கிரேக்க நாட்டில் அரிட்டைடீ1 என்ற ஒருவன் இருந்தான். இவனுக்கு நியாய புருஷன் என்று பட்டம் இருந்து கொண்டிருந்தது. இவனுடைய தன்னலமற்ற குணத்தையும், நியாய புத்தியையும் கண்டு மெச்சாதவர் யார்? இவன் பல யுத்த களங் களிலே போர்புரிந்து வெற்றி மாலை சூடி யிருக்கிறான். இவன் அரசாங்க சேவையில் உயர்தர உத்தியோகங்களை வகித்து அதிக மதிப்புடன் வாழ்ந்தான். ஆனால் இவன் இறந்தபோது பரம ஏழை யாகவே இறந்து போனான். இவனைப் பொருள் கொடுத்து வாங்க எத்தனையோ பேர் பிரயத்தனப்பட்டார்கள். கடமையினின்று பிறழ்ந்து போகுமாறு என்னென்னவோ முயற்சி களெல்லாம் செய்யப் பட்டன. ஆனால் இவன் ஒன்றுக்கும் அசைய வில்லை. ஒரு சமயம், ஆத்தென் நகரத்தில் ஒரு நாடகம் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு நடிகன், ஒழுக்கத்தின் சிறப்பைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். ஜனங்களெல்லாரும், நாடகம் பார்க்க வந்திருந்த அரிட்டைடீஸைப் பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர நடிகனுடைய நடிப்பைக் கவனிக்கவில்லை. போஷியோன்2 என்ற ஒரு ராணுவ தளகர்த்தன் இருந்தான். கிரேக்க வீரர்களிலே இவன் மிகச் சிறந்தவன். இவன் ஒரு தீர்க்கதரிசி என்று கூட ஜனங்கள் போற்றி வந்தார்கள். இவன் நல்லது இது, தீயது இது என்பதை நிர்த்தாட்சண்யமாகக் கண்டித்து வருவான். மகா அலெக்ஸாந்தர் என்பவன் ஒரு சமயம் இந்தப் போஷி யோனைத் தன் பக்கம் இழுத்துக் கொள்ளப் பார்த்தான்; பணங் கொடுத்துப் பார்த்தான். ஆசியா கண்டத்திலுள்ள நான்கு பெரிய நகரங்களை உனக்கே கொடுத்து விடுகிறேன் என்று இச்சை காட்டினான். ஆனால் இவைகளுக்கெல்லாம் போஷியோன் என்ன பதில் கூறினான் தெரியுமா? அலெக்ஸாந்தர் என்னை நேசிப்பது உண்மையாக இருந்தால், என்னுடைய ஒழுக்கத்தை என்னிடத் திலேயே விட்டு விடட்டும் என்றான். இதைக்கண்டு அலெக் ஸாந்தர் திடுக்கிட்டுப் போனான். டெமாத்தனீ1 என்ற ஒரு கிரேக்க நாவலன் இருந்தான். இவனுடைய நாவன்மை இன்றைய வரையில்கூடப் புகழப்படுகிறது. ஒரு சமயம், மேலே கூறிய மகா அலெக்ஸாந்தரின் ஆளொருவன் ஆத்தென் நகருக்கு வந்தான். அநேக புலவர்களும், நாவலர்களும் அலெக்ஸாந்தரின் பணத்திற்கு ஆசைப்பட்டு, எந்த விதமாகப் பணஞ் சம்பாதிக்கலாமென்று ஆவலோடு காத்திருந்தனர். அவர் களுள் டெமாத்தனீஸும் ஒருவன். இவன் அலெக்ஸாந்தரின் ஆள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அவனைப் பேட்டி கண்டான். அந்த விடுதியில் அலெக்ஸாந்தரினால் அனுப்பப் பெற்றிருந்த அநேக விலையுயர்ந்த கிண்ணங்கள் இருந்தன. டெமாத்தனீஸுக்கு அவற்றின் மீது கண் விழுந்து விட்டது. இதை அலெக்ஸாந்தரின் ஆள் அறிந்து கொண்டு விட்டான். அன்று இரவு இந்தக் கோப்பை களையும், சுமார் இருபது பொன் நாணயங்களையும் டெமாத்தனீ பெற்றான். அவ்வளவுதான்! அலெக்ஸாந்தரின் ஆளாகி விட்டான். இவனுடைய நாவன்மையெல்லாம் எதற்குப் பயன்பட்டது? கடைசி யில் இவனுடைய கதி என்னவாயிற்றுத் தெரியுமா? அவமானங்கள் பல ஏற்பட்டு விஷமுண்டு இறந்து போனான். 7. சொல்லாதே - செய் மகனே! சொல்லாதே; செய். இன்னின்ன மாதிரி நடந்து கொள்ள வேண்டுமென்று திட்டங்கள் போட்டுக்காட்டாதே. அதற்கு முன்னர் நீ நடந்து காட்டு. நீ நடந்து கொள்கிற மாதிரியைப் பார்த்துத்தான் பிறர் நடக்க வேண்டுமே தவிர, நீ சொல்கிற மாதிரியைப் பின்பற்றியல்ல. சொல்வது எளிது; அதைப் போல் செய்வது அரிது என்ற பழமொழியை அடிக்கடி எடுத்துச் சொல்லிக் கொண்டிராதே. அந்தப் பழமொழியைச் சொல்லாமலே அதன்படி நடந்து காட்டுவது சிலாக்கியமல்லவா? உலகத்தில் எத்தனையோ பேர் வந்து விட்டுப் போய் விடுகிறார்கள். ஆனால் எத்தனை பேர் தங்கள் பெயரை நிரந்தரமாக வைத்துப் போகிறார்கள் கவனித்தாயா? அது போல் உன்னுடைய பெயரையும் நீ வைத்து விட்டுப் போக வேண்டாமா? சொல்கிறவன் நிகழ்காலத்திலே மட்டுந்தான் வாழ்கிறான். ஆனால் செய்கிறவன், எதிர்காலத்திலும் தன் வாழ்க்கையை திரப்படுத்திக் கொண்டு விடுகிறான். மகாத்மா காந்தி போன்றவர்களை ஏன் உலகமெல்லாம் புகழ்கிறது? இவர்களெல்லாரும் செய்கிறபடி சொல்கிறவர்கள். சொல்கிறபடி செய்வதைவிட, செய்கிறபடி சொல்வது மிகவும் கடினம். கஷ்ட சாத்திய மான இந்தத் துறையில் இவர்கள் லாவக மாகச் செல்வதனால்தான் இவர்களுக்கு உலகப் பிரசித்தி ஏற்பட்டிருக்கிறது. மேலே கூறப்பட்டவர்கள் எப்பொழுதும் உழைத்துக் கொண் டிருக்கிறார்கள். அந்த உழைப்பிலேதான் இவர்களுடைய வாழ் வெல்லாம் இருக்கிறது. அதிலேதான் இவர்கள் இன்பத்தைக் காண்கிறார்கள். உழைப்பின் பெருமையை இவர்கள் நன்கு உணர்ந்து கொண்டிருக் கிறார்கள். ஏனென்றால், மனிதனிடத்திலே யுள்ள மனிதத் தன்மையை வளர்ச்சி பெறச் செய்வது இந்த உழைப்புத்தான் என்ற சூட்சுமத்தை இவர்கள் நன்கு உணர்ந்திருக் கிறார்கள். உழைப்பதிலே பெருமை சிறுமையோ, ஏற்றத் தாழ்வோ ஒன்றுமில்லை. சிலர் கையால் வேலை செய்கிறார்கள்; சிலர் கண்ணால் வேலை செய்கிறார்கள்; சிலர் அறிவினாலும் இதயத்தி னாலும் வேலை செய்கிறார்கள். இவர்களனைவருடைய உழைப்பும், ஒரு சமூகத்திற்கோ ஒரு தேசத்திற்கோ தேவையாக இருக்கிறது. இந்த உழைப்பு ஆரம்பத்தில் கடுமையானதாகவும் அல்லது பலனில்லாததாகவும் இருக்கும். ஆனால் இதில் பெருமையும் புகழும் நிறைந்திருக்கின்றன வல்லவா? ஒருவரும் ஒரு வேலையும் செய்யாமலே இந்த உலகத்தில் வாழ்ந்து விடலா மென்று, தேவ லோகத்திலிருந்து ஓர் உத்தரவு இந்தப் பூலோகத்தில் வந்து விழுந்து விட்டதாகக் கற்பனை செய்து பார். ஒரு பிராணியாவது வாழ்ந்து கொண்டிருக்குமா? அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அதனிடத்தில் ஒரு ஜீவகளை அல்லது சத்து இருக்குமா? உழைப் பில்லாமல் சோம்பேறித் தனமாயிருப்பது சாபக் கேடல்லவோ? மகா அலெக்ஸாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தானல்லவா கி.மு. நான்காவது நூற்றாண்டில்? அப்பொழுது பாரசீகர் களை ஜெயித்து விட்டு இந்தியாவை நோக்கி வருகிறபோது, பாரசீகர்கள், ஆடம்பர வாழ்க்கையிலே உள்ள அடிமைத் தனத்தைத்தான் உணர்ந்திருக் கிறார்களே தவிர, கஷ்டப்பட்டு வேலை செய்வதிலேயுள்ள சுதந்திரத்தை அறிந்து கொள்ளவில்லை என்று கூறினான். எவ்வளவு அர்த்த புஷ்டியுள்ள வாக்கியம் பார்த்தாயா? க்ஷத்திரிய சிகாமணியாகிய ராஜபுதனத்திலே யாண்ட மகாராணா பிரதாப் சிங்கைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறா யல்லவா? இவன், அக்பருக்கு அடிமைப்பட்டு ஆடம்பர வாழ்வை நடத்துவதைவிட, காட்டிலே மேட்டிலே வேளா வேளையில் அன்ன ஆகாரமில்லாமல் கூட இருபத்தைந்து வருஷகாலம் திரிந்து கொண் டிருப்பதிலேயே சுதந்திரத்தைக் கண்டான். இந்த இருபத்தைந்து வருஷகாலமும் இவன் சும்மாவாகவா இருந்தான்? தனது தேசம் சுதந்திரம் பெறுவதற்கு எவ்வளவு ஏற்பாடுகள் செய்தான்? எத்தனை பேருடைய விருப்பு வெறுப்புக்களை ஏற்றுக் கொண்டான்? தன் குடும்பத்தினர் படுகிற எத்தனையோ கஷ்டங்களை யெல்லாம் தன் கண்ணீரில் மறைத்துக்கொண்டு விட்டானல்லவா? ஆனால் இவ்வளவு கஷ்டங்கள் பட்டும் நாம் சுதந்திரமா யிருக்கிறோ மென்பதிலே இவன் எவ்வளவு திருப்தி கொண்டான்? எவ்வளவு பெருமை அடைந்தான்? இவனல்லவோ கர்ம வீரன்? பாரத தேசத்தின் கடைசி மூச்சு ஓடிக்கொண்டிருக்கிற வரையில் இவன் புகழ் பாடப்பட்டு வருமல்லவா? ஸெவீர1 என்ற ஒரு ரோம சக்ரவர்த்தி ஐரோப்பாவில் ஒரு காலத்தில் ஆண்டு கொண்டிருந்தான். அவன் மரணப் படுக்கையில் கிடந்தான். அப்பொழுது அவன் என்ன கூறினான்? நாம் வேலை செய்ய வேண்டும் என்றான் அப்பொழுது கூட! ரோம ராஜ்யம் செழிப்புற்ற நிலையிலிருந்த போது, யுத்த களத்திலிருந்து திரும்பி வரும் போர் வீரர்கள், ஓய்வு எடுத்துக் கொள்ளாமல், கலப்பையைக் கையிலே பிடிப்பார்கள்; நிலத்தைச் சாகுபடி செய்வார்கள். என்ன உழைப்பு? ரோம ஏகாதிபத்தியம் உன்னத திதியி லிருந்த தென்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? 8. முயற்சியைக் கைவிடாதே மகனே! சொல்லாதே செய் என்று சொன்னேன். செய்வதிலே கூட ஒழுங்கு வேண்டும்; அதில் உன்னுடைய சொந்த முயற்சி, சொந்த உழைப்பு கலந்திருக்க வேண்டும். பிறர் செய்வதிலே திருப்தி யடைந்து, அதனையே நீ செய்ததாகக்கொண்டு விட்டாயானால் அது பெரிய ஆபத்தல்லவா? உன்னிடத்திலே பிறருக்கு எப்படி மதிப்பு இருக்கும்? உன்னிடத்தில் செல்வம் இருக்கலாம்; அழகு இருக்கலாம்; பெரிய அந்தது உனக்கு ஏற்பட்டிருக்கலாம். அவை களுக்காக வேண்டுமானால் யாரேனும் உன்னெதிரே பல்லை இளித்துக் கொண்டு மரியாதை காட்டு வதாக நடிக்கலாமே தவிர, மனப்பூர்வமாக உன்னிடத்தில் யாரும் மதிப்பு வைக்கமாட்டார்கள். உன்னுடைய முயற்சியிலே, உன்னுடைய திறமையிலேதான் நீ வாழ வேண்டுமே தவிர, மற்றவற்றைக் கொண்டு மட்டும் இந்த உலகத் திலே வாழ்கிறா யென்று நீ கருதுவது வெறும் போலித் தனந்தான். நீ செய்கிற செயல்களிலே, எத்தனையோ இடையூறுகள் ஏற்படலாம். நேற்றுவரை உன்னிடம் பரம விசுவாசத்துடன் நடந்து கொண்டு வந்தவர்கள் இன்று போர் முகத்துச் சத்துருக்கள் மாதிரி ஆகி விடலாம். உன் குடும்பத்திலே, நீ எதிர்பாராத சங்கடங்களெல் லாம் எதிர்ப் படலாம். ஆனாலும் மனச்சோர்வு கொள்ளாதே. உன் காரியந்தான் உனக்குப் பிரதானம். நீ எண்ணி யிருக்கிற லட்சியத்தை யடைந்து விட்டா யானால், அப்படி லட்சியத்தை அடைந்து விட்டோம் என்ற திருப்தி யொன்றே, நீ அனுபவித்த பழைய கஷ்டங்களெல்லாம் தாமாக மறைந்து போகும்படி செய்யும். மலையேறிச் செல்கிறாய். கால் வலிக்கிறது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது. ஆயினும் கீழே இறங்கி விடுகிறாயா? இல்லையே. எப்படியாவது சிரமப்பட்டு மேலேறி உச்சி யடைந்து விடுகிறாய். சிகரத்திலே ஏறி நின்ற பிறகு, நீ காண்கிற காட்சி, நீ நுகர்கிற காற்று இவையெல்லாம் சேர்ந்து, மலையேறி வந்த சிரமத்தையெல்லாம் மறக்கச் செய்கின்றன வல்லவா? அப்படி மலை யுச்சி யடைந்த பிறகு கூட உனக்குத் தங்க நிழலோ, சுற்றியடிக்கும் காற்றினின்றும் காத்துக் கொள்ள ஒரு சாண் துணியோ, வயிற்றுப் பசிக்கு ஒரு பிடிச்சோறோ கிடைக்காமல் போகலாம். அப்படியே மரணமடைந்தும் போகலாம். ஆனாலும் அந்த மரணம், வெற்றி கொண்ட வீரன் போர்க்களத்தில் மல்லாந்து படுத்து உயிர் விடுவது போலத்தான். இதைச் சொல்லிக் கொண்டு வருகிற போது கொலம்பஸின் சரித்திரம் ஞாபகத்திற்கு வருகிறது. கொலம்ப1 என்பவன் யார் தெரியு மல்லவா? அமெரிக்காவைக் கண்டு பிடித்தவன். இவன் காலத்திலே உலகத்தைப் பற்றி விநோதமான அபிப்பிராயங்கள் இருந்தன. அந்தக் காலத்தில், உலகம் தட்டையாயிருக்கிற தென்று தான் அறிஞர்கள் கருதி வந்தார்கள். இவனோ உலகம் உருண்டையா யிருக்கிற தென்று சொன்னான். இதனை யாராவது நம்புவார்களா? அதுவும் கம்பளி நூல் திரித்து வயிறு பிழைக்கிற ஏழையினுடைய மகன் வார்த்தையை? உலகம் உருண்டையாயிருக்கிற தென்றும், இன்னும் பல நிலப் பிரதேசங்கள் நமது கட்புலனுக்கு எட்டாமல் இருக்கின்றன வென்றும், அவற்றைத் தாம் கண்டுபிடித்து வருவதாகவும் கூறினான். இதற்காக இவன், ஜீனோவா, பெயின், போர்த்துகல், பிரான், இங்கிலாந்து முதலிய பல நாட்டு மன்னர்களுடைய ஆதரவை நாடினான். ஆனால் இவனுக்கு யாருமே ஆதரவு கொடுத்துப் பேச வில்லை. எல்லாரும் இவனைப் பரிகசித்தார்கள். கடைசியில் பெயின் தேசத்து இஸபெல்லா அரசி2 இவனுக்கு ஆதரவு காட்டினாள். தன் சொந்தச் செலவில் மூன்று கப்பல்களைத் தயாரித்து அதற்கு வேண்டிய சாமான்களைக் கொடுத்தாள். பின்னர் 1492ஆம் வருஷம் ஆகட் மாதம் மூன்றாந்தேதி பாலோ துறைமுகத்தி லிருந்து புறப்பட்டான். இதுகாறும் அறிஞர்கள் என்று கருதப் பட்டவர்களுடைய அறியாமையோடு போராடினான். இனி, தன்னோடு வந்த மாலுமிகளின் அறியாமையோடு போராட வேண்டியதாயிற்று. சமுத்திரத்திலே சென்று ஒரு வாரமாயிற்று. பத்து நாளாயிற்று. எங்கும் கரையைக் காணோம். மாலுமிகள் கலகஞ் செய்ய ஆரம்பித்தார்கள். வேறு பல தொந்தரவுகளையும் கொடுத்தார்கள். ஆயினும் கொலம்ப இவற்றை யெல்லாம் சமாளித்து வந்தான். கடைசியில் எழுபதுநாள் பிரயாணத்திற்குப் பிறகு ஸான் ஸால்வடோர்3 என்ற தீவில் இறங்கினான். இதன் பிறகு க்யூபா, ஹிபானியோலா4 முதலிய பிரதேசங்களைக் கண்டுபிடித் தான். இவையாவும் பெயினைச் சேர்ந்தவையென்று, பானிஷ் கொடியை நாட்டி, அங்குச் சில மாலுமிகளை நிறுத்தி விட்டு, மீண்டும் பெயினுக்கு வந்து சேர்ந்தான். மறுபடியும் இரண்டாவது முறை பெரிய கப்பல் படை யுடனும் 1,200 பேருடனும் புறப்பட்டான். இதில் பணக்காரர்களும் சேர்ந்தனர். ஏன் தெரியுமா? பொன்னாசை! புதிதாகக் கண்டு பிடிக்கிற நாடுகளில் பொன் அகப்படுமென்றும், அதைத் தாங்களும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டுமென்றும் இவர்களுக்கு ஆசை. இந்த இரண்டாவது முறை குவாடாலூப், ஜாமைக்கா, ஸான்டா மிங்கோ1 முதலிய பிரதேசங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இவனுடன் கூடச்சென்ற பணக்காரர்கள், அவர்கள் எதிர்பார்த்தபடி பொன் அகப்படவில்லை யாதலால் பிணக்குகள் உண்டாகி, ஒருவருக்கொருவர் சண்டை போட்டு மடிந்தனர். இதனால் கொலம்ப திரும்பி வந்துவிட வேண்டியதாயிற்று. பின்னர், கொலம்ப ஆறு பெரிய கப்பல்களுடன், அமெரிக்கா நோக்கி மூன்றாவது முறையாகப் புறப்பட்டான். இந்த மூன்றாவது முறைதான் அமெரிக்காவை இவன் கண்டுபிடித்தது. இந்தச் சமயத்தில் இவன் இன்னும் சில தீவுகளையும் கண்டு பிடித்தான். இதற்குள் ஸான்டா மிங்கோ தீவிலுள்ள பானிஷ்காரர் களுக்கு விரோதமாக அந்த நாட்டுச் சுதேசிகள் கலகத்திற்குக் கிளம்பி னார்கள். அவர்களை பானிஷ்காரர்கள் மிகக் கொடுமையாக நடத்தி அடக்கினார்கள். ஆனால் பானிஷ்காரர் களுக்குள்ளேயே உட் கலகங்கள் ஏராளமாக ஏற்பட்டு விட்டன. எனவே கொலம்ப, பெயின் மன்னனுக்கு ஒரு கடிதம் எழுதி அதில், ஸான் டாமிங்கோ தீவுக்கென்று ஒரு ஜட்ஜையும் மாஜிட்ரேட்டையும் அனுப்புமாறு தெரிவித்திருந்தான். அப்படியே போபாடில்லா2 என்ற ஒருவன் அனுப்பப்பட்டான். இவன் கொடும்பாவி. இவன் வந்தவுடன், கொலம்பஸையும் அவன் இரண்டு சகோதரர்களையும் சிறையிலே அடைத்தான். இவர்களை விலங்கிட்டு பெயினுக்கு அழைத்துப் போகுமாறு வல்லேஜோ4 என்பவனுக்கு உத்தரவிட்டான். அப்படியே கையும் விலங்குமாகக் கொலம்ப பெயினுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, வழியில் மேற்படி வல்லேஜோ என்பவன், இவன் மீது கருணை பாராட்டி, விலங்குகளை எடுத்து விடுவதாகக் கூறினான். எடுக்க வேண்டாம். நான் என் தாய் நாட்டுக்குச் செய்த சேவைக்கு இவை சரியான சன்மானங்களல்லவா? இவற்றை எப்பொழுதும் அழியாப் பொருள்களாக வைத்துக் கொண் டிருப்பேன் என்றான் கொலம்ப. கொலம்ப நடத்தப்பட்டதைக் கண்டு, பெயின் தேசத்து அரச தம்பதிகள் வெட்கங் கொண்டு, கொலம்பஸுக்குப் போதிய சௌகரியங் களை அளிக்குமாறு கூறினார்கள். கொலம்பஸுக்கோ, கடல் யாத்திரை மோகம் இன்னும் விட்டபாடில்லை. எனவே, நான்காவது முறை, சில கப்பல்களுடன் புறப்பட்டான். இந்த யாத்திரையின் போது சில புதிய பிரதேசங்களைக் கண்டு பிடித்து பெயினுக்குச் சேர்த்துக் கொடுத்தான். கடைசியில் தன்னுடைய எழுபதாவது வயதில், தான் அருமையாக நேசித்து வந்த தாய் நாட்டுக்குத் திரும்பி வந்தான். இனியாவது, தான் நிம்மதியாகக் காலங்கழிக்கலாமென்றும், தன் ஜீவனத்திற்கு அரசாங்கத்தார் ஏதேனும் ஏற்பாடு செய்வார்களென்றும் எதிர்பார்த்தான். ஆனால் யாரும் இவனைச் சீந்தவில்லை. பலமுறை அரசாங்கத்தாருக்கு விண்ணப்பம் செய்து பார்த்தான். பலனில்லை. இருக்க குடிசையும், உண்ண உணவும் கூட இல்லாமற் போய்விட்டது. ஒரு பிச்சைக் காரன் மாதிரி இருந்து 1506ஆம் வருஷம் மே மாதம் இருபதாந் தேதி இறந்து போனான். மகனே! பார்த்தாயா? பெயினைப் பணக்கார தேசமாக்கி, உலகத்திலே மற்ற வல்லரசுகளின் எதிரே அதற்கு மகத்தான ஒரு கௌரவ தானத்தை ஏற்படுத்திக் கொடுத்தவனுடைய கதியைப் பார்த்தாயா? ஆனால் அவனுடைய புகழ் இன்றும் பிரகாசிக்கிற தல்லவா? கொலம்ப, ஒரு முறையல்ல, நான்கு முறை, எத்தனையோ இடையூறுகளையும் எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாமல், தான் கொண்ட லட்சியத்தை நாடிச் சென்றான். அந்த முயற்சி உன்னிடத் திலே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உனக்கு வெற்றி கிடைக்கும். ஆனால் அதன் பலா பலன்களைப்பற்றி மட்டும் சிந்திக்காதே. அதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பாயானால், உன் முயற்சியில் உனக்கு மனமே செல்லாது. இஃது அனுபவ உண்மை. 9. ஊக்கமாக வேலை செய் அப்பா! கொலம்பஸீன் வரலாற்றைக் கேட்டு உன் மனம் கல்லாகி விட்டதா என்ன? இந்த நன்றி கெட்ட உலகத்திற்கு நாம் ஏன் நன்மையைச் செய்யவேண்டுமென்று நினைத்து விடாதே. அப்படி நினைப்பது பயங்கொள்ளித் தனமாகும்; மனிதத் தன்மையு மாகாது இந்த உதாரணங் களையெல்லாம் படிக்கப் படிக்க, நமது பகவத் கீதையின் மூலாதாரமான நிஷ்காமிய கர்மத்தின் பெருமை உனக்கு நன்கு புலனாகும். சில பேர் நினைக்கிறார்கள், அதிருஷ்டம் துணை செய்தால் தான் நமது முயற்சி கைகூடுமென்று. அப்படி நமது முயற்சி, நாம் எதிர்பார்க்கிற பலனைக் கொடாவிட்டால், அதிருஷ்டத்தைக் குறை கூறுகிறார்கள். ஓர் உண்மையைக் கூறுகிறேன் உனக்கு. அதிருஷ்டம், மனிதர்களைப் போல் அவ்வளவு குருடானதில்லை. அனுபவ பூர்வமாக நீ பார்ப்பாயானால், எவனொருவன் உழைப் பாளியாயிருக்கிறானோ அவனுக்குத்தான் அதிருஷ்டமும் துணை செய்கிறது. எப்படி, சிறந்த கப்பல் மாலுமிகளுக்கு சமுத்திர அலை யும் காற்றும் துணை செய்கின்றனவோ அப்படியே உழைப்பாளிக்கு அதிருஷ்டம் துணை செய்கிறது. மனிதன், உயர்ந்த ஆராய்ச்சிகளைச் செய்கிற போதுகூட, சாதாரணமாக எல்லாருக்கும் இருக்கவேண்டிய கவனம், உறுதி, பிடிவாதம் முதலியன தேவையாகவே இருக்கின்றன. சிறந்த அறிவு மட்டும் இருந்தால் போதாது; அதனை விடா முயற்சி யுடன் ஒழுங்காக உபயோகிக்கிற முறையும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். உலகத்திலே பெரும்புகழ் படைத்த மகான்கள், சிறந்த அறிஞர்களாயிருக்கவில்லை யென்பதும், தங்களுடைய புத்தி கூர்மையினால் மட்டும் அவர்கள் முன்னுக்கு வரவில்லையென்பதும் உனக்குத் தெரியுமா? கூர்மையான அறிவு என்றால் என்ன? பொறுமையான உழைப்பின் முடிவுதான் என்று ஓர் அறிஞன் கூறுகிறான். நியூட்டனை1ப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? இவன்தான் ஆகர்ஷண சக்தியைக் கண்டுபிடித்தவன். இன்னும் பல ஆராய்ச்சி களையும் செய்திருக்கிறான். ‘இந்த ஆராய்ச்சிகளையெல்லாம் எப்படிச் செய்தீர்கள்? என்று ஒருவன் நியூட்டனைப் பார்த்துக் கேட்டபோது, அவைகளைப்பற்றிச் சதா சிந்தித்துக் கொண் டிருப்பேன் என்று பதில் கூறினான். என்ன சுலபமான பதில்? ஆனால் இந்தப் பதிலில் எவ்வளவு ஆழ்ந்த கருத்து இருக்கிறது? ஆகையால் நீ என்ன செய்ய வேண்டும்? சதா வேலை செய்து கொண்டிருக்கும் பழக்கத்தைப் பெறவேண்டும். இந்தப் பழக்கம் மட்டும் உனக்கு நிரந்தரமாக ஏற்பட்டு விட்டதேயானால், பிறகு உனக்கு அதிகமான கஷ்டங்கள் தோன்றாது. வேலை செய்யச் செய்ய, அதிலேயே ஒரு சுலபத்தைக் காண்பாய் முதலில் அந்த வேலையில் ஏற்பட்ட சிரமம் பிறகு உனக்குத் தோன்றாது. அதற்குப் பிறகு, அந்த வேலையைச் செய்யா விட்டால், ஏதோ குறைவாயிருப்ப தாகவே உனக்குத் தோன்றும். ஆகையால் வேலை செய்யும் பழக்கத்தை முதலில் நீ ஏற்படுத்திக்கொள். அப்படி நீ செய்கிற வேலையானது, உனக்கு உடனே வெற்றியைத் தராமலிருக்கலாம். அதற்காக நீ சோர்வடையக்கூடாது. நல்ல பலன் களை எதிர்பார்க்கிற காரியங்களில் நீ மெதுவாகத்தான் முன்னேற முடியும். நல்ல பலன்களை எளிதிலே அடைய முடியாது. நாம் நடந்து செல்கிறபோது எப்படி அடி அடியாகச் செல்கிறோமோ அப்படியேதான் மெது மெதுவாக முன்னேறிச் செல்ல முடியும் எப்படிக் காத்துக் கொண்டிருப்பதென்பதுதான் வெற்றியின் ரகசியம் என்கிறான் ஓர் அறிஞன். விதைத்த பிறகு தானே அறுவடை செய்ய முடியும். ருசியுள்ள பழம் மெதுவாகவே பழுக்கிறதென்ற உண்மை உனக்குத் தெரியுமா? பொறுமையாக இருந்து உன் வேலையைச் செய்து கொண்டு போனால் மட்டும் போதாது; உற்சாகத்துடனும் வேலை செய்ய வேண்டும். தொடர்ந்து வேலை செய்வதற்கு உற்சாகம் ஒரு மருந்து மாதிரி. இதனால் உன் ஒழுக்கமும் உயர்வடைகிறது. அறிவுள்ள மனிதனைக் கணிக்க வேண்டுமானால் அவன் காட்டுகிற உற்சாகத்தை யும் சுறுசுறுப்பையும் பொறுத்திருக்கிறது. இந்த இரண்டுந்தான், வெற்றியின் உயிரும் ஆத்மாவும் போல. மனிதனுடைய சந்தோஷ மும் இந்த இரண்டில்தான் இருக்கிறது. வாழ்க்கையிலே பரமானந்தம் என்பது என்னவென்று ஒருவன் கேட்கப் பட்டபோது, அவன் மனம் வைத்து உற்சாகத்துடன் வேலை செய்வது என்று சுருக்க மாகப் பதில் கூறினான். பொது ஜனத்தொண்டு செய்ய முன் வருகிறார்களே, அவர்கள் எவ்வளவு இடையூறுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது தெரியுமா? அவர்கள் செய்கிற பிரசாரங்கள், உடனே பலனைக் கொடுக்காம லிருக்கலாம். அதற்கு மாறாக எதிர்ப்புக்கள் பல ஏற்படலாம். அவர்கள் விதைக்கிற நல்ல விதையானது, கால தேவதையின் ஆழமான சேற்றில் அழுந்திப் போயிருக்கலாம். இந்த விதை முளையெழும்புகிற காலத்தில், எந்தப் பலனை உத்தேசித்து இந்த விதை விதைக்கப்பட்டதோ அந்தப் பலன், தேவையில்லாமலே போய்விடலாம். அதற்காக அந்தப் பொது நலத் தொண்டன், வேறோர் இடத்தில் நல்ல விதையை விதைக்காமல் இருந்து விடுவானா? ஆகையால் என் மகனே! நம்பிக்கையை மட்டும் இழந்து விடாதே. அதை இழந்து விட்டாயானால், அதற்கு நஷ்ட ஈடு செய்ய உன்னிடத்தில் வேறொன்றும் இராது. எவ்வளவு உழைத்து என்ன பலன்? உழைப்புத்தான் மிச்சம் என்று மட்டும் நீ நினைத்து விடுவாயானால், உன்னுடைய கதி அதோ கதிதான். கிறிதுவப் பாதிரிகள் உலகத்தின் பல பாகங்களுக்கும் சென்று, தங்கள் மதத்தைப் பரப்புகிறார்களே, அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது தெரியுமா? தாங்கள் எந்த ஜனங்களிடத்தில் பழகச் செல்கிறார்களோ, அந்த ஜனங்களின் மதானுஷ்டானங்களையும் பழக்க வழக்கங்களையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த ஜனங்களின் பாஷையைத் தெரிந்து கொண்டு அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாக வேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் அடைய எத்தனையோ வருஷங்கள் ஆகின்றன வல்லவா? இதற்கு எவ்வளவு பொறுமை வேண்டுமென்பதைப் பற்றி நீ சிறிது யோசித்துப் பார்த்தாயானால், அவர்களுடைய பொறுமையையும், விடா முயற்சியையும், சலியா உழைப்பையும் கண்டு நீ பிரமித்துப் போவாய். ஆகையால், மகனே! உழைப்பதற்குச் சங்கற்பம் செய்து கொள். 10. ஒழுக்கத்திற்கு உயர்வு கொடு உழைப்பதாக உறுதி கொண்டு விட்ட என் மகனே! நீ செய்து கொண்ட சங்கற்பம், இருதய பூர்வமானதுதானே? நான் இந்த மாதிரி சந்தேகப் படுவதற்குக் காரணங்கள் அநேகம் உண்டு. ஏனென்றால், நான்கு பேரோடு சேர்ந்து கொண்டு பேசுகிறபோதோ, அல்லது ஒரு காரியத்தைச் செய்கிறபோதோ ஒரு வித உற்சாகம் ஏற்படும். அந்த உற்சாகத்தின் விளைவாக, சில பிரதிக்ஞைகளைச் செய்து கொண்டு, காரிய சாதனைக்குக் கச்சை கட்டிக் கொண்டு விடுகிறோம். ஆனால் அந்த நான்கு பேருடைய கூட்டுறவு இல்லாமற் போய், உற்சாகமும் குறைந்துவரும் சமயத்தில், நாம் செய்து கொண்ட பிரதிக்ஞைகளை மறந்து விடுகிறோம். நாம் வரிந்து கட்டிக் கொண்ட கச்சையும் தளர்ந்து போகிறது. நீ பிரத்தியட்சமாகப் பார்க்கலாமே, தேசியத் தலைவர்களில் யாராவது நம்மிடையே வந்து பிரசங்கம் செய்து விட்டுப் போனவுடனே, கதரபிமானமும் காங்கிர பற்றும், என்று மில்லாமல் நம்மிடத்தில் அதிகமாக உண்டாகிவிடுவதை. கதர் கடைக்குச் சென்று பத்து, இருபது ரூபாய்க்குக் கதர் வாங்கு கிறோம். காங்கிர பிரசாரம் செய்யும் ஓரிரண்டு பத்திரிகைகளுக்குச் சந்தா செலுத்துகிறோம். சிறிது காலமானவுடனே, நாம் வாங்கின கதர் துணி கிழிவதற்கு முன்னேயே, நம்முடைய கதரபிமானமும் காங்கிர பற்றும் காற்றாய்ப் பறந்தோடிப் போகின்றன. அதோடு மட்டுமல்ல; கதரையும் காங்கிரஸையும் தூஷிக்கவும் ஆரம்பித்து விடுகிறோம். பழி தீர்க்கிற மனப்பான்மையோடு, மேனாடுகளி லிருந்து இறக்குமதியான அசல் பட்டுத் துணிகளையே உபயோகிக் கிறோம். இந்த விபரீதங்களுக்கெல்லாம் என்ன காரணமென்று நினைக் கிறாய்? இருதய சுத்தமில்லாமைதான். இதனாலேயே, நீ செய்து கொண்ட சங்கற்பம் திரமானதுதானே என்று முதலில் கேட்டுக் கொண்டேன். ஆனால் உன்னிடத்தில் இருதய சுத்தம் உண்டு என்பது எனக்குத் தெரியும். இல்லாவிட்டால் உனக்கு இந்த உபதேசங்களை யெல்லாம் செய்ய முன் வருவேனா? எவனொருவன், தனது கடமையை உணர்ந்து விட்டானோ, அவன் உடனே அதனை - அந்தக் கடமையை - செயலில் கொணர்வான். கடமையை உணராதவன்தான், எதைச் செய்யலாம், எப்படிச் செய்யலாம், எப்பொழுது செய்யலாம் என்ற ஆராய்ச்சி உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கி விடுவான். நாம் செய்யக் கூடியதெல்லாம் என்ன? நம் சக்திக்கியன்ற கடமையைச் செய்வது தான். அப்படிச் செய்து கொண்டு போகிற கடமைகள், நமக்கு நாளாவட்டத்தில் பழக்கமாகி விடுவ தோடல்லாமல் அவைகளே, நம்மைப் பிறருக்கு அளந்து காட்டும் கருவி களாய் அமைகின்றன. நாம் செய்கிற காரியங்களைக் கொண்டுதான், இவன் இத்தகைய மனிதன் என்று மதிக்கத் தொடங்குவர் பலரும். ஆனால் மகனே! கடமையைச் செய்வது அவ்வளவு சுலபமான காரியமல்ல. எதிர்ப்புக்களும் இடையூறுகளும் ஏராளமாக உனக்கு ஏற்படலாம். அவைகளை நீ சமாளித்துக் கொண்டு போகவேண்டும். உனக்கு ஒரு விஷயத்தை உணர்ந்து பார்க்கிற சக்தி இருக்கலாம். ஆனால் அதனைச் செயலில் கொண்டுவரக்கூடிய மனோபலம் இல்லாமற் போய் விடலாம். எனவே திடமான சித்தம் உனக்கு வேண்டும். திடசித்த மில்லாதவன், ஒரு விஷயத்தைப்பற்றித் தத்துவ ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கலாம்; கனவு கண்டு கொண்டிருக் கலாம். ஆனால் அவனால் ஒன்றுஞ் செய்யமுடியாது. உழைப்பிலே இன்பங்கண்ட ஓர் அறிஞன் கூறினான்:- பார்ப்பதற்கு என்ன இருக் கிறது? வெகு சொற்பந்தான். செய்வதற்குத்தான் என்ன இருக்கிறது? அதுவும் மிகச் சொற்பமே. ஆனால் செய்யத்தான் வேண்டும். ஆகையால் ஒரு காரியத்தைப் பற்றி யோசிக்காதே; அதைச் செய்து விடு. முதலில் நீ விருப்பு வெறுப்புக்களை வென்றுவிட வேண்டும். இந்த வெற்றி கூட அவ்வளவு கடினமானதல்ல. நமக்கு விரோதமாக ஏற்படும் அபகீர்த்தியைச் சமாளிப்பதுதான் மகாகடினம். நன்மை பயக்கக் கூடிய ஒரு காரியத்தைச் செய்ய ஒருவன் துணிந்து விட்ட பிறகு, நான் செய்கிற இந்தக் காரியத்தைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று சிந்திக்கத் தொடங்கி விடுவானாகில், அவனால் அந்தக் காரியத்தைத் தொடர்ந்து செய்ய முடியாதென்று நீ உறுதியாக நம்பலாம்; ஆனால் அவனே, இவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல், பொதுஜனங்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப்பற்றிக் கவனியாமல், காரியத்தில் இறங்கி விடுவானாகில், அவன்தான் காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும். நல்ல காரியங்களைச் செய்வதற்காக நாம் நம்பிக்கை கொள்வோம். நம்மிடமுள்ள அவ நம்பிக்கைகளை யெல்லாம் கெட்ட காரியங் களுக்கென்று ஒதுக்கித் தள்ளி விடுவோம். பிறரிடம் நாம் அவ நம்பிக்கை கொள்வதைவிட, பிறரால் நாம் ஏமாற்றப்படுவது நல்ல தல்லவா? என்று ஓர் அறிஞன் கூறியது இங்கே ஞாபகத்திற்கு வருகிறது. கடமை எங்கிருந்து ஆரம்பிக்கிறது தெரியுமா? குடும்பத்தி லிருந்து. ஒரு குழந்தையானது, நிராதரவாய், மற்றவர்களுடைய தயவை எதிர் பார்த்து பூமியிலே பிறக்கிறது. தன்னுடைய உணவுக்கும், போஷணை முதலியவைகளுக்கும் பிறருடைய தயவை எதிர்பார்க்கிறது. பின்னர், மெதுமெதுவாக அதற்குச் சில எண்ணங்கள் தோன்றுகின்றன. அதற்குப் பிறகு, பிறருக்குக் கீழ்ப் படியவும், தன் கடமையைச் செய்யவும், சந்தோஷமாக இருக்கவும் கற்றுக் கொள்கிறது. அதற்கென்று தனியான ஒரு மனோசக்தி ஏற்படுகிறது. அந்தச் சக்தியை நல்ல வழியில் செலுத்துவதும் கெட்ட வழியில் செலுத்துவதும், பெற்றோர்களின் சுபாவத்தைப் பொறுத் திருக்கிறது. ஆகையால் உன்னுடைய மனோ சக்தியை விருத்தி செய்துகொள். அப்படி விருத்தி செய்து கொள்ள, வயதைக் கடந்து விட்டதாக நீ கருதுவாயானால் உன் சந்ததிகளுக்காவது, அந்த மனோ சக்தியை விருத்தி செய்து வை. நன்றாக எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டு விடுவது அவ்வளவு முக்கியமல்ல. ஆனால் இந்தக் காலத்தில், பலர், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, குணத்தைக் கை சோர விடுகின்றனர். படித்தவரெல்லாரும் நற்குணத்தையும் சந்தோஷத்தையும் பெறு கிறார்களில்லை. அதற்கு மாறாக, குணமில்லாத படிப்பு கர்வத்தைக் கொடுத்து விடுகிறது. தவிர, படித்தவர்கள் சிந்தனா உலகத்தில்தான் சஞ்சரிக்க முடியுமே தவிர, கர்ம க்ஷேத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லை யல்லவா? ஒழுக்க வீனனாயிருக்கப் பட்டவன், எவ்வளவு படித்திருந்தாலும், அவன் பாதி மனிதன்தான். மனிதத் தன்மையில் அவன் போற்றப் படுவதேயில்லை. ஆகையால், மகனே! ஒழுக்கத்திற்கு முதல் தானமும், படிப்புக்கு இரண்டாவது தானமும் கொடு. 11. எண்ணினால் மட்டும் போதாது - செய்யவும் வேண்டும் அப்பா குழந்தாய்! நல்ல காரியத்தைச் செய்ய வேண்டும், செய்யவேண்டும் என்று நீ நினைத்து கொண்டிருந்தால் போதுமா? நல்ல எண்ணம் மட்டும் இருந்தால் போதாது. அந்த எண்ணத்தைச் செயலில் கொண்டுவர வேண்டும். நாம் எண்ணியதைச் செய்கையில் காட்டினால் தான், நம்மிடத்திலே அடங்கிக்கிடக்கும் சக்தியானது வெளிப்படும். அப்பொழுதே பிறர் நம்மிடத்தில் மதிப்பு வைப்பர். மதிப்பு வைப்பர் என்றால் என்ன அர்த்தம்? நம்மிடத்திலும் சக்தி இருக்கிறதென்பதை அங்கீகரிப்பர் என்று அர்த்தம். ஓர் ஆங்கிலப் பாதிரி, தேவாலய மொன்றில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது பின்வருமாறு கூறினான்:- மனிதனுடைய வாழ்க்கை, எதனால் ஆக்கப்பட்டிருக்கிறது? செயலினாலும் பொறுமையினாலுந்தான். அவனுடைய வாழ்க்கை யின் பலனை அளந்து பார்க்க வேண்டுமானால், அவன் செய்துள்ள பெரிய காரியங்களையும், பொறுமையாகச் சகித்துக் கொண்டிருந் ததையுமே வைத்துப் பார்க்கவேண்டும். ஆனால் தேக உழைப்பு ஒன்றுதான் சிறந்த உழைப்பு என்று எண்ணி விடாதீர்கள். மூளை உழைப்பு, சிந்தனை செய்கிற வேலை இவை யெல்லாம், வெளிப் பார்வைக்குத் தெரியாத வேலைகள் என்பது உங்கள் ஞாபகத்தில் இருக்கட்டும். ஒரு வேலையும் செய்யாமல் சும்மாயிருக்கிற சுபாவம் இருக்கிறதே, அது, அறிவிலே மயக்கம் ஏற்பட்ட மாதிரி. தவிர, சோம்பேறித்தனமாகக் காலங்கழிப்பது வாழ்க்கையா என்ன? உயிரைப் பிடித்துக் கொண்டிருப்பது என்று சொல்லலாமே தவிர, வாழ்கிறது என்று சொல்ல முடியாது. சோம்பல் இருக்கிறதே அது, உடலை மட்டுமல்ல, ஆத்மாவையும், மனச்சாட்சி என்று ஒன்றிருக்கு மானால் அதனையும் மெது மெதுவாக அரித்து விடுகிறது. உலகத் தில் பரவியிருக்கும் தீமைகளில் முக்காலே மூன்று வீதம் பங்கு சோம்பேறித்தனத்தினால் ஏற்பட்டதேயாகும். தனிப்பட்ட மனிதர்கள், தனித்தனியாக வேலை செய்யாவிட்டால், அவர்களை அங்கமாகக் கொண்ட ஜன சமுதாயந்தான் எப்படி ஒழுங்காக இயங்கும்? நீ வேலை செய்து கொண்டு போகிறாய் என்று வைத்துக் கொள். அப்பொழுது, இடையிலே ஏதேனும் இடையூறுகள் ஏற்படு கின்றனவா? அப்படியானால், அதற்காகச் சோர்ந்து போகாதே. த்ஸு கொட்டாதே. சலிப்புக் கொள்ளாதே. தொட்ட வேலையைத் தொடர்ந்து செய். பிறரை வசியப்படுத்தக் கூடிய மருந்து உழைப்பைப் தவிர வேறொன்றில்லை. உழைக்காதவன் உடல், உள்ளம் முதலியன, துருப்பிடித்த இரும்பு மாதிரி உழைப்பது சாணை பிடிப்பது போலாகும். நீ செய்து கொண்டு போகிற காரியத்தில் ஏதேனும் சங்கடங்கள் ஏற்பட்டால், அவற்றை நீ எவ்வாறு கொள்ளவேண்டும் தெரியுமா? உன்னைப் பரிசோதிப்பதற்காகத் தோன்றியுள்ள பரிசோதனைக் கருவி; உன் திறமையை வெளிப்படுத்தப் போகிற தூர தரிசினி. இந்தப் பரிசோதனை சமயத்தில், உழைப்பு என்ற பாறையின் மீது நாம் உறுதியாக நின்று விட்டோமானால், நம்மை அசைக்க யாராலும் முடியாது. நாம் இந்தப் பரிசோதனையில் நிச்சயம் வெற்றி பெற்று விடுவோம். இடையூறுகளைச் சமாளித்துக் கொண்டு போகின்றவன் தான் வீரபுருஷன். துன்பத்திலே உழன்று அதனின்று மீட்சியடை கிறவன்தான் வெற்றி நாயகன். கஷ்டம் வந்தால், அதனைத் தைரியமாக எதிர்த்து நில். அப்பொழுது உன் முகத்தில் சதா சிரிப்பு இருந்து கொண்டு இருக்கட்டும். நாம் அடையப்போகிற லட்சியத் திலேயே சந்தோஷமில்லை; அதற்காக நாம் செலவிடுகிற முயற்சி களிலேதான் சந்தோஷம் இருக்கிறது என்று அரிட்டாடல்1 என்ற கிரேக்க ஞானி சொன்னதை உனக்கு இந்தச் சமயத்தில் ஞாபகப் படுத்தட்டுமா? எப்படியாவது நாம் கொண்ட லட்சியத்தை யடைய வேண்டுமென்று உறுதி கொண்டு விட்டோமானால், அந்த உறுதி ஒன்றே நமக்கு உழைப்பதற்கு ஊக்குவிக்கும். அதுவே நமக்கு ஒரு தைரியத்தையும் ஊட்டும். தேவையை முன்னிட்டுத்தான், நமது அறிவு, உழைப்பு முதலியன யாவுமே உரம் பெறுகின்றன. எவ னொருவன், ஆரம்பத் தோல்விகளில் சோர்வு கொள்ளாமலிருக் கிறானோ அவன் இறுதியில் நிச்சயம் வெற்றி யடைகிறான். உலகத்திலே தோன்றிய மகான்கள் பலருடைய சரித்திரத்தை நாம் ஆராய்ந்து பார்த்தால், அவர்கள், கஷ்ட சிகரத்தின் மீதுதான் புகழ்க் கொடியை நாட்டியிருக்கிறார்கள் என்பது நன்கு தெரிய வரும். ஒரு பொருளை நாம் பெற வேண்டுமானால் அதற்காக நாம் உழைக்க வேண்டும். உழைக்காமல் ஒரு பொருளை அடையப் பார்ப்பது நமது பலவீனத்தையே காட்டும். ஒரு பொருளை அடைந்து விடுவது பெரிதல்ல. அடைந்த பொருளை அனுபவிக்க வேண்டும். அதிலே இன்பமும் காண வேண்டும். இவைகளெல்லாம் எப்பொழுது உண்டாகும்? உழைத்து அந்தப் பொருளைப் பெற்றால்தான். 12. சோர்வு கொள்ளாதே குழந்தாய்! என்னால் ஒன்றுஞ் செய்ய முடியவில்லையே. eh‹ V‹ ãwªnj‹ ïªj cyf¤âš? என்று சோர்ந்து விடாதே. உலகத்தில் நீ எப்படியோ பிறந்து விட்டாய். அப்படிப் பிறந்தது உன் இச்சையினாலல்ல. ஆனால் நீ நடத்தும் வாழ்க்கை உன் இச்சையைப் பொருத்திருக்கிறது. நீ பிறந்து விட்ட ஒரு காரணத்தினாலேயே உன் வாழ்க்கையை ஒழுங்காக நடத்த வேண்டுமென்ற அவசியம் வற்புறுத்தப்படுகிறதல்லவா? உலகத்திலே ஜென்மம் எடுத்து விட்ட பிறகு, ஏன் பிறந்தோம் என்ற கேள்வியைக் கேட்க உனக்கென்ன உரிமை யிருக்கிறது? உன் முன்னாலே உலகம் விரிந்து பரந்து கிடக்கிறது. அதில் அழகும் அழுக்கும், நன்மையும் தீமையும் கலந்துதான் இருக்கின்றன. நீ உலகத்தை எப்படிப் பார்க்கிறாயோ அப்படித்தான் உலகமும் உனக்குக் காட்சியளிக்கும். மனம் போல மாங்கல்யம் என்ற பழமொழி உனக்குத் தெரியாதா? மகனே! மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. ஞாபகப்படுத்து கிறேன், கேள். கௌரவர்களும் பாண்டவர்களும் சிறுவர்களாயிருந்து துரோணரிடம் கல்வி கற்று வந்தபோது இவர்களுடைய மனப்போக்கைப் பரிசோதிக்க எண்ணி துரோணர் ஓர் உபாயம் செய்தார். இரண்டு வீடுகளைக் காலி செய்து கொடுத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு வீட்டைப் பூரணமாக நிரப்பிக் காட்டவேண்டும் என்றார். கௌரவர்களின் மூத்தவனான துரியோதனன் தன்னுடைய வீட்டை வைக்கோலால் நிரப்பி விட்டான். பாண்டவர் தலைவனான தருமபுத்திரன் தன்னுடைய வீட்டை தீபாலங்காரம் செய்து நிரப்பினான். இதிலிருந்து இரு வருடைய மனப்போக்கையும் துரோணர் தெரிந்து கொண்டார். இந்தக் கதை உண்மையா இல்லையா என்பதைப் பற்றி நீ கவலைப் படாதே. இதன் கருத்தை மட்டும் கிரகித்துக்கொள். உலகத்தில் எப்பொழுதும் அழகைப்பார். நன்மையைத் தேடு. அப்பொழுது தான் நீ அழகனாவாய்; நல்லவன் ஆவாய். ஆனால் உன் மனத்தில் சோர்வு என்ற கறை மட்டும் படவேண்டாம். உனக்குக் காலமிருக்கிறது; வசதிகள் இருக்கின்றன. இவற்றை நீ எப்படி உபயோகித்துக் கொண்டாய்? இந்த நாகரிக காலத்திலே எதற்கெடுத்தாலும் எனக்கு நேரமில்லை என்று சொல்வது ஒரு சம்பிரதாயமாகி விட்டது. அப்படி நீ சொல்லாதே. மகாத்மா காந்தி ஏழு நூறு சுலோகங்களுள்ள கீதையை எப்படி மனப்பாடம் செய்தார் தெரியுமா? காலை வேளையில், தாம் பல் துலக்குகிற இடத்தில் தினம் ஒவ்வொரு சுலோகமாக எழுதி வைத்துப் பல் துலக்கிக் கொண்டே கீதை முழுவதையும் மனப்பாடம் செய்தார். தள்ளாத வயதினில், சிறையில் அடைபட்ட பண்டித மதன் மோகன் மாளவியா, அந்தச் சிறை வாசத்தின் பொழுதுதான் கீதையையும் பாகவதத்தையும் படித்து அவற்றின் தத்துவார்த்தங்களில் மனம் லயித்துப்போனார். இத்தகைய சான்றோர் களின் வாழ்க்கையை உனக்கு முன்னர் நிறுத்திப் பார். ஓய்வில்லை என்று சொல்வது அவமானம் என்று கருது. அப்படி நீ சொன்னால் அறிஞர்கள் உன்னை ஒரு சோம்பேறி என்றுதான் கருதுவார்கள். சோம்பலும், துக்கமும் நெருங்கிய நண்பர்கள் என்பது உனக்குத் தெரியுமா? ஏதேனும் ஒரு வேலையை - அந்த வேலை பிறருக்கு நன்மை தருவதாயிருக்கட்டும் - செய்து கொண்டே இரு. துக்கம், சோர்வு, அறிவிலே ஒரு கலக்கம் ஏதேனும் ஏற்படுகிறதா பார்? எந்த நோயும் உன்னை அணுகாது. மின்சாரத்திற்கு எவ்வளவு மகத்தான சக்திகள் உண்டு என்பதை உலகத்திற்கு நிரூபித்துக் காட்டிய தாம எடிசன் தினம் பதினெட்டு மணி நேரம் வேலை செய்தான். இரவு என்றும் பகல் என்றும் அவன் வித்தியாசம் பாராட்டியதே கிடையாது. தூங்கின நாட்களை விட தூங்காத நாட்கள்தான் அவனுக்கு அதிகம். ஆனால் உலகத்தில் பெரும் பாலோருக்கோ தூங்கின நாட்கள் தான் அதிகம். அந்தப் பெரும் பான்மைக் கூட்டத்தில் நீ சேர்ந்து விடாதே. பண்டித ஜவஹர்லால் நேருவுடன் ஒரு நாள் உன்னால் தங்க முடியுமா? அவரைப் போல் நீ உழைப்பது ஒரு புறம் இருக்கட்டும். அவருடைய அன்றாட வேலை களைக் கண்டு நீ முதலில் திக்பிரமை கொள்ளாதிருக்க வேண்டுமே! இப்படிப்பட்ட மகான்கள் எல்லோரும் உண்ணும் போதும், உறங்கும் போதுங்கூட வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் நலத்துக்காக அல்ல; உலக நன்மைக்காக. அதனால்தான் அவர்கள் முகத்தில் எப்பொழுதும் புன்சிரிப்பு காணப் படுகிறது. அவர்களுக்கு வயது ஆகஆக முதுமையும் எட்டி எட்டிப் போகிறது. ஆகையால் நீ சந்தோஷமாயிருக்க வேண்டுமானால் ஓய்வு என்பது கொள்ளாதே. எப்பொழுதும் வேலை செய்து கொண்டிரு. உடல் சோர்வோ, மனச் சோர்வோ பனியைப்போல மறைந்து விடுகிறது பார். 13. உனக்கும் அச்சமா? மகனே! உத்தியோகம் புருஷ லட்சணம் என்று இந்தக் காலத்தில் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறாயா? ஐயோ, என்ன அவக்கேடு! இந்த வாசகமொன்றே நமது அடிமைப் புத்தியை நன்கு எடுத்துக் காட்டு கிறதல்லவா? உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று சொல்லிப் போனார்கள் நமது முன்னோர்கள். ஆனால் நாமோ, இப்பொழுது எங்காவது ஓர் ஆபிசில் பதினைந்து அல்லது இருபது ரூபாய் சம்பளத்தில் குமாதாவாக அமர்ந்து, இட்ட வேலையைச் செய்து விட்டு, கண்டவருக்குப் பல்லிளித்துக் கொண்டு காலங்கழிப்பதில் திருப்தி யடைந்து விடுகிறோம். இது தான் வாழ்க்கை யென்று எண்ணுகிறோம். என்ன கேவலம்! ஆண் மகனுக்கு அழகு உத்தியோகமல்ல; அஞ்சாமை. எந்த மனிதனிடத்தில் அஞ்சாமை குடி கொண்டிருக்கிறதோ, எவன் எல்லாக் காரியங்களையும் தைரியமாக இருந்து நடத்து கிறானோ, அவனைத்தான் எல்லோரும் கொண்டாடுவார்கள். எவனிடத்தில் அச்சம் குடி கொண்டிருக்கிறதோ அவன் பார்க்கிற பார்வையிலேயே அது நன்றாய்த் தெரிந்துவிடும். அப்படி அசடு தட்டிய பார்வையோடு நீ இருக்க விரும்புகிறாயா? உன்னைப் பார்த்தவுடன் எல்லாரும் பரிகாசம் செய்ய மாட்டார்களா? ஒருவனுடைய வாழ்க்கையில் எத்தனையோ விதமான நெருக்கடிகள் ஏற்படுகின்றன. அவைகளை யெல்லாம் சமாளிக்க வேண்டு மானால், அவன் தைரியமுள்ளவனாகவல்லவோ இருக்க வேண்டும்? நீ எத்தனையோ தவறுகள் செய்யலாம். அந்தத் தவறு களிலிருந்து தப்பித்துக் கொள்வது எப்படி? உன்னிடத்திலுள்ள மனோதிடமல்லவா உன்னைத் தப்பிக்கும்படி செய்யும்? இதனை நீ இழந்து விடலாமா? இந்த மனோ தைரியமிருந்தால், எவனும் தன் கடமையை வெற்றிகரமாகச் செய்து கொண்டு போவான். அப்படிப் பட்ட மனோ தைரியத்தை நீ இழந்து விடலாகுமா? தைரியத்திற்கு எதிராகவுள்ளது எது? கோழைத்தனம். அதை யாராவது நம்புவார்களா? உலகமே அதைக் கண்டிக்கிற தில்லையா? கோழைத்தனம் எப்பொழுது ஒரு மனிதனிடத்தில் பிரவேசித்து விட்டதோ அப்பொழுதே அவனிடத்திலிருந்த மனிதத்தன்மை போய்விட்டதல்லவா? கோழைத்தனமும் மனிதத் தன்மையும் ஒரே இடத்தில் வசிக்க முடியுமா? எவனொருவன், யுத்த களத்தில் சத்துருவுக்குப் பயந்து ஓடுகிறானோ அவன் மட்டும் கோழை என்று கருதாதே. எவனொருவன், தன் அபிப்பிராயங்களைத் தாராளமாக எடுத்துச் சொல்லப் பயப்படுகிறானோ, அல்லது பிறருடைய பய முறுத்தலுக்காகவோ, பிறருடைய தயை தாட்சண்யத்திற்காகவோ தன் அபிப்பிராயங்களை அடிக்கடி மாற்றிக்கொள்கிறானோ அவனும் ஒரு கோழை. அவன், தான் கொண்ட அபிப்பிராயத்தை ஆதரித்துப்பேச தைரியமில்லை பார்த்தாயா? அப்படிப்பட்டவன் எந்தச் சமயத்திலும் பிறருக்கு அடிமையாகிவிடத் தயாராக இருக் கிறான். இதனால்தான் அரசியல் அடிமைத்தனத்திலே வாழ்கிற வர்கள் அநேகமாகக் கோழைகளாயிருப்பதைச் சர்வ சாதாரணமாக நீ பார்க்கலாம். அப்படிப்பட்டவர்கள் அடிமைத் தனத்திலே ஊறி ஊறி, தாங்கள் விடுதலையடைய வேண்டுமென்ற உணர்ச்சிகூட இல்லாதவர்களாகி விடுகிறார்கள். சிலர் நினைக்கிறார்கள், பண மிருந்தால்தான் ஒருவன் தைரியமாயிருக்க முடியும்; பணமில்லாதவன் கோழையாகத்தான் இருக்க முடியும் என்று. என்ன அறியாமை! பணத்திற்கும் அஞ்சாமைக்கும் என்ன சம்பந்தம்? பணமில்லாதவன்தான் அதிக தைரிய முள்ளவனாயிருக்க முடியும். ஏனென்றால் அவனுக்கு இந்த உலகத்திலே இச்சைகொள்ளக்கூடிய பொருள்கள் அதிகமில்லை. அதனால் அவனுக்கு ஆசையும் அதிகமில்லை. ஆசையில்லாதவன் அஞ்சாதவனா யிருக்கலாம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். நமது நாட்டிலே உலகத்தைத் துறந்த பரம ஞானிகள்தான் அஞ்சாமைக்கு அணிகலன் போல் இருந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டுச் சமய குரவர்களில் தலை சிறந்தவராகிய திருநாவுக்கரசரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறா யல்லவா? அவருடைய நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்ற வீர வாசகம் நமது செவியில் இன்னும் தொனித்துக் கொண்டிருக்கவில்லையா? பிறருடைய அவமதிப்புக்களைச் சகித்துக் கொண்டிருப்ப தற்குக் கூட தைரியம் வேண்டும். உன்னை அவமதித்துப்பேசு கிறானே அவன்தான் கோழை. அந்த அவமதிப்பை ஏற்றுக்கொள்கிற நீதான் வீரன். அவனைப் போல் நீயும் அவனைத் திருப்பி அவமதித்துப் பேசக்கூடும். அதற்கான தேக பலம், மனோ பலம் முதலியனவெல் லாம் உன்னிடம் இருக்கிறது. ஆயினும் நீ அவனை அவமதித்துப் பேசாமலிருக்கிறாய் அப்பொழுதுதான் நீ வீரன். அந்த மாதிரி செய்வதால்தான் அவனுக்கு நீ ஒரு வழிகாட்டி மாதிரியாகிறாய். ஒரு காந்தம் போல் இருந்து அவனை உன் வசப்படுத்திக் கொண்டு, அவனுடைய கோழைத்தனத்தையெல்லாம் கரைத்து விடுகிறாய். உன்னுடைய தைரியத்தின், மனோதிடத்தின் செல்வாக்கு அவனிடம் படிந்து விடுகிறது. அதனால் அவனும் ஒரு தைரிய புருஷனாகிறான். தைரியமுள்ள புருஷனை, அஞ்சாத வீரனை, எல்லா மக்களும் நம்பிக்கையோடு பின்பற்றுகிறார்கள். அவனைப் பின் பற்றுகிற விஷயத்தில், மரணத்தைக்கூட அவர்கள் பொருட்படுத்துகிறார்களில்லை. அந்த வீரன் இறந்து போகலாம். அவனுடைய தேகம் நெருப்பிலே எரிக்கப்பட்டோ மண்ணிலே புதைக்கப்பட்டோ போகலாம். அவனுடைய வீரம், அவனுடைய ஆத்மா என்றும் வாழ்ந்து கொண்டுதானிருக்கும். ஒரு மகா புருஷன், தொழுக்கட்டை ஏறியோ, நெருப்புக் குழியில் இறக்கப்பட்டோ மாண்டுபோகலாம். ஆனால் எந்த உண்மைக்காக, எந்த தர்மத்திற்காக அவன் மரிக்கிறானோ, அஃது அவனுடைய தியாகத் தினின்று பன்மடங்கு பிரகாசத்துடன் துளிர்த்து எழுகிறது. ஒரு தேசாபிமானியைத் தூக்கு மேடையிலேற்றுவித்து இறந்து போகச் செய்கிறார்கள். அவனும் முகத்தில் புன்சிரிப்பு தவழ இறந்து போகிறான். ஆனால் அவன் எந்த நோக்கத்திற்காக வாழ்ந் தானோ அது வெற்றி பெற வில்லையா? ஒரு மகானுடைய வாழ்க்கை, அவன் இறந்து போவதோடு மட்டும் முற்றுப் புள்ளி போட்டுக் கொள்வதில்லை; எல்லாருடைய இதயங்களிலும் புத்துயிர் பெற்றுத் தூண்டா விளக்காக எரிந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிரந்தர வாழ்வையடைய நீ விரும்பவில்லையா? ஒரு மகானாக வேண்டுமென்ற ஆசை உனக்கில்லையா? அப்படியானால் அஞ்சாமையை ஆபரணமாகக் கொள். 14. நல்ல காரியத்துக்கு நாலாயிரம் விக்கினம் மகனே! இப்பொழுது உலகத்தில் விஞ்ஞானம் எல்லாத் துறை களிலும் வளர்ச்சியடைந்திருக்கிற தென்பது உனக்குத் தெரியும். கட்டை வண்டியில் மணிக்கு நான்கு மைல் விகிதம் சென்று கொண்டிருந்த நாம், இப்பொழுது சராசரி இருநூற்றைம்பது மைல் விகிதம் ஆகாய விமானத்தில் செல்கிறோம். விளக்கெண்ணெய் விளக்கில் குனிந்து படித்துக்கொண்டிருந்த நாம் இப்பொழுது பிரகாசமான மின்சார விளக்கின் கீழ் இரவு பகலாகப் படிக்கிறோம். இப்படி எத்தனையோ மாற்றங்கள் நமது தலைமுறையிலேயே ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த விஞ்ஞான வளர்ச்சிக்கு ஆதி காரணர்களாயிருந்தவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக் கிறார்கள் தெரியுமா? தாங்கள் எண்ணியதை வெளியில் சொல்லவோ, அல்லது கண்டு பிடித்த நூதன விஷயங்களை அல்லது கருவிகளை வெளியில் காட்டவோ இவர்களுக்குச் சுதந்திரம் கொடுக்கப்படவில்லை அந்தக் காலத்தில். அப்படிப் பொது ஜன அபிப்பிராயத்தை மீறி புதிய கொள்கைகளை அல்லது தத்துவங்களை வெளியிட்டதற்காக இவர்கள் மரண தண்டணை யடைந்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் கவலைப்படவேயில்லை. மரணத்தை ஒவ்வொரு நிமிஷமும் எதிர்பார்த்தே இவர்கள் காரியங்களைத் துணிச்சலாகச் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். கி.பி. பதினாறாவது நூற்றாண்டில் கலீலியோ1 என்ற ஓர் இத்தாலிய வான சாதிரி இருந்தான். இவன் தூர திருஷ்டிக் கண்ணாடி யொன்றைக் கண்டுபிடித்து அதன் மூலமாக அநேக புதிய நட்சத்திரங்களை நிர்த்தாரணம் செய்தான். இன்னும் சூரியனைச் சுற்றி பூமி வலம் வருகிற தென்பதுபோன்ற அநேக நூதனக் கொள்கைகளை வெளியிட்டான். ஆனால் இந்தக் கொள்கைகள், அந்தக் காலத்து அறிஞர்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு விரோதமா யிருந்தன. இதனால் இவனை ரோமாபுரிக்கு வரவழைத்து விசாரித் தனர், பாதிரி மடத்துத் தலைவர்கள். என்ன கொடுமை! பாதிரிமார் களின் கோபத்துக்கும் தண்டனைக்கும் அஞ்சின வனாய் தான் நிர்த்தாரணம் செய்த கொள்கையை வாபீ வாங்கிக் கொண்டான் கலீலியோ. அந்தோ! என்ன அநியாயம்! ஆனால் இப்பொழுது கலீலியோவின் சித்தாந்தந்தான் சரியென்று சிறு குழந்தைகளும் ஒப்புக்கொள்ளுகின்றனவல்லவா? கலீலியோவைப்போல் கெப்ளர்1 என்ற ஒரு ஜெர்மானிய வான சாதிரி இருந்தான். இவனும் வான சாதிர சம்பந்தமாக அநேக நூதன விஷயங்களைக் கண்டுபிடித்தான்; அநேக நூல்கள் எழுதி னான். ஆனால் இவன் என்னென்ன துன்பங்களுக்குட்பட்டான்? இவன் நூல்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. எழுபத்தொன்பது வயது நிறைந்த இவனுடைய தாயார் சிறையில் வைக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டாள். கடைசியில் இவன் மூளை வியாதியால் இறந்து போனான். கொலம்பஸின் கதைதான் உனக்குத் தெரியுமே. அமெரிக் காவைக் கண்டு பிடிக்கும் பொருட்டு அவன் எவ்வளவு கஷ்டப் பட்டான்! ஒரு லட்சியத்திற்காகத் தங்களையே அர்ப்பணஞ்செய்து விடுகிறார்கள் அநேக மகான்கள். பழைய காலத்து விஞ்ஞானிகள், புதிய நாடுகளைக் கண்டு பிடித்தவர்கள், பிற நாடுகளில் நாகரிகத்தைக் கொண்டு புகுத்தியவர்கள், இவர்களெல்லோரும் யாரென்று நினைக் கிறாய்? மானிட சமுதாயமானது, தன்னம்பிக்கையை இழந்து நிற்கிற காலையிலே ஏ, மானிட சமுதாயமே! இவ்வளவு சீக்கிரத்தில் நம்பிக்கை இழந்து விடலாமா? என்று சொல்லிக் கொண்டே அதனைக் கை தூக்கி விடுகிற வர்கள். சத்தியத்திற்காகவும், தருமத் திற்காகவும், தேசாபிமானத்தை முன்னிட்டும் இவர்கள் உழைத் தார்கள். ஒரு லட்சியத்திற்காக உழைக்கிறோமென்பதில்தான் இவர்கள் திருப்தியடைந்தார்கள். தங்களுடைய சுய நன்மையைப் பற்றி ஒரு வினாடியும் இவர்கள் சிந்தித்ததில்லை. சாதாரணமாக எல்லா மகான்களும் இந்தப் பிரபஞ்சத்திலே தாங்கள் செய்ய வேண்டிய வேலையிது என்பதை மட்டும் தெரிந்துகொண்டு, அதிலேயே தங்களை ஈடுபடுத்திக்கொண்டு விடுகிறார்கள். இதற் கிடையில் இவர்கள் அநேக அவமானங்கள் அடையலாம்; அநேக சங்கடங்கள் படலாம். ஆனால் எல்லாவற்றையும் தைரியமாகச் சமாளிக்கிறார்கள். இவர்கள் இறந்து போகிறார்கள். ஆனால் இவர் களுடைய ஆத்மா, கோடி சூரியப் பிரகாசம் போல் பிரகாசிக்கிறது. தங்களுடைய பின் சந்ததியாருக்கு அழியாத ஒரு பெயரை வைத்துப் போகிறார்கள். அதனால் மானிட சமுதாயமே நன்மை யடைகிறது. இவர்கள் கஷ்டப்படுவதிலே கூட அநேக நன்மைகள் இருக் கின்றன. ஏனென்றால் ஒரு மனிதன் கஷ்டப்படுகிற போதுதான் அவனிடத்திலே அடங்கியுள்ள அறிவு, சுய முயற்சி, ஊக்கம், தளராத நம்பிக்கை முதலியன வெல்லாம் வெளியே வருகின்றன. ஒருவன் அடைகிற புகழைக் காட்டிலும் அவனுக்கு ஏற்படுகிற துன்பங் களைப் பொறுமையோடு மௌனமாகச் சகித்துக் கொள்கிறானே அதுதான் அவனுக்குப் பெருமையைக் கொடுக்கிறது. அவன் வயிற்றுப் பட்டினியால் சோர்ந்து போகலாம். மற்றவர்கள் செய்யும் அவமானங்களினால் அவன் தற்காலிக மாகத் தலைகுனிந்து கொண் டிருக்கலாம். அவனுடைய குடும்ப வாழ்க்கையே சீரழிக்கப்பட்டு விடலாம். ஆனால் அவன் நம்பிக்கையை மட்டும் இழப்பதே இல்லை. நம்பிக்கையிலேதான் எந்த மகானும் தன் கவலைகளை மறக்கிறான். அந்த நம்பிக்கைதான் அவனுக்குப் புன்சிரிப்பைத் தருகிறது. கவலையாகிற பெருஞ்சுமை அவன் தலையை இறுக்கிக் கொண்டிருந்த போதிலும் அவன் நிமிர்ந்துதான் நடக்கிறான். எவனொருவன் அதிகமாகக் கஷ்டத்தை யடைகிறானோ அவனால் தான் அதிகமான நன்மையைச் செய்ய முடியும் என்கிறது ஒரு வாசகம். யுத்த களத்தில் எவனொருவன் பொறுமையோடு தனக்கு நேரிடும் கஷ்டங்களைச் சகித்துக் கொண்டு மேல் நோக்கிச் செல்கிறானோ அவன் தான் வீரன். ஒருவனுக்குப் பத்து எதிரிகளைத் தாக்கி கொல்ல சக்தி யிருக்கலாம். ஆனால் அதே பத்து பேர் அவனை வந்து தாக்குகிறபோது அவன் மிரண்டு போய் பின் வாங்கலாம். அப்படிப்பட்டவனை வீரனாக எப்படிச் சொல்ல முடியும்? அவனை வெறும் பலசாலி என்று மட்டும் சொல்லலாம்; வீரனென்று சொல்ல முடியுமா? வீரர்கள் எப்பொழுதுமே தங்கள் லட்சியத்திற்காகப் போராடுகிறவர்கள். அவர்கள் போனாலும் அவர்களுடைய லட்சியம் காப்பாற்றப்படும். முன்னொரு காலத்தில் பாரசீக தேசத்து பிரபல மன்னனாகிய ஜெர்க்ஸ1 என்பவன் கிரீ தேசத்தின் மீது படையெடுத்தான். லியோனிதா2 என்பவனுடைய தலைமையில் கிரேக்கர்கள் இந்தப் பாரசீகப் படையை எதிர்த்தார்கள். இரு சார்பினருக்கும் தெர்மாப் பிலே3 கணவாயில் ஒரு கோர யுத்தம் நடைபெற்றது. கிரேக்க இதிகாசத்தில் இந்த தெர்மாப்பிலே யுத்தம் மிகப் பிரசித்தமானது. இதைப் பற்றி அறிஞர்கள் அநேக நூல்கள் இயற்றியிருக்கிறார்கள்; காவியங்கள் பாடி யிருக்கிறார்கள். இந்த யுத்தத்தில் லியோனி தாஸும் அவனுடைய கிரேக்கப் படை வீரர்களும் அழிந்து போனார்கள். ஆனால் கிரீ தேசம் காப்பாற்றப்பட்டது. ஒரு தேசம் அதன் விதீரணத்தினால் பெருமையடைவ தில்லை. அந்தத் தேசத்து ஜனங்களுடைய உயர்ந்த மனப்பான்மை யினால்தான் அது பெருமையடைகிறது. சிலர், தங்களுக்குச் சுதந்திரம் வேண்டுமென்று கதறுகிறார்கள். ஆனால் அந்தச் சுதந்திரத்தை அடைவதற்கோ அல்லது அதனை அனுபவிப்பதற்கோ அவர்கள் எந்த விதத்திலும் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வ தில்லை. சுதந்திரம், சுதந்திரம் என்று வெறுங் கூச்சல் போடுகிறார்கள். வெறுங்கூச்சல் போடுவதனால் மட்டும் சுதந்திரம் வந்து விடுமா? தியாகம் செய்ய வேண்டாமா? சத்திய வாழ்க்கையை நடத்த வேண் டாமா? சுதந்திரத்தின் மீது உண்மையான காதல் கொள்ள வேண் டாமா? அப்படி ஒரு தேசத்திலே சுதந்திரத்திற்காக, தரும வாழ்க் கையை, சத்திய மார்க்கத்தைக் கடைப்பிடிக்கிறவர்கள் ஒரு சிலர் தான். அவர்கள்தான் மகான்கள். அவர்களுக்குத்தான் அதிகமான கஷ்டங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் இந்தக் கஷ்டங்களைச் சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக் கொள்வதன் மூலமாகவே, அந்தத் தேசம் வாழ்கிறது. நல்ல காரியத்திற்கு நாலாயிரம் விக்கினங்கள் என்பார்கள். மகான்கள் இந்த நாலாயிரம் விக்கினங்களையும் புன் சிரிப்போடு கடந்து செல்கிறார்கள். 15. மகான்கள் யார்? உலகத்திலே மகான்கள் என்று எல்லாரையும் நாம் அழைக்கி றோமா? இல்லை. எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும் அவை களை யெல்லாம் அலட்சியமாகவும் புன்சிரிப்போடும் சமாளித்துக் கொண்டு மற்றவர்களுடைய நலத்துக்காக ஓயாமல் உழைக்கிறார் களே அவர்களைத்தான் மகான்கள் என்று அழைக்கிறோம். அவர்களைத்தான் மானிட சமுதாயம் தனது இருதய பொக்கிஷத் தில் வைத்துப் பூஜை செய்கிறது. எத்தனை மகான்கள், தங்கள் தேசத்தின் விடுதலைக்காகவும், தங்கள் ஜாதீய கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காகவும் எத்தனை விதமான கஷ்டங்கள் பட்டிருக்கிறார்கள்? மகனே! அவர் களுடைய புனிதமான சரித்திரங்களை நீ கேட்பாயானால், உனக்கு மயிர்க் கூச்செறியும்; உனது கண்களில் உன்னை யறியாமலே கண்ணீர் வடியும் இப்படிப்பட்ட மகான்கள் ஒரு நாட்டிற்கு மட்டும், ஒரு காலத்திற்கு மட்டும் உரியவர்கள் என்று நினையாதே. இவர்களெல்லோரும் காலங் கடந்தவர்கள்; நித்திய புருஷர்கள். இப்படிப்பட்ட மகான்களின் வரிசையில் ஆண்கள் மட்டும் இல்லை; பெண்களும் இருக்கிறார்கள். சேவை செய்ய, தியாகம் செய்ய, உலகத்திற்கு உபகாரம் புரிய ஆண்களுக்கு மட்டுந்தான் உரிமை யுண்டா என்ன? சக்தி யுண்டா என்ன? மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களின் உரிமைகளுக்காகச் சத்தியாக்கிரகம் நடத்தி வந்த போது சிறை சென்றார்; அங்கே கல்லுடைத்தார்; எத்தனையோ விதமான அவமானங்களை அடைந்தார். தமது மனைவி மரணாவதையி லிருக்கிறாள் என்று தெரிந் திருந்தும் அவளை மறந்து, தமது தொண்டிலே ஈடுபட்டிருந்தார். இவை யெல்லாம் எதற்காக? இந்திய ஜாதியின் கௌரவத்தைக் காப்பாற்று வதற்காக. இதனால்தானே இவரை ஒரு மகானென்று உலகம் போற்று கிறது. விட்ஜர்லாந்து என்ற மத்திய ஐரோப்பாவிலுள்ள சிறிய நாட்டைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயல்லவா? இந்த நாட்டைப் பல வல்லரசுகள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் இது சுதந்திரமாகவே இருக்கிறது; சமாதானமாகவே வாழ்கிறது. இதற்கு இந்த நாட்டு ஜனங்களுடைய தேசப்பற்று, வீர மனப்பான்மை, ஒழுக்கம் முதலியவைதான் காரணம். ஆனால் இந்த நாட்டார் சுதந்திரம் பெறுவதற்காக எவ்வளவு சிரமப்பட்டனர் தெரியுமா? ஒரு சிறிய சம்பவத்தைக் குறிப்பிடுகிறேன் கேள். கி.பி. 1386ஆம் வருஷம் ஆதிரியா தேசம், விட்ஜர்லாந்தின் மீது படை யெடுத்தது. விட்ஜர்லாந்துக்குப் படை பலம் அதிக மில்லை. இதனால் சொற்பப் படையைக் கொண்டே ஆதிரியர் களை எதிர்க்க ஆரம்பித்தது. ஸெம்பாக்1 என்ற இடத்தில் போர் நடைபெற்றது. ஆதிரியர்கள் நீண்ட ஈட்டிகளைக் கையிலேந்திக் கொண்டும், சுவர் மாதிரி இடை விடாமல் வரிசையாக அணி வகுத்துக் கொண்டும் முன்னேறிச் சென்றார்கள். சொற்பப் படை யினரான விகாரர்கள் கையில், குறுகிய ஈட்டிகளே ஆயுதங்களா யிருந்தன. எனவே தோல்வியை ஒப்புக்கொண்டு கலைந்து போக வேண்டிய நிலையிலிருந்தார்கள். இந்தச் சமயத்தில் ஒரு போர் வீரன், தோல்வியை ஒப்புக்கொண்டு ஓட மனமில்லாதவனாய், தன் சகோதர போர் வீரர்களை மற்றுமொரு முறை உற்சாகப்படுத்திப் பார்க்கலாமென்று தீர்மானித்தான். அப்படியே வி போர் வீரர்களைப் பார்த்து என் தாய் நாட்டுச் சகோதரர்களே! நான் சுதந்திர பாதையைத் திறந்து விடுகிறேன். என் மனைவி மக்களைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி விட்டு, மற்றப் போர் வீரர்களில் சிலருடைய ஈட்டிகளையும் வாங்கிக் கொண்டு ஒரே மூச்சாக ஆதிரியப்படையின் நடுவில் நுழைந்து விட்டான். ஆதிரியப் படை வழி விட்டது. அந்த வழியில் வி போர் வீரர்கள் ஜெய கோஷத்துடன் பிரவேசித்தார்கள். விங்க்கல்ரீட்2 என்ற அந்த வி போர் வீரன் ஆதிரியப் படைக்குள் நுழைந்து இறந்து விட்டான் என்பதென்னவோ வாதவம். ஆனால் அவன் நாடு காப்பாற்றப் பட்டதல்லவா? இந்த யுத்தம் நடைபெற்றது. 1386ஆம் வருஷம் ஜூலை மாதம் ஒன்பதாந்தேதியன்று. இப்பொழுது கூட பிரதி வருஷம் ஜூலை மாதம் ஒன்பதாந்தேதியை விகாரர்கள் தங்கள் தேசீய தினமாகக் கொண்டாடி வருகிறார்கள். விங்க்கல்ரீட் என்ற தங்கள் தலைவனை வழிபடுகிறார்கள். இவனை ஒரு சாதாரண போர் வீரன் என்றுதான் நீ கருதுகிறாயா? இல்லவே இல்லை. இவன் ஒரு மகான். இதனால்தான் விகாரர்கள் இவன் வசித்த வீட்டை ஒரு யாத்திரை தலம் போல் இன்றும் காப்பாற்றி வருகிறார்கள். இவன் அணிந்திருந்த சல்லடம், உபயோகித்த ஈட்டி முதலியவை களும் காப்பாற்றப்பட்டு வருகின்றன. ஆங்காங்கு இவனுக்கு உருவச் சிலைகள் பல ஏற்பட்டிருக்கின்றன. விட்ஜர்லாந்து வாசிகளில் ஆண்களுக்கு மட்டுந்தான் இந்தச் சுதந்திரப் பற்று, தியாக உணர்ச்சி முதலியன இருக்கின்றன வென்று நினைக்கிறாயா? வி பெண்களின் வீரமும் தியாகமும் அந்த நாட்டு இதிகாசத்தில் மகா பிரசித்தமானவை. மேற்படி ஸெம்பாக் யுத்தம் நடைபெற்ற சுமார் நூறு வருஷங்களுக்குப் பிறகு - அதாவது கி. பி. 1499ஆம் வருஷம் - ஆதிரியர்கள் மீண்டும் விட்ஜர்லாந்தின் மீது படை யெடுத்தார்கள். சாமர்த்தியசாலி களான ஆதிரியர்கள் எவ்வித சந்தடியும் செய்யாமல் ஒரு பெரும் படையினராக விட்ஜர்லாந்திலுள்ள ஒரு கணவாயில் வந்து சேர்ந்தனர். அந்தக் கணவாயில் பல கிராமங்கள் இருந்தன. கிராம வாசிகளில் ஆண்கள், தங்கள் அறுவடை முதலிய வற்றைக் கவனிக்க மலை மீது சென்றிருந்தனர். ஆதிரியப் படை வந்த தருணத்தில் பெண்கள் மட்டுமே கிராமங்களில் இருந்தனர். ஆதிரியப் படை வந்ததைப் பார்த்த இந்தப் பெண்கள் அத்தனைபேரும் ஒன்று சேர்ந் தனர்; வீடுகளிலே கிடந்த மண்வெட்டி, கோடரி முதலிய அகப் பட்ட ஆயுதங்களைக் கையிலேந்திக் கொண்டு ஆதிரியப் படையை எதிர்த்தனர். எதிர்பாராத இந்த எதிர்ப்பைக் கண்டு ஆதிரியப் படை சிதறி ஓடி விட்டது. விட்ஜர்லாந்தின் சுதந்திரம் மீண்டு மொரு முறை காப்பாற்றப்பட்டது. யாரால்? பெண்களால்! இதனால்தான் இன்றுகூட விட்ஜர்லாந்தில், பெண்களுக்கு அதிகமான சலுகைகளும் உரிமைகளும் இருக்கின்றன. 16. போர் வீரனாயிரு மகனே! போர் வீரனாயிரு என்று உனக்குச் சொல்கிறேன். சுலபமாக இதனைச் சொல்கிறேன் என்று நீ நினைக்காதே. போர் வீரன் என்ற சொற்றொடரின் முழு அர்த்தத்தையும் தெரிந்து கொண்டுதான் உனக்குச் சொல்கிறேன். அப்படியானால், பிரதி யொருவனும் போர்க் களத்திற்குச் சென்று போர் புரிந்து வீரனாதல் முடியுமா? அஃது அவசியமா? என்று நீ கேட்கலாம். யுத்த களத்திற்குச் சென்று போர் புரிகிறவன்தான் போர் வீரன் என்று நீ நினையாதே. வாழ்க்கை யென்பதே ஒரு போராட்டம். இஃது உனக்குத் தெரிந்த விஷயந்தானே? இந்த வாழ்க்கைப் போராட்டத்திலே ஈடுபட்டு வெற்றி காண்கிறவன் கூட வீரன்தான். வாழ்க்கையிலே வெற்றி காண்பது என்றால் என்ன? ஒருவன் ஏழையாயிருந்து, சுய முயற்சியி னாலும் அதிருஷ்ட வசத்தினாலும் கோடீசுவரனாகி விடுகிறா னென்று வைத்துக்கொள். கோடீசுவரனாகிவிட்ட ஒரு காரணத்தி னால் மட்டும் அவன் வாழ்க்கையில் வெற்றி கண்டு விட்டான் என்பது அர்த்தமா என்ன? இல்லவே இல்லை. அவன் கோடீசுவர னாகி விட்டதன் காரணமாக ஆயிரக்கணக்கான பேராவது சுகப் பட்டிருக்க வேண்டும். தவிர, அவன் பல பேருடைய துன்பத்தை உபயோகித்துக் கோடீசுவரனாகியிருக்கக்கூடாது. அதாவது எவனொருவன் தனது வாழ்க்கையில் அதிகமான பேருக்கு அதிக மான சுகத்தைக் கொடுத்திருக்கிறானோ, அதிகமான நன்மையைச் செய்திருக்கிறானோ அவன்தான் வாழ்க்கையில் வெற்றி கண்டவன் என்று சொல்லவேண்டும். ஆனால் இன்று உனக்கு யுத்த களத்திலே நின்று போர் புரிகிற போர் வீரனுடைய வாழ்க்கையைப் பற்றித்தான் சிறிது கூற வேண்டுமென்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு யுத்த வீரனுக்கும் வாழ்க்கைப் போராட்டத்திலே ஈடுபட்டிருக்கிற ஒரு தனி நபருக்கும் கடமையும் ஒன்றுதான்; தகுதியும் ஒன்றுதான். ஆகையால்தான் உனக்குப் போர் வீரனுடைய வாழ்க்கையைப் பற்றி எடுத்துச் சொல்கிறேன். ஒரு போர் வீரனுடைய வாழ்க்கை, கடமையை அடிப்படை யாகக் கொண்டு அமைந்திருக்கிறது. அவன் கீழ்ப்படிந்து நடக்கும் சுபாவமுடைய வனாகவும், ஒழுங்குக்குக் கட்டுப்பட்டவனாகவும், எப்பொழுதும் எதற்கும் தயாராயிருக்கிறவனாகவு மிருக்கவேண்டும். போர் முரசு கொட்டும் சப்தம் கேட்டவுடன் அவன் கச்சை கட்டிக் கொண்டு புறப்பட்டு விடவேண்டும். இன்னும் சிறிது நேரம் பொறுத்துப் போகலாமென்று இருக்கக்கூடாது. அல்லது ஏன் போக வேண்டும் என்று தன் மனத் திற்குள்ளேயே வாதப்பிரதி வாதங்கள் செய்து கொண்டிருக்கக்கூடாது. எந்தவிதமான ஆபத்து ஏற்படுமோ என்று சிந்தனை செய்து கொண்டிருக்கக்கூடாது. பீரங்கி வாயிலே சென்று நுழையுமாறு உத்தரவானாலும் அதற்குக் கீழ்ப் படிந்து உடனே செல்ல வேண்டும். வாழ்க்கைப் போராட்டத்திலே கூட ஒரு மனிதனுக்கு, ஒழுங்கும், தைரியமும், கடமையை உணரும் சக்தியும் இருந்தால் அவன் நிச்சயமாக வெற்றியடைவான். எவனொருவன், ஒழுங்காகத் தன் வாழ்க்கையை நடத்துகிறானோ அவனிடத்தில் விசேஷமானதொரு சக்தி உதயமாகிறது. அந்தச் சக்தியைக் கொண்டு அவன் அநேக காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியும் யுத்தகளத்திலேகூட ஒரு வீரன் மேற் பதவிகளை விரைவில் அடைகிறானென்று சொன்னால், அவன் தன் கடமையை ஒழுங்காகச் செய்து கொண்டு வந்திருக்கிறானென்றுதான் அர்த்தம். ஒரு போர் வீரன், தோல்வியிலே யாகட்டும், வெற்றியிலே யாகட்டும், தன் கடமையில்தான் கண்ணுங் கருத்துமா யிருக்க வேண்டும். தோல்வியிலே சோர்வோ, வெற்றியிலே களிப்போ கொள்ளக்கூடாது. வருவது என்ன என்பதை எப்பொழுதும் கூர்ந்து கவனித்துக் கொண் டிருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு போர் வீரன் காவல் புரியும் வேலைக்கு நியமிக்கப்படுகிறான் என்று வைத்துக் கொள். அவன் ராத்திரியில் தூங்கலாமா? சற்றுக் கண்ணயர்ந்து போய்விட்டா னாகில் அவன் படையே அழிந்துபோய் விடக்கூடிய நிலைமையும் ஏற்படக்கூடும். மற்றும், அந்தக் காவல் வீரன், தன் படை அனைத்தையும் காப்பாற்றும் பொருட்டு, தன் உயிரையே கொடுக்க வேண்டி வந்தாலும் வரும். அதற்கு இவன் பின்னடையவே கூடாது. ஒரு போர் வீரன், என்ன விதமான சாகஸச் செயல்களைச் செய்த போதிலும், எவ்வளவு துணிவான செயல்களை நிகழ்த்திய போதிலும் அவன் அவற்றைப்பற்றி பெருமையாகப் பேசிக்கொள்ள மாட்டான். அடக்கந்தான் அவனுக்கு ஆபரணம். தன்னுடைய வெற்றியில் எந்தப் போர் வீரன் செருக்குக் கொள்கிறானோ அதே போர் வீரன் தோல்வியில் சோர்வடைந்து விடுதலுங்கூடும். ஆகை யால் சிறந்த சேனாதிபதிகள் எப்பொழுதுமே தங்கள் வீரத்தைப் பற்றித் தற்பெருமை பேசிக் கொள்ள மாட்டார்கள். சென்ற நூற்றாண்டில் பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் போர் நடைபெற்றது. அப்பொழுது ஜெர்மனி வெற்றி பெற்றது. ஜெர்மன் சேனாதிபதியா யிருந்த வான் மோல்ட்கே1 என்பவன். இவனைப் புகழ்ந்து ஒரு ஜெர்மானியக் கவி அநேக பாடல்களைப் பாடினான். மோல்ட்கே, பாடல்களுக்காக வந்தனம் செலுத்தி விட்டு பெரிய மனிதர் களுடைய பெருந்தன்மை, அவர்களுக்குக் கஷ்டம் நேரிடுகிறபோது தான் வெளியாகும். ஒரு போரில் வெற்றி யேற்படுவது, மனிதர்களால் மட்டும் நிகழக்கூடிய சம்பவமல்ல; அதற்கான சந்தர்ப்பங்களும் உண்டாக வேண்டும் என்று கூறினான். எவ்வளவு அடக்கம் பார்த்தாயா? ஒரு போர் வீரனுக்குத் தியாக சக்தி நிறைய இருக்கவேண்டும். தன் உயிருக்கு இவன் அஞ்சத் தொடங்குவானாகில், அது காரண மாக ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி விடுதல் கூடும். புலமைக்கும் போர் வீரனுக்கும் நீண்ட தூரம் என்று சிலர் கருது கிறார்கள். அதாவது, போர் வீரர்களாயிருக்கப்பட்டவர்கள் புலவர் களாகவோ கவிகளாகவோ இருக்க முடியாதென்பது இவர்கள் அபிப்பிராயம். ஆனால் உலக சரித்திரம் அப்படிக் கூற வில்லை. கிரீ தேசத்திலே பெரும் புலவர்களாயிருந்த ஸாக்ரட்டீ, ஸோபோக்ளீ1, ஜெனோபன் ஆகியோர், தங்கள் தாய் நாட்டின் பெருமையை நிலை நாட்டுவதற்காக யுத்த களத்தில் போர் புரிந்திருக்கிறார்கள். ரோம ஏகாதிபத்தியத்தில் பிரபல சக்ரவர்த்தி யாகவும் பிரபல போர் வீரனாகவும் விளங்கிய சீஸர்2 ஒரு மகா வித்துவான் என்பது உனக்குத் தெரியாதா? இத்தாலிய கவிஞனான தாந்தே3 ஒரு போர் வீரன். ஆங்கிலக் கவிஞனான சாஸர்4 என்பவன், கி. பி. 1359 ஆம் வருஷம் பிரான்சின் மீது தொடுக்கப்பட்ட யுத்தத்தில் கலந்து கொண்டான். சுமார் ஆயிரத்திருநூறு நூல்களை எழுதிப் புகழ்பெற்ற லோபே-டி-வேகா என்ற பானிஷ் புலவன், தன் வாழ்நாளின் ஆரம்பத்தில் போர் வீரனாகத்தான் இருந்தான். ஸெர்வாண்ட்டீ5 என்ற மற்றொரு பானிஷ் புலவனும் போர் வீரனாகத்தான் இருந்தான். ஆகவே மகனே! கல்வி ஞானத்திற்கும் போர்த்தன்மைக்கும் பகைமை என்று கருதாதே. இரண்டையும் நீ வளர்த்துக் கொள். 17. இரக்கங் கொள் மகனே! வாழ்க்கையிலே வெற்றியடைய வேண்டுமென்று விரும்பு கிறாயா? அப்படியானால் உனக்கு ஒரு ரகசியம் சொல்லித் தரட்டுமா? அதாவது எல்லோரிடத்திலும் அன்பு செலுத்து. மற்றவர் துயரத்தைப் பார்த்து நீ சும்மாயிராதே. உன் மனத்தில் இரக்கம் உண்டாகட்டும். அப்பொழுதுதான் உன் விஷயத்தில் எல்லோரும் இரக்கங் காட்டுவர்; உன் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்வர். நீ பிறருக்கு அநுதாபங் காட்டுவாயானால், பிறரிடத்தில் அன்பு செலுத்துவாயானால், உன்னிடத்திலுள்ள மன அழுக்குகளைக் களைந்தவனாவாய். உன் மீது யாராவது துவேஷங் காட்டுவார்க ளானால், அதனையும் நீ களைந்த வனாவாய். உன்னிடத்திலே உண்மையான அன்பு குடி கொண்டிருக்கு மானால், அஃது எப்படிப் பட்ட கடின சித்தத்தையும் கரைத்துவிடும். அதனால் உன்னுடைய மனித குணத்தையும், பிறருடைய மனித குணத்தையும் வளர்த்த வனாவாய். அஃது ஒரு பெரிய விஷயமல்லவா? யேசு நாதருடைய பன்னிரண்டு முக்கிய சிஷ்யர்களில் ஜான் என்ற ஒருவர் இருந்தார். அவர் வயோதிகராகி விட்டார். அதிகமாக நடக்கவோ பேசவோ கூட அவரால் முடியவில்லை. ஒரு சமயம் குழந்தைகளடங்கிய ஒரு கூட்டத்திற்கு, சில நண்பர்கள் அவரைத் தூக்கிக்கொண்டு போனார்கள். அப்பொழுது அவர் குழந்தை களைப் பார்த்து என்ன உபதேசம் செய்தார் தெரியுமா? குழந்தை களே! ஒருவரை யொருவர் நேசியுங்கள் என்றார். மீண்டும் இதனை ஒரு தரம் வற்புறுத்திச் சொன்னார். வேறு ஒன்றும் எங்களுக்குச் சொல்லக்கூடியது இல்லையா? என்று குழந்தைகள் கேட்டார்கள். வேறு ஒன்றுமில்லை. இதைத்தான் நான் திரும்பத் திரும்பச் சொல்வேன். ஏனென்றால் அன்பு மட்டும் உங்களுக்கிருக்குமானால் வேறு ஒன்றும் உங்களுக்குத் தேவையில்லை என்றார். இதில் எவ்வளவு ஆழ்ந்த கருத்து இருக்கிறதென்பதை அறிந்து கொண்டாயா? இதில் ஒரு ரகசியம் இருக்கிறது. அதாவது அன்பானது, அன்பு செலுத்து பவருக்கு மட்டும் நன்மை தருவதில்லை. அன்பு செலுத்தப்படு பவரும் நன்மையடைகின்றார். இதனால்தான் ஜான் முனிவரும் இதனை வலியுறுத்திக் கூறினார். நீ செலுத்துகிற அன்பு, உடனே ஏற்றுக் கொள்ளப்படாம லிருக்கலாம். உனக்கு நன்றி செலுத்தப்படாமலிருக்கலாம். அதற்காக உன் அன்பைச் செலுத்துவதில் நீ சிறிது கூடக் குறையக்கூடாது. எந்த விதத்திலும், உன்னைவிடத் தாழ்ந்தவனாயிருக்கிற யாருக்கும் உன் அன்பைச் செலுத்துவதில் நீ பின் வாங்கக்கூடாது. அப்படி நீ அன்பைச் செலுத்த மறுப்பாயாகில், உனக்கு நீயே கெடுதல் செய்து கொண்டவனாவாய். உனக்குத் தீங்கு செய்து கொள்ளாமல், மற்றவர்களுக்கு உன்னால் தீங்கு செய்ய முடியாது. உன்னிடம் அன்பு மட்டும் பரிபூரணமாக நிரம்பியிருக்கு மானால், அஃது உனக்கு எல்லாக்காரியங்களையும் சாதித்துக் கொடுக்கும். உன்னிடத்திலே பணமில்லாமலிருக்கலாம். நீ வசிப் பதற்குப் பெரிய மாளிகை இல்லாமலிருக்கலாம். ஆனாலும் மற்றவர்களை வறுமை யினின்று கரையேற்றி விடுவதற்காக உனக்குத் தேவையான பணம் அகப்படும். மற்றவர்கள் வசிப்பதற்காக உன்னால் பெரிய வீடுகள் கட்டிக் கொடுக்க முடியும். பிறருக்குச் சேவை செய்ய வேண்டுமானால், பணந்தான் முக்கியமாகத் தேவை யென்று நீ கருதாதே. சாதாரணமாக இந்த உலகத்தில், எதற்கெடுத்தாலும் பணம் என்கிறார்கள். பணத்துக்கு அளவுக்கு மிஞ்சின ஒரு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இது தவறு. ஆதி காலத்தில் கிறிதுவ தர்மத்தைப் பரப்பிய கிறிது நாதரின் சிஷ்யர்கள், பணத்தை வைத்துக்கொண்டு பிரசாரம் செய்ய வில்லை. எளிய வாழ்க்கையை அனுஷ்டித்துக்கொண்டுதான், உயரிய போதனைகளை அவர்கள் செய்து கொண்டு வந்தார்கள். இந்தியாவிலே கூட, புத்தர் பிரானும், சங்கரர், ராமானுஜர், மத்வர் முதலியோரும் ஆடம்பர வாழ்க்கையை நடத்திக் கொண்டு ஆடம் பரமாகப் பிரசாரம் செய்யவில்லை. காந்தியடிகளைப் பார்த்தா யல்லவா? அவருக்கு, எவ்வளவு பொருள் வேண்டுமானாலும் கிடைக்கிறது. ஆனால் தமக்கென்று ஒரு செப்புக் காசையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை. இதனால்தான் அவருடைய சேவைக்கு ஒரு மகத்துவமும், அவருடைய உபதேசங்களுக்கு ஒரு சக்தியும் இருந்தன; எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும். மனிதன், தன்னிஷ்டப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். மனோ உறுதி மட்டும் அவனுக்கு இருக்கவேண்டும். என்னைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும், நான் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறேனென்பது, என்னுடைய தன்னலமற்ற தொண்டிலே இருக்கிறது. கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற சக்திகளை யெல்லாம் நாம் துஷ்பிரயோகஞ் செய்யாமல், ஒழுங்காக உபயோகித்துக் கொண்டு வந்தோமானால், நாம் மகான்களாகி விடுவோம். யாராலும் எதிர்க்க முடியாத ஒரு சக்தி நம்மிடத்திலே வந்து சேரும். இன்னொரு ரகசியமும் உனக்குச் சொல்கிறேன் கேள். பிறருடைய துன்பத்தைத் துடைப்பதிலேதான் நமது இன்பம் இருக்கிறது. கதாகாலட்சேபங்களைக் கேட்பது, சினிமா பார்ப்பது முதலியவைகளில் நாம் அடைகிற இன்பத்தைக் காட்டிலும், மேற்சொன்ன இன்பந்தான் சிறந்தது; மனிதத் தன்மை நிரம்பியது. தவிர மற்றவர்கள், நம்மிடத்தில் அன்பு காட்டுகிறார்களென்று நாம் அடைகிற திருப்தியிலே இருக்கிற இன்பம் வேறெதிலும் இல்லை. இந்த உலகத்தில், யாரிடத்தில் நாம் அதிகமான அநுதாபம் காட்ட வேண்டும் தெரியுமா? அங்கவீனர்கள், வியாதியதர்கள் முதலியோர் களிடத்திலல்ல. அவர்களிடத்திலே காட்ட வேண்டிய அநுதாபம் வேறே. ஆனால் யாரொருவர் தங்களைத் தாங்களே அடக்கிக் கொள்ள முடியாதவர்களாயிருக்கிறார்களோ, யார் மற்ற வர்கள் விஷயத்தில் தாங்கள் செலுத்த வேண்டிய சில கடமைகள் உண்டென்பதைத் தெரிந்து கொள்ளாமலிருக்கிறார்களோ, யார் தங்களுடைய சுகத்தையே பிரதானமாகக் கருதி வாழ்க்கை முழுவதையும் கழித்து விடுகிறார்களோ, யார் தங்களுடைய கீழான ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு நல்ல காரியத்தைச் செய்கிறார்களோ அவர்களெல்லாரும் நமது இரக்கத்துக்குரியவர்கள். சிலர் தங்களுடைய உணர்ச்சிகளுக்கு மட்டும் மதிப்புக் கொடுக்கிறார்கள்; மற்றவர்களுடைய உணர்ச்சி களுக்கு மதிப்புக் கொடுப்பதேயில்லை. இவர்கள் வெளியுலகத் திற்குப் பரம சாதுக்கள் போலிருக்கிறார்கள். ஆனால் இவர்களைப் பின் தொடர்ந்து சென்று கவனியுங்கள்; தங்கள் குடும்ப விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறார்களென்பது நன்கு தெரியும். இப்படிப்பட்டவர்களை நம்பாதே. இன்னும் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் யாரிடத்தில் அநுதாபங் காட்ட வேண்டுமோ அவர்களிடத்தில் காட்ட மாட் டார்கள்; யாரிடத்தில் காட்ட வேண்டாமோ அவர்களிடத்தில் காட்டுவார்கள். பணக்காரர்கள் நம் வீட்டுக்கு வந்தால் அவர் களுக்கு நாம் ஆசார உபசாரங்கள் செய்வோம். அவர்கள் முன்னர், பல்லிளித்துக்கொண்டு கைகட்டி நிற்போம். ஆனால் ஏழைகள்-அவர்கள் நெருங்கிய உறவினர்களாகக் கூட இருக்கலாம். யாராவது நம் வீட்டிற்கு வந்தால் அவர்களை நாம் பாராமுகமாகவே நடத்து கிறோம்; உதாசீனமாகவும் பேசுகிறோம். பணக்காரர்களுக்கு ஓர் அற்ப கஷ்டம் வந்து விட்டால், அதற்காக நாம் நிரம்ப அநுதாபப் படுகிறோம்; ஆனால் ஏழைகளுக்குக் கஷ்டம் வந்தால் அவர்களைப் பரிகசிக்கிறோம். இவையெல்லாம் பொய் அநுதாபமல்லவா? 18. தன் கையே தனக்குதவி தன் கையே தனக்குதவி என்று நாம் எவ்வளவு சுலபமாகச் சொல்கிறோமோ அவ்வளவு சுலபமாக அதனைச் சந்தர்ப்பம் வருகிறபோது அனுஷ்டித்துக் காட்டுகிறோமில்லை. அநேக சந்தர்ப் பங்களில், நம்மை நாம் சமாளித்துக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பங் களில் கூட நாம் மற்றவர்களுடைய உதவியை நாடுகிறோம். இதற்குக் காரணம் நமக்கு மனோ திடமில்லாததுதான். எவனொருவனுக்கு நம்மை நாமே சமாளித்துக் கொள்ள முடியும் என்ற மனோ திடம் இல்லையோ அவன் வாழ்க்கையில் வேகமாக முன்னேற முடியாது. தனிப்பட்ட மனிதர்கள் விஷயத்தில் மட்டுமல்ல, தேசங்களின் விஷயத்திலும் இந்த உண்மை பொருந்தும். அதாவது எந்த ஒரு மனிதனுக்கோ எந்த ஒரு ஜாதிக்கோ தன்னம்பிக்கை இல்லா விட்டால் அவன் அல்லது அது வீழ்ச்சி யடைய வேண்டியதுதான். நமது அன்றாட வாழ்க்கையில் கூட இந்த உண்மையை அனுபவ ரீதியாகப் பார்க்கலாமே. ஒருவன் மற்றவர்களை நம்பி ஒரு காரியத்தில் இறங்குகிறானென்று வைத்துக் கொள். நல்ல சமயத்தில் அவர்களுக்கும் இவனுக்கும் ஏதாவது மனதாபம் ஏற்பட்டு விடுகிறது. அவர்கள் இவனை விட்டு விலகி விடுகிறார்கள். எடுத்த காரியம் அரைகுறையாக இருக்கிறது. இவன் விழித்துக்கொள்கிறான். சுயமாக அந்தக் காரியத்தைப் பூர்த்தி செய்ய இவனுக்கு ஆற்றல் இல்லை; மனோதிடமில்லை. என்ன செய்வான்? மனச்சோர்வடை கிறான். எதிலும் ஒருவித வெறுப்புக் காட்டுகிறான். இதனால் என்ன ஆகிறதென்றால், எதற்கெடுத்தாலும் இவன் மற்றவர்களுடைய தயவை எதிர்பார்க்க வேண்டியவனாகி விடுகிறான். உலகத்தில் மகான்களாகப் போற்றப்படுகிறவர்கள் அத்தனை பேரும், தங்களுடைய வாழ்க்கையின் ஆரம்பத்தில் எவ்வளவு சிரமப்பட்டிருக் கிறார்கள் தெரியுமா? இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சுய முயற்சியினாலேயே முன்னுக்கு வந்திருக்கிறார்கள். இவர்கள், தங்களுடைய அறிவு விசேஷத்தினாலேயோ, அல்லது பிரசங்கத் திறமை யினாலேயோ மட்டும் முன்னுக்கு வந்திருக்கிறார் களென்று சொல்ல முடியாது. எந்த விதமான வாழ்க்கை உயர்ந்த வாழ்க்கை என்று தாங்கள் கருதினார்களோ அந்த வாழ்க்கையை இவர்கள் நடத்திக் காட்டியிருக் கிறார்கள். அப்படி நடத்திக் காட்டிய வாழ்க்கையும் உலகத்திற்கு உபகார மாயிருந்திருக்கிறது. இதனால் இவர்கள் மகான் களாக எப்பொழுதும் போற்றப்பட்டு வருகிறார்கள். இவர்களுடைய வரலாறுகளை நாம் சிறிது ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால், இவர்களில் பெரும்பாலோர் ஏழைக் குடியி லேயே பிறந்தவர்களாகத் தென்படுவார்கள். அப்படிப் பிறந்தது, வாழ்க்கையிலே இவர்களுக்குப் பெரிய சாதகமாக முடிந்திருக்கிறது. ஏனென்றால், அப்பொழுதுதான் இவர்களுக்கு வாழ்க்கையின் கரடு முரடான பாகங்களும் நன்றாகத் தெரியும். வாழ்க்கையின் நல்ல அமிசங்களைக் காண வேண்டுமென்ற ஆவலும் இவர்களுக்கு உண்டாகும். ஷேக்பியர்1 என்கிற ஆங்கில மகா கவியைப்பற்றிக் கேட்டிருக்கிறாயல்லவா? இவன் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் தான். இவன் தகப்பனார் கையுறைகள் தயாரிக்கும் தொழிலைச் செய்து வந்ததாகவும், விவசாயப் பொருள்களில் வியாபாரம் செய்து வந்ததாகவும் சொல்கிறார்கள். இவனும் பாலியத்தில் கம்பள நெசவுக்கு வேண்டிய நூலைத் தயாரித்துக் கொடுத்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. எப்படி யிருந்த போதிலும் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் இவனுக்கு அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவனுடைய நாடகங்களில் இவன் அந்தந்தப் பாத்திரமாக நடித்து எழுதியிருக்கிறான். இந்த அனுபவங் களைப் பெற இவன் ஆதியில் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டும்? ஸாமியல் ஜான்ஸன்2 என்ற ஓர் ஆங்கிலப் புலவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாமல்லவா? இவன்தான் முதன்முதலாக ஆங்கில பாஷையில் அகராதியைத் தொகுத்தவன் என்று சொல்வார்கள். இவன் ஆரம்பத்தில் மண்வெட்டிக் கூலி சம்பாதித்து வயிறு பிழைத்தவன். இப்படியே ஒவ்வொரு துறையிலும் புகழ் படைத்த பெரியார்கள் பலர் பாலியத்தில் அநேக கஷ்டங்கள் பட்டபோதிலும் தங்களுடைய சுய முயற்சியினால் முன்னுக்கு வந்திருக்கிறார்கள். தன் கையே தனக்குதவி என்ற பழமொழியில் இவர்களுக்குப் பூரண நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆகையால் என் மகனே! மற்றவர்களைப்போல் நீயும் உனது மூதாதையர்களின் புகழைப்பற்றிப் பேசிக் கொண்டிருப்பதிலோ, அல்லது உனது தாய் நாட்டின் பழைய காலப் பெருமையைப் பற்றிப் பாடிக் கொண்டிருப்பதிலோ காலங் கழித்துக் கொண்டிராதே. அதனால் மட்டும் நீ வளர்ச்சி யடைய முடியாது. உனது மூதாதையர் களின் புகழும், உனது தாய் நாட்டின் பழைய பெருமையும் உனக்கு ஓரளவு வழிகாட்டியா யிருக்கலாம். அவ்வளவுதான். வாழ்க்கைப் பாதையில் நடந்து செல்லவேண்டியவன் நீயே. உன் முயற்சியைக் கொண்டுதான். நீ முன்னே செல்லவேண்டும். ஆகையால் தன் னம்பிக்கையை இழக்காமல், வாழ்க்கைப் பாதையில் முன்னேறிச் செல்வாயாக. 19. பெரிய மனிதனாயிரு மகனே! பெரிய மனிதன் என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறாய். நீயும் இதனைப் பல பேர் விஷயத்தில் உபயோகித்திருக்கலாம். பலரும் உன் விஷயத்தில் இதனை உபயோகித் திருக்கலாம். ஆனால் இதற்கு எத்தனைபேர் அர்த்தந் தெரிந்து கொண்டு உபயோகிக்கின்றனர் என்பது சந்தேகமான விஷயம். பெரிய மனிதன் என்று சொன்னால் உருவத்திலேயா? வயதிலேயா? பணத்திலேயா? அறிவிலேயா? தேக பலத்திலேயா? இவையொன்றி லுமே இல்லை யென்றுதான் நான் சொல்வேன். பிறருடைய துன்பத்தைக் கண்டு சகியாமல் கண்ணீர் விடுகிறானே அவன் பெரிய மனிதன். மற்றவர் களுடைய துன்பத்தைத் துடைப்பதற்காகத் தான் துன்பம் அனுபவிக் கிறானே அவன் பெரிய மனிதன். தனது கொள்கைக்காக மரணத்தைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள் கிறானே அவன் பெரிய மனிதன். இவர்களெல்லோரும் கந்தையை உடுத்திக் கொண்டிருக்கலாம்; கூழைக் குடிக்கலாம்; குடிசையில் வசிக்கலாம். ஆயினும் இவர்கள் பெரிய மனிதர்கள்தான். மனிதத் தன்மை யென்று சொன்னாலே, அது மனிதனுடைய அகவளர்ச் சியைத் தான் குறிக்கிறதே தவிர, புற வளர்ச்சியைக் குறிக்கவில்லை. ஒரு பெரிய மாளிகையில், சிறிய மனமுள்ள ஒருவன் வசித்துக் கொண்டிருக்கிறானென்று வைத்துக்கொள். அவனைப் பெரிய மனிதன் என்று சொல்ல உன் மனம் துணியுமா? அதைப் போலவே, ஒரு சிறிய குடிசையில் பெரிய மனதுள்ள ஒருவன் வசிக்கிறா னென்று வைத்துக்கொள். அவனைச் சிறிய மனிதன் என்று நீ கூசாமல் கூறி விடுவாயா? ஆதலின், குழந்தாய்! பெரிய மனிதன் என்பதற்குச் சாதாரண ஜனங்கள் என்ன லட்சணம் வைத்துக் கூறுகிறார்களோ அதனை நீ அப்படியே பின்பற்றாதே. உலகம் சொல்வதையெல்லாம் நீ நம்பிக்கொண்டிருப்பாயானால் உனக்குத் தன்னம்பிக்கை யென்பதே இல்லாமற் போய்விடும். முற்காலத்தில், வீரம் என்று சொன்னால் அதில் சீலமும் அடங்கியிருந்தது. ஆனால் இந்தக் காலத்திலேயா? ஆகாய விமானத்திலிருந்து நிரபராதிகளான ஜனங்கள் மீது எவனொருவன் அதிகமான குண்டுகளைப் பொழிந்து அதிகமான உயிர்ச் சேதத்தை உண்டுபண்ணுகிறானோ அவன்தான் வீரன் என்று கௌரவிக்கப் படுகிறான். அவனுக்குத்தான் விக்டோரியா கிரா போன்ற பதக்கங்களைக் கொடுக்கிறார்கள். முற்காலத்திலே இப்படியில்லை. எவனொருவன் தன் தேக பலத்தையும் மனோபலத்தையும் உயர்ந்த லட்சியங்களுக்காக உபயோகப் படுத்துகிறானோ அவனே வீரன் என்று போற்றப்பட்டான். எவனொருவன் தன் சகோதரர்களுக்குத் தொண்டு செய்கிறானோ, அந்தத் தொண்டின் மூலம் அவர்களை உயர்த்துகிறானோ, அவர்களைக் காப்பாற்றுகிறானோ அவன்தான் வீரன் என்று கௌரவிக்கப்பட்டான். இந்த வீரமெல்லாம் புறத் தோற்றத்திலே காணப்படுகிற வீரம். மனிதனுடைய அந்தரங்கத் திலே பிரகாசிக்கிற வீரம் ஒன்றுண்டு. மனச்சாட்சிப்படி நடத்தல், யோக்கியப் பொறுப்புடன் விவகாரங்களைச் செய்தல், தன்னுடைய சௌகரியங்களை மௌனமாக மறுத்துக் கொண்டு விடுதல், உலக மெல்லாம் தன்னை இகழ்ந்தாலும், தான் சரி யென்று நினைக்கிற ஒரு காரியத்தைச் செய்தல் ஆகிய இவை யெல்லாமும் வீரமாகும். ஆனால் இந்த வீரம் வெளிப் பார்வைக்குத் தெரியாது. விசாலமான இருதயத்தில்தான் இந்த வீரம் குடிகொள்ளும். இந்த இருதயத்தி லிருந்துதான் அன்பு உதயமாகும். அன்பு நிறைந்த இருதயமுடைய வர்கள்தான் எந்தவிதமான துன்பங்கள் வரினும் அவற்றை ஏற்றுக் கொள்ளுஞ் சக்தியுடையவராக இருப்பர். அவர்களுக்குத்தான், தம்மை மறந்து தொண்டு செய்ய வேண்டுமென்ற ஊக்கம் உண்டாகும். யுத்தகளத்திலே நின்று போர் புரிகிறானே அவன் மட்டும் வீரனல்ல. அவன் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் யுத்தஞ் செய்கிறானென்பது வாதவம். தனது நாட்டிற்கும் ஜாதிக்கும் அழியாத புகழைத் தேடித்தருகிறா னென்பது உண்மை. இப்படிப் பட்டவனை ஒரு தைரியசாலி என்று சொல்லலாம். இவனிடத்தில் அருளும் அன்பும் இருந்தால்தான் இவனை வீரனென்று சொல்ல லாம். இப்படிப்பட்டவன்தான் பெரியமனிதன். மகான்கள் அல்லது பெரிய மனிதர்களென்று சொன்னால் அவர்கள் யுத்த களத்திலே நின்று போர் புரிய வேண்டுமென்ப தில்லை. அவர்கள் ஊர் ஊராகச் சென்று பிரசங்கம் செய்து கொண் டிருக்க வேண்டுமென்பது அர்த்தமில்லை. எவரிடத்தில் பெருந் தன்மை அதாவது மகான்தன்மை இருக்கிறதோ அவர்களை உடனே ஜனங்கள் தெரிந்துகொண்டு விடு கிறார்கள். அவர்களிடமுள்ள பெருந்தன்மையானது எப்படியோ, தானே, ஜனங்களிடத்தில் வந்து முத்திரையிட்டுவிடுகிறது. அவர்களுடைய வார்த்தைகளை ஜனங்கள் செவி கொடுத்துக் கேட்கிறார்கள். பெரிய மனிதர்களுடைய யுத்த மைதானமெல்லாம், தாமே வலியத் துன்பமனுபவித்தல், தன்னலத்தைத் தியாகஞ் செய்துவிடுதல் ஆகிய இவைதான். இதனால்தான் இவர்கள் இறக்கிற போது, எவ்வித சின்னங் களும் இவர்கள் மார்பில் பிரகாசிப்பதில்லை; லட்சக்கணக்கான மக்கள் இவர்களைச் சூழ்ந்து துக்கக் கண்ணீர் வடிப்பதில்லை; அதற்கு மாறாகச் சந்தோஷப்படுகிறார்கள். யேசு நாதர் சிலுவையிலறையப்பட்ட காலத்தில் அவருக்காக இரக்கங் காட்டினவர் ஒருசிலர்தான். ஆனால் அவரைப் பரிகசித்துப் பலவாறு தூஷித்தவர்கள்தான் அதிகம். ஆனால் அவர் இவைகளுக்காக மனம் நொந்தாரோ? இல்லவே இல்லை. இதனாலேயே அவரை இப்பொழுது உலக மகா ஜனங்கள் பக்தி சிரத்தையோடு போற்று கிறார்கள். அவர் இறந்து போன வரலாற்றைக் கேட்டு இப்பொழுது கோடிக் கணக்கான ஜனங்கள் கண்ணீர் உகுக்கிறார்கள். மனிதன் புகழுக்காகவும், வெற்றிக்காகவும் படைக்கப்படவில்லை. இவை களை விட மேலான தொரு லட்சியத்தை யடைவதற்காகவே சிருஷ்டிக்கப்பட்டிருக் கிறான். கடவுள் இந்தப் பூலோகத்தில் மனிதனுக்குச் சொற்ப ஆயுளையே கொடுத்திருக்கிறார். ஆனால் இந்தச் சொற்ப கால வாழ்விலே, அவனுடைய நித்திய வாழ்வு அடங்கியிருக்கிறது. இந்தச் சொற்ப கால வாழ்விலே, அவன் அநேக சத்துருக்களை வெற்றி கொள்ள வேண்டியிருக் கிறது; அநேக தீமைகளைத் தடுக்க வேண்டியிருக்கிறது; அநேக ஆபத்துக் களைக் கடக்க வேண்டியிருக்கிறது; அநேக தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது என்று ஓர் ஆசிரியன் கூறுகிறான். அதாவது மனிதனாகப் பிறந்துவிட்ட ஒருவன் எவ்வளவு எவ்வளவு காரியங் களைச் செய்ய வேண்டி யிருக்கிற தென்று இதனால் நன்கு தெரிய வரும். இவைகளைச் செய்கிறவர்கள் மனிதர்கள்; பெரிய மனிதர்கள்; மகான்கள். இந்த மாதிரியான மகான்கள் ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு மதத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் தோன்றுகிறார்கள். அப்படிப் பட்டதொரு மகானாக நீ ஆக வேண்டாமா? பெரிய மனிதனாக வேண்டாமா? பெரிய மனிதர்கள் அத்தனை பேருடைய சரித்திரத்தையும் நீ படித்துப் பார்த்தாயானால், அவர்கள் புகழையோ கீர்த்தியையோ பொருட் படுத்தாமல், மற்றவர்களுக்காகத் தங்களை ஒப்புக்கொடுத் திருக்கிறார்கள். தாங்கள், தங்களுடைய கடமையைச் செய்து விட்டோமென்ற திருப்தி தான் அவர்களுக்குக் கிடைத்த சன்மானம். குழந்தாய்! உனக்கு ஒரு விஷயம் மட்டும் ஞாபகமிருக்கட்டும். அதாவது உலகத்திலே அநாவசியமான பொருள் ஒன்றுகூட இல்லை. ஏதோ ஒரு பிரயோஜனத்திற்காகத்தான் கடவுள் அவற்றைச் சிருஷ்டித் திருக்கிறார். அவற்றைப் பிரயோஜனப் படுத்திக் கொள்ள வேண்டுவது நமது கடமை. அதைப் போலவே நமது வாழ்க்கையில் ஏற்படுகிற ஒவ்வோர் அனுபவமும் நமக்கு ஒவ்வொரு பாடந்தான். அதிலே ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. அநேக சந்தர்ப்பங்களிலே மனிதனுக்கு ஏற்படுகிற துரதிருஷ்டங்கூட அவனுக்கு அனுகூல மாகவே இருக்கிறது. ஏனென்றால் ஒரு மனிதனுக்குத் துரதிருஷ்டம் உண்டாகிற போதுதான், அவனிடத்திலேயுள்ள மனிதத் தன்மைகள் யாவும் வெளிப்படுகின்றன. ஜெர்மானியக் கவிஞன் ஒருவன் கூறுகிறான்:- எவனொருவன் கண்ணீர் விட்டுக் கொண்டே ரொட்டியைத் தின்கிறானோ, தனது படுக்கையில் அழுது கொண்டே புரண்டு இராக்காலத்தைக் கழிக்கிறானோ அவனால் தான் தெய்வ சக்தி யொன்று இருக்கிறதென்பதை அறிந்து கொள்ள முடிகிறது எவ்வளவு அருமையான வாசகம் பார்த்தாயா? நமக்கு அவக் கேடுகள் ஏதேனும் ஏற்படுகின்றனவென்று சொன்னால், அவை, நம்மைப் பரிசோதிக்கவும் அதிலே நாம் வெற்றியடையவும் கடவுளால் அனுப்பப் படுகின்றனவென்று நாம் கொள்ளவேண்டும். இந்தத் துன்ப காலத்தில் நாம் சறுக்கி விழாமல் உறுதியாக நின்றோ மானால் அப்பொழுதுதான் நாம் பெரிய மனிதராகிறோம். உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படுமானால் நீ என்ன செய்யப்போகிறாய்? கை கட்டிக்கொண்டு அழுதவண்ணமிருக்கப் போகிறாயா? அழாதே. பெரிய மனிதனாக நடந்து கொள். தலை குனியாதே. தலை நிமிர்ந்து நட. அதனால் உனக்கும் உன்னைப் பெற்றெடுத்த குடும்பத்திற்கும் அதிக பெருமையுண்டு. 20. அன்பினால் வெற்றிகொள் மகனே! அறிஞர்கள், மனிதனை என்னவென்று சொல்கி றார்கள் தெரியுமா? சமுதாயப் பிராணி என்று சொல்கிறார்கள். அதாவது மனிதன், மிருக சுபாவத்தையுடையவன் என்பதை இந்த வாசகம் ஊர்ஜிதம் செய்கிறது. மனிதன், தெய்வத் தன்மை நிறைந்தவ னென்றும் இதனால் அவன் தெய்வீக சக்தியாகிய அஹிம்சையைக் கையாள வேண்டு மென்றும், இன்று நேற்றல்ல, ஆயிரக்கணக்கான வருஷங்களாகப் பிரசாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. ஆனாலும், மனிதன், மிருக சுபாவத்தை விட்டானா பார்த்தாயா? இப்பொழுது ஐரோப்பாவிலே நடைபெறுகிற யுத்தம் ஒன்று போதுமே. மற்றவர்களைச் சீர்திருத்த வேண்டுமானாலுஞ் சரி, ஒழுங்கு படுத்த வேண்டுமானாலுஞ் சரி, மனிதன், பலாத்காரத்தைத்தான் உபயோகிக்க வேண்டுமென்று கருதுகிறான். ஏனென்றால் அதுதான் சுலபமான வழி. பலாத்காரமானது எப்பொழுதுமே காரண காரியங் களை விசாரிக்காது; எவ்வித தர்க்கவாதத்திற்கும் இடங்கொடாது. குறுக்குவழியாகச் சென்று ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டு மென்றால் அதற்குப் பலாத்காரந்தான் சரியான வழி. காட்டு மிராண்டி ஜாதியினர் எவனைப் பெரியவனென்று கருதுகிறார் களென்றால், எவன் ஓங்கியடிக்கிறானோ அவன்தான் பெரியவன். அவனுக்குத்தான் அதிக மரியாதையுண்டு. காட்டுமிராண்டி ஜாதியினரைச் சொல்லப் போவானேன்? நாகரிக ஜாதியினர் என்று பெயரெடுத்திருக்கிறவர்கள்கூட, ஓங்கியடிக்கிறவனே பலவான் என்று சித்தாந்தத்தைத்தான் அனுஷ்டிக்கிறார்கள். ஐரோப்பிய நாகரிக நாடுகளிலே பெரிய மனிதர்களிடையில் விநோதமான வழக்கமொன்றுண்டு. அதாவது, பெரிய மனிதர்கள் இரண்டு பேர்களுக்கிடையில் ஏதோ வாதப்பிரதிவாதம் ஏற்பட்டு அபிப்பிராய பேதம் முற்றி விடுமானால்; அப்பொழுது யாருடைய அபிப்பிராயம் சிலாக்கிய மானது என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டுமானால் என்ன செய்வார்கள் தெரியுமா? கத்தியெடுத்துச் சண்டை போடுவார்கள்; அல்லது துப்பாக்கி யெடுத்துக் கொண்டு ஒருவர் மீதொருவர் குறிபார்த்துச் சுடுவார்கள்; அல்லது குத்துச் சண்டை போட்டுக் கொள்வார்கள். இதற்கு டூயெல்1 என்று பெயர். அதாவது இருவர் சண்டை யென்று அர்த்தம். இந்தச் சண்டை யிலே யார் வெற்றி பெறுகிறானோ அவனுடைய அபிப்பிராயந்தான் சரி. என்ன விநோதமான தீர்ப்பு பார்த்தாயா? ஆனால் அதிருஷ்ட வசமாக, இந்த இருவர் சண்டை சமீப காலத்திலிருந்து காணப்பட வில்லை. தனிப்பட்ட நபர்கள் இங்ஙனம் சண்டை போடுவது போய், இப்பொழுது நாகரிக தேசங்கள் தங்கள் எல்லைத் தகராறுகளைத் தீர்த்துக் கொள்ளவோ, ஏற்கனவே செய்து கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தங்களை ஊர்ஜிதம் செய்து கொள்ளவோ, யுத்த முறையைத் தான் கையாள்கின்றன. இப்படிக் கையாள்வதுதான் நாகரிக மென்றும் கருது கிறார்கள். கிரேக்க ஏகாதிபத்தியமும் ரோம ஏகாதி பத்தியமும் ஓங்கி யிருந்த காலத்திலிருந்து நாளது தேதி வரைக்கும் யுத்தத்திற்கு மகத்தான கௌரவம் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. வீரம், கீர்த்தி என்ற உயர்ந்த வார்த்தைகளெல்லாம் இந்த யுத்தத்தை ஒட்டியே உபயோகிக்கப் படுகின்றன. பலாத்காரத்திற்கு இவ்வளவு மகத்துவம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அன்பினால் மானிட சமுதாயத்தை ஒன்றுபடுத்த முடியும், மானிட சமுதாயத்திற்குச் சேவை செய்ய முடியும் என்று யாராவது சொன்னால்கூட அதை யாரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இன்றைய உலகம் இருக்கிறது. என்ன ஆச்சரியம்! இப்படியிருந்தாலும் பலாத்கார முறையைக் காட்டிலும் அன்பு முறைதான் சிரேஷ்டமான தென்பதை அறிஞர்கள் அங்கீ கரித்துக் கொண்டிருக்கின்றனர். இன்று நேற்றல்ல, நூற்றாண்டுகள் கணக்காக அறிஞர்கள் இந்த அன்பு உபதேசத்தைச் செய்து கொண்டுதான் வருகின்றனர். கி. பி. பதினொன்று, பன்னிரண்டாவது நூற்றாண்டுகளில், கிறிதுவர்கள், தங்கள் கிறிதுவ மதத்தின் புனிதத் தன்மையைக் காப்பாற்றும் பொருட்டுச் சிலுவைப்போர்கள் நடத்தினார்கள். அன்பையும் பணிவையும் போதித்த கிறிது நாதரின் தர்மத்தை, ஆயுத பலத்தைக் கொண்டு காப்பாற்ற முற்பட்டு விட்டார்கள்! இப்படி இவர்கள் ஆயுதப் போர் நடத்திக் கொண் டிருந்த காலத்திலும், சில அறிஞர்கள் ஆங்காங்குத் தோன்றி அன்பு உபதேசத்தைச் செய்து கொண்டுதான் வந்தார்கள். இவர்களை ஜனங்கள் பரிகசித்தார்கள். அதிகாரிகள் பயமுறுத்தினார்கள். ஆயினும் இவர்கள் தங்கள் அன்புத் தொண்டை விடாமற் செய்து கொண்டுதான் வந்தார்கள். இவர்களெல்லாரும் மனிதத்தன்மை நிறைந்தவர்கள். மனிதர்களாகிய நாம் வளர்ச்சி யடைந்து கொண்டு வருகிறோ மென்று சொன்னால் நம்முடைய மனிதத் தன்மை வளர்ந்து கொண்டு வர வேண்டுமென்பதுதான் அர்த்தம். அப்படியானால் நாம் ஒவ்வொருவரும் மேலே சொல்லப்பட்ட மகான்களைப்போல் அன்பு உபதேசகர் களாகவல்லவோ ஆகவேண்டும்? அன்பு வாழ்க்கையை யல்லவோ நாம் நடத்த வேண்டும்? அன்பு வழியைப் பின்பற்றி நாம் நடந்தோமானால், அதனால் விளைவது நன்மையே தவிர தீமையில்லை. அன்பு நெறியினால் நாம் உயர்வதோடு மற்றவர்களையும் நாம் உயர்த்துகிறோம். அன்பின் செல்வாக்குக்குட் படுகிறவர்கள் யாருமே உயர்வு அடைகிறார்கள்; நாகரிகமுள்ளவர்களாகிறார்கள். அவர்களுக்கு ஒரு விதமான தன்னம்பிக்கை உண்டாகிறது. எப்படிப்பட்ட எதிர்ப்பையும் சமாளிக்க வல்ல சக்தி அன்பு ஒன்றுக்குத்தான் உண்டு. இவ்வளவு சக்தி வாய்ந்த இந்த அன்பை, தனிப்பட்ட நபர்கள் விஷயத்தில் மட்டும் பிரயோகிக்காமல், தேசங்களுக்கிடையே பிரயோகித்தால் எவ்வளவோ நலமுடையதாயிருக்கும்? கிராமங்களிலே நீ பார்த்திருக்கலாம். ஒரு கட்சிக்கும் மற்றொரு கட்சிக்கும் மனதாபம் ஏற்பட்டால் அவர்கள் கோர்ட்டுகளுக்குச் செல்வ தில்லை. கிராமத்திலுள்ள சில பெரியதனக்காரர்களைக் கொண்டு மத்தியதம் செய்யச் சொல்கிறார்கள். அவர்கள் செய்கிற மத்தியதத்திற்கு உபய கட்சிக் காரர்களும் சம்மதப்படுகிறார்கள். அன்பினால் எவ்வளவு பெரிய மனதாபங்களையும் தீர்த்துக் கொண்டு விட்டார்கள் நமது முன்னோர்கள். அவர்களை நாகரிக மற்றவர்களென்றும், இங்கித மறியாதவர்களென்றும் நாம் சொல்லிக் கொண்டு வருகிறோம். ஆனால் இப்பொழுது நாம், நாகரிகர் களென்று பெருமையோடு சொல்லிக் கொள்கிற நாம், எதற்கெடுத் தாலும் கோர்ட்டென்றும் வக்கீலென்றும் போகிறோம். உண்மை யில் நாம் நாகரிகர்களில்லை. நம்முடைய முன்னோர்கள்தான் நாகரிகர்கள். எமர்ஸன்1 என்ற அமெரிக்க அறிஞன் கூறுகிறான்:- பல தெய்வங்களை வணங்கிக் கொண்டு பரபர சத்துருக்கள் போல நாம் இந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதனால் உலகம் சலித்துப் போய்க் கிடக்கிறது. இப்படிப்பட்ட உலகத்திற்கு அன்பானது ஒரு புதிய ஜீவகளையைக் கொடுக்கும். அன்பு என்னும் குழந்தைக்கு எவ்வித ஆயுதமும் கிடையாது. ராஜதந்திரிகளின் தந்திரோபாயங்களையும், ராணுவப் படையின் வீராவேசத்தையும் இந்தக் குழந்தையானது மாற்றிவிடும். பலாத்காரமானது எங்கெங்கு பிரவேசிக்க முடியாதோ அங்கெல்லாம் அன்பானது நுழைந்து செல்லும். மற்றப் பலாத்கார சக்திகளால் அடையமுடியாத சித்தி களை இந்த அன்புச் சக்தியானது அடைய முடியும். முற்காலத்தில் பைத்தியம் பிடித்தவர்கள், குஷ்டரோகிகள், அடிமைகள், குற்ற வாளிகள் முதலியோர்களின் விஷயத்தில் பலாத்கார முறைகளைக் கையாண்டார்கள். பைத்தியக் காரர்கள் இரும்புச் சங்கிலிகளினால் கட்டப்பட்டு, மிருகங்களைப்போல் கூடுகளிலே அடைக்கப் பட்டார்கள். குஷ்டரோகிகளை எங்காவது ஒதுக்குப்புறத்தில் தள்ளி விட்டார்கள். என்ன கொடுமை? இவை யெல்லாம் இப்பொழுது மாறுதலடைந்திருக்கின்றன. அன்பு முறை களையே கையாள வேண்டுமென்ற எண்ணம் பரவியிருக்கிறது. இதனால் அன்புக்கு ஒரு புதிய சக்தி ஏற்பட்டிருக்கிறதென்று தெரிகிறதல்லவா? நாகரிகமாக நடந்து கொள்வது என்று சொன்னாலே அன்பாக நடந்து கொள்வது என்றுதான் அர்த்தம். ஆதலால், நீ ஒரு நாகரிக புருஷனாக நடந்து கொள்ள முயற்சி செய். அதாவது எல்லோரிடத்திலும் அன்பு செலுத்து. அப்பொழுது தான் நீ எடுத்த காரியத்தில் வெற்றியடைவாய். 21. எல்லாரும் உன் சகோதரர்கள் மகனே! முந்திய கடிதத்தில் பைத்தியக்காரர்கள், நோயாளிகள் முதலியவர்கள் மிகக்கொடுமையாக நடத்தப்பட்டார்களென்றும், நாளாவட்டத்தில்தான் இவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டுமென்ற உணர்ச்சி ஏற்பட்டதென்றும் கூறினேன். இங்ஙனம் மனிதர்களிலே கேவலமாகிப் போனவர்களிடத்திலே மட்டுமல்ல, நமது அன்பானது வாயில்லா ஜீவப் பிராணிகளிடத்திலும் விரிந்து செல்ல வேண்டும். அப்பொழுதுதான் அந்த அன்புக்கு உண்மை யான மதிப்புண்டு. ஏனென்றால், மனிதர்கள் எவ்வளவு இழி நிலையை யடைந்து விட்ட போதிலும், தங்கள் மனப்புண்னை வாய்திறந்து காட்டக்கூடும்; தங்களைத் துன்புறுத்துகிறவர்களைப் பார்த்து அன்பு காட்டுங்கள் என்று சொல்ல முடியும். ஆனால் வாயில்லாப் பிராணிகள் அப்படியல்ல. அவைகள் வாய் விட்டுக்கதறும்; கண்ணீர் வடிக்கும். அவ்வளவுதான். வேறொன்றும் அவைகளால் செய்யமுடியாது. அப்படிப்பட்டவைகளிடம் நீ அதிகமான இரக்கங் காட்ட வேண்டியது அவசியமல்லவா? இந்த மிருகங்கள் விஷயத்திலே முற்காலத்தில் எவ்வளவு அட்டூழியங்கள் நடைபெற்றன தெரியுமா? ஏன் இப்பொழுது மட்டுந் தானென்ன? பெயின் தேசத்தில் காளை மாடுகளைச் சண்டைக்கிழுத்து அவைகளை ரத்த காயப்படுத்தி விடுவதென்பது இன்றுங்கூட நடைபெற்று வருகிறது. இதை பெயின் தேசத்துத் தலைவனாகிய காபெல்லரோ1 என்பவனே பின்வருமாறு ஒப்புக் கொள்கிறான்:- பெயின் தேசத்தில் மிருகங்களுக்குக் கொஞ்சங் கூடக் கருணை காட்டப்படுவதில்லை யென்பதை பானிஷ்காரர் களாகிய நாம் அவமானத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டும். இப்பொழுது கூட நமது கிராமாந்தரங்களிலே நீ பார்க்கலாம், கோழிகளைச் சண்டைக்கு விடுவதை. இதிலே ஜனங்களுக்கு ஒரு திருப்தி; ஒரு சந்தோஷம். என்ன கொடுமை! ஜீவகாருண்ய சங்கங்கள் ஆங்காங்கு இருக்கின்றன. இவைகள், மனிதர்கள் மிருகங்களைக் கொன்று தின்னக்கூடாதென்ற விஷயத்திலும், பசுக்களைப் போஷிக்க வேண்டுமென்ற விஷயத்திலும் தங்கள் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன. மிருகங்களை எந்த விதத்திலும் இம்சிக்கக் கூடாதென்கிற அளவுக்கு இவை, தங்களுடைய பிரசாரத்தை விதரித்துக் கொண்டு போனால் மிகவும் நன்றா யிருக்கும். இங்கிலாந்திலே நெடுங்காலமாகக் காளைமாட்டுச் சண்டை நடைபெற்றுக்கொண்டுவந்தது. இதைச் சட்ட பூர்வமாகத் தடுக்கவேண்டு மென்று 1829ஆம் வருஷம் பார்லிமெண்டில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் இது நிறைவேற்றப்பட வில்லை. இந்த விளையாட்டுகள் ஜனங்களுடைய பொழுது போக்குக் காக ஏற்பட்டிருக் கின்றன வென்றும், இதில் அரசாங்கத்தார் தலையிடக்கூடாதென்றும், அப்பொழுது பார்லிமெண்டில் அங்கத்தினர்கள் கூச்சல் போட்டார்கள். என்ன நாகரிகம் பார்த் தாயா? 1835ஆம் வருஷந்தான், மாட்டுச் சண்டை நடத்தக் கூடா தென்ற சட்டம் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் நிறைவேற்றப் பட்டது. ஆனால் அப்பொழுதும் இதற்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை. இப்பொழுது கூட நாகரிகமுள்ள ஐரோப்பிய மாதர்களைப் பார்த்தால் தெரியும். பட்சிகளின் இறகுகளைத் தலையணியாக உபயோகித்துக் கொள்கிறார்கள்; அல்லது மிருகங்களின் தோல் களைத் தொப்பியாக அணிந்து கொள்கிறார்கள். இந்த நாகரிகத்திற் காக, வருஷந்தோறும் எத்தனை பட்சிகளும் எத்தனை மிருகங்களும் சுட்டுக்கொல்லப் படுகின்றன வென்பதும், இங்கிலாந்தில் மட்டும் வருஷந்தோறும் செத்த பட்சிகளின் இறகுகளும் மிருகங்களின் தோல்களும் எவ்வளவு இறக்குமதியாகின்றன வென்பதும் கணக்குப் போட்டுப்பார்த்தால், ஐயோ, நாகரிகம் என்பது ஜீவ வதையின் மீது தான் வளர்கிறதா வென்ற சந்தேகம் நமக்கு நிச்சயமாக உண்டாகும். ஆதலின் மகனே! உனது அன்பானது, எல்லா ஜீவராசிகளிடத்திலும் விரிந்து செல்லட்டும். கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்க வேண்டுமென்று தாயுமானவர் முழங்கியது, இந்த விரிந்த மனப்பான்மையின் பரிணாமந்தான். சாதாரணமாக மனிதர்கள், தங்களைப்போன்ற சகோதர மனிதர் களிடத்தில்தான் அன்பு செலுத்துகிறார்கள். அதுவே போதுமான அன்பு என்று நினைக்கிறார்கள். இப்படிச் சகோதர மனிதர்களிடத்தில் அன்பு செலுத்துவது நல்லதுதான். ஆனால் எல்லா ஜீவராசிகளிடத்திலும் ஒரே மாதிரியான அன்பு செலுத்து வதிருக்கிறதே அதுதான் விசேஷமான அன்பாகும். நமது புராண இதிகாசங்களைப் புரட்டிப்பார்த்தால், நமது முன்னோர்களாகிய முனிவரர்கள், ஆசிரமங்களில் வசித்துக் கொண்டிருந்ததையும், அந்த ஆசிரமங்களில் மான்கள், பட்சிகள் முதலியன வாசஞ் செய்து கொண்டிருந்ததையும், அவற்றினிடத்தில் அந்த முனிவரர்கள் காட்டிவந்த பிரீதியையும் காண்கிறோம். இந்த வரலாறுகளைப் படித்தால், நமது இதயத்திலிருந்து ஒரு சந்தோஷ உணர்ச்சி உண்டாகிறது. காளிதாச மகா கவி எழுதிய சாகுந்தலம் என்ற நாடகத்தில், சகுந்தலையானவள், கண்வருடைய ஆசிரமத்தை விட்டு துஷ்யந்தனுடைய அரண்மனைக்குச் செல்கிறபோது, மான் குட்டியி னிடமும் செடி கொடிகளிடமும் விடைபெற்றுச் செல்வதாக வருணிக்கப் பட்டிருக்கிற பாகத்தைப் படித்துப்பார். அந்தக் காலத் தில், நமது முன்னோர்கள், உயிருள்ள பிராணிகளிடத்தில் மட்டு மல்ல, தாவர வர்க்கங்களிடத்தில்கூட எப்படி அன்பு செலுத்தி வந்தார்களென்பதை நாம் படிக்கிறபோது, நம்மையறியாமல் நமது பெரியோர்களின் விசால இருதயத்திற்கு நாம் சரணாகதியடைகி றோம். இத்தாலியிலே லியார்னாடோ-டா-வின்ஷி1 என்றொருவன் இருந்தான். இவன் ஒரு விசித்திர புருஷன். இவன் ஓர் இஞ்சினீயர்; சித்திர நிபுணன்; தத்துவ ஞானி; எல்லாம். இவன், கூட்டிலே அடைபட்டிருக்கும் பட்சிகளை, கூட்டோடு வாங்கி விடுதலை செய்துவிடுவான். இதே மாதிரி, செயிண்ட் பிரான்சி அப் அஸிஸி2 என்றொரு முனிவன் இருந்தான். இவன், மிருகங்கள், பட்சிகள் முதலிய எல்லா ஜீவராசிகளையும் பார்த்து சகோதரர்களே என்று தான் அழைப்பான். இவனை, அப்பொழுது எல்லாரும் பரிகசித் தார்கள்; ஆனால் இப்பொழுது முனிவனாகப் போற்றுகிறார்கள். ஆதலின், மகனே! நீ எல்லா ஜீவராசிகளிடத்திலும் அன்பு செலுத்துகிற மாதிரி உன் இருதயத்தை விசாலப்படுத்திக்கொள். 22. நில் - ஓடாதே! 1. எண்ணிய கருமம் பண்ணி முடிக்க இசையாமற் போகலாம்; செல்லும் பாதை கல்லும் முள்ளும் கரடுமாய்க் கோணலாம்; கையிருப்புக் குறைய கடனோ குவியலாம்; உயிரில்லாத நகையும் உஷ்ணமான பெருமூச்சும் வரலாம்; கவலையோ தலைக்குமேல் அழுத்தி நிற்கிறது; ஓய்வு கொள் மகனே! ஆனால் ஓடி விடாதே. 2. வாழ்க்கை, சந்துகளும் பொந்துகளும் நிறைந்த பாதை; இவற்றில் சென்று பார்த்தால்தான் வழி தெரியும். இருக்கும் இடத்தில் ஒட்டிக்கொண்டிருந்தால் தோல்வியும் வெற்றியாக மாறலாம். மெதுவாகச் செல். சோர்ந்து விடாதே; முடியாது என்று சொல்லிவிடாதே. இன்னும் ஓர் அடியில் உன் லட்சியத்தை அடைந்து விடலாம். 3. சோர்ந்துபோகிற, தட்டுத்தடுமாறி நடக்கிற ஒருவனுடைய கண்ணுக்குத் தென்படுவதைக் காட்டிலும் நமது லட்சியம் சமீபத்தில் இருக்கலாம்; மறுநாள் காலை வெற்றி கிடைப்பது நிச்சயம்; ஆனால் இன்றிரவு பின்னோக்கி ஓடிப்போகாதே. பொழுது விடிந்ததும் பார்ப்பாய்; கைக்கெட்டியது வாய்க் கெட்டவில்லையே யென்று வருந்துவாய். 4. வெற்றி யென்பது என்ன? தோல்வியின் மறுபுறம்; சந்தேகமென்னும் மேகத்தின் பிரகாசமான விளிம்பு. லட்சியத்திற்கு எவ்வளவு சமீபத்தில் இருக்கிறா யென்பது உனக்கே தெரியாமலிருக்கலாம்; தூரத்திலிருப்பதுபோல் உனக்குத் தோன்றலாம்; ஆனால் அது மிகச் சமீபத்தில் இருக்கலாம். ஆதலின் அதிகமாகத் தாக்கப்பட்டால் தீவிரமாகப் போராடு. நலங்குலைந்த நிலைமையில்தான் நீ இடத்தை விட்டுப் பெயரக் கூடாது. 23. ஏன் அஞ்சுகின்றாய்? மரணத்தைக் கண்டு அஞ்சுகின்றாயா? அப்படி யானால் நீ என் மகனல்ல! அமரனாக வாழ வேண்டுமென்று உன்னைப் பெற் றெடுத்தேன். மரணத்தைக் கண்டு பயப்பட்டால் நீ என் மகனல்ல. மரணம் குளிர்ச்சியுடையது; அமைதி நிறைந்தது; ஆரவாரத் தினின்று நம்மை விடுதலை செய்வது. அப்படியிருக்க அதனைக் கண்டு பயப்படுவானேன்? மரணத்தை நேராக நின்று பார்! அதன் கண்களில் காலத்தின் விசாலம் ஜொலிக்கிறது. அதன் முகத்தில் தர்மம் துலங்குகிறது! அறத்தை ஆணை இடுவது அது. மறத்திற்கு முடிவு கட்டுவது அது. மரணத்தைக் கண்டால் மனம் அடங்குகிறது; மூச்சு நிற்கிறது; பழையன கழிகின்றன; புதியன தோன்று கின்றன. அந்தப் புதியனவற்றை அனுபவிக்க வேண் டாமா? மரணத்தைக்கண்டு ஏன் அஞ்சுகின்றாய்? பாரத தேசத்திலே பிறந்தாய். ஆத்மா அமரத் தன்மை யுடைய தென்பதை அறிந்திருக்கிறாய். இனியும் ஏன் மரணத்திற்கு அஞ்சு கின்றாய்? 24. கொடுக்கிறவனே வாழ்கிறவன் கொடு; மகனே! அனைவருக்கும் கொடு! வலிமையை, எண்ணத்தை, செயலைக் கொடு! அன்பை, கண்ணீரை, உன்னையே கொடு! கொடு! எப்பொழுதும் கொடுத்துக் கொண்டிரு! எவனொருவன் கொடுக்கவில்லையோ அவன் வாழவில்லை. எவ்வளவுக் கெவ்வளவு மகனே! கொடுக்கிறாயோ அவ்வளவுக் கவ்வளவு வாழ்ந்தவனாகிறாய். நீ வாழ்க!  அவள் பிரிவு பிரசுராலயத்தின் வார்த்தை எங்கள் ஆசிரியர் ஸ்ரீ வெ. சாமிநாத சர்மா அவர்களின் இல்லக் கிழத்தியாரான மாது ஸ்ரீ மங்களம் அம்மையார் அவர்களின் அகால பிரிவு குறித்து பி.ஜோ.பி. பதிப்பாளரும் தம் நண்பருமான ஸ்ரீ அரு. சொக்கலிங்கத்திற்கு, சர்மாஜி எழுதிய உருக்கமான பத்துக் கடிதங்கள் இதில் இடம் பெறுகின்றன. உன்னத இலட்சியங்களை உலகுக்குத் தந்த மகான்களின் வாழ்க்கைக் குறிப்புக்களையும், அவ்வறிஞர்களின் இலட்சியங் களையும், புராதன சரித்திர நிகழ்ச்சிகளையும் பற்றி இதுவரை எழுபதுக்கு மேற்பட்ட நூல்களைத் தமிழில் ஆக்கித் தந்த சர்மாஜி அவர்களை, அம்மையாரின் பிரிவு ஒரு குலுக்குக் குலுக்கி விட்டது. சர்மாஜி அவர்களின் தமிழ்ப்பணிக்கு சக ஊழியராகவும், அவர் களுக்கு ஒரு சிஷ்யை போலவும், அவர்களை எழுதத்தூண்டிக் கொண்டிருந்த தூண்டு கோலாகவும், அவர்களின் உடம்பைப் பேணிக் காப்பதில் தாதியாகவும் இல்லற வாழ்க்கையை நடத்திக் காட்டிய குடும்ப விளக்காகவும் நாற்பத்திரண்டு ஆண்டுகள் இணை பிரியாதிருந்த இலட்சிய மனைவியராகவும் வாழ்ந்த எங்கள் அம்மையாரின் மறைவு, சர்மாஜியின் வாழ்க்கையை துண்டித்த தோடு மட்டுமல்லாமல், ஒரு சில நாட்களிலே அவர்களுக்குத் தனிமையை உணர்த்தத் தலைப்பட்டு விட்டது. அந்தச்சமயத்தில் அம்மையார் அவர்கள் மறைந்த சில நாட்களில் - உணர்ச்சி வசத்தால் உந்தப்பட்டு அவர்கள் எழுதிய கடிதங்களே இந்நூலாக மிளிர்கிறது. இக்கடிதங்கள் ஆரம்பத்தில் பிரசுரத்திற்காகவென்று எழுதப் பட்டவையல்ல. சர்மாஜி அவர்களின் சொந்த நினைவுகள் பற்றி அவர்கள் தாமே எழுதி புத்தக வடிவில் வெளிவருவது இதுவே முதல் தடவை யாகும். ஆசிரிய தம்பதிகளின் வாழ்க்கையைப்பற்றி முழுதும் தெரிந்து கொள்ள இந்நூல் உதவி செய்யாதபோதிலும், அம்மையார் அவர்களின் பன்மொழிப் புலமை, சீரிய பண்பு, தமிழ்த்தொண்டில் அவர்களுக்கிருந்த ஆர்வம் இவைகளைப்பற்றிச் சிறிதளவாவது வாசகர்கள் அறிந்து கொள் வதற்கான வசதியை இந்நூல் ஏற்படுத்திக் கொடுக்குமென நினைத்து, பிரசுரிக்க அனுமதி கோரினோம். அதோடு அவள் பிரிவு என்ற இந்நூலின் தலைப்புப்பற்றியும் சர்மாஜியின் சம்மதத்தைக் கோரி, பெற்றோம். எங்கள் வேண்டு கோளுக்கு இசைந்த அவர்களுக்கு எமது நன்றி. மேலும் வாசகர்களுக்குச் சில சிறு விஷயங்களைத் தெரிவித்தால் நல்லதென்று கருதி ஆசிரியர் தந்த சில விவரங்களைக் கொண்டு ஆங்காங்கே சில அடிக் குறிப்புக்கள் தந்திருக்கிறோம். இன்னும் ஒவ்வொரு கடிதத்திற்கும் அதன் உள்ளுறைப் பொருளை வெளிப்படுத்தும் முறையில் தலைப்புப் பெயர் கொடுத்திருக்கிறோம். இவையனைத் திற்கும் பிரசுராலயத்தாரே பொறுப்பினர் என்பதை நாம் சொல்லத் தேவை இல்லை. பி.ஜோ. பிக்கும் ஆசிரிய தம்பதிகளுக்கும் ஏற்பட்ட உறவுபற்றி இந்நூலில் விவரிப்பது ஏற்றதாக இருக்குமென நினைத்து, இந்நூலின் கடைசியில் எங்கள் உறவும் சில நினைவுகளும் என்று ஒரு தனிப்பகுதி சேர்த்திருக்கிறோம். அதற்கும் பிரசுராலயத்தினரே பொறுப்பினராவர். பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் நம்மால் வெகுவாக நேசிக்கப்படுகிறவர்கள், இறந்து விடுகிற பொழுதுதான் மரணத்தின் அர்த்தத்தை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. * * * கடவுள் யாரை அதிகமாக நேசிக்கிறாரோ அவரை விரைவில் அழைத்துக்கொள்கிறார். * * * பொதுவாகப் பார்த்தால், உலகத்தில் நல்லவர்கள் தான் சீக்கிரத்தில் இறந்து போகிறார்கள். * * * நாம் வெறுமனே வாழ்ந்தால் மட்டும் போதாது; நமது பெயர், அமரத்துவம் என்னும் திரைச் சீலையில் எழுதப்பட வேண்டும். * * * வாழ்க்கை யென்பது என்ன? கடமைகளின் தொகுப்பு. * * * நல்ல விதமாக வாழ்க்கையை நடத்துகிறவர்கள் தான் நீண்ட காலம் வாழ்ந்தவர்களாகக் கணிக்கப்படு கிறார்கள். * * * யார், எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துகிறார் களோ, யாரிடத்தும் பணிவு காட்டுகிறார்களோ, அவர்கள் இறப்பதே இல்லை. * * * வாழ்க்கையைப் பரிமளிக்கச் செய்ய வேண்டு மானால் அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 1. ஒளி விளக்கு தி.நகர், சென்னை 6-3-1956 எனதன்புள்ள ஸ்ரீ சொ. அவர்களுக்கு நமகாரம். நலம் பல விளைக. எனது வாழ்க்கைக்கு வெளிச்சம் அளித்து வந்த ஒளி விளக்கு அணைந்து விட்டது. இவ்வளவு சீக்கிரத்தில் அணைந்து விடுமென்று நான் எதிர்பார்க்கவில்லை; நினைக்கவுமில்லை. சிறிது காலமாக, -ஏன்? இரண்டு வருஷங்களுக்கு மேலாக - அது மங்கலாக எரிந்து கொண்டிருந்த தென்னவோ வாதவம். அப்படி எரிந்து கொண் டிருந்தாலும், எரிந்து கொண்டிருக்கிறதே யென்பதில் எனக்கு ஒருவித திருப்தி இருந்து வந்தது. அந்த மங்கலான வெளிச்சத்தைத் துணையாகக் கொண்டு இன்னும் சிறிது காலம் தட்டுத்தடுமாறி யாவது வாழ்க்கைப் பாதையில் செல்வோம் என்ற நம்பிக்கையும் தைரியமும் இருந்தன. இப்பொழுதோ? ஒரே இருட்டு; அந்த இருட்டினால் திகைப்பு. புலம்புவதைத் தவிர வேறொன்றும் எனக்கு இப்பொழுது தெரியவில்லை. ஆனால் எனது வெந்துயரை யாரிடத்தில் எடுத்துரைப்பேன்? என் ஒப்பாரியைக் கேட்பார் யார்? வயிற்றிலே பிறந்த மகளோ, மகனோ இல்லை; கூடப்பிறந்த சகோதரியோ சகோதரனோ இல்லை. எல்லாரும் நீங்கள் தான் இப்பொழுது எனக்கு. எனது உள்ளத்தை அறிந்த ஒருவராக, நீங்கள்தான் எனது நீர்மல்கு கண்முன்னே நிற்கிறீர்கள். கேளுங்கள் எனது புலம்பலை. எனது சகோதரி ஒருத்தி இருந்தாள். எனக்கு நான்கு வயது இளையவள். லட்சுமி என்று பெயர்.1 எனது தாயைக் காட்டிலும் என்னை நன்கு அறிந்தவள். ஏதாவதொரு காரணத்தினால் எனது முகம் சிறிது வாட்டமடைந்து போனால்கூட அதைச் சகித்துக் கொண்டிருக்கமாட்டாள். உடனே அதற்குப் பரிகாரந் தேடிக் கொடுத்து விடுவாள். சகோதர வாஞ்சைக்கு இலக்கணமாயிருந்த இவள், தனது பதினேழாவது வயதில் (1915 ஏப்ரல்) பொன்னும் பூவுமாக இப்பூவுலகை நீத்துப் போய்விட்டாள், என்னைத் தனியொருவனாக ஆக்கிவிட்டு. இவள் மறைந்து ஏறக்குறைய நாற்பது வருஷங்களுக்கு மேலாகி விட்டபோதிலும், இப்பொழுது நினைத்துக் கொண்டால் கூட, எனது அடி வயிற்றிலிருந்து துக்கமானது அலை அலையாக எழும்பி, என் உள்ளத்தைத் தாக்கி, என் கண்களிலிருந்து நீரை வாரி இறைக்கிறது. ரத்த பாசமென்பது எவ்வளவு வல்லமையுடையது! என்னுடைய பத்தாவது வயதில் (1905) எனக்கு ஒரு சகோதரன் பிறந்தான். ஆனால் பிறந்தவுடனேயே இறந்து போய் விட்டான். அவனை என் கண்ணில் காட்டவே இல்லை என் பெற்றோர்கள். சிவந்த மேனியும் நல்ல தாஷ்டீகமுமுடையதாய், குழந்தை இருந்த தென்று என் தகப்பனார் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டுத் திருப்தியடைந்தேன். என் தாயாரை மட்டும் ஏன் குழந்தையைக் குழி தோண்டிப் புதைத்து விட்டீர்கள்? என்று நச்சரித்துக் கேட்டேன். என்ன பதில் சொல்லுவாள்? கண்ணீர் பெருக்கினாள். நானும் சில நாள்வரை அழுது கொண்டிருந்தேன். என்னுடைய இருபத்தெட்டாவது வயதில் (1922 டிசம்பர்) எனது தந்தையார்1 என்னை விட்டுப்போய் விட்டார். எனது வளர்ச்சியில் கண்ணுங் கருத்துங் கொண்டவர். நான் ஒரு நூலாசிரியனாக அரும்பு வதைக்கண்டு பெருமை கொண்டிருந்தார். அவர் பிரிந்து போனதும், ஒரு பெரிய சுமை என் தலையில் ஏறிக்கொண்ட மாதிரியான உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. இந்தச் சுமையை எப்படித் தாங்கப் போகிறோமென்ற பயமும் எனக்கு உண்டாகி விட்டது. எப்படியோ அதைச் சமாளித்துக்கொண்டேன். எனது முப்பத்து மூன்றாவது வயதில் (1928 டிசம்பர்) தாயை2 இழந்த சேயானேன். நான் ஒரே மகனாயிருந்தும், என் தாயார், என் வளர்ச்சியில் விசேஷ கவனஞ் செலுத்தினாளென்று சொல்ல முடியாது. தனது கூடப்பிறந்தவர்களின் குழந்தைகளிடம் எந்த மாதிரியான கண்ணோட்டஞ் செலுத்தினாளோ அதே மாதிரி கண்ணோட்டத்தையே என்னிடமும் செலுத்தினாள். எனக்கென்று விசேஷ சலுகை எதுவும் காட்டினாளில்லை. இருந்தாலும் நான் தாயன்புக்குக் கட்டுப்பட்டவனாகவே நடந்து வந்தேன். அவள் பிரிவு என்னை மிகவும் வாட்டி விட்டது. குடும்பமென்னும் கப்பல் இனி எப்படி இயங்குமென்ற திகைப்பும் எனக்கு உண்டாகிவிட்டது. இந்தத் திகைப்பிலிருந்து என்னை விடுவித்து, நான் கொண்டிருந்த குறிக்கோளைச் சுட்டிக்காட்டி, அதை நோக்கிச் செல்லுங்கள் என்று என்னைச் செல்லவிட்டு, இல்லறக்கப்பலின் சுக்கானைப்பிடித்துக் கொண்டாள் எனது மனைவி. எனது பெற்றோர்களின் பூரணமான அன்பையும் ஆசியையும் பெற்றிருந்த தனால், அவளுக்குச் சுக்கானைப் பிடித்துக்கொள்வது சுலப சாத்தியமாயிருந்தது. எனது தாயாரிடம் குடும்பக் கலையை நன்கு பயின்று அதில் பூரண தேர்ச்சியும் அடைந் திருந்தாள். அவளும்-எனது மனைவியும்-என்னுடைய அறுபத்தோராவது வயதுத்தொடக்கத்தில், என்னைத் தனியனாகத் தவிக்கவிட்டுவிட்டுத் தெய்வ நிலை எய்திவிட்டாள். இனி எனக்கு வாழ்க்கை என்பதேது? அஃது ஒரு பாலைவனந்தான். நான் ஒரு யந்திரந்தான். இனி என்னை ஒரு முழுப் புள்ளியாகக் கணிக்கமாட்டாதல்லவா உலகம்? கணவனை இழந்த திரீயாகட்டும், மனைவியை இழந்த புருஷனாகட்டும் அரைப் புள்ளி தானே? சகோதரி, தந்தை, தாய் இப்படி ஒருவர் பின்னொருவராக என்னை விட்டுப் பிரிந்து சென்ற காலங்களில், எனது மனைவி எனக்கு ஆறுதல் சொல்லி வந்தாள்; தேறுதல் அளித்து வந்தாள். அவர்கள் மூவரும் இல்லாத குறையை அவள் ஒருத்தி இருந்து நிறைவு செய்துவந்தாள். சோக சமுத்திரத்தைச் சுலபமாகக் கடந்து வந்தேன். இப்பொழுதோ? அவளே போய்விட்டாள். அந்தச் சோக சமுத்திரத்தைக் கடப்பது எப்படி? அஃது இன்னும் ஆழமாகவும் பயங்கரமாகவுமல்லவோ காணப்படுகிறது? அதிலிருந்து எழும் அலைகள் அடிக்கடியல்லவோ வந்து என்னைத் தாக்குகின்றன? தனிமை என்னும் பாறையில் என்னைத் தவிக்கவிட்டு விட்டல்லவோ போய் விட்டாள்? ஐயோ, இந்தத் தனிமை என்னால் சகிக்க முடியவில்லையே. வீடுண்டு; வாசலுண்டு. உண்ணுகின்றேன்; உடுத்துகின்றேன்; உறங்கு கின்றேன். ஒன்றிலும் குறைவில்லை. இருப்பினும் இவற்றில் இன்பத்தைக் காணகில்லேன். உயிரில்லாத யந்திரம் போல் எனது அன்றாட அலுவல் களை நடத்தி வருகின்றேன். ஒரு யந்திரமாக வல்லவோ என்னை ஆக்கிவிட்டுப் போய்விட்டாள்? இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று சொல்லிவிட்டுப் போன பெரியவருக்கு ஒரு கோடி நமகாரம். அவர் எந்த நிலையிலிருந்து அப்படிச் சொன்னாரோ தெரியாது. எவ்வளவு நேரத்திற்கு ஏகாந்தம் இனிமையாயிருக்கு மென்றும் அவர் சொல்ல வில்லை. ஒரு சில மணி நேரம் தனிமை இனிமை பயப்பதாயிருக் கலாம். ஆனால் எப்பொழுதுமா? வாழ்க்கை பூராவுமா? அப்பப்ப! வேண்டவே வேண்டாம் இந்தத் தனிமை. மனிதன் ஒரு சமூகப் பிராணி. நான்கு பேர் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பது தான் அவனுடைய இயற்கை. அதில்தான் இன்பம் நுகர்கிறான். அப்பொழுதுதான் அவன் வளர்ச்சியடைவதற்கான சூழ்நிலை அமைகிறது; தானும் வளர்ந்து, மற்றவர்களும் வளரும்படி செய்கிறான். அதை விடுத்து, அதாவது சமூகச் சூழ்நிலையை விடுத்து, தனிமையை விரும்புகிறவன், ஒன்று மிருகமாகவாவது இருக்க வேண்டும்; அல்லது தெய்வமாகவாவது இருக்க வேண்டும். நான் மிருகமல்ல. அது நிச்சயமாக எனக்குத் தெரிந்திருக்கிறது. நான் தெய்வமுமல்ல. அப்படியாக நான் விரும்பவுமில்லை. அது மகா சங்கடமான நிலை. நான் மனிதனாகவே இருக்க விரும்புகிறேன்; இல்லை, இல்லை; மனிதனாகவே வாழ விரும்புகிறேன். அதற்குத் தனிமை ஒரு தடைக்கல்லன்றோ? தனிமையை நான் ஏன் உணர வேண்டுமென்று நீங்கள் கேட்கலாம். வாதவம். உற்றாரும் உறவினரும் வந்து போய்க் கொண்டுதானிருக் கின்றனர். நானும் அவர்களிடையே போய் வந்து கொண்டிருக்கிறேன். வந்து பேசி விட்டுப்போகும் நண்பர்களுக்கோ குறைவில்லை. நான் வசிக்கும் இடமோ ஜன சந்தடி மிகுந்த இடம். போவோர் வருவோரைப் பார்த்துக் கொண்டிருந்தாலே பொழுது போகுமென்று சொல்லலாம். இருந்தாலும்? இவை என் தனிமையைத் தணிக்க முடியுமா? எப்பொழுது என் உடலின் பாதி என்னை விட்டகன்று விட்டதோ, எப்பொழுது எனது உயிருக் குயிராய் உலவிவந்த ஒருத்தி மறைந்து விட்டாளோ, அப்பொழுதே, அந்தக் கணத்திலிருந்தே நான் தனிமையை உணர ஆரம்பித்து விட்டேன். இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்தத் தனிமையை நான் அனுபவிக்க வேண்டும்? கடவுளே, நீ சொல்லு. என்ன முணு முணுக்கிறாய்? எஞ்சியுள்ள ஆயுள் பூராவுக்கும் அனுபவிக்க வேண்டு மென்கிறாயா? அப்படியானால் என் இதயத்திலிருந்து எழுந்து போய்விடு. ஐய்யய்யோ, போய்விடாதே. தவறிச் சொல்லி விட்டேன். பிழை பொறுப்பாய். நீ போய் விட்டால் நான் எப்படி எனது எஞ்சிய காலத்தைத் தள்ளுவேன்? நீ எனது இதயத்தில் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறாய் என்ற தைரியத்திலே, திடநம்பிக்கையிலே, எனது தனிமையை எப்படியோ சகித்துக்கொண்டு வருகிறேன். நீயும் போய் விட்டால்? போகாதே! போகாதே!! தனிமைக்கு நான் ஏன் பயப்படுகிறேனென்றால், அஃது எங்கே என்னை அகந்தையென்னும் படுகுழியில் தள்ளிவிடுமோ என்ற காரணத்தினால் தான். மனிதன், தனியே இருக்கிறபோது, தனக் கென்று தனியாக ஓர் உலகத்தைச் சிருஷ்டித்துக்கொண்டு அதில் வாழத்தொடங்கு கிறான். அந்த உலகத்திற்குத் தானே அரசனென்று கருதிக் கொண்டு விடுகிறான். தன்னுடைய தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குட்பட்டு விடுவ தனால் தன்னால் எந்தக் காரியத்தையும் சாதித்துக் கொண்டுவிட முடியும் என்ற எண்ணம் அவனிடம் ஓங்கி வளர்கிறது. அது மட்டுமல்ல, தன்னைப்போல் பிறரால் சாதிக்க முடியாதென்றும் கருதிக்கொண்டு விடுகிறான். கேட்க வேண்டுமா அகந்தை பிறந்து வளர்வதற்கு? அகந்தை வளரும் இடத்தில், குறுகிய எண்ணங்கள், கீழான இச்சைகள், இவை பலவும் மலிவான சரக்குகளாகி விடுகின்றன வல்லவோ? ஆண்டவனே, இந்த நிலைமை எனக்கேற்படாதபடி காப்பாற்று. பிறரை நேசிக்காதவன் பிறரால் நேசிக்கப்படமாட்டான். அப்படிப்பட்டவன்தான் தனிமையில் தஞ்சம் புகுவான். அவனுக்கு உலகம் கசப்பாகவே தோன்றும். தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் அத்தனைபேரும் தனக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்கிறார்க ளென்று கருதி, அவர்களுடைய தொடர்பினின்று தன்னை விடுவித்துக்கொண்டு தனிமையிலே இன்பங்காணச் செல்வான். தனக்குப் புறத்தியாகச் சமுதாயத்தை அவன் கருதிக்கொண்டு விடுவதனால் சமுதாயமும் அவனை வெகு சுலபமாகப் புறக்கணித்து விடுகிறது. சமுதாயமே, என்னைப் புறக்கணித்து விடாதே. நான் தனிமையை விரும்பவில்லை. தனிமையின் அனுபவத்தைச் சொல்லிக்கொள்ள யாராவது ஒருவர் இருக்க வேண்டும். அந்த ஒருவரும், நம்முடைய இதயத்தோடு பேசுகின்ற வராய் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் தனிமை, ஓரளவாவது இனிமையுடையதாயிருக்கும். அந்த ஒருவரும் நமக்கு இல்லையெனில் தனிமையைக் காட்டிலும் வேறு கொடுமை இருக்க முடியாது. இந்தக் கொடுமையினின்று என்னைக் காப்பாற்றக் கூடியவர் யார்? தனிமையைப்பற்றி வெகுவாகப் பேசிவிட்டேனோ என்னவோ? மன்னியுங்கள். இந்தத் தனிமையின் அனுபவம், வெஞ்சமரில் வீழ்ந்துபட்ட வீரனைப்போல் என்னை ஆக்கியிருக்கிறது. ஏனென்றால், என் மனைவி ஒருத்தி இருந்த காலத்தில், அவள் ஒருத்தி எனக்குப் பக்கபலமாக இருந்த ஒரு தைரியத்தினால், வாழ்க்கைப் போராட்டங்கள் பலவற்றிலும் துணிந்து ஈடுபட்டேன். எந்த விதமான போராட்டமாயிருந்தாலும் சளைக் கவேமாட்டேன். இவற்றுள், எவை எவற்றில் வெற்றி கண்டேன், எவை எவற்றில் தோல்வி யடைந்தேன் என்று என்னால் சொல்ல முடியாது. ஏனென் றால், வெற்றி தோல்விகளைப்பற்றி நான் கவலைகொள்ளவே யில்லை. அவை நம் வசத்தில் இல்லையல்லவா? போராடுவதிலேயே எனக்கு உற்சாகமிருந்து வந்தது. எனது உற்சாகத்திற்கு ஊற்றுக் களமாயிருந்து வந்தாள் எனது இல்லக் கிழத்தி. இப்பொழுதோ? ஊற்றே வற்றிப் போய்விட்டது. வற்றிப் போன ஊற்றிலிருந்து இனி நீர் சுரக்குமாவென்று நீங்கள் கேட்கலாம். சுரக்காதுதான். அஃது எனக்கு நன்கு தெரிந் திருக்கிறது. மாண்டவர் மீளமாட்டார் என்பதை நான் அறியாதவ னல்ல. துக்கப்பட வேண்டாதார்க்கு துக்கப்படுகிறாய் என்று தொடங்கும் பகவத்கீதை வாசகம்1 என் நினைவிலேயே இருக்கிறது. முடி சார்ந்த மன்னரும் பிடி சாம்பலாய்ப் போன கதைகளை ஒருவாறு அறிந்திருக்கிறேன். இருந்தாலும் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. என் துணைவியை நினைத்துக் கொண்டால் ஓர் எரிமலை என் அடிவயிற்றிலிருந்து கிளம்புகிறது. அதை என் அறிவைக் கொண்டு அடக்கப்பார்க்கிறேன். அந்தக் கணத்திற்கு அடங்கினாற் போலிருக்கிறது. திரும்பவும் அவள் நினைவு. மறுபடியும் எரிமலை. அவள் கையாண்டு வந்த எந்த ஒரு பொருளின் மீது என் கை பட்டாலும், உள்ளங்காலிலிருந்து உச்சந் தலைவரை மின்சார சக்தி பாய்ந்ததுபோல் அதிர்ச்சி உண்டாகிறது. ஆனால் அதை எப்படியோ சமாளித்துக் கொண்டு விடுகிறேன். அப்படிச் சமாளிப்பதற்கான சக்தியைக் கொடுப்பது கூட அவளுடைய மாசற்ற அன்புதான். ஏனென்றால், அவள் இருந்த வரையில், நான் பலவீனமடைவதை அவள் சிறிதுகூட சகித்துக் கொண்டிருக்கவில்லை. ஆக, நான் ஞான மொழிகள் பல பேசுகின்றேனே தவிர ஞானியல்லேன் என்பதை நன்கு உணர்ந்து வருகிறேன். ஞானியாகு நாள் எந்நாளோ? என் மனைவி, என் மீது கொண்டிருந்த களங்கமற்ற பக்தி என்னை அதற்குப் பக்குவப் படுத்து மென்று நம்பிக் கொண்டிருக்கிறேன். அப்படி நான் பக்குவப்படுகிற வரையில் அழுது கொண்டிருப் பேனோ என்னவோ? உரக்க, நான்கு பேர் கேட்கும்படியாக அழுது விட்டால் துக்கம் ஒருவாறு விரைவில் கரைந்து போகலாம். ஆனால் உரக்க என்னால் அழ முடியவில்லை. முதலாவது, அழுவதற்கான தேக திடம் இல்லை. சமீபகாலத்தில் கடுமையான நோய்வாய்ப்பட்டு, அதிலிருந்து ஓரளவு மீண்டுவருகிற தருணத்தில், இந்தக் கடுமை யான துக்கத்திற்கு நான் ஆளாகி விட்டேன். அதனால் உரக்க அழுவதற்கான உடல்வலிமை என்னிடம் இல்லை. இரண்டாவது, அறுபதுக்கு மேற்பட்ட வயதடைந் திருந்தும் அறுபதுக்கு மேற் பட்ட நூல்களெழுதியிருந்தும், இன்னும் துக்கத்தைக் கடக்கக் கூடிய பக்குவத்தை அடையவில்லையே, இப்படி அழுத கண்ணும் சிந்திய மூக்குமா யிருக்கலாமா என்று நான்கு பேர் பார்த்துப் பரிகாசம் செய்தால் என்ன செய்வது என்ற நாணம் என்னை ஆட்கொள்கிறது. இந்த இரண்டு காரணங்களினால் என் அழுகையை அடக்கிக் கொள்கிறேன். ஆயினும் என் அடி வயிறு குமுறுகிறது. அதிக துக்கத்தையோ, அதிக சந்தோஷத்தையோ அடக்கி வைத்தல், உடலுக் காகட்டும், உள்ளத்திற்காகட்டும் அவ்வளவு நல்லதல்ல வென்று சொல் வார்கள். எப்படியாவது வெளிப்படுத்தி விட்டால் தான், அதிக துக்கத் திற்கோ அதிக சந்தோஷத்திற்கோ மனிதன் பலியாகாமலிருக்கலாம். இரண்டிலும் - துக்கத்திலும் சந்தோஷத் திலும்-தன்னை இழந்துவிடாதபடி பிரதியொரு மனிதனும் தற்காத்துக் கொள்ள வேண்டுமல்லவா? ஆகவே, அழுதுஅழுது என் துக்கத்தைத் தணித்துக் கொள் வதற்குப்பதில் எழுதி எழுதி என் துக்கத்தைத் தணித்துக் கொள் கிறேன். உங்களுக்கல்லாது வேறு யாருக்கு நான் எழுதுவேன்? ஆதலின், எனது எழுத்துக்களைப் படிப்பதனாலுண்டாகிற வேதனையைச் சகித்துக் கொள்ளுமாறு உரிமையோடு உங்களை வேண்டுகிறேன். உங்களுக்கு வேதனை கொடுத்து என் வேதனையைக் குறைத்துக் கொள்ளப் பார்க் கிறேன். என்ன அநியாயம் பார்த்தீர் களா? ஆனால் என் நிலைமைக்குச் சிறிது இரங்குங்கள். எனது சகோதரி-லட்சுமி-இருந்திருந்தால், உங்களுக்கு இந்த வேதனையைக் கொடுத்திருக்கமாட்டேன்; என்னுடைய புலம்பலைக் கேட்கும்படியான துர்ப்பாக்கியம் உங்களுக்கு ஏற்பட்டிராது. ஆனால் அவள் போய்விட்டாள். அவளுக்குப் பிறந்த மகன் இருந் திருந்தால், அவனை என் ஆத்மாவின் பிரதி பிம்பமாக ஏற்று ஆறுதல் பெற்றிருப்பேன். என் மனைவியும், புத்திரன் கையால் அந்திமக் கிரியைகள் நடக்கும் என்ற திருப்தியோடு கண் மூடியிருப்பாள். ஆனால்-? அன்புள்ள 2. நல்ல பரம்பரை தி. நகர், சென்னை 10-03-1956 எனதன்புள்ள ஸ்ரீ சொ. அவர்களுக்கு நமகாரம். நலம் பல விளைக. யாரை நினைத்துக்கொண்டு இன்று எனது எழுதுகோலை எடுக்கின்றோனோ அவள்-எனது மனையாட்டி-நல்ல பரம்பரையைச் சேர்ந்தவள்; கண்ணியமான குடும்பத்தில் பிறந்தவள். இந்தக் குடும்பத்தினரிற் சிலரைத் தாங்கள் நன்கு அறிவீர்கள் அல்லவா? எனது மனைவியில் கடைசி காலத்தில், இவர்களுக்கிருந்த கவலையும், அவள் எப்படியாவது பிழைத்துவிட வேண்டுமென்ப தற்காக இவர்கள் மேற் கொண்ட சிரமமும் தாங்கள் நன்கு அறிந்தனவே. இவர் களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யவல்லேன்? நன்றியைத் தெரிவித்துக் கொள்வதற்குக்கூட எனக்கு வார்த்தைகள் அகப்படவில்லை. ஆனால் தாங்கள் என் சார்பாக இவர்களுக்கு நன்றி தெரிவித்து மிக அழகாக எழுதிய கடிதத்தைப் பார்த்தேன். தங்கள் பெருந்தகைமையை இவர்கள் பெரிதும் பாராட்டுகிறார் களென்பதை அறிந்து பெருமை கொண்டேன். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த முந்திய தலைமுறையின ராகட்டும், இன்றைய தலைமுறையினராகட்டும், பொருளீட்டுவதில் நேர்மையான முறைகளைக் கடைப்பிடிக்கிறவர்கள்; அதில் மிகவும் கண்டிப்புக் காட்டு கின்றவர்கள்; நெறி தவறி நடக்கிறவர்களைக் கண்டால் அஞ்சி ஒதுங்கி விடுவார்கள்; பொது நலப்பணிகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவார்கள்; அதற்காகத் தன் முனைப்புக் கொள்ளமாட்டார்கள். இவர்களுடைய தன்னடக்கத்திற்காகவும், தன்னல மறுப்புக்காகவும், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் இவர் களிடம் விசுவாசத்துடன் நடந்து கொள்வார்கள்; இவர்களுடைய பணியினால் பயனடைந்தவர்கள் இவர் களிடம் மரியாதை செலுத்துவார்கள். மற்றும் இந்தக் குடும்பத்தினர், பிறரிடம் காணப்பெறும் சிறுமை களை மறந்தும் கூறாது விடுத்து, பெருமைகளை மட்டும் பலர் அறியக் கூறி மகிழ்ச்சியடைவர். யாரிடத்தும், தம்மினும் இழிந்தோர் மாட்டும் பணிவே காட்டுவர். இன்முகமும் இன்சொல்லும் இவர்களுடன் பிறந்தவை. ஊரார் இவர்களைச் சுட்டிக் காட்டிப் பேசுவர் என்பதில் ஆச்சரியமேதுமில்லை யல்லவா?1 பசுவும் வாழையும் இருந்துவிட்டால் விருந்தினருக்குப் பயப்படத் தேவையில்லை யென்று சொல்லுவார்கள். இந்தக் குடும்பத்தினர், விருந்தினருக்குப் பயப்பட்டதாக நானறியேன். முகம் வாடி வரும் விருந்தினர் முகம் மலர்ந்து செல்வதை நான் பல்காலும் பார்த்திருக் கிறேன். இல்லறமானது எப்பொழுது மாட்சியுடைத்தாகிற தென்றால், வாழ்க்கையின் இலக்கணமறிந்து அதனை வாழ்ந்து காட்டுகிற போது தான். வாழ்க்கையைப் பற்றிப் பிறருக்கு உபதேசஞ் செய்து கொண்டிராமல், நன்னெறி இன்னதென உணர்ந்து அதன்படி ஒழுகு வதனாலும், அப்படி ஒழுகுவதன் மூலமாக மற்றவர்களை ஒழுகச் செய்வதனாலுமே இல்லறம் சிறப்படைகிறது. இந்த வகையில் சிறப்புற்ற குடும்பமே எனது மனைவி பிறந்த குடும்பம். இந்தக் குடும்பத்தினரில் பலரும் கலை உள்ளம் படைத்தவர்கள். கவிதை இயற்றல், நாடகம் நடித்தல், ஓவியம் வரைதல் முதலியன இக்குடும்பத்தினருக்கு, சிறப்பாகச் சிறுவர் சிறுமியர்க்குச் சர்வ சாதாரண பழக்கம். இசைக்கு வசப்பட்ட இவர்களுடைய வீட்டில் இசைக் கருவிகள் பல எப்பொழுதும் காட்சியளித்துக் கொண் டிருக்கும்; ஏன்? எப்பொழுதும் ஒலித்துக் கொண்டுமிருக்கும். என் மனைவியும் சங்கீதத்தில் நல்ல தேர்ச்சியுடையவள். ஹார்மோனியம் திறம்பட வாசிப்பாள். பள்ளி மாணாக்கியாயிருந்த காலத்தில் இசைத்திறனுக்காகப் பல பரிசுகள் பெற்றிருக்கிறாள். எனது மனைவியின் குடும்பத்தினரைப் பாடியார் என்று அறிந்தவர்கள் அழைப்பார்கள். அதாவது, இவர்களுடைய பூர்வீகம் பாடி என்னும் ஊர்; இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று அர்த்தம். இந்த ஊர், சென்னைக்குத் தென்மேற்கே சுமார் எட்டு மைல் தொலைவில் உள்ளது. இது, திருவலிதாயம் என்ற பெயரால் பாடல் பெற்ற தலம். வண்டு வைகும் மண மல்கிய சோலை வளரும் வலிதாயம் என்று ஞான சம்பந்தப் பெருமான் இதனைப்போற்றி யிருக்கிறார். பிருகபதி, அனுமான், பாரத்வாஜர் முதலியோர் சிவபெருமானை இங்குப் பூசித்துப் பேறு பெற்றதாக ஐதிகம். இங்கு வீற்றிருக்கும் சுவாமியின் பெயர் வலிதாயநாதர்; தேவியின் பெயர் தாயம்மையார். இந்தப் பாடியைச் சேர்ந்த சுப்பிரமணிய ஐயர் என்பவர் ஆங்கிலக் கல்வி பயின்று அரசாங்க உத்தியோகதரானார். ரெவினியு இலாகாவில் அலுவல் பார்த்துவந்த காரணத்தினால், கிராம மக்களோடு நெருங்கிய தொடர்பு கொள்ளும் வாய்ப்பு இருவருக்கு நிறையக் கிடைத்தது. கனிந்த உள்ளம் படைத்தவர். சொற்களை உதிர்க்க மாட்டார்; அளந்துதான் பேசுவார். தமது உத்தியோக வரம்புக்குட்பட்டு கிராம மக்களுக்கு எவ்வளவு நன்மை செய்யக்கூடுமோ அவ்வளவையும் செய்து கொடுப்பார். இதற்காக யாரிடமிருந்தும் எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்கமாட்டார். இது விஷயத்தில் மிகவும் கண்டிப்பாயிருந்தார். பார்த்தால் பரம சாதுவாயிருக் கிறார். ஆனால் உத்தியோக நெறியைக் கடைப் பிடிப்பதில் நெருப்பாயிருக் கிறாரே என்று எல்லோரும் பேசிக் கொள்வர். பாடி சுப்பிரமணிய ஐயருடைய தர்ம பத்தினியாக வாய்த்தவர் வேங்கடலட்சுமி அம்மாள். வெங்குபாய் என்று எல்லாரும் அழைப்பார்கள். தன் கணவரிடம் இந்த அம்மாள் கொண்டிருந்த பக்தியானது, இவளுடைய கடவுள் பக்தியை விஞ்சியதாயிருந்தது. குடும்ப பாரத்தின் பெரும் பகுதியை இந்த அம்மையாரே ஏற்றுத் திறம்பட நடத்தி வந்தாள். இல்லம் நாடி வரும் விருந்தினரை, வயிறும் மனமும் குளிர்வித்து அனுப்புவதில் இவளுக்கு நிகர் இவளே தான். இவள் இருந்த இடத்தில் திருமகள் மகிழ்ச்சி யுடன் வசித்துக்கொண்டு வந்ததில் ஆச்சரியமென்ன இருக்கிறது? சுப்பிரமணிய ஐயர்-வேங்கடலட்சுமி அம்மாள் தம்பதிகளுக்கு ஒன்பது குழந்தைகள். ஒரு குழந்தை மட்டும் சின்னஞ் சிறு வயதிலே பரமனின் அடியிணை எய்தி விட்டது. மற்ற எட்டுக் குழந்தைகளும் நன்றாக வளர்ந்து பெற்றோருக்கு உவகை யூட்டி வந்தன. ஆனால் இவர்கள்-பெற்றோர்கள்-தங்கள் உவகையை வெளிக்குக் காட்டிக் கொள்ளமாட்டார்கள். சிறப்பாக, தந்தையார், குழந்தைகளைத் தொட் டெடுத்துச் சீராட்டமாட்டார்; உலகப் பற்றற்றவர் போலவே நடந்து கொள்வார். உண்மையில், குழந்தைகளின் வளர்ச்சியில் இவருக்கிருந்த கண்ணுங் கருத்தும் மிகவும் ஆழமானவை. தமது மக்களிடத்தில் மனிதப் பண்புகள் அத்தனையும் நிறைந்திருக்க வேண்டுமென்பதில் அதிக கண்ணோட்டம் செலுத்தினார். ஒரு தந்தையின் கடமையும் இதுவே யன்றோ? மன மொத்த இந்தத் தம்பதிகளுக்கு 1900 ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. செவ்வாய்க் கிழமை பிறந்ததனால் மங்களம் என்று பெயரிட்டார்கள். இதுதான் இவர் களுடைய கடைசி குழந்தை. முந்திய குழந்தைகளைப்போல் இஃது அவ்வளவு திடகாத் திரத்துடன் இல்லை; தொட்டால் சிணுங்கி யாகவே இருந்தது. இது நீண்ட காலம் ஜீவித்திருக்குமோ என்ற கேள்வி சில சமயங்களில் பெற்றோர்கள் உள்ளத்தில் எழுந்ததுண்டு. ஆனால் இதற்கு ஜாதகம் கணித்தவர்கள், தீர்க்காயுளுள்ள குழந்தை யென்று சொல்லி, பெற்றோர்களின் உள்ளத்தைக் குளிர்வித்தார்கள். இருந்தாலும் இதன் வளர்ச்சியில் பெற்றோர்களுக்கு எப்பொழுதும் ஒரு வித கவலை இருந்து வந்தது. இந்தக் குழந்தையின் ஜாதகத்தை இங்கே கொடுத்திருக்கிறேன். இதைப் பார்த்து இனி பலன் சொல்லிப் பயனில்லை. ஆனால் இந்த ஜாதகம் சரியா, சரியாயிருந்தால் ஜாதகி எப்படி இருந்திருக்கக் கூடுமென்று தாங்கள் ஒருவாறு கணித்துப் பார்க்கலாமல்லவா? விகாரி வருஷம் மாசி மாதம் மூன்றாந்தேதி செவ்வாய்க் கிழமை பூச நட்சத்திரம் மீன லக்கினத்தில் ஜனனம். செவ்வாயன்று பிறந்த இந்தக் குழந்தைக்கு இரண்டு வயது பூர்த்தியாகி மூன்றாவது வயது நடந்து கொண்டிருக்கையில், இதன் தந்தையார் காஞ்சிபுரத்தில் காலமானார். என்ன துரதிருஷ்டம்! தாயாரின் குடும்பப் பொறுப்பு இன்னும் அதிகமாயிற்று. கவலைக்குச் சொல்லவா வேண்டும்? மிகவும் பரிசோதனையான காலம். இந்தக் காலத்தில் இந்த அம்மையார் காட்டிய மன உறுதி, நிதானந்தவறாமை, குடும்ப கௌரவத்தைக் கை சேர விடாமை முதலியனவற்றைக் கண்டு உற்றாரும் ஊராரும் வியந்தனர்; இவளிடத்தில் தங்களுக் கிருந்த மதிப்பை அதிகப்படுத்திக் கொண்டனர். சுமார் இரண்டரை வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்த மங்களம் என்ற கடைசி குழந்தைதான், பதினான்காவது வயதில், எனது பெற்றோர் களின் மூத்த புதல்வனான எனக்கு மாலையிட்டாள். அப்பொழுது எனக்குப் பத்தொன்பது வயது. என் கழுத்தில் இவள் மண மாலையிடுவதற்கு முந்தியே, இவள் கழுத்தில் நான் தாலி பூட்டுவதற்கு முந்தியே, இவளுடைய குடும்பத் தினருக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் நல்ல பரிச்சயம் உண்டு. இவர்களிடையே நிலவிவந்த மனப் பொருத்தந்தான், எங்களிருவரையும் எதிர்பாராத விதமாக மணப் பந்தலில் நிறுத்தி வைத்தது. ஆம்; எதிர்பாராத விதமாகத்தான். ஏனென்றால் எங்கள் விவாகம் நடந்தது ஒரு நாடகம் மாதிரி. என்னுடைய சொந்த ஊர் வெங்களத்தூர் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே? அதில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் அண்ணாசாமி ஐயர் என்ற ஓர் உத்தமர் இருந்தார். இவருடைய சகோதரி மகன்தான் பாடி சுப்பிரமணிய ஐயர்-மங்களத்தின் தந்தையார். இவர் வெங்களத்தூரில் தமது அம்மான் போஷணையில் சிறிது காலம் இருந்தார். அப்பொழுது இவரும் எனது தகப்பனாரும் சிறந்த நண்பர்களானார்கள். உத்தியோக நிமித்தமாக மதுராந்தகம் என்னும் ஊர் போந்த மங்களத்தின் பெற்றோர்களும் எனது பெற்றோர்களும் ஒரே வீட்டில் சிறிது காலம் குடியிருந்தார்கள். அப்பொழுது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். மங்களம் தவழும் குழந்தை. இவளுடைய தாய் தந்தையரை முதன்முதலாக நான் பார்த்தது இந்த வீட்டில் தான். சிறு பிள்ளையான எனக்கு, இவர்களுடைய மனமொத்த வாழ்க் கையைப் பற்றி என்ன தெரியும்? ஆனால் இவர்களுடைய உருவமும், இவர்கள் என்பால் காட்டிய அன்பும் என் நினைவிலிருந்து அகலவில்லை. வெங்குபாயின் கம்பீரமான தோற்றம் இப்பொழுதும் என் கண் முன்னே வந்து நிற்கிறது. மலர்ந்த முகம்; பரந்த நெற்றி; அதில் அகன்ற குங்குமப் பொட்டு; இந்தக் கோலத்தை நான் எந்நாளும் மறவேன். அப்படியே அந்த அம்மையார், தனது கணவனாருக்குச் செய்துவந்த பணிவிடைகளும் என் ஞாபகத்தில் இருந்து கொண் டிருக்கின்றன. மாலை நேரங்களில், அவர் நித்யானுஷ் டானத்திற்கு உட்காருவதையும், கண்மூடி ஜபம் செய்து கொண்டிருப்பதையும் நான் கூர்ந்து கவனிப்பேன்; எவ்வித சந்தடியும் செய்யமாட்டேன். அந்த அம்மையாருக்கு இது பரம சந்தோஷம். கணவனாரை இழந்த பிறகு வேங்கடலட்சுமி அம்மையார், தமது குடும்பத்துடன் காஞ்புரத்திலேயே நிரந்தரமாக இருந்துவிட வேண்டிய தாயிற்று. ஆண்பாடு பெண்பாடு என்று சொல்லுவார்கள், அத்தனையையும் இவள் ஒருத்தியே கவனித்து வந்தாள். இவள் இருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் என் சிறிய தந்தையார் குடியிருந்தார். என் பெற்றோர்கள் இங்கு அடிக்கடி வந்து போவார்கள். நானும் கூட வந்து போவேன். அப்பொழு தெல்லாம், மங்களம், சின்னஞ்சிறு கிளிபோல் ஓடி விளையாடிக் கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன். நானும் சிறு பிள்ளை யாகையால், இவளுடைய விளையாட்டைக் கண்டு களிக்கும் உற்சாகத்தில் இவளோடு சில வார்தைகள் பேசுவேன். ஏளனம், எக்களிப்பு எல்லாந்தான். ஏழெட்டு வருஷங் கழித்து, நாங்கள் மணப்பந்தலில் கைகோத்து நிற்கப் போகிறோ மென்று எங்களுக்கு அப்பொழுது எப்படித் தெரியும்? எங்களுடைய பெரியவர்கள் விவாகத்தைப்பற்றி எண்ணிக்கூட இருக்க மாட்டார்கள். மங்களம் அதிக தேகபலமில்லாதவளாயிருந்தாலும் அதிக புத்தி பலத்துடன் வளர்ந்து வந்தாள். இதனால், தனது சகோதர சகோதரிகளின் விசேஷ அன்பையும் சலுகையையும் பெற்று வந்தாள். இருந்தாலும் போஷணை விஷயத்தில் தாயாரின் கண்ணோட்ட நிழலிலேயே இருந்து வர வேண்டியவளானாள். பாலோ, அன்னமோ யார் கொடுத்தாலும் இவள் வயிறு ஏற்காது; ஏதாவதொரு கோளாறு உண்டாகிவிடும். தாயார் கைப்பட எது கொடுத்தாலும், அதைச் சுலபமாக ஜீரணித்துக் கொள்ளும் பக்குவத்தை இவள் வயிறு பெற்றிருந்தது. ஏனென்றால், தாயார் ஒருத்திக்குத்தான் மித மறிந்து உண்பிக்கத் தெரிந்திருந்தது. குழந்தைப் பருவத்திலிருந்தே இவள்-மங்களம்-எல்லாவற்றிலும் மிதமாகவே இருந்து வந்தாள். மங்களம், விவாகமாகும் வரையில் தாயாரை விட்டு ஒரு கணமும் பிரிந்தவளல்ல. அப்படி ஒரு வேளை இரண்டு வேளை பிரிந்திருக்கும்படி நேரிட்டால், வந்தது வினை, இவளைப் போஷிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறவர்களுக்கு. தாயார் திரும்பி வரும் வரை கண்ணைக் கசக்கிக் கொண்டிருப்பாள்; உடம்பு ஏதேனும் ஒரு தொந்தரவுக்குள்ளாகும்; தாயாரின் வரவை நோக்கித் தெருப்பக்கத்தில் போய் ஏக்கத்துடன் நின்று கொண் டிருப்பாள். இங்ஙனம் அரைக்கணமும் தாயாரை விட்டு பிரியா திருந்த இவள், புக்ககம் போந்த பிறகு, பிறந்தகம் சென்று சிறிது காலம் தங்க வேண்டுமென்று ஆசைப்பட்டது கிடையாது. தங்கள் நிலை உணர்ந்து அதற்குத் தக்கபடி தங்கள் மனத்தைப் பக்குவப் படுத்தி வைத்துக் கொள்ளும் சக்தி பெண்மணிகளுக்குத் தான் உண்டு போலும். மங்களத்திற்கு அமைந்திருந்த இயற்கையறிவு சிறிது கூர்மை யாகவே இருந்ததென்று சொல்ல வேண்டும். ஒரு பொருளைப் பார்த்த மாத்திரத்தில் அதன் தன்மை இன்னது தானென்று சுலபமாக உணர்ந்து கொண்டு விடுவாள். பிற்காலத்தில், எனது இல்லம் நாடிவரும் உற்றார் உறவினரையாகட்டும், மற்றவர்களையாகட்டும், அவர்களுடைய பார்வையிலிருந்து, அவர்களிடமிருந்து வெளிவரும் இரண்டொரு வார்த்தைகளிலிருந்து; இன்னார் இத்தகையர் என்று சர்வசாதாரணமாக மதிப்புப் போட்டு விடுவாள். அந்த மதிப்பில் கூடுதல் குறைச்சலே இராது. இவள் குழந்தையாயிருந்த போழ்து, இவளது தாயார், இவளுக்குப் பாலைக் கொடுத்துக் குடிக்கச் செய்வாள். பாலைப் பார்த்தவுடனேயே இவள்-மங்களம்-அது பசும் பாலா, எருமைப் பாலா என்று தெரிந்து கொண்டுவிடுவாள்; பசும் பாலாயிருந்தால் தான் குடிப்பாள்; எருமைப் பாலாயிருந்தால் அதை நிர்த்தாட்சயண் மாக மறுத்து விடுவாள். எருமைப்பாலில் லேசாகத் தண்ணீர் விட்டு, சர்க்கரை கலந்து குடிக்கச் செய்தால், அதை லேசாகச் சுவைத்துப் பார்த்து இது பசும் பாலல்ல; தண்ணீர் கலந்த எருமைப் பால் என்று சொல்லி மேலும் குடிக்க மாட்டாள். இது விஷயத்தில் இவளை ஏமாற்றவே முடியாது. இவளுக்காக என்று வீட்டில் எப்பொழுதும் ஒரு கறவைப் பசு இருந்து கொண்டிருந்தது. பிற்காலத்தில், புக்ககம் போந்த பிறகு, தரம் பார்த்தும் சுவைத்தும் பாலைப் பருகும் பழக்கம் இவளிடமிருந்து விலகி விட்டது. ஆம்; சென்னையின் திரவாசியாகிவிட்ட பிறகு, தரம் பார்த்தோ, சுவைத்தோ பாலைக் குடிக்க முடியுமா என்ன? வெளுத்ததெல்லாம் பால் தானே சென்னையில்? அன்புள்ள 3. முறையான கல்வி தி. நகர், சென்னை 14-03-1956 எனதன்புள்ள ஸ்ரீ சொ. அவர்களுக்கு நமகாரம். நலம் பல விளைக. இந்தக் கடிதத்தில் மங்களம் என்ற பெண், கல்வி பயின்ற வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்ல விழைகிறேன். இதைக்கொண்டு, சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முந்தி, பெண்களுக்கு எத்தகைய கல்வி போதிக்கப்பட்டு வந்ததென்பதைத் தாங்கள் ஒருவாறு அறிந்து கொள்ளலாம். ஐந்தாவது வயதுத் தொடக்கத்திலிருந்தே இந்த மங்களம் என்ற பெண், படிப்பிலே காட்டிய ஆர்வம் எல்லாரையும் வியக்கச் செய்தது. பள்ளிக்குச் செல்லவேண்டுமென்பதிலே தனியான உற்சாகங் காட்டினாள். எந்த ஒரு விஷயத்தையும் விரைவிலே கிரகித்துக்கொண்டு, அதை மனத்திலிறுத்திக் கொள்வாள். இவள் படித்தது காஞ்சிபுரம் சோமசுந்தர பாடசாலையில். அப்பொழுது, அதாவது 1915 ஆம் வருஷத்திற்கு முந்தி இந்தப் பள்ளி, பெண்களுக்கென்று நடைபெற்று வந்த பள்ளிகளில் மிகச் சிறந்த தொன்றாகப் பிரசித்தியடைந்திருந்தது. வெளி நாடுகளிலிருந்து வந்து போன கல்வி நிபுணர்களிற் சிலர், இந்தப் பாடசாலையையும், டில்லி யிலுள்ள இந்திரப் பிரதா பெண் பள்ளியையும், இந்தியாவி லேயே மிகச் சிறந்த பெண் பள்ளிக்கூடங்களென்று போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள். இந்தச் சோமசுந்தர பாடசாலைக்கு மூல புருஷராக விளங் கியவர் சோமசுந்தர சாதிரியார் என்ற கனவான். பெண்களுக்கு நல்ல முறையில் கல்வி போதிக்கப்பட வேண்டு மென்ற பெரு நோக்குடன் இவர் இந்தப்பள்ளியைத் தோற்றுவித்தார். இதனைத் திறம்பட நிருவாகஞ் செய்து வந்தவர் ராமநாத சர்மா என்பவர்; தலைமையாசிரியையாக இருந்து பணியாற்றியது பர்வதம்மாள். இந்த அம்மையார், வெறும் தலைமை ஆசிரியையாக மட்டும் இல்லை; மாணாக்கியர் அனைவருடைய தாயாகவும் விளங்கினாள். இந்த அம்மாள், கணக்குப் பிள்ளை வகுப்பைச் சேர்ந்தவள்; தமிழ்ப் புலமை நிரம்பியவள். விவாகஞ் செய்துகொண்ட சிறிது காலத் திற்குள்ளேயே கணவனை இழந்து விட்டாள். மனம், தெய்வ நெறியில் திரும்பியது. பெண்களுக்கு நல்ல முறையில் கல்வி புகட்டுவதைத் தனது வாழ்நாள் பணியாக மேற்கொண்டாள். காஞ்சிபுரம் சோமசுந்தர பாடசாலை, இந்தப் பணிக்கு ஏற்ற இடமாக அமைந்தது. இதில் படித்தது பெரும்பாலும் பிராமணக் குழந்தை களே. இந்தக் குழந்தைகளுக்கும் இந்த அம்மையாருக்கு மிடையே நிலவி வந்த அன்பு, சொல்லினால் சொல்லிக்காட்டுந் தரத்ததன்று. இந்தக் குழந்தைகளில் பலரும், தங்கள் வீட்டிலிருப்பதைக் காட்டி லும் வாத்தியாரம்மாள் வீட்டில் இருப்பதற்கே விரும்புவார்கள்; வாத்தியாரம்மாள் சொல்லிக் கொடுத்த பழக்க வழக்கங்கள்தான் தங்கள் வீட்டில் அனுஷ்டிக்கப் பட வேண்டுமென்று பெற்றோர் களிடம் வற்புறுத்துவார்கள். எதற்காக இதை இங்குக் குறிப்பிட்டுக் காட்ட வேண்டி யிருக்கிறதென்றால், நாற்பது வருஷங்களுக்கு முந்தி, வகுப்பு வேற்றுமை யென்பது, பள்ளிக்கூடங்களில் தலை காட்டவில்லை. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிள்ளைகள் பேசிக் கொள்ள மாட்டார்கள். ஆசியர் களாகட்டும், மாணாக்கர்களாகட்டும், குலம் கோத்திரம் முதலியவை களைப்பற்றி விசாரிக்கமாட்டார்கள். இப்பொழுதோ? சோமசுந்தர பாடசாலையில் ஏழாவது வகுப்புவரைதான் இருந்தது. ஏழாவது வகுப்பு என்று சொன்னாலும், தற்கால கூல் பைனல் வகுப்புக்கு ஈடாகச் சொல்லலாம். தமிழ், சம்கிருதம், இங்கிலீஷ் ஆகிய மூன்று மொழிகளும் இங்குக் கற்றுக் கொடுக்கப் பட்டன. தவிர, பெண்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு உபயோகப் படக்கூடிய தையல் வேலை, சித்திரம் வரைதல், கோலம் போடுதல், சமையற் கலை முதலிய பலவும் சொல்லித்தரப்பட்டன. மற்றும், சம்பாஷணைகள் மூலமாகவும், நாடகங்கள் வாயிலாகவும் பலவித போதனைகள் அளிக்கப்பட்டன. இசைப் பயிற்சியும் உடற்பயிற்சி யும் முக்கியமாகக் கருதப்பட்டன வென்பதுபற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. இந்தப் பள்ளிக்கூடத்தின் ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு பாடத்திலும் மங்களம் முதலிடம் பெற்று நின்றாள். ஒவ்வோர் ஆண்டு விழாவின் போதும் இவளுக்குக் கிடைத்த பரிசுகள் பல. ஆண்டு விழா முடிந்து வீட்டுக்கு வரும் போது, தனக்குப் பரிசாகக் கிடைத்த புத்தகங்களைத் தூக்கிக் கொண்டுவர முடியாமல் தூக்கிக் கொண்டு வருவாள். வீட்டு வாயிற்படிக்கு வரும்போதே இவளுடைய சகோதர சகோதரிகள் உன்னைக் காட்டிலும் நீ கொண்டு வரும் புத்தகங்கள் அதிக பளுவாயிருக்கின்றனவே என்று பரிகாசமாகச் சொல்லிக்கொண்டே இவள் கொண்டுவரும் புத்தகங்களை வாங்கிக் கொண்டு, இவளையும் கை பிடித்து உள்ளே அழைத்துப் போவார்கள். இவளுக்குக் கிடைத்த புத்தகங்களைப்பற்றி ஒரு வார்த்தை. இவை பொழுது போக்குக்கான புத்தகங்களல்ல; அறிவு வளர்ச்சிக் கானவை; இதயத்தை விரிவு படுத்தக்கூடியவை; பாரத நாட்டின் பண்பாட்டை விளக்கி வைப்பவை. புத்தகங்களைத் தவிர இவளுக்குக் கிடைத்த வெள்ளிக் கிண்ணங்களும் தங்கப் பதக்கங்களும் பல. பிரதி வருஷமும் இவள் பரிசுகள் பெற்று வருவது சிலருக்குப் பொறாமையாகக்கூட இருந்தது. இதற்காக இவள். குடும்பத்தினர் வருத்தப்பட்டது கிடையாது. இவள் தாயார் இவளுக்குக் கண்ணேறு கழித்ததுமில்லை. ஆண்டு விழாவின் போதாகட்டும், கல்வி இலாகா அதிகாரிகளோ அல்லது முக்கியதர்களோ பள்ளிக்கு விஜயம் செய்யும் போதாகட்டும், அவர்களைக் கௌரவிக்கின்ற முறையில் ஆடல் பாடல்கள், சிறு நாடகங்கள் முதலியன நடைபெறும். இவை ஒவ்வொன்றிலும் மங்களத்திற்கு முக்கியமான பாகம் அளிக்கப் பெறும். அவ்வளவென்ன? இவளில்லாமல் எதுவும் நடைபெறாது. நாடகங்களில், அநேகமாகக் கதாநாயகனாகவோ, கதாநாயகியாகவோ நடிக்கும்படி ஏற்படும். தமிழ், சம்கிருதம், இங்கிலீஷ் ஆகிய மூன்று மொழிகளிலும் திறம்பட நடிப்பாள். நடிப்புத் திறமைக்காக இவள் பெற்ற பரிசுகள் பல. ஒரு சிறிய உதாரணத்தை இங்குச் சொல்லிக் காட்ட விரும்புகிறேன். எனக்கு விவாகமாகி இரண்டு வாரங்களிருக்கும். அப்பொழுது நான் அரசாங்க ஆதரவில் நடைபெற்று வந்த ஒரு விவசாய தாபனத்தில் தலைமை குமாதாவாக அலுவல் பார்த்து வந்தேன். அந்த தாபனத்தின் கௌரவ காரியதரிசிகளுள் ஒருவராயிருந்தவர் திவான் பகதூர் மு. ஆதிநாராயணய்யா என்பவர். வயதிலும் அனுப வத்திலும் முதிர்ந்தவர். இவர்தான், தற்போது பிரபலமடைந் திருக்கும் இந்தியன் பாங்கியின் தாபகருள் ஒருவர். இவர், பிரதி வருஷமும் சோமசுந்தர பாடசாலையின் ஆண்டு விழாவுக்குக் காஞ்சிபுரம் சென்று வருவார். இவரும், காஞ்சிபுரத்தில் பல நற்பணிகள் புரிந்து வந்தவரும், மேற்படி பாடசாலையின் ஆதர வாளர்களில் ஒருவருமான ராமச்சந்திர சாதிரி என்பவரும் ஒரு நாள் மாலை, எனது அலுவலகத்திற்கு வந்தனர். அப்பொழுது, சமீபத்தில் நடைபெற்ற எனது விவாகத்தைப்பற்றிப் பேச்சு வந்தது. காஞ்சிபுரவாசியான ராமச்சந்திர சாதிரி, எனக்கு மனைவியாக வாய்த்திருக்கும் பெண்ணைப்பற்றி ஆதிநாராயணய்யாவிடம் பிரதாபித்தார். உடனே அவர் ஓ, அந்தக் குழந்தையா? நளனாக எப்படித் தான் நடித்தது? வந்திருந்த அத்தனை பேரும் அழுது விட்டார்களே! ஒவ்வோர் ஆண்டு விழாவின் போதும் அந்தக் குழந்தை ஏதாவதொரு முக்கிய பாத்திரமாக நடித்து வந்ததைப் பார்த்துப் பரவசப்பட்டிருக்கிறேன். அந்தக் குழந்தையா? பேஷ்! நீ மகா அதிருஷ்டசாலியப்பா என்று சொல்லி என் கையைப் பிடித்துக் குலுக்கிப் பாராட்டிவிட்டு, ராமச்சந்திர சாதிரியைப் பார்த்து, இவனும் நல்ல பையன்; அந்தக் குழந்தைக்கேற்ற புருஷன் தான் என்று கூறினார். அப்பொழுது நானடைந்த பெருமையை என்னென்று சொல்வேன்? சென்ற முதல் உலக மகா யுத்தம் ஏற்பட்டதன் விளைவாக, மேற்படி விவசாய தாபனம் கலைக்கப்பட்டுவிட்டது. எனக்கு மூன்று மாதச் சம்பளம்-ஒரு ரூபாயோடு சேர்த்து நூறு ரூபாய்-சன்மானமாகக் கிடைக்கும்படி செய்தார் மேற்படி ஆதிநாராயணய்யா. இந்தத் தொகைக்கு செக் எழுதிக் கொடுக்கச் செய்கிறபோது, இந்தப் பணத்தை என்ன செய்யப் போகிறாய்? வீணாகச் செல வழித்துவிடாதே. என் பெயரைச் சொல்லி, அந்தக் குழந்தைக்கு, அதானப்பா, உன் சம்சாரம், அவளுக்கு ஒரு நகை செய்து போடு என்று அதிகாரமும் அன்பும் கலந்த தொனியில் கூறினார். என்ன அன்பு! அவர் கூறிய வண்ணம் ஒரு கழுத்தணி செய்வித்து அணியச் செய்தேன், மங்களத்திற்கு. படிப்பிலும் நடிப்பிலும் எவ்வளவு உற்சாகம் இருந்ததோ அவ்வளவு உற்சாகம் விளையாட்டிலும் இருந்தது மங்களத்திற்கு. குதித்துக் குதித்துக் கோலாட்டம் போடுவாள்; பாட்மிண்ட்டன் விளையாடுவாள்; இன்னும் பள்ளிக்கூடத்தில் அவ்வப்பொழுது நடைபெறும் எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்வாள்; வெற்றியும் அடைவாள். பாட்மிண்ட்டன் விளை யாட்டுப் போட்டிகளில் இவள் பெற்ற சில பரிசுகளைப் புக்ககம் வந்தபோது கொண்டு வந்திருந்தாள். ராமநாத சர்மாவும் பர்வதம்மாளும், தங்கள் கடைசி காலம் வரை, தங்கள் தலை மாணாக்கியாக இருந்த மங்களத்தினிடம் பேரபிமானம் வைத்திருந்தார்கள். இந்த அபிமானம் காரண மாகவோ என்னவோ, இவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவர்களுக்கு மிகவும் இனிப்பா யிருந்தது. இதைப் பல முறை நான் நேரில் கண்டிருக்கிறேன். ராமநாத சர்மாவுக்குக் கடைசி காலத்தில் கண்பார்வை போய்விட்டது. இருந்தாலும் மனத்தளர்ச்சி சிறிதுகூட உண்டாக வில்லை; பாடசாலை விஷயத்தில் எப்பொழுதும் போல் உற்சாகங் காட்டி வந்தார். ஒரு சமயம், மங்களமும் நானும் காஞ்சிபுரத்திற்குப் போயிருந்த பொழுது, இவரைப் பார்க்கச் சென்றிருந்தோம். மங்களத்தின் குரலைக் கேட்டதும், இவளுடைய இரண்டு கை களையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு கண்ணீரைப் பெருக்க விட்டார். நா தழதழத்தது. அம்மா, மங்களம்! நீ இந்தப் பள்ளிக் கூடத்தின் நிருவாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு விடு. உனது கணவர் இதற்குச் சம்மதிப்பார் என்று நினைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே என்ன சர்மா, ஆட்சேபமில்லையே? என்று என் பக்கம் திரும்பிக் கேட்டார். எனக்கென்ன ஆட்சேபம்? ஏற்றுக் கொண்டால் எனக்குப் பெரிதும் மகிழ்ச்சிதான் என்றேன் நான். அப்படியானால் நீ ஏற்றுக் கொண்டு விடு. பிறகு சந்தோஷமாக என் உயிர் போகும். உயிர் போன பிறகு என் உடலை, பாடசாலையின் அதிவாரத்திலேயே அடக்கம் செய்து விடு. அப்பொழுதுதான் என் ஆத்மா சாந்தியடையும் என்றார் மங்களத்தைப் பார்த்து. பாடசாலையின் பிற்காலத்தைப்பற்றி எவ்வளவு கவலை? தமது மாணாக்கியினிடத்தில் எவ்வளவு நம்பிக்கை? ஆனால், பாட சாலையைப் பொறுத்தமட்டில் ராமநாத சர்மாவின் செல்வாக்கு அப்பொழுது தேய்பிறையாக இருந்ததனாலும், தவிர்க்க முடியாத வேறு சில காரணங்களாலும் அவருடைய விருப்பம் நிறைவேறாமல் போய் விட்டது. பர்வதம்மாளும், சென்னை போதரும் போதெல்லாம், எங்கள் இல்லம் வந்து இரண்டு வேளையாவது தங்கிச் செல்லாமலிருந்த தில்லை. தனது சிஷ்யையைப் பார்த்துச் செல்வதிலே அவ்வளவு திருப்தி அவளுக்கு. இவளுடைய குடித்தனப் பாங்கைப் பெரிதும் பாராட்டுவாள். தேவாரப் பதிகங்கள் சிலவற்றைப் பாடச் சொல்லிக் கேட்டுப் பரவச மடைவாள். இருவரும், பழைய காலத்துக் கல்வி முறையையும் இக்காலத்துக் கல்வி முறையையும் ஒப்பிட்டுப் பேசுவார்கள். இடை யிடையே, இலக்கிய விமர்சனம் நடைபெறும்; நாகரிகத்தின் பெயரால் தற்காலத்துக் குடும்பங்களில் காணப்பெறும் விபரீதங்கள் களி நடனம் புரியும். இருவருடைய சம்பாஷணைகளை நான் மௌனமாகக் கேட்டு உள்ளூர அனுபவிப்பேன். அந்தக் காலம் திரும்பி வருமோ? இருவரும் திரும்பிவர முடியாத உலகத்திற்கன்றோ சென்று விட்டார்கள். பர்வதம்மாள், தனது மாணவிகளுக்குத் தாயாகவும் இருந்தாளென்று நான் மேலே சுட்டிக் காட்டியதில் எவ்வளவோ அர்த்தமிருக்கிறது. தேவாரப் பதிகங்கள் பலவற்றை உரிய பண்ணோடு சொல்லிக் கொடுத்தாள். பிறந்தகத்திலிருக்கும் போது பெற்றோர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், புக்ககத்தில் மருமகளாக எப்படி நடந்துகொள்ள வேண்டும், குழந்தைகளின் தாயாக எப்படி நடந்துகொள்ள வேண்டும், இப்படிப் பல கோணங்களில் வைத்துக் குடும்பக் கலையைப் போதித்தாள். அவ்வப்பொழுது மாணவிகளின் வீடுகளுக்குச் சென்று சரியாகப் படித்து வருகிறார்களா, குடும்பத்தினரிடம் சரியாக நடந்து கொள்கி றார்களா என்றெல்லாம் கவனித்து வந்தாள். இந்த அம்மாளிடம் படித்தவர்கள், இப்பொழுது பெரிய குடும்பதர்க ளாகி நல்ல முறையில் இல்லறம் நடத்திவருவதை நான் கண்டு வருகிறேன். இவர்களுடைய இல்லற வாழ்க்கையில் பாரத நாட்டின் பண்பாடு அப்படியே பிரதிபலித்துக் காட்டுகிற தென்று பெருமையோடு தெரிவிக்கிறேன். சுருக்கமாக, பெண்களுக்கு எத்தகைய கல்வி போதிக்கப்பட வேண்டுமென்பதற்கு, காஞ்சிபுரம் சோமசுந்தர பாடசாலை ஒரு முன் மாதிரியாக இருந்தது. அதில் படித்த பெண்கள், குடும்ப வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டுமென்பதற்கு வழிகாட்டிக ளாக இருந்தார்கள். இத்தகைய வழிகாட்டிகளுள் ஒருத்தியே எனது வாழ்க்கைக்கு வெளிச்சம் காட்டும் விளக்காயமைந்தாள். அன்புள்ள 4. விந்தையான விவாகம் தி. நகர், சென்னை 20-03-1956 எனதன்புள்ள ஸ்ரீ சொ. அவர்களுக்கு நமகாரம். நலம் பல விளைக. எனக்குக் கல்யாணமானதே ஒரு விந்தை. அதைக்காட்டிலும் விந்தை எனது வாழ்க்கை. ஆனால் நிந்தையான வாழ்க்கையில்லை. நிச்சயமாகச் சொல்லுவேன். எனது ஜாதகத்தை வேண்டுமானால் பாருங்கள். ஜாதகத்தைக் கொண்டு ஜாதகனை ஒருவாறு மதிப் பிடலா மென்று சொல்லுகிறார்களல்லவா? சோதிட சாதிரத்தில் உங்களுக்கு எவ்வளவு தூரம் நம்பிக்கை இருக்கிற தென்பது எனக்குத் தெரியாது. பொதுவாக, பெரும்பாலோருக்கு அந்தச் சாதிரத்தைப் பற்றித் திடமான அபிப்பிராயம் எதுவும் இல்லை யென்றுதான் என் அனுபவம் கூறுகிறது. சோதிடர் கூறுவது கூடிய மட்டில் நமக்கு அனுகூலமா யிருந்தால், சாதிரம் பொய்யாகுமாவென்று சொல்லி சோதிடரைப் பாராட்டுகின்றோம். அவருக்குச் சன்மானங் கொடுக்கத் தயங்குவ தில்லை. அவர் சொல்வது பிரதி கூலமாயிருந்தால், சாதிரப்படி எல்லாம் நடக்கிறதாவென்று சொல்கிறோம். இவரென்ன எழுதி வைத்த பிரம்மாவா? என்று சொல்லி சோதிடரை அலட்சியப் படுத்துகிறோம். அவருக்குச் சன்மானம் கொடுக்க கை பின்வாங்கு கிறது. அநேகமாக சோதிடர்கள், யாருக்கும் பிரதி கூலமான பலனைச் சொல்வதில்லை. அதையே தொழிலாக வைத்துக் கொண் டிருக்கிறவர்கள், பலன் சொல்லுகிற விஷயத்தில் சர்வ ஜாக்கிரதை யுடனிருக்கிறார்கள். இன்னொரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா? சோதிடர்கள், நடந்ததைப் பற்றிச் சொல்வதெல்லாம் அநேகமாகச் சரியாயிருக்கிறது. நடக்கப் போகிறதைப்பற்றிச் சொல்வது அப்படியே நிறைவேறுவதில்லை. இன்னும், கெட்டது சொன்னால் பலிக்கிறது; நல்லது சொன்னால் அநேகமாகப் பலிப்பதில்லை. வேடிக்கையாக இல்லையா இது? என் ஜாதகத்தைப் பார்த்துச் சொன்ன சோதிடர் அத்தனை பேரும், நீசபங்க ராஜயோக ஜாதக மென்றே சொல்லியிருக் கிறார்கள். ஆனால் என் வாழ்க்கையில் எனக்கு ஏதும் யோகம் ஏற்பட்டதில்லை. அதிருஷ்டத்திற்கும் எனக்கும் வெகுதூரம். என்னுடைய அறுபதாவது வயதில் எனக்குப் பலத்த யோக மென்று எல்லாரும் சொன்னார்கள். இந்த அறுபதாவது வயதில்தான் என்னைக் கடுமையானதொரு நோய் தாக்கியது; இல்லாள் இல்லாதவனானேன். ஜாதகப் பொருத்தம் பார்த்துத்தான் எனக்கு முதலில் ஒரு பெண்ணை நிச்சயம் செய்திருந்தார்கள். ஆனால் அந்த விவாகம் நடைபெறவே இல்லை. கேளுங்கள் கதையை. என் சகோதரியின் மாமனார், ஒரு பெண்ணைக் குறிப்பிட்டுச் சொல்லி, மணமுடிக்க இசையுமாறு என் தகப்பனாரிடம் கூறினார். என் தகப்பனாரும் அவர் சொல்லுக்கு மதிப்புவைத்து, சரியென்று தலை யசைத்துவிட்டார். பெண்ணைப் பாராமலும், அந்தப் பெண்ணின் குடும்ப நிலையைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ளாமலும், ஜாதகப் பொருத்தம் ஒன்றையே வைத்து என் தகப்பனார் சம்மதம் கொடுத்து விட்டது என் தாயாருக்குச் சிறிது கூடப் பிடிக்கவில்லை. எனக்கு இருப்ப தெல்லாம் ஒரே மகன். அவனுக்கு நல்ல இடத்துப் பெண்ணாகச் சீர் வகையராக்களுடன் வரவேண்டும் என்று வாதாடினாள். அந்தப் பெண்ணைச் செய்து கொள்வதாகச் சம்பந்தியிடம் வாக்குக் கொடுத்து விட்டேன். இனி அதை மாற்ற முடியாது என்றார் என் தந்தை. இருவருக்கும் அடிக்கடி சொற் போர்கள் நிகழ்ந்தன. இதற்கு நான் நிமித்தமாயிருப்பது குறித்து வருந்தினேன். ஆனாலும் நான் என்ன செய்யக்கூடும்? எனக்கு விவாகமே வேண்டா மென்று சொல்லமுடியுமா? அல்லது இந்தப் பெண்ணைத்தான் விவாகம் செய்துகொள்ளப் போகிறே னென்று சொல்ல முடியுமா? ஏதும் சொல்லக்கூடிய துணிச்சல் எனக்கு ஏற்படவில்லை. எனது உறவினர் சிலர், அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டுமென்று விரும்பி, எங்கள் வீட்டுக்கு அழைத்துவரச் செய்தார்கள். அந்தப் பெண்ணும், பயந்த ஆட்டுக் குட்டிபோல் வந்து நின்றது. உறவினர் அதைச் சுற்றிவளைத்துக் கொண்டு, அதன் நிறம், உயரம், பருமன், கண், மூக்கு இப்படி ஒவ்வொன்றாக வருணித்துப் பேசினார்கள். விவரமறியாத அந்தப் பெண்ணும் இவைகளைச் சகித்துக் கொண்டிருந்தது. வேறு பேச்சு பேசமுடியுமா அந்தக் காலத்தில்? பையனுக்கேற்ற பெண் இல்லை யானாலும், பரவா யில்லை என்று தீர்ப்பளித்தார்கள், வந்து பார்த்த உறவினர்கள். என் தாயாரோ, இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தாள். என் தகப்பனாரோ, பெண் பரவாயில்லை யென்று சொன்ன தீர்ப்பைத் தமக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் முகூர்த்தம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. சென்னையிலேயே (முத்தியாலுப் பேட்டையில்) நடைபெறுவதாக ஏற்பாடு. முகூர்த்தத்திற்குச் சில நாட்களுக்கு முந்தி, நிச்சயிக்கப் பட்டதை நான்குபேர் அறிய ஊர்ஜிதப் படுத்திக் கொள்கின்ற முறையில், பெண் வீட்டார், பிள்ளை வீட்டுக்குவந்து முகூர்த்தப் பத்திரிகையுடன் தாம்பூலம் வழங்குவர். இதற்கு லக்ன பத்திரிகை வைத்தல் என்று பெயர். இஃதொரு சிறு சடங்காக நடைபெறும். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்த வழக்கம் இது. இப்பொழுதோ முகூர்த்தத்திற்கு முந்தின நாள்தான் இது நடைபெறுகிறது. குறிப்பிட்ட ஒரு நாளில் பெண் வீட்டார் லக்ன பத்திரிகை வைக்க வந்தார்கள். அவர்களுக்கு விருந்து முதலியனவும் நடை பெற்றன. பெண்ணின் பாட்டனார் ஒருவர், சடங்குக்கு வேண்டிய பழம், புஷ்பம், வெற்றிலை முதலியவைகளை வாங்கிக் கொண்டுவர கொத்தவால் சாவடிக்குச் சென்றிருந்தார். அவர் சென்னைக்குப் புதியவர். கொத்தவால் சாவடிக்குச் சென்றவர், அந்த இடத்திலேயே சுற்றிச் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்; வீட்டுக்குத் திரும்பிவர வழி தெரியவில்லை. நேரமாகி விட்டது. வந்திருந்தவர்கள் துடித்தார்கள். கடைசியில் எப்படியோ லக்ன பத்திரிகை ஒருவாறு படித்துக் கொடுக்கப்பட்டது. புஷ்பமும் வெற்றிலையும் வாங்கப்போகும் பொழுதே, தடையும் தாமதமும் ஏற்பட்டது, என் தாயாரின் மனவருத்தத்தை அதிகப்படுத்தியது. இதைப் பெரிய அபசகுனமாகக் கருதினாள். இந்தக் கல்யாணம் நின்று போகாதா என்று பிரார்த்திக்க ஆரம்பித்தாள். என் தந்தையோ, கொடுத்த வாக்கு தவறக்கூடாதே; கல்யாணம் நன்றாக நடக்க வேண்டுமே என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். 1914ஆம் வருஷம் ஜூலை மாதம் பத்தாந்தேதி முகூர்த்தம். முந்தின நாள் மாப்பிள்ளையை அழைப்பது என்ற ஒரு சடங்கு உண்டல்லவா? இதை முன்னிட்டு நான் என்னைத் தயார்ப் படுத்திக் கொண்டிருக்கையில், என் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டுவிட்டது. என் தாயார் இதைப் பார்த்து அழ ஆரம்பித்து விட்டாள். இதைக் காட்டிலும் வேறு அபசகுனம் என்ன வேண்டும் என்றாள். கல்யாணத்தின் போது தான் எங்காவது வேறு இடத்திற்குச் சென்று விடுவதாகக் கூறினாள். எனக்கு ஒன்றுந் தோன்றவில்லை. இதற்குள், வந்திருந்த உறவினர் சிலர், பெண் வீட்டுக்குச் சென்று அங்குச் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளைக் கவனித்து வந்து, அவர்கள்-பெண் வீட்டார் - சொன்னபடி ஏதும் செய்யமாட்டார்கள் போலிருக்கிறது; நமக்குச் சரியான சம்பந்தமில்லை யென்று என் தாயாரிடம் சொல்லிவிட்டார்கள். கேட்கவேண்டுமா என் தாயாரின் ஆத்திரத்திற்கு? இப்படியிருக்கையில், பெண் வீட்டார், மாப்பிள்ளையை அழைத்துவர ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். ஆனால் ஊர்வலத்திற்கு லைசென் வாங்கவில்லை. வாங்க வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியாது. எனவே ஊர்வலம் நடைபெற முடியாமல் தடைப்பட்டு விட்டது. இப்படி ஒன்றன் பின்னொன்றாகப் பல தடைகள் ஏற்பட்டு வருவதைக்கண்ட என் உறவினர் சிலர், கல்யாணத்தை நிறுத்து விடுகின்ற முயற்சியில் என் தாயாரோடு சேர்ந்து கொண்டார்கள். விதரித்துக் கொண்டு போவானேன்? கல்யாணம் நின்றுவிட்டது. ஆனால் அந்தப் பெண்ணுக்கு வேறோர் இடம் நிச்சயிக்கப்பட்டு அதே முகூர்த்தத்தில் விவாகம் நடைபெற்று விட்டது. தம்பதிகள் சகல சம்பத்துக்களுடன் சௌக்கியமா யிருக்கிறார்களென்று அறிந்து மகிழ்கிறேன். அவர்கள் நீடூழி வாழ்க! விவாகத்திற்கு வந்திருந்த உறவினர் பலரும் அவரவர் இடத்திற்குத் திரும்பிச்செல்ல ஆயத்தமானார்கள். இரண்டு நாள் கழிந்தது. ஆனி மாதம் முடிய இன்னும் ஒரு நாள் பாக்கி. இஃது இப்படி இருக்கட்டும். காஞ்சிபுரத்தில் பாடியார் வீட்டுக் கடைசி பெண்ணுக்குப் பல இடங்களில் வரன் தேடிக் கொண்டிருந்தார்கள். எந்த வரனும் சரிப்பட்டு வரவில்லை. பெண்ணைப் பார்க்க வந்த இளைஞர்களிற் சிலர் பட்டதாரிகள்; சிலர், பட்டம் பெறத் தகுதிப்படுத்திக் கொண்டிருந்தவர்கள். சுருக்கமாக, படித்தவர்கள். இவர்கள், பெண் படித்தவளாயிற்றே; அடங்கின சரக்காயிருக்குமா வென்று ஐயப்பட்டார்கள். ஐயப்பட்டார்களென்ன, அஞ்சவும் செய்தார்கள். படித்த ஆண் பிள்ளைகள்! விசால நோக்குடையவர்களென்று மார்தட்டிப் பேசுகிறவர்கள்!! படித்த பெண்களாயிருந்தால், தங்களுக்கு அடங்கி நடக்க மாட்டார்களென்று பயப்படுகிறவர்கள்!!! வெட்கக் கேடாக இல்லையா? இதற்கு மேல் இங்கு நான் ஏதும் பேச விரும்பவில்லை. ஆனி மாதம் முடியப் போகிறது. வரன் ஏதும் நிச்சயப்பட வில்லையே என்று பாடியார் வீட்டில் கவலைப் பட்டுக்கொண் டிருந்தார்கள். இந்த நிலையில் எனது அம்மான் ஒருவர், ஒரு விவாகத்தை முன்னிட்டுக் காஞ்சிபுரம் சென்றிருந்தார். அவர் மூலம், எனது விவாகம் நின்று விட்டதென்று தெரிந்து கொண்டு, பெண்ணின் மூத்த சகோதரர், வேறோர் உறவினருடன் சென்னைக்கு ஓடோடியும் வந்தார். எனது பெற்றோர்களுடன் இரண்டொரு வார்த்தைகள் பேசினர். அவ்வளவு தான். எனக்கும் பாடியார் வீட்டுப் பெண்ணுக்கும் விவாகம் நிச்சயமாகி விட்டது. எங்களிருவருடைய ஜாதகங்களும் பொருந்தி யிருக்கின்றனவா என்பதைப்பற்றி யாரும் சிந்திக்கவில்லை; சிந்திக்க அவகாசமுமில்லை; அதைப்பற்றிப் பேச்சே எழவில்லை. முந்தின விவாகத்தை முன்னிட்டு வந்து ஏமாற்றமடைந்து ஊர் திரும்பத் தயாராயிருந்த உறவினர்கள், காஞ்சிபுரத்திற்குப் புறப்படத் தயாரானார்கள். இங்ஙனம் இரண்டொரு வார்த்தைகளில் விவாகம் நிச்சயிக்கப்பட்டதென்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா? இதற்கு மூல காரணம் என்ன வென்று நினைக்கிறீர்கள்? பிராப்தம் அல்லது தெய்வ சங்கல்பம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஏற்கனவே முந்திய ஒரு கடிதத்தில் தெரிவித்திருக்கிறபடி, எனது குடும்பத்தினரும் மங்களத்தின் குடும்பத்தினரும் நீண்ட கால பரிச்சயமுடையவர்கள். ஒருவரையொருவர் நன்கு தெரிந்து கொண் டிருந்தார்கள். பெண், நல்ல குலத்தைச் சேர்ந்தவள்; அதனால் குண வதியாயிருப்பாள் என்ற ஒரே காரணத்திற்காக என் பெற்றோர்கள், உடனே சம்மதம் தெரிவித்தார்கள். அப்படியே பெண் வீட்டாரும், எனது பரம்பரையை அறிந்தவர் களாகையால், நான் நல்ல பிள்ளை யாக இருக்கக்கூடுமென்ற நம்பிக்கையின் பேரில் எனக்குப் பெண்ணைக் கொடுக்க முன் வந்தார்கள். சுமார் நாற்பது வருஷங்களுக்கு முந்தி வரை, விவாகப் பேச்சுக் களில் நிலையற்ற பணமோ, அழகோ முக்கியத்துவம் பெறவில்லை; நிலையாயிருக்கக் கூடிய குடிப் பெருமையும் குணச் சிறப்புமே முக்கியத்துவம் பெற்றன. இந்த அடிப்படையில் விவாகம் செய்விக்கப் பட்டவர்கள், ஈருடலும் ஓருயிருமாக நீண்ட காலம் வாழ்ந்திருந்தார்கள். இப்பொழுதோ? தவிர, சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முந்தி, விவாகம் செய்து கொள்ளப்போகிற பிள்ளையாகட்டும், பெண்ணாகட்டும், தங்கள் விவாக விஷயத்தில் அதிகமாகத் தலையிடமாட்டார்கள்; பெற்றோர் களோ, குடும்பத்துப் பெரியவர்களோ செய்யும் முடிவுக்குக் கட்டுப் படுவார்கள். ஏனென்றால், பெரியவர்கள், தங்களுக்கு நன்மையைத் தவிர வேறொன்றையும் செய்யமாட்டார்களென்பது சிறுவர்களின் திட நம்பிக்கையாயிருந்தது. பெரியவர்களுடைய அனுபவத்திற்கு இவர்கள் அதிக மதிப்புக் கொடுத்தார்கள். அப்படியே பெரிய வர்கள், சிறுவர் களுடைய நல் வாழ்வைக் கோரியே எந்த ஒரு முடிவையும் செய்தார்கள். இந்த அடிப்படையின் மீது பெரும் பாலான விவாகங்கள் நடைபெற்றன. குடும்பங்களில் வேற்றுமை உணர்ச்சி தலை காட்டாமலிருந்தது. நிற்க. விவாகம் நிச்சயமானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு மேல். சிறிது நேரத்திற்கெல்லாம் ராகுகாலம் வந்து விடுகிற தென்று சொல்லி, என்னையும் என் சகோதரியையும் முதலில் பீச் டேஷனுக்கு அனுப்பி விட்டார்கள் என் பெற்றோர்கள். மாலை ஆறு மணிக்குக் காஞ்சிபுரம் வண்டி புறப்பாடு. விவாகம் நிச்சயம் செய்யச் சென்னை வந்த பெண் வீட்டார், விவாகம் நிச்சயமாகி விட்டதென்றும், இரவு வண்டிக்குப் பிள்ளை வீட்டார் வந்து சேருகிறார்களென்றும், எல்லாவற்றையும் தயார்ப் படுத்தி வைக்குமாறும் காஞ்சிபுரத்திற்கு எக்பிர தந்தி கொடுத் திருந்தார்கள். பிள்ளை வீட்டாராகிய நாங்கள் இரவு பத்தரை மணிக்குக் காஞ்சிபுரம் போய்ச் சேர்ந்தோம். மிகச் சிறந்த முறையில் எங்களுக்கு வரவேற்பு நடைபெற்றது. வாரக்கணக்கில் முன்னேற்பாடுகள் செய் திருந்தால் கூட இவ்வளவு விமரிசையாக இராதென்று சொல்லும் படியாக எங்களுக்கு இட வசதி, சாப்பாட்டு வசதி எல்லாம் செய்யப் பட்டிருந்தன. வெங்கு பாயின் நிருவாகத் திறமையை எத்தனை வாயாலும் புகழ்ந்து பேசலாம். மறுநாள் திங்கட்கிழமை விவாகம். அதாவது 1914ஆம் வருஷம் ஜூலை மாதம் பதின்மூன்றாந்தேதி. அதற்கு முந்தின நாள் இரவு பதினோரு மணி வரை சாமிநாதனும் மங்களமும் தம்பதி களாகப் போகிறார்களென்று காஞ்சிபுரத்தில் யாருக்கும் தெரியாது. ஏன்? மங்களத்தின் உறவினர் சிலருக்கே தெரியாது. அவர்கள், அவசர அழைப்புப் பெற்று விவாகத்தின் இரண்டாவது, மூன்றாவது நாள்தான் வந்து சேர்ந்தார்கள். மங்களத்தோடு படித்த பள்ளித் தோழியர் பலரும், தங்களுக்கு முன்னறிக்கை கொடாமலே விவாகம் செய்து கொண்டாளென்று சொல்லி இவளைக் கேலி செய்து கொண்டே வாழ்த்தினார்கள். ராமநாத சர்மாவும் பர்வதம்மாளும், பிற ஆசிரியர்களும் விவாகத் திற்கு வந்து ஆசீர்வதித்தார்கள்; கூடவே தங்கள் பள்ளிக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்து வந்த மங்களம், இனி பள்ளிக்கு வந்து போகும் மாணாக்கியாக இருக்க மாட்டாளோ என்று சந்தேகமும் கொண்டார்கள். ஆனால் மங்களம், விவாகமாகிச் சுமார் ஒரு வருஷம் வரை பள்ளிக்கூடம் சென்று, தனித்த முறையில் ஏழாவது வகுப்புக்கு மேற்பட்ட பாடங்களைச் சிரத்தையுடன் படித்து வந்தாள். புக்ககம் புகுவதற்குச் சில மாதங்களுக்கு முந்தித்தான் இவளுடைய பள்ளிப்படிப்பு நின்றது. பள்ளிக்குச் சென்று படிப்பது நின்றதே தவிர படிப்பு நிற்கவில்லை. அதன் ருசி தெரிந்தவர்களுக்கு அதை நிறுத்தவும் முடியாதல்லவா? சிறு வயதில் நானும் மங்களமும் சந்தித்திருக்கிறோமென் றாலும், பிற்காலத்தில் இங்ஙனம் விவாகத்தினால் பிணைக்கப் படுவோமென்று அப்பொழுது எங்களுக்குத் தெரியாதல்லவா? எனவே மணப் பந்தலில் அவள் வந்து நின்றபோது எனக்குப் புதியவளாகவே தோன்றினாள். அவளுக்கு நான் புதியவனாகவே நின்றேன். ஆனால் ஒருவரை யொருவர் நிமிர்ந்து பார்த்துக் கொள்ள முடியுமா? அதுவும் அத்தனை பேர் முன்னிலையில்? பேசுவதா? கற்பனைக்குக் கூட எட்டாத விஷயம். மணப்பந்தலில் மங்களம் குனிந்த தலையுடன் உட்கார்ந் திருந்தாள். அவள் கழுத்தில் தாலி பூட்ட வேண்டிய வேளை வந்தது. அதற்காக நான் உடல் குனிந்தேன். அப்பொழுது பக்கத்திலிருந்த புரோகிதர், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளுமாறு எங்களுக்குக் கூறினார். அப்படியே மங்களம் தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்; நானும் அவளைப் பார்த்தேன். ஒரே சமயத்தில் கண்களின் சந்திப்பு; முகங்களில் புன்சிரிப்பு. இந்தப் புன்சிரிப்பு ஏன் ஏற்பட்டது? இளமையின் குறும்போ, காதலின் வித்தோ, இரண்டு ஆன்மாக்களை இணைத்து வைத்த பாலமோ, யாரறிவார்? ã‰fhy¤âš eh§fŸ VjhtJ nto¡ifahf¥ ngá¡bfh©oU¡»w rka§fËš ‘Ú V‹ m‹W áǤjhŒ? என்று மங்களத்தைக் கேட்பேன். உடனே அவள் நீங்கள் ஏன் சிரித்தீர்கள் என்று என்னைத் திருப்பிக் கேட்டுவிட்டு, பேச்சுக்கு முற்றுப் புள்ளியிட்டு விடுவாள். இந்தப் புன்சிரிப்பு அவளை விட்டு அகன்றதேயில்லை. அந்தக் காலத்து முறைப்படி ஐந்துநாள் விவாகம் நடை பெற்றது. ஒவ்வொரு நாளும் மாலையில் நலுங்கு நடைபெறும். அதற்கு அழைக்கின்ற முறையில் பிள்ளையையும் பெண்ணையும் பேசச் செய்து வேடிக்கை பார்ப்பார்கள். எனக்குப் பேசவேண்டு மென்று ஆசைதான். ஆனால் என்ன பேசுவதென்பதுதான் தெரியாது. நான் நிமிர்ந்த வண்ணம் சிரித்துக் கொண்டிருப்பேன். அவள் தலை குனிந்த வண்ணம் சிரித்துக் கொண்டிருப்பாள். விவாகத்தின் கடைசி நாள் வந்தது. மறுநாள் நாங்கள் ஊருக்குப் புறப்படவேண்டும். மங்களத்தைக்கூட அழைத்துக் கொண்டு போக முடியாதென்று பெரியோர்கள் தீர்மானித்து விட்டார்கள். எனவே அவளை விட்டு எப்படிப் பிரிவது என்ற எண்ணம் என் உள்ளத்தே எழுந்து எழுந்து அடங்கியது. ஆனால் இதை வெளிக்குக் காட்டிக் கொள்ள முடியுமா? பரிகாச அம்பு களன்றோ மேல் வந்து விழும்? கடைசியில் ஒருவாறு மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டு ஊர் திரும்பினேன். விவாகமான பிறகு, எட்டாவது நாள் பண்டிகை யென்றும், பதினாறாவது நாள் பண்டிகை யென்றும், தலை நோன்பென்றும், தலை தீபாவளி யென்றும் இப்படி வரிசைக் கிரமமாக வரும் பண்டிகைகள், தம்பதிகளைச் சந்திக்க வைக்கும் சந்தர்ப்பங்களா யமைந்தன. இந்தச் சந்தர்ப்பங்கள், தம்பதிகளின் காதலை வளர்த்துக் கொடுத்தன. இதற்காகவே பெரியோர்கள் இந்த வருஷாந்தப் பண்டிகைகளை ஏற்பாடு செய்து வைத்தார்கள். இப்படிப் படிப் படியாக வளர்ந்து பக்குவமடைந்த காதல்தான் தெய்வமணம் கமழ்ந்து தம்பதிகளின் வாழ்க்கையில் ஊடுருவி நின்றது. பதினாறாவது நாள் பண்டிகைக்கு நான் காஞ்சிபுரம் சென்றிருந்தேன். அப்பொழுது எங்களிரண்டு பேரையும் போட்டோ பிடிக்க வேண்டுமென்று, ராமநாத சர்மாவும் பர்வதம்மாளும் விரும்பினர். சோமசுந்தர பாட சாலையிலேயே போட்டோ எடுப்ப தென்று ஏற்பாடாகியிருந்தது. தான் படித்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பலர் முன்னிலையில், புருஷன் பக்கத்தில் நின்று எப்படி போட்டோ எடுத்துக் கொள்வது? பரிகாசத்திற்கு இடமான செயலன்றோ? மங்களத்திற்கு ஒரே வெட்கம். வெட்கம், கோபமாக உருக்கொண்டது. யார் மீது? என் மீதல்ல; போட்டோ எடுக்க ஏற்பாடு செய்தவர்கள் மீது. ஆயினும் என்ன செய்வது? வாத்தியாரம்மாவின் கட்டளைக்கிணங்க பள்ளிக் கூடம் வந்தாள். நான் நாற்காலியில் உட்கார்ந்திருக்க அவள் என் பக்கத்தில் நிற்க போட்டோவும் எடுக்கப்பட்டது. போட்டோ பிரதியில் அவள் முகத்தைப்பார்க்க வேண்டுமே! எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்தக் கணத்திற்குத்தான் அப்படி. எப்பொழுதுமே அப்படியிருக்க முடியுமா? பண்டிகை முடிந்ததும் நான் ஊர் திரும்பி விட்டேன். என்னைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் மங்களத்தின் உள்ளத்தில் முளைவிடத் தொடங்கியது. நேரில் சந்திக்க முடியாதல்லவா? பெட்டியில் வைக்கப் பட்டிருந்த என் போட்டோவை அடிக்கடி எடுத்துப் பார்ப்பாள். பார்ப்பதும் எப்படி? வீட்டிலுள்ள யாரும் தன்னைக் கவனியாமலிருக்கிற பொழுது. காதலுக்குக் களவும் தெரியுமென்பது மிகவும் உண்மை. இங்ஙனம் போட்டோவை எடுத்துப் பார்ப்பதுண்டென்று அவளே பின்னர் என்னிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறாள். நானும் ‘அந்தப் போட்டோவில் உன் முகத்தில் தான் எத்தகைய புன்சிரிப்பு? என்று சொல்லிப் பரிகசித் திருக்கிறேன். விவாகங்கள் தெய்வ லோகத்தில் நிச்சயிக்கப்படுகின்றன வென்று சொல்லுவார்கள். உண்மையில் எங்கள் விவாகம் தெய்வ சங்கற்பத்தினால்தான் நடைபெற்றது. ஏதோ ஒரு சக்தி எங்களிரு வரையும் பிணைத்து வைத்தது. அப்பொழுதே, அந்தக் கணத்தி லிருந்தே, அதாவது 1914 ஆம் வருஷம் ஜூலை மாதம் பதின்மூன்றாந் தேதி திங்கட்கிழமை பகல் நாங்கள் மணப்பந்தலில் கை கோத்து நின்ற அந்தக் கணத்திலிருந்தே ஒருவர் உள்ளத்தில் ஒருவர் குடி புகுந்து கொண்டோம். விவாக தினத்திலிருந்தே என் சகோதரிக்கும் என் மனைவிக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டுவிட்டது. ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொண்டார்கள். தனக்கு நல்ல மதனி வாய்த்ததைக் கண்டு என் சகோதரியும், அப்படியே தனக்கு நல்ல நாத்தி வாய்த் ததைக் கண்டு என் மனைவியும் முறையே பெருமைப்பட்டார்கள். என் மனைவி நடப்பது, பேசுவது, ஒரு பொருளைத் தொடுவது, இப்படி ஒவ்வொன்றும் அழகாயிருக்கிற தென்று என் சகோதரி அடிக்கடி சொல்லுவாள்; இவள் செய்கிற ஒவ்வொரு காரியத்தை யும் மெச்சுவாள். நானும் என் சகோதரியும் அடிக்கடி ஒருவரையொருவர் பரிகாசம் செய்து கொள்வோம். எனக்கு விவாகமான பிறகு, என் மனைவியின் நிதானம், நுண்ணிய அறிவு இவைகளை முன்னிலைப் படுத்தி, என் சகோதரி, இவையிரண்டும் உனக்கு இல்லை யென்று கேலி செய்வாள். நீ அதிருஷ்டசாலி; உனக்கு நல்ல பெண்டாட்டி வாய்த்தாள் என்பாள். என் மனைவியும்,தனது நாத்தியினுடைய புன்சிரிப்பிலும் இன் சொல்லிலும் ஈடுபட்டவளாய் அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் பொன் மொழியாகப் போற்றினாள். இருவரும் இவ்வளவு அந்நியோந்நியமாய் இருந்தது எனக்கு எவ்வளவோ பெருமையாயிருந்தது. ஆனால் விவாகமான பத்து மாதங்களுக்குள் - 1915ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் - என் மனைவி நாத்தியற்றவளானாள். இதை, என் துரதிருஷ்ட மென்று சொல்வதா? என் மனைவியின் துரதிருஷ்டமென்று சொல்வதா? இந்தக் கேள்விக்கு இன்னும் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அன்புள்ள 5. குடித்தனப் பாங்கு தி. நகர், சென்னை 25-03-1956 எனதன்புள்ள ஸ்ரீ சொ. அவர்களுக்கு நமகாரம். நலம் பல விளைக. 1914ஆம் வருஷம் ஜூலை மாதம் மங்களம் என்ற பெண் என் உள்ளத்தில் குடி புகுந்தாளெனினும், 1916ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் என் மனைவியாகப் புக்ககம் புகுந்தாள். புகுந்து சில நாட்களானதும், சம்பிரதாயப்படி பிறந்தகம் திரும்பச் சென்று, சிறிது காலம் அங்கேயே இருந்து விட்டு, நவம்பர் மாதம் புக்ககத்தில் நிரந்தரமாக வசிக்க வேண்டிய ஏற்பாடுகளுடன் வந்து சேர்ந்தாள். நான் அப்பொழுது என் பெற்றோர் களுடன் மயிலாப்பூர் நல்லப்பன் தெருவிலுள்ள ஒரு வீட்டில் குடியிருந்தேன். அந்த வீட்டில், சமையலறையைத் தவிர மற்றொரு பெரிய அறையில் எங்கள் குடும்பத்துச் சாமான்கள் பலவும் இருந்தன. இந்தப் பெரிய அறைதான் எங்களுடைய புழக்கத்திற்கு அதிகமாக உபயோகப்பட்டு வந்தது. வந்த அன்றே என் மனைவி இந்தப் பெரிய அறையை அழகுற மாற்றி யமைத்து விட்டாள். பரவலாகக் கிடந்த சாமான்களை யெல்லாம் ஒரு வழிப்படுத்தி, எந்தச் சாமானை எந்த இடத்தில் வைத்தால் அழகா யிருக்குமோ, எளிதில் உபயோகப்படக்கூடியதாய் இருக்குமோ அந்த இடத்தில் அந்தச் சாமானை வைத்தாள். அந்த அறையில் நான் உபயோகித்து வந்த மேஜை யொன்று இருந்தது. அஃது இவள் கைப்பட்டு எவ்வளவு சுத்தமாகி விட்டது? மாலை நான் என் அலுவலகத்திலிருந்து வந்து பார்க்கிறேன், புத்தம் புதிதாக அமைக்கப்பட்ட ஓர் அறைக்கு வந்திருக்கிறோமா என்ற எண்ணமே எனக்கு உண்டாயிற்று. எதற்காக இதைக் குறிப்பிட்டுச் சொல்கிறேனென்றால், நாம் வசிக்கும் இடம் சிறிதாயிருந்த போதிலும், நாம் கையாளும் பொருள்கள் குறைவாயிருந்த போதிலும், சிறிது முன்யோசனை யுடனும் நிதானத்துடனும் காரியங்களைச் செய்வோமானால், இடமும் விசால மடைந்து சுத்தமாக இருக்கும்; பொருள்களும் தேவைப்படுகிறபோது உபயோகத்திற்கு வரும். இதற்குக் குடும்பத் தின் பொறுப்பை உணர்தல் அவசியம். ஏனோ தானோ என்று அலட்சியமாக இருந்து விடுவோமானால், பொருள்கள் நஷ்டமாவ தோடு, இருக்கும் இடமும் அசுத்தப்பட்டு நமக்கு வியாதி முதலிய தொந்தரவுகள் உண்டாகும். வந்த அன்றே என் மனைவி, இருப்பிடத்தை இவ்வளவு அழகுற அமைத்து விட்டது என் பெற்றோர்களுக்கு மிகச் சந்தோஷம். என் நாட்டுப் பெண் எப்படித்தான் அறையை மாற்றி விட்டாள் என்று சொல்லி என் தாயார், அக்கம் பக்கத்திலுள்ள சில பெண்டுகளை அழைத்துக் கொண்டு வந்து காட்டியதும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் என் மனைவி நமகாரம் செய்து தாம்பூலம் கொடுத்ததும் இன்னும் என் பார்வையிலிருந்து அகலவில்லை. மறுநாள் காலை, என்தாயார், என் மனைவிக்குப் பல் தேய்க்கப் பற்பொடியும், ஒரு செம்பில் ஜலமும் கொண்டு கொடுத்தாள். வந்தது வினை. குடியிருந்தவர்கள் குசுகுசு வென்று பேசத் தொடங்கினார்கள். கபடமே தெரியாத என் தாயார் என்னவென்று கேட்டாள். நாட்டுப் பெண்ணுக்குப் பல் தேய்க்கப் பொடியும் ஜலமும் கொண்டு வந்து கொடுத்தீர்கள்; இனி சாய்வு நாற்காலி போட்டு அதில் உட்காரச் செய்து குடிப்பதற்குக் காபியும் படிப்பதற்குப் பத்திரிகையும் கொடுக்க வேண்டியது தான் பாக்கி என்று ஏளனமாகப் பேசினார்கள். என் தாயாருக்கு இது பிடிக்க வில்லை. இடம் புதிதாயிற்றே என்று செய்தால் இப்படிப் பரிகாசமா என்று மன வருத்தப் பட்டாள். இந்த வருத்தத்தை முகத்திலும் கொண்டுவந்து காட்டிவிட்டாள். பரிகாசம் செய்தவர்கள், என் தாயாருக்கு அநுதாபங் காட்டுகின்ற முறையில் படித்த நாட்டுப் பெண்ணாயிற்றே; இனி நீங்கள் தான் அவளுக்கு எல்லாம் செய்து தரவேண்டும். பேப்பர் படிப்பதற்கும் புருஷனோடு பேசுவதற்கும் தான் அவளுக்குப் பொழுது சரியாயிருக்கும். பாவம், உங்களுக்கு நிரம்ப கஷ்டம் என்று பேசினார்கள். என் தாயார் இதற்கு என்ன பதில் சொல்லுவாள்? போகப் போகத் தெரிந்து கொள்கிறார் களென்று சும்மாயிருந்து விட்டாள். படித்த பெண்ணென்றால் எவ்வளவு பரிகாசம் பார்த்தீர்களா? ஆனால் படித்த ஆண் பிள்ளைகளே, படித்த பெண்ணென்று பயந்து ஓடினார் களென்றால், படிப்பறியாத பெண்கள் பரிகாசம் செய்ததில் ஆச்சரிய மென்ன இருக்கிறது? பேப்பர் படிப்பதும் புருஷனோடு பேசுவதும் எவ்வளவு கேவலமான செயல்களாகக் கருதப்பட்டன முந்தி? இப்பொழுது? காலம் வேகமாக மாறி விட்டது. புதிதாகப் புக்ககம் போந்திருக்கிற நாட்டுப் பெண்ணுக்கு அவள் மாமியார்-என் தாயார்-எங்கள் குடும்பத்துப் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள் முதலியவற்றை லேசு லேசாகச் சொல்லிக் கொடுத்து வந்தாள். பிறந்தகத்தில் குடும்பக் காரியங்களில் ஈடுபட வேண்டிய அவசியமே இல்லாமல் வளர்ந்து வந்த என் மனைவி, வெகு சீக்கிரத்தில் குடும்பக்கலையில் நல்ல தேர்ச்சி பெற்று விட்டாள். இதைக்கண்டு என் தாயார் மிகவும் பெருமை யடைந்தாள். படித்த பெண்ணென்று பரிகாசஞ் செய்தவர்களோ, சிறிது காலமானதும், படித்த பெண் எப்படிப்பட்டவளென்பதைத் தெரிந்து கொண்டார்கள்; தங்கள் செயலுக்குப் பெரிதும் இரங்கி னார்கள்; தங்களைக் காட்டிலும் இந்தப் படித்த பெண், வீட்டுக் காரியங்களைச் செம்மையாகவும் துப்புரவாகவும் செய்வதைக் கண்டு வெட்கமுமடைந்தார்கள்; பூத்தொடுத்தல் முதல் பாட்டுப் படித்தல் வரை, யந்திரத்தில் மாவு அரைப்பது முதல் காலங் காட்டும் யந்திரத்தை-கடிகாரத்தை-பழுது பார்ப்பது வரை எல்லாம் இந்தப் படித்த பெண்ணுக்குத் தெரிந்திருக்கிறதே யென்று மோவாயில் கைவைத்துப் பேசினார்கள்; இவ்வளவு தெரிந் திருந்தும் இந்தப் பெண்ணிடத்தில் துளி கர்வத்தைக் காணோமே, தற்பெருமை என்பது எள்ளளவும் இல்லையே, என்ன அடக்கம், எவ்வளவு நிதானம் என்று ஆச்சரியப் பட்டார்கள். இவளை இப்படிப் போற்றிப் புகழ்ந்ததோ டல்லாமல், அநேக காரியங்களில் இவளைப் பின்பற்றவும் செய்தார்கள். இவள், தன்னை ஏளனக் கண்ணோடு அவர்கள் பார்த்த போது எப்படி மௌனஞ் சாதித்தாளோ அப்படியே தன்னைப் புகழ்ந்த போதும் மௌனஞ் சாதித்தாள். படித்த பெண்ணை நாட்டுப் பெண்ணாகப் படைத்ததற்காக என் தாயாரிடம் முதலில் அநுதாபஞ் செலுத்தி வந்தவர்கள், பின்னர், இத்தகைய நாட்டுப் பெண் கிடைத்ததற்கு எவ்வளவோ புண்ணியம் செய்திருக்க வேண்டுமென்று என் தாயாரைப் பாராட்டினார்கள். எனது தாயார், கள்ளமற்ற உள்ளம் படைத்தவள். இச்சக மாகப் பேசத் தெரியாதவள். எல்லோரையும் ஒரே மாதிரிதான் நடத்துவாள். தனது நாட்டுப் பெண்ணை வயிற்றிலே பிறந்த பெண்ணாகக் கருதினாளே தவிர, அயல் வீட்டுப் பெண்ணாகக் கருதவில்லை. அப்படி வேற்றுமை காட்ட அவளுக்குத் தெரியவும் தெரியாது. உண்மையில் தனது மருமகளை, தன் வீடு தேடி வந்திருக்கும் திருமகளாகவே எண்ணி மகிழ்ந்தாள். அவளுக்கு,தன் நாட்டுப் பெண் எது சொன்னாலும் இனிக்கும்; எந்தக் காரியத்தை எப்படிச் செய்தாலும் பிடிக்கும். தன்னைக் காட்டிலும் வயதிலும் அனுபவத்திலும் சிறியவளான தனது மருமகளின் ஆலோசனையை அடிக்கடி நாடுவாள். இதே பிரகாரம் அந்த நாட்டுப் பெண்ணும், தனது மாமியாரின் ஆலோசனையைக்கேட்டும் அனுமதி பெற்றும் ஒவ்வொரு காரியத்தையும் செய்வாள்; தனக்கு ஒரு காரியம் நன்றாகச் செய்யத்தெரிந்திருந்தும், செய்வதற்கு முந்தி எப்படிச் செய்ய வேண்டுமென்று மாமியாரைக் கேட்டுக்கொண்டுதான் செய்வாள். இந்த வழக்கம், அதாவது பிறரைக் கேட்டுச் செய்கிற வழக்கம் கடைசி வரை இவளை விடவேயில்லை. வயதிலும் அனுபவத்திலும் தனக்குச் சிறியவர்களாயிருப்பவர்களைக்கூட இதை இப்படிச் செய்யலாமா, அதை அப்படிச் செய்யலாமா என்று கேட்பாள். நான் சில சமயங்களில், உனக்குத் தெரிந்திருக்கிற காரியத்தை ஏன் பிறரைக் கேட்டுச் செய்கிறாய்? அவர்கள் உன்னை மட்டமாக வல்லவோ நினைத்துக் கொள்வார்கள் என்று கடிந்து கொள்கிற மாதிரி கேட்பேன். கேட்டுச் செய்வதனால் நமக்கு என்ன குறைவு வந்து விடும்? செய்யத் தெரியாமல் கேட்கிறாளென்று நினைத்துக் கொண்டு நம்மை அலட்சியம் செய்தால் செய்யட்டுமே. அதனால் நாம் குறைந்து போவோமா என்ன? ஒருவருடைய லட்சியத்திலோ அலட்சியத்திலோ நமது வாழ்க்கை கட்டுண்டு கிடக்கவில்லையே? என்று எனக்குச் சாந்தமாகப் பதிலளிப்பாள். என் தாயாரைப் போலவே என் தகப்பனாரும் மருமகளிடத்தில் அன்பு காட்டினார். தமது தினசரி பூஜைக்கு வேண்டிய எல்லா வற்றையும் அவள் முறைதெரிந்து சேகரித்து வைப்பதையும், அவ ளுடைய தெய்வ பக்தியையும் உற்றார் உறவினரிடம் பெருமையாகச் சொல்லிகொள்வார். தினந்தோறும் மாலையில் தமது அனுஷ் டானம் முடிந்ததும், எரிந்து கொண்டிருக்கும் குத்து விளக்குக்கு முன் தமது நாட்டுப்பெண் உட்கார்ந்து பாட வேண்டும். அவருடைய நிரந்தர உத்தரவு இது. அவருடைய கடைசி காலம் வரை இது, நாள் தவறாமல் நடைபெற்றது. வட மொழி சுலோகங்கள் என்ன, தமிழ்ப் பாடல்களென்ன, தெலுங்கு கீர்த்தனை களென்ன, ஒவ்வொன்றிலும் இரண்டு மூன்று வீதம் பாடுவாள். உச்சரிப்பு சுத்தமாக இருக்கும். பாவம் தோன்றப்பாடுவாள். கேட்டுப் பூரிப்படைவார் என் தந்தையார். இடையிடையே தமக்கு விருப்பமான சுலோகத்தையோ பாடலையோ சொல்லச் செய்வார். அவருக்கு நல்ல சங்கீத ஞானம் உண்டு. வட மொழி, தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று பாஷைகளிலும் அநேக கீர்த்தனைகளை இயற்றி யிருக்கிறார். என் தகப்பனார், என்னுடைய தாயார் கைப்பட சமையல் செய்து பரிமாறினால்தான் சுவைத்துச் சாப்பிடுவார். பொதுவாக, கணவன்மார் அனைவருக்கும் அமைந்து விடுகிற சுபாவம் போலும் இது. இருந்தாலும் என் தந்தையார், தமது நாட்டுப் பெண்ணினிடம் வைத்திருந்த அபிமானங் காரணமாக இவள் எப்படிப் பக்குவம் செய்து பரிமாறினாலும் அதில் திருப்தியே காட்டுவார். சமையலில் நான் ஏதும் குறை கூறினால் என்மீது அதிருப்தியைக் காட்டுவார். ஒரு சிறிய உதாரணம். 1916 ஆம் வருஷம் நவம்பர் மாதம் கடைசி வாரம் என் மனைவி புக்ககம் வந்து சில நாட்களேயாயின. ஒரு நாள், என் மனைவிக்கு, சமையல் செய்து பரிமாறும் பொறுப்பு ஏற்பட்டது. சமையல் செய் வதில் இவளுக்கு அப்பொழுது அதிக அனுபவம் உண்டாகவில்லை. இந்த நிலையில் அதிக பயத்துடன் சமைத்தாள். கத்தரிக்காய் கறி. நானும் என் தந்தையாரும் இலை முன்னர் உட்கார்ந்தோம். பரிமாறினாள். கத்தரிக்காய் கறியைச் சுவைத்தேன். அதில் கொஞ்சம் உப்பு அதிகமா யிருந்தது. அவ்வளவுதான். கோபம் வந்து விட்டது எனக்கு. இளமையின் மிடுக்கல்லவா? ஆங்கிலமும் தமிழும் கலந்து பாஷையில் வார்த்தைகளை உதிர்த்துக் கொட்டினேன். பதிலாக ஒரு வார்த்தைகூட என் மனைவி சொல்லவில்லை. மறைவில் கண்ணீர் உகுத்தாளோ என்னவோ எனக்குத் தெரியாது. சிறு பெண்தானே? என் தகப்பனார் என் செயலைக் கண்டு மிகவும் வருந்தினார். ஆனால் நேரிடையாக என்னைக் கண்டிக்கவில்லை; அப்படிக் கண்டிப்பது அவர் வழக்கமுமில்லை. சாயங்காலம் எனது காரியாலயத்திலிருந்து வந்து பார்க்கிறேன்; என்னுடைய தினசரிக் குறிப்புப் புத்தகத்தில் நீண்டதொரு புத்திமதி எழுதி வைத்திருந்தார். தமது நாட்டுப் பெண்ணை நான் கடிந்து கொண்டது மிக மிகத் தவறென்றும், அவள் மகா உத்தமி என்றும், நாட்டுப் பெண்ணாக அவள் வந்த போதிலும், தங்களைப் பொறுத்த மட்டில், அதாவது பெற்றோர் இருவரைப் பொறுத்தமட்டில் அவள் வீட்டில் பிறந்த பெண் ணென்றும், அவளை நான் சரியாக நடத்தினால்தான் தாங்களுக்குச் சரியான புத்திரனாக இருக்க முடியுமென்றும், இப்படிப் பல விதமாகக் கடுமையான பாஷையில் ஆங்கிலத்தில் எழுதி வைத் திருந்தார். அதைப் படித்துப் பார்த்தேன். என் செயலுக்கு வருந்தி னேன். கண்ணீர் உகுத்தேன். அது முதல் நான் என் மனைவியிடம் ஒரு மனிதனாகவே நடந்து கொண்டு வந்திருக்கிறேன். என் தாயார், தன் நாட்டுப் பெண்ணினிடம் வைத்திருந்த அளவு கடந்த பாசத்திற்கு அத்தாட்சியாக எத்தனையோ நிகழ்ச்சி களை நான் சொல்ல முடியும். 1918-19 ஆம் வருஷங்களில் கதர் இயக்கம் ஊக்கத்துடன் பரவி வந்த காலத்தில், நான் முரட்டுக் கதரையே உடுத்துவேன்; என் மனைவியையும் உடுத்தச் செய்தேன். நான் சொல்வதற்கு முந்தியே அவள் கதர்ச் சேலையை விரும்பி உடுத்திக் கொண்டாள். பதினெட்டு முழம் சேலை எவ்வளவு கனமாயிருக்க வேண்டுமென்று நான் சொல்லத் தேவை யில்லை. என் தாயார், இவ்வளவு கனமான சேலையை உடுத்திக் கொள்ளக் கூடிய தேகதிடம் தன் நாட்டுப் பெண்ணுக்கு இல்லை யென்றும், இதில்தான் தேச பக்தியைக் காட்ட வேண்டுமா என்றும் என்னைப் பலவாறாகக் கடிந்து கொண்டாள். என் வற்புறுத்தலுக்கு இணங்கியே தன் நாட்டுப் பெண் இந்த முரட்டுச் சேலைகளை உடுத்திக் கொண்டு கஷ்டப் படுகிறாளென்று கருதினாள். உண்மையில் என் மனைவி, தன்னிச்சையாகவே கதர் உடுத்தி வந்தாள். இவளது ஆடம்பர மற்ற தேச பக்தியை என் தாயார் எப்படி அறிந்து கொள்ள முடியும்? கனத்த சேலைகளைக் கட்டிக் கொள்வதே கஷ்டம். அதைக் காட்டிலும் கஷ்டம் அவைகளைத் துவைப்பது என்று சொல்லி, என் தாயார், தன் நாட்டுப் பெண் சேலைகளைத் துவைத்து உலர்த்துவாள். துவைத்துக் கொண்டிருக்கும் போது இப்படி அநியாயமாகக் கஷ்டப் படுத்துகிறானே ஓர் அசல் வீட்டுப் பெண்ணை. எப்படித்தான் சுமக் கிறாளோ? எனக்கே எடுத்துத் துவைக்கக் கஷ்டமா யிருக்கிறதே என்று சொல்லிக்கொண்டே துவைப்பாள். சில சமயங்களில் கண்ணீரும் வடிப்பாள். அதைப் பார்த்து நான் சிறு நகை செய்வேன். என் சிறு நகையைக்கவனித்து விட்டு இந்தப் பிடிவாதம் உனக்கு வேண்டாம். அவளை என்ன வென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? அவள் ஒரு பெண். சுமை தூக்கும் மாடு அல்ல என்று என் மீது சீற்ற வார்த்தைகளைச் சொரிவாள். இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் என் மனைவி எனக்காக இரங்குவாள்; தன் மாமியாருக்குச் சமாதான வார்த்தைகள் சொல்லிச் சாந்தப்படுத்துவாள். தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளுகின்ற முறையில் கதர்ச் சேலைகளை விடாமல் உடுத்தி வந்தாள். என் மனைவிக்கு மாங்காய், புளியங்காய், விளாங்காய், நாகப்பழம் இப்படிப்பட்டவைகள் மிகவும் பிடிக்கும். நாகப் பழத்தைத் தவிர மற்றவைகளை, காய்ப் பக்குவத்தில் இருக்கும் போது சுவைத்துச் சாப்பிடுவாள். எனக்கோ, இப்படிக் காய்ப் பக்குவத்தில் இருக்கும் போது சாப்பிடுவது பிடிக்காது. வேண்டா மென்று கண்டிப்பேன். என் மனைவியும் மறுத்து விடுவாள். என் தாயாரோ, தன் நாட்டுப் பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதில் பிடிவாதங் காட்டுவாள்; எனக்குத் தெரியாமல் மேற்படி பொருள்களைக் கடையிலிருந்து வாங்கித் தன் நாட்டுப் பெண் ணுக்குக் கொடுத்து மகிழ்வாள். ஆனால் இதை எனக்குத் தெரியாம லிருக்கச் செய்யவும் அவளுக்குத் தெரியாது. வெள்ளை உள்ளம் படைத்த வளல்லவா? என்னிடமே வந்து, உனக்குத் தெரியாமல் வாங்கிக் கொடுத்தேன். அவளுக்கு இஷ்டமான பொருள்களை வாங்கிக் கொடுத்தால்தான் எனக்குத் திருப்தியா யிருக்கிறது என்று சொல்லியும் விடுவாள். 1926-27 ஆம் வருஷங்களில் நான் மைசூரில் இருந்தேன். அப்பொழுது நானும் என் மனைவியும் ஸ்ரீ வேங்கடாசலமய்யா என்ற ஒரு பண்டிதரிடத்தில் கன்னடமும் ஹிந்தியும் படித்து வந்தோம். அவர் தினந்தோறும் மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்து சொல்லிக் கொடுப்பார். அவருக்கு நாங்கள் கொடுத்ததென்னவோ மாதம் நான்கு ரூபாய் தான். ஆனால் அவர் மிகுந்த சிரத்தையுடன் சொல்லிக் கொடுத்தார். அவர் முன்னிலையில் நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து படிப்போம். என் தாயார் சிறிது எட்டினாற்போல் உட்கார்ந்துகொண்டு, நாங்கள் படிப்பதைப் பார்த்து மகிழ்வாள். என் மனைவி, ஆசிரியரைப் பல கேள்விகள் கேட்டு, தன் சந்தேகங் களைத் தீர்த்துக் கொள்வாள். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் என் தாயாருக்கு, தன் மகனைக் காட்டிலும் தன் நாட்டுப் பெண் அதிக புத்திசாலி யென்பது அபிப்பிராயம். ஹிந்தி பரீட்சைக்கு நாங்கள் இருவரும் ஒன்றாகவே சென்றோம். பரீட்சை ஹாலுக்கு என் தாயார் கூடவே வந்தாள். நாங்கள் பரீட்சைக்கு அமர்ந்து எழுதும் இடத்தைப் பார்த்து மகிழ்ந்தாள். தனக்குத் தெரிந்தவர்களிடம், தனது நாட்டுப் பெண் பரீட்சைக்கு எழுதியிருப்பதைப் பற்றிப் பெருமையோடு சொல்லிக் கொண்டுவந்தாள். பரீட்சை முடிவு வெளியாயிற்று. மைசூர் ராஜ்யத்தில் நான் முதலாவதாகத் தேறினேன். என் மனைவி இரண்டாவதாகத் தேறினாள். மொத்தம் 150 மார்க்கு. எனக்கு 121 மார்க்கும் என் மனைவிக்கு 120 மார்க்கும் முறையே கிடைத்தன. இது தெரிந்ததும், என் தாயார் நீ ஏன் முதலாவதாக தேறினாய்? மங்களமல்லவோ முதலாவதாகத் தேறியிருக்க வேண்டும்? என்று என்னைக் கேட்டாள்! தனது நாட்டுப் பெண்ணிடத்தில் அவள் வைத்திருந்த பாசந்தான் என்னே!! பொதுவாக எனது பெற்றோர்கள், தங்கள் நாட்டுப் பெண்ணிடத்தில் வைத்திருந்த அபிமானத்தைச் சுருக்கிச் சொல்ல வேண்டுமானால் இவள் பாடுவதுதான் பாட்டு; பேசுவது தான் பேச்சு; செய்வதுதான் காரியம் என்று இப்படிக் கருதி வந்தார்கள். எனது பெற்றோர்கள் வைத்திருந்த அபிமானத்திற்கு அதிக மாகவே எனது மனைவியும், தனது மாமனாரிடத்திலும் மாமியா ரிடத்திலும் பக்தி செலுத்தி வந்தாள். பணிவுடனும் புன்சிரிப்புடனும் அவர்களுக்கு சிச்ருஷை செய்வாள். குறிப்பறிந்து நடப்பதில் எங்கள் நாட்டுப் பெண்ணுக்கு ஈடாக யாரையும் சொல்ல முடியாது என்று அவர்கள் அடிக்கடி சொல்லி மகிழ்வார்கள். எனது குடும்பத்தில் மாமியார்-நாட்டுப் பெண் பிணக்கு ஏற்பட்டது கிடையாது. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருவரிடத்திலும் இருந்தது. சில்லரை விஷயங்களைப்பற்றி அதிகமாகப் பேச மாட்டார்கள். ஓய்ந்த நேரங்களில், என் மனைவி, பெரிய புராணம், ராமாயணம், பாரதம் போன்ற சில நூல்களைப் படிப்பாள்; அல்லது அவற்றில் சில பகுதிகளை எடுத்துச் சொல்லி கருத்தை விளக்குவாள். தனது நாட்டுப் பெண் சொல்லி, தான் கேட்பதிலே என் தாயாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. எனது நாட்டுப் பெண் எவ்வளவு அழகாகப் பேசுகிறாள் பார்த்தீர்களா? என்று, கூட இருக்கிறவர் களிடம் சொல்லிப் பெருமையடைவாள். ஒரு குடும்பத்தில் மாமியார்-நாட்டுப் பெண் பிணக்கு இருந்து விட்டால், அதைக் காட்டிலும் வேறு தலைவேதனை ஒரு புருஷனுக்கு இருக்க முடியாது. அவன் தாயார் பக்கமும் சார முடியாது; மனைவி பக்கமும் சார முடியாது. சில சமயங்களில் அவனுடைய நிலை மிகவும் இரங்கத்தக்கதாயிருக்கும். அந்த மாதிரி சமயங்களில்தான் கூறாமல் சந்நியாசங் கொள் என்ற மனப்பான்மை உண்டாகி விடுகிறது. அதிருஷ்ட வசமாக எனக்கு அந்த மனப்பான்மை உண்டாகவில்லை; உண்டா வதற்கான காரணம் எழவேயில்லை. உண்மையில் என் தாயாரும் என் மனைவியும் ஒத்து வாழ்வது சிலருக்குப் பொறாமையாகக்கூட இருந்தது. நான் மைசூரிலிருந்த போது சிலர், என் தாயாரிடம் வந்து நீங்கள் மாமியாரும் நாட்டுப் பெண்ணும் எப்படி சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்கிறீர்கள்? உங்களால் எப்படி இது முடிகிறது? என்று ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறார்கள். மாமியாரும் நாட்டுப் பெண்ணும் சண்டை யிட்டுக் கொள்ள வேண்டு மென்று எந்த நீதி சாதிரம் சொல்லி யிருக்கிறதோ தெரியவில்லை. இந்த மாதிரியான பேச்சுக்களுக்கு அடிப்படையான காரணம் அறியாமை தான்; குறுகிய மனப் பான்மை தான். இவை யிரண்டும் ஒழிந்தால், எத்தனையோ குடும்பங்கள் இன்ப நிலையங்களாக விளங்கும். உலகத்திலுள்ள மாமியார்களுக்கும் நாட்டுப் பெண்களுக்கும் எனது வேண்டு கோள் என்னவென்றால், சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்; விட்டுக் கொடுங்கள்; சில்லரை விஷயங்களைப் பெரிதாக்கிப் பேசாதீர்கள்; குடும்ப போஷணைக்கு மூல காரணமா யுள்ள புருஷனைச் சங்கடமான நிலையில் சிக்க வைக்காதீர்கள்; மன நிம்மதியுடன் கடமையைச் செய்து கொண்டு போக அவனுக்கு அதிகமான சந்தர்ப்பங்கள் கொடுங்கள்; அவன் நிம்மதியாக வாழ்ந்தால் தான் நீங்கள் நிம்மதியாக வாழ முடியும். அன்புள்ள 6. திண்ணிய நெஞ்சம் தி. நகர், சென்னை 1-4-1956 எனதன்புள்ள ஸ்ரீ சொ. அவர்களுக்கு நமகாரம். நலம் பல விளைக. அந்த மெலிந்த தேகத்திற்குள் எத்தகைய திண்ணிய நெஞ்சம் குடி கொண்டிருந்தது? நினைக்க நினைக்க வியப்பும், ஏன்? திகைப்பும் கூட உண்டாகின்றன. வாழ்க்கையில் நாங்கள் எத்தனையோ மேடு பள்ளங் களைக் கடந்திருக்கிறோம்; எத்தனையோ திருப்பங்களைச் சந்தித்திருக் கிறோம். பஞ்சணையில் படுத்திருக்கிறோம்; பச்சை மண்ணைப் பரப்பி விட்டும் படுத்திருக்கிறோம். பசும்பாலைப் பதம் செய்து பருகிய நாட்களு முண்டு; நல்ல குடி தண்ணீருக்குத் தவித்த நாட்களுமுண்டு. ஒரு சமயங்கூட அவள்-என் மனைவி-மகிழ்ச்சி யினால் பொங்கியது மில்லை; துக்கத்தினால் தலை குனிந்தது மில்லை. கடுமையான சூறாவளிக்கு நடுவே அசையாது நிற்கும் கொடிக்கம்பம் போல் அவள் எப்பொழுதும் ஒரே நிதானத்துடன் இருந்தாள். மனச்சோர்வு என்பது அவள் அறியாத சொற்றொடர். இதனால், உடல் சோர்வுற்ற காலத்திலும் அதை வெகு அலட்சிய மாகச் சமாளித்துக் கொள்ளும் சக்தி அவளுக்கு இருந்தது. உச்சி மீது வானிடிந்து வீழ்ந்த போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை யென்ற பாரதியார் பாடலை அவள் பாடும் போது, தன்னுடைய அனுபவத்தை, தன்னுடைய உணர்ச்சியை வெளிப்படுத்துகிறா ளென்றே நான் கருதுவேன். நான் எப்பொழுதாவது நிலை கலங்கி நின்றால், எனக்கு ஊக்கமளித்து, ஆறுதல் சொல்லி, தெளிந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டுவிடுவாள். அவளுக்காக, நான் கலங்கிப்போய் கண்ணீர் வடிப்பேன். அவளோ, தனக்காகக் கலங்கவே மாட்டாள்; கண்ணீரும் வடிக்கமாட்டாள். கண்ணீர், கடமையை மறைத்து விடுமென்பது அவள் கருத்து. 1924ஆம் வருஷக் கடைசியில் அவளுக்குக் கடுமையான டைபாயிட் ஜுரம். உதடுகள் கருத்து, கண்கள் குழிவிழுந்து, இப்பவோ பின்னையோ என்ற நிலைக்கு வந்து விட்டாள். சிகிச்சை செய்து வந்த ஆயுர்வேத வைத்தியரும், பிழைத்தால் மறு பிறவிதான் என்று சொல்லி விட்டார். எனக்கோ அப்பொழுது எவ்வித வருமானமும் இல்லாத காலம். எப்படி யிருக்கும் எனது மன நிலை? ஆனால் என் மனைவி, தான் பிழைப்பது உறுதியென்றும் தனக் காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை யென்றும் எனக்குத் தைரியம் கூறினாள். அவளுடைய மன உறுதிதான் அவளை அந்த ஆபத்தினின்று காப்பாற்றியதென்று திண்ணமாகக் கூறுவேன். சென்னை தியாகராய நகரில் எனக்கென்று சொந்தமாக ஒரு மனை அமைத்துக் கொண்டு குடி வந்த போது, சுற்று முற்றும் ஒரே வேல மரங்கள்; எங்கும் ஒரே சகதி. மாலை நேரத்திலேயே நரிகள் ஊளையிடத் தொடங்கி விடும். என் வீடு, ஒற்றை மரம் போல் தனித்திருக்கும். தேய் பிறைக் காலங்களில், காரிருள் சூழ்ந்து கொண்டு எப்படிப்பட்டவரையும் பயப்படச் செய்யும். அப்பொழுது நான் நவசக்தி பத்திரிகையில் ஊழியம் செய்து கொண்டிருந்தேன். அநேக நாட்களில் வீட்டுக்குத் திரும்பிவர இரவு பதினோரு மணிக்கு மேலாகிவிடும். என் தாயாரும் எங்கள் கிராமத்திற்குச் சென்றிருப் பாள். இந்த நிலையில் என் மனைவி மட்டும் வீட்டில் தனியே இருப்பாள். நான் காரியாலயத்திலிருந்து திரும்பி வரும் வரை, பாடி வீட்டைக் காவல் செய்யும் வீரனைப்போல், வீட்டு வாசற்படியில் நின்று கொண்டிருப்பாள். நான் வீட்டுக்கு வந்ததும் உனக்குப் பயமாக இல்லையா? என்று கேட்பேன். என்ன பயம்? வானத்தில் விண் மீன்கள் விட்டு விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. அதோ, கிழக்கே மவுண்ட் ரோட் பக்கம் விளக்குகள் எரிந்து கொண் டிருக்கின்றன. ரெயில்கள் போகும் சப்தம் கேட்டுக் கொண்டிருக் கிறது. தோட்டப்பயிர் செய்கிறவர்கள், தங்கள் அலுவல்களை முடித்துக் கொண்டு, களைப்புத்தீர பாடிக்கொண்டும் பேசிக் கொண்டும் இப்பொழுது தான் போனார்கள் என்று இப்படி எனக்குச் சமாதானம் கூறுவாள். தனிமை, அவளுக்கு அச்சத்தை ஊட்டியதே கிடையாது. அதற்கு மாறாக, அவளுடைய சிந்தனா சக்தி அப்பொழுது சிறகெடுத்துப் பறக்கும். எங்கள் சாப்பாட்டை முடித்துக் கொண்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்போம். அப்பொழுதுதான், அவளுடைய சிந்தனைப் பறவை எந்தெந்த திசையில் சென்றது என்பது எனக்கு ஒருவாறு புலனாகும். அப்பொழுது அவள் பேசிய பேச்சுக்களில் எத்தகைய இனிமை தவழ்ந்தது! எவ்வளவு ஆழ்ந்த கருத்துக்கள் பொதிந்திருந்தன! ஐயோ, அவைகளை யெல்லாம் குறிப்பெடுத்து வைக்காமற் போனேனே! 1940 ஆம் வருஷக் கடைசி. ரங்கூனைச் சேர்ந்த பக்டோ என்ற இடத்தில் வாசம். நான் கடுமையான நோய்வாய்ப்பட்டுவிட்டேன். சுமார் இரண்டு மாதங்களுக்கதிகமாகப் படுக்கையிலேயே கிடக்க வேண்டிய தாயிற்று. பிரபல டாக்டர்கள் நால்வர் ஒருங்கு சேர்ந்து ஆலோசித்து ஆலோசித்து எனக்குச் சிகிச்சை செய்து வந்தார்கள். அவர்கள் எனது உடல் நிலையைப்பற்றி என்னைக் கேட்பார்கள். எனக்கு விவரமாகச் சொல்லத் திராணி இராது; சரியாகச் சொல்ல வும் தெரியாது. அப்பொழுது என் மனைவிதான் தைரியமாக முன் வந்து, விவரமாக எல்லாவற்றையும் டாக்டர்களுக்குச் சந்தேகம் ஏற்படாத முறையில் சொல்லுவாள். சிறிது கூட மனக்கலக்க மில்லாமல் இவ்வளவு தெளிவாகச் சொல்லுவதைக் கேட்ட டாக்டர்கள் வியப்படைவார்கள். இது மட்டுமல்ல; சரியாக நாற்பது நாட்கள் அவள் தன் கண்ணிமைகளை மூடவே யில்லை; பகலைப் போலவே இரவையும் கழிப்பாள். இரவு பூராவும் உட்கார்ந்தே கழிப்பாள். எனக்கு என்ன தேவை யென்பதை அவ்வப்பொழுது கவனித்து வேண்டுவன செய்வாள். கண்கள் உறக்கத்தைத் துறந்திருக்கிறபோழ்து, வயிறு உணவை ஏற்றுக் கொள்ளுமா? உறவினர்களுடைய கட்டாயத்திற்காக இலை முன்னர் உட்கார்ந்து எழுந்து விடுவாள். ஊண் உறக்கம் இரண்டை யும் துறந்திருந்தாள் இந்தக் காலத்தில். எப்படித்தான் அவளுக்கு இது சாத்தியமாயிருந்ததோ தெரியவில்லை. இந்த நெருக்கடியான காலத்தில் அவள் எனக்குச் செய்த சிச்ருஷைகளை எப்பிறவியிலும் என்னால் மறக்க முடியாது. கணவனுக்கு மனைவி சிச்ருஷை செய்யக் கடமைப் பட்டவள்தானே என்று நீங்கள் கேட்கலாம். அப்படி யில்லை. கடமைக்கு அடிப்படையில் அன்பு திகழ வேண்டும்; ஆன்ம நேய ஒருமைப்பாடு திகழ வேண்டும். இந்த அடிப்படையின் கீழ்செய்யப்படும் கடமையில் தான் தெய்வ மணங் கமழ்கிறது; செய்கிறவர்களும் செய்யப்படுகிறவர்களும் புனிதர்களாகிறார்கள். எங்களிடையே நிலவி வந்த உறவு, தெய்விக உறவு என்று நான் சொல்லிக்கொண்டால் அதைத் தற்பெருமையாக நீங்கள் கருதி விடக்கூடாது. இந்த நாற்பது நாட்கள் கண் விழித்திருந்தாளெனினும் அவள் ஒரு பொட்டுக் கண்ணீர்கூட விடவில்லை. அப்படிக் கண்ணீர் விட்டால் நான் எங்கே அதைரியப்பட்டு விடுவேனோ என்பது அவளுடைய எண்ணம். உண்மையில் அவள் கண்ணீர் விட்டால் என்னால் சகிக்க முடிவதில்லை. அவள் மட்டுமல்ல, பொதுவாக எந்தப் பெண்மணியாகட்டும் கண்ணீர் விடுவதைப் பார்த்து என்னால் சகிக்க முடிவதில்லை; சும்மா யிருக்கவும் முடியாது. கண்ணீருக்குக் காரணமென்ன வென்பதை விசாரித்து என்னால் இயன்றவரை ஏதேனும் பரிகாரம் செய்ய முயல்வேன். 1941ஆம் வருஷம் டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்திலிருந்து ஜப்பானியர்கள், ஆகாய விமானக் குண்டுகளால் ரங்கூன் நகரைத் தாக்கி வந்தனர். அப்பொழுது ரங்கூன் நகரத்தின் மத்தியில் இருக்கும் அநேக குடும்பத்தினர் சுற்றுப்புறமுள்ள பகுதிகளில் வந்து தங்கினர். நாங்கள் வசித்து வந்த பக்டோவிலும் சில குடும்பத்தினர் வந்து தங்கினர். எங்கள் வீடு ஒரு சிறிய சத்திரம் போலிருந்தது. அத்தனை பேருக்கும் நல்வரவு அளித்து, சாப்பாடு முதலியவைகள் உதவி உபசரித்தாள் என் மனைவி. அனைவருக்கும் தைரியம் சொன்னாள். குண்டுகள் விழும்போது இப்படி இப்படி இருக்கவேண்டு மென்று விவரமாகக் கூறி அனைவருடைய பயத்தையும் போக்கினாள். சில நாட்களுக்குப் பிறகு, ரங்கூனிலிருந்து பலர் கடல் மார்க்கமாகத் தாய் நாட்டுக்குத் திரும்பினர். பக்டோவில் பெரும் பாலோர் காலி செய்து விட்டனர். எங்கள் உறவினர்களில் என் மனைவி ஒருத்தி தவிர எல்லாப் பெண்டிரும் மூட்டை முடிச்சு களுடன் கப்பலேறி விட்டனர். அவள் மட்டும் செல்ல மறுத்து விட்டாள். என்னைத் தனியே விட்டு விட்டுச் செல்ல அவள் சம்மதிக்கவில்லை. நானும் போ என்று அவளை வற்புறுத்த வில்லை. இதற்குப் பிறகு சுமார் இரண்டு மாத காலம் வரை அவள் தனியொருத்தியாகவே வீட்டில் இருந்தாள். வீட்டிலிருந்த ஆண் பிள்ளைகளாகிய நாங்கள் (என்னோடு சேர்ந்த மூன்று நான்கு பேர்) பகல் நேரத்தில் எங்கள் அலுவல்களைக் கவனிக்க வெளியே சென்று விடுவோம். அவள் மட்டும் வீட்டில் எப்படியோ தைரியமாக இருந்தாள். பகலென்றும் இரவென்றும் வேற்றுமை பாராட்டாமல் ஜப்பானிய ஆகாய விமானங்கள் குண்டுகளைப் பொழியும். 23-12-1941 முதல் 21-2-42இல் நாங்கள் பக்டோவிலிருந்து புறப்பட்டது வரை சுமார் எண்பத்தாறு தடவை ஜப்பானிய ஆகாய விமானத் தாக்குதல்கள் நடைபெற்றன. இந்தத் தாக்குதல்களின் கடுமை, அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். ஆகாய விமானங்களிலிருந்து குண்டுகள் ஒன்றன் பின்னொன்றாக விழுகிற போது பூமி அதிரும்; வீட்டுச் சுவர்கள் ஆடும்; கதவுகள், ஜன்னல்கள் முதலியன சலசலவென்று ஓசைப்படும். இப்படிச் சுருக்கமாகசொல்லி விடுகிறேன். அபாய அறிவிப்புச் சங்கு ஊதினதும் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் தோண்டப்பட்டிருந்த ஆள் பதுங்கிக் குழியில் நானும் என் மனைவியும் உறவினர் இருவரும் சென்று உட்கார்ந்து கொள்வோம். அபாயம் நீங்கி விட்டதென்று சங்கு ஊதினதும் குழியிலிருந்து வெளியே வந்து விடுவோம். என் மனைவி, வீட்டுக் காரியங்களை எவ்வித பரபரப்புமின்றிச் செய்ய தொடங்கி விடுவாள். அச்சமென்பது அவள் முகத்தில் அணுவளவும் தோன்றாது. உண்மை யில் அவள் ஒருத்தி வீட்டில் இருந்தது ஆண் பிள்ளைகளாகிய எங்களுக்கு எவ்வளவோ தைரியமாக இருந்தது. 21-2-42 விடியற் காலையில் ரங்கூனை (பக்டோவை) விட்டுப் புறப்பட்ட நாங்கள் இருவரும் 24-4-42 பகல் சுமார் மூன்று மணிக்குக் கல்கத்தா வந்தடைந்தோம். வழியில் எத்தனையோ ஊர்களைப் பார்த்தோம். பலவித நோய்களையும் அனுபவித்தோம். ஏறிய மலைகள் எத்தனை? இறங்கிய கணவாய்கள் எத்தனை? புதிய புதிய மனிதர்களின் சந்திப்பு! புதியபுதிய அனுபவங்கள்! இந்த நடைப் பயணத்தின்போது என் மனைவி காட்டிய மனோ உறுதியை என்னென்று சொல்லுவது? அவளை டோலியில் வைத்துத் தூக்கிக் கொண்டு வந்த கூலியாட்களே ஆச்சரியப் பட்டுப்போயினர். செங்குத் தான மலைகளைக் கடக்கும் போது அவர்களே சிறிது துணுக்குறு வார்கள். அம்மா, ஜாக்கிரதை! கடவுளை நினைத்துக் கொண்டு தைரியமாயிருங்கள் என்று அவ்வப்பொழுது எச்சரிக்கை கொடுத்துக் கொண்டுவருவார்கள். அவர்களுக்குத் தைரிய மூட்டிக் கொண்டும், உற்சாகமான வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டும் வருவாள் என் மனைவி. அவளைத் தூக்கிக்கொண்டு வருவதில் அவர்கள் அலாதியான மகிழ்ச்சியடைவார்கள். இந்த வழி நடையின் போது ஒரு நாள் மேட்டுப் பாங்கான ஓரிடத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் இரவைக் கழிக்க வேண்டியதாயிருந்தது. சுற்றிலும் அடர்த்தியான காடு. வன விலங்குகள் செய்கிற சப்தம் காதில் விழுந்து கொண்டிருந்தது. ஒரே இருட்டு. அண்டை அயலிலுள்ளவர் களைப் பார்க்க வேண்டுமானால் கையோடு கொண்டு வந்திருந்த சிறிய அளவு மெழுகுவர்த்தியை ஏற்றித்தான் பார்க்க வேண்டும். ஆனால் அதை ஏற்றுவது மகா கடினம். ஏனென்றால் எப்பொழுதும் ஒரே பேய்க்காற்று. தீக் குச்சியை எடுத்துப் பற்றவைக்க முயன்றோமானால் அணைந்து அணைந்துதான் போகுமே தவிர பற்றவே பற்றாது. அன்று பற்றவைத்து, முடியாமல் சலித்துப்போய் இருட்டிலேயே படுத்து விட்டோம். இரவு சுமார் பன்னிரண்டு மணியிருக்கும். என் மனைவிக்கு உள்ளங்காலை ஏதோ ஒன்று நாவால் நக்குகின்ற மாதிரி உணர்ச்சி ஏற்பட்டது. என்னவென்று விழித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். நானும் உடனே ஒரு தீக்குச்சியைக் கிழித்தேன். அதுவும் எப்படியோ பற்றிக் கொண்டது. அந்த வெளிச்சத்தில் பார்த்தால் ஒரு முள்ளம் பன்றி முட்களை விரித்துக் கொண்டு ஓடுகிறது! நான் திடுக்கிட்டேன். என் மனைவியோ, ஒன்றும் நடவாதது போல் படுத்துக்கொண்டு விட்டாள். இன்னொரு நாள் வழி நடந்து வந்து கொண்டிருக்கிறோம். மாலைப் பொழுது. இருள் சூழ ஆரம்பித்து விட்டது. இருட்டுக்கு முன்னர் முகாமைப்போய் அடைந்து விடவேண்டு மென்பதற்காகப் பிரயாணிகள் பலரும் எங்களுக்கு முன்னேசென்றுவிட்டனர். நாங்கள் இருவரும் மெதுமெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த தனால் சிறிது பின் தங்கிவிட்டோம். நாங்கள் போய்ச் சேர வேண்டிய முகாமோ கண்ணுக்குத் தெரிகிற தூரத்தில்தான் இருக்கிறது. எங்களோடு வந்தவர்கள் எங்களுக்கு முன்னால் அந்த இடத்தை யடைந்து தீ மூட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் அந்த இடத்தையடைய மூன்று ஏற்றங்களையும் மூன்று இறக்கங் களையும் கடக்க வேண்டும். அன்று நீண்ட தூரம் நடக்க வேண்டி யிருந்ததால் எனக்குக் களைப்பு மேலிட்டு விட்டது. இனி மேல் நடக்க முடியாதென்று தோன்றியது. ஓரிடத்தில் தம்பிதமாக நின்று விட்டேன். இனி நான் வரமுடியாது. என்னை இங்கேயே விட்டுவிடு. நீ சென்று முகாமையடைந்து எல்லோருடனும் சேர்ந்து கொள். என்னைப் பற்றிக் கவலைப்படாதே உயிரிருந்தால் பின்னாடி வருகிறேன். இல்லை யானால் என்னை மறந்துவிடு என்று இப்படி என் மனைவியைப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே நான் மூர்ச்சையடைந்து கீழே விழுந்து விட்டேன். சில நிமிஷங்கள் வரை எனக்குச் சுய நினைவு இல்லை. பிறகு லேசாகக் கண் விழித்துப் பார்த்தேன். மையிருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது. அடர்ந்த காட்டி லிருந்துவரும் ஒய் என்ற சப்தம் காதைத் துளைத்துக் கொண்டிருக் கிறது. முன்னும் பின்னும் மனித சஞ்சாரத்தைக் காணோம். என் மனைவி மட்டும் பக்கத்திலே உட்கார்ந்திருக்கிறாள். அவளைப் பார்த்ததும் எனக்கு ஒருவித ஆத்திரம் வந்தது. அவள் மீது வைத்த அன்பினால் வந்த ஆத்திரந்தான்; அதாவது, அவளாவது உயிர் பிழைத்துச் சென்று சௌக்கியமாயிருக்கட்டுமென்ற எண்ணத்தி னால் வந்த ஆத்திரந்தான். நான்தான் முன்னாடியே உன்னைப் போகச் சொன்னேனே? இன்னுமா நீ இங்கே இருக்கிறாய்? இனி நீ எப்படி வேண்டுமானாலும் தொலைந்துபோ என்று சொல்லிக் கொண்டே வேகமாகக் கிளம்பி, நேரே முகாமை அடைந்தேன். எப்படி அடைந்தேன் என்று தெரியாது. அடைந்து, விழுந்தேன் தரையில். உடனே அங்கிருந்தவர்கள், சுடுதண்ணீரை என் முகத்தில் தெளித்து எனக்குச் சிறிது தெளிவை உண்டு பண்ணினார்கள். அம்மா எங்கே? என்று கேட்டார்கள். தெரியாது என்றேன். என்னை விட்டுப் பிரிய மறுத்து என் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த வளை ஆத்திரத்தினால் அரைக்கணத்தில் உதறித் தள்ளி விட்டு வந்த நான் எத்தகைய கொடியன்! ஆண்மக்கள் வெகு எளிதில் அசுரத் தன்மைக்கு வசப்பட்டு விடுகிறார்களென்பது எவ்வளவு உண்மை! என்னால் கைவிடப்பட்ட என் மனைவியோ, தன்னந் தனியே மெதுவாக முகாமை நோக்கி வந்துகொண்டிருந்தாள். எங்களோடு வந்த வரிற் சிலர், அவளை அழைத்துக் கொண்டுவர எதிர் நோக்கிச் சென்றார்கள்; சென்று அழைத்துவந்து முகாமில் சேர்த்தார்கள்; அவளுடைய அஞ்சாமையைக் கண்டு வியந்தார்கள்.கூடவே, அவளைத் தனியே விட்டுவிட்டு வந்த என்னைக் கடிந்து கொண் டார்கள். இதற்குப் பிறகு அவள் இந் நிகழ்ச்சியைப்பற்றி யாரிட மாவது பிரதாபித்திருக்க வேண்டுமே; என்னைத் தனியே விட்டு விட்டு வந்தீர்களே என்று என்னைக் கேட்டிருக்க வேண்டுமே; இல்லவே இல்லை. 1953ஆம் வருஷம் ஜூன் மாதம் அவளுடைய மரணத்திற்கு மூலகாரணமாயமைந்த நோயினால் தாக்கப்பட்டு, சிகிச்சைக்காக முதன் முதல் ஆபத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு என்னமாதிரி சிகிச்சை செய்வதென்பதைப்பற்றி டாக்டர்கள் பலவிதமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள்; அவளைப் பலவித பரிசோதனை களுக்குட்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு நாள் மாலை நான் ஆபத்திரிக்குச் சென்றேன். தனக்கு இன்னும் சிகிச்சை தொடங்கப்பட வில்லை யென்றும், தன்னை இன்னும் பரிசோதனைக்கே உட்படுத்தி வருவதாகவும் என் மனைவி கூறினாள். இதைக் கேட்டதும், ஐயோ, பரிசோதனைக் குரிய பொருளாகி விட்டாளே என்ற எண்ணம் என் இதயத்தைத் தாக்கியது. உடனே மூர்ச்சையடைந்து அவள் படுத்திருந்த கட்டிலின் மீது தலை சாய்த்து விட்டேன். அவள் என்னைப் பிடித்து உலுக்கிக் கொடுத்து ஏன் இப்படி அதைரியப்படுகிறீர்கள்? என் உடம்புக்கு ஒன்றுமில்லை. டாக்டர்கள் என்னைக் கொண்டு ஏதேனும் கற்றுக்கொள்ள முடியுமாவென்று பார்க்கிறார்கள். அவ்வளவு தானே தவிர வேறொன்றுமில்லை. நான் விரைவில் வீட்டுக்கு வந்து விடுவேன். என்று எனக்குத்தைரியம் சொன்னாள். அவள் முகத்தில் சிறிது கூட கவலைக்குறி தென்படவில்லை. இதற்குப் பிறகு நான்கு தடவை ஆபத்திரியில் அனுமதிக்கப் பெற்று சிகிச்சைக்கு உடன்பட்டாள். ஒவ்வொரு தடவை ஆபத்திரிக்குச் செல்லும் போதும் முகமலர்ச்சியுடன் தான் செல்லுவாள்; சிகிச்சைக்கு உட்பட்டிருக்கிற போதும் முக மலர்ச்சி தான்; சிறிதுகூட மன உறுதி குலையவில்லை. பல வித சிகிச்சைகள் செய்தும் குணம் தெரியவில்லை. நான் மிகவும் கவலையுற்றுக் கிடந்தேன். என்னைத் தனியனாக்கி விட்டுச் சென்று விடுவாளோ என்ற ஏக்கம் என்னை ஆட்கொண்டது. இந்த நிலையில் - 1955ஆம் வருஷம் ஏப்ரல் மாதம்-எனது நண்பர் ஒருவர், அவருக்குப் பரிச்சயமான ஒரு நல்ல டாக்டரிடம் அவளை அழைத்துக் கொண்டு போனார். நானும் சென்றிருந்தேன். அவர் பார்த்துவிட்டு இன்னும் ஆறு மாதந்தான் உயிர் பிழைத்திருப்பாள் என்று என்னிடம் தெரிவித்தார். இதைக் கேட்டதும் என் தலை மீது இடி விழுந்தது போலிருந்தது. சிறிது நேரம் சுய நினைவற்றிருந்தேன். பிறகு சமாளித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். டாக்டர் சொன்னதை அவளிடம் எப்படித் தெரிவிப்பது? ஆனால் தெரிவிக்காமலிருக்க முடியுமா? டாக்டர் சொன்னதை அவள் சூட்சுமமாக அறிந்து கொண்டு விட்டாள். என்றாலும் டாக்டர் சொன்னதை அவளுக்குச் சொன்னேன். அப்பொழுது என் குரல் நடுங்கியது. அதைக் கேட்ட அவள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்ன பாடியிருக்கிறார், தெரியுமா? என்று என்னைக் கேட்டாள். எனக்கொன்றும் புரியவில்லை. உடனே வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம் என்று தொடங்கும் தேவாரப் பதிகத்தை மனமுருகப் பாடினாள்.1 அஃது இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது; இன்னும் எத்தனை யுகங்களானாலும் ஒலித்துக்கொண்டிருக்கும். இத்தகைய திண்ணிய மனம் படைத்தவளா யிருந்தபடியால் தான் அவளுக்கு அபாரமான பொறுமை இருந்தது; எதிலும் ஒரு நிதானமுடையவளாக இருந்தாள். தன்னை மறந்துகூட இந்தப் பொறுமையையும் நிதானத்தையும் அவள் இழக்கவில்லை. இதைக் கண்டு, அவளுக்குக் கடைசி தடவையாகச் சிகிச்சை செய்து வந்த டாக்டர் ஆச்சரியப்பட்டுப் போனார்; இன்னமும் ஆச்சரியப் பட்டுக் கொண்டு தானிருக்கிறார். அவளுடைய பொறுமையையும் நிதானத்தையும் வசீகரமான ஒரு புன் சிரிப்பு கவிந்து கொண்டிருந்தது. கடைசி மூச்சு இருக்கிற வரை இந்தப் புன்சிரிப்பு அவளைவிட்டு அகலவேயில்லை. உயிர் போவதற்குச் சில மணி நேரமே இருந்தது. பலவீனத்தினால் பேசுஞ் சக்தியையும் இழந்து விட்டிருந்தாள். அப்பொழுது அவளுடைய தமையனார் பேர்த்தி வத்ஸலா என்ற குழந்தை, தவழ்ந்து கொண்டு அவள் படுக்கையருகில் வந்தது. அதைப்பார்த்ததும், முகத்திலே புன்சிரிப்பு தவழ வா, பாப்பா என்று மெல்லிய குரலில் அழைத் தாள். என்ன ஆச்சரியம்! தனக்குச் சிகிச்சை செய்ய வரும் டாக்டரிட மும் புன் சிரிப்புத்தான். அவர், நோயைப் பற்றி விசாரிப்பார்; புன் முறுவலுடன்தான் தன் நோயைப் பற்றிக் கூறுவாள். அவள், தனது புன் சிரிப்பைக் கொண்டு உடல் நோயையும் உள்ளத்தின் வேதனையையும் அடக்கியாண்டு வந்தாள். அவளுடைய புன் சிரிப்புக்கு இந்த மகத்தான சக்தி இருந்தது. உடல்நிலையைப் பற்றி விசாரிக்க வருகிறவர்கள் உடம்பு எப்படி இருக்கிறது? என்று கேட்பார்கள். நகை முகத்துடன் பரவாயில்லை என்று பதில் கூறுவாள். உண்மையில், நோய் வாட்டி வதைத்து எடுக்கும். அதைப் பற்றி லேசாகக்கூட பிரதாபிக்கமாட்டாள். யார் வந்து கேட்டா லும், எப்பொழுது வந்து கேட்டாலும் பரவாயில்லை என்ற ஒரே மாதிரியான பதிலைத்தான் கடைசிநேரம் வரை கூறிக்கொண்டு வந்தாள். மணப்பந்தலில் என்னை முதன் முதலாகக் கவர்ந்த அந்தப் புன்முறுவல், காலக்கிரமத்தில் உலக அன்பாக முதிர்ந்து எல்லோரையும் கவர்ந்தது. அது குழந்தை யென்றும் கிழவரென்றும், உறவினரென்றும் அந்நியரென்றும் வேற்றுமை பாராட்டியது கிடையாது. எல்லோரிடத்திலும் எப்பொழுதும் ஒரே மாதிரியான புன்முறுவல்தான். உள்ளம் வெளிச்சமாயிருந்தால்தான் முகத்தில் புன்சிரிப்பு தோன்றும்; கண்களில் அருள் வடியும். அஃது இருட்டாயிருந்தால், அந்த முகம், மிருகசுபாவங்களைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடியாக இருக்கும். எப்பொழுது என் மனைவி என்னைவிட்டுப் பிரிந்து சென்று விட்டாளோ அப்பொழுதே நான் இருக்குமிடம் புன்சிரிப்பு என்ற வெளிச்சம் படாத குகையாகிவிட்டது. மற்றவர்கள் என்னோடு சிரித்துக் கொண்டுதான் பேசுகிறார்கள். ஆனால் என் ஆத்மா சிரித்துப் பேசுகிறமாதிரியில்லையே. அன்புள்ள 7. குடும்பம் ஒரு பந்தமா? தி. நகர், சென்னை 7-4-1956 எனதன்புள்ள ஸ்ரீ சொ. அவர்களுக்கு நமகாரம். நலம் பல விளைக. குடும்பத்தை ஒரு பந்தமென்று சிலர் நினைக்கிறார்கள். அறியாமையினின்று பிறந்த கருத்து இது. குடும்பத்தில் தான் மனிதன் பரிபூரண சுதந்திரத்தைக் காண்கிறான்; அனுபவிக்கவும் முடியும். குடும்பமின்றேல் சமுதாயமேது? நாடேது? உலகமேது? அன்பு சுரக்கும் இடம் எது? நாகரிகத்தின் பிறப்பிடம் எது? மனிதனுக்கு, ஊழையும் உப்பக்கம்காணும் ஆற்றலை அளிப்பது எது? யோகமும் போகமும் கலந்து வாழ்வது எங்கே? குழந்தைகளின் மழலைச் சொற்களும் முதியோர்களின் அனுபவ உரைகளும் சேர்ந்து ஒலிக்கும் இடம் எங்கே? குடும்பம்; குடும்பம். குடும்பத்தை வெறுக்கின்றவனுடைய உள்ளத்தைச் சிறிது திறந்து பாருங்கள். அது வெறுங்கட்டாந்தரையாக இருக்கும். ஒரு பசும் புல்லைக் கூட அதில் காணமுடியாது. ஒத்த நலனிலும் ஒத்த பண்பிலும் ஒருவராய் இலங்கும் இருவர் இருக்குமிடத்தைக் காணுங்கள். அங்கே எல்லா இன்பங்களும் மண்டிக்கிடப்பதைப் பார்ப்பீர்கள். இத்தகைய குடும்பத்தில், வறுமையோ, நோயோ, பிற இல்லாமையோ எதுவும் ஏதும் செய்ய முடியாது. குடும்பக்கப்பலை இன்னவிதமாக இயக்க வேண்டும், அதில் இன்ன மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்பவைகளை அறிந்து கொள்ளாத சிலர், விவாகமான சிறிது காலத்திற்குப்பிறகு, குடும்ப வாழ்க்கையை வெறுத்துப் பேசுகிறார்கள். அவர்களைக் கண்டால் எனக்குப் பிடிப்பதே யில்லை. இன்பம் இன்னதென உணராத பிறவிகள்! ஆனால் அவர்களை யாவது என்னால் சகித்துக் கொள்ள முடிகிறது. விவாகமென்னும் வாயிற்படிக்குள் நுழையாத சிலர், குடும்ப வாழ்க்கையைப்பற்றி அலட்சியமாகப் பேசுவதையும், அஃதொரு சிறைச்சாலை யென்று பரிகசிப்பதையும், அதனை ஒரு துன்பக்கேணியாகக் கற்பனை செய்து கொண்டு அதனின்று ஒதுங்கி யிருக்க முயலுவதையும் என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. குடும்பத்தை ஒரு பந்தமென்று நான் கனவிலும் கருதியது கிடையாது. என்னைப்போலவே என் மனைவியும் கருதியிருந்தாள். நானோ அவளோ அப்படிக் கருதக்கூடிய சந்தர்ப்பம் ஒரு பொழுதும் எழவில்லை என்பதைப் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்குள் பிணக்கு என்பது தலைகாட்டியதே கிடையாது. நாங்கள் கருத்துவேற்றுமை கொண்டதேயில்லை. காதல் வாழ்க்கையில் ஊடல் என்று சொல்வார்களே அதுகூட எங்களுக்குத் தெரியாதென்று சொன்னால் நீங்கள் சிரிப்பீர்களோ என்னவோ? இங்ஙனம் நாங்கள் கருத்தொருமித்து வாழ்ந்ததனால், குடும்பம் ஒரு பந்தமல்ல என்று என்னால் மார்தட்டிப் பேச முடிகிறது; அப்படிப் பேசியுமிருக்கிறேன். நான் நவ சக்தி பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, ஒருநாள் மாலை திரு. வி. கலியாணசுந்தர முதலியார், அலுவலகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நன்மொழிகள் சில பகர்ந்து கொண்டிருந்தார். கூட நானும் சில நண்பர்களும் இருந்தோம். பேச்சுக்கிடையே இல்லறத்தைப் பற்றிப் பிரதாபம் வந்தது. விவாகமாகாத அந்த இளைஞரைப் பார்த்து, முதலியார், தம்பீ! சீக்கிரத்தில் மணஞ் செய்து கொள். அப்பொழுது உனக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும் என்றார். அதற்கு அந்த இளைஞர் கலியாணம் வேண்டவே வேண்டாம் ஸார்! என்று தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு முடிவுகட்டிவிட்ட மாதிரி கூறினார். ஏன் அப்படிச் சொல்லுகிறாய், தம்பீ என்று கேட்டார் முதலியார் நிதானமாக. விவாகஞ்செய்து கொண்டவர்களில் யாராவது சுகப்பட்டிருக் கிறார்களா, சொல்லுங்கள் என்று கேட்டார், உலக அனுபவமே அறியாத அந்த இளைஞர். உடனே நான் சுகப்பட்டிருக்கிறேன் என்று மார்தட்டிக் கூறினேன். முதலியார், பார்த்தாயா, தம்பீ! சுகப்பட்டவர் ஒருவருமில்லை யென்று சொன்னாயே? இனி அப்படிச் சொல்லாதே. விவாகந்தான் ஆணையாகட்டும், பெண்ணையாகட்டும் பண்படுத்திக் கொடுக் கிறது என்று இல்லறத்தின் மாண்பு பற்றி அந்த இளைஞருக்கு அறிவுறுத்தினார். எப்பொழுதுமே சாந்தமாகப் பேசுகிற நான், அப்பொழுது மார்தட்டிப் பேசியதைக் கண்டு முதலியாரும், கூட இருந்த சில நண்பர்களும் சிறிது ஆச்சரியமே யடைந்தனர். அந்த இளைஞர் பிரமித்தே போனார். சிறிது சமாளித்துக் கொண்டு சர்மாவுக்குக் கிடைத்திருக்கும் பாக்கியத்தைப் போல் எல்லாருக்கும் கிடைக்குமா? என்று இப்படி ஏதேதோ சொல்லி விட்டு, மெதுவாக நகர்ந்து விட்டார் அந்த இடத்திலிருந்து. இங்ஙனம் என்னை ஒரு பாக்கியசாலியாக்கியது யார்? என் மனைவி. இதை எங்கணும் எக்காலத்தும் முழக்கம் செய்து கொண்டிருப்பேன். என் மனைவி எப்பொழுதுமே பின் தூங்கி முன் எழுவாள். கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில்கூட இந்த நியதியை அவள் கை விட்டவளல்ல. காலையில் விழித்துக் கொண்டவுடன் முதன் முதலாக மனைவியைப் பார்த்தல் நல்லதென்று சொல்லுவார்க ளில்லையா? இந்த நல்லது, எனக்குத் தினந்தோறும் கிடைத்துக் கொண்டிருந்தது. என் மனைவி, நெற்றியில் குங்குமப் பொட்டு திகழ, முகத்தில் புன்சிரிப்பு தவழ என் கால் பக்கம் நின்று கொண்டு உதயமாகப் போகிறதே, எழுந்திருங்கள் என்று சொல்லி என்னை எழுப்புவாள். எழுந்து அவள் முகத்தைப் பார்ப்பேன்; என்னையறியாத ஒருவித உற்சாகம் எனக்கு உண்டாகி விடும். தற்கால நாகரிகப் பெண்டிற் சிலர், காலையில் தூங்கி யெழுந்தவுடன் வெற்று நெற்றியுடனும், கலைந்த கூந்தலுடனும் காட்சியளிக்கிறார்களே, அது மாதிரி இருப்பதுதான் நாகரிகம் என்று கருதுகிறார்களே, அப்படி அவள் ஒரு கணமும் இருந்த தில்லை. அந்த நாகரிகத்தை அவள் அறியாதவள்; அதை வெறுப்ப வளுங்கூட. எந்த நேரத்தில் அவளைப் பார்த்தாலும் புத்தம் புதியவளாகவே காணப்படுவாள். பொதுவாக, அவள் இருந்தவரையில் என்னுடைய தேவைகள் எனக்குத் தெரியாமலே இருந்து விட்டன. எனக்கு எது எப்பொழுது எவ்வளவு தேவை யென்பதை அவள்தான் திட்டமிட்டு வைத்திருந் தாள். பட்டவர்த்தனமாகச் சொல்ல வேண்டுமானால், நான் உண்ணு கின்ற உணவின் அளவோ, உடுத்துகின்ற உடையின் எண்ணிக் கையோ எனக்குத் தெரியாது. இப்பொழுது தான், அவள் போன பிறகு, சிறிது சிறிதாகப் பயின்று வருகிறேன். அப்பொழுதெல்லாம் அவள் நினைவு எனக்கு வராமலிருக்குமா? நான் ஏதாவதோர் அலுவல் நிமித்தம் வீட்டைவிட்டுப் புறப்படுவ தாயிருந்தால், எனக்கென்னென்ன தேவைப்படும் என்பதை உணர்ந்து முன் ஜாக்கிரதையாக அவைகளை எடுத்து வைப்பாள். நோயாளிகளைக் காணவோ, குழந்தைகள் அல்லது முதியோர்கள் இருக்குமிடத்திற்கோ நான் செல்வதாயிருந்தால், பழமோ, பட்சணமோ தயார் செய்து அழகாகப் பொட்டலங் கட்டியோ, பையில் வைத்தோ கொடுத்தனுப்புவாள். எங்கேனும் பிரசங்கத்திற்குச் செல்வதாயிருந்தால், நான் முன்னாடியே தயாரித்து வைத்திருக்கும் குறிப்புக்களை எடுத்து வைத்து, கூடவே, பேசும் போது நெஞ்சில் கரகரப்பு ஏற்படாவண்ணமிருக்க, கடுக்காய், சீனா கற்கண்டு இவைகளைச் சிறு சிறு பொட்டலங்களாகக்கட்டி வைப்பாள். பிரசங்கத்தை முடித்துக்கொண்டு நான் வீடு திரும்புகிற வரையில் எனக்காகக் கவலையும்படுவாள். என்ன கவலை என்று நினைக்கிறீர்கள்? பிரசங்கம் நன்றாக, தங்குதடையில்லாமல் நடை பெற்றதா? வெற்றி கரமாக முடிந்ததா? வந்திருந்தவர்கள் எப்படி ரசித்தார்கள்? நான் எந்த மாதிரி பேசினேன்? இவைகளைப் பற்றித்தான் கவலை. இந்த விவரங் களை யெல்லாம், நான் வீடு வந்து சேர்ந்ததும் என்னைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுவாள்; பிறகு தான் அவளுக்கு மன அமைதி ஏற்படும். என் படுக்கையை அவள் கையால் தட்டிப்போட்டால் தான் அவளுக்குத் திருப்தி உண்டாகும். உணவு, உடை, படுக்கை முதலியவைகள் விஷயத்தில் என் தேவைகளை நான் கவனித்துக் கொள்ள மாட்டேன் என்பது அவள் எண்ணம். அவள் எண்ணம் தவறு என்று என்னால் சொல்ல முடியவில்லை. அவள் படுநோயாகப் படுக்கையில் படுப்பதற்கு முந்தின நாள்வரை, என்னுடைய தேவை களைக் கவனித்து வந்தாள். தான் நோய்வாய்ப் பட்ட பிறகு, தன் கையால் எனக்குச் சமைத்துப் போட முடியவில்லையே என்ற வருத்தம் அவளுக்கு மிக உண்டு. இதை அடிக்கடி சொல்லி ஏங்குவாள். தாய்க்குப் பின் தாரம் என்று சொல்லுவார்கள். வயிறறிந்து, சுவை தெரிந்து அன்னமிடக்கூடியவர்கள் தாயாரும் மனைவியுமே யாவார்கள். தாயாருக்குப் பின், மனைவிதான் இந்தத்தாய்மைப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறாள். அவளிடும் அமுது அமுதமே யாகும். ஏனென்றால், இதற்கு அடிப்படையில் தூய அன்பு நிலவுகிறதல்லவா? இந்த அடிப்படையின் மீது தயாரிக்கப்படும் உணவு எவ்வளவு எளிமை யுடையதாயிருந்த போதிலும், அஃது உடலுக்கு உறுதி யளிப்பதாகவே இருக்கிறது. யாருமே இதை அனுபவத்தில் கண்டுணரலாம். தாயையும் மனைவியையும் இழந்து விட்டவர்கள், நாவை அடிமைப்படுத்திக் கொள்ளவேண்டிய கட்டாயத்திற்குட்பட்டு விடுகிறார்கள்; இந்த ஒரு விஷயத்திலாவது ஞானியாகக்கூடிய பக்குவத்தைப் பெறுகிறார்கள். என் மனைவி சமையற்கலையில் கைதேர்ந்தவள். அவள் தயாரிக்கும் பட்சணங்கள் தனிச் சுவை கொண்டிருக்கும். குறைவான பண்டங்களை உபயோகித்து அதிகமான பட்சண வகைகளைத் தயாரித்து, சிறு விருந்தினையும் பெரு விருந்தாகப் பரிமளிக்கச் செய்து விடுவாள். நாங்கள் இரண்டு பேராயிருந்தாலும், எதிர்பாராத விருந்தினர் இருவரோ மூவரோ வந்து விட்டால் அவர்களுக்குத் தேவையான உணவு கிடைக்கும்படி செய்து விடுவாள். அவளுக்கு இந்தத் திறமை உண்டு என்று உறவினரிலேயே அநேகருக்குத் தெரியாது. சில பணக்கார குடும்பங்களில், கணவனுக்கு வேண்டிய உணவை மனைவி தயாரிப்பதில்லை; தன் கையால் தயாரிக்கா விட்டாலும், பிறரால் தயாரிக்கப்பட்ட உணவைத் தன் கையால் பரிமாறுவதுமில்லை. இப்படிச் செய்வது கௌரவக் குறைவென்று கருதப்படுகிறதோ என்னவோ? இத்தகைய குடும்பங்களில் தாம்பத்திய ஒற்றுமை ஆழமுடையதாயிருக்குமா என்பது எனக்குச் சந்தேகமா யிருக்கிறது. அநேக குடும்பங்களில் நான் பார்த்திருக்கிறேன், கணவ னுக்கும் மனைவிக்கும் பிணக்கு உண்டாவதற்குக்காரணம் பணம் என்பதை. புருஷனும் மனைவியும், என் பணமென்றும் உன் பணமென்றும் சச்சரவிட்டுக் கொள்வது எவ்வளவு கேவலமா யிருக்கிறது? இதை நினைப்பது கூட எங்களால் சாத்தியமில்லா திருந்தது. எப்பொழுது என் பணம், உன் பணம் என்ற பேச்சு எழுகிறதோ அப்பொழுதே நான் வேறு, நீ வேறு என்ற பிரிவினை ஏற்பட்டுவிடுகிறது; என் நலன் வேறே, உன் நலன் வேறேயென்று ஆகி விடுகிறது. விவாகத்தின் உட்கருத்து என்னவோ அஃது ஓடி ஒளிந்து கொள்கிறது. விளைவு என்ன? குடும்பம், முட்செடிகள் நிறைந்த புதராகி விடுகிறது. இந்தப் புதரில் வளரும் குழந்தைகள் சுயநல உருவங்களாய் உலவிக் கொண்டிருக்கு மென்பதில் என்ன சந்தேகம்? சில குடும்பங்களில் சம்பாதிக்கிற புருஷன், தனக்குத் தான் பணத்தைச் செலவழிக்க உரிமையுண்டென்றும், மனைவிக்கு அந்த உரிமையில்லை யென்றும் நினைக்கிறான் பெட்டகத்துச் சாவியைத் தன் இடுப்பிலேயே வைத்துக் கொள்கிறான். தன்னுடைய மனைவி ஏதேனும் செலவழிக்க விரும்பினால், தன் உத்தரவு பெற்றுக் கொண்டுதான் செலவழிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறான். சுருக்கமாக இவன்-கணவனாகிய ஆண் மகன்-மனைவியை ஓர் அடிமையாகவே கருதுகிறான். அவளிடத்தில் இவனுக்கு நம்பிக்கை கிடையாது. ஆனால் அவள் மட்டும், தன்னிடத்தில் நம்பிக்கையும் விசுவாசமும் வைக்க வேண்டுமென்றும், தன்னிஷ்டத்திற்கு நடந்து கொள்ள வேண்டியது அவள் கடமையென்றும் கருதுகின்றான். இவனைப் போல் ஒரு சுயநலக்காரன் இருக்கமுடியுமா? இவன் எந்தக் குடும்பத்திற்கு எஜமானனாயிருக் கிறானோ, அந்தக் குடும்பத்தில் பொய்யும் புனைசுருட்டும், நிலவும்; துரோகம் தலைநீட்டிக் கொண்டிருக்கும்; சில்லரை மனதாபங்கள் அவ்வப் பொழுது எழுந்து அடங்கும்; தம்பதிகளுக்குள் மன ஒற்றுமை யென்பது மருந்துக்கும் காண முடியாது. இந்த நிலையில், வெளியார்வந்து புகுந்து இருவர் மீதும் ஆதிக்கஞ் செலுத்த முற்படுவர். எங்களுக்கு இந்தத்துர்ப்பாக்கிய நிலை ஏற்படவில்லை. என் மனைவி என்னை எந்த அந்ததில் வைத்திருத்தாளோ அதே அந்ததில் அவளை நான் வைத்திருந்தேன். எனக்கு அவள் சிச்ருஷை செய்து வந்தா ளென்றால், என்மீது வைத்திருந்த அன்பினாலேயே தவிர, என் கட்டாயத் திற்காக அல்ல; என்னைத் திருப்திசெய்ய வேண்டுமென்பதற்காகவுமல்ல; என்னிடமிருந்து ஏதேனும் எதிர்பார்த்துமல்ல. அன்பிலே ஊறிவந்த கடமையைச் செய்வதிலே தனிப்பட்ட தொரு சந்தோஷங் கொண்டாள்; ஆத்ம திருப்தி யடைந்தாள். எனக்கு அவள் சிச்ருஷை செய்துவந்ததைப் போல் அவளுக்கு நான் சிச்ருஷை செய்துவந்தேன். மனைவிக்குக் கணவன் சிச்ருஷை செய்வதை நான் கண்ணியக் குறைவாகக் கருதவில்லை. அவள் எனக்கு எப்படிக் கடமைப்பட்டவளோ அப்படியே நான் அவளுக்குக் கடமைப் பட்ட வனல்லவா? எனக்கு அவள் எப்படிப் பந்தகப்பட்ட வளோ அப்படியே அவளுக்கு நான் பந்தகப்பட்டவனல்லவா? என்னிச்சைப்படி அவள் நடக்க வேண்டுமென்று நான் எதிர் பார்ப்பதுபோல் அவள், தன்னிச்சைப்படி நான் நடக்க வேண்டு மென்று எதிர்பார்க்க மாட்டாளா? அப்படி எதிர்பார்க்க அவளுக்கு உரிமையில்லை யென்று சொல்லமுடியுமா? கணவன்மார் அநேகர் இந்தமாதிரியெல்லாம் எண்ணுவதேயில்லை. எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் இருவரும் சம அந்ததிலேயே பழகினோம். எங்களுக்குள் ஏற்றத் தாழ்வுகளே கிடையாது. இதனால் எங்களுடைய தன் மதிப்பு உணர்ச்சிக்கு ஒருபோதும் பங்கம் ஏற்பட்ட தில்லை. நாங்களிருவரும் ஒரேமாதிரி எண்ணினோம்; செயலும் அப்படித்தான். நான் எதைச் செய்தால் நன்றாயிருக்குமென்று அவள் எதிர் பார்ப்பாளோ அதையே நான், அவள் சொல்லாமலே செய்து முடித்திருப்பேன். அப்படியே நானும், இன்ன பதார்த்தத்தைச் சுவைத்துச் சாப்பிடலாம் போல் இருக்கிற தென்று எண்ணுவேன். அப்படியே அவள் நான் சொல்லாமலே அந்தப் பதார்த்தத்தைப் பக்குவம்செய்து வைத் திருப்பாள். கருத் தொருமித்து வாழ்தல் என்பது எங்களுக்கு மிகவும் சகஜமாகவே இருந்தது. இதனால் நாங்கள் அதிகமாகப் பேசமாட்டோம். ஏனென்றால் அப்படிப் பேசவேண்டியதற்கு அவசியமில்லை. ஒருவர் மனமறிந்து மற்றொருவர் நடந்து கொள்கிறபோது, வாய்ப்பேச்சுக்கு அதிக இடம் இல்லையல்லவா? நாங்களிருவரும் ஒருமனப் பட்டவர்களென்பதை எங்கள் உறவினரும், எங்களோடு நெருங்கிப் பழகிய ஒரு சிலரும் நன்கு அறிவர். இவர்கள், என் மனைவி காலமானதையொட்டி அநுதாபம் தெரிவித்து எழுதிய கடிதங்களில் இதையே சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். ஒரு சில பகுதிகளை இங்கு எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கு மென்று கருதுகின்றேன். கோயமுத்தூரிலிருந்து ஒருவர் எழுதுகிறார்:- அவள் இனிமையும் அன்பும் நிறைந்த ஆத்மா. அவள் ஒருசில வார்த்தைகளே பேசினாலும், அந்த வார்த்தைகளில் அன்பும், பிறருக்கு உற்சாகமூட்டுந் தன்மையும் தொனித்தன. சாதாரணமாகப் பிறரால் பொறுக்க முடியாத அளவுக்கு அவள் நோயினால் கஷ்டப்பட்டாள். அவளைப் பார்த்தால், கடுமையான நோயினால் பீடிக்கப் பட்டிருக்கிறாள் என்று சொல்லமுடியாதபடி, மிக்க தைரியத்துடனும் பொறுமையுடனும் அவள் தனது நோயைச் சகித்துக் கொண்டு வந்தாள். நீங்கள் இருவரும், ஒருவரையொருவர் நன்றாக அறிந்து கொண்டு, பரபரம் பக்தி சிரத்தை செலுத்தி நேசித்து வந்தீர்கள். உங்களிருவரிடையே நிலவிவந்த நேசத்தைச் சாதாரண மக்களால் சுலபமாக உணர முடியாது. நீங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த கனிவும் கருத்தும், மிக மௌன மாகவும், பிறரால் எளிதிலே புலப்படாததாகவும் இருந்தன; ஆனால் இனிமை யாகவும் புனிதத் தன்மையுடையனவாகவும் இருந்தன. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக உங்களிடையே உறுதியோடு நிலவி வந்த அன்பும் ஆன்மநேய ஒருமைப்பாடும், மரணத்தின் கையினால் கடுமையாகத் தகர்க்கப்பட்டுப் போயின. டெல்லியிலிருந்து ஒருவர்:- விவாகத்தின் உட்கருத்து என்னவோ அதன்படி உங்கள் இருவருடைய வாழ்க்கையும் அமைந்திருந்தது; ஒருவருக் கொருவர் உதவியாயிருந்தீர்கள். உங்களிருவருடைய இருதயங்களும் ஒரே குரலில் பேசின; நீங்கள் இருவரும் ஒருவராகவே வாழ்ந்தீர்கள். கோழிக்கோட்டிலிருந்து ஒருவர்:- பெண்மையின் லட்சியமாக அவள் இருந்தாள். அவளுடைய புலமைபிறர்க்கு எளிதில் புலப்படாததாய் இருந்தது. எளிமையும் அழகும் நிறைந்த வாழ்க்கையை நடத்தினாள். அவள் உங்களிடத்தில் வைத்திருந்த பக்தியும் விசுவாசமும், ஹிந்து பண்பாட்டிற்கும், இந்தியப் பண்பாடிற்கும் இயைந்ததாக இருந்தன. உதயபுரியிலிருந்து ஒருவர்:- அவள் மரியாதை மிகத் தெரிந்தவள். அவள் ஒரு மாணிக்கம். அந்த மாணிக்கத்திற்குள் புலமையும் ஞான பரிபக்குவமும் அடங்கிக் கிடந்தன. எல்லா நிலைமைகளிலும் அமைதியுடனும் நிதானமாகவும் நடந்து கொள்வாள். அவள், உங்களுக்கு எல்லாமுமாக இருந்தாள்; உங்களுடைய வாழ்க்கையின் எல்லா அமிசங்களிலும் பூரண பங்கு கொண்டிருந்தாள். உங்களிருவரையும்போல் ஒரு சிலர்தான் இருக்கக்கூடும். காஞ்சிபுரத்திலிருந்து ஓர் அம்மையார்:- மங்களம் உயிர் உன்னைவிட்டு எப்படிப் பிரிந்ததோ, ஆச்சரியமா யிருக்கிறது. ஜான்ஸியிலிருந்து ஓர் அம்மையார்:- மங்களத்தின் சிரித்த முகமும், யார் வந்தாலும், வா என்ற அன்பான வார்த்தையும், அவள் சாந்த குணங்களும் என் கண்முன் நிற்கின்றன. உங்களிருவருடைய உயிர் ஒன்றாகவும் உடல் இரண்டா கவும் இருந்தன. உங்களை விட்டு அவள் பிரிந்து போனது மனதுக்குக் கஷ்டமாகப் போயிற்று. மங்களம் எந்த விதத்திலும் புகழத்தகுந் தவள். அவளை யாரும் மறக்க முடியாது. கோலாலம்பூரிலிருந்து ஓர் அன்பர்:- உற்ற துணையாயிருந்த நளாயினி, வாசுகி போன்ற ஒரு புண்ணியாத்மா மறைந்து விட்டது. .......அம்மையின் அன்பும் ஆதரவும் பேரறிஞர் அவர்களுக்கு என்றென்றும் இருந்து காப்பதாக! அன்புள்ள 8. பரந்த அன்பு தி.நகர், சென்னை 12-4-1956 எனதன்புள்ள ஸ்ரீ சொ. அவர்களுக்கு நமகாரம். நலம் பல விளைக. புத்திரப்பேறு இல்லையென்று நானோ என் மனைவியோ கவலைப் பட்டது கிடையாது. எங்களுக்கென்று குழந்தைகளில்லை யானாலும், உற்றார், ஊரார் குழந்தைகளை யெல்லாம் எங்களுடைய குழந்தை களாகவே கருதினோம். இந்தமனப் பக்குவம்எங்களுக்கு ஏற்பட்டுவிட்டது .இந்தப் பக்குவ நிலையில் என்னைக்காட்டிலும் என் மனைவி ஒருபடி உயர்ந்தே இருந்தாளென்று bசால்ல nவண்டும். அவளிடம் யாராவது வந்து, குழந்தைகளில்லையேஎன்றுஅநுதாபம்கhட்டுகின்றமுiறயில்பசினால்,அவர்களுக்குப்பின்வருமாறுபதில்சல்லுவாள்:-நமக்கென்று குழந்தைகள் இருந்தால் நம்முடைய அன்பு ,அந்தக் குழந்தைகள் அளவோடு வரம்பு கட்டிக் கொண்டு விடுகிறது. இப்பொழுதோ, எல்லாக் குழந்தைகளும் நம்முடைய குழந்தைகள் என்று கருதிக்கொண்டு விடுவோமானால், நம்முள்ளே வரம்பு கட்டிக் கொண்டுள்ள அந்த அன்பானது, உலக அன்பாக விகாசமடைகிறது. நம்மிடத்திலே தங்கியுள்ள சுயநலம் தானாகவே அகன்று கொண்டு விடுகிறது. ஆகையால் நம்முடைய அன்பு விசாலப்பட்டிருக்க வேண்டுமென்ற நன்னோக்கத்துடன்தான் ஆண்டவன் புத்திரப் பேறு அளிக்க வில்லை. இப்படியாகச் சொல்லி, அநுதாபங்காட்டிப் பேசுகிறவர் களை மேற்கொண்டு பேச விடாமல் செய்துவிடுவாள். உறவினர் குழந்தைகளென்றும் ஊரார் குழந்தைகளென்றும் அவள் வித்தியாசம் பாராட்டியது கிடையாது; எல்லாக் குழந்தை களிடத்திலும் ஒரே மாதிரியாகவே அன்பு செலுத்தினாள். அவை களைக் குளிப்பாட்டி, உணவளித்து, அழகுபடுத்திக் காண்பதிலே அவளுக்குத் தனி ஆசை. அவள் காட்டிய அன்பின் விளைவாகச் சில குழந்தைகள் அவளை அம்மா என்றே அழைத்தன; சில குழந்தைகள் மாமி என்று அழைத்தன. அவளுடைய அன்பிலே வளர்ந்த குழந்தைகள் பலவும் நீண்ட ஆயுள் பெற்று நல்வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்பது என் இடையறாப் பிரார்த்தனை. புத்திரப் பேறு இல்லாக் குறையை நிறைவு செய்ய, சுவீகாரம் எடுத்துக் கொள்வதையும் அவள் விரும்பவில்லை. சுவீகாரம் எடுத்துக் கொள்வதென்பது இரவல் வாங்குவது தானே என்பது அவள் கேள்வி. வாழ்க்கையில், இரவல் வாங்குவதென்பது அவளுக்குப் பிடிக்காத விஷயம். அன்றாட விவகாரங்களில்கூட, வீட்டில் ஒரு சாமான் இல்லை யென்றால், அதற்காக அந்தச் சாமானை அண்டை அயல் வீடுகளிலிருந்து இரவல் வாங்கமாட்டாள்; அந்தச்சாமான் இல்லாமலே காரியத்தை நடத்தி விடுவாள்; அல்லது அதை விலை கொடுத்து வாங்கிவரச் செய்து உபயோகப் படுத்துவாள்; வாங்கி வரும்வரை, செய்யவேண்டிய காரியத்தை நிறுத்தி வைப்பாள். இப்படிப் பட்டவள், பிறர் குழந்தைகளை இரவல் வாங்கச் சம்மதிப்பாளா? ஒரு போதும் சம்மதிக்க வில்லை. இங்ஙனம் தனக்குக் குழந்தைகள் இல்லையென்றாலும், இல்லை யென்ற சொல் அவள் வாயிலிருந்து வந்ததே கிடையாது. குழந்தைகள் இல்லையோ? என்று யாராவது கேட்டால் நிறைய உண்டே. எல்லாக் குழந்தைகளும் என்னுடைய குழந்தைகள்தான் என்று இப்படிப்பதில் சொல்லுவாளே தவிர, இல்லையென்று சொல்லவே மாட்டாள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, வீட்டில் அன்றாட உபயோகத்திற்குரிய எந்தப் பொருள்களுக்கும் இல்லை யென்ற சொல் புறம்பானதாகவே இருந்தது. வீட்டுக்குத் தேவைப் படக் கூடிய சாமான்களை வாங்கிவர கடைக்குச் செல்லுமுன்னர், இன்ன சாமான் இருக்கிறதா என்று கேட்பேன். அதற்கு இல்லை யென்று பதில் வராது; வாங்கிவரவேண்டும் என்ற பதில் தான் வரும்; இல்லையென்ற சொல் வாய்தவறிக்கூட வராது. இஃது என் தாயாரிடமிருந்து பெற்ற பழக்கம். மற்றும், ஒரு பொருளை விற்பது என்று சொல்லமாட்டாள்; அதனைத் தாழ்த்துவது என்று தான் சொல்லுவாள். காதுக்கோ, மனத்துக்கோ இனிமை தராத வார்த்தைகள் அவளிடமிருந்து அகன்று நின்றன. அவள் எப்பொழுதும் சிற்றெறும்புபோல் சுறுசுறுப்பா யிருப்பாள். பகல் நேரத்தில் சிறிது நேரம்கூட படுத்துத் தூங்க மாட்டாள். பெரும்பாலும் தோட்டத்திலேயே கழிப்பாள்; அல்லது எழுதுதல் படித்தல் முதலியவை களில் ஈடுபட்டிருப்பாள். செடி கொடிகளிடத்தில் அவளுக்கிருந்த பரிவை, அவள் கைபடாத காலத்தில் அவை எப்படி வாடிப்போகின்றன என்பதைக் கொண்டு உணர்ந்து கொள்ளலாம். யாரோ ஒரு ஞானி, தினந்தோறும் தன் தோட்டத்திலுள்ள ஒவ்வொரு செடியிடமும் சென்று கைகுலுக்கி விட்டு வருவானாம். அந்தச் செடிகளும், அவன் கைபட்ட மாத்திரத் தில் குலுங்கச் சிரிக்குமாம். இது கற்பனையாகச் சிலருக்குத் தோன்ற லாம். ஆனால் அன்பினாலும் ஆதரவினாலும் அணைக்கப்பட்டு வளரும் செடி கொடிகள் எவ்வளவு செழுமையாயிருக்கின்றன என்பதற்கு எங்கள் தோட்டமே ஒரு சாட்சி. ஆனால் அந்தத் தோட்டம் இப்பொழுது வாட்ட முற்றிருக்கிறது. நான் என்னதான் அவைகளைப் பரிவோடு பார்த்தாலும், என் மனைவியின் மெல்லிய கரங்கள், தங்கள் மீது படவில்லையே என்று அவை - செடி கொடிகள் - தலை குனிந்து கண்ணீர் உகுக்கின்ற மாதிரியே என் மனத்தில் படுகிறது. தோட்டத்தில் உண்டாகும் பொருள்களை, அவை கனியோ, காயோ, பூவோ எதுவாயிருந்தாலும், பிறர்க்கு வழங்குவதில் அவளுக்கு ஒரு வித திருப்தி; அலாதியான ஒரு மகிழ்ச்சி. வீட்டுக்கு வரும் பெண்டிர்களுக்கு, தன் கையால் பூத்தொடுத்துக் கொடுப்பாள்; தாம்பூலம் வழங்குவாள். வெறுங் கையோடு யாரையும் அனுப்ப மாட்டாள். அவளுடைய அன்பிலே வளர்ந்த ஜெயஸ்ரீ என்ற ஒரு குழந்தை, அவளை பூ அம்மா என்றே அழைக்கும். அந்த அழைப் பிலே அன்புத் தேன் சொட்டும்; அதைச் சுவைக்கச் சுவைக்க அவள் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கும். வீட்டிற்கு வரும் பெண்டிர்க்கு மட்டுமல்ல, விருந்தினராக யார் வந்தாலுஞ் சரி, அவர்களுக்கு உபசரிப்பதை அவள் ஒரு தனிக் கலையாகவே பயின்றிருந்தாள். வந்த விருந்திற்குக் கண்ணைக் கொடுக்க வேண்டும்; மனத்தைக் கொடுக்க வேண்டும்; உண்மையும் அன்புமுள்ள வாக்கைக் கொடுக்க வேண்டும்; பின் செல்ல வேண்டும் என்று மகாபாரதம் கூறுகிறது. இதை எழுத்துப் பிசகாமல் அனுஷ்டித்து வந்தாள் என்மனைவி. வீண் பேச்சு என்பது அவளுக்கு வேப்பங்காய். அநேக குடும்பங்களில், அதிலும் ஓரளவு பொருளாதார வசதிகள் பெற்றுள்ள குடும்பங்களில், பெண் மக்கள் பெரும்பாலும் பகற்பொழுதை, நாகரிகமற்ற சம்பாஷணை களிலும், அந்தச் சம்பாஷணைகளி லிருந்து எழும் நாணம் விட்டசிரிப்பிலும் கழிப்பதைக் கண்டு அவள் வேதனைப்படுவாள்; அவர் களுடைய அறியாமைக்கு இரங்கு வாள்; சொல்லக்கூடிய இடமா யிருந்தால், வீண் பேச்சுக்களும் வம்பு தும்புகளும் தனக்குப் பிடிப்பதில்லை யென்று நாசூக்காகச் சொல்லிக்காட்டுவாள்; வீண் பேச்சுக்களினால் விளையக்கூடிய தீமைகளை, யார் மனமும் நோகாதபடி உணர்த்துவாள். அவளுடைய இந்தச் சுபாவம், உறவினர் பலர்க்கும் தெரியும். இதனால் அவளோடு ஏதேனும் பேச வேண்டியிருந்தால் விஷயத்தைப் பேசிவிட்டுப் போய்விடுவார்கள். ஆடம்பர வாழ்க்கையை அவள் அறவே வெறுத்து வந்தாள். உடுத்துகின்ற சேலைகள், பகட்டில்லாமல் இருக்க வேண்டும்; அணி கின்ற நகைகள், ஒரு சிலவாகவும் தேவையை அனுசரித்ததாகவும் இருக்க வேண்டும். இது தான் அவள் கொள்கை. இதை உறுதியாகக் கடைப்பிடித்து வந்தாள். எங்களுடைய நாற்பத்திரண்டு வருஷகால வாழ்க்கையில், ஒரு தடவை கூட அவள் எனக்கு இன்ன மாதிரி சேலை வேண்டும்; இன்ன நகை வேண்டும் என்று கேட்டது கிடையாது. நான்தான் புடவைக் கடைக்குப் போவேன். போய், உனக்கிஷ்டமானதை வாங்கி வா என்று நான் எவ்வளவு வற்புறுத்தினாலும் போக மாட்டாள். நகைகளில் அவளுக்கு அதிக விருப்பமில்லை யென்று நான் தங்களுக்கு முந்தி ஒரு கடிதத்தில் தெரிவித்திருந்ததற்குத் தாங்கள் எழுதியிருந்த அழகான பதிலை அவள் பொன்னே போல் போற்றி னாள். தங்களுடைய அந்த அழகான வாசகத்தைத் திரும்பவும் இங்கே ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன்:- அம்மையார் அவர்கள் நகை வேண்டும், துணி வேண்டும் என ஏன் கேட்கப் போகிறார்கள்? அப்படிக் கேட்காத மனைவியார் தங்களுக்கு வாய்த்தது போல, அந்த நகைகளுக்கும் அணிகலன்க ளுக்கும் மேம்பட்ட கணவர், அம்மையார் அவர்களுக்கு வாய்த் திருக்கிறதில் அவர்கள் பெருமையடைகிறார்களல்லவா? அவள்-என் மனைவி-எவ்வளவு அகத் தூய்மையுடையவளாக இருந்தாளோ அவ்வளவு புறத்தூய்மையுடையவளாகவும் இருந்தாள். அகத்தூய்மைக்குப் புறத்தூய்மை பெரிதும் உதவி செய்கிறதென்பதில் அவளுக்கு மிகுந்த நம்பிக்கை. பண்டங்கள், பாத்திரங்கள், துணி மணிகள் ஆகிய எல்லாவற்றையும் வெகு சுத்தமாக வைத்துப் பேணி வருவாள். இங்ஙனமே வீட்டையும் அழுக்குச் சேராமல் அவ்வப் பொழுது சுத்தப்படுத்திவந்தாள். தோட்டத்திலும் அப்படியே கவனஞ் செலுத்தி வந்தாள். நோய் வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடந்த காலத்தில்கூட, தினந்தோறும் உடையையும் படுக்கையையும் மாற்றச் செய்வாள். தன்னைச் சுற்றியுள்ள யாவும் பரிசுத்தமாக இருக்கவேண்டுமென்று விரும்பு வாள். படுக்கையிலிருந்த காலங்களில் ஒரு பொழுது கூட அவளுடைய குங்குமப் பொட்டோ, கூந்தலோ கலைந்ததில்லை. எதிலும் ஆடம்பரத்தை விரும்பாத அவள் தெய்வ பக்தியிலும் ஆடம்பர மற்றவளாகவே இருந்தாள். பிறர் மெச்ச, பூஜை முதலியவை களில் ஈடுபடமாட்டாள். அவள் கொண்டிருந்த தெய்வ பக்தி ஆழ்ந்தது; அடக்கமானது. பூஜைக் கிரமங்கள் அவளுக்கு நன்றாகத் தெரியும். பூஜைக்கு வேண்டியவற்றை எடுத்து வைப்ப திலேயே அழகும் ஒழுங்கும் கலந்திருக்கும். பண்டிகை முதலிய விசேஷ நாட்களில் கோலமிடல், செம்மண்ணிடல் முதலியவை களைத் தன் கையாலேயே செய்தால்தான் அவளுக்குத் திருப்தி. விசேஷ நாட்களில் எங்கள் வீடு நாடி வருவோர், பூஜை ஏற்பாடு களையும், கோலம், செம்மண் இடப் பெற்றிருக்கும் அழகையும் பார்த்து மெச்சிவிட்டுப் போகாமலிருக்க மாட்டார்கள். பண்டிகைகளை, அவைகளின் உட்கருத்தறிந்து கொண்டாடு வாள். அந்த உட்கருத்தை மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பாள். அவள் கடைசி யாகக் கொண்டாடியது வரலட்சுமி நோன்பு. அன்று அவளே முன் அமர்ந்து பூஜை செய்தாள். அன்று மாலை கூடியிருந்த சிறுவர் சிறுமியர்க்கு அந்த நோன்பின் தத்துவத்தையும், அது கொண்டாடப்பட வேண்டிய முறையையும் விளக்கிச் சுமார் அரைமணிநேரம் பிரசங்கம் செய்தாள். கேட்டவர்கள், அவளது அறிவோடு கூடிய பக்திக்கு வியந்தார்கள். தெய்வ பக்தியைப் போல் அவளுடைய தேச பக்தியும் ஆடம்பரமற்றதாக இருந்தது. தேசீயத் திருநாட்களைத் தவறாமல் கொண்டாடுவாள். அன்று சிறு குழந்தைகளைக் கூட்டி வைத்து அவர்களுக்கு அந்தந்தத் திருநாளின் உட்கருத்தை உணர்த்தும் முறையில் சிறு பிரசங்கம் செய்வாள். அவர்களைக் கொண்டு தேசீய கீதங்களைப் பாடச் செய்வாள். அவர்களுக்குத் தின்பண்டங்கள் வழங்குவாள். காந்தியடிகளிடத்திலும் காந்தீய தத்துவத்திலும் அவளுடைய பற்று மிக அதிகம். இதைப்பற்றி நாங்கள் அடிக்கடி பேசுவோம். காந்தியடி களைப்பற்றி நான் சில நூல்கள் எழுதியிருப்பதில் அவளுக்கு மிகப் பெருமை. கடைசி நாட்களில் படுக்கையிலிருந்த போழ்து, காந்தியடிகளின் ஒரு வாசகத்தை அதாவது, தம் பக்தர் களைத் தாம் சோதிக்கும் போது, அந்தச் சோதனையைத் தாங்கக் கூடிய சக்தியையும் கடவுள் அவர்களுக்கு அளிக்கிறார் என்ற வாசகத்தை திருப்பித் திருப்பிச் சொல்லி ஆறுதலடைந்து வந்தாள். அன்புள்ள 9. கருத்தொருமித்த வாழ்க்கை தி.நகர், சென்னை 20-4-1956 எனதன்புள்ள ஸ்ரீ சொ. அவர்களுக்கு நமகாரம். நலம் பல விளைக. ஆண்களாகட்டும் பெண்களாகட்டும், சிறியவர்களா யிருக்கும்பொழுது ஏதோ ஒரு துறையில் அதிக ருசியுடையவர்களா யிருக்கிறார்கள்; அந்தத் துறையில் மேலும் மேலும் முன்னேற வேண்டு மென்ற ஆவலும் ஊக்கமும் அவர்களுக்கு நிறைய இருக் கின்றன. ஆனால் பெரியவர்களான பிறகு, அவர்களுக்கு அமைகிற சூழ்நிலையானது, அவர்களை வேறு துறைக்குத் திருப்பி விட்டு விடுகிறது. சிலருக்கு இந்த வேறு துறை, சிறுவயதில் இவர்களுக்கு எந்தத் துறையில் அதிக ருசி இருந்ததோ அந்தத் துறைக்கு நேர் மாறாகக்கூட அமைந்து விடுகிறது. அப்பொழுது முந்திய துறையில் இருந்த ருசியோ, ஆர்வமோ எல்லாம் கனவுபோல் அவர்களுக்குத் தோன்றுகிறது. சிறப்பாகப் பெண்கள் விஷயத்தில் இங்ஙனம் துறைமாற்றம் எற்படுவது அதிகம் என்றே சொல்லவேண்டும். அநேக பெண்கள் இளமைப் பருவத்தில் சாரீர சம்பத் துடையவர்களாக இருக்கிறார்கள். சங்கீதத்தில் நல்ல புலமை பெற்று, அதில் பெயரும் புகழும் பெற வேண்டுமென்று ஆசையும் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அமையும் இல்லற வாழ்க்கையானது, சங்கீதத் துறைக்கு முற்றிலும் முரணாக இருந்து விடுகிறது. சிறு வயதில் அவர்கள் கொண்டிருந்த எண்ணம், ஆவல் எல்லாம் தேய்ந்து மாய்ந்து போகின்றன. இப்படி ஓர் எண்ணம், ஆவல் எல்லாம் நமக்கு இருந்தன வாவென்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளக் கூடிய நிலைமைக்குக் கூட அவர்கள் வந்து விடுகிறார்கள். ஆண் பிள்ளைகள் அநேகருடைய கதியும் இதுதான். சிறந்த விஞ்ஞான சாதிரியாகப் புகழ் பெறவேண்டுமென்று ஆசைப் படுகிறான் ஒருவன் சிறுவயதில். அவனே பெரியவனான பிறகு, எங்கோ ஒரு காரியாலயத்தின் மூலையில் ஊழியனாக அமர்ந்து இரவு பகலாக உழைக்க வேண்டிய வனாகிவிடுகிறான். இன்னும் சில குடும்பங்களில் பார்க்கிறேன், கணவனுக்கு ஒரு துறையில் ருசி; மனைவிக்கு அதற்கு நேர்மாறான துறையில் ருசி. கணவனுக்கு சினிமா மோகம் அதிகமாயிருக்கும்; அது மனைவிக்கு அறவே பிடிக்காது. வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை உபசரித்து அனுப்புவதிலே மகிழ்ச்சி காணும் புருஷனுக்கு, காக்கைக்குக் கூட அன்னமிட மனமில்லாத மனைவி வாய்த்து விடுவாள். இத்தகைய தம்பதிகளிடம் மன ஒற்றுமை யென்பதை எப்படிக் காண முடியும்? இவர்களிருக்குமிடம் எப்பொழுதும் ஒரு போர்க்களமாகவே இருக்கும். எங்களைப் பொறுத்தமட்டில், நாங்கள் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளிலும் ஒருமனப் பட்டவர்களாகவே இருந்தோம்; கைகோத்தே நின்றோம். பிற்காலத்தில் சந்திப்பு ஏற்படுமென்று தெரியாமலே, சிறுவயதில், எனக்கு என்னவிதமான மனப்போக்கு இருந்ததோ அதே விதமான மனப்போக்கு, எனக்கு மனைவியாக வாய்க்கப்போகும் மங்களத் திற்கும் இருந்தது. இப்படி இருந்த தென்று, நாங்கள் தம்பதிகளாகச் சந்திக்கிறபோது நன்றாகத் தெரிந்தது. எங்களிருவருடைய மனமும் வெகு சுலபமாகவும் சீக்கிர மாகவும் ஒன்று பட்டதைக் கொண்டு இதனை உறுதிப்படுத்திக் கொள்ளமுடிந்தது. மற்றத் துறைகளில் எங்களுடைய மனப்போக்கு ஒரே விதமாக இருந்ததென்பது அவ்வளவு விசேஷமல்ல. ஏனென்றால், கணவனும் மனைவியுமாகக் கைகோத்துக் கொண்டுவிட்ட பிறகு, சந்தர்ப்ப வசத்தினாலோ, நிர்ப்பந்தம் காரணமாகவோ, ஒரேவிதமான மனப் போக்குடையவர்களாக ஆகிவிடவேண்டியிருக்கிறது. அநேக குடும்பங் களில் இந்த மாதிரியான மன ஒற்றுமையையே காண்கி றோம். ஆனால் நாங்கள் இருவரும், இலக்கியத் துறையில் ஒருமனப் போக்குடைய வர்களாக இருந்ததுதான் எனக்கு விசேஷமாகத் தென்படுகிறது. சிறுவயதிலிருந்து மங்களத்திற்கும் எனக்கும் படிப்பில் அதிக ருசி இருந்து வந்தது. அவளுக்கோ, எனக்கோ, பொழுது போக்குக் கான புத்தகங்கள் என்று சொல்லுகிறார்களே அந்த மாதிரியான புத்தகங்களில் சுவை ஏற்படவில்லை. அறிவை வளர்க்கக் கூடிய, இதயத்தைத் தொடக் கூடிய நூல்கள்தான் எங்களுக்குச் சுவை தந்தன. இந்தமாதிரியான நூல்களைப் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டினோம். பொழுதுபோவது கூடத் தெரியாத வகையில் இவற்றில் ஈடுபட்டோம். இதனால், ருசிபேதம் என்று சொல்லுவார் களே அது கூட எங்களுக்கு இல்லை. அதாவது, பொதுவாகப் படிக்க வேண்டுமென்பதிலே மட்டுமல்ல, எந்த மாதிரியான நூல்களைப் படிக்க வேண்டுமென்பதிலும் நாங்கள் ஒரு சுவைப்பட்டவர் களாக இருந்தோம். மன ஒருமை ஏற்பட்டது எங்களுக்குப் புதுமை யாகவோ வியப்பாகவோ தோன்றவில்லை. விவாகமாவதற்கு முந்தியே நான் ஒரு நூலாசிரியனாக அரும்பி விட்டேன். கௌரீமணி என்ற எனது முதல் புத்தகம் அப்பொழுது வெளிவந்திருந்தது. அதில், பெண்களுக்கு நல்ல முறையில் கல்வி போதிக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்திச் சொல்லி யிருந்தேன். இந்தப் பகுதியைப்படித்த என் மனைவி, பெண் கல்வியைப் பற்றி என் கருத்து யாதென்பதைத் தெரிந்துகொண்டு, மேலும் மேலும் படித்துப் பயன்பெறக்கூடிய ஒரு சூழ்நிலை தனக்கு அமைந்து விட்டதைக் கண்டு திருப்தியடைந்தாள். கௌரீமணிக்குப் பிறகு லட்சுமிநாதன் என்ற ஒரு சிறு நாடக நூல் 1915 ஆம் ஆண்டில் வெளியாயிற்று. அதில், நான் எழுத விருக்கிற சில நூல்களின் பட்டியொன்று சேர்க்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த என்மனைவி, எழுத்துப் பணியே எனது வாழ்நாள் பணியாக இருக்குமென்று ஒருவாறு ஊகித்துக் கொண்டாள். புக்ககம் போந்த பிறகு, என்னுடைய கையெழுத்துப் பிரதிகள் சில வற்றைப் பார்க்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைத்தது. அவளுடைய ஊகம் ஊர்ஜிதமடைந்தது. தான் படித்தது வீண் போகாதென்பதை யும், தனது இலக்கிய ருசிக்குத் தேவையான உணவு கிடைக்கக்கூடிய இடத்தில் வாழ்க்கைப் பட்டிருப்பதையும் கண்டுகொண்டாள்; மகிழ்ச்சியடைந்தாள். தனது மகிழ்ச்சியைச் செயல் வடிவத்தில் கொண்டு வந்து காட்டிய போதுதான், அவள் மகிழ்ச்சியடைந்தாளென்பது எனக்குத் தெரியவந்தது. விதரித்துக் கொண்டு போவானேன்? காலக்கிரமத் தில், அவள், எனது இலக்கிய முயற்சிகளுக்குத் தூண்டுகோலாகவும் ஊன்றுகோலாகவும் அமைந்து விட்டாள். இப்படி நான் சொல்வது, உங்களைத் தவிர, மற்றவர்களுக்கு ஆச்சரியமாயிருக்கலாமோ என்னவோ? ஏனென்றால், இந்த அந்தரங்கம் அநேகருக்கு, உற்றார் உறவினருக்குக்கூட தெரியாது. தெரியவேண்டுமென்று அவள் விரும்பவில்லை. தான் சிருஷ்டிக்க வேண்டுமென்று அவள் ஆவல் கொள்ளவில்லை. என் சிருஷ்டிக்குத் துணையாயிருப்பது தன் கடமையென்று கருதினாள். இந்தக் கடமையை அடக்கமாகச் செய்து வந்தாள். தனக்கு என்ன தெரியுமென்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றோ, மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்றோ அவள் விரும்பியது கிடையாது. என் மனைவிக்கு, தமிழ், சம்கிருதம், இங்கிலீஷ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நல்ல பரிச்சயம் உண்டு. தெலுங்கிலும், கன்னடத்திலும், ஹிந்தியிலும் என்னைக் காட்டிலும் நன்றாகப் பேசுவாள். ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குப் பெயர்த்துச் சொல்லுவாள். நோய்வாய்ப்பட்டு ஆபத்திரியில் படுத்துக் கொண்டிருந்த காலத்தில், அவளுடைய பலமொழி அறிவு அவளுக்குப் பெரிதும் உதவியாக நின்றது. தங்களுக்குப் பரிச்சய மில்லாத மொழியில் நோயாளிகள் சொல்வதைக் கேட்க வேண்டிய டாக்டர்களும், டாக்டர்களுக்குப் புரிகிற மொழியில் சொல்ல விரும்புகிற நோயாளிகளும், அதோ, அந்த மூலைக்கட்டிலில், தனது நோயைப் புன்சிரிப்பினால் மறைத்துக் காட்டும் அம்மாளின் உதவியை நாடுவார்கள். உடனே அந்த அம்மாள்-என் மனைவி-நோயாளிகளின் படுக்கைக்குச் சென்று, அவர்கள் சொல்வதை டாக்டர்களுக்குப் புரியும் பாஷையிலும், அப்படியே டாக்டர்கள் சொல்வதை நோயாளிகளுக்குப் புரியும் பாஷையிலும் எடுத்துக்கூறி இருவரையும் நிம்மதி பெறச் செய்வாள். இதனால், டாக்டர்கள், நர்ஸுகள், நோயாளிகள் ஆகிய சகலரும் அவளிடம் தனியான அன்பு காட்டினார்கள். ஆனால் அவர்கள் காட்டிய அன்பும், செய்த சிகிச்சைகளும் பயன்தரவில்லை. இதற்கு அவர்கள் என்ன செய்வார்கள்? அவளுக்குக் கற்பதிலே எவ்வளவு விருப்பம் இருந்ததோ அவ்வளவு விருப்பம் கற்பிப்பதிலும் இருந்தது. தனக்குத் தெரிந்ததை, யார்கேட்பினும் தயங்காது சொல்லிக் கொடுப்பாள். ரங்கூனில் நாங்கள் வசித்துக் கொண்டிருந்த போழ்து, பகல் பதினோருமணியி லிருந்து ஒரு மணி வரை, பெண்கள் பலருக்கு ஹிந்தி கற்பித்து வந்தாள். இதனால் அவளை ஹிந்தி மாமி என்றே பலரும் அழைத்தார்கள். ஹிந்தி கற்றுக் கொள்வது மிகவும் கஷ்டமென்று அதுகாறும் பயப்பட்டுக் கொண்டிருந்த தாய்மார் பலர், அவள் சொல்லிக் கொடுத்த முறையினால் பயம் நீங்கி, அந்த அகில இந்திய மொழியைச் சுலபமாகக் கற்றுக் கொண்டார்கள். ரங்கூனுக்கடுத்த பக்டோ என்ற இடத்தில் நாங்கள் வசித்துக் கொண்டிருந்தபோது, அங்கு நடைபெற்று வந்த ஆரம்பப்பள்ளியில் கௌரவ ஆசிரியையாகச் சிறிது காலம் பணியாற்றினாள் என் மனைவி. அவளிடம் பயின்ற குழந்தைகள், கல்வித்துறையில் தங்களுக்கு நல்ல அடிப்படையை அமைத்துக் கொடுத்து விட்ட தங்கள் ஆரம்ப ஆசிரியைக்கு இப்பொழுதும் நன்றி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவள் ஒரு நல்ல மேடைப் பிரசங்கி யென்பது உங்களுக்குத் தெரியுமா? அவளுடைய பேச்சில் படாடோபம், சொல்லடுக்கு முதலியன இரா. அடக்கமாகவும் நிதானமாகவும் பேசுவாள். விஷயத்தை யொட்டியே பேசுவாள். சிறிது கூட எல்லைமீறிப் போகமாட்டாள். பேசுவதற்கு முன்னர், சிறு குறிப்பு தயாரித்துக் கொள்வாள்; அதை வைத்துக் கொண்டுதான் பேசுவாள். அவள் பேச்சை நீங்கள் கேட்கவில்லை யென்று அஞ்சுகின்றேன். திறந்த வெளி அரங்கு என்று இப்பொழுது பிரமாதமாகப் பேசுகிறார்களல்லவா, இப்படிப் பட்டதோர் அரங்கை 1924 ஆம் ஆண்டில், எனது மைத்துனரும், மாண்ட்டிஸோரி கல்வி முறையில் பெரிய நிபுணருமான ஸ்ரீ பா. சு. கிருஷ்ணசாமி ஐயரும் நானும் சென்னை அடையாற்றில் அமைத்து, அதில் ஜீவபாலன் என்ற ஒரு நாடகத்தை நடத்தினோம். வாயில்லாப் பிராணிகளைப் பலிகொடுப்பதென்கிற பழக்கத்தை நிறுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன், பிரசாரத்திற்காக வென்றே இந்த நாடகம் என்னால் தயாரிக்கப்பட்டது. இதில் என் மைத்துனரும் நானும் முக்கிய நடிகர்களாகப் பங்கு கொண்டோம் இதில் என் மனைவி இசை ஆசிரியையாகப் பங்கு கொண்டாள். இதே பிரகாரம் 1931ஆம் ஆண்டில் அடையாறு பள்ளிக்கூடத்தில், நான் எழுதி, முழுதும் பெண்களே நடித்த லவ குசன் என்ற நாடகத்தில் இசை ஆசிரியை யாக இருந்ததோடு மட்டுமல்லாமல், நாடகத்துறையில் தனக் கேற்பட்டிருந்த அனுபவத்தையும் நன்கு பயன்படுத்தினாள்; நடித்த சிறுமிகளின் விசுவாசத்தையும் பள்ளி ஆசிரியர்களின் நன்மதிப்பை யும் பெற்றாள். பொதுவாக யாருக்கு எதைச் சொல்லிக் கொடுத்தாலும் அதை இங்கிதமாகவும், மனத்தில் ஆழப் பதிகின்ற முறையிலும் சொல்லிக் கொடுப்பாள். எனக்குப் புத்தகப் பைத்தியம் அதிகம். என்னுடன் உரிமை யோடு பழகுகின்ற நண்பர்கள் சிலர், என்னைப் புத்தகப் புழு என்றே அழைப்பார்கள். இப்படி ஒரு புத்தகப் புழுவாக நான் நெளிந்து கொண்டிருப்பதற்கு என் மனைவி பெரிதும் உதவியாயிருந்தாள். வீட்டில் சில சமயம் அத்தியாவசியமான பண்டங்கள் இல்லாமற் போகும். காலையில் நான் அலுவலகத்திற்குச் செல்லு முன்னர், வீட்டுக்கு இன்னின்ன பண்டங்கள் தேவை யென்று சொல்லியனுப்பு வாள். நானோ மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்புங்கால், ஏதாவதொரு புத்தகக் கடைக்குள் நுழைந்து, புதிதாக வெளி வந்திருக்கும் புத்தகங்களை, கையிலிருக்கும் பணத்திற்கு வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்வேன். பண்டத்திற்குப் பதில் புத்தகம்! இதற்காக என் மனைவி சிறிது முகத்தைச் சுளித்துக் கொள்ள வேண்டுமே; மாட்டவே மாட்டாள். இப்பொழுது இந்தப் புத்தகங் களை வாங்கத் தவறினால் பிறகு இவை அகப்படுமென்பது என்ன நிச்சயம்? வாங்கிவந்தது சரிதான் என்று சொல்லி என் பைத்தியக்காரச் செயலை மெச்சுவாள். இந்த மாதிரி பலதடவை நான் செய்திருக் கிறேன். ஒரு தடவை கூட அவள் பொறுமை இழந்தது கிடையாது. நான், அநேகமாகக் காலை நேரங்களில்தான் என் எழுத்துப் பணியில் ஈடுபடுவேன். அப்பொழுது எனக்கு வேண்டிய உபகரணங் களையெல்லாம், நான் நித்தியக் கடன்களை முடித்து வருவதற்குள் தயார் படுத்தி வைப்பாள் என் மனைவி. எந்தச் சந்தர்ப்பத்தில் எது தேவை யென்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். எழுதிக் கொண் டிருக்கும்போது இடையே பேச்சுக் கொடுக்க மாட்டாள்; வேறு யாரேனும் தெரியாமல் பேச வந்து விட்டால், அவர்களை ஜாடை யாகத் தன்னிடத்திற்கு அழைத்துக் கொண்டு விடுவாள். சுருக்கமாக, குறிப்பறிந்து நடப்பதில் அவளை யாரும் விஞ்ச முடியாது. பகல் நேரங்களில், நான் எழுதி வைத்ததைப் படிப்பாள்; தன்னால் ஏதேனும் யோசனைகள் சொல்லக்கூடியதாயிருந்தால் அவற்றைத் தயக்கமின்றிச் சொல்லுவாள்; ஆனால் தன் யோசனை களை நான் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று எதிர் பார்க்க மாட்டாள். நாங்கள் மனம் விட்டுக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம். ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் மதிப்புக் கொடுக் கின்ற முறையிலேயே பேசுவோம். எங்களுடைய இத்தகைய சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருக்கிறவர்கள் சிறிது வியப்பே அடைவார்கள். நூல்களுக்கான கையெழுத்துப் பிரதிகளை நான் சில சமயங்களில் எழுதிவிடுவேன். அவைகளை, அச்சுக் கோப்பதற்குச் சுலபமாக இருக்கும் பொருட்டு நகல் செய்வாள். எழுத்து முத்து முத்தாயிருக்கும். அச்சகத்திலிருந்து வரும் ப்ரூப்புகளைத் திருத்து வாள். கூடிய மட்டில், எழுத்துப் பிழையோ கருத்துப் பிழையோ இல்லாமல் எனது நூல்கள் வெளிவர வேண்டுமென்பதில் அதிக கண்ணோட்டம் செலுத்துவாள். எனது உடல் நிலை இடங் கொடாத சந்தர்ப்பங்களில், எனக்காகக் கடிதங்கள் எழுதுவாள்; கட்டுரைகள் எழுதுவாள். அநேக சமயங்களில் நான் சொல்லிக் கொண்டே போவேன்; அவள் எழுதிக்கொண்டே வருவாள். இப்படி எத்தனையோ விதங்களில் என்னுடைய எழுத்துப் பணிக்கு உதவி வந்தாள். அவளுக்கு நல்ல ஞாபக சக்தி உண்டு. தேவாரம், திருவாசகம், திருப்புகழ், பெரிய புராணம், கம்ப ராமாயணம் இப்படிப்பட்ட நூல்களில் அநேக செய்யுட்கள் அவளுக்கு மனப்பாடம். இவை களில் எனக்குத் தேவையானவற்றை, தேவையான போது, அவளைச் சொல்லச் செய்து நான் எழுதிக்கொள்வேன். அவள் இருக்கிற தைரியத்தில், நான் அநேக செய்யுட்களை மனப்பாடம் செய்து கொள்ளாமலே இருந்துவிட்டேன். அவள் இருந்தவரையில், எனக்கு அநேக நூல்களைப் புரட்டிப்பார்க்க வேண்டிய அவசியமில்லாம லிருந்தது. இனி என்ன செய்வேன்? என்னுடைய ஒரு நூல் வெளியாயிற்றென்றால், அதைப் பார்த்து அவள் எவ்வளவு சந்தோஷப்படுவாள் தெரியுமா? அதன் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்பாள்; மேலட்டையை எடுத்து விட்டுப் பார்ப்பாள்; என் பெயரை வாசிப்பாள்; என்னைப் பார்ப்பாள்; ஆனால் என்னைப் பாராட்ட மாட்டாள். பாராட்டினால் என் தலை கனத்து விடப்போகிறதே என்ற எண்ணம்! இன்னும் நிறைய எழுத வேண்டும்; பெயர் நிலைத்திருக்கும்படி எழுதவேண்டும் என்று இப்படிப் பொதுப்படையாகப் பேசி எனக்கு ஊக்கமளிப்பாள். என் விலாசத்திற்கு வரும் கடிதங்களைக்கூட என் அனுமதி யில்லாமல் அவள் திறக்க மாட்டாள். ஆனால் புதிதாக வெளி வந்த புத்தகம், நூல் அஞ்சல் மூலம் வருமானால் அதை, தானே முதலில் உடைத்துப் பிரித்துப் பார்ப்பாள்; பிறகு தான் என்னைப் பார்க்க விடுவாள். 1920ஆம் வருஷம் பஞ்சாப் படுகொலை என்ற என் னுடைய நூல் வெளிவந்ததும், அதை அவள் எவ்வளவு ஆவலுடன் கை நீட்டி வாங்கினாள்? எவ்வளவு பெருமையுடன் அதன் பக்கங் களைப் புரட்டிப் பார்த்தாள்? அந்தக் காட்சி என் கண் முன்னேயே நிற்கிறது. 1954ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் ஆறாந்தேதி, தமிழ் எழுத்தாளர் மகா நாட்டில் எனக்குப் பட்டயம் வழங்கப்பட்ட தல்லவா, அதைப் பெற்றுக்கொண்டு நான் இரவு பத்து மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். அதற்கு நாலைந்து நாட்களுக்கு முந்திதான் அவள் ஆபத்திரியிலிருந்து விடுதலை பெற்று வீடு வந்திருந்தாள். உடல் மிகவும் பலவீன முற்றிருந்தது. சரியானபடி சமைத்துப்போட ஆளும் இல்லை. ஒரு சிறு பெண், அரை குறையாகச் சமைத்து வைத்து விட்டு வீட்டுக்குப் போய் விட்டது. இரவு பத்து மணியாகி விட்டதால், நான் இன்னும் வீடு வந்து சேரவில்லையே என்ற ஏக்கம் அவளுக்கு. தாழ்வாரத்திலேயே என் வரவை எதிர்பார்த்திருந்தாள். நான் வந்து உள் நுழைந்தேன். வாசற் படியண்டை வந்து பட்டயத்தையும் அதன் மீதிருந்த பூமாலையையும் தலை குனிந்து வாங்கிக் கொண்டாள். உள்ளே சென்று நான் சட்டையைக் கழற்றி வைப்பதற்குள் அவசரம் அவசரமாக அந்தப் பட்டயத்தைப் பார்த்துவிட்டு, எனக்கு இலைபோட்டு அன்னம் பரிமாறினாள். பட்டயம் கிடைத்ததைப்பற்றித் தன் மகிழ்ச்சியை வெளிப்படை யாகக் காட்டிக் கொள்ளவில்லை. நான் அதிகமாகக் களைத்துப் போயிருந்ததனால் ஒன்றும் பேசாமல் படுத்துவிட்டேன். பிறகு அவள் சாவதானமாகப் பட்டயத்தைப் பார்த்து விட்டு. என் அருகில் வந்து எனது இரண்டு கைகளையும் எடுத்து தன் கண்களில் ஒற்றிக்கொண்டாள். வேறொன்றும் சொல்லவில்லை. இது தான் அவள் எனக்கு அளித்த பாராட்டு. உறவினரல்லாத வேறு யாரேனும் வந்து குழந்தைகள் எத்தனை? என்று கேட்டால், சுவர்ப் பலகையில் வரிசையாக வைத் திருக்கும் எனது நூல்களைச் சுட்டிக்காட்டி இவையே எங்கள் குழந்தைகள் என்று பெருமையோடு சொல்லுவாள். அவர்கள் முதலில் சிறிது வியப்பே அடைவார்கள். பிறகு விவரம் தெரிந்து அவளைப் பாராட்டுவார்கள். இந்தக் குழந்தைகள்தான்-நூல்கள் தான் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் என்று அவர்கள் பாராட்டுதலுக்கு அடக்கமாகப் பதில் சொல்லுவாள். உண்மையான வாசகமல்லவா? அன்புள்ள 10. சங்கற்பம் தி. நகர், சென்னை 27-4-1956 எனதன்புள்ள ஸ்ரீ சொ. அவர்களுக்கு நமகாரம். நலம் பல விளைக. எனது வாழ்க்கைக்கு வெளிச்சம் தந்து வந்த விளக்கு இன்னும் சில ஆண்டுகளேனும் எரிந்து கொண்டிருக்கு மென்று எண்ணிக் கொண்டிருந்தேன். என் எண்ணத்தில் மண் விழுந்து விட்டது. இதற்காக நான் யாரையேனும் நொந்து கொள்ள முடியுமா? என் முன் வினைப்பயனை நான் தானே அனுபவிக்க வேண்டும்? என் எண்ணம் ஈடேறவில்லையாயினும் என் மனைவியின் எண்ணம் ஈடேறி விட்டது. மஞ்சள் குங்குமத்துடன் எனக்கு முந்திக் கொண்டு விடவேண்டுமென்று அவள் பிரார்த்தித்துக் கொண்டிருந் தாள். அவளது பிரார்த்தனைக்குச் செவி சாய்த்து ஆண்டவன் அவளைத் தன்னிருப்பிடத்திற்கு அழைத்துக் கொண்டு விட்டான். மங்களமாகப் பிறந்த அவள் மங்களமாகவே போய் விட்டாள். தாங்கள் கடைசி தடவையாக அவளைப் பார்த்தபோது இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டுப் பிரிந்து போய்விடுவா ளென்று எண்ணியிருக்க மாட்டீர்கள். எவ்வளவு கணீர் கணீரென்று உங்களோடு பேசினாள்? எவ்வளவு நம்பிக்கையுடன் நீங்கள் உங்கள் அலுவலை நாடிச் சென்றீர்கள்? நீங்களென்ன, அவளுக்குச் சிகிச்சை செய்து வந்த டாக்டரும், கடைசி நேரம் வரை எவ்வளவு நம்பிக்கை யுடனிருந்தார்? ஆனால்-? இந்த ஆனால் கேள்வியை எத்தனை தடவை என் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன்? அவளும், கடைசி நாளுக்கு முந்தின நாள் வரை நம்பிக்கை யுடன் தானிருந்தாள். உடல் நோய் ஏதுமின்றிச் சில நாட்களாவது இருந்து விட்டுப் போக வேண்டுமென்ற விருப்பம் அவளுக்கு இருந்தது. ஏனென்றால், மனிதன் மூன்று விதமான எச்சங்களோடு மரிக்கக் கூடாதென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். அதாவது, கடன் எச்சம், நோய் எச்சம், பகைமை எச்சம் ஆகிய மூன்றும் இல்லாமல் உயிர் போக வேண்டுமென்பது கருத்து. இந்த உண்மையை அவள் நன்கு அறிந்திருந்தாள். இதனால் தான், நோய் எச்சமின்றிச் சில நாட்களாவது இருக்க வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாள். அந்த ஆசை நிறைவேறக்கூடிய மாதிரியான குறிகள் பலவும் கடைசி நாள் வரையில் அவளிடம் இருந்தன; நம்பிக்கையுடனிருந்தாள். கடைசி நாளுக்கு முந்தின நாள் தான், அவளது நம்பிக்கையில் சிறிது தளர்ச்சி காணப்பட்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை நேரம். வழக்கம் போல் காபி அருந்தி விட்டு, படுக்கையில் உட்கார்ந்த வண்ணம், ஜன்னல் வழியாகத் தெருவில் போகிறவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது நான் அங்குச் சென்றேன். காபி சாப்பிட்டாயா? என்று கேட்டேன். ஆச்சு; நீங்கள்? என்றாள். ஆச்சு என்றேன். சிறிது நேரம் மௌனம். பிறகு இத்தனை நாட்களாக, நான் பிழைத்து, சிறிது காலம் உயிர் வாழ்வேன் என்ற நம்பிக்கையுடனிருந்தேன். இன்று, அந்த நம்பிக்கை என்னைக் கைவிட்டுப் போய் விட்டதாக உணர்கிறேன் என்றாள். ஏன் அப்படிச் சொல்கிறாய்? ஒன்றும் நடக்காது என்று நான் சொல்லி விட்டு வெளியே வந்து விட்டேன். அப்பொழுதே என் அடி வயிற்றில் ஒரு குமுறல் ஆரம்பித்துவிட்டது. அவளோ, இப்படிச் சொன்னதற்கப்புறம் அதிகமாகப்பேசவில்லை. தன் கவனத்தை, தனது சுற்றுச் சார்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலைக்குக் கொண்டு போய்விட்டாள். இந்த நிலையில் அவள் உள்ளத்தில் என்னென்ன எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தனவோ, யாருக்குத் தெரியும்? ஆனால் அந்த எண்ணங்கள், இவ்வுலக பந்தங்களினின்று விலகி யிருந்தன வென்று நான் நிச்சயமாகச் சொல்லுவேன். இப்படிச் சொல்லுவதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறீர் களா? கடைசி நேரத்தில், அவள் நல்ல நினைவுடனேயே இருந்தாள். ஆனால் கண்கள் மூடியிருந்தன. அருகிருந்தவர்கள் உங்களிடம் ஏதேனும் சொல்ல விரும்புகிறாளோ என்னவோ? கேளுங்கள் என்று என்னைப் பார்த்துச் சொன்னார்கள். நானும் அப்படியே அவள் படுக்கையண்டை சென்று என்ன என்று கூப்பிட்டேன். -இப்படி என்ன என்று சொல்லித்தான் நான் என் மனைவியை அழைப்பது வழக்கம். - என் குரலைக் கேட்டதும் மூடியிருந்த அவள் கண்கள் திறந்தன. என்னைப் பார்த்தாள். அவ்வளவுதான். மறுபடி யும் கண்கள் மூடி விட்டன. என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. மிக மிகச் சுருங்கிய முறையில் நடைபெற்ற எனது அறுபதாவது ஆண்டு நிறைவு விழாவின் போது அவள் எவ்வளவு சுறுசுறுப்புடன் இருந்தாள்? வந்தவரை யெல்லாம் எப்படி எப்படி உபசரித்தாள்? அதற்குப்பிறகு நூற்றிருபது நாட்கள் தான் அவள் உயிரோடிருப்பாள் என்று அப்பொழுது யாராவது நினைத் திருப்பார்களா? எனது அறுபதாவது ஆண்டு நிறைவை மிக விமரிசையாக நடத்தச் செய்ய வேண்டுமென்று அவள் என்னென்னவோ திட்டங்கள் போட்டிருந்தாள். அந்தத் திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் முறையிலும், அவைகளைச் செயல்படுத்தும் வகையிலும் தாங்கள் உதவி செய்யச் சித்தமாயிருந்தீர்கள். ஆனால் எனது உடல் நிலை குறுக்கே நின்றது உங்களுடைய எண்ணங்கள், அவளுடைய திட்டங்கள் எல்லாம் மணல் வீடாகச் சரிந்து போய்விட்டன. அவள் உள்ளத்தை இது மிகவும் பாதித்து விட்டது. வாழ்க்கையில் தனக்கேற்பட்ட பெரிய ஆசாபங்கமாக இதனைக் கருதிவிட்டாள். வாழ்க்கையில் ஒருவித அசட்டை மனப்பான்மை உண்டாகி விட்டது. இதனோடு, எனது உடல்நிலையும், அவள் எதிர்பார்த்தபடி சீக்கிரத்தில் அபிவிருத்தியடையவில்லை. நான் எங்கே முந்திக் கொண்டு விடப்போகிறேனோ என்று அஞ்சினாள். இதனால் தன் உடல் பராமரிப்பு விஷயத்தில் கவனக்குறைவு காட்டி வந்தாள். என் வற்புறுத்தலுக்கிணங்க, சிகிச்சைக்கு உட்பட்டு வந்தாளேயன்றி, தன்னிச்சையாக ஏதும் செய்து கொள்ளவில்லை. நோய் வாய்ப்பட்ட நிலையிலிருந்துங்கூட எனக்குச் செய்து வந்த பணிவிடைகளை அவள் சிறிது கூடக் குறைத்துக்கொள்ள வில்லை. எனக்கு எந்தச் சமயத்தில் எது தேவை யென்பதை உணர்ந்து அந்தத் தேவையை நிறைவேற்றி வந்தாள். இதை நினைக்க நினைக்க என் உள்ளம் மெழுகாகக் கரைகிறது. அப்பொழுதெல்லாம், அவள் மரணப் படுக்கையில் கிடந்த காட்சி என் அகக்கண் முன்னே வந்து நிற்கிறது. எந்த மென்மையான கரங்களைப் பற்றிக்கொண்டு 1914ஆம் வருஷம் ஜூலை மாதம் பதின்மூன்றாந் தேதி திங்கட் கிழமை பகல், சம்சார சாகரத்தில் இறங்கினேனோ, அந்தக் கரங்கள், 1956ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் பதின் மூன்றாந்தேதி திங்கட்கிழமை பகல், என்னைத் தனிமையென்னும் பாறையிலே தவிக்க விட்டு விட்டு, என் பற்றினின்றும் விடுதலை செய்து கொண்டன. முதல் திங்கட்கிழமை யன்று அந்தக் கரங்களை நான் பற்றிய பொழுது அவை எவ்வளவு உஷ்ணமாயிருந்தன! கடைசி திங்கட் கிழமை அதே கரங்களைத் தொட்டுப் பார்க்கிறேன். ஐயோ! எப்படிச் சில்லிட்டுப் போயிருந்தன? கொதித்து வந்த என் கண்ணீரினால் அவற்றை நனைத்துப் பார்த்தேன்; சூடு ஏறவே இல்லை. ஆனால் அந்தக் கணத்திலிருந்து என் உள்ளத்தில் சூடு ஏறத் தொடங்கி விட்டது. நாற்பத்திரண்டு கால இல்லற வாழ்க்கை! திரைப்படக் காட்சிபோல் எவ்வளவு சீக்கிரத்தில் ஓடி நின்று விட்டது? வாழ்க்கை ஒரு கண்ணா மூச்சி விளையாட்டு என்று சொல்வார்கள். அஃது எவ்வளவு உண்மை யென்பதை இப்பொழுது நன்கு உணர்கிறேன். ஆனால் இந்த விளையாட்டில் நாங்கள் இருவரும் மனப்பூர்வமாகக் கலந்து கொண்டோம். இன்பங்களும் துன்பங்களும் எங்கள் வாழ்க்கைக்கு மெருகு கொடுத்தன. இரண்டையும் ஒரே மாதிரியாகக் கருதி அனுபவித்தோம். இனி? நான் தனியன். எனக்கு வாழ்க்கை யென்பதேது? நான் மூச்சு விட்டுக்கொண்டு உலவி வருவதை வாழ்க்கை யென்று கருதுவீர் களானால், அந்த வாழ்க்கை ஏற்கனவே நான் தெரிவித்துக் கொண் டிருக்கிறபடி ஒரு பாலைவனந்தான். ஆனால் அந்தப் பாலைவனத் தில் தாங்கள் ஒரு பசும் புற்றரையாக எனக்கு இருக்கிறீர்கள். அஃதெனக்குப் பெரிய ஆறுதலாயிருக்கிறது. அதனால் நான் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் இழக்கவில்லை. அப்படி இழந்து விடுவேனாகில் என் மனைவிக்குத் துரோகம் செய்தவ னாவேன். சூட்சும சரீரத்தில் இருந்துகொண்டு என்னைப் பாதுகாத்து வரும் அவள் ஏன் இப்படித் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் இழந்து விடுகிறீர்கள்? என்று கேட்பாள்; கடிந்து கொள்வாள். என்னைக் கடிந்துகொள்ள அவளுக்குப் பூரண உரிமையுண்டு. அவள் உயிரோடிருந்த போது இந்த உரிமையை அடைந்திருந்தாள். இப்பொழுது இன்னும் அதிகமாக அந்த உரிமையை உபயோகிப்பாள் என்பது நிச்சயம். என்னைப்பற்றிய கவலைதான் இனி உங்களுக்கு இல்லையே? இனி உங்கள் குறிக் கோளை நாடிச் செல்வதில் என்ன தடை? என்று கேட்பாளல்லவா? என்னுடைய குறிக்கோள்தான் அவளுடைய சங்கற்பம்; அவளுடைய சங்கற்பந்தான் என்னுடைய குறிக்கோள். அவளுடைய சங்கற்பம் இன்னதென்று இந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லிக் காட்ட விரும்புகிறேன். நான் நூறு புத்தகங்கள் எழுதி முடிக்க வேண்டும். நூறாவது புத்தகத்தை எழுதி முடித்து விட்டு, அதற்குமேல் நான் ஓய்வு கொள்ள வேண்டும். இது தான் அவள் சங்கற்பம்; எனக்கிட்டிருந்த கட்டளை. இந்தக் கட்டளையை நிறைவேற்ற முயல்வேன். ஆண்டவன் அருளும் தங்கள் அன்பும் தேவை. உண்மையில் நண்பரே! என் மனைவி இறந்து விட்டதாக என்னால் எண்ண முடியவில்லை; இருப்பதாகவே என் நினைப்பு. எங்கோ அயலூருக்குப் போயிருப்பதாகவும், திரும்பி வந்து விடுவாளென்றுமே என் மனம் கருதுகிறது. எப்பொழுதும் அவள் என்னோடு இருக்க வேண்டுமென்பது தான் என் பிரார்த்தனை. இப்பிறவியில் மட்டுமல்ல; எப்பிறவியிலும். அன்புள்ள பெண்மைக்கு இலக்கணமாக வாழ்ந்த தேவீ! எங்கள் பார்வையிலிருந்து வெகு தொலைவுக்குப் போய் விட்டாய்; அப்பொழுது சிறிது கண்ணீர் சிந்தினோம். ஆனால் எங்கள் உள்ளத்தில் குடிகொள்ள உடனே வந்து விட்டாய்; இப்பொழுது எங்கள் கண்ணீரைத் துடைத்து விட்டோம். எங்கள் உறவும் சில நினைவுகளும் பி.ஜோ.பி. பதிப்பாளர் என்ற தொடர்பு ஒரு புறமிருக்க அன்புக்குப் பாத்திரமான நண்பன் என்ற முறையிலே, அம்மையார்பற்றிய நினைவுகளை ஆசிரியர் சர்மாஜி என்னிடம் கடித வாயிலாகப் பகன்றதை முன்பகுதியில் வாசகர்களுக்கு அளித்த தோடு மட்டும் நின்றுவிடாமல், எங்கள் உறவு பற்றி விளக்க வேண்டுவதும் கடமையாகக் கொண்டு என் ஞாபகத்திற்கு எட்டியவரை சில விஷயங்களை இந்தப் பகுதியில் சொல்லியிருக்கிறேன். (அரு.சொக்கலிங்கம், பதிப்பாளர். பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்.) எங்கள் உறவும் சில நினைவுகளும் ஆசிரிய தம்பதிகளுக்கும் பிரபஞ்சஜோதி பிரசுராலயத்திற்கும் ஏற்பட்ட தொடர்பு இன்றைக்கு (1957 இல்) இருபதாண்டுகளைக் கடந்து விட்டது. ஸ்ரீ வெ. சாமிநாதசர்மா அவர்கள் இதுகாறும் எழுதிய அத்தனை நூல்களும் அம்மையார் - சர்மாஜியின் மனை வியார் - அவர்கள் பணி சேர்ந்தே முழு உருப்பெற்று வெளிவந்திருக் கின்றன. இதுவரை பி.ஜோ.பிக்குக் கிடைத்துவந்த அந்த இரட்டைப் பணியில் அம்மையார் அவர்கள் மூலம் கிடைத்து வந்த பணியை ஆண்டவன் திரும்ப எடுத்துக்கொண்டு விட்டான். சாதாரணமாக ஓர் ஆசிரியருக்கும் பதிப்பாளருக்கும், ஆசிரியர் எழுதிக்கொடுக்கும் புத்தகம் வெளியாகும் வரை, அல்லது அந்தப்புத்தகம் விற்பனை யாகும் வரை உறவு நீடித்திருப்பது வழக்கம். அந்தப்புத்தகத்தின் மறு பதிப்புக்கூட அந்தப் பதிப்பகத்தி லிருந்து வெளிவருமென்ற நம்பிக்கை கிடையாது. அது, ஆசிரியர் விருப்பத்தை அல்லது பதிப்பாளர் விருப்பத்தைப் பொறுத்ததாக இருக்கும். அதாவது ஒரே ஆசிரியரின் நூல்கள் ஒரே பதிப்பகத்திலிருந்து வெளிவருமென்ற நியமம் கிடையாது. எங்கள் ஆசிரியருக்கும் எங்களுக்கும் ஏற்பட்டுள்ள உறவு அத்தன்மை வாய்ந்ததல்ல. சர்மாஜியின் நூல்களை வெளியிடுவதற் கென்றே ஏற்படுத்தப்பட்ட தாபனந்தான் பி.ஜோ.பி. என்பது வாசகர் களறிந்ததே. அதன் இருபது வருட வளர்ச்சியில், சர்மாஜியின் நூல்களைத் தவிர வேறு எந்த ஆசிரியர் நூல்களையும் பிரசுரித்தது கிடையாது. அப்படி வேறு ஆசிரியர் நூல்களைப் பிரசுரிப்பதாக இருந்தால், அந்த ஆசிரியர், சர்மாஜியின் தனி மதிப்புக்குரியவராக இருக்கவேண்டும். சர்மாஜியின் சம்மதத்தின் பேரில்தான் அந்த நூல்களும் பிரசுரிக்கப்படும். இதுவே எங்கள் சங்கற்பம். சர்மாஜி யின் நூல்களைத் தமிழரிடையே பரப்பி, தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்ற கருத்தோடு இந்தப் பிணைப்பு எங்களுக்குள் ஏற்பட்டது. இந்தப் பிணைப்பு வாசகர்களின் அன்பைப்பெறப் பெற மேலும் மேலும் வலுத்துக் கொண்டு வருகிறது. அம்மையார் அவர்கள் இரண்டு வருடங்கள் வரை தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு ஓயாத சிகிச்சைக்குள்ளாகி உடல் மெலிந்து வந்தார்கள். அந்தச் சமயத்திலும் அவர்களின் மாறாத தமிழ்ப்பக்தி தளிர்விட்டுக் கொண்டே இருந்தது. அம்மையார் உடம்பு சீர்பட வேண்டி ஔடதப் பிரயோகங்கள் குறைவர நடந்து கொண்டுதான் வந்தன. சில சமயம் அவர்கள் உடம்பின் உபாதை குறைந்து அவர் களுக்குச் சாந்தி நிலவிய தென்றால், ஔடதங்களால் அந்தச் சாந்தி அவர்களுக்கு ஏற்படவில்லை; சர்மாஜி எழுதிய புது நூல்கள் வெளி யான சமயத்தில்தான் ஏற்பட்டது. சர்மாஜி நிறைய நூல்கள் எழுத வேண்டுமென்பது அம்மையாரின் எண்ணம். தம் உடல் கோளா றால் சர்மாஜி பாதிக்கப்பட்டு, நூல் எழுதுவதில் தடை ஏற்பட்டு விடப்படாதென்பதற்காக அதிக கவலை கொள்வார்கள். அம்மையார் ஆயுட்காலத்திற்குள் சர்மாஜி நூறு புத்தகங் களாவது எழுதி வெளி வந்துவிடவேண்டு மென்பதும், அதற்குத்தகுந்தபடி தம்மாலான பணியை அவர்களுடன் சேர்ந்து செய்யவேண்டு மென்பதும் அம்மையார் கொண்டிருந்த அவா. சர்மாஜியால் எழுதிய ஒவ்வொரு நூலும் வெளிவரும் சமயம், அம்மையார், ஒவ்வொரு குழந்தையைப் பெற்றெடுத்த சந்தோஷத்தையே அடைந்து வந்தார்கள். அம்மையார் மறைவுக்குச் சுமார் இருபது நாட்களுக்கு முந்தித்தான் வியாதி கோரரூபம் பெற்றது. படுக்கையிலிருந்த நலுங்கக் கூடப்படாது; நலுங்க முடியவுமில்லை. வேற்றூரிலிருந்த எனக்குத் தகவல் கொடுக்கப்பட்டு நான் ஓடோடியும் வந்தேன். வந்ததும், அம்மையாரின் உடல் நிலையை விசாரித்தறிந்த சில மணி நேரத்தில் நானும் சர்மாஜியும் அம்மையார் அவர்கட்குச் சாந்தி ஔடதம் தயாரிக்கத் தலைப்பட்டு விட்டோம். அந்தச் சமயம் சர்மாஜியும் பூரண திடகாத்திரத்துடனில்லை. அதற்குச் சுமார் இரண்டு மாதத்திற்கு முன்பு அவர்களும் கடுமையான வியாதியால் தாக்கப்பட்டு அப்பொழுதுதான் உடம்பு தேறிவந்து கொண் டிருந்தார்கள். இதனால் அவர்களால் புது நூல்கள் எழுத முடியவில்லை. புது நூல்கள் வெளிவந்தால் அதில் அம்மையார் அவர்கள் சாந்தி பெறுவார்கள் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். அதற்கு வழிகண்டு பிடிக்க எங்களுக்கு நேரமாகவில்லை. சர்மாஜி அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்திவந்த ஜோதி என்ற மாதப் பத்திரிகையில், சர்மாஜி எழுதிய நூற்றுக் கணக்கான கட்டுரைகள் இருந்தன. அதைப்பகுதி பகுதியாகப் பிரித்து, சில புத்தகங்களாக வெளியிடலாமென்ற எண்ணம் இடம் பெற்றது. அதை உருவப் படுத்தியதில் சுமார் பத்துப் புத்தகங்களுக்கு ஏற்றதாகக் காணப் பட்டது. அதை ஒன்றன் பின்னொன்றாக வெளியிடுவதென்றும், மறுபதிப்புக்கு வரவேண்டியவைகளையும் சேர்த்து இருபது நூல்களைச் சீக்கிரத்தில் வெளியிடுவதென்றும் திட்டத்திற்கு வந்தோம். இம் முடிவை அம்மையாரிடம் சொல்லி அப்புத்தகத் தலைப்புக்களையும் எடுத்துக்காட்டி அவை சம்பந்தமாக வர வேண்டிய பதிப்புரைகளையும் படித்துக் காட்டினோம். இந்தச் சாந்தி ஔடதம் அவர்களுக்கு ஏற்றதாகக் காணப்பட்டது. புத்தகத்தின் எண்ணிக்கையும் அவர்கள் குறிக்கோளை எட்டிப் பிடிக்க ஏற்றதாக இருந்தது. அதைக்கேட்டு அவர்கள் முகமலர்ந் தார்கள். ஆனால் அந்தப் புத்தகங்களைப் பதிப்பிப்பதற்கு நாங்கள் அடிகோலுவதற்குள் அவர்கள் மறைந்து விட்டார்கள். இப்பொழுது அந்தப் புத்தகங்கள் ஒன்றன்பின் னொன்றாக வெளிவந்து கொண் டிருப்பதானது, அவர்கள் ஆத்மா சாந்தியடைய ஏதுவாக இருக்கு மென்பதில் ஐயமில்லை. அம்மையார் அவர்கள் வியாதியுற்ற சமயம், அவர்கள் மனத்தில் மற்றொரு விஷயமும் குடி கொண்டது. அதாவது சர்மாஜி யோடு இயைந்த நாற்பத்திரண்டு வருட தாம்பத்திய வாழ்க்கையில் இருவரும் சேர்ந்து, தேசத்திற்கும், சமூகத்திற்கும், தமிழுக்கும் ஆற்றிய பணிகளையும், சர்மாஜியின் குண சித்திரங்களையும் தாமோ அல்லது வேறு யாரோ சுருக்கமாகவாவது எழுதி வெளிவந்தால் நல்லதென்று எண்ணினார்கள். அதற்காக அவர்கள் ஆபத்திரியில் படுத்தபடுக்கையாகக் கிடக்கும் பொழுது சிலகுறிப்புக்களையும் தம் கைப்படவே தயாரித்து வைத்திருந்தார்கள். அதை அவர்கள் எம்மிடம் காட்டிய பொழுது, அவர்களையே அந்தப் பணியைச் செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளத்தான் ஆசை ஏற்பட்டது. அதற்குத்தகுந்த திடகாத்திரம் அவர் களிடம் அந்தச்சமயம் இல்லை. கடைசி வரையும் அது இல்லாமலே போய்விட்டது. அதை யார் பூர்த்தி செய்வதென்பதுதான் யோசனையாக இருந்தது. அம்மையா ரின் பிரிவாற்றாமை குறித்து எழுத நேர்ந்த கடிதங்களடங்கிய இந்த நூல், அம்மையாரின் எண்ணத்தை ஓரளவு பிரதிபலிப்பதால் அவர்களின் முதல் சிராத்த தினத்தில் (3-3-1957) இதை வெளியிட திட்டமிட்டோம். அம்மையார் தயாரித்த அந்தக் குறிப்புக்களை சமயம் வரும்போது கையாள எண்ணியுள்ளோம். படுத்த படுக்கையி லிருந்து தயாரித்த அந்தக்குறிப்புக்களில் ஒரு பாராவையும், அம்மையார் திடமாக இருந்த காலத்தில் எழுதிய பகுதியில் ஒரு பாராவையும், அம்மையார் கையெழுத்தை வாசகர்கள் அறியும் பொருட்டு, அப்படியே பிளாக் செய்து இதில் இணைத்திருக் கிறோம். திடமான காலத்துக் கையெழுத்து எவ்வளவு முத்து முத்தாகத் தோன்றுகிறது, நோய் கண்டு படுக்கையில் எழுதிய கையெழுத்து எவ்வளவு உருமாறிப் போயிருக்கிறதென்பது நமக்குப் புலப்படுவதோடு, ரேடியம் சிகிச்சை அம்மையாரை எவ்வாறு நோகவைத்தது என்பதையும் அவர்கள் குறிப்புக் காட்டுகிறது. படுத்த படுக்கையில் எழுதிய கையெழுத்து திடமான காலத்தில் எழுதிய கையெழுத்து இப்பொழுதோ மனிதன் மிகவும் வளர்ச்சியடைந்திருக் கிறான். நாகரிகம் என்ற பெயரால் அவனுடைய வாழ்க்கையில் அநேக மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. விஞ்ஞான சாதிர மானது, அவனை வெகு வேகமாக முன்னே தள்ளிக்கொண்டு செல்கிறது. அவனுடைய அன்றாட வாழ்க்கை யென்னும் வலையோ, மிகவும் நெருக்கமாகப் பின்னப்பட்டு வருகிறது. இந்த நிலைமையில் அவன், நான் என் மட்டுக்கும் அல்லது என்கையே எனக்குதவி என்று சொல்லிக்கொண்டிருந்தால் அது நடைபெறுகிற காரியமா? சர்மாஜி தம்பதிகளின் வாழ்க்கை; இயற்கையோடியைந்தது; மிகச் சிக்கனமானது. அப்படிப்பட்ட வாழ்க்கையை அவர்கள் கண்டிப்பாக அனுஷ்டித்து வந்தார்கள். அவர்கள், தங்கள் தேவையை, தங்களை மிஞ்சி விடாதபடியே ஆக்கிக் கொண்டிருந்தார்கள். போதுமென்ற மனமே பொன்மனம் என்றபடி, படாடோபமற்ற அவர்களின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டாகவே திகழ்ந்தது. உணவும் சரி, உடுக்கையும் சரி, எளிய முறையில் அமைத்துக் கொண்டு, யுத்தகாலமானாலும் சமாதான காலமானாலும் ஒரே மாதிரியாக வாழ்ந்து வந்ததால், அவர்களுக்கு வாழ்க்கை ஒரு பாரமாகத் தோன்றியதில்லை. உழைப்பே அவர்கள் தொழில். எழுதாத நாளோ படிக்காத நாளோ அவர்களுக்கில்லா தொழிந்தது. அந்த இறவா நாட்கள் தமிழன்னையின் புனித நாட்கள். எழுதுவதும் படிப்பதும்தான் சர்மாஜியின் முழுநேர வேலையாகையால், வீட்டிலிருந்தாலும், வெளியில் சென்றாலும், அந்த வேலை அவர்களை விட்டுப் பிரிந்த தில்லை. வெளியில் சென்றால், அவர்கள் கால்கள், அவர்களை நூல் நிலையங்களுக்கே இழுத்துச் செல்லும். எப்பொழுதாவது நிம்மதியை வேண்டி கடற்கரை செல்லு வார்கள். சிநேகிதர்கள் சர்மாஜி வீட்டுக்கு வந்து அளவளாவுவார்களே தவிர, சர்மாஜி அவர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு அதிகமாகச் செல்வது வழக்கமில்லை. இது, தன் முனைப்பினாலன்று, தன்னடக்கத்தினால் என்பதைச் சொல்லத் தேவையில்லை. சில சமயம், அழைப்புக் கிடைத்தால் குறிப்பிட்ட கூட்டங்களுக்குச் சென்று முடிந்த கணமே வீடு திரும்பிவிடுவார்கள். சென்னையில் வாசம் செய்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களில், விளம்பரப்படுத்திக் கொள்ளாத ஓர் எழுத்தாளர் இருந்தால் அது சர்மாஜி ஒருவராகத்தானிருக்க முடியும். தம்மைப்பற்றி யாரும் அறியாமலிருப்பதுவரை நல்லதென்றே எண்ணுவார்கள். பிறருக்கு எந்தவிதமான தொந்தரவும் தங்களால் ஏற்படக் கூடாதென்றே சர்மாஜி தம்பதிகள் கருதுவார்கள். பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், தற்சமயம் தன் அலுவலகத்தைப் புதுக்கோட்டையில் அமைத்துக் கொண்டிருக்கிறது. அதன் ஆசிரியர் சர்மாஜி சென்னையில் வசித்து கொண்டிருக்கிறார்கள். புத்தக சம்பந்த மான அச்சுவேலைகளும் பைண்டு வேலைகளும் புதுக்கோட்டையிலேயே நடைபெற்று வருகின்றன. ஆனால் ஒருநாள்கூட சர்மாஜியின் தொடர் பில்லாமல் எங்கள் வேலை நடக்க வழியில்லை. புரூப் அவர்கள் பார்க்காத படி அச்சேற மாட்டாது. மறு பதிப்புக்களுக்குகூட, புரூப்பை தாம் பார்க்காமல் அச்சேற்ற சர்மாஜி ஒப்பமாட்டார்கள். தம்மையும் மீறி சில சமயம் புத்தகத்தில் ஏற்படும் அச்சுப்பிழைகள் பற்றி எண்ணி எண்ணி வருந்துவார்கள். கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் எழுதி விடுவ தென்ற அவர்கள் வழக்கத்தைப் போல் புரூப் பார்த்து அனுப்பு வதிலும் அவர்கள் காலந்தாழ்த்துவதில்லை. அச்சுவேலையின் நுட்பங்களை எல்லாம் சர்மாஜி அறிந்திருப் பதால் அச்சகத்திற்கு அவர்களால் சிரமம் நேர்ந்ததே இல்லை. அவர்கள் புத்தகங்களை அச்சுக்கு எடுத்துக் கொண்ட அச்சகங்கள், சர்மாஜி கடைப் பிடித்துவரும் ஒழுங்கு முறைகளைக்கண்டு அடுத்தடுத்து அவர்கள் புத்தகங்களை அச்சுக்கு எடுத்துக்கொள்ள ஆசைப்படும். அச்சகத்தில் ஏற்படும் தப்புகளின் காரணங்களை அவர்கள் அறிந்து கொள்ள முடிவதால் அதற்காக வீண் கோபப் படுவதுமில்லை. இதனால் அச்சகத்தின் முக்கிய அச்சுக் கோப்பவர்கள், சர்மாஜி புத்தகம் அச்சிட்டு வெளிவரும் வரை பயபக்தியுடன் ஊழியம் புரிவதை நாம் பார்த்திருக்கிறோம். சர்மாஜி அவர்கள் புத்தகத்தை எடுத்துக் கொண்ட அச்சகத்தின் ஆரம்ப அச்சுக் கோப்பவர்கள், சீக்கிரத்தில் பூரண அனுபவத்தை அடைந்து விடுவார்கள். அச்சகத்து நுணுக்கங்களையும் வேண்டிய புத்திமதி களையும் அவ்வப்போது சொல்லி அச்சுக் கோப்பவர்கள் திருந்து வதற்கான காரியத்தைச் செய்வதில் சர்மாஜி அவர்கள் தயங்க மாட்டார்கள். சர்மாஜி அவர்கள் ஓய்வு நாட்களைத் தவிர மற்ற நாட்களில், காலையில் எழுதுவதில் கழிப்பார்கள். பகல் பன்னிரண்டு மணியிலிருந்து இரண்டுமணி வரை சற்று கண்ணயர்வார்கள். பிறகு புரூப் திருத்தி புதுக்கோட்டைக்கு, தபாலுக்குச் சேர்ப்பதற்காகவும் வந்த கடிதங்களுக்குப் பதில் அனுப்புவதற்காகவும் மும்முரமாக முனைவார்கள். அந்த வேலைகள் முடியும் வரை அவர்கள் கவனம் வேறு பக்கம் இழுக்கப் பட்டால் மிகவும் கவலையுறுவார்கள். அந்த நியமத்தை ஒழுங்குடன் கடைப்பிடித்து வருவதால், முதல் நாள் வேலை பாக்கிப்படுவதுமில்லை; அவர்களை எதிர்பார்ப்பவர்கள் ஏமாற்றமடைவதுமில்லை. சென்னையில் சில அன்பர்கள் மாலைப்பொழுதைத் தன் சிநேகிதர்களைப் பார்க்கும் சேவைக்காக ஒதுக்கி வைக்கிறார்கள். நடந்து கொடுத்தாற்போலும், சிநேகிதர்களின் உறவைப் பெற்றாற் போலும் அந்நேரம் அவர்களுக்கு உதவுகிறது. இந்தத் தட்டமுடியாத சிநேகிதர்கள் சர்மாஜியோடு உறவாட மாலைப் பொழுதில் வந்து விடுவது வழக்கம். தம் வேலை முடிந்து விட்டால் சர்மாஜி அவர்கள் பேசுவதில் மிக உற்சாகங்காட்டுவார்கள். வேலை கையோ டிருக்கையில் எப்படி அளவளாவிப் பேசமுடியும்? விஷயம் புரிந்த சில பெரியார்கள், நோக்க மறிந்து சீக்கிரத்தில் பேச்சை முடித்துக் கொண்டு போவதுண்டு. சிலர் உட்கார்ந்து கொண்டு பேச்சைப் பொழிந்து தள்ளிக் கொண்டிருப்பார்கள். சிநேகிதர் விருப்பத்தை நிறைவேற்ற நினைத்தால் கடிதமோ, புரூப்போ நேரத்தில் தபாலுக்குச் சேராது. வேலையிலேயே முனைந்து நின்றால் சிநேகிதர்கள் நினைத்து வந்த பயனை அடைய முடியாது. இந்த தர்ம சங்கடமான நிலை நேரும் பொழுது, அம்மையாரின் உதவி சர்மாஜிக்கு தேவைப் படுவது வழக்கம். அம்மையார், வந்திருக்கும் அன்பருக்கு காப்பியோ, அல்லது அந்தச் சமயத்தில் தயாரிலிருக்கிற மோரோ அல்லது குளிர்ந்த பானமோ ஒரு டம்ளரில் கொண்டு வந்து சிநேகிதர் மத்தியில் வைத்து விட்டு, சர்மாஜி பார்த்துக் கொண்டிருக்கும் கை வேலையை எடுத்துக் கொண்டு உள்பக்கம் போய், பார்த்து முடித்து பிறகு, சர்மாஜியின் மேஜைமேல் கொண்டுவந்து வைத்து விடுவார்கள். இதனால் அன்பு கனியப்பேசி அன்பர்களை அனுப்பு வதில் சர்மாஜிக்குச் சிரமமிருப்பதில்லை. சர்மாஜி அவர்கள் எதையும் நிறுத்துப் பார்த்துப் பேசக்கூடிய வர்கள். புறங்கூறுவதிலும், கண்டவர்களை எல்லாம் தம் முன் நிறுத்தி அவர்களைப்பற்றி விமர்சனம் செய்வதிலும் சர்மாஜி விருப்பங் கொள்வ தில்லை. ஆனால் சர்மாஜியிடம் பேச வருபவர்கள் எல்லோரும் அதே பக்குவ நிலையடைந்தவர்களென்று சொல்ல முடியுமா? பேச்சு வாக்கில் பல தரப்பட்ட அபிப்பிராயங்களும் புகுந்து விடுவதுண்டு. சர்மாஜி அவைகளில் சிக்கிக்கொள்ளாமல் பக்குவமாக விலகிக்கொண்டு விடுவார்கள் அன்பர் மனங் கோணா மலும், அவர் குறிப்பிடும் மனிதரைப் பற்றிப் புறங் கூறாமலும் தப்புவதற்குச் சில சமயம் சர்மாஜி நிரம்பச் சங்கடப் படுவதுண்டு. ஆனால் அந்த நிலையிலிருந்து அறவே தப்பித்துக் கொள்ள சர்மாஜி யால் வழி காண முடிவதில்லை. உலக வழக்கத்திற்கு மாறாகச் சில சமயம் ஞானிகளால்கூட நடக்க முடிவதில்லையல்லவா? சர்மாஜி அவர்களிடம் அன்பளிப்பாகப் புத்தகங்கள் பெற வேண்டி வருகிறவர்களும் உண்டு. அவர்கள், சில சமயம் ஓரிரு புத்தகங்களை மட்டும் வாங்கிப் போகும் எண்ணத்தில் வருவ தில்லை. இதுகாறும் சர்மாஜி எழுதிய அத்தனை நூல்களும் வேண்டு மென்ற பீடிகையைப் போட்டுக் கொண்டு, தாங்கள் பதவி வகிக்கும் வாசகசாலை அல்லது கல்வி தாபனம், ஏழ்மை நிலையிலிருப்ப தாகவும், அதன் வாசகர்கள் சர்மாஜியின் நூல்களை விரும்பிப் படிப் பதில் நாட்டங் கொண்டவர்களென்றும் சொல்லி வேண்டிக் கொள்வார்கள். சர்மாஜி, பிரசுராலயத்திலிருந்து, அதுவும் தம் பார்வைக்காக வென்று இரண்டே இரண்டு பிரதிகள் பெற்றுக் கொள்வது வழக்கம். வந்து கேட்பவர்களுக்கெல்லாம் அன்பளிப் பாக அளிக்கப் போதிய புத்தகங்கள் இல்லாத நிலையில், தமது தாராளத் தன்மைக்கு அவர்களால் இடங் கொடுக்க முடிவதில்லை. ஒரு சில புத்தகங்கள் எழுதிய ஆசிரியராக இருந்தால்கூட, அன்பளிப் பாக, தமது நூல்களை எல்லாம் கொடுத்துக் கொண்டேயிருக்க முடியுமா? அவருக்கு அது பெரிதாகத்தானே தோன்றும்? எழுபது புத்தகங்களுக்கு மேல் எழுதிய ஆசிரியர், தம் புத்தகங்கள் அத்தனையையும் அன்பளிப்பாக அளிப்பது எப்படிச் சாத்திய மாகும்? மொத்தப் புத்தகங்களின் விலை மதிப்பே நூற்றுக்கணக்குக்கு அடுத்து விடுகிறதல்லவா? இதனால் விலையில் வேணுமானால் சலுகை அளித்து, அதாவது கழிவு விஷயத்தில் கொஞ்சம் தாராள மாக நடந்து கொள்ளும்படி எங்களுக்கு சர்மாஜி சிபார்சு செய் வார்கள். புத்தகம் கேட்டு வருபவர்கள் ஓர் அந்ததோடு கூடியவர் களாகவும் படித்த வகுப்பாரோடு சேர்க்கத் தகுதியுடையவர் களாகவும் இருப்பதால் இவர்களிடமிருந்து தப்புவதில் சிரமமிருப் பதில்லை. மற்றொரு சாரார் இருக்கிறார்கள். அவர்கள் யாசகம் பெறுவதற் கென்றே பயிற்சி பெற்றவர்கள். அவர்கள் அந்த துடையவர்களாகவும் தோற்றமளிப்பார்கள். அவர்களை நாம் முன்பின் பார்த்திருக்கவேண்டிய அவசியமுமில்லை. அவர்களின் முதல் வணக்கமே நம்மை இளகச் செய்துவிடும். படித்தவர்களாகக் கூட இருப்பார்கள். இருந்தாலும் அவர்கள் குறிக்கோளில் கண்டிப் புடையவர்கள். கசக்கிப் பிழிந்து விடுவார்கள். திட்டத்துடனே வரவையும் செலவையும் வைத்துக் கொண்டிருப்பவர் களாகிய சர்மாஜி கூட அவர்களிடமிருந்து தப்பமுடிவதில்லை. இப்படிப் பட்டவர்களிடம் சர்மாஜி, தம் கையிலிருக்கிற சில்லரையைக் கொண்டு வந்து கொடுத்துப் பணிவாக நமகாரம் செய்து அவர் களை அனுப்பி விடுவார்கள். பெரிய பட்டணத்தில் இந்தத் தொல்லை சகஜமாகி விட்டதால் சர்மாஜியையும் இது பாதிக்காமல் விடுவதில்லை. எங்கள் பிரசுராலயத்தில், எம்மாதிரி நூல்கள் வெளிவர வேண்டுமெனச் சில திட்டங்களை ஏற்படுத்திக்கொண்டு அதற் கொப்ப வெளியிட்டு வருகிறோம். அறிவுப் பசி நிறைந்த தமிழர் களுக்குப் பல துறைப்பட்ட நூல்களும் தேவைப்படுகின்றன. அதில் ஒரு சில துறையையாவது பூர்த்தி செய்யும் பாக்கியம் எமக்குக் கிடைத்தால் போதுமென்பதுதான் எங்கள் எளிய கருத்து. மேல் நாட்டு அறிஞர்களையும் வரலாறுகளையும் கொள்கை விளக்கங் களையும் எடுத்துக் காட்டுவதை நாங்கள் வழக்கமாகக் கொண் டிருக்கிறோம். எங்கள் வாசகர்கள் அதை விரும்புவதையும் நாங்க ளறிந்து வருகிறோம். எங்கள் ஆசிரியரின் ஈடுபாட்டுக்குத் தகுந்த நூல்களை வெளியிடுவதில்தான் முக்கிய கவனஞ் செலுத்தி வருகிறோமென்பது தெளிவு. ஆசிரியர் சர்மாஜி அவர்களும், ஒரு நூலை எழுதத்தலைப்பட்டால் அதில் ஈடுபாடு கொண்டு விடுவார்கள். அந்த நூலின் இலட்சிய புருஷனையோ அந்த இலட்சிய புருஷனின் தேசத்தையோ தமதாக்கிக் கொள்ளும் அளவுக்கு ஈடுபட்டு விடுவார்கள். சுருங்கச் சொன்னால் அந்த இலட்சிய புருஷனாகவோ அவனின் தேசத்தானாகவோ அந்த நூல் முடியும் வரை மாறி விடுவார்களென்று சொல்லலாம். சில சமயம், சர்மாஜி எந்தக் கொள்கையைக் கடைப்பிடிப்பவர் என்று கூட வாசகர்கள் குழம்புவதுண்டு. கொள்கைகளை விளக்கும் முறையைப் பார்த்தால் எந்தக் கொள்கையை விளக்குகிறாரோ அந்தக் கொள்கை யுடையவரென்றே தோன்றும். அவர் விளக்காத கொள்கை இனி இல்லையே? அதனால் அத்தனை கொள்கை களையுமா அவர் கடைப் பிடித்து வருகிறார்? இல்லை. எதையும் ஆசிரியர் அனுபவித்தால்தான் எழுத முடியும். அந்தமாதிரி, ஆசிரியர்கள் அனுபவித்து எழுதும் நூல்கள்தான் நிரந்தர தானம் பெறமுடியும். அந்தச் சித்தாந்தத்தைக் கடைப் பிடிப்பதில், ஓர் ஒழுங்கை சர்மாஜி வைத்துக்கொண்டிருக்கிறார். அதில் தாம் அனுபவித்து திளைத்து விடுவதால் அந்நற்பண்பு சர்மாஜியைப் பற்றிக் கொண்டு விடுகிறது; அதில் படிந்து விடுகிறார்கள். நூலுக் குள்ள மதிப்புக்குத் தகுந்த பயபக்தியோடு ஒவ்வொரு நூலையும் எழுதி முடிக்கிறார்கள். அது முடிவுறாமல் பாதியில் நின்று விடப்படாதென்பது அவர்களுக்கு எப்பொழுதும் ஏக்கமாகவே இருக்கும். அவர்களுக்கு விரோதியாக இருப்பது நோய் ஒன்றே. நோயிலிருந்து மீண்டு எழும் பொழுது, புதிய புத்தகம் ஒன்று வெளியாவது வழக்கமாகவே போய் விட்டதால், நோயும் புத்தகம் எழுதுவதற்கு நிரந்தர தடையாக சர்மாஜிக்கு இருந்ததில்லை. கார்ல் மார்க் வாழ்க்கையை எழுதும்பொழுது அவர்களின் கால்கள் மரணையை இழந்த நிலையிலிருந்தன. அதைப் பொருட்படுத்தாமலே எழுதி முடித்தார்கள். பிளேட்டோவின் அரசியலை இரு கூறாகப் பிரித்து, முதல் பாகம் இரங்கூனில் வெளிவந்தது. அதை அடுத்து இரண்டாவது பாகத்தைத் தொடங்கும் பொழுது ஜப்பானியர் இரங்கூனில் குண்டு மாரி பொழியத் தலைப்பட்டார்கள். மக்களின் உயிர் ஒவ்வொரு நிமிடமும் ஊசலாடிக் கொண்டிருந்தது. ஆள் பதுங்கிக்குழியில் இன்ன நேரமென்றில்லாமல் பதுங்கிக்கொள்ளும் நிலையிலிருந்த சமயம் இரண்டாம் பாகம் மொழி பெயர்க்கப்பட்டது. குழியி லிருந்து கொண்டே சர்மாஜி மொழி பெயர்த்த பகுதிகள்தான் அதிகமென்று சொல்லலாம். நோயுஞ் சரி, மற்றச் சூழ்நிலையுஞ்சரி, சர்மாஜியின் எழுத்துவேலையைத் தடைப்படுத்திய தில்லை என்பதற் காகவே இதை எடுத்துக்காட்டியிருக்கிறோம். இந்தச் சமயத்தில் சர்மாஜி வாழும் இல்லத்தைப்பற்றிச் சொல்வது பொருத்தமாக இருக்கும். மாடமாளிகைகள் நிறைந்த மாம்பலத்தில் (தியாகராய நகர்) சர் முகமது உமான் ரோட்டில் பன்னிரண்டாவது இலக்க மிட்டதுதான் சர்மாஜியின் இல்லம்; அல்லது ஆசிரமமென்று சொல்லலாம். பின்னொரு காலத்தில் அது ஓர் அடுக்கு மாளிகையாகத் திகழலாம். இன்றுள்ள நிலையைத்தான் நாம் வருணிக்கப் புகுந்தோம். முப்பது வருடங்களுக்கு முன்பு சர்மாஜி நவ சக்தி பத்திரிகையின் தொடக்க காலத்தில் அங்குச் சேவை செய்து கொண்டிருந்தபொழுது இந்த இல்லம் தோன்றியது. அந்தப் பழைய தோற்றத்திலிருந்து இன்றுவரை இது மாறவில்லை. ஒரு சிறிய கெட்டிக் கட்டடம் அந்தக் காலத்தோதுக்குக் கட்டப் பெற்று அக்கட்டடத்தின் இருபுறங்களிலும் தாழ்வாரமாக்கப்பட்டு அத்தாழ்வாரங்களில் தென்னங்கீற்று வேயப்பட்டிருக்கிறது. சுற்றிலும் வேலியடைத்த அந்த இடத்தில் ஒரு கிணறும், கட்டடத்தை ஓர் ஓரமாக வைத்து மற்றப் பாகங்கள் முழுதும் தோட்டமாகவும், கிணற்றுக்குப் பக்கத்தில் ஒரு மாமரமும் கூடி குளிர் நிழலைத் தந்து கொண்டிருக்கிறது. வீட்டின் முன்புறத்து வேலி மரப்பட்டியலால் ஆக்கப்பட்டு மத்தியில் இரண்டு கதவுகளைக் கொண்டிருக்கிறது. இரண்டு கதவுகளையும் பிணைத்து மூடுவதற்காக ஒரு கம்பி வளையம் மாட்டி எப்பொழுதும் மூடப்பட்டிருக்கும். அந்த வளையத்தை யார் வேணுமானாலும் கழட்டிக் கொண்டு தாராள மாக உள்ளே பிரவேசிக்கலாம். கெட்டிக் கட்டடத்தில் முதல் அறை படுப்பதற்கும் படுத்துக் கொண்டே படிப்பதற்கும் ஏற்றதாக அமைக்கப்பட்டிருக்கிறது. சுவருக்குப் பக்கங்களில் அலமாரிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அலமாரிகள் ஆடை ஆபரணங்கள் வைப்பதற்காகவா வைக்கப்பட் டிருக்கின்றன? இல்லை. அலமாரிகள் முழுதையும் புத்தகங்கள் தான் நிரப்பிக் கொண்டிருக்கின்றன. சுவர் விட்டங்களிலும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். போதாத தற்கு பெஞ்சிகளிலும் நாற்காலிகளிலும் கூட புத்தகங்கள் சல்லாபமாக வீற்றிருக்கும். இரண்டாவது அறை சாமான்களின் அறையாக உபயோகப் படுகிறது. அம்மையார் அவர்கள் இருந்த காலத்தில், அவர்கள் ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கும்; சில சமயம் படிப்பதற்கும், புரூப் பார்ப்பதற்கும், சர்மாஜி எழுதும் கையெழுத்துப் பிரதிகளுக்கு மறு பிரதி எடுத்துக் கொடுப்பதற்கும் இந்த அறையே உபயோகப்பட்டு வந்தது. இதை அடுத்து மூன்றாவதாக உள்ள அறையில் தான் அம்மையாரின் சமையல் பணி நடந்து கொண்டிருக்கும். முதலாவது இரண்டாவது அறைகளினின்று தாழ்வாரத்திற்கு வர தனித்தனி வழிகளுண்டு. தாழ்வாரத்தின் கிழக்குப் பக்கம் கட்டடத்தின் உள் புகும் பகுதியாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. தெற்குப் பக்கம் தாழ்வாரம், வீட்டின் முக்கால் பங்கு அளவுக்கு நீண்டிருக்கிறது. அதன் அகலம் சுமார் ஆறு அடி இருக்கலாம். அந்தத் தாழ்வாரத்தில் சர்மாஜி அமர்ந்து எந்நேரமும் எழுத்துப் பணிசெய்து கொண் டிருப்பார்கள். எழுதிக்கொண்டிருக்கும் சர்மாஜி, தாழ்வாரத்திலிருந்த வாக்கில் உமான் ரோடில் போய்க் கொண்டிருக்கிறவர்களைப் பார்க்க முடியும். உமான் ரோடில் போகிறவர்களும் உற்று நோக்கி னால் சர்மாஜி அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பதைக் கவனிக்க முடியும். சர்மாஜியின் இந்தப் பழைய மோதர் இல்லம் மற்ற இல்லங்களுக்கு ஈடாக இல்லையானாலும் சென்னையில் நாளுக்கு நாள் மாறிக் கொண்டுவரும் நாகரிகமென்று சொல்லுவார்களே, அதைப்பற்றி கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல் இந்த வீட்டி லுள்ளவர்கள் சுபாவத் திற்கேற்ற விதம் தோற்ற மளித்துக் கொண் டிருக்கிறது. இந்த வீடு அமைந்த சமயத்தில் மாம்பலம் ஒரே திறந்த வெளியாக இருந்தது. இன்று பெரிய தனவந்தர்கள் வாழும் பகுதி யாக மாறி விட்டது. நகர பகளில் தியாகராய நகர் வரும் பகளுக் கெல்லாம் கடைசியாக நிறுத்துமிடம் சர்மாஜியின் வீட்டுக்குச் சமீபத்தில் வந்துவிட்டது. நகரத்தின் இரைச்சலுக்கும் இங்குக் குறை வில்லை. இந்த இரைச்சலுக்கு மத்தியில் தான் சர்மாஜி தம்பதிகள் தமிழ்ப் பணியைத் தொடர்ந்து செய்து வந்து கொண்டிருக்கி றார்கள். மாறுதல் வேண்டி அவர்கள் வெளியூருக்கு அதிகமாகச் செல்வதில்லை. சில சமயம் செல்ல நினைத்தாலும், அவர்கள் பணி அவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை. வீடுதான் அவர்களுக்கு வாசதலமாகவும், விசேஷ தலமாகவும், வாசகசாலையாகவும், எழுத்து மடமாகவும் விளங்குகிறது. புதிதாய் வரும் அன்பர்கள் இந்த வீட்டை ஓர் ஆசிரமம் மாதிரி காணப்படுகிறதே என்று சொல்லு வார்கள். ஆசிரமத்திற் குரிய இலட்சணங்கள் இந்த வீட்டுக்கு இயற்கை யாக அமைந்திருக்கிறது. இதில் வசித்து கொண்டிருப்பவர்களும் ஆசிரமவாசிகளைப்போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களல்லவா? சர்மாஜி தம்பதிகளுக்கு இந்த ஆசிரம வீடு போதுமானதாகவே காணப்பட்டது. கஷ்டத்தைச் சமாளிக்கும் இருதயம் பெற்றவர்க ளாகையால், அதிக சுகத்தைப்பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்ப்ப தில்லை. அது அவர்களுக்கு தேவையாகவும் தெரியவில்லை. அவர்கள் இல்லத்தில், மின்சார விளக்கு 1948-லும் தண்ணீர்க் குழாய் 1954-லும் தான் இணைக்கப்பட்டிருக்கிறதென்றால் பாருங்களேன்? படிப்ப தற்கும் எழுதுவதற்கும் பிரகாசமான வெளிச்சம் தேவையிருந்தும் அதை எவ்வளவு தூரம் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்திருக் கிறார்களென்பது புலனாகிறதல்லவா? தங்கள் வீடு ஓர் ஆசிரம மாகவோ அல்லது தமிழ் வளரும் இல்லமாகவோ திகழ வேண்டு மென்பது தான் சர்மாஜி தம்பதிகளின் எண்ணம். 1942ஆம் வருஷம் சர்மாஜி தம்பதிகள் பர்மாவிலிருந்து நடை பயணமாக வந்ததிலிருந்து இருவருடைய உடல் நிலையும் சீர்கெட்டு விட்டது. ஒன்று போனால் மற்றொன்று என்கிறமாதிரி பல நோய்களை அனுபவித்தார்கள். அந்த நோயிலும் தமிழ்ப் பணி யில் இன்பம் நுகர்ந் தார்கள். அம்மையார் மறைவுக்கு இரண்டு வருடங் கள் முன்பிருந்தே அம்மையார் உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப் பட்டு விட்டது. வைத்தியர்களிடம் காட்டியதில் புற்று நோய் என்ற பெரிய குண்டைத் தூக்கி போட்டார்கள். இந்த நோய்க்கு மருந்தே சரியானபடி கண்டு பிடிக்கப்படவில்லை. கண்டு பிடித்த வரையிலும் செல்வந்தர்களுக்கு ஏற்ற நிலையிலே இருக்கிறது. அப்படிப் பெருஞ் செலவு செய்து பார்க்கக் கூடியவர்களுக்குக்கூட திருப்திகரமாகச் சொதமானதில்லை. அதோடு இவ்வியாதி சுக வாசிகளைத்தான் பற்றியும் நிற்கிறது. இந்த நூதன வியாதி இந்தப் புண்ணியவதியையா, தேர்ந்தெடுக்க வேண்டும்? ரேடியம் சிகிச்சை அளிக்க வேண்டுமென வைத்தியர்கள் சொன்னார்கள். அதுவும் செய்து பார்க்கப்பட்டது. குணமானதாகச் சில சமயமும் உடனே பழைய நிலைமையும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. வைத்தியர்களும் புற்று நோய்தானா அல்லது வேறு காரணமா என்று மாறி மாறி சந்தேகித்து வந்தார்கள். புற்று நோய் என்ற முறையிலேதான் சிகிச்சை தொடர்ந்து நடந்து வந்தது. மேல் நாட்டு வைத்திய முறையிலிருந்து ஆயுர்வேத வைத்திய முறைக்கும் மாறிப் பார்த்தார்கள். அந்தச் சிகிச்சையிலும் குணமும் தோஷமும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருந்தது. இது நிற்க. சர்மாஜி அவர்களின் அறுபதாவது ஆண்டு நிறைவு விழாவை 1955ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் சிறப்பாகக் கொண்டாட நாங்கள் அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந் தோம். அம்மையார் உடல் நிலை சரியில்லாத நிலையில் கொண்டாட்டத்தை ஏற்றுக் கொள்ள சர்மாஜி தயங்கி னார்கள். அறுபதாவது ஆண்டு நிறைவை வியாதி தீரும் வரை எப்படித் தள்ளி வைக்க முடியும்? சில வைதிகச் சடங்குகளையாவது ஏற்றுக் கொள்ளும் படி மன்றாடினோம். கடைசியாக ஆடம்பர மன்னியில் வைதிகச் சடங்குகளை மட்டும் செய்வதென்றும் எழுத்தாளர்களுக்கு மட்டும் அறிவித்து ஒரு விருந்துபசாரம் நடத்துவதென்றும் தீர்மானத்துக்கு வந்து சர்மாஜியும் அதை ஒப்புக்கொண்டார்கள். இந்தச் சமயம் விதி, அதைச் சரியானபடி நிகழவிடாமல் வேறு பக்கம் திருப்பி விட்டது. விசேஷ தினத்திற்குச் சில நாட்களுக்கு முன்பாக சர்மாஜி படுத்த படுக்கையாகி அரை மேனியாகி விட்டார்கள். இதைக் கேட்ட மாத்திரத்தில் அடை யாறில் தம் சகோதரர் வீட்டில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்த அம்மையார், தம் பர்த்தாவைக் கவனிக்க ஓடோடியும் வந்தார்கள். தமது பராமரிப்பில்லாத குறையினால் தான் சர்மாஜி உடம்பு பாதிக்கப்பட்டது என்ற காரணத்தை மனத்தில் கொண்டு, தம்மை மறந்து அவர்களுக்குச் செய்ய வேண்டிய பணிவிடையில் முனைந்தார்கள். வியாதியின் கடுமை நீங்காத நிலையில் அறுபதாவது ஆண்டு நிறைவு நாள் வந்து கூடியது. படுக்கையிலிருந்தபடியே வைத்து சுருங்கிய முறையில் சில வைதிகச் சடங்குகள் நடை பெற்றன. ஸ்ரீ காசி க்ஷேத்திரத்திலிருந்து வந்த கங்கா தீர்த்தத்தைத் தெளித்து தான் நானம் செய்த பலனையடைய முடிந்தது. அந்த நிலையில் எழுத்தாளர்களை எப்படி வரவேற்றிருக்க முடியும்? அறுபதாவது நிறைவு தினத்தை யாருக்கும் அறிவிக்காமலே முடிக்க வேண்டியதாயிற்று. பிறகு வர வர சர்மாஜிக்குக் குணமாகிக் கொண்டு வந்தது. எழுந்து நடமாடும் நிலைக்கு சர்மாஜி மாறும் பொழுது அம்மையாரை வியாதி மறுபடி மடக்க ஆரம்பித்தது; அதில் மடங்கிய அம்மையார் மீள முடியாமலே போய் விட்டார்கள். அம்மையாரின் சகோதர சகோதரிகள் எல்லோரும் படித்த வகையைச் சேர்ந்தவர்கள். சகோதரர்கள் பொது வாழ்வையே தம் வாழ்வெனக் கொண்டவர்கள். அவர்களுக்குத் தங்கள் சகோதரி படுத்த படுக்கையாகி விட்டதையும் சகோதரி புருஷன் வியாதியி லிருந்து மீண்டு கொண்டிருப்பதையும் பார்த்து தனியாக அவர்களை விட்டு வைக்க தாளவில்லை. அடையாறிலுள்ள அவர்கள் இல்லத் திற்கு இருவரையும் கொண்டு செல்ல வேண்டுமென திட்டமிட்டு அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள். அங்கே நடந்த சிச்ருஷை களைப் பார்த்தால் ஆபத்திரியை மறந்து விடலாம். என்ன கண் காணிப்பு! என்ன ஒழுங்கு! அம்மையாரின் சகோதரரின் மனைவி யாரும் அவர்களின் மருமகளும் பயிற்சி பெற்ற தாதிமார்களைப் போல் பணியாற்றினார்கள். அந்த அமைதியான இடம் வியாதியையே ஓட்டி விடக்கூடிய அழகிய உணர்ச்சியைப் பெருக்கியது. வியாதியை மறக்க சங்கீதம் நல்ல மருந்தென்பது அம்மையாரின் எண்ணத்தில் ஊறிப்போன விஷயங்களிலொன்று. சங்கீத மயமான அந்தக் குடும்பத்தில் சங்கீதத்திற்குப் பஞ்சமில்லை. சங்கீதப் பேச்சுகள் எந்நேரமும் அடிபட்டுக் கொண்டிருக்கும். வாத்தியங்கள் காட்சிகொடுத்துக் கொண்டிருக்கும். குறிப்பாக சர்மாஜிக்கு, அவர்கள் மனைவியார் வியாதியைப்பற்றிய கவலையில்லாமலாக்கி எல்லா சிசுருஷை களையும் அம்மையாரின் சகோதரர் குடும்பத்தார் எடுத்துக் கொண்டு விட்டார்கள். இந்தச் சிசுருஷைகளின் விளைவாக அம்மையார் தெம்புடன் காணப்பட்டார்கள். அம்மையாரின் அந்திய காலத்தில் கிட்ட இருக்க பாக்கியம் பெறாத நான், அவர்கள் பிரிவதற்குப் பத்து நாள் முன்பாக அவர் களிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளச் சென்ற சமயம் ஆச்சரியமாக எழுந்து உட்கார்ந்து கொண்டு என்னுடன் கணீர் கணீர் என்று அட்சர சுத்தமாகப் பேசினார்கள். அன்று என்னோடு அளவாளவிப் பேசியது இன்றும் என் நினைவிலிருக்கிறது உபாதையை மறப்பதற்காகவோ என்னவோ, என் குடும்பத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியைப் பற்றியும் விரிவாக வினவி அநுதாபத்திற்கு அநுதாபங்காட்டி, சந்தோஷத்திற்குச் சிறப்புக் காட்டிப் பேசி னார்கள். சில நாளில் உலக பந்தத்திலிருந்து தாம் நீங்கப் போவதை மறந்து, என் தாயாரின் அந்திய காலத்தை நினைந்து வருந்தினார்கள். நான் விடைபெற்றுக் கொள்ளும் பொழுது, அதற்குப் பத்து நாட்களில் அம்மையாரை காலன் கொண்டேகி விடுவானென்று நினைத்திருந்தால் சர்மாஜிக்கு தெம்பூட்டி நான் பேசியிருக்க முடியுமா? அன்று அம்மையார் இருந்த தெளிவான தோற்றம், சர்மாஜிக்கு நான் ஆறுதல் சொல்லும் அளவுக்கு இருந்தது. அந்தத் தெளிவு அம்மையார் சகோதரரின் வீட்டின் அன்பான சூழ்நிலை காரணமாக மாறியதாகத்தான் அன்றிருந்திருக்க வேண்டும். அந்தச் சூழ்நிலையைக் கூட வியாதி பிறகு ஜெயித்து விட்டதல்லவா? இனி சர்மாஜி அவர்களுக்கும் பி. ஜோ. ã.க்F« ஏற்பட்ட உறவு பற்றிச் சிலவார்த்தைகள் சொல்ல விரும்புகிறோம். இன்று பொதுவாக நம் நாட்டில் நூல் வெளியிடும் கலை, நிரம்ப முன்னேறியிருக்கிறது. மேல் நாட்டுக் கொப்பான முறையில் வளர்ந்து வருவதாகக் கூடச் சொல்லலாம். இன்னுஞ் சில நூதன வசதிகள் நமக்கிருக்குமேயானால் மேல் நாட்டாரை நாம் எட்டிப்பிடிக்கும் அளவு வளர்ந்து விடுவோம். நாம் அனுபவித்து வரும் சுதந்திரம் நமக்கு அந்த உதவியை, படிப்படியாகச் செய்து கொடுக்கு மென்பதில் ஐயமில்லை. சுதந்திரமற்ற நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், சுமார் இருபது வருடங்களுக்கு, முன்பு எமது பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் ஆரம்பமாகும் சமயம், தமிழ் நூல்கள் வருந்தத்தக்க தோற்றத்தில்தான் வெளியாகிக் கொண்டிருந்தன. தமிழும் சரி, மற்ற இந்திய மொழிகளும் சரி, ஆதரவற்றிருந்த காலம் அது. அந்நிய அரசாங்கம் இந்திய மொழிகளின் வளர்ச்சியில் கவனஞ் செலுத்தத் தலைப்படவில்லை. இந்தியர்களாகிய நாமே மேல் நாட்டு மொழிகளில் வரும் புத்தகங்களைப் படிப்பதும், அந்தப் பாஷைகளில் பேசுவதுமே நாகரிகமென நினைத்திருந்த காலமது. அந்தச் சமயத்தில் தமிழ் நாட்டுக்கு அப்பால், கடல் கடந்த தொலைவிலுள்ள பர்மா நாட்டில் வயிற்றுப்பிழைப்புக்காக வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்கள் மத்தியில் பிரபஞ்ச ஜோதி பிரசுராலயமென்ற தமிழ் நூல்களை வெளியாகும் தாபனத்தை ஆரம்பித்தோம். அன்று அந்தச்சிறு முயற்சிக்குத் துணிவுதான் எங்களுக்குப் பின்னணியாக இருந்தது. அச்சிடும் புத்தகம் விற்குமா என்று நினைத்தகாலம் அது. இன்று கூட புத்தகம் வாங்கிப் படிக்கும் சக்தியை நாம் அடையவில்லையே? கால் நூற்றாண்டுக்கு முந்தி, தமிழ் அபிமானத்தாலோ, விஷயத் தெளிவுக் காகவோ, அதை விளக்கும் முறைக்காகவோ, நடையின் அழகுக்காகவோ தமிழர்கள் எங்கள் நூல்களை வாங்கிப் படித்து எங்களுக்கு வேண்டிய உற்சாகத்தைத் தந்திராவிட்டால் எமது இருபது வருட அனுப வத்தை எழுதும் தறுவாயில் இன்றிருந்திருக்க முடியாது. அந்தக் காலம் தமிழ்ப்புத்தக உலகில் ஓர் பொற்காலமென்றே சொல்லலாம். அதிலிருந்து தான் தமிழ் நூல் வெளிவருவதற்கும் படிப்பதற்கும் ஆதரவு வளர்ந்தது. மற்றொரு பாஷையைக் கொண்ட அந்நிய நாடாகிய பர்மா நாட்டில், தமிழ் நூல்களை வெளியாகும் வசதி குறைந்திருந்ததில் ஆச்சரிய மில்லை. தமிழ் நூல் வெளியாகும் பணியை ஏற்றுக் கொண்ட எமக்கு ஆரம்ப கஷ்டம் அதிகரித்தது. படம் போட்டுக் கொடுக்க ஓர் ஆள் கிடையாது. நல்ல பிளாக் மேக்கர் கிடையாது. தமிழ் நூல்களை அச்சிட்டுக் கொடுக்க வசதியுள்ள அச்சகமில்லை. போதிய எழுத்துக்கூட இல்லா திருந்தது. எல்லாம் நாங்களாக மாறிக் கொண்டோம். எங்கள் ஆசிரியருக் குள்ள நீண்ட கால அச்சு ஞானத்தைப் பயன்படுத்தி எல்லாவற்றையுமே உற்பத்தி செய்து கொண்டோம். ஓர் ஆங்கில தினசரியிலிருந்த ஒரு பிளாக் மேக்கர் அப்பொழுது தான் பிரிந்து சொந்தத்தொழிலை ஆரம்பித்தார். அவருக்கு நாங்கள் ஊன்று கோலாகவும் எங்களுக்கு அவர் உதவியாகவும் ஆக்கிக் கொண்டோம் படம் வரைய ஆளில்லாக் குறையை நிவர்த்திக்க போட்டோ பிளாக்குகளாகவே புத்தகங்களை நிரப்பினோம். அச்சகத்தையும் தேடிப் பிடித்துக் கொண்டோம். பெரிய புத்தகங்களை வெளியிட்ட பழக்கம் அவர்களுக்கு-அந்த அச்சகத்தாருக்கு இல்லை. அச்சுக்கோப்பவர்களுக்கும் அந்த ஞானம் அப்பொழுது ஏற்படவில்லை. அவர்களை எல்லாம் உண்டாக் கினோமென்றே சொல்லி விடலாம். புத்தகத்தை அச்சிட்டுக் கொடுப் பதற்குள்ள கூலி முதல் நாங்கள் நிர்ணயித்ததுதான். அச்சகத்தையே எங்கள் நோக்கத்திற்கு நடத்திக் கொள்ளும்படி அதன் உரிமை யாளர் விட்டு விட்டார்கள். பிறகு எங்கள் வேலை வர வரச் சுலபமாகிக் கொண்டு வந்தது. ஒவ்வோர் அடியாக எடுத்து வைத்து வேகமாக நடை போட ஆரம்பித்தோம். எங்கள் நூல்களுக்கு பர்மா வாழ் தமிழர்கள் மட்டுமல்ல, மலேயா வாழ் தமிழர்களும் பேராதரவு அளித்தார்கள். தமிழ் நாட்டிலும் புகுந்தோம். இங்கும் மதிப்பைப் பெற்றோம். தமிழ்ப் பத்திரிகைகளும் எங்கள் வெளியீடுகளுக்கு நல்ல மதிப்புரைகளை வழங்கின. தமிழறிஞர்கள் போற்றி எழுதியிருந்தார்கள். இது இப்படியிருக்கட்டும். இரங்கூனில் சூலைபகோடா என்ற பொற்கோவிலுக்கு முன்னால் விக்டோரியா மகாராணி பெயரால் நகரசபைக்குச் சொந்தமான ஒரு பூந்தோட்டமுள்ளது. அதைத் தமிழர் ராணி தோட்டமென்று சுருக்கமாக அழைப்பதுண்டு. இந்தியர்கள் நிறைந்திருக்கும் பகுதியிலிருந்ததால் விசேஷமாக இந்தியர்கள்தான் அந்தத் தோட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு வந்தார்கள். இந்தியத்தலைவர்கள் அச்சமயம் வரும்பொழுது நடக்கும் பெரிய கூட்டங்கள் எல்லாம் இத்தோட்டத்தில்தான் நடப்பது வழக்கம். மாலையில் நல்ல காற்றுக்காக குழந்தைகளும் பெண்களும் அறிஞர் களும் கூட அங்குத் தனித்தனியாக கூடி உட்கார்ந்து கொண்டு உரையாடிக் கொண்டிருப்பார்கள். அந்தத் தோட்டத்தின் ஒரு கோடியில் ஆசிரியர் சர்மாஜியும் தினம் வந்து அமருவது உண்டு. அவரைச் சுற்றி ஓர் நண்பர் குழாம் தினம் வந்து சேர்ந்து கூடிக்கொள்ளும். பல விஷயங்களைப்பற்றி மனத்திலுள்ளதை ஒவ்வொருவரும் விவரிப்பார்கள். 1935 முதல் 1939 வரை சர்வாதிகாரம் உச்ச நிலையிலிருந்ததாலும், இந்தியப் போராட்டம் குமுறிக் கொண்டிருந்ததாலும் அரசியல் பேச்சுக்களே அங்கே தினம் முக்கிய இடம்பெறும். அந்தக் கூட்டத்தில் அபிப்பிராயபேதம் நிகழ்ந்ததில்லை. அப்படி நிகழாமல் சர்மாஜி பார்த்துக்கொள்வார்கள். சர்மாஜியின் முடிவு ஏகமனதாக எப்பொழுதுமே ஏற்கப்பட்டு வந்தது. அன்பர்கள் சர்மாஜியிடம் வைத்துள்ள மதிப்பை இது எடுத்துக் காட்டியது. சில சமயம் பலத்த சிரிப்பு ஒலி எழும் அந்த நண்பர்களில் ஓரிருவர் விசித்திரமான கேள்விகளை எழுப்புவதுண்டு. அதற்குத் திடீரென சரியாக பதில் கொடுக்கும் ஓரிருவரும் இருந்தார்கள். அந்தப் பதில் சரிதானென்று படும் பொழுது தான் பலத்த சிரிப்பு ஒலி நிகழும்; கேள்வி கேட்டவரும் அதை உணர்ந்து பதிலை ஒப்புக் கொள்வது போலிருப்பார். அடுத்த பேச்சுக்கு அதே நிமிடத்தில் திரும்பி விடுவோம். இப்படியே பொழுது போவது தெரியாமல் பேசிக் கழித்த நாட்கள் அனந்தம். அந்த அருமை நண்பர்கள் இன்று வரை ஜீவிய வந்தர்களாக வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். பி.ஜோ.பி.யின் வளர்ச்சிக்கு அந்த அன்பர்கள் நிரம்ப உதவினார்கள். அவர்களோடு உரையாடிய அந்த இன்ப நினைவுகள் பற்றி இன்று நினைத்தாலும் புளகாங்கிதமடைகிறோம். அந்த நண்பர்கள் கூட்டம்தான், ஸ்ரீ வெ. சாமிநாத சர்மா அவர்களை சர்மாஜி என்றும், அவர்கள் மனைவியார் அவர்களை அம்மையார் என்றும் அழைக்கத் தொடங்கியது. அந்தச் சுருக்கப் பெயரிலே எமக்கும் ஏற்பட்ட பழக்கத்தாலே தான் எங்கள் நூல்களில் அவர்களைக் குறிப்பிடும் பொழுது சர்மாஜி என்றும் அம்மையார் என்றும் முறையே எழுதி வருகிறோம். இனி சர்மாஜி அவர்களின் முதல் சந்திப்புக்குச் செல்லுவோம். சர்மாஜி அவர்களை முதன் முதல் இரங்கூனில் நான் 1935 ஆம் ஆண்டு பிற்பகுதியில் சந்தித்தேன். அது-அந்த முதல்-சந்திப்பு என் அதிருஷ்டமும் தமிழ்த் தாயின் நல்ல திருஷ்டமும் சேர்ந்ததாகும். அப்பொழுது சர்மாஜி நாற்பத்தெட்டாவது வீதியில் ஒரு கடையை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் அமைத்துக் கொண்ட கடைக்கு பாரத பந்தர் என்று நாமமிடப்பட்டிருந்தது. அங்குக் கதர்த் துணிகளும், நல்ல தமிழ்ப் புத்தகங்களும், சில சுதேசி பண்டங்களும் கிடைக்குமென ஒரு நண்பர் மூலம் கேள்விப்பட்டேன். அவரே என்னை அங்கு அழைத்துச் சென்று சர்மாஜியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். நான் புத்தகம், கதர் துணி வாங்கும் வாடிக்கைக்காரனாகவும் சர்மாஜி புத்தக வியாபாரியாகவும் தான் அறிமுகமானோம். நான் கண்டு கொண்டிருந்த கனவுகளும் சர்மாஜி கொண்டிருந்த எண்ணங்களும் ஒன்று சேர இந்தச் சந்தர்ப்பம் உபயோகப்படப் போகிறதென்று எங்கள் இருவருக்குமே அப்பொழுது தெரியாது. நல்ல புத்தகங்கள் வாங்க வேண்டி அடிக்கடி நான் பாரத பந்தருக்குப் போகத் தலைப்பட்டேன். புத்தகப் பைத்தியமென்று என்னை நினைத்துக் கொண்டிருந்த சர்மாஜி எனக்கு வேண்டிய புத்தகங்களைச் சிபார்சு செய்து தந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சிபார்சு செய்துதரும் புத்தகங்கள் எனக்கு மிகவும் ஏற்றதாகக் காணப்பட்டன. தமிழ்நாட்டின் புத்தக வளர்ச்சியைப் பற்றி பின்னர் சர்மாஜியிடம் அறிய ஆவல் கொண்டேன். அதன் குறை நிறைகளைப் பற்றிப் பேசும் அளவுக்கு மாறி வந்து கொண் டிருந்தோம். அதுவரை அவர்கள் வெறும் புத்தக வியாபாரி என்று மட்டும்தான் நான் உணர முடிந்தது. அவர்கள் சுயசரிதம் எனக்கு அப்பொழுது தெரியாதல்லவா? அவர்களுக்கு ஒரு சுய சரிதம் இருக்கிற தென்பதைப்பற்றியும் நான் சிந்திக்கவில்லை. விளம்பர மென்பதையே விரும்பாத அவர்கள் ஒன்றையும் காட்டிக் கொள்ள வில்லை. தமிழ்ப் பத்திரிகைகளையும் திரு.வி.க.வைப் பற்றியும் பேச்சு வந்த பொழுதுதான் சர்மாஜி நவசக்தியில் தொண்டாற்றியது புலப் படலாயிற்று. நவசக்தியில் அதற்கு முன் எனக்கிருந்த ஈடுபாடு களைப்பற்றி நான் விவரித்தேன். அதிலிருந்து சர்மாஜியின் எழுதும் பாண்டித்தியம் எனக்குப் புலப்பட ஆரம்பித்தது. அவர்களிடமே அவர்களைப்பற்றிக் கிளறி அறிய ஆவலும் கொண்டேன். ஆனால் அவர்களின் அடக்கம் என்னை மிஞ்சவிடவில்லை. இப்படி பல நாட்கள் ஓடியதற்கப்புறம் அவர்கள் அதுவரை எழுதிய ஒன்பது புத்தகங்களைக் கண்ணுறும் பாக்கியம் பெற்றேன். அவர்கள் எழுதிச் சேர்த்து வைத்திருந்த சில கட்டுரைகளையும் பார்த்தேன். முதன் முதலாக அவர்களின் வசன நடைதான் என்னை எடுத்த எடுப்பில் கவர்ந்தது. அந்த நடையே என்னை ஆட்கொண்டு விட்டது. அதிலிருந்து எங்கள் நட்பு முற்ற ஆரம்பித்தது. இப்படி முதிர்ந்து வரத் தொடங்கிய காலத்திலேயே, சர்மாஜியும் அவர் மனைவியாரும் சேர்ந்து நடத்திய குடும்ப வாழ்க்கை என்னைக் கவர்ந்து விட்டது. எவ்வளவு எளிமை! எவ்வளவு அடக்கம்! நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அவர்கள் தேவை அவர்களை எப்பொழுதும் மிஞ்ச வில்லை என்பதை அப்பொழுதே கண்டு கொண்டேன். சிலர் தம் நாட்டை விட்டு அயல் நாடு சென்றால், தம் வாழ்க்கைப் போக்கையே மாற்றிக்கொண்டு விடுகிறார்கள்; அதுதான் நாகரிகமென்றும் நினைக்கிறார்கள். ஆனால் சர்மாஜி தம்பதிகளின் வாழ்க்கை, இதற்குப் புறம்பானது. எந்த விதமான சூழ் நிலையிலும் ஒரே விதமான வாழ்க்கைதான். நிற்க. சர்மாஜியிடம் பழக ஆரம்பித்ததிலிருந்து, உலக விஷயங் களைப்பற்றியும், அரசியலைப் பற்றியும், அறிவு வளர தமிழ் நாட்டாருக்கு நம்மால் என்ன செய்ய இயலும் என்ற எண்ணம் என்னை ஆட்கொண்டது. சர்மாஜியைப் போலொத்த அறிஞரைக் கொண்டு, அரசியல் நூல்களை வெளியிட வேண்டுமென்ற அளவுக்கு அந்த எண்ணம் மெதுவாக வளர்ந்தது. வியாபாரியாக மாறியிருக்கும் சர்மாஜியிடம் அந்த உதவி கிடைக்குமா என்று முதலில் தயங்கி னேன். என் தகுதியை எண்ணிப் பார்க்கையில், என் பலவீனமும் எனக்குத் தென்படாமலில்லை. பிரசுர சம்பந்தமாகச் சிறிதும் அனுப வமில்லாத எனக்கு, பிரசுரத்துக்குத் தேவையான பொருளாதாரத்தைப் பற்றியும் புரியவில்லை இப்படிச் சில நாட்கள், தயக்கத்தில் ஓடின. பிறகு சர்மாஜியிடமே துணிந்து கேட்டுவிடுவதென்றும், அவர்கள் யோசனையைப் பின்பற்றி நடப்பதென்றும் தீர்மானித்தேன். அப்படியே ஒரு நாள் அவர்களிடம் சென்று புத்தகம் எழுதித்தர லாமா என்று கேட்டேன். நன்றாக எழுதலாம் என்று அடக்கத் துடன் சொன்னார்கள். இப்படிச் சொன்னது, என்னை மட்டற்ற மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. பதிப்பாளனாக நான் மாறிவிட்டதாகக் கூட எண்ணிப் பார்த்துக்கொண்டேன். நான் முதன் முதலாக வெளியிடப்போகும் புத்தகம் சர்மாஜியின் புத்தகமாக இருக்கப் போகிறதென்று எண்ணிப் பெருமை யடைந்தேன். பிரசுராலயத்திற்கு என்ன பெயர் வைப்பது? பரந்த நோக்கத்தை வெளிப்படுத்தும் பெயராக இருக்க வேண்டுமென்று நானும் சர்மாஜியும், பல பெயர்களைப்பற்றிப் பேசினோம். சர்மாஜி பல பெயர்களை எழுதித்தந்து அதில் ஒரு பெயரைத் தெரிந்தெடுக்கு மாறு சொன்னார்கள். பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் என்னும் பெயர், விரிந்த நோக்குடையதாக எனக்குப்பட்டது. சர்மாஜியும் என் தெரிவை ஆமோதித்தார்கள். அன்று முதல் இன்று வரை தலைப்புக்களைப்பற்றி தீர்மானிக்கு முன்னர், சர்மாஜி அவர்கள் என் அபிப்பிராயத்தைக் கோருவதுண்டு. அவர்கள் பிரேரிக்கும் பல பெயர்களில் ஒன்றை நான் தெரிந்தெடுப்பதும், அதை அவர்கள் ஒப்புக்கொள்வதும் வழக்கமாகிவிட்டது. அவர்கள் என் மீது கொண்டுள்ள அன்பையும் நம்பிக்கையையுமே இது புலப்படுத்து கிறது. பிரசுராலயத்தின் பெயர் அமைக்கப்பட்டு விட்டது. முதல் வெளியீடு, எதைப்பற்றியதாக இருக்கவேண்டுமென்பதைப்பற்றி நாங்கள் தயக்கம் கொள்ளவில்லை. அன்று சர்வதேச அரசியல் அரங்கில் பிரக்கியாதி பெற்றிருந்த முஸோலினியின் வாழ்க்கை வரலாறு முதல் வெளியீடாக இருக்க வேண்டுமென்று தீர்மானித் தோம். அப்படியே 1935ஆம் ஆண்டு விஜய தசமி யன்று வெளி யிடுவதென்று திட்டமிட்டோம். புத்தக விலை ஒரு ரூபாய்க்குமேல் போகக்கூடாதென்பது என் எண்ணம். ஆனால் கையெழுத்துப் பிரதியில் விஷயம் நீண்டு விட்டது. படங்களும் அதிகமாகச் சேர்க்கப்பட வேண்டுமென்ற ஆவல் எனக்கு. கடைசியில், திட்ட மிட்ட காலங்கடந்து 23-1-36இல் டபில் கிரவுன் 1X16 அளவில் 248 பக்கங்களுடனும் ஐந்து ஆப்டோன் பிளேட்டுகளுடனும் ரூ. 1-4-0 விலையில் முதல் புத்தகமாகிய முஸோலினி வெளிவந்தது. எங்கள் திட்டம் உருவம் பெற்று ஓரளவு பலனும் கொடுக்கத் தொடங்கிய பிறகு தான் எனக்கு ஒரு வித அச்சம் உண்டாகத் தலைப் பட்டது. புத்தகத்தின் முதற் பக்கத்தில் ஆசிரியர் பெயர் பொறிக்கப் பட்டிருப்பதை எல்லோரும் அறிய முடியும். பிரசுராலயத்தின் பெயரையும் அறிந்து கொள்ள முடியும். ஆனால் பிரசுரகர்த்தர் யாரென்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டாலன்றி வேறு விதமாக அறிந்து கொள்ள முடியாது. பிரசுராலயத்தின் வார்த்தை என்ற பதிப்புரையிலும் பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் என்று மட்டும் தான் குறிப்பிட்டு வந்தோம். நல்ல வேலையாக, பதிப்பாளன் நான் என்று யாரும் கண்டு கொள்ளவில்லை, கண்டு கொள்ளாதவரையில் நல்லதே என்பது என் எண்ணம். வெளியான நூல்களைப்பற்றிப் பலர் என்னிடமே பாராட்டிப் பேசினார்கள். எங்கே நான் தான் பிரசுரகர்த்தன் என்று அனுமானித்து விடுகிறார் களோ என்று எனக்கு உள்ளூர நடுக்கம். சில சமயங்களில் நானும் நண்பர்களுடன் சேர்ந்து பிரசுரங்களைப் பாராட்டிப் பேசுவேன். என்னிடம் நெருங்கிப் பழகி யவர்கள்கூட, நான் பிரசுரகர்த்தன் என்று தெரிந்துகொள்ள வில்லை யென்று அறிந்து சிறிது திருப்தி யடைந்தேன். சர்மாஜிக்கு நான் உதவி செய்வதாகவே பலரும் கருதினார்கள். 1945 ஆம் வருடம் வரை, நான் பிரசுரகர்த்தனென்று காட்டிக்கொள்ளவில்லை. இது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. எப்பொழுதுமே, நாள்பட்ட குற்றவாளி, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதில் பயப்படுவ தில்லை யல்லவா? அதுபோல்; நான்தான் பி. ஜோ. பி.யின் பதிப்பாளன் என்று எழுத்து மூலம் காட்டிக் கொண்டபோது நண்பர்கள் மகிழ்ச்சியடைந் தார்கள். அவர்கள் மகிழ்ச்சியடைந்தது எனக்குப் பெருமையாக இருந்தது. ஏன் இப்படி பிரசுரகர்த்தன் என்று வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முதலில் தயங்கவேண்டுமென்று நண்பர் சிலர் ஆச்சரியத்துடன் கேட்கலாம். அப்படி நான் அன்று காட்டிக் கொண்டிருந்தால் என் நிலைமை வேறாயிருக்கும். பி. ஜோ. பி.யின் கதியும் வேறுவிதமாக முடிந்திருக்கும் சுருக்கமாக இப்பொழுது தெரிவித்துக் கொள்ளுகிறேன். இங்ஙனம் பி. ஜோ. பி.யின் மறை முகமான பிரசுரகர்த்தனாக இருந்த நிலையில் ஏழு நூல்கள் தொடர்ந்து வெளியாயின. இவை தவிர அந்தந்தக் காலத்து விஷயங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்ற முறையில், மின்னொளி பிரசுரம் என்ற பெயரில் பதினான்கு சிறு நூல்கள் வெளியாயின. இவை ஒவ்வொன்றின் விலை அப்பொழுது இரண்டணாதான். இந்தச் சமயத்தில், ராணிதோட்டத்து நண்பர்கள், சர்மாஜியை இன்னும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தார்கள். சர்மாஜியை ஆசிரியராகக் கொண்டு, ஒரு தினசரிப் பத்திரிக்கையோ, அது இயலாவிட்டால் வாரப் பத்திரிக்கையோ வெளியிடுவதென்று பேசப்பட்டது. ஆனால் இவை மூலம், நிரந்தரமான நன்மை ஏற்படாதென்று அறிந்தோம். மக்களின் பலதுறை அறிவை வளர்ப்பதற்கு மாதப் பத்திரிக்கையை ஏற்ற கருவி என்று துணிந்தோம். இதன் பிரகாரம், சர்மாஜியை ஆசிரியராகக் கொண்டு ஜோதி என்ற பெயரால் ஒரு மாதப் பத்திரிக்கை ஆரம்பிப்பதென்று தீர்மானித்தோம் ஜோதியின் முதல் சுடர் 1937 ஆம் வருஷம் ஆகட் மாதம், பண்டித ஜவஹர்லால் நேருவின் நல்லாசி பெற்று வெளிவந்தது. அது முதல் 1942 ஆம் வருஷம் பிப்ரவரி மாதம், ஜப்பானியப் படை இரங்கூன் வருவதற்கு முந்தின நாள் வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது அதன் பைண்டான பிரதிகள், நண்பர்கள் பலரின் பாதுகாப்பில் சேமமுறையில் வாழ்ந்து வருகின்றன. கடைசி இதழை அச்சிட்டு முடித்து விட்டு, சர்மாஜி தமது மனைவியாருடன் கால்நடையில் பர்மாவைக் கடந்து மணிப்பூர் வழியாக இந்தியா வந்து சேர்ந்தார்கள். அந்த நடைப் பயணத்தின் விளைவாக, இருவரும் உடல் நிலை கெட்டு சில ஆண்டுகள் வெகுவாகக் கஷ்டப் பட்டார்கள். இரண்டாவது உலக மகா யுத்தத் திற்குச் சிறிது முன்னாடியே, அலுவல் நிமித்தம் நான் பர்மாவை விட்டு இந்தியா வந்து விட்டேன். அப்படி நான் வந்து விட்டாலும், இரங்கூனிலிருந்த சர்மாஜியுடன் தொடர்புகள் வைத்துக் கொள் வதை நிறுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் பல நூல்களை மேலும் மேலும் எழுதி வர வேண்டுமென்று அவர்களைத் தூண்டிக் கொண்டும், பிரார்த்தனை செய்து கொண்டுமிருந்தேன். பர்மாவிலிருந்த சர்மாஜியின் நண்பர்களும் அவர்களைச் சும்மாவிட வில்லை. விடுவார்களா? சர்மாஜி அவர்களே, அறிவுச் சுடர் என்னும் தொடரில் மூன்று நூல்கள் வெளியிட்டார்கள். பிறகு நண்பர்கள் சிலர் சேர்ந்து, புது மலர்ச்சி நூற்பதிப்புக் கழகம் என்ற பெயரால் ஒரு தாபனத்தைத் தோற்றுவித்து அதன் மூலம் நான்கு நூல்கள் சர்மாஜியால் எழுதப்பட்டு வெளி வரச் செய்தார்கள். அந்த நூல்கள் யாவும், சர்மாஜியின் கையெழுத்திடப் பெற்று அன்பளிப் பாக இந்தியாவிலிருந்த எனக்கு வந்து கொண்டிருக்கும். அப்பொழுது, நான் வெளியிட்ட பெருமையைக் காட்டிலும் அதிகமான பெருமையை அடைந்து வந்தேன். நான் பர்மாவைவிட்டு இந்தியா போந்த பிறகு, வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபட வேண்டியவனானேன். திரும்பவும் நூல் வெளி யீட்டுத் தொடர்பு கொள்ள சில காலம் பிடித்தது. இடையில் நான் சில முயற்சிகளைச் செய்யாமலில்லை. ஆனால் அவை பயனற்றுப் போயின. சர்மாஜியோ, எழுதாமல் சும்மா இருக்கக்கூடியவர்களல்ல. எழுத்துப் பணியைத் தமது ஆயுட்பணியாகக் கொண்டவர்க ளன்றோ? தமிழ்ப் பண்ணையாரும் சக்தி காரியாலயத்தினரும் இந்த இடைக்காலத்தில் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள். சில நல்ல நூல்கள் வெளிவந்தன. பிறகு சர்மாஜி அவர்கள், சில மாத காலம் குமரி மலர் பதிப்பாசிரியராகத் தொண்டாற்றி வந்தார்கள். அந்தச் சமயத்தில் தான் நான், தீவிர வியாபாரப் பிடிப்பிலிருந்து விடுவித்துக் கொள்ள முடிந்தது. உடனே சர்மாஜி அவர்கள் இருக்கும் இடத்திற்கு ஓடோடி யும் வந்தேன். அவர்கள் என்னை அன்போடு அரவணைத்துக் கொண்டார்களென்பதைச் சொல்லவும் வேண்டுமோ? சர்மாஜி அவர்களின் நூல்களை மட்டுமே வெளியிடுவதென்ற சங்கற்பத்துடன் தொடங்கப் பெற்ற பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், சில கால ஓய்வுக்குப் பிறகு, அவர்கள் நூல்களையே வெளியிடுவ தென்ற சங்கற்பத்தைப் புதுப்பித்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை. 1947 ஆம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதி முதல் பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் தனது வெளியீட்டுப் பணியில் ஈடுபட ஆரம்பித்தது. தமிழன்பர்களின் ஆதரவையும் ஆசியையும் பெற்று வளர்ந்து வருகிறது; ஆதரவையும் ஆசியையும் தொடர்ந்து அளித்து வரும் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.  பிளேட்டோவின் கடிதங்கள் பிரசுராலயத்தின் வார்த்தை ஒரு காலத்தில் எல்லையிலும் செல்வாக்கிலும் விரிந்திருந்த கிரேக்க சாம்ராஜ்யம் இப்பொழுது அந்த இரண்டிலும் சுருங்கி ஒரு சிறிய நாடாகக்கிடக்கிறது. ஆனால் அந்த சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த பல துறை அறிஞர்கள் அள்ளிக்கொடுத்த கருத்துக்களும், வகுத்துக் காட்டிய கொள்கைகளும், இன்றளவும், மேலைநாட்டைமட்டு மன்று, உலகனைத்தையும் ஈர்த்து நிற்கின்றன. அந்தப் பலதுறை அறிஞர்களில் ஒருவன் பிளேட்டோ. இவன் பல நூல்களை இயற்றியிருக்கிறான். அவற்றுள் தலை சிறந்ததென்று அறிஞர்களால் போற்றப்பெறுவது ரிபப்ளிக் (Republic) என்ற நூலேயாகும். இதனைப் பல்லாண்டுகளுக்கு முன்பாகவே பிளேட் டோவின் அரசியல் என்ற பெயரால் முதன்முதலாகத் தமிழாக்கம் செய்து, நூல் வடிவாகக் கொண்டுவந்த பெருமை எமது ஆசிரியர் திரு.வெ. சாமிநாத சர்மா அவர்களைச் சார்ந்ததாகும். உலகத்துப் பல்வேறு மொழிகளுள், பிளேட்டோவின் நூல்கள் வெளிவராத மொழிகள் ஒன்றிரண்டு இருக்கலாமோ என்னவோ? பெருமைமிக்க தமிழ்த்தாயின் திருப்பாத கமலங்களில், பிளேட்டோவின் அத்தனை நூல்களையும், தமிழாக்கம் செய்து சமர்ப்பிக்க வேண்டுமென்பது எமது பேரவா. அந்த அவாவை நிறைவேற்றிக் கொள்ளுகின்ற வகையில் ஒரு சிறு முயற்சிதான் இந்த பிளேட்டோவின் கடிதங்கள் என்ற நூல். கடித இலக்கியம் என்பது, ஒரு மனிதனுடைய உள்ளத்தில் அவ்வப்பொழுது உதிக்கும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பதியவைக்கும் ஒரு சிறந்த சாதனம் என்பது அறிஞர்களின் கருத்து. பிளேட்டோவின் காலத்தில் நிலவிய அரசியல்நிலை, சமுதாயநிலை, அந்தக் காலத்தில் கடிதம் எழுதும் பாணி, பிளேட்டோவின் சான்றாண்மை, இன்ன பலவும் இந்தக் கடித நூலில் பரக்கக் காணலாம். எமது ஆசிரியரின் சரளமான மொழிபெயர்ப்பு, வாசகர் களைப் பெரிதும் கவரும் என்பதில் எமக்கு எவ்வித ஐயமுமில்லை. எமது வெளியீடுகளுக்கு ஆதரவு தந்துவரும் அன்பர்கள் அனைவருக்கும் எமது நன்றி. பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் வாசகர்களுக்கு பிளேட்டோவின் பெயரால் இதுவரை வெளிவந்திருக்கும் கடிதங்கள் மொத்தம் பதின்மூன்று. இவை தவிர அவன் வேறு சில கடிதங்களும் எழுதியிருக்கக்கூடும். ஆனால் அவை பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இந்தப் பதின்மூன்று கடிதங்களில், எல்லாமும் பிளேட்டோவி னால் எழுதப்பட்டவையா என்பதைப்பற்றி அறிஞர்களுக்குள் பலமான கருத்து வேறுபாடுகள் வெகுகாலமாக இருந்து வந்தன. ஆனால் சமீப காலத்தில் இந்த வேறுபாடுகள் நீங்கி, முதல் கடிதத்தைத் தவிர, மற்றப் பன்னிரண்டு கடிதங்களும் பிளேட்டோவி னால் எழுதப்பட்டவையே என்ற முடிவுக்குப் பெரும்பாலோரான அறிஞர்கள் வந்திருக்கிறார்கள். இந்த முதற்கடிதம் ஓர் இடைச் செருகல் என்றும், பிற்காலத்தில் யாரோ ஒருவர் எழுதி, பிளேட் டோவின் கடிதங்களோடு சேர்த்துவிட்டிருக்கக் கூடுமென்றும் இவர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். இப்படி இவர்கள் அபிப்பிராயப்படுவதற்குக் காரணம், முதற் கடிதத்திற்கும் மற்றப் பன்னிரண்டு கடிதங்களுக்கும் - குறிப்பாக ஏழாவது, எட்டாவது கடிதங்களுக்கும் - அநேக முரண்பாடுகள் காணப்படுவதுதான். தவிர, முதற்கடிதம், முதலாவது டையோனி ஸிய, பிளேட்டோவின் பிரயாணச் செலவுக்காக அவனிடம் ஒரு தொகை கொடுத்ததாகவும் அதை அவன் ஏற்றுக்கொள்ளாமல் திருப்பிவிட்டதாகவும் கூறுகிறது. ஆனால் பிளேட்டோவின் வாழ்க்கையைப்பற்றிய வரலாறுகள் எதிலும் இந்தப் பண விவகாரம் பிரதாபிக்கப்படவில்லை. இப்படி ஒரு சில காரணங்களினால், முதற் கடிதம் பிளேட்டோவினுடையதல்ல என்ற முடிவுக்கு அறிஞர்கள் வந்திருக்கிறார்கள். முதற் கடிதத்தைப் போலவே பன்னிரண்டாவது கடிதமும் சந்தேகத்திற்கிடந்தருவதாயிருக்கிறதென்பது சிலருடைய கருத்து. ஆனால் பெரும்பாலோர் இதை மறுத்து, நிச்சயமாக இது பிளேட்டோவினுடையதுதான் என்று அறுதியிட்டிருக்கின்றனர். இங்ஙனம் இந்த இரண்டு கடிதங்களைப்பற்றிச் சந்தேகமும் கருத்து வேறுபாடும் இருந்த போதிலும், பிளேட்டோவின் கடிதங் களைத் தாங்கிக்கொண்டு இதுகாறும் வெளிவந்திருக்கிற எல்லா நூல்களிலும் இவையிரண்டும் இடம் பெற்றே யிருக்கின்றன. இவ்விரண்டையும் யாரும் ஒதுக்கிவிடவில்லை. எனவே, இந்தத் தமிழாக்க நூலிலும், மள்ள ஆங்கிலப் பதிப்புக்களில் வெளிவந் திருக்கும் வரிசைப்படி, பதின்மூன்று கடிதங்களும் இடம் பெற்றிருக் கின்றன. இந்தப் பதின்மூன்று கடிதங்களும், கால வரிசைப்படியோ நிகழ்ச்சிகளின் வரிசைப்படியோ பதிப்பிக்கப்படவில்லை. அவ்வப்பொழுது அகப்பட்ட கடிதங்களை, அகப்பட்ட வரிசையில் பதிப்பித்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. பதின்மூன்று கடிதங்களில், ஏழு கடிதங்கள் ஸைரக்யூ ராஜ்ய சம்பந்தப்பட்டவை. இந்த ஏழு கடிதங்கள் மூலம், ஸைரக்யூஸின் சமுதாய வாழ்க்கை, அதனைச் சர்வாதிகாரிகளாக ஆண்ட இரண்டு டையோனிஸியகளின் மனப்போக்கு, இவர் களுடைய உறவினனான டியோனின் நண்பர்களுக்கு பிளேட்டோ வழங்கிய அறிவுரைகள் ஆகிய பலவற்றையும் ஒருவாறு அறிந்து கொள்கிறோம். மற்ற ஆறு கடிதங்கள் மூலம், பிளேட்டோவுக்கும் அவன் நண்பர்களுக்கும், இருந்த சுமுகமான உறவுமுறைகளும், சிறப்பாக, பிளேட்டோ, தன் நண்பர்களிடத்தில் கொண்டிருந்த நம்பிக்கையும், அவர்கள், தங்கள் கல்வியறிவையும் உலக அனுப வத்தையும் மற்றவர்களுடைய நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டு மென்பதில் அவன் கொண்டிருந்த ஆர்வமும் ஒருவாறு புலனா கின்றன. பதின்மூன்று கடிதங்களுள் ஏழாவது கடிதம் மிக நீண்டது: மற்றப் பன்னிரண்டு கடிதங்களையும் சேர்த்தால் எவ்வளவு நீள முடையதாயிருக்குமோ அவ்வளவு நீளமுடையதாயிருக்கிறது. எனவே இதனை ஒரு தனி நூலாகக் கொள்ளுதல் பொருந்தும். இப்படி நீளமாக இருப்பதனால் மட்டுமன்று, இதில் அடங்கியிருக்கும் விஷயங்களைக் கொண்டும் இது முக்கியத்துவம் வாய்ந்ததாயிருக் கிறது. எப்படி யென்றால், பொதுவாக சிஸிலி தீவின், சிறப்பாக ஸைரக்யூ ராஜ்யத்தின் கி.மு. ஐந்தாவது, நான்காவது நூற்றாண்டின் சரித்திரத்தை மேலோட்ட மாகவாவது தெரிந்துகொள்ள இந்தக் கடிதம் ஒரு திறவுகோல் போல் இருக்கிறது. தவிர, இந்தக் கடிதம், ஓரளவுக்கு, பிளேட்டோவின் சுயசரித மாகவும் இருக்கிறது. பிற்காலத்தில், பிளேட்டோவின் வாழ்க்கை வரலாற்றை எழுதப் புகுந்தவர்களுக்கு இந்த ஏழாவது கடிதமே முக்கிய ஆதாரமாயிருந்து வந்திருக்கிறது. தவிர, இந்த ஏழாவது கடிதம், டியோனுடைய நண்பர்களுக்கு எழுதப்பட்டபோதிலும், பொதுவாக அரசியலில் ஈடுபட்டிருக்கிற வர்கள், வாழ்க்கையை நேரிய முறையில் நடத்த விரும்புகிறவர்கள், இப்படிப் பல தரத்தவருக்கும் பொதுவாக எழுதப்பட்டதாகக் கொள்ளலாம். எல்லாரும் ஒப்புக்கொள்ளக்கூடிய, எக்காலத்திற்கும் பயன்படக்கூடிய பல உண்மைகள் இந்தக் கடிதத்தில் பொதிந்து கிடக்கின்றன. பிளேட்டோவின் அக்காடெமி என்கிற கழகத்தில் பயின்ற வர்களும் பயிலுவித்தவர்களுமான சிலர், கிரேக்க ராஜ்யங்கள் பலவற்றிலும் ஆண்டுவந்த சர்வாதிகாரிகளுக்கு, அவர்களுடைய அழைப்பின்பேரில் சென்று, அரசியலமைப்பை ஒழுங்குபடுத்திக் கொடுப்பதிலும், சட்டதிட்டங் களை நிர்மாணம் செய்து கொடுப் பதிலும் பெரிதும் உதவி புரிந்து வந்தார்கள். அரசியலில் மட்டுமல்ல, வேறு பல துறைகளிலும் இவர்களுக் கிருந்த புலமையை, சர்வாதிகாரிகள் பலர் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். இதற்கு உதாரணமாக ஐந்தாவது கடிதத்தைப் பார்க்க. இங்ஙனம் சென்றவர்கள்மூலம் கழகத்திற்கு நல்ல செல்வாக்கு ஏற்பட்டு வந்தது. இதைக் கண்டு, சிலர், பிளேட்டோவினிடம் பொறாமை கொண்டனர்; இவன்மீது பல அவதூறுகளைக் கிளப்பி விட்டனர். கழகத்திலிருந்து சென்ற பலரும் சர்வாதிகார மனப் பான்மையுடையவர் களென்றும், இவர்கள் மூலம் பிளேட்டோ, கிரேக்க ராஜ்யங்கள் பலவற்றிலும் சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தப் பார்க்கிறா னென்றும், ஸைரக்யூஸில் சர்வாதிகாரிகளாக ஆண்ட இரண்டு டையோனிஸியகளுடன் இவன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததே இதற்கு அத்தாட்சியென்றும், இப்படிப் பலவாறாகக் கூறினர். இன்னுஞ் சிலர், பிளேட்டோ ஆடம்பர வாழ்க்கை நடத்த முற்பட்டுவிட்டானென்றும், பிறர் பணத்தைத் தன் சொந்தத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளத் தயங்காதவ னென்றும் கூறத்தலைப்பட்டனர். உண்மையில், பிளேட்டோ இவைகளுக்கெல்லாம் நேர் மாறானவன். கழகத்தில் பயின்ற இவனுடைய சீடர்களில் ஒரு சிலர், தாங்கள் பெற்ற போதனைகளைச் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். அதுவும் நிச்சயமாகச் சொல்லமுடியாது. அப்படியிருந்தாலும், பிளேட்டோவை இதற்கு எப்படிப் பொறுப் பாக்கமுடியும்? வேறு சிலர், பிளேட்டோ, தன் அரசியற்கோட்பாடுகள் முதலிய வற்றை ஏட்டில் எழுதிக்காட்டுவதில் வல்லவனே தவிர, செயலில் கொண்டுவரக்கூடிய ஆற்றல் பெற்றவனில்லையென்று சொல்லி வந்தனர். பிளேட்டோவுக்கு இது மன உறுத்தலாக இருந்துவந்தது. இந்த மாதிரியான சில அவதூறுகளுக்கு மறைமுகமாகப் பதில் சொல்லுகின்ற முறையில் ஏழாவது கடிதம் அமைந்திருக்கிறது. மற்றும் இந்த ஏழாவது கடிதத்தில், பிளேட்டோவின் பலமுக உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன. ஸைரக்யூஸியர்களின் சுகபோக வாழ்க்கையைக் கண்டு வெறுப்புக்கொள்கிறான். வாக்குப் பிறழ்ந்த இரண்டாவது டையோனிஸிய மீது கோபமடைகிறான். டியோன் கொலை செய்யப்பட்டு விட்டதை அறிந்து வருத்தங்கொள்கிறான்; உருகி உருகிப் பேசுகிறான். மற்றும், டியோனிடம் இவன் கொண் டிருந்த அன்பு, அவனுடைய நல்ல தன்மையில் இவனுக்கிருந்த நம்பிக்கை, அவன், தன் போதனைகளை ஏற்று அவற்றின் பிரகாரம் நடக்கமுற்பட்டதைக் கண்டு இவன் கொண்ட மகிழ்ச்சி இப்படிப் பலவும் இந்த ஏழாவது கடிதத்தில் தலைதூக்கி நிற்கின்றன. டியோனிடம் இவன் கொண்டிருந்த ஆழ்ந்த நட்பின் காரணமாக அவன்-டியோன்-ஸைரக்யூ மீது படையெடுத்துச் சென்று இரண்டாவது டையோனிஸியஸை விரட்டியடித்த பிறகு, ஜன நாயக ஆட்சிமுறையைப் பின்பற்றாமல் சர்வாதிகார ஆட்சிமுறையை நிலைநாட்ட முற்பட்டதைக்கூட இவன் அழுத்தமாகக் கண்டிக் காமல், அவன் உயிரோடிருந்திருந்தால் நேர்மையாகவே நடந்து கொண்டிருப்பான் என்று அவனுக்குப் பரிவு காட்டுகின்ற வகையில் பேசுகிறான். அற்றம் மறைக்கும் பெருமை, சிறுமை குற்றமே கூறிவிடும் என்ற குறட்பா இங்கு நினைவு கொள்ளுதற்குரியது. இங்ஙனம் இவன் டியோனுக்குப் பரிந்து பேசினாலும், இரண்டாவது டையோனிஸியமீது அந்த டியோன் படையெடுக்க முற்பட்டு இவனுடைய உதவியை நாடுகிறபோது, இருவருக்கும்-டியோனுக்கும் இரண்டாவது டையோனிஸியஸுக்கும்-சமரஸம் ஏற்படுவதற்குத்தான் தான் உதவியாயிருக்கமுடியுமே தவிர, சண்டை ஏற்படுவதற்கு உதவியாயிருக்க முடியாதென்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டான். இவனுடைய நேர்மைக்கு இதைக்காட்டிலும் வேறு சான்று வேண்டு வதில்லையன்றோ? இந்த ஏழாவது கடிதத்தை எழுதி முடிக்க, பிளேட்டோவுக்கு நான்கு மாதம் பிடித்ததென்பர் சிலர். இதனை ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது. முதுமையானது இவனை முட்டிக் கொண்டிருந்த காலத்தில், ஏறக்குறைய எழுபத்தைந்தாவது வயதில் இந்தக் கடிதத்தை எழுதினா னென்பது வாதவம். இதனால், இவனுடைய நாற்பதாவது வயதில் அரசியல் என்ற நூலை எழுதிய வேகத்தில் இந்தக் கடிதத்தை எழுத முடியாமலிருந்திருக்கலாம். ஆனால் நான்கு மாத அவகாசம் எடுத்துக்கொண்டானென்று சொல்வது இவனுடைய எழுத்தாற்றலுக்கு நாம் சரியான மதிப்புக் கொடுத்ததாகாது. பொதுவாக இந்தக் கடிதங்கள், இடம், காலம், இனம், மொழி ஆகிய பல்வேறு வேற்றுமைகளைக் கடந்துநிற்கும் உண்மைகள் பலவற்றைத் தாங்கி நிற்கின்றன என்று சொல்லலாம். பிரதியொரு மனிதனும் மெய்ப்பொருளை நாட வேண்டும்; ஆளும் பொறுப்பை ஏற்கிறவர்கள், முதலில் தம்மைத்தாம் ஆளவேண்டும், அதாவது புலனடக்கம் பெறுதல் வேண்டும்; நல்லவர்களைத் தெரிந்தெடுத்து நண்பர்களாக்கிக் கொள்ளவேண்டும்; தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யவேண்டும்; ஆடம்பர வாழ்க்கையை விலக்கி எளிய வாழ்க்கையை மேற்கொள் வதில்தான் இனிமையும் நிறைவும் இருக்கின்றன; இப்படிப் பல உண்மைகள், பல நியதிகள், இந்தக் கடிதங்களில் விரவியிருக்கின்றன. இந்தக் கடிதங்களைச் சிறிது பொறுமையோடு படித்துவிட்டு, பிறகு, வாசகர்கள் திருக்குறளில் உள்ள மெய்யுணர்தல், குற்றங் கடிதல், பெரியாரைத் துணைக்கோடல், நட்பு, மன்னரைச் சேர்ந் தொழுகல், இன்னா செய்யாமை, சான்றாண்மை, இப்படிச் சில அதிகாரங்களைப் படித்து ஒப்புநோக்க வேண்டுகின்றேன். பிளேட்டோவின் நூல்கள் பெரும்பாலும் சம்பாஷணை வடிவத்திலுள்ளவை. கடிதங்களடங்கிய இந்தநூல், கட்டுக் கோப்பான உரைநடையில் அமைந்திருக்கிறது. கிறிது சகத்திற்குச் சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு, கிரேக்க மொழியில், உரைநடை, மிடுக்கும் கம்பீரமும் நிறைந்து வளமுடையதாயிருந்த தென்பதற்கு, இந்தக் கடிதத் தொகுப்பு, சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறதென்று கிரேக்க மொழி வல்லுநர்களும், கிரேக்க மூலத்திலிருந்து ஆங்கில மொழிப்படுத்திய அறிஞர்களும் கருது கிறார்கள். முற்கால கிரேக்க அறிஞர்கள் கையாண்ட உரைநடையே, பிற்காலத்தில் ஐரோப்பிய மொழிகளில் தோன்றிய உரைநடை இலக்கியங்களுக்கு வழிகாட்டியாயிருந்ததென்று இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இந்தக் கடிதங்களைப் படிக்குமுன்னர், ஒரு தடவையாவது, கிரீ - வாழ்ந்த வரலாறு, பிளேட்டோவின் அரசியல், சமுதாய சிற்பிகள் ஆகிய மூன்று நூல்களைப் படிக்குமாறு அன்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அப்படிப் படித்துவிட்டால், இந்தக் கடிதங்கள் பிளேட்டோவின் உள்ளக் கிடக்கையை எளிதாக அறிந்து கொள்ள உதவி செய்யும். கடிதங்களைப் படித்துக்கொண்டு போகிறபோது, வாக்கியங் களுக்கிடையே, பிறைக்குறிகளுக்குள் சிறுசிறு வாக்கியங்கள் சேர்ந் திருப்பதைக் காணலாம். வாசகர்கள் தொடர்ச்சி விட்டுப் போகாமல் படிக்க வேண்டுமென்பதற்காகவும், சுலபமாக விளங்கிக்கொள்ள வேண்டு மென்பதற்காகவும் இவை என்னால் சேர்க்கப்பட்டவை. இந்தக் கடிதங்களை நான் மொழிபெயர்த்துக்கொண்டு வருகிறபோது தற்காலத்திற்கு பிளேட்டோ என்ற பெயரில் அமெரிக்காவில் வெளியான ஓர் ஆங்கில நூலைப் படித்தேன். அதில் அந்த நூலாசிரியன், பிளேட்டோவின் கோட்பாடுகள் அமெரிக்க அறிஞர்களிடையே நாளுக்கு நாள் அதிக செல்வாக்குப் பெற்றுவருகிறதென்றும், 1960ஆம் ஆண்டில் மட்டும் பிளேட்டோ வின் நூல்களைக் கொண்ட இருபத்தைந்து விதமான பதிப்புகளைத் தான் பார்த்ததாகவும், தன்பார்வைக்குப்படாமல் இன்னும் எத்தனையோ பதிப்புக்கள் வெளிவந்திருக்கக் கூடுமென்றும் பெருமை யோடு கூறுகிறான். உலகியலில் அதிகமாக ஈடுபட்டிருக்கும் அமெரிக்காவிலேயே பிளேட்டோ செல்வாக்குப் பெற்று வருகிறா னென்றால், அவன் படைப்புக்களின் ஆழமும் சிரஞ்சீவித் தன்மையும் ஒருவாறு புலனாகும். மற்ற நாடுகளில் அவன் எவ்வளவு அதிகமான செல்வாக்கைப் பெற்றிருக்கிறான் என்பதைப்பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. உலகத்துப் பல்வேறு மொழிகளி லும் பிளேட்டோவின் படைப்புக்கள் பல்வேறு பதிப்புக்களாக வெளிவந்திருக்கின்றன. அதுபோல் தமிழ்மொழியிலும் அவனுடைய படைப்புக்கள் பலவும் பல பதிப்புக்களாக வெளிவரவேண்டு மென்பது என் ஆசை. இந்த நூலின் இறுதியில், அனுபந்தமாக, பிளேட்டோ எழுதி வைத்துப்போன உயிலைச் சேர்த்திருக்கிறேன். பிளேட்டோவின் கடிதங் களுக்கும் இந்த உயிலுக்கும் நேரடியான தொடர்பு எதுவு மில்லை யாயினும், பிளேட்டோவைப் போன்ற அறிஞர்கள், தங்க ளுடைய பிற்காலத்தில், தங்கள் சொத்து பற்றுக்கள், எந்தவிதத்திலும் கேட்பாரற்றுப் போய்விடக் கூடாதென்பதில் எவ்வளவு கண்ணுங் கருத்து முடையவர் களாயிருந்தார்களென்பதை நாம் அறிந்து கொள்ள இந்த உயில் ஓரளவு உதவியாயிருப்பதனால், இதனை அனுபந்தமாகச் சேர்த்திருக்கிறேன். வெ. சாமிநாதன் முன்னுரை ஐரோப்பாவின் தெற்கே மத்திய தரைக்கடலிலுள்ள இத்தலி யின் கடலோரப்பிரதேசங்களிலும், இத்தலிக்குத் தென் மேற்கி லுள்ள சிஸிலிதீவிலும், நேர்மேற்கிலுள்ள ஸார்டீனியா, கார்ஸிக்கா ஆகிய தீவுகளிலும், கிரேக்கர்கள், கி.மு. 700ஆம் வருஷத்திலிருந்து கி.மு. 550 ஆம் வருஷம் வரை சுமார் நூற்றைம்பது வருஷ காலத்தில், கூட்டம் கூட்டமாக வந்து குடியேறி, கிரீஸி லுள்ளதைப் போல் அநேக நகர ராஜ்யங்களை தாபித்துக் கொண்டார்கள். இந்த நகர ராஜ்யங்களில் தோன்றிய பெரியோர் பலர், கிரேக்க நாகரிகமும் கலைகளும் செழுமையடைவதற்கு உறுதுணையாயிருந்தனர். இந்த நகர ராஜ்யங்களில், கிரீஸில் அவ்வப்பொழுது ஏற்பட்டு வந்ததுபோல், சர்வாதிகார ஆட்சியென்றும், ஒரு சிலர் ஆட்சியென் றும், ஜன ஆட்சியென்றும், இப்படி அடிக்கடி ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. இந்த நகர ராஜ்யங்களுள் இங்குக் குறிப்பிடத்தக்கது, சிஸிலிதீவின் கிழக்குப்பகுதியில் கடலோரமாகவுள்ள ஸைரக்யூ ராஜ்யம்.1 கி.மு. நான்காவது நூற்றாண்டில், இது, மற்ற நகர ராஜ்யங்களைக் காட்டிலும் விதீரணமுடையதாகவும், செல்வச் செழுமையுடையதாகவும் விளங்கிவந்தது. ஆப்பிரிக்காவின் வடகோடியில் இப்பொழுது டூனி2 என்ற ஒரு நகரம் இருக்கிறது பாருங்கள். இதற்குச் சிறிது வடமேற்கே, கிறிது சகத்திற்குச் சுமார் எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, கார்த்தேஜ்3 என்ற ஒரு சாம்ராஜ்யம் தோன்றி வளர்ந்து வந்தது. இது, தன் வியாபாரத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக, மத்திய தரைக்கடலில் ஆதிக்கம் பெறவிழைந்தது; அந்தக் கடலி லுள்ள அநேக ராஜ்யங்களுடன் அடிக்கடி போர் தொடுத்தது; முக்கியமாக, சிஸிலிதீவை, தன் சுவாதீனத்திற்குள் வைத்துக் கொள்ள முயன்றது. இதற்காக, அதன்மீது, கி.மு. 481 ஆம் வருஷத்திலிருந்து 240 ஆம் வருஷம் வரை, விட்டு விட்டுப்போர் தொடுத்தது. ஆனால் பூரண வெற்றியடையவில்லை. சிஸிலியர்களுக்கு அதிகமான பொருட் சேதத்தையும் உயிர்ச் சேதத்தையும் உண்டுபண்ணிய ஒரு திருப்தியைத்தான் அடைந்தது. கார்த்தேஜ், அடிக்கடி சிஸிலியின்மீது படையெடுத்து வந்தது என்று சொன்னாலும், இந்தப் படையெடுப்பைத் தாங்கிநிற்கும் பெரும்பற்றான பொறுப்பு ஸைரக்யூ ராஜ்யத்தைச் சேர்ந்ததா யிருந்தது. இப்படித்தாங்கி நின்றதோடல்லாமல், இது, கார்த்தேஜை, வெற்றிப்படிகளில் ஏறவிடாதபடி தகைந்தும் வந்தது. இதனால், சிஸிலியிலுள்ள நகர ராஜ்யங்களுக்கு மத்தியில்-ஏன்? கிரீஸிலுள்ள மற்ற ராஜ்யங்களுக்கு மத்தியில்கூட-இதன் செல்வாக்கு ஒருபடி உயர்ந்தே இருந்தது. இந்த உயர்வுக்குக் காரணமாயிருந்தவர்களில் முக்கியமானவன் டையோனிஸிய என்பவன். இவன் கி.மு. 430 ஆம் வருஷம் பிறந்து 367 ஆம் வருஷம் இறந்து போனான். மொத்தம் அறுபத்தேழு வருஷ வாழ்வு. இதில், முப்பத்தெட்டு வருஷ காலம் சர்வாதிகாரியாக இருந்து ஆண்டான். இவனைப் பின்வரும் பக்கங்களில் முதலாவது டையோனி ஸிய (மு. டையோனிஸிய) என்றும்,1 இவன் மகனை இரண் டாவது டையோனிஸிய (இ. டையோனிஸிய) என்றும்2 சொல்லிக்கொண்டு போவோம். மு. டையோனிஸிய, ஆரம்பத்தில் அரசாங்கத்துச் சாதாரண ஊழியர்களில் ஒருவனாக வாழ்க்கையைத் தொடங்கினான். பிறகு, கார்த்தேஜின் படையெடுப்பை ஒரு சாதனமாக உபயோகித்து, தன் சாமர்த்தியத்தினால், கி.மு. 405 ஆம் வருஷம், தன்னுடைய இருபத் தைந்தாவது வயதில் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டான்; கைப் பற்றிக் கொண்ட அதிகாரத்தை நிலைப்படுத்திக்கொள்ள அநேக தந்திரங் களைக் கையாண்டான்; ஸைரக்யூஸுக்கு அருகி லுள்ள ஒர்ட்டிகியா (Ortygia) என்ற ஒரு சிறிய தீவில், தற்காப்பு நிமித்தம் பலத்த அரண்களோடு கூடிய ஒரு கோட்டையைக் கட்டினான்; தனக்கு மெய்க்காப்பாளர்களாகப் பலரை அமர்த்திக் கொண்டான். இவனுடைய முப்பத்தெட்டு வருஷ ஆட்சி காலத்தில், ஸைரக்யூ பலவகையிலும் விரிந்தது. பெரிய பெரிய கட்டடங்கள் எழும்பின; அழகு அழகான கோயில்கள் தோன்றின. அக்கம் பக்கத்திலுள்ள ராஜ்யங்களிலிருந்து அநேகர் வந்து குடியேறினர். கடற்படையின் பலம் அதிகரித்தது. மு. டையோனிஸிய, ஸைரக் யூஸின் சுதந்திரத்தை அழித்துப்போட்டான். ஆனால் அதனை, ஐரோப்பாவிலேயே மிகச் சிறந்ததாகவும் சக்திவாய்ந்த தாகவும் ஆக்கினான் என்று ஒரு சரித்திராசிரியன் கூறுகிறான். கிரேக்க நகர ராஜ்யங்களில், ஒவ்வொரு வருஷமும், திறமை சாலியான ஒருவனைப் பிரதம படைத்தலைவனாகத் தெரிந் தெடுப்பது வழக்கம். அரசாங்க அதிகாரங்கள் யாவும் அவனைச் சேர்ந்ததாகவே இருக்கும். ஒரு வருஷம் தெரிந்தெடுக்கப்பட்டவன், தன்னுடைய சாமர்த்தியத் தினாலோ, ஜனங்களுடைய சம்மதத்தின் பேரிலோ, அடுத் தடுத்த வருஷங்களில், பிரதம படைத்தலைவனாகத் தெரிந்தெடுக்கச் செய்து கொள்வது வழக்கம். ஆத்தென்ஸில், பெரிக்ளீ, போஷியோன்1 போன்றவர்கள், இங்ஙனம் பலதடவை தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றக் கிரேக்க ராஜ்யங்களின் நடைமுறையைத் தழுவி ஸைரக் யூஸிலும், கி.மு. 405ஆம் வருஷம் மு. டையோனிஸிய, பிரதம படைத்தலைவனாகத் தெரிந்தெடுக்கும்படி செய்து கொண்டான். அதற்குப் பிறகு, தொடர்ந்தாற்போல் முப்பத்தெட்டு தடவை தெரிந்தெடுக்கப் பட்டான். இந்த முப்பத்தெட்டு வருஷ காலமும், அரசாங்கத்தின் அதிகாரங்கள் பலவும், தன்னிடமே இருக்கும்படி செய்துகொண்டான். சுருக்கமாக ஒரு சர்வாதிகாரியாக ஆண்டான். இப்படி இவன் சர்வாதிகாரியானதற்கு இவன் செய்த சூழ்ச்சிகள் ஒரு காரணமாயினும், இவனுடைய போர்த் தந்திரத்திலும், அரச தந்திரத்திலும் ஜனங்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் ஒரு காரண மாயிருந்தது. கார்த்தேஜின் படை யெடுப்புக்களை இவன் வெகு சாமர்த்தியமாகத் தகைந்து நின்றான். அந்தப் படையெடுப்புக்களை முகாந்தரமாகக் காட்டி, தன் பிரதம படைத்தலைமைப் பதவியைப் பிரதி வருஷமும் ஊர்ஜிதம் செய்துகொண்டு வந்தான். மற்றும் இவன், போர்முகத்திலோ, அரசதந்திர அரங்கத்திலோ, எவ்வளவு சிக்கலான நிலைமை ஏற்பட்டபோதிலும், அதிலிருந்து மீளவும் அதைச் சமாளிக்கவும், நியாய அநியாயம் பாராமல் எல்லா முறை களையும் கையாண்டான். அதில் சிறிதுகூட தயக்கம் காட்டிய தில்லை. இதனால், சிஸிலி தீவிலோ, இத்தலியின் மற்றப் பகுதி களிலோ உள்ள நகர ராஜ்யங்கள் இவனிடத்தில் ஒருவித மதிப்பும், அதே சமயத்தில் ஒருவித அச்சமும் கொண்டிருந்தன. இவனுடைய உழைக்குஞ் சக்தியைக் கண்டு எல்லோருமே வியந்தனர். ஓய்வென்பதை அறியவேமாட்டான். தன்னுடைய அரசியல் அலுவல்களுக்கிடையே, துன்பியல் நாடகங்கள் சில எழுதினான்; சில கவிதைகள் இயற்றினான். பல இடங்களிலிருந்து பல துறை அறிஞர்களை வரவழைத்து அவர்களோடு சல்லாபம் செய்வதிலும், அவர்களை ஆதரிப்பதிலும், அவர்களுடைய நட்பைப் பெறுவதிலும் பெருமை கண்டான். இவனுடைய நட்பைப் பெற்ற வர்களில் ஒருவன் பிளேட்டோ.1 பிளேட்டோ, தன் குருநாதனாகிய ஸாக்ரட்டீ2 கி.மு. 399 ஆம் வருஷம் மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் விஷ மருந்தி இறந்துபோனதற்குப் பிறகு, ஆத்தென்ஸில் தங்கியிருக்க மனமில்லாமல் வெளிநாடுகளில் யாத்திரை செய்து வந்தான். இந்த யாத்திரையின்போது, ஏறக்குறைய கி.மு. 387 ஆம் வருஷம் சுமார் நாற்பதாவது வயதில், இத்தலியின் தென்பகுதிக்கு வந்தான். அங்கு பித்தாகோரஸின்3 சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த அறிஞர்கள் சிலர் வசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் அளவளாவி, தன் அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டுமென்பதே இவன் நோக்கம். இவன் அங்கு வந்திருப்பது மு. டையோனிஸியஸுக்குத் தெரிந்தது. இவனுடைய பரந்த புலமையைப்பற்றி ஒருவாறு கேள்விப்பட்டிருந்தான். இவனை அறிமுகம் செய்துகொள்ள வேண்டுமென்று ஆவல் கொண்டான்; தன் ஆதானத்திற்கு வந்துபோகும்படி இவனுக்கு அழைப்பு அனுப்பினான். பிளேட்டோவுக்கும் மு. டையோனிஸியஸை சந்திக்க வேண்டு மென்ற விருப்பம் இருந்தது. ஏனென்றால், கிரேக்க ராஜ்யங் களிடையே இவனுடைய - மு. டையோனிஸியஸினுடைய-செல்வாக்கு அப்பொழுது உச்ச நிலையிலிருந்தது. தவிர, தான் ஓர் இலக்கிய கர்த்தன் என்றும், தத்துவ சாதிரத்தில் தனக்கு ஓரளவு பயிற்சி உண்டு என்றும் இவன் சொல்லிக்கொண்டிருந்தான். இவையெல்லாம் பிளேட்டோவுக்குத் தெரிந்திருந்தன. எனவே, இவனுடைய - மு. டையோனிஸியஸினுடைய - அழைப்பை ஏற்றுக் கொண்டு கி.மு. 387 ஆம் வருஷம், அதாவது இத்தலியின் தென் பகுதிக்கு வந்த அதே வருஷம் ஸைரக்யூஸுக்கு வந்தான். பிளேட்டோ, ஸைரக்யூஸுக்கு வந்ததற்கு மற்றொரு முக்கிய மான காரணமுண்டு என்று சொல்லப்படுகிறது. மு. டையோனி ஸிய மனைவியின் சகோதரன் டியோன்4 என்று ஒருவன் இருந்தான். பிளேட்டோ ஸைரக்யூஸுக்கு வந்தபோது, இவனுக்கு ஏறக்குறைய இருபது வயதுதான் ஆகியிருந்தது. இருந்தாலும் நுண்ணறிவும் மன உறுதியும் நிறையப் பெற்றிருந்தான். இதனால் இவன் வயதொத்த இளைஞர்களிடையே இவனுக்கு ஓரளவு செல்வாக்கு இருந்தது. இவன் தந்தை Ï¥ghÇdÞ(Hipparinus) என்பவன், ஸைரக்யூஸின் அரசாங்க நிருவாகத்தில் மு. டையோனி ஸியஸுக்குப் பெரிதும் உதவியா யிருந்தான். இதனால் இவன்-டியோன்-தன்னை, சாதாரண மக்களைக் காட்டிலும் மேம்பட்டவன், அதாவது மேல்தரத்து மனிதன், அரசாங்க நிருவாகத்தில் பங்கு கொள்ளும் உரிமை தனக்குப் பரம்பரையாக உண்டு என்று இப்படி யெல்லாம் கருதி வந்தான்; அதாவது அந்தக் காலத்தில் கிரேக்க ராஜ்யங்களில் நிலவிவந்த பலதர அரசியல் கொள்கைகளில், மேன்மக்களாட்சியே சிறந்தது என்ற கொள்கை இவன் ரத்தத் திலேயே ஊறியிருந்தது என்று சொல்லலாம். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், ஜன ஆட்சிமுறையில் ஈடுபாடில்லாத மனப்பான்மை யுடையவனாயிருந்தான். இங்ஙனம் இவன் தன்னை மேல்தரத்து மனிதனாகக் கருதிக் கொண்டிருந்தபோதிலும், அந்தக் காலத்தில், சிஸிலியிலுள்ள பெரும்பாலான நகர ராஜ்யங்களில் மேல்தரத்து மக்களென்போர் நடத்தி வந்த ஆடம்பர வாழ்க்கையை அறவே வெறுத்து வந்தான். மற்றும் இவன், மேன்மக்களாட்சியை ஒருவகையில் ஆதரிக்கிறவனா யிருந்தாலும், அப்பொழுது மு. டையோனிஸிய நடத்தி வந்த சர்வாதிகார ஆட்சியை வெறுத்து வந்தான். கி.மு. நான்காவது நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, குறிப்பாக ஸாக்ரட்டீ மரணத்திற்குப் பிறகு, கிரேக்க ராஜ்யங்கள் பலவற்றின் அரசியல் வாழ்வு லேசுலேசாகச் சீரழிந்துகொண்டு வந்தது. அரசியலில் ஒழுக்கத்திற்கு இடமில்லாமற் போய்விடுமோ என்ற நிலைமை ஏற்பட்டது. இவைகளையெல்லாம் நேரில் பார்த்தவன் பிளேட்டோ. இந்த நிலைமை மாறவேண்டுமானால், ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொள் கிறவர்கள் ஞானிகளாயிருக்க வேண்டும் அல்லது ஞானிகள் ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். இதனை ஒரு கொள்கை யாகவே கிளத்தினான். இந்தக் கொள்கை, கிரீஸிலுள்ள அரசியல் அறிஞர்களிடையே பரவியது. பிளேட்டோவின் பேரறிவைப் பற்றியும் தூய்மையான வாழ்க்கையைப்பற்றியும் ஏற்கனவே கேள்வி வாயிலாகத் தெரிந்துகொண்டிருந்த டியோன், அவனை நேரில் சந்திக்க ஆவல் கொண்டான். இத்தலியின் தென்பகுதிக்கு அவன் வந்திருப்பது தெரிந்ததும், ஸைரக்யூஸுக்குக் கட்டாயம் வந்து போகும்படி அவனுக்கு அழைப்பு விடுத்தான். இந்த அழைப்பு, பிளேட்டோ, ஸைரக்யூ வருவதற்கு மற்றொரு முக்கிய காரணமா யிருந்தது. எப்படியோ, பிளேட்டோ, ஸைரக்யூ போந்ததும் அவனுக்கும் டியோனுக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு, இருவருடைய முடிவுகாலம் வரை முறிவுபடாமலே இருந்தது. பிளேட்டோவைச் சந்தித்த முதல் தடவையிலிருந்தே டியோனின் வாழ்க்கைப் போக்கு மாறிவிட்டது. எளிய வாழ்க்கையை மேற் கொண்டான்; உடை, உணவு ஆகிய எல்லாவற்றிலும் குறைந்த பட்சத் தேவையிலேயே திருப்தியடைந்தான். இவனுடைய இந்த வாழ்க்கை முறையை அரசாங்க உயர்பதவிகளில் இருந்த சிலரும் பின்பற்றினர். மற்றும் டியோன், பிளேட்டோவினிடமிருந்து அரசியல் சம்பந்தமாக அநேக நற்போதனைகளைப் பெற்றான். இந்தப் போதனைகளுக்கெல்லாம் மையாயிருந்தது, ஞானிகளே ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறவர்கள் ஞானி களாயிருக்கவேண்டும் என்பதேயாகும். இதைப்பற்றி பிளேட்டோ தனது அரசியல் என்ற நூலில் விரித்துக் கூறியிருக்கிறானல்லவா? இந்த மாதிரி சில போதனைகளைச் செய்து வந்ததோடு பிளேட்டோ, ஸைரக்யூஸில் அப்பொழுது நடைபெற்று வந்த (மு. டையோனிஸியஸின்) சர்வாதிகார ஆட்சி முறையை மாற்றிச் சட்ட வரம்புக்குட்பட்ட ஆட்சி முறையை ஏற்படுத்த வேண்டிய அவசி யத்தை வலியுறுத்தி வந்தான். இதன் தாத்பரியம் என்னவென்றால், எந்த ஒரு ராஜ்யமும் ஒரு தனி மனிதனுடைய சர்வாதிகாரத்திற்குட் பட்ட தாயிராமல் சட்டங்களால்தான் ஆளப்பட வேண்டுமென்பது தான். இதை இன்னும் விளக்கிச் சொல்ல வேண்டுமானால், ஒரு ராஜ்யத்தின் நிருவாகம் ஒரு தனி மனிதனுடைய விருப்பு வெறுப்புக் களுக்குட்பட்டு நடைபெறுவதாயிருக்கக் கூடாது; அந்த ராஜ்யத்துப் பிரஜைகளின் பூரண சம்மதத்தின்பேரில் அமுலுக்குக் கொண்டுவரப் படுகிற சட்ட திட்டங்களுக்குட்பட்டு நடைபெற வேண்டுமென்பது தான். ராஜ்யத்தை ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிற வர்கள், சட்டதிட்டங்களால் ஆளப்பட வேண்டுமென்பதே இதன் சுருங்கிய கருத்து. தவிர, கார்த்தேஜ் அடிக்கடி படையெடுத்து வந்ததன் விளைவாக, இத்தலியிலும் சிஸிலிதீவிலும் நிலவிவந்த கிரேக்க நாகரிகமும் கலைகளும் எங்கு அழிந்துபடுமோ என்ற அச்சம் அப்பொழுது இருந்தது. அழியவிடாதபடி அவற்றைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தையும் பிளேட்டோ, டியோனுக்கு வலியுறுத்தி வந்தான். ஸைரக்யூஸுக்கு வந்ததும், பிளேட்டோ, டியோனைச் சந்தித்தது போலவே மு. டையோனிஸியஸையும் சந்தித்தான். முதல் சந்திப்பான படியால், இருவரும் ஆரம்பத்தில் ஒருவர் மீது ஒருவர் விசுவாச முடையவராகவே பழகி வந்தனர். ஆனால் சிறிது காலத்திற் குள், இருவரும் பிணக்குக் கொள்ளும்படியான நிலைமை ஏற்பட்டது. பிளேட்டோ, மு. டையோனிஸியஸுடன் அடிக்கடி நடத்திவந்த சம்பாஷணைகளில் சர்வாதிகார ஆட்சியைக் கண்டித்துப்பேசி வந்தான்; ஆடம்பரமற்ற வாழ்க்கையின் அவசியத்தை உணர்த்தி வந்தான். இந்த நல்லுரைகள் மு. டையோனிஸுக்குப் பிடிக்கவில்லை. இதை பிளேட்டோவும் சீக்கிரத்தில் உணர்ந்து கொண்டான். தவிர, பிளேட்டோ, தன்னைப் புகழ்ந்து பேசுவான், தன்னுடைய பேராற்றலையும் புலமையையும் வியந்து பாராட்டுவான் என்று மு. டையோனிஸிய எதிர்பாத்தான். ஆனால் பிளேட்டோ, முகதுதி செய்வதையோ, செய்யப்படுவதையோ விரும்பாதவன். எது நன்மை என்று, தான் உணர்கிறானோ அதையே ஒளிவு மறைவின்றிச் சொல்லக்கூடியவன். மு. டையோனிஸிய இதை விரும்புவானா? இருவருக்கும் பிணக்கு ஏற்பட்டது. கடைசியில் மு. டையோனிஸிய, தன் அதிகார பலத்தைக் கொண்டு, பிளேட்டோவை, ஒரு கப்பலில் ஏற்றி அடிமையாக விற்பனையாகும்படி செய்துவிட்டான். ஆனால் நல்ல வேளையாக ஒரு தனவான், பிளேட்டோவை, ஓர் அடிமைக்குரிய விலையைக் கொடுத்து வாங்கி விடுதலை செய்தான். பிளேட்டோவும் எப்படியோ கஷ்டப்பட்டு ஆத்தென் வந்து சேர்ந்தான். (கி.மு. 387 ஆம் வருஷம்) ஆக, ஸைரக்யூஸில் இவன் ஒரு சில மாதங்களே தங்கி யிருந்தானென்று தெரிகிறது. இந்த யாத்திரையிலிருந்து திரும்பி வந்தவுடனேயே-ஏறக்குறைய அதே கி.மு. 387 ஆம் வருஷத்திலேயே-பிளேட்டோ, ஆத்தென்ஸில் அக்காடெமி (Academy) என்ற பெயரால் ஒரு கல்விக்கழகத்தை தாபித்தான். இதுவே ஐரோப்பா கண்டத்தில் முதன்முதலாக ஏற்பட்ட பல்கலைக் கழகம் என்பர் ஆராய்ச்சியாளர். பிளேட்டோ சென்ற பிறகு டியோன், மு. டையோனிஸியஸுக்கு, சர்வாதிகாரத்தினால் ஏற்படக்கூடிய தீமைகளைப் பற்றியும், நல்ல விதமாக எப்படி ஆளவேண்டுமென்பதைப் பற்றியும் நல்லுரைகள் பல பகர்ந்து வந்தான்; ஏற்கனவே சொன்னதுபோல் தன் சொந்த வாழ்க்கையையும் எளிய முறையில் நடத்தி வந்தான். ஆனால் மு. டையோனிஸியஸின் ஆதானத்தில் இருந்த ஒரு சிலரைத் தவிர அநேகருக்கு, இவனுடைய எளிய வாழ்க்கையும், இவன் மு. டையோனிஸியஸுடன் நெருங்கிய நட்புக்கொண்டவனாயிருப் பதும் பிடிக்கவில்லை. இருவருக்கும் மனத்தாங்கல் உண்டு பண்ணி வந்தார்கள். இப்படியிருக்க, மு. டையோனிஸிய கி.மு. 367 ஆம் வருஷம் இறந்துவிட்டான். அவனுக்குப் பிறகு அவன் மகன் இ. டையோனி ஸிய ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். இவன் முறை யான கல்வி பெற்றிராவிட்டாலும் இயற்கையான அறிவு பெற்றிருந்தான். சுகபோகத்திலே வளர்ந்துவிட்டவன். நெஞ்சுரம் இல்லாதவன். பிறர் சொல்லுக்கு எளிதில் வசப்படக்கூடியவன். ஆனால் அகந்தை கொண்டவன். தான் நல்ல பெயரெடுக்க வேண்டு மென்பதற்காக ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும், மூன்று வருஷத்திற்கு யாரும் வரி செலுத்தவேண்டாமென்று உத்தர விட்டான். அரசியல் காரணங் களுக்காகச் சிறைப்படுத்தப் பெற் றிருந்தவர்களை விடுதலை செய்வித்தான். டியோன்தான் இவனுக்கு முக்கிய ஆலோசகனாயிருந்தான். பிளேட்டோவின் போதனைகளைப் பின்னணியாகக் கொண்டு இவனுக்கு-இ. டையோனிஸியஸுக்கு-சர்வாதிகார ஆட்சியினால் ஏற்படக்கூடிய தீமைகளைப்பற்றியும், சட்ட வரம்புக்குட்பட்ட ஆட்சியினால் உண்டாகக் கூடிய நன்மைகளைப் பற்றியும், எளிய வாழ்க்கையில் உள்ள இனிமையைப் பற்றியும் அடிக்கடி எடுத்துச் சொல்லி வந்தான். ஆரம்பத்தில் இந்த நன்மொழிகளை ஏற்றுக் கொள்கிற மனப்பான்மையி லிருந்தான் இ. டையோனிஸிய. ஆனால் இவனுடைய ஆதானத்திலிருந்த பெரும்பாலோர் இதை விரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் ஆடம்பர வாழ்க்கையில் தோய்ந்திருந்தவர்கள். ஆட்சிமுறை மாறினால், தங்களுடைய சுக போகங்களுக்கு இடையூறு உண்டாதல் கூடுமென்று அஞ்சினார்கள். எனவே இ. டையோனிஸியஸின் சர்வாதிகார மனப்போக்குக்குத் தூபமிட்டவண்ணம் இருந்தார்கள். இவனுக்கும் டியோனுக்கும் இருந்துவந்த உறவைத் துண்டித்துவிட முயற்சி செய்து வந்தார்கள். இவற்றின் விளைவாக இ. டையோனிஸியஸின் மனம், டியோனின் நன்மொழிகளைக் கேட்பதினின்று மெள்ள மெள்ள விலகிக்கொண்டு வந்தது. ஆயினும் டியோனுக்கு, இவனை எப்படியாவது தன் வழிக்கு - நல்வழிக்கு - திருப்பிவிடலாமென்ற நம்பிக்கை இருந்துவந்தது. தனக்கு உதவியாக, பிளேட்டோவை வரவழைத்து இவனுக்கு உபதேசங்கள் செய்யச்சொல்லவேண்டுமென்று தீர்மானித்தான். மேலும் மேலும் இவனுக்கு நல்லுரைகள் புகட்டிவந்தான். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு-கி.மு. 387 ஆம் வருஷம்-பிளேட்டோ, ஸைரக்யூஸுக்கு வந்திருந்தானல்லவா, அதுமுதற் கொண்டு இருவருக்கும்-டியோனுக்கும் பிளேட்டோவுக்கும்-கடிதப் போக்குவரத்து மூலமாகவும் நண்பர்கள் மூலமாகவும் இடைவிடாத தொடர்பு இருந்து வந்தது, இதை ஆதாரமாகக் கொண்டு டியோன், பிளேட்டோவை, மீண்டும் ஒரு தடவை ஸைரக்யூஸுக்கு வந்து போகுமாறு அழைப்பு விடுத்தான்; தன் அழைப்பை மறுக்க வேண்டா மென்றும் கேட்டுக்கொண்டான். இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பிளேட்டோ முதலில் சிறிது தயங்கினான்; பிறகு ஏற்றுக் கொண்டான்.1 டியோன் அழைப்பு விடுத்த சமயத்தில், பிளேட்டோவுக்கு கிரேக்க அறிஞர்களிடையே நல்ல மதிப்பு இருந்துவந்தது. இவன் தாபித்து நடத்திவந்த அக்காடெமி என்ற கழகத்தில் பயின்ற பலர், கிரேக்க ராஜ்யங்கள் பலவற்றிற்கும் சென்று, அவை பல வகையிலும் சிறப்புப்பெறுவதற்கான அரிய ஆலோசனைகள் சொல்லியும், பெரிய திட்டங்கள் வகுத்துக்கொடுத்தும் வந்தார்கள். இதனால் இவர்களை உற்பத்திசெய்து கொடுத்த அக்காடெமிக்கும், அதன் தலைவனான பிளேட்டோவுக்கும் கிரேக்க உலகில் நல்ல பெயரும் புகழும் இருந்ததில் ஆச்சரியமில்லை. இத்தகைய பெயரும் புகழும் படைத்த பிளேட்டோ, நேரில் வந்து நல்வழி காட்டுவானாகில், அந்த வழியில் செல்ல இ. டையோனிஸிய தயங்கமாட்டான் என்று கருதியே, டியோன், பிளேட்டோவுக்குக் கட்டாயம் வந்து போகும்படி அழைப்பு விடுத்தான். பிளேட்டோவும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு கி.மு. 367 ஆம் வருஷம், ஸைரக்யூஸுக்கு இரண்டாந் தடவையாக வந்தான். வந்ததும் இவனை இ. டையோனிஸிய, அரச மரியாதைகளோடு வரவேற்றான்; ஸைரக்யூஸுக்கு நல்லகாலம் பிறந்துவிட்டதென்று சொல்லி, தெய்வங் களுக்குப் பூசைபோடச் செய்தான்; பிளேட்டோ வின் போதனைகளைப் பெற்று, அதன் விளைவாக ஸைரக்யூஸில் சர்வாதிகார ஆட்சிக்குப் பதிலாக, சட்ட வரம்புக்குட்பட்ட மன்ன ராட்சி முறையை ஏற்படுத்தப் போவதாகக் காட்டிக்கொண்டான். ஜனங்களெல்லோருக்கும் ஒரே உற்சாகம். பிளேட்டோவின் நற்போதனைகளைப்பெற இ. டையோனி ஸிய ஆவல் கொண்டிருந்ததைப்போல் அவனுடைய ஆதானத்தி லிருந்த அறிஞர் சிலரும் ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால் இ. டையோனிஸியஸுக்கு இந்த ஆவலைச் செயலில் கொண்டுவர, ஏற்கனவே சொன்னபடி மனோதிடம் இல்லை; நற்போதனை களுக்கோ துர்ப்போதனைகளுக்கோ எளிதில் வசப் பட்டு மனமாறு தலடையக் கூடியவனாயிருந்தான். தவிர, பிளேட்டோ வின் நற்போதனை களுக்கிணங்க, தன் சொந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் இவனால் முடியவில்லை. இதற்குத் தகுந்தாற்போல், இவனுடைய சர்வாதிகாரத்திற்கு ஆக்கந்தந்து அதன் மூலம் தங்கள் சுகபோக வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்திவர முனைந்த சிலர் இவனுக்கும், பிளேட்டோ-டியோன் ஆகிய இரு வருக்கும், மனமாற்றம் ஏற்படக்கூடிய வகையில் சில சூழ்ச்சிகள் செய்தனர். இந்தச் சூழ்ச்சிகள், கோரிய பலனைக் கொடுக்காமற் போகவில்லை. டியோன், தன் ஆதி பாதிகள், ரொக்கம் முதலிய வைகளை விட்டுவிட்டு, நாட்டுக்குப் புறம்பாகச் சென்றுவிட வேண்டுமென்று உத்தரவிடப்பட்டான். பிளேட்டோ காவல் கைதிபோல் வைக்கப்பட்டான். இனி என்ன? ஸைரக் யூஸுக்கு, தான் வந்த நோக்கம் நிறைவேறாது என்று பிளேட்டோ வுக்குத் தெரிந்துவிட்டது. இந்த நிலையில் சிஸிலி தீவில் ஒரு போர் மூண்டது. இதில், தான் கவனஞ் செலுத்த வேண்டியிருக்கிறதென்றும், போர் முடிந்ததும், பிளேட்டோவையும் டியோனையும் ஸைரக்யூஸுக்குத் திருப்பி வரவழைத்துக் கொள்வதாகவும் இ. டையோனிஸிய கூறினான். அதாவது, பிளேட்டோவினிடம் நீ திரும்பிப் போய்விடு என்று நேரடியாகச் சொல்லாமல் இப்படிச் சொன்னான். இதைத் தெரிந்துகொண்டான் பிளேட்டோ. ஸைரக்யூஸுக்குச் சென்ற சில மாதங்களுக்குள் ஏறக் குறைய கி.மு. 367ஆம் வருஷக் கடைசியில் ஆத்தென்ஸுக்குத் திரும்பி வந்து சேர்ந்தான். இவனுக்கு முன்னாடியே, டியோன், நாடுகடத்தப் பட்டவனாய் ஆத்தென்ஸுக்கு வந்து விட்டிருந்தான்; அங்கிருந்து கொண்டு, ஸைரக்யூஸிலுள்ள தன் சொத்து பற்றுக்களிலிருந்து கிடைத்து வந்த வருமானத்தில் சுகஜீவனம் நடத்தி வந்தான். இவனுக்கும் இ. டையோனிஸிய ஸுக்கும் எப்படியாவது சமரஸம் செய்து வைக்க வேண்டு மென் பதை முக்கிய நோக்கமாகக் கொண்ட பிளேட்டோ, ஆத்தென் ஸுக்கு வந்ததிலிருந்து, இ. டையோனிஸியஸுடன் இடை விடாத கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தான். இந்த நிலையில் கி.மு. 362ஆம் வருஷம் ஸைரக்யூஸுக்கு வந்து போகும்படி இ. டையோனிஸிய, பிளேட்டோவுக்கு அழைப்புவிடுத்தான். வேறு சில நண்பர்களும், முன்பு பிளேட்டோ வந்து போனதன் விளைவாக, இ. டையோனிஸிய, தத்துவ சாதிரம் பயிலுவதில் அதிக முன்னேற்றம் அடைந்திருக்கிறா னென்றும், அவனுடைய அழைப்பை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு வந்தால் அவனை நல்லவழிக்குத் திருப்பிக்கொண்டு வந்து விடலா மென்றும் பிளேட்டோவுக்கு எழுதியிருந்தார்கள். பிளேட்டோ, முந்தின தடவைபோல் இந்தத் தடவையும் ஸைரக்யூ செல்வதற்குத் தயங்கினான். ஆனால் இ. டையோனிஸிய, மீண்டும் ஒரு தடவை இவனுக்கு அழைப்புவிடுத்தான். தவிர, நண்பர்கள் எழுதி யிருந்ததில், பிளேட்டோ, இ. டையோனிஸிய அழைப்புக்கிணங்கி வரா விட்டால், டியோனின் சொத்துப் பற்றுக்களை அவன் - இ. டையோனிஸிய - பறிமுதல் செய்தாலும் செய்துவிடக்கூடுமென்று குறிப்பாகத் தெரிவித்திருந்தார்கள். டியோனும், ஸைரக்யூஸுக்குச் சென்று வருமாறு பிளேட்டோவை வற்புறுத்தினான். பிளேட்டோவுக்கும் இ. டையோனிஸியைப் போன்ற இளைஞர்கள், சில சமயங்களில் திடீரென்று அறிவு ஒளிபெற்று நல்வழிக்குத் திரும்புதல் கூடுமென்று கழகத்தின் (அக்காடெமியின்) தலைமைப் போதகாசிரியனா யிருந்து அவன் பெற்றிருந்த அனுபவம் கூறியது. இதனால், தனக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிற ஓர் இளைஞனை-இ. டையோனிஸியஸை-சன்மார்க்கத்திலே திருப்பி விடக்கூடிய சந்தர்ப்பம், அவன் வற்புறுத்தி அழைத்திருப்பதன் மூலம் தனக்குக் கிடைத்திருக்கிறது என்றும், அந்தச் சந்தர்ப்பத்தைக் கைநழுவவிட்டால் தன் நண்பர்கள் தன்னைக்குறை கூறுவார்க ளென்றும் கருதினான். மற்றும் டியோனின் சொத்துபற்றுக்கள், தான் செல்லா விட்டால் எங்குப்பறிமுதல் செய்யப்பட்டு விடுமோ என்றும் கவலைகொண்டான். எனவே, மூன்றாந் தடவையாக ஸைரக்யூஸுக்குச் செல்ல ஒருப்பட்டான். இப்படி ஒருப்பட்டாலும், தான் செல்வதனால், எதிர்பார்க்கிற பயன் கிட்டுமா என்ற சந்தேகம் இவனுக்கு இருந்துகொண்டு தான் இருந்தது. எனவே, மிகுந்த தயக்கத்துடனேயே இந்த மூன்றாந் தடவைப் பயணத்தை மேற் கொண்டானென்று சொல்லவேண்டும். ஸைரக்யூஸுக்குச் சென்றான் பிளேட்டோ. சென்றதும் இ. டையோனிஸியஸை சந்தித்தான். முதல் சந்திப்பிலேயே, அவன் சன்மார்க்கத்திற்குத் திரும்பமாட்டானென்று இவனுக்குத் தெரிந்து விட்டது. அவன் - இ. டையோனிஸிய-தத்துவ சாதிரப் பயிற்சி யில் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறானென்பதை லேசாகப் பரீட்சை செய்து பார்த்தான். எல்லாம் நுனிப்புல் மேய்கிற விவகார மாகவே இருந்தது. ஆனால் அவனோ-இ. டையோனி ஸியஸோ-தான்பூரண ஞானம் பெற்றுவிட்டதாகக் காட்டிக் கொண்டான். இனி அவனை நல்வழிக்குத் திருப்பிக் கொண்டுவர முடியாதென்று பிளேட்டோவுக்குத் தெரிந்துவிட்டது. பிறகு, டியோனின் சொத்து பற்றுக்களை அவனுக்குக் கிடைக்கச் செய்ய முயன்றான். ஆனால், இ. டையோனிஸிய, தான் கொடுத்த வாக்குறுதி களையெல்லாம் மறந்து, டியோனின் சொத்துபற்றுக் களைப் பறிமுதல் செய்து விட்டான். ஸைரக்யூஸிலியே தங்கியிருந்த டியோனின் மனைவி ஆரட்டே (Arete) என்பவளை தன் ஆதானிகர்களில் ஒருவனுக்குப் பலவந்தமாக விவாகம் செய்து வைத்தான். பார்த்தான் பிளேட்டோ. இனி ஸைரக்யூஸில் தங்குவது ஆபத்து என்று உணர்ந்தான். மனங் கசந்தவனாய் கி.மு. 360 ஆம் வருஷம் ஆத்தென்ஸுக்குத் திரும்பிவந்து சேர்ந்தான். பிளேட்டோ ஆத்தென்ஸுக்குத் திரும்பி வந்ததும், டியோனைச் சந்தித்து, ஸைரக்யூஸில் நடந்தவற்றைப்பற்றி விவரமாக எடுத்துச் சொன்னான். இதைக்கேட்ட டியோனுக்கு ஆத்திரம் பொங்கியது. இ. டையோனிஸியஸைப் பழிவாங்க உறுதிகொண்டு, ஸைரக்யூ மீது படையெடுத்துச் செல்வதென்று முடிவு செய்தான். இதற்காக நண்பர்களின் உதவியை நாடினான். பிளேட்டோவின் கழகத்தைச் சேர்ந்த சிலர், உதவி செய்ய முன்வந்தார்கள். பிளேட்டோவின் உதவி யையும் நாடினான் டியோன். ஆனால் பிளேட்டோ, இ. டையோனி ஸியஸுக்கும் டியோனுக்கும் ஏற்பட்டுள்ள பிணக்கைத் தீர்த்து வைத்து, சமரஸம் ஏற்படக்கூடிய ஒரு காரியத்திற்குத்தான், தான் உடந்தையாயிருக்க முடியுமே தவிர, ஒருவர்மீது ஒருவர் பழி வாங்குவதற்கு உடந்தையா யிருக்க முடியாதென்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான். டியோன், இதற்காகச் சளைக்கவில்லை. சில நண்பர்களுடன் ஒரு சிறு படையைக் கூட்டிக்கொண்டு கி.மு. 357ஆம் வருஷம் ஸைரக்யூஸை நோக்கிச் சென்றான். இந்தச் சிறுபடையைக் கொண்டு இ. டையோனிஸியஸின் பெரும்படையை எப்படிச் சமாளிக்கப் போகிறா னென்று அகில கிரீஸும் வியப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் இந்த வியப்பு அதிகரிக்கின்ற வகையில், டியோன் படை வெற்றியே கண்டது.1 இ. டையோனிஸியஸின் சர்வாதிகார ஆட்சியில் வெறுப்புக் கொண்டிருந்த ஸைரக்யூஸியர் களில் பெரும்பாலோர் டியோன் வெற்றியடைவதற்கு உதவியாயிருந் தனர். தவிர, டியோனின் படை ஸைரக்யூஸை நோக்கி வந்து கொண்டிருந்த சமயம் இ. டையோனிஸிய, தன் கடற்படையை வலுப்படுத்த இத்தலியின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள லோக்ரி (Locri) என்ற ராஜ்யத்திற்குச் சென்றிருந்தான். இதனால் டியோன் படை, சுலபமாக ஸைரக்யூஸுக்குள் வெற்றிக் கோலத்துடன் பிரவேசிக்க முடிந்தது. பிரவேசித்த ஒரு வாரத்திற்குப் பிறகுதான் இ. டையோனிஸிய. ஸைரக்யூஸுக்குத் திரும்பிவந்தான். முந்தி மு. டையோனிஸியஸினால் நன்கு கட்டப்பெற்று தன்னால் நன்கு பந்தோபது செய்து வைக்கப்பட்டிருந்த ஒர்ட்டிகியா தீவு மட்டும் டியோன் வசப்படாமலிருந்ததைக் கண்டான். அங்கிருந்து கொண்டு டியோனை விரட்டுவதற்கான முயற்சி செய்து கொண்டிருந்தான். இந்த முயற்சியின் விளைவாக இவன் படைக்கும் டியோன் படைக்கும் இரண்டு தடவை சிறுபோர்கள் நிகழ்ந்தன. இவற்றில் டியோனுக்கே வெற்றி கிடைத்தது. இ. டையோனிஸியஸும் முன்பு போல் இத்தலியின் தென்பகுதியிலுள்ள லோக்ரி என்ற ராஜ்யத் திற்குத் தப்பிச் சென்றுவிட்டான். வெற்றிகொண்ட டியோன், அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். தங்களுக்கு இனி விடுதலை கிடைக்கு மென்றும், ஜனநாயக ஆட்சி ஏற்படுமென்றும் ஜனங்கள் உற்சாகமா யிருந்தார்கள். ஆனால் டியோனுக்கு எப்பொழுதுமே ஜனநாயக ஆட்சி முறையில் விருப்பம் இருந்ததில்லையல்லவா?1 இதனால் இவன், அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதும் ஜனநாயக ஆட்சியை தாபிக்கவில்லை. அதற்கு மாறாக, சர்வாதிகார முறையிலேயே நடந்துகொண்டான். இதன் விளைவாக ஜனங்களின் அவ நம்பிக்கைக்கு ஆளானான். தவிர, கிரேக்க நகர ராஜ்யங்களின் நடைமுறையைத் தழுவி, ஸைரக்யூஸில் நடைபெற்ற பிரதம படைத்தலைவன் தேர்தலில்,2 டியோனுக்கும், இவனுடைய வெற்றிக்கு உதவி செய்த ஹெரா கிளிடீ3 என்பவனுக்கும் போட்டி ஏற்பட்டது. இதில் டியோன் வெற்றி பெறவில்லை. மற்றும், ஹெராகிளிடீ, அரசாங்க நிருவாகத்தில், சாதாரண மக்களுக்குச் சாதகமாயிருக்கக்கூடிய சில சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டுமென்று முனைந்தான். டியோன் இதை எதிர்த்தான். ஜனங்களுக்கு இவன் பேரில் வெறுப்பு உண்டாகிவிட்டது. போதாக் குறைக்கு இ. டையோனிஸியஸும், இவன் பலத்தை யும் செல்வாக்கையும் குறைக்கப் பலவித சூழ்ச்சிகள் செய்துவந்தான். எல்லாம் சேர்ந்து, டியோனை, ஸைரக்யூஸிலிருந்து வெளியேறி விடும் படியான நிலைமையை உண்டுபண்ணியது. அப்படியே டியோனும், ஒரு சிறுபடையுடன், அருகிலுள்ள லியோண்ட்டினி4 என்ற நகர ராஜ்யத்திற்குச் சென்றான். இவன் சென்றுவிட்டது தெரிந்து, இ. டையோனிஸியஸின் கடற்படை, எதிர்பாராதவிதமாக ஸைரக்யூஸை கைப்பற்றிக் கொண்டது. இந்தக் கடற்படையைச் சேர்ந்தவர்கள், ஸைரக்யூஸியர் களைப் பலவித கொடுமைகளுக்குட்படுத்தினார்கள். இதைச் சகிக்க மாட்டாமல் அவர்கள், டியோனுக்கு, உடனே ஒரு படையுடன் வந்து, தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார்கள். டியோனும் இதற்கிசைந்து, ஸைரக்யூ நகரத்தை இ. டையோனி ஸியஸின் கடற்படையினருடைய கொடுமை களிலிருந்து காப் பாற்றினான். இதற்குப் பிரதியாக, ஜனங்கள் - அதாவது ஜன சபை யினர் - இவனைப் பிரதம படைத்தலைவனாகத் தெரிந்தெடுத்து, இவனிடத்தில் சர்வ அதிகாரங்களையும் ஒப்புவித்தார்கள். இதற்குப் பிறகாவது இவன், சர்வாதிகார மனப்போக்கிலிருந்து திரும்பி ஜனஆட்சி பாதைக்கு வருவான் என்று எதிர்பார்த்தார்கள். உண்மை யில், இவனும் பிளேட்டோவும் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பின் விளைவாக, பிளேட்டோ, ஓர் அரசியல் அமைப்பு எப்படி இருக்க வேண்டுமென்று திட்டம் வகுத்துக் கொடுத்தானோ அந்தத் திட்டத்தை நடைமுறையில் கொண்டுவர இந்தச் சந்தர்ப்பத்தை இவன் பயன்படுத்திக் கொள்வான் என்று இவனையறிந்த சிலர் கருதி யிருந்தார்கள். ஆனால் டியோன் இப்படிச் செய்யத்தவறிவிட்டான். சர்வாதிகார ஆட்சிக்கு அரண் செய்கிற வகையிலேயே நடந்து வந்தான். தவிர, வருஷாந்தப் பிரதம படைத்தலைமைப் பதவித் தேர்தலில் இவனுக்கும் ஹெராகிளிடீஸுக்கும் முன்புபோல் போட்டி ஏற்பட்டது. இந்தப் போட்டி நீடித்துக்கொண்டு போவதை டியோன் விரும்பவில்லை. எனவே, ஹெராகிளிடீஸை மரண மடையும்படி செய்துவிட்டான். இதே பிரகாரம், தனக்கு விரோத மாகக் கிளம்பிய பலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்தும் கொலை செய்தும்விட்டான். இவையெல்லாம் சேர்ந்து இவனை ஜனங்களுடைய கோபத்திற்கு ஆளாக்கின. தவிர, இவனுடைய நம்பிக்கைக்குரியவனாயிருந்த நண்பனும், ஆத்தென்ஸி லிருந்து இவனுடன் சேர்ந்து வந்தவனுமான கால்லிப்ப (Callippus) என்ற ஆத்தீனிய தளபதியே இவனுக்கு விரோதியாகி, இவனைத் தொலைத்து விட சூழ்ச்சி செய்யத் தொடங்கினான். அவனுடைய சூழ்ச்சியும் பலித்தது. அவனுடைய ஆட்கள், டியோனைக் கொலை செய்துவிட்டார்கள். இது நடந்தது கி.மு. 353ஆம் வருஷம். டியோன் கொலையுண்டதைக் கேட்டு பிளேட்டோ பெரிதும் துக்கித்தான். டியோன் கொலையுண்ட பிறகு, மேலே சொல்லப்பெற்ற கால்லிப்ப, அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டான். கைப்பற்றிக் கொண்டதும், ஜனங்களுக்கு எவ்வித நன்மையையும் செய்யாமல், தன் அதிகாரத்தை வலுப்படுத்திக்கொள்வதில் முனைந்தான். டியோ னுக்கு உடந்தையா யிருந்தவர்கள் மீது அடக்குமுறை அம்புகளை விடுத்தான். அவர்கள், அருகிலிருந்த லியோண்ட்டினி ராஜ்யத்திற்கு ஓடிப்போய், அங்கிருந்து ஸைரக்யூஸை வசப்படுத்திக்கொள்ள தீவிர முயற்சி செய்தார்கள். இவர்களுடைய முயற்சியும் ஒருவாறு பலன் கொடுத்தது. கால்லிப்ப, ஸைரக்யூஸில் இல்லாத சமயம் பார்த்து, அதன்மீது படையெடுத்துச் சென்று வசப்படுத்திக் கொண்டார்கள். வசப்படுத்திக்கொண்டதும், அங்கு எந்தவிதமான அரசியலமைப்பை நிறுவலாம் என்பதைப்பற்றி பிளேட்டோவின் ஆலோசனையைக் கேட்டார்கள். அவனும் இரண்டு கடிதங்கள் மூலமாகத் தன் ஆலோசனைகளைத் தெரிவித்தான். அவையே இந்நூலில் இடம் பெற்றிருக்கும் ஏழாவது எட்டாவது கடிதங்கள். இந்தச் சந்தர்ப்பத்தில், இ. டையோனிஸியஸின் கதையைச் சுருக்க மாகச் சொல்லிமுடிப்போம். லோக்ரி ராஜ்யத்திற்குச் சென்ற அவன், அங்கிருந்துகொண்டு சர்வாதிகார ஆட்சி நடத்தினான்; ஜனங்களைப் பலவித கொடுமைகளுக்குட்படுத்தி வந்தான். இந்த நிலைமையில், ஸைரக்யூஸை மீண்டும் தன் வசப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன், ஒர்ட்டிகியா கோட்டைக்குச் சென்று அங்கு முகாம் போட்டான். அவன் அங்குச் சென்ற சமயம் பார்த்து, லோக்ரி வாசிகள், அவனுடைய குடும்பத்தினருக்குப் பலவித இம்சைகளைக் கொடுத்து அவன் மீது வஞ்சம் தீர்த்துக்கொண்டார்கள். இந்தக் காலத்தில் சிஸிலி தீவிலுள்ள பெரும்பாலான நகர ராஜ்யங் களில் கடுமையான சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வந்தது. ஜனங்கள் இதைச் சகிக்கமுடியாதவர்களானார்கள். தவிர, கார்த்தேஜ், சிஸிலியின் மீது படையெடுத்து வருவதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண் டிருப்பதாகக் கேள்வியுற்றார்கள். எனவே, இந்த அவல நிலையிலிருந்து தங்களை மீட்டுத்தர, தங்களுடைய முன்னோர்கள் கிரீஸின் எந்தப் பகுதியிலிருந்து வந்து குடியேறி னார்களோ அந்தப் பகுதிக்கு அதாவது தங்களால் தாய்நாடாகக் கருதப்பட்டு வந்த கொரிந்த்தியா (Corinth) ராஜ்யத்திற்கு விண் ணப்பித்துக் கொண்டார்கள். கொரிந்த்தியாவும், டிமோலியான் (Timolian) என்பவனுடைய தலைமையில் ஒரு படையை அனுப்பியது. அவன், ஸைரக்யூஸையும் வேறு சில ராஜ்யங்களையும் கைப்பற்றிக்கொண்டான்; அவைகளைச் சர்வாதிகார ஆட்சியினின்று விடுதலை செய்வித்தான். ஒர்ட்டிகியா கோட்டையில் முகாம் செய்திருந்த இ. டையோனிஸியஸும், கோட்டையை டிமோலியானிடம் ஒப்படைத்து விடுவதாகவும், தன்னை உயிர்பிழைத்திருக்க விடுமாறும் டிமோலியானைத் தூதர் மூலம் கேட்டுக் கொண்டான். அவனும் இதற்கிசைந்து, ஒர்ட்டிகியா கோட்டையைக் கைப்பற்றிக்கொண்டு, இ. டையோனிஸியஸை ஒன்றுஞ் செய்யாமல் கொரிந்த்தியாவுக்கு அனுப்பிவிட்டான். அங்குச்சென்ற அவன்-இ. டையோனிஸிய- சில வருஷ காலம் உயிர்பிடித்து வைத்துக் கொண்டிருந்துவிட்டு, கடைசியில் கி.மு. 330 ஆம் வருஷம் இறந்து போனான். பிளேட்டோவின் கடிதங்களைப் புரிந்துகொள்ள வேண்டு மானால், மேலே சொன்ன அளவுக்கு ஸைரக்யூஸைப் பற்றின வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். முதற் கடிதம் வாசகர்களுக்கு பகுதியில் கூறியுள்ளபடி, இந்தக் கடிதம் ஓர் இடைச்செருகல் என்றும், பிளேட்டோ, முதல் தடவையாக ஸைரக்யூஸுக்குச் சென்று ஏமாற்ற மடைந்து கி.மு. 387ஆம் வருஷம் ஆத்தென்ஸூக்குத் திரும்பிவந்த பிறகு இதை எழுதியதாகப் புனையப் பட்டதென்றும் கருதப் படுகின்றன. உண்மையிலேயே பிளேட்டோ இந்தக் கடிதத்தை எழுதியிருக்கும் பட்சத் தில், அவனுடைய சான்றாண்மைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக இது திகழ்கிறது என்று சொல்லலாம். மு. டையோனிஸியஸுக்கு பிளேட்டோ எழுதுவது: நலம். நான் உன்னோடிருந்து உன்பூரண நம்பிக்கையைப் பெற்று உன் ஏகாதிபத்தியத்தை நிருவகித்து வந்த கால முழுவதிலும், நீயே எல்லா நன்மைகளையும் அடைந்தாய்; எனக்கு எல்லா அபவாதங் களும் கிடைத்தன. இருந்தாலும் அவைகளை நான் சகித்துக்கொண் டிருந்தேன். ஏனென்றால், நீ எடுத்துக்கொண்ட கடுமையான நடவடிக்கைகளுக்கு என்னைப் பொறுப்பாளியாக்க மாட்டாய் என்பது எனக்குத் தெரியும். அரசாங்க நிருவாகத்தில் உன்னுடன் பங்கு கொண்டிருக்கும் எல்லாரும், இது விஷயத்தில் என் சார்பாகவே பேசுவர். அவர்களில் பலருக்காக நான் வக்காலத்து வாங்கிக்கொண்டு பேசியிருக்கிறேன்; அவர்களுக்கு ஒரு சிறு தண்டனையும் கிடைக்காதபடி அவர்களைக் காப்பாற்றியிருக் கிறேன். எனக்குப் பூரண அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்ததன் விளைவாக, உன் ராஜ்யத்திற்குப் பலதடவை ஏற்பட்டிருந்த ஆபத்துக்களிலிருந்து அதனைக் காப்பாற்றியிருக்கிறேன். இவ்வள வெல்லாம் நான் செய்தும், என்னைக் கப்பலேறிச் சென்று விடும்படி உத்தரவிட்டுவிட்டாய். உன்னிடம் சிறிது காலம் ஒரு பிச்சைக்காரன் இருந்திருந்தால் அவனை எப்படி மரியாதை யில்லாமல் அனுப்பி யிருப்பாயோ அப்படி என்னை அனுப்பி விட்டாய். என்னைப் பொறுத்தமட்டில், நான் இனி, மனித சமூகத்தினிடம் அதிகமான நம்பிக்கை வைக்கமாட்டேன். சர்வாதிகாரியான நீயோ, உற்ற நண்பர்களில்லாமல் இருக்கப் போகிறாய். இது நிச்சயம். நான் புறப்படும்போது, எனக்கு நீ கொஞ்சம் பொன் கொடுத் தாயல்லவா, அதை, இந்தக் கடிதம் கொண்டுவரும் பாக்கீய (Baccheius) என்பவனிடம் திருப்பியனுப்பியிருக்கிறேன். இது, என் பிரயாணச் செலவுக்குப் போதாது. வேறு இனத்திற்காக இதை நான் பயன்படுத்தக் கூடாதல்லவா? இதை-இந்தப் பொன்னை-நீ எனக்குக் கொடுத்தது உனக்கு அவமானம்; நான் பெற்றுக் கொண்டிருந்தால் எனக்கு அவமானம். இந்தச் சொற்பப் பொன்னை நீ கொடுத்தாலும், கொடுத் ததைத் திருப்பிப் பெற்றுக்கொண்டாலும், எல்லாம் உனக்கு ஒன்று தான். ஆகையால், இந்தப் பொன்னைத் திருப்பிப் பெற்றுக்கொண்டு, என்னைப்போன்ற உன் நண்பர்களில் யாராவது ஒருவருக்குக் கொடு. உன்னிடமிருந்து நான் அதிகமான சலுகைகளைப் பெற்றிருக்கிறேன். இப்பொழுது உனக்கு ஏற்பட்டிருக்கும் அதிருஷ்டம் மாறும்போது, நல்ல நண்பன் ஒருவனாவது என் பக்கத்தில் இருக்கவேண்டும் என்று நீ பிரார்த்தனை செய்ய வேண்டியிருக்கும். சர்வாதிகாரிகள் கொலைக்குட் படுகிறபொழுது ஐயோ, உற்ற நண்பர்கள் இல்லாமல் சாகிறேனே என்று வருத்தப்பட்டுச் செத்ததாகவே கவிஞர்கள் வருணித்திருக்கிறார்கள். பணமுடையினால் சாகிறேனே என்று சொல்லிக்கொண்டு செத்ததாக யாரும் வருணிக்கவில்லை. வந்தனம். இந்தப் பொன்னைக் கொடுத்ததனால் நீ எனக்கு எவ்வளவு தீங்கிழைத்துவிட்டாய் என்பதை இனியேனும் உணர்வா யாக! மற்றவர்களிடம் இதே மாதிரி நடந்துகொள்ளாமல் நல்ல விதமாக நடந்து கொள்வாயாக! இரண்டாவது கடிதம் இந்தக் கடிதம், எப்பொழுது எழுதப்பட்ட தென்று நிர்ணய மாகச் சொல்லமுடியவில்லை; கி.மு. 366 ஆம் வருஷத்திலிருந்து 360ஆம் வருஷத்திற்குள் எழுதப் பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சி யாளர்கள் கருது கின்றனர். இ. டையோனிஸியஸுக்கு பிளேட்டோ எழுதுவது: நலம். உன்னைப்பற்றி நான் இழிவாகப் பேசாமல் சும்மா இருக்க வேண்டுமென்றும், அப்படியே டியோனைத் தவிர, என் வழியைப் பின்பற்றுகின்ற மற்றவர்களை உனக்கு விரோதமாக எதுவும் பேசாமலும் செய்யாமலும் இருக்குமாறு நான் கட்டுப்படுத்த வேண்டுமென்றும், அப்படிச் செய்வது என் கடமையென்றும், நீ நினைப்பதாக ஆர்க்கிடேம1 என்னிடம் கூறுகின்றான். டியோனை மட்டும் நீ தனியாகப் பிரித்துக் காட்டுவதைப் பார்த்தால், மற்ற என் நண்பர்களைக் கட்டுப்படுத்த, அதாவது என் சொல்லைக் கேட்கும் படிசெய்ய எனக்குச் சக்தியில்லையென்று நீ கருதுவதாகத் தெரி கிறது. உண்மைதான். உன்னையோ, டியோனையோ, மற்ற என் நண்பர்களையோ, என் சொல்லைக் கேட்கும்படி செய்வேனாயின், அதனால் நம்மெல்லோருக்கும், ஏன், அகில கிரீஸுக்கும்கூட நன்மை உண்டாகும் என்பது நிச்சயம். இப்பொழுதுள்ளபடி பார்த்தால், நான் என்னென்ன கோட் பாடுகளைப்பற்றி உபதேசித்து வருகிறேனோ, அவற்றைப் பின்பற்ற வேண்டுமென்பதில் விருப்பம் காட்டுகிறவன் நான் ஒருவனாகவே இருக்கிறேன். என்னைச் சேர்ந்தவர்களில் பலர், ஒலிம்ப்பிய விழா விற்கு வந்திருந்தபோது, அங்கு உன்னைப்பற்றி நிந்தனையாகப் பேசிக் கொண்டிருந்தார்களென்று க்ராட்டிட்டோல (Cratistolus) என்பவனோ, பாலிக்ஸீன (Polyxenus) என்பவனோ உன்னிடம் சொன்னதை அப்படியே உண்மையென்று நீ நம்பிவிட வேண்டாம். அப்படிச் சொன்னவன் யாராயிருந்தாலும் அவன், என்னைக் காட்டிலும் கூர்மையான செவிப் புலன் படைத்தவனாயிருக்க வேண்டும். எப்படியிருந்த போதிலும், அவர்கள் நிந்தனையாகப் பேசியது உண்மையா என்று நீ என்னைக் கேட்டுவிட்டிருப்பது மிகவும் சரி. இது போலவே, இனி, எங்களில் யாராவது உன்னைப் பற்றித் தவறாகப் பேசியதாக நீ கேள்விப்படுவாயானால், கேள்விப் பட்டது சரியா என்று உடனே எங்களுக்கு எழுதித் தெரிந்துகொள். என்ன நடந்தது என்பதை உனக்கு நான் எவ்வித வெட்கமோ தயக்கமோ இல்லாமல் கூறுவேன். உனக்கும் எனக்குமுள்ள தொடர்பைப் பொறுத்தமட்டில், நாமிருவரும், ஏறக்குறைய எல்லாக் கிரேக்கர்களுக்கும் தெரிந்தவர் களே. நமக்குள்ள தொடர்பு ரகசியமானதுமல்ல. நம்முடைய நட்பு, நீடித்ததாயும் பகிரங்கமானதாயும் இருப்பதால், வருங்காலத்திலும் அதுபற்றிப் பேசப்படும்; பேசுகின்றவர்களும் அதிகமான பேரா யிருப்பர். பொதுவான சில நியதிகளை எடுத்துக்காட்டினால்தான், இப்பொழுது நான் சொல்வது உனக்குச் சரியாகப் புலப்படும். எப்பொழுதுமே ஞானமும், மேலான அதிகாரமும் இணைந்தே செல்லவேண்டுமென்பது இயற்கை நியதி. இவை, பரபரம் ஒன்றையொன்று வசீகரிக்குந் தன்மையனவாயிருக் கின்றன; எப் பொழுதும் இணைந்திருக்க வேண்டுமென்பதை நாட்டமாகக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு சக்திகளைப்பற்றி, அதாவது ஞானசக்தி, அதிகாரசக்தி ஆகிய இரண்டு சக்திகளைப்பற்றிப் பேச எல்லா மனிதர்களும் ஆவல் கொள்கிறார்கள். இவை இரண்டின் இணைப்பைப் பற்றிக் கவிஞர்கள் கூறுவதைக் காதுகொடுத்துக் கேட்கவும் விருப்ப முடையவர்களாயிருக்கிறார்கள். இந்த இரண்டு விதமான சக்திபடைத்தவர்கள், ஏதோ ஒரு விதத்தில், பகைமை முறையிலோ, நட்பு முறையிலோ ஒன்று சேர்ந்திருந்த செய்திகளை கிரேக்க வரலாற்றிலும் கிரேக்க இலக்கியத்திலும் காண்கிறோம். எதற்காக இவ்வளவு தூரம் சொல்கிறேனென்றால், நாமிருவரும் இறந்துபோன பிறகுகூட, நம்மைப் பற்றி எல்லோரும் பேசுவர் என்பதை வலியுறுத்திக் காட்டு வதற்குத்தான். அவர்கள் சொல்லுக்கு நாம் மதிப்புக் கொடுக்க வேண்டும். வருங் காலத்தின்மீது நாம் சிந்தனை செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்த வேண்டியது தான் நியாயம். பண்பாடில்லாதவர்கள்தான் வருங் காலத்தைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டுமென்று நினைப்பார்கள். பண்பாடு நிறைந்த வர்கள், தம்மைப்பற்றி வருங்காலத்தவர் நல்ல விதமாகப் பேச வேண்டுமென்பதற்காக, தங்களால் இயன்றவரை பாடுபட வேண்டு மென்று கருதுவார்கள். இப்படி அவர்கள் கருதுவதனால், இறந்து போனவர்கள், இந்த நிலவுலகத்தில் என்ன நடந்து கொண் டிருக்கிற தென்பதை ஒருவாறு அவ்வப்பொழுது அறிந்து கொண்டு வருகிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. பெருமனம் படைத்த வர்கள், தங்களைப் பற்றி இறந்துபோனவர்கள் என்ன நினைக்கிறார் களென்பதை முன்கூட்டியே ஒருவாறு ஊகித்துத் தெரிந்து கொண்டு விடுகிறார்கள். சாதாரண மக்கள், அப்படியெல்லாம் முன்கூட்டி ஒன்றும் தெரிந்து கொள்ளமுடியா தென்று மறுக்கிறார்கள். இவ்விரு சாராரில், நல்லவ ர்களுக்கு என்ன புலப்படுகிறதோ அதுவே நாம் நம்புவதற்குத் தகுதியுடைய தாயிருக்கிறது. இந்த நல்லவர்கள், தாங்கள் யாரோடு நட்புக் கொண்டு பழகுகிறார்களோ அவர் களுக்கும் தங்களுக்குமுள்ள உறவைப்பற்றி இப்பொழுது பேசப் படுவதைக் காட்டிலும் இன்னும் நல்லவிதமாக எதிர்காலத்தில் பேசப்பட வேண்டுமென்பதற்காக, தங்களுடைய நிகழ்கால உறவு முறைகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்படுமானால் அவற்றைச் சரிப்படுத்திவிட சந்தோஷத்துடன் முனைவார்கள். நாமும் நம்மிடையே இதுகாறும் நிலவிவந்த உறவுமுறை யில் ஏதேனும் பிசகு நேர்ந்திருக்குமானால், அதை நம்முடைய சொல்லாலும், செயலாலும், இப்பொழுது, கடவுள் அருளால் திருத்திக் கொள்ள முடியும். அப்படித் திருத்திக்கொள்வதென்பது அசாத்தியமன்று. தத்துவ சாதிரத்தைப் பொறுத்த மட்டில், அதனைப் பின்பற்று கின்ற முறையில் நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படியே அதற்கு நல்ல பெயரோ கெட்ட பெயரோ ஏற்படுகிறது. அந்தத் தத்துவ சாதிரத்தின்மீது நமக்குள்ள பக்தியை, நம்முடைய நடவடிக்கையின் மூலமாகவே புலப்படுத்திக் காட்ட வேண்டும். அதுதான் சிறந்தவழி. நம்முடைய உறவுமுறையில் என்ன குறைகள் ஏற்பட்டன, அவற்றை எப்படித் திருத்திக்கொள்ளலாம் என்பவைகளைப் பற்றி நான் சொல்லட்டுமா? நான் சிஸிலிக்கு வந்தபோது, அங்கிருந்த தத்துவ சாதிரிகள் மத்தியில் என் பெயர்தான் மேலோங்கி இருந்தது. நான் ஸைரக்யூஸுக்கு வந்தபோது, என்னுடைய தத்துவம், சாதாரண ஜனங்களின் ஆதரவையும் பெறக்கூடுமென்று நீ புகழ்ந்து பேசுவாய் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இதில் வெட்ககரமாகத் தவறிவிட்டேன். இதற்குக் காரணம், பொதுஜனங்கள் நினைத்தது போல் இல்லை. வேறு காரணம். என்னை நீ பரிபூரணமாக நம்ப வில்லையென்று தெரிகிறது. இந்த அவநம்பிக்கையினால், என்னை வெளியேற்றுவதற்காக ஏதோ ஒரு முகாந்தரத்தை ஏற்படுத்திக் கொண்டாய். இப்படி என்னை வெளியேற்றி விட்டு வேறு சிலரைத் தருவித்து, அவர்களிடம் என்னுடைய தத்துவ சாதிர சம்பந்தமான போதனைகளைப்பற்றி அபிப்பிராயம் கேட்கவேண்டு மென்பதே உன் நோக்கம். இப்படி நீ செய்ததைக்கொண்டு, பலர், என்னை நீ புறக்கணித்துவிட்டாயென்றும், வேறு சில கோட்பாடுகளில் உனக்கு ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறதென்றும் உரக்கப் பேசிக் கொண்டார்கள். இப்படிப் பேசிக்கொண்டார்களென்பது உனக்குத் தெரியும். இந்த நிலைமையில், நம்மிடையே நிலவ வேண்டிய உறவு எப்படி இருக்கவேண்டுமென்று நீ என்னைக் கேட்கிறாய். இதற்கு இங்கே விடை கூறுகிறேன். தத்துவ சாதிரப் பயிற்சி விஷயத்தில் உனக்கு அலட்சிய புத்தி இருக்குமானாலும் சரி, அல்லது, சுயமாகவோ மற்றவர்களிட மிருந்தோ நீ பெற்றிருக்கிற தத்துவ சாதிரப் பயிற்சி, என்னுடைய போதனை களைக் காட்டிலும் சிறந்ததாயிருக்கிறதென்று நீ கருதுவதாயிருந் தாலும் சரி, எதையும் எனக்குப் பகிரங்கமாகத் தெரிவித்துவிடு. இரண்டுமில்லை; என்னுடைய கோட்பாடுகளில்தான் உனக்கு ஈடுபாடு இருக்கிறதென்று நினைக்கிறேன்; அப்படி இருக்குமானால் அதையும் நீ பகிரங்கமாகவே ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த மாதிரி விஷயங்களில் நீ வழிகாட்ட வேண்டியவனாகவும், நான் அந்த வழியைப் பின்பற்ற வேண்டிய வனாகவும் இருக்கிறோம். என்னை, விஷயம் தெரிந்தவனென்று நீ மதிப்பா யானால், உன்னைப் பற்றி நான் நல்லவிதமாகப் பேசுவேன்; இல்லையானால் ஒதுங்கி விடுவேன். எனக்கு மதிப்புக்கொடுக்கும் விஷயத்தில் நீ மற்றவர் களுக்கு வழிகாட்டியாயிருப்பாயானால், தத்துவ சாதிரத்திற்கு மதிப்புக்கொடுக்கிறவன் என்ற புகழ் உனக்குக் கிட்டும். உன்னுடைய மதிப்பைப் பெறாமல் உனக்கு நான் மரியாதை செலுத்தி வந்தால், நீ கொடுக்கிற பணத்திற்காக நான் உனக்கு மரியாதை செலுத்து கிறேன் என்றுதான் ஏற்படும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், நீ என்னை கௌரவித்தால், அது, நம்மிரண்டு பேருக்குமே பெருமையா யிருக்கும். அப்படிக் கில்லாமல், உன்னை நான் முகதுதி செய்வே னாகில், அது, நம்மிரண்டு பேருக்குமே அவமானம். பரம்பொருளுண்மையைப் பற்றி உனக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை ஆர்க்கிடேம விளக்குவான். மேலும் சந்தேகங்கள் தோன்றினால் அவ்வப்பொழுது எனக்குத் தெரிவி. ஆனால் நான் சொல்வதெல்லாம் விடுகதைகள் மாதிரிதான் இருக்கும். போகப் போக, சுயமாக ஆராய ஆராய, உண்மை தெரியும். இந்த உண்மையை, எழுத்தின் மூலம் விளக்கமுடியாது. அப்படி விளக்கினால் அது தப்பர்த்தத் திற்குத்தான் இடங்கொடுக்கும். ஆகவே, பரம்பொரு ளுண்மையைப்பற்றி நான் எழுதும் கடிதங்கள், விஷய ஞான மில்லாதவர்கள் கையில் அகப்படாதபடி பார்த்துக் கொள். உன்னுடைய ஆதானத்தில் அறிஞர் பலர் இருப்பதை நான் அறிவேன். அவர்களெல்லோரையும்விட நீ, வாதஞ் செய்து வெற்றி பெறுவதில் வல்லவன் என்பதும் எனக்குத் தெரியும். அவர்களிற் சிலர், உனக்கு வெற்றி ஏற்பட வேண்டுமென்பதற்காக, தாங்கள், வலிய தோல்வி யடைகிறார்களென்று சிலர் கூறுகின்றனர். அப்படி யிருக்கமுடியாது. உண்மையிலேயே உன்னோடு சரியாக வாதஞ் செய்ய முடியாத நிலையில்தான், அவர்கள், தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை நீ தக்கப்படி சன்மானித்து வருகிறாயென்று தெரிகிறது. பிலிட்டியோன்1 என்பவனுடைய சேவை உனக்கு இன்னும் தேவையாயிருக்கிறதா? தேவையிருந்தால் அங்கேயே அவனை இருத்திக் கொள். இல்லையானால் இங்கு புஸிப்ப2 என்பவனுக்கு அவனுடைய உதவி தேவையாயிருக்கிறது. பிலிட்டியோனை அனுப்பி வைக்கும்படி பெயுஸிப்பஸும் என்னோடு சேர்ந்து உன்னைக் கேட்டுக் கொள்கிறான். மூன்றாவது கடிதம் பிளேட்டோ, மூன்றாவது தடவை ஸைரக்யூஸுக்குச் சென்று ஆத்தென்ஸுக்குத் திரும்பிவந்த பிறகு, ஏறக் குறைய கி.மு. 360ஆம் வருஷக் கடைசியில் இந்தக் கடிதத்தை எழுதியிருக்கக் கூடுமென்பது ஆராய்ச்சி யாளர் துணிபு. இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள சில விஷயங்கள் ஏழாவது கடிதத்திலும் கூறப்பட்டிருக் கின்றன. இரண்டையும் ஒப்பு நோக்குக. இ. டையோனிஸியஸுக்கு பிளேட்டோ எழுதுவது: வாழ்க.1 பல இடங்களிலிருந்து எனக்கு வந்திருக்கிற தகவல்கள்படி, உன்னுடைய ஆதானத்தில் இருக்கும் பல நாட்டுத் தூதர்களிடம், சிஸிலியிலுள்ள கிரேக்க நகர ராஜ்யங்களைத் திருத்தி அமைக்கவும், அதே பிரகாரம், ஸைரக்யூஸை, சர்வாதிகார ஆட்சியினின்று விடுதலை செய்வித்து, அங்கு, சட்ட வரம்புக்குட்பட்ட மன்னராட்சியை நிறுவவும் நீ ஒரு சமயம் மிக ஆவல் கொண்டிருந்த தாகவும், ஆனால் நீ இவைகளைப் பற்றி என்னிடம் பிரதாபித்த போது, அப்படி யெல்லாம் ஒன்றும் செய்ய வேண்டாமென்று நான் உன்னைத் தடுத்து விட்டதாகவும் நீ சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்று தெரிகிறது. மற்றும், ஆட்சிமுறை மாறவேண்டுமென்கிற திட்டத்தில் பங்குகொள்ளுமாறு டியோனுக்கு நான் ஆலோசனை சொல்லி வருவதாகவும் நீ கூறிக்கொண்டிருக்கிறாய். இன்னும் இந்தச் சீர்த்திருத்தத் திட்டங்களை, உனக்கு விரோதமான ஒரு கருவியாக உபயோகித்து, உன்னுடைய ராஜ்யம் உனக்கு இல்லாதபடி செய்ய நாங்கள் முயல்கிறோமென்றும் நீ சொல்லிக்கொண்டிருக்கிறாய். இந்த மாதிரி நீ சொல்லிக்கொண்டு வருவதனால் உனக்கு ஏதேனும் லாபமுண்டா என்பது உனக்குத்தான் தெரியும். ஆனால் நீ சொல்லிக் கொண்டிருப்பது, என்ன நடந்ததோ அதற்கு நேர்விரோதமாயிருக் கிறது. எப்படியோ, நீ எனக்குப் பெரிய தீங்கு செய்தவனாகிறாய். உன்னுடைய கூலிப்படையினரையும், ஸைரக்யூ வாசிகளையும், எனக்கு விரோதமாகத் தொடர்ந்தாற் போல் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த பிலிட்டிடீஸும்,1 வேறு பலரும் ஏற்கனவே பல பொய்க்கதைகளைக் கட்டிவிட்டிருக் கிறார்கள். உன் கோட்டைக் குள் நான் சிறிதுகாலம் தங்கியிருந்த காரணத்தினால், அப்பொழுது நீ என் சொற்படியே நடந்துவந்தாய் என்று வெளியார் நினைத்தனர்; நீ செய்துவந்த ஒவ்வொரு தவறான காரியத்திற்கும் என்னையே பொறுப்பாக்கிப் பேசினர். தெரிந்தேதான், உன்னுடைய அரசாங்க விவகாரங்களில் நான் ஓர் அளவுக்குட்பட்டுப் பங்கு கொண்டேன்; அதுவும் ஆரம்ப காலத்தில்தான். உனக்கு இது நன்றாகத் தெரியும். அப்படிப் பங்கு கொண்டதுகூட, ஏதோ சாதித்து விடலாமென்ற எண்ணத்துடன் தான். மற்றச் சில்லரை விஷயங்கள் ஒரு பக்கமிருக்கட்டும். உன் ராஜ்யத்துச் சட்டத்தின் பீடிகையாயுள்ள பகுதியை சரி செய்து கொடுப்பதில் நான் பெரிதும் உழைத்தேன். ஆனால் நான் ஸைரக்யூஸி லிருந்து வெளிவந்துவிட்ட பிறகு, நீயும் உன் கூட்டாளிகளும் சேர்ந்து, அதைத் திரும்பவும் பரிசீலனை செய்து, சில அமிசங்களைச் சேர்த்திருப்ப தாகக் கேள்விப்படுகிறேன். ஆனால் என்னைத் தெரிந்து கொண்டிருக் கிறவர்கள், என் கைவேலை எது என்பதை நன்கு அறிந்துகொள்வார்கள். ஆகையால் மேலே நான் தெரிவித்திருக்கிற படி, ஸைரக்யூஸியர் களிடையிலோ, மற்றவர்களிடையிலோ, நீ என்னைப்பற்றித் தவறாகப் பிரசாரம் செய்யவேண்டிய அவசிய மில்லை. அதற்குமாறாக, நீ என்மீது சாட்டப்பட்ட பல குற்றங்களை மறுத்து எனக்கு ஆதரவாகப் பேச வேண்டும். உன்னுடைய அரசாங்க விவகாரங்களில் நான் ஒரு சிறு பங்கு எடுத்துக்கொண்டதுதான் சரி என்பதை முதலில் உனக்கு நிரூபித்துக் காட்டுகிறேன். அடுத்தபடி, சிஸிலியிலுள்ள கிரேக்க நகர ராஜ்யங் களைத் திருத்தி அமைக்கும் விஷயத்தில், உனக்குத் தடையாக நான் இருக்க வில்லையென்பதையும் நிரூபித்துக் காட்டுகிறேன். நீயும் டியோனும் சேர்ந்து விடுத்த அழைப்பின்பேரில் தான் நான் ஸைரக்யூஸுக்கு வந்தேன். டியோன், என்னுடைய பழைய நண்பன்; பண்பட்டவன்; பக்குவ வயதடைந்தவன்; ஒழுங்கான நடக்கையுள்ளவன். உன்னுடைய அரசாங்க சம்பந்தமான பிரச்சனைக ளாகட்டும், அவை போன்ற வேறு பல முக்கியமான பிரச்னைக ளாகட்டும், எல்லா வற்றைப் பற்றியும் தக்க ஆலோசனை சொல்வ தற்கு, மேற்சொன்ன தகுதிகள் யாவும் இன்றியமையாதவை என்பதை எந்த அறிவுள்ள மனிதனும் ஒப்புக்கொள்வான். ஆனால் நீயோ, வயதில் சிறியவனாயிருந்தாய். அனுபவ பூர்வமாக நீ தெரிந்து கொண்டிருக்கவேண்டிய அநேக விஷயங் களில் உனக்கு ஒருவிதமான அனுபவமும் இல்லாமலிருந்தது. எனக்குத் தெரியாதவனாகவே நீ இருந்தாய். கடவுள் சித்தத்தினாலோ, தற்செயலாகவோ, வேண்டு மென்றோ, எப்படியோ, நீ, டியோனைத் தேசப்பிரஷ்டம் செய்து விட்டாய். நீ தனியனாக நின்றாய். நானோ, என்னுடைய சகபாடி களில் அறிவுள்ள ஒருவனை இழந்துநின்றேன்; மூடனான ஒருவன் மட்டும் இருந்தான். அவனும் கற்பனையான ஓர் அரசனாகத்தான் இருந்தானே தவிர, நிஜமான ஓர் அரசனாக இருக்கவில்லை. உண்மை யில் அவன், பழிக்கஞ்சாத ஒரு கூட்டத்தினரால் ஆளப்படுகிறவனா யிருந்தான்.1 இந்த நிலைமையில் நான், உன்னுடைய அரசாங்க விவகாரங்களில் பெரும் பங்கெடுத்துக் கொள்வதென்பது சாத்திய மாயிருந்திருக்க முடியுமா? அப்படித்தான் பங்கெடுத்துக் கொண் டிருந்தாலும், உள்ள நிலைமையில் நான் என்ன சாதித்திருக்க முடியும்? அப்பொழுதிருந்து நான் பொதுவிவகாரங்களில் தலையிடா மல் ஒதுங்கிவிட்டேன். உன்னுடைய சகபாடிகளின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ளவும் நான் விரும்பவில்லை. உனக்கும் டியோனுக்கும் ஏற்பட்ட மனதாபத்தைத் தீர்த்து வைப்பதிலும், உங்களிருவரையும் நண்பர்களாகச் சேர்த்துவைப்பதிலும் என் முழுச்சக்தியையும் செலவழித்தேன். இதற்காகவே நான் உழைத்து வந்தேன் என்பதை நீயே ஒப்புக்கொள்வாய். கடைசியில், பல வாக்கு வாதங்களுக்குப் பிறகு நாம் ஓர் ஏற்பாடு செய்து கொண்டோம். அதாவது, நீ அப்பொழுது ஒரு போரில் ஈடுபட்டிருந்ததால்,2 நான் ஆத்தென்ஸுக்குத் திரும்பிச் செல்வதென்றும், சமாதானம் ஏற்பட்ட பிறகு, உன் அழைப்பின் பேரில் நானும் டியோனும் ஸைரக்யூஸுக்குத் திரும்பி வருவதென்றும் ஏற்பாடு செய்துகொண்டோம். போர் முடிந்தது. சமாதானமும் ஏற்பட்டது. என்னை வரச்சொல்லி நீ இரண்டாந்தடவையாக அழைப்பு அனுப்பினாய். ஆனால் நான் முன்பு செய்துகொண்ட ஏற்பாட்டிற்கு மாறாக, என்னைமட்டும் வரச்சொல்லியும், டியோனை பிறகு அழைத்துக் கொள்வதாகவும் அந்த அழைப்பில் குறிப்பிட்டிருந்தாய். இந்தக் காரணத்தினால் உன் அழைப்பை ஏற்க மறுத்தேன். இப்படி நான் மறுத்தது (அப்பொழுது ஆத்தென்ஸி லிருந்த) டியோனுக்கும் மிகவும் வருத்தம். நீ கட்டளையிட் டிருந்தபடி நான் சென்றால் நன்றாயிருக்குமென்று அவன் கருதினான். இதற்கு ஒரு வருஷங்கழித்து, உன்னிடமிருந்து சில கடிதங் களுடன் ஒரு யுத்தக்கப்பல் வந்தது.3 அந்தக் கடிதங்களில், நான் வந்தால், டியோன் சம்பந்தப்பட்ட எல்லா விவகாரங்களையும் என் விருப்பப்படி முடிவு செய்துவிடலாமென்றும், அப்படி நான் வராவிட்டால் ஏதும் செய்யமுடியாதென்றும் நீ கண்டிருந்தாய். உன் அழைப்பை ஏற்றுக் கொண்டு நான் கட்டாயம் வரவேண்டுமென்று வற்புறுத்தி உன்னிட மிருந்து வந்த கடிதங்களும், இத்தலியிலும் சிஸிலியிலுமுள்ள நண்பர்கள் உன் வேண்டுகோளின்படி எழுதி யனுப்பிய கடிதங்களும் எத்தனை! எத்தனை! இதே பிரகாரம் என்னுடைய நண்பர்களும், எனக்கு அறிமுகமான பலரும் எனக்கு எழுதிய கடிதங்கள் எத்தனை! எத்தனை! இப்படிக் கடிதங்கள் வந்து குவிந்தபிறகும், நான் செல்வதற்குத் தயங்கக்கூடாதென்றும், கட்டாயம் போய்த்தானாக வேண்டு மென்றும் என்னுடைய நண்பர்களும், சிறப்பாக டியோனும் கருதினார்கள். ஆனால் நான் எனக்கு வயதாகி விட்டது1 என்று சொன்னேன். தவிர, பிறரைத் தூற்றுவதிலும் விரோதித்துக் கொள்வதிலுமே நாட்டமுடையவர்களை எதிர்த்து நிற்பது கடினம் என்ற உறுதியான கருத்தும் எனக்கு இருந்தது. தனிப்பட்ட மனிதர்களிடத்திலோ, மன்னர்களிடத்திலோ, செல்வமானது மிதமிஞ்சிக் குவியுமானால், அதற்கு ஏற்றாற்போல், அவர்களைச் சுற்றி, சுகபோக வாழ்க்கையை நாடுகின்ற கோள் சொல்லிகளும், இச்சகம் பாடுகின்ற புல்லுருவிகளும் அதிகரிக்கிறார்கள். மிதமிஞ்சிய செல்வமோ, வரம்பற்ற அதிகாரமோ, இந்த விளைவைத்தான் உண்டுபண்ணும். இவற்றையெல்லாம் நான் நன்கு அறிந்தவனே. ஆயினும் இவைகளைப் பொருட்படுத்தாமல் நான் புறப்பட்டேன். என்னுடைய நண்பர்கள் யாரும், நான் எவ்வித பிரயாசையும் எடுத்துக்கொள்ளாமல் சும்மாயிருந்து விட்டதனால்தான், தங் களுடைய சொத்துபற்றுக்களை இழந்து விட்ட தாகவும், நான் பிரயாசை எடுத்துக் கொண்டிருந்தால் அவை காப்பாற்றப் பட்டிருக்கும் என்றும் என்னைப்பற்றித் தவறாக நினைக்கக்கூடா தல்லவா? நான் புறப்பட்டு வந்ததனால் உண்டான விளைவு என்ன என்பது உனக்கு நன்றாகத் தெரியும். நான் அவ்விடம் வந்ததும், உன் கடிதங்களில் நீ குறிப்பிட்டிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுக்குமாறு உன்னைக்கேட்டேன். முதலாவதாக, உன்னுடைய உறவினனான டியோனைத் திரும்ப வரவழைத்து, முன்புபோல் அவனை உன் பூரண நட்புக்குரியவனாக்கிக்கொள்ள வேண்டு மென்று சொன்னேன். இதன்படி நீ நடந்திருந்தாயானால், நீயும் ஸைரக்யூஸும், ஏன், கிரீ முழுவதும் இப்பொழுதைக் காட்டிலும் இன்னும் அதிக மகிழ்ச்சியடைந்திருக்கும். இரண்டாவதாக, டியோனுடைய சொத்துபற்றுக்களை ஒரு சிலருக்கு-அவர்கள் யார் யார் என்பதை நான் இங்குச் சொல்லத் தேவையில்லை-பிரித்துக் கொடாமல், அவனுடைய குடும்பத்தினருக்குச் சேருமாறு செய்ய வேண்டுமென்று கேட்டேன். தவிர, நான் ஸைரக்யூஸுக்கு வந்ததன் பயனாக, டியோனுடைய சொத்துபற்றுக்களின் வருஷவாரி வருமானத்திலிருந்து இப்பொழுது அவனுக்கு எவ்வளவு அனுப்பப் பட்டு வருகிறதோ அதைக்காட்டிலும் இன்னும் கொஞ்சம் அதிக மாக அனுப்பித்தரச் செய்ய வேண்டுமென்றும், எந்த விதத்திலும் அது குறைந்துவிடக் கூடாதென்றும் எண்ணினேன். ஆனால் என்னுடைய இந்தக் கோரிக்கைகள் எதுவுமே நிறைவேறவில்லை. எனவே, நான் திரும்பிச்செல்ல உன்னிடம் அனுமதி கேட்டேன். அதற்கு நீ, இந்த வருஷம் முடியும் வரையில் காத்திருக்குமாறும், அதற்குள், டியோனின் சொத்து பற்றுக்கள் முழுவதையும் விற்று முதலாக்கி, அதில் ஒரு பாதியை கொரிந்த்தியாவிலுள்ள டியோனுக்கு அனுப்பிவிடுவதாகவும், மறுபாதியை டியோனுடைய மகனின் உபயோகத்திற்காக ஸைரக்யூஸிலேயே வைத்துக்கொள்வதாகவும் வாக்குறுதி கொடுத்தாய். ஆனால் இந்த வாக்குறுதிப்படி நீ நடக்க வில்லை. இதுபோல் இன்னும் எத்தனையோ வாக்குறுதிகள் கொடுத்து அவற்றின்படி நடக்காம லிருந்திருக்கிறாய். அவற்றையெல்லாம் பற்றி இங்கு நான் பிரதாபிக்க விரும்பவில்லை. டியோனுடைய சம்மதத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு, அவனுடைய சொத்து பற்றுக்களை விற்கப்போவதாக முதலில் சொன்னாய். ஆனால் அப்படிச் செய்யாமல், அவனுடைய சொத்து பற்றுக்கள் அனைத்தை யும் விற்றுவிட்டாய். பிறகு, விற்றுமுதலான தொகையை அவனுக்கு அனுப்பிவைக்குமாறு நான் உன்னைக் கேட்கா திருக்க வேண்டு மென்பதற்காகவும், உன்னுடைய சூழ்ச்சிகளை நான் தெரிந்து கொள்ளாமலிருக்க வேண்டுமென்பதற்காகவும், ஒரு திட்டம் போட்டாய். அந்தத் திட்டம் கேவலமானது; சம்பந்தமில்லாதது; நியாய மற்றது. அதனால் விளையக்கூடிய நன்மையும் இல்லை. ஹெராகிளிடீ1 என்பவனை நாடுகடத்தப் போவதில்லையென்று முதலில் நீ எனக்கு வாக்குறுதி கொடுத்தாய். இதற்கு தியோடோட் டீஸும் யூரிபியஸும்2 சாட்சிகள். ஆனால் பின்னர், இந்த வாக்குறுதியைமீறி அவனை நாடுகடத்திவிட்டாய். இது நியாயம் என்று நானோ, ஸைரக்யூஸிலுள்ள உன் நண்பர்களோ கருதவில்லை. என்னுடைய அநுதாபமெல்லாம், டியோன் சார்பாகவே இருக்கிற தென்றும் உன் பக்கம் இல்லையென்றும் வெகுகாலமாகவே நீ சொல்லிக் கொண்டு வந்தாய். பிறகு டியோனின் நண்பர்களாகிய ஹெராகிளிடீ பேரிலும் தியோடோட்டீ பேரிலும் குற்றஞ் சாட்டப்பட்டபோது, அவர்கள் தண்டிக்கப்படாமலிருப்பதற்காக நான் முழுமூச்சுடன் வேலை செய்கிறேன் என்று சொன்னாய். இப்படியெல்லாம் நீ சொன்னதுதான், நம்முடைய நட்பில் வேற்றுமை ஏற்பட்டதற்கு அடிப்படையான காரணம். உன்னால் நாடு கடத்தப் பட்ட ஹெராகிளிடீ, என்னுடைய நீண்டகால நண்பன்; என்னை உபசரித்து வந்தவன். உன்னைவிட எந்த விதத்திலும் தாழ்ந்த வனல்லன். அவனுக்கு உன்னால் துன்பம் ஏற்பட்டுவிட்டது. அவனை, உன் அதிகாரத்திற்குப் பயந்து நான் புறக்கணித்து விட்டே னாயின், என்னை ஒரு துரோகியென்று நியாய புத்தியுள்ள எவனும் நினைத்திருப்பான். ஆகவே அவன் நாடுகடத்தப்படாமலிருப்பதற் காக முயற்சி செய்தேன். இப்படி நான் முயற்சி செய்ததுதான், நமக்குள் ஏற்பட்ட மனவேற்றுமைகளுக் கெல்லாம் காரணம்; வேறு காரணம் எதுவுமில்லை. ஆகவே நம்முடைய நட்பில் பங்கம் ஏற்பட்ட தற்கு உன்னுடைய இந்தச் செயல்களே காரணம். ஓநாய்க்கும் ஓநாய்க்குமுள்ள நட்புதான் இப்பொழுது நம்மிடையே நிலவுகிறது. என்மீது கொண்டுவரப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டைப் பற்றியும் நான் சில வார்த்தைகள் சொல்லவேண்டியவனா யிருக்கிறேன். நான் சொல்வதை ஊன்றிக்கவனித்து, அதில் ஏதேனும் பொய் இருக்கிறதா என்று நீயே பார்த்துக்கொள். நான் ஸைரக்யூஸி லிருந்து புறப்படுவதற்கு இருபது நாட்கள் முன்பு, ஹெராகிளிடீ சார்பாகவே நான் நடந்துகொண்டு வருகிறேன் என்று நீ சொன்னதை நான் கண்டித்தேன். இப்பொழுது அதையே நீ மறுபடியும் சொல் கிறாய். இருக்கட்டும். நாம் இருவரும் அப்பொழுது, உன் அரண் மனைத் தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தோம். கூட, ஆர்க்கி டேமஸும் அரிட்டோகிரீட்டஸும் (Aristocretus) இருந்தனர். அவர்கள் முன்னிலையில் நீ என்னைப் பார்த்து பிளேட்டோ, நீ ஸைரக்யூஸுக்கு முந்தின தடவை வந்திருந்தபோது, சிஸிலியிலுள்ள கிரேக்க நகர ராஜ்யங்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டுமென்று எனக்கு ஆலோசனை சொன்னாயே, அது நினைவிருக்கிறதா என்று கேட்டாய். நினைவிருக்கிறதென்றும், அப்படி உரிமை வழங்குவது தான் மிக நல்லதென்றும் நான் சொன்னேன். பிறகு, இப்படி நான் சொன்னதை ஆலோசனை மாத்திரமாகத்தான் எடுத்துக்கொள்ளப் போகிறாயா அல்லது அதில் ஆழ்ந்தபொருள் இருப்பதைக் காணப்போகிறாயா என்று நான் கேட்டேன். இப்படி நான் கேட்டதும் உனக்குக் கோபம் வந்துவிட்டது. அலட்சியமாகப் பதில் சொன்னாய். பலவந்தமாக ஒரு புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டு உன் திட்டப்படி நடக்கவேண்டுமானால், நான் முதலில் பள்ளிக் கூடம் சென்று படிக்கவேண்டும் போலிருக்கிறது; அப்படிப் போகா விட்டால் நீ சொல்லும் திட்டங்களைக் கைவிட வேண்டியதுதான் என்று சொல்லிவிட்டு, உடனே, பள்ளிக்கூடத்தில் படிக்கவேண் டியது ஜியோமிதியை (க்ஷேத்திர கணிதத்தை)த் தானே? என்று கேட்டாய். அதற்கு உடனே பதில் சொல்லவேண்டுமென்று எனக்குத் தோன்றியது. ஆனால் நான் சொல்லவில்லை. ஏனென்றால், ஒரு சிறுவார்த்தை சொன்னால்கூட, நான், என் ஊருக்குத் திரும்பிப் போவது சாத்தியமில்லாமற் போய்விடுமோ என்ற அச்சம் எனக்கு உண்டாயிற்று. நானோ, ஊருக்குத் திரும்ப வேண்டுமென்பதில் மிகவும் ஆவலுடைய வனாக இருந்தேன். இவைகளையெல்லாம் நான் எதற்காகச் சொல்கிறேனென் றால், கார்த்தஜீனியர்களின் படையெடுப்பினால் பாழ்பட்டுப் போன நகரங்களைச் சீர்திருத்தியமைப்பதையும், ஸைரக்யூஸியர்க ளைச் சர்வாதிகார ஆட்சியினின்று விடுவித்து சட்ட வரம்புக்குட் பட்ட மன்னராட்சிக் குட்படுத்துவதையும் வேண்டாமென்று நான் உன்னைத் தடுத்துக் கொண்டிருப்பதாக நீ அவதூறு சொல்லிக் கொண்டிருக்கிறாயே அதை நிறுத்திக்கொள்ள வேண்டு மென்ப தற்குத்தான். உண்மையில் நான்தான், மேலே சொன்ன காரியங்களை நீ உடனடியாகச் செய்ய வேண்டுமென்று உன்னை வற்புறுத்தி வந்தேன். நீ மறுத்துவந்தாய். நீ அப்படி மறுக்காமல் மேற்சொன்ன காரியங்களைச் செய்திருந்தால், உனக்கும் ஸைரக்யூஸியர்களுக்கும், ஏன், சிஸிலிமுழுவதற்கும் எவ்வளவோ நன்மையாயிருந்திருக்கும். ஆகவே நண்பனே, எனக்கு விரோதமாக நீ சொன்னதை யெல்லாம் நான் சொல்லவில்லை என்று நீ மறுத்துவிட்டால் போதும். அதுதான் நான் உன்னிடத்திலிருந்து கோரும் நியாயம். நான்காவது கடிதம் டியோன், கி.மு. 357ஆம் வருஷம் இ. டையோனி ஸியஸுக்கு விரோதமாக ஸைரக்யூமீது படை யெடுத்துச்சென்று, முதல் வெற்றிகண்ட சிறிது காலத் திற்குப் பிறகு, அவனுக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்ட தென்பது ஆராய்ச்சியாளர் துணிபு. ஸைரக்யூஸை சேர்ந்த டியோனுக்கு பிளேட்டோ எழுதுவது: நலம். நீ இப்பொழுது இறங்கியிருக்கும் (போர்) முயற்சிகளில் நான் மிகுந்த அக்கரையுடையவனாக இருக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அவை வெற்றிகரமாக முடிய வேண்டுமென்பதில் நான் மிக ஆவலுடையவனாயிருக்கிறேன். இப்படி நான் ஆவல் கொள்வ தற்கு வேறொரு காரணமுமில்லை. நல்லது எதுவோ அதன்மீது எனக்குள்ள மிகுந்த ஆசைதான் காரணம். உண்மையிலே நற்குணங்களைப் படைத்து அவற்றை நடக்கையில் கொண்டுவந்து காட்டுகிறவர்கள், கௌரவிக்கப் படுவதற்குரியவர்கள். அவர்களைக் கௌரவிக்கவும் வேண்டும். கடவுள் அருளால் இதுவரை உன் முயற்சிகள் நல்ல பயனையே கொடுத்து வந்திருக்கின்றன. ஆனால் வருங்காலத்தில் நாம் இன்னும் அதிகமான பிரயாசைகள் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். பலத்திலோ,தைரியத்திலோ, புத்திசாலித் தனத்திலோ, நாம் மற்றவர் களைக்காட்டிலும் மேலானவர்களாயிருப்பது பெரிதல்ல. உண்மை யிலும், நேர்மையிலும், பெருந்தன்மையிலும் மேலானவர்களா யிருந்து அந்தப் பண்புகளுக்கிசைய நடப்பதுதான் பெரிது. இந்தப் பண்புகளுடையவர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக நடந்து கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால், மற்றச் சாதாரண ஜனங்களோடு இவர்களை ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, அந்தச் சாதாரண ஜனங்கள் இவர்களுடைய குழந்தைகளே என்று எண்ணும்படி அவ்வளவு உயர்வாக இவர்கள் நடந்துகொள்ள வேண்டும். நாங்கள் எப்படிப்பட்டவர்களென்று சொல்லிக்கொண் டிருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே இருக்கிறோம் என்று இவர்கள் உலகத்திற்குக் காட்ட வேண்டும். இப்பொழுதுள்ள நிலையில் அப்படிக்காட்டிக் கொள்வது சுலபம். மற்றவர்கள், எல்லோருக்கும் தெரிந்தவர்களாவதற்குமுன், எங்கெங்கோ சென்று அலையவேண்டியிருக்கிறது. ஆனால் எந்தச் சம்பவங்களின் மைய புருஷனாக நீ இருக்கிறாயோ அந்தச் சம்பவங்கள், உலகத்தின் கவனத்தை ஒரே ஓர் இடத்தின்மீது, சிறப்பாக அந்த இடத்திலுள்ள உன்மீது திருப்பிவிட்டிருக்கின்றன. உலக முழுவதும் கவனஞ்செலுத்துகிற ஒருவனாக இப்பொழுது நீ இருக்கிறாய். ஆகவே லைக்கர்க,1 ஸைர2 ஆகிய இருவரைக் காட்டிலும், ஒழுக்கத்திலும் அரசதந்திரத்திலும் மேலானவர்க ளென்று கருதப்படுகின்ற மற்ற எல்லோரைக் காட்டிலும் மேலான வனாக இருக்க நீ உன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். இப்படி நான் சொல்வதை நீ நன்றாக மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு விசேஷ காரணமும் இருக்கிறது. அஃது என்னவென்றால், இ. டையோனிஸிய, ஸைரக்யூஸிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பிறகு உனக்கும், ஹெராகிளிடீ, தியோ டோட்டீ முதலிய உன் சகபாடிகளுக்கும் போட்டி ஏற்பட்டு அதனால் நீ எடுத்துக்கொண்ட காரியம் கெட்டுப்போகுமென்று எல்லோரும் சொல்லிக்கொள்கிறார்கள். உங்களுக்குள் எவ்வித போட்டியும் ஏற்படாதென்று நம்புகிறேன். அப்படி ஏற்பட்டாலும் அதை அகற்றிவிடக்கூடிய வகையில் நீ நடந்துகொள்ள வேண்டும். அப்படி நடந்துகொண்டால் எல்லாம் சரியாகிவிடும். உனக்கு ஒன்றும் தெரியாதென்கிற மாதிரி நான் இப்படி எழுது கிறேன் என்று கருதி நீ உனக்குள்ளேயே சிரித்துக் கொள்வாயோ என்னவோ? எப்பொழுதுமே, ஒரு விளையாட்டில் பங்கு கொள் கிறவர்கள், தாங்கள் விளையாடுவதைப் பார்த்து, குழந்தைகள் ஆரவாரம் செய்வது கண்டோ, நல்லெண்ணம் படைத்த நண்பர்கள் உற்சாகமூட்டுவதனாலோ, தங்கள் விளையாட்டுக்களில் இன்னும் அதிகமான சுறுசுறுப்புடன் பங்கு கொள்கிறார்கள் என்பதை நான் கண்டிருக்கிறேன். ஆதலின், வெற்றி கிட்டுகிற வகையில் நட வடிக்கைகள் எடுத்துக்கொள். எங்களிடமிருந்து ஏதேனும் உதவி தேவைப்படுமானால் எங்களுக்கு எழுது. நீ புறப்பட்டுச் சென்றபோது இங்கு என்ன நிலைமை இருந்ததோ அதே நிலைமைதான் இப்பொழுது இருக்கிறது. இதுவரை நீ என்ன செய்தாய், இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பவை களைப்பற்றி எங்களுக்கு எழுது. ஏனென்றால், இங்கு என்னென்னவோ செய்திகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. எதுவும் எங்களுக்கு நிச்சயமாகத் தெரிய வில்லை. தியோடோட்டீஸிடமிருந்தும் ஹெராகிளிடீஸிட மிருந்தும் லாஸிடீமோனுக்கும்1 எஜீனாவுக்கும்2 இப்பொழுதுதான் கடிதங்கள் வந்திருக்கின்றன. ஆனாலும் அங்கு (ஸைரக்யூஸில்) என்ன நடக்கிறது என்பதைப்பற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியாது. நீ, போதுமானபடி இசைந்து கொடுக்கிறவனாயில்லையென்று சிலர் உன்மீது குறை கூறுகிறார்கள். நீ ஏதேனும் சாதிக்க விரும்புவா யானால், ஓரளவு விட்டுக்கொடுக்கவேண்டிய மனப்பான்மை இருக்க வேண்டியது அவசியம். பிடிவாத குணம், தனிப்பட்டிருப்ப வர்களுக்குத்தான் பொருந்தும். நலம். ஐந்தாவது கடிதம் பெர்டிக்கா என்பவன், மகா அலெக்ஸாந்தரின் தந்தையான பிலிப் மன்னனின் (Philip II) மூத்த சகோதரன். இவனை மூன்றாவது பெர்டிக்கா (Perdiccas III) என்று அழைப்பர். இவன் கி.மு. 364 முதல் 359 ஆம் வருஷம் வரை மாஸிடோனியாவை ஆண்டு வந்தான். ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சிறிது காலங் கழித்து, இவன், ராஜ்ய நிருவாக சம்பந்த மாகத் தனக்கு ஆலோசனை சொல்ல ஓர் அறிஞனை அனுப்பு மாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க, பிளேட்டோ, தன் கழகத்தைச் சேர்ந்த யூப்ரீய என்பவனை அனுப்பி இந்தக் கடிதத்தையும் எழுதினான். பெர்டிக்காஸுக்கு பிளேட்டோ எழுதுவது: நலம். உன் கடிதம் கிடைத்தது. அதில் நீ கேட்டுக்கொண்டபடி உன்னுடைய நலன்களை மிகவும் அக்கரையுடன் கவனிக்க வேண்டு மென்று யூப்ரீயஸுக்கு1 உணர்த்தியிருக்கிறேன். நீ எழுதியிருக்கிற அநேக பிரச்னைகளைப்பற்றி, சிறப்பாக இந்த யூப்ரீயஸை நீ எப்படி உபயோகித்துக்கொள்ள வேண்டு மென்பதைப் பற்றி, உனக்குச் சில அறிவுரைகள் கூறுவது என் கடமையென்று கருதுகிறேன். இவன், இந்த யூப்ரீய, உனக்குப் பெரிதும் உதவியாயிருப்பான். சிறப்பாக எந்த விஷயத்தைப்பற்றி நீ ஆலோசிக்க விரும்புகிறாயோ அந்த விஷயத்தைப்பற்றி உனக்கு நல்லவிதமான ஆலோசனை சொல்வதில் இவன் உதவி உனக்குப் பெரிதும் பயன்படும். நீ இளைஞன். அதனால் இவன் உதவி உனக்குத் தேவை. இந்தக் காலத்தில் இளைஞர்களுக்குப் புத்திமதி சொல்லக் கூடிய தகுதியுடையவர்கள் ஒரு சிலராகவே இருக்கிறார்கள். மிருகங்களில் பலவகை இருப்பதுபோல், ஆட்சிமுறைகளிலும் பலவகைகளுண்டு. ஒவ்வோர் ஆட்சிமுறையும் ஒவ்வொரு பாஷை யில் பேசும். ஜனநாயகத்திற்கு ஒரு பாஷை; ஒரு சிலர் ஆட்சிக்கு வேறொரு பாஷை; மன்னராட்சிக்கு மற்றொரு பாஷை. இந்தப் பல்வேறு பாஷை களும் தங்களுக்குத் தெரியும் என்று பலர் சொல்வார்கள். ஆனால் ஒரு சிலர் தான், ஒரு பாஷைக்கும் மற்றொரு பாஷைக்குமுள்ள வித்தியாசத்தை - அதாவது ஓர் ஆட்சிமுறைக்கும் மற்றோர் ஆட்சி முறைக்குமுள்ள வித்தியாசத்தை-தெளிவாகத் தெரிந்து கொண்டிருப்பர். எந்த ஆட்சிமுறை, கடவுளர்களையும், மனிதர்களையும் நோக்கித் தனக்குச் சொந்தமானதும், பொருத்த மானதுமான பாஷையில் பேசுகிறதோ, எந்த ஆட்சிமுறை தன் சொல்லுக்குத் தகுந்தபடி தன் செயலை நிர்ணயித்துக் கொள்கிறதோ அந்த ஆட்சிமுறைதான் நிலைத்திருக்கும்; செழிப்பாகவும் இருக்கும். ஆனால் அதே ஆட்சிமுறை வேறோர் ஆட்சிமுறையின் சாயலாக இருக்க முற்படுமானால், அது நாசமாகத்தான் போகும். இந்த மாதிரி யான விஷயத்தில் ஆலோசனை சொல்ல, யூப்ரீய உனக்குப் பெரிதும் உதவியாயிருப்பான். அவன் பல துறைகளில் திறமையுடையவன். அந்தந்தத் துறைகளில் அவனைப் பயன்படுத்திக் கொள்ளலாமென் றாலும் உன்னுடைய சேவையில் இருக்கும் மற்ற எல்லோரைக் காட்டிலும் அவன் ஒருவனே, மன்னராட்சிக்குத் தகுதியுடைய பாஷை எது என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வல்லவன். ஆகையால் இந்த விஷயத்தில் நீ அவனை உபயோகப் படுத்திக் கொள். அப்படி உபயோகப்படுத்திக் கொள் வாயானால் நீயும் நன்மையடைவாய்; அவனுக்கும் பெரிய ஆதரவு கொடுத்தவனாவாய். இப்படி நான் சொல்வதை யாராவது ஒருவன் கேட்டுவிட்டுப் பின்வருமாறு கூறலாம்:- ஜனநாயக ஆட்சிக்கு நன்மை பயக்கக் கூடியது எது என்பதைப்பற்றித் தனக்குத் தெரியும் என்று பிளேட்டோ நினைத்துக் கொண்டிருக்கலாம். அப்படித் தனக்குத் தெரிந்திருப்பதை ஜன சபையில் பகிரங்கமாகச் சொல்ல அவனுக்கு உரிமை இருந்தபோதிலும் அவன் அதைப்பற்றி ஒரு வார்த்தைக்கூட ஒருபோதும் சொன்னதே கிடையாது. இதற்கு நீ பின்வருமாறு பதில் கூறலாம்:- பிளேட்டோ, அவனுடைய ஆத்தென் ராஜ்யம் நல் வாழ்வு நடத்திவந்த காலத்தின் கடைசி பகுதியில் பிறந்தவன். அவன் பிறந்த பொழுது ஆத்தென் ராஜ்யத்துப் பொது ஜன அபிப்பிராயத்திற்கு அதிக வயதாகிவிட்டிருந்தது. இதை அவன் பார்த்தான். தவிர, ஏற்கனவே இருந்த அரச தந்திரிகள் புகுத்திய அரசியல் சம்பிரதாயங் களில் அது-ஆத்தென்-நன்றாக ஊறியிருந்தது. அந்தச் சம்பிர தாயங்கள், பிளேட்டோ என்ன அறிவுரைகள் வழங்கக்கூடுமோ அவைகளுக்கு நேர்மாறாக இருந்தன. ஒரு தகப்பனைப்போலிருந்து அவன் சொந்த ராஜ்யமான ஆத்தென்ஸுக்குப் புத்திமதிகள் கூறியிருப்பான். ஆனால் அந்தப் புத்திமதிகளினால் எவ்வித பயனும் உண்டாகாது, தன் உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடுமென்பதை அவன் உணர்ந்திருந்தான். இதனால் அவன் எவ்வித புத்திமதி களையும் கூறவில்லை. உண்மையில் தன் சொந்த ராஜ்யத்திற்குப் புத்திமதிகள் கூறுவதி லுள்ள இன்பத்தைக் காட்டிலும் வேறு என்ன இன்பம் அவனுக்கு இருக்கப்போகிறது? எனக்கும் அதே மாதிரி, அதாவது அவனுடைய புத்திமதிகளினால் நன்மை ஏற்படக்கூடு மென்று தெரிந்தால், புத்திமதிகள் கூறுவான். அப்படிக் கூறுவதனால் நான் எவ்வித பயனையும் அடையமாட்டேன் என்று அவனுக்குத் தெரிந்தால் அவன் என்னைப் புறக்கணித்து விடுவான்; எனக்கு எவ்வித புத்திமதிகளும் கூற, கண்டிப்பாக மறுத்து விடுவான். ஆறாவது கடிதம் ஹெர்மையா (Hermeias) என்பவன், சின்ன ஆசியாவி லுள்ள அட்டார்னேய (Atarneus) என்ற நகர ராஜ்யத் தின் சர்வாதிகாரியாக ஆண்டவன். இவன் காலம் கி.மு. நான்காவது நூற்றாண்டு. இவனுடைய ஆதரவில் அரிட்டாட்டல் (Aristotle) சிறிது காலம் வாழ்ந்து வந்தான். இந்தக் கடிதத்தில் கூறப்பெற்றுள்ள எராட்டஸும் காரிக்கஸும் (Erastus and Coriscus) பிளேட்டோவின் கழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள், ஹெர்மையா ஸுடன் நெருங்கிய நட்புக்கொண்டிருந்தார்களென்று தெரிகிறது. இக்கடிதத்திலிருந்து, பிளேட்டோ, நட்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்பது புலனாகிறது. ஹெர்மையாஸூக்கும், எராட்டஸுக்கும், காரிக்கஸுக்கும் பிளேட்டோ எழுதுவது: நலம். ஏதோ ஒரு தெய்விக சக்தி, இப்பொழுது உங்கள் வசத்தில் ஓர் அரிய சந்தர்ப்பத்தை ஒப்புவித்திருக்கிறதென்பது என் நம்பிக்கை. இதை நீங்கள் சரியானபடி பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நீங்கள் மூவரும் சேர்ந்தாற்போல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஒருவருக்குத் தேவையா யுள்ளதை மற்றொருவர் அளித்து உதவக் கூடும். ஹெர்மையாஸின் ஆதிக்கத்திற்குப் பேராதரவாயிருப்பது அவனுடைய குதிரைப்படையின் பெருக்கமன்று; காலாட் படையின் பலமன்று; பொக்கிஷத்திலுள்ள அதிகமான பணமுமன்று; ஒழுக்க முள்ள, உண்மையான நண்பர்கள் அதிகமான பேராக அவன் பெற் றிருப்பதே. எராட்டஸுக்கும், காரிக்கஸுக்கும், அவர்களைக் காட்டிலும் வயதானவன் என்ற முறையில் நான் ஒரு வார்த்தை சொல்லவேண்டியிருக்கிறது. அதாவது அவர்கள், தாங்கள் பெற்றிருக்கிற தத்துவ சாதிர அறிவோடு, தங்களைப் பாதுகாத்துக் கொள்கிற விவகார ஞானத்தையும் பெறவேண்டும். ஏனென்றால், அயோக்கியர்கள் விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி அவர்கள் அனுபவமில்லாதவர்கள். அவர்கள், தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை யோக்கியர்கள் மத்தியிலும், நல்லெண்ண முடையவர்கள் மத்தியிலும் கழித்து விட்டவர்கள். இதனால் அவர் களுக்குப் பலமான பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் தத்துவ சாதிர அறிவைத் துறந்துவிடாமலும், உலக விவகாரங் களைப் பற்றிய அறிவில் அதிகமாக ஈடுபடாமலும் இருப்பார்கள். உலக விவகார ஞானம் பெற்றிருப்பதில் எவ்வித சிறப்பும் இல்லை; ஆயினும் அது ஓரளவுக்கு அவசியமாயிருக்கிறது. உலக விவகார ஞானம் அதிகமாகக் கைவரப் பெறாத எராட்டஸுக்கும், காரிக்கஸுக்கும் பாதுகாப்பு அளிக்கக் கூடிய சக்தி ஹெர்மையாஸுக்கு நிறைய இருக்கிறது. இந்தச் சக்தி அவனுக்கு இயற்கையாகவே ஏற்பட்டது போலும். இதை அவன், வெகுகால அனுபவத்தின் மூலம் ஒரு கலையாக அபிவிருத்தி செய்து கொண்டிருக்கிறான். அவனைப் பாராமலேயே இந்த அபிப்பிராயந்தான் அவனைப்பற்றி எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஹெர்மையாஸுக்கு நான் சொல்வதென்னவென்றால், ஹெர்மை யாஸே, உன்னைக் காட்டிலும் எனக்கு, எராட்டஸையும், காரிக்கைஸையும் நீண்ட நாட்களாகத் தெரியும். அவர்களைக் காட்டிலும் சிறந்த நண்பர்கள் வேறு யாரும் உனக்கு இருக்க முடியாது. ஆதலால், அவர்களுடன் நெருங்கி நட்புக் கொள்ள உன்னாலான நடவடிக்கை களையெல்லாம் நீ எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுடன் நட்புக் கொள்வதை அடிப்படையான ஒரு கோட்பாடாகவே நீ கொள்ள வேண்டும். காரிக்கஸுக்கும், ஏராட்டஸுக்கும் நான் கூறுவதென்ன வென்றால், நீங்கள் இருவரும் ஹெர்மையாஸின் ஆதரவைப் பெறவேண்டும். உங்கள் மூவருடைய கூட்டுறவு, நெருங்கிய நட்பாக முதிரவேண்டும். இந்த கூட்டுறவிற்குப் பங்கம் ஏற்படுவதாக உங்களில் யாரேனும் ஒருவர் உணர்ந்தாலும் உடனே எனக்கும், இங்குள்ள என் நண்பர்களுக்கும் உங்கள் குறைகளை எடுத்துச் சொல்லிக் கடிதம் எழுதுங்கள். நீங்கள் எங்களிடம் மதிப்புக்கொண் டிருப்பது உண்மையானால், பெருமளவில் ஏற்படக்கூடிய பிணக்கு களைத் தவிர மற்றப் பிணக்குகளை நீங்களே உங்களுடைய நியாய புத்தியைக்கொண்டு சுலபமாக அகற்றிக்கொண்டு விடுவீர் களென்று நம்புகிறேன். தத்துவ சாதிரத்தினிடம் நமக்குள்ள விசுவாசத்தை, நம்முடைய திறமைக்கேற்றவாறு நாம் பயன்படுத்துவோமானால், நன்மையே விளையும். அப்படிப் பயன்படுத்தாமற் போவோமாயின் என்ன விளையும் என்பதைப்பற்றி நான் சொல்லத் தயாராக இல்லை. ஏனென்றால் நன்மையான விளைவுகளைப்பற்றித்தான் நான் சொல்லமுடியும். கடவுளருளால் எல்லாம் நன்மையாகவே முடியு மென்று நம்புகிறேன். இந்தக் கடிதத்தை நீங்கள் மூன்று பேரும் சேர்ந்து படியுங்கள். அது முடியாவிட்டால் இரண்டு பேராவது சேர்ந்து படியுங்கள்; அடிக்கடி படியுங்கள். இதில் கூறப்பட்டுள்ளதை ஒரு சட்டமாக மதித்து ஏற்றுக் கொண்டு நடவுங்கள். ஏழாவது கடிதம் கால்லிப்ப என்பவனுடைய ஆட்களினால் கி.மு. 353 ஆம் வருஷம் டியோன் கொலை செய்யப்பட்டுவிட் டான். அதற்குச் சிறிது காலங்கழித்து, பிளேட்டோ, இந்தக் கடிதத்தை எழுதினதாகக் கொள்ளலாம். டியோனின் நண்பர்களுக்கும் அவனைப் பின்பற்றி வந்தவர்களுக்கும் பிளேட்டோ எழுதுவது: நலம். டியோன் என்ன நோக்கங்களைக் கொண்டிருந்தானோ அதே நோக்கங்களை நீங்கள் கொண்டிருப்பதாக நான் கருதவேண்டு மென்றும், அதனால் உங்களோடு நான், பெயரளவில் மட்டுமல்ல, உண்மையாகவே ஒத்துழைக்க வேண்டுமென்றும் எனக்கு எழுதி யிருக்கிறீர்கள். உண்மையிலேயே உங்களுடைய கொள்கைகளும் நோக்கங்களும் டியோனினுடையது போல் இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு உதவிசெய்வதாக இதன் மூலம் பதில் தெரிவிக்கிறேன். அப்படி இல்லை யானால், உங்களுக்கு உதவி செய்வதைப்பற்றி நான் நன்கு ஆலோசிக்க வேண்டியவனா யிருக்கிறேன். டியோன் கொண்டிருந்த கொள்கைகள் யாவை, அவன் என்னென்ன சாதிக்கவேண்டுமென்று எண்ணியிருந்தான் என்பவை களைப்பற்றி நான் அறிந்த அளவு வேறு யாரும் அறிந்திருக்கமுடி யாது. இதுபற்றி யாரும் ஊகிக்கத்தேவையில்லை. என்னுடைய நாற்பதாவது வயதில், நான் முதன் முதலாக ஸைரக்யூஸுக்கு வந்து அவனுடன் நட்புக்கொண்ட பிறகுதான் அவனுடைய அரசியற் கொள்கைகள் உருவாயின. அப்பொழுது அவன் இளைஞன். இருந் தாலும், ஸைரக்யூ மக்கள், சுதந்திரம் பெற வேண்டும், நல்லதும் நியாயமானதுமான சட்டதிட்டங்களினால் ஆளப்பட வேண்டும் என்ற திடமான கருத்துக்களைக் கொண்டிருந்தான். அவனுடைய ஆயுள்முழுவதும் இந்தக் கருத்துக்களையே கொண்டிருந்தான். அவனுடைய மகனும் அவன் அடிச்சுவடுகளைப் பின்பற்றினால் நன்றாயிருக்கும். இங்ஙனம் ஒரு மனிதன், திடமான சில அரசியல் கொள்கைகளுடையவனாக எப்படி ஆகிறான் என்பதைப்பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அதைத் தெரிவிக்க இந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். அநேக இளைஞர்களைப்போல் நானும், என் இளமைப் பருவத்தில், எனக்குப் போதிய பக்குவம் ஏற்பட்டதும், பொதுவாழ்வில் ஈடுபட வேண்டுமென்று ஆசைகொண்டிருந்தேன். அதற்குத் தகுந்தாற் போல், அதாவது என் ஆசை நிறைவேறும் என்று நான் நம்பிக்கை கொள்ளக் கூடிய வகையில், சில காரியங்கள், அப்பொழுது ஆத்தென்ஸில் நடைபெற்றன. அப்பொழுதிருந்த ஆட்சி முறையின் மீது ஜனங்களுக்கு மிகவும் அதிருப்தி ஏற்பட்டிருந்தது. ஒரு புரட்சியும் நடைபெற்றது, இதன் விளைவாக, ஐம்பத்தோரு பேரைக் கொண்ட ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப் பட்டது. இந்த ஐம்பத் தோரு பேரில் பதினோருபேர், சந்தைகூடு மிடத்தைப் பாதுகாவல் செய்யவும், சில விசேஷ பொறுப்புக்களை நிறைவேற்றவும் நியமிக் கப்பட்டனர்; பத்துபேர், துறைமுகப் பகுதியைக் கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்டனர்; மிகுதி முப்பதுபேர், இந்த இருபத் தோரு பேருக்கு மேலானவர்களாக இருந்துகொண்டு சர்வ அதிகாரங் களையும் செலுத்தி வந்தனர். இவர்களிற் சிலர் என்னுடைய உறவினர் களாகவும் எனக்கு அறிமுகமானவர்களாகவும் இருந்தனர். இவர்கள், என்னைத் தங்களோடு வந்து சேர்ந்துகொள்ளுமாறும், அரசியல் வாழ்க்கை என் சுபாவத்திற்கு ஏற்றதாயிருக்குமென்றும் கூறி அழைத்தார்கள். இத்தகைய சூழ்நிலையில் இளைஞனாகிய நான் பொதுவாழ்வில், அதாவது அரசியல் வாழ்வில் ஈடுபட ஆசை கொண்டேனென்றால், அதில் என்ன ஆச்சரியமிருக்கிறது? இந்த முப்பதின்மரும் அப்பொழுது நிலவிவந்த தீமைகளை அகற்றி நீதிவழுவா முறையில் ஆட்சி நடத்துவார்கள் என்று எண்ணி, அவர்களுடைய நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து வந்தேன். ஆனால் இவர்கள், முந்தின ஆட்சி எவ்வளவோ மேலானது, தங்கமான ஆட்சி என்று சொல்லும்படியாக ஆட்சி நடத்தினார்கள்; தீயசெயல்கள் பல புரிந்தார்கள். அவற்றுள் ஒன்றாக, ஸாலாமி தீவு வாசியும் நேர்மையுள்ளவன் என்று பெயரெடுத்திருந்தவனுமாகிய Ènah‹(Leon of Salamis) என்ற ஒரு குடிமகனை, அநியாயமாகச் சிரச்சேதஞ் செய்துவிடத் தீர்மானித்து, அவனைக் கைதுசெய்து கொண்டு வருமாறு ஒரு குழுவினருக்கு உத்தரவிட்டு, அந்தக் குழுவினரில் ஒருவனாக, வயதில் எனக்கு மூத்தவனும், எனது சிறந்த நண்பனும், நீதிமானுமாகிய ஸாக்ரட்டீஸையும் சேர்த்து அனுப்ப முயன்றதைச் சொல்லவேண்டும். இந்த முயற்சியின்மூலம், ஸாக்ரட் டீஸை, தங்களுடைய அடாத செயல்களுக்கு உடந்தையாக்கப் பார்த்தார்கள். அவன் இதற்கு உடன்படுவானா, மாட்டானா என்பதைப்பற்றி அவர்கள் சிந்திக்க வேயில்லை. அவனோ, என் உயிர்போனாலும் இந்த அநீதமான செயலுக்கு உடன்பட மாட்டேன் என்று சொல்லி, அவனை (லியோனை)க் கைது செய்து கொண்டுவரச் செல்ல மறுத்துவிட்டான். இந்த மாதிரியான செயல்களையெல்லாம் பார்த்து நான் ஆத்திரமடைந்தேன். இந்த அநீதமான ஆட்சியோடு தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடா தென்று தீர்மானித்தேன். சிறிது காலத்திற்குப் பிறகு இந்த முப்பதின்மருடைய ஆட்சி வீழ்த்தப்பட்டது. இதனோடு அப்பொழுது நிலவியிருந்த அரசிய லமைப்பும் மறைந்துவிட்டது. இதனால், பொதுவாழ்வில் ஈடுபட வேண்டுமென்ற ஆசை எனக்கு மறுபடியும் உண்டாயிற்று. இந்த ஆசை, முந்தின தடவை இருந்ததுபோல் அவ்வளவு தீவிரமானதாக இல்லையென்றாலும் ஓரளவு இருந்ததென்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். முப்பதின்மருடைய ஆட்சி வீழ்ந்துபட்டபிறகு, சிறிது காலம், நிலவரமற்ற ஒரு நிலைமை நிலவியிருந்தது. இந்தக் காலத்தில், புரட்சி என்ற பெயரால் அநேக அக்கிரமங்கள் நடை பெற்றன. முந்தின பகைமைகளெல்லாம் பழிதீர்த்துக் கொள்ளப் பட்டன. இவைகளைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. ஆனால் பொதுவாகப் பார்க்கிறபோது, இந்தக் காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டவர்களில் பெரும்பாலோர், மிகுந்த கருணை யுடையவர்களாக இருந்தார்கள் என்றே சொல்லவேண்டும். ஆயினும் துரதிருஷ்டவசமாக, இவர்களில் செல்வாக்குள்ள சிலர், எனது நீண்டகால நண்பனாகிய ஸாக்ரட்டீமீது கேவலமான ஒரு குற்றத்தைச் சாட்டி, விசாரணைக்குக் கொண்டுவந்து விட்டார்கள். தெய்வ நிந்தனை செய்து வருகிறானென்பது அவன்மீது சாட்டப் பட்ட குற்றம். இப்படிப்பட்டதொரு குற்றஞ் சாட்டப்படுவதற்கு அவன் எந்த விதத்திலும் தகுதியுடைய வனல்லன் என்பது என் கருத்து. சம்பிரதாயமான விசாரணைக்குப் பிறகு அவன் மரண தண்டனை விதிக்கப்பெற்றான். இத்தனைக்கும் அவன்மீது குற்றஞ் சாட்டியவர்கள் அவனாலேயே ஒருமுறை காப்பாற்றப்பட்டிருக் கிறார்கள்! இந்த மாதிரி நடைபெறுவதையெல்லாம் பார்த்துப் பார்த்து, எந்த மாதிரியான மனிதர்கள், அரசியலில் அதிகமாகக் கலந்து கொண்டிருக் கிறார்கள், எந்த மாதிரியான சட்டதிட்டங்கள் நடை முறையில் இருந்து வருகின்றன என்பவைகளைப்பற்றி நான் சிந்திக்கலானேன். சிந்திக்கச் சிந்திக்க, பொதுவாழ்வில், அதாவது அரசியலில், சீர்திருத்தஞ் செய்வது, எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியவந்தது. உண்மையான நண்பர்களும், நாம் கிளத்தும் கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றக் கூடியவர்களும் பின்பல மாக இருந்தாலன்றி, நம்மால் எந்த ஒரு சீர்திருத்தத்தையும் அரசியலில் செய்ய முடியாதென்பதை உணர்ந்தேன். தவிர, எங்களுடைய மூதாதையர்கள் (ஆத்தீனியர்கள்) கடைப் பிடித்து வந்த கொள்கைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றி எங்கள் நகர ராஜ்யம் செயல்படவில்லை. அவர்கள் - அந்த மூதாதையர்கள்-வகுத்த சட்டதிட்டங்கள், நிறுவிய அரசியல் தாபனங்கள், யாவும் படிப்படியாகச் சீர்குலைந்துகொண்டு வந்தன. எதுவும் நிலையற்றதாகவே இருந்தது. இவைகளை யெல்லாம் அருகிலிருந்து பார்த்து வந்த எனக்கு, பொதுவாழ்வில் ஈடுபடவேண்டுமென்று ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்த தீவிர உற்சாகம் குன்றிப் போய்விட்டது; ஒருவித திகைப்பும் உண்டாயிற்று. ஆயினும் அரசியல் தாபனங்கள், சட்டதிட்டங்கள் ஆகியவைகளைச் சீர்திருத்தியமைக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கு இருந்து கொண்டிருந்தது. எப்படிச் சீர்திருத்தி அமைப்பது என்பதைப்பற்றி நான் சிந்தித்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் செயலில் இறங்கவில்லை. தகுந்த காலம் வரட்டுமென்றிருந்தேன். ஆக, எந்த ஒரு ராஜ்யமும் சரியாக ஆளப்படவில்லை, எந்த ஒரு ராஜ்யத்திலும் சட்டதிட்டங்கள் சீர்திருந்த முடியாத அளவுக்கு மோசமாகிவிட்டன, இவற்றிற்குப் பரிகாரம் காணவேண்டுமானால் கடுமையான முறை களைக் கையாளவேண்டும், இதற்கு அதிருஷ்டமும் நமக்குத்துணை செய்யவேண்டும் என்ற முடிவு களுக்கே நான் வரவேண்டியதாயிற்று. மற்றும், தனிப்பட்ட மனிதனிடத்திலோ, ஒரு ராஜ்யத்தினிடத்திலோ, நீதியை அல்லது தருமத்தை நிலைபெறச் செய்யவேண்டுமானால், அதற்குத் தத்துவ ஞானத்தைத் துணைகொள்ள வேண்டுமென்றும், அந்தத் தத்துவ ஞானத்தினிடம் பக்தி செலுத்துகிறவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டாலன்றி, அல்லது ராஜ்ய நிருவாகத்தை நடத்துகிறவர்கள், தத்துவ ஞானத்தின்மீது நாட்டஞ் செலுத்துகிறவர்களாயிருந்தாலன்றி, மானிட சமுதாயத்தின் மீது படிந்திருக்கும் அநேக தீமைகள் அகலமாட்டா என்ற தீர்மானத் திற்கு வந்தேன். இந்த மாதிரி சில உறுதிப்பாடான கருத்துக்களைக் கொண்ட வனாகவே நான் முதன்முதலில் இத்தலிக்கும் சிஸிலிக்கும் வந்தேன். ஆனால் அங்கே வந்து, மக்கள் நடத்தும் மிதமிஞ்சிய போக வாழ்க்கையைப் பார்த்த பிறகு எனக்கு ஒரே வெறுப்பு ஏற்பட்டு விட்டது. இளமையிலிருந்து இந்த மாதிரி போக வாழ்க்கை நடத்துகிற யாரும் எப்பொழுதுமே நிதானத்துடன் இருக்க முடியாது. பொதுவாக, போகவாழ்க்கையில் ஈடுபடுவது இயற்கைக்கு விரோதம். ஈடுபாடு கொண்டிருக்கிறவர்கள், தன்னடக்கம் என்ற பாடத்தைக் கற்றுக் கொள்ளமுடியாது; வேறு எந்த நல்ல குணத்தை யும் பெற முடியாது. எந்த ராஜ்யத்தின் பிரஜைகள், தங்களிடமுள்ள செல்வம், சக்தி அனைத்தையும் ஆடம்பர வாழ்க்கைக்குச் செலவிடுகிறார்களோ, வயிறு புடைக்க உண்பதும் குடிப்பதும் தவிர வேறு வேலை செய்வது தங்கள் கண்ணியத்திற்குக் குறைவு என்று கருதுகிறார் களோ, காமக்கேளிக்கைகளில் ஈடுபடுவதை ஒரு தொழிலாகவே கருதி அதில் உற்சாகத்தோடு ஈடுபடுகிறார்களோ, அந்த ராஜ்யத்தில் ஒருபோதும் அமைதி நிலவியிராது. அந்த ராஜ்யத்தின் சட்ட திட்டங்கள் என்னதான் நல்லவையா யிருக்கட்டுமே அவற்றினால் ஜனங்களுக்கு எவ்வித பயனும் உண்டாகாது. அப்படிப்பட்ட ராஜ்யங்களில் ஆட்சிமுறை அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும். சர்வாதிகார ஆட்சியிலிருந்து, ஒரு சிலர் ஆட்சி; ஒரு சிலர் ஆட்சியி லிருந்து ஜனநாயக ஆட்சி; இப்படி முடிவில்லாமல் மாறிக் கொண்டேயிருக்கும். இப்படி ஆட்சிமுறை மாறிக்கொண்டிருக்கிற காலங்களில், நிருவாகத்திலிருக்கிறவர்கள், நேர்மையான அரசாங்கம் ஏற்படவேண்டுமென்று வாய்திறந்துசொல்ல யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். ஸைரக்யூஸுக்கு நான் முதலில் வந்தபோது இந்த மாதிரியான எண்ணங்களே என் உள்ளத்தில் குடிகொண்டன. நான் அங்கே வந்ததற்கும், பிற்காலத்தில் டியோனுக்கு ஏற்பட்ட கதி, ஸைரக் யூஸில் நடைபெற்று வந்த சம்பவங்கள் ஆகியவற்றிற்கும் ஏதோ சம்பந்தம் உண்டு என்று சொல்வதற்கில்லை. மேலான ஒரு சக்தியே என் வருகைக்குக் காரணமாயிருந்ததென்று சொல்ல வேண்டும். ஆனால் நான் வராம லிருந்தால், டியோனும் ஸைரக்யூஸும் இன்னும் அதிகமான துரதிருஷ்டத்தை அனுபவித்திருக்கக் கூடுமோ என்னவோ? ஆகையால் இதுவரை என் அறிவுரைகளுக்கு மதிப்புக் கொடுத்தவர்களைக் காட்டிலும் நீங்கள் அதிகமான மதிப்புக் கொடுத்தால்தான், இன்னும் அதிகமான துரதிருஷ்டத்திற்கு நீங்கள் ஆளாகாமலிருக்கலாம். நான் அப்பொழுது சிஸிலிக்கு வந்ததனால் தான், பின்னர் அங்குப் பலவித குழப்பங்கள் ஏற்பட ஆரம்பித்தன என்று எப்படிச் சொல்லக்கூடும்? அப்பொழுது டியோன் ஒரு வாலிபனாயிருந்தான். அவனும் நானும் பல தடவை கலந்து பேசினோம். தனிமனிதனோ, மானிட சமுதாயமோ நலமுற வாழ வேண்டு மென்பதைப்பற்றி நான் கொண்டிருந்த கருத்துக்களை அவனுக்கு எடுத்தச் சொன்னேன். இந்தக் கருத்துக்களை நடைமுறை யில் கொணருமாறு வலியுறுத்தினேன். இப்படி நான் அவனுக்குச் சொல்லிவந்ததன் மூலம், ஸைரக்யூஸில் நடைபெற்றுவந்த சர்வாதிகார ஆட்சியின் வீழ்ச்சிக்கு, ரகசியமாக, ஆனால் என்னையறி யாமல் அடிகோலி வந்தேன். பொதுவாகவே, டியோனுக்கு எதையும் சீக்கிரமாகக் கற்றுக்கொள்ளும் ஆற்றல் இருந்தது. அதிலும் நான் அவனிடம் என்னென்ன விஷயங் களைப்பற்றிப் பேசினேனோ அவற்றை அதிவிரைவில் கற்று வந்தான். நான் இது வரையில் அநேக இளைஞர்களுக்குப் போதனை செய்திருக் கிறேன். ஆனால் டியோன் மாதிரி உற்சாகத்துடனும் கவனத்துடனும் என் போதனைகளைக் கேட்டவர் யாருமிலர். அவனும் - டியோனும் - இத்தலியிலும் சிஸிலியிலுமுள்ள பெரும்பாலோரான ஜனங்கள் எந்த மாதிரி வாழ்க்கையை நடத்தி வந்தார்களோ அந்த மாதிரி தன் மிகுதிநாள் வாழ்க்கையை நடத்தப்போவதில்லையென்று உறுதிபூண்டான். சுக போகங்களைக்காட்டிலும், ஆடம்பரங்களைக்காட்டிலும், சீல வாழ்க்கைதான் மேலானது என்று கருதி அதற்கு அதிக மதிப்புக் கொடுக்க முற்பட்டான். இதனால் அவனுடைய வாழ்க்கைமுறை மு. டையோனிஸிய ஆட்சி காலத்தில் வாழ்ந்து வந்த ஜனங்களுக்கு மிகவும் வெறுப்பூட்டுவதாயிருந்தது. ஏனென்றால், சர்வாதிகார ஆட்சி நடைபெறும் ராஜ்யத்தில் எந்த முறையில் ஜனங்கள் வாழ்ந்து வந்தார்களோ அந்த முறையில் அவன் வாழ்ந்துவரவில்லை; சீலத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்துவந்தான். சரியான முறையில் போதனை பெற்றதன் விளைவாகவே, தன்னிடம் இந்த மாறுதல், அதாவது சீலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டு மென்ற எண்ணம் ஏற்பட்ட தென்று அவன் கருதினான். தான் மாறியதுபோல் மற்றவர்களும், மு. டையோனிஸியஸுக்குப் பிறகு மாறுதலடைவார்களென்று எண்ணினான்; தன் சகாக்கள் உள்பட சிலரிடத்தில் இந்த மாறுதல் ஏற்பட்டு வருவதையும் கண்டான். கடவுள்கிருபையால், மு. டையோனிஸியஸுக்குப் பிறகு ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிற இ. டையோனிஸிய ஸிடம் இந்த மாறுதல் ஏற்படு மென்றும், இதனால் அவன் சீர்திருந்துவானென்றும், அஃது அவன் வாழ்க்கையிலேயே ஒரு திருப்பமாயிருக்குமென்றும், அந்தத் திருப்பத்தின் விளைவாக, ஸைரக்யூஸில் உண்மையான மகிழ்ச்சி ஏற்படுமென்றும் அவன் - அந்த டியோன் - கருதினான். இந்த மாறுதல் ஏற்படவேண்டுமென்பதற்காக அவன் அநேக முயற்சிகள் செய்தான். அவன் நண்பர்களும் முயற்சி செய்தார்கள். ஆனால் இவற்றோடு அவன் நின்றுவிடவில்லை. தானும் தன் நண்பர் களும் செய்யும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்க, நான் உடனே ஸைரக்யூஸுக்கு வரவேண்டியது அவசியமென்று எண்ணி எனக்கு அழைப்பு விடுத்தான்.1 அந்த அழைப்பில், ஏற்கனவே என்னிடமிருந்து பெற்ற போதனைகளின் பயனாக, பெருந்தன்மை யும் சீலமும் நிறைந்த வாழ்க்கையை நடத்தவேண்டுமென்ற ஆசை, தன் உள்ளத்தில் உண்டாகியதைக் குறிப்பிட்டிருந்தான். இந்த மாதிரியான ஆசையை இ. டையோனிஸியஸின் உள்ளத் திலும் உண்டுபண்ண வேண்டுமென்று அவன் விரும்பினான். அப்படி உண்டுபண்ணிவிட்டால், நாடுமுழுவதும், அதாவது நாட்டு மக்கள் அனைவரும் நல்வாழ்க்கை நடத்த முற்படுவார்களென்றும், அப்பொழுது, இதுவரையில் நீங்கள் அனுபவித்து வந்த பலவித துன்பங்களை அனுபவிக்கவேண்டி வராதென்றும் அவன் வெகுவாக நம்பினான். இந்த நம்பிக்கையின் பேரில்தான் அவன், உடனே என்னை வரவழைக்குமாறு இ. டையோனிஸியஸை தூண்டிக் கொண்டிருந்தான். கூடவே எனக்கும், மற்றவர்கள் யாராவது இ. டையோனிஸியஸிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அவனைக் கீழ்த்தரமான வாழ்க்கைப்போக்கில் அழைத்துச் செல்லாமுன், நான், உடனடியாக ஸைரக்யூஸுக்கு வரவேண்டியது அவசியமென்று வற்புறுத்தி யிருந்தான். இதைப்பற்றி எனக்குச் சிறிது விரிவாகவே எழுதியிருந்தானென்று சொல்லவேண்டும்; தன்னுடைய அழைப்பை, கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பமாகக் கருதவேண்டு மென்றும், இத்தலி, சிஸிலி ஆகிய இவைகளின் சக்தி, அரசாங்கத் தில் தனக்கிருக்கும் செல்வாக்கு, இ. டையோனிஸியஸின் இளமை, தத்துவ ஞானத்தையும் பண்பாட்டையும் பெறவேண்டு மென்பதில் அவனுக்குள்ள ஆர்வம், இப்படிப் பலவற்றைப்பற்றியும் குறிப்பிட்டு எனக்கு எழுதி யிருந்தான். மற்றும், நான் வந்தால், தன்னுடைய உற்றாரும் உறவினரும் போதனைகளை ஏற்றுக்கொள்வார்க ளென்றும், அவர்கள் ஏற்றுக் கொண்டதன் காரணமாக இ. டையோனி ஸியஸும் என் போதனைகளைச் சுலபமாக ஏற்றுக்கொள்ளக்கூடு மென்றும், ஞானியும் அரசனும் ஒருவனாகவே இருக்கவேண்டும், அதாவது ஞானம் பெற்றவர்களே அரசர்களா யிருக்கவேண்டும் அல்லது அரசபீடத்தில் அமர்கிறவர்கள் ஞானிகளாயிருக்கவேண்டும் என்று நான் கண்டுவரும் கனவை நனவாக்கிப்பார்க்க இது நல்ல வாய்ப்பு என்றும் இப்படிப் பலபடியாக எழுதியிருந்தான். எனக்கென்னவோ, இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்பதைப்பற்றி யோசனையாகவே இருந்தது. ஏனென்றால், பொதுவாக, இளமைப்பருவத்திலுள்ளவர்கள், அடிக்கடி மாறுந்தன்மை யுடையவர்களாகவும், எதிலும் நிச்சய புத்தியில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் டியோன் அப்படிப்பட்டவனில்லையென்பதும், ஓரளவு மனப்பக்குவம் அடைந்துவிட்டவனாகவும், எதிலும் உறுதிப் பாடுடையவனாகவும் இருக்கிறானென்பதும் எனக்குத் தெரியும். எனவே, ராஜ்ய நிருவாகத்தைப்பற்றி நான் கொண்டிருக்கும் கருத்துக்களை ஒருவ னாவது நடைமுறைக்குக் கொண்டுவருவானாகில் அதுவே போதும், அப்படிக் கொண்டுவர முயல்கிறவனுக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்க வேண்டியது அவசியம், அவன் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு என் கருத்துக்களை நடைமுறையில் கொண்டுவந்து வெற்றி பெறுவானாகில், நல்லது எது என்பதைப் பற்றி நான் என்ன கனவு கண்டுவந்தேனோ அந்தக் கனவு நனவாகும் என்று இப்படியெல்லாம் நான் எண்ணினேன். இந்த நோக்கத்துடன்தான் நான் சிஸிலிக்கு வர ஒப்புக் கொண்டேனே தவிர, சிலர் நினைத்தபடி, (ஸைரக்யூ மக்களின் சுகபோக வாழ்க்கையில் பங்குகொள்ள வேண்டுமென்பதற்காக) அல்ல. தவிர, என்னுடைய சுயமரியாதையும் என் எண்ணத்தின் முன்னணியில் வந்து நின்றது. ஏனென்றால், என்னுடைய கொள்கை களைச் சொல்லளவில் தான் கொண்டுவந்து காட்டுகிறேனே தவிர, செயலுக்குக் கொண்டுவரத் துணிகிறேனில்லை என்று நான் நினைக் கப்படக் கூடாதல்லவா? மற்றும், டியோனுடைய அழைப்பை மறுப்பது, அவனுடைய அன்பான உபசரணை களையும், அவன் என்னிடம் கொண்டுள்ள நட்பையும் மறுப்பதாகும் என்று நான் கருதினேன். அவனுடைய அழைப்பை நான் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது என்ன ஆகும்? அவன், ஒன்று, கொல்லப்பட்டோ, நாடு கடத்தப்பட்டோ போயிருப்பான். நாடு கடத்தப் பட்டநிலையில் அவன் என்னிடம் (ஆத்தென்ஸுக்கு) வந்து என்ன பிளேட்டோ! நாடோடியாக வந்திருக்கிறேன் பார்; நான் நாடோடியா வதற்குக் காரணமாயிருந்த சத்துருக்களை எதிர்த்து நிற்கப் போதுமான படைபலமில்லாமல் நான் இப்படி நாடோடியாகவில்லை. உன்னுடைய நாவன்மையைக் கொண்டு இளைஞர்களை நல்வழிப்படுத்தித் தோழமை யோடு வாழச்செய்யும் ஆற்றல் உனக்கு இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அந்த ஆற்றல் எனக்கு இல்லாததனால்தான் இந்த நிலைக்கு நான் வந்திருக்கிறேன். ஸைரக்யூஸுக்கு வந்து உன் நாவன்மையைப் பயன்படுத்தியிருப்பாயானால் (அதாவது இ. டையோனிஸியஸை நல்வழிப் படுத்த உன் நாவன்மையைப் பயன்படுத்தியிருப்பா யானால்) எனக்கு இந்தக் கதி ஏற்பட்டிராதல்லவா? தத்துவ சாதிரத்தைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து பேசுகிறாய். அதற்கு என்ன மதிப்புக் கொடுக்க வேண்டுமோ அதை மற்றவர்கள் கொடுக்க வில்லையென்றும் சொல்லு கிறாய். ஆனால் தக்க சமயத்தில் நீ என் உதவிக்கு வரவில்லை. இதனால் நீ போற்றும் தத்துவ சாதிரத்தை நீயே புறக்கணித்துவிட்டாய் என்று ஏற்படுகிறது. ஒரு கால், நான் அருகில் (மெகாரா பிரதேசத்தில்1) இருந்திருந்தால் என் உதவிக்கு நீ நிச்சயம் வந்திருப்பாய். இருந்தாலும், ஸைரக்யூ வெகுதொலை வில் இருக்கிறது; அங்கு வந்துபோவது மிகவும் கஷ்டம் என்று நீ இப்பொழுது சமாதானம் கூறுவாயேயானால் அது சரியான சமாதானமாகாது. நீ வராதது உன் கோழைத்தனத்தையே காட்டு கிறது என்றெல்லாம் பேசுவான். அப்பொழுது அவனுக்கு நான் மரியாதையான பதில் என்ன கூறுவது? ஒன்றும் கூற முடியாது. இந்த மாதிரியான நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற் காகவே, நான், (ஆத்தென்ஸில் மேற்கொண்டிருந்த) என் அலுவல் களை யெல்லாம் விட்டுவிட்டு, என் கோட்பாட்டுக்கும் எனக்கும் முற்றிலும் மாறுபட்ட ஒரு சர்வாதிகார ஆட்சியின்கீழ் வசிக்க முற்பட்டேன். இப்படி நான் அங்கு வந்ததை, விருந்தோம்பலுக்கும் நட்புக்கும் அதிதேவதையா யிருக்கும் ஜூ1 தெய்வத்திற்கு நான் செய்யவேண்டிய கடமையைச் செய்ததாகவே கருதுகிறேன். இஃது இருக்கட்டும். ஸைரக்யூஸுக்கு வந்ததும் நான் அங்குக் கண்டதென்ன? இ. டையோனிஸியஸின் அரசவையில் வேற்றுமை உணர்ச்சிகள் நிரம்பியிருந்தன. டியோன், அரச பீடத்தை ஆக்கிரமித்துக்கொள்ள முயற்சி செய்கிறான் என்று அவன்மீது அவதூறான செய்திகள் பல உலவிவந்தன. அவன் தரப்பில், என்னால் முடிந்தவரை வாதஞ் செய்துபார்த்தேன். ஆனால் ஏதும் பயனில்லை. நான் அங்கு வந்த நான்காவது மாதத்தில், இ. டையோனி ஸிய என்ன செய்தானென்றால், டியோன், அரச பீடத்திற்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்கிறானென்று அவன்மீது குற்றஞ்சாட்டி, அவனை அவமானப் படுத்துகின்ற முறையில், ஒரு கப்பலில் ஏற்றி நாடு கடத்திவிட்டான். இதனால் டியோனின் நண்பர்களாகிய எனக்கும் மற்றவர்களுக்கும், நாங்கள் அவனுக்கு உடந்தையா யிருந்தோமென்று எங்கே குற்றஞ் சாட்டப்பட்டுத் தண்டிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயம் ஏற்பட்டது. அவ்வளவென்ன? இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் காரணம் நான்தான் என்று சொல்லி, இ. டையோனிஸிய என்னைக் கொன்றுவிட்டா னென்றுகூட ஒரு வதந்தி பரவிவிட்டது. ஆனால் அவன் அப்படியெல்லாம் செய்ய வில்லை. நாங்கள் எந்த மாதிரி மனப்பான்மை யுடையவர்களா யிருக்கிறோமென்பதை ஒருவாறு தெரிந்துகொண்டான். எங்களை, அதாவது டியோனின் நண்பர்களாகிய என்னையும் மற்றவர்களை யும் சரியான பந்தோபதில் வைக்காமற்போனால், இன்னும் அதிகமான குழப்பங்கள் உண்டாகுமென்று தெரிந்து, எங்கள் அனைவரையும் அன்பாக நடத்தினான். சிறப்பாக என்மீது அதிகமாக அன்பு செலுத்தினான் என்று சொல்லவேண்டும். நான் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவை யில்லையென்றும், நான் ஸைரக்யூஸை விட்டுப் போய்விட்டால், அது, தனக்குத்தான் அகௌரவமென்றும், நான் அங்கேயே தங்கியிருந்தால், தான் அதிகமான சாதகத்தை யடையக்கூடுமென்றும், ஆதலின் அங்கேயே தங்கியிருக்குமாறும் என்னை வெகுவாக வேண்டிக்கொண்டான். உண்மையில் அவன் வேண்டுகோளை ஒரு பாசாங்கு என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், சர்வாதிகாரிகளின் வேண்டுகோள்களுக்குப் பின்னால் பலாத்காரசக்தி இருந்துகொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். நான் அங்கே தங்கவேண்டுமென்பதை நிச்சயப்படுத்திக் கொள் வதற்காக அவன் - இ. டையோனிஸிய - என்னை அரண்மனைக் கோட்டைக்குள் அழைத்துவரச்செய்து, அங்கேயே இருக்கும்படி செய்து விட்டான்; அதிலிருந்து நான் வெளியேற முடியாதபடியும் செய்து விட்டான். அதாவது, நான் அங்குத் தங்கி யிருக்கிற வரையில், யாரும், அவனுடைய உத்தரவில்லாமல் என்னை வெளியே அழைத்துக்கொண்டு போகமுடியாதபடி தடை செய்து விட்டான். ஒருகால் நான் எங்கேனும் செல்லவிரும்பினால், என்னைப்பின் தொடர ஒரு காவலாளியையும் நியமித்துவிட்டான். அப்படிக் காவலாளி இல்லாமல் நான் தனியே செல்வதை, நெடுஞ் சாலைகளில் பாரா கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் பார்த்தால், அவர்கள், உடனே, என்னை மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்தி நிறுத்தி, தன்னிடம் திருப்பி அழைத்துக் கொண்டு வந்து விடவேண்டு மென்று அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். எதற்காக இந்த பந்தோபதையெல்லாம் எனக்கு ஏற்படுத்தினானென்றால், அவன் என்மீது அளவிலாத அன்பு செலுத்தி வருகிறான் என்று ஒரு செய்தி எங்கணும் பரவியிருந்ததுதான். ஆனால் இந்தச் செய்தி, அவன் என்னைக் கொன்றுவிட்டானென்று பரவியிருந்த செய்திக்கு நேர்மாறாக இருந்தது. அவன் என்மீது அளவில்லாத அன்பு செலுத்திவருகிறான் என்று பரவியிருந்த செய்தியில் ஏதேனும் உண்மை இருந்ததா? நான் அங்கு வந்த சொற்ப காலத்திற்குள், அவன் என்னுடைய குணத்தை யும் வாழ்க்கைப் போக்கையும் அறிந்துகொண்டபிறகு, என்னிடத் தில் அதிக பிரியம் வைக்கத்தொடங்கினான் என்பது வாதவம். ஆனால், டியோனை நான் மெச்சிப் பாராட்டி வந்தேனல்லவா, அதைக்காட்டிலும் அதிகமாகத் தன்னை மெச்சிப்பாராட்ட வேண்டுமென்றும், அப்படியே டியோனுடைய நட்பைக்காட்டி லும் தன்னுடைய நட்பையே நான் அதிகமாக நாடவேண்டு மென்றும் அவன் - அந்த இ. டையோனிஸிய-விரும்பினான். அவனுடைய இந்த விருப்பம் நிறைவேற வேண்டுமானால், முதலில் அவன், என்னுடைய போதனைகளைக் கேட்டுப் பயன்பெற வேண்டுமென்ற விருப்பமுடைய ஒரு மாணாக்கனாக வேண்டும். ஆனால் இது விஷயத்தில் அவன் திடமனமில்லாதவனாக இருந் தான். டியோன், தன்னைக் கவிழ்க்கச் சூழ்ச்சி செய்கிறானென்றும், அப்படிச் சூழ்ச்சி செய்து அரசபீடத்தைக் கைப்பற்றிக்கொள்ளப் பார்க்கிறானென்றும் உலவிவந்த வெட்டிப்பேச்சுக்களையெல்லாம் கேட்டுக்கேட்டு அவன் பயந்து விட்டிருந்தான். அவனுடைய இந்தப் போக்கை நான் சகித்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால், ஒரு சமயமில்லாவிட்டால் மற்றொரு சமயத்தில் தத்துவ சாதிரத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையை நடத்த வேண்டுமென்ற ஆசை அவனுக்கு உண்டாகுமென்று நம்பி வந்தேன். ஆனால் அவன் எனக்கு எதிர்ப்பே காட்டி வந்தான். நான் முதல் தடவையாக1 சிஸிலிக்கு வந்து அங்குச் சிறிது காலம் தங்கியபொழுது இருந்த நிலைமை இது. இந்த நிலைமையில் நான் என் தாய்நாட்டிற்குத் திரும்பினேன். திரும்பிய உடனே, நான் மறுபடியும் ஸைரக்யூஸுக்கு வர வேண்டுமென்று இ. டையோனிஸிய அவரச மாக அழைப்பு விடுத்தான். இப்படி இரண்டாவது தடவை நான் திரும்பி வந்ததற்கான காரணங்களையும், அப்பொழுதிருந்த நிலைமையையும் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆவல் கொண்டிருக்கிறவர் களைத் திருப்தி செய்விப்பதற்கும், அப்படி நான் மறுபடியும் அங்கு வந்தது நியாயம் என்று நிரூபித்துக் காட்டுவதற்கும் முன்பு, இப்பொழுதுள்ள நிலைமையில் நீங்கள் என்ன செய்யலாம் என்பதைப்பற்றி என்னுடைய ஆலோசனைகளைக் கூறுகிறேன். ஒருவன், தனது உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கின்ற முறையில் வாழ்க்கை நடத்தி அது காரணமாக நோய்வாய்ப்பட்டு விடுகிறானென்று வைத்துக்கொள்வோம். அவனுக்கு நாம் செய்ய வேண்டிய முதல்கடமை என்ன? உன்னுடைய பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள் என்று அறிவுரை புகட்டுவதுதான். இதற்கு மேல் அதிகப்படியாக அவனுக்கு நாம் புத்திமதி வழங்குவதாயிருந்தால், அது, முதலில் நாம் சொன்ன அறிவுரையை ஏற்றுக்கொண்டு அதன்படி தன் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள அவன் சம்மதப்படுகிறானா இல்லையா என்பதைப் பொறுத்து இருக்கிறது. அப்படி அவன் சம்மதப்படவில்லை யானால், அவனுக்குச் சிகிச்சை செய்ய முன்வருகிற எந்த ஒரு வைத்தியனும், அவன், சுயமரியாதை யுள்ளவனாயிருக்கும் பட்சத்தில், அந்த நோயாளிக்கு மேற்கொண்டு வைத்தியம் செய்வதை நிறுத்திக்கொண்டு விடுவான். அப்படி நிறுத்திக்கொள்ளாமல் மேலும் மேலும் வைத்தியம் பார்த்து வருவானாகில் அவன்-அந்த வைத்தியன்-ஒன்று தன்மான உணர்ச்சி யில்லாதவனாயிருக்க வேண்டும்; அல்லது திறமையற்ற வனாயிருக்க வேண்டும். ஒரு ராஜ்யத்திற்கும் இதே நியதிதான். ஒரு ராஜ்யத்தின் பிரஜைகள், மன்னராட்சிக்கோ, ஒரு சிலர் ஆட்சிக்கோ, எந்தவித மான ஆட்சிக்குட் பட்டிருந்த போதிலும், அந்த ராஜ்யத்தின் சட்ட திட்டங்கள், ஒழுங்கான முறையிலும் நியாயமான முறையிலும் அமுல் செய்யப்பட்டு வருமானால், அப்பொழுது அவர்களுக்குப் பொதுநல சம்பந்தமான ஆலோசனைகளைக்கூற எந்த ஓர் அறிஞனும் முன்வருவான். அப்படிக்கின்றி, நியாயமான அரசாங்க ஆதிக்கத்துக் குட்படாமல், வழி தவறிச் செல்கின்றவர்களும், எவ்வளவு சொன்னாலும் நியாயமான வழிக்குத் திரும்பிவர மறுக்கின்றவர் களும், அரசியல் சட்டத்தைப் பொருட்படுத்த வேண்டாம், அதை எந்தக் காரணத்தை முன்னிட்டும் மாற்றி யமைக்கவேண்டாம், அப்படி மாற்றினால் கொலை செய்து விடுவோம் என்று இப்படி யெல்லாம் ஆளுந்தொழிலை மேற்கொண்டிருக் கிறவர்களை பய முறுத்திக் கொண்டிருக்கிறவர்களும், தங்களுடைய விருப்பத்தை மட்டும் பூர்த்தி செய்து கொண்டிருக்கவேண்டுமென்று அந்த ஆளுந்தொழிலைச் செய்துகொண்டிருக்கிறவர்களுக்குச் சொல்லியும், தங்களுடைய விருப்பங்களை மிகச் சுலபமாகவும் சீக்கிரமாகவும் நிறைவேற்றிக் கொள்ளவேண்டுமென்று பார்க்கிறவர்களுமான ஜனங் களுக்கு நல்ல ஆலோசனைகள் கூற ஒருவன் முன்வருவா னாகில், அவனை, தன்மான உணர்ச்சியில்லாதவன் என்றே சொல்ல வேண்டும்; ஆலோசனை சொல்ல மறுக்கிறவனை உண்மையான மனிதன் என்று சொல்ல வேண்டும். இந்தக் கொள்கையை அனுசரித்துத்தான், வாழ்க்கையின் முக்கியமான பிரச்னைகளைப்பற்றிக் கலந்தாலோசிக்க, எப்பொழு தேனும் எவனேனும் என்னிடம் வந்தால், அவன், பணத்தைச் சம்பாதிக்க என்ன வழியென்று கேட்க வந்தவனாயினுஞ் சரி, உடலையோ ஆத்மாவையோ பேணுவது எப்படியென்று கேட்க வந்தவனாயினுஞ்சரி, எவனுக்கும் நான் ஆலோசனை கூறுவது வழக்கம். முதலில், அன்றாட வாழ்க்கை ஒழுங்கான முறையில் நடை பெற்று வருகிறதா என்று தெரிந்துகொள்வேன். அடுத்து, அவன் சம்பந்தப்பட்ட பிரச்னையைப்பற்றி என்னுடைய ஆலோசனையைக் கேட்கக்கூடியவன்தானா என்று பார்ப்பேன். அப்படிப்பட்ட வனுக்குத்தான் நான் மகிழ்ச்சியுடன் ஆலோசனை கூறுவேன். அப்படிப்பட்டவனிடத்தில் ஏதோ சொன்னோம், போனோம் என்று இருக்கமாட்டேன். அதற்கு மாறாக, என்னுடைய ஆலோசனையைக் கேட்க என்னிடம் வராதவனிடமோ, அல்லது என் ஆலோசனையை ஏற்று அதன்படி நடக்கமாட்டான் என்று எனக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டால் அப்படிப் பட்டவனிடமோ, நானாக வலியச்சென்று அவனுக்குப் புத்திமதி கூறமாட்டேன். அவன் என்னுடைய சொந்த மகனாயிருந்தாலுஞ்சரி, அவனுக்கும் இந்தக் கண்டிப்புத்தான். ஓர் அடிமைக்குப் புத்தி புகட்டினாலும் புகட்டுவேன்; அதன்படி அவன் சுயமாக நடந்துகொள்ளத் தெரியாவிட்டால் அவனை வற்புறுத்திச் செய்தாலும் செய்வேன். ஆனால் ஒரு தகப்பனையோ, தாயையோ, அவர்களுக்குச் சுயமாகச் சிந்தித்துச் செயலாற்றும் சக்தி இருக்கிற வரையில், அவர்களை, என் ஆலோசனைப்படி நடக்க வேண்டுமென்று வற்புறுத்தமாட்டேன். அப்படி வற்புறுத்துவது தர்ம விரோதமான காரியமாகும். அவர்கள், தங்களுக்குப் பிடித்த மான ஒருவித வாழ்க்கைப் போக்கில் சென்று கொண்டிருக்கிற வர்கள். அந்தப் போக்கு எனக்குப் பிடித்தமில்லாதிருக்கலாம். அதற்காக அவர்களைக் கண்டித்துச் சொல்ல மாட்டேன். அப்படிச் சொல்லி அவர்களுடைய விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ள மாட்டேன். அவர்களை முகதுதி செய்தோ, அவர் களுக்கு இங்கிதமாயிருக்கக் கூடிய வார்த்தைகளைச் சொல்லியோ, அவர் களுடைய போக்கிலேயே போய்க்கொண் டிருப்பதற்கு உற்சாகம் தரவும் மாட்டேன். அந்தப் போக்கிலேயே நானும் சென்று சந்தோஷப்படுவதைக் காட்டிலும் இறந்து படுவதே நல்லது. அறிவுள்ள ஒரு மனிதன், தன் தாய்நாட்டு விஷயத்தில் இதே மாதிரியான கருத்தைத்தான் கொள்ளவேண்டும்; இந்தக் கருத்துக் கிசையவே செயல் புரியவேண்டும். தன்னுடைய நாட்டின் அரசாங்கம் சீர்கெட்ட முறையில் இருக்கிறது என்று கருதினால், அவன் இப்படி இருக்கின்றது என்று எச்சரிக்கை கொடுக்கலாம். ஆனால், தான் எச்சரிக்கை கொடுத்தால், அது சரியானபடி கேட்கப்படுமா, தன் உயிருக்கு ஆபத்து ஏற்படாமலிருக்குமா என்றெல்லாம் அவன் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும், அரசாங்க மாற்றம் ஏற்படவேண்டு மென்பதற்காக அவன் பலாத்காரத்தை உபயோகிக்கக் கூடாது. ஒரு சிலரை நாடுகடத்தாமலும் அல்லது பலரைக் கொலை செய்யாம லும், ஒழுங்கான அரசாங்கத்தை அமைக்க அவனால் முடிய வில்லை யானால், அவன், பொதுவாழ்வினின்று ஒதுங்கி யிருந்து, தன்னுடைய க்ஷேமத்திற்கும், தன்னுடைய நாட்டின் க்ஷேமத்திற்கும் பிரார்த்தனை செய்து வரலாம். இந்த மாதிரியான சில கருத்துக்களைக் கொண்டவனாகவே நான் இப்பொழுது சில ஆலோசனைகளைக் கூறுகிறேன். டியோனும் நானும் இ. டையோனிஸியஸுக்குத் திரும்பத்திரும்ப என்ன ஆலோசனைகளைக் கூறிவந்தோமோ அவற்றையே இப் பொழுது உங்களுக்குச் சொல்கிறேன். அவனுக்குக் கூறப்பட்ட ஆலோசனைகள் தாம் யாவை? முதலாவது, அவன், தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்கின்ற முறையில், அதாவது தன்னைத்தானே ஆளுஞ் சக்தி பெறுகிற வகையில், தன்னுடைய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அதனோடு, தன்னிடம் எப்பொழுதும் விசுவாச மாயிருந்து வரக்கூடிய நண்பர்களையும், தன்னை எப்பொழுதும் பின்பற்றி வந்துகொண்டிருக்கக் கூடிய ஒரு கூட்டத்தினரையும் அவன் சம்பாதித்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டையும் அவன் செய்தால்தான், அவனுடைய தகப்பனுக்கு (மு. டையோனி ஸியஸுக்கு) ஏற்பட்ட துரதிருஷ்டம் அவனுக்கு ஏற்படாதிருக் கலாம். (இப்படிச் சில ஆலோசனைகளைக் கூறினோம்.) அவனுடைய-இ. டையோனிஸியஸினுடைய-ஆதிக்கத்திற் குட்பட்டிருந்த அநேக சிறு சிறு ராஜ்யங்களை அந்நியர்கள் (கார்த்த ஜீனியர்கள்) படையெடுத்து வந்து அழித்துவிட்டுப் போனார்க ளல்லவா, அதற்குப் பிறகு, அவைகளை அவன் திரும்பவும் கைப் பற்றிப் பழையபடி தன் வசப்படுத்திக்கொண்டான். ஆனால் அந்த ராஜ்யங்களில், தன்னிடம் விசுவாசமாயுள்ள அரசாங்கங்களை தாபிக்க அவனால் முடியவில்லை. ஏன்? அந்த அரசாங்கங்களை நிருவாகம் செய்ய, அவனிடம் விசுவாச மாயிருக்கக்கூடிய நண்பர் களோ, உறவினர்களோ யாரும் அவனுக்கு இருக்கவில்லை. தன் னுடைய சொந்த சகோதரர்களைக்கூட அவன், மேற்படி அரசாங்க நிருவாக பதவிகளுக்கு நியமிக்கக்கூடவில்லை. இவ்வளவுக்கும் அவர்கள் - அந்தச் சகோதரர்கள் - அவனுக்கு இளையவர்களே; அவனால் கல்வி கற்பிக்கப்பட்டவர்களே. சாதாரண நிலையிலிருந்த அவர்களை அவன்தான் மேலே கைதூக்கிவிட்டான்; ஏழ்மை நிலைமையிலிருந்தவர்களைச் செல்வச் சீமான்களாக்கி வைத்தான். இவ்வளவெல்லாம் செய்தும், அவர்களை, அரசாங்க நிருவாகத்தில் பங்குகொள்ளச் செய்ய முடியவில்லை. அவர்கள் விஷயத்தில், அவன் கொண்டாடிய உறவுமுறையோ, எதிர்பார்த்த நன்றிவிசுவாசமோ, போதித்த போதனைகளோ எதுவும் பலிக்கவில்லை. பாரசீகத்தை ஆண்டுவந்த டேரிய1 மன்னனுக்குக்கூட, அவனுக்கு ஆதரவாயிருக்கக்கூடிய உறவினர்களோ, நண்பர்களோ பலர் இருக்க வில்லைதான். ஆனால் தன்னுடைய நம்பிக்கைக்குரிய நண்பர்கள் சிலரை, அதாவது தன்னுடன் அடிக்கடி பிணங்கிக் கொள்ளாதவர் களாகவும், தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாதவர்களாகவும் இருந்த சிலரை-சம்பாதித்து வைத்துக் கொண்டிருந்தான்; அவர்களின் உதவி கொண்டு பாரசீகத்திற்குப் புறம்பாயிருந்த அநேக பிரதேசங்களை வெற்றிகொண்டான்; (தன் ராஜ்யத்தின்) ஏழு மாகாணங்கள்மீது ஆட்சி செலுத்தினான்.2 இந்த ஒவ்வொரு மாகாணமும் சிஸிலியைக் காட்டிலும் பெரிது. இப்படி ஏழு மாகாணங்களையும் கட்டியாண்டதன் மூலம், ஒரு சட்ட நிர்மாணகர்த்தன் எப்படிப் பட்டவனாயிருக்க வேண்டும் என்ப தற்கும், ஓர் அரசன் எப்படிப்பட்டவனாயிருக்க வேண்டு மென்பதற் கும் வழிகாட்டியாயமைந்துவிட்டான். அவன் இயற்றிவைத்துப் போன சட்ட திட்டங்கள்தாம், இன்றளவும் பாரசீக ஏகாதிபத்தி யத்தைக் கட்டிக்காத்து வருகின்றன. ஆத்தீனியர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அந்நியர்களின் ஆக்கிரமிப்புக்குட்பட்டு விடுவோமோ என்று அஞ்சிக் கொண்டிருந்த அநேக கிரேக்க ராஜ்யங்களைத் தங்கள் பாதுகாப்பின்கீழ் கொண்டு வந்தார்கள். இவ்வளவுக்கும் இந்த ராஜ்யங்களில், கிரேக்கர்கள் அதிகமாகச் சென்று குடியேறவில்லை; இவை ஏற்கனவே தாபிக்கப் பட்டு விட்டிருந்தன. அவ்வளவுதான். அந்த நிலையில், இவைகளைத் தங்கள் பாதுகாப்பின்கீழ் கொண்டுவந்து, சுமார் எழுபது வருஷத்திற் கதிகமாக (ஏறக்குறைய கி.மு. 477ஆம் வருஷத்திலிருந்து கி.மு. 404ஆம் வருஷம் பெலொப்பொனேசிய யுத்தம் முடியும் வரை) ஆட்சி செலுத்தினார்கள். இதற்கு என்ன காரணம்? ஒவ்வொரு ராஜ்யத்தி லும் இவர்களுக்கு நண்பர்கள் இருந்ததுதான். இ. டையோனிஸியஸோ, சிஸிலிதீவு பூராவையும், தன் னொருவனுடைய ஆதிக்கத்திற்குட்பட்ட ஒரே ராஜ்யமாக ஐக்கியப் படுத்த வேண்டியவனாயிருந்தான். அப்படியே ஐக்கியப்படுத்தி விட்டான். இப்படி ஐக்கியப்படுத்திவிட்ட போதிலும் அவன், தன் அதிகாரத்தை அங்குச் சரியாக நிலைநாட்ட முடியவில்லை. இதற்குக் காரணம், தன்னிடம் விசுவாசங்கொண்ட நண்பர்களை அவன் சம்பாதித்துக்கொள்ளாததுதான். அவன் யாரையும் நம்பவில்லை; நம்பிக்கை கொள்ளக்கூடிய நண்பர்களை அவன் சம்பாதித்துக் கொள்ளவில்லை. ஒருவனுக்கு விசுவாசமுள்ள நண்பர்கள் இருக் கிறார்களா இல்லையா என்பதைக்கொண்டு அவன் எத்தகைய குணம் படைத்தவன் என்பதை நான் நன்கு தெரிந்து கொள்ளலாம். இந்த விஷயங்களையெல்லாம் டியோனும் நானும், இளைஞ னாகிய இ. டையோனிஸியஸின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம். அவனுடைய தகப்பன் அவனைச் சரியானபடி வளர்க்கவில்லை. இதனால் அவன், நல்லறிவும் பண்பாடும் அற்றவனாகிவிட்டான். அவனுடைய பதவிக்குத் தகுந்தபடி நல்ல மனிதர்களோடு அவன் பழகவில்லை. எனவே, குணசீலர்களாயுள்ள உறவினர்களையும், சகபாடிகளையும் நண்பர் களாக்கிக் கொள்ளு மாறு டியோனும் நானும் எடுத்துக்கூறினோம். இதற்கு மேலாக உன் சுபாவங்கள்மீது நீ ஆதிக்கங் கொள்ளவேண்டும் - அதாவது தன்னைத்தான் ஆளவேண்டும் என்று அவனுக்குப் பலவிதமாகச் சொன்னோம். ஏனென்றால் இது விஷயத்தில் அவன் மிகவும் குறை பாடுடையவ னாயிருந்தான். இப்படியெல்லாம் நாங்கள் அவனுக்கு நேருக்கு நேராய் முகத்திலறைந்தாற்போல் சொல்லவில்லை. அப்படிச் சொல்வது, எங்களுக்கு நல்லதல்லவென்று நாங்கள் கருதினோம். எனவே அவனிடமுள்ள குறைகளை அவனுக்கு மறைமுகமாகச் சுட்டிக் காட்டினோம். இந்தக் குறைபாடுகளை அகற்றிக் கொண்டால்தான், உன் ஆத்மாவை அழிவினின்று காப்பாற்றிக் கொள்ள முடியும்; உன்னுடைய பிரஜைகளுக்கும் விமோசனம் அளிக்கமுடியும். இதைத்தான் நீ செய்யவேண்டும். வேறுவழியில்லை. வேறுவழி சென்றால் அழிவுதான் உண்டாகும் என்று இப்படிப் பலவகையாக அவனுக்கு எடுத்துச் சொன்னோம். மேலும் நாங்கள் சுட்டிக் காட்டிய வழியில் செல்; அறிவைப் பூர்த்தி செய்துகொள்; தன்னடக்கம் பெறு; சிஸிலியிலுள்ள பாழ்பட்டுக் கிடக்கும் நகர ராஜ்யங்களைப் புனர் நிர்மாணம் செய்து அவைகளில் ஒழுங்கான அரசாங்கங்களை அமைத்துவிடு; அப்படி அமைக்கிறபோது, அவை, தங்களுக்குள் சண்டைபோட்டுக் கொள்ளாமலும் உன்னோடு சண்டை யிடாமலும் பார்த்துக்கொள்; அப்பொழுதுதான் அவை-அந்த நகர ராஜ்யங்கள்-ஒன்று சேர்ந்து கார்த்தஜீனியர்களை எதிர்த்து நிற்க முடியும் என்று சொன்னோம். இன்னும் இப்படிச் செய்வா யாகில், உன் தகப்பனின் ஆதிக்கத்திற் குட்பட்டிருந்த ராஜ்யத்தைக் காட்டிலும் இரட்டிப்பு மடங்கென்ன, இன்னும் பல மடங்கு பலமுள்ள ராஜ்யத்தை நீ ஆளக்கூடும். அதுமட்டுமன்று; உன் தகப்பன் கார்த்தஜீனியர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கைப் படி ஒரு தொகையைத் திறைப்பணமாக இப்பொழுது நீ அவர் களுக்குக் கொடுத்து வருகிறாயல்லவா, அதற்குப் பதிலாக, ஸைரக் யூஸை முன்பு சர்வாதிகாரியாயிருந்து ஆண்ட ஜீலோன்,1 அந்த கார்த்தஜீனியர்களை வெற்றிகொண்டு அவர்களைத் திறைப்பணம் கொடுத்துவரும்படி செய்ததுபோல் நீயும் செய்யலாம் என்றெல் லாம் வலியுறுத்தினோம். இப்படி வலியுறுத்தி அறிவுரைகள் வழங்கிய நாங்கள், அவனுக்கு விரோதமாகச் சூழ்ச்சிசெய்து வருகிறோமென்று பலவிதமான வதந்திகள் பல திசைகளிலிருந்தும் அவன் செவிகளில் விழுந்தன. இந்த வதந்திகளை நம்பி அவன் டியோனை நாடுகடத்தி விட்டான். என்னை அச்சத்திற்கும் ஆபத்திற்கும் உட்படும்படி செய்தான். இதற்குப் பிறகு நடந்த விஷயங் களைப்பற்றி நான் விரிவாகக்கூற விரும்பவில்லை. சில ஆண்டுகள் கழித்து டியோன், பெலொப்பொனேசியாவிலிருந்தும் ஆத்தென்ஸி லிருந்தும் திரும்பி வந்து இ. டையோனிஸியஸுக்கு வேறுவிதமான பாடம் புகட்டி னான். அதாவது ஸைரக்யூ வாசிகளை, ஒரு தடவை இ. டையோனி ஸியஸின் ஆதிக்கத்தினின்றும், மற்றொரு தடவை Ã¥ÌaÞ(Nibsius) என்பவன் தலைமையில் வந்த படையினர் புரிந்த அட்டூழியத்தி னின்றும், ஆக இரண்டு தடவை காப்பாற்றினான். இதற்குப் பிரதி யாக அவர்கள்-அந்த ஸைரக்யூவாசிகள்-என்ன செய்தார்கள்? டியோனை, இ. டையோனிஸிய எப்படி நடத்தினானோ அப்படியே நடத்தினார்கள். டியோன், தன் போதனையினாலும், செல்வாக்கை உபயோகித்தும் இ. டையோனிஸியஸை, அவனுடைய ராஜ்யத்தை நல்லவிதமாக ஆளக்கூடிய வகையில் தகுதிப்படுத்த முயன்று கொண்டிருந்தான். அதே சமயத்தில், இ. டையோனிஸிய என்ன செய்து கொண் டிருந்தான்? டியோன், சர்வாதிகாரங்களையும் கைப்பற்றிக்கொள்ள முயன்று கொண்டிருக்கிறானென்று அவன் விரோதிகள் கிளப்பிவிட்ட வதந்திகளுக்குச் செவிகொடுத்துக் கொண்டிருந்தான். இ. டையோனிஸியஸின் மனத்தை மாற்றி ராஜ்யாதிகாரப் பொறுப்பைப் புறக்கணிக்கும்படி அவனை ஆக்கி விடவேண்டும்; அப்படி ஆக்கிவிட்டால் அவன்-அந்த இ. டையோனி ஸிய-அந்தப் பொறுப்பைத் தன்வசம் ஒப்புவித்து விடுவான்; அதற்குப்பிறகு, சூழ்ச்சிகள் செய்து சர்வ அதிகாரங் களையும் கைப் பற்றிக்கொண்டு இ. டையோனிஸியஸை நாடு கடத்தி விடலாம்; இப்படியெல்லாம் டியோன் திட்டமிட்டிருப்பதாக அவனுடைய விரோதிகள், இ. டையோனிஸிய செவிகளில் ஓதிவந்தார்கள். அது மட்டு மன்று; ஸைரக்யூ வாசிகளிடையிலும் இந்த மாதிரியான வதந்திகளைப் பரப்பினார்கள். இதில் வெற்றியும் அடைந்து விட்டார்கள். ஆனால் இந்த வெற்றி இயற்கைக்கு மாறுபட்டது; இதற்குக் காரண புருஷர்களை வெட்கப்படும்படி செய்வது. இந்த வெற்றி அவர்களுக்கு-டியோனின் விரோதிகளுக்கு-எப்படி ஏற்பட்ட தென்பதைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நான் ஓர் ஆத்தீனியன், பிரஜாவுரிமையுடையவன், டியோனின் நண்பன், அவனுடன் தொடர்புகொண்டவன் என்ற முறையில் இ. டையோனிஸியஸின் அரசவைக்கு வந்தேன். அவ்விருவருக்கு மிடையே எழுந்த வேற்றுமைகளை அகற்றி இருவரையும் நண்பர் களாகச் சேர்த்து வைக்கலாமென்ற நம்பிக்கையோடுதான் வந்தேன். ஆனால் இ. டையோனிஸிய, என்னைத் தனக்குமட்டும் நண்பனாக இருக்கச் செய்யவும், அவன், டியோனை நாடு கடத்திவிட்டு சரி யென்று நான் சொல்லவேண்டுமென்பதற்காகவும், எனக்குப் பல பரிசுகள் அளித்தும் மரியாதைகள் செய்தும் என்னைக் கௌரவப் படுத்தினான். இப்படி யெல்லாம் செய்தால், நான் அவன் வசப்பட்டு விடுவேன் என்று எதிர்பார்த்தான். ஆனால் இதில் அவன் ஏமாற் றத்தையே அடைந்தான். சிறிது காலங்கழித்து, டியோன், தன் தாய்நாட்டுக்கு-ஸைரக்யூஸுக்கு - திரும்பிவந்தான்; தன்னோடு இரண்டு நண்பர்களை அழைத்து வந்தான். அவ்விருவரும் ஆத்தீனியர்கள்தான். ஆனால் அவர்களுக்கும் டியோனுக்கும் ஏற்பட்ட நட்பு, தத்துவ சாதிர விசாரணையில் ஒரே கருத்துக்கொண்டவர்கள் என்பதனால் ஏற்பட்ட நட்பன்று; எத்தனையோ பேர்களுக்கிடையில் ஏற்படுகிற சாதாரண நட்புதான்; ஏதோ ஒரு சங்கத்தில் அங்கத்தினர்களா யுள்ளவர்களுக் கிடையில், பரபரம் உபசரித்துக்கொள்வதன் மூலமாகவோ, அந்தச் சங்கத்தின் அந்தரங்கச் சடங்குகளில் ஒன்று சேர்ந்திருக்கிறவர்கள் என்ற முறையிலோ ஏற்படுகிற நட்பைப் போன்றதுதான். இந்த நட்பைத் தவிர, அவர்கள், டியோன், ஸைரக்யூஸுக்குத் திரும்பிவர உதவி செய்திருக் கிறார்கள். இதனால் அவன்-டியோன்-இந்த இருவரையும், சகோதரர் களாகவும் தோழர் களாகவும் கருதி அழைத்துவந்தான். அவர்கள் ஸைரக்யூஸுக்கு வந்ததும், ஜனங்கள், டியோனைப் பலவிதமாகத் தூற்றுவதைக் கண்டார்கள்; டியோன், தான் சர்வாதிகாரியாயிருக்க வேண்டு மென்பதற்காகச் சூழ்ச்சி செய்கிறானென்று கேள்விப் பட்டார்கள். என்ன செய்தார்கள் தெரியுமா? தங்களை உபசரித்து அழைத்துவந்த அவனை-டியோனை-காட்டிக்கொடுத்து விட்டார்கள்; அவன் கொலை செய்யப்படுவதற்கு உடந்தையா யிருந்தார்கள். என்ன இழிவு! தர்மத்திற்கு விரோதமாக அவர்கள் நடந்து கொண்டது எளிதில் மறக்கமுடியாத ஒன்று. அவர்கள், தங்கள் இழி செயலினால் ஆத்தென்ஸுக்குக் கெட்டபெயர் வாங்கிக் கொடுத்தார்களென்று பொதுவாக ஜனங்கள் சொல்லிக் கொள் வதை நான் அலட்சியப் படுத்திவிட முடியாது. ஆனால் அதே ஆத்தென்ஸை சேர்ந்த ஒருவன்,1 டியோனைக் காட்டிக்கொடாமலிருந்தான் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். அப்படிக் காட்டிக் கொடுத்திருந்தால் அவனுக்கு ஏராளமான பொருள் கிடைத்திருக்கும்; பலவித கௌரவங்களும் கிட்டியிருக்கும். ஆனால் அவன் காட்டிக் கொடுக்க வில்லை. ஏனென்றால், அவனுக்கும் டியோனுக்கும் ஏற்பட்ட நட்பு, சாதாரண நட்பன்று; ஒரே மாதிரியான கல்விப்பயிற்சி, ஒரே மாதிரியான லட்சியம், இப்படிப்பட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட நட்பு. அறிவுள்ள ஒரு மனிதன், இத்தகைய நட்பைத்தான் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்; இந்த நட்பில்தான் நம்பிக்கை வைக்கவேண்டும். ஆகையால் இந்த இருவருடைய செயலுக்காக, ஆத்தென்ஸை இழிவுபடுத்திச் சொல்லவேண்டாம். அவ் விருவரையும் ஒரு பொருட்டாகக் கருதவேண்டாம். இவையெல்லாம் டியோனுடைய நண்பர்களுக்கும் உறவினர் களுக்கும் தெரியவேண்டுமென்பதற்காகவே இவ்வளவு தூரம் சொல் கிறேன். இது தவிர, அதிகப்படியாக இன்னுமோர் ஆலோ சனையையும் சொல்லவேண்டியவனாயிருக்கிறேன். ஏற்கனவே இது சம்பந்தமாக இரண்டு தடவை எச்சரிக்கையாகச் சொல்லியிருக் கிறேன். அஃது என்னவென்றால், சிஸிலியையாகட்டும், வேறெந்த ராஜ்யத்தையாகட்டும், தனி மனிதனுடைய சர்வாதிகார ஆட்சிக்குட் படுத்தாதீர்கள், சட்டங்களின் ஆட்சிக்குட்படுத்துங்கள் என்பது தான்.1 இதுவே என் கோட்பாடு. ஒருவன், சர்வ அதிகாரங்களையும் தன்னொரு வனிடமே தேக்கிவைத்துக் கொண்டு ஆண்டால், அதனால் ஆள்கின்ற அந்த ஒருவனுக்கும் நன்மை யில்லை; ஆளப் படுகின்ற பிரஜைகளுக்கும் நன்மையில்லை. இருசாராருக்கும் துன்பமே. இதன் தீய விளைவுகள், பிந்திய தலைமுறைகளையும் பாதிக்கும். சாசுவதமாயிருக்கக்கூடிய நன்மை எது என்று தெரியாத, குறுகிய நோக்கமுடைய ஒரு சில அறிவிலிகள் இதனால் அனுகூல மடைவார்கள். இந்த என் கோட்பாட்டை முதலில் டியோனுக்கும் பிறகு இ. டையோனிஸியஸுக்கும் விவரித்துக் கூறினேன். இப்பொழுது உங்களுக்கும் கூறுகிறேன். கடவுள் பெயரால் இதைக் கேளுங்கள். இ. டையோனிஸியஸின் நிலைமையையும் டியோனின் நிலைமை மையும் உன்னிப்பாருங்கள். ஒருவன்-இ. டையோனிஸிய-என் போதனைகளுக்குச் செவிகொடுக்க மறுத்துவிட்டான்; கண்ணிய மிழந்து வாழ்கிறான்.2 இன்னொருவன்-டியோன்-என் போதனைகளுக்குச் செவிகொடுத்தான்; கண்ணியமாக இறந்து போனான். ஒருவன், தன் சொந்த உயர்வையோ, தன் நாட்டின் உயர்வையோ லட்சியமாகக் கொள்வானாகில், அதற்காக அவன் எல்லாவித துன்பங்களையும் அனுபவிக்கத் தயாராக இருக்க வேண்டும். அதுதான் நியாயம். அதுதான் அவனுக்குப் பெருமை. நம்மில் யாரும் மரணத்தினின்று தப்பமுடியாது. மரணம் ஏற்படாதிருந்தால் சந்தோஷமா யிருக்கலாமென்று சிலர் நினைக் கிறார்கள். அது தவறு. ஆத்மா என்ற ஒன்று இருக்கிறதென்பதை அறியாதவர்களுக்கு நல்லதும் இல்லை; கெட்டதும் இல்லை. ஆத்மா, தனித்திருந்தாலும் சரி, உடம்போடு சேர்ந் திருந்தாலும் சரி, அப்பொழுதுதான் அதற்கு நல்லது கெட்டது உண்டு. ஆத்மா அழியாத் தன்மையுடையதென்று நமது முன்னோர்கள் அருளி யிருக்கிறார்கள். அஃது இந்த உடம்பிலிருந்து வெளியேறியதும், உடம்போடு சேர்ந்திருந்த காலத்தில் செய்த செயல்களுக்குரிய பலனை அனுபவிக்கவே செய்கிறது. ஆகையால் தீயனவற்றையும் அநியாயமானவற்றையும் பிறருக்குச் செய்வதைக் காட்டிலும், பிறரால் நமக்குச் செய்யப்படுவதை அனுபவிப்பது குறைந்த தீமையின் பாற்படுமென்றே சொல்லவேண்டும். ஆனால் இப்படிச் சொல்வதை, உலக ஆசைகளில் அதிகமாக ஈடுபட் டிருக்கிறவர்கள் கேட்கமாட்டார்கள். அப்படிக் கேட்டாலும், இஃதென்ன பேதமை என்று சிரிப்பார்கள்; சிரித்துவிட்டு, தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்வதில் முனைந்துவிடுவார்கள்; அதில் போலியான இன்பத்தை யும் நுகர்வார்கள்; அந்த இன்பம், தெய்வத் தன்மையுடைய தென்றும் கூசாமல் கூறுவார்கள். இவ்வளவுக்கும் காரணம், இவர்கள், ஆத்மாவின் அமரத்தன்மையை அறியாததுதான். அறியாத காரணத்தி னால், இவர்கள், தங்கள் குறைபாடுகளை உணரமாட்டார்கள்; தாங்கள் செய்கிற ஒவ்வொரு கெட்டசெயலும், தங்களையே திருப்பி வந்து தாக்குகிறதென்பதையும், அதனால் தங்களுடைய ஆத்மாவுக்குக் களங்கம் ஏற்படுகிற தென்பதையும், அடுத்தடுத்த பிறவிகளில் பலவிதமான அவமானங் களுக்கு உட்படவேண்டியிருப்பதோடு, பல்வேறு துன்பங்களையும் அனுபவிக்கவேண்டி வருமென்பதையும் அறியமாட்டார்கள். இவைபோன்ற உண்மைகளையே நான் டியோனுக்குப் போதனை செய்தேன். இவைகளை அவன் ஏற்றுக்கொள்ளவும் செய்தான். அப்படி யிருக்க, அவனைக் கொலை செய்தவர்கள் மீதும் இ. டையோனிஸிய மீதும் நான் ஏன் கோபங்கொள்ளக்கூடாது? கோபங்கொள்ளாமலிருக்க முடியுமா? டியோனைக் கொலை செய்துவிட்ட விஷயத்தில் (அவனோடு வந்த ஆத்தீனியர்கள் இரு வரும், இ. டையோனிஸியஸும்) மூவரும், எனக்கு மட்டுமல்ல, மானிட சமுதாயத்திற்கே தீங்கிழைத்தவர்களா கிறார்கள். முந்திய இருவரும், நியாயத்தையே கடைப்பிடிப்பதென்று உறுதி கொண்டிருந்த ஒருவனை - டியோனை - கொலை செய்தனர்; மூன்றாமவன்-இ. டையோனிஸிய-தன் ராஜ்ய முழுவதிலும் நியாயத்தை அமுல் நடத்துவதற்கான சக்திபடைத்திருந்தபோதிலும், அதை இந்த விஷயத்தில் டியோன் கொலை செய்யப்பட்ட விஷயத்தில்-பயன் படுத்தாம லிருந்து விட்டான். அவனிடத்தில் - அந்த ஒருவனிடத்தில் - ஞானசக்தியும் அதிகார சக்தியும் ஒன்று சேர்ந்து செயலாற்றி இருக்குமானால், அது, கிரேக்கர்களுக்கு மட்டுமல்ல, கிரேக்க ரல்லாதாருக்கும் சிறந்த உதாரணமா யிருந்திருக்கும். அதுமட்டு மன்று; ஒரு தனிமனிதனோ, ஒரு ராஜ்யமோ, தர்மத்தை அடிப்படை யாகக் கொண்டு ஞான மார்க்கத்தில் செல்லுமானால் தான் சந்தோஷ மாயிருக்க முடியும் என்ற உண்மையை மானிட சமுதாயத்திற்கு உணர்த்தியிருக்க முடியும். இ. டையோனிஸியமீது எனக்குள்ள குறையெல்லாம் இப்படி அவன் செய்யவில்லையே என்பதுதான். அவன் எனக்கு இழைத்த தீங்குகளை நான் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. டியோனை கொலை செய்தவன், என்னையும் ஒருவகையில் கொலை செய்தவனாகிறான். டியோன், தன் முயற்சியில் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பானாகில், அவனுடைய நிருவாகம் எப்படியிருக்குமென்பது எனக்கு ஒருவாறு தெரியும். முதலாவது, அவன், ஸைரக்யூமீது படிந்திருந்த அடிமைக் கறையைத் துடைத்திருப்பான்; சுதந்திர ஆடையை அதற்கு அணி வித்திருப்பான். (அதாவது ஸைரக்யூஸை அடிமைத்தனத் திலிருந்து விடுவித்துச் சுதந்திரம் பெறச் செய்திருப்பான்.) பிறகு நல்ல, பொருத்த மான சட்டங்களை இயற்றிக்கொடுத்து, அவைமூலம், ஸைரக்யூ வாசிகளின் வாழ்க்கை ஒழுங்கான முறையில் நடைபெறுவதற்காக, தன் முயற்சிகள் அனைத்தையும் செலவழித் திருப்பான். இதைச் செய்துமுடித்துவிட்டு அதே உற்சாகத்துடன் சிஸிலி தீவிலுள்ள மற்ற ராஜ்யங்களின் புனர் அமைப்பு விஷயத்தில் ஈடுபட்டிருப்பான். அதாவது அந்த ராஜ்யங் களிலுள்ள அந்நியர் பலரையும்-கார்த்த ஜீனியர்கள் பலரையும்-விரட்டியடித் திருப்பான்; எஞ்சியிருந்தவர் களை, தனக்கு ஆட்படுத்திக் கொண்டிருப்பான். இந்தக் காரியங் களில் அவன் ஹையேரானைக்1 காட்டிலும் சுலபமாக வெற்றி பெற்றிருப்பான். எந்த ஒரு காரியத்திலும், நியாயமாகவும், உறுதியுட னும், நிதானத்துடனும், அறிவுடனும் நடந்துகொள்கிற ஒருவன், அந்தக் காரியத்தைச் செய்து முடிப்பானாகில், அவனுடைய மேற்சொன்ன நல்ல தன்மைகளுக்குச் சாதாரண மக்கள் மதிப்புக் கொடுப்பார்கள். உண்மையில் இ. டையோனிஸிய, நல்லவழிக்குத் திரும்பியிருப்பானாகில், மேற்சொன்ன நல்ல தன்மைகள் யாவும் வெளிப்பட்டு, எல்லா மனிதர்களின் மனத்திலும் நிலைபெற் றிருக்கும். ஆனால் துரதிருஷ்டவசமாக, ஒரு துர்த்தேவதை குறுக்கிட்டு, தெய்வத்திற்கும் சட்டத்திற்கும் மதிப்புக் கொடாதபடி அவனைச் செய்துவிட்டது. தவிர, மனிதர்களுடைய மனமென்னும் மண்ணில், கீழான தன்மைகளையெல்லாம் பயிரிட்டு வளர்த்தோமானால், அவைகளி லிருந்து கசப்பான கனிகளே-பலன்களே-கிடைக்கும் என்ற உண்மையை அறிந்துகொள்ள முடியாதபடி அவனைச் செய்து விட்டது. அவன் அறிந்துகொள்ளாததன் விளைவாக, டியோனும் நானும், அவனுடைய நன்மைக்காக வகுத்திருந்த திட்டங்க ளெல்லாம் பயனற்றுப்போயின. டியோனுடைய நண்பர்களாகிய உங்களுக்கு நான் கூறுவ தெல்லாம் என்னவென்றால், சிஸிலியின் புனர் அமைப்பு விஷயத்தில் நாம் இப்பொழுது மூன்றாவது முறையாக முயற்சி செய்ய முற்பட்டிருக்கிறோம். ஆகையால் அபசகுனமாக நாம் எதையும் சொல்லவேண்டாம். நீங்கள் முன்பு அனுபவித்த துன்பங்களை யெல்லாம் மறந்துவிடுங்கள்; டியோனைப்போல் உங்கள் நாட்டின் மீது பற்று வையுங்கள்; அவனுடைய புத்தி நிதானந்தவறாத போக்கைப் பின்பற்றுங்கள்; அவன் வகுத்து வைத்த திட்டங்களைப் பற்றி நான் உங்களுக்கு எடுத்துச் சொன்னேனல்லவா, அந்தத் திட்டங்கள்படி நடவுங்கள். உங்களுடைய முன்னோர்கள் எப்படி டோரியமுறையில்1 வாழ்ந்தார்களோ அதே மாதிரி உங்களில் எவனாவது ஒருவன் நடந்துகொள்ளாமல், டியோனைக் கொலை செய்தவர்களைப்போல், அதாவது சிஸிலியர்களைப் போல் வாழ முற்படுவானாகில், அவனுடைய உதவியை எதிர் பாராதீர்கள். அவன் உங்களிடம் விசுவாசமாக நடந்துகொள்வான் என்று நம்பாதீர்கள். சிஸிலியின் புனர் அமைப்பு விஷயத்திலோ, அதன் சட்டத்திட்டங் களை ஒழுங்குபடுத்தும் விஷயத்திலோ, மற்ற எல்லாருடைய உதவியையும் கோருங்கள்; சிஸிலி தீவிலுள்ளவர் களிடமிருந்து மட்டுமல்ல, பெலொப்பொனேசியாவி லுள்ளவர் களிடமிருந்தும் ஆத்தென்ஸிலுள்ளவர்களிடமிருந்தும் கூட உதவியைக் கோருங்கள். ஆத்தென்ஸில் எத்தனையோ சீல புருஷர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் டியோனின் கொலைக்கு உடந்தை யாயிருந்தவர்களை-அந்த இரண்டு ஆத்தீனியர்களை - அறவே வெறுக்கிறார்கள். நான் சொல்லும் இந்தத் திட்டங்களெல்லாம் எதிர் காலத் திற்குத்தான் பயன்படும் என்று சொல்லாதீர்கள். நிகழ்காலத்திற்கும் இவை பயன்படும். ஏனென்றால், இப்பொழுது உங்களிடையே தினந்தோறும், ஒன்றுபோனால் மற்றொன்று என்கிற மாதிரி அநேக சச்சரவுகள் இருந்து வருகின்றன; இவைகளினால் நீங்கள் பாதிக்கப் பட்டு வருகிறீர்கள். ஓர் அரசியல்கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதில் வெற்றி கண்டதும், வெற்றிகாண்பதற்கு முன்பு, தான் செய்த தவறுகளை மறந்து விட வேண்டும்; தனக்கு விரோதமா யிருந்தவர்களைப் பழிவாங்கக் கூடாது. அப்படிச் செய்யாதவரை யில், நாட்டில் கொலைகள் நடை பெற்றுக் கொண்டுதானிருக்கும்; வேண்டாதவர்கள் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டுத்தான் வரு வார்கள்; கட்சிச் சண்டைகள் இருந்து கொண்டு தானிருக்கும். இவைகளுக்கு முடிவே இராது. இப்படி முடிவு இராதென்பதைச் சாதாரண அறிவு படைத்தவர்கள்கூடத் தெரிந்துக் கொள்ளக்கூடும். வெற்றியடைந்த கட்சியானது, தன்னடக்கம் பெற்று, தன் கட்சி நலன்வேறு, தோல்வியடைந்த கட்சியின் நலன் வேறு என்று கருதாமல், பொதுநலனைக் கருதிச் சட்டங்களை நிர்மாணித்து நடை முறையில் கொண்டு வருமானால், தோல்வியினால் பலவீன மடைந்து போன கட்சியானது, இந்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டு மென்பதில் இரட்டிப்பு மடங்கு கவனஞ்செலுத்தும். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, வெற்றியடைந்த கட்சியின் எண்ணிக்கை பலத்தைக் கண்டு அச்சம். மற்றொன்று, வெற்றி யடைந்த கட்சியானது. தன்னடக்கம் பெற்றதாகி, தான் இயற்றிய சட்டங்களுக்கு மற்ற எல்லோரையும்போல் தானும் கட்டுப்பட்டு நடக்க முன்வருவதைக் கண்டு அதனிடம் ஏற்பட்ட மதிப்பு, எனவே கட்சிச் சண்டைகளினால் பிளவுபட்டிருக்கிற ஒரு ராஜ்யத்தில், ஒழுங்கு ஏற்படவேண்டுமானால், வெற்றியடைந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ளும் கட்சியானது மேற்கண்ட விதமாக நடந்து கொள்ளவேண்டும். அப்படிக்கின்றி, எந்த ஒரு ராஜ்யத்தில், அதிகாரத்திலுள்ளவர்கள் கட்சிமனப்பான்மையுடன் நடந்து கொள்கிறார்களோ அந்த ராஜ்யத்தில் சண்டைச் சச்சரவுகளும் பகைமை உணர்ச்சியும் இருந்துகொண்டுதானிருக்கும். வெற்றியடைந்த கட்சியானது, அதாவது ஆளும் அதி காரத்தைக் கைப்பற்றிக் கொண்ட கட்சியானது, ராஜ்யத்தின் பொது நலனை உண்மையிலேயே விரும்புமானால், உயர்குணம் படைத்த கிரேக்கர் சிலரைத் தெரிந்தெடுத்து, தனக்கு ஆலோசகர்களாக அமர்த்திக்கொள்வ தென்று தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இப்படித் தெரிந்தெடுக்கப் படுகிறவர்கள், வயது வந்தவர்களாகவும், குடும்பதர்களாகவும், நல்ல பரம்பரையில் வந்தவர்களாகவும் ஓரளவு சொத்துபற்றுடையவர் களாகவும் இருந்தால் மிக நல்லது. பதினாயிரம்பேரைப் பிரஜைகளாகக் கொண்ட ஒரு சிறு நகர-ராஜ்யத்திற்கு இத்தகைய ஆலோசகர்கள் ஐம்பதுபேர் இருந்தால் போதும். கிரீஸிலிருந்து எங்களிடம் வந்து எங்களுக்கு ஆலோசகர் களாக இருங்கள் என்று அவர்களை-உங்களால் தெரிந்தெடுக்கப் பட்ட அந்த உத்தம புருஷர்களை-நீங்கள் நேரில் சந்தித்துக் கேட்டுக்கொள்ளவேண்டும்; பலவித கௌரவங்களை வழங்குவதாக அவர்களுக்குச் சொல்லவேண்டும். இப்படியெல்லாம் உற்சாக மளித்து அவர்களை, அவர்களுடைய குடும்பத்தினின்று பிரிந்து உங்களிடம் வருமாறு செய்யவேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்று வதில் வெற்றி யடைந்த கட்சியின் நலனுக்கென்று ஒருவிதமாகவும், தோல்வியடைந்த கட்சிக்கென்று வேறுவித மாகவும் இல்லாமல் எல்லாருடைய பொதுநலனை முன்னிட்டும் நாங்கள் சட்டங்கள் இயற்றித்தருகிறோம் என்று அவர்களைப் பிரமாணம் எடுத்துக் கொள்ளச் செய்து, பிறகு சட்டங்களை இயற்றித்தருமாறு அவர் களுக்குச் சொல்ல வேண்டும்.1 சட்டங்கள் இயற்றப்பட்டு அவை நடைமுறையில் வரும் போது, அதாவது அந்தச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் விஷயத்தில், தோல்வியடைந்த கட்சியைக்காட்டிலும் வெற்றியடைந்த கட்சி அதிக உற்சாகம் காட்டவேண்டும். அப்பொழுதுதான் எல்லாம் ஒழுங்காக நடக்கும். தீமைகள் யாவும் விலகிப்போகும். எங்கணும் மகிழ்ச்சி நிலவும். அப்படிக்கின்றி, வெற்றியடைந்த கட்சி, தன் கட்சி நலனுக்கென்று வேறுவிதமாக நடந்துகொள்ள முற்படுமானால், என்னுடைய ஒத்துழைப்பை மட்டுமல்ல, யாருடைய ஒத்துழைப்பை யும் நீங்கள் எதிர் பார்க்க முடியாது. ஸைரக்யூஸின் நன்மைக்காக, டியோனும் நானும் சேர்ந்து வெளியிட்ட திட்டங்கள் ஏறக்குறைய இந்த முறையிலேயே இருந்தன. ஆனால் இவற்றை இரண்டாந்தர மென்றுதான் சொல்ல வேண்டும். முதல்தரமான திட்டம், எல்லாப் பொருள்களும் எல்லாருக்கும் பொதுவாயிருக்க வேண்டுமென்பது தான்; அதாவது பொதுவுடைமைக் கோட்பாடு, நடைமுறையில் கொண்டுவரப்பட வேண்டுமென்பதுதான். இந்த முதல்தரமான திட்டத்தை, இ. டையோனிஸியஸின் உதவிபெற்று நடைமுறையில் கொண்டுவர நாங்கள் (டியோனும் நானும்) முயன்றோம். ஆனால் எங்கள் துரதிருஷ்டம், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. நீங்கள் மறுபடியும் முயற்சி செய்வீர்க ளானால், அதிருஷ்டம் உங்களுக்குக் கூடிவரலாம்; தெய்வத்தின் திருவருளும் உங்களுக்குக் கிட்டலாம். இ. டையோனிஸியஸை நாடி நான் முதல்தடவையாக வந்தபோது இந்த ஆலோசனையைத்தான் சொன்னேன். இரண்டா வது தடவை மிகுந்த யோசனையின்பேரில் தான் வந்தேன். முதல் தடவை நான் சிஸிலிக்கு வந்தபோது என்ன நடந்த தென்பதைப்பற்றி மேலே சொல்லியிருக்கிறேன். பிறகு என்னை (கிரீஸுக்கு) திருப்பி அனுப்பிவிடுமாறு இ. டையோனிஸியஸை மன்றாடிக் கேட்டுக் கொண்டேன். கடைசியாக நாங்கள் ஒரு சமரஸ ஏற்பாட்டுக்கு வந்தோம். சிஸிலிதீவில் அப்பொழுது (உள்நாட்டு) போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. போர் நின்று அமைதி ஏற்பட்ட பிறகும், தான் அதிகாரத்தை உறுதியாகக் கைப்பற்றிக் கொண்டபிறகும், டியோனையும் என்னையும் (சிஸிலிக்கு) திரும்ப வரவழைத்துக் கொள்வதாக இ. டையோனிஸிய கூறினான். தவிர, டியோன், சுயநாட்டைவிட்டு வேற்று நாட்டுக்குச் சென்று வசிக்கும்படி சொல்லப்பட்டதாகக் கருதிக் கொள்ள வேண்டுமே தவிர, சுயநாட்டி னின்று அடியோடு அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாகக் கருதிக் கொள்ளக் கூடாதென்றும் கூறினான்.1 இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, நான் மீண்டும் ஸைரக்யூஸுக்கு வந்துபோவதாக அவனுக்கு வாக்கு கொடுத்தேன். சிறிது காலங்கழித்து சிஸிலிதீவில் சண்டை ஓய்ந்துவிட்டது; அமைதியும் ஏற்பட்டது. உடனே புறப்பட்டு வருமாறு இ. டையோனி ஸிய எனக்கு அழைப்பு விடுத்தான். ஆனால் டியோனுக்கு, இன்னும் ஒரு வருஷத்திற்குப் பொறுத்திருக்குமாறு சொல்லி யனுப்பிவிட்டான். இ. டையோனிஸிய என்னைமட்டும் அழைத்திருக்கிறா னென்று தெரிந்ததும், டியோன், என்னிடம் வந்து, உடனே புறப்படு மாறு என்னை வற்புறுத்தினான். இதற்குத் தகுந்தாற்போல், இ. டையோனிஸிய, தத்துவ சாதிரத்தில் பயிற்சிபெற வேண்டு மென்பதில் மறுபடியும் ஊக்கங் கொண்டிருக்கிறானென்று சிஸிலி யிலிருந்து செய்திகள் பல வந்து கொண்டிருந்தன. இதனாலேயே இ. டையோனிஸியஸின் அழைப்பை நான் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில் டியோன் ஆவல் காட்டினான். ஆனால் எனக்கென்னவோ, டியோனையும் இ. டையோனிஸியஸை யும் அவரவர் போக்குப்படி விட்டுவிடுவதே நல்லதென்று தோன்றி யது. ஏனென்றால், தத்துவ சாதிரப் பயிற்சி பெறவேண்டுமென் பதில் இளைஞர்களுக்கு உண்டாகும் உற்சாகம் எப்படி அடிக்கடி மாறுதலடைகிறதென்பதை நான், என் அனுபவத்திலிருந்து ஒருவாறு அறிந்து கொண்டிருக்கிறேனல்லவா? எனவே, எனக்கு வயதாகிவிட்ட தென்றும், அவன் - இ. டையோனிஸிய, - முன்பு, என்னிடம் சொன்னபடி நடக்கவில்லையென்றும் சொல்லி, அவனுடைய-இ. டையோனிஸியஸினுடைய - அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியா தென்று பதில் எழுதிவிட்டேன். இப்படி எழுதி விட்டதனால், டியோனுக்கும் இ. டையோனிஸியஸுக்கும் என்மீது வருத்தம். நான் முன்பு ஸைரக்யூஸுக்கு வந்து திரும்பிய பிறகு, ஆர்க்கெட்ட2 என்பவன், இ. டையோனிஸியஸை வந்து பார்த் திருக்கிறான். தவிர ஸைரக்யூஸிலுள்ள சிலர், இ. டையோனி ஸியஸின் நட்பைப்பெற்று, அதன் விளைவாக அவனிடமிருந்து தத்துவசாதிர சம்பந்தமான சில சாதாரண விஷயங்களைத் தெரிந்துகொண்டு, அவைகளை மற்றவர் களுக்கும் தெரிவித்து வந்திருக்கிறார்கள். இ. டையோனிஸிய, தத்துவ சாதிர சம்பந்தமான என்னுடைய கோட்பாடுகளில் நல்ல தேர்ச்சி பெற்று விட்டானென்பது அவர்கள் நினைப்பு. அந்த நினைப்பிலேயே அவர்கள், அவனிடமிருந்து தெரிந்து கொண்டவைகளை மற்றவர் களுக்குத் தெரிவித்து வந்திருக்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால், இ. டையோனிஸியஸுக்கு, விஷயங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தி இயற்கையாகவே இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் அதிகார ஆசையும் நிறைய இருக்கிறது. தன்னைப்பற்றி யாராவது புகழ்ந்து பேசினால், அதற்குச் சந்தோஷப் படுகிறான். பிறகு, தனக்குத்தானே எண்ணிப்பார்க்கை யில், நான் அவனுடன் தங்கியிருந்தபொழுது என்னிடமிருந்து ஒன்றும் கற்றுக் கொள்ளவில்லையென்று தெரிந்ததும், அதற்காக வெட்கப்படுகிறான். என்னுடைய கோட்பாடுகளைச் சரிவரத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசையுடையவனாக இருப்ப தோடு, தனக்கு அதுகாறும் கிட்டியிருக்கிற புகழுக்குப் பங்கம் ஏற்படக்கூடாதென்றும் விரும்புகிறான். அப்படிப் பங்கம் ஏற்படக் கூடாதென்பதுதான் அவனுடைய ஆசையை வளர்க்கும் தூண்டு கோலாயிருந்தது. நான் ஆத்தென்ஸுக்கு க்ஷேமமாக வந்து சேர்ந்த பிறகு, திரும்பி நான் ஸைரக்யூஸுக்கு வரவேண்டுமென்று அழைப்பு விடுத்து, அந்த அழைப்பை நான் மறுத்துவிட்டேனல்லவா, அப்படி நான் மறுத்துவிட்டது, அவனுடைய சுபாவங்கள் எனக்குப் பிடிக்க வில்லை என்பதனாலோ, அவனுடன் பழகியதன் விளைவாக அவனுடைய வாழ்க்கைப் போக்கில் எனக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது என்பதனாலோ இருக்கலாம் என்று யாரும் நினைத்து விடக்கூடாதென்பதுதான் அவனுடைய நோக்கமாயிருந்தது. இந்த விஷயங்களைப் பற்றிய முழு உண்மையும் சொல்லிவிட வேண்டியதுதான் நியாயம் என்று நான் கருதுகிறேன். அப்படி நான் சொல்வது பூராவையும் படிக்கிற ஒருவன், என்னுடைய தத்துவ சாதிர அறிவு இகழத்தக்கதென்றோ, இ.டையோனிஸிய அந்த அறிவில் புகழ் பெற்றவன் என்றோ அபிப்பிராயப்படலாம். அப்படி அபிப்பிராயங் கொள்வதை நான் வரவேற்கிறேன். இ.டையோனிஸிய, மூன்றாவது முறையாக எனக்கு அழைப்பு விடுத்தான். கூடவே, நான் சௌகரியமாக வரவேண்டு மென்பதற்காக ஒரு சிறு கப்பலை அனுப்பி, அதில் சிஸிலியில் எனக்குப் பழக்கமான நண்பர்கள் சிலரையும் கூட்டி அனுப்பினான். இந்த நண்பர்களில் ஒருவன் ஆர்க்கிடேம1 அவன் ஆர்க்கைட்டஸின் மாணாக்கன். அந்த ஆர்க்கைட்டஸிடம் எனக்கு அதிக மதிப்பு உண்டு. இது இ.டையோனிஸியஸுக்குத் தெரியும். இங்ஙனம் வந்த நண்பர்கள் அனைவரும், தத்துவ சாதிரப் பயிற்சியில் இ.டையோனி ஸிய வெகுதூரம் முன்னேறியிருக்கிறானென்று சொன்னார்கள். இ.டையோனிஸியஸுக்கு, நான் டியோனிடம் அதிக விசுவாச முடையவனாயிருக்கிறேன் என்பது தெரியும்; அப்படியே டியோன், நான் சிஸிலிக்குச் செல்ல வேண்டுமென்பதில் அதிக ஆவலுடைய வனாயிருக்கிறான் என்பதும் தெரியும். எனவே, எனக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினான். அதன் முற்பகுதியில் பின்வருமாறு குறிப் பிட்டிருந்தான்:- நாங்கள் கேட்டுக் கொள்கிறபடி நீ உடனே சிஸிலிக்குப் புறப்பட்டு வருவாயானால், நமக்கும் டியோனுக்கு முள்ள வேற்றுமைகளெல்லாம் உன் விருப்பப்படியே ஒழுங்குபட்டு விடும். இப்படி ஒழுங்குபடுத்திவிட நான் முன்கூட்டியே சம்மதிக் கிறேன். ஏனென்றால்,நியாயமானதையே நீ கோருவாய் என்பது எனக்குத் தெரியும். அப்படி நீ வர மறுப்பாயானால், டியோனைப் பொறுத்த விஷயமோ, வேறு விஷயமோ எதுவும் உன் விருப்பப்படி முடிவு பெறுமென்று நீ எதிர்பார்க்கக்கூடாது. இ.டையோனி ஸிய கடிதத்தில் கண்டவார்த்தைகளே இவை. கடிதத்தின் மற்றப்பகுதிகளை இங்கே எடுத்துக்காட்டுவது பொருத்தமாயிராது. இதே பிரகாரம், ஆர்க்கைட்டஸிடமிருந்தும், டாரெண்ட்டம் வாசிகள் சிலரிடமிருந்தும் கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. இப்பொழுது நான் வராவிட்டால் தங்களுக்கும் இ.டையோனி ஸியஸுக்கும் நான் செய்துவைத்த சிநேகம் முறிந்து போகுமென்றும், அந்தச் சிநேகம், தங்கள் (டாரெண்ட்டம்) ராஜ்ய முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானதென்றும் குறிப்பிட்டிருந்தார்கள். இப்படி ஒரு பக்கம், சிஸிலியிலும் இத்தலியிலுமுள்ள நண்பர்கள், நான் வரவேண்டுமென்று வற்புறுத்தினார்கள்; மற்றொரு பக்கம், ஆத்தென்ஸிலுள்ளவர்கள் நான் போகவேண்டுமென்று வற்புறுத்தி னார்கள். ஆகவே, டாரெண்ட்டம் ராஜ்யத்து நண்பர்களின் கோரிக்கையைப் புறக்கணிக்கக்கூடாதென்று முடிவு செய்தேன். தவிர, சுயபுத்தியுள்ள ஓர் இளைஞன், மேலான சில விஷயங்களை யதேச்சையாகக் கேட்டுவிட்டு, அதையொட்டி மேலான வாழ்க் கையை நடத்த விரும்புகிறானென்றால், அஃது, இது வரையில் கேள்விப்படாத புதிய விஷயமொன்றுமல்லவே? எனவே உண்மை நிலையைக் கண்டறிவது என் கடமை என்று கருதினேன். நான் போகாவிட்டால், இ.டையோனிஸியஸைப்பற்றி நல்ல விதமாகச் சொல்லியனுப்பியிருக்கிற நண்பர்களை நான் அலட்சியப் படுத்திவிட்டது போலாகுமல்லவா? எனவே இந்தக் காரணங்களை முன்னிட்டுக்கொண்டு நான் புறப்பட்டேன். எனக்கென்னவோ நான் செல்வதனால் நன்மை உண்டாகுமா என்ற சந்தேகம் இருந்து கொண்டு தான் இருந்தது. என்றாலும் புறப்பட்டேன். இப்படிப் புறப்பட்டது மூன்றாவது முறை.1 ஆனால் கடவுள் புண்ணியத்தால் நான் சேமமாகத் திரும்பிவிட்டேன். கடவுளுக்கு அடுத்த படியாக இ.டையோனிஸியஸுக்கு நான் வந்தனஞ் செலுத்த வேண்டும். ஏனென்றால், என்னைக் கொலை செய்துவிட வேண்டுமென்று பலர் விரும்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இ.டையோனிஸிய அவர்களைத் தடுத்துவிட்டான். இதன் மூலம் என் நிலைமைக்கு ஓரளவு மதிப்புக் கொடுத்தான். நான் அங்கு வந்ததும், இ.டையோனிஸிய, உண்மையி லேயே தத்துவ சாதிரப் பயிற்சி பெற வேண்டுமென்பதில் உற்சாகமுடைய வனாயிருக்கிறானா அல்லது அவனைப் பற்றி நான் ஆத்தென்ஸி லிருக்கையில் எனக்கு வந்த செய்திகளெல்லாம் பொய்யா என்பதைக் கண்டறிவது என் முதல்வேலை என்று கருதினேன். இப்படிக் கண்டறி வதற்கான வழி, கண்ணியமான வழி, சர்வாதிகாரிகளைக் கண்டறிவதற் கேற்ற வழி, அதிலும் தத்துவ சாதிர சம்பந்தமான சில சாதாரண விஷயங்களைத் தங்கள் மூளையில் சேர்த்து வைத்துக்கொண்டிருக்கும் சர்வாதிகாரிகளைக் கண்டறிவதற்கேற்ற வழி ஒன்றுண்டு. (இந்த மாதிரி சாதாரண விஷயங்களை இ.டையோனிஸிய சேர்த்து வைத்திருக் கிறானென் பதை நான் ஸைரக்யூஸுக்கு வந்தவுடனேயே கண்டுகொண்டு விட்டேன்.) அந்த வழி என்ன? தத்துவ ஞானியாக விரும்புகிற ஒருவனுக்கு, அந்தத் தத்துவ ஞான சம்பந்தமான எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொல்ல வேண்டும்; அதாவது, தத்துவ ஞானத்தின் தன்மையென்ன, அந்த ஞானத்தையடைய என்னென்ன இடையூறுகளைக் கடக்கவேண்டும், எவ்வளவு உழைப்பை மேற்கொள்ள வேண்டும், இப்படிப் பலவற்றையும் எடுத்துச் சொல்ல வேண்டும். இப்படிச் சொல்லப் பட்ட அனைத்தையும் கேட்கும் ஒருவன், அவன் மெய்யறிவு பெற வேண்டுமென்பதில் உண்மையிலேயே ஆசை யுடையவனாயிருக்கும் பட்சத்தில், அதேசமயம், அந்த மெய்யறிவைப் பெற வேண்டு மென்பதில் முனையக்கூடிய தெய்வத்தன்மை அவனிடம் இருக்கும் பட்சத்தில், ஆச்சரியமான ஒரு பிரயாணத்தைப் பற்றி, அதாவது ஞான மார்க்கத்தைப் பற்றி நாம் எடுத்துச் சொன்னதாக நினைப் பான்; தன் முழுச்சக்தியுடன் அந்தப் பிரயாணத்தை உடனே மேற் கொள்ள வேண்டுமென்றும், அதாவது ஞானமார்க்கத்தில் செல்ல வேண்டு மென்றும், அந்தப் பிரயாணத்தை மேற்கொண்டாலன்றி, தான் வாழ்ந்தும் பயனில்லையென்றும் கருதுவான். இதற்காக, அந்தப் பிரயாணத்தை மேற்கொள்ளும்படி சொன்ன ஆசிரியனை, பிரயாணத்தின் முடிவு வரையில் தனக்கு வழிகாட்டிக் கொண் டிருக்குமாறு அடிக்கடி தூண்டிக் கொண்டிருப்பதிலோ அல்லது ஒரு வழிகாட்டியில்லாமல் தானே சுயமாகப் பிரயாணத்தை மேற்கொள்ளக்கூடிய அளவுக்குப் போதுமான சக்திபெறும் வரையிலோ, தன் முழு முயற்சிகளையும் செலவிடுவான். அவன் எந்தவிதமான தொழிலைச் செய்து கொண்டிருந்தபோதிலும் அவனுடைய மனம், மேற்படி முயற்சிகளில்தான் ஒன்றி நிற்கும். மற்றும் அவன், மெய்யறிவு பெறவேண்டுமென்பதில் உறுதியான பற்றுடைய வனாயிருப்பான். ஒரு விஷயத்தைக் கிரகிப்பதிலோ, கிரகித்ததைப் பற்றிச் சிந்திப்பதிலோ, சிந்தித்துத் தெளிவு காண்பதிலோ திறம் படைத்தவனா யிருப்பான். இவைகளுக்கு மாறுபட்ட வாழ்க்கையின் மீது வெறுப்புக் கொள்வான். வெயிலில் இருக்கிற ஒருவனுடைய உடம்பு எப்படிக் கருமைஅடைந்து விடுகிறதோ அதுபோல், சிலர், தத்துவ ஞானத்தைப்பற்றி மேலெழுந்த வாரியான சில அபிப்பிராயங்களைக் கொண்டவர்களாயிருக் கிறார்கள். இவர்களை உண்மையான தத்துவ ஞானிகள் என்று சொல்ல முடியாது. இப்படிப்பட்டவர்கள், தத்துவ ஞானத்தின் பரப்பையும், அதற்காக மேற்கொள்ளவேண்டிய உழைப்பையும், தங்கள் உழைப்பு பயன் தரவேண்டுமானால், தங்களுடைய அன்றாட வாழ்க்கையை எப்படி ஒழுங்காக அமைத்துக் கொள்ள வேண்டு மென்பதையும் எண்ணிப் பார்த்து, மெய்யறிவு பெறுவ தென்பது தங்கள் சக்திக்கு மீறியதென்று முடிவு கட்டிவிடுகிறார்கள். தத்துவ ஞானத்தின் தொண்டர்களாக இருப்பதற்குப் போது மான தகுதிகள் அவர்களிடம் இல்லாமலிருப்பதுதான் இதற்குக் காரணம். இன்னும் சிலர், தத்துவ ஞானத்தைப் பற்றித் தாங்கள் போதிய அளவு தெரிந்து கொண்டுவிட்டதாகவும், இனி, அதற்காக எவ்வித முயற்சிகளும் எடுத்துக்கொள்ளத்தேவையில்லையென்றும் கருதுகிறார்கள். மேலே சொன்ன கடினமான வழியைப் பின்பற்றி, தத்துவ ஞானத்தைப் பெற வேண்டுமென்பதில் உண்மையிலேயே சிரத்தை கொள்ளாதவர்கள் யாரென்பதை நாம் தெரிந்துகொண்டு விடலாம். அப்படி சிரத்தை கொள்ளாதவர்கள், தங்களுக்குத் தத்துவ ஞானத்தைப் போதிக்க முன்வந்த ஆசிரியர்களை நொந்து கொள்ளாமல் தங்களையே நொந்து கொள்ள வேண்டும். நான் ஸைரக்யூஸுக்கு வந்ததும், இ.டையோனிஸியஸிடம் மேற்சொன்ன மாதிரி பேசினேன். இதனால் எடுத்த எடுப்பிலேயே, தத்துவ ஞான சம்பந்தமாக என்னுடைய கோட்பாடுக ளனைத்தை யும் நான் அவனுக்குச் சொல்லவில்லை. அவனும் அவைகளைப் பற்றி என்னைக் கேட்கவில்லை. தத்துவ ஞான சம்பந்தப்பட்ட முக்கியமான விஷயங் களை, பிறருடன் யதேச்சையாகச் செய்த சம்பாஷணைகளிலிருந்து, தான் தெரிந்து கொண்டு விட்டதாகக் கூறினான். பிறகு, தான் கேள்விப்பட்டதை ஒரு நூலாக எழுதி வெளியிட்டானென்றும், அந்த நூலிலுள்ள கருத்துக்கள் என்னிட மிருந்து பெற்றவையென்று காட்டாமல், தன் சுய சிந்தனையி லிருந்து எழுந்தவையென்று குறிப்பிட்டிருந்தா னென்றும் கேள்விப்படு கிறேன். இஃது உண்மையோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் இதே விஷயத்தைப் பற்றி, அதாவது தத்துவ ஞானத்தைப் பற்றி வேறு சிலர் எழுதியிருக்கிறார்களென்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்கே, தாங்கள் என்ன எழுதியிருக்கிறோ மென்பது தெரியாது. ஒன்றுமட்டும் நான் நிச்சயமாகக் கூறமுடியும். எந்தப் பிரச்னைகளின் மீது இப்பொழுது நான் கவனஞ் செலுத்தி வருகிறேனோ அவைகளைப் பற்றி யாராவது இதுவரை எழுதியிருந் தாலுஞ்சரி, இனி எழுதப்போவதா யிருந்தாலுஞ் சரி, அவர்கள் இந்தப் பிரச்னைகளைப் பற்றித் தாங்கள் நன்கு தெரிந்துகொண் டிருப்பதாகப் பாசாங்கு செய்கிறவர்களே யாவர். அவர்கள், என்னிடமிருந்து கற்றுக் கொண்டதாகச் சொல்லிக்கொண்டாலுஞ் சரி, தாங்களே சுயமாகக் கண்டுபிடித்து வெளியிடுவதாகச் சொல்லிக் கொண்டாலுஞ்சரி, அவர்களுக்கு ஒன்றும் தெரியாதென்பது என் அபிப்பிராயம். இந்தப் பிரச்னைகளைப் பற்றி விளக்க நான் இதுவரை ஒரு நூலும் எழுதவில்லை; இனியும் எழுதப்போவ தில்லை. மற்றச் சாதிரங்களைப் போல் தத்துவ சாதிரத்தை எழுத்தின் மூலமாக, அதாவது நூல் வாயிலாகப் பிறருக்குப் புகட்ட முடியாது. ஆசிரியனும் மாணாக்கனும் நீண்டகாலம் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலம் இதைப் பயிலவேண்டும். அப்படிப் பயின்று வரும்போது, திடீரென்று ஒரு சமயம், நெருப்பைப் பற்ற வைத்தால் வெளிச்சம் உண்டாவதுபோல், ஆன்மாவில் வெளிச்சம் உண்டாகும்; அதாவது ஆன்ம ஒளி உண்டாகும். அந்த ஒளி, தனக்குத்தானே தூண்டிவிட்டுக் கொண்டு வளர்ச்சி பெறுந் தன்மையது. இன்னொன்றையும் நான் தெரிந்து கொண்டிருக்கிறேன். இந்தத் தத்துவ சாதிர சம்பந்தமான பிரச்னைகள், நூல்கள் மூலமாகவோ, சொற்பொழிவுகள் வாயிலாகவோ வெளிப்பட வேண்டுமானால், அவை என்னிடமிருந்து வெளியாவது நல்லது. அவை தவறாக எடுத்து விளக்கப்பட்டால் அதனால் நான் பாதிக்கப் படுகிறேன். நூல்கள் மூலமாகவோ, சொற்பொழிவுகள் வாயி லாகவோ இவற்றை - இந்தத் தத்துவ சாதிர சம்பந்தமான பிரச்னைகளை - வெளியுலகத்திற்குப் பரப்பவேண்டுமென்று நான் எண்ணி அதைச் செயல்படுத்துவேனாகில், அதைக் காட்டிலும் சிறப்பான சேவை மானிட சமுதாயத்திற்கு நான் என்ன செய்ய முடியும்? ஆனால் இவைகளைப் பற்றி பகிரங்கமாக ஆராய்ச்சி நடத்துவது, ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலோருக்குப் பயன்படாது. அந்த ஒரு சிலரும், சுருக்கமாக விளக்கம் கொடுத்துவிட்டால், தங்களுக்குத் தாங்களே இவைகளைப் பற்றிய உண்மையைக் கண்டு பிடித்துக் கொள்வார்கள். அரைகுறையாகத் தெரிந்து கொண்டுள்ள பெரும்பாலாரோ, ஒன்று, தத்துவ சாதிரத்தைப் பற்றி இகழ்ச்சி யாகப் பேசுவர்; அல்லது தங்களுக்கு அந்தச் சாதிரத்தைப் பற்றி எல்லாம் தெரிந்துவிட்டதாக அசட்டு மகிழ்ச்சி கொள்வர். இவை களைப் பற்றி இன்னும் சிறிது விளக்கமாகச் சொல்கிறேன். அப்பொழுதுதான் நான் சொல்வது விளங்கும். எந்த ஒரு பொருளைப் பற்றி அறியவேண்டுமானாலும், மூன்று துணைக்கருவிகளை உபயோகிக்கவேண்டியது அவசியமாகிறது. அதாவது மூன்று கருவிகளைச் செயல்படுத்தினால் தான் ஒரு பொருளை அறியமுடியும். முதலாவது அந்தப் பொருளின் பெயர்; இரண்டாவது அந்தப் பொருளுக்கு இலக்கணம்; மூன்றாவது அந்தப் பொருளின் உருவம். நான்காவதாகச் சொல்லவேண்டு மானால் அந்தப் பொருளைப் பற்றிய அறிவைச் சொல்ல வேண்டும். அந்த அறிவு, மேற்சொன்ன மூன்று துணைக்கருவிகளினின்று தனிப் பட்டது. ஐந்தாவதாகச் சொல்லவேண்டியது நிஜமாகவே உள்ள அந்தப் பொருள்; அதாவது அறிவுக்கு இலக்காயுள்ள பொருள்; எந்தப் பொருளைப் பற்றி நாம் அறிகிறோமோ அந்தப் பொருள். உதாரணமாக, ஒரு வட்டத்தை எடுத்துக்கொள்வோம். இந்த வட்டத்திற்குப் பொருந்துகிற உதாரணம் எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தும். ஒன்றைப் பார்த்து வட்டம் என்று சொல்லுகிறோம். அந்தச் சொல்தான், அந்த வட்டத்தின் பெயர், அடுத்தாற்போல் அந்தப் பொருளுக்கு இலக்கணம். இந்த இலக்கணம், சில பெயர்ச்சொற்களையும் சில வினைச் சொற்களையும் கொண்டது. அதாவது ஒரு வட்டமென்றால், மையத்திலிருந்து எந்தக் கோணத் திற்கும் ஒரே தொலைவுடைய ஒரு வடிவம் என்று சில சொற்களைக் கொண்டு விளக்கம் தந்து, அதற்கு வட்டம் என்றும், ஒரே சுற்றளவுள்ளது என்றும், உருண்டையா யிருப்பது என்றும், இப்படிச் சில பெயர்களைச் சொல்கிறோம். இந்தப் பெயருக்கு அடுத்தது, அந்த வட்டத்தின் வடிவம். இதை நாம் வேண்டும் போது, கோடிட்டுக் காட்டுகிறோம்; வேண்டாத பொழுது அழித்துப் போடுகிறோம். இதையே மண்டலம் என்று சொல்லி நம்மிஷ்டத் திற்குத் திருப்புகிறோம்; அல்லது அழித்துப் போடுகிறோம். இவ்வள வெல்லாம் விளக்கம் கொடுத்தாலும், அந்த வட்டமென்னவோ, இந்த விளக்கங்களிலிருந்து தனிப்பட்டதாகவே இருக்கிறது. ஏனென் றால், அது - வட்டம் - இந்த விளக்கங்களி லிருந்து வேறுபட்டது. நான்காவதாக, வட்டத்தைப் பற்றிய அறிவு, வட்டத்தின் காரணம், வட்டத்தைப் பற்றிச் சரியான அபிப்பிராயம் எல்லாம் ஏற்படு கின்றன. இந்த மூன்றும், அதாவது அறிவு, காரணம், அபிப்பிராயம் ஆகிய மூன்றும் ஆத்மாவுக்குள் இருக்கின்றன; ஆனால் சொற் களாகவோ, வடிவங்களாகவோ இல்லை. எனவே இவை - அறிவு, காரணம், அபிப்பிராயம் ஆகிய இவை - வட்டத்தி னின்றும், மேலே சொன்ன வட்டத்தின் பெயர், விளக்கம், வடிவம் ஆகிய மூன்றி னின்றும் தனிப்பட்டிருக்கின்றன. இவற்றுள், பொருளைப் பற்றிய அறிவு அல்லது காரணம், ஐந்தாவதாகச் சொல்லப்பட்ட பொருளுக்கு, உறவு முறையி லாகட்டும், ஒருமைப்பாட்டிலாகட்டும் வெகு சமீபத்தில் இருக்கிறது. மற்றவை யாவும் எட்டினாற்போலவே இருக்கின்றன. இதே முறையில்தான், நேர்க்கோடுகள், வட்டங்கள், வர்ணங்கள், நல்லவை, அழகானவை, நியாயமானவை, பொதுவாக உடலைப் பொறுத்த எல்லாம் இருக்கின்றன. தவிர, செயற்கையானவை, இயற்கையானவை, நெருப்பு, நீர் முதலிய பஞ்சபூதங்கள், உயிருள்ள பொருள்கள், பலவித ஆத்மாக்கள், குணங்கள், சம்பந்தாசம்பந்தங்கள் ஆகிய எல்லாவற்றிற்கும் இந்த நியதி பொருந்துவதாக இருக்கிறது. இவை ஒவ்வொன்றைப்பற்றிய முதல் நான்கை அறிந்து கொள்ளாமல், ஐந்தாவதாகச் சொல்லப்பட்டதை, அதாவது நிஜமாயுள்ள பொருளின் நிஜத்தன்மையைப் பூரணமாக அறிய முடியாது. மற்றும், முதலிற் சொல்லப்பட்ட முதல் நான்கும், ஒரு பொருளின் தன்மையைப் பற்றிய உத்தேசமான கருத்தைக் கொள்வதற்கு எந்த அளவில் உதவியாயிருக்கின்றனவோ அந்த அளவில்தான் அந்தப் பொருளின் உண்மையான தன்மையைப் பற்றிய கருத்தைக் கொள் வதற்கும் துணையாயிருக்கின்றன. இதற்குக் காரணம் பாஷையின் குறைபாடுதான்; அதாவது சரியான சொற்கள் அகப்படாமைதான். ஆகையால் எந்த ஒரு ஞானியும், தன்னிடம் பிறக்கும் உள்ளொளியைச் சொற்களால் எழுதிக் காட்டத் துணிய மாட்டான். ஏனென்றால், இந்த மாதிரியான விஷயங்களைப் பற்றி எழுதுகிறபோது, ஒரு சொல்லைப் பிரயோகித்தால் அதைப் பிறகு மாற்றக்கூடாது. ஆனால் ஒரு நூலில் உசிதம்போல் சொற்களை மாற்றவேண்டியிருக்கும்; ஆதலால் எழுதத் துணியமாட்டான். பொதுவாகவே, ஒருபொருளைப் பற்றி நாம் கொண்டுள்ள கருத்துக்களில் முரண்பாடான அமிசங்கள் இருக்கின்றனவே தவிர, அந்தப் பொருளில் இல்லை. தவிர, அந்த முரண்பாடான அமிசங் களின் பெயர்களும் நிலையான பெயர்கள் அல்ல; மாறுதலடையக் கூடியவை. ஒரு வட்டத்தை நேர்க்கோடு என்றோ, ஒரு நேர்க் கோட்டை வட்ட மென்றோ நாம் மாற்றிச் சொன்னால் என்ன? எல்லாம் வெறும் பெயர்கள் தானே? தவிர, இந்தப் பொருளுக்கு நாம் வகுக்கிற இலக்கணமும், பெயர்ச்சொற்களாலும் வினைச்சொற்க ளாலும் ஆனவைதானே? இவை இப்படித்தான் இருக்கவேண்டு மென்று ஒரு வரையறை இல்லையே? அறிவோடு சேர்ந்த நான்கு கருவிகளும் ஏன் தெளிவாக இல்லை என்பதற்கு இன்னும் ஆயிரம் காரணங்கள் கூறலாம். ஆத்மாவானது, எது உண்மையோ அதையே காண விழைகிறது. ஆனால் இந்த நான்கு கருவிகளும், ஆத்மா எதைக் காண விழைய வில்லையோ அதையே அதற்குக் காட்டுகின்றன. இவை-இந்த நான்கும்- புலனறிவையே ஆதார மாகக் கொண்டிருப்பதால் எதைக் காட்டவேண்டுமோ, எதைச் சொல்ல வேண்டுமோ அதற்கு மாறாகக் காட்டுவதும் சொல்வதும் இவைகளுக்குச் சுலபமாக இருக்கின்றது. இதனால் இவை எல்லாரையுமே ஒரு குழப்பத்திற் காளாக்குகின்றன. குறைகள் நிறைந்த பயிற்சியை நாம் பெற்றிருப்ப தனால், உண்மையை நேரில் காண்பது நமக்குப் பழக்க மில்லாமற் போகிறது. அதற்குப்பதில், நம்முடைய புலன்களுக்குத் தெரிகிற அந்த உண்மையின் பிரதிபிம்பத்தைப் பார்த்துத் திருப்தியடை கிறோம். இதைப்பற்றி வினாவிடை ரூபமாகப் பேசித் தீர்க்கிறோம். ஆயினும் இது விஷயத்தில் நம்மையே நாம் பரிகசித்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்க, அப்படிப் பரிகசித்துக்கொள்ளா மலும் இருக்கிறோம். இதற்குக் காரணம், மேலே சொல்லப்பெற்ற அறிவோடு சேர்ந்த நான்கு கருவிகளைக் கையாள்வதிலும், அவற்றை அடிக்கடி பரிசீலனை செய்து பார்ப்பதிலும் நாம் சமர்த்த களாயிருப்பதுதான். ஐந்தாவதாயுள்ள அந்த மெய்ப்பொருள் இருக்கிறதே அதைப்பற்றி எழும் கேள்விகளுக்குச் சம்பாஷணை வாயிலாகவோ நூல் மூலமாகவோ பதில் சொல்ல முனைந்தாலுஞ் சரி, அல்லது தகுந்த விளக்கங்கள் கொடுக்க வேண்டியிருந்தாலுஞ் சரி, எவனொருவன் அதே சம்பாஷணைவாயிலாக அல்லது நூல் மூலமாக எதிர்வாதஞ் செய்வதில் வல்லவனாயிருக் கிறானோ அவன் வெற்றியடைந்து விடுகிறான். அதே சம்பாஷணை வாயிலாக அல்லது நூல் மூலமாகப் பதில் சொல்லவோ, விளக்கங் கொடுக்கவோ முனைகிறவன், விஷயஞானம் இல்லாதவன் என்று அவனைக் கேட்கிறவர்கள் அல்லது அவன் நூலைப் படிக்கிறவர்கள் கருதிவிடுகிறார்கள். இவர்கள், பதில் சொல்கிறவனுடைய அல்லது விளக்கங் கொடுக்கிறவனுடைய மனத்தை, எதிர்வாதஞ் செய்கிறவன் மறுப்பதில்லையென்பதையும், அடிப்படையிலேயே குறைபாடுடைய நான்கு கருவிகளையே (அறிவோடு சேர்ந்த நான்கு கருவிகளையே) மறுக்கிறான் என்பதையும் தெரிந்து கொள்வதில்லை. இந்த நான்கு கருவிகளும், தனித்தனியாகவோ, ஒன்று சேர்த்தோ எத்தனை தரம் பரிசோதனைக்குட்படுமானாலும், இயற்கையாகவே குண நிறைவுடைய ஒருவனிடத்தில், இயற்கையாகவே நல்லவைகள் நிறைந்த ஒரு பொருளைப் பற்றிய அறிவை உண்டுபண்ணுவ தென்பது கடினம். உலகத்தில் பெரும்பாலோர் ஆன்ம பரிபக்குவம் பெறாதவர் களாகவே இருக்கிறார்கள். அவர்கள் பெற்றுள்ள அறிவும், அவர் களுடைய சீல சுபாவங்களும் ஓரளவுக்குக் கறைப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்டவர் களை, எத்தகைய மேதைகளாலும், உண்மையைக் காணும்படி செய்ய முடியாது. இன்னும் ஒருவன், எவ்வளவுதான் கல்வியறிவும் ஞாபக சக்தியும் படைத்தவனாயிருந்த போதிலும், அவனுக்கு உண்மையைக் காணவேண்டுமென்ற ஆவல், அவன் சுபாவத்திலேயே இல்லாமற் போனால், அவனால் உண்மையைக் காணமுடியாது. ஏனென்றால், உண்மையைப் பற்றிய அறிவு, அதனைக் காண வேண்டுமென்ற ஆவலில்லாத ஒரு சுபாவத்தில் வேர் கொள்ளாது. உண்மைக்கும், உண்மையைக் காணவேண்டு மென்ற ஆவல் நிறைந்த உள்ளத்திற்கும் நெருங்கிய உறவு இருக்க வேண்டும். மற்றும், உண்மையைப் பற்றிய சரியான கருத்துக்களை யும் தவறான கருத்துக்களையும் சேர்த்தே ஆராய்ச்சி செய்ய வேண்டும். இங்ஙனம் ஒரு பொருளின் பெயர், அதற்குக் கொடுக்கப் படும் விளக்கம், மற்றபடி புலன்களால் தெரிந்து கொள்ளப்படு கிறவை, மற்ற உணர்ச்சிகள் ஆகிய பலவற்றையும் ஒன்று சேர்த்துப் பரிசோதனை செய்ய வேண்டும்; ஒன்றோ டொன்றை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். இவை சம்பந்தமாக, உண்மையைக் காணவேண்டு மென்ற ஆவலுடையவனும், அதாவது மாணாக்கனும், அந்த ஆவலை நிறைவேற்றி வைக்கக்கூடிய ஆற்றல் படைத்தவனும், அதாவது ஆசிரியனும், எவ்வித காழ்ப்போ, பொறாமையோ இல்லாமல், வினா விடை ரூபமாகத் தர்க்கவாதஞ் செய்யவேண்டும். சுருக்கமாக, கடினமான உழைப்பை மேற்கொள்ள வேண்டும். இதற்குப் பிறகுதான், அறிவானது முதிர்ந்த நிலையையடையும். அந்த நிலையில், ஒரு பொருளின் உண்மை தெரியும். இதனாலேயே இந்த மாதிரியான உயர்ந்த விஷயங்களைப் பற்றித் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறவர்கள், அந்த விஷயங் களை எழுத்திலே கொண்டு வரத் துணியமாட்டார்கள். அப்படி எழுதி, தங்கள் சிந்தனைகளை, மற்றவர்களுடைய பொறாமைக்கும் விமரிசனத் திற்கும் உட்படுத்த மாட்டார்கள். அதாவது, சட்ட நிர்மாணத்தைப் பற்றியோ, வேறு எந்த விஷயத்தைப் பற்றியோ எழுதப்பட்டிருக்கும் ஒரு நூலை நாம் பார்த்த மாத்திரத்தில் அந்த நூலை எழுதிய ஆசிரியன், உண்மை யிலேயே திறமையுடையவ னாயிருக்கும் பட்சத்தில், அந்த நூலில் அவனுடைய ஆழ்ந்த சிந்தனைகள் இடம் பெறவில்லையென்று நாம் நிச்சயமாக முடிவுசெய்து கொள்ளலாம். அந்தச் சிந்தனைகள் அவனிடமேதான் இருந்துகொண்டிருக்கும். அப்படி அவன், தன் முடிவான சிந்தனைகளை எழுத்திலே கொண்டுவந்து காட்டி யிருப்பானாகில் அவனை ஒரு பைத்தியக்காரனென்றுதான் சொல்ல வேண்டும். இ. டையோனிஸியஸும் சரி, வேறு எவனும் சரி, அவன் என்னதான் திறமையுள்ளவனாயிருந்தாலும், எல்லாவற்றிற்கும் மூலாதாரமாயுள்ள பொருளைப்பற்றி-மெய்ப்பொருளைப்பற்றி-மூலப்பிரகிருதியைப்பற்றி-ஏதேனும் எழுதியிருப்பானாகில், அவன் விஷயம் தெரியாதவன் என்பது என் அபிப்பிராயம். விஷயம் தெரிந்தவனாயிருப்பின், இந்த மாதிரி தகாத முறையில் வெளிப் படுத்தத் துணியமாட்டான். ஒருகால், அந்த மூலப் பொருளின் உண்மை மற்றவர்கள் நினைவில் இருக்கவேண்டு மென்பதற்காக நான் எழுதியிருக்கிறேனென்று அவன் சொன்னால், அது சரியில்லை. அது-அந்த மூலப் பொருளின் உண்மை-ஒருவனுடைய ஆத்மா வோடு ஐக்கியப் பட்டுவிடுமானால், அவன் அதை மறப்பதற்கு ஏதுவே இராது. எனவே அவன்-இ. டையோனிஸிய-இதைப்பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறானென்றால், இதன் மூலம் புகழ்பெற வேண்டுமென்ப தற்குத் தான்; அதாவது தானே சுயமாக இதை-இந்த மூலப்பொருளின் உண்மையை-கண்டுபிடித்து விட்டதாகக்காட்டி, கேவலமான ஒரு புகழைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டுமென்ப தற்குத்தான். அவன் உண்மையில் என்னுடைய தத்துவங்களை அறிந்துகொண்டு விட்டதாக வைத்துக்கொண்டாலும், இதுதான்-புகழ்பெறவேண்டு மென்பதுதான் - உண்மையான நோக்கமா யிருக்கவேண்டும். என்னுடைய தத்துவங்களைப்பற்றி அவனிடம் நான் ஒரே ஒரு தடவைதான் பேசினேன். இந்த ஒரு சம்பாஷணையிலிருந்து அவன் என்னுடைய தத்துவங்களையெல்லாம் எப்படி அறிந்திருக்க முடியும்? கடவுளுக்குத்தான் வெளிச்சம்! இந்தத் தத்துவங்கள் ஏற்கனவே நாம் கண்டுபிடித்தது தானே, அல்லது மற்றவர்கள் நமக்குத் தெரிவித்திருப்பது தானே என்று கருதி, என்னுடன் (இந்தத் தத்துவங்களைப் பற்றி) ஒரு தடவை சம்பாஷித்ததேபோதும், நமக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்பது அவன் நினைப்பா? அல்லது நான் சொன்னதெல்லாம் பிரயோஜன மில்லை என்று அவன் கருதிவிட்டானா? ஞானத்திலும் தர்மத்திலும் சதா நாட்டமுடைய வகையில் தன் அன்றாட வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாது, இந்தத் தத்துவோபதேசங்கள், தன் சக்திக்கு மீறியவை என்பதை அவன் நன்கு உணர்ந்துகொண்டுவிட்டதுதான் உண்மையான காரணமாயிருக்க வேண்டுமில்லையா? ஒருகால், என்னுடைய தத்துவோபதேசங்கள் எவ்விதப் பிரயோஜனமுமில்லாதவை என்று அவன் எண்ணினால், அப்படி எண்ணுவது சரியில்லையென்று சொல்வதற்குப் பலர் இருக்கிறார்களே? இந்தத் தத்துவோபதேசங்களின் பிரயோஜனத்தைப்பற்றிச் சரியான அபிப்பிராயம் சொல்வதற்கு, இ. டையோனிஸியஸைக் காட்டிலும் இவர்கள் தகுதி படைத்தவர்க ளல்லவா? இந்தத் தத்துவங்களைத் தானே கண்டுபிடித்ததாகவோ அல்லது என்னிடமிருந்து பூரணமாகத் தெரிந்து கொண்டுவிட்ட தாகவோ எண்ணிக்கொண்டு, அந்த எண்ணத்தின் பேரில் அவன், மற்றவர்களுடைய மனத்தைப் பக்குவம் செய்து கொடுக்கக்கூடிய பக்குவம் தனக்கு ஏற்பட்டு விட்டதாகக் கருதியிருப்பானாகில், அதைக் காட்டிலும், இந்தத் தத்துவங் களின் ஆசிரியனுக்கு அவனால் வேறு அபசாரம் செய்திருக்கமுடியாது. ஆனால் இந்த அபசாரத்தை அவன் செய்தேவிட்டான். எப்படியென்பதைச் சொல்லுகிறேன். முதலில்1 இ. டையோனிஸிய, (நாடு கடத்தப்பட்டு) பெலொப் பொனேசியாவில் இருந்த டியோனின் (ஸைரக்யூஸிலுள்ள) சொத்து பற்றுக்கள் அவனுக்குச் சுவாதீன முடையனவாகவே இருந்துவரவும், அந்தச் சொத்துபற்றுக்களி லிருந்து கிடைக்கும் வருமானத்தை அவன் பெற்றுவரவும் அனுமதியளித்தான். இப்படி அனுமதியளித்த சிறிது காலங்கழித்து,2 டியோனுக்கு (அவன் சொத்துபற்றுக்களினின்று கிடைக்கும் வருமானத்தில்) எதையும் அனுப்பவேண்டாமென்று (ஸைரக்யூஸிலுள்ள) அவனுடைய (டியோ னுடைய) காரியதர்களுக்கு உத்தரவிட்டு விட்டான். ஏற்கனவே எனக்கு எழுதியிருந்த கடிதத்தை (அதாவது நான் ஸைரக்யூஸுக்கு வந்தால், தனக்கும் டியோனுக்கும் ஏற்பட்டிருந்த வேற்றுமைகளெல் லாம் என் விருப்பப்படியே ஒழுங்குபட்டுவிடும் என்று எழுதியிருந்த கடிதத்தை) அடியோடு மறந்துவிட்டதுபோல் இப்படி அவன் உத்தரவிட்டான். இதற்கு அவன் என்ன சமாதானம் கூறினான் தெரியுமா? அந்தச் சொத்துபற்றுக்கள் டியோனுடையவை அல்ல, அவனுடைய மகனுக்குரியவை, அந்த மகன் என்னுடைய சொந்த மருமகன், அந்த மருமகனுக்கு நான்தான் சட்டப் பூர்வமான ரட்சகன் (கார்டியன்) என்று இப்படியெல்லாம் சமாதானம் கூறினான். விஷயங்கள் வெகுசீக்கிரத்தில் இந்த அளவுக்கு முற்றி விட்டன. அவ னுடைய இந்த ஒரு செயலே (இப்படி அவன் உத்தர விட்டதே) தத்துவ ஞானம் தனக்குக் கைவரவேண்டுமென்று அவன் கொண்டிருந்த ஆசையின் தன்மையை எனக்கு விளக்கிக் காட்டியது. இதனால் என்னையும்மீறி எனக்குக் கோபம் வந்தது. இப்படி எனக்குக் கோபம் வந்தது நியாயமே. ஆனால் நான் யார்மீதும்-இ. டையோனிஸிய மீதோ, என் மீதோ, மூன்றாவது முறை ஸைரக்யூஸுக்கு என்னை வரும் படி அழைத்து எனக்குத் தர்ம சங்கடமான நிலைமை ஏற்படு வதற்குக் காரண புருஷர்களாயிருந்த நண்பர்கள் மீதோ-கோபங் கொள்ளக்கூடா தென்று தீர்மானித்தேன். கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது. (ஆத்தென்ஸுக்கு) கப்பல்கள் புறப்பட்டுக்கொண்டிருந்தன. எனவே, டியோன், இப்படிக் கேவலமாக நடத்தப்பட்டபிறகு, நான், இங்கே (ஸைரக்யூஸில்) இருக்கமுடியாதென்று இ. டையோனிஸியஸிடம் கூறினேன். ஆனால் அவன் என்னைச் சாந்தப்படுத்தப்பார்த்தான். என்னைப் போகவேண்டாமென்று கேட்டுக் கொண்டான். அவன்மீது கொண்ட அதிருப்தியுடன் நான் உடனடியாக ஆத்தென்ஸுக்குச் செல்வது தனக்கு நன்மையாயிராதென்று அவன் கருதினான். நானோ புறப்பட்டு விடுவதென்று உறுதிகொண்டேன். என் உறுதியை மாற்றமுடியாதென்று தெரிந்ததும், என் பயணத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் தானே செய்வதாக என்னிடம் கூறினான். எனக்குக் கோபம் வந்துவிட்டது. ஏதாவது ஒரு வியாபாரக் கப்பலைப் பிடித்து அதில் ஏறிச்செல்வதென்றும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை, மேற்கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி விட்டாலுஞ்சரி, அதனையும் அனுபவிப்பதென்றும் தீர்மானித்தேன். நான் யாருக்கும் எவ்வித குற்றமும் செய்யவில்லை; நான் தான் குற்றத்திற்குட் படுத்தப்பட்டிருக்கிறேன். நான் யாருக்கும் எவ்வித தீங்கும் இழைக்கவில்லை; எனக்குத்தான் தீங்கிழைக்கப்பட்டிருக் கிறது. (எனவே நான் ஏன் அஞ்சவேண்டும்?) என்னுடைய உறுதியைக் கண்டு அவன்-இ. டையோனிஸிய - கப்பல்கள் துறைமுகத்தைவிட்டுச் செல்ல முடியாது என்ற காலம் வரையில், என்னை அங்கேயே (ஸைரக்யூஸிலேயே) இருத்திக் கொள் வதற்கு ஒரு தந்திரம் செய்தான். நான் போகத் தீர்மானித்து விட்டதாகச் சொன்ன மறுநாள், அவன் என்னிடம் வந்து பின்வரு மாறு நயமாகப் பேசினான்:- இதோ பார் பிளேட்டோ, டியோன் விஷயமாகவும் அவனுடைய பண விஷயமாகவும் நாம் இப்படிச் சதா சண்டைபோட்டுக் கொண்டிருப்பதை நிறுத்திக்கொண்டு விடுவோம். உன் பொருட்டு, டியோனுக்காக இதைச் செய்கிறேன். அதாவது அவன், தன் பணத்தை எடுத்துக் கொண்டு பெலொப் பொனேசியாவில் போய் வசிக்கட்டும். அவன், நாடு கடத்தப்பட் டிருப்பதாக நாம் நினைத்துக் கொள்ள வேண்டாம். அவனுக்கும் எனக்கும் நீ உள்பட அவனுடைய நண்பர்களுக்கும் ஒருவித சமரஸம் ஏற்பட்டவுடன், அவன் திரும்ப ஸைரக்யூஸிக்கு வர அனுமதிக்கப்படுவான். ஆனால் ஒரு நிபந்தனை. எனக்கு விரோதமாக அவன் சூழ்ச்சி செய்யக்கூடாது. இந்த நிபந்தனைக்கு அவன் கட்டுப் பட்டு நடப்பான் என்பதற்கு நீயும், உன் நண்பர்களும், இங்கு சிஸிலி யிலுள்ள அவன் நண்பர்களும் எனக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இதே பிரகாரம் அவனும், இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக உங்களுக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அவன் இங்கிருந்து எடுத்துப் போகிற பணத்தை ஆத்தென்ஸிலோ பெலொப்பொனேசியாவிலோ, நீ தெரிந்தெடுக்கிற நபர்களிடம் ஜமால் செய்துவைக்கட்டும்; அதிலிருந்து கிடைக்கிற வருமானத்தைமட்டும் அவன் அனுபவித்துக்கொண்டிருக் கட்டும். ஆனால் அந்தப் பணத்தை அவன் உன் அனுமதியின்றி ஒன்றும் செய்யக்கூடாது. ஏனென்றால் அது பெருந்தொகை. அந்தத் தொகையை அவன் இஷ்டத்திற்குச் செலவழிக்கலாமென்று ஏற்பட்டுவிட்டால், அதைக் கொண்டு அவன் எனக்கு விரோதமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வான். இதனால்தான் உன் அனுமதி யின்றி அவன் இந்தப் பணத்தை ஒன்றும் செய்யக்கூடாதென்று சொல்கிறேன். உன்னிடத்திலும் உன் நண்பர்களிடத்திலும் எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. இவைதாம் என் நிபந்தனைகள். இவைகளைப்பற்றி நன்றாக யோசித்துப்பார். இவை உனக்கு திருப்தியாயிருக்குமானால், பாக்கியிருக்கிற இந்த வருஷம் பூராவும் நீ இங்கேயே தங்கியிருக்கலாம். வசந்தகாலம்1 வந்ததும் (டியோ னுடைய) இந்தத் தொகையை எடுத்துக்கொண்டு நீ புறப்பட்டுப் போகலாம். டியோனுக்காக நீ இதைச் செய்வாயானால் அவன் உனக்குப் பெரிதும் கடமைப்பட்டவனாயிருப்பான். இப்படி அவன் சொன்னதைக் கேட்டு எனக்கு ஆத்திரமாக வந்தது. ஆயினும் நான் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. காட்டிக் கொள்ளாமல், அவன் சொன்னதைப்பற்றி ஆலோசித்து, மறுநாள் என் முடிவைக் கூறுவதாகத் தெரிவித்தேன். இதற்கு அவன் ஒப்புக் கொண்டான். நானும் என் இருப்பிடத்திற்கு வந்து மனவேதனை யுடன் இதைப் பற்றிப் பலவாறாக யோசித்தேன். நான் யோசித்த தெல்லாம் இதுதான். டையோனிஸியஸுக்கென்னவோ, தான் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவேண்டு மென்ற உத்தேசம் இராது. ஆனாலும் இப்பொழுது நான் புறப் பட்டுப் போய்விட்டால், அவன், தனக்கும் எனக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைப் பற்றி டியோனுக்கு எழுதுவான்; டியோ னுடைய நண்பர்களைக்கொண்டும் எழுதச் செய்வான். ஒரு சமரஸ ஏற்பாட்டுக்குவர, தான் இசைந்ததாகவும், நான்தான் அதற்கு மறுத்துவிட்ட தாகவும், டியோனின் விகாரங்களை ஒழுங்குபடுத்தி விடுவதில் எனக்கு அக்கரையில்லை யென்கிற மாதிரி எடுத்துக்காட் டியும் பலவாறாகத் திரித்து எழுதச் செய்வான். தவிர, இன்னொன்றைப் பற்றியும் நான் யோசிக்கவேண்டி யிருந்தது. அதாவது, என்னைப் போகவிடாமல் அவன் தடுத்துவிட லாம். இதற்காக, கப்பல் அதிகாரிகளுக்கு, என்னை ஏற்றிச்செல்ல வேண்டாமென்று திட்ட வட்டமான உத்தரவு போட்டுத்தடுக்காமல், நான் இங்கேயே தங்கியிருக்க வேண்டுமென்பது தன் விருப்பம் என்று பொதுவாகத் தெரியும்படி செய்தாலே போதுமல்லவா? எந்த ஒரு கப்பல் அதிகாரியாவது என்னை ஏற்றிச்செல்லத் துணிவானா? அல்லது இ. டையோனிஸிய அரண்மனையிலிருந்துதான் நான் வெளிவர முடியுமா? தவிர, நான், அரண்மனையைச் சுற்றியுள்ள தோட்டத்தின் ஒரு பகுதியில் வசித்துக் கொண்டிருக்கிறேன். அந்தத் தோட்டக் காவல்காரன், இ. டையோனிஸியஸின் திட்டவட்டமான உத்தரவில்லாமல் என்னை வெளியில் செல்லவிடுவானா? சரி; இந்த வருஷத்தில் பாக்கியுள்ள நாட்கள்வரை நான் இங்கேயே தங்கியிருந்தால், டியோனுக்கு, என்னுடைய நிலைமையைப் பற்றியும், அவனுக்காக நான் இங்கு என்ன செய்து கொண்டிருக் கிறேன் என்பதைப் பற்றியும் கடிதம் எழுதலாம். இ. டையோனி ஸிய, தான் கொடுத்த வாக்குறுதிகளில் ஒரு சிலவற்றையாவது நிறைவேற்றிக் கொடுப் பானாகில், நான் இங்கே தங்கியது வீண் போகாது. டியோனுடைய சொத்து பற்றுக்கள், சரியானபடி மதிப்பிட்டுப்பார்த்தால் நூறு டாலெண்ட்டுகள்1 பெறுமானவையா யிருக்கும். இப்பொழுது எதிரிட்டு நிற்கும் இடையூறுகள் கடக்க முடியாதவையாகிவிட்டாலும், நான் இங்கே இன்னும் ஒரு வருஷகாலமாவது இருப்பது நல்லது. இ. டையோனிஸியஸின் திட்டங்கள்தாம் யாவை என்பது போகப்போகத் தெரியுமல்லவா? இந்த முடிவுக்கு நான் வந்ததும், என் முடிவை, மறுநாள், இ. டையோனிஸியஸுக்குத் தெரிவித்துப் பின்வருமாறு கூறினேன்:- நான் இங்கே தங்குவதாகச் செய்த முடிவு டியோனைக் கட்டுப் படுத்தாது. இப்பொழுது நாம் செய்து கொண்ட ஏற்பாட்டை விளக்கி, அவனுக்கு, நாமிருவரும் சேர்ந்து ஒரு கடிதம் எழுதுவோம். அதில், நம்முடைய இந்த ஏற்பாடு அவனுக்குத் திருப்தியளிக்கிறதா, திருப்தியளிக்கவில்லை யென்றால், ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படவேண்டுமா, அப்படி மாற்றங்கள் செய்யப்படவேண்டு மானால் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும், இவை களைப் பற்றித் தெரிவிக்குமாறு அவனைக் கேட்போம். அது வரை யில் நீ வேறு எவ்வித நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. நான் சொன்ன வார்த்தைகள் இவ்வளவுதான். இந்த ஏற் பாட்டுக்கு நாங்கள் வந்த சில நாட்களுக்குப் பிறகு, நான் எந்தக் கப்பலில் புறப்படுவதாக இருந்தேனோ அந்தக் கப்பலும் வேறு சில கப்பல்களும் புறப்பட்டுப் போய்விட்டன. நான் இனி வெளியேற முடியாதென்று தெரிந்ததும், இ. டையோனிஸிய, என்னிடம் வந்து, டியோனுடைய சொத்துக் களில் ஒரு பாதி அவனுடையதாக இருக்கட்டும்; மற்றொரு பாதி, அவன் மகனுடையதாக இருக்கட்டும்; இரண்டையும் சேர்த்து மொத்தமாக நான் விற்றுவிடுகிறேன். விற்றுமுதலான தொகையில் சரிபாதியை உன்னிடம் கொடுக்கிறேன்; மறுபாதியை, டியோனுடைய மகனுக்காக நான் வைத்துக்கொள் கிறேன். இப்படிச் செய்வதுதான் நியாயம் என்று கூறினான். இதைக் கேட்டு நான் திடுக்கிட்டுப் போனேன். இனியும் இதைக் கண்டித்துச் சொல்வது முட்டாள்தனம் என்று நினைத்தேன். ஆயினும் டியோனிட மிருந்து கடிதம் வரட்டும். உன்னுடைய இந்தப் புதிய ஏற்பாட்டைப் பற்றி அவனுக்குத் தெரிவிப்போம் என்று அவனுக்கு-இ. டையோனிஸியஸுக்கு-சொன்னேன். ஆனால் அவன் இதைப் பொருட்படுத்தாமல், டியோனுடைய சொத்துபற்றுக்கள் பூராவை யும், மிகவும் பொறுப்பற்ற விதமாக, தனக்கிஷ்டமான முறையில், தனக்கிஷ்டமான பேருக்கு விற்றுவிட்டான். இதைப்பற்றி என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. இதற்குப் பிறகு நான், டியோன் விஷயமாக, அவனிடம் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. மேற்கொண்டு டியோன் விவகாரத்தில் முயற்சி செய்வது வீண் என்று கருதினேன். தத்துவ சாதிரத்திற்கும் என் நண்பர்களுக்கும் ஏதேனும் சேவை செய்யவேண்டுமென்று நான் செய்த முயற்சி இந்த நிலைக்கு என்னைக் கொண்டுவந்துவிட்டது. இதற்குப் பிறகு நான் ஒரு கூட்டிலகப் பட்டுக்கொண்டு வெளியே பறந்து போவதற்கு எப்பொழுது சந்தர்ப்பம் கிடைக்குமோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பறவைபோல் இ. டையோனிஸியஸுடன் வசித்துக் கொண்டிருந்தேன். அவனோ-அந்த இ. டையோனிஸியஸோ-என்னைப் பயமுறுத்தி வைத்துக் கொண்டிருப்ப தற்கும், டியோ னுடைய சொத்துபற்றுக்களைத் தானே சுவாதீனப் படுத்தி வைத்துக் கொள்வதற்கும் சூழ்ச்சிகள் பல செய்து கொண்டிருந்தான். ஆனால் நாங்கள் இருவரும் சிநேகமாகவே இருக்கிறோமென்று சிஸிலி பூராவுக்கும் காட்டிக் கொண்டோம். இஃது இப்படி இருக்கட்டும். இ. டையோனிஸிய, தன்னுடைய கூலிப்படையைச் சேர்ந்த வயதானவர்களின் சம்பளத்தைக் குறைக்க முயன்றான். இஃது அவனுடைய தகப்பன் பின்பற்றிவந்த முறைக்கு நேர்விரோதம். இது தெரிந்து, அந்தக் கூலிப்படையினர் ஆத்திரமடைந்தார்கள். அவன் வசித்த கோட்டைக்கு முன்பாக ஒன்று திரண்டுவந்து, சம்பளக் குறைவை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று ஆர்ப்பரித்தார்கள். அவர்கள் கோட்டைக்குள் புகுந்துவிடப் போகிறார்களே என்பதற் காக, அவன், கோட்டைக் கதவுகளை மூடும்படி செய்தான். ஆனால் அவர்களோ, கோட்டையின் மதிற்சுவர்களைச் சுற்றிக்கொண்டு, காட்டுமிராண்டித் தனமான முறையில் போர் முழக்கம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதைக் கேட்டு அவன் பயந்துவிட்டான். அவர்கள் கோரின யாவற்றையும் அதற்கு மேலும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டான். இந்தக் கலகத்திற்குக் காரணம், ஹெராகிளிடீ என்பவனுடைய தூண்டுதல்தான் என்று ஒரு வதந்தி பரவியது. இதை இ. டையோனிஸிய கேள்வியுற்றான். ஹெராகிளிடீஸை சிறைப் படுத்த முயன்றான். ஆனால் ஹெராகிளிடீஸோ எங்கோபோய் ஒளிந்து கொண்டுவிட்டான். மேற் கொண்டு என்ன செய்வதென்று இ. டையோனிஸியஸுக்குத் தெரிய வில்லை. தியோடோட்டீ என்பவனுக்குச் சொல்லியனுப்பினான். அவன் வந்ததும், இருவரும் அரண்மனைத் தோட்டத்தில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந் தார்கள். அப்பொழுது நான் அங்கு உலாவிக் கொண்டிருந்தேன். அவர்கள் என்ன பேசிக் கொண்டிருந்தார்களென்பது பூராவும் எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் பேசிக்கொண்டே என் அருகில் வரும்போது, தியோடோட்டீ, இ. டையோனிஸியஸிடம் என்ன சொல்லிக் கொண்டிருந்தான் என்பதுமட்டும் என் காதில் நன்றாக விழுந்தது. இதற்குப் பிறகு தியோடோட்டீ என்னிடம் வந்து பின்வருமாறு கூறினான்:- இதோ பார் பிளேட்டோ, இ. டையோனிஸியஸிடமிருந்து நான் ஒரு வாக்குறுதிபெற முயன்று கொண்டிருக்கிறேன். அஃது என்ன வென்றால், ஹெராகிளிடீஸை வரவழைத்து, அவன்மீது கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டு களைச் சொல்வோம். அந்தக் குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு, ஒருகால் அவன் சிஸிலியை விட்டு வெளியேற வேண்டியிருக்கு மானால், அவன் தன் மனைவியுடனும் குழந்தையுடனும் பெலொப் பொனேசியாவுக்குச் சென்று வசிப்பதற்கும், அங்கு அவன் இ.டையோனிஸியஸுக்கு எவ்வித தீங்கும் செய்யா திருக்கிற வரையில், (சிஸிலியிலுள்ள) அவனுடைய சொத்துபற்றுக்களி லிருந்து கிடைக்கிற வருமானத்தை அனுபவித்துக் கொண்டிருப் பதற்கும் அனுமதியளிக்க வேண்டுமென்றும், அப்படியே செய்வ தாக உறுமொழி கொடுக்குமாறும் இ. டையோனிஸியஸை நான் கேட்டுக் கொண்டிருக் கிறேன். ஹெராகிளிடீஸுக்கும் உடனே வருமாறு சொல்லி ஏற்கனவே ஓர் ஆளை அனுப்பியிருக்கிறேன். இப்பொழுது மறுபடியும் ஓர் ஆளை அனுப்புகிறேன். எப்படியும் அவன் வந்துவிடுவான். அவன் வருவதற்கு முந்தி, இ. டையோனி ஸியஸே அவனை நேரில் எங்காவது சந்திக்கும்படி நேரிட்டால், அவனை-ஹெராகிளிடீஸை-வேறொன்றும் செய்யாமல் அவன்மீது தனக்கேற்பட்டுள்ள மனத்தாங்கல் தீரும் வரையில், நாட்டுக்கு வெளியே சென்று வசித்துக்கொண்டிருக்க அவனுக்கு அனுமதி யளிப்பதாக உறுதிமொழி கொடுக்கவேண்டும் என்று அவனை-இ. டையேனிஸியஸை-கேட்டுக் கொள்ளப்போகிறேன். இப்படி அவன் - தியோட்டோட்டீ - என்னிடம் சொல்லிக்கொண் டிருக்கையில், இ. டையோனிஸிய எங்கள் பக்கமாக வந்தான். அவனைப்பார்த்து, தியோடோட்டீ நான் சொல்லும் இந்த ஏற்பாட்டுக்கு நீ ஒப்புக் கொள் கிறாயல்லவா என்று கேட்டான். இதற்கு அவன்-இ. டையோனிஸிய- அப்படியே ஒப்புக் கொள் கிறேன். உன் வீட்டிலேயே அவனைக் காணும்படி நேரிட்டால்கூட அவனுக்கு எவ்வித தீங்கும் செய்யமாட்டேன் என்று பதில் சொன்னான். இது நடந்த மறுநாள் மாலை, யூரிபிய என்பவனும் தியோடோட்டீஸும், மனச்சங்கடத்துடன் அவசரம் அவசரமாக என்னிடம் வந்தார்கள். வந்ததும் தியோடோட்டீ, பார் பிளேட்டோ, ஹெராகிளீடீ விஷயமாக நேற்று இ. டையோனி ஸிய வாக்குறுதி கொடுத்தபோது, நீ, சாட்சியாயிருந்தா யல்லவா? என்று கேட்டான். ஆம், நிச்சயமாக இருந்தேன் என்று சொன் னேன். இப்பொழுது என்ன நடக்கிறது தெரியுமா? ஹெரா கிளிடீஸை, கண்டுபிடித்துச் சிறைப்படுத்த இ. டையோனிஸியஸின் படையாட்கள் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருக் கிறார்கள். அவன் - ஹெராகிளிடீ - இங்குதான் சமீபத்தில் எங்காவது இருக்க வேண்டும். நீ உடனே எங்களுடன் இ. டையோனிஸியஸிடம் வா; அவனிடம் சென்று விஷயங்களைச் சொல்வோம் என்றான் தியோடோட்டீ. உடனே நாங்கள் இ. டையோனிஸியஸிடம் சென்றோம். அவனைப் பார்த்ததும், என்னோடு வந்த இருவரும்-யூரிபியஸும் தியோடோட்டீஸும் - மௌனமாக நின்று அழுது கொண்டிருந்தார்கள். நான் அவனிடம் ஹெராகிளிடீ விஷயமாக நீ நேற்று கொடுத்த வாக்குறுதிக்கு விரோதமாக நடந்துகொள்கிறா ரென்று இவர்கள் சொல்கிறார்கள். அவன்-ஹெராகிளிடீ-இங்கு எங்காவது ஒளிந்து கொண்டிருக்கிறானென்று நீ கேள்விப்பட்டாய் போலும் என்று சொன்னேன். இதைக் கேட்டதும் அவனுக்குக் கோபம் வந்துவிட்டது; முகம் சிவந்துபோனான். தியோடோட் டீஸோ, அவன்முன்னால் முழந்தாளிட்டுப்பணிந்து, அவன் கை களைப் பிடித்துக்கொண்டு, கண்களில் நீர்மல்க, ஹெராகிளிடீஸை ஒன்றுஞ்செய்ய வேண்டாமென்று கேட்டுக்கொண்டான். நான் உடனே, டியோடோட்டீஸை உற்சாகப் படுத்துகின்ற முறையில் வா, தியோடோட்டீ; இ. டையோனிஸிய அப்படியெல்லாம் ஒன்றுஞ் செய்துவிடமாட்டான்; கொடுத்தவாக்கை மீறமாட்டான் என்றேன். இதைக் கேட்டதும், இ. டையோனிஸிய, தான் உண்மை யிலேயே ஒரு சர்வாதிகாரி என்று நிரூபித்துக் காட்டுவதுபோல் என்னை முறைத்துப்பார்த்து நான் எந்தவிதமான வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்றான். இதைக் கேட்ட நான் அட கடவுளே, நீ வாக்குறுதி கொடுத்தாயே; இப்பொழுது தியோடோட்டீ என்ன கேட்கிறானோ அதை நீ கொடுப்பதாக அல்லவோ வாக்குறுதி கொடுத்தாய்? என்று சொல்லிக் கொண்டு திரும்பி வந்துவிட்டேன். இதற்குப் பிறகு ஹெராகிளிடீஸை, எப்படியாவது அகப்படுத்திவிட வேண்டுமென்று இ. டையோனிஸிய வெகுவாக முயன்றான். இப்படி அவன் முயன்று கொண்டிருப்பதை தியோடோட்டீ அவ்வப்பொழுது அவனுக்கு - ஹெராகிளிடீஸுக்கு - தெரிவித்து, உடனே எங்காவது ஓடிப்போய் விடுமாறு எச்சரிக்கை கொடுத்து வந்தான். அவனும்-ஹெராகிளிடீஸும்-தன்னைத் தேடிக்கொண் டிருந்த இ. டையோனிஸியஸின் ஆட்களுக்கு அகப்படாமல், கார்த்தஜீனியப் பிரதேசத்திற்குத் தப்பிச் சென்றுவிட்டான். இதற்குப் பிறகு, இ. டையோனிஸியஸுக்கு, என்னைப் பகிரங்க மாக விரோதித்துக் கொண்டுவிட்டால், டியோனுடைய பணத்தை அவனுக்கு அனுப்பவிடாமல், தானே வைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்குமென்று கருதினான். அப்படிக் கருதுவதற் கான காரணமும் அவனுக்கு இப்பொழுது ஏற்பட்டுவிட்டதல்லவா? எனவே அவன், நான் வசித்துவந்த அரண்மனைத் தோட்டத்தில், பெண்டுகள், பத்துநாள் பூசை செய்யப்போகிறார்களென்றும், அது வரையில் நான் கோட்டைக்கு வெளியே சென்று ஆர்க்கிடேம வீட்டில் தங்கியிருக்கலாமென்றும் கூறினான். (நானும் அப்படியே சென்று அங்குத் தங்கியிருந்தேன்.) அங்குத் தங்கியிருக்கையில், தியோடோட்டீ, தன் இருப்பிடத்திற்கு என்னை வரவழைத்து, இ. டையோனிஸியமீது, குறைகள் பல சொல்லிக் கொண்டான்; கோபமான வார்த்தைகளைக் கொட்டினான். நான் தியோடோட்டீ வீட்டுக்குச் சென்றதை இ. டையோனி ஸிய கேள்விப்பட்டான். என்னுடன் சண்டை யடித்துக்கொள்ள இப்பொழுது அவனுக்கு வேறொரு நல்ல காரணமும் அகப்பட்டது. உடனே ஓர் ஆளை என்னிடம் அனுப்பி, தியோடோட்டீ, என்னை வரவழைத்துப்பேசியது உண்மையா என்று கேட்டுவரச் செய்தான். உண்மைதான் என்றேன் நான். அப்படி யானால் நீங்கள் இ. டையோனிஸியஸைக் காட்டிலும் டியோனையும் அவனுடைய நண்பர்களையுமே அதிகமாக நேசிக்கிறீர் களென்பது தெரிகிறது; இது தவறு என்று உங்களுக்குத் தெரிவிக்கும்படி உத்தரவிடப் பட்டிருக்கிறேன் என்று அந்த ஆள் சொல்லிவிட்டுப் போனான். இதற்குப் பிறகு இ. டையோனிஸிய, என்னை அரண் மனைக்குத் திரும்பி வருமாறு அழைக்கவில்லை. நான் ஹெராகிளி டீஸுக்கும் தியோடோட்டீஸுக்கும் நண்பன், அதனால் தனக்கு விரோதியென்று கருதிவிட்டான். தவிர, டியோனுக்குப் பணம் கிடைக்காமற் போனதைப் பற்றி நான் அதிருப்தியடைந் திருக்கிறேன் என்பதையும் அவன் தெரிந்து கொண்டான். இதற்குப் பிறகு, கோட்டைக்கு வெளியே படைவீரர்கள் தங்கியிருந்த இடத்தில் அவர்கள் மத்தியில் வசித்துக்கொண்டிருந்தேன். அங்கிருந்த வேலை யாட்களில் சிலர், என்னைப்போல் ஆத்தென் ராஜ்யத்துப் பிரஜைகள். அவர்களும் வேறு சிலரும் என்னிடம் வந்து, படை வீரர்களிடையே எனக்குக் கெட்டபெயர் ஏற்பட்டிருக்கிறதென்றும், அவர்களிற் சிலர் தங்களுக்கு அதிகாரம் இருக்கும்பட்சத்தில், என்னைக் கொன்றுவிடுவதாகப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்க ளென்றும் தெரிவித்தார்கள். ஆகவே நான், தப்பிச் செல்வதற்கு வழிதேட வேண்டிய வனானேன். என்னுடைய நிலைமையை விளக்கி, ஆர்க்கைட்டஸுக்கும் டாரெண்ட்டத்திலுள்ள மற்ற நண்பர்கள் சிலருக்கும் கடிதம் எழுதினேன். அவர்களும் உடனே, லாமிக்க (Lamiscus) என்பவனுடன் ஒரு தூது கோஷ்டியை இ.டையோனி ஸியஸிடம் அனுப்பினார்கள். அந்த லாமிக்கஸும், இ.டையோனி ஸியஸிடம் வந்து, ஆத்தென்ஸுக்குத் திரும்பிச் செல்லவேண்டு மென்ற என் விருப்பத்தைத் தெரிவித்து, என்னைச் செல்ல வொட்டாமல் தடுக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டான். இ. டையோனிஸிய, இதற்கு ஒப்புக்கொண்டு, என்னை விடுதலை செய்வித்தான்; வழிச் செலவுக்குக் கொஞ்சம் பணமும் கொடுத்தான். அப்பொழுது நான், டியோனுக்குரிய பணத்தைப் பற்றி ஏதும் கேட்கவில்லை. அவனும் என்னிடம் ஏதும் கொடுக்கவில்லை. இதற்குப் பிறகு நான் பெலொப்பொனேசியாவுக்கு வந்தேன். சிறிதுகாலத்தில், ஒலிம்பிய விளையாட்டு விழா தொடங்கியது. அங்கு நான் சென்றிருக்கையில், டியோனை யதேச்சையாகச் சந்திக்க நேர்ந்தது. அவனிடம் (ஸைரக்யூஸில்) நடந்தவற்றையெல்லாம் விவர மாக எடுத்துச் சொன்னேன். இதைக் கேட்டு அவன் ஆத்திரமடைந்து, என்னைச் சரிவர நடத்தாதற்காகவும், தன்னை அநியாயமாக நாடுகடத்தி வைத்திருப் பதற்காகவும், நானும், என் உறவினர்களும், நண்பர்களும் சேர்ந்து இ. டையோனிஸியஸைப் பழிவாங்கத் தயாராகவேண்டுமென்று கூறினான். இதற்கு நான், என் நண்பர் களை வேண்டுமானால் இந்த முயற்சியில் இறங்கச்சொல்; என்னைப் பொறுத்தமட்டில், நான் இறங்கத் தயாராக யில்லை. நீயும் உன் நண்பர்களும் சேர்ந்துதான், இ. டையோனிஸியஸின் விருந்தாளியா யிருக்குமாறும், அவன் நடத்திவந்த பூசை முதலியவற்றில் பங்கு கொள்ளுமாறும் என்னை வற்புறுத்தினீர்கள். அங்கு உன்னோடு நான் சேர்ந்துகொண்டு, அவனுக்கும் அவன் ஆட்சி பீடத்திற்கும் விரோதமாகச் சூழ்ச்சி செய்கிறேனென்று எழுந்த வதந்திகளை அவன் ஒருகால் நம்பியிருக்கக்கூடும். ஆனாலும் அவன் என்னை மரியாதையுடனேயே நடத்தி வந்தான்; என்னை மரணத்திற்குட் படுத்தவில்லை. தவிர, (அவன்மீது) யுத்தந்தொடுக்க முயலுகின்ற யாருக்கும் உதவி செய்யக் கூடிய வயதில் நான் இல்லை. (அதாவது எனக்கு வயதாகிவிட்டது.) ஆனால் நீங்கள் இருவரும்-இ.டையோனி ஸியஸும் டியோனும் நண்பர் களாகவும் பரபர நலனை நாடுகின்றவர்களாகவும் இருக்கவிரும்பினால், அதற்கு உதவி செய்ய நான் தயாராயிருக்கிறேன். அவனுக்கு-இ. டையோனிஸியஸுக்கு-தீங்கிழைப்பதாயிருந்தால் அதற்கு, வேறு யாருடைய உதவியை யாவது நீ நாடலாம் என்று பதில் கூறினேன். (இதற்குப் பிறகு இ. டையோனிஸியஸுக்கும் டியோனுக்கும், சமரஸமாகப் போய்விடும்படி கூறினேன்.) ஆனால் என் பேச்சை அவர்கள் இருவரும் கேட்கவில்லை; என்னுடைய சமரஸ முயற்சி களை அலட்சியப்படுத்தவும் செய்தார்கள். எனவே, அர்களுக்கேற் பட்ட துரதிருஷ்டங்களுக்கெல்லாம் அவர்கள்தான் பொறுப்பு. இ. டையோனிஸிய மட்டும், டியோனுக்குரிய பணத்தை அவனிடம் சேர்ப்பித்துவிட்டிருந்தாலுஞ்சரி, அல்லது அவனுடன் ஒருவித சமரஸ ஏற்பாட்டுக்கு வந்திருந்தாலுஞ்சரி, இந்தத் துரதிருஷ்டங் களெல்லாம் நேர்ந்திருக்கமாட்டா. இ. டையோனிஸிய மட்டும், ஒரு சமரஸ ஏற்பாட்டுக்கு இணங்கியிருப்பானாகில், டியோனை, எவ்வித யுத்த நடவடிக்கையும் எடுத்துக்கொள்ள வேண்டாமென்று தடுக்க நான் முயன்றிருப்பேன்; ஏன், அவனைச் சுலபமாகத் தடுத்தும் இருப்பேன். ஆனால் இ. டையோனிஸியஸும் டியோனும் ஒரு சமரஸ ஏற்பாட்டுக்கு வராமல் ஒருவரையொருவர் தாக்கினர். என்ன விளைந்தது? நாசந்தான். டியோன், தன் சொந்த நகர ராஜ்யத்தில் தானும் தன் நண்பர் களும் சேர்ந்து அதிகாரஞ் செலுத்த வேண்டுமென்று விரும்பியது நியாயந்தான். நான் அப்படித்தான் விரும்புவேன்; நான் மட்டு மென்ன, நியாய புத்தியுள்ள எவரும் அப்படித்தான் விரும்பி யிருப் பார்கள். மகத்தான சேவைகள் செய்திருப்பதன் விளைவாகவே ஒருவ னுக்கு அதிகமான கௌரவங் களும் மேலான பதவிகளும் கிட்ட வேண்டுமென்ற உண்மையை அவன்-டியோன்-தெரிந்து கொண் டிருந்தான். சிலர், கையில் காசில்லாமல் வெறுங்கிளர்ச்சிமட்டும் செய் வார்கள்; தங்களையும், தங்கள் ஆசாபாசங்களையும் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளமாட்டார்கள்; சூழ்ச்சிகள் பல செய்து, பணம் படைத்தவர்களை, அவர்கள் ராஜ்யத்தின் சத்துருக்கள் என்று சொல்லிக் கொலை செய்துவிட்டு, அவர்களிடமிருக்கும் பணத்தைப் பறித்து, தங்களுடைய சூழ்ச்சி களுக்குத் துணையாயிருந்தவர் களுக்கும் நண்பர்களுக்கும் நீங்கள் ஏழைகள் என்று இனி குறை பட்டுக் கொண்டிருக்க வேண்டாம் என்று சொல்லிப் பகிர்ந்து கொடுப்பார்கள். இதே முறையைத் திரும்பத் திரும்பக் கையாண்டு தங்களையும், தங்கள் உடன் கூட்டத்தினரையும், தங்களுடைய ராஜ்யத்தையும், பண பலமுடையவர்களாக்கிக் கொண்டு விடு வார்கள். இப்படிப் பட்டவர்கள், அதிகமான கௌரவங்களுக்கும் மேலான பதவிகளுக்கும் ஆசைப்படுவதுபோல் அவன்-டியோன்-ஆசைப் படுகிறவனல்லன். அந்த மாதிரியான போலி கௌரவத்தை அவன் ஏற்றுக்கொள்ளவும் மாட்டான். தவிர, பல சிறிய ராஜ்யங்களை, தன் ஆதிக்கத்திற்குட்படுத்திக் கொண்டிருக்கிற ஒரு பெரிய ராஜ்யத்தின் தலைவனாயிருப்பதையும், அந்தச் சிறிய ராஜ்யங்களின் பணத்தை அநியாயமாகப் பறித்து, தன் பெரிய ராஜ்யத்தின் நன்மைக்காகச் செலவழிப்பதையும் அவன் விரும்ப மாட்டான். இந்த மாதிரியான ஓர் அதிகார பதவியை அடைய வேண்டுமென்பதற்காக, டியோனாகட்டும் வேறு யாராகட்டும் விரும்பி முயலமாட்டார்கள். அப்படி முயன்று அடைந்தால், தாங்கள்மட்டுமல்ல, தங்கள் குடும்பத்தினரும் தீராத ஒரு நோயை வலிய வரவழைத்துக் கொண்டது போலாகுமென்பதை அவர்கள் அறிவார்கள். கொலைகளோ, ரத்தக்களரிகளோ இல்லாமல், நியாய மானதும் மேலான தன்மைகளுடையதுமான ஓர் அரசியலமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்பதே டியோனின் நோக்கமாயிருந்தது. பிறருக்குத் தீங்கு செய்வதைவிட, பிறர் செய்யும் தீங்கை அனுப விப்பதே நல்லதென்ற கொள்கையுடையவன் டியோன். இந்தக் கொள்கையுடையவனாயிருந் தாலும் அவன், தன்னைப் பாது காத்துக்கொள்வதில் ஜாக்கிரதையாகவே இருந்தான். ஒரு நல்ல அரசியலமைப்பை ஏற்படுத்துவதில் வெற்றி காணும் நிலையில்தான் அவனுக்கு வீழ்ச்சி ஏற்பட்டது. இப்படி அவனுக்கு வீழ்ச்சி ஏற்பட்ட தில் ஆச்சரியமேதுமில்லை. ஏனென்றால், ஒரு கப்பல் மாலுமிக்கு, புயற்காற்று வருகிறதென்று தெரிந்திருக்கலாம். ஆனால் திடீரென்று அது தன்னை வந்து தாக்குமென்று அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான். அதனால் அவன் கப்பல் உடைந்துபோகலாம். அது போல், கூர்மையான அறிவு படைத்த ஒரு நல்ல மனிதன், துஷ்டர் களினால் ஏமாற்றப்படாமலிருக்க வழி தெரிந்துகொண்டிருக்க லாம். ஆனால் அவர்களால் தாக்கப்படுவோம் என்று எதிர்பார்த்து, தன்னைத் தயார் படுத்திக் கொள்ளாமலிருக்கலாம். இந்த மாதிரி தன்னைத் தயார்படுத்திக் கொள்ளாத ஒரு பிழையைத்தான் டியோன் செய்தான். அவன், கீழ் மக்களாலேயே வீழ்த்தப்பட்டான். இதை அவன் நன்கு தெரிந்து கொண்டுமிருந்தான். ஆனால் அவர்களுடைய அறியாமையின் ஆழத்தையும், அதனால் ஏற்படக்கூடிய விபரீத விளைவுகளையும் அவன் தெரிந்து கொள்ளவில்லை. தெரிந்து கொள்ளாததனால்தான் அவன் வீழ்ந்துபட்டான். அவனுக்காக சிஸிலி முழுவதும் துக்கத்தில் ஆழ்ந்தது. தற்போதைய நிலையில் உங்களுக்கு நான் கூறக்கூடிய யோசனை களை மேலே சொல்லிவிட்டேன். இப்பொழுதைக்கு இது போதும். சிஸிலிக்கு நான் இரண்டாவது தடவை1 வரும்படி நேரிட்ட தற்குக் காரணங்களைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டு மென்பது என் நோக்கம். அதையும் மேலே சொல்லிவிட்டேன். நான் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளுக்கெல்லாம் தகுந்த கார ணங்கள் இருக்கின்றனவென்று நீங்கள் தெரிந்துகொண்டால், அதுவே இந்தக் கடிதத்தை எழுதியதன் நோக்கம் நிறைவேறியதாகும். எட்டாவது கடிதம் ஏழாவது கடிதம் எழுதியனுப்பிய சுமார் பதின்மூன்று மாதங் களுக்குப் பிறகு, ஏறக்குறைய கி.மு. 352ஆம் வருஷ இறுதியில், பிளேட்டோ, இந்தக் கடிதத்தை எழுதினானென்று கருதப்படுகிறது. டியோனின் நண்பர்களுக்கும் அவனைப் பின்பற்றி வந்தவர்களுக்கும் பிளேட்டோ எழுதுவது; நலம். நீங்கள் உண்மையான நன்மையை அடைய வேண்டுமானால் என்னென்ன கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டுமென்பதைப் பற்றி (இந்தக் கடிதத்தில்) என் சக்திக்கியன்ற மட்டில் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். இப்படி நான் சொல்வதைக் கேட்பதனால் உங்களுக்கு மட்டுமல்ல, ஸைரக்யூஸிலுள்ள ஒவ்வொருவருக்கும், உங்களுடைய எதிரிகளுக்குக்கூட, சுருக்கமாக, புண்ணியமானவை எவை எவை என்று கருதப்படுகின்றனவோ அவைகளைப் புறக் கணிக்காமல் இருக்கின்ற அனைவருக்கும் நன்மை உண்டாகு மென்று நம்புகிறேன். அப்படிப் புறக்கணித்துவிட்டுச் செய்யப் படுகின்ற செயல்கள் யாவும் குற்றங் களேயாம். அவைகளுக்குப் பிராயச்சித்தம் கிடையாது. சர்வாதிகார ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு, அதாவது டியோனைக் கொலை செய்த கால்லிப்ப என்பவன் ஸைரக்யூஸி லிருந்து பிரஷ்டம் செய்யப்பட்ட பிறகு, சிஸிலிபூராவிலும், கட்சிச் சண்டைகளைத் தவிர வேறொன்றும் காணப்படவில்லை. ஒரு கட்சியினர் சர்வாதிகார ஆட்சியைப் பழையபடி கொண்டுவந்து நிலை நிறுத்தப் பார்க்கின்றனர். இன்னொரு கட்சியினர், அந்த ஆட்சி அடியோடு இல்லாதொழிவதற்காகப் பாடுபடுகின்றனர். இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில், பெரும்பாலோர் உங்களுக்கு எந்த விதமான ஆலோசனை சொல்வார்கள், தெரியுமா? உங்களுடைய கட்சிக்கு நன்மை தரக்கூடிய நடவடிக்கைகளையும், உங்களுடைய எதிர்க் கட்சிக்குத் தீமைதரக் கூடிய நடவடிக்கைகளையும் முறையே எடுத்துக்கொள்ளுங்கள் என்று தான் கூறுவார்கள். ஆனால், ஒருவன் தனக்கு அதிகமான தீங்குகளை வரவழைத்துக் கொள்ளா மல், தன் எதிரிகளுக்கு அதிகமான தீங்குகளை உண்டுபண்ணுவ தென்பது மிகவும் கடினம். (அதாவது பிறருக்குத் தீங்கு செய்ய முற்படுகிறவன், தனக்குத் தானே தீங்கு செய்து கொண்டவனா கிறான்.) இதற்கு உதாரணமாக, சிஸிலியிலேயே என்ன நடக்கிற தென்று பாருங்கள். ஒரு கட்சியினர் மற்றொரு கட்சியினரைத் தாக்குவதும், தாக்கப்பட்ட கட்சியினர், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயல்வதும், இப்படி நடைபெறுகிற தல்லவா? இந்த முறையையே கடைப்பிடித்துப் பாருங்கள் என்று உங்களுக்கு ஆலோசனை சொல்வது சுலபந்தான். நீங்களும் இந்த முறையைக் கடைப்பிடிப்பதில் வல்லவர்களாயிருக்கிறீர்கள். இந்த முறையை நீங்கள் பிறர்க்கும் சொல்லிக் கொடுக்கக்கூடும். ஆனால் எல்லா ருக்கும் நன்மை தரக்கூடிய அல்லது இரண்டு கட்சியினருக்கும் குறைவான தீங்கைத் தரக்கூடிய ஒரு திட்டத்தை கண்டுபிடிப்பது கடினம்; கண்டுபிடித்தாலும் அதை நடைமுறையில் கொண்டு வருவது அதனிலும் கடினம். ஆயினும் அப்படிப்பட்ட ஒரு திட்டத்தைக் கண்டுபிடிக்கக் கூடிய ஆற்றலை அருளவேண்டு மென்று அனைவரும் ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தனை செய்வோமாக! கார்த்தேஜீக்கும் உங்களுக்கும் போர் ஏற்பட்ட காலத்தி லிருந்து நீங்கள் உங்களுடைய அரசியல் விரோதிகள் உள்பட அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் தொடர்ந்தாற் போல ஆளப்பட்டு வருகிறீர்கள்.1 உங்களுடைய முன்னோர்கள், மிகவும் நெருக்கடியான நிலைமையில் இருந்த பொழுது, அதாவது சிஸிலியில் கிரேக்கர்கள் குடியேறி வசித்துவந்த பகுதிகளனைத்தும் கார்த்தஜீனியர்களின் ஆளுகைக்குட்பட்டு விடக்கூடிய ஆபத்து ஏற்பட விருந்தபொழுது, இந்தக் குடும்பத்தினரை அதிகாரபீடத்தில் அமர்த்தினார்கள். சிஸிலியை, (கார்த்தஜீனியர்களின் ஆதிக்கத் திற்குட்படாதபடி) காப்பாற்ற வேண்டு மென்ற நோக்கத்துடன், வாலிப பருவத்திலிருந்த மு. டையோனிஸியஸிடம் ராணுவ நிருவாகப் பொறுப்பை ஒப்புவித்தார்கள். அவனுக்கும் போராடுவதில் இயல் பாகவே ஈடுபாடு இருந்தது. அதனால் போர்க்குணம் மிகுந்தவனாக இருந்தான். அவனுக்கு, வயதில் மூத்தவனாக இருந்த ஹிப்பாரின2 என்பவனை ஆலோசனை சொல் பவனாக, அதாவது மந்திரியாக இருக்கும்படி செய்தார்கள். அவர்கள் இருவரிடமும் அரசாங்க நிருவாக அதிகாரங்களனைத்தையும் ஒப்புவித்து அவர்களைச் சர்வாதிகாரிக ளாக்கினார்கள். அதிருஷ்ட வசத்தினாலோ அல்லது கடவுள் அருளாலோ அல்லது அந்த இருவரும் காட்டிய வீரத் தினாலோ எப்படியோ, சிஸிலி, அந்தத் தலைமுறை வரைக்குமாவது கார்த்தஜீனியர்களின் ஆதிக்கத்திற்குட்படாதபடி காப்பாற்றப் பட்டது. அது மிகவும் முக்கியமான விஷயம். மு. டையோனி ஸியஸும், மூத்த ஹிப்பாரினஸும் சிஸிலியைக் காப்பாற்றியதற் காக, அவர்களுக்கு அனைவரும் நன்றி செலுத்தக் கடமைப்பட் டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்குப் பிறகு அதிகாரத்திற்கு வந்தவர்கள், தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார்கள், அதற்காக ஓரளவு தண்டனையையும் பெற்றுவிட்டார்கள். ஆனால் அதுபோதாது, இன்னும் அவர்கள், தங்கள் செயலுக்குக் கழுவாய் தேடிக்கொள்ள வேண்டியவர்கள்தான். ஆனால் கழுவாய் தேடிக் கொள்ள வேண்டுமென்று அவர்களை வற்புறுத்தக்கூடிய வகையில் உங்களுடைய நிலைமை இருக்கிறதா? உங்களுக்கு ஆபத்தில்லாமல் அவர்களை, அதாவது டியோனைக் கொலைசெய்த கால்லிப்பஸை யும், அவன் கட்சியினரையும் நாடு கடத்தி விடக்கூடிய வலிமை உங்கள் கட்சிக்கு இருந்திருக்குமானாலுஞ் சரி, அல்லது அவர்களே சுலபமாக, மீண்டும் தங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண் டிருந்தாலுஞ்சரி, அப்பொழுது நான் ஆலோசனை கூறவேண்டிய சந்தர்ப்பமே ஏற்பட்டிராது. இப்பொழுதுள்ள நிலைமையில், இரண்டு கட்சியினரும், அதாவது நீங்களும் உங்களுக்கு எதிராயுள்ள கால்லிப்ப கட்சியினரும், எங்களிஷ்டப்படி காரியம் நடைபெற் றிருந்தால் வெற்றி பெற்றிருப்போமென்றும், ஒரு சிறிய விஷயத்தி னால் தவறி விட்டதென்றும் இப்படியெல்லாம் நினைக்கிறீர்கள். இதனால் தொடர்ந்தாற்போல் உங்களிடையே சச்சரவுகள் இருந்து கொண்டிருக்கின்றன. இவைகளுக்கு முடிவே இராது. இந்த நிலைமை நீடித்துக்கொண்டு போகுமானால், சிஸிலித்தீவு பூராவை யும் ஒரு நாளில்லாவிட்டால் ஒரு நாள் ஆகானியர்களோ பொனீஷியர்களோ ஆக்கிரமித்துக்கொண்டு விடுவார்கள்.1 ஆகையால், இந்த நிலைமைக்கு மாற்றாக ஒரு திட்டம் தேட வேண்டியது ஒவ்வொரு கிரேக்கனுடைய கடமையுமாகும். என்னைப் பொறுத்தமட்டில் நான் ஒரு திட்டம் சொல்லலாமென்று நினைக்கிறேன். என்னுடைய திட்டத்தைக் காட்டிலும் சிறந்ததான வேறொரு திட்டம் இருக்கிறதென்று யாராவது ஒருவன் கருதுவா னானால் அதை அவன் தாராளமாகச் சொல்லட்டும். அவனை நான் நாட்டுப்பற்றுமிக்க ஒரு கிரேக்கன் என்று அழைத்துப் போற்றுவேன். ஆனால் என் திட்டம், நியாயத்தையும் தர்மத்தையும் அடிப்படை யாகக் கொண்டதென்று மட்டும் கூறுவேன். சர்வாதிகார ஆட்சி நடத்துகின்ற ஒருவனுக்கும், அந்த ஆட்சிக் குட்பட்டிருக்கிற பிரஜைகளுக்குமிடையே ஏற்படக்கூடிய சச்சரவு களைத் தீர்த்து வைக்கின்ற ஒரு மத்தியதனைப்போல் நான் இங்குப் பேசுகின்றேன். சர்வாதிகார ஆட்சி நடத்துகின்றவனைப் பார்த்து, சர்வாதிகாரி என்ற பெயரையும், அந்தப்பெயருக்குரிய ஆட்சி முறையையும் நீக்கிவிடு; முடிந்தால் முடியாட்சி முறையாக மாற்றியமைத்துவிடு என்று கூறுவேன். அப்படி மாற்றியமைப்பது சுலபமான காரியந்தான். மாற்றியமைத்து, தன்னை, சட்டங்களுக்குட்பட்ட ஒரு நிருவாக அதிகாரியாக ஆக்கிக்கொள்ளட்டும். அதாவது, சட்ட வரம்புக்குட் பட்ட முடியாட்சி முறையின் தலைவனாக அவன் இருக்கட்டும்; அப்பொழுது, அவன், தன் பிரஜைகளிடமிருந்து உண்மையானதும், என்றும் நிலைத்திருக்கக் கூடியதுமான மதிப்பைப் பெறுவான். சர்வாதிகார ஆட்சியினின்று விடுதலைபெற்றுச் சுதந்திரமா யிருக்க வேண்டுமென்பதில் வரம்பு மீறின உற்சாகங் காட்டுகிற வர்கள், கலகத்திற்கும் குழப்பத்திற்கும் இரையாகி சங்கடப்படு வார்கள். உங்களுடைய முன்னோர்கள் ஒரு காலத்தில் இந்த மாதிரியான சங்கடத்திற்குட்பட்டிருந்தார்களல்லவா? அடிமைத் தனமோ, சுதந்திரமோ, மிதமிஞ்சிப் போய்விடுமானால் தீமைகளே விளையும். இரண்டும் ஓர் அளவுக்குட்பட்டிருக்கும் பட்சத்தில் நன்மையே விளையும். அளவுக்குட் பட்டிருத்தல் என்பது என்ன? கடவுளின் ஆணைக்குட்பட்டிருத்தல்தான். மிதமிஞ்சிப் போதல் என்பது என்ன? மனிதர்களுடைய ஆணைக்குட் பட்டிருப்பதே யாகும். அறிஞர்கள், சட்டத்தையே தெய்வமாகக் கருது கிறார்கள். அறிவிலிகளோ, சுகபோகத்தைத் தெய்வமாகக் கருதுகிறார்கள். நான் சொல்லும் இந்த ஆலோசனைகளை நீங்கள் மனத்தில் வாங்கிக்கொள்வதோடு, டியோனுடைய நண்பர்களுக்கும், எல்லா ஸைரக்யூஸியர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். டியோன் உயிரோ டிருந்திருந்தால் என்னசொல்லியிருப்பானோ அதையே நானும் சொல்கிறேன். ஆதலால், நாங்கள் இருவரும் சேர்ந்தே இந்த ஆலோசனை களைச் சொல்வதாக நீங்கள் கொள்ளவேண்டும். அப்படியானால் டியோனுடைய திட்டங்கள்தான் என்ன, அவன் என்ன சொல்லியிருப்பான் என்று கேட்கிறீர்களா?1 சொல்கிறேன்:- ஸைரக்யூஸியர்களே! பண ஆசைக்கும் செல்வத்தை மிதமிஞ்சிச் சம்பாதித்துக் குவிக்கவேண்டுமென்ற எண்ணத் திற்கும் இடங்கொடாத வகையில் சட்டதிட்டங்களை ஏற்படுத்துங்கள். மனிதனுக்கு நன்மை தரக்கூடியவையென்று வெகுகாலமாகக் கருதப் பட்டு வருகின்றவை மூன்று. முதலாவது ஆத்மா; இரண்டாவது உடல்; மூன்றாவது செல்வம். இவற்றுள் முதலாவதான ஆத்மாவின் உயர்வுக்கு உங்களுடைய சட்டதிட்டங்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். (அதாவது, பிரஜைகளுடைய ஆன்ம வளர்ச்சிக்கு வழி வகைகள் ஏற்படுத்திக்கொடுப்பது, உங்கள் சட்ட திட்டங்களின் முதலாவது நோக்கமாயிருக்கவேண்டும்.) அடுத்தாற்போல், உடல் நலம் இடம் பெறவேண்டும். (அதாவது, பிரஜைகள் தேக பலமுடையவர்களா யிருக்க வேண்டுமென்பதை இரண்டாவது நோக்கமாகக் கொள்ள வேண்டும்.) கடைசியில் செல்வம் இடம் பெறவேண்டும். (அதாவது, பிரஜைகள் செல்வச் செழிப்புடையவர்களாயிருக்க வேண்டுமென் பதை மூன்றாவது நோக்கமாகக் கொள்ளவேண்டும்.) வரிசைக் கிரமமாக இந்த மூன்றுக்கும் இடங்கொடுத்து இயற்றப்படுகின்ற சட்ட திட்டங்களுக்கு எல்லோரும் கட்டுப்பட்டவர்களாயிருக்க வேண்டும். இப்படியிருந்தால்தான், எல்லோரும் உண்மையான சந்தோஷத்துடன் வாழமுடியும். அதாவது, பூரண சந்தோஷமென்று சொல்கிறார்களே அந்தச் சந்தோஷத்தை அனுபவித்துக்கொண்டு வாழமுடியும். அப்படிக்கின்றி, செல்வம் படைத்தவர்கள்தான் சந்தோஷமுடையவர்களாயிருக்கிறார்கள் என்று சொல்வது முட்டாள்தனமாகும். பெண்களும், குழந்தைகளுந்தான் இப்படிச் சொல்வார்கள். செல்வம் சந்தோஷத்தைத் தரும் என்ற கோட்பாடு மிகவும் கேவலமானது; துன்பத்தைத் தரக்கூடியது. இதை வேண்டு மானால் நடைமுறையில் கொண்டுவந்து பாருங்கள். அப்பொழுது தான் நான் சொல்வது உண்மையென்பது தெரியும். எப்பொழுதுமே ஒரு பொருளை அனுபவித்துப் பார்த்தால்தானே அதனுடைய உண்மை தெரியும்? இப்பொழுது சிஸிலி தீவு மிகவும் ஆபத்திற்குட் பட்டிருக்கிறது. நீங்களோ, அதாவது, சர்வாதிகார ஆட்சியின் கொடுமைகளைத் தவிர்க்க வேண்டுமென்ற கருத்துடைய நீங்களோ, உங்களுடைய எதிரிகளோ, அதாவது, சர்வாதிகார ஆட்சியை மீண்டும் நிலைபெறச் செய்ய வேண்டு மென்ற கருத்துடைய உங்க ளுடைய எதிரிகளோ, இருவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சமரஸ திட்டம் ஏற்பட்டேயாக வேண்டும். அப்படி ஏற்பட வேண்டியது தான் முறை. இப்பொழுது நீங்கள் எதிர்க்கட்சியினராகப் பிரிந்திருந்த போதிலும், உங்களுடைய முன்னோர்கள், கார்த்தஜீனியர்களை எதிர்த்துப் போராடினார்கள். அவர்களுடைய வீரச் செயல்களி னால், கிரேக்கர்கள், அழிவினின்று காப்பாற்றப்பட்டார்கள். அப்படிக் காப்பாற்றப்பட்டிரா விட்டால், இப்பொழுது நாம் இந்த அரசாங்க அமைப்புப் பிரச்னையைப் பற்றி வாதிக்கச் சந்தர்ப்பமே ஏற்பட்டிராதல்லவா? கிரேக்கர்கள் அப்பொழுது தோல்வியடைந் திருந்தால் சுதந்திரத்தைப்பற்றிய பேச்சுக்கோ, நம்பிக்கைக்கோ இப்பொழுது இடம் இராதல்லவா? ஆதலின், இந்த உண்மையை நீங்கள் இரு கட்சியினரும் மனத்தில்கொண்டு, ஒரு சமரஸ ஏற் பாட்டுக்கு வரவேண்டியது அவசியம். உங்களில் சுதந்திரம் பெற வேண்டுமென்பதில் ஆவல்கொண்டுள்ள கட்சியினர், அப்படியே சுதந்திரம் பெறட்டும். ஆனால் அவர்கள்-ஓர் அரசனுடைய அதிகாரத் திற்குட்பட்டவர்களாக, அதாவது மன்னராட்சிக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அப்படியே எதிர்க்கட்சியினர் ஆளும் பதவியைப் பெறட்டும். ஆனால் அந்தப் பதவி, நீங்கள் இயற்றும் சட்டங் களுக்குப் பொறுப்புடைய தாயிருக்கவேண்டும். அந்தச் சட்டங்களும், ஆளும் பதவியி லிருப்பவர்களோ, பிரஜைகளோ, சட்டங்களை மீறி நடப்பார்களானால், அவர்கள் எவ்வித வித்தியாசமுமில்லாமல் தண்டனைக்குட் படுவார்களென்று விதிக்கவேண்டும். இந்த மாதிரியான ஏற்பாடுகளைச் செய்து கொண்டும், இவற்றிற்குக் கட்டுப்பட்டு நடப்பதாக சங்கற்பித்துக்கொண்டும், கடவுளின் உதவியால் உங்களுடைய அரசர்களை (அதாவது ஆளுந் தகுதியுடையவர்களை) நியமியுங்கள். முதலாவது என் மகனை1 ஓர் அரசனாகத் தெரிந்தெடுங்கள். இப்படித் தெரிந்தெடுப்பது என் தகப்பனாருக்கும் எனக்கும் நீங்கள் செய்ய வேண்டிய கடமையே யாகும். கார்த்தஜீனியர்களின் படை யெடுப்பினின்று சிஸிலியைக் காப்பாற்றியவர் என் தகப்பனார். நானோ, அதனை-சிஸிலியை-சர்வாதிகார ஆட்சியினின்று இரண்டு தடவை விடுவித்துக் கொடுத்தேன். ஆகவே என் மகனை அரசனாகத் தெரிந் தெடுப்பது உங்கள் கடமை. அவனுக்குத் துணைவனாக, அதாவது துணை அரசனாக என் தகப்பனாரின் பெயரையுடையவனாகவும்,மு. டையோனிஸியஸின் மகனுமாக இருக்கின்றவனை - அதாவது ஹிப்பாரின என்பவனை நியமியுங்கள். அவன் செய்த உதவிக்காக-அதாவது கால்லிப்ப என்பவனுடைய ஆதிக்கத்தி லிருந்து ஸைரக்யூஸை விடுவித்துக் கொடுத்தற்காக அவனை நீங்கள் நியமிக்க வேண்டும். தவிர அவன் மிகவும் நேர்மையுள்ளவன். அவன் ஒரு சர்வாதிகாரியின் மகனாக இருந்தபோதிலும், சிஸிலியின் விடுதலைக் காக, தானே மனமுவந்து உதவி செய்ய முன்வந்தான். இதனால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் புகழேற்படும்படி செய்து கொண் டான். அவனை, துணை அரசனாக நியமியுங்கள். மூன்றாவதாக, இப்பொழுது உங்களுடைய எதிரிகளின் படைகளை யார் தலைமை வகித்து நடத்திக்கொண்டிருக்கிறானோ, அவனுடன்-அதாவது மு. டையோனிஸியஸின் மகனான இ. டையோனிஸியஸுடன்-சமரஸப் பேச்சுக்கள் தொடங்க முந்துங்கள். அவனை ஓர் அரசனாக நியமிப்பதை ஸைரக்யூஸியர்கள் ஒப்புக் கொள்வதாயிருந்தால், அவனும், தன்னுடைய சொந்த ராஜ்யமாகிய சிஸிலியின்மீது கொண்ட இரக்கத்தினாலும், அதிலுள்ள கோயில்கள் முதலிய புனிதமான தலங்கள் போதிய பராமரிப் பின்மையால் பாழ் பட்டுப் போகின்றனவே என்ற பச்சாதாபத்தினாலும், அவை இப் பொழுது நடைபெறும் உள்நாட்டுப் பூசல்களுக்கும் அந்நியர்களின் ஆக்கிரமிப்புக்கும் இரையாகி அடியோடு அழிந்து போய்விடக் கூடாதே என்ற நல்லெண்ணத்தி னாலும், தான் ஒரு சர்வாதிகாரியா யிருப்பதினின்று விலகி சட்ட வரம்புக்குட்பட்ட ஓர் அரசனாக இருக்கச் சம்மதிப்பானாகில், அவனை ஓர் அரசனாக நியமியுங்கள்.1 ஆக இந்த மூன்றுபேர் உங்களுக்கு அரசர்களாயிருக்கட்டும். இவர் களுக்கு, பார்ட்டாவில் அரசர்களுக்கு என்ன அதிகாரங்கள் இருக்கின்றனவோ அந்த அதிகாரங்களைக் கொடுப்ப தாயிருந்தாலுஞ் சரி, அல்லது இவர்களுக்கு வரம்பிட்ட சில அதிகாரங் களைக் கொடுப்ப தாயிருந்தாலுஞ் சரி எப்படியோ இவர்களை நியமனம் செய்வது பின்வரும் முறையில் இருக்கட்டும். இந்த மூன்று பேரும், சிஸிலியை அழிவினின்று காப்பாற்றி அதன்மூலம் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அழியாத புகழைத் தேடிக்கொள்ள விரும்பு வார்களானால், இவர்களை, ஒரு மகாநாடு கூட்டி, அதற்கு வரும்படி செய்யுங்கள். இம்மூவரும், மேற்படி மகாநாட்டுக்கு சிஸிலியி லிருந்தும், மற்றக் கிரேக்க ராஜ்யங்களிலிருந்தும் பிரதிநிதிகள் எத்தனைபேர் வர வேண்டுமென்று விரும்புகிறார்களோ, அத்தனை பேரையும் வரவழையுங்கள். இவர்களுக்கு, மேற்படி மூவரையும் சமரஸத்துடன் இருந்து ஆளவைக்க அதிகாரம் கொடுங்கள். பிறகு, இவர்கள் ஒன்றுகூடி ஆலோசித்துச் சட்டதிட்டங்களை வகுக் கட்டும். இந்தச் சட்டதிட்டங்களின் படி மூன்று அரசர்களுக்கும், மத சம்பந்தமாக நடைபெறும் சடங்குகளை மேற்பார்வை செய்யவும், ஏற்கனவே ராஜ்யத்திற்கு நன்மைகள் பல செய்திருக்கின்றவர்கள் எந்தெந்த விஷயங்களைக் கவனித்து வந்தார்களோ அந்த விஷயங் களைக் கவனித்து வரும்படி செய்யவும், அதிகாரம் கொடுங்கள். எல்லா விவகாரங்களையும்-அதாவது, சண்டைக் காலத்திலும், சமாதான காலத்திலும் ஏற்படக்கூடிய எல்லா விவகாரங் களையும்-கவனித்துக்கொள்ள, பொதுவாக அரசாங்க நிருவாகத்தை நடத்த முப்பத்தைந்து பேரை நியமியுங்கள். இந்த முப்பத்தைந்து பேரும், மேல்சபை கீழ்ச்சபை என்னும் இரண்டு பொதுஜன சபைகளின் ஒத்துழைப்பைப் பெற்று நிருவாகத்தை நடத்தட்டும். ராஜ்யத்தில் நிகழக்கூடிய குற்றங்களை விசாரிக்க நீதிமன்றங்கள் பல நிறுவப் படட்டும். ஆனால் மரணதண்டனைக்கும், தேசப் பிரஷ்டத்திற்கு முரிய குற்றங்களை விசாரிக்கின்ற அதிகாரம் இந்த முப்பத்தைந்து பேரிடமே இருக்கவேண்டும். இவர்கள், ஒவ்வொரு வருஷமும் தெரிந்தெடுக்கப் படுகின்ற திறமையான சிலரை நீதிபதிகளாகத் துணை சேர்த்துக்கொண்டு மேற்சொன்ன மரணதண்டனைக்கும், தேசப்பிரஷ்டத்திற்குமுரிய குற்றங் களை விசாரித்துத் தீர்ப்புச் சொல்லவேண்டும். ஆனால் இந்த மூன்று அரசர்களில் யாரும் நீதிபதியாக அலுவல் பார்க்கக்கூடாது. ஏனென்றால் இந்த மூன்று அரசர்களும் புரோகிதர்களைப் போன்றவர்கள். இவர்கள், மரண தண்டனை, சிறைவாசம், தேசப்பிரஷ்டம் போன்ற தண்டனைகளுக் குரிய குற்றங்களை விசாரிப்பதன்மூலம் தங்களைக் களங்கத்திற்குட் படுத்திக் கொள்ளக்கூடாது. இதுதான் என் திட்டம். இதனை, நான் (டியோன்) செல் வாக்கோடிருந்த காலத்தில் நடைமுறையில் கொண்டுவர விரும்பி னேன்; இப்பொழுதும் அந்த விருப்பம் எனக்கு இருக்கிறது. நண்பர் களாக நடித்த சிலர் என்னைத் தடுத்திராவிட்டால், உங்களுடைய உதவியைப்பெற்று சத்துருக்கள்மீது வெற்றிக் கொண்டிருப்பேன். மேலே சொன்னதிட்டப்படி ஓர் அரசாங்கத்தை அமைத்திருப்பேன். என் விருப்பப்படி எல்லாம் நடைபெற்றிருந்தால், சிஸிலியை இப்பொழுது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அந்நியர்களை விரட்டியடித்து விட்டு நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டியிருப்பேன். அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற நம்மோடு ஒத்துழைத்தவர் களுக்கு, அவர்கள் இழந்ததையெல்லாம் மீட்டுக் கொடுத்து, அவர் களைப் பழைய நிலைமையில் கொண்டுவந்திருப்பேன். இந்த மாதிரியெல்லாம் செய்ய வேண்டுமென்பதை உங்கள் பொது நோக்கமாகக்கொண்டு அதனை நிறைவேற்ற முயலுங்கள். இந்த விஷயத்தில் உங்களோடு ஒத்துழைக்க மறுக்கிறவர்களை உங்களுடைய விரோதிகளாகக் கருதுங்கள். நடைமுறைக்கு வரக் கூடாத எதையும் நான் சொல்லவில்லை. ஏற்கனவே, நான் மேலே சொன்ன திட்டத்தை உங்களில் இருவர், அதாவது மு. டையோனி ஸியஸின் மகன் ஹிப்பாரினஸும், என் (டியோன்) மகன் (ஹிப்பாரி னஸும்) ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். இதனால் இது சிறந்த திட்டம் என்றும், நடைமுறைக்கு வரக்கூடியதென்றும் தெரிகிறதல்லவா? இதே மாதிரி ஸைரக்யூஸியர்கள் அனைவரும் அபிப்பிராயப்படு வார்களென்று நினைக்கிறேன். எல்லாத் தெய்வங்களுக்கும் வழிபாடு செய்யுங்கள். மேலே நான் சொன்ன திட்டத்தை நிறைவேற்றச் செய்ய உங்களுடைய நண்பர் களையும், எதிரிகளையும் நல்ல வார்த்தைகளால் இடை விடாமல் தூண்டிக்கொண்டு வாருங்கள். ஒன்பதாவது கடிதம் ஆர்க்கைட்ட என்பவன், பொதுநல வாழ்க்கையில் ஈடுபடுவதனால் ஏற்படக்கூடிய சிரமங்களைப் பற்றியும் கவலைகளைப்பற்றியும் குறிப்பிட்டு, பிளேட்டோவுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதற்குப் பதிலாக, பிளேட்டோ, பொதுநலத் தொண்டில் ஈடுபடவேண்டிய அவசி யத்தை இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டுகிறான். ஆர்க்கைட்டைஸைப் பற்றிய விவரங்களுக்கு ஏழாவது கடிதம் 101 ஆம் பக்கம் அடிக்குறிப்பைப் பார்க்க. டாரெண்ட்டம் நகரத்தைச் சேர்ந்த ஆர்க்கைட்டஸுக்கு பிளேட்டோ எழுதுவது: நலம். ஆர்க்கிப்பஸும், பிலோனிடீஸும்,1 அவர்களுடைய நண்பர் களும், நீ கொடுத்தனுப்பிய கடிதத்துடன் என்னை வந்து பார்த் தார்கள். உன்னைப்பற்றிய எல்லா சமாசாரங்களையும் சொன் னார்கள். அவர்கள் எந்தக் காரியத்திற்காக அனுப்பப்பட்டார் களோ அந்தக் காரியம் முடிந்தது. அது மிகவும் சுலபமான காரியம். ஆனால் நீ பெரிய காரியமென்று நினைத்திருப்பதாகச் சொன் னார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நீ இப்பொழுது அவர்களை எந்தக் காரியத்திற்காக அனுப்பியிருக்கிறாயோ அந்தக் காரியம், உன்னுடைய சொந்த நலத்திற்கானதாயிருந்தாலும் அதை யும் கவனிக்கத்தான் வேண்டியிருக்கிறது. அப்படிக் கவனிப்பதில் எனக்கு ஒருவித இன்பமும் இருக்கிறது. ஆனால் ஒன்றைமட்டும் நீ மனத்தில் கொள்ளவேண்டும். அதாவது, நம்மில் யாரும் நமக்காகமட்டும் பிறக்கவில்லை. நம் முடையதில் ஒரு பகுதி, நமது தேசத்திற்குரியது; ஒரு பகுதி, நமது பெற்றோர்களுக்குரியது; ஒரு பகுதி, நமது நண்பர்களுக்குரியது. இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம், நம்மிட மிருந்து விசேஷமான சேவைகளை எதிர்பார்க்கிறது. பொதுநலத் தொண்டு செய்ய முன்வருமாறு நம்முடைய தேசம் நம்மை அழைக்கிறபோது, அதை மறுப்பது நம்முடைய இயல்புக்கு விரோதமானது. நாம் மறுத்துவிட்டால், நம்முடைய தானத்தில் தகவிலார் சிலர் வந்து அமர்ந்து விடுதல்கூடும். பொதுஜனங்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்ற ஆசையினால்தான் அவர்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபட முன்வருகிறார்களென்று சொல்ல முடியாது. இதனோடு இந்தக் கடிதத்தை நிறுத்திக் கொள்கிறேன். எக்கிராடீஸை1 நான் கவனித்துக் கொள்கிறேன். அவனிடத்திலும் அவன் தந்தையிடத்திலும் எனக்கு அதிக மதிப்புண்டு. பத்தாவது கடிதம் இந்தக் கடிதத்தில் கூறப்படும் அரிட்டோடோர (Aristodorus) என்பவனைப் பற்றிய விவரம் தெரிய வில்லை. இவன் டியோனின் நம்பிக்கையைப் பெற்றிருந் தவன் என்றுமட்டும் தெரிகிறது. இவனுக்குச் சில அறிவுரைகள் வழங்குகிறான் பிளேட்டோ, இந்தக் கடிதத்தின் மூலம். அரிட்டோடோரஸுக்கு பிளேட்டோ எழுதுவது: நலம். நீ டியோனின் பூரண நம்பிக்கையைப் பெற்றுள்ள நண்பனா யிருக் கிறாயென்றும், ஆரம்பத்திலிருந்தே இப்படி இருந்து வருகிறா யென்றும் அறிகிறேன். அவனிடமிருந்தே இதைக் கேள்விப்பட்டேன். மெய்யறிவை நாடிச் செல்லும் ஒருவனுக்கு நியாயமாக இருக்க வேண்டிய பண்புகள் உன்னிடமிருக்கின்றன என்று சொல்லலாம். அதாவது, எதிலும் ஓர் உறுதியோடிருத்தல், நட்புக் கொண்டா ரிடத்தில் பக்தி விசுவாசத் துடனிருத்தல், நண்பர்களின் நம்பிக்கைக் குரியவனாயிருத்தல், இவை யெல்லாம் மெய்யறிவு படைத்திருப்ப வர்களுக்கு இருக்கவேண்டியவை. உன்னிடம் இவை இருக்கின்றன. இவை இல்லாமல் வேறு எந்த வித்தை களைக் கற்றாலும், வேறு விதங்களில் அறிவைச் செலுத்தினாலும், எல்லாம் வெறும் ஆபரணங்கள் என்று தான் சொல்லவேண்டும். இதுவே என் அபிப் பிராயம். உன்னிடமுள்ள மேலே சொன்ன பண்புகளை நீ கை விடாமல் பாதுகாத்து வருவாயாக. பதினோராவது கடிதம் லியோதாம (Leodamas) என்பவன், பிளேட்டோவின் கழகத்தைச் சேர்ந்தவன்; கணித சாதிர நிபுணன். அரசதந்திரி. இவன் கிரேனீடீ (Crenidae) அல்லது டாட்டோ (Datos) என்ற ராஜ்யத்தைச் சேர்ந்தவன். அந்த ராஜ்யத்திற்குரித்தான சட்டதிட்டங்களை வகுக்க பிளேட்டோவின் ஆலோசனையை நாடினான். அவனை, தன் ராஜ்யத்திற்கு வந்துபோகுமாறும் கேட்டுக் கொண்டான். அதற்கு பிளேட்டோ, இந்தக் கடிதத்தின் மூலம் தன் கருத்தைத் தெரிவிக்கிறான். இந்தக் கடிதம் ஏறக்குறைய கி.மு. 360ஆம் வருஷம் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. லியோதாமஸுக்கு பிளேட்டோ எழுதுவது: நலம். நீ என்னிடம் விளக்கிவைத்த திட்டங்களை ஒழுங்குற அமைக்க வேண்டுமானால், நீ ஆத்தென்ஸுக்கு வந்துபோவது நல்லதென்று முன்பு நான் உனக்கு எழுதியிருந்தேன். ஆனால் நீ, அப்படி வருவதற் கில்லை என்றும், நானோ, ஸாக்ரடீஸோ1 முடிந்தால் அங்கு வரவேண்டுமென்றும் எழுதியிருந்தாய். ஆனால் ஸாக்ரட்டீ நீர்க்கடுப்பு வியாதியினால் அவதைப்பட்டுக் கொண்டிருக்கிறான். நானோ, எந்தக் காரியத்தைச் செய்துமுடிக்க என்னை அழைக் கிறாயோ அந்தக் காரியத்தைச் செய்து முடிக்க முடியாத நிலையில் அங்கு வருவது உசிதமாயிராது. நீ உத்தேசித் திருக்கிற திட்டம், நடைமுறையில் கொண்டு வரப்படக் கூடுமென்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. இப்படி நான் கருதுவதற்கான காரணங்களைச் சொல்லவேண்டுமானால் அதற்கு வேறொரு நீண்ட கடிதம் எழுத வேண்டியிருக்கும். தவிர, இந்த வயதில் நீண்ட தூரப்பயணத்தை மேற்கொள்வதற்குப் போதிய தேக பலம் எனக்கு இல்லை. மற்றும் இப்பொழுதெல்லாம் கடல் வழியிலோ, தரைவழியிலோ நீண்ட தூரப்பயணத்தை மேற்கொள்வதில் அநேக ஆபத்துக்கள் இருக் கின்றன. ஆகையால், உனக்கும் உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் ஓர் ஆலோசனை சொல்கிறேன். என்னுடைய இந்த ஆலோசனை, மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், இஃது என்ன பெரிய ஆலோசனை என்று அலட்சியமாகத் தோன்றும். ஆனால் அதை நடைமுறையில் கொண்டுவருவது கடினம். ஒரு ராஜ்யத்தின் சட்டதிட்டங்கள் எவ்வளவுதான் சிறந்த முறையில் இயற்றப்பட்டிருந்த போதிலும், அதிகார பதவியி லிருக்கிறவர்கள், ஜனங்களுடைய அன்றாட வாழ்க்கை ஒழுங்காக நடைபெறவேண்டு மென்பதில் கவனஞ் செலுத்தாமற் போனால், அந்த ஜனங்கள் - அடிமைகளாகட்டும், வாக்குரிமை பெற்ற சுதந்திரப் பிரஜைகளாகட்டும் - எல்லாரும் - எதிலும் நிதானத்தைக் கடைப் பிடிக்கிறவர்களாகவும், தைரிய முடையவர்களாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளாமற் போனால், அந்தச் சட்டதிட்டங்களின்கீழ் நல்லதோர் அரசாங்கத்தை அமைக்க முடியாது. அமைக்க முடியும் என்று யாராவது கருதினால் அது தவறு. அப்படி ஜனங்களின் நன்மைக்காக அதிகாரஞ் செலுத்தக்கூடியவர்கள் உன்வசம் இருப்பார்களானால், நீ கருதுகிறபடி ஒரு நல்ல அரசாங்கத்தை அமைத்தல் சாத்தியமே. அப்படி யாரும் இல்லையென்றால், பிறருக்கு, நல்வழியில் செல்லுமாறு நாம் கற்பிக்கவேண்டும், அப்படியே நாமும் நல்வழியில் செல்லக் கற்கவேண்டும், என்றெல்லாம் பேசுவதில் அர்த்தமில்லை. அந்த முடியாத நிலையில் கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்வதுதான் உனக்குச் சரியான வழி என்று எனக்குத் தோன்றுகிறது. இப்பொழுது நீ குடியேறியிருக்கும் ராஜ்யம் எந்த முறையில் அமைக்கப்பட்டதோ, அப்படியேதான் முந்திய காலத்து ராஜ்யங்களில் பெரும்பாலானவை அமைக்கப்பட்டன. பிறகு ஏதாவது ஒரு யுத்தம் உண்டாவதனாலோ, வேறு காரணத்தி னாலோ அந்த அரசாங்க அமைப்பு மாறவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. அப்பொழுது திறமைசாலியான ஒருவன் தோன்றி, அந்த அரசாங்கத்தைச் சீர்திருத்தி அமைக்கிறான். அப்படித்தான் இதுவரை நடைபெற்று வந்திருக்கிறது. முதன்முதலாக நீ செய்ய வேண்டியதென்னவென்றால், நல்ல அரசாங்கம் அமையவேண்டுமென்ற ஆவல் மனப்பூர்வமாக இருக்கிற தென்று நீ காட்டிக்கொள்ள வேண்டும். அப்படி அமைய வேண்டுமானால் அதற்கு முன்பு எத்தனை தடைகளைச் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றியும் நீ சிந்தித்துப் பார்க்க வேண்டும். பன்னிரண்டாவது கடிதம் பித்தாகோரஸின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த ஒக்கெல்ல (Occellas) என்பவன், தான் எழுதிய சில கட்டுரைகளை, தன் நண்பனான ஆர்க்கைட்ட ஸுக்கு அனுப்ப, அவன் அவற்றை பிளேட்டோவின் பார்வைக்கு அனுப்பு கிறான். அவைகளைப் பார்த்து விட்டு இந்தக் கடிதத்தை எழுதினான் பிளேட்டோ என்று சிலர் கருதுகின்றனர். வேறுசிலர், இது பிளேட்டோவின் கடிதமாயிருக்க முடியாதென்றும், பிற்காலத்தில் யாரோ ஒருவர், ஒக்கெல்லஸின் எழுத்துக்களுக்குப் பெருமை தேடித்தர வேண்டு மென்பதற்காக, பிளேட் டோவின் நற்சாட்சிப்பத்திரம் போன்ற இந்தக் கடிதத்தை எழுதி, பிளேட்டோவின் கடிதத் தொகுப் பில் சேர்ந்திருக்கிறாரென்றும் கருதுகின்றனர். டாரெண்ட்டம் ராஜ்யத்தைச் சேர்ந்த ஆர்க்கைட்ட ஸுக்கு பிளேட்டோ எழுதுவது: நலம். நீ அனுப்பிய கட்டுரைகளைப் பெற்றுப் பெருமகிழ்ச்சி யடைந்தேன். கட்டுரைகளை எழுதியவன், அவனுடைய பெருமை வாய்ந்த முன்னோர்களின் சரியான வாரிசு என்றே சொல்லத் தோன்றுகிறது. நான் எழுதியவற்றை அனுப்ப வேண்டுமென்று கேட்டிருக் கிறாய். அவற்றை இன்னும் நான் முடிக்கவில்லை. ஆனாலும் நீ கேட்டிருப்ப தனால், அவற்றை உள்ளது உள்ளபடியே அனுப்பி வைக்கிறேன். அவற்றை மிகவும் கவனத்துடன் காப்பாற்றி வர வேண்டுமென்பதைப்பற்றி உனக்கு நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. பதின்மூன்றாவது கடிதம் டியோன், இ. டையோனிஸியஸினால் நாடு கடத்தப் பட்டு விட்டபிறகு, பிளேட்டோ, ஸைரக்யூஸில் தங்க மனமில்லாதவனாய், ஏறக்குறைய கி.மு. 367 ஆம் வருஷக்கடைசியில் ஆத்தென்ஸுக்குத் திரும்பிவந்து விட்டானல்லவா, அதற்குப்பிறகு - கி.மு. 366 ஆம் வருஷத் தொடக்கத்தில்-இந்தக் கடிதம் எழுதப்பட்ட தென்று கருதப்படுகிறது. ஸைரக்யூஸின் சர்வாதிகாரியான இ. டையோனிஸி யஸுக்கு பிளேட்டோ எழுதுவது: நலம். ஒரு சமயம் நீ லோக்ரி நகரத்திலிருந்து வந்திருந்த இளைஞர் களுக்கு விருந்தளித்தபோது நானும் இருந்தேனல்லவா, அப் பொழுது நீ உன் இருப்பிடத்திலிருந்து எழுந்து, நான் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து, மிகுந்த நட்பு முறையில், என்னை வரவேற்று அழகான சில வார்த்தை களைப் பேசினாய். அப்பொழுது நீ மனப் பூர்வமாகப் பேசினாய் என்றுதான் எனக்குத் தோன்றியது. என் பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞனும் அப்படித்தான் கருதினான்; கருதியதோடு மட்டுமில்லாமல், என்ன டையோனிஸிய, பிளேட்டோவிடமிருந்து மெய்யறிவைப்பற்றி அதிக மாகத் தெரிந்து கொண்டிருக்கிறாய் போலிருக்கிறது என்று உன்னைப் பார்த்துச் சொன்னான். நீ அதற்குப் பதிலாக, அதுமட்டுமா? வேறு சில வற்றையும் தெரிந்துகொண்டிருக்கிறேன், (ஸைரக்யூஸுக்கு வர வேண்டு மென்று) அவனுக்கு நான் அழைப்பு விடுத்த நிமிஷத்தி லிருந்து, அவ்வள வென்ன, அழைக்கவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டதிலிருந்தே, (அவனிடமிருந்து மெய்யறிவைப் பெற்றுக் கொள்கிற விஷயத்தில்) நான் லாபம் அடைந்தவனானேன் -என்று கூறினாய். ஆகையால், நாமிருவரும் ஒருவருக்கொருவர் பிரயோஜன முடையவர்களாய் இருப்பதைக் காப்பாற்றி வருவதோடு, அதிகரித்துக் கொண்டும் வருவோமாக. இந்த உத்தேசத்துடன், என்னுடைய சில நூல்களை அனுப்பியிருக்கிறேன். கூட, ஹெலிகோன்1 என்ற ஒருவனையும் அனுப்பியிருக்கிறேன். ஆர்க்கைட்ட என்பவன் இப்பொழுது உன்னோடு இருக்கிறானென்று நினைக்கிறேன். இருந்தால் அவனும் நீயும் இந்த ஹெலிகோனை நன்கு பயன் படுத்திக்கொள்ளலாம். இந்த ஹெலிகோன், சிஜிக்க (Cyzicus) என்னும் நகரத்தைச் சேர்ந்தவன்; யூடோக்ஸ1 என்பவனின் சீடன்; நிறையப் படித்தவன். ஐஸோக்ராட்டீ2 என்பவனுடைய சீடர் களில் ஒருவனோடும் பாலிக்ஸின3 என்பவனோடும் சேர்ந்து பயின்றவன். இவ்வளவு புலமை பெற்றவனாயிருந்த போதிலும், இனிய சுபாவம் உடையவன்; குதர்க்கம் பேசமாட்டான்; நன்றாகப் பழகுவதற்கு ஏற்றவன். இருந்தாலும், இவனைப்பற்றிய என் அபிப் பிராயத்தை ஜாக்கிரதையாகவே வெளியிடு கிறேன். ஏனென்றால் மனிதர்களில் பெரும்பாலோர் மாறுதலடையும் சுபாவமுடைய வர்களாய் இருக்கிறார்கள். இந்த ஹெலிகோனைப்பற்றிக்கூட முதலில் எனக்கு ஓரளவு அச்சமே இருந்தது. இதனால் இவனைப்பற்றிப் பலரிடம் விசாரித்தேன். யாரும் இவனைப்பற்றித் தப்பான அபிப்பிராயம் சொல்லவில்லை. இருந்தாலும், நீ இவன் விஷயத்தில் ஜாக்கிரதையா யிருப்பது நல்லது. நீயே இவனைப் பரிசோதனை செய்து பார். உனக்கு அவகாசம் இருக்கும் பட்சத்தில், இவன், உனக்குப் போத னைகள் செய்யட்டும்; உன்னுடைய மெய்யறிவை அதிகரித்துக் கொள்ள எல்லா வகையிலும் பயன்படட்டும். உனக்குத் தற்போது அவகாசம் இல்லையானால், தகுதியுள்ள வேறு யாராவது ஒருவ னுக்கு இவன் போதிக்கட்டும். பிறகு, உனக்கு அவகாசம் ஏற்படுகிற பொழுது, அவனிடமிருந்து, அதாவது, போதனை பெற்றவனிட மிருந்து நீ கற்றுக்கொள்ளலாம்; அப்படிக் கற்று, உன் நற்குணங் களை அதிகரித்துக்கொள். நீ எழுதிக் கேட்டிருந்த பிரகாரம், அப்போலோவின் உருவச் சிலை யொன்றை லெப்டினெ (Leptines) என்பவன் மூலம் அனுப்பி யிருக்கிறேன். இதனைச் செய்தவன், லியோகாரெ4 என்ற ஒரு சிற்பி; வயதில் சிறியவன்தான்; ஆனால் தொழில் திறமைமிக்கவன். இவனிட மிருந்து வேறோர் அழகான உருவச்சிலையையும் வாங்கி அனுப்பி யிருக்கிறேன். இதை உன் மனைவிக்குக் கொடுக்கவும். நான் உன் னுடைய விருந்தினனாக அங்கு (ஸைரக்யூஸில்) தங்கியிருந்த போது, என்னைப் பெரிதும் கவனித்து வேண்டிய உபசரணைகளையெல் லாம் செய்தாள். தவிர, உன் குழந்தைகளுக்காக பன்னிரண்டு ஜாடிகள் மதுவையும், இரண்டு ஜாடிகள் தேனையும் அனுப்பியிருக்கிறேன். இவைகளை வாங்குவதற்காகத் தேவைப்பட்ட பணத்தையும், ஆத்தென்ஸில் வேறு சிலருக்குக் கொடுக்கப்படவேண்டியிருந்த பணத்தையும், மேலே சொன்ன லெப்டினெ என்பவனிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறேன். அவனை உன்னிடம் அனுப்புவதற் காக ஏற்பட்ட கப்பல் செலவுத் தொகையில் பெரும்பகுதியை அவனே ஏற்றுக்கொண்டு, அதை எனக்குக் கொடுத்துவிட்டான். இதைக் கொண்டு தான் மேற்சொன்ன சாமான்களில் சிலவற்றை வாங்கினேன். இங்கே ஆத்தென்ஸில் நீ போட்டு வைத்திருக்கிற பணத்தைப் பற்றிச் சில விஷயங்கள் உனக்குத் தெரிவிக்க வேண்டியவனாயிருக் கிறேன். மற்றவர்களுடைய பணத்தை நான் எப்படி உபயோகித்து வருகிறேனோ அப்படித்தான் உன் பணத்தையும் உபயோகித்து வருகிறேன். அதையும், சிக்கனமாக, தேவையானவைகளுக்கு மட்டுமே உபயோகிப்பேன். என் நிலைமை என்னவென்றால், என்னுடைய குழந்தைகள் என்று சொல்லத் தக்க நான்கு பெண்களை விவாகஞ்செய்து கொடுக்க வேண்டிய வனாயிருக்கிறேன். இந்தப் பெண்களின் தாய்மார்களின் விவாகத்தின் போது வரதட்சிணை கொடுத்தேன். அதே பிரகாரம் இந்தப் பெண்களுக்கும் நான் ஏற்பாடு செய்யவேண்டும். என் தாயார் காலமாகிவிட்டாள், அவளுக்குக் கல்லறை கட்டவேண்டும். அதற்குப் பணம் தேவை. இவைகளுக் கெல்லாம் நான் சிக்கனமாகத்தான் செலவழிப்பேன். ஆனால் இவைகளுக்கெல்லாம் முதல் பணம், உன்னுடையதாகத்தான் இருக்கும். உன் பொருட்டு ஒரு நல்ல காரியத்தைச் செய்ய எனக்குப் பணம் தேவைப்படுமானால், அதை நாம் திட்டமிட்டிருந்தபடி, முன்னே கொடுத்து பின்னே வாங்கிக்கொள்ளக்கூடிய உன்னுடைய நண்பர்கள் யாரும் இங்கு இல்லை. உன் சம்பந்தப்பட்ட முக்கியமான ஒரு காரியம் கட்டாயம் நடந்தாக வேண்டுமானால், அதற்கு உடனே பணம் தேவைப்படும். அந்தப் பணத்தை உன்னுடைய பிரதிநிதிகள் வந்து கொடுக்கிறவரை, அந்தக் காரியத்தைத் தள்ளிப்போடவோ, வேண்டாமென்று சொல்லவோ முடியாது. அதனால் நஷ்டமே ஏற்படும்; உன்னுடைய நிலைமையும் தர்ம சங்கடமாகிவிடும். இன்னும் சில விலையுயர்ந்த பொருள்களை வாங்கி அனுப்பு மாறும், அதற்கு தேவையான பணத்தை, உன் நண்பனாகிய ஆண்ட்ரோமெடீ1 என்பவனைக்கேட்டு வாங்கிக் கொள்ளு மாறும் நீ எழுதியிருந்தாய். அப்படியே பணத்திற்கு அவனைக் கேட்டுவிட்டேன். அவன், உன் தகப்பனாருக்குக் கடன் கொடுத்து அதை வசூல் பண்ணுவது மிகவும் கஷ்டமாகி விட்டதென்றும், வேண்டுமானால் ஒரு சிறு தொகையைக் கொடுப்பதாகவும் சொல்லி யனுப்பினான். எனவே, லெப்டினெஸிட மிருந்து ஒரு தொகையை வாங்கிக்கொண்டேன். அவனைப் பாராட்ட வேண்டும். பணம் கொடுத்ததற்காக அல்ல; பிரியத்தோடு கொடுத்ததற்காக. இப்படிக் கொடுத்ததில் மட்டுமல்ல, வேறு பல விஷயங் களிலும் அவன், உன்னுடைய உண்மையான நண்பன் என்று தன்னைக் காட்டிக் கொண்டான். இதை ஏன் சொல்கிறேனென்றால், உன்னிடத்தில் நல்லெண்ணமுள்ளவர் யார், இல்லாதவர் யார் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான். உன்னுடைய பண விஷயத்தில் நான் சிறிது பட்டவர்த்தனமாகவே பேச விரும்பு கிறேன். உன்னைச் சூழ்ந்திருக்கிறவர்கள் எப்படிப்பட்டவர்க ளென்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டு மென்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன். ஏன் என்றால் இவர் களைப்பற்றி எனக்கு ஓரளவு அனுபவம் இருக்கிறதல்லவா? இவர்கள் (இந்த அதிகாரிகள்) தங்களுடைய செயல்களைப்பற்றி உன்னிடம் தெரிவிக்கிறபோது, செலவு ஏற்படக்கூடிய திட்டங்களைப்பற்றிச் சொல்லத் தயங்கு கிறார்கள். அப்படிச் சொன்னால் உன்னுடைய அதிருப்திக்கு ஆளாக வேண்டிவருமே என்று அஞ்சுகிறார்கள். ஆகையால், எல்லாவற்றைப்பற்றியும் விவரமாகச் சொல்லவேண்டும் என்று அவர்களை நீ கட்டாயப் படுத்தவேண்டும். அப்பொழுது தான், எங்கே என்ன நடக்கிறதென்பதை நீ நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். அப்படித் தெரிந்து கொள்வது உன் கடமை. அப்பொழுது தான் உன் ராஜ்யத்தை நீ ஒழுங்காகக் காப்பாற்றி வரமுடியும். ஆளுந் தொழிலைச் செய்கிறவர்கள், பணத்தை இனமறிந்து ஒழுங்காகச் செலவு செய்தல் அவசியம். அப்பொழுதுதான் பணவருவாய்க்கும் வசதி ஏற்படும். பண விஷயத்தில் கண்டிப்பாய் இருப்பது எவ் விதத்திலும் கௌரவக் குறைவு இல்லை. உன்னைச் சுற்றியுள்ளவர்கள் உனக்குக் கெட்ட பெயர் கொண்டு வந்துவிடாத படி நீ பார்த்துக் கொள்ள வேண்டும். அனுபந்தம் பிளேட்டோவின் உயில் பிளேட்டோ, கி.மு. 427ஆம் வருஷம் பிறந்து 347ஆம் வருஷம் இறந்து போனான். தன் கடைசி காலத்தில், இவன் ஓர் உயில் எழுதி வைத்தான். அது வருமாறு:- பிளேட்டோ, தன் சொத்துபற்றுக்கள் விஷயமாக எழுதி வைக்கும் உயில்: இபிடியாடீ1 என்ற இடத்தில், வடக்கே ஸெபீஸியாவி லுள்ள2 கோயிலுக்குப் போகும் பாதைக்கும், தெற்கே ஹெரா கிளீஸின்3 கோயிலுக்கும், கிழக்கே பிரியாரியா என்னும் இடத்தைச் சேர்ந்த ஆர்க்கெட்ராட்ட4 என்பவனுடைய நிலத்திற்கும், மேற்கே சொல்லீடே என்னும் இடத்தைச் சேர்ந்த பிலிப்ப5 என்பவனுடைய நிலத்திற்கும் மத்தியிலுள்ள சொத்தை (ஆதியை)6 யாருக்கும் விற்கவோ, பராதீனப்படுத்தவோகூடாது. அது, சிறுவன் அடிமாண்ட்டஸுக்கு7 எல்லா வகையிலும் உரிமையுடையதாகச் செய்யப்படவேண்டும். கால்லிமாக்கஸிடமிருந்து8 வாங்கப்பட்ட ஐரிஸிடீயி லுள்ளதும்,9 வடக்கே யூரிமெடோன்10 நிலத்திற்கும், தெற்கே டெமோட்ராட்ட11 என்பவனுடைய நிலத்திற்கும், கிழக்கே மேற்சொல்லப்பட்ட யூரிமெடோனுடைய நிலத்திற்கும், மேற்கே ஸெபீஸஸுக்கும்12 மத்தியிலுள்ளதும்.......... என்னுடைய சொத்து நிலவரம் வருமாறு:- 1. மூன்று மினா1 வெள்ளி. 2. நூற்றறுபத்தைந்து ட்ராக்மா2 எடையுள்ள ஒரு வெள்ளிக்கிண்ணம். 3. நாற்பத்தைந்து ட்ராக்மா எடையுள்ள ஒரு வெள்ளிக் கோப்பை. 4. ஒரு தங்கமோதிரம்; ஒரு தங்கக்கடுக்கன் (காதணி) இரண்டும் சேர்ந்து நாலரை ட்ராக்மா எடையுள்ளது. கல்தச்சனாகிய யூகிளிடீ3 என்பவன் எனக்கு மூன்று மினா கடன் பாக்கி தரவேண்டும். ஆர்ட்டெமி4 என்பவனுக்கு விடுதலையளிக்கிறேன். வீட்டு வேலைக்காக என்னிடமிருந்த டைகோன், பிக்டா, அபோல்லோனிடீ, டியோனிஸிய ஆகிய அடிமைகளை அப்படியே விட்டுப்போகிறேன்.5 என் வீட்டுத் தட்டுமுட்டுச் சாமான்களின் பட்டியல் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.6 இதன் நகல் பிரதியொன்று டெமிட்ரிய7 என்பவன் வசம் இருக்கிறது. நான் கொடுக்கவேண்டிய கடன் பாக்கி எதுவும் கிடையாது. லியோதனீ, புஸிப்ப, டெமிட்ரிய, ஹெகியா, யூரிமெடோன், கால்லிமாக்க, தியோபாம்ப்ப ஆகியோரை8 எனக்குப்பின் என் காரியதர்களாக (எக்ஸிகியூட்டர்களாக) நியமிக்கிறேன். வரலாறு கண்ட கடிதங்கள் பதிப்புரை தமிழில் அரசியல் இலக்கியம் வளமும் வனப்பும் பெற பாடுபட்டவர்களுள் அமரர் வெ. சாமிநாத சர்மா அவர்களுக்கு ஒரு தனியிடம் உண்டு. தமிழக அரசியல்வாதிகள் அறிஞர்கள் பலர் அமரர், வெ. சாமிநாத சர்மாவின் நூல்களினாற் பெற்ற பயனைப் பலவாறாகக் குறிப்பிட்டுள்ளனர். தலைமுறை இடைவெளி என்பது ஒரு பிரச்சனை. பல சான்றோர்களின் நினைவை இன்றைய இளந் தலைமுறையினருக்கு எடுத்துக்கூற வேண்டியுள்ளது. இந் நூல் வெளியீட்டின்மூலம் இதை ஒரு தொண்டாகவே கருதுகிறோம். அமரர், வெ. சாமிநாத சர்மா அவர்களின் நூல்களை வெளி யிடும் உரிமையைப் பெற்றுள்ள திரு. பெ.சு. மணி, பூங்கொடி பதிப்பகம் வெளியிட வரலாறு கண்ட கடிதங்கள் என்னும் கையெழுத்துப் படிகளை அளித்து பெருமைப் படுத்தியதற்காக எங்கள் நன்றியைக் கூறிக் கொள்கிறோம். ஆறே நாள்களில் இந்நூலை அழகுற அச்சிட்டு உதவிய மூவேந்தர் அச்சகத்தாருக்கும், எழிலார்ந்த முகப்பு ஓவியத்தை உருவாக்கித் தந்த ஓவியர் ஈவரி அவர்களுக்கும் எங்கள் நன்றி உரியது. வே. சுப்பையா பூங்கொடி பதிப்பகம். வாசகர்களுக்கு எண்ணையும் எழுத்தையும் கூட்டிப் படிக்கத் தெரிந்து கொண்டிருக்கிறவன்கூட, தபாற்காரனை எதிர்பார்க் கிறான். கற்றறிந்தவன் என்று கருதிக் கொண்டிருக்கிறவன் அல்லது கருதப் படுகிறவன் அந்தத் தபாற்காரனை எதிர்பார்க்கிறானென்றால் அதில் என்ன ஆச்சரியமிருக்கிறது? பிறரைக் கொண்டு படிக்கச் சொல்லித் தெரிந்து கொள்கிறவனாகட்டும், சுயமாகப் படிக்கத் தெரிந்து கொண்டிருக் கிறவனாகட்டும், இருவரும், கடிதங்களை எதிர் பார்ப்பதில் ஒரே ஆவலுடையவர்களாயிருக்கிறார்கள். செய்யுந் தொழில், வாழ்க்கைத் தரம், இப்படிப் பலவகையிலும் இவர்கள் வேறு வேறுபட்டவர்களா யிருக்கலாம். ஆனால் கடிதங்களை எதிர் பார்க்கிற அளவில் இவர் களுடைய ஆவல் நன்றாகவே இருக்கிறது. இப்படித் தாங்கள் கடிதங்களை எதிர்பார்ப்பதுபோல், மற்றவர்களும் தங்களிடமிருந்து கடிதங்களை எதிர்பார்ப்பார்க ளென்பதை இவர்கள் உணராமலிருப்பதில்லை. எனவே, கடிதங் களைப் பெறுவதில் இவர்களுக்குள்ள ஆவல், கடிதங்கள் எழுத வேண்டுமென்ற ஆர்வத்தை உண்டு பண்ணுகிறது. இப்படிப் பரபர கடித வரத்துப் போக்கில் இவர்கள் காட்டும் உற்சாகத்திற்கு எல்லை கட்டிக் காட்ட முடியாது. பொதுவாகக் கடிதங்களைச் சிறகு படைத்த தூதர்கள் என்று சொல்வார்கள். ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்துப் பேசிக் கொள்ள முடியாத நிலையில் இந்தத் தூதர்கள், மூலம் பேசிக் கொள்வதென்பது, சாதாரண பழக்கமாக ஆதிகாலந் தொட்டு இருந்து வந்திருக்கிறது. ஆரம்பத்தில், கடிதங்கள் எழுதுவதற்கு, மரப்பட்டைகள், தோல்கள், செம்பு முதலிய உலோகங்களினால் தயாரிக்கப் பெற்ற தகடுகள், ஆகிய பலவும் பயன்படுத்தப் பெற்றன. பிறகு ஓலை வகைகள் உபயோகிக்கப் பெற்றன. கடைசியில் காகிதம் வந்தது. இஃது இருக்கட்டும். கடிதங்களைப் பெற வேண்டுமென்பதிலும், கடிதங்கள் எழுத வேண்டுமென்பதிலும் ஏன் எல்லோருக்கும் ஆவல்? ஆர்வம்? உற்சாகம்? பிறருடைய உள்ளத்தைக் காண்பதற்கும், பிறருக்குத் தங்கள் உள்ளத்தைக் காட்டுவதற்கும், கடிதங்கள் துணைக் கருவி களாயிருக்கின்றன. ஒருவர் எழுதும் கடிதத்தில்தான் அவருடைய ஆத்மாவை அசல் வடிவத்தில் காண முடியும் என்ற வாசகம் இங்குச் சிந்திக்கற்பாலது. ஓர் ஆண் மகனையும் ஒரு பெண் மகளையும் இணைத்து வைப்பது காதலென்றால், அந்தக் காதலை வளர்த்துச் செழிப்புண்டு பண்ணும் சக்தி கடிதங்களுக்குண்டு என்பதை யாரே மறுக்க முடியும்? காதலர்களிடையே கடிதப் போக்குவரத்து எப்பொழுது நிகழ்கிறது? ஒருவரையொருவர் சந்தித்துப் பேசுகின்ற வாய்ப்பு அகன் றிருக்கிற நிலையில்தான் நிகழ்கிறது. நேரில் சந்திக்கிறபொழுது எப்படி மனந்திறந்து பேசுவார்களோ அப்படியே கடிதத்தின் மூலம் பேசிக் கொள்கிறார்கள்; பேசித் தங்கள் தனிமையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்; அதே சமயத்தில் இனிமையையும் நுகர் கிறார்கள் காதலர்கள், பரபரம் கடிதங்களை எதிர்பார்த்து, பசி, தாகம், தூக்கம் எல்லாவற்றையும் துறந்து நிற்பதைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கிறோமில்லையா? அநேகமாகக் காதற் கடிதங்கள், தனிமை யிலே எழுதப்படுகின்றன, தனிமையிலே படிக்கப்படுகின்றன. சிலர்,ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிற காரணத்தி னால், கடிதங்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இவர்களுடைய கடிதங்களில் ஒருவித ரத்தபாசம் ஊடுருவிச் செல்வதைக் காணலாம். இந்த ரத்த பாசம், புதிய உறவினால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது பரம்பரையாக வந்து கொண்டிருக்கும் உறவினால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம். இந்த மாதிரியான கடிதங்களைப் பொதுவாகக் குடும்பக் கடிதங்கள் என்று சொல்லுதல் பொருந்தும். முன்பின் பார்த்துப் பரிச்சயம் பெற்றிராதவர்களிடையிலும் கடிதப் போக்குவரத்துக்கள் நடைபெறுவதுண்டு. இவர்கள் நேரில் சந்தித்திரா விட்டாலும், ஒருவர் கொண்டிருக்கும் கொள்கைகளை மற்றொருவர் ஏதோ ஒரு வகையில் அறிந்து கொண்டிருப்பர் என்றாலும் இந்தக் கருத்துக் களுக்கு அல்லது கொள்கைகளுக்கு, எழுத்து மூலம் விளக்கம் பெற வேண்டிய அல்லது விளக்கம் தர வேண்டிய அவசியம் சில சந்தர்ப்பங் களில் இருவருக்கும் ஏற்பட்டு விடுகிறது. அப்பொழுது கடிதங்களைப் பரிமாறிக் கொள்கின்றனர், இத்தகைய கடிதங்களில், ஒருவருடைய அறிவுப் பெருக்கம், மனப்பக்குவம், பலதுறை அனுபவங்கள் ஆகிய வற்றைப் பரக்கக் காணலாம். இவற்றில் பெரும்பாலான கடிதங்கள், அமர முத்திரை பெற்று மானிட சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் அணையா விளக்குகளாய் இருக்கும். பரபரம் பகைமை கொண்டவர்களும் கடிதங்கள் மூலம் பேசிக் கொள்வதுண்டு. இப்படிப்பட்ட கடிதங்களில், மனிதப் பண்புகள் குறைந்து காணப்படும்; இறுமாப்பு, பேராசை, வன்ம உணர்ச்சி ஆகிய கீழான உணர்ச்சிகள் மேலோங்கிக் காணப்படும். சுதந்திரமா, அடிமைத்தனமா என்ற கேள்வி கேட்கிறவர்கள், அந்தக் கேள்விக்கு விடை தருகிறவர்கள் ஆகிய இரு சாராருக்கு மிடையிலும் கடிதப் போக்குவரத்துக்கள் நடைபெறுவதுண்டு. இத்தகைய கடிதங்களில், ஆதிக்க சக்தியின் ஆரவாரத்தைக் கேட்கலாம்; அதே சமயத்தில் சுதந்திர சக்தியின் நெஞ்சுறுதியைக் காணலாம். முந்திய சக்தியின் எண்ணிக்கைப் பலத்தைக் கண்டு நாம் மலைத்துப் போகிறோம்; பிந்திய சக்தியின் ஆன்ம பலத்தைக் கண்டு வியந்து போற்றுகிறோம். இந்தப் பிந்திய இருவகைக் கடிதங்கள், ஒரு நாட்டின் சுதந்திரப் போக்கையோ, ஒரு சமுதாயத்தின் வாழ்க்கைப் போக்கையோ மாற்றி விடுவதற்கு மூல காரணங்களாயமைகின்றன. இப்படிக் கடிதங்களில் பலவகையுண்டு. ஒவ்வொரு வகையி லும் ஒவ்வொரு விதமான ருசியுண்டு. இவை, எந்தெந்தக் காலத்தில், எந்தெந்தச் சூழ்நிலையில் எழுதப் பட்டனவோ, அந்தந்தக் காலத்தை யும் அந்தந்தச் சூழ்நிலையையும் முறையே பிற்காலத்தவர் அறிந்து கொள்வதற்கு உதவியாயிருக்கின்றன. பொதுவாகக் கடிதங்கள், ஒருவருடைய உள்ளத்தில் அவ்வப் பொழுது ஏற்படக்கூடிய உணர்ச்சிகள், எண்ணங்கள் முதலிய வற்றைப் பிரதிபலித்துக் காட்டக்கூடிய கண்ணாடிகள், இருவருடைய உள்ளங்களை இணைத்து வைக்கும் பாலங்கள்; செயலில் இறங்கத் துணிந்து விட்டவர்களின் மனத்தில் உருவாகியிருக்கும் திட்டங் களை ஒருவாறு அறிவிக்கும் முன்னோடிகள். ஆதி காலந்தொட்டு எத்தனையோ விதமான மனிதர்கள் எத்தனையோ விதமான கடிதங்கள் எழுதிவந்திருக்கிறார்கள். காதலர்கள் பரிமாறிக் கொள்ளும் கடிதங்களை ஒரு பக்கமாக, வைத்துவிட்டுப் பார்த்தோமானால் ஆண்டியும், அரசனும் அதி மேதையும் ஆதிசூரனும், தன்னலம் பேணுகின்றவனும் பிறர்நலத்திற் காக வாழ்கின்றவனும், இப்படிப் பலவகையான பேர், பலவிதமான சூழ்நிலைகளிலிருந்து கொண்டு கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். இவர்களிற் சிலருடைய கடிதங்கள், புண்பட்ட மனத்தினருக்கு ஆறுதல் அளிக்கின்றன. சிலருடைய கடிதங்கள், அறிவிழந்து விட்டதன் விளைவாகச் செயல் தடுமாறி நிற்பவர் களுக்கு அறிவுரை புகட்டி, செயல் புரியும் ஆற்றலைக் கொடுக்கின்றன. சிலருடைய கடிதங்கள், மறநெறியில் செல்வோரை அறநெறிக்குத் திருப்பி விடுகின்றன. சிலருடைய கடிதங்கள், மற்றவர்களுடைய இரக்க உணர்ச்சிக்கு விண்ணப்பித்துக் கொள்கின்றன. அதிகார வெறியிலே, கிறுக்கப்பட்ட கடிதங்கள் எத்தனை! அந்த வெறிக்குப் பணிந்து போக மறுத்து எழுதப்பட்ட கடிதங்கள் எத்தனை! ஏதோ ஒரு தொடர்பினால் ஏற்படுகின்ற பாசம், சிறைவாசத்தினால் பெறுகின்ற அனுபவம், தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்படுகிற போது உண்டாகிற எண்ணங்களின் மோதல், இப்படிப் பலவற்றையும் சித்தரித்து நம் அகக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்ற கடிதங்கள் எத்தனை! சுருக்கமாகச் கூறுமிடத்து, இந்தக் கடிதங்கள், பல தரத்து மனிதர்களுடைய உள்ளப் பாங்குகளை அறிந்து கொள்ள உதவி செய்கின்றன. இங்ஙனம் பலரால் பலதரப்பட்ட கடிதங்கள் காலந்தொட்டு எழுதப்பட்டு வந்திருக்கிற போதிலும், இவற்றுள் ஒரு சிலவே, நூற்றுக் கணக்கான கடிதங்களே இலக்கிய ஏடுகளில் நிலையான இடம் பெற்றிருக் கின்றன. இந்த நூலில், இருபது கடிதங்கள் காணப்பெறும், இவற்றைக் கால வரிசையில் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு கடிதத்திற்கும் முகவுரையாக, கடிதம் பரிமாறிக் கொண்டவர்களைப் பற்றியும், ஏன், எதற்காக, எந்தச் சூழ்நிலையில் கடிதம் எழுதப்பட்ட தென்பதைப் பற்றியும் சுருக்கமாக குறிப்பிட்டிருக்கிறேன். இவை, கடிதங்களைச் சுவைத்துப் படிக்க, வாசகர்களுக்கு உபயோகமா யிருக்கும் என்று நம்புகிறேன். இந்த நூலிலுள்ள ஒரு சில கடிதங்கள் கல்கி பத்திரிகையில் வெளிவந்தவை. அப்பத்திரிகை ஆசிரியருக்கு என் நன்றி. வெ. சாமிநாதன் 1. துறவிக்கு வேந்தன் துரும்பு டையோஜெனீ1 என்பவன் ஒரு கிரேக்க ஞானி. இளமையில் ஸாக்ரட்டீஸின்2 சீடனாகிய ஆண்டி தெனீ3 என்பவனிடம் கல்விபயின்றவன். வறுமை வாழ்க்கையை தானே வலிய மேற் கொண்டான். கந்தையே உடுத்துவான். ஒருநாளின் பெரும் பொழுதை, நீர்த்தொட்டி ஒன்றில் உட்கார்ந்து கழிப்பான். ஒரு சமயம் இவன் ஆத்தென்4 நகரத்திலிருந்து எஜினா தீவு5க்கப்பால் கப்பலில் சென்று கொண்டிருந்தான். வழியில் கடல் கொள்ளைக்காரர்களிடம் அகப்பட்டுக் கொண்டுவிட்டான். அவர்கள் இவனை ஒரு சீமானுக்கு அடிமையாக விற்றுவிட்டார்கள். அந்தச் சீமான் இவனை விடுதலை செய்து விட்டான். டையோ ஜெனீ, பகல் நேரங்களில் எரியும் விளக்கொன்றைக் கையில் பிடித்துக் கொண்டு, எதையோ தேடுவதுபோல் வீதிகளிலும் சந்து பொந்துகளிலும் சுற்றித் திரிந்து கொண்டிருப்பான். ‘gfš neu¤âš És¡nf‰¿¡ bfh©L v‹d njL»whŒ? என்று யாராவது கேட்டால் நேர்மை யுள்ள ஒரு மனிதனைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று பதிலளிப்பான். வெளித் தோற்றத்துக்கு ஒரு பைத்தியக்காரனைப் போல் நடந்து கொண்ட இந்த ஞானி புலனடக்கம் பெற்றவன்; சுக துக்கங்களுக்கு அப்பாற்பட்டவன்; சமுதாய சம்பிரதாயங்களுக்குப் புறம்பானவன்; யாருக்கும் அஞ்சான்; எதற்கும் அஞ்சான். இவனைப் பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசத் தலைப்பட்டனர். ஒருசமயம், மகா அலெக்ஸாந்தர்6 இவனைப் பார்க்க விரும்புவதாக அரிட்டிப்ப7 என்ற தன் நண்பனிடம் சொன்னான், அவனும் அலெக் ஸாந்தரின் விருப்பத்தை ஒரு நண்பன் மூலம் டையோஜெனீஸுக்குத் தெரிவித்தான். அதற்கு இவன் - டையோஜெனீ - பின் வரும் கடிதத்தை அரிட் டிப்பஸுக்கு எழுதினான்;- அரிட்டிப்பஸுக்கு, மாஸிடோனியாவின் அரசனாகிய அலெக்ஸாந்தர் என்னைக் காண மிகவும் ஆவலுடையவனாக இருக்கிறான் என்று சொல்லி யனுப்பி யிருக்கிறாய்... அவனுக்கு அரசன் என்ற பட்டத்தை நீ கொடுத்திருப்பது நல்லதுதான். மாஸிடோனியர்கள் எப்படிப் பட்டவர்களாயிருந்தாலும் எனக்கென்ன? நான் யாருடைய பிரஜையும் இல்லை. அவனுக்கு - அந்த அலெக்ஸாந்தர் என்னும் அரசனுக்கு - என்னையும் என் வாழ்க்கைப் போக்கையும் அறிந்து கொள்ள விருப்பமிருக்குமாயின் அவன் இங்கே வரட்டும் அவன் தன்னுடைய மாஸிடோனியா, ஆத்தென்ஸுக்கு வெகு தூரத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பது போல், நான் என்னுடைய ஆத்தென், மாஸிடோனியாவுக்கு வெகுதூரத்தில் இருப்ப தாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் கடிதத்தின் செய்தியை அலெக்ஸாந்தர் அறிந்ததும், டையோஜெனீஸைப் பார்க்க வேண்டு மென்ற அவனுடைய விருப்பம் அதிகமாயிற்று. ஆனால் சரியான சந்தர்ப்பம் ஏற்படவில்லை. ஒரு சமயம் எதிர்பாராதவிதமாக இருவரும் ஆத்தென் நகரத்தில் சந்திக்கும்படி நேரிட்டது. அப்பொழுது அலெக்ஸாந்தர், டையோ ஜெனீஸைப் பார்த்து, ‘தங்களுக்கு நான் எந்த விதத்தில் உதவியாயிருக்கக் கூடும்? என்று கேட்டான். அதற்கு டையோஜெனீ என் மீது சூரிய வெளிச்சம் பட்டுக் கொண்டிருக்கிறது. அதை மறைத்துக் கொண்டு குறுக்காக நிற்காதே; சிறிது விலகியிரு என்று கூறினான். இதைக் கேட்டு அலெக்ஸாந்தர் திகைத்துப் போய், நான் அலெக்ஸாந்தரா யில்லாமலிருந்தால் டையோஜெனீஸாகவே இருக்க விரும்புவேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அப்பால் நகர்ந்து போய் விட்டான். 2. மிடுக்கும் துடுக்கும் கிறிது சகம் தொடங்குவதற்கு மூன்று நூற் றாண்டுகள் முன்பு வரை பாரசீக ஏகாதிபத்தியம் உன்னத வாழ்வு நடத்தி வந்தது. ஏறக்குறைய மத்திய ஆசியா முழுதும் அதன் ஆதிக்கத்துக்குட்பட்டிருந்த தென்று சொல்லலாம். இத்தகைய பாரசீகத்தின்மீது கி.மு. 334ஆம் வருஷம் மகா அலெக்ஸாந்தர் படை யெடுத்து வந்தான். அப்பொழுது மூன்றாவது டேரிய1 என்பவன் பாரசீகத்தை ஆண்டு வந்தான். தன்னுடைய ஆதிக்கச் சக்தியில் பெரு நம்பிக்கை கொண்டவன் இவன். அலெக்ஸாந்தர் படையெடுத்து வருகிறான் என்று தெரிந்ததும், அவனுக்கு எச்சரிக்கை செய்கிற முறையில் பின்வரும் கடிதத்தை எழுதி யனுப்பினான்:- மன்னாதி மன்னனாகிய டேரிய, அலெக்ஸாந்தருக்கு எழுதுவது. வானுலக அரசராகிய கடவுள் இந்த நிலவுலக சாம்ராஜ்யத்தை எமக்கு அருளியிருக்கிறார். அந்தக் கடவுள் இந்த உலகத்து நான்கு திசைகளையும் எம்முடைய ஆதீனத்தில் ஒப்படைத் திருக்கிறார். மற்றும் அந்த ஆண்டவன் எமக்குப் பெரும் புகழையும் உயர்ந்த அந்ததையும் அருளும் சக்தியையும் அளித்துக் கூடவே ஆயிரக்கணக்கான வீரர்களையும் உடன் கூட்டத்தாரையும் உதவியிருக்கிறார். இந்த உண்மைகளை, கள்வர் கூட்டத்தின் தலைவனாகிய அலெக்ஸந்தர் அறியட்டும். நீ, கள்வர்களையும் கீழ் மக்களையும் பெருங் கூட்டத்தின ராகத் திரட்டியிருக்கிறாய் என்றும், அவர்களைத் கண்டு உனக்கு மகிழ்ச்சி பொங்கியிருக்கிறதென்றும், அவர்களுடைய உதவியைக் கொண்டு எம்முடைய மகுடத்தையும், சிங்காதனத்தையும் அபகரித்துக் கொள்ளவும், எமது ராஜ்யத்தைச் சீர்குலைக்கவும், எமது நாட்டையும் மக்களையும் அழிக்கவும் முற்பட்டிருக்கிறா யென்றும் அறிகிறோம். ஆழ்ந்து சிந்தியாது இப்படி நீ முற்பட் டிருப்பது, அறிவுப் பக்குவம் பெறாத ஐரோப்பிய மக்களின் தன்மைக்குப் பொருந்துவதாகவே இருக்கிறது. இப்பொழுது நீ செய்ய வேண்டியது என்னவென்றால், இந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன், எந்த இடத்துக்கு வந்திருக்கிறாயோ, அந்த இடத்திலிருந்து உடனே திரும்பிப்போய் விடவேண்டும். அதுதான் உனக்கு நல்லது. படை திரட்டிக்கொண்டு வந்த குற்றத்திற் காக நாம் உன்னைத் தண்டிக்க மாட்டோம். பயப்பட வேண்டாம் எம்மால்பழி வாங்கப்படு வதற்கோ எம்முடைய தண்டனையைப் பெறுவதற்கோ நீ இன்னும் தகுதி பெறவில்லை. இதோ பார்! ஒரு பெட்டி நிறையத் தங்கமும் ஒரு மூட்டை எள்ளும் அனுப்பியிருக்கிறோம். இவைகளைக் கொண்டு எமது பண பலத்தையும் அதிகார பலத்தையும் நீ தெரிந்து கொள்ளலாம். தவிர, ஒரு சாட்டையும் பந்தும் அனுப்பியிருக்கிறோம். நீ விளையாட்டுப் பிள்ளை ஆதலால், நீ விளையாடுவதற்காக பந்தை அனுப்பி யிருக்கிறோம். நீ தண்டனைக் குரியவன் என்பதற்காகச் சாட்டையை அனுப்பியிருக்கிறோம். இந்தக் கடிதத்தைக் கண்டு அலெக்ஸாந்தருக்கு மகா கோபம் வந்து விட்டது. கடிதம் கொண்டு வந்த தூதர்களைச் சிரச்சேதஞ் செய்து விடும்படி உத்தர விட்டான். ஆனால் ஆதானிகர்கள், தூதர்களைக் கொல்வது தருமமல்ல என்று சொல்ல, உத்தரவை ரத்து செய்துவிட்டு அந்தத் தூதர்களிடம் பின்வரும் பதில் கடிதத்தைக் கொடுத்து அனுப்பினான்:- மன்னாதி மன்னன் என்று பாசாங்கு செய்து கொண்டிருக்கிற வனுக்கு, அலெக்ஸாந்தர் எழுதுவது: தன்னைக் கண்டு வானுலகத் தோரெல்லாம் பயந்து நிற்பதாகச் சொல்கிறவனும், உலகத்து மக்கள் எல்லாரும் தன்னிடமிருந்து அறிவு பெறுவதாகச் சொல்கிற வனுமான டேரிய, அலெக்ஸாந்தர் என்னும் கேவலமான ஒரு சத்துருவினிடம் ஏன் பயப்பட வேண்டும். அவன் கௌரவத்துக்கு ஏற்குமா? இதோ பார்! நான் உன்னைப் போர்களத்தில் சந்திக்கத் தீர்மானித்து விட்டேன். உன் ராஜ்யத்தின் மீது படையெடுத்து வரப்போகிறேன். நான் ஆண்டவனுடைய பணிவான ஊழியன். அவன் ஒருவனுக்குத்தான் என் தலை வணங்கும். எனக்கு வெற்றி வாங்கித் தருமாறு அவனை இறைஞ்சு கின்றேன். அதிகார தோரணையில் நீ அனுப்பிய கடிதத்துடன் ஒரு சாட்டை, ஒரு பந்து, ஒரு பெட்டி நிறையத் தங்கம், ஒரு மூட்டை எள்ளு ஆகிய இவைகளை அனுப்பியிருக்கிறாய். இவை எனக்கு வரப்போகிற அதிருஷ்டத்தின் அறிகுறிகள் என்றும், நான் அடையப் போகிற வெற்றி களை அறிவிக்கும் நல்ல சகுனங்கள் என்றும் கருதுகிறேன். நீ அனுப்பி யிருக்கும் சாட்டை, உன்னைத் தண்டிக்கவும், உன்னை நல் வழிப் படுத்தவும் உபயோகப்பட வேண்டிய கருவி என்பதைத் தெரிவிக்கிறது. நீ அனுப்பியிருக்கிற பந்து, உருண்டையா யுள்ள இந்தப் பூமி முழுவதும் என்னுடைய பிரதிநிதிகளின் ஆதிக்கத்துக்குட்படப்போகிறது என்பதை ருசிப்பிக்கிறது. ஒரு பெட்டி நிறையப் பணம் அனுப்பியிருக்கிறாயே, அது, உன்னுடைய பொக்கிஷம் முழுவதும் என் வசப்படப் போகிறது என்பதை அறிவிக்கிறது. ஒரு மூட்டை எள் அனுப்பியிருக்கிறாய். அதை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்க்கிற போது அதிகமாகத்தான் இருக்கிறது. ஆனால் தொட்டுப் பார்த்தால் மிருதுவாக இருக்கிறது. உட்கொண்டால் அதிகத் தீங்கு விளைவிக்காது. நீ அனுப்பியவைகளுக்குப் பிரதியாக நான் உனக்கு ஒரு பை நிறைய கடுகு அனுப்பியிருக்கிறேன். அதைச் சுவைத்துப் பார்த்து, உன் மீது நான் அடையப் போகிற வெற்றி எவ்வளவு கசப்புடைய தாக இருக்கும் என்பதை நீ நன்கு அறிந்து கொள்ளலாம். இதற்குப் பிறகு பாரசீகப் படைகளும் கிரேக்கப் படைகளும் இஸ2 என்ற இடத்தில் கி.மு. 331-ஆம் வருஷம் சந்தித்தன. இப்படிச் சந்தித்தது, இரண்டு மகா சமுத்திரங்களிலிருந்து சீறி எழும் அலைகள் மோதுவது போலவும், இரண்டு பெரிய இரும்பு மலைகள் முட்டிக் கொள்வது போலவும் இருந்ததென்று ஒரு சரித்தி ராசிரியன் வர்ணிக்கிறான். அவ்வளவு மும்முரமாகப் போர் நடைபெற்றது. கடைசியில் பாரசீகப் படைகள் தோல்வியடைந்தன. டேரிய மன்னன் போர்க்களத்தி லிருந்து தப்பியோடிப் போனான். ஆனால் அவனுடைய மனைவியும் மக்களும் கிரேக்கர்கள் வசம் அகப்பட்டுக் கொண்டனர். இந்த நிலையில் டேரிய மன்னன் என்ன செய்வான்? அலெக்ஸாந்தரிடம் சமாதானம் கோரினான். தன் ராஜ்யத்தில் பாதியைக் கொடுத்து விடுவதாகக் கூறினான். அலெக்ஸாந்தர் இதற்கு இசைய வில்லை. டேரியஸுக்குப் பின்வரும் பதிலை அனுப்பினான்:- டேரியஸுக்கு அலெக்ஸாந்தர் எழுதுவது: உன் பெயர் கொண்ட டேரிய3 என்பவன், அநேக ஆண்டுகளுக்கு முன்பு, கிரீஸின் மீது படையெடுத்து வந்து, நகரங்கள் பலவற்றை அழித்து விட்டான். அதற்குப் பிறகு, முதலாவது ஜெர்கஸ4 மன்னன் தலைமையில் இரண்டாவது முறையாகப் பாரசீகப் படைகள் கிரீஸை நோக்கி வந்து, செழிப்பான பிரதேசங்கள் பலவற்றைப் பாழ்படுத்தி விட்டுப் போயின. இவையெல்லாம் போகட்டும். என் தந்தை பிலிப்பைக்5 கொலை செய்தவர்கள் யார்? உன்னுடைய கையாட்களே ஏராள மான பணம் கொடுப்பதாகச் சொல்லி அவர்களை இந்த இழி செயலைச் செய்யும்படி தூண்டினாய். அநியாயமாக இந்த யுத்தத்தைத் தொடங்கி, கோழைத் தனமாக நடத்துகிறாய். யாராரிடம் நீ பயம் கொண்டிருக்கிறாயோ, அவர்களை ரகசியமாகச் சிறைப்படுத்திக் கொலை செய்துவிட முயற்சி செய்கிறாய். உனக்குப் பின்பலமாக ஒரு பெரும்படை இருந்த போதிலும், அதனை நீ தலைமை தாங்கி நடத்திய போதிலும், என்னை கொலை செய்கிறவர்களுக்கு ஆயிரம் பொன் சன்மானம் அளிப்பதாகப் பிரகடனம் செய்திருக்கிறாய். இதிலிருந்து நீ ஒரு கோழை என்று தெளிவாகிறது. இப்பொழுது நான் உன்மீது தொடுத்திருக்கும் யுத்தம் என்னைத் தற்காத்துக் கொள்வதற்கேயாகும். கடவுள் எனக்கு வெற்றியருள்வார். அதன் மூலம் நான் யுத்தம் தொடுத்தது நியாயம் என்று தெரியப் போகிறது. இஸ போர்களத்தில் உன்மீது நான் வெற்றி கொண்டேன். ஆதலால் உன் சமாதானக் கோரிக்கைக்கு இணங்க நான் எந்த விதத்திலும் கட்டுப் பட்டவன் அல்லன். ஆயினும் உன்னுடைய தற்போதைய நிலைமையை மனத்தில் கொண்டு, நீ என்னை அணுகுவாயானால், எவ்வித நிபந்தனையும் இல்லாமல் உன் மனைவி மக்களை விடுதலை செய்விக் கிறேன். யார்மீது நான் வெற்றி கொள்கிறோனோ அவர்களை எப்படிக் கண்ணியமாக நடத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நீ என்னிடம் வருவாயானால் உன் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது. அப்படி ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று நீ சந்தேகிக்கும்பட்சத்தில், உன்னை அழைத்து வர நான் என்னுடைய ஓர் ஆளை அனுப்பி வைக்கிறேன். நீ இங்கே வந்த பிறகும், அவனை உனக்குப் பின்னால் இருந்து கொண்டு உன்னைப் பாதுகாத்து வரும்படி செய்கிறேன். நீ இங்கே வருவதற்கு முன்பு எனக்குக் கடிதம் எழுதுவதா யிருந்தால், அரசனாகிய அலெக்ஸாந்தருக்கு எழுதுவதாக நினைத்து எழுதாமல், உனக்கு அரசனாகிய அலெக்ஸாந்தருக்கு எழுதுவதாக நினைவில் பதிய வைத்துக் கொண்டு எழுது. அலெக்ஸாந்தர் எதிர்பார்த்தபடி டேரிய அவனை அணுகவில்லை. எனவே இருவருடைய படை களும் காகமேலா6 என்ற இடத்தில் கி.மு. 331ஆம் வருஷம் மீண்டும் சந்தித்தன. அலெக்ஸாந்தரின் படை வெற்றி கண்டது. டேரிய போர்க்களத்திலிருந்து தப்பியோட அவனை அலெக்ஸாந்தர் துரத்திக் கொண்டு சென்றான். ஆனால் வழியில் டேரிய அவனுடைய தளபதிகளில் ஒருவனாலேயே கொலை செய்யப்பட்டு விட்டான். பாரசீக ஏகாதிபத்தியத்தின் பெருவாழ்வும் மங்கிவிட்டது. 3. துக்கம் தவிர் ப்ளூட்டார்க்1 என்ற கிரேக்க அறிஞன்,கிரேக்க ரோம இதிகாசங்களில் புகழ் பெற்றிருந்த பலருடைய வாழ்க்கை வரலாறுகளைக் கட்டுரை வடிவத்தில் சுவை பட எழுதியிருக்கிறான். தவிர அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய அநேக கட்டுரைகள் எழுதித் தன் பரந்த மனப்பான்மையையும் உலக அனுபவத்தையும் வெளிப் படுத்தியிருக் கிறான். இவனுக்கு நான்கு ஆண் குழந்தை களும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. பெண் குழந்தையின் பெயர் டிமோக்ஸேனா2 விளையாட்டுப் பருவத்திலேயே இறந்து விட்டது. அப்பொழுது இவன் ஊரில் இல்லை. வெளியூருக்குச் சென்றிருந்தான். குழந்தையின் மரணச் செய்தியைக் கேள்வியுற்றதும், தன் மனைவிக்கு ஆறுதல் அளிக்கின்ற முறையில் ஒரு கடிதம் எழுதினான். அதன் சில பகுதிகள் வருமாறு:- என் வாழ்க்கைத் துணைவியே! நமது அருமை மகள் இறந்து விட்ட செய்தியை எனக்குத் தெரிவிக்கும்படி நீ அனுப்பிய ஆள், என்னை வந்து பார்க்கவில்லை; எங்கேயோ வழி தவறிப் போய் விட்டான் போலிருக்கிறது. ஆதலால், நான் டானக்ரா3 என்ற ஊருக்கு வந்த பிறகுதான், குழந்தையின் மரணத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன். ஏற்கனவே ஈமச்சடங்கு நடைபெற்று முடிந்திருக்கலாம். அது சம்பந்தமான ஏற்பாடுகள், உனக்கு, இப்பொழுதோ, பிறகோ, குறைந்த அளவு துயரத்தைக் கொடுக்கக் கூடியனவாக இருந் திருக்க வேண்டுமென்று விரும்பு கிறேன். இன்னும் சில சடங்கு களைச் செய்தால், உன் துயரம் குறையும் என்று நீ கருதும் பட்சத்தில் அப்படியே செய்துவிடு. என் அனுமதிக்காகக் காத்திராதே. ஆனால் ஆடம்பரமான சடங்குகளும், அர்த்தம் இல்லாத சடங்குகளும் தவிர்க்கப்பட வேண்டும். அவை களுக்கு நீ இடங்கொடுக்க மாட்டாய் என்பது எனக்குத் தெரியும். நமக்கு வரிசையாக நான்கு ஆண் குழந்தைகள் பிறந்த பிறகு ஒரு பெண் குழந்தை வேண்டுமென்று நீ ஆசைப்பட்டாய். அப்படியே ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவள் உனக்கு எவ்வளவு அருமையானவளா யிருந்தாள் என்பது எனக்குத் தெரியும். அவள் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தி வந்தாள். தனக்குப் பால் கொடுக்கும் தாதியைக் கொண்டு மற்றக் குழந்தைகளுக்கும் பால் கொடுக்கச் செய்வாள். அதுமட்டுமன்று; தன்னுடைய விளை யாட்டுப் பொம்மை களுக்கும் பால் கொடுக்கச் செய்வாள்! தன் னோடு விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை, தன்னுட னிருந்து சாப்பிட வேண்டுமென்று வற்புறுத்துவாள்; தனக்குப் பிரியமானவைகளை யெல்லாம் அந்தக் குழந்தைகள் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று விரும்புவாள்; தனக்கு மகிழ்ச்சி தருகிற எல்லாவற்றையும் மற்றவர்களும் அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்படுவாள். அவளுடைய இந்த மாதிரியான சுபாவங்க ளெல்லாம், அவள் உயிரோடிருந்தபோது நமக்குப் பெருமகிழ்ச்சி யளித்தன. இப்பொழுது அவற்றை - அந்தச் சுபாவங்களை - நினைத்து நாம் ஏன் துக்கப்பட வேண்டும்? நம்முடைய சென்றகால மகிழ்ச் சியை நிகழ்கால துக்கத்திலே இழந்துவிடக் கூடாது. துக்கம் விசாரிக்க வந்தவர்கள் முன்னிலையில் நீ உன் துக்கத்தை மிகைப்படுத்திக் காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொண்டிருந்தா யென்றும், பிரேத அடக்கச் சடங்குகள் யாவும், அமைதியாகவும் சீராகவும் நடைபெறச் செய்தாய் என்றும் கேள்விப் பட்டேன். இதைக் கேட்டு நான் ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால் எந்தக் காலத்திலும், எந்த நிலையிலும் நீ ஆடம்பரத்தையும் வெளிப் பகட்டையும் விரும்பாதவள் என்பது எனக்குத் தெரியும். சீலமுள்ள ஒரு திரீ, எப்படிக் களியாட்டங்களில் நிதானம் தவறாமல், இருக்க வேண்டுமோ அப்படியே துக்கம் நேரிடுகிற போதும் நிதானம் தவறாமல் இருக்க வேண்டும். எப்பொழுதுமே துக்கத்தை அதிகமாகக் கொண்டாடக் கூடாது. அப்படிக் கொண்டாடினால் பிறகு அது நம்மை விட்டுப் போகவே போகாது. நித்தமும் துக்கப்பட்டுக் கொண்டிருக்க வேண் டியதுதான். துக்கத்தை மிதமிஞ்சிக் கொண்டாடுவதனால், நமது சக்தி குன்றிப் போகிறது; குறுகிய மனப்பான்மை உண்டாகிறது; மகிழ்ச்சி யென்பது மறைந்து போகிறது. மற்றும், துக்கத்தை அதிக மாகக் கொண்டாடுவதனால், நமது உடல் நலம் குன்றி விடுகிறது. உண்மையில் துக்கம் வந்து தாக்கினால், அதைத் தாங்கிக் கொள்ள, தேகத்தைத் திடமாக வைத்துக் கொள்ள வேண்டும். தேகமானது எவ்வித அசைவுக்கும் உட்படாமல் ஒரே நிதானத்துடன் இருக்கும் பட்சத்தில், துக்கம் வந்து தாக்கினாலும் அது கூர் மழுங்கின தாகப் போய்விடுகிறது. அதன் கடுமை குறைந்து போகிறது. அதற்கு மாறாகத் தேகத்தை நாம் கண்டபடி உபயோகித்தோமானால் அற்ப சொற்பமாக ஏற்படுகிற துக்கத்தினால்கூட, அது மிகவும் பாதிக்கப் பட்டு விடுகிறது. ஆகையால் தேக நலனை முன்னிட்டு, துக்கத்தை ஒரு வரம்புக் குட்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இதில் பயங்கரமான விஷயம் என்னவென்றால், புத்தி கெட்ட சில திரீகள் துக்கம் விசாரிப்பதாகச் சொல்லிக் கொண்டு வந்து, ஓவென்று அலறி அழுது, ஒருவாறு தணிந்து போயிருக்கிற துக்கத்தைக் கிளறி விடுவதுதான். இவர்கள் இப்படி வந்து கிளறிக் கொடுக்காதிருந்தால் அந்தத் துக்கம், தானாகவோ, வேறு காரணங்களினாலோ தணிந்து போகும். யாராவது ஒருவருடைய வீட்டில் நெருப்புப் பற்றி எரிந்து ண்டிருந்தால், உடனே அண்டை அயலிலுள்ளவர்கள் சீக்கிரமாகவும் வேகமாகவும் வந்து அந்த நெருப்பை அணைக்க முயல்கிறார்கள். ஆனால் ஆத்மா பற்றி எரிகிறபோது, அதை - அந்த எரிச்சலை- மேலும் வளர்த்து இன்னல் கொடுக்கிறார்கள். இதனால், காலக்கிரமத்தில் குறைந்து போக வேண்டிய அந்த துக்கம் வலுப்பெற்றுத் தீராத வேதனையைத் தந்து கொண்டிருப்ப தாகி விடுகிறது. இந்த மாதிரியெல்லாம் உன் விஷயத்தில் ஏற்படாதபடி நீ ஜாக்கிரத்தையுடன் இருக்கவேண்டும். இப்பொழுது நமது துக்கத்துக்குக் காரணமாயுள்ள குழந்தை பிறக்காதிருந்ததற்கு முன்பு, நாம் எப்படியிருந்தோம் என்பதை நினைத்துப் பார். குழந்தை பிறக்கவில்லையே என்பதற்காக நம் அதிருஷ்டத்தை நொந்து கொண்டோமா? வருத்தப்பட்டோமா? இல்லையே. இப்பொழுது அந்த நிலைமையில்தான் நாம் இருக்கி றோம். அப்பொழுது வருத்தப்படாமல் இருந்ததைப்போல் இப் பொழும் இருப்போமாக! அந்தக் குழந்தை நம்மோடு இருந்த இரண்டு வருஷ காலத்தில் நாம் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்தோம். அந்த இன்பகரமான காலத்தை நம் நினைவிலிருந்து எந்தக் காரணத்தை முன்னிட்டும் அப்புறப்படுத்தி விடலாகாது. நமக்குக் கிடைத்த சிறிய நன்மையைப் பெரிய தீமையாகக் கருதிக் கொண்டுவிடக் கூடாது. அப்படியே, நாம் எதிர் பார்த்த அளவுக்கு அதிருஷ்டம் நம்மிடம் வராவிட்டால், அதற்காக, சொற்ப அளவில் வந்த அதிருஷ்டத்துக்கு நாம் நன்றி செலுத்தாமலிருக்கலாமா? எப்பொழுதுமே நாம் தெய்வத்தின் திருவருளுக்குத் தலை வணங்க வேண்டும். துரதிருஷ்டத்தின் விளைவாக நாம் துக்கத்தை அனுபவிக்க நேரிட்டால், அந்தத் துக்கத்திலிருந்து மீள ஒரே ஒரு வழிதானுண்டு. அதுதான், துக்க உணர்ச்சிக்கு நேர்மாறாக இருக்கிற சந்தோஷ உணர்ச்சியை நம் நினைவிலே கொண்டு வந்து நிறுத்துவது. ஏற்கனவே நாம் அனுபவித்த சந்தோஷங்களை யெல்லாம் ஞாபகப் படுத்திக் கொண்டு, வாழ்க்கையின் பிரகாசமான பகுதிகளின் மீது சிந்தனையைச் செல்ல விடுவோமானால் துக்கத்தின் வேகம் தானே தணிந்து போகும். வாசனைப் பொருள்கள் நல்ல வாசனையைக் கொடுப்பதோடு நில்லாமல், துர்நாற்றத்தையும் அருகே வரவொட் டாமல் தடுக்கின்றன அல்லவா? ஒரு புத்தகம் இருக்கிறது. அதன் எல்லாப் பக்கங்களும் அழுக்குப் படாமல் சுத்தமாக இருக்கின்றன. ஆனால் எங்கோ ஒரு மூலையில் சிறிது கறை பட்டிருக்கிறது. அதற்காக அந்தப் புத்தகத்தைக் குறை கூறுகிறோமா? இல்லை. அதுபோல், நமது வாழ்க்கையில் ஏதோ ஒரு சிறு துக்கம் ஏற்பட்டு விட்டால், அதற்காக நமது வாழ்க்கை முழுவதிலும் குறைப்பட்டுக் கொண்டிருக்கலாமா? ஆதலின், வீணாகத் துக்கப்படாதே; வாழ்க்கையின் சந்தோஷ மான பகுதிகளை நினைவில் கொண்டு, மன அமைதி பெறுவாயாக. 4. கெடுவார் கேடு நினைப்பார் ரோம ஏகாதிபத்தியத்தின் சக்கரவர்த்தியாகக் கி.பி. 54 முதல் 68ஆம் வருஷம் வரை, ஆண்ட நீரோ1 என்பவன், பிறர் துன்பத்திலே இன்பம் நுகரும் தன்மையன்; காமக் குரோதங்களில் அழுந்தியவன். இவன் தாயார் அக்ரிப்பினா2 என்பவள், ஒழுக்கத் துக்குப் புறம்பானவள்; தான் நினைத்ததைச் செய்து முடிக்க இழிதகைமையின் ஆழத்துக்குத் துணிந்து சென்றவள். தன் மகன் நீரோ, அரசு கட்டிலில் அமர வேண்டு மென்பதற்காக இவள் செய்த சூழ்ச்சிகள் பல. நீரோ ஆளத் தொடங்கிய சில ஆண்டுகளுக்குப் பிறகு, தன் ஆதான பிரபுக்களில் ஒருவனாயிருந்த வனும், தனக்குப் பின்னால் பட்டத்துக்கு வரப் போகிற வனுமாகிய ஆத்தோவின்3 மனைவி ஸபீனா4 என்பவ ளின் மோக வலையிலே சிக்கிக் கொண்டு அவள் இஷ்டத்துக்கெல்லாம் ஆடிவந்தான். அவள் நீரோவி னிடத்தில் தன் செல்வாக்கு நிலைத்திருக்க வேண்டு மென்பதற்காக, அவனுக்கும் அவன் தாயார் அக்ரிப்பி னாவுக்கும் மனதாபத்தை உண்டு பண்ணினாள்; அவனைக் கொல்ல அவள் சூழ்ச்சிகள் பல செய்து வருகிறாளென்று கோள் மூட்டினாள். நீரோவும் இதற்குச் செவி கொடுத்தான். தாயார் மீது வெறுப்புக் கொண்டு அவளை மரணத்துக்குட் படுத்தி விடும்படி உத்தரவிட்டான் இதன் பிரகாரம், அவனுடைய ஆட்கள் பொழுது போக்குக்காகக் கடலில் சிறிது தூரம் சென்று வரலாமென்று காரணம் சொல்லி அவளை, வெடி மருந்து வைக்கப்பட்ட ஒரு கப்பலில் அழைத்துச் சென்றார்கள். அது கடலில் சிறிது தூரம் சென்றதும் வெடித்துச் சுக்கு நூறாகப் போய் விட்டது. ஆனால் அக்ரிப்பினா தப்பி விட்டாள். நீந்திச் சென்று கரையடைந்தாள். அடைந்த பிறகு நீரோவின் கட்டளைப்படியே, தன்னை மரணத்துக்குள்ளாக்கும் முயற்சி நடைபெற்றிருக்கிறது என்று ஊகித்துக் கொண்டாள். இதற்கு உடந்தையாக இருக்கக் கூடு மென்று நீரோவின் அத்தை சிலானாவின்5 மீது என்ன காரணத்தினாலோ சந்தேகங் கொண்டாள். அவள்மீது குற்றஞ்சாட்டுகின்ற முறையிலும், தான் நிரபராதி என்பதைச் சுட்டிக் காட்டியும், நீரோவுக்கு உருக்கமான தொரு கடிதம் எழுதினாள். அது வருமாறு:- மலடியான (உன் அத்தை) சிலானாவுக்குத் தாய்ப் பாசம் இன்ன தென்று தெரியாமல் இருப்பது குறித்து நான் ஆச்சரியப் பட வில்லை. பிள்ளையே பெறாத ஒருத்திக்கு, பிள்ளையை இழந்து விட்ட தனால் ஏற்படக்கூடிய துக்கத்தை எப்படிச் சகித்துக் கொள் வது என்பது பற்றித் தெரியாமல் இருப்பது சகஜமே. இயற்கை யானது, நாம் அனுபவிக்காத ஒன்றின் மீது வெறுப்புக் கொள்ளச் செய்கிறது; அல்லது அதனை அலட்சியமாகக் கருதும்படி செய்கிறது. பொதுவாகத் தாய்மார்கள், தங்கள் சந்தானங்களின் விஷயத் தில் எவ்வளவு அன்பு உடையவர்களாக இருக்கிறார்கள் என்பது, மகனே, உனக்குத் தெரியாதா? அவர்களுடைய அன்பு இயற்கை யாகவே உள்ளது; எல்லையற்றது. அவர்களுடைய மென்மையான சுபாவமானது அந்த அன்பைப் போஷித்து வளர்க்கிறது. ஒரு தாய், தன் உயிரைப் பணயமாக வைத்து எதைப் பெற்றாளோ, அதைக் காட்டிலும் அருமையானது வேறோன்றும் அவளுக்கு இருக்க முடியாது. எதைப் பெறுவதற்காக அவள் துக்கத்தையும் துன்பத்தையும் சகித்துக் கொண்டாளோ, அதைக் காட்டிலும் மதிப்புடையது வேறொன்றும் அவளுக்கு இருக்க முடியாது. சுகப்பிரசவம் ஆகும் என்ற நம்பிக்கை அவளுக்கு இருப்பதனால்தான், அவள், பிரசவ வேதனையைப் பொறுத்துக் கொள்கிறாள். அப்படி அவள் பொறுத்துக் கொள்ளாமற்போனால் வம்ச விருத்தியென்பது இல்லாமலே போகுமல்லவா? மகனே, ஒன்பது மாத காலம் உன்னை என் வயிற்றிலே வைத்துக் காப்பாற்றினேன். என் ரத்தத்தைக் கொண்டு உன்னைப் போஷித்து வளர்த்தேன். இவைகளை நீ மறந்து விட்டாயா? உன்னைப் பெற்றெடுக்க எவ்வளவோ கஷ்டப்பட்ட நான், உன்னைக் கொல்ல முயல்வேனா? ஒருகால், உன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்ததற்காக, தெய்வங்கள், என்மீது கோபித்துக் கொண்டு, என்னை இந்தத் தண்டனைக்குள்ளாகி யிருக்கின்றனவா? அப்படித் தானே நினைக்க வேண்டியிருக்கிறது? துரதிர்ஷ்டக்காரியான அக்ரிப்பினா, உன்னைக் குற்றவாளி என்று யாரும் நினைக்க மாட்டார்கள். அப்படியிருந்தும் நீ குற்றவாளி என்று உன் மகனாலேயே சந்தேகிக்கப்படுகிறாய்! கீழ்த்தரமான ஒரு பெண்கூட, தன் மகனைக் கொல்லும் முயற்சியில் இறங்க மாட்டாள். அப்படிப்பட்ட ஒரு குற்றத்தை என் மீது சுமத்தி விட்டு, என்னைச் சக்கரவர்த்தினி என்று அழைப்பதில் எனக்கென்ன பெருமை இருக்கிறது? அரசவையின் காற்றைச் சுவாசிப் போர், மிகவும் துரதிருஷ்டக்காரர்கள். மேலான அறிவு படைத்தவர்கள் கூட, அந்த அரசவையிலிருந்து உண்டாகும் புயற் காற்றினின்று தப்ப முடிவதில்லை. அங்கு நிலவும் அமைதிகூடச் சில சமயங்களில் ஆபத்தா யிருக்கிறது. ஆனால் அரசவையை நான் ஏன் குறைகூற வேண்டும்? மகனே, நீயே சொல் உன்னைக் கொல்ல நான் ஏன் சதி செய்ய வேண்டும்? இன்னும் அதிகமான துன்பத்தை அனுபவிக்கவா? உன்னை வீழ்த்தி விட்டு நான் அடையப்போகிற நன்மைகள்தாம் யாவை? ஆனால் ராஜ்ய ஆதிக்கம் பெற வேண்டுமென்று ஆசைப்படு கிறவர்கள், இயற்கை நியதிகளை மீறி நடக்கத் துணிகிறார்கள். அதற்காக அவர்கள் நியாயமாகப் பெற வேண்டிய தண்டனையைக் கூடப் பெறுவ தில்லை. எப்பொழுதுமே பேராசையானது, தான் கொண்ட நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள, எந்தத் தீய செயலிலும் இறங்கத் தயங்குவதில்லை. உன்னைக் கொல்ல நான் சதி செய்திருப்பேனாகில், நான் எந்தத் தெய்வத்தினிடம் சென்று பாவ மன்னிப்புக் கோருவேன்? நீ மேலும் புகழ்பெற வேண்டும் என்பதற்காக எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பேன்? எத்தனையோ கஷ்டங்களைச் சமாளித் திருப்பேன்? ஆனால் அவைகளையெல்லாம் பற்றிச் சொல்லிக் காட்டி, அவைகளுக் காக நீ எனக்கு நன்றி செலுத்த வேண்டுமென்று நான் எதிர்பார்ப்பதாகக் கருத வேண்டாம். அப்படி எதிர்பார்ப்பது உன் நன்றி உணர்ச்சிக்குப் பங்கம் விளைவிப்பதாகும். நிரபராதி என்று சொல்லி என்னை நான் காப்பாற்றிக் கொள்ள விரும்ப வில்லை. நீ நியாயம் வழங்குவாய் என்று நம்புகிறேன். இந்த உருக்கமான கடிதத்தைக் கண்டுகூட நீரோவின் மனம் மாறவில்லை. அக்ரிப்பினாவைக் கொலை செய்து விடும்படி உத்தரவிட்டான். அவளும் கொலையுண்டாள். அக்ரிப்பினாவைக் கொலை செய்யுமாறு, தூண்டிய ஸபீனாவின் கதி என்னவாயிற்று? ஒருநாள், நீரோ, அதிகக் கோபத்துடனிருக்கையில், அவளைக் காலால் உதைத்தான். அவள் அப்பொழுது கர்ப்பமா யிருந்தாள். உதைபட்டதன் விளைவாக இறந்து விட்டாள். அவள் இறந்து ஒன்பது வருஷங் கழித்து, நீரோ, ஜனங்களுடைய வெறுப்புக்குப் பாத்திரமாகித் தற்கொலை செய்து கொண்டான். 5. பணிய மறுத்த பேரரசி கி.பி. மூன்றாவது நூற்றாண்டில், எகிப்து உள்பட ஏறக்குறைய மேற்கு ஆசியா முழுவதும் ஒரு பெண் மணியின் ஆளுகைக்குட் பட்டிருந்ததென்று சொன் னால் நேயர்களில் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கும். இவள் பெயர் ஜினோபியா1; நல்ல அழகி. ஐந்தாறு மொழிகளில் தேர்ச்சி பெற்றவள்; கலை, விஞ்ஞானம் முதலிய துறைகளிலும் புலமை பெற்றிருந்தாள்; எல்லாவற்றுக்கும் மேலாக வீரம் செறிந்த வாழ்கையை நடத்திவந்தாள். கி.மு. முதல் நூற்றாண்டில் எகிப்தில் ஆண்டு வந்தவளும், அழகிலும் வீரத்திலும் பெயர் பெற்றி ருந்தவளுமான கிளியோபாட்ரா2 என்பவளின்வழித் தோன்றல் என்று தன்னைச் சொல்லிக் கொள்வதில் ஜினோபியா பெருமை கண்டாள். கணவன் இறந்துபோன பிறகு ராஜ்ய நிர்வாகம் பூராவையும் ஏற்றுக் கொண்ட இவள், தன் ஆதிக்க எல்லையை விதரிக்க எண்ணி அநேக போர்களில் ஈடுபட்டாள்; தானே தலைமை தாங்கி, படைகளை நடத்திச் சென்றாள்; வெற்றியும் கண்டு வந்தாள். இவளுடைய ராஜ்யத்தின் தலைநகரமாயிருந்தது பால்மைரா3 என்ற ஊர். இந்த நகரம் இருந்த இடமே இப்பொழுது தெரியவில்லை. தற்போதைய சிரியா நாட்டின் தலைநகரமாகிய டமாக4 என்னும் ஊருக்கு வடமேற்கில் சுமார் நூற்றைம்பது மைல் தொலைவில் இந்த நகரம் இருந்ததாகப் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். ஜினோபியா ஆண்டு வந்த காலத்தில், ரோம சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக வீற்றிருந்தவன் அரேலியன்5 என்பவன். இவன், ஜினோபியாவை, ரோம சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும்படி செய்ய வெகுவாக முயன்றான். இவள் முடியாதென்று சொல்லி வந்தாள். போர் தொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தீர்மானித்து, அரேலியன், இவளுக்குக் கடைசி தடவையாகப் பின்வரும் கடிதத்தை எழுதினான். ஜினோபியாவுக்கு, நான் இப்பொழுது உன்னை என்ன செய்ய வேண்டுமென்று சொல் கிறேனோ, அதை நீயே வெகு காலத்துக்கு முன்பே செய்திருக்க வேண்டும். அப்படி நீ செய்யவில்லை. இப்பொழுது, பால்மைரா நகரத்தை, என் படைகள் வசம் ஒப்புக் கொடுத்துவிடுமாறு இதன் மூலம் உனக்கு ஆணை யிடுகிறேன். அப்படிச் செய்வாயானால், உன்னுடையவும், உன்னைச் சேர்ந்தவர்களுடையவும் உயிருக்கு ஆபத்து ஏற்படாதென்று உறுதி கூறுகிறேன். ஆனால் உன் சுதந்திரத்துக்கு உறுதி கூற முடியாது. நானும், ரோம அறிஞர் களடங்கிய சபையும் சேர்ந்து ஆணையிடுகிற இடத்தில் நீயும் உன் குழந்தைகளும் சென்று வசிக்கவேண்டும். அப்படி வசிப்பதோடு நீ திருப்தியடைய வேண்டும். உன்னுடைய நகைகள், தங்கம் வெள்ளி முதலிய சொத்து பற்றுக்கள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டு ரோம அரசாங்கத்தின் பொக்கிஷத்தில் கொண்டு போய்ச் சேர்க்கப்படும். உன்னுடைய பிரஜைகள் மட்டும் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெறுவார்கள். அவர்களுக்கு எல்லாச் சலுகைகளும் காட்டப்படும். இந்தக் கடிதத்துக்குப் பதிலாக, ஜினோபியா முகத்தில் அறைந்தாற் போல் பின்வரும் கடிதத்தை எழுதி அனுப்பினாள்:- அரேலியனுக்கு, உன்னைப் போல் யாரும் இதுவரையில் என்னை ஆணை யிட்டதில்லை. உன்னுடைய வீரத்தினால் மட்டுமே நீ யுத்தத்தில் வெற்றி காண முடியும்; வெற்றியின் பலனையும் அனுபவிக்க முடியும். இந்த உண்மையை நீ முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். எனது முந்திய பரம்பரையைச் சேர்ந்த கிளியோபாட்ரா ஒரு ராணியாக இருந்து மரிக்க விரும்பினாளே தவிர, உனது முந்திய பரம்பரையைச் சேர்ந்த அகட6 மன்னனுடைய அடிமையாக வாழ்ந்து கொண் டிருக்க ஒருப்படவில்லை. இதைத் தெரிந்து கொள்ளாதவன் போல் நீ, பால்மைரா நகரத்தை, உன் படைகள் வசம் ஒப்புக் கொடுத்து விடுமாறு எனக்கு ஆணையிடுகிறாய். நாங்கள் பாரசீகர்களுடைய உதவியை எதிர்பார்த்துக் கொண் டிருக்கிறோம். சாரஸேனியர்கள்7 எங்களுக்காக ஆயுதமெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அர்மீனியர்கள்8 எங்களுக்குச் சாதகமாக நிற்க முன்வந்திருக்கிறார்கள். வழிப்பறிக் கெள்ளைக்காரர்கள் சிலர் ஒன்று சேர்ந்து உன்னுடைய ஒரு பகுதிப் படையைத் தோல்வியுறச் செய்திருக்கிறார்கள். இந்தப் படைகளெல்லாம் ஒன்றுகூடி எங்களுக்கு உதவியாக வருமானால், உனக்கு என்ன கதி நேரிடும் என்பதை நீயே தெரிந்து கொள். அப்பொழுது உன் அதிகார தொனியை மாற்றிக் கொள்வாய். இந்தப் பூவுலகம், உன் வசத்தில் இருக்கிறதென்றும், அதை உன் இஷ்டம் போல் செய்யலாம் என்றும் தவறாக நினைத்துக் கொண்டு, என்னுடைய பிறப்புரிமையை விட்டுக் கொடுக்குமாறு அதிகார தோரணையில் ஆணையிட மாட்டாய். ஜினோபியாவின் இந்தப் பதில் அரேலியனுக்கு ஆத்திரத்தையே உண்டுபண்ணியது. பெரும் படை யுடன் சென்று பால்மைரா நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டு அதனைத் தரையோடு தரையாக்கி விட்டான். ஜினோபியா, தன் குழந்தைகளுடன் தப்பிச் செல்ல முயன்றாள். முயலும்போது ரோமாபுரிப் படை களிடம் சிக்கிக் கொண்டு விட்டாள். அரேலியன், இவளை ரோமாபுரிக்கு அழைத்துச் சென்றான்; தன்னுடைய வெற்றிக் கோலாகலத்தில், அவளையும் கலந்து கொள்ள வைத்த பிறகு, நகரை விட்டு ஒதுக்குப் புறமான இடத்தில் தனியாக ஒரு மாளிகையில் இறுதிக் காலம்வரை வசிக்கும்படி செய்தான். 6. நாட்டுப் பற்று மிகுந்த ஞானி செயிண்ட் ஜெரோம்,1 என்பவன், கி.பி, நான்காவது நூற்றாண்டின் பிற்பகுதியிலும், ஐந்தாவது நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த ஒரு கிறிதுவ ஞானி. இவன் விவிலியத்தை ஹீப்ரு மொழியிலிருந்து லத்தீன் மொழியில் பெயர்த்து வெளியிட்டு நீடித்த புகழை யடைந்தவன். தவிர, தேசபக்தி மிகுந்த ரோமானியப் பிரஜை ரோம சாம்ராஜ்யத்தின் செல் வாக்கு எவ்விதத் திலும் குன்றாதிருக்க வேண்டுமென்பதில் பேரார்வம் கொண்டவன் அப்படிக் குன்றாதிருக்குமென்பதில் பெரு நம்பிக்கை கொண்டிருந்தான். ஆனால், தன் வாழ்நாளின் கடைசிப் பகுதியில், அந்த நம்பிக்கையை இழந்து விடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை இவனுக்கு ஏற்பட்டது. கி.பி. ஐந்தாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் வடக்கிலிருந்தும் வடகிழக்கிலிருந்தும், பல வகை முரட்டு இனத்தினர், ரோம சாம்ராஜ்யத்தின் மீது படையெடுத்து வந்து அதனை நாசப்படுத்தி வந்தனர். இங்ஙனம் படையெடுத்து வந்தவரில் ஒருவகையினர் விஸிகோத்தியர்2 இவர்களுக்குத் தலைவனாயிருந்த அலாரிக்3 என்பவன், கி.பி. 410ஆம் வருஷம், ஒரு பெரும்படை கொண்டு வந்து ரோமாபுரியைச் சூறை யாடி விட்டுப் போனான். இந்தச் சமயத்தில், மேற்படி ஜெரோம் என்பவன், கிறிது நாதர் அவதரித்தருளிய பெத்ல்ஹோம்4 நகரத்தில் வசித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது இவனுக்கு வயது எழுபது. ரோம சாம்ராஜ்யம், சூறையாடப்பட்டதைக் கேட்டுக் கண்ணீர் வடித்தான். இனி ரோம சாம்ராஜ்யம், பழைய செல்வாக்கை அடையா தென்றும், அடியோடு வீழ்ந்து படும் என்றும் இவனுக்கு புலப்பட்டு விட்டது. அந்த வீழ்ச்சியை தன் அகக் கண்ணால் பார்க்கிறான். எழுதுகிறான் ஒரு நண்பனுக்கு: எத்தனை ஆபத்துக்கள் நம் காலத்தில்! நினைத்தாலே உடல் நடுங்குகிறது. சென்ற இருபது ஆண்டுகளாக, தினந்தோறும், கான்ட்டாண்டி நோபிளுக்கும்5 ஆல்ப் மலைக்கு6 மிடையில் ரோமானியர்களுடைய ரத்தம் சிந்தப்பட்டு வருகிறது. ரோம சாம்ராஜ்யத்திற்கு க்கித்தியா, திரே, மாஸிடோன்7 முதலிய பல பிரதேசங்களை, கோத்தியர்களும்8 ஹுணர்களும்9 இவர்களைப் போன்ற பல இனத்தினரும் சூறையாடிச் சீரழித்துவிட்டார்கள். மிருகத்தன்மை வாய்ந்த இவர்களுக்கு, கண்ணியமும் சீலமும் நிறைந்த எத்தனை திரீகள் விளையாட்டுப் பொருள்களாகி விட்டிருக்கிறார்கள்? இவர்களால், தேவாலயங்கள் பல தகர்க்கப் பட்டுப் போயின. புனிதமானவை யென்று மக்களால் போற்றப் பட்டு வந்த இடங்களில், இவர்கள், குதிரைகளைக் கொண்டு வந்து கட்டினார்கள். மேலும், இவர்கள், மகான்களின் சவக்குழிகளைத் தோண்டி அவர்களுடைய எலும்புகளை எடுத்து நானாதிசைகளி லும் வீசி எறிந்தார்கள். உண்மையில் ரோம சாம்ராஜ்யம் விழுந்து கொண்டு வருகிறது. ஆனாலும் ரோமானியர்களாகிய நாம் இவர்கள் முன்னிலையில் இந்த முரட்டு இனத்தினர் முன்னிலையில் தலை வணங்கவில்லை? தலை நிமிர்ந்தே நிற்கிறோம். ரோம சாம்ராஜ்யத்திற்குக் கிழக்குப் பக்கத்திலுள்ள பிரதேசங்கள் இந்த மாதிரியான இடுக்கண்களுக்கு உட்பட மாட்டாவென்று இதுகாறும் நினைத்துக் கொண்டி ருந்தோம். ஆனால் கடந்து போன ஆண்டில், வடக்கேயிருந்து வந்த இந்த ஓநாய்க் கூட்டத்தினர் கோத்தியர், ஹுணர் முதலியோர் அநேக பிரதேசங்களைச் சீரழித்து விட்டார்கள். சீரும் சிறப்புமாக இருந்த அநேக ராஜ்யங்களின் தலை நகரங்களை முற்றுகையிட்டுப் பாழ்படுத்தி விட்டார்கள். எனக்கு நூறு நாக்குகளும், நூறு வாய்களும், இரும்பு போன்ற குரலும் இருந்தால் கூட, இவர்களுடைய அட்டூழியங்களை சொல்லிக்காட்ட முடியாது. அந்த அட்டூழியங்களுக்குப் பெயர் சொல்லவும் முடியாது என்று வர்ஜில்10 என்ற கவிஞன் பாடியிருப்பது இந்தச் சந்தர்ப்பத்தில் என் ஞாபகத்திற்கு வருகிறது. நம்முடைய பாவச் செயல்கள்தான், நம்மை இந்தத் துக்ககரமான நிலையில் வைத்திருக்கின்றன; கோத்தியர் போன்ற இந்த மிருகக் கூட்டத்தினரைப் பலமுள்ளவர்களாகச் செய்திருக் கின்றன. கடவுளுக்கு நம் மீது கோபம் ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கோபத்தினாலேயே, இந்தக் காட்டுமிராண்டி ஜாதியினரை நம் மீது ஏவி விட்டிருக்கிறார். ஐயோ! ஒரு காலத்தில் உலகனைத்தையும் நடுங்க வைத்த ரோமானியப் படைகள் இப்பொழுது சத்துருக்களைக் காணும் பொழுதே நடுங்குகின்றன. ரோமாபுரி, புகழ் பெறுவதற்காக அல்ல, தன் உயிருக்காகவே, தன் எல்லைக்குள்ளேயே இப்பொழுது போராட வேண்டியிருக்கிற தென்றால், இதை யாராவது நம்புவார்களா? லூகன்11 என்ற கவிஞன் சொன்ன மாதிரி ரோமாபுரி வலிமை இழந்து விட்டது என்று சொன்னால், உலகத்தில் வலிமையை எங்கே காண முடியும். இப்பொழுது பயங்கரமான ஒரு செய்தியைக் கேள்விப் படுகிறேன். ரோமாபுரியைச் சத்துருக்கள் முற்றுகையிட்டிருக்கிறார் களென்றும், அதன் மக்கள். பணத்தைக் கொடுத்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்களென்றும் கேள்விப்படுகிறேன். இதைக் கேட்டதும். என் குரல், என் நெஞ்சத்தைப் பிளந்து கொண்டு வெளிவரப் பார்க்கிறது. ஆனால் அழுகை, வார்த்தைகளை வெளி வரவிடாமல் அந்த நெஞ்சத்தைத் தடுக்கிறது. உலகனைத்தையும், தன் ஆக்கிரமிப்புக்குட்படுத்திக் கொண் டிருந்த ரோமாபுரி, இப்பொழுது பிறருடைய ஆக்கிரமிப்புக்குட் பட்டு விட்டது. போதாக்குறைக்கு பஞ்சமும் அதன் மீது தன் கொடுமையைக் காட்டி விட்டது. ரோமாபுரியின் வீழ்ச்சியினால் உலகம் பூராவும் சீரழிந்து வருவதாகவும், நமது பாவங்களைத் தவிர மற்றவையெல்லாம் பாழடைந்து வருவதாகவும் நான் உணர்கிறேன். நமது பாவங்கள் தாம் இப்பொழுது கொழுத்துக் கிடக்கின்றன. ஒரு காலத்தில் தலை தூக்கி நின்ற ரோமாபுரி, ஐயோ, இப்பொழுது ஒரு பெருந்தீயினால் விழுங்கப்படுகிறது. எங்குப் பார்த்தாலும் ரோமானியப் பிரஜைகள் சொந்த நாட்டுக்குப் புறம்பானவர்களாயிருக்கிறார்கள். அகில மனைத்தையும் வெற்றிகண்டு அதன்மீது யுகக்கணக்கில் படிப்படி யாக நிர்மாணிக்கப்பட்டு வந்த ரோம சாம்ராஜ்யம் விழுந்துபட்ட தென்று சொன்னால் அதை யார் நம்புவார்கள்? பல்வேறு இனங் களுக்கும் தாய்மை தானத்தில் இருந்து வந்த ரோமாபுரி, இப்பொழுது கல்லறையாகக் கிடக்கிறதென்று சொன்னால் அதை யார் நம்புவார்கள்? ஒரு காலத்தில் தலை நிமிர்ந்து நின்ற ரோமாபுரி, தன்னுடைய பாதுகாப்பைப் பற்றி அலட்சியமாயிருந்த ரோமாபுரி, செல்வங் கொழித்திருந்த ரோமாபுரி, இப்பொழுது தாழ்மையுற்று விட்டது; அதன் மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவும் பிச்சைக்காரர் களாகவும் ஆகி விட்டார்கள். அவர்களுக்கு ஆறுதல் உண்டாகும் படி நாம் என்ன செய்ய முடியும்? நம்முடைய அநுதாபத்தைத்தான் காட்டமுடியும். அவர்கள் விடும் கண்ணீரோடு நமது கண்ணீரையும் கலக்க விடத்தான் முடியும். இந்தக் கடிதம் எழுதப்பட்ட சில ஆண்டுகளுக் குப் பிறகு சரியாகச் சொல்லப்போனால் கி.பி.455ஆம் வருஷம் ஜென்ஸெரிக்12 என்பவன் தலைமையில் வடக்கேயிருந்து ஒரு பெரும்படை வந்து ரோமா புரியை அடியோடு நாசமாக்கிவிட்டது. இதற்குப் பிறகு அது தலைதூக்க முடியாததாகிவிட்டது. 7. நன்றி நவிலல் புத்தர்பிரான் அவதரித்தருளிய பாரத நாட்டுக்குச் சீனாவிலிருந்து அநேக பௌத்த சந்நியாசிகள் கி.பி. ஏழாவது நூற்றாண்டில் வந்து போயினர். இவர்களுள் முக்கியமானவன் ஹ்யூன் த்ஸாங். இவனை யுவான் சுவாங் என்றும் அழைப்பர்.1 இவன் இந்தியாவை நோக்கி யாத்திரையாகப் புறப்பட்டுச் சீனாவின் மேற்கெல்லைப் பக்கமாக வந்து கொண்டிருக்கையில், ஒரு சிற்றரசனுடைய விருந்தினனாகச் சில நாட்கள் தங்கும்படி நேரிட்டது. அப்பொழுது அந்தச் சிற்றரசன், இவனுடைய பரந்த புலமையிலும் தவ ஒழுக்கத்திலும் பெரிதும் ஈடுபட்டுப்போய், இவனை மேற்கொண்டு யாத்திரை செய்ய வேண்டா மென்றும், தன்னிடமே நிரந்தரமாகத் தங்கியிருக்கு மாறும் கேட்டுக்கொண்டான். ஹ்யூன் த்ஸாங் இதற்கு இணங்க மறுத்து, யாத்திரையைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்கிற தன் உறுதியைத் தெரிவித்தான். அப்பொழுதும் அந்தச் சிற்றரசன், இவன் பிரயாணத் துக்கு அனுமதி கொடுக்க மனமிசையவில்லை. எனவே இவன் - ஹ்யூன் த்ஸாங் - மூன்று நாட்கள் உண்ணாவிரத மிருந்தான். இதைக் கண்டு அந்தச் சிற்றரசன் பயந்து போய் நான்காவது நாள் இவனுக்கு மேற்கொண்டு செல்ல அனுமதி கொடுத்ததோடல்லாமல், யாத்திரை யின் போது தேவைப்படக்கூடிய அநேக பொருள் வகைகளையும், அவைகளை எடுத்துச் செல்வதற்கான ஆட்கள், குதிரை முதலிய பரிவாரங் களையும், துணை வர்களாகச் செல்ல நான்கு பௌத்த சந்நியாசிகளையும் அனுப்பினான்; தவிர, ஹ்யூன் த்ஸாங் எந்தெந்த நாடுகளின் வழியாகச் செல்லக் கூடுமோ அந்த நாடு களின் அரசர்களுக்கு - இருபத்தி நான்கு அரசர்களுக்கு - அறிமுகக் கடிதங்களும் கொடுத்தான். இவையனைத் துக்கும் நன்றி தெரிவிக்கும் முறையில், ஹ்யூன் த்ஸாங் அந்தச் சிற்றரசனுக்கு ஒரு கடிதம் எழுதினான். இதனை, இவனுடைய சுருக்கமான சுயசரிதம் என்று கூறலாம். இதில், தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ள வேண்டிய சில இடங்களில் ஹ்யூன் த்ஸாங் என்றே சொல்லிக் கொள்கிறான். கடிதம் வருமாறு- ஆழமான நதியையோ, கடலையோ கடக்க விரும்பும் ஒருவன், துடுப்புக்களுடன் கூடிய ஒரு படகின் உதவியை நாட வேண்டியவனா யிருக்கிறான். அது போல் மனிதர்கள், தங்களுடைய வாழ்க்கை சம்பந்த மான பலவித பிரச்னைகளைப் பற்றி ஏற்படக் கூடிய சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொள்ள வேண்டு மானால், சாதிரங்களின் உதவியை நாட வேண்டும். கருணை உள்ளங் கொண்ட ததாகதர்(புத்தர்), களங்கம் நிறைந்த இந்த உலகத்தில் அவதரித்தருளினார். மக்களின் மனத்தில் படிந்து கிடக்கும் அஞ்ஞான இருளைப் போக்கும் ஞான சூரியனாக அவர் விளங்கினார். எல்லா ஜீவராசிகளும் நன்மை பெற வேண்டும் என்பதற்காகவே அவர் அவதரித்தார் தம் கடமை முடிந்ததும், எது அநித்தியமோ அதைத் துறந்துவிட்டு நித்தியமாயுள்ளதை நாடிச் சென்று விட்டார். அவர் அருளிவிட்டுப் போன உபதேசங்கள், கீழ் நாட்டில் (சீனாவில்) சுமார் அறுநூறு வருஷங்களுக்கு மேலாகப் பரவியிருக் கின்றன. காசியப மாதங்கன், சங்கவர்மன், தர்மரட்சகன், குமாரஜீவன் ஆகிய அறிஞர்கள், அவைகளை நன்கு பிரகாசப்படுத்தி யிருக்கின்றனர். அவர்கள் உண்மையை விளக்கிச் சொன்னதோடல் லாமல் வேறு பல அரிய காரியங்களையும் செய்திருக்கின்றனர். அவர்களும், அவர் களைப் போல் புத்த மத கிரந்தங்களைச் சீன மொழியில் மொழி பெயர்த்தவர் களும், வெகு தொலைவில் உள்ள நாடுகளிலிருந்து வந்த படியால், புத்தமத கிரந்தங்களுக்குப் பல்வேறு வியாக்கியானங்கள் ஏற்பட்டு விட்டன. தவிர, புத்தர் பிரானுடைய காலமும் வெகுமுந்திய தாகிவிட்டது. அதனாலும், அவருடைய தத்துவங்களில் தவறான பல கருத்துக்கள் புகுந்துவிட்டன. இவைகளினால், புத்தமதம் இரண்டு கிளைகளாகப் பிரிந்து விட்டது. இவற்றுள் ஒன்றான மஹா யானத்தில், வடக்குப் பக்கத்துக் கொள்கை என்றும், தெற்குப் பக்கத்துக் கொள்கை என்றும் இரண்டு பிரிவுகள் ஏற்பட்டு விட்டன. இவற்றுள்ளும் வாதப் பிரதிவாதங்கள் அதிகம். இவை காரணமாக, ஜனங்களுக்கு, புத்த மதத்தைப் பற்றிப் பலவித சந்தேகங்கள் தோன்றத் தொடங்கி விட்டன. இவற்றுக்கு யாராலும் விளக்கம் தர முடியவில்லை. முற்பிறவியில் செய்த நற்றவப் பயனால், ஹ்யூன் த்ஸாங் சிறுவயதிலேயே பிட்சுவாகி, புத்தமத கிரந்தங்களைப் பல்வேறு ஆசிரியர் களிடம் சுமார் இருபது வருஷ காலம் பயின்றான்; வேறு பல அறிஞர் களோடு சேர்ந்து ஆராய்ச்சி செய்தான். இப்பொழுது மஹாயானம், ஹீனயானம் என்ற இரு கிளைகளைப் பற்றி ஒருவாறு தெரிந்து கொண்டிருக்கிறான். இருந்தாலும், புத்த மத சம்பந்தமான ஒரு கிரந்தத்தை எடுத்துப் படிக்கத் தொடங்குகையில், அவனுக்குச் சந்தேகங்கள் பல தோன்றுகின்றன. அதனுள் பொதிந்து கிடக்கும் நுண்ணிய கருத்துக்களை அவனால் விளங்கிக் கொள்ள முடிவ தில்லை. விளக்கங் காண வேண்டு மென்பதற்காக, அவன் புத்தர் பிரான் உபதேசித்தருளிய இடங்களுக்குச் சென்று வர வேண்டு மென்று வெகுகாலமாகவே ஆவல் கொண்டிருந் தான். ஆகாயம் முழுவதையும் ஒரு சிறு குழாய் வழியாகப் பார்க்க முடியாது என்பதும், அப்படியே கடல் நீர் முழுவதையும் ஓர் அகப்பை யினால்; அளக்க முடியாதென்பதையும் அவன் தெரிந்து கொள்ளாம லில்லை. ஆயினும் அவன், தன் ஆவலை நிறைவேற்றிக் கொள்ளவே துணிந் தான். இதற்காக, எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு அவன், தன் யாத்திரையைத் தொடங்கிவிட்டான். அநேக கஷ்ட நிஷ்டூரங் களுக்குப் பிறகு யிவு என்ற ராஜ்யத்தை அடைந்தான். வானுலகமும் நானிலமும் வாழ்த்த, பிரபஞ்சத்தின் அன்பைப் பெற்றிருக்கும் சக்கரவர்த்தியாகிய தாங்கள், பிரஜைகளைத் தங்கள் பிள்ளைகளைப் போல் பரிபாலித்து வருகிறீர்கள். கிழக்குப் பக்கத் தில் உள்ள பெரிய நாட்டின் (இந்தியாவின்) நற்பண்புகள் பலவும் தங்களிடம் குடி கொண்டிருக்கின்றன. மேற்குப் பக்கத்தில் உள்ள நாட்டின் (சீனாவின்) பழக்க வழக்கங்களையும் தாங்கள் பின்பற்று கிறீர்கள். அக்கம் பக்கத்திலுள்ள நாடுகள், தங்களுடைய அன்புக்கும் நல்லொழுக்கத்துக்கும் வசப்பட்டனவாயிருக்கின்றன. தவிர தாங்கள் முனிவர்களிடம் மரியாதை செலுத்துகிறீர்கள்; அறிஞர்களிடம் அன்பு காட்டுகிறீர்கள்; எது நல்லதோ அதை விரும்புகிறீர்கள்; ஜனங்களை அன்புடன் நடத்துகிறீர்கள். மற்றும் தொலைதூரத்தில் உள்ள நாட்டிலிருந்து வந்தவர்களை அன்புடன் வரவேற்று நன்கு உபசரிக்கிறீர்கள். நான் இங்கே வந்த பிறகு, என்னை மிகவும் பரிவுடன் உப சரித்து. பௌத்த தர்மத்தைப் பற்றிப் பிரசங்கம் செய்யும் படியான கௌரவத்தையும் எனக்கு அளித்தீர்கள். என்னைத் தங்கள் சகோதரன் என்று அழைத்து என் மீது சகோதர வாஞ்சை செலுத்தினீர்கள். மேற்குப் பகுதியிலுள்ள இருபத்து நான்கு ராஜ்யங்களுக்குத் தாங்கள் அறிமுகக் கடிதங்கள் கொடுத்து, அவற்றில், என்னை மரியாதையாக நடத்துமாறும், என் யாத்திரைக்குத் தடை ஏதும் ஏற்படாமல் செய்து கொடுக்குமாறும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். குளிர்காலத்தில் பனி படிந்த பாதையில், நான் தனியனாகப் பிரயாணம் செய்ய வேண்டியிருக்குமென்று கருதி, தாங்கள், எனக்கு நான்கு வாலிபத் துறவிகளை வழித் துணைவர்களாக அனுப்பித் தந்ததுடன் துவராடை முதல் பலவித உடைகளும், கம்பளிகளும், காலுக்கும் தலைக்கும் பாதுகாப்பு அளிக்கக்கூடிய உறை, தொப்பி முதலியவை களும், இன்னும் பலவகைப் பொருள்களும் கொடுத்து உதவி யிருக்கிறீர்கள். மற்றும், இந்தியாவுக்குச் சென்று திரும்பி வர, இருபது வருஷ காலம் பிடிக்குமென்று உத்தேசமாகக் கருதி, அந்த இருபது வருஷத்துச் செலவுக்குத் தேவையான பணமும் அளித்திருக் கிறீர்கள். இங்ஙனமெல்லாம் தாங்கள் காட்டிய அன்புக்கு, நான் தலைவணங்க வேண்டியவனாயிருக்கிறேன். என்னுடைய நன்றியை எப்படித் தெரிவிப்பது என்று எனக்குப் புரியவில்லை. தாங்கள் என்னிடம் காட்டிய அன்பை, ஷியாவோ நதியின் வெள்ளத்தோடு ஒப்பிட்டுக் கொள்ள முடியாது. ஏனென்றால், அந்த நதியின் வெள்ளத்தைக் காட்டிலும், தங்கள் அன்பு வெள்ளம் மேலானதா யிருக்கிறது. தாங்கள் எனக்குச் செய்திருக்கும் உதவி, பாமிர் மலைத் தொடர்ச்சியைக் காட்டிலும் கனமானது. இனி என்னுடைய பயணத்தில் எனக்கு எவ்வித கவலையும் இராது. நான் தொடங்கி யுள்ள யாத்திரையைப் பூர்த்தி செய்து கொண்டு திரும்புவேனாயின், அதற்குக் காரணம் தாங்கள் தான் அல்லவா? தங்களுக்குத்தான் என் நன்றியெல்லாம் நான் இந்தியாவுக்குச் சென்று அறிஞர்கள் பலரை யும் சந்திப்பேன். அவர்களிடமிருந்து பௌத்த தர்மத்தைப் பற்றி நன்கு, அறிந்து கொள்வேன். திரும்பி என் தாய் நாட்டுக்கு வந்ததும், புத்த மத கிரந்தங்களைச் சீனமொழியில் மொழி பெயர்ப்பேன். அதன் மூலம், இதுவரை தெரியாதிருந்ததைத் தெரியப்படுத்துவேன்; தவறான கருத்துக்களை அகற்றச் செய்வேன். இப்படியெல்லாம் செய்வதன் மூலம், தாங்கள் என்னிடம் காட்டிய விசேஷ அன்புக்கு நன்றி செலுத்திக்கொள்வேன். நான் மேற்கொண்டு செல்ல வேண்டிய வழி வெகுதூரமா யிருக் கிறது. ஆகையால் இனி இங்குத் தாமதிக்கக் கூடாதவனா யிருக்கிறேன். விடை பெற்றுக் கொள்வதென்பதே வருத்தந்தரக் கூடியதாயிருக்கிறது. என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் பொருட்டு இக்கடிதத்தை எழுதலானேன். 8. கண்ணியம் காத்த கவிஞன் உண்மையான ஒரு கவிஞன், அன்புக்கு அடி பணிவான்; ஆனால் அதிகாரத்திற்குத் தலைகுனிய மாட்டான். மற்றும் அவன், தனக்குத்தானே விதித்துக் கொள்ளும் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு, தன்னிச்சை யாக நடந்து கொள்வான்; ஆனால் மற்றவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு நடக்க மறுப்பான். அந்தக் கட்டுப்பாடுகளை எதிர்த்துப் போராடவும் செய்வான்; அப்படிப் போராடியதன் விளைவாக ஏற்படக்கூடிய சிறை வாசத்தையோ, தேசப் பிரஷ் டத்தையோ, எதையும் அகத்தில் எவ்வித வன்மமும் கொள்ளாமல், இன்முகத்தோடு ஏற்று அனுபவிப்பான். இன்னும் அவன், தன் சுயமரியாதைக்கு ஊனம் உண் டாகும் வகையில் எதையும் சொல்ல மாட்டான்; செய்யவும் மாட்டான். இத்தகைய உண்மையான கவிஞர்களில் ஒருவன் தாந்தே1 . இவன் இத்தாலியிலுள்ள ப்ளாரென்2 நகரத்தில் கி.பி.1265ஆம் வருஷம் பிறந்தான். ஒன்பதாவது வயதி லேயே, தன் சம வயதினளான பியேட்ரி3 என்ற பெண்ணைக் காதலிக்கத் தொடங்கிவிட்டான். இரு வரும், கருத்தொருமித்த காதலர்களாக வளர்ந்து, சுமார் இருபத்திரண்டு வருஷ காலம் இணைபிரியாமல் வாழ்ந்து வந்தனர். பியேட்ரி கி.பி.1295-ஆம் வருஷம் இறந்து போனாள். இரண்டு வருஷங் கழித்து, கெம்மாடொ னாட்டி4 என்ற ஒரு மாதை மறுமணம் புரிந்து கொண் டான் தாந்தே. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. ஆனாலும் தாந்தே, பியேட்ரிஸை மறக்க வில்லை; தன் உயிருள்ளளவும் அவளைத் தன் உள்ளத்தே வைத்துப் போற்றி வந்தான். அவளும் தானும் சந்தித் ததையும். காதல் வாழ்க்கை நடத்தியதையும் விவரித்து அநேக கவிதைகள் இயற்றினான். உரைநடைச் செய் யுள்கள் என்று சொல்லத் தக்க இவற்றின் தொகுப்பு புதிய வாழ்க்கை 5 என்ற பெயரால் ஒரு நூலாக வெளி வந்தது. தாந்தே காலத்தில், இத்தாலி, துண்டு துண்டு ராஜ்யங்களாகப் பிரிந்து கிடந்தது. முக்கியமான ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு விதமான ஆட்சி முறை நடைபெற்று வந்தது. ப்ளாரென் நகரத்தில் குடியரசு முறையைத் தழுவிய நிருவாகம் நடைபெற்று வந்தது. இப்படிப் பிரிந்து கிடந்த ராஜ்யங்களனைத்தை யும் நன்றாக இணைத்து, புனித ரோமானிய சக்ர வர்த்தி என்ற பெயரால் அழைக்கப்படக் கூடிய ஒரு மன்னனுடைய அதிகாரத்தின் கீழ் ஐக்கிய இத்தாலி யாக அமைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் ஒரு கட்சி முற்பட்டது. இதனை மன்னர் கட்சி என்று அழைத்தனர். இதற்கு எதிராக, போப்பாண்டவர் அதிகாரத்தின் கீழ் ஐக்கிய இத்தாலி உருவாக வேண்டு மென்ற நோக்கத்துடன் மற்றொரு கட்சி ஏற்பட்டது. இதனைப் போப்பாண்டவர் கட்சி என்று அழைத்தனர். இவ்விரு கட்சிகளும், ப்ளாரென் நகரத்து அரசியலில் மாறி மாறி ஆதிக்கம் பெற்று, ஒன்றை யொன்று அடக்கி யொடுக்க முயன்று வந்தன. தாந்தே, மன்னர் கட்சியைச் சேர்ந்தவன்; அதில் முக்கியதனுங் கூட. கி.பி. 1302ஆம் வருஷம் ஏறக்குறைய தாந்தேயின் முப்பத்தேழாவது வயதில் - போப்பாண்டவர் கட்சி ப்ளாரென் நகரத்து அரசியலில் ஆதிக்கம் பெற் றிருந்தது. இந்தக் கட்சியினர், தாந்தேயும் அவனைச் சார்ந்த வேறு நால்வரும் ப்ளாரென் நகரத்து அரசிய லில் பங்கெடுத்துக் கொண்டு அதிகாரம் வகித்தபோது, அநேக ஊழல்கள் நடை பெறுவதற்குக் காரணமா யிருந்திருக்கிறார்களென்றும், தங்களுடைய கட்சிக்கு - போப்பாண்டவர் கட்சிக்கு - விரோதமாகக் கடுமை யான நடவடிக்கைகள் எடுத்து வந்திருக் கிறார் களென்றும் இப்படிப் பல குற்றங்கள் சாட்டினார்கள். இந்தக் குற்றங் களை மறுத்து வாதாட, தாந்தேயும் அவனுடைய சகாக்களும் அப்பொழுது ப்ளாரென் நகரத்தில் இல்லை; வெளியே அரசியல் அலுவலாகச் சென்றிருந்தார்கள். எனவே, இவர்கள் மேற்படி குறறச்சாட்டு களுக்குச் சரியான சமாதானம் சொல்ல இயலவில்லை. ஆயினும் போப்பாண்டவர் கட்சியினர், இவர்கள் - தாந்தேயும் மற்ற நால்வரும் - குற்றஞ் செய்தவர்களேயென்று தீர்மானித்து (தற்காலத்து நாணய மதிப்பின்படி) மூவாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென்றும, அப்படிச் செலுத்தத் தவறினால், இவர்களுடைய சொத்து பற்றுக்கள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டு அழித்து விடப்படு மென்றும், அபராதத் தொகையைச் செலுத்திவிட் டால், (ப்ளாரென்ஸை முக்கிய நகரமாகக் கொண்ட) டஸக்கனி6 மாகாணத்தை விட்டு வெளியேறி இரண்டு வருஷகாலம் வசித்துக் கொண்டிருக்க வேண்டுமென் றும், இரண்டு வருஷத்திற்குப் பிறகு திரும்பி வந்தாலும், எந்த விதமான அதிகார பதவியையும் இவர்கள் வகிக்கக் கூடாதென்றும், ஒருகால் அந்த இரண்டு வருஷ கெடுவுக்குள் இவர்கள் திரும்பி வந்து அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்தால், இவர்கள் கையும் பிடியுமாகப் பிடித்து உயிரோடு கொளுத்தி விடப்படுவார்களென் றும் தீர்ப்பளித்தனர். இந்தத் தீர்ப்பு வெளியான பிறகு, அரசியல் அலுவல் நிமித்தமாக வெளியூருக்குச் சென்றிருந்த தாந்தே, ப்ளாரென் நகரத்திற்குத் திரும்பவே யில்லை. சுமார் பதினைந்து வருஷ காலம் போப்பாண்டவர் கட்சியின் செல்வாக்குக்குட்படாதிருந்த ஒவ்வோர் ஊரிலும் சிறிது சிறிது காலம் வசித்து வந்தான்; ஏறக்குறைய நாடோடி வாழ்க்கையை நடத்தி வந்தா னென்றே சொல்ல வேண்டும். இந்த நாடோடி வாழ்க்கை நடத்தி வந்த காலத்தில்தான் உலகத்துச் சிறந்த காப்பியங்களுள் ஒன்றெனக் கருதப்படுகின்ற தெய்விக நாடகம்7 என்ற கற்பனை செறிந்த காப்பியத்தை இயற்றினான். இது மூன்று பெரும் பகுதிகளையும் நூறு அத்தியாயங் களையும் கொண்டது. இதில், தாந்தேயே முக்கிய பாத்திரமாயிருந்து. கனவு உலகத்தில் சஞ்சரிக்கும் போது, முதலில் நரகலோகத்திற்கு செல்கிறான். அங்கு, பூலோகத்தில் பாவம் செய்த பலர், கொடிய தண்ட னைகள் அனுபவிப்பதைப் பார்க் கிறான். அங்கிருந்து, பூலோகத்தில் செய்த பாவங்களைக் கழுவிக் கொள்கின் றவர் நிறைந்த உலகத்திற்குச் சென்று, அங்கு அவர்கள், குறைந்தபட்ச தண்டனை அனுபவித்துக் கொண் டிருப்பதைக் காண்கிறான். இந்த இரண்டு உலகங் களுக்கும், இவனை, இத்தாலியப் பூங்காவில் இவனுக்கு வெகு காலம், முன்னாடியே நெடு மரமாக வளர்ந்து நிழல் பரப்பியிருந்த வர்ஜில்8 என்பவன் அழைத்துக் கொண்டு போகிறான். இவன்தான் ஏனீத்9 என்ற காப் பியத்தை இயற்றியவன். இந்த இரண்டு உலகங்களையும் பார்த்துக் கொண்டு, மூன்றாவதாக உள்ள சொர்க்க லோகத்திற்குள் நுழையும்போது இவனை, இவனுடைய காதலியாகிய பியேட்ரி வரவேற்று அந்த உலகத்தைச் சுற்றி காண்பிக்கிறாள். பார்த்து மகிழ்கிறான் தாந்தே. இதுதான் கடவுளின் உறைவிடம் என்று கூறி காப் பியத்தை முடிக்கிறான். கி.பி. 1316ஆம் வருஷம், அதாவது தாந்தே, டகனி, மாகாணத்தை விட்டு வெளியே சென்று விட வேண்டுமென்று உத்தரவு பிறந்த சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இவன் சார்ந்து நின்ற மன்னர் கட்சியினர், பல இடங்களிலும் சிதறிப் போய் பலவீன மடைந்து விட்டனர். இனி அவர்களால் எவ்வித தீமை யும் உண்டாகாதென்று அப்பொழுது ப்ளாரென் நகரத்து அரசியலில் ஆதிக்கம் வகித்து வந்த போப் பாண்டவர் கட்சியினருக்குத் தோன்றியது. எனவே அவர்கள் தாந்தே முதலாயினோர் சில நிபந்தனை களுக்குட்பட்டு ப்ளாரென் நகரத்திற்குத் திரும்பி வரலா மென்று உத்தரவு பிறப்பித்தனர். அந்த நிபந்தனைகள் யாவை? குறிப்பிட்ட ஒரு தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும்; தலையில் ஒரு காகிதக் குல்லாயை அணிந்து கொண்டு, தங்கள் செயலுக்கு வருந்துகின்ற பாவனையில் தலைகுனிந்த வண்ணம் ஊர்வலமாக ப்ளாரென் நகரத்திற்குள் வர வேண்டும். இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு ப்ளாரென் நகரத்திற்குத் திரும்பி வருமாறு தாந்தேக்கு அவனுடைய நண்பர்கள் கடிதங்களுக்குமேல் கடிதங்கள் எழுதினார்கள். ஆனால், மானமிழந்து வாழ ஒருப்படாத இவன்- தாந்தே - தனக்குக் கடிதங்கள் எழுதிய நண்பர் களில் ஒருவனுக்குச் சுடச்சுட ஒரு பதில் கடிதம் எழுதினான். அது வருமாறு:- மே, 1316 ஐய, உங்கள் கடிதத்தை, அதற்குரிய மரியாதையுடனும் அன்புட னும் பெற்றுக் கொண்டேன். அதைக் கவனமாகப் படித்துப் பார்த்தேன் நான் ப்ளாரென் நகரத்திற்குத் திரும்பி வர வேண்டு மென்பதில் நீங்கள் எல்லோரும் எவ்வளவு அக்கரை யுடையவர் களாயிருக்கிறீர்களென்பதை அதிலிருந்து தெரிந்து கொண்டேன். அதற்கு நன்றி. சொந்த ஊரிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒருவனுக்கு அந்த ஊரிலேயே சில நண்பர்கள் இருப்பது அருமை. ஆனால் எனக்கு அப்படிப் பட்ட நண்பர்களில் ஒருவராக நீங்கள் இருக்கிறீர்கள். அதற்காக மீண்டும் உங்களுக்கு நன்றி உங்கள் கடிதத்திற்கு நான் எழுதும் இந்தப் பதில் கோழை மனமுள்ள சிலர் விரும்புகிற தோரணையில் இராது. என்றாலும் இந்தப் பதிலை ஊன்றிப் படித்துவிட்டு, பிறகு அதைப் பற்றி உங்கள் தீர்ப்பை அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன். நீங்களும் மற்ற நண்பர்களும் எழுதியிருப்பதைப் பார்க்கிற போது, நான் ப்ளாரென் நகரத்திற்கு திரும்பி வர விரும்பினால் என் செயலுக்கு வருந்துகின்ற முறையில் வர வேண்டுமென்றும் அபராத காணிக்கையாக ஒரு தொகையைச் செலுத்த வேண்டு மென்றும் ஏற்படுகின்றன. இந்த இரண்டு நிபந்தனைகளும் பரிகாசத்திற்குரியவை இவற்றை எனக்கு அறிவித்தவர்கள், எனக்கு நன்மை தரக்கூடிய யோசனையைத் தெரிவித் திருக்கிறார்களென்று என்னால் கருத முடியவில்லை. பதினைந்து வருஷ காலம் எங்கெங்கோ சுற்றியலைந்து அநேக துன்பங்களை அனுபவித்த தாந்தே, அவன் செர்நத, ஊருக்குத் திரும்பி வர வேண்டுமென்பதில் எவ்வளவு கருணை! நான் நிரபராதி என்பதை உலகமெல்லாம் அறியும். இடைவிடாது படித்து வந்தேன். வியர்வை சொட்ட ஓயாது உழைத்து வந்தேன். இவைகளுக்கு இதுதானா சன்மானம்! நான் தத்துவ ஞானத்தை ஓரளவு அறிந்தவன் எனவே, விலங்கிடப் பெற்ற ஒரு குற்றவாளி போலிருந்து, செய்யாத குற்றத்திற்கு மன்னிப்புக் கோருகின்ற அறிவில்லாத காரியத்திற்கு ஒரு போதும் உடன்பட மாட்டேன். எப்பொழுதுமே தருமத்தை உபதேசித்து வந்தவன் நான். மற்றவர்கள் இழைத்த தீங்குகளை அனுபவித்த பிறகு, எனக்கு யார் தீங்கிழைத் தார்களோ அவர்களுக்கு ஒரு தொகையை அபராதமாகக் கொடுக்க வேண்டுமென்று சொல்வதை என்னால் ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடியாது. அப்படி நான் ஒப்புக் கொண்டால், அது, அவர்கள் எனக்குத் தீங்கிழைத்தது சரியென்று ஒப்புக்கொண்டது போலாகுமல்லவா? இந்த நீசத்தனமான நிபந்தனைகளுக்குட்பட்டு, என் சொந்த ஊருக்குத் திரும்பி வர நான் ஒரு போதும் ஒருப்பட மாட்டேன். என் தீர்ப்பிற்கோ, கௌரவத்திற்கோ பழுது ஏற்படாமல், வேறு வழி ஏதேனும் சொல்வீர்களாயின், அந்த வழியாக என் சொந்த ஊருக்குத் திரும்பி வர தயங்க மாட்டேன். எனக்குத் தீங்கிழைத்தவர்கள் விதிக்கும் நிபந்தனை களுக்குட்பட்டுத்தான் நான் திரும்பி வர வேண்டும்,வேறு வழியில்லை என்பீர்களாயின், ப்ளாரென் நகரத்திற்கு ஒருபோதும் திரும்ப மாட்டேன். வானத்திலே சஞ்சரிக்கும் சூரியனையும் நட்சத்திரங்களையும் நான் எங்கிருந்து கொண்டாவது பார்க்க முடியாதா என்ன? என் சகோதரப் பிரஜைகளின் கண்முன்னர், அவமானத்துடனும் அகௌரவத்துடனும் ப்ளாரென் நகரத்திற்குத் திருமபி வராமலேயே, எங்கிருந்து கொண்டாவது நித்தியமாயுள்ள பொருளின் மீது என் சிந்தனையைச் செலுத்த முடியாதா என்ன? நான் எங்கிருந்தாலும் என் வயிற்றுக்கு ஆகாரம் கிடைக்காமற் போகாது. தாந்தே, தன் கடைசி நாட்களை, அதாவது, கி.பி. 1315 முதல் 1321 ஆம் வருஷம் வரை, இத்தாலியிலேயே ராவென்னா10 என்ற ஊரில் கழித்தான். கி.பி 1313 ஆம் வருஷத்திற்குப் பிறகு இயற்றத் தொடங்கிய தெய்விக நாடகம் என்ற காப்பியத்தை இந்த ஊரில்தான் முடித்தான். கி.பி. 1321ஆம் வருஷம் ஐம்பத்தாறாவது வயதில் இயற்கை எய்தினான். இவன் மரித்த சுமார் ஒன்றே முக்கால் நூற் றாண்டுக்குப் பிறகு இவன்மீது பிறப்பிக்கப்பட்டிருந்த தேசப் பிரஷ்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இந்த நற்காரியத்தைச் செய்தவன் லொரென்ஸே டீ மெடீஷி11 என்பவன். இவன் ப்ளாரென் நகரத்தின் சர்வாதி காரியாயிருந்த காலத்தில்தான் இதைச் செய்தான். 9. வறுமையில் நிறைவு கண்ட புலமை விஜய நகர சாம்ராஜ்யத்தை ஹரிஹரன், புக்கன் என்ற இரண்டு சகோதரர்கள் கி.பி. 1336ஆம் வருஷம் தாபித்தார்கள். இவர்களுக்கு இரண்டு சகோதரர்கள். உறுதுணைவர்களாகவும், நல்வழி காட்டிய ஆசிரியர்க ளாகவும், மதி மந்திரிகளாகவும் இருந்தார்கள். ஒருவர் மாதவ வித்யாரண்யர்: மற்றொருவர் சாயணர்; இருவரும் வேதசாதிர விற்பன்னர்கள்; அரசியல் அறிஞர்கள்; வேதங்களுக்கும் மிருதிகளுக்கும் விளக்க உரை கண்டவர்கள்; அத்வைத மதக்கோட் பாடுகளை விளக்கிப் பல நூல்கள் எழுதியுள்ளார்கள். அரசவையில் இவர்களுடைய செல்வாக்கு மிகுந் திருந்தது. வித்யாரண்யருடைய சமகாலத்தவர் வேதாந்த தேசிகன் என்ற வைஷ்ணவப் பெரியார். கி.பி. 1268ஆம் வருஷம் காஞ்சி புரத்தில் பிறந்த இவர், இளமையில் பல நூல்களைக் கற்று, பண்டிதர் பலர் வியக்கும் வண்ணம் அவைகளில் தேர்ச்சி பெற்றார். வடமொழியிலும் தமிழ் மொழியிலும், காவியங்கள், பிரபந்தங்கள்,வியாக்தி யானங்கள், நாடகம் ஆகிய பல துறைகளில் இவர் சுமார் எண்பத்து மூன்று நூல்களுக்குமேல் எழுதி யுள்ளார். ராமானுஜருக்குப் பிறகு, விசிஷ்டாத்வைத மதக்கோட் பாடுகளை விளக்கி வைப்பதில் தலை சிறந்தவர் என்று இவரை அறிஞர்கள் கருதுகிறார்கள். இவருடைய தமிழ் நூல்களில் மும்மணிக் கோவை, நவரத்தினமாலை, அடைக்கலப் பத்து முதலிய - குறிப் பிடத்தக்கன. இத்தகைய மகாமேதாவியாக வேதாந்ததேசிகர் இருந்தபோதிலும், இவர் கடைசி காலம் வரை பொருளையும் புகழையும் நாடாமல், உஞ்ச விருத்தி செய்து கொண்டு, அதாவது தினந்தோறும் தமக்குத் தேவையான அளவு பிட்சை எடுத்துக்கொண்டு வந்து, அதைப் பக்குவஞ் செய்வித்து உண்டு வந்தார். இத்தகைய வாழ்க்கையில் நிறைவு கண்டார். வித்யாரண்யரும் வேதாந்த தேசிகரும் ஒரே ஆசிரியரிடம் சிறிது காலம் பயின்றவர்கள். இருவரும், வெவ்வேறு மதக்கோட்பாடுகளைப் பின் பற்றுகிறவர்க ளாகவும், உலகரீதியாகப் பார்க்கிற பொழுது வெவ் வேறு நிலையிலுள்ளவர்களாகவும், வெவ்வேறு இடங்களில் வசிக்கிறவர் களாகவும் இருந்தபோதிலும், நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார்கள்; பரபரம் மதிப்புக் கொண்டிருந்தார்கள். ஆனால் வித்யாரண்யர் தமது சகபாடியான வேதாந்த தேசிகர், பிட்சை எடுத்துக் காலங்கழிப்பதை அவ்வளவாக விரும்பவில்லை. அவரை, தாம் செல் வாக்குப் பெற்றிருக்கும் விஜய நகர அரசவைக்கு வர வழைத்து, அரச மரியாதைகளைச் செய்து வைக்க வேண்டுமென்றும், அதன் மூலம் அவரை வசதியாக வாழ வைக்கவேண்டுமென்றும விரும்பினார். அவரை அரசவைக்கு வந்து போகுமாறு ஒரு கடிதம் எழுதி னார். அதற்கு வைராக்கியம் நிறைந்த வேதாந்த தேசிகர், வடமொழியில் ஐந்து செய்யுள்களைக் கொண்ட ஒரு பதிலெழுதினார். இதற்கு வைராக்கிய பஞ்சகம் என்று பெயர் வழங்குவர். இதன் கருத்து வருமாறு: பரந்த இந்தப் பூவுலகத்தின் ஒரு மூலை; அதில் நூற்றில் ஒரு பாகம்; அதை ஆள்வதனால், அகற்ற முடியாத கர்வங்கொண்ட வர்களும், மனக் குழப்பம் நிறைந்தவர்களும் அற்பர்களுமாகிய அரசர்களைப் புகழ்வதையே வாழ்வின் பயனாகக் கருதும் பண்டிதர் களை நான் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. முன்பு எவன், பிடி அவல் தந்த குசேலரை, குபேர சம்பத்துடையவராக்கினானோ அவனையே - அந்தக் கண்ணபிரானையே - நான் வழிபடக் கருதி யுள்ளேன். வயிற்றுப் பசியைப் போக்க, பிட்சை எடுப்பதனால் கிடைக்கும் அன்னம் போதாதா? குளத்தில் தங்கியிருக்கும் தண்ணீரில் ஒரு கை தண்ணீர் உயிரைக் காப்பாற்றப் போதாதா? முயற்சியில்லாமல், கிடைக்கக்கூடிய கந்தல் துணி, உடுத்துவதற்குப் போதாதா? வயிற்றை நிரப்பிக் கொள்வதற்காக, அறிஞர்கள்கூட, அற்ப அரசர்களை அடை கிறார்களே இது ஆச்சரியம்! ஆச்சரியம்! கடல் நடுவில் எரிந்து கொண்டிருக்கும் வடவைத் தீயின் கிரணங்கள் போல் பிரகாசிக்கும் ஜாடராக்னியான (பசிக்கனல் - வயிற்றில் பசியைத் தூண்டிவிடுவது) நன்றாக எரியட்டும். ஆனால் நாம், மாலை நேரத்தில் மலர்ந்து மணம் வீசும் ஜாதி மல்லிகையின் வாசனையைக் கொண்ட நாவினால் அரசர்களைத் துதி பாடி இரத்தல் செய்யோம். அற்ப அரசர்களின் அரண்மனை வாயிலில் அமர்வது இழிவு. அந்த இழி நிலையிலுள்ளவர்களுக்கு எனது வணக்கம். என்னைப் பொறுத்த மட்டில், மைவண்ணனும், அருச்சுனன் ரதத்தைச் செலுத்தியவனுமாகிய கண்ணனே எனக்கு எல்லாம். அவனே என்னுடைய பொக்கிஷம்! அரசர்களை அடைந்து பெறும் பொருள், பசியைப் போக்க லாம்; ஆனால் அது அழிந்துபோகுந்தன்மையது. அருச்சுனனை வளர்த்தது எதுவோ, கோவர்த்தனகிரியைக் கை தூக்கி எடுத்து ஆநிரையைக் காத்தது எதுவோ, நம்முடைய எல்லாக் காரியங்களை யும் முடித்துத் தருவது எதுவோ, எவ்விதத் துன்பத்தையும் கொடாமலிருப்பது எதுவோ, அது, அந்தமெய்ப் பொருள், என்னிடம் எப்போதும் இருக்கிறது. எனக்குப் பிதிரார்ஜித சொத்து ஏதும் இல்லை; சுயார்ஜிதமான சொத்தும் இல்லை. ஆனால் என்னுடைய பிதாமகனால் (அதாவது பிரம்மாவினால்) சம்பாதிக் கப்பட்ட பொருள் எனக்கு இருக்கிறது. அது எனக்குப் போது மானது. வேதாந்த தேசிகர் நூற்றிரண்டு வயது வரை வாழ்ந்துவிட்டு 1369ஆம் வருஷம் திருமார்பனின் திருவடி சேர்ந்தார். 10. கொலம்ப எழுதிய முதற்கடிதம் அமெரிக்காவைக் கண்டுபிடித்தவன் கொலம்ப1 என்று பொதுவாகச் சொல்லப்பட்டு வருகிறதாயினும், உண்மையில் அவன் கண்டு பிடித்த தெல்லாம், அமெரிக்காவுக்குக் கிழக்குப் பக்கத்திலுள்ள சில தீவுகளையே. இந்தத் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே, ஐரோப்பாவிலுள்ள பல்வேறு நாட்டவரும் அமெரிக்கா சென்று குடியேறுவது சாத்திய மாயிற்று. இந்தக் குடியேற்றத்திற்கு வழி காட்டியவன் என்ற முறையிலேயே, கொலம்ப, அமெரிக்காவைக் கண்டு பிடித்தான் என்று சொல்வது ஒரு மரபாயிருக்கிறது. புதிய நாடுகளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஆசை மேலீட்டால், கொலம்ப, நான்கு தடவை கடற் பயணத்தை மேற் கொண்டான். இவனுடைய முயற்சிக்கு அப்பொழுது பெயின் தேசத்து அரச தம்பதிகளா யிருந்த, பெர்டினாந்தும் இபெல்லா2வும் ஆதரவு தந்தனர். இவனும் தான் கண்டுபிடித்த தீவுகள் பெயின் தேசத்தின் ஆதிக்கத்திற்குட் பட்டவை என்று தெரி விக்கின்ற முறையில், அவற்றிற்குப் புதிய பெயர்கள் கொடுத்து அழைத்தான்; அவற்றில், பெயின் தேசத்துக் கொடிகளைப் பறக்கவிட்டான். இவனால் பெயின் தேசத்தின் அரசியல் செல்வாக்கு ஓரளவு விரிந்தது என்று சொல்ல வேண்டும். இவ்வளவு செய்த இவனுக்குக் கடைசியில் கிடைத்த பரிசு என்ன? அவமானம்! கை விலங்கு! வறுமையின் ஆழத்தில் புதைந்து போய் அங்கேயே தன் கடைசி மூச்சை விடும்படியான நாதியற்ற நிலைமை! இந்த நிலைமைக்கு இவன் வந்ததன் காரணம், இவனை, ஒரு நிரபராதி என்று சொல்லக்கூடிய வகையில் இவன் நடவடிக்கைகள் இல்லாமலிருந்தது தான். இந்தத் தீர்ப்பு ஒரு பக்கமிருக்கட்டும். கொலம்ப, முதல் தடவையாக கி.பி.1492ஆம் வருஷம் ஆகட் மாதம் மூன்றாந் தேதி, பெயின் தேசத்தின் தென்கிழக்குப் பக்கத்திலுள்ள பாலா3 என்ற துறைமுகத்திலிருந்து, நூற்றிருபது மாலுமிகளைக் கொண்ட மூன்று கப்பல்களுடன் மேற்கு நோக்கிப் புறபட்டான். கொந்தளிக்கும் அத்லாந்திக் மகா சமுத் திரத்தில் பல இடையூறுகளைச் சமாளித்துக் கொண்டு சென்று, புறப்பட்ட சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு சில தீவுகளைக் கண்டான். இவற்றுள் ஒன்று ஜுவானா4. இதுவே தற்போது க்யூபா5 என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீவை அடைந்த பிறகு, இந்தத் தீவைப் பற்றி பெர்டினாந்து மன்னனுடைய பொக்கிஷ மந்திரிக்கு ஒரு கடிதம் எழுதினான். இதுவே இவன் புறப்பட்ட பிறகு எழுதிய முதற் கடிதம் என்று சொல்லப்படுகிறது இதன் சில பகுதிகள் வருமாறு:- நான் பெயின் தேசத்துத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட முப்பத்து மூன்றாவது நாள், சில தீவுகளைக் கண்டேன். அவைகளில் எண்ணிறந்த மனிதர்கள் வசித்துக் கொண்டிருந்தார்கள். எல்லாத் தீவுகளையும், நமது அதிருஷ்டம் மிக்க அரசர் பொருட்டுச் சுவாதீனப்படுத்திக் கொண்டதாகப் பிரகடனம் செய்வித்தேன். நமது தேசத்துக் கொடியை ஆங்காங்கு பறக்க விடும்படி உத்தரவிட்டேன். யாரும் இவைகளுக்கு ஆட்சேபிக்கவில்லை. ஒரு தீவுக்கு நமது ரட்சகரின் (யேசுநாதரின்) பெயரைக் கொடுத்தேன் (இதுவே ஸான் ஸால்வடார்6 என்பது) இன்னொன்றுக்கு நமது அரசர் பெயரும் மற்றொன்றிற்கு நமது அரசியின் பெயரும் இப்படி ஒவ்வொன்றாக ஒவ்வொரு புதுப பெயர் கொடுத்தேன். இந்தத் தீவுகளில் ஒன்று ஜுவானா இதன் கடற்கரையோரமாக மேற்கு நோக்கிச் சிறிது தூரம் சென்றேன் செல்லச் செல்ல எங்கே போய் முடிகிறதென்று தெரியவில்லை. அவ்வளவு பெரிதாயிருந்தது. இதனால் இஃது ஒரு தீவாக இருக்க முடியாதென்றும் மிகப் பெரிய சீனாதேசமாக இருக்கக் கூடுமென்றும் எண்ணினேன். கடலோரத்தில் ஒரு நகரம் கூடத் தென்படவில்லை. சிலசில கிராமங்களும் ஒழுங் கில்லாத சில நிலபுலங்களுமே தென்பட்டன. இங்கு வசித்துக் கொண்டிருந்தவர்களுடன் பேச்சுக்கொடுக்க முயன்றேன்; முடிய வில்லை. ஏனென்றால் அவர்கள், எங்களைப் பார்த்தவுடனேயே பயந்து ஓடிப் போய் விட்டார்கள். இன்னும் சிறிது தூரம் சென்றால், பெரிய கட்டடங்களும் நகரங்களும் தென்படக் கூடுமென்று கருதி மேலும் சென்றேன். எவ்வளவு தூரம் சென்றாலும் பயனிராது என்ற தெரிந்தது. தவிர, நாங்கள் சென்ற வழி, சிறிது தூரத்திற்குப் பிறகு, வடக்குப் பக்கமாகத் திரும்பியது. அந்தப் பக்கம் செல்வதைத் தவிர்க்க விரும்பினோம். ஏனென்றால் அந்தப் பக்கம் குளிரும் காற்றும் பலமாயிருந்தன. எனவே. சென்ற வழியே திரும்பி வந்து, ஒரு விரிகுடாவை அடைந் தோம். அங்கிருந்து கொண்டு, தரைப் பக்கமாக உட்புறம் சென்று அரசன் யாராவது இருக்கிறானா, நகரமேதேனும் தென்படுகிறதா என்று பார்த்து வர, எங்களில் இரண்டு பேரைப் பொறுக்கியெடுத்து அனுப்பினோம். அவர்கள் மூன்று நாள் பிரயாணம் செய்து விட்டுத் திரும்பி வந்து, கணக்கில்லாத ஜனங்களையும் வீடுகளையும் பார்த்த தாகவும், அந்த வீடுகளெல்லாம் மிகச் சிறியனவாக இருக்கின்றன என்றும், அவைகளுக்கு மேலாக எவ்வித அரசாங்கமும் இருப்ப தாகத் தெரியவில்லை யென்றும் சொன்னார்கள். இந்த (க்யூபா) தீவில், கப்பல்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கக்கூடிய அகன்ற துறைமுகங்கள் பல இருக்கின்றன. இவைகளைப் போல் நான் எங்கும் பார்த்ததில்லை. ஆரோக்கியத்தைத் தரவல்ல பெரிய நதிகள் பல இங்கு ஓடுகின்றன. உயர்ந்த மலைகள் இங்குக் காணப்படுகின்றன. பொதுவாக நான் பார்த்த தீவுகள் யாவுமே மிக அழகாக இருக்கின்றன. இவற்றில் பலவகை மரங்கள் வானுற ஓங்கி வளர்ந்திருக்கின்றன. இவற்றின் இலைகள் எந்தக் காலத்திலும் உதிர்வதில்லை. சில மரங்களில் பழங்களும் சில மரங்களில் வண்ண வண்ண மலர்களும் காணப்படு கின்றன. ஜுவானா தீவில் ஏழெட்டு விதமான தென்னை மரங்கள் இருக்கின்றன. இவற்றின் உயரத்தையும் அழகையும் என்னென்று சொல்வது? இன்னும் கணக்கில்லாத தேவதாரு மரங்களும், பரந்த புல் தரைகளும், விதம் விதமான பட்சிகளும், வகை வகையான தேனும், வேறு வேறான உலோகங்களும் இந்தத்தீவில் காணப்படு கின்றன. ஆனால் இரும்பு மட்டும் இங்கு இல்லை. ஹிபானா7 என்ற தீவும் (தற்போது ஹைடி8 என்பது) இப்படித்தான் இருக்கிறது, .இந்தத் தீவில் ஏலம், கிராம்பு போன்ற வாசனைச் சாமான் களும் பொன் முதலிய உலோகப் பொருள்களும் ஏராளமாக இருக்கின்றன. நான் கண்டதும் அறிந்ததுமான எல்லாத் தீவுகளிலும் ஆண் பெண் இருபாலாரும் பிறந்த வடிவத்துடனேயே இருக்கிறார்கள். பெண்களிற் சிலர் மட்டும் இலையினாலோ சிறிய துணியினாலோ மூடிக்கொள் கிறார்கள். இந்தத் தீவுகளிலுள்ள ஜனங்கள் மேலே சொன்னபடி, இரும்பு என்பதை அறியாதவர்கள். இவர்களிடத்தில் எவ்வித ஆயுதங்களும் இல்லை. ஆனால் ஆயுதங்களை உபயோகிக்கக்கூடிய சக்தி இவர் களுக்கு இல்லையென்று சொல்ல முடியாது. எல்லோருமே நல்ல திடசாலி களாயிருக்கிறார்கள். என்றாலும் பயந்த சுபாவமுடைய வர்களாயிருக் கிறார்கள். உறுதியாயுள்ள ஒருவகை நாணலை (கொறுக்சையை) சூரிய வெப்பத்தில் காய வைத்து, அதன் அடிப்பாகத்தில் ஒர மரத்துண்டை கூறாக்கி இணைத்து, அதையே அம்பு மாதிரி வைத்துக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் இவைகளை அடிக்கடி உபயோகிப்பதில்லை. நான், என்னுடைய ஆட்களில் இரண்டு மூன்று பேரைத் தெரிந் தெடுத்து, இவர்கள் வசிக்கும் கிராமங்களுக்கு அனுப்பி இவர்களோடு தொடர்பு கொள்ளுமாறு செய்வேன். ஆனால் இவர்கள் என்னுடைய ஆட்களைப் பார்த்ததும், கிராமங்களைக் காலிசெய்துவிட்டு, குமபல் கும்பலாக வெளியேறிவிடுவார்கள். என்னுடைய ஆட்களால் இவர் களுக்கு எந்த விதமான தொந்தரவும் ஏற்பட்டது கிடையாது. இப்படி இவர்கள் பயந்து ஓடிய போதிலும், ஒரு சிலரை நான் ஏகதேசமாகச் சந்திக்கும்படி நேரிட்டுவிடும். அப்பொழுது இவர்களுக்கு, என்னிடம் என்ன இருக்கிறதோ அதைக் கொடுப்பேன். இதற்குப் பதிலாக நான் எதையும் இவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை. தங்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லையென்று இவர்களுக்குத் தெரிந்து விட்டால் போதும் அப்பொழுது மிகவும் சரள சுபாவத் துடன் நம்மிடம் பழகத் தொடங்கி விடுகிறார்கள். நம்பிக்கை வைக்கப்படக் கூடியவர்களாக நடந்து கொள்கிறார்கள்; தாராள மனப்போக்குடையவர் களாயிருக்கிறார்கள்; தங்களிடத்தில் உள்ளதை மற்றவர்கள் கேளாமலேயே கொடுத்து விடுகிறார்கள். சில சமயங்களில் உங்களுக்கு என்ன வேண்டும்? கேளுங்கள்; கொடுக் கிறோம் என்று பிறரைக் கேட்கும் படி சொல்கிறார்கள்; நாம் எவ்வளவு அற்பமான ஒரு பொருளைக் கொடுத்தாலும் அதைச் சந்தோஷத்துடன் பெற்றுக்கொண்டு அதற்குப் பிரதியாக, தங்களிட முள்ள மதிப்புள்ள பொருள்களைக் கொடுத்து விடுகிறார்கள். ஆகவே இவர்களுக்குக் கண்ணாடிகள், தட்டுகள், சாவி வளை யங்கள், பூட் கட்டும் கயிறுகள் இப்படிப்பட்டவை களைக் கொடுக்க வேண்டாமென்று எனது ஆட்களுக்கு உத்தரவிட்டேன். நாம் கொடுக்கும் அற்பமான பொருள்களை, இவர்கள் மிக மதிப்புக் கொண்டவை என்று கருதி விடுகிறார்கள். இந்தத் தீவுகளில் வசிக்கின்ற அனைவரும், தோற்றத்திலும், நடையுடை பாவனைகளிலும்; பேச்சிலும் அதிக வித்தியாசப் பட்டவர்களா யிருக்கவில்லை. பரபரம் ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொண்டு பழகுகிறார்கள். இவை காரணமாக, இவர்களைக் கிறிதுவர்களாக்குவது சுலபம். இவர்களும் கிறிதுவர்க ளாவதற்குத் தயாராயிருக்கிற மாதிரி தென்படுகிறது. கூடிய மட்டில் எல்லோரையும் கிறிதுவர்களாக்க வேண்டுமென்பது தானே நமது அரசர் பெருமானின் விருப்பம். எனக்குத் தெரிந்த வரையில், இந்தத் தீவுகளில் வசிக்கும் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு மனைவிதான். இந்த ஒருதார மணத்துடனேயே எல்லோரும் திருப்தியடைகிறார்கள். அரசர்கள், அரச வமிசத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிய இவர்கள் மட்டும், இருபது மனைவி மார்களை வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார்க ளென்று தெரிகிறது. பொதுவாக இந்தத் தீவுகளில், ஆண்களைவிட பெண்கள் தான் அதிகமாக வேலை செய்கிறார்களென்று தோன்றுகிறது? ஒவ்வொரு வருக்கும் தனித்தனி சொத்து பற்றுக்கள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. 11. வேண்டுதலும் வேண்டாமையும் தமிழ்நாட்டு நாயன்மார்களைப் போலவும் ஆழ்வார்களைப் போலவும் மகாராஷ்டிரத்தில் அநேகர் இருந்திருக்கின்றனர். இவர்களில் இங்குக் குறிப்பிடத் தக்கவர்கள் இருவர். ஒருவர் துகாராம் சுவாமிகள் (கி.பி.1568 - 1649) இன்னொருவர் ராமதா சுவாமிகள் (கி.பி.1608 - 1689). இவர்களுடைய பாடல்கள், இலக்கிய நயமுடையனவாகவும், மக்களை நல்வழிப்படுத்துவன வாகவும் இன்றளவும் இருந்து வருகின்றன. சிவாஜி மகாராஜன் (கி.பி.1627 - 1680) இவ்விரு வருடைய போதனைகளில் பெரிதும் ஈடுபட்டவன். இவர்களில் துகாராம் சுவாமிகள் ஒரு மளிகைக்கடை வியாபாரியின் மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்து விட்டதனால், குடும்பப் பொறுப் பையும் வியாபாரப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டியவரானார். ஆனால் இரண்டிலும் இவர் மனம் செல்லவில்லை. இரண்டிலும் தோல்வியே கண்டார். வறுமை மேலிட்டது. ஆனால் இவர் மன மெல்லாம் கடவுள் நெறியிலேயே சென்று கொண் டிருந்தது. துறவு பூண்டார். ஆண்டவன் புகழைப் பாடுவதிலும், பக்திமார்க்கத்தில் மக்களைச் செலுத்து வதிலும் காலங்கழித்தார். ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தார். இவரது பக்திப் பாடல்களைக் கேட்டு மக்கள் பரவசப் பட்டுப் போனார்கள்; இவரிடத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டார்கள். இவர் புகழ் மகாராஷ்டிரம் முழுவதும் பரவியது. சிவாஜிக்கு இருபது அல்லது இருபத்தோரு வயது இருக்கும்! ஒரு நாள், துகாராம் சுவாமிகளின் பாடல் ஒன்றை ஒரு பக்தன் வாயிலாகக் கேட்டான். உள்ளம் உருகி நின்றான். பின்னர் அவருடைய வேறு சில பாடல்களையும் செவி மடுத்தான். அவருடைய வாழ்க்கைப் போக்கை ஒருவாறு தெரிந்து கொண்டான். அவரை வரவழைத்து, தன்னோடு இருக்கச் செய்ய வேண்டுமென்று விரும்பினான். அப்படி வந்து வசிப் பதாயிருந்தால், பொன்னும் பொருளும் ஏராளமாகக் கிடைக்கச் செய்வதோடு எல்லாவித வசதிகளையும் செய்து கொடுப்பதாகவும் ஒரு பெரியார் மூலம் அவருக்கு சொல்லியனுப்பினான். இதற்கு துகாராம் சுவாமிகள் சில கவிதைகள் மூலம் பதில் எழுதியனுப்பினார். அவற்றின் சில பகுதிகள் வருமாறு:- என்னை நீ சந்திக்க வேண்டுமென்று உறுதி பூண்டிருக்கிறாய்; இதுதான் உன்னுடைய கடிதத்தின் சாரம்! அப்படியானால் என்னுடைய இந்தப் பதிலைக் கேள். அரசனே, என் மனப்பூர்வமான வேண்டுகோளுக்குச் செவி கொடு. எவ்வித நோக்குமில்லாமல் காட்டிலே திரிந்து கொண் டிருக்கிறேன். என்னைப் பார்த்தாலே அருவருப்பு உண்டாகும்; மிகக் குறைவான ஆடையையே உடுத்திக் கொண்டிருக்கிறேன். என் உடம்பின்மீது தூசு தும்புகள் படிந்திருக்கின்றன. எனக்குக் குறைவான ஆகாரந்தான். பழங்களை உட்கொண்டே காலந்தள்ளுகிறேன். எனது அங்க அவயவங்களோ மிக மெல்லியனவாகவும் கோணல் மாணலாகவும் இருக்கின்றன. மற்றவர்கள் பார்வைக்குத் தகுதியுடைய தாக அவை இல்லை. ஆகையால் துகாராம் உன்னை வேண்டிக் கொள்கிறான்; உன்னை வந்து பார்க்க வேண்டுமென்பதைப் பற்றி அவனிடம் பேசாதே. உன்னுடைய சந்நிதானத்திற்கு நான் வருவதனால் யாருக்கு என்ன நன்மை? என் கால்கள் தாம் சோர்வடையும் எனக்கு ஆகாரமா? பிட்சை எடுத்துச் சாப்பிடுகிறேன். அது போதும்! உடையா? கந்தைத் துணிகள் இருக்கின்றன. படுப்பதற்குக் கற்பாறை இருக்கிறது; உடம்பை மூடிக் கொள்ள ஆகாயம் இருக்கிறது. இப்படியிருக்கிறபோது, நான் யாருடைய தயவை எதிர் பார்த்து நிற்கவேண்டும்? அப்படி நிற்பது வாழ்க்கையை வீணடிப் பதாகும். எனக்குக் கௌரவம் வேண்டுமென்பதற்காக நான் அரசவை யில் போய் நிற்க வேண்டுமா என்ன? அங்கு - அரசவையில் - திருப்தி என்பது காணக்கிடைக்காத அரிய பொருள். அரசவையில் பணக்காரர்களுக்குத்தான் கௌரவமெல்லாம். மற்றவர்களுக்குக் கௌரவம் என்பது இல்லை. ஆனால் எனக்கோ, ஆடம்பரமாக ஆடைகளை அணிந்து கொண்டிருக்கிறவர்களைப் பார்த்தாலோ மரண வேதனை அடைவது போன்ற உணர்ச்சி உண்டாகிறது. இப்படியெல்லாம் நான் சொல்வதைக் கேட்ட பிறகு, உனக்கு என் மீது அலட்சியபுத்தி ஏற்படலாம். ஆனால் கடவுள் யாரையும் அலட்சியப்படுத்து வதில்லை. உனக்கு ஒரு ரகசியத்தைச் சொல்லி வைக்கிறேன்.பிட்சை எடுத்து உண்பதைக் காட்டிலும் வேறு பெரிய சந்தோஷம் எதுவு மில்லை, உலக ஆசைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள், எவ்வளவு சடங்குகள் செய்தாலும் எத்தனை உபவாசங்கள் இருந்தாலும் துக்கத்தில் கிடந்து உழல வேண்டியவர்கள் தான். துகாராம், மனநிறைவு என்ற செல்வத்தை நிறையப் பெற்றிருக் கிறான்; கடவுளின் அன்பைப் பெற்றிருக்கிறானே அதுவே அவ னுடைய ஆதி. முற்பிறவியில் செய்த புண்ணிய வினைகளே அவனுக்குக் கவசம். இதைப் படித்த சிவாஜி அப்படியே மெய் மறந்து போனான். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, துகா ராம் சுவாமிகளைத் தேடிக்கொண்டு புறப்பட்டான். எங்கெங்கோ அலைந்து திரிந்து கடைசியில் அவரைக் கண்டுவிட்டான். அவர் அடிகளில் விழுந்து வணங்கி னான். தான் அணிந்திருந்த உடைகளைக் கழற்றிக் கிழித்து எறிந்து விட்டு, கந்தல் துணிகள் சிலவற்றைப் பொறுக்கியெடுத்து வந்து உடுத்திக் கொண்டு சுவாமிகள் பின்னால் மௌனமாக உட்கார்ந்து விட்டான். இங்ஙனம் யாருக்கும் தெரிவிக்காமல் வந்து விட்ட சிவாஜியை இவனுடைய பரிவாரத்தினர் பல இடங்களிலும் அலைந்து தேடி, கடைசியில் கண்டு பிடித்து விட்டனர்; ஊர் திரும்பி வந்து அரச காரியங் களைக் கவனிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், சிவாஜி இவை களுக்குச் செவி கொடுக்க மறுத்து விட்டான். கடைசியில் இவர்கள் சிவாஜியின் பரிவாரத் தினர் - சிவாஜியின் தாயார் ஜீஜாபாயிடம் சென்று நிலைமையைத் தெரிவித்தார்கள். அவள் உடனே சிவாஜியின் இருப்பிடத்திற்கு வந்து ஹிந்து சாம் ராஜ்யத்தை தாபிக்க வேண்டு மென்றும், ஹிந்து மதத்திற்குப் புத்துயிர் கொடுத்து வளர்க்க வேண்டு மென்றும், உன்னைப் பின் பற்றி நிற்கும் அனைவருக் கும் ஊக்கமளித்து விட்டு இப்பொழுது நீ இப்படி ஒதுங்கியிருக்கலாமா? பாரதநாட்டில் ஞானி களும் துறவிகளும் எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறார்கள். அவர் களுக்குக் குறைவில்லை. ஆனால் புனிதமான இந்தப் பாரத நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்க இப்பொழுது ஒரு வீரன் தேவை. உனக்குத்தான் அந்தப் பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது. ஹிந்து தர்மத்தைக் காப்பாற்ற பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றித் திரியும் பாடகர்களும் சன்னி யாசிகளும் இப்பொழுது தேவையில்லை; பலங் கொண்ட படைகளே தேவை. ஆகையால் எழுந்திரு; புறப்படு; உன்னுடைய அரச கடமைகளைச் செய்ய முற்படு என்றெல்லாம் கடிந்தாற் போல் கூறினாள். சிவாஜி, தாயின் வாசகத்தில் உண்மை இருக்கிற தென்பதை ஒப்புக் கொண்டு, துகாராம் சுவாமிகளிடம் விடைபெற்றுக் கொண்டான். ஊர் திரும்பி அரச கடமைகளை மேற்கொண்டான். இதற்குப் பிறகு, துகாராம் சுவாமிகளை இவன் சந்திக்கவே இல்லை. இவன் சந்தித்த அதே வருஷத்தில் - 1649ஆம் வருஷத்தில் - அவர் மறுவுலகத்திற்குச் சென்று விட்டார். 12. தந்தையின் பரிவுக்கு அஞ்சிய மகன் பாரத நாட்டில் டில்லியைத் தலைநகரமாகக் கொண்டு மொகலாய சாம்ராஜ்யத்தை தாபித்தவன் பாபர். இவன் இடுக்கண்களைக் கண்டு நகையாடி யவன்; போர் தந்திரம் வல்லவன். இல்லாவிட்டால் ஹிந்துதானத்தில் ஆதிக்க பலமும் படை பலமும் பெற்றிருந்த ஆப்கானியர்களும் ராஜபுத்திரர்களும், பானிப்பட்டு போர்க்களத்திலும் (கி.பி.1526) காண்வா போர்க்களத்திலும் (கி.பி.1527) பெரும் படையுடன் இவனை எதிர்த்து நின்றபோது, தன்னுடைய சிறிய படை கொண்டு வெற்றி கண்டிருப்பானா? பாபர், போர்த் தந்திரம் வல்லவனாயிருந்ததோடு, தன்னுடைய தாய் மொழியாகிய துருக்கி மொழியிலும், மற்றும் பாரசீக மொழியிலும் புலமை பெற்றவன் இந்த இரண்டு மொழிகளிலும் அநேக கவிதைகள் இயற்றி யிருக்கிறான். இவன் எழுதிய வாழ்க்கைக் குறிப்புக்கள் என்ற நூல், உலக இலக்கியங்களின் வரிசையில் இடம் பெற்றிருக்கிறது. இவன் ஆண்ட காலம் கி.பி.1526-1530. பாபருக்குப் பிறகு அவன் மகன் ஹுமாயூன் பட்டத்திற்குவந்தான். இவனை துரதிருஷ்டசாலி என்று சொல்ல வேண்டும். தந்தையிடமிருந்து பெற்ற சாம் ராஜ்யத்தை, தன்னுடைய பலவீனத்தினால் சில ஆண்டு களுக்குள் இழந்துவிட்டு, சுமார் பதினைந்து ஆண்டுகள் வரை நாடோடி வாழ்க்கையை நடத்தினான். பிறகு பாரசீக மன்னன் அளித்த படை உதவி கொண்டு, டில்லியையும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களையும் கைப்பற்றி மீண்டும் மொகலாயர் ஆட்சியை நிறுவி னான். ஆனால் தொடர்ந்து ஆள இவன் கொடுத்து வைக்கவில்லை. கி.பி. 1556ஆம் வருஷம் ஜனவரி மாதம் ஒரு நாள், தன் அரண்மனை மாடியிலிருந்து கீழே இறங்கி வருகிறபோது படிக்கட்டுகளிலிருந்து சறுக்கி விழுந்து அதன் விளைவாக இறந்து போனான். ஹுமாயூனுக்குப் பிறகு அக்பர், மொகலாய சாம்ராஜ்யத்தைக் கட்டி வளர்த்தவன். இவனை மகா அக்பர் என்று சரித்திரம் அழைக்கிறது. இவன் பல போர்களை நடத்தி, மொகலாய சாம்ராஜ்யத்தின் எல்லையை விதரித்துக் கொண்டு போனான். ராஜபுத்திர மன்னர் பலர் இவன் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டனர். ஆனால் மேவார் ராஜ்யத்து அதிபதி யாகிய மகாராணாபிரதாப் சிங் இவனுடைய ஆதிக் கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டான். இதற்காக இவன் பல தடவை அக்பர் படைகளுடன் மோத வேண்டியிருந்தது. எத்தனையோ துன்பங்களை அனுப விக்க நேர்ந்தது. இவனுடைய வாழ்க்கை ஒரு வீர காவியம். கடைசியில் அக்பருக்குத் தலைவணங்காமலே கி.பி. 1597ஆம் வருஷம் ஐம்பத்தேழாவது வயதில் இறந்து போனான். அக்பர், சர்வ சமய சமரஸக் கொள்கையை அனுஷ்டித்தான். எல்லா மதத்தினரும் இவன் ஆட்சியில் எல்லாச் சலுகைகளையும் பெற்று வாழ்ந்தனர். இதனால் இவன் ஜனங்களுடைய விசுவாசத்தைப் பெற் றிருந்தான். இவன் ஆண்ட காலம் கி.பி. 1556-1605. அக்பருக்குப் பிறகு அவனுடைய மூத்த மகன், ஸலீம் என்பவன் ஜஹாங்கீர் என்ற பட்டப் பெயருடன் அரசு கட்டிலில் அமர்ந்து, இருபத்திரண்டு வருஷ காலம் (கி.பி. 1605-1627) ஆண்டான். இவன், வங்காளத் தில் பர்த்துவான் மாகாணத்து அதிபதியாயிருந்த ஷேர் அப்கான் என்பவனுக்கு வாழ்க்கைப்பட் டிருந்த மிர் உன்னிஸா என்ற பேரழகியை, அவன் ஒரு போரில் கொலையுண்ட பிறகு, தன் மனைவியாக்கிக் கொண் டான். தன் மனைவியான பிறகு அவளை நூர்ஜஹான் என்று அழைக்கச் செய்தான். இவனுடைய அரச காரியங்களில் அவளுடைய செல்வாக்கு மிகுந்திருந்த தென்பர். ஜஹாங்கீருக்கு, குரோ, பார்வேஜ், குர்ரம், ஷரியார் என்று நான்கு பிள்ளைகள். இவர்களில் குர்ரம் என்பவன்தான், ஜஹாங்கீருக்குப் பிறகு ஷாஜஹான் என்ற பட்டப் பெயருடன் ஆண்டான். இந்த ஷாஜஹான் பட்டத்திற்கு வருமுன், தகப்ப னாருக்கு விரோதமாகக் கலகங்கள் பல செய்தான். ஜஹாங்கீர், இந்தக் கலகங்களை யெல்லாம் அடக்கி விட்டான். தந்தைக்கும் மகனுக்கும் மனதாபம் ஏற்பட்டிருந்த நிலையில் இருவருக்குமிடையே நடை பெற்ற கடிதப் போக்குவரத்து இங்குத் தரப்பட்டிருக் கிறது. ஜஹாங்கீரின் கடிதம் பெருமை வாய்ந்த மகனும், அதிருஷ்டமும் வெற்றியுமான மகுடத்தின் முத்தும், சந்தோஷமும் சத்தியமுமான கழுத்து ஆரத்தின் நடுவிலே துவங்கும் விலயுயர்ந்த ரத்தினமும், சக்கரவர்த்தியின் அதிகமான கவனத்தையும் அன்பையும் பெற்றிருப்பவனுமான அரச குமாரன் சுல்தான் குர்ரமுக்கு- அரசுக்குச் செய்ய வேண்டிய மனமறிந்த கடமைகளையும், பெற்றோர்கள் விஷயத்தில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக் களையும் பற்றி அரச குமாரன் கவனியாமல் இருப்பது விசனிக்கத் தக்கது. அவன்-அரசகுமாரன்-கிலாபத் மீதும் அரச குடும்பத்தின் மீதும் தனக்கு துவேஷம் இருக்கிறதென்பதற்கான அடையாளங் களைக் காட்டி வருகிறான். அரச பீடத்தையும் அரச மகுடத்தையும், தான் கைப்பற்றிக் கொள்ள வேண்டு மென்பதற்காக, தனது தகப்பனாருக்கு விரோதமாக எதிர்ப்புக் காட்டிய எந்த ஓர் அரசிளங் குமாரனும் இருந்ததாகத் தெரியவில்லை. இப்பொழுது, குர்ரமைப் போன்ற அதிருஷ்டமும் ஐசுவரியமும் நிறைந்த ஓர் அரச குமாரன் விரோதம் காட்டுவது விசனிக்கத்தக்கதாகும். சண்டைகள் பல செய்து, நாடுகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற மனத்துணிவு அரச குமாரனுக்கு ஏற்பட்டிருக்குமானால், காந்தஹார் பிரதேசத்தின் மீது மொகலாயர்கள் ஆதிக்கம் இருக்கக் கூடாதென்றும், அதனை அடியோடு அழித்து விடவேண்டுமென்றும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் பாரசீகத்தின் அப்பா1 சக்ரவர்த்திக்கு விரோத மாக, தன்னிடத்திலே விசுவாசமும் நம்பிக்கையும் வைத்திருக்கும் படைகொண்டு செல்லட்டுமே? அப்பாஸின் ஆதிக்கத்தை ஒழிக் கட்டுமே? சிங்காதனத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் பொருட்டு, தன் தகப்பனார் மீதே திரும்புகிற போதுதான் மனத்திற்கு நிரம்பச் சங்கடமாயிருக்கிறது. அரச ஆதிக்கமென்பது வெறும் முயற்சியினால் மட்டும் பெற்றுவிடக் கூடியதா? வருங்காலத்தில் வெற்றி ஏற்படுவதென்பது தெய்வத்தின் திருவருளைப் பொறுத்திருக்கிறது? கடவுள், தமக்குப் பிடித்த ஒருவருக்குத் தான் அரச கௌரவத்தை அளிக்கிறார். ஆதலின் அரச குமாரனான குர்ரம், வணக்கமாயிருக்க வேண்டும்; ஒரு குழந்தை யைப் போல் அடங்கியிருக்க வேண்டும். தனது போர்த் திறமையை யுத்த களத்தில் காட்ட வேண்டுமென்று விரும்பினால், நேரே காந்தஹாருக்குச் சென்று அங்கே தன் போர்த் திறமையைக் காட்டட்டும். அவன் அரச சந்நிதானத்திற்கு அடங்கிப் போவானானால், அவன் இதுவரை செய்த காரியங்கள் மறக்கப் படும்; அரச சந்நிதானத்தின் அனுக்கிரகம் அவனுக்குக் கிடைக்கும். குர்ரமின் பதில் நான் ஒரு குழந்தையைப் போல் பலவீனமானவன். சக்ரவர்த்தி யவர்களோ பலவீனர்களைக் காப்பாற்றுகிறவர், கடவுள், தமது அடியார்களின் தவறுகளை மன்னித்துவிடுகிறார். தாங்கள் என் னுடைய எஜமானர்; நான் தங்களுக்கு அடிமை, என் செயல்களுக்கு இரங்குகிறேன். நான் மிகவும் பலவீனன்; தாங்களோ உலகத்தை யெல்லாம் வெற்றி கொண்டவர்கள். கருணை கூர்ந்து என் தவறு களை மன்னித்துவிடுங்கள். என் உயிருக்குப் பயந்தே நான் அரச சந்நிதானத்திற்கு வர அஞ்சுகிறேன். நான் மகுடத்திற்கோ, சிங்காதனத்திற்கோ ஆசைப் படுகிறேனில்லை. பொழுதை வீணே கழித்துவிட்ட நான் எப்படி அரச பதவிக்கு ஆசைப்பட முடியும்? என்ன வந்தாலும் சரி, எல்லாக் காலங் களிலும் தங்களுடைய அடிமை நான். சக்ரவர்த்தியவர்கள், என்னை அவமானப்படுத்த மாட்டீர்க ளென்ற நம்பிக்கையுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உண்மையில் தாங்கள் நாட்டின் அரசர். சிங்காதனமும் அரச முத்திரையும் எப்பொழுதும் தங்களிடமே இருக்கட்டும். கடவுள் பேரால் கேட்டுக் கொள்கிறேன், என்னைத் தவறாகக் கருத வேண்டாம். தங்களுக்கு விரோதமாக நான் நடந்துகொள்ள மாட்டேன். சக்ரவர்த்தியவர்களுக்கு விரோதமாக ஓர் எறும்பு நிற்குமா என்ன? சக்ரவர்த்தியவர்கள் ஆதரவாக இருக்கிற வரையில், எனக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படாது. வங்காளத்தில் இப்பொழுது எனக்கு அளிக்கப் பட்டிருக்கும் படைத் தலைமைப் பதவியில் நான் திருப்தியடைந்த வனாயிருக்கிறேன். துரதிருஷ்டத்திற்கு இரையாகி விடுவேனாகில் என் கதி அதோ கதிதான். அரச சமூகத்தின் ஆடம் பரத்திலிருந்து நான் ஒதுங்கி யிருப்பதை சக்ரவர்த்தியவர்கள் பொருட் படுத்தத் தேவையில்லை. என்னுடைய செயல்களுக்கு அது தக்க தண்டனையே. புகழ் என்பது, படிப்படியாகவே அடையக்கூடியது. ஆனால் பார்வெஜ், மற்றவர்கள் எதிர்பாராத விதமாக நடந்து கொண் டிருக்கிறான். தாங்கள் பார்வெஜை, பட்டத்துக்குரியவனாக நியமனம் செய்திருக்கிறீர்கள். ஆனால் குருவின் ரத்தத்தைச் சிந்திய தாக என்மீது பழி சுமத்தியிருக் கிறீர்கள். நான் தைரியமாகச் சொல்கிறேன். பார்வெஜ் ஓர் அயோக்கியன்; அவன் தான் குருவின் ரத்தத்தைச் சிந்திய குற்றவாளி. குருவின் கொலைக்கு நானே காரணம் என்று சொல்லப் படுவதால், நான் பார்வெஜை அப்புறப்படுத்த முயல்வேனாகில் அது பெரிய விஷயமல்ல. கடவுள், பார்வெஜுக்குக் கீர்த்தியை அளித் திருப்பாரானால், அதே கடவுள் எனக்கு ரத்தம் சிந்தக்கூடிய ஒரு வாளைக் கொடுத்திருக் கிறார் என்று சக்ரவர்த்தியவர்களுக்கு உறுதி யுடன் கூறவேண்டியவனா யிருக்கிறேன். பார்வெஜ், என்னிடம் விரோதம் பாராட்டினால் நானும் விரோதம் பாராட்டுவேன்; என்னிடம் சகோதர பாவம் காட்டினால் நானும் சமாதானமாக இருப்பேன். தர்பாருக்கு வருமாறு எனக்கு உத்தரவிட்டிருக்கிறீர்கள். சமாதான மாகப் போவதற்கு எந்த விதத்திலும் தகுதியில்லாத பார்வெஜுடன் நான் எப்படிச் சமாதானமாகப் போவேன்? என் விஷயத்தில் நல்லெண்ணம் கொள்வீர்களானால். நான் தங்களுக்கு அடிமை; அப்படிக்கின்றி விரோத பாவம் காட்டுவீர்களானால், என் உயிர் இருக்கிற வரையில் நான் ஒதுங்கியே இருப்பேன். ஒருதரம் என் வாளை உறையிலிருந்து எடுத்துவிடு வேனாகில், சக்ரவர்த்தியவர்களுக்கோ, பார்வெஜுக்கோ கொஞ்சங்கூட தயை காட்ட மாட்டேன். இந்த ராஜ்யத்தில் எனக்கு நிகராக ராணுவத் திறமை படைத்தவர் யாருமில்லை என்பதை நான் தங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமா என்ன? என்னுடைய சேவையைத் தாங்கள் உபயோகித்துக் கொண்டிருப்பீர்களானால், தாங்கள் காந்தஹார் பிரதேசத்தை இழந்திருக்க மாட்டீர்கள். தக்காணம், பார்வெஜின் நிருவாகத்திலிருந்த வரையில் அது குழப்பங்களுக்கும் ஒழுங்கீனங்களுக்கும் நிலைக்களமாயிருந்தது. ஆனால் இருமுறை அந்தப் பிரதேசத்தை வெற்றி கொண்டேன். அந்தச் சந்தர்ப்பங்களில் என் உயிரை நான் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. (ராஜபுதனத் திற்கு வடகிழக்கிலுள்ள) காங்க்ரா பிரதேசத்தை (கி.பி. 1620 ஆம் வருஷம்) நான் ஜெயித்த விஷயம், ஹிந்துதானத்திலுள்ள எல்லோருக்கும் தெரியும். நான்தான் அந்தப் பிரதேசத்து ராணாவை வீழ்த்தினேன். சரித்திரத்தில் அதற்கு நிகரான சம்பவம் வேறொன்றுமில்லை. சக்ரவர்த்தியவர்களின் நல்லாசியினாலேயே நான் எல்லா யுத்தங் களிலும் ஜெயித்துக் கொண்டிருக்கிறேன். நமது ராஜ்யத்திற்கு நான் கௌரவத்தைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறேன்; ராணாவிட மிருந்து கப்பம் வாங்கியிருக்கிறேன். இலாமியரல்லாதவர்கள் இலாமிய மதத்தைத் தழுவிக் கொண்டதும், ராஜபுதனத்தில் மொகலாய ராணுவம் பிரவேசித்ததும் என்னாலே தான். நான் மலைகளைத் தவிடு பொடியாக்கி விடுவேன்; அந்நியர்களின் படையெடுப்பை எதிர்த்து நிற்பேன்; மலை களை நான் ஏன் ஒரு பொருட்டாக மதிக்க வேண்டும்? அவை, கருங்கற் களினாலாக்கப் பட்டவை என்றால் நான் எஃகினாலாக்கப் பட்டவன். அரசாங்க பொக்கிஷத்தின் திறவுகோல் என்னிடம் வரவேண்டு மென்பதற்காக நான் பிரார்த்தனை செய்யவேண்டுமா என்ன? என்னிடத்தில் வாளாயுதம் இருக்கிற வரையில், மேற்படி பொக்கிஷத்தின் சாவியும் என்னிடத்தில்தான் இருக்கிறது. எனக்குள்ள அதிகமான ஆயுத பலத்தின் காரணமாக, எனக்கே பார்வெஜைக் காட்டிலும் முன் வரிசையில் நிற்க உரிமையுண்டு. இந்த உலகம் இருக்கிறதே அது வீரமுள்ள ஒரு கன்னிகை. வயதானவர்களும் பலவீனர்களும் அவள் கையைப் பிடித்தால் அவர்களை நிராகரித்து விடுகிறாள்; அறிவும் ஆண்மையுமுடைய ஒருவனுடைய கரத்தையே அவள் பற்றுகிறாள். அப்படிப்பட்ட பூமாது என்னைக் காதலிப்பது பொருத்தமே. என் மனத்தைத் திறந்து காட்டிவிட்டேன். உலகத்தின் போக்கை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அது பிரமிப்பைக் கொடுக்கக் கூடியதாகவும் சிக்கலுடையதாகவும் இருக்கிறது. நமது அரச வமிசத்தின் வளமைக்கு நான் மூல காரணமாயிருக் கிறேன். ஆதலால் என்னை அவமானப்படுத்த வேண்டாம். உண்மையை விவரிக்கும் இந்தக் கடிதத்தை எனது தூதன், தங்கள் சந்நிதானத்தில் கொண்டு சேர்ப்பான் என்று நம்புகிறேன். 13. தண்ணீருக்குத் தவித்த சக்ரவர்த்தி ஜஹாங்கீருக்குப் பிறகு ஷாஜஹான்; கி.பி. 1628 முதல் 1658 ஆம் வருஷம்வரை ஆண்டான். இவன் காலத்தில், மொகலாய சாம்ராஜ்யம், பல வழிகளிலும் சிறந்து விளங்கியது. பாரத நாட்டிற்கும் மேலை நாடு களுக்கும் ஜஹாங்கீர் காலத்தில் ஏற்பட்ட வியாபாரத் தொடர்பு இவன் காலத்தில் அதிகரித்தது. ஐரோப்பியர் பலர் இவன் சேவையில் அமர்ந்திருந்தனர். ஷாஜஹான், நூர்ஜஹானின் உறவினரான மும்தாஜ் மகால் என்ற அழகியை கி.பி. 1612ஆம் வருஷம் விவாகஞ் செய்து கொண்டு சுமார் பத்தொன்பது வருஷகாலம் இன்ப வாழ்க்கை நடத்தினான். அவள் கி.பி. 1631ஆம் வருஷம் இறந்து விட்டாள். அவள் நினைவாக, அவள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், தாஜ்மகால் என்ற கட்டடத்தைக் கட்டினான். உலகத்து ஏழு அதிசயங்களுள் ஒன்றாக இது இன்றளவும் போற்றப்பட்டு வருகிறது. பட்டத்துரிமை பெற வேண்டி ஷாஜஹான், அரசிளங்குமரனா யிருந்த பொழுது, எப்படி ஜஹாங் கீருக்கு விரோதமாகப் பல கலகங்கள் செய்தானோ அப்படியே, இவனுடைய - ஷாஜஹானுடைய பிள்ளை களான தாராஷுகோ, ஷூஜி, அவுரங்கசீப், முராத் ஆகிய நான்கு பேரும் பட்டத்துரிமைக்காகப் போராடி னார்கள். கி.பி. 1657ஆம் வருஷக் கடைசியில் ஷாஜஹான் ஆக்ரா கோட்டையில் தங்கியிருந்தபொழுது நோய் வாய்ப்பட்டு விட்டான். இந்தச் சந்தர்ப்பம் பார்த்து, பிள்ளைகள் நால்வரும் பல போர்களில் ஈடுபட்டார் கள்; சூழ்ச்சிகள் பல நடைபெற்றன. இவற்றில் அவுரங்க சீப்பே வெற்றி கண்டான். இந்த வெற்றியை உறுதிப் படுத்திக் கொள்ளவேண்டி, கி.பி. 1658 ஆம் வருஷம் ஜூலை மாதம் ஆக்ரா நகரத்திலேயே, தான் பட்ட மேற்றுக் கொண்டதாகப் பிரகடனம் வெளியிடச் செய்தான். அடுத்த வருஷம்-கி.பி. 1659 ஆம் வருஷம்-டில்லியில் கோலாகலத்துடன் சம்பிரதாயமான முடி சூட்டு விழா நடைபெற்றது. இது நிற்க. அவுரங்கசீப், ஆக்ராவில், சக்ரவர்த்தியாகப் பிரகடனம் வெளியிடச் செய்ததற்கு முன்பு, அந்த ஆக்ரா கோட்டையை, தன் வசப்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தான். ஷாஜஹான் அங்குதானே இருந்தான்? அவனை, தனக்கு விரோதமாக ஏதும் செயல் புரியாத படி செய்துவிட வேண்டுமென்பது அவுரங்க சீப்பின் நோக்கம். அந்தக் கோட்டையை, ஷாஜஹானிடத்தில் விசுவாசங்கொண்டிருந்த ஒரு படை காத்து நின்றது. அவுரங்கசீப் கி.பி. 1658 ஆம் வருஷம் ஜூன் மாதம் அதனை-கோட்டையை முற்றுகையிட்டான். முற்றுகை வெற்றிபெற வேண்டு மென்பதற்காக கோட்டைக்கு யமுனை நதியிலிருந்து தண்ணீர் வரும் வழியை அடைத்து விட்டான். இதனால், முற்றுகையைத் தாங்கி நின்றவர்கள் தண்ணீரின்றித் தவிக்கலானார்கள். கோட்டைக்குள்ளிருந்த கிணறுகளின் தண்ணீரோ, ஒரே கறுப்பு நிறமாயிருந்தது. ஷாஜஹான், குடி தண்ணீரில்லாமல் கஷ்டப்பட்டான். இந்த நிலைமைக்கு ஏதேனும் ஒரு பரிகாரங்காணுமாறு, கோட்டைக் குள்ளிருந்த படை வீரர்கள், ஷாஜஹானை வேண்டிக் கொண்டார்கள். அப்பொழுது இவன் அவுரங்கசீப்புக்குப் பின்கண்ட கடிதத்தை எழுதினான்:- என் மகனே, என் வீரபுத்திரனே, ஆண்டவன் திருவருளின்றி, மரத்திலிருந்து ஓர் இலை கூட உதிர்வதில்லை என்பதைப் பார்த் திருந்தும், அதிருஷ்ட தேவதை என்னை அன்புடன் நடத்தவில்லை யென்று நான் ஏன் குறைப்பட்டுக் கொள்ள வேண்டும்? நேற்றுவரை நான் ஒன்பது லட்சம்பேர் கொண்ட பெரும்படையின் தலைவனா யிருந்தேன். இன்று ஒரு குவளைத் தண்ணீருக்கு ஏங்கி நிற்கிறேன். ஹிந்துக்கள் எவ்வகையிலும் போற்றக்கூடியவர்கள். அவர்கள், இறந்தவர்களுக்குக் கூட தண்ணீர் கொடுக்கிறார்கள். நீயோ, என் மகனே! மிகப்பெரிய முஸல்மான். என்னைத் தண்ணீரின்றித் தவிக்க விட்டிருக்கிறாய். எனது செல்வக்குமாரனே! இதை நன்றி கெட்ட உலகத்தில் ஏற்படும் நல்லதிருஷ்டத்தைக் கண்டு கர்வமடையாதே. அறிவு நிறைந்த உன் தலையின்மீது, கடமையினின்று பிறத்தல், கர்வம் ஆகிய மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளாதே. இந்த அநித்திய மான உலகம், இருளடர்ந்த ஒரு பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு வழியாயிருக்கிறது. கடவுளைச் சிந்திப்பதாலும், மனிதர்க ளிடத்தில் அன்பு செலுத்து வதினாலுமே அழியாத ஐசுவரியம் கிடைக்கிறது? இவைகளை நீ அறிந்து கொள். இந்தக் கடிதத்திற்கு, அவுரங்கசீப் எல்லாம் தங்கள் செயலாலேயே விளைந்தது என்று ஒரே வாக்கியத்தில் பதில் எழுதி அனுப்பி விட்டான். இதற்குப் பிறகு மூன்றுநாள் வரை தாக்குப் பிடித்து பார்த்தான் ஷாஜஹான். முடியவில்லை. வேறு வழியின்றி, மகனுக்குக் கோட்டையை ஒப்புக்கொடுத்துச் சரண்புகுவது என்று தீர்மானித்தான். நான்காவது நாள் பகில்கான் என்ற ஒரு பிரதானி மூலம் அவுரங்கசீப்புக்கு ஒரு கடிதம் எழுதியனுப்பினான். அதில் தனக்கு இக் கதி நேரிட்டதற்கு வருந்துவதாகவும், எந்தச் சக்ர வர்த்திக்கும் இந்த மாதிரி நேரிட்டிரா தென்றும், ஆனால் எல்லாம் ஆண்டவன் கட்டளை யென்றும் குறிப்பிட்டு விட்டு மேலும் எழுதுகிறான்:- உனக்கு இப்பொழுது கிடைத்திருக்கும் அதிகாரத்தைக் கண்டு கர்வமடையாதே. உன்னுடைய நற்காலத்திலே அதிக நம்பிக்கை கொள்ளாதே. இம்மையிலும் மறுமையிலும் நற்பெயரெடுக்க விரும்பினால், குர்ஆனில் கூறியுள்ளவாறு, தகப்பனாரின் கட்ட ளைக்குக் கீழ்ப்படி. ஒரு தகப்பனாருக்குச் செய்ய வேண்டிய கடமையை நீ செய்ய வேண்டுமென்று இறுதியாக உன்னைக் கேட்டுக் கொள்கிறேன். செல்வாக்கிலும் அதிகாரத்திலும் உயர்ந்து நிற்கும் மொகலாய அரச வமிசத்தின் நற்பெயருக்குக் களங்கம் உண்டு பண்ண வேண்டாமென்று கோருகிறேன். அவுரங்கசீப், இதற்குப் பதிலளிக்கையில், தான் எப்பொழுதும் போல் தகப்பனாரிடத்தில் அன்பும் மரியாதையுமுடையவனாக இருப்பதாகவும், தன் னுடைய பகைவர்கள், தனக்கு விரோதமாகச் செய்த சில செயல் களின் விளைவாகவே, தான் இப்படிச் செய்ய நேரிட்டதென்றும் கூறி மேலும் எழுதுகிறான்:- சில நிகழ்ச்சிகள் காரணமாகச் சக்ரவர்த்தியவர்களை நேரில் கண்டுபேச அஞ்சுகிறேன். என்னுடைய ஆட்கள் வசம் கோட்டை யின் நுழைவாயில்களை ஒப்புக் கொடுத்து, அவர்கள் தாராளமாக உள்ளேயும் வெளியேயும் செல்ல ஏற்பாடுகள் செய்தால் என் சந்தேகங்கள் தீரும். அப்பொழுது நான் தங்களின் சந்நிதானத்திற்கு வந்து, தங்கள் விருப்பப்படி நடந்து கொள்கிறேன்; தங்களுக்கு விரோதமாக ஒன்றும் செய்வதற் கில்லை. இதற்குப் பிறகு ஆக்ரா கோட்டை அவுரங்க சீப்புக்கு வசப்பட்டது. ஷாஜஹானும், பிறகு, சுமார் எட்டு வருஷகாலம் உயிரைப் பிடித்துக் கொண்டு இருந்துவிட்டு கி.பி. 1666 ஆம் வருஷம் இறந்து போனான். 14. செய்வினைக்கு இரங்கல் மிகுந்த கோலாகலத்துடன் கி.பி. 1659ஆம் வருஷம் டில்லி சிங்காதனத்தில் அமர்ந்த அவுரங்கசீப் கி.பி. 1707 ஆம் வருஷம் வரை சுமார் ஐம்பது வருஷகாலம் ஆண்டான். இவனுக்கு ஆலம்கீர் என்ற ஒரு பட்டப் பெயருண்டு. உலகத்தை வென்றவன் என்று இதற்குப் பொருள். இவன், தன் சொந்த வாழ்க்கையை, உடை, உணவு எல்லா வற்றையும் எளிய முறையில் அமைத்துக் கொண்டிந்தான். தன்னுடைய தேவைகளைத் தன் சொந்த முயற்சியினாலும் உழைப்பினாலும் நிறை வேற்றிக் கொண்டான். தவிர, இவன், கீழ்த் தரமான இச்சைகளுக்கு வசப்படாதவன். இலாம் மார்க்க சம்பந்தமான நூல்களில் நன்கு பயிற்சி பெற்றவன்; அரசாங்க நிருவாகத் துறையில் நிபுணன் உதாரணமாக, காலத் திற்குத் தகுந்த படியும், இடத்திற்கேற்றாற் போல வும் உத்தியோகதர் களைப் பொறுக்கியெடுக்கும் ஆற்றலும், அவர்களை எப்போது சன்மானிக்க வேண்டும், எப்போது தண்டிக்க வேண்டும் என்ற முன் யோசனையும், சத்துருவையும் மித்துருவையும் எப்படி எப்படி நடத்த வேண்டுமென்ற பாகுபாட்டு அறிவும் இவனிடம் நிறைந்திருந்தன. தவிர இவன் அரசாங்க விவகாரங்களைத் தனது உடல் நலத்தைக்கூட கவனியாது, குன்றா ஊக்கத்துடனும் தளரா முயற்சி யுடனும் நடத்தி வந்தான். நாட்டின் பல பாகங்களில் நடக்கும் விஷயங்களை ஒற்றர்கள் மூலம் அறிந்து, அவைகளுக்கு ஆகவேண்டியவற்றை உடனுக்குடன் செய்து வந்தான். தவிர அவுரங்கசீப், ஆழ்ந்த மதப்பற்றுடைய வனாயிருந்ததோடு, தன்னுடைய இலாமிய மதத்தைப் பரப்பி அதனை எல்லாரும் பின்பற்றக் கூடிய வகையில் நிலைபெறச் செய்யவேண்டு மென்று விரும்பினான். இதன் விளைவாக, தன்னுடைய பிரஜைகளில் பெரும் பாலோராகவுள்ள ஹிந்து மதத்தினருடைய மனம் புண்படும்படியாக அநேக நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டான். ஹிந்துக்களால் புனிதமானவை யென்று கருதப் பட்ட அநேக கோயில்கள் தகர்த்து வீழ்த்தப் பட்டு அவற்றின்மீது மசூதிகள் கட்டப் பெற்றன. மற்றும் அவுரங்கசீப் கி.பி. 1679 ஆம் வருஷம் முலிமல்லாதார்மீது ஏற்கனவே சில முலிம் மன்னர்களால் விதிக்கப்பட்டு வந்து பின்னர் அக்பர் சக்ரவர்த்தியினால் ரத்து செய்யப்பட்டிருந்த ஜஸியா என்ற தலைவரியை மீண்டும் புதுப்பித்து வசூலிக்கச் செய்தான். இப்படிச் சில நடவடிக்கைகள் காரணமாக அவுரங்கசீப், தன் பிரஜைகளில் பெரும்பாலோராக இருந்த ஹிந்துக்களின் நல்லெண்ணத்தையும் ராஜ விசுவாசத்தையும் மட்டுமல்ல முலிம்கள் பலருடைய நல்லெண்ணத்தையும் ராஜ விசுவாசத்தையும்கூட இழந்து வந்தான். தனிமனிதன் என்ற முறையில் இவனிடத்திலிருந்த சில நல்லியல்புகளும், நிருவாகம் செய்வதில் இவன் காட்டிய திறமையும், இந்த நட வடிக்கைகளின் விளைவாக மங்கிப் போயின. இவன், தன் வாழ்நாளின் கடைசியில், வேதனைகள் நிறைந்த சூழலில், அதாவது தன் தகப்பன் ஷாஜஹானை அவன் கடைசி காலத்தில் எந்த துக்கப்படும் படியான நிலை யில் கழிக்கும்படி செய்தானோ அதே மாதிரி துக்கப் படும் படியான நிலைமையில் கழித்தான் என்பதிலோ, அவனுடைய ஆட்சியின் பிற்பகுதியில் மொகலாய சாம்ராஜ்யத்தின் கட்டுக் கோப்பு தளர்ந்து போகத் தொடங்கியதிலோ, கி.பி. 1707 ஆம் வருஷம் மூப்பு முதிர்ந்த நிலையில் அவன் இறந்துபோன பிறகு அந்தக் கட்டுக்கோப்பு தகர்ந்து போய்விட்டதிலோ வியப் பென்ன இருக்கிறது? அவுரங்கசீப்புக்கு முகம்மது சுல்தான், முவாஜம், ஆஜம், அக்பர், காம்பகஷ் என்று ஐந்து பிள்ளைகள். இவர்களில் முவாஜம் என்பவன்தான் பகதூர்ஷா (அல்லது ஷா ஆலம்) என்ற பட்டப்பெயருடன் கி.பி. 1707 முதல் 1712 ஆம் வருஷம் வரை ஆண்டான். ஆனால் பெயரளவில்தான் என்று சொல்லவேண்டும். அவுரங்கசீப், தன் குமாரர்களுக்கு, அவர்களுடைய சொந்த வாழ்க்கை எப்படி நடைபெற்றால் நன்றா யிருக்கு மென்பதைப்பற்றியும், நிருவாக சம்பந்தமான சில யோசனைகளையும் அவ்வப் பொழுது சில கடிதங்கள் வாயிலாகத் தெரிவித்து வந்தான். இந்தக் கடிதங்களின் சிலவும், கடைசி நாட்களில், தன் முந்திய செயல்களுக்கு வருந்துகின்ற முறையில் எழுதிய ஒரு கடிதமும் கீழே தரப்பட் டிருக்கின்றன. 1. எளிய வாழ்க்கை இந்தக் கடிதம் இரண்டாவது குமாரனும், பின்னால் பகதூர்ஷா என்ற பெயருடன் பட்டத்திற்கு வந்தவனுமான முவாஜம், காபூலில் அரசப் பிரதி நிதியாக ஆண்டு கொண்டிருந்த பொழுது எழுதப் பட்டது. மகிழ்ச்சி நிரம்பிய மகனே, முவாஜம்! ஆண்டவன் உன்னைக் காத்து ரட்சிப்பாராக! என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் எழுதிய கடிதத்தின் மூலமாக, நீ தர்பாருக்கு வரும்போது மஞ்சள் நிறமுள்ள தலைப்பாகை அணிந்துகொண்டும், பால்வாணி (ஒருவகைப் பட்டுத் துணி)யைத் தேகத்தின்மீது தரித்துக் கொண்டும் இருக்கின்றாய் என்று தெரியவந்தது. நீ இப்போது நாற்பத்து ஆறாவது வயதை அடைந்து விட்டாய். பேஷ்! நரைத்த தாடியுடன் இந்த ஆடம்பரமான உடைகளை அணிகிறாய்! 2. குடிகளிடத்தில் விசுவாசம் (இந்தக் கடிதமும் முவாஜத்துக்கு எழுதப்பட்டது). பட்டத்துக்குரிய மூத்த மகனே! என்னுடைய கடிதத்தை உனக்கு நேரில் சீக்கிரம் அளிக்கும் பொருட்டு, முனாம்கானை இப்பொழுது அனுப்பி இருக்கிறேன். என்னைப் பற்றிய பிரக்ஞை இப்போது உனக்கு இல்லை. நான் யார், நான் எங்கே செல்வேன், பாவங்கள் நிறைந்த இந்தப் பாவிக்கு (அவுரங்கசீபுக்கு) என்ன கதி நேரிடும் என்ற விஷயங்கள் எனக்குத் தெரியாது. ஆண்டவன் பாதுகாப்பில் எல்லோரையும் ஒப்புவித்து விட்டு அனைவரிடத்தி லும் கடைசி முறையாக விடை பெற்றுக் கொள்கிறேன். பிரபலமும், மங்களகரமும் நிறைந்த என் புதல்வர்கள், (எனது பிற்காலத்தில்) தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு, கடவுளின் ஊழியர் களாகிய ஜனங்களிடையே படுகொலை நிகழுமாறு நடந்து கொள்ளக் கூடாது. அனைவருடைய மனத்தையும் மாற்றுகிறவ னாகிய ஆண்டவன், இவ்வுலகத்திலே உனது பொக்கிஷமாயுள்ள பிரஜைகளைக் காப்பாற்றும் பொருட்டுத் தனது அருளைப் பொழிவானாக! அரசர்களுக்கு நல்வழி காட்டுவானாக! 3. அரச கடமைகளைக் கவனி இந்தக் கடிதம் மூன்றாவது குமாரனான ஆஜம், குஜராத் மாகாணத்தில் ராஜப்பிரதிநிதியாய் இருந்த போது எழுதப்பட்டது. பெருமை நிறைந்த மகனே! ராஜ பாட்டையில் ஆபத்து அதிகப் பட்டிருக்கிறதென்று ஒற்றர்களின் மூலம் தெரியவந்தது. கொள்ளைக் காரர்கள், வியாபாரிகளையும், பிரயாணிகளையும் கொள்ளையடிக் கிறார்கள். யாத்திரிகர்கள் நிர்ப்பயமாய்ப் பிரயாணஞ் செய்ய முடிவ தில்லை. உன்னுடைய படையும் என்னுடைய படையும், தங்கியிருக்கும் இடத்திற்கு அருகிலேயே, இத்தகைய வழிப்பறிக் கொள்ளைகள் நடை பெறுமானால், தொலைவிலுள்ள பாதைகளின் நிலைமை எப்படி இருக்கும்? ஒற்றர்கள் உனக்குச் சரியான செய்திகளைத் தெரிவிப்ப தில்லை போலும்! அஜாக்கிரதை யும் கவனமின்மையும் அரசுரிமைக்கு விரோதமானவைகளாகும். இப்பொழுது நீ புதிய ஒற்றர்களை நியமித்து அவர்களுக்கு எச்சரிக்கையும் செய்ய வேண்டும்; பழைய ஒற்றர்களைத் தண்டிக்க வும் வேண்டும். மேற்படி ராஜபாட்டையில், கொள்ளைக்காரர் களின் உபத்திரவமில்லாதபடி செய்ய உடனே ஒரு சேனையைத் தயார்செய். உன்னுடைய இந்த வெட்கங்கெட்ட நிருவாகத் திறமை யின்மையை இன்னும் எவ்வளவு காலம் அனுமதிக்கப் போகிறாய்? உன்னை நஷ்டமடையும் படியோ லாபமடையும் படியோ கூறவில்லை. ஆனால் நல்ல சந்தர்ப்பத்தை இழந்து விடும் மகனே எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறாயோ அதை உடனே செய். நீ மகிழ்ச்சியோடு இருப்பாயாக! 4. வேட்டையாடலாமா இந்தக் கடிதமும் மேற்படி ஆஜத்திற்கு எழுதியது:- பெருமை நிரம்பிய மகனே, தாலி நதிக் கருகில் நீ சென்ற ஒரு மாத காலமாய் நாரைகளைச் சுட்டுக் கொல்வதில் காலங் கழித்தாய் என்று தெரிகிறது. வேட்டையினால் சந்தோஷமும், இனிய உணவும் கிடைக் கின்றன வென்பது உண்மையே ஆனால் உன்னுடைய கடமைகளாகிய ராஜ காரியங்களைக் கவனித்துவிட்டுப் பிறகு வேட்டையில் கவனஞ் செலுத்தினால் அது இன்னும் மகிழ்ச்சி நிரம்பியதாய் இருக்கும். மதத்திற்கு முரணில்லாமலும், வழக்கத்திற்கு விரோதமில்லாமலும் அரச காரியங்களை ஒழுங்காகக் கவனிக்க வேண்டும். அரசனுக்குரிய பொறுப்புக்களை, வழக்கமாக அனுசரிக் கப்பட்டு வரும் சம்பிரதாயங் களும், பிரபல சரித்திரங்களும், வேறு பல நூல்களும் விளக்கமாகக் கூறுகின்றன. மற்றக் கடமைகள் எல்லாவற்றையும்விட, அரச கடமை களைத் தான் முக்கியமாகக் கொள்ள வேண்டும். ஒரு ஜில்லாவின் விஷயங்களைப் பூரணமாகக் கவனித்து விட்டதாக நீ திருப்தி அடையலாமா? உன் அதிகாரி களுடைய காரியங்களை கவனிக்கக் கூடாதா? நீ வேட்டையாடிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறாய்; ஆனால் நானோ கோட்டைகளை ஜயிப்பதிலும் சத்துருக்களை அடக்குவதிலும் முனைந்து நிற்கிறேன். அந்தோ! இம்மையிலும் மறுமையிலும் உன்னுடைய நிலைமை என்னமாயிருக்கப் போகிறதோ? 5. தன் செயலுக்கு மனமிரங்கல் இந்தக் கடிதம் அவுரங்கசீப், தன் கடைசி காலத் தில் கடைசி குமாரனான காம்பக்ஷுக்கு எழுதியதாகச் சொல்லப்படுகிறது:- அழகுள்ள மகனே, தன்னிச்சைப்படி நடக்கும் மனிதர்கள் நிரம்பிய இவ்வுலகத்தில் ஆண்டவன் திருக்குறிப்பைப் பற்றியும், அவனது அருட் சக்தியைப் பற்றியும், உனக்கு நான் எடுத்துக் கூறினேன். ஆனால் இந்தப் போதனைகளை நீ கேட்கவுமில்லை; அங்கீகரிக்கவும் இல்லை. நானே உங்களினின்றும் பிரிந்து வேறு உலகத்திற்குச் செல்கிறேன். உனக்குப் போதிய அறிவும் ஆற்றலும் இல்லையேயென்று இரங்குகிறேன். இப்பொழுது இரங்குவதால் என்ன பயன்? இம்மையிலே நான் செய்த பாவச் செயல்களின் பலனை மறு உலகத்திற்கு எடுத்துச் செல்கிறேன். இயற்கையின் நியமம் விசித்திரமானது. தனியாக இவ்வுலகத்தில் தோன்றிய நான், இப்பொழுது இந்தப் பாவ மூட்டையுடன் வேறு உலகத்திற்குச் செல்கிறேன். பன்னிரண்டு நாட்களாக நான் ஜுரத்தால் அடிபட்டும் அது என்னுடைய தேகத்தில் சக்தி இல்லாதது கண்டு என்னை விட்டு ஓடி விட்டது. எங்கெங்கு எனது பார்வையைச் செலுத்துகிறேனோ அங்கெல்லாம் ஆண்டவன் தோற்றமே எனக்குப் புலப்படுகிறது. என் னுடைய பிற்காலத்திலே பட்டத்திற்கு வருவோர் பலவீனர்களாய் இருப்பதால், அவர்களால் என்னுடைய உத்தியோகதர்களும், ராணுவமும், பிரஜைகளும் எப்படி நடத்தப் படுவார்களோ என்ற கவலையே என் துக்கத்தை அதிகப்படுத்துவதாய் இருக்கிறது. என்னை நானே தெரிந்து கொள்ள முடியாதவனாக இருக்கிறேன். நான் பல பாவச் செயல்களைச் செய்திருக்கிறேன். எனக்கு எந்த விதமான தண்டனை கிடைக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆண்டவனால் என்னுடைய பிரஜைகள் காப்பாற்றப் படுவார்கள் என்பது நிச்சயமேயாயினும், வெளியுலக நிகழ்ச்சிக்கு ஏற்றாற் போல், அவர்களைக் காப்பாற்றுவது, முகமதியர்களுடையவும் எனது குமாரர்களுடையவும் கடமையாகும். (என் மூன்றாவது குமாரனான) ஆஜமும் என் அருகில் இருக்கிறான். உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவனிடம் கூறி இருக்கிறேன் தவிர, என்னுடைய கடைசி கோரிக்கையையும் நீ அங்கீகரிக்க வேண்டும். அதாவது யுத்தங்களில் முகமதியர்கள் கொல்லப்படக் கூடாது. அப்படி அவர்கள் கொல்லப்பட்டால் அந்தப் பழியானது இந்தப் பயனற்ற ஜீவனாகிய அவுரங்கசீபின் மீது சாரும். உன்னையும், உன் குமாரர்களையும் ஆண்டவன் வசத்தில் ஒப்புவித்து விட்டு இந்த உலகத்தினின்று பிரிந்து செல்ல உன்னிடமிருந்து விடை பெற்றுக் கொள்கிறேன். 15. தலைவரிக்கு சிவாஜி எதிர்ப்பு மகத்தான மொகலாய சாம்ராஜ்யம் அவுரங்க சீப்பின் ஆளுகைக் குட்பட்டிருந்த காலத்தில் அதனை எதிர்த்து நின்றான் ஒரு சிறிய ஜாகீர்தாரின் மகன். இவன்தான் சிவாஜி. மகாராஷ்டிரத்திலுள்ள சிவனேரி என்ற மலைக்கோட்டையில் கி.பி. 1627 ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் பிறந்தான். இவன் தகப்பனார் ஷாஜி; தாயார் ஜீஜாபாய். சிவாஜி, பிள்ளைப் பருவத்திலிருந்து தாயாரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தான். பிற்காலத்தில் இவன் ஹிந்து தர்மத்தில் கொண்டிருந்த தீவிரமான பற்றுக்கும், பல சந்தர்ப்பங்களில் காட்டிய வீரத்திற்கும், கை யாண்ட அரச தந்திர முறைகளுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்மைக்குக் கொடுத்த மதிப்புக்கும் ஜீஜாபாயின் போதனைகளே காரணம். தாய் சொல் துறந்தால் வாசகமில்லை என்ற வாசகத்தை எழுத்துப் பிசகாமல் பின்பற்றி வந்தவன் சிவாஜி. இவனுடைய தாயே இவனுக்கு எல்லாமாக இருந்தாள் என்று சுருங்கக் கூறலாம். ஹிந்து சாம்ராஜ்யத்தை, அநேக நூற்றாண்டு களுக்கு முன்பு இருந்தது போல் மீண்டும் தாபித்து நிலை பெறச் செய்ய வேண்டு மென்பதில் இவனுக்கு ஏற்பட்டிருந்த ஆர்வம், இவனைப் பல போர் முகங் களுக்கு அழைத்துச் சென்றது. அவுரங்கசீப், தான் பட்டத்திற்கு வந்த காலத்தி லிருந்து, சிவாஜியின் படை பலம் பெருகி வருவதையும், இவன் அதிகாரத்திற்குட்பட்ட ராஜ்ய எல்லை விரிந்து கொண்டு வருவதையும் கண்டான். இவனுக்கு விரோத மாக அவ்வப்பொழுது, போர்த்திறம் படைத்த படை களுடன் அனுபவம் மிக்க படைத் தலைவர்களை அனுப்பி வந்தான். ஆனால் அந்தப் படைத் தலைவர்கள் தோல்வியே கண்டு வந்தனர். எனவே சிவாஜியை வேறு விதமாக அகப்படுத்தத் தீர்மானித்தான் அவுரங்கசீப். இதற்குத் தன்னுடைய சேவையில் அமர்ந்திருந்த ஜெய்சிங் என்ற ராஜபுத்திர தளபதியைக் கை யாளாக உபயோகித்தான். அந்த ஜெய்சிங், சிவாஜிக்கு அவுரங்க சீப்பைச் சந்திப்பதனால் அநேக அனுகூலங்கள் ஏற்படக் கூடுமென்று ஆசை வார்த்தைகள் சொல்லி இவனை ஆக்ரா நகரத்திற்கு அனுப்பி வைத்தான். அந்த நகரத்தில்தான் அப்பொழுது அவுரங்கசீப் தங்கி யிருந்தான். சிவாஜி, முதலில் சிறிது தயங்கினான். என்றாலும், அவுரங்கசீப்பை நேரில் சந்திப்பதனால் தான் சில சில சாதகங்களைப் பெறக் கூடுமென்று எண்ணி கி.பி. 1666 ஆம் வருஷம் ஆக்ராவுக்குச் சென்றான். அவுரங்கசீப், சிவாஜியை முதலில் சுமுகமாக வரவேற்றான். ஆனால் இவனுக்குக் கொடுக்க வேண்டிய கௌரவத்தைக் கொடுக்க வில்லை. இது கண்ட சிவாஜி ஆத்திரமடைந்தான். இதனை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, அவுரங்கசீப், சிவாஜியை, அரசவையில் மரியாதை யாக நடந்து கொள்ளவில்லை யென்று சொல்லி, ஒரு மாளிகையில் சிறையிருக்கும்படி செய்து விட்டான். சிவாஜி, சுமார் மூன்று மாத காலம் காவல் கைதி போல் இருக்கும்படி நேர்ந்தது. ஆனால் இந்தக் காலத்தில், தான் தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளை ரகசியமாகச் செய்து வந்தான். தான் மிகவும் நோய் வாய்ப்பட்டிருப்பதாகவும், இதற்குப் பரிகாரமாக பலவகைத் தின்பண்டங்களைத் தயாரித்து, தினந்தோறும் மாலை நேரத்தில், பிராமணர்கள், துறவிகள் போன்ற பலருக்கும் வழங்கி வர விரும்புவதாகவும், அப்பொழுதுதான் தன் நோய் தீருமென்றும் சொல்லி, சிவாஜி, தன்னைக் காவல் காத்து வந்த அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக் கொண்டான். இதன் பிரகாரம் சில நாட்கள் வரை தினந்தோறும் மாலை நேரத்தில் கூடை கூடையாகத் தின்பண்டங்கள் சிவாஜியின் இருப்பிடத்தி லிருந்து இவனுடைய ஆட்கள் மூலம் வெளியே சென்று கொண்டிருந்தன. காவல் காத்து நின்றவர்கள், தினந் தோறும் வழக்கமாகச் செல்லும் தின்பண்டக் கூடைகள் தானேயென்று, சில நாட்களுக்குப் பிறகு இவைகளைப் பரிசோதனை செய்யாமலே வெளியே அனுப்பி வந்தனர். இப்படி அனுப்பி வந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் சிவாஜி ஒரு கூடையில் அடங்கி முடங்கி உட்கார்ந்து கொண்டு, மற்ற தின்பண்டங் களின் கூடை யோடு கூடையாக வெளியே வந்துவிட்டான். இப்படி இவன் தப்பி வந்தது, சரித்திர உண்மையே யானாலும் ஒரு கட்டுக்கதை போலவே இருக்கிறது. ஆக்ராவிலிருந்து தப்பி வந்த பிறகு, சிவாஜி, பல போர்களில் ஈடுபட்டான். இவனுடைய ராஜ்ய எல்லை யும் விரிந்தது கி.பி. 1674 ஆம் வருஷம் சத்ரபதி சிவாஜி யாக முடி சூட்டிக் கொண்டான். சுமார் ஆறு வருஷ காலம் திறமையாக அரசு செலுத்திவிட்டு கி.பி. 1680 ஆம் வருஷம் இறந்து போனான். பொதுவாக சிவாஜி, ஹிந்து தர்மத்திற்கும் ஹிந்துக்களுக்கும் எவ்வித ஊனமும் ஏற்படக்கூடா தென்பதில் அதிக அக்கரை செலுத்தினான் என்று சொல்லலாம். அவுரங்கசீப், கி.பி. 1679 ஆம் வருஷம் ஹிந்துக்கள் மீது ஜஸியா என்ற தலைவரி விதித் தானல்லவா, அதைக் கண்டித்து அவனுக்கு, சிவாஜி ஒரு கடிதம் எழுதினான். அது வருமாறு:- ஆலம் கீர் (அவுரங்கசீப்), சக்ரவர்த்தி அவர்களுக்கு, எப்பொழுதும் நல்லதையே நாடும் சிவாஜி, கடவுளின் அருளுக்கும், சக்ரவர்த்தி அவர்கள் காட்டும் தயைக்கும் வந்தனஞ் செலுத்தி விட்டுத் தெரிவித்துக் கொள்வதாவது: சக்ரவர்த்தி அவர்களின் நன்மையை நாடுகின்ற இவன், விதி செய்த சதி காரணமாக, சந்நிதானத்தினிடமிருந்து விடை பெற்றுக் கொள்ளாமல் புறப்பட்டு வந்து விட்டானாயினும்,1 சக்ரவர்த்தி அவர்களுக்கு ஊழியன் என்ற முறையிலும், நன்றி காட்ட வேண்டியவன் என்ற முறையிலும், நியாயமாகச் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் முடிந்த வரையில் செய்யத் தயாரா யிருக்கிறான். தாங்கள் என்னுடன் நடத்திய போர் காரணமாக, தங்க ளுடைய செல்வம் கரைந்து விட்டதாலும், தங்களுடைய பொக்கிஷம் வறண்டு விட்டதாலும், அவைகளை நிறைவு செய்து கொள்ளவும், அரசாங்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும், ஹிந்துக்களிடமிருந்து ஜஸியா என்ற பெயரால் (தலை) வரி வசூலிக்க வேண்டுமென்று, உத்தரவு பிறப்பித்திருக்கிறீர்களென்று கேள்விப்படுகிறேன். (மொகலாய) ஏகாதிபத்தியக் கட்டடத்தின் சிற்பி என்று சொல்லத்தக்க ஜலாலுத்தீன் அக்பர் பாதுஷா, சுமார் ஐம்பது வருஷகாலம் பூரண அதிகாரத்துடன் ஆண்டார். அவர், தமது ராஜ்யத்தில் வாழும் கிறிதுவர்கள், யூதர்கள், முலிம்கள், ஹிந்துக்கள் முதலிய எல்லோரும் ஒன்றுபட்டு, சகோதரர்கள் போல் வாழக் கூடிய முறைகளைக் கையாண்டார். தம்முடைய பிரஜைகள் எல்லோரையும் கட்டிக் காப்பாற்ற வேண்டுமென்ற கருத்தே, அவர் பரந்த உள்ளத்தில் குடி கொண்டிருந்தது. இதனால் அவர் ஜகத்குரு என்ற பட்டப் பெயரால் பிரசித்தியடைந்தார். அவருக்குப்பின் வந்த நூருத்தீன் ஜஹாங்கீர், சுமார் இருபத்திரண்டு வருஷகாலம், தமது அருட்பார்வையை, உலகத்தின் மீதும், அதில் வாழும் மக்கள் மீதும் செலுத்தினார்; தமது இதயத்தை நண்பர்களுக்குக் கொடுத்தும், தமது இருகரங்களையும் (அரசாங்க) அலுவல்களுக்குக் கொடுத்தும் (அதாவது அரசாங்க நன்மைக்காக உழைத்தும்), தாம் மேற்கொண்டிருந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். அவருக்குப்பின் வந்த ஷாஜஹான் சக்ரவர்த்தி, தமது அருட்பார்வையை உலகத்தின்மீது (தமது ராஜ்யத்துப் பிரஜைகளின் மீது செலுத்திக் கொண்டு, முப்பது வருஷகாலம் ஆண்டார்; அவருக்கு அமர வாழ்வு கிடைத்தது. அமர வாழ்வு என்பது என்ன? நல்ல காரியங்களைச் செய்து பெறுகிற புகழுக்குத்தான் அமர வாழ்வு என்று பெயர்! இங்ஙனம் நல்ல காரியங்களைச் செய்து வந்ததால் தான், அவர் இந்த உலகத்தில் சந்தோஷகரமான வாழ்க்கையை நடத்தினார். நல்ல பெயரெடுத்துக் கொண்டு இவ்வுலகத்தில் வாழ்கிறவர்கள், நிலைத்திருக்கக் கூடிய செல்வத்தைப் பெற்றவர் களாகிறார்கள். அவர்கள் மரித்த பிறகு அவர்கள் செய்த நல்ல காரியங்களைப் பலரும் சொல்லிக் கொண்டிருப்பதால் அவர் களுடைய பெயர் நிலைத்திருக்கக் கூடியதாகி விடுகிறது என்ற மூதுரை இங்குச் சிந்திக்கற்பாலது. அக்பர் பாதுஷாவிடம் குடி கொண்டிருந்த உயர்ந்த குணங் களின் விளைவாக, எங்குச் சென்ற போதிலும், அவருக்கு வெற்றி கிடைத்து வந்தது. அவர், தம்முடைய ஆட்சி காலத்தில், அநேக ராஜ்யங்களையும் கோட்டைகளையும் வெற்றி கொண்டார். அக்பர் (ஜஹாங்கீர், ஷாஜஹான்) முதலிய சக்ரவர்த்திகளின் அரசியல் முறைகளைப் பின்பற்ற ஆலம்கீர் (அவுரங்கசீப்) தவறிவிட்ட ஒன்றைக் கொண்டே, அந்தக் சக்ரவர்த்திகள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் களாயிருந்தார்களென்பதைத் தெரிந்து கொள்ள லாம். ஜஸியா என்ற தலை வரியை அவர்களும் விதித்திருக்கலாம்; விதிக்க அவர் களுக்கு அதிகாரமும் இருந்தது. ஆனால் அவர்கள் விதிக்கவில்லை. ஏனென்றால் அவர்கள், தங்கள் உள்ளத்தில் குறுகிய மத பக்திக்கு இடங் கொடுக்க வில்லை. அவர்கள், கடவுளால் படைக்கப்பட்ட எல்லா மனிதர் களும், உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர் எல்லாரும், பல்வேறு சமயக் கோட்பாடுகள், பல்வேறு சுபாவங்கள் ஆகியவற்றின் உயிருள்ள உதாரணங்கள் என்று கருதினார்கள். அவர்கள் செலுத்திய அன்பும், அருளும், அவர்கள் நினைவாக, கால ஏட்டில் நிலையான இடம் பெற்றிருக்கின்றன. தூய்மையான இந்த மூன்று ஆத்மாக்களும் (அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான்) மானிட சமுதாயத்தினருடைய, சிறியோர் பெரியோர் எல்லோருடைய இருதயத்திலும், நாவிலும், புகழுடன் வாழ்ந்து கொண்டிருப் பார்கள். நல்லெண்ண முடையவர்களுக்குத்தான் அமரவாழ்வு என்ற பலன் கிட்டுகிறது. இதனாலேயே அந்த மூன்று சக்ரவர்த்திகளுக்கும் செல்வம் குவிந்தது; அதிருஷ்டம் கூடி வந்தது. அவர்கள் எடுத்த காரியம் யாவற்றிலும் வெற்றி கண்டார்கள். அவர்கள் காலத்தில், ஜனங்கள் நிம்மதியுடனும் பாதுகாப்புடனும் வாழ்ந்து வந்தார்கள். சக்ரவர்த்தியாகிய தங்களுடைய காலத்தில், அநேக கோட்டைகளும் அநேக மாகாணங்களும் தங்கள் கைவிட்டுப் போயின; மற்றவையும் சீக்கிரத்தில் போய்விடும். ஏனென்றால் அவைகளை-அந்தக் கோட்டை களையும் மாகாணங்களையும்-அழித்துப் போடுகின்ற விஷயத்தில் நான் சிறிதும் தளர்ச்சி காட்டமாட்டேன். தங்கள் ஆட்சியின் கீழ் குடியானவர்கள் நசுக்கப்பட்டு வருகிறார்கள்; ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் கிடைக்கும் வருமானம் குறைந்து கொண்டு வருகிறது ஒரு லட்சம் (ரூபாய்) வந்த இடத்தில் ஆயிரம் ரூபாயும், ஆயிரம் வந்த இடத்தில் பத்தும் இப்படித்தான் வசூலாகின்றது; அதுவும் மிகுந்த கஷ்டத்துடன். சக்ரவர்த்தியும் அரசகுமாரர்களும் வசித்து வருகின்ற அரண்மனை களை வறுமையானது, தனது இருப்பிடமாக்கிக் கொண்டு விட்டது. இதைக் கொண்டு, தங்கள் சேவையில் இருக்கும் பிரபுக்களும் உத்தியோகதர்களும் எந்த நிலைமையில் இருப்பார்கள் என்பதைச் சுலபமாக ஊகித்துக் கொள்ளலாம். தங்களுடைய ஆட்சியில், ராணுவத்தினர் கொதிப்படைந்திருக்கி றார்கள்; வியாபாரிகள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்; முலிம்கள் அழுது கொண் டிருக் கிறார்கள்; ஹிந்துக்கள் வாடிக் கொண்டு வருகிறார்கள்; பெரும் பாலானவர்கள், இரவு நேரத்தில் சாப்பிட ரொட்டிகூட இல்லாமலிருக் கிறார்கள்; பகல் நேரத்தில் துயரத்தின் மிகுதியால், தங்கள் கன்னத்தில், வீங்கிப் போகும்படி அறைந்து கொள் கிறார்கள். இந்த மாதிரியான நிலைமையில் ஜஸியா என்ற தலை வரியை விதிக்கத் தங்கள் திருவுள்ளம் எப்படிச் சம்மதித்தது? இதனால் தங்களுக்கு ஏற்படும் அபகீர்த்தி, மேற்கிலிருந்து கிழக்குவரை பூராவும் பரவும். ஹிந்துதானத்தின் சக்ரவர்த்தி, பிச்சைக்காரர் களுடைய பிட்சாபாத்திரங்கள் மீது இச்சைகொண்டு விட்டார், பிராமணர்கள், ஜைன சந்நியாசிகள், யோகிகள், பைராகிகள், பிச்சைக்காரர்கள், ஈனர்கள், பஞ்சத்திலடிபட்டவர்கள் இப்படிப் பட்டவர்களிடமிருந்து ஜஸியா என்ற தலைவரி வசூலிக்கிறார், பிச்சைக்காரர்கள் வைத்துக் கொண்டிருக்கும் சாமான் பையை அபகரிப்பதில் தமது வீரத்தைக் காட்டுகிறார், தமது முன்னோர் களின் நற்பெயரை தரையோடு தரையாக்கி விட்டார், என்றெல்லாம் பிற்காலத்துச் சரித்திரம் கூறும். சக்ரவர்த்தியர்களே, குர்-ஆனில் தாங்கள் நம்பிக்கை கொண் டிருக்கும் பட்சத்தில், அதில், கடவுள் எல்லாருக்கும் உரித்தானவர், முலிம்களுக்கு மட்டுமல்ல என்பது காணப்படும். இலாம் மதமென்பதும் ஹிந்து மதமென்பதும் வெவ்வேறான பெயர்களே; ஆண்டவன், தான் வரையும் மானிட சமுதாய மென்னும் படத்தைப் பூர்த்தி செய்ய உபயோகிக்கும் வேறு, வேறு வர்ணங்களே. அவனை நினைப்பதற்காகவே, மசூதிகளில் தொழுகை நடக்கிறது; கோயில் களில் மணியடிக்கிறது. தன்னுடைய மதம் ஒன்றே சிறந்ததென்ற குறுகிய மனப்பான்மை கொள்வது, தெய்வத் திரு நூலின் வாசகத்தை மாற்றியமைக்க முயல்வது போலாகும்; ஓர் ஓவியன் வரைந்துள்ள பூரணமான படத்தில் புதிய கோடுகளை வரையப் பார்ப்பது, அந்த ஓவியனிடம் குற்றங் காண்பது போலாகும். ஜஸியா என்னும் தலைவரி சிறிதும் நியாயமற்றது. ஹிந்து தானத்திற்கு இது புதிது; அனாவசியமானது; ஜனங்களைக் கொடுமைப் படுத்துவதும், ஹிந்துக்களைப் பயமுறுத்துவதுந்தான் ஆண்டவன்மீது செலுத்தும் பக்திக்கு அடையாளம் என்று தாங்கள் கருதுவீர்களாயின், முதலில், ஹிந்துக்களின் தலைவனாயிருக்கும் ராணா ராஜ்சிங்2 என்பவனிடம் ஜஸியா என்னும் அந்தத் தலை வரியை வசூலிக்க வேண்டும்; பிறகு என்னிடமிருந்து வசூலிப்பது கஷ்டமாயிராது. ஏனென்றால், நான் தங்களுடைய ஊழியன்; அப்படிச் செய்வதை விடுத்து, ஈக்களையும் எறும்புகளையும் கொடுமைப்படுத்துவது தங்களுடைய வீரத்திற்கு இழுக்காகும். 16. வீரத்தில் வளர்ந்த காதல் கி.பி. பதினெட்டாவது நூற்றாண்டில், அதற்கு முந்திய நூற்றாண்டு களில் இருந்ததுபோல், இத்தலி தனித்தனி ராஜ்யங்களாகப் பிரிந்து ஒற்றுமையில்லாமற் கிடந்தது. மேலும் அதன் வடக்கில் பெரும் பகுதி, ஆதிரியாவின் ஆதிக்கத்துக்குட்பட்டு அநேக துன்பங்களை அனுபவித்து வந்தது. இந்த நிலையி லிருந்து அதனை மீட்டு, சுதந்திரம் பெறச் செய்யவும், பிரிந்து கிடந்த ராஜ்யங்களை நன்றாக இணைத்து ஐக்கிய இத்தலியை உருவாக்கவும் பாடுபட்டவர் மூவர். ஒருவன் மாஜினி;1 இன்னொருவன், காரிபால்டி;2 மற்றொருவன் காவூர்.3 மூவரில், காரிபால்டி, மாஜினியுடன், சேர்ந்து, இத்தலியின் விடுதலைக்காக அநேக புரட்சிகள் நடத்தி னான். படைகள் திரட்டிப் போர்கள் பல செய்தான். இவைகளுக்காக இவன் அனுபவித்த துன்பங்கள் எண்ணில. இந்தத் துன்பங்களில் ஒன்றாக இவன் கி.பி. 1834 ஆம் வருஷம், தன்னுடைய இருபத்தேழாவது வயதில், இத்தலியை விட்டுத் தப்பிச் செல்லவேண்டியதாயிற்று; தென்னமெரிக்காவிலுள்ள ப்ரேஜில்4 நாட்டில் தஞ்சம் புகுந்தான். அங்கும் இவனால் சும்மாயிருக்க முடிய வில்லை. இளமையிலிருந்தே இவன் ஒளிந்தும் மறைந்தும் இருந்து திடீர் திடீரென்று சத்துருப் படைகளைத் தாக்குகின்ற கொரில்லாப் போர் முறையில் நன்கு பயிற்சி பெற்றிருந்தானாதலின், அப்பொழுது அங்கு-ப்ரேஜிலில்-அரசாங்கத்திற்கு விரோதமாக நடைபெற்ற புரட்சியில் பங்கு கொள்ளும் வாய்ப்பு இவனுக்குச் சுலபமாகக் கிடைத்தது. இந்தப் புரட்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றான். பிறகு அடுத்தாற் போலுள்ள உருகுவே5 நாட்டில் நடைபெற்ற புரட்சியில் கலந்து கொண்டு, அந்த நாடு சுதந்திரம் பெறுவதற்கு உதவி செய்தான். இங்ஙனம் சுமார் பதினான்கு வருஷகாலம் கி.பி.1834 முதல் 1848ஆம் வருஷம் வரை-தென்னமெரிக்கா விலேயே இவன் காலம் கழிந்தது. ப்ரேஜில் நாட்டில் புரட்சி முயற்சிகளில் தீவிர மாக ஈடுபட்டிருந்த காலத்தில் இவனுக்குக் காதலிக்க வும் நேரம் கிடைத்தது. அந்த நாட்டுப் பெண்ணொருத்தி யின்மீது காதல் கொண்டான். இவன் காதல் கொண்டா னென்று கொள்வது பொருத்தமாக இருக்கும். அவள் பெயர் அநீதா ரிபேரா6 முதல் சந்திப்பிலேயே இரு வரும் மன ஒருமைப்பாடு கொண்டனர். இந்த முதல் சந்திப்பைப்பற்றி, காரிபால்டி, தன் வாழ்க்கைக் குறிப்புக்களில் பின் வருமாறு எழுதுகிறான்:- நாங்கள் முதன்முதல் சந்தித்தபோது, எங்களுக்கேற்பட்ட பரவசம் காரணமாக. ஒருவரையொருவர் உற்றுப் பார்த்த வண்ணமிருந்தோமேயொழிய, வாய் திறந்து பேச முடியவில்லை. முன்பின் தெரியாத யாரோ இருவர், முதல் தடவையாகச் சந்தித்த மாதிரி எங்களுக்குத் தோன்றவில்லை. வெகு காலத்திற்கு முன்பு சந்தித்துப் பழக்கமானவர்கள் போலவே உணர்ந்தோம். அநீதா, கறுப்பு நிறந்தான். ஆனால் எடுப்பான தோற்றம். நல்ல உயரம்; பராக்கிரமம் மிகுந்தவள்; தைரியசாலி. சுருக்கமாக, பெண்ணுடல் கொண்ட ஓர் ஆண் என்று சொல்லலாம். அவள் தகப்பனார் ஏற்கனவே அவளை, தனக்குப் பிடித்தமான ஓர் இளைஞனுக்கு விவாகம் செய்து கொடுக்க நிச்சயித்திருந்தான். ஆனால் காரிபால்டியைச் சந்தித்த பிறகு அவள், அந்த இளைஞனை மணக்க மறுத்துவிட்டாள். தகப்பனோ, அவளைப் பலவந்த மாக அந்த இளைஞனுக்கே மணம் செய்துவைக்க முயன்றான். இது தெரிந்ததும், காரிபால்டி, அவளை இரவோடு இரவாக ஒரு கப்பலில் ஏற்றிக் கொண்டு, ப்ரேஜிலுக்கு அருகிலுள்ள ஒரு தீவுக்குச் சென்று விட்டான். இதற்குப் பிறகு இருவரும் பிரியாமலே இருந்தார்கள்; காலக்கிரமத்தில் சில குழந்தைகளுக்குப் பெற்றோர்களானார்கள். அநீதா குதிரை சவாரி செய்வதில் வல்லவள். ப்ரேஜிலில் காரிபால்டி பங்கு கொண்ட புரட்சிகளில் அவளும் பங்கு எடுத்துக் கொண்டாள். அரசாங்கப் படைகளால் துரத்தப்பட்டு, ஊர் ஊராக ஓடியும், காடு மேடுகளில் ஒளிந்தும்; காரிபால்டியுடன் இணை பிரியாமல் இருந்து அநேக கஷ்டங்களை அனுபவித் தாள். சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் நாடோடி வாழ்க்கையே நடத்தினார் களென்று சொல்லலாம். ஒரு சமயம் ப்ரேஜில் அரசாங்கத்துப் படை களுக்கும் காரிபால்டியின் புரட்சிப் படைகளுக்கும் கடுமையான போர் நடைபெற்றது. போரில் பங்கு கொண்டிருந்த அநீதா, அரசாங்கப் படைகள் வசம் சிக்கிக் கொண்டு விட்டாள். மீள்வது எப்படி? போரில், தன் கணவன்-காரிபால்டி-இறந்து போயிருக்கக் கூடுமென்று அஞ்சி, அவன் சவத்தைப் போர்க்களத்தில் தேடிப் பார்க்க அனுமதி கொடுக்குமாறு அரசாங்கப் படைத் தலைவனைக் கேட்டுக் கொண்டாள். அனுமதி யும் கிடைத்தது. போர்க்களத்தில் புகுந்து ஒவ்வொரு சவமாகப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டே சென்று, கடைசியில், காவல் வீரர்களின் கண்ணுக்குப் படாமல், போர்க்களத்தி லிருந்து தப்பிச் சென்றுவிட் டாள். நான்கு நாட்களுக்கு மேலாக அன்ன ஆகார மில்லாமல், குதிரை மேலேறிக் கொண்டு அடர்ந்த காடுகளூடே சென்றாள்; வழியில், சுழல்கள் நிறைந்த ஆறுகளைக் கடந்தாள்; பின்னால் துரத்திக்கொண்டு வந்த அரசாங்கப் படைகளுடன் இடையிடையே போரிட்டு வெற்றி கண்டாள்; கடைசியில் ஐந்தாவது நாள், காரிபால்டி தங்கியிருந்த இடத்திற்கு வந்து அவனோடு சேர்ந்து கொண்டாள். இவருடைய இந்த வீரச் செயலைப் பாராட்டு கின்ற முறையில், காரிபால்டி, பின்னொரு சமயம் அநீதா என் பொக்கிஷம்; என்னைக் காட்டிலும் அவளுக்கு, எல்லா நாடுகளும் சுதந்திரம் பெற்று வாழ வேண்டுமென்பதில் எவ்வளவு உற்சாகம் என்று எழுதினான். கி.பி. 1848ஆம் வருஷம் இத்தலியில் பெரும் புரட்சி தொடங்கி விட்டதென்று கேள்வியுற்றான் காரிபால்டி. தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தான். சில நாட்களுக்குப் பிறகு அநீதாவும், குழந்தைகளுடன், ப்ரேஜிலிலிருந்து புறப்பட்டு, காரிபால்டி, பிறந்த ஊராகிய நை7 நகரத்திற்கு வந்து சேர்ந்தான். கரிபால்டி, இத்தலி வந்ததும், மாஜினியுடன் சேர்ந்துகொண்டு, ரோமாபுரியைக் கைப்பற்றி அங்குக் குடியரசை தாபிக்க, சுமார் மூவாயிரம் பேர் கொண்ட, ஒரு தொண்டர் படையுடன் புறப்பட்டான். வழியில் ஆங்காங்கு முகாம் போட்டுக் கொண்டு, தொண்டர் களுக்கு உற்சாக மூட்டும் வகையில் சில பேச்சுக்கள் பேசியும், சில வசதிகளைச் செய்து கொடுத்தும் வந் தான். இந்தப் பலதரப்பட்ட அலுவல்களுக்கிடையே அநீதாவை மறக்கவில்லை வழியில் ஸுபியாக்கோ8 என்ற ஓர் ஊரில் முகாம் போட்டுத் தங்கியிருந்த பொழுது, பின் வரும் கடிதத்தை எழுதினான். ஸுபியாக்கோ, 19-4-1849 என் அன்புமிக்க அநீதாவுக்கு, நான் சௌக்கியம். படையுடன் அனாக்னி9 என்ற ஊரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். அநேகமாக நாளைய தினம் அங்கு போய்ச் சேரக்கூடும். அங்கு எத்தனை நாள் தங்க வேண்டி யிருக்குமென்பதை இப்பொழுது சொல்ல முடியாது. அனாக்னியில் துருப்புக்களுக்கு வேண்டிய துப்பாக்கி முதலிய யுத்தக் கருவிகளைப் பெறுவேன். நீ நை நகரத்திற்குச் சேமமாக வந்து சேர்ந்ததைப் பற்றி உன்னிடமிருந்து கடிதம் வராதவரை, எனக்கு மன நிம்மதி இராது? உடனே எனக்கு எழுது. என் அன்புமிக்க அநீதா, உன்னிடமிருந்து அவ்வப்பொழுது எனக்குத் தகவல் வந்து கொண்டிருக்க வேண்டும். ஜினோவா10 நகரத்திலும் டோகானா11 நகரத்திலும் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி புரட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி உன் அபிப்பிராயம் என்ன? எனக்குத் தெரிவி. வீரமாதே, கோழைகளாயிருக்கிற இந்த இத்தாலிய ஜாதியை நீ கேவலமாக மதிக்கக் கூடும்; ஆம்; உன் அலட்சியப் பார்வையை இவர்கள்மீது செலுத்தக் கூடும்; இவர்களுக்கு. என் தாய் நாட்டு மக்க ளாகிய இவர்களுக்கு-இத்தாலிய ஜாதியின் அழியாத் தன்மையைப் பற்றி எத்தனை தரம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன்? எவ்வளவு உற்சாக மூட்டியிருக்கிறேன்? ஆனால் இவர்கள் அந்த அழியாத் தன்மையைப் பெறத் தகுதியற்றவர்களாயிருக்கிறார்களே! வீரம் செறிந்த எந்த ஒரு புரட்சியிலும் துரோகம் தலைகாட்டி, அந்தப் புரட்சியை மேலோங்க வொட்டாமல் செய்திருக்கிறது என்பது உண்மைதான். இப்பொழுது இத்தலி என்ற பெயருக்குக் களங்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனை எல்லோரும் இகழ்ச்சியாகவே பேசுகிறார்கள். கோழைகள் நிறைந்த ஒரு சமூகத்தில் நான் பிறந்திருக்கிறேன் என்பதை நினைக்கும் பொழுது எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. ஆனால் இதற்காக என் தைரியத்தை இழந்துவிட்டே னென்றோ, என் தாய்நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி அவ நம்பிக்கை கொண்டிருக்கிறே னென்றோ நீ கருதி விடாதே. சொல்லப் போனால், என் தாய் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி முன்னைக் காட்டிலும் இப்பொழுது அதிகமான நம்பிக்கை கொண்டவனா யிருக்கிறேன். தனிப்பட்ட ஒரு மனிதனுக்குத் துரோகம் செய்கிறவன் எவ்விதத் தண்டனையும் பெறாமல் தப்பித்துக் கொண்டுவிடலாம். ஆனால் ஒரு தேசத்திற்குத் துரோகம் இழைக்கிறவர்கள் எவ்வித தண்டனையும் பெறாமல் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்தத் தேசத்தின் துரோகிகள் யார் என்பது இப்பொழுது தெரிந்து விட்டது. இத்தலியின் இருதயம் அரை குறையாகவாவது அடித்துக் கொண்டுதான் இருக்கிறது அந்தத் துடிப்பு அதன் - இத்தலியின் - சக்தியை அளந்து சொல்லக் கூடிய முழுத் துடிப்பாக இல்லாம லிருக்கலாம். ஆயினும் அது - இத்தலி - தனக்கு ஏற்பட்டிருக்கும் பல தரப்பட்ட வியாதிகளை அகற்றிக் கொள்ளக் கூடிய சக்தி வாய்ந்ததாகவே இருக்கிறது. சுதந்திரப் புரட்சிக்கு எதிராக நிற்கிறவர்கள், தங்கள் துரோகச் செயல்களினால் ஜனங்களைப் பயமுறுத்தி வைத்திருப்பதில் வெற்றி பெற்றுவிட்டார்களென்பது வாதவம் ஆனால் அந்த ஜனங்கள், அவர்களுடைய துரோகச் செயல்களை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். அவர்கள்-அந்த ஜனங்கள்-தங்களுடைய தற்போதைய அச்சத்தினின்று விடுபட்டவுடன், கொதித்தெழுந்து, தங்களைக் கீழான நிலைக்கு இழுத்துக் கொண்டு வந்தவர்கள் யாரோ அவர்களை - அந்தத் துரோகிகளை-அடியோடு அழித்துப் போடுவார்கள். அநீதா, மறுபடியும் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன்; எனக்குக் கடிதம் எழுது. உன்னைப் பற்றியும், என் தாயாரைப் பற்றியும் தம் குழந்தைகளைப் பற்றியும் நான் அவ்வப்பொழுது சமாசாரங்களை தெரிந்து கொண்டிருக்க வேண்டும். என்னைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். முன்பு இருந்ததை விட இப்பொழுது உடல் நலம் பெற்றிருக்கிறேன். என்னையும் என்னைப் பின்பற்றி வரும் தொண்டர் படையினரையும் யாரும் அசைக்க முடியாதென்ற உறுதியுடையவனாயிருக்கிறேன். ரோமா புரி இப்பொழுது என் அகக்கண் முன்னர் கம்பீரமாகக் காட்சி யளிக்கிறது. அதன் வீரபுருஷர்கள் அனைவரும் அதனருகில் இருக் கிறார்கள். கடவுள் நமக்குத் துணை செய்வார் வந்தனம்! உன்னுடைய ஜிஸஸெப்பே (ஜோஸப் காரிபால்டி) சில நாட்களுக்குப் பிறகு, காரிபால்டியின் தொண்டர் படை ரோமாபுரியைக் கைப்பற்றிக் கொண்டது. உடனே அங்கு, மாஜினி உட்பட மூவ ருடைய தலைமையில் குடியரசு தாபிதமாகியது. ஆனால் ஆதிரியப் படைகளும், பானிஷ் படை களும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு, இந்தக் குடியரசை நீண்ட நாள் வாழவிடவில்லை. ரோமாபுரியை முற்றுகை யிட்டுப் பலமாகத் தாக்கின. காரிபால்டியின் திறமையான தலைமையில், குடியரசுப் படைகள் முற்றுகைச் சுமார் இரண்டு வாரத்திற்கு மேலாக எதிர்த்து நின்றன. ஆயினும் என்ன? ரோமாபுரி வீழ்ந்து விட்டது. முற்றுகையின் ஆரம்பித்திலேயே, காரிபால்டிக்குச் சத்துருக்களின் குண்டுகளினால் காயமேற்பட்டது. அதைப் பொருட்படுத்தாமலேயே அவன் கடைசி வரை, முற்றுகையின் முன்னணிப் படையில் நின்று படை வீரர்களுக்கு உற்சாகமூட்டி வந்தான். வீழ்ச்சிக்குப் பிறகு, காரிபால்டி, தன் தொண்டர் படையுடன் வெனி12 நகரம் நோக்கிக் கால் நடையாகப் பின் வாங்கிச் செல்ல முற்பட்டான். ஆதிரிய-பிரெஞ்சு-பானிஷ் கூட்டுப் படைகள் இவனைத் துரத்திக் கொண்டு வந்தன. போதாக் குறைக்கு வழியில் அநேக குன்றுகளையும் சதுப்பு நிலங்களையும் கடக்க வேண்டியிருந்தது. இவைகளையெல்லாம் சமாளித்துக் கொண்டு வெனி நகரம் வந்து சேர்ந்தான். இங்ஙனம் இவன் வந்து சேர்ந்தது. இத்தலியின் சுதந்திரப் போராட்டத்தின் சரித்திரத்தில் ஒரு முக்கிய மான பகுதியாகும். காரிபால்டி, ரோமாபுரியிலிருந்து பின் வாங்கிச் செல்ல முற்பட்ட தொடக்கத்தில், அநீதா, இவனுடன் வந்து சேர்ந்து கொண்டாள். வழி நெடுக இவன் பக்கத்திலேயே குதிரை மீது சவாரி செய்து கொண்டு சென்றாள், தொண்டர் படையினரை அவ்வப்பொழுது உற்சாகப்படுத்தியும், காய மடைந்து போனவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை செய்தும் வந்தாள். இப்படிச் சென்று கொண்டிருக்கையில், வழியில் ஒரு நாள், திடீரென்று நோய் வாய்ப்பட்டு விட்டாள். இவர்கள் சென்றதோ, தண்ணீரில்லாக் காட்டில். அநீதாவுக்கு மரணதாகம் எடுத்துவிட்டது. தண்ணீர், தண்ணீர் என்று கதறினாள். ஆனால் அதுதான் அவ ளுக்குக் கிடைக்கவில்லை காரிபால்டி எவ்வளவோ முயன்றும் பயனில்லாமற் போய்விட்டது. கடைசியில் இவன் மடி மீது தலை வைத்துப் படுத்தாள். உயிரும் பிரிந்தது. காரிபால்டி, கண்ணீர் விட்டுக் கதறினான், அவளுடைய இந்த மரணத்தைப் பற்றி பின்னர் ஓரிடத்தில் குறிப்பிடுகிறான்: கிடைக்கக் கூடாத ஒரு பொக்கிஷம் எனக்குக் கிடைத்தது. அது விலைமதிப்புக் கப்பாற்பட்டது. அதை இழந்து விட்டேன். எல்லை யற்ற காதலினால் எங்களிருவருடைய இதயங்களும் ஒன்று சேர்ந்திருந்தன. அவளை உயிர் பிழைக்க வைக்க எவ்வளவோ முயன்றேன். முடியவில்லை அவளுக்குத் தண்ணீர் கொடுக்க முடியாத பாவத்திற்கு ஆட்பட்டு விட்டேன். ஐயோ, அவள் பிணமாகக் கிடந்தாள். அநீதாவின் மரணத்திற்குப் பிறகு, காரிபால்டி அநேக புரட்சிகளில் ஈடுபட்டு, வெற்றி தோல்விகளை மாறி மாறிப் பெற்று வந்தான். கடைசியில், கி.பி. 1875ஆம் வருஷம் இத்தலியிலுள்ள எல்லா ராஜ்யங் களும் ஒன்று சேர்ந்து ஐக்கிய இத்தலியாக அமைந்ததும், அதன் பார்லிமெண்டில் சிறிது காலம் அங்கத்தினனாக இப் பதவி வகித்தான். கி.பி. 1882 ஆம் வருஷம் ஜுன் மாதம் இரண்டாந் தேதி காப்ரோ13 என்ற தீவில் அமைதியாக உயிர் நீத்தான். 17. போற்றி பாடாத புலவன் ஆங்கில இலக்கிய உலகத்தின் மிகப் பெரியவன் என்று பெயர் படைத்தவன் ஸாமியல் ஜான்ஸன்.1 இவன் பிறந்தது, இங்கிலாந்தில் ட்ரா போர்ட் ஷைர் மாகாணத்தைச் சேர்ந்த லிச்பீல்ட்2 என்ற சிற்றூரில்; தந்தை, ஒரு சிறு புத்தக வியாபாரி. ஜான்ஸனுக்குச் சிறுவயதிலேயே கண்டமாலை என்ற வியாதி ஏற்பட்டது. இதன் விளைவாக, இவ னுடைய உடலுறுப்புக்கள் சில பாதிக்கப்பட்டன. ஒரு கண்ணில் பார்வை சிறிது காலம் குன்றியிருந்தது. தந்தையிடமிருந்து இவன் வறுமையைத் தான் ஆதியாகப் பெற்றான். இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் கல்லூரியில் படித்து தன் அறிவுக் கூர்மையினால் வகுப்புகளில் தேறிவந்தான். ஆனால் கடைசியில் பட்டம் பெறாமலேயே கல்லூரியிலிருந்து வெளியேற வேண்டியவனானான். காரணம் பட்டப் படிப்புக்குரிய கட்டணத்தைச் செலுத்த முடியாதது தான். இதற்கு மாற்றாக, வாழ்க்கையின் பிற்பகுதியில், இவனுடைய அதிமேதையை அங்கீகரிக்கின்ற முறை யில் டாக்டர் பட்டம் இவனைத் தேடிக் கொண்டு வந்தது. தன்னுடைய வறுமை நிலையிலுங்கூட, ஜான்ஸன், தன் மானத்தை இழக்கவில்லை. பிறருடைய தயவிலோ, நன்கொடையிலோ வாழ மறுத்தான். கல்லூரி ஆசிரியர் களுட்பட யாரிடத்திலும், பணிந்துபேச மாட்டான். ஒரு சமயம், கல்லூரியில், இவனுடைய கந்தல் உடையை யும் கிழிந்த பூட்ஸையும் பார்த்த ஒரு நண்பன், இவன் வசித்து வந்த அறையில், இவனுக்குத் தெரியாமல் ஒரு ஜதை புதிய பூட்ஸை வைத்துப் போனான். அதை இவன் வந்து பார்த்தான். அப்படியே தூக்கி எறிந்து விட்டான் வெளியே. இங்ஙனம் பல சமயங்களில் கல்லூரியில் அடக்க மில்லாமல் நடந்து வந்தபோதிலும், இவனுடைய கூரிய அறிவைக் கண்டு ஆசிரியன்மார் வியப்படைந்து இவ னிடம் அன்பு செலுத்தி வந்தனர். இருபத்தோராவது வயதில் கல்லூரியைவிட்ட இவன், சிறிது காலம், அங்குமிங்குமாகச் சில்லரை உத்தியோகங்கள் பார்த்தான். பார்த்து என்ன? வறுமை என்னவோ இவனை விட்டகலவில்லை. தொடர்ந்தாற் போல் சுமார் முப்பது வருஷகாலம் வறுமையோடு போராட வேண்டிய நிலைமையிலேயே இருந்தான். சுமார் இருபத்தெட்டாவது வயதில் ஜான்ஸன் லண்டன் போந்தான். பிழைப்பு நிமித்தந்தான். போந்த பிறகு, சில பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதி னான்; சொந்தமாக ஓரிரண்டு பத்திரிகைகளையும் நடத்தினான். ஏதோ ஒருவகையாகப் பிழைப்பு நடந்து வந்தது. இவனுடைய கூர்த்த மதியும் அன்பு நிறைந்த உள்ளமும் இவனுக்குச் சில நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தன. அவர்களுள் ஒருவன் கோல்ட் மித்3 என்ற இலக்கிய மேதை. வைத்தியத்திற்குப் படித்து எழுத்தாளனாக மாறியவன். ஜான்ஸனைப் போலவே வறுமையோடு போராடிவந்தான். ஜான்ஸன் எப்பொழுதுமே, தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலும், பிறருடைய கஷ்டத்தைத் தீர்க்க தன்னாலியன்றதைச் செய்யத் தயங்க மாட்டான். இவனுடைய உதவியைப் பெற்ற பலருள் முக்கியமான வன் கோல்ட்மித். ஜான்ஸன், லண்டன் போந்த பத்தாவது வருஷம் கி.பி. 1747ஆம் வருஷம் தான் தயாரிக்க இருக்கும் ஆங்கில மொழி அகராதியைப் பற்றிய விளம்பர மொன்றை வெளியிட்டான். அதில் அகராதியின் தொகுப்பு முறை, தர இருக்கின்ற பொருள் விளக்கம், இலக்கண விளக்கம், ஆங்கில மொழியின் வரலாறு முதலியவை பற்றிக் குறிப்பிட்டிருந்தான். இந்த விளம் பரத்தை அநேகருக்கு அனுப்பி வைத்ததுபோல் லார்ட் செடர் பீல்ட்4 என்ற ஒருவனுக்கும் அனுப்பி வைத்தான். இந்த செடர்பீல்ட் அப்பொழுது அரசாங்க மந்திரிகளுள் ஒருவனாயிருந்தான்; தவிர இலக்கிய ரசிகன் என்றும், இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவு தரு கிறவன் என்று பெயர் படைத்திருந்தான். அகராதியைப் பற்றிய விளம்பரம் வரப்பெற்றதும் இவன், அந்த முயற்சியைப் பாராட்டுகின்ற முறையில் ஒரு கடிதம் எழுதி, கூட பத்து பவுன் சந்தாவும் ஜான்ஸனுக்கு அனுப்பி வைத்தான். இதற்குப் பிறகு இருவருக்கும் தொடர்பு ஏற் பட்டது செடர்பீல்ட், தான் அடிக்கடி நடத்தும் விருந்துகளுக்கு ஜான்ஸனை அழைப்பதுண்டு. ஜான்ஸ னுடைய சம்பாஷணைத் திறனில் இவனுக்கு அதிக பிரமை ஏற்பட்டிருந்தது. இருந்தாலும் ஜான்ஸனுக்கு, பொதுவாக நான்கு பேரிடத்தில், சிறப்பாக பிரபுக்கள் வீட்டில் நடைபெறும் விருந்துகளின் போது, எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதெல்லாம் தெரியாது சேறு படிந்த பூட் காலோடு வருவான். விருந் துண்ணும்போது பதார்த்தங்களை ஒழுங்காக உப யோகிக்க மாட்டான். சில சமயம் சித்தப்பிரமை பிடித்தவன் போலிருப்பான். சில சமயம் முணு முணுத்துக் கொண்டேயிருப்பான். சில சமயம் உரக்கத் கத்துவான். சுருக்கமாக ஒரு பைத்தியக்காரன் போல் நடந்துகொள்வான் செடர்பீல்டுக்கு இது பிடிக்க வில்லை. இவனை மெள்ள மெள்ள புறக்கணிக்க முயன்றான். ஜான்ஸனோ, தன்னுடைய அகராதி முயற்சிக்கு இவனிடமிருந்து அதிகமான ஆதரவை எதிர்பார்த்தான். இந்த எண்ணத்துடன் செடர் பீல்டின் மாளிகைக்கு ஓரிரண்டு முறை சென்றான். சரியான மரியாதை கிடைக்கவில்லை. ஒரு சமயம், செடர்பீல்டின் பேட்டிக்கு வெகு நேரம் காத்திருந் தான். ஆனால் வாயிற்காப்போன், பிரபு வேறொரு வருடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல இவனை உள்ளே செல்ல விடாமல் தடுத்து விட்டான். தன்மான உணர்ச்சி மிக்க ஜான்ஸன், இதற்குப் பிறகு செடர்பீல்டின் மாளிகைப் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அகராதி வேலையில் தீவிரமாக ஈடுபட்டான் ஜான்ஸன். இது முடிய சுமார் எட்டு வருஷ காலம் பிடித்தது. இதை வெளியிட முன்வந்த பிரசுர கர்த்தர்கள், இவனுக்குச் சுமார் ஆயிரத்து ஐந்நூற் றெழுபத்தைந்து பவுன் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு, அப்படியே சிறுசிறு தொகையாகக் கொடுத்து வந் தார்கள். ஆனால் இது போதுமா? அகராதி தயாரிப்பில் இவன் ஒரு சில எழுத்தாளர்களின் உதவியைப் பெற்று அவர்களுக்கு அவ்வப்பொழுது பணம் கொடுத்து வர வேண்டியிருந்தது. இதனால் மேற்கொண்டு பணத் தேவைக்காக, நடுநடுவே சில நூல்கள் எழுதினான்; நாடகமொன்று எழுதி அதை நடிக்கும்படி செய்தான். இவை மூலம் ஓரளவு பணம் கிடைத்தது. இவ்வாறாக இலக்கிய உலகத்தில் இவனுடைய புகழ் வளர்ந்து வந்தது. இதே காலத்தில், இவனுடைய நண்பர்கள் சிலர் சேர்ந்து, இவனை முக்கியதனாகக் கொண்டு இலக்கிய சங்கமொன்று தொடங்கினார்கள். அதில் இவன் அடிக்கடி, ஏன், தினந்தோறும் சென்று கலந்து கொள்வான். அப்பொழுது இவனுடைய அறிவுக் கூர்மையும் சம்பாஷணைத் திறனும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். இப்படி ஜான்ஸன், புகழ்பெற்று வருவதை செடர் பீல்ட் கவனிக்காமல் இருப்பானா? ஜான்ஸ னுடைய தன்மான உணர்ச்சிக்குப் பங்கம் விளைவித்து விட்டதைப்பற்றி வருத்தப்படாம லிருப்பானா? அகராதி வேலை முடிந்து வெளியாகுந் தருணத்தி லிருக்கிறதென்று தெரிந்து கொண்டான். எப்படி யாவது ஜான்ஸனுக்கு உண்டு பண்ணிய மனப்புண்ணை ஆற்றி, அவனுடைய நன்மதிப்புக்கும் நன்றிக்கும் உரியவனாகத் தன்னை ஆக்கிக்கொள்ள விரும்பினான். இந்த நோக்கத்துடன் உலகம்5 என்ற ஒரு பத்திரிகையில், ஜான்ஸனையும், அவனுடைய அகராதியையும் புகழ்ந்து இரண்டு கட்டுரைகள் எழுதினான். இந்தக் கட்டுரைகளைப் பார்த்த பிறகு, ஜான்ஸன், அகராதியை, தன் பெயருக்குச் சமர்ப்பணம் செய்வானென்று எதிர் பார்த்தான். தன் விருப்பத்தை ஜான்ஸன் காதில் விழும்படியும் செய்தான். இங்ஙனம் சமர்ப்பணம் செய்யப்பட்டால், இலக்கிய ரசிகன் என்றும், இலக்கிய கர்த்தர்களின் போஷகன் என்றும் தனக்கேற்பட்டுள்ள பெயர், மேலும் பிரகாசிக்கும் என்று இவன் எண்ணி னான். ஆனால் ஜான்ஸனுக்கு, செடர் பீல்டின் பாராட்டுரைகள் எந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தன என்பது தெரியாதிருக்குமா? அந்தப் பிரபுவுக்கு அழகான பாஷையில் ஒரு கடிதம் எழுதினான். இந்தக் கடிதம் பின்னர், உலகப் பிரசித்தி பெற்றதாகி விட்டது உண்மையை உபாசிக்கும் ஓர் எழுத்தாளன் பதவியும் பணமும் சேர்ந்து பசப்பும் வார்த்தைகளில் மயங்கிப்போய், தன்னை இழந்து விடமாட்டான் என்பதற்கு இந்தக் கடிதம், சிறந்த எடுத்துக் காட்டாக என்று நிலைத்து நிற்கும். கடிதம் வருமாறு:- 07-02-1755 கனம் பொருந்திய செடர்பீல்ட் பிரபுவுக்கு எழுதியது. என்னுடைய அகராதியைப் பொது ஜனங்களுக்குச் சிபார்சு செய் கின்ற முறையில் உலகம்5 என்ற பத்திரிகையில் வெளியான இரண்டு கட்டுரைகள் தங்களால் எழுதப்பட்டவையென்று அந்தப் பத்திரிகையின் சொந்தக்காரர் மூலம் அறிந்து கொண்டேன். இப்படிப் பெரிய இடத்தி லிருந்து பாராட்டுதல் பெறுவது பெரிய கௌரவந்தான். ஆனால் பெரிய இடத்திலிருந்து ஆதரவு பெறுவதில் பழக்கப்படாத எனக்கு அந்த ஆதரவை எப்படி, எந்த வார்த்தை களால் ஏற்பது என்பது தெரியவில்லை. தாங்கள் ஓரளவு ஆதரவு காட்டியதன் பேரில், தங்களை முதன் முதலாகச் சந்தித்தபோது தாங்கள் நடந்துகொண்ட மாதிரியைப் பார்த்து, நான், மற்றவர்களைப் போல் தங்களால் வசீகரிக்கப் பட்டவனானேன். தங்களைச் சந்தித்தது எனக்குப் பெரிய பெருமை என்றும் கருதினேன், எந்த ஆதரவைப் பெறுவதற்காக உலகம் போட்டி போட்டுக்கொண்டு நிற்கிறதோ அந்த ஆதரவு, தங்களிட மிருந்து எனக்குக் கிடைக்கும் என்று எண்ணினேன். இப்படி யெல்லாம் நான் நினைத்துக் கொண்டிருந்ததற்கு மாறாக, என்னுடைய வருகை தங்களால் விரும்பப்படவில்லையென்று பின்னர் தெரிந்து கொண்டேன். அப்படி விரும்பப்படாத நிலையில் தங்க ளிடம் நான் மறுபடியும் மறுபடியும் வந்து கொண்டிருப்பேனாயின், அது, என்னுடைய சுயமரியாதைக்கும் தன்னடக்கத்திற்கும் ஊறு விளை வித்துக் கொண்டவனாவேன். நான் ஒருமுறை தங்களைப் பகிரங்கமாகப் பாராட்டிப் பேசினேன். அப்பொழுது, தனிப்பட்டு வாழ்கின்றவனும். மற்றவர்களுடைய தாட்சண்யத்திற்குக் கட்டுப் படாதவனுமான ஒரு புலவன் எவ்வளவு புகழ்ந்து பேசுவானோ அந்த அளவுக்கு நான் தங்களைப் புகழ்ந்து பேசினேன். என்னால் முடிந்ததை யெல்லாம் செய்தேன். நான் தங்களுடைய மாளிகையின் தலை வாயிலில் காத்து நின்று பிறகு வெளியேற்றப்பட்டு பிரபுவே, ஏழு வருஷங்கள் கழிந்து விட்டன. இந்த ஏழு வருஷ காலத்தில் என்னுடைய (அகராதி) வேலையைத் தொடர்ந்து நடத்திவந்திருக்கிறேன். இந்தக் காலத்தில் நான் அனுபவித்த கஷ்டங்களைப் பற்றிக் குறையாகச் சொல்லிக் கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை. கடைசியாக, தங்களிட மிருந்து உதவியான ஒரு காரியத்தைக்கூடப் பெறாமல், உற்சாகம் அளிக்கக்கூடிய வகையில் ஒரு வார்த்தைகூட இல்லாமல், ஆதரவு தரக் கூடிய மாதிரி ஒரு புன்சிரிப்புக்கூடக் கிடைக்காமல் எப்படியோ அகராதி வேலையை முடிக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டேன் தங்களால் இந்த மாதிரி நடத்தப்படுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னை ஆதரிக்கிறவர்கள் என்று இதுவரை யாரும் எனக்கு இருந்ததில்லை. தண்ணீரில் மூழ்கி, உயிருக்குத் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவனை அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, பிறகு, அவன் எப்படியோ சமாளித்துக் கரைசேர்ந்துவிட்ட பிறகு, அவனுக்கு உதவி செய்வதாக முன்வந்து அவனைச் சங்கடப்படுத்துகிறவனை, அவனுக்கு ஆதரவு அளிக்கிறவன் என்று சொல்ல முடியுமா? அகராதி வேலையில் நான் மேற்கொண்ட உழைப்பைப் பாராட்டித் தாங்கள் எழுதிய கட்டுரைகள், சிறிது முன்கூட்டி வெளி வந்திருக்கு மானால், அது, தாங்கள் என்மீது கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்துவதாயிருக்கும். ஆனால் பாராட்டுதலைப் பற்றி ஒருவித அசிரத்தை மனப்பான்மை உண்டாகி, அது காரணமாக, அந்தப் பாராட்டுதலைப் பெறுவதனால் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியை நான் அனுபவிக்க முடியாத நிலைமையில், என்னுடைய அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள யாரும் இல்லாமல் நான் தனிப்பட்டவனா யிருக்கிற நிலைமையில்,6 நான் எல்லோருக்கும் தெரிந்தவனாகி விட்ட பிறகு எவ்வித பாராட்டுதலும் எனக்குத் தேவையில்லாத நிலைமையில், தாங்கள் என்னைப் பாராட்டியிருக் கிறீர்கள். எந்த இடத்திலிருந்து நாம் நன்மையைப் பெறவில்லையோ அந்த இடத்திற்கு நாம் கடமைப்பட்டிருக்க வேண்டியதில்லை யென்றும்; எந்த அகராதிவேலை, ஆண்டவன் அருளால் நான் ஒருவனாகவே இருந்து செய்து முடிந்ததோ அது வேறொருவருடைய ஆதரவின் பேரில்தான் செய்து முடிந்ததென்று பொது மக்கள் கருதுவதற்கு இடமளிக்கக் கூடாதென்றும் நான் சொன்னால், அது கோபத்தின் மிகுதியினால் சொல்லப்பட்டதாகத் தாங்கள் கொள்ளக்கூடாது. கல்வி மான்களை ஆதரிக்கின்ற எந்த ஒரு நபருக்கும் கடமைப் படாதவனாய் நான் ஒருவனாகவே இருந்து அகராதி வேலையை முடிக்கும் நிலைக்குக் கொண்டுவந்து விட்டேன். ஆகையால் இனி, ஆதரவு கிடைக்கவில்லையே என்று எண்ணி வருந்திக் கொண் டிருக்க மாட்டேன் எனக்கு ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கைக் கனவு ஒரு காலத்தில் கண்டுகொண்டிருந்தேன். அந்தக் கனவிலே பெருமையும் அடைந்திருந்தேன். ஆனால் அந்தக் கனவிலிருந்து இப்பொழுது விழித்துக் கொண்டு விட்டேன். ஊழியன் ஸாமியல் ஜான்ஸன் இந்த அகராதி வெளியான பிறகு ஜான்ஸ னுடைய புகழ் அதிகரித்து. ஆனால் இவனுடைய பணக் கஷ்டம் குறையவில்லை. கடன் பாக்கி இருந்து கொண்டிருந்தது. இதற்காக இரண்டு முறை சிறை செல்ல வேண்டிய நிலைமைக்கும் உட்பட்டான். இங்ஙனம் தன் காலத்தில் இவன் பல கஷ்டங்களுக்குட்பட்டு வாழ்ந்தானாயினும், பிற்காலத்தில் நிலைத்து நிற்கக் கூடிய சில நல்ல நூல்களைப் படைத்து விட்டுப் போனான். அந்த நூல்களின் மூலம் இவன் எப் பொழுதும் வாழ்ந்து கொண்டிருப்பான். 18. பண்பாட்டின் இலக்கணம் செக்காவ்1 என்பவன், சிறு கதைகளும் நாடகங் களும் எழுதிப் புகழ்பெற்ற ஒரு ருஷ்ய அறிஞன். ஆரம் பத்தில் வைத்தியத் தொழிலுக்குப் படித்து அதில் தேர்ச்சி பெற்றான். ஆனால் அந்தத் தொழிலைச் சரிவர நடத்தவில்லை சிறந்த எழுத்தாளனாக மாறிவிட்டான். இவனுக்கு நிக்கோலாய்2 என்ற ஒரு மூத்த சகோதரன் இருந்தான். அவனுக்கு, செக்காவ், பண்பாடுள்ள மனிதர்களென்று யாரைச் சொல்லலாம், அவர் களுடைய லட்சணங்களென்ன, என்பவைகளைச் சுட்டிக் காட்டி, கி.பி. 1886ஆம் வருஷம், மாக்கோ3 நகரத்திலிருந்து ஒரு கடிதம் எழுதினான். அது வருமாறு:- உன்னை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை யென்று அடிக்கடி என்னிடம் குறை கூறிவருகிறாய். கதேயும்4 நியூட்டனும்5, இப்படிக் குறை கூறிக் கொண்டிருக்கவில்லை. யேசுநாதர் ஒருவர் தான் இப்படிக குறை கூறிக்கொண்டார். ஆனால் அவர் கூட, தம்மைப் பற்றி யல்ல; தம்முடைய கோட்பாடுகளை ஜனங்கள் புரிந்து கொள்ள வில்லையே என்றுதான் குறைபட்டுக் கொண்டார். உன்னையோ, எல்லாரும் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். நீதான் உன்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, அது மற்றவர்களுடைய குற்றமா என்ன? உன்னை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். உன் பொருட்டு மனப்பூர்வமாக அனுதாபப்படுகிறேன். உன்னுடைய சகோதரன் என்ற முறையிலும் உன்னுடைய நண்பன் என்ற முறையிலும் உனக்கு இதை உறுதியாகச் சொல்கிறேன். எனக்கு ஐந்து விரல்கள் உண்டு என்பதை நான் எப்படித் தெரிந்து கொண்டிருக்கிறேனோ, அப்படியே உன்னுடைய நல்ல குணங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆறாத நல்ல குணங்களைப் பெரிதும் மதிக்கிறேன்; போற்றுகிறேன். உன்னை நான் தெரிந்து கொண்டிருக்கிறேன் என்பதற்கு அத் தாட்சியாக அந்த நல்ல குணங்களை வரிசைக்கிரமமாக எடுத்துச் சொல்கிறேன். உன்னிடத்தில் கசிந்த அன்பு நிறைந்திருக்கிறது; தாராளமனம் இருக்கிறது; தன்னலமற்ற தன்மை இருக்கிறது உன்னிடத்தில் இருக்கும் கடைசி காசைக்கூட மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளத் தயாராயிருக் கிறாய்; உன்னிடத்தில் பொறாமை இல்லை; துவேஷம் இல்லை. எளிய நெஞ்சம் படைத்தவனாயிருக்கிறாய் எல்லா ஜீவராசி களிடத்திலும் கருணை காட்டுகிறாய் யாரும் உன்னை நம்பக்கூடிய விதமாக நடந்து கொள்கிறாய் உன்னிடம் வன்ம புத்தி இல்லை. வஞ்சக எண்ணமும் இல்லை உனக்குத் தீங்கிழைக்கப்பட்டால் அந்தத் தீங்கை நீ நினைவில் வைத்துக் கொள்வதில்லை. இவைக ளனைத்திற்கும் மேலாக உன்னிடம், மற்றவர்களுக்கில்லாத ஒருவித அறிவுத்திறன் இருக்கிறது. அது உனக்குக் கடவுளால் அருளப் பட்டது. அந்த அறிவுத்திறன் ஒன்று காரணமாக, நீ, லட்சக்கணக் கான மக்களுக்கு மேம்பட்டவனா யிருக்கிறாய். உன்னைப் போல் ஒரு சிலர்தான் உலகத்தில் இருக்கிறார்களென்று சொல்லலாம். உனக் கிருக்கும் இந்த அறிவுத்திறன் காரணமாக நீ தனிப்பட்ட ஒரு வியக்தி யாயிருக்கிறாய் நீ ஒரு தவளையாகவோ, சிலந்திப் பூச்சியாகவோ எப்படியிருந்த போதிலும், உன்னுடைய இந்த அறிவுத் திறனுக்காக உன்னை எல்லோரும் மதிப்பர். அறிவுத்திறன் முன்னே எல்லாம் மறந்துவிடப்படுகின்றன. ஆனால் உன்னிடத்தில் ஒரே ஒரு குறை இருக்கிறது. இதனால் தான் உன்னுடைய சுயநிலையை நீ உணரமுடியாதவனா யிருக்கிறாய்; உன் துக்கத்திற்கெல்லாம், மனவேதனைக்கெல்லாம் காரணம் அதுதான். அந்தக் குறை என்னவென்றால், நீ பண்பாடில்லாதவனா யிருப்பதுதான். உன்னிடத்தில் சிறிதளவுகூட பண்பாடு இல்லை. வாழ்க்கையின் இனிமையை நுகர வேண்டுமானால், நாம் சில நியதிகளுக்குட்பட்டுத் தானாக வேண்டும். ஒருவன், அறிஞர்கள் மத்தியில் கூச்சமில்லாமல் இருக்க வேண்டுமானால், அவர்களுள் தான் ஒருவனாகக் கருதிக்கொண்டு இருக்க வேண்டுமானால், அவர்களுடன் சந்தோஷமாக இருக்க வேண்டுமானால், அவன் ஓரளவுக்காவது பண்பாடுடையவனா யிருக்க வேண்டும். உனக்கிருக்கும் அறிவுத் திறனானது, அறிஞர்கள் மத்தியில் உன்னைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது; அவர்களுள் ஒருவனாகவும் நீ இருக்கிறாய்! ஆனால் உன்னிடம் போதுமான பண்பாடில்லாத காரணத் தினால், அந்த அறிஞர் குழுவிலிருந்து அடிக்கடி விலகிக்கொண்டுபோய் விடுகிறாய். ஆகவே நீ ஒரு நிலையிலில்லாமல் அப்படியும் இப்படியுமாக ஊசலாடிக் கொண்டிருக்கிறாய். 1. பண்பாடுள்ளவர்கள், முதலாவது, ஒருவனுடைய மனிதத் தன்மைக்கு மதிப்புக் கொடுக்கிறவர்களாயிருப்பார்கள். இதற்காக, அவர்கள், எப்பொழுதும் அன்புடையவர்களாகவும், நிதானதர் களாகவும், பணிவுடையவர்களாகவும், மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கிற மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒரு சிறு காரணத் திற்காக அவர்கள் மற்றவர்களோடு சண்டை யடித்துக் கொள்ள மாட்டார்கள். ஒருவனோடு சேர்ந்து வாழும்படி நேரிட்டால், அவர்கள், அந்த ஒருவனுக்குத் தாங்கள் காட்டும் சலுகையென்று கருதமாட்டார்கள். உன்னோடு யாரும் சேர்ந்து வாழ முடியாது என்று அந்த ஒருவனைப் பார்த்துச் சொல்ல மாட்டார்கள். மற்றும் அவர்கள், தங்கள் வீட்டிலுள்ள வர்கள், அளவுக்கு மிஞ்சி, சந்தடி செய்து கொண்டு பேசினாலோ, பேசாமல் மௌனமாக இருந்தாலோ, ஏளனமாகப் பேசினாலோ, முன் பின் தெரியாதவர்கள் தங்கள் வீட்டில் யதேச்சையாக வந்து தங்கி னாலோ, இவைகளையெல்லாம் பொறுத்துக் கொள்வார்கள். 2. அவர்கள் - பண்பாடுள்ளவர்கள் - தங்கள் கண்ணால் பார்க்கும் பிச்சைக்காரர்களிடத்தில் மட்டுமன்று, ஜீவ ஜந்துக்க ளிடத்தில் மட்டுமன்று, தங்கள் கண்ணால் பார்க்க முடியாத ஜீவராசிகளிடத்திலும் இரக்கம் காட்டுவார்கள். பிறருக்கு உதவி செய்ய வேண்டுமென்பதற்காக, அவர்கள், இரவு முழுவதும் விழித்துக் கொண்டிருப்பார்கள்; பிறருடைய இல்லாமையைப் பூர்த்தி செய்து கொடுப்பார்கள். 3. மற்றவர்களுடைய சொத்துக்கு அவர்கள் அதிக மதிப்புக் கொடுப்பார்கள். இதனால் சொத்துக்குடையவர்கள், தங்கள் சொத்தின்மீது கடன்பட்டுவிட்டால், அந்தக் கடனைத் தீர்த்து, சொத்தை அவர்களுக்கு மீட்டுக்கொடுப்பார்கள். 4. அவர்கள் - பண்பாடுடையவர்கள் - எதையும் மனப்பூர்வ மாகச் சொல்வார்கள்; செய்வார்கள். நெருப்புக்கு அஞ்சுவது போல் பொய்க்கு அஞ்சுவார்கள். சாதாரண விஷயங்களில்கூட அவர்கள், பொய் சொல்ல மாட்டார்கள். ஒருவனிடம் பொய் சொல்வது, அவனை அவமானப் படுத்துவது போலாகுமென்று கருதுவார்கள். வீட்டிலே எப்படி நடந்து கொள்கிறார்களோ அப்படியே, அதாவது நான்கு பேர் மத்தியிலும் நடந்து கொள்வார்கள். மற்றவர்களுடைய நம்பிக்கையைப் பெற வேண்டுமென் பதற்காக ஒரு காரியத்தைச் செய்ய மாட்டார்கள். மற்றவர்களுடைய செவிப் புலனுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்பதற்காக, அதிகமாகப் பேசாமல் பெரு மளவு மௌனமாயிருப்பார்கள். 5. அவர்கள் - பண்பாடுடையவர்கள் - தங்களிடத்தில் மற்றவர் களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டுமென்பதற்காக, தங்களை இழிவு படுத்திக் கொள்ளமாட்டார்கள். மற்றவர்களுடைய இதய வீணை யில் அந்தோ, பரிதாபம் என்ற நாதம் எழக்கூடிய மாதிரி, தங்களைத் தாழ்த்திக்கொண்டு பேசமாட்டார்கள். தவிர அவர்கள். ஐயோ, என்னை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கி றார்களே என்றோ நான் என்ன, இரண்டாந்தரத்து மனிதனாகி விட்டேன் என்றோ அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். இப்படியெல்லாம் சொல்லிக் கொள்வதும் நடந்துக் கொள்வதும், அற்பத்தனமாகும்; நீசத்தனமாகும். 6. அவர்கள் - பண்பாடுடையவர்கள் - வீண் டம்பம் அடித்துக் கொள்ளமாட்டார்கள்; போலித்தனம் அவர்களுக்குப் பிடிக்காது. தம்மைப் பெரிய மனிதர்களென்று நினைத்துக் கொண்டிருப்பவர் களுடன் கைகுலுக்குவதை அவர்கள் பெருமையாகக் கருத மாட்டார்கள். 7. அவர்கள், ஒரு பைசா பெறுமான உபகாரத்தை யாருக் காவது செய்தால், அதை நூறு ரூபாய் பெறுமான உபகாரத்தைச் செய்ததாக ஊரெல்லாம் பறை சாற்றிக் கொண்டிருக்கமாட் டார்கள்; மற்றவர்கள் செல்ல அஞ்சிய இடங்களுக்குத் தாங்கள் துணிந்து சென்று காரியத்தைச் சாதித்துக் கொண்டு விட்டதாக வெறுமனே சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள். 8. அவர்கள், தங்களிடமுள்ள அறிவுத்திறனுக்கு மதிப்புக் கொடுத்து அதனை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள முயல் வார்கள். அப்படி வளர்த்துக் கொள்வதற்காக, பெண்ணின்பத் தையோ, மதுபானத்தையோ, தங்களிடம் எங்கேனும் அற்பசொற்ப மாக கர்வம் குடிகொண்டிருந்தால் அதனையோ, எல்லாவற்றையும் துறந்துவிடுவார்கள்; உண்மையிலே தங்களிடமுள்ள அறிவுத் திறனுக்காகப் பெருமை கொள்வார்கள். 9. அவர்கள்-பண்பாடுடையவர்கள்- தங்களிடமுள்ள அழகு உணர்ச்சியை வளர்த்துக் கொள்வார்கள்; அசுத்தமானவற்றை வெறுப்பார்கள்; பெண்ணின்பம் துய்ப்பதில் நிதானத்தைக் கடைப் பிடிப்பார்கள். பெண்களிடமுள்ள தாய்மைக் குணத்தைப் பெரிதும் போற்று வார்கள். பொய் சொல்வதில் வல்ல புத்திசாலித்தனத்தைப் பாராட்ட மாட்டார்கள். இப்படிப் பண்பாடுடையவர்களின் லட்சணங்களைப் பல படித்தாகச் சொல்லிக் கொண்டு போகலாம். அறிஞர்கள் மத்தியில் நீ கௌரவமாக இருக்க வேண்டுமானால்; ஒருசில நூல்களைப் படித்துவிட்டால் மட்டும் போதாது; மேலே நான் சொன்ன தன்மைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீ ஓயாமல் உழைக்கவேண்டும்; நிறையப் படிக்க வேண்டும்; படிப்பதிலும் நல்ல நூல்களையே பொறுக்கியெடுத்துப் படிக்க வேண்டும். ஏதோ தெரிந்து கொண்டிருப்பதைக் கொண்டு கர்வங் கொள்ளாதே; அதை அறவே நீக்கிவிடு. அதிகமாகச் சொல்ல நீ குழந்தையல்ல. நீ ஒரு மனிதனாக வளர்ந்து வருவாய் என்று நாங்களெல்லோரும் எதிர்பார்க் கிறோம். அன்புள்ள, உன் சகோதரன். 19. விடுதலைக்கு வித்திட்ட கடிதம் வியாபார ஆதிக்கம் பெற வேண்டுமென்ற நோக்கத்துடன்தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு முதன் முதலாக வந்தார்கள். காலக் கிரமத்தில் இந்த ஆதிக்கம் பெற்றதோடு அரசியல் ஆதிக்கமும் பெற்று விட்டனர். இவர்களுக்கு முன்னாடி வந்த போர்த்து கீசியர் முதலான ஐரோப்பிய இனத்தினர் எவ்வளவோ முயன்றும் எந்தவிதமான ஆதிக்கத்தையும் பெற முடியாமலிருக்க ஆங்கிலேயர் மட்டும் ஆதிக்கம் பெற்றதற்குக் காரணம் என்ன? மொகலாய சாம்ராஜ்யத்தின் கட்டுக்கோப்பு தளர்ந்து வந்தது. நாட்டில் வேற்றுமை உணர்ச்சிகள் பரவலாயின. சுயநல எண்ணங்கள் வளர்ந்து கொண் டிருந்தன. இவைகளையெல்லாம் ஆங்கிலேயர்கள், தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் கள். இதில் இவர்கள், மற்ற ஐரோப்பிய இனத்தினரைக் காட்டிலும் கைதேர்ந்தவர்களாயிருந்த படியால், விரைவில் அரசியல் ஆதிக்கம் பெற்றுவிட்டார்கள். இவர்கள் ஆதிக்கம் பெற்ற கதை பெருங்கதை; கறைகள் மலிந்த கதை கூட; இஃதொரு பக்கம் இருக்கட்டும். வந்த ஆங்கிலேயர்களிற் சிலர், கிறிதுவ மதத்தைப் பரப்புவதில் முனைந்தார்கள். சிலர், வியாபாரத்தைப் பெருக்குவதில் ஈடுபட்டார்கள். வேறு சிலர்-மிகக் குறைவான பேர்-இந்தியாவின் நாகரிக பரம்பரையிலும், இலக்கியம் முதலியவற்றிலும் உண்மை யான அபிமானங் கொண்டு அவற்றை அறிந்து கொள்ளவும், உலகத்தினருக்கு அறிவிக்கவும் வெகு வாகப் பாடுபட்டிருக்கின்றனர். இவர்களுடைய சேவையை இந்தியா என்றும் மறக்கமுடியாது. இவர்களைப் போல் இன்னுஞ் சிலர், இந்தியா சுதந்திரமிழந்து தங்கள் இனத்தினருடைய, அதாவது ஆங்கிலேயர்களுடைய அரசியல் ஆதிக்கத்துக்குட் பட்டிருப்பதையும், ஆங்கிலக் கல்வி பயின்றவர்கள், சிறப்பாக இளைஞர்கள், தங்களுடைய சுய எண்ணத்தை யும், சுய சக்தியையும் வெளிப்படுத்த வாய்ப்புப் பெறாத வர்களாய் நிலை தடுமாறிக் கொண்டிருப்பதையும் கண்டு மனப்பூர்வமாக வருத்தப்பட்டிருக்கின்றனர்; வருத்தப்பட்டதோடு நின்று விடாமல் இவைகளி னின்று விமோசனம் பெற வழியையும் காட்டியிருக் கின்றனர். இந்தியர்களின் தேசீய அபிலாஷைகளைப் பிரதிபலித்துக் காட்டுகின்ற முறையில் அகில இந்திய தாபனம் ஒன்று தேவை யென்பதை இந்தியாவின் பல மாகாணங்களிலுமிருந்த முக்கியதர் சிலர் உணர்ந்து, 1885 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் சென்னையில் ஒன்று கூடிப் பேசியதையும், இதன் விளைவாக, முதலாவது இந்திய தேசீய காங்கிர 1885 ஆம் வருஷம் டிசம் மாதம் பம்பாயில் கூடியதையும் பலரும் அறிவர். ஆனால் இந்த அகில இந்திய தாபனம் தோன்று வதற்குக் காரணமா யிருந்தது ஓர் ஆங்கிலேயப் பெரு மகனுடைய முயற்சியே என்பதை ஒரு சிலரே அறிந் திருக்கக் கூடும். இந்தப் பெருமகன்தான் ஹ்யூம் என்பவன் இவன் முழுப்பெயர் ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்1 இந்திய அரசாங்கத்து உயர்தர உத்தியோகதனா யிருந்து மனப்பூர்வமாகச் சேவை செய்துவிட்டு ஓய்வு பெற்றிருந்தான். இவனை இந்திய தேசீய காங்கிரஸின் தந்தை என்று அழைப்பர். இது முற்றிலும் பொருத்தமே. ஆனால் இந்த அகில இந்திய தாபனம் தோன்று வதற்கு மறைமுகமாகத் தூண்டியவன் லார்ட்டப்ரின்.2 இவன் கி.பி. 1884 முதல் 1888 ஆம் வருஷம் வரை, இந்தியாவின் கவர்னர்-ஜெனரலா யிருந்தவன். இந்தியர் களின் தேசீய அபிலாஷைகளைத் தெரியப்படுத்தக் கூடிய ஓர் அகில இந்திய தாபனம் இருந்தால், அதன் மூலம், அந்த அபிலாஷை களைத் தெரிந்துகொண்டு, முடிந்த வரையில் அவற்றை நிறைவேற்றி வைப்பதற் கான வழிவகைகளைத் தேடலாமென்ற தன் கருத்தை, லார்ட் டப்ரின் தன் சொந்த ஹோதாவில் ஹ்யூமுக்குத் தெரிவிக்க, ஹ்யூம், அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு, இந்தியத் தலைவர்கள் ஒன்றுகூடிப் பேசுவதற்கான வாய்ப்பு ஏற்பட முயற்சி எடுத்துக் கொண்டான்; அனை வருக்கும் உற்சாகமூட்டினான். காங்கிர பிறந்தது. இந்தியர்கள், தங்கள் சுய முயற்சியினால்தான் எதையும் சாதிக்க வேண்டுமென்றும், அந்தச் சாதனை தான் நிலைத்து நிற்குமென்றும், அன்னியர்களுடைய தயவையோ, உதவியையோ எதிர்பார்த்தும், பெற்றும், தங்களுடைய தேசீய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முயல்வது தவறென்றும், அப்படி முயல்வது அவர்களுடைய தன்மதிப்பு உணர்ச்சிக்கு இழுக்கு என்றும், ஹ்யூம் பலவாறாக உணர்ந்தான். இந்த உணர்ச்சியை வெளிப்படுத்துகின்ற முறையில், அவன், 1883ஆம் வருஷம் மார்ச்சு மாதம் முதல் தேதியிட்டு, கல்கத்தா சர்வகலாசாலையைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு உருக்கமானதொரு சுற்றுக் கடிதம் அனுப்பினான். அந்தச் சுற்றுக் கடிதத்தின் சில பகுதிகள் வருமாறு: படித்த வகுப்பினருள் பெரும்பாலோராகவுள்ள நீங்கள்தான், இந்தியாவின் ஆன்மிக, சமுதாய, அரசியல் முன்னேற்றத்திற் கெல்லாம் மூலபுருஷர்களாயிருக்கிறீர்கள். தனி மனிதனிடத்திலே யாகட்டும், ஒரு ஜாதியினிடத்திலே யாகட்டும், முன்னேற்றத்திற்கான சக்திகள் உற்பத்தியாக வேண்டுமானால், அவை, அந்த மனிதனுக் குள்ளேயிருந்து தான் உற்பத்தியாக வேண்டும். ஆகையால், அறிவும் பண்பாடும் நிறைந்த இந்தியப் புதல்வர்களாகிய நீங்கள்தான், உங்கள் தாய்நாடு முன்னேறு வதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். என்னைப் போன்ற அந்நியர்கள், இந்தியாவை யும் அதன் மக்களையும் நேசிக்கலாம்; இந்தியாவின் நன்மைக்காக, காலத்தை, எண்ணத்தை, பணத்தை எல்லாவற்றையும் செலவழிக்க லாம்; போராடலாம்; பலவிதத் தியாகங்களும் செய்யலாம் ஆலோசனைகள் பல சொல்லலாம்; தங்களுடைய அனுபவம், திறமை, அறிவு அனைத்தையும் இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுகிறவர்களுக்குக் கொடுக்கலாம். என்ன செய்தாலும் அந்நியர்கள், இந்தியர்களாக மாட்டார்களல்லவா? ஆதலின், இந்தியர்கள்தான் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உழைக்க முன் வரவேண்டும்! உங்களில் பொறுக்கி யெடுத்தாற்போல் ஐம்பது பேர் சேர்ந்து தேச முன்னேற்றத்திற்காக உழைக்கக்கூடிய ஒரு தாப னத்தைத் தோற்றுவிக்க வருவீர்களானால் போதும். உங்களுடைய உண்மையான உழைப்பு, நிச்சயம் அந்த தாபனத்தை முன்னேறச் செய்யும் நீங்கள் தோற்று விக்கும் தாபனம் ஜனநாயக முறையில் அமைந்திருக்க வேண்டும். சுயநலத்திற்கு அதில் அடியோடு இடந் தரக்கூடாது. தாபனத்தின் தலைவர், பிரதம தொண்டராகவும், மற்ற அங்கத்தினர்கள் அவருடைய, உதவித் தொண்டர்களாகவும் கருதிக் கொண்டு பணியாற்ற வேண்டும். தேசத்தின் ஜீவநாடியாயுள்ளவர்கள் நீங்கள்தான். உங்களில் ஐம்பது பேர்-தியாக உணர்ச்சியும், தேசபக்தியுமுடையவர்களான, தங்கள் ஆயுளுள்ளளவும் தங்களுடைய காலத்தையும் உழைப்புச் சக்தியையும் தேச முன்னேற்றத்திற்கென்று செலவிடத் தயாராயுள்ள ஐம்பது பேர் முன்வரவில்லை யென்று சொன்னால், இந்தியாவுக்கு விமோசனமே கிடையாது. இந்திய மக்கள் அந்நிய ஆட்சியின ருடைய கைக் கருவிகளாயிருக்க வேண்டியதுதான். சமுதாயத்தின் தலைவர்களென்று கருதப்படுகிறவர்கள், சர்வசாமானிய மனிதர் களைப் போல் நடந்து கொண்டால், தங்களுடைய சொந்த நல னுக்கே முக்கியத்துவம் கொடுத்தால், தங்களுடைய தாய்நாட்டின் நன்மைக்காக ஒரு காரியத்தைச் செய்யத் துணிவு கொள்ளா விட்டால் அவர்கள் அடிமைப்பட்டிருப்பதற்கு தான் தகுதியுடைய வர்கள்; வேறெதற்கும் தகுதியுடையவர்களல்லர். எந்த ஒரு ஜாதியும், அதன் யோக்கியதைக்குத் தகுந்த மாதிரி தான் ஆட்சி முறையைப் பெறுகிறது. சமுதாயத்தின் முக்கியதர் களான நீங்கள், உயர்ந்த கல்வியறிவைப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள், உங்கள் சொந்த சுகங்களையும் நலன்களையும் புறக்கணித்துவிட்டு, உங்களுக்கும் உங்கள் நாட்டுக்கும் அதிக சுதந்திரம் கிடைக்க வேண்டுமென்பதற்காகவும், நடுநிலைமையோடு அரசாங்கம் நடை பெறவேண்டுமென்பதற்காகவும். உங்களுடைய விவகாரங்களை நீங்கள் கவனித்துக் கொள்ளும் விஷயத்தில் உங்களுக்கு இன்னும் அதிக பங்கு கிடைக்க வேண்டு மென்பதற்காகவும், உறுதியாகப் போராட மறுப்பீர்களானால், உங்களுடைய நண்பர்களாகிய நாங்கள் உங்களுக்காகப் பரிந்து பேசுவது தவறு. உங்களுடைய விமோசனத்திற்கு எதிரிடையாயிருக்கிறவர்கள் உங்கள் விஷயத்தில் நடந்து கொள்வதுதான் சரியென்றே சொல்ல வேண்டி வருகிறது. அப்படிச் சொல்லும்படியாகிவிட்டால் இந்தியா முன்னேறும் என்ற நம்பிக்கைக்கு முடிவு கட்டிவிட வேண்டியதுதான்; இப்பொழு துள்ள ஆட்சிதான் இந்தியாவுக்கு ஏற்றது, வேறெவ்வித ஆட்சிக்கும் அது தகுதியுடையதன்று என்று தீர்மானித்துவிட வேண்டியது தான். இப்படித் தீர்மானிப்பதுதான் சரியென்று நீங்கள் கருதி விடுவீர்க ளாயின், நாங்கள் சரியாக நடத்தப்படுவதில்லை, ஒன்றும் தெரியாத குழந்தைகள் போல் நடத்தப்படுகிறோம் என்று இனி யார் மீதும் குறை கூறாதீர்கள். குழந்தைகளைப் போல் நீங்கள் நடந்து கொண் டால் உங்களை வேறு எவ்விதமாக நடத்துவார்கள்? ஆங்கி லேயர்கள் எங்களைச் சரியாக நடத்தவில்லையே யென்று, இனி குறை கூறாதீர்கள். பொது நன்மைக்காகச் சொந்த சுகத்தைப் புறக்கணித்துவிட்டு சேவை செய்கிறவர்கள்தான் ஜனங்களுடைய மதிப்பில் உயர்ந்து நிற்பார்கள். ஆங்கிலேயர்களுக்கு இந்தச் சேவா உணர்ச்சியும் தேசபக்தியும் இருந்ததினால்தான் அவர்கள் இப் பொழுதுள்ள நிலைமையில் இருக் கிறார்கள் பொறுப்புள்ள உத்தியோகங்களுக்கு உங்களைப் புறக்கணித்து விட்டு அவர்களே நியமிக்கப்படுகிறார்களென்று சொன்னால், அதற்காக நீங்கள் ஏன் வருந்தவேண்டும்? அவர்கள் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக் கிறார் களேயென்று ஏன் முணுமுணுக்க வேண்டும்? ஒரு மனிதனோ, ஜாதியோ, சுதந்திரமும் சுகவாழ்வும் பெற வேண்டுமானால், அவனோ அதுவோ, தன்னல மறுப்பு, தியாகம் ஆகிய இரண்டு வழிகளைக் கடந்துதானாக வேண்டும். அதற்குத் தயாராயில்லாத வரையில் நீங்கள் அடிமைத் தளையில் பிணிக்கப்பட்டிருக்க வேண்டியது தான். காங்கிர தோன்றுவதற்கு முந்தியே ஆங்கில ஆட்சியின்மீது அதிருப்தி புகைந்துகொண்டிருந்தது. கி.பி. 1883-84 ஆம் வருஷங்களில் இந்த அதிருப்தி கனன்று வர ஆரம்பித்தது. ஆங்கில அரசாங்கமும் அடக்கு முறைகொண்டு இதனை அணைத்துவிட பெருமுயற்சிகள் செய்துவந்தது. இந்த நிலைமையில் தான் என்றும் போன்ற நல்லெண்ணமும் பரந்த நோக்க முள்ள ஆங்கிலேயர் சிலர், அதிருப்திக் கனல் பெருந் தீயாகப் பரவாமல் தடுக்கும் பொருட்டும் அரசாங்கத் தின் அடக்குமுறை முயற்சிகளைத் தகையும் பொருட்டும் ஒரு வழிகோல முயன்றனர்; அதில் இந்திய ரீதியில் கட்டுப்பாடான ஒரு தாபனம் ஏற்படுத்தி அதன் மூலம் இந்தியர்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்தல் சிறந்ததென்று கருதினர். ஏற்கனவே இத்தகைய தாபனம் ஒன்று தேவையென்பதை இந்தியத் தலைவர் பலர் உணர்ந்திருந்தாராயினும் இந்த உணர்ச்சிக்கு ஹ்யூம் போன்றவர்கள் உரமூட்டினர். ஹ்யூமினுடைய மேற்படி சுற்றுக் கடிதந்தான், இந்திய தேசீய காங்கிர தோன்றுவதற்கு முக்கிய தூண்டுதலாயிருந்தது. இந்தக் கடிதத்தினால் உற்சாகம் பெற்ற இளைஞர் பலர் பிற்காலத்தில் காங்கிரஸின் வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தார்கள். ஹ்யூமைப் பின்பற்றி இந்தியர்களின் அபிலாஷை களுக்கு ஆதரவளித்த ஆங்கிலேயர் அநேகர். ஸர் ஹென்ரி காட்டன்,3 ஸர்வில்லியம் வெட்டர் பர்ன்4 ஆல்ப்ரெட் வெல்ப்5 சார்ல பிராட்லா6 போன்ற வர்கள் காங்கிரஸுக்குத் தலைமை வகித்தார்கள். 20. பாரத மக்களின் நிலைமை சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழக்கம் செய்த லோகமான்ய பாலகங்காதர திலகர், மகாராஷ்டிரத்திலுள்ள ரத்தினகிரி என்ற ஊரில் கி.பி. 1856ஆம் வருஷம் பிறந்தார். சரித்திரம், விஞ்ஞானம், கணிதம் முதலிய பல துறைகளிலும் இவர் புலமை பெற்றிருந்தார். வடமொழியில் ஆராய்ச்சி மிக்கவர். கி.பி. 1883 ஆம் வருஷம், அதாவது அகில இந்திய காங்கிர தோன்றுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, ஆங்கில மொழியில், மகாராட்டா என்ற ஒரு வாரப் பத்திரிகையையும், மகாராஷ்டிர மொழியில் கேசரி என்ற ஒரு வாரப் பத்திரிகையையும் பூனா நகரத்தில் தோற்றுவித்து, அவை மூலம், அந்நிய ஆதிக்கத்தினின்று நமது தாய்நாடு விடுதலை பெற வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பல முகங் களாகப் பிரசாரம் செய்து வந்தார். மற்றும், பாரத நாட்டின் வரலாற்றுத் தொன்மையைப் பற்றிச் சில நூல்களை எழுதி வெளியிட்டார். அரசியலில் தீவிர வாதக் கட்சியைச் சேர்ந்தவர். இதனால் அப்பொழுதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கோபத்திற்கு அடிக்கடி ஆளாக வேண்டியவரானார். கி.பி. 1908 ஆம் வருஷம், தமது இரண்டு பத்திரிகைகளிலும், அரசாங்கத்தின் மீது ஜனங் களுக்குத் துவேஷம் உண்டுபண்ணக் கூடியவை என்ற கருதப்பட்ட சில கட்டுரைகளை வெளியிட்டார் என்ப தற்காக விசாரனைக்குப் பிறகு, ஆறு வருஷம் சிறைத் தண்டனை பெற்றார். உண்மையில் மேற்படி கட்டுரை களை இவர் எழுதவில்லை; வேறு யாரோ எழுதியது. எழுதியவர் பெயரைச் சொல்லியிருந்தாலும் தாம் இவைகளை எழுதவில்லையென்று மறுத்திருந்தாலும், தண்டனை பெறுவதினின்று தப்பித்துக் கொள்ளலா மென்று இவருக்கு மறைமுக மாகத் தெரிவிக்கப் பட்டது. ஆயினும், பத்திரிகாசிரியர் என்ற முறையில், கட்டுரைகளை வெளியிட்ட பொறுப்பு தம்முடையதே யென்றும், இதற்காகத் தண்டனை விதிக்கப்படு மானால் அதை ஏற்று அனுபவிக்கத் தயார் என்றும் கூறிவிட்டார். இவர் காட்டிய இந்த நேர்மை, நமது நாட்டின் அரசியலில் இவருக்கிருந்த செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. தமக்கு விதிக்கப்பட்ட ஆறு வருஷ சிறைவாசத் தண்டனையை இவர் புன்முறுவலோடு, ஏற்று பர்மா வில் மாந்தளை என்ற நகரத்துச் சிறையில் வைக்கப் பட்டார். தனிமையில் சிறைவாசத்தைக் கழிக்கும்படி நேரிட்டாலும், இவர், தமது தனித்துவத்தையோ, மனத்திண்மையையோ இழந்து விடவில்லை. தமது கூரிய அறிவையும், மன நிறைவையும், பாதுகாத்துக் கொள்ளுகின்ற வகையில், பகவத்கீதைக்கு அரியதொரு விளக்கவுரை எழுதினார். இதுவே பின்னர் கீதா ரகசியம் என்ற நூலாக வெளிவந்தது. ஒரு நூல் எழுது வதற்கான உபகரணங்கள் எதுவும் இல்லாத ஒரு சூழ் நிலையில் இவர் எழுதிய இந்த அரிய பெரிய நூல், இவருடைய அறிவின் முதிர்ச்சிக்கும் மனப்பக்குவத் திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. ஆறு வருஷ சிறை வாசத்தை முடித்து விட்டு இவர் கி.பி. 1914 ஆம் வருஷம் ஜூன் மாதம் தாய் நாட்டுக்குத் திரும்பி வந்து பூனா நகரத்தையடைந்தார். அங்கு வந்து சேர்ந்தார் என்ற செய்தியை அறிந்ததும், கல்கத்தாவில், அமிர்த பஜார் பத்திரிகை என்ற ஆங்கில தினசரிப் பத்திரிகையைத் தோற்றுவித்துத் திறமையாக நடத்திவந்த வரும், இவருடைய ஆப்த நண்பருமான மோதிலால்கோஷ் என்பவர் இவருக்கு நமது தாய் நாட்டின் அப்பொழுதைய அவல நிலைக்கு வருந்து கின்ற முறையில நீண்டதொரு கடிதம் எழுதினார். அது வருமாறு:- கல்கத்தா 25-06-1914 அன்புமிக்க நண்பருக்கு, கடைசியில் தாங்கள் சிறையிலிருந்து தாய் நாட்டுக்குத் திரும்பி வந்து விட்டீர்கள். உடல் நலம் கெட்டு, மனச் சோர்வுடன் அரை குறை மனிதனாக இல்லாமல், முழு மனிதனாக, எல்லாம் நிறைந்த மனிதனாக வந்திருக்கிறீர்களென்று நம்புகிறேன். என்னுடைய ஊனக் கண்களால் மறுபடியும் தங்களைப் பார்ப்பேனோ என்னவோ? ஏனென்றால் தாங்கள் இங்கிலாந்துக்குச் செல்லப் போவதாகவும், அங்கும் ஐரோப்பாவிலும் பல வருஷகாலம் தங்கப் போவதாகவும் பத்திரிகைகளில் பார்த்தேன். அப்படியானால், தங்களிடமிருந்து கடைசி முறையாக நான் விடை பெற்றுக்கொள்ள வேண்டியதுதான். இப்பொழுது எனக்கு அறுபத்தாறாவது வயது நடந்துகொண்டிருக்கிறது. எழுபதுக்கு இன்னும் நான்கு வருஷங்கள் பாக்கி. ஆனால் அதைப்பற்றிக் கவலையில்லை. தங்களுக்கு என்மீது ஒரு சொட்டு அன்பு இருக்குமானால், நாமிருவரும் தெய்வலோகத் தில் மறுபடியும் சந்திப்போம். மனிதர்களாகிய நாம் இந்த நில வுலகத்தில், கண்டதையும் தின்னும் விகாரமான புழுக்களைப் போலல்லவோ நெளிந்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நம்மை அடைத்து வைத்திருக்கும் இந்தச் சடலம் கழன்றுபோன கணத்தி லேயே நாம் தெய்வலோகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கி விடுவோம். அங்கு நாம் காற்றைப்போல் சுதந்திரமாக எங்கும் உலவலாம்; ஆனந்தமாக ஆடிப்பாடலாம்; இனிய உணவுகளை உட்கொள்ள லாம். சி.ஐ.டி. போலீசாரையும் தங்களுக்குத் தண்டனையளித்த நீதிபதியையும் பார்த்து நமது விரல்களை நொடிக்கலாம். இந்தப் பூலோகத்தில் எழுபது வருஷ வாழ்வு என்பது குழந்தை விளை யாட்டு மாதிரிதான். ஆனால் நம்மில், எத்தனை பேர் இதனை உணர்ந்திருக்கின்றனர். நிஜமான வாழ்வு என்பது நமக்கு அடுத்த உலகத்தில்தான் ஆரம்பிக்கிறது. இப்பொழுது நாம் கனவு உலகத்தில்தான் இருந்து கொண்டிருக்கிறோம். இரண்டு பேருண்மைகள் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட் டிருக்கின்றன என்பதை அறிந்திருக்கிறீர்களா? ஒன்று, மரணம் என்பது ஒரு கற்பனை மற்றொன்று நமது அன்புக்குரியவராயிருந்து இறந்துபோன அனைவரும் இந்த உலகத்தில் ஒன்றாகச் சேர்ந் திருந்ததைப் போல் மறு உலகத்திலும் சேர்ந்தே வாழ்வர். அப்படி யிருக்க, நாம் ஏன் சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? அன்புள்ள சகோதரரே, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பது மட்டுமல்ல; அவர் நன்மை மயமானவர்; பரிபூரணமானவர்; அன்பு மயமானவர்; இனிமை மயமானவர்; அழகுமயமானவர். அவருடைய இந்தத் தன்மைகளை அறிந்து கொள்வது கடினந்தான்; ஆனால் முடியாத தன்று. எவனொருவன், அன்பே கடவுள், கடவுளே அன்பு என்ற பேருண்மையைத் தெரிந்து கொண்டு விடுகிறானோ அவன் தான் மகான். சென்ற ஆறு வருஷ காலம் தாங்கள் (சிறையில்) தவமிருந்ததை நினைத்துப் பார்க்கிறபோது, இந்தமாதிரியான எண்ணங்களே எனக்கு உண்டாகின்றன. என்னைப்போல் தங்க ளுக்கும் இந்த மாதிரியான எண்ணங்கள் உண்டாகலாம் என்று நம்பி இவற்றைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிச்சமுள்ள தங்கள் வாழ்நாளை எப்படிக் கழிக்கப் போகி றீர்கள் என்பதை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். என்னைப் பொறுத்த மட்டில் நான் முக்காலே அரைக்கால் வாசி மறுவுலகத்தைச் சேர்ந்தவனா யிருக்கிறேன். ஆகையால் இந்தப் பூவுலகத்தைப் பற்றிய விவகாரங்கள் எனக்கு அதிகமான சிரத்தையை உண்டு பண்ணுவ தில்லை. ஆனாலும், வறுமை மிக்க, துரதிருஷ்டம் வாய்ந்த என் தாய்த்திரு நாட்டின் மீது எனக்குள்ள பற்றை விலக்கிவிட்டிருக்க முடியவில்லை. அந்தோ, நமது நாட்டு ஜனங்கள் வாழ்க்கையில் எவ்வித நிலவரமுமில்லாமல் இருக் கிறார்கள்; அந்த வாழ்க்கையை, அதன் போக்கிலேயே போக விட்டுவிட்டு, அந்தப்போக்கிலேயே அவர்களும் போய்க்கொண் டிருக்கிறார்கள். எங்கே போகிறார் களோ, அவர்களுக்கே தெரியாது. நல்லவை எவையோ மேன்மை யானவை எவையோ, அவை எல்லாவற்றின் மீதும் அவர்கள் நம்பிக்கை இழந்து கொண்டு வருகிறார்கள்; மானிட சமுதாயத்தின் மதிப்பில் படிப்படியாக இறங்கிக் கொண்டு வருகிறார்கள். நம்முடைய தேசீய வாழ்க்கையை, நினைத்துப் பார்க்கிறபோது துக்கமே உண்டாகிறது. ஆனால் நமக்கு எழுபது வயதுக்குள்தானே ஆகிறது? முடிவில்லாத காலத்தில் இது எம்மாத்திரம்? என்று நினைத்துக்கொண்டு ஆறுதலடை கிறேன். இந்த ஆறுதலில், எனது தாய்த்திருநாட்டின் எதிர்காலம் மிகப் பிரகாசமாயிருக்கப் போகிறது என்ற நம்பிக்கை எனக்கு உண்டாகிறது. வங்காளத்தின் கவர்னர் லார்ட் கார்மிக் கேல்1, ஒரு முறை என்னோடு பேசிக் கொண்டிருந்தபோது, பாரமார்த்திக விஷயமாக ஏதாவது சொல்லும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். அதற்கு நான் ஒன்று மட்டும் சொல்வேன். அது, மேன்மைதங்கிய தங்களுக்கு மட்டு மல்ல; எல்லோருக்கும் பொதுவானது. அதாவது, நாமெல் லோரும் நல்வாழ்க்கை நடத்துவோமாக. அன்பே உருவான கடவுளை நேசிப் போமாக. அப்பொழுதுதான் நாம் மரணமடைந்த பிறகு நமது ஆத்மா, மேலே சென்று ஆனந்த மயமான சொர்க்க லோகத்தை யடையும். ஆனால் அந்த உலகத்தைப்பற்றி, மேன்மை தங்கிய தங்களுக்கோ எனக்கோ ஒன்றும் தெரியாது என்று சொன்னேன். இப்படி நான் சொன்னதில் புதிய கருத்தொன்று மில்லை. ஆனால் ஆச்சரியமானதென்னவென்றால், சத்தாயுள்ளது எதுவோ, சுயம்பிரகாசமாயுள்ளது எதுவோ அழகாயுள்ளது எதுவோ, அதனை நாம் அடியோடு மறந்து விட்டு, குழப்பங்கள் பல நிறைந்த, நம்மால் சரிவர அறிந்து கொள்ளப்படாத, நமது இதயத்தில் வெளிச்சத்தையும் ஆனந்தத்தையும் அளிப்பதற்குப் பதில் இருட்டையும், வேதனையையும் உண்டு பண்ணிக்கொண்டிருக்கிற விஷயங்களில் மூழ்கிக் கிடக்கிறோம் என்பதுதான். பாரமார்த்திக சம்பந்தமான சாதாரண உண்மைகளை ஜனங்கள் அவ்வப் போது நினைவுபடுத்திக்கொண்டு வருவார்களானால், உலகத்திற்கு எவ்வளவோ நன்மையுண்டு. தாங்கள் சிறையிலிருந்த காலத்தில், சில அரிய நூல்களை எழுதியதாகக் கேள்விப்படுகிறேன். இதிலிருந்து, நம்முடைய துயரத்தில் கூட கடவுள் நம்மிடத்தில் கருணைகாட்டுகிறார் என்பது தெரிகிறது. தாங்கள் துன்பத்தை அனுபவித்தாலும் அது வீண் போகவில்லை. தாங்கள் சிறையிலிருந்தபோது, இந்தியா முழுவதும் தங்களுக்காக அழுதுகொண்டிருந்தது. தாங்கள் விடுதலையடைந்து விட்டீர்களென்று தெரிந்ததும், இப்பொழுது, தங்களுக்கு எல்லா நலன்களையும் அருள வேண்டு மென்று பிரார்த்திக்கிறது. நமது தாய் நாட்டுக்கும் பொதுவாக மானிட சமுதாயத்திற்கும் மேலும் மேலும் தொண்டு செய்ய, தாங்கள் நீடூழிகாலம் வாழ்ந்து கொண்டிருப்பீர் களாக! அன்புள்ள மோதிலால் கோஷ்  பாரதமாதாவின் கடிதங்கள் முன்னுரை காலத் தேவைக்கு ஏற்ப தமிழை வளர்த்த எழுத்துலக யோகிகளுள் ஒருவர் அமரர் வெ.சாமிநாத சர்மா (1995-1978). அவருடைய இலக்கிய ஆளுமையின் பன்முகப் பரிமாணங் களுள் ஒன்று, கடித இலக்கியத் துறை. 1958-இல் நாகர்கோயில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் தமிழ் எழுத்தாளர்கள் கடித இலக்கியத்துறையில் கவனஞ் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று தமது தலைமையுரையில் குறிப்பிட்டார், சாமிநாத சர்மா. கடித இலக்கியம் என்று ஒன்று உண்டா? என்று கேட்கப் பெற்ற ஒரு காலமும் இருந்துள்ளது. நவீன தமிழ் இலக்கியத் துறையை வளர்த்த முன்னோடிகளுள் வ.வே.சு.ஐயர், மறைமலையடிகளுடன், வெ.சாமிந த சர்மாவும் இணைந்தார். சர்மா அன்றைய பர்மா-ரங்கூனில் வாழ்ந்த காலத்தில் ஜோதி எனும் மாத இதழில் ஆசிரியராகவிருந்தார். ரங்கூனில் பாரத பந்தர் என்னும் பெயரில் புத்தக விற்பனைக் கடையைத் தொழிலாக நடத்தி வந்தார்.சென்னையில் திரு.வி.க.வின் நவசக்தி, தேசபக்தன் இதழ்களில் பணியாற்றிய சர்மாஜிக்கு ரங்கூனில் `1937 ஆகட்டில் வெளிவரத் தொடங்கிய `ஜோதி இதழில் இதழாசிரியராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அரசியல், இலக்கியம், கலை, நவீன படைப்பிலக்கியம், பொருளாதாரம், விஞ்ஞானம் எனப் பலவாறாக ஜோதியின் ஒளிக்கற்றைகள் விரிந்தன. இவற்றுள் ஒன்றாகக் கடித இலக்கியமும் தோன்றியது. வ. பார்த்தசாரதி’எனும் புனைப்பெயரில் சர்மாஜி, ’ஜோதி’யில் ‘மகனே உனக்கு!எனும் தலைப்பில் கடிதங்கள் எழுதி வந்தார். இந்தக்கடிதங்கள்,வாசகர்களுக்கு தன்னம்பிக்கையுடன் வாழ்வியல் பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை விளங்க வைத்தன. ஜோதி இதழ் ரங்கூனில் 1942 பிப்ரவரி வரையில் வெளி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மகனே உனக்கு என எழுதப் பெற்றக் கடிதங்கள் சென்னை 1956-இல் அதே தலைப்பில் நூலாக பிரபஞ்ச ஜோதி பிரசுராயலம் வெளியீடாக வந்தது. இரண்டாம் உலகப்போரின் காரணமாக பர்மாவில் ஏற்பட்ட யுத்த கால நெருக்கடிச் சூழல் காரணமாக சர்மாஜியும், அவருடைய இல்லத்தரசி மங்களம் அம்மையாரும் இந்தியாவிற்குப் புலம் பெயர்ந்தவர்களுடன் சேர்ந்து ரங்கூனை விட்டு 21.2.1942இல் வெளியேறினர். நடைப்பயணம் மேற் கொண்ட நிலையில் கல்கத்தாவில் 24.2.1942இல் வந்து சேர்ந்தனர். இதன் விபரத்தை அவருடைய பர்மா வழிநடைப் பயணம்எனும் நூலில் அறியலாம். சென்னை வந்தபிறகு 1945 முதல் 1946 வரையில் புகழ்பூத்த காந்தியவாதியான ஏ.கே.செட்டியாரின் குமரிமலர் எனும் மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார் சர்மாஜி. இக்காலத்தில் வ.பார்த்தசாரதி என்ற புனை பெயரிலேயே பாரதமாதாவின் கடிதங்கள் எனும் தலைப்பில் குமரி மலரில் எழுதினார். மொத்த 12 கடிதங்கள் வெளிவந்தன. பாரத மாதாவின் கடிதங்கள்சர்மாஜியின் பிற கடித இலக்கிய நூல்களான அவள் பிரிவு(1957),பிளேட்டோவின் கடிதங்கள்-1976 `வரலாறு கண்ட கடிதங்கள்-1979-போன்று நூல் வடிவம் பெறவில்லை.சர்மாஜியின் மறைவிற்குப் பிறகு என் பொறுப்பில் வந்த அவருடைய கையெழுத்துப் படிகள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் முதலானவற்றில் பாரத மாதாவின் கடிதங்களும் கிடைத்தன. திருவான்மியூர் கலாக்ஷேத்திரத்தில் இறுதிக் காலத்தைக் கழித்த சர்மாஜி, தமக்கு ஆதரவாக இருந்த கலாக்ஷேத்திரத்தைச் சார்ந்த டாக்டர் பத்மாசினி அம்மையாரிடம் தாம் வாழ்ந்த காலத்திலேயே 15.10.1975-ஆம் தேதியிட்டு பின் வருமாறு ஒரு குறிப்பு வரைந்தளித்துள்ளார். “Dr. பத்மாசினி அவர்களுக்கு, என்னுடைய கையெழுத்துப் பிரதிகள் அடங்கியப் பெட்டியை கையெழுத்துப் பிரதிகளுடன் ஸ்ரீ.பெ.சு.மணி அவர்களிடம் ஒப்படைக்கவும். அவர் விலாசம் 3B, ராமகிருஷ்ணாபுரம், 2-வது தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. - வெ. சாமிநாதன். என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பெட்டியில் கிடைத்த பாரத மாதா கடிதங்களைப் பற்றி என்னுடைய அறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் தமிழ்ப்பணி எனும் நூலில் (1990) சுருக்கமாக எழுதினேன். இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு எழுதப்பெற்றதால், தேசத் தொண்டாற்ற தம் மக்களை பாரத மாதா தூண்டுவதாகக் கடிதங்களின் உள்ளடக்கம் அமைந்தது. இக்கருத்து, இறுதிக் கடிதத்தில் பின்வருமாறு கூறப்பெற்றுள்ளது. மகனே! இதுதான் என்னுடைய கடிதம். என்னுடைய நாற்பது கோடி மக்களும் பசியாற உண்டு உடம்பு மறைய ஆடை யணிந்து, நிம்மதியான வாழ்க்கையை நடத்த வேண்டுமென்பதே என் விருப்பம். அந்த விருப்பத்தை நிறைவேற்றிட நீ ஒரு கருவியாயமைய வேண்டுமென் பதற்காகவே இந்தக் கடிதங்கள் உனக்கு எழுதிக் கொண்டு வந்தேன். இந்தக் கடிதங்கள் உன்னுடைய தேசத் தொண்டுக்கு வழிகாட்டியிருக்குமானால் அதுவே நான் அடைகிற திருப்தி. கடிதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றின் தலைப்பும், தேசிய அரசியல் பாட போதனைக்குரியதாக அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. விடுதலைப் போராட்டக் காலத்திற்கு உரியனவாக இருந்தாலும், அவற்றின் பொதுப்பண்புகள், தேசபக்திப் பண்பு போலவே நித்திய மானவை. எனவே, தற்காலம் பொருத்தத்திற்கும் உரியதே `பாரத மாதாவின் கடிதங்கள்எனும் இந்நூல். இக்கடிதங்கள் நூல் உருவாக்கம் பெறவில்லையே என்று என்னுடைய முற்கூறிய நூலில் வெளிப்படுத்திய ஆதங்கத்தைப் போக்கி நண்பர் தமிழ்மண் பதிப்பகம் வே.சுப்பையா அவர்கள் நிறைவு செய்ததற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 11, இராமகிருஷ்ணாபுரம், 2-ஆவது தெரு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033. பெ.சு. மணி 1. தேச சேவை குழந்தாய்! நீ வயது வந்த பிள்ளையாகி விட்டாலும், உன்னையும், உன்னைப் பெற்றவர்களையும் பெற்றெடுத்த எனக்கு நீ குழந்தைதானே! ஆகையால் உன்னைக் குழந்தாய் என்று அழைத்தே இந்தக் கடிதத்தை ஆரம்பிக்கிறேன். குழந்தாய் என்ற இந்த அழைப்பிலே அன்பு கலந்திருக் கிறது; ஆசீர்வாதம் நிறைந்திருக் கிறது. உனக்குச் சகல சம்பத்துகளும் உண்டாவதாக! என்னைத் தள்ளாதவளென்று உன் நெஞ்சத்திலிருந்து தள்ளி விடாமல் அவ்வப்பொழுது என்னை நினைக்கிறாய்; அறிவுத் துறை யிலும் அனுபவத் துறையிலும் நீ அடைந்து வரும் முன்னேற்றத்தை நான் அறிய வேண்டுமென்று ஆவல் கொள்கிறாய். நிரம்ப நல்லது. உன்னுடைய இந்த ஆவல் ஒன்றே உனது எதிர்காலத்திற்கு நிச்சயமாக வழிகாட்டும். வாழ்க மகனே! உன் படிப்பு முடிந்துவிட்டது. தேச சேவையிலே இறங்க வேண்டுமென்ற இச்சை உனக்கு அளவு கடந்து இருக்கிறது. அந்த மட்டிலும் சந்தோஷந்தான். எங்கேயாவது ஊழியஞ் செய்யலாமா, யாருக்கேனும் அடிமையாயிருக்கலாமா என்று உன் மனம் அலை பாயாமல், தேச சேவை என்ற ஒன்றிலேயே ஒன்றி நிற்கிறதே அது வரையில் உன்னைப் பாராட்ட வேண்டியதுதான். இளமை யானது, ஆசை களின் செழுமையான வளர்ச்சிக்கு உரம் போன்றது. ஆனால் அந்த ஆசைகள் கீழான மார்க்கத்திலே செல்லாமல் மேலான மார்க்கத்திலே செல்லுமாறு அவைகளைப் பாதுகாக்க வேண்டும். இப்படிப் பாதுகாக்கக் கூடியது எது? விவேகம். ஆகையால் நீ எப்பொழுது இந்தச் சிறு வயதில் தேச சேவையிலே ஈடுபட வேண்டுமென்று சங்கல்பித்துக் கொண்டாயோ அப் பொழுதே உனக்கு விவேகம் இருக்கிறதென்பதைத் தெரிந்து கொண்டேன். அந்த விவேகம் உன்னோடு பிறந்தது. அதை நீ வளர்க்க வேண்டும். அப்படி வளர்த்துக் கொண்டு வருவாயானால் உன் மனம் கிழப் பருவம் அடையாது. உனக்கு மரணமும் கிட்டாது. நீ சிரஞ்சீவியா யிருப்பாய்! தேச சேவையிலே ஈடுபட வேண்டுமென்று சங்கல்பித்துக் கொண்ட நீ அதற்கு உன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். தேசத்திற்குச் சேவை செய்வதென்பது சுலபமல்ல. தேசத்தின் மீது உனக்குள்ள பக்திதான், அதற்குச் சேவை செய்ய வேண்டுமென்று உன்னைத் தூண்டு கிறது. எண்ணத்திலே இருக்கிற பக்தியானது, செயலிலே சேவையாகப் பரிணமிக்கிறது. v©z¤â‹ Koî jhnd braÈ‹ Mu«g«?ஆக எவனொருவன், தன்னை தேச பக்தன் என்று சொல்லிக் கொள்கிறானோ அவன், தேசத்திற்குத் தொண்டாற்றி அந்தத் தொண்டிலே இன்பம் காணாமற் போவா னாகில் அவனுடைய தேசபக்தி நிறைவுடைய தேச பக்தியாகாது; பூரண தேச பக்தியாகாது. தேசத்திற்குச் சேவை செய்வதென்றால் என்ன அர்த்தம்? தேசத்திலுள்ள மண்ணுக்கும் மரத்துக்கும் சேவை செய்வதென்பது அர்த்தமா? அல்லது ஊர்வன, பறப்பன,நடப்பன என்று சொல்லப் படுகிற பிராணிகளுக்குச் சேவை செய்வதென்பது அர்த்தமா? இவையெல்லா வற்றிற்கும் சேவை செய்யத்தான் வேண்டும். இவை செழிப்பாக வளரவும், வாழவும் நாம் துணை செய்ய வேண்டும். இவைகள் மானிட சமூகத்தின் நலனுக்காக உபயோகப்படுமாறு செய்ய வேண்டும். ஆனால் இவை போதா; இவை மட்டும் சேவை யாகா. நம்மைச் சுற்றியுள்ள நமது சகோதர மனிதர்களுக்குச் சேவை செய்யவேண்டும். அதாவது அவர்களுடைய முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டும். எப்படியென்று கேட்பாயானால், அவர்கள் அறியாமைக் குட்டையில் அழுந்திக் கிடந்தால் அவர்களை அறிவுத் துறைக்கு அழைத்துக் கொண்டு வரவேண்டும்; வறுமையினால் உடல் மெலிந்து, உள்ளம் சோர்ந்து கிடப்பவர்களை உடல் வலிவும் உள்ளத்திண்மையும் உடையவர்களாகச் செய்ய வேண்டும்; வாழ்க்கை யென்றால் என்ன, எப்படி வர வேண்டுமென்பவைகளைப் பற்றிக் கொஞ்சம்கூடத் தெரியாதவர்களுக்கு, வாழ்க்கையானது சதா சலித்துக் கொண்டிருப்பது, சுவையுடையது, நம்மைச் சூழ்ந்திருப்ப வர்களை இன்புறச் செய்வதிலேதான் அந்த வாழ்க்கை பிரகாசிக் கிறது, அதுதான் நிஜ வாழ்வு என்று தெரியப்படுத்த வேண்டும். சிறப்பாக நீ பிறந்திருக்கிற நாட்டிலே, என் பெயரைத் தாங்கிக் கொண்டு பழம்பெருமையினால் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்தியாவிலே, மேற்கண்ட மாதிரியான வேலைகளைச் செய்வது மிகவும் கஷ்டம். ஏனென்றால் சுதந்திரமில்லாத நாடு உனது நாடு. இதை முதலில் நீ நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். எந்த நாட்டிலே சுதந்திர மில்லையோ அந்த நாட்டிலே வாழ்வு இல்லை. அந்த நாட்டு மக்களுக்கும் ஒளியிழந்த சூரியனுக்கும் வித்தியாசம் இல்லை. அவர்கள் உலவுகின்ற உருவங்களே தவிர நடமாடுந் தெய்வங்களல்ல. சுதந்திரமாக இருப்பது தான் மனித சுபாவம். அந்தச் சுபாவமில்லாத வர்களை மனிதர்களென்று எப்படிச் சொல்ல முடியும்? ஆகையால் உன்னுடைய வேலை மிகவும் சிரமமானது. மற்ற நாடுகளிலே தேச சேவை செய்வதற்கும், இந்தியாவிலே தேச சேவை செய்வதற்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் உண்டு. மற்ற நாடுகளிலே, மனிதர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமுதாய வாழ்க்கையிலும், பொருளாதாரச் சீர்கேட்டினாலோ அல்லது அரசியல் நடத்துவோரின் அஜாக்கிரதையினாலோ அல்லது அசிரத்தையினாலோ அவ்வப்பொழுது அநேக கறைகள் படுதல் கூடும். அவைகளைப் போக்குவ தோடு தேச சேவையென்பது ஓரளவு முற்றுப்பெறுகிறது. அங்கே தேச சேவையென்பது பயிர் நடுவே முளைக்கும் களைகளைப் பிடுங்குவது போல; அழுக்குப் படிந்த உடலைக் குளிப்பாட்டுவது போல; செடிகளைப் பூச்சிகள் அரிக்காமலிருக்கச் சாம்பல் தெளிப்பதுபோல. ஆனால் நமது நாட்டிலோ தேச சேவையென்பது மகா கடினமான ஒரு சாதனை; எப்படிப்பட்டவருடைய மனத்தையும் ஒடித்துவிடக்கூடிய ஒரு சம்மட்டி. ஏனென்றால் இங்கே சுதந்திர மில்லை. ஒரு நல்லதைச் செய்யவேண்டுமானால், அதற்கு முதற்படி யாக எத்தனையோ தீமைகளை அகற்ற வேண்டியிருக்கிறது; எத்தனையோ சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. இங்கே தேச சேவையென்பது, தரிசாகக் கிடக்கிற நிலத்திலே சாகுபடி செய்யப் பிரயத்தனப்படுகிற மாதிரி. இங்கே கண்ணிழந் திருப்பவர்களுக்குக் கண்ணைக் கொடுக்க வேண்டும்; பிறகு அந்தக் கண்களைக் கொண்டு அவர்களைப் பார்க்கச் செய்ய வேண்டும். இரண்டு வரிகளிலே சுலபமாக இதைச் சொல்லிவிட்டேன். ஆனால் இதைச் செய்வது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். இதற்காகவே தேச சேவைக்கு உன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று முதலில் உனக்கு எச்சரிக்கை செய்தேன். முதலாவது நீ ஓர் அடிமையென்பதை உணரவேண்டும். அந்நிய ஆதிக்கத்திற்கு அடிமையாயிருப்பது ஒருபுறமிருக்கட்டும்; உனக்கே நீ அடிமையாயிருக்கிறாய். இப்படி நான் சொல்வது, இந்தக் காலத்து இளைஞனாகிய உனக்கு ஒரு புதிராயிருக்கலாம்; நான் ஏதோ தத்துவம் பேசுகிறேன், வேதாந்தம் பேசுகிறேன் என்று என்னைப் பார்த்து அலட்சியச் சிரிப்பு சிரிக்கலாம்; அல்லது என்னைப் பரிகாசம் செய்யலாம். நீ என்னைப் பார்த்துச் சிரிப்பத னால் நான் குறைந்து விடமாட்டேன். நான் காலங் கடந்தவள். சரித்திர அறிஞர்கள் என்னுடைய வயதை நிர்ணயிக்க முயன்று தோல்வியடைந்து போயிருக்கிறார்கள். உன்னைப் போல் யுகக் கணக்கிலே வந்து கொண்டிருக்கிற கோடிக்கணக்கான இளைஞர் களுடைய அசட்டையும் பரிகாசமும் என் முகத்திலே ஒரு சுருக் கத்தையும் உண்டு பண்ணவில்லை; அப்படி உண்டு பண்ணவும் பண்ணாது. நோயினால் அவதிப்படுகிற ஒருவன், அந்த நோய் தாங்கமாட்டாமல், ‘தாயே, என்னை ஏன் பெற்றாய்?என்று தாயை நோகிறான்; கடவுளே, என்னை ஏன் படைத்தாய்? என்று கடவுளை நோகிறான். இதற்காக அவனைத் தாயோ கடவுளோ வெறுப்ப தில்லை; அவன் மீது வருத்தங் காட்டுவதுமில்லை. அதைப் போல், உனக்கு நீ அடிமையாயிருக்கிறாய் என்று நான் சொன்னால், அதற்காக நீ என்னைக் கோபித்துக்கொண்டால் அல்லது பரிகாசஞ் செய்தால் அதற்காக நான் வருத்தப்படப் போவதில்லை. உன்னை நீ ஆள வேண்டும்; உனக்கு நீ எஜமானாக இருக்க வேண்டும்; என்று நான் சொல்லிக்கொண்டு தானிருப்பேன். ஆத்ம சுதந்திரம் பெற்று விட்டால் அரசியல் சுதந்திரம் எளிதிலே கிடைத்துவிடும். இந்த உண்மையை நான் எப்பொழுதும் உனக்கு வற்புறுத்திக் கொண் டிருப்பேன். ஏனென்றால், நமது நாகரிகம் இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டது. இந்த உண்மையை நாம் கைவிட்டு விட்டோமானால் நமது நாகரிகத்தை இழந்து விட்டவர்களாவோம். நம்மை இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு அப்பொழுது யோக்கியதை இராது. சுதந்திரமில்லாத ஒரு நாட்டிலே முதலில் ஜனங்கள், தாங்கள் அடிமைகள் என்பதை உணரவேண்டும். அப்படி உணர்வார் களானால் அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற முயற்சி செய்வார்கள். விடுதலை வேண்டுமென்ற விருப்பம் அடிமை உணர்வினின்று எழுவது. ஆதலின் முதலில் நீ அடிமை என்பதை உணர்ந்து கொள். அப்பொழுதுதான் மற்றவர்களுக்கு அவர்க ளுடைய அடிமைத்தனத்தை உணர்த்தமுடியும். எந்த விஷயத் திலுமே, மற்றவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நீ எதிர்ப்பார்க்கிறாயோ அப்படி நீ முதலில் நடந்து காட்ட வேண்டும். உன் வாழ்க்கையிலே எது அனுஷ்டிக்க முடியாமலிருக் கிறதோ அதை நீ மற்றவர்களுக்கு உபதேசிக்கக் கூடாது. உன்னுடைய வாழ்க்கையினால்தான் மற்றவர்களுடைய வாழ்க்கையை நீ சீர்திருத்த முடியுமே தவிர, உன்னுடைய சொல்லினாலல்ல. ஆதலின் முதலில் நீ உன்னுடைய அடிமைத்தனத்தை நன்றாக உணர வேண்டும்; விடுதலை வேண்டுமென்கிற ஆர்வம் உனக்குத் தீவிரமாக இருக்க வேண்டும். இந்தியாவில் எத்தனையோ ஜாதிகள் இருப்பதாகச் சொல்கி றார்கள். உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். என்ன பேதமை! அடிமை நாட்டிலே உயர்ந்தவன், தாழ்ந்தவன் ஏது? nkš #hâ, Ñœ #hâ VJ?, எல்லாம் ஒரே ஜாதிதான். அதுதான் அடிமை ஜாதி. வேலைக் காரர்கள், தங்களுக் குள்ளே, ஒருவன் தாழ்ந்தவன் என்றும், மற்றொருவன் மேலானவ னென்றும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் எஜமானனுக்கு எல்லோரும் வேலைக்காரர்கள்தான். அதுபோல் இந்தியாவிலுள்ள வர்கள் தங்களுக்குள்ளே பணக்காரன் என்றும் ஏழையென்றும், உத்தியோகஸ்த னென்றும், தொழிலாளியென்றும், ஹிந்துவென்றும் முஸ்லீம் என்றும் பலவித ஜாதி , மத, அந்தஸ்து வேற்றுமைகளைக் கற்பித்துக் கொண்டு அந்த வேற்றுமைகளைக் கண்டு பெருமை கொள்ளலாம்; அல்லது திருப்தி யடையலாம்; அல்லது அந்த வேற்றுமைகள் ஊர்ஜிதப்பட வேண்டுமென்பதற்காக ஒருவருக் கொருவர் சண்டைபோட்டுக் கொள்ளலாம். ஆனால் அந்நிய ஆதிக்க நிழல் எல்லார் மீதும் ஒரே மாதிரியாகத்தான் படிகிறது. அது யாரிடத்திலும் பாரபட்சமாக நடந்து கொள்வதில்லை. வேண்டு மானால் தன் காரிய சாதனைக்காகச் சில சமயங்களில் சிலரைத் தட்டிக் கொடுக்கலாம்; சிலரை எட்டி வைக்கலாம். அவ்வளவுதானே தவிர, மற்றபடி அது - அந்நிய ஆதிக்கம் - தனக்கு ஆட்பட்டிருப்ப வர்கள் விஷயத்தில் ஒரே மாதிரியான எண்ணமே கொண்டிருக் கிறது; தன்னுடைய ஆதிக்கத்திற்கு ஊறு ஏற்படாதவரையில் எல்லோரையும் ஒரே மாதிரியாகவே பார்க்கிறது. ஆனால் தனது ஆதிக்கத் திற்குச் சிறிது அசைவு ஏற்படுமானால் அது சீறி எழுகிறது; தனக்கு ஆட்பட்டிருப்பவர்களைத் துரும்பாக மதிக்கிறது. பொது வாகவே ஆள்கிறவர் களுடைய விருப்பு வெறுப்பையொட்டியே ஆட்படுகிறவர் களுடைய வாழ்வு தாழ்வு இருக்கிறது என்ற அடிப்படையான உண்மையை மட்டும் நீ அடிக்கடி ஞாபகப் படுத்திக் கொண்டு வரவேண்டும். மற்றும் நம்மிடத்திலேயுள்ள ஜாதி சமய வித்தியாசங் களெல்லாம் அந்நிய ஆதிக்கத்தை இன்னும் ஆழமாக ஊன்றிக் கொள்ளும்படி செய்கின்றன. அந்நிய ஆதிக்கத்திற்கு இந்த வேற்றுமைகள் நல்ல எரு மாதிரி. இந்த வேற்றுமைகள் மீதுதான் அது தோன்றுகிறது; வளர்கிறது; வாழ்கிறது. உலக சரித்திரத்தில் பொதுவாகக் காணப்பெறும் உண்மை இது. பாரசீக ஏகாதி பத்தியம், கிரேக்க ஏகாதிபத்தியம், ரோம ஏகாதிப்பத்தியம் ஆகிய இவைகளெல்லாம் தங்களுக்கு ஆட்பட்டிருந்த ஜாதியினருடைய வேற்றுமைகளில்தான் வாழ்ந்தன; அந்த ஜாதியினர்களை வேற்றுமைப் படுத்தித்தான் வாழ்ந்தன. ஆனால் வேற்றுமைகளின் மீது வளர்ந்த, வாழ்ந்த ஏகாதிபத்தியங்கள் ஒன்றுகூட நீடித்து நிலை க்கவில்லை; நல்லவிதமாக மறையவுமில்லை. MjÈ‹ kfnd!முதலில் உன்னை நீ அறி. பிறகு எனது உண்மையான நிலை உனக்குப் புலப்படும். என்னுடைய சேவைக் காக உன்னைத் தகுதிப்படுத்திக் கொள்வாய். அப்படித் தகுதிப் படுத்திக் கொள்வதிலேதான் உன்னுடைய எதிர்காலம் இருக்கிறது.நீ வாழ்க! நீ மறந்தாலும் உன்னை மறவாத, பாரத மாதா. 2. உன்னை நீ அறி மகனே! கல்லூரியில் படித்து முடித்தவுடனேயோ அல்லது ஏதாவது ஒரு கட்டுரை எழுதி அது ஒரு பத்திரிகையில் வெளியான வுடனேயோ அல்லது நான்கு பேர் கூடியிருக்கிற ஒரு கூட்டத்திலே சிறிது வாசாலகமாகப் பேசுகிற சக்தி ஏற்பட்டவுடனேயோ, `எனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது;என்னால் எல்லாம் சாதித்து விட முடியும் என்று எண்ணிக் கொண்டு விடாதே. அப்படி எண்ணுவா யானால் அது உன்னுடைய வளர்ச்சிக்குத் தடையாகும். உலகத்திற்காவது, இவ்வளவு சதுர மைல் விஸ்தீரண முடையது, இவ்வளவு டன் நிறையுள்ளது என்று கணக்குச் செய்து ஒரு வரம்பு கட்டிவிடுகிறார்கள்; அப்படியே சமுத்திரத்தின் ஆழம் இவ்வளவுதான் என்று நிர்ணயப்படுத்தி விடுகிறார்கள்; ஆகாயத்தி லுள்ள நட்சத்திரங் களைக்கூட எண்ணிச் சொல்லி விடுகிறார்கள். Mdhš f‰f nt©oa Éõa§fŸ ï›tsîjh‹ v‹W ïJtiuÆš ahuhtJ xU tiuaiw brŒâU¡»wh®fsh?, கற்றது கைம் மண்ணளவு, கல்லாதது உலகளவு என்ற வாசகம் வெறும் ஏட்டுச் சுரைக்காயல்ல; உன் இருதயத்திலே பதிந்திருக்க வேண்டிய அழியாத உண்மை. இந்த உண்மையை நீ தெரிந்து கொண்டிருந்தாயானால் அதுவே உன்னை நீ அறிந்து கொண்ட தாகும். உன்னை நீ அறிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் உன்னை ஏதோ வேதாந்தச் சுழலில் கொண்டு போய் விட்டு விட்டதாக மலைக் காதே. வேதாந்தம் என்றால் அது ஏதோ நமது தினசரி வாழ்க்கையினின்று வேறுபட்டது, வாழத் தெரியாதவர்கள் தான் வேதாந்திகளாகிறார்கள் என்றெல்லாம் நீ தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறாய். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இதைப் பற்றிப் பின்னாடி விஸ்தாரமாகப் பேசிக் கொள்ளலாம். இப்பொழுது உனக்கு உலக ரீதியான, உன் வாழ்க்கைக்கு வழிகாட்டியாயிருக்கக் கூடிய சில விஷயங்களைப் பற்றியே கூறுகிறேன். இந்த நோக்கத் துடன்தான் உன்னை நீ அறியவேண்டும் என்ற வாக்கியத்தை இங்கே பிரஸ்தாபித்தேன். உன்னை நீ அறிய வேண்டும் என்றால் உன் தகுதியை, உன் சக்தியை, உன் திறமையை நீ தெரிந்து கொள்ள வேண்டும், உன் பொறுப்பை நீ உணரவேண்டும், உன் கடமையை நீ அறிய வேண்டும் என்ற இந்தமாதிரியான சாதாரண அர்த்தத்தில்தான் சொல்கிறேன். உன் தகுதியை, உன் சக்தியை,உன் திறமையை நீ தெரிந்து கொண் டால் அதற்குத் தக்கபடி காரியங்களைச் செய்வாய்; தோல்வி யென்பது உனக்கு ஏற்படாது. உற்சாகத்திலே தலைதெறித்துப் போகாமல் நிதான மாயிருப்பாய். இந்த உலகத்திலே நாம் தெரிந்து கொண்டிருக்கிற விஷயம் சொற்பந்தான் என்ற உணர்ச்சி உனக்கு இருக்குமானால் இன்னும் அதிக விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் உனக்கு உண்டாகும். அதனால் வளர்ச்சியடைந்து கொண்டு போவாய். வளர்ச்சி தானே வாழ்வு. மற்றும், தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் உனக்கிருக்குமானால், மற்றவர்களுக்கு ஒன்றுந் தெரியாதென்று சொல்லிக்கொண்டிருக்கமாட்டாய். உனக்கு தெரிந்திருக்கிற ஒரு விஷயம், உன் சகோதரன் ஒருவனுக்குத் தெரியவில்லையென்று வைத்துக் கொள். அதற்காக அவனை நீ பரிகசிக்கக் கூடாது. அவனுக்குத் தெரிந்த ஒரு விஷயம், உனக்குத் தெரியாமலிருக்கலாம். அப்பொழுது அவன் உன்னைப் பரிகசித்தால் உன் மனம் எவ்வளவு வருத்தப்படும் என்று யோசித்துப்பார். மற்றவர்களுடைய அறியாமையைப் பார்த்து நீ பரிகசித்தாயானால் நீதான் நஷ்டப்படுகிறாய். எப்படியென்றால் உன் பரிகாச வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் மனம் புண்படு கிறது. உன்மீது வெறுப்புக் கொள்கிறார்கள். உன்னிடமிருந்து விஷயங் களைத் தெரிந்து கொள்ளவேண்டுமென்ற ஆவல் அவர்களுக்கு ஏற்கனவே இருந்திருந்தால், உன்னுடைய பரிகாச வார்த்தைகளைக் கேட்டபிறகு, அந்த ஆவல் அடங்கிப் போய்விடுகிறது. உன்னிடத் திலே ஓர் அலட்சியப் புத்தியும் ஏற்பட்டு விடுகிறது. இதனால் உனக்குத் தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து அவர்களுடைய அறிவை விருத்தி செய்கிற புனிதமான ஒரு தொண்டைச் செய்யும் சந்தர்ப்பத்தை இழந்து விடுகிறாய்; அதே சமயத்தில் அவர்களிடமிருந்து ஏதேனும் தெரிந்து கொள்ள வேண்டியதிருந்தால் அப்படித் தெரிந்து கொள்கிற சந்தர்ப்பத்தை யும் போக்கடித்துக் கொண்டு விடுகிறாய். அவர்களுடைய அறிவையும் நீ விருத்தி செய்யவில்லை; உன்னுடைய அறிவையும் நீ விருத்தி செய்து கொள்ளவில்லை. இது யாருக்கு நஷ்டம்? உலகத்திலே தெரிந்தவர் என்று யாருமில்லை. ஒன்றிலே அறிவுடையவர்கள் மற்றொன்றிலே அறிவில்லாதவர்களாக இருக்க லாம். இதற்காக அவர்களைக் குறைவாகக் கருதக்கூடாது. ஒருவரை உயர்வென்றும் மற்றொருவரைத் தாழ்வென்றும் எண்ணக்கூடாது. ஆகாய விமானம் ஓட்டுகிறவனுக்கு மாட்டுவண்டி ஓட்டத் தெரியா திருக்கலாம். எழுதிப் பிழைக்கிறவனுக்கு மண்வெட்டிப் பிழைக்கத் தெரியாதிருக் கலாம். இதற்காக ஒருவனை உயர்வாகவோ மற்றொருவனைத் தாழ்வாகவோ நினைக்க வேண்டியதில்லை யல்லவா? அறிஞர்கள் என்று மற்றவர்களால் கௌரவிக்கப்படுகிற வர்கள், தங்களுடைய அறிவைப் பொருத்தமட்டில் அடக்கமாகவே இருக் கிறார்கள்; ஏன், தங்களுக்கு ஒன்றுமே தெரியாதென்று கூடச் சொல்லிக் கொள்கிறார்கள்; மற்றவர்களிடமிருந்து ஏதேனும் கற்றுக் கொள்ள முடியுமாவென்று ஆவலோடு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆவல்தான் உனக்கு இருக்க வேண்டும். இந்த ஆவலிருந்தால் உன்னை நீ அறிந்து கொண்டவனாவாய். அடுத்தபடியாக உன்னுடைய தகுதி, உன்னுடைய சக்தி, உன்னுடைய திறமை இவைகளையும் நீ தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது இன்னின்ன காரியத்தை நம்மால் ஒழுங்காகச் செய்யமுடியும், இன்னின்ன காரியங்களைச் செய்ய முடியாது என்று உனக்கே தெரிந்திருக்க வேண்டும். பணத்தையோ, புகழையோ, வேறெந்தப் பலனையோ எதிர்ப்பார்த்து, உன்னால் முடியாத காரியத்தில் பிரவேசித்தாயானால் உனக்குத் தோல்விதான் கிடைக்கும். அதாவது உனக்கு அந்தக் காரியத்தில் வெற்றி ஏற்படாத தோடு கூட உனக்கு அவமானமும் உண்டாகும். இப்படிப் பல தடவைகளில் அவமானமடைந் தாயானால் உனக்கு நிச்சயம் மனச் சோர்வு ஏற்படும். செய்ய முடிந்த காரியத்தைக் கூடச் செய்யாமல் விட்டுவிடுவாய். முடிந்தவர்கள்கூட முடியாதவர்களாகி விடுவதற்குக் காரணம்,தங்களுடைய தகுதியையும், சக்தியையும், திறமையையும் உணராமல் ஒரு காரியத்தில் பிரவேசிப்பதுதான். உதாரணமாக நீ தனிமையாக உட்கார்ந்து கொண்டு பேனாவைப் பிடித்தாயானால் ஒன்றன்பின் ஒன்றாகப் பல எண்ணங்கள் உதயமா கின்றன; அந்த எண்ணங்களைக் கோவை யாக எழுத்திலே கொண்டு வருகிறாய். எதைச் சொல்ல வேண்டு மென்று விரும்புகிறாயோ அதை எழுத்தின் மூலம் நன்றாகச் சொல்லிவிடுகிறாய். ஆனால் எழுத்திலே கொண்டுவந்த அந்த விஷயத்தை ஒரு சபையிலே எடுத்துச் சொல்ல வேண்டுமென்று யாராவது உன்னை அழைத்து, அந்த அழைப்புக் கிணங்கிச் செல்வா யானால், சபையோரைப் பார்த்தவுடனே உனக்குத் தடுமாற்றம் ஏற்பட்டுவிடுகிறது; உன் எண்ணங்கள் சிறைப்பட்டுப் போகின்றன; உன் முகத்திலே அசடு வழிகிறது. உன் எழுத்துக்காக உன்னிடத்தில் மதிப்பு வைத்திருந்த சபையோர்கள்,உன் பேச்சைக் கேட்டு, அந்த மதிப்பைக் குறைத்துக் கொண்டு விட்டாலும் விடலாம். உன்னுடைய தாழ்வுக்கு நீயே காரணமாகிறாய். உன் சகோதரன் ஒருவன் இருக்கிறான். அவனால் ஒரு வரிகூட ஒழுங்காக எழுத முடியாது. ஆனால் ஒரு சபையில் நின்று வாசாம கோசரமாகப் பேசுவான். அப்படிப் பட்டவன், ஏதோ ஒரு பலனை உத்தேசித்து, மிகுந்த சிரமத்தின் பேரில் புஸ்தகம் எழுதத் தொடங்கு வானாகில் அவன் வெற்றியடைவானா? சாதாரணமாக ஒரு நூலாசிரி யனுக்குக் கிடைக்கிற மதிப்பு அவனுக்குக் கிடைக்குமா? பேச்சிலே நீ தோல்வி யடையந்ததற்கும், எழுத்திலே உன் சகோதரன் தோல்வியடைந்ததற்கும் காரணம் என்ன? உங்களுடைய தகுதிக்கும்,திறமைக்கும் மிஞ்சின ஒரு காரியத்தில் நீங்கள் பிரவேசித்ததுதான். இப்படியேதான் ஒவ்வொரு விஷயத்திலும். முடக்கு வாதத்தினால் அவதிப்பட்ட ஒருவன், பரிசுக்காக ஆசைப்பட்டு ஓட்டப்பந்தயத்திலே போட்டி யிடுவானாகில், அவனுக்குக் கிடைப்பது என்ன? தோல்வி! அவமானம்! நோய்! ஆகவே, உன் தகுதியைத் தெரிந்திருப்பதுதான், உன் சக்தியை உணர்ந்திருப்பது தான், உன் திறமையை அறிந்திருப்பதுதான் உன்னை நீ அறிந்து கொண்டிருப்பதாகும். இப்படிச் சொல்வதனால் உன்னுடைய தகுதி,சக்தி,திறமை இவைகளுக்கு ஒரு வரம்பு உண்டு என்று முடிவு கட்டிவிடாதே. அப்படி முடிவு கட்டி விட்டாயேயானால்,உன் வாழ்க்கை மலராத மொட்டாகவே இருந்து கருகிவிடும். அறிவானது எவ்வளவு விரிவுடையதோ அதைப் போல் அந்த அறிவையுடைய மனித னுடைய சக்தியும் விரிவுடையது. அவனுக்கு அசாத்தியம் என்பது ஒன்றுமில்லை. ஆனால் அந்தச் சக்தியை அவன் நல்லதுக்காக உபயோகப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவனுடைய அறிவுக்கும் சக்திக்கும் மதிப்புண்டு. பிரதியொரு மனிதனுக்கும் இயற்கையாகவே சில சக்திகள் இருக்கின்றன. அவை அவனோடு பிறந்தவை. இந்தச் சக்திகளை அவன் வளர்க்க வேண்டும். மனிதன் வளர்ந்து கொண்டு வருகிறா னென்றால் அவன் தன்னிடத்திலுள்ள சக்திகளை வளர்த்துக் கொண்டு வருகிறான் என்றுதான் அர்த்தம். இந்தச் சக்திகளைச் சிலர் துரிதமாக வளர்க்கலாம்; வேறு சிலர் மெதுவாக வளர்க்கலாம். இந்த அளவில்தான் அறிவுள்ளவர்கள் என்றும், அறிவில்லாதவர் களென்றும் மனிதர்களுக் குள்ளே வித்தியாசம் உண்டே தவிர வேறு விதமான வித்தியாசம் இல்லை. மெதுவாக வளர்கிறவர்களைக் கண்டு வேகமாக வளர்கிறவர்கள் ஏளனம் செய்யக்கூடாது. அப்படியே வேகமாக வளர்கிறவர்களைக் கண்டு மெதுவாக வளர்கிறவர்கள் பொறாமைப் படக்கூடாது. அதற்கு மாறாக ஒருவரிடத்திலே மற்றொருவர் அநுதாபமும் பக்தியும் முறையே செலுத்த வேண்டும். மெதுவாக வளர்கிறவர்களுக்குத் துணையாயிருந்து அவர்களுடைய முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டும். அப்படியே வேகமாக வளர்கிறவர்களைப் பார்த்து அவர்களைப் பின்பற்ற வேண்டு மென்ற ஆவல் மெதுவாக வளர்கிறவர்களுக்கு இருக்க வேண்டும். இங்ஙனம் மற்றவர்களுக்காக பாடுபட வேண்டும். அந்தப் பாட்டிலேதான் நமது வளர்ச்சி இருக்கிறது. அப்படியே நம்மைக் காட்டிலும் முன்னே சென்றிருக்கிறவர்களை வேகமாகச் சென்று பிடிக்க வேண்டும். அப்படிப் பிடிப்பதிலேதான் நமது முன்னேற்றம் இருக் கிறது என்ற எண்ணங்கள் எவனுக்கு இருக்கிறதோ அவன்தான், தன்னை அறிந்தவன்; தன் கடமையை உணர்ந்தவன். உன் வளர்ச்சியை விரும்பும் பாரத மாதா. 3. தேச பக்தி மகனே! நீ தேச சேவையிலே இறங்குவதற்கு முன்னர், உன்னுடைய தகுதியை, உன்னுடைய திறமையை, உன்னுடைய மனப்போக்கை நன்றாகத் தெரிந்து கொண்டிருக்க வேண்டுமென்று ஏன் கூறுகிறேன் என்று கேட்பாயானால், பின்னாடி நீ, ஏன் இந்தத் துறையிலே இறங்கினோம் என்று பச்சாதாபப் படக்கூடாது என்பதற்காகத்தான். எண்ணித் துணிக கருமம்என்றல்லவோ நாயனார் கூறினார்? அப்படி நீ பச்சாதாபப்பட்டுக் கொண்டிருப்பா யானால், உன்னுடைய குடும்பத்தினரின் அநுதாபத்திற்குக்கூட நீ புறம்பானவனாகிவிடுவாய்; உன்னை உற்சாகப்படுத்தி முன்னே தள்ளிவிட்ட நண்பர்களெல்லோரும் கைகொட்டிச் சிரிப்பார்கள்; ஒரு சிலர்-நிரம்பக் குறைவான பேர்- உன் மீது இரக்கங் காட்டு வார்கள். யாருடைய ஏளனத்திற்கும் நீ ஆளாகக் கூடாது, யாருடைய இரக்கத்திற்கும் நீ பாத்திரமாயிருக்கக் கூடாது என்பதற்காகவே இப்படிப் பலமாக உனக்கு எச்சரிக்கை செய்கிறேன். தேச சேவை செய்ய வேண்டுமென்ற ஆவலை உன்னிடம் உண்டு பண்ணியது எது? உன்னிடத்திலேயுள்ள தேச பக்திதான். இந்தத் தேசபக்தி, மனிதராகப் பிறந்த எல்லாருக்கும் இருப்பது சகஜம். மனிதர்களுக்கு மட்டுமென்ன,பிராணி வர்க்கங்களுக்குக்கூட உண்டு. காட்டிலே வாழும் மிருகங்கள், எந்த இடத்திலே பிறந்து வளர்ந்தனவோ அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் செல்ல விரும்புவதில்லை. வீட்டிலே நாய், பூனைகள் வளர்கின்றன. குட்டியாக இருந்த காலத்திலிருந்து இவை ஓரிடத்திலேயே பழகி விடுகின்றன. பிறகு அந்த இடத்திலிருந்து மாற அவைகளுக்கு விருப்பமே இருப்பதில்லை. அந்த இடத்தைச் சேர்ந்த எஜமானர்கள் மாறினால் கூட அவை அந்த இடத்தை விட்டுப் போக விரும்புவ தில்லை. நீ ஒரு வீட்டிலே சில வருஷகாலம் குடியிருக்கிறாய் என்று வைத்துக்கொள். அந்த இடத்திலே உனக்கு ஒரு பற்றுதல் ஏற்பட்டு விடுகிறது. உன்னால் தாங்க முடியாத அசௌகரியங்கள் இருந்தா லொழிய அந்த இடத்தைவிட்டுப் பெயர நீ விரும்புவதில்லை. வாடகைக்கு இருக்கிற வீட்டிலேயே உனக்கு இவ்வளவு பற்றுதல் இருக்குமானால், சொந்த வீட்டிலே உனக்கு எவ்வளவு பற்றுதல் இருக்கவேண்டும்? சொந்த வீட்டின் விரிவுதானே சொந்த நாடு? எனவே நாட்டுப்பற்று என்பது, தேசாபிமானம் என்பது, உன்னிடத்திலே மட்டும் இருக்கிற ஒரு விசேஷமான பண்பு என நினைத்து அதிலே ஒரு பெருமை கொள்ளாதே. பெற்ற தாயி னிடத்திலே, பிறந்த நாட்டினிடத்திலே பற்றுக் கொண்டிருப்பது, பக்தி பூண்டொழுகுவது சகஜமே தவிர, அப்படியில்லாமலிருப்பது தான் அசகஜம்; மனித சுபாவத்திற்கு விரோதம்; தருமத்திற்கும் நியாயத்திற்கும் விரோதம். சிலர் பொதுக்கூட்டங்களில் பேசுகிறபோது நான் ஒரு தேச பக்தன்;நான் ஒரு தியாகி என்று மார்தட்டிப் பேசுவதை நீ பார்த்தும் கேட்டும் இருக்கலாம். இன்னுஞ் சிலர் கூட்டத்தில் பேசப் போகிறவரை அறிமுகப்படுத்தி வைக்கிறபோது இவர் ஒரு தேசப் பக்தர்;தியாகி என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள். k‰wt®fËl¤âny ïšyhj g©ò ït®fËl¤âny ïU¥g jhf tšynth V‰gL»wJ ïjdhš?இந்தப் பண்பு இல்லாதவர் கள் கூட இருக்க முடியுமா? அப்படி இல்லாமலிருந்தால் அவர்கள் மனிதர்களா? நான் என் தாயாரிடத்தில் ஆசையாயிருக்கிறேன் என்று ஒருவன் சொன்னால் அதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? தாயாரிடத்தில் ஆசையில்லாத வனாயிருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டும்;அவனும் நாமும் சேர்ந்து வெட்கப்பட வேண்டும். சரி; தேச பக்தியென்றால் என்ன? உன் தேகத்தின் மீது உனக்கு ஒருவித அபிமானம் ஏற்பட்டிருக்கிறதல்லவா? உன் முன்னேற்றத் திலே உனக்கு ஒருவித சிரத்தை இருக்கிறதல்லவா? உன்னுடைய பெரியோர் களிடத்தில் உனக்கு ஒருவித பக்தி உண்டல்லவா? இந்த அபிமானம், சிரத்தை, பக்தி ஆகிய அனைத்தையும் ஒன்று சேர்த்து அதனைப் பன் மடங்கு பெருக்குவாயானால் அந்தப் பெருக்கல்தான் தேசாபிமானம்; தேசத்தின் மீதுள்ள சிரத்தை; தேசபக்தி. உன்னிடத் திலே நான் என்ற ஒரு தன்மை அல்லது உணர்ச்சி இருக்கிறத ல்லவா அதனுடைய விரிவுதான், பெருக்கம்தான், தேசபக்தி. இதனை ஸ்பஷ்டமாகச் சொல்ல வேண்டு மானால் பல அகங்காரங்கள் சேர்ந்ததுதான் ஒரு தேசபக்தி; பல தேசங்களின் மீது கொண்டுள்ள பக்திகளின் சேர்க்கைதான் உலக பக்தி. இந்த உலக பக்தியானது, ஜாதி, மத, நிற வேற்றுமைகள் எதனையும் பாராதது; உலக மக்கள் அனைவரும் ஒரு குடும்பத்துப் பிள்ளைகள் என்று கருதுவது. உலகத்தின் எந்த மூலை முடுக்கிலாவது ஒரு துர்ச்சம்பவம் நிகழு மானால், அதைக்கேட்டு உலக பக்தி நிறைந்தவர்களுடைய ஆத்மா துடிதுடிக்கும்; அந்தத் துர்ச்சம்பவத்திற்குப் பரிகாரந்தேட முயற்சி செய்யும். இப்படி உலக பக்தி என்ற நிலையில் நின்று பார்க்கிற போது, தேச பக்தியென்பது தாழ்ந்த படியிலிருப்பதாகவே தோன்றும். இது வாஸ்த வந்தான். ஆனால் கீழ்ப்படியிலிருந்துதானே மேல்படிக்குச் செல்ல வேண்டும்? பெற்ற நாட்டின்மீது பக்தியில்லாதவன் எப்படி பரந்த உலகின்மீது பக்தி செலுத்த முடியும்? தவிர, எல்லா ஸ்திரீகளையும் தன் தாய்போல பாவிக்க வேண்டு மென்று சொன்னால், தாய்க்கு ஒரு விசேஷ ஸ்தானம் கொடுத்திருக் கிறோமென்பது ஏற்படவில்லையா? அதைப்போல் தனது சொந்த நாட்டைப் போல் எல்லா நாடுகளையும் நோக்க வேண்டுமென்று சொன்னால் தன் சொந்த நாட்டின் மீது அதிகமான கவனம் செலுத்த வேண்டும், தன் நாட்டின் நலத்திற்காக, மற்ற நாடுகளின் நலத்தை நாடவேண்டுமென்பதே அர்த்தம். ஆகவே தேச பக்தி யென்பது, உலக பக்திக்கு, உலக சகோதரத்துவத்திற்கு எந்த விதத்தி லும் முரண்பட்டதல்ல. முந்தியதன் தொடர்ச்சியே பிந்தியது. சுயநலம் கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் சுயநல வித்திலிருந்துதான் பர நல விருட்சம் வளர்கிறது என்ற ரகசியம் உனக்குத் தெரியுமா, சுயநலமில்லாவிட்டால் பர நலம் ஏது? நான் இல்லாவிட்டால் தான்ஏது? நான்கள் பல சேர்ந்ததுதான் `தான். அதுபோல சுயாபிமானங்கள் பல சேர்ந்ததுதான் சுய தேசாபிமானம்; பல சுய தேசாபிமானங்கள் சேர்ந்ததுதான் உலகாபிமானம். ஒவ்வொன்றும் ஒவ்வொருநிலையில் தேவை தான். ஒன்றுக்கு மற்றொன்று முரண்பட்டதன்று. ஆனால் மேனாட்டாரிற் பலர் இப்படிக் கருதவில்லை. தங்கள் நாட்டின் மீது கொண்டுள்ள பற்று, மற்ற நாடுகளின் மீதுள்ள துவேஷத்தினின்று வளர்ந்ததாயிருக்க வேண்டுமென்று எண்ணு கிறார்கள். இந்தியர்களுடைய தேசபக்திக்கு, சத்துருவே கிடையாது. சேர வாரும் செகத்தீரே என்று உலகத்தினரை அறைகூவி அழைக் கிறது அது. ஆனால் மேனாட்டாரின் தேச பக்தி, சொந்த நாட்டோடு வரம்பு கட்டிக்கொள்கிறது; அதற்கு அப்பால் விரிந்த உலகம் இருக்கிறதென்று அது கருதுவதேயில்லை. தேச பக்தியின் லட்சணங்கள் என்ன வென்றால், முதலாவது, அது தேசத்திலுள்ள எல்லாவற்றின் மீதும் ஒரே மாதிரியான அபிமானம் கொண்டது. ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரையில், சென்ற காலம் முதல் வருங்காலம் வரையில் எல்லாவற்றிலும் அது பெருமையைக் காண்கிறது. எனது நாட்டிலே வளர்ந்த செடி இது, எனது நாட்டு மண்ணிலிருந்து தோண்டியெடுத்த இரும்பு இது, எனது நாட்டுச் சங்கீதம் இது, எனது நாட்டின் பண்பாட்டுக்குப் பிரதிநிதியாயிருக்கிற மகான் இவர் என்று, தனது நாட்டின் ஒவ்வொன்றையும் அபிமானத்தோடு, திருப்தியோடு, பெருமை யோடு நோக்குகிறது. இரண்டாவது, தேச பக்தியானது, நாட்டு மக்களை ஒன்று படுத்தியே பார்க்கிறது; வேற்றுமைப்படுத்திக் காண்பதில்லை. உண்மையான தேச பக்தன், தனது நாட்டு மக்களில் யாரையும், இன்னஜாதியார், இன்ன மதத்தினர், இன்ன குலத்தினர் என்று வித்தியாசப்படுத்திப் பேசமாட்டான்; பார்க்கவும் மாட்டான். `இவர் என்னுடைய நாட்டார்; என் சகோதரர் என்றே சொல்லுவான். மூன்றாவது, தேசபக்தியென்பது உணர்ச்சி மயமானது மட்டுமன்று; செயல் திறனும் உடையது. அது மின்னல்போல் தோன்றி மறைந்து போகிற ஒளியல்ல; அமரஜோதி. அது ஓய்விலே அமைதியைக் காண்ப தில்லை; உழைப்பிலே இன்பத்தை நுகர்கிறது. உண்மையான தேசபக்தன், தேசத்தை முன்னணியிலே நிறுத்தித் தான் பின்னணியிலே நிற்கிறான்; தேசநலனுக்காக, தன்னை அழித்துக் கொள்வது அவசியமாயிருந்தால் அதற்கும் அவன் பின் வாங்குவதில்லை; புன்சிரிப்போடு தூக்கு மேடையில் ஏறி நிற்கிறான்; பீரங்கி முன்னர் மார்பைத் திறந்து காட்டுகிறான்; எதற்கும் அவன் பின்வாங்குவதில்லை. அவன் அஞ்சாமையின் வடிவம்; உண்மையின் உரைகல்; தர்மத்தின் பிரகாசம். இப்படிப்பட்ட ஒரு தேசபக்தனாக நீ இருக்கவேண்டும். அப்பொழுதுதான் நீ செய்கிற சேவை உனக்குச் சந்தோஷத்தை அளிக்கக் கூடியதாகவும், மற்றவர்களுக்கு நன்மையைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும். உன் வளர்ச்சியை வாழ்வாகவுடைய, பாரத மாதா. 4. முயற்சியும் பயிற்சியும் இளைஞனே! தேச சேவையிலே இறங்குவதற்கு முன்னர் நீ பல துறைகளில் பயிற்சி பெற வேண்டும்; அந்தப் பயிற்சியும் உன் சொந்த முயற்சியினால் பெற வேண்டும். பள்ளிக்கூடத்தோடு உன் பயிற்சி முடிந்து விட்டதாக நினையாதே. உண்மையான பயிற்சி, பள்ளிக் கூடத்தைவிட்ட பிறகுதான் ஆரம்பிக்கிறது. தற்போது நமது நாட்டில் பள்ளிக்கூடங்களில் போதிக்கப்படும் கல்விக்கும் உலக வாழ்க்கைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை யென்பது, உனக்கு, பள்ளிக்கூடத்தை விட்ட பிறகுதான், உலக வாழ்க்கையிலே பிரவேசித்த பிறகுதான் தெரியும். சாதாரணமான உலக வாழ்க் கைக்கே, மனிதத்தன்மை என்கிற ஏணியின் அடிப்படியிலே இருக்கப்பட்டவர்கள் கூட நடத்திவிடக்கூடிய உலக வாழ்க்கைக்கே இந்தக் காலத்துப் பள்ளிக்கூடப்படிப்பு உதவவில்லை யென்றால், மகத்தான மனோ பலமும், கூர்மையான அறிவும் தேவையா யிருக்கிற தேச சேவைக்கு எங்கே உதவப் போகிறது? ஆகையால் உன் சுய முயற்சியைக் கொண்டு அநேக துறைகளில் பயிற்சி பெற வேண்டியது அவசியமாகும். சில இளைஞர்கள், இரண்டொரு நூல்களை மேலெழுந்த வாரியாகப் புரட்டிப் பார்க்கத் தெரிந்து விட்டால் அல்லது நான்கு பேர் மத்தியிலே நின்று கொண்டு சொற்களை வரிசையாக அடுக்கத் தெரிந்துவிட்டால், உற்சாகங்கொண்டு தேச சேவை யென்ற பெயரால் சில காரியங்களைச் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள்; புதிய சங்கங்களைத் தோற்றுவித்து அவற்றின் நிருவாகப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட வர்களால் நீடித்த காலம் தொண்டு செய்ய முடியாது; சாசுவதமான பலனை அளிக்கக்கூடிய மாதிரியான காரியத்தையும் செய்ய முடியாது. எவ்வளவு உற்சாகத் துடன் தேசசேவையிலே பிரவேசித்தார்களோ அவ்வளவு சோர்வுடன் ஒதுங்கி விடுவார்கள். சீக்கிரத்தில் இவர்களுக்குச் சோர்வு ஏற்படு வதன் காரணம் என்னவென்றால், இவர்களுடைய அறிவும் மனமும் போதிய பண்பாடடையாமைதான். இவர்களுக்கு எந்தத் துறை யிலும் போதிய பயிற்சி கிடையாது. சரியான அஸ்திவாரமில்லாத கட்டிடம் போன்றவர்கள் இவர்கள். இவர்களிலே ஒருவனாக நீ இருக்கக் கூடாதென்பதற்காகவே இவ்வளவு பீடிகை போட்டுக் கொண்டு சொல்கிறேன். தேச சேவையிலே இறங்க வேண்டுமென்று நீ எப்பொழுது சங்கற்பித்துக் கொண்டு விட்டாயோ அது முதற்கொண்டு குறைந்தது ஐந்து வருஷகாலம், உன்னுடைய பயிற்சிக் காலமாயிருக்க வேண்டும். அதாவது ஓர் உத்தியோகத்தில் சேர்ந்து கொண்டால் சிறிது காலம் உமேதவாரியாக இருக்க வேண்டுமென்று சொல்கி றார்களல்லவா, அதைப்போல் இந்த ஐந்து வருஷம் உன்னுடைய உமேதவாரிக்காலம். இந்தக் காலத்தில் நீ ஒரு தேசத்தொண்டனல்ல; தேசத் தொண்டனா வதற்கு உன்னைத் தகுதிப்படுத்திக் கொள்கிறாய். ஆகையால் இந்தக் காலத்தில் தேசத் தொண்டனென்று சொல்லிக் கொண்டு நீ பகிரங்கமாக வரக்கூடாது; எந்த ஒரு ஸ்தாபனத்திலும் பொறுப்பான பதவியை வகிக்கக் கூடாது. இந்தக் காலத்தில் உன்னை, நீயே எல்லாவித பரிசோதனை களுக்கும் உட்படுத்திக் கொள்ள வேண்டும், உன் மனச்சாட்சிதான் உன்னுடைய பரீட்சாதிகாரி. உன்னுடைய மனச்சாட்சி, நீ தேர்ச்சியடைந்து விட்டதாகச் சொல்லி விட்டால் அப்பொழுது நீ பகிரங்கமாக வரலாம். இந்த ஐந்து வருஷ காலமும், நீ, உள்ளே யிருந்து வெளியே பார்க்கவேண்டும்; தனிமையிலிருந்து சமுதாயத்தை நோக்க வேண்டும்; அமைதியாயிருந்து உலக ஆரவாரத்தைக் காணவேண்டும். இப்படி நீ பயிற்சி பெறுவாயானால், பின்னர் நீ பகிரங்கத்திற்கு வருகிறபோது, உன்னால் வெளியே யிருந்து உள்ளே பார்க்க முடியும்; சமுதாயத்தின் மத்தியிலே இருந்துகொண்டு உன்னுடைய தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்; ஆரவாரத்தின் மத்தியிலே நீ அமைதியா யிருக்கலாம். இந்த ஐந்து வருஷ காலத்தில் நீ படிக்க வேண்டும்; படித்ததைச் சிந்திக்க வேண்டும்; ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியாக எடுத்துக் கொண்டு பல கோணங்களிலிருந்து அதனை ஆராய்ச்சி செய்ய வேண்டும்; எந்த ஒரு பிரச்சினையைப் பற்றியும் முடிவான ஓர் அபிப்பிராயம் கொண்டுவிடக்கூடாது; யாருடைய கட்சியையும் ஆதரித்தோ மறுத்தோ பேசக்கூடாது; எல்லா விஷயங் களுக்கும், எல்லாக் கருத்துக்களுக்கும் உன் மனம் திறந்திருக்க வேண்டும். ஆனால் உன் பார்வை மட்டும் தேசீயப் பார்வையா யிருக்க வேண்டும்; உன் லட்சியம் தேச சேவையா யிருக்க வேண்டும். முதலாவது, இந்த ஐந்து வருஷ காலத்தில், உன் தேகத்தை உன்னுடைய ஏவலாளாக இருக்கப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். தேகம் இடங்கொடுக்கவில்லை யென்ற வாக்கியம் உன் வாயிலிருந்து வரவே கூடாது. வெயிலுக்கும் மழைக்கும், காற்றுக்கும் குளிருக்கும், பசிக்கும் நித்திரைப் பங்கத்துக்கும் தாக்குப் பிடிக்கக் கூடிய மாதிரி உன் தேகத்தைச் சரிப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். நோயாகப் படுப்பது அவமானம் என்ற எண்ணம் உன்னைவிட்டு அகலவே கூடாது. எந்த இடத்திலே எந்தவிதமான உணவு அகப்பட்டாலும் அதை மனமுவந்து உட்கொள்ளப் பழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும். என்னுடைய தூக்க வேளை இது, சாப்பாட்டுச் சமயம் இது, ஓய்வாயிருக்கிற நேரமிது என்று இப்படி எல்லாம் ஒரு கண்டிப்புச் செய்து கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விடுவாயானால், அது பின்னர், உன்னுடைய தேசத் தொண்டுக்குப் பெரிய இடையூறா யிருக்கும்; எளிதிலே நோய்வாய்ப்பட்டு விடுவாய்; வைத்தியர்களுடைய தயவை அடிக்கடி எதிர்பார்க்க வேண்டியிருக்கும். தேசத்தொண்டு என்பது குளிர்ந்த பூங்காவனமல்ல; யுத்த மைதானம். அதில் பிரவேசிக்கிறவன் பகலில் மரத்தடியில் இருப்ப தற்கும், இரவில் கட்டாந்தரையில் படுப்பதற்கும் தயாராயிருக்க வேண்டும்; குடிசையிலே தலை குனிந்து நுழைவதற்கும், அங்குக் கையேந்திக் கஞ்சி குடிப்பதற்கும் சித்தமாயிருக்க வேண்டும்; எவ்வளவு தூரமானாலும் நடந்து செல்வதற்கு முன்னிற்க வேண்டும். இவையாவும் உடல் வலிமை இன்றேல் சாத்தியமாகுமா? ஆகையால் இந்த ஐந்து வருஷ காலத்தில் உன் உடலை வளர்த்துக்கொள்; அதை உன் வசமாக்கிக்கொள். அடுத்தது மனம். மனத்தை குரங்குக்கு ஒப்பிட்டுச் சொல் வார்கள் நமது பெரியோர்கள். அந்த மனக்குரங்கை, முடிந்தமட்டில் ஒரு நிலைக்குக் கொண்டு வரவேண்டும். அப்படிக் கொண்டு வருகிற விஷயத்தில் நீ ஒரு சிறிதளவு வெற்றி பெற்றால்கூட, சுக துக்கங்கள் உன்னை அதிகமாகப் பாதிக்கமாட்டா; பூஷணைகளும் தூஷணை களும் உன்னை நிலைபிறழச் செய்யமாட்டா; பூமாரி சொரிந்தும் முகஸ்துதி செய்தும் யாரும் உன்னை வசியப்படுத்திவிட முடியாது; அப்படியே கல்மாரி பொழிந்தும், அச்சுறுத்தியும் யாரும் உன்னைக் கட்சி மாற்ற முடியாது; ஆளும் வர்க்கத்தினர் அலட்சியமாக வீசி எறியும் பட்டம் பதவிகள் உன்னை மயக்கமாட்டா. ஆகையால் இந்த ஐந்து வருஷ காலத்தில் உன் மனதை எவ்வளவுக்குப் பக்குவப்படுத்திக் கொள்ளுகிறாயோ அவ்வளவுக்கு உன் தேச சேவை ஒழுங்காக நடைபெறும். இந்த ஐந்து வருஷ காலத்தில் நீ நிறையப் படிக்க வேண்டும். முதலாவது, உன்னுடைய தாய்மொழியிலே உனக்குப் புலமை நிரம்பி யிருக்க வேண்டும். தாய் மொழியில் பயிற்சியில்லாதவன் தாய் நாட்டுக்குச் சேவை செய்ய முடியாது. மொழியின்றி நாடு இல்லை. மொழிப் பற்றில்லாதவன் நாட்டுப் பற்றில்லாதவன். உன் தாயாரிடத்தில் தான் நீ மனம் விட்டுப் பேச முடிகிறது. அதுபோல் உன் தாய்மொழியின் மூலம்தான் உன் சகோதரர்களுக்கு உன் மனத்திலுள்ளதைத் தெளிவாக எடுத்துச் சொல்லமுடியும். எந்த நாட்டிலும், தேசத்தின் சுதந்திரத்திற்காக உழைத்த அறிஞர்கள், முதலில் பாஷையின் சுதந்திரத்திற்காகவே பாடு பட்டார்கள். ஆகவே, பள்ளிக்கூடத்தில் பெற்ற தாய்மொழிப் பயிற்சியோடு திருப்தி யடைந்து விடாமல், மேலும் மேலும் அதனுடைய சொல்லழகிலும் பொருளாழத்திலும் ஈடுபட்டு உன் அறிவை அபிவிருத்தி செய்து கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் அதன் அபிவிருத்திக்கான வழிகளில் பாடுபடுவதற்கு உன்னால் முடியும். தாய்மொழிக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் பொது மொழியான ஹிந்தியை நீ நன்கு பயில வேண்டும். ஹிந்தி, அழகும் கம்பீரமும் நிறைந்த பாஷை. நமது இருதயத்தின் நாசூக்கான பாகங்களைத் தொட்டுத் தட்டிவிடக் கூடிய சக்தி அதற்கு இருக்கிறது. தவிர, ஹிந்தி பாஷையில் உனக்குப் போதுமான பயிற்சி இருக்கும் பட்சத்தில்,இந்தியாவின் எந்த மூலைமுடுக்குக்கும் நீ தாராளமாகச் செல்ல முடியும். காஞ்சியிலே பிறந்தவனும் காசியிலே பிறந்தவனும் சகோதரர்களென்று கருதிக் கொள்வதற்கு ஹிந்தி மொழி பெரிதும் உதவியாயிருக்கிறது. மற்றும், இந்தியாவில் மாகாணத்துக்கு மாகாணம் காணப்படுகிற வேற்றுமை களைக் களைந்தெறிவதும், இந்தியா ஒரு கண்டமல்ல, ஒரே நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட, ஒரே லட்சித்தை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிற ஒரு ஜாதியினர் வசிக்கிற நாடு என்ற உணர்ச்சியை உண்டு பண்ணுவதும் ஹிந்தி மொழியேயாகும். ஹிந்திக்கு அடுத்தபடியாக வடமொழியில் நீ பயிற்சி பெறவேண்டும். இதனைச் செத்துப்போன பாஷையென்று அலட்சியப் படுத்தாதே. இந்தியாவிலே வழங்கப்படுகின்ற எந்த மொழியை எடுத்துக் கொண்டு நீ ஆராய்ச்சி செய்து பார்த்தாலும், அதற்கு வேர்போல இருக்கிறது இந்த வட மொழி. மரத்தினுடைய வேர் கண்ணுக்குத் தென்படு வதில்லை. இதனால் மரத்திற்கு வேரே இல்லையென்று சொல்லிவிட முடியுமா? அதுபோல் வடமொழி யானது பேச்சு வழக்கிலே இல்லாவிட்டாலும், எல்லா மொழி களுக்கும் ஊற்றுப் போல இருக்கிறது. ஊற்றிலிருந்து புறப்பட்டுக் கால்வாய் வழியாக ஓடிவருகிற நீரைப் பருகுவதைக் காட்டிலும் ஊற்று நீரைப் பருகுவது விசேஷ மல்லவா?கால்வாய் நீரை உன் தேவைக்கு உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்; உன்னுடைய அன்றாட வாழ்க்கைப் பயிரை வளம் படுத்திக்கொள்ள அந்த நீரைப் பாய்ச்சிக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் அதனோடு இந்தக் கால்வாயின் மூலத்தையும் நீ தெரிந்து கொண்டால் அது விசேஷமல்லவா? மற்றும், பாரத நாட்டின் புராதனம் என்கிற ஆழமான சுரங்கத்திலே நீ தைரியமாக இறங்கிச் செல்வதற்கு, வடமொழி அறிவானது பிரகாசமான விளக்குமாதிரி. இந்தியாவின் சரித்திரம், கலாச்சாரம், தத்துவ ஞானம், அரசநீதி முதலியவைகளை நீ தெளிவாகப் பார்க்க வேண்டுமானால் உனக்கு ஸம்ஸ்கிருத பாஷா ஞானம் அவசியம். தவிர, இந்த ஞானம் இருக்குமாகில், உன் தாய் நாட்டின் புராதனத்தைப் பற்றி நீ அலட்சியமாகப் பேசமாட்டாய்; அதிலே உனக்கு ஒருவித பக்தி ஏற்படும்; இந்தியாவைப் பற்றி மேனாட்டுச் சரித்திராசிரியர்கள் எழுதி வைத்துப் போயிருக்கிற உண்மைபோல் காணப்படும் பொய்களில் உனக்கு அவநம்பிக்கை ஏற்படும்; இந்த அவநம்பிக்கை யானது, உனது தாய்த் திரு நாட்டின் எதிர்காலத்தின் மீது உனக்குள்ள நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஆதலின் உனது நாட்டு நலனை உத்தேசித்து நீ வடமொழி யில் பயிற்சி பெறுதல் அவசியம். வடமொழிக்கு அடுத்தது ஆங்கிலம், ஆங்கில பாஷை தற்போது நம்மை ஆள்வோருடைய பாஷையாக இருக்கிறது. ஆள்வோருடைய பிடியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமானால், அந்த ஆள்வோருடைய பாஷையைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டியது அவசியம். ஆனால் அந்த பாஷைக்கு நீ அடிமையாகி விடக் கூடாது; அதில் பேசுவதுதான் கௌரவம் என்று கருதக் கூடாது; தற்போது ஆளும் ஸ்தானத்தில் இருக்கிறவர்களுடைய மதிப்பைப் பெறவேண்டு மென்பதற்காக அதில் நீ புலமை பெறக் கூடாது. அறிவு அபிவிருத்திக்காக எந்த பாஷையையும் நாம் பயில வேண்டியது தான்; புலமை பெற வேண்டியதுதான். ஆனால் தாய்ப் பாஷையைப் புறக்கணித்துவிட்டு அந்நிய பாஷையைப் போற்று வதையும், அதில் புலமைபெற்று அந்நியருடைய மதிப்பைப் பெற வேண்டு மென்று விரும்புவதையுமே நான் விரும்பவில்லை. ஆங்கில பாஷையானது தற்போது உலக வியாபார பாஷை யாக இருக்கிறது; உலகத்தின் எந்தப் பாகத்திற்கும் நீ தைரியமாகச் செல்ல வேண்டுமானால், ஆங்கில பாஷாஞானம் உனக்கு அவசிய மாகும். இன்னும், உன்னுடைய அரசியல் வேலைகளுக்கு ஆங்கில அறிவு இன்றியமையாதது. அரசியற் சம்பந்தமான நூல்களெல்லாம் ஆங்கிலத்திலேதான் இருக்கின்றனவென்று நான் சொல்லவில்லை; எல்லாப் பாஷைகளிலுந்தான் இருக்கின்றன.ஆனால், உலகத்தி லுள்ள பல நாடுகளின் அரசியல் அமைப்புகள் எப்படித் தோன்றின, எப்படி வளர்ச்சி யடைந்தன, இப்பொழுது எந்த ஸ்திதியிலே இருக்கின்றன, இவைகளி லிருந்து, நம்முடைய சுதந்திர அரசியலை அமைத்துக் கொள்வதற்கு அனுகூலமாக நாம் ஏதேனும் பாடங்கள் கற்றுக் கொள்ள முடியுமா என்பவைகளுக்காக, நீ ஆங்கில மொழியில் நல்ல பயிற்சி பெறுவது அவசியமாகும். இதிலும், பள்ளிக்கூடத்திலே பயின்றதோடு திருப்தி யடைந்து விடாதே. அங்கே நீ கற்றுக் கொண்டது சுண்டைக்காய் பிரமாண மென்றால், நீ கற்றுக் கொள்ள வேண்டியது தேங்காய்ப் பிரமாணம் என்று குறிவைத்துக் கொண்டு உன்னுடைய ஆங்கில அறிவை அபிவிருத்தி செய்து கொள். இங்ஙனம் தாய் மொழி, ஹிந்தி, வடமொழி, ஆங்கிலம் ஆகிய வற்றோடு, முடிந்தால், இந்தியாவில் பேசப்படும் வேறு சில பாஷை களிலும் நீ பயிற்சி பெறுதல் நல்லது.இதனால் பிற மொழி யினருடைய மனப்பான்மை, அபிலாஷை முதலியனவற்றை நீ நன்கு உணரமுடியும்; உன்னுடைய தேச சேவைக்கு அவர்களுடைய ஆதரவு உனக்குக் கிடைக்கும். இப்படிப் பொதுவாக பாஷா ஞானம் பெறுவதோடுகூட பூகோளம், சரித்திரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய துறை களில் நீ விசேஷ பயிற்சி பெற வேண்டும். உன்னுடைய கிராமம், உன்னுடைய ஜில்லா, உன்னுடைய மாகாணம், உன்னுடைய நாடு, கடைசியில் உலகம், இப்படி வரிசைக் கிரமத்தில் ஒவ்வொன்றி னுடைய பூகோள அமைப்பு, சரித்திரம், பொருளாதாரம், அரசியல் ஆகியவைகளைப் பற்றி நீ நன்கு ஆராய்ச்சி செய்து தெளிவான அபிப்பிராயம் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உனது நாட்டினுடைய உரிமைக்காக நீ போராட முடியும்; உனது நாட்டு மக்களுக்கு, அவர்களுடைய கடமையை உணர்த்த முடியும். துரதிருஷ்ட வசமாக தற்காலத்துப் பள்ளிக்கூடப் படிப் பானது, உன்னுடைய சொந்த நாட்டைப்பற்றி உனக்குச் சரியானபடி தெரிய விடாமல் செய்துவிட்டது. அதைப்பற்றிக் கேவலமாக எண்ணும்படியாகக் கூட உன்னைச் செய்து விட்டது. உலகத்தின் எந்தப் பாகத்திலும் காண முடியாத அற்புதம் இது. ஆகையால் உன் தாய் நாட்டின் பூகோள அமைப்பு, சரித்திரம், வரலாறு, பொருளாதார வாழ்க்கை முதலியவைகளை இந்தியக் கண்கொண்டு பார்க்க வேண்டும். மேலே சொன்ன ஐந்து வருஷ காலத்தில் நீ செய்ய வேண்டிய முக்கியமான வேலை இது. இந்தச் சந்தர்ப்பத்தில் உனக்கு ஓர் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். எந்தக் காரணத்தை முன்னிட்டும் உன்னுடைய தாய் நாட்டின் பழைமையைப் பற்றிக் கேவலமாக எண்ணாதே. நமது முன்னோர் களுடைய பழக்கவழக்கங்களெல்லாம் வெறும் குருட்டு நம்பிக்கை களென்று லேசாக ஒதுக்கித் தள்ளிவிடாதே. நமது மூதாதையர்கள் வெறுங் கற்பனை உலகத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தார்களென்றும், லௌகிக வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்கு ஒன்றுமே தெரியா தென்றும் ஏளனம் செய்யாதே. அறிவு என்பது எக்காலத்திற்கும் எல்லாருக்கும் பொதுவானது. நிகழ்காலத்திற்கு மட்டுந்தான் அது உரித்தானது என்று கருதி உன் சுயமதிப்பைக் கெடுத்துக் கொள்ளாதே. இவைகளுக்கு மாறாக உனது முன்னோர் களின் நாகரிகப் பண்புகளையும், அவற்றுக்கு அடிப்படையாயிருந்த தத்துவங்களையும் செவ்வனே தெரிந்து கொண்டு, அவைகளை நிகழ்கால சமுதாய அமைப்பிலே நீ புகுத்த வேண்டும். அப்பொழுது தான் தனி மனிதனுடைய வாழ்க்கையும், சமுதாய வாழ்க்கையும் ஒன்றுபட்டு சுதந்திரப் பாதையில் செல்லும். தேச சேவையென்பது, குறிப்பிட்ட ஒரு துறையைப் பற்றின சேவையை மட்டும் குறிக்காது. கிராமங்களிலே சென்று, கல்வி வாசனையை நுகராத ஏழைப் பிள்ளைகளுக்குக் கல்வியை இலவச மாகப் போதிக்கிறாயா. அல்லது கிராம வாசிகளுக்கு இலவசமாக சிகிச்சை செய்கிறாயா,அல்லது சட்டசபையிலே சென்று ஜனங் களுடைய குறை களை எடுத்துச் சொல்கிறாயா, அல்லது பேச் சுரிமை, எழுத்துரிமை முதலிய ஜீவாதாரமான உரிமைகைளைப் பெறுவதற்காகப் போராடி, அதன் விளைவாகச் சிறை செல்கிறாயா, எல்லாம் தேச சேவைதான்; எல்லாம் அரசியல் தொண்டுதான். அரசியல் என்ற முளையைச் சுற்றித் தான் எல்லாம் சுழல்கின்றன. அரசியல் ஒழுங்காக இருந்தால், ஜனங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் சமுதாய வாழ்க்கையும் ஒழுங்காக நடைபெறுகின்றன. ஆகையால் அரசியல் தொண்டு வேறே, சமுதாயத்தொண்டு வேறே என்று பிரிவினை செய்வதில் அர்த்தமில்லை. ஆனால், குறிப்பிட்ட ஒரு காரியத்தைத்தான் உன்னால் திறமை யாகச் செய்ய முடியும். ஏதோ ஒரு துறையில்தான் உனக்கு இயற்கை யாகவே ஓர் ஆர்வம், அதை நன்றாக நடத்திக்காட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையும் இருக்கும். அந்தத் துறையிலே நீ விசேஷ கவனஞ் செலுத்தி, அதிலேயே உன்னுடைய வாழ்நாள் முழுவதையும் செல வழிப்பது நல்லது. அந்த வகையில் உன்னுடைய முயற்சியையும் பயிற்சியையும் திருப்பி விடுவது நல்லது. உதாரண மாக ஏழை எளியவர் களுக்கு இலவசமாகக் கல்வி புகட்டுவதில் உனக்கு இயற்கையான ஒரு சிரத்தை இருக்கிறதென்று வைத்துக் கொள். அது விஷயமாக, மேலே சொன்ன ஐந்து வருஷ காலத்தில் பெரும்பாகத்தைச் செலவிட்டு அதில் விசேஷ திறமை பெறுவது நல்லதில்லையா? அப்பொழுதானே நீ எடுத்த காரியத்தை ஒழுங் காகச் செய்து கொண்டு போக முடியும்? கடைசியாக ஒரு விஷயம். இந்த ஐந்து வருஷ காலத்தில் நீ படித்ததை, ஆராய்ச்சி செய்ததை, எழுத்திலே கொண்டு வரவும், பிரசங்க ரூபமாகச் செய்யவும் நீ பழக்கிக் கொள்ள வேண்டும். முதலில் தனிமையிலிருந்து இவ்விரண்டையும் அப்பியாசம் செய்வது நல்லது. நீ எழுதுகிற எழுத்துக்களை கட்டுரை வடிமாக்கி உடனே பத்திரிக்கைகளில் வெளிவரவேண்டுமென்றும், நீ பேசுகிற பேச்சைக் கேட்டுப் பலர் சந்தோஷப்பட வேண்டுமென்றும் இந்த ஐந்து வருஷ காலம் வரை எண்ணாதே. நீயே எழுதி எழுதி, பேசிப்பேசிப் பழகு. பகிரங்கத்திற்கு வரவேண்டு மென்ற எண்ணம் உன்னைவிட்டு அடியோடு அகன்றிருக் கட்டும். அப்பொழுது பலமான அஸ்திவாரத்தின்மீது உன்னுடைய தேச சேவையென்கிற கட்டடம் எழும்பும். உன்னுடைய முயற்சியையும் பயிற்சியையும் ஆசீர்வதிக்கும், பாரத மாதா. 5. ஸ்தாபனத்தின் அவசியம் மகனே! உன்னுடைய, ஐந்து வருஷ காலப்பயிற்சி முடிந்துவிட்டது. பயிற்சியின் முடிவு சேவையின் ஆரம்பம். ஆதலின் இனியே நீ தேச சேவகன் என்ற பெயருக்குத் தகுதியுடையவனாகிறாய். இனி உனக்கு ஓய்வு கிடையாது; பொறுப்பு அதிகம். நீ செய்கின்ற ஒவ்வொரு காரியத்தையும் இனி எல்லோரும் கூர்ந்து கவனிப் பார்கள். குறை காண்பதற்காக வல்ல; தாங்களும் பின்பற்ற வேண்டு மென்பதற்காக, நீ சொல்கிற உபதேசங்களைக் காட்டிலும் நீ செய்கிற காரியந்தான் மற்றவர்களுக்கு முக்கியம். ஆதலின் இனி ஒழுங்கே உன் வடிவம்; ஒழுக்கமே உன் ஆத்மா; தேச நலனே உன் லட்சியம். முதலில் ஏதேனும் ஒரு ஸ்தாபனத்தில் சேர்ந்து கொள். அதுதான் உனக்கு நல்லது. ஸ்தாபனத்தில் சேர்ந்து கொள்வதனால் அதனுடைய கட்டுப்பாடுகளுக்கெல்லாம் உட்பட வேண்டுமே யென்று தயங்காதே. கட்டுப்படத் தெரிந்தவன்தான் பிறரைக் கட்டுப்படுத்த முடியும். கீழ்ப்படியத் தெரிந்து கொண்டிருக்கிறவன் தான் சரியான எஜமானனாயிருக்க முடியும். என்னொருவனால் எல்லாம் சாதிக்க முடியும் என்று எண்ணாதே. அப்படி எண்ணுவாயானால் உன்னால் எதுவும் சாதிக்க முடியாது. உன்னுடைய தேக பலமோ, பணபலமோ, அறிவு பலமோ ஓரளவுக்குத் தான் உனக்கு வெற்றியை வாங்கிக் கொடுக்கும். ஆனால் அந்த வெற்றி சாசுவதமாயிராது. அந்தப் பலங்களில் ஏதேனும் ஒன்று இருக்கும் வரையிலேயே உன்னால் வேலை செய்ய முடியும். ஏதேனும் ஒன்று குன்றுமானால், நீ தொடங்கிய வேலை யாவும் நின்றுவிடும்; உன்னுடைய தனித்துவமே போய்விடும். ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஒவ்வொரு விதமான சக்தி இருக்கிறது. இந்தச் சக்திகள் அனைத்தும் ஒரு ஸ்தாபனத்தில் ஒன்று சேருகின்றன. இதனால் ஒரு தனி மனிதன் எந்த அளவுக்கு ஒரு காரியத்தைச் சாதிக்க முடியுமோ, அந்த அளவுக்குப் பன்மடங்கு அதிகமான காரியத்தை ஒரு ஸ்தாபனம் சாதிக்க முடியும். தவிர எதிர்ப்பு ஏற்பட்டால் அதனை ஒரு தனி மனிதன் நிலையாக நின்று சமாளிக்க முடியாது; ஆனால் ஒரு ஸ்தாபனமோ, எவ்வளவு பெரிய எதிர்ப்பையும் லேசாகச் சமாளித்துவிட முடியும். உலக சரித்திரத்தில் அழியாத முத்திரையை இட்டு விட்டுச் சென்ற மகான்கள் அத்தனை பேரும், தங்கள் வாழ்க்கையின் லட்சி யத்தைப் பூர்த்தி செய்வதற்காக, ஒரு ஸ்தாபனத்தையே கருவியாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஸ்தாபனங்களின் மூலந்தான் அவர் களுடைய கொள்கைகள் பரவியிருக்கின்றன. புத்தர்பிரான் என்ன, யேசுநாதர் என்ன, மகாத்மாகாந்தி என்ன, இவர்களெல்லோரும் தங்கள் கொள்கைகளைப் பரப்புவதற்கு முறையே சங்கத்தையும், சபையையும், `காங்கிரஸையுமல்லவோ துணை கொண்டார்கள்? நாகரிகமென்று இப்பொழுது நாம் எதைச் சொல்கிறோமோ அஃது என்ன? நீண்ட காலமாக அநேகர் சேர்ந்து உழைத்த உழைப்பின் விளைவுதானே? எனவே நல்லது என்று ஒன்று ஏற்பட வேண்டுமானால்? அது நீடூழி காலம் இருந்து எல்லோ ருக்கும் நல்லது செய்து கொண்டிருக்கவேண்டுமானால் அதற்கு நான்கு பேருடைய ஒத்துழைப்பு அவசியம். அந்த ஒத்துழைப்புக்கு இடமாயுள்ளது எதுவோ,அதற்குக் கருவியாய் அமைவது எதுவோ அதுதான் ஸ்தாபனம். இந்த ஸ்தாபனத்தை, சங்கம் அல்லது சபை அல்லது கழகம் அல்லது சமிதி என்று எப்படி வேண்டுமானால் அழைத்துக்கொள்ளட்டும். அதைப்பற்றி உனக்காவது ஒன்று மில்லை. நானே ஏன் ஒரு ஸ்தாபனத்தை அல்லது சங்கத்தைத் தோற்றுவிக்கக்கூடாது, ஏன் ஒரு சங்கத்தின் அங்கத்தினராகச் சேர்ந்து கொள்ளவேண்டும் என்று நீ கேட்கலாம். அப்படிச் செய்வதை யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. ஆனால் அப்படித் தோற்றுவிப்பதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை யோசித்துப் பார். உன்னால் வகுக்கப்பட்ட எந்தத் தத்துவம், சங்கத்தின் மூலம் பிரகடனம் செய்யப்படுவதற்குக் காத்துக் கொண் டிருக்கிறது?உன்னைப் பின்பற்றுகிறவர் எத்தனை பேர் இருக்கின் றனர்? இவைகளையெல்லாம் யோசியாமல் என் கையிலே கொஞ்சம் பணமிருக்கிறது, எனக்குச் சொந்தமாக ஒரு கட்டிடமும் உண்டு. நான் சொல்கிறபடி நடக்கிற வேலைக்காரர் சிலர் இருக்கின்றனர் என்று சொல்லிக்கொண்டு ஒரு சங்கத்தை ஆரம்பிப்பாயானால் நிச்சயம் உனக்கு அவமானம் உண்டாகும்; அதற்கு அகால மரணம் ஏற்படும். ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர் உன்னுடைய தனித்துவம் உலகிற்கு வெளிப்படவேண்டும். அப்படி வெளிப்படுகிற தனித்துவம் நிலைத்து நிற்பதற்குத்தான், அந்தத் தனித்துவம் சர்வத்துவமாக விரிவதற்குத்தான் ஒரு ஸ்தாபனம் தேவையா யிருக்கிறது. இப்படித் தங்களுடைய தனித்துவத்தை உலகிற்கு வெளிப்படுத்துகின்றவர் ஒரு சிலரே. இவர்களையே மகான்க ளென்றும் அவதார புருஷர்களென்றும் அழைக்கிறோம். அப்படிப் பட்ட மகானாக நீ இருக்கும் பட்சத்தில் தாராளமாக நீ ஒரு ஸ்தாபனத்தைத் தோற்றுவிக்கலாம். ஆனால் மகான் களென்று அழைக்கப்படுகிறவர்கள் கூட எத்தனையோ படிகளைத் தாண்டிய வர்கள்; எத்தனையோ சாதனைகளைப் பயின்றவர்கள். அப்படிப் பயின்ற சாதனைகளும் ஏதோ ஒரு ஸ்தாபனத்திலிருந்து கொண்டு தான் என்பது உனக்கு நினைவிருக்கட்டும். நீ எத்தனை படிகளைத் தாண்டி யிருக்கிறாய்? எத்தனை சாதனைகளில் சித்தி பெற்றிருக் கிறாய், ஒருவிதமான அடிப்படையுமில்லாமல், எந்த ஸ்தானத்திலும் சேர்ந்து உழைக்காமல் நான் ஒரு சங்கத்தைத் தோற்றுவிக்கிறே னென்று சொன்னால், உன்னை ஒரு போலி என்றுதான் எல்லோரும் கருதுவார்கள். ஆதலின் அப்படிப்பட்ட அசட்டுக் காரியத்தைச் செய்யாமல், தேச நலனை லட்சியமாகவுடைய ஒரு ஸ்தாபனத்தில் சேர்ந்துகொள். ஒரு ஸ்தாபனத்தில் அல்லது சங்கத்தில் அங்கத்தினனாகி விட்டாயென்று சொன்னால், மாத சந்தாவோ வருஷ சந்தாவோ செலுத்தி விடுவதோடு, அல்லது வார, மாத, வருஷக் கூட்டங் களுக்குத் தவறாமல் சென்று வருவதோடு உன் கடமை முடிந்து விட்டது என்று கருதாதே. பொழுதைத் தமாஷாகக் கழிப்பதற்கேற்ற இடம் அது என்றும் எண்ணாதே. இதற்கென்று, பொழுதைக் கழித்துத் தொலைப்பதற்கென்று சில பெயர்வழிகள்இருக்கிறார்கள். நீ அப்படிச் செய்யக்கூடாது. உனக்கு வாழ்க்கையிலே சில லட்சி யங்கள் உண்டு. அந்த லட்சியங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரவேண்டுமென்று சங்கல்பம் செய்து கொண்டிருக்கிறாய்; அதற்காகவே ஐந்து வருஷப் பயிற்சியும் பெற்றிருக் கிறாய். ஆதலின் எல்லோரையும்போல் நீ இருக்கக் கூடாதல்லவா? ஒரு சங்கத்தில் முதன் முதல் அங்கத்தினனாகப் பதிவு செய்து கொள்கிறபோது இச்சங்கத்தின் நோக்கங்களை நான் ஒப்புக் கொள்கிறேன்; இச்சங்கத்தின் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என்ற கருத்துக்களடங்கிய ஒரு காகிதத்தில் நீ கையெழுத்திடுகிறாயல்லவா, அது வெறும் காகிதம் என்று லோசாக நினைத்து கையெழுத்துப் போடாதே. அது பிரமாண பத்திரம். அந்தரங்க சுத்தியோடு நீ அதில் கையெழுத்துப் போடவேண்டும். சங்கத்தின் நோக்கங்களில் ஒருசிலவற்றை நீ ஒப்புக் கொள்ளவில்லை யென்றால், அல்லது சங்கத்தின் எல்லா விதிகளுக்கும் உன்னால் கட்டுப்பட முடியாது என்று நீ கருதினால், கையெழுத்துப் போட்டு அங்கத்தினனாகச் சேரக்கூடாது. ஒரு சங்கத்திலே சேர உனக்கு எப்படி உரிமை உண்டோ அப்படியே ஒரு சங்கத்தில் சேராமலிருப்பதற்கும் உனக்கு உரிமையுண்டு. எப்பொழுது ஒரு சங்கத்திலே சேர்ந்துகொண்டு விட்டாயோ அப்பொழுதிருந்தே அதன் வளர்ச்சி தேய்வுக்கு நீயும் ஒரு பொறுப்பாளி; அதற்கு ஏற்படுகிற கௌரவம், அகௌரவம் எல்லாம் உன்னையும் சாரும். ஆதலின் ஒரு சங்கத்திலே சேருவா யானால் அதனோடு உன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு விடு. சிலர், பல சங்கங்களில் அங்கத்தினர்களாகச் சேர்ந்துகொள்கி றார்கள். அப்படிச் சேர்ந்து கொள்வோரிற் பெரும்பாலோர் கௌரவத் திற்காகவே சேருகிறார்கள்; தங்களிடத்திலுள்ள பணத்தின் மிகுதியைப் பலரும் அறிய வேண்டுமென்று விரும்புகிறார்கள்; தங்களுடைய செல்வாக்கை அபிவிருத்தி செய்து கொள்ளப் பார்க்கிறார்கள். இவர்கள், உழைக்காமலே ஊதியம் பெறும் கூட்டத்தினர்; போரைப்பாராமலே வீரனென்று மார்தட்டிப் பேசுவோர். இவர்களிலே ஒருவனாக நீ ஆகிவிடாதே. உன் பயிற்சி யெல்லாம் வியர்த்தமாகிவிடும். நம்முடைய லட்சியத்திற்கும் மனப் போக்குக்கும்,சக்திக்கும், பொருளாதார நிலைமைக்கும், ஏற்றாற் போலுள்ள பொதுநலத்தை நாடும் ஒரு சங்கத்தில் சேர்ந்து கொண்டு அதற்காகப் பாடுபடுவதே சிறந்தது. அப்பொழுதுதான் அதனுடைய வளர்ச்சியிலே உன்னுடைய வளர்ச்சியைக் காணமுடியும். ஒரு சங்கத்திலே சேர்ந்து கொண்ட பிறகு நீ எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்னென்ன செய்ய வேண்டு மென்பதைப் பற்றி உனக்கு இங்கே வரிசைப் படுத்திக் கூறுகிறேன். 1. ஒரு சங்கத்திலே சேர்ந்து கொண்ட பிறகு, அதில் அங்கத் தினராயுள்ள எல்லோரையும் பரிச்சயம் செய்து கொள். அவர்களை உன் சகோதரர்களாகக் கருது. எல்லோரும் ஒரே லட்சியப் பாதையில் செல்கிற பிரயாணிகளல்லவா? ஒரே நோக்கத்திற்காக அல்லது குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காகப் பாடுபடுகிறவர்களல்லவா? எனவே சங்கத்தின் எல்லோரையும் உன்னைப்போல் கருது; அப்பொழுதுதான் அவர்களும் உன்னைத் தங்களைப் போல் கருது வார்கள். ஒரு வரம்புக்குட்பட்ட எண்ணிக்கையுடைய சங்க அங்கத் தினர்களை நீ சகோதரர்களாகப் பாவிக்கத் தெரிந்து கொண்டால் தான் பிறகு உனது தாய் நாட்டிலுள்ளவர்களையும், அதன் பிறகு உலகத்திலுள்ளவர்களையும் சகோதரர்களாகக் கருதுவது உனக்குச் சாத்தியமாகும். உன்னிலிருந்து சங்கம்; சங்கத்திலிருந்து தேசம்; சேதத்திலிருந்து உலகம். இவைதான் முன்னேற்றப் படிகள். 2. நீ சங்கத்திலே சேர்வதற்கு முன் அதன் நடைமுறைகள் எப்படி இருந்தன என்பதை, சங்கத்தின தஸ்தாவேஜூகளைப் பார்த்தும், சங்கத்தில் பொறுப்பான பதவிகள் வகித்து வந்தவர்கள் மூலமாகவும் தெரிந்து கொள். அவைகளிலிருந்து ஏதேனும் அபி விருத்தி செய்ய முடியுமானால் அதைப் பல பேருடன் கலந்து கொண்டு செய். செய்வதற்கு உனக்கு அதிகாரமில்லையானால், அதிகாரமுள்ளவர்களிடத்திலே போய்ச் சொல்லு. அப்படிச் சொல்லுவது ஆலோசனை ரூபமாயிருக் கட்டும். 3. சங்கத்தின் லட்சியங்கள், நியமங்கள் முதலியன அனுஷ்டான வடிவத்தில் நீ செய்கிற ஒவ்வொரு சிறிய காரியத்திலும் பிரதிபலிக்க வேண்டும். உன்னுடைய பேச்சு, உன்னுடைய நடக்கை எல்லாவற்றையும் பார்த்து, ஓ! இன்ன சங்கத்தின் அங்கத்தினரா இவர்? அதனால்தான் இவரைக் கண்டவுடனே இவரிடத்தில் நமக்கு ஒரு மதிப்பு உண்டாகிறது என்று சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் உனக்கும், உன்னுடைய சங்கத்திற்கும் பெருமை. 4. சங்கத்தில் ஏதேனும் பொறுப்பான பதவி வகிப்பதற்கு நீ எப்பொழுதும் தயாராயிருக்க வேண்டும். அதற்கேற்ற மாதிரி நீ உன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆனால் பதவிக்காக நீ ஆசைப்படக் கூடாது; போட்டியும் போடக்கூடாது. உன்னை விடத் தகுதி வாய்ந்தவர்கள் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள முன் வருவார்களானால் அவர் களுக்காக நீ விட்டுக் கொடுக்கவேண்டும். பெரும்பாலோர், நீயே பதவி வகிக்க வேண்டுமென்று அபிப்பிராயப் பட்டால் அதற்குச் சம்மதப்பட வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் நீ மறுக்கக் கூடாது. அப்படி மறுப்பது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகும். 5. பதவி கிடைத்துவிட்டதனால் உனக்கு ஏதோ புதிய கௌரவம் வந்துவிட்டதென்று கருதாதே. மகத்தானதும் புனித மானதுமான பொறுப்பு உன் தலைமீது ஏறியிருக்கிறதென்று எண்ணி அடங்கு. பதவி ஏற்றுக்கொண்ட பிறகு உன் கடமை அதிகரிக்கிறது; உரிமை குறைகிறது. 6. சங்கத்தின் வேலைகள் ஒழிந்த நேரங்களில் கவனிக்கப் படவேண்டியவை என்று எண்ணாதே. அன்றாடம் அவசியம் செய்ய வேண்டிய வேலைகளாகவே அவைகளைக் கருதவேண்டும். 7. சங்கத்தின் கணக்குகளை ஒழுங்காக வைத்துக் கொள்ள வேண்டும். அன்றாடக் கணக்குகளை அன்றாடம் முடித்துவிட வேண்டும். முக்கியமாகப் பண விவகாரங்களில் நீ நிரம்பக் கண்டிப்பாக இருக்க வேண்டும். 8. இதே பிரகாரம் சங்கத்தின் எந்த ஒரு தஸ்தாவேஜும் ஒழுங்காக இருக்க வேண்டும். யார் எந்தச் சமயத்திலே எந்த விதமான தகவல் கேட்டபோதிலும் உடனே சரியான விவகாரம் கிடைக்கிற மாதிரி தஸ்தாவேஜுகள் இருக்கவேண்டும். உன்னுடைய வீட்டுக் கணக்கையும் தஸ்தாவேஜுகளையும் எவ்வளவு அக்கறையாக வைத்துக் கொண்டிருக்கிறாயோ அதைக்காட்டிலும் பன்மடங்கு அக்கறையுடன் சங்கத்தின் கணக்குகளையும் தஸ்தாவேஜுகளையும் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். உன் வீட்டுக் கணக்குகளை வெளியார் யாரும் வந்து பார்க்கப் போவதில்லை. யாருக்கும் அதைப் பற்றிச் சிரத்தை யில்லை. ஆனால் ஒரு சங்கத்தின் கணக்கு களைத் தணிக்கை செய்ய, விவரங்கள் அறிய, எல்லா அங்கத்தினர் களுக்கும் உரிமையுண்டு. எனவே இது விஷயத்தில் நீ மிகவும் ஜாக்கிரதையுடனிருக்க வேண்டும். 9. சங்கத்தின் வார அல்லது மாத அல்லது வருஷக் கூட்டத்தில், நீ பொறுப்பேற்றுச் செய்த காரியங்களைப் பற்றிப் பலர் - சங்க அங்கத்தினர்கள்-பலவிதமான கேள்விகள் கேட்பார்கள். அவர்கள் கேட்கிற கேள்விகள் உண்மையான சந்தேகத்தின் மீது எழுந்தவையா யிருக்கலாம்; அல்லது உன்னுடைய கண்ணியத்தை யும் பொறுப்புத் தன்மையையும் பரிசோதிப்பதற்காக இருக்கலாம். எப்படியிருந்த போதிலும், நியாயமாகக் கேட்கப்படுகின்ற, கூட்டத் தின் தலைவரால் அனுமதிக்கப்படுகின்ற எல்லாக் கேள்விகளுக்கும் நீ சாவதானத்துடனும் பொறுப்புணர்ச்சி யுடனும் பதில் சொல்ல வேண்டும். 10. பிரதி தினமும் சங்கத்தின் இடத்திற்கு நீ போக வேண்டும். சங்கத்தை உன் இடத்திற்கு வரவழைத்துக் கொள்ளாதே. அதாவது சங்கத்தின் விவகாரங்களைச் சங்கத்திற்கே சென்று கவனிக்க வேண்டும். 11. சங்கத்தை உன் சொந்த காரியத்திற்காக உபயோகித்துக் கொள்ளாதே. சங்கத்தின் சிப்பந்திகள் உன் வீட்டுச் சிப்பந்திகளல்ல. சங்கத்தின் சாமான்கள் உன் வீட்டுச் சாமான்களல்ல. இது விஷயத் தில் நீ நிரம்ப கண்டிப்பாயிருக்க வேண்டும். 12. சங்கத்திலே நீ வகிக்கும் பதவியைக் கொண்டு எந்தவித மான சலுகைகளையும் அடையப் பாராதே. பதவி, கடமையின் பீடம்; சலுகைகளை வாங்கிக் கொடுக்கும் சாதனமல்ல. 13. பதவியிலிருந்து கொண்டு, சங்க அங்கத்தினர் விஷயத்தில் ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமோ, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வித்தியாசமோ, வேறு எந்தவிதமான வித்தியாசமோ நீ பாராட்டக் கூடாது. எல்லோரிடத்திலும் நீ பாரபட்சமின்றி நடந்து கொள்ளவேண்டும். பணக்காரர் சிலர், சில நூறு ரூபாய்கள் மொத்தமாகச் செலுத்திவிட்டு, சங்கத்தின் போஷகர் என்ற கௌரவ ஸ்தானமுடையவராயிருக்கலாம். வேறு சிலர்அணாக்கணக்கில் சந்தா செலுத்திவிட்டு சாதாரண அங்கத்தினரா யிருக்கலாம். இந்த இருதரத்தினர் விஷயத்திலும் நீ ஒரே மாதிரியாகவே நடந்து கொள்ள வேண்டும். போஷகர் வந்தால் பல்லிளிப்பதும், அங்கத் தினர் வந்தால் அசட்டையா யிருப்பதும் கூடவே கூடாது. 14. ஒரு சங்கத்தில் பதவிகள் வகிப்போர் எல்லோரும் ஒரே மாதிரியான அந்தஸ்தனுடையவரே. ஒருவருக்கொருவர் ஏற்றத் தாழ்வு கிடையாது. தலைவராயிருப்போர், காரியதரிசியைத் தமக்குக் கீழ்ப்பட்ட உத்தியோகஸ்தர் என்றும், அப்படியே, காரியதரிசியாக யிருப்போர், தலைவரைத் தமக்கு மேலதிகாரி யென்று கருதுவதும் நிரம்ப தவறு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கடமையும் பொறுப்பும் இருக்கின்றன வென்பதற்காகவே ஒரு சங்கத்தில் பல பதவிகள் இருக்கின்றன. இந்தக் கடமைகளிலே, இந்தப் பொறுப்புகளிலே ஏற்றத் தாழ்வு கிடையாது. 15. நீ பதவி யேற்றுக் கொண்டவுடன், உன்னுடைய உத்தியோக காலத்தில் என்னென்ன செய்யப் போகிறாய் என்பதைப் பற்றி ஒரு திட்டம் போட்டுக் கொள். அப்படித் திட்டம் போடுவதற்கு முன், சங்கத்திலுள்ள சாதனங்களையும்,உன்னுடைய சக்தியையும் கவனித்துக் கொள். நீ போடுகிற திட்டம் அனுஷ்டான சாத்திய மானதா யிருக்கவேண்டும்; சங்க அங்கத்தினர் எல்லோருடைய ஒத்துழைப்பையும் பெறுவதாயிருக்க வேண்டும். 16. சங்க உத்தியோகஸ்தர்களின் தேர்தல்கள் நடைபெறுகிற போது ஒவ்வொரு தடவையும் நீ போட்டிப் போடாதே. மற்றவர் களுக்கும், உன்னைப்போல் பதவி வகிக்க வேண்டுமென்று ஆசை யிருக்கு மல்லவா? அவர்களுக்கு நீ இடங்கொடுக்க வேண்டும். அது மட்டுமல்ல; நீ பதவியி லிருந்த காலத்தில் அடைந்த அனுபவத்தை அவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும். 17. எந்த ஒரு காரியத்தையும் அரைகுறையாகச் செய்யாதே. செய்வன திருந்தச் செய் என்ற மூதாட்டியின் வாக்கியம் எப்பொழுதும் உன் நினைவிலிருக்கட்டும். 18. கடைசியாக, எந்த ஒரு விஷயத்தையும் அற்பமென்று அலட்சியம் செய்யாதே. இன்று அணுவாயிருப்பது நாளையே மகத்தான தாகிவிடலாம். சிறிய விஷயத்திலே, நீ எப்படி நடந்து கொள்கிறாய் என்பதைப் பார்த்துத்தான் பெரிய விஷயத்தை உன்னிடம் ஒப்படைப்பர். எனவே பெரிய விஷயத்தை நீ சாதிக்க வேண்டுமானால் சிறிய விஷயத்தில் நீ கண்ணுங் கருத்துமாயிருக்க வேண்டும். இப்படிக்கு, உன் சேவையிலே சிறப்படைய விரும்பும், பாரத மாதா. 6. பிரச்சாரம் மகனே! தேசத் தொண்டிலே பிரச்சாரம் ஒரு முக்கியமான அம்சம். நீ எந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறாயோ, எந்தக் கொள்கையிலே உனக்குப் பரிபூரண நம்பிக்கை இருக்கிறதோ அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதும், அவர்களைப் பின்பற்றச் செய்வதும் உனது கடமையாகும். இதற்கே பிரச்சாரம் என்று பெயர். இந்தப் பிரச்சாரத்தை நீ பல வகைகளில் செய்யலாம். எந்த வகையில் செய்வதற்கு உன்னால் முடியும் என்பதை நீயே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே நான் கூறியபடி உன்னால் எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்யவே நீ முற்பட வேண்டும். உன்னால் முடியாது என்று உனக்குச் சிறிது சந்தேகந் தட்டினால் கூட அதில் பிரவேசியாதே. தன்னம்பிக்கையோடு தொடங்கப் படுகிற காரியந் தான் வெற்றியளிக்கும். ஒரு காரியத்தில் பிரவேசிப்பதற்கு முன் அதைப்பற்றித் தீவிரமாக யோசனை செய். அதன் பலாபலன்களை, சாதக பாதகங்களைப் பற்றிச் சிந்திப்பதில் சிறிது காலமேனும் செலவிடு. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்த பின் அந்தக் காரியத்தில் பிரவேசித்த பிறகு, அதிலிருந்து பின்வாங்காதே. கடைசி வரையில், அந்தக் காரியத்தின் முடிவைக்காண்கிறவரையில், அதற்காகவே நீ பாடுபட வேண்டும். எண்ணித் துணிக கருமம்,துணிந்தபின் எண்ணுவ மென்பது இழுக்கு என்ற வள்ளுவர் வாக்கு உன் பிரச்சாரத்திற்கு வழிகாட்டி யாயிருக்கட்டும். பிரச்சார நிமித்தம் நீ பலரோடு தொடர்பு கொள்ள வேண்டி யிருக்கும். அதற்காக அநேகருடைய வீட்டுக்கு நீ போக நேரிடும். அப்படியே அநேகர் உன் வீட்டுக்கு வரக்கூடும். உன் வீட்டுக்கு வருகிறவர்கள்,எந்த நேரத்தில் வந்தால் சௌகரியமாயிருக்கும், அப்படி வருகிறவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எவ்வளவு குறைவான வார்த்தைகளில் விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நீ எதிர்பார்க்கிறாயோ அப்படியே மற்றவர்கள் வீட்டுக்கு நீ போகிறபோதும் நடந்து கொள்ளவேண்டும். ஒருவரை, பிரசங்கம் செய்யுமாறு அழைக்க அவர் வீட்டுக்குப் போகிறாய் என்று வைத்துக்கொள். அவருடைய அலுவல்களென்ன, அவர் எந்த நேரத்தில் வீட்டில் இருப்பார், எந்த நேரத்தில் சென்றால் பிரசங்கம் செய்ய ஒப்புக் கொள்ளும் மனோநிலையில் இருப்பார் என்பவைகளை ஒருவாறு முன்கூட்டியே தெரிந்து கொண்டு சென்றால் உன் காரியம் பலிதமாகும்; அவரும் உன்னிடம் முகங்கொடுத்துப் பேசுவார்; அவரிடத்தில் நீ வைத்திருக்கிற மதிப்பு, அவர் உன்னிடத்திலே காட்டுகிற பிரியம் ஆகிய இரண்டும் வளரும். ஏதேனும் ஒரு சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் ஒரு சிலருக்கு நல்ல வெயில் நேரத்தில்தான் ஓய்வு கிடைக்கிறது. அந்த ஓய்வு நேரத்தை, யாரையாவது ஒரு பிரசங்கியைக் கண்டுபிடிப்பதிலேயோ, அந்தப் பிரசங்கத்திற்குத் தலைமை தாங்கக் கூடிய ஒருவரைத் தேடிப்பிடிப் பதிலேயோ செலவிட்டு, காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறார்கள். அந்த வெயில் வேளையில் யாரை நாடி அவர்கள் போகிறார்களோ அவர் உறங்கிக் கொண்டிருப்பார்; அல்லது சாப்பாட்டு விடுதியில் தமது குடும்பத் தாருடன் அளவளாவிக் கொண்டிருப்பார். அப்பொழுது அவரை அணுகுவது அவ்வளவு உசிதமாயிராது. அப்படியே இரவு நேரத்தில் சுமார் எட்டு மணிக்கு மேல் ஒருவரைத் தொந்திரவு படுத்துவதும் நல்லதல்ல. மற்றும், ஒருவரை, அவருடைய உத்தியோகம் பார்க்கிற இடத்திற்குச் சென்று பிரசங்கம் செய்யுமாறோ அல்லது கூட்டத் திற்குத் தலைமை வகிக்குமாறோ கேட்பது அவ்வளவு சரியல்ல. கூடியமட்டில் அவருடைய வீட்டிலேயே சந்தித்துப் பேசுவதுதான் நல்லது. அப்படி வீட்டுக்குச் சென்று காணமுடியாமல் காரியாலயத் திலேயே சென்று காணவேண்டிய அவசியம் ஏற்பட்டால், சுருக்க மான நேரத்தில் குறைவான வார்த்தைகளைச் சொல்லி அவரை இணங்குமாறு செய்துகொண்டு வெளியே வந்துவிட வேண்டும். எந்த விஷயத்தைப் பற்றிப் பிரசங்கம் செய்யவேண்டுமென்று நீ விரும்புகிறாயோ அந்த விஷயத்தைப் பற்றித் தெளிவாகப் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்த ஒருவரையே நீ பிரசங்கத்திற்கு அழைக்க வேண்டும். ஒருவருக்கு எல்லாத் துறைகளிலும் பயிற்சி இருக்க முடியாது. ஒருவர், எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசலாம். வாசாலகமுள்ள ஒருவருக்கு இந்தக் காலத்திலே இது மகா சுலபம். அச்சடித்த புத்தகங்கள் அலமாரிக் கணக்கில் நமக்குத் துணை செய்ய இருக்கிறபோது, பேசுவதற்கு விஷயந்தான் அகப் படாதா? பேசத்தான் முடியாதா? ஆனால் அப்படிப் பேசுவதில் என்ன பிரயோஜனம்? பேசுவோருக்கும் நன்மையில்லை; கேட் போருக்கும் வளர்ச்சியில்லை. நாம் பேசுகிற எந்த ஒரு விஷயமும் கூடியமட்டில் நம்முடைய அனுபவத்தோடு ஒட்டியதாயிருக்க வேண்டும்; அல்லது எதைப்பற்றி நமக்குப் பரிபூரண ஞானம் இருக்கிறதோ, எந்த விஷயத்தில் நமக்கு நம்பிக்கை ஏற்பட்டு அதை எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறோமோ அதையே பேச வேண்டும். மற்றவர்களுக்கு மட்டுமல்ல, உனக்கும் இதே வார்த்தைதான். உன்னை யாராவது பிரசங்கத்திற்கு அழைத்தால், உனக்கு எந்த விஷயத்தில் அதிகமான பரிச்சயம் உண்டோ அந்த விஷயத்தைப் பற்றிப் பேசவே நீ ஒப்புக்கொள்ள வேண்டும்; விஷயத்தின் தலைப்பையும் நீயே கொடுத்து விடுவது நல்லது. அப்படி உடனே முடிவு செய்து தலைப்பின் பெயரைச்சொல்ல முடியாவிட்டால் பின்னாடி தெரிவிப்பதாகவோ, அல்லது வந்து கேட்டுக்கொண்டு போகுமாறோ சொல்ல வேண்டும். உங்கள் இஷ்டப்படி தலைப்பைப் போட்டுக் கொள்ளுங்கள் என்று சிலர் அலட்சியமாகச் சொல்லி விடுகிறார்கள். இது, சில சமயங்களில் விபரீதமாகப் போய்விடு மென்பதை இவர்கள் உணர்வதேயில்லை. இவர்கள் பேச நினைத் திருப்பது ஒரு விஷயமாயிருக்கலாம்; ஆனால் விஷயத்தின் தலைப்பு, வேறு அர்த்தத்தை, சில சந்தர்ப்பங்களில் நேர்மாறான அர்த்தத்தைக் கூட, கொடுக்கக் கூடியதாயிருக்கலாம். ஆகவே, பேசப்போகிற விஷயத்தின் தலைப்பைப் பேசுவோரே கொடுத்து விடுவது நல்லது. அப்படிக் கொடுப்பதையும், எழுதிக் கொடுப்பது இன்னும் நல்லது. வாய்மொழியாகச் சொல்லுவதிலே, சில பிரதிகூலங்கள் இருக் கின்றன. எப்படியென்றால், விஷயத்தின் தலைப்பைக் கேட்டுக் கொண்டு போகிறவருடைய ஞாபக சக்தியே அவரைச் சில சமயங் களில் கைவிட்டுவிடலாம். அல்லது நாமே அவசரத்தில் அல்லது பேசப் போகிறோமென்னும் உற்சாகத்தில் ஒன்றை மனத்திலே எண்ணிக்கொண்டு வேறொன்றை வாயால் சொல்லிவிடலாம். ஒரு சமயம், ஜீவகாருண்ய சங்கத்தின் காரியதரிசியொருவர், ஒரு பிரசங்கியிடம் வந்து அஹிம்ஸையைப் பற்றிப் பேசவேண்டு மென்று கேட்டுக் கொண்டார். பிரசங்கியும் ஒப்புக் கொண்டு, அஹிம்ஸையின் பிதாமகன் என்று தாம் பேசப்போகும் விஷயத் திற்குத் தலைப்புக் கொடுத்து, இந்தமாதிரியே பிரகடனம் செய்யு மாறு கூறினார். இப்படிக் கூறியது வாய்மொழியால். இதனால் ஏற்பட்ட விபரீதம் என்னவென்று கேட்கிறீர்கள்? பிரசங்கியார் சொன்ன விஷயம்,காரியதரிசியின் காதில் எப்படி விழுந்ததோ தெரியாது; அவர், `அஹிம்ஸையும் பிதாமகனும் என்று பிரகடனம் செய்துவிட்டார். அதனோடு கூட, பிரசங்கத்திற்குத் தலைமை வகிக்க இசைந்த பெரியாரிடம் இப்படியே தெரிவித்துவிட்டார். இதன் விளைவு என்னவாயிற்றென்றால், பிரசங்கியார், `அஹிம்ஸையின் பிதாமகன் என்ற தலைப்புக்கேற்றாற்போல்,குறிப்புகள் எடுத்துக் கொண்டு பிரசங்கத்திற்குப்போனார். ஆனால் தலைவரோ, அஹிம்சையும் பிதாமகனும் என்ற தலைப்புக்கேற்றார்போல் குறிப்புகள் எடுத்துக் கொண்டு பிரசங்கத்திற்கு வந்திருந்தார்! சொற்பொழிவும் தலைமை யுரையும் எவ்வளவு பொருத்தமா யிருக்குமென்று நினைக்கிறீர்கள்? ஒரே குழப்பந்தான். ஆகவே உன் பிரசங்கத்தின் தலைப்பை ஒரு துண்டுக் காகிதத்தில் குறித்துக் கொடுத்துவிடுதல் நல்லது. சிலர், தாங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவதற்குத் தயாராயிருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படிச் சொல்வதனால், தங்களுடைய சர்வ விஷய ஞானத்தைப் புலப்படுத்திக் கொள்வதாக அவர்களுக்கு எண்ணம். நீ ஒரு போதும் அப்படிச் செய்யாதே. ஒருவன், தன்னை, சகலகலாவல்லுனன் என்று சொல்லிக் கொண்டால் அவனை நம்பாதே. நுனிப்புல் மேய்கிறவர்கள்தான் அப்படிச் சொல்வார்கள். உன்னால் எந்த விஷயத்தைப் பற்றித் தெளிவாகச் சொல்ல முடியுமோ, எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினால், உன்னைப் பிரசங்கத்திற்கு அழைக்கிற ஸ்தாபனத்தின் கொள்கையைப் பலரும் முன்னைக் காட்டிலும் அதிகமாகத் தெரிந்துகொள்வார்களோ அப்படிப்பட்ட விஷயத்தையே நீ பேசவேண்டும். அந்த மாதிரி உன்னால் பேசமுடியாது என்று உனக்குப் பட்டதேயானால் பேசுவதற்கு ஒப்புக் கொள்ளாதே; கண்டிப்பாக மறுத்துவிடு. அதனால் உன் கௌரவம் குறைந்து போகாது; பிரசங்கத்திற்கு அழைக்க வந்தவர், உன்னைத் தாழ்வாகக் கருதமாட்டார். நீ எந்த ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கிறாயோ அந்த ஸ்தாபனத்தில் அங்கத்தினராகச் சேருமாறு சொல்லவோ, அல்லது அந்த ஸ்தாபனத்தின் அபிவிருத்திக்காக நன்கொடை வசூலிக்கவோ நீ சில முக்கியஸ்தர்கள் வீட்டுக்குப் போக வேண்டியிருக்கும். அப்படிப் போய்ச் சந்தித்துப் பேசுகிறபோது அவர்களை அனாவசிய மாகப் புகழ்ந்து பேசாதே. அவர்கள் அங்கத்தினராகச் சேர்ந்தால் தான் ஸ்தாபனம் செல்வாக்குப் பெறு மென்றும், அல்லது அவர் களுடைய பண உதவி இல்லாமல்தான் ஸ்தாபனம் அபிவிருத்தி யடைய முடியாமலிருக்கிறதென்றும், அவர்களை ஸ்தோத்திரம் செய்து பேசுகிற முறையில் ஸ்தாபனத்தை இழிவுபடுத்திப் பேசாதே. ஒருவனிடத்திலே இல்லாத குணங்களை அவனிடத்திலே இருப்ப தாக வைத்துப் புகழ்ந்து பேசுவது அவனை நாம் தவறான நிலையில் கொண்டு போய் வைப்பதாகும். அப்படியே நாமும் நம்முடைய சுயமதிப்பு ஸ்தானத்திலிருந்து இறங்கி விடுகிறோம். எந்தக் காரியங்கள் பூர்த்தியடைய வேண்டுமென்பதற்காக நீ மற்றவர் களுடைய உதவியை நாடுகிறாயோ, அந்தக் காரியங்கள் நிறை வேற்றப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லு; அந்தக் காரியங்களைப் பற்றி உயர்வாகப் பேசு. அந்தக் காரியம் நல்ல தென்றுப்பட்டு அதற்காக ஒருவர் உதவி செய்ய முன்வரவேண்டுமே தவிர,உனது தாட்சண்யத்திற்காகவோ, அல்லது தங்களுக்கு மறைமுகமான சாதகம் ஏதேனும் கிடைக்கு மென்பதற்காகவோ யாரும் ஒரு ஸ்தாபனத்தில் சேரக்கூடாது; அதற்குப் பண உதவி செய்யக்கூடாது. அப்படிச் சேருவார்களானால் அல்லது பண உதவி செய்ய முன் வருவார்களானால் நீ அவர்களைக் கண்டிப்பாகத் தடுத்துவிட வேண்டும். ஒருவரால் சில காரியங்கள் ஆக வேண்டியிருக்கிற தென்பதற்காக அவரைப் பாராட்டிப் பேசுகிற உற்சாகத்திலே, மற்றவர்களை நீ குறைவாகச் சொல்லாதே; மற்றவர்களுடைய பொது நல சேவைகளில் குற்றங்காண்பதும், அவர்களுடைய அந்தரங்க சுத்தியில் சந்தேகங் கொள்வதும் மிகக் கேவலமாகும். மனிதப் பிறவி எடுத்திருக்கிற ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவித குறை இருக்கத் தான் செய்யும். குறையில்லாத மனிதன் கடவுளல்லவோ? ஆகவே குறைகளை நீக்கி குணத்தையே நாம் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வரிடத்திலும் ஒவ்வொரு விதமான குறையை நாம் கண்டு கொண்டு போனோமானால், கடைசியில் நாமே குறைமயமாகப் போய்விடு வோம். நம்மிடத்திலே அற்ப சொற்பமாயிருந்த நல்ல தன்மைகள் கூட நாளாவட்டத்தில் மறைந்தொழிந்து போகும். இது மகா ஆபத்து. ஆகவே, நம்முடைய சுய நன்மைக்காகவாவது, சுயவளர்ச்சிக் காகவாவது, மற்றவர்களைக் குறை கூறாமலிருப்பது நல்லது. மற்றவர்களைப் பற்றிக் குறைவாகப் பேசாதிருப்பதோடுகூட உன்னைப் பற்றியும் நீ தாழ்வாகப் பேசிக் கொள்ளக்கூடாது. அதே சமயத்தில் உன் பேச்சில் தன்முனைப்பும் இருக்கக்கூடாது. உன்னுடைய கல்வி விசேஷத்தைப் பற்றியோ, நீ செய்கிற தொண்டின் முக்கியத்துவத்தைப் பற்றியோ, அதிகமாக சிலாகித்துப் பேசாதே. மற்றவர்கள் உன்னுடைய அறிவு ஆற்றலைப் பற்றியும், உன்னுடைய சேவையின் மகத்துவத்தைப் பற்றியும் பேச வேண்டுமே தவிர, நீயே புகழ்ந்து கொண்டிருக்கக் கூடாது. அப்படிச் செய்வாயானால் மற்றவர் களுடைய பரிகாசத்திற்குத்தான் ஆளாவாய். பிரச்சார நிமித்தம் நீ வெளியூர்களுக்குச் செல்ல வேண்டி யிருக்கும். அப்படிச் செல்கிறபோது, குறைவான வசதிகளை எதிர்ப்பார்த்துப்போ. உன் வீட்டில் என்னென்ன வசதிகளுடன் இருந்தாயோ அந்த வசதிகளை யெல்லாம் நீ வெளியிடங்களில் எதிர்பார்க்கக்கூடாது. நீ ஓரிடத்திலே சென்று தங்குவது, அந்த இடத்திலுள்ளவர்களுக்குச் சந்தோஷமாயிருக்க வேண்டுமே யொழிய சங்கடமாயிருக்கக் கூடாது. யாருடைய அழைப்பின் மீது சென்றிருக்கிறாயோ அவர்களுடைய சௌகரியா சௌகரியங்களை நீ அனுசரித்துக் கொண்டு போகவேண்டும். இன்னின்ன விதமான உபசரணைகளை நீ எதிர்பார்க்கிறாய்,எந்தவிதமான சாப்பாடு உனக்குப் பிடிக்கும் என்பன போன்ற விஷயங்களை அவர்களுடைய விருப்பத்திற்கும் சௌகரியத்திற்குமே விட்டு விடு. நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ உன்னுடைய விருப்பு வெறுப்புகளைச் சொல்லாமலிருத்தல் நல்லது. எந்த இடத்திற்கு நீ சென்றாலும் தொண்டன் என்ற தோரணையில் செல்லு; தலைவன் என்ற தோரணையில் செல்லாதே. தலைமைப் பதவி, உன்னை நாடி வரவேண்டுமே தவிர அதனை நீ நாடிச் செல்லக்கூடாது. வெளியூர்களுக்கு நீ உன் சொந்தப் பணத்தைச் செலவிட்டுக் கொண்டு போனால், ரெயிலில் நீ எந்த வகுப்பிலே போனாலும் பரவா யில்லை. அப்படியே ஒரு பணக்காரர், உன்னை எந்த வகுப்பிலே அழைத்துக் கொண்டு போனாலும் அதைப் பற்றியும் கேள்வியில்லை. ஆனால் சாதாரண பொருளாதார ஸ்திதியுடைய ஒரு பொது ஸ்தாபனத்தின் செலவில் அல்லது அதன் அழைப்பின் மீது நீ செல்வாயானால் கூடியமட்டில் நீ மூன்றாவது வகுப்புப் பிரயாணியாகச் செல்வதே நல்லது. பொதுப்பண விஷயத்தில் நாம் மிகவும் சிக்கனமாயிருக்க வேண்டுமல்லவா? இப்படி மூன்றாவது வகுப்பிலே பிரயாணஞ் செய்வது எல்லோருக்கும் சாத்தியமில்லாதிருக்கலாம். தேக பலமில்லா தவர்கள், இருமல், காசம் போன்ற ஏதோ ஒரு தீராத வியாதியினால் எப்பொழுதும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறவர்கள், ஆகிய இப்படிப்பட்டவர்கள் மேல் வகுப்புகளில் பிரயாணஞ் செய்வதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். சிலருக்குப் பிரயாணத்தின் போதுதான் ஓய்வு கிடைக்கிறது; அமைதியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். இப்படிப் பட்டவர்கள் மேல் வகுப்புகளில் பிரயாணஞ் செய்வது நல்லது. ஏனென்றால் மறுநாள், சென்ற இடத்தில் இவர்கள் சுறுசுறுப்பாக வேலை பார்க்க முடியும். பிரயாணஅலுப்பைத் தீர்த்துக் கொள்வதற் கென்று ஒரு நாள் வீணாகாது. எதற்காக இந்தப் பிரயாணத்தைப் பற்றி இவ்வளவு தூரம் சொல்கிறேனென்றால், பொதுப்பணத்தைச் செலவிடுகிறபோது, நாம் கஞ்சர்களாக இருக்க வேண்டுமென்ப தற்குத்தான். வெளியூர்களுக்குச் செல்கிறபோது, அங்கே யாருடைய உதவியையும் நீ எதிர்பார்க்கக்கூடாது; யாரிடமிருந்தும் சலுகை பெற எண்ணக்கூடாது; குறைந்த வசதிகளை, மனமார, புன்சிரிப் போடு நீ ஏற்றுக் கொண்டு அதிகமான பலனைக் கொடுக்கக் கூடிய சேவையைச் செய்துவிட்டு வருவதே உன் நோக்கமாயிருக்க வேண்டும். மற்றவர் களுடைய நன்மைக்காக நீ இருக்கிறாயே தவிர, உன்னுடைய நன்மைக்காக மற்றவர்கள் இல்லையென்பது உன் நினைவில் எப்பொழுதும் இருக்கட்டும். உனது நன்மை நாடும், பாரத மாதா. 7. பொதுக்கூட்டம் தேச முன்னேற்றத்திற் கென்றே வாழ்க்கை நடத்த முன் வந்திருக்கிற என் மகனே! பிரச்சாரத்தின் ஒரு முக்கியமான பகுதி பொதுக்கூட்டம். நமது கொள்கையைப் பலரறியச் செய்யவேண்டு மானால், பலர் பின்பற்ற வேண்டுமானால், முக்கியமான சிலரை, அதாவது யார் வார்த்தைக்கு மதிப்பு இருக்கிறதோ அல்லது யார் சொல்கிற வார்த்தையை மற்றவர்கள் கேட்பார்களோ அப்படிப் பட்டவர்களைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசுவது ஒரு முறை; இன்னொரு முறை, பலரையும் ஒரு பொதுவான இடத்தில் கூட்டுவித்து அவர்களுக்குத் தமது கொள்கைகளை எடுத்துச் சொல்வது. முந்தின முறைக்கு நாம் சந்திக்கிற ஒவ்வொருவரையும் நாம் நன்கு தெரிந்து கொண்டிருக்க வேண்டும்; அவரும் நம்மைத் தெரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். பிந்தின முறைக்கு, எல்லோரையும் நாம் தெரிந்து கொண்டிருக்க வேண்டு மென்பது அவசியமில்லை. ஆனால் வந்திருக்கிற எல்லோரும் நம்மை ஏதோ ஒரு வகையில் தெரிந்து கொண்டிருப்பர். சிலர் நம்மைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பர்; ஆனால் பார்த்திருக்க மாட்டார். வேறு சிலர், நம்மை அடிக்கடி பார்த்திருப்பர்; ஆனால் நம்மை இன்னாரென்று தெரிந்திருக்க மாட்டார். நம்மைப் பார்த்திருப்பவர்களைக் காட்டிலும் நம்மைத் தெரிந்து கொண்டிருப்பவர்கள்தான் நமக்கு முக்கியம். அப்படிப்பட்டவர்கள்தான் நமக்குத் தேவை. ஏனென்றால் அவர்கள் நமது கொள்கைகளை ஜன சமுதாயத்தினிடையே கொண்டு பாய்ச்சுவதற்கான குழாய்கள் போன்றவர். நம்மைத் தெரியாதவர்களிடையே நம்மைத் தெரியப்பண்ணு வதற்கு ஏற்ற சாதனம் பொதுக்கூட்டம். தேச சேவையிலே ஈடுபட்டிருக் கிறவர், இந்தப் பொதுக் கூட்டத்தைப் பற்றி லேசாக நினைக்கக்கூடாது. அப்படி லேசாக நினைக்கிற மனப்பான்மை சிலரிடத்திலே இருப்பதால் தான் இதை எடுத்து நான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு திறந்த வெளியில், நாலுபேரைக் கூட்டி வைத்து, இரண்டொருவரை விஷயப் பொருத்தமில்லாமல் பேச வைத்துவிட்டால் அதனோடு பொதுக்கூட்டம் கூட்டி நடத்துகிற கடமை முடிந்துவிட்டதென்று சிலர் கருதுகின்றனர். அப்படி இல்லவே இல்லை. பொதுக்கூட்டத்தைக் கூட்டுவதென்றால் அதற்கென்று சில முன்னேற்பாடுகள் உண்டு; சில காரியக் கிரமங்கள் உண்டு. இவைகளெல்லாம் அனுசரித்துக் கொண்டு நடத்துகிற பொதுக்கூட்டத்தினால் உண்டாகிற பலன்களும் விசேஷமாக இருக்கும். பொது ஜனங்களைத் தன் கட்சிக்குத் திருப்பிக் கொள்ள விரும்புகிற எந்த ஒரு தலைவனும், பொதுக் கூட்டங்களைக் கூட்டுகிற விஷயத்திலும் அவைகளைத் திறம்பட நடத்துகிற விஷயத்திலும் பெரிதும் கவனஞ் செலுத்துகிறான். முஸோலினி, ஹிட்லர்,கமால் அத்ததூர்க், டிவேலரா ஆகியோர் இவ்விஷயத்தில் கைதேர்ந்தவர்கள். இவர்களுடைய இந்தத் திறமை, இவர்கள் அரசாங்கத் தலைமைப் பதவியைப் பெறுவதற்குப் பெரிது உதவி செய்தது. பொதுக் கூட்டங்களைக் கூட்டத் தெரிந்து கொள்வதற்கு முன்னர், பொதுக்கூட்டங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டு மென்பதைத் தெரிந்துக் கொள்வது அவசியமாகும். அப்படித் தெரிந்து கொள்வதனால், கூட்டம் கூடுகிறவர்களுடைய சிரமம் குறைகிறது; நம்முடைய உணர்ச்சியும் ஓர் ஒழுங்குக்குட்படுகிறது. ஆதலால், முதலில் பொதுக் கூட்டங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதைக் கீழே வரிசைப்படுத்திக் கூறுகிறேன். 1. கூட்டம் எத்தனை மணிக்குக் கூட இருக்கிறதோ அதற்கு முன்னதாகவே நீ போய் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு விட வேண்டும். நீ காலந்தாழ்ந்து போவதனால், கூட்டத்தைக் கூட்டுகிற வர்களும், காலந்தாழ்ந்தே கூட்டத்தைத் தொடங்க வேண்டியிருக் கிறது. மற்றும் காலந்தாழ்ந்துபோவதனால், நம்முடைய பொறுப் புணர்ச்சிக்கு நாமே மதிப்புக் கொடாதவர்களாகிறோம். எந்த நோக்கத்திற்காகக் கூட்டம் கூட்டப்படுகிறதோ அந்த நோக்கத்தில் நமக்கு எவ்வளவு அக்கறை யில்லை யென்பதைக் காட்டிக் கொள்கி றோம். ஆகவே குறிப்பிட்ட நேரத்திற்கு ஓரிரண்டு நிமிஷங்களுக்கு முன்னாடியாவது நீ கூட்டத் திற்குப் போய் விட வேண்டும். 2. கூட்டம் சுமார் இத்தனை மணி நேரத்திற்குள் முடியு மென்று உனக்கு உத்தேசமாகத் தெரியுமல்லவா? அத்தனை மணி நேரம்வரையில் நீ கூட்டத்திலே இருக்க முடியும், வேறு ஜோலி யில்லையென்று தெரிந்தால், முன் வரிசையில் போய் உட்கார்ந்து கொள். அதனால் உனக்கு நன்மை; மற்றவர்களுக்கும் அசௌகரிய மில்லை. அப்படிக்கின்றி கூட்டத்தின் நடுவிலேயே எழுந்து போக வேண்டியிருக்குமென்று தெரிந்தால், கடைசி வரிசையில், அதாவது மற்றவர்களுக்குத் தொந்திரவு கொடாமல் எழுந்து போகக்கூடிய ஓரிடத்தில் அமர்ந்துகொள். எழுந்து போகிற போது, ஓசைப் படுத்தாமலும் மற்றவர்கள் கவனம் உன்மீது படாதபடிக்கும் எழுந்து போ. பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் கூட்டம் முடிகிற வரையில் இருந்து விட்டுப் போவதுதான் நல்லது. அது தான், கூட்டத்தின் நோக்கத்தில் உனக்குச் சிரத்தை இருக்கிறதென்பதற்கு அடையாளம். 3. கூட்டத்திலே வந்து ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு விட்டபிறகு, பின்னாடி யார் யார் வருகிறார்கள் என்று அடிக்கடி திரும்பிப் பாராதே. அப்படியே பெண்கள் இருக்கிற பக்கம் ஆண்களும், ஆண்கள் இருக்கிற பக்கம் பெண்களும் முறைத்துப் பார்த்தல் மரியாதையல்ல. நம்முடைய கவனம் பூராவும் மேடை மீதே இருக்க வேண்டும். தவிர, கூட்டத்தின் வேறோரிடத்தில் நமக்குத் தெரிந்த யாராவது ஒருவர் வந்திருந்தால், அவரை அழைத்து நம் பக்கத்தில் உட்கார்த்திக் கொள்ள வேண்டு மென்பதற்காக அவரைக் கைதட்டிக் கூப்பிடுதலும் அல்லது சீட்டியடித்து அழைத்தலும் தவறாகும். 4. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இடை யிடையே நம் நண்பர்களோடு குசுகுசுவென்று பேசிக் கொண் டிருக்கக்கூடாது. பிரசங்கியாரைப் பற்றியோ, பிரசங்கத்தைப் பற்றியோ நம்முடைய அபிப்பிராயத்தை உடனுக்குடன் நம் நண்பர் களிடம் சொல்லித் திருப்தியடைந்து விடக்கூடாது. அதில் எவ்வித பெருமையுமில்லை. நாம் இடையிடையே பேசிக் கொண்டிருப்போ மானால், அது, பிரசங்கம் செய்கிறவர்களுடைய எண்ணப் போக்கைச் சிதைப்பதாகும். 5. பிரசங்கம் செய்கிறவர்களுடைய நடை, உடை, பாவனை களைப் பற்றியோ, அவர்கள் பிரசங்கம் செய்கிற தோரணையைப் பற்றியோ பரிகாசம் செய்வதும், அவர்களைச் சுட்டிக்காட்டிச் சிரிப்பதும், நம்மிடத்திலேயுள்ள கீழான தன்மைகளின் வெளித் தோற்றங்களாகும். நம்மைப் பார்த்து ஒருவர் பரிகசித்தாலோ அல்லது சிரித்தாலோ, நாம் எந்தவிதமான உணர்ச்சியை அடை வோம் என்பதைச் சிறிது யோசனை செய்து பார்த்துக் கொண்டோ மானால், அந்தப் பரிகாசத்தையும் சிரிப்பையும் சீக்கிரத்தில் விட்டு விடுவோம். 6. கூட்டத்தில் பிரசங்கம் செய்கிறவர்கள் அல்லது தலைமை வகிக்கிறவர்கள், தங்களைச் பேசச் சொன்னதற்காக அல்லது தலைமை வகிக்கச் சொன்னதற்காக வந்தனமளிப்பதாகச் சொல்வது ஒரு சம்பிரதாயம். இப்படி அவர்கள் சொல்கிறபோது கைத்தட்ட வேண்டிய அவசியமில்லை. அப்படியே அநுதாபத் தீர்மானம் நிறைவேற்றப் படுகிறபோதும் கைதட்டுதல் அனாவசியம். 7. பிரசங்கம் செய்கிறவர்களைப் பார்த்துச் சிலர் கேள்வி கேட்பதுண்டு. அப்படிக் கேள்வி கேட்பதில் தவறொன்றுமில்லை. ஆனால் நம்முடைய கேள்விகள், நமக்குள்ள உண்மையான சந்தேகத் தின் மீது எழுந்தவையாயிருக்க வேண்டும்; பிரசங்கம் செய்கிறவர் களுடைய திறமையைப் பரிசோதிக்கிற நோக்கத்தோடு கூடியதா யிருக்கக் கூடாது. கேட்கிற கேள்வியும் மரியாதையான பாஷையில் அமைந்திருக்க வேண்டும். சில பிரசங்கிகள், தங்களுடைய பதில்களை யோசித்துச் சொல்ல வேண்டுமென்பார்கள்;யோசித்துச் சொல்ல வேண்டிய பதில் களாகவே அவை இருக்கும். இதற்காக, பிரசங்கிகளைத் திறமையற்றவர் களென்று கருதிவிடக் கூடாது. ஒருவரைப் பார்த்துத் திறமையற்றவர் என்று சொல்லிவிடுவது சுலபம். அப்படிச் சொல்லி விடுவதனால் நாம் திறமையானவர்களாக எப்படி ஆகிவிடுவோம்? 8. சிலர், பிரசங்கம் கேட்கப்போகிற இடத்திலே, தின்பண்டங் களை எடுத்துக் கொண்டு போய், தின்ன ஆரம்பித்துவிடுகிறார்கள். இது மிகக் கேவலம். செவிக்குணவு பெறப்போகிற இடத்திலே வயிற்றுணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாமா? 9. இருமல், தும்மல் முதலியன அதிகமாகவுடையவர்கள், கைக்குழந்தையுடைய தாய்மார்கள் ஆகியோர், கூட்டத்தின் கடைசி வரிசையில் இருந்து கொள்ளுதல் நல்லது. அவசியமான பொழுது, கூட்டத்திலுள்ளவர்களுக்கு அசௌகரியமில்லாதபடி சிறிது எட்டினாற்போல் போவதற்கு அனுகூலமாகியிருக்கும். இனி, கூட்டத்தைக் கூட்டுகிறவர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை வரிசைப்படுத்திக் கூறுகிறேன். 1. கூட்டம் நடைபெறுகிற இடம், கூடியமட்டில் வெளிச்ச முள்ள தாகவும், காற்றோட்டமுடையதாயும் இருக்க வேண்டும். போதிய வெளிச்சமும் காற்றும் இல்லாவிட்டால் பேசுகிறவர்களுக்கு உற்சாகமும்,கேட்கிறவர்களுக்குச் சிரத்தையும் குறைந்து போய் விடுகிறது. எந்த நோக்கத்திற்காகக் கூட்டம் கூட்டப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேறுவதற்கு இடையூறு ஏற்பட்டுவிடுகிறது. ஆகவே நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் இருக்கிற இடத்தில், அதுவும் கொஞ்சம் விசாலமான இடத்தில் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்தல் அவசியமாகும். 2. கூட்டம் நடைபெறுகிற விவரத்தை, துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் கூடிய மட்டில் முன் கூட்டியே பொதுஜனங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். கூட்டம் கூட்டுகிறவர்கள் தங்கள் நண்பர்கள் சிலருக்குக் கூட்டம் நடை பெறுகிற விஷயத்தைத் தெரிவித்துவிட்டால் அதுவே போது மென்று நினைத்தால் அது தவறு. நண்பர்கள் பொதுஜனங்களல்ல. 3. கூட்டத்தை, குறிப்பிட்ட காலத்தில் தொடங்கி விட வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் தாமதப்படுத்தலாகாது. இதைக் கொஞ்சம் வலியுறுத்திச் சொல்ல வேண்டியது அவசியமா யிருக்கிறது. ஐந்து மணி என்று அறிவித்துவிட்டு ஐந்தரை மணிக்கு ஏன் தொடங்குகிறீர்கள் என்று கேட்டால் `இந்தியன் பங்சுவாலிடி (Indian Punctuality) என்று பல்லிளிக்கிறார் சிலர். இந்தியர்களுக்கென்று தனியான ஒழுங்கு முறை இருக்கிறதா என்ன? ஐந்து மணி என்று அறிக்கையில் வெளியிட்டால்தான், ஐந்தரை மணிக்காவது ஜனங்கள் வருவார்கள் என்ற எண்ணத்துடனேயே அறிக்கையைத் தயாரிப்பது, இந்தியர்களுக்கு மட்டும் ஏற்பட்டிருக்கிற விசேஷமான குணமா என்ன? இப்படிச் செய்வதனால் நம்முடைய ஒழுங்கற்ற தன்மையை நாமே ஊர்ஜிதம் செய்து கொள்கிறோம். இது மகா கேவலம். யார் வந்தாலும் வராவிட்டாலும், எவ்வளவு குறைவான பேர் வந்திருந்தாலும், குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தைத் தொடங்கிவிடுவதென்று சங்கல்பம் செய்து கொண்டு அப்படியே செய்து காட்டுங்கள். இரண்டொரு கூட்டங்களுக்குப்பிறகு, குறிப் பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே எல்லாரும் வந்து விடுகிறார்களா இல்லையா என்று பாருங்கள். 4. கூட்டத்திலே பேசவேண்டும், அல்லது தலைமை வகிக்க வேண்டுமென்று யாரையாவது கேட்க விரும்பினால், அவரவர் களுடைய வீட்டிலே போய்க் கேட்பதுதான் முறை. வழியிலேயே எங்கேயாவது சந்திக்கிற போதோ, அல்லது பொதுவான இடத்திலே யதேச்சையாகச் சந்திக்கிற போதோ கேட்டு சம்மதத்தைப் பெறப் பார்ப்பது உசிதமல்ல. யாருடைய உயர்வுக்கு நீ மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறாயோ, அந்த விருப்பத்தை நீ காரியாம் சத்தில் செய்து காட்டவேண்டுமானால், அவரவர்களுடைய வீட்டிலே சென்று அவரவர்களுடைய சம்மதத்தைப் பெறுதல் அவசியமாகும். 5. கூட்டம் நடைபெறுவதற்குக் குறைந்தது ஒருமணி நேரத்திற்கு முந்தியே, மேஜை நாற்காலிகளை உரிய இடங்களில் போட்டுவித்தல், அலங்காரங்கள் முதலியன செய்தல், யாராருக்கு மாலைகள் அணிவிக்க வேண்டுமோ அல்லது உபசாரப் பத்திரங்கள் வாசித்துக் கொடுக்க வேண்டுமோ அவைகளையெல்லாம் தயாராக வைத்துக் கொள்ளுதல், விளக்குகளெல்லாம் சரியாக இருக்கின் றனவா என்று பார்த்துக் கொள்ளுதல், ஒலி பரப்பும் கருவி ஒழுங் காக வேலை செய்கிறதா என்று சரிபார்த்தல் ஆகிய இப்படிப் பட்டவைகளை யெல்லாம் நன்றாகக் கவனித்து ஒழுங்குப்படுத்திக் கொள்ள வேண்டும். கூட்டம் தொடங்கியான பிறகு, அல்லது தலைவரோ, பிரசங்கிகளோ கூட்டத்திற்கு வந்த பிறகு மேற் சொன்னவைகளை ஏற்பாடு செய்தல் நம்முடைய அசிரத்தையையே காட்டும். எல்லா ஜோடனைகளும் பொருந்தியிருக்கிற ஒரு கூட்டத் திற்கு, ஜனங்கள் வருகிறபோதே ஓர் உற்சாகத்தை யடைகிறார்கள்; உணர்ச்சி பெறுகிறார்கள்; கூட்டத்தின் நோக்கத்திலே தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள். அப்படிக்கின்றி, அவர்கள் வந்து உட்கார்ந்த பிறகு அவர்கள் கண்முன்னேயே மேடையை அலங்கரிப்பது, மேஜை நாற்காலிகளை வரிசையாகப் போடுவது முதலிய காரியங்களைச் செய்து கொண்டிருப்போமானால், அவர்களுக்கு உற்சாகம் குன்றிவிடுகிறது; கூட்டத்தின் நோக்கத்திலே உள்ள சிரத்தையை இழந்து விடுகிறார்கள். ஆதலின் மேற்சொன்ன ஏற்பாடுகளையெல்லாம் முன்கூட்டியே செய்து கொண்டு விடுதல் மிகவும் அவசியமாகும். 6. கூட்டத்தில் தலைமை வகிப்போர், பிரசங்கம் செய்வோர் ஆகியோருக்கு ஒரேமாதிரியான மாலைகளை அணிவித்தலே உத்தமம். இவர்களுக்குள்ளே பாகுபடுத்திக் காட்டுவது உசிதமல்ல. 7. பிரசங்க அழைப்பில் யாரார் பெயர் குறிப்பிடப்பட்டிருக் கிறதோ அவர்களை மட்டும் பேசச்செய்ய வேண்டும். வந்திருக்கிற வர்களில் சிலர் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவராயிருந்தாலும், எத்தகைய உயர்பதவியிலுள்ளவராக இருந்தாலும், எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவர்களைப் பேசவைத்தால், கூட்டத்தின் ஒழுங்கு முறைக்கு விரோத மாகும். தவிர, கூட்டத்திற்குப் பிரசங்கம் கேட்க வந்திருப்பவர் களைத் திடீரென்று பேசச் சொல்லுதல், அவர் களுடைய திறமையைப் பரிசோதனை செய்வது போலாகும். 8. கூட்டத்திற்குத் தலைமை வகிப்பவர்கள் அல்லது முக்கிய மான பிரசங்கிகள் ஆகியோருக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுத்தல் என்பது இப்பொழுது ஒரு சம்பிரதாயமாகி விட்டது. இந்தச் சம்பிரதாயத் திற்கு அடிப்படையில் எந்த அளவுக்கு உண்மை யான மதிப்பு இருக்கிற தென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். சம்பிரதாயத்திற்காக உபசாரப் பத்திரங்கள் வாசித்துக் கொடுப் பதைக் காட்டிலும், உண்மையான மதிப்பு இருந்து உபசாரப் பத்திரங்கள் வாசித்துக் கொடாமல் இருப்பதே நல்லது. கஞ்சனைக் கர்ணன் என்று அழைப்பதிலே என்ன அர்த்தமிருக்கிறது? அப்படி அழைத்து,அழைக்கப்படுகிறவரை அவருக்கு உரியதல்லாத ஒரு ஸ்தானத்தில் வைத்துவிடுகிறோம். அதாவது அவருடைய உண்மை நிலையை அவருக்கு அறியாமல் செய்து விடுகிறோம். இது,அவருக்கு நாம் செய்கிற நன்மையாகுமா? 9. பிரசங்க அழைப்பில் இன்னார் தலைமை வகிப்பார் என்று அறிவித்துவிட்டுப் பின்னர், கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் அவரைத் தலைவராகப் பிரேரிப்பதும், ஆமோதிப்பதும் பெரும் பாலான கூட்டங்களில் நடைபெறுகிற வழக்கமா யிருக்கிறது. இது அவசியமென்று சிலரும், அனாவசியமென்று வேறு சிலரும் கருது கின்றனர். இரண்டு கட்சிகளிலும் நியாயம் இருக்கிறது. பிரசங்க அழைப்பைப் பாராமலே, ஏதோ கூட்டம் நடைபெறுகிறதே, பார்த்து விட்டுப் போகலாமேயென்று சிலர் கூட்டத்திற்கு வந்திருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இன்னார் தலைவர் என்று அறிமுகப்படுத்த வேண்டியதும், தலைவர் மூலமாக இன்னார் பிரசங்கிகள் என்று அறிமுகப்படுத்த வேண்டியதும் அவசிய மாகிறது. ஆகவே, பிரசங்க அழைப்பில் தலைவர் பெயர் பொறிக்கப் பட்டிருந்தாலும் கூட்டத்தில் அவர் பெயரைப் பிரேரணை செய்து அவரைத் தலைமை ஸ்தானத்தில் அமர்த்துவது அவசியமாகு மென்று சிலர் சொல்கின்றனர். எப்பொழுது பிரசங்க அழைப்பில் தலைவர் பெயரையும், பிரசங்கத்தின் பெயரையும் தெரியப்படுத்தி விட்டோமோ பிறகு அவர்களைப் பற்றிக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்க வேண்டியதே அவசியமில்லையென்று வேறு சிலர் கருதுகின்றனர். இரு சாராருடைய கருத்திலும் பிழையில்லை. ஆதலின் இதனை அடிப்படையாகக் கொண்ட சச்சரவே தேவையில்லை. 10. கூட்டத்தின் முடிவில் வந்தனோபசாரம் சொல்வதென்கிற சம்பிரதாயத்தை எவ்வளவு சுருக்கமாகச் செய்து முடிக்க வேண்டுமோ அவ்வளவு சுருக்கமாகச் செய்து முடிக்க வேண்டும். கூட்ட முடிவில் ஜனங்கள் வீடு திரும்பவேண்டுமென்ற ஆவலில் இருக்கிறபோது, அவர்களைச் சம்பிரதாயமான சில வார்த்தை களைக் கேட்பதற்காகக் காக்க வைக்க வேண்டியது அவசியமில்லை. இதனால் அவர்களுக்குச் சலிப்பே ஏற்படும். மேலே சொன்னவைகளைத் தவிர, இடத்திற்கும் காலத் திற்கும் ஏற்றாற்போல், கூட்டங்களை நடத்துதல், கூட்டங்களில் நடந்து கொள்ளுதல் ஆகியவைகளில் என்னென்ன சேர்க்க வேண்டுமோ அல்லது எப்படி எப்படி மாற்றிக்கொள்ள வேண்டுமோ அப்படியெல்லாம் செய்து கொள்ள உனக்குத் தெரியாதா என்ன? உன் சேவையினால் சோபிக்க விரும்பும், பாரத மாதா. 8. பிரசங்கம் மகனே! பேச்சு ஒரு கலை; அதை நீ பயில வேண்டும்; அதில் நீ வல்லவனாக வேண்டும். அப்பொழுதுதான் உன்னுடைய பிரச்சாரம் பலனுடையதாயிருக்கும். பேச்சிலே என்ன இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. பேச்சைக் காட்டிலும் செயல் முக்கியம் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் செயலுக்குத் தூண்டுவது பேச்சு என்பதை நீ மறந்துவிடக் கூடாது. இன்னின்னபடி ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று உனக்கு எப்படித் தெரிகிறது? பிறர் சொல்லக் கேட்டுத்தானே? கல்விச் செல்வத்தைக் காட்டிலும் கேள்விச் செல்வம் விசேஷமானதென்று சொல்வார்கள். இந்தக் கேள்விச் செல்வம் எதனை முக்கியமாகக் கொண்டு பெருமையடைகிறது? பேச்சையல்லவோ? ஒருவர் சொல்லித்தானே மற்றவர் கேட்க வேண்டும். ஆதலின், பேச்சென்ன வேண்டியிருக்கிறதென்று அலட்சியப் படுத்தக்கூடாது. ஆனால் பேச்சுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, மற்ற சிந்தனை, செயல் எல்லாவற்றையும் இரண்டாம் பட்சமாகக் கருதாமலிருக்க வேண்டும். அதுதான் முக்கியம். செயலுக்குப் பேச்சு ஒரு கருவி. அந்தக் கருவிக்குள்ள கௌரவத்தை அதற்கு நீ கொடுக்க வேண்டும். அந்தக் கருவியை நன்றாக உபயோகிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படித் தெரிந்து கொண்டால்தான் நீ எடுத்த காரியத்தை நன்றாகச் செய்து முடிக்க முடியும். பிரசங்கம் செய்வதென்பது சுலபமல்ல. அதற்கு வெறும் படிப்பு மட்டும் இருந்தால் போதாது; உலக அனுபவம் மட்டும் இருந்தால் போதாது. நீ படித்ததையும், உன்னுடைய அனுபவத்தை யும் மற்றவர் களுடைய மனத்தில் பதியும்படியாக எடுத்துச் சொல்கிற சக்தி உனக்கு இருக்க வேண்டும். இந்தச் சக்தி நாள்பட்ட பயிற்சி யினால்தான் ஏற்படும். நீ ஒரு நல்ல பிரசங்கியாகப் புகழ் பெற வேண்டுமானால், முதலாவது உன்னுடைய திறமையிலே உனக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். இது மிகவும் சிக்கலான விஷயமாயிற்றே; எல்லோருக்கும் விளங்கும்படி இதை நாம் சொல்லமுடியுமா என்ற சந்தேகம் அல்லது அதைரியம் உனக்கு ஏற்பட்டு விடுமானால், உன் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வெளிவராது. உன்னுடைய படிப்பு, நீ அடைந்திருக்கிற உலக அனுபவம் எல்லாம் பிறர்க்குப் பயன்படாமல் வியர்த்தமாகிவிடும். இரண்டாவது, உனக்கு நிறைய ஞாபக சக்தி இருக்க வேண்டும்; அப்படி இருப்பதோடு கூட, அது உன்னை நல்ல சந்தர்ப்பத்தில் கைவிட்டு விடாமல் அதனைப் பழக்கப்படுத்தி வைத்திருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பழமொழியை நீ அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாய்;அது உன் நினைவின் முன்னணியில் இருக்கும். இருந்தாலும் ஒரு நல்ல பிரசங்கத்தில்,நீ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருக்கிறபோது, அந்தப் பழமொழியை உபயோகிக்க வேண்டுமென்று கருதி அதனைச் சொல்ல வாயெடுப்பாய்;அது வரவே வராது. அது-அந்தப் பழமொழி-உன் நினைவி லிருந்து ஒதுங்கியிருந்து, உன்னை வேடிக்கை பார்க்கும். நினைவுக்கு வராமல் தலையைச் சொறிவாய்; மேலே வார்த்தைகள் வராமல் தடுமாறு வாய்; `அந்தப் பழமொழியை ஞாபகமிருந்தால் சொல்லுங்களேன் என்கிற மாதிரியாகப் பக்கத்திலுள்ளவர்களைப் பார்த்துப் பல்லை இளிப்பாய். இந்த மாதிரியான நிலைமை உனக்கு ஏற்படாதபடி உன் ஞாபக சக்தியைப் பாதுகாத்து வளர்த்துக் கொள்ளவேண்டும். மூன்றாவது, எந்தப் பாஷையிலே பிரசங்கம் செய்ய இருக்கிறாயோ, அந்தப் பாஷையில் நீ பூரண பாண்டித்தியம் பெற்றிருக்கவேண்டும்; அந்தப் பாஷையின் நெளிவு சுளுவுகள், ஓசை நயங்கள் எல்லாம் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். நீ மனத்தில் என்ன எண்ணியிருக்கிறாயோ, எந்தக் கருத்தை வெளியிட வேண்டு மென்று நீ விரும்புகிறாயோ, அதற்குச் சரியான வார்த்தைகளை உபயோகிக்க உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். நீ ஏதேனும் ஒன்றைச் சொல்ல விரும்பலாம்; ஆனால் அதை வெளியிடுவதற்குச் சரியான வார்த்தை அகப்படாமல், ஏதோ ஒன்றைச் சொல்லியாக வேண்டுமே யென்பதற்காக வேறொரு வார்த்தையைச் சொல்லி வைப்பாய். அது விபரீத அர்த்தம் கொடுத்து விடும். நீ தவறாகக் கருதப்பட்டு விடுவாய். உன் சங்கல்பத்துக்கு இடையூறு ஏற்படும். ஆதலின் இந்த மாதிரியான நிலைமைக்கு நீ உன்னைக் கொண்டு வரக்கூடாது. ஒரு பாஷையின் மீது உனக்குப் பூரண ஆதிக்கம் இருந்தால்தான் உனக்கு இந்த மாதிரியான நிலைமை ஏற்படாமல் இருக்கும். நான்காவது, உன் குரலை நீ நன்றாக வைத்துக் கொண்டிருக்க வேண்டும். இது விஷயத்தில் ஒரு சங்கீத வித்துவானும் ஒரு பிரசங்கியும் ஒரே மாதிரியானவர்கள். சாரீரம் இல்லையானால் சங்கீதத்திற்கு இனிமையில்லை. அதுபோல் ஒரு பேச்சாளனுக்கு நல்ல குரல் இல்லையானால் அவனுடைய பேச்சு எடுபடுவதில்லை. ஆகவே இது விஷயத்தில் நீ அதிக கவனஞ் செலுத்த வேண்டும். கட்டைக் குரல் என்று சொல்கிறார்களே அப்படிப்பட்ட குரலுடைய வர்கள் சிறந்த பிரசங்கிகளாயிருக்க முடியாது. பிரசங்கத்திற்கு கம்மிய குரலும் கூடாது; கீச்சுக் குரலும் கூடாது; நயமும் கம்பீரமும் கலந்த குரல் இருக்க வேண்டும். சங்கீதத்திலே எப்படி ஆரோகணம் அவரோகணம் என்று சொல்வார்களோ அதைப்போல் பிரசங்கத் திலும் குரலை உயர்த்த வேண்டிய இடத்திலே உயர்த்த வேண்டும்; தாழ்த்த வேண்டிய இடத்திலே தாழ்த்த வேண்டும். இதற்கு உன் குரலைப் பழக்கப்படுத்திக் கொள்வது அவசியமாகும். ஐந்தாவது, உன் சரீர போஷணை, சாரீரம் ஒழுங்காயிருக்க வேண்டுமானால் சரீரம் ஒழுங்காயிருக்க வேண்டும். அதனை நீ நன்றாகப் போஷித்துப் பாதுகாக்க வேண்டும். சரீரத்தைப் போஷீக்க வேண்டு மென்றால் கண்ட பொருள்களையும் வயிற்றிலே கொண்டு திணித்து உடம்பைப் பருமனாக்கிக் கொள்வது என்பது அர்த்த மல்ல. உண்ணல், உறங்கல், வேலை செய்தல் எல்லாவற்றிலுமே ஒரு நியாயம் இருக்க வேண்டும். ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறபடி, எல்லா இடங்களுக்கும் எல்லாக் காலங்களுக்கும் ஒத்துக் கொள்ளக் கூடியதாய் உன் தேகத்தை நீ வைத்துக் கொள்ள வேண்டும். சரீர போஷணைக்கும் பிரசங்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீ கேட்கலாம். அடிக்கடி பிரசங்கள் செய்கிறவன் அதிகமான மூச்சைச் செலவழிக்க வேண்டியவனாயிருக்கிறான். மூச்சு செலவழிய செலவழிய இருதயம் பலவீன மடைகிறது. இருதய பலவீனம் தேகபலவீன மல்லவோ? ஆகையால் இந்தப் பலவீனம் அதிகமாக ஏற்படாதபடி தேகத்தைப் போஷித்து வரவேண்டும். இப்படிப்பட்ட தகுதிகளெல்லாம் உனக்கு இருக்கிறதாவென்று பார்த்துக் கொண்டு, அப்படியில்லையானால் அவைகளைச் சம்பாதித்துக் கொண்டு பிறகே நீ பிரசங்க மேடையில் ஏற வேண்டும். இதற்குச் சில வருஷ காலம் பிடிக்கலாம். அதற்காக நீ சலிப்படையக் கூடாது. இந்தப் பயிற்சிக் காலத்தில் நீயே தனியாக இருந்து பேசிப்பேசிப் பழகிக்கொள்ள வேண்டும். miwÆny Mo¤jhnd m«gy¤â‰F tunt©L«?அப்படிப் பழகிக் கொள்கிறபோது, உன் முன்னே ஒரு பெரிய கண்ணாடியை வைத்துக்கொண்டு, பேசிப்பேசிப் பழகிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உன் முகத்திலே ஏற்படுகிற கோணல்கள், உன் தேகம் அவயவங்கள் செய்கிற சேஷ்டைகள் எல்லாம் உனக்குத் தெரியும்; அவைகளை நீ திருத்திக் கொள்ள முடியும். நீ எவ்வளவுதான் பயிற்சி செய்து கொண்டிருந்தாலும், உன் சிநேகிதர்களுக்கும் மத்தியில் நீ வாசாம கோசரமாகப் பேசி வந்தாலும், ஒரு பொதுக்கூட்டத்தில் நீ முதன் முதலாகப் பேசத் துவங்குகிறபோது உனக்கு நிரம்ப சிரமமாகவே இருக்கும். உன் மார்பு படபடவென்று அடிக்கும்; உடம்பெல்லாம் வியர்க்கும்; கைகால்கள் நடுங்கும்; மறதியென்பது உன்னை ஆட்கொண்டு விடும்; பேசுகிறபோது நாக்குழறும். ஆரம்பத்தில் எல்லாப் பிரசங்கி களுக்கும் இது சகஜமாக ஏற்படக்கூடியது தான். இதற்காக நீ சோர்வடைந்து போகக்கூடாது. நாளாவட்டத்தில், அதாவது ஐந்தாறு கூட்டங்களில் பேசிப் பழகியானபிறகு உனக்கு இந்த நிலைமை மாறிவிடும். உனக்கு ஒரு தைரியம் உண்டாகும். பழகப் பழக, கடினமானதுகூட சுலபமாகி விடுமல்லவா? ஆனால் இப்படி நன்றாகப் பழகி விட்டோமோயென்ப தற்காக, எந்தப் பிரசங்கத்திற்கும் அலட்சியமாகப் போகக் கூடாது. கூட்டத்திற்குப் போய் மேடையிலே ஏறி நின்ற பிறகு என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்லி உட்கார்ந்து விடலாமென்று எண்ணக்கூடாது; அல்லது, நமக்கு முன்னாடி யார் பேசுகிறார்களோ அவர் பேச்சை அனுசரித்துச் சில வார்த்தைகள் சொன்னால் போகிறதென்று கருதக்கூடாது. இப்படி நீ கருதுவது, உன்னுடைய திறமையைப் பற்றி நீ அதிகமாக எண்ணிக் கொண்டிருக்கிறாய், அதில் உன்னை இழந்து விட்டிருக்கிறாய் என்பதுவே அர்த்தம். இது உன்னுடைய முன்னேற்றத்தின் அடையாளமல்ல. உன்னுடைய திறமையின் அளவை நீ நன்கு தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அந்தத் திறமையைச் சரியானபடி தக்க சந்தர்ப்பத்தில் உபயோகிப் பதிலேயே உன்னுடைய வளர்ச்சி இருக்கிறது. பிரசங்கம் செய்கிற விஷயத்தில் உனக்கு எத்தனை வருஷ அனுபவம் இருந்தபோதிலும், ஒவ்வொரு பிரசங்கத்திற்கும் போதிய தற்காப்புடன்தான் நீ போகவேண்டும். நீ எந்த விஷயத்தைப் பற்றிப் பேசப் போகிறாயோ அதைப் பற்றி, பிரசங்கத்திற்குக் குறைந்தது ஒரு நாள் முந்தியிருந்தாவது நன்றாகச் சிந்தனை செய்; அவசியமான நூல்களைப் படி; தேவையான குறிப்புகள் எடுத்துக் கொள். அப்படி எடுத்துக் கொண்ட குறிப்புகளை நன்றாக ஜீரணம் செய்து கொள். பிறகு அக்குறிப்புகளிலிருந்து சிறுகுறிப்பு ஒன்று தயாரித்துக் கொள். இந்தக் குறிப்புடன்தான் நீ ஒவ்வொரு பிரசங்கத்திற்கும் செல்ல வேண்டும். குறிப்பில்லாமல் பிரசங்கம் செய்வதுதான் கௌரவம் என்று கருதாதே. சொல்ல வேண்டியதை ஒழுங்காகவும் விஷயத் தொடர்புடனும் சொல்ல வேண்டுமானால் சிறுகுறிப்பு அவசியம். உன் குறிப்பிலே நீ வரிசைக் கிரமமாகக் குறித்துக் கொண்டிருக்கிற விஷயங்கள், பாதையிலே இருக்கும் மைல் கற்கள் மாதிரி. இந்த மைல் கற்கள், ஒரு பிரயாணிக்கு எப்படி உதவியா யிருக்கின்றனவோ அப்படியே, மேற்சொன்ன குறிப்புகள், ஒரு பிரசங்கிக்கு உதவி செய்கின்றன. எந்த ஒரு பிரசங்கத்தையும் முக்கால் மணி நேரத்திற்குள் முடித்து விடு. அதற்கு மேல் போனால், கேட்கிறவர்களுக்குச் சலிப்பு ஏற்பட்டாலும் ஏற்படக்கூடும். அப்படி ஒரு தரம் ஏற்பட்டு விடுமேயானால் பிறகு உன் பிரசங்கங்களுக்கு ஜனங்கள் கூடுவது கஷ்டம்; அவர்களுக்கு உன் பிரசங்கத்தைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் தணிந்துவிடும். எப்பொழுதுமே ஒரு பிரசங்கத்தை, இன்னும் பேசமாட்டாரா என்று ஜனங்கள் ஆவல் காட்டுகிற நிலையிலேயே முடித்து விட வேண்டும். அப்பொழுதுதான் அடுத்த பிரசங்கத்திற்கு வருவார்கள். பிரசங்க வெற்றிக்கு இது ஒரு ரகசியம். தவிர, ஒரு பிரசங்கத்திலேயே எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டுமென்று ஆத்திரப்படாதே. முக்கால் மணி நேரத்திற்குள் உன் புலமையைக் காட்டிவிட முடியாது. உன் பிரசங்கத்திற்கு என்ன தலைப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை யொட்டினாற் போன்ற சில விஷயங்களைப் பற்றி, குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிந்து விடக் கூடிய மாதிரி நீ பேச வேண்டும். அதில்தான் உன் சாமர்த்தியம் இருக்கிறது. பேசுகிறபோது பாட ஆரம்பித்து விடாதே. அப்படியே பாடுகிறபோது பேசக் கூடாது. பிரசங்கத்தின் நடுவில், பழைய நூற்களிலிருந்து ஏதேனும் மேற்கொள் எடுத்துச் செல்ல வேண்டு மானால் அதை இசையோடு, ஆனால் ராக ஆலாபனை முதலிய எதுவுமில்லாமல், சொல்லி முடித்து விடு. ஒவ்வொரு பிரசங்கத்தின் போதும், ஜனங்கள் எந்த மனப் பான்மையில் இருக்கிறார்கள், எந்த உணர்ச்சியில் இருக்கிறார்கள் என்பவைகளை நீ நிதானித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஜனங்களைச் சந்தோஷிப்பிக்க வேண்டுமென்பதே உன் நோக்கமா யிருக்கக்கூடாது; அவர்களை நல்ல வழியில் திருப்புவதே உன் நோக்க மாயிருக்க வேண்டும். வாழ்க்கையிலே லவலேசமும் பிரயோஜன மில்லாத விஷயங்களைச் சொல்லி இன்று நீ ஜனங்களைச் சிரிக்க வைக்கலாம்; அவர்களும், நீ மேடையிலே ஏறி நின்றவுடன் உன்னைப் பார்த்துக் கைகொட்டி ஆரவாரம் செய்யலாம். ஜனங்கள் உன் மீது காட்டுகிற அபிமானம் என்று இதனைக் கருதாதே. அதே ஜனங்கள், இன்று உன்னைக் கண்டவுடன் கைகொட்டிய ஜனங்கள், நாளை உன் மீது கல் வீசி எறியலாம். உண்மையிலேயே நீ ஜனங்களுடைய அபிமானத்தைப் பெற வேண்டுமானால், அவர்களுடைய அறிவை வளர்க்கிற வகையில், வாழ்வை உயர்த்துகிற வகையில் நீ பேச வேண்டும்; காரியங்களைச் செய்ய வேண்டும். நீ அவர்களுக்கு நன்மையானதைத்தான் சொல்கிறாய் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டாக வேண்டும். இதற்குச் சிறிது காலம் பிடிக்கும். இருந்தாலும் நீ பொறுமையோடிருந்து அவர்களுடைய நம்பிக்கையை முதலில் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். பெண்களும் ஆண்களும் நிறைந்திருக்கிற கூட்டத்தில் நீ மிகவும் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும். நாசூக்கில்லாத ஒரு வார்த்தையை வாய் தவறிச் சொல்லிவிட்டால் கூட உன் மீது ஒரு வித அருவருப்பு ஏற்பட்டு விடும். பெண்களைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுமேயானால், கூட்டத்திற்கு வந்திருக்கும் பெண்கள் கொஞ்சமும் கூச்சமின்றி, தலைகுனிந்து கொள்ளாமல், கேட்கக் கூடிய மாதிரி நீ பேச வேண்டும். பெண்கள் முன்னிலையிலே பேசுவது, தொம்பரவன் ஒரு நூல் கயிற்றின் மீது ஏறி நடக்கிற மாதிரி. உன்னையும் மீறின தேக அசௌகரியம் உனக்கு இருந்தா லொழிய பொதுவாக நின்று கொண்டே பேசப் பழகிக் கொள். அப்பொழுதுதான் உன் பேச்சுக்கு ஒரு கம்பீரம் இருக்கும். அப்படி நிற்கிறபோது நன்றாக நிமிர்ந்து நில்; ஜனங்கள் மீது பொதுவாக உன் பார்வை செல்லட்டும். பிரசங்கத்தின் போது யாரையும் குறிப்பாகப் பாராதே. கைகால்களை அநாவசியமாக ஆட்டாதே. உன் உணர்ச்சி களை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பேச நேரிடுகிறபொழுது, முடிந்தமட்டில் உன் அங்க அவயவங்களின்மீது கவனம் இருக்கட்டும். பேசுகிறபோது சிலை போல் ஓரிடத்திலேயே நின்று கொண்டு பேசவேண்டுமென்பது அவசியமில்லை. இடம்விட்டு இடம் பெயரலாம். ஆனால் அப்படிப் பெயர்வது, ஜனங்கள் கவனியாதபடி இருக்க வேண்டும். அதாவது நீ இடம்விட்டு இடம் மாறுவதை அவர்கள் குறிப்பாகக் கவனிக்கும்படி நீ நடந்து கொள்ளக் கூடாது. உன் பேச்சிலே அவர்கள் பூரணமாக ஈடுபட் டிருக்கிறபொழுது அந்தப் பேச்சோடு பேச்சாக உன் இடமாற்றமும் இருக்க வேண்டும். கடைசியாக ஒன்று சொல்கிறேன். பிரசங்கத்திற்கு ஒப்புக் கொண்டு விட்டபிறகு எந்தக் காரணத்தை முன்னிட்டும் அந்தப் பிரசங்கத்திற்குப் போகாமலிருக்கக் கூடாது. இந்த விஷயத்தில் முக தாட்சண்யம் என்பது கூடவே கூடாது. பிரசங்கத்திற்கு வர முடியாதென்று தோன்றினால் அதை முதலிலேயே சொல்லிவிட வேண்டும். அதுதான் நேர்மை. வாழ்க்கையில் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய தல்லவோ உன் கடமை? உனது நலன் விழையும், பாரத மாதா. 9. கட்சிக் கட்டுப்பாடு அப்பனே! நீ ஏதேனும் ஒரு கட்சியில் சேர வேண்டியிருக்கு மானால் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிவிக்க விரும்புகிறேன். பொதுவாக அரசியலைப் பற்றின விவகாரங்களில்தான் கட்சிகள் ஏற்படுகின்றன. கட்சியென்ற வார்த்தையையே அரசியலைப் பொறுத்த விஷயங்களுக்குத்தான் அநேகமாக உபயோகப்படுத்து கிறார்கள். ஆதலின் நான் இங்கே சொல்வதெல்லாம் அரசியல் கட்சிகளைப் பற்றியேயாகும். ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள், பல்வேறு பாஷையினராகவும், பல்வேறு மதத்தினராகவும், பல்வேறு ஜாதியினராகவும், ஏன், பல்வேறு நாட்டினராகவும் கூட இருக்கலாம். ஆனால் இவர்கள் ஒரே லட்சிய முடையவர்களாயிருக்கவேண்டும்; அந்த லட்சியத்தை யடைவதற்கு ஒரே பாதையில் செல்லுகிறவர்களாக இருக்க வேண்டும். உதாரணமாக, சமதர்மக் கட்சி (பொதுவுடைமைக் கட்சி) இருக்கிறது. இது உலகமெல்லாம் பரவியிருக்கிறது. இதில் சர்வ தேசத்தினரும் அங்கத்தினர்களாக யிருக்கிறார்கள். ஆயினும் இவர்கள் ஒரு கட்சியினரே. இங்ஙனம் ஒரே லட்சியமுடையவர்களா யிருந்து, அந்த லட்சியத்தை யடைவதற்கு ஒரே மார்க்கத்தைக் கடைப்பிடிக்கிற வர்கள், குறைந்த பட்சம் வருஷத்திற்கொருதரமாக ஓரிடத்தில் கூட வேண்டும்; சில காரியக் கிரமங்களுக்குட்பட்டு நடக்கச் சம்மதிக்க வேண்டும். இப்படிப் பட்டவர்கள்தான் ஒரு கட்சியினர் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியுடையவர்கள். லட்சியம் மட்டும் ஒன்றாயிருந்தால் போதாது; அதை அடைகிற வழியும் ஒன்றாயிருக்க வேண்டும். இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இப்படிப்பட்டவர்களே ஒரு கட்சியினராக இருக்க முடியும். ஒரே லட்சியமுடையவர்கள், ஆனால் அதனை யடைவதற்கு வேறு வேறு வழிகளில் செல்கிறவர்கள் ஒன்று சேருவார்களானால் அவர்களை ஒரு கட்சியினர் என்று சொல்ல முடியாது; ஓர் இயக்கத்தினர் என்றே சொல்ல வேண்டும். கட்சி என்ற வார்த்தையைச் சொல்கிறபோது, அதில், கட்டுப்பாடு என்ற அர்த்தம் தொனிப்பதை நீ நன்கு உணரலாம். தன்னிச்சைப்படி நடக்கும் சுபாவமுடையவர்கள் ஒரு கட்சியில் சேரத் தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள். ஒரு கட்சியில் சேர்ந்து விட்டால், உரிமை, ஓரளவு குறைகின்றது என்பது வாஸ்தவம். ஆனால் அந்த உரிமை ஒரு வரம்புக் குட்பட்டிருக்கிற போதுதான், புனிதமும், பிரகாசமும் அடைகின்றது. அரசியல்வாதிகள் சிலர், தாங்கள் எந்தக் கட்சியிலும் சேர்ந்தவர்களில்லையென்றும், தாங்கள் சுயேச்சைவாதிகள் என்றும் சொல்லிப் பெருமை கொள்கிறார்கள். இப்படிச் சொல்லிக் கொள் வதில் அர்த்தமே யில்லை. இவர்களைச் சந்தர்ப்பவாதிகள் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்கள், யாருடைய நம்பிக்கைக்கும் உரியவரா யிருக்க முடியாது. எந்தக் கட்சியிலும் இவர்கள் சேரவில்லை யென்றால் எந்தக் கொள்கையும் இவர்களுக்கு இல்லையென்பதே அர்த்தம். எப்பொழுது அரசியல் அரங்கத்தில் பிரவேசித்து விட்டோமோ அப்பொழுதே ஏதேனும் ஒரு கட்சியில் சேர்ந்து கொள்ளத்தான் வேண்டும். அதுதான் நம்முடைய ஒழுங்கான வளர்ச்சிக்குத் துணை செய்யும். ஆனால் நாம் சேருகிற கட்சியானது, தேச நலனை நாடுவதாய், சமுதாய ஒற்றுமையை வளர்ப்பதாய் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கட்சியிலே சேருவதற்கு முன்னர், அதன் விதிகளை நன்றாகப் படித்துத் தெரிந்து கொள். அந்த விதிகளின் படி உன்னால் நடக்கமுடியுமா என்று நன்றாக யோசித்துப்பார். பிறகு கட்சியில் சேர்ந்து கொள். சுயநலத்திற்காக ஒரு கட்சியில் சேராதே. அப்படிச் சேருவா யானால், உனது சுயநலம் பூர்த்தியானவுடன் அந்தக் கட்சியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் உண்டாகும். சரி, அப்படியே விலகிக் கொண்டு விடுகிறாய். பிறகு வேறொரு சந்தர்ப்பத்தில் வேறொரு கட்சியில் சேர விரும்புவாயானால் அப்பொழுது அந்தக் கட்சி, உன்னைச் சேர்த்துக் கொள்ளுமா? உன் மீது அவநம்பிக்கை கொள்ளாதா? அற்பத்திற்கு ஆசைப்பட்டு உன்னுடைய அரசியல் வாழ்வையல்லவா களங்கப்படுத்திக் கொண்டு விடுகிறாய். சுயநலத்திற்காக ஒருவன் அரசியல் துறையில் இறங்குவானாகில் அவன் அந்தத் துறையையும் கலக்கிவிட்டு, தன்னையும் களங்கப்படுத்திக் கொள்கிறான். கட்சியிலே சேர்ந்து கொண்டு விட்ட பிறகு, அதன் கூட்டங் களுக்கு நீ தவறாமல் செல்ல வேண்டும்; கூட்ட நடவடிக்கைகளில் நீ சுறுசுறுப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். அதாவது, விஷயங் களைத் தெளிவுபடுத்து வதற்காகவும் தெளிவுப்படுத்திக் கொள்வதற் காகவும் நீ வாதங்களில் கலந்து கொள்ளவேண்டும். விஷயத்திற்காக வாதம் செய்யலாமே தவிர, ஆளுக்காகவோ, வாக்கு வன்மையை வெளிப்படுத்துவதற்காகவோ வாதம் செய்யக்கூடாது. கட்சிக் கூட்டத்தில் சில சமயங்களில் உன்னுடைய அபிப்பி ராயம் ஏற்றுக் கொள்ளப்படலாம்; சில சமயங்களில் நிராகரிக்கப் படலாம்; அதற்காக உற்சாகமோ சோர்வோ அடையக்கூடாது. கட்சிக் கூட்டத்தில் உன் கருத்துக்களை நீ தாராளமாக எடுத்துச் சொல்லலாம். பிறகு, கட்சியினர் ஒரு முகமாக அல்லது பெரும் பாலோராக என்ன தீர்மானத்திற்கு வருகிறார்களோ அதற்கு நீ கட்டுப்பட்டு நடக்கவேண்டும். இதுதான் கட்சி ஒழுங்கு என்பது. கட்சியினர், முடிவான ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு முன்னர், ஜனநாயகத்திற்கு மகத்துவம் உண்டு; முடிவான ஒரு தீர்மானத்துக்கு வந்த பிறகு, ஜனநாயகம் வலுவிழந்து விடுகிறது; கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரால் சர்வாதிகாரம் நடைபெறு கிறது. அப்படி, ஒரு கட்சியைச் சேர்ந்த பிரதி அங்கத்தினரும் கட்சிக் கட்டுப்பாட்டுக் குட்பட்டு நடப்பதுதான் கட்சிக்குப் பெருமை; கட்சியிலுள்ள ஒவ்வோர் அங்கத்தினருக்கும் பெருமை. ஒரு கட்சி, எந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுகிறதோ அந்தத் தீர்மானத்தை உடனே அனுஷ்டானத்திற்குக் கொண்டு வர வேண்டும்; மற்றவர்களிடையே அதைப் பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டியிருந்தால் அதையும் செய்ய வேண்டும். கட்சி சம்பந்தப் பட்ட வரையில், உன்னுடைய சொந்த ஹோதாவென்பது போய்விடு கிறது; கட்சியின் பிரதிநிதி என்ற ஹோதாதான் முன்னிற்கிறது. கட்சி வேலைகளைக் கவனிப்பதற்கென்று உன்னுடைய முழு நேரத்தையும் செலவழிக்க வேண்டியிருந்தால், அதற்காக ஒரு தொகையைக் கட்சிப்பணத்திலிருந்து பெற்றுக் கொள்வதில் தவறு ஒன்று மில்லை. உன்னுடைய குடும்ப காலட்சேபம் நடக்க வேண்டு மல்லவா? அதற்காக நீ என்ன செய்வாய்? உன்னைக் காப்பாற்றிக் கொண்டால்தான் மற்றவர்களை நீ காப்பாற்ற முடியும். ஆகலின் கட்சி நிதியிலிருந்து ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு, கட்சிக் காக வேலை செய்வதில் கௌரவக்குறைவு ஒன்றுமில்லை. கட்சிக்கென்று பணந் திரட்டுவாயானால், அதற்கென்று ஒழுங்கான கணக்கு வைத்துக்கொள். உன் சொந்ததிற்காகக் கட்சி யின் பணத்தை உபயோகிக்காதே. உன் சொந்தத்திற்காகச் செலவு செய்து கொண்டவை களைக் கட்சியின் கணக்கில் எழுதாதே. அப்படியே, கட்சிக்காக நீ ஏதேனும் செலவு செய்திருந்தால், அதைக் கட்சிக் கணக்கில் எழுதவும் தயங்காதே. ஒரு கட்சியில் சேருவதன் விளைவாக உன்னிடத்திலேயுள்ள மேலான சுபாவங்கள் வளர்ச்சியடைய வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் உன் கட்சியினரல்லாதவரிடம் நீ துவேஷம் பாராட்டக் கூடாது. அவர்களுடைய நன்னடத்தையிலே நீ சந்தேகங்கொள்ளக் கூடாது. அவர்களிடத்திலே நீ நல்ல அமிசங்களைத்தான் காணவேண்டும். பிறரிடத்தில் கெடுதலையே காண்பது நம்மைக் கெடுத்துக் கொள்வதாகும். ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டுவிட்ட பிறகு எல்லோருக்கும் நல்லவனாக நடந்து கொள்ள வேண்டுமென்பது முடியாத காரியம். எல்லோரிடத்திலும் நல்லதனமாக நடந்து கொள்ள வேண்டியது தான்; யாருடைய மனத்தையும் புண்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டு மென்பதும் சரி. ஆனால் உன் கொள்கையைப் புறக்கணித்து விட்டு, உன் லட்சியத்தை மறைத்துக் கொண்டு, எல்லோரையும் திருப்திப் படுத்தப்பார்ப்பது, எல்லோருக்கும் நல்லவனாக நடந்து கொள்ள வேண்டுமென்று முயல்வது வீண். அது காரியாம்சையில் நிறைவேறாது. ஆகலின் உன் கொள்கையில் நீ உறுதியாயிருக்க வேண்டும்; உன் லட்சியத்திலிருந்து உன் பார்வை திரும்பக் கூடாது. அப்படி யிருந்து கொண்டு, எல்லோருக்கும் நல்லவனாக நடந்து கொள்வதில் யாருக்குத்தான் ஆட்சேபம் இருக்கப்போகிறது? ஒரு கட்சியைச் சேர்ந்தவன் என்பதற்காக ஏதேனும் சின்னங்கள் அணிந்து கொள்ள வேண்டி யிருக்குமானால், அப்படி அணிந்து கொள்ளவும், சொல்லவும் சங்கோஜப் படாதே; அப்படி அணிவதும் சொல்வதும் கௌரவக்குறைவென்று கருதாதே. ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு விட்ட பிறகு, உன் சொந்த கௌரவத்தைக் காட்டிலும் கட்சியின் கௌரவம்தான் உனக்கு முக்கியம். ஒரு கட்சியிலே சேருவது தொண்டு செய்வதற்காக; அதிகாரம் செலுத்துவதற்காக அல்ல. இது உனக்கு நன்றாக ஞாபகமிருக் கட்டும்; அதிகாரத்திலே ஆபத்துண்டு. தொண்டு சாசுவதமானது; அதிகாரம் அற்ப ஆயுளுடையது. தொண்டிலே மனிதன் வளர் கிறான்; அதிகாரத்திலே மனிதன் தேய்கிறான். நீ எதை விரும்ப வேண்டுமென்பதை உனக்கு நான் சொல்லவா வேண்டும்? பொதுவாக, கட்சியென்பது குறுகிய வட்டாரந்தான். ஆனால் அதில் நீ சுழன்றாடத்தான் வேண்டும். ஏனென்றால் அரசியலில், கட்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. அதை நீ வேண்டா மென்று கருதுவாயானால், அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதே நல்லது. அப்படி ஒதுங்கவும் மனமில்லாமல், எந்தக் கட்சியிலும் சேர விருப்பமில்லையானால், உனது அரசியல் வாழ்வு பிரகாச முடையதாயிராது. உனது நலன் விழையும், பாரத மாதா. 10. தலைவனுக்குரிய தன்மைகள் மகனே! உலகத்திலே பிரதியொரு மனிதனும் ஏதோ ஒன்றை யடைய வேண்டுமென்று ஆசைப்படுகிறான். அந்த ஒன்று, உருவமாயுள்ள ஒரு பொருளாகவும் இருக்கலாம்; அருவமாயுள்ள ஒரு சக்தியாகவும் இருக்கலாம். எப்படியிருந்தபோதிலும், அதனை யடைய வேண்டு மென்கிற விஷயத்தில் அவனுடைய ஆசை யென்னவோ தீவிரமான தாகவே இருக்கிறது. அந்த ஆசையின் தீவிரத்திற்குத் தகுந்தபடி அவன் அதிகமான முயற்சி செய்கிறானா, ஒழுங்காக உழைத்துக் கொண்டு வருகிறானா, மேலும் மேலும் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டு செல்கிறானா என்பவை யெல்லாம் வேறு விஷயங்கள். அவன் ஆசைப்படு கிறான் என்பதை மட்டும் இங்கே ஒப்புக்கொண்டு பேசுவோம். அந்த ஆசையின் தீவிரத்திற்குத் தகுந்தபடி சிலர், தாங்கள் கோரியதை அடைகிறார்கள்; வேறு சிலர் ஆசாபங்கப்பட்டுப் போகிறார்கள். அநேக சந்தர்ப்பங்களில், ஆசைப்படாமலே முயற்சி செய்கிறவர்களும், முயற்சி செய்யாமலே ஆசைப்படுகிறவர்களும் கடைசியில் ஒரே விதமான பலனைத்தான் அடைகிறார்கள். ஆனால் ஆசைப்பட்டும் அடையாமலே போகிற சிலவும் உண்டு. நாம் எதை அடையவேண்டுமென்று இச்சை கொள்கி றோமோ, அந்த இச்சையானது எவ்வளவுக் கெவ்வளவு அதிகப்பட் டிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு தொலைவாக அந்த இச்சையை அடைய வேண்டிய தானது ஒதுங்கிப் போகிறது. கீர்த்தி என்று சொல்கிறோம். ஒருவன், கீர்த்தி பெறவேண்டுமென்று எவ்வளவு பாடுபட்டாலும் அவனுக்குக் கீர்த்தி கிடைப்பதில்லை. கீர்த்தி பெறவேண்டு மென்பதை லட்சியமாகக் கொள்ளாமல் உழைத்துக் கொண்டு மட்டும் போகிறவனுக்கு, கீர்த்தி, தானாகவே வலிய வந்தடைகிறது. கீர்த்தியைப் போன்றதுதான் தலைமைப் பதவியும். தலைமைப் பதவிக்காக ஆசைப்பட்டு ஒருவன் தன் இயக்கத்திலோ, ஒரு கட்சி யிலோ சேர்ந்து கொள்வானாகில், அவனுக்கு அந்தத் தலைமைப் பதவி கிட்டவே கிட்டாது. தலைமைப் பதவியானது, ஒருவன் விரும்பிப் பெறுவதல்ல; தானாக வந்தடைவது. அப்படித் தானாக வந்தடைவதும் உழைப்பின் விளைவினால். அப்படிப்பட்ட தலைமைப் பதவிதான் புனிதமுடையது; சாசுவதத் தன்மை யுடையது. இதற்கு மாறாக, பண பலத்தைக் கொண்டோ, ஆள்பலத்தைக் கொண்டோ, வேறு புற சாதனங்களைக் கையாண்டோ ஒருவன் தலைமைப் பதவி பெறுவானாகில் அது நீடித்து நிலைப்பதில்லை. முதலில் அவனுடைய மனிதத் தன்மையை அழித்து, கடைசியில் அவனையே அழித்து விடுகிறது. அவனிடம் ஏற்பட்டிருந்த ஒரு பயத்தினால் அவனைப் பின்பற்றிக் கொண்டிருந்தவர்கள், அவ னுடைய பெயரைக்கூட நாளாவட்டத்தில் மறந்து விடுகிறார்கள். அன்பினால் ஆள்வதிலேதான் அழகு இருக்கிறது. அதிகாரத்தினால் ஆள்வதிலே எல்லா விகாரங்களும் அடங்கியிருக்கின்றன. அது போல் பிறர் பார்த்து ஒப்படைக்கிற தலைமைப் பதவியிலேதான் சிறப்பிருக்கிறது; தானாக ஏற்றுக் கொள்கிற தலைமைப் பதவியிலே சிறப்பில்லை. முதலில் உனக்கு ஓர் எச்சரிக்கை செய்கிறேன். நீ பல வருஷகாலம் தேச நலனுக்காகவோ, அல்லது குறிப்பிட்ட ஒரு வகுப்பின் நன்மைக்காகவோ ஈடுபட்டிருக்கலாம். ஆயினும் உனக்குத் தலைமைப் பதவி கிட்டாமலே போகலாம். உன்னைவிட வயதிலும் அனுபவத்திலும், உழைப்பிலும், தியாகத்திலும் குறைந்தவர்கள் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்களைப் பின்பற்றிச் செல்ல வேண்டிய அவசியம் உனக்கு ஏற்படலாம். நீ எந்த வகுப்பின் நலனுக்காகப் பாடுபட்டாயோ அந்த வகுப்பினரே உன்னை அலட்சியஞ் செய்யலாம். இவைகளுக்காகக் கொஞ்சங்கூட நீ சோர்வடையக் கூடாது; உன்னுடைய சேவையிலிருந்து திரும்பக் கூடாது; தொண்டு செய்வதுதான் உனது லட்சியமாயிருக்க வேண்டுமே தவிர, அதிலேதான் நீ இனிமை காணவேண்டுமே தவிர, தலைமைப் பதவி உன்னுடைய லட்சியமல்ல. அதில் இனிமை இருக்கிற தென்று கருதி அதை அடைய விரும்புவாயானால் அது இனிக்கவே இனிக்காது. தலைமைப் பதவியானது, கடமையின் பீடம்; இனிமையின் படுக்கையல்ல. தலைமைப் பதவி உயர்ந்தது, தொண்டர் பதவி தாழ்ந்தது என்று ஒரு போதும் நினையாதே. எப்பொழுது உனக்கு அந்த நினைவு உண்டாகிறதோ அப்பொழுதே தொண்டு செய்யும் யோக்கியதை உனக்கு இல்லை என்று ஏற்படுகிறது. ஒரு வீட்டில் பல தூண்கள் இருக்கின்றன. இவற்றில் தெருப்பக்கம் இருக்கிற தூண்கள் விசேஷமானவை, புறக்கடைப்பக்கம் இருக்கிற தூண்கள் மட்ட மானவையென்று சொல்ல முடியுமா? வீட்டைத் தாங்கிக் கொண் டிருப்பதற்கு எல்லாத் தூண்களுந்தான் அவசியமா கின்றன. அதைப் போல் ஒரு தேசத்தின் நலனுக்காக, சமுதாயத்தின் நலனுக்காக, தலைவர்களுந் தேவை; தொண்டர்களுந் தேவை. தொண்டர் களில் லாமல் தலைவர்கள் மட்டும் என்ன செய்வது? தலைவர் களில்லாமல் தொண்டர்கள் எப்படி ஒழுங்கான சேவை செய்யமுடியும்? தலைமைப் பதவியை அடைகிறவரை, அதனையடைய வேண்டுமென்ற ஆவலென்னவோ அதிகமாயிருக்கும். ஆனால் அதை அடைந்த பிறகு, ஏன் அடைந்தோம் என்ற சலிப்பு ஏற்படும். தலைமைப் பதவியானது, எட்டியிருந்து பார்த்துக் கொண்டிருக்கிற வரையில் வசீகரமுடையதா யிருக்கிறது; ஆனால் அருகில் சென்று அதில் அமர்கிற போது, கவர்ச்சியெல்லாம் இழந்து கடினமான ஒரு கல்லாகியிருக்கிறது. இந்தக் கல்லிலே இடறி விழுகிறவர்களும் உண்டு; இதனை ஆசனமாகக் கொள்கிறவர்களும் உண்டு. தலைமைப் பதவியானது, பொறுப்புகள் நிறைந்தது; கடமையை உணர்த்திக் கொண்டிருப்பது; எவ்வளவு உழைத்தாலும் ஓய்வு கொடாதது; ஊணையும் உறக்கத்தையும் மறக்கடிக்கச் செய்யுந் தன்மையது; நிதானமான சொல்லையும் செயலையும் உடையது. மகனே! தலைவனாக வரவேண்டுமென்ற ஆசை உனக்கு இருக்கிறதல்லவா, அதற்காக வெட்கப்படாதே. அந்த ஆசை எல்லாருக்கும் இருக்கவே இருக்கும். ஆனால் அந்த ஆசையிலே உன் கடமையை மறந்து விடக்கூடாது; அதற்காக உன்னைப் பறி கொடுத்து விடக்கூடாது. தொண்டின் கடைசி மைல் கல்லை நீ அடைவாயானால் அங்கே, தலைமை ஸ்தானம் தானே ஆரம்ப மாவதை நீ காண்பாய். ஆகலின் தொண்டு செய்து கொண்டிரு. அதே சமயத்தில் தலைவர்களுக்குரிய தன்மை களையும் தெரிந்து கொள். அந்தத் தன்மைகளில் முக்கியமான வற்றைச் சொல்கிறேன், கேள். இங்கே தலைவர்களென்று சொன்னால், அரசியல் கட்சித் தலைவர் களைப் பற்றித்தான் சொல்கிறேன் என்பது உனது ஞாபகத்தி லிருக்கட்டும். 1. ஒரு தலைவனாயிருக்கப்பட்டவன், தனது கட்சியைப் பற்றின சகல விவரங்களையும் பரிபூரணமாகத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது கட்சியில் எத்தனை அங்கத்தினர்கள் இருக்கி றார்கள், கட்சியின் வரவு செலவு என்ன, கட்சியின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்கிறது, இந்தச் செல்வாக்கு எந்தெந்தப் பிரதேசத்தில் அதிகப்பட்டிருக்கிறது, எந்தெந்தப் பிரதேசத்தில் குறைந்திருக்கிறது, இப்படிப்பட்ட பொதுவான விஷயங்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் குறைகளைக் களைந்து நிறைசெய்து கட்சியை ஒழுங்காக நடத்திச் செல்ல முடியும். 2. தன் கட்சி அங்கத்தினருக்குள்ளே மன வேற்றுமை இருக்கு மானால், அதனைக், கட்சியின் தலைவன் தன் சொந்த செல்வாக்கை உபயோகித்தாவது அகற்றிவிட வேண்டும். கட்சி அங்கத்தினர்கள் கூடியமட்டில் ஒரு மனப்பட்டவர்களாயிருந்தால்தான், கட்சியின் ஒற்றுமை குலையாமலிருக்கும். 3. கட்சியின் அங்கத்தினர் ஒவ்வொருவரையும் ஒரு தலைவன் நேரடியாகத் தெரிந்து கொண்டிருத்தல் மிகவும் நல்லது. இப்படிச் சொல்வதனால் ஒவ்வொருவருடைய பெயரையும் ஞாபகத்திலே வைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. தன்கட்சி அங்கத் தினரைப் பார்த்தவுடனே, இவர் நமது கட்சியைச் சேர்ந்தவர், இன்ன ஊர்க்காரர், இன்ன துறையிலே இறங்கி உழைக்கிறவர் என்பன போன்ற விவரங்களை ஓரளவுக்காவது ஒரு தலைவன் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். பல மைல் தொலைவிலிருந்து ஒரு தொண்டன் தன் தலைவனைப் பார்த்துச் சில ஆலோசனை களைக் கேட்க வேண்டுமென்று ஆவலோடு வருவான். அப்படி வருகிறபோதே, தலைவர் நமக்கு நன்றாகப் பரிச்சயமானவர்தானே, இன்ன இடத்தில் அவரை வரவேற்று உபசாரப் பத்திரம் படித்துக் கொடுத்தோமல்லவா, அப்பொழுது நாம் படித்த தோரணையைப் பார்த்து நம்மைப் பாராட்டுகிறதற் கறிகுறியாக நமது முதுகைக் கூட தட்டிக் கொடுத்தாரே, ஆகையால் அவரிடம் நாம் தாராளமாகக் கலந்து பேசலாம் என்றெல்லாம் மனக்கோட்டைக் கட்டிக் கொண்டு வருவான். வந்து தலைவனை வணங்கி நிற்பான். அப்படி வணங்கி நிற்கிறவனைப் பார்த்து நீங்கள் யார், தெரியவில்லையே என்கிற மாதிரி அந்தத் தலைவன் பேசுவானாகில் அப்பொழுது அந்தத் தொண்டனுக்கு எப்படி இருக்கும்? அவனுடைய ஆவலெல் லாம் தணிந்து, தலைவனிடத்திலே வெறுப்பாக மாறும். கட்சி அங்கத்தினர்களுடைய வெறுப்பை ஒரு தலைவன் சுலபமாகச் சம்பாதித்துக் கொண்டு விடலாம்; அவர்களுடைய ஒத்துழைப்பைப் பெறுவது கடினம். ஒரு சிறிய சம்பவம், அல்லது ஓர் அற்ப விஷயத் தில் காட்டப் பெறும் அசட்டை மனப்பான்மை, தலைவனுக்கும் கட்சி அங்கத்தினர்களுக்கும் மத்தியிலே பிளவை உண்டு பண்ணி விடும். ஆகையால் ஒரு தலைவன், சிறிய விஷயத்தில் கூட சர்வ ஜாக்கிரதையுடன் நடந்து கொள்ளவேண்டும். 4. ஒரு தலைவனுக்கு, புன்சிரிப்பு என்பது பெரிய பொக்கிஷம் மாதிரி. ஒருவரை வரவேற்கிறபோதும், அவருடன் சம்பாஷிக்கிற போதும், அவருக்கு விடைகொடுத்து அனுப்புகிற போதும், ஒரு தலைவன் புன்சிரிப்போடு கூடியவனாயிருப்பானாகில், வந்தவர் எவ்வளவு விரோத பாவத்துடன் வந்திருந்த போதிலும், திரும்பிச் செல்கிற போது நல்ல எண்ணத்துடனேயே செல்வர். ஒரு தலைவன், தேக உபாதி காரணமாகவோ, மனவேதனையினாலோ, வருகிற வரிடம் முகஞ் சுளித்துப் பேசுவானாகில், தன்னுடைய கோபதாப உணர்ச்சிகளை வெளிப் படுத்துவானாகில், அது, அவனைப் பற்றித் தவறான அபிப்பிராயங்கள் பரவுவதற்கு ஏதுவாயிருக்கும். இதற்கு ஒரு தலைவன் இடங்கொடுக்கவே கூடாது. 5. தலைவன், குறித்த நேரத்தில் குறித்த காரியத்தைச் செய்ய வேண்டும். இன்ன தேதியில் இத்தனை மணிக்கு என்னை வந்து பாருங்கள் என்று ஒரு தொண்டனுக்கு அல்லது ஒரு நண்பனுக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டு, பிறகு அந்த நேரத்திற்குச் சரியாக அந்தத் தொண்டன் வந்து காத்துக் கொண்டிருக்க, தலைவன் இல்லாவிட்டால், அல்லது தலைவனுடைய காரியதாரியோ, வேறு ஆளோ, தலைவர் எங்கேயோ வெளியே போயிருக்கிறார்; இப் பொழுது வரமாட்டார்; இன்னும் இரண்டு மணி நேரங்கழித்துத் தான் வருவார் என்று சொன்னால், அந்தத் தொண்டனுடைய மனோநிலைமை எப்படி இருக்குமென்பதை நீயே ஊகித்துக் கொள். அந்தத் தொண்டன், தலைவனுடைய ஒழுங்கில் எப்படி நம்பிக்கை வைப்பான்? கடிதப் போக்கு வரத்திலாகட்டும், கட்சிக் கூட்டங் களைக் கூட்டி நடத்துவிப்பதிலாகட்டும், எதிலும், தலைவனா யிருக்கப் பட்டவன் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும். 6. ஒரு கட்சித் தலைவன், எதிர்க்கட்சியினரிடத்தில் கண்ணிய மாகவும் கௌரவமாகவும் நடந்து கொள்ள வேண்டும். எதிர்க் கட்சியினருடைய கொள்கைகளை வன்மையாகக் கண்டிக்கலாம்; ஆனால் எதிர்க்கட்சியினரைத் தூஷிக்கக் கூடாது. அவர்களிடத் திலே ஜனங்களுக்கு ஆத்திரமுண்டாகும்படி பிரச்சாரஞ் செய்யக் கூடாது. இப்படிச் செய்வதனால், எதிர்க்கட்சியைக் காட்டிலும் தன் கட்சிதான் அதிகமாகப் பாதிக்கப்பெறும். 7. உணவு, இடம், பிரயாணம் ஆகிய இப்படிப்பட்டவை களின் விஷயத்தில் ஒரு தலைவன் எவ்வித விசேஷமான வசதி களையோ, சலுகைகளையோ எதிர்பார்க்கக்கூடாது. தான் செய்ய வேண்டிய கடமைக்குக் குந்தகம் ஏற்படாத வகையில், எல்லோரை யும் போல் அவன் உணவு கொள்ள வேண்டும்; இருக்கவேண்டும்; பிரயாணம் செய்ய வேண்டும். எல்லோர் மத்தியிலும் எல்லாருட னும் சரிசமானமாகப் பழகினால்தான் ஒரு தலைவனுக்குப் பெருமையே தவிர, ஒதுங்கி யிருப்பதனால் எவ்விதப் பெருமையு மில்லை. 8. ஒரு தலைவன், ஒழுக்கத்திலே நெருப்பாயிருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலாரிலும் விதவிதமான மனப்போக்குடையவர் களுடன் ஒரு தலைவன் பழக வேண்டியிருப்பதால், அவனுடைய பேச்சிலோ, அங்க சேஷ்டைகளிலோ ஒழுக்கத்திற்கு விரோதமான அமிசம் ஒரு சிறிதும் காணப்படக்கூடாது. அப்படிப் பார்க்கிறவர் களுக்கோ, கேட்கிறவர்களுக்கோ அவனுடைய ஒழுக்க விஷயத்தில் ஒரு சிறிது சந்தேகம் ஏற்பட்டு விடுமானால் கூட அவனுடைய தலைமை ஸ்தானத்திற்கு அஸ்தமன வாழ்வு ஆரம்பமாகிவிடும். அறிவு, உழைப்பு, தியாகம் இவையெல்லாம் சேர்ந்து ஒருவனுக்குத் தலைமைப் பதவியை வாங்கிக் கொடுக்கின்றன வென்பது வாஸ்தவம். இவற்றோடு ஒழுக்க மென்பது சேராவிட்டால், தலைமைப் பதவி யானது, வேரில்லாத மரம்போல் ஆட்டங்கொடுத்துக் கொண் டிருக்கும். ஒழுக்கந்தான், மேற்படி அறிவு,உழைப்பு முதலியவற்றைச் சோபிக்கச் செய்கிறது; அவற்றிற்குச் சக்தியை அளிக்கிறது. 9. தலைவன், மனோதிடமுடையவனாயிருக்க வேண்டும். இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும், தூற்றுதலையும் போற்றுதலையும் சரிசமானமாகக் கருத வேண்டும். தலைமைப் பதவி சறுக்க லுடையது என்ற நினைவு எப்பொழுதும் அவனுக்கு இருக்க வேண்டும். அந்த நினைவு இருந்தால்தான் அவன் நிதானந்தவறி ஒரு காரியத்தைச் செய்யமாட்டான். 10. ஒரு தலைவன், எப்பொழுதுமே தன் கருத்தை முன் கூட்டியே தெரிவித்துவிடக் கூடாது. தன் கட்சியைச் சேர்ந்தவர்கள் சொல்லும் பலதிறப்பட்ட அபிப்பிராயங்களையும் நிதானமாகக் கேட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அவைகளைப் பற்றி தீர ஆலோசித்து, அவற்றின் சாதக பாதகங்களை நன்றாகத் தெரிந்து கொண்டு தன் கருத்தை வெளியிட வேண்டும். சிறப்பாகக் கட்சிக் கூட்டங்களை நடத்தி வைக்கிறபோது இது மிகவும் அவசியம். 11. தலைவனாயிருக்கப்பட்டவன் சொல்லிலும் செயலிலும் ஒன்றுபட்டவனாயிருக்க வேண்டும். அவனுடைய அந்தரங்க வாழ்க்கையும், பகிரங்க வாழ்க்கையும் ஒன்றாயிருக்க வேண்டும். வீட்டுக்கு ஒரு கொள்கை, நாட்டுக்கு ஒரு கொள்கை என்று இருந்தால் அவனிடத்தில் யாருக்கும் மதிப்பிராது. 12. ஒரு தலைவன், தன் கட்சியினரிடத்தில் பரிபூரண நம்பிக்கை வைக்க வேண்டும்; யாரையும் சந்தேகிக்கக் கூடாது. அப்படி யார் மீதேனும் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் அதைப்பற்றி அவரிடத் தில் நேர்முகமாகத் தெரிவித்து, தன் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும். அப்படிச் செய்வது, குறிப்பிட்ட அந்த நபரையும் திருத்துவதாகும். 13. தன் கட்சியைச் சேர்ந்த சிலர், தன்னைப் போலவோ, மற்றவர் களைப் போலவோ பேச்சுத் திறமையற்றவராகவோ, பணக்குறைவுடைய வராகவோ, பட்டப்படிப்பு இல்லாதவராகவோ, இந்த மாதிரி ஏதேனும் ஒரு வகையில் குறைவுடையவராக இருக்க லாம். இதற்காக அவர்களை ஒரு தலைவன் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ ஏளனம் செய்யக்கூடாது; தாழ்வாக மதிக்கக் கூடாது. அவர்களுடைய குறைகளை, அவர்களைத் தனிப்படச் சந்தித்துச் சொல்லித் திருத்தப் பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில் ஒரு தலைவன், தந்தை போலவோ, மூத்த சகோதரன் போலவோ நடந்து கொள்ளவேண்டும். 14. தன் கட்சியைச் சேர்ந்தவர்கள், எந்த அளவுக்குத் தன்னுடைய தலைமையை ஏற்றுப் பின்பற்றி வருகிறார்களென்பதை ஒரு தலைவன் அடிக்கடி நிதானித்துப் பார்த்துக் கொள்ளவேண்டும். தான், கட்சியினரைக் காட்டிலும் தீவிரமாகப் போனாலுஞ் சரி, கட்சியினர், தன்னைக் காட்டிலும் தீவிரமாகப் போனாலும் சரி, இரண்டையும் சரிப்படுத்திக் கொண்டு போக வேண்டும். கட்சி யினரைக் கூடவே அழைத்துக்கொண்டு செல்கிறவன் தான் சரியான தலைவன். உனது நல்வாழ்வை விரும்பும் பாரத மாதா. 11. தனி வாழ்வும் பொது வாழ்வும் குமாரா! நீ ஒரு தனி வியக்தி. உன்னை நாற்பது கோடியாகப் பெருக்கினால் அதுதான் உன்னுடைய தேசம். தேசத்தின் சிறிய அமிசம் நீ; உன்னுடைய பெரிய அமிசம் தேசம். நீ அணுவானால் தேசம் மகத்து. ஆதலின் உன்னுடைய ஒழுங்கான வாழ்க்கையிலேதான் தேசம் ஒழுங்குபடுகிறது; உன்னுடைய வளர்ச்சியிலேதான் தேசம் வளர்கிறது. அப்படியானால் உன்னுடைய சொந்த வாழ்க்கையிலே நீ எவ்வளவு சிரத்தை யுடையவனாயிருக்கவேண்டுமென்பது தெரிகிற தல்லவா? சுருக்கமாக, உன்னிலே தேசம் பிரதிபலிக்க வேண்டும்; தேசத்தினுடைய நல்வாழ்விலே உன் வாழ்வு பூர்த்தியடைய வேண்டும். இப்படி நான் சொல்வது உனக்கு ஒரு புதிர்போல இருக்கலாம்; அல்லது வேதாந்தபரமான விஷயமென்று படலாம். அப்படி யெல்லாம் ஒன்றுமில்லை. அனுபவ உண்மையையே சொல்கிறேன். வெளி நாடுகளில் நீ சிறிது காலம் யாத்திரை செய்தால்தான், அல்லது சிறிதுகாலம் வசித்தால்தான் இந்த உண்மை உனக்கு நன்றாகப் புலனாகும். நீ உடுக்கிற உடையிலே, நீ உண்கிற உணவிலே, உன்னுடைய நாடு எத்தகைய சீதோஷ்ணமுடையது, எத்தகைய வளமுடையது என்பது வெளிநாட்டார் கணித்துக் கொண்டு விடுவர். உன்னுடைய நடையிலே, பார்வையிலே, பேச்சுத் தோரணையிலே, நீ சுதந்திர நாட்டானா அல்லது அடிமை நாட்டானா என்பதை யாரும் எளிதிலே தெரிந்து கொண்டு விடுவர். உன்னைக் கொண்டு உனது நாட்டை அளப்பர். ஆதலின் உனது நாடு பெருமையடைய வேண்டு மானால் நீ பெருந்தன்மையோடு நடந்து கொள்ளவேண்டும். உனது நாடு எந்தெந்த விதத்தில் பிரகாசிக்க வேண்டுமென்று விரும்பு கிறாயோ, எந்தெந்த விஷயத்தில் புகழடைய வேண்டுமென்று பார்க்கிறாயோ அந்த விதத்திலும் அந்த விஷயத்திலும் நீ திறம்பட நடந்து கொள்ள வேண்டும். உனது நிமிர்ந்த நடையிலே, அகன்ற மார்பிலே, உனது நாட்டின் வலிமை புலனாகிறது. உனது துருதுரு என்றிருக்கும் கண்களிலே உனது நாடு விழிப்புடனிருக்கிறது. உனது சம்பாஷணையிலே உனது நாட்டின் ஆழ்ந்த ஞானம் வெளிப் படுகிறது. நான்கு பேருடன் நீ சரளமாகப் பழகுவதிலே, எல்லோரையும் நேசிப்பதிலே, எங்கே துக்கம் தோன்றுகிறதோ அங்கே அதைத் துடைக்க நீ செல்லும் துரிதத்திலே, மனச்சாட்சிக்கு மதிப்புக் கொடுத்து பணத்திற்கு நீ காட்டும் அசட்டையிலே, தாய்நாட்டின் பெருமைக்குச் சிறிது கூட பங்கம் வரக்கூடாதென்கிற விஷயத்தில் நீ கொண்டுள்ள உறுதியிலே, உனது நாட்டின் கலாசாரப் பண்புகள் யாவும் விகாசமடைகின்றன. இப்படிக்கெல்லாம் நடந்து கொள்ளாமல் வேறுவிதமாக நடந்து கொள்வாயேயானால், உனக்கு அவமானம் மட்டுமல்ல, உனது நாட்டுக்கு அவமானத்தைத் தேடித்தருகிற பெரிய குற்றத்தைச் செய்தவனாகிறாய். வெளிநாடுகளில் நீ சென்று, பிச்சையெடுத்தோ, இச்சகம் பாடியோ, ஏதாவது ஒரு இழிதொழிலைச் செய்தோ உன்னுடைய ஒரு சாண் வயிற்றை வளர்ப்பதிலே முனைந் திருப்பாயே யானால் அது உன் நாட்டுக்கு எவ்வளவு இழிவு தெரியுமா? அந்நிய நாட்டிலே அந்நியரின் ஏவலாளாய் அதிகாரப் பதவியிலே நீ அமர்ந்து கொண்டிருப்பாயே யானால், அது உன் நாட்டுக்கு எவ்வளவு கேவலம் என்பதை நீ அறிவாயா? சொந்த நாட்டிலே சுதந்திரமில்லாதவன் அந்நிய நாடுகளுக்குச் சென்றால் அங்கே அவன் ஒரு கூலியாகவும், அடிமையாகவும், கறுப்புப் பேய் ஆகவும் கருதப்படுகிறானென்றால் அதில் ஆச்சரியப்படுவதற் கென்ன இருக்கிறது? மகனே! இந்த உண்மைகளையெல்லாம் நீ அனுபவ பூர்வமாக அறிந்து கொள்ள வேண்டியதவசியம். இதற்காக வெளிநாடுகளில் சிலவற்றிற்காவது நீ பிரயாணம் செய்யவேண்டும். உன் தேகத்தில் சக்தி இருக்கிறபோது, உன்கையிலே காசு இருக்கிறபோது, இந்தப் பிரயாணத்தைச் செய்து வருவது உனக்குப் பெரிய படிப்பினையா யிருக்கும். உன்னுடைய பயிற்சியில் இதனை ஒரு முக்கிய அமிசமாக நீ கருதவேண்டும்; உன் தேச சேவைக்கு இது பெரிதும் உதவும். உன்னுடைய தனி வாழ்க்கையை, அதாவது சொந்த வாழ்க்கையை ஒழுங்குப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று மேலே சொன்னேனல்லவா அதைப் பற்றிச் சிறிது கூற விரும்புகிறேன். தேசத் தொண்டிலே ஈடுபட்டிருக்கிற நீ, உன் சொந்த வாழ்க்கையைத் திறந்த புத்தகமாக வைத்திருக்க வேண்டும். யாரும், எந்த நிமிஷத்திலும் உனது அந்தரங்கத்தில் பிரவேசித்துப் பரிசோதனை செய்யக்கூடும். அதற்கு நீ தயாராயிருக்க வேண்டும். துணி உடுத்திக் கொள்வது முதல் வீட்டுக் கணக்கு வைத்துக் கொள் வது வரை எல்லா விவகாரங்களிலும் நீ களங்கமில்லாமலிருந்தால் தான் உன் சொல்லுக்கு மதிப்புண்டு; செயலுக்குப் பலனுண்டு. வீட்டுக்கு ஒருவிதமாகவும், நாட்டுக்கு வேறு விதமாகவும் நீ நடந்து கொண்டால், தேசத்திற்காக, நீ செய்திருப்பதாகச் சொல்லும் தியாகமனைத்தும் வியர்த்தமாகிவிடும். நீ வீட்டிலே எப்படி நடந்து கொள்கிறாயோ கூடியவரை அப்படியே பொதுவிலும் நடந்து கொள்ளவேண்டும். சிலபேரை நான் பார்த்திருக்கிறேன், வீட்டிலே, தனிப்பட்ட முறையில் சிலரோடு பேசுகிறபோது, தங்களுக்குப் பிடிக்காத அரசியல் வாதிகளைப் பற்றியோ, அரசியல் கொள்கைகளைப் பற்றியோ தூஷண மாகவும், பரிகாசமாகவும் பேசுகிறார்கள். ஆனால் அதே நண்பர்கள், பொது மேடைகளிலே நின்று பேசுகிறபோது, அதே அரசியல்வாதிகளைப் போற்றியும், அதே அரசியல் கொள்கை களை ஆதரித்தும் பேசுகிறார்கள். இவர்களுக்குத் தேசநலன் பெரிதல்ல; கொள்கை முக்கியமல்ல; எப்படியாவது தங்கள் கழுத்திலே இரண்டு பூமாலைகள் விழுந்தால் போதும், தங்கள் பேச்சைக் கேட்டு நான்கு பேர் கைகொட்டினால் போதும் என்ப திலே திருப்தியடைகிறவர்கள். புகழை நாடி இவர்கள் ஓடுகிறார்கள். ஆனால் அந்தப் புகழானது இவர்களுக்குக் கிடைக்காமலேயே ஓடிவிடு கிறது. கடைசியில் இவர்கள் கண்டபலன் ஆசாபங்கந்தான். இந்த ஆசாபங்கம் உனக்கு ஏற்படாதிருக்குமாக! இன்னுஞ் சிலர், வீட்டிலே இருக்கிறபோது பகட்டான உடை உடுத்திக் கொள்கிறார்கள். ஆடம்பரமான உணவைச் சாப்பிடு கிறார்கள். ஆனால் பொதுவிலே வருகிற போது உடையிலும், உணவிலும் எளியவர் களாயிருக்கிறார்கள். இதற்கு மாறாக வேறு சிலர், வீட்டிலே எளிமையாகவும், வெளியிலே ஆடம்பரமாகவும் நடந்து கொள்கிறார்கள். இந்த வேஷமெல்லாம், இந்த நடிப்பெல் லாம் நிலைத்து நிற்குமா? மகனே! நீ என்றும், எந்த இடத்திலும் உடை, உணவு முதலிய விஷயங்களில் ஒரே மாதிரியாக இரு. உன் மனம் ஒரு நிலைப்படுவதற்கு இது ஒரு சாதனமா யிருக்கும். மனம் ஒரு நிலையிலே நிற்குமானால்தான், உன்னுடைய அரசியல் வாழ்க்கையிலே நீ சந்திக்கக்கூடிய வெற்றி தோல்விகளையும், சுக துக்கங்களையும் சமமாகக் கருதிக்கொண்டு முன்னே செல்ல முடியும். தேசத்தொண்டு செய்வதற்காக நீ எந்த விதத்திலும் பெருமைப் படக்கூடாது. நான் ஒரு தேசபக்தன் என்று சிலர் மார்தட்டிப் பேசுகிறார்கள். இதில் அர்த்தமேயில்லை. அப்படிப் பேசுகிறவர்கள், அந்தரங்க சுத்தியுடன் தேசத்தின் மீது பக்தி செலுத்துகிறார்களா என்பது சந்தேகிக்கப்பட வேண்டிய விஷயம். உண்மையான தேசபக்தியானது, பேச்சிலே வெளிப்பட விரும்பாது; தான் என்ற முனைப்பு அதற்கு இல்லை. இப்படித்தான் தியாகமும். தியாகமானது மௌனத்திலே தான் சோபிக்கிறது. நான் இரண்டரை வருஷகாலம் சிறைவாசம் செய்தேன்; என் உடல் பொருள் ஆவியனைத்தையும் தேசத்திற்கே அர்ப்பணம் செய்து விட்டேன் என்று சிலர் பகிரங்கமாகப் பேசுவதை நீ கேட்டிருக்கிறா யல்லவா? அப்படிப் பேசுவதைக் கேட்டவுடனே, அவர்களிடத்தில் இதற்கு முன்னர் ஏதேனும் மதிப்பு வைத்திருப்பாயே யானால், அந்த மதிப்பு, உன்னைப் பொறுத்த மட்டில் குறைந்து விடுவதை நீ உணர்ந்திருக் கிறாயா? அப்படித் தானே, உன்னுடைய தியாகத்தைப் பற்றி மற்றவர்கள் முன்னிலையில் பேசுவாயானால், உன்னைப் பற்றி மற்றவர்கள் கொண்டிருந்த மதிப்புக் குறைந்துவிடும்? எப்பொழுதுமே, தேசத் தொண்டிலே ஈடுபட்டிருக்கிறவன், தன் மதிப்பை இழந்து விடக்கூடிய மாதிரி, எந்த இடத்திலும், எப்பொழுதும் பேசவும் கூடாது; எதையும் செய்யவும் கூடாது. உன்னுடைய தியாகத்தைப் பற்றித் தற்பெருமையாகப் பேசிக் கொள்ளாம லிருப்பதைப் போல் மற்றவர்களுடைய தியாகத்தையும் நீ குறை சொல்லக்கூடாது. தேர்தலில் எனக்கு எதிராக நிற்கும் நண்பர் ஒன்றரை வருஷந்தான் சிறை சென்றிருக்கிறார். நானோ இரண்டரை வருஷம் சிறை சென்றிருக்கிறேன் என்று மேடை மீதேறிப் பேசுவதும், அவனென்ன , போலீஸான் கையில் இரண்டு அடிதானே பட்டான்? நானோ ஐந்தாறு தடவை அடிபட்டிருக் கிறேன்; ஆஸ்பத்திரியில் பதினைந்து நாள் படுத்தல்லவோ கிடந்தேன் என்று பேசுவதும் எவ்வளவு கேவலம்? நீ சொல்கிற சொல்லைக் காட்டிலும், நீ வாழ்கிற வாழ்க்கையை முன்மாதிரியாக வைத்துக் கொண்டுதான் மற்றவர்கள் உன்னைப் பின்பற்றுவார்களென்பது உன்னுடைய ஞாபகத்தில் இருக்கவேண்டும். அன்றாட வாழ்க்கையில் நீ எப்படி நடந்து கொள்கிறாயென்பதைப் பொருத் திருக்கிறது உன்னுடைய பொது வாழ்க்கையின் பிரகாசம். தனிப்பட்ட முறையில் அல்லது நாம் தனித்திருக்கிறபோது எப்படி நடந்து கொண்டாலென்ன, என்ன செய்தாலென்ன என்று ஒருபோதும் எண்ணாதே. அகத்திலுள்ளது தான் முகத்திலே தோன்றும்; வீட்டிலுள்ளதுதான் நாட்டிலே பரிணமிக்கும். உதாரணமாக ஒரு கிராமத்தைச் சுகாதார நிலையிலே வைத்துக் கொண்டிருக்க வேண்டிய பொறுப்பு உன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிற தென்று வைத்துக் கொள். உன் வீட்டைச் சுகாதார நிலையில் நீ வைத்துக் கொண்டிராவிட்டால், கிராமத்தைச் சுகாதார நிலையில் வைத்துக் கொண்டிருக்கிற பொறுப்பை நீ எப்படி ஒழுங்காக நிறைவேற்ற முடியும்? உன்னைப் பொறுத்த மட்டில் நீ சுத்தமாயிருக்க வேண்டாமா? உன் குடும்பத்தினரைச் சுத்தமாக இருக்கச் செய்ய வேண்டாமா? உன் வீட்டைக் குப்பை மேடாக்கிக் கொண்டு விட்டுக் கிராமத்துக் குப்பைகளை அகற்ற நீ முயன்றால், உன் முயற்சிக்குக் கிராமவாசிகள் எப்படி ஆதரவு கொடுப்பார்கள்? நீ நோய்வாய்ப்பட்டிருக்கிற போது மற்றவர் களுடைய நோயைப் பரிகரிப்பது எங்ஙனம் சாத்தியம்? ஆதலின் பிள்ளாய்! உனக்கு நீ முதலில் வைத்தியம் செய்து கொள்; உன்னை நீ சரிப்படுத்திக் கொள்; உன்னை நீ ஒழுங்குப்படுத்திக்கொள். சிலர் கருதுகிறார்கள், தனி வாழ்க்கைக்கு முரண்பட்டது பொது வாழ்க்கையென்று. இப்படிக் கருதுவது சுத்தத்தவறு. ஏற்கனவே நான் கூறியபடி தனி வாழ்க்கையின் தொடர்ச்சிதான், தனி வாழ்க்கையின் விரிவுதான், பொதுவாழ்க்கை. இதை யறியாமல், சிலர், தேச சேவை முட்டின்றி நடைபெற வேண்டுமானால், குடும்ப பாரமே கூடாதென்று சொல்கிறார்கள். குடும்பத்தை ஒரு சுமையாகக் கருதுகிறவர்கள், தேசத்தின் சுமையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? கோழைகள்தான், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறவர்கள் தான், வாழ்க்கையில் ஒழுங்கும் நிதானமும் இல்லாதவர்கள்தான், குடும்பத்தை ஒரு சுமையென்று சொல்வார்கள். பெற்ற தாயையும் கட்டிய மனைவியையும் கண்ணீரும் கம்பலையுமாக விட்டு விட்டு, தேச சேவை செய்யப் புறப்படுகிறவன், யாருடைய கண்ணீரையும் துடைக்க முடியாது; யாருடைய சுமையையும் இறக்கி வைக்க முடியாது. குடும்பத்தை விட்டு ஓடுவதற்குத் துறவு என்ற புனிதமான பெயர் கொடுத்துத் தங்களைத் திருப்தி செய்து கொள்கிறார்கள் சிலர். திருடன், களவும் கற்று மற என்ற வாசகத்தின் மூலம் தன் தொழிலுக்கு ஆதாரம் தேடிக் கொள்வதைப் போலிருக்கிறது இவர்களுடைய செய்கை. துறவு என்று சொன்னால், குடும்பத்தை விட்டு ஓடிவிடுவது என்று அர்த்தமல்ல; காஷாயந்தரிப்பதல்ல; நான் எனது என்ற பற்றுதலைத் துறக்க வேண்டும்; செய்கையின் பயனைத் துறக்க வேண்டும். அதுதான் நிஜமானதுறவு. மற்றபடி துறந்துவிட்டேன் என்று சொல்வதெல்லாம் போலித் துறவுதான். ஆகவே, மகனே! குடும்பத்தை விட்டுவிட்டு தேசசேவை செய்ய முன் வராதே; அந்த எண்ணமே உனக்கு வேண்டாம். குடும்பத்தை விட்டிருக்கிற மனிதன் அரை மனிதன்; குறை மனிதன். அவன் இதயத்தை, உனக்குச் சக்தி இருக்குமானால், திறந்து பார்; அது பாலைவனமாகத்தான் இருக்கும். குடும்பத்தோடிருக்கிற யாரும் அவனை நம்ப மாட்டார்கள். குழந்தைகள் அவனிடம் விசுவாசத்துடன் வரமாட்டா. இந்த மாதிரியான நிலைமையில் நீ ஒருபோதும் இருக்கவேண்டாம். உனது குடும்ப வாழ்க்கை, உன்னுடைய பொதுவாழ்க்கைக்குப் படியாயிருக்குமாக! உனது குடும்ப வாழ்க்கையிலே இனிமை காண்பாயாக! அந்த இனிமை யானது, உன்னுடைய தேசீய வாழ்க்கையிலே மணம் வீசுவதாக! உனது நலன் கோரும், பாரத மாதா. 12. பொது ஜனங்கள் மகனே! பொது ஜனங்களை உன்னிலிருந்து வேறாகப் பிரித்து எண்ணாதே. அவர்களிலே நீ ஒருவன். உன்னுடைய வாழ்க்கையும் அவர்களுடைய வாழ்க்கையும் ஒன்றுதான். மற்றும் பொது ஜனங்களை எப்பொழுதும் அலட்சியம் பண்ணாதே. அவர்களுக்கு, உன்னைப் போல் அழகாகப் பேசுஞ் சக்தி இல்லாம லிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இதயமுண்டு; அதில் உணர்ச்சிகள் பொங்குவதுண்டு. அவர்களுடைய புருவங்கள் எப்பொழுது நெற்றியிலே ஏறுகின்றன, எப்பொழுது அவர்கள் உதட்டைப் பிதுக்குகிறார்கள், அவர்களுடைய முகத்திலே எப்பொழுது சிணுக்கம் ஏற்படுகிறது, இவை களையெல்லாம் நீ நன்றாகக் கவனி. அவர்களுடைய குமுறல்களைச் செவிகொடுத்துக் கேள். அப்பொழுதுதான் அவர்களுக்கும் உனக்கும் நல்ல உறவு ஏற்படும். எதற்காக இவ்வளவு தூரம் சொல்கிறேனென்றால், சிலர், மேடை மீதேறி இரண்டு பிரசங்கங்கள் செய்து விட்டால், தங்கள் கழுத்திலே இரண்டு பூமாலைகள் விழுந்துவிட்டால், தங்களை, மற்றவர்களினின்று வேறானவர்களாக, இல்லை, இல்லை, மற்றவர்களைக் காட்டிலும் தங்களை உயர்ந்தவர்களாகக் கருதிக் கொண்டு விடுகிறார்கள். அப்படி வாய்விட்டுச் சொல்லிக் கொள் வதற்கு, அவர்களுக்குத் தைரியமில்லை யானாலும், அவர்களுடைய அலட்சியமான பார்வையிலும் உதட்டியான பேச்சிலும் இந்த மனப்பான்மை நன்றாக வெளியாகிறது. இந்த மனப்பான்மை கூடவே கூடாது. பொது ஜனங்களிடமிருந்துதான் நீ வந்தவன். அவர்களிடத்திலேதான் நீ போய்ச் சேரவேண்டியவன். ஆகையால் உன்னைப் போல் அவர்களைப் பார்; அப்பொழுதுதான் அவர்கள், தங்களைப் போல் உன்னைப் பார்ப்பார்கள். பொது ஜனங்கள், ஒடிந்து போகிறவர்களல்ல; வளைந்து கொடுக்கிற வர்கள். அவர்களுடைய இந்த வளைந்து கொடுக்கிற தன்மையை, நீ துர்உபயோகப்படுத்திக் கொள்ளக்கூடாது. அவர்கள் உன் இஷ்டத்திற்கு வருகிறார்களென்பதற்காக, அவர்களைத் தவறான பாதையில் அழைத்துச் செல்லக்கூடாது. ஆனால் நான் செல்கிற பாதை தவறு என்று எனக்கு எப்படித் தெரியும்? எனக்குச் சரி யென்றுபட்ட பாதையில்தானே நான் செல்வேன் என்று நீ சொல்லலாம். வாஸ்தவம். இதற்கு ஒரே ஒரு பதில்தான் சொல்ல முடியும். உன்னை ஒரு தனி வியக்தியாக நீ கருதிக் கொள்ளாமல், யாரிடையே நீ சேவை செய்கிறாயோ அவர்களில் ஒருவனாக உன்னை ஆக்கிக் கொண்டுவிட்டாயானால் உனக்குச் சரியான பாதை புலப்பட்டுவிடும். சில சமயங்களில், உன்னை யறியாமலே நீ தவறான பாதையில் சென்று விடக்கூடும். அப்படிச் சென்று கொண்டிருக்கிறபோது, மத்தியிலே தவறு என்று தெரிந்துவிட்டால், உன் தவறைப் பகிரங்க மாக ஒப்புக்கொண்டு திரும்பிவரத் தயங்காதே. அதனால் உன்னுடைய மதிப்பு உயருமே தவிர குறையாது. பொது ஜனங்கள் எப்பொழுதும் குற்றத்தை அகற்றிக் குணத்தைக் கொள்ளும் சுபாவமுடையவர்கள்; மறந்து மன்னிக்குந் தன்மையர்கள். பொது ஜனங்கள் படாடோபத்தில் மனம் லயிக்கக் கூடியவர்கள். உரத்த சப்தம், பெருத்த ஜனம், அலங்கார விசேஷம் இவைகளை அவர்கள் விரும்புவது சகஜம். அவர்கள் மத்தியிலே சென்று பிரச்சாரஞ் செய்வதற்கு இவைகளையெல்லாம் உப யோகித்துக் கொள்ளவேண்டும். வாத்திய கோஷத்துடனும் விளக்கு வரிசைகளுடனும் கூடிய ஊர்வலங்கள், கொடியேற்ற விழாக்கள், தொண்டர்களின் அணிவகுப்பு, பிரசங்க மேடை களை அலங் கரித்தல் இவைகளையெல்லாம் நீ நன்றாக ஏற்பாடு செய்ய வேண்டும். இவைகளுக்காகும் செலவு வீண்செலவு என்று சொல்ல முடியாது. ஆனால் உனது பிரச்சாரம் பயன்தருகிற அளவுக்கு இந்தப் படாடோபங்களும் இந்தச் செலவும் இருக்க வேண்டும். அதாவது எவ்வளவு பயனைப் பெறுவதற்கு எவ்வளவு செலவழித்தால் போது மென்பதை நீ முன்னதாக நிர்ணயித்துக் கொண்டு அதன் பிரகாரம் எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். பொது ஜனங்களிடத்தில் செல்வாக்குப் பெறுவது கடினம்; ஆனால் பெற்ற செல்வாக்கை இழந்துவிடுவது சுலபம். செல்வாக்குப் பெறுவது மலைமீது ஏறுகிற மாதிரி; இழந்துவிடுவது இறங்குகிற மாதிரி. ஆகையால் பிரயாசைப்பட்டுச் சம்பாதிக்கிற செல்வாக்கைக் காப்பாற்றிக் கொள்வதில் நீ கண்ணுங் கருத்துமாயிருக்க வேண்டும். செல்வாக்கைக் காப்பாற்றிக் கொள்வதாவது என்ன? அதனை உன் சொந்த நலனுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளாமலிருப்பதுதான். எதுவரையில் எனது நலன் என்ற ஒன்று உனக்கு தனியாக இல்லையோ அதுவரையில் உனக்குப் பொது ஜனங்களிடத்தில் மதிப்பு இருக்கும். பொது ஜனங்களுக்கு நன்மையைத் தருகிற காரியத்தையே நீ செய்ய வேண்டும். எந்தக் காரியத்தைச் செய்தால் அவர்களுக்கு சந்தோஷமாயிருக்குமோ அதைமட்டும் செய்துகொண்டு போவா யானால் அவர்களுடைய உண்மையான அன்பை நீ பெறமுடியாது; நீயும் அவர்களை உண்மையாக நேசித்தவனாக மாட்டாய். பொது ஜனங்கள், தாங்கள் அடைகிற நன்மையிலேதான் சந்தோஷத்தைக் காணவேண்டும். அதுதான் நிஜமான சந்தோஷம். இந்த நிஜமான சந்தோஷத்தை அவர்களுக்கு அளிப்பதே உன் கடமை. பாமர ஜனங்கள் என்று அழைக்கப்படும் பொதுஜனங் களைச் சுற்றிக் கொண்டிருக்கும் அசுத்தங்கள், மூட நம்பிக்கைகள், அறிவுக்குப் பொருத்தமில்லாத பழக்கவழக்கங்கள் இவைகளைக் கண்டு வெறுப்புக் கொள்ளாதே; உன் மனதுக்குள்ளாகக் கூட அவர் களைப் பரிகசியாதே; இவைகளுக்குப் பதிலாக அவர்களிடத்தில் அநுதாபங் காட்டு; அவர் களுடைய எண்ணப் போக்கை மெது மெதுவாகத் திருப்ப முயற்சி செய்; அவர்களுடைய அறிவுக் கண்ணைத் திறந்துவிடு; அவர்கள் எப்படி வாழ்க்கையை நடத்த வேண்டுமென்று நீ வாழ்ந்து காட்டு. ஆனால் இந்தச் சீர்திருத்த விஷயத்தில் நீ மிகவும் நிதானமா யிருக்கவேண்டும். திடீரென்று ஒரு மாறுதலைப் புகுத்தாதே. அது ஆத்திரத்தைத்தான் உண்டு பண்ணும். மற்றும் நீ எந்தவிதமான சீர்திருத்தம் செய்தாலும், அது, யாரை உத்தேசித்து நீ அந்தச் சீர்திருத்தத்தைச் செய்கிறாயோ அவர்களுடைய பொருளாதார நிலைமைக்குத் தகுந்தபடி இருக்கட்டும். அவர்களுடைய வருமானம் என்ன, செலவு என்ன இவைகளையெல்லாம் நீ கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும். அவர்களுக்குத் தகுந்தபடியாக அவர்களைச் சீர்திருத்திக் கொண்டு போக வேண்டும். சில சமயங்களில் உனக்குச் சாத்தியமா யிருப்பது அவர்களுக்குச் சாத்தியமில்லாதிருக்கலாம். இதற்காக அவர்கள் மீது குறை சொல்வதில் பயனில்லை. அவர்க ளுடைய நிலைமையி லிருந்துதான் நீ அவர்களைப் பார்க்க வேண்டும். பொதுஜன அபிப்பிராயம் என்பது ஒன்று உண்டல்லவா? அதனை உருவாக்குவது உன் கடமை. அப்படி உருவாக்குவதற்கு, முதலில் உனக்கென்று சொந்தமான சில அபிப்பிராயங்கள் இருக்க வேண்டும். அந்த அபிப்பிராயங்கள் திடமானவையாகவும் இருக்க வேண்டும். இங்ஙனம் திடமான அபிப்பிராயங்கள் கொள்வதற்கு ஆழ்ந்த படிப்பும், நீண்ட அனுபவமும் வேண்டும். இவையிரண்டை யும் நீ அதிகமாகச் சேகரித்துக் கொள். எந்தப் பிரச்சினையைப் பற்றியும், அல்லது எந்த ஒரு தனி நபரைப் பற்றியும், அல்லது எந்த ஒரு ஸ்தாபனத்தைப் பற்றியும் சட்டென்று ஓர் அபிப்பிராயம் சொல்லாதே; அவைகளைப் பற்றி ஒரு தீர்மானம் செய்துவிடாதே. சாதக பாதகங்களைப் பற்றி நன்றாக ஆலோசனை செய்த பிறகே எந்த ஒரு பிரச்சினையைப் பற்றியும் ஒரு முடிவுக்கு வரவேண்டும். அப்பொழுதுதான் உன் அபிப்பிராயத்திற்கு மதிப்பு இருக்கும். தேசத் தொண்டன் என்ற முறையில் நீ வெளியிடுகிற அபிப்பிராயம், ஆயிரக் கணக்கான சகோதரர்களைப் பாதிக்கும் என்பது உனக்கு ஞாபகமிருக் கட்டும். ஆகையால் மேடை மீதேறிப் பேசுகிறபோது ஆகட்டும், தனிப்பட்ட முறையில் நண்பர்களோடு சம்பாஷிக்கிற போதாகட்டும், உன் வார்த்தைகளை அளந்து உபயோகிக்க வேண்டும். உன் அபிப்பிராயத்தை இனிமையான பாஷையில் ஆனால் உறுதியாக மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் மனவருத்தம் ஏற்படாதபடி வெளியிடவேண்டும். இது விஷயத்தில் நீ சர்வ ஜாக்கிரதையுட னிருப்பாயாக. பொது ஜனங்களிடையில் நீ பிரச்சாரத்திற்காகச் செல்கிற போது, உன்னுடைய தயாள குணத்தினாலேயே அப்படிச் செல் கிறாய் என்று எண்ணிக் கொண்டு செல்லாதே. அவர்களிடத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன என்ற மனோபாவத்துடனேயே செல். கற்றுக் கொள்ளும் மனோபாவமுடையவர்கள்தான் பிறருக்குக் கற்பிக்க முடியும். பொது ஜனங்கள் மத்தியிலே தொண்டு செய்யும் சந்தர்ப்பம் உனக்கு ஏற்பட்டிருப்பதைப் பற்றிச் சந்தோஷப்படு; அதிலே பெருமை கொள்; அதனை ஒரு புனிதமான கடமையாக ஏற்று ஒழுங்காகச் செய்து கொண்டு போ. அந்தத் தொண்டுக்காக எவ்வித உரிமைகளையோ சலுகைகளையோ எதிர்பாராதே. ஆரம்பத்தில் பொது ஜனங்களிடையே சேவை செய்யச் செல்கிற போது உன்மீது அவர்கள் சந்தேகங் கொள்ளக்கூடும். நீ உன் மனத்தை அவர்களுக்குத் திறந்து காட்டலாம்; ஆனால் அவர்களுக்கு உன் திறந்த மனத்தைப் பார்க்குஞ் சக்தி வேண்டுமல்லவா? அந்தச் சக்தியை நீதான் அவர்களுக்கு உண்டுபண்ணவேண்டும். அப்பொழுது தான் அவர்கள் உன்னைப் புரிந்து கொள்வார்கள். ஆகையால் ஆரம்பத்தில், பொது ஜனங்கள் மத்தியில் சேவை செய்வதென்பது உனக்குக் கஷ்டமாகவே இருக்கும்; அநேக கஷ்டங்கள் ஏற்படக் கூடும்; யாருக்காக சேவை செய்ய முன்வந்திருக்கிறாயோ அவர்களே உன்னை எதிர்ப்பார்கள். இவைகளை யெல்லாம் நீ பொறுமையுடன் சமாளிக்க வேண்டும்; கொஞ்சம் கூட நிதானத்தை இழக்காமல் உன் சேவையைச் செய்து கொண்டு போக வேண்டும். சிறிது காலத்திற்குப் பிறகு, உனக்கேற்பட்ட இடைஞ்சல்கள் தாமாகவே விலகும்; எதிர்ப்புகள் ஒழியும்; உன் மீது விரோதம் பாராட்டியவர்கள் நீ சொல்கிறபடி நடப்பார்கள். ஆகவே நீ முதலில் அதிகமான பொறுமையைக் கைக் கொள்ளவேண்டும். பொது ஜனங் களிடத்தில் உண்மையான அன்பு இருந்தால்தான் உனக்குப் பொறுமை ஏற்படும். அன்புதான் எல்லாவற்றிற்கும் ஆணிவேர். இதனை நீ வளர்த்துக் கொண்டு போக வேண்டும். மகனே! இதுதான் என்னுடைய கடைசிக் கடிதம். என் னுடைய நாற்பது கோடிமக்களும் பசியாற உண்டு, உடம்பு மறைய ஆடையணிந்து, நிம்மதியான வாழ்க்கையை நடத்த வேண்டு மென்பதே என் விருப்பம். அந்த விருப்பத்தை நிறைவேற்ற நீ ஒரு கருவியா யமைய வேண்டு மென்பதற்காகவே இந்தக் கடிதங்களை உனக்கு எழுதிக் கொண்டு வந்தேன். இந்தக் கடிதங்கள் உன்னுடைய தேசத் தொண்டுக்கு வழி காட்டியா யிருக்குமானால் அதுவே நான் அடைகிற திருப்தி உனக்குச் சகல சௌபாக்கியங்களும் உண்டாக வேண்டுமென்று ஆசீர்வதிக்கும், பாரத மாதா. 