வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல் திரட்டு - 9 ஹிட்லர், முஸோலினி ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 9 ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2005 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10.5 புள்ளி பக்கம் : 24 + 344 = 368 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 230/- படிகள் : 500 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 அணிந்துரை எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையை தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார். ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்துவிட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன். அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார். ஆமாம் வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமையாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறு வெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக் கின்றன. இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது. 83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக் கின்றன. அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தன்னே நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம். காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033. பெ.சு. மணி வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள் தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணியாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ்த் தென்றல் திரு. வி. க.; மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப்பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையை தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது. இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது. போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட்களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல். சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும். சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும். காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே! எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்றுதலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே! 6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டை - 622 002. டோரதி கிருஷ்ணமூர்த்தி பதிப்புரை ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக்கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத்தக்கது. தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர்களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகிறது. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத்தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கி யங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம். தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல்களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். அடிமை உணர்வையும், அலட்சியப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம். பதிப்பாளர் நுழையுமுன்... அபிசீனியா சக்கரவர்த்தி ஹெயிலி செலாஸி  அபிசீனியா - இல்லை - இல்லை - இது எத்தியோப்பியா என்று இதன் பெயரை நீங்களும் தெரிந்துக்கொள்ள வேண்டாமா?  இதற்குப் போதுமான எண்ணெய் கிடைக்கவில்லை. ஆயினும் ஒருவாறு விளக்கு ஏற்றி வைத்திருக்கிறேன் என்று இந்நூலை உருவாக்கிய காலத்தில் இந் நாட்டைப் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை என்பதை ஆசிரியர் குறிப்பிடு கிறார்.  இயற்கை இடையூறுகள் எவ்வளவு இருந்தபோதிலும் அவ்வளவையும் கடந்து தன் நாட்டை வளப் படுத்திய அபிசீனியா பேரரசன் ஹெயிலி செலாஸி வரலாறு நமக்கு ஒரு படிப்பினை - படிக்க வேண்டிய பாடம்.  எத்தியோப்பிய அரச குடும்பமும், சப்பானிய அரச குடும்படும் உலக அரச குடும்பங்களில் சிறப்பு உடை யனவாக சொல்லப்படுகின்றன. நீங்களும் படியுங்கள்.  வெயிலினால் கருத்துப்போனவர்கள் வாழும் நாடு. கலப்பு இன மக்கள் வாழும் இடம் என்பது இதன் பொருள், அரபிய நாட்டினர் இந்த நாட்டோடு வணிகம் செய்த காலத்தில் பல இனமக்கள் வாழும் நாடு என்று கருதி இதற்கு கலப்பு நாடு என்று பெயர் வைத்ததாக சர்மா கூறுகிறார். உள்ளே செல்லுங்கள். இந்த நாட்டை அறிவோம்  உலக உருண்டைப் பந்தில் குறைந்த காலமே மழை பெய்யும் இடம் எத்தியோப்பியோ மட்டுமே. எகிப்து, சூடான் நாடுகளின் செழிப்புக்குக் காரணமாக அமைந்துள்ள நீல ஆறு இந்த நாட்டில் இருந்துதான் உற்பத்தியாகிறது .  இன்று நாம் நாள்தோறும் காலை எழுந்தவுடன் அருந்தும் குளம்பி (காபி) முதல்முதலாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது இந்த நாட்டில் உள்ள காபா மாநிலத்தில் விளைந்தது என தெரிகிறது. அதனால் இதற்கு காபி என்று பெயர் வந்தது.  குறைந்த நீரில் உழவுத் தொழிலில் மேன்மையுற்று உலக நாடுகளுக்கு உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இந்நாட்டை முன்னேற்றிய மன்னர்தான் அபிசீனிய சக்கரவர்த்தி. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்பதற்கு இவன் வரலாறு சாட்சி.  வேளாண் தொழிலே இந் நாட்டுமக்களின் உயிர்த் தொழில். பருத்தி, கோதுமை, பார்லி, தினை, சோளம் இந்நாட்டின் முக்கிய விளைப்பொருள்கள். காட்டுப்பகுதி மாநிலங்களில் இரப்பரும், மர வகைகளும் நிறைந்த நாடு. தங்கம், வெள்ளி, செம்பு, உப்பு, நிலக்கரி, கந்தகம் முதலிய கனிவளங்கள் நிறைந்த நாடு. மக்களை அறிவோம்  செல்வ வளமிக்க பெண்மக்களாக இருந்தாலும் நூல் நூற்றல், நெசவு நெய்தல், உணவுச் சமைத்தல் ஒவ்வொரு எத்தியோப்பியப் பெண்ணும் தெரிந்திருக்க வேண்டும். பொதுத் தொண்டிலும், உலக அரசியல் நடப்பிலும் பெண்மக்கள் பங்கேற்றதாகத் தெரிகிறது.  எத்தி யோப்பியர்கள் தாய் மொழிப் பற்றும், தாய் நாட்டுப் பற்றும் மிக்கவர்கள். தம் மக்கள் உருவாக்கிய கை நூல் ஆடைகளையே உடுத்திக்கொள்வர். அணிகலன்களும் தம் மக்களால் செய்யப்பட்டதையே அணிவர். நாட்டுப் பற்றுக்கும், மொழிபற்றுக்கும் சாட்சியாக இருக்கும் நாட்டை நீங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள். நீதிமன்றத்தை அறிவோம்  பணத்திற்காகவோ, நட்புரிமைக்காகவோ, அறமற்ற தீர்ப்பு வழங்கும் வழக்கம் அந்த மண்ணில் கிடையாது.  இம்மக்களின் உழைப்பும், நாட்டுப்பற்றும், தாய்மொழிப் பற்றும், நீதிமன்ற நெறிமுறைகளும், அம்மண்ணிற்குப் பெருமை சேர்க்கின்றன. மொழி இன நாட்டுப்பற்றில் தமிழர்களின் நிலை அவலம் நிறைந்ததாக உள்ளது.  அறிவியலில் விந்தைகள் பல நிகழ்ந்து கொண்டிருக்கும் காலம் இது. அந்த நாட்டைப் பற்றி மேலும் அறிவதற்கு முயலுங்கள். அதற்கு வழிகாட்டியாய் அமையும் இந் நூலைப் படித்து மேலும் வரலாற்றுப் பயணத்தைத் தொடருங்கள். * * * கமால் அத்தாதுர்க்  19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் நோயாளி என்று உலக வல்லரசுகளால் இழித்துரைக்கப்பட்ட துருக்கி நாட்டிற்குப் புத்துயிர் அளித்துப் புதுவாழ்வும், புகழ் வாழ்வும் தேடித்தந்தவன் கமால் அத்தாதுர்க். துருக்கி நாட்டு அகவாழ்விலும், புறவாழ்விலும் மாபெரும் மாற்றங் களைச் செய்தவன்.  ஆழ்ந்த நாட்டுப் பற்றும், உள்ளத்தில் உறுதியும், ஓயா உழைப்பும், எதனையும் எதிர்கொண்டு தாங்கிக் கொள்ளும் ஒருவனால்தான் ஒரு நாட்டின் விடுதலையை முன்னெடுக்க முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவனின் வரலாற்றுச் சுவடுகள்.  வாழ்விழந்து படுகுழி பள்ளத்தில் தாழ்ந்து கிடந்த துருக்கிய மக்களைக் கைதூக்கிவிட்டவன்; இளம் துருக்கியர் இயக்கத்தை தோற்றுவித்து தாய்நாட்டுப் பற்றுக்கான மூல விதையை முதன்முதலில் அந்த மண்ணில் விதைத்தவன்.  துருக்கி துருக்கியர்களுக்கே என்று கூறி உலக நாடுகளின் நாட்டுப்பற்றுக்கு ஊற்றுக்கண் அமைத்தவன். அவன் விதைத்த அந்த ஒளிதான் இன்று உலகெங்கும் கலங்கரை விளக்கமாக அமைந்து, அந்தஅந்த நாட்டின் விடுதலைப் போருக்கு வழிகாட்டிச் செல்கிறது. படியுங்கள். தாய் மொழி பற்று  துருக்கி மொழியை, துருக்கியப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக அமைத்து, தாய்மொழிக் கல்விக்கு உலக அரங்கில் முதல் முதலாக விதைப் போட்டவன். உலக நாடுகளுக்கு முன்னேர் பூட்டியத் தலைவன். ஆட்சி யாளர்களின் கைகளில் பாடமாக இருக்க வேண்டிய மறைநூல் இது.  துருக்கிய மொழிதான் நீதிமன்ற மொழியாகவும், நிருவாக மொழியாகவும், வணிக மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும், அறிவியல் கல்வி மொழியாகவும் துருக்கி மொழிதான் இருக்க வேண்டுமென்று சட்டம் இயற்றி, உலக நாடுகளுக்கு வழிகாட்டிச் சென்றவன்.  பெண்ணியச் சீர்திருத்தமும், இலக்கிய மறு மலர்ச்சியும், பொருளாதார மறுமலர்ச்சியும் செய்து, உலக அரங்கில் துருக்கியைத் தூக்கி நிறுத்தியவனின் வரலாறு. பெண்ணியச் சிந்தனையாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், இலக்கிய மறுமலர்ச்சியாளர்கள் படிக்க வேண்டிய நூல்.  புழுதியிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் நெடும்பயணம் மேற்கொண்டு, மக்களிடையே எழுச்சி அலையை ஏற்படுத்தி அம் மக்களின் அடிமைவிலங்கொடித்த வீரத் தலைவனின் வரலாறு .  சோர்வுற்று நிலைகுலைந்து தலை குனிந்து கிடந்த மக்களை தலைநிமிர வைத்தவன். மொழியும், இனமும், நாடும் மேன்மையுற உழைக்கும் தமிழர்களின் கைகளில் கட்டாயம் தவழ வேண்டிய நூல். ஒரு கலங்கரை விளக்கம்.  கைகட்டி வாய்பொத்தி கண்மூடிக் கடவுளைத்தொழுது கொண்டிருந்தால் மட்டும் விடிவுக்காலம் ஏற்படாது. ahuhtJ e«ik¡ fh¥gh‰¿¡ fiuna‰¿ÉLth® v‹w v©zK« c§fS¡F nt©lh«! நம் கையே நமக்கு உதவி என்பதை மக்களுக்கு உணர்த்தியவனின் வரலாறு.  நீதிபதிகள், நிருவாகிகள், கல்வியாளர்கள், வணிகர்கள், வழிபாட்டாளர்கள் அறிவியலாளர்கள் மறுமலர்ச்சி யாளர்கள் கைகளில் தவழ வேண்டிய அரிய நூல். படியுங்கள்.  நாடு உனக்கு என்ன செய்தது என்று எண்ணாதே! நீ நாட்டுக்கு என்ன செய்தாய்? என்று கேட்ட கென்னடியின் வரிகளைத் தமிழர்களுக்கு நினைவூட்டும் நூல் இது. பொன்மொழிகளுள் சில  ஒரு நாட்டிற்குச் செல்வமும் செழிப்பும் இன்றியமையா தேவைகள்தாம். ஆனால், விடுதலை இல்லாத நாடாக இருந்தால் நாகரிக உலகில் அது அடிமைநாடாகவே கருதப்படும்.  துருக்கியன் நன்மதிப்புடையவன், பெருந்தன்மை கொண்டவன், திறமை யுடையவன், உழைக்கும் ஆற்றல் உடையவன். இப்படிப்பட்ட துருக்கியர்களை கொண்ட மக்கள் குமுகாயம், அடிமையாக உயிர் வைத்துக் கொண்டு இருப்பதை விட அடியோடு மடிவதையே விரும்பும்.  மாற்றானிடமிருந்து மண்ணைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே உடைய வர்க்கு ஒரே ஒரு வழிதான் உண்டு - அது மரணம்.  உன் பாதையில் துன்பங்கள் வரலாம். தூக்கி எறிந்து விட்டு திரும்பிப் பாராமல் நேர்மையாக போ. முன்னேறிச் செல். உன்னை நோக்கி வந்த இடர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.  ஆசிரியர்களே புதிய துருக்கியை உருவாக்குவது உங்களுடைய வேலை; உங்கள் திறமையிலேயே - நீங்கள் செய்கின்ற ஈகத்திலேயே - துருக்கியின் எதிர்கால தலை முறையினரின் வாழ்க்கை இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்; வருங்கால துருக்கியின் தலைமுறை யையும் துருக்கிய குடியரசையும் அதன் இறையாண்மை யையும் காப்பாற்றுவது உங்கள் கடமை.  நம்முடைய பெண்கள் ஆண்களைக் கண்டவுடன் ஏன் முகத்தையும் கண்களையும் மூடிக்கொள்கிறார்கள்? நாகரிகம் உடைய மக்களுக்கு இது பொருந்துமா? நமது பெண்ணினம் நம்மைப்போலவே அறிவு நிரம்பியவர்கள். அவர்களும் கண்விழித்து, உலகத்தைப் பார்க்கட்டுமே! முன்னேறத் துடிக்கும் ஆவலுடைய குமுகாயம் தன் பாதியான பெண்ணினத்தைப் புறக்கணிக்கலாமா?  இவை இந்நூலின் எடுக்கப்பெற்ற சில வயிர வரிகள். யானைப் பசிக்குச் சோளப் பொரி எப்படிப் போதும்? துருக்கியின் எழுச்சிச் சுடரொளியில் தமிழனின் முன்னேற்றம் தொடரட்டும். நூலுக்குள் நுழையலாம். வாருங்கள். * * * சாக்ரட்டீசு அறிவுக் கோயிலைத் திறந்தவன்  தமிழர்களைப் போலவே உலகத்தில் தொன்மை மிக்க நாகரிகத்திற்குச் சொந்தம் கொண்டாடும் உரிமை கிரேக்கர் களுக்கு உண்டு. அம்மக்களின் கிரேக்கம் (கிரீ) ஐரோப்பாக் கண்டத்திற்கு அறிவுக் கண்ணையும், நாகரிக வழியையும் திறந்துவிட்ட மண்.  அறியாமை இருளில் மூழ்கித்தவித்த மக்களுக்கு அறிவொளி கொடுத்த கிரேக்கமண்ணுக்கு மேலும் பெருமை சேர்த்த பேரறிஞன் சாக்ரட்டீசு. அவன் பிறந்த மண்ணை நோக்கி வணங்குவோம்.  ஒரு நாடு விடுதலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டு மானால் அந்த நாட்டு மக்கள் வெறும் நாட்டுப் பற்றுடைய வராக இருந்தால் மட்டும் போதாது. அறிவும் ஆற்றலும், உண்மை ஓம்பலும், நீதி வழுவாமல் நடந்து கொள்ளலும் வேண்டும். என்று கூறிய புகழாளன்.  கொள்கைக் கோயிலில் தன்னைக் கற்பூரமாக எரித்துக் கொண்டவன் சாக்ரட்டீ. இவன் அறிவுக் கோயிலின் தலைவாயிலைத் திறந்து விட்ட பேரறிவாளன். இவனைப் பற்றி படியுங்கள். இவனுடைய பெருமைகள்  தனது நாடு பெரும் சிக்கலில் சிக்கித் தவித்துக் கொண் டிருந்த போது அதனை மீட்க தன்னால் இயன்றதை செய்தவன்;  தனக்கு வந்த வீரப் பரிசை தன் தோழனுக்கு வழங்கியவன். தம்மையே பிறருக்கு ஒப்படைத்த பெருந்தகையாளன்.  மக்களிடம் மண்டிக் கிடந்த அறியாமை இருளை அடியோடு அகற்றிட அவர்களுக்குப் பகுத்தறிவுக் கருத்துக்களைப் புகட்டிய பண்பாளன்;  நாட்டுப் பற்றாளன்; நாட்டைமீட்கப் போர்க்களம் கண்டவன்; நாட்டின் மானம் காக்க மரணத் தண்ட னையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டவன்;  வறுமை வாழ்வை விரும்பி ஏற்றவன். தன்னலம் அணு வளவும் இல்லாத தவமகன். மாந்த நேயம் என்னும் மலைமுகட்டில் ஒளிவீசித் திகழ்ந்தவன்.  தன் நாட்டை உலக வரலாற்றின் பொன்னேட்டில் பொறிக்க வைத்தவன். தன் மறைவிற்குப் பிறகு நாட்டின் எழுச்சியைச் சுமந்து செல்லும் பக்குவத்தைத் தன் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தவன்.  யாழின் நரம்பிலிருந்து பிறக்கும் இன்னோசை நாதமான இவன் வாழ்வு படிக்கத்தக்கது; பாராட்டத்தக்கது; பாது காக்கத்தக்கது; பின்பற்றத்தக்கது. உங்களுக்காக இதோ சாக்ரட்டீசின் ஈக வரலாற்றை தந்துள்ளோம். நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா? * * * பிளேட்டோ  அறிவுலக மேதை சாக்ரடீசின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் எழுத்தாக்கி உலகில் நிலைத்திருக்கச் செய்தவன். தனக்குப்பின் அரிடாட்டில் என்னும் பேரறிஞனை உலகுக்குத் தந்தவன்.  சாக்ரடீசு என்னும் அறிவுச் சுடரிலிருந்து எழுந்த நந்தா நல்விளக்கு பிளேட்டோ. இவனைத்தான் சாக்ரட்டீசின் தலைமாணாக்கன் என்று அறிவுலகம் போற்றிப் புகழ் கின்றது.  ஓர் ஆசிரியன் வாழ்கின்ற வகையிலே-சொல்லிக்கொடுக் கின்ற முறையில்தான் ஒரு மாணக்கனின் அறிவு தெளிவடை யும்; உள்ளம் பண்படும். ஆசிரியர்கள் படிக்க வேண்டிய நூல்.  ஓர் அரசன் எப்படி இருக்கவேண்டும், எப்படி ஆள வேண்டும் என்பன வற்றைப் பொருத்தே ஒரு நாட்டின் நிலை இருக்கும். என்பதை ஆட்சியாளர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய நூல்.  அறிவுக்கு அடக்கம் வேண்டும். அப்பொழுதுதான் அந்த அறிவுக்கு ஓர் ஒளி ஏற்படும். பிளேட்டோவினிடத்தில் அந்த அறிவின் அடக்கம் இருந்தது. அந்த அடக்கம்தான் இவனை அமரருள் உய்த்தது என்பதை நீங்களும் தெரிந்துக் கொள்ளுங்கள்.  மாந்தப் பண்பின் அழியாத் தன்மையையும், நாட்டின் இலக்கணத்தையும் கண்டு காட்டும் நூல். பிளேட்டோ வின் பெருந்தன்மையும், உண்மைத்தன்மையும் அவனுக்கு அணிகலனாக அமைந்தன.  சாக்ரட்டீசின் மறைவிற்குப் பிறகு ஏதென் நகரம் பசுமை இழந்தசோலையாக மாறியதால் அந்த நாட்டை விட்டே வெளியேறியவன் பிளேட்டோ. இன்னும் என்ன? படியுங்கள்.  மிதமிஞ்சி உண்ணுவதும், குடிப்பதும் கேளிக்கைகளில் ஈடுபாடும் கொண்டுள்ள மக்கள் வாழும் ஒரு நாடு பண்பட்ட அரசியல் அமைப்பில் நிலைத்திருக்க முடியாது என்பது பிளேட்டோவின் வரலாறு உணர்த்தும் செய்திகளை உள்ளே படியுங்கள்.  வள்ளுவத்தின் பெருமையை உணர்த்தும் செய்திகள் இந்நூலினுள் புதைந்து கிடக்கின்றன. * * * அரிடாட்டில்  தன் காலத்து அறிவையெல்லாம் ஒருங்கே திரட்டி, அந்த அறிவுக்கு உருவம் கொடுத்தவன். அந்த உருவத்தின் பல உறுப்புகளாக அறிவைப் பிரித்துப் பார்த்தவன். பிறகு அந்த உறுப்புகளை சேர்த்துக் காட்டியவன் என்று அவன் காலத்து அறிஞர்களால் போற்றப்பட்ட பேரறிஞன்.  பாண்டியன் தலையலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனின் மதிப்பிற்குரிய அவைக்களப் புலவரேறு மாங்குடி மருதனைப் போல இவன் உலக மாவீரன் அலெக்சாந்தரை நல்வழிப் படுத்தியவன் இவன் வரலாற்றை நீங்களும் தெரிந்துக்கொள்ளவேண்டாமா?  பேரறிஞன் பிளேட்டோவால் பெருமைப்பட கூறப்பட்ட வன். அறிவின் மலையாய்த் திகழ்ந்தவன். அறிஞர்களுக்கு அறினஞாய் இருந்தவன்.  மன்னனின் கடமைகள் யாவை என்பதை உணர்த்தும் நூலை எழுதி மன்னனுக்கு உணர்த்தியவன். இவனைப் பற்றிய செய்திகள் வள்ளுவத்தின் பெருமைக்குப் பெருமை சேர்ப்ப தாக உள்ளது.  வள்ளுவ அரசியலைப் போல செறிந்த - தெளிவான இவனது அரசியல் மெய்ம்மங்கள் இன்றைக்கும் அரசியல் பொதுநோக்கர்களால் பாராட்டப்படுகின்றன.  அறத்தைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் இன்னபிற வற்றையும் எழுதியதால் அறிஞர் உலகில் போற்றப் பட்டவன்.  உலக மொழிகள் பலவற்றில் அரிடாட்டிலின் அரசியல் மொழியாக்கம் செய்யப்பட்டு உலக அரசியல் அரங்கில் நிலையான வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது.  நல்ல சட்டங்களால் ஆளப் படுவதைக் காட்டிலும் ஒரு நல்ல மனிதனால் ஆளப்படுவதுதான் நாட்டிற்குச் சிறப்பு, நாணம் என்பது இளமைக்கு அணிகலன். முதுமைக்கு இழுக்கு, நல்லதை நாடி ஒருவனிடம் நட்புக்கொள்க, இவை போன்ற பல செய்திகள் இவன் வாழ்க்கையின் பதிவுகளாகும்.  இளைஞர்கள், முதியவர்கள் எப்படிப்பட்ட தன்மை உடையவர்கள் என்பதை அறிவதற்கு இந்நூலின் உள்ளே நுழையுங்கள், செய்திகளைப் படியுங்கள். அறிவுக் கண் கொண்டு ஆழ்ந்து சிந்தியுங்கள்.  கிரேக்கத்தின் மேன்மையை தெரிந்துக்கொள்வதற்குப் பிளேட் டோவும், அரிடாட்டிலும் என்ன சொல்கிறார்கள் என்பதை நாம் படிக்கவேண்டும். எந்த ஒன்றையும் முழுமை யாக தெரிந்துகொள்ள அறிவும், ஆராய்ச்சியும் தேவை. அறிவை பிளேட்டோவின் வழியிலும், ஆராய்ச்சியை அரிடாட்டி லின் வழியிலும் பார்க்க வேண்டும்.  பிளேட்டோ -அரிடாட்டில் ஆகிய இருவரும் கிரேக்கத்தின் தொன்மையான அரசியல் வரலாற்றின் இரு கண்கள். இரண்டின் ஒளிப் பாய்ச்சல்களையும் தமிழ்ப் படிப்பாளிகளுக்காக சர்மா படைத்தளித்துள்ளார்.  அரிடாட்டிலின் வரலாற்றிலிருந்து புத்தெழுச்சியையும் புதுப்பாடத்தையும் கற்றுக்கொள்ள வாருங்கள். நூலுக்குள் நுழையுங்கள். * * * கன்பூசியசு  சீன மக்கள் போற்றும் புலவரேறு கன்பூசிய. நிலை குலைந்து கிடந்த சீனப் பெருநிலத்தைச் சீர்ப்படுத்திய பேரறிஞன்; 250ஆண்டு காலச் சீன வரலாற்றைத் தன் விரும்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு மாபெரும் வரலாறாகப் படைத்தவன்.  தனிமாந்தர் ஒவ்வொருவரும் அறநெறியில் சென்றால் தான் குமுகாயமோ, அரசோ சரிவர இயங்க முடியும் என்னும் கருத்தைப் பரப்பியவனைப் படியுங்கள். பழமை யைத் தெளிவுறத் தெரிந்துக் கொண்டால்தான், புதுமையை உருவாக்க முடியும் என்ற கருத்துப் பட வாழ்ந்தவனின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.  உரிமைகளும், கடமைகளும் பின்னிப் பிணைந்தவை. கடமைகளைத் துறந்து விட்டோ, மறந்து விட்டோ உரிமைகள் மட்டும் என்னும் குறுகிய பாதையில் சென்று கொண்டிருந்தால் அந்தப் பாதைக்கு வலிவு வராது என்பதை உணர்த்தும் அவனுடைய கருத்துக் கட்டளை களிலிருந்து சில:  நாம் செய்யத் தவறவிட்ட ஒவ்வொரு கடமையும், நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒவ்வொரு உண்மையை மறைத்து விடுகிறது.  மனத்தைக் கடமையில் செலுத்து; ஒழுக்கத்தைக் கடைப் பிடி; மனத்துக்கண் மாசிலனாக இரு; கண்ணியமாகவும், பொறுமையாகவும் செயல்களைச் செய்வாயெனில் நாகரிக மில்லாத இடங்களில் கூட நீ நன்மதிப்புப் பெறுவாய்.  புகழைப் பெறுவதற்குத் தகுதியுடையவனாக உன்னை ஆக்கிக் கொள்; ஒழுக்க மற்றவனை நண்பனாகக் கொள்ளாதே; நல்லன கொண்டு தீயன விலக்கு; உன் அறிவுக்கு உகந்ததை உலகம் ஏற்கும்படி செய்.  தம் மண்ணின் மெய்ம்மங்களை மக்களிடம் பரப்பிய கன்பூசியசு வரலாறு மெய்ம்மத்தின் வரலாறு - சீன நாட்டின் வரலாறு - பழமையின் வரலாறு. தமிழர்கள் படிக்க வேண்டிய வரலாறு.  வரலாற்றை முறையாக ஆவணப்படுத்தாதவர்கள் தமிழர்கள். சீனப் பெருநிலத்திற்குப் பெருமை சேர்த்த கன்பூசியசைப் பற்றிய வரலாற்று ஆவணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள். தமிழர்களுக்கு உள்ள வரலாற்றுப் பெருமைகளை உணருங்கள். மண்ணின் பெருமையை மண்பதைக்குக் காட்டுங்கள். * * * மார்க் அரேலிய  மார்க் அரேலிய உருக்குலைந்து போன உரோமா புரியை உயர் நிலைக்குக் கொண்டுவர உழைத்தவன்.  குறையற்ற வேந்தனாகவும், நிறைவுற்ற மாந்தனாகவும் வாழ்ந்தவன்; நற்குணங்களைப் பெரிதெனக் கொண்ட பண்பாளன் மார்க் அரேலிய.  செல்வமோ, அதிகாரமோ இல்லாத நிலையில் இயற்கை யோடு ஒட்டிய வாழ்வு நடத்துவது அவ்வளவு கடினமல்ல.  அரச வாழ்வும், ஆடம்பர செல்வச் சூழலும், அளவற்ற அதிகாரமும் சூழ்ந்திருக்கும் போது ஒருவன் ஒரு துறவியாக வாழ்தல் எவ்வளவு கடினம் என்பதை, அவன் நிலையில் நின்று பார்ப்பதை விட உங்களின் பார்வையில் நின்று இவனைப் பாருங்கள். இவன் வாழ்வு காட்டும் வழித்தடங்கள்  என்கடன் பணிசெய்து கிடப்பதே; நல்லவனாக வாழ்வது தான் வாழ்வின் குறிக்கோள்; எதனையும் எதிர்கொள்ளப் பழகு; செல்வம் பெருக்கு-செல்வத்தை ஈந்து வாழ்; ஒருவ ரோடு ஒருவர் இணைந்து வாழ்வதுதான் மாந்தர் பண்பு; பிறர் குறை காண முயலாதே - தன் குறை நீக்கி வாழ்.  பொதுத்தொண்டு செய்வதுதான் மாந்தப் பிறப்பின் உயர் நிலை - அதனைச் செய்து வாழ்; பொறுமை கடலினும் பெரிது; எளிமையும் அடக்கமும் மாந்த வாழ்வின் அணி கலன்கள்; நன்மை செய், தீமை தவிர்; உண்மை பேசு - புறம் பேசாதே; மாந்தப் பற்றுகொள் - அன்புடன் வாழ முற்படு என்பன இவன் வாழ்வின் அணிகலன்கள். படியுங்கள். * * * அசோகன்  இந்திய அரசுச் சின்னமாக விளங்கும் அசோகச் சக்கரம் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் பேரரசன் அசோகனின் நினைவாய் விளங்கி இந்தியத் துணைக்கண்டத்திற்குப் பெருமைச் சேர்த்து வருவதை அறிவோம்.  கலிங்கநாட்டின்மீது போர் தொடுத்து அதனால் குருதி ஆறு கொப்புளித்து ஓடும் அளவிற்கு விளைந்த மரண ஓலங்களி லிருந்து அவன் அடைந்த மனமாற்றத்தைப் படியுங்கள்.  அறத்தின் கண்கள் திறந்த அசோகனுக்கு அருளின் வடிவம் புத்தனின் கொள்கை விளக்கு கிடைத்தது. போர்ப் பயணம் ஓய்ந்தது; களப்போர்களில் மறவர்களின் வாழ்வு குற்றுயிரும், குலையுயிருமாய்ப் போவதற்கு மாறாக வளம் பெறத் தொடங்கியது.  மாமன்னன் - பேரரசன் - மன்னர் மன்னன் என்றெல்லாம் கொண்டாடப்பட்ட அவன் புத்தனின் அருள் வெள்ளத்தை உலக மக்கள் பருகிடுவதற்கான தலைமை தூதனானான்.  மக்களுக்குத் தந்தையாய் இருந்தவன். அரசியல் தேரை அமைதி வழியில் ஓட்டியவன். அயல் நாட்டாரையும் அன்பினால் ஆட்கொண்டவன். இன்னா செய்தாருக்கு நன்னனயம் செய்த நல்லோன்.  உண்மையில் இவனது ஆற்றலின் அருமை கற்பாறை களிலும், கல்தூண்களிலும் செதுக்கப்பட்ட வரலாற்று ஓவியங்களாக இன்று நமக்கு காட்சிதந்து நம்மை யெல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறது.  அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழும் இல என்னும் வள்ளுவத்தின் பெருமைக்குப் பெருமைச் சேர்த்தவன்.  அறம், ஈகை என்பவை என்பனவற்றை விளக்கி, அறத்தின் வாழ்வை உலகிற்கு உணர்த்தியவன். நானிலத்திற்கான நாகரிக விளக்கேற்றி நல்லறிவு புகட்டியவன்.  அரசர்களிலே மாந்தனாக விளங்கிய இவன் மற்றவர்கள் செல்லாத புதிய பாதையில் சென்று புத்துலகம் படைத்த புதியவனை; தூயவனை படியுங்கள்.  அசோகன் கடைப்பிடித்த அந்தக் கொல்லாமை அறம் அண்ணல் காந்திக்கும் ஒளியாகத் திகழ்ந்தது; இந்திய விடுதலைக்கு வழியும் பிறந்தது. உள்ளே செல்லுங்கள்.  வரலாற்றுக் கண்ணிகள் - தொடர்ச்சிகள் நம்மை வாழ வைக்கும் அச்சுப்புள்ளிகள். அதன் தொடர்ச்சியில் வலுவான முத்திரையிட்ட அந்த அசோகச் சின்னத்தை வழங்கிய மன்னர் மன்னனின் வாழ்க்கைச் சுவடுகளை சர்மா நமக்குத் தந்துள்ளார். தெரிந்துக் கொள்ள வேண்டாமா? படியுங்கள். அறத்தின் கண்கொண்டு பாருங்கள். * * * நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் பெ.சு. மணி, ஞானாலயா கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், புலவர் கோ. njtuhr‹, Kidt® ïuhFyjhr‹, Kidt® ïuhk FUehj‹, K¤jÄœ¢ bršt‹ f.K., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செ. சரவணன் மேலட்டை வடிவமைப்பு இ. இனியன் அச்சுக்கோப்பு முனைவர் செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோ பாய் மெய்ப்பு வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மபிரியா, நா. இந்திரா தேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன் உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . அபிசீனிய சக்ரவர்த்தி இரண்டாவது அபிசீனியா-இல்லை-எதியோப்பியா, உலகத்துப் பழைய நாடுகளில் ஒன்று. இதன் பழமை எவ்வளவு ஆழமோ, அவ்வளவு ஆழமாகவே ஜனங்களின் மறதியிலும் இதுகாறும் இது புதைந்திருந்தது. இத்தலி-அபிசீனிய யுத்தத்தின் காரணமாக இஃது இப்பொழுது மேலுக்கு வந்திருக்கிறது. ஏகாதிபத்திய தேவதையின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கும் இந்தச் சுதந்திர நாட்டைத் தமிழர்க்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டு மென்பது என்ஆவல்.இதன் விளைவே பிரபஞ்ச ஜோதியின் இரண்டாவதுசுடர். இதற்குப் போதுமான எண்ணெய் அகப்பட வில்லை, ஆயினும் ஒருவாறு ஏற்றி வைத் திருக்கிறேன். இதனைக் கொண்டு எதியோப்பி யாவைப் பூரணமாகப் பார்க்க முடியாதிருக்கலாம். ஆனால் அதன் மீது அநுதாபங் கூட செலுத்த முடியாதா? யுவ, பங்குனி, க. வெ. சாமிநாதன் 1. சரித்திர வரலாறு ஆப்ரிக்கா கண்டத்தின் வடகிழக்குப் பாகத்தில் அமைந் திருக்கும் எதியோப்பியா என்கிற அபிசீனியா, உலகிலேயுள்ள சுதந்திர நாடுகளில் மிகப் பழமையானது. இதன் சரித்திரம் கிறிது பிறப்பதற்கு நாலாயிரத்து ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னிருந்தே தொடங்குகிறது. எதியோப்பியாவின் முதல் மன்னனாகிய ஓரி என்பான் கி.மு. 4478ஆம் வருஷத்தில் ஆண்டான் என்பது ஒரு வரலாறு. இந்நாட்டு ஜனங்களின் தேகத்திலே சுதந்திர ரத்தம் பரம்பரையாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வீர மக்களின் சரித்திரம், சென்ற பல ஆண்டுகள் வரை, நவீன நாகரிகச் சந்தை இரைச்சலில் காணப்படாமலும், கேட்கப்படாமலும் இருந்தது. ஆனால் இப்பொழுது - கி.பி. இருபதாம் நூற்றாண்டின் முற்பாகத் தில் - எதியோப்பியா, உலகத்தாரின் கருணையோடு கூடிய கண்கள் முன்னர் காட்சியளிக்கிறது. எதியோப்பியாவுக்கு அபிசீனியா என்றும் ஒரு பெயருண்டு. இந்நாட்டார், தங்களை எதியோப்பியர் என்றே அழைத்துக் கொள்ள விரும்புகின்றனர். எதியோப்பியா என்ற பதத்துக்கு வெயிலினால் கருத்துப்போன முகமுடையவர்கள் வசிக்கும் நாடு என்பது பொருள். ஹாபேஷ் என்ற அராபியச் சொல்லி னடியாகப் பிறந்த அபிசீனியா என்பதற்கு கலப்பு ஜாதியார் வசிக்கும் இடம் என்று அர்த்தம். அராபியர்கள் இந்த நாட்டோடு வியாபாரம் செய்து வந்த காலத்தில், இதில் பல ஜாதியார் வசிப்பதாகக் கருதி, இதற்குக் கலப்பு நாடு என்று பெயர் வைத்து விட்டார்கள். ஆனால் எதியோப்பி யர்கள், இந்தச் சொல்லைப் பெரிதும் வெறுக்கிறார்கள். கிறிது நாதர் தோன்றியதற்குச் சுமார் ஆயிரம் வருஷங் களுக்கு முன்னால், இந்நாட்டை ஷேபா என்ற ஒரு பெண் ஆண்டு வந்தாள். இவள் அழகின் வடிவம்; அறிவுக் களஞ்சியம். ஜனங்கள் இவளைத் தெய்வமாகக் கொண்டாடிப் போற்றிவந்தார்கள். இவள் ஜெருசலத்தை ஆண்டு வந்த சாலோமன் மன்னனிடம் அரசியல் ஞானம் பெறச் சென்றாள். இருவருக்கும் காதல் உண்டாயிற்று. இதன் விளைவாக ஓர் ஆண் மகவு உதித்தது. அதற்கு மெனலிக் என்று பெயரிட்டார்கள். ஷேபா ராணிக்குப் பிறகு, மெனலிக் என்பவனே எதியோப்பியாவின் சக்ரவர்த்தியானான். இவன் பெயராலேயே எதியோப்பிய அரச பரம்பரை அழைக்கப்பெற்று வருகிறது. இந்த மெனலிக் மன்னன் காலத்தில், எகிப்து, சூடான் முதலிய பிரதேசங் களும் எதியோப் பியாவின் ஆதிக் கத்திற்குட்பட் டிருந்தன. மெனலிக் அரசனுக்குப் பின்னால், எதி யோப்பியாவின் சரித்திரம் சிறிது மங்கியிருந்தது. இதன் ஏகாதிபத் தியம் பிறரை அச்சுறுத்தியும், பிறரால் அச்சுறுத் தப்பெற்றும் ஒரு வாறு வாழ்ந்து வந்தது. கி.பி. 1500 ஆம் வருஷத்தில், இந்த ஏகாதிபத் தியம் உடைந்து போயிற்று. உடைந்து போன இவை, சிறுசிறு சுயேச்சை நாடுகளாக உருக்கொண்டன. சுமார் முந்நூறு வருஷங்கள் வரை, இந்தக் குறு நாடுகள் ஒன்றுக்கொன்று போரிட்டு வந்தன முக்கியமாக ஷோவா, டைக்ரே, அம்ஹாரா ஆகிய நாட்டு மன்னர்கள், தங்களுடைய மேலாதிக்கத்திற்கு முனைந்து போர்புரிந்து கொண்டிருந்தார்கள். இந்தச் சமயத்தில்-பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில்-ஆப்ரிக்கா கண்டத்தின் கிழக்குப் பாகத்தில் செங்கடலோரமாக வுள்ள துறைமுகப்பட்டினங்களில், பிரெஞ்சுக்காரரும் பிரிட்டி ஷாரும் சிறுசிறு கூட்டத்தினராக வந்திறங்கி வியாபாரஞ் செய்து வந்தார்கள். இந்தக் கடலோரப் பிரதேசங்கள், எகிப்தின் ஆதிக்கத்துக் குட்பட்டிருந்த சில சுதேச மன்னர்களின் நிருவாகத்திலிருந்தன. வியாபார நோக்கத்துடன் வந்த பிரெஞ்சுக்காரரும், பிரிட்டிஷாரும் ஒவ்வொரு துறைமுகப் பட்டினமாக விலை கொடுத்து வாங்கத் தொடங்கினார்கள். இப்படி மெது மெதுவாக இவர்கள் ஆப்ரிக்காவில் தங்கள் ஆதிக்கத்தை தாபித்தார்கள். இச்சமயத்தில் அம்ஹாரா பிரதேசத்தை ஆண்டுவந்த தியாடோர் என்னும் மன்னன், பிரிட்டிஷ் வியாபாரிகளில் சிலரைத் துன்புறுத்திச் சிறைசெய்துவிட்டான். பிரிட்டிஷ் அரசாங்கத்தாருக்கு இது கோபத்தை மூட்டிவிட்டது. எனவே, 1869ஆம் வருஷத்தில் ஸர் ராபர்ட் நேபியர் என்ற தளபதியின் தலைமையில் ஒரு பிரிட்டிஷ் படை எதியோப்பியாவில் வந்திறங்கியது. மக்டாலா என்ற இடத்தில் பிரிட்டிஷாருக்கும் எதியோப்பியருக்கும் பெரிய யுத்தம் நடந்தது. எதியோப்பியர் தோல்வியடைந்தனர். இதைக் கண்டு சகியாத தியாடோர் மன்னனும் அவனுடைய மகனும் தற்கொலை செய்து கொண்டார்கள். இதனால் ஜனங்கள் துக்கப்படவில்லை. தியாடோர் கொடுங்கோலன். இவ னுடைய ஆட்சியில் ஜனங்கள் படாதபாடெல்லாம் பட்டார்கள். எனவே, இவன் மீது கொண்ட வெறுப்புக் காரணமாக பிரிட்டி ஷாரை உற்சாகமாக வரவேற்றார்கள். தியாடோருக்குப் பிறகு அம்ஹாரா பிரதேசத்திற்கு, டைக்ரே பிரதேசத்தின் அரசனான ஜான் என்பவன், பிரிட்டிஷாரின் துணை கொண்டு அரசனானான். இவன் 1872ஆம் வருஷம் இறந்துபோனான். இதுவே சமய மென்று, ஷோவா பிரதேசத்து அரச னாயிருந்தவன், டைக்ரே, அம் ஹாரா பிரதேசங் களையும் தன் ஆதிக்கத்துக்கு உட்படுத்திக் கொண்டு, 1889ஆம் வருஷம் இரண் டாவது மெனலிக் என்ற பட்டப் பெயருடன் எதி யோப்பிய சக்ர வர்த்தியானான். இவன் ஆட்சிக் காலத்திலேயே, எதியோப்பியர் ஒன்றுபட்ட ஒரு சமூகமாயினர் என்று கூறலாம். மெனலிக் மன்னன், ஷோவா மாகாணத்துச் சிற்றரசனா யிருந்த போது, 1869ஆம் வருஷத்தில் சில இத்தாலிய கப்பல் வியாபாரிகளுக்குச் செங்கடல் ஓரமாக இருந்த சுமார் 670 மைல் நீளமுள்ள பிரதேசத்தை ஏறக்குறைய பதினைந்து லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டான். இந்தப் பிரதேசமே இப்பொழுது எரீட்ரா என்று அழைக்கப் பெறுகிறது. மெனலிக் மன்னன், தங்களுக்குச் செய்த இந்த நன்மைக்காக, அவன் எதியோப்பியாவின் சக்ரவர்த்தியாவதற்கு இத்தாலியர்கள் வேண்டிய உதவி புரிந்து வந்தார்கள். இதனால் இத்தாலியர்களுக்கும் மெனலிக் மன்னனுக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. ஆனால் இத்தாலியர்கள் இந்த நட்புரிமையைத் தங்க ளுடைய ராஜ்ய விதீரணத்திற்குச் சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்ள முயன்றார்கள். இஃதறிந்த மெனலிக் மன்னன், இரு சாராரும் தத்தம் நாட்டெல்லையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டு மென்று கூறினான். இதன் பயனாக 1889ஆம் வருஷத்தில் உச்சியாலி என்ற இடத்தில், இத்தலியும் எதியோப்பியாவும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தம் இத்தாலிய பாஷையிலும், அம்ஹாரிக் என்ற எதியோப்பிய பாஷையிலும் எழுதப்பெற்றன. ஆனால் இந்த இரண்டு ஒப்பந்தங்களிலும் இருந்த ஷரத்துகள் வெவ் வேறு விதமாக இருந்தன! இந்த ஒப்பந்தத்தின்படி எதியோப்பியா வின் அரசியல் நிருவாகத்தை மேற்பார்வை செய்யத் தங்களுக்கு அதிகாரம் உண்டு என்று இத்தாலியர்கள் வற்புறுத்தி வந்தார்கள். மெனலிக் அரசன் இதை மறுத்துக்கொண்டுவந்தான். இச்சமயத்தில், எதியோப்பியாவிலுள்ள பல மாகாணத்தவருக்குள்ளும் சில்லரைச் சச்சரவுகள் நடைபெற்றுக் கொண்டு வந்தன. தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு இதுவே சமயமென்று இத்தாலியர்கள் நினைத்து 1895ஆம் வருஷம், மெனலிக் வேந்தனுக்கு விரோதமாக ஒரு படையை அனுப்பினார்கள். ஆனால் எதியோப் பியர் சிறந்த போர் வீரர்; அஞ்சா நெஞ்சினர்; யுத்தகளத்தில் உயிரைத் துரும்பாக மதிப்பவர். 1896ஆம் வருஷம் மார்ச் மாதம் முதல் தேதி அடோவா என்ற ஊரில் இத்தாலியப் படையை முறியடித்தார்கள். ஏராளமான சேதத்தை உண்டாக்கினார்கள். கடைசியில் வேறு வழியின்றி, 1896ஆம் வருஷம் அக்டோபர் மாதம் இத்தாலியர், மெனலிக் அரசனுடன் சமாதானம் செய்து கொண்டனர். இதற்கு அடி அபாபா உடன்படிக்கை என்று பெயர். அடோவா யுத்தத்தில் வெற்றி காண்பதற்கு முன்னாடியே, மெனலிக் அரசன் தனது நாட்டைப் பல வழிகளிலும் முன்னுக்குக் கொண்டுவர முயன்றான். இதற்காக, அந்நிய நாட்டார் பலருடைய உதவியையும் நாடினான். இவன் எதியோப்பியாவின் தலை நகரை கோண்டார் என்னும் ஊரிலிருந்து அடி அபாபா என்னும் ஊருக்கு மாற்றினான். ஜிபூடி என்ற துறைமுகத்திலிருந்து ஹரார் வரையிலும் பிறகு அதைத் தொடர்ந்தும் ரெயில்வே போடுவதற்கு ஒரு பிரெஞ்சு கம்பெனிக்கு உரிமை கொடுத்தான்.1 ஆல்ப்ரெட் இல்க் என்ற ஒரு விட்ஜர்லாந்து தேசத்து இஞ்சினீரின் ஆலோசனையின் பேரில், நாட்டின் பல பாகங்களிலும் பாதைகள், பாலங்கள், அணைகள் முதலியன போடுவித்தான். இத்தகைய முன்னேற்ற முறைகளைக் கையாண்டதன் காரணமாக இவனை, எதியோப்பியர்கள் ஒரு தெய்வமாகவே கொண்டாடி வந்தார்கள். இப்பொழுதும் இவன் பெயரைச் சொல்லும்போது, எதியோப்பி யர்கள் தலை வணங்கியே கூறுவார்கள். இம்மன்னன் 1913ஆம் வருஷம் இறந்து போனான்.2 இவனுக்குப் புத்திரன் இல்லை. எனவே, இவன் இளைய மகளின் மகனாகிய லிஜ்ஜாஸு என்பவன் பட்டத்துக்கு வந்தான். இவன் செல்வத்திலேயே பிறந்து வளர்ந்து வந்தானாதலின் அரசாங்கத்தின் பொறுப்பை உணரும் ஆற்றல் பெறவில்லை. போக வாழ்க்கையிலேயே ஈடுபட்டு விட்டான். இதனை உணர்ந்து, ஹரார் மாகாணத்தின் அதிபதியாயிருந்தவனும், தற்போதைய சக்ரவர்த்தியின் தகப்பனுமாகிய ரா மாகொன்னன் என்பான், மெனலிக் மன்னன் கீழ் யுத்த மந்திரியாக இருந்த ஜார்ஜி என்பவனுடன் சேர்ந்து கொண்டு, லிஜ்ஜாஸு என்பவனைப் பட்டத் திலிருந்து நீக்கிவிட சூழ்ச்சி செய்தான். இச்சமயத்தில் லிஜ்ஜாஸுவும் எதியோப்பிய கிறிதவப் பாதிரிமார்களின் ஆதிக்கத்தி லிருந்து விடுதலை யடைந்து, இலாம் மதத்தைத் தழுவ முயன்றான். இதையே முக்கிய காரணமாகக் காட்டி 1916 ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் லிஜ்ஜாஸுவை அரச பதவியினின்று விலக்கி விட்டார்கள்.3 இவனுக்குப் பிறகு, இவனுடைய பெரிய தாயாரும் மெனலிக் மன்னனுடைய மூத்த குமாரியுமான ஜவுடிடு (ஜுடித்) சக்ரவர்த்தினியானாள். அரசாங்க நிருவாகத்தில் இவளுக்குத்துணை செய்ய ரா மாகொன்னனுடைய புதல்வனாகிய ரா டபாரி (தற்போதைய சக்ரவர்த்தி) என்பான் உதவியாக இருந்தான். 1930ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் இரண்டாந்தேதி ஜவுடிடு இறந்து போனாள். உடனே ரா டபாரி, ஹெயிலி செலாஸி என்ற பட்டப் பெயருடன் 1930ஆம் வருஷம் நவம்பர் மாதம் இரண்டாந் தேதி சிங்காதனம் ஏறினான். இவனே தற்போதைய சக்ரவர்த்தி. இவனை எதியோப்பியர் நேகு நெகெதி என்று அழைக்கி றார்கள். அதாவது மன்னாதி மன்னன் என்பது பொருள். எதியோப்பியாவை ஆண்ட மன்னர்களில் ஹெயிலி செலாஸி 334-வது மன்னன். எவ்வித மாற்றமுமின்றிப் பரம்பரையாகத் தொடர்ந்து வரும் அரச வமிசங்களில் எதியோப்பிய அரச வமிசமும் ஜப்பானிய அரச வமிசமும் சிறப்புள்ளவை யென்று சொல்லப்படு கிறது. இந்தப் பரம்பரைப் பெருமைக்குத் தகுந்தப்படி ஹெயிலி செலாஸியின் முடிசூட்டு வைபவமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. உலகத்தின் நானா பக்கங்களி லிருந்து, எல்லா அரசாங்கங்களும் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி யிருந்தன. எதியோப்பிய சிற்றரசர்கள், தங்கத்தினாலும் வைரத்தினாலும் இழைத்த ஆடையாபரணங்களை அணிந்து வந்து விழாவைச் சிறப்பித்தார்கள். எதியோப்பியாவிலேயே உண்டான தங்கம், வைரம், தந்தம் ஆகியவற்றினாலேயே சக்ரவர்த்தியின் சிங்காதனம், கிரீடம், செங்கோல் முதலியன செய்யப்பட்டிருந்தன. ஆடம்பரமான சடங்கு களுடன், எதியோப்பியர்களின் பிரதம மதகுருவான அபுனா கைரில்லா என்பார், பல குருக்கள்மாருடைய துணைகொண்டு, சக்ரவர்த்திக்கும் சக்ரவர்த்தினிக்கும் முறையே முடிகள் சூட்டினார். அந்நிய அரசாங்கப் பிரதிநிதிகள் ஆடம்பரமாக உபசரிக்கப் பெற்றார்கள். இந்த முடிசூட்டு வைபவம் அக்காலத்தில் உலகத்தாரின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. ஆனால் அதே சமயத்தில், ஒரு சில வல்லரசுகளின், நாடு பிடிக்க வேண்டு மென்ற ஆசையையும் அது தூண்டி விட்டதென்று எப்படி சொல்லாம லிருக்க முடியும்? 2. நாடும் நாட்டு மக்களும் எதியோப்பியாவை ஐரோப்பிய வல்லரசுகளின் குடியேற்ற நாடுகள் சூழ்ந்திருக்கின்றன. இதன் வடக்கே எகிப்தும், மேற்கே இத்தாலிய எரீட்ரா, இத்தாலிய சோமாலிலாந்த், பிரெஞ்சு சோமாலி லாந்த், பிரிட்டிஷ் சோமாலிலாந்த் ஆகிய பிரதேசங்களும், தெற்கே கென்யாவும், கிழக்கே சூடானும் எல்லைகளாக இருக்கின்றன. இதன் மொத்த விதீரணம் சுமார் 424,000 சதுரமைல். இதன் உத்தேச ஜனத்தொகை சுமார் எழுபது லட்சம். எதியோப்பியா மலைத் தொடர்கள் நிறைந்த நாடு. சமதரையா யுள்ளவை பெரும்பாலும் மணல் நிறைந்த வனாந்தரமாகவே இருக் கின்றன. இதனால் சில இடங்களில் அதிக வெயிலும் சில இடங் களில் சம சீதோஷ்ணமும் நிலவுகின்றன. சமுத்திர மட்டத்திற்கு நாலாயிரம் அடிக்கு மேலுள்ள பூப்பிரதேசங்கள் ஆரோக்கிய வாசத்திற்கு ஏற்றவை. ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நல்ல மழைக்காலம். மற்ற எட்டு மாதமும் வெயிற்காலம் என்றே கூறவேண்டும். வெயிற் காலத்திலேயே ஜனங்கள் அதிக சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள். மழைக்காலத்தில் வெளியே எங்கும் செல்ல முடியாது. குறைந்த காலத்தில் அதிக அளவு மழை பெய்யக்கூடிய இடம் எதியோப்பியாவே. எகிப்து, சூடான் பிரதேசங்களின் செழிப்புக்குக் காரணமாகவுள்ள நீலநதி எதியோப்பியாவின் வட மேற்கிலுள்ள டானா1 ஏரியிலிருந்தே உற்பத்தி யாகிறது. இந்த ஏரியைச் சுற்றியுள்ள, பிரதேசங்கள் மிகச் செழிப்புள்ளவை. விவசாயமே இந்நாட்டு மக்களின் தொழில். பருத்தி, கோதுமை, பார்லி, தினை, சோளம் முதலியன முக்கிய விளைபொருள்கள். காபி செடிகள் காடுமேடுகளிலெல்லாம் உற்பத்தியாகின்றன. இந்நாட்டி லுள்ள காபா (Kafa) மாகாணத்திலிருந்துதான் முதன் முதல் காபி வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகச் சொல்லப்படு கிறது. இதனாலேயே இதற்குக் காபி என்று பெயர். காட்டுப் பிரதேசங்களில் ரப்பரும் மர வகைகளும் கிடைக்கின்றன. தங்கம், வெள்ளி, இரும்பு, செம்பு, உப்பு, நிலக்கரி, கந்தகம் முதலியவை புராதன முறையில் பூமியிலிருந்து வெட்டி யெடுக்கப்படுகின்றன. எதியோப்பியா பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருக் கிறது. வடக்கே டைக்ரே, அம்ஹாரா, கோஜ்ஜம், வால்லோ, ஷோவா ஆகியவையும், தென் மேற்கே காபாவும், தெற்கே ஒகாடானும் முக்கியமானவை. வட கிழக்கில் டானகில் என்றொரு பெரிய பாலைவனம் உண்டு. டானா ஏரி, ஜவாய் ஏரி, அவுசா ஏரி, டிபானி ஏரி ஆகியவை இந்நாட்டின் முக்கிய தண்ணீர்த் தேக்கங்கள். நீலநதி, வேபிஷிபேலி முதலியன முக்கிய நதிகள். எதியோப்பியாவின் தலை நகரம் அடிஅபாபா. இதன் பொருள் புது மலர் என்பது. மெனலிக் அரசன், தனது மனைவியின் விருப்பத்திற் கிணங்க, இந்தப் புது நகரத்தை 1885 ஆம் வருஷம் தோற்றுவித்தான். அது முதல் இது விருத்தியடைந்துகொண்டு வருகிறது. அடிஅபாபா தவிர, அடோவா, மக்டாலா, டோப்ரா மார்க்கோ, ஜிபூடி, டிரேடாவா, ஹரார், கினீர், அல்லாடா, ஷெராதா, சாஸாபானே, கெலேடி முதலியவை முக்கிய நகரங்கள். எதியோப்பியரை நீக்ரோ வர்க்கத்தில் சேர்த்துக் கூறுகின்றனர் சிலர். இதை எதியோப்பியர்கள் பெரிதும் வெறுக்கிறார்கள். நிறத்திலும் தேகக்கூறு பாட்டிலும் இவ்விரு சாராருக்கும் நிரம்ப வேற்றுமை உண்டு. எதியோப்பியர்கள் பொதுவாக பழுப்பு நிறமுடையவர்கள். எதியோப்பியர்களுக்குள் பலவித உட்பிரிவுகள் இருக்கின்றன. அம்ஹாரிக்கர், கல்லாக்கள், டைகரேயர், டானகிலியர், சோமா லியர், குராகியர் முதலிய பல ஜாதியார் உண்டு. இவர்களில் அம்ஹாரிக்கர்களே உயர்ந்த ஜாதியார் என்று கருதப்படுகின்றனர். அறிஞர்கள், ராஜ தந்திரிகள், போர் வீரர்கள் முதலியோர் இந்த ஜாதியினரே. அரசாங்க உத்தியோகங் களில் பெரும்பாலான இவர்கள் வசத்திலேயே இருக்கின்றன. இவர் களுக்கடுத்தபடி முக்கிய மானவர்கள் கல்லாக்கள். இந்த வகுப்பு திரீகள் மிகவும் அழகுள்ள வர்கள். கீழ்த்தரமான வேலைகளைச்செய்து பிழைப்போர் குராகியர். எதியோப்பியாவில் பொதுவாக வழங்கப்படும் பாஷை அம்ஹாரிக். இதுவே அரசாங்க பாஷையாகவும் இருக்கிறது. வேறு சில பாஷைகள் ஆங்காங்குப் பேசப்படுகின்றன. எதியோப்பியாவின் தெற்குப் பாகத்தில் முலீம்கள் சிறிது அதிகமாயிருக்கிறார்கள். இவர்களுக்கும் மற்ற எதியோப்பியர் களுக்கும் மத வேறுபாடு ஒன்று தவிர, வேறு வித்தியாசங்கள் இல்லை. தாய்நாடு என்ற விஷயத்தில் எல்லாரும் ஒன்றுபட்ட இனத்தவரே. எதியோப்பியர்களில் பெரும்பாலோர் கிறிதவர்கள். கி.பி. நான்காவது நூற்றாண்டிலேயே, இந்நாட்டில் கிறிதவ மதம் வேரூன்றித் தழைக்கத் தொடங்கிவிட்டது. இடையிடையே இலாம் மதமும் யூத மதமும் தலைகாட்டிய போதிலும், சென்ற ஆயிரத்தைந்நூறு வருஷங்களாகக் கிறிதவ மதமே இந்த நாட்டு அரசாங்க மதமாக இருந்து வருகிறது. மதத்தின் செல்வாக்கு எதியோப்பியாவில் மிக அதிகம். அநேகமாக ஒவ்வொரு குக் கிராமத்திலுங்கூட ஒரு மாதா கோயில் இருக்கும். எதியோப்பியாவில் மொத்தம் சுமார் பதினையாயிரம் மாதா கோயில் களுக்கு அதிகமாக இருக்கின்றன. இந்த மாதா கோயில்களை நிருவகிக்கும் பாதிரிமார் களுக்கு அதிக செல்வாக்கு உண்டு. இவர்களே கிராமப் பள்ளிக் கூடத்தை நடத்துபவர்கள். இதனால் கிராம ஜனங்களிடத்தில் இவர் களுடைய செல்வாக்கைச் சுலபமாக உபயோகிக்க முடிகிறது. எதியோப்பியாவின் ஜனத் தொகையில் சுமார் கால் பங்கினராக வுள்ள இவர்கள், புதிய மாற்றங்களை அதிகமாக விரும்பாதவர்க ளாகையால், தற்போதைய சக்ரவர்த்தி, தனது நாகரிக சக்ரத்தையும் மெதுவாகவே உருட்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. எதியோப்பிய கிறிதவர்கள் அனைவரும், ஒரு சிலுவையைக் கயிற்றிலே கட்டி கழுத்திலே தொங்கவிட்டுக்கொண்டிருப்பார்கள். இந்தச் சிலுவை, அவரவர்களுடைய அந்ததுக்குத் தகுந்தபடி வெள்ளியிலோ, பித்தளையிலோ, இரும்பிலோ செய்யப்பட்டிருக்கும். சிலுவையோடு கூடிய கயிற்றைக் குழந்தைப் பருவத்திலிருந்தே கழுத்தில் கட்டி விடுவார்கள். ஞான நானத்தின்போதே இந்தச் சடங்கும் நடைபெற்றுவிடும். சிலுவையைத் தாங்கி நிற்கும் கயிற்றுக்கு மதாப் என்று பெயர். எதியோப்பியர்கள், சிலுவையைக் கண்டெடுத்த திருநாளென்று ஒரு பெரிய திருவிழாவை, வருஷத்திற்கொருமுறை கொண்டாடு வார்கள். இதற்கு மாகல் திருவிழா என்று பெயர். இஃது அநேக மாக அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் கொண்டாடப்பெறும். கிறிதுநாதரை எந்தச் சிலுவையில் அறைந்து கொல்வித்தார்களோ அந்தச் சிலுவையை, அவர் இறந்த பிறகு யூதர்கள் எடுத்துக் கொண்டு போய் ஒளித்து வைத்து விட்டார்களாம். பிறகு, சில கிறிதவ பக்தர்கள் அதனைத் தேடிக் கண்டுபிடித்த திருநாளையே, எதியோப்பி யர்கள் மாகல் திருவிழா என்று கொண்டாடுகிறார்கள். இந்தத் திருவிழாச் சம்பந்தமாக நடைபெறும் தெய்வப் பிரார்த்தனையில், சக்ரவர்த்தியும் மற்ற அரசகுடும்பத்தினரும் கலந்து கொள்வார்கள். சுமார் ஒரு வாரம் வரை நடைபெறும் இந்த விழாவுக்கு நாட்டின் நானா பக்கங்களிலிருந்தும் ஜனங்கள் வந்து அடிஅபாபாவில் கூடுவார்கள். அதுகாலை, சக்ரவர்த்தி தர்பார் நடத்துவதும், வீரர்கள் தங்கள் வீரச்செயல்களைக் காண்பிப்பதும், துருப்புகள் அணி வகுத்துச் செல்வதும் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். எதியோப்பிய கிறிதவர்களின் பிரதம மத குருவுக்கு அபுனா என்று பெயர். எப்படி ரோமன் கத்தோலிக்கர்களுக்குப் போப்பரசர் பிரதம குருவோ அப்படியே எதியோப்பியர்களுக்கு இந்த அபுனா இருக்கிறார். சக்ரவர்த்திக்கு முடி சூட்டுவிப்பதும், மத சம்பந்தமான முக்கிய விஷயங்களில் ஆலோசனை கூறுவதும் இவர் வேலைகள். இந்தப் பிரதம குருவின் தானத்திலிருப்போர், மதத்தில் மட்டு மல்லாமல் அரசியல் விஷயத்திலும் அதிகமான செல்வாக்கை உபயோகப்படுத்துவது வழக்கம். ஆனால் இப்பொழுதுள்ள அபுனா கைரில்லா என்பவர், தமக்குச் சம்பந்தப்படாத விஷயங்களில் தலையிடுவதில்லை யென்றும், நூலாராய்ச்சியில் அதிக விருப்ப முடையவரென்றும் சொல்லப்படுகின்றன. எதியோப்பியா பல மாகாணங்களாகப் பிரிக்கப்பெற்று, ஒவ்வொரு மாகாணமும் ஒவ்வொரு சிற்றரசர்களுடைய நிருவாகத்திற் குட்பட்டிருக் கிறது. இவர்களுக்கு ரா என்று பெயர். இவர்கள் தங்கள் மாகாணங்களைப் பொறுத்தமட்டில் சுயேச்சையுள்ள வர்கள். ஆனால் தற்போதைய சக்ரவர்த்தி பட்டத்திற்கு வந்த பிறகு, இவர்கள் அனைவரையும் தன்னாதிக்கத்திற்கு வசப்படுத்திக் கொண்டிருக்கிறான். இந்த ராகளின் கீழ் ஜில்லா அதிகாரிகள் மாதிரியும், கிராம அதிகாரிகள் மாதிரியும், பலர் உண்டு. இவர்களும் சுயேச்சையானவர்களே. ஒவ்வொருவருடைய சேவையிலும் பல படை வீரர்கள் இருப்பார்கள். இவர்கள் காரணமாகவே, மாகாண அதிகாரிகளுக்குள் அடிக்கடி பிணக்குகள் நிகழும். ஆனால் சில வருஷங்களாக இவை குறைந்திருக்கின்றன. ஹெயிலி செலாஸி, அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, காலத்திற்கேற்ற புதிய அரசியல் முறைகளை மெது மெதுவாக நடைமுறையில் கொணர்ந்து, எதியோப்பிய ஏகாதிபத்தியத்தின் அதிவாரத்தைப் பலப்படுத்திக்கொண்டு வருவதை அரசியல் உலகம் பெரிதும் கவனித்துக்கொண்டு வருகிறது. அரசாங்க இலாகாக்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி மந்திரி மார்களின் நிருவாகத்தின் கீழ் இருக்கின்றன. மொத்தம் இருபது மந்திரிகள் இருக்கிறார்கள். அந்தந்த இலாகா நிருவாகத்தைப் பொறுத்த மட்டில், மந்திரிமார்களுக்குப் பூரண அதிகாரம் இருந்த போதிலும் யாவும் சக்ரவர்த்தியின் நேரான மேற்பார்வையிலேயே நடைபெறுகின்றன வென்று கூறவேண்டும். எதியோப்பியாவுக்குப் பார்லிமெண்டு சபை உண்டு. மந்திரிச் சபையின் ஆலோசனையின் பேரில், சக்ரவர்த்தியினால் நியமிக்கப் பெற்றவர்களே இதில் அங்கத்தினர்கள். எதியோப்பிய ஜனங்களின் மனப்பான்மைக்கு இந்த முறை மிகவும் ஏற்றதாகவே இருக்கிறது. சக்ரவர்த்தி, வருஷத்திற்கு ஒரு முறை, தான் பட்டத்திற்கு வந்த திருநாளாகிய நவம்பர் மாதம் இரண்டாந்தேதி பார்லிமெண்டைத் திறந்து வைப்பது வழக்கம். அப்பொழுது நாட்டின் பொருளாதார நிலைமையும் மற்ற முக்கியமான விஷயங்களும் பிரதிநிதிகளுக்கு விதாரமாக எடுத்துச் சொல்லப்பெறும். புதிய சட்டங்கள், சீர்திருத்தங்கள் முதலியவற்றை அங்கீகரிக்கும்படி செய்வதும் அப்பொழுதுதான். எதியோப்பிய அரசியலின் அதிவாரம் கிராமத்திலிருந்தே ஆரம்பமா கிறது. கிராமத்தலைவனுக்கு ஷும் என்று பெயர். அரசாங்க உத்தியோகதர் களுக்கு ராணுவப்பயிற்சியும் தெரிந் திருக்க வேண்டுமென்பது எதியோப்பியாவின் நியதி. உயர்ந்த மலைத்தொடர்களும் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளும் எதியோப்பியாவில் நிறைந்திருப்பதனால், நினைத்தபடி போகவோ வரவோ முடியாது. ஒட்டகங்களும் கோவேறு கழுதைகளுமே பெரும் பாலும் போக்கு வரவு சாதனங்களாக உபயோகிக்கப் பெறு கின்றன. ஒழுங்கான பாதைகள் இரா. இடையிடையே சிற்றாறுகள் குறுக்கிட்டு ஓடும். இவற்றை மனிதர்களும் மிருகங்களும் நீந்தியே கடக்கவேண்டும். அநேகமாக எதியோப்பியர்கள் தொலைதூரப் பிரயாணத்தையும் நடந்தே முடிப்பார்கள். இப்படி நடக்கும்போது காலுக்கு எவ்வித மிதியடியும் உபயோகிக்க மாட்டார்கள். உப யோகித்தால் இவர்களால் வேகமாக நடக்க முடியாது. இவர்களுடைய உள்ளங்கால், நீர்யானையின் மேல் தோலைப் போல் மிகவும் கெட்டியாயிருக்கும். சாதாரணமாக, எதியோப்பியாவில் உயர்வகை பூட் அணிந்து கொண்டு ஒருவன் தொடர்ந்து மூன்று நாள் நடந்து சென்றால் அவன் பூட் தேய்ந்துவிடும். ஆனால் எதியோப்பியர்கள், இத்தகைய பிரதேசங்களில் எவ்வித சிரமமு மின்றி வேகமாக வெறுங் காலுடன் செல்வார்கள். ஒரு சில பணம் படைத்த எதியோப்பியர்கள் கோவேறு கழுதைகளின் மீது அமர்ந்து பிரயாணஞ் செய்வார்கள். தலையின்மீது பாரமான மூட்டைகளைச் சுமந்து கொண்டு வேகமாக நடத்தல், மலைகள் மீது ஏறுதல், நீரோட்டங்களை நீந்திக் கடத்தல், பிரயாணத்தின் மீது எதிரிடும் காட்டு மிருகங்களை அலட்சியமாக எதிர்த்தல் முதலிய வற்றில் எதியோப்பியர்கள் கைதேர்ந்தவர்கள். எனவே, இவர்கள் பலசாலிகளாகவும், அஞ்சா நெஞ்சினர்களாகவும், துன்பத்தைப் புன்சிரிப்புடன் சகித்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருப்பதில் ஆச்சரியமில்லையல்லவா? பணக்காரனுக்கும் அறிவுள்ளவனுக்கும் அடுத்தபடியாக எதியோப்பியாவில் அதிகமாகக் கௌரவிக்கப்படுகிறவன் தபாற் சேவகன். இந்நாட்டில் தபால்கள் ஆள்கள் மூலமாகவே பெரும் பாலும் எடுத்துச் செல்லப் பெறுகின்றன. சாதாரணமாகத் தபாற் சேவகர்கள் அந்தந்த ஊரின் தபால்களை ஒன்று சேர்த்து ஒரு பையில் கட்டி நீண்டதொரு கழியின் நுனியில் தொங்கவிட்டுக் கொள்கி றார்கள். போகும்போது அந்தந்தக் கிராமத் தபால்களைப் பட்டு வாடாச் செய்துகொண்டும், வேற்றிடங் களுக்குச் செல்ல வேண்டிய தபால்களைச் சேகரித்துக்கொண்டும் போவார்கள். இவர்கள் அநேகமாக சாதாரண ஜனங்கள் செல்லும் பாதையில் செல்வதில்லை. அப்படி செல்வதென்றால் நீண்ட நாட்கள் பிடிக்கு மல்லவா? குறுக்குப் பாதைகளிலேயே இவர்கள் செல்வார்கள். வழியில் ஆங்காங்குக் கிராமங்களில் தங்கும்போது கிராமவாசிகளின் விருந்தினர்களாக இருப்பார்கள். இவர்களுக்குத் திருடர் பயம் கிடையாது. காட்டுமிருகங்களும் இவர்களை ஒன்றும் செய்ய மாட்டா என்ற நம்பிக்கை எதியோப்பியர்களுக்கு இருக்கிறது. போக்கு வரவு வசதிகள் மிகக்குறைவாக இருந்த போதிலும், எதியோப்பியாவில் செய்திகள் வெகு சீக்கிரமாகப் பரவி விடுகின்றன. இதனால் பத்திரிகைகள் இல்லாத குறையை ஜனங்கள் உணர்வ தில்லை. வாரத்திற்கொருமுறை அல்லது இரண்டு முறை, முக்கிய மான ஊர்களில் சந்தைகள் நடைபெறும். அக்கம்பக்கத்துக் கிராம வாசிகள் ஒன்று கூடுவார்கள். வியாபாரம் நடைபெறும். அந்தந்தக் கிராமவாசிகளும் தங்கள் கிராமத்துச் செய்திகளை பரபரம் சொல்லிக்கொள்வார்கள். இதுவே எதியோப்பியாவின் நீடித்த வழக்கம். தற்போதைய சக்ரவர்த்தி பட்டத்திற்கு வந்த பிறகு, ரேடியோ, தந்தி, டெலிபோன், ஆகாய விமானம் முதலியன, செய்திகளைப் பரப்புவதற்கு ஒருவாறு துணை செய்கின்றன. ஆனால் இவை அதிகமாயில்லை. எதியோப்பியாவில் வெளிநாட்டு வியாபாரம் அதிகமில்லை யென்றே சொல்லவேண்டும். பெரிய கைத்தொழிற் தாபனங்களும் குறைவு. இவற்றிற்குக் காரணம் போக்கு வரவு வசதியின்மையே யாகும். காபிக்கொட்டை, சிங்கத்தின் மயிர், சிறுத்தைத்தோல், யானைத் தந்தம் முதலியன அதிகமாக வெளிநாட்டு வியாபாரி களால் வாங்கிச் செல்லப்பெறுகின்றன. இந்நாட்டில் புனுகுப் பூனைகள் மிக அதிகம். கோழி வாத்துகளை போல் எதியோப்பிய விவசாயிகள் இப்புனுகுப் பூனையை அதிகமாக வளர்க்கிறார்கள். இவற்றிலிருந்து புனுகு எடுக்கப்பெற்று அந்நியர்களுக்கு விற்கப் படுகிறது. எதியோப்பிய கிராமவாசிகள் அமைதியான வாழ்வு நடத்து வதில் ஆர்வங்கொண்டவர்கள். விருந்தினரை உபசரிப்பதில் குறைபா டில்லாதவர்கள். அதிலும், பெரிய மனிதர் என்று கருதப்படும் ஒருவரிடமிருந்து சிபார்சுக் கடிதம் வாங்கிக்கொண்டு சென்று விட்டால், தங்கள் சுகங்களையும் குறைத்துக்கொண்டு உபசரிப் பார்கள். ஆண்களைப் போலவே பெண்களும் அன்புடையவர்கள்; சுறுசுறுப்பானவர்கள். புருஷர் களோடு சேர்ந்து உழுதல், பயிரிடுதல் முதலிய வேலைகளைக் கவனிப்பதுடன் வீட்டுக்காரியங்களையும் அக்கரையுடனே கவனிப்பார்கள். நூல் நூற்றல், நெசவு செய்தல், சோறு சமைத்தல் ஆகிய மூன்றும் ஒவ்வோர் எதியோப்பிய பெண் மணிக்கும் தெரிந்திருக்க வேண்டும். எவ்வளவு பணக்கார குடும்பத் தில் பிறந்திருந்த போதிலும் அல்லது புகுந்திருந்தபோதிலும், இந்த மூன்றும் இன்றியமையாப் பயிற்சிகள். பருத்தி சாகுபடியாவதற்குத் தகுதியாக இந்நாட்டின் நிலப்பாங்கு இருக்கிறபடியால், நூற்றலும் நெய்தலும் முக்கிய பயிற்சிகளாகக் கொள்ளப் படுவதில் ஆச்சரிய மில்லை. எதியோப்பிய பெண்கள், கிராமப் பொது விஷயங்களில் கலந்து கொள்வதுண்டு. சிறிது காலமாக இவர்கள் உலக அரசியல் விஷயங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு எதியோப்பிய அரச குடும்பம் வழி காட்டியிருக்கிறது. எதியோப்பியர்கள் சம்பாஷணைக்கு மிகவும் லாயக்கான வர்கள். எப்பொழுதும் ஒரு பழமொழியைப் புகுத்தியே பேசு வார்கள். இவர்களுக்கு ஞாபக சக்தி நிரம்ப அதிகம். ஆயிரக்கணக் கான வருஷங்களாக எதியோப்பியாவை ஆண்ட மன்னர்களின் பெயர்களை வரிசைக் கிரமமாகச் சிறிதும் தயக்க மின்றிச் சொல்வார்கள். எதியோப்பியர்கள் புகையிலையை எவ்விதமாகவும் உபயோகப் படுத்த மாட்டார்கள். பெரியோர்கள் முன்னிலையில் சுருட்டுப் பிடிப்பதும், வெற்றிலை போடுவதும் மரியாதைக் குறைவென்று கருதப்படுகின்றன. மற்றும் எதியோப்பியர்கள் பெரும்பாலோர் மதுபானஞ் செய்வதை வெறுக்கிறார்கள். தேஜ் என்ற ஒருவகை பானத்தையே இவர்கள் அருந்துகிறார்கள். சில செடி கொடிகளின் சாரத்தையும் தேனையும் சேர்த்து வீடுகளிலேயே பெண்களால் தயாரிக்கப் பெறும் பானம் இது. விருந்தினர்க்கு முதலில் மரியாதை யாகக் கொடுக்கப்பெறுவது இதுவே. எதியோப்பியர்கள் பச்சை மாமிசத்தைத் தின்பதாகச் சொல்லப்படு கிறது. ஆனால் இஃது அவ்வளவு உண்மையல்ல. வருஷத்திற் கொருமுறை, அல்லது முக்கியமான சடங்குகளின் போது, பச்சை மாமிசத்தைத் தின்பதென்பது ஒரு சம்பிரதாயமாகவே கொள்ளப்படுகிறது. பொதுவாக வேகவைத்த மாமிசத்தையே சாப்பிடுவார்கள். எதியோப்பியாவின் மீது முஸல்மான்கள் படை யெடுத்து வந்த காலத்தில் அவர்களை எதிர்த்து நின்ற எதியோப்பி யர்கள், போர்க்களத்தில் பச்சை மாமிசத்தைத் தின்று உறுதியாகப் போர் புரிந்தார்களென்றும், மாமிசத்தைப் பக்குவப்படுத்தி உண்ண இவர்கள் அவகாசம் பெறவில்லை யென்றும், இது முதற்கொண்டே, வெற்றிக்கொண்டாட்டத்திற் காக நடைபெறும் சடங்குகளில் பச்சை மாமிசம் உபயோகிக்கப் படத் தொடங்கியதென்றும் ஒரு வரலாறு கூறுகிறது. எதியோப் பியர்களின் தினசரி ஆகாரம் கோதுமை, பார்லி, தினை, சோளம் முதலியவற்றால் செய்யப் பெற்ற ரொட்டி. இதனுடன் மாமிசத்தைப் பல வகையாகப் பக்குவப்படுத்திச் சாப்பிடுவார்கள். மிளகையும் உப்பையும் பொடி செய்து எதற்கும் உபயோகிப்பார்கள். மிளகுக் குழம்பில் இவர்களுக்கு நிரம்பப் பிரியம். எஜமானர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதில் எதியோப்பி யர்கள் தலை சிறந்தவர்கள். வேலைக்காரர்களைக் காப்பாற்றுவதும், அவர்களுக்கு வேண்டிய உடை, உண்டி முதலியன அளிப்பதும் எஜமானர்களின் பொறுப்பு. எனவே ஓர் எஜமானன் தன்னுடைய செல்வ நிலைக்குத்தக்க வண்ணம் ஆயிரக்கணக்கான பேரை வேலைக்கமர்த்திக்கொள்ளலாம். இவர்களே, அவசியமானால், எஜமானன் சார்பாக ஆயுதந் தாங்கிப் போருக்குச் செல்வார்கள். இந்த முறையையே அடிமை வழக்கம் என்று சொல்லி வெளிநாடுகளில் பிரசாரம் செய்யப்படு கிறது. எதியோப்பியர்கள், தங்களுக் குள் ஏற்படும் வழக்குகளைத் தீர்த்துக் கொள்வது விநோதம். இந்நாட்டில் எல்லாரும் நீதிபதிகள்தான்; எல்லாரும் வக்கீல்கள்தான். நீதி தலத்திற்குத் தனியான கட்டிடங்கள் இல்லை. மர நிழலோ தெருமுனையோ, பொதுச் சதுக்கமோ எல்லாம் நீதி வழங்கு வதற்குரிய இடங்களே. பொதுவாக, எதியோப்பியர்கள் சச்சரவிட்டுக் கொள்ளும் சுபாவமுடையவர்கள். ஆனால் வெகு சீக்கிரத்தில் சமாதானமும் செய்து கொண்டு விடுவார்கள். இதனால் இந்தக் கோர்ட்டு களுக்கு எப்பொழுதும் வேலையிருந்து கொண்டேயிருக்கும். இரண்டு பேர் சண்டையிட்டுக் கொண்டால், வழியில் போகிற யாராவது ஒரு மூத்தவனைப் பார்த்து, தங்களுடைய வழக்கை விசாரித்துத் தீர்ப்புக் கூறுமாறு இருசாராரும் கேட்டுக்கொள்வார்கள். அவனும் அதற்கிசைந்து விடுவான். உடனே கோர்ட் ஆரம்பித்து விடும். வாதியும் பிரதிவாதியும் தங்கள் வழக்கு களை எடுத்துச் சொல்லத் தொடங்குவார்கள். சில சமயங்களில், இரு கட்சிக்காரர்களும் தங்களுக்குத் தெரிந்த ஒரு நண்பனை அழைத்து வந்து, தங்கள் சார்பாக வாதம் செய்யுமாறு கேட்டுக்கொள்வார்கள். கட்சிக்காரர்களோ அல்லது வக்கீல்களோ வாதம் செய்யும்போது ஒரே சந்தடிதான். எல்லாரும் இரைச்சலிட்டே பேசுவார்கள். பெரிய கும்பல் கூடிவிடும். கட்சிக்காரர்கள் வாதம் செய்யும்போது பார்த் தால், எந்தச் சமயத்தில் இரு சாராரும் அடித்துக் கொள்வார்களோ என்று தோன்றும். ஆனால் எல்லாம் வேடிக்கைதான் எதியோப்பி யர்களுக்கு! நீதிபதியின் தீர்ப்புக்கு இருதரத்தினரும் கட்டுப்பட்டு விடுவர். வழக்கு முடிந்ததும், சிறிது நேரத்திற்கு முன் சண்டை யடித்துக் கொண்ட இரு கட்சிக்காரரும், கைகோத்துக்கொண்டு வேடிக்கையாகப் பேசிக்கொண்டே போவார்கள். தீர்ப்புச் சொல்லும் நீதிபதி, தனக்கு இவ்வளவு கட்டணம் கொடுக்க வேண்டுமென்று முதலிலேயே பேசிக்கொண்டு விடுவான். அநேகமாக இரு கட்சியினரும் நீதிபதிக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். வழக்கில் வெற்றி பெற்றவன், பேசிய தொகைக்கு அதிகமாகச் சில சமயங்களில் கொடுப்பதுண்டு. ஆனால் பணத்துக்காகவோ நட்புரிமைக் காகவோ பட்சபாதமாகத் தீர்ப்புச் சொல்லும் வழக்கம் எதியோப்பியர்க ளிடத்தில் கிடையாது. இந்த முறையினால், அதிகச் செலவின்றி, குறைந்த காலத்தில் நியாயம் பெற முடிகிறது. நாகரிகம் வாய்ந்த தாகப் பெருமை பேசிக்கொள்ளும் நாடுகளில் நீதிக்காகச் செல வழிக்கப்பெறும் காலம் எவ்வளவு? பணம் எவ்வளவு? கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக நடைபெறும் வழக்குகள் விநோதமானவை. பணம் பெற்ற ஒருவன், குறித்தகாலத்திற்குள் திருப்பிக்கொடாமலிருந்ததற்காக வழக்குத் தொடரப் பெறுகிறான் என்று வைத்துக்கொள்வோம். இவன் திருப்பிக்கொடுக்க வேண்டு மென்பது ருஜுவாகி விட்டால், கடன் கொடுத்தவன், கடன்பட்டவ னுடைய கையிலோ அல்லது காலிலோ ஒரு சங்கிலியைப்போட்டு மாட்டி, தன்னோடு சேர்த்துக் கட்டிக்கொண்டு தன்னிருப்பிடத் திற்கு அழைத்துச் சென்றுவிடுவான். கடன் தீரும் வரையில் கடன் பட்டவன் இந்தச் சங்கிலிப் பிணைப்புடனேயே இருக்கவேண்டும். அதுவரையில் கடன் கொடுத்தவனும் இவனுக்குச்சோறு போட்டுத் தீரவேண்டும். இருதரத்தாரும் இந்தச் சங்கிலித் தொடர்புடன் இருந்தபோதிலும், மிகுந்த சிநேகபாவத்துடனேயே இருப்பார்கள்; சிறிதும் மனத்தாங்கல் இராது. கொலை, கொள்ளை முதலிய குற்ற வழக்குகளை விசாரிக்க அரசாங்கத்தாரின் நிருவாகத்திற்குட்பட்ட பிரத்தியேக நியாய தலங்கள் ஆங்காங்கு இருக்கின்றன. அடி அபாபாவில் உயர்தர நீதிதலம் ஒன்று இருக்கிறது. இந்த நியாயமன்றங்களில் நீதி கிடைக்கவில்லை யென்று கருது கிறவர்கள், கடைசி முறையாகச் சக்ரவர்த்தியிடத்தில் விண்ணப் பித்துக்கொள்ளலாம். எதியோப்பியர்கள் பிறப்பிலேயே வீரமுள்ளவர்கள். ஆயுதந்தரிப்பது ஆண்மைக் கழகு என்பது இவர்கள் நம்பிக்கை. துப்பாக்கிக் குண்டுகளை இடுப் பிலே வரிசையாகச் சொருகி வைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் சூலம் மாதிரியாகவுள்ள ஓர் ஆயுதத்தைக் கூடவே எடுத்துச் செல்வார்கள். இந்த ஆயுதங்களைத் தனியாக வைப்பதற்காக, ரெயில் வண்டி களில் கூட பிரத்தியேக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. போர் புரிவதில் எதியோப்பியர்களுக்கு நிரம்ப ஆசை. சிங்கம், புலி முதலிய மிருகங்களை இவர்கள் சாதாரண நாய், பூனை மாதிரி வீட்டில் வளர்க்கிறார்கள். வெளியூர்களுக்குப் பிரயாணஞ் செய்யும்போது, அநேகமாக இவர்கள் சிங்கங்களை அழைத்துச் செல்கிறார்கள். அடி அபாபாவிலுள்ள சக்ரவர்த்தியின் அரண்மனையில் அதிகமான சிங்கங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. சக்ரவர்த்தியோ, மற்ற அரச குடும்பத்தினரோ தோட்டம் முதலிய இடங்களில் உலவும்போது, இச்சிங்கங்கள் கூடவே வரும். சமூகத்தில் பிறரால் ஒருவன் மதிக்கப்பட வேண்டுமானால் இத்தனை சிங்கங்களைக் கொன்றவன் என்றே கூறுவார்கள். தாங்கள் கொன்ற சிங்கத்தின் பிடரிமயிரை எடுத்துத் தங்கள் தலையணியாக உபயோகித்துக் கொள்வதில் இவர்களுக்கு ஒரு பெருமை. சாதாரண ஒரு சிறு பையனுக்குக் கூட இந்த வீர உணர்ச்சி இருக்கிறது. ஒரு துப்பாக்கியோ அல்லது வேறு ஆயுதமோ இவனுக்குக் கிடைத்து விட்டால், இவன் நிற்பதும் நடப்பதும் மிடுக்காவே இருக்கும்; பேச்சும் உதட்டியாகவே வரும். எதியோப்பியர்களின் மாசற்ற வீரத்திற்குச் சமமாக இவர் களுடைய ராஜபக்தியையே கூற முடியும். தங்கள் அரசனுக்காக இவர்கள் எதையும் செய்வார்கள். தேசம், அரசன் என்று வரும்போது, எதியோப்பியர் களுக்கிடையேயுள்ள பிணக்குகள், மன மாற்றங்கள் முதலியன யாவும் மறைந்து விடும். நூற்றாண்டுகள் கணக்காகத் தங்கள் நாடு சுதந்திர மாயிருந் திருக்கிற தென்பதை இவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இவ்வுணர்ச்சி இவர்கள் மனதில் வேரூன்றியிருக்கிறது. தங்கள் சுதந்திரம் பறிமுதல் செய்யப் பெற்று விடுமோ என்ற எண்ணம் இவர்களுக்கு உண்டாகும் போது, இவர்கள் எவ்வித மான தியாகங்களையும் செய்து, அச் சுதந்திரத்தைக் காப்பாற்ற முன்னிற்கி றார்கள். நாட்டின் பிரதி பிம்பமே அரசன் என்று இவர்கள் கருதுவதால், அரசனையும் நாட்டையும் எப்பொழுதும் ஒன்றுபடுத் தியே பேசுவார்கள். பொது வான ஒரு சத்துருவால் தங்களுடைய நாட்டுக்கோ அரசனுக்கோ தீங்கு நேரிடு வதாயிருந்தால், இவர்கள் உடனே ஒன்று கூடி விடு கிறார்கள். தற்போதைய சக்ரவர்த்தி பட்டத்திற்கு வந்த பிறகு, இவனுக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்தவர் பலர்; சிலர் பகிரங்கமாகப் படைகளையும் திரட்டிக்கொண்டு வந்தனர். அவரில் பால்ட்சா என்பவன் ஒருவன். அவன் செல்வாக்குள்ள ஒரு சிற்றரசன். அவன் ஆதிக்கத்தின் கீழ் ஆயிரக்கணக்கான வீரர்கள் இருந்தார்கள். 1896ஆம் வருஷத்து அடோவா யுத்தத்தில் மெனலிக் மன்னன் பக்கத்திலிருந்து இத்தாலியர்களைத் தோற்கடித்த எதியோப்பிய தளபதிகளில் பால்ட்சா முக்கியமானவன். அவன் ஒரு சமயம் சுமார் இரண்டாயிரம் படைவீரருடன் வந்து, அடி அபாபாவை முற்றுகையிடும் பாவனையாக, நகரத்திற்கு வெளியே யுள்ள மைதானத்தில் முகாம் போட்டான். இதை யறிந்த ஹெயிலி செலாஸி, சில தூதர்களை பால்ட்சாவிடம் அனுப்பி, தான் சமரஸம் செய்து கொள்ள விரும்புவதாகவும், உடனே அரண்மனைக்கு வர வேண்டுமென்றும் சொல்லச் செய்தான். அதன்படி பால்ட்சாவும் பொறுக்கி யெடுத்த சில போர்வீரர்களுடன் அரண்மனைக்கு வந்தான். அச்சமயம் பார்த்து, ஏற்கெனவே செய்திருந்த ஏற்பாட்டின் படி, சக்ரவர்த்தியின் உத்தியோகதர்கள் சிலர், பால்ட்சாவின் படை வீரரிடம் சென்று, சக்ரவர்த்திக்கு விரோதமாகப் படையெடுப்ப வர்கள் பேராபத்துக் குள்ளாவார்கள் என்று நயத்தினாலும் பயத்தினாலும் கூறி, சொற்பத் தொகையை இனமாகக்கொடுத்து எல்லாரையும் திருப்பி அனுப்பி விட்டார்கள். எல்லோரும் திரும்பி விட்டார்கள் என்று தெரிந்ததும், சக்ரவர்த்தி பால்ட்சாவைக் கைது செய்யுமாறு உத்திரவிட்டான். அப்படியே கைது செய்து சிறைவாசத் தண்டனை விதித்து விட்டான். அவனுடைய சொத்து சுதந்திரங்கள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டன. பால்ட்சா, இரண்டு வருஷம் சிறையில் அவதிப்பட்ட பிறகு, தன் செயலுக்குப் பெரிதும் இரங்கி, சக்ரவர்த்திக்கு ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதினான். சக்ரவர்த்தியும் அவனை மன்னித்து விட்டான். ஆனால் ஒரு நிபந்தனை. பால்ட்சா, இனி அரசியல் விஷயங்களில் கலக்கவே கூடாதென்றும், துறவு பூண்டு எங்கேனும் ஒரு மடத்தில் ஒதுங்கி வாழவேண்டுமென்றும் உத்திரவிட்டான். பால்ட்சாவும் அதற்கிசைந்தான். அது முதல் அவன் சிறந்த ராஜபக்தனாகவே விளங்கி வந்தான். 1934 ஆம் வருஷம் கடைசியில், வால்-வால் என்ற இடத்தில் எதியோப்பியர்களுக்கும் இத்தாலியர் களுக்கும் சச்சரவு ஏற்பட்டதாகப் பால்ட்சாவுக்குத் தெரிந்தது. இந்தச் சமயத்தில், சக்ரவர்த்திக்குத் தன்னாலான உதவியைச் செய்ய வேண்டு மென்று தீர்மானித்தான். தனது பாதிரிக் கோலத்துடன் அடி அபாபாவுக்குத் தனியனாக நடந்து வந்தான். பழைய சிற்றரசன் என்று எவரும் அவனை அடையாளங்கண்டு பிடிக்கவில்லை. பால்ட்சா அரண்மனையை அடைந்தான். தன் வரவைச் சக்ரவர்த்திக்குத் தெரிவித்தான். எதிர்பாராத விதமான பால்ட்சாவின் வரவைக்கேட்ட சக்ரவர்த்தி ஆச்சரியப்பட்டு, அவனை உள்ளே வரவழைத்தான். பால்ட்சா, பணிந்து நின்று பின்வருமாறு பேசினான்:- சக்ரவர்த்தியவர்களே! நான் பழைய பால்ட்சாவல்ல. சென்ற சில வருஷங்களாகத் தாங்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை நான் காப்பாற்றி வந்திருக்கிறேன். அந்த நம்பிக்கையை இனியும் நான் இழப்பனோ? அப்தாம் என்ற ஊரிலும், வால்வால் என்ற ஊரிலும் தங்கள் படை வீரர்கள் அந்நியர்களால் தாக்கப்பட்டார்கள் என்று கேள்வியுற்றேன். இந்த யுத்த சமயத்தில், நான் என்னுடைய பாதிரி மடத்தில் ஒதுங்கியிருக்க முடியாது. மெனலிக் சக்ரவர்த்தியின் பக்கத்திலிருந்து நான் அடோவாவில் யுத்தம் செய்தேன். இப்பொழுது உங்கள் அருகில் நின்று போர் புரிய எனக்கு இடந்தர வேண்டும். இம் மொழிகளைக் கேட்ட அரச சபையிலிருந்த அனைவரும் மன முருகிப்போயினர். ஆனால், சக்ரவர்த்தி தன் உணர்ச்சியை வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல், மன உறுதியுடன் பின்வருமாறு பதில் அளித்தான்:- பால்ட்சா! நாட்டின் பொருட்டு நீ இறக்கச் சித்தமாயிருப்பதற்கு வந்தனம். இந்தத் தள்ளாத வயதில், படை வீரர்களை யுத்த களத்திற்கு அழைத்துச் செல்ல முன் வந்த உனக்குப் பெரிதும் நன்றி கூறுகிறேன். ஆனால் இப்பொழுது காலம் மாறிவிட்டது. இப்பொழுதைய யுத்தங்கள், அடோவா யுத்தத்தைப் போலவல்ல. தைரியமும் தேசபத்தியும் மட்டும் இருந்தால் இப்பொழுது போதாது; யுத்த தந்திரங்களிலும் நன்கு பயின்றிருக்க வேண்டும். பால்ட்சா! உனக்கு உரித்தான இடம் இங்கே; என் பக்கத்திலே. யுத்த களத்திற்குச் செல்ல இளமை நிறைந்த தளபதிகள் இருக்கிறார்கள். அது முதல், பால்ட்சா, சக்ரவர்த்தியின் அருகில் இருந்து அரிய ஆலோசனைகள் சொல்லிக்கொண்டுவருவதாகச் சொல்லப் படுகிறது. இத்தகைய சம்பவங்கள் எதியோப்பியாவில் சர்வ சாதாரணம். இத்தலி-அபிசீனிய யுத்தம் தொடங்குவதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், பல மாகாணத்துச் சிற்றரசர்கள், சக்ரவர்த்தி யின் செல்வாக்கு வளர்ச்சி யடைந்து வருவதைக் கண்டு பொறாமைப் பட்டார்கள். பரபரம் ஒருவர்க் கொருவர் பொச்சரிப்புக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்நியராகிய இத்தாலியர் தங்கள் அருமை எதியோப்பியாவின் மீது படையெடுக்கத் தொடங்கி விட்டனர் என்று கேட்டு அனைவரும் மன ஒருமைப்பட்டு விட்ட னர்; சக்ரவர்த்திக்குத் துணை செய்ய முன் வந்தனர். பொதுவாக எதியோப்பியர்கள் அந்நியர்களுக்கு இடங்கொடுப்பதில் விருப்ப மில்லாதவர்கள். அப்படி இடங்கொடுப்பது தங்கள் சுதந்திரத்தைப் பறிமுதல் கொடுப்பதாகும் என்பதை இவர்கள் நன்கு உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, இத்தலி-அபிசீனிய யுத்தம் தொடங்கப் பெற்ற பிறகு, சாதாரண பாமர ஜனங்களும், தங்களிட மிருந்த அற்ப சொற்ப பணத்தையும் யுத்தத்திற்குச் செலவழிக்குமாறு சக்ரவர்த்தியிடம் காணிக்கையாகச் செலுத்தியதைக் கண்டு ஏன் ஆச்சரியப் படல்வேண்டும்? எதியோப்பியர்களின் தேசபத்தியை அவர்கள் அணிந்து கொண்டிருக்கும் உடையைக்கொண்டு தெரிந்து கொள்ளலாம். கையினால் நூற்று கையினால் நெய்யப்பெற்ற துணிகளையே எதியோப்பியர்கள் உபயோகிக்கிறார்கள். இதற்கு சம்மா என்று பெயர். காற்சட்டையும் மேற் சட்டையும் தவிர, உடம்பைப் போர்த்துக் கொள்ளும் விதமாக ஓர் அங்கவதிரத்தையும் மேலே தரித்துக்கொள்வார்கள். இதுவே இவர்களுடைய தினசரி ஆடை. விசேஷ காலங்களில் பட்டினால் நெய்யப் பெற்ற சட்டைகளை உபயோகிப்பார்கள். அப்பொழுதே ஆபரணங்களால் தங்களை அழகு படுத்திக்கொள்வார்கள். இவர்கள் அணியும் ஆபரணங்கள் யாவும் எதியோப்பியாவில் உண்டான உலோகங்களினாலேயே செய்யப்பெற்றிருக்கும் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. நாட்டு உடையைப் போல் நாட்டு மொழியிலும் இவர்களுக்கு நிரம்பப் பற்று உண்டு. மேனாடுகளுக்குச் சென்று கல்விபயின்று திரும்பி வந்த பல இளைஞர்கள், அம்ஹாரிக் பாஷையில் பல புதிய இலக்கி யங்களை வெளியிட்டு வருகின்றனர். எதியோப்பிய ஆண்களைப் போலவே பெண்களும் வீராவேசமும் தேச பக்தியும் நிரம்பியவர்கள். இவர்கள் தங்கள் கணவன்மாரோடு யுத்தகளத்திற்குச் சென்று அவர்களுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்வார்கள். காயமடைந்தவர்களுக்கு வைத்திய உதவி புரிவார்கள். அவசியமானால் புருஷர்களுக்கு உதவியாக இவர்களும் ஆயுதந் தாங்கிப் போர் புரிவார்கள். இத்தலி-அபிசீனிய யுத்தத்தில், எதியோப்பிய பெண்மணிகள் பலர், ஆண்வேஷந் தரித்துப் போர்புரிகிறார்களென்றால் அதில் ஆச்சரியப் படத்தக்க தொன்றுமில்லை. எதியோப்பிய வீரத் தாய்மார்களின் பரம்பரை யான தருமத்திற்கு அது முற்றிலும் ஏற்றதுதான். இச்சமயத்தில் மேனன் சக்ரவர்த்தினியைப்பற்றி ஒரு வார்த்தை. இவர் அரண்மனையில் ஆடம்பரமாக வசிக்கும் அரசியாக இருந்து வருவதில் திருப்தியடையாதவர். எதியோப்பிய பெண்கள் இயக்கத் திற்கு இவர் தலைவியாயுமிருக்கிறார். இவர் தாய்மையின் கடமையை நன்குணர்ந்தவர். இவருடைய முயற்சியினாலேயே எதியோப்பியா வில் கஷ்ட நிவாரண சங்கங்கள் பல ஏற்பட்டிருக்கின்றன. இத்தலி-அபிசீனிய யுத்தம் சம்பந்தமாக, உலகத்திலுள்ள தாய்மார்களுக்கு இவர் விடுத்த ஓர் அறிக்கையின் முக்கிய பாகங்கள் வருமாறு:- உலகத்திலுள்ள தாய்மார்கள் யுத்தத்தை ஒருமுகமாக எதிர்த்து நிற்க வேண்டும். பெண்களின் கடமை இதுவேயாகும். திரீகளிடம் அன்பு நிறைந்திருக்கிறது. இந்த அன்பைக் கொண்டு யுத்தத்தை நிறுத்துவோம். இதில் நிறவேற்றுமை வேண்டாம்............ எதியோப்பியர்கள் சமாதானத்தையே விரும்புகிறார்கள். நாங்கள் எவரிடமும் வலியச் சண்டைக்குச் செல்லவில்லை. ஆனால் எங்களையும் மீறி யுத்தம் நேரிடுமானால் அதற்காக நாங்கள் துடித்துச் சாகப்போவதில்லை. எதியோப்பியர்கள் எப்பொழுதும் அந்நியர்களுக்கு ஆதரவு கொடுத்து வந்திருக்கிறார்கள். எங்கள் நாட்டுக்கு வந்து உண்மையாக வேலைசெய்து பிழைக்கும் எவரிட மும் எங்களுக்குத் துவேஷம் கிடையாது. பிறநாடுகளின்மீது ஆதிக்கம் கொள்ள வேண்டுமென்ற நோக்கமும் எங்களுக்கு இல்லை. ஆனால் எங்களையும் மீறி யுத்தம் நேரிட்டால், போர்க் களத்திற்குச் செல்லும் எங்கள் புருஷன்மார்களுக்குத் துணை செய்வோம். இதுவே எங்கள் கடமை. சிலர் நினைக்கிறபடி இது கஷ்டமாயிருக்க லாம். ஆயினும் உயிரையும் பொருட்படுத்தாது எங்கள் ஆடவர் களுக்குத் துணையாக எப்பொழுதும் இருப்போம். இந்த வீர வாசகத்தைக் கேட்ட எதியோப்பிய தாய்மார்கள், யுத்த களத்திற்கு ஆயுதந் தாங்கிச் செல்வதில் ஆச்சரியமில்லை யல்லவா? சக்ரவர்த்தியின் மூத்த பெண்ணான டெஹாய் என்பவர், இதே மன உறுதியுடையவர். இவர் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை செய்யும் வேலையிலீடுபட்டிருக்கிறார். ஓய்வு நேரங்களில் போர் வீரர்களுக்கு வேண்டிய உடைகளை நெய்தும் தைத்தும் கொடுக்கிறார். தாய்மையுள்ளம் நிறைந்த இந்த திரீரத்னங்களை அநாகரிகர்கள் என்று சிலர் கூசாமல் கூறுகின்றனர்! 3. அரச குடும்பம் வீரம் நிறைந்த ஆண்களையும் தாய்மையாகிற இறைமை நிறைந்த பெண்களையும் உடைய எதியோப்பியாவை இப்பொழுது ஆள்வது யார்? இவனுடைய குணாதிசயங்கள் என்ன? இவற்றை ஒருவாறு தெரிந்து கொள்ள வேண்டுவது அவசியமல்லவா? ஹெயிலி செலாஸியின் இளமை வாழ்க்கையைப் பற்றி விவரமாக ஒன்றுந் தெரியவில்லை. ராமாகொன்னன் ஹரார் மாகாணத்தின் கவர்னராயிருந்த போது, அவனுடைய மூத்த மகனாக இவன் 1891ஆம் வருஷம் ஜூலை மாதம் இருபத்தோராந் தேதி ஹராரில் பிறந்தான். முகம்மதியர்களின் படை யெடுப்பும், மற்ற மாகாணத்தவரின் எதிர்ப்பும் அக்காலத்தில் அதிகமாயிருந்த படியால், இவன் முரட்டுச்சு பாவத்துடனேயே வளர்ந்து வந்தான். எடுத்த காரியத்தைச் சாதிக்க வேண்டுமென்ற பிடிவாதம், உயர்ந்த லட்சியம், தனது தாய் நாடு எல்லா வகையிலும் முன்னேற வேண்டு மென்ற ஆவல் முதலிய குணங்கள் இவனுக்கு இளமையிலிருந்தே வேரூன்றி யிருந்தன. சாதாரண கிராமவாசிகள் உண்ணும் உணவை உண்டும், வைக்கோற் படுக்கையில் படுத்தும் இவன் உலக அநுபவம் பெற்றான். இவனை எப்படியாவது எதியோப்பிய சக்ரவர்த்தியாக்க வேண்டுமென்ற எண்ணம் ரா மாகொன்னனுக்கு இருந்தது. அந்த நோக்கத்துடனேயே இவனைச் சிறு வயதிலிருந்து பழக்கி வந்தான். இவனைச் சூழ்ந்து பலமான பாதுகாப்பு ஒன்று எப்பொழுதும் இருந்து வந்தது. இதனால் இவன் சிறு வயதிலேயே அரசாங்க நிருவாகத்தின் ரகசியங்களையும், தனது அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்குரிய சூழ்ச்சிகளையும் நன்கு கற்றுக்கொண்டான். இவனுக்கு உயர்தரக்கல்வி கொடுக்கப்பெறவில்லை; பிற்கால வாழ்க்கையில் பயனளிக்கக்கூடிய கல்வியே அளிக்கப்பெற்றது. ஆனால் இவன் தன்னுடைய சுய முயற்சியினால் பல நூல்களைப் படித்துத் தனது கல்வி ஞானத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக் கிறான். சக்ரவர்த்தியான பிறகு கூட, இவன் தன்னுடைய பல வேலை களுக்கிடையே முக்கியமான நூல்களைப் படிப்பான். ஆனால் முன்னேற்றத்திற்கு வழிகாட்டாத எந்த நூலையும் கையால் தொட மாட்டான். இவனுக்குப் பிரெஞ்ச் பாஷையில் நல்ல ஞானம் உண்டு. இங்கிலீஷ் பாஷை சுமாராகப் பேசுவான். அம்ஹாரிக் மொழியில் சிறந்த பண்டிதன். இந்தப் பாஷையில் ஒரு வாரப் பத்திரிகையும் நடத்தி வருகிறான். இதற்கு ஒளியும் அமைதியும் என்று பெயர். தற்போது அந்நிய நாட்டு மந்திரியாக இருக்கும் பெலாடின் கேடா ஹிரௌ இதற்கு உதவி ஆசிரியன். இந்தப் பத்திரிகாலயத்திலிருந்து, அம்ஹாரிக் பாஷையில் பல புதிய நூல்கள் அவ்வப்பொழுது சக்ரவர்த்தியின் மேற்பார்வையில் வெளியாகின்றன. தனது ஜனங் களின் கல்வி அபிவிருத்தியில் அதிக அக்கரை கொண்ட இவன், தான் பட்டத்திற்கு வந்த பிறகு, புது முறையில் பல பள்ளிக்கூடங் களை ஏற்படுத்தி யிருக்கிறான். பெண் பாடசாலைகளையும் நிறுவி யிருக்கிறான். வருஷந்தோறும் சில இளைஞர்களைப் பொறுக்கி யெடுத்து உயர்தரக் கல்வி பெறும் பொருட்டு வெளிநாடுகளுக்கு அனுப்புவிக்கிறான். இவர்கள் திரும்பி வந்து தங்கள் படிப்பின் முழுப்பயனை நாட்டின் முன்னேற்றத் திற்கு உதவுகிறார்கள். மற்றும், வெளிநாட்டுக் கிறிதவப் பாதிரிமார்கள், கிராமாந்தரங்களில் குடியேறி இலவச பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தி நடத்தி வருவதற்குச் சக்ரவர்த்தியின் பூரண ஆதரவு இருக்கிறது. ஹெயிலி செலாஸி முன்னேற்ற முறைகளில் பெரிதும் விருப்புடையவன். இவன் அதிகாரம் ஏற்றுக் கொண்ட பிறகு நாட்டின் பல பாகங்களில் புதிய பாதைகள் போடுவித்திருக்கிறான். அடி அபாபா நகரத்தில் பல புதிய கட்டிடங்கள் எழும்பியிருக் கின்றன. ரோட்டுகளுக்குத் தார் போடப் பெற்று வருகிறது. நவீன முறையில் வைத்திய சாலைகள் பல நிறுவப்பட்டிருக்கின்றன. அடி அபாபாவில் மட்டும் இரண்டு பெரிய ஆபத்திரிகள் உண்டு. ஆப்ரிக்கா கண்டத்தில் வேறெங்கும் இத்தகைய ஆபத்திரிகள் இல்லை யென்றே சொல்லப்படுகிறது. இங்ஙனம் பலபட முன்னேற்றம் அடையும் விஷயத்தில் இவன் அந்நிய நாட்டு நிபுணர்கள் பலரை வரவழைத்துத் தனது சேவையில் வைத்துக் கொண்டிருக்கிறான். வீடன்காரர், அமெரிக்கர், விட்ஜர்லாந்துக்காரர் முதலிய பலரும் எதியோப்பிய அரசாங்க சேவையில் இருக்கிறார்கள். எதியோப்பிய ராணுவத்தைச் சீர்திருத்திப் புது முறையில் பழக்குவிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள தளபதி வர்ஜினுக்கு நிரம்பிய செல் வாக்கு உண்டு. இங்ஙனம் வெளிநாட்டாரை உத்தி யோகத்திற்கு அமர்த்திக் கொள்வதில் சக்ரவர்த்தி மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. குடியேற்ற நாடுகள் அதிகமா யில்லாத அரசாங்கத்துப் பிரஜைகளையே தனது உத்தி யோகதர்களாகப் பொறுக்கியெடுக்கிறான். இந்த உத்தியோக தர்களும் சக்ரவர்த்தியிடத்தில் விசுவாசத்துடன் நடந்து கொள்கி றார்கள். ஜனங்களின் பொருளாதார வாழ்வைச் சீர்படுத்த வேண்டு மென்ற நோக்கத்துடன் ஹெயிலி செலாஸி, புதிய முறையில் பாங்கி களை தாபித்திருக் கிறான். இவை, அரசாங்க நிருவாகத் திற்குட்பட்டு நடை பெறுகின்றன. அடி அபாபாவிலுள்ள எதியோப்பியா பாங்கி, நோட்டுச் செலாவணி முறையைச் சமீப காலத்திலிருந்து கையாளத் தொடங்கி யிருக்கிறது. இந் நாட்டில் இந்தியர்கள் பலர் வியாபாரத்திலும் வேறு பல தொழிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களைச் சக்ரவர்த்தி நிரம்ப அன்புடன் நடத்துவதாகச் சொல்லப்படுகிறது. ஹெயிலி செலாஸி, வரி விதிக்கும் முறையையும் ஒழுங்கு படுத்தினான். ஜனங்கள், தங்கள் வரியைப் பொருளாகவும் செலுத்த லாம் என்று இந்தப் புதுமுறை கூறுகிறது. இது ஜனங்களுக்கு மிகவும் சௌகரியமாயிருக்கிறது. வரிக்குப் பதிலாக, ஆடு மாடுகள், தோல்கள், காபி கொட்டை முதலியவை செலுத்தப் பெறுகின்றன. இவற்றை அரசாங்கத்தார் பெற்று மொத்தமாக வெளி நாட்டாருக்கு விற்று விடுகின்றனர். இதனால் அரசாங்கம் ஒரு வியாபார தாபன மாகவும் இருக்கிறதென்று சொல்லலாம். எதியோப்பியாவில் அடிமை வியாபாரம் நடைபெறுகிற தென்றும், ஜனங்களுக்குள் இந்த அடிமை வழக்கம் இருக்கிற தென்றும் சிலர் குறைகூறி வந்தனர். சர்வதேச சங்கத்தில் தன்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று எதியோப்பியா விண்ணப்பஞ் செய்து கொண்டபோது, அதனைச் சேர்த்துக் கொள்ளக்கூடா தென்று எதிர்த்த தேசங்கள், இந்த அடிமை வழக்கத்தையே முக்கிய காரணமாக எடுத்துக்காட்டின. ஹெயிலி செலாஸி, இது விஷயத் தில் முனைந்து, பலத்த எதிர்ப்புக்கிடையே, இந்த வழக்கத்தைச் சிறிது சிறிதாக ஒழித்து வருவதை யார்தான் பாராட்டாமலிருக்க முடியும்? 1924 ஆம் வருஷத்தில் இதற்காக ஒரு சட்டமும் பிறப்பிக் கப்பட்டது. ஆனால் இந்தச் சட்டத்தினால் அதிக தொல்லையே ஏற்பட்டிருப்பதாக எதியோப்பியாவை அறிந்தவர்கள் கூறுகி றார்கள். ஏனென்றால், அடிமை வழக்கம் என்ற சொற்றொடருக்கு மேனாட்டார் என்ன பொருள் கொள்கிறார்களோ அந்தப் பொருளில் இந்த வழக்கம் எதியோப்பியாவில் இல்லை. அடிமைகள் என்று சொல்லப் பெறுவோர் சில தலை முறைகளாக, எஜமானர் களுடைய குடும்பத்துடனேயே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். சில சமயங்களில், இந்த அடிமைகளுக்கும் எஜமானர்களுக்கும் விவாக சம்பந்தம் ஏற்படுவதுண்டு. இத்தகையோரைத் திடீரென்று பிரிப்பதனால் இருசாராருக்கும் பல தொந்திரவுகள் விளைவது சகஜமல்லவா? இங்ஙனம் விடுதலை செய்யப்பெற்ற அடிமைகளும் வேறு பிழைக்க வழியின்றித் திண்டாட வேண்டி யிருக்கிறது. இதனால் எதியோப்பியாவில் கூட வேலையில்லாத் திண்டாட்டம் ஆரம்பித்து விட்டதென்று கூறுவர் சிலர். ஆனால், ஹெயிலி செலாஸி எதற்கும் மனஞ்சலியாது, சர்வதேச சங்கத்திற்குத் தான் கொடுத்த வாக்குறுதிப்படி இந்த அடிமை வழக்கத்தை ஒழித்து வருகிறான். விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுக்குப் பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தப் பெற்றிருக்கின்றன. சிறிது கல்வி பயின்றவர்கள் போலீ இலாக்காவிலும் வேறு பல உத்தியோகங்களிலும் நியமிக்கப் பெற்றிருக்கிறார்கள். இந்த அடிமைகளின் விடுதலை விஷயத்தில் சில வெளிநாட்டுப் பாதிரிமார்களும் உதவி செய்து வருவது இங்குக் குறிப்பிடத்தக்கது. எதியோப்பிய சங்கீதம் ஓவியம் முதலிய உயர்தரக்கலை களுக்கு ஹெயிலி செலாஸி அதிக ஆதரவு அளித்து வருகிறான். இதனால், சில இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு அரசாங்கச் செலவில் சென்று திரும்பி வந்திருக்கிறார்கள். ஆகாய விமானங்களை ஓட்டுதல், மின்சார இயந்திரங்களை இயக்குதல், சினிமா தொழில், ரேடியோ பேசுதல் முதலிய பல நவீனத் துறைகளில், எதியோப்பிய இளைஞர் பலர் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இளைஞர்களிடையே சாரணர் இயக்கமும் ஓங்கி வளர்ந்து வருகிறது. ஹெயிலி செலாஸி, முன்னேற்ற முறைகளில் எவ்வளவு ஆவலுள்ள வனாயிருந்த போதிலும், இவனுடைய நிலைமை எப்பொழுதும் தர்ம சங்கடமாகவே இருந்து வந்திருக்கிறது. பட்டத் திற்கு வருவதற்கு முன்னால், இவனைச் சுற்றிச் சதியாலோசனைகளும், அரசியல் சூழ்ச்சிகளும், சிற்றரசர்களின் எதிர்ப்பும் வட்டமிட்ட வண்ணம் இருந்தன. ஆனால் இவன் அனைத்தையுங் கடந்து சரித்திரப் பெருமை நிறைந்த சிங்காதனத்தில் அமர்ந்தான். எதியோப்பியாவின் சிங்காதனம், மற்ற அரசர்களுடைய சிங்காதனங்களைப்போல், இவனுக்கு ஓய்வுப் படுக்கையாக இல்லை. உலகத்தோடு ஒட்ட ஒழுகி, நாகரிக முன்னேற்றத்தில் எதியோப்பியாவும் தனக்குரிய பங்கைப் பெற வேண்டுமென்ற ஆவல் இவனுக்கு அதிகம். இதனாலேயே, இவன் ரீஜண்டாயிருந்தபோதே, 1923 ஆம் வருஷம் எதியோப்பி யாவைச் சர்வதேச சங்கத்தில் சேருமாறு செய்தான். ஆனாலும், இவன் தனது லட்சியத்தை மெது மெதுவாகவே செயலில் கொணர வேண்டியிருக்கிறது. இவன் நினைக்கிறபடி வேகமாக ஒன்றும் செய்ய முடிவதில்லை. எத்தனையோ தடைகள்! மத குருக்கள் மாருடைய குறுகிய நோக்கம் ஒரு புறம்! சிற்றரசர்களுடைய சில்லரைச் சச்சரவுகள் மற்றொரு பக்கம்! எதியோப்பியாவைச் சுற்றி யுள்ள ஐரோப்பிய வல்லரசுகளின் சந்தேகப் பார்வை வேறொருபால்! இவற்றோடு உலகப்பொருளாதார மந்தமும் சேர்ந்து கொண்டது. எனவே, மிகவும் ஜாக்கிரதையாக ஆனால் நிச்சயமாக முன்னேற வேண்டியிருப்பதை இவன் நன்கு தெரிந்து கொண்டிருக்கிறான். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறான். பழமையிலே புதைந்து கிடக்கும் ஒரு சமூகத்தைத் திடீரென்று மேலே பறக்க வைப்பது அநுபவ சாத்தியமானதல்ல. இதனை ஹெயிலி செலாஸி நன்கு உணர்ந்து ஒவ்வொரு துறையிலும் கவனஞ் செலுத்தி முன்னேற் றத்தை உண்டாக்கியிருக்கிறான் என்று கூற வேண்டும். இந்த முன்னேற்றம், வெளியுலகக் கண்ணாடி கொண்டு பார்க்கும்போது மிகச்சிறியதாயிருந்த போதிலும் இதற்காக இவன் எவ்வளவு உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கிறதென்பது ஒரு சிலருக்கே தெரியும். ஹெயிலி செலாஸி எப்பொழுதும் சுறு சுறுப்புள்ளவன். தினந்தோறும் விடியற் காலை நான்கு மணிக்கு எழுந்து விடுவான். அது முதல் ராஜ்ய விவகாரங்களைக் கவனிக்கத் தொடங்குவான். இவன் சிந்தனையும் உழைப்பும் எப்பொழுதும் எதியோப்பியாவின் முன்னேற்றங் கருதியதாகவே இருக்கும். தன் நாட்டிற்காக இவன் எப்பொழுதும் கவலைப்பட்ட வண்ணம் இருக்கிறான் என்பது இவன் முகக்குறியினால் தெரியும். எதியோப்பிய சக்ரவர்த்தி ஐந்தரை அடி உயரமுடையவன். மாநிறம். இவன் சிரிப்பிலே ஒரு தனியழகு உண்டு. இவனுடைய அடர்ந்த தாடியும் மீசையும் கம்பீரத்தைத்தருகின்றன. இவனது விசாலமான நெற்றி, ஆழ்ந்த அறிவையும் முன்யோசனையையும் வெளிக்குக் காட்டுகின்றது. இவன் கண்கள், பிரகாசமுள்ள பலகணி களாக இருக்கின்றன. வாழ்க்கையில் பல போராட்டங்கள் நடத்தி அநுபவம் பெற்றவன் என்பது இவனைப் பார்த்தவுடன் தெரியும். பிறரிடத்தில் இவன் பேசும்போது, தன் உணர்ச்சி களை முகத்தில் நன்கு வெளிப்படுத்திக் கொண்டும், கைகளால் சைகை செய்து கொண்டும் பேசுவான். ஆனால் எப்பொழுதும் எவரையும் துடுக் காகப் பேசமாட்டான். இவன் பேச்சிலே ஒரு பணிவும் உறுதியும் காணப்படும். சாதாரணமாக இவன் காபா என்று சொல்லப் பெறும் கறுப்புப் பட்டினாலாய மேற்சட்டையும், காலை இறுக்கிப் பிடித்துக் கொள்ளும் காற்சட்டையும் அணிந்துகொண்டிருப்பான். ராணுவ சம்பந்தமான அலுவல்களில் கலந்து கொள்ளும்போது, ஒரு தளபதியின் உடையில் விளங்குவான். ஹெயிலி செலாஸி குடும்பப்பற்று நிரம்ப உடையவன். இவனுடைய சீர்திருத்த முயற்சிக்கு, மேனன் சக்ரவர்த்தினி பூரண ஒத்துழைப்பைக் கொடுத்து வருகிறார். இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அரச தம்பதிகள் மிகுந்த ஒற்றுமையுடையவர்கள். தனது பிள்ளை களின் கல்வி விஷயத்தில் ஹெயிலி செலாஸி அதிக கவனஞ் செலுத்தி வருகிறான். இவன் தன் குழந்தைகளோடு பழகும்போது, ஓர் அரசனாக இராமல் அன்புள்ள ஒரு தகப்பனாகவே இருப்பான். இவனுடைய மூத்த மகள் இறந்து விட்டபோது, சக்ரவர்த்தியும் சக்ரவர்த்தினியும் கோ வென்று கதறியழுததைக் கண்ட ஜனங்கள், கூடவே புலம்பினார்கள். சக்ரவர்த்தினியிடத்தில் நிரம்பிய தெய்வபக்தியுண்டு. நாட்டின் க்ஷேமத்திற்காக உண்ணாவிரத மிருப்பதும், தேவதைகளுக்குப் பூஜை செய்வதும் இவர் வழக்கம். இத்தலி-அபிசீனிய யுத்தத் தொடக்கத்தில் இவர் பதினாறு நாட்கள் உண்ணாவிரத மிருந்ததை யார் மறக்கமுடியும்? எதியோப்பிய தாய்மார்கள், நெருக்கடியான சந்தர்ப்பங்களில் தேவதை களுக்குப் பூஜை செய்வதும் உபவாச மிருப்பதும் பரம்பரையான வழக்கம். சக்ரவர்த்தி தம்பதிகள் ஆடம்பர வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டவர்கள். அடி அபாபாவி லுள்ள கிப்பி என்ற குன்றின்மீது சக்ரவர்த்தியின் அரண்மனையும் அதனைச் சார்ந்த கட்டிடங்களும் இருக்கின்றன. அரசாங்க சம்பந்த மான அலுவல்கள் நடைபெறுவதற்காக விசாலமான முற்றங்களும், தர்பார் மண்டபங்களும், ஆடம்பர வாழ்க்கைக்குரித்தான மற்ற யாவும் இங்கு அமைந்திருக்கின்றன. ஆனால் அரச தம்பதிகள் இங்கு வசிப்பதில்லை; இதற்கு ஐந்து மைல் தொலைவிலுள்ள புதிய-ஆனால் சிறியதொரு கட்டிடத்தில் வசிக்கிறார்கள். இஃதொரு சிறிய பங்களா மாதிரி இருக்கிறது. இதனைச் சுற்றிப் பூந்தோட்டம். இந்தக் கட்டிடத்தை எழுப்புவதற்கு எதியோப்பியர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு செங்கல்லைக் கொடுத்து உதவியதாகவும், இஃது ஐரோப்பிய சிற்பிகளின் மேற் பார்வையில் ஏழு மாதத்திற்குள் கட்டி முடிந்ததென்றும் சொல்லப் பெறுகின்றன. சக்ரவர்த்தியின் குமாரர்களும் வீரம் நிறைந்த இளைஞர்கள். மூத்த குமாரனாகிய அபௌ வூஸன் என்பான், டைக்ரே மாகாணத்தின் கவர்னராக நியமிக்கப் பெற்று, எதியோப்பிய படைகளின் முக்கிய தளகர்த்தனாயிருக்கிறான். இரண்டாவது குமாரனான சுமார் பதினைந்து வயதுடைய மாகொன்னனும் ஒரு பெரும் படைக்குத் தலைவனாக நியமிக்கப் பெற்று, இத்தலி அபிசீனிய யுத்தத்தில் கலந்து கொண்டிருக் கிறான். இவனிடத்தி லேயே சக்ரவர்த்திக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகச் சொல்லப் பெறுகிறது. மூன்றா வது குமாரனாகிய சாஹ்லே செலாஸி மிகச் சிறியவன். ஆனால் இவனும் யுத்த முறை களில் பயிற்சி பெற்று வருகிறான். பொதுவாக, ஹெயிலி செலாஸி, தன்னினின்று ஜனங் களை வேறாகக் கருத வில்லை. ஜனங்களும் தங்களினின்று வேறாக அரசனை நினைக்க வில்லை. இத்தகைய ராஜ பக்தியும், குடி யன்பும் ஒன்று பட்டு வாழ்தல் மிக அருமை யல்லவா? ஆனால் இந்த ஒன்றுபட்ட வாழ்வில், களங்க மற்ற தேசபக்தி, கோடி சூரியப் பிரகாசம் போல் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. 4. இத்தலி - அபிசீனிய யுத்தம் உலகம் எதிர்பாராதவிதமாக 1935 ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் எதியோப்பியா மீது இத்தலி யுத்தம் தொடங்கியது. இதற்குக் காரணம் என்ன? 1911 ஆம் வருஷம், இத்தாலிய அரசாங்கம் லிபியா மீது படையெடுத்தபோது, சமூக வாதக் கட்சியைச் சேர்ந்திருந்த முஸோலினி, அதனைப் பலமாக எதிர்த்தான். இத்தலிக்குக் குடி யேற்ற நாடுகள் தேவையில்லை யென்னும் கருத்துப்பட அப்பொழுது பேசினான். ஆனால் திடீரென்று இப்பொழுது, இருபது வருஷங் களுக்குப் பிறகு முஸோலினிக்குக் குடியேற்ற நாடுகளின் மீது ஆசை உண்டானதேன்? இரண்டாவது மெனலிக் மன்னன் காலத்திலிருந்து-அடோவா யுத்தம் ஒன்றைத் தவிர-இத்தலியர்களுக்கும் எதியோப்பி யர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்திருக்கிறது. மற்ற நாட்டாரை விட, இத்தாலியர் களுக்கு எதியோப்பியாவில் அதிக செல்வாக்கு இருந்தது. எதியோப்பியாவின் மூலை முடுக்குகளி லெல்லாம் இத்தாலிய தானீகர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். இவர்களிடத்தில் எதியோப்பியர்கள் எப்பொழுதும் துவேஷ புத்தியுடன் நடந்து கொண்டதாகத் தெரியவில்லை. இத்தாலியர் களும், எதியோப்பிய அரச பரம்பரையினரின் பெயரால் பல தரும தாபனங்களை ஏற்படுத்தி யிருக்கிறார்கள். இப்படி யெல்லாம் இருக்க, இத்தலி, அபிசீனியா மீது திடீரென்று பாய்வானேன்? இதற்குக் காரணங்கள் பலர் பலபடக் கூறுவர். இவற்றைச் சிறிது ஆராய்வோம். எதியோப்பியாவைப் பொறுத்த மட்டில் மூன்று ஐரோப்பிய வல்லரசுகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இவை கிரேட் பிரிட்டன், பிரான், இத்தலி. கறுப்பு நிறத்தவர் வசிக்கும் ஆப்ரிக்கா கண்டத்தி லுள்ள பிரதேசங்களை, தங்கள் தேவைக்குத் தகுந்தபடி பங்கு போட்டுக் கொள்வதில் எவ்வித தவறுமில்லை என்பது இம்மூன்று நாடுகளின் நம்பிக்கை. ஆனால், இவ்விஷயத்தில் இத்தலி சிறிது பலஹீனப் பட்டிருந்தது. எகிப்து, சூடான், மொராக்கோ ஆகிய மூன்று பிரதேசங் களையும் முறையே காப்பாற்றிக் கொள்வதிலும், கூடுமானால் விதரித்துக் கொள்வதிலும் கிரேட் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் எப்பொழுதும் போட்டா போட்டி இருந்து கொண்டு வந்தது. பிரான்சின் கைவலுத்து விடப்போகிறதே யென்ற எண்ணத் தினாலோ என்னவோ, கிரேட் பிரிட்டன், எப்பொழுதும் இத்தலி யின் கோரிக்கைகளுக்கு ஆதரவு காட்டி வந்தது. அபிசீனியா விஷயத் தில் கிரேட் பிரிட்டனுக்கு ஒரே ஒரு கவலைதான். டானா ஏரியி லிருந்து உற்பத்தியாகும் நீல நதியின் போக்கு, தடை செய்யப் படாமல் இருக்க வேண்டுமென்பதே. இதற்கு உதவி செய்யக்கூடியது சுதந்திர அபிசீனியாவாக இருக்கட்டும், இத்தலியின் ஆதிக்கத் திற்குட்பட்ட அபிசீனியாவாகவாவது இருக்கட்டும், அதைப்பற்றிக் கவலையில்லை. அதற்கு வேண்டியது நீல நதியைப்பற்றிய உரிமை தான். ஜிபூடி-அடி அபாபா ரெயில்வே சம்பந்தமாக உள்ள உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டும், கிரேட் பிரிட்டன், இத்தலி ஆகிய நாடுகளின் மீதுள்ள பரம்பரை விரோதத் தின் காரணமாகவும், அபிசீனியாவை ஆதரிக்க வேண்டு மென்பது பிரான்சின் ஆவல். இத்தலியோ, பிரான்சின் நல்லெண்ணத்திலோ, அல்லது கிரேட் பிரிட்டனுடைய நல்லெண்ணத்திலோ எப்பொழு தும் நம்பிக்கை கொண்டது கிடையாது. ஆனால் அடோவா யுத்தத் தில் தானடைந்த தோல்விக்கு எப்படியாவது பழி தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற ஆத்திரம் அதற்குப் பூரணமாக இருந்து வந்திருக் கிறது. இந்தச் சூழலினிடையே, அபிசீனியா, தனது சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறது. இந்தப் பொதுவான எண்ணத்தை மனதில் கொண்டு, மேற்படி மூன்று ஐரோப்பிய வல்லரசுகளும் தங்களுக்குள்ளும், அபிசீனியா விஷயத்திலும் நடந்து கொண்டதைக் கவனிப்போம். அடோவா யுத்தத்தின் விளைவாக, 1896 ஆம் வருஷம், இத்தலிக்கும் அபிசீனியாவுக்கும் ஏற்பட்ட அடி அபாபா உடன் படிக்கைக்கு முன்னாலேயே, இத்தலியும் கிரேட் பிரிட்டனும் அபிசீனியா சம்பந்தமாக, அதன் சம்மதமின்றியே, மூன்று ஒப்பந்தங்கள் செய்து கொண்டன. இரண்டு ஒப்பந்தங்கள் 1891 ஆம் வருஷத்திலும் ஒன்று 1894ஆம் வருஷத்திலும் நிறைவேற்றப்பட்டன. இரண்டு நாடுகளும், இந்த மூன்று ஒப்பந்தங்கள் மூலமாக அபிசீனி யாவில் தங்கள் செல்வாக்கு எவ்வளவு தூரம் உபயோகிக்கப் பெற லாம் என்பதை ஒருவாறு வரையறுத்துக் கொண்டன. அடி அபாபா உடன்படிக்கைக்குப் பிறகுகூட, இந்த மூன்று ஒப்பந்தங் களும் தங்களைக் கட்டுப்படுத்துவன போலவே, கிரேட் பிரிட்டனும் இத்தலியும் கருதிவந்தன. ஆனால் அபிசீனியாவில் செல்வாக்கை உபயோகிப்ப தென்பது விளக்கப்படாமலே இருந்து வந்தது. 1894 ஆம் வருஷம் ஜிபூடியிலிருந்து அடி அபாபா வரை ரெயில் போடும் உரிமையை அபிசீனியாவிட மிருந்து பிரான் பெற்றுக் கொண்டு விட்டது. அதுமுதற் கொண்டே, கிரேட் பிரிட்டனும், இத்தலியும், தாங்களும் சில ஏகபோக உரிமைகள்பெற வேண்டு மென்று ஆவல் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. 1902 ஆம் வருஷம் அபிசீனியாவோடு, கிரேட் பிரிட்டன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலமாக சூடான் எல்லைப்புறம் வரை யறுத்துக் கொள்ளப் பெற்றதோடு, நீல நதியின் போக்கைத் தடை செய்யக் கூடியவிதமாக எவ்வித அணையும் போடுவதில்லை யென்று அபிசீனியா உறுதி கொடுத்தது. மற்றும், காம்பேலா என்ற ஊரில் ஒரு வியாபார தாபனம் ஏற்படுத்திக் கொள்ளவும், உகாந்தாவிலிருந்து சூடான் வரை, அபிசீனியா மூலமாக ரெயில் போட்டுக் கொள்ளவும், கிரேட் பிரிட்டன் உரிமை பெற்றது. இதன் பயனாக, வியாபார தாபனம் மட்டும் ஏற்பட்டது; ரெயில் போடப் பெறவில்லை. இதற்குப் பிறகு 1906ஆம் வருஷம், கிரேட் பிரிட்டன், பிரான், இத்தலி ஆகிய மூன்று நாடுகளும் எதியோப்பியா சம்பந்தமாக ஒரு தனி ஒப்பந்தம் செய்துகொண்டன. எதியோப்பியாவிட மிருந்து, இந்த மூன்று நாடுகளும் தனித்தனியாக உரிமைகள் பெற முயல வேண்டுமென்றும், இந்த முயற்சி செய்யும் விஷயத்தில் பரபரம் மூன்று நாடுகளும் ஒத்துழைக்க வேண்டுமென்றும், ஆனால் ஒரு நாடு பெறும் உரிமையானது மற்ற இரண்டு நாடுகளையும் பாதிக் காமல் இருக்க வேண்டு மென்றும் இந்த ஒப்பந்ததின் ஷரத்துகள் கூறின. தவிர, எதியோப்பியாவின் அரசியல் சுதந்திரம் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாதென்றும், எதியோப்பியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடா தென்றும், அப்படி தலையிடுவதா யிருந்தால் மூன்று நாடுகளும் ஒன்று சேர்ந்தே தலையிட வேண்டு மென்றும் இந்த ஒப்பந்தம் வலியுறுத்தியது. இவை மட்டுமா? மூன்று நாடுகளும் மூன்று திசைகளில் ரெயில்வே போட்டுக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன. ஆனால் இவ்வளவும், எதியோப்பிய அரசாங்கத்திற்குத் தெரிவியாமலும் அதன் சம்மதத்தைப் பெறா மலுமே செய்யப் பெற்றன. இது விஷயம், பிறகு அப்பொழுதிருந்த மெனலிக் மன்னனுக்குத் தெரிந்தது. இந்த ஒப்பந்தம் இருப்பதாகவே தான் கருதமுடியாதென்று அவன் கூறிவிட்டான். ஆனால் பின்னர், எதியோப்பியாவின் சுதந்திரம் அங்கீகரிக்கப் பெற்றிருப்பதை மட்டும் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தான். மற்றும் மேற்படி மூன்று நாடுகளும் கோரிய உரிமைகளை-ஏற்கெனவே பிரான்சுக்கு அளிக்கப் பெற்றுவிட்ட ஜிபூடி ரெயில்வே உரிமையைத் தவிர-அநுமதிக்க மறுத்துவிட்டான். இதனின்றும் அவன் விழிப்புற்று, தனது நாட்டைச் சுற்றியுள்ள கிரேட் பிரிட்டன், பிரான், இத்தலி ஆகிய மூன்றுக்கும் சொந்தமான பிரதேசங்களின் எல்லைப்புறத்தை நிர்ணயிக்கும் விஷயமாக ஒப்பந்தங்கள் செய்து கொண்டான். எல்லைப்புற நிர்ணய சம்பந்தமாக நியமிக்கப்பெற்ற கமிஷன்கள் தங்கள் வேலையைப் பூர்த்தி செய்து கொண்டு வந்தன; இத்தாலிய சோமாலிலாந்தில் மட்டும் பூர்த்தியாகாமல் இருந்தது. 1914 ஆம் வருஷம் ஐரோப்பிய யுத்தம் தொடங்கப் பெற்ற போது, முதலில் ஒதுங்கி யிருந்த இத்தலியானது பிறகு நேசக் கட்சியா ருடன் சேர்ந்தது. இதற்கு முக்கிய காரணமாயிருந்தது 1915 ஆம் வருஷத்தில், பிரான்சும் கிரேட் பிரிட்டனும், இத்தலியுடன் லண்ட னில் செய்து கொண்ட ரகசிய உடன்படிக்கையே யாகும். யுத்தத்தில் நேசக் கட்சியார் வெற்றி பெற்று, தங்கள் குடியேற்ற நாடுகளை அதிகப்படுத்திக் கொண்டால் இத்தலிக்கும் சில பிரதேசங்கள் அளிக்கப்படுமென்று அதில் கூறப் பட்டிருந்தது. யுத்தமும் முடிந்தது; நேசக் கட்சியார் வெற்றி பெற்றனர். வல்லரசுகள் குடியேற்ற நாடுகளை ஒருவாறு பங்கு போட்டுக் கொண்டன. ஆனால், தனக்குச் சரியானபடி நாடுகள் கொடுக்கப் பெறவில்லை யென்ற குறை இத்தலிக்கு இருந்து வந்தது. ஜர்மனிக்குச் சொந்தமா யிருந்த குடியேற்ற நாடுகளை பிரான்சும் கிரேட் பிரிட்டனுமே பங்கு போட்டுக்கொண்டு விட்டன என்று இத்தலி கருதியது. யுத்தம் முடிந்த பிறகு, 1919ஆம் வருஷம், நீலநதி சம்பந்தமான உரிமை களையும் டானா ஏரியிலிருந்து சூடானுக்கு ரோட் போடுவதையும் கிரேட் பிரிட்டன் வற்புறுத்த வேண்டுமென்றும், வடக்கேயிருந்து தெற்கே ரெயில்வே போட்டுக் கொள்ளவும், அபிசீனியாவின் மேற்குப் பாகத்தில் பொருளாதாரச் செல்வாக்கை உபயோகித்துக் கொள்ளவும் உரிமை வேண்டுமென்று தான் வற்புறுத்துவதாகவும் இத்தலி கிரேட் பிரிட்டனிடம் கூறியது. ஆனால் கிரேட் பிரிட்டன் அப்பொழுது இதற்கு மறுத்து விட்டது. சர்வ தேச சங்கத்தில் தன்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டு மென்று 1923ஆம் வருஷம், அபிசீனியா விண்ணப்பித்துக் கொண்டது. இதற்கு எதிராக, கிரேட் பிரிட்டன், விட்ஜர்லாந்து, ஆதி ரேலியா, நார்வே ஆகிய நாடுகள் இருந்தன. பெல்ஜியம், பிரான், இத்தலி, போர்த்துகல் ஆகிய நாடுகள் அபிசீனியாவைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கூறின. கடைசியில், அடிமை வழக்கத்தைச் சட்டபூர்வமாக ஒழிக்க வேண்டுமென்றும், ஆயுத ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தமாக ஒரு கட்டுப்பாட்டுக்கு உட் பட்டிருக்க வேண்டுமென்றும் வரையறுத்து அபிசீனியாவைச் சேர்த்துக் கொண்டன. சர்வ தேச சங்கத்தில் தான் சேர்ந்து கொண்டு விடுவதால், தன்னுடைய சுதந்திரம் எப்பொழுதும் பிறநாடுகளினால் பாதிக்கப் பெறாதென்று அபிசீனியா மனப்பூர்வமாக நம்பியது. அபிசீனியாவில் தான் கோரும் சில உரிமைகளை கிரேட் பிரிட்டன் ஆதரித்தால், கிரேட்பிரிட்டனுடைய உரிமைகளைத் தான் ஆதரிப்பதாக 1919ஆம் வருஷம் இத்தலி கேட்டதற்கு, கிரேட் பிரிட்டன் மறுத்து விட்டதல்லவா? 1925ஆம் வருஷம், கிரேட் பிரிட்டன், இந்தப் பிரச்னையை எழுப்பி, இத்தலியின் கோரிக்கை களைத்தான் ஆதரிப்பதாகவும், இத்தலியும் தன் கோரிக்கைகளை ஆதரிக்க வேண்டுமென்றும் தெரிவித்தது கடைசியில், இரு நாடு களும் சேர்ந்து, 1926ஆம் வருஷம், தங்களுடைய கோரிக்கைகளை அபிசீனியாவுக்குத் தெரிவித்தன. இதற்கு, அபிசீனியா மன வருத்த மடைந்து இந்த விஷயம் முழுவதையும் சர்வதேச சங்கத்திற்குத் தெரிவித்தது. ஒரு தேசத்தில் சில ஏகபோக உரிமைகளைப் பெறுவதற் காக, வேறு இரண்டு தேசங்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்வதைக் கண்டு அபிசீனியா ஆச்சரியப்பட்டது. பிறகு கிரேட் பிரிட்டனும், இத்தலியும் சமாதானம் கூற, அபிசீனியா ஒருவாறு திருப்தியடைந்தது. 1928ஆம் வருஷத்திலிருந்து இத்தாலிய சோமாலிலாந்தின் எல்லைப்புறத்தை நிர்ணயிக்கும் வேலையில் அவ்வப்பொழுது இத்தாலிய அரசாங்கம் ஈடுபட்டிருந்தது. இது, மெதுமெதுவாகத் தனது எல்லைப் புறத்தை விதரித்துக்கொண்டு போவதாகவும், சுமார் அறுபத்தைந்து மைல் வரை தனது எல்லையைத் தள்ளிப் போட்டிருப்பதாகவும் கூறப்பட்டன. வால் வால் என்பது, முன்னர் அபிசீனியாவின் தெற்கு மாகாணமாகிய ஒகாடானைச் சேர்ந்திருந்த தாகவும் இதற்குத் தென் கிழக்கில் சுமார் அறுபத்தைந்து மைலுக்கப் பால் இத்தாலிய சோமாலிலாந்தின் எல்லைப்புறம் இருந்ததென்றும் அபிசீனியா கூறிக்கொண்டு வந்தது. 1925ஆம் வருஷம் வரை இத்தலியினால் வெளியிடப்பெற்று வந்த பூகோள படங்களும் இதனையே வலியுறுத்துகின்றன. பிறகு வெளியான படங்கள் இதனை மாற்றியிருக்கின்றன. இதனால் சில காலமாகவே, இத்தலியானது, சிறிது சிறிதாகத் தனது எல்லைப் புறத்தை அதிகப்படுத்திக்கொண்டு வந்திருக்கிறதாகத் தெரிகிறது. மற்றும் வால் வாலைச் சுற்றியுள்ள பிரதேசங்களில், அபிசீனியாவின் ஆதிக்கம் உறுதியுடன் செல்லாம லிருந்தது இத்தலியின் வித ரிப்புக்குச் சௌகரியமாயிருந்தது. ஆனால் ஹெயிலி செலாஸி சக்ரவர்த்தியான பிறகு, எதியோப் பியாவின் ஆதிக்கம் இந்தப் பிர தேசங்களில் வலுக்கத் தொடங் கியது. 1934ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் இத்தாலியத் துருப்புகள் இத்தாலிய சோமாலிலாந்தின் எல்லைப்புறத்தில், எதியோப்பிய அரசாங்கம் சந்தேகப்படும்படியாக நடந்து கொள்ள ஆரம்பித்தன. ஆனால் இரண்டு அரசாங்கங்களும் வெளிப்பார்வைக்கு மிகவும் நட்புடனேயே இருந்தன. 1934ஆம் வருஷம் நவம்பர் மாதம் கோண்டாரில் இருந்த இத்தாலிய தானீகர் தாக்கப் பெற்றதாகச் செய்தி கிடைத்ததும், எதியோப்பிய அரசாங்கம் உடனே மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விட்டது. பிரிட்டிஷ் சோமாலிலாந்தின் எல்லைப்புறத்தில் உள்ள ஜாதியார் அங்குள்ள மேய்ச்சல் தரைகளை எவ்வளவு தூரம் உபயோகித்துக் கொள்ளலா மென்பதைப் பற்றி நிர்ணயிக்க, பிரிட்டிஷாரும் அபிசீனியர்களும் அடங்கிய ஒரு கமிஷன் 1934ஆம் வருஷம் நவம்பர் மாதம் 23 ஆம் தேதி வால் வாலுக்கு வந்தது. இந்தக் கமிஷனுக்குத் துணையாக சுமார் 1600 பேரடங்கிய ஒரு அபிசீனியப் படையும் வந்தது. வால் வாலில், இத்தாலியர் சார்பில் 250 பேரடங்கிய ஒரு சோமாலியர் படை இருந்தது. இதற்கு ஒரு மைல் தொலைவில், இத்தாலிய எல்லைப்புற காரியாலயம் இருந்தது. ஆங்கிலோ அபிசீனிய கமிஷன் அங்கத்தினர்கள் தங்கியிருந்த இடத் தில் ஒரு கிணறு உண்டு. அதனை அங்கத்தினர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் உபயோகிக்கக் கூடாதென்று சோமாலிய படை யினர் தடுத்ததோடு, அங்கத்தினரை அவர்கள் வேலையைச் செய்ய வொட்டாதபடி தகைந்தனர் என்று சொல்லப் பெறுகிறது. இதனால், அபிசீனிய படையினர், சோமாலியர்களைப் பின்னுக்குத் தள்ளி னார்கள். இருசாரரும் கைகலக்க வேண்டி ஏற்பட்டது. கமிஷனைச் சேர்ந்த பிரிட்டிஷ் பிரதிநிதிகள் சமாதானம் செய்ய முயன்றார்கள். இத்தாலியர் சார்பில் இருந்த தளபதி மிகவும் பிடிவாதமாக நடந்து கொண்டார் என்றும் பிரிட்டிஷ் பிரதிநிதிகள் சமாதானம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்கள் தலைக்குமேலே இரண்டு இத்தாலிய ஆகாய விமானங்கள் வட்டமிட்ட வண்ணமிருந்ததாகவும், அப்படி வட்டமிட்டபோது, விமானத்திலிருந்த பீரங்கிகளை கமிஷன் அங்கத்தினர்கள் மீது திருப்பியதாகவும் சொல்லப்படுகின்றன. இதற்காகத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து விட்டு, பிரிட்டிஷ் அங்கத்தினர்களும் அபிசீனிய அங்கத்தினர்களும் அடோ என்ற இடத்திற்குத் திரும்பி விட்டனர். ஆனால் அபிசீனியப் படை மட்டும் வால் வாலிலேயே இருந்தது. இதனை ஆட்சேபித்து இத்தாலிய தளபதி பல கடுமையான கடிதங்களை அபிசீனிய தளபதிக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. பின்னர், இது சம்பந்தமான கடிதப் போக்குவரத்துகள் அனைத்தையும் எதியோப்பிய அரசாங்கம் சர்வதேச சங்கத்திற்கு அனுப்பியது. இருதரத்துப் படையினரும் ஒரே இடத்தில் நேருக்கு நேராக நின்று கொண்டிருந்ததனால், உணர்ச்சி மேலிட்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி யுத்தம் தொடங்கியது இருதரப்பிலும் சேதம் உண்டா யிற்று. 8 ஆம் தேதி கமிஷனர்கள் தங்கியிருந்த அடோ என்ற இடத்தை நோக்கி இத்தாலிய ஆகாய விமானங்கள் சில குண்டுகள் எறிந்தன. இரண்டு அரசாங்கங்களும் பரபரம் ஒன்றின் மீது ஒன்று குற்றஞ் சாட்டின. இது சம்பந்தமாக மத்தியதம் செய்யுமாறும், அதற்குத்தான் கட்டுப்படுவதாகவும் அபிசீனிய அரசாங்கம் சர்வதேச சங்கத்திற்குத் தெரிவித்துக்கொண்டது. ஆனால் இத்தாலிய அரசாங்கம் இதற்கு இணங்கவில்லை. அதற்கு மாறாக ஹரார் மாகாணத்துக் கவர்னர் மன்னிப்புக் கேட்கவேண்டுமென்றும், வால்வாலிலுள்ள இத்தாலியக் கொடிக்கு அபிசீனியத் துருப்புகள் வணக்கஞ் செலுத்த வேண்டுமென்றும், இருபதினாயிரம் பவுன் நஷ்டஈடு செலுத்த வேண்டு மென்றும் கூறியது. அபிசீனியா இதற்குச் சம்மதிக்கவில்லை. தான் எவ்வித குற்றமும் செய்யவில்லை யென்றும் வால்வால் பிரதேசம் அபிசீனியாவைச் சேர்ந்ததாயிருக்க, அதிலுள்ள இத்தாலியக் கொடிக்கு வணக்கஞ் செலுத்துவது இத்தாலிய ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டதாகு மென்றும் அபிசீனியா கூறியது ஆனால் இத்தலியோ, நாளுக்கு நாள் தனது துருப்புகளை அதிகப் படுத்திக்கொண்டு வந்தது. இத்தலியைக் கண்டித்து அபிசீனியாவும், அதனை மறுத்து இத்தலியும் சர்வதேச சங்கத்திற்குப் பல கடிதங்களை அனுப்பின. இதற்கிடையே இரண்டு நாடுகளும் யுத்த முதீப்புகள் செய்து வந்தன. இத்தாலிய அரசாங்கம், ஏராளமான துருப்பு களை யும் யுத்த தளவாடங்களையும், அபிசீனியாவுக்கு வடக்கேயுள்ள எரீட்ராவிலும் தெற்கேயுள்ள இத்தாலிய சோமாலிலாந்திலும் இறக்கிக்கொண்டு வந்தது. கடைசியில், 1935 ஆம் வருஷம் மே மாதம், சர்வதேச சங்கம், இத்தலி-அபிசீனியத் தகராறை விசாரிக்கத் தொடங்கியது. ஆயினும் இந்த விசாரணை, நிர்ணயமான முடிவுக்குச் சீக்கிரம் வர வில்லை. செப்டம்பர் மாதம் வரை இழுத்துப் பறித்துக்கொண்டு வந்தது. ஆனால் விசாரணையின்போது, இத்தாலியப் பிரதிநிதிகள் நடந்து கொண்டதைப்பார்த்தால், இத்தாலிய அரசாங்கம் யுத்தத்திற்கே முனைந்திருப்பதாகத் தெரிந்தது. செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி சர்வதேச சங்கம், இத்தலி-அபிசீனியத் தகராறு சம்பந்தமாக மீண்டும் ஆலோசிக்கக் கூடியது. ஆனால், இத்தலி, எந்த விதமான சமரஸத் திற்கும் இணங்கவில்லை. சர்வதேச சங்கக் கூட்டத்தில், அபிசீனியப் பிரதிநிதிக்குச் சமமாகத்தான் உட்கார முடியாதென்று கூறி இத்தாலியப் பிரதிநிதி எழுந்து போனது பலருடைய மனதையும் புண் படுத்தியது. பிரான்சும் கிரேட் பிரிட்டனும் சேர்ந்து, அபிசீனியா விடமிருந்து பொருளாதார சம்பந்தமாகச் சில உரிமைகளை வாங்கித் தருவதாகக் கூறின. ஆனால் இத்தலி ஒரே பிடிவாதமா யிருந்தது; ஆப்ரிக்காவுக்குப் படைகள் அனுப்பி வைப்பதைச் சிறிதும் நிறுத்தவில்லை. சாதாரணமாக ஒரு தேசத்தின் மீது மற்றொரு தேசம் படையெடுப்பதாயிருந்தால், யுத்தத்தை இன்ன தேதியில் தொடங்கப் போகிறோம் என்று முன்னறிக்கை செய்வதுண்டு. ஆனால் இத்தலி இந்த யுத்த முறையைக்கூட அநுஷ்டிக்கவில்லை. சர்வ தேச சங்கம் சமரஸம் செய்து கொண்டிருக்கும் போதே, இத்தாலிய துருப்புகள் யுத்த முழக்கத்துடன் எதியோப்பிய எல்லையைக் கடந்து விட்டன. அபிசீனியா மீது படையெடுக்க இத்தலி தீர்மானித்ததற்குக் காரணமென்ன? அபிசீனியாவை நாகரிகப்படுத்த வேண்டுமென்பதா இதன் நோக்கம்? 1928ஆம் வருஷம் வரை எதியோப்பியாவுடன் நட்புரிமை கொண்டிருந்த இத்தலி, 1935ஆம் வருஷத்தில் அதன் விரோதியாக மாறியதற்குக் காரணங்கள் என்ன வென்பதை, இத்தலி அரசாங்கம் இன்னும் தெளிவுபடக்கூறவில்லை. ஏற்கெனவே அமுலிலிருக்கும் உடன்படிக்கைகள்படி எதியோப்பிய அரசாங்கம் நடந்து கொள்ளவில்லை யென்றும், எரீட்ராவிலும் இத்தாலிய சோமாலிலாந்திலும் எல்லையை ஒழுங்கு படுத்திக் கொடுக்க மறுத்துவிட்ட தென்றும், தன்னுடைய சேவையில் வைத்துக் கொண்டிருக்கும் அந்நிய நாட்டு நிபுணர்களில் இத்தாலியரைச் சேர்த்துக் கொள்ளவில்லை யென்றும், இத்தாலியரோடு அதிகமான வியாபாரம் செய்யவில்லை யென்றும் சில காரணங்கள் இத்தலியால் கூறப்படுகின்றன. ஆனால் இவையாவும் சரியல்லவென்று, சர்வ தேச சங்கத்துக் கூட்டத்திலேயே எதியோப்பிய பிரதிநிதி, பல ஆதாரங் களுடன் எடுத்துக் காட்டியதை, அறிஞருலகம் கவனியாமலில்லை. இத்தலி ஒரு சிறிய நாடு. ஜனத்தொகைக்குத் தகுந்தபடி போதுமான, நிலப்பரப்போ, மூலப்பொருள்களோ இல்லை. மற்ற ஐரோப்பிய வல்லரசுகள் தங்களுக்கிஷ்டமானபடி, ஆப்ரிக்கா கண்டத்தில் குடியேற்ற நாடுகளை வகுத்துக் கொண்டன. இத்தலிக்குச் சொந்தமான ஆப்ரிக்க நாடுகளோ வெறும் பாலைவனங்கள். எனவே, ஏன் அபிசீனியாவை ஆக்ரமித்துக் கொண்டு, இத்தாலியர் களைக் குடியேற்றக் கூடாதென்பது முஸோலினியின் கேள்வி. இதனால் ஒரு நாட்டின் சுதந்திரம் பறிக்கப்பட்டாலென்ன? அபிசீனிய சமூகம் அடியோடு அற்றுப் போனால் தானென்ன? முஸோலினி வேண்டுவது இத்தாலிய ஏகாதிபத்தியத்தின் விதரிப்பு. மற்றும், இந்தச் சமயத்தில் அபிசீனியா மீது படையெடுக்கா விட்டால், முஸோலினியின் நிலைமை சங்கடமாகியிருந்திருக்கும். ஏனென்றால், சென்ற சில வருஷங்களாக இத்தலியில் பொருளாதார மந்தமும், இதனால் வேலையில்லாத் திண்டாட்டமும் வளரத் தொடங்கின. முஸோலினியின் செல்வாக்கு குறையும் போலிருந்தது. எனவே, ஜனங்களின் கவனத்தை ஏதேனும் ஒரு துறையில் திருப்பவேண்டு மல்லவா? இதனாலேயே, இந்த யுத்த ஜுரம் கிளப்பி விடப்பட்டது என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் எது எப்படி இருந்த போதி லும், 1928ஆம் வருஷத்திலிருந்தே, இத்தலியானது அபிசீனியாவைக் கபளீகரித்துக்கொள்ள, முயற்சிகளும் சூழ்ச்சிகளும் முறையே செய்து வந்ததென்று நன்றாகத் தெரிகிறது. சர்வதேச சங்கத்தின் பலஹீனத்தை ஆதாரமாகக் கொண்டு, இத்தலி, அபிசீனியா மீது பகிரங்கமாக யுத்தம் தொடுக்கத் தொடங்கியது. மஞ்சூரியா மீது ஜப்பான் படை யெடுத்த போது சர்வ தேச சங்கம் என்ன செய்தது? ஜர்மனி, சங்கத்தினின்று விலகிய போது என்ன செய்ய முடிந்தது? இதனால் ராணுவ முறையில் சிந்தனை செய்யும் சர்வாதிகாரிகள் பலர், உடன்படிக்கைகளை வெறுங் காகிதங்களாகக் கருதத்தொடங் கினர். தன் காலத்தில் இத்தாலிய சரித்திரம் மாற்றி எழுதப்பெற வேண்டுமென்ற ஆவலுடைய முஸோலினி, எதியோப்பியாவுக்கும் இத்தலிக்கும் உள்ள பழைய நட்பை மறந்து, அடோவா தோல்விக்கு வஞ்சம் தீர்க்கு முறையில் எதியோப்பியாவின் மீது படை யெடுத்திருப்பது, நாகரிக உலகத்தை நடுக்குறச் செய்திருப்பதில் ஆச்சரியமென்ன இருக்கிறது! உலக மனைத்தும், எதியோப்பியா விடம் அநுதாபம் காட்டுகிறது. நிராயுத பாணிகளான எதியோப்பிய ஆண், பெண், குழந்தைகளின் மீது, இத்தாலிய ஆகாய விமானங்கள் குண்டுமாரி பொழிவது, எதியோப்பியாவின் மீதுள்ள அநுதாபத்தை யும், இத்தலியின் மீதுள்ள வெறுப்பையும் அதிகப்படுத்துகின்றன. அநுபந்தம் 1 சில முக்கிய சம்பவங்கள் ஹெயிலி செலாஸி பிறந்தது. 1891 எதியோப்பியா சம்பந்தமாக இத்தலியும் கிரேட் பிரிட்டனும் மூன்று ஒப்பந்தங்கள் நிறைவேற்றிக் கொண்டன. 1891-1894 ஜிபூடியிலிருந்து அடி அபாபா வரையில் ரெயில் போடும் உரிமை பிரெஞ்சுக்காரருக்கு அளிக்கப் பெற்றது. 1894 அடோவா யுத்தத்தில் எதியோப்பியர்களால் இத்தாலியர் முறியடிக் கப்பட்டது. 1896 கிரேட் பிரிட்டனும் எதியோப்பியாவும், வியாபார உரிமைகள் சம்பந்தமாக உடன்படிக்கை செய்து கொண்டது. 1902 எதியோப்பியாவில் தங்களுடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் விஷயமாக, இத்தலி, பிரான், கிரேட் பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டது. 1906 இரண்டாவது மெனலிக் மன்னன் இறந்து போனது. 1913 லிஜ்ஜாஸு அரச பதவியினின்று விலக்கப் பெற்றது. ஜுடித், சக்ரவர்த்தினியாகவும், ராடபாரி, ரீஜண்டாகவும் நிருவாகத்தை நடத்தி வரத்தொடங்கியது. 1916 சர்வதேச சங்கத்தில் தன்னைச் சேர்த்துக்கொள்ளுமாறு எதியோப்பியா விண்ணப்பித்துக் கொண்டது. 1923 அபிசீனியாவில் தங்கள் உரிமைகளை எப்படி காப்பாற்றிக் கொள்வதென்பதைப்பற்றி இத்தலிக்கும் கிரேட் பிரிட்டனுக்கும் கடிதப்போக்கு வரவு நடைபெற்றது. 1925 ஜுடித் மரணம்; ரா டபாரி, ஹெயிலி செலாஸி என்ற பட்டப் பெயருடன் சிங்காதனம் ஏறியது. 1930 வால்வால் சம்பவம். 1934 அபிசீனியா மீது இத்தலியின் இரண்டாவது படையெடுப்பு. 1935 அநுபந்தம் 2 சில குறிப்புகள் எதியோப்பிய சக்ரவர்த்தியின் முழுப்பெயர்: ஹி இம்பீரியல் மெஜடி ஹெயிலி செலாஸி I. (His Imperial Majesty Haili Selassie I. G. C. B., G. C. M. G., G. C. V, O., LL.D.) பிறந்தது: 21.7-1891. சக்ரவர்த்தியாகப் பட்டாபிஷேகம் செய்து கொண்டது: 2.11-1930. பட்டத்திளவரசன்: அபா வூசன். (His Imperial Highness Prince Asfa Wosan) பிறந்தது: 27-7-1916. மணந்தது (ரா சையமின் குமரி வுலாடா இரேலை) 9-5-1932. எதியோப்பிய நாணய வகைகள்: தலாரி அல்லது தாலர் (Thaler) என்னும் வெள்ளி நாணயங்கள் உபயோகத்திலிருக்கின்றன. ஒரு தாலரின் மதிப்பு சராசரி ஒன்றரை ரூபாய். 1932-33ஆம் வருஷத்தி லிருந்து காகித நோட்டுகள் அச்சிடப்பெற்று செலாவணி யிலிருக் கின்றன. எதியோப்பியாவின் தேசீயக் கொடி: பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய மூன்றும் மேல் கீழ் வரிசைக் கிரமமாக உள்ளது. எதியோப்பிய ராணுவ உத்தியோகங்களின் வரிசை: பாலம்பரா-காப்டன் (Captain) பிதுவாரி-மேஜர் (Major) கென்ஸா மாட்ச்-வலதுபுறச் சேனைத் தலைவன். கிரா மாட்ச்-இடதுபுறச் சேனைத் தலைவன். டெட்ஜா மாட்ச்-நடுப்புறச் சேனைத் தலைவன். ரா-சேனாதிபதி அல்லது கவர்னர். எதியோப்பிய கௌரவப் பட்டங்கள்: ஆடோ-கனவான். ப்ளாட்டா-வித்துவான். காந்திபா-ஸர். பிலாடின் கேடா-மஹாவித்துவான். சக்ரவர்த்தியைக் கண்டு பேசும்போது உத்தியோகதர்கள் ஷான் ஹாய் (மேன்மை தங்கிய) என்று சொல்லியே அழைப் பார்கள். முற்றும் கமால் அத்தாதுர்க். பிரசுராலயத்தின்வார்த்தை ஒரு காரியத்தைத் தள்ளிவைத்துக் கொண்டு போனால் அது தள்ளிக் கொண்டேதான் போகிறதென்பது எவ்வளவு உண்மை! இந்த நூலின் முதற் பதிப்பு 1939ஆம் வருஷம் ஜனவரி மாதம் வெளி யாயிற்று; வெகு விரையில் செலவழிந்தும் விட்டது. இரண்டாவது உலக மகா யுத்தம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இதன் மறுபதிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் சிறிது தயங்கினோம். பல காரணங்கள். அவைகளை விரித்துக் கூற இது சந்தர்ப்பமல்ல. நவீன துருக்கியின் சிருஷ்டி கர்த்தனான கமாலை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல், எங்கள் ஆசிரியரின் எழுத்துக் களைத் தொடர்ந்து படித்துவரும் அன்பர்களிடையே, சிறப்பாக முலிம் சகோதரர்களிடையே வரவர அதிகரித்து வந்தது. இதை அன்பர் பலர் நேரிலும் கடித வாயிலாகவும் தெரிவித்து, இந்நூலின் மறுபதிப்பு அவசியம் வெளியாகவேண்டுமென்பதை எமக்கு உணர்த்தினர். எனவே, இந்த மறுபதிப்பை அன்பர்கள் முன்னிலை யில் சமர்ப்பிக்கிறோம். பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் வாசகர்களுக்கு (முதற் பதிப்பு) 1923ஆம் வருஷத்திற்கு முன்னர் துருக்கிக்குச் சென்று வந்த ஒருவன், பதினைந்து வருஷங் கழித்து - 1938ஆம் வருஷத்தில் - மீண்டும் அந்த நாட்டிற்குச் சென்று பார்ப்பானாகில் நாம் முன்னர் பார்த்த துருக்கி இதுதானா? வேறு புதிய நாட்டுக்கு வந்திருக்கி றோமா? என்று நிச்சயமாக பிரமிப்பும் சந்தேகமும் கொள்வான். சென்ற பதினைந்து ஆண்டுகளுக்குள் துருக்கியின் அகவாழ்விலும் புறவாழ்விலும் - மகத்தான மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. ராஜ தந்திர விவகாரங்களில் தீர்க்கதரிசனம் கூறும் ஆற்றல் வாய்ந்தவர்கள் கூட, இந்த மாதிரியான மாற்றங்கள், சிதில மடைந்துபோன துருக்கி யில் ஏற்படமுடியும் என்று நினைக்கவேயில்லை. இந்த மாற்றங்கள் ஏற்பட்டதுகூட அவ்வளவு பெரிதல்ல. இவை திரப்பட்டு ஜனங்களின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்கமுடியாதபடி கலந்து விட்டதைக் குறித்துத்தான் பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். இவற்றிற்கெல்லாம் காரணமாயிருந்த கமால் அத்தா துர்க் இன்றும் என்றும் துருக்கியர்களால் போற்றப்படுவான். கமாலின் ஜீவிய சரிதத்தை எழுதி வெளியிட வேண்டுமென்ற எனது நீண்டகாலத்து ஆசை, இப்பொழுது - அவன் இறந்த பிறகே -ஓரளவுக்குப் பூர்த்தியாயிற்று. கமாலின் நிருவாகத்தின்கீழ் துருக்கி யில் ஏற்பட்ட பலவித மாற்றங்களைப்பற்றித் தமிழில் தனி நூல்கள் பல வெளி வரவேண்டுமென்பது எனது அவா. அதனைத் தக்க அறிஞர்கள் செய்வார்களானால், இந்திய அரசியல் வாழ்வுக்குப் பெரிதும் உதவியாயிருக்கும். கமாலின் ஜீவிய சரித்திரத்தைப் பற்றிக் கூறப்புகுந்த இந்த நூலில் அவன் ஏற்படுத்தி வைத்த மாற்றங்கள் சுருக்கமாகவே கூறப்பட்டிருக்கின்றன. 1934ஆம் வருஷம் துருக்கியில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டப்படி கெமால் என்ற பெயர் கமால் என்றே அழைக்கப்பட வேண்டும். அதனாலேயே நூலின் பெயர் கமால் அத்தா துர்க் என்று இடப் பட்டிருக்கிறது. இங்ஙனமே ஊரின் பெயர்களும் மாற்றப்பட் டிருக்கின்றன. ஆயினும் நான் நூலின் உட்பாகத்தில் எல்லாருக்கும் தெரிந்தமாதிரியான கெமால் (கமால்), கான்டாண்டிநோபிள் (இதாம்பூல்) போன்ற பெயர்களையே உபயோகித்திருக்கிறேன். ஊக்கம் நிறைந்த எனது நண்பர் ஸ்ரீ அ.க. செட்டியார் அவர்கள், வெளிநாடுகளில் சுற்றுப்பிரயாணஞ் செய்த காலத்தில், கமாலைப் பற்றி ஆங்காங்குக் கிடைத்த பல நூல்களையும், வேறு பல செய்தி களையும் எனக்கு அனுப்பி உபகரித்தார்கள். நான் இந்த ஜீவிய சரித் திரத்தை எழுதுவதற்கு அவை பெரிதும் உதவியாயிருந்தன. அவர்களுக்கு எனது நன்றி. இந்நூலை நான் எழுதுங் காலத்தில் பல வழிகளிலும் ஊக்க மூட்டி உதவிபுரிந்து வந்தார்கள். ஆனைக்குளம் ஸ்ரீ ஞானகுருபரன் அவர்கள். நான் எழுத விரும்பும் இன்னும் பல நூல்களுக்கும் இவர்கள் இம்மாதிரியே உதவி செய்யவேண்டுமென்பதுதான் எனது பிரார்த்தனை. வெகுதானிய ஸ்ரீதை, 10. வாசகர்களுக்கு (இரண்டாம் பதிப்பு) வாசகர்களுக்கு, இந்த மறு பதிப்பைப்பற்றி நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை; ஏனென்றால் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நவீன துருக்கி எந்த அடிப்படையின் மீதெழுந்தது, அதனை எழுப்பியவன் எத்தகையவன், அவன் காலத்தில் துருக்கி கண்ட முன்னேற்றத் துறைகள் எவை எவை. இன்ன பலவற்றோடு இந்நூல் முற்றுப் பெறுகிறது. கமாலிய சகாப்தத்தை அறிந்து கொள்ள விழைவோர்க்கு இந்நூல் ஒருவாறு உதவியாயிருக்கு மென்று நம்புகிறேன். கமால் காலத்திற்குப் பிறகு துருக்கியில் நடைபெற்றவை இந்நூலில் இடம் பெறவில்லை. நூலின் தலைப்புக் கிணங்க, கமாலை மையமாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டதே தவிர, துருக்கியை மையமாகக் கொண்டல்ல. எனவே இந்த மறு பதிப்பில் புதிதாக அநேகப் படங்களைச் சேர்த்திருக்கிறதே தவிர விஷயங்கள் ஒன்றும் புதிதாகச் சேர்க்கப்படவில்லை யென்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வெ. சாமிநாதன் முதற்பாகம் போர் வீரன் ஒரு தேசத்திற்குச் செல்வமும் செழிப்பும் அவசியந்தான். ஆனால் அது சுதந்திரமில்லாத நாடாயிருந்தால், நாகரிக உலகத்திற்கு முன்னர், அஃது அடிமையாகவே கருதப்பெறும். கமால் அத்தாதுர்க். 1 பழைய துருக்கி 1. ஓநாய்க் கொடி பிடித்த உதுமானியர் உலகத்திலுள்ள ஒவ்வொரு நாகரிக ஜாதியாருடைய உற்பத்தி தானத்திற்கும் மத்திய ஆசியாவின் பெயரைத்தான் சொல்கி றார்கள் சரித்திரக்காரர்கள். இஃதொரு சம்பிரதாயமாக ஆகி விட்டது என்று கூடச் சொல்லலாம். இதற்கு, துருக்கியினுடைய பூர்வ சரித்திரம் புறம்பாக வில்லை. ஆனால் நவீன துருக்கியர்கள் இதனை மறுக்கிறார்கள். துருக்கியர் தான் புராதன நாகரிகம் மிகுந்த ஜாதியாரென்றும், இவர்களிட மிருந்துதான் இப்பொழுதைய பிரித்தானியர் முதலிய ஜாதியார் பிரிந்தனர் என்றும் இவர்கள் சாதிக்கிறார்கள். கொஞ்சம் தலைநிமிர்ந்து பார்க்கக் கூடிய சக்தி வந்த பிறகு, ஒவ்வொரு ஜாதியாரும் -ஒவ்வொரு சிற்றரசனுங்கூட - இப்படிச் சொல்லிக்கொள்வது சகஜந்தான். ஹிட்லரைக் கேளுங்கள்! ஆரிய ஜாதிதான், புனிதமும் புராதனமும் வாய்ந்த ஜாதி யென்றும், இதிலிருந்து பிரிந்து சென்ற கிளைகள்தான் மற்ற ஜாதி களென்றும், சொல்லவில்லையா? இந்தியாவிலேகூட அநேக சமதானாதிபதிகள், தங்கள் பூர்விகத்தைச் சூரியனோடும், சந்திர னோடும் இணைத்துப்பேசி தற்பெருமை கொள்ளவில்லையா? ஆகவே, துருக்கியர்களுடைய பூர்வ சரித்திரத்தை அதிக ஆழமாகத் தோண்டிப்பாராமல், சுமார் ஏழு நூற்றாண்டுகள் அடியிலிருந்து கவனிப்போம். கி.பி. பதின்மூன்றாவது நூற்றாண்டில், ஆசியா கண்டத்தின் மத்தியிலேயுள்ள கோபி பாலைவனத்தின் ஓரமாயுள்ள சுங்கேரியா மைதானத்தின்மீது உங்கள் திருஷ்டியைச் சிறிது செலுத்திப் பாருங்கள். கறுப்புக் குதிரை மயிர்களினால், வேயப்பட்ட கூடாரங்கள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இவைகளிலிருந்து புறப்படு கிறவர்கள் எவ்வளவு உயரமாகவும் கம்பீரமாகவும் இருக்கிறார்கள்! மகா துணிச்சலுள்ளவர்கள். இவர்களுடைய கண்களிலே ஒரு கொடூரம் நிறைந்திருக்கிறது. இருந்தாலும் தங்களுடைய எஜமானனுக்குக் கீழ்ப்படிகிற சுபாவம் இயற்கையாகவே இவர்களுக்கு அமைந்திருக்கிறது. இவர்கள்தான் உமான்லி துருக்கியர்கள். 1 அதோ, உயரமானதோர் இடத்திலே பெரியதொரு கூடாரம் இருக்கிறது பாருங்கள்; அதன்மீது ஓநாய் உருவமைந்த கொடி பறக்கிறது. கூடாரத்திற்குள்ளே கம்பீரமாக வீற்றிருக்கிறவன்தான் இந்த உமான்லி துருக்கியர்களுடைய எஜமானன்; அரசன்; ஷா சுலைமான். ஓநாயைப்போல், சத்துருக்களை வேட்டையாடி த்வம்சம் செய்யக்கூடிய சக்தி தனக்கும் தன் கூட்டத்தாருக்கும் உண்டு என்பதைத் தெரியப் படுத்துவதற்காகவே, தன் கொடியில் ஓநாய் உருவத்தை அமைத்துக் கொண்டிருக்கிறான். பதின்மூன்றாவது நூற்றாண்டில் இவர்கள் வசித்திருந்த பிரதேசத்தில் மழையே இல்லாமல் போய்விட்டது. புல்லுக்குப் பறந்தன கால்நடைகள்; தண்ணீருக்குத் தவித்தார்கள் ஜனங்கள். எனவே, சுபிட்சமான ஓரிடத்தைத் தேடிச் செல்வோம் என்று இவர்கள் மேற்கு நோக்கிப் புறப்பட்டார்கள். அப்படிப் போகும் போது, வடக்கேயிருந்து தார்த்தாரியர்கள் வந்து இவர்களை நெருக்கினார்கள். இதனால், இவர்கள் சிறிது தெற்குப்புறமாகத் திரும்பி, அர்மீனியா வழியாகச் சின்ன ஆசியா பிரதேசத்தில் வந்து நிலைத்தார்கள். இங்கிருந்துதான் துருக்கியர் களுடைய சரித்திரம் ஆரம்பமாகிறது. சுலைமானுக்குப் பிறகு எர்டோக்ரூல் என்பவன் இந்த உமான்லி துருக்கியர்களுக்கு அதிபதியாயிருந்து சிறிது காலம் ஆண்டான். இவனுக்கு கி.பி1258ஆம் வருஷம் உதுமான் என்று சொல்லப்பட்ட உமான் என்பவன் பிறந்தான். இவனுடைய பெயரைக்கொண்டுதான் உதுமானிய ஏகாதிபத்தியம் என்று பின்னர் அழைக்கப்பட்டது. இந்த உமான், தனது மூதாதையர் களைப்போல் நாடோடி வாழ்க்கையை நடத்தாமல் நிலையான ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தி கி.பி. 1299ஆம் வருஷம், சுல்தான் என்று பட்டஞ்சூட்டிக்கொண்டான். சில பிரதேசங்களைத் தன் அதிகார எல்லைக்குட்படுத்தி, அங்கெல்லாம் பிற்கால உதுமானிய ஏகாதி பத்தியத்திற்கு விதையூன்றினான். இவனுக்குப் பிறகு சுமார் பத்துத் தலைமுறைகள் வரை இந்த ஏகாதிபத்தியம் விரிந்துகொண்டு வந்தது. ஆனால் ஓயாத போராட்டத்தின் மீதுதான். இந்த உதுமானியர்கள், மேற்குப் பக்கமாகத் தங்கள் ராஜ்யத்தை விதரித்துக்கொண்டு போகப் போக, கிறிதுவ ராஜாங்கங்களுடைய துவேஷமும் எதிர்ப்பும் அதிகமாயின. ஆயினும் உதுமானிய ஏகாதிபத்தியம் கிழக்கிலும் மேற்கிலும் விசாலித்துக் கொண்டுதான் வந்தது. இப்படி பலத்த எதிர்ப்புகளுக்கிடையே முன்னேறி வந்ததனால், இந்த உதுமானி யர்கள் எவ்வித கஷ்டங்களையும் சகிக்கக் கூடிய போர் வீரர்களாக வும், திறமையான சேனாதிபதிகளாகவும் ஆனார்கள். இந்தத் தன்மைகள் இவர்களுக்குப் பரம்பரையாகவே அமைந்து விட்டன. இந்தக்காலத்தில் செர்வியா, கிரீ, பல்கேரியா முதலிய நாடுகள் பல, இந்த ஏகாதிபத்தியத்தோடு இணைக்கப்பட்டன. இங்ஙனம் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக விசாலித்து வந்து உதுமானிய ஏகாதிபத்தியம் பதினாறாவது நூற்றாண்டில் உச்ச நிலையையடைந்தது. சுலைமான் என்பவன் அப்பொழுது துருக்கி சிம்மாசனத்தின்மீது வீற்றிருந்தான். இவன், முதல் சுலைமானுடைய பத்தாவது தலைமுறை. இவன் காலத்தில் உதுமானிய ஏகாதி பத்தியம், அல்பேனியாவிலிருந்து பாரசீகம் வரையிலும், எகிப்தி லிருந்து காக்கஸ மலை வரையிலும் பரவியிருந்தது: ஹங்கேரியும் கிரிமியாவும் இவனுக்குக் கீழடங்கிய நாடுகளாயிருந்தன. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் இவனுக்குக் காணிக்கைகள் வந்து குவிந்தன. ஐரோப்பாவின் கிறிதுவ மன்னர்கள், தங்களுக்குள் சண்டைகள் ஏற்பட்டால், அவைகளைத் தீர்த்து வைக்குமாறு சுலைமானைக் கேட்டுக்கொண்டார்கள். ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா ஆகிய மூன்று கண்டங்களிலும் இவனுடைய ஆதிக்கம் சென்றது. மத்தியதரைக் கடலில், உதுமானிய ஏகாதிபத்தியத்தின் கப்பற்படைகள், கம்பீரமாக நின்று கொண்டு இந்த மூன்று கண்டங்களின் அமைதியைக் காத்து வந்தன. சுலைமான், ஒரு வெற்றி வீரனாக விளங்கியதோடு மட்டு மின்றி, தனது ஏகாதிபத்தியத்தில், சட்டம், ஒழுங்கு முதலியவை களையும் ஏற்படுத்தினான். ஒரு தேசம் நாகரிகம் அடைந்திருக்கிற தென்று சொல்வதற்கு என்னென்ன தேவையோ அவையாவும் அப்பொழுதைய துருக்கிய ஏகாதிபத்தியத்தில் நிரம்பியிருந்தன. சுலைமானுக்குப் பிறகு, துருக்கி ஏகாதிபத்தியம் வர வர இறங்கு முகத்திலேயே போய்க்கொண்டிருந்தது. அதனுடைய சக்தியும் கட்டுப்பாடும் தளர்ந்து போயின. சுலைமானுக்குப் பின் வந்தவர்கள் சுமார் இருபத்தேழு சுல்தான்கள். இவர்கள் ஒவ்வொரு வருடைய காலத்திலும், ஏகாதிபத்தியத்திற்கு ஓர் அசைவு ஏற்பட்டுக் கொண்டுதான் வந்தது. ராஜ்ய நிருவாகத்தின் சூத்திரக் கயிறு, மெது மெதுவாக அரண்மனை அந்தப்புர வாசிகளிடத்தில் போய் சிக்கிக் கொண்டது. கேட்பானேன் க்ஷீண தசைக்கு? கி.பி. 19-வது நூற்றாண்டில் ஐரோப்பாவின் நோயாளி என்று பெயரெடுத்துக்கொண்டு, செல்வம், செல்வாக்கு எல்லாமிழந்து, வற்றிப்போன ஒரு பழம்போலச் சுருங்கிக் கிடந்தது துருக்கி ஏகாதி பத்தியம். இதற்குக் கீழ் அடங்கியிருந்த கிரீ, செர்வியா, பல்கேரியா முதலிய நாடுகள் சுதந்திரக் கொடி தூக்கிவிட்டன. சீக்கிரத்திலேயே இந்தத் துருக்கி ஏகாதிபத்தியம் சிதறிப்போய் விடும் என்று ஐரோப்பிய வல்லரசுகள் ஒவ்வொன்றும் இதனைப் பங்கு போட்டுக் கொள்ளப்பார்த்தன. ருஷ்யா, கிரிமியாவையும் காக்கஸஸையும் தன் வசப்படுத்திக் கொள்ள முயன்றது. பிரான், சிரியா மீதும் டூனி மீதும் கை வைத்தது. இங்கிலாந்து, எகிப்தையும் சைப்ர தீவுகளையும் ஆக்ரமித்துக் கொண்டது. ஜெர்மனியோ, சுல்தானோடு சிநேகமாயிருந்து, சந்தர்ப்பம் கிடைத்த போது, மிகுதியுள்ளனவற்றைக் கபளீகரித்துக் கொண்டுவிடப் பார்த்தது. துருக்கியிலே விசேஷமான சலுகைகளும் பொருளாதார உரிமைகளும் வேண்டுமென்று ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக் கொண்டு கேட்டன. உதுமானிய ஏகாதிபத்தியத்தின் கடைசி நாட்களை, ஒவ்வொரு நாடும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தாலும், எதுவும் துணிந்து முன்வந்து அதனை விழுங்கிவிடக்கூடிய தைரியத்தைப் பெறவில்லை. ஏனென்றால், இவைகளுக்குள்ளேயே பரபர சந்தேகங்களும் பொறாமை களும் இருந்தன. தவிர, துருக்கி சுல்தான், முலிம்களுக்கு மத குருவாகவும் இருந்தது, இந்த வல்லரசுகளுக்கு ஒரு சங்கடமாகவே இருந்ததென்று சொல்ல வேண்டும். ஏனென் றால், துருக்கியைத் தீண்டுவது, கலீபாவைத் தீண்டுவதாகும்; கலீபாவைத் தீண்டினால், உலக முலிம் அபிப்பிராயத்தின் ஒரு நாசூக்கான இடத்தைத் தாக்கு வதாகுமல்லவா? கி.பி. 19-வது நூற்றாண்டில் ஆண்ட சுல்தான்கள், பொது வாகத் திறமைசாலிகள் என்று சொல்ல முடியாது. இந்த நூற் றாண்டில் மேனாட்டு நாகரிகம் துருக்கியில் படிப்படியாகப் புகுந்து வந்தது. இதனை வடிகட்டி நாட்டில் புகுத்துவது தங்கள் கடமை யென்று சுல்தான்கள் கருதினார்கள். இதனால் பலவித சிக்கல்களி லேயும் இவர்கள் மாட்டிக் கொண்டார்கள். 1808ஆம் வருஷம் இரண்டாவது முகம்மது என்பவன் சிம்மாசனத்தில் ஏறி முப்பத் தொரு வருஷம் ஆண்டான். தேசீய அரசியலில் பல சீர்திருத்தங்கள் செய்ய வேண்டுமென்று சொல்லப்பெற்ற யோசனைகளை இவன் காது கொடுத்துக் கேட்டான். அவ்வளவுதான். செய்கையில் ஒன்றும் காட்டவில்லை. ஹத்தீ ஷெரீப் என்றதொரு சீர்திருத்தச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்தானே தவிர, இது நடைமுறையில் வேலை செய்வதற்கு முன்னரே இறந்துவிட்டான். இவனுக்குப் பின்னால் பட்டத்துக்கு வந்தவர்கள், இந்தத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழமையில் பெருமை கொள் வதிலே திருப்தி கண்டார்கள். அரசியல் விஷயத்திலும் பொருளாதார விஷயத்திலும், மற்ற வல்லரசுகளுடைய தயவை, துருக்கி எதிர்பார்க்க வேண்டியிருக்கிற தென்பதை இவர்கள் அடியோடு மறந்தே விட்டார்கள். தங்கள் பழைய சம்பிரதாயங்களிலே மூழ்கி, தேசீய செல்வத்தை ஆடம்பரத்திலும் மதச்சடங்குகளிலும் துர் விநியோகப்படுத்தினார்கள். இந்த மாதிரி துருக்கி சீரழிந்துகொண்டு வருவதைக் கண்டு, மேனாட்டுக் கல்வி பயின்ற சில இளைஞர்கள் கிளர்ச்சி செய்தார்கள். இந்த இளைஞர் இயக்கம் வர வர வலுத்துக் கொண்டு வந்தது. இந்த இயக்கத்தின் தலைவனான மிதாத் பாஷா என்பவன், - 1876ஆம் வருஷம் - அப்பொழுது சுல்தானாயிருந்த அப்துல் அஜீ என்ப வனைச் சிம்மாசனத்தினின்று இறக்கிவிட்டு, ஐந்தாவது மூரத் என்பவனை அதில் அமர்த்திப் புதியதொரு அரசியல் திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வருமாறு செய்வித்தான். ஆனால், இந்தப் புதிய திட்டம், சுமார் ஒரு வருஷ காலந்தான் பெயரளவில் அமுலில் இருந்தது. இதற்குள் மூரத் என்பவன் விலகிவிட்டான். இவன் சகோதரனான இரண்டாவது அப்துல் ஹமீத் என்பவன் 1876ஆம் வருஷம் பட்டத்துக்கு வந்தான். இவன் உடனே புதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டான். பார்லிமெண்டைக் கூட்டவில்லை. தன் சகோதரனையும் தேசப்பிரஷ்டம் செய்தான். எல்லாவித முன்னேற்ற இயக்கங்களையும் நசுக்குவதிலேயே இவன் சக்தியனைத்தும் செல வழிக்கப்பட்டன. இதற்காகத் தேசமெங்கணும் ஒற்றர்களை நியமித்தான். மிதாத் பாஷா உள்பட பலரைத் தேசப்பிரஷ்டம் செய் வித்தான். அநேகர் ரகசியமாகத் தூக்குமேடையில் ஏற்றுவிக்கப் பட்டார்கள். தேசம், அரசியல் முன்னேற்றத்துக்கு இன்னும் பக்குவப் படவில்லையென்பது இவன் கருத்தென்று இவனையறிந்தவர்கள் கூறினார்கள். எப்படியோ தேசம் ஒரே கொந்தளிப்பில் இருந்தது. வெளி நாடுகளில் கல்வி பயின்று முற்போக்கான எண்ணங்களுடன் திரும்பி வந்த இளைஞர்கள் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். 2 சமுதாய வாழ்க்கை இந்தக் காலத்தில் துருக்கிய ஜன சமுதாயம் எந்த நிலையில் இருந்ததென்பதைச் சிறிது கவனிப்போம். இந்தப் பிரபஞ்ச வாழ்க்கை, கடவுளின் ஆணைப்படி நடக்கிறதென்றும், அவருடைய பிரதிநிதியாக இருந்தே சுல்தான் ஆட்சி புரிகிறாரென்றும் பொது ஜனங்கள் நம்பினார்கள். மதமின்றி வாழ்க்கை நடத்தலாம் என்று யாராவது சொன்னால், அவர்கள் கடவுள் விரோதிகளென்று கருதப் பட்டார்கள். உலகத்திலே நடைபெறுகிற ஒவ்வொரு விவகாரமும், மனிதர்களுடைய அறிவைக்கொண்டு இயற்றப் படுகிற ஒவ்வொரு சட்டமும் கடவுளின் உத்தரவின்பேரில் தான் நடை பெறுகின்றன என்பது துருக்கியர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனால், ராஜ்ய விவகாரங்களில் ஒருவித அசிரத்தை ஏற்பட்டது. மற்றும், தன்னொருவனுக்குத்தான் போர் வீரனாயிருக்கத் தெரியும், தன்னால்தான் போர் செய்ய முடியும் என்ற அசட்டு நம்பிக்கை ஒவ்வொரு துருக்கியனிடத்திலும் குடி கொண்டிருந்தது. துருக்கியர்கள் மட்டுந்தான் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். கிறிதுவர், யூதர் முதலாயினோர் சேர்த்துக் கொள்ளப் படவில்லை. இப்படிச் சேர்த்துக் கொள்ளப்படாதது இவர்களுக்கு நன்மையாகவே இருந்தது. ஏனென்றால் இவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு, கொழுத்த பணக்காரர்களானார்கள். துருக்கியிலே வசித்த அந்நியர்களோ, விசேஷ உரிமைகளினால் தங்களை அரண் செய்து கொண்டு, தத்தம் நாகரிகத்தையும் வியாபாரத்தையும் விருத்தி செய்து வந்ததோடு, துருக்கி சிம்மாசனத்தை மதியாமலும் இருந்த வந்தார்கள். கல்வியானது, பாமர ஜனங்களுக்கு எட்டாத ஒரு பிரச்சனை யாகவே இருந்து வந்தது. வைதிகர்களுடைய கட்டுப்பாட்டுக்குட்பட்டே, கல்விச் சாலைகள் ஆங்காங்கு நடைபெற்று வந்தன. தேசீயத்திற்குப் பயன்படாத வகையிலேயே இந்தக் கல்விமுறை இருந்து வந்தது என்று சுருக்கமாகக் கூறிவிடலாம். இங்ஙனம் பழமையிலும், மதத்தின் பெயரால் எழுந்த காலத்திற் கொவ்வாத பல பழக்கவழக்கங்களிலும் அழுந்திக் கிடந்த துருக்கியை மேலே தூக்கிவிட, அசாதாரணமான உழைப்பும், தன்னலமற்ற தியாக சக்தியும் தேவையாயிருந்தன. வெளிநாடுகளில் கல்வி பயின்று திரும்பி வந்த துருக்கிய இளைஞர்கள் உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்து செல்லக்கூடிய சக்தி மட்டும் பெற்றிருந் தார்கள். அது போதுமா? கர்ம வீரர்களல்லவோ தேவை. 2 நமது சரித்திர நாயகன் 1. தாயும் தந்தையும் கிரீ தேசத்தின் தெற்குப் பக்கத்தில் சாலோனிகா என்பது ஒரு துறைமுகப்பட்டினம். இது துருக்கியின் ஆதீனத்திற்கு உட் பட்டிருந்தது. இங்கே சுங்க இலாகாவில் வேலை பார்த்து வந்தான் அலி ரிஜா என்பவன். இவன் எல்லோரையும் போல், நுனிப்புல் மேய்கிறவனல்லன்; கொஞ்சம் ஆழமாகப் பார்க்கிறவன். துருக்கி சாம்ராஜ்யம் வெளிப் பார்வைக்குத்தான் பகட்டாகத் தெரிகிறதே தவிர, உள்ளே புரைப்புண் ஏற்பட்டு அழுகிக் கொண்டு வருவதை நன்கு உணர்ந்திருந்தான். இப்படி அழுகி வருவதற்குக் காரணங்கள் என்னவென்பதையும் இவன் தெரிந்து கொண்டிருந்தான். இவ னுடைய சகோதர உத்தியோகதர்கள், தங்களுக்கிடப்பட்ட வேலைகளை எவ்வளவு பொறுப்புடனும், மனச்சாட்சிக்கு விரோத மில்லாமலும் செய்து வருகிறார்கள் என்பதை நேரில் பார்த்து வருகிறானல்லவா? இரண்டு கண்களையும் இறுக மூடிக் கொள்; இரண்டு கைகளையும் விரித்து நீட்டு; அதிலே வந்து விழுவதனைத் தையும் இரண்டு பக்கத்துச் சட்டைப் பைகளிலும் நிரப்பு. இதுதான் துருக்கிய அரசாங்க உத்தியோகதர்களின் தாரக மந்திரம். சட்டங்கள், நியாயதலங்கள் முதலியனவெல்லாம் இருந்தனவென் பது உண்மைதான். எதற்காக? இவற்றை மீறி நடப்பதற்குத்தான்! இதிலே என்ன தவறு இருக்கிறது? குறைந்த வேலை செய்து அதிக பணம் சம்பாதிக்க வேண்டுமென்பது லட்சியமாக அமைந்து விட்டால் எதைச் செய்தால்தான் என்ன? அலி ரிஜா, உலகத்திலே என்னென்ன நடைபெறுகிற தென் பதைக் கவனித்துக்கொண்டு வந்தான். பத்திரிகைகளை வர வழைத்துப் படித்தான். அடுத்தாற்போலுள்ள ஐரோப்பிய ஜாதியார் எப்படி முன்னேற்றமடைந்து வருகிறார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்தான். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தலைவன் தோன்றி, பிண்டம்போல் அசையாமலிருந்த ஒரு ஜன சமூகத்தை மின்சார வேகத்திலே துடிக்கச் செய்திருக்கிறான் என்பதையெல்லாம் இவன் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தினான். ஜெர்மனியிலே ஒரு பிமார்க் தோன்றி, சிதறிப் போயிருந்த நாடு களையெல்லாம் ஒன்று கூட்டி அசைக்க முடியாத ஓர் ஏகாதிபத்தியத்தை நிர்மாணித்து விட்டான். இந்த ஜெர்மனிக்கல்லவோ, துருக்கிய இளைஞர்கள் ராணுவப் பயிற்சிக்காக அரசாங்கச் செலவில் அனுப்பப்பட் டார்கள்? அதைப் போல் இந்தத் துருக்கியும் முன்னேற்றமடை யாதா? துருக்கியிலே ஒரு தலைவன் தோன்றமாட்டானா? இப்படி யெல்லாம் இவன் எண்ணி எண்ணி உள்ளம் சோர்வடைந்தான். சாலோனிகா, ஒரு துறைமுகப் பட்டினமாதலால் அங்குப் பல ஜாதியாரும் வசித்தனர். துருக்கியர்கள் வசித்த இடம் எப்பொழுதும் நித்திரை செய்து கொண்டிருந்தது. ஏனென்றால் இங்கே வீடுகளின் தெருக்கதவுகள் எப்பொழுதும் மூடப்பட்டிருக்கும். கோஷா திரீகள் வெளியிலே செல்வதென்றால் முகமூடியுடன் தான். தெருக்களிலே ஜன நடமாட்டம் மிகக் குறைவு. யாராவது வயது முதிர்ந்த கிழவர்கள் இருவர் மூவராக ஆங்காங்கு உட்கார்ந்து கொண்டு டீ சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அல்லது ஹுக்காவைப் பிடித்துக் கொண்டு, கலீபாவினுடைய மகிமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த இடத்திலேயுள்ள ஒரு வீதியில்தான் அலி ரிஜாவின் வீடு இருந்தது. நல்ல தேகக் கட்டு; நீலக் கண்கள்; சுருட்டை மயிர்; சிவந்த மேனி. இவள்தான் ஜுபேதா ஹனூம்; அலிரிஜாவின் தர்ம பத்தினி. ஜுபேதா ஹனூம் மதப் பற்று நிரம்ப உடையவள். பழைய சம்பிரதாயங்களிலே நன்மை பல உண்டென்று நம்பினவள். அதிக மாகப் படித்தவளல்ல. ஆனால் தன் குடும்ப நிருவாகத்தை அரசாங்க நிருவாகத்தை விடத் திறமையாக நடத்திவந்தாள். ஜுபேதா, ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமென்று உறுதி கொண்டால் அதைச் சாதித்தே தீர்வாள். இதனைப் பிடிவாத குணமென்று சொல்ல முடியாது. அவ்வளவு மனோ உறுதி; தன்னம்பிக்கை. இவள்தான் குடும்பத்தை ஆண்டு வந்தாள். இவளுடைய அதிகாரத்திலே யாராவது குறுக்கிட்டால் கோபம் வரும்; கொஞ்சத்திலே சாந்தம் ஏற்படாது. இவளுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. மூத்தது மகன்; குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டான். இரண்டாவது நமது சரித்திர நாயகன் - முதபா கெமால். மூன்றாவது மக்பௌலா என்ற பெண் குழந்தை. 2. பிறப்பும் படிப்பும் முதபா கெமால் 1880ஆம் வருஷம் பிறந்தான். அப் பொழுது தாயாருக்கு ஏறக்குறைய முப்பது வயது இருக்கும். தன்னுடைய ஒரே ஆண் குழந்தையின்மீது அதிக விசுவாசங் கொண்டிருந்தாள் என்பதில் ஆச்சரியமில்லை. இந்த ஒரு மகனுக் காக ஜுபேதா எவ்வளவு தியாகங்களைச் செய்திருக்கிறாள்? பிறருக்குத் தெரியாமல் எவ்வளவு கஷ்டங்களைச் சகித்துக்கொண்டிருக் கிறாள்? உலகத்திலே தாய்மார்கள், தங்களுடைய சந்தானங்களின் எதிர்கால நல்வாழ்வுக்காக, அந்தரங்கத்தில் எவ்வளவு துக்கக் கண்ணீர் வடிக்கிறார்கள்? முதபாவை அதிக அக்கரையோடு பெற்றோர்கள் வளர்த்து வந்தார்கள் என்பதை இங்கே விசேஷித்துச் சொல்ல வேண்டி யிருக்கிறது. ஏனென்றால், அலி ரிஜா, நிரந்தர உத்தியோகமொன்றில் இருந்தான் என்பது உண்மை. ஆனால் ஒரு மாதமாவது சரியான படி சம்பளம் வாங்கியது கிடையாது. குறைந்தது இரண்டு மூன்று மாதச் சம்பளமாவது பாக்கியிலிருக்கும். மேல் வரும்படி யினால் பிழைக்கிற வழியும் அலி ரிஜாவுக்குத் தெரியாது. இதனால் குடும்ப நிருவாகத்திற்காக எவ்வளவு மனோவேதனைப்பட்டிருக்க வேண்டும்? ஆனால் தம்பதிகள் இருவரும், குழந்தையின் எதிரே, தங்கள் கவலையைச் சிறிதளவுகூடக் காட்டிக்கொள்ளமாட்டார்கள். அதற்கு வேண்டிய உணவு வகைகளையோ, ஆகார வகைகளையோ கொஞ்சங்கூடக் குறைக்கமாட்டார்கள். எப்படி? தங்களுடைய தேவைகளை மறுத்துக்கொண்டு! முதபாவுக்கு ஏழாவது வயது ஆரம்பமாயிற்று. ஏதேனும் ஒரு பள்ளிக்கூடத்தில் படிப்பிக்க வேண்டுமே? தன் மகனுக்குச் சிறந்த முறையில் கல்விப் பயிற்சி அளிக்கவேண்டுமென்பது அலி ரிஜாவின் உத்தேசம். முதபாவை ஜெர்மனிக்கு அனுப்ப வேண் டும். அங்கே நல்ல பள்ளிக்கூடத்தில் படித்து சிறந்த ஒரு மனிதனாக, நவீன நாகரிக புருஷனாக, மற்றத் துருக்கியப் பிள்ளைகளுக்கு ஒரு வழிகாட்டியாக அவன் திரும்பி வர வேண்டும் இப்படியெல்லாம் அலி ரிஜாவின் தந்தை உள்ளம் சிந்தித்தது. ஆனால் ஜுபேதாவோ, தன் மகன் ஒரு பெரிய மௌல்வியாக வேண்டுமென்று ஆவல் கொண்டாள். பரிசுத்தமான இலாமிய தர்மத்தைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதிலோ, அல்லது அதனைப் பிரசாரம் செய்வதிலோ தன் மகன் திறமைசாலியாயிருப்பான் என்று தன் கணவனோடு அடிக்கடி வாதம் செய்வாள், இது சம்பந்தமாக இருவருக்கும் அடிக்கடி மனதாபங்கள் ஏற்படும். கடைசியில் ஜுபேதாவுக்குத்தான் அலி ரிஜா இணங்க வேண்டியதாயிற்று. முதபாவை அவன் தாயார் விருப்பப்படி முதலில் ஓர் இலாமியப் பள்ளிக் கூடத்தில் படிக்கவிட்டு, பிறகு, ஐரோப்பிய முறையில் நடத்தப்படுகிற பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிடலாம் என்று அலி ரிஜா தீர்மானித்தான். இதை ஜுபேதாவுக்கு வெளிப்படையாகவும் தெரிவிக்கவில்லை. பிறகு என்ன நடைபெற்ற தென்பதை முதபாவே தன் சுய சரித்திரத்தில் பின்வருமாறு கூறுகிறான்:- என் குழந்தைப் பருவத்தின் அநுபவம் ஒன்று மட்டும் என் ஞாபகத்திற்கு வருகிறது. அது என் ஞாபகத்தில் சிதையாமல் தெளிவாக இருக்கிறது. என் படிப்பு விஷயமாகத்தான் இந்த அநுபவம். நான் எந்தப் பள்ளிக்கூடத்தில் சென்று படிக்க வேண்டு மென்பதைப்பற்றி என் பெற்றோர்கள் நேர்மாறான அபிப்பிராயங் களைக் கொண்டிருந்தார்கள். என் தாயார் பழைய ஆசார விவகாரங் களை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தவள்; அவற்றிலே தான் அவள் வளர்க்கப்பட்டவள். அவளுடைய வாழ்க்கையே பக்தி சிரத்தையோடு கூடிய வாழ்க்கை. ஒரு ஹோட்ஜாவினால் நடத்தப் படுகிற வைதிகப் பள்ளிக் கூடத்திற்குச் சென்று இலாமிய தர்மத்தை நான் கற்க வேண்டும் என்பது அவள் விருப்பம். இந்த மாதிரியான ஒரு பள்ளிக்கூடத்தில் முதலில் சேர்ந்து அட்சராப்பியாசம் ஆரம்பிப்பது ஒரு மதச் சடங்காகக் கருதப்பட்டது. அதனால்தான் என் தயார், நான் ஒரு மதப் பள்ளிக் கூடத்திற்குச் செல்ல வேண்டு மென்று வற்புறுத்தினாள். என் தகப்பனாரோ வைதிக மார்க்கத்திற்கு விரோதமானவர். விரிந்த மனப்பான்மையுடையவர். மேனாட்டிலிருந்து வந்து விழுந்து கொண்டிருந்த எண்ணங்களை யெல்லாம் ஆதரிக்கிறவர். அவர், நவீன முறையில் உலக விவகாரங்களுக்கு அநுகுணமான பாடங்களைப் போதிக்கிற பள்ளிக்கூடத்திற்கு என்னை அனுப்ப வேண்டுமென்று விருப்பங் கொண்டார். இதில், ஒரு சிறிய தந்திரத்தைக் கையாண்டு என் தகப்பனார் தான் வெற்றி பெற்றார். என் தாயாரின் விருப்பப்படி, சம்பிரதாய மான மதச் சடங்குகளுடன் பத்மா மொல்லா காதின் பள்ளிக் கூடத்திற்கு அனுப்புவதென்று தீர்மானிக்கப்பட்டது. அட்சராப்பி யாச தினத்தன்று காலை என்னை அலங்கரித்தார்கள். வெள்ளை உடை; சரிகைத் தலைப்பாகை. கையிலே பொன் முலாம் பூசிய ஒரு மரக்கிளை. எங்கள் வீடு பச்சைத் தோரணங்களால் அலங்கரிக்கப் பெற்றிருந்தது. அங்கு, ஆசிரியர் - ஹோட்ஜா - தமது மாணாக்கர் களுடன் வந்தார். பிரார்த்தனை நடந்தது. என் தாயார், என் தகப்பனார், ஆசிரியர் இவர்களுக்கு முறையே இலாமிய முறையில் நான் வணக்கஞ் செலுத்தினேன். அவர்களுடைய கைகளுக்கு முத்தங்கொடுத்தேன். பின்னர் ஊர்வலமாகப் புறப்பட்டோம். கூட வந்திருந்த பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் கைகொட்டி ஆரவாரஞ் செய்தார்கள். மசூதிக்கருகில் இருந்த பள்ளிக்கூடத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கு எல்லாரும் சேர்ந்து பிரார்த்தனை செய்தார்கள். பின்னர், அந்த ஹோட்ஜா என் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு ரகசியமான அறைக்கு அழைத்துச் சென்று அங்கு குர் - ஆன் உபதேசம் செய்தார். ஆறு மாதங் கழித்து - சரியான தேதி எனக்கு நினைவில்லை. என்னுடைய தகப்பனார் ஒரு தடபுடலும் செய்யாமல் பத்மா மொல்லா காதின் பள்ளிக் கூடத்திலிருந்து என்னை அழைத்துக் கொண்டு போய், ஐரோப்பிய முறையில் தனிப்பட்ட ஒரு பள்ளிக் கூடத்தை நடத்திவந்த ஷெம்ஸி எப்பெண்டி என்பவரிடம் கொண்டு விட்டார். என் தாயார் இதை ஆட்சேபிக்கவில்லை. அவளுடைய விருப்பம் பூர்த்தியாயிற்று. மத சம்பந்தமாக அவள் கொண்டிருந்த நம்பிக்கைகளுக்குப் பழுது ஒன்றும் ஏற்படவில்லை. அட்சராப்பி யாச சம்பந்தமாக நடைபெற வேண்டிய மதச் சடங்கிலேதான் அவள் மனம் ஒன்றி நின்றது. முதபா, எதைப் படித்தாலும் சரி, எங்கே படித்தாலுஞ் சரி, இலாமிய மதத்திற்கும் சுல்தானுக்கும் விரோதமாக நடக்கக் கூடாதென்பதுதான் ஜுபேதாவின் எண்ணம். முதபா, பள்ளிக் கூடத்திலிருந்து வீட்டுக்கு வந்த பிறகு, அல்லது இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர், ஜுபேதா தான் பெரியோர்கள் பால் கேட்ட இலாமிய மத போதனைகளை நீதிக் கதைகளாக அவனுக்குச் சொல்வாள். துருக்கிச் சாம்ராஜ்யத்திற்குத் தேய் பிறையே இல்லை யென்றும், உலக முலிம்களை எல்லாம் அது கட்டிப் பிணைத் திருக்கிறதென்றும் பெருமையாகக் கூறுவாள். ஜுபேதா ஒரு சிறந்த தேசபக்தை; ராஜபக்தையுங் கூட. குழந்தை முதபாவுக்கு எப்பொழுதும் நிமிர்ந்த பார்வை தான். எல்லோருடனும் கலகலத்துப் பேசமாட்டான். அப்படிப் பேசினாலும் அதில் ஓர் அதிகார த்வனி இருக்கும். பிறரை அடக்கு வதற்காகத்தான் இவன் பிறந்திருக்கிறானே தவிர, பிறருக்கு அடங்கு வதற்கல்ல என்கிற மாதிரி இவனுடைய நடை, பாவனை யெல்லாம் இருந்தன. உடைகள் அணிந்து கொள்வதில் இவன் குழந்தைப் பருவத்தி லிருந்து மகா கண்டிப்புக்காரனா யிருந்தான். உடைகள் ஒழுங்காக வும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு நிமிஷங் கூட அதை உபயோகிக்க மாட்டான். இந்த விஷயத்தில் இவனுடைய தகப்பனார் தான் இவனுக்கு வழிகாட்டி. அலி ரிஜா, ஐரோப்பிய முறையில்தான் உடைகள் அணிந்து கொள்வான். தன் குடும்பக் கவலை என்ன இருந்த போதிலும் அதை வெளியிலே காட்டிக் கொள்ள மாட்டான். அளந்துதான் பேசுவான். மரியாதைக் குறை வாகப் பேசமாட்டான். அலி ரிஜாவின் இந்த வழிகளை யெல்லாம் முதபா அப்படியே பின்பற்றினான். தகப்பனார் எப்படி உடை யணிகிறார், எப்படி நடக்கிறார், எப்படிப் பிறரோடு பேசுகிறார் என்பவற்றையெல்லாம் ஒதுங்கியிருந்து கவனிப்பான்; அப்படியே தானும் செய்வான். துருக்கியக் குடும்ப வாழ்க்கையில் பரபர மரியாதைகள் நிரம்ப உண்டு. வீட்டுக்கு எஜமானனான தகப்பனார், மாலையில் வெளியிலிருந்து வீட்டுக்கு வந்தால், குழந்தைகள் அவருக்கு வணக்கஞ் செலுத்தி, கைக்கு முத்தங் கொடுப்பார்கள். தகப்பனார் எதிரே மகன் உட்கார மாட்டான். பேச்சு வார்த்தைகளிலேகூட ஒரு சம்பிரதாயம் உண்டு; மரியாதை உண்டு. ‘அப்படி உட்காரலாமே’ என்பார் தகப்பனார் முதலில், ‘தங்களுடைய எதிரில் நான் கனவி லும் உட்காரலாமா? என்பான் மகன். அப்படியானால் உட்காரும் படியாக உத்தரவிடுகிறேன் என்பார் தந்தை அன்புடன். ‘தங்கள் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமலிருக்க முடியுமா? என்று சொல்லிக் கொண்டே அமர்வான் புத்திரன். மரியாதையான இந்தப் பழக்க வழக்கங்களினால் பிள்ளை களுக்கு ஒருவித தன்னடக்கம், மரியாதையாகப் பேசுகிற சுபாவம் முதலியன ஏற்பட்டன. இந்தச் சம்பிரதாயங்களெல்லாம் அலி ரிஜாவின் குடும்பத்தில் நிறைய உண்டு. முதபாவை ஒரு குழந்தையாகக் கருதிப் பேசமாட்டான் அலி ரிஜா. ஒரு பெரிய மனிதனாக நடந்த கொள்ளும்படியே அவனை ஊக்கப் படுத்துவான். அதற்குண்டான மரியாதை வார்த்தை களையே அவனிடம் உபயோகிப்பான். மகனுக்குப் புத்திமதிகள் சொல்வதானாலும், அப்படிச் செய்தால் நன்றாயிருக்கும்; இப்படிப் பேசினால் அழகாயிருக்கும் என்கிற மாதிரிதான் சொல்வானே தவிர, அப்படிச் செய்; இப்படிச் செய் என்று சொல்லவே மாட்டான். இப்படியேதான் குடும்பத்திலுள்ள எல்லாரும். சகோதார சகோதரிகளிடத்திலேகூட என்ன வினயம்! விளையாடுகிற சமயங் களில்கூட இரைச்சல் போடமாட்டார்கள் குழந்தைகள். முதபா, தனது ஒன்பதாவது வயதிலேயே விளையாட்டு களை யெல்லாம் நிறுத்திவிட்டான். உலக விவகாரங்களறிந்த ஒரு மனிதனாகவே அதுமுதல் நடந்து கொள்ள ஆரம்பித்தான். படிப்பில் முதபா, மிகச் சூடிகையாக இருந்தான். ஒருநாள் கூட, இன்று பாடங்களைப் படிக்கவில்லை என்று இவன் சொன்னது கிடையாது. இதனால், இவனுடைய ஆசிரியர் ஷெம்ஸி எப்பெண்டி, இவனை வகுப்புச் சட்டாம்பிள்ளையாக நியமித்தார். இதற்காக, முதபா கர்வங்கொண்டது கிடையாது; மற்றப் பிள்ளைகளை அவமரியாதையாகப் பேசியதும் இல்லை. சட்டாம் பிள்ளையாக இருக்க, தான் தகுதியுடையவன் என்றே இவன் எண்ணினான். ஐரோப்பிய முறையில் கல்வி கற்பிப்பதென்றால் லேசான காரியமா? எவ்வளவு பணச் செலவு? அலிரிஜாவுக்கு இந்தக் கவலை அதிகமாகி விட்டது. ஜுபேதாவோ, குடும்பத்தை மிகச் சிக்கனமாக நடத்தித் தன் புருஷனையும் மகனையும் ஒழுங்கான உடைகளுடன் தான் வெளியிலனுப்பி வந்தாள். ஆனால் -? எத்தனை நாட்களுக்குத் தம்பதிகள் - மகன் தூங்கிய பிறகு - பணத்துக்காகக் கவலைப்படு வார்கள்? அலி ரிஜா திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தான். தன் உத்தியோகத்தை ராஜிநாமா செய்தான். மர வியாபாரமொன்றை ஆரம்பித்தான். அந்நியர் பலரும் இங்கு வந்து குறைந்த மூலதனத்தை வைத்து வியாபாரஞ் செய்து அதிக பணம் சம்பாதிக்கிறபோது நாம் ஏன் செய்யக்கூடாதென்பது இவன் கேள்வி. அரசாங்க உத்தி யோகத்திலேயே இருந்து இரண்டு கண்களை மூடிக் கொண்டு கையை மட்டும் நீட்டியிருந்தால் அதிக பணஞ் சம்பாதித்திருக் கலாம். ஆனால் அலி ரிஜா, மிக்க நாணயதன், ஒழுங்குத் தவறான முறையில் செல்லவே மாட்டான். அக்கிரமமான முறையில் சம்பாதித்து வயிறு வளர்ப்பதை விட, நெறி பிசகாதவன் என்ற பெயரோடு பட்டினி கிடப்பது மேலல்லவா? அலி ரிஜாவின் இந்தச் சுபாவம், முதபாவிடம் பூரணமாகப் பதிந்தது. சொந்தமாக வியாபாரம் செய்வதென்றால் லேசான காரியமா? அதுவும் அரசாங்க உத்தியோகம் என்கிற குறுகிய வட்டத்திலேயே இருந்த வாழ்க்கையை நடத்தியவனுக்கு? அந்நியர்களுடைய போட்டி வேறே. ஆனால் அலி ரிஜா உழைப்பாளி. தவிர, இவனுக்கு ஒரு லட்சியம் ஏற்பட்டுவிட்டது. தன் அருமந்தன்ன புதல்வன் - வாழ்க்கையின் ஒரே விளக்கு - முதபாவை அந்நிய நாட்டுக்கு அனுப்பி, உயர்தரப் படிப்புச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதற்காக எவ்வளவு கஷ்டங்கள் பட்டால்தானென்ன? தினந் தோறும் மாலையில் அலுத்துச் சலித்துப்போய் வீட்டுக்கு வருவான். அவன் வரவை முதபா எவ்வளவு ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பான்? தகப்பனார் உள்ளே நுழைந்ததும் அவருக்கு சலாம் செய்து கையை முத்தமிடுவான். பின்னர் இராச் சாப்பாடு முடிந்த பிறகு இருவரும் சேர்ந்த அநேக புதகங்களைப் படிப் பார்கள். தகப்பனார், பிள்ளைக்குச் சொல்லிக்கொடுத்த விஷயங்கள் பல. ஆனால் பிள்ளையிடமிருந்து தந்தை கற்றுக் கொண்டதும் உண்டு. பிற்காலத்தில் சர்வ துருக்கியர்களின் அன்பைப் பெற்று, தேசத் தலைவனாக வந்த பிறகு கூட, தன் தகப்பனாரின் நினைவு வந்தால், முதபா அப்படியே தம்பித்துப் போய் நின்றுவிடுவான். எனக்காக எத்தனை இரவுகள் தூக்கமில்லாமல் கழித்திருக்கிறார்? நான் படித்து முன்னுக்கு வரவேண்டுமென்று அவர், தமது தினசரித் தேவைகளைக் கூட எவ்வளவு தியாகம் செய்திருக்கிறார்? என்னைப் பற்றி அவர் கொண்டிருந்த அபிலாஷைகள் எவ்வளவு தூரம் நிறை வேறியிருக்கின்றன என்பதை அவர் நேரில் இருந்து கவனிக்க முடியவில்லையே?, என்றெல்லாம் துக்கிப்பான். 3. தந்தையின் பிரிவு; தாயின் தவிப்பு அட, இன்று இந்த வீட்டிலே ஏன் இவ்வளவு நிசப்தம்? யாராரோ வீட்டுக்கு வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக் கின்றனரே? ஒருவர் முகத்திலும் சிரிப்பைக் காணோமே? அதோ, டாக்டர்! ஏன்? அலி ரிஜாவுக்கு என்ன உடம்பு? டாக்டர் வீட்டுக்குள் நுழைந்த சிறிது நேரத்திற்குள், தலைகுனிந்த வண்ணம் ஏன் திரும்பிப் போய்விட்டார்? அலி ரிஜா படுத்திருக்கிறான். அவன் கை கால்களை அசையவே யில்லை; சில்லிட்டும் விட்டன. கண்கள் மூடிவிட்டன. பக்கத்தி லிருந்த ஜுபேதாவின் கண்ணீர்த் துளிகள் மட்டும் ஒவ்வொன்றாக அவன் முகத்தில் விழுந்து கொண்டிருக்கின்றன. முதபா கொஞ்சம் எட்ட நின்று கொண்டு, தகப்பனார் முகத்தை உற்றுப் பார்த்த வண்ணமிருக்கிறான். முதபா அழவில்லை. இப்பொழுது மட்டுமல்ல; எப் பொழுதுமே. அழுகிறவன் ஆண் மகனா? சிறிது நேரத்திற்கெல்லாம் அலி ரிஜாவை எடுத்துக் கொண்டு போய், இலாமிய மதாசாரப்படி புதைத்துவிட்டார்கள். அப்பொழுது முதபாவுக்கு வயது ஒன்பது. ஒரு தாயார், இரண்டு குழந்தைகள், வறுமைச் சுழலிலே அகப்பட்டுக் கொண்டு விட்டார்கள். அலி ரிஜா செய்து வந்த வியாபாரம் அவ்வளவு செழிப்பாக இருக்கவில்லை. ஆகவே, அதில் ஏதேனும் பணம் மீதியிருந்தால் அதைக் கொண்டு ஜீவனம் நடத்தலா மென்பதற்கும் இல்லை. தவிர, அரசாங்க உத்தியோகத்திலிருந்ததற் காகக் கிடைக்கிற உபகாரச் சம்பளமோ மிகச் சொற்பம், அதுவும் சரியாகக் கிடைக்காது, என்ன செய்வது? ஜுபேதா, அலி ரிஜா இறந்துபோன சில நாட்களுக்குள்ளேயே, தன் குடும்பத்தைக் கலைத்துவிட்டாள். தாயாரும் இரண்டு குழந்தை களும் மூட்டை முடிச்சுக்களைக் கட்டி முதுகின்மீது போட்டுக் கொண்டு, சாலோனிகா வீதிகளின் வழியே புறப்பட்டு விட்டார்கள். யாருக்கும் குனியாத முதபாவின் தலை, அப்பொழுது - அந்தத் தெருக்களின் வழியே செல்கிறபோது - குனிந்தது. ஆனால் ஒரு பொட்டுக் கண்ணீர்கூட வரவில்லை. எங்கே செல்வது? அதுவும் முதபாவுக்குத் தெரியாது. தாயார் எந்த வழியில் செல்கிறாளோ அந்த வழியே செல்வோம் என்று வழி நடந்தான். முதுகிலே மூட்டை கனக்கிறது. ஆனாலும் என்ன? இன்னும் பெரிய பாரங்களையெல்லாம் சுமக்க வேண்டுமே! சாலோனிகாவுக்குச் சமீபத்தில் லாஜாஸான் என்ற ஒரு சிறிய கிராமம். சில மண் குடிசைகள்தான் இங்கே இருந்தன. அவ்வளவு சுபிட்சமான கிராமம் இல்லை. இங்கே, ஜுபேதாவின் ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவன் இருந்தான். இவன் ஒரு விவசாயி. தனது சொந்த நிலங்களைப் பார்த்துக்கொண்டு ஜீவனம் செய்துவந்தான். இங்கே தான், ஜுபேதா தன் குடும்பத்துடன் போய்த் தஞ்சம் புகுந்தாள். அவனும் இரக்க சித்தமுடையவன். விவசாயி அல்லவா? முதபாவைப் பார்த்தவுடன் அவனுக்கு ஒரு நல்ல எண்ணம் உண்டாயிற்று . முதபா, தன் விவசாயத்தொழிலுக்கு மிகவும் உதவியா யிருப்பான் என்று தெரிந்துகொண்டான். முதபாவும், பிறர் தனக்கு வேலையிடுகிற வரை காத்துக் கொண்டிருக்கவில்லை. மாட்டுத் தொழுவத்தைச் சுத்தம் செய்வான்; நிலங்களுக்குச் சென்று உழுவான்; களை பிடுங்குவான்; கதிர் அறுப்பான். அறுவடையில் லாத காலங்களில் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு வருவான். இங்ஙனம் கால்நடைகளை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக் காகத் தொலைதூரம் செல்வதிலேதான் முதபாவுக்கு சந்தோஷம். அங்கே சென்று, ஆடு மாடுகளை மேயவிட்டு, தான் மட்டும் தனியே இருந்து எண்ணாத எண்ணங்களையெல்லாம் எண்ணுவான். மல்லாந்து படுத்து, நீல நிர்மல ஆகாயத்தை நோக்கிய வண்ண மிருப்பான். சில சமயங்களில் மாலையில் அதிக இருட்டாகிவிடும். அப்பொழுதுகூட ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டுதானிருப்பான். ஆகாயத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றனவோ அத்தனை எண்ணங்கள் இவன் மனத்தில் தோன்றும். ஆனாலும் முதபா கனவு உலகத்தில் வாழ்கிறவனில்லை. நடைமுறையில் எவை எவை சாத்தியமோ அவற்றிலேயே இவன் மனம் பதியும். என்றாலும் தனிமையையே எப்பொழுதும் விரும்பினான். மாடு மேய்க்கும் மற்றப் பிள்ளைகளோடு சேர மாட்டான். இப்படி இரண்டு வருஷங்கள் கழிந்தன. முதபாவும் கொஞ்சம் வளர்ந்து விட்டான். இப்படியே இவனை வைத்துக் கொண்டிருப்பதா? எத்தனையோ பேரைப் போல் ஒரு சாதாரண விவசாயியாக இவன் இருந்துவிடுவதா? ஜுபேதாவுக்கு இது பிடிக்கவில்லை. btËehLfS¡F mD¥ã¥ go¥ò¢ brhšÈ¡ bfhL¡f KoahÉ£lhY«., இங்கேயே தன் மகனை நல்ல முறையில் படிக்கவைக்க வேண்டுமென்பது இவள் எண்ணம். இதை மனத்தில் வைத்துக் கொண்டுதான், தன் சகோதரனிடத்தில் இரண்டு வருஷ காலம் எவ்வளவோ கஷ்டங்களைச் சகித்துக் கொண்டு இருந் தாள். ஆனால் முதபாவுக்கு வயது பதினொன்று ஆகிவிட்டது. இனியும் காலங் கடத்திக் கொண்டு போகலாமா? சாலோனிகாவில் ஜுபேதாவின் ஒன்றுவிட்ட சகோதரி ஒருத்தி இருந்தாள். அவளிடம் கொஞ்சம் பணம் இருந்தது. தன்னொரு மகனுக்கு மேலே படிப்புச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்ற தன் ஆவலையும், அதற்குத் தன் கையில் போதிய பணமில்லாமையையும் குறித்து அவளிடம் அடிக்கடி நேரிலும் கடித மூலமாகவும் தெரிவித்து வந்தாள். அவள் மனத்தை இணங்கச் செய்ய ஏறக்குறைய இரண்டு வருஷமாயிற்று. கடைசியில் அவள் முதபாவைத் தன் செலவில் படிப்பிக்கச் சம்மதித்தாள். ஒரு நாள் முதபா, ஆடு மாடுகளை மேய்த்துக் கொண் டிருக்கையில் இவன் சகோதரி குதித்தோடி வந்து, அம்மாள் உன்னை உடனே அழைத்து வரச் சொன்னாள் என்றாள். முதபா, தனது வாழ்க்கையில் ஏதோ மாறுதல் ஏற்படப் போகிறதென்று மனத்திற்குள் நிச்சயித்துக் கொண்டு வீட்டுக்கு நடந்து வந்தான். அப்பா, நீ சாலோனிகாவுக்குத் திரும்பிப்போய் உன் சிறிய தாயா ரிடத்தில் இருந்துகொண்டு படிக்க வேண்டும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் நான் செய்திருக்கிறேன் என்றாள் தாயார். முதபா இதற்கு உடனே சம்மதித்தான். 4. ஒரு மனிதனாக ஆகிறேன் பார் முதபா, சாலோனிகாவுக்கு வந்து பள்ளிக்கூடத்திற்கு ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்தான். இவனுடைய கூர்மையான புத்தியைக்கண்டு ஆசிரியர்கள் வியந்தார்கள். இவனது அறிவு எவ்வளவு கூர்மையாக இருந்ததோ அவ்வளவு கூர்மையாக இவ னுடைய உணர்ச்சியும் இருந்தது. பிறருக்குக் கொஞ்சங்கூட அடங்கி நடக்க மாட்டான். ஆனால் அதற்காகப் பிறரிடத்தில் அவமரியாதை யாகவும் நடந்து கொள்ளமாட்டான். தன்னை யாராவது தாழ்ந்த அந்ததில் வைத்துப் பேசினால் அதைச் சிறிதும் சகியான். மற்றப் பிள்ளைகள், இவனோடு சிரித்துப் பேசவேண்டுமென்று விரும்பு வார்கள்; இவன் சிரிக்கவே மாட்டான். ஆனாலும் இவனிடத்திலே எல்லாருக்கும் ஒரு பிரீதி ஏற்பட்டிருந்தது; நெருங்கிமட்டும் பேச மாட்டார்கள். எவ்வளவு கஷ்டமான பாடங்களிருந்தாலும் அவற்றைப் படித்து முடித்து வகுப்பிலே மற்றப் பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருப்பான். முதபா, புரட்சிக்காரனாகவே பிறந்து விட்டான். இதனால் பிறருடைய அதிகாரத்திற்கு அடங்கி நடப்பதென்றால் இவனால் முடியவில்லை. அன்போடு எதைச் சொன்னாலும் கேட்பான். பட்டமோ, பதவியோ இவனை மருள வைத்ததில்லை. இந்தச் சிறு வயதிலேயே இதனால் இவனுடைய ஆசிரியர்களுக்கும் இவனுக்கும் அடிக்கடி மனதாபங்கள் ஏற்படும். இவனுடைய புத்தி தீட்சண் யத்தைக்கண்டு இவனை ஊக்கப்படுத்தினவர்கள் யாருமே கிடை யாது. ஒரு விதவையின் மகன்; அரை வயிற்றுக் கஞ்சிக்குக்கூட வழி யில்லாமல் படிக்க வந்துவிட்டான் என்று ஒருவித வெறுப்போடு தான் பார்த்தார்கள். இது முதபாவுக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது. இதனால், தன்னுடைய திறமையும், தன் கடமையை ஒழுங்காகச் செய்துகொண்டு போவதுந்தான் தனது தற்காப்புகள் என்று உறுதி கொண்டு அவற்றிலேயே கண்ணுங் கருத்துமா யிருந்தான். தம் முடைய சக்தியில் சில பேருக்குச் சந்தேகம் உண்டு. அப்படிப்பட்ட சந்தேகமொன்றுமே முதபாவிடம் கிடையாது. தான் செல்வக் குடும்பத்திலே பிறக்கவில்லையென்பதற்காக இவன் தன்னைத் தாழ்வாக நினைத்துக் கொண்டது கிடையாது. தன்னை யாராவது இழிவாகப் பேசினால் அதற்குச் சுடச்சுடப் பதில் சொல்வான்; சில சமயங்களில் நன்றாக அடித்தும் விடுவான். வகுப்பில் அராபி பாடத்தை எடுத்துக்கொண்ட ஆசிரியர் ஹபீ என்பவர். முதபாவுக்கு அராபி பாஷையில் ஒரு வெறுப்பு. அதைச் சொல்லிக் கொடுக்கிற வாத்தியாரிடத்திலே கேட்க வேண் டுமா? அவருக்கும், தன்னுடைய பாடத்தை இவன் அலட்சியம் செய்கிறானேயென்று இவன் மீது ஒரு துவேஷம். ஒருநாள் முதபாவுக்கும், மற்றொரு மாணாக்கனுக்கும் வகுப்பில் கை கலந்த சண்டை ஏற்பட்டுவிட்டது. அந்தச் சமயத்தில் மேற்படி அராபி வாத்தியார் வந்து விட்டார். முதபா! ஏன் அந்தப் பையனை அடித்தாய்?. என்னை அவமானமாகப் பேசுகிறவர் யாராயிருந்தாலும் அவர்களை நான் லேசில் விடமுடியாது. நான் ஒரு கோழையல்ல. என்னுடைய நிலைமையில் யாரிருந்தாலும், தங்களுக்கேற்பட்ட அவமானத்திற்குப் பலாத்காரத்தை உபயோகித்தாவது பரிகாரந் தேடிக் கொண்டிருப்பார்கள். முதபாவின் இந்த வார்த்தைகள் வகுப்பில் கணீர் கணீர் என்று ஒலித்தன. ஆனால் அராபி ஆசிரியரின் செவிகளில் இவை ஈயத்தைக் காய்ச்சி வார்த்தது போலிருந்தது. அடித்தவனுக்குத் தண்டனை அடிபட வேண்டியதுதான் என்று சொல்லிக் கொண்டு, முதபாவைப் பிடித்து நன்றாக அடித்துவிட்டார். தன்னைப் பெரிய மனிதனாக நினைத்துக் கொண்டிருக்கிற இவனுக்கு இந்தப் பூசை வேண்டியதுதான் என்று எண்ணி மற்றப் பிள்ளைகள் சிரித்தார்கள். முதபா, அடிபட்டுக்கொண்டு தன் பெஞ்சியில் வந்து உட்கார்ந்தான். அவன் முகத்திலே ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டு விட்டது. கல்லிலே எழுதின சித்திரம் போலாகிவிட்டான். அன்றைய பாடங்கள் முடிந்தன. பள்ளிக்கூடத்தை விட்டு வீதியிலே வந்தான். அந்தக் கட்டடத்தைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. இவனுக்கும் அந்தப் பள்ளிக்கூடத்திற்கும் ஏற்பட்டிருந்த தொடர்பு அன்றோடு அற்றுவிட்டது. ஜுபேதாவுக்கு இது தெரிந்தது. தன் மகனுக்கு நல்ல விதமாகச் சொன்னாள்; பயமுறுத்திப் பார்த்தாள்; கெஞ்சினாள். என்னை அவமதித்தவனைத்தானே நான் அடித்தேன். அதற்கு எனக்கு உரிமையில்லையா? இதற்காகப் பலர் பார்த்துச் சிரிக்க என்னை அடிப்பதா? புழுதி மண்ணிலே என்னைப் போட்டுப் புரட்டியெடுத்தாலும் இந்தப் பள்ளிக்கூடத்திற்கு நான் போக மாட்டேன் என்று முதபா கண்டிப்பாகச் சொல்லி விட்டான். ஜுபேதா என்ன செய்வாள்? இனி மகனைத் திருப்ப முடியா தென்பது தெரியும். அழுதாள். சாலோனிகாவில் வேறே பள்ளிக் கூடம் இல்லையே? மகனே! உன்னை நான் வேறெங்கே அனுப்பு வேன்? கான்டாண்டி நோபிகளுக்கு உன்னை அனுப்புவோமென் றால் அங்கே அதிகச் செலவல்லவோ? அதற்குப் பணமேது? உன் சிறிய தாயார் இதற்கே முணகிக் கொண்டிருக்கிறாளே? மீண்டும் உன் மாமன் வீட்டுக்குப் போய் மாடு மேய்க்க வேண்டியதுதான் என்று என்னென்னவோ சொன்னாள். இவை முதபாவின் செவியில் ஏறவேயில்லை. முதபா, எல்லோரும் மதிக்கக்கூடிய ஒரு மனிதனாக ஆகிறேன் பார் என்று சொன்னாயே. ï¥go¤jhdh? என்றாள் தாய். ஆகிறேன் பார் என்று இரண்டு வார்த்தைகளில் பதில் சொல்லி விட்டு வெளிக் கிளம்பிவிட்டான் முதபா. எங்கே? யாருக்கும் தெரியாது. அப்பொழுது முதாவுக்கு வயது பன்னிரண்டு. 5. ராணுவப் பள்ளிக்கூடத்தில் முதபாவுக்கு எப்பொழுதுமே ஒழுங்கான உடைகள் அணிந்து கொள்வதிலும், அப்படி அணிந்து கொண்டு செல் வோரைப் பார்ப்பதிலும் ஒரு விருப்பமல்லவா? சாலோனிகா வீதிகளில் ராணுவ உத்தியோகதர்கள், சுத்தமான உடையணிந்து மிடுக்காகச் செல்வதை இவன் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பான். தானும் இந்த மாதிரி ஒரு ராணுவ உத்தியோகதனாக வேண்டு மென்ற எண்ணம், இவனுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே ஏற்பட்டிருந்தது. தாயாரிடம் இரண்டு வார்த்தைகள் சொல்லிவிட்டு வெளியே வந்த முதபா, கொஞ்ச தூரம் தெருவழியே நடந்தான். மேஜர் காத்ரி என்ற ஒரு ராணுவ உத்தியோகதனுடைய வீடு அங்கே இருந்தது. அவன், தன் தகப்பனாருக்கு நிரம்ப வேண்டியவன் என்பது முதபாவுக்குத் தெரியும். அவனிடம் சென்று, தன்னை அவ்வூரிலுள்ள அரசாங்க ராணுவப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பிக்க வேண்டுமென்று கேட்டான். பன்னிரண்டு வயதுப் பையன்! எவ்வளவு தைரியமாக அதிக மான பழக்கமில்லாத ஓர் உயர்தர ராணுவ உத்தியோகதனிடம் சென்று தன்னை ராணுவப் பள்ளிக் கூடத்தில் சேர்த்து விடுமாறு கேட்கிறான்! இவன் பார்வையிலே ஒரு தீட்சண்யம்! பேச்சிலே ஒரு மிடுக்கு! என்ன மரியாதை! எவ்வளவு விறைப்பாக நிற்கிறான்! இவன் ஒரு போர் வீரனாகவே பிறந்திருக்கவேண்டுமென்று மேஜர் காத்ரி தீர்மானித்து விட்டான். முதபாவைச் சில கேள்விகள் கேட்டான். அவைகளுக்குச் சுருக்கமாகவும் விஷயத்தையொட்டி யும் பதில் சொன்னான் முதபா. நிச்சயம் உனக்கு ராணுவப் பள்ளிக் கூடத்தில் அனுமதி கிடைக்கும் என்று உறுதி கூறி அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தான் காத்ரி. ராணுவப் பள்ளிக்கூடத்தில் சேருவதற்கு முன்னர், பிரவேசப் பரீட்சை நடைபெற்றது. கேட்ட கேள்விகளுக்கு, பீரங்கியிலிருந்து குண்டுகள் வெளிவருவதுபோல் பதில் கூறினான் முதபா. பரீட்சாதி காரிகள் இவனைப் பார்த்தார்கள்; தங்களையும் பார்த்துக் கொண்டார்கள். தங்களையெல்லாம் அடக்கியாளக் கூடிய ஒரு தலைவனாகப் பிற்காலத்தில் இவன் வரக்கூடுமென்ற சந்தேகம் அப்பொழுதே தோன்றி விட்டதோ என்னவோ அவர்களுக்கு? ஒரு நாள் திடீரென்று முதபா வீட்டுக்கு வந்தான். தான் ராணுவப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்திருப்பதாகக் கூறினான். தாயார் அழத் தொடங்கிவிட்டாள். முதபா, ஒரு மௌல்வியாக வேண்டு மென்று அவள் ஏற்பாடு செய்துகொண்டிருந்தாள். ஆனால் போர் வீரனாகவா? அதுவும் உதுமானிய ராணுவத்திலா? சுல்தான் எப்பொழுதும் யாருடனாவது போராடிக் கொண்டிருக்கிறாரே? ஆனாலும் என்ன செய்வது? முதபாவின் சங்கல்பத்தை மாற்ற முடியாது. விதிப்படியே நடக்கட்டுமென்று விட்டுவிட்டாள். முதபா, ராணுவப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து விட்டான். எல்லோரையும்போல் பள்ளிக்கூட ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப் பட்டு நடந்தான். கணக்கில் இவன் சுறுசுறுப்பாயிருந்தான். தினந் தோறும் நடைபெறுகிற தேகப் பயிற்சியிலே முதன்மையாக இருந்தான். மற்றச் சகோதர மாணாக்கர்கள் இவனிடத்தில் ஓர் அன்புடனும் ஆனால் பக்தியுடனும் நடந்துகொண்டார்கள். இரண்டு வருஷம் கழிந்தது. மூன்றாவது வருஷத்தில், கீழ் வகுப்புகளுக்குப் பாடஞ்சொல்லிக் கொடுக்க முதபா நியமிக்கப்பட்டான். ஒரே சமயத்தில் ஒரே பள்ளிக்கூடத்தில் அதிலும் ராணுவப் பள்ளிக் கூடத்தில் - மாணாக்கனாகவும் ஆசிரியனாகவும் இருந்தான். இஃது இவனுக்குத் தனது திறமையில் நம்பிக்கையை உண்டுபண்ணியது. முதபாவின் மீது தனியன்பு செலுத்திய கணித ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் பெயரும் முதபா. ஒரு நாள் அவர், முதபா, உன் பெயரும் என் பெயரும் ஒன்றாயிருக்கிறது. நமக்குள் ஏதேனும் வித்தியாசம் இருக்க வேண்டாமா? ஆகையால் உன்னை முதபா கெமால் என்று அழைக்கப் போகிறேன் என்றார். அன்று முதல் முதபா, முதபா கெமால் ஆனான். அப்பொழுது இவனுக்கு வயது பதினான்கு. இந்தச் சிறு வயதிலேயே, கெமால், அருகில் வசித்து வந்த ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டான். அவளோடு இவன் நெருங்கிப் பழகச் சந்தர்ப்பம் உண்டாகவில்லை. ஆனால் தினந்தோறும் மாலையில் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்து தனது சட்டைகளை ஒழுங்காக இதிரி போட்டு வைத்துவிட்டு, தனது நண்பர்களோடு விளையாடப் போகவேண்டுமென்று சொல்லிக் கொண்டு வெளியே கிளம்பி விடுவான். நேரே தான் காதலித்த பெண்ணின் வீட்டுக்கு எதிரே சென்று நிற்பான்; உலவுவான். சாளரத்தின் வழியாக அவள் எட்டிப் பார்க்க மாட்டாளா என்று ஏங்குவான். ஆனால் அந்தப் பெண், இவன் மீது காதல் கொண்டாளா இல்லையா வென்பது நமக்குத் தெரியாது. சாதாரணமாக எல்லா இளைஞர்களுக்கும் சகஜமாக ஏற்படுகிற சிற்றின்ப எண்ணங்கள், இவனுக்குக் கொஞ்சம் சீக்கிரத்திலேயே தோன்றத் தொடங்கிவிட்டன வென்று சொல்லி இவனுடைய காதல் நாடகத்தின் முதற்காட்சியை முடித்து விடுவோம். இப்படி இவனுடைய கவனம் சிறிது சிதறிப் போனாலும், தன்னுடைய படிப்பிலோ, தனக்கிட்ட வேலைகளிலோ சிறிது கூட இவன் பிசகியது கிடையாது. ராணுவப் பயிற்சியின் முதற்பகுதி முடித்த மாணாக்கர்கள், மொனாடிர் என்ற ஊரிலுள்ள ராணுவப் பயிற்சி சாலைக்கு மேற்பகுதியை முடிக்க அனுப்பப் படுவார்கள். ஆகையால் முதபாவும் மொனாடிர் வந்து சேர்ந்தான். அந்த வருஷத்தில் - 1897ஆம் வருஷத்தில் - மொனாடிர் நகரத்தில் யுத்த பேரிகைகள் முழங்கின; வாளாயுதங்கள் மின்னி மின்னி மறைந்தன. துருப்புக்கள் அணிவகுத்துச் சென்றன; பின்னால் பீரங்கிப்படைகளின் கடகட சப்தம். சுல்தான் வாழ்க என்ற ஜனங்களின் ஆரவாரம் எதிரோலி கொடுத்தது. ஏன்? துருக்கிக்கும் கிரீஸுக்கும் யுத்தம்! எதைப் பற்றி? கிரீட் என்ற ஒரு சிறிய தீவைப்பற்றி. இந்தத் தீவு, துருக்கிக்குச் சொந்த மானது. ஆனால் இங்கே கிரேக்கர்கள், தங்களுக்குச் சில விசேஷ உரிமைகள் உண்டென்று வாதஞ் செய்தனர். சமரஸம் ஏற்பட வில்லை. பிறகு - ? பிறகு என்ன? ஆயுத பலந்தான் இருக்கவே இருக் கிறது. துருப்புக்களை மோத விட்டனர். கிரீ தோற்றது. துருக்கி வெற்றிக் கொடி தூக்கியது. இந்த யுத்தத்தை, மொனாடிர் ராணுவப் பயிற்சி சாலையில் படித்துக் கொண்டிருந்த வருங்கால தளபதிகள் ஊக்கத்தோடு கவனித்து வந்தார்கள். யுத்த சம்பந்தமான படங்களை வைத்துக் கொண்டு, இருதரத்துச் சேனாதிபதிகளும் எந்தெந்த விதமான யுத்த தந்திரங்களைக் கையாண்டு வருகிறார்கள் என்பதை ஆராய்ந்து வந்தனர். இவை எல்லாம் ஒரு படிப்புத்தானே? முதபா, இந்த ஆராய்ச்சிகளில் கலந்து கொள்வான். தளபதிகள் கையாண்ட சில யுத்த தந்திரங்கள் இவனுக்குப் பிடிக்கா விட்டால் அவைகளை நிர்த்தாட்சண்யமாகக் கண்டிப்பான். இந்தச் சமயத்தில் இவனோடு கூடப் படித்துக்கொண்டிருந்த சகோதர மாணாக்கனொருவன், பிற்காலத்தில் இவனைப்பற்றிப் பின்வருமாறு கூறுகிறான்:- முதபா எப்பொழுதும் மற்றச் சகோதர மாணாக்கர் களோடு நெருங்கமாட்டான். கொஞ்சம் விலகியே இருப்பான். தன் நெருங்கிய நண்பன் என்று யாரையும் இவன் சொல்லிக் கொண்ட தில்லை. ஆனால் எவரையும் இவன் பகைத்துக் கொண்டதில்லை. சிடு மூஞ்சியாவும் இருந்ததில்லை. அதற்கு மாறாக எப்பொழுதும் சந்தோஷமாகவே இருப்பான். மற்ற மாணாக்கர்களிடத்திலே மரியாதையாகவும் அன்பாகவும் பேசுவான். எதற்கும், நான் என்று அட்சதை போட்டுக் கொண்டு முன்னே வந்து நிற்கமாட்டான். ஆனால் இவனைப் பின்பற்றி நாங்கள் சென்று கொண்டிருந்தோம். இவனைத் தலைவனாகக் கொண்டு நடக்கிறோம் என்பது தெரியா மலே நாங்கள் பின்பற்றிச் சென்றோம். முதபா, இந்தக் காலத்தில் அதிகமாகப் படிப்பான். ஆனால் படித்ததைச் சிந்திப்பதற்கு அதிக நேரம் செலவிடுவான். ஒரு புதகத்தைப் படித்து முடிக்க ஒரு மணி நேரமானால் அதைப்பற்றிச் சிந்திக்க மூன்று மணி நேரம் ஆகும். ஒரு சமயம் நாங்கள் முதபாவை அணுகி, எங்களுடன் விளையாட்டுகளில் நீ கலந்துகொள்ள மாட்டேனென்கிறாய். நீயே தனியாக இருக்கிறாய். நீ எதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக் கிறாய்? எது உன்னுடைய லட்சியம்? பிற்காலத்தில் நீ என்ன தான் செய்யப்போகிறாய்? என்று கேட்டோம். அவன் பென் ஓலியாகின் என்றான். அதாவது நான் ஒரு முக்கியதனாகப்போகிறேன் என்று அர்த்தம். ஆனால் நீ ஒரு சுல்தானாக முடியாதே? அப்படியொன்றும் உத்தேசமில்லையே? பென் ஓலியாகின் முதபா, வருஷத்திற்கொருமுறை விடுமுறையின் போது, சாலோனிகாவுக்குச் சென்று தன் தாயாரோடு தங்கியிருப்பான். இந்தக் காலத்தில் ஜுபேதா ஹனூம், மோராலி ரகீப் என்ற ஒரு பணக்காரனை இரண்டாவது மணம் புரிந்துகொண்டாள். இது முதபாவுக்குப் பிடிக்க வில்லை. தன் தகப்பனார் அலி ரிஜாவுக்கு இது துரோகம் செய்தது போலிருந்தது. இவனுக்கு. ஆனால், ஜுபேதா, தன்னொரு மகனுடைய நன்மையை முன்னிட்டுத்தான் இந்த விவாகஞ் செய்து கொண்டாள். இந்த விஷயம் முதபாவுக்குப் பின்னரே தெரிந்தது. ஜுபேதா, இரண்டாவது விவாகஞ் செய்து கொண்ட பிறகு, முதபாவுக்கு மாதந்தவறாமல் ஒழுங்காகச் செலவுக்குப் பணம் வந்துகொண்டிருந்தது. விடுமுறை நாட்களில் முதபா சும்மா இருப்பதில்லை. சாலோனிகாவிலுள்ள பிரெஞ்சு பாதிரிமார்களிடம் பிரெஞ்சு பாஷை கற்றுக் கொண்டான். ஒரு நாள் இவன் சரியானபடி பாடம் படிக்கவில்லையென்று ஒரு பாதிரி கோபித்துக்கொண்டான். இதை இவனால் பொறுக்க முடியவில்லை. இதனால், இவன் வேறு பாஷைகளைக் கற்றுக்கொள்ள முடியாமற் போய்விட்டது. மொனாடிர் வாழ்க்கையைப்பற்றி முதபா கூறுகிறான்:- மொத்தத்தில், மாணாக்கர்களுக்குள், நல்ல போட்டியிருந்தது. ஒவ்வொரு மாணாக்கனும், தானே முதலில் தேர்ச்சிபெற வேண்டு மென்று ஆவல் கொண்டிருந்தான். மொனாடிர் ராணுவப் பயிற்சிப் பள்ளிக்கூடத்தில் எல்லாப் பரீட்சை களிலும் தேறிவிட்டான் முதபா. பதினேழு வயதுதான் அப்பொழுது. இனி, ராணுவத்தில் ஓர் உத்தியோகதனாகச் சேர வேண்டியதுதான். அப்படிச் சேருவதற்கு முன்னர் ராணுவ உத்தியோகதர்களுக் கென்று கான்டாண்டி நோபிளிலுள்ள கலாசாலையில் மூன்று வருஷம் பயில வேண்டும். இந்தப் பயிற்சி முடிந்தவுடன் சேனையில் காப்டன் வேலை கிடைக்கும். எனவே, முதபா, கான்டாண்டி நோபிளுக்குச் சென்றான். 3 தேசப் பிரஷ்டமா? 1. செயலுக்கு ஆரம்பம் கான்டாண்டி நோபிள்! மேனாடும் கீழ்நாடும் சந்திக்கிற இடம்! அகில முலிம்களின் கலீபா வசிக்கிற புண்ணிய தலம்! இருபதாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த நகரம், தனது புராதனப் புகழின் அதமனச் சாயலிலே பிராகாசித்து வந்தது. இங்கே எல்லா ஜனங்களையும், எல்லா நாகரிகங் களையும் சந்திக்க லாம். வாழ்க்கையைக் கவலையின்றி, இன்பகரமாக, ஆடம்பரமாகக் கழிப்பதற்கு ஏற்ற நகரம்! ஆனால் கையிலே தாராளமாகக் காசுகள் நடமாடிக் கொண்டிருக்க வேண்டும். எப்படிப்பட்ட மனத் திண்மை படைத்தவர்களையும் மயங்க வைக்கும் இந்த நகரம், தனது வாயிற் கதவுகளை, நமது இளைய போர்வீரனுக்குத் திறந்து விட்டது. முதபா, மொனாடிரிலிருந்தது போலவே, கான் டாண்டி நோபிள் ராணுவப் பயிற்சிப் பள்ளிக்கூடத்திலும், மற்றவர் களோடு அதிகமாக நெருங்கிப் பழகாமல் வாழ்ந்து வந்தான். முதல் இரண்டு வருஷ காலம், இவன் உள்ளத்தில் பலபட்ட நினைவுகள் தோன்றி அடங்கின. இயற்கைதானே! வாழ்க்கையை சுவைத்துப் பார்க்கவில்லை யல்லவா? முதபாவினுடைய பயிற்சியின் மூன்றாவது வருஷம் ஆரம்பமாயிற்று. அப்பொழுதிருந்தே துருக்கியின் அரசியலில் - பொதுஜன விவகாரங்களில் - கவனஞ் செலுத்தலானான். பத்தொன்பதாவது நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்தே துருக்கியில் தேசீய விழிப்பு ஏற்பட்டது. துருக்கிய சமுதாயம் தனி வாழ்க்கையை நடத்த வேண்டுமென்பதை வலியுறுத்தப் பல நூல்கள் தோன்றின. துருக்கியனே, எழுந்திரு என்று சொல்லி, கவிகள் பலர் தேசத்தைத் தட்டி எழுப்பினார்கள். ஆனால், அப்பொழுதைய அரசாங்கத்திற்கு - அந்நியர் களுடைய வலையிலே சிக்கிக் கொண்டிருந்த அரசாங்கத்திற்கு - இவையெல்லாம் பிடிக்கவில்லை. இந்த நூல்களை வைத் திருப்போர். பாடல்களைப் பாடுவோர் அனைவரும் புரட்சிக்காரர்க ளென்று கருதப்பட்டு தண்டனைக்குட்படுத்தப் பெற்றார்கள். எந்த ஒன்றை அரசாங்கம் வேண்டாமென்று தடுக்கிறதோ, அதுதானே ஜனங்களிடத்தில் தீவிரமாகப் பரவுகிறது? அதிலும் இளைஞர் களிடத்தில் சொல்ல வேண்டுமா? நாமிக் கெமால் என்பவன் ஒரு வரகவி. இவன், துருக்கிய சமுதாயத்தை விழிப்புறச் செய்தவர்களில் ஒருவன். இவன் பல பாடல்களை இயற்றினான். இதற்காக இவன் அடைந்த பலன் தேசப் பிரஷ்டம். இவனுடைய பாடல்களை அரசாங்கத்தார் தடுத்திருந் தனர். ஆனால் எல்லாரும் இவன் பாடல்களைப் பாடினார்கள். தேசீய நுல்களை நாங்கள் படிக்கக்கூடாதென்று ஏன் தடுக்கப் பட்டோம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அரசாங்கத் திடந்தான் ஏதோ ஊழல் இருக்கிறதென்று நாங்கள் தீர்மானித் தோம் என்பது முதபாவின் வாக்கு. இந்த ஊழலைப் போக்கவேண்டாமா? தேசீய வாழ்க்கை என்கிற பிரவாகத்தைத் தங்கு தடையில்லாமல் ஓடச்செய்ய வேண்டாமா? ஆனால் இதற்கு வெறும் உணர்ச்சிமட்டும் இருந்தால் போதாது. இதை முதபா ஆரம்பத்திலிருந்தே நன்கு தெரிந்து கொண்டிருந்தான். புரட்சி மனப்பான்மை கொண்ட பலரையும் ஒன்று சேர்த்து ஒரு தாபனமாக அமைக்க வேண்டுமென்று தீர்மானித்தான். இதனை ரகசியமாகவே தொடங்க வேண்டி யிருந்தது. இதற்கு வாதன் சங்கம் என்று பெயரிடப்பெற்றது. 2. வாதன் சங்க வேலைகள் இந்தியாவில் ஒரு காலத்தில் வந்தேமாதரம் என்று சொல்வது எப்படி விபரீதமாகக் கருதப்பட்டதோ அப்படியே துருக்கியிலும் வாதன் என்று சொல்வது ராஜத் துரோகமாகக் கருதப்பட்டது. வாதன் என்றால் தந்தையர் நாடு என்று அர்த்தம். அரசாங்கத்தார் எந்தப் பெயரைக் கண்டு நடுங்கினரோ அந்தப் பெயரையே முதபா, தான் தொடங்கிய சங்கத்திற்கு வைத்தான். இந்தச் சங்கத்திற்கு நிருவாகக் கமிட்டியொன்று ஏற்படுத்தப் பட்டது. இதில் முதபா ஓர் அங்கத்தினனாகத் தெரிந்தெடுக்கப் பட்டான். வாதன் சங்கத்தார், வாதன் என்ற பெயருடன் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தனர். இது கையினாலேயே எழுதப்பெற்று விநியோகிக்கப் பெற்றது. மிக ரகசியமாகவே இது நடந்தது. தேசத்தில் எங்ஙனம் புரட்சியை உண்டாக்கலாம் என்பதைப் பற்றி யும், புரட்சியின் தத்துவங்களைப் பற்றியும் இதில் வரையப்பட்டு வந்தன. முதபாவும் இவன் சகாக்களும் கொண்டிருந்த புரட்சி சம்பந்தமான எண்ணங்கள் ஒழுங்குபட்டு அமைவதற்கு இந்தப் பத்திரிகை ஒரு நல்ல சாதனமா யிருந்தது. இந்தப் பத்திரிகையின் வளர்ச்சிக்குக் கெமால் பெரிதும் உழைத்தான். சிறிது காலம் ஆசிரியனாகவும் பிரசுரகர்த்தனாகவும் இருந்தான். சில சமயங்களில் உணர்ச்சி ததும்பும் கவிகளை இதில் எழுதுவான். வாதன் சங்கத்தார், பத்திரிகை நடத்துவதோடு நில்லாமல், ஒழிந்த நேரத்தில் முக்கியமான பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு வாதம் செய்வார்கள். குறிப்பிட்ட நேரத்தில் ஒரு விஷயத்தைக் சுருக்கமாகவும் தெளிவாகவும் பேசி முடிக்க வேண்டுமென்பது ஒரு பொது விதியாகக் கையாளப்பட்டது. பிரசாரஞ் செய்வதற்கு இப்பொழுதிருந்தே தங்களைத் தகுதிப்படுத்திக் கொண்டார்கள் இதன் அங்கத்தினர்கள். இங்ஙனம் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் ஒரு ரகசியச் சங்கம் நடைபெற்று வந்தது; அரசாங்கத்தைக் காப்பதாகிற தொழிலிலே ஈடுபடப் போகிறவர்களை உற்பத்தி செய்துவரும் ஒரு தாபனத் திலேயே! கடைசி வருஷப் பரீட்சையும் முடிந்தது. முதபா தேறி விட்டான். துருக்கிய ராணுவத்தில் ஒரு காப்டன் பதவி கிடைத்தது. அப்பொழுது இவனுக்கு வயது இருபது. ராணுவ அதிகாரிகள், காப்டன் முதபாவையும் இவனுடன் தேறிய மற்றவர்களையும் எந்தெந்த ஊருக்கு அனுப்பலா மென்று யோசித்துக் கொண்டிருந் தார்கள். இதற்குச் சில வாரங்கள் பிடித்தன. இதற்குள், முதபாவும் இவனுடைய சகாக்களும், வாதன் சங்கத்தை நிரந்தமான ஒரு தாபனமாக அமைத்துவிடத் தீர்மானித்தனர். சங்கத்தைச் சேர்ந்த ஓர் அங்கத்தினர் பெயரால் ஒரு சிறிய வீட்டை வாடகைக்குப் பிடித்தனர். இதனைச் சங்கத்தின் தலைமைக் காரியாலயமாகவும், வாதன் பத்திரிகையின் காரியாலய மாகவும் அமைத்தனர். தங்களுடைய ரகசியக் கூட்டங்களை இங்குக் கூட்டி வந்தனர். சிறிது காலத்திற்குப் பின்னர் அதிகாரிகளின் சந்தேக திருஷ்டி இவர்கள் மீது விழ ஆரம்பித்தது. ஒரு நாள் வாதன் சங்கத்துக் காரியாலயத்திற்குப் பெத்தி பே என்ற ஒருவன் வந்தான். இவனைப் பற்றிச் சங்கத்தினர்களுக்கு அதிகமாகத் தெரியாது. ஆனால், ராணுவத்தில் சேர்ந்திருந்து பின்னர் விலக்கப்பட்டவன் என்பது மட்டும் தெரியும். இவன், தனது நிலைமையைப் பிறர் இரங்குமாறு கூறினான். தனக்கு இருக்கவும், உண்ணவும் வசதியில்லையென்றும், இவ்விரண்டும் தனக்குக் கொடுக்கப் பட்டால் இந்த வாதன் சங்கத் திற்கு மனப்பூர்வமாக உழைப்பதாகவும் வினயத்தோடு தெரிவித்துக் கொண்டான். தங்கள் கட்சிக்குப் புதிய ஆள் சேர்ந்ததைப் பற்றிச் சங்கத்தினர் சந்தோஷமடைந்தனர். தவிர, சங்கக் கட்டடத்தில் நிரந்தமாக ஒருவர் வசிப்பதாயிருந்தால், யாருக்குமே சந்தேகம் ஏற்படாதென்று இவர்கள் கருதினார்கள். எனவே, பெத்தி பே என்ற இந்தப் புதிய நண்பனுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத் தார்கள். இவனும், சங்கத்து வேலைகளை ஒழுங்காகவும் சுறுசுறுப் பாகவும் கவனித்து வந்தான். சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள், இந்த பெத்தி பே, தனது நண்பன் ஒருவன் இருக்கிறா னென்றும், அவனைச் சங்கத்தில் சேர்க்க விரும்புவதாகவும் தெரிவித் தான். அப்படி அவனைச் சந்திப்பதாயிருந்தால், சங்கக் காரியா லயத்தில் வேண்டாமென்றும், இதனால் சந்தேகம் உண்டாகலா மென்றும், ஏதேனும் ஒரு டீ கடையில் சந்தித்தல் நலமென்றும் கூறினான். இதை அனைவரும் நம்பினார்கள். கான்டாண்டி நோபிளில் ஒரு டீ கடை. அங்கு ஒரு பெரிய மேஜையைச் சுற்றிப் பலர் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் வாதன் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று யாருக்குமே தெரியாது. ராணுவ உத்தியோகதர்கள் என்றுதான் எல்லோரும் கருதினார்கள். ஏறக்குறைய வாதன் சங்கத்து எல்லா அங்கத்தினர் களும் ஆஜராயிருந்தார்கள். முதபா, ஒரு பக்கத்தில் நாற்காலியின் மீது கால்மேல் கால் போட்டுக் கொண்டு சிகரெட் பிடித்து மூக்கின் வழியாகப் புகையை விட்டுக் கொண்டிருக் கிறான். திடீரென்று எல்லாருடைய முகங்களும் ஒரு பக்கமாகத் திரும்பின. பெத்தி பே தன் நண்பனுடன்! அந்தப் புதிய நண்பன், பார்வைக்கு லட்சணமா யிருந்தான். நல்ல பேச்சுக்காரனாகவும் இருந்தான். அவனுக்கு வாதன் சங்கத்து நோக்கங்கள்யாவும் டீ கடையிலுள்ள மற்றவர்கள் அறிந்து கொள்ளாத முறையில் - விளக்கிக் கூறப்பட்டன. ஆனால் அவன், இவர்களை விட வாதன் சங்கத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொண்டிருந்தான். இப்படிக் கொஞ்ச நேரம் சம்பாஷணை நடைபெற்றது. திடீரென்று அந்தப் புதிய மனிதன் புன்சிரிப்புடன் எழுந்து நின்று தன்னை இன்னானென்று அறிமுகப்படுத்திக் கொண்டான். மேஜையைச் சுற்றியிருந்த எல்லாருடைய முகங்களும் வெளுத்தன. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இவர் யார்? அரசாங்க ஒற்றன்! தன்னுடன் அனைவரும் வருமாறு அவன் கேட்டுக் கொண் டான். வெளிப் பக்கத்தில் சில போலீஸார் இவர்களை அழைத்துக் கொண்டு போகக் காத்துக் கொண்டிருப்பதாகவும், ஒரு வண்டி யிலே செல்லலாமென்றும், இவர்களைப் பின் தொடர்ந்து வரத் தான் மிகுந்த சந்தோஷமுள்ளவனாக இருப்பதாகவும் பணிவோடு - ஆனால் கள்ளப் பார்வையோடு - தெரிவித்தான். 3. சிறையில் காப்டன் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதபா, கான்டாண்டி நோபிள் சிறையில் கைதியாகிக் கிடக்கிறான். ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறை! அனைவரையும் சந்திக்க விட்டால், சிறையிலேயே புரட்சியை உண்டு பண்ணினால் என்ன செய்வது? முதபாவின் அறையில் எலி உபத்திரவம் அதிகம்; இவன் உடம்பெல்லாம் பூச்சிக்கடி. தன் தலையில் என்ன எழுதியிருக்கிறதென்று தெரியாத நிலையில் தனிமையாக உழன்று கொண்டிருந்தான். ஜுபேதாவுக்கு இந்தச் செய்தி எப்படியோ எட்டிவிட்டது. சாலோனிகாவிலிருந்து ஒடி வந்தாள் கான்டாண்டி நோபிளுக்கு. மூடிதரித்த முகம்; தளர்ந்த நடை. ஆறாக யிருதடங் கண்ணும் அஞ்சன வெம்புனல் சோர, என் மகனெங்கே? என் முஸ்தபா எங்கே? என்று வாய் அரற்றிக் கொண்டிருக்கிறது. கான்டாண்டி நோபிளிலுள்ள ஒவ்வொர் அரசாங்கக் காரியாலயத்தின் படிகளிலும் ஏறி ஏறி இறங்கினாள். யாரைப் போய்க் கேட்டாலும், எந்த உத்தியோகதரைச் சலாம் செய்தாலும் தோளைத்தான் அசைத்துக் கொடுக்கிறார்களே தவிர, வாயிலிருந்து ஒரு வார்த்தையாவது வர வில்லை. ‘என் முஸ்தபா உயிரோடு இருக்கிறானா? வயிற்றுக்குள்ளே துக்க அலை மோத இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டே, பாபர கடலை நோக்குவாள். அலை கடலே! எத்தனையோ பேரை விழுங்கி ஏப்பம் விட்டது போல் என் புத்திர ரத்தினத்தையும் விழுங்கி விட்டாயா? என்பாள். சுல்தானுக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்தவர்கள், இந்தக் கடலிலே ரகசியமாக மிதக்கவிடப் பட்டார்கள் என்பது இவளுக்குத் தெரியும். இப்படி வாரங்கள் பல சென்றன. அங்கே முதபா, சிறைக் கதவுக் கம்பிகளைப் பிடித்துப் பிடித்துக் கையும் இரும்பாவிட்டது. எதிரே தோன்றுகிற சுல்தானுடைய அரண்மனையைப் பார்த்துப் பார்த்துக் கண்ணும் இமை கொட்ட மறுத்துவிட்டது. இங்கே ஜுபேதா அழுது அழுது, பார்வை மழுங்கி விட்டது. ஏறக்குறைய கால் குருடாகி விட்டாள். அவளுடைய கண்மணி எங்கே என்று தெரியவில்லை. அவள் கண் போனாலென்ன? காப்டன் உடையோடு அவனைப் பார்க்க வேண்டுமென்று அவள் கண்கள் எவ்வளவு ஆவலாயிருந்தன? எப்பொழுது அந்த ஆவல் தீர வில்லையோ, இனி அவை புண்ணாகிப் போனால்தானென்ன? சிறையிலே யுள்ளவர்களுக்கு என்ன தண்டனை? இது சம்பந்த மாகச் சுல்தானுடைய உத்தரவு பிறந்தது. தவறிழைத்தவர்கள், சுலபமாகத் திரும்பி வர முடியாதபடி சாம்ராஜ்யத்தின் ஓர் ஒதுக்குப் புறத்திற்கு உத்தியோகதர்களாக அனுப்பப்பட வேண்டும். ஏறக்குறைய தேசப் பிரஷ்டம் செய்த மாதிரி. இந்த உத்தரவு பிறந்த இருபத்து நான்கு மணி நேரத்திற்குள், முதபா, சிறையிலிருந்து கப்பலடிக்கு அழைத்துச் செல்லப்பட்டான். சிறிது தூரத்தில ஜுபேதா பின் தொடர்ந்து சென்றாள். மகனையும் தாயையும் சந்திக்கவிடவில்லை அதிகாரிகள். முதபாவை ஏற்றிக்கொண்டு கப்பலும் நகர்ந்து விட்டது. எங்கே போகிறதென்று தெரியாது கரையிலே இருந்த ஜுபேதாவுக்கு. அரண்மனைக்குப் பின்னால் கப்பல் மறைகிற வரை, அந்தக் திசையையே நோக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் இதே இடத்தில் பின்னொரு காலத்தில் தன் மகனுக்கு ஓர் உருவச்சிலை அமைக்கப் படும் என்று இவளுக்கு அப்பொழுது எப்படித் தெரியும்? 4 ரகசிய முயற்சிகள் 1. போர் வீரன் வாழ்க்கை டமாக என்பது சிரியா நாட்டின் தலை நகரம். இஃது அப்பொழுது துருக்கி சாம்ராஜ்யத்தின் ஆதீனத்திற்குட்பட்டு இருந்தது. இங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ராணுவத்தில் ஒரு காப்டனாக இருந்து வேலை பார்க்கும்படி அனுப்பப்பட்டான் முதபா கெமால். இவன் இங்குச் சென்ற சமயத்தில் ட்ரியுஸெ என்ற ஒரு வகை ஜாதியினர், கலகத்திற்குக் கிளம்பியிருந்தார்கள். இந்தக் கலகத்தை அடக்குமாறு கெமாலுக்கு உத்தரவு கிடைத்தது. இதை இவன் திறமையாக அடக்கினான். இந்தப் போராட்டத்தின்போது, முதபா, பாலதீனம், சிரியா நாடுகளிலுள்ள மூலை முடுக்குகளையெல்லாம் தெரிந்து கொண்டான். தவிர, ஒரு போர் வீரனுடைய வாழ்க்கை எப்படிப் பட்டது என்பதை அனுபவபூர்வமாக அறிந்து கொண்டான். திறந்த வெளிகளிலே படுப்பதும், குண்டுகளின் சப்தத்தை அலட்சியமாகக் கேட்பதும், பல்வேறு சுபாவங்களுடைய மனிதர்களோடு பழகுவ தும் இவனுக்குச் சர்வ சாதாரண சம்பவங்களாகிவிட்டன. கலகம் ஒருவாறு அடக்கப்பட்டது. கெமால் தன்னுடைய வாதன் சங்கத் திற்கு ரகசியமாக வேலை செய்ய ஆரம்பித்தான். ராணுவத்தில் சேவை செய்து கொண்டிருந்த மற்ற உத்தியோகதர்களுக்கும் இவனைப் போலவே தீவிரமான எண்ணங்கள் இருந்தன. இவர்கள் முதபாவைத் தலைவனாகக் கொண்டு, வாதன் சங்கத்திற்குக் கிளை தாபனமொன்றை டமாக நகரத்தில் நிறுவ ஏற்பாடு செய்தனர். பாலதீனத்திற்கும் சிரியாவுக்கும் தலைமைச் சங்கமாக இது இருந்து கொண்டு, மேற்படி இரண்டு நாடுகளிலும் தீவிரப் பிரசாரம் செய்ய வேண்டுமென்று தீர்மானித்தனர். இந்தச் சங்கம் எதிர் பார்த்தபடி பலனளிக்கவில்லை. ஏனென்றால், ராணுவ உத்தி யோகதர்களிடத்தில் ஆதரவு இருந்ததே தவிர, மற்றப் போர் வீரர்களிடத்திலும் பொது ஜனங்களிடத்திலும் ஆதரவு ஏற்பட வில்லை. துருக்கிய தேசீய இயக்கத்திற்கு, அராபியர்கள் விரோதமா யிருப்பார்கள் என்பதை இந்தக் காலத்திலே கெமால் நன்கு தெரிந்து கொண்டுவிட்டான். இதனால் இங்கிருந்து சுல்தானுக்கு விரோத மாக எவ்வித புரட்சியையும் உண்டுபண்ண முடியாது என்ற முடிவுக்கு வந்தான். சாலோனிகாவுக்குச் சென்று அங்கிருந்து தீவிரமாக வேலை செய்ய வேண்டுமென்ற எண்ணம் இவனுக்கு இக்காலத்தில் உண் டாயிற்று. ஏனென்றால் துருக்கிய ராணுவத்தின் மூன்றாவது பகுதிப் படையின் தலைமை தானம் இந்த சாலோனிகாதான். இந்தப் படையிலேயே, தீவிர மனப்போக்குடைய ராணுவ உத்தியோக தர்கள் இருந்தார்கள். தவிர, இந்தப் படைக்கு ஒரு நல்ல பெயரும் இருந்தது. துருக்கி சாம்ராஜ்யத்தின் எந்த மூலையிலிருக்கிற ராணுவ உத்தியோகதனும், தன்னை சாலோனிகாவுக்கு மாற்றிக் கொள்ளவே விரும்பினான். கெமால், சாலோனிகாவுக்கு எப்படிப் போவது? தன்னை அந்த இடத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டுமானால், யாராவது ஒரு பெரிய ராணுவ உத்தியோகதனுடைய சிபார்சும், ஆதரவும் இருக்க வேண்டுமல்லவா? சாலோனிகாவில் பீரங்கிப் படைக்குத் தலைவ னாக ஷுக்ரி பாஷா என்றொருவன் இருந்தான். இவன் கெமாலுக்கு வேண்டியவன். சுல்தானுடைய அருளுக்குப் பாத்திரனாகவும் இருந்தான். இவனைப் பிடித்தால் தன் காரியம் ஆகுமென்று கருதிய கெமால், தன்னை சாலோனிகாவுக்கு மாற்றிக்கொள்ளும்படி அவனுக்கு எழுதினான். அதில் தேசீய புனருத்தாரண விஷயத்தில் தான் கொண்டிருந்த கருத்துக்களையும் ஒளிவு மறைவின்றிக் குறிப் பிட்டு இருந்தான். அநேக வாரங்கள் கழிந்தன. ஷுக்ரி பாஷாவிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை. இந்தச் சமயத்தில், டமாகஸிலிருந்து ஜாபா என்ற துறைமுகத்திற்குக் கெமாலை மாற்றியிருப்பதாக ஓர் உத்தரவு கிடைத்தது. அதற்காகத் தன் சாமான்களையெல்லாம் கட்டி எடுத்துக் கொண்டு, ஜாபாவுக்குப் போவதற்குத் தன் விடுதி யிலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது முன்பின் தெரியாத ஒருவன், இவன் கையில் ஒரு துண்டுக் காகிதத்தைக் கொண்டுவந்து திணித்தான். அதில் என்ன எழுதியிருந்தது? சாலோனிகாவுக்கு வர தீவிரமாகப் பிரயத்தனப்படு. இங்கே உனக்கு ஆதரவு கிடைக்கும். 2. மாறு வேஷம் எந்தவிதமாகவும் அர்த்தம் செய்துகொள்ளக்கூடிய இந்த வாக்கியங்கள், தன் விருப்பத்தைப் பூர்த்தி செய்யக் கூடியனவாக இருக்கின்றனவென்று கெமால் கருதினான். ஷுக்ரி பாஷாவிட மிருந்து ரகசியமாக வந்தது இந்தக் குறிப்பு என்பதையும் அறிந்து கொண்டு விட்டான். உடனே தன் ஜாபா பிரயாணத்தை சாலோனிகா பிரயாணமாக மாற்றிக்கொண்டான். ஜாபா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துருக்கியப் படைகளின் தளகர்த்தனாக அஹமத் பே என்ற ஒருவன் இருந்தான். இவன் வாதன் சங்கத்து அங்கத்தினன்; கெமாலின் அந்தரங்க நண்பன். இவன், கெமால், சாலோனிகா செல்வதற்கு உடந்தையா யிருந்தான். டமாகஸிலிருந்து ஜாபா வுக்கு மாற்றப்பட்ட கெமால், ராணுவ அலுவல்களைக் கவனிக்கிற தில்லையென்றும், ஜாபாவிலேயே அவன் இல்லையென்றும், கான்டாண்டி நோபிள் அதிகாரிகள் அறிந்து காரணங் கேட்பார்க ளானால், தான் முன்னெச்சரிக்கை செய்து வரவழைத்துக் கொள்வ தாக - அஹமத் பே, முதபாவுக்குத் தெரிவித்தான். முதபா ஓர் ஐரோப்பிய யாத்திரிகன் மாதிரி வேஷந்தரித்துக்கொண்டு புறப் பட்டுவிட்டான். பெயரைக்கூட மாற்றிக் கொண்டான். அந்தப் புனை பெயரால் பிரயாண அனுமதிச் சீட்டுப் பெற்று, நேரே எகிப்து சென்று அங்கிருந்து ஆதென் வழியாக சாலோனிகாவை அடைந்தான். ஓரிடத்திலே உத்தியோகஞ் செய்கிறவன், அதிலும் ராணுவ உத்தியோகதனாக இருக்கப் பட்டவன், மேலதிகாரி களுக்குத் தெரியாமல் வேறோர் ராணுவப்படை தங்கியிருக்குமிடத் திற்கு மாறு வேஷத்தில் செல்வதென்றால் எவ்வளவு துணிச்சல் இருந்திருக்க வேண்டும்? அதுவும் முதபா சாலோனிகாவுக்கு ராணுவ அலுவலாகச் செல்லவில்லை; சுல்தானுக்கு விரோதமான புரட்சி இயக்கத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே செல்கிறான்! சாலோனிகா வந்து சேர்ந்தான் முதபா. அன்று மாலையி லேயே ஷுக்ரி பாஷாவின் முன்னர் ஆஜரானான். இவனைப் பார்த்தவுடன் ஷுக்ரி பாஷா திகைத்துப் போனான். உத்தியோக முறையில் சாலோனிகாவுக்கு மாற்றிக்கொள்ளப் பிரயத்தனப்பட வேண்டுமென்று தான் இவன் முதபாவுக்கு ஜாடையாகத் தெரிவித் திருந்தானே தவிர, இப்படி உத்தரவு பெறாமல் மாறு வேஷம் பூண்டு ஓடி வந்து விடுமாறு கூறவில்லை. அதிகாரிகள் துப்பு விசாரித்து, முதபா சாலோனிகாவில் இருப்பதாகக் கண்டு பிடித்துவிட்டார் களானால், ராணுவத்திற்கே ஒரு கேவலமான பழிச் சொல்லன்றோ ஏற்பட்டுவிடும்? ஆகையால், முதபா விஷயத்தில் தான் ஒன்றுஞ் செய்யமுடியாதென்று சொல்லிவிட்டான். ஆனால் உடனே திரும்பிப் போய்விடு, உத்தியோக தலமாகிய ஜாபாவுக்கு என்று கூறவில்லை. இவனுடைய துணிச்சலும், இவனது மிடுக்கான பார்வையும், பேசுகிற கண்டிப்பும் ஷுக்ரி பாஷாவின் உள்ளத்தில் ஒரு கலக்கத்தை உண்டு பண்ணி விட்டன. அதிக நம்பிக்கையோடு வந்த முதபா ஷுக்ரி பாஷாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டுச் சோர்வு கொண்டான். ஆனாலும், தன் சொந்த முயற்சியினாலேயே ரகசியச் சங்கங்களை ஏற்படுத்தி, நாட்டிலே புரட்சியை உண்டுபண்ண வேண்டுமென்று தீர்மானித்து அதற்காக வேலை செய்தான். பல நண்பர்களிடம் தன் கருத்தைத் தெரிவித்து, அவர்களைத் தன் கொள்கைக்கு இழுக்கப் பார்த்தான். ஆனால் யாரும் இவனுக்குப் பிடி கொடுத்துப் பேசவில்லை. இவனோடு நேர்முகமாகப் பேசவும் துணிவு கொள்ளவில்லை. இன்றைக்கு, நாளைக்கு என்று கழித்துக் கொடுத்து வந்தார்கள். இவைகளுக்கெல்லாம் காரணம் என்னவென்பது இவனுக்குப் புரியவில்லை. ஆனால் தனக்குப் பின்னால் யாரோ துப்பறிவதாக ஓர் எண்ணம் தட்டுப்பட்டுக் கொண்டேயிருந்தது. யாரோடு பேசி னாலும், தன்னைப் பற்றி இல்லாத பொல்லாத கேள்விகளை யெல்லாம் கேட்கிறார்கள். ஏன் இப்படி என்ற சந்தேகம் இவனை அடிக்கடி உறுத்திக் கொண்டிருந்தது. கடைசியில் ஒருநாள், இவனுக்குக் காரணம் தெரியவந்தது. இவனுடைய பள்ளிக்கூடத் தோழன் ஒருவன் - இப்பொழுது ராணுவ சேவையில் இருக்கிறவன், மேலதிகாரிகளின் உத்தரவுக்கிணங்க, முதபாவோடு நெருங்கிப் பழகிக் கொண்டு வந்தான். இவன் ஒரு நாள், முதபாவைத் தனியாக அழைத்துக் கொண்டுபோய், கமிட்டியில் உன்னை ஓர் அங்கத்தினனாகச் சேர்த்துக்கொள்ள இசைந்துள்ளார்கள் என்று தெரிவித்தான். இந்தக் கமிட்டியின் பெயரை இப்பொழுதுதான் முதல் முதலாக முதபா கேள்விப்பட்டான். இந்தக் கமிட்டியின் பெயர் ஐக்கிய - முன்னேற்றக் கமிட்டி இதைப் பற்றி இங்கே தெரிந்து கொண்டு விடுதல் நல்லது. 3. ஐக்கிய முன்னேற்றக் கமிட்டி இருபதாவது நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்து துருக்கிய மக்களிடையே ஒரு நவீன உணர்ச்சி ஏற்பட்டது. சுற்றுப்புறமுள்ள நாடுகளெல்லாம் முன்னேற்றம் என்ற சொல்லை முழக்கிக் கொண்டு, அரசியல், பொருளாதாரம், இலக்கியம் முதலிய எல்லாத் துறைகளையும் புதிய பார்வையோடு பார்த்தன. இந்த முழக்கம் துருக்கியில் மட்டும் கேளாமல் இருக்குமா? துருக்கிய இளைஞர் களும், மற்ற நாட்டார்களைப் போல் தாங்களும் சுதந்திரமாக எண்ணவும், எண்ணியபடி செய்யவும் விரும்பினார்கள். மதத்தின் பெயராலும், சம்பிரதாயங்களினாலும் கட்டுப்பட்டிருக்க இவர்கள் விரும்பவில்லை. தவிர இவர்களில் பலர், பிரான். ஜெர்மனி முதலிய நாடுகளுக்குச் சென்று கல்வி பயின்றவர்கள். அங்கிருந்து திரும்பி வந்து தங்கள் நாட்டின் கீழான நிலைமையைப் பற்றிக் கவனிக்கிறபோது பெரிதும் துக்கித்தார்கள். தங்கள் நாட்டு மக்களும் மற்ற நாட்டாரைப்போல் தலை நிமிர்ந்து நடக்க வேண்டு மென்று விரும்பினார்கள். ஆனால், அப்பொழுது அரச பீடத்திலே வீற்றிருந்த சுல்தான் அப்துல் ஹமீது இவைகளையெல்லாம் விரும்ப வில்லை. பரம்பரையாகச் சுல்தான்கள் செலுத்தி வந்த சுயேச் சாதிகார ஆட்சியானது நிலைத்திருக்க வேண்டுமானால் இந்த மேனாட்டு எண்ணங்கள், துருக்கிய ஜன சமுதாயத்தின்மீது படியக் கூடாதென்பது அப்துல் ஹமீதின் எண்ணம். தேசீய உணர்ச்சியைக் கிளப்பிவிடுகிறவர்கள் அத்தனை பேரும் தேசத்துக்கும், சுல்தா னுக்கும் விரோதிகளாகக் கருதப்பட்டார்கள். தந்தையர் நாடு என்று பொருள்படக்கூடிய வாதன் என்ற சொல்லைக் கூட உபயோகிக்கக்கூடாதென்பது சுல்தானுடைய உத்தரவு. ஏனென் றால், தேசீய உணர்ச்சி என்பது ஒரு முறை சமுதாயத்திற்குள் பிரவே சித்து விடுமானால், அது நாளாவட்டத்தில் அந்தச் சமுதாயத்தையே சீர்குலைத்து விடுமல்லவா! இதனால் இந்தத் தேசீய உணர்ச்சியை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும். இது சுல்தானின் தீர்மானம். இதனால், காலத்திற்குத் தகுந்தபடி செய்யப்பட வேண்டிய சில சீர்திருத்தங்கள் கூட செய்யப்படாமல் நின்றுவிட்டன. பள்ளிக் கூடங்களில் நவீன விஞ்ஞான சாதிரங்கள் போதிக்கப்பட்டன வென்பது வாதவம். ஆனால் மாணாக்கர்களுக்கு அவை பயனில வாகச் செய்யப்பட்டன. ராணுவத்தைச் சீர்திருத்திப் புதிய முறையில் அமைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் வெளி நாடுகளிலிருந்து சில ராணுவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டார்கள் என்பது உண்மை. ஆனால் அவர்கள் வேலையெல்லாம் சம்பிரதாயமான சில காரியங்களைச் செய்வதோடு நின்றுவிட்டது. வெளிநாடு களிலே பயிற்சிக்காக அனுப்பப் பெற்ற துருக்கிய ராணுவ வீரர்கள் திரும்பி வந்து சில சீர்திருத்தங்களைச் செய்ய முனைகிற சமயத்தில், தந்திரமாக ராஜ்யத்தின் மூலைமுடுக்கான பிரதேசங்களுக்கு அனுப்பப் பெற்றார்கள். யுத்தக் கப்பல்கள் துறைமுகங்களில் துருப் பிடித்துக் கிடந்தன. இந்த நிலையில், கொஞ்சம் தேசீய உணர்ச்சி யுடையவர்கள் நாடு கடத்தப்பட்டதில் என்ன ஆச்சரியம்? இன்னுஞ் சிலர், தேசத்தின் கேவல நிலைமையைக் சகிக்க முடியாதவர்களாகித் தாங்களே வெளி நாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள். இத்தகையவர் களில் சிலர் ஒன்றுசேர்ந்து பாரி நகரத்தில் ஒரு ரகசியச் சங்கம் கண்டார்கள். இவர்களிற் பெரும்பாலோர் நூலாசிரியர்கள், பத்திரிகாசிரியர்கள், பள்ளிக்கூட ஆசிரியர்கள், சில மாணாக்கர்கள் முதலியோராவர். அரசியல் இயக்கங்களில் நேர்முகமான அனுபவம் ஒன்றும் இவர்களுக்குக் கிடையாது. இதனால் இவர்களுடைய தத்துவங்கள் தீவிரமாயிருந்தன; லட்சியமும் தீவிரந்தான். இவர்கள் எதற்கும் பிரெஞ்சு அரசியல் முறைகளையே முன் மாதிரியாக வைத்துக் கொண்டு நடந்தார்கள். இந்தக் கூட்டத்திற்கு அஹமத் ரிஜா பே என்ற ஒருவன் தலைவனாயிருந்தான். இவன் நல்ல படிப்பாளி. ஆனால் இவன் துருக்கியிலிருந்து வெளியேறி நீண்ட நாட்களாகி விட்டபடியால் துருக்கிய சமுதாயத்தின் ஜீவநாடி மீது இவன் கை இருக்கவில்லை. மேலே கூறப்பட்ட இக்கூட்டத்திற்கு பாரி கமிட்டி என்று பெயர். இந்தக் கமிட்டிக்குத்தான் செல்வாக்கு அதிகம். துருக்கியின் பல பாகங்களிலும் இதற்குக் கிளைக் கமிட்டிகள் இருந்தன. இந்தக் கமிட்டி மெஷ்வெர்ட் என்ற பெயருடன் ஒரு பத்திரிகையைப் பாரிஸில் வெளியிட்டு அவனை ரகசியமாகக் கான்டாண்டி நோபிளுக்கு அனுப்பி, அங்கிருந்து துருக்கியின் முக்கியமான ஊர்களிலேயுள்ள மேற்படி கமிட்டியின் கிளை தாபனங்களுக்கு அனுப்பி வந்தது. இந்த பாரி கமிட்டி மாதிரி இன்னொரு ரகசியச் சங்கம் இருந்தது. இதற்குச் சுல்தான் அப்துல் ஹமீதின் சகோதரி மகனான ஜெபாஹெத்தீன் தலைவனாயிருந்தான். இந்தச் சங்கத்தின் தலைமைக் காரியாலயம் பெர்லின் நகரத்தில் இருந்தது. இவர்களை மிதவாதிகள் என்ற சொல்லலாம். மாஜி மந்திரிகள், உபகாரச் சம்பளம் பெற்றிருக்கிற உத்தியோகதர்கள் முதலிய அரசியல் அனுபவதர்கள் இதில் அங்கத்தினர்களாயிருந்தார்கள். ஆனால் இவர்களுக்கு எவ்விதமான வேலைத்திட்டமும் இல்லை. தற் போதைய நிருவாகத்தைச் சீர்திருத்தி, ஜெர்மனியிலிருக்கிற மாதிரி அரசாங்கத்தை அமைத்துவிட வேண்டுமென்பது இவர்களுடைய நோக்கமாயிருந்தது. இவர்களுக்கு நாட்டில் அதிகமான செல் வாக்குக் கிடையாது. இந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்த முக்கியதர் சிலர், இரண்டையும் ஒன்று சேர்த்து, தனிக் கட்சியாக அமைக்க முயன்றனர். இதன் விளைவே, ஐக்கிய முன்னேற்றக் கமிட்டி . இது, துருக்கிய இளைஞர் கமிட்டி யென்றும், துருக்கிய இளைஞர் கட்சி யென்றும், துருக்கிய இளைஞர் இயக்கம் என்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்டது. மேலே கூறப்பட்ட பாரி கமிட்டியும் பெர்லின் கமிட்டியும் ஒன்று சேர்ந்து விட்டன வாயினும் இருவருக்கும் இந்த ஐக்கிய முன்னேற்ற கமிட்டி கூட்டங்களில் அடிக்கடி மனதாபங்கள் ஏற்பட்டு வந்தன. பாரி கமிட்டியார் அறிவுத் துறையிலே மட்டும் நின்றுகொண்டு தேசத்தில் புரட்சியை உண்டாக்க வேண்டுமென்று விரும்பினர். பெர்லின் கமிட்டி யார் ராணுவ முறைகளைப் பின்பற்றி புரட்சியை நடத்தினால்தான் வெற்றி கிடைக்கும் என்று கருதினர். ஆனால் பெர்லின் கட்சிக்கே அதிக செல்வாக்கு இருந்தது. இந்த ஐக்கிய முன்னேற்ற கமிட்டியின் மத்திய தாபனம் பாரி நகரத்திலேயே இருந்தது. இதன் கிளை தாபனங்கள், சாலோனிகா உள்பட எல்லா ஜில்லா தலைநகரங்களிலும் இருந்தன. இவற்றில் சாலோனி காவிலிருந்த கிளைக் சங்கத்திற்குத்தான் அதிக செல்வாக்கு இருந்தது. இந்தக் கமிட்டியார், ஒரு புரட்சியை உண்டுபண்ணி அதன் மூலம் அரசாங்க நிருவாகத்தைக் கைப்பற்றிக்கொள்ளவேண்டு மென்று வேலை செய்தனர். இந்த விஷயத்தில் இவர்கள் மிகவும் ரகசியமாகவும் வேலை செய்ய வேண்டியிருந்தது. ஏனென்றால் சுல்தானுடைய ஒற்றர்கள் எங்குப் பார்த்தாலும் இருந்தார்கள். இவர்கள் பணத்தை இறைத்து நல்லவர்கள் மனத்தில் கூட துராசை களைக் கிளப்பி விட்டார்கள். ஆகவே இந்தக் கமிட்டியார் புதிதாகச் சேரவரும் ஒவ்வோர் அங்கத்தினரையும் அதிக ஜாக்கிரதையாக விசாரித்து, பிறகே சேர்த்துக் கொண்டார்கள். இந்தக் கமிட்டியில் முதபா ஓர் அங்கத்தினனாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டான். ஆனால் இவனுக்குக் கமிட்டியாருடைய மனப்போக்கு, அவர்கள் கொண்டிருக்கிற லட்சியம் முதலிய ஒன்றுமே பிடிக்கவில்லை. தவிர இவர்களுக்குள்ளே அபிப்பிராய வேற்றுமை களும் கட்சிப் பிணக்குகளும் நிறைய இருந்தன. இவர்களால் நிரந்தர மான ஒரு நன்மையை நாட்டிற்குச் செய்ய முடியாதென்று முதபா நன்கு கண்டு கொண்டான். தவிர, மேற்படி கமிட்டியிலுள்ளவர்கள் ஆடம்பரத்திலே திளைத்திருந்தார்கள்; பட்டம் பதவிகளில் மோகங் கொண்டிருந்தார்கள். மற்றும், முதபாவைத் தங்கள் அந்தரங்கக் கோஷ்டியில் இவர்கள் சேர்த்துக் கொள்ளவில்லை. 4. டமாக நகரத்தில் இந்த நிலைமையில் முதபா தயங்கிக்கொண்டிருக்கையில், இவன் தற்பொழுது சாலோனிகாவிலிருக்கிறானென்றும், தனது உத்தியோக தலமான ஜாபாவில் இல்லையென்றும் எப்படியோ கான்டாண்டிநோபிள் அதிகாரிகளுக்குத் தெரிந்துவிட்டது. உடனே இவனைக் கைது செய்து தலைநகருக்கு அனுப்பும்படி சாலோனிகாவுக்கும் ஜாபாவுக்கும் உத்தரவு பறந்தது. சாலோனிகாவி லுள்ள ராணுவத் தலைவனுக்கு உதவி உத்தியோகதனாக ஜெமில் பே என்ற ஒருவன் இருந்தான். இவன் முன்னர் கான்டாண்டி நோபிளில் வாதன் சங்கத்து அங்கத்தினாயிருந்தான். முதபாவுக்கு வேண்டிய நண்பன். இவன், தனக்கு கிடைத்துள்ள இந்த உத்தரவை இரண்டு நாள் வரை கூடுமானால் தாமதித்து வைக்கலாமென்றும், ஆகவே உடனே புறப்பட்டு ஜாபாவுக்குச் சென்று விடுதல் நல்ல தென்றும் கூறினான். அப்படியே முதபாவும் பழைய மாதிரி மாறு வேஷம் பூண்டு ஜாபாவுக்குச் சென்றான். ஜாபா துறைமுகத்தை அடைவதற்கு முன்னரேயே, அங்கே தளகர்த்தனாயிருந்த அஹமத் பே முதபாவைக் கப்பலில் சந்தித்து ராணுவ உடைகளைக் கொடுத்து, கைதி செய்யுமாறு கான்டாண்டி நோபிளிலிருந்து கிடைத்திருக்கிற உத்தரவையும் காட்டினான். இதனின்று தப்பு விப்பது எப்படி என்பதைப்பற்றி இரண்டு நண்பர்களும் சிறிது யோசித்தார்கள். நல்ல வேளையாக இந்தச் சமயத்தில், துருக்கிய அரசாங்கத்திற்கும் பிரிட்டிஷாருடைய நிருவாகத்திற்குட்பட்ட எகிப்திய அரசாங்கத்திற்கும் எல்லைப்புறத் தகராறு ஏற்பட்டிருந்தது. அரேபியா முழுவதும் எகிப்துக்கே சேரவேண்டுமென்றும், செங் கடலில் வடகிழக்கு மூலையிலிருக்கிற அகாபா என்ற துறைமுகமும் தங்களுடைய சுவாதீனத்திலேயே இருக்கவேண்டுமென்றும் பிரிட்டிஷார் கூறினர். ஆனால் துருக்கி, இந்தத் துறைமுகம் தன் னுடைய சுவாதீனத்திலிருந்து கை நழுவிப்போகச் சிறிதும் விரும்ப வில்லை. இதனால், எந்தச் சமயத்திலும் யுத்தம் மூளலாம் போலிருந் தது. இதனால் எல்லைப்புறத்தில், படைகள் யுத்த சந்நாகத்தோடு இருக்கவேண்டுமென்று துருக்கிய அரசாங்கத்தார் உத்தரவிட்டிருந் தார்கள். முதபா, நேரே இந்தப் படைகள் இருக்கும் பேர் ஷேபா என்ற இடத்திற்குச் சென்றான். இங்கே இவன் நண்பனும் அரசியல் சகபாடியுமான லூப்டி பே தளகர்த்தனாயிருந்தான். அவன் கீழ் ஒரு பகுதிச் சேனைத் தலைவனாகப் போய் அமர்ந்தான் முதபா. ஜாபா தளகர்த்தனான அஹமத் பே, முதபாவின் ராணுவ சேவையைப் பற்றித் தவறுதலான தகவல்கள் அரசாங்கத்தாருக்குக் கிடைத்திருக்கக் கூடுமென்றும் அவன் பல மாதங்களாக, துருக்கிய எல்லைப்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படையிலே இருக்கிறானென்றும் கான்டாண்டிநோபிளுக்குத் தெரிவித்து விட்டான். அரசாங்கத்தார் இந்தத் தகவல் சரிதானாவென்று லூப்டி பேயைக் கேட்க, அவனும் ஆமாம் என்று சொல்லிவிட்டான். அகாபா துறைமுகத்தைப் பற்றிய சச்சரவு துருக்கியர்களுக்குச் சாதகமாக முடிந்தது. முதபா டமாக நகருக்கு வந்து சேர்ந்தான். கொஞ்ச நாளைக்கு, தன் பெயர் வெளியிலே அடிபடாத வகையில் அடங்கியிருப்பதென்று தீர்மானித்தான். ராணுவத்தில் லெப்டினெண்ட் மேஜர் பதவிக்கு இவன் உயர்த்தப்பட்டான். இங்ஙனம் சுமார் ஒரு வருஷ காலம் டமாக நகரிலேயே கழித்தான் முதபா. 5 மாற்றமும் ஏமாற்றமும் 1. மாஸிடோனியாவில் சலசலப்பு ஒரு வருஷம்! எவ்வளவு நீண்ட காலம்? கர்ம வீரர்களுக்கு இஃது ஒரு யுகம்போலல்லவோ? இந்த ஒரு வருஷத்தை, டமாக நகரத்தில், உருப்படியான வேலையொன்றுஞ் செய்யாமல் எப்படித் தான் கழித்தானோ கெமால்? தன்னை சாலோனிகாவுக்கு மாற்றும் படி மேலதிகாரிகளை எழுதிக் கேட்டான். இந்த ஒரு வருஷம் கழித்து, சாலோனிகாவிலிருந்த இவனுடைய சகாக்கள் இப்பொழுது இளைஞர் இயக்கம் வலுத்து நிற்கிறதென்றும், முதபாவின் சேவை அவசியமென்றும் இவனுக்குத் தெரிவித்திருந்தார்கள். இதன் பொருட்டு இவனுடைய மாற்றத்திற்கு, மறைமுகமாக வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்கள். அப்படியே இவன் சாலோனிகாவிலிருந்து மூன்றாவது படையின் தலைமைக் காரியாலயத்திற்கு மாற்றப்பட்டான். காரியாலயத்திலேயே வேலை செய்வதோடு மாஸிடோனியா ரெயில்வேக்களைத் தணிக்கை செய்கிறவேலையும் இவனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வேலை இவனுக்கு நிரம்ப அனுகூலமா யிருந்தது. ஐக்கிய முன்னேற்றக் கமிட்டியின் சாலோனிகா கிளைக்கும் மற்றக் கிளைகளுக்கும் ஒரு தொடர்பு ஏற்படுத்தி வைக்க இந்த ரெயில்வே சுற்றுப் பிரயாணம் மிகவும் அனுகூலமாயிருந்தது. இந்தச் சமயத்தில் மாஸிடோனியாவில் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டது. இங்கே பல ஜாதியார் வசித்தனர். இந்த மாஸிடோனி யாவைச் சுற்றியுள்ள பால்கன் நாடுகள், இதனைக் கபளீகரித்துக் கொள்ள முயன்றன. இதனால் உள்நாட்டுச் சண்டை வலுத்தது. மாஸிடோனியா, துருக்கியின் ஆதிக்கத்துக்குப்பட்டிருந்த போதிலும், அதனை அந்நியர் களுடைய ஆசைப் பிடிகளினின்று விடுவிக்க, துருக்கிய அரசாங்கத் தினால் முடியவில்லை. இதனால் ஜரோப்பாவி லுள்ள முக்கிய வல்லரசுகள் ஒன்றுகூடி, சர்வதேசப் படையொன்றை மாஸிடோனி யாவில் நிறுத்தி வைப்பதென்றும், இத்தலி இதனை மேற்பார்வை செய்வதென்றும் ஏற்பாடு செய்தன. இந்த ஏற்பாட் டுக்கு முனைந்து நின்றது பிரிட்டன். ஏனென்றால், ஐரோப்பிய மத்திய வல்லரசுகள், அதாவது ஜெர்மனி, ஆதிரியா - ஹங்கேரி முதலியன - தங்கள் திருஷ்டியை மத்தியதரைக் கடலின்மீது செலுத்தாமலிருக்க, இந்த மாஸிடோனியா ஒரு தடையாயிருக்கு மல்லவா? ஆனால் துருக்கி சுல்தான் இந்த ஏற்பாட்டுக்கு இணங்க வில்லை. தன் சாம்ராஜ்ய உரிமைகளை விட்டுக்கொடுத்தது போலாகு மல்லவா? இதற்காக, ஐரோப்பிய வல்லரசுகள், தங்கள் கப்பற் படை களை மாஸிடோனியா துறைமுகங்களிலே கொண்டு வந்து நிறுத்தி, துருக்கியைப் பயமுறுத்திப் பார்த்தன. ஆனால் இதனிடையில் இந்த வல்லரசுகளுக்குள்ளேயே பிணக்கு ஏற்பட்டு விட்டது. பின்னர், பால்கன் பிரதேசங்கள், மாஸிடோனியாவில் கொண்டாடுகிற உரிமைகளைப் பற்றித் தீர்ப்புச் சொல்ல சர்வதேச நீதி தலம் ஒன்றை ஏற்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டன. இதனை ருஷ்யா மட்டும் எதிர்த்து நின்றது. துருக்கி இந்த ஏற்பாட்டுக்கும் இணங்க விரும்பவில்லை. ஆனால் பகிரங்கமாக இதனை எதிர்த்துப் போராடவும் தைரியமில்லை. இதைப் பற்றி வல்லரசுகளுக்கு எவ் விதமான முடிவும் சொல்லாமல் காலதாமதம் செய்து கொண்டே வந்தது. தன்னுடைய பலவீனத்தினால்தான் துருக்கி இப்படிக் கால தாமதம் செய்து கொண்டு வருகிறதென்பதை வல்லரசுகள் தெரிந்து கொள்ளாமலிருக்குமா? இந்தச் சந்தர்ப்பத்தில் ருஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் போர் மூண்டது. யாருமே எதிர்பாராதபடி ஜப்பான் வெற்றி கொண்டது. ஒரு சிறிய கீழ்நாடு - அதிலும் வெகு சொற்ப காலத்திற்கு முன்னரேயே அரசியல் அரங்கத்திலே வந்த நாடு - ஒரு பெரிய மேனாட்டைத் தோற்கடிப்பது எப்படிச் சாத்தியமாயிருந்த தென்பதைப் பற்றித் துருக்கிய இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கி னார்கள். தங்களுடைய பலத்தினால்தான் தாங்கள் வாழமுடியும் என்பதை நன்றாக உணர்ந்தார்கள். போனது போக, எஞ்சியிருக்கிற துருக்கி சாம்ராஜ்யம் இனியும் சிதைந்து போகாமலிருக்க வேண்டு மானால், அந்நியருடைய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதில் நாம் ஒற்றுமைப்பட்டவர்களாயிருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார்கள். இலாமிய மதவாதிகள்கூட இந்த விடுதலை இயக்கத் திற்கு ஆதரவு கொடுத்தார்கள். இலாமிய மதம் காப்பாற்றப்பட வேண்டுமானால், அந்நியர்களினின்று விடுதலையடைய வேண்டு மென்று பாமர மக்களிடையே பிரசாரம் செய்தார்கள். சுல்தானிய அரசாங்கமோ தேச மக்களின் இந்த விடுதலை எழுச்சியை அடக்குவதிலேயே முனைந்து நின்றது. ஆனால் அந்நியர்களுடைய ஆசைகளுக்கு இணக்கங் காட்டுவதில், எவ்வளவு தூரம் விட்டுக் கொடுக்கலாமோ அவ்வளவு தூரம் விட்டுக் கொடுக்கத் தயாராயிருந்தது. 2. இளைஞர் இயக்கத்தின் புரட்சி இதனால் இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு இதன் தானத்தில் புதியதோர் அரசாங்கத்தை தாபித்துவிட வேண்டு மென்று உறுதி கொண்டனர் இளைஞர் கமிட்டியார். இதற்காக ஒரு புரட்சியை ஆரம்பிக்க வேண்டுமென்றும் தீர்மானித்தார்கள். ஆனால் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் விஷயத்தில் ஓர் ஒழுங்கில்லை; கட்டுப்பாடுமில்லை. முதபா, இந்த இயக்கத்தில் கலந்துகொண்டான். முன் கூறியது போல், தன் உத்தியோக அலுவலாகச் சுற்றுப்பிரயாணஞ் செய்கிறபோது, பிறருக்கு எவ்வித சந்தேகமும் உண்டாகாத முறையில் பிரசாரஞ் செய்து வந்தான். ஆனால் மனப்பூர்வமாக இவன் இந்த இயக்கத்தில் கலந்து கொண்டுழைத்தானாவென்பது சந்தேகம். ஏனென்றால் இதற்குமுன் பரீட்சித்துப் பார்க்கப்படாத ஒரு திட்டத்தை நடைமுறையில் கொணர இந்த இயக்கத்தார் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர் என்பது இவனுக்குத் தெரியும். இது வெற்றியுறுமாவென்பது இவனுக்கு ஆரம்பத்திலிருந்தே சந்தேகமா யிருந்தது. வெறும் உற்சாகத்தில் மிதந்து எவ்வளவு தூரந்தான் செல்ல முடியும் என்ற கேள்வியை இவன் அடிக்கடி கேட்டுக் கொண்டு வந்தான். இவன் என்ன கருத்தோடிருக்கிறான் என்பதை இவனைச் சுற்றியிருந்தவர்களும் அறிந்து கொள்ள முடியவில்லை. இளைஞர் இயக்கத்தார் புரட்சி செய்யவேண்டுமென்று ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்களே தவிர, இன்ன தேதியில் கலகக் கொடி தூக்கவேண்டுமென்று திட்டமாக நிச்சயித்துக் கொள்ள வில்லை. இந்த இளைஞர் இயக்கத்தில் அப்பொழுது மொத்தம் முந்நூறு அங்கத்தினர்களே இருந்தார்கள். ராணுவம் தங்கள் பக்கம் சேருமா என்பதையும் இவர்கள் நிச்சயப்படுத்திக் கொள்ளவில்லை. இந்த நிலையில் 1908ஆம் வருஷம் ஜுலை மாதம் சாலோனிகாவி லுள்ள இளைஞர் இயக்கத்தின் நிருவாகக் கமிட்டியார், பாரி கமிட்டியின் அனுமதியின்றியே கலகம் தொடங்க உத்தரவிட்டனர். நியாஜி பே என்பவன், ஒரு சிலரைச் சேர்த்துக் கொண்டு மாஸி டோனியாவின் வடக்குப் பாகத்தில் சென்று கலகக்கொடி தூக்கினான். இதே மாதிரி என்வெர் பே என்பவன், கிழக்கு மாஸி டோனியாவில் தொடங்கிவிட்டான். இரண்டு பேருக்கும் அந்தந்தப் பிரதேசங்களில் இருந்த பொது ஜனங்களில் சிலர் ஆதரவு காட்டி னார்கள். ஆனால் துருப்புகளில் பெரும்பாலோர் இந்தக் கலகத்தில் கலந்து கொள்ளவில்லை. இவர்களுக்குச் சம்பள பாக்கி முதலிய விஷயங்களில் அதிருப்தி இருந்தபோதிலும், சுல்தானுக்கு விரோத மாகப் பகிரங்கக் கலகம் செய்யக்கூடிய மனப்பான்மை உண்டாக வில்லை. இந்தக் கலகச் செய்தி, சுல்தானுக்கு எட்டியது. ஒரு விதத்தில் சுல்தானுக்குச் சந்தோஷந்தான், ஏனென்றால், அரசாங்க விரோதிகள் இன்னாரென்று இப்பொழுது பகிரங்கமாகத் தெரிந்துவிட்ட தல்லவா? கலகத்தை அடக்குமுறை ஆர்ப்பாட்டங் கொண்டு அடக்கச் சில முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் கலகம் அடங்கவில்லை. எனவே, கலகக்காரர்களுக்குக் கண்துடைக்கிற மாதிரி, 1876ஆம் வருஷம் நிறைவேற்றப்பட்டு இடையில் அமுலுக்குக் கொண்டுவரப் படாதிருந்த அரசியல் திட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இது நடந்தது 1908ஆம் வருஷம் ஜுலை மாதம் 23ஆம் தேதி. புரட்சி செய்து, சுல்தானிய அரசாங்கத்தைத் தங்கள் வசப் படுத்திக்கொண்டு விட்டதாக இளைஞர் இயக்கத்தினர் கருதினர். எங்கேயோ மூலையில் துருப்பிடித்துக் கிடந்த அரசியல் திட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்து இளைஞர் இயக்கத்தைப் பணிய வைத்து விட்டதாகச் சுல்தானுடைய அபிப்பிராயம். இளைஞர் இயக்கம் இப்பொழுது வலுக்க ஆரம்பித்தது. புரட்சிக்கு முன்னர் இதில் முந்நூறு அங்கத்தினர்கள்தான் இருந்தார்கள். இப்பொழுது ஒரு லட்சத்திற்கு மேல் வெகு சீக்கிரம் சேர்ந்து விட்டார்கள். இளைஞர் கமிட்டியில் அங்கத்தினராகச் சேர்ந்துகொள்வது ஒரு நாகரிகமாகிவிட்டது. தவிர, பணமும் கமிட்டிக்கு ஏராளமாகக் கிடைக்க ஆரம்பித்தது. சுல்தானுடைய சொந்தப் பணத்திலிருந்து இந்தக் கமிட்டிக்கு 75,000 பவுன் கிடைத்தது. முன்னர், புரட்சிக்காரர்களென்று போலீ உளவாளி களால் பயமுறுத்தப்பட்டவர்கள், இப்பொழுது ஒரு பெரிய அரசியல் கட்சியினரானார்கள். புதிய அரசியல் திட்டப்படி பார்லிமெண்ட் தேர்தல் நடைபெற்றது. இதில் இளைஞர் கமிட்டியைச் சேர்ந்தவர் களே பெரும்பான்மையோராக வெற்றி பெற்றார்கள். 3. பிளவுகள் புதிய அரசியல் திட்டம் அமுலுக்கு வந்துவிடவே, தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டிருந்தவர்களெல்லோரும் திரும்பி வந்தார்கள். இவர்கள்தான் புரட்சி நடைபெறுவதற்குத் தூண்டுகோலாயிருந்த வர்கள்; ஆனால் புரட்சியை நேராக இருந்து நடத்தவில்லை. தவிர, புரட்சியை நடத்தியவர்கள் ராணுவ உத்தியோகதர்கள்; அரசியல் வாதிகளல்ல. எனவே அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக் கொள்கிற விஷயத்தில் அரசியல்வாதிகளுக்கும் ராணுவ உத்தியோகதர் களுக்கும் அபிப்பிராய பேதம் ஏற்பட்டது. தவிர புரட்சியின் நோக்கம் முடிவு பெற்று விட்டதால், இனி இளைஞர் கமிட்டி தேவையில்லையென்றும், அது கலைத்து விடப்படலாமென்றும் ஒரு யோசனை கூறப்பட்டது. புரட்சியை நடத்தியவர்களுக்கு அரசாங்க நிருவாக அனுபவம் என்ன இருக்கிற தென்றும், ஆகையால் பழைய சுல்தானிய அரசாங்கத்து உத்தியோக தர்களே நிருவாகத்தை நடத்த வேண்டுமென்றும் இன்னொரு யோசனை கூறப்பட்டது. இங்ஙனம் இளைஞர் கமிட்டியாருக்குள் பலவித கருத்து வேற் றுமைகள் தோன்றியது, சுல்தானிய அரசாங்கத்துக்கு நன்மை யாகவே முடிந்தது. கடைசியில் சுல்தானிய அரசாங்கத்துக்குப் பழைய மந்திரிச் சபையே நிருவாகத்தை நடத்துவதென்றும் இளைஞர் கமிட்டியினரால் தெரிந்தெடுக்கப்பட்ட ஏழு அங்கத்தினர் கொண்ட ஒரு நிருவாகக் கமிட்டி இந்த மந்திரிச் சபையை மேற்பார்வை செய்துகொண்டு வருவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. வருஷத்திற் கொருமுறை இளைஞர் காங்கிர கூடி, அரசாங்கம் இன்னின்ன வேலைகளைச் செய்ய வேண்டுமென்று திட்டம் வகுத்துக் கொடுக்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. முதபா இந்த ஏற்பாடுகள் எதிலும் கலந்து கொள்ள வில்லை. புரட்சியை உண்டாக்கி விடுவது சுலபம்; அதனை வெற்றி கரமாகக் கொண்டு நடத்துவதுதான் மிகக் கடினம் என்பதை இவன் நன்கு உணர்ந்திருந்தான். இளைஞர் கமிட்டியின் நிருவாகம் போகிற போக்கைப் பார்த்து மனத்திற்குள் சிரித்துக் கொண்டிருந்தான். ராணுவத்தில் முதபாவுக்குச் செல்வாக்கு இருக்கிறதென் பதைக் கமிட்டியார் உணர்ந்து, இவனை எங்கேனும் வெளி நாட்டுக்கு அனுப்பிவிடத் தீர்மானித்தனர். வட ஆப்ரிக்காவில் டிரிபோலி பிரதேசம் துருக்கியின் ஆதீனத்திற்குட்பட்டிருந்தது. இங்கே இத்தலிக்குக் கண்ணிருந்த தென்பதை உணர்ந்த இளைஞர் கமிட்டியார், துருக்கிக்குச் சாதகமான பிரசாரத்தைச் செய்ய டிரிபோலிக்கு முதபாவை அனுப்பினார்கள். முதாபாவுக்கும், இந்த வெளியூர்ப் பிரயாணம் தேவை யாயிருந்தது. ஏனென்றால், புரட்சியென்ற பெயரை வைத்துக் கொண்டு இளைஞர் கமிட்டியார் செய்கிற ஆடம்பரங்களினின்று ஒதுங்கியிருப்ப தற்கு என்ன வழி யென்று இவன் யோசித்துக் கொண்டிருந்தான். நல்ல வேளையாக இவனுடைய டிரிபோலி பிரயாணம் ஏற்பாடாயிற்று. 4. எங்கும் குழப்பம் இளைஞர் கமிட்டியார் நிருவாகத்தை ஏற்றுக் கொண்ட சமயத்தில், துருக்கியின் வெளிநாட்டு விவகாரங்கள் மிகக் குழப்பமா யிருந்தன. பானியாவையும், ஹெர்ட்ஸெகோனாவையும் ஆதிரியா வீகரித்துக் கொண்டு விட்டது. கிரீ, கிரீட் துறைமுகத்தைக் கைப்பற்றிக் கொண்டு விட்டது. ருஷ்யாவின் தூண்டுதல் பேரில், பல்கேரியா, தான் இனியும் துருக்கியின் ஆதீனத்திற்குட்பட்டிருக்க முடியாதென்று சொல்லி சுதந்திரக் கொடி தூக்கி விட்டது. அல்பேனியாவிலும் அரேபியாவிலும் கலகங்கள் கிளம்பின. இவை யொன்றையுமே, இளைஞர் கமிட்டி நிருவாகமானது தடுக்க முடியவில்லை தவிர, உள்நாட்டிலே, இளைஞர் கமிட்டியார், ஜனங்களுடைய மனப்போக்கை அறியாமலும், அதனை முதலில் மாற்ற முயலாமலும் நவீன சீர்திருத்தங்கள் பலவற்றை அமுலுக்குக் கொண்டுவர முயன்றார்கள். சட்டத்தின் கீழ் எல்லா மதத்தினரும் ஒரேவிதமாகவே நடத்தப்படுவர் என்றும், துருக்கிய பாஷை மூல மாக இனிப் பள்ளிக் கூடங்களில் பாடங்கள் போதிக்கப்படுமென்றும் இளைஞர் கமிட்டியார் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்கள். தவிர, இவர்கள் பொது விவகாரங்களில் ஐரோப்பியர்கள் போல் நடந்து கொண்டார்கள். சில திரீகள் முகமூடி எடுத்துவிட்டு வீதிகளில் செல்லத் தொடங்கினார்கள். இவையெல்லாம் பாமர ஜனங்களுக்கு விபரீதமாகத் தோன்றின. இவர்களுடைய உணர்ச்சிகளை, மத போதகர்களான உலேமாக்கள் அதிகமாகக் கிளப்பிவிட்டார்கள். ராணுவத்தைச் சேர்ந்த சாதாரண போர் வீரர்களிடையே உலே மாக்கள் நல்ல பிரசாரம் செய்து, அவர்களை இளைஞர் கமிட்டிக்கு விரோதமாகத் தூண்டினார்கள். மதத்திற்கு ஆபத்து வந்துவிட்ட தென்றும், அதனையும் அதன் பிரதிநிதியான சுல்தானையும் காப்பாற்றுவது நமது கடமையென்றும் துருப்புகள் கலகத்திற்குக் கிளம்பின. 1909ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி கான் டாண்டிநோபிளில் இந்தக் கலகம் தொடங்கியது. கான்டாண்டிநோபிளில் கலகம் ஏற்பட்டிருக்கிறதென்று சாலோனிகாவிலுள்ள இளைஞர் கமிட்டிக்குத் தெரியவந்தது. உடனே இளைஞர் கமிட்டியார் ஒரு பெரும் படை திரட்டிக் கொண்டு, கான்டாண்டி நோபிளை நோக்கி வந்தனர். இந்தப் படையின் ஒரு பகுதித் தலைவனாக முதபா கெமால் நியமிக்கப் பட்டான். 1909ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 24ந் தேதி இரவு சாலோனிகா துருப்புகள் கான்டாண்டி நோபிளில் பிரவேசித்தன. யாருக்குமே இவை பிரவேசித்தது சரியாகத் தெரியவில்லை. அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில், முக்கியமான தலங் களையெல்லாம் இந்த சாலோனிகா துருப்புகள் கைப்பற்றிக் கொண்டுவிட்டன. முதலில் கலகம் செய்த கான்டாண்டி நோபிள் படைகள், இனி எதிர்த்துப் போராடுவதில் பயனில்லையென்று சரண்புகுந்து விட்டன. 5. சுல்தானுக்குச் சிறைவாசம் மறுநாள் பார்லிமெண்ட் கூடியது. சுல்தான் அப்துல் ஹமீதைச் சிம்மாசனத்தினின்று இறக்கி விடுவதென்ற தீர்மானம் நிறைவேறியது. மாலை நேரம், அரண்மனைக் கதவுகள் யாவும் திறக்கப்பட் டிருந்தன. அரண்மனைக்குள் பயங்கரமான ஓர் அமைதி குடிகொண் டிருந்தது. அரண்மனைப் பரிவாரத்தினர் அற்ற குளத்தின் அறு நீர்ப்பறவை போல், அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு, சுல்தா னிடம் மரியாதைக்காகக் கூட ஒரு வார்த்தை சொல்லிக் கொள் ளாமல் வெளியேறி விட்டனர். தனது அறையில் தன் பத்து வயது நிறைந்த தன் கடைசி மகனான அப்துர் ரஹீமோடு உட்கார்ந் திருக்கும் சுல்தான் அப்துல் ஹமீதின் முகத்தில் கவலை நிரம்பி யிருந்தது. பார்லிமெண்டின் பிரதிநிதிகளான மூன்று பேர் உள்ளே நுழைந்தார்கள். பார்லிமெண்ட் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தைச் சுல்தான் முன்னர்ச் சமர்ப்பித்தார்கள். என் தலைவிதி! பார்லிமெண்டின் இந்தத் தீர்மானம் எனக்கு மிகுந்த வருத்தத்தை உண்டு பண்ணுகிறது. எப்படி என் ஜனங்களின் நன்மைக்காக நான் இதுகாறும் உழைத்து வந்தேனோ, அதைப் போல் என் ஜனங்களின் அபிப்பிராயத்திற்கும் கட்டுப்படுகிறேன். ஆனால் என் உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லையே? இவை சுல்தானுடைய வாசகங்கள்! இந்தக் கடைசி விஷயத்தில் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டுவதில்லையென்று பிரதிநிதிகள் சுல்தானுக்கு உறுதி கூறினார்கள். சுல்தானும் அந்தப்புர திரீகளும் உடனே சாலோனிகாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே வில்லா அலாடினி என்ற இடத்தில் காப்பில் வைக்கப்பட்டார்கள். உடனே அப்துல் ஹமீதின் சகோதர உறவு பூண்ட சுல்தான் ஐந்தாவது முகம்மதைச் சிம்மாசனத்தில் கொலுவீற்றிருக்கச் செய்து, பலரும் சம்பிரதாயமான சில மரியாதைகளைச் செய்தார்கள். இந்த சுல்தான் முகம்மது, அப்துல் ஹமீதின் கைதிபோல் சுமார் முப்பது வருஷ காலம் அரண்மனையிலேயே வைக்கப்பட்டிருந்த காரணத்தி னால், தளர்ந்த நடையும் ஒடுங்கிய தேகமுமாய் இருந்த போதிலும் இவனுடைய கண்களிலே ஒருவித தீட்சண்யம் இருந்தது. இவன் பயத்தோடு பார்ப்பதாகவே பலருக்கும் தோன்றியது. புதிய சுல்தான் அரண்மனைக்குள் பிரவேசித்ததும், பரிவாரங்கள் அத்தனை பேரும் புதிய மனிதர்களாக இருப்பதைப் பார்த்து, முன்னர் அப்துல் ஹமீதின் கைதியாக இருந்ததுபோக இப்பொழுது இளைஞர் கமிட்டியின் கைதியாக இருக்கும்படி நேரிட்டிருக்கிறதுபோலும் என்று நினைத்ததில் ஆச்சரியமில்லை யல்லவா? கான்ண்டாண்டிநோபிளின்மீது படையெடுத்து வந்த தளகர்த்தர்களில், முதபா கெமால் எந்தப் பகுதித்தலைவனாக இருந்தானோ அதே பகுதியில் என்வெர் பாஷா என்பவனும் இருந்தான். இவனுக்கு ஜனங்களிடத்தில் அப்பொழுது அதிகமான செல்வாக்கு இருந்தது. இவனுடைய புகழொளி உச்சி வானில் ஏறத் தொடங்கியது. ஆனால் முதபா, இந்தப் புகழிலே பிரகாசிக்க விரும்பவில்லை; ஒதுங்கியே இருந்தான். இளைஞர் கமிட்டியாருடைய நிருவாகம் எப்படியிருக்கப் போகிற தென்பது முதபாவுக்கு நன்றாகத் தெரியும் இவன் எதிர் பார்த்தபடியே நிருவாக ஆரம்ப காலத்திலிருந்தே பொறாமைகளும் ரகசியச் சூழ்ச்சிகளும் நடைபெற ஆரம்பித்து விட்டன. மந்திரிச் சபை அமைவதும் கலைவதும், பார்லிமெண்டு கூடிக்கூடி ஓயாமல் பேசி, கடைசியில் ஒருவித முடிவுக்கு வராமல் கலைவதும் தினசரி சம்பவங்களாகி விட்டன. முன்னுக்குப் பின் முரணான அரசாங்க உத்தரவுகள் பிறந்தவண்ணமிருந்தன. எதற்குக் கீழ்ப்படிவது என்பது தெரியாமலே ஜனங்கள் திகைத்தார்கள். இந்த நிலையில் முதபா கெமால், கமிட்டியாருடைய உத்தரவுப்படி மீண்டும் சலோனிகா வுக்கு மாற்றப்பட்டான். சாலோனிகாவிலும் இவன் நீண்ட நாள் நிறுத்தி வைக்கப்படவில்லை. 1910ஆம் வருஷம் பிரெஞ்சு அரசாங்கத்தார், பாரிஸில் ஒரு ராணுவப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதற்குத் துருக்கியிலிருந்து ஒரு பிரதிநிதிக் கூட்டம் சென்றது. அந்தப் பிரதிநிதிக் கூட்டத்தில் ஒருவனாக முதபா அனுப்பப் பட்டான். அங்குச் சென்று ஒரு நவீன ராணுவம் எப்படி இருக்க வேண்டுமென்பதை நன்றாகப் பார்த்துக் கொண்டான். இந்த அனுபவம் ஏற்பட்டிருந்ததன் காரணமாக, இவனை, சாலோனிகாவி லுள்ள ராணுவ உத்தியோகதர்கள் பயிற்சி பெறுவதற்கென்றிருந்த பள்ளிக்கூடத்தில் ஓர் ஆசிரியனாக நியமித்தார்கள் அதிகாரிகள். இங்கு இவனுடைய செல்வாக்கு அதிகரித்து வந்தது. இதனால், சாலோனிகாவிலேயே நிறுவப்பட்டிருந்த ராணுவப் படையின் ஒரு பகுதித் தலைவனாக நியமனம் பெற்றான். ஆனால், இதிலும் இவனை நீண்ட நாள் வைத்திராமல், கான்டான்டிநோபிள் யுத்த மந்திரிக் காரியாலயத்திற்கு வந்து வேலை பார்க்குமாறு உத்தர விட்டனர். அப்படியே கான்டாண்டிநோபிளுக்குத் திரும்பி னான். இவனை, அங்குக் கவனிப்பார் யார்? எத்தனையோ பேரில் ஒருவனல்லவா? இங்ஙனம் சிலகாலம் கழிந்தது. 6 பால்கன் போர் முழக்கம் 1. டிரிபோலியில் ஆப்ரிக்கா கண்டத்தின் வடபாகம் அநேக நூற்றாண்டுகள் வரை துருக்கி சாம்ராஜ்யத்தின் ஆதீனத்தில் இருந்தது. ஆனால் இவற்றை, பிரான்ஸும், கிரேட் பிரிட்டனும் இருபதாவது நூற்றாண்டு ஆரம்பத்தில் பங்கு போட்டுக் கொண்டுவிட்டன. மோரோக்கோ பிரான்ஸுக்கும், சூடான் இங்கிலாந்துக்கும் போய்ச் சேர்ந்தன. நாமும் இதில் ஏன் பங்கு கேட்கக் கூடாதென்று இத்தலி இந்த ஏகாதிபத்திய வேட்டையில் கலந்துகொள்ள ஆரம்பித்தது; டிரிபோலி பிரதேசத்தைச் சுவாதீனப்படுத்திக் கொண்டுவிடத் தீர்மானித்தது. இதற்கு ஏதேனும் ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொள்ள வேண்டு மல்லவா? டிரிபோலி, லிபியா முதலிய பிரதேசங்களில் இத்தாலியர் செய்துவரும் வியாபாரமானது, துருக்கிய உத்தியோகதர் களால் தடை செய்யப்படுகிற தென்றும், ஆகவே டிரிபோலியைத்தான் ஆக்ரமித்துக் கொள்ளப் போவதாகவும், இதற்கு இருபத்துநான்கு மணிநேரத்திற்குள் சம்மதத்தைத் தெரிவிக்காமற் போனால், யுத்தம் தொடரப்படுமென்றும், இத்தலி, துருக்கி அரசாங்கத்திற்கு ஓர் அறிக்கை விடுத்தது. துருக்கியை எவ்வளவு திரணமாக மதித் திருந்தன ஐரோப்பிய வல்லரசுகள் என்பது இதனால் நன்கு தெரி கின்றதல்லவா? இருபத்து நான்காவது மணி எப்பொழுது அடிக்கப் போகிறதென்று இத்தலி காத்துக் கொண்டிருந்தது. அது கழித்த மறு கணமே. இத்தலி டிரிபோலியின் மீது படையெடுத்தது. இந்தப் படையெடுப்பை எதிர்ப்பதென்று துருக்கி அரசாங்கம் தீர்மானித்து ஒரு படையை அனுப்பியது. இந்தப் படைக்கு என்வெர் பாஷா சேனாதிபதியாகவும், முதபா கெமால் பாஷா உதவிச் சேனாதிபதியாகவும் நியமிக்கப்பட்டனர். இந்த இருவருக்கும் அடிக்கடி மனதாபங்கள் நிகழ்ந்து வந்தன. சுமார் ஒரு வருஷ காலம் இந்த டிரிபோலி யுத்தம் எந்த விதமான முடிவுக்கும் வராமல் நடைபெற்றுக் கொண்டு வந்தது. துருக்கியப் படையில் அதிக சேதம். டிரிபோலி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற போதே பால்கன் பிரதேசத்துச் சிற்றரசுகளான பல்கேரியா, பானியா, செர்வியா, கிரீ முதலியவை ஒன்று சேர்ந்து துருக்கியை எதிர்க்க ஆரம்பித்தன. இந்தப் புதிய எதிர்ப்பைச் சமாளித்துக் கொள்ள வேண்டுமானால், டிரிபோலி யுத்த சம்பந்தமாக இத்தலியுடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டியது துருக்கிக்கு அவசியமா யிருந்தது. எனவே, 1912ஆம் வருஷம் அக்டோபர் மாதம் இத்தலி யுடன் உடன்படிக்கை செய்து கொண்டது. இதன்படி டிரிபோலிக்குச் சுய ஆட்சி கொடுக்கப்பட்டது. பெயரளவில்தான் இந்தச் சுய ஆட்சியே தவிர, இத்தலியின் ஆதிக்கம், இந்தக் காலத்திலிருந்தே இங்கு வேரூன்றத் தொடங்கிவிட்டது. கெமால், டிரிபோலியிலிருந்து கான்டாண்டிநோபிளுக்கு 1912ஆம் வருஷம் டிசம்பர் மாதம் வந்து சேர்ந்தான். அப்பொழுது கான்டாண்டிநோபிளின் நிலைமை எப்படி இருந்தது? எல்லாம் ஒரே குழப்பம். செர்வியப் படைகள் வடக்குப் பக்கத்திலிருந்து முன்னேறிக் கொண்டு வருகின்றன. கிரேக்கர்கள் தெற்குப் பக்கமாக வந்து தாக்கி, சாலோனிகாவைக் கைப்பற்றிக் கொண்டு விட்டார்கள். கைப்பற்றிக் கொண்டதோடு மட்டுமல்ல; நகரத்தையே சீரழித்து, சுமார் இருபத்தையாயிரம் பேரைக் கைது செய்திருக்கிறார்கள். பல்கேரியப் படைகளோ, கான்டாண்டி நோபிளை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. பதினைந்து மைல் தூரந்தான் இன்னும் அவை கடந்து வரவேண்டியிருக்கிறது. துருக்கி சாம்ராஜ்யம் என்று சொல்லப்படுவது, இனி ஐரோப்பாவில் என்ன இருக்கிறது? கான்டாண்டிநோபிளைச் சுற்றியுள்ள இந்தப் பதினைந்து மைல் விதீரணமுள்ள பிரதேசமும், அட்ரியாநோபிள் கோட்டையுந்தான்! கான்டாண்டி நோபிள் நகரத்தில், யுத்த முனையில் காயமடைந்து திரும்பி வந்தவர்களின் அழுகைக் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. காயமடைந்தவர்கள் ஆயிரக்கணக்கில், ஆபத்திரிகளில் மட்டுமல்ல, மசூதிகளிலும் தனி வீடுகளிலும் நிரம்பிவிட்டார்கள், சத்துருக்களுக்குப் பயந்து நகரத்திற்குள் வந்து தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கையோ சொல்ல முடியாது. கான்டாண்டி நோபிளை வந்தடைந்த கெமால், தன் தாயார், சகோதரி முதலியவர்கள் என்னவானார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படத் தொடங்கினான். சாலோனிகா, கிரேக்கர் வசமன்றோ அகப்பட்டுக் கொண்டுவிட்டது? அங்குதானே இவன் தாயார் வசித்துக் கொண்டிருந்தாள்? அங்குச் சென்று கண்டு பிடித்து அவர் களைக் கான்டாண்டி நோபிளுக்கு அழைத்து வந்து, சௌகரிய மான ஓரிடத்தில் இருக்கச் செய்தான். 2. பல்கேரியாவின் மீது படையெடுப்பு பின்னர், யுத்த மந்திரிக் காரியாலயத்திற்குச் சென்று ஆஜர் கொடுத்தான். காலிபோலி தீபகற்பத்தின் வட பாகத்திலுள்ள புலேர் என்ற இடத்திற்குச் சென்று, அங்கே படையெடுத்து வரும் பல்கேரி யர்களை முன்னேறவிடாமல் தடுத்து நிற்குமாறு உத்தரவிடப் பெற்றான். அப்படியே, இவன் புலேருக்கு வந்து சேர்ந்தானோ இல்லையோ, அதே சமயத்தில் பல்கேரியப்படைகள், துருக்கியர் களைத் தாக்க ஆரம்பித்தன. துருக்கியர்களிடத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை. ஆயினும் கெமால் தன் படைகளைத் திரட்டி உறுதியுடன் எதிர்த்துப் போராடி வந்தான். இதனிடையில் சமாதானப் பேச்சுகள் ஆரம்பித்தன. ஐரோப்பாவில், கான்டாண்டிநோபிளை மட்டும் தங்களுக்கு வைத்துக் கொண்டு, மற்றவற்றை யெல்லாம் தங்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட வேண்டுமென்று பால்கன் நாடுகள் கேட்டன. என்ன ஆசை? அட்ரியா நோபிளை உடனே தங்கள் வசம் ஒப்புவித்துவிட வேண்டுமென்று பல்கேரியா வற்புறுத்தியது. எதிரி இளைத்தவனா யிருந்தால், நமது ஆசைகளும் வளர்ந்து கொண்டு போகுமல்லவா? இங்கே, கான்டாண்டிநோபிள் மந்திரிச் சபையில், அபிப்பிராய வேற்றுமைகள் குமுறிக் கொண்டிருந்தன. பிரதம மந்திரியாயிருந்தவன் கியாமில் பாஷா என்ற வயோதிகன். இவன் என்ன செய்தாவது எதைக் கொடுத்தாவது சமாதானம் செய்து கொண்டுவிட வேண்டு மென்று ஒரே பிடிவாதமாயிருந்தான். ஆனால் மற்றவர்கள், கொஞ்சம் வயதிலே இளைஞர்களா யிருந்தவர்கள், சிறப்பாக ராணுவத் தலைவர்கள், இங்ஙனம் கேவலமாகச் சரணாகதி யடைந்து விடக் கூடாதென்று ஒரே பிடிவாத மாயிருந்தார்கள். கேட்க வேண்டுமா கட்சிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும்? ஒருவரை யொருவர் கவிழ்த்து விட்டு, நிருவாக ஆதிக்கம் பெறவிரும்பி னார்களே தவிர, எல்லாரும் ஒன்றாயிருந்து பொதுவான எதிரியைத் துரத்திவிட வேண்டுமென்ற எண்ணம் யாருக்குமே உண்டாக வில்லை. சரியான தலைவனும் இல்லை. இந்தக் குழப்பமான நிலையில் என்வெர் பாஷா டிரிபோலியி லிருந்து வந்து சேர்ந்தான். நிருவாக ஊழலைக் கண்டான். இனி ஒரு கணமும் தாமதிக்கக் கூடாதென்று தீர்மானித்தான். தன்னிடத் திலே விசுவாசம் பூண்ட ராணுவ உத்தியோகதர்களை ஒன்று திரட்டினான். இவர்களுடன் நேரே சுல்தானுடைய அரண்மனைக்குப் போனான். அப்பொழுது மந்திரிச் சபையின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. திடீரென்று கூட்டத்திற்குள் பிரவேசித்தான். அத்து மீறிப் பிரவேசிப்பதாக மந்திரிகள் கோபங்கொண்டு இவனை யும், இவன் சகாக்களையும் தடுத்தார்கள். கை கலந்த சச்சரவு ஏற்பட்டது. யுத்த மந்திரியாயிருந்த நாஜிம் பாஷா, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். கியாமில் பாஷா முதலிய மற்ற மந்திரிகள் விரட்டியடிக்கப்பட்டார்கள். அரசாங்க நிருவாகத்தை என்வெர் கைப்பற்றிக் கொண்டு விட்டான். முகம்மத் ஷெவ்கத் பாஷா என்பவன் பிரதம மந்திரியாக்கப்பட்டான். இந்த அளவுக்கு வெற்றிதான்! ஆனால், எதிர்த்து நிற்கிற பல்கேரியர்களை அட்ரியா நோபிளிலிருந்து விரட்டியடித்து விட வேண்டுமென்று என்வெர் போட்ட திட்டம் சரிவர நிறைவேறவில்லை. துருக்கியப் படை களை எந்தெந்த முறையில் அணிவகுத்து வைத்தால், சத்துருக்களைப் பின்னடையச் செய்யலாமென்பதைப் பற்றி என்வெர் போட்ட திட்டம் தோல்வியையே விளைவிக்கும் என்று கெமால் கூறினான். இஃது என்வெருக்குப் பிடிக்கவில்லை. நான் சொன்னபடி செய்ய வேண்டுமே தவிர, எதிர்த்துப் பேச உனக்கு உரிமை கிடையாது என்றான் என்வெர். இந்த வார்த்தைகள் கெமாலின் மனத்திலே நன்றாகத் தைத்தன. ஆனால் அந்தச் சமயம் பதில் ஒன்றுங் கூறாமல் சும்மாயிருந்துவிட்டான். என்வெர் திட்டப்படியே, துருக்கியப் படைகள், பல்கேரியச் சேனையை எதிர்த்துப் போராடின. விளைவு என்ன? துருக்கியப் படையில் ஏராளமான சேதம்; பெருந்தோல்வி. அட்ரியா நோபிள், பல்கேரியர் வசப்பட்டுவிட்டது. எந்தச் சமாதான நிபந்தனைகளை, முன்னர் கியாமில் பாஷா ஏற்று கொள்ளலாமென்று கருதினானோ, அதே நிபந்தனை களடங்கிய சமாதான உடன்படிக்கையில் என்வெர் இப்பொழுது கையெழுத்திட்டான்! ஆனால் துருக்கிய சாம்ராஜ்யத்திற்கு எங்கேயோ கொஞ்சம் அதிருஷ்டம் ஒட்டிக்கொண்டிருந்தது. தங்களுக்குக் கிடைத்த துருக்கியப் பிரதேசங்களைப் பங்கிட்டுக் கொள்ளும் விஷயத்தில், பால்கன் நாடுகள் ஒன்றுக்கொன்று போராடத் தொடங்கின. பல்கேரியா, செர்வியாவின் மீதும் கிரீஸின் மீதும் போர் தொடுத்தது. ஆனால் தோல்வியுற்றது. இங்ஙனம் ஒருவர்க்கொருவர் சண்டை யிட்டுக் கொள்வதைத் துருக்கிக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ளத் தொடங்கினான் என்வெர். மிக்க துணிச்சலுடன், தன் படைகளைத் திரட்டிக் கொண்டு முன்னோக்கிச் சென்றான். பல்கேரியர்களைத் துரத்தியடித்தான். அட்ரியா நோபிள் துருக்கியின் வசப்பட்டது. ஆடம்பரப் பிரியனாகிய என்வெர், மேற்படி நகரத்திற் குள் வெற்றி வீரனாகத் தன் படைகளுடன் பிரவேசித்தான். இந்தப் படை வீரர்களிலே ஒருவனாக. கெமாலும் சென்றான். யாருக்கு இவனைப் பற்றி அப்பொழுது தெரியும்? பின்னர், கெமால், கான்டாண்டிநோபிளுக்குத் திரும்பி வந்தான். அட்ரியா நோபிளைக் கைப்பற்றின சந்தோஷத்திலே என்வெர் இவனை ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னல் பதவிக்கு உயர்த்தினான். இதனைக் கொண்டு கெமால் திருப்தியடைந்து விடுவான் என்று நினைத்தானோ என்னவோ? 3. அதிகாரம் அந்நியர் வசமா? அட்ரியா நோபிளின் வெற்றிக்குப் பிறகு, என்வெர் நிரம்ப மிடுக்காக இருந்தான். இவனால் முன்னர் பிரதம மந்திரி தானத் தில் இருத்தி வைக்கப்பட்ட முகம்மத் ஷெவ்கத் பாஷா கொலை செய்யப்பட்டு விட்டபடியால், இப்பொழுது அரசாங்கத்தை என்வெர், தலாத், ஜெமால் ஆகிய மும்மூர்த்திகளுமே நடத்தி வந்தார்கள். கெமால் ஒதுக்கப் பட்டவனாகி விட்டான். இவனுடைய சுதந்திர எண்ணங்களும் அலட்சியப் பார்வையும் யாருக்கும் பிடிக்க வில்லை. ஐக்கிய முன்னேற்றக் கமிட்டியார் இவனை வெறுத்து வந்தனர். என்வெருடன் இவன் சதா போராடிக்கொண்டு வந்தான். என்வெரோ, தான் இப்பொழுது பெற்றுள்ள அதிகார பதவியை எவ்வளவு ஆடம்பரமாக உபயோகப்படுத்திக் கொள்ள லாமோ அவ்வளவு தூரம் உபயோகித்துக் கொண்டான். பெரிய பெரிய திட்டங்களையெல்லாம் போட்டான். சுல்தான் - கலீபாவின் ஆதிக்கத்தின் கீழ் அகில உலக முலீம்களையும் கொண்டு வந்து விட வேண்டுமென்று மனக்கோட்டை கட்டினான். துருக்கி சாம் ராஜ்யத்தின் பழைய புகழை மீண்டும் நிலைநிறுத்த வேண்டு மென்பது இவன் ஆசை. இந்த எண்ணங் களெல்லாம் நிறைவேற வேண்டுமானால் துருக்கிய ராணுவத்தைப் பலப்படுத்த வேண்டும். ஒழுங்கான முறையில் அதற்குப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று இவன் திட்டம் போட்டான். இதற்கு ஜெர்மனியின் உதவியை நாடினான். ஜெர்மன் தளகர்த்தனாகிய தளபதி லிமான் வான் சாண்டர் என்பவனை வரவழைத்து, துருக்கிய ராணுவத்தைச் சீர்திருத்தியமைக்குமாறு ஏற்பாடு செய்தான். இந்த ஏற்பாடு, கெமாலுக்குச் சிறிது கூடப் பிடிக்கவில்லை. ராணுவத் தலைவர்களிடம் தனித்தனியாகச் சென்று, இந்த ஏற்பாட்டினால், துருக்கியின் வருங்கால வாழ்வு சீரழிந்து போகும் என்று தர்க்க ரீதியாக எடுத்துக் கூறினான். நாம் ஒரு சாம்ராஜ்யமாக வாழ்வதற்கு, அடிப்படையான அதிகாரங்கள் எவை எவை தேவையோ, அவற்றிற்கெல்லாம் அதிவாரமா யமைந்திருப்பது நமது ராணுவமல்லவா? அப்படிப்பட்ட ராணுவத்தை நிருவாகம் செய்யும் பொறுப்பை ஜெர்மானியர் களிடம் ஒப்படைப்பதைப்போன்ற பைத்தியக்காரத்தனமான செயல் வேறொன்றுமில்லை. நம்முடைய விவகாரங்களை நாமல்லவோ கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த ஜெர்மானிய, ராணுவ தளகர்த்தனை வரவழைப்பது, தேசத்தையே அவமதிப்பதாகும் என்ற கருத்துகள் கொண்ட ஒரு கடிதத்தை எழுதி என்வெர் பாஷாவுக்கு அனுப்பினான். இந்தக் கடிதத்தைப் பெற்ற என்வெர், கெமாலைத் தலைநகரத்தில் இருக்க விடுவது ஒரு பெரிய தொல்லை என்ற முடிவுக்கு வந்தான். கெமாலின் முக்கிய நண்பர்களில் ஒருவனான பெத்தி பே என்பவன், பல்கேரியாவின் தலைநகரான சோபியாவில், துருக்கி அரசாங்கத்தின் தானீகனாக இருந்து வந்தான். அவனுடைய மெய்க்காவலர்களில் ஒருவனாகக் கெமாலை நியமித்து, சோபியாவுக்கு அனுப்பி விட்டான் என்வெர். சோபியாவில், கெமாலுக்கு அதிகமான வேலையில்லை. ஓய்வு நேரம் அதிகமாகக் கிடைத்தது. இந்த நேரத்தை எப்படிச் செல வழிப்பது? ஓர் ஆசிரியனை அமர்த்தி அவனிடம் மேனாட்டு நாட்டி யத்தைக் கற்றுக் கொண்டான். பெரிய மனிதர்கள் அடிக்கடி கூடுகிற சங்கங்களில் சேர்ந்து அங்கு வரும் பல திரீகளோடு சல்லாபம் செய்தான்; அவர்களோடு நாட்டியமாடினான். ஆனால் இவனை யாருமே காதல் கொள்ளவில்லை. 1914ஆம் வருஷம் ஜுன் மாதம் கடைசி வாரம் செராஜிவோ வில், ஆதிரிய இளவரசனான ஆர்ச்ட்யூக் பெர்டினாந்து, ஒரு செர்விய மாணவனால் கொலை செய்யப்பட்டான். இது காரண மாக ஐரோப்பிய வல்லரசுள் யுத்தக் கொடி தூக்கின. துருக்கி, ஜெர்மனியோடு சேர்ந்து விட்டது. ஆனால் பல்கேரியா, எந்தக் கட்சி யிலும் சேராமல் நடுநிலைமை வகித்தது. இப்படியே துருக்கியும் கொஞ்ச காலத்திற்காவது நடுநிலமை வகித்திருந்து, பிறகு எந்தக் கை வலுத்திருக்கிறதோ அந்தப் பக்கம் சேர்ந்து விடலாகாதா வென்று எண்ணினான் சோபியா நகரத்திலிருந்த கெமால். ஆனாலும் என்ன செய்வது? துருக்கி, ஜெர்மனியுடன் சேர்ந்து, யுத்த பேரிகை கொட்டி விட்டது. தாய்நாட்டுக் கொடியின் கீழ் போய் நிற்க வேண்டாமா? தாய்நாட்டைக் காப்பாற்ற வேண்டாமா? நடுநிலைமை வகிக்கிற ஒரு தேசத்தின் தலைநகரத்தில் என்ன வேலை? இப்படி யெல்லாம் கெமால் சிந்தித்தான். தவிர, அந்தக் காலத்தில் எல்லாரும் சகஜமாக நினைத்தது போல, இந்த யுத்தம் சில வாரங்களில் முடிந்துவிடு மென்றுதான் கெமாலும் நினைத்தான். ஆனால் வாரங்கள் மாதங்க ளாயின. யுத்தம் மும்முரமாகி வந்தது. 1915ஆம் வருஷம் பிப்ரவரி மாதமாகிவிட்டது. யுத்தம் தொடங்கி ஆறு மாதமாகியும், இவன் எப்படிச் சும்மாயிருப்பான்? உடனே போர்முனைக்குச் செல்ல வேண்டுமென்று துடிதுடித்தான். தன்னைப் போர் முனைக்கு அனுப்பு மாறு கான்டாண்டி நோபிள் அரசாங்கத்தைக் கேட்டான். இருக்கும் இடத்திலே இரு என்று உத்தரவு கிடைத்தது. தன் நண்பர்களுக்கெல்லாம் எழுதிக் கேட்டான், பயனில்லை. கடைசி யில் ரஜா எடுத்துக் கொண்டு, கான்டாண்டி நோபிளுக்குச் சென்று அங்கிருந்து போர் முனைக்குப் போவதென்று தீர்மானித்து, பிரயாணத்துக்கு ஏற்பாடு செய்தான். அந்தக் கடைசி சமயத்தில், உடனே கான்டாண்டி நோபிளுக்குப் புறப்பட்டு வருமாறு உத்தரவு வந்தது. அப்படியே கான்டாண்டிநோபிள் வந்து சேர்ந்த கெமால், டார்டனெல் ஜல சந்தியை முற்றுகை போட்டிருக்கும் நேச தேசக் கப்பற்படைகளை விரட்டியடிக்குமாறு, ஜெர்மன் ராணுவ தள கர்த்தனான வான் லிமான் சாண்டர்ஸின் தலைமையில் அனுப்பப் பெற்ற சேனையில் ஒரு பகுதித் தலைவனாக நியமனம் பெற்றான். 7 கம்மந்தான் யார்? 1. ஜனங்களின் ஏக்கம் உ! உரத்துப் பேசாதே! நமக்கேன் இதைப் பற்றியெல்லாம்? என்றான் ஓர் அர்மீனியன். யில்தி கியோக்கின் மீது எந்தத் தேசத்துக் கொடி பறந்தால் தானென்ன? வியாபாரிகளுக்குச் சாதகங்கள் செய்து கொடாமல் யாரும் இருக்கமாட்டார்களே? என்றான் ஒரு யூதன் காபியை உறிஞ்சிக் கொண்டே. எவ்வளவு தன்னம்பிக்கை, சமூகத்தை உறிஞ்சுகிற இந்தப் பேர்வழிக்கு? மார்மாரா கடலையும் எஜீயன் கடலையும் ஒன்று சேர்த்து, ஐரோப்பா கண்டத்தினின்றும் ஆசியா கண்டத்தைப் பிரிக்கிற இந்த டார்டனெல் ஜலசந்தி எவ்வளவு சரித்திரப் பிரசித்தி பெற்றது! ஜெர்க்ஸ என்ற பாரசீக மன்னன், (கி.மு. 480) கிரீ தேசத்தை ஜெயிக்க வேண்டுமென்ற எண்ணங்கொண்டு, தன் சேனைகளுடன் இந்த ஜலசந்தியின் வழியாகத் தானே, ஐரோப்பாவின் எல்லையை மிதித்தான்! ஆனால் சாலாமிஸ் என்ற இடத்தில் தோல்வியுற்று ஆசியா கண்டத்திற்குத் திரும்பி ஓடி விட்டான்! ‘தெர்மாப்பிலே யுத்தத்தில் அவன் கிரேக்கர்களைத் தோற் கடித்து, ஆத்தென்ஸ் நகரத்தைக் கொளுத்திவிட்டதைப் பற்றிக் கூறுகிறானா பார் இந்தக் கிரேக்கன்? என்று முணகினான் டீ ப்ளேட்டிலே தன் நிழலைப் பார்த்துக் கொண்டே ஒரு பிரெஞ்சுக் காரன். எங்கள் மஹா அலெக்ஸாந்தர் ஆசியா கண்டத்தின் மீது படையெடுத்துச் சென்றதும் (கி. மு. 334) இந்த டார்டனெல் ஜல சந்தி வழியாகத்தானே? ஐரோப்பாவிலே ஒரு காலும், ஆசியாவிலே ஒரு காலுமாக வைத்துக் கொண்டு எத்தனை நாட்களுக்குத்தான் இந்தத் துருக்கி ராஜ்யம் வாழப் போகிறது? என்று சொல்லிக் கொண்டே ஒரு சுருட்டைப் பற்ற வைத்தான் அந்த கிரேக்கன். சமுத்திரத்தையெல்லாம் கட்டியாள்கிற இந்தப் பிரிட்டி ஷாருக்கு, நாற்பது மைல் நீளமுள்ள இந்த டார்ட்னெல் ஜல சந்தியைக் கைப்பற்றிக் கொள்வது ஒரு பிரமாதமா? ஜெர்மனியோடு துருக்கி சேர்ந்ததற்கு நல்ல பரிசு கிடைக்கப் போகிறது! என்று உதட்டைப் பிதுக்கினான் ஓர் ஆங்கிலேயன். 1915ஆம் வருஷம் மார்ச் மாதம் பதினேழாந்தேதி, கான் டாண்டிநோபிளின் டீ கடைகளொன்றில் நடக்கிற காட்சி இது. கான்டாண்டிநோபிள், ஒரு பலசரக்குக் கடை மாதிரி. பெயருக்குத் தான் இது துருக்கி ஏகாதிபத்தியத்தின் தலைநகரம். ஆனால் இங்கே அர்மீனியர், ஆங்கிலேயர், ஜெர்மானியர், கிரேக்கர், யூதர் முதலிய எல்லோருக்கும் விசேஷ சலுகைகள் உண்டு. அதிலும், ஐரோப்பிய யுத்தம் ஆரம்பித்து, துருக்கி ஜெர்மனியோடு சேர்ந்து விட்ட பிறகு, இங்கே ஒற்றர்களும், தேசத் துரோகிகளும் அதிகமாகி விட்டார்கள். பல நாட்டு நாணயங்களும் இங்கே கணீர் கணீரென்று ஓசைப்பட்டன! நகரத்தின் மத்தியிலே உள்ள சோபியா மசூதி எவ்வளவு புராதனப் பெருமையுடையது! ஆனால் அன்று - மார்ச் மாதம் பதினேழாந்தேதி - சோபையிழந்துதான் இருந்தது. நகரத்திலே வசித்த அந்நியர்கள் குதூகலமாக இருந்தாலும், சுயதேச வாசிகள் - துருக்கியர்கள் - பாவம்! அவர்களுடைய நடையிலே கூட ஒரு தளர்ச்சி; வெறித்த பார்வை; எந்தச் சமயத்தில், எஜியன் கடலிலே நங்கூரம் பாய்ச்சியிருக்கும் பிரிட்டிஷ் - பிரெஞ்சு யுத்தக் கப்பல்களி லிருந்து வெடிகுண்டுகள் வந்து விழுந்து, காலி போலி தீபகற்பத்தையே படுசூரணமாக்கி விடுமோ வென்ற ஓர் ஏக்கம். போதாக்குறைக்கு, அந்நிய நாட்டு ஒற்றர்கள், துருக்கிய ஜனங்களிடத்தில் ஒருவித பீதியை உண்டுபண்ணி விட்டிருந்தார்கள். துருக்கி யுத்த மந்திரியின் காரியாலயத்தில் ஒரே பரபரப்பு. தளகர்த்தர்கள் பலர். பிளான்கள் பலவற்றை விரித்துப் போட்டுக் கொண்டு, தங்கள் தங்கள் ஆள்காட்டி விரல்களை ஒவ்வோர் இடமாக வைத்து வைத்து எடுக்கிறார்கள்; கையிலே இடுக்கிக் கொண்டிருக்கும் நோட் புதகத்தில் ஏதோ குறித்துக் கொள்கி றார்கள். ஒரு பெரிய மகாநாடு நடக்கிறது. ஆனால் அதிகமான பேச்சு வார்த்தைகள் இல்லை. அடுத்த அறையிலே, யுத்த மந்திரி யாகிய என்வெர் பாஷா, ஜெர்மானிய பிரதம தளகர்த்தனான ஜெனரல் லிமான் வான் சாண்டர் என்பவனை வரவேற்று, அவனோடு அந்தரங்கமாகப் பேசுகிறான். என்வெருடைய முகத்தில் ஈயாட வில்லை. அந்த ஜெர்மானிய தளபதியின் முகமோ இறுகிப் போன பனிக்கட்டி மாதிரியிருக்கிறது. இவ்வளவுக்கும் என்ன காரணம்? 2. டார்டனெல் ஜலசந்தியில் இருபதாவது நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்தே ஜெர்மனியின் ராணுவ பலத்திலும், அதன் கைத்தொழில் பெருக்கத்திலும் துருக்கிக்கு ஒரு பிரமை ஏற்பட்டிருந்தது. ஜெர்மானியரும் இதனைச் சாதகமாக உபயோகித்துக்கொண்டு, தங்கள் செல்வாக்கைத் துருக்கி யில் பரப்பி வந்தார்கள். துருக்கிய ராணுவம், ஜெர்மன் மாதிரியில் அமைக்கப்பட்டது. ஜெர்மானிய ராணுவ உத்தியோகதர்களால் தான் துருக்கியர்களுக்கு ராணுவப் பயிற்சியளிக்கப்பட்டது. ஜெர்மன் ராணுவக் கமிஷன் என்ற ஒரு நிரந்தர தாபனம், துருக்கிய யுத்தம் மந்திரியின் காரியாலயத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. இதன் தலைவனாயிருந்தவன்தான் லிமான் வான் சாண்டர் என்பவன். ஐரோப்பிய மகா யுத்தம் தொடங்கப் பெற்றதும், துருக்கி, ஜெர்மனி யோடு சேர்ந்து கொண்டது1 இதனால் இது, ஒரு பக்கம் நேசக்கட்சி2 யினருக்கும், மற்றொரு புறம் ருஷ்யாவுக்கும் விரோதியாகிவிட்ட தல்லவா? எனவே துருக்கியைத் தண்டித்து, ஜெர்மனிக்குப் பலக் குறைவை உண்டுபண்ணி, அதன் மூலமாக ருஷ்யாவுக்கு ஆதரவு அளிப்பது நேசக் கட்சியினருக்கு அவசியமாயிருந்தது. இதனால் இவர்கள் மத்தியதரைக் கடல் வழியாக ஒரு பெரிய கப்பற் படையைக் கொண்டு வந்து டார்டனெல் ஜலசந்தியின் முகத்துவாரத்தில் நிறுத்தி வைத்தனர். டார்டனெல்ஸில் பலாத்காரமாகப் புகுந்து விட ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். துருக்கியின் தற்காப்புச் சக்தி யிலே இவர்களுக்குச் சர்வ அலட்சியம். ஆனால் துருக்கியும் சும்மா யிருக்கவில்லை. நேசக்கட்சிக் கப்பல்கள், டார்டனெல் ஜலசந்தி யின் வழியாகச் செல்லக் கூடாதென்று ஜலசந்தி வாயிலை அடைத்து விட்டது. இதற்காக, ஜலசந்தியின் இரண்டு பக்கங்களிலுமுள்ள முக்கியமான கோட்டைகளில், ஒரு சில பீரங்கிகளை ஏற்றி வைத் திருந்தது. ஆனால் பிரிட்டிஷ் - பிரெஞ்சுக் கப்பல் பீரங்கிகளுக்கு முன்னே துருக்கிய பீரங்கிகள் எம்மாத்திரம். நேசக் கட்சிக் கப்பல்கள், 1915ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் பத்தொன்பதாந் தேதியிலிருந்து, மார்ச் மாதம் பதினைந்து தேதி வரை, ஜலசந்தியின் நுழைவாயிலிலே இருக்கும் ஸெத் - எல்- பாஹ்ர் கோட்டை மீதும், கும்காலே கோட்டை மீதும் பீரங்கிப் பிரயோகம் செய்த வண்ணமாயிருந்தன. கடைசியில் இந்த இரண்டு கோட்டை களும் அடங்கிவிட்டன. எனவே, மார்ச் மாதம் பதினெட்டாந் தேதி ஜலசந்தியில் நுழைந்து, இடையிலேயுள்ள கோட்டைகளையெல் லாம் தகர்த்துக் கொண்டு, ஒரு சில வாரங்களுக்குள் கான்டாண்டி நோபிளை அடைந்து விடுவதென்று, நேசக்கட்சி கப்பல்படை அதிகாரிகள் தீர்மானித்தார்கள். பதினெட்டாந் தேதி இவர்கள் நுழையப் போகிறார்கள் என்ற செய்தி, முந்திய நாளே, கான்டாண்டி நோபிளில் எட்டி விட்டதால்தான் அன்று அங்கு அவ்வளவு பரபரப்பு! எஜீயன் கடலிலிருந்து டார்டனெல்ஸுக்குள், நுழைந்து சிறிது தூரம் வந்தால் அங்கே ஜல சந்தி குறுகலடைகிறது. இரண்டு கரைக்கும் நடுவே ஒரு மைல் அகலந்தான். மேல் கரையில் கிலீத் பாஹ்ர் என்ற கோட்டை; கீழ்க் கரையில் சாணக் என்ற கோட்டை; இரண்டையும் பந்தோபது செய்து வைத்திருந்தார்கள் துருக்கி யர்கள். ஏற்கனவே போட்டிருந்த திட்டப்படி, 1915ஆம் வருஷம் மார்ச் மாதம் 18ஆம் தேதி, நேசக் கட்சி யுத்தக் கப்பல்கள் மேற்படி குறுக லான பாகத்தை நெருங்கின. ஆனால் இரு கரைகளிலுமிருந்து, துருக்கியர்கள் குண்டுகள் வீசி இவற்றைத் திருப்பியனுப்பிவிட்ட னர். இதனால் நேசக் கட்சி யுத்தக் கப்பல்களில் சில மூழ்கிப் போயின; சில சேதமடைந்தன. துருக்கி, இங்ஙனம் எதிர்த்துப் போராடும் என்று நேசக் கட்சியினர் எதிர் பார்க்கவேயில்லை. இனி பிரிட்டன் சும்மாயிருக்கலாமா? அதுவும் கடலரசி பிரிட்டன்! 3. காலிபோலி யுத்தம் தரை மூலமாகவும் கடல் மூலமாகவும் துருக்கியைத் தாக்குவ தென்று தீர்மானித்தது பிரிட்டன். ஸர் இயான் ஹாமில்டனுடைய தலைமையில் ஒரு லட்சம் படைகள் திரட்டப்பட்டன. இங்ஙனமே கப்பற்படையும் தயாரிக்கப்பட்டது. 1915ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி இரவு, காலிபோலி யின் தெற்குப் பாகத்திலுள்ள ஸெத்-எல்-பாஹ்ர் கோட்டைக்கு அருகில் பிரிட்டிஷ் துருப்புகளின் ஒரு பகுதி வந்திறங்கியது. துருக்கியப் படைகள் இவற்றிற்குச் சிறதுகூட இடங்கொடாமல் எதிர்த்துப் போராடுகின்றன. மற்ற இடங்களில் என்ன நடை பெறுகிறதென்று யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. இந்த இடத்திற்கு வடக்கே அன்ஸாக் கோவ் என்ற இடத்தில் பிரிட்டிஷ் துருப்புகளின் மற்றொரு பகுதி இறங்க முயற்சி செய்தது. இந்த இடத்தில் துருக்கியரின் காவல் பலமில்லை யென்பதைத் தெரிந்து கொண்டு, தன் படையின் பெரும் பாகத்தை இங்கே இறக்கி, பிறகு மெதுவாகச் சிறிது தூரத்தில் உள்ள குன்றை ஆக்ரமித்துக் கொண்டு விட்டால், அங்கிருந்து தீபகற்பம் முழுவதையும் தன்னாதிக் கத்துக்குக் கொண்டு வந்து விடலாமென்பது பிரிட்டிஷ் சேனாதி பதியின் எண்ணம். அன்ஸாக் கோவ் என்ற இடத்தில் பிரிட்டிஷ் படைகள் எதிர்பார்த்தபடி இறங்க முடியவில்லை. ஏனென்றால் இங்கு அலை அதிகமாயிருந்தது. கூட இருட்டு. துருப்புகளை ஏற்றிச் சென்ற படகுகள் அலை வேகத்தினால் கொஞ்சம் வடக்குப் பக்கம் தள்ளிப் போயின. பொழுது விடிவதற்குள் எங்காவது ஓரிடத்தில் இறங்கி, கடற்கரையைக் கைப்பற்றிக் கொண்டுவிட வேண்டுமென்பது பிரிட்டிஷ் சேனாதிபதியின் விருப்பம். எனவே, வடக்கே தள்ளிப் போன படகுகள் ஓரிடத்தில் கரையடைந்தன. இங்ஙனம் இந்தப் படை இறங்கியது, ஒரு குன்றின் அடிவார மாயிருந்தது. இந்தக்குன்றுக்கு அரிபுர்னு என்று பெயர். எதிர்த்து நிற்கக் கூடிய துருக்கியப் படை ஒன்றும் இங்குக் காணப்படவில்லை. ஆகவே, அரிபுர்னு மலையைத் தங்கள் கைவசப் படுத்திக்கொண்டு விட்டால், அதன் உச்சியிலிருந்து துருக்கியப் படைகளைச் சிதற அடித்து விடலாமென்று கருதி பிரிட்டிஷ் படையின் தளகர்த்தன் தன் படைகளை மலை மீதேற உத்தரவிட்டான். அப்படியே, ஆதிரேலியர்களைக் கொண்ட இந்தப் படை உற்சாகமாக மலைமீதேறியது. முக்கால் பங்கும் ஏறிவிட்டது. உச்சியைக் கைப்பற்ற இன்னும் கொஞ்ச தூரந்தான் பாக்கி. ஆனால் திடீரென்று, பாறைகளின் இடுக்குகளிலிருந்து பல துப்பாக்கி முனைகள் இந்தப் படைகளைக் குத்திக் கீழே வீழ்த்தின. ஆங்காங்குப் பதுங்கியிருந்த துருக்கியப் படைவீரர்கள், இவர்களைச் சிதற அடித்து விட்டார்க்ள. ஆதிரேலியர்கள் கடற்கரைக்கு மீண்டும் வந்து சேர்ந்தார்கள். அங்குக் கடற்கரையிலோ துருப்புகள் இன்னும் படகுகளிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கின்றன. குன்றிலிருந்து தப்பியோடி வந்தவர்களைக் கண்டு, புதிதாக வந்திறங்கிக் கொண் டிருக்கிறவர்கள் பயந்துபோய், கைகலந்து சண்டையும் போட் டார்கள். இருட்டல்லவா? சத்துருவென்றும் மித்துருவென்றும் தெரியவில்லை. ஒரே கலவரம்! இந்தச் சந்தர்ப்பத்தில், குன்றின் உச்சியிலிருந்து துருக்கிய பீரங்கிக் குண்டுகள் வந்து விழ ஆரம்பித்து விட்டன. ஆதிரேலியர்களின் ரத்தமும், எஜீயன் கடலின் உப்புத் தண்ணீரும் ஒன்று கலந்தன. இந்தக் குழப்பத்திற்கு என்ன காரணம்? எங்கிருந்து பீரங்கிப் பிரயோகம் நடைபெறுகிறது? பிரிட்டிஷ் படையின் தளகர்த்தன் திகைத்துப் போய்விட்டான். அரிபுர்னு மலையில், துருக்கியப் படையின் பத்தொன்ப தாவது பிரிவு பாதுகாவலாக வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரிவின் தளகர்த்தனாக நியமிக்கப்பட்டிருந்தவன் ஒரு கண்டிப்பான அதிகாரி. மற்றத் துருக்கிய தளகர்த்தர்களைப் போல், தயை தாட் சண்யம் காட்டுகிற தன்மையோ, விட்டுக்கொடுக்கிற சுபாவமோ இவனிடம் கிடையாது. இவன் தன் கீழிருந்த சிறு உத்தியோகதர் களிடமிருந்து ஒழுங்கை எதிர்பார்த்தான் இவனுடைய சைந்நியத் தில் கடமையைத் தவறினவர்களோ, ஒழுங்கு மீறினவர்களோ கிடையாது. அவ்வளவு கடுமையான தளகர்த்தன் இவன். இவன் சமீபத்தில் தான் இந்தப் படையின் தளகர்த்தன் பதவியை ஏற்றான். இதற்கு முன்னர் இவன் சோபியா என்ற நகரத்தில் ராணுவக் காரிய தரிசியாயிருந்தான். இவன் பத்தொன்பதாவது பகுதிப் படையின் தளகர்த்தன் பதவியை ஏற்றுக் கொண்ட ஒரு சில வாரங்களுக்குள், தன் கீழிருந்த போர் வீரர்களுக்கு ஒரு ஜீவ சக்தியைத் திணித்து விட்டான். அட, சைத்தான்தான் வரட்டுமே, எங்கள் கம்மந்தான் (காப்டன் - தளகர்த்தன்) எங்களுக்குத் தலைவனா யிருந்து போர் நடத்துகிற வரையில் எதற்கும் அஞ்ச மாட்டோம் என்று இவன் கீழிருந்த போர் வீரர்கள் சொல்லிக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஆதிரேலியப் படைகள் அரிபுர்னு கடற்கரையில் இறங்கிய அன்றிரவு, இந்தப் பத்தொன்பதாவது பகுதிப் படையினர் நித்திரை செய்யவில்லை. இவர்களுடைய கம்மந்தான் அரிபுர்னு மலையின் மீது யுத்தப் பயிற்சி நடத்த வேண்டுமென்று உத்தரவு செய்திருந்தான். இது யதேச்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படையினருக்கோ, கம்மந்தானு க்கோ ஆதிரேலியப் படைகள் அரிபுர்னு மலையைக் குறியாக வைத்துக் கொண்டு அன்றிரவு தங்களைத் தாக்குமென்று தெரியாது. பயிற்சி செய்யப் போதிய தரைப்படையுடன், கொஞ்சம் பீரங்கிப்படையும் வரட்டும் என்று கம்மந்தான் உத்தரவு செய்திருந்தான். பீரங்கிப் படைகளுக்கு, அதிகமான குண்டுகளும் தேவையிருக்குமோ? என்று கேட்டான் ஒரு கீழதிகாரி. ஆம் என்றான் கம்மந்தான். துருக்கிய வீரர்கள் யுத்தப் பயிற்சி செய்து கொண்டே அரிபுர்னு மலையில் ஏறினார்கள். இருட்டு. குளிர். ஆனாலும் கம்மந்தான் முன்னே வழிகாட்டிக்கொண்டு சென்றதால், உற்சாகத்தோடு மேலேறினார்கள். பொழுது விடிய இரண்டு ஜாமந்தான். இருக் கிறது, இன்னும் மலை உச்சியைப் போய்ச் சேரவில்லை. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, இரண்டு துருக்கியக் காவலர்கள் எதிர்ப்புறமாக ஓடி வந்தார்கள். இங்கிலீஷ்! 炙äZ! இந்த இரண்டு வார்த்தைகள்தான் அவர்கள் சொன்னார்கள். சத்துருக்களின் மீது பாயுங்கள் என்றான் உடனே கம்மந்தான். யுத்தப் பயிற்சி செய்து கொண்டு வந்தது இப்பொழுது உண்மையிலேயே யுத்தமாகி விட்டது. துருக்கியர்கள் வெகு வேகமாக மலையேறினார்கள். துருக்கி சாம்ராஜ்யத்தின் வாழ்வோ தாழ்வோ இவர்கள் கையிலேதான் இருந்தது. ஆதிரேலியர்கள், மலையின் மேற்பக்கத்தில் ஏறி வருகிறார்கள். துருக்கியர்கள் கீழ்ப் புறத்திலிருந்து போகிறார்கள். இரண்டு பேரும் சந்தித்தபோது கை கலந்த சண்டை ஆரம்பமாகியது. பிறகு பீரங்கி முழக்கம். ஆதிரேலியர்கள் கடற்கரைக்குத் திரும்பிவிட்டார்களல்லவா? இவர்களைத் துரத்திக்கொண்டு துருக்கியப் படையினர், கடற்கரை வரை சென்றனர். ஆனால் சமுத்திரத்திலே நின்றுகொண்டிருந்த கப்பல் பீரங்கி களிலிருந்து குண்டுகள் வந்து விழுந்து இவர்களை முன்னேற விடாமல் தடை செய்தன. இவைகளுக்குப் பதில் சொல்லக் கூடிய நீண்ட பீரங்கிகள் துருக்கியர் வசம் இல்லை. கம்மந்தான் பல்லைக் கடித்தான். அவன் என்ன செய்வான்? ஆதிரேலியர்களை, கடற்கரை பிரதேசத்திலிருந்து அப்புறப் படுத்த முடியவில்லை. ஆனால், பிரிட்டிஷாரும் தாங்கள் எதிர்பார்த்தபடி முன்னேற முடியவில்லை. ஆயினும் கம்மந்தான் சும்மாயிருக்கவில்லை. அன்றிரவும் மறுநாளும், தனது துருப்புகளை உற்சாகப்படுத்தி, ஆதிரேலியர் களைப் பின்னே தள்ளும்படி ஏவினான். இவன் படையின் முன்னணியிலே நின்றுகொண்டு, போர் வீரர்களுக்கு வேண்டிய சௌகரியங்களைக் கவனித்தான். அடிக்கடி அவர்களுக்கு நல்ல வார்த்தைகளைச் சொல்லி ஊக்கப்படுத்துவான். இப்படி மே மாதம் முதல் வாரம் வரை, இரு தரப்பினரும் விடாப்பிடியாகப் போராட் டத்தை நடத்தினர். 4. மண்வெட்டி தாங்கிய தொண்டன் கடைசியில் ஒருவரையொருவர் பின்னுக்குத் தள்ள முடியாத நிலையில், தாங்கள் ஆக்ரமித்துக் கொண்ட இடத்தைப் பந்தோ பது செய்ய ஆரம்பித்தனர். இடையில் இருசாராரும், இறந்து போனவர்களைப் புதைத்து விடுவதென்று நிச்சயித்து, தற்காலிகமாக யுத்த நிறுத்தம் செய்தனர். பிண நாற்றம். சகிக்க முடியாத வெயில். தண்ணீர்க் கஷ்டம். இந்த நிலையில், துருக்கிய வீரர்கள் பிரிட்டிஷ் சேனை தங்கியிருக்கும் இடத்திற்கும் பிரிட்டிஷார் துருக்கிய சேனை தங்கியிருக்கும் இடத்திற்கும் சென்று இறந்து போனவர் களைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். துருக்கிய வீரர்களில் ஒருவன், கையிலே மண்வெட்டி தாங்கிக் கொண்டு, பிரிட்டிஷ் படைகள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, எடுத்துக் கொண்டு வர முடிந்த பிணங்களை எடுத்துக் கொண்டு வந்தான்; மற்றவற்றை அங்கேயே குழிவெட்டிப் புதைத்தான். இடையிடையே, பிரிட்டிஷ் சோல்ஜர் களோடு பிரெஞ்சு பாஷையில் தட்டுத் தடுமாறிப் பேசுவான். புன் சிரிப்பு நிறைந்த உதட்டிலே சதா சிகரெட் புகைந்து கொண் டிருக்கும். இவனுடைய சுறுசுறுப்பையும் பார்வையையும் கண்டு பிரிட்டிஷ் சோல்ஜர்கள், ‘இவன் ஒரு துருக்கியன்தானா? என்று சந்தேகித்தார்கள். இவன் பிணங்களைத் தூக்குவதும் குழி பறிப்பது மான வேலையில் ஈடுபட்டிருந்தாலும், பிரிட்டிஷாருடைய யுத்த முகாமில் என்னென்ன நடைபெறுகிற தென்பதையும் கூர்மையாகக் கவனித்து வந்தான். யுத்த நிறுத்த கெடுவு முடிந்தது. மீண்டும் யுத்தம். ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுக்கவில்லை. இப்படியாக மூன்று மாதங்கள் சென்றன. 1915ஆம் வருஷம் ஆகட் மாதம் பிரிட்டிஷார் அதிக மான துருப்புக்களை காலிபோலி தீபகற்பத்திலே கொண்டு குவித் தனர். நீண்ட கால யுத்தத்திற்கு வேண்டிய மாதிரி உணவுப் பொருள்கள் முதலியனவற்றை ஏற்றிக் கொண்டு, பிரிட்டிஷ் சாமான் கப்பல்கள் பல, எஜீயன் கடலில், காலிபோலி தீபகற்பத்திற்கு மேற்கே வந்து நின்றன. கரையோரமாகவுள்ள பிரதேசங்களை, கடலிலிருந்த வண்ணம் பிரிட்டிஷ் பீரங்கிகள் படுசூரணமாக்கி வந்தன. நரகமே, இங்கு வந்து குடி புகுந்து விட்டதோ என்று எண்ணும்படியிருந்தது. தற்காப்புக்காகத் துருக்கியர் வசம் என்ன இருந்தன? மூன்று படைகளும் ஒரு சில பீரங்கிகளுந்தான். நல்லகாலமாக, வேறு சில துருக்கியப் படைகளும் கடைசி சமயத்தில் வந்து சேர்ந்து கொண்டன. ஆகட் மாதம் ஒன்பதாந் தேதி சுவ்லா விரிகுடாவின் அருகில் இறங்கி முன்னேறுவதாகப் பிரிட்டிஷார் திட்டம் போட்டிருந்தனர். துருக்கியப் பிரதம சேனாதிபதியான லிமான் வான் சாண்டர், இந்தப் பகுதிக்கு மேலே கூறப்பட்ட கம்மந்தானை தளகர்த்தனாக நியமித்து, சத்துருக்களை எதிர்க்கும்படி ஏற்பாடு செய்திருந்தான். இந்தப் படைகள், சானக் பேர், ஹோஜா செமென் என்ற இரண்டு குன்றுகளைத் தங்கள் யுத்த களமாக ஏற்பாடு செய்து கொண்டன. இந்த இரண்டு குன்றுகளையும் பிடித்துக் கொள்ள பிரிட்டி ஷாரும் துருக்கியரும் விடாப்பிடியாகச் சண்டை செய்தனர். ஆனால் பிரிட்டிஷார் எதிர்பார்த்தபடி முன்னேற முடியவில்லை. முன்னே சொன்ன கம்மந்தான் இவர்களை விரட்டியடித்தான். இந்தச் சமயத்தில் இவன் காட்டிய துணிச்சல் பிரமிக்கத்தக்கது. மயிரிழை ஆபத்துகள் இவனுக்குப் பலமுறை ஏற்பட்டன. ஏதோ ஒரு பெரிய காரியத்தைச் சாதிப்பதற்காக இவன் கடவுளால் காப்பாற்றப்பட்டு வருகிறானோவென்று இவனுடைய போர் வீரர்கள் எண்ணி னார்கள். மூன்று மாதகாலம் விடாப்பிடியாகப் போராட்டம் நடை பெற்றது. இங்கிலாந்தின் சிறந்த போர் வீரர்கள் மடிந்து வந்தனர். ஆனால், லண்டனிலிருந்த யுத்த மந்திரிக் காரியாலயம் ஒரே பிடிவாதமாயிருந்தது. கான்டாண்டி நோபிளைக் கைப்பற்றுவது அவ்வளவு முக்கியமாக அது கருதியது. தவிர, ஏகாதிபத்தியத்தின் கௌரவம் ஒன்றிருக்கிறதல்லவா? அதையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே. ஆனால் பிரிட்டிஷாரின் துரதிருஷ்டவசமாக, நவம்பர் மாதக் கடைசியில் துருக்கியப் படைகளுக்குத் துணை செய்ய ஜெர்மனியி லிருந்து பெரிய பீரங்கிகள் வந்திறங்கின. 1915ஆம் வருஷம் டிசம்பர் மாதம் பத்தொன்பதாம் தேதி, இனியுத்தம் செய்வதில் பயனில்லையென்றும், காலிபோலி தீபகற்பத் தின் ஓர் அங்குல மண்கூட நமது கையில் அகப்படாதென்றும் தீர்மானித்து, அன்றிரவு, கப்பல்களிலேறித் திரும்பிவிட்டனர் பிரிட்டிஷார். மொத்தம் இந்தக் காலிபோலி யுத்தத்திலே முப்பதினாயிரம் பேர் மரணம்; எண்ணாயிரம் பேர் காணாமல் போயினர்; எழுபத்து நாலாயிரம் பேர் காயமடைந்தனர். நவீன யுத்த சாதனங்களில்லாமல், குறைந்த படைகளுடன், எல்லா வசதிகளையுமுடைய பெரிய பிரிட்டிஷ் சைந்நியத்தை விரட்டியடிப்பதற்கு முக்கிய காரணனாயிருந்த இந்தக் கம்மந்தான் யார்? லெப்டினெண்டு கர்னல் கெமால் பாஷா! 8 சிரியாவில் 1. யுத்தமேன்? 1915ஆம் வருஷம் டிசம்பர் மாதம் கடைசியில் கான்டாண்டி நோபிளுக்குத் திரும்பி வந்தான் கெமால். பத்திரிகைகள், இவனை வரவேற்றுத் தலையங்கங்கள் எழுதின. ராணுவ தளகர்த்தர்கள், இவனிடத்தில் ஒரு விசேஷ மரியாதையைச் செலுத்தத் தொடங்கி னார்கள். ஆனால் அரசியல்வாதிகள், இவனைக் கண்டு பொறாமைப் பட்டார்கள். இதன் விளைவு என்ன? அப்பொழுது அரசாங்க நிருவாகத்தைத் தன் கையிலே வைத்துக் கொண்டிருந்த என்வர் பாஷா, கெமாலை, தியார் பெகிர் என்ற ஊரிலுள்ள ராணுவத்தின் தலைவனாக நியமித்து அனுப்பிவிட்டான். இந்த தியார் பெகிர் என்பது, கான்டாண்டி நோபிளுக்கு மேற்கே 555 மைல் தூரத்தி லுள்ளது. இந்த இடத்திற்குச் சென்றான் கெமால். அங்கிருந்த ராணுவப் படையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான். இந்தச் சமயத்தில் பிரிட்டிஷார், சிரியா வழியாகத் துருக்கியைத் தாக்கப் படை திரட்டினர். இதனால் உடனே கான்டாண்டி நோபிளுக்கு வரவேண்டுமென்று கெமாலுக்கு யுத்தக் காரியாலயத்திலிருந்து உத்தரவு கிடைத்தது. பிரிட்டிஷார், சிரியா மூலமாகத் துருக்கியைத் தாக்க வேண்டிய அவசியமென்ன? இதைப்பற்றி நாம் கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுவது இந்த இடத்தில் அவசியமாகிறது. அரேபியா, சின்ன ஆசியாவிலுள்ள சிரியா, பாலதீனம், மெஸபொடேமியா முதலிய பிரதேசங்கள், ஆப்பிரிக்கா கண்டத்தில் வடபாகத்திலிருந்த பிரதேசங்கள் ஆகிய அனைத்தும் துருக்கி சாம்ராஜ்யத்தின் ஆதீனத் திற்குட்பட்டிருந்தன வல்லவா? இந்த ஒவ்வொரு பிரதேசத்திலும் துருக்கிய ஆதிபத்தியத்துக்கு விரோதமான கிளர்ச்சிகளை உண்டு பண்ணி அதனைச் சீர்குலைக்க வேண்டுமென்று பிரிட்டிஷார் பல திட்டங்களைப் போட்டு வைத் திருந்தனர். இந்தத் திட்டங்களுக் கெல்லாம் மூலகாரண மாயிருந்தவன் தளபதி டி. இ. லாரென் என்பவன். இவன் அராபியர்களுடைய பழக்க வழக்கங்களையும் அவர்களுடைய சுபாவங்களையும் நன்கு தெரிந்து கொண்டிருந் தவன். அராபிய பாஷையை அராபியர்களைப் போலவே பேசுவான். அவர்களைப் போலவே உடை தரித்துக் கொள்வான். தன்னை அந்நியன் என்று சொல்லாதபடி அராபியர்களிலே தானும் ஒருவன் என்கிற மாதிரியே நடந்து கொண்டு வந்தான். இவன், ஐரோப்பிய யுத்த ஆரம்ப காலத்திலிருந்தே அராபியர்கள் மத்தியில் துருக்கிக்கு விரோதமாகப் பிரசாரஞ்செய்து வந்தான். அராபியர்கள் வீர வாழ்க்கையில் விருப்புள்ள வர்களென்றும், இவர்கள் ஏன் துருக்கியர் களுக்கு அடங்கி நடக்க வேண்டு மென்றும் இவன், அந்தப் பாலைவனப் பிரதேசத்திலே ஆங்காங்குக் குதிரை மீதேறிச் சென்று அராபியர்களைக் கிளப்பி வந்தான். இந்த அராபியர் களுக்குத் தேவையான ஆயுத வகைகளை, பிரிட்டிஷார் ரகசியமாக உதவி வந்தனர். அராபிய தேசீய சேனை என்றொரு சேனை தனியாகப் பிரிட்டிஷாருடைய மேற்பார்வையில் ஏற்படுத்தப் பெற்று விட்டது. இந்தச் சேனையின் துணை கொண்டு, முலிம்களின் புண்ணிய தலமாகிய மெக்கா நகரத்தை அராபியர்கள் தங்கள் வசப்படுத்திக் கொண்டார்கள். ஹூசேன் என்பவன், தான், இனி துருக்கியின் ஆதீனத்திற்குட்பட்டவனில்லை யென்றும், மெக்காவின் அரசன் என்றும் பிரகடனப் படுத்திக்கொண்டான். இதற்கு பிரிட்டி ஷாருடைய ஆதரவு பூரணமாக இருந்தது. மெக்காவைச் சுவாதீனப் படுத்திக் கொண்ட அராபியர்கள் மேன்மேலும் உற்சாகங் கொண்டவர்களாய், மற்ற பாகங்களையும் கைப்பற்றிக் கொள்ளத் தீர்மானித்தனர். துருக்கிக்கு விரோதமான கிளர்ச்சிகள் விபரீதமாகப் பரவி வந்தன. துருக்கிய சாம்ராஜ்யத்தின் சவக்குழி அரேபிய பாலைவனத்தில் பறிக்கப் பட்டுவிட்டது. மெக்காவுக்கு வடக்கு மெடீனா என்றொரு முக்கிய நகரம் இருக்கிறதல்லவா? இங்குத் துருக்கியப் படை ஒன்று, எப்பொழுதும் போல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தப் படை, அராபியர் களுடைய எதிர்ப்பை மிகவும் சாமர்த்தியமாகச் சமாளித்து வந்து கொண்டிருந்தது. எத்தனை நாட்களுக்கு? இந்த மெடீனா நகரம், ஹெட்ஜா ரெயில்வே தொடர் வந்து முடிகிற இடம். இதற்குத் தெற்கே ரெயில்வே போக்குவரத்து அப்பொழுது இல்லாமலிருந்தது. இந்த ஹெட்ஜா ரெயில்வே வடக்கே டமாகஸிலிருந்து புறப்பட்டு, செங்கடலுக்கு ஓரமாக ஆயிரக்கணக்கான மைல் வந்து மெடீனாவில் முடிகிறது. இந்த ரெயில்வே தொடர்பை அறுத்து, துருக்கிக்கும் அரேபியாவுக்கும் சம்பந்தமில்லாமல் செய்துவிட வேண்டுமென்பது பிரிட்டிஷாரின் திட்டங்களில் ஒன்று. துருக்கி சாம்ராஜ்யத்தின் கௌரவத்தை எந்த வகையிலேனும் காப்பாற்ற வேண்டுமென்பது துருக்கிய அரசாங்கத் தின் கருத்து; அதாவது என்வெரின் கருத்து. இதற்காக அரேபியாவும், ஹெட்ஜா ரெயில்வேயும், சத்துருக் களின் கையில் சிக்கிக் கொள்ளாத படி தடுக்கவேண்டுமென்று தீர்மானித்தான் இவன். துருக்கியின் தற்போதைய பலவீனமான நிலையில், இந்த முயற்சி பைத்தியக்காரத்தனமான செயலாகவே வந்து முடியுமென்று, துருக்கியின் சேவையிலிருந்த ஜெர்மானிய ராணுவ தளகர்த்தர்களும் கெமாலும் அபிப்பிராயப்பட்டார்கள். ஆனால் என்வெர் இந்த விஷயத்தில் ஒரே பிடிவாதமாயிருந்தான். இப்படி இவன் பிடிவாத மாக இருக்கவேண்டுமென்பதுதான் பிரிட்டிஷாரின் பிரார்த்தனை. துருக்கிக்குப் பல போர்முகங்களையும் சிருஷ்டித்து விட்டோமா னால், அதன் படைகள். பல போர்முகங்களிலும் சிதறிப் போகு மென்றும், அப்பொழுது தாங்கள் ஒவ்வொரு இடமாகக் கைப் பற்றிக் கொண்டு விடலாமென்றும் பிரிட்டிஷார் ஏற்பாடு செய்திருந் தனர். பாலதீனத்தில் ஒரு பெரும் படையைத் திரட்டி வைத்திருந் தனர். இந்தியா, எகிப்து முதலிய நாடுகளிலிருந்து படைகளும், படைக்கலங்களும் அனுப்பப் பட்டன. சிறிது காலத்திற்குள் மெஸபொடேமியாவிலுள்ள பாக்தாத் நகரம் பிரிட்டிஷார் வசம் அகப்பட்டுக்கொண்டுவிட்டது. என்வெர் போட்ட திட்டங்கள் பலிதமடையவில்லை. அவன் நிலைமை சங்கடமாகி விட்டது. எப்படியாவது மீண்டும் பாக்தாத் நகரத்தைக் கைப்பற்றிவிட வேண்டு மென்று தீர்மானித்தான். இதற்காக ஜெர் மானியர்களின் உதவியை நாடினான். ஜெர்மானிய தளகர்த்தனான வான் லிமான் சாண்டர் என்பவன், என்வெரை, இந்த முயற்சியில் இறங்காதிருக்குமாறு தடுத்துப் பார்த்தான். பயனில்லை. கடைசி யில், துருக்கியர்களும் ஜெர்மானியர்களும் கலந்த ஆசியப்படை யொன்று பாக்தாத் நகரத்தை பிரிட்டிஷாரிடமிருந்து கைப்பற்ற அனுப்பப்பட்டது. இதற்கு வான் பால்கென்ஹேய்ன் என்ற ஜெர்மானிய தளகர்த்தன் சேனாதிபதியாக நியமிக்கப்பட்டான். இவன்கீழ் ஒரு பகுதிப் படைத் தலைவனாகக் கெமால் அனுப்பப் பெற்றான். படைத்தலைவனான வான் பால்கென்ஹேய்னுக்கும் கெமா லுக்கும் அபிப்பிராய வேற்றுமைகள் அடிக்கடி உண்டாயின. கெமாலை நல்லதனப்படுத்தி அவனைத் தன் கீழ் இருத்திக் கொள்ள வேண்டுமென்று பால்கென்ஹேய்ன் பலவிதமாக முயன்றான். ஒரு சமயம், ஒரு சிறு பெட்டியில் சில தங்க நாணயங்களை வைத்துக் கெமாலுக்குத் தன் அன்பளிப்பாக அனுப்பினான். கெமால் இதனைப் பெற்றுக் கொண்டு இதற்காக ஒரு ரசீது கொடுத்தனுப்பிவிட்டான். சில நாட்கள் கழித்து, கெமால், தான் பெற்ற தங்க நாணயங்களை பால்கென்ஹேய்னுக்குத் திருப்பி அனுப்பி, தான் கொடுத்த ரசீதைத் திருப்பிக் கேட்டான். மற்றும், என்வெருடைய கையாளாக இந்த பால்கென் ஹேய்ன் இருந்து வருவது கெமாலுக்குச் சிறிதுகூடப் பிடிக்கவில்லை. பாக்தாத் நகரத்தை மீண்டும் கைப்பற்றுகிற முயற்சி. துருக்கிக்கு அதிகமான விபரீதத்தை உண்டாக்கிவிடுமென்று பலவிதமாக எடுத்துச்சொல்லிப் பார்த்தான். மற்ற சகோதர ராணுவ தளகர்த்தர் களை ஒன்று சேர்த்துக் கிளர்ச்சி செய்யுமாறு தூண்டினான். இவை யெல்லாம் கான்டாண்டி நோபிளிலுள்ள யுத்தக்காரியாலயத் திற்குத் தெரிந்தது. கெமாலின் இந்த மாதிரியான நடவடிக்கைகள், ராணுவக் கட்டுப்பாட்டுக்கும் ஒழுங்குக்கும் முரண்பட்டதல்லவா? ஆனால் கெமாலைப் பகிரங்கமாக விசாரணை செய்து தண்டனை விதிக்கவும் கான்டாண்டிநோபிள் அரசாங்கத்தாருக்குத் தைரிய மில்லை. எனவே, கெமால் நோய்வாய்ப் பட்டிருப்பதாகக் காரணங் காட்டி அவனுக்குநீண்ட நாள் ரஜா கொடுத்துவிட்டார்கள். அலெப்போ என்ற நகரத்தில் கெமால், தன் படைத் தலைமைப் பதவியை ஒப்புக் கொடுத்துவிடும்படி உத்தரவு பிறப்பித்தார்கள். அப்படியே கெமாலும் தன் பதவியை ஒப்புக்கொடுத்துவிட்டான். ஆனால் கையில் பணமில்லை. கான்டாண்டி நோபிளுக்குத் திரும்ப வேண்டுமே. சிரியாவிலே இவனை நம்பி, யார் பணங் கொடுப்பார்கள்? அத்தகைய தாராள சிந்தையுடைய பெரிய பணக் காரர்களும் அங்கு இல்லை. நல்ல வேளையாக, கெமாலுக்குச் சொந்தமாகச் சில குதிரைகள் இருந்தன. இவற்றை இவனுடைய நண்பனான ஜெமால் என்பவன் பெரிய மனது பண்ணி வாங்கிக் கொண்டு ஐயாயிரம் பவுன் கொடுத்தான். இதைக் கொண்டு கெமால், கான்டாண்டிநோபிளுக்குத் திரும்பி வந்தான். 2. இளவரசனுடன் கான்டாண்டி நோபிளுக்குத் திரும்பி வந்த கெமால், தன் தாயாரோடு சிறிது காலம் அமைதியாக வாழ்ந்து வந்தான். ஆனால் குடும்ப வாழ்க்கையிலேயுள்ள கட்டுப்பாடுகள் இவனுக்குப் பிடிக்க வில்லை. தனது வாழ்க்கையின் ஒவ்வொரு சிறிது அம்சத்திலும் கூட சுதந்திரமாக இருக்கவே இவன் விரும்பினான். எனவே தாயாரை மட்டும் தனியாக வைத்துவிட்டு இவன் ஒரு ஹோட்டலில் போய்த் தங்கினான். அங்குத் தன் காலத்தைத் தனிமையிலேயே கழித்தான். எப்பொழுதும் போல என்வெரையும். அவன், ஜெர்மானிய தளகர்த்தர்களுக்குத் துருக்கிய ராணுவத்தில் ஆதிக்கம் கொடுத் திருப்பதையும் பற்றி வருவோர் போவோரிடமெல்லாம் தூஷித்து வந்தான். நாளாவட்டத்தில் என்வெரை விரும்பாதவர்கள் அனை வரும் இவன் பக்கம் வந்து சேர்ந்தார்கள். இவன் செல்வாக்கு வளர்ந்து வரலாயிற்று. அரசாங்கத்தின் தலைமை தானத்திலேயே இவனுக்கென்று தனிக்கட்சி யொன்று அமையும் போலிருந்தது பார்த்தான் என்வெர். இவனை எப்படியாவது தலைநகரத்தைவிட்டு அப்புறப்படுத்திவிட நிச்சயித்தான்; ஆனால் சுலபமான காரிய மல்லவே! கெமாலையும் அவனுடைய சகாக்களையும் விரோதித்துக் கொள்ளாமல் செய்ய வேண்டிய காரியமல்லவா இது? நல்ல வேளையாக 1918ஆம் வருஷ ஆரம்பத்தில் துருக்கிய இளவரசனான வஹித்தீன், ஜெர்மனிக்கு விஜயம் செய்து அங்குள்ள ராணுவ ஏற்பாடுகளையெல்லாம் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று முடிவு செய்யப்பட்டிருந்தது. இளவரசனின் பரிவாரத்தில் ஒருவ னாகக் கெமாலையும் சேர்த்து அனுப்பி விடுவதென்று என்வெர் தீர் மானித்தான். அப்படிச் செய்வதனால், முதலாவது, தலைநகரத்தில் கெமாலின் தொல்லை ஒழியும்; இரண்டாவது, கெமால் நேரே சென்று ஜெர்மானிய ராணுவ பலத்தைப் பார்த்து வருவானாகில் அவன் மனம் மாறக் கூடும். இவை என்வெரின் குருட்டு நம்பிக்கைகள்! இளவரசனுடன் கெமால் ஜெர்மனிக்குச் சென்றான். பிரயா ணத்தின் போது இவனுக்கும் இளவரசனுக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. இளவரசன், என்வெரையும் தலாத் பாஷாவை யும் வெறுத்து வருவதைக் கெமால் கண்டு கொண்டான். அவர் களுடைய பிடிப்பினின்று விடுதலை யடைய வேண்டுமென்பது இளவரசனின் விருப்பம். இளவரசனுடைய வெறுப்பைத் தனக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ள வெண்டு மென்பது கெமாலின் ஆசை. ஆனால் இருவரும் ஒருவரையொருவர் மனப் பூர்வமாக நம்பவில்லை. இளவரசனுடன் ஜெர்மானிக்குச் சென்ற கெமால், அங்கு ஜெர்மானிய தளகர்த்தர்களுடன் நேருக்கு நேர் கலந்து பேசினான். அவர்கள் போட்டிருந்த யுத்த திட்டங்களெல்லாம் தோல்வியடையு மென்று அவர்கள் முகத்துக்கெதிரேயே சொன்னான். ஜெர்மானியர் களுக்குக் கெமாலின் நடவடிக்கைகள் சிறிதுகூடப் பிடிக்கவில்லை. கெமால், கான்டாண்டி நோபிளுக்குத் திரும்பி வந்தான். உடனே கடுமையான நோயினால் படுக்கையில் வீழ்ந்து விட்டான். வயிற்றில் கோளாறு ஏற்பட்டுவிட்டது. இவனுடைய நண்பர்கள் இவனை வெளிநாடுகளுக்குப் போய் சிகிச்சை செய்து கொள்ளுமாறு கூறினார்கள். எனவே ஆதிரியாவி லுள்ள வியன்னாவுக்கும், ஜெக்கோலோவேகியாவிலுள்ள கார்ல்பாட்டுக்கும் சென்று சிகிச்சை செய்து கொண்டான். இந்த நோய் இவனுக்கு அடிக்கடி ஒருவிதமான ஏக்கத்தைக் கொண்டு வைத்துவிட்டது. உற்சாகமிழந்து சோர்ந்து கிடப்பான் சில சமயங்களில். இன்னும் சில சமயங்களில் கோபத்தினால் சீறி எழுவான். இவை யெல்லாம் சேர்ந்து இவன் தேகத்தில் சக்தியே இல்லாமல் செய்துவிட்டன. 1918ஆம் வருஷம் ஜூலை மாதம் மூன்றாந் தேதி சுல்தான் ஐந்தாவது முகம்மது காலமாகி விட்டான். வஹித்தீன், சுல்தான் ஆறாவது முகம்மத் என்ற பெயர் தாங்கிக் கொண்டு சிங்காதனம் ஏறினான். கெமால், பல நண்பர்களின் வற்புறுத்தலுக்கிணங்க 1918ஆம் வருஷம் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் காண்டாண்டி நோபிளுக்கு வந்து சேர்ந்தான். புதிய சுல்தானைச் சந்தித்தான். வஹித்தீனுக்கும், கெமாலுக்கும் இருந்த பழைய நட்பு இப்பொழுது வளர்ந்து வர ஆரம்பித்தது. துருக்கி சாம்ராஜ்யத்துக்கு அழிவு ஏற்படாவண்ணம் பாதுகாக்க வேண்டுமானால் சுல்தானே நேரில் ராணுவ நிருவாகத்தை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்றும், என்வெரை விலக்கி ஜெர்மானிய ராணுவ தளகர்த்தர்களுக்கு விடை கொடுத்தனுப்பி விட்டுத் தன்னை ராணுவத்தின் பிரதம உத்தியோகத னாக நியமித்து அதன் மூலமாகத் துருக்கியைக் காப்பற்ற வேண்டு மென்றும் யோசனை கூறினான் கெமால், சுல்தானுக்கு. ஜெர்மானி யர்களுடைய தொடர்பினின்று துருக்கி விலகிக் கொண்டு நேசக் கட்சியினருடன் தனியான சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமென்பதும் கெமாலின் மற்றொரு யோசனை. இந்த யோசனையை கெமால் அடிக்கடி சுல்தானிடம் வற் புறுத்தி வந்தான். ஒரு சமயம் சம்பாஷணை நடக்கிறபோது கெமால் சுல்தானிடம் காட்டவேண்டிய மரியாதையின் சம்பிரதாயங்களைக் கூடக் கை நழுவவிட்டு ஆத்திரமாகத் தன் கட்சியை எடுத்துச் சொன்னான். இது சுல்தானுக்குப் பிடிக்கவில்லை. நான் என்வெர் பாஷாவுடனும், தலாத் பாஷாவுடனும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன் என்று சுருக்கமாகவும் கண்டிப்பாகவும் பதில் சொல்லி விட்டான் சுல்தான். சுல்தான் இங்ஙனம் பின்னடைந்ததற்குக் காரணம் என்ன வென்றால் என்வெர் இவனைப் பயமுறுத்தி வைத்திருந்தான். கெமாலைவிட என்வெருக்கு தேசத்தில் செல்வாக்கு அதிகமென்று சுல்தானுக்கு அவன் ஆலோசனை கர்த்தர்கள் கூறிவைத்திருந் தார்கள். இந்த அபிப்பிராயம் ஏற்படும்படியாக என்வெர் மிக சாமர்த்தியமாக நடந்து கொண்டு வந்தான். கெமால், இந்தச் சூழ்ச்சிகளையெல்லாம் கண்டு ஆத்திரம் அடைந்தான். தன்னுடைய கோரிக்கைகள் ஒன்றுகூட நிறைவேற வில்லையேயென்று மனம் பொங்கினான். 3. மீண்டும் போர்முனைக்கு என்வெர் இதனோடு நிற்கவில்லை. கெமாலை எப்படியாவது தொலை தூரத்திற்கு அனுப்பிவிடுவதற்கு ஏற்பாடு செய்தான். இரண்டு வாரங்கள் கழிந்தன. சுல்தான், கெமாலுக்கு அழைப்பு அனுப்பித் தன்னை வந்து காணுமாறு ஏற்பாடு செய்தான். சுல்தான் தன் பரிவாரங்கள் புடைசூழ கொலுவீற்றிருக்கிறான் அரண்மனையில். ஜெர்மானிய ராணுவ தளகர்த்தர்கள் மிடுக்காக நிற்கிறார்கள் ஒருபுறம். கெமால் வந்தான். சம்பிரதாயமான மரியாதைகளைச் செய்தான். சுல்தானும் இவனை அதிக அன்போடு வரவேற்று உபசரித்து அருகிலிருந்த ஜெர்மானிய உத்தியோகதர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். இவர்தான் முதபா கெமால் பாஷா; மிகுந்த திறமை சாலி. இவரிடத்தில் எனக்கு அதிகமான நம்பிக்கை யுண்டு என்று சொல்லிவிட்டு, கெமாலைத் திரும்பிப் பார்த்து பாஷா அவர்களே, தங்களை சிரியாவின் வடபாகத்தி லுள்ள துருக்கியப் படைக்குச் சேனாதிபதியாக நியமித்திருக்கிறேன். அந்தப் படை முகம் மிகவும் முக்கியமானது. தாங்கள் உடனே அங்குச் செல்லவேண்டும். அந்தப் பிரதேசம் சத்துருக்கள் கையில் சிக்குமாறு தாங்கள் விட்டுவிடக்கூடாது. இந்த வேலையைத் தாங்கள் திறம் படச் செய்வீர்களென்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு என்று கூறினான் சுல்தான். சுல்தானிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தான் கெமால். வழியில் என்வெர் நின்று கொண்டிருந்தான். கெமாலைப் பார்த்து புன்சிரிப்பு சிரித்தான். கெமாலும் ஒரு நிமிஷம் அவனை முறைத்துப் பார்த்தான். சுல்தானுடைய உத்தரவுக்குத் திரை மறைவி லிருந்து வேலை செய்தது யார் என்பது இவனுக்குத் தெரியுமல்லவா? கோபத்தை அடக்கிக்கொள்ளுகிற சுபாவந்தான் கெமாலுக்கு இல்லையே. பேஷ் என்வெர், உன்னை நான் நிரம்பப் பாராட்டு கிறேன். நீ வெற்றி கொண்டு விட்டாய். எனக்குத் தெரிந்த வரையில் சிரியாவிலுள்ள ராணுவம் பெயரளவில்தான் இருக்கிறது. என்னை அங்கு அனுப்புவதின் மூலம் நிரம்ப அழகாகப் பழிதீர்த்துக் கொண்டு விட்டாய் என்று உரக்கக் கர்ஜித்தான். இதற்கு என்வெர் ஒரு பதிலும் சொல்லவில்லை. இந்த இருவரும் நேருக்கு நேர் நின்றுகொண்டு பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு ஜெர்மானிய தளகர்த்தன் அவன் சிறிது அகம்பாவத்தோடு, துருக்கியத் துருப்புகளைப் பற்றி ஒரு கவலையும் வேண்டுவ தில்லை. ஆடு மாடுகளைப்போல் அவர்களுக்கு ஓடத் தெரியும். அவர்களுக்குச் சேனாதிபதியாக இருக்கிறவர்களைப் பார்த்து நான் பொறாமைப்படுவதே கிடையாது. என்று கண் சிமிட்டிக் கொண்டே சொன்னான். இந்த வார்த்தைகள் கெமாலின் செவியில் விழுந்தன. திரும்பினான் அந்த ஜெர்மானியன் பக்கம். கண்களில் தீப்பொறி பறக்க, உதடு துடிக்க, நான்கூட ஒரு போர்வீரன்தான். துருக்கிய ராணுவத்திற்கு நானும் சேனாதிபதியாக இருந்திருக்கிறேன். துருக்கியப் போர்வீரன் எப்பொழுதும் புறமுதுகிட்டு ஓடமாட்டான். அவனுக்குப் பின் னடைவது என்ற வார்த்தையே தெரியாது. எனது தளகர்த்தரே, துருக்கியப் போர்வீரர்களின் முதுகுப்பக்கத்தை நீங்கள் பார்த் திருப்பீர்களாயின் அது நீங்கள் திரும்பி ஓடிப்போனபோது உங்கள் முதுகை நீங்கள் பார்த்துக் கொண்டது போல்தான். உங்களுடைய கோழைத்தனத்தை மறைப்பதற்காகத் துருக்கியர்களைத் துச்சமாகப் பேசுகிறீர்களா? என்ன தைரியம்? என்று அந்த மண்டபமே எதிரொலி கொடுக்குமாறு முழக்கம் செய்தான். கெமால் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு மண்டபத் திற்கு வெளியே சென்றான். அவன் முதுகை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 4. பின்னடைதல் 1918ஆம் வருஷம் ஆகட் மாதம். தீய்க்கிற வெய்யில். புழுதி யும் மணலும் நிறைந்த வெறும் வனாந்தரப் பிரதேசம். இதுதான் சிரியா தேசத்தின் போர்முனை. இங்குப் பிரிட்டிஷார் பலமான முதீப்புகள் செய்து வந்தனர். தளபதி அல்லென்பி என்பவ னுடைய தலைமையில், பெரிய படையொன்று அணிவகுத்து நின்றது. துருக்கியப் படைகளின் சேனாதிபதியாக தளபதி வான்லி மான் சாண்டர் இருந்தான். வான் பால்கென்ஹேய்ன் ஜெர் மனிக்குத் திரும்பிப் போய்விட்டான். இவனுடைய தானத்தில் தான் கெமால் நியமிக்கப்பட்டிருந்தான். சாண்டர், கெமாலுக்கு ஏழாவது வகுப்புப் படைத்தலைமைப் பதவியைக் கொடுத்தான். இந்தப் படைதான், துருக்கிய அணி வகுப்பில் மத்திய தானத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் இந்தப் படையின் அதிபதிக்கு அதிகமான பொறுப்பு உண்டு. 1918ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதியன்று, பிரிட்டிஷ் படை, துருக்கியர்களைத் தாக்க ஆரம்பித்தது. துருக்கியப்படைகள் சின்னாபின்னமாகிச் சிதறியோடிப் போயின. புறமுதுகிட்டுச் சென்ற துருக்கியப்படைகள், சுமார் இருநூற்றைம்பது மைல் தூரம் சென்று அலெப்போ என்ற ஊரில் வந்து சேர்ந்தன. சிதறிப்போய், பிறகு ஒன்று சேர்ந்த இந்தப் படை களின் தலைமைப்பதவியை கெமால் ஏற்றுக்கொண்டான். சிரியா வின் வடபாகத்தையும், அலெப்போ நகரத்தையும் காப்பாற்றுகிற பொறுப்பு இவனிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரிட்டிஷ் படையினர், துருக்கியப் படைகளை அலெப்போ வரையில் துரத்திக்கொண்டு வந்தனர். இதே சமயத்தில், அராபி யர்கள் அலெப்போ நகரத்திற்குள் நுழைந்து விட்டனர். துருக்கியர் களுக்கும் அராபியர் களுக்கும் கைகலந்த சண்டை ஆரம்பமாகி விட்டது. பிரிட்டிஷ் படைகள், நகரத்திற்குள் பிரவேசிக்கிறார்கள் என்று தெரிந்ததும், அலெப்போ நகர வாசிகளும் துருக்கியர்களுக்கு விரோதமாகிவிட்டார்கள். இனி இந்த ஊரில் தங்குவது ஆபத் தென்று நிச்சயித்தான் கெமால். தன் படைகளுடன், அலெப்போ வுக்கு வடக்கேயுள்ள கிட்மா என்ற ஊருக்குச் சென்று அங்கே முகாம் போட்டான். பிரிட்டிஷ் படையினர் இங்கும் துரத்திக் கொண்டு வந்தனர். 26-10-1918இல் இரண்டு படைகளும் கை கலந்தன. கெமா லின் உற்சாகத்தின் பேரில், துருக்கியப் படைகள் மிகத் தைரியமாகப் போர் புரிந்தன. பிரிட்டிஷ் படையில் அதிக சேதம் ஏற்பட்டது. கெமால், இனி இந்த இடத்தில் இருப்பது பொருந்தாதென்று கருதி, வடக்கே பத்து மைல் தூரம் தள்ளிப் போய் தன் படைகளை ஒழுங்குபடுத்தி நிறுத்திக் கொண்டான். இந்த இடத்திற்கு இப்பால் பிரிட்டிஷ் படைகள் வரக்கூடா தென்றும், இதனை விட்டுக் கொடுத்துத் துருக்கியப் படைகளும் பின்னடையக்கூடாதென்றும் தீர்மானித்தான். அப்படியே பிரிட்டிஷ் படைகளும் இந்த இடத்தை விட்டு முன்னேறவில்லை; துருக்கியப் படைகளும் பின்னடைய வில்லை. இந்த இடந்தான் நாளதுவரை துருக்கி சாம்ராஜ்யத்தின் எல்லையாக இருந்து வருகிறது. இங்ஙனம் இரண்டு படைகளும் எதிருக்கெதிராக உறுமிக் கொண்டிருக்கையில். பிரிட்டிஷாருடன், துருக்கிய அரசாங்கம் முத்ரோ என்ற இடத்தில் சமாதானம் செய்து கொண்டு விட்டது. என்று செய்தி வந்தது. துருக்கியிலுள்ள எல்லா ஜெர்மானியர்களும் உடனே ஜெர்மனிக்குத் திரும்பி வந்துவிட வேண்டுமென்று உத்தரவு பிறந்தது. இதனால், சிரியா போர் முனையில், துருக்கியப் படை களின் பிரதம சேனாதிபதியாயிருந்த வான் லிமான் சாண்டர் தன் பதவியைக் கெமால் வசம் ஒப்புவித்துவிட்டுப் பெர்லினுக்குப் புறப்பட்டு விட்டான். இரண்டாம் பாகம் புரட்சியாளன் அந்நிய ஆட்சியின் பாதுகாப்பை ஏற்றுக் கொள்வதானது, நம்மிடத்திலே மனித குணங்கள் ஒன்றுமேயில்லை யென்பதை அங்கீகரித்துக் கொள் வது போலாகும். அதாவது நம்முடைய பலவீனத்தையும் திறமையின்மையையும் ஏற்றுக் கொண்டது போலல்லவா? பரம அடிமைத்தனத்திற்கு இறங்கி விட்டால்தானே, நாம் அந்நியருடைய பாதுகாப்பை ஏற்றுக்கொள்ள முடியும்? ஆனால் துருக்கியன் தன்மதிப்புடையவன்; பெருமை கொண்டவன். அவனுக்குத் திறமையுண்டு; சாமர்த்தியமுண்டு. அப்படிப் பட்ட துருக்கியர்களைக் கொண்ட ஒரு ஜன சமூகம், அடிமையாக உயிர் வைத்துக் கொண்டிருப்பதைவிட அடியோடு மடிவதையே விரும்பும். ஆகையால் ஓன்று சுதந்திரம்! அல்லது மரணம்! கமால் அத்தாதுர்க் 9 துருக்கி எங்கே? 1. பரிதாப நிலை 1918-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் கடைசி வாரம், ஜெர்மனியோடு இதுகாறும் சேர்ந்து நேசக் கட்சியாரை எதிர்த்துப் போர் புரிந்து வந்த பல்கேரியா சரணடைந்து விட்டது. இதன் மன்னனாகிய பெர்டினாந்து முடி துறந்துவிட்டான். பல்கேரியா வீழ்ந்து பட்டதனால், நேசக் கட்சியாருக்குத் துருக்கியைக் கைப் பற்றிக் கொள்வது மிகவும் சுலபமாகிவிட்டது. மாஸிடோனியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள், கான்டாண்டி நோபிளை நோக்கி வந்துகொண்டிருந்தன. ஏற்கனவே இந்தப் படைகள், அட்ரியா நோபிளுக்கு அருகிலுள்ள மாரிட்ஸா என்ற ஊரைத் தாண்டி விட்டன. கான்டாண்டி நோபிளுக்கு வந்து சேர இன்னும் சில நாட்கள்தான் பாக்கி! பிரெஞ்சுக்காரர் கான்டாண்டி நோபிளை நோக்கி வருவதா? இதனைப் பிரிட்டன் பொறுத்துக் கொண்டிருக்குமா? எஜீயன் தீவுகளுக்கருகில் நங்கூரமிட்டிருந்த பிரிட்டிஷ் கப்பற்படை தன் குழாய் வழியாகப் புகைவிட ஆரம்பித்தது. அப்பொழுது அரசாங்க நிருவாகத்தை நேரடியாகக் கவனித்துக் கொண்டு வந்து சுல்தான், எப்படியாவது நேசக் கட்சியினருடன் சமாதானம் செய்து கொண்டுவிட வேண்டுமென்று தீர்மானித்தான். இதற்கனு சரணையாயுள்ளவர்களையே மந்திரிச் சபையில் நிய மித்துக் கொண்டான். 30-10-1918இல் முத்ரோ என்ற இடத்தில் சமாதான உடன்படிக்கை நிறைவேறியது. இந்த உடன்படிக்கையின் படி துருக்கியின் கப்பற்படைகள் நேசக் கட்சியார் வசம் ஒப்புவிக்கப் பட்டன. தேசப் பாதுகாப்புக்கு வேண்டிய படையை மட்டும் வைத்துக்கொண்டு, மிகுதியுள்ள படைகள் கலைக்கப் பட்டுவிட்டன. எனவே, சிரியாவில் கெமாலுக்கு என்ன வேலை? அவன் படைகள் கலைக்கப்பட்டு விட்டன. தவிர, இதே சமயத்தில், பிரதம மந்திரி யான இஜ்ஜெத் பாஷா, இவனை உடனே கான்டாண்டி நோபிளுக்கு வருமாறு தெரிவித்தான். இஜ்ஜெத் பாஷாவுக்கும் சுல்தானுக்கும் மனதாபம் ஏற்பட்டுவிட்டது. தான் ராஜீநாமா செய்யப் போவதாகவும், தனக்குப் பின்னால், பிரிட்டிஷாரிடத்தில் அத்தியந்த விசுவாசம் பூண்ட டெவேபிக் பாஷாவை பிரதம மந்திரியாக்க சுல்தான் உத்தேசிப்பதாகவும், கெமாலின் உதவி தனக்கு இச்சமயத்தில் தேவையாயிருக்கிற தென்றும் டெலிபோன் மூலம் தெரிவித்தான் இஜ்ஜெத் பாஷா. கெமால் தனது ராணுவத் தலைமைப் பதவியை வேறொருவ னிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு நேரே கான்டாண்டி நோபிளுக்கு வந்தான். சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு ஏறக்குறைய ஒரு மாத காலமாகி விட்டது. அப்பொழுது துருக்கி எந்த நிலையி லிருந்தது? ஐரோப்பாவையும் ஆசியாவையும் கட்டியாண்ட துருக்கிய சாம்ராஜ்யம் இப்பொழுது சிறு சிறு துண்டமாகச் சிதறிக் கிடந்தது. எகிப்து, சிரியா, பாலதீனம், அரேபியா முதலிய நாடுகளெல்லாம் தனித்தனியாகப் பிரிந்து போயின. டமாக, ஜெருசலேம், அலெப்போ, பாக்தாத், மோசூல் முதலிய நகரங்களில் இப்பொழுது துருக்கியின் அதிகாரம் செல்லுமா? இலாமிய நாடுகள் ஒன்று பட்டிருக்கின்றன என்ற பெயர் இல்லாமற் போய்விட்டது. இப்பொழுது துருக்கி சாம்ராஜ்யம் என்பதெல்லாம் என்ன? சின்ன ஆசியாவிலே ஒரு பாகமும், ஐரோப்பாவின் தென் கிழக்கு மூலை யிலேயுள்ள ஒரு சிறு பிரதேசமுந்தான். இதுகூட, நேசக் கட்சியா ருடைய விருப்பத்திற்கும் அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டு தற்காலிக மாக இயங்கிக் கொண்டு வந்தது. எவ்வளவு உயர்ந்த வாழ்விலிருந்து எவ்வளவு தாழ்ந்த வாழ்வுக்கு வந்துவிட்டது. கான்டாண்டி நோபிளுக்கு வந்த கெமால் என்ன கண்டான்? நேசக் கட்சியினரின் ஆதிக்கத்தில் துருக்கி சாம்ராஜ்யத்தின் தலைநகரம் பணிந்து கிடந்தது. பாபர கடலில் பிரிட்டிஷ் யுத்தக் கப்பல்கள், அடிக்கடி தங்கள் ஊது குழல்களினின்று சப்தத்தைக் கிளப்பிக்கொண்டிருந்தன. பிரிட்டிஷ் துருப்புகள், கான்டாண்டி நோபிளை மட்டுமல்ல, டார்டனெல் ஜல சந்தியோரமாயுள்ள முக்கியமான எல்லாக்கோட்டைகளையும் கைப்பற்றி அவற்றைக் காவல் செய்துகொண்டிருந்தன. இந்தப் பிரிட்டிஷ் படை களோடு பிரெஞ்சுப் படைகளும் இத்தாலியப் படைகளும் சேர்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தன. நேசக்கட்சி உத்தியோகதர்கள்தான். துருக்கியின் போலீ, துறைமுகங்கள் முதலியவற்றின் நிருவாகத்தை ஏற்று நடத்தி வந்ததோடு, சமாதான உடன்படிக்கையில் கண்டபடி, கோட்டைகள் யாவும் கொஞ்சம் கூட சந்து பொந்துகளில்லாமல் இடிக்கப் பட்டுத் தரையோடு தரை யாக ஆக்கப்படுகின்றனவாவென்பதையும், ராணுவம் ஒழுங்காகக் கலைக்கப்படுகின்றதா வென்பதையும் மேற் பார்வை செய்து வந்தார்கள். துருக்கியின் நிருவாக யந்திரத்தை அச்சு வேறு, ஆணி வேறாகப் பிரித்தெறிவதில் இவர்களுக்கு எவ்வளவு சிரத்தை! என்ன மகிழ்ச்சி! ஐக்கிய முன்னேற்றக் கமிட்டி சட்ட விரோதமானதென்று கலைக்கப்பட்டு விட்டது. என்வெர், தலாத், ஜெமால் ஆகிய மூவரும் வேற்று நாடுகளுக்கு ஓடிப்போய்விட்டார்கள். இன்னும் சிலர் தலைமறைவாக ஒளிந்து கொண்டிருந்தார்கள். எண்பது வயதுக்கு மேலான டெவேபிக் பாஷா, பெயரளவுக்குப் பிரதம மந்திரியா யிருந்துகொண்டு அரசாங்கத்தை நேசக்கட்சியாருடைய உத்தரப் படி நடத்தி வந்தான். ஆனால் டெவேபிக் பாஷாவும் நீண்ட காலம் இந்த மந்திரிப் பதவியில் இருக்கவில்லை. சுல்தான் இவனை விலக்கி, பார்லி மெண்டையும் கலைத்துவிட்டான். துருக்கிய சிங்காதனமும் துருக்கியும் ஒன்று; இந்தச் சிங்கா தனத்தையும் தன்னையும் காப்பாற்றிக் கொள்வதன் மூலமாகத்தான், துருக்கியையும் காப்பாற்ற முடியும் என்று சுல்தான் கருதினான். இதற்காக நேசக்கட்சியாருடைய நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டுமல்லவா? நேசக்கட்சியினரில் கை வலுத்திருக் கிறவர்கள் பிரிட்டிஷார். பிரிட்டிஷாரும், சுல்தானை அகில முலிம்களின் கலீபாவாக அங்கீகரித்துக் கௌரவப்படுத்தி வைப்பதில் தங்களுக்குச் சாதகமுண்டென்பதைத் தெரிந்து கொண் டிருந்தார்கள். ஆகையால் சுல்தானும் பிரிட்டிஷாரும் கை சேர்ந்து வேலை செய்வதில் முனைந் தார்கள். இந்த எண்ணத்திற்கு விரோதமா யிருப்பவர்கள் யாரையுமே சுல்தான் விரும்பவில்லை. பார்லி மெண்டைக் கலைத்ததும் இதற்குத்தான். சுல்தானுடைய நோக்கத் திற்கிணங்கியவாறு நடந்து கொள்ளக்கூடிய தாமாத் பெரீத் பாஷா பிரதமமந்திரியாக நியமிக்கப்பட்டான். 2. உற்ற நண்பன் கெமாலுக்கு இப்பொழுது இடமெங்கே? இவனைச் சீந்து வாரும், ஏந்துவாரும் இல்லை. எந்தக் கட்சியின் கொள்கைக்கும் இவன் பொருத்தப் பட்டவனாகத் தெரியவில்லை. என்ன செய்வான் இவன்? கான்டாண்டி நோபிளுக்கு அருகில் ஷிஸி! என்ற ஒரு சிறு கிராமம் உண்டு. அதில் அமைதியாக வசித்து வந்தான். பொது விஷயங்கள் எதிலும் தலையிட்டுக் கொள்ளவில்லை. தனியாக ஓரிடத்தில் வசித்துக் கொண்டிருந்த தன் தாயாரையும் சகோதரியை யும் மட்டும் அடிக்கடி சென்று பார்த்து வருவான். இவனுக்கு நண்பர்களும் அதிகமான பேர் இல்லை. ஆனால் ஒரே ஒரு நண்பன் மட்டும் உண்டு. அவன்தான் தளபதி அரீப். தளபதி அரீப், சிறந்த ராணுவ வீரன். ஜெர்மனியில் பயிற்சி பெற்றவன். கெமாலைவிட வயதிலே சிறியவன். ஆனால் இருவருடைய முகத்தோற்றமும் ஒன்றாகவே இருக்கும். இருவருடைய பழக்க வழக்கங்களும், பொருள்களைப் பேதா பேதமறிந்து சுவைக்குந் தன்மையும் ஒரே மாதிரியாக இருந்தன. இருவரும் பாலிய சிநேகி தர்கள். இருவரும் சேர்ந்தே சாலோனிகா, சிரியா, பால்கன் பிரதேசங்கள், காலிபோலி ஆகிய இடங்களில் ராணுவ சேவை செய்தார்கள். ராணுவ விஷயங்களில் இருவருக்கும் சமமான நிபுணத்துவம் உண்டு. கெமால் ஒருவரிடத்திலும் நெருங்கிப் பேச மாட்டான். ஆனால் அரீபினிடம் மட்டும், அவன் தோள்மீது கை போட்டுக் கொண்டு பேசுவான். இவர்களைக் காதலன் - காதலி யென்று கூடச் சிலர் சொல்வதுண்டு. ஆனால் உண்மையில், கெமால் ஒரு தலைவனாகவும், அரீப் அவனை எப்பொழுதும் பின் தொடர்ந்து செல்கிற ஒரு தொண்டனாகவும் இருந்து வந்தார்கள். இப்படியே நாட்கள் பல கழிந்தன. 1919ஆம் வருஷம் பிறந்து விட்டது. துருக்கியின் மீது நேசக்கட்சியார் வைத்திருந்த பிடிப்பு வரவரத் தளர ஆரம்பித்தது. இத்தலி, பிரான், பிரிட்டன் ஆகிய நாடுகளில் ராணுவம் கலைக்கப்பட்டுவிட்டது. தவிர, யுத்தத்தினால் ஏற்பட்ட சோர்வு, ஒவ்வொரு நாட்டிலும் உள்நாட்டுக் குழப்பங் களாகவும் வேறு பல சிக்கல்களாகவும் உருவெடுத்து உலவின. பாரி நகரத்தில் நேசக்கட்சித் தலைவர்கள் ஒன்று கூடினார்கள். இதுதான் சமாதான மகாநாடு. இவர்களுடைய கவனமும் முயற்சியும், ஜெர்மனியை எவ்வாறு சின்னா பின்னப்படுத்திவிடலாமென்பதி லேயே சென்றன. துருக்கியைப் பற்றிக் கவனஞ் செலுத்த இவர் களுக்கு அவகாசம் எங்கே? துருக்கியை இப்பொழுதுள்ளபடியே விட்டு வையுங்கள்; அது தானாகச் சிதறிப்போகும். அப்பொழுது நாம் அதனைப் பங்கிட்டுக் கொள்ளலாம் என்றார்கள் சமாதான மகாநாட்டின் ஆலோனை கர்த்தர்கள். இங்கு கான்டாண்டி நோபிளில் இருந்த நேசக்கட்சிப் பிரதிநிதிகள், பரபர சந்தேகங் காரணமாகப் பகிரங்கமாகவே சண்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவரும் துருக்கியிடமிருந்து ஏதேனும் சலுகைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதிலே முனைந்திருந்தார்கள். இதற்காக அவரவரும் தனித்தனியாகத் துருக்கியர்களை முகதுதி செய்தும் அவர்களுக்கு நல்ல பிள்ளைகள் போல நடந்து கொண்டும் வந்தார்கள். இதனால், துருக்கிய இளைஞர்களிலே சிலர், நம்மிடத்தில் இன்னும் கொஞ்சம் சத்து இருக்கிறது; அதனால்தான் நேசக் கட்சியினர் ஒவ்வொருவரும் நமது நட்பை விரும்புகிறார்கள். ஆகையால், நாம் எதிர்த்துப் போராடி, ஏன் நமது உரிமைகளை தாபித்துக் கொள்ளக்கூடாது? என்று பலவிதமாக எண்ண லானார்கள். ஆனால் இவையெல்லாம் கான்டாண்டி நோபிளில் நடைபெற முடியாது. ஏனென்றால் பிரிட்டிஷார், சுல்தானைத் தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு அடக்குமுறையைப் பிரயோ கித்து வந்தார்கள். ஆகையால், உட்பிரதேசத்திலே - பிரிட்டி ஷாருடைய செல்வாக்குப் புகாத ஏதாவதொரு மலைப் பிராந்தியத் திலே - உதாரணமாக அனட்டோலியா மாகாணத்திலே ஏதாவது முயற்சி செய்து பார்க்கலாம் என்று இவர்கள் தீர்மானித்தார்கள். கான்டாண்டி நோபிளில் சுமார் பத்துப் பன்னிரண்டு ரகசியச் சங்கங்கள் தோன்றின. இவற்றின் வேலையென்னவென் றால், நேசக்கட்சியார் எங்கெங்கு ஆயுதங்களைக் குவித்து வைத் திருக் கின்றனரோ, அங்கிருந்தெல்லாம் கூடுமான வரை ஆயுதங் களைக் களவாடிக் கொண்டு வந்து உட்பிரதேசங்களுக்கு அனுப்புவது; இங்ஙனம் அனுப்பப்பெறும் ஆயுதங்களை ஒன்று சேமித்து வைத்து, எந்தச் சந்தர்ப்பத்தில் எப்படி உபயோகப்படுத்தலாம் என்பதைப் பற்றித் திட்டம் போடுவது; இங்ஙனம் ஆயுத பலத்தின் மூலமாக, அந்நியர்களை விரட்டியடித்து, துருக்கியின் சுதந்திரத்தைக் காப் பாற்றுதல்; இவையே இந்த ரகசிய தாபனங்களின் முக்கிய வேலை களாயிருந்தன. இந்த தாபனங்களின் மூல புருஷனாகக் கெமால் இருந்தான் என்பதை நாம் சொல்ல வேண்டுமோ? அனட்டோலியா முதலிய மாகாணங்களில் ஆங்காங்கு, பழைய ஐக்கிய முன்னேற்றக் கமிட்டிகளின் கிளை தாபனங்கள் இருந்தன வல்லவா? இவற்றைச் சிலர் புதுப்பித்து வந்தனர். இந்த தாபனங்களின் துணைகொண்டு, நேசக்கட்சியினருடைய - சிறப் பாக பிரிட்டிஷாருடைய - ஆக்ரமிப்பை எதிர்த்துப் போராடுவ தென்று இவர்கள் தீர்மானித்தார்கள். நேசக்கட்சி உத்தியோகதர்கள், மாகாணங்களிலுள்ள அரசாங்க தாபனங்களைக் கைப்பற்றிக் கொள்ளாதபடி தடை செய்தார்கள். சமாதான ஒப்பந்தப்படி, தங்க ளுடைய கட்டுப்பாட்டுக்குட்பட்டிருந்த துருக்கிய ராணுவத்தைக் கலைக்க மறுத்தார்கள். 10 அதிகார பதவி 1. தாயாரிடம் விடை சின்ன ஆசியாவிலே உள்ளது அனட்டோலியா மாகாணம். இங்கு அர்மீனியர், துருக்கியர், குருதியர் முதலிய பல ஜாதியினரும் பரபரப் பொறாமை காரணமாக ஆங்காங்கு நாட்டைச் சூறை யாடி வந்தனர். சில்லரைக் கலகங்கள் கிளம்பிய வண்ண மிருந்தன. நேசக் கட்சியினர் இந்தக் குழப்பத்தை அடக்கி சமாதானத்தை உண்டுபண்ணுமாறு சுல்தானுக்குக் கூறினார். இந்தப் பிரதேசத்திற்கு யாரை அனுப்புவது? யுத்த மந்திரிக் காரியாலயத்தார் தளபதி முதபா கெமால் பாஷாவின் பெயரைச் சிபார்சு செய்தனர். ஆனால் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் இந்தச் சிபார்சை அங்கீ கரிக்க மறுத்துவிட்டனர். கெமால், பிரிட்டிஷாருக்கு விரோதி யல்லவா? காலிபோலி யுத்தத்தில் பிரிட்டிஷாரை விரட்டியடித்த வனல்லவா? ஆயினும் பல சில்லரைத் தகராறுகளுக்குப் பிறகு, கெமாலை ராணுவ பரிசோதகனாகவும், கிழக்கு மாகாணங்களின் கவர்னர்-ஜெனரலாகவும் நியமிப்பதென்று தீர்மானிக்கப் பட்டது. இவனுடைய நியமன உத்தரவை, நேசக்கட்சி அதிகாரிகளே வரைந்தனர். அதில் இவன் செய்யவேண்டிய காரியங்கள் இன்னின்ன வென்று குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் கெமால் உத்தரவின் வாசகங்களைத் தன் நோக்கத்திற்கிணங்கினாற்போல் மாற்றி யமைத்து எழுதுவித்துக்கொண்டான். பிரதம மந்திரியும், யுத்த மந்திரியும் இந்த உத்தரவில் கையெழுத்துப் போட்டனர். இந்த உத்தரவின் நகல்கள், சின்ன ஆசியாவின் பல பிரதேசங்களிலு மிருக்கும் நேசக்கட்சி உத்தியோகதர் களுக்கு அனுப்பப்பெற்றன. துருக்கிய அரசாங்கத்தினராலும் நேசக்கட்சி யினராலும் அங்கீகரிக் கப்பட்ட பிரதிநிதியாக, கெமால், அனட்டோலி யாவுக்குச் சென்றான். புறப்படுவதற்கு முன்னர், கெமால் சில ஏற்பாடுகளைச் செய்து விட்டுப்போனான். துருக்கிய ராணுவத் தலைமைக் காரியாலயத்தில் பிரதம உத்தியோகதனாகவிருந்த ஜெவாத் பாஷாவுக்கும் தனக்கும் ரகசிய தந்திப் போக்குவரத்து நடத்திக்கொள்ள சௌகரியப்படுத்திக் கொண்டான். இந்தத் தந்திப் போக்குவரத்தின் மூலமாகத் தலை நகரத்தில் அவ்வப்பொழுது என்ன நடைபெறுகிறதென்பதைத் தெரிந்து கொள்வ தோடு, நிலைமைக்குத் தகுந்தபடி வேலைத் திட்டங்களையும் மாற்றிக் கொள்ளலாமல்லவா? தன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான ஐந்து ராணுவ உத்தியோகதர் களைப் பொறுக்கியெடுத்துத் தனது மெய்க் காப்பாளராக நிய மித்துக்கொண்டான். மற்ற பிரயாண ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து கொண்டான். தாயாரிடம் விடைபெற வேண்டுமல்லவா? ஓடினான் வீட்டுக்கு. பணிந்தான் தாயின் பாதத்தில். தாயாருக்கு வயோதிகம். கண் தெரியாது. தன்னொரு மகன் எங்கேயோஅலைந்து திரிந்து கொண்டிருக்கிறானே என்ற கவலை. கெமாலைக் கண்டதும் கண்ணீர்விட்டாள். மகனுடைய முகத்தைத் தன் கையினால் தடவிக் கொடுத்தாள். தனது அனட்டோலிய பிரயாணத்தைக் கூறினான் கெமால். அவள் என்ன சொல்வாள்? குழந்தைபோல் விக்கி விக்கி அழுதாள். கெமால்: தாயே! அழுவானேன்? இந்த முறை, நான் ஒரு பெரிய காரியத்தைச் செய்து முடிக்க வேண்டியிருக்கிறது. நாமிரு வரும், இன்னும் நீண்டகாலத்திற்குச் சந்திக்க முடியாமலே இருக்க லாம். காரியத்தை முடித்து விட்டேன் என்று சொல்லிக் கொள்கிற வரையில் நான் திரும்பிவரப்போவதில்லை. இந்தத் தடவை, அம் மாதிரி நான் சொல்லாவிட்டால் இனி எப்பொழுதுமே சொல்லப் போவதில்லை. அம்மா! அழவேண்டாம். நமக்காகவா நாம் இந்த உலகத்திலே வாழ்கிறோம்? இல்லையே. வேறொன்றுக்காக வல்லவோ.....? ஜுபேதா : வேறெதற்காக மகனே! கடவுளுக்காக - கெமால் : அப்படியே இருக்கட்டும். தாங்கள் ஒரு போர் வீரனுடைய தாயாரல்லவா? உங்கள் கண்ணீரை அடக்கிக் கொள் ளுங்கள். ஏன் நீங்கள் அழவேண்டும்? சுல்தானுடைய பிரதிநிதியாக, ராணுவ பரிசோதகன் என்ற உத்தியோக தோரணையில் நான் இப்பொழுது அனட்டோலியாவுக்குச் செல்கிறேன். நீங்கள் பயப்படவேண்டியதே இல்லை. ஜுபேதா:ஆனாலும் குழந்தாய், எனக்குக் கவலையாயிருக் கிறதே. என்னிடமிருந்து ஏதோ நீ ஒளிக்கிறாய். சுல்தானின் பிரநிதி யாகச் செல்கிறயா? அப்படியானால் அவருக்கு விசுவாசமாக நடந்துகொள். கெமால்: அந்த விஷயம் அவரைப் பொறுத்தல்லவோ இருக்கிறது. ஜுபேதா : உன்னை மறுபடியும் காண மாட்டேனோ என்று என் மனம் ஏங்குகிறது. கெமால்: தைரியமாயிருங்கள் அம்மா! நீங்கள் ஒரு போர் வீரனுடைய தாயார் என்பது ஞாபகத்திலிருக்கட்டும். கவலைப்பட வேண்டாம். முதபா கொண்டுள்ள நம்பிக்கைக்கும் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கும் அநேக வேற்றுமைகள் உண்டு. நான் கொண்டுள்ள நம்பிக்கை, நான் செல்லவேண்டிய மார்க்கம் இன்னதென்று நன்றாக எடுத்துக்காட்டுகிறது. இதனால் என் மனோ உறுதியும் அதிகப்படுகிறது. சரி, எனக்கு நேரமாகிறது. நான் போய் வருகிறேன். இனெபோலி என்ற கப்பலில், கிழக்கு மாகாணங்களின் கவர்னர் - ஜெனரலான கெமால், தன் பரிவாரங்களுடன், கான்டாண்டி நோபிளை விட்டுப் புறப்பட்டுவிட்டான். ஜுபேதா அவன் போகிற வழியே கையை நீட்டிக் கொண்டிருந்தான். 2. கிரேக்கர்களின் ஆக்ரமிப்பு பாரி சமாதான மகாநாட்டில், ஜெர்மனியைப் பணிய வைக்கும் முயற்சியில் எல்லோரும் ஈடுபட்டிருந்ததோடு கூட, வெற்றி கொள்ளப் பட்ட நாடுகளை எந்தெந்த விதமாகப் பங்கு போட்டுக் கொள்வதென்பதைப் பற்றிய வாதம் நீண்ட நாள் நடைபெற்றது. இத்தாலி, கிரீ, ஜெக்கோலோவேகியா ஆகிய ஒவ்வொரு நாட்டினரும், தங்கள் தங்களுக்கு விசேஷமான சலுகைகள் தேவை யென்று மன்றாடினார்கள். யாருடைய செல்வாக்கும் மிஞ்சி விடாத படியும், ஆனால் எல்லோரையும் திருப்திபடுத்துகிற மாதிரியாகவும் நாடுகளைப் பகிர்ந்து கொடுப்பதில் லாயிட் ஜார்ஜும் கிளமென் ஸோவும் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொண்டார்கள். அப்பொழுது கிரீ தேசத்தின் சர்வாதிகாரி போலிருந்தான் வெனிஜெ லோ என்பவன். இவன், துருக்கியின் வசமிருந்த மிர்னா என்ற பிரதேசத்தை கிரீ வசம் ஒப்புவித்துவிட வேண்டுமென்று லாயிட் ஜார்ஜ்ஜையும் கிளமென்ஸோவையும் பிடித்து நெருக்கினான். இதற்கு நேசக் கட்சியினர் இணங்கவே வேண்டியிருந்தது. நேசக் கட்சியினரின் சார்பாக, மிர்னாவை ஆக்ரமித்துக் கொள்ளுமாறு கிரீஸுக்கு அனுமதி கொடுத்தனர். இப்படி அனுமதி கொடுத்ததை நேர்முகமாகத் துருக்கி அரசாங்கத்திற்குத் தெரிவிக்கவில்லை. நேசக் கட்சியினர், மிர்னாவை ஆக்ரமித்துக் கொள்ளப் போவதாக மட்டும் தெரிவித்தனர். இதற்குத் துருக்கிய அரசாங்கம் இணங்கியது. வேறு வழியில்லை யல்லவா? துருக்கியப் பிரதம மந்திரியான தாமாத் பெரீத் பாஷா, மிர்னாவின் கவர்னருக்குப் பிறப்பித்த உத்தரவில், துருக்கியப்படைகளை, எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யவொட் டாமல் தடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும், நேசக்கட்சிப் படைகள் வந்திறங்கும்போது ஜனங்கள் எவ்வித எதிர்ப்பு முறை களையும் கையாளாமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தான். 1919ஆம் வருஷம் மே - மாதம் 14ஆம் தேதி. மிர்னா துறை முகத்தில் ஒரு கப்பற்படை வந்து நின்றது. இதன் தலைவனாகிய தளபதி கால்தோர்ப் என்பவன், தன் கப்பலிலிருந்து, மிர்னாவின் கவர்னருக்கு நேசக்கட்சிப் படைகள் வந்திறங்கப் போவதாகச் செய்தியனுப்பினான். இரண்டு மணி நேரங்கழித்து, கவர்னரைத் தான் நேரில் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தான். கவர்னரும், அப்படியே, கப்பலில் தளபதியைச் சந்தித்தான். மிர்னாவை கிரேக்கர்கள் ஆக்ரமித்துக் கொள்ளப்போகிறார்கள் என்றான் தளபதி. இந்த வார்த்தை, கவர்னரின் தலையில் இடி விழுந்தது போலாயிற்று. அவனையறியாமலே கண்களில் நீர் வடிந்து கொண் டிருந்தது. ‘»nu¡f®fsh? என்றான் மறுபடியும் ஆமாம்; அப்படித் தான் பாரிஸிலிருந்து கண்டிப்பான உத்தரவு வந்திருக்கிறது என்றான் தளபதி. மிர்னாவை ஆக்ரமித்துக் கொள்வதைப்பற்றி ஆட்சேபனையில்லை. ஆனால் கிரேக்கப் படைகளை மட்டும் கொண்டு ஆக்ரமித்துக்கொள்ள வேண்டாம். அப்படிக் கிரேக்க துருப்புகளை மட்டும் இறக்குவதாயிருந்தால் விளைவு என்னாகுமோ வென்பதை நான் சொல்லமுடியாது. அதற்கு நான் ஜவாப்தாரியு மல்ல என்றான் கவர்னர். அவையெல்லாம் முடியாது என்றான் தளபதி கண்டிப்பாக அப்படியானால் ஆங்கிலேய மாலுமிகளில் சுமார் இருநூறு அல்லது முந்நூறு பேரை எனக்கு உதவியாகக் கொடுங்கள். அவர்களின் உதவியைக்கொண்டு முகம்மதியர்களைச் சாந்தப்படுத்தி வைக்கிறேன். கிரேக்கர்களுடைய ஆக்ரமிப்பு முடிவானதல்லவென்று ஒருவாறு சமாதானஞ் சொல்கிறேன் என்றெல்லாம் கெஞ்சினான் கவர்னர். முடியாது என்ற ஒரு வார்த்தைதான் அந்தத் தளபதியின் வாயிலிருந்து வெளிவந்தது. இந்த மாதிரியான தர்க்கங்களிலேயே அன்றையபொழுது கழிந்தது. கிரேக்கர்கள், தங்கள் ஊரைக் கைப்பற்றிக் கொள்ளப் போகிறார்கள் என்று மிர்னாவாசிகளுக்கு எப்படியோ தெரிந்து விட்டது. அன்றிரவை ஆத்திரத்தோடு கழித்தார்கள். மறுநாள் மே மாதம் 15ஆம் தேதி. சூரியோதயமாயிற்று. மிர்னா விலுள்ள எல்லாக் கிரேக்க ஜனங்களும் துறைமுகத்தில் வந்து கூடி னார்கள். பாண்டு வாத்தியங்கள் முழங்க, கிரேக்கத் துருப்புகள் கப்பல் களிலிருந்து இறங்கின. கிரேக்கப் பிரதம பாதிரி, துருப்புகளுக்கு ஆசி கூறினான். ஜனங்கள் வாழ்க வெனிஜெலோ என்று ஆரவாரம் செய்தார்கள். உடனே, மிர்னாவின் வீதிகள் வழியே கிரேக்கப்படைகள் அணிவகுத்துச் செல்லத் தொடங்கின. இவைகளுக்குப் பின்னரும் முன்னரும் இயந்திர பீரங்கிகள் பராக்கு கூறிக்கொண்டு போயின. நகரத்தின் மத்தியிலேயுள்ள அரசாங்க மாளிகையின் எதிர்ப்புற மிருக்கும் விசாலமான சதுக்கத்தின் பக்கம் திரும்புகிற சமயத்தில், எங்கிருந்தோ ஒரு குண்டு வந்து இந்தக் கிரேக்கப் படையின் மத்தி யில் விழுந்தது. கிரேக்கப் படைவீரர்கள் நின்றுவிட்டார்கள். இயந்திர பீரங்கிகள் முழங்க ஆரம்பித்தன. அடுத்தாற்போலிருந்த துருக்கிய வீரர்களும் பதிலுக்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய் தார்கள். கேட்க வேண்டுமா? பிணக் குவியல் தான்; ரத்த வெள்ளந்தான்! சிறிது நேரம் அமைதி ஏற்பட்டது. கிரேக்கர்கள், துருக்கியப் போர் வீரர்களத்தனை பேரையும் கைதுசெய்து கப்பலடிக்குக் கொண்டு போனார்கள். வழியில் கிரேக்க ஜனங்கள் இந்தத் துருக்கியப் போர் வீரர்களைப் பலவித அவமானங்களுக்குட்படுத்தினர்; இம்சைகள் பலவும் செய்தனர். இதனால் துருக்கியர் பலர் இயமனுலகுக்கு விரைந்து சென்றனர். வீதிகளில் துருக்கியப் பிணங்களின் நாற்றம் சகிக்க முடிய வில்லை. துருக்கியர்களுடைய வீடுகள் பலவும் கொள்ளையடிக்கப் பட்டன. மிர்னாவின் கவர்னர் உள்பட சுமார் இருபதினாயிரம் துருக்கியர்கள் கைதிகளாக்கப்பட்டு கிரீஸுக்கு அனுப்பப்பட்டனர். கிரேக்கர்கள், மிர்னாவில் வந்து இறங்கிய இந்தச் சம்பவந் தான், பின்னர் சுமார் மூன்று வருஷகாலம் வரை துருக்கிய மண்ணிலே ஏற்பட்ட பல ரத்தக் களரிகளுக்கெல்லாம் மூல காரணமாயிருந்தது. 3. ஜனசக்தி சீறி யெழுகிறது கான்டாண்டி நோபிளுக்கு நேர் கிழக்கே, அனட்டோலியா மாகாணத்தின் வடக்கே, கருங்கடலின் தெற்குப் பாகத்தில் ஸாம்ஸுன் என்றொரு சிறிய துறைமுகப்பட்டினம் இருக்கிறது. இந்தத் துறைமுகத்தில் 1919ஆம் வருஷம் மே மாதம் 19ஆம் தேதி இனெபோலி கப்பல் வந்து நின்றது. எந்தப் புதிய கப்பல் வந்தாலும் அந்த ஊர் ஜனங்கள் வந்து வேடிக்கை பார்ப்பது வழக்கம். அப்படியே அன்றும் திரளான ஜனங்கள் வந்து கூடியிருந்தார்கள். இனெ போலி கப்பலிலிருந்து ஓர் ராணுவ உத்தியோகதன் மிடுக்காக வந்திறங்கினான். வேறு ஐந்து ராணுவ வீரர்கள் இவனைப் பின் தொடர்ந்து இறங்கினார்கள். இந்த ராணுவ உத்தியோகதனைப் பற்றி அந்த ஊர் ஜனங்களுக்கு என்ன தெரியும்? இவனை உற்று உற்றுப்பார்த்தார்கள். இவனைப் பார்த்தவுடனே, அங்குக் கூடி யிருந்த ஜனங்களுக்கு இவனிடத்தில் ஒருவித மதிப்பும் பயமும் ஏற்பட்டன. இவன் நடக்கிறபோது, எடுத்து வைக்கிற ஒவ்வோர் அடிக்கும் ஏதோ விசேஷ அர்த்தம் இருப்பது போல் தோன்றியது. இவன் பரந்த நெற்றியிலே விழுந்திருந்த கோடுகள், இவன் மனத் திண்மையை அளந்து காட்டும் பாதரஸ அளவை மாதிரியிருந்தன. கிரேக்கர்களினுடையவும் அர்மீனியர்களுடையவும் துவேஷப் பிரசாரத்தின் விளைவாக, இந்தப் பிரதேசத்தை விட்டு வேறெங்கே யாவது சென்றுவிட வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை யென்று கலங்கிக் கொண்டிருந்த துருக்கியர்கள், கெமாலை நேருக்கு நேர் சந்தித்துக் கொஞ்சம் தைரியமடைந்தார்கள். கப்பலிலிருந்து இறங்கின கெமால், தன் சிப்பந்திகளுடன் நேரே அரசாங்க மாளிகைக்குச் சென்றான். மிர்னாவில் கிரேக்கப் படைகள் வந்திறங்கியதையும், அதன்பின் விளைவுகளையும் கேள்வி யுற்றான். இந்த மாதிரி நடந்ததே நல்லதென்று கெமால் கருதினான். துருக்கி முழுவதையும் நேசக்கட்சிப் படைகள் ஆக்ரமித்துக் கொண்டிருந்தாலுங் கூட அதைப்பற்றித் துருக்கியர்கள் ஆட்சேபித் திருக்க மாட்டார்கள். துருக்கியர்கள் அவ்வளவு தூரம் சோர்வுற்றுக் கிடந்தார்கள். ஆனால் அந்த கிரேக்கர்கள் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்களானால் அதை ஒரு கணமும் சகித்துக்கொண் டிருக்க இவர்கள் தயாராயில்லை. இரு சமூகத்தினருக்கும் உள்ள பகைமை அவ்வளவு ஆழமாக வேரூன்றிக் கிடந்தது. நாங்கள் யாருக்கு வேண்டுமானாலும் தலை வணங்குவோம்; இந்தக் கிரேக்கர் களுக்கு மட்டும் தலைவணங்க முடியாது என்று துருக்கியர்கள் சொல்லிக் கொண்டார்கள். நேசக்கட்சியாருடைய நியாய புத்தியில் இவர்களுக்கு இருந்த கடுகளவு நம்பிக்கை கூட, கிரேக்கர்களுக்கு மிர்னா பிரதேசத்தை ஒப்புக்கொடுக்கச் செய்ததற்குப் பிறகு இல்லாமல் போய்விட்டது. ஜனங்களுக்கு ஆத்திரம் பொங்கியது. இந்த ஆத்திரத்தை ஒருமுகப்படுத்தி, தேசீய வழியில் கொண்டு செலுத்த வேண்டியது கெமாலின் பொறுப்பாயிருந்தது. மிர்னாவை கிரேக்கர்கள் வசம் ஒப்புவிக்குமாறு நேசக் கட்சியார் வற்புறுத்தினா லும், துருக்கிய அரசாங்கம் இதற்கு இணங்கலாமா என்ற அரசாங்க விரோதமான எண்ணத்தையும் இந்தச் சமயத்தில் மெதுவாகக் கெமால் தூண்டிவிடத் தீர்மானித்தான். முதலில் ராணுவத்தின் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் சம்பாதிக்க முயன்றான். அப்பொழுது, துருக்கி சாம்ராஜ்யத்திற் குட்பட்ட சின்ன ஆசியப்பிரதேசத்திலே ஆறு ராணுவப் பிரிவுகள் இருந்தன. சிதறிக் கிடந்த இந்த ஆறு ராணுவப் பிரிவுகளின் தலைவர் களோடு கெமால் தந்திப் போக்குவரத்து வைத்துக் கொண்டான். சோர்வுற்றுத் தலை குனிந்து கிடக்கும் துருக்கியைத் தலை நிமிரச் செய்வது ஒவ்வொரு துருக்கி யனுடைய கடமை யுமென்றும், இதற்காகத் தான் செய்யும் முயற்சி களுக்கு ராணுவத் தலைவர்களின் பூரண உதவி தேவையென்றும் இந்தத் தந்திகளில் குறிப்பிட்டான். இவனே நேரில் தந்தியாபீசில், இரவு பகல் என்ற வித்தியாசமில்லா மல் உட்கார்ந்து கொண்டு தானே தந்தி கொடுப்பான். பதிலுக்குக் கிடைக்கும் தந்திகளையும், தானே தந்தி இயந்திரத்திலிருந்து வரவேற்றுக் குறித்துக் கொள்வான். இந்தத் தந்திப் போக்குவரத்தின் மூலம், மற்ற ராணுவத் தலைவர்களின் உதவி தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இவனுக்கு ஏற்பட்டது. ஸாம்ஸுன் நகரம் இந்தக்காலத்தில் பிரிட்டிஷாருடைய ஆதிக்கத்திலிருந்தது. ஆங்கிலேய ஒற்றர்கள், கெமாலின் ஒவ்வொரு காரியத்தையும் கவனித்துக்கொண்டு வந்தார்கள். இந்த நிலைமை யில் இந்த நகரத்திலிருந்து வேலை செய்வது அவ்வளவு உசிதமில்லை யென்றும், தெற்கே உட்பிரதேசத்திலிருக்கும் அமேயா என்ற ஊருக்குச் சென்று தன் தலைமை தானத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லதென்றும் தீர்மானித்தான் கெமால். 4. அழைப்பும் மறுப்பும் அமேயா சென்றதும், கெமாலுக்குச் சிறிது தாராளமாக வேலை செய்ய முடிந்தது. அனட்டோலியா மாகாணத்தின் கவர்னர் - ஜெனரல் என்ற முறையில், மாகாணத்தின் சிவில் அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டான். முக்கியமான ஊர்களில், தேசீய சங்கங்களை ஏற்படுத்த வேண்டுமென்றும், ஏற்கனவே சங்கங்கள் இருந்து துருப்பிடித்துப் போயிருந்தால் அவற்றைப் புதுப்பிக்க வேண்டுமென்றும் எல்லா ராணுவ உத்தியோகதர்களுக்கும் சிவில் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கைகள் விடுத்தான். இது சம்பந்தமாக அவ்வப்பொழுது என்ன நடைபெறுகிறதென்பதைத் தனக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தான். ஏற்கனவே இந்தப் பிரதேசங்களில் தாபிக்கப்பட்டிருந்த தேசீய சங்கங்களை அடக்கி ஒடுக்கிவிட வேண்டுமென்பதற்காகவே, இவனைக் கான்டாண்டி நோபிள் அதிகாரிகள் இந்தப்பிரதேசத் திற்கு அனுப்பினார்கள். ஆனால் இவனே இந்தச் சங்கங்களை புதுப்பிக்குமாறு உத்தரவிட்டான்! தன்னுடைய இந்தச் செயல், சுல்தானுடைய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறதென்று எல்லா உத்தியோகதர்களுக்கும் தெரிவித்தான்! மிர்னாவை கிரேக்கர்கள் ஆக்ரமித்துக் கொண்டதையும், அங்கும், பிற இடங்களிலும் துருக்கியர்கள் எவ்வளவு கொடுமை யாக நடத்தப்படு கிறார்கள் என்பதையும் ஜனங்களுக்குத் தெரியப் படுத்தி, அதன் மூலமாகத் தேசீய விழிப்பை உண்டுபண்ணும் பொருட்டு ஆங்காங்குக் கூட்டங்கள் கூட்டி, தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்ப வேண்டுமென்று எல்லா அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பினான். இந்தச் சுற்றறிக்கைப்படி முக்கியமான எல்லா ஊர்களிலும் கூட்டங்கள் கூடின. தீர்மானங்கள் நிறைவேறின. கான்டாண்டி நோபிளுக்கும் மற்ற ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் தந்திகள் பறந்தன. கான்டாண்டிநோபிளில் இருந்த அதிகார வர்க்கம் இந்த தந்திகளைக் கண்டு மருண்டு விட்டது. இந்தத் தந்திகள் தவிர வேறு பல தகவல்களும் இதற்குக் கிட்டின. வல்லரசுப் பிரதிநிதிகள் உடனே கெமாலைத் திருப்பி அழைக்கவேண்டுமென்று சுல்தானுக்குக் கட்டளையிட்டனர். சுல்தானும் பிரதம மந்திரி தாமாத் பெரீத் பாஷாவை அழைப்பித்து உடனே கெமாலை இங்கே வரவழைக்க வேண்டுமென்று உத்தரவிட்டான். ஆனால் கெமால் எங்கே? ஸாம்ஸுனிலா? இல்லையே. அமேயாவிலா? அங்குக் கூடக் காணோம். பதைபதைத்தான் பிரதம மந்திரி. என்ன நடந்துவிடுமோ என்று துடிதுடித்தான். கடைசியில் பிரதம மந்திரியின் அதிருஷ்டவசமாக கெமால், எர்ஸெரூம் என்னும் நகரத்தில் இருப்பதாகத் தெரிந்தது. உடனே கெமாலுக்குத் தந்தி பறந்தது. ரஜா கொடுக்கிறோம். உடனே கான்டாண்டி நோபிளுக்கு வா. முடியாது. வேறு எந்த ஊருக்காவது போ. கிளர்ச்சி ஒன்றும் செய்யாதே. முடியாது. துருக்கி சுதந்திரம் அடைகிற வரையில் நான் அனட்டோலியாவிலே தான் இருப்பேன். நீ கான்டாண்டிநோபிளுக்கு வந்துவிட வேண்டுமென்பது பாதுஷாவின் விருப்பம். முடியாது. பாதுஷாவின் உத்தரவு இது. ராணுவத்தில் நான் வகிக்கும் பதவியை ராஜீநாமா செய்துவிட அனுமதிவேண்டும். ராணுவ சம்பந்தமான எல்லாப் பதவிகளிலுருந்தும் நீ விலக்கப்பட்டுவிட்டாய். நிரம்ப வந்தனம். கெமால், மேஜர் ஜெனரல் முதபா கெமால் பாஷாவாக இருந்தது போய் சாதாரண கெமாலாகிவிட்டான். அரசாங்கத் திற்கும் இவனுக்கும் இனி எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனால் இவனை இப்படியே விட்டுவைப்பதா? இவன் செல்வாக்கை ஓங்க விடலாமா? கான்டாண்டி நோபிள் அதிகாரவர்க்கம் இந்தச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. 5. சமாதான மகாநாடு பாரிஸில் சமாதான மகாநாடு, வார்சேல் உடன்படிக்கை என்ற பத்திரத்தில் ஜெர்மனியின் தலையெழுத்தை எழுதிவிட்டார்கள் லாயிட்ஜார்ஜும் கிளெமென்ஸோவும் சேர்ந்து. இனி துருக்கியின் தலையில் என்ன எழுதலாம் என்ற யோசனை பிறந்தது. அதன் தலை மீது எழுதுகோலை வைப்பதற்கு முன்னர் அதன் அபிப்பிராயத்தைத் தான் கேட்டுப் பார்ப்போம் என்ற தயை பிறந்தது பிரான்ஸுக்கு. துருக்கியின் மீது ஏற்பட்ட வாஞ்சையல்ல இதற்குக் காரணம். பிரிட்டன் மீது கொண்ட சந்தேகம்! ஆனால் அந்தப் பெருங் கதையை ஏன் இங்கு விதரித்துக் கொண்டு போக வேண்டும்? சமாதான மகாநாட்டுக்குப் பிரதிநிதிகளை அனுப்புவதாயிருந்தால் அனுப்பலாம் என்று துருக்கிக்குத் தாக்கீது பிறந்தது. பிரதம மந்திரியான தாமாத் பெரீத் பாஷா, தான் மகா நாட்டுக்குப் போக வேண்டுமென்று விரும்பினான். இவனை பிரான் தன்னுடைய கப்பலில் ஏற்றி அழைத்து வர ஏற்பாடு செய்தது. இவனோடு ஏற்கனவே பிரதம மந்திரியாக இருந்த டெவேபிக் பாஷாவும் போவதாக இருந்தது. ஆனால் இவன், பிரிட்டிஷா ருடைய தூண்டுதல் பேரில் தனக்கு உடம்பு அசௌகரியமா யிருக்கிறதென்றும், பின்னால் தான் வருவதாகவும் தெரிவித்தான். சில நாட்கள் கழித்து, பிரிட்டன் தன்னுடைய கப்பல் ஒன்றில் இந்த டெவேபிக் பாஷாவையும் இவன் பரிவாரங்களையும் ஏற்றிக் கொண்டு வந்து பாரிஸிலே விட்டது. சமாதான மகா நாட்டில், துருக்கி இரண்டு குரலில் பேச வேண்டும் என்பது ஐரோப்பிய வல்லரசுகளின் விருப்பம்! மகாநாட்டு மேஜையைச் சுற்றி, பிரதிநிதிகள் ஒருவர் முகத்தை ஒருவர் முறைத்துப் பார்த்த வண்ணம் உட்கார்ந்து கொண் டிருந்தார்கள். துக்ககரமான ஓர் அமைதி குடி கொண்டிருந்தது. தாமாத் பெரீத் பாஷா எழுந்தான். துருக்கியின் சார்பாகப் பேச ஆரம்பித்தான். வில்ஸனுடைய பதினான்கு கோட்பாடுகளையும் துருக்கி அங்கீகரிக்கிறது என்றான். அராபியர்களுக்குச் சுதந்திரம் அளிப்பதாக உறுதி கூறினான். மற்ற ஐரோப்பிய தேசங்களின் நாகரிகப் போட்டியில் துருக்கியும் கலந்து கொள்ளச் சித்தமாயிருப்ப தாகவும், துருக்கிய ஜன சமுதாயத்தை வெகு சீக்கிரத்தில் நாகரிகப் படுத்திவைப்பதாகவும் சொன்னான். ஐரோப்பிய யுத்தத்தில் துருக்கி கலந்து கொண்டது பெரிய குற்றம் என்பதை ஒப்புக் கொண்டான். இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் யார்? இப்பொழுதுள்ள மந்திரிச் சபையைச் சேர்ந்தவர்கள் அல்ல; இதற்கு முன்னே அரசாங்க நிருவாகத்தைக் கைப்பற்றிக் கொண்டிருந்த ஐக்கிய முன்னேற்றக் கமிட்டியார்தான் என்று விளம்பரப்படுத்தினான். கிளமென்ஸோ புலி இதுவரையில் சும்மா இருந்தது. இந்தக் கடைசி வாசகத்தைக் கேட்டதும் எழுந்து உறும ஆரம்பித்தது:- துருக்கியப் பிரதம மந்திரியே துருக்கியின் குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டார். இதனால் நாம் தீர்ப்புச் சொல்வது சுலபமாகி விட்டது. இப்பொழுது துருக்கி முழுவதும் நேசக் கட்சியார் வசத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறதென்பதை அவர் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளட்டும்; எந்த இடத்தில் துருக்கியன் நடக்கிறானோ அந்த இடத்தில் புல்லும் முளைக்காது என்று ஒரு பழமொழி உண்டு. உதுமானிய ஜாதியினர் சுபாவமாகவே காட்டு மிராண்டிகள் என்பதை நாம் மறந்து விட்டோமா? அக்கிரமத்தையும் அட்டூழி யத்தையும் தவிர உலகத்திற்கு அந்த ஜாதி வேறு என்ன அளித்திருக் கிறது? இதனாலேயே இது ஜெர்மனியோடு சேர்ந்து கொண்டு உலக நாகரிகத்தையும் உலக சுதந்திரத்தையும் அழிக்கத் தீர்மானித்தது. யுத்தத்தின் பொழுது துருக்கியர்கள் செய்த அக்கிரமங்களை யாராவது கணித்துச் சொல்ல முடியுமா? போதும் பிரதம மந்திரியவர்களே! உங்களுடைய விஜயத்திலிருந்து பாரி விலகிக்கொள்ளட்டும். நீங்கள் எவ்வளவு சீக்கிரமாக உங்கள் தாய் நாட்டுக்குத் திரும்பிச் செல்லு கிறீர்களோ அவ்வளவுக்கு எங்களைக் கௌரவப்படுத்தின வர்களாவீர்கள். நாகரிக வேலையில் ஈடுபட உங்களுக்கு இன்னும் அவகாசமிருக்கிறது. இந்த மாதிரி செய்ய உங்களுக்கு மனமிருந்தால் ஐரோப்பா முழுவதும் உங்களுக்கு உதவிசெய்யும். சமாதான மகாநாடு முடிந்து விட்டது. துருக்கியப் பிரதி நிதிகள் திரும்பிவிட்டார்கள். என்ன கொண்டு வந்தார்கள்? இந்தக் கேள்வியே துருக்கி எங்கணும் ஒலித்துக்கொண்டிருந்தது. இந்த ஒலியைப் பெருக்கினான் கெமால். 6. ஜன சக்தியை உருவப்படுத்த கெமால், அனட்டோலியா மாகாண முழுவதும் சுற்றுப் பிரயாணஞ் செய்தான். கிராமங்கள் தோறும் சென்று கூட்டங்கள் கூட்டிப் பிரசங்கங்கள் செய்தான். ஜனங்களின் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டான். புராதனப் பெருமை வாய்ந்த நமது துருக்கிய சாம்ராஜ்யத்தை அந்நியர்கள் பங்குபோட்டுக் கொள்ளப்போகிறார்கள். இதை நீங்கள் சகித்துக் கொண்டிருக்கப் போகிறீர்களா? என்று கதறினான். எனது துருக்கிய சகோதரர்களே! ஒரு தனிப்பட்ட மனித னால் - அவன் எவ்வளவு பெரிய மனிதனானாலுங் கூட உங்களைக் காப்பாற்ற முடியாது. உங்கள் சுய பலத்தைக் கொண்டு, நீங்களே உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் - கைகட்டி, கண்மூடி, கடவுளைத் தொழுது கொண்டிருந்தால் மட்டும் உங்களுக்கு விமோசனம் ஏற்படாது; அல்லது அந்நியர் யாராவது நம்மைக் காப்பாற்றிக் கரையேற்றி விடுவார்கள் என்ற எண்ணமும் உங்களுக்கு வேண்டாம் என்றெல்லாம் முழக்கம் செய்தான். இந்தக்காலத்தில், தன் உடல் நலத்தைச் சிறிது கூடப் பொருட்படுத்தாமல் கெமால் எவ்வளவு வேலை செய்தான்? மோட்டார் வண்டியிலோ, குதிரை மீதோ, ஒன்றுமே அகப்படாவிட்டால் நடந்தோ கிராமங்கள் தோறும் சென்றான். புழுதி மண்ணிலே, எரிக்கிற வெயிலிலே, பகலென்றும் இரவென்றும் வித்தியாசம் பாராட்டாமல் எவ்வளவு தூரம் சுற்றுப் பிரயாணம் செய்தான்? எத்தனை மேடைகள் மீதேறிப் பிரசங்கஞ் செய்தான்? எத்தனை பேரைத் தனித் தனியாக அழைத்து அவர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் மூலம் காரிய சாதனைக்கு ஏற்பாடு செய்தான்? எத்தனை தேசீயச் சங்கங்களை ஆங்காங்கு நிறுவச் செய்தான்? இங்ஙனம் ஆங்காங்குத் தோன்றியிருந்த சக்திகளையெல்லாம் ஒன்று திரட்டுவதும், இவற்றை ஒரு தலைவனுடைய ஆதிக்கத்திற் குட்படுத்தி, ஒரு முகமாகச் செலுத்துவதும் இவனுடைய அடுத்த கடமை யாயிருந்தது. இதற்காக, அனட்டோலியாவின் மத்திய பாகத்திலேயுள்ள சிவா என்ற நகரத்தில் ஒரு காங்கிரஸைக் கூட்ட வேண்டுமென்று ஏற்பாடு செய்தான். இதற்காக ராணுவத் தலைவர் உள்பட எல்லா அதிகாரி களுக்கும் தந்தி மூலமாகக் கீழ்க்கண்ட சுற்றறிக்கையை அனுப்பினான்:- துருக்கிக்கு இப்பொழுது ஆபத்தேற்பட்டிருக்கிறது. மத்திய (கான்டாண்டிநோபிள்) அரசாங்கம் அதன் கடமையைச் செய்யச் சக்தியற்றிருக்கிறது. ஜன சமூகத்தின் மனோ திடத்தாலும், சக்தி யினாலுமே தேசத்தின் சுதந்திரத்தைக் காப்பாற்ற முடியும். சிவா என்ற ஊரில் ஒரு பொதுக் காங்கிர கூட்டப் பெறும். அதற்கு ஒவ்வொரு ஜில்லாவும் மூன்று பிரதிநிதிகளை அனுப்பலாம். இந்த விஷயம் ரகசியமாக இருக்க வேண்டும். இந்த அறிக்கை, கான்டாண்டிநோபிளில் சட்ட ரீதியாக ஏற்படுத்தப் பெற்றுள்ள அரசாங்கத்தின் மீது யுத்தந் தொடுத்தது போலல்லவா? அரசாங்கத்திற்கு இந்த விஷயம் தெரிந்தது. உடனே உள் நாட்டு மந்திரி, கெமாலுடன் உத்தியோக சம்பந்தமான எல்லாத் தொடர்புகளையும் அறுத்துக்கொள்ள வேண்டுமென்றும், அவ னுடன் எவ்வித கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொள்ளக் கூடா தென்றும், அப்படி வைத்துக் கொள்வது தேசத் துரோகக் குற்ற மாகக் கருதப்படுமென்றும் ஒரு சுற்றறிக்கை விடுத்தான். இதனால் சில உத்தியோகதர்கள் பயந்தார்கள். கெமாலுடன் ரகசியமாகவே தொடர்பு வைத்துக்கொண்டார்கள். ஆனால் சிவாஸில் மகாநாடு கூடுவது இதனால் தடைப்படவில்லை. கெமால் இதுகாறும் ஒரு தனி மனிதனாயிருந்து வந்தான். இப்பொழுது ராஜத் துரோகியாகவும் ஆகிவிட்டான். இனி இவனுக்கு ஜன சமூகத்திலே செல்வாக்கு ஏது? ஆனால் இவன், மனோ தைரி யத்தை மட்டும் இழக்கவில்லை. தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான சில நண்பர்களையும் ராணுவ தளகர்த்தர்களையும் ஒன்றுகூட்டி அவர்களிடம் மனம் விட்டுப் பேசினான். நாம் இப்பொழுது பிரிந்து செல்ல வேண்டிய பாதையில் இருக்கிறோம். நம்முடைய சுய பலத்தைக் கொண்டுதான் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். கான்டாண்டிநோபிள் அரசாங்கம் நமக்கு விரோதமாக இருக்கும். அதாவது உள்நாட்டுக் குழப்பந்தான். நாம் அநேக ஆபத்துக்களை எதிர்பார்க்க வேண்டியிருக்கும். அநேக தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும். இந்த முயற்சியில் நாம் இறங்கிவிட்ட பிறகு, யாருமே திரும்பிப் பார்க்கக் கூடாது; ஏன் இறங்கினோம் என்று விசனிக்கக் கூடாது; நீங்கள் இப்பொழுது ஒரு தலைவனைத் தெரிந்தெடுக்க வேண்டும். என்னை நீங்கள் தலைவ னாகத் தெரிந்தெடுக்கும் பட்சத்தில், எனக்கேற் படுகிற கஷ்ட நிஷ்டூரங்களையெல்லாம் நீங்களும் அனுபவிக்கத் தயாராக இருக்க வேண்டும். என்னை ஒரு புரட்சிக்காரன் என்று அரசாங்கத்தார் தீர்மானித்து விடுவார்களல்லவா? என்னைத் தலைவனாகத் தெரிந் தெடுத்தால் ஒரே ஒரு நிபந்தனைதான் நான் கேட்கிறேன். நான் ராணுவ பதவியில் இருந்தால் என் கட்டளைக்கு எப்படி நீங்கள் உடனே கீழ்ப்படிந்து நடப்பீர்களோ, அப்படியே தலைவன் என்ற ஹோதாவில் நான் இடுகிற கட்டளைகளுக்கெல்லாம் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். கூடியிருந்தோர் அனைவரும் கெமாலையே தலைவனாக அங்கீகரித்துக் கொண்டார்கள். ஆனால் அவர்களும் ஒரு நிபந்தனை போட்டார்கள். சுல்தானுக்குப் பாதகம் உண்டாகாதபடி கெமால் இடுகிற எல்லாக் கட்டளைகளுக்கும் தாங்கள் கீழ்ப்படிந்து நடப்ப தாகச் சொன்னார்கள். கெமால், தன் நண்பர்களுக்கு மட்டும் தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டதில் திருப்தியடையவில்லை. தனக்கென்று ஓர் அந்தது வேண்டாமா? பொது ஜனங்களின் முன்னிலையில் எப்படிப் போய் நிற்பது? ஒரு சில நண்பர்கள் சேர்ந்து இவனைத் தலைவனாக அங்கீகரித்து விட்டால் போதுமா? யாருக்குத் தலைவன்? எதற்குத் தலைவன்? இந்தக் கேள்விகளெல்லாம் பிறக்கும் அல்லவா? சிவாஸில் காங்கிரஸைக் கூட்டுவிப்பதும் இந்த நோக்கத் திற்காகத்தான். ஆனால் அதற்குப் பூர்வாங்கமாக எர்ஸெரூமில் ஒரு மகாநாட்டைக் கூட்ட வேண்டுமென்று தீர்மானித்தான். இதற்குக் கிழக்குப்பிரதேசத்திலுள்ள பல பிரதிநிதி களையும், ராணுவத் தலைவர்களையும் வரவழைத்தான். இந்தக் காலத்தில் இவனுக்குப் பக்கபலமாக நின்றவர்கள் கியாஸிம் காராபெகிர் பாஷா, அலி புவாத்பாஷா, ரெபெத் பாஷா, ரவுப் பே முதலியோர். ஆனால் இவர்களிலே ஒருவராவது, கெமாலோடு கடைசி வரையில் தொடர்ந்து செல்லவேயில்லை. இவர்களில் ஒவ்வொரு வரும் இவனுக்கு விரோதிகளாகி, துருக்கிய அரசியல் வாழ்வி லிருந்தே மறைந்து விட்டார்கள். 11 சிவா காங்கிர 1. எர்ஸெரூம் மகாநாடு எர்ஸெரூம் நகருக்குப் புறம்பாயுள்ள ஒரு தனியான இடத்தில் சிறிய கட்டடம். மிகப் பழையது. முன்னர் இங்கே ஏதாவது பள்ளிக் கூடம் இருந்திருக்க வேண்டும். இந்தக் கட்டடத்தை நோக்கி 1919ஆம் வருஷம் ஜுலை மாதம் 23ஆம் தேதி பலர் வந்து கொண் டிருந்தனர். இங்ஙனம் வந்தவர்கள் சாதாரணமானவர்களல்ல ரென்றும், சமூகத்திலே ஒரு சிறிது அந்ததுடையவர்களென்றும் இவர்களுடைய நடை உடை பாவனைகளால் தெரியவந்தது. கட்டடத்திற்குள் மகாநாடு ஆரம்பமாயிற்று. கிழக்குப் பகுதிச் சேனைத்தலைவனான கியாஸிம் காராபெகிர் பாஷா, மகாநாட்டின் தலைவனாக உயர்ந்ததோர் ஆசனத்தில் அமர்ந்தான். ராணுவ உத்தி யோகதர்கள், சிவில் அதிகாரிகள், புரோகிதர்கள், பள்ளிக்கூட ஆசிரியர்கள், வைத்தியர்கள் முதலிய சமூகத்தின் பல தரத்தினரும் மகாநாட்டில் பிரசன்னமாயிருந்தார்கள். கெமால் பேசத் தொடங் கினான். அனட்டோலியா, இப்பொழுது ஒரு தேசீயப் புரட்சியில் ஈடு பட்டிருக்கிறது. நமது தாய்நாட்டுக்குப் பூரண சுதந்திரம் வேண்டு மென்பதுதான் நமது நோக்கம். தன்னுடைய மானத்தையும் வாழ்வையும் காப்பாற்றிக் கொள்ளத் தீர்மானித்து விட்ட ஒரு ஜன சமுதாயத்தை, உலகத்திலேயுள்ள எந்தச் சக்தியும் அடக்கி வைத்துக் கொண்டிருக்க முடியாது. துருக்கிக்குச் சொந்தமல்லாத பிரதே சங்கள் எவையேனும் இருந்தால், அவற்றை உரியவர்களிடத்தில் நாம் ஒப்புவித்துவிடத் தயார். அப்பொழுது அந்தப் பிரதேசங்களின் தலை விதியை அவையே நிர்ணயித்துக் கொள்ளும். ஆனால் அனட்டோலியாவின் மண்ணில் ஓர் அங்குலத்தைக் கூட நாம் விட்டுக்கொடுக்க முடியாது. துருக்கிய ஜன சமுதாயத்தைப் பிரிக்க முடியாது. அஃது ஒன்றுபட்டது. யுத்தத்தையே, நமது வாழ்க்கையின் சிறந்த கொள்கையாகக் கொண்டிருக்கிறோம். நம்மைப் பலப்படுத்திக் கொள்ள நாம் தீர்மானித்து விட்டோம். ஒரு தேசம், தன்னுடைய அதிகாரத்தைத் தானே வலிய விட்டுக்கொடுத்து விடுமானால், அஃது அடிமை நாடாகவே கருதப்படும். ஆனால் ஒவ்வொரு துருக்கியனுடைய தேகத்திலும் பரிசுத்தமான ரத்தம் ஓடுகிறது. அதைப்பற்றி அவன் பெருமையும் கொள்கிறான். இத்தகையவர் களைக் கொண்ட ஒரு நாடு எப்பொழுதும் யுத்தஞ் செய்து கொண்டு போகத்தயாராயிருக் கிறது. ஆனால் அடிமையாயிருந்து வாழ்கிற அவமானத்தை மட்டும் அஃது ஏற்றுக் கொள்ளச் சித்தமாயில்லை. நாம் போர் செய்வோம். என்னதான் வந்துவிடப் போகிறது? தோல்விதானே. ஆனால் மானந் துறந்து வாழ்வதை விட, மானத் துடன் மரிப்பது மேலல்லவா? துருக்கியின் புராதனப் பெருமையிலே நமக்கு நம்பிக்கையுண்டு. அந்தப் பெருமையினால் ஏற்படுகிற பலத்திலே நமக்கு நம்பிக்கை உண்டு. இரண்டு வழிகள் தான் நம் முன்னே திறந்து விடப்பட்டிருக்கின்றன. ஒன்று சுதந்திரம்; மற்றொன்று மரணம். துருக்கிய ஜன சமுதாயம், பிரிக்க முடியாத ஒரு பிண்டம். ஐக்கியப்பட்ட இந்தக் கிழக்குப் பிரதேசம், அந்நியர்களுடைய ஆக்கிர மிப்பையும் தலையீட்டையும் எதிர்த்து நிற்கும். சுல்தா னுடைய அரசாங்கம் இந்த வேலையைச் செய்யத் தவறிவிடுமானால், அரசாங்க நிருவாகத்தை வேறொரு புரட்சி அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். ‘சுல்தான் - கலீபாவுக்கு விரோதமாகப் புரட்சி செய்யலாமா? என்று கூட்டத்தி லிருந்து ஒரு குரல் எழுந்தது. அந்நியர்களுடைய ஆதீனத்தில் அகப்பட்டுக் கொண் டிருக்கும் சுல்தான் - கலீபாவை விடுதலை செய்யவே இந்தப் புரட்சியை நாம் ஆரம்பித்திருக்கிறோம் என்றான் கெமால் உடனே. பின்னர், யாரைத் தலைவனாகத் தேர்ந்தெடுப்பதென்பதைப் பற்றிப் பலத்த வாதம் நடைபெற்றது. சில்லரைப் பொறாமைகள் பல இந்தச் சமயத்தில் தலைதூக்கி நின்றன. யாராருக்கு என்னென்ன பேச வேண்டுமென்று விருப்பமிருக்கிறதோ அதையெல்லாம் பேசட்டும் என்று கெமால் மௌனமாகவே எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான். கடைசியில் ரகசியமாக வாக்கு எடுத்துப் பார்ப்பதென்று தீர்மானிக்கப் பட்டது. அப்படியே வாக்குகள் எடுக்கப்பட்டன. முதபா கெமால் பாஷா தலைவன்! 2. கைது செய்ய உத்தரவு இந்தச் சமயத்தில் கூட்டத்திற்குள் ஒரு சேவகன் வந்து நுழைந்தான். கியாஸிம் பாஷா அருகில் சென்று சலாம் செய்தான். ஒரு தந்தியை நீட்டினான். அதனைப் படித்தான் கியாஸிம் பாஷா. அவன் முகத்தில் வியர்வை அரும்ப ஆரம்பித்தது. சபையில் ஒரே அமைதி. கியாஸிம் ஆசனத்தை விட்டு எழுந்தான். கெமாலின் அருகில் சென்று உங்களோடு தனித்து ஒரு நிமிஷம் பேச வேண்டுமே யென்றான். இருவரும் வெளியே சென்றார்கள். சுல்தா னிடமிருந்து இதோ உத்தரவு வந்திருக்கிறது என்று சொல்லித் தந்தியை நீட்டினான் கியாஸிம். அதில் என்ன கண்டிருக்கிறது? உடனே கெமாலைக் கைது செய்யவும்; மகாநாட்டைக் கலைத்து விடவும். உங்களை ஆதரிப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். ஆனால் சுல்தானுடைய உத்தரவுக்கு கீழ்ப்படியவேண்டியவனாயிருக் கிறேனே என்றான் பதை பதைத்துக் கொண்டே கியாஸிம். தந்தியைப் படித்துவிட்டுத் திருப்பி கியாஸிம் பாஷாவிடத்தில் கொடுப்பதற்குள் கெமால் எத்தனையோ எண்ணங்களை எண்ணி னான். ஆங்கிலேயர்களிடம் சரணாகதி. மால்ட்டா தீவிலோ, வேறெங்கோ சிறைவாசம் அல்லது தூக்குமேடை. இப்படி ஒன்றன் பின்னொன்றாக எண்ணங்கள் உதித்துவிட்டன. எல்லாம் உங்கள் தயவைப் பொறுத்திருக்கிறது. கியாஸிம் பாஷா! துருக்கியர்கள் அடிமைகளாயிருக்க வேண்டுமா அல்லது சுதந்திர புருஷர்களாயிருக்க வேண்டுமா என்பதை நீங்கள்தான் தீர்மானிக் வேண்டும் என்றான் நிதானமாக. இதைப்பற்றி யோசனை செய்ய அவகாசம் கொடுங்கள் என்றான் கியாஸிம். கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. சியாஸிம் பாஷா, நீண்ட நேரம் தனக்குள் யோசனை செய்தான். மனச்சாட்சி படைத்தவனாதலால் ஒரு முடிவுசெய்து கொண்டான். கெமாலின் இருப்பிடத்திற்கு வந்தான். பாஷா! அந்நிய சத்துருக்களின் வசம் பாதுஷா ஒரு கைதி போல் சிக்கிக்கொண்டிருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். அப்படி யானால் அரசாங்கத்தின் அதிகாரம் ஜனங்களிடத்திலேயே வந்து விட்டதல்லவா! ஆகையால், கான்டாண்டிநோபிளிலிருந்து வரும் உத்தரவுகள் சுல்தானால் பிறப்பிக்கப்பட்டவையல்ல என்பதையும், ஆங்கிலேயர்களுடைய உத்தரவு என்பதையும் நான் அறிந்துகொண் டேன். நீங்கள் சொல்வதுதான் சரியென்று எனக்குப்படுகிறது. தவிர, நீங்கள் என் நண்பரல்லவா? உங்களுக்கு நான் வாக்குறுதி கொடுத்து விட்டேன் அல்லவா? இப்படிச் சொல்லிக்கொண்டே சுல்தானுடைய உத்தரவைக் கிழித்துப்போட்டான் கியாஸிம் பாஷா. ஆபத்தினின்று தப்பினான் கெமால். மறுநாள் மீண்டும் மகாநாடு கூடியது. தேசத்தின் லட்சியம் எதுவாயிருக்கவேண்டும், அதனையடைய என்னென்ன மார்க்கங் களைக் கையாளவேண்டும் என்பவற்றைப்பற்றி வாதம் நடை பெற்றது. கீழ்க்கண்ட அமிசங்களடங்கிய அறிக்கையைத் தயாரித்து வெளியிடுவ தென்று தீர்மானிக்கப்பட்டது:- 1. தேசீய எல்லைக்குட்பட்ட துருக்கி முழுவதும் பிரிக்க முடியாத ஒன்று. 2. உதுமானிய ஏகாதிபத்தியம் பல துண்டங்களாக்கப் படுவதையோ, அந்நியர்கள் துருக்கியை ஆக்கிரமித்துக் கொள் வதையோ அல்லது தலையிடுவதையோ, ஜன சமூகம் ஒற்றுமையாக எதிர்க்கும். 3. ஜன சமுதாயத்தின் சுதந்திரத்தையும் தேசத்தின் ஒற்றுமை யையும் காப்பாற்றத் தற்போதைய அரசாங்கம் சக்தியற்றிருக்கு மானால், இந்த நோக்கங்களைக் காப்பாற்றும் பொருட்டுத் தற்காலிக அரசாங்கம் ஒன்று ஏற்படுத்தப்பெறும். இந்தத் தற்காலிக அரசாங்கத்தைத் தேசீய காங்கிர தெரிந்தெடுக்கும். அப்படி முடியாமற் போனால், நிருவாகக் கமிட்டி இதனைத் தெரிந் தெடுக்கும். 4. தேசீய சக்திகளையெல்லாம் ஒன்று திரட்டி அதனை ஆளும் சக்தியாகக்கொண்டு வருவதும், அரசாங்க அதிகாரத்திற்கு மூல தானமாயிருப்பது இந்தச் சக்தியே என்ற கொள்கையை தாபிப்பதுமே முக்கியமான நோக்கங்கள். 5. நம்முடைய அரசியல் அதிகாரத்தையோ அல்லது நமது சமூக அந்ததுகளையோ பாதிப்பதாகிற எந்த உரிமைகளையும் கிறிதுவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. 6. அந்நியர்களுடைய ஆதிக்கத்தையோ, மேற்பார்வையையோ எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. 7. தேசீய சபையை உடனே கூட்டுவிக்கவும், அரசாங்க நடவடிக்கைகள் அதன் நிருவாகத்திற்குட்படவும் உடனே காரியங்கள் செய்யப்படவேண்டும். இந்தத் தீர்மானங்களை நடைமுறையில் கொணரவும், மேலே கூறப்பட்ட அறிக்கையைத் தயாரித்து வெளியிடவும், ஒன்பது பேர் அடங்கிய ஒரு பிரதிநிதிக் கமிட்டி நியமிக்கப்பட்டது. கமிட்டி யின் தலைவன் கெமால் என்பதை நாம் சொல்லவேண்டியதில்லை யல்லவா? ஆனால் இந்தக் கமிட்டி ஒருமுறைகூட கூடவே இல்லை. சுல்தானுக்கு விரோதியென்று பகிரங்கமாக வெளிவர யாருக்கும் பயந்தானே? கெமால் இதற்கெல்லாம் மனஞ் சோரவில்லை. கமிட்டியின் வேலைகளத் தனையையும் இவனே ஏற்றுக்கொண்டு செய்தான். மகாநாட்டிலே தீர்மானித்தபடி அறிக்கை தயாரித்துத் தேச மக்களுக்கு வினியோகித்தான். வல்லரசுகளின் பிரதிநிதிகளுக்குங்கூட இந்த அறிக்கையின் பிரதிகள் அனுப்பப்பெற்றன.1 எர்ஸெரூம் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், கிழக்கு மாகாணங்களில் மட்டும் அழுலுக்குக் கொண்டு வரக் கூடியனவாக இருந்தன. துருக்கியனைத்திற்கும் இஃது அமுலில் வர வேண்டாமா? அப்பொழுது தானே, துருக்கிய ஜன சமுதாயம் பிரிக்க முடியாத ஒன்று என்ற கொள்கைக்கு அர்த்தமுண்டு. சிவா காங்கிரஸில் இதனைச் செய்து முடிப்பதென்று தீர்மானித்தான் கெமால். 3. உயிருக்கு ஆபத்து எர்ஸெரூம் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களைக் கண்டு சுல்தான் மிகவும் ஆத்திரம் கொண்டான். கெமாலை யும் அவன் சகாக்களையும் உடனே அடக்குவது அவசியமென்று கருதினான். இதற்காக, அனட்டோலியாவுக்கு இரண்டு பிரிவுப் படைகளை அனுப்புவதென்று வல்லரசுப் பிரதிநிதிகளோடு கலந் தாலோசித்தான். ஆனால் ஹை கமிஷனர்கள் இதை அங்கீகரிக்க வில்லை. முத்ரோ ஒப்பந்தப்படி படைகளைக் கலைத்து விடுவது போக, புதிய படைகளைத் தயாரித்து அனுப்புவதாவென்று இந்த யோசனையை நிராகரித்து விட்டார்கள். பின்னர், தனிப்பட்ட நபர்கள் சிலரை அனட்டோலியா மாகாணத்திற்கு அனுப்பி அங்குக் கலகத்தைக் கிளப்பி விடுவதென் றும், பின்னர், இவையெல்லாம் கெமால் கட்சிக்காரர்களுடைய விஷமத்தனங்கள் என்று குற்றஞ்சாட்டி, கெமாலின்மீது ஜனங் களுக்கு ஒரு துவேஷத்தை உண்டுபண்ணுவதென்றும் ஏற்பாடு செய் தார்கள். ஆனால் கெமால் இது விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருந்தான். தன் எல்லைக்குள் இருக்கிற படைகள், எந்தக் கார ணத்தை முன்னிட்டும் அந்நியப் படைகளுடன் மோதிக்கொள்ளக் கூடாதென்று உத்தரவிட்டான். அனட்டோலியா மாகாண எல்லைக்குள் கெமால் எங்குக் காணப்பட்டாலும் அவனை உடனே கைது செய்து கான்டாண்டி நோபிளுக்குக் கொண்டுவர வேண்டுமென்று எல்லா அதிகாரி களுக்கும் சுல்தான் அறிக்கை விடுத்தான். இந்த உத்தரவை முன்னிட்டு எர்ஸெரூமி லிருந்து சிவாஸுக்குக் கெமால் தன் சகாக்களுடன் சென்று கொண்டிருந்த போது இவனைக் கைது செய்யச் சில முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் கெமால் இதனை முன்னாடியே யறிந்து, வேறொரு வழியாக சிவா போய்ச் சேர்ந்தான். பின்னர், சுல்தான், தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான அலி கலீப் பே என்பவனை மலேஷியா என்ற ஊரைத் தலைநகராகக் கொண்ட எல் அஜீ என்ற மாகாணத்திற்குக் கவர்னராக நியமித் தான். இந்த மாகாணத்தில் குருதிய ஜாதியார் அதிகம். இவர்களின் துணைகொண்டு, சிவாஸில் காங்கிர நடைபெறுகிற போது, அந்த ஊரின் மீது படையெடுத்து, காங்கிரஸில் ஆஜராயிருக்கிற அத்தனை பேரையும் அப்படியே கைது செய்யவேண்டுமென்று அலி கலீப் பேக்கு உத்தரவிட்டான். 4. சிவாஸில் இந்த நிலையில் சிவா காங்கிர 1918ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி கூடியது. கெமால் தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான். முதன் முதலாகக் காங்கிர, சுல்தான் - கலீபாவிடம் தனக் கிருக்கும் ராஜ விசுவாசத்தைத் தீர்மான மூலமாகத் தெரிவித்துக் கொண்டது. இதைவிட நகைச்சுவை நிரம்பிய வேறோரு தீர்மானத்தைக் காங்கிர நிறைவேற்ற முடியாது என்று கெமால் அப்பொழுது தனக்குள்ளேயே நகைத்துக் கொண்டான். பின்னர் வாதங்கள் தொடங்கிவிட்டன. அந்நியர் களில், யார் துருக்கிக்கு அதிகமான சாதகம் செய்வார்கள் என்பதைப் பற்றியே பிரதிநிதிகள் பேசினார்கள். துருக்கி, சுதந்திரமாக வாழ முடியும் என்ற நம்பிக்கை கூட இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. இந்தப் பேச்சுக்களை யெல்லாம் கேட்டு, கெமால் எவ்வளவு ஆத்திரங் கொண்டான்? அர்த்தமில்லாத இந்த வாதங்கள் நாட்கள் கணக்காக நடைபெற்றன. இதனிடையில், சுல்தானுடைய உத்தரவைப்பெற்ற அலி கலீப், சில குருதியர்களைத் திரட்டிக்கொண்டு சிவாஸை நோக்கி வருகிறா னென்று செய்தி கிடைத்தது. எனவே காங்கிரஸை சீக்கிரத்தில் முடித்துவிட வேண்டுமென்று தீர்மானித்தான் கெமால். எர்ஸெரூம் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தேசீய ஒப்பந்தத் தீர்மானம் சில மாற்றங்களுடன் இங்கு நிறைவேற்றப் பட்டது. மோசூலிலிருந்து அலெக்ஸான்ட்ரெட்டா என்ற ஊர் வரையில் நேராக ஒரு கோடு இழுத்து அதற்கு வடபாகத்திலுள்ள பிரதேசங்கள் யாவும் புதிய துருக்கியாய் அமையுமென்றும், இதனை அந்நியர்கள் ஆக்கிரமித்துக் கொள்ளாதபடி பாதுகாத்துக் கொள் வது துருக்கிய ஜன சமுதாயத்தின் கடமையென்றும் தீர்மானங்கள் நிறைவேறின. இந்தத் தீர்மானங்களை நடைமுறையில் கொணரு வதற்கு ஒரு பிரதிநிதிக் கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்தக் கமிட்டிக்குக் கெமாலே தலைவன். மகாநாட்டை முடித்துவிட்ட கெமால், அலி கலீப்பையும் அவன் படைகளையும் விரட்டியடித்தான். தேச மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு மந்திரிச் சபையை அமைக்க வேண்டுமென்றும், இதற்காக உடனே பார்லிமெண்டரி தேர்தல் நடத்தவேண்டுமென்றும் சிவா காங்கிரஸிலிருந்து கான் டாண்டிநோபிள் அரசாங்கத்திற்குப் பொதுப்படையாக ஒரு தந்தி கொடுக்கப்பட்டது. இதே மாதிரியாக ராணுவத் தலைவர் களும் தனித்தனியாகத் தந்திகள் கொடுத்தார்கள். கான்டாண்டிநோபிளில் பிரதம மந்திரியான தாமாத் பெரீத் உஷாராகிவிட்டான். தலைமைத் தந்திக் காரியாலயத்துத் தலைவனை வரவழைத்து, சுல்தானுக்கு வரும் தந்திகள் ஒன்றையும் அரண்மனைக்கு அனுப்ப வேண்டாமென்று உத்தரவிட்டான். ஆனால் தந்தி ஆபீசில் தந்தி இயந்திரங்கள் டிக் டிக் என்று அடித்த வண்ணமாயிருந்தன. சிவாஸி லிருந்து தந்திமேல் தந்தி. நாங்கள் கொடுத்த தந்திக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லையே என்று மிடுக்காகப் பேசுகிறது அந்தத் தந்தி இயந்திரம். தந்திக் காரியால யத்துத் தலைவன் என்ன செய்வான்? ஓடினான் மீண்டும் பிரதம மந்திரியிடம். தாமாத் பெரீத் திணறி விட்டான். சுல்தானுக்குக் கிடைக்கிற எல்லாத் தந்திகளும் மந்திரிச் சபையின் மூலமாகவே செல்லவேண்டும் என்று பதில் தந்தி கூறுமாறு உத்தரவிட்டான். ஆனால் சிவாஸிலிருந்தவர்கள் எந்த மண்ணினால் செய்யப்பட்ட வர்கள் என்பதை இவன் அறியவில்லை. சுல்தானுக்கும் எங்களுக்கும் நேரான தந்திப் போக்குவரத்துக்கு இடம் கொடாவிட்டால் கான்டாண்டிநோபிள் அரசாங்கத்திற்கு எவ்வித செய்தியும் வரவொட்டாமல் தடுத்துவிடுவோம். இதைப் பற்றி முடிவுகட்ட ஒரு மணி நேரம் அவகாசம் கொடுக்கிறோம். என்று சிவாஸிலிருந்து எச்சரிக்கைத் தந்தி கிடைத்தது. அன்று செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அனட்டோலியா மாகாணத்தி லுள்ள எல்லாத் தந்திக் காரியாலங்களிலும், கெமால் தன் ஆட்களை ஏற்பாடு செய்து வைத்திருந்தான். இதனால் சிவாஸிலிருந்தும், அனட்டோலியா மாகாணத்திலிருந்தும் அன்றிரவு கான்டாண்டி நோபிளுக்குச் சென்ற எல்லாத் தந்திகளும் ஒரு வரத்துடனேயே பாடின. செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி பொழுது விடிந்தது. கான்டாண்டிநோபிளிலிருந்து ஒரு பதிலும் வரவில்லை. இனி என்ன? கான்டாண்டி நோபிளிலிருந்து வருகிற செய்திகளை ஏற்கவோ, இங்கிருந்து செய்திகளை அனுப்பவோ கூடாது என்று அனட்டோலியா மாகாணத்தில் இருந்த எல்லாத் தந்திக் காரியா லயங்களுக்கும் உத்தரவு பிறப்பித்தான் கெமால். சில இடங்களில் தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டு விட்டன. இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படியாதவர்களெல்லாம் உடனே கைது செய்யப்பட்டு அவர் களுக்குப் பதில், நம்பிக்கையுள்ள உத்தியோகதர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். எல்லாம் ஒரே இரவில் முடிந்துவிட்டது. தலைநகரம் வேறு. அதனால் ஆளப்படுகிற ராஜ்யம் வேறாகி விட்டது. ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லை. இதனோடு கெமால் நிற்கவில்லை. மாகாண அதிகாரிகளிடமிருந்து காண்டாண்டி நோபிள் அரசாங்கத்திற்கு வழக்கமாக அனுப்பப்பட்டு வருகிற கடிதப்போக்குவரத்துகளையும் கஜானா பணங்களையும் தன் இருப்பிடமாகிய சிவாஸிற்கே திருப்பி விடுமாறு தனக்குக் கீழ்ப் பட்ட உத்தியோகதர்களுக்கு உத்தரவு விடுத்தான். அனட்டோலியா மாகாணத்தின் அரசாங்க நிருவாகத்தை சிவா நியமனம் பெற்ற பிரதிநிதிக் கமிட்டியாரே இனி நடத்துவரென்றும் அறிவிக்கப் பட்டது. 5. அரசாங்கம் பணிகிறது கான்டாண்டிநோபிளில் சுல்தான், அரண்மனையில் இருந்து கொண்டு பல்லைக் கடித்தான்; முகத்தைச் சுளித்தான். தன்னை ராஜத்துரோகம் சூழ்ந்துகொண்டுவிட்டதை இப்பொழுதே உணர்ந்தான். கான்டாண்டி நோபிள் ராஜ்யமில்லாத தலைநகரமாக இருந்தது. சுல்தான் அரண்மனையில் கொலு வீற்றிருக் கிறான்; ஆனால் அவனுக்கு நாடு இல்லை. அரசாங்கயந்திரம் ஓடுகிறது; ஆனால் அதிலிருந்து ஒன்றும் உற்பத்தியாகவில்லை. தனக்கு யாராவது துணைக்கு வருவார் களாவென்று சுற்று முற்றும் பார்த்தான். ராணுவமா? அதுதான் தேசீயத் திமிர் கொண்டு நிற்கிறதே. நேசக்கட்சி ஹை கமிஷனர்களா? அவர்கள் தோளை மட்டும் அசைத்துக் கொடுத்தார்கள்; இஃது உள்நாட்டு விஷயம். இதில் நாங்கள் தலையிட முடியாது என்று சொல்லிவிட்டார்கள். சுல்தான் என்ன செய்வான்? பணியவேண்டியது தானே. அப் பொழுதுகூட ஒரு சிறிய தந்திரத்தைக் கையாண்டான். கெமாலோடு பால்யத்திலிருந்து பழகின அப்துல் கரீம் பாஷா என்பவனைத் தேடிப்பிடித்து அவனை முகதுதி செய்து கெமாலிடம் தூது பேசுமாறு ஏவினான். கெமாலுக்குக் கௌரவமான பேர்களைக் கொடுத்து அழைக்குமாறு உத்தரவிட்டான். குதுப் - உல் - அக்தாப் - நட்சத்திரங்களின் நட்சத்திரம்! - இந்தப் பெயர் கொண்டுதான் கெமாலை அழைக்குமாறு கனம் தங்கிய எக்ஸெலன்ஸி கரீம் பாஷாவுக்கு உத்தரவாயிற்று கான்டாண்டிநோபிளுக்கும் சிவாஸுக்கும் அறுநூறு மைல் தூரம். கரீம் பாஷாவும் கெமாலும் முறையே இரண்டிடங்களிலும் இருந்து கொண்டு தந்தி மூலம் பேசத்தொடங்கினார்கள். ஒருநாள் இரவு முழுவதும் - சுமார் எட்டு மணி நேரம் - தந்திப் போக்குவரத்து நடைபெற்றது. கரீம் பாஷா, குர் ஆனில் தனக்கிருக்கும் புலமையை எல்லாம் கொட்டிப் பார்த்தான். கடவுளின் பிரதிநிதியாகிய சுல்தானுக்குத் துரோகம் செய்யக்கூடாதென்று நயந்து பேசினான். பயங்காட்டினான். ஆனால் தந்திக் கம்பியின் கிழக்குப் பாகத்தி லிருக்கிற அந்த நட்சத்திரங்களின் நட்சத்திரம் இந்த உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் எளிதில் இறங்கி வந்துவிடக்கூடியதா? கரீம் பாஷா என்ன அலங்கார பாஷையில் பேசினானோ, அந்த அலங்கார பாஷையிலேயே கெமால் அவனுக்குப் பதில் சொல்லி விட்டான். பக்த சிகாமணியே! உண்மை. கடவுளின் திருக்கை எங்குந் தான் விரிந்திருக்கிறது. ஆனால் புனித ஆத்மாவே! ஒருவன் எப் பொழுதுமே கடவுளின் அருளில் வாழ்ந்துகொண்டிருக்க முடி யுமா? தனக்கு நேர்ந்திருக்கிற ஆபத்துக்கு, தானே பரிகாரந் தேடிக் கொள்ள வேண்டாமா? பார்த்தான் கரீம் பாஷா. இனி என்ன செய்வது? ஓடினான் அரண்மனைக்கு. கையை விரித்தான். வேறு வழியில்லை இனி சுல்தானுக்கு. ‘கெமாலின் கடைசி பட்சமான கோரிக்கைகள் தான் என்ன? என்று மறுபடியும் வினவுமாறு சொன்னான். இரண்டே இரண்டு வாக்கியங்களில் பதில் கிடைத்தது. தாமாத் பெரீத் பாஷாவின் மந்திரி சபை உடனே ராஜீநாமா செய்யவேண்டும். புதிய பார்லிமெண்டுக்குத் தேர்தல்கள் நடைபெறவேண்டும். 1919ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி தாமாத் பெரீத் பாஷாவின் மந்திரிச் சபை ராஜிநாமாச் செய்து விட்டது. அலிரிஜா பாஷா என்ற ஒரு வயோதிகனைப் பிரதம மந்திரியாகக் கொண்ட மந்திரிச்சபை அமைந்தது. கெமாலுக்கு வேண்டிய ஜெமால் பாஷா என்பவன் இந்த மந்திரிச் சபையில் யுத்த மந்திரியானான். கான்-டாண்டிநோபிளையும் சிவாஸையும் இணைக்கக் கூடிய ஒரு பாலம்போல் இந்த மந்திரிச் சபை இருந்ததென்று கூறலாம். ஆனால் இதற்கென்று தனியான அரசியல் கொள்கைகள் எதுவுமில்லை. கெமால், சிவா காங்கிரசின் பிரதிநிதிக் கமிட்டி பெயரால், அலி ரிஜா பாஷாவின் மந்திரிச் சபையை அங்கீகரிப்பதாகவும் அதனோடு ஒத்துழைப்பதாகவும் ஓர் அறிக்கை வெளியிட்டான். இதனோடு சுல்தானுக்கும் தாமாத் பெரீத் பாஷாவின் மந்திரி சபையை விலக்கி விட்டதற்காகத் தேசத்தின் பெயரால் வந்தனம் செலுத்துவதாக உபசாரப் பத்திரம் ஒன்று அனுப்பினான். தேசத்தின் பெயரால்! தேசத்தின் பெயரால் பேச யாருக்கு உரிமையுண்டு? சுல்தானுக்கா? கெமாலுக்கா? சுல்தான் இந்த உபசாரப் பத்திரத்தை வாசித்துக்கொணடிருக்கிறபோதே தன் சிங்காதனத்தின்கீழ் பள்ளம் வெட்டப்படுவதாக உணர்ந்து விட்டான். சிவா காங்கிர எந்த நோக்கத்திற்காகக் கூட்டப்பெற்றதோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டதென்றும், இனி தேசீய இயக் கத்தைக் கலைத்துவிடலாமென்றும் கெமாலுக்குச் சிலர் ஆலோசனை கூறினார்கள். ஆனால் புதிய மந்திரி சபை எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்த்துக்கொண்டுதான் நமது இயக்கத்தைக் கலைக்க வேண்டுமென்று அவர்களைச் சமாதானப்படுத்தி வைத்தான் கெமால். ஆனால் இதே சமயத்தில் அனட்டோலியா மண்ணில் இந்த தேசீய இயக்கம் நன்றாக வேரூன்றும்படி செய்து வந்தான். புதிதாக நடைபெறப்போகும் பார்லிமெண்ட் தேர்தலில் தேசீயக் கட்சி யினருக்குப் பெரும்பான்மையான தானங்கள் கிடைக்கும் பொருட்டு நாடெங்கணும் சென்று பிரசாரம் செய்தான். அலி ரிஜா பாஷாவின் மந்திரிச் சபையை இவன் ஏற்று கொண்டானே தவிர இவன் முன்னர் விடுத்த உத்தரவுகளை - அதாவது கான்டாண்டி நோபிளுக்குச் செல்கிற கடிதப் போக்குவரத்து களையும் கஜானா பணங்களையும் தனக்குத் திருப்பவேண்டுமென்று விடுத்த உத்தரவை - ரத்து செய்யவே இல்லை. ஆகவே ஒரே சாம்ராஜ்யத்தில் இரண்டு அரசாங்கங்கள் நடை பெற்று வந்தன. கான்டாண்டிநோபிளில் ஓர் அரசாங்கம்; அதற்கு அதிகாரமில்லாத அரசன். இங்கே அனட்டோலியாவில் அதிகார பலம் நிரம்பிய அரசாங்கத்திற்குக் கெமால் பாஷா தலைவன் இதனைச் சமாளிப்பதெப்படி? மீண்டும் கான்டாண்டிநோபிள் அரசாங்கம் வளைந்து கொடுத்தது. சலீஹ் பாஷா என்பவன், கான்டாண்டிநோபிள் அரசாங்கத்தின் பிரதிநிதியாக, அனட் டோலியா அரசாங்கத்துடன் சமரஸம் பேசச் சென்றான். 1919ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி அமேயாவில் இரண்டு கட்சிப் பிரதிநிதிகளும் கலந்து பேசினார்கள். சில முடிவுகளுக்கும் வந்தார்கள். முதலாவது சுல்தான் - கலீபாவினுடைய அந்ததையும் புனிதத் தன்மையையும் காப்பாற்றவேண்டும். இரண்டாவது எர்ஸெரூம் மகாநாட்டிலும், சிவா காங்கிரஸிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களின்படி, துருக்கி, சுதந்திரமாக வாழ உரிமை உண்டென் றும், அந்த மகாநாடுகளில் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் இருக்கும் துருக்கியப் பிரதேசங்களை அந்நியர் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தக் கூடாதென்றும் அங்கீகரிக்கப்பட்டன. இந்த இரண்டு முக்கியமான அம்சங்களிலும் கெமால் கான்டாண்டிநோபிள் அரசாங்கத்தின் மீது வெற்றி கொண்டு விட்டான். சிவா காங்கிரஸில் நியமனம் பெற்ற பிரதிநிதித்துவக் கமிட்டியை - அதாவது போட்டி அரசாங் கத்தைக் - கலைத்து விடுவதா? வேண்டாமா? என்பதைப் பற்றிய பிரச்னை எழுந்தது. இதைப் பின்பு பார்த்துக் கொள்வோமென்று மெதுவாகச் சொல்லி வாதத்திற்கே வராமல் செய்துவிட்டான் கெமால். இந்த மாதிரியான சமயங்களில்தான் கெமால் ராஜ தந்திர சிகரத்தின்மீது ஏறி வெற்றிக்கொடி தூக்குகிறான். புதிய பார்லி மெண்ட் கூடப்போவதாலும் அதற்கு வருங்கால அரசாங்க அமைப்பை நிர்ணயிக்கும் பூரண உரிமை இருப்பதாலும் இந்தப் பிரச்னையைப்பற்றிக் கான்டாண்டிநோபிள் அரசாங்கப் பிரதிநிதிகள் வற்புறுத்தவேயில்லை. தாமாத் பெரீத் மந்திரிச் சபை வீழ்த்தப்பட்டவுடனேயே கான்டாண்டிநோபிளிலிருந்த ஹை கமிஷனர்கள் சுல்தானிய அரசாங்கத்தின் செல்வாக்கு அதமித்து வருவதையும், அனட்டோ லியாவில் ஆம்; கிழக்கில்தான் - ஒரு புதிய சக்தி உதயமாகிக் கொண்டு வருவதையும் சூட்சுமமாகக் கண்டுகொண்டு விட்டார்கள். இனி என்ன? உதய ராகத்திலே பாடவேண்டியது தானே? இதில் வல்லவர் களல்லவா வல்லரசுப் பிரதிநிதிகள்? துருக்கியின் வருங்கால புருஷன், சிவாஸிலே இருக்கிறானென்று சொல்லி ஹை கமிஷனர்கள், கான்டாண்டிநோபிளி லிருந்து சிவாஸுக்கு ஓடினார்கள். தங்கள் உள்ளன்பைக் காட்டிக் கொள்வதற்கறிகுறியாக அவனோடு கை குலுக்கக் கையை நீட்டினார்கள். அவனும் கையை நீட்டினான்; ஆனால் மனத்தை மட்டும் திறக்கவே இல்லை. 12 அந்நியர் சூழ்ச்சி 1. பார்லிமெண்ட் கூடுதல் தேசீயப் போராட்டம் வர வர மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருப்பதாலும், கான்டாண்டிநோபிளுக்குச் சமீபத்தில் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தினாலும், கெமால் தன்னுடைய தேசீய இயக்கத்தின் தலைமை தானத்தை சிவாஸிலிருந்து அங்கோராவுக்கு மாற்றிக் கொண்டான். தவிர, அனட்டோலியா மாகாணத்தின் ரயில்வே பாதைகளெல்லாம் இங்கு வந்து கூடு கின்றன. துருக்கியின் மத்திய தானமாகவும் இந்த அங்கோரா இருந்தது. தேசீய நாடகத்தின் அடுத்த காட்சியைக் கான்டாண்டி நோபிளில் நடிக்க வேண்டியிருப்பதால், அதற்கு முந்தின காட்சியை இந்த அங்கோராவில் நடித்துக்காட்டத் தீர்மானித்து விட்டான் கெமால். எனவே, 1919ஆம் வருஷம் டிசம்பர் மாதம் தன் பரிவாரத் துடன் அங்கோரா வந்து சேர்ந்தான். அன்றைய தினத்திலிருந்தே வேலை செய்யத் தொடங்கிவிட்டான். உள்ளூரிலிருந்த தந்திக் காரியாலயத்தைத் தன்னுடைய காரியாலயமாக ஏற்படுத்திக் கொண்டு இரவும் பகலுமாக அறிக்கைகள் மேல் அறிக்கை, உத்தரவுகளுக்கு மேல் உத்தரவு பிறப்பித்த வண்ணமாயிருந்தான். பார்லிமெண்ட் தேர்தலுக்கு முந்திய இரண்டு வாரங்களில் கிராமங்கள் தோறும் காற்றாடிபோல் சுற்றினான். தேசீயக் கட்சியையே ஆதரிக்க வேண்டு மென்று மேடை தோறும் பேசினான். தேர்தலும் நடைபெற்றது. கெமாலின் தேசீயக்கட்சி அபேட்ச கர்கள் பெரும்பாலோராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கெமா லும், எர்ஸெரூம் பிரதேசத்துப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டான். இங்ஙனம் தெரிந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்களை யெல்லாம் அங்கோராவில் ஒன்றுகூட்டி, இவர்கள் கான்டாண்டி நோபிளில் கூடப்போகிற பார்லி மெண்ட்டில் என்னென்னவிதமாக நடந்து கொள்ள வேண்டுமென்று எடுத்துக் கூறினான். இவன் மட்டும் பார்லிமெண்ட் கூட்டத்திற்குச் செல்ல வில்லை. 1920ஆம் வருஷம் ஜனவரி மாதம் 11ஆம் தேதி புதிய பார்லிமெண்ட் கான்டாண்டிநோபிளில் கூடியது. வழக்கம் போல் ராஜ விசுவாசத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எர்ஸெரூம் மகாநாட்டிலும் சிவா மகாநாட்டிலும் நிறைவேற்றப்பட்ட தேசீய ஒப்பந்தத்தின் அமிசங்கள் அப்படியே அங்கீகரிக்கப்பட்டன. ஆனால் தேசீயக்கட்சி அங்கத்தினர்களும், கான்டாண்டிநோபிளின் சூழலில் அகப்பட்டுக் கொண்டதினாலேயோ என்னவோ, சமரஸ மனப்பான்மையைக் கொண்டுவிட்டார்கள். எப்படியாவது உள்நாட்டுக் குழப்பம் ஏற்படாமல், எல்லாம் சமரசமாக முடிந்தால் போதும் என்ற மனப்பான்மை இவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. கெமால் பாஷா ஓதிய உபதேசங்களெல்லாம் மணற்காட்டிலே பேய்ந்த மழையாகி விட்டது. ஐரோப்பிய வல்லரசுகள், துருக்கியப் பார்லிமெண்டின் இந்த மனப்பான்மையை எப்படியோ தெரிந்துகொண்டுவிட்டன. முன்னே விதித்திருந்த நிபந்தனைகளை விலக்கி, கான்டாண்டி நோபிள் நகரமும், டார்டனெல் ஜலசந்தியும் இனிச் சுல்தா னுடைய ஆதிக்கத்திலேயே இருக்கும் என்று அறிக்கை அனுப்பின. பார்லிமெண்ட் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே இந்த அறிக்கை வந்து சேர்ந்தது. தேசீயக் கட்சி அங்கத்தினர்கள் தங்களுக்கு வெற்றி ஏற்பட்டுவிட்டதாக நினைத்து விட்டார்கள். துருக்கி சம்பந்தமாக இனி நடைபெறப் போகிற சமாதான மகா நாட்டில் தங்களுக்குச் சாதகமாகவே எல்லாம் நடந்துவிடும் என்று நம்பினார்கள். ஆகையால் வல்லரசுகளை நாம் இப்பொழுது விரோ தித்துக் கொள்ளக் கூடாதென்றும், அவைகளுக்கு ஆதரவாயிருக்கிற சுல்தானுக்கு நாம் பக்க பலமாயிருக்க வேண்டுமென்றும், தீர்மானித்து விட்டார்கள். ஹை கமிஷனர்கள் சுல்தானுடன் சேர்ந்து கொண்டு இங்ஙனம் தேசீயக் கட்சி யங்கத்தினர்களை நல்லதனப்படுத்தித் தங்கள் திட்டங்கள் ஒவ்வொன்றையும் பார்லிமெண்டில் கிளத்தி வெற்றி யடைந்தார்கள். தேசீயக் கட்சிக்கு ஆதரவாயிருக்கிற ஜெமால் பாஷா யுத்த மந்திரிப் பதவியினின்றும் விலக்கப்பட்டான். அலி ரிஜா பாஷாவின் மந்திரிச் சபையைக் கலைத்துவிட்டுத் தேசீய நோக்குடன் கூடிய மந்திரிச் சபையை அமைக்க வேண்டுமென்று கெமால் சொல்லியனுப்பி இருந்தான். இதனை நடத்த விடாமல் ஹை கமிஷனர்கள் செய்து விட்டார்கள். இவற்றையெல்லாம் அங்கோராவிலிருந்து கொண்டு கவனித்து வந்தான் கெமால். ஆச்சரியப்படவே இல்லை. ஏனென்றால், மனத் திண்மை படைத்தவர்கள்கூட அதிகார ஆடம்பரச் சூழலில் அகப் பட்டுக்கொண்டுவிட்டால் கொஞ்சம் கலங்கித்தான் போவார்கள் என்பது இவனுக்குத் தெரியுமல்லவா? பொது ஜனங்களிடத்திலேயே தன்னுடைய பலம் இருக்கிறதென்று உறுதி கொண்டான். கான் டாண்டிநோபிளில் தனக்கு நம்பிக்கையாயுள்ள சில நண்பர்களின் மூலமாக அநேகவிதமான ஆயுதங்களை வரவழைத்து அங்கோராவில் சேமித்து வைத்துக் கொண்டான். மற்றச் சுற்றுப் புறங்களிலிருந்தும் ஆயுதங்கள் வந்த குவிந்தன. இதே சமயத்தில் நாடு முழுவதும் அந்நியர்களின் மீது துவேஷம் வளர்ந்து வந்தது. வல்லரசுப் பிரதிநிதிகளாக ஆங்காங்கு நிறுத்திவைக்கப் பட்டிருந்த அதிகாரிகளின் உத்தரவுகள் புறக் கணிக்கப்பட்டு வந்தன. சில்லரைக் கலகங்கள் ஏற்பட்டன. துருக்கி இங்ஙனம் எதிர்பாராத விதமாக உயிர்த்தெழத் தொடங்கியதைப் பார்த்து வல்லரசுகள் கோபங் கொண்டன. இதற்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டாமா? வல்லரசுகளின் பிரதம மந்திரிகள் இதைப் பற்றி லண்டனில் கூடி ஆலோசித்தார்கள். துருக்கியின் உள்நாட்டில் அந்நியப் படைகள் அதிகம் இல்லாத காரணமாகக் கான்டாண்டி நோபிளின் மீது மட்டும் தங்கள் கவனத்தைச் செலுத்தத் தீர்மானித்தார்கள். 1920ஆம் வருஷம் மார்ச் மாதம் 10ஆம் தேதி லார்ட் கர்ஸன் பிரிட்டிஷ் பார்லிமெண்ட்டில் பேசிய போது, துருக்கி, இங்ஙனம் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கு மானால் ஏன் ஐரோப்பிய பூகோள படத்திலிருந்தே அதனை அழித்துவிடக் கூடாது என்னும் கருத்துப் படப் பேசினான். 2. அடக்குமுறை 1920ஆம் வருஷம் மார்ச் மாதம் 15ஆம் தேதி இரவு கான்டாண்டி நோபிள் முழுவதும் தூங்கிக் கொண்டிருக்கிறது. சூனியமாயிருக்கும் வீதிகளை மின்சார விளக்குதம்பங்கள் காவல் காத்துக் கொண்டிருக் கின்றன. பார்லிமெண்ட் கூட்டத்திற்கு வந்திருந்த எல்லாப் பிரதிநிதிகளும் அவரவர்களுடைய ஜாகைகளில் குறட்டை விடுகிறார்கள். நிசப்தமான இந்த நேரத்தில பிரிட்டிஷ் படைகளின் பூட் ஓசை, இவர்கள் ஏறிவருகிற மோட்டார் லாரி சப்தம், இவை மட்டுமே கேட்கின்றன. இந்த மோட்டார் லாரி, குறிப்பிட்ட சில வீடுகள், ஹோட்டல்கள் முதலியவைகளுக்கு எதிரே நிற்கிறது. இதிலிருந்து சில பிரிட்டிஷ் ராணுவ உத்தியோகதர்கள் இறங்கி மேற்படி கட்டடங்களுக்குள்ளே நுழைகிறார்கள். உள்ளே இருந்து சிலரைக் கைலாகு கொடுத்துப் பலவந்தமாக அழைத்து வந்து லாரியில் உட்கார வைக்கிறார்கள். உடனே இந்த மோட்டார் வாகனம் மாயமாய்ப் பறக்கிறது. என்ன விசேஷம்? ஒன்றுமில்லை. துருக்கிக்கு ஒரு பாடங் கற்பிக்க வேண்டுமென்று லார்ட் கர்ஸன் கூறியிருந்தானல்லவா? அதுதான். ஏற்கனவே வல்லரசுகள் விடுத்திருந்த உத்தரவுப்படி, கான் டாண்டி நோபிளிலிருந்த பிரிட்டிஷ் ஹை கமிஷனர், சுல்தானுக்கு விரோதமாக நடந்து கொண்டவர்களையெல்லாம் கைது செய்து விட்டான். இந்த 15ஆம் தேதியன்று இரவு. பார்லிமெண்ட் அங்கத் தினர்களும், அரசாங்க உத்தியோகதர்கள் பலரும் - அதாவது சுல்தானுக்கு விரோதமாகவும் தேசீயக் கட்சிக்கு - கெமால் கட்சிக்கு - நேர்முகமாகவோ, மறைமுக மாகவோ, ஆதரவாகவும் இருக்கின்ற வர்கள் என்று சந்தேகிக்கப் பட்டவர்கள் பலரும் - சிறையிலே கொண்டு வைக்கப்பட்டார்கள். தேசீயக் கட்சியின் முக்கிய அங்கத் தினர்களான ரவுப்பே, பெத்தி பே முதலியவர்களும், முன்னர் பிரதம மந்திரியாயிருந்த சையத் ஹலீம் உள்பட வேறு பலரும் கை விலங் கிடப்பட்டு, கான்டாண்டி நோபிளின் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள், இவர்களைத் தனியாகச் சிறையிலும் அன்றிரவு வைக்கவில்லை. கொலை, கொள்ளை முதலிய குற்றங்கள் செய்து தண்டிக்கப்பட்டிருக்கிற சாதாரண குற்றவாளிகளுடன் சேர்த்து வைக்கப்பட்டார்கள். வேண்டுமென்றே செய்த காரியம் இது. மறுநாள் காலை 16ஆம் தேதி, கான்டாண்டி நோபிள் வாசிகள் வழக்கம்போல் விழித்தெழுந்தார்கள். இரவில் என்ன நடந்ததென்று இவர்களுக்குத் தெரியாது. துறைமுகத்திலிருந்த பிரிட்டிஷ் யுத்தக் கப்பல்களிலிருந்து பிரிட்டிஷ் துருப்புகள் இறங்கி, அணி வகுத்துக் கொண்டு வீதிகள் வழியே வருகின்றன. இவர்களை இறக்குமதி செய்த கப்பல்களில், முந்திய இரவில் கைது செய்யப் பட்டவர்கள். அத்தனை பேரும் மாஜி மந்திரிகளும் கொலைகாரர் களும், பார்லிமெண்ட் அங்கத்தினர்களும் கொள்ளைக்காரர்களும், இப்படி ஜதை ஜதையாகச் சேர்த்து - ஏற்றுமதி செய்யப்பட்டார்கள். உடனே கப்பல் சப்தமிட்டுக் கொண்டு நகரத் தொடங்கிவிட்டது. எங்கே? மால்ட்டா தீவுக்கு! அங்கேயுள்ள விசாலமான சிறைச்சாலை, இவர்களை வரவேற்கத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தது. கான்டாண்டி நோபிளில் ராணுவச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. ஜனங்கள் அமைதியாயிருக்க வேண்டு மென்று எச்சரிக்கை செய்யப்பட்டார்கள். சுல்தானுடைய உத்தரவு களுக்குக் கீழ்ப்படிவது ஓவ்வொரு துருக்கியப் பிரஜையினுடைய கடமையுமாகும் என்றது பிரிட்டிஷ் ஹை கமிஷனருடைய உத்தரவு ஒன்று. சுல்தான் பெயராலேயே எல்லாக்காரியங்களும் நடை பெற்றன. சுல்தானும் இதற்கு இணங்கிக் கொடுத்தான். துருக்கி முழுவதிலும் பொங்கியெழுந்த தேசீய வெள்ளத்தைக் கடந்து செல்வதோ, அல்லது அதில் மூழ்கி இருந்த இடம் தெரியாமல் போய்விடுவதோ, எல்லாவற்றிற்கும் பிரிட்டனுடைய துணையி லேயே, அதன் ராஜ தந்திரத்திலேயே நம்பிக்கை வைத்து விடுவ தென்று தீர்மானித்துவிட்டான் சுல்தான். ராணுவச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட உடனே, பார்லிமெண்ட்டும் கலைக்கப்பட்டுவிட்டது. சலீஹ் பாஷாவின் மந்திரிச் சபைக்கு இனி இடமேது? இங்கிலாந்தின் உறுதுணைவ னான பழைய தாமாத் பெரீத் பாஷாவின் தலைமையில் புதிய மந்திரிச் சபை அமைக்கப் பட்டது. மந்திரிச் சபையின் பேராலும் சுல்தான் பேராலுமே எல்லாக் காரியங்களும் நடைபெற்றன. ஆனால் உத்தரவுகள் விடுத்ததென்னவோ பிரிட்டிஷ் ஹைகமிஷனர்தான். அரசாங்கக் காரியாலங்கள் அனைத்தும் பிரிட்டிஷாருடைய சுவாதீனத்திற்கு வந்துவிட்டதும், துருக்கிய உத்தியோகதர்கள் பலர் தங்கள் தங்கள் காரியாலயத்திலிருந்து வெளியேறிவிட்டார்கள். இன்னும் பலர் நகரத்தைவிட்டு வெளியூர்களுக்குப் போய்விட் டார்கள். ஆனால் தலைமைத் தந்தி காரியாலயத்தில் மட்டும், காலை பத்து மணியிலிருந்து ஒரு தந்திக் குமாதா தன்னுடைய தந்திக் கருவியை விடாமல் பிடித்த வண்ணம் அடிக்கடி அங்கோராவுக்குத் தந்தி அடித்துக் கொண்டே யிருந்தான். இங்கிலீஷ்காரர், இன்று காலை திடீரென்று அரசாங்கக் காரியாலயங்களைக் கைப்பற்றிக்கொண்டார்கள். அங்குக் காவலில் இருந்த துருக்கியர்களுடன் சண்டை - ராணுவப் பள்ளிக்கூடத்தை ஆக்ரமித்துக் கொண்டுவிட்டார்கள் - தந்திக் காரியாலயம் அவர்கள் வசமாகிக் கொண்டிருக்கிறது. நம்மவரில் ஆறுபேர் இறந்தனர். பதினைந்து பேருக்குக் காயம் - தங்கள் உத்தரவு என்ன? இங்ஙனம் அங்கோராவுக்குத் தந்தி போய்க்கொண்டிருக்கிற போது, தந்திக் காரியாலயம் பிரிட்டிஷார் வசம் சிக்கிக் கொண்டு விட்டது. இதன் பிறகு, தந்திக் காரியாலயத்திலிருந்து ஒரு செய்தியும் அங்கோராவுக்கு அனுப்ப முடியவில்லை. இவ்வாறு அங்கோராவிலுள்ள கெமாலுக்குத் தைரியமாகத் தந்திகளை அனுப்பிக் கொண்டு வந்தவன் மொனாடிர்லி ஹம்தி எப்பெண்டி என்பவன். இவனைப் பற்றிக் கெமால் பகிரங்கமாகப் பாராட்டிப் பேசியிருக்கிறான். மொனாடிர்லி ஹம்தி எப்பெண்டியைப் போன்ற ஒரு தைரிய முள்ள தேச பக்தன் அங்கு - கான்டாண்டி நோபிளில் - இல்லாமற் போயிருந்தால் தலைநகரத்திற்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டி யிருக்குமோ? கான்டாண்டி நோபிளில் இருந்த ஒரு மந்திரியாவது, ஒரு பார்லிமெண்ட் அங்கத்தினராவது, ஒரு ராணுவத் தலைவ ராவது, நமது தேசீய இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஓர் அங்கத்தின ராவது, அங்குள்ள நிலைமையைப்பற்றி எனக்குத் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு அந்த யோசனையும் வரவில்லை. அவர்களுக்கு மனக் கலக்கம் ஏற்பட்டு விட்டதென்றே நாம் ஊகிக்க வேண்டியிருக்கிறது. அங்கோராவுக்குத் தந்தி மூலம் விஷயங்களைத் தெரிவிக்க வேண்டு மென்பதுகூடத் தெரியாத அவ்வளவு புத்தி சுவாதீனம் இவர்களுக்கு இல்லாமற் போய் விட்டதற்குக் காரணம் தெரியவில்லை. தந்தி குமாதாவான ஹம்தி எப்பெண்டி, பின்னர் அங்கோராவுக்கு வந்து, எங்கள் தந்திக் காரியாலயத்தின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டான். இவனுக்கு நான் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறேன் என்பதை, தேசத்தாருக்குப் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்வது என் கடமையென்று கருதுகிறேன். சுல்தான், பிரிட்டிஷார் அனுஷ்டிக்கிற இந்த அடக்குமுறை களைக் கண்டு சிறிது நிம்மதி கொண்டான். தனது சிங்காதனத்திற்கு இனி ஆட்டமே கிடையாது என்று நம்பினான். 13 போட்டி அரசாங்கம் 1. பிரசார வேலை கான்டாண்டி நோபிளைப் பிரிட்டிஷார் கைவசப்படுத்திக் கொண்ட அதே தினத்தில் 16-3-1920 - கெமால் தன் கட்சியினருக்கு விடுத்த ஒரு சுற்றறிக்கையில் கான்டாண்டி நோபிளிலிருந்து பிறக்கிற எந்த உத்தரவுக்கும் யாருமே கீழ்ப்படியக் கூடாதென்றும், அங்குள்ள மந்திரிச் சபை அந்நியர்களின் பொம்மையாக இருக்கிற தென்றும் தெரிவித்தான். பிரிட்டிஷார் இங்ஙனம் எதிர்பாராத விதமாகக் கான்டாண்டிநோபிளை ஆக்ரமித்துக் கொண்டது. துருக்கிய சாம்ராஜ்ஜியத்தின் தலைமீது அடித்ததாகுமென்றும், இந்த ஆக்ரமிப்பு, சரித்திரத்திலேயே இதுவரை காணப்படாத ஒரு அநீதமான செய்கை என்றும், இதனால் விளையும் பலாபலன் களுக்குச் சரித்திரத்தின் முன் ஐரோப்பிய வல்லரசுகள் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றும் உலகத்திலுள்ள எல்லா அரசாங்கங் களுக்கும் அறிக்கை விடுத்தான். எங்களுடைய இந்த துக்ககரமான வேளையில் நாங்கள் கொண்டுள்ள லட்சியத்தின் நியாயத் தன்மை யும், அதன் புனிதத் தன்மையுமே ஆண்டவனுக்கு அடுத்தபடியாக எங்களுக்குத் துணையாக நிற்கின்றன என்று இந்த அறிக்கையை முடித்தான். ஆனால் அப்பொழுதைய ஐரோப்பிய வல்லரசுகளின் ஈரமற்ற இதயத்திலே நியாயத்திற்கும் புனிதத் தன்மைக்கும் இடம் எங்கேயிருந்தது? துருக்கிய ஐன சமுதாயத்தின் பிரதிநியாக இருந்து தான் பேசுவதாக இந்த அறிக்கைகள் மூலம் திரப்படுத்திக் கொண் டான் கெமால். தவிர அந்நியர்கள் லேசாகக் கருதியபடி துருக்கியை அவ்வளவு சுலபமாக அழித்துவிட முடியாது என்பதையும் இதன் மூலம் உலகத்திற்குத் தெரிவித்தான். கான்டாண்டி நோபிளை அந்நியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டது, பார்லிமெண்ட் அங்கத்தினர்கள் கைது செய்யப் பட்டது, இவற்றிற் கெல்லாம் சுல்தான் துணை நின்றது ஆகிய இந்த விவரங்களெல்லாம் கிராம ஜனங்களிடத்தில் நன்றாகப் பரவும்படி செய்தான் கெமால். ஜனங்களுக்குச் சுல்தானிய அரசாங்கத்தின் மீதிருந்த நம்பிக்கை தளர்ந்தது. தேசீய உணர்ச்சி பொங்கி எழுந்தது. கான்டாண்டி நோபிளில் பிரிட்டிஷார் இருக்கிற வரையில் தங்களுக்கு விமோசனமில்லையென்பதைத் துருக்கியர்கள் உணர ஆரம்பித்தார்கள். கெமாலின் கட்சிக்கு ஆள் பலம் பெருகியது. கெமால் ஒருவனே நம்மைக் காப்பாற்ற முடியும் என்று இவர்கள் நம்பினார்கள். கிராம வாசிகளல்லவா? நிஷ்களங்க மனது. கெமா லுக்கு எதையும் அர்ப்பணம் செய்யத் தயாராயிருந்தார்கள். ஆண்கள் எல்லோரும் கெமாலியப் படையில் வந்து சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்றார்கள். குடியானவப் பெண்கள் தங்கள் தங்கள் கிராமத்துக் கொல்லன் பட்டடைகளில் தயார் செய்யப்படுகிற யுத்தக் கருவி களைத் தலை மீதும் தோள்மீதும் சுமந்து கொண்டு வந்து கெமா லுக்கு காணிக்கை கெலுத்தினார்கள். உயர்தர குடும்பத்துப் பெண்கள் யுத்தத்தில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை செய்யும் பொருட்டுத் தாதிகளாய் வந்து அமர்ந்தார்கள். இன்னும் சில பெண்கள் வீடுகளிலேயே இருந்து கொண்டு கெமாலியப் போர் வீரர்களுக்குத் தேவையான உடுப்புகளைத் தயாரித்து அனுப்பி னார்கள். 2. தேசீய பார்லிமெண்ட் ஜனங்களை உணர்ச்சிப் பெருக்கிலே மட்டும் மிதக்க விட்டு விட்டால் போதுமா? நிர்மாண வேலைகளைத் தொடங்க வேண் டாமா? உடனே கெமால் அங்கோராவில் புதிய பார்லிமெண்டைக் கூட்ட ஏற்பாடு செய்தான். தேசீயக் கட்சியின் பிரதிநிதிக் கமிட்டி யின் பெயரால் தேர்தல் அறிக்கைகள் அனுப்பினான். கான் டாண்டிநோபிளில் கூடிக் கலைக்கப் பட்ட பார்லிமெண்ட்டுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்று தெரிவித்தான். துருக்கியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவது இந்த அங்கோரா பார்லி மெண்டுதான் என்று முழக்கம் செய்தான். 1920ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி, அன்று வெள்ளிக் கிழமை. வேண்டுமென்றே வெள்ளிக்கிழமை கூட்டத்தை ஆரம்பிக்கச் செய்தான் கெமால். ஏனென்றால் அன்று முலிம் களின் தொழுகை நாளல்லவா? துருக்கியர்கள் மத பக்தி நிறைந்தவர் களாதலால் அவர்களைத் திடீரென்று தன்னுடைய நோக்கத்திற்கு இணங்கச் செய்ய முடியாது என்பதைக் கெமால் நன்கு உணர்ந்திருந் தான். அதற்காக அவர்கள் மனப்போக்கிலேயே அவர்களைவிட்டு அதன் மூலமாக அவர்கள் ஆதரவைப் பெற்று பின்னர் அதிகார பலத்தைக் கொண்டு அவர்களைப் புதிய உலகத்திற்குக் கொண்டு வர வேண்டுமென்பது இவன் எண்ணம். இதற்காக, தேசீய சபை கூடுவதற்கு முன்னர், அருகில் உள்ள மசூதியில் அங்கத்தினர்கள் அனைவரும் வந்து சேருமாறு செய்தான். தொழுகை நடந்தது. சுல்தான் கலீபாவுக்கு எல்லாவித நலன்களும் உண்டாக வேண்டு மென்று அனைவரும் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு அனைவரும் அணி வகுத்து, முன்னர் பிறைக் கொடி பறக்க, ஊர்வலமாகத் தேசீய சபை நடைபெறும் மண்டபத்திற்குள் நுழைந் தார்கள். இதே நேரத்தில் அனட்டோலியா மாகாணத்திலுள்ள எல்லாக் கிராமங்களிலும் இதே மாதிரி தெய்வப்பிரார்த்தனை நடைபெற வேண்டுமென்று ஏற்பாடு செய்திருந்தான் கெமால். இந்த மதச் சடங்குகளோடு தேசீய சபை தொடங்கப் பெற்றது.1 வழக்கம்போல் ராஜ விசுவாசத் தீர்மானம் நிறைவேறியது. பின்னர் கெமால் தேசீய சபை கூட்டப்பெற்றதின் நோக்கங்களை யும், நாடு தற்போது இருக்கும் நிலைமையையும், துருக்கியின் வருங்கால அரசியல் அமைப்பு எத்தகையதாய் இருக்கவேண்டு மென்பதையும் விவரமாக எடுத்துச் சொன்னான். இவனுடைய பேச்சிலிருந்து கீழ்க்கண்ட அம்சங்களை மட்டும் நாம் கிரகித்துக் கொண்டு மேலே செல்வோம். 1. தனியாக ஓர் அரசாங்கம் தாபிக்கப்பட வேண்டும். 2. இந்த அரசாங்கத்தின் தலைவன், தற்காலிகமாக நியமிக்கப் பட்டிருக்கிறான் என்றோ அல்லது ஒரு ரீஜெண்ட் மாதிரியிருந்து காரியங்களை நடத்துவானென்றோ சொல்லி இந்தப் பிரச்னையைக் கடத்திக் கொண்டு போகக்கூடாது. 3. ஜன சக்தியானது இந்தத் தேசீய சபையின் மூலமாகத் தேசத்தை ஆள்கிறது என்ற தத்துவத்தை அங்கீகரிக்க வேண்டும். 4. இந்தத் தேசீய சபையினிடத்தில் தேசத்திற்கென்று சட்டங்கள் செய்யும் அதிகாரமும் தேசத்தை ஆள்வதற்குத் தேவை யான நிருவாக அதிகாரமும் சேர்ந்து ஒப்படைக்கப்பட்டிருக் கின்றன. 5. இந்தத் தேசீய சபையினால் தேர்ந்தெடுக்கப்பெற்ற ஒரு நிருவாக சபை அரசாங்கத்தை நடத்தும். இந்தத் தேசீய சபையின் தலைவனே இந்த நிருவாக சபையின் தலைவனாகவும் இருப்பான். குறிப்பு:- சுல்தான் கலீபா அந்நியர்களின் பிடிப்பினின்றும் விடுதலையடைந்த பிறகு, இந்தத் தேசீய சபையினால் நிர்ண யிக்கப்படுகிற சட்ட ரீதியான ஒரு தானத்தைப் பெறுவார். இந்தக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இவன் பேசினபோதிலும், துருக்கியின் வருங்கால அரசியல் அமைப்பு இந்த விதமாகத் தானிருக்கும் என்பதை வரையறுத்துச் சொல்லாமலே இருந்துவிட்டான். குடியரசா, ஜனநாயக அரசாங்கமா, முடியரசா என்பதைப் பற்றி இவன் ஒன்றுமே சொல்லவில்லை. கெமாலின் பிரசங்கத்தைக் கேட்ட அங்கத்தினர்கள், தேசீய சபையின் தலைவனாகக் கெமாலை ஏகமனதாகத் தேர்ந்தெடுத் தார்கள். பின்னர் அரசாங்க நிருவாகத்திற்காகச் சில சட்டங்களும் இயற்றப்பட்டன. நிருவாகத்தை நடத்த மேலே கூறப்பட்ட நிருவாக சபையே மந்திரிச் சபையாக அமைந்தது. இதில் 11 மந்திரிகளும், சேனாதிபதியும் ஆக 12 பேர் இருந்தார்கள். தேசீய சபையின் தலைவனே நிருவாக சபையின் தலைவன் என்ற முறையில் கெமால் மந்திரிச் சபையின் தலைவனுமானான். இந்த மந்திரிச் சபையைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் தேசீய சபைக்கு இருந்ததல்லவா? அந்த அதிகாரத்தைச் சில மாதங்கள் கழித்து நிருவாக சபையின் தலைவ னுக்கே வருமாறு செய்து கொண்டான் கெமால், இங்ஙனம் சட்ட ரீதியாக அதிகாரத்தைக் கைப்பற்றினான். இவனிடத்தி லிருந்தே எல்லா அதிகாரங்களும் பிறந்தன. ஜனநாயகப் போர்வையைப் போர்த்த ஒரு சர்வாதிகாரியானான். பார்லிமெண்ட்டிடமிருந்து அதிகாரங் களைப் பெற்றான்; அந்த அதிகாரங்களைக் கொண்டே பார்லிமெண்ட்டை ஆண்டான். பார்லிமெண்ட்டின் பெரும் பான்மையான வாக்குகளுக்கு இவன் கட்டுப்பட்டு நடந்தான். ஆனால் தன்னோக்கப்படியே அந்த பெரும்பான்மையான வாக்குகள் இருக்குமாறும் செய்து கொண்டான். அங்கோராவில் தேசீய அரசாங்கம் வேலை செய்யத் தொடங்கி விட்டது. புதிய மந்திரிச் சபையில், கெமாலின் முந்திய போராட்டங்களில் கூடவே இருந்து துணை செய்த ஒருவன் சேர்த்துக் கொள்ளப்பட்டான். ராணுவ சேவையில் இவன் இளைஞன். உருவத்திலும் சிறியன். முகவெட்டும் இல்லை. இவன்தான் கெமாலின் மரணத்திற்குப் பிறகு துருக்கியக் குடியரசின் தலைவனாக நியமனம் பெற்ற இமெத் இனோனு. இதுவரையில் இவன் தேசீய இயக்கத் திற்காகக் கான்டாண்டி நோபிளில் பெரிதும் உழைத்து வந்தான். இவனைப் பிரதம சேனாதிபதியாகக் கெமால் நியமனம் செய்தான். இதனால் வயதான அநேக ராணுவ தளகர்த்தர் களுக்கு மனதாபம் ஏற்பட்டது. ஆனால் கெமால் இதனை லட்சியம் செய்யவில்லை. புதிய மந்திரிச் சபை, கடுமையான சட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாகப் பிறப்பித்து வந்தது. கான்டாண்டிநோபிள் அரசாங்கம், அந்நிய நாடுகளோடு செய்திருந்த வியாபார உடன்படிக்கைகள், அரசியல் ஒப்பந்தங்கள் முதலியன யாவும் செல்லுபடியாகாதவை என்றது ஒரு சட்டம். அரசாங்கத்திற்குக் கிடைக்கிற வரிப்பணங்கள் யாவும் - சுல்தானுடைய சொந்த நிலங்களிலிருந்து கிடைக்கிற வருமானமும், மத தாபனங்களிலிருந்து கிடைக்கிற வருமானமும் உள்பட அங்கோரா அரசாங்கத்தின் நிருவாகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் கான்டாண்டிநோபிள் அரசாங்கத் தின் வருவாய் அடைக்கப்பட்டு விட்டது. அங்கோராவிலும், அதன் ஆதிக்கத்திற்குட்பட்ட மற்ற முக்கிய நகரங் களிலும், நீதிதலங்கள் ஏற்படுத்தப்பெற்றன. அங்கோரா அரசாங்கத்தின் எதிரிகள் யாவரும் தேசத் துரோகிகள் என்று சட்ட ரீதியாகக் கருதப்பட்டார்கள். அங்கோராவில் போட்டி அரசாங்கம் ஏற்பட்டுவிட்டதைக் கேட்ட சுல்தானும் தாமாத் பெரீத் பாஷாவின் மந்திரிச் சபையும் கோபத்தினால் கிளர்ந்தெழுந்தார்கள். அங்கோராவின் மீது படை யெடுத்துச் சென்று கலகக்காரர்களை நிர்மூலமாக்கிவிட ஏற்பாடு செய்தார்கள். கலீபாவின் படை, பலப்படுத்தப்பெற்று அனட்டோலி யாவை நோக்கி அனுப்பப் பெற்றது. இது தவிர ஆங்காங்குச் சில்லரை ஆசாமிகளை அனுப்பி ஜனங்களைத் தூண்டிவிடுமாறு ஏற்பாடுகள் செய்யப்பெற்றன. இவை காரணமாக அனட்டோலியா மாகாணம் முழுவதும் குழப்பங்கள் உண்டாயின. அங்கோரா அரசாங்கம் இவற்றை ஒரே சமயத்தில் சமாளிக்கக் கூடிய நிலைமையில் இல்லாமல் திணறிக் கொண்டிருந்தது. 1920ஆம் வருஷம் மே மாதம் முழுவதும் இங்ஙனம் குழப்பமான நிலைமை யிலேயே அனட்டோலியா மாகாணம் இருந்தது. கலீபாவின் சேனைக்கு எங்கும் வெற்றி. கெமாலியப் படைகள் சில இடங்களில் முறியடிக்கப் பட்டுப் பின்னடைந்தன. கெமாலியர்களிற் பலர் உயிர் துறந்துவிட்டார்கள். முடியரசா? குடியரசா? என்ற கேள்வி ஒரு நூல் இழையில் தொங்கிக் கொண்டிருந்தது. 14 செவர் ஒப்பந்தம் 1. கைகட்டி நிற்பதா? இந்தச் சந்தர்ப்பத்தில் ஐரோப்பிய வல்லரசுகள் துருக்கியின் தலைவிதியை நிர்ணயித்து ஒரு சமாதான உடன்படிக்கை நிறை வேற்றி வெளியிட்டது. இதற்குத்தான், செவர் உடன்படிக்கை என்று பெயர். மிர்னாவைத் தவிர்த்து, அனட்டோலியா மாகாணம் மட்டுமே வருங்கால துருக்கி, கான்டாண்டி நோபிளும் டார்டனெல் ஜலசந்தியும், பிரிட்டன், பிரான், இத்தலி ஆகிய மூன்று வல்லரசுகளின் மேற்பார்வையில் இருக்கும், அரேபியா, பாலதீனம் முதலிய பிரதேசங்கள் பிரிட்டனுடைய ஆதீனத்திற்குப் போய்விடும். துருக்கியின் ஆதீனத்திற்குட்பட்டிருந்த துருக்கிய ரல்லாத மற்ற அர்மீனியர், கிரேக்கர் முதலியோர் சுயநிர்ணய உரிமை அளிக்கப் பெறுவர். துருக்கிக்குச் சொந்தமானதென்று எந்தப் பிரதேசம் ஒதுக்கப்பட்டதோ அந்தப் பிரதேசத்தையும் - அனட் டோலியா மாகாணத்தையும் - மூன்று பகுதிகளாகப் பிரித்து, தங்கள் தங்கள் செல்வாக்குக்கு உட்பட்டவைகளாக்கிக் கொள்ளவேண்டு மென்று மேற்படி மூன்று வல்லரசுகளும் தீர்மானித்தன. அதாவது சுருக்கமாகக் கூறுவோமானால், செவர் உடன்படிக்கை, துருக்கிய ஏகாதிபத்தியத்திற்கு மரணதண்டனை விதித்துவிட்டது. துருக்கிக்கு, ராஜ்யாதிகார உரிமை உண்டென்பதை இந்த உடன்படிக்கை அங்கீ கரித்தது. ஆனால் அதன் கைகால்கள் கட்டப்பட்டுவிட்டன. இந்த செவர் உடன்படிக்கை, கெமாலுக்குச் சாதகமாக முடிந்தது. இந்த உடன்படிக்கையின் ஷரத்துக்களைக் கேட்ட ஒவ்வொரு துருக்கியனும் கெமாலியக் கட்சியில் சேர்ந்துவிட்டான். ஐந்து நூற்றாண்டு களாக ஒரு சாம்ராஜ்யத்திலே சுதந்திரப் பிரஜை யாக இருந்தவன் இப்பொழுது அடிமை வாழ்வை ஏற்றுக் கொள்ளச் சம்மதிப்பானா? துருக்கியர்கள் அனைவரும், தங்களுக்குள்ளே யிருந்த பரபரப் பொறாமைகளையும் பகைமைகளையும் மறந்து விட்டு, கெமாலை தேச ரட்சகனாக வீகரித்துக் கொண்டார்கள். சுல்தான் - கலீபாவைத் தவறான பாதையில் நடத்திச் சென்ற தாமாத் பெரீத் பாஷா முதலியோர் மீது பழி தீர்த்துக் கொள்ளவேண்டு மென்று சபதஞ் செய்து கொண்டார்கள். விளைவு என்ன? கலீபா வின் படை சிதறி ஓடிவிட்டது. அங்கோரா அரசாங்கத்திற்கு விரோதமாகக் கிளம்பிய கலகங்கள் யாவும் அடங்கிவிட்டன. அங்கு மிங்கும் சிதறிக்கிடந்த அந்நியப்படைகள் யாவும் விரட்டி யடிக்கப்பட்டன. அங்கோராவில், இமெத்பாஷாவின் தலைமையில் தேசீய ராணுவம் பலப்படுத்தப்பெற்றது. யுத்த தளவாடங்கள் மலைமலை யாகக் குவிந்தன. யுத்த சந்நாகங்கள்யாவும் செய்து கொண்டு கெமால், அந்நியர் சூழலில் அகப்பட்டுக் கொண்டிருக்கிற கான்டாண்டி நோபிள் மீது படை யெடுக்குமாறு உத்தரவு செய்தான். இவனுடைய படைகள், பல தளகர்த்தர் களின் தலைமையில் பகுதி பகுதிகளாகப் பிரிந்து கொண்டு, கான்டாண்டிநோபிளைக் கடல் பக்கமாகவும் தரைப் பக்கமாகவும் குழ்ந்துகொள்ள ஆரம்பித்தன. அப்பொழுது கான்டாண்டி நோபிளில் பிரிட்டிஷ் படைகள் அதிகமாக இல்லை. துறைமுகத்திலிருந்த இரண்டொரு பிரிட்டிஷ் யுத்தக் கப்பல்கள் கெமாலியப் படைகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தன. ஆனால் கெமாலியப் படைகள், இவற்றின் வாயையடக்கி, கான்டாண்டிநோபிள் நகரத்தின் மீது பீரங்கி களைத் திருப்பின. பிரிட்டிஷ் ஹை கமிஷனரின் காரியாலயம் சேத மடைந்தது. வல்லரசு களின் படைபலத்தையும், சுல்தானுடைய ஆதரவையும் நம்பி இதுகாறும் கான்டாண்டிநோபிளில் வசித்துக் கொண்டிருந்த வல்லரசுப் பிரதிநிதிகளான ஹை கமிஷனர்களும், அவர் களுடைய சிப்பந்திகளும், மற்ற அந்நியர்களும் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு, கப்பல்களில் ஏறிச் செல்லத் தயாராயிருந்தார்கள். இரண்டு நாட்கள் தொடர்ந்து கான்டாண்டி நோபிளில் பீரங்கிச் சப்தம் கேட்டவண்ணமாயிருந்தது. கெமாலியப் படை பூராவும் இன்னும் கான்டாண்டி நோபிளை வந்து அடையவில்லை. அந்தப் படையின் முன்னணி வகுப்புத்தான், கான்டாண்டி நோபிளை இங்ஙனம் அதிரச் செய்து வருகிறது. கெமாலியர்கள் வசத்தில் கான்டாண்டி நோபிள் அகப்படுவது இப்பவோ? பின்னையோ? செவர் உடன்படிக்கையைத் தயாரித்த ராஜ தந்திரிகளின் செவியில், இந்தச் செய்திகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து விழுந்தன. என்ன துணிச்சல்? ஜெர்மனியைப் பணிய வைத்த நேசக் கட்சிப் படை களை, சரியான ராணுவ உடுப்புக்களைக் கூடப் பெற்றிராத ஒரு சில துருக்கியர்கள் விரட்டியடிப்பதா? கேவலம் ஒரு கலகக்கூட்டத் திற்குத் தலைவனான கெமாலுக்கு, ராஜ தந்திரத்திலேயே புரண்டு எழுந்த லாயிட் ஜார்ஜும், கிளமென்ஸோவும், பிரசிடெண்ட் வில்ஸனும் பணிந்து கொடுப்பதா? இதை எப்படியாவது அடக்க வேண்டும். இதை - இந்தக் கெமாலியப் புரட்சியை - இப்படியே துளிர்க்க விட்டோமானால், உலக பூகோள படத்தை மாற்றியமைப் பதற்கு நாம் போட்டிருக்கிற திட்டங்களெல்லாம் வீணாகிவிடு மல்லவா? ஆகையால் இந்தக் கலகத்தை உடனே அடக்க வேண்டும். ஆனால் எப்படி? 2. கிரீ உதவி இங்ஙனம் நேசதேச ராஜ தந்திரிகள், பாரிஸில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்கள். பிரிட்டனிலிருந்தும், பிரான்ஸில் இருந்தும், இனிப் படைகளைத் தயார் செய்து அனுப்புவதென்பது அசாத்தியம். அவ்வளவு தூரம் ஜனங்கள் சேர்ந்து போயிருந்தார்கள். இந்த இரண்டு நாடுகளிலும் இனி என்ன செய்யலாம். நல்லவேளை யாக, கிரீ தேசத்துப் பிரதம மந்திரியான வெனிஜெலா, இவர் களின் துணைக்கு வந்தான். இவன் மகா மேதாவி. இவன் தன் வாழ்க்கையில் ஒரே ஒரு லட்சியத்தைத்தான் கொண்டிருந்தான். கிரீ தேசத்திற்குப் பழைய ஏகாதிபத்தியப் புகழைத் திருப்பி வாங்கிக் கொடுக்க வேண்டும்; அந்த ஏகாதிபத்தியத்துடன் துருக்கியையும் இணைத்து, கான்டாண்டி நோபிளைத் தலைநகரமாக்கிக் கொள்ள வேண்டும். இந்தக் கனவிலேயே இவன் வாழ்ந்து கொண்டு வந்தான். இதற்காகவே அல்லும் பகலும் உழைத்தான். ஏற்கனவே இவன், மிர்னாவில் கிரேக்கப்படைகளைத் தயார்படுத்தி வைத் திருந்தான். பிரிட்டிஷாரிடமும், பிரெஞ்சுக் காரர்களிடமும் மிகுதி யாகத் தங்கிப்போன யுத்த தளவாடங்களை யெல்லாம் வாங்கிக் குவித்தான். எப்பொழுது சந்தர்ப்பம் அகப்படப் போகிறதென்று இவன் காத்துக் கொண்டிருந்தான். துருக்கியிடமிருந்து சில பிரதேசங்களைப் பிடுங்கி கிரீ தேசத்துடன் சேர்ப்பதாயிருந்தால், தன்னுடைய கிரேக்கப் படைகளை அனுப்பி, கெமாலியர்களைக் கான்டாண்டி நோபிளிலிருந்து விரட்டியடிக்கச் செய்வதாகக் கூறினான். நேச தேச ராஜதந்திரிகள் உடனே இந்த யோசனையை ஏற்றுக் கொண்டார்கள். துருக்கியப் பிரதேசங்கள் சிலவற்றை கிரீஸுடன் சேர்த்துவிடுவதாக உறுதி கூறினார்கள். எப்படியாவது, கெமாலியர்களின் கையில் துருக்கி அகப்பட்டுக் கொண்டு கஷ்டப் படாமலிருந்தால் போதும். சுல்தானையும் துருக்கியையும் காப்பாற்ற வேண்டுவது நேசக் கட்சியினரின் பொறுப்பல்லவா? தவிர, கிரேக்கப் படைகளுக்கு எல்லாவித ராணுவ சாதனங் களும் இருந்தன. துருக்கியப் படைகளா? சரியான உணவு உண்டா? உடை யுண்டா? யந்திர பீரங்கிகள் உண்டா? போக்குவரவு சாத னங்கள்தான் அதிகமா? துருக்கியப் போர் வீரர்களில் பெரும் பாலோருக்கு பூட் கூட இல்லை. கிராமங்களில் புராதன முறையில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் தான் இவர்களுடைய படை பலம்! இவர்கள், கிரேக்கர்களை எதிர்த்துப் போர் செய்ய முடியுமா? இங்ஙனம், நேச தேச ராஜ தந்திரிகள் கனவு கண்டு கொண்டிருந் தார்கள். 1920ஆம் வருஷம் ஜுன் மாதம் 22ஆம் தேதி, கிரேக்கப் படைகள் மிர்னாவை விட்டுப் புறப்பட்டு கான்டாண்டி நோபிளை நோக்கி வந்து கொண்டிருந்தன. இவைகளை ஆங்காங்கு எதிர்த்து நின்ற கெமாலியப் படைகள் சீரழிந்து உருத் தெரியாமல் போயின. த்ரே மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துருக்கியப் படை, அதன் தளகர்த்தனான ஜாபர் தயார் பாஷாவுடன் கிரேக்கர் களால் சிறை பிடிக்கப்பட்டு விட்டது. அட்ரியா நோபிளைக் கைப் பற்றிக் கொண்டுவிட்டார்கள் கிரேக்கர்கள். இங்ஙனமே, கிரேக்கப் படையின் மற்றொரு பகுதி, அனட்டோலியாவிலுள்ள ப்ரூஸா நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டு, வடக்குக் பக்கமாகக் கான் டாண்டி நோபிளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. இந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெமாலியப் படைகள் எங்கே? இனி, தன் படைகளைக் கிரேக்கர்களுடன் மோதவிட்டுத் தோல்வியைச் சம்பாதித்துக் கொள்வதோடு, அங்கோராவுக்கும் ஆபத்தைத் தேடிக் கொள்ளக்கூடாதென்று தீர்மானித்தான் கெமால். தன் சேனையின் பெரும் பாகத்தை அங்கோராவைச் சுற்றியுள்ள மலைப் பிரதேசங்களுக்குத் திருப்பி அழைத்துக் கொண்டுவிட்டான். கெமாலுக்குத் தோல்வி! சுல்தானையும் வல்லரசுகளையும் எதிர்த்து நிற்கிறவர்களுக்குக் கடவுள் கருணை காட்டுவாரா என்ற கேள்வி, கெமாலியர்களுக்குள்ளேயே பிறந்துவிட்டது. அங்கோரா தேசீய சபையில் ஒரே கூச்சல், சபைத் தலைவன் என்ற முறையில் எல்லாருடைய கோபப்பார்வைகளும் கெமாலின் மீது விழுந்த வண்ணமாயிருக்கின்றன. துருக்கியர்கள் இங்ஙனம் தோல்வியுற்றுச் சீரழிந்து போனதற்கெல்லாம் காரணம் யார்? முதபா கெமால்தான். இந்தத் தோரணையிலேயே பிரதிநிதிகள் பலரும் பேசினார்கள். போதும் நாம் யுத்தம் செய்தது. சுல்தா னோடு சமரஸம் செய்து கொண்டு நிம்மதியாக இருப்போம். கெமாலை நம்பி நாம் அவமானப்பட்டது போதும். இந்த மாதிரி தன்னம்பிக்கையில்லாத பேச்சுக்கள் தேசீய சபையில் எதிரொலி கொடுத்தன. எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக் கொண் டிருந்தான். கெமால். எழுந்து நின்றான்; சிம்மம் போல் அனைவரை யும் ஒரு முறை பார்த்தான்; பின்னர் பேசத் தொடங்கினான். இங்ஙனம் நீங்கள் என் மீது கோபிப்பதில் என்ன பயன்? கிரேக்கர்களை எதிர்த்துப் போராடக் கூடிய சக்தி துருக்கிய தேசீயச் சேனையிடம் இல்லையென்றால் அதற்குக் காரணம் சுல்தான்தான். முத்ரோ ஒப்பந்தப்படி துருக்கிய ராணுவத்தைக் கலைத்து விட்டு நம்மிடமிருந்த ஆயுதங்களை எல்லாம் சத்துருக்களிடம் ஒப்புவித்து விட்டோம். இதனையடுத்தாற்போல் உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டது. இதனை அடக்குவதில் நமது கவனத்தையெல்லாம் செலுத்தினோம். நமது படைகளைத் திரட்டி அவைகளுக்கு ஒழுங் கான ராணுவப் பயிற்சி கொடுத்துப் போதிய யுத்த தளவாடங்களை யும் அளித்தால் துருக்கியப் போர் வீரர்களை யாராவது எதிர்த்து நிற்க முடியுமா? அந்நியர்களின் ஆதிக்கத்திற்குட்பட்டுவிட்ட சுல்தானிய அரசாங்கம்தான் இதற்கெல்லாம் பொறுப்பாளி. துருக்கிய ராணுவத்தைச் சீர்திருத்தி அமைத்துக் கொள் வதற்குப் பணம் தேவை; அவகாசம் தேவை. இதற்குத் தேசீய சபை ஆதரவா யிருக்க வேண்டும். இப்படியெல்லாம் பிரதிநிதிகளுக்குச் சமாதானம் சொல்லி முதலில் எதிர்ப்பில்லாமல் செய்து கொண்டான். பின்னர் அவர் களுடைய தேசீய உணர்ச்சியையும் கிளப்பிவிட்டான். இப்பொழுது நாம் யாருடன் போராடுகிறோம்? கிரேக்கர் களுடன். அவர்களுக்குப் பக்கபலமாகப் பிரிட்டிஷார் இருக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் நேர்முகமாக அல்ல. துருக்கியைத் தாய்நாடாகக் கொண்ட எனது சகோதரர்களே! நேற்று வரையில் உங்களுடைய பிரஜைகளாகவும் அடிமைகளாகவும் இருந்த கிரேக்கர்களுக்கு முன்னர் தலை வணங்கப் போகிறீர்களா? நான் இதனை நம்பவேமாட்டேன். ஒன்று கூடுங்கள். கச்சை கட்டுங்கள். வெற்றி நமதே. இந்தப் பேச்சைக் கேட்டதும், பிரதிநிதிகளில் ஒருவராவது எழுந்து நின்று பேச வேண்டுமே? இவனுடைய யோசனையை - அதாவது போரைத் தொடர்ந்து நடத்தவேண்டுமென்ற யோசனையை தேசீய சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. பின்னர் கெமால் ஜனங்களுக்கு உற்சாக மூட்டக் கூடியவாறு சுற்றறிக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக விடுத்தான். ஆள் பலமும், ஆயுத பலமும் தேவையென்று ராணுவ தளகர்த்தர்களுக்கு உத்தர விட்டான். இந்த இரண்டு பலத்தையும் சேகரித்துக் கொடுப்பதில் எப்பொழுதும் போல் கிராம ஜனங்கள் முனைந்து நின்று கெமா லுக்கு உதவி செய்தார்கள். ஆனால் வெறும் பேச்சினால் மட்டும் ஜனங்களுடைய மனச்சோர்வையும் தேசீய சபையினருடைய கோபத்தையும் அகற்றிவிட முடியுமா? செயலிலே காட்ட வேண்டாமா? 3. அர்மீனியாவுடன் போர் துருக்கியின் கிழக்கெல்லையும் ருஷ்யாவின் தெற்கெல்லையும் சந்திக்கிற பிரதேசத்தில் அர்மீனியர்கள் ஒரு தனிச் சமூகத்தினராக வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்குச் சுய நிர்ணய உரிமை கொடுப்ப தாகச் சொல்லி இவர்கள் வசிக்கிற பிரதேசங்களை ஒரு தனிக் குடியரசு நாடாகச் சிருஷ்டி செய்தார்கள் நேச தேச ராஜதந்திரிகள். ஆனால் இந்தச் சிருஷ்டி, ஆரம்பத்திலேயே எதிர் பார்த்த பலனைத் தராமல் இறந்துவிட்டது. நேச தேசங்கள் முதலில் தங்களுக்குச் சுய நிர்ணய உரிமை கொடுப்பதாகச் சொல்லி ஒரு குடியரசு நாடாகவும் சிருஷ்டி செய்து வைத்துப் பின்னர் கைவிட்டுவிட்டதைக் குறித்து அர்மீனியர்கள் மிகவும் ஆத்திரம் அடைந்திருந்தார்கள். ஏற்கனவே அர்மீனியர்களுக்கும் துருக்கியர்களுக்கும் பரம்பரைப் பகைமை உண்டல்லவா? அர்மீனியக் குடியரசு ஏற்பட்டுவிட்டதன் காரணமாக இந்தப் பகைமை முற்றியது. சில துருக்கியர்கள் அர்மீனியர் களால் கொலை செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு அங்கோரா அரசாங்கம், அர்மீனியக் குடியரசின் மீது யுத்தம் தொடுத்தது. க்யாஸிம் காராபெகிர் பாஷாவின் தலைமையில் கெமாலியப் படை அணிவகுத்துச் சென்று அர்மீனியர் களை முறியடித்தது. அவர்களின் தலைநகரமாகிய கார் என்னும் நகரத்தைக் கைப்பற்றிக்கொண்டது. அர்மீனிய அரசாங்கம் பணிந்தது. பின்னர் கூம்ரூ என்ற இடத்தில் அங்கோரா அரசாங்கமும் அர்மீனியக் குடியரசும் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டன. மற்றோர் அந்நிய நாட்டோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளக்கூடிய அந்ததை இதன் மூலம் அங்கோரா அரசாங்கத் திற்கு ஏற்படுத்திக் கொண்டான் கெமால். தவிர செவர் உடன்படிக்கை மூலம் இந்த அர்மீனியக் குடியரசு சிருஷ்டிக்கப்பட்டதல்லவா? இந்தக் கூம் ரூ ஒப்பந்தத்தின் மூலம் செவர் உடன்படிக்கையை அங்கோரா அரசாங்கம் நிராகரித்திருக்கிறது என்பதையும் திரப்படுத்திக் கொண்டான். அர்மீனியக் குடியரசைக் சேர்ந்த ஒரு பிரதேசம் துருக்கி எல்லையில் வந்து சேர்ந்தது. புதிய நாட்டைக்கூட துருக்கிக்குச் சேர்த்துச் கொடுத்திருக்கிறான். கெமால் என்ற நம்பிக்கை ஜனங்களின் மனத்திலே பதிந்துவிட்டது. எஞ்சியிருந்த அர்மீனியப் பிரதேசம் பின்னர் ருஷ்யாவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டு விட்டது. அது வேறு விஷயம். இந்த அர்மீனிய யுத்தத்தினால் கெமாலுக்கு மூன்று விதமான சாதகங்கள் ஏற்பட்டன. 1. துருக்கியர்களிடத்திலே காணப்பெற்ற சோர்வு நீங்கி அந்நியர்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு தைரியத்தை உண்டுபண்ணியது. 2. கிழக்குப் பக்கத்திலிருந்த அங்கோரா அரசாங்கத்திற்கு இனி எவ்விதமான ஆபத்து மில்லை. 3. ருஷ்யாவுக்கும் அங்கோரா அரசாங்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இந்த மூன்றாவது சாதகத்தையே கெமால் அதிகமாக எதிர் பார்த்து அதனை நன்றாக உபயோகித்தும் கொண்டான். டார்ட னெல் ஜலசந்தியை பிரிட்டிஷார் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிற வரையில் தனக்கு ஆபத்தென்று சோவியத் அரசாங்கம் நன்றாக உணர்ந்திருந்தது. கான்டாண்டி நோபிளும் டார்டனெல் ஜல சந்தியும் துருக்கியின் வசமே இருக்க வேண்டுமென்பது கெமாலியர் களின் கட்சியாதலால் தனக்குச் சாதகமாகவும் பிரிட்டனுக்கு விரோதமாகவும் உள்ள ஓர் அரசாங்கம் துருக்கியில் நிலைத்திருக்க வேண்டுமென்ற கொள்கையோடுதான் சோவியத் ருஷ்யா கெமாலுக்கு ஆதரவு கொடுத்தது. கெமாலும் ருஷ்யா விடமிருந்து போதுமான ஆயுத பலத்தைப் பெற்று அதன் மூலம் அந்த அரசாங்கத்தின் ஆதரவைக் கொண்டு மேற்கு வல்லரசுகளைப் பயமுறுத்தி அவை களைத் துருக்கியினின்று வெளியேற்ற வேண்டுமென்று கருதினான். எனவே, சோவியத் அரசாங்கத்திற்கும் அங்கோரா அரசாங்கத் திற்கும் ஒரு சிநேக ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் இரண்டு கட்சிப் பிரதிநிதிகளும் தங்கள் மனச் சாட்சிகளை ஒரு புறமாக அப்புறப் படுத்தி வைத்துவிட்டுத்தான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட் டார்கள். 4. யுத்த சந்நாகம் ருஷ்யாவிலிருந்து யுத்த ஆயுதங்களும் பணமும் ஏராளமாக வந்து துருக்கியில் குவிந்தன. இவை இரண்டினையும் தொடர்ந்து சோவியத் அரசாங்கத்தார் தங்களுடைய பொதுவுடைமைக் கொள்கையையும் இங்குக் கொண்டு வந்து பரப்பினார்கள். அங்கோரா அரசாங்க பொக்கிஷத்தில் ருஷ்ய நாணயங்கள் வந்து விழுந்ததோடுகூட, தனிப்பட்ட நபர்களின் சட்டைப் பைகளிலும் வந்து நிரம்பின. பொதுவுடைமைக் கொள்கையைப் பரப்புவதற்குத் துருக்கி, செழுமண் பூமியாக இருக்கு மென்று சோவியத் அரசாங்கம் எண்ணியது. ஆனால் இந்த மண்ணுக் குடையவனை அது சரியாக மதிப்பிட்டுக் கொள்ள முடியவில்லை. தன்னுடைய லட்சியத்தை அடைவதற்காகப் பொதுவுடைமைக் கொள்கையை கெமால் உபயோகித்துக்கொண்டான். ஆனால் அதற்குத் தான் அடிமைப் பட்டுப் போகவில்லை. பொதுவுடைமைக் கொள்கையை ஆதரிப்ப தாகச் சொல்லி எழுந்த நபர்களையும் அவர்களின் இயக்கங்களை யும் தேசத்தில் அமைதிப்பங்கம் உண்டாவதற்குக் காரணர்கள் என்று குற்றஞ்சாட்டி அவர்களுக்குச் செல்வாக்கில்லாமல் செய்து விட்டான். ஆனால் ருஷ்யப் பொதுவுடைமைக் கொள்கைக்கு விரோதியென்று இவன் காட்டிக் கொள்ளவேயில்லை. இதே சமயத்தில் தேசீய ராணுவத்தைப் பலப்படுத்தினான். ஆள் திரட்டிப் புதிய படைகளை அமைத்தான். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தோ அல்லது ஒவ்வொரு சிறிய கிராமத்தி லிருந்தோ ஓர் ஆளையாவது துருக்கிய சேனைக்குக் கொடுக்க வேண்டு மென்றும், இந்த ஓர் ஆளுக்காக ஏற்படுகிற செலவு வகைகளை அந்தக் குடும்பமோ, அல்லது அந்தச் சிறு கிராமமோ ஏற்றுக் கொள்ள வேண்டு மென்றும் உத்தரவிட்டான். ராணுவத்திற்கு வேண்டிய கால்நடைகளும் அவை களுக்கு வேண்டிய தீவன வகைகளும் அங்கோராவில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டன. அனட்டோலியா மாகாண முழுவதும் ஒரு தொழிற்சாலை மாதிரி ஆகிவிட்டது. ஒவ்வொரு துருக்கியனும், தெருவிலே திரிந்து கூலிவேலை செய்கிறவன் முதல் மாளிகை மீதிருந்து மந்தமாருதத்தை இன்பமாக இழுத்துக் கொண்டிருக்கும் பணக்காரர்கள் வரையில் எல்லோரும் கெமாலின் ஆணைக்குட் பட்டு யுத்த சந்நாகத்தில் ஈடுபட்டார்கள். இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால் ஒரு மாகாண முழுவதும் இங்ஙனம் யுத்த சந்நாகம் செய்து கொண்டிருந்ததை ஐரோப்பிய வல்லரசுகளும் வெற்றி கொண்ட கிரேக்கர்களும் எட்ட இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததுதான். அவர்கள் கண் முன்னேயே இந்த யுத்த சந்நாகங்கள் செய்யப்பட்டன. ஆனால் அவர்கள் பார்வைக்கு இவை படவே இல்லை. அங்கோரா அரசாங்கத்தைச் சமாதானப் படுத்தவும் அவர்கள் முயலவில்லை. ஆனால் இதற்கு மாறாக செவர் உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதிலேயே தங்கள் கவனத்தைச் செலுத்தினார்கள். சுல்தானிய அரசாங்கம் செவர் உடன்படிக்கையில் கையெழுத் திட்டது. இந்த உடன்படிக்கையைத் துருக்கி முழுவதும் அங்கீகரிக்கச் செய்ய வேண்டுமென்றும் இதற்கு ஆறுமாதம் தவணை கொடுப்பதாகவும் சுல்தானுக்கு ஆணை பிறந்தது. பாவம், சுல்தான் என்ன செய்ய முடியும்? கெமாலியர்களை அடக்குவதற்காக அனுப்பப் பெற்ற துருப்புகள் கெமாலியர்கள் பக்கமே போய்ச் சேர்ந்து கொண்டன. ஜனங்கள் சுல்தானுக்குப் பிரஜைகளாக வாழ்வதை விடுத்து, கெமாலின் பக்தர்களானார்கள். சுல்தான் திகைத்துப் போனான். கெமாலியர்களால் பெரிதும் வெறுக்கப்பட்ட தாமாத் பெரீத் பாஷாவின் மந்திரிச் சபையைக் கலைத்துவிட்டு, டெவேபிக் பாஷாவைக் கொண்டு புதிய மந்திரிச் சபையை அமைத்தான். இப்படியாவது கெமாலியர்களின் துவேஷம் சிறிது குறையட்டும் என்பது இவன் கருத்து. தவிர கெமாலியர்களுக்குத் தங்கள் இதயத்தில் இடம் கொடுத்திருக்கிற சலீஹ் பாஷா, இஜ்ஜெத் பாஷா ஆகிய இருவரையும் இந்தப் புதிய மந்திரிச் சபையில் கொண்டு திணித்தான். சமாதான முறைகளில் கெமாலியர்களைத் தன் வலைக்குட்படுத்திவிட வேண்டும் என்பது சுல்தானுடைய எண்ணம். 5. தூது சென்ற இரண்டு மந்திரிகள் இதற்காக சலீஹ் பாஷாவையும், இஜ்ஜெத் பாஷாவையும் கெமால் பாஷாவிடம் சமரஸம் பேசுவதற்குத் தூதர்களாக அனுப்பி னான். இவர்களுடன் கலந்து பேசத் தான் சித்தமாயிருப்பதாகவும் பிலேத்ஷிக் என்ற ஒரு ரெயில்வே டேஷனில் இவர்களை வரவேற்று உபசரிக்கக் காத்துக் கொண்டிருப்பதாகவும் கெமால் தெரிவித்தான். டேஷனில் மற்றொரு பிளாட்பாரத்தில் ஒரு ரெயில் வண்டி கிழக்குப் பக்கமாக நோக்கிச் செல்வதற்குத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தது. கான்டாண்டி நோபிளிலிருந்து இரண்டு பாஷாக்களும் வந்து சேர்ந்தார்கள். கெமால் இவர்களை எதிர் கொண்டழைத்து முகமன் கூறினான். பின்னர் மூவரும் தனியாக இருந்து பேசத் தொடங்கினார்கள். சுல்தானுடன் சமரஸமாகப் போக வேண்டுமென்று மேற்படி இரண்டு பாஷாக்களும் நயத்தினா லும் பயத்தினாலும் சொன்னார்கள். ஆனால் கெமால் எதையுமே காதில் போட்டுக்கொள்ளவில்லை. அங்கோராவில் தாபிக்கப் பட்டுள்ள தேசீய அரசாங்கத்தைச் சுல்தான் அங்கீகரிக்க வேண்டு மென்றும், அதே சமயத்தில் கான்டாண்டி நோபிள் அரசாங்கத்தைக் கலைத்துவிட வேண்டுமென்றும் திட்டமாகக் கூறினான். தாங்கள் வந்த காரியம் பயன்பெறாது என்று நிச்சயித்துக் கொண்ட சுல்தானின் தூதர்கள் இருவரும் திரும்பிச் செல்ல எழுந்திருந்தார்கள். உடனே கெமால் அவர்களிடம் சிரித்துக் கொண்டே இனிமையான பாஷையில் எங்கே போக உத்தேசம்? உங்களை அங்கோராவுக்கு அழைத்துச் செல்ல அதோ ரெயில் வண்டி காத்திருக்கிறது. தயை செய்து அதில் ஏறிக் கொள்ளுங்கள் என்றான். அந்த இரண்டு பேரும் திடுக்கிட்டுப் போனார்கள். சில படைவீரர்கள் புடைசூழ அவர்கள் இருவரும் ரெயிலில் ஏற்றப்பெற்று அங்கோராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்! அங்கோரா அரசாங்கத்தின் கட்டாய விருந்தினர்கள்! ஆம்; சுல்தானிய அரசாங்கத்தின் இரண்டு மாஜி பிரதம மந்திரிகளும் அங்கோரா அரசாங்கத்தின் காப்பில் வைக்கப்பட்டார்கள். 15 எதிர்பாராத சங்கடங்கள் 1. நேச தேசங்களுக்குள் பிணக்கு இந்தச் சந்தர்ப்பத்தில், செவர் உடன்படிக்கையைத் தயாரித்த நேச தேச ராஜ தந்திரிகளுக்குள் பிணக்கு ஏற்பட்டு விட்டது. உதுமானிய ஏகாதிபத்தியத்தின் பெரும்பாகத்தைப் பிரிட்டன் தனக்கென்று ஒதுக்கிக் கொண்டுவிட்டது குறித்து, பிரான்ஸுக்கு மனவருத்தம். பால்கன் பிரதேசங்களில் தனக்கிருந்த செல்வாக்கைப் பிரிட்டன் இங்ஙனம் மெதுவாகப் பறித்துக் கொண்டுவிட்டதைக் குறித்து பிரான் முணு முணுத்துக் கொண்டிருந்தது. மத்தியத் தரைக்கடலில் கிரீ தேசத்தின் செல்வாக்கு வளர்ந்து வர இடங் கொடுக்கப்பட்டிருப்பதை இத்தலி விரும்ப வில்லை. இங்ஙனம் செவர் உடன்படிக்கையைத் தயாரித்த இந்த மூன்று நேச தேசங் களுக்குள்ளேயே மனக்கசப்பு இருந்து வந்தபோது கிரீஸில் யாருமே எதிர்பாராதபடி சில சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. நேச தேசங் களின் ஆதரவு பெற்று, கிரீ தேசத்து மன்னனான கான்டண்ட்டைனை, வெனிஜெலா நாட்டை விட்டு வெளியேறும்படி செய்து, அவன் மகனான அலெக்ஸாந்தரைச் சிங்காதனத்தில் இருத்தி, தான் சர்வாதி காரியானான். சொற்பகாலம் வரை, வெனிஜெலாஸின் புகழ் கிரீஸில் ஓங்கி நின்றது. ஆனால் அலெக்ஸாந்தர் மன்னன், ஒரு குரங்கினால் கடிக்கப்பட்டு திடீரென்று இறந்து போனான். வெனி ஜெலா, கான்டண்ட்டைன் மன்னனுடைய இரண்டாவது மகனான பால் இளவரசனுக்கு, அரச மகுடத்தை அளித்தான். ஆனால் அவன் மறுத்து விட்டான். இனி என்ன? வெனிஜெலாஸா? கான்டண்ட்டைனா? ஜனங்கள் ஒரே முகமாக, கான்டண்ட்டைன் மன்னனே மீண்டும் வந்து நாட்டை ஆள வேண்டு மென்று விரும்பினார்கள். 1920ஆம் வருஷம் நவம்பர் மாதம் வெனிஜெலா கிரீஸினின்று பிரஷ்டம் செய்யப்பட்டான். ஜனங்களின் பூரண அங்கீகாரம் பெற்று கான் டண்ட்டைன், கிரேக்க சிங்காதனத்தில் மீண்டும் கொலுவீற் றிருந்தான். தங்களுடைய கையாளாயிருந்த வெனிஜெலா, கிரீஸினின்று வெளியேற்றப்பட்டதையும், கான்டண்ட்டைன் மன்னன், அரச முடியை அணிந்து கொண்டதையும் நேச தேசங்கள் விரும்பவில்லை. இனி என்ன செய்வது? செவர் ஒப்பந்தத்தைப் பரீசிலனை செய்து பார்த்து, அதைக் கூடியவரையில் எல்லாருக்கும் திருப்திகரமாகத் திருத்தியமைக்கும் பொருட்டு லண்டனில் தாங்கள் ஒரு மகாநாடு கூட்டுவதாகவும் அதற்குக் கிரேக்கப் பிரதிநிதிகளும் துருக்கியப் பிரதிநிதிகளும் அழைக்கப் பட்டிருப்பதாகவும் நேச தேச ராஜ தந்திரிகள் ஓர் அறிக்கை வெளியிட்டார்கள். செவர் உடன்படிக்கை, பிறந்தவுடனேயே ஆபரேஷனுக்கு வந்துவிட்டது! துருக்கி அரசாங்கம், பிரதிநிதிகளைப் பொறுக்கி யெடுத்து அனுப்புகிறபோது, அந்தப் பிரதிநிதிக் கூட்டத்தில் முதபா கெமாலோ, அவன் பிரதிநிதிகளோ சேர்ந்திருக்க வேண்டுமென்று நேச தேச ராஜ தந்திரிகள் ஒரு நிபந்தனை விதித்தார்கள். மகாநாட்டிற்கு அழைக்கப் படுவதே ஒரு பெரிய கௌரவமல்லவா? கெமாலை, தங்கள் வலைக் குட்படுத்த வேண்டியது அவசியமாயிருக்கிறது. அப்படியானால் அவனுக்கு ஏன் இந்தக் கௌரவத்தைக் கொடுக்கக் கூடாது? இதன் மூலம் செவர் ஒப்பந்தத்தின் சில வாசகங்களை மாற்றி அதனை அமுலுக்குக் கொண்டு வந்து விடலாமல்லவா? இப்படியெல்லாம் நேச தேச ராஜதந்திரிகள் எண்ணினார்கள். ஆனால் கெமால் இதற்கெல்லாம் இசைந்து கொடுக்கிறவனல்லன் என்பதை இன்னும் இவர்கள் தெரிந்து கொள்ளவில்லையானால் அது யாருடைய குற்றம்? 2. அங்கோராவைத் திருப்தி செய்ய சுல்தானிய அரசாங்கம் இனி என்ன செய்யும்? அங்கோராவைத் திருப்தி செய்ய மீண்டும் ஒரு முயற்சிசெய்து பார்த்தது, பிரதம மந்திரியான டெவேபிக் பாஷா, வல்லரசுகளின் அழைப்பைக் கெமாலுக்கு அனுப்பி அதனுடன் நீண்டதொரு கடிதமும் எழுதி னான். சுல்தானிய அரசாங்கத்துப் பிரதிநிதிகளும் அங்கோரா பிரதி நிதிகளும் ஒன்று சேர்ந்து மகாநாட்டுக்குச் செல்வது நல்லதென்றும், துரதிருஷ்டவசமாகத் துருக்கிய சாம்ராஜ்யத்தைக் கறைப்படுத்திக் கொண்டிருக்கும் பிளவுகளையெல்லாம் இதன் மூலம் அகற்றி அனைவரும் ஒற்றுமையாயிருந்து துருக்கிக்கு நலம் பல செய்யலா மென்றும் இதில் குறிப்பிட்டிருந்தான். கெமால் இதற்கு விடுத்த பதில் என்ன? நேச தேச ராஜதந்திரிகள், சுல்தானிய அரசாங்கத்திற்கு அழைப்பு அனுப்பும் விஷயத்தில் தவறு செய்து விட்டார்கள். கான்டாண்டி நோபிளில் இப்பொழுது எந்தவிதமான அரசாங்கமுமே இல்லை. அங்கோராவிலுள்ள தேசீய சபைதான், துருக்கியின் சரியான அரசாங்கம். நியாயமாக அதற்குத்தான் அழைப்பு அனுப்பியிருக்க வேண்டும். ஆயினும் கான்டாண்டிநோபிளுடன் சமரஸமாகப் போக நான் தயார். அதற்கு ஒரே ஒரு காரியத்தைச் செய்துவிட்டால் போதும். சுல்தான் பதவியும் கிலாபத்தும் புனிதமானவை என்பதை அடிப்படையான கொள்கையாக ஏற்றுக்கொண்டுள்ள அங்கோரா தேசீய சபையைச் சுல்தான் அங்கீகரித்துவிட வேண்டும். ஜனப் பிரதிநிதிகளின் விருப்பப்படிதான் அங்கோரா அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகையால் அது வேறுவிதமாக நடக்க முடியாது. இதைப்பற்றி இனியும் பேச்சு வளர்வதற்கு இடமில்லா மல் அங்கோரா அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றி யிருக்கிறது. சுல்தான் மேலே கூறிய யோசனையை நிராகரிப்பா ரானால்1 அவருடைய சிங்காதனம் சிதறிப் போகும்படியான ஆபத்தை அவர் தேடிக்கொள்கிறவராவார். இனி இதனால் ஏற்படுகிற பலாபலன்கள் யாவும் சுல்தானையே சாரும். கெமால் இவ்வளவு மிடுக்காக இந்தப் பதிலை விடுத்ததற்கு அர்த்தமில்லாமல் போகவில்லை. அங்கோரா தேசீய சபை, தற்காலிக மாக ஏற்பட்ட ஒரு தாபனம் என்ற நிலைமையிலிருந்து மாறி, சட்ட ரீதியாக ஏற்பட்ட ஓர் அரசாங்க உறுப்பாக அமைந்துவிட்டது. கெமால், யாராலுமே எளிதில் கண்டு அறிய முடியாத தன்னுடைய சிறந்த ராஜ தந்திரத்தினால், 1921ஆம் வருஷம் ஜனவரி மாதம் 20ஆம் தேதி, துருக்கியின் புதிய அரசியல் அமைப்பை நிர்ணயித்து, தேசீய சபையில் ஒரு சட்டத்தை நிறைவேற்றி வைத்தான். இந்த அரசியல் திட்டத்தின்படி, ஜனப் பிரதிநிதித்துவம், குடியரசு முறையிலேயே அமைக்கப்பட்டது. ராஜ்யாதிகாரம் அனைத்தும் எவ்வித கட்டுப் பாடும் நிபந்தனையுமின்றி ஜனங்களையே சார்ந்த தென்றும், இந்த ஜனங்களின் பிரதிநிதி தாபனமாகவே தேசீய சபை இருக்கு மென்றும், அந்நிய நாடுகளுடன் போர் தொடுக்கவோ, சமாதானம் செய்து கொள்ளவோ, உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளவோ, அவற்றை ரத்து செய்யவோ, அந்நியநாடுகளுக்குத் தூதர்களை யனுப்பவோ ஆகிய எல்லா அதிகாரங்களும் இந்தச் சபைக்கே உண் டென்றும் மேற்படி சட்டம் வரையறுத்து விட்டது. இந்தச் சட்ட அமைப்புக்குள் சுல்தானுக்கு இடமெங்கே? இந்தப் பிரச்னையைப் பற்றி, சட்டத்தில் ஒன்றுமே சொல்லாமல் இருந்தான் கெமால். இது சிறிய விஷயமென்றும், இப்பொழுது நமது கவனத்தையெல்லாம் தேசீய ஒற்றுமையிலேயே செலுத்தவேண்டு மென்றும் சமாதானம் கூறிவிட்டான். கெமாலின் கோரிக்கைகளுக்குச் சுல்தானிய அரசாங்கம் எளிதிலே இணங்கி விடுமா? லண்டன் மகாநாட்டுக்குத் துருக்கியி லிருந்து இரண்டு கட்சிப் பிரதிநிதிகளும் சென்றார்கள். இதில் கூட, கெமால் அந்நியர்கள் பார்த்து பிரமிக்கும்படியாகவும், துருக்கியி லுள்ள சுல்தானிய பக்தர்கள் இவனை நம்பும்படியாகவும் ஒரு சிறிய தந்திரத்தைக் கையாண்டான். 3. அந்நியர் முன்னர் ஒற்றுமை 1921ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் லண்டனில் மகாநாடு ஆரம்ப மாயிற்று. எல்லாரும் என்ன எதிர்பார்த்தார்கள்? துருக்கியிலிருந்து வந்திருக்கிற இரண்டு கட்சிப் பிரதிநிதிகளும். மகாநாட்டு மேஜையைச் சுற்றி உட்காரும்போது, ஒருவரையொருவர் முறைத்துப் பார்த்துக் கொண்டு சத்துருக்கள் மாதிரி உட்கார்ந் திருப்பார்கள் என்று தான் எதிர்பார்த்தார்கள். ஆனால் மகாநாட்டின் இரண்டாவது நாள், துருக்கியின் இரண்டு கட்சிப் பிரதிநிதிகளும் ஒன்றாக மண்டபத்தில் நுழைந்தார்கள்; மேஜையைச் சுற்றி ஒரு வரிசையாக உட்கார்ந்தார்கள். இரு கட்சியினரும் துருக்கியர்கள் தானே! பின்னர், வாதத்தில் கலந்து கொள்கிற போது, சுல்தானிய அரசாங்கத்தின் பிரதிநிதியாகச் சென்றிருந்த டெவேபிக் பாஷா எழுந்து நின்று, துருக்கியிலிருந்து வந்திருக்கும் பிரதிநிதிக் கூட்டத்திற்குத் தானே தலைவனென்றும், ஆனால் தனக்குப் பதிலாக, அங்கோரா அரசாங்கத்தின் பிரதிநிதி யாக வந்திருக்கும் பெகிர் சாமி பே, இரண்டு கட்சியினரின் சார் பாகப் பேசுவானென்றும் தெரிவித்தான். அந்நியர்கள் முன்னிலை யில் துருக்கி ஒற்றுமையா யிருக்கிறதென்று காட்டிக் கொள்ள வேண்டுமென்பதற்காக, தனது பிரதிநிதியாகிய பெகிர் சாமி பேக்கு இந்த மாதிரி உத்தரவு செய்திருந்தான் கெமால். துருக்கிக்கும் கிரீஸுக்கும் ஏற்பட்டிருக்கிற மனதாபங்களைச் சமரசமாகத் தீர்த்து வைப்பதே, மகாநாடு கூட்டியதன் நோக்கமென்றும், இதற்காக செவர் உடன்படிக்கையில் சில மாற்றங்கள் செய்யத் தாங்கள் தயாராயிருப்பதாகவும் நேச தேச ராஜ தந்திரிகள் தெரிவித்தார்கள். மிர்னா பிரதேசத்திலுள்ள ஜனங் களின் நிலைமையைப் பற்றி விசாரிக்க ஒரு கமிஷன் நியமிப்பதாக வும், அந்தக் கமிஷன் சிபார்சுகளைத் துருக்கியும் கிரீஸூம் அங்கீ கரித்துக் கொள்ள வேண்டுமென்றும், ஆனால் இதற்குப் பதிலாக செவர் உடன்படிக்கையைச் சில மாற்றங்களுடன் இரண்டு நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தனர். துருக்கியப் பிரதிநிதிகளோ கமிஷன் நியமனத்திற்குச் சம்மதம் தெரிவித்தார்கள். ஆனால் உடன்படிக்கையை அங்கீகரிப்பதைப் பற்றி ஒன்றுமே சொல்ல வில்லை. கிரேக்கப் பிரதிநிதிகள் கமிஷன் நியமனத்தையே அங்கீகரிக்க முடியாதென்று சொல்லிவிட்டார்கள். கடைசியில் நான்கு வாரம் அவகாசம் கொடுப்பதாகவும், இதற்குள் இரண்டு கட்சியினரும் தீர்க்காலோசனை செய்து ஒரு சமரஸ முடி வுக்கு வருதல் நல்லதென்றும் சொல்லி மகாநாட்டை கலைத்து விட்டனர். 16 சக்கேரியா யுத்தம் 1. கிரேக்கர்களின் படையெடுப்பு லண்டன் மகா நாட்டில் கூறப்பட்ட நான்கு வார அவகா சத்தைக் கூடக் கிரேக்கர்கள் கவனிக்கவில்லை. சமரஸமாகப் போக வேண்டுமென்ற எண்ணம் இருந்தால்தானே? 1921ஆம் வருஷம் ஜூலை மாதம் துருக்கியின்மீது, கிரீ பெரிய யுத்தம் தொடுக்க ஆரம்பித்தது. கிரேக்கப் படைகள் இரண்டு பகுதிகளாகப் பிரிந்து வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் ஒரே சமயத்தில் துருக்கியப் படைகளைத் தாக்கின. துருக்கியப் படைகளும் ரெபெத் பாஷாவின் தலைமையிலும் இமெத் பாஷாவின் தலைமையிலும் இரண்டு பகுதிகளாகப் பிரிந்து கிரேக்கர்களை எதிர்த்துப் போராடின. இரு கட்சியினருக்கும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறிக் கிடைத்தன. ஆனால் நவீன யுத்த சாதனங்களைப் படைத்த கிரேக்கர்களின் படை பலத்திற்கு முன்னர், துருக்கியப் படை எத்தனை நாட்களுக்குச் சமாளிக்க முடியும்? இமெத் பாஷா, இனோனு என்ற இடத்தில் கிரேக்கர்களை எதிர்த்துச் சுமார் பத்து நாட்கள் வரை போராடி னான். ஆயினும் கிரேக்கர்கள் மேலும் மேலும் அவன் படைகளைச் சூழ்ந்துகொண்டு வரலானார்கள். எகிஷேர் என்ற நகரம் அவர்கள் வசப்பட்டுவிட்டது. ஆயினும் பணிந்து கொடுப்பதில்லை யென்ற ஒரே உறுதியுடன் இருந்தான் இமெத். இந்தச் சமயத்தில் கெமால் பாஷாவே போர்முனைக்கு வந்து சேர்ந்தான். உள்ள நிலைமையைப் பரிசீலனை செய்து பார்த்தான். இனி, இந்த இடத் தில் துருக்கிய ராணுவத்தை வைத்திருந்தால் ஆபத்து வந்து சேரு மென்று நிச்சயித்து, உடனே கிழக்கு நோக்கிப் பின்னடையுமாறு உத்தரவிட்டான். எகிஷேருக்கு மேற்கே சக்கேரியா நதி ஓடிக்கொண்டிருக் கிறது. இந்த நதியோரமாகக் குன்றுகள் வரிசையாகத் தொடர்ந்து இருக்கின்றன. பின்னடைந்து கொண்டே வந்த துருக்கியத் துருப்புகள் இந்த இடத்தில் வந்து நின்றன. துருப்புகள் கூடவே, கிரேக்கர் களுக்குப் பயந்துபோன துருக்கிய கிராம ஜனங்கள் முதலாயி னோரும், தங்கள் மூட்டை முடிச்சு களுடன் வந்தார்கள். துருக்கிய ஜன சமுதாயமே, துருக்கியினிடம் விடை பெற்றுக்கொண்டு, எந்த மத்திய ஆசியப் பிரதேசத்திலிருந்து அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னர் வந்ததோ, அதே பிரதேசத்திற்கு இப்பொழுது திரும்பிச் செல்வது போலிருந்தது. இவர்களுக்குப் பின்னர், இவர்கள் விட்டு வந்த வீடு வாசல்கள் கிரேக்கர்களால் தீ வைக்கப்பட்டு எரிவதைப் பார்த்து, இன்னும் முன்னோக்கிப் போய் விடலாம் என்ற பயத்தை அடைந்தார்கள் துருக்கியர்கள். சக்கேரியா ஆற்றங்கரையில் முகாம் போட்ட துருக்கியத் துருப்புக்கள் சுமார் நான்கு வார காலம் ஓய்வு பெற்றன. இந்தக் காலத்தில் கிரேக்கர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க அநேகவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. படைகள் புதிய முறையில் அணி வகுக்கப் பெற்று நிறுத்தப்பட்டன. கிரேக்கப் படைகளும் எகிஷேரிலிருந்து பின் வாங்கின; துருக்கியத் துருப்புகளை துரத்திக் கொண்டு வரவில்லை. அப்படித் துரத்திக் கொண்டு வருவது சுலபமான காரியமுமன்று. எகிஷேரி லிருந்து சக்கேரியா வரையில் இடையிலுள்ள பிரதேசம், அப்பொழுது கோடைகாலமானதால் வறண்டு போயிருந்தது. ஆகவே, தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் முதலியவற்றைப் போதுமான அளவு சேகரித்துக் கொண்டுதான் துருக்கியர்களைத் துரத்திக் கொண்டு வரவேண்டியிருந்தது. ஆக இரண்டு கட்சியினரும் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்வதில் சிறிது காலங்கழித்தார்கள். 2. திரும்பும் திசையெலாம் எதிர்ப்புகள் இந்த இடைக் காலத்தில் கெமாலுக்கு அநேக விதமான இடைஞ்சல்கள் தோன்றின. துருக்கியப் படைகள் கிரேக்கர்களால் முறியடிக்கப்பட்டுப் பின்னோக்கி வருவதைக் கேட்ட அங்கோரா தேசீய சபை அங்கத்தினர்கள் கூக்குரலிட ஆரம்பித்து விட்டார்கள். சேனைத் தலைவர்களிடத்தில் கெமால் அதிக நம்பிக்கை வைத்ததின் பலன் இது என்று கெமாலின் மீது தங்களுக்கிருந்த துவேஷத்தைக் கிளப்பினர் ஒரு சிலர். இனி தேசீய சபையாவது துருக்கிய அரசாங் கத்தை நடத்துவதாவது; எல்லாம் பகற் கனவுதான் என்றனர் வேறு சிலர். கெமாலை ஆதரிக்கும் கட்சியினருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கிரேக்கர்களின் படையெடுப்புக்குப் பயந்து, மேற்கு அனட்டோலியா பிரதேசத்திலிருந்த ஜனங்கள் அங்கோராவில் வந்து தஞ்சம் புகுந்தார்கள். ஆயிரக்கணக்கில் வந்த இத்தனை பேருக்கும் சிறிய நகரமான அங்கோராவில் இடமேது? உணவேது? இந்தக் காட்சியைக் கண்ட தேசீய சபை அங்கத்தினர்கள் இன்னும் அதிகமான ஆத்திரமடைந்தார்கள். சபையில் தினந்தோறும் வாதப் பிரதிவாதங்கள், ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொள்ளுதல் முதலியன நடைபெற்றன. சக்கேரியா போர் முகத்திலிருந்து திரும்பி வந்த கெமால் இவற்றையெல்லாம் பொறுமையோடு கேட்டுக் கொண்டு வந்தான். உருப்படியான யோசனைகள் என்னதான் சொல்லப்படு கின்றன என்று பார்ப்போம் என்பதுதான் இவன் கருத்து. கடைசி யில், துருக்கியப் படைகளின் சேனாதிபதிப் பதவியை கெமாலே ஏற்றுக் கொண்டு யுத்தத்தை நடத்தினால் ஒரு கால் வெற்றி பெறலாம் என்றும், தற்போதைய நிலைமையில் இதைத் தவிர வேறு வழி யில்லை என்றும் இவனுடைய எதிர்க்கட்சியினர் அபிப்பிராயப் பட்டார்கள். கெமாலின் மீது எல்லாப் பொறுப்புக்களையும் சுமத்தி, அவனைப் பழிக்காளாக்க வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம். கெமால் எழுந்து நின்றான். பிரதம சேனாதிபதி பதவியை யாதொரு தடையுமின்றி ஏற்றுக் கொள்ள நான் சித்தமாயிருக் கிறேன் என்றான். ஆனால் ஒரு நிபந்தனை. தேசீய சபையின் உரிமைகள், அதிகாரங்கள் யாவும் மூன்று மாதத்திற்குத் தன் ஒருவ னிடமே ஒப்படைக்கப்பட வேண்டுமென்றும், அப்படியானால் தான் யுத்தத்தில் வெற்றி காண முடியு மென்றும் கூறினான். அதாவது தான் ஒரு சர்வாதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும். என்பது இவன் எண்ணம். ஆனால், இது சுய நலத்திற்காக அல்ல; சத்துருக்களோடு போராடும் நிலைமையிலிருக்கிற ஒரு தேசத்தில், ஜனநாயகம் என்ற பெயரால் பலவித அபிப்பிராயங்கள் எழுந்திருக்கு மாயின், அது காரணமாக யுத்தத்தில் வெற்றியடைவது துர்லபம் என்பதே இவன் கருத்து. கெமாலைச் சர்வாதிகாரியாக்குவதில் தேசீய சபை சிறிது தயங்கியது. வேறு வழியில்லை. அவனைச் சர்வாதிகாரியாக நியமிப்பதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றியது, ஒரு நிபந்தனையுடன் கெமாலிடம் ஒப்படைக்கப்படும் சர்வாதிகாரங்கள் எந்தச் சமயத்தி லும் தேசீய சபையினால் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும் என்பதுவே இந்த நிபந்தனை. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வுடன், தேசீய சபைக்கு வாக்குறுதி கொடுப்பது போல் பின்வரும் வாக்கியங்களைக் கூறினான் கெமால்:- சத்துருக்களைத் தோற்கடிப்போம் என்ற நம்பிக்கையிலிருந்து ஒரு கணமும் நான் பிறழ்ந்ததே கிடையாது. இந்த என் நம்பிக் கையை இந்தத் தேசீய சபை முன்னரும், துருக்கிய ஜன சமுதாயத்தின் எதிரிலும் உலகத்தின் சந்நிதானத்திலும் பகிரங்கமாகத் தெரியப் படுத்திக் கொள்ளுகிறேன். இந்த வாக்குறுதியின் மூலம், துருக்கியின் எதிர்கால வாழ்விற் காக, அதன் நிகழ்காலப் பிரஜைகளை ஆயிரக்கணக்கில் பலி கொடுக்கும் மகத்தான பொறுப்பை ஏற்றுக் கொண்டான் கெமால், இந்தப் பொறுப்பை ஏற்று நடத்துவதற்கு அமானுஷிகமான சக்தி யல்லவோ வேண்டும்? இந்தச் சக்தி இவனிடம் நிரம்பி இருந்தது. 3. ஒரு லட்சம் பெறுமான உயிர் தேசீய சபையின் எதிர்ப்பை மெதுவாகச் சமாளித்துக் கொண்ட கெமாலுக்கு, இந்தச் சந்தர்ப்பத்தில் வேறொருவிதமான ஆபத்து ஏற்பட்டது. இந்திய கிலாபத் கமிட்டியின் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு, ஒருவன் அங்கோராவிற்கு வந்தான். இவன் பெயர் முதபா ஸாகிர். இந்தியாவிலுள்ள முலிம்கள், துருக்கிய தேசீய இயக்கத்தில் அதிகமான அநுதாபங் காட்டுகிறார்களென்றும், இந்த இயக்கம் வெற்றிபெற வேண்டு மென்பதே அவர்கள் விருப்பம் என்றும், அவர்களின் நல்லெண்ணத்தைத் தெரிவிப்பதற்காக அவர்களின் பிரதிநிதியாகத் தான், வந்திருப்பதாகவும் இவன் கூறிக் கொண்டான். தவிர, மேற்படி கிலாபத் கமிட்டியார், தன் மூலமாக பத்து லட்சம் பவுனை அனுப்பி இருக்கிறார்களென்றும், அதனை அங்கோரா அரசாங்கத்தினிடம் கொண்டு சேர்ப்பிக்குமாறு தனக்கு ஆணையிடப்பட்டிருக்கிறதென்றும், அந்தப் பத்து லட்சம் பவுனும் விரைவில் வந்து சேருமென்றும் இவன் சொன்னான். அங்கோராவில் இவனுக்கு எல்லாவித மரியாதைகளும் செய்யப்பட்டன. கெமால் உள்பட எல்லா முக்கியதர்களிடமும் இவன் நெருங்கிப் பழக ஆரம்பித்தான். ஆனால், அங்கோரா போலீஸுக்கு இவன் மீது சந்தேகம் ஏற்பட்டது. இவனைக் கண் காணித்து வந்தனர். இவனுக்கு வந்த தபால்கள் யாவும் பரிசோதிக் கப்பட்டன. இதன் மூலம் இவன் பிரிட்டிஷ் ஒற்றர் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்று தெரியவந்தது. உடனே போலீஸார் இவனைக் கைது செய்து விசாரணைக்குக் கொண்டுவந்தனர். விசாரணையின் போது, தான் கெமாலைக் கொலை செய்யும் பொருட்டே அனுப்பப் பட்டதாகவும், இந்தக் காரியத்தை நிறைவேற்றினால் ஒரு லட்சம் பவுன் தனக்குச் சன்மானமாகக் கொடுப்பதாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததாகவும் சொல்லி, இதற்காகப் போடப்பட்டிருந்த திட்டங்களையும் விவரித்துக் கூறினான் இந்த முதபா ஸாகிர். இவனுக்கு உடனே மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அங்கோராவில் அதிகமான பரபரப்பை உண்டாக்கியது. கெமால் இவ்விவரங்களைக் கேட்டவுடன் என்னுடைய உயிர் இவ்வளவு மதிப்புடையதென்று எனக்குத் தெரியவில்லையே என்றான் சிரித்துக் கொண்டே. மேற்படி முதபா ஸாகிரின் கொலை முயற்சிக்கும், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இதைப்பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. பிரிட்டிஷ் துப்பறியும் இலாகாவைச் சேர்ந்த யாரோ ஒருவனுடைய விஷமத்தனந்தான் இது என்பதே பலருடைய அபிப்பிராயம். ஆனால், அங்கோரா அரசாங் கத்தார் இந்தச் சம்பவத்தை முன்னிலைப் படுத்திக்காட்டி உலகத்தா ருடைய அநுதாபத்தைப் பெற்றனர். 4. போர்க் களத்தில் சபதம் தேசீய சபையினிடமிருந்து சர்வாதிகாரமும் பெற்றதும், கெமால் ஒரு கணமும் ஓய்வின்றி உழைத்துவந்தான். அதிகார தோரணையில் அறிக்கைகள் விடுத்து, ஆயுத பலத்தையும் ஆள் பலத்தையும் சேகரித்து, சக்கேரியா போர் முனைக்கு அனுப்பினான். இந்த யுத்தத்திற்காக தேச மக்களின் உழைப்பை மட்டுமல்ல, அவர்களுடைய எண்ணத்தையும், உணர்ச்சியையும் சேகரிக்க வேண்டி யிருந்தது. போர்முனையில் சத்துருக்களைச் சந்திக்கிற வர்கள் மட்டு மல்ல: கிராமங்களிலே, வீடுகளிலே, வயற்காடுகளிலே உள்ள அனைவருமே இந்த யுத்தத்தில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டுமென்கிற மாதிரியாக நான் உத்தரவு பிறப்பித்து வந்தேன் என்று கெமால் ஓரிடத்தில் கூறுகிறான். 1921ஆம் வருஷம் ஆகட் மாதம் 24ஆம் தேதி சக்கேரியா வில், கிரேக்கப் படைகளும், துருக்கியப் படைகளும் சந்தித்தன. இருபத்திரண்டு நாட்கள் இடைவிடாமல் இந்த யுத்தம் நடந்தது. சரித்திரப் பிரசித்தி பெற்ற கோர யுத்தங்களில் இஃது ஒன்று. யுத்தம் தொடங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்னர், கெமால் தன் குதிரை மீது ஏறிக்கொண்டு சைந்நியத்தைப் பார்வையிடச் சென் றான். போகும் வழியில், காரா தாக் (கருங்குன்றம்) என்ற ஒரு சிறு குன்று இருந்தது. அதன் மீது ஏறிச் செல்லும்பொழுது குதிரையின் கால் சறுக்கிற்று. கீழே விழுந்துவிட்டான் கெமால். இவன் மீது குதிரையும் விழுந்தது. இதனால் இவனுடைய விலா எலும்பு ஒன்று ஒடிந்து போயிற்று. எழுந்திருக்கக் கூட முடியவில்லை. என்ன அப சகுனம்! இன்னும் யுத்த ஆரம்பமாகவில்லை. பாஷ் கம்மந்தான் (சேனாதிபதி) கீழே விழுந்து விட்டது என்ன துர்ச் சம்பவம்! துருக்கியப் போர் வீரர்கள் இங்ஙனமெல்லாம் பேசி உற்சாகமிழந்தார்கள். போர் வீரர்கள் இங்ஙனம் உற்சாகம் குன்றிவிடுவார்கள் என்பது கெமாலுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அங்கோரா வுக்குத் தன்னைச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர், போர் வீரர்கள் முன்னிலையில் தன்னைக் கொண்டுவந்து காட்டச் செய்தான். தன்னுடைய வலியைப் பொறுத்துக் கொண்டு, போர் வீரர்களைப் பார்த்துப் பின் வருமாறு கூறினான்:- இது கடவுளின் செயல். எந்த இடத்தில் என்னுடைய எலும்பு களில் ஒன்று முறிந்ததோ, அதே இடத்தில் சத்துருக்களின் எதிர்ப்பும் முறியடிக்கப்படும். ஆதலின் எனது போர் வீரர்களே! ஊக்கத்துடன் இருங்கள். நான் சிகிச்சை செய்து கொண்டு உடனே திரும்பி வந்து விடுகிறேன். உடனே ராணுவ தளகர்த்தர்கள், சிகிச்சைக்காகக் கெமாலை அங்கோராவுக்கு எடுத்துச் சென்றார்கள். அங்குச் சிகிச்சை செய்து கொண்டு மறுநாள் கெமால் மீண்டும் போர்க்களத்தில் பிரசன்ன மானான். இவனைப் பார்த்ததும் போர்வீரர்கள் உற்சாகங்கொண்டு கைகொட்டி ஆரவாரம் செய்தார்கள். நேற்று கம்மந்தான் கீழே விழுந்தவுடன் தனது நோயையும் சகித்துக்கொண்டு என்ன கூறினான்? அந்த வீரவாசகம் நமது உயிரோடு கலந்துவிட்டதல்லவா? ஆம். இந்த இடத்திலே கிரேக்கர்கள் முறியடிக்கப்பட வேண்டும் என்று போர்வீரர்கள் சபதம் செய்து கொண்டார்கள். 5. கிரேக்கர்கள் ஓடுகிறார்கள் மேலே கூறியபடி 24-8-1921இல் கிரேக்கர்களின் பீரங்கிச் சப்தம் கேட்கத் தொடங்கியது. துருக்கியப் படைகளைவிட, மூன்று மடங்கு அதிகமாயுள்ள கிரேக்கப் படைகள் வெற்றியடைந்து முன்னோக்கி வருகின்றன. துருக்கியப் படைகள் எந்தெந்த இடங் களில் திரப்படுத்தி வைக்கப்பெற்றிருந்தனவோ, அந்த இடங்களை யெல்லாம் கிரேக்கர்கள் கைப்பற்றிக்கொண்டு விட்டார்கள். போர்முனைக்கு அடுத்தாற்போல் உள்ள அலாகோஷ் என்ற கிராமத்தில் ஒரு குடியானவன் குடிசையில் கெமால் முகாம் போட்டுக் கொண்டு யுத்தத்தை நடத்திவருகிறான். முதல் இரண்டு வாரங்களில் கிரேக்கர்கள் முன்னேறி வந்தார்களாயினும், அவர்கள் முன்னேறுகின்ற ஒவ்வொர் அடிக்கும் அநேக உயிர்களைப் பலி கொடுக்கவேண்டியிருந்தது. துருக்கியர்கள் அவர்களை எளிதில் முன்னேறவிடவில்லை. 7-9-21இல் கிரேக்கர்களின் முன்னேற்றம் நின்று போயிற்று. படைகள் சோர்ந்துபோயின. இதனையறிந்த கெமால் இவர்களைத் திருப்பித் துரத்த துருக்கியப் படைகளுக்கு உத்தரவு கொடுத்தான். கிரேக்கப் படைகள் கைப்பற்றிக்கொண்ட தலங்களையெல்லாம் மீண்டும் துருக்கியப் படைகள் சுவாதீனப் படுத்திக் கொண்டன. தற்காப்புக்காகக்கூட இனிப் போராடுவதில் பயனில்லையென்று கிரேக்க சேனாதிபதி உணர்ந்து கொண்டான். 14-9-21 அன்று கிரேக்கப் படைகள் சக்கேரியா ஆற்றைக் கடந்து பின்வாங்கத் தொடங்கிவிட்டன. போகிற வழியில் கிராமங்களைக் கொளுத்தியும், ஜனங்களைக் கொன்றும், வேறுவிதமான பல அட்டூழியங்களைச் செய்தும் தங்கள் ஆத்திரத்தையெல்லாம் கக்கி விட்டுப் போனார்கள் கிரேக்கர்கள். சக்கேரியா யுத்தத்தில் கெமால் வெற்றி பெற்றது துருக்கியைப் பற்றி மேனாட்டார் இதுகாறும் கொண்டிருந்த அபிப்பிராயத்தை அடியோடு மாற்றிவிட்டது. பின்வாங்கிக் கொண்டு சென்ற கிரேக்கப் படைகள், சென்ற ஜுலை மாதத்தில் எந்த இடத்திலிருந்து புறப்பட்டு முன்னேறி வந்தனவோ அதே இடத்தில் - அதே எகிஷேர் நகரத்திற்குப் பின்னால் - சென்று நின்றன. இவைகளைத் துரத்திச் சென்ற துருக்கியத் துருப்புகளும் இந்த கிரேக்க முகாமுக்கு எதிரில் முகாம் போட்டுக் கொண்டு, கிரேக்கர்களை முன்னேற விடாதபடி பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு, கெமால் அங்கோராவுக்கு திரும்பிவந்தான். 6. காஜி பட்டம் சக்கேரியா யுத்தத்தில் துருக்கியர்கள் வெற்றி கொண்டதைக் கேட்ட அங்கோரா ஜனங்கள் பெருமகிழ்ச்சி கொண்டார்கள். கெமாலிடம் இவர்கள் இதுகாறும் கொண்டிருந்த விசுவாசமானது, இப்பொழுது பக்தியாக மாறியது. சக்கேரியா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே தேசீய சபையானது, தனக்கென்று சொந்தமாக ஒரு கட்டடத்தைக் கட்டிக் கொண்டு, அதிலேயே இனிக் கூட்டங்களைக் கூட்டுவதென்று ஏற்பாடு செய்திருந்தது. கட்டடம் மிகச்சிறியதுதான். ஆனால் ஜனங்களிடத்தில் ராஜ்யா திகாரம் வந்து விட்டது என்பதைக் காட்டும் ஒரு சின்னமாக இது விளங்கியது. துருக்கியின் வருங்காலத் தலைநகரம் இந்த அங்கோரா தான் என்பதை அறிவிக்கும் அறிகுறியாகவும் இந்தத் தேசீய சபைக் கட்டடம் இருந்தது. பொது ஜனங்களின் ஆரவாரத்தையும் ஆடம்பரமான வரவேற்பையும் அதிகமாக விரும்பாத கெமால், சக்கேரியா போர் முனையிலிருந்து ரகசியமாகவே அங்கோராவுக்கு வந்தான். வந்த மறுநாள் தேசீய சபைக் கூட்டத்தில் ஆஜரானான். இவனைக் கண்ட தும், பிரதிநிதிகள் அனைவரும் எழுந்து நின்று இவனுக்கு மரியாதை செலுத்தினார்கள். காஜி என்ற கௌரவப் பட்டத்தை இவனுக்கு ஏகமனதாக வழங்கியது தேசீய சபை. துருக்கிய சரித்திரத்தில் இதற்கு முன்னர் இந்த காஜி பட்டம் மூன்று சுல்தான்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறது. சுல்தானால் வழங்கப் படக் கூடிய கௌரவப் பட்டங்களில் இதுவே முதன்மையானது. இத் தகைய பட்டத்தை அரசு பரம்பரையைச் சேராத கெமாலுக்கு அளித்துக் கௌரவித்துத் தானும் பெருமையடைந்தது அங்கோரா தேசீய சபை. காஜி கெமால் பாஷாவைப் பாராட்டி ருஷ்யா, பிரான், இத்தலி, அமெரிக்கா, இந்தியா, ஆப்கானிதானம் முதலிய நாடுகளிலிருந்து தந்திகள் வந்து குவிந்தன. இந்த நாடுகளில் சில, தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவிக்க நேராகவே தங்கள் பிரதிநிதிகளை அனுப்பின. ஆனால் கெமால், இவைகளினால் தன்னை மறந்து விட வில்லை. தான் நடத்த வேண்டிய போராட்டம் இனியே தொடங்கப் போகிற தென்பதை நன்கு உணர்ந்திருந்தான். சக்கேரியா வெற்றி, துருக்கியர்களின் இறுதி வெற்றியாகாதென்பது இவனுக்கல்லவோ தெரியும்? கிரேக்கர்கள், அனட்டோலியாவில் அதிக தூரம் முன்னேறாதபடி தடுக்கப்பட்டார்கள் இந்த சக்கேரியா யுத்தத்தில். தவிர, துருக்கியப் படை அடியோடு அழிந்து போகாதபடி காப்பாற் றியது இந்த சக்கேரியா யுத்தம். அவ்வளவுதான். கிரேக்கர்கள், இன்னும் துருக்கிய மண்ணில் தானே ஊன்றிக் கொண்டிருக்கி றார்கள்; இவர்களை விரட்டினாலன்றி துருக்கியர்கள் பூரண வெற்றி யடைந்ததாகச் சொல்ல முடியாதல்லவா? இப்பொழுது எகிஷேர் நகரத்தருகில் முகாம் போட்டுக்கொண்டிருக்கும் கிரேக்கர்களை முன்னேற விடாமல் தடுக்கவும் வேண்டும்; அதே சமயத்தில் அவர் களைப் பின் தள்ளி, அவர்கள் மீது வெற்றி கொள்ளவும் வேண்டும். இதற்காகத் துருக்கிய ராணுவத்தைச் சீர்ப்படுத்தி முன்னிலும் அதிகமாகப் பலப்படுத்த வேண்டும். கிரேக்கர்கள் மீது வெற்றி கொள்வது, ராணுவ வீரர்களும், சாதாரண ஜனங்களும், யுத்தத்தி னால் ஏற்படுகிற கஷ்ட நஷ்டங்களுக்கு எவ்வளவு தூரம் தாக்குப் பிடிக்கிறார்கள் என்பதை நன்கு உணர்ந்திருந்தான் கெமால். எனவே கெமால், இமெத் பாஷாவையும் பெவ்ஸி பாஷாவை யும் முக்கிய துணைவர்களாகக் கொண்டு அல்லும் பகலும் உழைத்தான். கிரேக்கர்களிடத்திலுள்ள நவீன யுத்த தளவாடங் களைப்போல் தன்னிடத்திலும் இருக்கவேண்டுமென்று கருதி, இதற்காக அந்நிய நாடுகளின் உதவியை நாடினான். ருஷ்யாவி லிருந்து கடன் வாங்கின பணத்தைக் கொண்டு, இத்தாலியிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் ஆயுதங்களை வாங்கினான். பிரான்ஸுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டு அதன்மூலம் ஆள் பலமும் ஆயுத பலமும் பெற்றான். ஆனால் இதனோடு திருப்தியடைய வில்லை. சேனைக்கு இன்னும் அதிகமான ஆட்கள் தேவையென்று அறிக்கை விடுத்தான். சேனைக்கு ஆள் திரட்டுவது, துருக்கியின் அப்பொழுதைய சோர்ந்த நிலையில் அவ்வளவு சுலபமான காரியமா? போதுமே யுத்தம். கிரேக்கர்கள் தான் எங்கேயோ ஓடிப்போய் விட்டார்களே. இனி என்ன கவலை? பழையபடி எங்கள் நிலபுலங் களை உழுது சாகுபடி செய்து கொண்டு, நிம்மதியாகக் காலங் கழிக்குமாறு எங்களை விட்டுவிடக் கூடாதா? என்று ஜனங்கள் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். இவர்களுக்கெல்லாம் சமாதானம் சொல்லிச் சேனைக்கு ஆள்சேர்க்க வேண்டியிருந்தது. 7. சில்லரைத் தொந்தரவுகள் இதே சமயத்தில் தேசீய சபையில் கெமாலுக்கு எதிர்ப்பு கிளம் பியது. சக்கேரியா யுத்தந்தான் வெற்றிகரமாக முடிந்துவிட்டதே. இனி கெமாலிடம் சர்வாதிகாரங்களும் இருப்பானேன்? இவற்றை ரத்து செய்து, முன்மாதிரி தேசீய சபைக்கு இந்த அதிகாரங்களெல் லாம் வந்துவிடவேண்டுமல்லவா? இதற்காகத் தேசீய சபைக் குள்ளேயே சூழ்ச்சிகள் பல நடைபெற்றன. தேசீய சபைக் கூட்ட மொன்றில், கெமாலிடம் அளிக்கப்பட்ட சர்வாதிகாரங் களும் மீண்டும் தேசீய சபையிடமே வந்து சேரவேண்டுமென்று ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இது பெரும்பான்மை யோருடைய ஆதரவு பெறவில்லை. ஆயினும் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதே, மந்திரிச் சபையின் மீது நம்பிக்கையில்லை யென்பதைக் காட்டுகிறதென்றும், ஆகையால் தாங்கள் ராஜீநாமா செய்து விடுவதாகவும் மந்திரிச் சபையார் கூறினார்கள். பொறுங்கள் என்றான் கெமால். அப்பொழுது இவன் படு நோயாய்க் கிடந்தான். இதனால் தேசீய சபையின் வாதத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆயினும் மேற்படி சபையின் ரகசியக்கூட்டம் ஒன்றைக் கூட்டி, தேசத்தின் தற்போதைய நிலைமையில் சர்வாதிகாரங்களும் தன்னிட மிருக்க வேண்டிய அவசியத்தை மிக அழகாக எடுத்துக் கூறினான். பிரதிநிதிகள் இதனை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். மூன்று மாதங்களுக்கொருமுறை இந்தச் சர்வாதிகாரங்களையும் தேசீய சபையிடமிருந்து பெறவேண்டுமென்பது போய், மறு தீர்மானம் வரை கெமாலிடமே சர்வாதிகாரங்களும் ஒப்படைக்கப்பட்டிருக் கின்றன என்ற தீர்மானம் நிறைவேறியது. இதே சமயத்தில் முன்னர் ஐக்கிய முன்னேற்றக் கமிட்டியின் சார்பாக அரசாங்க நிருவாகத்தைக் கைப்பற்றிக் கொண்டு மும் மூர்த்திகள் போல் ஆண்ட என்வெர் பாஷா, தலாத்பாஷா, ஜெமால் பாஷா ஆகிய மூவரும் இப்பொழுது வெளி நாடுகளிலிருந்து தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்கள். பொகாரா மாகாணத்தில் ஓர் அரசன் போல் அதிகாரஞ் செலுத்திக்கொண்டு, இலாமிய நாடுகளெல்லாம் ஒன்று சேரவேண்டு மென்ற தன் எண்ணத்தைப் பிரசாரஞ் செய்த என்வெர், துருக்கிக்குள் பிரவேசிக்க விரும்பினான். ஆனால் இதற்குள் இவன் ருஷ்யர்களோடு போர் தொடுத்து அதில் மடிந்து போனான். ஏற்கனவே தலாத் பாஷா, பெர்லின் நகரத்தில் பகிரங்கமாகக் கொலை செய்யப்பட்டு மரணமடைந்தான். ஜெமால் பாஷா, ஆப்கானிதானம் சென்று அங்கு அமீர் அமானுல்லாகா னுடைய ஆலோசனை கர்த்தனாக நியமனம் பெற்று அவனுடைய சீர்திருத்த முயற்சிகளுக்கு உதவி செய்து வந்தான். அமானுல்லாகா னுடைய நிலைமை சங்கடமாகி விடவே, இவன் ருஷ்யாவுக்கு ஓடிப் போய் அங்கிருந்து கெமாலுக்கு ஒரு கடிதம் எழுதி, துருக்கிக்குத் தான் திரும்பி வர உத்தேசிப்பதாகத் தெரிவித்தான். கெமால் இதற்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் இதற்குள் ஜெமால், ருஷ்யா விலேயே கொலையுண்டு இறந்து போனான். இந்த மும்மூர்த்தி களின் சிஷ்ய பரம்பரையானது, அங்கோரா தேசீய சபையில் கெமா லுக்கு அடிக்கடி தொந்தரவு உண்டு பண்ணிக் கொண்டிருந்தது. இதனுடைய முயற்சியால், பழைய ஐக்கிய முன்னேற்றக் கமிட்டி மீண்டும் தலை காட்டத் தொடங்கியது. ஆனால் இதனைத் தலை தூக்க விடாமல் ஆரம்பத்திலேயே நிர்த்தாட்சண்யமாகக் கத்தரித்து விட்டான் கெமால். அங்கே போர் முனையில், கிரேக்கர்களை முன்னேறவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் துருக்கியப் படை வீரர்கள், சலித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். எவ்வளவு காலம் பொறுமை யாக இருந்த இடத்திலேயே இருந்து கொண்டிருப்பது? ஒன்று, கிரேக்கர்களை எதிர்த்துப் போராடி அவர்களை விரட்டவாவது வேண்டும்; வனாந்தரம் போலுள்ள இந்தப் போர் முகத்தில் எத்தனை நாட்கள் ஒரு வித வசதியுமின்றி அவதிப்பட்டுக் கொண்டிருப்பது என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்கள். ராணுவ தளகர்த்தர்களில் சிலர் இந்த முணகலில் கலந்து கொண்டார்கள். இன்னும் சிலர், கெமாலுக்கு ஆதரவு காட்டிப் பேசினார்கள். சில சூழ்ச்சிகளும் நடைபெற்றன. ராணுவத்தில் இங்ஙனம் கருத்து வேற்றுமை களும் ஒழுங்கீனங்களும் இருக்கக்கூடாதென்பதில் கண்டிப்பாயுள்ள கெமால், தளகர்த்தர்களில் சுமார் இருபத்தைந்து பேரை மரண தண்டனைக்குட்படுத்தி விட்டான். ராணுவத்தின்மீது தனக்கிருந்த பிடிப்பை இவன் சிறிது கூடத் தளர்த்திக் கொடுக்கவே யில்லை. கெமாலின் நெருங்கிய நண்பர்களோ, உடனே சமாதானம் செய்து கொண்டு விடுவது நல்லதென்று ஆலோசனை கூறினார்கள். இதை யறிந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தார், தங்களுடைய ராஜதந்திரத் தினால் கெமாலை வென்றுவிடப் பார்த்தார்கள். செவர் உடன் படிக்கையை மாற்றி யமைக்கும் விஷயத்தில் தாங்கள் மறுபடியும் துருக்கியுடன் சமரசம் பேசத் தயாராக இருப்பதாகத் தெரிவித் தார்கள். செவர் ஒப்பந்தம்! அஃது எங்கே இருக்கிறது? எப்பொழுதோ அது குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டதே. நான் சமரஸத் திற்குத் தயார். துருக்கிக்கு இப்பொழுது அமைதி தேவைதான். ஆனால் செவர் என்ற வார்த்தையோடு சமரஸம் பேச வருகிறவர்களுடன் சமாதானம் பேசத் துருக்கி சித்தமாயில்லை. மற்றும் அனட்டோலியா மண்ணிலிருந்து கிரேக்கர்கள் அடியோடு விலகிக் கொள்கிற வரையில், துருக்கி யாருடனுமே சமரஸம் பேச விரும்பவில்லை என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டான் கெமால். படைமுனையில் இருந்து கொண்டு போர் புரிகிற ஒரு யுத்தவீரன் மீது பல திசைகளிலிருந்தும் ஒரே சமயத்தில் அம்புகள் வந்து விழுவது போல, கெமாலுக்கு இங்ஙனம் பலவிதமான எதிர்ப்புகள் வந்து கொண்டேயிருந்தன. இவற்றையெல்லாம் இவன் சமாளித்துக் கொண்டு வந்ததோடு, கிரேக்கர்களோடு இனி நடத்த வேண்டிய போராட்டத்திற்கு நாட்டையும் ராணுவத்தையும் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தான். 17 வெற்றியும் விவாகமும் 1. மிர்னா மீது 1922ஆம் வருஷம் ஆகட் மாதம் அனட்டோலியா பிரதேசத் தில் கோடை வெய்யில் எரிக்கிறது. எங்கும் ஒரே புழுதி மண். கிரேக்கர்கள் எவ்வளவு காலந்தான் பொறுமையோடு இந்த இடத்தி லிருந்து கொண்டு துருக்கியர்களின் எதிர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். கிரேக்கப் போர் வீரர்கள், சரியான தள கர்த்தர்கள் இல்லாத காரணத்தினால், தாங்கள் யுத்தகளத்திலிருக் கிறோம் என்பதைக் கூட மறந்து வெறியாட்டயர்ந் திருந்தார்கள். அங்கு, கிரீ தேசத்திலோ அரசாங்க நிருவாகம் மிகவும் ஊழலாயிருந்தது. போர் முனையிலிருந்த போர் வீரர்களுக்கு உணவு, உடை முதலியன சரியாக வழங்கப்படவில்லை. இதனாலும் கிரேக்கப் போர்வீரர்கள் உற்சாகம் குன்றியிருந்தார்கள். ஆகட் மாதம் 26ஆம் தேதி கிரேக்கப் படைகளைத் தாக்குவதென்று கெமால் நிச்சயத்திருந்தான். அந்த மாதம் முதல் வாரத்திலேயே இவன் போர்முனைக்கு வந்து எல்லா ஏற்பாடுகளை யும் தானே நேரில் கவனித்தான். எல்லாம் ரகசியமாகவே நடை பெற்றன. துருக்கியர் பக்கத்தில் யுத்த சந்நாகங்கள் ஒன்றுமே செய்யப் படவில்லை யென்று எதிரிகள் நம்புமாறு இவன் நடந்து கொண் டான். துருக்கியப் போர்வீரர் களுக்கிடையே உதை பந்தாட்டம் நடைபெறுமாறு ஏற்பாடு செய்து, அப்போது, தான் ஆஜராயிருந் தான். அங்கு வந்திருந்த எல்லா ராணுவ தளகர்த்தர்களுக்கும் 26ஆம் தேதியன்று இரவு எல்லாம் சித்தமாயிருக்க வேண்டுமென்று உத்தரவிட்டுவிட்டு, யாரும் சந்தேகப்படாமல் அங்கோராவுக்குத் திரும்பிச் சென்று விட்டான். யுத்த தினத்திற்கு ஒரு வாரம் முந்தி துருக்கிக்கும் மற்ற வெளி நாடுகளுக்கும் எவ்வித செய்திப் போக்கு வரத்தும் இல்லாதிருக்குமாறு ஏற்பாடு செய்தான். இதன் காரண மாக அனட்டோலியாவில் உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுவிட்ட தென்றும், இனி துருக்கியர்கள் போரிடத் தயாராயிருக்கமாட்டார் களென்றும் கிரேக்கர்கள் நம்பி விட்டார்கள். யுத்தம் எந்தத் தேதியில் தொடங்கப்பட வேண்டுமென்று கெமால் நிச்சயித்தானோ அதே ஆகட் மாதம் 26ஆம் தேதியன்று இரவு சாங்காயாவிலுள்ள தனது பங்களாவில் நடனக் கச்சேரி நடை பெறு மென்றும், அதற்கு அனைவரும் வரவேண்டுமென்றும் இரண்டு நாள் முன்னர் - 24ஆம் தேதியன்று - அங்கோராவிலுள்ள முக்கியதர் களுக்கு அழைப்பு அனுப்பினான். அன்று இரவு பொறுக்கியெடுத்த சில சிப்பந்திகளுடன் தன்தாயாரிடம்கூடச் சொல்லிக்கொள்ளாமல் ரகசியமாகப் போர் முனைக்குக் கிளம்பி விட்டான். போர் முனை யின் தலைமைக் காரியாலயத்தை அன்று இரவே அடைந்து எல்லா ஏற்பாடுகளும் ஒழுங்காக இருக்கின்றனவா என்று கவனித்தான். தன் யுத்தக் காரியாலயத்திலிருந்து அவன் வெளி வரவே இல்லை. அங்கோராவிலேயே கெமால் இருப்பதாக எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். 26ஆம் தேதி நள்ளிரவு. கெமால் போர் முகத்தில் வந்து நின்று கொண்டு, வீரர்களே! முன்னேறுங்கள். உங்கள் லட்சியம் மத்திய தரைக் கடல் என்று முழக்கம் செய்தான். விடியற் காலை நான்கு மணிக்குத் துருக்கியப் படைகள் கிரேக்கப் படைகள் தங்கியிருந்த தும்லூபு னார் என்ற இடத்தைத் தாக்கின. அன்று மாலை நான்கு மணிக்கு கிரேக்க ராணுவம் சிதறியோடத் தொடங்கிவிட்டது. இவர்களைத் துரத்திக் கொண்டு துருக்கியக் குதிரைப் படை சென்றது. இடை வழியில் எத்தனை கிராமங்கள் கொளுத்தப்பட்டன? எத்தனை உயிர்கள் நாசமாக்கப் பட்டன? சுமார் பத்துத் தினங்களுக்குள் கிரேக்கப் படைகள் 190 மைல் பின்னடைந்து போய் மிர்னா வழியாகக் கப்பலேறி விட்டன. கிரேக்கர்களை விரட்டியடித்துக் கொண்டு மிர்னாவை நோக்கித் துருக்கியப் படை சென்று கொண்டிருக்கிறது. இன்னும் சில மைல்கள் தான் இருக்கின்றன. அதிக களைப்பால் உஷாக் என்ற ஒரு சிறு நகரத்தில் முகாம் போட்டன துருக்கியப் படைகள். கெமாலும் தன் படையுடன் கூடவே செல்கிறானல்லவா? மேற்படி உஷாக் என்ற ஊரில் தங்கியிருந்தபோது, கிரேக்க பிரதம சேனாதிபதியும் அவன் உதவி சேனாதிபதியும், துருக்கியர்களால் கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி கிடைத்தது. இவர் களைத் தன் முன்னர் அழைத்துக் கொண்டு வரச்சொன்னான் கெமால். இருவரும் வந்தார்கள். ஒரு புறம் இமெத் பாஷாவும், மற்றொரு புறம் பெவ்ஸி பாஷாவும் நிற்க, கெமால், எழுந்து நின்று இவர்களை வரவேற்றான். இருவருடனும் கை குலுக்கினான். காபியும் சிகரெட் டும் கொடுத்து இவர்களை உபசரித்தான். கிரேக்கப் படைகள் பின்வாங்கிச் சென்றபோது, வழியிலே எதிர்ப்பட்ட கிராமங்களை எரிக்குமாறும், துருக்கிய ஜனங்களைச் சித்திரவதை செய்யுமாறும் உத்தரவிட்டது இந்த இரண்டு சேனாதிபதிகள்தான். ஆயினும் என்ன? இவர்கள் போர் வீரர்களல்லவா? போர் முகத்துச் சத்துருக் களல்லவா? இதற்காக இவர்களைக் கௌரவப்படுத்த வேண்டியது அவசியமில்லையா? கெமால், இவர்களை உபசரித்துக் கொண் டிருக்கிற போதே, இவர்களை ஏற இறங்கப் பார்த்தான். தன்னால் தாக்கப்படுவதற்குத் தகுதியில்லாத சத்துருக்கள் என்று இமெத் பாஷாவிடம் தனியாகக் கூறி நகைத்தான். கடைசியில் அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்புகிற போது, நல்லது; யுத்தம் இருக்கிறதே அஃதொரு லாட்டரி மாதிரி. உங்களாலான வரையில் நீங்கள் முயன்று பார்த்தீர்கள். இதன் முடிவு அதிருஷ்டத்தின் வசமன்றோ இருக்கிறது? கவலைப்படா தீர்கள் என்று உபசார வார்த்தைகள் கூறினான். 1922ஆம் வருஷம் செப்டம்பர் 9ஆம் தேதி, வெற்றி கொண்ட துருக்கியப் படைகள், மிர்னாவுக்குள் பிரவேசித்தன. படைகளுக்கு முன்னால், அலங்கரிக்கப்பட்ட ஒரு மோட்டார் வண்டியில் கெமால் இருந்தான். இவனுக்குப் பின்னால், மற்ற ராணுவ தள கர்த்தர்களின் மோட்டார் வண்டிகள் வரிசையாக வந்தன. இவை களுக்குப் பின்னர், துருப்புகள் அணிவகுத்துப் பிரவேசித்தன. இந்த வெற்றி ஊர்வலம் செல்கிறபோது, மிர்னாவில் கிரேக்கர்களினால் பல துன்பங்களுக்குள்ளான துருக்கியர்கள், வழி நெடுக வரிசையாக நின்று கொண்டு, வாழ்க பாஷா வாழ்க கெமால் என்று வாழ்த்தி னார்கள். கிரேக்கர்களோ எங்கள் மீது பழி தீர்க்க வேண்டாம். எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கத்தினார்கள். 2. இவள் யார்? - ஒரு புதிர்! துருக்கியப் படைகள் மிர்னாவில் பிரவேசித்த மூன்றாவது நாள், ராணுவத் தலைமைக் காரியாலயத்தில் கெமால் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறான். இதுவே இவன் ஜாகைகூட. ஒரு போர்ச் சேவகன் பிரவேசித்து சலாம் செய்தான். தங்களைக் காண வேண்டுமென்று ஓர் அம்மாள் வந்திருக் கிறாள்; வந்த காரியம் என்ன என்பதைத் தெரிவிக்க மறுக்கிறாள். தங்களைக் காணவேண்டுமாம். என்றான் சேவகன். இப்படி இவன் சொல்லிக் கொண்டிருக்கிறபோதே அந்த அம்மாள் உள்ளே பிரவேசித்தாள். மன்னிக்க வேண்டும். என் பெயர் லதீபா ஹனூம்! கெமால் கற்சிலைபோல் ஒரு நிமிஷம் ஆகிவிட்டான். ஒரு பக்கம் கோபம்; மற்றொரு பக்கம் ஆச்சரியம். தன்னுடைய அறைக் குள் யாரும் இதுவரை அனுமதி இல்லாமல் பிரவேசித்ததில்லை. இதற்காகக் கோபமடைந்தான். முன் பின் தெரியாத ஓர் இளமங்கை - அதிலும் ஓர் இலாமியப் பெண் - இங்ஙனம் துணிச்சலாகத் தனித்து ஓர் அந்நியனுடன் பேச வந்திருப்பதைக் கண்டு ஆச்சரிய மடைந்தான். பின்னர் போர்ச் சேவகனைப் பார்த்து வெளியே போ என்று சமிக்ஞை செய்தான். அந்தப் பெண்ணை உட்காருமாறு கூறினான். அவளும் கொஞ்சங் கூடக் கூச்சமில்லாமல் தனக்குக் காட்டப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்தாள். அவளை ஏற இறங்கப் பார்த்தான் கெமால். சாதாரணமாகத் துருக்கிய திரீகள் அணிந்து கொள்ளும் தலையணியைத் தவிர, மற்றபடியெல்லாம் ஐரோப்பிய உடையிலேயே இருந்தாள் அவள். முகமூடியில்லை. வட்டமான முகம். அதில் இரண்டு கருவிழிகள். முகத்தில் கம்பீரமான ஒரு சிரிப்பு. வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையிலும் அதிகாரத் தொனி. ஆனால் அந்த தொனியில் ஒரு பணிவும் ஒரு மரியாதையும் காணப்பட்டன. அடக்கவும், அடங்கவும் தெரியும் அவளுக்கு என்று அவளுடைய சம்பாஷணையிலிருந்து கெமால் நிச்சயப் படுத்திக் கொண்டான். ஆயினும் அவள் ஒரு புதிர் போலவே இருந்தாள் கெமாலுக்கு. இவளைப் பார்த்தால் ஓர் உயர்குடும்பத்து திரீமாதிரி தென்படு கிறது. ஆனால் துருக்கிய உயர் குடும்பத்துப் பெண்கள், இவ்வளவு தைரியமாக வந்து அந்நியர்களுடன் பேச மாட்டார்களே. ஓயாத போராட்டத்திற்குப் பிறகு, பீரங்கிச் சப்தங்களைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போன செவி களுக்கு, இவளுடைய சம்பாஷணை எவ்வளவு இனிமையாயிருக்கிறது! என்ன சாந்தியைத் தருகிறது! மிர்னாவின் கொடும் வெயிலைக் கண்டு கூசிப்போன கண்களுக்கு, இவளைப் பார்ப்பது எவ்வளவு குளிர்ச்சியா யிருக்கிறது! ஆனால் இவள் யாரோ தெரியவில்லையே. இவளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் ஏதோ சம்பந்தம் இருக்கிறாற் போலுமிருக் கிறதே. ஒரு சில நிமிஷ நேரத்தில், இத்தகைய பல சந்தேகங்களை யெல்லாம் கெமாலின் வீர உள்ளத்தில் உண்டு பண்ணி விட்டாள் லதீபா ஹனூம். தங்களுக்கு என்ன தேவையோ? தங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்றான் கெமால். லதீபா, தன் வரலாற்றைச் சுருக்கமாக - ஆனால் கம்பீரமாக - தெரிவித்தாள். என் தகப்பனார் மெளமெரான் சாகி பே, இந்த ஊரில் பெரிய கப்பல் வியாபாரி, செல்வந்தர்களுக்கு மத்தியில் என் தகப்பனா ருக்கு ஒரு விசேஷ மதிப்பும், முக்கிய தானமும் உண்டு. நான் பாரிஸில் படித்தவள். பிரெஞ்சு, ஜெர்மனி, ஆங்கிலம் முதலிய பாஷைகள் நன்றாகத் தெரியும். என் பெற்றோர்கள் இப்பொழுது பாரிஸில்தான் இருக்கிறார்கள். இந்த மிர்னாவுக்குக் கொஞ்சம் தூரத்தில் போர்னோவோ என்ற ஓர் இடம் இருக்கிறது. அஃதொரு சுகவாச தலம். சிறு குன்றுகள் நிறைந்த அந்த இடத்தில் எங்க ளுக்குப் பெரியதொரு மாளிகை இருக்கிறது. இட்ட வேலையைச் செய்வதற்கு அங்கு ஏராளமான பணியாட்களை வைத்திருக் கிறோம். தாங்கள், தங்கள் பரிவாரங்களுடன் அங்கு வந்து நிம்மதி யாகத் தங்கியிருக்கலாமே. நகரத்தின் மத்தியில். இந்த நெருக்க மான இடத்தில் தங்கி வேலை செய்வது மிகவும் அசௌகரியமா யில்லையா? இந்த சம்பாஷணைக்கிடையில் ஒரு ராணுவ தளகர்த்தன் அறைக்குள் பிரவேசித்து சலாம் செய்து பின்வருமாறு கூறினான்:- நகரத்தில் கிறிதவர்கள் வசிக்கும் பாகம் தீப்பற்றிக்கொண்டு விட்டது. யாருடைய விஷமச் செயலோ தெரியவில்லை. நெருப் பணைக்க உபயோகிக்கும் குழாய்கள் யாவும் துண்டிக்கப் பட்டிருக் கின்றன. கிறிதவர்களின் தேவாலயங்களில், ஏராளமான யுத்த தளவாடங்கள் குவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இவை, வெடிக்குமானால், நகரத்தின் மற்றப் பாகங்களுக்கும் தீ பரவுதல் கூடும். இந்தச் செய்தியைத் தெரிவித்துவிட்டு, தளகர்த்தன் வெளியே சென்றுவிட்டான். மறுபடியும் கெமாலும் லதீபாவும் பேச ஆரம்பித்தார்கள். முதலில், கெமால், அவளுடைய விருந்தினனாக இருக்க மறுத்து விட்டான். ஆனால் அவள் வற்புறுத்தவே, தன் ஜாகையை அவள் மாளிகைக்கு மாற்றிக்கொள்ள இசைந்தான். போர்னோவோவில் இருந்த லதீபாவின் மாளிகை மனோ ரம்மியமா யிருந்தது. என்ன அமைதி! மாளிகையைச் சுற்றிப் பசுமை யான தோட்டங்கள். மாளிகையின் எந்த இடத்தில் நின்று கொண்டு பார்த்தாலும், மிர்னா நகர முழுவதும், அடுத்தாற் போலுள்ள நீலத்திரை கடலும் நன்றாகத் தெரிகின்றன. இங்குக் கெமால் வந்து குடியேறியதும் ஒருவித மனச் சாந்தியைப் பெற்றான். இவனுடைய தேவைகள் ஒவ்வொன்றும் கவனிக்கப்பட்டு வந்தன. காலந் தவறாமல் இனிய உணவு; கூப்பிட்ட குரலுக்கு ஏவலாள்; கெமா லுடன் உத்தியோக சம்பந்தமாகப் பேச வருவோர்களின் தேவை களும் கவனிக்கப்பட்டு வந்தன. இவ்வளவு நுணுக்கமாக எல்லா ஏற்பாடுகளையும் கவனிக்கிற அந்தப் பெண் - லதீபா ஹனூம் - இனிமையான துருக்கிய பாஷையில் பேசுகிறாள். அவள் குரல் வீடெங்கும் பரவியிருக்கிறது. அவள் பார்வை, ஒவ்வொன்றையும் கவனித்து வருகிறது. கெமால், அவளுடைய திறமையை உபயோகித்துக் கொள்ளத் தீர்மானித்தான். பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் முதலிய அந்நிய பாஷைகள் அவளுக்குத் தெரிந்திருந்ததாலும், அந்நிய பாஷைகளில் அடிக்கடி கடிதப் போக்குவரத்து நடத்த வேண்டியிருந்ததாலும், லதீபாவை, தன் காரியதரிசியாக நியமித்துக் கொண்டான். லதீபாவின் திறமையை, மட்டும் உபயோகித்துக் கொண்டால் போதுமா? அவள் அழகையும் பருக வேண்டாமா? எனவே கெமால். தன் மனத்தை அவளிடத்தில் ஒப்புக் கொடுத்தான். அவளைக் காதல் கொண்டான். அவளும் இவனைக் காதல் கொண்டாள். ஆனால் வேண்டும் போது பறித்து முகர்ந்து பிறகு கசக்கிப் போடப்படுகிற ஒரு புஷ்பமாக இருக்க அவள் விரும்பவில்லை. இருவரும் ஒருநாள் மனம் விட்டுப் பேசினார்கள். தான் மேற்போட்டுக் கொண்டிருக்கிற வேலை முடிந்து, தேசத்தில் சமாதானம் ஏற்படுகிற வரையில் தான் விவாகம் செய்துகொள்ளப் போவதில்லை யென்று உறுதி பூண்டிருப்பதாகக் கெமால் கூறினான். லதீபா கூறினாள்:- நானும் சில நெறிகளுக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன். நான் உங்களைக் காதலிக்கிறேன் என்பது உண்மை. ஆனால் உங்க ளுடைய வைப்பாட்டியாக அல்ல. எந்தவிதமான கட்டுப்பாடுகளுக்கும் உட்பட விரும்பாத கெமால். லதீபாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கோபங் கொண்டான். மறுநாளே அந்த மாளிகையை விட்டு வெளியேறி, தன் படை தலத்திற்குச் சென்று விட்டான். இது நடந்து ஆறு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. கிரேக்கர்கள் முகாம் போட்டிருக்கிற த்ரே மாகாணத்தை நோக்கி முன்னேறிச் செல்லுமாறு துருக்கியப் படைகளுக்கு உத்தரவிட்டு விட்டு, கெமால் சாங்காயாவுக்கு திரும்பி விட்டான். இந்த ஆறு வார காலமும் லதீபாவின் சிந்தனையாகவே இருந்தான் கெமால். லதீபாவும், பாரீ நகருக்குத் திரும்பிப்போய் மீண்டும் மேல் படிப்புப் படிக்க உத்தேசித்திருந்தாள். ஒரு நாள் கெமால் சாங்காயாவிலிருந்த தன் வீட்டிலிருந்து ஒரு மோட்டார் வண்டியில் புறப்பட்டான். ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. நேரே மிர்னாவுக்குப் போகச் சொன்னான் மோட்டார் ஓட்டியை. போர்னோவோ மாளிகைக்கு வந்து சேர்ந்தான். லதீபா, மேல் மாடியில் இருந்தாள். நேரே மேலேறிச் சென்றான் கெமால். இப்பொழுதே நாம் விவாகம் செய்து கொள்வோம்; இப் பொழுதே எவ்வித ஆடம்பரமும் இல்லாமல். யாருக்கும் தெரிவிக்க வேண்டுவதில்லை. ஒருவருக்கும் அழைப்பு வேண்டாம், என்றான் கெமால். இங்ஙனம் திடீரென்று வந்து இந்த விவாகப் பேச்சுக்களைப் பேசுவதைக் கேட்ட லதீபா, சிறிது நேரம் திக்பிரமை கொண்டாள். கொஞ்சம் பொறுங்கள். நாளை காலை பார்ப்போம் என்றாள். வேறு வழியில்லாமல் பொறுமையாக இருந்தான் கெமால் மறுநாள் காலை வரை. மறுநாள் உதயமாயிற்று. இருவரும் மோட்டாரில் ஏறிக் கொண்டு, மிர்னா நகரத்தை நோக்கிச் சென்றார்கள். முதன் முதலாகத் தங்கள் கண்ணுக்குத் தென்பட்ட ஓர் இமாமைச் சந்தித்து, இந்த இடத்திலேயே, இப்பொழுதே எங்களிருவருக்கும் விவாகம் செய்து வையுங்கள் என்றான் கெமால். அந்த இமாமுக்கு, பாவம், என்ன செய்வதென்று தெரியவில்லை. கெமால் மீண்டும் வற் புறுத்தவே, அங்கேயே இருவருக்கும் விவாகம் நடைபெற்றது. இருவரும் புருஷனும் மனைவியுமாக போர்னோவோ மாளிகைக்குத் திரும்பிச் சென்றார்கள். துருப்புக்களை மேற்பார்வை செய்யக் குதிரை மீது ஏறிக் கொண்டு சென்றான், விவாகம் நடைபெற்ற சில தினங்களுக்குப் பிறகு கெமால். பக்கத்தில் ஒரு திரீ, குதிரை மீதேறிக்கொண்டு கூடவே வருகிறாள். வீர சேனாதிபதி போலவே அவள் விளங்கு கிறாள். அவள் யார்? காஜி முதபா கெமால் பாஷாவின் தர்ம பத்தினி; லதீபா ஹனூம். அப்பொழுதுதான், பலருக்கும், கெமால் பாஷா விவாகம் செய்து கொண்டிருக்கிற செய்தி தெரிந்தது. தம்பதிகள் வாழ்க என்று எல்லாக் குரல்களும் ஒன்று சேர்ந்து ஒலித்தன. 18 சுல்தான் தேவையா? 1. முடுகி நிற்கும் பிரிட்டன் கப்பலேறி ஓட்டம் பிடித்த கிரேக்கப் படைகள், திரே மாகாணத்தின் கிழக்குப் பாகத்தில் போய் அணிவகுத்து நின்றன. தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்வதில் இவைகளுக்கு விருப்பமே யில்லை. எனவே துருக்கியர்களுடன் மீண்டும் போர் தொடுக்க வேண்டுமென்று. அவசர அவசரமாக யுத்த முதீபுக்கள் செய்யத் தொடங்கினார்கள் கிரேக்கர்கள். ஆனால் கெமால், இவர்களுக்கு இந்த அவகாசத்தைக் கொடுக்கக் கூடாதென்று தீர்மானித்தான். கிரேக்கர்களை த்ரே மாகாணத்திலிருந்தே விரட்டிவிட வேண்டு மென்பது இவன் நோக்கம். எனவே, மிர்னாவைக் கைப்பற்றிக் கொண்ட சில நாட்களுக் குள்ளேயே இவன், தன் படைகளை இரண்டு பகுதிகளாக அணி வகுத்துக் கொண்டு கான்டாண்டிநோபிளை நோக்கியும், டார்டனெல் ஜலசந்தியை நோக்கியும் புறப்பட்டான். ஆனால் நேசக் கட்சியினர் 1921ஆம் வருஷம் மே மாதம் 15ஆம் தேதி வெளி யிட்ட ஓர் அறிக்கையில், பாபர ஜல சந்திக்கும் டார்டனெல் ஜல சந்திக்கும் இரு மருங்கிலும் உள்ள சிறிய பிரதேசம் நடு நிலைமைப் பிரதேசமென்றும், இதில் பரபரம் போராடிக் கொண்டிருக்கும் கிரேக்கர்களோ, துருக்கியர்களோ பிரவேசிக்கக் கூடாதென்றும் குறிப்பிட்டிருந்தனர். எனவே இந்த இரண்டு பிரதேசங்களையும் நோக்கி கெமால் படையெடுத்து வந்தபோது நேசக் கட்சியினர் தடுத்தனர். ஆனால் இதில், தான் பிரவேசித்தே ஆக வேண்டுமென்று கூறினான் கெமால். ஏற்கனவே கிரேக்கர்கள் இந்த மாதிரி அனுமதி கோரினார்களென்றும் அவர்களுக்கு மறுக்கப்பட்டு விட்டதென்றும், அதைப் போல் துருக்கியர் களுக்கும் அனுமதி மறுக்க வேண்டியதிருக்கிறதென்றும் நேசக் கட்சிப் படையின் தலைவனான தளபதி ஹாரிங்க்டன் தெரிவித்தான். ஆனால் துருக்கியப் படைகள் முன்னேறிச் சென்று டார்டனெல் ஜலசந்தியின் ஆசியப் பகுதியிலுள்ள சானக் என்ற இடத்தில் வந்து நின்றன. இங்கிருந்து ஜலசந்தியைக் கடந்து அட்ரியா நோபிளுக்குச் செல்ல வேண்டுமென்பது கெமாலின் உத்தேசம். இதைக் கண்டு நேசக் கட்சியார் சிந்தனைக் குள்ளாயினர். சானக்கில் துருக்கியர்கள் வந்து நிற்க இடம் கொடுத்து விட்டோமானால் கடல் வழியாகவும் தரை மார்க்கமாகவும் கான்டாண்டி நோபிள் தாக்கப்பட்டு விடும் என்று இவர்கள் பயந்தார்கள். எனவே தளபதி ஹாரிங்க்டன் கான்டாண்டி நோபிளிலிருந்து நேசக்கட்சிப் படை ஒன்றை சானக்கைக் காப்பாற்றும் பொருட்டு அனுப்பினான். எதிர்பாராத இந்த நிலைமை ஏற்பட்டு விட்டதைக் கண்டு நேசக்கட்சி மந்திரிச் சபைகள் திடுக்கிட்டன. நடுநிலைமைப் பிரதேசம் என்று நாம் எந்த இடத்தை வரையறுத்து வைத்தோமோ அந்த இடத்தின் ஓர் அங்குல மண்ணில் கூட துருக்கியப் படை காலடி எடுத்து வைக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுமென்று தளபதி ஹாரிங்க்டனுக்கு உத்தரவிட்டன. நேசக் கட்சியினரின் கொடிகள், இந்த நடுநிலைமைப் பிரதேசத்தில் பறந்த மாத்திரத்தி லேயே, துருக்கியர்கள் பயந்துபோய் நின்று விடுவார்கள் என்று இவை எதிர்பார்த்தன போலும். ஆனால் கெமால் இதற்கெல்லாம் அஞ்சுபவனா? வரையறுக்கப்பட்ட பிரதேசத்தை நோக்கித் துருக்கியப் படைகளைச் செலுத்துமாறு தனது தளகர்த்தர்களுக்கு உத்தரவிட்டான். இனியும் சும்மாயிருக்கலாமா பிரிட்டன்? அதன் கௌரவத் திற்கு ஹானி ஏற்பட்டு விடவில்லையா? முன்னேறி வரும் துருக்கியப் படைகளை எதிர்த்து விரட்டுமாறு நேசக் கட்சிப் படைத் தலைவ னான மேலே கூறப்பட்ட தளபதி ஹாரிங்க்டனுக்கு உத்தரவிட்டான், பிரிட்டிஷ் பிரதம மந்திரி லாயிட் ஜார்ஜ். ஆனால் இந்த உத்தரவை இவன் விடுக்கிறபோது, பிரான்ஸையோ, இத்தலியையோ கலந்து கொள்ள வில்லை. ஏற்கனவே, துருக்கிய சாம்ராஜ்யத்தைப் பங்கு போட்டுக் கொள்ள வேண்டுமென்று நேச தேசங்கள் தீர்மானித்த போது, தங்களைப் பிரிட்டன் சரியாகக் கவனித்துக் கொள்ள வில்லையென்று பிரான்ஸும் இத்தலியும் மனம் புழுங்கிக் கொண் டிருந்தன. அப்பொழுதிருந்தே இந்தத் துருக்கியச் சதுரங்க விளை யாட்டிலிருந்து எப்படியாவது தந்திரமாக விலகிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் இந்த இரண்டு நாடுகளுக்கும் இருந்தது. இப்பொழுது லாயிட் ஜார்ஜ் தங்களைக் கேளாமலும், கலந்து ஆலோசியாமலும் துருக்கியின் மீது யுத்தந்தொடுக்குமாறு நேசக் கட்சிப் படைகளின் சேனாதிபதிக்கு உத்தரவிட்டதைக் காரணமாக வைத்துக் கொண்டு, துருக்கியுடன் போராடத் தாங்கள் இப் பொழுது சித்தமாயில்லையென்று தெரிவித்து விட்டன. நடு நிலைமைப் பிரதேசப் பாதுகாப்புக்கென்று துருக்கியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்கள் படைகளை உடனே வரவழைத்துக் கொண்டன.1 இப்பொழுது நிலைமையென்ன? லாயிட் ஜார்ஜூம், கெமால் பாஷாவும் நேருக்கு நேர்ப்பட்ட சத்துருக்களானார்கள். இரண்டு பக்கத்து பீரங்கிகளின் வாய் களிலும் குண்டுகள் திணித்து வைக்கப்பட்டிருந்தன. எந்த நிமிஷத்திலும் எதிரிகளின் மீது இவற்றைத் திருப்பலாம் என்ற நிலைமையிலிருந்தது. பிரிட்டன் மட்டும் தனியாகத் தன்னோடு போர் புரியாதென் பதைக் கெமால் நன்கு தெரிந்து கொண்டிருந்தான். பிரிட்டனிலும், துருக்கியை இனியும் பகைத்துக் கொள்ளக் கூடாதென்று அபிப்பி ராயம் வலுத்து வந்தது. எனவே, கெமால் பாஷாவுடன் சமரஸம் பேசத் தயாராயிருப்ப தாகவும், கிழக்கு த்ரே பிரதேசத்திலிருந்து கிரேக்கர்கள் அகன்றுவிட வேண்டுமென்பதுவே தனது விருப்ப மென்றும் பிரிட்டன் தெரிவித்தது. 2. முதேனியா ஒப்பந்தம் முதேனியா என்பது, மார்மோராக் கடலின் மீதுள்ள ஒரு துறைமுகப்பட்டினம். இங்கு 1922ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 11ந் தேதி சமாதான மகாநாடு கூடியது. அங்கோரா அரசாங்கத்தின் சார்பாக இமெத் பாஷா ஆஜராயிருந்தான். த்ரே மாகா ணத்தைக் கிரேக்கர்கள் உடனே காலி செய்து மாரிட்ஸா என்ற எல்லைப்புறத்திற்கு அப்புறம் சென்றுவிட வேண்டுமென்றும், கான்டாண்டிநோபிளிலிருந்த நேசக்கட்சிப் படைகள் உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டுமென்றும், இமெத் பாஷா வலி யுத்திக் கூறினான். கொஞ்சம் திகைப்புக்குப் பிறகு, பிரிட்டன் இந்த நிபந்தனை களை ஏற்றுக் கொண்டது. 11-10-22இல் சமாதான உடன் படிக்கையில் பிரிட்டிஷ் பிரதிநிதிகளும் அங்கோரா பிரதிநிதிகளும் கையெழுத் திட்டார்கள். கான்டாண்டிநோபிளின் அரசாங்க நிருவாகத்தைக் கைப் பற்றிக் கொண்டிருந்த நேச தேச உத்தியோக தர்களும், ராணுவப் படையினரும் உடனே அகன்று விட்டார்கள். இந்த முதேனியா ஒப்பந்தத்தின் விளைவு என்ன? இங்கிலாந் தில் லாயிட் ஜார்ஜின் மந்திரிச் சபை வீழ்ந்துபட்டது? போனர்லா மந்திரிச் சபை ஏற்பட்டது, லார்ட் கர்ஸன் இந்தப் புதிய மந்திரிச் சபையில் அந்நிய நாட்டு மந்திரி. கிரீ தேசத்தில், கான்டண் டைன் மன்னன் மீண்டும் தேசப் பிரஷ்டம் செய்யப் பட்டான். வெனிஜெலோ, அதிகார பதவிக்குத் திரும்பவும் வந்துவிட்டான். இனி நேச தேசங்களுக்கும் துருக்கிக்கும் எந்தவிதமான சம்பந்தம் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி நிர்ணயப் படுத்திக் கொள்ள வேண்டாமா? இதற்காக விட்ஜர்லாந்திலுள்ள லாஸேன் என்ற நகரத்தில் ஒரு சமாதான மகாநாடு கூட்டுவதென்று நிச்சயிக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரில் அங்கோரா அரசாங்கத்திற்கும் கான்டாண்டி நோபிளின் சுல்தானிய அரசாங்கத்திற்கும் அழைப்புகள் ஒரே சமயத்தில் அனுப்பப்பட்டன. பிரிட்டிஷ் அரசாங்கம் எந்நோக்கோடு ஒரே நாட்டிலுள்ள இந்த இரண்டு அரசாங்கங்களுக்கும் அழைப்பு அனுப்பச் செய்ததோ நமக்குத் தெரியாது. ஆனால் கெமால், துருக்கியின் உள்நாட்டு முக்கிய பிரச்னை ஒன்றைத் தீர்த்துக் கொள்வதற்குரிய ஒரு கருவியாக இந்த அழைப்பை மிகத் திறமை யுடன் உபயோகித்துக் கொண்டுவிட்டான். 3. இரு அரசாங்கங்கள் அவசியமா? அங்கோரா தேசீய சபை இந்த லாசேன் மகாநாட்டு அழைப்பைப் பற்றி வாதம் செய்தது. ஒரே நாட்டில் இரண்டு வித அரசாங்கங்கள் இருப்பது கூடாதென்றும், ஒரே அரசாங்கந்தான் நாட்டில் அதிகாரம் செலுத்த வல்லதென்றும், முடிவிற்கு வந்தது. இது வரையில் அங்கோரா அரசாங்கத்திற்கும் கான்டாண்டி நோபிள் அரசாங்கத்திற்கும் எந்தவிதமான தொடர்பு இருக்க வேண்டுமென்பதைப் பற்றி நிர்ணயிக்கப் படாமலே இருந்து வந்தது. கெமால் இதனை வேண்டுமென்றே நிர்ணயிக்காமல் ஒதுக்கி வைத்திருந்தான். ஆனால் இப்பொழுது இதைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டுமல்லவா? இதற்குத் தேசீய சபை பூரண சம்மதியை அளித்தது. ஆனால் இதை எப்படி நிச்சயப் படுத்துவது? ஒன்று சுல்தானிய அரசாங்கம் இல்லாமற் செய்துவிட்டு அதன் தானத்தில் குடியரசு அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும். அல்லது சுல்தானைப் பெய ரளவில் அதிகாரமில்லாத ஒரு கௌரவப் பதவியில் இருத்தி, கெமாலை ஆயுள்பரியந்தம் பிரதம மந்திரியாக்கி அரசாங்கத்தை நடத்துமாறு செய்விக்க வேண்டும். இங்ஙனம் பலதரப்பட்ட அபிப் பிராயங்கள் தேசீய சபையில் கிளத்தப்பட்டன. அங்கத்தினர்கள் சண்டமாருதம் போல் வாதம் செய்தார்கள். சுல்தானும் மற்ற மந்திரிகளும், அந்நியர்களின் கைக் கருவிகளாகித் தேசத் துரோகம் செய்துவிட்டார்கள் என்று கோபம் பொங்கப் பேசினார்கள். வாதங்கள் மும்முரமாக நடைபெற்றன. இதுவரையில் அனைத்தையும் மௌனமாக இருந்து கேட்டுக் கொண்டிருந்த கெமால், ஏற்கனவே தான் தயாரித்து வைத்திருந்த ஒரு தீர்மானத்தை ஓர் அங்கத்தினனைக் கொண்டு பிரேரிக்கச் செய்தான். இந்தத் தீர்மானத்திற்குச் சாதகமாக வாக்குக் கொடுக்கும் படி எண்பது அங்கத்தினர்களை ஒரு கட்சியாக ஏற்படுத்தி வைத் திருந்தான். தேசத்தின் ராஜ்யாதிகாரம் முழுவதும் அதன் முழுத்தன்மை யோடு தேச மக்களின் கையில் வந்துவிட்டபடியால், இனி சுல்தான் தேவையில்லை. சுல்தானியப் பதவி ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால் கிலாபத் தானம் அப்படியே இருக்கிறது. இதுவே பிரேரணையின் சாரம். இந்தப் பிரேரணை அங்கத் தினர்களிடையே எதிர்பாராத ஒரு வெடிகுண்டு போல் விழுந்தது. சுல்தான் வேறே, கலீபா வேறே என்று பிரித்துப் பார்க்கும் மனப் பான்மை யேயில்லாத அங்கத்தினர்களுக்கு இந்தப் பிரேரணையைப் பற்றி ஒன்றுமே புரிந்துகொள்ள முடியவில்லை. உடனே கெமாலின் யோசனையின் பேரில் இந்தப் பிரேரணை பரிசீலனைக் கமிட்டியின் விசாரணைக்கு அனுப்பப் பெற்றது. பரிசீலனைக் கமிட்டியார் மதம், சட்டம், சம்பிரதாயம் முதலிய வரம்புகள் இட்டுக் கொண்டு அதற்குள்ளேயே ஓயாமல் வாதம் செய்து கொண்டிருந்தார்கள். இந்தக் கூட்டங்களுக்கும் கெமால் ஆஜராகியிருந்து வாதங்களைக் கவனித்துக் கொண்டு வந்தான். அங்கத்தினர்கள் சுற்றிச் சுற்றி வாதஞ் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து, தான் சில வார்த்தைகள் பேச விரும்புவதாகத் தெரிவித் தான். உட்கார்ந்தபடியே பின் வருமாறு பேசினான்:- ராஜ்யாதிகாரம் பிறரால் நமக்கு வழங்கப்படவில்லை. வெற்றி அடைந்த அதனை வீகரித்துக் கொண்டிருக்கிறோம். முற்காலத் தில் உமானிய அரச பரம்பரை வெற்றிகொண்டே இந்த அதிகா ரத்தைக் கைப் பற்றிக் கொண்டது. இப்பொழுது தேசமே இதனைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நடைமுறையில் இருப்பதை அங்கீகரிக் கிற ஒரு பிரச்னைதான் நமக்கு முன்னர் இருக்கிறது. தேசீய சபையும், பரிசீலனைக் கமிட்டியும் இதைப் பற்றி விரைவில் முடிவுக்கு வருதல் நல்லது. அப்படி முடிவுக்கு வர மறுத்து விடுமானால் ஏற்கனவே தீர்மானித் திருக்கிறபடி காரியங்கள் நடை பெறும். ஆனால் - அப்படி நடைபெறு மானால் - கனவான்களே, சில தலைகள் கீழே உருள வேண்டியதுதான். இதற்கு மேல் பரிசீலனைக் கமிட்டியில் வாதத்திற்கு இட மேது? உடனே இந்தப் பிரேரணை சட்டரீதியாக வரையப்பட்டுத் தேசீய சபை முன்னர் கொண்டுவரப்பட்டது. இதை வாக்குக்கு விடப்போகிற சமயத்தில் ஓர் அங்கத்தினன் எழுந்து, ஓட்டுப் போடும் அங்கத்தினர்கள் ஓட்டுச் சீட்டில் தங்கள் பெயரையும் குறிக்க வேண்டும் என்று கூறினான். இஃது அனாவசியமென்று சபையின் தலைவன் என்ற ஹோதாவில் கெமால் நிராகரித்துவிட்டு, இந்தப் பிரேரணை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் படும் என்பதைப் பற்றி எனக்குச் சந்தேகமே இல்லை என்று சிறிது கோபத் துடன் கூறினான். உடனே பிரேரணைக்குச் சாதகமாயுள்ளவர்கள் எல்லோரும் கையைத் தூக்கலாம் என்று சொன்னான். சபையில் குழப்பம் ஏற்பட்டது. சிலர் தங்கள் ஆசனங்களிலிருந்து எழுந்து நின்று பேச முயன்றார்கள். அதற்குள் கெமால் உரத்த குரலில் பிரேரணை ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது என்று கூறினான். அங்கத்தினர்களின் மத்தியி லிருந்து ஒரு குரல் நான் அதை எதிர்க் கிறேன் என்று எழுந்தது. வாயை மூடு என்றது மற்றொரு குரல், கெமாலின் கட்சியிலிருந்து. சுல்தான் பதவி வேறு, கிலாபத் வேறு என்று பிரித்துக் காட்டிய இந்தச் சட்டம் 1922ஆம் வருஷம் நவம்பர் மாதம் முதல் தேதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. ஏழு நூற் றாண்டுகளாக வாழையடி வாழையென வளர்ந்து வந்த உதுமானிய அரச பரம்பரை, இந்தச் சட்டத்தின் மூலம் உலர்ந்து, வற்றி, இருந்த இடங்கூடத் தெரியாமலே போய்விட்டது. ஆனால் சுல்தானுக்குக் கலீபா என்ற கௌரவம் மட்டும் இருந்து கொண்டு வந்தது. 4. கடைசி சுல்தான் மேற்படி சட்டம் அமுலுக்கு வந்த ஐந்தாவது நாள், ரெபெத் பாஷா கான்டாண்டிநோபிள் நிருவாகத்தை அங்கோரா அரசாங்கத்தின் சார்பாக ஏற்றுக்கொண்டான். சுல்தானிய மந்திரிச் சபை ராஜீநாமா செய்துவிட்டது. ஆனால் சுல்தான் வஹீத்தீன் மட்டும் தனது அரசு கட்டிலை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். அதனின்றும் இறங்கி விடுமாறு எத்தனையோ பேர் அவனுக்கு ஆலோசனை கூறினர். ஆனால் அவன் கேட்கவே இல்லை. தனக்குச் சகாயம் செய்யுமாறு பிரிட்டிஷ் ஹை கமிஷனரை அரண்மனைக்கு அழைப்பித்தான். கலந்து ஆலோசித்தான். யார் என்ன செய்ய முடியும்? சக்கரவர்த்திப் பெருமானே! நாங்கள் என்ன செய்ய முடியும்? தாங்கள் அரசு துறந்து உடனே நாட்டை விட்டு வெளியேறி விடுதல் தான் நல்லது. தங்களையும் தங்கள் பரிவாரங்களையும் பத்திரமாக மால்ட்டா தீவிற்குக் கொண்டுபோய் விட ஒரு பிரிட்டிஷ் யுத்தக் கப்பல் துறைமுகத்தில் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறது, என்று பணிவோடு கூறினான் தளபதி ஹாரிங்க்டன். அரசு துறப்பதா? ஒரு நாளும் முடியாது. அன்று இரவு அரண்மனையில் ஒரே கொந்தளிப்பு. தூதர்கள் வந்துகொண்டும் போய்க் கொண்டுமிருந்தார்கள். டெலிபோன் மணி அடித்த வண்ணமாயிருந்தது. சுல்தான் அன்று இரவு தூங்கவே இல்லை. இருந்த இடத்திலேயே ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிட் டான். பக்கத்தில் இளவரசன் எர்ட்ரோக்ருல் நிற்கிறான். திடீரென்று ஒரு பாஷா வந்து குனிந்து சலாம் செய்தான். அவன் கண்களில் நீர் ததும்புகிறது. மெதுவாக, பாதுஷா அவர்கள் மீது தேசத் துரோகக் குற்றஞ் சாட்டி விசாரணைக்குட்படுத்தப் போகிறார்களாமே! அங்கோரா தேசீய சபை இங்ஙனம் தீர்மானித்திருப்பதாக இப்பொழுதுதான் தகவல் வந்திருக்கிறது என்று கூறினான். இந்த வார்த்தைகளைக் கேட்டான் சுல்தான். கண்ணீரை அடக்கிக் கொண்டான். எழுந்து நின்றான். அவன் இரு கரங்களும் அருகிலிருக்கும் மகனின் கழுத்தைச் சுற்றிக்கொண்டன. என் உயிருக்கும் ஆபத்து வந்து விட்டதா? ஆண்டவனே! காப்பாற்று என்று உரத்த குரலில் கூறினான். என்ன செய்வது என்றே அவனுக்குத் தோன்றவில்லை. அங்கும் இங்கும் உலவத் தொடங்கினான். அரண்மனைச் சிப்பந்திகள் மூட்டை முடிச்சுகளையெல்லாம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். 1922ஆம் வருஷம் நவம்பர் 17ஆம் தேதி, இன்னும் பொழுது புலரவில்லை. விடியற்காலை. பிசு பிசுவென்று தூறிக் கொண்டிருக் கிறது. சுல்தான் வஹீத்தீன் சில பரிவாரங்களுடன் அரண்மனைப் பக்கத்திலிருந்த ஒரு சிறிய நுழைவாயில் வழியே வெளியேறித் துறைமுகத்தை அடைந்தான். கான்டாண்டி நோபிள், இன்னும் தூக்கத்தினின்று எழுந் திருக்கவில்லை. மலேயா என்ற பிரிட்டிஷ் யுத்தக் கப்பல் புகை விட்டுக் கொண்டு துறைமுகத்திலிருந்து நகரத் தொடங்கி விட்டது. சுல்தானும் அவன் பரிவாரங்களும் கப்பலின் மேல் தளத்தில் நின்று கொண்டு கான்டாண்டிநோபிளையும், துருக்கியையும் கடைசி முறையாகப் பார்க்கிறார்கள். கப்பல் வெகு தூரம் சென்று மறைந்து விட்டது. ஆனால் துருக்கி அவர்களைப் பார்க்கவே இல்லை. சுல்தான் வஹீத்தீன், மால்ட்டா தீவில் சிறிது காலம் இருந்து பிறகு சான்ரிமோ என்ற ஊரில்1 தனது பங்களாவில் அமைதியாக இறந்து போய் விட்டான். அங்கோரா தேசீய சபை, கிலாபத் பதவியைச் சுல்தான் வஹீத்தீனுடைய உறவினனாகிய அப்துல் மஜீத்துக்கு வழங்கியது. அப்துல் மஜீத் கலீபாவாக அனைவராலும் கௌரவிக்கப்பட்டான். அதிகாரமில்லாத கௌரவம்! 19 லாஸேன் மகாநாடு 1. இரண்டு ராஜ தந்திரிகள் 1922ஆம் வருஷம் நவம்பர் மாதம் 21ஆம் தேதி லாஸேன் நகரத்தில் சமாதான மகாநாடு கூடியது. மகாநாட்டு மேஜையைச் சுற்றிப் பன்னிரண்டு ராஜ்யங்களின் பிரதிநிதிகள் உட்கார்ந்திருந் தார்கள். மகாநாட்டு மண்டபத்திற்குள் ஒரு குள்ள வடிவம் மெது வாக, ஆனால் கம்பீரமாக வந்தது. இது யார்? இந்தப் பன்னிரண்டு பேர்களுடைய பார்வையும் ஒரே சமயத்தில் அந்த உருவத்தின் மீது விழுந்தது, அங்கோரா அரசாங்கத்தின், இல்லை, துருக்கியின், பிரதிநிதியா? இமெத் பாஷாவா? இந்தப் பெயரைக் கேட்டதும் சில பிரதிநிதிகளின் உதட்டிலிருந்து ஒருவித பரிகாசச் சிரிப்பு எழுந்தது. பிரான்ஸின் பிரதிநிதியாக வந்திருந்த பாயின் கரேயின் கண்களில் ஓர் அலட்சியப் பார்வை. பிரிட்டிஷ் பிரதிநிதியாக எழுந் தருளியிருந்த லார்ட் கர்ஸன், சூரியன் அதமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதி என்பதைக் காட்டிக் கொள்வதற்காகவோ என்னவோ, யாருடனும் அளவளாவிப் பேசாமல் சிறிது ஒதுங்கியே இருந்தான். இமெத் பாஷா வந்தபோது லார்ட் கர்ஸன் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை ஏன்? துருக்கியின் பிரதிநிதி தானே! மகாநாட்டில் துருக்கியப் பிரதிநிதிகளுக்குச் சம அந்தது கிடையாது என்பதை வற்புறுத்துவதற்காகவோ என்னவோ, துருக்கியப் பிரதிநிதிகளுக்குக் கையில்லாத நாற்காலிகள் போடப் பட்டிருந்தன; மற்றப் பிரதிநிதிகளுக்குக் கையோடு கூடிய நாற் காலிகள்! இமெத்தின் கண்கள், மகாநாட்டு மண்டபத்தை ஒரு முறை வலம் வந்தன. உடனே அவன் பார்வை துருக்கியப் பிரதிநிதி களுக்கென்று போடப்பட்டிருந்த நாற்காலி களின் மீது விழுந்தது, ஏன் இந்த வித்தியாசம்? இமெத் ஊகித்துக் கொண்டு விட்டான். இதை மற்றப் பிரதிநிதிகள் கவனித்தார்கள். சிலர் தங்கள் தொண்டையைக் கனைத்துக் கொடுத்து, இமெத் பாஷாவைத் திருப்தி செய்து விடலாமென்று கருதினார்கள். மகாநாட்டின் சிப்பந்தி ஒருவன் இமெத்திடம் வந்து போதிய அவகாசமில்லாமையால் அதிகமான கை நாற்காலிகளைக் கொண்டுவந்து போட முடியவில்லை. மன்னிக்க வேண்டும் என்று பணிவோடு தெரிவித்தான். நல்லது. இந்தக் குறை நிவர்த்திக்கப் பட்ட பிறகு நாங்கள் திரும்பி வருகிறோம் என்றான் இமெத். லார்ட் கர்ஸன் இதைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனான். கண் மூடி கண் திறப்பதற்குள் கை நாற்காலிகள் கொண்டுவந்து போடப்பட்டன. இமெத் பாஷாவின் முதல் வெற்றி! பின்னர் மகாநாடு உத்தியோக தோரணையில் ஆரம்ப மாயிற்று. முஸோலினி, பாயின்கரே முதலியோர் பிரசன்னமாயிருந் தார்கள். பிரதிநிதிகள் ஒருவர் பின் ஒருவராகப் பேசத் தொடங்கி னார்கள். செவர் ஒப்பந்தத்தைச் சில அமிசங்களில் மாற்றிக் கொடுக்கிற தோரணையிலேயே இந்தப் பேச்சுக்கள் இருந்தன. ஆனால் இமெத் பாஷா, கெமாலிய அரசாங்கத்திற்கும், செவர் உடன்படிக்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென் றும், அதனை அடிப்படையாகக் கொண்டு, இங்குப் பேச்சுத் தொடங்கப்படுவதைத் தான் ஆட்சேபிப்பதாகவும், முதேனியா சமாதான உடன்படிக்கை நிறைவேற்றப் பட்டபோது துருக்கி வெற்றியடைந்த தேசம் என்ற ஆதாரத்தின் பேரில் பேச்சு வார்த்தைகள் நடந்தனவென்றும், ஆகையால் துருக்கிக்கு இந்த மகாநாட்டில் சம அந்தது உண்டு என்ற அங்கீகாரத்தின் பேரில்தான சமரஸப் பேச்சுக்கள் தொடங்கப் பெற வேண்டும் என்றும் அழுத்தந்திருத்த மாகக் கூறினான். இதைக் கேட்டுப் பிரதிநிதிகள் பிரமித்துப் போனார்கள். ஆனால் வேறுவழியில்லையே, இணங்கித்தான் போக வேண்டி யிருந்தது. முத்ரோ ஒப்பந்தத்திற்குப் பிறகு நிலைமை மாறிவிட்ட தல்லவா? ஐரோப்பிய யுத்தத்தில் தோற்றுப் போன உதுமானிய ஏகாதிபத்தியத்துடனா இப்பொழுது சமரஸம் பேசப்படுகிறது? இல்லை; கெமாலியத் துருக்கியுடன். துருக்கிக்கு மகாநாட்டில் சம அந்தது உண்டு என்பது அங்கீகரிக்கப்பட்டது. இமெத்தின் இரண்டாவது வெற்றி! நேச தேசப் பிரதிநிதிகள், பின்னர் பேசிய போது, அடிக்கடி தங்களுக்குள்ளிருக்கும் ஒற்றுமையைப் பற்றி வற்புறுத்திப் பேசி வந்தார்கள். ஏன் இந்த ஒற்றுமையைப் பற்றி இவர்கள் இவ்வளவு தூரம் வற்புறுத்த வேண்டும்? இவர்களிடையே அதிகமான மன வேற்றுமைகள் இருப்பதை மறைப்பதற்கா? சாதாரணமாகக் கொஞ்சம் காது மந்தமாயுள்ள இமெத் பாஷாவுக்கு இந்த ஒற்றுமைப் பல்லவி நன்றாகக் காதில் விழுந்து கொண்டிருந்தது. தவிர கெமாலிய ராஜ தந்திரத்திலே இவன் பழக்கப் பட்டவனல்லவா? வார்சேல் சமாதான மகாநாட்டைத் திறம்பட நடத்தி அதில் ஜெர்மனியைச் சீர்குலைத்து அனுபவம் பெற்ற நேச வல்லரசுப் பிரதிநிதிகள், யுத்தத்திற்குக் காரணர் யார், அவர்கள் என்னென்ன குற்றஞ் செய்தார்கள் என்பன போன்ற பிரச்னைகளை யெழுப்பித் துருக்கியின் மீது குற்றப் பத்திரிக்கை வாசிக்க ஆரம்பித்தார்கள். இமெத் பாஷா உடனே எழுந்து, இந்தப் பிரச்னையைப் பற்றி வாதம் செய்யத் தான் தயாரா யில்லையென்றும், அப்படி வாதம் செய்வதாயிருந்தால் துருக்கியின் சென்ற முப்பது வருஷ சரித்தி ரத்தைப் புரட்டிப் பார்க்க வேண்டுமென்றும், அதற்கு இப்பொழுது தனக்கு அவகாசமோ, மனமோ இல்லையென்றும் கண்டிப்பாகச் சொல்லிவிட்டான். இப்பொழுது புதிதாகச் சிருஷ்டியாகி யிருக்கும் துருக்கிய தேசீய அரசாங்கம், அரசியல், பொருளாதாரம், ராணுவம் முதலிய எல்லா விஷயங்களிலும் பூரண உரிமை பெற்றுள்ள தாகவே இருக்க வேண்டுமென்பது தங்கள் நோக்கமென்றும், சிறிய தேசங் களுக்குச் சுய நிர்ணய உரிமையை வாங்கிக் கொடுப்பதற்காகவே நேச தேசங்கள் யுத்தத்தில் இறங்கியிருக்க, இப்பொழுது அந்தச் சிறிய தேசங்களின் மீது யுத்தக் குற்றஞ் சாட்டுவது சரியாகாதென்றும் எடுத்துக் காட்டினான். இனி மகாநாட்டில் மல் யுத்தம் ஆரம்பித்துவிட்டது. ஒரு பக்கம் ராஜதந்திர நிபுணனான லார்ட் கர்ஸன், மற்றொரு புறம் நேற்றுப்பிறந்த கெமாலிய அரசாங்கத்தின் பிரதிநிதி, குள்ள இமெத். மற்றப் பிரதிநிதிகள் இந்த இருவரும் போடுகிற சண்டைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். துருக்கிக்கு நாடு பிடிக்கிற ஆசையில்லை யென்றும், துருக்கிக்குச் சம்பந்தமில்லாத பிரதேசங்களை யெல்லாம் விட்டுக் கொடுத்துவிட அது தயாரா யிருக்கிறதென்றும், ஆனால் துருக்கியின் பூரண சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள அஃது எல்லா வகையிலும் சித்தமாயிருக்கிற தென்றும் இமெத் பாஷா எடுத்துக் கூறினான். ஆனால் துருக்கியை நசுக்கிவிடவேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிநிதியாக இருந்து லார்ட் கர்ஸன் பேசுகிறபோது இந்தச் சமாதானங்களெல்லாம் அவன் செவியில் ஏற்குமா? இதைப் பற்றி நாள் கணக்காக, வாரங்கள் கணக்காக வாதங்கள் நடைபெற்றன. இதனோடு மற்றொரு பிரச்சனையும் கிளம்பியது. டார்டனெல் ஜலசந்தி யாருடைய ஆதிக்கத்திலிருக்க வேண்டும்? இந்த ஜலசந்தியில் எல்லா நாடுகளும் போக்குவரத்து வைத்துக் கொள்ளலாம் என்றும், இதன் கரை யோரங்களில் ராணுவ பந்தோபது இருக்கக்கூடாதென்றும் பிரிட்டன் கூறியது. இந்தச் சந்தர்ப்பத்தில் சோவியத் ருஷ்யாவும் மகாநாட்டில் வந்து கலந்து கொண்டது, ருஷ்யப் பிரதிநிதி, ஜலசந்தியானது, துருக்கியின் நிருவாகத்தில்தான் இருக்க வேண்டுமென்று கூறினான். துருக்கியின் விஷயத்தில ருஷ்யாவுக்கு இவ்வளவு அக்கரை இருப் பானேன்? ஜலசந்திக்கு ஒரு வாயில் காப்போன் போல் துருக்கியை வைத்துவிட்டால், தனக்கு எவ்வித ஆபத்தும் மத்திய தரைக் கடல் மூலமாக மேற்கு ஐரோப்பிய வல்லரசுகளிடமிருந்து ஏற்படாது என்பதே ருஷ்யாவின் நோக்கம் ஆனால், துருக்கி இந்தத் தந்திரத்தை நன்கு அறிந்து கொண்டது. ருஷ்யாவிற்கும், பிரிட்டனுக்கும் நடக்கிற போட்டியில், தான் ஒரு சதுரங்கக் காயாக இருக்க விரும்பவில்லை. எனவே பிரிட்டன் கூறிய ஏற்பாட்டுக்கு இமெத் பாஷா இணங்கி விட்டான். பின்னர், துருக்கிக்கும், ஈராக் நாட்டிற்கும் இடையேயுள்ள மோசூல் பிரதேசத்தைப் பற்றித் தகராறு ஏற்பட்டது. இதனை ஈராக் நாட்டோடு சேர்த்துவிட வேண்டுமென்று லார்டு கர்ஸன் கூறினான். ஆனால், இமெத் பாஷா இது துருக்கிக்கே சேர வேண்டும் என்று வற்புறுத்தினான். இரண்டு பேரும் பிடிவாதமாகவே பேசி வந்தார்கள். கடைசியில் இமெத் பாஷா, இந்தப் பிரச்னையைப் பற்றிய வாதத்தைத் தற்காலிகமாகத் தள்ளி வைக்கலாமென்றும், இப்பொழுது மகாநாட்டில் இதைப் பற்றி ஆலோசிக்க வேண்டிய தில்லையென்றும் கூறினான். இதை மகாநாடு அங்கீகரித்தது. இதுகாறும், துருக்கியில் அந்நியர்களுக்கிருந்த பொருளாதார சம்பந்தமான சலுகைகளெல்லாம் ரத்து செய்யப்பட வேண்டு மென்று இமெத் பாஷா கூறினான். இதைப் பற்றி பலத்த வாதம் நடைபெற்றது. ஐரோப்பிய வல்லரசுகளின் பண உதவியின்றித் துருக்கி நீடித்து வாழ முடியாது என்று பிரிட்டிஷ், பிரெஞ்சுப் பிரதி நிதிகள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். ஆனால், இதற் கெல்லாம் இமெத் பாஷா இசைவதாயில்லை. இந்தச் சலுகை களை ரத்து செய்வதானால் பிரான்ஸுக்குத்தான் அதிக நஷ்டம். ஏனென்றால், துருக்கியில் இருந்த கைத்தொழில் தாபனங்கள், பாங்குகள் முதலியவற்றில் பிரான்ஸின் மூலதனமே அதிகம். இதனால் இந்த விஷயத்தில் பிரெஞ்சுப் பிரதிநிதிகள் அதிக ஆக்ரோஷத்துடன் பேசினார்கள். துருக்கிக்குத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியுமென்றும் இமெத் பாஷா எல்லா வாதங்களுக்கும் சேர்த்துப் பதில் கூறிவிட்டான். உடனே, நேச தேசப் பிரதிநிதிகள் வேறோரு வாதத்தைக் கொண்டு புகுத்தினர். அதாவது துருக்கியில் அந்நியர் பெற்றுள்ள வியாபார சலுகைகளெல்லாம் உடன்படிக்கைகளின் மூலம் ஊர்ஜிதம் செய்யப் பட்டிருக்கின்றன வென்றும், ஆகையால், பரபர சம்மதத்தின் பேரிலேயே இவற்றை ரத்து செய்ய முடியுமென்றும் கூறினார். அப்படியானால், இந்த உடன்படிக்கைகளை உடனே ரத்து செய்துவிட வேண்டுமென்று இமெத் பாஷா கூறினன். இதற்குப் பிறகு லார்டு கர்ஸன் எழுந்து, துருக்கி இன்னும் சரியான சட்ட திட்டங்களை வகுத்துக் கொள்ளவில்லை. என்றும், இந்த நிலையில் அதற்கு அந்நியர்களின் உதவி அவசியம் இருக்குமென்றும் சொல்லிப் பார்த்தான். இவையெல்லாம் விரைவில் நடைமுறையில் கொணரப்படுமென்று இமெத் சமாதானம் கூறினான். பிறகு அந்நியர்களின் வியாபார சம்பந்தமான சலுகைகள் முதலியன ரத்து செய்யப் படுவதாயிருந்தால் உடனே ரத்து செய்யப்படக் கூடா தென்றும், சுமார் இருபது வருஷமாவது இடைக்காலம் கொடுக்க வேண்டுமென்றும் பிரிட்டிஷ், பிரெஞ்சு பிரதிநிதிகள் வற்புறுத்தி னார்கள். இதற்கிணங்க முடியாதென்றும் உடனே இவை ரத்து செய்யப்படு மென்றும் இமெத் பாஷா கூறினான். இங்ஙனம் எந்த விஷயத்திலும் ஒருவிதமான முடிவுக்கும் வராமல் சுமார் மூன்று மாத காலம் வரை மகாநாடு நடைபெற்றது. பிரிட்டன், துருக்கிக்கு இணங்கிப்போகிற விஷயத்தில் எவ்வளவோ தூரம் விட்டுக்கொடுத்திருக்கிறதென்றும், மேலே கூறப்பட்ட அந்நியர்களின் உரிமை விஷயத்தில் இன்னமும் விட்டுக்கொடுக்க முடியாதென்றும் லார்ட் கர்ஸன் கண்டிப்பாகக் கூறினான். துருக்கி இன்னமும் இணங்கி வராவிட்டால், மகாநாடு கலைந்து போகு மென்று லார்ட் கர்ஸன் பயமுறுத்திப் பார்த்தான். அதனால் ஏற்படு கிற பொறுப்புக்களைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதாயிருந்தால் தாராளமாக மகாநாட்டைக் கலைத்து விடலாம் என்றான் இமெத் பாஷா நிதானமாக. மகாநாடு முறிந்து போகுமோ வென்று எல்லோரும் பயந்து கொண்டிருந்தார்கள். இரவு எட்டு மணி, லாஸேனிலிருந்து ஒன்பது மணிக்கு ரெயில் புறப்படுகிறது. லார்ட்கர்ஸன், அதில், தான் செல்லப் போவதாகவும், யோசித்து முடிவு சொல்ல இன்னும் ஒருமணி நேரம் இருக்கிற தென்றும் கூறினான். மகாநாடு கலைந்துவிட்டது. பிரதிநிதிகள் தங்கள் ஜாகைக்குப் போய்விட்டார்கள். பிரெஞ்சுப் பிரதிநிதிகள் சிலர், இமெத் பாஷாவின் ஜாகைக்குச் சென்று, சமரஸத்திற்கு இணங்குமாறு வற்புறுத்திச் சொன்னார்கள். இமெத் பாஷா, ஓர் அங்குலம் கூட நகர முடியாதென்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான். லார்ட் கர்ஸன், ரெயில்வே டேஷனில் காத்துக்கொண் டிருந்தான். ஏன்? இமெத் பாஷா, தன்னிடம் ஓடிவந்து சரணாகதி அடைவானென்று! ஆனால் நவீன துருக்கி பிறந்து விட்டதென் பதையும், அதன் பிரதிநிதியுடன் தான் சமரஸம் பேச வந்திருப்பதை யும் அவன் மறந்து விட்டான். இமெத் பாஷா, டேஷனுக்கு வரவேயில்லை. வண்டியும் லார்ட் கர்ஸனை ஏற்றிக் கொண்டு நகர்ந்து விட்டது. 1923ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் லாஸேன் மகாநாடு முறிந்து போய்விட்டது. பிரதிநிதிகள் அவரவர்கள் நாடுகளுக்குப் போய்விட்டார்கள். 2. ஜனக் கட்சி லாஸேன் மகாநாடு முறிந்து போனது, அங்கோரா தேசீய சபையில் பெரிய அதிர்ச்சியை உண்டு பண்ணி விட்டது. அங்கத்தி னர்கள் இதை எதிர்பார்க்கவேயில்லை. மீண்டும் யுத்தம் ஏற்படுமோ வென்ற கவலை ஏற்பட்டு விட்டது இவர்களுக்கு. கெமால் பாஷா வின் மீது தங்களுக்கிருந்த ஆத்திரத்தையெல்லாம் காட்டுவதற்கு இது நல்ல சந்தர்ப்பமென்று, தேசீய சபையில் கெமாலுக்கு விரோத மாயிருந்தவர்கள் கருதினார்கள். சுல்தான் பதவி ரத்து செய்யப்பட்ட பிறகு, கெமாலின் கட்சி வர வரக் குறைந்து கொண்டு வந்தது. இப்பொழுது லாஸேன் மகாநாட்டில் இவன் கையாண்ட முறை களும் தவறி விட்டனவல்லவா? அல்லது, கிரேக்கர்களைத் துரத்திக் கொண்டு மிர்னா வரை போய்ச் சேர்ந்தோம். அப்படியே கான்டாண்டி நோபிள் வரை போயிருக்கலாமே. ஏன் முதேனியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும்? இங்ஙனம் பலரும் பலவிதமாகத் தேசீய சபையில் பேசினார்கள். ஒன்பது நாட்கள் வரை - சில சமயங்களில் இராக் காலங்களில் கூட - இந்த வாதங்கள் நடைபெற்றன. கெமாலை நேரடி யாகத் தாக்காமல் இமெத் பாஷாவின் மீது சொல்லம்புகள் பெய்யப்பட்டன. இமெத் பாஷாவை முதலில் வீழ்த்தி விட்டால், பின்னர் கெமாலைத் தாக்கு வதும் வீழ்த்துவதும் சுலபமல்லவா? ஆனால், இங்ஙனம் எதிர்த்துப் பேசியவர்கள் ஒற்றுமைப்பட்ட கொள்கையுடையவராயில்லை. இவர்களுக்கு ஒரு தலைவனுமில்லை. இவர்கள் எய்த அம்புகளைப் போலவே இவர்கள் கொண்ட குறிகளும் பலவாயிருந்தன. ஆனால், லாஸேன் மகாநாட்டிலோ, அது சம்பந்தமாக நடைபெறும் வேறு சமரஸப் பேச்சுக்களிலோ துருக்கி கலந்து கொள்ள வேண்டுமென்ற அபிப்பிராயத்தை மட்டும் எல்லோரும் வெளியிட்டார்கள். இது வரையில் நம் நோக்கத்திற்கு ஆதரவு இருக்கிறதென்று தெரிந்து கொண்டான் கெமால். ஆனால், இங்ஙனம் பலதிறப்பட்ட கொள்கையினரை எதிர்க் கட்சியிலே வைத்துக் கொண்டு எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியாதென்று தீர்மானித்து விட்டான். மந்திரிச் சபையினரையும், தன் கட்சியைத் சேர்ந்தவர்களையும் ஒரு நாள் நள்ளிரவில் டெலிபோன் மூலம் தன் வாசதலத்திற்கு அழைப்பித்து, மறு நாள் கூடும் தேசீய சபைக் கூட்டத்தில் கையாள வேண்டிய முறைகளைப் பற்றி முன்னேற்பாடுகள் செய்து கொண்டான். மறுநாள் - 1923ஆம் வருஷம் ஏப்ரம் மாதம் 2ஆம் தேதி - தற்போதைய தேசீய சபை கலைக்கப்பட வேண்டுமென்றும், புதிய தேர்தல்கள் நடைபெற வேண்டுமென்றும் கெமாலியக் கட்சியைச் சேர்ந்த ஓர் அங்கத்தினனால் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேறியது. இந்தச் சபையைக் கலைத்து விடுவதற்கு யோசனை செய்து கொண்டிருக்கையிலேயே, கெமால், அடுத்த தேர்தலுக்குள் தனது கட்சியை வலுப்படுத்திக் கொள்வதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்துகொண்டு வந்தான். பார்லிமெண்ட் கூட்டங்களில் தன் கொள்கைகளை ஆதரிப்பதெற் கென்று ஒரு கட்சி இருந்தால், அது சாசுவதமான ஆதரவாயிராதென்றும், ஆகையால் நாடு முழுவதும் பரவியுள்ளதும் ஒழுங்குக்கும் கட்டுப் பாட்டுக்கும் உட்பட்டதுமான ஒரு கட்சி, தன் கைக்குள் இருக்க வேண்டு மென்றும் தீர்மானித்தான். துருக்கியின் சுதந்திரத்திற்காக அந்நியர்களை எதிர்த்து நிற்பதெற் கென்று மூன்று, நான்கு வருஷங்களுக்கு முன்னர் தாபிக்கப் பெற்ற அனட்டோலியா, ருமேனியா மாகாணங்களின் உரிமைச் சங்கங்க ளுக்குப் புதிய பெயரும், புதிய உயிரும் கொடுத்து, அவற்றை மேலெழுந்திருக்கச் செய்தான். இதற்காக நாடெங்கணும் சுற்றுப் பிரயாணஞ் செய்தான். அநேக கூட்டங்களில் பேசினான். இதற்கு ஜனக்கட்சி எனப் பெயர் கொடுத்தான். இந்த ஜனக் கட்சி யின் பெயரால் இவன் விடுத்த அறிக்கை யில், இதுவரையில் தேசீய இயக்கம் என்னென்ன காரியங்களைச் சாதித்திருக்கிற தென்பதைத் தெளிவுபட எடுத்துக் காட்டினான். ஆனால் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன வென்பதைப் பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லை. ஜனசக்தியின் மூலமாகத்தான் ராஜ்யாதிகாரம் பிறக்கிறதென்றும், இந்தத் தத்துவத்தை விருத்தி செய்துகொண்டு போவதே தேசீய இயக்கத்தின் கொள்கையா யிருக்குமென்றும் பொது வாகவே இந்த அறிக்கையில் குறிப்பிடப் பெற்றிருந்தது. இங்ஙனம், இந்தத் தேர்தல் அறிக்கையில் பொதுப் படையாகக் குறிப்பிடப்பெற்றிருந்ததால் சில சாதகங்களும் பாதகங் களும் இருந்தன. கெமாலின் வருங்கால லட்சியத்தைப் பொறுத்த மட்டில், இப்படி பொதுப்படையாகச் சொல்லி யிருந்தது நல்லது தான். ஆனால், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய இந்தப் பொதுத் தத்துவத்தை, இவனைக் கவிழ்த்து விடவேண்டுமென்ற நோக்கத்தோடு கூடிய எதிர் கட்சியினரும், எவ்வித மனச்சங்கடமும் இல்லாமல் ஏற்றுக் கொண்டு, தேர்தலில் அபேட்சகர்களாக நின்று வெற்றி பெறுவதற்கு அனுகூலமாயிருந்தது. தேர்தல் நடைபெற்றது. எதிர்க் கட்சியினர். எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. கெமாலுக்குச் சாதகமாயுள்ள ஜனக் கட்சி யின் அபேட்சகர்களே பெரும்பான்மையோராக வெற்றி பெற்றுத் தேசீய பார்லிமெண்ட்டில் புகுந்தார்கள். ஆனால் இவர்கள் அத்தனை பேரும் கெமாலிடம் விசுவாசம் பூண்டவர்களல்ல. உள்ளுக்குள்ளேயே யிருந்து இவனுக்கு விரோதமாக வேலை செய்தார்கள். கெமால், ஒரு விஷயத்தில் மட்டும் மிகவும் எச்சரிக்கையா யிருந்தான். அதாவது, தான் தாபித்த ஜனக் கட்சி யை நிருவாகம் செய்ய ஒரு கமிட்டியையோ, நிருவாக சபையையோ ஏற்படுத்திக் கொள்ள வில்லை. கட்சித் தலைவன் ஒருவனே; அவனுடைய ஆணைக்குட்பட்டே கட்சி இயங்க வேண்டும் என்று ஏற்பாடு செய்துகொண்டான். 3. ஒப்பந்த விவரங்கள் இந்த நிலையில், 1923 ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி, லாஸேன் மகாநாடு மீண்டும் ஆரம்பமாயிற்று. லார்ட் கர்ஸன் இப்பொழுது பிரிட்டிஷ் பிரதிநிதியாக ஆஜராகவில்லை. இவ னுக்குப் பதில், இதுகாறும் கான்டாண்டி நோபிளில் பிரிட்டிஷ் ஹை கமிஷனராயிருந்த ஸர் ஹோரே ரம்போல்ட் ஆஜராயிருந் தான். இதன் மூலம், பிரிட்டனின் மனப்பான்மை கொஞ்சம் மாறி விட்டதென்று தெரியவில்லையா? ஆயினும் மகாநாட்டில் ஏகமன தான முடிவுக்கு வர மூன்று மாதங்களுக்கு மேலாயின. கடைசியில் 1923ஆம் வருஷம் ஜூலை மாதம் 24ஆம் தேதி, சமாதான மகாநாடு வெற்றிகரமாக முடிந்துவிட்டதென்பதை அறிவிக்க, லாஸேன் நகரத்துப் பிரதம மாதா கோவிலின் மணி, விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. இந்த லாஸேன் உடன்படிக்கையின் ஷரத்துக் களைச் சுருக்கமாகத் தெரிந்துகொண்டு விடுவோம். 1. அட்ரியாநோபிள் உள்பட கிழக்கு த்ரே மாகாணம் துருக்கியை யடைந்தது. 2. துருக்கியின் ஆதீனத்திலிருந்த பாலதீனமும் ஈராக்கும் கிரேட் பிரிட்டனுடைய பாதுகாப்புக்கும், சிரியா, பிரான்ஸின் பாதுகாப்புக்கும் விடப்பெற்றன. அரேபியா தனி நாடாக்கப் பட்டது. 3. மெஸொபோடேமியாவின் வடக்கு எல்லைப்புறம் - அதாவது மோசூல் பிரதேசப் பிரச்னை பின்னர் நிர்ணயித்துக் கொள்ளப்பட லாம் என்று விட்டுவிடப்பட்டது. 4. மத்தியதரைக் கடலிலேயுள்ள டொடோகானீ தீவுகள், இத்தலியின் ஆதீனத்திலேயே இருக்க வேண்டுமென்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டது. 5. எகிப்து, ஸூடான், ஸைப்ர தீவுகள் முதலியவற்றின்மீது தான் செலுத்தி வந்த உரிமைகளைத் துருக்கி விட்டுக்கொடுத்து விட்டது. 6. துருக்கியில் அந்நியர்கள் அனுபவித்து வந்த உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. 7. டார்டனெல் ஜலசந்தியின் வழியாகச் சர்வ தேசங்களின் கப்பல் போக்குவரத்து வியாபாரம் நடைபெறலாமென்றும், இதன் இரு கரை களிலும் ராணுவ பந்தோபது செய்யப்படக் கூடா தென்றும் தீர்மானிக்கப் பட்டது. லாஸேன் உடன்படிக்கை, துருக்கிக்கு, ஐரோப்பிய அரசியல் அரங்கத்தில் ஒரு புதிய அந்ததைக் கொடுத்தது. இதன் மூலம், துருக்கியில் அந்நிய நாட்டாருடைய ஆதிக்கம் ஒழிந்ததோடு, அவர்கள் கொண்டிருந்த பகைமை எண்ணமும் மறைந்தது. 1923ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி துருக்கியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்நியத் துருப்புகள் யாவும் வெளி யேறி விட்டன. அந்நிய நாட்டுப் பிரஜைகளென்னவோ எப்பொழு தும்போல் வசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் முன் மாதிரி செல்வாக்கை உபயோகித்து ஆதிக்கம் செலுத்தவில்லை. 1923ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி, துருக்கி யின் தலைநகரம், கான்டாண்டிநோபிளிலிருந்து அங்கோராவுக்கு மாற்றப் பட்டது. மூன்றாம் பாகம் துருக்கியர் தந்தை ஒவ்வொரு தேசமும் கொண்டாடுகிற சுதந்திரத்திற்குத்தான் நாங்களும் உரிமை கொண்டாடுகிறோம். எங்களுடைய தேசீய எல்லைக்குள் நாங்கள் சுதந்திரப் பிரஜைகளாக வாழ வேண்டும். எங்களுடைய எல்லைக்கு வெளியே, ஓர் அங்குலம் கூட எங்களுக்கு வேண்டாம். ஆனால் எங்கள் எல்லைக்குள் ஓர் அங்குலத்தைக்கூட நாங்கள் விட்டுக்கொடுக்கத் தயாராயில்லை. கமால் அத்தாதுர்க். 20 குடியரசு தாபிதம் 1. ராஜதந்திர காரியங்கள் துருக்கிக்குப் புதிய அந்தது ஏற்பட்டு விட்டது. ஆனால் புதிய வாழ்வு ஏற்படவேண்டாமா? இனியும் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கலாமா? அப்படித்தான் வாழ்ந்து கொண் டிருக்க முடியுமா? இதற்காக, முனைந்து வேலை செய்யத் தொடங் கினான் கெமால். சென்ற நான்கு வருஷகாலமாக இவன் போராடி வந்ததெல்லாம், துருக்கியில் ஒரு புதிய அரசியலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்பதற்காகத்தானே? இந்த அரசியல் திட்டம் ஒருவாறு உருக்கொண்டு வேலை செய்து வருகிறது. ஆனால் இதற்குப் பெயரிட வேண்டாமா? என்ன பெயர் கொடுப்ப தென்பதைப்பற்றி ஏற்கனவே நிச்சயித்துக் கொண்டிருந் தானானாலும், இது வரை, யாருக்குமே இதைப்பற்றி இவன் தெரிவிக்கவில்லை. நவீன அரசியல் முறை குடியரசுதானே? இதனையே துருக்கிக்கு வழங்கிவிட வேண்டுமென்று தீர்மானித்தான். இந்தத் தீர்மானத்தை நடைமுறையில் கொணரக் கெமால் அனுஷ்டித்த ராஜ தந்திர முறைகள் ஒரு கட்டுக்கதை போலவே இருக்கின்றன. முன்னர்க் கூறியுள்ளபடி புதிய தேசீய பார்லிமெண்ட்டில், கெமாலின் விரோதிகள் பலரும் அங்கத்தினர்களாகி விட்டார்கள். இவர்கள் ஜனக் கட்சியின் பெயரைச் சொல்லிக்கொண்டுதான் உள்ளே பிரவேசித்தார்கள். மந்திரிச் சபையை அமைக்கிற அதி காரம் பார்லிமெண்ட்டுக்குத்தானே உண்டு? இந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு எதிர்க் கட்சியினர், கெமாலுக்குப் பிடித்த மில்லாத சில நபர்களை மந்திரிச் சபையில் கொண்டு திணித்தார்கள். கெமாலுக்கு அளிக்கப்பட்ட சர்வாதிகாரத்தில் ஒவ்வொன்றாகக் குறைத்துக் கொண்டு வந்துவிட வேண்டுமென்ற நோக்கத்தோடு தான் மந்திரிச் சபையை நியமிக்கும் அதிகாரம் பார்லி மெண்ட் டுக்கே உண்டு என்ற சட்டத்தை எதிர்க் கட்சியினர் முந்திய பார்லி மெண்ட்டில் நிறைவேற்றி வைத்துக் கொண்டிருந்தார்கள். அதை இப்பொழுது கெமாலுக்கு விரோதமாக உபயோகித்து ஓரளவு வெற்றியும் பெற்றார்கள். ஆனால் கெமால் இந்த அதிகாரத்திற்கு, அதிகாரமில்லாதபடி வெகு சாமர்த்தியமாகச் செய்து கொண்டான். கெமாலியக் கட்சியைச் சேர்ந்த பெத்தி பே, மந்திரிச் சபையின் தலைவனாக ஏற்கனவே நியமனம் பெற்றிருந்தான். ஒரு மாத காலமாக இந்த மந்திரிச் சபையோ நிருவாகத்தை நடத்தி வந்தது. கெமால் இந்த மந்திரிச் சபையை ராஜிநாமா செய்துவிடுமாறு கூறினான். அதனோடு, ராஜிநாமா செய்த இந்த மந்திரிகள் மீண்டும் பார்லிமெண்ட்டினால் மந்திரிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த நியமனத்தை இவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாதென்றும் ஏற்பாடு செய்தான். மந்திரிச் சபை ராஜிநாமா செய்து விட்டது. சட்டப்படி புதிய மந்திரிச் சபையைத் தெரிந்தெடுக்க வேண்டிய பிரச்னை பார்லிமெண்ட்டின் முன்னர் வந்தது. எல்லோராலும் ஏகோபித்து அங்கீகரிக்கக்கூடியதும், நிருவாகத் திறமை நிரம்பியது மான ஒரு மந்திரிச் சபையை பார்லிமெண்ட்டினால் தெரிந்தெடுக்க முடியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மந்திரியை ஆதரித்தோ, எதிர்த்தோ வந்தனர். நிருவாகத் திறமையைக் கவனிக்குமிடத்தில், பழைய மந்திரிகள் தான் சிறந்தவர்கள் என்று அங்கத்தினர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். ஆனால் அவர்களோ மறு தேர்தலுக்கு நிற்க மறுத்துவிட்டார்கள். இனி என்ன செய்வது? இதைப் பற்றி நாட்கள் கணக்காக வாதங்கள் நடை பெற்றன. பார்லிமெண்ட்டில் எப்பொழுதும் கூச்சலும், குழப்பமுமாகவே இருந்தது. இதற்கிடையில் ஜனக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதுவும், மந்திரிச் சபையைப் பற்றி ஒருவிதமான முடிவுக்கும் வரமுடியவில்லை. கெமால் எதிர்பார்த்தபடியே காரியங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் 1923ஆம் வருஷம் அக்டோபர் மாதம்28ஆம் தேதி, கெமால், சாங்காயாவிலுள்ள தன் வீட்டில் பொறுக்கியெடுத்த சில நண்பர்களை வரவழைத்து விருந்து நடத்தினான். ÉUªJ Ko»w jUz¤âš, ‘ehis eh« všnyhU« nr®ªJ Foauir Þjhã¤J ÉLnthkh? என்று கேட்டான். விருந்தினர்கள் இதைக் கேட்டு ஆச்சரியப் பட்டார்களோ என்னவோ நமக்குத் தெரியாது; ஆனால் எல்லோரும் இவன் கோரிக்கைக்கு இணங்கினார்கள். உடனே அவசரம் அவசரமாக அடுத்த நாள் கூட வேண்டியதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனக்கட்சிக் கூட்டத்தின் நிகழ்ச்சி முறைகள் தயாரிக்கப்பட்டன. இந்த நாடகத்திலே யாரார் என்னென்ன விதமாக நடிக்கவேண்டும் என்பது இங்குத் தீர்மானிக்கப் பட்டது. அடுத்த நாள், அக்டோபர் மாதம் 29ஆம் தேதி முற்பகல் ஜனக் கட்சிக் கூட்டம் கூடியது. கெமால் இதற்கு வரவில்லை. வீட்டிலேயே இருந்து விட்டான். எல்லாம் முன்னேற்பாடுதானே! பெத்தி பே ஒரு மந்திரிச் சபையின் ஜாபிதாவைத் தயாரித்து ஆஜர்ப் படுத்தினான். இது நிறைவேறாது என்பது இவனுக்குத் தெரியும். ஆயினும் வேண்டுமென்றே இதனைக் கிளத்தி நிராகரிக்கச் செய்தான். பின்னர் வாதங்கள் தானே? முடிவு ஏது? இந்தக் கூட்டத்தில் மந்திரிச் சபையைப் பற்றி ஒருவிதமான முடிவுக்கு வரமுடியாது என்ற எண்ணத்தை மெதுவாக உருவாக்கி வந்தார்கள். கெமாலின் நண்பர்கள். இப்படி இருக்கிறபோது, இந்த நெருக்கடியைத் தீர்த்து வைக்கக் கட்சியின் தலைவனான கெமாலுக்கு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையைக் கெமாலுதீன் சாமி பாஷா என்பவன் கொண்டு வந்தான். இது கரகோஷத்துடன் ஏகமனதாக நிறைவேறியது. உடனே கெமாலுக்குச் செய்தி அனுப்பப்பட்டது. கெமால், கூட்டம் நடைபெற்றுக் கொண் டிருக்கிறபோது வந்து சேர்ந்தான். வந்தவுடன் பேசுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டான். மேடை மீதேறிய கெமால் ஒரு முறை, மண்டபத்தைத் தன் பார்வையால் வலம் வந்துவிட்டுப் பின்னர் பேசத் தொடங்கினான்:- நமது அரசாங்க முறையிலே உள்ள ஊழலினால்தான் நாம் இந்தச் சங்கடத்திற்குள்ளாகி யிருக்கிறோம். மந்திரிச் சபை நியமன விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் அதிகாரமிருப்பதனால் ஒழுங்கான தொரு மந்திரிச் சபையை ஏகோபித்து நியமனம் செய்ய முடிய வில்லை பார்த்தீர்களா? ஆதலின் அரசாங்க முறையின் அடிப்படை யிலேயே மாற்றம் செய்யப்படவேண்டும். இங்ஙனம் சொல்லிக்கொண்டே, ஏற்கனவே முந்திய நாள் இரவு தயாரித்து வைத்திருந்த ஒரு மசோதாவைத் தன் சட்டைப் பையிலிருந்து எடுத்துப் படித்தான். இதன் மீது அனைவரும் ஓட் செய்யவேண்டுமென்று கூறினான். அரசாங்கம், குடியரசு முறையைத் தழுவியதாக இருக்கு மென்றும், பார்லிமெண்ட்டினால் நான்கு வருஷத்திற்கொருமுறை தெரிந் தெடுக்கப்பட்ட ஒருவன் இந்தக் குடியரசுக்குத் தலைவனாயிருப்பான் என்றும், இந்தத் தலைவன்தான், மந்திரிச் சபைக்குத் தலைவனாக வரக்கூடிய ஒருவனை வரவழைத்து அவனைக் கொண்டு மந்திரிச் சபையை அமைக்க வேண்டுமென்றும், இது பார்லிமெண்ட்டினால் பின்னர் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டிருந்தன. மந்திரிச் சபையின் நெருக்கடியைத் தீர்த்து வைக்கக் கட்சித் தலைவனை அழைத்தால், அவன் அரசாங்க முறையையே மாற்றிவிட்டானே என்று எல்லோரும் பிரமித்துப் போனார்கள். ஆனால் - ? கெமாலின் நண்பர்கள் சிலர் வேண்டுமென்றே இந்த மசோதா வின் மீது வாதம் செய்தார்கள். கட்சியின் அபிப்பிராயத்தைத் தழுவியே எல்லாக் காரியங்களும் நடைபெறுகின்றன. என்று காட்டிக்கொள்ள வேண்டு மல்லவா? சிறிது நேரத்திற்குள் மசோதா நிறைவேற்றப்பட்டது. கட்சிக் கூட்டம் முடிந்தவுடன் பார்லிமெண்ட்டு கூட்டம் ஆரம்பமாயிற்று. அப்பொழுது மாலை மணி ஆறு. கெமாலின் நண்பன் ஒருவன் இந்தக் குடியரசு மசோதாவை ஆஜர்ப்படுத்தினான். இதற்கான சடங்குகள்யாவும் சாங்கோபாங்கமாகச் செய்யப் பட்டன. பார்லிமெண்ட் விதிகளின்படி இந்த மசோதா பரிசீலனைக் கமிட்டியின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. ஒரு மணி நேர ஆலோசனைக்குப் பிறகு மசோதா மீண்டும் பார்லிமெண்ட் முன்னர் கிளத்தப்பட்டது. இலாமிய மதமே அரசாங்க மதமாயிருக்கவேண்டுமென்ற ஒரே பிரிவை மட்டும் இந்த மசோதாவில் சேர்த்த னர் பரிசீலனைக் கமிட்யார்.1 இதனை அப்பொழுது கெமால் ஆட்சேபிக்கவில்லை. பார்லிமெண்ட்டில் கிளத்தப்பட்ட மசோதா முதல் முறை இரண்டாவது முறை, மூன்றாவது முறை வரிசைக் கிரம மாக நிறைவேற்றப்பட்டது. இரவு 9½ மணிக்கு மசோதா சட்ட மாகியது. 9 3/4 மணிக்கு கெமால் பாஷா குடியரசின் தலைவனாகத் தெரிந்தெடுக்கப் பட்டான். உடனே நாடு முழுவதும் இந்தச் செய்தி தந்தி மூலம் பரப்பப் பட்டது. அன்று இரவு சரியாக 12 மணி. துருக்கியக் குடியரசு தாபிதமாகிவிட்டதற்கறிகுறியாக அங்கோராவில் 101 குண்டுகள் போடப்பட்டன. சட்ட ரீதியாக அமைந்த குடியரசுக்கு, சட்ட ரீதியான தலைவனானான் கெமால். 2. அரசியல் விரோதிகள் கெமாலின் அரசியல் விரோதிகள் பலரும், இப்பொழுது கான்டாண்டி நோபிளில் கலீபாவிடம் போய்ச் சேர்ந்தார்கள். அரச பதவிக்குரியவரான ஒருவர், அரசாங்க அதிகாரமில்லாமல், மதத் தலைவர் என்ற ஹோதாவில் எல்லா ஆடம்பரங்களுடனும் ஒரு ராஜ்யத்தில் வசித்துக்கொண்டிருப்பாரானால், அந்த ராஜ்யத்திற்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்கிறவர்களனைவரும், அவரிடம் போய் அடைக்கலம் புகுந்து கொள்வார்களென்பது உலகனைத்திற்கும் ஏற்பட்ட ஒரு பொது நியதிதானே? அதிலும் துருக்கியக் குடியரசு இப்பொழுதுதான் சட்ட ரீதியாக வேரூன்றிக் கொண்டிருக்கிறது. இதனை அதே மண்ணிலிருந்து தோன்றி, அந்தக் குடியரசுக்குள்ளே இருந்துகொண்டு ஒரு கூட்டம் அரிக்கத் தொடங்கிவிடுமானால் அஃது ஆபத்தல்லவா? இந்த ஆபத்து வளரவிடக்கூடாதபடி செய்து விடவேண்டுமென்று தீர்மானித்தான் கெமால். அந்நியர்களின் செல்வாக்கிலே முழுகிக்கிடந்த கான்டாண்டி நோபிள், எப்பொழுதுமே சூழ்ச்சிகள் பல நடைபெறுவதற்கேற்ற செழுமண் பூமியாயிருந்து வந்திருக்கிறது. இதனாலேயே கெமால், தனது அரசியல் நோக்கங்கள் நிறைவேறுவதற்குரிய இடமாக அங்கோராவைப் பொறுக்கியெடுத்துக் கொண்டான். குடியரசு தாபிதமான பிறகு, கெமாலின் அரசியல் விரோதிகளான ரவுப் பே, ரெபெத் பாஷா, கியாஸிம் காரா பெகிர், அலி புவாத் பாஷா முதலியோர், கான்டாண்டி நோபிளுக்குச் சென்று, கலீபாவுக்கு ஆதரவு காட்டியும், குடியரசுக்கு விரோதமாகவும் பிரசாரஞ் செய்தார்கள். முடியரசை மீண்டும் ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். கான்டாண்டிநோபிள் பத்திரிகைகள் குடியரசைத் தாக்கி எழுதி வந்தன. கிலாபத்திற்கு அதிகமான கௌரவம் கொடுத்து அதனைப் பாதுகாத்துவர வேண்டுமென்று கனம் ஆகாகான், குடியரசு மந்திரிச் சபைக்கு எழுதிய ஒரு கடிதம், இந்தப் பத்திரிகைகளொன்றில் பிரசுரிக்கப்பட்டது. இதற்காக இந்தப் பத்திரிகையின் ஆசிரியன், தேசத் துரோகக் குற்றஞ் சாட்டப்பட்டுச் சிறைவாசத் தண்டனை விதிக்கப்பட்டான். ஆனால், குடியரசுக்கு விரோதமான இந்தக் கிளர்ச்சி களிலேயோ, அல்லது கிலாபத்தை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளும் விஷயத்திலேயோ, அப்பொழுதைய கலீபாவான அப்துல் மஜீத் எந்த விதத்திலும் கலந்து கொள்ளவில்லை. அறிவு நூல்களைப் படிப்ப திலும் சித்திரங்கள் தீட்டி மகிழ்வதிலுமே அப்துல் மஜீத்தின் கவன மெல்லாம் சென்றன; காலமெல்லாம் கழிந்தன. மதத்தையும் முடியரசையும் ஆதரவாகக் கொண்டு கிளம்பி யுள்ள இந்த எதிர்ப்பு வலுக்கு முன்னர், இதற்கு மூலகாரணமா யமைந்துள்ள கிலாபத் பதவியை ரத்து செய்துவிட வேண்டுமென்று கெமால் தீர்மானித்தான். இதற்கு நல்ல சந்தர்ப்பமும் கிடைத்தது. அப்துல் மஜீத்தின் பிரதம காரியதரிசியிடமிருந்து மந்திரிச் சபைக்கு ஒரு கடிதம் வந்தது. அரசாங்க பொக்கிஷத்திலிருந்து கலீபாவுக்குக் கொடுக்கப்படும் தொகையானது செலவுக்குப் போதுமானதா யில்லையென்றும், எனவே கலீபாவின் அந்ததிற்கேற்றவாறு தொகையைச் சிறிது அதிகப்படுத்த வேண்டுமென்றும், தவிர அரசாங்கம் கலீபாவைச் சரியாகக் கவனிக்கிற தில்லை யென்றும் இந்தக் கடிதத்தில் காணப்பட்டிருந்தன. இதற்குக் கெமால் அனுப்பச் செய்த பதிலில் பின்வரும் வாக்கியங்கள் கவனிக்கத் தக்கன:- அரசாங்கமும், அரசாங்க உத்தியோகதர்களும், தன்னோடு உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டுமென்ற கலீபாவின் கோரிக்கை, குடியரசின் சுதந்திரத்திற்கு முரண்பட்டதாகும். லௌகிக சம்பந்தமாகவோ, அரசியல் சம்பந்தமாகவோ பார்த்தால், கிலாபத் தாபனம் இருப்பதற்கே நியாயமில்லை. புராதன சரித்திரச் சின்னம் என்ற ஓர் அமிசத்திற்குத் தான் அதற்கு மதிப்புக் கொடுக்க முடியும். குடியரசுத் தலைவனின் செலவுக் கென்று, அரசாங்கப் பொக்கிஷத்தி லிருந்து எந்தத்தொகை ஒதுக்கப்படு கிறதோ அதைவிடக் குறைவான தொகை, கலீபாவுக்கு இருந்தால் போதுமென்றே அரசாங்கம் கருது கிறது. கலீபா நிறைவேற்றவேண்டிய கடமைகளும் ஒன்றுமில்லை. ஆடம்பரங்களுக்கு இப்பொழுது இடம் கிடையாது. அரசாங்கக் கருவிகள் யாவுமே இப்பொழுது பழுது பார்க்கப்பட வேண்டிய நிலைமையிலிருக்கின்றன. அரண்மைனைப் பிரபுக்கள் பிரதம காரியதரிசிகள் முதலிய உத்தியோகதர்கள் தேவையென்ற எண்ணமானது, கலீபாவின் அதிகாரமயக்கத்தை இன்னும் அதிகப் படுத்திக்கொண்டு வருகிறது. இந்தக் கடிதம் 1924ஆம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதி அப்துல் மஜீதுக்கு அனுப்பப்பட்டது. 3. கடைசி கலீபா 1924ஆம் வருஷம் மார்ச் மாதம் முதல் தேதி, தேசீய பார்லி மெண்ட் கூடியது. இதில், கெமால் நிகழ்த்திய சொற்பொழிவில், மதம் வேறு, அரசாங்கம் வேறாகப் பிரித்துவிட வேண்டிய அவசி யத்தைப் பற்றி வற்புறுத்திப் பேசினான். அடுத்த நாள் இரண்டாந் தேதி, ஜனக்கட்சிக் கூட்டத்தில், இது சம்பந்தமாகத் தான் தயாரித்து வைத்திருந்த மசோதாக்களைக் கிளத்தினான். இவைமீது வழக்க மான வாதங்கள் நடைபெற்றன. மறுநாள் மூன்றாந் தேதி, கிலாபத் தாபனம் ரத்து செய்யப் பட வேண்டுமென்பதன் சம்பந்தமான மசோதா பார்லிமெண்ட்டில் கொண்டு வரப்பட்டு அன்றிரவு முழுவதும் இதன்மீது வாதம் நடை பெற்றது. அடுத்த நாள் காலை ஆறரை மணிக்கு மசோதா நிறைவேறிச் சட்டமாகிவிட்டது. கலீபா வும், கலீபாவின் பரம்பரையினரும் இனி துருக்கியில் வசிக்கக்கூடா தென்றும், இன்னும் பத்து தினங்களுக்குள் நாட்டைவிட்டு வெளி யேறிவிட வேண்டுமென்றும் இந்தச் சட்டம் கூறியது. 1924ஆம் வருஷம் மார்ச்சு மாதம் 4ஆம் தேதி துருக்கிய சரித்திரத்திலேயே - ஏன்? இலாமிய சரித்திரத்திலேயே ஒரு முக்கிய நாளாகும். ஏனென்றால், அன்று அப்துல் மஜீத், கான்டாண்டி நோபிளை விட்டு வெளியேறிச் சென்ற நாளல்லவா? கடைசி கலீபா வல்லவா? இதன் பின்னர், உதுமானிய அரச பரம்பரையைச் சேர்ந்த சுமார் முப்பது பேர் கான்டாண்டி நோபிளை விட்டு வெளியேறி விட்டார்கள். கெமாலே, கலீபா பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டு மென்று இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஓர் இயக்கம் கிளம்பியது. இதற்கு, துருக்கிய தேசீய பார்லிமெண்ட்டிலும், துருக்கிக்குப் புறம்பாயுள்ள இலாமிய நாடுகளிலும் ஒருவாறு ஆதரவும் இருந்தது. ஆனால் கெமால், இந்த ஆசைத் தூண்டுதலுக்கெல்லாம் இணங்கவேயில்லை. 21 சில எதிர்ப்புகள் 1. ஜனங்களின் அன்பு பழமையில் உறைந்துபோய் விட்டிருந்த துருக்கியை, அதன் மீது நூற்றாண்டுகள் கணக்காகச் சுற்றியிருந்த தளைகளையெல் லாம் மிகச் சாமர்த்தியத்துடன் அறுத்தெறிந்து, மேலுக்குக் கொண்டு வந்து ஒரு நிலையில் நிறுத்தினான் கெமால். இதனை மீண்டும் கீழ் நிலைக்கு இழுத்துக் கொண்டு போகக்கூடிய சக்திகளை யெல்லாம் அப்புறப்படுத்தி விட்டான். குடியரசு உருவமும் கொடுத்தான். இனி பிராண வாயுவைப் புகட்ட வேண்டியது பாக்கி. ஆனால் இது மிகவும் முக்கியமான வேலை யல்லவா? குடியரசு தாபிதமானதும், கிராம ஜனங்களுடைய அன்பைச் சம்பாதித்துக்கொள்ள முயன்றான். ஏனென்றால், ஒரு தேசத்தின் வாழ்வோ, தாழ்வோ, அந்தத் தேசத்துக் கிராம ஜனங்கள் கொண் டுள்ள மனச் சந்துஷ்டியில்தான் இருக்கிறதென்ற உண்மையைக் கெமால் நன்குணர்ந்திருந்தான். இவனுடைய இந்த எண்ணம் நிறைவேறு வதற்கனுகூலமாகவே, அனட்டோலியா மாகாண வாசிகளுடைய மனப்பான்மையும் அமைந்திருந்தது. கி.பி. 19ஆவது நூற்றாண்டிலேயே ஐரோப்பிய நாகரிகத்தை வரவேற்கவேண்டி, துருக்கியின் பலகணிகள் திறக்கப்பட்டுவிட்ட போதிலும், அனட்டோலியா மாகாணத்துக் கிராமவாசிகள் மட்டும் அந்த நாகரிகத்தில் ஈடுபடாமல் ஒதுங்கியே நின்றார்கள். ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்து அதன்மீது வாதம் செய்து கொண்டு போகிற மனப்பான்மை இவர்களுக்கு ஏற்படவில்லை. எதையும் நம்பினார்கள். அந்த நம்பிக்கைப்படி நடந்து வந்தார்கள். அவ்வளவுதான் இவர்களுக்குத் தெரிந்தது. இது கெமாலுக்கு மிகவும் அனுகூலமாயிருந்தது. கடவுளின் தூதனாகவே கெமாலை இவர்கள் போற்றி வந்தார்கள். கெமாலின் சட்டதிட்டங்களைப் பற்றியோ, அவை சம்பந்தமாக அனுஷ்டிக்கப் படுகிற முறைகளைப் பற்றியோ இவர்கள் ஆராய்ச்சி செய்யவில்லை. காஜி அவர்கள் விடுகிற உத்தரவுகள் யாவும் நம்முடைய நன்மைக்குத்தான் இருக்கும். ஆகையால் அவர் சொன்னபடி செய்வோம் என்ற நம்பிக்கை யுடனேயே கெமாலைப் பின்பற்றி நடந்து வந்தார்கள். நில வருமானத்தில் பத்தில் ஒரு பாகம் மத தாபனங்களின் போஷணைக்காகக் கொடுக்கப்பட வேண்டும் என்ற ஒரு சட்டம் நீண்ட காலமாக அனுஷ்டானத்தில் இருந்து வந்தது. இதைக் கெமால் ரத்து செய்து செய்துவிட்டான். இது கிராம ஜனங்களிடத்தில் ஒரு புதிய நம்பிக்கையையும், அவர்களின் பொருளாதார வாழ்வில் சிறிது முன்னேற்றத்தையும் அளித்தது. கிராம ஜனங்களிடத்தில் எவ்விதம் பழக வேண்டும் என்பது கெமாலுக்கு நன்றாகத் தெரியும். இவன் அவர்களை நன்றாக அறிந்து கொண்டான்; அவர்களும் இவனை நன்கு அறிந்து கொண்டார்கள். 2. ராணுவம் அடுத்தபடியாக ராணுவத்தைத் தூய்மைப்படுத்தும் வேலை யில் முனைந்தான் கெமால். இதுகாறும் ராணுவ தளகர்த்தர்களே, பார்லிமெண்ட்டிலும் அங்கத்தினர்களாயிருந்து அரசியல் விவகாரங் களில் கலந்து கொண்டிருந்தார்கள். இதனால் ராணுவத்தின் பட்ச பாதமற்ற தன்மை பாதிக்கப்பட்டு வந்தது. இதனைச் சட்ட பூர்வமாக எடுத்து விட்டான் கெமால். பார்லிமெண்ட்டில் அங்கம் வகிப்பவர்கள், ராணுவ தளகர்த்தர்களாயிருக்கக் கூடாதென்றும், ராணுவ தளகர்த்தர்கள் பார்லிமெண்ட்டில் தானம் வகிக்கக் கூடாதென்றும் விதி ஏற்படுத்தினான். இதுகாரணமாக ராணுவ பலத்தைக் கொண்டு அரசியலில் கெமாலுக்கு விரோதமாகத் தங்கள் செல்வாக்கை உபயோகித்துக் கொண்டு வந்தவர்கள், தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துவிட வேண்டியவர்களானார்கள். இதற்குப் பிறகு, துருக்கிய ராணுவம் குடியரசு அரசாங்கத்தை அசையாமல் காப்பாற்றிக் கொண்டுவரக் கூடிய ஒழுங்குள்ள ஒரு தாபனமாக அமைந்துவிட்டது. 3. கட்சித் தலைவனும் கெமால் குடியரசுத் தலைவனானதோடு கூட, ஜனக் கட்சியின் தலைவனாகவும் இருந்து வந்தான். அரசாங்கத் தலைவன், கட்சி களுக்குப் புறம்பானவன் என்றும், அவன் எந்தக் கட்சியின் சார்பு பற்றியும் நிற்கக் கூடாதென்றும், இது ஜனநாயக தத்துவத்திற்கு விரோதமானதென்றும், ஆகையால் உடனே கட்சித் தலைமைப் பதவியை ராஜிநாமா செய்துவிட வேண்டுமென்றும் இவனுடைய எதிர்க்கட்சியினர் கிளர்ச்சி செய்து வந்தார்கள். இதற்குக் கெமால் பின்வருமாறு சமாதானம் கூறினான்:- என்னைப் பொறுத்த மட்டில் நான் அரசியல் விஷயத்தில் நடு நிலைமை வகிக்க வேண்டுமென்றோ அல்லது எல்லாக் கட்சி களுக்கும் அப்புறப்பட்டவனாயிருக்கவேண்டுமென்றோ சொல் வதில் அர்த்தமேயில்லை என்பதை, துருக்கியப் பொது ஜனங்களும் அகில உலகமும் அறிந்துகொள்ள வேண்டும். நான் குடியரசுக்கு உட்பட்டவன். அதுவே ஜனக் கட்சியின் கொள்கை. அறிவுத் துறை யிலும், சமூக முன்னேற்றத் துறையிலும் துருக்கிய ஜன சமுதாயம் அபிவிருத்தி யடைய வேண்டும் என்பதையே இந்த ஜனக் கட்சி வலி யுறுத்தி வருகிறது. இந்த முக்கியமான பிரச்சனையில் வேறு வித மான அபிப்பிராயம் எந்தத் துருக்கியனுக்கும் இருக்க முடியாது. ஜனக்கட்சி, துருக்கிய ஜன சமுதாயம் அனைத்தையும் தழுவி நிற்கிறது. அதன் வேலைத் திட்டம் ஜன சமுதாயத்தின் வேலைத் திட்டமே. என்னைப் பொறுத்தமட்டில், குடியரசுத் தலைவனாக வும் ஜனக்கட்சித் தலைவனாகவும் இருப்பதுவே யோக்கியப் பொறுப்புடையதாகும் என்று நான் கருதுகிறேன். இந்தப் பேச்சு, கெமாலுக்கு இன்னும் அதிகமான விரோதி களைச் சம்பாதித்துக் கொடுத்துவிட்டது. ஜனக் கட்சியினின்றும் பலர் பிரிந்து சென்று குடியரசின் முன்னேற்றக் கட்சி என்று ஒரு புதுக்கட்சியை தாபித்தார்கள். துருக்கியின் சுதந்திர யுத்தத்தில் கெமாலுடன் சேர்ந்து கொண்டு அநேக கஷ்ட நஷ்டங்களை யடைந்த பலரும் இந்த எதிர்க் கட்சியில் போய்ச் சேர்ந்து கொண்டு விட்டார்கள். இவர்கள் இப்பொழுது தங்கள் எதிர்ப்பைப் பகிரங்க மாகவே காட்டத் தொடங்கினார்கள். 1924ஆம் வருஷம் நவம்பர் மாதம் தேசீய பார்லிமெண்ட் கூடியது. அப்பொழுது இமெத் பாஷா மந்திரிச் சபையின் தலைவனாயிருந்தான். இவனைக் கண்டித்து எதிர்க் கட்சியினர் ஆக்ரோஷமாகப் பேசினார்கள். எனவே இமெத் பாஷா விலகிக் கொண்டான். இவனுக்குப் பதில், பார்லிமெண்டின் தலைவனா யிருந்த பெத்தி பே, மந்திரிச் சபையின் தலைவனானான். கெமாலே இங்ஙனம் செய்துவைத்தான். இதற்குக் காரணம் எதிர்க்கட்சியின ருக்கு விட்டுக்கொடுக்க வேண்டுமென்பதுதான். இதன் பின்னர் பார்லிமெண்ட் கூட்டங்கள் அமைதியாகவோ, ஒழுங்காகவோ நடைபெறவில்லை. அங்கத்தினர்கள் கைகலப்பது சர்வ சாதாரண மாகிவிட்டது. ஓர் அங்கத்தினன் சுட்டுக் கூடக் கொல்லப்பட்டு விட்டான். எந்த நாட்டிலும் புரட்சியேற்பட்டு அஃது ஓரளவு அடங்கின பிறகு இந்த மாதிரியான பின் விளைவுகள் ஏற்படுவது இயற்கைதான். 4. குருதியர் கலகம் இங்ஙனம் எதிர்க் கட்சியினருக்கு ஆத்திர மூட்டக்கூடிய சம்பவங்கள் என்ன நடைபெற்று விட்டனவென்பதைச் சிறிது கவனிப்போம். குருதியர்கள் எப்பொழுதுமே அரசாங்கத்திற்குத் தொல்லை விளைவித்துக் கொண்டிருந்தார்கள் அல்லவா? இப்பொழுது கெமாலிய அரசாங்கம், கிலாபத் தாபனத்தை எடுத்து விட்டபடியால் இவர்கள் முன்னிலும் பதின்மடங்கு கோபங் கொண்டு கலகத்திற்குக் கிளம்பி விட்டார்கள். இவர் களின் தலைவ னான ஷேக் சையத் என்பவன், சுல்தான அப்துல் ஹமீத்தின் மகனான சலீம் எப்பெண்டி என்பவனைச் சுல்தானாகவும் கலீபாவாகவும் அமரச் செய்துவிட வேண்டுமென்று குருதியர்களைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தான். குருதியர்களின் கலகத்தை அடக்க மந்திரிச் சபையின் தலைவ னான பெத்தி பேயின் பொறுப்பில் ஒரு படை அனுப்பப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி இந்தப் படையால் குருதியர்களை வெற்றி கொள்ள முடியவில்லை. இதனால் ஜனக் கட்சியின் கூட்டத்தில் பெத்தி பேயின் மீது குற்றஞ்சாட்டித் தீர்மானங்கள் கொண்டுவரப் பட்டன. கூட்ட நடவடிக்கைகளின் போது அங்கத்தினர்கள் குழப்பம் விளைவித்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் கெமால் தலையிட்டுப் பெத்தி பேயை ராஜிநாமா செய்யும்படி செய்தான். மந்திரிச் சபை கலைந்துவிட்டது. இமெத் பாஷாவைத் தலைவனாகக் கொண்ட மந்திரிச் சபை மீண்டும் அமைந்தது. இமெத் பாஷாவின் புதிய மந்திரிச்சபை அமைந்ததும், கெமால், பார்லிமெண்ட்டைக் கூட்டுவித்து தேசத்தின் அலங்கோல மான நிலையை எடுத்துக் கூறினான். இவ்வளவு தூரம் கஷ்டப் பட்டுக் குடியரசை தாபித்து விட்டது பெரிதல்ல வென்றும், உள்நாட்டுக் குழப்பம் இல்லாதபடி செய்து கொள்வதிலேதான் துருக்கியக் குடியரசின் எதிர்கால வாழ்வு தங்கி யிருக்கிறதென்றும் விளக்கிக் சொன்னான். இந்த நிலைமையைச் சமாளிக்கத் தனக்கு இரண்டு வருஷ காலம் விசேஷ அதிகாரம் கொடுக்க வேண்டுமென்று கேட்டான். பார்லிமெண்ட் இதனை ஏகமனதாக அங்கீகரித்தது. உடனே இந்த விசேஷ அதிகாரத்தைக் கொண்டு, நாடெங்கணும் ராணுவச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்தான். பார்லிமெண்ட் அங்கத்தினர்கள், அரசாங்கத்திற்கு விரோத மாகப் பேசினால் அவர்களை எந்தச் சட்டமும் பாதிக்காது என்று இதுகாறும் விதியிருந்தது. இதனை ரத்து செய்துவிட்டான் கெமால். இதன் மூலம் பார்லிமெண்ட்டில் கெமாலிய ஆட்சிமுறைக்கு விரோத மாகப் பேசியவர்கள் அனைவரும் அடக்கப்பட்டு விட்டார்கள். பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டுச் சட்டம் இடம்பெற்றது. இது காரணமாகச் சுமார் பன்னிரண்டு பத்திரிகைகள் வெளிவராமலே நின்றுவிட்டன. பகிரங்கமாகவோ, அந்தரங்கமாகவோ. கெமாலிய அரசாங்கத்திற்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்ததாக கருதப்பெற்ற சுமார் நூற்றைம்பது பிரமுகர்கள் நாடு கடத்தப் பட்டார்கள். குடியரசு முன்னேற்றக் கட்சியின் காரியாலயம் மூடப்பட்டு விட்டது. அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களில் சிலர் ஜனக்கட்சியில் சேர்ந்துகொண்டு விட்டார்கள். இன்னும் சிலர் வெளிநாடுகளுக்குப் போய் விட்டார்கள். பார்லிமெண்ட்டில் எதிர்க்கட்சியே இல்லாமல் போய்விட்டது. தேசத்தில் ஒரே ஒரு கட்சிதான் நிலவவேண்டும். அந்தக்கட்சி, தலைவனுடைய கட்டுப்பாட்டுக்குட்பட்டு இயங்க வேண்டும் என்ற நியதி ஏற்பட்டது. இதே சமயத்தில் குருதியர்கள் மீது கடுமையான நடவடிக்கை கள் எடுத்துக் கொள்ளப்பெற்றன. கலகத்தலைவனான ஷேக் சையத் தூக்கு மேடையில் ஏற்றி வைக்கப்பட்டான். கலகம் ஒருவாறு அடங்கியது. ஆனால் பூரணமாக அடங்குவதற்கு இரண்டு வருஷத் திற்கு மேல் ஆயிற்று. எனினும் குருதியர்கள் தற்காலிகமாக அடங்கினார்களே தவிர, இவர்களுடைய போரட்ட மனப்பான்மை விடாமல் தொடர்ந்து கொண்டுதான் வந்தது. 1929ஆம் வருஷம் இவர்கள், கிழக்கு அனட்டோலியா மாகாணத்தில் மீண்டும் கலகத்திற்குக் கிளம்பினார்கள். இந்தச்சமயத்தில் துருக்கியில் பலவிதமான சமுதாய சீர்திருத்தங்கள் ஏற்பட்டு நடைமுறையில் இருந்து வந்தன. இந்தச் சீர்திருத்தங் களெல்லாம் இவர்களுக்குப் பிடிக்கவில்லை. மற்றும் ஆப்கானிதானத்தில் அமானுல்லாகானுடைய சீர்திருத்த முயற்சிகள் வெற்றி பெறாமல் போனது, இவர்களுடைய கலகத்திற்கு ஒரு தூண்டுகோலாயிருந்தது. தவிரவும், அந்நிய நாடுகள் பல, இந்தக் குருதியர்களுக்கு விரோத மாயிருந்தனவென்று சொல்லப்பட்டது. ஆனால் துருக்கிய அரசாங்கம், இந்தக் கலகத்தை வெகு சீக்கிரத்தில் அடக்கிவிட்டது. இந்த 1929ஆம் வருஷக் கலகத்திற்குப் பிறகு, குருதி யர்கள் ஒருவாறு அடங்கினார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அரசியல் விவகாரங்களில் எதிர்ப்பே இல்லாமல் செய்து கொண்ட கெமால், பின்னர் சமுதாய சீர்திருத்த வேலையில் இறங்கி னான். 22 சீர்திருத்தங்கள் 1. உடை மாற்றம் சாதாரணமாகவே எந்த நாட்டிலும் சமுதாய சீர்திருத்த விஷய மானது, ஜன சமுதாயத்தினுடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு நாசூக்கான பாகத்தைத் தாக்குவதல்லவா? ஆனால் கெமால், இந்த விஷயத்தில் பரிபூரணமாக வெற்றி பெற்றுவிட்டான். இந்தக் காலத்தில் ராணுவச் சட்டம் அமுலில் இருந்து வந்தது. இவனுக்குச் சாதகமா யிருந்தது. இந்தச் சீர்திருத்த இயக்கம் ஆரம்பத்தில் ஓர் அற்ப சம்பவ மாகவேதான் தோன்றியது. இனபோலி என்பது ஒரு சிறிய துறைமுகப் பட்டினம். அங்கு ஒரு பிரசங்கம் செய்வதற்குக் கெமால் போயிருந்தான். அப்பொழுது இவன் பின்வருமாறு கூறினான்:- இடைக்கால அறிவு வளர்ச்சி நிலையிலேயே இருப்போம் என்று பிடிவாதம் செய்கிற தேசங்கள் இந்தப் பூவுலகத்தினின்றும் மறைந்துபோக வேண்டியதுதான். துருக்கியர்கள் சர்வதேச நாகரிகத்தோடு இணைந்து போக வேண்டும். இதை அவர்கள் வெளித் தோற்றத்தினாலும் காட்டிக் கொள்ள வேண்டும். நாகரிக முள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற உடை களை அணிந்து கொள்வதே நமது தேசீய கௌரவத்திற்குப் பொருத்தமானதா யிருக்கும். நாம் பூட், நிஜார், ஜாக்கெட், காலர் டை, ஹாட் இவை களையே அணிந்துகொள்ள வேண்டும். துருக்கியர்களின் உடையில் ஒருவித மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தை நீண்டநாளாகக் கொண்டிருந்த கெமால், திடீரென்று இந்த உடைச் சீர்திருத்தத்தைப் பொது ஜனங்களின் முன்னிலையில் கொண்டுவந்து திணிக்கவில்லை. இந்த உடை மாற்றத் தினால் ஏற்படுகிற சாதகங்கள் அதிகமென்றும் ஒரு சமூகத்தார் உடைகள் அணிந்து கொள்ளும் விதத்தைப் பார்த்துத் தான் அவர்கள் பிற சமூகத்தினரால் மதிக்கப்படுகின்றனரென்றும் பல இடங்களிலும் பிரசாரம் செய்துவந்தான். பிறகு, ராணுவப் போர்வீரர்களுக்கு அவர்கள் அணிந்து வந்து பெ என்ற குல்லாயை மாற்றி ஐரோப்பிய முறையில் உள்ள தொப்பியைக் கொடுத்தான். எவ்வித முணு முணுப்புமின்றிப் போர்வீரர்கள் இந்தத் தலையணிமாற்றத்தை ஏற்றுக்கொண்டார்கள். இது கெமாலுக்குப் பெரிய ஆதரவாயிருந்தது. கெமால், தானும் பொதுக்கூட்டங்களிலோ அரசாங்க சம்பந்தமான அலுவல்களிலோ ஆஜராயிருக்கிறபோது, ஐரோப்பிய உடைகளைத் தரித்துக்கொண்டே பிரசன்னமாவான். இவன் மாதிரி மற்ற அரசாங்க உத்தியோகதர்களும் தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டார்கள். பின்னர் 1925ஆம் வருஷம் நவம்பர் மாதம் 25ஆம் தேதி, துருக்கியர்கள் இனி ஹாட் தான் அணிந்து கொள்ள வேண்டு மென்ற சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், இலாமிய ஒற்றுமைக்கு அறிகுறியென்று துருக்கியர்களால் நீண்ட காலமாகக் கருதப்பட்டு வந்ததும், அவர்களுடைய சம்பிரதாய உடையினின்று பிரிக்க முடியாததுமான ‘bgÞ’(Fez) என்ற தலையணியை - குல்லாயை - இனி தரித்துக்கொள்ளக் கூடாதென்று தடுக்கப்பட்டுவிட்டது. போலீஸார், தெரு முனைகளில் ஆங்காங்கு நின்றுகொண்டு பலவந்தமாக இந்தக் குல்லாய் களைப் பிடுங்கிப் பறிமுதல் செய்தார்கள். ஆனால் கெமால் எதிர்பார்த்தபடி ஜனங்கள் இந்த மாற்றத்தை அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளவில்லை. பலவந்தமாகக் குல்லாய்கள் பறிமுதல் செய்யப்படுவதைக் கண்டு இவர்களுக்கு ஆத்திரம் கிளம்பி விட்டது. ஐரோப்பிய யுத்தத்தில் துருக்கி சிக்கிக் கொண்டபோது, இவர்கள் எத்தனையோ கஷ்ட நஷ்டங்களை அடைந்தார்கள். அவற்றை யெல்லாம் பொறுமையோடு சகித்து வந்தார்கள். இதற்குப் பிறகு எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டன. சுல்தான் நீக்கப்பட்டான்; குடியரசு தாபிக்கப்பட்டது; கலீபா தானங்கூட காலியாகிவிட்டது. இவற்றிற் கெல்லாம் பொறுமை யாயிருந்த துருக்கியர்கள், இந்தக் குல்லாய் மாற்றத்தை மட்டும் அங்கீகரிக்க மறுத்து விட்டார்கள். ஹாட் அணிவது கிறிதுவர் களுடைய பழக்கமல்லவா? கிறிஸ்துவ சின்னத்தையா நாம் அணிவது? என்று பலவிடங்களிலும் கிளர்ச்சி செய்தார்கள். பெ என்கிற இந்தக் குல்லாய், நமது அறியாமையின் அடையாளமாக, பிடிவாதத் தின் சின்னமாக, முன்னேற்றம், நாகரிகம், ஆகிய இவற்றின் மீது நாம் கொண்டுள்ள துவேஷத்தின் அறிகுறியாக நமது தலைமீது அமர்ந் திருக்கிறது என்பது கெமாலின் அபிப்பிராயம். ஆனால் இதற்கு எதிர்பாராத விதமான எதிர்ப்புகள் கிளம்பின. ஐரோப்பிய நாகரிகக் காற்று வீசாத கிழக்கு மாகாணங்களின் இந்த எதிர்ப்பு பலமா யிருந்தது. ஆங்காங்குக் கலகங்கள் தோன்றின. கெமால், தனது விசேஷ, அதிகாரத்தைக் கொண்டு இவைகளை உடனுக்குடன் அடக்கினான். ராணுவச் சட்டத்தின்கீழ் தாபிக்கப்பட்ட விசேஷ கோர்ட்டுகள் இந்தக் காலத்தில் மிகச் சுறுசுறுப்பாக வேலை செய்தன. பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இன்னும் பலருக்கு நீண்டகாலச் சிறைவாசம். உடை விஷயத்தில் ஜனங்களைக் கட்டாயப்படுத்தக் கூடா தென்றும், குடியரசுத் தத்துவத்திற்கே இது விரோதமான தென்றும், ஆகையால் ஹாட் அணிய வேண்டுமென்று கட்டாயப் படுத்துகிற சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும் தேசீய பார்லிமெண்ட் டில் நூருத்தீன் பாஷா என்பவன் ஒரு மசோதா கொண்டுவந்தான். ஒரே ஒரு பிரதிநிதிதான் இதனை ஆதரித்தான். இந்த இருவரும் உடனே சபையினின்று விலக்கப்பட்டு விட்டார்கள். ஆண்கள் குல்லாய் அணியக் கூடாதென்று சட்டம் ஏற்படுத் தியது போல், பெண்கள் முகமூடியணியக் கூடாதென்றும் சட்டம் இயற்றப் பட்டது. முகத்தைத் திறந்தாலும் தலையைத் திறக்கக் கூடாது என்றும், அப்படி கூந்தல் தெரிய திரீகள் வெளியே செல்வது மரியாதைக் குறை வென்றும் இந்தச் சட்டம் இயற்றப் பட்ட பிறகு ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. இந்தக் கிளர்ச்சியை மிகக் சாமர்த்தியமாகச் சமாளித்தான் கெமால். ஏனென்றால் திரீகள் விஷயமல்லவா? அவசியமானால், திரீகள் தங்கள் கூந்தல் மட்டும் மறையக் கூடியமாதிரி ஒரு கைத் துண்டைத் தலையில் கட்டிக் கொள்ளலாம் என்று ஒரு மாற்றஞ் செய்யப்பட்டது. இதன்படியே, திரீகள் முகமூடியில்லாமல். கைத்துண்டை மட்டும் தலையில் கட்டிக் கொண்டு வெளியில் வரலானார்கள். இங்ஙனம் கட்டிக்கொண்டு வரும் யாராவது ஒரு திரீயைக் கெமால் எதேச்சையாகச் சந்திக்க நேரிட்டுவிட்டால், தாயே, தங்களுடைய கூந்தல் எவ்வளவு அழகாயிருக்கிறது? அந்த இயற்கை அழகை ஏன் மறைத்து வைத்துக் கொள்ளுகிறீர்கள் என்று பணிவோடு சொல்வான். இந்த விதமாகத் தலையில் துண்டு கட்டும் வழக்கமும் நின்றுவிட்டது. இதனோடு, கல்வி, சுகாதாரம், வைத்தியம் வசதி, அரசியல் உரிமை முதலிய எல்லாத்துறைகளிலும், திரீகளுக்கும் ஆண் களைப் போலவே சந்தர்ப்பங்களும் உரிமைகளும் அளிக்கப்பட்டன. 2. சதியாலோசனை ஜனங்களைப் பழைய கொள்கைகளினின்று திருப்பி அவர் களுக்குப் புதிய நாகரிகத்தைப் புகுத்த வேண்டுமென்ற வேலை வெற்றிகரமாக நடைபெறும் பொருட்டு, கெமால் நாடெங்கணும் சுற்றுப் பிரயாணம் செய்தான். ஜனங்களோடு நெருங்கிப் பழகும் கலையில் தேர்ச்சி பெற்ற வனான இவன், தன் பிரசாரத் திறமையால் ஜனங்களின் மனப்போக்கை, வெகு சீக்கிரத்தில் ஆச்சரியப்படத்தக்க மாதிரி மாற்றி விட்டான். இப்படி இவன் சுற்றுப் பிரயாணஞ் செய்துகொண்டு வந்த போது மிர்னா வந்து சேர்ந்தான். அப்பொழுது 1927ஆம் வருஷம் மே மாதம். இவனை வரவேற்று உபசரிக்க, நகர மக்கள் பலவித ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந் தார்கள். ஆனால் துரதிருஷ்ட வசமாக, கெமால் ஊர்வலமாக வருகிறபோது, அவன்மீது வெடி குண்டெறிந்து கொன்று விட ஒரு சிலர் சூழ்ச்சி செய்து வந்ததைப் போலீஸார் கண்டுபிடித்துக் குற்ற வாளிகளைத் தண்டிக்கச் செய்தனர். இங்ஙனம் குற்றவாளிகளை நீதி தலத்தில் கொண்டு வந்து நிறுத்துகிற போது பலர் மூக்கின் மீது விரலை வைத்தனர். ஏன்? கெமாலின் உற்ற தோழனான அரீப்பே! கைதிக் கூண்டில்! என்ன ஆச்சரியம்? நீதி தலத்தில் ஆஜராயிருந்த வர் பலரும், தங்கள் கண்களை நம்பவேயில்லை. ஆனாலும் அரீப்பேதான்! கெமாலின் கவசம் போலிருந்த அரீப் பேதான்! அரீப்பும், இன்னும் பலரும் மரண தண்டனை விதிக்கப் பட்டார்கள். மரணதண்டனை விதிக்கப்படுமானால், அது, குடியரசுத் தலைவ னால் ஊர்ஜிதம் பெற வேண்டுமென்பது சட்டம். எனவே, அரீப் பேயின் மரண தண்டனைப் பத்திரம், கெமாலின் கையெழுத்துக்கு அனுப்பப் பெற்றது. கெமால் அதில் கையெழுத்திட்டான். கை யெழுத் திடுகிற போது, அவன் முகத்தில் எவ்வித மாறுதலும் தோன்ற வில்லை. கை விரல்களும் நடுங்கவில்லை. ஏனென்றால், தேசம் பெரிதா, நட்பு பெரிதா என்ற கேள்வியே அவன் உள்ளத்தில் எழ வில்லை துருக்கியே கெமால், கெமாலே துருக்கியாகிவிட்ட பொழுது1 இந்தக் கேள்வி எழத்தான் முடியுமா? கெமாலும் அரீப் பேயும் எப்பொழுது, ஏன் பகைமை கொண் டார்கள் என்று வாசகர்கள் ஆச்சரியப்பட்டுக் கேட்கக் கூடும். 1924- ஆம் வருஷம் ஒரு நாள், கெமால் ஏதோ ஆத்திரத்தில் ஆரீப் பேயைத் தாக்கிப் பேசினான். கெமாலின் எந்த வார்த்தைகளுக்கும் பணிந்து கொடுத்துப் போகிற அரீப்பே, அன்று கெமால் சொன்ன வார்த்தைகளைப் பொறுக்க மாட்டாதவனாய், கெமாலிடமிருந்து பிரிந்து சென்று விட்டான். அன்றுமுதல் இவன் கெமாலின் பரம விரோதியாகி விட்டான். பார்லிமெண்ட் தேர்தலில் இவன் ஓர் அபேட்சகனாய் நின்று வெற்றி பெற்று, பார்லிமெண்ட்டில் கெமாலின் எதிர்க் கட்சியில் சேர்ந்து கொண்டான். அப்பொழுதிருந்தே கெமா லின் கோபப் பார்வை இவன் மீது விழுந்து விட்டது. கெமாலைக் கொலை செய்ய வேண்டுமென்ற சூழ்ச்சியில், அரீப்பே உண்மையில் சம்பந்தப் பட்டிருந்தானா அல்லது, கெமாலின் பக்தர்கள், அரீப் பேயை இந்தச் சூழ்ச்சியில் சம்பந்தப்படுத்தி விட்டார்களா வென்பது நமக்குத் தெரியாது. அஃது இதயம் திறந்து பேசின கெமாலுக்கும் அரீப் பேயுக்குந்தான் தெரியும். ஆனால் அவர்கள் இருவருமே இறந்து விட்டார்கள். 3. அன்றாட வாழ்க்கையிலும் கூட துருக்கி அசைய ஆரம்பித்துவிட்டது. சமுதாய வாழ்வின் ஒவ்வோர் அமிசத்திலும் சீர்திருத்தங்கள் நடைபெற்றன. இதற்காக ஒரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டது. பார்லிமெண்ட்டும் இதனை உடனே அங்கீகரித்தது. சாதாரணமாக வெளிப்பார்வைக்கு மிகச் சிறிய விஷய மாயிருக்கலாம். ஆனால், அதுவே தேசீய வாழ்வைக் குலைக்கக் கூடிய தாகவோ, அல்லது தேசீய கௌரவத்தை உயர்த்தி வைக்கக் கூடிய தாகவோ இருக்கலாம். எனவே, கெமால், சிறிய விஷயமென்றும் பெரிய விஷயமென்றும் பாகுபாடு செய்யாமல், ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தினான். துருக்கிக்குப் புதிய ஜீவகளை கொடுக்கவேண்டுமென்பது இவன் நோக்கமல்லவா? முதலில் சில சில்லரைச் சீர்திருத்தங்களைப் பற்றிக் கூறி விட்டு, பிறகு பெரிய விஷயங்களுக்குச் செல்வோம். அங்கோரா தேசீய பார்லிமெண்ட் கட்டடத்தின் முகப்பில், குர் - ஆனிலிருந்து ஒரு வாக்கியம் பொறிக்கப்பட்டிருந்தது. இஃது எடுக்கப்பட்டு, இதற்குப் பதில், ஜனங்களாலேயே அரசாங்கம் நடைபெறுகிறது என்ற வாக்கியம் துருக்கிய பாஷையில் பொறிக்கப்பட்டது. சம்பாஷணைகளின் போது, என்னென்ன விதமான மரியாதைச் சொற்களை வழங்க வேண்டும், எந்தெந்த மாதிரி மரியாதைகளைச் செய்ய வேண்டும், ஒருவரை மற்றொருவருக்கு எவ்வாறு அறிமுகப் படுத்தி வைக்கவேண்டும், ஒருவரிடமிருந்து விடை பெற்றுக் கொள் வதானால் என்ன சொல்ல வேண்டும், பெரியோர்களை வணக்கஞ் செய்வது எப்படி, சிறியோர்கள் செய்யும் வணக்கத்தைப் பெரி யோர்கள் அங்கீகரிப்பதெப்படி முதலிய அன்றாட விவகாரங்களில் ஓர் ஒழுங்கு இருக்க வேண்டுமென்று வரையறுக்கப்பட்டது. இலாமிய சம்பிரதாயப்படி மூன்று முறை குனிந்து சலாம் செய்கிற பழக்கம் தடுக்கப் பட்டது. அதற்குப் பதில் தலையிலுள்ள தொப்பியைச் சிறிது உயர்த்திக் காட்டவோ, அல்லது ஐரோப்பிய முறையில் கை குலுக்கவோ செய்ய வேண்டுமென்று விதிக்கப் பட்டது. அரசாங்கக் காரியாலயங்களில் அன்னியர்கள் யாரேனும் அலுவலாக வந்தால் அவர்களுக்குக் காபி கொடுத்து உபசரிப்பது பழைய சம்பிரதாயம். காரியமாக வந்தவர்கள் காபி குடித்துக் கொண்டிருந்தால், வேலை சுறுசுறுப்பாக நடக்குமா? இந்தப் பழக்கம் சட்ட பூர்வமாக நிறுத்தப்பட்டது. நாம் நீளத்தை எப்படி மைல் கணக்கில் அளக்கிறோமோ, அப்படியே பிரெஞ்சுக்காரர்கள் மீட்டர் கணக்கில் அளப்பார்கள். இந்த மீட்டர் அளவையையே துருக்கியில் அமுலுக்குக் கொண்டு வந்தான் கெமால். வருஷம், மாதம், தேதி முதலியவைகளையும் ஐரோப்பிய முறையில் மாற்றியமைத்தான். காலை சூரியோதய மானதிலிருந்துதான் ஒரு நாள் கணக்கிடப்பெற்று வந்தது. பழைய துருக்கியில் இதை மாற்றி, ஐரோப்பிய முறையில் இரவு பன்னிரண்டு மணிக்கு மேலிருந்துதான் நாள் ஆரம்பமாகிறதென்று தீர்மானிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை ஓய்வு நாளாக இருந்தது, ஞாயிற்றுக்கிழமையாக மாற்றியமைக்கப்பட்டது. துருக்கியருக்குள் பலவித வகுப்புப் பிரிவுகள் இருந்தன. இந்தப் பிரிவுகளின் பெயரைக்கொண்டு யாரையுமே அழைக்கூடா தென்றும், துருக்கியர்கள் என்றே அனைவரும் அழைக்கப்பட வேண்டுமென்றும் விதி ஏற்படுத்தப்பெற்றது. இதன்மூலம் துருக்கியர்களின் ஒற்றுமை உணர்ச்சி வலுப்பெறத் தொடங்கியது. வீதிகளில் பிச்சையெடுப்பவர்கள் குற்றவாளிகளாகக் கருதப் பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள். பிச்சைக்காரர்களுக்கென்று தனி விடுதிகள் ஏற்படுத்தப்பெற்றன. தேக திடமுள்ளவர்கள், பிச்சை யெடுக்கக் கூடா தென்று தடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஏதேனும் ஒரு வேலை கொடுக்கப்பட்டது. அங்கவீனர்கள், பைத்தியக்காரர்கள் முதலியவர்களைப் பார்த்துச் சிரிப்பதும், பரிகாசம் செய்வதும் தணடனைக்குரிய குற்றங்களாகக் கருதப்பட்டன. இவர்கள் நமது இரக்கத்திற்கும் அநுதாபத்திற்குமன்றோ உரியவர்கள்? இவர்களைப் பார்த்துப் பழிப்பதும் ஏளனம் செய்வதும் எத்தகைய கொடுமை யான செயல்! விவாகம் செய்து கொள்ள விரும்பும் ஆணும் பெண்ணும், பரபரம் காதல் கொண்டு கருத்தொருமித்துவிட்டால் மட்டும் போதாது; பெற்றோர் களின் சம்மதம் இருந்தால் கூட விவாகம் செய்து கொள்ளள முடியாது. ஆனால் விவாகம் செய்து கொள்ளப் போகும் ஆணும் பெண்ணும், தேகாரோக்கியமுள்ளவர்களென்று தக்க வைத்தியர்களிடமிருந்து சர்ட்டிபிகேட் பெறவேண்டும். பிறகுதான் இவர்கள் விவாகம் செய்து கொள்ளலாம். தேகாரோக்கிய மில்லாதவர்கள் விவாகம் செய்து கொள்ளக் கூடாது. விவாக மென்பது, மதச் சடங்கென்றோ, தெய்விக சம்மதம் பெற்ற ஒரு பிணைப்பென்றோ கெமால் கருதினானில்லை. ஆணும் பெண்ணும் சேர்ந்து தேசத்திற்குச் செய்ய வேண்டிய கடமைக்குத் தூண்டுகோலா யிருப்பதுவே இந்த விவாகம் என்பது கெமாலின் கருத்து. துருக்கியில் எப்பொழுதுமே மதத்திற்கு ஒருவித ஆதிக்கம் இருந்து வந்ததல்லவா? இந்த மதத்தின் பெயரால் அநேக தாப னங்கள் ஏற்பட்டிருந்தன. இவைகளுக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தன. நாட்டின் பெரும்பாலான செல்வம் இவைகளிடத்தில் முடங்கிக் கிடந்தது. இந்த மத தாபனங்களைச் சேர்ந்தவர்கள், பாமர ஜனங்களின் குருட்டு நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்டு, அட்டைபோல் சமுதாயத்தின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு வந்தார்கள். வளர்ந்துகொண்டு வரவேண்டிய துருக்கியக் குடி யரசுக்கு, இந்த தாபனங்களும், இவற்றைச் சேர்ந்தவர் களும் பெரிய முட்டுக் கட்டைகள் என்று கெமால் கருதினான். எனவே, 1924ஆம் வருஷம் மார்ச் மாதம் 3ஆம் தேதி, தேசீய பார்லிமெண்ட்டில் ஒரு சட்டம் நிறைவேற்றி அதன் மூலம், இந்த மத தாபனங்களை யெல்லாம் கலைத்துவிட்டான். இவற்றின் சொத்துக்கள் யாவும் அரசாங்கத்திற்கு பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன. இந்த தாப னத்தைச் சேர்ந்தவர்கள், உழைத்துப் பிழைக்க வேண்டிய சாதாரண பிரஜைகளாகி விட்டார்கள். மத போதகர்களால் நடத்தப்பட்டு வந்த பள்ளிக் கூடங்கள் யாவும், கல்வி இலாகா மந்திரியின் நிரு வாகத்திற்குட்படுத்தப் பெற்றன. குடியரசுச் சட்டத்தின் இரண் டாவது பிரிவில், இலாமிய மதமே துருக்கிய ராஜாங்கத்தின் மத மென்று கூறப்பட்டிருந்த போதிலும், கெமால், மததாபனங்கள் சம்பந்தமாக இந்தச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்தது இவனுடைய அசாதாரணமான துணிச்சலையே காட்டுகிறது. 4. துருக்கி துருக்கியர்களுக்கே கெமால் தன்னுடைய அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தி லிருந்தே துருக்கி துருக்கியர்களுக்கே என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு வந்தானல்லவா? அதனை இப்பொழுது நடைமுறையில் கொணர ஆரம்பித்தான். கிறிதுவப் பாதிரி மார்கள் நடத்திவந்த பள்ளிக்கூடங்களுக்கு ஆதரவு காட்டமறுத்து விட்டான். துருக்கியப் பள்ளிக்கூடங்களிலேயே ஆரம்பக் கல்வி யனைத்தும் போதிக்கப்பட வேண்டுமென்றும் விதி ஏற்படுத்தினான். அந்நியர்களால் நடத்தப்பெறும் பள்ளிக் கூடங்களில், மத சம்பந்த மான பாடங்கள் போதிக்கப்படக் கூடாதென்று தடுத்துவிட்டான். இந்த அந்நியர் பள்ளிக்கூடங்களிலும், துருக்கிய பாஷை கட்டாய பாடமாகப் போதிக்கப் படவேண்டுமென்றும், துருக்கிய ஆசிரியர் களை (நூற்றுக்கு இத்தனை சதவிகிதமென்று) நியமனம் செய்து கொள்ள வேண்டுமென்றும் கட்டாயப்படுத்தினான். வியாபாரம் செய்யும் கம்பெனிகளில் நூற்றுக்கு இத்தனை சதவிகிதம் துருக்கியர்களின் மூலதனம் இருக்க வேண்டுமென்றும், அப்படியே டைரெக்டர்கள். சிப்பந்திகள் முதலியவர்களிலும் நூற்றுக்கு இத்தனை பேர் துருக்கியர்களா யிருக்க வேண்டுமென் றும், இந்தக் கம்பெனிகளின் கடிதப் போக்குவரத்துக்கள், கணக்கு வகையராக்கள் முதலிய யாவும் துருக்கிய பாஷையிலேயே இருக்க வேண்டுமென்றும் விதிகள் ஏற்படுத்தப் பெற்றன. குறிப்பிட்ட சில தொழில்களில் அல்லது உத்தியோகங்களில் துருக்கியர்கள் தவிர அந்நியர்கள் இருக்கக்கூடா தென்று வரையறுக்கப்பட்டது. உதாரண மாக, வக்கீல் தொழில், வைத்தியத் தொழில், பொம்மைச் சாமான்கள் செய்யுந் தொழில் முதலிய தொழில்களில் அந்நியர்களுக்கு இடமே இல்லாமற் செய்து விடப்பட்டது. துருக்கியக் கைத் தொழில் களுக்கு ஆதரவு அளிக்கும் பொருட்டு, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அதிக தீர்வை விதிக்கப்பட்டது. துருக்கியச் சாமான்களையே துருக்கியர்கள் வாங்க வேண்டுமென்ற பிரசாரம் நாடெங்கணும் அரசாங்க ஆதரவு பெற்று நடைபெற்றது. ராணுவம், போலீ முதலியவைகளுக்கு துருக்கியில் தயாரிக்கப் பட்ட உடைகளே அளிக்கப்பட வேண்டுமென்று அரசாங்கச் சட்ட மொன்று கூறியது. ஓநாய் உருவங்கொண்ட தபால் முத்திரைகள் அச்சடிக்கப் பட்டு செலாவணிக்கு வந்தன. 5. நீதி நிருவாகம் குர் - ஆனை அனுசரித்து நடைபெற்று வந்த நீதி நிருவாக மானது அடியோடு ரத்து செய்யப்பட்டு, ஐரோப்பிய முறையில் சட்டங்கள் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டன. இங்ஙனம் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், சிவில் விவகாரங்கள், கிரிமினல் விவகாரங்கள், வியாபார சம்பந்தங்கள் முதலிய அனைத்தையுமே தழுவியன வாயிருந்தன. 1926ஆம் வருஷம் பிப்ரவரி மாதத்திலிருந்து ஜூன் மாதத்திற்குள் கீழ்க்கண்ட சட்டங்கள் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டன:- 1. சிவில் கோட் - (விட்ஜர்லாந்து சட்டத்தை அனுசரித்து) 2. உரிமைச் சட்டம் - ( ) 3. வியாபாரச் சட்டம் - (ஜெர்மனி, இத்தாலிய சட்டங்களை அனுசரித்து) 4. கடல் போக்கு வரவு சட்டம் - (ஜெர்மன் சட்டத்தை அனுசரித்து) 5. பினல் கோட் - (இத்தாலிய சட்டத்தை அனுசரித்து) 6. கிரிமினல் கோட் - (ஜெர்மன் சட்டத்தை அனுசரித்து) 7. சிவில் புரோஸீஜர் கோட். இந்தச் சட்டங்களை அனுசரித்தே இப்போழுது துருக்கியில் நீதி நிருவாகம் நடைபெறுகிறது. ஏழை மக்களுக்கு அதிகப் பணச் செலவில்லாமல் நீதி கிடைக்குமாறு பல சௌகரியங்கள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. 1934ஆம் வருஷத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்குப்படி, துருக்கியில் 677 நீதி தலங்கள் இருந்தன. சிவில் கேகளும், கிரிமினல் கேகளுமாக வருஷத்தில் சுமார் பத்து லட்சம் கேகள் விசாரிக்கப்பட்டு பைசல் செய்யப்படுகின்றன. மேலே கூறப்பட்ட நீதி தலங்களுக்கெல்லாம் மேற்பட்ட பிரதம நீதி தலம் ஒன்று உண்டு. இது பத்துப் பிரிவுகளை யுடையது. கான்டாண்டி நோபிளிலும் அங்கோராவிலும் சட்டக் கல்லூரிகள் அமைக்கப்பெற்று அங்கு அநேக மாணாக்கர்கள் சட்டப் பயிற்சி பெறுகிறார்கள். இது தவிர, அரசாங்கச் செலவில் இளைஞர் பலர் அந்நிய நாடுகளுக்குச் சென்று சட்ட விவகாரங் களைக் கற்றுக் கொண்டு வந்து, அதனைத் தங்கள் நாட்டு நலனுக்கு உபயோகப்படுத்துகிறார்கள். சட்ட சம்பந்தமான விவகாரங்களில் துருக்கிய திரீகள் பூரண பங்கெடுத்துக் கொள்கிறார்கள். பலர் நீதிபதிகளாகவும் நியாயவாதிகளாகவும் வேலை செய்கிறார்கள். நூற்றுக்கணக்கான பெண்கள் சட்டக் கல்லூரிகளில் படிக்கி றார்கள். 6. கல்வித் துறையில் எல்லாவற்றையும்விட முக்கியமான கல்விச் சீர்திருத்த விஷயத் தில் கெமால் அதிக கவனஞ் செலுத்தினான். கல்வியினாலல்லவா ஒரு தேசம் அதிகார பலம் பெறுகிறது? செழுமையடைகிறது? முன்னேறிச் செல்கிறது? ஆகையால் ஜனங்களின் அறியாமையைப் போக்கத் தீவிரமான முயற்சிகள் எடுத்துக்கொண்டான். நூற்றுக்குப் பத்து பேர் கூட எழுதப் படிக்கத் தெரியாத ஜனங்களுக்கு எளிய முறையில் கல்வியைப் புகட்ட என்ன வழியென்று ஆலோசித்தான். மேனாட்டுப் பாஷைகளின் எழுத்துக்களையெல்லாம் தானே ஆராய்ச்சி செய்தான். இந்தச் சமயத்தில், மத்திய ஆசியாவில் வசித்து வந்த ருஷ்யப்பிரஜைகளான தார்த் தாரியர்கள், லத்தீனிய எழுத்துக் களிலேயே தங்கள் பாஷையை எழுத வேண்டுமென்று சோவியத் ருஷ்ய அரசாங்கத்தார் தீர்மானித்திருந்த செய்தியும் இவனுக்குத் தெரிந்தது. அராபிய முறையைப் பின்பற்றி வலப் பக்கத்திலிருந்து இடது பக்கமாக எழுதப் பெறும் துருக்கிய பாஷையின் ஓசை நயங் களுக்கேற்ற மாதிரியான லத்தீனிய எழுத்துக்களைத் தயார்ப்படுத்தி னான். இதில் இவன் முதலில் புலமை சம்பாதித்துக் கொண்டான். ஒரு புதிய இயக்கத்தை எப்படி, எந்தச் சந்தர்ப்பத்தில் ஆரம்பிக்க வேண்டுமென்ற நுணுக்கங்களெல்லாம் கெமாலுக்கு நன்கு தெரியு மல்லவா? 1928ஆம் வருஷம் கோடை காலத்தில், இவன் கான்டாண்டி நோபிளுக்கு விஜயஞ் செய்தான். மந்திரிகள், அரசாங்க உத்தியோகதர்கள் முதலிய பலரையும் அங்கு வந்திருக்கு மாறு ஏற்பாடு செய்தான். 1919ஆம் வருஷத்திற்குப் பிறகு இவன் முதல் முதலாக இப்பொழுதே கான்டாண்டிநோபிளுக்கு விஜயஞ் செய்தானாதலின், கான்டாண்டிநோபிள் வாசிகள் இவனை மகத்தான ஆடம்பரத்தோடும் உற்சாகத்தோடும் வரவேற்று உபசரித் தார்கள். இவர்கள் காட்டிய இந்த உற்சாகமானது, எந்த விதமான புதிய சீர்திருத்தத்தைச் சொன்னாலும் அதனை உடனே ஏற்றுக் கொள்வார்கள் போலிருந்தது. கான்டாண்டிநோபிள் அரண்மனையில் ஒரு மகாநாடு கூட்டினான் கெமால். இதற்குச் சமூகத்திலுள்ள பலதிறப்பட்ட அந்ததுள்ளவர்களும் - ஆண் பெண் உள்பட பலரும் வந்திருந்த னர். கெமாலின் உத்தரவுப்படி மேடை மீது ஏற்கனவே ஒரு கரும் பலகையும் சாக்குத்துண்டும் வைக்கப் பட்டிருந்தன. கெமால், மேடை மீதேறி நின்று கொண்டு, பயிற்சி பெற்ற ஓர் ஆசிரியன் மாதிரி புதிய லத்தீனிய எழுத்துக்களைக் கரும்பலகையில் எழுதிக்காட்டி, இந்த எழுத்துக்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருவதினால் ஏற்படும் சௌகரியங்களையெல்லாம் விளக்கிக் கூறினான். ஜனங்கள் இந்த எழுத்துக்களை உற்சாகத்தோடு கற்றுக்கொள்ளத் தொடங்கி னார்கள். கெமால், இதனோடு திருப்தியடையவில்லை. கரும் பலகை சகிதம், சாக்குத்துண்டும் கையுமாக நாடெங்கணும் சுற்றுப் பிரயாணஞ் செய்து, ஜனங்களுக்கு இந்தப் புதிய எழுத்துக்களைக் கற்றுக் கொடுத்தான். காஜியே நேரில் வந்து பாடங்கற்றுக் கொடுக்கிற போது, யார்தான் உற்சாகத்தோடு பாடங் கற்றுக்கொள்ள மாட்டார்கள்? வயோதிகர் களெல்லோரும் சிறு பிள்ளைகள் போல் லேட்டும் பலப்பமும் எடுத்துக் கொண்டு புதிய எழுத்துக்களை எழுதப் பழகினார்கள். தாய்மார் களெல்லோரும் தங்கள் குழந்தை களுக்குப் புதிய எழுத்துக்களைச் சொல்லிக் கொடுக்கவேண்டுமே யென்ற ஆவலினால் லத்தீனிய எழுத்துக் களில் சிரத்தை காட்டி னார்கள். ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு பள்ளிக்கூடம்; ஒவ்வொரு சர்வ கலாசாலை; கெமால், பிரதம ஆசிரியன்! 1928ஆம் வருஷம் நவம்பர் மாதம் 3ஆம் தேதி, லத்தீனிய எழுத்துக்களிலேயே துருக்கிய பாஷை எழுதப்படவேண்டுமென்ற சட்டம் தேசீய பார்லிமெண்ட்டில் நிறைவேற்றப்பட்டது. புதிய எழுத்துக்களை ஒழுங்காகக் கற்றுக் கொள்வதற்கென்று ஆங் காங்குப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. நாற்பது வயதுக்குட் பட்ட எல்லாத் துருக்கியர்களும் இந்தப் பள்ளிக்கூடங்களில் படிக்க வேண்டுமென்று விதி ஏற்படுத்தப் பெற்றது. இந்த விதியை மீறியவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் சிறை யிலுள்ள கைதிகள், லத்தீனிய எழுத்துக்களில் துருக்கிய பாஷையை எழுதக் கற்றுக் கொள்ளாவிட்டால் விடுதலை கிடையாதென்று கூறப் பட்டது. கல்வி பயிலாதவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்பதைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்குக் கட்டாயமாகக் கல்வி போதிக்கும் படி, செய்வது போலீஸாரின் வேலையாயிருந்தது. துருக்கியின் கல்விமுறை, தேச நலன் ஒன்றனையே குறிக் கோளாகக் கொண்டு அமைக்கப்பட்டது. பிள்ளைகளின் தேகப் பயிற்சியும் மனப் பரிபக்குவமும் ஒருங்கே கவனிக்கப்பட்டு வரு கின்றன. உதை பந்தாட்டம், டென்னி முதலிய மேனாட்டு விளை யாட்டுக்களில் ஆண்களும் பெண்களும் தேர்ச்சி பெற்று வருகி றார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆரம்பக் கல்வியானது கட்டாய மாக்கப்பட்டது. ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் தவிர மற்ற உயர்தரப் பள்ளிக்கூடங்களில் மதக் கல்வி போதிக்கப்படுவதில்லை. சுல்தானிய ஆட்சியின் கீழ் எந்த இரண்டு பாஷைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ அந்த அரபிபாஷையும் பாரசீக பாஷையும் தற்போதைய துருக்கியப் பள்ளிக்கூடங்களில் கற்றுக் கொடுக்கப் படுவதேயில்லை. மற்றும் கல்வி புகட்டும் விஷயத்தில் ஏழைக ளென்றும் பணக்காரர்களென்றும் வேற்றுமை பாராட்டப்படுவ தில்லை. அனாதைக் குழந்தைகளுக்கு இலவசமாகவே கல்வி போதிக்கப்படுகிறது. புதிய கல்வி முறையானது, ஜனங்களிடத்தில் எவ்வளவு தூரம் பரவியிருக்கிறதென்பதைச் சில புள்ளி விவரங்களினால் மட்டும் தெரிவிப்போம். 1923 - 1924ஆம் வருஷத்தில் மொத்தம் 3,58,548 பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று படித்து கொண்டிருந் தார்கள். ஆனால் 1935 - 1936 -ஆம் வருஷம் 7,70,527 பேர் பள்ளிக் கூடங்களுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். அரசாங்க வரவு செலவுத் திட்டத்தில் பிரதி வருஷமும் கல்விக்கென்று அதிகமான தொகை ஒதுக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடங்களை நிறுவி அவைகளின் மூலமாக மட்டும் ஜனங்களுக்குக் கல்வியறிவைப் புகட்டுவதோடு கெமால் திருப்தி யடைய வில்லை. ஆங்காங்குப் புத்தகசாலைகளும் வாசகசாலை களும் தாபித்தான். இவை கல்வி இலாகாவின் மேற்பார்வையி லேயே நடை பெற்றன. புத்தகசாலைகளையும் வாசக சாலைகளை யும் கவனிப்பதற் கென்று தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். லத்தீனிய எழுத்துக்கள் துருக்கிய பாஷையில் எழுதப்பட வேண்டு மென்ற சட்டம் அமுலுக்கு வந்த பிறகு, துருக்கி முழுவதிலும் மொத்தம் 1,720 புத்தகசாலைகள் தாபிக்கப்பட்டன. சுமார் இருபது லட்சம் புத்தகங்களுக்கு அதிகமாக இந்தப் புத்தகசாலை களில் இருக்கின்றன. சிறு சிறு கிராமங்களில் கூட அமைக்கப்பட் டிருக்கும் இந்தப் புத்தக சாலைகளைக் கிராம ஜனங்கள் எவ்வளவு உற்சாகத்தோடு உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்! ஜனங்களின் அறிவு வளர்ச்சிக்காகப் பொருட்காட்சிச் சாலைகள் பல ஆங்காங்கு நிறுவப்பட்டிருக்கின்றன. கான் டாண்டி நோபிளின் புராதன மசூதியென்று புகழ் பெற்றிருந்த செயின் சோபியா மசூதி, சித்திரக் கலைகள் நிரம்பிய ஒரு பொருட் காட்சி சாலையாக மாற்றப்பட்டது. முக்கியமான சுமார் பதினைந்து நகரங்களில் பொருட்காட்சி சாலைகள் அமைக்கப் பட்டிருக் கின்றன. இளைஞர்களுக்குப் பரோபகார எண்ணத்தை இளமையி லிருந்தே ஊட்டும்பொருட்டு, சாரணர் இயக்கம் காணப்பட்டு, அஃது இப்பொழுது தேசீய பலத்துக்கு உறுதுணையாயிருந்து வருகிறது. பொதுவாகக் கூறுமிடத்து தற்போதைய துருக்கியக் கல்வி முறையானது, துருக்கிய சமுதாயம், துருக்கிய பார்லிமெண்ட், துருக்கிய ராஜாங்கம் ஆகிய இவைகளிடத்தில் இளைஞர்களுக்கு ஒரு மரியாதையை உண்டு பண்ணுவதாகவும், மற்றவர்களும் இந்த மரியாதையைச் செலுத்து மாறு செய்வதாகவும்1 அமைக்கப் பட்டிருக்கிறது. 7. இலக்கிய மறுமலர்ச்சி பின்னர் துருக்கிய பாஷையிலேயே ஒரு மறு மலர்ச்சி ஏற்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் துருக்கிய சரித்திரத்தையும் துருக்கிய பாஷையையும் சரியானபடி ஆராய்ச்சி செய்து, பழைய காலத்தில் என்னென்ன துருக்கியச் சொற்கள் வழக்கில் இருந்தனவோ அவற்றை யெல்லாம் அராபியச் சொற்களுக்குப் பதில் உபயோகத்திற்குக் கொண்டு வரும்படி செய்தான் கெமால். மதச் சடங்குகளின் போதும், தொழுகை முதலியன நடைபெறுங்காலங்களிலும் துருக்கிய பாஷையை உபயோகிக்க வேண்டுமென்று விதி ஏற்படுத்தினான். குர் -ஆன் துருக்கிய பாஷையில் மொழி பெயர்க்கப்பட்டது. விஞ்ஞானம் முதலிய சாதிரீய சம்பந்தமான சொற்களுக்கு, சர்வதேசங்களிலும் எந்தச் சொற்கள் பொதுவாக வழங்கப்படுகின்றனவோ அதே சொற்களை அப்படியே துருக்கிய பாஷையிலும் உபயோகிக்குமாறு செய்தான். இங்ஙனம் துருக்கிய பாஷையில் மறுமலர்ச்சி இயக்கத்தை ஒரே நாளில் கொண்டு புகுத்திவிடவில்லை கெமால். படிப்படியாகவோ, ஜனங்களின் மனத்தைப் பக்குவப்படுத்தி, அவர் களின் ஆதரவு பெற்று இலக்கிய விகாசத்தைக் கண்டான். திடீரென்று பள்ளிக்கூடங்களுக்குச் சென்று புதிய கல்வி முறை எவ்வாறு போதிக்கப்படுகிறதென்பதையும் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறதென்பதையும் பரிசீலனை செய்து பார்ப்பான். சுமார் பத்து வருஷத்திற்குள் துருக்கிய ஜனங்கள், புதிய கல்விமுறை யில் சகஜமாகப் பழகி விட்டார்கள். சிறந்த எழுத்தாளர்களுக்கு அரசாங்கத்தார் சன்மானமளித்து அவர்கள் மூலமாக நல்ல நூல்கள் வெளிவரச் செய்வதோடு கூட, அரசாங்கத்தாரே நவீன கருத்துக்கள் நிறைந்ததும், குடியரசு தத்து வங்களை விளக்கியும் பல நூல்களை வெளியிட்டு வருகின்றனர். விஞ்ஞான சம்பந்தமான பல நூல்கள் பிரசுரமாயிருக்கின்றன. பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் துருக்கிய பாஷையில் மொழி பெயர்த்து வெளியிடுவதில், துருக்கிய அறிஞர்கள் சிறிது கூடக் கூசுவதேயில்லை. துருக்கிய பாஷையிலும், துருக்கியர்களுடைய பழக்க வழக்கங் களிலும், அராபியச் சொற்களும், அராபியப் பழக்க வழக்கங்களும் புகுந்து கொண்டதை நாளா வட்டத்தில் களைந்து வந்த முயற்சி யானது, 1934ஆம் வருஷம் நவம்பர் மாதம் 26ஆம் தேதி ஓர் அரசாங்கச் சட்டமாகப் பரிணமித்தது. அராபிய, உதுமானிய சம்பிரதாயப்படி உபயோகிக்கப் பெற்று வந்த பெயர்கள், பட்டங்கள், பதவிகள் முதலியன துருக்கிய பாஷா சம்பிரதாயப்படியே உப யோகிக்கப்பட வேண்டுமென்று இந்தச் சட்டம் கூறியது. ஆகா, பாஷா, பே முதலிய பட்டப் பெயர்கள் மறைந்து போயின. திரீகள் ஹனூம் என்று அழைக்கப்படுவதில்லை. ஒவ்வொரு துருக்கிய ஆண் மகனும் பாய் என்றும், ஒவ்வொரு துருக்கியப் பெண்மணியும் பாயான் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஊர்ப் பெயர்களும் மாற்றப்பட்டன. சில உதாரணங்கள் வருமாறு:- பழைய பெயர் புதிய பெயர் அங்கோரா அங்காரா கான்டாண்டிநோபிள் இதாம்பூல் மிர்னா இமிர் காலிபோலி கெலிபோலு அட்ரியா நோபிள் எதிர்னே துருக்கியப் பெயர்களையே உபயோகிக்க வேண்டுமென்ற இந்தச் சட்டப்படி கெமாலும் தன் பெயரை மாற்றிக் கொண்டான். முதபா கெமால் என்ற இரண்டு சொற்களும் அராபியச் சொற்கள். ஆனால் அதிருஷ்டவசமாக, கெமால் என்ற அராபியச் சொல்லுக்குப் பதிலாக கமால் என்ற ஒரு துருக்கியச் சொல் அகப்பட்டது. இந்த கமால் என்ற சொல்லுக்கு பலவான் ஆயுத பாணி என்று பெயர். ஆகையால் இந்த கமால் என்ற பெயரையே தன் பெயராக அமைத்துக் கொண்டான் கெமால். அங்கோரா பார்லிமெண்ட்டினால், சக்கேரியா வெற்றிக்குப் பிறகு இவனுக்கு அளிக்கப்பட்ட காஜி என்ற அராபிய பட்டத்தையும் இவன் உபயோகிக்கவில்லை. ஐரோப்பிய நாகரிக சம்பிரதாயத்தையொட்டி ஒவ்வொரு துருக்கியனும். தனக்கென்று ஒரு குடும்பப் பெயரை வைத்துக் கொள்ள வேண்டுமென்று 1935ஆம் வருஷம் ஓர் அரசாங்க உத்தரவு பிறந்தது. 1937ஆம் வருஷ முடிவுக்குள் எல்லாத் துருக்கியர்களும் ஒவ்வொரு குடும்பப் பெயரை வைத்துக் கொண்டுவிட்டார்கள். உதாரணமாக, துருக்கியக் குடியரசுத் தலைமைப் பதவியில் அமர்ந் திருந்த இமெத் பாஷா இமெத் இனோனு என்று அழைக்கப் படுவது கவனிக்கத்தக்கது. இமெத் என்பது பெயர்; இனோனு என்பது குடும்பப் பெயர்.1 ஒரு நாட்டின் உன்னத வாழ்வுக்கு அறிகுறிகளாயிருப்பன, அந்த நாட்டின் சித்திரக் கலையும் சங்கீதக் கலையுமேயாகும். இந்த இரண்டும் சுல்தானியத் துருக்கியில் புறக்கணிக்கப்பட்டு வந்தன. கெமால் இந்த இரண்டு கலைகளுக்கும் புத்துயிர் கொடுத்தான். ஆங்காங்குச் சித்திரசாலைகளும், சங்கீதக் கழகங்களும் நிறுவச் செய்தான். அங்கோராவிலும், கான்டாண்டி நோபிளி லும் அநேக உருவச் சிலைகள், வெற்றிச் சின்னங்கள் முதலியன அந்நிய சைத்ரிகர்களுடைய உதவிகொண்டு நிறுவும்படி செய்தான். துருக்கிய இளைஞர்களுக்கு, அந்நிய சைத்ரிகர்களின் துணை பெற்றுச் சித்திரக் கலையைப் பயிலுவித்தான். இங்ஙனமே சங்கீதத்திற்கென்று அநேக பள்ளிக் கூடங்கள் ஏற்பட்டன. பள்ளிக்கூடத்தில், பிள்ளைகள் சங்கீத ஞானமுடைய வர்களா வென்று பரிசோதிக்கப்பட்டார்கள். திறமையான மாணாக் கர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சங்கீத வித்துவான்கள், அரசாங்கத்தினரால் சன்மானிக்கப்பட்டு கௌரவப்படுத்தப் பட்டார்கள். ஐரோப்பியத் தலைநகரங்களில் இப்போது துருக்கிய சங்கீத வித்துவான்கள் அதிகமாகப் பாராட்டப்பட்டு வருகிறார்கள். இங்ஙனமே நாடகக்கலையும் அபிவிருத்தி செய்யப்பட்டது. அங்கோராவிலும், கான்டாண்டி நோபிளிலும் அரசாங்க நாடக மண்டபங்கள் நிறுவப் பெற்று, இவற்றில் உயர்தரமானதும் துருக்கியின் தேசீய வாழ்வைப் பிரதிபலிக்கக்கூடியதுமான நாடகங்கள் நடிக்கப் பெறுகின்றன. ஒரு தேசத்திலே நடைபெறுகிற பத்திரிகைகளைக் கொண்டு, அந்தத் தேசத்தின் பரிசுத்த வாழ்வு, ஜனங்களின் திருப்தியான மனப்பான்மை, பொருளாதார முன்னேற்றம் முதலியவைகளைத் தெரிந்துகொள்ளலாம். நவீன துருக்கியில் பத்திரிகைகளுக்குப் பூரண சுதந்திரம் அளிக்கப் பட்டிருக்கிறது. பத்திரிகைகளும் மிகக் கௌரவமான முறையிலேயே நடைபெறுகின்றன. ஐரோப்பிய முறையிலே இவற்றின் அமைப்பு முதலியன இருக்கின்றன. ஐனங் களுக்குப் பத்திரிகைகளைப் படிக்க வேண்டுமென்ற. ஆவலும் அதிகப் பட்டிருக்கிறது. பத்திரிகைகளுக்குப் பல இடங்களி லிருந்தும் செய்திகளை அனுப்புவதற்கென்று ராய்ட்டர், அசோசியே டெட் பிர முதலிய தாபனங்கள் இருக்கிற மாதிரி, துருக்கிய செய்தி தாபனம் ஒன்று (Ajans Anadolu) இருக்கிறது. இப்பொழுது துருக்கிய பாஷையில், தினசரிப் பத்திரிகைகள், வாரப் பத்திரிகைகள், மாத சஞ்சிகைகள் உள்பட 216 பத்திரிகைகள் வெளியாகின்றன. 8. பொருளாதார முன்னேற்றம் இனி, பொருளாதார சம்பந்தமான சீர்திருத்தங்களைப் பற்றிக் கவனிப்போம். 1923ஆம் வருஷம் ஜுலை மாதம் 24ஆம் தேதி லாஸேன் ஒப்பந்தம் நிறைவேறிய தினத்திலிருந்ததுதான், துருக்கியின் பொருளாதார வாழ்வும் ஆரம்பமாகிறதென்று சொல்ல வேண்டும். வியாபாரம், கைத்தொழில் முதலிய துறைகளில் அந்நியர்களுக்கு இடமில்லாமல் செய்துவிட்டது, ஆரம்பத்தில் துருக்கிக்குச் சிறிது கஷ்டமாகவே இருந்தது. ஆனால்; இந்தச் சங்கடங்களையெல்லாம் எதிர் பார்த்ததுத்தான், கெமால் துருக்கி துருக்கியர்களுக்கே என்ற தத்துவத்தைப் பொருளாதாரத் துறையிலும் கொண்டு புகுத்தினான். தேசத்தின் வியாபாரத்தையும் கைத்தொழில்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு, அந்நியர்களுக்குச் சலுகைகள் கொடுத்துவிடுவது, பின்னர் தேசீய வாழ்வுக்கே ஆபத்தாக வந்து முடிகிறதென்பதைக் கெமால் நன்குணர்த்திருந்தான். புதிய கைத்தொழில்களை தாபிக்கவும், ஏற்கனவேயுள்ள கைத்தொழில்களை நவீன முறையில் சீர்திருத்தியமைக்கவும், வியாபார அபிவிருத்திக்கான ஏற்பாடுகளைச் செய்யவும் நிரந்தரப் பொருளாதாரக் கமிட்டி யொன்று அங்கோராவில் தாபிக்கப் பட்டது. இதில் பலதுறை நிபுணர்கள், அங்கத்தினர்களாக நியமிக் கப்பட்டார்கள். இவர்கள் அவ்வப்பொழுது அரசாங்கத்திற்குப் பொருளாதார சம்பந்தமான ஆலோசனைகள் சொல்லி வருகி றார்கள். எந்த விதமான பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கும் முக்கிய மான தேவையாயிருப்பது பணமல்லவா? இந்தப் பணத்திற்காக, துருக்கியை அந்நியர்களிடம் ஒப்படைக்கக் கெமால் விரும்ப வில்லை. உன்னிடத்திலுள்ள பணத்தைச் செலவழி. கடன் வாங்கின பணம் பணமாகாது என்பது ஒரு பழைய துருக்கியப் பழமொழி. இதன்படியே கெமாலிய அரசாங்கம் நடந்துவந்தது. பண சம்பந்தமாக ஜனங்களுக்குப் போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும்பொருட்டு ஆங்காங்கு ரொக்கலேவாதேவி பாங்குகளும், விவசாயிகளுக்குச் சௌகரியமான நில அடமான பாங்குகள், விவசாய பாங்குகள் முதலியனவும், கைத்தொழில் பாங்குகள் பலவும் தாபிக்கப்பட்டன. 1924ஆம் வருஷம் தாபிக்கப்பட்ட இஷ் பாங்க் என்ற தாபனத்திற்கு இப்பொழுது 42 கிளைகள் இருக் கின்றன. சுமேர் பாங்க் என்ற தாபனத்திற்கு 54 கிளைகளும் 205 ஏஜென்ஸிகளும் இருக்கின்றன. சென்ட்ரல் பாங்க் என்ற தாபனம் அரசாங்கப் பொக்கிஷத்தை வைத்துக்கொண்டும், நோட்டுகள் அச்சடித்து வழங்கிக்கொண்டும் தேசத்தின் நாணயத்தைக் காப்பாற்றி வருகிறது. இப்பொழுது துருக்கியர்களாலேயே நிருவகிக்கப்பட்டு வருகிற பாங்குகள் சுமார் நாற்பத்தைந்துக்குமேல் இருக்கின்றன. வியாபார அபிவிருத்திக்கு அடிப்படையாயிருப்பது ரோட்டு வசதிகளும் ரெயில் வசதிகளுமே என்பதைக் கெமாலிய அரசாங்கத் தார் நன்கு உணர்ந்து இதற்காவன செய்தனர். 1923ஆம் வருஷம் துருக்கியில் சுமார் 11,500 மைல்நீளமுள்ள ரோட்டுகளே இருந்தன. இவையும் போக்குவரத்துக்குச் சௌகரியமில்லாதிருந்தன. இவை யாவும் செப்பனிடப்பட்டன. புதிய ரோட்டுகளும் போடப்பட்டன. 1936ஆம் வருஷக் கடைசியில் ரோட்டுகளின் மொத்த நீளம் 25,000 மைல். இன்னும் ஒவ்வொரு வருஷமும் புதிய ரோட்டுகள் போடப் பட்டு வருகின்றன. 1923ஆம் வருஷத்தில் சுமார் இரண்டாயிரம் மைல் நீளத்திற்கே இருந்த ரெயில் பாதைகள் 1936ஆம் வருஷம் 4,076 மைல் நீளத்திற்கு விதரிக்கப் பட்டிருக்கின்றன. 1923ஆம் வருஷம் குடியரசு தாபிதமானவுடன் பலர் தனிப் பட்ட முறையில் புதிய கைத்தொழில்களைத் தொடங்க ஆரம்பித் தார்கள். ஆனால், நாட்டில் போதிய மூலதனமில்லாத படியால் இவை செழிப்பாக ஓங்கவில்லை. எனவே அரசாங்கமே பல புதிய கைத்தொழில் தாபனங் களைத் தொடங்கியது; தனிப்பட்டவர் களுடைய தாபனங்களையும் விலை கொடுத்து வாங்கி விருத்தி செய்தது. கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வதற்கென்று 1934ஆம் வருஷம் ஐந்து வருஷத் திட்டம் ஒன்று தொடங்கப்பெற்றது. இதன் பயனாக இப்பொழுது, துருக்கி தனக்குத் தேவையான சர்க்கரை, சிமெண்ட்., பட்டுத் துணி வகைகள், தோல் சாமான்கள் முதலிய வற்றை உற்பத்தி செய்துகொள்கிறது. இதனோடு, சிமெண்ட் முதலிய பொருள்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. விவசாயப் பொருள்களின் உற்பத்தியை அதிகப்படுத்தவும் அநேக முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. உதாரணமாக 1927ஆம் வருஷம் 1,333,000 டன் கோதுமை உற்பத்தியாயிற்று. 1933ஆம் வருஷத்தில் இது 2,712,000 டன்னுக்கு அதிகமாயிற்று, நவீன முறையில் விவசாயஞ் செய்யக் கிராம ஜனங்களுக்கு அநேக அனுகூலங்கள் செய்து தரப்பட்டிருக்கின்றன. விவசாயப் பள்ளிக் கூடங்கள் முக்கியமான இடங்களில் தாபிக்கப்பட்டு நல்ல வேலை செய்து வருகின்றன. 1940ஆம் வருஷத்திற்குள், துருக்கி தனக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் தானே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய நிலைமைக்கு வந்துவிடுமென்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். 1937ஆம் வருஷம், மூன்று வருஷ வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன்மூலம் தேசத்தின் சுரங்கப் பொருள் களை அபிவிருத்தி செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கின்றன. நிலக்கரி, செம்பு, இரும்பு முதலிய பொருள்களைத் தோண்டி யெடுக்கப் புதிய தாபனங்கள் தோன்றி நல்ல வேலை செய்து வருகின்றன. மின்சார சக்தியை அதிகமாக உற்பத்தி செய்யவும், ரஸாயனப் பொருள்களை அதிகப்படுத்தவும் 1939ஆம் இரண்டாவது ஐந்து வருஷத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஜனங்களின் சுகாதார நிலைமையைப்பற்றியும் அரசாங்கம் கவனஞ் செலத்தாமலில்லை. வைத்தியக் கல்லூரிகளும் சுகாதாரக் கழகங்களும் பல நகரங்களில் தாபிக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்கச் சுகாதார இலாகாவில் 1923 - 24ஆம் வருஷத்தில் 623 உத்தியோகதர்கள் இருந்தார்கள் 1933ஆம் வருஷம் இந்த உத்தியோகதர்களின் எண்ணிக்கை 1,304 ஆகியது. இங்ஙனமே அரசாங்க ரஸாயன சாதிரிகளும் 566 பேரிலிருந்து 888 பேராயிருக் கிறார்கள். ஜனங்களின் வைத்திய வசதிகளுக்கென்று, பல முக்கிய இடங்களிலும் ஐரோப்பிய முறையில் ஆபத்திரிகள் தாபிக்கப் பட்டிருக்கின்றன. இதே மாதிரி, பிரசவ சாலைகளும், விசேஷ வியாதி களைக் கவனிக்கக்கூடிய தனி ஆபத்திரிகளும் தக்க நிபுணர் களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன. அனாதைகள், அங்கவீனர்கள் முதலியவர்களுக்கென்று தனிப் பள்ளிக்கூடங்களும் கைத்தொழில் தாபனங்களும் நிறுவப்பட்டு நல்ல வேலை செய்து வருகின்றன. தந்தி, தபால், டெலிபோன் முதலிய வசதிகள் குடியரசுத் துருக்கியில் பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன. 1923ஆம் வருஷம் துருக்கியில் மொத்தம் 158 தபாலாபீகளே இருந்தன. 1933ஆம் ஆண்டு இவை 493-க்கு அதிகமாயின. 1923ஆம் வருஷத்திலிருந்து 1933ஆம் வருஷத்திற்குள் - பத்து வருஷத்தில் - 1,462 மைல் நீளமுள்ள, புதிய தந்திக் கம்பிகள் போடப்பட்டு, தந்திப் போக்குவரவு வசதி அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சௌகர்யத்தினால் 1923 - வருஷத்தில் 8,800,000 உள்நாட்டுத் தந்திகள் பட்டுவாடா செய்யப் பட்டன. 1933ஆம் வருஷம் இவை 14,980,000 தந்திகளாக அதிகரித்தன. ஆகாய விமானங்கள் மூலம் தபால் போக்குவரத்துக்கள் இப்பொழுது அதிகரித்திருக்கின்றன. 1933ஆம் வருஷக் கடைசியில் இருபத்து மூன்று வெளிநாடுகளோடு துருக்கிய, ஆகாய விமானப் போக்குவரத்தின் மூலம் சம்பந்தம் வைத்துக் கொண்டிருந்தது. துருக்கியிலேயே ஆகாயப்படையும் கடற்படையும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஆகாய விமான சங்கங்கள் பல ஏற் பட்டு, இளைஞர்கள் உற்சாகமாக ஆகாய விமானப் பயிற்சியில் பழகி வருகிறார்கள். திரீகள் பலர் சிறந்த ஆகாய விமான ஓட்டிகளா யிருக்கிறார்கள். குக்ட்சென் என்ற ஒரு திரீ, இந்த ஆகாயப் படையில் ஓர் உயர்தர உத்தியோகம் வகிக்கிறாள். உலகத்திலேயே, இந்த மாதிரியான உத்தியோகம் வகிக்கும் திரீ இவள் ஒருத்திதான். கடற்படையில், உயர்தர அதிகாரிகள் அனைவரும் துருக்கியர்களே. தேவையான அளவுக்குத்தான் அந்நியர்களின் உதவி பெறப்படு கிறதே தவிர, அந்நியர்களை உயர்தர உத்தியோகதர்களாக நியமித்துக் கொள்ளும் வழக்கம் கைவிடப் பட்டிருக்கிறது. நவீன துருக்கியில். துருக்கியின் கைத்தொழில் அபிவிருத்தியில் பிரிட்டன் உதவி செய்து வருகிறது. பிரிட்டிஷ் நிபுணர்கள் உலோகச் சுரங்கங்களைக் கண்டுபிடிப்பதிலும் அவைகளை வேலை செய்வதிலும் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கமானது, துருக்கிய அரசாங்கத்திற்கு அதன் கைத்தொழில் அபிவிருத்திக்காக 16,000,000 பவுன் கடன் கொடுத்திருக்கிறது. இதன் மூலம் இரண்டாவது ஐந்து வருஷத் திட்டத்தைத் துருக்கி வெற்றிகரமாக நிறைவேற்றும் என்று அறிஞர்கள் நம்புகிறார்கள். இங்ஙனம் பொருளாதாரத் துறையில் பல அமிசங்களிலும் முன்னேற்ற மடைந்து வரும் துருக்கியைக் கண்டு பால்கன் நாடுகள் பொறாமைப்படுவதில் என்ன ஆச்சரியம்? 23 அந்நிய நாடுகள் தொடர்பு 1. மோசூல் பிரச்சனை கெமால் குடியரசுத் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்ட பிறகு, துருக்கிக்கும் அந்நிய நாடுகளுக்கும் ஏற்பட்ட தொடர்பு களைப்பற்றிச் சுருக்கமாகக் கூறுவோம். யுத்தத்தை ஒழிப்பதற்காக ஐரோப்பிய மகாயுத்தம் ஏற்பட்ட தென்று சொல்லப்பட்டது. வாதவம். ஆனால் அந்த யுத்த முடிவிலே ஏற்பட்ட வார்சேல் சமாதான உடன்படிக்கை, அநேக யுத்தங்களைச் சிருஷ்டி செய்து விட்டு, இப்பொழுது காகிதக் குப்பைக் கூடையிலே போய் தஞ்சம் புகுந்துவிட்டது. இங்ஙனம் ஏற்பட்ட யுத்தங்கள் எதிலும் துருக்கி கலந்து கொள்ளவேயில்லை. பழைய துருக்கிய சாம்ராஜ்யத்தின் ஏகாதிபத்திய எண்ணங்களில் ஒரு சிறிதளவாவது கெமாலிய துருக்கிக்கு இல்லாம லிருப்பதே இதற்கு முக்கிய காரணம். சக்கேரியா யுத்தம் முடிந்தவுடன், அங்கோரா தேசீய பார்லிமெண்ட்டில் கெமால் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் பின்வருமாறு குறிப்பிட்டான்:- நாம் யுத்தத்தை விரும்பவில்லை; சமாதானத்தையே கோரு கிறோம். துருக்கி, தனது எல்லைக்குள் பரிபூரண சுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்பதே நமது விருப்பம். இங்ஙனம் வாழும் உரிமையை, எல்லா நாடுகளுக்கும் ஐரோப்பா வழங்கியிருக்கிற தல்லவா? லாஸேன் மகாநாட்டின்போது மோசூல் சம்பந்தமான பிரச்னை, ஒருவித முடிவுக்கும் கொண்டுவரப்படாமல் தள்ளிவைக்கப்பட்ட தல்லவா? இந்தப் பிரச்னை 1926ஆம் வருஷம் வரையில் எவ்வித முடிவுக்கும் வராமல் இருந்து வந்தது. இந்தப் பிரச்சனை, சர்வதேச சங்கத்தின் ஆதரவில் நியமனம் செய்யப்பெற்ற ஒரு சர்வதேசக் கமிஷனின் பரிசீலனைக்கு விடப்பட்டது. இந்தக் கமிஷனானது, மோசூல் பிரதேசம் ஈராக் நாட்டைப் போய்ச்சேர வேண்டுமென்று தீர்மானித்தது. இதனை முதலில் துருக்கி அங்கீகரித்துக் கொள்ள வில்லை. ஈராக் நாட்டைப் போயடைவதென்றால், பிரிட்டிஷா ருடைய செல்வாக்கு வேரூன்றிய மாதிரிதானே என்று துருக்கி கருதியது. இதனைத் துருக்கி விரும்புமா? ஆனால் இந்தச் சமயத்தில் கெமால், பிரிட்டனுடன் விரோதித்துக் கொள்ளவும் விரும்ப வில்லை. கடைசியில் பிரிட்டனுக்கும் துருக்கிக்கும் ஏற்பட்ட உடன் படிக்கைப்படி மோசூல், ஈராக் நாட்டைப் போயடைந்தது. மோசூல் எண்ணெய்க் கிணறுகளிலிருந்து கிடைக்கிற வருமானத்தில் ஒரு பகுதி துருக்கிக்கு அளிப்பதாகப் பிரிட்டன் சம்மதித்தது. இந்த 1926- ஆம் வருஷ ஒப்பந்தப்படி, துருக்கிக்கும் ஈராக்குக்கும் எல்லை வகுக்கப்பட்டது.1 2. சமாதான நோக்கம் துருக்கிக்கும் கிரீஸுக்கும் ஏற்பட்டிருந்த பகைமையாவும் இப்பொழுது பனிபோல் பறந்து போயின. இரண்டு நாடுகளும் இப்பொழுது சிநேகப்பான்மையுடனேயே இருக்கின்றன. துருக்கி, துருக்கியர்களுக்கே என்பது கெமாலிய அரசாங்கத்தின் கொள்கை யாதலால், மற்ற நாடுகளின் உரிமைக்கு எவ்விதத்திலும் தன்னால் பங்கம் ஏற்படக்கூடாதென்பதில் துருக்கிய அரசாங்கம் கண்ணுங் கருத்துமாயிருக்கிறது. பால்கன் நாடுகள், அந்நியநாட்டு விவகாரங் களில் ஒன்றுபட்ட கொள்கையை அனுசரிக்க வேண்டுமென்பதில் துருக்கி அதிக பங்கெடுத்து வேலை செய்து இந்த ஒற்றுமையை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது. உலகத்தின் மற்றப் பாகங்களில் எத்தனையோ விதமான குழப்பங்கள் ஏற்பட்டு வந்த போதிலும், தென்கிழக்கு ஐரோப்பியப் பிரதேசங்களில் ஒருவித அமைதி ஏற்பட் டிருப்பதற்குத் துருக்கியே முக்கியகாரணம் என்று கூறவேண்டும். ஈரான், ஈராக், ஆப்கானிதானம் முதலிய கீழ் நாடுகளுடனும், பிரான், இத்தலி, பிரிட்டன் ஆகிய மேல்நாடுகளுடன் துருக்கி சிநேக ஒப்பந்தம் செய்து. கொண்டிருக்கிறது. 1932ஆம் வருஷம் துருக்கி, சர்வ தேச சங்கத்தில் சேர்ந்து கொண்டது. சங்கத்து நடவடிக்கைகளில் துருக்கியப் பிரதிநிதிகள் அதிக பங்கெடுத்துக்கொள்ள வில்லையானாலும், அதன் உயர்ந்த லட்சியத்தில் துருக்கிக்கு எப்பொழுதுமே நல்லெண்ணம் இருந்து வந்திருக்கிறது. ஆனால் இந்தச் சங்கமானது, வர வரச் செல்வாக்கு இழந்து வருவதையும், எந்த நோக்கத்தோடு இஃது ஆரம்பிக்கப் பட்டதோ அந்த நோக்கத்தைக் கடைப்பிடித்து நடந்து வராததை யும் துருக்கி கவனித்துக்கொண்டு வருகிறது. இதை, துருக்கியப் பிரதம மந்திரியான, சி. பாயார் பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறான்:- இந்தச் சர்வதேச தாபனம், தற்காலத் தேவைகளுக்குத் தகுந்தாற் போல் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். அதன் சமீப அனுபவங் களிலிருந்து அனுபவ சாத்தியமான முடிவுகளை அது காணவேண்டும். அப்பொழுதுதான், அது தன் வேலையைப் பூர்த்தி செய்ய முடியும். இதற்காக, துருக்கி தன்னாலான உதவியைச் சர்வ தேச சங்கத்திற்குச் செய்யத் தயார்.1 1935ஆம் வருஷம், இத்தாலிய படைகளும் யுத்த தளவாடங் களும் சூய வாய்க்கால் வழியாக எதியோப்பியாவுக்குச் சென்றன. எதியோப்பியாவுக்கும் இத்தலிக்கும் பலத்த யுத்தம் தொடங்கி விட்டது. சர்வதேச சங்கம், இந்த நெருக்கடியைச் சமரஸமாகத் தீர்த்துவைக்கும் சக்தியில்லாமலிருந்தது. இந்த எதியோப்பிய - இத்தாலிய யுத்தம் வலுக்குமானால் டார்டனெல் ஜலசந்தி, கான்டாண்டி நோபிள் ஆகிய இவை தாக்கப்படாமலிருக்கும் என்பதற்கு என்ன உறுதி என்று துருக்கி கேட்க ஆரம்பித்தது. எனவே லாஸேன் உடன்படிக்கையைத் திருத்தி யமைக்க வேண்டுமென்று கோரியது. எனவே, 1937ஆம் வருஷம் மாண்ட்ரியு என்ற நகரத்தில் துருக்கியின் விருப்பப்படி ஒரு மகாநாடு கூடியது. டார்டனெல் ஜலசந்தியும் அதன் இரு கரைப் பிரதேசங்களும் துருக்கியின் ஆதீனத்திற்குட்பட்டதென்ற கொள்கை அங்கீகரிக்கப்பட்டது. லாஸேன் உடன்படிக்கைப்படி, மேற்படி இருகரைப் பிரதேசங் களிலும் துருக்கியத் துருப்புகள் இருக்கக்கூடாதென்று விதிக்கப்பட் டிருந்த தல்லவா? இந்த மாண்ட்ரியு ஒப்பந்தத்திற்குப் பிறகு, துருக்கியத் துருப்புகள் இந்தப் பிரதேசங்களில் பிரவேசித்து, சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் காலிபோலி யுத்தத்தின்போது ஆக்கிர மித்துக் கொண்டிருந்த கோட்டை களில் போய் வசிக்கத் தொடங்கின. துருக்கி, தன் பழைய ஆதிக்கத்தை இந்தப் பிரதேசத்தில் நிலை நிறுத்திக்கொண்டது. 1937ஆம் வருஷ ஆரம்பத்தில் பெர்லின் நகரத்தில் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்றன. அதே சமயத்தில் இங்கிலாந்து மன்னனாகிய எட்டாவது எட்வர்ட், துருக்கிக்கு விஜயஞ்செய்து, காலிபோலி யுத்த தலங்களைப் பார்வையிட்டான். அப்பொழுது கெமால் அவனை வரவேற்று உபசரித்தான். இருவரும் போர் வீரர்கள்; யுத்த அனுபவம் நிரம்பப் பெற்றவர்கள்; ஜனங்களின் தொண்டர்கள்; அதற்காக அதிகார பதவியில் வீற்றிருந்தவர்கள். இருவரும் கான்டாண்டிநோபிளில் கைகுலுக்கிக் கொண்டது, பிரிட்டனுக்கும் துருக்கிக்கும் உள்ள சிநேகப்பான்மைக்கு முத்திரை வைப்பதுபோல் இருந்தது. பொதுவாகத் துருக்கியின் அந்நிய நாட்டுக் கொள்கையானது பிற நாடுகளுடன் செய்துகொண்டுள்ள சிநேக ஒப்பந்தத்தைக் கௌரவமாகப் பாதுகாப்பதும், பழைய நட்புகளை விருத்தி செய்து கொள்வதும், இன்னும் அதிகமான நாடுகளுடன் சிநேக ஒப்பந்தம் செய்து கொள்வதுமே யாகும். இந்த முறையைத் துருக்கி ஒழுங்காக அனுசரித்து வருகிறது. 24 அத்தா துர்க் 1. இடமும் பொருளும் அங்கோராவுக்கு அரை மணி நேரப் பிரயாண தூரத்தில் சாங்காயா என்ற ஒரு சிறு பிரதேசம் இருக்கிறது. இங்கு ஒரு சிறு குன்று. இதன்மீது ஒரு சிறு பங்களா. எவ்வளவு எளிய தோற்றத் துடன் காணப்படுகிறது இது? இந்தப் பங்களாவின்மீது கோபுரம் மாதிரி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. எதற்காக? துருக்கியக் குடியரசின் பிரசிடெண்டினுடைய வாசதலம் இது என்று புலப்படுத்துவதற்காக. இந்தப் பங்களாவைச் சுற்றி, சிறு சிறு கட்டடங்கள் பல காணப்படுகின்றன. இவைதான், கெமாலின் முக்கிய நண்பர்கள், உத்தியோகதர்கள் முதலியோர் வசிப்பதற் கென்று அமைக்கப் பட்ட ஜாகைகள். இவையனைத்தையும் ஒருங்கு சேர்த்துப் பார்க்கிறபோது, கி.பி. 13ஆவது நூற்றாண்டில் சுங்கேரியா மைதானத்தில் ஷா சுலைமான், தனது பரிவாரங்களுடன் வசித்திருந்த காட்சி, நமது அகக் கண் முன்னர் வந்து நிற்கிறது.1 ஷா சுலைமான் துருக்கிய சாம்ராஜ்யம் தாபிதமாவதற்கு அடி கோலினான்; கெமால், இந்த அதிவாரத்தின்மீது எழுப்பின கட்டடத்தைப் புனர் நிர்மாணம் செய்து அதில் மேனாட்டு நாகரிக விளக்கை ஏற்றி வைத்தான். இதுதான் வித்தியாசம். பங்களாவைச் சுற்றி என்ன அழகான பூந்தோட்டம்! அதில் எத்தனை விதமான நறுமலர்கள்! இங்குள்ள யாவுமே ஒரு புதிய ஜீவனைப் பெற்றுவிட்டதைப் போன்ற சந்தோஷத்தில் மூழ்கியிருப் பதாக நமக்குத் தெரிகிறது. பங்களாவுக்குள் சிறிது நுழைவோமா? இதன் எஜமானன் மிக எளிய வாழ்வை நடத்துவதிலே பிரியங் கொண்டவன் என்ற எண்ணம், உள்ளே பிரவேசித்தவுடன் நமக்குப் பட்டுவிடுகிறது. இதில் மொத்தம் பத்து அறைகள் தான் இருக் கின்றன. அறைகளில் அனாவசியமான மரச் சாமான்கள் கிடையாது. கீழே சித்திர வேலைப் பாடுகள் நிறைந்த கம்பளங்கள் விரிக்கப்பட் டிருக்கின்றன. ஒவ்வோர் அறையிலும், பூங்கொத்துகள் நிறைந்த தொட்டிகளை வேலைக்காரர்கள் தினந்தோறும் கொண்டு வைத்து அழகுபடுத்துகிறார்கள். இந்தப் பத்து அறைகளில் ஒரு பெரிய அறை இருக்கிறது. இங்கும் விசேஷமான நாற்காலி முதலிய மரச் சாமான் வகைகளோ, சுவரில் படங்கள் முதலியவைகளோ ஒன்றும் இல்லை. புராதன சுல்தான்களுடைய ஓரிரண்டு ஈட்டிகள் மட்டும் சுவரில் மாட்டப்பட்டிருக்கின்றன. அறையின் மத்தியில் ஒரு பெரிய மேஜை போடப்பட்டிருக்கிறது. இதன் மீது பச்சை விரிப்பு. ஒரு புறத்தில் பெரியதொரு கை நாற்காலி; இதன் எதிர்ப்புறத்தில், சில சிறிய நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. மேஜைக்கு அருகில் புதக அலமாரிகள் வரிசையாகக் காட்சியளிக்கின்றன. இதுதான், கெமால் தன் உத்தியோக அலுவல்களைக் கவனிக்கிற அறை. ஆடம்பரமாக வாழ்வதென்பது கெமாலுக்குப் பிடிக்காது. இவனுடைய முக்கியமான தேவைகள் மூன்று. அவை முறையே சுத்தமான காற்று, சிறந்த நூல்கள் , சங்கீதம். திறந்த வெளியிலே கெமால் மணிக்கணக்காக உட்கார்ந்து நூல்களைப் படிப்பான். அதில் சலிப்பே கொள்ளமாட்டான். அங்ஙனமே, இவன் ஆகாரம் அருந்துகிறபோது, இனிய சங்கீதத்தைக் கேட்டுக்கொண்டிருப்பான். இதற்காவன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆகாரத்தில் ஐரோப்பிய முறையில் பக்குவம் செய்யப்பெற்ற உணவுகளையும், துருக்கிய முறையில் பக்குவம் செய்யப்பெற்ற உணவுகளையும் மாறி மாறிச் சாப்பிடுவான். அப்படியே ஐரோப்பிய சங்கீதத்தையும் துருக்கிய சங்கீதத்தையும் மாறி மாறிச் சுவைப்பான். அடிக்கடி நாட்டியங்களாடுவதில் இவனுக்கு அதிக விருப்பம். தான் சுத்தமாய் இருப்பதோடு தன்னைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் சுத்தாமா யிருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பான். இதே மாதிரிதான் உடை விஷயத்திலும். பிள்ளைப் பருவத்திலிருந்தே தூய்மையாயிருக்க வேண்டுமென்பதில் இவன் விசேஷ அக்கரை செலுத்தி வந்தா னல்லவா? கெமாலுக்குச் சீட்டாட்டத்தில் அதிக பிரியம் உண்டு. அதிலும் போக்கர் என்ற விளையாட்டுத்தான் அதிகமாக ஆடுவான். குதிரை களைப் போஷிப்பதிலும் அவைகளின்மீது சவாரி செய்வதிலும் இவனுக்கு ஒரு விசேஷ சிரத்தை இருந்தது. ராணுவத்தில் சேவைக் காகச் சேர்ந்த காலத்திலிருந்தே இவன், தனக்கென்று சில குதிரை களைச் சொந்தமாக வாங்கி வைத்திருந்தான். குடியரசுத் தலைவ னாகி சாங்காயாவில் வசிக்கத் தொடங்கின பிறகு குதிரைத் தொழு வம் ஒன்று அமைத்து அதில் நல்ல ரகத்துக் குதிரைகளை வாங்கிப் போஷித்து வந்தான். தினந்தோறும் இவைகளைச் சென்று பார்வையிடுவான். குதிரைமீது வேகமாகச் சவாரி செய்வதில் இவனுக்கு அதிக விருப்பம். அப்படியே மோட்டார் வண்டியில் செல்வதானாலும் வேகமாகத்தான் செல்வான். கெமால் மிகத் தைரியசாலி. எவ்வளவு நெருக்கடியான நிலைமைகள் ஏற்பட்டபோதிலும், யுத்த களத்தில் குண்டுகள் தலைமீது போய்க் கொண்டிருந்தாலும் சிறிதுகூட அமைதி குலைய மாட்டான். ஒரு சமயம் காலிபோலி யுத்த களத்தில் துருப்புகளின் தற்காப்புக்கென்று தோண்டப்பட்டிருந்த ஒரு பள்ளத்தின் மேல் பாகத்தில் இவன் உட்கார்ந்திருந்தான். எதிரிகளின் பக்கத்திலிருந்து குண்டுகள் வந்து விழுந்தவண்ணமாயிருக்கின்றன. இவன்மீது கட்டாயம் குண்டு வந்து விழுமென்றும், உடனே வேறிடத்திற்குச் சென்றுவிடுதல் நல்லதென்றும் இவனுடைய சிப்பந்திகள் இவனுக்கு ஆலோசனை கூறினார்கள். ஆனால் இவன் இந்த ஆலோ சனையைக் கேட்கவில்லை. இப்பொழுது இந்த இடத்திலிருந்து போவது தவறு. என்னுடைய போர் வீரர்கள் என்னைப்பார்த்து என்ன நினைப்பார்கள்? என்று பதில் சொல்லி விட்டு, வாயில் ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு அலட்சியமாக உட்கார்ந்திருந் தான். இவனைச் சுற்றிக் குண்டுகள் விழுந்த வண்ணமாயிருக்கின்றன. இவன் மட்டும் இருந்த இடத்தைவிட்டு அசையவே இல்லை. குண்டுகளும், இவனைச் சுற்றி விழுந்தனவே தவிர இவனுக்கு ஒரு சேதத்தையும் விளைவிக்கவில்லை. இவ்வளவு தைரியசாலியாயிருந்போதிலும், கெமால் எந்தக் காரியத்திலும் துணிந்துபோய் விழமாட்டான். எதிலும் எச்சரிக்கை யாயிருப்பான். அதிமேதாவிகளைக்கண்டு இவன் சந்தேகிப்பான். ஒரு நிதானத்திற்குட்படாத எண்ணங்கள் இவனுக்கு உற்சாக மூட்டுவதில்லை. அன்றாட வேலைகளை இன்னின்ன நேரத்தில்தான் செய்வது என்ற ஒரு நியதியை இவன் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. எப் பொழுது - அஃது எந்த நேரமாயிருந்தாலும் சரிதான் - வேலை வருகிறதோ அப்பொழுதே அந்த வேலையைக் கவனித்து முடித்து விடவேண்டும். எத்தனை மணி நேரமானாலுஞ் சரிதான். வேலை நேரத்தில் ஆகாரம், நித்திரை முதலியவை ஒன்றுமே இவனுக்குத் தேவையில்லை. அநேக சமயங்களில் நல்ல மலேரியா ஜுரம் அடித்துக்கொண்டிருக்கும். அதற்காக வாயில் மருந்து மாத்திரை களைப் போட்டுக்கொணடிருப்பான். ஆனால் வேலையென்னவோ எப்பொழுதும்போல் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கும். சிறிது நேரங்கூடப் படுக்கமாட்டான். உழைப்பிலே, கெமாலை மிஞ்சிவிட யாராலும் முடியாது. நாட்கள் கணக்காக விடாது தொடர்ந்து வேலைசெய்த சம்பவங்கள் பல உண்டு. சிவா மகாநாட்டைக் கூட்டி வைத்த காலத்திலும், சக்கேரியா யுத்தத்தின் போதும் இவன் உழைத்த உழைப்பைத் துருக்கியர்கள் என்றுமே மறக்க மாட்டார்களல்லவா? 1927ஆம் வருஷம் அக்டோபர் மாதம், அங்கோரா தேசீய பார்லிமெண்டின் முன் இவன் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினான். இந்தப் பிரசங் கத்தைத் தினந்தோறும் ஆறு மணி நேர வீதம் ஆறு நாட்கள் விடாமல் செய்து முடித்தான்.1 இந்தப் பிரசங்கத்தை இவன் நாற்பத் தெட்டு மணிநேரம் உட்கார்ந்து இமெத் பெவ்ஸி முதலியவர் களின் துணைகொண்டு தயாரித்து முடித்தான். உலகத்திலே, இவ்வளவு நீண்ட பிரசங்கத்தை யாருமே இதற்கு முன் செய்ததில்லை யென்று அறிஞர்கள் கருதுகிறார்கள். கெமால் சாதாரணமாகக் காலையில் அதிக நேரங்கழித்தே படுக்கையிலிருந்து எழுந்திருப்பான். ஆனால் இரவில் அதிக நேரம் கண் விழித்திருந்து வேலை செய்வான். தன்னைப்போலவே தன் நண்பர்களும் கூடவே விழித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பான். துருக்கிய இலக்கியம், உலக இயக்கங்களில் ஒன்றாகக் கௌரவிக்கப்பட வேண்டுமென்பது கெமாலின் அபிலாஷை. இதற்காக இவன் அநேக அறிவுக் கழகங்களை தாபித்தான். துருக்கிய பாஷையின் தொன்மை, துருக்கிய சரித்திரத்தின் பெருமை இவைகளை விளக்கக் கூடிய நூல்களை அறிஞர்களைக் கொண்டு வெளியிடச்செய்தான். இதற்காகத் தன் சொந்தப் பணத்திலிருந்தும், அரசாங்கப் பொக்கிஷத்தி லிருந்தும் அதிக தொகை செலவழிக்கு மாறு செய்தான். கெமாலுக்கு விவசாயத்திலே அதிகமான விருப்பம் உண்டு. அங்கோராவுக்கருகில் இவனுக்குச் சொந்தமாகச் சுமார் ஒரு லட்சம் ஏக்கரா விதீரணமுள்ள நிலம் இருக்கிறது. இதில் ஒரு பாகத்தில், விவசாயப் பண்ணை ஒன்று ஏற்படுத்தி, அதில் விவசாய சம்பந்தமான எல்லாவித பரிசோதனைகளும் நடைபெறும்படி செய்திருக்கிறான். இங்கு நவீன முறையில் விவசாயத்தை எப்படிச் செய்யலாம் என்பன போன்ற காரியங்கள் நடைபெறுகின்றன. துருக்கிய அரசாங்க விவசாய இலாகாவுக்கு இந்தப் பண்ணை ஒரு முன் மாதிரியா யிருக்கிறது. கெமால், தன்பொழுதின் பெரும் பாகத்தை இந்தப் பண்ணையிலேயே கழிப்பான். துருக்கி, ஒரு விவசாய நாடு என்பதை இவன் நன்கு உணர்ந்திருந்தான். ஜனங்களில் ஐந்தில் நான்கு பேர் விவசாயிகள். ஆகையால் கெமால் விவசாய விஷயத்தில் அதிக கவனஞ் செலுத்தியதில் என்ன ஆச்சரியம்? கெமால், தனக்குப் பிற்காலத்தில் தன்னுடைய சொத்துக்கள் எவ்வாறு உபயோகிக்கப் பெற வேண்டுமென்பதைப் பற்றி ஓர் உயில் எழுதி வைத்துப் போயிருக்கிறான். இந்த உயிலின் விவரங்களைக் கொண்டு கெமால் எந்தெந்த விஷயங்களில் விருப்பங்கொண் டிருந்தான், யாராரிடம் பற்று வைத்திருந்தான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கெமால் சேமித்து வைத்திருந்த ரொக்கம், உயர்ந்த பொருள்கள் முதலியவைகளை குடியரசு ஜனக்கட்சிக்குக் கொடுத்து விட்டான். இவனுடைய பூதியில் ஒரு பாகம் இவனுடைய ஐந்து வளர்ப்புப் பெண்களுக்கும் போய்ச் சேர்ந்தது. துருக்கிய ஆகாயப் படையில் குக்ட்சென் என்று ஒரு பெண்மணி உயர்தர உத்தியோக பதவி வகிக்கிறாள். உலகத்திலேயே ஆகாயப்படை உத்தியயோகதரா யிருக்கிறவள் இவள் ஒருத்திதான். இவளுக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று மேற்படி உயிலில் கூறப்பட்டிருக்கிறது. தற்போதைய பிரசிடெண்ட் இமெத் இனோனுவின் இரண்டு குழந்தைகளுக்கும் உயர்ந்த முறையில் கல்வி கற்றுக்கொடுக்க ஒரு தொகை ஒதுக்கப் பட்டிருக்கிறது. மிகுதித்தொகையை! துருக்கிய பாஷா சரித்திர சங்கத்திற்குக் கொடுத்துவிட வேண்டுமென்று உயில் கூறுகிறது. 2. இல்லற வாழ்க்கை லதீபா ஹனூமை கெமால்விவாகம் செய்துகொண்ட பிறகு இருவரும் சுமார் இரண்டு வருஷ காலம் இனிதாக இல்லறம் நடத்தி னார்கள். துருக்கியப் பெண்கள் சமூகம், ஆண்களோடு சமமான அந்தது பெறும் விஷயத்தில் லதீபா பெரிதும் உழைத்தாள். ஆனால் இருவருக்கும் அடிக்கடி மன மாற்றங்கள் நிகழ்ந்து வந்தன. இருவருமே கட்டுப்படாத சுபாவமுடையவர்கள்; விட்டுக்கொடாத மனப்பான்மையர்; எடுத்துக் கொண்ட காரியத்தைச் சாதிப்பதில் முனைந்தவர்கள்; சுதந்திரமாக வாழ்வதில் பெருமை கொண்ட வர்கள். இந்த நிலையில் இருவரும் எப்படி ஒற்றுமைப்பட்டு வாழ முடியும்? இருவரையும் சாந்தப்படுத்தி வைக்கக் குழந்தையும் இல்லை. எனவே விவாகரத்து ஏற்பட்டு விட்டது. சாங்காயா பங்களாவில் வீட்டுக்கு எஜமானி யார்? லதீபா ஹனூம் அல்ல. இந்த தானத்தை இவளுக்குப்பிறகு வேறு யாரும் அபகரித்துக்கொள்ள வில்லை; அபகரித்துக் கொள்ளவும் கெமால் இடம் கொடுக்க வில்லை. விவாகரத்து ஏற்பட்டதும், லதீபா ஹனூம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பிரசங்கங்கள் செய்ய அழைக்கப்பட்டாள். ஆனால் துருக்கிய அரசாங்கம் இவளுக்குப் பிரயாண அனுமதிச் சீட்டுக் கொடுக்க மறுத்துவிட்டது. ஆனால் தனிப்பட்ட முறையில் ஐரோப்பாவில் பிரயாணஞ் செய்யலாமென்று அனுமதித்தது. இவளுக்கு ஜீவனாம்சமாகக் கெமால் ஐயாயிரம் பவுன் கொடுத்தான். சக்கேரியா யுத்தத்திற்கு முன்னர், சாங்காயாவில் கெமால் வசித்துக்கொண்டிருந்தபோது, பிக்ரியேஹனூம் என்ற ஒரு பெண் இவனுக்கு உதவி செய்ய வந்தாள். யுத்தத்தில் தாதி வேலை செய்யப் பழகுவதற்கென்று வந்த இவள், பின்னர் கெமாலைக் காதல் கொண்டாள். கெமாலும் இவள் மீது ஆசை வைத்தான். சாங்காயா பங்களாவை ஒழுங்குபடுத்தி, ஒரு வீட்டுக்குரிய கௌரவத்தை அதற்கு அளித்தவள் இந்த பிக்ரியே ஹனூம் தான். ஆனால் சிறிது காலங்கழித்து இவள் நோய்வாய்ப்பட்டு விட்டாள். கெமாலும் இவளைத் திரகரிக்கத் தொடங்கினான். இந்த நிலையில் கெமால் லதீபா ஹனூமை விவாகம் செய்துகொண்ட செய்தி இவளுக்குத் தெரிந்தது. ஆயினும் இவள் - இந்த பிக்ரியே ஹனூம் - கெமாலின் இருதயத்தின் ஒரு மூலையில் இருக்க விரும்பினாள். ஆனால் கெமால், இவளுக்கென்று தன் இருதய வாசலை அடைத்துவிட்டான் பிக்ரியே, பாவம், காச நோயால் கடைசியில் மாண்டு போனாள். இன்றும் துருக்கி, இவளுக்காகத் துக்கிக்கிறது. யாருடைய கட்டுப்பாட்டுக்கும் அடங்காத கெமால் தன் தாயார் ஜுபேதாவினிடத்தில் மாத்திரம் பரம பக்தியோடு நடந்து கொண்டு வந்தான். அவளுடைய ஆலோசனைகளை அடிக்கடி கேட்பான். அவளும் இவனுக்கு அநேக புத்திமதிகளைக் கூறுவாள். இவருக்கும் அடிக்கடி அபிப்பிராய வேற்றுமைகள் ஏற்படும். இதற் காகப் பலத்த வாக்குவாதம் செய்வார்கள். ஆனாலும் அவரவர் களுடைய மரியாதை எல்லைக்குட் பட்டுத்தான். சக்கேரியா யுத்தத்திற்கு முன்னரும் அதற்குப்பின்னரும் கெமா லுக்கு அநேகவிதமான எதிர்ப்புகளும் சங்கடங்களும் ஏற்பட்டன வல்லவா? அந்தச் சமயத்தில் - 1923ஆம் வருஷம் ஜனவரி மாதம் 26-ஆம் தேதி - ஜுபேதா இறந்துபோனாள். தாயாரின் மரணத் திற்காக கெமால் வருத்தப்பட்டான். ஆனால் கண்ணீர் விடவில்லை. 3. தன்னலமற்ற தன்மை கெமால் தன்னுடைய அதிகார பதவியைச் சுய நலத்திற்காக உபயோகித்தவன் அல்லன். தவிர, பிறருடைய அபிப்பிராயங் களுக்கு மதிப்புப் கொடாமல் தன்னிஷ்டப்படி காரியங்களைச் செய்கிறவனு மல்லன். ஒரு விஷயத்தைப் பற்றி இவன் ஒருவித அபிப்பிராயங்கொண்டு விட்டிருந்தாலும், அதற்காகப் பிறர் சொல்லுகிற அபிப்பிராயங்களைப் புறக்கணிக்கமாட்டான். அதற்கு மாறாக எதிர்க்கட்சியினருடைய அபிப்பிராயங்களைத் தெரிந்து கொள்ள ஆவல் கொள்வான். பார்லிமெண்ட்டில் எதிர்க்கட்சி ஒன்று இருக்க வேண்டுமென்பதே இவன் விருப்பம். இதைப்பற்றிச் சிறிது விரிவாக கூறுவோம். கெமாலியக் கட்சியான ஜனக்கட்சி 1934ஆம் வருஷம் சீர்திருத்தி யமைக்கப்பட்டது. கட்சியின் பெயரானது குடியரசு ஜனக்கட்சி என்று மாற்றப்பட்டது. இளைஞர்களுக்குக் கட்சியில் பொறுப்புள்ள பதவிகள் கொடுக்கப்பட்டன. ஜனங்களுடைய அபிப்பிராயங்களைச் சரிவரப் பிரதிபலித்து, அவர்களிடத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்வதற்குரிய ஒரு கருவியாகவே இந்தக் கட்சி இருந்து வரத் தொடங்கியது. 1935ஆம் வருஷம் துருக்கிய பார்லிமெண்ட்டின் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஜனக்கட்சி அங்கத்தினர்களைத் தவிர, ஜனங்களிடத்தில் செல்வாக்குள்ளவர்களும், எந்த விதமான கட்சிச் சார்புமில்லாமல், நடுநிலைமையிலிருந்து கொண்டு அரசாங் கத்தின் குறை நிறைகளை எடுத்துக்காட்டி அதனை ஒழுங்கான பாதையில் செலுத்திக்கொண்டு போகிறவர்களுமான ஒரு சில பிரதி நிதிகள் தெரிந்தெடுக்கப்பட வேண்டுமென்று கெமால் விரும்பி னான். இங்ஙனமே, பதின்மூன்று பிரதிநிதிகள் தெரிந்தெடுக்கப் பெற்று, பார்லிமெண்ட்டில் அங்கத்தினரானார்கள். இதே சமயத்தில், பதினேழு திரீ அங்கத்தினர்களும் முதன் முறையாகப் பார்லிமெண்ட்டுக்குத் தெரிந்தெடுக்கப்பெற்றுப் பிரதிநிதி தானங் களில் அமர்ந்தார்கள். கெமால், இந்தப் புதிய பார்லிமெண்ட்டுக் கூட்டத்தைத் திறந்து வைக்கிறபோது, திரீ அங்கத்தினர்களை வரவேற்றுப் பாராட்டிப் பேசி, தன் வாழ்நாளின் கனவு இப் பொழுதே பூர்த்தியாயிற்று என்று பெருமை கொண்டான். 4. பேசும் ஆற்றல் கெமால் ஜனங்களிடத்தில் நெருங்கிப் பழகுவதில் மகா நிபுணன். யாராரிடத்தில் எப்படி எப்படிப் பேச வேண்டுமென்பதை இவன் தெரிந்து கொண்டிருந்தான். அடிக்கடி சுற்றுப் பிரயாணஞ் செய்து, ஜனங்களுடன் நேரான தொடர்பு வைத்துக்கொள்வதில் இவன் கைதேர்ந்தவன். சுற்றுப்பிரயாணஞ் செய்வதில் சிறிது கூடச் சலிப்புக் கொள்ளமாட்டான். தனது உத்தியோகதர்களும் இங்ஙனம் அடிக்கடி சுற்றுப் பிரயாணம் செய்ய வேண்டுமென்று இவன் எதிர்பார்ப்பான். தவிர, மேடை மீதேறி இவன் பிரசங்கம் செய்கிறபோது, எதிர்க்கட்சியினர் யாருமே வாய் திறந்து பேசமாட்டார்கள். இவன் பேசுகிற ஒவ்வொரு பேச்சும், கிளத்துகிற ஒவ்வொரு வாதமும் ஜனங்களுடைய இதயத்திலே நேராகச் சென்று பாயக்கூடியதாயிருக்கும். இவனுடைய அரசியல் வெற்றிக்கு, இவனிட மிருந்த நாவன்மை ஒரு முக்கிய காரணம். இவன் அவ்வப் பொழுது நிகழ்த்திய சொற்பொழிவுகளிலிருந்து சில பாகங்களை இங்குத் தருகிறோம்:- வாழ்க்கை யென்பது என்ன? போராட்டம். வாழ்க்கையிலே வெற்றி கொள்வதென்பது யுத்தத்திலே வெற்றி கொள்வதுதான். பொருளாதார சம்பந்தமான அதிகாரத்தையும் ஆன்ம பலத்தையும் அடிப்படையாகக் கொண்டதே வெற்றி. மானிட சமூக சம்பந்தப் பட்ட எல்லாப் பிரச்னை களும், அவைகளுக்குப் பரிகாரந்தேடு வதிலே ஏற்படுகிற ஆபத்துக்களும், பின்னர் ஏற்படுகிற பரிகாரங் களும் இந்த எல்லையற்ற போராட்டத்தின் விளைவுகள்தான். * * * ஒவ்வொரு தோல்வியும், அச்சத்துடனும் சோர்வுடனுமே ஆரம் பிக்கிறது. தனிப்பட்ட மனிதர்களைப் போல்தான் சமூகங்களும், இவை, தங்களுடைய அதிகார ஆற்றலுக்கும் திறமைக்கும் ருஜு காட்டினால்தான் பிறருடைய மதிப்பைப் பெறமுடியும். துருக்கிய சமுதாயமானது, இப்பொழுது மகத்தான ஒரு கஷ்ட பரிசோத னைக்கு ஆளாகியிருக்கிறது. இது வரையில் இந்த மாதிரியான பரிசோதனைக்கு அஃது உட்பட்டதேயில்லை. இந்தப் பரிசோத னையில் அது வெற்றி பெறுவதற்கு முன்னர், அது பிறருடைய நன்மதிப்பையும், நல்லெண்ணத்தையும், நட்பையும் சம்பாதித்துக் கொள்ள முடியுமா? துருக்கியன் பெருந்தன்மையுள்ளவன். அதனால் கர்வமும் படைத்தவன். அவனுக்குத் திறமையுண்டு; உழைக்கும் ஆற்றலுண்டு. இத்தகையவர் களைக் கொண்ட ஒரு ஜன சமுதாயமானது அடிமைத்தனத்திலே வாழ்வதைவிட இறப்பதையே விரும்புகிறது. தங்கள் நாட்டைக் காப்பற்ற வேண்டுமென்ற எண்ணம் உண்மை யிலேயே உடையவர்களுக்கு ஒரே ஒரு பரிகாரந்தான் உண்டு. சுதந்திரம் அல்லது மரணம். * * * துருக்கியின் சுதந்திரத்தின்மீது யாராவது கைவைத்தால் - அவர்கள் யாராயிருக்கட்டும் - அவர்கள் மீது துருக்கிய சமூகம் அனைத்தும் ஒன்று சேர்ந்து யுத்தந் தொடுக்கட்டும். போராட்டத்திற்குப் பிறகு - வேலை! தேசீய மண்ணிலே வேலை செய்யுங்கள். தேசத்தின் சுகத்திற்காகவும், சந்தோஷத்திற்காகவும் வேலை செய்யுங்கள். நமது சுதந்திர வாழ்க்கையைப் பலப் படுத்தும் முயற்சியில் சிறிது கூடத் தளர்ச்சி காட்ட வேண்டாம். * * * நான் எதை எதை புனிதமாகக் கருதுகிறேனோ அவற்றை யெல்லாம் சாட்சியமாகக் கொண்டு கூறுகிறேன்:- நாம் பூரண சுதந்திரம் பெறுகிற வரையில், தேச மக்களுடன் சேர்ந்து பய பக்தியுடன் உழைப்பேன். * * * துருக்கிய ஜனங்கள் எப்பொழுதுமே, துன்பம் அனுபவிக்கவேண்டு மென்பதற்கும் தியாகம் செய்வதற்கும் அஞ்சுவது கிடையாது. துருக்கி உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிற வரையில் தோல்வியை ஒப்புக்கொள்ளாது. அப்படி ஒப்புக் கொண்டால் மரணந்தானே! * * * நமது லட்சியம், தேசீய எல்லைக்குட்பட்ட பரிபூரண சுதந்திரம். இதற்குக் குறுக்காக யார் நிற்கிறார்களோ அவர்களோடு போராடு வோம்; வெற்றிக்கொள்வோம். இந்த விஷயத்தில் நாம் உறுதி யாகவே நிற்கிறோம். * * * நமக்கு வெற்றி கிடைக்கும். இதில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை யாருமே அசைக்க முடியாது. துருக்கிக்கு மட்டு மல்ல, உலகத்திற்கே பகிரங்கமாகத் தெரிவிக்கிறேன்:- நாம் வெற்றி யடைவோம். நாகரிகம் இருக்கிறதே, அது நெருப்பு மாதிரி, எதிர்ப்பட்டவரை யெல்லாம் எரித்துவிடுகிறது. உலகமெல்லாம் முன்னேறிக் கொண்டிருக்க, நாம் சும்மா யிருந்ததனால் நாம் அதிகமான கஷ்டங் களையடைந்தோம். இப்பொழுது நாம் முன்னேற வேண்டிய காலம் வந்திருக்கிறது. விஞ்ஞானம், கைத்தொழில் நுணுக்கங்கள் முதலிய பலவும் நமக்குத் தேவை. * * * நம்முடைய திரீகள், ஒரு புருஷனுடைய முகத்தைக் கண்டவுடன் ஏன் முகத்தையும் கண்களையும் மூடிக்கொள்கிறார்கள்? நாகரிக முள்ள ஜனங்களுக்கு இது பொருந்துமா? நமது திரீ சமூகமானது, நம்மைப் போலவே அறிவு நிரம்பியது. அவர்களும் முகத்தைத் திறக்கட்டுமே; கண் திறந்து உலகத்தைப் பார்க்கட்டுமே. முன்னேற்றமடைய வேண்டுமென்ற ஆவலுள்ள எந்தச் சமூகமும், தன் பாதியாகிய திரீகளைப் புறக்கணிக்க முடியாது. * * * ஆசிரியர்களே! புதிய துருக்கியைச் சிருஷ்டிப்பது உங்கள் வேலை. உங்கள் திறமையிலே, நீங்கள் செய்கிற தியாகத்திலே துருக்கியின் எதிர்கால சந்ததியின் வாழ்க்கை இருக்கிறது. * * * அவர்கள், அந்த ஆங்கிலேயர்கள், அவர்களைப் போல் நாமும் திறமைசாலிகள் என்பதை விரைவில் உணரவேண்டும். தங்க ளுக்குச் சமானமானவர்களாக நம்மை அவர்கள் மதிக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு போதும் நாம் தலைகுனிய மாட்டோம். நம்மிலே கடைசி மனிதன் ஒருவன் இருக்கிற வரையில் அவர் களுடைய நாகரிகத்தை அவர்கள் மண்டையிலேயே போட்டு உடைக்கிற வரையில் அவர்களை எதிர்த்து நிற்போம். ஒவ்வொரு முட்டாளிடத்திலும் சென்று, நீ செய்த காரியம் சரியென்று நிரூபித்துக் கொண்டிருக்கிற தற்கால நாகரிகத்தில் நீ சேராதே. பாமர ஜனங்களின் ஆரவாரம் உன்னை நீண்ட தூரத்திற்கு அழைத்துக் கொண்டு போகாது. அஃது அவ்வளவு முக்கியமான விஷயமுமல்ல. நீ செய்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் எல்லா ருடைய அங்கீகாரத்தையும் தேடிக் கொண்டு செல்வாயானால், கொஞ்ச காலம்வரை அதனால் நல்ல பலன் கிட்டுவது போல்தா னிருக்கும். ஆனால் எதிர்காலத்தில் உன்னுடைய வாழ்க்கையின் பிரகாசம் குன்றிவிடும். பிறருடைய எதிரொலியாக இருப்பதினா லேயோ, பிறருடைய கண்களில் மண்ணைப் போட்டு விடுவதினா லேயோ பெருமை ஏற்பட்டு விடாது. தேச நன்மைக்கு எது அவசியமானது என்பதைக் கவனித்து, தான் கொண்ட லட்சியத்தை நாடி நேராகச் செல்வதிலேதான் ஒருவனுடைய பெருமை இருக் கிறது. அநேகர் வந்து, தங்கள் தங்கள் யோசனைகளை யெல்லாம் உன்னிடம் கூறி நீ போகிற வழியினின்று உன்னைத் திருப்பப் பார்ப்பார்கள். அவர்கள் தாராளமாக உன்னிடம் வரட்டும்; ஆனால் அவர்களுடைய செல்வாக்கை மட்டும் உன்னிடம் உபயோகிக்காமலிருக்க வேண்டும். நீ மட்டும் அப்படியும் இப்படி யும் திரும்பிப் பாராமல் நேராகப் போ. உன் பாதையில் பல இடையூறுகள் குறுக்கிடலாம். முதலிலேயே உன்னைப் பெரிய மனிதனென்று நினைத்துக் கொண்டு விடாதே. சிறிய மனித னென்றும் பலவீனனென்றும் - ஆனால் பிறரிடமிருந்து எவ்வித உதவியையும் எதிர் பாராதவனென்றும் உன்னை நினைத்துக் கொண்டு முன்னேறிச் செல். இடையில் குறுக்கிட்ட எல்லாக் கஷ்டங்களும் விலகிவிடும். இதன் பிறகு உன்னை யாராவது பெரிய மனிதன் என்று சொன்னால் அவனைப் பார்த்து நீ நன்றாகச் சிரிக்கலாம். 5. எங்கள் தந்தை 1934ஆம் வருஷம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி துருக்கிய பார்லிமெண்ட்டின் விசேஷக் கூட்டமொன்று கூடியது. நவீன துருக்கியைச் சிருஷ்டித்து அதன் ஆசிரியனாகவும் தலைவனாகவும் இருந்து இடைவிடாது தொண்டாற்றிய கெமாலினிடம் தேசம் நன்றி செலுத்துகிறதென்பதைக் காட்டுவதற் கறிகுறியாகக் கெமாலை, இனி அத்தா துர்க் என்றே அழைக்க வேண்டுமென்று அப்பொழுது ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. அத்தா துர்க் என்றால் துருக்கியர் தந்தை என்று பெயர். இதனைக் கொண்டு, துருக்கியர்கள் கெமாலிடம் எத்தகைய பக்தி செலுத்தி வந்தார்கள், செலுத்தி வருகிறார்கள் என்பது நன்கு புலப்படும். 1923ஆம் வருஷம், குடியரசு ஏற்பட்டு முதன் முதலாகக் கெமால் பிரசிடெண்ட்டாகத் தெரிந்தெடுக்கப்பட்ட பிறகு, 1927, 1931, 1935ஆம் வருஷங்களில் மூன்று முறை பிரசிடெண்ட் தேர்தல் நடைபெற்றது. இந்த மூன்று முறையும், கெமாலே ஏக மனதாக பிரசிடெண்ட் தானத்திற்குத் தெரிந்தெடுக்கப்பட்டான். 1935ஆம் வருஷம் நான்காவது முறையாக இவன் குடியரசுத் தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்ட போது ஜனங்கள் காட்டிய உற்சாகத்திற்கு அளவே கிடையாது. கெமாலிடம் ஜனங்கள் காட்டிவந்த மதிப்பும் மரியாதையும் ஒரு புறமிருக்கட்டும். கெமால், ஜனங்களிடத்தில் எவ்வளவு நேச மாக நடந்து கொண்டான்! இவன் தனிமையாகவே வாழ்க்கையை நடத்தினான். அன்றாட வாழ்க்கையில்கூட தனிமையையே விரும்பி னான். ஆனால் துருக்கி முழுவதும் இவனுடைய குடும்பம்; துருக்கியர் அனைவரும் இவன் மக்கள். இவனுக்குப் புத்திரப்பேறு கிடையாது. ஆனால் தன்னோடு சேர்ந்து யுத்த களங்களில் வீரமாகப் போர் புரிந்து வீர மரணமெய்திய ராணுவ தளகர்த்தர்களில் சில ருடைய பெண் குழந்தைகளை, தன் குழந்தைகளாக வளர்ந்து வந்தான். இங்ஙனம் இவனுடைய வளர்ப்புக் குழந்தைகளாக அமைந்த பெண்கள் ஐவர். இவனுடைய வாழ்க்கையின் அதமன காலத்தில் இந்த ஐந்து பெண்களுந்தான் இவனுக்கு ஆறுதலா யிருந்தார்கள். 1938ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி துருக்கியக் குடியரசு தாபிதமான பதினைந்தாவது வருஷக் கொண்டாட்டம் துருக்கி யெங்கணும் கொண்டாடப்பட்டது. ஆனால் ஜனங்கள், முந்திய வருஷங் களைப் போல் அவ்வளவு உற்சாகமாயில்லை. ஏனென்றால், அப்பொழுது கெமால் மிகுந்த நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையில் கிடந்தான். அப்பொழுது கூட கெமால், அரசாங்க மந்திரிகளை வரவழைத்து என்ன கூறினான்? தான் நோயாய்க் கிடப்பதாகவும் பிரசிடெண்ட் வேலையைத் தன்னால் இப்பொழுது செய்ய முடியாதென்றும், ஆகையால் வேறொரு வரை பிரசிடெண்ட்டாகத் தெரிந்தெடுத்துக் கொள்ளுமாறும் கூறினான். ஆனால் அரசாங்கத்தினரோ, ஜனங்களோ இதற்குச் சம்மதிப்பார் களா? கெமாலின் ஜீவிய தசை வரை அவன் குடியரசு பிரசிடெண்ட் என்ற தானத்திலேயே இருக்க வேண்டுமென்று விரும்பினார்கள். பிரசிடெண்ட் என்ற கௌரவத்தோடுதான், கெமால் 1938ஆம் வருஷம் நவம்பர் மாதம் பத்தாந் தேதி தன் கடைசி மூச்சை விட்டான். அவனுடைய பூதவுடல் அன்று பொன்றிவிட்டது. துருக்கி முழுவதும் அன்று கதறியது. சக்கேரியா யுத்தத்தின் போது, தனது விலா எலும்பு ஒடிந்து போயிருந்தும், அதனை அலட்சியம் செய்து விட்டு மறுநாளே போர்க்களத்திற்கு வந்து எங்களுக்குக் காட்சி யளித்து உற்சாக மூட்டிய எங்கள் கம்மந்தான் எங்கே? என்று ஏங்கி நின்றார்கள் துருக்கியப் போர் வீரர்கள். எங்களுக்கு உலகத்தினைத் திறந்து காட்டிய எங்கள் அப்பனெங்கே? என்று அரற்றினார்கள் தாய்மார்கள். ஒருபுறம் மதத்தினாலும் மற்றொருபுறம் அரசியலினாலும் நசுக்கப்பெற்று உருத் தெரியாமல் கிடந்த எங்களைக் கைபிடித்துக் கரையேற்றிவிட்டு, எங்களுக்கும் இந்த உலகத்தில் வாழ உரிமையுண்டு என்ற எண்ணத்தை எங்கள் உள்ளத்திலே வேரூன்றச் செய்த எங்கள் நாயகனெங்கே? என்று அனட்டோலியா விவசாயிகள், தங்கள் வியர்வையோடு கண்ணீரை யும் சேர்த்து உகுத்தார்கள், தாங்கள் சாகுபடி செய்யும் செழு மண்ணிலே. துருக்கிய இளைஞர்களோ, எங்கள் தந்தை இறந்து போனதற்காக நாங்கள் அழுது கொண்டிருக்கப் போவதில்லை. ஆனால் அவர் காட்டி விட்ட பாதையில் ஒழுங்காக, கட்டுப் பாடாகச் செல்லப் போகிறோம் என்று உறுதி பூண்டார்கள். இவர்கள் எடுத்துக் கொண்ட இந்தப் பிரதிக்ஞைதான் கெமாலின் ஆத்மாவுக்குச் சாந்தியைத் தருவதாயிருக்கும். ஏனென்றால் கெமால், தான் செய்துவந்த ஒவ்வொரு வேலையையும், துருக்கியின் நிகழ்கால சந்ததியை முன்னிட்டுச் செய்யவில்லை. துருக்கியின் எதிர்காலச் சந்ததியின் நல்வாழ்வு தான் அவனுடைய லட்சியமாயிருந்தது. 1927ஆம் வருஷம் அக்டோபர் மாதம் துருக்கியப் பார்லி மெண்ட்டில் இவன் நிகழ்த்திய நீண்ட சொற்பொழிவைப் பின்வரும் வாக்கியங்களினால்தான் முடித்தான்:- வருங்காலத் துருக்கியின் சந்ததிகளே! துருக்கியக் குடியரசையும் அதன் சுதந்திரத்தையும் காப்பாற்றுவது உங்கள் கடமை. இதற்குத் தேவையான சக்தி, உங்களுடைய பரம்பரை ரத்தத்திலேயே கலந்திருக் கிறது. கெமால்! உண்மையிலேயே நீ இறந்துவிட்டாயா? நீ படைத்த அங்கோரா நகரம், உன் பிரசங்கங்கள் எங்கு சதா எதிரொலி செய்து கொண்டிருந்தனவோ அந்த தேசீய பார்லிமெண்ட், சாங்காயாவில் உன்னால் உன் நோக்கப்படி நிர்மாணிக்கப்பட்ட அந்தச் சிறிய பங்களா, உன்னை ஏற்றிக்கொண்டு சென்றதனால் பெருமை யடைந்த குதிரைகள், இவற்றையெல்லாம் விட்டுவிட்டுப் போக உனக்கு எப்படி மனம் துணிந்தது? நீ எடுத்துக்கொண்ட காரியம் முடிந்துவிட்டதா? நீ ஒருசமயம் கூறின வார்த்தைகள், இன்னும் எப்படி எதிரொலி கொடுக்கின்றன? நான் என்னுடைய ஜனங்களை நேரிய பாதையில் கைபிடித்து அழைத்துக்கொண்டு போவேன். அவர்களுடைய கால், மண்ணிலே நன்றாக ஊன்றிக் கொள்கிற வரையில், அவர்கள் தங்கள் வழியைத் தெரிந்த கொள்ளுகிற வரையில் நான் இங்ஙனமே கைப் பிடித்து அழைத்துச் செல்வேன். அதற்குப் பிறகு அவர்கள், தங்களுக்குப் பிடித்தமான தலைவனையோ, மார்க்கத்தையோ தெரிந்தெடுத்துக் கொள்ளலாம். அவர்களே ஆட்சி புரியலாம். அப்பொழுதுதான் என் வேலையும் முடிவுபெறும். கெமாலின் வேலை நிறைவேறிவிட்டதென்றே நாம் நம்ப வேண்டும். துருக்கியின் எதிர்கால நல்வாழ்வில் கெமாலுக்குப் பூரண நம்பிக்கை இருந்தது. ஓரிடத்தில் இவன் கூறியிருக்கிறான்:- உலகத்திலுள்ள எல்லா ஜனங்களைப்பற்றியும் நான் தெரிந்து கொண்டிருக்கிறேன். அந்த ஜனங்களை யுத்தகளத்திலும், நெருப்பு மழையின் கீழும், மரணத்தின் எதிரிலும் சந்திக்கிறேன். ஒரு ஜன சமூகத்தின் ஒழுக்க நிலையை இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் தான் காணமுடியும். எனது ஜனங்களே! நான் சத்தியமாகச் சொல் கிறேன். துருக்கிய மகா ஜனங்களின் ஆன்ம பலமானது, உலகத்தி லுள்ள எல்லா ஜனங்களின்ஆன்ம பலத்திற்கும் மிஞ்சியதாகவே இருக்கிறது. இந்தக் குன்றாத நம்பிக்கையோடுதான் கெமால் கண் மூடி விட்டான். இவன், சென்ற பதினைந்து வருஷ காலமாக ஏற்றுவந்த மகத்தான பொறுப்பை, 1938ஆம் வருஷம் நவம்பர் மாதம் பதினோரந் தேதி இமெத் இனோனு ஏற்றுக்கொண்டான். இமெத் இனோனு, துருக்கியக் குடியரசின் இரண்டாவது தலைவன். கெமாலின் ஆத்மாவுக்கு இது பெரிய சாந்தியை அளித்திருக்குமல்லவா? கெமால் இறந்து விட்டதாகத் துருக்கியர்கள் நம்பவேயில்லை. அவனுடைய உருவச் சிலைகள் ஆங்காங்கு கம்பீரமாக நின்று ஜனங்களுக்கு ஊக்கமூட்டியும் வழிகாட்டியும் நிற்கின்றன. தேசீய பார்லிமெண்ட்டில் அவனுடைய தானம் எப்பொழுதும் அவன் பெயராலேயே விளங்கிக்கொண்டிருக்கிறது. அவனுடைய ஒவ்வொரும் முக்கியமான ஊரிலும் கட்டப்பெற்ற வாசத்திற் கென்று தலம், அந்தந்தப் பிரதேச ஜனங்களின் யாத்திரை தலமாகிவிட்டது. அப்படியிருக்க அவன் எவ்வாறு இறந்து போயிருக்க முடியும்? துருக்கியர்கள் பேசுகிற ஒவ்வொரு பேச்சிலும் அவர்கள் விடுகிற ஒவ்வொரு மூச்சிலும் என்ன பிரதிபலிக்கின்றது? அத்தாதுர்க்! அத்தாதுர்க்! அனுபந்தம் 1 தெரிந்து கொள்ள வேண்டிய தென்ன? எல்லை முதலியன: ஆசியா கண்டத்தையும் ஐரோப்பா கண்டத்தையும் இணைத்து வைக்கிற ஒரு நாடாகத் துருக்கி இருக் கிறது. இதனாலேயே ஐரோப்பாவிலுள்ள துருக்கிக்கு ஐரோப்பியத் துருக்கி யென்றும், ஆசியாவிலுள்ள துருக்கிக்கு ஆசியத் துருக்கி யென்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. ஆனால் ஐரோப்பாவிலுள்ள துருக்கியப் பிரதேசம் மிகச் சொற்பந்தான். துருக்கியின் வடக்கில் கருங்கடல்; கிழக்கில் ஈரானும் ருஷ்யாவும்; தெற்கில் ஈராக் நாடும் மத்தியதரைக் கடலும்; மேற்கில் ஏஜியன் கடல், கிரீ, பல்கேரியா முதலியன. துருக்கியின் மொத்த விதீரணம் 2,94,000 சதுர மைல். இதில் ஐரோப்பாவிலுள்ள துருக்கியின் விதீரணம் சுமார் 9,000 சதுர மைல்தான். 1935ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி, துருக்கி யின் ஜன கணிதம் ஒன்று எடுக்கப்பட்டது. இதன்படி மொத்த ஜனத்தொகை 16,188,767. இதில் 7,974,925பேர் ஆண்கள்; 8,213,842 பேர் பெண்கள். ஆண்களை விட பெண்கள் அதிகம். இந்த மொத்த ஜனத்தொகையில் வேற்று நாட்டார் 53,546 பேர் இருக்கின்றனர். அதாவது மொத்த ஜனத்தொகையில் ஏறக்குறைய ஆயிரத்துக்கு மூன்று பேராகிறது. இந்த அந்நியர்களில் கிரேக்கர்களும் இத்தாலி யர்களுமே அதிகம். அந்நியர்களில் பாதி பேருக்கு மேல் வியாபாரம், கைத்தொழில் முதலியவைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். நிருவாக சௌகரியத்திற்காக, துருக்கி எட்டு பகுதிகளாகவும் 63 விலாயத்துகளாக (ஜில்லாக்களாக)வும் பிரிக்கப்பட்டிருக்கிறது. 1923ஆம் வருஷம் வரை, துருக்கியின் தலைநகரம் கான் டாண்டி நோபிளாயிருந்தது. பின்னர், கெமாலின் ஏற்பாட்டுப்படி அங்கோரா தலைநகராக்கப்பட்டது. முக்கிய நகரங்களும் அவற்றின் ஜனத் தொகையும் வருமாறு:- பெயர் ஜனத்தொகை கான்டாண்டிநோபிள் - 740,751 மிர்னா - 153,924 அங்கோரா - 123,314 அடானா - 72,652 ப்ரூஸா - 61,451 கோன்யா - 47,286 அட்ரியாநோபிள் - 34,528 எர்ஸெரூம் - 30,801 ஸாம்ஸுன் - 30,333 தலைநகரமான அங்கோரா இப்பொழுது பல வகையிலும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்க முறையில் பல உயர்ந்த கட்டடங்கள் எழும்பிக்கொண்டு வருகின்றன. அங்கோ ராவைப் பழைய அங்கோரா வென்றும் புதிய அங்கோராவென்றும் பிரித்திருக்கிறார்கள். புதிய அங்கோராவுக்கு யேனிஷெஹீர் என்று பெயர். இதுவே இப்பொழுது அபிவிருத்தி செய்யப்பட்டுவருகிறது. இங்கு ஜன பவனம் (People’s House) என்ற விசாலமான கட்டடம், நவீன முறையில் கட்டப் பட்டிருக்கிறது. இதே மாதிரி முக்கிய நகரங்களிலும் ஜன பவனம் என்ற பெயரால் கட்டடம் இருக்கிறது. இந்த ஜன பவனத்தில் விசாலமான மண்டபங்கள், நாடக மேடை, பொருட்காட்சி சாலை, புத்தகசாலை, சித்திர சாலை, துருக்கியிலே உற்பத்தி செய்யப்படும் பொருள் வகைகள் முதலிய பலவும் அடங்கி யுள்ளன. இந்த ஜன பவனத்தைப்பற்றி ஒரு மேனாட்டு ஆசிரியன் பின்வருமாறு வருணிக்கிறான்:- துருக்கிய மகா ஜனங்களால் சிருஷ்டிக்கப்பட்ட இந்த ஜன பவனங்கள், துருக்கிய ஜன சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்காகவும், சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்காவும், சமூகம், தேசம், தருமம், கடமை, தேசபக்தி இவைகள் விஷயத்தில் ஜனங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதைக் காட்டுவதற்காகவும், ஜனங்களின் பொருளாதார ஞானத்தையும், கலா ஞானத்தையும் அபிவிருத்தி செய்வதற்காகவும் உபயோகப்படுத்தப் பெறுகின்றன. அங்கோராவில் இமெத் இனோனு கழகம் என்ற ஒரு தாபனம் இருக்கிறது. இது பெண்களுக்கென்று ஏற்படுத்தப் பெற்ற பள்ளிக்கூடம். இங்குக் குடும்ப வாழ்க்கை,அந்த வாழ்க்கையை எவ்வாறு நடத்த வேண்டும், இதற்குப் பெண்கள் எந்தெந்த மாதிரி யில் தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற விவரங்கள் பலவும் பாடங்களாகப் போதிக்கப்படுகின்றன. இந்த தாபனம் பெண்களாலேயே நிருவகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இங்ஙனமே வேறு பல பள்ளிக்கூடங்களும் அரசாங்கக் காரியாலயங்களும் அங்கோரா நகரத்தை அழகுபடுத்தி வருகின்றன. அரசியல் முறை: துருக்கியில் ஒரே பார்லிமெண்ட்தான் உண்டு. இதனையே, துருக்கிய தேசீய பார்லிமெண்ட் என்றும், துருக்கிய தேசீய சபையென்றும், கிராண்ட் நேஷனல் அஸெம்ப்ளி யென்றும் அழைக்கிறார்கள். துருக்கிய பாஷையில் இதற்கு கமுதே (Kamutay) என்று பெயர். நான்கு வருஷத்திற்கொருமுறை தேர்தல் நடைபெற்று, பிரதி நிதிகள் தெரிந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தச் சபைதான் குடியரசுத் தலைவனையும் நான்கு வருஷத்திற்கொரு முறை தெரிந்தெடுக்கிறது. பார்லிமெண்ட் அங்கத்தினர்களில், யார் ஒரு மந்திரி சபையை அமைத்து அரசாங்க நிருவாகத்தை ஏற்று நடத்த முடியுமென்று பிரசிடெண்டுக்குத் தோன்றுகிறதோ அவரை அழைப்பித்து மந்திரி சபையை அமைக்கச் செய்து, அரசாங்க நிருவாகத்தை அந்த மந்திரி சபையினிடத்தில் ஒப்படைக்கிற பொறுப்பு பிரசிடெண்டைச் சேர்ந்தது. 18 வயதுக்கு மேற்பட்ட எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஓட்டுரிமை உண்டு. துருக்கியக் குடியரசின் தற்போதைய (1939) தலைவன் இமெத் இனோனு; பிரதம மந்திரி சி. பாயார். தற்போதைய துருக்கிய பார்லிமெண்டில் 17 திரீ அங்கத்தினர்கள் இருக்கி றார்கள். துருக்கியில் ஒரே ஓர் அரசியல் கட்சிதானுண்டு. இதற்கு குடியரசு ஜனக்கட்சி என்று பெயர். முன்னர் ஜனக்கட்சி என்று அழைக்கப்பட்டது. இப்பொழுது குடியரசு ஜனக்கட்சி யென்று அழைக்கப்படுகிறது. ஆண், பெண், ஏழை, பணக்காரர் முதலிய எவ் வித வேற்றுமையுமின்றி யாரும் இதில் அங்கத்தினராகச் சேரலாம். துருக்கியின் மொத்த ஜனத்தொகையில் எட்டில் ஒருவர் வீதம் இதில் அங்கத்தினராயிருக்கின்றனர். இந்தக் கணக்குப்படி ஏறக்குறைய இருபதரை லட்சம் பேர் இந்தக் கட்சியில் அங்கத்தினர். பாதுகாப்பு : 21 வயதுக்கு மேற்பட்ட எல்லா ஆண்களும், காலாட்படையாயிருந்தால் 18 மாதக் கட்டாய ராணுவச் சேவையும், குதிரைப் படை, பீரங்கிப் படையாயிருந்தால் இரண்டு வருஷக் கட்டாய ராணுவச் சேவையும் செய்ய வேண்டும். நாணய வகைகள்: லைரா என்றும், பியாத்ரே என்றும் தங்க நாணயங்களும் வெள்ளி நாணயங்களும் செலாவணியிலிருக் கின்றன. 100 பியாத்ரே கொண்டது ஒரு லைரா. இந்த லைரா வையே துருக்கிய பவுன் என்று அந்நியர்கள் வழங்குகிறார்கள். ஒரு துருக்கியப் பவுனின் மதிப்பு ஏறக்குறைய ரூ. 13 - 8 -0. சில விசேஷங்கள்: துருக்கியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வர்கள் 6,241 பேர் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் கிராமங்களிலேயே வசிக்கிறார்கள். குடியரசு அரசாங்கம் ஏற்பட்ட பிறகு, நகரங்கள் யாவும் சுத்த மாக இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஜனங்களும் தூய்மையான உடைகளணிந்து கௌரவமான முறையில் நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கப் படுகிறார்கள். உதாரண மாக, வீதிகளில் பத்திரிகைகள் விற்பவர்கள் கூட, காலில் பூட் அணிந்துகொள்ள வேண்டு மென்றும், முழுங்காலுக்குக் கீழ்வரை உடையணிந்திருக்க வேண்டு மென்றும், தினந்தோறும் க்ஷவரம் செய்து கொள்ள வேண்டுமென்றும் அரசாங்க உத்தரவு ஒன்று கூறுகிறது. இங்ஙனம் தூய்மையான உடையணிந்து பத்திரிகை விற்பனை செய்யாதவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம். இப்படியே, சாதாரண விஷயங்களில் கூட அரசாங்கம் கவனஞ் செலுத்திவருகிறது. ஜனங்கள் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்த வேண்டு மென்ற கெமாலின் கோரிக்கைப்படி, ஜன சௌகரியத்துக்கான பல ஏற்பாடு களையும் அரசாங்கத்தார் வரிசைக்கிரமமாகச் செய்து வருகின்றனர். துருக்கிய அரசாங்க ரெயில்வேக்களில், பிரயாணி களின் சௌகரியத் திற்காக ஒயர்லெ செட்டுகள் அமைக்கப்பட் டிருக்கின்றன. ரெயில்வே டேஷன்களில், பிரயாணிகள் பொழுதை உல்லாசமாகக் கழிக்கும் பொருட்டு லௌட் பீகர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த லௌட் பீகர்களை ஒவ்வொரு ஏழையும் வைத்து உபயோகித்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, அரசாங்கத்தார், இவற்றை உற்பத்தி செய்யும் பொருட்டு ஒரு தொழிற்சாலை அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். துருக்கியக் குடியரசின் பதினைந்தாவது வருஷக் கொண் டாட்டம் 1938ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 29ந் தேதி கொண் டாடப்பட்ட போது, அநேக வருஷங்களாகத் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டு வெளிநாடுகளில் கிடந்த அரசியல் வாதிகள் பலருக்கு மன்னிப்பளிக்கப்பட்டது. கடைசி கலீபா நாட்டை விட்டுப் பிரஷ்டம் செய்யப்பட்ட போது, கூடச்சென்ற பலரும் மன்னிப்புப் பெற்று மீண்டும் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தனர். இங்ஙனம் வந்தவர் தொகை சுமார் 150. கெமால் சுற்றுப் பிரயாணஞ் செய்யுங்காலத்தில், அவன் தங்குவதற்கென்று ஒவ்வொரு முக்கியமான ஊரிலும், பொது ஜனங்களாலேயே ஒரு தனிக் கட்டடம் கட்டப்பட்டுப் பாதுகாக்கப் பெற்று வருகிறது. இதனை அத்தா துர்க்கின் இல்லம் என்று அழைக்கிறார்கள். கெமால் இறந்த பிறகு இந்தக் கட்டடங்களுக்கு விசேஷ மதிப்பும் புனிதத் தன்மையும் ஏற்பட்டிருக்கின்றன. கெமால், தேசீய பார்லிமெண்ட்டில் வகித்து வந்த அங்கத் தினர் தானம் பூர்த்தி செய்யப்படாமலே இருக்க வேண்டு மென்றும், அந்த தானத்தில் எப்பொழுதுமே கெமால் இருப்ப தாகக் கருதப்பட வேண்டுமென்றும் தேசீய பார்லிமெண்ட் தீர்மானித்திருக்கிறது. துருக்கியில் கெமாலுக்குச் சுமார் 1,300 உருவச் சிலைகள் இருக்கின்றன. இவை யாவும் துருக்கியர்கள், கெமால் அத்தா துர்க்கி னிடத்தில் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதைப் புலப்படுத்துவன வாகும். துருக்கியின் தேசீய தினம் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி. பிரதி வருஷமும், இந்த நாளைத் தேசீயத் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள் துருக்கியர்கள். 1923ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி துருக்கியக் குடியரசு தாபிக்கப்பட்டு கெமால் முதல் பிரசிடெண்டாகத் தெரிந்தெடுக்கப்பட்டான் என்பது இங்கு ஞாபகத்தில் வைக்கத்தக்கது. தேசியக் கொடி: அடிப்படை சிவப்பு, அதன் மீது பிறைச் சந்திரனும் நட்சத்திரமும். அனுபந்தம் 2 முக்கிய சம்பவங்கள் வருஷம் மாதம் முக்கிய சம்பவங்கள் 1288 - சுங்கேரியா மைதானத்திலிருந்து உமான்லி துருக்கியர்கள் கிளம்பி,துருக்கி நோக்கி வந்தது. 1463 - மே 20 துருக்கியர்கள், கான்டாண்டி நோபிளைக் கைப்பற்றிக் கொண்டது. 1520 - உதுமானிய ஏகாதிபத்தியத்தின் உன்னத நிலை 1876 - சுல்தான் அப்துல் ஹமீத் II பட்டத்துக்கு வந்தது. 1877 - ருஷ்யாவுக்கும் துருக்கிக்கும் யுத்தம். 1880 - சாலோனிகாவில் முதபா கெமால் பிறந்தான். 1889 - துருக்கியின் பாதுகாவலனாக ஜெர்மனி அமைந்தது; கெய்ஸரின் துருக்கி விஜயம். 1903 - மொனாடிர் ராணுவப் பள்ளிக்கூடத்தில் கெமால் ஒரு மாணாக்கனாகச் சேர்ந்தான். 1908 - ஐக்கிய முன்னேற்றக்கமிட்டி யின் புரட்சி. 1908 - பல்கேரியா, துருக்கியின் ஆதீனத்திலிருந்து விடுபட்டுத் தனி நாடாகி விட்டது. 1909 - சுல்தான் அப்துல் ஹமீது சிம்மானசத்தினின்று இறக்கப்பட்டுச் சிறைவைக்கப்பட்டது. 1911 - அக்டோபர் டிரிபோலியில் துருக்கி - இத்தாலிய யுத்தம். 1912 அக்டோபர் முதல் பால்கன் யுத்தம். 1913 - இரண்டாவது பால்கன் யுத்தம். 1914 - ஆகட் ஐரோப்பிய மகா யுத்தம். 1915 பிப்ரவரி டார்டெனல் ஜலசந்தியை பிரிட்டிஷ் கப்பற்படை தாக்கியது. 1918 அக்டோபர் 30 முத்ரோ ஒப்பந்தம் - நேசக்கட்சி யினருக்கும் துருக்கிக்கும். 1919 மே 19 ஸாம்ஸுன் துறைமுகத்தில் கெமால் வந்திறங்கினான். 1919 ஜுலை 23 எர்ஸெரூம் மகாநாடு. 1919 செப்டம்பர் 13 சிவா மகாநாடு. 1920 ஏப்ரல் 23 அங்கோராவில் தேசீய சபை (கிராண்ட் நேஷனல் அஸெம்ப்ளி) ஆரம்பம். 1920 ஏப்ரல் 24 கெமால் மேற்படி சபையின் தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டது. 1921ஜனவரி 9 முதல் இனோனு யுத்தம் 1921 மார்ச் 16 துருக்கிய - ருஷ்ய ஒப்பந்தம். 1921 மார்ச் 30 இரண்டாவது இனேனு யுத்தம். இமெத் பாஷாவின் தீரம். 1921ஆகட் 5 துருக்கிய ராணுவத்திற்குக் கெமால் சேனாதிபதியாக நியமனம் பெற்றது. 1921 ஆகட் 14 சக்கேரியா யுத்தம். 1921 அக்டோபர் 20 தேசீய துருக்கியுடன் பிரான் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டது. 1922ஆகட் 26 கிரேக்கர்கள், துருக்கியர்களால் முறியடிக்கப்பட்டனர். 1922செப்டம்பர் 9 துருக்கியர்களின் மிர்னா ஆக்ரமிப்பு 1922செப்டம்பர் 29 முதேனியா ஒப்பந்தம். 1922நவம்பர் 1 சுல்தான் பதவி எடுக்கப்பட்டு விட்டது. 1922நவம்பர் 17 அப்துல் மஜீத் கலீபாவானது 1922நவம்பர் 21 லாஸேன் மகாநாடு ஆரம்பம். 1923ஜனவரி 26 கெமாலின் தாயார் ஜுபேதா ஹனூம் மரணம். 1923ஜூலை 24 லாஸேன் ஒப்பந்தம். 1923அக்டோபர் 2 துருக்கியிலிருந்த அந்நியத் துருப்புகள் அடியோடு விலகிவிட்டன. 1923அக்டோபர் 6 குடியரசு ராணுவம், கான்டாண்டி நோபிளைக் கைப்பற்றிக் கொண்டது. 1923அக்டோபர் 13 அங்கோரா, துருக்கியின் தலை நகரமாக்கப்பட்டது. 1923அக்டோபர் 28 துருக்கி, குடியரசானது. கெமால் குடியரசின் தலைவன். 1924மார்ச் 3 கிலாபத் எடுக்கப்பட்டது. 1924மார்ச் 3 மதப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. 1924ஆகட் 26 இஷ்பாங்கி தாபனம். 1925மார்ச் குருதியர் கலகம் 1925ஆகட் 24 துருக்கியர்கள், குல்லாய்க்குப் பதில் ஹாட் அணிய வேண்டுமென்ற சட்டம் பிறந்தது. 1926மே 28 கைத்தொழில் தாபனங்களை ஆதரிக்க வேண்டுமென்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1926அக்டோபர் 3 கெமாலின் உருவச்சிலை முதன் முதலாகக் கான்டாண்டி நோபிளில் திறக்கப்பட்டது. 1927அக்டோபர் 28 துருக்கியில் முதன்முதலாக ஜன கணிதம் எடுக்கப்பட்டது. 1927நவம்பர் 24 அங்கோராவில் கெமாலின் உருவச் சிலை திறக்கப்பட்டது. 1928 அக்டோபர் 3 லத்தீனிய எழுத்துக்களையே துருக்கிய பாஷைக்கு உபயோகிக்க வேண்டுமென்ற சட்டம் நிறைவேறியது. 1929 ஜனவரி 1 லத்தீனிய எழுத்துக்களை ஜனங்களுக்குக் கற்றுக்கொடுக்க பள்ளிக்கூடங்கள் நாடெங்கணும் திறக்கப்பட்டன. 1929 மே 24 உத்தியோகதர்களின் சம்பள விகிதம் நிர்ணயிக்கப்பட்டு ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1930 பிப்ரவரி 22 நாணயச் செலவாணியை ஓர் அளவுக்குட்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1930 ஜுன் 11 அரசாங்க மத்திய பாங்கி தாபனம் 1931 மார்ச் 23 கட்டாய ஆரம்பக் கல்விச் சட்டம் அமுலுக்கு வந்தது. 1932 ஜூலை 11 துருக்கிய மொழி ஆராய்ச்சிக் கழகம் தாபிக்கப்பட்டது. 1933 ஆகட் 1 கான்டாண்டி நோபிளில் புதிய சர்வகலாசாலை தாபிக்கப்பட்டது. 1933 அக்டோபர் 29 குடியரசின் பத்தாவது வருஷக் கொண்டாட்டம், 1934 நவம்பர் 24 கெமாலுக்கு அத்தா துர்க் என்ற கௌரவப்பட்டம் அளிக்கப்பட்டது. 1937 - மாண்ட்ரியு ஒப்பந்தம். 1937- எட்டாவது எட்வர்டின் துருக்கி விஜயம். 1938 அக்டோபர் 29 குடியரசின் பதினைந்தாவது வருஷக் கொண்டாட்டம். 1938 நவம்பர் 10 கெமால் அத்தா துர்க் மரணம். 1938 நவம்பர் 11 இமெத் இனோனு, குடியரசின் தலைவனாக நியமனம் பெற்றது.  சமுதாய சிற்பிகள் வாசகர்களுக்கு (முதற் பதிப்பு) ஒரு சமுதாயம், எப்பொழுதும், ஒரே மாதிரியாக இருப்ப தில்லை. ஒரு சமயம், அதன் மேனியில் மாசுபடிந்து விடுகிறது; இன்னொரு சமயம், அதற்குத் தளர்ச்சி ஏற்பட்டு விடுகிறது; பிறிதொரு சமயம், அது தன் சுய நிலையை மறந்து விடுகிறது; மற்றொரு சமயம், ஏதோ ஒருவிதமான அடிமை இருளில் அஃது அகப்பட்டுக்கொண்டு தத்தளிக்கிறது. இந்த மாதிரியான சமயங் களில் அதன் மேனிக்கு மெருகிட, அதன் நடைக்கு வேகம் கொடுக்க, அதன் சுய நிலையை நினைவுபடுத்த, அதனை அடிமை இருளி லிருந்து விடுவிக்க, சிலர் தோன்றுகின்றனர். இவர்கள்தான் சமுதாய சிற்பிகள். வேறு வேறு பெயர்களால் இவர்களை அழைப்பது முண்டு. இந்தச் சமுதாய சிற்பிகள், சமுதாயத்தின் எந்த நிலையி லிருந்தும் தோன்றலாம்; அரசர்களாகவும் இருக்கலாம்; ஆண்டிக ளாகவும் இருக்கலாம். இவர்கள், எந்த நிலையிலிருந்து வந்தவர் களென்பது முக்கிய மல்ல; எந்த நிலையிலிருந்துகொண்டு வாழ்கிறார் களென்பது தான் முக்கியம். இவர்கள் வாழ்கின்ற நிலையோ, இவர் களுடைய சம காலத்தவரால் சரியாக பார்க்கப் படுவதுகூட இல்லை. ஏனென்றால், இவர்கள் வருங்காலத் திற்காக வாழ்கிறார்கள். இவர்கள் சொல்வதும் செய்வதும் புதுமையாகவும் புதிர்போலவும் இருக்கின்றன. இவர் களுடைய வாழ்நாள் முடிந்து நாளாக நாளாகத் தான் இவர்களுடைய பெருமை புலப்படுகின்றது. புகழுடம்பு பெற்ற இவர்களுடைய ஆயுளும் நீடிக்கிறது. இந்தச் சமுதாய சிற்பிகள், சுய சிந்தனையும் சுய முயற்சியு முடையவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் இந்தச் சுய சிந்தனை யையும் சுய முயற்சியையும், சுய தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக உபயோகிப்பதில்லை; சமுதாயத்தின் தேவையைப் பூர்த்தி செய் வதற்காகவே உபயோகிக்கிறார்கள். இதனாலேயே இவர்கள் சமுதாயத்தின் நினைவில் என்றும் இருந்துகொண் டிருக்கிறார்கள். இந்தச் சிறிய நூலில், சமுதாய சிற்பிகள் என்று சொல்லத் தகும் அறுவருடைய உருவப்படங்களும், அவர்களது சுருக்கமான வாழ்க்கை வரலாறுகளும் தரப்பட்டிருக்கின்றன. வாழ்க்கை வரலாறு என்று சொல்வதைக் காட்டிலும் வாழ்க்கையைப்பற்றிய சுருக்கமான விமரிசனம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். சுருங்கிய இந்த விமரிசனத்தைப் படிப்பதன் மூலம், இவர்களை மேலும் மேலும் அறிந்துகொள்ள வேண்டும், இவர்களுடைய அடிச் சுவடுகளைப் பின்பற்ற வேண்டுமென்ற ஆர்வம் வாசகர்களுக்கு உண்டாக வேண்டுமென்பது என் பிரார்த்தனை. தியாகராய நகர் 2. 4. 52 ஸாக்ரட்டீ (கி.மு. 470-399) யேசுநாதர் அவதரிப்பதற்கு இன்னும் ஐந்தாறு நூற்றாண்டுகள் இருக்கின்றன. ஐரோப்பா முழுதும் அறியாமை இருட்டிலே தடவிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதன் தென் கிழக்கு மூலையிலுள்ள ஒரு சிறு பிரதேசத்தில் மட்டும் அறிவு ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. இந்த அறிவு வெளிச்சத்திலே நாகரிகமானது ஜீவ களையோடு கொலுவமர்ந் திருக்கிறது. என்ன ஆச்சரியம்! வாழ்க கிரீ! ஐரோப்பாவுக்கு முதன் முதலாக அறிவுக் கண்ணையும் நாகரிகக் கண்ணையும் திறந்துவிட்டது இந்தக் கிரீதான் என்பதை வாசகர்களே, முதன் முதலிலேயே தெரிந்து கொண்டு விடுங்கள். இந்தக் கிரீஸில் அந்தக் காலத்தில், அறிவுச் சுரங்கத்தில் இறங்கி ஆராய்ந்த அதிமேதையர்களென்ன, ஆத்ம பரிசோதனையில் இன்பங் கண்ட ஞானிகளென்ன, சிற்பம், சங்கீதம் முதலிய நுண்கலைகளின் எல்லைக் கோடுகளைக் காண முனைந்த நிபுணர்களென்ன, குடி மக்களுக்குகந்ததோர் அரசியல் இன்னபடிதான் இருக்கவேண்டு மென்று எழுதிக்காட்டிய தோடல்லாமல் நடத்தியும் காட்டிய அரசதந்திரிகளென்ன, போர் முகத்தில் புறமுதுகு காட்டத் தெரியாத வீரர்களென்ன, இப்படிப் பல துறை வல்லுநர் தோன்றி புகழ் பரப்பிக் கொண்டிருந்தனர். இவர் களால்தான் கிரீ இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறது; என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும். இங்ஙனம் கிரீஸுக்கு அழியாத் தன்மையளித்து அது காரணமாக அழியாத்தன்மை எய்தியவருள் ஒருவன் தான் ஸாக்ரட்டீ. வாழ்க ஸாக்ரட்டீ! கிரீஸைச் சுற்றி அநேக தீவுகள் இருப்பதை பூகோள படத்தில் பார்க்கலாம். ஒவ்வொரு தீவும் ஒரு ராஜ்யமாயிருந்தது. இவற்றிற்குத் தீவு ராஜ்யங்களென்று பெயர். இங்ஙனமே கிரீஸுக்குள்ளும் தனித்தனி ராஜ்யங்கள் பல இருந்தன. இவற்றிற்கு நகர ராஜ்யங்க ளென்று பெயர். இப்படிச் சுதந்திர ராஜ்யங்கள் பலவற்றைக் கொண்ட ஒரு சேர்க்கைதான் பொதுவாகக் கிரீ என்ற பெயரால் முற்காலத்தில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த எல்லா ராஜ்யங் களுக்கும் மேற்பட்டு நின்றவை, தலைமை வகித்தவை இரண்டு ராஜ்யங்கள். ஒன்று ஆத்தென்; மற்றொன்று ப்பார்ட்டா. இவ்விரண்டையும் கிரீஸின் இரண்டு கண்கள் என்று சொல்வார்கள் அறிஞர்கள். ஆத்தென்ஸிலே பிறந்து ஆத்தென்ஸுக்காகவே வாழ்ந்தவன்தான் ஸாக்ரட்டீ. எல்லாக் கிரேக்கர்களுக்கும் தேச பக்தியும் சுதந்திரப் பற்றும் இருந்த போதிலும், ஆத்தென் ராஜ்யத்துப் பிரஜைகளிடத்தில், அதாவது ஆத்தீனியர் களிடத்தில் இவை விசேஷித்துக் காணப் பட்டன. இதனால்தான், மிகவும் வலுப்பெற்றிருந்த பாரசீக சாம்ராஜ்யம், கிரீஸின் சுதந்திர வாழ்வை முடித்து விடமுனைந்து, கி. மு. ஐந்தாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் படையெடுத்து வந்த போது, கிரேக்க ராஜ்யங்கள் பலவற்றின் சார்பாக அதனை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டனர். இரண்டு தடவை கிரீஸின் மீது பாரசீகம் படையெடுத்து வந்தது. இரண்டு தடவையும் தோல்வியேயடைந்தது. உண்மையான தேசபக்தியும் சுதந்திரப் பற்றும் ஒரு ராஜ்யத்துப் பிரஜைகளுக்கு இருக்குமானால், அந்த ராஜ்யம் விதீரணத்தில் எவ்வளவு சிறியதா யிருந்தபோதிலும், ஜனத் தொகையில் எவ்வளவு குறைவுடையதா யிருந்தபோதிலும், அதனை எந்த ஓர் அந்நிய வல்லரசும் ஆதிக்கங் கொண்டுவிட முடியாது என்ற உண்மையை அந்தக் காலத்திலேயே உலகத்திற்கு உணர்த்திக் காட்டினார்கள் ஆத்தீனியர்கள். பாரசீகப் போராட்டத்திற்குப் பிறகு ஆத்தென்ஸின் செல்வாக்கு மிகவும் உயர்ந்தது. அதன் புகழ்ச் சூரியன் உச்சத்தையடைந்தான். பொருள்கள் குவிந்தன. கலைகள் செழித்தன. அழகுத் தெய்வம், கோயில்களாகவும் மண்டபங்களாகவும் உருக் கொண்டுவிட்டதோ என்று சொல்லும்படியாக எத்தனை கோயில்கள், எத்தனை மண்டபங்கள் எழும்பின! இந்தக் காலத்தில் ஆத்தென்ஸின் அதிகார பீடத்தில் வீற்றிருந்தவன் பெரிக்ளீ என்பவன். இவனை ஓர் அரச ஞானியென்று சொல்லலாம். ஒரு தடவைகூட இவன் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தது கிடையாது. ஆத்தென்ஸைப் பல வகையிலும் முன்னுக்குக் கொண்டுவரவேண்டு மென்ற ஒரு நோக்கத்துடன் இவன் தன் அதிகாரத்தைச் செலுத்தி னான்; அரும்பாடுகள் பலப்பட்டான். ஆயினும் இவன் கதி என்ன வாயிற்று? கடைசி காலத்தில் மனமுடைந்து மரணமடைந்தான். இவன் இறப்பதற்கு இரண்டு வருஷங்களுக்கு முந்தியே (கி.மு. 431) ஆத்தென்ஸுக்கும் ப்பார்ட்டாவுக்கும் மகத்தானதொரு யுத்தம் மூண்டுவிட்டது. பெலொப்பொனேசிய யுத்தம் என்று இதற்குப் பெயர். சரியாக இருபத்தேழு வருஷ காலம் நடைபெற்றது. பாரசீக யுத்தத்தைக் காட்டிலும் இந்தப் பெலொப் பொனேசியப் போர் கிரீஸுக்கு அதிகமான சேதத்தை உண்டுபண்ணிவிட்டது. சிறப்பாக ஆத்தென்ஸுக்கு இந்தப் போர் முடிவிலிருந்து இறக்கந் தான். ஆத்தென்ஸின் ஏற்றத்தையும் இறக்கத்தையும் கண்டவன் ஸாக்ரட்டீ. ஒரு ராஜ்யம், சுதந்திரத்தை நீடித்து அனுபவித்துக் கொண்டிருக்கவேண்டுமானால், அந்த ராஜ்யத்தின் பிரஜைகள் வெறும் தேசபக்தியுடையவர்களாக மட்டும் இருந்தால் போதாது; அறிவு, சீலம், உண்மை கடைப்பிடித்தல், நீதி வழுவாமல் நடந்து கொள்ளல் இவைபோன்ற மேலான பண்புகளுடையவராயிருக்க வேண்டும். இந்த மேலான பண்புகளை ஆத்தீனியர்களுக்குப் புகட்டத் தோன்றியவனே ஸாக்ரட்டீ. இவன், ஆத்தென் அடைந்திருந்த செல்வாக்கையோ, வகித்திருந்த அதிகாரத்தையோ பெரிதாகக் கருதவில்லை; மேலே சொன்ன மேலான பண்புகளையே பெரிதாகக் கருதினான்; இந்தப் பண்புகளை ஆத்தீனியர்களிடையே எஞ்ஞான்றும் நிலைபெறச் செய்ய வேண்டுமென்பதையே தன் வாழ் நாளின் குறிக்கோளாகக் கொண்டான் இதற்காக, மெய்யான அறிவு எங்கே, கோணாத நீதி எங்கேயென்று அல்லும் பகலும் துருவித் துருவிப் பார்த்தான். இந்தத் துருவிப்பார்க்கும் வேலையிலேயே இவன் ஆயுள் பூராவும் கழிந்தது. துருவிப் பார்ப்பதை நிறுத்திவிடுமாறு பணபலமும் அதிகார பலமும் சேர்ந்து இவனை மிரட்டின. மரிப்பதற்குத் தயாராயிருந் தானே தவிர, தனது ஆராய்ச்சியை நிறுத்த இவன் ஒருப்படவில்லை. புன்சிரிப்போடு மரணத்தை ஏற்றுக் கொண்டான். லட்சியம் என்ற பலிபீடத்தின் முன்னே எரிந்த கர்ப்பூரம் இவன். இவனுக்குப் பிறகு ஆத்தென் மணமிழந்து. மதிப்பிழந்து நின்றது. ஸாக்ரட்டீ, ஆத்தென்ஸில் கி.மு. 470ஆம் வருஷம் சாதாரண நிலையிலிருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தான். இவன் தகப்பனார் ஒரு சிற்பி; தாயார் மருத்துவம் செய்துவந்தாள். அந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு வழக்கமாக அளிக்கப்பட்டுவந்த கல்வி இவனுக்கும் அளிக்கப்பட்டது. சங்கீதம், கணிதம், வான சாதிரம், தத்துவ சாதிரம், உடற் பயிற்சி, இப்படிப் பலவற்றிலும் பயின்று தேர்ச்சியடைந்தான். தர்க்க சாதிரத்திலும் பயிற்சி பெற்றான். பரம்பரைத் தொழிலாகிய சிற்பமும் இவனுக்குத் தெரிந்திருந்தது. படிப்பு முடிந்தது. தகப்பனார் செய்து வந்த தொழிலைச் சில வருஷகாலம் செய்து வந்தான். இதில் இவனுக்குச் சொற்ப வருமானமே கிடைத்தது. ஆனால் இதைக் கொண்டு இவன் திருப்தியேயடைந்தான்; வறுமையிற் செம்மை காணும் ஆற்றல் இவனுக்குப் பாலியத்திலேயே ஏற்பட்டுவிட்டது. இப்படி ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும் இவன் மனம் நிம்மதி பெறவில்லை; எதையோ ஒன்றை நாடி நின்றது; அந்த ஒன்றையடைய விழைந்தது. அந்த ஒன்று என்ன? அதுதான் மெய்யறிவு. ஜனங்கள் - ஏன்? படித்தவர்களென்று பெருமை கொண்டிருக் கிறவர்கள்கூட - நீதி அநீதியென்றும், சத்தியம் அசத்தியமென்றும், அழகு விகாரம் என்றும், தைரியம் கோழைத்தனமென்றும், இப்படிப் பல விதமாகப் பேசுகிறார்கள். இவற்றின் நிஜமான அர்த்தமின்ன தென்று தெரிந்துகொண்டு பேசுகிறார்களா? இவற்றைப்பற்றிச் சரியாக அறிந்து கொண்டிருக்கிறார்களா? இல்லவே இல்லை. இவற்றைப் பற்றிய உண்மையான அறிவை ஜனங்களுக்கு உணர்த்து வதே தன் கடமையெனக் கொண்டான் ஸாக்ரட்டீ. இதற்காகவே, தான் கடவுளால் இந்தப் பூலோகத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாகக் கருதினான். இந்தத் தெய்வ கட்டளையை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டுமேயென்ற எண்ணந்தான் இவன் மனத்தின் முன்னணியில் வந்து நின்றது. இதற்காகத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டான் இந்தக் காலத்தில். அறிவுறுத்த வேண்டியவர்கள், முதலில் அறிந்து கொள்ளவேண்டுமல்லவா? எனவே, தன்னைச் சுற்றி நடைபெறுகிற ஒவ்வொரு விவகாரத்தையும் கூர்ந்து கவனித்து வரலானான். ஒவ்வொரு விவகாரமும் இவன் சிந்தனையைக் கிளறிவிட்டுக் கொண்டிருந்தது. இங்ஙனம் சிந்தனைக் கடலில் மூழ்கி மூழ்கி எழுந்தபோதி லும், தான் ஆத்தென் ராஜ்யத்தின் பிரஜை என்பதை இவன் மறந்துவிடவில்லை. ஒரு பிரஜைக்குரிய கடமைகளை ஒழுங்காகச் செய்துவந்தான். ஒரு பிரஜையின் கடமைகளுள் தலையாயது எது? தனது ராஜ்யம் ஆபத்திலே சிக்கிக்கொண்டிருக்கிறது; அதனின்று அதனை மீட்கத் தன்னாலியன்றதைச் செய்யவேண்டும். இதை நன்கு உணர்ந்திருந்தான் ஸாக்ரட்டீ. ஸாக்ரட்டீஸுக்கு நாற்பது வயதாகிற சமயத்தில் பெலொப் பொனேசிய யுத்தம் மூண்டுவிட்டது. சர்வ கிரீஸிலும் பரவிய தீயல்லவா இது? இந்தத் தீயில் துணிந்து இறங்கத் தயங்கவில்லை ஸாக்ரட்டீ. ஆத்தீனியக் காலாட்படையில் சேர்ந்து, அரசாங்கம் உத்தரவிடுகிற இடங்களுக்குச் சென்று போர் புரிந்தான். பொட்டி டீயா என்ன, டேலியம் என்ன, ஆம்ப்பிபோலி என்ன, இந்தப் போர்க்களங்களில் இவன் காட்டிய வீரம், உறுதி, நிதானம் முதலிய வற்றைக் கண்டு, கூட இருந்த படை வீரர்கள் பிரமித்துப்போனார்கள். தனக்குக் கிடைக்கவேண்டிய வீரப்பரிசை, தன் சகாவான வேறொரு வனுக்கு வழங்குமாறு செய்தான். தம்மையே பிறர்க்கு வழங்கிய பெருந்தகையாளருள் ஒருவனல்லனோ இவன்? யுத்த சேவையிலிருந்து விடுதலையடைந்ததும், இவனுடைய நண்பர்கள், இவனை ராஜ்யத்தின் அன்றாட அரசியல் விவகாரங் களில் கலந்து பணிபுரியுமாறு வேண்டினார்கள். ஆனால் இவன் இதற்கு இசையவில்லை. அப்பொழுது ஆத்தென்ஸில் நேர் முகமான ஜன ஆட்சி நடைபெற்று வந்தது. அதாவது ஒவ்வோர் ஆத்தீனியப் பிரஜைக்கும் அரசாங்க நிருவாகத்தில் பங்கு கொள்ளும் உரிமை இருந்தது; அப்படியே நீதிபதியாயிருந்து நீதி வழங்கவும் உரிமை இருந்தது. இவை மீது ஸாக்ரட்டீஸுக்கு மனஞ் செல்லவில்லை. ஜனங்களிடையே பரவியுள்ள அறியாமையை அகற்றி அவர்களுக்கு நல்லறிவு புகட்டுவதையே தனது கடமையாகக் கொண்டான். இதற்காக இவன் கல்லூரி வைத்து நடத்தவில்லை; மேடைகள் மீதேறிப் பிரசங்கங்கள் செய்யவில்லை. வீதியிலே போய்க்கொண் டிருப்பான். வழியில் யாராவது எதிர்ப்பட்டால் அவரை நிறுத்தி வைத்து, ஏதேனும் கேள்விகள் கேட்பான். அவரும் தமக்குத் தெரிந்தவரையில் பதில் சொல்வார். இவனும் மடக்கி மடக்கிக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பான். இதைப் பார்த்து நான்கு பேர் கூடுவார்கள். சம்பாஷணை வளரும். வாதப் பிரதிவாதங் களுக்குக் கேட்பானேன்? நான்கு பேர் சேர்ந்திருக்கிற இடங்களில் ஸாக்ரட்டீஸை நிச்சயமாகக் காணலாம். கடைத் தெருவா, கோயிலா, திருவிழாவா, பணக்காரர்களின் மாளிகையா, தொழிற்சாலையா, எங்கும் ஸாக்ரட்டீ தான்! ஸாக்ரட்டீஸைப்பற்றிய பேச்சுதான்! எந்த இடத்திற்குப் போகவும் யாருடன் பேசவும் இவன் சிறிதுகூட கூச்சப்பட்டதில்லை. இவ்வண்ணம் இவன் ஜனங்களுடைய அறிவைத் துலக்கம் பெறச் செய்யும் பணியில் முழுமூச்சாக இறங்கியிருந்த காலத்திலும், பிரஜை என்ற ஹோதாவில் தான் செய்யவேண்டிய முக்கியமான அரசியற் கடமைகளை விடாது செய்துவந்தான். அரசாங்க நிருவாக சபையில் ஒருவனாயிருந்து சிறிது காலம் சேவை செய்தான். இவ்வாறு இவன் செய்துவந்த காலத்தில், அதிகாரத்திற்குப் பயந்து, மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்து கொண்டதென்பதே கிடை யாது. ஒரு சமயம், அரசாங்கம், பணக்காரப் பிரபு ஒருவனைக் கைது செய்துகொண்டு வருமாறு இவனுக்கு உத்தரவிட்டது. அவனைக் கைது செய்வது நியாயத்திற்கு விரோதமென்று இவனுக்குப்பட்டது. உத்தரவை நிறைவேற்ற மறுத்துவிட்டான். அன்பை அடிப்படை யாகக் கொள்ளாத, நீதியைத் துணையாகப் பெற்றிராத அதிகார சக்திக்கு இவன் தலை வணங்கியதே கிடையாது. ஸாக்ரட்டீஸின் உண்மையை உணர்த்தும் முறையானது, இளைஞர்களின் மனத்தைப் பெரிதும் கவர்ந்து விட்டது. காலக் கிரமத்தில் இவனைப் போற்றிப் பின்பற்றுகிற ஒரு சிஷ்ய கோஷ்டி இவனுக்கு ஏற்பட்டது. இந்தச் சிஷ்யர்களிலே முக்கியமானவன் பிளேட்டோ. கிரேக்கர்களெல்லோருக்கும் பொதுவானது டெல்பி என்ற இடத்திலுள்ள கோயில். கிரேக்கர்கள் குறி கேட்பதில் பிரியமுடைய வர்கள். இந்த டெல்பி கோயில், குறி சொல்லும் இடங்களெல்லாவற் றிற்கும் மேலானதாகக் கருதப்பட்டது. ஸாக்ரட்டீஸின் சிஷ்யர் களில் ஒருவன், இந்தக் கோயிலுக்குச் சென்று ஸாக்ரட்டீஸைக் காட்டிலும் அறிவுடையவர் வேறு யாரேனும் உண்டா? என்று கேட்டான். இல்லை என்ற பதில் வந்தது. இதைக் கேட்ட ஸாக்ரட்டீ, தனக்குள்ளேயே நகைத்துக் கொண்டான். அறிவுக்கு எல்லை யேது? இதற்குப் பிறகு இவனுடைய அறிவு ஆராய்ச்சி, பன் மடங்கு அதிகரிக்கத் தொடங்கியது. மற்றவர்கள் அறியாமலிருந்தும், அறிந்தவர்களென்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். நானோ, என்னுடைய அறியாமையை அறிந்துகொண்டிருக்கிறேன். இதுதான் மற்றவர்களுக்கும் எனக்குமுள்ள வித்தியாசம் என்று, தன்னுடைய அறிவைப் பாராட்டிப் பேசுகிறவர்களுக்கு அடக்க மாகப் பதில் கூறுவான். இவனுடைய இந்தப் பிரசாரம், பணக்காரர்களுக்கும், பரம்பரைப் பழக்க வழக்கங்களில் ஊறிப் போயிருந்தவர்களுக்கும் பிடிக்கவில்லை. இளைஞர்கள் மனத்தைக் கெடுத்து வருகிறா னென்றும், தெய்வ நிந்தனை செய்து வருகிறானென்றும், இவன்மீது குற்றஞ் சாட்டி விசாரணைக்குக் கொண்டுவரச் செய்தார்கள். தான் செய்து வந்ததெல்லாம் சரியென்று இவன் எதிர்வாதஞ் செய்தான். பயனில்லை. குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தக் குற்றத்திற்கு மரண தண்டனைதான் விதிக்கப்பட வேண்டுமென்று வழக்குத்தொடுத்தவர்கள் வற்புறுத்தினார்கள். அப்பொழுதைய வழக்கப்படி மரண தண்டனைக்குப் பதில் வேறு தண்டனை ஏதேனும் விதிக்கப்படவேண்டுமானால், அதைச் சொல் என்று நீதிபதிகள் இவனைக் கேட்டார்கள். தண்டனையா? ஆத்தென் ராஜ்யத்திற்கு நான் எத்தனையோ வகைகளில் நன்மை செய்திருக் கிறேன். அதற்காக என் ஆயுளுள்ளளவும் என்னை அரசாங்கச் செலவில் போஷித்துக் காப்பாற்றி வரவேண்டும் என்று பதில் கூறினான். இதைக் கேட்டு நீதிபதிகளுக்குக் கோபம் வந்துவிட்டது. மரண தண்டனையை ஊர்ஜிதம் செய்து விட்டார்கள். மரண தண்டனை ஒரு மாத காலம் வரை நிறைவேற்றப் படவில்லை. சர்வ கிரேக்கர்களும் கொண்டாடுகின்ற ஒரு திருவிழா அப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த விழா முடிகிற வரை மரண தண்டனை எதுவும் நிறைவேற்றப்படக்கூடாதென்பது நியதி. எனவே ஒரு மாத காலம் ஸாக்ரட்டீ சிறையிலேயே கிடந்தான். சிறையிலே கிடந்தானென்று சொல்வதைக்காட்டிலும் சிறையிலே தவஞ் செய்து கொண்டிருந்தானென்று சொல்லுதல் பொருத்தமாயிருக்கும். இந்த ஒரு மாத காலத்திலும் இவனுடைய சீடர்களும் நண்பர்களும் இவனை அடிக்கடி வந்து பார்த்துப் போனார்கள். அவர்களுடன் நடத்திய சம்பாஷணையும், அவர்களுக்குச் செய்த உபதேசங்களும், மனிதத் தன்மையில் இவன் அடைந்திருந்த உயர்ந்த நிலைக்குச் சிறந்த அத்தாட்சி களாக விளங்குகின்றன. இவனது நண்பர்கள், சிறையிலிருந்து தப்பித்துச் செல்லுமாறும், அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தாங்கள் செய்வ தாகவும் கூறினார்கள். என்ன கேவலம்! இவர்களுக்காக இரங்கினான் ஸாக்ரட்டீ. நான் ஆத்தென்ஸின் பிரஜை. அந்த ஆத்தென்ஸினால் போஷிக்கப்பட்டு வளர்ந்தேன். அதனுடைய சட்ட திட்டங்களை இயற்றுகிற விஷயத் தில் நான் பங்கெடுத்துக்கொண்டேன். என்னைப் போஷித்து வளர்த்த ராஜ்யம், எனது பெற்றோர்களுக்குச் சமானம். அந் நிலையி லுள்ள ராஜ்யம் எனக்கு மரணதண்டனை விதித்திருக்கிறது. எந்தச் சட்ட திட்டங்கள் இயற்றப்படுவதில் நான் பங்கெடுத்துக்கொண் டேனோ அந்தச் சட்டத்திட்டங்களே, நான் மரணமடையவேண்டு மென்று உத்தரவிட்டிருக்கின்றன. இப்படியிருக்க, சிறையிலிருந்து நான் தப்பித்துச் சென்றால், என்னை வளர்த்த ராஜ்யத்திற்கும், நான் இயற்றிக் கொடுத்த சட்ட திட்டங்களுக்கும் துரோகம் செய்த குற்றவாளியாவேனல்லவா? மீண்டுமொருமுறை நான் குற்றவாளி யாகவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா என்று கேட்டான். கடைசியில் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டிய நாள் வந்தது. க்ரட்டீ, மன அமைதியுடன் அமர்ந்திருந்தான். சுற்றிலும் சீடர் முதலாயினோர் துக்கம் நிறைந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தனர். மரணதண்டனை பெற்றவர்களை விஷ மருந்தச் செய்வதே அந்தக் காலத்துக் கிரீஸில் வழக்கம். இந்த வழக்கப்படி, சிறைக் காவலனொருவன், விஷம் நிறைந்த ஒரு கோப்பையை ஸாக்ரட்டீஸிடம் நீட்டினான். அவனுக்கு ஆசி கூறி நன்றி தெரிவித் தான் ஸாக்ரட்டீ! ஏன்? இந்த ஒரு மாத காலமும் அவன் தன்னிடம் அன்புடன் நடந்து கொண்டதற்காக! கொடுத்த விஷத்தைக் குடித்து விட்டான். முகத்தில் சிறிது துக்கக் குறி தோன்ற வேண்டுமே? இல்லவே இல்லை. கோப்பை காலியாகி விட்டது. கூட இருந்தவர்கள், தங்கள் துக்கத்தை அடக்கிக் கொள்ளமுடியாமல் கோவென்று வாய்விட்டுக் கதற ஆரம்பித்தார்கள். அவர்களைச் சாந்தப்படுத்தி, தன்னை அமைதியாக இறக்கவிடுமாறு வேண்டிக்கொண்டான் ஸாக்ரட்டீ. சிறிது நேரத்திற்கெல்லாம் உடம்பு சில்லிட்டது; கைகால்கள் விறைத்துப் போயின. மூச்சு நிற்கிற சமயம். அப் பொழுது, அருகேயிருந்த சீடனிடம் அப்பா, எனக்காக நீ ஒரு காரியம் செய்யவேண்டும். அஃதென்னவென்றால், ஆக்ளேப் பிய தெய்வத்திற்கு நான் ஒரு சேவல் பலி கொடுக்கவேண்டும்; அதை நீ எனக்காகக் கொடுத்துவிடு; மறவாதே யென்று கூறினான் ஸாக்ரட்டீ. நோய்வாய்ப் பட்டிருக்கிறவர்கள், சொதமடைந் தால், இந்த ஆக்ளேப்பிய தெய்வத் திற்குப் பலி கொடுப்பது கிரேக்கர்களின் வழக்கம். இந்த வழக்கத்தை யொட்டியே ஸாக்ரட் டீ இப்படிக் கூறினான். அதாவது இந்த இகலோக வாழ்க்கையை நோய்வாய்ப்பட்டிருந்த நிலையென்றும், பரலோக வாழ்க்கையைச் சொதமடைந்த நிலையென்றும் ஸாக்ரட்டீ கருதினான். தனக்கு மரணம் கிட்டிவிட்டதால், தான் சொத மடைந்துவிட்டதாகக் கருதி, சொதமடைந்தவர்கள் பலி கொடுக்க வேண்டுமென்கிற வழக்கத்தை யொட்டி ஒரு சேவலைப் பலி கொடுக்குமாறு கூறினான். மரணத்தைக் கண்டு இவன் அஞ்சாமல் மட்டும் இருக்கவில்லை; அதை மகிழ்ச்சியோடு வரவேற்கவும் செய்தான். பலி கொடுக்கவேண்டுமென்று மேலே சொன்ன வார்த்தைகள் தான் ஸாக்ரட்டீஸின் வாயிலிருந்து வந்த கடைசி வார்த்தைகள். அடுத்த கணத்தில் மூச்சு நின்றது. இங்ஙனம் இவன் பூதவுடல் நீத்தது கி.மு. 399ஆம் வருஷம். ஸாக்ரட்டீஸை ஒரு லட்சண புருஷன் என்று சொல்ல முடியாது. நெற்றி சிறிது முன்னே வந்திருக்கும்; சப்பை மூக்கு; தடித்த உதடுகள்; பெரு வயிறு; கண்களை உருட்டி உருட்டிப் பார்ப்பான். ஒரே ஆடைதான். இதுவும் அழுக்குப் படிந்தும் கிழிந்தும் இருக்கும். காலில் மிதியடி போட்டுக் கொள்ளமாட்டான். வெயிலோ, குளிரோ, பனியோ எந்தக் காலத்திலும் இந்த ஒற்றை யாடைதான்; மிதியடியில்லாத நடைதான். இவனைப் பார்த்தவர் பரிகசித்தனர். பழித்தவரும் உண்டு. உடலைப் பேணி வளர்க்க வேண்டுமென்பதில் இவன் கருத்தைச் செலுத்தவில்லை; உள்ளொளி பெருக்குவதிலேயே கவனஞ் செலுத்தினான். இவன் குடும்பத்தோடு வாழ்ந்தான்; ஆனால் குடும்பத்திற்காகக் கவலைப்பட்டுக்கொண் டிருக்கவில்லை. இவன் மனைவியின் பெயர் ஜாந்திப்பே. இவர் களுக்கு மூன்று பிள்ளைகள். ஸாக்ரட்டீ சிறந்த தேச பக்தன்; தேசத்தைக் காப்பாற்றப் போர் செய்தான்; தேச மக்களுக்கு நல்லறிவு புகட்டுவதற்காக வறுமை வாழ்க்கையை மேற்கொண்டான்; தேசத்தின் கௌர வத்தைக் காப்பாற்றும்பொருட்டு மரணத்தைப் புன்சிரிப்போடு ஏற்றுக்கொண்டான். ஸாக்ரட்டீ, தெய்வ கட்டளையை மீறி ஒரு காரியத்தையும் செய்வதில்லை; ஓர் ஆத்மாவுக்குக்கூட தீங்கு உண்டு பண்ணிய தில்லை. தன்னலம் என்பது அணுவளவும் அவனுக்கு இருக்க வில்லை. எது நன்மை, எது தீமையென்று பாகுபடுத்திப் பார்ப்பதில் அவன் தவறியதே கிடையாது. சுருக்கமாக, அவனை மனிதத் தன்மையின் நிறைவு என்று சொல்லலாம். ஸாக்ரட்டீ எழுப்பிய ஞான ஒலியை பிளேட்டோ மூலமாகக் கேட்போம். பிளேட்டோ (கி. மு. 427-347) ஸாக்ரட்டீ என்னும் ஞானச் சுடரினின் றெழுந்த நல்விளக்கு பிளேட்டோ; அவனுடைய தலைமாணாக் கன் என்று சொன்னால் அது முற்றிலும் பொருந்தும். ஸாக்ரட்டீஸின் நல்வாக்கு களைஎழுத்திலே கொணர்ந்து அதன் மூலம் அவனை அறிவு உலகத்திலே நிரந்தரமாக வாழ வைத்தவன் பிளேட்டோ. ஸாக்ரட்டீஸை இப்பொழுது நாம் கேட்க முடிகிறதென் றால், அதற்குக் காரண புருஷன் பிளேட்டோ தான். ஸாக்ரட் டீஸுக்கு ஜெனோபன் என்ற மற்றொரு சீடனுண்டு. இவனும், தனது ஆசானைப் பற்றிச் சில குறிப்புக்கள் எழுதி வைத்துப் போயிருக்கிறான். ஆனால் இவன் மூலம் ஸாக்ரட்டீஸை ஒருவாறு பார்க்கத்தான் முடிகிறது; கேட்டு அனுபவிக்க முடிவதில்லை. இந்தப் புனிதமான சேவையை நமக்காகச் செய்து வைத்துப் போனவன் பிளேட்டோவே. இந்தச் சேவையின் மூலம், தனக்கு ஞான ஒளி தந்த நாயகனைச் சிரஞ்சீவி யாக்கியதோடல்லாமல் தானும் சிரஞ்சீவியானான். வாழ்க பிளேட்டோ! பிளேட்டோ, கி.மு. 427-ஆம் வருஷம், ஆத்தென்ஸின் உயர் குடும்பமொன்றில் பிறந்தான். இவனது பெற்றோர்கள், அரச வமிசத்தைச் சேர்ந்தவர்களென்று தங்களைச் சொல்லிக் கொண் டார்கள். இவனது உற்றார் உறவினரும் ஓரளவு செல்வாக்குப் பெற்ற வர்களாயிருந்தார்கள். இவர்கள் வீட்டுக்கு ஸாக்ரட்டீ அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தான். எனவே, சிறு குழந்தைப் பருவத்தி லிருந்தே பிளேட்டோவுக்கு ஸாக்ரட்டீஸின் பரிச்சயம் ஏற்பட்டிருந் தது. அவனுடைய தோற்றம், பேச்சு முதலிய யாவும் பிளேட்டோ வின் பசு மனத்தில் நன்கு பதிந்திருக்கவேண்டும். பிளேட்டோ, மற்றக் கிரேக்கச் சிறுவர்களைப் போல் கல்வி பயின்றான். இலக்கியம், கணிதம், இசைப் பயிற்சி இப்படி அனைத்தி லும் தேர்ச்சியடைந்தான். ஹோமர் என்ற கவிஞர் இயற்றிய இலியத், ஒடிஸே என்ற இரண்டு மகா காவியங்களில் பெரும் பகுதி இவனுக்கு மனப் பாடமாயிருந்தது. யாழ் போன்றதொரு நரம்புக் கருவியில் வாசிக்கவும், அபிநயத்தோடு பாடவும் இவன் தெரிந்து கொண்டிருந்தான். உடற்பயிற்சியைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? அதில், மற்றக் கிரேக்க இளைஞர்களுக்குச் சிறிதும் குறைந்தவனா யில்லை. மற்றும், கவிதைகள் புனையும் ஆற்றலும் இவனுக்கு இருந்தது. சில கவிதைகளை இயற்றியதாகவும் தெரிகிறது. ஆனால் பிற்காலத்தில் இவன் சிறந்த உரைநடையாசிரிய னாகப் புகழ் பெற்றான். இவ்வளவெல்லாம் சொன்ன போதிலும், நூல்களின் வாயி லாக இவன் பெற்ற அறிவு மிகவும் சொற்பமென்று தான் சொல்ல வேண்டும். மக்களிடையே பழகிப்பெற்ற அறிவு தான் அதிகம். தான் உயர் குடும்பத்துச் சிறுவன் என்று கருதிக் கொண்டு சாதாரண ஜனங்களிடமிருந்து ஒதுங்கியிராமல் எல்லோரிடையிலும் சென்று சகஜமாகப் பழகினான். சந்தைச் சதுக்கமென்ன, உடற்பயிற்சி சாலைகளென்ன, தொழில் பட்டடைகளென்ன, விவசாயப் பண்ணைகளென்ன, இப்படி ஒவ்வோர் இடமாகச் சென்று அங்கு நடைபெறும் விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பான்; எதையும் அலட்சியஞ் செய்யமாட்டான். யாரைச் சந்தித்த போதிலும் அவரிட மிருந்து ஏதேனும் கற்றுக்கொள்ள வேண்டுமென்றே பார்ப்பான். இங்ஙனம் இவன் பெற்ற உலகியலறிவு இவனது நூல்களின் பல இடங்களில் பிரதிபலிக்கின்றது. அந்தக் காலத்து எல்லாக் கிரேக்கர்களையும் போல், பிளேட்டோ, நாட்டுப்பற்று மிகவுடையவனாக இருந்தானென்பதை நாம் சொல்லத் தேவையில்லை. அப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருந்த பெலொப் பொனேசிய யுத்தத்தில் குதிரைப் படை வீரனாயிருந்து சேவை செய்தான். சில பரிசில்களும் இவனுக்குக் கிடைத்தன. பிளேட்டோ விரும்பி யிருந்தால், சிறந்த ஓர் அரசியல்வாதி யாக மலர்ந்திருக்கலாம். அதற்கு வேண்டிய வசதிகளும், வாய்ப்புக் களும், தகுதிகளும் இவனுக்கு இருந்தன. ஆனால் இவனுடைய வாழ்க்கைப் பாதையின் ஏறக்குறைய இருபத்தெட்டாவது மைற் கல்லில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அதுதான் ஸாக்ரட்டீஸின் மரணம். குழந்தைப் பருவத்திலிருந்தே ஸாக்ரட்டீஸிடம் கவர்ச்சி கொண்டிருந்த பிளேட்டோ, பதினேழு அல்லது பதினெட்டு வயதடைந்ததும், அவனுடைய சம்பாஷணைகளில் பெரிதும் ஈடு பட்டான். அவனுடன் பேசுவதும் பழகுவதும் இவனுக்குப் பெரிய படிப்பினையா யிருந்தது. அவனை நிழல்போல் பின் தொடர்வதில் பெருமை கண்டான். தனது அறியாமைத் திரையை அகற்றி விட்ட ஆசானாகக்கொண்டான் அவனை. இருவருக்குமிடையே பிரிக்க முடியாத தொடர்பு ஏற்பட்டது. இந்தத் தொடர்பு முற்றிக்கொண்டு வருகிற தருணத்தில், ஸாக்ரட்டீ, அநியாயமாகக் குற்றஞ் சாட்டப்பட்டு மரண தண்டனை பெற்றான். விசாரணையின் போது ஸாக்ரட்டீ நிகழ்த்திய சொற்பொழிவுகள் இவன் உள்ளத்தை உலுக்கிவிட்டன. பிறகு அவன் சிறையில் ஒரு மாத காலம் இருந்தபோது இவனும் கூடவே இருந்து, அவன் அவ்வப்பொழுது செய்துவந்த தத்துவோப தேசங்களைச் செவி மடுத்துவந்தான். கடைசியில் அவன் விஷமருந்தி இறந்தபோது, கூடவே இருந்து துக்கக் கண்ணீர் வடித்தான். பிறகு கூறுகிறான் ஓரிடத்தில்:- ஸாக்ரட்டீஸுக்காக நான் அழவில்லை. இத்தகைய நண்பனொருவனை இழந்துவிட்ட என் துரதிருஷ் டத்தைக் குறித்தே அழுதேன். ஸாக்ரட்டீஸினிடத்தில் இவன் வைத்திருந்த பக்தி இதிலிருந்து ஒருவாறு புலனாகிறதல்லவா? ஸாக்ரட்டீஸின் மரணத்திற்குப் பிறகு, பிளேட்டோவுக்கு அரசியலிலேயே வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. அப்பொழுது ஆத்தென்ஸில் ஜனங்களுடைய ஆட்சியே நடைபெற்று வந்தது. ஜனங்களிலே ஒருவனாக வாழ்ந்த, ஜனங்களுக்காக வாழ்ந்த ஒருவனை, அந்த ஜனங்களுடைய ஆட்சியே கொலை செய்துவிட்டதென்றால் அந்த ஜனங்களிடத்திலும், அவர்கள் நடத்திய ஆட்சியினிடத்திலும் அடிப்படையான சில குறைபாடுகள் இருக்க வேண்டுமென்று உணர்ந்தான் பிளேட்டோ. இந்தக் குறைகள் அகலும் வகையில் ஜனங்களுக்கு நல்லறிவு புகட்டுவதிலேயே தனது மிகுதி வாழ்நாளை யும் செலவழிப்பதென்று சங்கற்பம் செய்து கொண்டான். ஆனால், இந்தச் சங்கற்பத்தை உடனே அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர இவன் மனம் திடப்படவில்லை; தன்னை இன்னும் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கருதினான். ஸாக்ரட்டீ இறந்து போனதற்கப்புறம் இவனுக்கு ஆத்தென், பசுமை இழந்த சோலை மாதிரி தென்பட்டது. அங்கேயிருக்க இவனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. யாத்திரை புறப்பட்டுவிட்டான். எகிப்து என்ன, வட ஆப்ரிக்காவின் மற்றப் பிரதேசங்களென்ன, இத்தலியின் தென் பகுதியென்ன, இப்படிப் பல இடங்களையும் சுற்றிப் பார்த்தான். ஆங்காங்குள்ள அறிஞர்களைத் தேடிக் கண்டு பிடித்து அவர்களிடமிருந்து அநேக அரிய விஷயங்களைத் தெரிந்து கொண்டான். சுமார் பத்து வருஷத்திற்கு மேல் இப்படி யாத்திரை யில் கழிந்தது. யாத்திரையிலிருந்து திரும்பி வருகிறபோது, இத்தலிக்குத் தெற்கே சிஸிலி தீவிலுள்ள ஸைரக்யூ என்ற இடத்தில் சிறிது காலம் தங்கினான் பிளேட்டோ. இது, கிரேக்கர்கள் குடியேறி தா பித்துக்கொண்ட சக்திவாய்ந்த ராஜ்யங்களுள் ஒன்று. பிளேட்டோ சென்றிருந்தபோது, இந்த ராஜ்யம் முதலாவது டையோனிஸிய என்ற ஒருவனுடைய சர்வாதிகார ஆட்சிக்குட்பட்டிருந்தது. இவனுடைய மனைவியின் சகோதரன் டியோன் என்பவன். இவ னுக்குச் சுமார் இருபது வயதுதானிருக்கும். ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தான். பிளேட்டோ, ஸைரக்யூ போந்ததும், இந்த டியோனை அறிமுகம் செய்து கொண்டான். இவனுக்குச் சில நல்லுபதேசங்களைச் செய்தான். இதற்குப் பிறகு டியோன் அடி யோடு மாறிவிட்டான்; எளிய வாழ்க்கையும் உயர்ந்த நோக்கமு முடைய வனானான்; சுருக்கமாக, பிளேட்டோவின் சீடனானான். இந்த டியோன், பிளேட்டோவை, டையோனிஸியஸுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். பிளேட்டோவுடன் சிறிது காலம் பழகினால், டையோனிஸியஸின் சர்வாதிகார மனப்பான்மையில் சிறிது மாற்றம் ஏற்படக்கூடுமென்றும், இதனால் அவன் ஜனங்களுக் குகந்த முறையில் நிருவாகத்தை நடத்தக் கூடுமென்றும் இவன் நம்பினான். ஆனால் டையோனிஸியஸுக்குப் பிளேட்டோவின்மீது வெறுப்பே ஏற்பட்டது. பிளேட்டோவுக்கும், ஸைரக்யூவாசிகள் நடத்திவந்த வாழ்க்கையின்மீது வெறுப்பு ஏற்பட்டது. மிதமிஞ்சி உண்டார்கள்; குடித்தார்கள்; கேளிக்கை களில் ஈடுபட்டார்கள். இப்படிப்பட்ட பிரஜைகளைக்கொண்ட ஒரு ராஜ்யம், பண்பட்ட தோர் அரசியலமைப்பின்மீது நிலைத் திருக்கமுடியாதென்று கண்டுகொண்டான். இப்படி இருவரும் மனவேற்றுமை கொண்டிருந்த சமயத்தில், ப்பார்ட்டா தேசத்திலிருந்து ஒருவன் டையோனிஸியஸிடம் ஏதோ ஒரு காரியமாக வந்திருந்தான். அவனிடம் பிளேட்டோவை ஒப்புவித்து ப்பார்ட்டாவுக்கு அழைத்துக்கொண்டு போய் அடிமையாக விற்றுவிடும்படி கூறினான் டையோனிஸிய. நல்வழி காட்டவந்தவனுக்கு எத்தகைய நன்றி! நல்ல வேளையாக பிளேட்டோ, அடிமையாக விற்கப்படவில்லை; ஒரு வியாபாரியினுடைய தயவி னால் ஆத்தென் வந்து சேர்ந்தான். ஆத்தென் வந்து சேர்ந்ததும், கல்விக் கழகமொன்றை தாபித்தான். இதற்கு அக்காடெமி என்று பெயர். ஐரோப்பா விலேயே முதன்முதலாக ஏற்பட்ட சர்வ கலாசாலை இதுவென்று அறிஞர்கள் கூறுகிறார்கள். தனது ஆசானிடமிருந்து கேட்ட அறி வுரைகளையும், தனது யாத்திரையில் கண்ட அனுபவங்களையும் திரட்டி இங்குப் பாடங்களாகப் போதித்தான். ஆத்தென்ஸிலிருந்து மட்டுமல்ல, வெளியிடங்களிலிருந்தும் இளைஞர் பலர் வந்து இங்குக் கல்வி பயின்றார்கள். இப்படிப் பயின்று வந்த இளைஞர் களிலே ஒருவன் அரிட்டாட்டல். கழகத்தில், பாட புத்தகங்கள் உபயோகிக்கப்பட்டதாகத் தெரிய வில்லை; வாய்மொழி மூலமாகவே மாணாக்கர்களுக்கு அறிவு புகட்டப் பட்டு வந்தது. வெறும் வார்த்தைகளைக் கொண்டு உண்மையை உணர்த்த முடியாதென்பது பிளேட்டோவின் கோட்பாடு. ஆசிரியன் வாழ்கின்ற விதத்திலே, சொல்லிக் கொடுக்கின்ற முறை யிலேதான் ஒரு மாணாக்கனின் அறிவு தெளி வடைகிறது, உள்ளம் பண்படுகிறது என்று பிளேட்டோ திடமாக நம்பினான். கழகத்தில் நீண்ட சொற்பொழிவுகள் நடைபெற்றதாகவும் தெரியவில்லை. பிளேட்டோ ஒரு சிறந்த பிரசங்கியல்ல. தனது வாழ்நாளில் இவன் ஒரே ஒரு முறைதான் பிரசங்கம் செய்ததாகத் தெரிகிறது. அதுவும் ஏறக்குறைய எழுபது வயதுக்கு மேல். பிரசங்கம், உண்மையென்னும் விஷயத்தைப் பற்றி, இந்தப் பிரசங்கத்தைக்கேட்டவர்களில் சிலர் குறிப்பெடுத்துக் கொண்டார் களென்றும், குறிப்பெடுத்துக்கொண்ட வர்களில் ஒருவன் அரிடாட்டல் என்றும் சொல்லப்படுகின்றன. பிளேட்டோ, கழகத்தைத் திறம்பட நடத்துவதிலேயே தன் ஆயுள் பூராவையும் செலவிட்டான். இவனுடைய தலைமையில் ஏறக்குறைய நாற்பது வருஷகாலம் கழகம் நடைபெற்றுவந்தது. இடையில் இரண்டு தடவை ஸைரக்யூஸுக்குச் சென்றுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கழகம் தொடங்கிய இருபதாவது வருஷம் பிளேட்டோ வுக்குச் சுமார் அறுபது வயதிருக்கும். கிரேக்கர்களிடையே இவன் புகழ் பரவி நின்றது. இவன் சொல்லுக்கு மதிப்பும் ஏற்பட்டிருந்தது. அப்பொழுது ஸைரக்யூஸில் முதலாவது டையோனிஸியஸின் மகனான இரண்டாவது டையோனிஸிய என்பவன் பட்டத்திற்கு வந்திருந்தான். இவனுக்கு, முந்திச் சொன்ன டியோன் என்பவனே மதி மந்திரியா யிருந்தான். தனது அரசனை நல்வழிப்படுத்த வேண்டு மென்பது இவன் எண்ணம். இதற்காக, பிளேட்டோவை ஸைரக்யூ ஸிற்கு வரவழைக்கு மாறு டையோனிஸியஸைத் தூண்டினான். இவனுடைய அழைப்புக்கும் டியோனுடைய வற்புறுத்தலுக்கு மிணங்கி, பிளேட்டோ, ஸைரக்யூஸிற்குச் சென்றான். ஓர் அரசன் எப்படி இருக்கவேண்டும், எப்படி ஆளவேண்டு மென்பவைகளைப் பற்றி இதுகாறும் தான் போதித்து வந்தவைகளை, டையோனிஸிய மூலமாக அனுஷ்டானத்தில் கொண்டுவரச் செய்ய வேண்டுமென்ப தற்காகவே இவன் ஸைரக்யூஸிற்குச் செல்ல உடன்பட்டான். சென்ற தும் டையோனிஸிய இவனை நன்கு உபசரித்து இவன் போதனை களுக்குச் செவி கொடுத்தான். ஆனால் ஆரம்ப உற்சாகமாகவே முடிந்தது. டியோனின் சூழ்ச்சி காரணமாகவே, பிளேட்டோ, தனக்கு அரச கடமைகளைப்பற்றிப் போதிக்க முன்வந்திருப்பதாக எண்ணிக்கொண்டுவிட்டான். எனவே டியோனின் மீது வெறுப்புக் கொண்டு அவனை நாடு கடத்திவிட்டான். பிளேட்டோவுக்கு இது பிடிக்கவில்லை. இனி இங்கிருத்தல் தகாதென்று தீர்மானித்துக் கொண்டு, போன நாலாறு மாதங்களுக்குள் ஆத்தென்ஸுக்குத் திரும்பி வந்துவிட்டான். ஐந்து வருஷங் கழித்துத் திரும்பவும் இவன் ஸைரக்யூஸுக்குச் செல்லும்படி நேரிட்டது. ஸைரக்யூஸிலிருந்து வந்தது முதல் டையோனிஸியஸுடனும் டியோனுடனும் கடிதப் போக்குவரவு வைத்துக் கொண்டிருந்தான் பிளேட்டோ. நாடுகடத்தப்பட்ட டியோனும் சிறிது காலம் ஆத்தென்ஸில் பிளேட்டோவுடன் தங்கியிருந்ததாகத் தெரிகிறது. டையோனிஸியல், பிளேட்டோவுக்கு எழுதிய கடிதங்களில், தான் தத்துவ சாதிரம் பயில விரும்புவ தாகவும் அதற்குப் பிளேட்டோவின் துணையை நாடுவதாகவும், மற்றும், டியோனுடைய சொத்து பற்றுக்களை அவனுக்கனுகூல மான முறையில் பைசல் செய்ய விழைவதாகவும், இதற்கும் பிளேட் டோவின் உதவி அவசியமென்றும், இப்படிப் பல காரணங்களை முன்னிட்டு ஸைரக்யூஸுக்குக் கட்டாயம் ஒருமுறை வந்துவிட்டுப் போகுமாறும் குறிப்பிட்டிருந்தான். அப்பொழுது ஆத்தென்ஸி லிருந்த டியோனும் இவனைப் போகுமாறு வற்புறுத்தினான். எனவே, ஏறக்குறைய தனது அறுபத்தைந்தாவது வயதில் மூன்றாவது முறையாக ஸைரக்யூஸுக்குச் சென்றான் பிளேட்டோ. ஆனால் இந்தத் தடவையும் ஆசாபங்கமேயடைந்தான். தத்துவ சாதிரம் பயிலவேண்டுமென்று டையோனிஸிய தெரிவித்த ஆசை யெல்லாம் வெறும் போலியேயென்பதையும், அவனுக்குத் தெரிந்திருக்கிற சொற்பமும் தவறு என்பதையும், சென்ற சில நாட்களிலேயே அறிந்துகொண்டான். தவிர, டியோனுடைய சொத்துக்கள் விஷயமாக தான் என்ன சொல்லியும் கேளாமல், அவனிஷ்டப் படிக்கே அவற்றைப் பைசல் செய்ய அவன் முனைந் திருப்பதையும் தெரிந்து கொண்டான். இனி அங்கிருப்பதில் என்ன பயன்? டையோனிஸியஸுக்கும் இவனுக்கும் வரவர மனதாபம் முற்றியது ஒருவரையொருவர் வெறுக்கவும் தலைப்பட்டனர். ஸைரக்யூஸை விட்டு வந்தால் போதுமென்றிருந்தது பிளேட்டோ வுக்கு. பிளேட்டோ ஒழிந்தால் போதுமென்றிருந்தது டையோனி ஸியஸுக்கு. கடைசியில் டையோனிஸிய, பிரயாணச் செலவுக் கென்று ஒரு தொகையைக் கொடுத்து பிளேட்டோவைக் கப்பலேற்றி விட்டான். இவனும், சென்ற சில மாதங்களுக்குப் பிறகு ஆத்தென் ஸுக்குச் சுகமே வந்து சேர்ந்தான். இதற்குப் பிறகு ஆத்தென்ஸை விட்டு நகரவேயில்லை. தனது கடைசி மூச்சு இருக்கிற வரை கழகத்தின் அபிவிருத்தியிலேயே நாட்டஞ் செலுத்தி வந்தான். இறக்கிறபோது இவனுக்கு வயது எண்பது. கழகத்தை நடத்தி வந்த காலத்தில் இவன் அநேக நூல்களை இயற்றினான். இவற்றுள் பெரும்பாலான சம்பாஷணை வடிவமா யுள்ளவை. இவையனைத்திலும் தனது ஆசானாகிய ஸாக்ரட் டீஸையே பேசவைக்கிறான். ஸாக்ரட்டீ சொன்னவைகளை அவ்வப்பொழுது குறிப்பெடுத்துக்கொண்டு பிறகு அவைகளுக்கு எழுத்துருவம் கொடுத்திருக்கிறானா? அல்லது தன்னுடைய கருத்துக்களை ஸாக்ரட்டீ வாக்குமூலமாக வெளியிடுகிறானா? இதைப்பற்றி ஒன்றும் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. எப்படியும் தனது நூல்களின் மூலம் ஸாக்ரட்டீஸை இறவாத புகழுடையவனாகச் செய்துவிட்டான். பிளேட்டோ இயற்றிய தாகச் சொல்லப்படும் நூல்கள் சுமார் நாற்பது. இவற்றுள் இருபது அல்லது இருபத்தைந்து நூல்களுக்கு மேல் அறிஞருள்ளத் தில் மேலான இடத்தைப் பெற்றிருக்கின்றன. பிளேட்டோவின் இல்லற வாழ்க்கையைப் பற்றிய விவரங்கள் ஒன்றுந் தெரியவில்லை. இவனுக்குச் சந்ததிகள் இருந்ததாகவும் தெரிய வில்லை. எல்லோரையும் போல் உண்டும் உடுத்தும் வாழ்க்கையை அனுபவித்தும் வந்தானென்று நாம் ஊகித்துக்கொள்ளலாம். ஆனால் எதிலும் நிதானம் வேண்டுமென்று இவன் போதித்துவந்தது போல், நிதானத்தை வாழ்க்கையிலே கடைப்பிடித்தான். ஆயுள் முழுவதும் இவன் தேகாரோக்கியமுடையவனாயிருந்தான். எப்பொழு தாவது லேசாக ஒற்றைத் தலைவலி வருமென்று சொல்வார்கள். வயோதிக காலத்தில் இவன் செவிப்புலன் சிறிது மந்தப்பட்டிருந்த தாகத் தெரிகிறது. அறிவுக்குகந்த அடக்கம் இருக்க வேண்டுமென்று சொல் வார்கள். அப்பொழுதுதான் அந்த அறிவுக்கு ஒரு பிரகாசம் ஏற்படு கிறது; மதிப்பு உண்டாகிறது. பிளேட்டோவினிடத்தில் அறிவுக்குச் சமதையான அடக்கம் இருந்தது. இந்த அடக்கந்தான் இவனை அமரருள் உய்த்ததென்று சொல்ல வேண்டும். கிரீஸில் ஒலிம்ப்பிய விழா என்ற ஒரு விழா நடைபெறுவது வழக்கம். இதில் சர்வ கிரேக்கர்களும் கலந்து கொள்வார்கள். இசைப் போட்டி, இலக்கியப் போட்டி, விளையாட்டுப் போட்டி இப்படிப் பலவும் அப்பொழுது நடைபெறும். இந்த விழாவுக்கு ஒரு சமயம் பிளேட்டோ சென்றிருந்தான். அப்பொழுது இவன் பெயர் மிகவும் பிரசித்தியடைந் திருந்தது. ஆனால் இவனை நேரில் பார்த்த வர்கள், இவன்தான் பேரறிஞனாகிய பிளேட்டோ என்று சுலப மாகக் கண்டுகொள்ள முடியாத அவ்வளவு எளிய தோற்றமுடைய வனாகவும் அடக்கமுடையவனாகவும் இருந்தான். விழாவுக்கு வந்திருந்த சிலர், விழா முடிந்ததும், ஆத்தென்ஸுக்குச் சென்று பிளேட்டோ நடத்திவரும் கழகத்தைப் பார்த்துவர வேண்டுமென்று இச்சை கொண்டிருந்தார்கள். இதற்குத் தகுந்தாற்போல் இவர் களுக்குப் பிளேட்டோவின் பரிச்சயம் ஏற்பட்டது. பிளேட்டோவும் இவர்களை ஆத்தென்ஸுக்கு வந்துபோகுமாறு அழைத்தான். ஆனால் அவர்களுக்கு இவன்தான் பிரசித்தியடைந்துள்ள பிளேட்டோ என்று தெரியாது; பிளேட்டோ என்ற அதே பெயருடைய வேறு யாரோ ஒரு சாதாரண மனிதன் என்று நினைத்தார்கள். பிளேட்டோ வும், தன்னைப் பற்றி எதுவும் பிரசித்தமாகச் சொல்லிக்கொள்ள வில்லை. இவனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு அவர்கள் ஆத்தென்ஸுக்கு வந்து கழகத்தைச் சுற்றிப் பார்த்தார்கள். பிளேட்டோ, அவர்களை எல்லா இடங்களுக்கும் அழைத்துக் கொண்டுபோய் காட்டினான்; அனைத்தையும் விளக்கிக் கூறினான் கடைசியில் திரும்பிச் செல்ல வேண்டி வந்தபொழுது அவர்கள் இவனைப் பார்த்து, பிளேட்டோவென்று நீ பெயர் வைத்துக் கொண்டிருப்பதைப் பற்றி நிரம்ப சந்தோஷம். ஆனால், கழகத்தின் தலைவனும் பேரறிஞனுமாகிய அந்தப் பிளேட்டோவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கக்கூடாதா என்று கேட்டார்கள். அவன் என்ன பதில் கூறுவான்? நான்தான் அந்தப் பிளேட்டோ என்று நிதானமாகப் பதில் கூறினான். அவர்கள் அப்படியே பிரமித்துப் போனார்கள். கடைசியாக, பிளேட்டோவின் இலக்கிய சிருஷ்டிகளின் மீது சிறிது கருத்தைச் செலுத்துவோம். இவற்றுள், அரசியல் என்னும் நூலே மிகச் சிறந்ததென்று கூறுவர் அறிஞர். இதில், நல்லதோர் அரசியல் எங்ஙனம் அமைந்திருக்க வேண்டும்; குடி மக்கள் எத்தகைய லட்சணங்களோடு கூடியவர்களாயிருக்கவேண்டும், யாரார் ஆளுங் கடமையைச் செய்தற் குரியர், அவர்களுக்கு எப்படிப் பட்ட கல்வி போதிக்கப்படவேண்டும், நீதி, அழகு, காதல் முதலியவை பற்றின உண்மையான கருத்துக்களென்ன, இப்படிப் பல விஷயங்கள் ஆராயப்படுகின்றன. இதனைச் சுருக்கமாக ஓர் அரசியல் நூலென் றும், நீதி சாதிரமென்றும் கூறலாம். இது சம்பாஷணை ரூபமா யுள்ளது. இன்னும் சட்டங்கள் என்ற ஒரு நூலும் இவன் பெயரைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. இவனுடைய கடைசி காலத்தில் இஃது எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதன் பெரும் பகுதி, சட்டங்கள் எப்படி இயற்றப்பட வேண்டுமென்பதைப் பற்றிக் கூறுவதாயிருக்கிறது. ஆத்மாவின் அழியாத் தன்மை, நட்பின் இலக்கணம், மெய்க் காதல் என்பது என்ன, சால்பு எனின் யாது இப்படி அநேக விஷயங் களைப்பற்றி இவனது மற்றைய நூல்கள் கூறுகின்றன. இவற்றி லிருந்து மாதிரிக்காக, ஒரிரண்டு கருத்துக்களை எடுத்துக் காட்ட விரும்புகிறோம். மெய்யறிவு படைத்தவர்கள், அடக்கமாயிருக்கிறார்கள்; ஆனால் அஞ்சாமையுடையவர்களாகவும் இருக்கிறார்கள். நிதானம், நீதி, வீரம், பெருந்தகைமை, உண்மை, இவைதான் ஆத்மாவின் அணிகலன்கள். * * * உன்னை நீ பாதுகாத்துக்கொண்டால் அதுவே நீ பிறர்க்குச் செய்யும் சிறந்த தொண்டாகும். * * * தெய்வங்களே! என் ஆத்மாவுக்கு அழகைக் கொடுங்கள்; எனது அகமும் புறமும் ஒன்றாயிருக்கட்டும்; ஞானிகள்தான் உண்மையான செல்வர்கள் என்று கருதும்படியான மனப் பான்மையை எனக்கு அருளுங்கள். அரிட்டாட்டல் (கி.மு. 384-322) ஆசானின் போதனைகளென்ற எல்லைக்கோடுகளுக் குள்ளிருந்து கொண்டு தம் கருத்துக்களை வெளியிடும் மாணாக் கர் ஒரு வகையினர்; அந்த எல்லைக் கோடு களைச் சில இடங் களில் மீறிக்கொண்டு சென்று தம் கருத்துக் களை வெளியிடும் மாணாக்கர் மற்றொரு வகையினர். இருவகை யினரும் குரு பக்தியில் குறை வில்லாதவர்கள்; ஆசிரியனுடைய ஆசி நிழலில் வாழ்ந்து வருகிறவர்கள். பிந்திய வகையினரைச் சேர்ந்த மாணாக்கனே அரிட்டாட்டல். பிளேட்டோவுக்கும் அரிட்டாட்டலுக்குமுள்ள தொடர்பை இந்தக் கண் கொண்டு தான் நாம் பார்க்க வேண்டும். அரிட் டாட்டல், தனது நூல்களில், பிளேட்டோவின் கருத்துக்களிற் சிலவற்றை, சிறப்பாக அரசியல் கருத்துக்களை வன்மையாகக் கண்டித்திருக்கிறான். எப்பொழுதுமே அரிட்டாட்டல், ஒரு விஷயத்தைப் பற்றித் தனது கருத்துக்களைச் சொல்ல முற்படுகிற போது, தனக்கு முந்தி அந்த விஷயத்தைப் பற்றி யாரார் என்னென்ன விதமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்களோ அவற்றை யெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்ந்து, அவை ஏற்கத் தகுந்தனவல்லவென்று நிரூபித்துக் காட்டிய பிறகு தனது கருத்துக் களை வலியுறுத்திச் சொல்வது வழக்கம். பல அறிஞர்களுடைய கருத்துக்களை ஆராய்கிறபோது, பிளேட்டோவின் கருத்துக்களை யும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்த முறையில்தான் பிளேட் டோவைத் தாக்குகிறானென்று சொல்ல வேண்டும். தாக்குகிறா னென்று சொல்வதைக் காட்டிலும் மாறுபடுகிறானென்று சொல்வதுதான் அழகாயிருக்கும். ஆசிரியனுடைய கருத்துக்குத் தன் கருத்து மாறுபட்டிருக்கும் பட்சத்தில் அதை எடுத்துச் சொல்லாமலிருத்தல் ஒரு சீடனுக்கு நேர்மையன்று; குருத் துரோகமுமாகும். உண்மையான ஓர் ஆசிரியன் இத்தகைய சீடனை விரும்பவும் செய்யான். பிளேட்டோ உண்மையான குரு; அரிட்டாட்டல் நேர்மையுள்ள சீடன். பிளேட்டோ இல்லாவிட்டால் அரிட்டாட்டல் இல்லை யென்பது வாதவம். ஆனால், அரிட்டாட்டலின் மூலமாகத் தான் பிளேட்டோவை நன்றாகப் பார்க்க முடிகிறது; அவனுடைய குறை நிறைகள் நமக்கு நன்கு புலனாகின்றன. எனவே, இருவரையும் பிரித்துச் சொல்ல முடியாது. கிரீ என்ன போதிக்கிறதென்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் பிளேட்டோவும் அரிட்டாட் டலும் என்ன சொல்கிறார்களென்பதைக் கேட்க வேண்டும். பிளேட்டோவை அறிவு என்றும், அரிட்டாட்டலை ஆராய்ச்சி என்றும் கூறலாம். எந்த ஒன்றையும் பூரணமாகத் தெரிந்து கொள்வதற்கு அறிவு, ஆராய்ச்சி இரண்டும் அவசியமல்லவா? பல கலைகளும் சேர்ந்து ஒரு மனிதனாக உருவெடுத்து வந்தன என்று சொன்னால், அந்த மனிதன் அரிட்டாட்டல் தான். இவன் காலத்திற்கு முந்தி கிரீஸில் சகல கலா வல்லவர் பலர் தோன்றி யிருக்கின்றனர் என்பது உண்மை. இவனுக்குப் பிந்தியும் சிலர் தோன் றினர் என்பது நிஜம். ஆனால் இந்தச் சர்வ கலா வல்லவர் கோஷ்டிக்குத் தலைவன் என்று சொல்லத் தகுந்தவன் அரிட்டாட்டல் தான். இவன் ஆராயாத பொருளே இல்லை; சொல்லாத விஷயமே இல்லை. இவன், தன் காலத்து அறிவை யெல்லாம் ஒருங்கே திரட்டி, அந்த அறிவுக்குச் சாதிர ரீதியான ஓர் உருவம் கொடுத்தான்; உருவம் கொடுத்த தோடல்லாமல், அதனைப் பல அங்க அவயவங் களாகப் பிரித்துப் பார்த்தான்; பிறகு அந்த அங்க அவயவங்களைச் சேர்த்தும் காட்டினான். இப்படிச் சொல்லி, அரிட்டாட்ட லிடம் தனக்குள்ள பக்தியைத் தெரிவித்துக் கொள்கிறான் பிற் காலத்து அறிஞனொருவன். பிராணி சாதிரம் முதல் மனோ தத்துவ சாதிரம் வரையில், இலக்கிய விமர்சனம் முதல் அரசியல் வரை சகலமான விஷயங்களைப் பற்றியும் இவன் நூல்களெழுதி யிருக்கிறான். தனிப்பட்ட ஒரு மனிதன், அறுபத்திரண்டு வருஷ ஆயுட் காலத்திற்குள், இத்தனை துறைகளில் எப்படிப் புலமைபெற முடிந்ததென்று அறிஞர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இந்த ஆச்சரியத்தைக் காட்டிலும் பெரிய ஆச்சரியமென்ன வென்றால், அரிட்டாட்டலின் பல துறைப் புலமை, மேனாட்டுக்கே சிறிது காலம் வரை தெரியாமலிருந்துதான். எகிப்தின் வடக்குப் பக்கத்தில் அலெக்ஸாந்திரியா என்ற ஒரு துறைமுகப் பட்டினம் இருக்கிறது. ஒரு காலத்தில் இது மிகவும் பிரசித்தியடைந்திருந்தது. இங்கு ஒரு பெரிய புத்தகசாலை இருந்தது. இதில் அரிட்டாட்டலி னுடைய நூல்களின் மூலப் பிரதிகள் வைக்கப்பட்டிருந்ததாக ஊகிக்கப்படுகிறது. இந்தப் புத்தக சாலை கி. பி. ஏழாவது நூற்றாண் டின் இடைக் காலத்தில் எரிந்து போயிற்று. இதற்குப் பிறகு அரிட்டாட்டலைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள மேனாட்டுக்கு ஏதுவில்லாமலே போய்விட்டது. அரிட்டாட்டலினுடைய நூல் களின் மூலப் பிரதிகளோ, அல்லது அவற்றினின்று பிரதி செய்யப் பட்டவைகளோ, எரிந்துபோன அலெக்ஸாந்திரியா புத்தகசாலையி லிருந்து காப்பாற்றப்பட்டோ, வேறு விதமாகவோ அரேபியாவுக்கு வந்து சேர்ந்தன. கி. பி. ஒன்பதாவது நூற்றாண்டில் இவை அராபிய பாஷையில் மொழி பெயர்க்கப்பட்டன. அராபிய அறிஞர்கள், அரிட்டாட்டலின் மேதையை வியந்து பாராட்டத் தொடங்கி னார்கள். கி.பி. பதினோராவது, பன்னிரண்டாவது நூற்றாண்டு களில், கிறிதுவர்கள் துன்புறுத்தப் படுகிறார்களென்றும், அவர் களுக்கு நிவாரணம் அளிக்கவேண்டுமென்றும் சொல்லி, ஐரோப்பா விலுள்ள கிறிதுவர்கள் பலரும் ஒன்று சேர்ந்து அரேபியாவின் மீது படையெடுத்து வந்தார்கள். திரும்பத் திரும்ப நடைபெற்ற இவை களுக்குச் சிலுவைப் படையெடுப்புகள் என்று பெயர். இந்தக் காலத்தில் ஐரோப்பிய அறிஞர்களுக்கும், அராபிய அறிஞர் களுக்கும் தொடர்பு உண்டாயிற்று. அராபிய மொழியின் மூலம் அரிட்டாட்டலை பரிச்சயம் செய்து கொண்டார்கள் ஐரோப்பிய அறிஞர்கள். அரிட்டாட்டலின் நூல்கள் லத்தீன் பாஷையிலும், பிரெஞ்சு பாஷையிலும் மொழிபெயர்க்கப்பட்டன. இதற்குப் பின்னரே, அரிட்டாட்டல், மேனாட்டுக்கு நன்கு தெரிந்தவ னானான்! தற்போதைய கிரீஸின் வட கிழக்கில் ஸாலோனிக்கா என்ற ஒரு நகரம் இருக்கிறது பாருங்கள், இதற்குச் சிறிது கிழக்கேயுள்ள ட்டாகிரா என்ற ஊரில்தான் அரிட்டாட்டல் கி. மு. 384-ஆம் வருஷம் பிறந்தான். இவனுடைய தந்தை வழியினர், பரம்பரையாக வைத்தியத் தொழில் நடத்தி வந்தவர்கள். இவனது தந்தை, அப்பொழுது மாஸிடோனியா ராஜ்யத்தை ஆண்டுவந்த இரண் டாவது அமிண்ட்டா என்பவனுக்கு வைத்தியனா யிருந்தான். இந்த அமிண்ட்டா என்பவன் மகா அலெக்ஸாந்தரின் தந்தை வழிப் பாட்டன். இரு குடும்பத்தினருக்கும் பரம்பரையான ஒரு தொடர்பு இருந்து வந்ததனால் தான், பிற்காலத்தில் அரிட் டாட்டல், மகா அலெக்ஸாந்தரின் ஆசிரியனாயிருக்க ஒப்புக் கொண்டான். ஆதான வைத்தியனுடைய மகன் என்ற முறையில், அரிட் டாட்டல், இளமையில் சிறிது செல்வாக்குடனேயே வளர்ந்து வந்தான்; படிப்பில் அதிக ஊக்கங் காட்டினான். எதையும் கற்க வேண்டும், எல்லாவற்றையும் ஆராயவேண்டுமென்ற ஓர் ஆவல் இவனுடைய குழந்தைப் பருவத்திலேயே காணப்பட்டது. பதினேழு வயது ஆயிற்று. அப்பொழுது ஆத்தென்ஸில் பிளேட்டோவின் கழகம் மிகவும் பிரபலமடைந்திருந்தது. இந்தக் கழகத்தில் சேர்ந்து படிக்க ஆத்தென்ஸுக்கு வந்தான் அரிட் டாட்டல். பிளேட்டோவின் போதனைகளில் ஈடுபட்டான். பிளேட்டோவும், இவனது கூர்த்த மதியினையும், ஒவ்வொரு விஷயத்தையும் நுணுகி ஆராய வேண்டுமென்பதில் இவன் காட்டிய பொறுமையினையும் கண்டு வியந்தான். ஆராயும் விஷயத்தில் இவன் பொறுமை காட்டினா னென்றாலும், விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில் இவன் காட்டிய துடிப்பு, இருதயத் துடிப்பு போலிருந்ததென்று சொல்லலாம். அரிட்டாட்டல், என்னுடைய கழகத்தின் இருதயம் என்று பிளேட்டோவே கூறி யிருக்கிறான். குறைந்த விலையில் நூல்கள் அகப்படுவதென்பது அப்பொழுது கிரீஸில் சிறிது கஷ்டமாயிருந்தது. அதிக பணங் கொடுத்துத்தான் வாங்கவேண்டும். அரிட்டாட்டலுக்குப் போதிய பண வசதி இருந்த படியால், நிறைய நூல்கள் வாங்கிச் சேகரித்துக் கொண்டான்; ஓயாமல் படித்தான். படிப்பு முடிந்ததும், ஆராய்ச்சித் துறையில் இறங்கிச் சில வருஷ காலம் கழித்தான். இவனுடைய ஆராய்ச்சி, பிளேட்டோவுக்கு மிகவும் உதவியாயிருந்தது. இங்ஙனம் சரியாக இருபது வருஷ காலம் கழகத்தில் கழித்தான். கி.மு. 347ஆம் வருஷம் பிளேட்டோ இறந்துவிட்டான். அரிட் டாட்டலுக்கு அப்பொழுது வயது முப்பத்தேழு. கழகத்திலிருந்து விலகிக் கொண்டான். பிளேட்டோ போன பிறகு அங்கிருக்க இவன் மனமொப்ப வில்லை. இதற்கு முக்கியமான காரணம், பிளேட்டோ வின் தானத்தில் கழகத் தலைவனா யமர்ந்தவனை இவனும், இவனுடைய சகாக்களிற் சிலரும் விரும்பாமலிருந்ததுதான். எனவே, இந்தச் சகாக்களில் ஒருவனான ஜெனோக்ராட்டீ என்பவனைக் கூட்டிக்கொண்டு மேற்படி 347ஆம் வருஷம் ஆத்தென்ஸை விட்டு வெளியேறி விட்டான். வெளியேறி, சின்ன ஆசியாவிலுள்ள அஸ என்ற ஊருக்கு வந்து சேர்ந்தான். இங்கு, ஏற்கனவே பிளேட்டோவின் கழகத்தில் பயின்ற இருவர் குடியேறி பிளேட்டோவின் போதனைகளைப் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். இவர்களுடன் சேர்ந்து கொண்டான் அரிட்டாட்டல், தன் சகாவுடன். இந்த நால்வரும் சேர்ந்து, பிளேட்டோவின் கழகம் மாதிரி ஒன்றை தாபித்து அதன் மூலம் பிளேட்டோவின் போதனைகளைப் பரப்பிக் கொண்டு வந்தனர். அஸ ஊருக்குச் சமீபத்தில் அட்டார்னேய என்ற ஒரு சிறு நகர ராஜ்யம். இதனை ஹெர்மையா என்ற ஒருவன் சர்வாதி காரியாக இருந்து ஆண்டு வந்தான். இவனுக்கும் அரிட்டாட்ட லுக்கும் நட்பு ஏற்பட்டது. ஹெர்மையாஸின் வளர்ப்புப் பெண்ணை விவாகஞ் செய்து கொண்டான் அரிட்டாட்டல். ஹெர்மையாஸின் ஆதரவுக்குக் குறைவேது? சுமார் மூன்று வருஷ காலம் அஸ ஊரில் தங்கி யிருந்தான். பிறகு இரண்டு வருஷகாலம், அருகிலிருந்த லெபோ தீவுக்குச் சென்று வசித்தான். இங்கு வசித்தபோது, கடல் வாழ் பிராணிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தான். இங்கிருக்கிற போது. இவன் மனைவி, ஒரு பெண் குழந்தையை விட்டுவிட்டு இறந்து போனாள். இதனால் இவன் அதிக துக்கத்தை யடைந்தா னென்பதை நாம் சொல்லத் தேவையில்லை. லெபோ தீவை விடுத்து மாஸிடோனியாவுக்குச் சென்றான் அரிட்டாட்டல். அப்பொழுது மாஸிடோனியாவை ஆண்டு வந்தவன் பிலிப் என்ற அரசன். இவன்தான், மகா அலெக்ஸாந்தரின் தந்தை. தன் மகனுக்கு ஆசிரியனா யமர்ந்து அவனுக்குச் சிறந்த முறை யில் பயிற்சி அளிக்குமாறு கேட்டுக்கொண்டான் அரிட்டாட் டலை. பரம்பரைத் தொடர்பு இருந்த தினாலும், அரிட்டாட்ட லின் பேரறிவை நன்கு தெரிந்து கொண்டிருந்தவனாதலாலும் இப்படிக் கேட்டுக்கொண்டான் போலும். பிலிப் மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, அரிட்டாட்டல், ஏறக்குறைய தனது நாற்பத்திரண்டாவது வயதில் மாஸிடோனியாவுக்குச் சென்று அலெக்ஸாந்தரின் ஆசிரியனாயமர்ந்தான். அலெக்ஸாந்தருக்கு அப்பொழுது வயது பதின்மூன்று. மிகத் துடிப்புள்ளவனாயிருந்தான். அரச கடமைகளை ஒழுங்காகச் செய்து வர, இவ்வளவு துடிப்பு கூடாதல்லவா? எனவே அவனுக்குக் கல்வியறிவு புகட்டி வந்ததோடு, நிதானம், பொறுமை முதலிய சில பண்புகளையும் ஊட்டி வந்தான் அரிட்டாட்டல். சுமார் ஆறு வருஷ காலம் இந்த ஆசிரியப் பணி நடைபெற்று வந்தது. அலெக்ஸாந்தர், தனது கடைசி நாட்கள் வரை தன் ஆசிரியனை மிகவும் கண்ணியமாக நடத்தி வந்தான்; தனது நன்றியைப் பல முகங்களாலும் தெரிவித்துக் கொண்டான். அரிட்டாட்டலின் பிறந்த ஊராகிய ட்டாகிரா, பிலிப் மன்னனால் நாசமாக்கப்பட் டிருந்தது; அதனைப் புனர் நிர்மானம் செய்வித்தான். அரிட்டாட்ட லின் ஆராய்ச்சிகளுக்குப் பொருளுதவி, ஆள் உதவி முதலியன செய்தான். அரிட்டாட்டலும், ஓர் அரசன் செய்யவேண்டிய கடமைகள் யாவை என்பதை உணர்த்தும் பொருட்டு, இரண்டு நூல்கள் எழுதி அலெக்ஸாந்தருக்கு அளித்தான். இதன் மூலம் அலெக்ஸாந்தருக்கு ஆளுந்திட்ட மொன்றையே வகுத்துக் கொடுத்து விட்டானென்பர். அலெக்ஸாந்தர் பட்டத்திற்கு வந்து ஆளுந்தொழிலை மேற் கொண்டு விட்டான். பாரசீகத்தின் மீது படையெடுத்துச் செல்வதற் கான ஆயத்தங் களையும் செய்து கொண்டிருந்தான். இனி மாஸிடோனியாவில் என்ன வேலை அரிட்டாட்டலுக்கு? தவிர ஆத்தென், காந்தம் போல் இவனை இழுத்தது. அங்குச் சென்று வசிக்க வேண்டுமென்ற எண்ணமே இவனிடம் மேலோங்கி நின்றது. எனவே, தன்னுடைய நாற்பத்தொன்பதாவது வயதில் ஆத்தென்ஸை அடைந்தான். ஆத்தென் போந்ததும், அரிட்டாட்டல், பிளேட்டோ வின் கழகத்திற்குச் சமீபத்தில் லைஷீயம் என்ற பெயரால் மற்றொரு கழகத்தை ஆரம்பித்தான். பிளேட்டோவின் கழகத்திற்கு அப் பொழுது, இவனுடைய நண்பனான ஜெனோக்ராட்டீஸே தலைவ னாயிருந்தான். ஆயினும் என்ன? தான் சுயமாக ஒரு கழகத்தை தாபித்து அதனைத் திறம்பட நடத்த வேண்டுமென்று உறுதி கொண்டுவிட்டான். சுய சிந்தனையாளனல்லவா? ஆத்தென், அப்பொழுது பழைய ஆத்தென்ஸாயில்லை; சுதந்திரத்தை இழந்து விட்டிருந்தது; மாஸிடோனியாவின் ஆதிக்கத் திற்குட் பட்டிருந்தது. மகா அலெக்ஸாந்தரின் பிரதிநிதியாக ஆண்ட்டிபேட்டர் என்பவன், கிரீஸின் நிருவாகத்தை நடத்தி வந்தான். இவன், அரிட்டாட்டலுக்கு நெருங்கிய நண்பன். மாஸி டோனியாவில் அரிட்டாட்டல் தங்கியிருந்த பொழுதே இரு வருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆண்ட்டிபேட்டரின் நண்பன் என்ற காரணத்தினால், அரிட்டாட்டலின் மீது, ஆத்தென்ஸி லுள்ள சிலருக்கு வெறுப்பு ஏற்பட்டிருந்தது. ஆண்ட்டிபேட்டர், ஆதிக்க சக்தியின் பிரதிநிதியல்லவா? ஆத்தென்ஸின் சுதந்திரத்தைப் பறிமுதல் செய்துவிட்டவனல்லவா? ஆத்தென்ஸின் கிழக்குப் பக்கத்தில் ஒரு தோட்டம். இதில் குறுக்கும் நெடுக்குமாக நடை பாதைகள் இருந்தன. இந்தத் தோட்டத்தில்தான் லைஷீயம் காணப்பட்டது. தோட்டத்தின் நடுவிலுள்ள ஒரு கட்டடத்தில், புத்தகசாலை அமைக்கப்பட்டது. இங்குள்ள அறைகள் சிலவற்றில் சில பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. புத்தக சாலையில் பலதேச அரசியல் திட்டங்கள் முதல் பூகோளப் படங்கள் வரை சகலமும் வைக்கப் பட்டிருந்தன. இன்னும் ஆராய்ச்சி செய்வதற்கான கருவிகள் பலவும் இங்கிருந்தன. ஆராய்ச்சி செய்யும் ஆற்றலும் தகுதியுமுடைய மாணக்கர் களே லைஷீயத்தில் பெரும்பாலும் சேர்த்துக் கொள்ளப்பட் டார்கள். ஆராய்ச்சிகள் செய்வதும் ஆராய்ச்சிகளின் முடிவுகளைக் குறித்துக் கொள்வதும் மாணாக்கர்களின் முக்கிய வேலைகளா யிருந்தன. அரிட்டாட்டல், இந்த ஆராய்ச்சிகளுக்கு வழி காட்டு வான்; துணையா யிருப்பான். மாணாக்கர்களுக்கு ஏதேனும் போதிக்க வேண்டியிருந்தால், பெரும்பாலும் மேலே நடை பாதைகளிருந்தன வென்று சொன்னோ மல்லவா, அந்த நடை பாதைகளில் உலவிக் கொண்டே போதிப்பான். இதனால் லைஷீயத்திற்கு, நடை பயில் கழகம் என்ற பெயர் வந்தது. கழகத்தில் பயின்றவர்கள், நடை பயில் மாணாக்கர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். லைஷீயம், சுமார் பன்னிரண்டு வருஷ காலம் சிறப்புற நடை பெற்று வந்தது. கி.மு. 323ஆம் வருஷம் மகா அலெக்ஸாந்தர் பாபி லோனில் மரித்து விட்டான். அவன் கட்டி வைத்த ஏகாதிபத்தியக் கட்டு அவிழ்ந்து போக ஆரம்பித்தது. ஆத்தென் உள்பட கிரேக்க ராஜ்யங்கள் பலவும் மாஸிடோனிய ஆதிக்கத்தை உதறிவிட முனைந்தன. ஆத்தென்ஸில் கலகம் கிளம்பி விட்டது. இனி இங்கிருப் பது ஆபத்தென்று உணர்ந்தான் அரிட்டாட்டல். ஆண்ட்டி பேட்டரின் நண்பனல்லவா? எனவே, ஆத்தென்ஸை விட்டு, வடக்கே கால்ஸி என்ற ஊருக்குச் சென்று விட்டான். அப்பொழுது இவனுக்கு வயது ஏறக்குறைய அறுபத்தொன்று. கால்ஸி சென்ற பிறகு அதிக காலம் உயிரோடிருக்க வில்லை அரிட்டாட்டல். சென்ற அடுத்த வருஷமே, கி.மு. 322ஆம் வருஷம், தனது அறுபத்திரண்டாவது வயதில் மரண தேவதையின் தரிசனத்திற்குச் சென்றுவிட்டான். அரிட்டாட்டல் இறப்பதற்கு முந்தி ஓர் உயில் எழுதி வைத் திருந்தான். இந்த உயிலில் கண்ட ஷரத்துக்களை நிறைவேற்றும் பொறுப்பை, ஆண்ட்டிபேட்டரிடமே ஒப்படைத்திருந்தான். ஆண்ட்டிபேட்டரிடம் இவன் வைத்திருந்த நம்பிக்கைக்கு இதுவே சிறந்த சான்றாகும். உயிலில் என்ன கண்டிருந்தான்? லெபோ தீவில் இறந்துபோன தன் மனைவியின் அதிகளை எடுத்து வரச் செய்து, தன்னுடைய அதிகளுக்குப் பக்கத்திலேயே புதைக்க வேண்டும்; தன்னிடம் ஊழியம் செய்து கொண்டிருந்த அடிமை களை விடுதலை செய்ய வேண்டும். இவைதான் உயிலில் காணப் பட்ட முக்கியமான விஷயங்கள். கிரீஸில் அப்பொழுது அடிமை கொள்ளும் வழக்கம் சர்வ சாதாரணமாக இருந்து வந்ததென்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. அரிட்டாட்டல் வசீகரமான தோற்றமுடையவன். ஆடைகள் அணிந்து கொள்ளும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தினான். பார்ப்பதற்கு ஓரளவு பகட்டுக்காரன் என்று தோன்றும். கையில் மோதிரம் அணிந்து கொண்டிருப்பான். பேசுகிறபோது சிறிது தொற்றும். அரிட்டாட்டல், மொத்தம் எத்தனை நூல்கள் எழுதினா னென்பதை நிச்சயித்து சொல்ல முடியவில்லை. இப்பொழுது ஒரு சில நூல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. ஆனால் இவையே அவனுடைய பல கலைப் புலமையை எடுத்துக் காட்டுவதற்குப் போதுமானவையாயிருக் கின்றன. கிடைத்திருப்பனவற்றுள், அறிஞருலகத்தில் அதிகமாக உலவி வருகின்றவை, அறத்தைப் பற்றிய நூலும், அரசியலைப்பற்றிய நூலும், பேச்சுக் கலையைப் பற்றிய நூலும், பொதுவாகக் கவிதையைப்பற்றியும், சிறப்பாக நாடகத்தைப்பற்றியும் எழுதப்பட்ட நூலுமேயாம். அரச நீதி என்ற பெயரால் வழங்கப்பெறும் அரசியலைப்பற்றிய நூல், கிரீஸில் நிலவி யிருந்த நூற்றைம்பத்தெட்டு நகர ராஜ்யங்களின் அரசியலமைப்புக் களையும் நன்கு பரிசீலனை செய்து எழுதப்பட்ட நூல். இதில் அநேக ராஜ்யங்களின் அரசியலமைப்புக்கள் ஆராயப்பட்டிருக் கின்றன. இந்த நூலில் தான், பிளேட்டோவின் கருத்துக்களிற் சில வற்றை மறுத்திருக்கிறான் அரிட்டாட்டல். சம்பாஷணை வடிவில் இவன் எந்த நூலையும் எழுதவில்லை; தனது கருத்துக்களைத் தெரிவிக்க உரை நடையையே கருவியாகக் கொண்டான். இதனால், பிளேட்டோவின் சிருஷ்டிகளில் காணப் பெறும் விறுவிறுப்போ, உணர்ச்சி பாவங்களோ இவன் சிருஷ்டி களில் காண முடியாது. எடுத்துக் கொண்ட விஷயத்தை, விருப்பு வெறுப்பின்றி அலசி ஆராயுந்திறனும், தான் கண்ட முடிவை உறுதி யாகவும் ஆனால் அடக்கத்துடனும் சொல்லும் ஆற்றலும் இவ னுடைய நூல்களில் காணலாம். சுருக்கமாக அறிவோடு ஒட்டியன வாகவே இருக்கும் இவனுடைய நூல்கள். இவனுடைய நூல்களிலிருந்து சில சில கருத்துக்களைப் பொறுக்கி எடுத்து இங்குக் காட்ட விரும்புகிறோம். சந்தோஷத்தை மறுப்பதிலேயல்ல, துக்கத்தை அனுபவிப் பதிலே தான் ஆண்டகைமை இருக்கிறது. * * * கௌரவமான முறையில் மரணமடைவதற்கு எவனொருவன் அஞ்சாமலிருக்கிறானோ அவனே உண்மையான வீரன். * * * ஒருவனுடைய போதிக்கிற சக்திதான், அவன் பேரறிவு படைத்தவன் என்பதற்கு அடையாளமாயிருக்கிறது. * * * சந்தோஷம் வருகிறபோது அதைப்பற்றிச் சிந்தனை செய்யாதே; அது போகிறபோது அதைப்பற்றிச் சிந்தனை செய். * * * பெரு மனம் படைத்திருப்பதுதான், எல்லா நற்குணங் களுக்கும் ஆபரணம் போன்றது. * * * பெரு மனம் படைத்தவர்கள், தாங்கள் எதை மேலான தென்று கருதுகிறார்களோ அதற்காகத் தங்கள் உயிரைக் கொடுக்கும் விஷயத்தில் மிகவும் தாராளமாயிருப்பார்கள். * * * கெட்ட மனிதர்கள், பயத்திற்குக் கீழ்ப்படிகிறார்கள். நல்ல மனிதர்கள், அன்புக்குக்கீழ்ப்படிகிறார்கள். * * * உழைப்பின் முடிவு ஓய்வு. * * * அவனவனுக்கு உரித்தானதை அவனவனுக்கு வழங்குவது தான் நீதி. * * * நல்ல சட்டங்களால் ஆளப்படுவதைக் காட்டிலும் ஒரு நல்ல மனிதனால் ஆளப்படுவதுதான் ஒரு ராஜ்யத்திற்குச் சிறப்பு. * * * ஒரு ராஜ்யத்தின் வாழ்வு தாழ்வுகளெல்லாம் அந்த ராஜ்யத் தின் இளைஞர்கள் பெறும் கல்வியைப் பொறுத்திருக்கிறது. பெருந்தகைமை யென்பது நாம் பெறும் கௌரவங்களிலே இல்லை; அந்தக் கௌரவங்களைப் பெறுதற்கு நாம் உரியர் என்ற தன்மதிப்பு உணர்ச்சியிலேதான் இருக்கிறது. * * * நாணமென்பது, இளமைக்கு ஆபரணம்; முதுமைக்கு இழுக்கு. * * * ஒருவனை நல்லவனென்று கருதி அவனிடத்தில் நட்புக் கொள்ளுகிறோம். பிறகு அவன் கெட்டவனாக மாறிவிட்டால்? அவனுடன் தொடர்ந்து நட்புக் கொண்டிருப்பதா? அல்லது நட்பை முறித்துக் கொண்டுவிடுவதா? முறித்துக் கொண்டு விடவேண்டியது தான். ஏனென்றால் நல்லதை நாடித்தான் நாம் நட்புக் கொள்ளு கிறோம். நல்லது எப்பொழுது அவனிடமிருந்து அகன்று விட்டதோ, அப்பொழுதே நாமும் அவனிடமிருந்து விலகிக் கொள்ள வேண்டி யது தான். * * * இளைஞர்கள் எப்படிப்பட்ட தன்மையுடையவர்கள்? தீவிர இச்சையுடையவர்கள்; அந்த இச்சைகளை நிறைவேற்றிக் கொள் வதில் துரிதம் காட்டுகிறவர்கள்; புலனடக்கமில்லாதவர்கள்; நிலை யற்றமனமுடையவர்கள்; சீக்கிரத்தில் கோபமடையக் கூடியவர்கள்; அந்தக் கோபத்தில் உக்கிரங்கொண்டு விடக்கூடியவர்கள்; தங்கள் கோபத்தைக் கைகளினால் காட்டவும் (அதாவது பலாத்காரச் செயலில் இறங்கவும்) தயாராகிவிடுகிறவர்கள்; பணத்தைக் காட்டி லும் கௌரவத்தையும் வெற்றியையுமே அதிகமாக விரும்புகிற வர்கள்; ஏனென்றால் பணத்தேவையை அவர்கள் இன்னும் உணர வில்லை யல்லவா? நல்ல மனம் படைத்தவர்கள்; அதிகமான நம்பிக்கை யுடையவர்கள்; எளிதில் யாரையும் நம்பக் கூடியவர்கள்; சுலபமாக ஏமாற்றப்படக் கூடியவர்கள்; துணிச்சலுடையவர்கள்; கூச்சமுடைய வர்கள்; தாராள மனப்பான்மை கொண்டவர்கள்; நண்பர்களை நேசிக் கிறவர்கள்; எதிலும் தீவிரமாகச் சென்று அதனால் தவறுகளுக்கு ஆளாகக் கூடியவர்கள்; பிறரிடத்தில் தயை காட்டும் சுபாவமுடையவர்கள்; கேளிக்கைகளில் பிரியமுடைய வர்கள்; இப்படி, இப்படி. * * * முதியவர்கள் எப்படிப்பட்ட தன்மையுடையவர்கள்? எதையும் தீர்மானிக்க முடியாதவர்கள்; ஒரு காரியத்தில் அளவுக்குக் குறைவான தீவிரத்தைக் காட்டுகிறவர்கள்; எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் நிச்சயமாகத் தெரியும் என்று சொல்லாதவர்கள்; எதிலும் ஒருவித வெடுவெடுப்பும் சந்தேகமும் கொள்கிறவர்கள்; அன்பும் துவேஷமும் மாறி மாறிக் கொள்கிறவர்கள்; சோர்ந்த மனமுடைய வர்கள்; இருப்பதை இழந்துவிடக்கூடாதென்று நினைக்கிறவர்கள்; எதிலும் அச்சமுடையவர்கள்; கௌரவத்தைக் காட்டிலும் பணத் தையே பெரிதாகக் கருதுகிறவர்கள்; கூச்சமற்றவர்கள்; குறைவான நம்பிக்கையுடைவர்கள்; பழைய ஞாபகங்களிலேயே வாழ்கிற வர்கள்; தங்கள் பழைய ஞாபகங்களைப் பற்றித் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருப்பதில் திருப்தியடைகிறவர்கள்; தீவிரமாகக் கோபங் கொள்கிறவர்கள்; ஆனால் அந்தக் கோபத்தைச் செயலில் கொண்டுவர முடியாதவர்கள்; எதிலும் பற்றுக்கொள்ளாதவர்கள்; எப்பொழுதும் ஏதோ ஒரு குறை சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள்; இப்படி, இப்படி. கன்பூஷிய (கி.மு. 551 - 479) தனி மனிதன்; தனி மனிதர் பலரடங்கிய சமு தாயம்; சமுதாயம் ஒழுங்கு பட இயங்கிக் கொண்டிருப் பதற்குத் துணை செய்யும் அரசாங்கம்; இம்மூன்றும் வேறு வேறான கூறுகள் என் றாலும், ஒன்றைவிட்டு மற் றொன்றைப் பிரிக்க முடி யாது. தனி மனிதன் இல்லா விட்டால் சமுதாயமில்லை. சமுதாயமில்லாவிட்டால் அரசாங்கம் எதற்கு? ஒன்றின் உரிமைகளும் கடமைகளும் மற்றொன்றின் உரிமைக ளுடனும் கடமைகளுடனும் பின்னிக்கொண்டிருக்கின்றன. இதனால், ஒன்றின் நன்மைக் காக மற்றொன்று நல்ல விதமாக நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இப்படி நடந்து கொள்வதற்கு முதற்படியாக, ஒவ்வொன்றும், தன்தன் உரிமைகளையும் கடமைகளையும் அறிந்து கொள்ளவேண்டும். இவற்றினை அறிவிப்பவரே மகான்கள்; தீர்க்கதரிசிகள்; கடவுளின் தூதர்கள்; எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். தனி மனிதனோ, சமுதாயமோ, அரசாங்கமோ, தன் உரிமை களையும் கடமைகளையும் அறிந்திருக்கலாம்; ஆனால் சில சமயங்களில் அவற்றினை மறந்து விடுதல் கூடும்; மறந்துவிடக்கூடிய சூழ்நிலை அவைகளுக்கு ஏற்படலாம். அல்லது, உரிமைகளையும் கடமைகளையும் உணர்ந்திருந்தும், அவற்றினை அனுஷ்டானத் திற்குக் கொண்டுவர முடியாத ஒரு சிக்கலில் அகப்பட்டுத் தவிக்க லாம். அல்லது கடமை களைந் துறந்துவிட்டோ, மறந்துவிட்டோ, உரிமைகளென்னும் குறுகிய பாதையில் சென்றுகொண்டிருக்க லாம். அந்தப் பாதைக்கு முடிவுண்டு என்பது அவைகளுக்குத் தெரியாது. இந்த மாதிரியான சந்தர்ப்பங் களில்தான் மகான்கள் தோன்றுகின்றனர்; ஒவ்வொன்றின் உரிமை களையும் கடமைகளை யும் ஞாபகப்படுத்துகின்றனர்; அனுஷ்டானத் திற்குக் கொண்டுவரச் செய்கின்றனர்; கடமைகளென்னும் அகன்ற பாதையில் திருப்பிவிடு கின்றனர். இவர்கள் தோன்றுவதை அவதார மென்கிறோம். இவர்கள் சொல்வதை உபதேசங்க ளென்கிறோம். ஒன்று கவனித்தீர்களா? இந்த மகான்களென்போர், உரிமை களைக் காட்டிலும் கடமைகளைத்தான் அதிகமாக வற்புறுத்தி யிருக்கிறார்கள்; அவைகளைப் பற்றித்தான் விதரித்துப் பேசியிருக் கிறார்கள். இவர்கள், அதைக் கேள், இதைக் கேள் என்று சொல்ல வில்லை; அதைச் செய், இதைச் செய் என்று தான் சொல்லியிருக் கிறார்கள். கடமைகளைச் செய்து கொண்டு போவதில்தான், மனிதனோ, சமுதாயமோ வளர்ச்சியடைய முடியும்; சுயநிலையி லிருந்து இழிந்து படாமலிருக்க முடியும். உண்மையைக் காண விழைவோர், கடமைகளைச் செய்து கொண்டு போவதில்தான் திருப்தியடைகிறார்கள். நாம் செய்யத் தவறிவிட்ட ஒவ்வொரு கடமையும், நாம் அறிந்து கொள்ளவேண்டிய ஒவ்வோர் உண்மை யினை மறைத்துவிடுகிறது என்று ஓர் அறிஞன் கூறுகிறான். மற்றும், கடமைகளைச் செய்து கொண்டிருப் பவர்களுக்குத்தான் தெய்வத்தின் திருவருள் கிட்டுகிறது. யாருக்குக் கடமையைச் செய்து கொண்டு போகவேண்டுமென்ற ஆவல் இருக்கிறதோ அவர் களுக்குக் கடவுளின் உதவி கிடைக்கிறது என்பது ஒருவனுடைய வாக்கு. மகான்கள், உண்மையை நாடுகின்றவர்கள்; கடவுளின் அருளுக்காகக் காத்து நிற்கிறவர்கள்; தங்களைப் போலவே எல்லோரும் உண்மையை நாட வேண்டும், கடவுளின் அருளைப் பெற வேண்டும் என்று இவர்கள் விரும்பு கிறார்கள்; இதனாலேயே கடமைகளை அதிகமாக வலியுத்துகிறார்கள். தனி மனிதனாகட்டும், சமுதாயமாகட்டும், அரசாங்க மாகட் டும், தன் தன் கடமைகளைச் செய்து கொண்டு போகவேண்டு மென்று மகான்கள் வற்புறுத்துகின்றார்களாதலினால், இவர்கள் ஒரு சமயம், தனி மனிதனை மட்டும் உயர்த்திக் கொடுக்கும் குருமார் களாகவும், மற்றொரு சமயம் சமுதாய சீர்திருத்தவாதிகளாகவும், பிறிதொரு சமயம் அரசியல் பண்டிதர்களாகவும் மாறி மாறித் தோற்றமளிக்கிறார்கள்; இதனால் முரண்பாடுகள் நிறைந்தவர் களாகவும் எண்ணப்படுகிறார்கள். உண்மையில் இவர்கள் எல்லாமு மாக இருக்கிறார்கள். எல்லோருடைய நலன்தான் இவர்களுடைய குறிக்கோள். இத்தகைய மகான்களில் ஒருவன்தான் கன்பூஷிய; சீனர்கள் போற்றும் ஞான பண்டிதன். இவன், கிறிது மகான் அவதரிப்ப தற்கு ஐந்து நூற்றாண்டுகள் முந்தி அவதரித்தவன். இவன் அவதரிப்ப தற்குச் சுமார் இருபது நூற்றாண்டுகளுக்கு முந்தியிருந்தே சீனா, நாகரிகத்தில் நிறைவுற்றிருந்தது. சீலமே பெரிதுடைய பிரஜைகள், கட்டுக்கோப்பான சமுதாயம், பண்பட்ட அரசாங்கம் எல்லாம் அங்கிருந்தன ஆனால் கி.மு. ஆறாவது நூற்றாண்டில் இவை யாவும் நிலைகுலைந்து நின்றன. இங்ஙனம் நிலைகுலைந்து நின்றவைகளை ஒரு நிலைப்படுத்தவே கன்பூஷிய தோன்றினான். சீனாவில் மட்டுமல்ல, நாகரிகத்தில் சிறப்புற்று விளங்கிய இந்தியாவிலும் கிரீஸிலும்கூட, இந்த ஆறாவது நூற்றாண்டில் ஏதோ ஒரு வகையான குழப்பம் ஏற்பட்டிருந்தது. இந்தக் குழப்பத்தி லிருந்து தெளிவு காண, இந்தியாவில் புத்தர்பிரானும், கிரீஸில் ஸாக்ரட்டீ மகானும் முறையே தோன்றினர். கன்பூஷிய, புத்தர், ஸாக்ரட்டீ ஆகிய மூவரும் ஏறக்குறைய சம காலத்தவரே. கன்பூஷிய என்பது ஐரோப்பியர்கள் வழங்கிய பெயர். சீனர்கள், குங்-புத்-ஸே என்றுதான் அழைப்பார்கள். ஞானியும் அரச தந்திரியுமான குங் என்று இதற்கு அர்த்தம். நாம் இங்கே எல்லோருக்கும் தெரிந்திருக்கிற கன்பூஷிய என்ற பெயரையே உபயோகித்துக்கொண்டு போகிறோம். சீனாவின் வடமேற்கிலுள்ள ஷாண்ட்டுங் மகாணத்தின் ஒரு பகுதிதான் கன்பூஷியஸின் பிறப்பிடம். இந்தப் பகுதி, ஆதியில் லூ என்ற ராஜ்யமாயிருந்தது. இங்கு ஷு-லியாங் ஹை என்ற ஒரு சுத்த வீரன் இருந்தான். இவன் உயரம் பத்தடி என்று சொல்லப்படுகிறது. எல்லோரையும் போல் சிறு வயதில் விவாகம் செய்துகொண்டான். வயதுக் காலத்தில் குழந்தைகள் பிறந்தன. ஆனால் எல்லாம் பெண் குழந்தைகள். மொத்தம் ஒன்பது பெண்கள் இவனுக்கும் சலித்துப் போய்விட்டது. ஓர் ஆண் மகன் வேண்டுமென்று ஆவல் கொண் டான். அப்பொழுது இவனுக்கு வயது எழுபது. ஆயினுமென்ன? பதினேழு வயதான ஒரு பெண்ணை மணம் புரிந்து கொண்டான். இவள் மகா உத்தமி. ஒரு கிழவனை மணந்ததற்காகச் சிறிதும் மன வருத்தம் கொள்ளவில்லை. காலக்கிரமத்தில் கர்ப்பவதியானாள். கர்ப்பமாயிருக்கிறபோது, இவள், பல தெய்விகக் கனவுகளைக் கண்டாளென்றும், இந்தக் கனவுகளில் கூறப்பட்ட வண்ணம் அருகி லுள்ள ஒரு மலைக் குகைக்குச் சென்று அங்கேயே பிரசவித்தா ளென்றும், குழந்தை பிறந்ததும், பூமியிலிருந்து சூடான நீர் குபுகுபு என்று பொங்கியெழுந்து குழந்தையைக் குளிப்பாட்டிவிட்டு பிறகு அடங்கிவிட்டதென்றும், குழந்தை பிறந்தபோதே மேலே தேவ வாத்தியங்கள் ஒலித்துக் கொண்டிருந்தனவென்றும் சீன புராணங்கள் கூறுகின்றன. எந்த ஒரு நாட்டுப் புராணங்களிலும், அந்த நாட்டு மகான்களின் பிறப்பைப் பற்றிப் பேசுகையில், இந்த மாதிரியான சம்பவங்கள் நிகழ்ந்ததாகக் கூறுவது சகஜமாகவே இருக்கிறது. இங்ஙனம் தெய்வத் திருவருளைக் கூட்டிக்கொண்டு மாநிலத்தின் நலம் பெருக்கப் பிறந்த குழந்தையே கன்பூஷிய. பிறந்தது கி.மு. 551ஆம் வருஷம். தந்தை அடைந்த சந்தோஷத்திற்குக் கேட்கவேண்டுமோ? குழந்தைப் பருவத்தில் கன்பூஷிய அதிக சுறுசுறுப்புக் காட்டினான்; நன்கு விளையாடினான். ஆனால் இவன் விளையாட் டெல்லாம் தெய்வ சம்பந்தமுடையனவாகவே இருந்தன. பூசைக் குரிய பாத்திரங்களை ஒழுங்குபடுத்தி வைப்பான்; பூசை செய்கிற மாதிரி இருந்து காட்டுவான். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த மாதிரியான விளையட்டுக்களை யெல்லாம், கூட இருந்து அனுப விக்க, தகப்பன் கொடுத்து வைக்க வில்லை; குழந்தையின் மூன்றாவது வயதிலேயே இறந்து போய் விட்டான். குடும்பத்தில் வறுமை புகுந்துகொண்டது. இது காறும் அதனைக் காப்பாற்றிக்கொண்டு வந்தவன் கண் மூடிக்கொண்டு விட்டானல்லவா? குழந்தையின் படிப்புக்குத் தடை ஏற்பட்டது. ஏழாவது வயதில் இவன் - கன்பூஷிய - ஏதோ ஒரு பள்ளிக்கூடத் திற்குச் சென்றதாக ஒரு வரலாறு கூறுகிறது. எவ்வளவு தூரம் இது சரியென்பது தெரியாது. ஆனால் இவனுக்கு இயற்கையறிவு நிரம்பி யிருந்தது. இவன் வயதொத்த சிறுவர்களுக்குப் புலப்படாத விஷயங்கள் பல இவனுக்குச் சுலபமாகப் புலப்பட்டன. இதனால், இவனுடன் பழகி வந்த சிறுவர்களுக்கு இவனிடத்தில் ஒருவித பக்தி விசுவாசம் ஏற்பட்டது. சிறு வயதிலிருந்தே இவன் சொல்லுக்கு மதிப்பு வைக்கிற ஒரு கோஷ்டி அமைந்தது. கன்பூஷிய, முறையாகக் கல்வி பயிலத் தொடங்கியது பதினைந்தாவது வயதிலிருந்துதான், இருந்தாலும் வெகு சீக்கிரத்தில் இவன் பல துறைகளிலும் அறிவு பெற்றான். பிற்காலத்தில், இவனது பலதிற அறிவினைக் கண்டு வியந்த சீடர்களிடத்தில் கூறுகிறான்:- சிறு வயதில் நான் மிகவும் தாழ்ந்த நிலையிலிருந்தேன். இதனால் பலதிற அறிவு பெற என்னால் முடிந்தது. ஆனால் அஃதொன்றும் பிரமாதமில்லை. பத்தொன்பதாவது வயதில் விவாகம் செய்து கொண்டான் கன்பூஷிய. அடுத்த ஆண்டில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு லீ என்று பெயர். பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்ததாகத் தெரிகிறது. விவாகம் செய்துகொண்டதால் குடும்பப் பொறுப்பு அதிகமாகி விட்டதல்லவா? எனவே இருபதாவது வயதில் அரசாங்கத்தின் கீழ் ஒரு சிறு உத்தியோகத்தை ஏற்றுக்கொண்டான். சாதாரண கணக்கு வேலைதான். இதனை ஒழுங்காகச் செய்து வந்தான். ஆனால் இதில் இவன் மனம் திருப்தியடையவில்லை. இரண்டாவது வருஷத்தில் இந்த உத்தியோகத்திற்கு விடை கொடுத்துவிட்டு ஒரு போதகாசிரி யனாயமர்ந்தான். இளைஞர் பலர் இவனிடமே போந்து கல்வி பயின் றனர். மாணாக்கர் கொடுத்தது எவ்வளவு சிறிய தொகையா யிருந்த போதிலும் அதை இவன் மிகவும் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண் டான். பயில வரும் மாணாக்கர்களிடத்தில், பொருளைக் கொடுக்கிற சக்தி எவ்வளவு இருக்கிறதென்று இவன் பார்க்கவில்லை; அதற்குப் பதிலாக, அவர்களிடத்தில் கல்வி பயில வேண்டுமென்ற ஆவலிருக் கிறதா, ஓரளவு சுய அறிவு இருக்கிறதா என்று தான் பார்த்தான். தவிர, சொல்லிக் கொடுத்ததை உடனுக்குடன் கிரகித்துக் கொண்டு சொல்லும் மாணாக்கர்களுக்கு மட்டுமே தொடர்ந்து போதித்தான்; மற்றவர்களுக்குக் கண்டிப்பாக மறுத்து வந்தான். ஒரு விஷயத்தின் ஒரு மூலையை நான் காட்ட, மற்ற மூன்று மூலைகளையும் சுயமாகப் பார்த்துக் கொள்ளத் தெரியாத மாணாக்கர்களுக்கு நான் தொடர்ந்து பாடஞ்சொல்லிக் கொடுப்பதில்லை என்று கூறுகிறான் ஓரிடத்தில். மாணாக்கர்களுக்கு என்ன போதித்தான்? ஒரு மனிதன், தினசரி செய்யவேண்டிய கர்மங்களென்ன, அனுசரிக்கவேண்டிய தர்மங்க ளென்ன, இவைகளைப் பற்றிச் சீனாவின் புராதன காலத்து முனி புங்கவர்கள் கூறிப் போந்த அனைத்தையும் தொகுத்துப் போதித்தான். இந்த விஷயத்தில் இவனுக்கு அதிகமான சிரத்தை இருந்தது; ஆற்றலும் இருந்தது. தனி மனிதன் அறநெறியில் சென்றால்தானே, சமுதாயமோ அரசாங்கமோ சரிவர இயங்கமுடியும்? இங்ஙனம், புராதன காலத்திலிருந்து திரண்டு வந்திருக்கும் ஞானத்தினைப் புதிய முறையில் திறம்பட போதிக்கும் ஆற்றல் படைத்தவன் என்ற புகழ், இந்தக் காலத்திலேயே, ஏறக்குறைய இருபத்திரண்டு இருபத்து மூன்று வயதிலேயே இவனுக்கு ஏற்பட்டு விட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக, இந்தப் புகழொளியைக் கண்டு களிக்க இவன் தாயார் கொடுத்து வைக்கவில்லை. இவனது இருபத்து மூன்றாவது வயதில் பரலோகம் சென்றுவிட்டாள். இதற்காக இவன் பெரிதும் துக்கித்தான் என்பதை நாம் சொல்ல வேண்டுமோ? தாயின் மரணத்திற்குப் பிறகு சுமார் பன்னிரண்டு வருஷ காலம், கற்பிப்பதைக் குறைத்துக் கொண்டு கற்பதிலேயே முனைந்து நின்றான். அறம், அரசியல், இசை இப்படிப் பலதுறைகளிலும் பூரண பாண்டித்தியம் பெறவேண்டுமென்பதே இவன் ஆவல். இதற்காக யாரிடம் சென்று பாடங் கேட்கவும் இவன் கூச்சப்படவில்லை. இவனது சம காலத்தவனும், இவனைக் காட்டிலும் வயதில் மூத்த வனும், பரம ஞானியுமான லாவோத்ஸே என்பவனை நாடிச்சென்று, அவனிடம், பிரதியொரு மனிதனும் அனுஷ்டிக்க வேண்டிய ஆசார நியமங்களைப்பற்றியும் இன்னும் அநேக விஷயங்களைப்பற்றியும் தெரிந்து கொண்டான். இப்படிப் பலரிடமிருந்தும் தெரிந்து கொண்டதன் விளைவாக, இவனது கற்பிக்கும் ஆற்றல் முன்னைக் காட்டிலும் அதிகமாகியது; சீடர்களின் எண்ணிக்கையும் பெருகியது. இவனது முப்பத்தாறாவது வயதில், இவன் வசித்திருந்த லூ ராஜ்யத்தில் கலகம் உண்டாயிற்று. இதனால் இந்த ராஜ்யத்தின் அதிபதி, த்ஸி என்ற மற்றொரு ராஜ்யத்திற்கு ஓடிப்போய்விட்டான். கன்பூஷியஸும் அங்குப் போக வேண்டியதாயிற்று. அங்குச் சென்று, ஓர் உத்தியோகத்தில் அமர்ந்தான். ஆனால் இவன், தன் உத்தி யோகத்தில் காட்டிய கண்டிப்பும் நேர்மையும், இவனுக்கு விரோத மான ஒரு சூழ்ச்சியைக் கிளப்பிவிட்டன. எனவே இவன் திரும்பவும் லூ ராஜ்யத்திற்கே வந்துவிட்டான். த்ஸி ராஜ்யத்தில் இவன் வசித் திருந்ததெல்லாம் சுமார் ஒரு வருஷந்தான். இதற்குப் பிறகு சுமார் பதினைந்து வருஷ காலம், பழைய கிரந்தங்களைப் பரிசீலனை செய்வதிலும், அவற்றைப் புதிய முறை யில் தொகுப்பதிலும் ஈடுபட்டிருந்தான். பழமையைத் தெளிவுறத் தெரிந்து கொண்டால்தான், வருங்காலத்தில் சீர்பெற்ற வாழ்வு நடத்தலாமென்ற திடநம்பிக்கை இவனுக்கு ஏற்பட்டிருந்தது. இதுகாறும் கற்றவைகளையும் போதித்தவைகளையும் அனுஷ்டானத்தில் கொண்டுவந்து காட்ட, கன்பூஷியஸின் ஐம்பத் தோராவது வயதிலிருந்து சில சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. எப்படி யென்று பார்ப்போம். ஐம்பத்தோராவது வயதில், கன்பூஷிய, லூ ராஜ்யத்தின் தலைநகரத்திற்கு அதிபதியாக நியமிக்கப்பட்டான். இவனுடைய நிருவாகத்தின்கீழ், சொற்ப காலத்திற்குள், நகர ஜனங்களுடைய அன்றாட வாழ்க்கையில் அற்புதமான மாறுதல்கள் பல காணப் பட்டன. எல்லோருக்கும் ஒழுங்காக உணவு கிடைத்துக்கொண் டிருப்பதற்கு ஏற்பாடு செய்தான். பாதைகள் சுத்தமாக வைக்கப் பட்டன. இவனது நிருவாகத் திறமையைக் கண்ட லூ ராஜ்யத்தின் தலைவன், இவனை அரசாங்க மந்திரியாக்கினான். சுமார் நான்கு வருஷ காலம் மந்திரிப் பதவியிலிருந்து அநேக சீர்திருத்தங்களைச் செய்தான். நிலங்களை அளவை (சர்வே) செய்தான். விவசாய அபி விருத்திக்கான திட்டங்கள் பலவற்றை அமுலுக்குக் கொண்டு வந்தான். இன்னும், ராஜ்யத்தில், களவுகள் நடைபெறா வண்ணம் செய்தான். வேறு குற்றங்கள் நிகழா வண்ணம் தடுத்தான். ஐம்பத்தாறாவது வயதில் பிரதம மந்திரியானான் கன்பூஷிய. பதவி ஏற்றுக்கொண்ட மூன்றாவது மாதத்தில், வறுமையானது ராஜ்யத்தி லிருந்து ஓடிவிட்டது. வறுமையின்றேல், களவேது? குற்றமேது? கன்பூஷியஸின் திறமையான நிருவாகம், அண்டை ராஜ்யங் களின் பொறாமையைக் கிளறிவிட்டது. லூ ராஜ்யத்தின் தலைவனைத் துன்மார்க்க வழிகளில் ஈடுபடுத்தி, அதன் மூலமாக அவனுக்கும் கன்பூஷியஸுக்கும் பிணக்கு உண்டாகும் வண்ணம் சூழ்ச்சிகள் நடைபெற்றன. மேலே சொல்லப் பெற்ற த்ஸி ராஜ்யத்தின் தலைவன், விலை மாதர் சிலரை லூ ராஜ்யத்தின் தலைவனிடம் அனுப்பினான். அந்தோ, அவனும் அந்த விலை மாதருடைய மோக வலையில் விழுந்துவிட்டான். ராஜ்யத்திற்கு உய்வேது? இனி நாம் இங்கிருத்தல் தகாதென்று கன்பூஷியஸும், பதவியை ராஜீநாமா செய்துவிட்டு ராஜ்யத்தினின்று வெளியேறி விட்டான். இதற்குப் பிறகு சுமார் பன்னிரண்டு வருஷ காலம், தனது சீடர்களுடன் ராஜ்யம் ராஜ்யமாகச் சுற்றுப்பிரயாணஞ் செய்ய லானான். இந்தச் சுற்றுப் பிரயாணத்தின்போது, மனிதர்களும், சமு தாயமும், அரசாங்கமும் சன்மார்க்கத்தில் செல்லக்கூடிய வகையில் உபதேசங்கள் செய்து வந்தான். அநேக ராஜ்யங்கள் இவனுடைய ஆலோசனையைக் கோரின. எங்கணும் இவனுக்கு வரவேற்பு; ராஜ மரியாதைகள். உலகம் உய்ய உழைக்கும் உத்தமர்களுக்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பேயன்றோ? இந்தச் சுற்றுப்பிரயாணத்தின்போது இரண்டு தடவை இவன் உயிருக்கு ஆபத்து ஏற்படவிருந்தது. இரண்டு தடவையும் தப்பியே விட்டான். ஆபத்து ஏற்பட்ட காலத்தில் இவன் சிறிது கூட மனக் கலக்கம் கொள்ளவில்லை. தெய்வப் பணியை நிறைவேற்ற வந்திருக்கிற எனக்கு, அந்தப் பணி நிறைவேறுகிற வரை எவ்வித ஊறும் ஏற்படாது; என் உயிரும் போகாது என்று மனவமைதி குலையாமல் கூறுவான். இங்ஙனம் சுற்றுப்பிராயணம் செய்துகொண்டிருக்கையில், லூ ராஜ்யத்திற்கு வந்து சேருமாறு அந்த ராஜ்யத்துத் தலைவனால் கேட்டுக்கொள்ளப்பட்டான் கன்பூஷிய. அப்படியே, தனது அறுபத்தெட்டாவது வயதில் சுய ராஜ்யத்திற்கு வந்து சேர்ந்தான். ஆனால் முந்தி மாதிரி எவ்வித அரசாங்க உத்தியோகத்தையும் ஏற்றுக் கொள்ள வில்லை; ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற மனப்பான்மை யும் இவனுக்கு உண்டாகவில்லை. அதற்குப் பதில், இலக்கியப் பணி யில் ஈடுபட வேண்டுமென்ற விருப்பமே இவனிடம் மேலோங்கி நின்றது. பழைய கிரந்தங்கள் பலவற்றைப் பரிசோதனை செய்து பதிப்பித்தான். கி. மு. 722ஆம் வருஷம் முதல் 481ஆம் வருஷம் வரை, அதாவது தனது எழுபதாவது வயது வரை நடைபெற்ற சம்பவங் களைத் தொகுத்து, சுமார் இருநூற்று ஐம்பது வருஷ கால சரித்திர மாக எழுதினான். இந்தச் சரித்திர நூலுக்கு இவன் அதிக முக்கியத் துவம் கொடுத்தான். இதைக் கொண்டுதான் பிற்காலத்தவர் தன்னை மதிப்பர் என்று கூறினான். ஒரு சரித்திர நூலை எப்படிப் பாரபட்ச மற்ற முறையில் எழுத வேண்டு மென்பதற்கு இவனுடைய இந்தச் சரித்திரம் ஒரு வழிகாட்டியா யிருக்கிறதென்று சீன அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்தச் சரித்திர நூலை எழுதி முடித்த இரண்டாவது வருஷம், ஏறக்குறைய எழுபத்து மூன்றாவது வயதில், கன்பூஷிய காலமாகி விட்டான். இவனுடனிருந்த சீடர்கள் - சுமார் மூவாயிரம் பேர் – கண்ணீர் விட்டுக் கலங்கினார்கள். லூ ராஜ்யத்தின் தலைவன் கதறி னான்:- அந்தோ! தெய்வத்திற்கு என் ராஜ்யத்தின்மீது இரக்க மில்லையா? இந்த மகானை இங்கே விட்டுவைக்கக்கூடாதா? ஒரு நோயாளியைப் போல் நான் தனியனாகிவிட்டேனே? வணக்கத்திற் குரிய எனது ஐயனே! எனக்கு நல்லறிவு புகட்ட இனி யாரு மில்லையே! இவனது சீடர்களில் ஒருவனான த்ஸே குங் என்பவன், இவன்மீது எழுப்பப்பட்ட சமாதியினருகிலேயே ஆறு வருஷ காலம் தொடர்ந்து வசித்துக்கொண்டிருந்தான். என்ன குருபக்தி! கன்பூஷிய, ஒரு மத தாபகனல்ல; புதியதொரு தத்துவத்தைக் கண்டு பிடித்தவனல்ல; நவீனமான ஒரு கொள்கையை நிலைநாட்டியவனுமல்ல; பழைய காலத்து உண்மைகளைப் புதிய நிலைக்கேற்ற விதமாகச் சொன்னவனே. நான் ஞானியல்லேன்; நல்லியல்புகள் நிறைந்தவனு மல்லேன் என்று இவனே தன்னைப் பற்றி ஓரிடத்தில் கூறிக்கொள்கிறான். ஆனாலும் சீனர்கள், இவனைத் தெய்வ புருஷனாகக் கருதி, இவனுக்குக் கோயில் கட்டிக் கும்பிடு கிறார்கள். சீனமக்களில் பெரும்பாலோர் இவனது உபதேசங் களைத் தெய்வ கட்டளைகளாக நம்புகிறார்கள். கன்பூஷியஸின் உபதேசங்களிற் சிலவற்றைக் கீழே தருகிறாம்:- மனத்தைக் கடமையில் செலுத்து. சீலத்தைக் கடைப்பிடி. தயைக்குக் கட்டுப்படு. மேலான கலைகளில் மனச்சாந்தி பெறு. * * * மனத்துக்கண் மாசிலனாயிருந்து நீ பேசுவாயாகில் கண்ணியமாகவும் நிதானமாகவும் காரியங்களைச் செய்வாயாகில், நாகரிகமில்லாத இடங்களில் கூட நன்மதிப்புப் பெறுவாய். * * * புகழைப் பொருட்படுத்தாதே; புகழ் பெறுவதற்குத் தகுதியுடையவனாக உன்னைச் செய்து கொள். * * * சீலமற்றவனை நண்பனாகக் கொள்ளாதே. * * * நாம் யாரிடத்தில் பழகினாலும், அவரிடத்தில் காணப் பெறும் நற்பண்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும்; கெட்ட வற்றை விலக்கிவிட வேண்டும். * * * சீலம் எப்பொழுதும் தனித்து நிற்பதில்லை; அதற்கு நண்பர்கள் நிறைய உண்டு. * * * ஆள்கிறவர்கள் நன்னடத்தையுள்ளவர்களாயிருக்கும் பட்சத் தில், அவர்கள் விடுக்கிற உத்தரவுகளுக்கு எல்லோரும் கீழ்ப்படி கிறார்கள். * * * சீல புருஷர்கள் ஒரு ராஜ்யத்தில் தொடர்ந்து ஆட்சி புரிவார்களானால், அந்த ராஜ்யத்தில், மரண தண்டனை விதிக்கப் படவேண்டிய அவசியமே ஏற்படாது. * * * அரசனாயிருப்பது கடினம். மந்திரியாயிருப்பது சுலபமல்ல. * * * முற்காலத்தில் மனிதர்கள், தங்கள் அபிவிருத்திக்காகப் படித்தார்கள்; இப்பொழுதோ மற்றவர்கள் நம்மைப் பாராட்ட வேண்டுமென்பதற்காகப் படிக்கிறார்கள். * * * தெரிந்ததைத் தெரியுமென்றும், தெரியாததைத் தெரியா தென்றும் சொல்வதுதான் அறிவு. * * * சிறிய விஷயங்களில் பொறுமை காட்டாவிட்டால் பெரிய காரியங்கள் கெட்டுப் போகின்றன. மார்க்க அரேலிய (கி.பி. 121-180) யேசுநாதர் சிலுவையில் ஏறி ஏறக்குறைய ஒரு நூற் றாண்டாகி யிருந்தது. அவ ருடைய உபதேசங்களைப் பரப்ப முயன்றவர்களும், கடைப் பிடிக்க முனைந்தவர் களும் இல்லாத பொல்லாத இம்சைகளுக் குட்படுத்தப் பட்டார்கள். எந்த ரோமாபுரி யில் இப்பொழுது புனிதத் தன்மை வாய்ந்த போப்பரசர் கள்அருட்கொலு வீற்றிருந்து கிறிதுவ தர்மத்தை வளர்த்து வருகிறார்களோ அந்த ரோமா புரியில் தான் முந்தி, அதாவது கிறிது சகத்தின் ஆரம்ப காலத்தில் இந்த இம்சைகள் அதிகமாக நடைபெற்றன. இந்தக் காலத்தில் ஆண்ட ரோம சக்ர வர்த்திகள், கிறிதுவர்களைப் பலவித கொடுமைகளுக்குட்படுத்து வதை ஓர் அரசியல் முறையாகவே கையாண்டு வந்தார்களென்று சொல்லலாம். இவர்களிலே ஒருவன்தான் மார்க்க அரேலிய. இந்த விஷயத்தில், அதாவது கிறிதுவர்களுக்கு விரோதமான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்ட விஷயத்தில் இவன் ஒரு துரதிருஷ்டசாலி. அந்தத் துரதிருஷ்டமான நிலைமையில் இவன் இருந்தான். மனிதத் தன்மையில் நிறைவுற்றவனாக வாழவேண்டு மென்பதை லட்சியமாகக் கொண்டிருந்த இவனுடைய வாழ்க்கை யில் இஃதொரு களங்கம் என்று கூறுவர் சிலர்; இவன் என்ன செய்வான்? தனக்கு முந்தி ஆண்ட அரசர்கள் அனுசரித்து வந்த முறையையே இவன் பின்பற்றினான். தவிர, தனது பிரஜைகளின் மனப்போக்கையும் தழுவிச் செல்லவேண்டியவனா யிருந்தான்; பிரஜைகளின் மனப்போக்கு அப்பொழுது கிறிதுவர்களுக்கு முழு விரோதமாகவே இருந்தது என்று சொல்லி இவனை மேற்படி களங்கத்தினின்று விடுதலை செய்வோர் மற்றுஞ் சிலர். இந்தக் கட்சிப் பிரதிகட்சிகள் வெகு காலமாகவே இருந்துகொண்டு வரு கின்றன. இந்த இரண்டு கட்சிகளில் எந்த ஒன்றிலும் நாம் சேரவேண்டு வதில்லை. நடு நிலைமையோடு பார்ப்போமானால், மாத்யூ ஆர்னால்ட் என்ற அறிஞன் கூறுகிறபடி, மார்க்க அரேலிய குற்றமற்றவன்; ஆயினும் ஒரு விதத்தில் துரதிருஷ்டசாலி. இப்படிக் கூறவே விரும்புகிறோம். அதிருஷ்டமோ, துரதிருஷ்டமோ ஒருவ ருடைய வசத்தில் இல்லையல்லவா? மார்க்க அரேலியஸை, குறை யற்ற அரசனாகவும் நிறைவுற்ற மனிதனாகவுமே நாம் காண்கிறோம்; அப்படியே நண்பர்களுக்குக் காட்ட விரும்புகிறோம். இதனால் தான், முதலிலேயே, கிறிதுவர்கள் சம்பந்தமாக அவன் சில நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டானென்ற விஷயத்தைப் பிரதாபிக்கத் துணிந்தோம். மார்க்க அரேலியஸை அறிமுகப்படுத்தாமல், அவனைப் பற்றி எடுத்த எடுப்பிலேயே தீர்ப்புக் கூறிவிட்டீர்களேயென்று வாசகர்கள் கேட்கலாம். அசோகனைப் பல அமிசங்களில் ஒத்திருக் கின்ற இவனை, இந்த அரச ஞானியை, சரியான கோணத்தில் இருத்தி வைத்துக் காணவேண்டுமென்பதற்காகவே இப்படிச் செய்தோம். கி.பி. இரண்டாவது நூற்றாண்டு ரோம சாம்ராஜ்யம் மகோன்னத திதியிலிருந்தது. இன்றைய ஐரோப்பாவின் பெரும் பகுதியும், ஆசியாவின் ஒரு பகுதியும், ஆப்பிரிக்காவின் வடபகுதியும் இதன் அதிகார எல்லைக்குட்பட்டிருந்தன. படை கொண்டு சென்ற இடங்களிலெல்லாம் இதற்கு வெற்றி கிடைத்து வந்தது. இதன் சட்ட நிர்மாண முறையையும் நிருவாக முறையையும் ஏற்றுப் பின்பற்று வதிலே மற்ற நாடுகள் பெருமை கொண்டன. ரோமாபுரியிலோ, பொன்னும் பொருளும் ஏராளமாக வந்து குவிந்தன. ஏழ்மைத்தன மும் அடிமைத்தனமும் ஒரு புறத்தில் முணு முணுத்துக்கொண் டிருந்த போதிலும், மற்றொரு புறத்தில் செல்வமானது செல்வாக்குப் பெற்று ஆடம்பரத்தின் உச்சியில் ஏறி நின்றது. ஒரு வேளை உணவுக்கும் ஒரு நாள் உடைக்கும் பணக்காரர்கள் ஆயிரக்கணக்கில் பணஞ் செலவழித்தார்கள். இந்த நிலையில் ஒழுக்கமென்பது எங்கே தலைகாட்ட முடியும்? இருந்த இடம் தெரியாமல் பதுங்கிக் கொண்டு விட்டது. சீலமென்று பேசினோர் ஏளனத்திற்காளாயினர். இப்படி யிருந்தபோதிலும், சீலமானது அடியோடு இறந்துவிட வில்லை; ஒரு சிலரிடத்தல் உயிர் வைத்துக் கொண்டுதானிருந்தது. இவர்கள், புலனடக்கி இயற்கையோடொட்டிய வாழ்வு நடத்தி வந்த னர். இவர்கள்தான் ட்டாயிக்குகள். தனி மதத்தினர் போலிருந்து, தங்களாலியன்ற வரை ஜனங்களைச் சன்மார்க்கத்தில் திருப்ப முயன்று வந்தனர். இவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர், அறிவு உலகத்திலும் அரசியல் உலகத்திலும் நட்சத்திரங் களைப்போல் பிரகாசித்து வந்தனர். இந்த நட்சத்திரங்களுக்கு நாயக நட்சத்திர மாயிருந்தவன் மார்க்க அரேலிய. செல்வமோ அதிகாரமோ இல்லாத நிலையில் இயற்கையோ டொட்டிய வாழ்வு நடத்துவது அவ்வளவு கடினமல்ல; ஊனைச் சுருக்கி ஞானம் பெருக்குவதும் அவ்வளவு சிரமமல்ல. அரசபோகம், ஆடம்பரச் சூழல், இணையில்லாத அதிகாரம், இவைகளுக்கு மத்தியில் இருந்து கொண்டு ஒரு ஞானியாக வாழ்தல் எவ்வளவு கடினமென்பதை அந்த நிலையில் நின்று பார்த்தால்தான் தெரியும். இந்தக் கடினமான சாதனையில் வெற்றிபெற்றவன் மார்க்க அரேலிய. இதனால்தான் உலகத்துச் சிரஞ்சீவிகளிலே ஒருவனாக வாழ்ந்துகொண்டிருக்கிறான். இவன் செங்கோலேந்திய ஞானி; சினமகற்றிய அரசன்; மாற்றலரை மன்னித்த வீரன்; சாந்த சீலன்; பிறரிடத்தில் குற்றமே காணாத சீராளன்; அரச பதவியிலமர்ந்து அந்தப் பதவிக்குப் பெருமை தேடிக்கொடுத்தவன் ஆளுந்தகுதி பெற்ற பின்னரே அரசு கட்டில் ஏறினான்; ஆனால் இவன் ஆட்சி யின் பெரும் பகுதி போர்க்களங்களிலேயே கழிந்தது. இந்த விஷயத் திலும் இவன் துரதிருஷ்டசாலியென்றே சொல்ல வேண்டும். மார்க்க அரேலிய கி. பி. 121ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் இருபத்தாறாந்தேதி ரோமாபுரியில் பிறந்தான். இவனுடைய பெற்றோர்கள் உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவனது தாயார், அப்பொழுது சக்ரவர்த்தியாக ஆண்டுகொண்டிருந்த அண்ட்டோ னின பைய என்பவனுடைய சகோதரி. இந்த அண்ட்டோ னின பையஸுக்கு முந்தி ஆண்ட ஹாட்ரியன் சக்ரவர்த்தி, தனக்குப் பின்னால் அரச பதவியில் அமர வேண்டிய வாரிசாக இந்த அண்ட் டோனின பையஸை நியமித்துவிட்டுப் போனான். ஆனால் ஒரு நிபந்தனையுடன். இந்த அண்ட்டோனின பைய, தனக்குப் பின்னால் மார்க்க அரேலியஸையும், தனது பேரப்பிள்ளையாகிய வீர என்பவனையும் வாரிசுகளாக ஏற்றுக் கொள்ள வேண்டு மென்பதுதான் அந்த நிபந்தனை. இந்த நிபந்தனைப்படியே நடந்து கொண்டான் அண்ட்டோனின பைய. அதாவது, தன்னுடைய சகோதரி மகனையே, தனக்குப் பின்னாடி ஆளக்கூடிய வாரிசாக ஏற்றுக்கொண்டான். இவனுக்கே, இந்த வாரிசுக்கே, தன் பெண்ணான பவுட்டினா என்பவளை மணஞ் செய்துகொடுத்தான். எனவே, அண்ட்டோனின பையஸுக்குப் பின்னர் பட்டத்திற்கு வந்த மார்க்க அரேலிய, அவனுடைய சகோதரி மகனும் மருமகப் பிள்ளையுமாவான். இவன் - மார்க்க - ஆளும் உரிமையோடு பிறக்கவில்லை. பதினேழாவது வயதில்தான் இந்த உரிமை இவ னுக்குக் கிடைத்தது. இவனது முழுப் பெயர் மார்க்க அரேலிய அண்ட்டோனின. இதுவும் பிள்ளை போனதன் காரணமாக ஏற்பட்ட பெயரேயாகும். மார்க்கஸின் சொந்த தந்தை அன்னிய வீர என்பவன், அரசாங்கத்தில் ஓர் உயர்தர அதிகாரியாக அலுவல் பார்த்துவந்தான்; மார்க்கஸின் சிறு பிராயத்திலேயே இறந்துவிட்டான். இதனால் தந்தையைப் பெற்ற பாட்டனுடைய போஷணையிலும் தாயா ருடைய பாதுகாப்பிலும் இவன் வளர்ந்து வரலானான். பிள்ளைப் பருவத்திலேயே இவனிடத்தில் மேலான பண்புகள் காணப்பட்டன. சந்தோஷத்தினாலோ துக்கத்தினாலோ இவனது முகம் சிறிதுகூட மாற்றமடையாது. எல்லோரிடத்திலும் நல்ல விதமாக நடந்து கொள்வான். தனது பேச்சினாலும் நடத்தையினாலும் எல்லோ ருக்கும் மகிழ்ச்சியை யளிப்பான். ஹாட்ரியன் சக்ரவர்த்திக்கு இவ னிடத்தில் அலாதியான பிரியம் ஏற்பட்டது. இவனுடையஆறாவது வயதிலேயே இவனைப் பகிரங்கமாகக் கௌரவப்படுத்தி, இவன்மீது தனக்குள்ள பிரியத்தைக் காட்டிக் கொண்டான். எட்டாவது வயதில் இவன், செவ்வாய்க் கடவுளைத் தொழும் ஒரு வகை மத கோஷ்டியில் சேர்க்கப்பட்டான்; இந்தக் கோஷ்டி யினர் செய்துவந்த எல்லாச் சடங்குகளையும் ஒழுங்காகச் செய்து வந்தான்; இவர்கள் கூறி வந்த மந்திரங்களனைத்தையும் நன்றாகச் சொல்லி வந்தான். பார்த்தவர்களும் கேட்டவர்களும் பிரமித்துப் போனார்கள். பன்னிரண்டாவது வயதில் இவனது படிப்பு ஆரம்பமாயிற்று. அந்தக் காலத்து வழக்கப்படி, செய்யுளியற்றல், திறம்படப் பேசுதல், ஒரு ரோமப் பிரஜை தெரிந்துகொள்ளவேண்டிய சட்ட நுணுக்கங்கள் முதலிய பல விஷயங்களையும் கற்றுக்கொண்டான். ஆயினும் இவன் மனம், தத்துவ சாதிரம் பயிலவேண்டுமென்பதிலேயே ஆவல் கொண்டது. அப்படியே பயின்றான். பயின்றதோடு மட்டு மல்ல, தத்துவ ஞானிகளைப்போலவே தன் வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டான் அந்தச் சிறு வயதிலேயே எளிய உணவையே உட்கொள்ளுவான்; முரட்டுத் துணியையே உடுத்துவான்; வெறுந் தரையில் அமர்ந்தே படிப்பான். உயர்குடும்பத்துப் பிள்ளைகள் படிக்கிற காலத்தில் உபயோகித்து வந்த சுக சாதனங்கள் எதனையும் இவன் உபயோகிக்க மறுத்துவிட்டான். தாயார் ஒரு பக்கம் மனம் நோவாள். ஆனால் மற்றொரு பக்கத்தில், தன் மகனின் மன வுறுதியைக் கண்டு மகிழ்வாள். மார்க்கஸுக்கு ஆசிரியர்களாயமர்ந்தவர் சுமார் இருபது பேர். இவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு துறை அறிவு பெற்றான். ஆனால் இந்தப் பல துறை அறிவை இவன் முக்கியமாகக் கருதவில்லை; இவர்களிடமிருந்து பெற்ற சில நல்ல குணங்களையே முக்கியமாகக் கருதினான். இதற்காக, இவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி செலுத்து கிறான் பிற்காலத்தில், தனது வாழ்க்கைக் குறிப்புக்கள் போன்றுள்ள நூலில். ஆசிரியர்களிடமிருந்து மட்டுமென்ன, தனது தாயார், பாட்ட னார் முதலியோரிடமிருந்துகூட சில நல்ல பண்புகளைப் பெற்ற தாகவே இவன் கூறுகிறான் எனது பாட்டனாரிடமிருந்து நன் னடத்தையும் புலனடக்கமும் பெற்றேன்.... எனது தாயாரிடமிருந்து, பக்தி, பரோபகார எண்ணம், தீச்செயல் புரியாமை, புரியாமை மட்டுமல்ல, எண்ணாமை இவைகளைக் கற்றேன்; மற்றும் எளிய வாழ்க்கையைக் கடைப்பிடிக்கத் தெரிந்துகொண்டேன். இதே மாதிரி, ஓர் ஆசிரியனிடமிருந்து, பிறரிடம் குற்றங் காணாமையும், இன்னோர் ஆசிரியனிடமிருந்து மன ஒருமைப்பாடும், மற்றோர் ஆசிரியனிடமிருந்து தொண்டு செய்யும் விஷயத்தில் சாக்குப் போக்குச் சொல்லாமையும், இப்படி ஒவ்வொருவரிடமிருந்து ஒரு நல்ல சுபாவத்தைக் கற்றுக்கொண்டதாகவே தெரிவித்துக்கொள் கிறான். இதிலிருந்து, இளமையிலிருந்தே இவன் மனம், சன்மார்க்கத் திலேயே சென்றதென்பது புலனாகும். ஹாட்ரியன் சக்ரவர்த்தி கி.பி. 138ஆம் வருஷம் இறந்து போனான். அப்பொழுது மார்க்கஸுக்குப் பதினேழு வயது. ஹாட் ரியன் விதித்த நிபந்தனைப்படி, அண்ட்டோனின பைய அரியணை ஏறினான்; மார்க்க இளவரசனானான். அதுமுதற்கொண்டு இவன் தாய்மனைவிட்டு அரண்மனையில் வசிக்கவேண்டியதாயிற்று. இதற்காக இவன் மகிழ்ச்சி கொள்ளவில்லை; துக்கமே யடைந்தான். ஏன் என்று நண்பர்கள் கேட்டபொழுது, ஏகாதிபத்திய ஆட்சியி னால் உண்டாகக்கூடிய தீமைகளை எடுத்துக்கூறி, தான் அந்த ஆட்சி யின் ஒரு கருவியாக இருக்கவேண்டி யிருக்கிறதே யென்று விசனித் தான். அண்ட்டோனின பைய கி.பி. 138ஆம் வருஷத்திலிருந்து 161ஆம் வருஷம் வரை இருபத்துமூன்று வருஷ காலம் ஆண்டான். இவன் ஆட்சி அமைதியாகவே கழிந்தது. ரோம ஏகதிபத்தியம், அண்டை அயலாருடைய பொறாமையைக் கிளறிவிடக்கூடிய அவ்வளவு சோபிதமாக விளங்கியது என்று சுருக்கமாகச் சொல்லி விடுவோம். உண்மையில் இந்தப் பொறாமையானது கிளர்ந் தெழுந்து, அடுத்த ஆட்சியில், அதாவது மார்க்கஸின் ஆட்சியில் பல கலகங்களாகவும் எதிர்ப்புக்களாகவும் கிளம்பின. அண்ட்டோனின பைய ஆண்ட இருபத்து மூன்று வருஷ காலத்திலும், மார்க்க, நிருவாக அனுபவம் பெறுவதற்கான பல சந்தர்ப்பங் களைப் பெற்றான். பொறுப்பான உத்தியோகங்கள் பல இவனிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றைத் திறம்பட நடத்தி அனைவருடைய மதிப்பையும் பெற்றான். அண்ட்டோனின பைய, இவனுக்கு ஆதரவு காட்டியும் உற்சாகமூட்டியும் வந்தான் தன் பெண்ணான பவுட்டினாவை, இவனுக்கு விவாகமும் செய்து கொடுத்தான். அப்பொழுது இவனுக்கு இருபத்தைந்து வயது. அண்ட்டோனின பைய கி.பி. 161ஆம் வருஷம் இறந்து போனான். நாற்பது வயதடைந்த மார்க்க பட்டமேற்றான்; தான் மட்டுமல்ல; ஹாட்ரியன் சக்ரவர்த்தி கூறிய நிபந்தனைப்படி, அவ னுடைய பேரப் பிள்ளையாகிய வீர என்பவனையும் தன்னோடு கூட பட்டமேறச் செய்தான். ரோமாபுரியில் ஒரே காலத்தில் இரண்டு சக்ரவர்த்திகள்! அண்ட்டோனின பைய இறந்ததும், இவனையே, ஆளும் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொள்ளுமாறு, அதாவது இவனொருவனே சக்ரவர்த்தியாயிருந்து ஆளவேண்டுமென்று ஜனப் பிரதிநிதி சபையானது வற்புறுத்தியது. ஆனால் இவன் கேட்க வில்லை. ஹாட்ரியன் சக்ரவர்த்தி விதித்த நிபந்தனைப்படியே நடந்து கொண்டான். நிபந்தனையை மீறலாகுமோ? வீர, அசமந்தன்; கேளிக்கைகளில் பிரியமுடையவன்; அரச பதவிக்குத் தகுதியில்லா தவன். ஆயினும் மார்க்க அவனிடத்தில் அன்பு காட்டி மரியாதை யும் செலுத்திவந்தான்; தன் பெண்ணையும் அவனுக்கு மணஞ் செய்து கொடுத்தான். வீரஸும், எல்லா வகையிலும் தன்னைக் காட்டிலும் மேலானவனாக மார்க்கஸை மதித்து வந்தான்; அவனுக்கு முதல் தானம் கொடுத்து, தான் இரண்டாவது தானத்திலேயே இருந்து வந்தான். யூப்ரெட்டீ நதிக்குக் கிழக்கிலுள்ள ஒரு பகுதி, முந்தி, பார்த்தியா ராஜ்யமாயிருந்தது. மார்க்க, பட்டமேற்ற சிறிது காலத்திற்குள், அதன் மீதுபோர் தொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற் குட்பட்டான். தன் சகோதர சக்ரவர்த்தியாகிய வீரஸின் தலைமை யில் ஒரு பெரும் படையை அங்கு அனுப்பினான். ஆனால் வீரஸோ, போரில் மனஞ் செலுத்தவில்லை; தன் சுபாவத்திற்கேற்ப களியாட் டங்களில் ஈடுபட்டிருந்தான். என்றாலும், திறமை வாய்ந்த சேனாதி பதிகள் சிலர் கூடச்சென்றிருந்ததால், போர், ரோமாபுரிக்குச் சாதக மாகவே முடிந்தது. இது முடிந்ததும், இத்தலிக்கு வடக்கேயிருந்தும், பிரிட்டன் என்ன, எகிப்து என்ன, இப்படிப் பல இடங்களிலிருந்தும் ஒன்றன் பின்னொன்றாகக் கிளம்பிய எதிர்ப்புக்களைச் சமாளிக்கவேண்டி யவனானான் மார்க்க. இவை காரணமாகவே, இவன் ரோமாபுரி யில் தங்கிய நாட்கள் சிலவாகவும், போர் முகங்களில் கழித்த நாட்கள் பலவாகவும் இருந்தன. நடத்திய போர்கள் அனைத்திலும் ஒருவாறு வெற்றியே கண்டான். இந்தப் போர்களொன்றில், இவனோடு கூடச் சென்ற இவனது சகோதர சக்ரவர்த்தியாகிய மேற்சொன்ன வீர இறந்துபோனான்; இறந்தது கி.பி. 169ஆம் வருஷம். அப்பொழுது மார்க்கஸுக்கு நாற்பத்தெட்டு வயது. வீரஸின் துர்நடத்தைகளை ஒருவாறு அறிந்திருந்தும், மார்க்க, அவனைக் கடைசி வரையில் கண்ணியமாகவே நடத்திவந்தான். அவன் இறந்த பிறகு அவனுக்குத்தெய்வ மரியாதைகள் நடைபெறும் படி ஏற்பாடு செய்தான். அவன் குடும்பத்தினருக்கு உயர்பதவிகள் முதலியன அளித்து, அவனிடத்தில் தனக்குள்ள விசுவாசத்தைப் புலப்படுத்திக்கொண்டான். வீர, ஒரு நாளில்லாவிட்டாலும் மற்றொரு நாள் நல்ல வழியில் திரும்புவான் என்ற நம்பிக்கை இவ னிடத்தில் குன்றாமலிருந்தது. ஆனால் அவன் - வீர - ஒழுக்கவீனத் தின் விளைவாக முப்பத்தொன்பதாவது வயதிலேயே மரணமடைந்து விட்டான். வீர மரித்த பிறகு, மார்க்க, தானே ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். ஏற்றுக்கொண்டதும், முந்தி மாதிரி, போர் முகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்படியே சென்று அநேக இடங்களில் வெற்றி கண்டான். வெற்றி கொள்ளப் பட்டவர்களை மனிதத்தன்மைக்கு முரண்படாத வகையில் நடத்தி னான். இப்படி நடத்தியதுதான் இவனுடைய வெற்றிகளுக்கெல் லாம் மேலான வெற்றியாயிருந்தது. எகிப்தில் கிளம்பிய எதிர்ப்பை அடக்க காஷிய என்ற ஒருவன் அனுப்பப்பட்டிருந்தான். இவன் திறமை வாய்ந்த சேனாதிபதி என்று பெயர் படைத்திருந்தான். இவனுடைய திறமையில் மார்க்கஸுக்கு அதிக நம்பிக்கையிருந்தது. இவன் எகிப்துக்குச்சென்று எதிர்ப்பை அடக்கி ஒடுக்கினான். இதனால் தன்னை வெல்ல யாராலும் முடியாது என்று கர்வங்கொண்டுவிட்டான். எனவே எகிப்திலிருந்து நேரே சிரியாவுக்குச் சென்றான். அங்குச் சென்று மார்க்கஸுக்கு விரோத மாகக் கலகக்கொடி தூக்கிவிட்டான்; தன்னைச் சக்ரவர்த்தியென்று பிரகடனமும் செய்து கொண்டான். இஃது, இவனோடு சேர்ந்து கலகங் கிளப்பிய சிலருக்குச் சகிக்கவில்லை; இவனைக் கொலை செய்து விட்டார்கள். இது நடந்தது கி.பி. 175ஆம் வருஷம். காஷிய கொலையுண்டது மார்க்கஸுக்குத் தெரிந்தது. அவன் கலகங் கிளப்பியதற்காக வருந்தாதவன், அவன்மீது வெறுப்புக் கொள்ளாதவன், அவன் கொலையுண்டதற்காகப் பெரிதும் வருந்தினான். ஐயோ, காஷிய, கலகக்கொடி தூக்கியதற்காக அவனை மன்னித் திருப்பேனே; அப்படி மன்னிப்பதனாலுண்டாகிற சந்தோஷத்தை எனக்குக் கொடாமல் இறந்துபோய்விட்டானே என்று சொல்லிக் கலங்கினான். காஷியஸோடு சேர்ந்து கலகஞ் செய்தவர்களனைவருக்கும் மன்னிப்பளித்தான். பின்னர், கலகம் நடைபெற்ற பிரதேசங்களைச் சுற்றிப்பார்க்க வேண்டுமென்று புறப்பட்டான் மார்க்க. கூடவே, இவன் மனைவி பவுட்டினாவும் சென்றாள். இவனுக்கு ஒரு மகனுண்டு. அவன் பெயர் கம்மோட. அப்பொழுது அவனுக்கு ஏறக்குறைய பதினான்கு வயதாகி யிருந்தது. அவனையும் அழைத்துச் சென்றான் மார்க்க. மேற்படி பிரதேசங் களைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வருகையில் பவுட்டினா திடீரென்று நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டாள். இது மார்க்கஸுக்கு மிகவும் துக்கத்தையளித்ததென் பதை நாம் சொல்லத் தேவையில்லை. பவுட்டினா துர்நடத்தையுள்ளவளென்று சொல்லிப் பலவிதமான அவதூறுகள் மார்க்கஸின் காதில் விழுந்தன. ஆனால் இவன் அவைகளை நம்பவில்லை; அல்லது பொருட்படுத்தவில்லை. எப்பொழுதும் போல் அவளை விசுவாசத்துடனேயே நடத்தி வந்தான். அவள் இறந்த பிறகு அவளுக்கு வெள்ளியினால் உருவச்சிலைகள் சமைத்து அமைக்க ஏற்பாடு செய்தான். சுற்றுப்பிரயாணத்தை முடித்துக்கொண்டு மார்க்க, தன் மகன் கம்மோடஸுடன் கி. பி. 176ஆம் வருஷம் ரோமாபுரிக்குத் திரும்பி வந்தான். திரும்பி வந்ததும், தன் மகனுக்கு இளவரசு பட்டம் சூட்டி மகிழ்ந்தான். அவனிடத்தில் ராஜ்ய நிருவாகப் பொறுப்புக்கள் சிலவற்றையும் ஒப்புவித்தான். ஆனால் அவனோ, தகப்பனாருக்கு நேர்விரோதமான நடத்தையுள்ளவனாயிருந்தான். மகா கர்வி; காமுகன்; பிறரைக் கொடுமைப்படுத்தி அதில் மகிழ்ச்சியடை கிறவன். சுருக்கமாக, ஓர் ஆசிரியன் கூறுகிறமாதிரி, அதுகாறும் ஆண்டுவந்தவர்களில், கேவல மானவர்களென்று கருதப்பட்டவர்க ளத்தனை பேருடைய கேவலமான குணங்கள் யாவும் ஒருங்கே திரண்டு இவனிடம் குடிகொண்டிருந்தன. இத்தகைய மகனைப் பெற்றெடுத்த விஷயத்திலும் மார்க்க ஒரு துரதிருஷ்டசாலி யென்றே சொல்ல வேண்டும். கம்மோட, மார்க்கஸுக்குப் பிறகு கி.பி. 180ஆம் வருஷத்தி லிருந்து 192ஆம் வருஷம் வரையில் சுமார் பதின்மூன்று வருஷ காலம் ஆண்டான். கடைசியில் ரோமாபுரியிலேயே சிலரால் குத்திக் கொல்லப் பட்டானென்பதையும், இறந்த பிறகு, இவன் சவத்தைக் கொக்கிபோட்டு இழுத்துக் கொண்டுபோய், ரோமாபுரிக்குப் பக்கத்தில் ஓடும் டைபர் நதியில் தள்ளிவிடவேண்டுமென்றும், பொது ஜன விரோதியாகிய இவனுக்கு ராஜ மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படுவதாகிற கௌரவம் கொடுக்கக் கூடாதென் றும் ரோமாபுரி பிரதிநிதிச் சபையானது தீர்மானம் நிறை வேற்றிய தென்பதையும் கொண்டு இவன் ஆட்சி எப்படி இருந்திருக்கும், ஜனங்கள் எவ்வளவு தூரம் அதிருப்தியடைந்திருப்பார்கள் என்பதை வாசகர்களே! யோசித்துக்கொள்ளுங்கள். இது நிற்க. மார்க்க மொத்தம் பத்தொன்பது வருஷகாலம் ஆண்டான். இவனது ஆட்சி ஜன விருப்பத்தைத் தழுவிய ஆட்சியாகவே இருந்த தென்று சொல்ல வேண்டும். இவனுக்கு முந்தி ஆண்ட சக்ரவர்த் திகள், பிரதிநிதிச் சபைக்குப் பெயரளவில் எல்லா அதிகாரங்களை யும் கொடுத்துவிட்டு, செயலளவில் எல்லா அதிகாரங்களையும் தாங்களே செலுத்தி வந்தார்கள். இவன் அப்படிச் செய்யாமல், உண்மையிலேயே பிரதிநிதிச் சபையின் விருப்பத்தை அனுசரித்து ஆட்சி நடத்தி வந்தான். ராஜ்யத்தில் ஒழுக்கவீனங்கள் குறையக் கூடிய விதமாகவும், எல்லோருக்கும் ஒரே மாதிரி நீதி கிடைக்கக் கூடிய மாதிரியாகவும் அநேக சட்டதிட்டங்களை அமுலுக்குக் கொண்டுவந்தான். மற்றும், பஞ்சகாலத்தில் எல்லோருக்கும் ஒழுங் காக உணவு கிடைத்துக் கொண்டிருக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்தான். போக்குவரவு சாதனங்களை அதிகப்படுத்தினான். இன்னும், ஜனங்களுக்கு நன்மை தரக்கூடிய அநேக காரியங்களைச் செய்தான். அரச கடமைகளைச் செய்யும் விஷயத்தில் மார்க்கஸுக்கு ஓய்வென்பதே தெரியாது. இரவு பகலென்று பார்க்க மாட்டான். அரண்மனையிலிருந்தாலும் போர்க்களத்திலிருந்தாலும் அரச காரியங்களை உடனுக்குடன் செய்து முடிப்பான். ஆனால் எந்த ஒரு காரியத்திலும், நன்றாக யோசித்த பின்னரே ஒரு முடிவுக்கு வருவான். லட்சக்கணக்கான தனது பிரஜைகளின் உயிருக்கும் பொருளுக்கும் தான் பொறுப்பாளி என்பதை இவன் நன்குணர்ந்திருந்தான். தனது சொந்த வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் எளிய முறையையே கடைப்பிடித்தான். போகம், பகட்டு முதலியவற்றைக் கண் ணெடுத்தும் பார்த்தானில்லை. இங்ஙனம் அரசர்களிலே சிறந்த அரசனாக ஆண்டும், மனிதர்களிலே உயர்ந்த மனிதனாக வாழ்ந்தும் விட்டு, இந்நிலவுலகினின்று மறைந்து போனான் மார்க்க, கி.பி. 180ஆம் வருஷம் மார்ச்சு மாதம் பதினேழாந்தேதி. ஆனால் இவன், ஆண்ட ஆட்சியிலே, வாழ்ந்த வாழ்க்கை யிலே இன்று வாழ்ந்துகொண்டிருக்கவில்லை; இவன் எழுதி வைத்துப்போன சில குறிப்புக்களிலேதான் வாழ்ந்து கொண்டிருக் கிறான். இந்தக் குறிப்புக்களை, இவன், தன் சொந்த வளர்ச்சிக்காக, சொந்த நலனுக்காக எழுதினான். இவற்றை ஓரிடத்திலிருந்து கொண்டு எழுதவில்லை. அரண்மனையோ, போர்க்களமோ, எங்கே எப்பொழுது அவகாசம் கிடைக்கிறதோ அங்கே அப்பொழுது இவற்றை எழுதினான். இதன் மூலம் மனச்சாந்தியும் அடைந்தான். இந்தக் குறிப்புக்களின் தொகுப்பு, பிற்காலத்தில், சிந்தனைகள் என்னும் பெயரைப்பெற்று, அறிஞருள்ளத்தைக் கவர்ந்திருக்கிறது. இந்தத் தொகுப்பைப் பன்னிரண்டு பகுதிகளாக அல்லது அத்தி யாயங்களாக வகுத்துப் பதிப்பித்திருக்கின்றனர் அறிஞர். இவற்றி லிருந்து சில மணிகளைப் பொறுக்கித் தர விழைகின்றோம். அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன சொல்லுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைப்பற்றிக் கவலை கொள்ளாமல், உனக்கென்று வகுத்துக்கொண்டிருக்கின்ற நேரிய வழியில் செல்வாயானால் எத்தனையோ தொந்தரவுகளை நீ கடந்தவனாவாய். * * * உன்னால் ஒரு காரியத்தைச் செய்ய முடியாவிட்டால், அதனால், மற்ற மனிதர்களாலும் அதைச் செய்ய முடியாது என்று நினைத்துவிடாதே. மற்ற மனிதர்களால் செய்ய முடிகிற ஒரு காரியத்தை உன்னால் நிச்சயம் செய்ய முடியும். * * * என்னுடைய கடமையை நான் செய்கிறேன். அவ்வளவு தான். மற்றவைகளைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை. * * * மற்றவர்கள் என்ன சொன்னாலுஞ்சரி, நான் நல்லவனாகவே நடந்து கொள்வேன் என்பதே உன் குறிக்கோளா யிருக்கட்டும். * * * திடீரென்று எதிர்பாராதவிதமாக ஏற்படக் கூடிய கஷ்ட நிஷ்டூரங்களைச் சமாளித்துக் கொள்கிற மாதிரி உன் வாழ்க்கை இருக்க வேண்டும். * * * செல்வம் வந்தால் அதற்கு, அகந்தை கொள்ளாமல் வரவேற்புக் கொடு. அப்படியே அதனைப் போகவிடவும் தயாராயிரு. * * * ஒருவரோடொருவர் சேர்ந்து வாழ்வதற்காகத்தான் மனிதர்கள் உலகத்திலே பிறக்கிறார்கள். ஆதலின், உன்னால் முடிந்தால், மற்றவர்களுக்கு உனக்குத் தெரிந்ததைச் சொல்லிக்கொடு; அல்லது அவர்களிடம் பொறுமை காட்டு. * * * எவனொருவன் பிறருக்குத் தீங்கிழைக்கின்றானோ அவன், தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்கிறான். * * * ஒரு நல்ல மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென் பதைப்பற்றி அதிகமாகப் பேசாதே; நீ நல்ல மனிதனாக நடந்து கொள். * * * பொது நன்மைக்காக நான் ஏதேனும் செய்திருக்கிறேனா? இதுவே நீ அடிக்கடி கேட்டுக் கொள்கிற கேள்வியா யிருக்கட்டும். * * * நல்ல காரியத்தைத் தவிர வேறொன்றையும் செய்யாதே. உண்மையைத் தவிர வேறொன்றையும் பேசாதே. * * * எளிமை, அடக்கம் இவையிரண்டினாலும் உன்னை அலங் கரித்துக்கொள்.............. மனித சமூகத்தை நேசி. கடவுளைப் பின்பற்று. அசோகன் (கி.மு. 304-232) உலக சரித்திரத் தின் ஏடுகளைச் சிறிது புரட்டிப் பாருங்கள்; எத்தனை சக்ரவர்த்திகள்! எத்தனை ஜார்கள்! எத்தனை சீஸர்கள்! இவர்கள் சாதித்த காரியங்கள் அனந்தம்; அடைந்த வெற்றி களுக்கோ கணக் கில்லை. ஆயினும் இவர்களுடைய பெயர்கள், மணலிலே எழுதிய எழுத்தைப் போல் சிறிது காலம் இருந்துவிட்டுப் பிறகு மறைந்து போயின. ஒருவ னுடைய பெயர் மட்டும் கல்லிலே எழுதிய எழுத்தென நிலைத்து நிற்கிறது. இதற்குக் காரணம் என்ன? மற்றவர்கள், பிரஜைகளுக்கு எஜமானர்களாயிருந்து ஆண் டார்கள்; இவன், - இந்த ஒருவன் - பிரஜைகளுக்குத் தந்தையாயிருந்து ஆண்டான். மற்றவர்கள், ஆயுத வெற்றி கண்டார்கள்; இவன், தரும வெற்றி கண்டான். மற்றவர்கள், ஹிம்சைப் பாதையில் அரசியல் ரதத்தை ஓட்டிச் சென்றார்கள்; இவன், அரசியல் தேரை, அஹிம்ஸை வழியில் நடத்திச் சென்றான். மற்றவர்கள், அண்டை அயல் நாட் டினரை, அதிகார பலத்தின் மூலம் அடக்கியாளப் பார்த்தார்கள்; இவன், அண்டை அயல் நாட்டினரை அன்பினால் ஆட்படுத்தியே விட்டான். மற்றவர்கள், தீமை செய்தார்க்குத் தீமையே செய்து காட்டி வழிப்படுத்த வேண்டுமென்பதை அரசியல் முறையாகக் கொண்டார்கள்; இவன், தீமை செய்தார்க்கு நன்மை செய்தே நல்வழிப்படுத்த வேண்டுமென்பதை அரசியல் தருமமாக அனுஷ்டித் தான். மற்றவர்கள், மனிதர்களிடம் மட்டும் அன்பு காட்டினார்கள். இவன் சர்வ ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தினான். கல்லின் மேல் பொறித்த எழுத்தாக இவன் பெயர் நிலைத்து நிற்பதில் என்ன அதிசயமிருக்கிறது? உண்மையில், இவன், காலத்தின்மீது வெற்றி காணும் ஆற்றல் படைத்த கற்பாறைகளிலும் கற்றூண்களிலும் செதுக்கப்பட்ட சாஸனங்களில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான். இங்ஙனம் சிரஞ்சீவியாக வாழ்ந்துகொண்டிருக்கிற இவன் யார்? எந்த நாடு, இவனுடைய ஆளுகையினால் மாட்சி யடைந்தது? இவன் தான் அசோகன்; இவன் ஆண்டது, நமது தாய்நாட்டில்தான்; நானிலத்திற்கு நல்லறிவையும் நாகரிகத்தையும் நல்கிய நமது இந்தியாவில்தான். இந்தியாவில், வடக்கே ஆப்கனிதானத்திலிருந்து தெற்கே மைசூர் வரையில் அசோகனுடைய ஆட்சி நிலவியது. ஆயினும் இவன், தன்னை ராஜன் என்றுதான் அழைத்துக்கொண்டான்; சக்ரவர்த்தி என்று அழைத்துக்கொள்ளவில்லை. அசோகன் என்று அடிக்கடி சொல்லி, தன் பெயரைக்கூட பிரசித்தப்படுத்திக்கொள்ள இவன் விரும்பவில்லை தன்னை தேவப்பிரியன் என்றும் பிரியதர்சி என்றும் அழைத்துக் கொண்டான். வாதவத்தில் இவன் தேவர் களுக்குப் பிரியமுள்ளவனாக நடந்துகொண்டான்; பார்ப்பதற்கும் பிரியமுள்ள தோற்றமுடைய வனாயிருந்தான் மற்றும். இவன், பிரஜை களைப் பிரியமாக நடத்தினான்; பிரஜைகளும் இவனிடத்தில் பிரிய மாக நடந்துகொண்டார்கள். தேவப்பிரிய பிரியதர்சிராஜன்! இந்தப் பெயருடன்தான் இவன் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறான். அஹிம்சையைத் தத்துவ அளவிலே கொண்டு வந்து நிறுத்திக் காட்டுவது சுலபம்; அனுஷ்டானத்திலே கொண்டுவந்து காட்டுவது கடினம். அதிலும் அரசியல் துறையிலே அநுஷ்டிப்பதென்பது மிகவும் கடினம். ஏனென்றால் அரசு என்பது, ஹிம்சை என்கிற அடிப் படையின் மீதுதான் இயங்குகிறது. ஹிம்சையின் துணையினால் தான் அரசு ஆக்கம் பெறுகிறது; நிலைத்து நிற்கிறது. அரசியல் பண்டி தர்கள் இப்படித் தான் கூறிப் போயிருக்கிறார்கள்; அனுபவத்திலும் இப்படித்தான் இருக்கிறது. அரச நீதி என்பதற்குத் தண்ட நீதி என்றே நமது முன்னோர்கள் பெயர் கொடுத்திருப்பது கவனிக்கத் தக்கது. ஆனால் இந்த ஹிம்சையை, இந்தத்தண்டத்தை ஓர் அளவுக் குட்படுத்திப் பிரயோகிக்க வேண்டும்; தவிர இதனால் நன்மை யுண்டாவதா யிருக்கவேண்டும். ஹிம்சை, மேலானதொரு நன்மையை யடைவதற்கான ஒரு சாதனம், அதுவும் ஒரு வரம்புக்குட்பட்ட சாதனம், அதுவே லட்சியமாக இருக்கக்கூடாது என்றெல்லாம் சில நியதிகளை ஆள்வோருக்கென்று வகுத்து வைத்திருக் கிறார்கள் அறிஞர்கள். இந்த நிலையில், ஹிம்சையை அறவே நீக்கிவிட்டு அஹிம்சை விசையினால் அரசியல் இயந்திரத்தை இயக்க ஒருவன் முற்படுவானாகில், அதிலும் அதிகார பீடத்திலிருந்து கொண்டு முற்படுவானாகில் அவனை அசாதாரண புருஷன் என்றுதான் சொல்ல வேண்டும். அசோகன் வாழ்ந்து கொண்டிருக்கிறானென் றால், அதற்கு இதுதான் முக்கிய காரணம். பார்க்கப்போனால், உலகத்தில், அஹிம்சையை அரசியலில் நேரடியாகப் புகுத்தி வெற்றி காணமுனைந்தோர் இருவர்தான். இருவரும், நமது இந்தியாவில் அவதரித்து இந்தியாவுக்குப் பெருமை தேடித்தந்திருக்கின்றனர். ஒருவன் அசோகன்; மற்றொருவன் காந்திமா முனிவன். முன்னவன், அதிகார சக்தியின் பிரதிநிதியாக இருந்து அஹிம்சையைக் கையாண்டான். பின்னவன், அதிகார சக்தியை எதிர்த்து நிற்க அஹிம்சையைக் கையாண்டான். இருவரும், தங்கள் ஆயுட்காலத்தில் வெற்றியே கண்டனர். இந்த வெற்றி, இவர்களுக்குப் பிற்காலத்தில் நீடித்து நின்றதா, இதனால் விளைந்த பயன் என்ன என்பவை பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அவற்றினை இங்கு நாம் ஏன் ஆராயவேண்டும்? எப்படியும் இவர்கள், சூழ் நிலையைக் கடந்து நின்று, மற்றவர்கள் செல்லாத புதிய பாதையில் செல்லத் துணிந்தார்கள்; அதுவே ஒரு பெரிய காரியம். அதுவே இவர்களுக்குப் பெரிய வெற்றி. அஹிம்சையை கர்ம க்ஷேத்திரத்தில் கொண்டுவந்து நிறுத்தினான் அசோகன். அதனை எல்லோரும் கண்டுகளிக்கும்படி செய்தான், இரண்டாயிரத்திருநூறு ஆண்டு களுக்குப் பிறகு காந்தி மகான். முந்தியவன், அரசரிலே மனிதனாக விளங்கினான். பிந்தியவன் மனிதரிலே அரசனாக வாழ்ந்தான். இருவரும் மகாத்மாக்கள். மகாத்மாக்களைப் பெற்றுக் கொடுக்கும் பேறு படைத்தது நமது தாய்நாடு. இதற்காக, இந்தப் பேறு படைத் திருப்பதற்காக, தாய் நாடே! உனக்கு வணக்கம். இப்பொழுதைய பீஹார் ராஜ்யத்தின் ஒரு பகுதி முந்தி மகத ராஜ்யமாயிருந்தது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரம். இதுவே இப்பொழுது பாட்னா என்று அழைக்கப்படுகிறது. கி. மு. நான்காவது நூற்றாண்டின் கடைசி பகுதியில் இந்த மகத ராஜ்யம், ஓர் ஏகாதிபத்தியமாக விரிந்து, வடக்கே ஆப்கனிதானத்திலிருந்து தெற்கே மைசூர் வரையில் தன்னகத்தே கொண்டிருந்தது. இங்ஙனம் ஒரு சிறிய ராஜ்யத்தைப் பெரிய ஏகாதிபத்தியமாக வளர்த்தவன் சந்திரகுப்தன், இவன், இந்தியாவை ஆக்கிரமிக்க வந்த கிரேக்கர் களை வெற்றி கொண்டவன். சிறந்த அரச தந்திரியான சாணக்கியன் என்பவனுடைய துணைகொண்டு, தான் கண்ட ஏகாதிபத்தியத்தைச் சுமார் இருபத்தைந்து வருஷ காலம் திறம்பட ஆண்டான். இவ னுடைய மகன் பிந்துசாரன். பிந்துசாரனுடைய மகன்தான் அசோகன். அசோகனுடைய தாயார் பெயர் சுபத்ராங்கி. அசோகன், கி.மு. 304ஆம் வருஷம் பிறந்தானென்பர். பதினெட்டாவது வயதில் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்ட ஒரு பகுதிக்கு அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டான். அங்குச் சென்று சில வருஷ காலம் இருந்து நிருவாக அனுபவம் பெற்றான். பின்னர் தட்சசீலத்தைத் தலைநகராகக் கொண்ட பகுதியில் ஒரு கலகம் தோன்றியது. அதை அடக்க அனுப்பப்பட்டான். சென்று கலகத்தை அடக்கி அரசாங்கத்தின் கௌரவத்தைக் காப்பாற்றி னான். முப்பதாவது வயதில் ஏறக்குறைய - கி. மு. 273ஆம் வருஷம்-பட்டமேற்றான். ஆனால் அப்பொழுதே மகுடாபிஷேகம் செய்து கொள்ளவில்லை. நான்கு வருஷங்கழித்துத்தான் - முப்பத்து நான்கா வது வயதில் - செய்து கொண்டான். இந்த வருஷத்திலிருந்தே, அதாவது கி.மு. 269ஆம் வருஷத்திலிருந்தே இவனது நிஜமான ஆட்சி தொடங்குகிறதென்று சொல்லவேண்டும். இந்தக் கணக்கில் தான் தன்னுடைய சாஸனங்களில் இவன் கூறிக்கொள்கிறான். கி.மு. 262ஆம் வருஷம், அதாவது இவனது ஆட்சியின் எட்டாவது வருஷத்தில், கலிங்க ராஜ்யத்தின் மீது போர் தொடுக்க வேண்டிய அவசியம் இவனுக்கு ஏற்பட்டது. போர் தொடுத்தான்; வெற்றியும் அடைந்தான். ஆனால் இந்தப் போரில் ஏற்பட்ட சேதம் இவன் மனத்தைப் பெரிதும் அசைத்துக் கொடுத்துவிட்டது. நூற்றைம்பதினாயிரம் பேர் சிறைப்பட்டனர்; நூறாயிரம் பேர் கொலை செய்யப்பட்டனர்; இதைவிடப் பலமடங்கு பேர் இறந்து போயினர்........... ஏற்கனவே வெற்றி கொள்ளப்படாத ஒரு நாட்டை வெற்றி கொள்வதனால், கொலை, மரணம், சிறைப்படுத்தல் முதலியன நேரிடுகின்றன. இது, தேவப்பிரியனுக்கு (அசோகனுக்கு) அதிக வருத்தத்தையும் மனக்கிலேசத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது என்று ஒரு சாஸனத்தின் மூலம் தன் மனப்புண்ணைத் திறந்துகாட்டு கிறான். போரில் வெற்றி கண்டுவிட்டோமென்று மகிழ்கின்றனர் அநேகர் இந்தக் காலத்தில். இந்த மகிழ்ச்சி, எத்தனை பேருடைய துக்கத்தின்மீது உண்டாகிறதென்பதை இவர்கள் சிறிது யோசித்துப் பார்ப்பார்களானால், அபாய அறிவிப்புச் சங்கின் சப்தத்தைக் கேட்க வேண்டிய அவசியமே நமக்கு ஏற்படாது. ஆனால், உலகம், சிந்தித்துத் தான் பார்ப்பதில்லை; பழமையினின்று பாடங்கற்றுக்கொள்ளவும் மறுக்கிறது. இருபதாவது நூற்றாண்டு யுத்தப்பிரியர்களே! இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னே கூறிப்போந்த தேவப் பிரியனுடைய வாசகத்திற்குச் சிறிது செவி கொடுங்கள்! கலிங்கத்துப் போருக்குப் பிறகு, அசோகன், புதிய மனிதனா னான்; இவனது சொந்த வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும் அடியோடு மாறிவிட்டன. கலிங்கர்களை வெற்றிகொண்ட க்ஷணத்திலேயே, தேவப் பிரியனுக்கு, தர்மத்தைத் தீவிரமாக அனுஷ் டிக்கவேண்டுமென்ற எண்ணம், அதன்மீது பக்தி, அதனை எல்லோருக்கும் உபதேசிக்க வேண்டு மென்ற நோக்கம் எல்லாம் உண்டாயின. வெற்றிகளிலே சிறந்தது தர்ம வெற்றிதான் என்று உறுதிகொண்டான். சுருக்கமாக, அஹிம்சையே, இவனது வாழ்க்கை யின் பிரதான கொள்கையாக, முக்கிய நடை முறையாக அமைந்து விட்டது. கலிங்கத்தில் வெற்றி கண்ட இரண்டாவது வருஷத்திலிருந்து, ஆயுளோடு ஆட்சி முடிகிறவரை சரியாக இருபத்தெட்டு வருஷ காலம், தர்மப் பிரசாரத்தையே தனது முக்கியமான ஆளுங்கடமையாகக் கொண்டான் அசோகன். அவ்வப்பொழுது தல யாத்திரைகள் செய்து வந்தான். தர்மம் இன்னது, அதன் பல கூறுகள் யாவை, அவற்றை இன்னபடி அனுஷ்டிக்கவேண்டும் என்பவைகளை விவரித்து ஆங்காங்குக் கற்பாறைகளிலும் கற்றூண்களிலும் தவசிகள் வசிக்கும் சில குகைகளிலும் சாஸனங்கள் எழுதுவித்தான். இந்தச் சாஸனங்களுக்கு தர்ம லிபிகள் என்று பெயர். தர்மம் எப்படி அழி யாததோ அதைப்போல் இந்தத் தர்ம லிபிகளும் அழியாமலிருக்க வேண்டுமென்பதற்காகவே, அழிவுக்கு இரையாகாத கற்களில் பொறித்துவைத்தான் போலும்! பாறை களில் செதுக்கப்பட்ட சாஸனங்கள் பாறைச் சாஸனங்களென்றும், கற்றூண்களில் எழுது விக்கப்பெற்ற சாஸனங்கள் தம்ப சாஸனங் களென்றும் அழைக்கப் படுகின்றன. ஜனங்களுடைய பார்வைக்கு அடிக்கடி பட்டுக்கொண் டிருக்கிற மாதிரியான இடங்களிலேயே இந்தச் சாஸனங்கள் எழுது விக்கப்பெற்றன. இவை அகப்பட்டிருக்கும் இடங்களைக்கொண்டு, அசோகனுடைய ராஜ்யத்தின் விதீரணத்தை ஒருவாறு நிர்ணயிக்க முடிகிறது. வடக்கே ஆப்கனிதானத்திலிருந்து தெற்கே மைசூர் வரை அசோகனுடைய ராஜ்யாதிகாரம் செலாவணியில் இருந்து வந்த தென்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறோமல்லவா? அசோக னுடைய சாஸனங்களில் சில, ராஜ்யத்தின் எல்லைப்புறங்களில் இடம் பெற்றிருப்பதால், அண்டை ராஜ்யங்களிலும் தர்மம் பரவ வேண்டும். அவற்றின் பிரஜைகள் தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டு மென்ற நோக்கம் அசோகனுக்கு இருந்ததென்பது நிச்சயம். அறத்தான் வருவதே இன்பமென்பதை உணர்ந்தவன் மட்டுமல்ல, எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்தவனு மாவான் அசோகன். தர்மம் இன்னது என்று பிரகடனம் செய்துவிட்டு திருப்தி யடைந்திருக்கவில்லை அசோகன்; அதனைத் தனது பிரஜைகளிடத் தில் புகுத்தவும், அதனால் பிரஜைகள் பயன் பெறவும் ஏற்பாடுகள் செய்தான். இதற்காகச் சில விசேஷ உத்தியோகதர்களை நியமித் திருந்தான். இவர்களுக்குத் தர்ம மகா மாத்திரர்கள் என்று பெயர். இந்தத் தர்ம மகா மாத்திரர்களுக்குப் பலவிதமான கடமைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஜனங்களை தர்மத்திலே பற்றுள்ளம் கொள்ளுமாறு செய்ய வேண்டும்; தர்மத்தினிடத்தில் அரை மனத் துடன் பக்தி செலுத்தி வருகிறவர்களை முழு மனத்துடன் பக்தி செலுத்துமாறு செய்யவேண்டும்; இப்படிச் செலுத்துவது அவர் களுடைய நன்மைக்காகவும் சந்தோஷத் திற்காகவுமே என்று சொல்ல வேண்டும்; தர்மத்தை அனுசரிக்கிறவர் களுக்குக் கவலையில்லாமல் செய்ய வேண்டும்; அநியாயமாகத் தண்டிக்கப்பட்டவர்களுக்கும் துன்புறுத்தப்பட்டவர்களுக்கும் பரிகாரம் கிடைக்குமாறு செய்ய வேண்டும்; மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் சிகிச்சை செய்வதற் காக ஏற்படுத்தப் பெற்ற ஆபத்திரிகளை மேற்பார்வை செய்ய வேண்டும்; அவைகளுக்கு ஒழுங்காக மருந்து மூலிகைகள் கிடைத்துக் கொண்டிருப்பதற்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும்; யாத்திரிகர் களுக்கு உபயோகமான குடிநீர் வசதிகள், சத்திரம் சாவடிகள் இவை களைப் பாதுகாக்க வேண்டும்; அரச குடும்பத்தினருடைய தான தருமங்கள் சரிவர நடைபெறுகின்றனவாவென்று கண்காணித்து வரவேண்டும். இன்னோரன்ன கடமைகளைக் கொண்ட இந்த உத்தியோக தர்கள் மூலம் தர்மத்தைப் பிரசாரம் செய்தும் அதனை அபிவிருத்தி செய்தும் வந்தான் அசோகன். தவிர, இந்த உத்தி யோகதர்கள், தர்மத்தைப் பரப்பும் பொருட்டு, வெளிநாடு களுக்கும் தூதர்களாக அனுப்பப்பட்டார்கள். வடக்கே சிரியா என்ன, கிரீ என்ன, எகிப்து என்ன, தெற்கே சேர சோழ பாண்டிய நாடுகளென்ன, இலங்கை என்ன, இப்படித் தொலைதூரங்களுக்கு அசோகனுடைய தர்ம சக்கரம் இந்தத் தூதர்கள் மூலம் உருண்டு சென்றதென்று சொன்னால் நாம் ஆச்சரியமே படவேண்டியிருக் கிறது. அசோகன், இந்த நாடுகள்மீது தனது ஆக்ஞாசக்கரத்தையே உருட்டி யிருக்கலாம்; அதற்குப் போதிய பலம் இவனிடம் இருந்தது; ஆயினும் இவன் அப்படிச் செய்யவில்லை; தர்ம சக்கரத்தை மட்டுமே உருட்டினான். இந்தியாவின் தர்மம் இதுதான்; இந்தியா வாழ்ந்து கொண்டிருப்பதன் ரகசியமும் இதுதான். சரி; அசோகனால் பிரகடனம் செய்யப்பட்ட இந்தத் தர்மம் என்பது என்ன? இதைப்பற்றிச் சிறது தெரிந்துகொள்வது அவசிய மாகும். அசோகன், தன்னைப் பொறுத்தமட்டில், புத்த மதத்தையே தழுவி நின்றான், புத்த தர்மத்தையே பின்பற்றினான் என்பது நிச்சயம். கலிங்கத்துப் போருக்குச் சுமார் இரண்டரை வருஷம் முந்தி, தான் புத்த மதத்தில் சேர்ந்ததாகவும், ஆனால் அதில் அதிக சிரத்தைக் காட்டாமல் சாதாரண ஓர் உபாசகனாக இருந்ததாகவும், மேற்படி போரினால் ஏற்பட்ட மனவேதனை காரணமாக (புத்த) தர்மத்தில் தீவிர இச்சை ஏற்பட்டு, சுமார் ஒரு வருஷத்துக்கு மேல் (புத்த) சங்கத் தில் ஈடுபட்டிருந்ததாகவும், தான் வெளியிட்ட சாஸனங்களின் மூலம் தெரிவித்துக் கொள்கிறான். மற்றும், புத்தர் பிறந்த இடம், ஞானம் பெற்ற இடம், இப்படி பௌத்தர்கள் போற்றும் புனித தலங்கள் பலவற்றிற்கும் யாத்திரை சென்றிருக்கிறான். இத்தகைய சில ஆதாரங்களைக்கொண்டு, இவன் புத்த மதத்தையே அனுஷ் டித்து வந்தானென்று உறுதியாகச் சொல்லலாம்; சிலர், இவனை ஜைன மதத்தினன் என்று கூறுவர். ஆனால் இதற்குப் போதிய ஆதார மில்லை. பொதுவாக, ஒவ்வொரு மதத்தினரும், தம் தம் மதத்தைச் சேர்ந்தவனென்று பெருமையோடு சொல்லிக்கொள்ளக்கூடிய விதமாக அசோகனுடைய மத வாழ்க்கை இருந்ததென்று சொல்ல லாம். அசோகன், தான் அனுஷ்டித்து வந்த மதத்தைத் தனது பிரஜை களும் அனுஷ்டிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கவில்லை; தனது ஆளும் அதிகாரத்தைக் கொண்டு அப்படி வற்புறுத்தவுமில்லை. அவரவரும் அவரவருக்குரிய மதத்தை அனுஷ்டித்து வரவேண்டு மென்பதே இவன் நோக்கமாயிருந்தது. எல்லா மதங்களும் இவன் ராஜ்யத்தில் இடம் பெற்றிருந்தன. எல்லா மதத்தினருக்கும் இவன் ஆதரவு அளித்து வந்தான். ஆனால் எல்லா மதங்களுக்கும் அடிப் படையாயுள்ள, எல்லா மதங்களுக்கும் பொதுவாயுள்ள சில உண்மைகள், சில நியமங்கள், சில கடமைகள் உண்டு. இவற்றின் திரட்சியே தர்மம் என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. இந்தத் தர்மத்தைத் தனது பிரஜைகள் யாவரும் அனுஷ்டிக்கவேண்டு மென்று இவன் விரும்பினான். இந்த விருப்பத்தைத் தான் வெளி யிட்ட சாஸனங்கள் மூலம் பலபடத் தெரிவித்துக் கொள்கிறான். ஆழ்ந்து பார்க்கப்போனால், தர்மம் என்பது என்ன? எல்லா ஜீவராசிகளையும் ஓர் ஒழுங்கில் இணைத்து வைத்துக்கொண் டிருப்பது எதுவோ அது தான் தர்மம். ஒரு மனிதன், தன் விஷயத்தி லாகட்டும், பிறர் விஷயத்திலாகட்டும், அப்படியே குடும்பத்திலும், சமுதாயத்திலும், அரசியலிலும் எப்படி எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதை வகுத்துக் கூறும் ஒரு திட்டமே தர்மம். அசோகன் வகுத்துக் கூறிய தர்ம திட்டம் என்ன? பாவ காரியங்களைச் செய்யாதிருத்தல், நல்ல காரியங்களைச் செய்தல், தயை, தானம், சத்தியம், சுததம், சாந்தம் இவை யாவும் சேர்ந்ததே தர்மம். இந்தத் தர்மத்தை எப்படி நடைமுறையில் கொணர்வது? பிராணி வர்க்கங்களைக் கொல்லாதிருக்க வேண்டும்; அவைகளுக்கு எவ்வித ஹிம்சையும் செய்யாதிருத்தல் வேண்டும்; மாதா பிதாக் களுக்கும் பெற்றோர்களுக்கும் சிச்ருஷை செய்யவேண்டும்; குருவி னிடத்தில் பக்தி செலுத்தவேண்டும்; மித்திரர்களிடத்திலும் உற்றார் உறவினரிடத்திலும் மரியாதையாக நடந்துகொள்ளவேண்டும்; பணியாட்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும்; திரவியத்தைத் திட்டமாகச் செலவழிக்கவேண்டும்; சிறிது சேமித்தும் வைக்க வேண்டும்; இவ்வாறு நற்காரியங்களைச் செய்து கொண்டிருத்தலே தர்மத்தை நடைமுறையில் கொணர்வதாகும். இங்கே ஒரு விஷயம் கவனிக்கவேண்டும். அசோகன், தர்மம் இன்னது என்று சொல்லிவிட்டதோடு திருப்தியடையவில்லை; அதை இன்னபடி அனுஷ்டிக்க வேண்டுமென்றும் சொல்லுகிறான். தவிர, தர்மம் என்பது அசோகனுக்கு மிகவும் பிடித்த வார்த்தை. இதனை அடிக்கடி தன் சாஸனங்களில் உபயோகிக்கிறான்; எல்லா வற்றிலும் இதைக் காண்கிறான்; எல்லாம் தர்ம மயமாக இருக்க வேண்டுமென்று விழைகிறான். தர்ம தானம், தர்ம விஜயம், தர்மச் சடங்கு இப்படித்தான் கூறிக்கொண்டு போகிறான். அசோகன் கூறிப்போந்த இந்தத் தர்மம் எந்த மதத்திற்குப் புறம்பானது? எந்த மதம் இதனை வலியுறுத்தாமலில்லை? உலகத்துச் சர்வ மதங்களுக்கும் அடிப்படையாயுள்ள இந்தத் தர்மத்தைப் பிரகடனம் செய்த அசோகனை, புத்த மதத்தை மட்டுமே உபதேசித் தான் என்று சொல்லுவது எப்படித் தருமமாகும்? அசோகன், உலகனைத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சில பொதுவான உண்மை களை உபதேசித்தான்; உலகத்திற்கு உபதேசித்தான்; உலகமுள்ளள வுக்கும் உபதேசித்தான். இந்த உலகக் கண்கொண்டுதான் அசோகனைக் காணவேண்டும். அசோகன், அரசன் என்ற முறையில், தனது பிரஜைகளின் உயிரையும் பொருளையும் காப்பாற்றிக் கொடுப்பதோடு, அவர் களைச் சந்தோஷப்படுத்தி வைத்துக்கொண்டிருப்பதோடு திருப்தி யடைய வில்லை; அவர்களை நல்வழிப்படுத்தியும் வந்தான். உலகத் திலே ஆண்ட அரசர்களெல்லாரும், தங்கள் பிரஜைகளின் புறவாழ்க் கைக்கு மட்டுந்தான் தாங்கள் பொறுப்பாளிகள் என்று கருதியே ஆண்டுவந்தார்கள். ஆனால் அசோகன், தனது பிரஜைகளைத் தனது குழந்தைகளைப்போல் கருதி அவர்களுடைய அக வாழ்க்கைக்கும் பொறுப்பேற்றுக் கொண்டான்; அந்தப் பொறுப்பை இருபத் தெட்டு வருஷ காலம் ஒழுங்காகவும், சிறிதுகூட சலிப்படையாமலும் நிறைவேற்றியும் வந்தான். இந்த அமிசத்தில் அசோகன், தனிச் சிறப்புடன் விளங்குகிறான். அசோகன், தர்மத்தை இன்னபடி அனுஷ்டிக்க வேண்டு மென்று சாஸனங்களின் மூலம் வலியுறுத்திச் சொன்னதோடு, தர்ம மார்க்கத்தில் தனது பிரஜைகள் சுலபமாகச் சொல்லவேண்டுமென் பதற்காகச் சில அனுகூலங்களையும் செய்துகொடுத்தான். அவை என்னென்ன? (1) மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் சிகிச்சை சாலைகள் ஏற்படுத்தினான். (2) பாதைகள் நெடுகிலும் சத்திரம் சாவடிகள் கட்டுவித்தான்; பிரயாணி களுக்கு நிழல் தரக்கூடிய மரங்களை நடச் செய்தான்; கிணறுகள், குளங்கள் வெட்டுவித்துக் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தான். (3) உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தர்மம் சரிவர அனுஷ்டிக்கப்படுகிறதா என்று கண்காணித்து வருவதற்காகத் தனி உத்தியோகதர்களை நியமித் தான். (4) திரீகள் ஒழுக்கங்கெடாமல் இருக்கிறார்களாவென்று கண்காணித்துவர சில உத்தியோகதர்களை நியமித்தான். (5) மத உணர்ச்சி ஏற்பட வேண்டுமென்பதற்காகத் தனிப்பட்ட விதத்தில் கூட்டங்கள் கூட்டுவித்தான்; ஊர்வலங்கள் முதலியன நடைபெறச் செய்தான். (6) பிரதி வருஷமும் மகுடாபிஷேக தினத்தன்று, சிறைச் சாலைகளிலிருந்து குற்றவாளிகளை விடுதலை செய்வித்தான்.(7) பிராணி வதை கூடாதென்று தடுத்தான். (8) வேட்டை முதலிய விளையாட்டுக்களைத் தடுத்தான். (9) யுத்தம், அந்த யுத்தத்தில் வெற்றி என்பவைகளைத் தனது அரசியல் அகராதியிலிருந்து நீக்கிவிட்டான். (10) தர்மத்தின் மூலமாகவே சர்வ தேச உறவு முறைகளையும் நிர்ணயித்துக்கொண்டான். இத்தகைய பல ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து பிரஜைகளை அறநெறியில் செல்லுமாறு செய்தான் அசோகன். அசோகன், தனது ஆளுங்கடமையை எங்ஙனம் நிறைவேற்றி வந்தான்? கூறுகிறான்ஒருசாஸனத்தில்:-..........všyh நேரங்களிலும் எல்லா இடங்களிலும், நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் சரி, திரீகளின் அந்தப்புரத்திலுருந்தாலும் சரி, பிரயாண வண்டி யிலோ, அரண்மனைத் தோட்டத்திலோ எங்கிருந்தாலும் சரி, உத்தியோக லீகிதர்கள் அங்கு வந்து, ஜனங்களுடைய காரியங் களைப்பற்றி எனக்குத் தெரிவிக்கவேண்டும். ஜனங்களுடைய காரியங்களைக் கவனிக்க நான் எல்லா இடங்களிலும் தயாரா Æருக்கிறேன்........................všyhUila நன்மைக்காகவும் நான் தொண்டு செய்யவேண்டும்.......................... பிராணி வர்க்கமனைத்திற்கும் எனது கடமையைச் செய்ய வேண்டுமென்ற லட்சியத்தையே எனது முயற்சிகளெல்லாம் கொண்டிருக்கின்றன..................... பிரதியொரு மனிதனும், தன் குற்றத்தைத் தானே கண்டு திருந்துதல் வேண்டுமென்பதைப் பின்வரும் சாஸனத்தில் விளக்கு கிறான்:- மனிதன் தான் செய்த நல்ல காரியத்தையே கவனிக்கிறான். இந்த நல்ல காரியத்தை நான் செய்தேன் என்று சொல்லிக்கொள் கிறான். ஆனால், தான் செய்த பாவத்தை அவன் கவனிப்பதில்லை. இந்தப் பாவச் செயலை நான் செய்தேன் என்று அவன் சொல்லிக் கொள்வதில்லை. தான் செய்த குற்றத்தை அவன் காண்பதில்லை. இங்ஙனம் தன் குற்றத்தைத் தானே காண்பது கடினந்தான். ஆனால் அதையே மனிதன் கவனிக்கவேண்டும். கோபம், கர்வம், பொறாமை முதலியன குற்றங்களேயாம். இவற்றிற்காக மனிதன் இரக்கப்பட வேண்டும். இங்ஙனம் தன் குற்றத்திற்குத் தானே இரங்குதல் இம்மைக்கும் மறுமைக்கும் நல்லது. அசோகன், தனது நாட்டாரென்றும் பிற நாட்டாரென்றும் வித்தியாசம் பாராட்டாமல் எல்லோரும் நன்மையடைய வேண்டு மென்பதை நோக்கமாகக் கொண்டிருந்தான். இதைப் பின்வரும் சாஸனத்தின் மூலம் தெரிவிக்கிறான்: மனித சமூகத்தின் நன்மையையும் சந்தோஷத்தையும் விருத்தி செய்ய வேண்டு மென்று........ .......v‹ கவனத்தைச் செலுத்துகிறேன்.............Mdhš அவனவன் தன் தன் மதத்தின் மீதே பற்றுள்ளங் கொண்டிருத்தல் மிகவும்முக்கிaமானது.................” இதனால் அசோகனுடைய பரந்த உள்ளம் நமக்கு ஒருவாறு புலனாகின்றது. 