ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 8  ஆய்வுக் கட்டுரைகள்  தொல்காப்பியப் பொதுப் பாயிரம் மூலமும் உரையும் ஆசிரியர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் தமிழ்மண் அறக்கட்டளை சென்னை - 17. நூற் குறிப்பு நூற்பெயர் : தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 8 ஆசிரியர் : தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எ.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 12 புள்ளி பக்கம் : 24 + 240 = 264 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 245 /- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : செல்வி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11. குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் 116 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு தோற்றம் : 15.08.1892 - மறைவு : 02.01.1960 தொன்மைச் செம்மொழித் தமிழுக்கு உலக அரங்கில் உயர்வும் பெருமையும் ஏற்படுத்தித் தந்த தமிழக முதல்வருக்கு... தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அறிவித்து உவப்பை உருவாக்கித் தந்த தமிழக முதல்வருக்கு... ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் அருந்தமிழ்ச் செல்வங்களை நாட்டுடைமையாக்கி பெருமை சேர்த்த தமிழக முதல்வருக்கு... பத்தாம் வகுப்பு வரை தாய்மொழித் தமிழைக் கட்டாயப் பாடமாக்கிய முத்தமிழறிஞர் தமிழக முதல்வருக்கு.... தலைமைச் செயலக ஆணைகள் தமிழில் மட்டுமே வரவேண்டும் என்று கட்டளையிட்ட தமிழக முதல்வருக்கு... தமிழ்மண் அறக்கட்டளை நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறது. அணிந்துரை இரா. இளங்குமரன் திருவள்ளுவர் தவச் சாலை திருவளர்குடி (அஞ்சல்) அல்லூர், திருச்சிராப்பள்ளி - 620101 தமிழக வரலாற்றொடு வாழ்பவர் வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், தொடக்க நாள்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, இந்த ஆய்வுக் கட்டுரைகள் என்னும் நூல். சோழர் குடி என்பது முதல் புறநாட்டுப் பொருள்கள் என்பது ஈறாக முப்பத்தெட்டுக் கட்டுரைகளையும், ஆத்திரையர் பேராசிரியர் அருளிய தொல்காப்பியப் பொதுப்பாயிரம் மூலமும் உரையும் என்னும் குறுஞ்சுவடியையும் கொண்டது இத்தொகை நூலாகும். இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் வெளிவந்த இதழ்கள், மலர்கள், பற்றிய இணைப்பும் உள்ளமை ஆய்வுப் பயன் செய்வதாம். பின்னாளில் ஆசிரியர் இயற்றிய சோழர் வரலாறு, பாண்டியர் வரலாறு முதலிய நூல்களுக்கு மூலமாகவும் முன்னாகவும் அமைந்த கட்டுரைகள் இவை. வரலாறு என்பது மெய்ச்சான்று கொண்டே நடையிடுவது. இட்டுக் கட்டும் வேலை வரலாற்றில் இடம் பெறின் மெய்மம் அழிந்துபோம்! வரலாற்றில் காலக்குறிப்பு என்பது தலைப்பட்டது. தொடர்ந்த ஆண்டு முறை கொள்ளாமல், அரசர் ஆட்சியாண்டு கொண்டே கணிக்க வேண்டிய இடர் உடையது. அன்றியும், ஒருவேந்தர் பெயரே, பின்வரும் பலர் பெயரா குங்கால், அவர்களுள் இவர் எத்தனாமவர் எனக் காணலில் உண்டாம் அரும்பாடு! நூல் தொகுப்பு மட்டுமே முழுதுறு ஆய்வுக்குச் சாலும் என்னும் நிலைமை இன்றிக், கோயில் கல்வெட்டு, அதன் சூழல், அகழ்வு ஆய்வு, மக்கள் வழக்கு என்பனவெல்லாம் புதைபொருள் கண்டெடுத்துக் காட்சிக்கு வைப்பது போன்று கவனமாகவும் கடமையுணர்வோடும் செய்ய வேண்டும். கவின் மிக்கதும் கடினமானதுமாம் ஆக்கப்பணியாதல்! இவற்றிலெல்லாம் ஆழங்கால் பட்டவர் ஆசிரியர் என்பதும், அவர் எவ்வாறு தம் தாழா முயற்சியாலும், தனித்திறத்தாலும் பின்னைப் பெருநூல்களின் படைப்புகளுக்குத் தம்மை ஆட்படுத்தி வளர்ந்தார் என்பதற்குச் சான்றாகி வழிகாட்டுவதுமாகிய நூல் இஃதாம். கோவந்த புத்தூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வணங்கும் பொருட்டு ஒரு சிவராத்திரியில் அவ்வூர்க்குச் சென்றிருந்தேன். அப்போது அங்குள்ள திருக்கோயில் பல கல்வெட்டுக்கள் நிறைந்த பழைமை வாய்ந்த கற்றளியாகக் காணப்பட்டது. அக்கல்வெட்டுக்களுள் இரண்டைப் படித்துப் பார்த்தபோது, அத்திருக்கோயில் விசயமங்கலம், விசயமங்கை என்ற பெயருடையதென்பது வெளியாயிற்று. எனவே கோவந்த புத்தூரிலுள்ள அத்திருக்கோயில் திருவிசயமங்கை என்னும் பெயருடைய தென்று நன்குணரப்பட்டது. பிறகு அத்தலத்திற்குரிய தேவாரப்பதி கங்களையும் பெரியபுராணத்தையும் ஆராய்ந்தபோது கல்வெட்டுக்கள் உணர்த்திய அவ்வரிய செய்தி அவற்றால் பெரிதும் உறுதி யெய்திற்று. பின்னர் இத் திருக்கோயிலிலுள்ள கல்வெட்டுக்களை எழுதி வந்து வெளியிடவேண்டும என்ற விருப்பத்துடன் காலங்கருதிக் கொண்டிருந் தேன். சென்ற கோடை விடுமுறையில் சில நண்பர்களுடன் அவ்வூர்க்குச் சென்று ஒரு நாள் முழுவதும் தங்கிச் சில கல்வெட்டுக் களை எழுதி வந்தேன். வரலாற்று ஆராய்ச்சியாளர்க்குப் பயன்படும் என்று கருதி அவற்றை இதுபோது வெளியிடலானேன் என்று தாம் வரலாற்றுத் தொகுப்பில் ஈடுபட்ட முறையை வெளியிடு கிறார். (பக்.70-71) (தமிழ்ப்பொழிலில் வந்த கட்டுரை: ஆண்டு 1931) சென்ற ஆண்டில் திருப்புறம்பியத்திலுள்ள சிவாலயத்தில் காணப்படும் கல்வெட்டுக்களுள் சிலவற்றை யான் எழுதிவந்த போது மூன்று கல்வெட்டுக்களில் விரையாக் கலி என்று குறிக்கப் பெற்றிருத்தலைக் கண்டேன்(92) என்றும், சேய்ஞலூர் மிழலை நாட்டில் உள்ளது என்பது கல்வெட்டால் புலப்படும். இதற்கு அண்மையில் இரண்டு மைலில் மிழலை என்று அழிந்த ஊர் ஒன்று உள்ளது. இஃது இப்பொழுது கும்பகோணத்தில் இருந்து நான்கு மைல் தூரத்தில் சென்னைக்குப் போகும் பெருவழியில் உள்ளது. யாம் நேரிற் சென்று அதனைப் பார்த்த போது அழிவுற்ற நிலையில்உள்ள ஒரு பழைய சிவாலயம் அங்கே காணப்பட்டது(103) என்றும், ஏர் என்னும் திருக்கோயிலுக்கு யான் சென்று பார்த்த போது அது பழமை வாய்ந்த ஒரு சிவாலயம் என்று துணிதற்குரிய தாக இருந்தது(105) என்றும், இன்னவாறு கட்டுரைகளில் குறித்துச் சொல்லுதலும், அவற்றைப் பற்றியும் அவற்றின் நிலையைப் பற்றியும் குறிப்பிடும் செய்திகளை அறியும் போதும் சதாசிவனார் எடுத்துக் கொண்ட ஆர்வ முயற்சியின் அளவு புலப்படும். ஆசிரியர் தாம் எழுதுகின்ற பெருமக்களை அயன்மைப்படுத்திக் காணாமல் அகப்படுத்திக் காண்பாராய் நம் கண்டராதித்தர், நம் கரிகாலர் என்பது, அவர் பெரு மக்களை மதிக்கும் மதிப்பீட்டு விளக்கமாகி நம் சதாசிவமாகத் திகழ்பவராகிறார். அதியர் என்னும் குடியில் வந்தவர் அதியர்; அவ்வழியினன் அதியமான். அவன் அதிகமான் எனப்பட்டது, வையை வைகை யாகியது போன்ற வழுவே. இந்நாளில் தருமபுரி என வழங்கப்படும் ஊரே, பழந்தகடூர் என்பது தெளிந்த செய்தி. அக்குடியின்பின் ஆய்வுச் செய்திகள் அறிய முடியா நிலையில் வரலாறு இடர்ப்படுதல் கண்கூடு (24,25) அக்காலத்தில் அச்சான்றுகள் கிடைத்தில என்பது புலப்படுகிறது. வரலாற்று அறிஞர் து.அ.கோபிநாதராயர், திருவிசைப்பாப் பாடியவர் இரண்டாம் கண்டராதித்தர் என்பதை மறுத்து, முதற் கண்டராதித்தரே என்பதை நிறுவுகிறார். திருவிசைப்பாவிலுள்ள இராச ராசேச்சுரப் பதிகம் கருவூர்த் தேவர் பாடியது என்றும் தெளிவிக் கிறார். (36) முதல் இராசராசன் காலத்திற்கு முன்னர்ச் சோழமண்டலம் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததேயன்றி வளநாடுகளாகப் பிரிக்கப்பட வில்லை. அவ்வாறு ஒன்பது வளநாடுகளாகப் பிரித்தவன் முதல் இராசராசனே என்கிறார் (89) விக்கிரம சோழமாராயர் அகமுடையாள் (72) தஞ்சாவூர் கிழவன் உலகளந்தான் அகமுடையாள் உய்யக்கொண்டாள் (112) என்பன ஆம்படையாள் என்பதன் மெய்வடிவம் காட்டுவன. மூடுதல் (கவசம்) என்பது மெய்காப்பு என அருமையாக ஆளப்படுகிறது (112) பழநாளில் மெய்மறை எனப்பட்டது அது. செம்பாதி என்றும் ஆட்சி உள்ளம் கவர்கிறது. அறிஞர் சதாசிவனார், பெருவழி (Road) பணிமகன் (Servant) புதுக்குப்புறம் (Cost for repairing) என்று இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ள செந்தமிழ்த் தொடர்மொழிகள் நமது உள்ளத்தைப் பிணிக்கும் தன்மையனவாயிருக்கின்றன என்று வியக்கிறார். (91). திருவெள்ளறையில் தோண்டப் பெற்ற கிணற்றின் பெயர், மாற்பிடுகு பெருங்கிணறு என்பது. இதனைக் கூறும் சிவனார், இந்நாளில் ஆற்றின் பாலங்களுக்கும், பிற கட்டடங்களுக்கும் பெயரிட்டு வழங்குவது போல அந்நாளிலும் அத்தகைய வழக்கம் இருந்தது என்கிறார் (86) அகநானூற்றுக்கு அகவலால் உரை செய்த பால்வண்ண தேவனான வில்லவதரையன் ஊர் மணக்குடி : அது, திருத் தரு பூண்டிக் கூற்றத்திலே உள்ளது எனத் தெளிவிக்கிறார். (120) இடை மருதும் இடவையும் ஓர் ஊரே என்னும் ஆய்வாளர்கள் உரையை, இரண்டும் வேறு வேறே என்பதைத் திருநாவுக்கரசர் பாடிய சேத்திரக் கோவையில் வரும், இடைமருது ஈங்கோய் இராமேச்சரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப் பேரூர். என்பது கொண்டு தெளிவிக்கிறார். ஊர்ப்பெயர் ஆய்வு நெறி இஃதெனக் கிராமம் என்னும் கட்டுரை முகப்பில் சுட்டுகிறார் அறிஞர் சதாசிவனார். தமிழ்நாட்டு ஊர்களின் பழைய பெயர்களையும், அவ்வூரின் இடைக்காலத்தில் எய்திய வேறு பெயர்களையும், அவற்றின் வரலாற்றையும் அறிந்து கொள்வதற்குத்தக்க ஆதாரங்களாக இருப்பவை, பன்னிரு திருமுறைகளும், தமிழ்வேந்தர்கள் காலத்தில் வரையப் பெற்ற கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் ஆகும். என்கிறார் (125) கிராமம் என்னும் பொதுப்பெயர் ஓரூர்க்குச் சிறப்புப் பெயராகிய வகையைக் குறிப்பிடுகிறார். ஊரின் பெயர், முடியூர் என்பது. வடமொழியில் மௌலிகிராமம் எனப்பட்டு, கிராமமாக நின்றுவிட்டது என்கிறார் (125 - 128) ஏடேறியவையும் அச்சேறியவையும் அறிவர் வாயேறியவையும் ஆகிய எல்லாமும் நம்புதற்குரியவை ஆகா; அவற்றிலும் இட்டுக் கட்டப்பட்டவையும் பொய்யாய்ப் புனைந்தவையும், நம்புதற்கு மறுதலையானவையும் உண்டு என்பதால் தான் திருவள்ளுவர். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்றார். அந்நிலையில் பேரறிஞராகிய மறைமலையடிகளும் திருவள்ளுவ மாலை சங்கச் சான்றோர் இயற்றியது என்று நம்பினார்! நம் சிவனாரும் அவ்வாறே நம்பினார்! (140). ஆனால் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் இயற்றியதே ஞானவெட்டி என்று வெறுவாயை மெல்லுவார் கருத்தை ஒப்பாது கால அடைவு, யாப்பு, பொருள் நிலை காட்டி மறுத்துரைத்து உண்மையை நிலைநாட்டுகிறார் (138-142) சாதிமை பாராச் செந்தண்மை அந்தண்மையைச் சாதிமைப் படுத்தும் செருக்கரை நிந்திப்பதை, அந்தண்மை நிந்திப்பாகக் கருதுவது ஆசிரியர் பழவடிமைச் சான்றை வெளிப்படுத்து கின்றது (140) கல்லாடம் இயற்றிய கல்லாடர், சங்கநாள் கல்லாடர் அல்லர் என்றும் கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிற்படவே வாழ்ந்தவர் என்றும் கூறுகிறார் தொல். சொல். உரையாசிரியர் கல்லாடர் என்பார் பற்றி இக்கட்டுரையில் குறிப்பு இல்லாமையால், அவர் இக்கட்டுரை எழுதும் காலத்தில் இக் கல்லாடவுரை வெளிப்பட்டதாகவில்லை என்பது விளங்கும் (143 - 150) வேம்பைக் கோன் நாராயணனைப் பற்றி எழுதவரும் சிவனார், வேம்பற்றூர்க் குமரனார், செவ்வைச் சூடுவார், ஆளவந்தான், மாதவபட்டர், வீரைக் கவிராச பண்டிதர், தத்துவராயர், சீர்பட்டர், ஈசான முனிவர் ஆயோரைப் பற்றியெல்லாம் சொல்வது நல்ல வரலாற்றுப் பதிவாகும். தேடுதல் வேட்கையராகக் கற்பார் திகழச் செய்யும் வழிகாட்டுதலுமாகும். ஏனெனின், அவ்வவ் வூரவரே அறியா நிலையில், வாழ்வறியா வாழ்வில் அல்லவோ உழல்கின்றனர். ஆசிரியர் கல்வெட்டில் சீர்களும் எழுத்துகளும் உதிர்ந்து அவ்விடங்களில் புள்ளியிட்டுப் பதிப்பித்துள்ளமையால் (தென்னிந்தியக் கல்வெட்டுப் புத்தகம் நான்காம் தொகுதி : 167) எவரேனும் அவ்வந்தாதியின் சுவடி வைத்திருப்பின் உதவுமாறு வேண்டியுள்ளார். பயன் பெற்றிரார் என எண்ண வேண்டியுள்ளது. பெற்றிருப்பின் 15 பாடல்களைப் பதிப்பித்தவர் முற்றாகப் பதித்திருப்பார் (154 - 155) ஈழம் கொண்டான், கொல்லம் கொண்டான், கங்கை கொண்டான், கடாரங் கொண்டான் என்னும் விருதுப் பெயர்களைப் பலரும் அறிவர். ஆனால், ஏழிசைச் சூழல், ஏழிசைச்சங்கம் என்பவற்றைக் கொண்டிருந்த மாமதுரை மன்னன் தன் அரியணைக்கு இசையளவு கண்டான் என்று பெயரிட்டிருந்த செய்தி தமிழிசைச் சிறப்புக்குச் சிறந்த எடுத்துக் காட்டாம் (166) இசைத் தமிழ் வல்ல குலோத்துங்க சோழன் - I மனைவி ஏழிசை வல்லபி என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்தமையும் நெஞ்சைப் பிணைக்கும் செய்தியாம் (167) ஆங்கிலம் ஒன்றையே கற்றார் - அதற்கு ஆக்கையோ டாவியும் விற்றார் தாங்களும் அந்நிய ரானார் - செல்வத் தமிழின் தொடர்பற்றுப் போனார். என்னும் நிலையில் நாடு ஆகியபோது, இளம் பிள்ளைகளுக்கு எழுத்தறிவித்துக் கல்வி கற்பித்து வந்தவர்கள் ஊர்தோறும் வாழ்ந்து கொண்டிருந்த வீரசைவப் பெருமக்களாகிய பாலாசிரியன் மாரேயாவர் என்று ஆசிரியர் கூறுவது சிறப்பு நிலை; பொதுமை நிலை அவ்வவ் வூர்களில் வாழ்ந்து தமிழுக்கெனவே தம்மை ஒப்படைத்துத் திண்ணைப் பள்ளிகள் நடத்தியும், பழஞ்சுவடிகளைப் படியெடுத்தும், பாடம் சொல்லியும், சுவடிகளைப் பாதுகாத்தும் வந்த பெருமக்கள் அனைவரையுமே சாரும் என்பது தெளிவு. இளம்பாலாசிரியர் என்பார் சங்க நாளிலேயே இருந்தமை சங்கப் புலவர் பெயர்களை அறிவார் அறிவர் (172-173). கரந்தை என்னும் பெயர் எவரும் அறிந்தது. கருந்தட்டான் குடி என்பது மக்கள் வழக்கு. ஆனால், கருந்திட்டைக்குடி என்னும் பெயரினது அது என்பதைக் கல்வெட்டால் ஆசிரியர் காட்டுகிறார். (175). பழவரலாற்றை நிறுவப் புது நிகழ்ச்சி காட்டல் இணைத்து நோக்கித் தெளிவுபெற உதவுகின்றது. (173) தமிழரல்லாத சிலர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளுக்குத் திராவிடி என்ற தாய் மொழி ஒன்று இருந்தது என்பது அறியாமையால் அன்று. வேண்டுமென்றே அவ்வாறு சொல்லிப் பரப்புவதற்குக் காரணம், தமிழ்மொழியைத் தென்னாட்டு மொழிகளுக்குத் தாய்மொழியாக ஏற்றுக் கொண்டு அதற்கு முதன்மையும் தனிச்சிறப்பும் அளித்தற்குச் சிறிதும் இடம் கொடுக்கக்கூடாது என்ற எண்ணமேயாம். என்பது சிவனார் கொண்ட உளைவின் வழி வெளிப்பட்ட மறுப்பாகும் (184 - 185) புதிய ஆண்டு தொல்காப்பியர் காலத்தில் ஆவணியில் தொடங்கி யிருத்தல் வேண்டும் என்கிறார் (186) ஆதிகாலம், கடைச்சங்க காலம், இருண்ட காலம், பல்லவ பாண்டியர் காலம், சோழர் காலம் பிற்காலப் பாண்டியர் காலம், அந்நியர் ஆட்சிக்காலம் என இலக்கிய வரலாற்றுச் சுருக்கத்தை அறியும் வகையில் எழுதுகிறார் (தமிழ் இலக்கியச் சரிதச் சுருக்கம் 184 - 194). கவிஞர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர் பிறந்த மலரி என்னும் ஊர், திருச்சிராப்பள்ளியை அடுத்துள்ள திருவரம்பூர் என வழங்கும் திருஎறும்பியூரே என்பது அங்குள்ள கோயில் கல்வெட்டால் புலப்படுகிறது என்கிறார் (195) ஒட்டக்கூத்தர்காலத்துப் புலவர்கள் நம்பிகாளியார், நெற்குன்ற வாணர், தமிழ்த் தண்டியாசிரியர், தக்கயாகப்பரணி உரையாசிரியர், தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பேராசிரியர் முதலானோர் ஆவர். கம்பர், புகழேந்தி, சேக்கிழார் ஆகியோர் இவர்காலத்தவர்அல்லர் என்கிறார். ஏனெனில் கம்பர், ஔவையார், ஒட்டக்கூத்தர் புகழேந்தியார் ஆயோரை ஒருகாலத் தவராக்கி ஒட்டிப்பாடவும், வெட்டிப் பாடவும் எதிராட்டு நிகழ்த்தவும் ஆகியவை பிற்காலப் புலவர்களின் புனைவு என அறியச் செய்கிறார் (198) பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அன்பு பற்றி இயற்றிய பாடல்கள் சனவிநோதினி இதழில் (1891) வெளிவந்ததைச்செந்தமிழ் நேயர்களும் படித்துணருமாறு ஈண்டு வெளியிடுகிறேன். என்பது, பிறர்புகழ் பரப்பு தலுடன், நற்கருத்தை நாடறியச் செய்யும் நன் முயற்சியுமாம் (201) தெலுங்கு மொழியில் முதலில் செய்யுள் இயற்றப் பெற்ற காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும் என்று கல்வெட்டுச் சான்றுவழியே உறுதி என்னும் ஆசிரியர், ஆந்திரது தாய்மொழிப்பற்று நம்மனோர் நன்குணர்ந்து பின்பற்றுதற்குரியதொன்று என்கிறார் (209) மேலும், முதலில் செய்யுள் தோன்றிய காலம் யாதென ஆராய்ந்து காண முடியாத அத்துணைத் தொன்மையும் பெருமையும் வாய்ந்த நம் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள நம்மனோர், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன்னர் இயற்றப் பெற்ற செய்யுளே இல்லாத தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள ஆந்திரர் பாற் காணப்படும் தாய்மொழிப் பற்றைப் பார்த்தாயினும் தாய்மொழித் தொண்டில் ஈடுபட்டு உண்மைத் தொண்டாற்றுவார்களாக என்கிறார் (210) இதனைத் தமிழ்ப் பொழிலில் 1931 - 1932 ஆம் ஆண்டில் எழுதியுள்ளார் என்பது எண்ணத்தக்கது. சேனாவரையர் ஊர் பாண்டி நாட்டைச் சார்ந்தது என உய்த்துணரப் படுகிறது என்கிறார். பின் ஆய்வால் மட்டுமன்றிப் பாண்டி நாட்டார்க்கு நன்கு அறிமுகமானதும் கொற்கை சார்ந்ததுமாகிய ஆற்றூரிலே சேனாவரையர் கோயிலும் சிலையும் உண்டு. (211) பழைய ஊர் ஒன்று கடல்கோளால் அழிவுற, அப்பெயரால் வேறிடத்து ஊர் அமைத்தல் வழக்கம் என்பதைக் கொல்லம் ஊர் கொண்டு நிறுவுகிறார் (214) மதிப்பு அடைச் சொல்லாகிய திருவாளர் என்பதை முதலில் எழுதத் தொடங்கி வழக்கத்திற்குக் கொண்டு வந்தவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தாரே என்கிறார் (215). இது பழ முறையே என்பதையும் கல்வெட்டுச் சான்றால் நிறுவுகிறார் (215). காயங்களால் இனிய சுவைத்தாக்கி உண்டல் (திருக். 253 பரிமே). என்பதால் இனிய சுவை கொடுப்பவை காயங்கள் என்பதை அறியலாம். இக் காயங்கள் ஐந்து என்பதை, காயம் மிளகமுது, மஞ்சளமுது, சீரகவமுது, சிறுகடுகமுது, கொத்தமலி அமுது என்றுகல்வெட்டால் தெளிவிக்கிறார் (217) இந்நாளில் காயம் என்பது பெருங்காயம், ஈரவெண்காயம், வெண்காயம் என வழக்கில் உள்ளமை அறிவோம். புறநாட்டுப் பொருள்கள் என்னும் முப்பத்தெட்டாம் கட்டுரையில், வெற்றிலை (மலேசியா), சர்க்கரை (சீனம்) மிளகாய் ( அமெரிக்கா) கத்தரிக்காய் (அமெரிக்கா), காப்பி (அரேபியா), தேயிலை (சீனம்) உருளைக் கிழங்கு (அமெரிக்கா) புகையிலை (அமெரிக்கா) என்பவற்றை விளக்கி யுரைக்கிறார். வெற்றிலை = வெறு + இலை; சமைத்தற்குப் பயன்படாத இலை என்பது இதன் பொருள் என்கிறார். காய்த்தல் இல்லாத வெறு இலை வெற்றிலை ஆகும். அதனை வெற்றி இலை என்பதோ, அவியாமல் வெறுமனேதின்பது என்பதோ பொருந்துவன வல்ல. ஒருவர்க்குரிய விருதுகளைப் பாருங்கள் (77)! ஏகாரத்தின் பின் ய் வருதலைச் சுட்டுகிறார்; ஆய்தற்குரியது என்கிறார் (84) மழவர் வரலாறு தமிழ்ப் பொழிலில் துணர்1, மலர் 1, துணர் 2, மலர் 1,2 ஆகியவற்றில் வெளிவந்துளது (1925 - 1926) கட்டுரை, தொடரும் என்றுளது. ஆயினும் தொடர்கிடைத்திலது! 1914 இல் இருந்து ஏறத்தாழ இருபது ஆண்டுகளில் வெளிவந்த கட்டுரைகள் இவை, அக்கால நிலையினும் வரலாறு பலவகையாலும் தெளிவு பெற்றுள்ளமையை அறியலாம். ஆயினும், இத்தொகுதியின் பங்களிப்பு அத்தெளிவுக்குப் பெரிதும் உதவுகின்றது. இறுதியாய் அமைந்த ஆத்திரையர் பேராசிரியர் - தொல்காப்பியப் பொதுப் பாயிர விருத்தியைப் பதிப்பித்து அதனைக் காத்துள்ளார். ஏனெனில், அவர்க்குக் கிட்டிய சுவடி ஒன்றே ஒன்று கொண்டு பதிப்பிக்கப் பட்டதாம் தமிழகவரலாற்றுலகில் தடம் பதித்த சதாசிவனார், அப்பதிவால் என்றும் வாழ்வார்! இதுகால் பெருமக்கள் அறிவாக்கம் நாட்டுடைமைப் பொருளாக்கப் படுதல் என்னும் நன்னோக்கால், பொதுமை பூத்துப் பொலியும் வளமாக வெளிப்படுகிறது. அவ்வெளிப்பாட்டைச் செய்பவர், தமிழ்மண் அறக்கட்டளை நிறுவனர் திருமலி கோ.இளவழகனார். தமிழ்மண், தமிழ்மொழி, தமிழ் இனம் என்னும் முக்காவல் கடனும் முறையாக ஆக்குவதே நோக்காகக் கொண்டவர் இப்பெருமகனார்! தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் தம் முழுதுறு படைப்புகளையும் தமிழுலகம் கூட்டுண்ண வழங்கும் இத்தோன்றல், தொண்டு வழிவழிச் சிறப்பதாக! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன் பதிப்புரை கோ. இளவழகன் நிறுவனர் தமிழ்மண் அறக்கட்டளை தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருப்புறம்பயம் எனும் சிற்றூரில் 15.8.1892ல் பிறந்தார். இவர் 68 ஆண்டுகள் வாழ்ந்து 02.01.1960ல் மறைந்தார். பண்டாரம் என்னும் சொல்லுக்குக் கருவூலம் என்பது பொருள். புலமையின் கருவூலமாகத் திகழ்ந்த இம்முதுபெரும் தமிழாசான் இலக்கியத்தையும் வரலாற்றையும் இருகண்களெனக் கொண்டும், கல்வெட்டு ஆராய்ச்சியை உயிராகக் கொண்டும், அருந்தமிழ் நூல்களைச் செந்தமிழ் உலகத்திற்கு வழங்கியவர். இவர் எழுதிய நூல்களையும், கட்டுரைகளையும் ஒருசேரத் தொகுத்து 10 தொகுதிகளாக தமிழ் கூறும் உலகிற்கு வைரமாலையாகக் கொடுக்க முன்வந்துள்ளோம். சங்கத் தமிழ் நூல்களின் எல்லைகளையும் , அதன் ஆழ அகலங் களையும் கண்ட பெருந்தமிழறிஞர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரிடம் தமிழ்ப்பாலைக் குடித்தவர்; தமிழவேள் உமாமகேசு வரனாரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்; பண்டிதமணி கதிரேசன் செட்டியார் தலைமையில் தமிழ்ப்பணி ஆற்றியவர்; நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அய்யா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர். திருப்புறம்பயம் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிற்றூர்; திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குரவர் நால்வராலும், திருத்தொண்டர் புராணம் படைத்தளித்த சேக்கிழாராலும், தேவாரப் பதிகத்தாலும் பாடப்பெற்ற பெருமை மிக்க ஊர்; கல்வி, கேள்விகளில் சிறந்த பெருமக்கள் வாழ்ந்த ஊர். நிலவளமும், நீர்வளமும் நிறைந்த வளம் மிக்க ஊர்; சோழப் பேரரசு அமைவதற்கு அடித்தளமாய் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். பண்டாரத்தாரின் ஆராய்ச்சி நூல்களான சோழப் பெருவேந்தர்கள் வரலாறு - பாண்டியப் பெருவேந்தர்கள் வரலாறு - தமிழ் இலக்கிய வரலாறு - ஆகிய நூல்கள் எழுதப்பட்ட பிறகு அந்நூல்களை அடிப்படையாகக் கொண்டுதான் வரலாற்று நாவலாசிரியர்களான கல்கி - சாண்டில்யன் - செகசிற்பியன் - விக்கிரமன் - பார்த்தசாரதி - கோவி.மணிசேகரன் ஆகியோர் வரலாற்றுப் புதினங்களை எழுதித் தமிழ் உலகில் புகழ் பெற்றனர். பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டு ஆராய்ச்சியும் , வரலாற்று அறிவும் , ஆராய்ச்சித் திறனும், மொழிப் புலமையும் குறைவறப் பெற்ற ஆராய்ச்சிப் பேரறிஞர். பிற்கால வரலாற்று அறிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர். வரலாற்று ஆசிரியர்கள் பலர் முன்னோர் எழுதிய நூல்களைக் கொண்டுதான் பெரும்பாலும் வரலாறு எழுதுவது வழக்கம். ஆனால், பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டுக்கள் உள்ள ஊர்களுக்கெல்லாம் நேரில் சென்று அவ்வூரில் உள்ள கல்வெட்டுக்களை ஆராய்ந்து முறைப்படி உண்மை வரலாறு எழுதிய வரலாற்று அறிஞர் ஆவார். புலமை நுட்பமும் ஆராய்ச்சி வல்லமையும் நிறைந்த இச் செந்தமிழ் அறிஞர் கண்டறிந்து காட்டிய கல்வெட்டுச் செய்திகளெல்லாம் புனைந்துரைகள் அல்ல. நம் முன்னோர் உண்மை வரலாறு. தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காக, பண்டாரத்தார் நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து வெளியிடுகிறோம். பல துறை நூல்களையும் பயின்ற இப்பேரறிஞர், தமிழ் இலக்கிய வரலாற்று அறிஞர்களில் மிகச் சிறப்பிடம் பெற்றவர்.இவர் எழுதிய ஊர்ப் பெயர் ஆய்வுகள் இன்றும் நிலைத்து நிற்பன. இவரது நூல்கள் வரலாற்று ஆய்வாளர் களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஊற்றுக்கண்ணாய் அமைவன. வரலாறு, கல்வெட்டு ஆகிய ஆய்வுகளில் ஆழ்ந்து ஈடுபட்டுப் பல வரலாற்று உண்மைகளைத் தெளிவு படுத்தியவர். பண்டாரத்தார் நூல்களும், கட்டுரைகளும் வட சொற்கள் கலவாமல் பெரிதும் நடைமுறைத் தமிழில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் மன்னர்கள் வரலாறு - தமிழ்ப் புலவர்கள் வரலாறு - தமிழக ஊர்ப்பெயர் வரலாறு - தமிழ் நூல்கள் உருவான கால வரலாறு ஆகிய இவருடைய ஆராய்ச்சி நூல்கள் அரிய படைப்புகளாகும். தாம் ஆராய்ந்து கண்ட செய்திகளை நடுநிலை நின்று மறுப்பிற்கும் வெறுப்பிற்கும் இடமின்றி, வளம் செறிந்த புலமைத் திறனால், தமிழுக்கும் தமிழர்க்கும் பெரும்பங்காற்றிய இவரின் பங்களிப்பு ஈடுஇணையற்றது. தென்னாட்டு வரலாறுதான் இந்திய வரலாற்றுக்கு அடிப்படை என்று முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் சதாசிவப் பண்டாரத்தார் அவர்களே. தமிழரின் மேன்மைக்கு தம் இறுதிமூச்சு அடங்கும் வரை உழைத்த தந்தை பெரியாரின் கொள்கைகளின் பால் பெரிதும் ஈடுபாடு கொண்டு உழைத்தவர் ஆராய்ச்சிப் பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் ஆவார். தமிழ் - தமிழர் மறுமலர்ச்சிக்கு உழைத்த பெருமக்கள் வரிசையில் வைத்து வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் தமிழர் தம் பெருமைக்கு அடையாளச் சின்னங்கள். நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் வெளியீட்டு விழா கடந்த 29.12.2007இல் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் - தமிழர் நலங்கருதி தொலைநோக்குப் பார்வையோடு தமிழ்மண் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தொடக்கத்தின் முதல் பணியாக தென்னக ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து முதன்முதலாக தமிழ்மண் அறக்கட்டளை வழி வெளியிடுகின்றன. இப்பேரறிஞரின் நூல்கள் தமிழ முன்னோரின் சுவடுகளை அடையாளம் காட்டுவன. அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை பொற்குவியலாக தமிழ் உலகிற்குத் தந்துள்ளோம். இவர் தம் நூல்கள் உலக அரங்கில் தமிழரின் மேன்மையை தலைநிமிரச் செய்வன. பண்பாட்டுத் தமிழர்க்கு நான் விடுக்கும் விண்ணப்பம்; சதாசிவத்துப் பண்டாரத் தார்க்கும்; ஒரு மறைமலைக்கும், மணவழகர் தமக்கும், மக்கள் கொண்டாடும் சோமசுந் தர பாரதிக்கும், நம் கொள்கை தோன்றக், கண்டார்க்க ளிக்கும் வகை உருவக்கல் நாட்டுவது கடமையாகும். எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை நெஞ்சில் நிறுத்துங்கள். இப்பேரறிஞர் எழுதிய நூல்களில் சைவசிகாமணிகள் இருவர் என்னும் நூல் மட்டும் எங்கள் கைக்கு கிடைக்கப்பெறா நூல். ஏனைய நூல்களை பொருள்வாரியாகப் பிரித்து வெளியிட்டுயுள்ளோம். தமிழர் இல்லந் தோறும் பாதுகாத்து வைக்கத்தக்கச் செந்தமிழ்ச் செல்வத்தை பிற்காலத் தலைமுறைக்கு வாங்கி வைத்து தமிழர் தடயங்களை கண்போல் காக்க முன்வருவீர். ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வு நூல்களுக்கு மதிப்புரை அளித்து மணம் கமழச் செய்த தமிழ்ச் சான்றோர்கள் பெரும்புலவர் இரா. இளங்குமரனார் கோ. விசயவேணுகோபால் பி. இராமநாதன் முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி க.குழந்தைவேலன் ஆகிய பெருமக்கள் எம் அருந்தமிழ்ப்பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து பெருமைப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு எம் நன்றி என்றும் உரியது. நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் பெரும்புலவர் இரா. இளங்குமரனார், முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு - மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர் அச்சுக்கோப்பு முனைவர் கி. செயக்குமார், ச.அனுராதா, மு.ந.இராமசுப்ரமணிய ராசா மெய்ப்பு க.குழந்தைவேலன், சுப.இராமநாதன், புலவர் மு. இராசவேலு, அரு.அபிராமி ——— உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், ரெ. விசயக்குமார், இல.தருமராசு, ——— எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . உள்ளடக்கம் ஆய்வுக் கட்டுரைகள் 1. சோழர் குடி 3 2. nrhH‹ fÇfhy‹ 55 ».ã.-95 கி.பி. 7 3. சோழன் செங்கணான் 13 4. அதிகமான் நெடுமானஞ்சி 19 5. ஓரி 26 6. இளங்கோவடிகள் குறித்துள்ள பழையசரிதங்கள் 31 7. முதற்கண்டராதித்த சோழதேவர் 35 8. மழவர் வரலாறு 39 9. சம்புவராய மன்னர் 49 10. அறந்தாங்கி அரசு 58 11. திருப்புறம்பயத்துக் கல்வெட்டுக்கள் 65 12. கோவிந்த புத்தூரிலுள்ள திருவிசயமங்கைக் கல்வெட்டுக்கள் 70 13. தொண்டைமான் சாசனம் 77 14. கரந்தைத் தமிழ்ச் சங்கச் செப்பேடுகள் 80 15. பழைய காலத்திய இருபெருங் கிணறுகள் 83 16. விரையாக்கலியும் விடேல் விடுகும் 92 18. ஏர் என்னும் வைப்புத்தலம் 105 19. செருத்துணையாரும் புகழ்த் துணையாரும் அவதரித்த திருப்பதிகள் 110 20. அகநானூற்றின் உரையாசிரியரது ஊர் 117 21. இடவையும் இடைமருதும் 121 22. கிராமம் 125 24. திருவள்ளுவரும் ஞானவெட்டியும் 138 25. கல்லாடமும் அதன் காலமும் 143 26. காளமேகப் புலவரது காலம் 151 27. வேம்பையர்கோன் நாராயணன் இயற்றிய சிராமலை அந்தாதி 154 28. சோழர்களும் தமிழ் மொழியும் 159 29. தமிழிசை வளர்ந்த வரலாறு 164 30. வீர சைவர்களின் தமிழ்த்தொண்டு 170 31. வழுக்கி வீழினும் 174 32. இரு பெரும் புலவர்கள் 179 33. தமிழ் இலக்கியச் சரிதச் சுருக்கம் 184 34. ஒட்டக்கூத்தர் (12ஆம் நூற்றாண்டு) 195 35. அன்பைப் பற்றிய பாடல்கள் 201 37. எனது ஆராய்ச்சியிற் கண்ட சில செய்திகள் 207 38. புறநாட்டுப் பொருள்கள் 220 இணைப்பு 224 தொல்காப்பியப் பொதுப் பாயிரம் மூலமும் உரையும் முகவுரை 229 தொல்காப்பியப் பொதுப் பாயிரம் மூலமும் உரையும் 233  ஆய்வுக் கட்டுரைகள்  தொல்காப்பியப் பொதுப் பாயிரம் மூலமும் உரையும் ஆய்வுக் கட்டுரைகள் 1.சோழர் குடி நமது தமிழகத்தின்கட் செங்கோலேச்சிய முடியுடைத்தமிழ் வேந்தர் மூவரில் இக்குடியினர் சோணாட்டையாளும் உரிமை பூண்டவராவர். இவர்கள் இடைக்கட்புகுந்து இந்நாட்டைத் தம்மடிப்படுத்தியாள் வரல்ல ரென்பதும், படைப்புக்காலந் தொட்டே இந்நாட்டின் அரசுரிமை பூண்டவர் களென்பதுஞ் செந்தமிழ்ப் பெரியோர் கொள்கைகளாம். இதனை வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி- பண் பிற்றலைப் பிரிதலின்று (திருக்குறள் - குடிமை 5) என்பதன்உரையில், பழங்குடி- தொன்றுதொட்டு வந்தகுடி; தொன்றுதொட்டுவருதல் சேர சோழ பாண்டியரென்றாற்போலப் படைப்புக்காலந் தொடங்கி மேம்பட்டு வருதல் என்று ஆசிரியர் பரிமேலழகர் கூறியவற்றால் நன்கறியலாம். இக்குடியினரது நாடுதான் புனனாடெனப் படுவது; இவர்கள்தான் வளவரென்று சிறப்பித்துப் போற்றப் படுவோர்; இவர்கள் நாடே சோறுடைத்து; இவர்கள்நாடுதான் எண்ணிறந்த சிவாலயங்களைத் தன்னகத்துக் கொண்டு விளங்குவது; இவர்கள் தான் சைவசமயத்தைப் போற்றிவளர்த்து வந்த உத்தமச் சைவசீலரெனப் படுவோர். வளவ னாயினு மளவறிந் தழித்துண் என்னும் முதுமொழியில் இக்குடியினரே பொருட் செல்வத்தின் மேம்பாட்டிற் கோரெல்லையாக வைத்துக் கூறப்பட்டிருத்தல் காண்க. பலசொல்லியென்? மூவேந்தருள்ளும் சோழர் தாம் உணவுப் பொருள்களுஞ் சிவாலயங்களும் மிகுந்துள்ள நீர்வளம் பொருந்திய நாடுடையார் என்று சிறப்பிக்கப்படுவாரென்க. கறவைமுறை செய்த காவலனும் புள்ளுறுபுன்கண்டீர்த்த புரவலனும் இக்குடியிற் தோன்றியோர்களேயெனின், இக்குடிக்கு, யான் வேறு ஏற்றமுங் கூறவேண்டுமோ? பாண்டியர்களைப் போன்று இவர்கள் தமிழ்ச்சங்கம் நிறுவாவிடினும் செந்தமிழ் வளர்த்த பெருமையில் அவர்கட்கு இவர்கள் சிறிதுங்குறைவு பட்டிலரென்பது பழையசங்க நூல் களையும் பிறநூல் களையும் ஆராய்வார்க்கு நன்குபுலப்படா மலிராது. என்னை? பதினாறு நூறாயிரம்பொன்னீந்து பட்டினப்பாலைகொண்டோன் கரிகால் வளவனன்றோ? பதினொரு சைவத்திரு முறைகள், திருத் தொண்டர் புராணம், கம்பனது இராமாவ தாரம், வீர சோழியம் முதலிய அருமைவாய்ந்த நூல்களெல்லாம் இவர்களது வள்ளன்மையாலும் பெருமுயற்சியாலுமன்றோ நம்மனோர் கண்டுகளிக்கும் வண்ணம் வெளிவந்துள்ளன. இவர்கள் சூரியவம்சத்தைச் சேர்ந்தவர்கள்,1 இவர்கட்குரிய போர்ப்பூவுந் தார்ப்பூவும் முறையே ஆத்தியும் முல்லையு மாம்; கொடி புலிக்கொடியாம். பண்டைக்காலத்து இவர்களது தலைமை நகரங்கள் உறையூரும் காவிரிப் பூம்பட்டினமு மாயிருந்தன; பின்னர், தஞ்சையும் கங்கைகொண்ட சோழபுரமும், காஞ்சியும் தலைமை நகரங்களாயின. இக்குடியிற்றோன்றிச் சோணாட்டையாட்சி புரிந்த மன்னர் பலராவர், இவர்களது சரிதங்கள் முழுதுந் தொடர்ச்சியாய்த் தற்காலத்து அறிந்து மகிழ்தற்கிடமில்லாமற் போயின. ஆயினும், திருவுடைய ரேயன்றித் தெள்ளியருமாய்த் தோன்றி வீரமும், புகழும் என்றும் நின்றுநிலவப் பல அரும்பெருஞ்செயல்களைச் செய்துமுடித்து இந்நிலவுலகத்தை விட்ட கன்ற பெருந்தகையாளர் பலர் சரிதங்கள், பழைய தமிழ்ப் புலவர் களியற்றியுள்ள செய்யுட்களினாலும் சிலா தாம்பிரசாசனங் களினாலும் அறியப்படுகின்றன. கடைச்சங்க காலத்திற்குப் பின்னர் விளங்கிய சோழ மன்னர்களின் சரிதங்களை, நன்காராய்ந்து, தொடர்ச்சி யாக, ஸ்ரீமான் T.A. கோபிநாதராயர் M.A. அவர்களும் ப்ரொபஸர் கிருஷ்ணஸாமி ஐயங்கார் M.A அவர்களும் முறையே தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவெளி யிட்டிருக்கிறார்கள். அரும்பெரும் முயற்சிகொண்டு சோழ சரித்திர அமுதை நம் தமிழகத்திற்கும் புறநாடுகட்கு மூட்டிக் களிப்பித்த இவ்விரு புலவர் கட்கும் நம்மவர் பெரிதும் நன்றியறிதற் கடப்பாடுடையராவர். கடைச்சங்க காலத்திற்கு முன்னர் விளங்கிய சோழமன்னர்களுள், வாயிற் கடை மணி நடுநாநடுங்க - வாவின் கடைமணியுகு நீர் நெஞ்சுசுடத் தான்றன் அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்த மனுநீதிகொண்ட சோழனும், புறவுநிறை புக்குப் பொன்னுலகமேத்தக் - குறைவிலுடம் பரிந்த கொற்றவனாஞ் சிபியும், ஓங்குயர் மலயத் தருந்தவ னுரைப்பத் - தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியனும், அமரமுனிவ னகத்தியனருளாற் - காவிரி கொணர்ந்த காந்தமன் னவனும், வாதராசனை வலிந்து பணி கொண்டோனும், தாங்கள் பாரதமுடிப்பளவுநின்று தருமன்றன் கடற் படைதனக்குதவிசெய் தோனுமாய சிலரது பெயர்கள் மாத்திரங் கேட்கப்படுகின்றன. இனி, கடைச்சங்ககாலத்தில் விளங்கிய சோழமன்னர் பலராவர். அவர் களுள், புறநானூறு முதலிய தொகை நூல்களால் அறியப்படும் சிலரை இங்குக் குறிக்கின்றேன். 1. முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி, 2.வேற்பஃறடக்கைப் பெரு விறற்கிள்ளி 3. உருவப்பஃறேரிளஞ்சேட்சென்னி. 4. கரிகாலன், 5.நலங்கிள்ளி, 6.நெடுங்கிள்ளி, 7. மாவளத்தான், 8. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், 9. குராப்பள்ளித் துஞ்சியபெருந்திருவளவன், 10. இராஜசூயம் வேட்டபெருநற் கிள்ளி, 11. கோப்பெருஞ்சோழன், 12. சோழன் செங்கணான். மேற்குறித்துள்ள அரசர்பெருந்தகைகளுள் உருவப்பஃறேர் இளஞ் சேட்சென்னி. கரிகாலனதுதந்தையாவன்; கரிகாலன் 12000 சிங்களவர் களைச் சிறைபிடித்துக் கொணர்ந்து காவிரியினிரு மருங்குங்கரை யெடுப்பித்துத் தங்கள் நாட்டைப் புனனா டெனவும், தங்களை வளவ ரெனவும் யாவருஞ் சிறப்பித்தோதும் வண்ணம் சோணாட்டை வளமுறச் சீர்படுத்திய செம்பியரேறென்ப. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான் என்போர் ஒரேகாலத்துச் சோணாட்டில் விளங்கியோரென்பது இவர்கள் தாயபாகத்தின் பொருட்டு ஆமூர், உறையூர் முதலிய இடங்களில் முற்றுகையிட்டுப் போர்புரிந்த செய்தியைக் குறிக்கும் புறப்பாடல் களால் நன்குவிளங்கும். கிள்ளிவளவன் உறையூரி லிருந்து சோணாட்டை யாட்சி புரிந்தவன்; இவனுக்கு விரோதிகளாய்ச் சோழர்குடியிற் றோன்றியோ ரொன்பதின்மர் உண்ணாடுகளிற்கலகஞ் செய்துவந்தனர்; உறையூர்க்குத் தென்புறத்துள்ள நேரிவாயிலில், சேரன்செங்குட்டுவன் இவர்களைப் போரில் வென்று மைத்துனனாகிய கிள்ளிவளவனது ஆட்சியைச் சோணாட்டில் நன்கு நிலைநாட்டினா னென்பது பதிற்றுப்பத்து 5- ம்பத்தின் பதிகத்தானும் சிலப்பதிகாரத்தானும் அறியப்படுகிறது. இதனால், இக்குடியினர் பலர் இந்நாடுகளில் யாண்டும் வசித்து வந்தனரெனத் தெரிகிறது. இவர்கள் உண்ணாடுகளிலும், சோழமன்னர் களால் ஜெயிக்கப் பெற்ற புறநாடுகளிலும் சிற்றரசர்களாகவும் தண்டத் தலை வராகவும் மண்டிலமாக்களாகவும் கோட்டம், கூறு, நாடு முதலிய வற்றின் அதிகாரிகளாகவும் இருந்துவந்தனராதல் வேண்டும். கோப்பெருஞ்சோழனென்போன், தன்மேற்பகை கொண்ட தன்மக்களிரு வருடன் போர்க்கெழுந்த ஞான்று புல்லாற்றூர் எயிற்றியனா ரென்னும் புலவர்பெரு மானாற் சமாதானஞ்செய்யப்பட்டுத் தன்னர சை யவர்கட் களித்துத் தான் வடக்கிருந்து உயிர் துறந்தனனென்பது புறப்பாடல்களால் அறியப்படுகின்றது. சோழன் செங்கணான், அறுபான் மும்மை நாயன்மார்களில் ஒருவராக விளங்கிய வளவர்பெருமான்.  2. nrhH‹ fÇfhy‹ 55 ».ã.-95 கி.பி. பண்டைக்காலங்களிற் சோழநாட்டை மிக்க நீதியுடனும் சிறப்புடனும் ஆண்டுவந்த சோழ அரசர்களுட் சிலர்சரிதத்தை, யான் அறிந்தவரை நம் நாட்டார்க்குத் தெரிவிப்பது என் கடமையாதலின், ஈண்டுச் சோழன் கரிகாலன் சரிதத்தை ஒருவாறு சுருக்கி எழுதப் புகுந்தேன் இவ்வரசனை, சோழன்கரிகாலனென்றும், சோழன்கரிகால் வளவ னென்றும், சோழன்கரிகாற்பெருவளத்தானென்றும், பழைய நுல்கள் கூறுக்கின்றன. ஆயினும். சோழவம்ச பரம்பரையிற் கரிகாலன் காலத் திற்குப் பின்னர், அவன் பெயரைத்தரித்த அரசர் பலரிருந்தன ரென்று தெரியவருகிறதினால், இவனைக், கரிகாலன் முதலாலாமன் என்றே வழங்கல் சாலப்பொருந்தும். உருவப்பஃறேரிளஞ் சேட்சென்னியின் அருமைப்புத்தி ரனாகிய இம்மன்னர் பெருமான் ஆட்சிபுரிந்தகாலம் கி.பி. 55முதல் கி.பி.95 வரையிலுமென்று 1800 ஆண்டுகட்குமுந்திய தமிழர் என்னும் நூலுடையார் கூறுகின்றனர். இதனை, மற்றைய பழஞ்சரித்திர வாராய்ச்சிவல்லாரும் அங்கீகரித்திருக்கின்றனர். இவ்வரசன் சிறுவனாயிருக்கும்போது காலில் நெருப்புப் பற்றிக் கால் வெந்துபோயிற்று. இக்காரணம்பற்றியே இவன் கரிகால னென்று வழங்கப்படுகிறான் போலும். இவன்காலில் நெருப்புப்பற்றிய விஷயம், முச்சக்கரமளப்பதற்கு நீட்டியகா லிச்சக்கரமேயளந்ததாற் - செய்ச்செ யரிகான்மேற் றேன்றொடுக்கு மாய்ப்புனனீர் நாடன் கரிகாலன் கானெருப்புற்று என்ற பழைய செய்யுளால் அறியப்படுகிறது . இவன் பால்யத்திலேயே சிங்காதனம் ஏறும்படி நேர்ந்தது. இவன் பட்டத்திற்குவந்தவுடனே ஓர் ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்தது. அதாவது, தமக்குள் சண்டையிட்டுக்கொண்டு நியாய தலத்திற்குத் தீர்த்துக் கொள்ளும்பொருட்டு வந்த இரு முதியோர்கள் தாம் நெடுந்தூரத்தில் வரும்போதே நியாய சபையில் ஓர் இளைஞனிருப்பதாக அறிந்து அவ்விளைஞனால் தம் வழக்கை நியாயமாய்த் தீர்க்கமுடியாதென்று சந்தேகித்தார்கள். அவர்கள் சந்தேகித்த விஷயத்தை ஒற்றர்கள் மூலமாக அல்லது வேறு எவ்விதமாகவோ அறிந்து கொண்ட கரிகாலன் அரண்மனைக்குள் விரைந்து சென்று கிழவனைப்போல் மாறுவேடம் பூண்டு கொண்டு சிங்காதனத் தமர்ந்திருந்தனன். பின்னர், நியாசபையை நோக்கி வந்தவிருவரும் சிங்காதனத்தில் வயதுமுதிர்ந்தவரசனே இருக் கிறானென்றுணர்ந்து தங்கள் வழக்கைத் தெரிவித்துக் கொண்டார்கள். இளைஞனாயினும் கூரியபுத்தியுள்ள கரிகாலன், அன்னவர்வழக்கை நன்றாய் விசாரித்து நியாயமளித்தனன். இச்செய்கை, இம்மன்னனது நுண்ணறிவையும், நீதிபரிபாலன மாண்பையும் நன்கு விளக்கு வதோடு, குடிகள்மனம் எவ்வாறோ அவ்வாறே தான் நடந்து கொள்ளவேண்டு மென்ற எண்ணமும் அவனிடத்திருந்த தென்பதையும் புலப்படுத்துகிறது. இவ்வாச்சரியமான விஷயத்தை, இளமைநாணிமுதுமையெய்தி யுரைமுடிவுகாட்டியவுரவோன் என்ற மணிமேகலையானும், உரைமுடிவுகாணா விளமையோ னென்ற நரைமுதுமக்களுவப்ப - நரைமுடித்துச் சொல்லான்முறை செய்தான் சோழன்குலவிச்சை கல்லாமற் பாகம் படும் என்ற பழமொழிச் செய்யுளானும் நன்குணரலாம். இவன்றன் ஆட்சிக் காலத்தில், காடுகளையழித்து நாடு உண்டுபண்ணி, பழைய ஊர்களைப் புதுப்பித்து, புதிதாக அநேகம் பட்டினங்களை தாபித்து, அநேக குளங்களும் கால்வாய்களும் வெட்டி, அதனால் ஜலாதாரம் உண்டுபண்ணி, விவசாயி களின் ஷேமத்தைப் பெருக்கி, கோயிலமைத்து, தன்னிராஜதானியைச் சுற்றி மதிலெழுப்பித் தேசத்தைச் சரியாகப் பாதுகாத்தா னென்பது, காடுகொன்றுநாடாக்கிக் குளந்தொட்டுவளம் பெருக்கிப் பிறங்குநிலை மாடத்துறந்தை போக்கிக் கோயிலொடுகுடிநிறீஇ வாயிலொடுபுழையமைத்து ஞாயிறொறும் புதைநிறீஇ என்ற பட்டினப்பாலைச் செய்யுளடிகளால் அறியப்படுகிறது. அன்றியும், முதற்கயவாகுவின் தகப்பன்காலத்தில், இவன் இலங்கையின் மீது படையெடுத்துச் சென்று, 12000 சிங்களவர் களைச் சிறைபிடித்துச் சோழதேசத்திற்குக் கொண்டுவந்து, காவிரியினிரு மருங்குங் கரையெடுப்பித்தான். இதனை தொழுது மன்னரேகரை செய் பொன்னியில் என்ற கலிங்கத்துப் பரணிச் செய்யுளாலுணர்க. இதனால், இவன் பகைவரைவெல்லு மாண்மையிற்சிறந்தவனென்பதும், ஜலாதாரம் உண்டுபண்ணி விவசாயிகளின் ஷேமத்தை விருத்தி பண்ணியவ னென்பதும் தெரியக்கிடக்கின்றன. விவாசாயிகள் சிறப்புடன் விளங்கினமையால் வியாபாரம் மிகச் செழித்தது. இம்மன்னன் இராஜதானிநகரமாக விளங்கியது பூம்புகாரெனும் காவிரிப்பூம்பட்டினமே. இஃது ஒரு சிறந்த துறைமுகப்பட்டினமாக அக்காலத்திலிருந்தது. கப்பல்கள் திசைமாறியும் நிலைமாறியுஞ் செல்லாமல் துறைமுகத்திற்கு வந்துசேரும்பொருட்டு இப்பட்டினத்தில் அநேக தீபதம்பங்கள் இருந்தனவாம். இதனை இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும் என்ற சிலப்பதிகாரத்தாலுணர்க. இத்துறைமுகத்தில், குதிரை, கற்பூரம், சந்தனம்,அகில் முதலியவை இறக்குமதி செய்யப்பெற்றன; முத்து, பவளம், மிளகு, வாசனைச்சாமான் முதலியவை ஏற்றுமதிசெய்யப்பட்டன. இவ்விதமாக வியாபாரம் நடந்தமையால் அரசனுக்கு ஏற்றுமதி இறக்குமதி மூலமாய் வரக்கூடிய இறைவரியிலிருந்து வருமானமும் அதிகரித்தது கடலோரங்களில் கட்டப்பட்டுள்ள பெரிய பண்டசாலைகளில் இரவும் பகலும் வந்திறங்கிய பண்டப் பொதியின்மீது, அரசனுடைய உத்தியோகதர்கள் சோழன் கொடியின் அடையாளமாகப் புலிப் பொறியைப் பொறித்து விடுவார்கள். அவ்வாறு பொறித்தபிறகு வரியைக் கொடுத்து ரசீதைப் பெற்றுக் கொண்டுதான் வியாபாரிகள் தமது பண்டங்களை வெளியே எடுத்துப் போவார்கள். இவற்றை, அளந்தறியாப்பலபண்டம் வரம்பறியாமைவந் தீண்டி யருங்கடிப்பெருங்காப்பின் வலியுடைவல்லணங்கினோன் புலிபொறித்துப்புறம்போக்கி என்ற செய்யுளடிகளாலறிக. வியாபாரத்திற்காக வெளியூர் களிலிருந்து வந்துள்ள வர்த்தகர்கள் உள்ளூரிலிருந்த வர்த்தகர் களோடு இனிமையாகக் கலந்து வாழ்ந்தார்கள். இவர்கள் பதிபழகிக் கலந்தினிதுறையும் வர்த்தகர்கள் என்று சிறப்பிக்கப்பட்டிருக் கிறார்கள். இம்மன்னர்பெருமான் போர் செய்யவிரும்பி வட திசைக்குச் சென்று வடபுலத்தரசர்களை வென்று, அங்கு எதிரே குறுக்கிட்ட இமய மலையைச் செண்டினால் அடித்து அதன் பிடரிடத்தே தனது புலியைப் பொறித்து வந்தானென்பது, “ இருநிலமருங்கிற் பொருநரைப்பெறா அச் செருவெங்காதற்றிருமாவளவன்” ................. .........சிமயப்பிடர்த்தலைப் “கொடுவரியேற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு” என்னும் சிலப்பதிகாரத்தினானும், “ செண்டுகொண்டு கரிகாலனொருநாளினிமயச் சிமயமால்வரை திரித் தருளிமீளவதனைப் பண்டுநின்ற படிநிற்கவிது வென்றுமுதுகிற் பாய்புலிக்குறிபொறித்தலுமறித்த பொழுதே” என்னும் கலிங்கத்துப் பரணியானும், “ கச்சிவளைக்கச்சிகாமக் கோட்டங்காவன் மெச்சியினிதிருக்குமெய்ச்சாத்தன் - கைச்செண்டு கம்பக்களிற்றுக்கரிகாற் பெருவளத்தான் செம்பொற்கிரிதிரித்த செண்டு ” என்னும் பழைய செய்யுளானும் “.. இலங்கு வேற்கரிகாற் பெருவளத்தோன் வன்றிறற்புலியிமயமால்வரை மேல் வைக்க வேகுவோன்” என்னும்பெரியபுராணத்தானும் அறியக்கிடக்கின்றது.nதசத்தில்60,000Fடிகள்ïருந்தார்களென்றும்mக்குடிகளும்bநடுநிலமுழுதாளும்fரிகாலனைKதற்குடியாகiவத்துvண்ணுதலையுடையmவ்வளவுÄக்கோங்கியbசல்வKŸளஒ¥பற்றகுoகளாயிருந்தார்களென்றும்சிyப்பதிகாரம்கூWம். இ«k‹d® பெருமானின் மீது கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் ஒரு தமிழ்ப்புலவர் பட்டினப்பாலை என்னும் பிரபந்தம்பாடி 16 லட்சம் பொன் பரிசுபெற்றவ ரென்பது, தழுவுசெந்தமிழ்ப்பரிசுவாணர் பொன் பத்தொடாறுநூ றாயிரம்பெறப் பண்டுபட்டினப்பாலை கொண்டது என்ற கலிங்கத்துப்பரணிச் செய்யுளால் அறியப்படுகிறது. மேற்கூறிய பிரபந்தமும், இவன்மீது முடத்தாமக்கண்ணியார் என்னும் தமிழ்ப்புலவர் பாடிய பொருநராற்றுப்படை என்னும் பிரபந்தமும் பத்துப்பாட்டிற் காணப்படுகின்றன. அன்றியும், சங்கத்துச் சான்றோர் இவன்மீதியற்றி யுள்ள தனிச்செய்யுட் களும் புறநானூற்றிற் காணப்படுகின்றன. இதனால், இவன், தமிழபிமானமேலிட்டு, புலவர்களை ஆதரித்து வந்தவனெனத் தெரிகிறது. இவ்வரசனின் வாழ்க்கைத்துணைவியா யமைந்தவள் நாங்கூர் வேள்குமாரத்தி; இவர்களுக்கு இரண்டு புதல்வரும் ஒரு புதல்வியுமுண்டு. துறவுபூண்டு சிலப்பதிகார மியற்றியருளிய இளங்கோ வடிகளும் இம்மன்னன் புதல்வியின் புதல்வனே. இவர்களின் பெயர் முதலியவை களைச் கீழ்க்குறித்துள்ள வம்சாவளியை நோக்கி யறிந்துகொள்க.  3. சோழன் செங்கணான் கோச்செங்கட்சோழநாயனார் என்னும் பெயருடன் அறுபத்து மூன்றுநாயன்மார்களில் ஒருவனாக விளங்குகின்ற வனும், சைவசமயா சாரியரில் ஒருவராகிய ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி சுவாமிகள். திருவாய் மலர்ந் தருளிய திருத்தொண்டத் தொகையில் தென்னவனா யுலகாண்ட செங்கணான் என்று கூறப்படு கின்றவனும் இம்மன்னனே யாவன். இவ்வரசர், பூர்வஜன்மத்தில் ஒரு சிலந்திப் பூச்சியயிருந்தன னென்றும், அப்பொழுது அப்பூச்சி திருவானைக்காவில் திருவெண்ணாவற் கீழமர்ந்திருந்து சிவபெருமான்மீது சூரிய கிரகணங்கள் படாவண்ணமும் சருகுகள் உதிராவண்ணமும் தன்வாய் நூலினாலே மேலேவலைகள் கட்டிப் பாதுகாக்குந் தொண்டு செய்து வந்த தென்றும், அதே சிவலிங்கத்தை வழி பட்டுவந்த ஒருயானை மேலே கட்டியுள்ள வலைகளை அநுசிதமென்று நாடோறும் சிதைத்தும்வர, இதனைப் பன்னாட்களாகச் சிலந்திகண்டு, பொறாது தன்பணிவிடைகளை இரக்க மின்றியழிக்கும் யானையின்மீது சினந்து, அதன் துதிக்கையுட் புகுந்து நோயுண்டாக்க, யானை அதனைப் பொறுக்கமுடியாமல் தன் துதிக்கையைக் கீழேயறைந்து தன்னையும் தன்னுட்புகுந் திருந்த சிலந்தியையும் கொன்ற தென்றும், இவ்வாறு மரணமடைந்த சிலந்தியே மறு ஜன்மத்திற் செங்கணானாகப் பிறந்ததென்றும் பெரியபுராணம் கூறும். இதனை, திருஞானசம்பந்தசுவாமிகள் - அரிசிற்கரைத்திருப் புத்தூர் 7- வது பாசுரம் சிலந்திசெங்கட்சோழனாகச் செய்தான் என்றும், திருநாவுக்கரசு சுவாமிகள்- திருக்குறுக்கை 4 சிலந்தியுமானைக்காவிற்றிருநிழற்பந்தர்செய்து உலந்தவனிறந்த போதேகோச்செங்கணானுமாகக் கலந்தநீர்க்காவிரி சூழ்சோணாட்டுச் சோழர்தங்கள் குலந்தனிற்பிறப் பித்திட்டார்குறுக்கைவீரட்டனாரே என்றும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருநின்றியூர் 1 திருவும்வண்மையுந் திண்டிறலரசுஞ் சிலந்தியார் செய்த செய்பணி கண்டு, மருவுகோச்செங்கணான்றனக் களித்த வார்த்தை கேட்டு நுன் மலரடியடைந்தேன் என்றும் நமது சமயாசாரியசுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய பாசுரங்களாலும் நன்கறியலாம். இம்மன்னன் தனது தாய்வயிற்றிலிருந்து காலந்தாழ்த்துப் பிறந்தமை யாற் சிவந்தகண்களை யுடையனாயிருந்தன்; இவனை, செங்கணானென்று யாண்டும் வழங்கல் இக்காரணம் பற்றியே யென்க. இம்மன்னனது இராஜதானிநகரமாக விளங்கியது உறையூர்; இஃது அக்காலத்திற் பேரரணுடையதோர் சிறந்தநகர மாயிருந்தது. பண்டைத் தமிழ்நூல்களிற் கோழியூர் என்று வழங்கப்படுவதும் இந்நகரமேயாம். இதன்காரணத்தை, முற்காலத்து ஒரு கோழியானது யானையைப் போர் தொலைத்தலான் அந்நிலத்திற் செய்த நகர்க்குச் கோழியென்பது பெயரா யிற்று1 என்னும் அடியார்க்குநல்லார்கட்டுரையானு முணர்க. இம்மன்னர்பெருமான் புறநாட்டரசர்களைவென்று தன்னி ராஜ்யத்தை விதாரனப்படுத்தவிரும்பி, வஞ்சிசூடி, சேரநாட்டின் அரசனாகிய சேரன்கணைக்காவிரும்பொறைமேற் சென்றனன்; இவர்கள் இருவர்க்கும் கழுமலம்2 என்னும் ஊரின்கண் ஒரு பெரும்போர் நடந்தது; அப்போரிற் சோழன்செங்கணான் வாகை மிலைந்ததுடன், சேரமானையும், அவன் இன்னுயிர்த் தோழரும் நல்லிசைப் புலவருமாகிய பொய்கை யாரையும் பிடித்துக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிட்டிருந்தான். பின்னர், ஆசிரியர் பொய்கையார் சோழன் செங்கணான் மீதுகளவழி நாற்பது1 என்னும் ஒரு செந்தமிழ் நூல்பாடிச் சேரமானைச் சிறை மீட்டனர். இதனை, களவழிக்கவிதை பொய்கையுரை செய்யவுதியன் கால்வழித்தளையை வெட்டியரசிட்டவவனும் என்னும் கலிங்கத்துப்பரணிச் செய்யுளானு முணர்க (இராஜ பாரம்பரியம் -18). இனித் தென்னவனாயுலகாண்ட செங்கணான் என்னும் திருநாவலூரர் திருவாக்கை நுணுகியாராயுமிடத்து, இவன் பாண்டி நாட்டையும் ஜெயித்துத் தன்னாட்சிக் குட்படுத்தியிருக்க வேண்டுமென்பது புலப்படுகின்றது. மேற்கூறியதையே மின்னாடு வேலேந்து விளைந்தவேளை விண்ணேறத் தனிவேலுய்த் துலக மாண்டதென்னாடன் குடகொங்கன் சோழன்2 என்னும் திருமங்கை யாழ்வார் வாக்கும் பின்னும் வலியுடைத்தாமாறு செய்தலைக் காண்க. அன்றியும், இவனை, தென்றமிழன் வடபுலக் கோன் சோழன்3 என்று திருமங்கைமன்னன் புகழ்ந்துரைத்தமையால் இவன் வடநாடுகளையும் ஜெயித்து ஆட்சிபுரிந்தவனென்பது நன்கு தெளியப் படும். இவ்வரசனைக் கழன்மன்னர்மணிமுடி மேற்காகமேறத், தெய்வவாள் வலங்கொண்டசோழன்4 என்றும், வெங்கண்மா களிறுந்தி விண்ணிலேற்ற விறன்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த - செங்கணான் கோச்சோழன்5 என்றும், பாராளவரி வரென்றழுந்தையேற்றப் படை மன்னருடல் துணியப் பரிமாவுய்த்த தேராளன்கோச்சோழன்6 என்றும் பன்முறை தம் பாசுரங்களில் திருமங்கையாழ்வார் புகழ்ந்தோதலாலும், இவ்வரசர் பெருமானது போர்வீரமும் ஆண்மையும் நன்கு விளங்கும். இவ்வரசன் சிறந்தகல்விமான்; உலகநூல் முற்றக்கற்றுப் பல துறை ப்பயிற்சியுமுடையனாயிருந்தனன். செந்தமிழ்ப் புலவர்களை மிக ஆதரித்துவந்த சோழமன்னர்களுள் இவனும் ஒருவன். இம்மன்னன் மிக்கசிவபக்தன்; இவன் அறுபான் மும்மை நாயன் மார்களில் ஒருவனென்றும், ஸ்ரீமத் - சுந்தரமூர்த்தி சுவாமிகளால், திருத் தொண்டத்தொகையில் வணக்கங்கூறப் பெற்ற வனென்றும் முன்னரே கூறியுள்ளேன். இதனால் இம்மன்னர்பெருமானது சிவபக்தியின் மாண்பு எத்தன்மைத் தென்பது நன்கறியக்கிடக்கின்றது. இவன் சைவ சமயத்தில் மிக ஈடுபட்டவனேனும் வைணவத்திலும் அபிமான முள்ளவனென்பது திருமங்கையாழ்வார் பாசுரங்களினால் அறியப் படுகிறது. சோழ நாட்டில் அநேகசிவாலயங்கள் இவனால் எடுப்பிக்கப்பட்டுள்ளன. இதனை எண்டோளீசர்க் கெழின்மாட மெழுபது செய் துலக மாண்ட, திருக்குலத்து வளச் சோழன்1 என்னும் திருமங்கை யாழ்வார் வாக்கானும், மந்திரிகடமை யேவிவள்ளல் கொடையனபாயன் முந்தைவருங்குலமுதலோனாய முதற்செங்கணான் அந்தமில்சீர்ச் சோணாட்டிலகனாடு தொறுமணியார் சந்திரசேகரன மருந்தானங்கள் பலசமைத்தான்2 என்னும் பெரியபுராணச் செய்யுளானும் அறியலாம். நன்னிலம், திருஅம்பர், தண்டலைநீணெறி, திருவானைக்கா, வைகல் முதலான தலங்களில் எடுப்பித்த சிவாலயங்கள் இவனால் எடுப்பிக்கப்பட்டனவென்று தேவாரத்தினால் தெரிகிறது. இனி, இவ்வரசனைப்பற்றிவழங்கும் ஒரு சிறுகதை வரைகின்றேன்; இவன் உறந்தையம்பதிக்கருகில் காவிரியில் நீராடுங்கால் தனதுமுத்தாரம் ஆற்றில்விழுந்து காணாமற்போக, நீரினின்று ‘அடிவணங்கி ஆனைக்கா வுடையண்ணலே! தாங்கள் என் முத்தாரத்தை ஏற்றுக்கொள் வீர்களாக என்றுவேண்ட, அம்முத்தாரமும் காவிரியினின்று கொண்டுபோகப் பட்ட திருமஞ்சனக்குடத்திலிருந்து திருவானைக் காவுடைய சிவபெருமான் மீது ஆரமாக வீழ்ந்து திகழ்ந்தது. இதனைச் செங்கணானும் ஏனையோரும் அறிந்து ஆச்சரிய முற்றனர். இவ்விஷயத்தை, தாரமாகிய பொன்னித்தண்டுறை யாடிவிழுந்து நீரினின்றடி போற்றிநின் மலர்கொள்ளெனவாங்கே யாரங்கொண்ட வெம்மானைக்காவுடை யாதியை என்னும் ஸ்ரீமத் - சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாக்கானு முணர்க. இவ்வரசனதுகாலம்;- இவனைச் சைவசமயாசாரியராகிய திருஞானசம்பந்த சுவாமிகள் தமது பாசுரங்களிற் கூறியுள்ளா ரென்பது முன்னரே தெரிவித்திருக்கிறேன். திருஞானசம்பந்த சுவாமிகள் கி.பி. 7-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் விளங்கிய வரென்று காலஞ்சென்ற திருவனந்தபுரம் ப்ரொபஸர் சுந்தரம் பிள்ளையவர்கள் நுண்ணிதின் ஆராய்ந்து வரையறுத்திருக் கின்றனர். ஆகவே சோழன் செங்கணானும் கி.பி 7-ம் நூற்றாண்டின் முன்னரேயிருந்திருக்க வேண்டும். கி.பி.4-ம் நூற்றாண்டிற்குமேல் 10-நூற்றாண்டு வரை பல்லவர்கள் என்னும் ஒருபராக்கிரமமுடைய வம்சத்தரசர்கள் சார்வபௌமச்சக்கிர வர்த்தி களாய், காஞ்சிபுரம், மாமல்லபுரம் முதலிய இடங்களை இராஜதானி நகர மாகக் கொண்டு அரசாண்டுவந்தன ரென்பதும், அக்காலங்களிற் சோழர்கள் தாழ்ந்தநிலைமையையடைந்து பல்லவர் கட்குக் கீழிருந்தார்களென்பதும் சிலாசாசனவாராய்ச்சியால் தெரிகின்றன. புறநாடுகளையும் வென்று தன்னாட்சிக் குட்படுத்திச் சிறப்புடன் அரசுவீற்றிருந்த வளவர்பெரு மானாகிய செங்கணான் தன்னிராஜ்யத்தைப் பல்லவர்கட் கிழந்து இக்காலத்துத் தாழ்ந்த நிலைமையிலிருந்தானென்று சொல்லற் கிடமில்லை யாதலால் இவன் கி.பி.4-ம் நூற்றாண்டிற்கு முன்னரேயிருந்திருக்க வேண்டும். ஆனாற் செங்கணான் கி.பி. முதற் நூற்றாண்டிலிருந்த சோழன் கரிகாலனுக்குப் பிந்தியவ னென்பது யாவருமறிந்த விஷயம். கரிகாலனுக்குப் பின்னர் நான்கு சோழமன்னர்கள் தொடர்ச்சியாய் ஆட்சி புரிந்திருக்கின்றனர். ஒவ்வொருவனும் தனித்தனி ஆட்சிபுரிந்த காலம் 25 வருஷமாக இதில்100வருஷங்கள் சென்றிருக்க வேண்டும். அதன் பிறகு சோழ மன்னர்களைப்பற்றி ஒன்றுந்தெரியவில்லை. இதில் 50 வருடங்கள் சென்றிருக்க வேண்டும். பிறகு செங்கணானிருந்த தாகத் தெரிகிறது. ஆகையாற் சோழன் செங்கணான் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவனாதல் வேண்டும். இவ்வரசன்காலத்தில் தொண்டியென்னும் நகரின்கண் சேரமான் கோக்கோதைமார்பன் என்னும் ஓரரசனிருந்ததாகப் புற நானூற்றால் தெரிகிறது.  4.அதிகமான் நெடுமானஞ்சி இவன் கடைச்சங்கநாளில் தமிழகம் புகழவிளங்கிய கடையெழு வள்ளல்களில் ஒருவனென்பது முரசுகடிப் பிகுப்பவும் என்னும் 158-ம் புறப்பாட்டாலும், சிறுபாணாற்றுப் படையில் 84முதல் 122 வரையுள்ள அடி களாலும் நன்கு விளங்கும். இவனை அதியமான் நெடுமானஞ்சியெனவும், நெடுமானஞ்சியெனவும், அஞ்சியெனவும், எழினி யெனவும் வழங்குவர். இவ்வள்ளலைப்பற்றிய சரித்திரமுழுவதும் அறியவிட மில்லையேனும் பழையநல்லிசைப்புலவர்கள் இவன் விஷயமாகப் பாடியுள்ள செய்யுட்கள் இவன்வரலாற்றைச் சிறிது அறிதற்கு உதவியா யிருத்தலோடு இவனது பெரிய கொடைச் சிறப்பையும், மிகுந்தபோர் வீரத்தையும் அரியகுணங் களையும் இக்காலத்தார்க்கு நன்குபுலப்படுத்துகின்றன. இவன்1 மழவர் என்னும் ஒருக்கூட்டத்தார்க்கு அரசனென்பது ஓங்குதிற - லொளிறிலங்கு நெடுவேன்மழவர் பெருமகன் (புறம்.88) எனவும் வழுவில்வண்கை மழவர் பெரும (புறம். 90) எனவும் புறநானூற்றில் வருதலாற்றெரியலாம். இவன் ஊர்தகடூரென்பதும். மலை குதிரைமலையென்பதும் 230, 158 - ம் புறப் பாடல்களால் முறையே அறியப்படுகின்றன. இவன் வெட்சிப் பூவையும் வேங்கைப்பூவையும் அணிவோன்; இவனுக்குரிய மாலை பனைமாலை யாகும் (புறம். 99). புறநானூற்றுரையாசிரியர், இவனுக்குப் பனந்தார் கூறியது சேரமாற்கு உறவாதலின் என்று 99- ம் புறப்பாட்டினுரையிற் குறித் திருப்பதனால் இவன் சேரர்களுக்கு உறவினனென்பது அறியக்கிடக் கின்றது. இவன் நகர் வேற்றரசரால் தாக்கமுடியாத அரண்வலியுடைய தென்றும், மலைக் கணங்கள் போன்ற மாளிகைகளையுடையதென்றும் கூறுவர், இதனை, ஆர்வலர்குறுகினல்லதுகாவலர் கனவினுங்குறுகாக்கடியுடைவியனகர் மலைக்கணத்தன்னமாடஞ்சிலம்ப என்னும் அடிகளிற்காண்க. இவனதுகொடையைச் சிறப்பிப்பதோர்விஷயம் புறநானூற்றில் காணப்படுகிறது. அஃதாவது;- இவ்வள்ளல் ஒருகாலத்து உண்டோர்க்கு நெடுங்காலம் ஜீவித்திருத்தலைச் செய்யும் அருமைபெருமை வாய்ந்த தோர் நெல்லிக்கனியைப் பெற்று, தானுண்டு நெடுநாள் உயிர்வாழ்ந் திருத்தலைக் காட்டிலும் ஔவையைப் போன்ற நல்லிசைப் புலமை மெல்லியலார் நெடுநாளிருப்பின், தமிழகத்திற்கு மிக்க நன்மையெனக் கருதி அவருக்கு அதனை அளித்தனன் என்பதாம். இதனை, .......தொன்னிலைப் பெருமலைவிடரகத்தருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனிகுறியா தாதனின்னகத்தடக்கிச் சாதனீங்கவெமக்கீந்தனையே (புறம். 91) என ஔவையாரும், ......மால்வரைக் கமழ்பூஞ்சாரற்கவினிய நெல்லி யமிழ்துவிளைதீங் கனியௌ வைக்கீந்த வுரவுச் சினங்கனலு மொளிதிகழ் நெடுவே லரவக்கடற்றானையதிகனும்(சிறுபாணாற்றுப்படை 99-103) என இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனாரும் கூறுதல் காண்க. அன்றியும், இனியவுளவாகவின்னாதகூறல்- கனியிருப்பக் காய் கவர்ந் தற்று என்னும் திருக்குறள் விசேடவுரையில், ஆசிரியர் பரிமேலழகரும் இனிய கனிகளென்றது ஔவையுண்ட நெல்லிக் கனிபோலமிழ் தாவன வற்றை என்று இச்செய்தியைக் குறித்திருக் கின்றனர். இவ்வரலாற்றால் இவனது வள்ளன்மை நன்கு புலப்படும். இவன் இரவலர்க்கினியனாய்ப் புரவலர்க்கின்னானாய் நின்ற பெருநிலையை ஔவையார் மிகவும் பாராட்டிக்கூறுவர். இதனை, ஊர்க்குறுமாக்கள் வெண்கோடுகழாஅலி னீர்த்துறை படியும் பெருங்களிறு போல வினியை பெருமவெமக் கேமற்றதன் றுன்னருங்கடாஅம்போல வின்னாய் பெருமநின் னொன்னா தோர்க்கே எனவரு மினியபாடலானறிக. இப்பெருந்தகையைப் பாடியபுலவர்பெருமக்கள், ஔவையார் பெருஞ்சித்திரனார், பொன்முடியார், பரணர் என்போர். இவர் களுள் நல்லிசைப் புலமைமெல்லியாருள் ஒருவராகிய ஔவையாரே இவ்வள்ளலது அருமைபெருமைகளை அதிகமாக வெளியிட்டவர். வேள்- பாரிக்குக் கபிலர்போலவும், வேள்-ஆய்க்கு உறையூர் ஏணிச்சேரிமுட மோசியார் போலவும், சேரமான்கணைக்காலிரும் பொறைக்குப் பொய்கையார் போலவும். கோப்பெருஞ் சோழற்குப் பிசிராந்தையார் பொத்தி யார் போலவும், அதியமான்நெடுமானஞ்சிக்கு ஔவையாரே பெரிதும் நட்புரிமைபூண்டவராவர். இவன் றன்பால் என்றைக்கும் ஒரு படியான பேரன்பே பூண்டிருந்தனனென்பதை. ஒருநாட் செல்லலமிரு நாட்செல்லலம் பலநாட் பயின்று பலரொடு செல்லினுந் தலைநாட் போன்ற விருப்பினன்மாதோ வணிபூணணிந்தயானையியறே ரதியமான் (புறம்.101) என்னும் செய்யுளடிகளில் நன்குவிளக்கி ஔவையார் பெரிதும் புகழ்ந்திருக்கின்றனர். இவ்வள்ளலது முன்னோர்களே தேவர்களைப் போற்றி வழிபட்டும் அவர்கட்கு வேள்விக் கண் ஆவுதியையருந்துவித்தும் விண்ணுலகி லிருந்து பெறற்கரிய கரும்பை இவ்வுலகிற் கொணர்ந்தனரென்பது, அமரர்ப்பேணியு மாவுதியருத்தியு மரும்பெறன் மரபிற்கரும்பிவட்டந்து நீரகவிருக்கையாழி சூட்டிய தொன்னிலை மரபினின் முன்னோர்போல என்னும் புறப்பாட்டினடிகளால் அறியப்படுகின்றது. இம்மழவர்பெருமான் யுத்தத்திற் பேர்பெற்றவீரன். இவன் பரணர்1 என்னும் நல்லிசைப் புலவர் புகழ்ந்துபாடும்படி கோவலூரை வென்றா னென்று 99- ம் புறப்பாடல் அறிவிக்கின்றது. அன்றியும், இவன்றனக்குப் பகைவர்களாய ஏழரசருடன் போர் செய்துவாகை மிலைந்தனன்2 இதனை, .....அமையாய்செருவேட் டிமிழ்குரன் முரசினெழுவ ரொடுமுரணிச் சென்ற மர்கடந்து நின்னாற்ற றோன்றிய வன்றும்பாடுநர்க்கரியை என்னும் புறப்பாட்டடிகளால் அறியலாம் . இவன், நல்லிசைப்புலவராகிய ஔவையாரை, அக்காலத்துக் கச்சியையாண்ட தொண்டைமானுழைத் தூதனுப்பியதாக 95- ம் புறப்பாட்டால் தெரிகிறது. இவன் எக்காரணம்பற்றி அங்ஙனந் தூதனுப்பினானென்று தற்காலத்து அறியக்கூடவில்லை. அத்தொண்டை மான் தன் போர்வலியின் பெருமையுணருமாறு தன்படைக் கலக் கொட்டிலைக் காட்ட ஔவையார் அவற்றைப் பார்த்து இப்படைக் கருவி களெல்லாம் போரிற்பயன் படாமை யாற் பீலியணிந்து மாலைசூட்டிக் காம்புதிருத்தி நெய்யணிந்து காவலையுடைய அரண்மனைக்கண் வீணேதங்குவன: எம்முடைய அதிகன்வேல் பகைவரைக்குத்துதலான் நுனிமுரிந்து கொல்லன் பணிக்களரியிற் சிறிய கொட்டிலிடத் துற்றன என்று அத்தொண்டைமான்வீரத்தையிகழ்ந்து தமது அதிகன்போர் வீரத்தையே மேம்படுத்துரைத்தார். தொல்காப்பியப் புறத்திணையியல் ஏழாஞ்சூத்திரத் துரையில் ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர்செல்லாது தன்மதிற்புறத்து வருந் துணையும் இருப்பின் அஃது உழிஞை யினடங்கும்: அது சேரமான் செல்வுழித் தகடூரிடை அதிக மானிருந்ததாம் என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் எழுதி யிருத்தலாற் சேரமானுக்கும் அதிகமானுக்கும் தகடூரின்கண் ஒரு பெரும்போர் நடந்திருக்க வேண்டுமென்பது அறியப் படுகிறது. இனி, ஔவையார்பாடிய கடல்கிளர்ந்தன்ன தகடூர் நாப்பண் என்னும் 295- ம் புறப்பாட்டாலும், புறத்திரட்டிலே காணப்படும் தகடூர் யாத்திரைப் பாடல்களாலும். தகடூரின்கண் ஔவையார் காலத்தில் ஒரு பெரும்போர் நடந்திருக்க வேண்டுமென்பது நன்குவிளங்குகிறது. இப்போர் மேற்கூறிய சேரமானுக்கும் அதிகமானுக்குமே நடைபெற்றதாதல் வேண்டும். இதனை நன்குவிளக்கக் கூடிய மற்றொருபிரமாணம் பதிற்றுப் பத்திற் காணப்படுகிறது. பதிற்றுப்பத்து எட்டாம்பத்தின் பதிகத்தில், இப்போர் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறைக்கும் அதிகமானுக்கும் நடந்ததென்றும். சேரமானே வாகைமிலைந்தனனென்றும் சொல்லப்பட்டிருக்கின்றன. அன்றியும், சேரமான் தகடூரின்கண் போர் செய்து அதிகமானை வென்ற விஷயம் அவன் பெயர்க்கு முன்னால் அடையாகக் கொடுக்கப்பட்டு வழங்கும் தகடூரெ றிந்த என்னும் சொற்றொடரினாலும் நன்கு விளங்கி நிற்றல் காண்க. இப்போரில் அருங்குணமும் பெருங்கொடையும் வாய்ந்த அதிகமான் உயிர்துறந்திருக்க வேண்டுமென்பது 295-ம் புறப்பட்டால் அறியப்படுகிறது. இவன் இறந்ததையறிந்த நல்லிசைப் புலவராய ஔவையார் பெரிதும் மனமிரங்கி, அவனையின்றிக் கழிகின்ற காலையும் மாலையும் இனியில்லையாகுக: யான் உயிர்வாழுநாளும் எனக்கு ஓர்பயன் படாமையின் அவையல்லவாகுக: நடப்பட்டகல்லின் கட்பீலியைச் சூட்டி நாராலரிக்கப்பட்டதேறலைச் சிறிய கலந்தானுகுப்பவும் அதனைக் கொள்வனோ? கொள்ளானோ? சிகரமோங்கிய உயர்ந்தமலை பொருந்திய நாடு முழுவதுங் கொடுப்பவும் கொள்ளாதவன் என்னுங்கருத்துப்பட இல்லாகியரோ காலைமாலை என்ற பாட்டைக்கூறி வருந்தினர்: இவர் பின்னும் தம்மாற்றாமை தோன்ற அடியில்வரும் உருக்கமான பாடலைக் கூறிப்புலம்பினர். அருஞ்சொனுண்டேர்ச்சிப் புலவர்நாவிற் சென்றுவீழ்ந்தன்ற னருநிறத்தியங்கிய வேலே யாசாகெந்தையாண்டுளன் கொல்லோ வினிப்பாடுநருமில்லைப்பாடுநர்க் கொன்றீகுநருமில்லை (புறம்.235) இதன்பொருள்:- அழகிய சொல்லையாராயும் நுண்ணிய ஆராய்ச்சியையுடைய அறிவினையுடையோர் நாவின்கண்ணே போய் வீழ்ந்தது அவனது அரியமார்பகத்தின் கண்தைத்தவேல்; எமக்குப் பற்றாகிய எம்மிறைவன் எவ்விடத்துள்ளான் கொல்லோ? இனிப்பாடுவ ருமில்லை; பாடுவார்க்கொன்றீ வாருமில்லை என்பதாம் . இவ்வதிகமானது தவமகன் ஔவையாராற்பாடப்பெற்ற பொகுட்டெழினியென்பான். இவன்றன் அரும்பெறற்றந்தை யாரைப் போன்று தானும் நல்லிசைப் புலவராகிய ஔவையார் பால் நட்புரிமை பூண்டு, அவர்க்குச் சிறப்புப்பல செய்தனன் என்பர். அதிகமான் நெடுமானஞ்சியின் வரலாறு இதற்குமேல் அறியவிட மில்லையாதலால் இனி இவனது நகரும் மலையும் யாண்டையன வென்பதையாராய்வாம். இவனது தலைமை நகராகிய தகடுர் மைசூர் இராஜ்யத்திலிருக்கிறதாகத் தெரிகிறது. சித்தூரைச்சார்ந்த போலூருக் கடுத்த திருமலையென்றும் சமணக்கிராமத்தி லுள்ள ஒரு கல்வெட்டால் அதிகமான், அதிகன் என்று கூறப்படும் கேரளதேசத்தரசனொருவன் இருந்தா னென்பதும், இவன் குமாரனாகிய விடுகாதழகிய பெருமாள்தகடா வென்று சொல்லப்பட்ட ஊரை யாண்டானென்பதும், இவன் வம்சத்தில் எழினியென்ற ஓரரசனிருந்தா னென்பதும் அறியப்படுகின்றன. வடமொழியில் தகடானென்பது தமிழில் தகடூர் என்று வழங்கி வந்தது போலும். இப்பொழுது தென்கன்னடம் ஜில்லாவிலுள்ள குதிரை மூக்கு மலையே இவனுடைய குதிரைமலையாயிருக்கலாமென்று கருத இடமுண்டு.  5. ஓரி இவன் மழவர் குடியிற் றோன்றிய பெருந்தகை என்பது வெம்போர் - மழவர் பெருமகன் மாவள் ளோரி கைவள மியைவ தாயினும் ஐதே கம்ம வியைந்துசெய் பொருளே என்ற நற்றிணைப் பாடலால் அறியப்படுகின்றது. இவனை ஆதனோரி எனவும் வல்வில்லோரி எனவும் கூறுவர். கடைச்சங்க நாளில் நிலவிய கடையெழுவள்ளல்களில் இவனும் ஒருவன் என்பது முரசுகடிப்பிகுப்பவும் என்னும் 158-ம் புறப்பாட்டானும் சிறுபாணாற்றுப்படையானும் நன்கு விளங்குகின்றது. இவன் கொல்லிமலையையும் அதனைச் சூழ்ந்த நாட்டையும் ஆண்டவன். இதனை, ஓரி-பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி (அகம்.208) எனவும் வல்வில் லோரி கொல்லிக்குடவரை (குறுந்தொகை100) எனவும். கொல்வி யாண்ட வல்வில் லோரியும் (புறம்.158) எனவும் போதரும் சங்கத்துச் சான்றோர் பாடல்களால் அறியலாம். இக்கொல்லிமலை, தேன், பழம் முதலாய உணவுப் பொருள்களும், இடையறாது நீரொழுகும் பல இனிய அருவிகளும் உடையது. கொல்லிக் கூற்றத்தில் யானைகள் மிகுந்திருந்தமையின் இவன் யானைத் தந்தங்கள் விற்று அதனாலும் பெரும்பொருள் ஈட்டி வந்தனனென்பது, கருங்கண் வேழத்துக் கோடுகொடுத் துண்ணும் வல்வி லோரிக் கொல்லிக் குடவரை என்னுங் குறுந்தொகைப்பாடலால் அறியக்கிடக்கின்றது. இத்தகைய நாட்டிற்குத் தலைவனாக விளங்கிய நமது மழவர் பெருமானும் வருவாய் மிக்குடையவனாய் இரவலர்க்கு வரையாது கொடுக்கும் வண்மையனாய் இனிதுவாழ்ந்து வந்தனன். இவனது வள்ளன்மையை, மாரி வண்மகிழ் ஓரி (நற்றிணை 265) எனவும், மாவள்ளோரி கைவள மியைவ தாயினு மைதே கம்ம (மேற்படி.52) எனவும், அந்நாளில் விளங்கிய செந்தமிழ்ப் புலவர்களாகிய கபிலரும் பரணரும் புகழ்ந்து கூறியுள்ளனர். இவ்வள்ளல் தன்பால் எய்திய புலவர் கட்கும் இரவலர்கட்கும் யானையும் பொன்னும் மணியும் மிகுதியாக அளித்துவந்தனன். இதனை, தன்மலைப் பிறந்த தாவி னன்பொன் பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்மெனச் சுரத்திடை நல்கி யோனே விடர்ச்சிமை யோங்கிருங் கொல்லிப் பொருந னோம்பா வீகை விறல்பெய் யோனே (புறம். 152) இழையணி யானை யிரப்போர்க்கீயும் சுடர்விடு பசும்பூட் சூர்ப்பமை முன்கை யடுபோ ரானா வாத னோரி (புறம். 153) என்னும் பாடல்களால் நன்குணரலாம். அன்றியும் தன் மலைப் பிறந்த தாவினன்பொன் என்பது அக்காலத்தே கொல்லி மலையிலிருந்து பொன் எடுக்கப்பெற்ற செய்தியை விளக்குதல் காண்க. இவ்வள்ளல்பாற் சென்று நீரின்கண் பூவாதமணி மிடைந்த குவளைப் பூவை வெள்ளிநாராற் றொடுக்கப்பெற்ற பொன்னரி மாலை யினையும் பிறவணிகலன்களையும் யானையணிகளுடனே பெற்றுத் திரும்பினோர், பொருள்வருவாய்க் குரியவையாய்த் தமக்கு இன்றியமையாதனவா யிருந்துள்ள தொழில்களையும் மறந்தொழிந்தனர் என்ற இவனது பெருங்கொடைத் திறத்தைப் பெரிதும் பாராட்டிக் கூறியுள்ளார் வன்பரணர் என்னும் புலவர் பெருந்தகையார். இம்மழவர் கோமான், இங்ஙனம் பல்லாற்றானும் பெருமையுற்று வாழ்ந்துவரும் நாட்களில் கொல்லிக் கூற்றத்தின் பக்கத்திலுள்ள தகடூரில் வீற்றிருந்து அதனைச் சூழ்ந்துள்ள நாட்டை ஆட்சிபுரிந்துவந்த அதிகமான் நெடுமானஞ்சி என்பான் மலையமானாட்டின்மீது படையெடுத்துச்சென்று, அதனைக் கைப்பற்றிக் கொண்டு அந்நாட்டரசனாகிய மலையமான் திருமுடிக்காரியைத் திருக்கோவலூரினின்றும் துரத்தி விட்டனன், திருமுடிக்காரியோ மூவேந்தருக்கும் படைத் துணைமை பூண்டு உற்றுழி யுதவி ஒரு காலத்தில் பெரும்புகழ் எய்தியவன். ஆதலால் மேற்கடற்கரை யோரத்துள்ள தொண்டி என்னும் பட்டினத்தி லிருந்து அரசாண்டுவந்த செல்வக் கடுங்கோவாழியாதனது புதல்வனாகிய பெருஞ்சேரலிரும் பொறையிடஞ்சென்று தனக்கு அதிகமானால் நேர்ந்த இன்னலை அறிவித்து அவற்றைப் போக்குமாறு வேண்டினன். அதனைக் கேட்ட சேர மன்னன் காரியின் நிலைமைக்குப் பெரிதும் இரக்கமுற்று அதிகமானைப் போரிற்புறங்கண்டு அவன் கவர்ந்துள்ள நாட்டைத் திரும்பப் கைப்பற்றி அதனைக் காரிக்கு அளிப்பதாக உறுதிகூறினன்; அன்றியும் அதிக மானோடு போர் தொடங்குமுன்னர் அவனது தாயத்தானாகிய ஓரியோடு பொருது அவனது கொல்லிக் கூற்றத்தைக் கைப்பற்றிக் கொள்வது இன்றியமையாததென்று அச்சேரமான் கருதினான். அதனை யறிந்த திருமுடிக்காரி சேரமானது படையுடன் வஞ்சி சூடி ஓரியினது கொல்லி மலைக்குச் சென்றனன். காரிக்கும் ஓரிக்கும் கொல்லிமலையின் பக்கலில் பெரும்போர் நடைபெற்றது. இரவலர்கட்கு இனியனாய் அன்னார் வேண்டிய வேண்டியாங்கு அளித்துவந்த பெருங் கொடைவள்ளலாகிய ஓரி, அப்போரில் இம்மண்ணுலகை நீத்து ஈவாருங் கொள்வாருமில்லாத வானுலகம் எய்தினான். இச்செய்தி, குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த காரிக் குதிரைக் காரியொடு மலைந்த ஓரிக் குதிரை யோரியும் என்ற சிறுபாணாற்றுப்படையடிகளானும், ஓரிக் கொன்ற வொருபெருந் தெருவிற் காரி புக்க நேரார் புலம்போற் கல்லென் றன்றா லூரே என்ற நற்றிணைப் பாடலானும், முள்ளூர் மன்னன் கழறொடிக் காரி செல்லா நல்லிசை நிறுத்த வல்வில் லோரிக் கொன்று சேரலற் கீத்த செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி என்ற அகப்பாட்டானும் இனிது அறியப்படுகின்றது. போரில் வாகை மிலைந்த திருமுடிக்காரி மிக்க ஆரவாரத்தோடு ஓரியினது நகரத்துட் புகுந்து அதனையும் கொல்லிக் கூற்றத்தையும் கைப்பற்றிக் கொண்டான். பின்னர், அவன், அந்நாட்டைச் சேரமானுக்கு அளித்துவிட்டமையின், அது பெருஞ்சேரலிரும் பொறைக்கு உரியதாயிற்று. செந்தமிழ்ப் புலவர்களும் கொல்லி மலையைப் பொறையன் கொல்லியென்றே வழங்குவாராயினர், இதனை, இரவலர் மெலியா தேறும் பொறையன் உரைசா லுயர்வரைக் கொல்லிக் குடவயின் (நற்றிணை185) எனவும், துன்னருந் துப்பின் வென்வேல் வானவன் இகலிருங் கானத்துக் கொல்லி போல (அகம். 338) எனவும், மறமிகு தானைப் பசும்பூட் பொறையன் கொல்லி (அகம். 303) எனவும் வெல்போர் வானவன் கொல்லிக் குடவரை (அகம்.213) எனவும் போதரும் நல்லிசைப் புலவர்களது பாடல்களால் உணர்க. இரவலர்கட்கீந்து அதனால் இசைபட வாழ்ந்த நமது வள்ளலது பெருவாழ்வும் நல்லறிஞர் பலரும் இரங்கி வருந்து மாறு இங்ஙனம் முடிவெய்தியது. ஊழின் வலியை இந்நிலவுல கத்து யாவர்தாம் கடத்தல் கூடும்? இனி, இவனது கொல்லிமலையில் அமைக்கப்பெற்றிருந்த கொல்லிப் பாவையைப்பற்றிய செய்தியையும் ஈண்டுக் குறிப்பிடுதல் பொருத்தமுடையதேயாகும். செந்தமிழ்ப் புலவர்கள் அழகிற் சிறந்த பெண்டிர்களுக்கு இப்பாவையை உவமானமாகக் கொண்டு கொல்லியம் பாவையன்னாய் என்று குறிப்பிடுதல் பெருவழக்கா வுள்ளமையின், இது பேரழகு வாய்ந்த தொரு பாவையாயிருத்தல் வேண்டும். இது கண்டார் உள்ளமும் விழியும் கவர்ந்து காமவேட்டை வருவித்து இறுதியிற் கொல்லத்தக்க தாகக் கடவுளாலேயே அமைக்கப் பெற்ற ஒரு மோகினிப்படிமம் என்று கூறுகின்றனர். இப்பாவை, கடவுளால் காக்கப் படுவ தென்பதும், காற்று, மழை, இடி முதலிய இடையூறுகளால் தன் உருக்கெடாமல் என்றும் தன் இயல்பு குன்றாதிருப்பது என்பதும், கொல்லித் தெய்வங் காக்குந் தீதுதீர் நெடுங்கோட் டவ்வெள் ளருவிக் குடவரை யகத்துக் கால்பொரு திடிப்பினுங் கதழுறை கடுகினு முருமுடன் றெறியினு மூறுபல தோன்றினும் பெருநிலங் கிளரினுந் திருநல வுருவின் மாயா வியற்கைப் பாவை ((நற்றிணை201) என்ற பாடலால் நன்கு புலப்படுகின்றன. அன்றியும். கொல்லி நிலைபெறு கடவுளாக்கிய பலர்புகழ் பாவை என்னும் அகப்பாட்டா னும்(அகம்.209) பெரும்பூட் பொறையன் பேஎ முதிர் கொல்லிக் - கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய - நல்லி யற்பாவை என்னும் குறுந்தொகைப் பாடலானும்(குறுந்.89) கொல்லிக் குடவரைப் - பூதம் புணர்ந்த புதிதியல் பாவை என்னும் நற்றிணைப் பாடலானும்(நற்.192) இப்பாவை கடவுளால் ஆக்கப்பட்டதென்பது தெளிவாம்.  6. இளங்கோவடிகள் குறித்துள்ள பழையசரிதங்கள் இளங்கோவடிகளென்பார் இன்றைக்கு 1800 ஆண்டுகட்கு முன்னர்ச் சேரநாட்டில் வஞ்சிநகரத்திலிருந்து ஆட்சிபுரிந்த சேரன்செங்குட்டுவனது தம்பியாவர். மிக்க இளம் பருவத்தி லேயே துறவுபூண்டு, அவ்வாச் சிரமத்திற் கேற்பவொழுகிவந்த இவ்வடிகள், உலகத்திற்குப் பயன்படும் வண்ணம், தாமியற்றி யருளிய சிலப்பதிகாரம் என்னும் நூலின் கண் நமது புராணேதி காசங்களிற் சொல்லப்படுவனவும் பிறவுமாய சில அருமை வாய்ந்த பழையசரித்திரங்களைச் சமயம் வாய்த்தபோதெல்லாம் ஆங்காங்குக் குறித்திருக்கின்றனர். பண்டைக் காலங்களிலியற்றப் பெற்ற ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாயதும், யாவராலும் புகழ்ந்து போற்றப் பெற்றதுமாய சிலப்பதிகாரத்திற் கூறப் படுஞ்சரித்திரங்கள் நமது புராதன சரித்திர ஆராய்ச்சியிற் புகுந்துள்ள அறிஞர்பலர்க்கும் பெரிதும் பயன்படு மென்று கருதி, அவற்றை முறையே ஈண்டுத் தொகுத்தெழுதுகின்றேன். 1. மனுநீதிகண்டசொழன், தனது அரும்பெறற் புதல்வனைத் தேர்க்காலிலிட்டது. வாயிற்கடைமணிநடுநாநடுங்க வாவின் கடைமணிபுகுநீர் நெஞ்சுசுடத்தான்ற னரும்பெறற் புதல்வனையாழியின் மடித்தோன்;- (சிலப். வழக்குரைகாதை 53-55) ..........முன்வந்த கறவைமுறை செய்தகாவலன்காணம்மானை காவலன் பூம்புகார்பாடேலோரம்மானை:- (வாழ்த்துக்காதை - அம்மானைவரி 2) 2. சிபிச்சக்கரவர்த்தி, தன்பாலடைக்கலம்புக்கதொரு புறாவின் நிமித்தம் தன்னுடம்பையரிந்து கொடுத்தது. எள்ளறு சிறப்பினிமையவர்வியப்பப் புள்ளுறு புன்கண்டீர்த்தோன்; (வழக்குரைகாதை51-52) புறவுநிலை புக்குப் பொன்னுலகமேத்தக் குறைவிலுடம்பரிந்த கொற்றவன் யாரம்மானை குறைவிலுடம்பரிந்தகொற்றவன் முன்வந்த கறவைமுறைசெய்தகாவலன்காண்:- (வாழ்த்துக்காதை - அம்மானைவரி2) குறுநடைப்புறவினெடுந்துயர்தீர வெறிதருபரிந்தினிடும்பைநீங்க வரிந்துடம்பிட்டோன றந்தரு கோலும்:- (நீர்ப்படைக்காதை 166-168) 3. உக்கிரகுமாரபாண்டியன்.தேவேந்திரன்பூட்டிய ஆரத்தைப் பூண்டது. திங்கட் செல்வன்றிருக்குலம் விளங்கச் செங்கணாயிரத்தோன்றி றல்விளங்காரம் பொங்கொளிமார்பிற்பூண்டோன்வாழி:- (நாடுகாண்காதை23-25) கோவாமலையாரங் கோத்தகடலாரந் தேவர்கோன்பூணாரந் தென்னர் கோன்மார்பினவே: (ஆய்ச்சியர்குரவை, உள்வரிவாழ்த்து1) வானவர்கோனாரம்வயங்கிய தோட்பஞ்சவன்தன் மீனக்கொடிபாடும்பாடலேபாடல்:- (வாழ்த்து- வள்ளைப்பாட்டு2) 4. உக்கிரகுமாரபாண்டியன், தன்கைவளையால் இந்திரன் முடியையுடைத்ததும், மேகத்தைச் சிறைப்படுத்தியதும். முடிவளையுடைத் தோன்முதல்வன் சென்னியென் றிடியுடைப் பெருமழையெய்தாதேகப் பிழையாவிளையுட் பெருவளஞ்சுரப்ப மழைபிணித்தாண்டமன்னவன் வாழ்கென:- காடுகாண்காதை 26.29) வச்சிரத்தடக்கையமார்கோமான் உச்சிப்பொன்முடியொளிவளையுடைத்தகை (கட்டுரைகாதை50-51) .......கொற்றத் திடிப்படைவானவன் முடித்தலையுடைத்த தொடித்தோட்டென்னவன்கடிப்பிடுமுரசே: (ஆய்ச்சியர்குரவை- படர்க்கைப்பரவல்3) 5. குலசேகரபாண்டியன், தன்கைகுறைத்தது. உதவாவாழ்க்கைக்கீரந்தைமனைவி புதவக்கதவம்புடைத்தனனோர்நா ளரசவேலியல்லதியாவதும் புரைதீர்வேலியில்லென மொழிந்து மன்றத்திருத்திச் சென்றீரவ் tழி Æ‹ற›tலிகாவாjவெனச்brவிச்சூட்டாணியிற்புiகயழல்gத்திbeஞ்சஞ்சுடுதவினஞ்சிநLக்குற்றுt¢சிரத்தடக்கையமரர்fமான்c¢சிப்பொன்முடியொளிவளையுடைத்தகைFiறத்தrங்கோற்குறையாக்கொற்றத்âiறக்குடிப்பிறந்தோர்:- கட்டுரைகாதை 42-53) 6. வானத்தின்கண்ணசைந்து கொண்டிருந்த மூன்றுமதில் களைச் சோழனொருவன் அழித்தது. .............ca®ÉR«ã‰ ,,,,,,,,,,,,,,,,உயர்விசும்பிற் றூங்கெயில்மூன்றெறிந்த சோழன்காணம்மானை சோழன்புகா®நகரம்பாடேலோரம்மானை:- (வாழ்த்துக்காj-அம்மானைவரி1) வெயில்விளங்குமணிப்பூண்விண்ணவர் வியப்ப வெயின்மூன்றெறிந்தவிகல் வேற்கொற்றமும்: (நீர்ப்படைக்காதை 164-165) 7. பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் நடந்த பெரும்போரில் இருபக்கத் தார்க்கும் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் உணவளித்தது, ஓரைவரீரைம்பதின் மருடன்றெழுந்த போரிற்பெருஞ்சோறு போற்றாதுதானளித்த சேரன்பொறையன்மலையன்றிறம்பாடிக் கார்செய்குழலாடவாடாமவூசல்:- (thœ¤J¡fhij - ஊசல்வரி2) 8. சேரனொருவன் கடற்கடம் பெறிந்தது, கடம்புமுதறடிந்தகாவலனைப்பாடிக் குடங்கை நெடுங்கண்பிறழவாடா மோவூசல் கொடுவிற் பொறிபாடியாடா மோவூசல்; (வாழ்த்துக்காதை ஊசல்வரி1) .........வான்கோட்டாற் கடந்தடுதார்ச் சேரன்கடம்பெறிந்தவார்த்தை படர்ந்தநிலம் போர்த்த பாடலேபாடல்: (வாழ்த்துக்காதை - வள்ளைப்பாட்டு2) முந்நீரினுள் புக்குமூவாக்கடம்பெறிந்தான் மன்னர்கோச் சேரன்வளவஞ்சிவாழ்வேந்தன்: (ஆய்ச்சியர்குரவை-உள்வரிவாழ்த்து3) .........ஊங்கனோர்மருங்கு கடற்கடம்பெறிந்தகாவலனாயினும் (நடுகற்காதை 134-135) மாநீர்வேலிக்கடம்பெறிந்திமயத்து வானவர்மருளமலைவிற் பூட்டிய வானவர்தோன்றல்:- (காட்சிக்காதை1-3)  7.முதற்கண்டராதித்த சோழதேவர் இவ்வரசர்பெருமான் சோணாட்டில், தஞ்சையில் வீற்றிருந்து அரசு புரிந்த சோழமன்னர்களுள் ஒருவர்: முதற்பராந்தக சோழ தேவரது இரண்டாவது புதல்வர் இவரது தமையனாராகிய இராஜாதித்தன் என்பார் தக்கோலத்தில், கி.பி.949-இல் இரட்ட அரசனாகிய கன்னா தேவனோடு புரிந்த பெரும்போரில் இறந்தமையின், பராந்தகசோழ தேவருக்குப்பின்னர் இவர் சோழமண்டலத்தின் அரசராக அரியணையேறினர். அப்போரின் பயனாக, பகைவனாகிய கன்னாதேவன் சோழ மண்டலத்தின் வடக்கிற் சில பகுதிகளைக் கவர்ந்து கொண்டமையின் எஞ்சிய வற்றையே கண்டராதித்தர் ஆண்டுவந்தார். சோழமன்னர்கள் ஒருவர்பின் ஒருவராகத் தரித்துக் கொண்டு வந்த இராஜகேசரி, பரகேசரி என்றபட்டங்களுள் இவர் இராஜகேசரியென்னும் பட்டம் புனைந்தவர். கண்டராதித்தச் சதுர்வேதிமங்கலம் என்ற ஒரு நகரத்தைக் காவிரியின் வடகரையில் இவர் தம்பெயரால் அமைத்தா ரென்று லேய்டன் நகரச் செப்பேடுகள் கூறுகின்றன. அதுவே, இப்போது திருச் சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள கண்டாரதித்தம் என்ற ஊர்போலும். இவர் தமிழ்மொழியிற் சிறந்த புலமையும் சிவபெரு மானிடத்துப் பேரன்பும் வாய்ந்தவரென்பது இவர் பாடியுள்ள திருவிசைப்பாவினால் தெரிகிறது. திருவிசைப்பாவில் இவர் பாடியபதிகங்கள் பல இருத்தல் வேண்டும். ஆனால், தற்காலத்தி லுள்ளது மின்னாருருவ மேல்விளங்க என்னும் தொடக்கத்துக் கோயிற்பதிகம் ஒன்றே. அப்பதிகத்தின் எட்டாவது பாடலில், வெங்கோல் வேந்தன்றென்னாடுமீழங் கொண்டதிறற் - செங்கோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன் என்று தம் தந்தையா ராகிய முதற்பராந்தகசோழதேவரைக் குறித்திருப்ப தோடு அவர் தில்லையம் பலத்திற்குப் பொன்வேய்ந்ததையும் கூறியுள்ளனர். அன்றியும், பத்தாம்பாடலில், காலார் சோலைக் கோழிவேந்தன்றஞ்சையர் கோன்கலந்த, - வாராவின் சொற் கண்டராதித்தன் என்று தம்மையே இவர் குறித்திருப்பது அறியத்தக்கதொன்றாகும். இஃதிங்ஙனமாக: சோழவமிசச்சரித்திரம் எழுதிய அறிஞர் து.அ.கோபிநாதராயர் அவர்கள் திருவிசைப்பாப்பாடியவர் இரண்டாங் கண்டராதித்தரென்று அந்நூலில் வரைந்துள்ளனர்: அதற்கு அவர்கூறும் காரணமாவது: கண்டராதித்தர் முதல் இராஜராஜ சோழதேவர் தஞ்சையில் எடுப்பித்த இராசராசேச் சுரத்தைத் தம் திருவிசைப்பாவில் பாடியிருக் கின்றனர்: முதல் இராஜராஜ சோழதேவர் முதற்கண்டராதித்தரது தம்பி யாகிய அரிஞ்சயன் என்பாரது பெயரர்: சுந்தரசோழரென்று அழைக்கப் பெறும் இரண்டாம்பராந்தகசோழரது புதல்வர்: ஆதலால், தஞ்சை இராச ராசேச்சுரத்தைத் திருவிசைப்பாவிற் பாடியவர் முதற்கண்ட ராதித்த ரெனக் கொள்ளின், அவர், தம் தம்பியின் பெயரரது ஆட்சிக் காலத்தும் இருந்த வராதல் வேண்டும்: ஆனால், முதற்கண்டராதித்தர் இறந்த பின்னரே அவரது தம்பியாகிய அரிஞ்சய னென்பார் செங்கோல் கைக் கொண்டன ரென்று கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன: எனவே, திரு விசைப் பாப் பாடியவர் முதற்கண்ட ராதித்தர் ஆகார் - என்பது, திருவிசைப் பாவிலுள்ள பதிகங்களுள் கண்டராதித்தர் இயற்றியது ஒன்றேயாகும். அப்பதிகமும் கோயிலெனப்படுந் திருச்சிற்றம்பலத்தைப் புகழ்வது. இராயர் அவர்கள் கூறியவாறு கண்டராதித்தர் இராசராசேச்சுரத்தைப் பாடிய பதிகம் திருவிசைப்பாவிற் காணப்படவில்லை. ஆனால், திருவிசைப் பாவிலுள்ள இராசராசேச்சுரப் பதிகம் கருவூர்த் தேவர் பாடியதாகும். கங்கை கொண்ட சோழீச் சுரத்தைப் பாடியவரும் இக்கருவூர்த் தேவரேயாவர். ஆகவே, கருவூர்த்தேவரி யற்றிய இராசராசேச்சுரப்பதிகத்தைக் கண்டராதித்தர் இயற்றினா ரெனப்பிழையாகக்கொண்டு, அதனால், திருவிசைப் பாப் பாடியவர் இரண்டாம் கண்டராதித்தர் என்று ராயர் அவர்கள் எழுதியிருப்பது தவறுடைத்தென்க. எனவே, முதற்கண்ட ராதித்தரே திருவிசைப்பாப் பாடியவரென்பது திண்ணம். இனி, கண்டராதித்தரது ஆட்சிக்காலம் மிகச்சுருங்கிய தொன்றேயாம். இவர், தம்கீழ்வாழுங்குடிகளிடத்தில் அன்பும் இரக்கமுமுடையவராய்ப் பல நற்கருமங்களைச் செய்துள்ளனர், இவர்காலத்திற் போர் முதலியன நிகழவில்லையாதலின், குடிகள் எல்லோரும் இன்புற்று வாழ்ந்துவந்தனர். ஆதலால், அன்னோர் தம் அரசர்பாற் பேரன்புடையராய், அவரைக் கடவுளின் அவதாரமென்றே கருதுவராயினர். இவருக்கு வீரநாரிணியார், செம்பியன்மாதேவியார் என்ற இருமனைவியர் இருந்துள்ளன ரென்று தெரிகிறது. அவ்விருவருள் முன்னவர் இவரது வாழ்க்கையில் முதற்பகுதியிலிருந்தவர். இவ்வரசியார் பலகோயில்கள் கட்டுவித்துப் புகழுற்றாரென்று கி.பி. 931ல் வெட்டப்பெற்ற முதற்பராந்தக சோழதேவரது கல்வெட்டுக் கூறுகின்றது. இவரது வாழ்க்கையிற் பிற்பகுதியிற், பட்டத் தரசியாக விளங்கியவர் செம்பியன்மா தேவியார் எனப்படுவர். அரசரது இரண்டாம் மனைவியாகிய அவ்வம்மையார் மழநாட்டரசரது புதல்வியென்று கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. நமது கண்டராதித்தருக்கும் செம்பியன்மா தேவியருக்கும் மதுராந்தகன் என்ற ஒரு புதல்வர் பிறந்தனர். அவரை உத்தமசோழரென்று அழைப்பது வழக்கம். புதல்வர் பிறந்தவுடன் அரசர் வானுலகஞ் சென்றாரென்று லேய்டன் செப்பேடுகள் கூறுகின்றமையின் இவர் செம்பியன்மா தேவி யாருடன் நெடுங்காலம் வாழ்ந்திருக்கவில்லையென்று தெரிகிறது. ஆனால், அவ்வரசியார் மாத்திரம் தம்நாயகர் இறந்தபின்னர், நீண்டகாலம் உயிருடனிருந்துள்ளனர். முதல் இராஜராஜ சோழ தேவர் ஆட்சியின் 16- ஆம் ஆண்டாகிய கி.பி.1001 வரை அவர் இருந்தாரென்பது. கல்வெட்டுக் களால் அறியப்படுகின்றது. எனவே, தம் நாயகர் இறந்தபின்னர் சற்றேறக் குறைய நாற்பத்தைந்து வருடங்கள் அவர் உயிருடனிருந் திருக்கின்றனர். அவர், அரசரது முதன் மனைவியாரைப்போல் தாமும் பல கோயில்கள் எடுப்பித்து அவற்றிற்கு நிலங்கள் அளித்தனரென்று பலகல்வெட்டுக்கள் புகழ்ந்துரைக்கின்றன. நம் கண்டராதித்தர் கி.பி.955-ல் இறந்தபோது இவரது புதல்வர் மதுராந்தகசோழர் என்பார் முடிசூடிக்கொண்டு அரசுபுரிதற்கு ஏற்ற பருவத் தினராயில்லை. ஆதலால் இவரது தம்பியாகிய அரிஞ்சயனென்பவர் இவருக்குப்பின்னர் ஆட்சி புரியத்தொடங்கினர். அரிஞ்சயனும் அவரது புதல்வர் சுந்தரசோழருடம் அரசாண்டபின்னர், மதுராந்தகசோழர் கி.பி.969-ல் முடிசூடிக்கொண்டு 16 வருடகாலம் ஆட்சிபுரிந்து கி.பி.985-ல் விண்ணுலகெய்தினர் என்ப. மதுராந்தகசோழர் அவரது தாய்தந்தையராகிய செம்பியன்மா தேவியார், முதற்கண்டராதித்தர் என்ற மூவரது படிமங்களும் தஞ்சை ஜில்லாவிலுள்ள கோனேரிராஜபுரம் சிவாலயத்தில் அமைக்கப் பட்டுள்ளன.  8.மழவர் வரலாறு பண்டைக்காலத்தில் நம் தமிழகத்தின் ஒரு பகுதியை மழவர் என்ற ஒரு குலத்தினர் ஆட்சிபுரிந்துள்ளனரென்பதும், இன்னோர் பெருவீரர்களா யிருந்தமையின் அந்நாளில் தமிழகத்தில் ஆட்சிபுரிந்துவந்த முடியுடை வேந்தர்களாகிய சேரசோழ பாண்டியர்கட்கு உற்றுழியுதவி வந்துள்ளன ரென்பதும் அகநானூறு1 புறநானூறு2 பதிற்றுப்பத்து3 முதலான சங்க நூற்களை ஆராய்வார்க்கு இனிது புலப்படும். கடையெழு வள்ளல்களிற் சிலர் இக்குலத்தைச் சேர்ந்தவராவர். வரையா மலீயும் வள்ளல்களாய் முற்காலத்தே பெரும்புகழ் படைத்து நிலவிய அதியமான் நெடுமான் அஞ்சி, ஓரி முதலானோர் தோன்றியது இம்மழவர் குலமெனின் இதற்கு வேறு சிறப்பும் வேண்டுமோ? இத்தகைய பெருமை வாய்ந்த மழவர் குலத்தின் வரலாறு நாம் அறிந்துகொள்ளுதற்குரியதொன்றாகலின் அதனைப் பண்டைத் தமிழ் நூற்களின் துணைகொண்டு ஆராய்ந்து அறிய முயல்வோம். இனி, இம்மழவர் என்பார் யாவர்? இவர்கள் எவ்வகுப்பைச் சேர்ந்தவர்கள்? இவர்களது பழைய நாடு யாது? இன்னோர் தமிழகத்தின் பழைய மக்களா? அன்றி இங்கு இடையிற் குடியேறியவர்களா? மற்றும் இவர்களைப் பற்றிச் சிறப்பாக அறிந்துகொள்ளக்கூடியன யாவை? இவர் களது வழியினராக இப்போது நம் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றவர் யாவர்? என்பவற்றை ஆராய்வாம். மிகப்பழைய காலத்தில் நம் தமிழகத்தின் தென்பகுதியைக் கடல் கொண்டபோது அழிந்தொழிந்த தமிழ் நூற்கள் எத்துணையோ பலவாம்.1 அவையொழிய எஞ்சியுள்ள தமிழ் நூற்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம் என்ற இலக்கன நூலேயாகும், இந்நூல் அகத்திய முனிவரது மாணாக்கரும், இடைச்சங்கப்புலவருள் ஒருவருமாகிய ஆசிரியர் தொல் காப்பியனாரால் இயற்றப்பெற்றது: நிலந்தருதிருவிற் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேற்றப்பெற்றது இடைச்சங்கத் தார்க்கும். கடைச்சங்கத்தார்க்கும் இலக்கண நூலாக அமையப்பெற்றது. இத்தகைய அருமை வாய்ந்த பழைய நூலில் முற்காலத்தில் தமிழ் மக்களுள் காணப்பட்ட குல வேறுபாடுகள் இனிது கூறப் பட்டுள்ளன. அதனை யாராயுங்கால், பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வகுப்பினரும் பழைய நாளில் நம் தமிழகத்தில் வாழ்ந்து வந்தனரென்பது மரபியலாற் பெறப்படுகின்றது. அன்றியும். ஆசிரியர் தொல்காப்பியனார் அகத்திணையியலில் கருப்பொருளின் பாகுபாடாகிய மக்கள் திறம் உணர்த்துமிடத்து நிலம்பற்றி வாழும் ஐந்திணை மாக்கள் இருந்தமை கூறுகின்றார். அன்னோர் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்து வகை நிலங்களிலும், முறையே வாழ்ந்த குறவர், ஆயர், உழவர். வேட்டுவர், பரதவர் என்போர். அவர்களேயன்றிக் குற்றேவன் மாக்களும் தொழிலாளரும் இருந்தனரென்பது அகத்திணையியலிலுள்ள அடியோர் பாங்கிலும் வினைவலர் பாங்கினும்2 என்ற சூத்திரத்தால் அறியக்கிடக்கின்றது. இதுகாறுங் கூறியபலவகைப் பிரிவினருள் பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வகுப்பினரும் எல்லா நிலங்கட்கும் உரியவராய் அக்காலத்தில் விளங்கிய மக்கள் ஆவர். குறவர், ஆயர், உழவர், வேட்டுவர், பரதவர் ஆகிய ஐந்திணை மக்கள் அவ்வந் நிலத்திற்கே உரியவராய் நிலம்பற்றி வாழ்ந்த மக்கள் ஆவார். குற்றேவன் மாக்களும் தொழிலாளரும் ஐந்திணை மாக்களை அடுத்தவராக அக்காலத்தே கருதப் பட்டுள்ளன ரென்பது மேற்கூறிய அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் என்ற அகத் திணையியற் சூத்திரத்தால் அறியப்படுகின்றது. ஈண்டுத் தோழிலாளர் எனப் பட்டோர் மேற்கூறப் பெற்றவர் தம் வாழ்க்கையை நடாத்துதற்கு இன்றி யமையாதவர்களாயுள்ளவர்கள். மேற்கூறிய எல்லோருக்கும் தலைவராய் எல்லா நிலங்களையும் ஆட்சிபுரிந்தோர் அவர்களுள் ஒரு வகுப்பினராகிய அரசர் ஆவர். குறிஞ்சி, முல்லை,முதலான ஐவகை நிலங்கட்கும் குறவர், ஆயர் முதலான அவ்வந்நில மக்களுள்ளும் தலைவராயினார்: உளர்; அன்னோர் குறும் பொறைநாடன். அண்ணல். ஊரன், மீளி, சேர்ப்பன் என்று அழைக்கப்பெற்றுள்ளனர். அவர்கள் அவ்வந்நிலங்கட்குத் தலைவராயினும் எல்லா நிலங்கட்கும் மக்கட்கும் தலைமை பூண்டு விளங்கிய நெடுமுடி வேந்தர்க்குக்கீழ் வாழ்ந்து வந்தனர். இனி, அக்காலத்தே அறிவர், தாபதர், பரத்தையர் என்போரும் சிறப்புற்று விளங்கினவராவர். அவர்களுள் அறிவர் எனப்படுவார் முக்காலங்களுமுணர்ந்து எல்லாவுயிரிடத்தும் செந்தண்மை பூண்டு பேரறிஞராய் நிலவிய நிறைமொழி மாந்தர். அறிவரே அந்தணரென்று கூறப்பெற்றோர். அவர் ஆணையிற் கூறியன வெல்லாம் மறையெனவும் மந்திரமெனவும் சொல்லப்படும் தாபதர் என்போர் தவவேட முடையராய் விரதவொழுக்கம் மேற்கொண்டவராவர். பார்ப்பாருள் அறிவரும் தாபதரும் ஆயினார் உளார். ஆனால் அறிவரெல்லோரும் பார்ப்பனரல்லர்: அன்றியும் தாபதரெல்லோரும் பார்ப்பாருமல்லர். எனவே, அறிவரும் தாபதரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவரல்லர். பரத்தையர் காதற் பரத்தையரும் காமக்கிழத்தியருமென இருவகைப்பிரிவினராய் வாழ்ந்த வரைவின்மகளிராவர். இதுகாறும் யாம் கூறிய வகுப்பினர்களே முன்னர் தமிழ் நாட்டில் வசித்த பழந்தமிழ்க் குடிகளாவார். அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் ஆகிய நன்கு வகுப்பினரும் அகநகர்க்கண்ணும் ஐந்திணைமக்கள் குறிஞ்சி, முல்லை முதலிய நிலங்களிலுள்ள சிற்றூரின்கண்ணூம் வசித்து வந்தனர். தொழிலாளரும் குற்றேவன்மாக்களும் புறநகர்க்கண் சேரிகளில் வசித்தனர். பரத்தையயர் அகநகரில் வாழ்ந்துவந்தனர். அறிவரும் தாபதரும் யாண்டும் வசித்தற்குரியர். ஆனால் வடுகர் முதலான தமிழரல்லாத பிறசாதியினரும் தமிழகத்தில் தற்காலத்தில் வாழ்ந்து வரினும், இன்னோர் பழந்தமிழ் மக்களல்லாராதலின் இவர்களைப் பற்றிய ஆராய்ச்சி ஈண்டைக் கேற்புடைத்தன்றென்க. இனித் தொல்காப்பியத்திற் கூறப்பெற்றுள்ள பல்வகைக் கூட்டத்தினருள் மழவர் என்பார் கூறப்படவில்லை. எனவே அன்னவர் மேற்குறித்துள்ள பிரிவினருள் அடங்கியுள்ளவராதல் வேண்டும். இன்றேல், பிறநாட்டினின்றும் போந்து தமிழகத்தில் குடியேறியுள்ள வேறு தேயமக்களாதல் வேண்டும். ஈண்டு இதனையாராய்ந்து உண்மை காண்போம். சாதிப்பெயர், இடம்பற்றியும் தொழில்பற்றியும் உண்டாகு மென்பது ஆசிரியர் தொல்காப்பியனாரது கருத்தாகும். எனவே, சேரநாட்டில் வசிப்போர் எல்லோரும் சேரரும், பாண்டிய நாட்டில் வசிப்போர் எல்லோரும் பாண்டியரும், சோழநாட்டில் வசிப்போர் எல்லோரும் சோழரும் ஆதல் வேண்டும். ஆயின். பண்டைநூற்களிலும் கல்வெட்டுக் களிலும் பயின்றுள்ள சேரர் பாண்டியர் சோழர் என்ற இடத்தாற்போந்த குடிப்பெயர்கள் அந்நாடுகளில் தொன்றுதொட்டு ஆட்சிபுரிந்துவந்த அரசர் குலத்தினரைக் குறிக்கின்றனவேயெனின், கூறுவாம்; ஒரு நாடடின் வசிப்போர் பல்வகைக்குலத்தினராயினும். அந்நாட்டின் அடியாகத் தோன்றிய குலப்பெயர்கள் அந்நாட்டில் தொன்றுதொட்டு அரசுரிமை யெய்தியுள்ளார்க்கே யுரியதாகும். பிறகுலத்தினரிருப்ப, சேரர், பாண்டியர், சோழர் முதலிய நாட்டடியாகப் போந்த குலப்பெயர்கள் அந்நாடுகளிலுள்ள அரசர் குலத்தினரையே அவ்வாறு குறிப்பது சிறப்புப்பற்றியே யாமெனவுங் கொள்க. இனி, அந்நாடுகளில் வசிக்கும் பார்ப்பார், வணிகர், வேளாளர் முதலிய பிறகுலத்தினரைக் குறிக்குங்கால் அந்நாடு களின் அடியாக மருவிப்போந்த பெயரோடு அன்னோரது குலப்பெயரையும் இணைத்துக் கூறுதல் வழக்காறாக உள்ளதென்பதை யாவரும் அறிவர். உதாரணமாக, சோழ நாட்டில் வசிக்கும் பார்ப்பார், வணிகர், வேளாளர் என்ற இன்னோர் சோழியப்பார்ப்பார், சோழியச்செட்டி, சோழிய வேளாளர் என்றழைக்கப் பெறுதல்காண்க. இதுகாறும் கூறிய வாற்றால் நாட்டின் அடியாகத் தோன்றிய குலப்பெயர் தனித்து வழங்கிவரின் அஃது அந்நாட்டின் அரசர் குலத்தினரையே குறிக்குமென்பது மிகத்தெளிவாய் விளங்குகின்றது. இது நூல்வழக்கானும் உலகவழக்கானும் ஒருங்கே உறுதியெய்துதல் காண்க. இத்துணையும் கூறியவாற்றால், நாம் அறிந்துகொள்ளு மாறு முயன்ற மழவர் என்பார் மழநாட்டில் வசித்தோர் ஆதல் வேண்டு மென்பது நன்கு புலப்படுகின்றது. நாட்டினடியாகப் போந்த மழவர் என்ற குடிப்பெயர் பிறகுலப் பெயரோடு இணைந்து வழங்கப் பெறாது தனித்து வழங்கி வருதலைச் சங்க நூல்களில் காண்கின்றோ மாகலின் இன்னோர் ( மழவர்) அந்நாட்டில் அரசு புரிந்துவந்த அரசர் குலத்தினராதல் தெள்ளிது. இதனால் மழநாட்டிலுள்ள அரசர்குலத்தினரே சங்கத்துச் சான்றோர்களால் மழவர் என்று வழங்கப் பெற்றுள்ளன ரென்பது இனிதுணரப்படுகின்றது. இன்னோர், மழநாட்டினடியாகத் தோன்றிய மழவர் என்ற குடிப் பெயரையே தமக்குரிய குலப்பெயராகக் கொண்டுள்ளமையால் இவர் களது தாய்நாடு மழநாடாகுமென்பது நன்கறியப்படும். இம்மழநாடு மழபுலம்1 என்றும் அழைக்கப்பெறும். இனி, இம்மழநாடு யாண்டுள்ளதென்பதை யாராய்வாம். இது தமிழ் மொழிக்கே சிறப்பெழுத்தாயுள்ள ழகரம் பயின்றுள்ள பெயருடைய தாயிருக்கின்றது. ஆதலால், இது நம் தமிழகத்தில் அடங்கியுள்ளதொரு நாடாதல்வேண்டும். ஆசிரியர் தொல்காப் பியனாரானும் பவணந்தி யாரானும் கூறப்பெற்ற செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்துள்ள பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளுள்2 மழநாட்டின் பெயரைத் தொல்காப்பியத்திற் குரைகண்ட பெரியாருள் எவருங் கூறக்கண்டிலம். உரையாசிரியர்களால் கூறப்பெறாத பல நாடுகள் நம் தமிழகத்தில் உளவென்பது, தொண்டை நாடு, கொங்குநாடு, திருமுனைப் பாடிநாடு முதலியவற்றால் தெளியப்படும். அங்ஙனம், உரையாசிரியர்களால் விதந்தோதப் படாத பல நாடுகளுள் மழநாடும் ஒன்றாயிருத்தல் வேண்டும். அன்றியும், தமிழகம் சேரநாடு, பாண்டிநாடு, சோழநாடு என்ற மூன்று பெரும் பிரிவுகளை யுடையதாயிருந்ததென்பது, வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பில் நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர்1 என்ற தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திரத்தால் நன்கறியக் கிடக் கின்றது. இம்மூன்று பெரும்பிரிவுகளும் பல உள்நாடுகளை யுடையன வாயிருந்தனவென்பது பழைய தமிழ் நூற்களையும் கல்வெட்டுக் களையும் ஆராய்வார்க்கு இனிது புலப்படும்2. ஆகவே, இம்மூன்று பெரும் பிரிவுகளுள் அடங்கியுள்ள பல உள்நாடுகளில் மழநாடும் ஒன்றா யிருத்தல் வேண்டும். தாயவன் யாவுக்குந் தாள்சடை மேற்றனித்திங்கள் வைத்த தூயவன் பாதந் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும் வேயவன் மேன்மழ நாட்டுவிரிபுனன் மங்கலக்கோ னாயவ னானாய னென்னை யுவந்தாண் டருளினனே3 என்ற நம்பியாண்டார் நம்பிகளது திருவாக்கினாலும் உறுதிசெய் கின்றது. இதற்கேற்ப ஆசிரியர் சேக்கிழார், திருஞான சம்பந்த நாயனார் புராணத்திலும் ஆனாய நாயனார் புராணத்திலும் முறையே கூறியுள்ள, அங்கணகன்றம்மருங்கிலங்கணர் தம் பதிபலவுமணைந்து போற்றிச் செங்கமலப் பொதியவிழச் சேல்பாயும் வயன்மதுவாற் சேறுமாறாப் பொங்கொலிநீர் மழநாட்டுப் பொன்னிவட கரைமிசைப்போய் புகலிவேந்தர் நங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிர மம்பணிய நண்ணும் போதில்1 மாடுவி ரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச் சூடுப ரப்பிய பண்ணைவ ரம்புசு ரும்பேற ஈடுபெ ருக்கிய போர்களின் மேகமி ளைத்தேற நீடுவ ளத்தது மேன்மழ நாடெனு நீர்நாடு.2 பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகண் மேலோடும் வெங்கதிர் தங்கவி ளங்கிய மேன்மழ நன்னாடாம் அங்கது மண்ணில ருங்கிய மாகவ தற்கேயோர் மங்கல மாயது மங்கல மாகிய வாழ்மூதூர்.3 என்னும் பாடல்களால் சோழநாட்டின்கண் மழநாடென்ற தோர் உண்ணாடுள்ளமை நன்கு தெளியப்பெறும். சிவனடியார் அறுபத்து மூவருள் ஒருவராய ஆனாயநாயனார் அவதரித்த திருப்பதியாகிய திருமங்கலமும் திருஞானசம்பந்த சுவாமிகளால் பாடப்பெற்ற திருப்பாச்சிலாச்சிரமும் இம்மழநாட்டின்கண் உள்ளமை மேலே காட்டியுள்ள பாடல்களால் இனி துணரப்படும். அன்றியும் அன்பிலாலந் துறை. திருமாந்துறை, திருப்பழுவூர், திருமழபாடி, திருவிசயமங்கை4 முதலிய பாடல்பெற்ற திருப்பதிகள் இந்நாட்டின் கண்ணுள்ளன வேயாகும், ஆகவே, இம்மழநாடு கொள்ளிடத்தின் வடகரையைச் சார்ந்த தாய், ஐயன்வாய்க்கால் பெருவளவாய்க்கால் முதலிய கால்வாய் களாற் பாயப்பெற்றுத் திருச்சிராப்பள்ளி சில்லாவில் கீழ்மேல் பலகாத தூரம் நீண்டு கிடந்ததொரு நாடாதல் வேண்டும். இஃது ஆசிரியர் சேக்கிழார் காலத்தில் சோழநாட்டின் உள்நாடுகளில் ஒன்றாக விருந்ததென்பதை அப்பெயரியாரது செந்தமிழ்ப் பாடல்கள் கொண்டு இனிது விளக்கினேம். ஆனால், சங்கத்துச்சான்றோர்கள். இயற்றியுள்ள தொகைநூல்களில் காணப்பெறும் பாடல்களால்1 இந்நாடு சேரநாட்டின் ஒருபகுதியையும் கடைச்சங்க நாளில் தன்னகத்து அடக்கிக் கொண்டிருந்தமை நன்கு பெறப்படுகின்றது. ஆகவே, மழநாடு சேரநாட்டின் கீழ்ப் பகுதியையும் சோழநாட்டின் மேற் பகுதியையும் தன்பால் அடக்கிக் கொண்டு. பண்டைக் காலத்தில் ஒரு பெரிய நாடாகவே இருந்துள்ளது. இதனால் இந்நாட்டில் வசித்துவந்த மழவர்குடியினர் தமிழகத்தில் பழைய மக்களே யன்றி இடைக்கண் இங்குக்குடியேறிய வரல்ல ரென்பது நன்கு விளங்குதல் காண்க. தற்காலத்தே நமது இந்தியப்படைஞரில் சீக்கியரும் கூர்க்கரும் சிறந்த வீரராயிருத்தல்போல இம்மழவர் குடியினர் பண்டைக்காலத்திய போர்வீரர்களில் சிறந்து விளங்கியவராவர். இன்னோர் இத்தகைய சிறந்த வீரராயிருந்தமையின் நெடுமுடி வேந்தர்களாய சேர பாண்டிய சோழர் இவர்களைப் போர்த் துணை கொண்டிருந்தனர்.குவியற்கண்ணி மழவர் மெய்ம்மறை2 வாலூன் வல்சி மழவர் மெய்ம்மறை3 எனவரும் பதிற்றுப் பத்தால் இமய வரம்பன்றம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனும் 4 ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும்5 மழவர்களைப் படைத்துணை கொண்ட செய்தி நன்கறியப் பெறும். இனி இவர்களுள் பெரும்பகுதியார் குதிரைப்படைஞ ராகவும் யானை வீரராகவும் இருந்துள்ளனரென்பது உருவக் குதிரை மழவரோட்டிய6 எனவும், மைபடு நெடுந்தோள் மழவரோட்டியிடைப் புலத் தொழிந்த வேந்து கோட்டி யானை7 எனவும் போதரும் சங்கத்துச் சான்றோர் பாடல் களால் இனிது புலப்படும். அன்றியும் இன்னோர் சிறந்த வில்லாளிகளாகவும் இருந்திருத்தல் வேண்டுமென்பது ஒண்சிலை மழவர்1 கல்லா மழவர் வில்லிடந்தழீஇ2 என்பவற்றால் அறியப்பெறும். இனி மழவர்முழவின் நோன்றலை கடுப்பப் பிடகைப்பெய்த கமழ் நறும் பூவிணர்3 என்ற மதுரைக் காஞ்சியடிகள் இன்னோர் ஒருவகைப் போர்ப் பறை கொட்டிச் செல்லும் வழக்க முடையரென்பதைத் தெரிவிக் கின்றன. இவர்கள் பூந்தொடை விழவு4 மிகச் சிறப்புடைய தென்பது187- ஆம் அகப்பாட்டால் தெரிகின்றது. இனிப் பூந்தலைமழவர்5 என்னும் மதுரைக் காஞ்சியானும் குறியற்கண்ணிமழவர்6 என்னும் பதிற்றுப் பத்தானும் இவர்கள் தங்கட்கு அடையாளமாகப் போர்ப்பூவும், தார்ப்பூவும் சூடிக் கொள்ளுதல் பெறப்படுகின்றது தகர்மருப் பேய்ப்பச் சுற்றுபுசுரிந்த - சுவனமாய்ப் பித்தைச் செங்கண்மழவர்7 என்று இன்னோரது தலைமயிர் சிறப்பிக்கப் பெற்றுள்ளது. உண்ணற் குரிய உணவுகளாக இவர்கள் கைக் கொண்டவை உருசியுள்ள தின்பண்டங்களும் வீரர்கட்குரிய வேறுவித உணவுமேயா மென்பது தீம்புழல் வல்சிக் கழற்கான் மழவர்8 செவ் வூன்றோன்றா வெண்டுவை முதிரை - வாலூண்வல் சிமழவர்9 என்பவற்றால் நன்குணரப் படுகின்றது. இங்ஙனம் போர்வீரத்திற்கும் படைவன்மைக்கும் பேர் பெற்றவர் களாக விளங்கிய மழவர் மிகச்சிறப்புற்று உயர்நிலையி லிருந்தது மதுரைமா நகரின்கண் கடைச்சங்கம்நின்று நிலவிய காலமேயாம். எனவே, இவர்கள் சிறந்து வாழ்ந்தமை இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டு கட்கு முன்னரேயாமெனக் கொள்க. கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த பல்லவ வேந்தனும் முதல்மகேந்திரவர்மனது தந்தையுமாகிய சிம்மவிஷ்ணு வென்பான் தென்னாட்டின்மீது படையெடுத்துப் பாண்டியர், சோழர், கேரளர், மழவர் என்ற மன்னவர்களை வென்றானென்று காசாக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன10. இதனால் கி.பி . ஆறாம் நூற்றாண்டிலும் மழவர் குடியினர் சேரபாண்டிய சோழரோடு ஒருங்குவைத் தெண்ணப் படும் பெருமையுடைய ராயிருந்தன ரென்பது தெளிவாகின்றது. கி.பி. எட்டாம் நூற்றாண்டினிடையில் பாண்டிநாட்டில் ஆட்சி புரிந்தவனும் அரிகேசரி பராங்குசன் மாறவர்மன் என்று செப்பேடுகளில் குறிக்கப் பெற்றவனுமாகிய முதல் இராச சிம்மபாண்டியன் ஒரு மழவ அரசனது புதல்வியை மணந்துகொண்ட செய்தி வேள்விக்குடிச் செப்பேடுகளால் அறியக்கிடக்கின்றது1. அன்றியும், திருவிசைப்பாவிலுள்ள பதிகங்களுள் ஒன்றைத் திருவாய் மலர்ந்தருளிய முதற்கண்டராதித்த சோழதேவர் மழவர் குடியிற் றோன்றிய ஒரு பெண்மணியைத் திருமணஞ் செய்து கொண்டா ரென்பதுகல்வெட்டுக்களால் வெளியா கின்றது2. இன்னோர்க்குப் பிறந்த அருமைப் புதல்வனே உத்தமச் சோழனென்று புகழப் பெறும் மதுராந்தகச் சோழ னென்பான்3 இம்மன்னன் இராசராசசோழனது ஆட்சியின் முற் பகுதியில் அவனோடு சேர்ந்து சோழநாட்டை ஆட்சிபுரிந்தவன். இவற்றால், ஏழு, எட்டு, பத்து, பதினோராம் நூற்றாண்டுகளிலும் மழவர் குடியினர் சிறந்துவாழ்ந்தமை நன்கு பெறப்படும். இக்காலத்தே இவர்கள் சோழர்கட்கு அடங்கிய குறுநில மன்னராகவும், அன்னோர்க்குப் படைத் தலைவராகவும் மந்திரா லோசனை சபையின் அங்கத்தினராகவும் இருந்துள்ளனர்4 ஆகவே, நெடுமுடிவேந்தராகிய சேரபாண்டிய சோழரது நிலை குலைய, பிறர் இத்தமிழகத்தைக் கைப்பற்றிய நாட்களில் தான் மழவரும் தங்கள் பண்டைப்பெருமையிற் சுருங்கித் தாழ்ந்த நிலையையெய்தத் தலைப்பட்டனர். இனி, இம்மழவரது வழித்தோன்றல்களாகத் தற்காலத்தே யுள்ளவர் யாவரென்பதை ஆராய்வோம். (தொடரும்) குறிப்பு: இதன் தொடர்ச்சி கிடைக்கவில்லை. 9. சம்புவராய மன்னர் வடக்கில் திருமால் எழுந்தருளியுள்ள வேங்கட மலையையும் தெற்கில் குமரிமுனையையும் கிழக்கிலும் மேற்கிலும் இருபெருங் கடல் களையும் எல்லையாகவுடைய இந்நிலப்பரப்பு முற்காலத்தே தமிழகம் என்னும் பெயரினை யுடையதாக இருந்தது. இத்தமிழகம் சேரமண்டலம், சோழமண்டலம், பாண்டி மண்டலம் என்னும் மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுச் சேர சோழ பாண்டியர் என்னும் தமிழ் மூவேந்தர்களால் ஆளப் பெற்று வந்தது. இற்றைக்கு ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகட்கு முன்னர், சோழ மண்டலத்தின் வடபகுதி ஒருதனி மண்டல மாகப் பிரிக்கப் பட்டு தொண்டை மண்டலம் என்னும் பெய ரெய்தியது. இத்தொண்டை மண்டலத்தை அந்நாளில் அரசாண்டவர்கள் தொண்டைமான் மரபினர் ஆவர். இவர்கள் சோழரின் வழியினர்: இவர்கள் தம் குடி முதல்வராகிய சோழரைப் போல் ஆத்திமாலையை அடையாளமாலையாகக் கொள்ளாமல் ஒரு காரணம் பற்றித் தொண்டை மாலையைத் தம் அடையாள மாலையாகக் கொண்டமையின் தொண்டைமான்கள் என்று அழைக்கப்பெற்றனர். இவ்வேந்தர்களுள் முதல்வன் தொண்டைமான் இளந்திரையன் என்பவன்: இவன் காவிரிப்பூம் பட்டினத்தைத் தலை நகராகக் கொண்டு சோழ நாட்டை ஆட்சிபுரிந்த சோழன் கரிகாற் பெரு வளத்தானது பெயரன்; சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனது மகன்; கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் பெருமானால் பாடப்பெற்ற பெரும் பாணாற்றுப்படை என்னும் பிரபந்தங்கொண்டவன்; செந்தமிழ்ப் புலமையிற் சிறந்தவன்: திருமால் பக்தியில் ஒப்பற்றவன்; இவனும் இவனது வழித்தோன்றல்களும் காஞ்சிமா நகரைத் தலை நகராகக் கொண்டு தொண்டைமண்டலத்தை ஆட்சி புரிந்து வந்தனர். இவர்கள், மக்களாகப் பிறந்தோர் இவ்வுலகில் அடையக்கூடிய உயர் நிலைக்கு எல்லையாகத் தோட்டிமுதல் தொண்டைமான் வரையில் என்னும் பழமொழியில் வைத்து இன்றும் பாராட்டப் பட்டு வருதல் காண்க. இவர்களது ஆட்சி. கி.பி. நான்காம் நூற்றாண்டு வரையில் தொண்டை மண்டலத்தில் நடைபெற்றது. அந்நூற்றாண்டின் தொடக்கத்தில் போர் விருப்பம் வாய்ந்த பல்லவர்கள் வடக்கேயுள்ள ஆந்திர நாட்டிலிருந்து தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தனர். அவர்கள் முதலில் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர்: பின்னர் தொண்டை மண்டலத்தையும் பிடித்துக்கொண்டு அரசாளத் தொடங்கினர். பல்லவர்களும் தொண்டை மண்டலத்தை அரசாண்ட காரணம்பற்றித் தொண்டை மான்கள் என்றழைக்கப்பெற்றனர். கி.பி.830 முதல் 854 வரை யாண்ட தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன் மேற்பாடப் பட்ட நந்திக் கலம்பகத்திலும் அவ்வேந்தன் தொண்டையந்தார் மன்னன் என்றும் தொண்டைமான் என்றும் புகழப்பெற்றிருத்தலுக்குக் காரணம் இதுவே யாகும். பல்லவர்களது ஆளுகையும் தொண்டை மண்டலத்தில் கி.பி. 880-ல் முடிவெய்தியது. ஆயினும் கி.பி. 600 முதல் 880 வரை நிகழ்ந்த அவர்களது ஆட்சிக்காலம் தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் ஒரு சிறந்தபகுதியாகும். அக்காலத்தில் தமிழ்வேந்தர்களுள் ஒரு பகுதியினராகிய சோழர்கள் தம்நாட்டை இழந்து தாழ்ந்த நிலையை எய்தினர். பல்லவர்கள் நெடுமுடி வேந்தர்களாகவும் உள்நாட்டுத் தலைவர்களிடத்தும் திறைவாங்கும் பெருமையுடைய வர்களாகவும் விளங்கினர். அவர்களது ஆட்சிக்காலத் தேதான் சைவசமய ஆசாரியர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர், சுந்தரமூர்த்திகள் முதலான பெரியோர்களும், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் முதலான வைணவசமய ஆசாரியர் களும் நம் தமிழகத்தில் வாழ்ந்தனர். ஆகவே அப்பெரியோர்கள் எல்லாம் அரிய பெரிய அற்புதங்களை நிகழ்த்திச் சைவ வைணவ சமயங்களை வேரூன்றுமாறு செய்து அவற்றை எங்கும் பரவச்செய்த ஒருகால விசேடமென்று அப்பகுதியைக் கூறுவது சாலப் பொருந்துமென்க. இனி, ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவர்களது தொண்டை மண்டலம் பிற்காலச் சோழர்களுள் முதல்வனாகிய விஜயால யனது புதல்வன் முதலாம் ஆதித்தசோழனால் வென்று கொள்ளப்படவே, பல்லவர்களும் குறு நில மன்னர் ஆயினர். தொண்டைமண்டலமும் சயங்கொண்ட சோழமண்டலம் என்னும் புதியதோர் பெயரைப்பெற்றது. அந்நாளில் சோழ மன்னர்களுக்கு திறைசெலுத்திவந்த பல்லவர்குலச் சிற்றரசர் களும் தலைவர்களும் தொண்டை மண்டலத்தில் பலபகுதி களில் வசித்து வந்தனர். அவர்களுள் பெரும்பாலோர் சோழமன்னர் களின் அமைச்சர்களாகவும் படைத்தலைவர்களாகவும் நிலவிய தோடு சில உண்ணாடுகளையும் தனியூர்களையும் ஆட்சிபுரியும் உரிமையும் பெற்றிருந்தனர். இங்ஙனம் வாழ்ந்துவந்த பல்லவ குலச் சிற்றரசர்களுள் சம்புவராயர் என்ற பட்டப் பெயருடன் விளங்கியவர்களும் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தனர் என்பதும் தெரிகிறது. இவர்களது ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதி செங்கற்பட்டு, வடஆற்காடு ஜில்லாக்களைக் கொண்டுள்ளதாயிருந்தது. இவர்கள் சோழ மன்னர்களுக்கு திறை செலுத்தினர். கல்வெட்டுக் களால் அறியப்படும் சம்புவராய மன்னர்களுள் செங்கேணி மிண்டன் அத்திமல்லன் சம்பு வராயன் என்பவனே மிகப் பழமையானவன். இவன் மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் 8- ஆம் ஆண்டில் (கி.பி.1186) திருவல்லமுடைய மகாதேவர்க்குக் குற்றத் தண்டம், திரிசூலக்காசு இவற்றால் கிடைக்கும் வருவாய்களைக் கொடுத்தனன் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது. (South Indian Inscrieions voi.111 No.60) இக்கல்வெட்டின் இறுதியில் செங்கேணிகள் வம்சம் உள்ளவரைக்கும் இத்தர்மத்தைச் செய்யாமல் நிறுத்துவோர் கங்கைக் கரையிலும் குமரிக் கரையிலும் குரால் பசுவைக் கொன்றவனது பாவத்தையடைவர் என்று வரையப் பட்டுள்ளது. இதனால் செங்கேணி என்பது குடிப்பெயர் என்று வெளியாகிறது. மூன்றாம் குலோத்துங்கனது ஆட்சியின் 11- ஆம் ஆண்டில் (கி.பி. 1189) செங்கேணி அம்மையப்பன் கண்ணுடைய பெரு மானான விக்கிரம சோழச் சம்புவராயன் பலவரிகளால் கிடைக்கும் வருவாய்களைத் திருவல்லமுடையார்க்கு அளித்தனன். (S.I.I.Vol. III No. 61) முன்னவனுக்குப் பின்னவன் யாது முறையுடையான் என்பது இப்போது புலப்படவில்லை. சோழச்சம்புவராயன் என்னுஞ் சொற்றொடர் இம்மரபினர் அப்போது சோழ மன்னர்க்குக் கப்பஞ் செலுத்திவந்த சிற்றரசராயிருந்தனர் என்பதைப் புலப் படுத்துகின்றது. அன்றியும் பலவரிகளால் கிடைக்கும் வருவாய் களை அவன் திருவல்ல முடையார்க்கு அளித்திருப்பது அப்பகுதி அவனது ஆட்சிக்குப் பட்டிருந்தது என்பதை நன்கு விளக்குகின்றது. இவ்வரசனது புதல்வன் செங்கேணி விராசனி அம்மையப்பன் தனிநின்று வென்றான் தன்வசி காட்டுவான் அழகிய சோழனான எதிரிலி சோழச் சம்புவராயன் என்போன். இதனைக் காஞ்சி புரத்திலுள்ள அருளாளப் பெருமாள் கோயில் கல்வெட்டொன்று அம்மையப்பன் மகன் சோழப்பிள்ளை யான அழகிய சோழச்சம்புவரயன் என்றுரைப்பதால் நன்குணரலாம். (Ins. 36 of 1893) இவனது கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் 27- ஆம் ஆண்டாகிய கி.பி. 1205-ல் தான் முதலில் காணப்படுகிறது. ஆகவே அக்காலத்தேதான் இவன் ஆட்சிபுரியத் தொடங்கியிருத்தல் வேண்டும் இவன் காலத்தில் பாண்டி நாட்டில் பராக்கிரம பாண்டியனுக்கும் குலசேகரபாண்டியனுக்கும் ஆட்சியுரிமை யைப்பற்றிய விவாதம் உண்டாயிற்று. பராக்கிரம பாண்டியனுக்கு இலங்கைமன்னனாகிய பராக்கிரமபாகு என்பான் துணைப் படை யனுப்பினான். இலங்கைப் படைக்குத் தலைவனாக வந்தவன் இலங்கா புரித்தண்ட நாயகன் குலசேகர பாண்டியனுக்குச் சோழமன்னர்கள் உதவி புரிந்தனர். படைக்குத் தலைமை வகித்து மகாசாமந்தனாகச் சென்றவரை நமது எதிரிலி சோழர்களது சோழச்சம்புவராயனது புதல்வனாகிய திருச்சிற்றம்பலமுடை யான் பிள்ளைப் பல்லவராயன் என்பவனேயாம். பாண்டிநாட்டில் இராமேச்சுரம், திருக்கானப்போர், தொண்டி, பொன்னமராவதி, மணமேற்குடி முதலான இடங்களில் இவ்விரு படைகட்கும் பெரும்போர்கள் நிகழ்ந்தன. முதலில் சிங்களப்படை வெற்றி பெற்றது. அதன் பயனாகப் பல நகரங்களும் கோயில்களும் இடிக்கப் பட்டன. இச்செய்திகளைக் கேள்வியுற்ற எதிரிலி சோழச் சம்புவராயன் பெரிதும் வருந்திக் காஞ்சிபுரத்திற் கருகிலுள்ள ஆரப்பாக்கத்தில் எழுந்தருளியிருந்த உமாபதி தேவராகிய ஞானசிவ தேவரிடம் சென்று இச்செய்தி களை விண்ணப்பித்துச் சிங்களப்படை நம் சோழ நாட்டிற் புகுந்தால் பல ஆலயங்கள் அழிக்கப்பட்டுவிடுமே: அந்தணர் துன்புறுவரே: ஆதலால் அச்சிங்களப்படை தோற்றோடுமாறு தாங்கள் எவையேனும் உபாயங்கள் செய்தருளவேண்டும் என்று கூறினன். இதனைக்கேட்ட அப்பெரியார் அன்னோர் இராமேச் சுரம் கோயில் வாயிலை இடித்துச் சிவபெருமானுக்கு நித்திய பூசை நடை பெறாதவாறு இடையூறு புரிந்தனர் என்று கேள்வியுற்றேன்: எனவே அவர்கள் சிவா பராதம் செய்தவர் ஆவர். ஆகவே, அவர்கள் போரில் தோல்வியெய்தி ஓடுமாறு தக்கவழி தேடுவேன் என்றுரைத்து இருபத்தெட்டு நாட்கள் இரவும்பகலும் தவம்புரிந்தனர் அப்போது திருச்சிற்றம்பல முடையான் பிள்ளைப் பல்லவராயனிடமிருந்து இலங்காபுரித் தண்டநாயகனும் சகத்விசயதண்டநாயகனும் தோல்வி யுற்று இலங்கைக்கு ஓடிப்போயினர் என்று எதிரிலி சோழச் சம்பு வராயனுக்கு ஒரு திருமுகம் வந்தது. இதனைக் கண்ட இச் சம்புவராயன் பெரிதும் மகிழ்ந்து ஆரப்பாக்கத் திலிருந்த சுவாமிகளிடம் கொண்டு போய்க்காட்டவே. அவரும் உவகையுற்றனர். பின்னர் இவ்வேந்தன் ஆரப்பாக்கம் என்னும் கிராமத்தை அப்பெரியாருக்கு அளித்தனன். இச்செய்திகளை ஆரப்பாக்கத்திலுள்ள கல்வெட்டுக்களில் விளக்கமாய்க் காணலாம். (Ins. 20 of 1899) இவ்வேந்தன் மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்தும் அவனது சிற்றரசர்களுள் ஒருவனா யிருந்தனன். விரிஞ்சிபுரத்திற் கருகிலுள்ளதும் பொய்கை என்று தற்காலத்தில் அழைக்கப்படுவதுமாகிய இராஜேந்திர சோழநல்லூர் சித்திரமேழிமலை மண்டல விண்ணகரான அருளாளப் பெருமாளுக்குக் குமாரமங்கலம், புத்தூர், அத்தியூர் ஆகிய கிராமங்களைக் கி.பி.1238,1239, 1243 ஆம் ஆண்டுகளில் மலை மண்டலத்து வணிகன் இராமகேரளச் செட்டியிடம் இம்மன்னன் பொன் பெற்றுக்கொண்டு தேவதானமாக விட்டான் என்று பொய்கையிலுள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. (S.I.I Vo1. Nos. 59,61,62 and 64) அத்திமல்லன் சம்புகுலப் பெருமாளான இராஜகம்பீரச் சம்புவராயன் என்பானும் மூன்றாம் இராஜராஜசோழனது ஆட்சியின் 20-ம் ஆண்டாகிய கி.பி.1236-ல் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான் என்று தெரிகிறது. இவன் எதிரிலி சோழச்சம்புவராயனது தம்பியாயிருத்தல் வேண்டுமென்று ஊகிக்கப்படுகிறது. இவ்விருவேந்தரும் ஒரேகாலத்தில் ஆட்சி புரிந்து வந்துள்ளார் என்பது பல கல்வெட்டுக்களால் நன்கறியக் கிடக்கின்றது. நமது இராஜகம்பீரச் சம்புவராயன் குன்றத்தூரை இராஜகம்பீர நல்லூர் என்னும் பெயருடன் நிலவுமாறு பங்களராயர்க்குக் காணியாகக் கி.பி.1236-ல் அளித்தான். இச்செய்தியை உணர்த்தும் கல்வெட்டொன்று வைகவூர்த் திருமலையிற் காணப்படு கின்றது. அதனை அடியில் குறிக்கின்றேன். வதிஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீஇராஜராஜ தேவருக்கு யாண்டு இருபதாவது முதல் ஜயங்கொண்ட சோழமண்டலத்துத் தமனூர் நாட்டு விரான்பாக்கத்து இலாலப் பெருமான் மகன் ஆண்டான்கள் பங்கள ராயர்க்குப் பல்குன்றக் கோட்டத்துப் பங்களநாட்டு நடுவில்.... க்குன்றத் தூரான ராஜகம்பீரநல்லூர் இவர்க்குக் காணியாகக் கீழ்நோக்கின கிணறும் மேனோக்கின மரமும் நாற்பாலெல்லையும் விற்றொற்றிப் பரிக்கிரயத்துக்கு உரித்தாவதாகக் கொடுத்தோம். அத்திமல்லன் சம்புகுலப் பெருமாளான ராஜகம்பீரச் சம்புவராயனேன். (S.I.I. Vol.I No.74) இக்கல்வெட்டால் இராஜகம்பீரச் சம்புவராயன் மூன்றாம் இராஜராஜ சோழனது ஆட்சிக்குட்பட்டிருந்த ஒரு குறுநில மன்னன் என்பதும், சம்புகுலப்பெருமாள் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவன் என்பதும் நன்கு விளங்குகின்றன. இராஜகம் பீரச்சதுர்வேதிமங்கலம் எனவும், சம்புகுலப் பெருமான் அகரம் எனவும் அழைக்கப்படும் ஊர்கள் இம்மன்னன் பெயரால் அழைக்கப்பெற்ற ஊர்கள் போலும். இராஜகம்பீர நல்லூரும் இராஜகம்பீரச் சதுர்வேதிமங்கலமும் வேறு ஊர்களாதல் உணர்க. இனிச் சம்புவராய மன்னர்களுள் இராஜகம்பீரச் சம்புவராயனே மிகவும் பெருமையுற்றவன். இவ்வேந்தன் காலத்தில் இவனது இராச்சியம் பெருகியதோடு இராஜகம்பீரவிராஜ்ஜியம் என்னும் பெயரையும் எய்தியது. இவன் படைவீட்டில் ஒரு மலைக்கோட்டையமைத்து அதனைத் தனக்கு உறைவிடமாகவுஞ் செய்துகொண்டான். கி.பி. 1258-ல் படைவீட்டில் வெட்டப் பெற்றுள்ள ஒரு கல்வெட்டு இவன் சோழர்களுக்குக் கப்பம் செலுத்தாமல் அரசுபுரிந்தான் என்று கூறுகின்றது. இதனால் இவன் காலத்தேதான் சம்புவராயர்கள் நெடுமுடி வேந்தராய் ஆட்சிபுரியும் பெருமையை அடைந்தனர் என்பது நன்கு வெளியாகின்றது. இவர்களது இராச்சியமும் தொண்டை மண்டலத்துப் படைவீட்டி ராஜ்யம் என்று புகழப் படும் சிறப்பையும் அடைந்தது. படைவீட்டினுள் அம்மையப் பேச்சுவரர் ஆலயம் எடுப்பித்து அதற்கு நிபந்தங்கள் விட்டவனும் இவ்வேந்த னேயாவன். இவனது தந்தையாகிய அம்மையப்பன் கண்ணுடைய பெருமானான விக்கிரமசோழச் சம்புவராயனது பெயரே இவ்வாலயத் திற்கு இடப்பட்டது போலும். சோழ மன்னர்களது ஆட்சிக் காலங்களில் எடுப்பிக்கப்பெற்ற இராஜராஜேச்சுரம், கங்கைகொண்ட சோழேச்சுரம், விக்கிரமசோழேச்சுரம் என்ற ஆலயங்கள் எய்தியுள்ள பெயர்களையும் ஆராய்ந்து நோக்குங்கால் இவ்வுண்மை நன்கு புலப்படும். இனி இவனுக்குப் பின்னர் அரசுரிமை எய்தியவன் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை. ஆனால் இவனுக்குப் பின்னர்ப்பட்டம் பெற்றவன் தனது சுயேச்சையை இழந்திருக்க வேண்டும் என்று தோன்று கிறது. இதற்கேற்ப, காஞ்சிபுரத்திலும் அதனைச் சூழ்ந்துள்ள சில இடங் களிலும் தெலுங்குநாட்டுச் சோழர்களது கல்வெட்டுக்களும் சேந்த மங்கலத்துப் பல்லவனாகிய கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுக்களும் அக்காலத்தில் காணப் படுகின்றன. எனவே, சம்புவராயர்களும் சிலகாலம் இவர்களுக்குத் திறை செலுத்தும் நிலையிலிருந்தனரோ என்று ஐயுற வேண்டியிருக் கின்றது. ஆயினும் கி.பி.1314-15-ல் வீரசோழச் சம்புவராயன், வீரசம்புவராயன் என்போரது கல்வெட்டுக்கள் சில இடங்களில் காணப்படுகின்றன, இன்னோர் சுயேச்சையுற்று வாழ்ந்து வந்தனர் என்று தெரிகிறது. அன்றியும் கி.பி. 1322-ல் சகலலோக சக்கிரவர்த்தி வென்று மண்கொண்ட சம்புவராயன் பட்டம் சூட்டப்பெற்று அரசாளத் தொடங்கினான். இவன் சக்கிரவர்த்தி என்ற பட்டம் பெற்றிருத் தலாலும் வென்றுமண் கொண்ட என்ற அடைமொழிகளோடு விளங்கு தலாலும் இவனே தெலுங்கு நாட்டுச் சோழர் முதலானோரைப் போரில் வென்று மீண்டும் சுயேச்சையுற்றுத் தனியரசு புரிந்தவனாதல் வேண்டும் என்பது நன்கு புலப்படுதல் காண்க. இவன் கி.பி. 1338 வரை ஆட்சிபுரிந்தான். இவன் காலத்தில் படைவீட்டு ராஜ்யம் மகோன்னத நிலையி லிருந்து இவனுக்குப் பிறவேந்தரெல்லாம் அஞ்சுவராயினர். விஜயநகர வேந்தர் களும் தமக்குத் தெற்கிலுள்ள சம்புவராயர் களைக் கண்டு அஞ்சி அவர் களை எவ்வாறயினும் தம் சிற்றரசர்களாக்கித் திறைசெலுத்தச் செய்ய வேண்டுமென்று காலங்கருதிக் கொண்டிருந்தனர். இன்னோரது முயற்சி வென்றுமண்கொண்ட சம்புவராயன் என்பானது ஆட்சியுள்ள வரையில் பயன்பட வில்லை. கி.பி. 1338-ல் அவ்வேந்தன் விண்ணுல கெய்தவே அவனது புதல்வன் இராஜநாராயண சம்புவராயன் முடி சூட்டப்பட்டான். இவன் நாட்டாட்சியை எய்திய பின்னர்ச் சகலலோக சக்கிரவர்த்தி ராஜநாராயண சம்புவராயன் என்று அழைக்கப் பெற்றான். இவன் கி.பி, 1339 முதல் 1366வரை ஆட்சிபுரிந்தான். இவனது கல்வெட்டுக்கள் காஞ்சி, மாமல்லபுரம், படைவீடு, வேலூர். திருப்புக்கொளி, போளூர்த்திருமலை முதலான இடங்களில் காணப்படுகின்றன. இவனும் தனது முன்னோர்கள் போலவே பல கோயில்களுக்கு நிபந்தங்கள் விட்டிருக்கின்றான். இவனது ஆட்சிக் காலத்தில் தான் விஜயநகர வேந்தனாகிய குமார கம்பண்ணன் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்தனன். இது கி.பி.1365-க்கு முன்னர் நிகழ்ந்தது. பெரும்படையுடன் தென்னாடு போந்த விஜயநகர வேந்தன் முதலில் படைவீட்டிராஜ்ஜியம் எனப்படும் இராஜகம்பீர விராஜ்ஜியத்தைத் தாக்கினான். தாக்கவே இராஜ நாராயண சம்புவராயனும் தன் பகைவனை எதிர்த்துப் போர்புரிந்தான், இறுதியில் விஜயநகர வேந்தன் வெற்றி யடைந்தமையின் சம்புவராயன் தன் நாட்டை இழந்தான். ஆயினும் குமார கம்பண்ணன் தான் கைப்பற்றிய நாட்டைத் திரும்ப அச்சம்புவராய மன்னனுக்கேயளித்து அவனைத் தனக்கு ஆண்டுதோறும் திறைசெலுத்தி வருமாறு கட்டளையிட்டு விட்டுப் பாண்டிநாடு நோக்கிச்சென்றான். பிறகு கி.பி.1366-ல் இராஜநாராயண சம்புவராயனும் இறந்தான். அவன் வழியில் தோன்றிய சம்புவராயர்களும் குறுநில மன்னராகி விஜயநகரத் தரசர் களுக்குக் கப்பஞ் செலுத்திவந்தனர். அன்னோர் பல ஆண்டுகள் அந்நிலையிலேயே இருந்துவந்தனர். பின்னர் அவர்களது ஆட்சியும் ஒழிந்தது. ஒழியவே அவர்களும் செல்வங் குன்றியவர்களாய்த் தாழ்ந்த நிலையை எய்தினர். வடஆற்காடு ஜில்லாவில் வேலூருக் கண்மை யிலுள்ள படைவீடு என்ற இடத்தில் இன்றும் அவர்களது வழியினர் வசிக்கின்றனர். படைவீடு என்னும் அவர்களது தலைமைநகரம் இப்போது படவேடு என்றழைக்கப்படுகிறது. அங்கு அழிந்துகிடக்கும் அரண்களையும் கோட்டையையும் அம்மையப்பேச்சுரர் ஆலயத்தையும் இன்றும் காணலாம் இனி, இரட்டைப்புலவர்களால் பாடப்பெற்ற கலம்பகம் கொண்டவனும் காஞ்சியைத் தலைமைநகராகக்கொண்டு அதனைச் சூழ்ந்துள்ள பகுதியை அரசாண்டவனும் காஞ்சியில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதருக்கு அரிய பெரிய திருப் பணிகள் பல புரிந்தவனுமாகிய ஏகாம்பரச் சம்புவராயன் என்பானும் அச்சம்புவராய மன்னர்களின் வழித்தோன்றல் களுள் ஒருவன் என்பது ஈண்டு அறிந்துகோடற் குரியதாகும்.  10.அறந்தாங்கி அரசு நம் தமிழகம் முற்காலத்தில் சேர சோழ பாண்டியராகிய மூன்று தமிழ் வேந்தராலும் அரசாளப்பெற்று வந்தது என்பதை யாவரும் அறிவர். இதனை, வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்னும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூற்றினாலும் இனிது உணரலாம். அப்பெரு வேந்தர்களைப் போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெரும் தானையர் என்று பிறிதோரிடத்து அவ்வாசிரியர் பாராட்டியுள்ளனர். இதனை நோக்கு மிடத்து, நம் தமிழகத்திற்கும் சேர சோழ பாண்டியர்க்கும் ஏற்பட்டிருந்த தொடர்பு மிகத் தொன்மை வாய்ந்தது என்பது தெள்ளிதின் விளங்கும். மூவேந்தரது ஆட்சிக்குப்பட்டிருந்த இந்நிலப்பரப்பில் சில குறுநில மன்னரும் அந்நாளில் இருந்தனர் என்பது சங்க நூல்களால் அறியப்படு கின்றது. ஆசிரியர் தொல்காப்பியனார் இவர்களை, மன்பெறு மரபின் ஏனோர் எனவும் குறித்துள்ளனர் இன்னோர், முடியுடை வேந்தர் மூவர்க்கும் உற்றுழி உதவிவந்த வர்கள்: அவர்களைப் போல் வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் ஆரமும் தேரும் வாளும் உடையவர்கள். கடைச்சங்க நாளில் இக்குறுநில மன்னர்கள் வேளிர் என்று வழங்கப்பெற்றனர். பறம்பு நாடு, மிழலைக் கூற்றம், முத்தூர்க் கூற்றம் , பொதியில் நாடு, ஆவிநன்குடி முதலியவற்றில் வாழ்ந்த குறுநில மன்னர் முற்காலத்தில் வேளிர் என்று வழங்கப் பெற்றமை, அகநானூறு புறநானூறு முதலான சங்க நூல்களால் அறியக்கிடக்கின்றது. இவர்கள் வேள் எனவும், அரசு எனவும், அரையர் எனவும், அந்நாளில் வழங்கப் பெற்று வந்தனர் என்பது பல கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.மண்டல மாக்களுந் தண்டத் தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும். அழுந்தூரும் நாங்கூரும், நாவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமும், கழாரும் முதலிய பதியிற்றோன்றி வேள் எனவும், அரசு எனவும் உரிமை யெய்தினோர்.1 என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியிருத்தலும் இதனை வலியுறுத்தல் காண்க. வழுத்தூர் அரசு, சூரைக்குடி அரசு, அறந்தாங்கி அரசு, சேந்தமங்கலத்தரசு, புல்வய லரசு என்போர் நம் தமிழகத்தில் முற்காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னர் ஆவர். இவர்களுள் அறந்தாங்கி அரசு என்று பெருமையுடன் முன்னர் வாழ்ந்து வந்த குறுநில மன்னர் வரலாறே ஈண்டு ஆராயப்படுவதாகும். தஞ்சாவூர் சில்லாவில் அறந்தாங்கி என்ற நகரம் ஒன்றுள்ளது. மாயூரத்திலிருந்து தெற்கே செல்லும் இருப்புப்பாதை இப்பொழுது இவ்வறந்தாங்கி நகரத்தில்தான் முடிவுறுகின்றது. இந்நகரைச் சூழ்ந்து பெரிய மதிலும் அகழியும் அழிவுற்றுக் கிடத்தலை இன்றுங்காணலாம். இஃது ஒரு காலத்தில் அரசர் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய திருவுடை நகராயிருந் திருத்தல் வேண்டும் என்பதை இவை நன்கு புலப் படுத்துகின்றன. இந்நகரிலிருந்து முன்னாளில் ஆட்சிபுரிந்தவர்களே அறந்தாங்கி அரசு என்ற பெயருடன் நிலவிய குறுநில மன்னர்கள். இவர்கள் தொண்டைமான் என்ற பட்டமுடையோர்; பல்லவர் மரபினர்; ஆளுடையார் கோயில் என்று இந்நாளில் வழங்கப்பெறுவதும், மணி வாசகப் பெருமானுக்குச் சிவபெருமான் செந்நெறி அறிவுறுத்தியதும் ஆகிய திருப்பெருந்துறையில் பெரிதும் ஈடுபாடுடையோர்; அங்கு எழுந் தருளியுள்ள இறைவனையே தம்குல தெய்வமாகக் கொண்டு வழிபட்டு வந்தோர், இச்செய்திகளுள் சிலவற்றைக் காஞ்சிபுர வராதீசுவரன் ஆளுடைய தம்பிரானார்சீபாத பக்தன் என்று இன்னோரது கல்வெட்டுக்கள் கூறுவதால் அறியலாம். அன்றியும், இவர்கள் திருப்பெருந்துறையில் பல அரிய திருப்பணிகள் புரிந்து நாள் வழிபாட்டிற்கும் பிறவற்றிற்கும் விட்டுள்ள நிபந்தங்களாலும் இதனை உணரலாம். கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு முடிய நம் தமிழகத்தின் பெரும் பகுதி பல்லவர் ஆட்சிக்குட் பட்டிருந்தது என்பது வரலாற்று ஆராய்ச்சியால் அறியப்பெற்றதாகும். முதல் ஆதித்தசோழன் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவர் களைப் போரில் வென்று சோழமண்டலத்தையும் தொண்டை மண்டலத்தையும் கைப் பற்றினான். பின்னர், பல்லவர்களுள் சிலர் சோழ மன்னர்க்குத் திறை செலுத்தும் குறுநில மன்னர் ஆயினர்; சிலர் அவர்கள்பால் அமைச்சர், படைத்தலைவர், திருமந்திர ஓலை முதலான அரசியல் அதிகாரிகளாகவும் வாழ்ந்து வந்தனர்; இங்ஙனம் வாழ்ந்துவந்த பல்லவ குலத் தலைவர்களுள் அறந்தாங்கித் தொண்டைமானும் ஒருவன் ஆவான். இத் தொண்டைமான் மரபினர் அறந்தாங்கி அரசு எனவும் வணங்காமுடித் தொண்டை மான் எனவும் அறந்தாங்கியில் புகழுடன் வாழ்ந்துவந்த செய்தி பல கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. இன்னோரது வரலாற்றைத் தொடர்பாக அறிந்து கோடற்குரிய சான்றுகள் இந்நாளில் கிடைத்தில. ஆயினும், கிடைத்துள்ள ஆதாரங் களைக் கொண்டு ஒருவாறு ஆராய்ந்து முடிவு காண்பாம். புதுக்கோட்டைக்கு வடகிழக்கிலுள்ள வேசிங்கி நாட்டில் வளத்து வாழவிட்ட பெருமாள் தொண்டைமான் என்பவன் கி.பி.1201 இல் இருந்தனன் என்று தெரிகிறது.இவனே, அறந்தாங்கித் தொண்டைமான் களுள் மிகத் தொன்மை வாய்ந்தவன். எனவே, கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இக்குடியினர் தம் ஆட்சியை அங்கு நிறுவி யிருத்தல் வேண்டும். இவனுக்குப் பின்னர் ஆட்சிபுரிந்தவர் யாவர் என்பது புலப்படவில்லை. கி.பி.1426 முதல் 1443 வரையில் குலசேகர தொண்டை மானும். கி.பி.1443 இல் சூரியதேவர் சுந்தரபாண்டியத் தொண்டை மானும் கி.பி.1444 முதல் 1453 வரையில் அழகிய மணவாளப் பெருமாள் தொண்டைமானும் அரசாண்டனர். இவர்களைப் பற்றிய வரலாறு தெரியவில்லை. இவர்கள் மூவரும் உடன்பிறந்தவர்களாக இருத்தல் கூடும் என்று கல்வெட்டுத் துறை (இலாக்கா) ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அழகிய மணவாளப் பெருமாள் தொண்டைமானுக்கு இலக்கணத் தண்ணாயகத் தொண்டை மான் என்ற புதல்வன் ஒருவன் இருந்தனன். 1.இவனுக்குப் பின்னர்த் திருநெல்வேலிப் பெருமாள் தொண்டை மானும் 2 ஏகப்பெருமாள் தொண்டைமானும் ஆட்சி புரிந்தனர். இவர்களுள் ஏகப்பெருமாள் தொண்டைமான் கி.பி.1481 முதல் 1499 வரையில் அரசாண்டான். இவன் கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை நாட்டில் பழங்கரை, வாளவர் மாணிக்கம், கோவிலூர் முதலான ஊர்களில் காணப்படுகின்றன. இவ்வேந்தனுக்கு மூன்று புதல்வர் இருந்தனர். அன்னோர் தீராத வினை தீர்த்தான் தொண்டைமான் 3. ஆவுடைநயினார் தொண்டைமான் 4. பொன்னம்பல நாத தொண்டைமான் என்போர். இவர்களுள், பொன்னம்பலநாத தொண்டைமான் கி.பி. 1514 முதல்1569 வரை ஆட்சிபுரிந்தான். இவன் கல்வெட்டுக்கள் புதுக் கோட்டை நாட்டிலும் இராமநாதபுரம் சில்லாவிலும் காணப் படுகின்றன. எனவே, இவனது நாடு மிகப்பெருகி இக்காலத்திலுள்ள புதுக்கோட்டை நாட்டின் ஒரு பகுதியையும், இராம நாதபுரம் சில்லாவின் ஒரு பகுதியையும், தஞ்சாவூர் சில்லா விலுள்ள அறந்தாங்கித் தாலூகாவையும் தன்னகத்து கொண்டு விளங்கிற்று என்று கூறலாம். இவன் சிறந்த சிவ பத்தியுடையவன். இவன் வாழ்ந்து வந்த நாளில் தண் பெயரால் அலை விலஞ்சாதரன் சந்தி, தொண்டைமான் சந்தி என்று கட்டளைகள் அமைத்து அவற்றிற்கு நிபந்தங்களும் விட்டுள்ளான். இவன் ஈழ மண்டலத்தின்மீது படையெடுத்துச் சென்று, அதனை வென்று திறைகொண்ட வீரச் செயல் பாராட்டத்தக்கது. இவ்வரிய செயலையும் இவன் ஏழு நாட்களில் செய்து முடித்தனன் என்பது ஈண்டு அறியத்தக்க தொன்றாகும். ஈழநாட்டு மன்னன் விசயநகர வேந்தனாகிய கிருஷ்ண தேவராயனுக்குத் திறை செலுத்தி வந்தான். அவன் ஒரு முறை அதனைக் குறித்த காலத்திற் செலுத்தாமை பற்றி, அவ்வேந்தற் காகப் பொன்னம் பலநாத தொண்டைமான் இலங்கைமீது படையெடுத்துச் சென்று, அதனை ஏழு நாட்களில் வென்றனன் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சிபுரிந்துள்ள மையின், இவனது வாழ்நாளில் பல நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அவற்றை யெல்லாம் இந்நாளில் அறிய இயலவில்லை. இவன் வேள் பாரியின் பறம்பு1 நாட்டிலுள்ள கொடுங் குன்றமுடைய சிவபெருமானுக்குச் சிறுகாலைச் சந்திக்கும், தன் பேரால் அமைத்த தொண்டைமான் சந்திக்கும் திருநாமத்துக் காணியாக மேலூர் என்ற ஊரை அளித்தசெய்தியை உணர்த்தும் கல்வெட்டு ஒன்று உளது. அதனை இக்கட்டுரையின் இறுதியிற் காணலாம்.. பொன்னம்பலநாத தொண்டைமான் புதல்வன் வரவினோத தொண்டைமான் என்பவன். இவனுக்குப் பிறகு ஆண்டியப்பன் அச்சுத நாயகத் தொண்டைமான் கி.பி.1577இல் அரசாண்டான். இத்தொண்டைமான்களின் வழியினர் பதினெட்டாம் நூற்றாண்டிலும் அறந்தாங்கியில் ஆட்சிபுரிந்தனர் என்று தெரிகிறது. இரகுநாத வணங்காமுடித் தொண்டைமான் மகனான அருணாசல வணங்காமுடித் தொண்டைமான் என்பான் கி.பி.1713இல் திருப் பெருந்துறையில் எழுந் தருளியுள்ள சிவபெருமானுக்குச் சில ஊர்கள் இறையிலியாக அளித்த செய்தி ஒரு செப்பேட்டால் அறியப்படுகிறது.2 . இங்ஙனம் சிறப்புடன் ஆண்டுவந்த இன்னோர் தம் நாட்டையும் அரசுரிமையையும் எப்போது எவ்வாறு இழந்தனர் என்பது புலப்பட வில்லை. தலைநகராகிய அறந்தாங்கியும் தன் பெருமையும் வனப்பும் இழந்து, தனது பழைய நிலையை ஒரு சிறிது உணர்த்தும் இடிந்த மதிலும் அழிந்த அகழியும் உடைய சிற்றூராக இந்நாளில் உளது. கால வேறு பாட்டால் உண்டாகும் மாறுதல்களுக்கு உட்படாதது இவ்வுலகில் யாதுளது? பிரான்மலையிலுள்ள பொன்னம்பலநாத தொண்டைமானது கல்வெட்டு (1) வதிஸ்ரீ ஸ்ரீமான் மஹா மண்டலேசுவரன் அரியராய விபாடன் பாஷைக்குத் தப்புவராயிர கண்டன் கண்டனாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் பூர்வ (2) தெட்சிண பச்சிம உத்தர சமுத்திராதிபதி எம்மண்டலமும் கொண்டு எழுந்தருளிய ஸ்ரீகிருஷ்ண தேவ மகாராயர் பிருதுவிராச்சியம் பண்ணி அருளாநின்ற (3) சகாப்தம் 1440 இதன் மேல் வெகுதான்ய வருஷம் உத்தராயணத்துமிதுன நாயற்று அபரப்பட்சத்து அமாவாசியையும் மங்கலவாரமும் விருத்தி (4) யோகமும் பெற்ற இற்றை நாள் சூரியகிரண புண்ணிய காலத்து திருமலை நாட்டு திருக்கொடுங் குன்றத்து நாயினார் நல்ல மங்கைபாகற்கு அறந்தாங்கி அரசு அச்சமறி (5)யாத பெருமாள் முகிலின் கீழ்த்திரியும் இளவன்னியர் மிசுரகண்டன் ஆட்டுக்கு ஆணை வழங்கும் பெருமாள் ஏழுநாளையில் ஈழந் திறைகொண்ட பெருமா (6)ள் கோன் பாத..... யாத பெருமாள் காஞ்சிபுர வராதீசுவரான் ஆவுடைய தம்பிரானார் ஸ்ரீபாத பக்தன் ஏகப்பெருமாள் தொண்டைமானார் புத்திரன் (7) பொன்னம் பலநாத தொண்டைமானார் நாயினார் நல்ல மங்கைபாகற்கு உபையமாகக் கட்டின சிறு காலைச் சந்திக்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்டு (8) வேண்டும் நித்தம் நிமந்தங் களுக்கு நம் பேரால் கட்டின பொன்னம்பலநாத தொண்டைமானார் சந்தியாக அமுது செய்யும்படிக்குக்கொ (9)டுத்த இந்நாயினார்...... தேவ தாந........... நாமத்துக் காணியாக சோழபாண்டிய வளநாட்டு மேலூர்ப் பெரு நான்கெல்லைக்குட்பட்ட (10) தும் சாஉறிரண் யோதகதர பூர்வமாக திருநாமத்துக் காணியாக சந்திராரிதத்தவற் செல்லக் குடுத்த படியாலே இதுக்குள் உள்பட்ட (11) நிதிநிக்ஷேப ஜலபாஷாண கூப தடாகாதியும் தம்பிரானாற்கே உரித்தாகக் கடவதாகவும். இவ்வூர்க்கு வரும் கடமைகா (12)ணிக்கை வேண்டுகோள் விநியோகம் மற்றும் எப்பேர்ப்பட்ட வரி உபாதியும் கழித்துக் குடுத்தபடியாலே சந்திராதித்யவ (13)ற் செல்ல சர்வ மான்யமாக திருநாமத்துக் காணியாக அநுபவித்துக் கொள்ளவும். கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொ(14)ண்டு திருநாமத்துக் காணியாக சந்திராதித்ய வற்செல்ல அநுபவித்துக் கொள்ளவும். இந்த தன்மத்துக்கு அகிதம் பண்ணி(15)னவன் கங்கைக் கரையில் கபிலையும் பிராமண னையும் மாதா பிதாவையும் குருவையும் கொன்ற தோஷத்திலேபோ (16)கக் கடவனாகவும். இந்த நேரிலே சருவமானியமாகப் பற்றி அநுபவித்துக் கொள்ளவும். அறந் (17)தாங்கி கணக்கு அடியார்க்கு நல்லான் கற்பூரக் காலிங்கராயன் எழுத்து.1 11. திருப்புறம்பயத்துக் கல்வெட்டுக்கள் (1) காலம்: பராந்தகசோழதேவரது நான்காம் ஆண்டு இடம்:கர்ப்பகிரகத்தின்தென்புறம். 1. ஸ்வஸ்திஸ்ரீ பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வம்மற்கு யாண்டுநான்காவது வடகரை அண்டாட்டுக்கூற்றத்து நீங்கியதேவதாநம் திருப்புறம்பியத்து திரும்புறம்பியமுடைய மகாதேவற்கு இருமுடி சோழவணுக்கர் செய்வித்த இவ்வூர் திருநந்தவானமண்டலங் (2)காப்பார்க்கு நந்தவாந புறமாக இன்நம்பர்நாட்டு பிரமதேயம் வாநவன் மகாதேவி சதுவேதி மங்கலத்து மத்யஸ்தந்நூற்றெண்மண் வலியந்னான திருப்புறம் சோழவணுக்க பெருங்காவிதி.......... ராஜகேசரிவதிக்கு (3)கிழக்கு வாநவன் மகாதேவி வாய்க்காலுக்கு வடக்குமுதல் கண்ணாற்று முதலாவது ரத்துகாலே அரைமாவரைய்க்காணி யுமில்வதிக்குக் கிழக்கு தாமத்தவாய்க்காலுக்கு வடக்குஅரைமா வரைய்க்காணி முந்திரி.....லம் அறுமாக்காணி முந்திரிகை நிலமும் விலைப் பொருள் கழஞ்சில் லொடக்க (4)லந்நூற்றுக் கழஞ்சும் இவ்விரும(5) டிச்சோழ வணுக்கரிடை அறக்கொண்டு இத் (6) திருப்புறம்பியத்துத்திரு நந்தவானம்(7) மண்டலங் காப்பானான திருநந்தவானம் (8)புறமாக மாதலி குஞ்சரமல்லன் இத் (9) திருக்கற்றளி பிக்சர் கண்காணியொடும் இச்(10) செய்யில்.......... இவன் சந்திரதிச்ச (11) வல்இத் திருநந்தவாநத்துக்கு அளிப் பார்களாக (12)வும் இந்நிலம் கோநீக்கி இவன் கண்காணிச்சு சந்திராதிதத்தவல் காத்தூட்டப் (13)பெறுவதாகவும் இப்பரிசு இந்நிலங் கொண்டு திருநந்தவாநப் புறம் செய்து (14) குடுத் தோம் இவ்விருமடி சோழபெருபடை படையோம் இவ்வானம் பன் மேகஸ்வர (15)iக்ஷ இவ்வநங் காப்பார் ஸ்ரீ பாதம் எங்கள் தலைமேல் - நன்றாக. (2) காலம்:- முதல் குலோத்துங்க சோழதேவரது ஐ ஆம் ஆண்டு. இடம்:- கர்ப்பகிரகத்தின் தென்புறம் கீழ்ப்பாகம் ஐ ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு - வது உலகுய்ய வந்த சோழவளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து திருப்புறம்பியமுடைய மஹதே......... பங்குனித் திருநாளும் திருவேட்டையும் திருத்தாமம் பிரசாதித்தும் அமுதுசெய் ஐஐ தருளி அடியாற்கு வழக்கத்துக்கும் திருவமுதரிசிருள கலனே நாழி உருக்கி நெல் இரு தூணி குறுமணியும் கறியமுது நெய்யமுது தயிரமுதுக்கும் உள குறுணிநாழி........ கும் திருவமுதுக்குமாக ஸ்ரீ பராந்தக சதுர்வேதி மங்கலத்துத் தென்பிடாகை ஐஐஐ திருவெள்ளறை நல்லூர் வெள்ளாளர் அரிவாள் தாயனும் சிறுத் தொண்டரும் உள்ளிட்டஊரார் திருத்து கொல்லையுட்பட நிலம் நாலுமாவுக்கும் கொல்லை..... காக உட்பட இறுக்கு நெல் கலனேம் இறுத்து மிகுதியால் உள்ளித்......ஐஏ..... நிவந்தஞ் செலுத்தவேணும் ஸ்ரீ ஜெயங்கொண்ட சோழ புரத்திருக்க வாணாதிராஜர் விண்ணப்பஞ் செய்ய இப்பரிசு இத்திநம் செய்கைக்குக் கல்லிலும் செம்பிலும் வெட்டுக என்று திருவாய்மொழிந்தருள திருமுகப்படி கல்லுவெட்டி.... (3) காலம்:-முதல் இராஜராஜசோழனது பத்தாம் ஆண்டு இடம்:-கர்ப்பக் கிரகத்தின் தென்புறம். 1. வஸ்ரீதிருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக்கல மறுத்தருளி கங்கை பாடியும் நுளம்பப்பாடியும் தடிகைப்பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமுந்திண்டிறல் வென்றித் தன் (2)டாற்கொண்ட தன்னெழில் வளரூழியில் யெல்லா யாண்டுந் தொழுதகை விளங்கும் யாண்டே செழியரைத்தேசு கொள்கோ இராஜகேசரி வம்மற்கு யாண்டு பத்தாவது வடகரை அண்டாட்டுக் கூற்றத்து திருப்புறம்பியத் தாடியா னாகிற(3) கூத்தபெருமாளுடைய நம்பிராட்டியார் திருப்பள்ளிக் கட்டிலுக்கு இவ்வூர் வளஞ்சியர் வைத்த திருநொந்தா விளக்கு இவைபற்றுக்கு பழையவாநவன்மாதேவி நிலம் வானவன் மாதேவி நதிக்கு கிழக்கு ராஜேந்திரிவாய்க்காலுக்கு மேற்குநின்று (4)சம்மதித்து கையோலை செய்துகொடுத்தோம். தேவகன்மி களேம் இவை கோயில் கணக்கு புறம்பியம் உடையான் பிரளயன் புறம்பியன் எழுத்து. இது மஹேசுரசாட்சி. (4) காலம்:- முதல் இராஜராஜசோழனது பத்தாம் ஆண்டு இடம்:-கர்ப்பக் கிரகத்தின் தென்புறம். வதிஸ்ரீ கோவிராஜகேசரிவம்மற்கு யாண்டு பத்தாவது அண்டாட்டுக் கூற்றத்து நீங்கிய தேவதானம் திருப்புறம்பியத்து பட்டாலகற்குப் பல்லவப் பேரரரையன் வீரசிகாமணிப் பல்லவரையன் சந்திராதித்தவல்லெரிக்க வைத்த நொந்தாவிளக்கு ஒன்று நிக்கு நிசதம் உழக்கு நெய்க்குவைத்த சாவா மூவாப் பேராடு தொண்ணூறும் பன்மா ஹேவரரக்ஷை. (5) காலம்:- முதல் இராஜராஜசோழனது ஏழாம் ஆண்டு இடம்:- முன்னர் வரைந்துள்ள கல்வெட்டிற்குக் கீழ். வதிஸ்ரீ கோவிராஜகேசரிவம்மற்கு யாண்டு எஆவது திருப்புறம்பிய பட்டாலகற்கு இருமுடிசோழ அணுக்கரில் ராசமாநாயகன் இத்தேவற்கு சந்திராதித்தவல் எரிக்க வைத்த திருநொந்தா விளக்கு ஒன்றுனிக்கு னிசதம் உழக்கு நெய்யாக வைத்த ஆடு தொண்ணுறு. (6) காலம்:-முதல் இராஜராஜசோழனது ஐந்தாம் ஆண்டு இடம்:-கர்ப்பக் கிரகத்தின் தென்புறம். (1)வதிஸ்ரீ கோவிராஜகேசரிவம்மற்கு யாண்டு ரு ஆவது வடகரை அண்டாட்டுக் கூற்றத்து நின்று நீங்கிய தேவ தானந் திருப்புறம்பியம் வானவன் மூவேந்த வேளான் ஆராதித்த புறம்பிய முடைய (2) மஹா தேவர் பண்டாரத்து இராஜவதிக் யாண்டு உ ஆவது முதல் ரு ஆவது வரை செலவு நீக்கி உடலாயீந்த பொன்னில் இம்மாஹா தேவர்க்கு சந்திராதித் தவல் சாத்தியருள யிட்டப்பட்ட மூன்றினாற் பொன்னூற்றைம்பதிற் (3) கழஞ்சும் பொற்பூ+நிறை ஐங்கழசும் இதிற் சந்திராதித்தவற் சாத்தவும் தண்ணீரமுது செய்ய இட்ட வெள்ளி வட்டில்+ நிறை நாற்பத்து முக்கழஞ்சேய் மூன்று மஞ்சாடியு மரைமாவுமாக இவை யித்தனையும் மாஹேவர ரக்ஷை. (7) காலம்:- முதல் இராஜராஜசோழனது இருபத்தைந்தாம் ஆண்டு. இடம்:- கர்ப்பக் கிரகத்தின் மேற்புறம். (1) வதிஸ்ரீ கோவிராஜகேசரிவம்மரான (2) ஸ்ரீராஜ ராஜ தேவர்க்கு யாண்டு உ ரு(3) ஆவது இராஜேந்திர சிங்கவள நாட்டு அண் (4) டாட்டுக் கூற்றத்து நின்று நீங்கிய தேவதாந(5) ந்திருப்புறம்பியத்து திருப்புறம்பிய முடைய மஹாதே (6) வர்க்கு இத்தேவர் தேவதானம் பிரம்பியன் காசு......... இருக்கும் வெள் (7)ளாளன்பொருந பாடியுடையான் அரணிதிமண்ணியக முடையான் (8)ஒழியாப்பகை பசுபதி வைத்த திருநொந்தா விளக்கு+ஒன்று இதில் முன்பு (9)இவன் பக்கல் காசுகொண்டு இவ்வூர் ஸ்ரீ கோயிலுடையான் மாறன்முன் (10)னூற்றுவபட்டன் எரிக்கக்கடவ விளக்கு அரையும் (11) இவன் மக்கள் பக்கல் காசு கொண்டு இவ்வூர் ஸ்ரீகோயி (12)லுடையார்கள் எரிக்கக் கடவ விளக்கு அரையும் ஆக விளக்கு ஒன்று - பஞ்சு போசு... (8) காலம்:- முதல் இராஜராஜ சோழனது பதினேழாம் ஆண்டு, இடம்:- கர்ப்பக் கிரகத்தின் தென்புறம். (1) வதிஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியும் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர் சாலை கலமறுத்தருளி கங்கை பாடியும் நுளம்பபாடியும்தடிகைவழியும் குடமலைநாடும் கொல்லமும் கலிங்கமும் திண்டிறல் வென்றி (2) செழுயனைத் தேசுகொள் கோவி ராஜராஜ கேசரிவம்மற்கு யாண்டு எஆவது வடகரை அண்டாட்டுக் கூற்றத்து நின்று நீங்கிய தேவதாநந் திருப்புறம் பியமுடைய மஹா தேவற்கு மல்லிவைத்த நொந்தா விளக்குக்கு கோயில் வெட்டிச்சு அரையும் படி யாப்பில் வெட்டிச்சு அ.... (3) மாக விளக்கு + மன்றாடி சொற்படி கண்ணன் எழுத்து இது...  12. கோவிந்த புத்தூரிலுள்ள திருவிசயமங்கைக் கல்வெட்டுக்கள் கோவந்த புத்தூர் என்பது திருச்சிராப்பள்ளி சில்லா உடையார் பாளையம் தாலுக்காவிலுள்ள ஒரு சிவத்தலமாகும். இது கும்பகோணத் திற்கு வடமேற்கில் ஐந்துமைல் தூரத்திலுள்ள திருப்புறம்பயத்திற்கு வடமேற்கே மூன்றுமைல் தூரத்தில் கொள்ளிடப்பேராற்றின் வட கரையில் இருக்கின்றது. இவ்வூரி லுள்ள சிவாலயம் திருவிசயமங்கை என்னும் பெயருடையதாகும். இது சைவசமயாசாரியராகிய திருஞான சம்பந்தராலும் திருநாவுக் கரசராலும் பாடப்பெற்ற பெருமையும் பழமையும் வாய்ந்தது: பாண்டுவின் மகனாகிய பார்த்தனால் பூசிக்கப் பெற்றமையின் இஃது இப்பெயரெய்திற்று என்பது பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து வேண்டு நல் வரங்கொள் விசையமங்கை ஆண்ட வன்னடியே நினைந் தாசையாற்காண்ட லேகருத்தாகி யிருப்பனே என்னும் ஆளுடைய அரசினது திருப்பாடலால் நன்குபுலப்படுகின்றது கோவந்தபுத்தூர் என்பது இக்காலத்தில் கோவந்த புத்தூர் என்று வழங்கு கின்றது. அத்தலத்தில் கோ வந்து பூசித்த காரணம் பற்றி அஃது அப்பெயர் எய்தியது போலும். இவ்வரலாறு அக்கோயிலின் திருச்சுற்று மாளிகையில் அமைக்கப்பெற்றுள்ள சுதைப்படிமங்களால் விளங்கு கின்றது. அன்றியும், கொள்ளிடக் கரைக் கோவந்த புத்தூரில் வெள் விடைக் கருள்செய் விசயமங்கை - உள்ளிடத்துறை கின்றவுருத்திரன் கிள்ளி டத்தலை யற்றத யனுக்கே என்னும் தேவாரப்பாடலும் ஈண்டு ஆராய்தற்குரிய தாகும். கோவந்த புத்தூரும் அவ்வூரி லுள்ள சிவாலயமாகிய திரு விசயமங்கையும் வெவ்வேறு தலங்கள் என்றும் அவற்றுள் கோவந்தபுத்தூர் வைப்புத்தலம் என்றும் திருவிசயமங்கை பாடல் பெற்றதலம் என்றும் கருதிவந்தனர். கோவந்தபுத்தூரில் எழுந் தருளியுள்ள சிவபெருமானை வணங்கும் பொருட்டு ஒரு சிவராத்திரியில் அவ்வூர்க்குச் சென்றிருந்தேன். அப்போது அங்குள்ள திருக்கோயில் பல கல்வெட்டுக்கள் நிறைந்த பழைமை வாய்ந்த கற்றளியாகக் காணப்பட்டது. அக்கல்வெட்டுக்களுள் இரண்டைப் படித்துப் பார்த்தபோது அத்திருக்கோயில் விசயமங்கலம், விசய மங்கை என்ற பெயருடைய தென்பது இனிது வெளியாயிற்று. எனவே கோவிந்த புத்தூரிலுள்ள அத்திருக்கோயில் திரு விசயமங்கை என்னும் பெயருடைய தென்பது நன்குணரப்பட்டது. பிறகு அத்தலத்திற்குரிய தேவாரப் பதிகங் களையும் பெரிய புராணத்தையும் ஆராய்ந்தபோது கல்வெட்டுக்கள் உணர்த்திய அவ்வரியசெய்தி அவற்றால் பெரிதும் உறுதியெய்திற்று. பின்னர் இத்திருக்கோயிலிலுள்ள கல்வெட்டுக்களை எழுதிவந்து வெளி யிடவேண்டும் என்ற விருப்பத்துடன் காலங் கருதிக் கொண்டிருந்தேன். சென்ற கோடை விடுமுறையில் சில நண்பர்களுடன் அவ்வூர்க்குச் சென்று ஒரு நாள்முழுவதும் தங்கிச் சில கல்வெட்டுக்களை எழுதி வந்தேன். வரலாற்று ஆராய்ச்சியாளர்க்குப் பயன்படும் என்று கருதி அவற்றை இதுபோது வெளியிடலானேன். I இடம்:- திருவிமானத்தின் மேற்புறம் காலம்:- மதுராந்தக சோழனது 13ஆம் ஆண்டு (1) வதிஸ்ரீ கோப்பரகேசரிபந்மற்குயாண்டு வது வடகரை ப்ர்மதேயம் பெ (2)ரிய ஸ்ரீவானவன் மாதேவிச் சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீவிஜய மங்கலதே (3) வதற்கு இஸ்ரீ விமானம் கல்லால் எழுந் தருளுவிச்சேன் ஸ்ரீ உத்தமசோழ தேவர் பெருந் (4) திறத்து குவளாலம் உடையான் அம்பலவன் பழுவூர் நக்கனானவிக்கிரம சோழ (5) ஸ்ரீமாராயனேன் இஸ்ரீவிஜய மங்கலத்து மஹாதேவற்கு:- II இடம்:-திருவிமானத்தின் மேற்புறம் காலம்:- மதுராந்தகசோழனது 13ஆம் ஆண்டு (1) கோப்பரகேசரிவற்மற்கு யாண்டு வது இத்திருக்கற்றளி எடுப்பித் (2) தகுவளாலமுடையான் அம்பலவன்பழுவூர் நக்கனான விக்கிரம சோழமாரா (3) யர் அகமுடையாள் அபராதி தன் செய்யவாய் மணி சந்திரா தித்தவன் வைத்த நொந் (4) தா விளக்கு ஒன்றுக்கு நிசத(ம்) உழக்கு நெய்யாக வைத்த ஆடு தொண்ணுற்று ஆறு. இவை சாவா மூவா - பன்மாகேசு ரட்சை.. III இடம்:- திருவிமானத்தின் மேற்புறம். காலம்:- மதுராந்தகசோழனது 13ஆம் ஆண்டு (1) கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு வது இத்திருக்கற்றளி எடுப் (2)பித்த குவளாலமுடையான் அம்பலவன் பழுவூர் நக்கன் ஆன விக்கிரம சோழ மாராயர் (3) அகமுடையாள் சிங்கபன்மன் கஞ்சி அக்கன்வைத்த நொந்த விளக்கு ஒன்றுக்கு நிசதமுழக் (4) குநெய் (5) யெரிக்கவை (60த்தசாவாமு (7)வாப்பேராடு (8) தொண் (9) ணுற்றுஆ (10) றுஇவை ப(11)ன்மாகேசுர (12) ரக்ஷை. IV இடம்:- திருவிமானத்தின் தென்புறம். காலம்:- மதுராந்தகசோழனது 10ஆம் ஆண்டு (1)வதி ஸ்ரீகோப்பரகேசரிவர்மற்கு யாண்டு வதுவட கரை (2)பிர்மதேயம் பெரிய ஸ்ரீவானவன் மாகதேவிச் சதுர்வேதிமங் (3)கலத்து ஸ்ரீ விஜயமங்கலத்து மஹாதேவற்கு இத்திரு (4)க்கற்றளி செய்வித்த அம்பலவன் பழுவூரனான ஸ்ரீவிக்கிர (5) மசோழமாராயன் சந்திராதித்தவல் நந்தாவிளக்கு ஒன் (6) றினுக்கு வைத்த ஆடு தொண்ணூற்றாறு அண்டாட் (7) டு மழவர் ஸ்ரீவிஜயமங்கலத்து மகாதேவர்க்கும் (8)சந்திராதித்த வல்நொந்தா விளக்கிரண்டுக்குக் கொடுத்த பலக்கிரண்டு. இவை பன்மாகேசுரரட்சை. V இடம்:- திருவிமானத்தின் தென்புறம். காலம்:- மதுராந்தகசோழனது 10 ஆம் ஆண்டு (1)வதி ஸ்ரீகோப்பரகேசரி பன்மற்கு யாண்டு வது வடகரைப் பிர்மதேயம் பெரிய வானவன் மகாதேவிச் சதுர் (2)வேதிமங்கலத்து ஸ்ரீவிஜயமங்கலத்து மகாதேவற்கு சந்திராதித் தவல் நந்தாவிளக்குக்கு அடிகள் பழுவே(3) ட்டரையர் மறவன் கண்டனார் கன்மி குன்றக் கூற்றத்து ஆரணி நல்லூருடைய மடைப்பெருமை சுவாமியான குன்ற நாட்டு (4) கண்டப் பெருந்தீவன் வைத்த ஆடு தொண்ணுறும் பன்மாகேசுரரட்சை. VI இடம்:- திருவிமானத்தின் வடபுறமும் மேற்புறம் காலம் :- மதுராந்தகசோழனது 14 ஆம் ஆண்டு. (1) கோப்பரகேசரிவர்மற்கு யாண்டு வது உடையா (2) ர் பெருந்திறத்து குவளாலமுடையான் அம்பலவன் பழுவூர் (3) நக்கனான விக்கிரமசோழ மஹாராஜநேன் வடகரை பிர்மதேய (4) ம்பெரிய ஸ்ரீவானவன் மகாதேவிச் சதுர்வேதி மங்கலத்து விஜயமங்கலத் (5) துமஹாதேவர் ஸ்ரீவிமானம் கல்லால் எழுந்தருளுவித்து இத்தேவர்க்குத் (6) திருவமுதுக்கும் திருவிளக்குக்கும் ஸ்ரீபலிக்கும் திருமெய்ப் பூச்சுக்கும் திருப்பூசை (7) க்கும் திருநன்தவாநபுறத்துக்கும் திருவிழாவுக்கும் சிரவணங் களுக்கும் மற்றும் (8) இத்தேவற்குவேண்டும் ஆராதினைகள் எப்பேர்ப்பட்டனவைச் சுக்கு (9) மாக னான் கொடுத்த ஊராவது இப்பெரிய ஸ்ரீவாநவன் மஹாதேவி சதுர்வேதிம (10) ங்கலத்து வடபிடாகை நெடுவாயிலும் (11) இது உட்படும் ஊர்த்தாமரை னல் (12) ஊரும் திருச்சே நிவலமும் மரக்குலக்கு (13) றிச்சியும் உள்பட்ட இந்நெடுவாயில் வளை (14) வில் சுற்று முற்றும் இவ்வூர் நிலமும் புன் (15) செயும் மென்செயும் மேநோக்கின மரமும் கீழ் (16) னோக்கின கிணறும் குளமும் கொட்டகமும் புற்றுந் தெற்றியும் ம (17) ற்றும் உடும்போடி ஆமை தவழ்நிலத்து எப்பேர்ப்பட்ட (18) வும் இவ்வூர் இலைக்கலம் தறிப்புடைவையும் கண் (19) ணாலக்காணமும் கொற் பாட்டமும் உலையும் உலைப்பாட்டமும் (20) உள்பட இவ்வூர் வளையில் சுற்றுமுற்றும் இப்பெரிய ஸ்ரீவானவன் (21) மஹாதேவிச் சதுர்வேதி மங்கலத்து பெருங்குறிப் பெருமக்கள் பக்கல் விலை (22) கொண்டு உடையேனா இம்மகா சபையார்க்கே எழுநூறு காசுகுடு (23) த்து இறை இழிச்சி இப்பரிசு இறையிலியாக நான் உடையேனாம் இரு (24) ந்த இந்நெடுவாயில் முற்றும் இஸ்ரீவிஜயமங்கலத்து மகாதேவர்க்குமு (25) ன் சாட்டப்பட்ட எப்பேர்பட்ட திருவாராதினைகளுக்கும் போகமாகக் கொடுத்தேன் (26) குவளாலமுடையான் அம்பலவன் பழுவூர் நக்கனான விக்கிரம சோழ மஹா (27) ராஜனேன். இவை பன்மாகேசுரரட்சை அறம்மறவற்க அறமல்லது துணையில்லை (28) இவர் சொல்ல எழுதினான் இவ்வூர் மகா... ந்நி... வானவன் மாதேவி பெருங்கா (29) விதியேன் இவை என்னெழுத்து. (1) இந்நெடுவாயிலும் நெடுவாயில் சுற்றின படாகை (2) களும் இத்தேவற்கு இறுக்கக்கடவ இறையிலி கோயிற்கல் ஊர்கால் பழுவூர் நக்கனால் (3) திருமுற்றத்து அளக்கக் கடவநெல்லு... (4) அட்டக் கடவ நெல்லு ஆயிரக்கலம் முன்துணைக்கழஞ்சாகவைத்த பொன்காசு நிறைகல்லால் (5) பொன் நூற்றுக்கழஞ்சும் தறிப்புடைவை ஒன்று கால்பொன் பெறுவன புடைவை பன்னிரண்டும் (6) நெய் எண்ணெய் முக்கலம் கொல்லர் உலைப்பாட்டம் இரும்பு ஆயிரப்பலம் நெடுவாயில் புறத்திற்கு நிபந்தஞ்செய்தபடி சிவயோகிப் பிராமணர் ஐம்பதின்மரும் ஐம்பதின்மருக்கு ஒருவனுக்கு (7) அரிசி யிருநாழியாக இரு நாழிக்கு நெல்லு ஐந்நாழியாக ஐம்பதின்மருக்கு நெல்லு இரு கலனே எழுகுறுணி இருநாழி (8) யுமாக நெய்முந்நாழிஆழக்குக்கு நெய்நாழிக்கு நெல்லு தூணியாக நெய் முந்நாழி ஆழாக்குக்கு நிசதம் நெல்லு... (9) நாழியும் கறிக்கு நெல்லு தூணியும் புளிங்கறியும் அடுவார்க்கு நெல்லு குறுணியும் அட்டி (எஞ்சியவை உதிர்ந்து போய்ப் படிக்க முடியாத நிலையி லுள்ளன.) VII இடம் : - மகாமண்டபத்தின் தென்புறம். காலம் :- மூன்றாம் இராசராசசோழனது 32ஆம் ஆண்டு. (1) வதி ஸ்ரீதிரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு வது (2) கண்ணிஞாயிற்று, பூர்வபட்சத்து சதுர்த்தசியும் ஞாயிற்றுக் கிழமையும் பெற்ற உத்திரட்டாதிநாள் (3) வடகரை விக்கிரம சோழவள நாட்டு இன்னம்பர் நாட்டு உடையார் திருவிசையமங்கை யுடைய நாய (4) னார் திருமடைவளாகத்து திருத்தொண்டத் தொகையன் திருமடத்து தானபதி சுப்பிரமண்ணிய சிவனேன் இந் (5) நாயனார்க்கு திருப்பள்ளித் தாமம் ஆக்குவார்க்கு ஜீவனத்துக்கு உடலாகத் திருநந்தவனபுரமாகக் கொண்டு விட்ட நிலமாவது (6) ஸ்ரீபராந்தகச் சதுர்வேதி மங்கலத்து கோதண்டராம வதிக்கு மேற்கு வானவன் மாதேவி வாய்க்கா (7) லுக்கு வடக்கு ஆறாங்கண்ணாற்று முதற் சதுரநிலம் (8) மாலின் வடக்கடைய நிலம் நான்மாவரையில் (9) மேற்கடைய நிலம் இரண்டு மாக்காணியில் கீழ்க்கடை நிலம்... (10) அரைமா நீங்க இதன் வடக்கு நான்கிளி நல்லூர் கிழவன் நாயன் வாழவந்த நாயன்தீபத்தரையர் பக்கல் (11) விலைகொண்டு உடையேனாய் என்னுதாய் இருந்த வெட்டுப்பாழ் நிலம் கானியும் சந்திராதித்த வரை.. (12) திருநந்தவனம் ஆக்குவார்க்கு ஜீவனசேஷமாக விட்டேன் உடையார் திருவிசயமங்கை உடைய நாய (13) னார்க்குத் திருத்தொண்டத் தொகையன் திருமடத்து தானபதி சுப்பிரமணிய சிவனேன் (14) இவை என்னெழுத்து - இவை பன்மாகேசுரரட்சை. சில குறிப்புக்கள் இவ்வேழு கல்வெட்டுக்களுள் முதல் ஆறு மதுராந்தக சோழன் காலத்துக் கல்வெட்டுக்களாகும். இம்மதுராந்தக சோழன் ஒன்பதாம் திருமுறையுள் மின்னாருருவ மேல்விளங்க என்று தொடங்கும் கோயிற் பதிகம் பாடியருளிய முதற்கண்டராதித்த சோழ தேவரது அருமைப் புதல்வன்; முதல் இராசராசசோழனது சிறிய தகப்பன்; கி.பி. 970-ஆம் ஆண்டு பட்டமெய்தி கி.பி. 985-வரை நம்சோழமண்டலத்தை ஆட்சி புரிந்தவன். இவ்வேந்தனுக்கு உத்தம சோழன் என்ற வேறு பெயரும் உண்டு. அன்றியும், இவனுக்கு விக்கிரமசோழன் என்ற மற்றொரு பெயரும் இருந்திருத்தல் வேண்டும் என்பது இப்போது வெளியிடப் பெற்றுள்ள திருவிசய மங்கைக் கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. இவ்வேந்தனது ஆட்சியின் பத்தாம் ஆண்டாகிய கி.பி. 980க்கு முன்னரே, கோவந்த புத்தூரிலுள்ள திருவிசய மங்கை என்னுந் திருக்கோயில் கற்றளியாக அமைக்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதை நான்காம் கல்வெட்டு உணர்த்துகின்றது. எனவே, இது முதலாம் இராசராச சோழனால் தஞ்சைமா நகரின்கண் எடுப்பிக்கப்பெற்ற இராசராசேச்சுரம் என்னும் ஆலயத்தினும் பழமை வாய்ந்த கற்றளி யாகும். மதுராந்தக சோழன் காலத்துக் கோயிலமைப்பு எங்ஙனம் இருந்தது என்று ஆராயப் புகுவார்க்கு இக்கற்றளி பெரிதும் பயன்படும். இதனை எடுப்பித்தவன் குவளால முடையான் அம்பலவன் பழுவூர் நக்கன் என்பான். இவன் மதுராந்தக சோழனது பெருந்திறத்து அதிகாரிகளுள் ஒருவன்; இவ்வேந்தனால் கொடுக்கப்பெற்ற விக்கிரமசோழமாராயன் என்னும் பட்டம் உடையவன். மாராயம் பெற்ற நெடுமொழி என்னும் வஞ்சித் திணைக்குரிய துறை ஒன்றால் அரசர்கள் தம் அதிகாரிகளுள் தக்கோர்க்கு இங்ஙனம் பட்டம் அளித்துப் பாராட்டுவது பழைய வழக்க மென்பது அறியப்படுகின்றது. இனி, இவ்விக்கிரமசோழமாராயனது சிவ பக்தியின் மாண்புபெரிதும் போற்றத்தக்கது. இத்தலைவன் திருவிசய மங்கையைக் கற்றளியாக எடுப்பித்ததும் இத்திருக்கோயிற்கு ஆண்டொன்றிற்கு ஆயிரக்கல நெல் வருவாயுள்ள நெடுவாயில் என்னும் ஊரை நிபந்தமாக விட்டு அதனை இறையிலியாக்கியதும் நூறு கழஞ்சு பொன் அளித்ததும் பிறவும் இவனது சிவபக்தியின் முதிர்ச்சியை நன்கு விளக்குதல் காண்க. இவனைப் போலவே இவனது மனைவிமார்களும் சிவபக்தியுடையவர் களாகத் திகழ்ந்தனர். என்பது இரண்டாவது கல்வெட்டினாலும் மூன்றாவது கல்வெட்டினாலும் புலப்படுகின்றது. பிறசெய்திகளை இக்கல்வெட்டுக்களை ஆராய்ந்துணர்க.  13. தொண்டைமான் சாசனம் இதன் மேல் செல்லாநின்ற நந்தனநாம (ர) த்து உத்தராயணத் துவில் மாகமாசத்து பூருவபட்சத்தில் சுக்கிரவாரமும் சத்தமியும் ரோகணி நட்சத்திரமும் சுபயோக சுபகரணமும் பெற்ற புண்ணிய தினத்தில் மண் மகாமண்டலேசுரன், அரியராயிரதன் விபாடன் பாஷைக்குத் தப்புவராயிர கண்டன் முவாயிரகண்டன் கண்டனாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் பூருவ தெட்சிண பச்சி மோத்தர திக்கு விசயஞ் செய்து எம்மண்டலமும் திறைகொண்டருளிய ராசாதிராஜன் துருக்கர் தளவிபாடன் துருக்கர் மோகந் தவிழ்த்தான் ஒட்டியர் தளவிபாடன் ஒட்டியர்மோகந்த விழ்த்தான் பாண்டிமண்டலத் தாபனாச்சாரியன் சோழ மண்டல பிரதிட்டாசாரியன், தொண்டைமண்டல துரந்தராதிபன் கீர்த்திப் பிரதாபன் வீரப் பிரதாபன் புவனேகரவீரன் சிவபூசாதுரந்தரன் சிவகாரியா துரந்தரன் வடவெள்ளாறு சுந்தரபாண்டிய வளநாட்டு இளங் கோனாட்டு அறந்தாங்கி அரசு அச்சமறியாதான் ஆட்டுக்கு ஆணை வழங்கு மதுளன் சேரன்பாட செந்தமிழ்ப்புனைந்த புங்கவன் கருது மாசாகா கமலசந்திரன் கொற்றக்குடையும் தவண்டையு முள்ள குணசீலன் தன்னையடைந் தாரை தானாக காக்கும் பிராமன் நடைகற்ற போதொருடை கற்றதீரன் ஏழுநாழிகையில் ஈழந்திறை கொண்ட பெருமாள் புற்றுமாத்தியும் பொந்தாலும் போகே னென்று வென்ற புரந்தரன் தலைமலைகண்டான் பிணமலை கண்டான் முகவின் கிழத்தியு மிளவன்னியமிசுர கண்டன் திருமிழலைத் திருநாடன் மல்லை யாபதி மயிலையாதி பதி அவ்வைக் கனி கொண்டவன் செயனை வென்றவன் பட்டனுக்கு முதுகு சாய்த்தான் மரைபுக்கார் காவலன் அடியார் வேலைக் காரன் காஞ்சிபுராதீவரன் ஆளுடைய தம்பிரானார் துஅவுடைய றெகுநாத வணங்காமுடி தொண்டைமானாரவர்கள் புத்திரன் அருணாசலவணங்காமுடி தொண்டைமானாரவர்கள்.1 திருப்பெருந்துறையாவுடைய பரமசுவா மியார்க்கு உஷாகால பூசைக்குப் பரதேசி முத்திரை அம்பலத்தாடு பண்டாரம் பாரிச மாகநடக்கிற தனது அபிஷேகக் கட்டளைக் கிராமங்களுக் கெல்லாம் சருவமான்னியமாக தருமசாசன பட்டயம் கொடுத்தபடி கிராமங்களாவது கல்லிங்க நாடு, பைங்கானாடு தானவனாட்டில் காலகம் உள்ளூர் உக்கடை பழநகரம்படி வெள்ளாற்று நாட்டில் சிறுவயல், ஈச்சுங்குடி, காரணிநாடு, ஆலையேம் பல், ஒ(த) ய மாணிக்கம், மான நல்லூர், களக்குடி, எய்யமங்கலம், பெருங்காடு, விளங்குளம்வட்டத்து அஞ்சில் ரெண்டு சீமையில் முலவயல் திருமழலைநாட்டு வெள்ளாம் பற்றில் புண்ணிய வயல், எழுநூற்றுமங்கலம், உலகந்தனியேந்தல், இரையாமங்கலம், தவசியார் பட்டமங்கை, சித்திரலிடங்கம், மங்கலம், கொனப்பன்வயல், கீழகாரை, காட்டுக்குடி, இரும் பானாடு, தொமொகி நாட்டுப் பற்றில் மதகம் தாணிக்காடு தில்லைவயல் செய்யிவயல் திருவாகுடி இதுமுதலாக அபிஷேக கட்டளைக்கு நடக்கிற கிராமங்கள் ஏந்தல் உள்கிடைக் கெல்லாம் இரைவரிமுதலாக ஊழியமுள்பட சகலமும் வேண்டா மென்று சருவமானியமாக கட்டளை யிட்டோம், ஆன படியினாலே யியாக அபிஷேகக் கட்டளைக்கு மான்னியமாக அனுபவிச்சுக் கொள்ளக் கடவதாகவும், நம்மைச் சார்ந்த மனுஷர் மக்களெல்லாம் இந்த தர்ம சாதனப் பட்டயப்படிக்கு ஒரு சில்லரையளும் வாராமல் புண்ணியத்தைப் பரிபாலனம் பண்ணி பூர்வாபூர்வம் நடந்த படியே உத்தரோத்தர மாக நடப்பிக்கக்கட வோனாகவும். இந்தப்படிக்கு திருப் பெருந்துறை யாவுடைய பரமசுவாமியருக்கு அம்பலத்தாடும் பண்டாரத்தின் பாரிச மாகநடக்கிற தனது அபிஷேகக் கட்டளைக் கிராமங்களுக் கெல்லாம் நாம் மனப் பூர்வமாக அபிமானிச்சு சருவ மாண்ணிய மாக கட்டளையிட்டு தர்மசாதனப் பட்டயம் கொடுத்தோம். இந்த தர்மத்தைப் பரிபாலனம் பண்ணினவர்கள் கெங்கைக் கரையிலும் ஆதிசேதுவிலும் கோடி பிரும பிரதிட்டையும் கோடி சிவலிங்க பிரதிட்டையும் பண்ணின தர்மத்தை யடைவாராகவும். இந்த தர்மத்துக்கு யாதாமொருவர் விகாதம் பண்ணினவர்கள் கெங்கைக்கரையிலும் ஆதிசேது விலும் கோடி கோவை வதைபண்ணின தோழத்திலும் மாதா பிதாவைவதை பண்ணின தோழ்த்திலும் போவர்களாகவும். (ஒப்பம்) இந்த தர்மசாதனப்பட்டயம் எழுதினேன் கோவில் கணக்கு சித்திரபுத்திரன் மகன் அவாத்தரன் யெழுத்து. யாதாது :- அசலாதிரவுமுன்புரம் தலப்பிர் உபதேச அவசரமாக பிரதிமையளும் பீடத்தின்... மும் எழுதியும் ரு... எழுத்துக்களையும்... கி மேலாக உ எழுத்துக்களையும் ஒட்டியும் ஓரங்களில் உ இடத்தில் வீரியும் நடுவில் இடத்தில் துவாரம் விழுந்தும் பாசிபுடித்துமிருக்கிறது மல்லாமல் மேற்படி பின்புறம் ரு வரிக்குமேலாக அ எழுத்து ஒட்டியும் கடைசியில் சூலமும் எழுதியிருக்கிறது. மன்னியில் இந்த நகல் முன்புறம் 31-ம் வரிக்கு மேலாக உ எழுத்து ஒட்டியுமிருக்கிறது. (ஒப்பம்) வாதிக்காக F.kh.கிUZz சாதிரி வக்கீல். செப்டம்பர் மீ 1853 வருடம் செப்டம்பர் மீ 15உ தாக்கல். (ஒப்பம்) திரு. அதிசயம்பிள்ளை, முன்சீப். (True Copy) (Signed). D.S.M. Grinfell. Ag.Sub. Judge. Fileed on the 26th February 1859. (True copy) 14. கரந்தைத் தமிழ்ச் சங்கச் செப்பேடுகள் நம் தமிழகத்தில் முற்காலத்தில் அரசாண்ட சேர சோழ பாண்டியர் களும் பல்லவர்களும் திருக்கோயில்களுக்கும் அந்தணர்க்கும் பிறர்க்கும் இறையிலியாக நிலங்கள் வழங்கும் போது தம் அறச்செயல்கள் என்றும் நின்று நிலவுமாறு அவற்றைச் செப்பேடுகளில் வரையச் செய்து தம் அரசாங்க முத்திரையுடன் உரியவர்களுக்கு அளிப்பது வழக்கம். அவர்கள் அங்ஙனம் செய்யுங்கால், அச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாற் றோடு தம் வீரச்செயல்களை யாதல் தம் மெய்க் கீர்த்தியை1 யாதல் முதலில் எழுதுவித்துப் பிறகு அப்போது தாம் செய்த அறச்செயலைத் தெளிவாகக் குறித்திருத்தல் காணலாம். அத்தகைய செப்பேடுகளும், நானூற்று முப்பது ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற பிற்காலச் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் அறவோலை செய்து அதுபற்றி வரைந்து வழங்கிய செப்பேடுகள் பலவாதல் வேண்டும். அவைகள் காலப்போக்கில் ஏற்பட்ட ஆட்சி மாறுதல் களால் இந்நாளில் கிடைக்காமற் போயின. கோயில்களிலிருந்த செப்பேடு களுள் பல, உருக்கி விற்கப் பெற்றும் செப்புப் பாத்திரங்களாக மாறியும் போயின. அறியாமையால் நிகழ்ந்த அத்தகாத செயல்களால் மறைந் தொழிந்த வரலாற்றுண்மைகளும், அரிய செய்திகளும் அளவிட்டுரைக்கத் தக்கனவல்ல. எனினும், நிலத்திற் புதையுண்டு பல ஆண்டுகள் மறைந்து கிடந்த செப்பேடுகளில் சில இக்காலத்தில் ஆங்காங்கு அரிதிற் கிடைத்து நம் நாட்டின் உண்மை வரலாற்றை அறிந்து எழுதுவதற்குப் பயன்பட்டு வருதல் ஓரளவு மகிழ்ச்சி அளிக்கின்றது. அச்செப்பேடுகள், கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்ற போதும் பொதுமக்கள் இல்லம் முதலியன அமைத்த போதும் நிலத்தை அகழ்ந்த ஞான்று எதிர்பாராத நிலையில் அகப்பட்டவையேயாம். இதுகாறும் கிடைத்துள்ள சோழ மன்னர்களின் செப்பேடு களுள் வரலாற்று ஆராய்ச்சிக்கு உறுதுணையாகப் பெரிதும் பயன்படுவன நான்காகும். அவை, சுந்தர சோழனின் (கி.பி. 957 - 970) அன்பிற் செப்பேடுகள், முதல் இராசராச சோழனின் (கி.பி. 985 - 1014) ஆனைமங்கலச் செப்பேடுகள், முதல் இராசேந்திர சோழனின் (கி.பி. 1012- 1044) திருவாலங்காட்டுச் செப்பேடுகள், வீரராசேந்திர சோழனின் (கி.பி. 1063 - 1070) சாராலச் செப்பேடுகள் என்பன. அவற்றுள், சுந்தர சோழனுடைய அன்பிற் செப்பேடுகளே மிக்க தொன்மை வாய்ந்தவை யாகும். பல ஆண்டுகளாகத் தமிழ்த் தாய்க்கு அருந்தொண்டுகள் ஆற்றி வரும் நம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குக் கிடைத்துள்ள செப்பேடுகளின் தொகுதி, முதல் இராசராச சோழனுடைய அருமைப் புதல்வனும் கி.பி. 1012 முதல் 1044 வரையில் சோழ இராச்சியத்தில் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து சோழர் பேரரசை யாண்டும் பரப்பி கங்கைகொண்ட சோழன் என்ற சிறப்புப் பெயருடன் அரசாண்டவனும் ஆகிய முதல் இராசேந்திர சோழன் தன் ஆட்சியின் எட்டாம் ஆண்டாகிய கி.பி. 1020ல் அளித்ததாகும். எனவே, இஃது ஏறத்தாழத் தொள்ளாயிரத்து முப்பத்தேழு ஆண்டுகட்கு முன்னர் வரையப் பெற்றதாதல் வேண்டும். இதனால் பண்டைச் சோழ மன்னர்களின் வரலாற்றையும், முதல் இராசேந்திர சோழனுடைய வீரச்செயல் களையும், பெருங்கொடைத் திறத்தையும், சோழர்களின் அரசியல் முறை களையும், பதினொன்றாம் நூற்றாண்டில் நிலவிய ஊர்கள் ஆறுகள் கால்வாய்கள் முதலானவற்றின் உண்மைப் பெயர்களையும், அக்கால வழக்கங்களையும் மற்றும் பல அரிய செய்திகளையும் இதனால் நன்கறிந்து கொள்ளலாம். மேலே குறிப்பிட்ட நான்கு செப்பேடுகளிலும் காணப்படாத சில அரிய வரலாற்றுச் செய்திகள் இதில் சொல்லப் பட்டிருத்தல் உணரற்பாலதாகும். இத்தொகுதி ஐம்பத்தைந்து செப்பேடுகளையுடையது. இது வலிமை யுள்ள செப்பு வளையத்தில் கோக்கப் பெற்றிருப்பதோடு தாமரைப் பூ வடிவில் அமைந்த பீடத்தின் மேல் முதல் இராசேந்திர சோழனுடைய வட்ட வடிவமான அரசாங்க முத்திரையையும் உடையது; வடமொழிப் பகுதி, தமிழ்ப் பகுதியாகிய இரண்டு பகுதிகளைத் தன்னகத்துக் கொண்டது. இவற்றுள், முதலிலுள்ள வடமொழிப் பகுதி மிகச் சுருங்கியதும் அதன் பின்னுள்ள தமிழ்ப் பகுதி மிக விரிந்ததுமாகும். வடமொழிச் செப்பேடுகள் மூன்றுள்ளன. அவற்றுள் ஒவ்வொன்றும் 16 1/2 அங்குல நீளமும் 9 1/2 அங்குல அகலமும் உடையது. எஞ்சிய தமிழ்ச் செப்பேடுகள் ஐம்பத்திரண்டினுள் முதல் இருபத்தொன்று 16 1/2 அங்குல நீளமும் 9 அங்குல அகலமும் உடையன; மற்றச் செப்பேடுகள் நீளத்திலும் அகலத்திலும் சிறிது குறைந்துள்ளன. இது, முதல் இராசேந்திர சோழன் கி.பி. 1020ல் சோழ மண்டலத்தில் ஐம்பத்தோர் ஊர்களைத் திரிபுவன மாதேவிச் சதுர்வேதிமங்கலம் என்ற பெயருடன் ஒன்றாக்கி, வேதங்களிலும் சாத்திரங்களிலும் வல்ல அந்தணர் பலர்க்குப் பிரமதேய மாக வழங்கிய நிகழ்ச்சியைத் தெரிவிப்பதாகும். இதில் அவ்வூர்களின் பெயர்களும், நான்கெல்லைகளும், விளை நிலங்களின் கணக்கும், அவற்றிலிருந்து வருவாயாக ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய நெல்லுங் காசும், அவற்றைப் பெறுதற்குரிய அந்தணர்களின் ஊர்களும் பெயர்களும் பங்குகளும், விளக்கமாக வரையப்பட்டுள்ளன. அவ்வூர்களி லிருந்து ஆண்டுதோறும் அன்னோர் பெறும் நெல் ஐம்பத்தோராயிரத் தைம்பது கலமும் காசு முப்பத்திரண்டரை யுமாகும் என்பது இதனால் நன்கறியக்கிடக்கின்றது. பேரும் புகழும் படைத்துத் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கிய முதல் இராசேந்திர சோழன், இவ்வறத்தைத் தன் தாயாகிய திரிபுவனமாதேவியின் பெயரால் செய்துள்ளமை, இப்பெரு வேந்தன் தன் தாயிடத்தில் கொண்டிருந்த பேரன்பினை இனிது புலப்படுத்துவதாகும்.  15. பழைய காலத்திய இருபெருங் கிணறுகள் 1. மாற்பிடுகு இருபெருங் கிணறுகள் மாற்பிடுகு பெருங்கிணறு என்பது திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே பன்னிரண்டு மைல் தூரத்திலுள்ள திருவெள்ளறைப் புண்டரீகாட்சப் பெருமாள் கோயிலின் தென்பக்கத்திலுள்ளது. இங்குக் குறிக்கப் பெற்ற திருமால் கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்றதாகும். அன்றியும், இவ்வூரில் சிவாலயம் ஒன்று உளது. இது மலையிற் குடைந்ததொரு கோயில் என்பது பார்ப்போர்க்கு இனிது புலப்படும். தற்காலத்தில் இத்திருக் கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமானைச் சம்புநாதர் என்று வழங்கு கின்றனர்; ஆனால் இதிற் காணப்படும் கல்வெட்டுக்கள் திருவானைக்கல் பெருமான் அடிகள் என்றே உணர்த்துகின்றன. இவ்விருகோயில்களிலும் சோழ மன்னர்களது கல்வெட்டுக்கள் பல உள்ளன. அவற்றுள் இரண்டு கல்வெட்டுக்கள் ஒரு கிணற்றின் மேற் பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்று, கிணற்றை வெட்டுவித்தவன் யாவன் என்பதையும் அதற்கு இடப்பெற்ற பெயர் யாது என்பதையும் கிணறு வெட்டப் பெற்ற காலத்தையும் அறிவிக்கின்றது. மற்றொரு கல்வெட்டு அறுசீர் விருத்தமாக உள்ளது. கல்வெட்டுக்கள் இரண்டையும் அடியிற் காண்க : 1. (1) வதிஸ்ரீ பாரத்வாஜகோத்திரத்தின் வழித்தோன்றிய பல்லவ திலத குலோத்பவன் தந்திவர்மற்கு யாண்டு நான்காவதெடுத்துக் கொண்டு ஐந்தாவது முற்றுவித்தான் ஆலம் பாக்க விசைய நல்லூழான் (2) தம்பி கம்பன் அரையன் திருவெள்ளறைத் தென்னூர்ப் பெருங்கிணறு இதன் பெயர் மாற்பிடுகு பெருங்கிணறென்பது - இது ரட்சிப்பார் இவ்வூர் மூவாயிரத்தெழுநூற்றுவரும் : 2. (1) கண்டார் காணா வுலகத்திற் காதல் செய்து நில்லாதேய் பண்டேய் பரமன் படைத்தநாள் பார்த்து நின்று நையாதேய் (2) தண்டார் மூப்பு வந்துன்னைத் தளரச் செய்து நில்லாமுன் உண்டேலுண்டு மிக்கது உலகம் மறிய வைம்மினேய்.* இவற்றுள் முதலாவது கல்வெட்டு பல உண்மைச் செய்திகளை யுணர்த்துகின்றது. பல்லவ குலத்தினர் பாரத்துவாச கோத்திரத்தினர் என்பதையும் அப்பல்லவ குலத்தில் தந்திவர்மன் என்னும் வேந்தன் ஒருவன் இருந்தான் என்பதையும் திருவெள்ள றைத் தென்னூர்ப் பெருங் கிணறு அவ்வேந்தனது ஆட்சியில் நான்காம் ஆண்டில் தோண்டத் தொடங்கப்பெற்று ஐந்தாம் ஆண்டில் அவ்வேலை முடிவுற்றது என்பதையும் அப்பெருங் கிணற்றைத் தோண்டுவித்தவன் ஆலம்பாக்க விசயநல்லூழான் தம்பியான கம்பன் அரையன் என்பதையும் அதன் பெயர் மாற்பிடுகு பெருங்கிணறு என்பதையும் அஃது இனிது புலப்படுத்து கின்றது. நந்திவர்மப் பல்லவ மல்லனது உதயேந்திரம் செப்பேடு களிலும் காசாக்குடி செப்பேடுகளிலும் பாரத்துவாச முனிவர் பல்லவ மன்னர்களின் முன்னோர்களுள் ஒருவராகக் குறிக்கப்பட்டுள்ளார். (South Indian Inscriptions Volume II Part III) பல்லவர்களைப் பாரத்துவாச கோத்திரத்தினர் என்று முதலாவது கல்வெட்டு உணர்த்துவதற்குக் காரணம் இதுவே யாகும். அக்கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ள தந்திவர்மன் கி.பி. 717 முதல் கி.பி. 780 வரையில் நம் தமிழ் நாட்டில் ஆட்சிபுரிந்த நந்திவர்மப் பல்லவ மல்லனது மகன்; கி.பி. 780 முதல் 830 முடிய சோழ மண்டலத்தையும் தொண்டை மண்டலத்தையும் அரசாண்ட நெடுமுடி வேந்தன். எனவே, இவனது ஐந்தாம் ஆண்டாகிய கி.பி. 785-ல் மேலே குறித்துள்ள திருவெள்ளறைத் தென்னூர்ப் பெருங்கிணற்றின் வேலை முடிவெய்தி அது மக்கட்குப் பயன்படும் நிலையில் இருந்திருத்தல் வேண்டும். அப்பெருங்கிணற்றைத் தோண்டு வித்தவன் கம்பன் அரையன் என்பான். இவன் ஆலம்பாக்க விசய நல்லூழான் என்பவனது தம்பி என்பது அக்கல்வெட்டால் அறியப்படு கின்றது. இங்குக் குறிக்கப்பெற்ற ஆலம்பாக்க விசய நல்லூழான் நந்திவர்மனது தந்தையாகிய நந்தி வர்மப் பல்லவ மல்லனது அமைச்சர்களுள் ஒருவன். இச்செய்தி நந்தி வர்மப் பல்லவ மல்லவனது ஆட்சியின் அறுபத்திரண்டாம் ஆண்டில் வெளியிடப் பெற்ற1 பட்டத்தாள் மங்கலம் செப்பேட்டினால் புலப்படுகின்றது. பெருங்கிணறு தோண்டு வித்த கம்பன் அரையனும் தன் தமையனைப் போலவே பல்லவ மன்னர் களது அரசாங்கத்தில் உயர்நிலையில் இருந்தவன் ஆதல் வேண்டும். அரையன் என்பது அரசனால் அளிக்கப்பட்ட பட்டமாகும். கம்பன் என்பது இவனது இயற்பெயர், எனவே, கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கம்பன் என்பது இயற்பெயராக வழங்கிவந்த செய்தி ஈண்டு அறிந்து கொள்ளுதற்குரிய தொன்றாம். உடன் பிறப்பினராய்ப் பல்லவ மன்னர்களான நந்தி வர்மப் பல்லவ மல்லன், தந்தி வர்மன் என்போரது ஆட்சிக் காலங்களில் உயர் நிலையிலிருந்து அரசாங்கத்தை நடத்திவந்த இவ்விரு தலைவர்களும் ஆலம்பாக்கம் என்னும் ஊரில் வாழ்ந்தவர்கள் என்பது ஆலம்பாக்க விசைய நல்லூழான் என்ற சொற்றொடரால் நன்கு வெளியாகின்றது. இவ்வாலம்பாக்கம், லால்குடி என்று தற்காலத்தில் வழங்கும் திருத்தவத்துறையிலிருந்து அரியலூர்க்குச் செல்லும் பெருவழியில் 12 ஆவது மைலில் உள்ளது. இது பல்லவர்களது ஆட்சிக்காலங்களில் தந்தி வர்மமங்கலம் என்னும் பெயரை எய்தியிருந்தது; சோழ மன்னர்களது ஆட்சிக் காலங்களில் மதுராந்தகச் சதுர்வேதி மங்கலம் என்று வழங்கிற்று; அந்நாளில் சோழ மண்டலத்திலிருந்த ஒன்பது வளநாடுகளில் ஒன்றாகிய இராசேந்திரச் சிங்கவள நாட்டின் உண்ணாடுகளுள் ஒன்றான பொய்கை நாட்டிலுள்ள ஊராக இருந்தது. (Annual Report on Epigraphy for 1905-06 page 63) திருவெள்ளறையிலுள்ள மாற்பிடுகு பெருங்கிணற்றைப் போல இவ்வாலம்பாக்கத்திலும் மாற்பிடுகு ஏரி ஒன்றும் இருந்ததென்று கல்வெட்டுக்களால் புலப்படு கின்றது. வெவ்வேறு ஊர்களிலுள்ள பெருங் கிணற்றிற்கும் ஏரிக்கும் ஒரே பெயரிட்டு வழங்கப்பட்டுள்ளமை ஈண்டுணரத் தக்கது. இவ்வேதுபற்றித் திருவெள்ளறையில் பெருங்கிணறு தோண்டுவித்த கம்பன் அரையன் என்னும் தலைவனே தன் ஊராகிய ஆலம்பாக்கத்திலும் மாற்பிடுகு ஏரியை வெட்டுவித்திருத்தல் கூடும் என்றும் எண்ணலாம். மாற்பிடுகு ஏரியை வெட்டுவித்தவன் இவனது தமயனாகிய ஆலம்பாக்கம் விசைய நல்லூழானாக இருத்தல் வேண்டும் என்று கூறினும் பொருந்தும். இவ்வூர்க்குத் தந்திவர்மமங்கலம் என்னும் ஒரு பெயரிருந்திருப்பதை நோக்குங்கால் கி.பி. 780 முதல் 830 முடிய ஆட்சி புரிந்த தந்திவர்மன் என்ற பல்லவ மன்னனால் உடன் பிறப்பினராகிய இவ்விருவர்க்கும் இது முற்றூட்டாக அளிக்கப் பட்டிருத்தல் வேண்டும் என்று அறியப்படுகின்றது. இனித் திருவெள்ளறையில் தோண்டுவிக்கப்பெற்ற கிணற்றின் பெயர் ஆராய்தற்குரிய தொன்றாம். கல்வெட்டில் அதன் பெயர் மாற்பிடுகு பெருங்கிணறு என்பது என்றிருத்த லால் நாகரிகம் மிகுந்துள்ளதாகக் கருதப்படும் இந்நாளில் ஆற்றின் பாலங்களுக்கும் பிற கட்டிடங்களுக்கும் பெயரிட்டு வழங்குவது போல அந்நாளிலும் அத்தகைய வழக்கம் இருந்து வந்தது என்பது நன்கறியக் கிடக்கின்றது. மாற்பிடுகு என்பது ஒரு சிறந்த பட்டம் என்று புலப்படுகின்றது. மால்+பிடுகு என்ற இத்தொடர் மொழியின் பொருள் பேரிடி என்பதேயாம். இப்பட்டத்தையும் விடேல் விடுகு, பாகப் பிடுகு, பெரும்பிடுகு என்ற பட்டங் களையும் பெற்று வாழ்ந்த சில முத்தரையர்களின் கல்வெட்டுக்கள், செந்தலை, திருச்செந்துறை, திருமெய்யம், மலைக்கோயில் முதலான ஊர்களில் உள்ளன. இன்னோர், பல்லவ மன்னர்கட்குத் திறை செலுத்திவந்த குறுநில மன்னர் ஆவர். எனவே, இப்பட்டங்கள் பல்லவ மன்னர்களால் இவர்களுக்கு வழங்கப் பட்டிருத்தல் வேண்டும், செங்கற்கபட்டு ஜில்லா வல்லங்குகைக் கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டு, பல்லவ வேந்தனாகிய முதல் மகேந்திர வர்மன் பகாப்பிடுகு என்னும் பட்டம் உடையவனா யிருந்தனன் என்று உணர்த்துகின்றது. சைவசமயாசாரியருள் ஒருவராகிய திருநாவுக்கரச அடிகளைத் துன்புறுத்தியவன் இவ்வேந்தனேயாவன். இவனது பேரனுடைய புதல்வனான முதல் பரமேச்சுரவர்மன் பெரும்பிடுகு என்ற பட்டம் எய்தியவன் என்பது கூரத்துச் செப்பேடுகளால் அறியப்படுகின்றது. (South Indian Inscription 1 Page 154) கி.பி. 830முதல் 854 வரையில் ஆட்சிபுரிந்த தெள்ளா றெறிந்த நந்திவர்மன் விடேல் விடுகு என்ற பட்ட முடையவன் என்பது நந்திக் கலம்பகத்தால் புலப்படுகின்றது. இவனது தந்தையாகிய தந்திவர்மனே மாற்பிடுகு என்னும் பட்டத்துடன் நிலவியவன். எனவே கி.பி.785ஆம் ஆண்டில் திருவெள்ளறையில் கம்பன் அரையன் என்னும் தலைவனால் அமைக்கப்பெற்ற மாற்பிடுகு பெருங்கிணறு கி.பி. 780முதல் 830 வரையில் அரசாண்ட பல்லவ வேந்தனாகிய தந்தி வர்மனது பட்டப் பெயரால் அக்காலத்தில் வழங்கப் பெற்றிருத்தல் வேண்டு மென்பது நன்கு வெளியாதல் காண்க. II இராசராசன் கிணறு இராசராசன் கிணறு என்பது காஞ்சிமா நகரிலிருந்து வந்தவாசிக்குச் செல்லும் பெருவழியில் மாமண்டூருக்குத் தெற்கே ஐந்துகல் தூரத்தி லுள்ள உக்கல் என்ற ஊரில் மேலைப் பெருவழியிலுள்ளது. இக்கிணற்றின் வரலாற்றை அவ்வூரிலுள்ள புவனி மாணிக்க விஷ்ணு கிரகம் என்னும் பெயருடைய திருக்கோயிலில் காணப்படும் ஒரு கல்வெட்டு நன்கு விளக்குகின்றது. அதனை அடியிற் குறிக்கின்றேன். 1. வதிஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச்சாலைக் கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்கபாடியுந் நுளம்ப பாடியுந் தடிகைபா 2. டியும் குடமலைநாடும் கொல்லமும் கலிங்கமும் முரட் டொழில் சிங்களர் ஈழமண்டலமும் இரட்டப்பாடி ஏழரை இலக்கமும் முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் திண்டிறல் வென்றித் தண்டாற் 3. கொண்ட தன்னெழில் வளரூழியுளெல்லா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோ ராஜகேஸரி வன்மரான ஸ்ரீராஜராஜ தேவர்குயாண் 4. டு உகூ ஆவது ஜயங்கொண்ட சோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துத் தனியூர் உக்கலாகிய ஸ்ரீவிக்கிரமா பரணச் சதுர்வேதி மங்கலத்து மேலைப் 5. பெருவழியில் ஸ்ரீராஜராஜதேவர் திருநாமத்தால் கிணறுந் தொட்டியும் சமைப்பித்தான் உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் பணிமகன் சோழ மண்டலத்து தென்கரை நாட்டு நித்த 6. விநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆவூருடையான் கண்ணணாரூரன் இவனே ஸ்ரீராஜராஜ கிணற்றில் தொட்டிக்கு நீரிறைப் பார்க்கு அருமொழிதேவன் மரக்காலால் நிசதம் நெல் உ ங (குறுணி) ஆ 7. கத் திங்கள் க-க்கு நெல் * (முப்பது கலமும் ஸ்ரீராஜராஜன் தண்ணீராட்டுவார்க்கு நிசதம் நெல்* (குறுணி) ஆக திங்கள் க்கு நெல்லு கலமும் இப்பந்தலுக்கு குசத்கலம் இடு. 8. வார்க்கு திங்கள் க-க்கு நெல்லு 3/4 (இருதூணி) ஆக திங்கள் (உ)க்கு நெல்லு கலமும் ஸ்ரீராஜராஜன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதத்துக்கும் ஆட்டாண்டுதோறும் புதுக்குப் புறமாக வைச்ச 9. நெல்லு உ கலம் 3/4 (இருதூணி) ஆக நெல்* கலம் 3/4 (இரு தூணி) இந்நெல்லுக்கு இவன் பக்கல் இவ்வூர் ஸபையோம் இறைத்திரவியமும் கிரையத்ரவியமும் கொண்டு இறை இழிச்சி.... இக்கல்வெட்டினால் பல செய்திகள் (South Indian Inscriptions Volume III No. 44) அறியக்கிடக்கின்றன. இதில் குறிக்கப் பெற்றுள்ள கோராஜ கேசரி வர்மன் இராஜராஜன் சுந்தரசோழன் என்று வழங்கும் இரண்டாம் பராந்தக சோழனது மகன்; தஞ்சைமாநகரிலுள்ள இராசராசேச்சுரம் என்னும் திருக்கோயிலை எடுப்பித்த பெருமையுடையவன்; கி.பி. 985 முதல் கி.பி. 1014 வரையில் சோழ மண்டலத்தையும் பிற மண்டலங்களையும் சிறப்புடன் ஆட்சிபுரிந்த பெருந்தகையாளன்; இவ்வேந்தனது திருப்பெயரால் இராஜராஜன் கிணறு அமைக்கப்பட்டது. இக்கிணற்றைச் செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள உக்கல் என்ற ஊரில் தன் அரசன் பெயரால் அமைப்பித்துத் தண்ணீர் இறைத்தற்கு நிபந்தம் விட்டவன் முதல் இராஜராஜ சோழனது பணிமகனும் சோழ மண்டலத்தில் நித்த விநோத வளநாட்டி லுள்ள ஆவூர்க் கூற்றத்து ஆவூரில் வாழ்ந்த தலைவனுமாகிய கண்ணன் ஆரூரன் என்பான். நித்த விநோத வளநாடு என்பது முதல் இராஜராஜ சோழன் காலத்தில் சோழமண்டலத்திலிருந்த ஒன்பது வளநாடுகளுள் ஒன்றாகும். சோழ மண்டலம் முதல் இராஜராஜசோழனது ஆட்சிக் காலத்திற்கு முன்னர், பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததே யன்றி வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. முதல் இராஜராஜனது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் தான் சோழமண்டலம் இராஜேந்திர சிங்கவளநாடு, இராசாச்ரய வளநாடு, நித்த விநோத வளநாடு, க்ஷத்திரிய சிகாமணி வளநாடு, உய்யக்கொண்டார் வளநாடு, அருண்மொழித்தேவ வளநாடு, கேரளாந்தக வளநாடு, இராசராச வளநாடு, பாண்டிய குலாசனி வளநாடு என்ற ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு வளநாடும் பலநாடுகளைத் தன்னகத்துக் கொண்டு விளங்கிற்று. வள நாட்டைத் தற்காலத்திலுள்ள ஜில்லாவுக்கும் நாட்டைத் தாலுக்காவிற்கும் ஒப்பாகக் கூறுதல் பொருந்தும். வளநாட்டின் உட்பகுதிகளுள் சிலவற்றைக் கூற்றங்கள் என்று வழங்குவதும் உண்டு. மேலே குறித்துள்ள ஒன்பது வளநாடுகளின் பெயர்களும் இராஜராஜ சோழனது இயற்பெயரும் புனை பெயர்களுமேயாம். பெரும் பான்மையாக நோக்குமிடத்து ஒவ்வொரு வளநாடும் இரண்டிரண்டு பேராறுகளுக்கும் இடையில் அமைந்திருந்த நிலப்பரப்பேயாகும். மேலே வரைந்துள்ள கல்வெட்டில் குறிக்கப்பெற்ற நித்த விநோத வளநாடு என்பது தஞ்சாவூர் தாலுகாவின் கீழ்ப்பகுதியும் பாவநாசந் தாலுகாவின் மேற்பகுதியும் மன்னார்குடித் தாலுகாவின் வடபகுதியும் அடங்கிய நிலப்பரப்பாகும். ஆவூர் கூற்றம், கிழார்க் கூற்றம், வெண்ணிக் கூற்றம், பாம்புணிக் கூற்றம், நல்லூர் நாடு, கரம்பைநாடு, முடிச்சோணாடு என்பவை நித்த விநோத வளநாட்டின் உட்பகுதிகளாகவுள்ள சிலநாடுகள் ஆகும். இனி ஆவூர்க் கூற்றத்து ஆவூர் என்பது தற்காலத்தில் தஞ்சை ஜில்லா பாவநாசந் தாலுகாவிலுள்ளதும் சைவசமயா சாரியார்களால் பாடப் பெற்ற சிறப்புடையதும் பசுபதீச்சுரம் என்னும் திருக்கோயிலைத் தன்னகத்துக் கொண்டு விளங்குவது மாகிய ஆவூரேயாகும். ஆவூர்க் கூற்றம் என்பது இவ்வாவூரைத் தலைநகராகக் கொண்டு இதனைச் சூழ்ந் திருந்த ஒரு சிறு நாடாகும். இரும்புதலை, விளத்தூர் முதலான ஊர்கள் இக்கூற்றத்திலிருந்தன என்று கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. எனவே, தஞ்சாவூர் ஜில்லா பாவநாசந் தாலுகா ஆவூரில் வாழ்ந்த தலைவனும் முதல் இராஜராஜசோழனது பணிமகனு மாகிய கண்ணன் ஆரூரன் என்பவனே செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள உக்கல் என்ற ஊரில் தன் அரசனாகிய இராஜராஜன் பெயரால் கிணறு தோண்டுவித்துத் தண்ணீர் இறைப்பார்க்கு நிபந்தம் விட்டவன் என்றுணர்க. இக்கல்வெட்டில் காணப்படும் அருமொழி தேவன் மரக்கால் அரசாங்க முத்திரையிடப் பெற்ற மரக்கால் ஆகும். அருமொழி தேவன் என்பது முதல் இராஜராஜனுக்குரிய பெயர்களுள் ஒன்றாம். இவ்வேந்தன் காலத்திலிருந்த அரசாங்க மரக்காலுக்கு இராச கேசரி என்ற பெயர் வழங்கிற்று என்றும் இம்மன்னர் பெருமானால் எடுப்பிக்கப் பெற்ற தஞ்சை இராசராசேச்சுரம் திருக்கோயிலிலிருந்த மரக்காலுக்கு ஆடவல்லான் என்ற பெயர் வழங்கிற்று என்றும் கல்வெட்டு களால் அறியப்படுகின்றன. இங்குக் குறிக்கப்பெற்ற அருமொழி தேவன், இராசகேசரி, ஆடவல்லான் என்ற மூன்று மரக்கால் களும் ஒரே அளவுள்ளவை என்பது ஈண்டு உணர்தற்குரியது. நாள்தோறும் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பவனுக்கு நாள் ஒன்றுக்குக் கூலி இரண்டு மரக்கால் நெல்லும் கொடுக்கப் பட்டு வந்தது என்பது இக்கல்வெட்டால் புலப்படுகிறது. அன்றியும், திங்கள்தோறும் மட்பாண்டங்கள் இடுவோனுக்குத் திங்கள் ஒன்றுக்கு எட்டு மரக்கால் நெல் கூலியாகக் கொடுக்கப் பட்டுள்ளது. இராஜராஜன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதம் நேருமாயின் அவற்றைப் புதுக்குவதற்கு ஆண்டு ஒன்றுக்கு இரு கலனே எட்டு மரக்கால் நெல் நிபந்தமாக வைக்கப் பட்டுள்ளது. இனி, இக்கல்வெட்டில் காணப்படும் பெருவழி (Road) பணிமகன் (Servant) புதுக்குப்புறம் (Cost for repairing) என்ற செந்தமிழ்த் தொடர்மொழிகள் நமது உள்ளத்தைப் பிணிக்குந் தன்மை யனவாயிருக்கின்றன. மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில் சீர்ப் பெண்ணுப் பெருந்தகையாள் பெற்றானும் - உண்ணுநீர்க் கூவல் குறையின்றித் தொட்டானும் இம்மூவர் சாவா வுடம்பெய்தி னார்.  16. விரையாக்கலியும் விடேல் விடுகும் 1. விரையாக்கலி சென்ற ஆண்டில், திருப்புறம்பியத்திலுள்ள சிவாலயத்தில் காணப் படும் கல்வெட்டுக்களுள் சிலவற்றை யான் எழுதி வந்தபோது மூன்று கல்வெட்டுக்களில் விரையாக்கலி என்பது குறிக்கப் பெற்றிருத்தலைக் கண்டேன். இம்மூன்றனுள் ஒன்று முதல் இராசராச சோழனது ஆறாம் ஆண்டில் பொறிக்கப் பெற்றதாகும். அது, விரையாக் கலியென்னும் நிறை கோல் ஒன்று திருப்புறம்பிய ஆலயத்தில் இருந்தது என்று உணர்த்து கின்றது. மற்றொன்று, கங்கைகொண்ட சோழன் என்று வழங்கப் பெறும் முதல் இராசேந்திர சோழனது பதினாறாம் ஆண்டில் வரையப் பெற்றது. அது திருப்புறம்பியத்தில் அந்நாளிலிருந்த ஒரு தெரு விரையாக்கலிப் பெருந்தெரு என வழங்கி வந்தது என்று தெரிவிக்கின்றது. மூன்றாங் கல்வெட்டு, குலோத்துங்க சோழன் காலத்தியது. அதில் குறிக்கப் பெற்றவன் முதற் குலோத்துங்க சோழன் அல்லன் என்பது வெளிப்படை; எனவே, மற்ற இருவருள் ஒருவன் ஆதல் வேண்டும் அக்கல்வெட்டின் இறுதியில் திருவாணை-திருவிரையாக்கலி என்பது காணப்படுகின்றது. முதல் இரண்டு கல்வெட்டுக்களால் ஒரு நிறை கோலும் ஒரு தெருவும் விரையாக்கலி என்ற பெயரோடு வழங்கப் பெற்றன என்பது புலனாகின்றது. சோழ மன்னர்களது பெயர்களிட்டு வழங்கப் பெற்ற பெருந்தெருக்கள் பல அந்நாளில் தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், சிதம்பரம், திருவரங்கம் முதலிய நகரங்களில் இருந்துள்ளன என்பது சயங்கொண்ட சோழப் பெருந்தெரு, வீரசோழப் பெருந்தெரு, திருவிக்கிரமன் திருவீதி, குலோத்துங்கன் திருவீதி என்பவற்றால் நன்கு அறியப்படு கின்றது. விரையாக்கலிப் பெருந்தெரு வென்ற தொடரில் விரையாக்கலி என்பது எவ்வேந்தனையும் குறிக்க வில்லை. ஆதலால் அஃது ஆராய்ந்துணர்தற்குரியதாகும். மூன்றாம் கல்வெட்டில் திருவிரையாக்கலி என்பதற்கு முன்னருள்ள திருவாணை என்னுந் தொடர்மொழி அஃது இன்னது என்பதை இனிது புலப்படுத்து கின்றது. திருவருள் என்பது கடவுளது அருளைக் குறிப்பது போல் திருவாணை என்பதும் ஈண்டுக் கடவுளது ஆணையைக் குறிக்கின்றது. எனவே, சிவபெருமானது ஆணையே திருவிரையாக்கலி எனும் பெயருடைய தாயிருத்தல் காண்க. ஆகவே, விரையாக்கலி என்பது சிவபெருமானது ஆணையேயாதல் அறிந்து கொள்ளற்பாலது. இச்செய்தி, ஒட்டுடன் பற்றின்றி உலகைத் துறந்த செல்வராகிய பட்டினத்துப் பிள்ளையார் அருளிய கோயில் நான்மணி மாலையிலுள்ள ஒரு பாடலாலும் உறுதியெய்துகின்றது. அஃது. உரையின் வரையும் பொருளின் அளவும் இருவகைப்பட்ட எல்லையுங் கடந்து தம்மை மறந்து நின்னை நினைப்பவர் செம்மை மனத்தினுந் தில்லைமன் றினும்நடம் ஆடும் அம்பல வாண! நீடு குன்றக் கோமான் தன்திருப் பாவையை நீலமேனி மால்திருத் தங்கையைத் திருமணம் புணர்ந்த ஞான்று பெரும! நின் தாதவிழ் கொன்றைத் தாரும், ஏதமில் வீர வெள்ளிடைக் கொடியும், போரில் தழங்குந் தமருகப் பறையும், முழங்கொலித் தெய்வக் கங்கை யாறும், பொய்தீர் விரையாக் கலியெனும் ஆணையும், நிரைநிரை ஆயிரம் வருத்த மாயிரு மருப்பின் வெண்ணிறச் செங்கண் வேழமும், பண்ணியல் வைதிகப் புரவியும், வான நாடும், மையறு கனக மேருமால் வரையுஞ், செய்வயல், தில்லையாகிய தொல்பெரும் பதியுமென் றொருபதி னாயிரந் திருநெடு நாமமும், உரிமையிற் பாடித் திருமணப் பந்தருள் அமரர் முன்புகுந் தறுகு சாத்திநின் தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத் தென்னையும் எழுத வேண்டுவன் நின்னருள் ஆணை வைப்பிற் காணொணா அணுவும் வானுற நிமிர்ந்து காட்டுங் கானில்லால் நுளம்புங் கருடனா தலினே :- என்பதாம். சிவபெருமானுக்குத் தசாங்கம் கூறவந்த அடிகள், பொய்நீர் விரையாக்கலியெனும் ஆணையும், என்று தீஞ்சுவையொழுகும் அவ்வாசிரியப்பாவில் அவ்விறைவனது ஆணையின் திருப் பெயரைக் குறித்திருப்பது அறிந்து கொள்ளுதற்குரியதாகும். இனி, திருப்புறம்பியத்திலுள்ள திருக்கோயிலிலிருந்து யாம் எழுதி வந்த அக்கல்வெட்டுக்கள் மூன்றும் சரித ஆராய்ச்சியாளர் களுக்குப் பெரிதும் பயன்படுமாதலின் அவற்றை அடியில் வரைகின்றேன். 1. முதல் இராசராசசோழன் காலத்தியது (1) வதிஸ்ரீ கோ ராஜராஜகேசரி வன்மற்கு யாண்டு ஆவது ஸ்ரீதிருப்புறம்பியமுடைய மகாதேவர்க்குத் திரு (2) மஞ்சன நீராடியருள ஸ்ரீகண்டன் மதுராந்தக தேவரான ஸ்ரீ உத்தம சோழ தேவர்க்காக இ(த்) தேவரை (3) த் திருவயிறு வா(ய்)த்த உடைய பிராட்டியார் தந்த வெள்ளிக் கலசம் ஒன்று அலகுநிலை தூற்று நாற்பத்துமு (4) க் கழஞ்சே முக்காலே இரண்டு மஞ்சாடி, இதுக்கு விரையாக் கலி யென்னுந் நிறைகோலால் நிறை (5) பதின்மூன்றெழுக்கை ஒரு பலம் பதின்கழஞ்சே காலாக இவ்வூர்க் கல்லால் விற்ற (6) நிறை நூற்றுநாற் பதின்கழஞ்சே முக்காலே மூன்று மஞ்சாடியும் அறுமா இவைபன் (7) மாகேவர ரக்ஷை. 2. கங்கைகொண்ட சோழன் காலத்தியது வதிஸ்ரீ திருமன்னிவள ரிருநில மடந்தையும் போர்செயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந் தன்பெருந் தேவிய ராகி இன்புற நெடிது யரூழியு ளிடைதுறை நாடுந் தொடர் வனவேலிப் படர்வன வாசியுஞ் சுள்ளிச் சூழ்மதிட் கொள்ளிப் பாக்கமு நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும் பொருகட வீழத் தரைசர்த முடியு மாங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும் முன்னவர்பக்கல் தென்னவர்வைத்த சுந்தர முடியு மிந்திர னாரமும் தென்றிசை ஈழ மண்டல முழுவதும் எறிபடைக் கேரளர் முறைமையிற் சூடுங் குலதன மாகிய பலர்புகழ் முடியும் செங்கதிர் மாலையுஞ் சங்கதிர் வேலைத் தொல் பெருங்காவற் பல்பழந் தீவும் செருவிற் கினவி இருபத் தொருகால் அரைசுகளை கட்ட பரசு ராமன் மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதி இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட் டொளித்த சயசிங்கன் அளப்பரும் புகழொடும் பீடியல் இரட்டப் பாடி ஏழரை இலக்கமும் நவநிதிக் குலப்பெரு மலைகளும் விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமு முதிர்பட வல்ல மதுரை மண்டலமும் காமிடை வள நாமனைக் கோணமும் வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும் பாசடைப் பழன மாசுனி தேசமும் அயல்வில் வண்கீர்த்தி ஆதிநக ரவையில் சந்திரன் தொல்குலத் திந்திர திலதனை விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப் பலதனத் தொடுநிறை குலதனக் குவையும் கிட்டருஞ் செறிமிளை ஒட்ட விஷையமு பூசரர் சேர்நற் கோசலை நாடும் தந்ம பாலனை வெம்முனை யழித்து வண்டுறை சோலைத் தண்ட புத்தியும் இரண சூரனை முரணுறத் தாக்கித் திக்கனை சீத்தித் தக்கன லாடமும் கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத் தங்காத சாரல் வங்காள தேசமும் தொடுகடற் சங்கு வொட்ட மகிபாலனை வெஞ்சமர் வளாகத் தஞ்சுவித் தருளி ஒண்டிறல் யானையும் பெண்டிர் பண்டாரமும் நித்தி ........................................ மும் அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச் சங்கிராம விசயோத் துங்க வன்ம னாகிய கடாரத் தரைசனை வாகையம் பொருகடிற் கும்பக் கரியொடு மகப்படுத் துரிமையிற் பிறக்கிய பெருநிதிப் பிறக்கமும் ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில் விச்சாதிரத் தோரணமு முத்தொளிர் புனமணிப் புதவமும்கனமணிக் கதவமும் நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும் நன்மனை யூரெழிற் றொன்மலை யூரும் ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும் கலங்கா வல்விற விலங்கா சோகமும் காப்பறு நிறைபுனல் மாப்பப் பாலமும் காவலம் புரிசை மேவுலிம் பங்கமும் விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும் கலைத் தக்கோர்புகழ் தலைத்தக் கோலமும் திதமா வல்விறல் மதமா லிங்கமும் கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும் தேனக்க வார்பொழில் மாநக்க வாரமும் தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும் மாப்பெருந் தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான உடையார் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு வது வடகரை ராஜேந்திர சிங்கவளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து நின்று நீங்கிய தேவதானம் திருப்புறம்பியத் தாதித் தீவரமுடைய மஹா தேவர்க்குச் சந்திராதித்தவல் சந்திவிளக்குச் சிறுகாலை அஞ்சும் உச்சியம் போதஞ்சும் எரியக் கடவவாக வைத்த வெண்ணெய் உழக்கு இவ்வெண் ணெய் உழக்குக்கும் வெளாநாட்டு நெற்குப்பை உடையார் வெண்காடன் குடிதாங்கி தேவர் பண்டாரத்து வைத்த காசைம்பது இக்காசைம்பதும் இத்தேவர் தேவதானம் பிரம்பில் விரையாக்கலிப் பெருந்தெருவிற் சங்கரப்பாடியோம் இத்தேவர் கன்மிகள் வசங்கொண்ட காசைம்பது இக்காசைம்பதுங் கொண்டு நிசதம் உழக்கெண்ணெய் சந்திராதித்தவல் அட்டகட வோம் விரையாக்கலிப் பெருந்திருவிற் சங்கரப் பாடியோம்.... 3. குலோத்துங்க சோழன் காலத்தியது (1) வதிஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு....... (2) வடகரை விக்கிர சோழ வளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து நின்று நீங்கிய தேவ (3) தானம் திருப்புறம்பியத்து உடையார் திருப்புறம்பிய முடையார் கோயில் அமுதுபடியாக புகுநா (4) அமுது செய்தருளுவது பூரியாதலால் இப்படியாக.... இத்தேவற்கு ஆறாவது ஆயிரத்தளியா (5) னமீனவன் மென்கண்ட சோழபுரத்தெழுந்.... கும்பிட்ட நக்கன் (6) ஆட் கொண்ட நாயகன் விண்ணப்பஞ் செய்து உடை யார் திருப்புறம்பிய முடையாரும் ஆளுடைய நாச்சியாரும் (7) சென்னெல் அமுது செய் தருளப்பண்ணி அமுது செய்து வருகையால் பின்பு உள்ளு.... எழுந் தருளியிருக்குந் தேவர்க (8) ள் அமுது செய்வது... பூரியே சந்திராதித்தவல் அமுது செய்தருளப் பண் (9) ணவே ணுமென்று திருப்புறம்பியத்தில் வெள்ளாள ரையும் குலோத்துங்க (10) சோழ மங்கலத்து காணியாளரையும் வெள்ளாளரையும் மற்றும் புறம்புள்ள தேவதான (11)த்துக் காணியாளரையும் வேண்டிக் கொள்ள இப்படி இவர்கள் சம்மதித்து இந்நெல்லு (12) அளக்க இசைந்திட்டு இட்டமையில் சென்னெல்லும் வெள்ளையுமல்லதுபூரி (13) அமுது செய்விப்பார் திருவாணை திருவிரையாக்கலி - இது பன்மா சேஸீவரரக்ஷை. விடேல் விடுகு காஞ்சிமாநகரைத் தலைநகராக் கொண்டு தொண்டை மண்டலத்தையும் சோழமண்டலத்தையும் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்களுள் தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் என்பவனும் ஒருவன் ஆவன். சரித ஆராய்ச்சியாளர்கள் அவனை மூன்றாம் நந்திவர்மன் என்பர். அவன் கி.பி. 830 முதல் 854 வரை அரசாண்டவன். தற்காலத்தில் வெளி வந்துள்ள பாரதவெண்பா அவ்வேந்தன் காலத்தில் எழுதப் பெற்றதாகும். அதன் ஆசிரியர் பாயிரத்தில் அவனைப் புகழ்ந்து ஒரு வெண்பா கூறியிருத்த லோடு பல்லவர் கோமான் பண்டிதராலயன் என்னும் உரை நடையில் அவனைப் பாராட்டியுள்ளனர். சிறந்த செந்தமிழ்ப் புலமையும் ஒப்பற்ற சிவபத்தியும் வாய்ந்த அவ்வேந்தன் புலவர் பெருமக்கள் பால் பேரன்பு பூண்டு அன்னோரைப் பெரிதும் ஆதரித்து வந்தான். அவன் காலத்தில் நிலவிய புலவர் பெருமான் ஒருவர் அவன் மீது ஒரு கலம்பகம் பாடியுள்ளார். அது நந்திக் கலம்பகம் எனப்படும் கலம்பகங்களுள் மிகவும் பழமை வாய்ந்தது அதுவேயாகும். அந்நூல் அவ்வேந்தனை அவனி நாராயணன் எனவும், மல்லை வேந்தன் எனவும், மயிலை காவலன் எனவும், விடேல் விடுகு எனவும் புகழ்ந்து கூறுகின்றது. அவற்றுள், விடேல் விடுகு என்னும் சொற் றொடர் மூன்று பாடல்களில் வந்துள்ளது. அப்பாடல்களுள் ஒன்று, நெஞ்சா குலமுற்றிஙனே மெலிய நிலவின்கதிர் நிளெரியாய் விரியத் துஞ்சா நயனத்தொடு சோருமிவட் கருளா தொழிகின்றது தொண்டைகொலோ செஞ்சாலி வயற்படர் காவிரிசூழ் திருநாடுடை நந்திசினக்கலியின் வெஞ்சாயன் மறைத்த தனிக்குடையான் விடை மண் பொறி யோலை விடேல்விடுகே (நந்திக்கலம்பகம், பா.11) என்பது, ஈண்டு விடேல் விடுகு என்பது நந்திவர்மனை யுணர்த்துதல் அறியத்தக்கது. அன்றியும், வினைவார்கழல் நந்தி விடேல் விடுகு என்பதும், விண்டொடு திண்கிரியளவும் வீரஞ் செல்லும் விடேல் விடுகு என்பதும் பல்லவ வேந்தனாகிய நந்திவர்மனையே குறித்தல் காண்க. அவ்வேந்தனது தந்தையாகிய தந்திவர்மனது ஆட்சிக்காலத்தில் குவாவன் சாத்தன் என்ற தலைவன் ஒருவன் விடேல் விடுகு முத்தரையன் என்னும் பட்டத்துடன் புதுக்கோட்டை நாட்டைச் சார்ந்த ஒரு பகுதியில் வாழ்ந்து வந்தான். (Inscriptions of Pudukkottai State No. 18) அவன் பல்லவ மன்னர்களுக்குத் திறை செலுத்தி வந்த ஒரு குறுநில மன்னனாதலின், விடேல் விடுகு என்னும் பட்டம் அவனுக்கு அவ்வரசர்களால் வழங்கப்பெற்றுள்ளது. அன்றியும், விடேல் விடுகு விக்கிரமாதித்த சதுர்வேதி மங்கலம் என்னும் ஊர் ஒன்று, நந்திக் கலம்பகங்கொண்ட தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் காலத்தில் தொண்டை மண்டலத்தில் திருவல்லத்திற்கு அண்மையில் இருந்துள்ளது. (South Indian Inscriptions Vol. II No. 43) இவற்றை யெல்லாம் ஆராயுங்கால் பல்லவ மன்னர்கட்கு உரியனவாய் அக்காலத்தில் வழங்கிவந்த பட்டங்களுள் விடேல் விடுகு என்பதும் ஒன்று என்று எண்ண வேண்டியிருந்தது. அத்தொடர் மொழி உண்மையாக எதனையுணர்த்து கின்றது என்று அறிந்துகொள்ள இயலாமையின் அது பல்லவர்க்குரிய பட்டங்களுள் ஒன்று என்றே யானும் கருதியிருந்தேன்.1 காஞ்சிமாநகரில் பரமேச்சுரவிண்ணகரத்தில் பொறிக்கப் பெற்றுள்ள ஒருகல்வெட்டை அண்மையில் யான் ஆராய்ந்து பார்க்க நேர்ந்த போது விடேல் விடுகு என்பது பல்லவ மன்னர்களது ஆணையைக் குறிக்கும் ஒரு தொடர்மொழி என்றுணர்ந்தேன். அக்கல்வெட்டில் காணப்படும் அப்பகுதி: 1. மந்திரி மண்டலமும் மகாசாபிந்தரும் உபயகணத்த யாரும் கடகயாருகள் நந்திவன்மனென்று அபிஷேகஞ் செய்து தெர்க்கேய்ச் சத்திரிகரிவயும் சமுத்திரகோஷத்து (2) .... கட்வாங்கத்வஜமும் விருஷ பலாஞ்சனமு மிறக ...... டிகளாற் கூட்டி விடேல் விடுகென்னுந் திருவாணை நடாவி அபிஷேகஞ் செய்திருந்த இடம் (S.I.I. Vol. IV Ins. No. 135)* என்பதாம். அது பல்லவ மல்லன் என்று வழங்கப் படுவோனாகிய நந்திவர்மன் என்பான் தான் முடிசூடிய நாளில் பல்லவ அரசர்களுக்குரிய சமுத்திர கோஷம் என்னும் முரசத்தையும் கட்டுவாங்க துவசத்தையும் இடப முத்திரையையும் எய்தி, விடேல் விடுகு என்னும் ஆணையை நடாத்தினான் என்று கூறுகின்றது. ஈண்டுக் குறிக்கப் பெற்ற நந்திவர்மப் பல்லவமல்லன் என்பான் கி.பி. 717 முதல் 779 முடிய நம் தமிழகத்திற் பெரும் பகுதியை ஆட்சிபுரிந்த பல்லவ அரசன் ஆவான். இவனது பேரனே நந்திக் கலம்பகம் கொண்டவனும் பாரத வெண்பாவைப் பாடு வித்தவனும் தெள்ளாறு எறிந்தவனும் ஆகிய நந்திவர்மன் என்பவன். ஆகவே, நந்திக்கலம்பகத்திலும் கல்வெட்டுக்களிலும் பயின்றுவரும் விடேல்விடுகு என்னும் தொடர்மொழி முற்காலத்தில் பல்லவ அரசர்களது ஆணையைக் குறித்தமை நன்கு புலப்படுத்தல் காண்க.  இ. ஊர்ப்பெயராய்வு 17. பெருமிழலைக் குறும்ப நாயனாரது திருப்பதி சிவனடியார் அறுபத்துமூவருள் ஒருவராகிய பெருமிழலைக் குறும்ப நாயனார் வாழ்ந்து வீடுபேறெய்திய திருப்பதி. பெருமிழலை என்பது திருத் தொண்டர் புராணம் படித்தோர் யாவரும் நன்கறிந்த தொன்றாம். இஃது இங்ஙனமாக, சைவ சமயசாரியர்களால் பாடப் பெற்றதும், திருஞான சம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் படிக்காசு அருளப் பெற்றதுமாகிய திருவீழிமிழலை என்னும் திருப்பதியே, இந்நாயனாரது பெருமிழலை எனக்கொண்டனர் பிற்காலத்தினர். ஆதலால், இத்திருப்பதிகள் இரண்டும் ஒன்றா? அன்றி வேறா? வேறாயின் பெருமிழலை யாண்டையது? என்பவற்றை ஆராய்வாம். சுந்தரமூர்த்திகள் அருளிய திருநாட்டுத் தொகையிலுள்ள மிழலை நாட்டு மிழலையே, வெண்ணிநாட்டு மிழலையே என்ற அடியால் மிழலை என்னும் பெயருடைய திருப்பதிகள் இரண்டு உண்டு என்பது வெளியா கின்றது. அன்றியும் இவ்விரு மிழலைகளுள் ஒன்று மிழலை நாட்டிலும் மற்றொன்று வெண்ணி நாட்டிலும் இருத்தல் வேண்டு மென்பது அவ்வடியாலே அறியப்படுகின்றது. ஆசிரியர் சேக்கிழார் நமது குறும்ப நாயனாரது திருப்பதி, மிழலை நாட்டிலுள்ள பெருமிழலை என்று மிகத் தெளிவாய்க் கூறியுள்ளனர். இதனை, சூதநெருங்கு குலைத்தெங்கு பலவுபூகஞ் சூழ்புடைத்தாய் வீதிதோறு நீற்றினொளி வீரியமேலி விளங்குபதி நீதிவழுவா நெறியினராய் நிலவுங்குடியா னெடுநிலத்து மீதுவிளங்குந் தொன்மையது மிழலைநாட்டுப் பெருமிழலை. - பெரியபுராணம், குறும்ப.1. என்ற பாடலால் உணர்க. அன்றியும் அவ்வாசிரியர் வீழிமிழலையை மிழலை நாட்டிலுள்ள திருப்பதி என்று யாண்டும் குறிப்பிடவில்லை. ஆதலால் அவர் வீழிமிழலையும் பெரு மிழலையும் வெவ்வேறு திருப்பதிகள் என்றே கருதியுள்ளா ரென்பது ஒருதலை. எனவே, சுந்தர மூர்த்திகள் கூறியுள்ள மிழலைநாட்டு மிழலையும் வெண்ணி நாட்டு மிழலையும் முறையே பெருமிழலையும் வீழிமிழலையுமாயிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். ஆகவே இவ்விரண்டும் வெவ்வேறு திருப்பதிகளேயாம். இங்ஙனமே, ஆனாய நாயனாரது மங்கலமும்1 ஏயர்கோன் கலிக்காம நாயனாரது பெரு மங்கலமும்2 அரிவாள் தாய நாயனாரது கணமங்கலமும்3 பொதுவாக மங்கல மெனப் படினும் அவை வேறு வேறு திருப்பதிகளாயிருத்தல் ஈண்டு அறியத் தக்கது. இத்துணையுங் கூறிய வாற்றால், பெருமிழலைக் குறும்ப நாயனாரது திருப்பதி வெண்ணி நாட்டு வீழிமிழலை யன்றென்பதும், மிழலை நாட்டுப் பெருமிழலையே யாம் என்பதும் இனிது புலப்படும். இனி, மிழலை நாட்டிலுள்ள பெருமிழலை எவ்விடத் துள்ளது என்பதைத் துருவி நோக்குவோம். முற்காலத்தில் சோழமண்டலம் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றுள் இராசேந்திர சிங்கவளநாடு என்பதும் ஒன்றாகும். ஒவ்வொரு வளநாடுப் பலநாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது; எனவே, இராசேந்திர சிங்கவளநாட்டிலும் பல உள்நாடுகள் இருந்திருத்தல் வேண்டும். இவ்வளநாடு இருபத்திரண்டு நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்த தென்பது கல்வெட்டு ஆராய்ச்சியால் புலப்படுகின்றது; அவற்றுள் மிழலைநாடு என்பதும் ஒன்றாகும். இதனை இராஜேந்திர சிங்கவளநாட்டு மிழலைநாட்டுச் சேய்நலூர் சபையார் இடக்கடவ திருமெய்க்காப்பு ஒன்றும் 4 என்ற கல்வெட்டுப் பகுதியால் நன்குணரலாம். இக்கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ள சேய்நலூர், அறுபான் மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய சண்டேசுவரநாயனார் திருவவதாரம் செய்தருளியதும் மண்ணியாற்றின் கரையில் உள்ளதுமான திருச்சேய்ஞலூரே யாகும். இத்திருச்சேய்ஞலூர் மிழலை நாட்டிலுள்ளது என்பது மேற்குறித்த கல்வெட்டால் புலப்படும் செய்தியாகும். இத்திருப்பதிக் கண்மையில் இரண்டுமைலில் மிழலை என்ற அழிந்த ஊர் ஒன்று உள்ளது. இஃது இப்பொழுது கும்ப கோணத்திலிருந்து நான்கு மைல் தூரத்தில் சென்னைக்கு போகும் பெருவழியில் உள்ளது. யாம் நேரிற் சென்று அதனைப் பார்த்த போது அழிவுற்ற நிலையிலுள்ள ஒரு பழைய சிவாலயம் அங்கே காணப்பட்டது. எக்காரணத்தாலோ அச்சிவாலயமும் அதனைச் சூழ்ந்துள்ள ஊரும் அழிந்து போய்விட்டன. அவ்வூரினர் அதற்கருகிலுள்ள களம்பரம் என்ற ஊரில் குடியேறியுள்ளனர். மிழலையும் அதிலுள்ள சிவாலயமும் பழைய நாளில் நல்ல நிலையில் இருந்திருத்தல் வேண்டும். அழிவுற்ற அவ்வாலயத்தி லுள்ள படிமங்கள் அதில் ஒரு புறத்தில் புதியதாக அமைக்கப் பெற்றுள்ள ஒரு சிறு அறையுள் வைக்கப்பெற்று வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன. அவ்விடத்திற் பெருமிழலைக்குறும்ப நாயனாரது படிமம் இன்றும் உள்ளது. ஆகவே, புலவர் பெருமானாகிய சேக்கிழார், குறும்பநாயனாரது திருப்பதியாகக் கூறியுள்ள பெருமிழலை மிழலைநாட்டிலுள்ள இம்மிழலையே யாதல் அறிந்து கொள்க. இனி, சேக்கிழாரடிகள் குறும்பநாயனாரது திருப்பதி பெருமிழலை என்றன்றோ உரைத்துள்ளனரெனின், கூறுவாம் பாபநாசம் தாலுக்காவி லுள்ள மிலட்டூர் முற்காலத்தில் பெருமிலட்டூர் என்று வழங்கிற்று என்பது நித்தவினோத வளநாட்டுக் கிழார்க் கூற்றத்துப் பெருமிலட்டூர் ஊரார் யாண்டு இருபத்தொன்பதாவது முதல் காசு ஒன்றுக்கு ஆட்டைவட்டன் முக்குறுணி நெல்லுப் பொலிசையாகத் தஞ்சாவூர் ஸ்ரீராஜ ராஜேரம் உடையார் பெரும் பண்டாரத்தேய் ஆடவல்லான் என்னும் மரக்காலால் அளக்கக் கடவர்களாகக் கொண்ட காசு இருநூறினால் ஆண்டாண்டு தொறும் அளக்கக் கடவநெல்லு ஐம்பதின் கலம் (S.I.I. Vol II. No. 6) என்னும் கல்வெட்டினால் புலப்படுகின்றது. இதனைப் போலவே, தஞ்சாவூர்த் தாலுக்காவிலுள்ள ஆற்காடு என்னும் ஊர் பழையநாளில் பேராற்காடு எனவும் சீநக்க வள்ளலுக்குரிய ஊர்களுள் ஒன்றாகிய அரசூர் பேரரசூர் எனவும் வழங்கிவந்தன என்று தெரிகின்றது. (South Indian Inscriptions. Vol II Introduction Page 26.) எனவே, பெருமிலட்டூர், பேராற்காடு, பேரரசூர் என்று முற்காலத்தில் வழங்கிய ஊர்கள் முறையே மிலட்டூர், ஆற்காடு; அரசூர் என்று தற்காலத்தில் வழங்குவது போல, நமது குறும்பநாயனாரது திருப்பதியாகிய பெருமிழலையும் இஞ்ஞான்று மிழலை என வழங்குகின்றது என்றுணர்க. குறிப்பு : இஃது செந்தமிழ்த் தொகுதி 21 பகுதி 10-இல் வெளிவந்த கட்டுரையின் திருந்திய வடிவமாகும்.  18. ஏர் என்னும் வைப்புத்தலம் கும்பகோணத்திற்கு வடபால் இரண்டுமைல் தூரத்தில் ஏரகரம் என்ற சிற்றூர் ஒன்று உளது. அது சைவசமயாசாரியர் நால்வர்களாலும் பாடப்பெற்ற திருப்புறம்பியம் என்னுந் தலத்திற்குத் தென்கிழக்கே இரண்டு மயில் தூரத்திலும், திருஞானசம்பந்த சுவாமிகளாலும் திருநாவுக்கரசு சுவாமி களாலும் பதிகங்கள் பாடப்பெற்ற இன்னம்பர் என்னும் திருப்பதிக்கு வடகிழக்கில் இரண்டுமைல் தூரத்திலும் இருக்கின்றது. கல்லாமக்கள் அதனை ஏராரம் எனவும் ஏராவரம் எனவும் வழங்குகின்றனர். அவ்வூர் இதுபோது மிகவும் அழிவுற்ற நிலையில் இருக்கின்றது. ஆயினும், பண்டைக்காலத்தில் நம் சோழமண்டலத்திற் சிறந்து விளங்கிய பேரூர் களுள், அச்சிற்றூரும் ஒன்றாக இருந்திருத்தல் வேண்டும் என்பதை அதனை ஒருமுறை பார்த்தோரும் நன்குணர்ந்து கொள்ளலாம். அப்பழைய வூரில் தென்மேற்குமூலையில் வயல்களுக்கு அணித்தாக ஒரு சிவாலயம் உளது. அது பாதுகாப்பாரின்றிச் சிதைந்து அழிந்து போகும் நிலையில் இதுபோது இருக்கின்றது. அவ்வாலயத்தின் திருமதில்களும் திருச்சுற்று மாளிகைகளும் கோபுரமும் இடிந்து போயின; மகாமண்டபம் மாத்திரம் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. அத்திருக்கோயிலுக்கு யான் சென்று பார்த்தபோது அது பழமைவாய்ந்த ஒரு சிவாலயம் என்று துணிதற்குரியதாக இருந்தது. அதன் கருப் பக்கிரகத்தின் தென்புறத்தில் பெரியதோர் கல்வெட்டும் காணப்பட்டது. அக்கல்வெட்டு மிகச் சிதைந்தும் நிலத்திற் புதைந்தும் இருந்தமையின் அதனை முழுதும் படித்தற்கு இயலவில்லை. ஆயினும் அஃது எவ்வரசன் காலத்தில் வரையப் பெற்றது என்பதையும் அத்திருக்கோயில் அமைந்துள்ள ஊரின் உண்மைப் பெயர் யாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உண்டாயிற்று. ஆகவே, நிலத்திற் புதைந்திருந்த பகுதியைச் சில நண்பரது உதவி கொண்டு தோண்டிப் பார்த்த போது அது கி.பி. 1120 முதல் 1136 வரையிற் சோழ மண்டலத்திற் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து ஆட்சி புரிந்த விக்கிரமசோழன் காலத்துக் கல்வெட்டு என்பது நன்கு வெளியாயிற்று. விக்கிரம சோழனது நீண்ட மெய்க்கீர்த்தியில் ஐம்படைப்பருவத்து வெம்படைத்தாங்கியும் என்பது முதலாகவுள்ள பகுதியும் காணப்பட்டது. பின்னர், அக்கல்வெட்டில் எஞ்சிய பகுதியையும் இயன்றவரையில் முயன்று படித்துக் கொண்டு வருங்கால், இன்னம்பர் நாட்டு ஏராகிய மும்மடி சோழமங்கலம் என்னும் தொடர்மொழிகள் அத்திருக்கோயில் அமைந்துள்ள அவ்வூரின் பெயர் யாது என்பதைத் தெளிவாகப் புலப்படுத்தி மகிழ்வூட்டின. பிறகு, அவ்வூர் வைப்புத்தலங்களுள் ஒன்று என்பது எனது ஆராய்ச்சியிற் புலப்பட்டமையின் அதனை ஈண்டு வரையலானேன். சைவசமயகுரவர்களுள் ஒருவராகிய திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகத்தில் உள்ள, இடைமரு தீங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேரூர் சடைமுடி சாலைக்குடி தக்களூர் தலையாலங்காடு தலைச்சங்காடு கொடுமுடி குற்றாலங் கொள்ளம்பூதூர் கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு கடைமுடி கானூர் கடம்பந்துறை கயிலாயநாதனையே காணலாமே என்னும் திருப்பாடலில் ஏர் என்ற திருப்பதியொன்று கூறப் பட்டுள்ளது. அன்றியும், அவ்வடிகள் அருளிய திருவீழி மிழலைத் திருத் தாண்டகத் திலுள்ள, பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பாழிய்யார் பெரும்பற்றப்புலியூர் மூலட்டானத்தார் இரும்புதலார் இரும்பூளையுள்ளார் ஏரார் இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன்சொற் கரும்பனையான் இமையோடும் கருகாவூரார் கருப்பறியலூரார் கரவீரத்தார் விருப்பமரர் இரவுபகல் பரவியேத்த வீழிமிழலையே மேனினாரே என்ற திருப்பாடலிலும் ஏர் என்னும் திருப்பதி குறிக்கப் பெற்றிருத்தல் அறியத்தக்கதாகும். வாகீசப் பெருமானது திருவாக்கிற் பயின்றுள்ள அத்திருப்பதிக்கு அவ்வடிகள் திருவாய் மலர்ந்தருளிய தனிப்பதிகம் இது போது காணப்படவில்லை. அன்றியும், திருஞான சம்பந்த சுவாமிகளும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அருளிய பதிகங்களும் அத்திருப் பதிக்கு இல்லை. சமயகுரவர்களாகிய இப்பெரியோர்கள் மூவரும் அருளிய தேவாரப்பதிகங்களுள் பல இறந்து போயின என்று சொல்லக் கேட்கிறோம். அங்ஙனம் இறந்துபோன பதிகங்களுள் ஏர் என்னும் திருப்பதிக்குரிய பதிகங்களும் இருத்தல் கூடும் என்பது திண்ணம். ஆயினும், திருநாவுக்கரையரது திருவீழிமிழலைத் திருப்பதிகத்திலும் க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகத்திலும் அத்திருப்பதி கூறப் பட்டிருத்தலின் அது தேவாரவைப்புத் தலங்களுள் ஒன்றாகும் என்பது ஒருதலை. எனவே, ஏர் என்னும் அவ்வைப்புத்தலம் யாண்டையது? எனின் அஃது இன்னம்பர் நாட்டு ஏராகிய மும்மடிசோழ மங்கலம் என்று கல்வெட்டுக் களிற் குறிக்கப் பெற்று இதுபோது ஏரகரம், ஏராரம் என்ற பெயர்களுடன் கும்பகோணத்திற்கு வடபால் இரண்டு மைல் தூரத்தில் உள்ள ஊரேயாதல் வேண்டும். இனி, ஏரகரம் திருக்கோயிலிற் காணப்பெறும் அக்கல் வெட்டு, அவ்வூர் இன்னம்பர் நாட்டில் உள்ளது என்பதையும், பழைய காலத்தில் ஏர் என்னும் பெயருடன் நிலவியது என்பதையும், அதற்கு மும்மடிசோழ மங்கலம் என்ற வேறொரு பெயரும் அந்நாளில் இருந்தது என்பதயும் நன்கு புலப்படுத்து கின்றது. இவ்வின்னம்பர் நாடு பண்டைக்காலத்திற் சோழ மண்டலத்திற் காவேரிக்கு வடகரையிலிருந்த பலநாடுகளுள் ஒன்றாகும்; இஃது இன்னம்பரைத் தலைநகராகக் கொண்டது. கும்பகோணந்தாலூகாவில் உள்ள கொட்டையூர், மேலக் காவேரி, கருப்பூர், அசுகூர், ஏரகரம் முதலான ஊர்களையும் பாவநாசந் தாலூகாவில் உள்ள ஆதனூர், மருத்துவக்குடி முதலான ஊர்களையும் தன்னகத்துக் கொண்டு இவ்வின்னம்பர் நாடு முற்காலத்தில் விளங்கிற்று என்பது பல கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. எனவே, தற்காலத்தில் இந்நாடு கும்ப கோணம், பாவநாசம் தாலுகாக்களில் அடங்கியுள்ள ஒரு பகுதி எனலாம். இன்னம்பர்நாட்டில் உள்ளதென்று கல்வெட்டுக் களால் அறியப்படும் ஏர் என்னும் திருப்பதி இந்நாளிலும் இன்னம்பருக்கு அணித்தாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. அன்றியும், அத்தலத்தைத் தம் திருப்பதிகங்களிற் கூறியுள்ள திருநாவுக்கரசு சுவாமிகள் இன்னம்பர் ஏர் எனவும் ஏரார் இன்னம்பரார் எனவும் அதனை இன்னம்பருக்கு அணித்தாக வைத்துக் கூறியிருப்பதும் ஈண்டு அறிந்து கொள்ளற்பாலதாகும். இனி, முதல் இராசராசசோழனால் எடுப்பிக்கப் பெற்ற தஞ்சை இராசராசேச்சுரத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று ஏர் என்னும் திருப்பதி இன்னம்பர்நாட்டில் உள்ளது என்று உணர்த்துகின்றது. அது ராஜேந்திர சிங்க வளநாட்டு இன்னம்பர்நாட்டுப் பழைய வானவன்மகாதேவிச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் இடக்கடவ திருமெய்காப்பு ஒன்றும் (எ) இந்நாட்டு அசுகூர் சபையார் இடக்கடவ திருமெய்காப்பு ஒன்றும் (எஉ) இந்நாட்டு ஏராகிய மும்மடி சோழமங்கலத்தார் இடக்கடவ திருமெய் காப்பு ஒன்றும் (எங) இந்நாட்டு ஸ்ரீபராந்தகச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் இடக்கடவ திருமெய்காப்பு இரண்டும் (South Indian Inscriptions Volume II. No. 70) என்பதாம். தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள இக்கல்வெட்டும் இன்னம் பருக்கு அண்மையில் உள்ள ஏரகரத்தில் அமைந்துள்ள கோயிலிற் காணப்படும் கல்வெட்டும் தம்முள் ஒற்றுமையுடையன வாய் ஏர் என்ற ஊர் இன்னம்பர்நாட்டில் உளது என்றுணர்த்துதல் காண்க. ஆகவே, ஏர் என்னும் வைப்புத்தலம் இந்நாளில் ஏரகரம் என்ற பெயருடன் கும்பகோணம் தாலூக்காவில் காவேரியாற்றிற்கு வடகரையில் உள்ளது. என்பது நன்கு உறுதியெய்து கின்றது. பத்து, பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் வைப்புத்தல மாகிய ஏர், மும்மடி சோழமங்கலம் என்ற மற்றொரு பெயரும் உடையதாக இருந்தது என்பது ஏரகரத்திலுள்ள கல்வெட்டாலும் தஞ்சைப் பெரிய கோயிலிலுள்ள கல்வெட்டாலும் புலப்படு கின்றது. சோழமன்னரது ஆட்சிக்காலங்களில் நம் தமிழகத்தில் உள்ள பல நகரங்கள் அவ்வேந்தர்களது பெயர்களால் வழங்கப் பெற்றுவந்தன என்பது பல கல்வெட்டுக்களால் தெரிகின்றது. கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்றாகவுள்ளதும் திருவானிலை என்னும் திருக்கோயிலைத் தன்னகத்துக் கொண்டது மாகிய கருவூர் அந்நாளில் முடி வழங்கு சோழ புரம் என்ற பெயரையும் உடையதாக இருந்தது என்பது அவ்வூரிலுள்ள கல்வெட்டுக் களால் வெளியாகின்றது. (South Indian Inscriptions Vol. III. Nos. 23 and 24) நம் சோழமண்டலத்திற் காவேரிக்குத் தென்பால் உள்ள தலங்களுள் ஒன்றாகிய பழையாறு என்ற நகர் முடிகொண்ட சோழபுரம் என்னும் பெயரையும் முற்காலத்தில் உடையதாக இருந்தது. (Inscriptions No. 271 of 1927). அவ்வூர்கள் கருவூராகிய முடிவழங்கு சோழபுரம் எனவும் பழையாறாகிய முடிகொண்ட சோழபுரம் எனவும் கல்வெட்டுக்களில் வரையப் பெற்றிருத்தல் போல ஏர் என்னும் தலமும், ஏராகிய மும்மடி சோழமங்கலம் என்று குறிக்கப் பெற்றுள்ளது. மும்முடி சோழன் மும்மடிச் சோழன் என்ற பெயர்கள் முதல் இராசராசசோழனுக்கு வழங்கி வந்தன என்று தெரிகிறது. எனவே, முதல் இராசராசசோழனது ஆட்சிக் காலத்திலேதான் ஏர் என்னும் தலம் மும்மடி சோழமங்கலம் என்ற பெயரை எய்தியிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள முதல் இராசராசசோழனது கல்வெட்டும் இதனை வலியுறுத்துகின்றது. ஆகவே, சோழமன்னரது ஆட்சிக் காலங்களில் மும்மடிசோழ மங்கலம் ஏர் என்ற பெயர்களை உடையதாயிருந்த ஊர் இந்நாளில் ஏரகரம் என்று வழங்கிவருகின்றது என்பதும், அஃது அப்பர் சுவாமிகளாற் குறிக்கப் பெற்ற வைப்புத் தலங்களுள் ஒன்று என்பதும் நன்கு வெளியாதல் காண்க. குறிப்பு : இஃது தமிழ்ப்பொழில் துணர் 10 மலர் 6-இல் வெளி வந்த கட்டுரையின் திருந்திய வடிவமாகும்.  19. செருத்துணையாரும் புகழ்த் துணையாரும் அவதரித்த திருப்பதிகள் அறுபான்மும்மை நாயன்மார்களுள் செருத்துணையார் என்பவர் ஒருவர். இப்பெரியார் தஞ்சாவூரில் அவதரித்து, திருவாரூர் என்னும் திருப்பதியை அடைந்து சிவபத்தியும் அடியார் பத்தியும் மிக்குடைய வராய்த் திருத்தொண்டு செய்து வந்தனர். அந்நாளில், திருக்கோயில் வழி பாட்டிற்கு அங்கு வந்த பல்லவர் கோனாகிய கழற்சிங்கரது மனைவியார் பூமண்ட பத்தின் பக்கத்திற்கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்துபார்க்க, அச்செயலைப் பொறாத செருத் துணையார் அவ்வம்மையாரின் மூக்கை அறுத்தனர். அஞ்சா நெஞ்சம் படைத்த இவ்வடிகள் ஆரூரிறைவற்கு மலர்மாலை தொடுக்கும் தொண்டினைப் பன்னாள் புரிந்து, இறுதியில் அப்பெருமானது திருவடி நிழலை யடைந்தனர். இவ்வடியாரது வரலாற்றைத் திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரிய புராணத்திற் காணலாம். இவ்வடிகள் பிறந்த திருப்பதி தஞ்சாவூர் என்பது தஞ்சை மன்னவனாஞ் செருத்துணை தன்னடியார்க்கு மடியேன் என்னும் சுந்தர மூர்த்தி சுவாமிகளது திருவாக்கினால் அறியப்படு கின்றது. தஞ்சாவூர் என்ற பெயருடைய மூன்று ஊர்கள் நம் தமிழகத்தில் உள்ளன. பாண்டி மண்டலத்தில் தென்காசிக்கருகில் ஒரு தஞ்சாவூர் உளது என்பது, தென்காசிக் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது.1 சோழ மண்டலத்தில் அப்பெயர் வாய்ந்த இரண்டு ஊர்கள் இருக்கின்றன. எனவே, இம்மூன்றனுள் செருத்துணையாரது திருப்பதி யாது என்பது ஆராய்தற் குரியதாகும். நம்பியாண்டார் நம்பியருளிய திருத்தொண்டர் திருவந்தாதியில் உள்ள ஒரு பாடலும், சேக்கிழாரடிகளது பெரியபுராணத்தில் செருத் துணை நாயனார் புராணத்தில் உள்ள ஒரு பாடலும், இவ்வடிகள் பிறந்தருளிய திருப்பதி எந்நாட்டில் உள்ளது என்பதை நன்கு விளக்கு கின்றன. அவை, கழிநீள் கடல்நஞ் சயின்றார்க் கிருந்த கடிமலரை மொழிநீள் புகழ்கழற் சிங்கன்றன் றேவிமுன் மோத்தலுமே எழில்நீள் குமிழ்மலர் மூக்கரித் தானென் றியம்புவரால் செழுநீர் மருகனன் னாட்டமர் தஞ்சைச் செருத்துணையே திருத்தொண்டர் திருவந்தாதி, பா. 66. உள்ளும் புறம்புங் குலமரபி னொழுக்கம் வழுவா வொருமைநெறி கொள்ளுமியல்பிற் குடிமுதலோர்மலிந்த செல்வக் குலப்பதியாந் தெள்ளுந் திரைகண் மதகுதொறுஞ்சேலுங்கயலும் செழுமணியுந் தள்ளும் பொன்னி நீர்நாட்டு மருக னாட்டுத் தஞ்சாவூர் பெரியபுராணம் - செருத்துணைநாயனார் புராணம். பா.1 என்பன. இவற்றால் செருத்துணையாரது திருப்பதி சோழ மண்டலத்தில் உள்ள மருகல் நாட்டுத் தஞ்சாவூர் என்பது வெளியாதல் காண்க. இனி சோழமண்டலத்தில் தஞ்சாவூர் என்று வழங்கப் பெற்றுவரும் இரண்டு ஊர்களும், ஒன்று விசயாலயன், முதற் பராந்தகன், முதல் இராசராசன் முதலான சோழமன்னர்கள் வீற்றிருந்து செங்கோலோச்சிய திருவுடைமாநகரமாகும். இம்மாநகர், தஞ்சாவூர்க் கூற்றத்தில் உள்ளது என்பது பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ இராஜராஜே சுவரமுடையார்க்கு நாம் கொடுத்தன....’1 என்னும் தஞ்சைப் பெரியகோவிற் கல் வெட்டால் புலப்படுகின்றது. ஆகவே, தஞ்சாவூர்க் கூற்றத்தி லுள்ள இத்தஞ்சாவூர் செருத்துணைநாயனாரது திருப்பதியன்று என்பது திண்ணம். சோழமண்டலத்தில் க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டின் உள்நாடுகளுள் ஒன்றாகிய மருகல் நாட்டில் ஒரு தஞ்சாவூர் உளது என்பது க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுமருகல் நாட்டு மருகல் சபையார் இடக்கடவ திருமெய்காப்பு ஒன்றும்... இந்நாட்டு வைப்பூர் ஊரால் இடக்கடவ திருமெய்காப்பு ஒன்றும் இந்நாட்டு தஞ்சாவூர் ஊரார் இடக்கடவ திருமெய்காப்பு ஒன்றும் என்ற கல்வெட்டினால் தெரிகின்றது. (ளுடிரவா ஐனேயைn ஐளேஉசiயீவiடிளே ஏடிட. ஐஐ. ஐளே சூடி. 70) இச்செய்தி மற்றொரு கல்வெட்டாலும் உறுதியெய்து கின்றது. அது, (1) ‘திருவாய்க்கேள்வி முன்னாக திருபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 2-ஆவது ஆடிமாசம் செவரன்மேடான அகரநகரீசுவரச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீ மூலஸ்தான முடையார் கோயிலிற் செம்பாதி காணியுடைய (2) சிவப்பிராமணன் காசிபன் இருஷப தேவ பட்டனேனும் இந்த ஸ்ரீ மூலஸ்தான முடையார் கோயிலிற் மற்றைச் செம்பாதி காணியுமுடையஇக்குடி மகாதேவப் பட்டனுள்ளிட்ட அனைவோமும் சோழமண்டலத்து மருகல் நாட்டுத் தஞ்சாவூர் தஞ்சாவூர் கிழவன் உலகளந்தா (3) ன் அகமுடையாள் உய்ய கொண்டாள் பக்கற் காணி ஒகரியிலே நாங்கள் கொண்ட பழங்காசு இக்காசு மூன்றுக்கும் பலிசை நிசதிச் செலவாக இத்தேவர்க்கு அந்தியம் போது ஏற்றி இச்சந்தியிற் பேரமுது செய்த இத்தனையுஞ் செல்ல நாங்களும் எங்கள் சந்தானத்தாரும் சந்திராதித்தவரை... (4) திதல் ஒருசந்தி விளக்கு எரிக்கக் கடவோமாகச் சிலாலேகை பண்ணிக் கொடுத்தோம். இவ்வனைவோம் இவர்கள் பணிக்க எழுதினேன் இவ்வூர்க் கரணத்தான் சிவதாசன் ஆட்கொண்டானான நூற்று நாற்பத் தென்மனேன் இவை என் எழுத்து. இப்படிக்கு இவை இருஷபதேவ பட்டன் எழுத்து. இப்படிக்கு இவை மகாதேவ பட்டன் எழுத்து’ என்பதாம். எனவே, நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரடிகளும் கூறியுள்ள மருகல் நாட்டுத் தஞ்சாவூர், இவ்விருகல்வெட்டுக்களிலும் குறிக்கப்பெற்றுள்ள தஞ்சாவூரே யாதல் வேண்டும் என்பது ஒருதலை. இந்நாளில் நம்மாகாணத்திலுள்ள தாலுக்காக்கள் போல, சோழ மண்டலத்தில் பல உள்நாடுகள் முற்காலத்தில் இருந் துள்ளன. அவற்றுள் மருகல் நாடு என்பதும் ஒன்றாகும். இது திருமருகலைச் சூழ்ந்துள்ள நாடு என்பது இதன் பெயரால் அறியப்படுகின்றது. இந்நாடு மிகவும் தொன்மை வாய்ந்த தொன்றாம். ஆளுடைய நம்பிகளும் தமது திருநாட்டுத் தொகையில் மருகல் நாட்டு மருகலே என்று இம்மருகல் நாட்டைக் குறித்திருப்பது அறியத்தக்கது. திருமருகல்1 வைப்பூர், பூதனூர், இடையாற்றுக்குடி, தஞ்சாவூர் முதலான ஊர்கள் இந்நாட்டில் உள்ளன என்பது சில கல்வெட்டுக்களால் வெளியாகின்றது. ஆகவே, இந்நாடு முற்காலத்தில் தஞ்சை ஜில்லா நன்னிலம் தாலுக்காவில் இருந்திருத்தல் வேண்டும். எனவே, இந்நாட்டில் உள்ள தஞ்சாவூரும் நன்னிலம் தாலுக்காவில் இருத்தல் வேண்டும் என்பது திண்ணம். மாயூரத்திலிருந்து திருவாரூர்க்குச் செல்லும் இருப்புப்பாதையில் வெட்டாற்றிற்கு வடகரையில், திருவிற்குடி என்னும் புகைவண்டி நிலையம் ஒன்று உளது. இதற்குக் கிழக்கே சுமார் ஐந்துமைல் தூரத்தில், தஞ்சாவூர் என்ற ஊர் ஒன்று இருக்கின்றது. நன்னிலம் தாலுக்காவில் உள்ள இந்த தஞ்சாவூரே, நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரடிகளும் கூறியுள்ள மருகல் நாட்டுத் தஞ்சாவூராகும். இதுவே, செருத் துணை நாயனார் அவதரித்த திருப்பதி என்பது நன்கு துணியப்படும். சிவனடியார் அறுபத்து மூவருள் புகழ்த்துணை நாயனார் என்பவரும் ஒருவர். இவர் செருவிலிபுத்தூரில் ஆதிசைவ மரபிலே தோன்றிச் சிவபெருமானை முறைப்படி அருச்சித்து வரும் நாட்களில், கொடிய பஞ்சம் உண்டாக, அதனைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தளர்ச்சியுற்ற நிலையிலும் தம் தொண்டினைக் குறைவறச் செய்து கொண்டு வந்தனர். நாள் தோறும் வறுமையால் மெலிவுற்றுவந்த புகழ்ந்துணையார், ஒருநாள் சிவபெருமானுக்குத் திருமஞ்சன மாட்டும் போது, அவ்விறைவன் திருமுடி மீது திருமஞ்சனக் குடத்தை உடல் தளர்ச்சியினால் தாங்க முடியாமல் போட்டு விட்டார். உண்மைத் தொண்டராகிய இவ்வடிகளது வறுமை ஒழியுமாறு, பஞ்சம் நீங்கும் வரையில் சிவபெருமான் நாள்தோறும் இவருக்கு ஒரு பொற்காசு அளித்து வந்தனர். படிக்காசு பெற்ற புகழ்த் துணையார் இறைவன் திருவருளை நினைந்து நினைந்து மனம் உருகித் தம் திருத்தொண்டை முட்டின்றிச் செய்துவந்தார். பஞ்சமும் நீங்கிற்று. எந்நாளும் திருத்தொண்டை வழாது புரிந்துவந்த இவ்வடிகள், இறுதியில் சிவபதம் எய்தினர். இவ்வரலாற்றைப் பெரிய புராணத்திற் காணலாம். திருத்தொண்டர் திருவந்தாதியின் ஆசிரியராகிய நம்பியாண்டார் நம்பியும், பெரியபுராணத்தின் ஆசிரியராகிய சேக்கிழாரடிகளும், புகழ்த்துணைநாயனார் அவதரித்துத் தொண்டுபுரிந்த இறைவன் திருவடியையடைந்த திருப்பதி செருவிலிப் புத்தூர் என்று தம் நூல்களில் கூறியுள்ளனர். இதனை, செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை வையஞ் சிறுவிலைத்தா உருவலி கெட்டுண வின்றி உமைகோனை மஞ்சனஞ்செய் தருவதோர் போதுகை சோர்ந்த கலசம் விழத்தரியா தருவரை வில்லி அருளின் நிதியது பெற்றனனே திருத்தொண்டர் திருவந்தாதி, பா.67. செருவிலிபுத் தூர்மன் னுஞ்சிவமறையோர் திருக்குலத்தார் அருவரைவில் லாளிதனக் ககத்தடிமை யாமதனுக் கொருவர்தமை நிகரில்லார் உலகத்துப் பரந்தோங்கிப் பொருவரிய புகழ்நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார் பெரியபுராணம், புகழ்த்துணைநாயனார் புராணம். பா.1. என்ற பாடல்களால் இனிதுணரலாம். புலவர் பெருமான் களாகிய இவ்விருவரும் இங்ஙனம் கூறியிருக்க, சந்தானா சாரியருள் ஒருவராகிய கொற்றங்குடி உமாபதி சிவனார், தாம் இயற்றியுள்ள திருத்தொண்டர் புராண சாரத்தில் புகழ்த்துணை யாரது திருப்பதி அழகார் திருப்புத்தூர் என்று குறித்துள்ளார்.1 எனவே, செருவிலிபுத்தூருக்கு அழகார் திருப்புத்தூர் என்ற பெயரும் உண்டு போலும். ஆனால் செருவிலிபுத்தூர் என்ற பெயருடைய ஊர் இந்நாளில் யாண்டும் காணப்படவில்லை. நாயன் மார்கள் அவதரித்தருளிய திருப்பதிகளை யாவரும் அறிந்து கொள்ளுமாறு மிகத் தெளிவாகக் கூறிச்செல்வது, சேக்கிழாரடிகள்பால் காணப்படுந் தனிச் சிறப்புக்களுள் ஒன்றாகும். இவ்வுண்மையை, ஆனாய நாயனாரது திருப்பதி மேல்மழநாட்டில் மங்கலம் எனவும், திருநாளைப் போவாரது திருப்பதி மேற்காநாட்டில் உள்ள ஆதனூர் எனவும், குறும்ப நாயனாரது திருப்பதி மிழலை நாட்டுப் பெருமிழலை எனவும், செருத்துணையாரது திருப்பதி மருகல் நாட்டுத் தஞ்சாவூர் எனவும் அடிகள் கூறியிருத்தலால் நன்கறியலாம். இத்தகையார், புகழ்த்துணையாரது திருப்பதியாகிய செருவிலிபுத்தூர் எந்நாட்டில் உள்ளது என்பதை உணர்த்தாமைக்குக் காரணம் புலப்படவில்லை. இந்நிலையில், உமாபதி சிவனார் அஃது அழகார் திருப்புத்தூர் என்று எவ்வாறுணர்ந்தனரென்பது ஆராய்தற்குரிய தொன்றாகும். இனி, ஏழாந் திருமுறையில் புகழ்த்துணையார் வரலாற்றைக் கூறும் பாடல் ஒன்று உளது. அது சைவசமய குரவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய அரிசிற்கரைப்புத்தூர்ப் பதிகத்தில் உள்ளது. அஃது, அகத்தடிமை செய்யு மந்தணன்தான் அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான் மிகத்தளர்வெய்திக் குடத்தையு நும்முடிமேல் விழுத்திட்டு நடுங்குதலும் வகுத்தவனுக்கு நித்தற்படியும் வருமென் றொருகாசினை நின்ற நன்றிப் புகழ்த்துணை கைபுகச் செய்துகந்தீர் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே என்பதாம். இப்பாடலில் கூறப்பெற்றுள்ள புத்தூர், அரிசில் என்னும் ஆற்றின் தென்கரையிலிருத்தலால் அரிசிற்கரைப் புத்தூர் என்ற பெயரையும் எய்தியுள்ளது. அன்றியும், இதனை அழகார் திருப்புத்தூர் என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழங்கியுள்ளனர் என்பது, அரிக்கும் புனல்சேர் அரிசிற்றென் கரை அழகார் திருப்புத்தூர் அழகனீரே என்னும் அவ்வடிகளது திருவாக்கினால் அறியப்படுகின்றது. எனவே, புகழ்த் துணையாரது திருப்பதி அழகார் திருப்புத்தூர் என்று உமாபதி சிவனார் தம் திருத்தொண்டர் புராண சாரத்தில் குறித்தமைக்குக் காரணம், சுந்தரமூர்த்தி சுவாமிகளது அரிசிற் கரைப்புத்தூர்ப் பதிகமேயாகும். இந்நாளில், அழகார் திருப்புத்தூர் என்பது அழகாத்திரிப்புத்தூர் எனவும், அழகாப்புத்தூர் எனவும் வழங்கப்படுகின்றது. இது, கும்பகோணத்திற்குத் தென்கிழக்கில் நான்கு மைல் தூரத்தில், குடவாயிலுக்குச் செல்லும் பெரு வழியில் அரிசில் ஆற்றின் தென்கரையில் இருக்கின்றது. இத் திருப்பதியில் அவதரித்துத் திருத்தொண்டு புரிந்து இறைவன் பால் படிக்காசு பெற்ற புகழ்த் துணையாரைத் தம்பதிகத்தில் வைத்துச் சிறப்பித்துள்ள சுந்தரமூர்த்தி சுவாமிகள் அரிசிற் புனல்கொண்டு வந்தாட்டுகின்றான் என்று அரிசிலாற்றையும் குறித்திருப்பது உணரற் பாலதாகும். திருஞானசம்பந்த சுவாமிகளும் தமது அரிசிற்கரைப் புத்தூர்ப் பதிகத்தில், அலந்த அடியான் அற்றைக் கன்றோர் காசெய்திப் புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே என்று புகழ்த்துணையார் இத்தலத்திற்செய்த திருத்தொண்டைப் பாராட்டி யுள்ளனர். ஆகவே, சைவசமய குரவர்களாகிய திருஞான சம்பந்தராலும், சுந்தரமூர்த்திகளாலும் குறிக்கப் பெற்றதும், இக்காலத்தில் அழகாப்புத்தூர் என்று வழங்கப்படு வதும் ஆகிய அரிசிற்கரைப் புத்தூரே அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய புகழ்த்துணைநாயனாரது திருப்பதி என்பது நன்கு விளங்குதல் காண்க.  20. அகநானூற்றின் உரையாசிரியரது ஊர் சங்கத்துச் சான்றோர்கள் பாடியருளிய தொகை நூல்களுள் ஒன்றாகிய அகநானூற்றை இக்காலத்துத் தமிழறிஞர்களும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் நன்கு அறிவார்கள். இத்தொகைநூல் சொற் பொருள் வளங்களிற் சிறந்து அகப்பொருளிலக்கணத்திற்கு அரியதோர் இலக்கிமாய் மிளிர்வதோடு தமிழகத்தில் முற்காலத்தில் வாழ்ந்த மூவேந்தர், குறுநிலமன்னர், வள்ளல்கள் முதலானோரைப் பற்றிய அரிய செய்திகளையும் கூறுகின்றது. இந்நூலின் பெருமைக் கேற்பச் சீரியதோர் உரை இதற்கு எழுதப்பட்டிருப்பின் அஃது எல்லோருக்கும் பெரும் பயனளிக்கும் என்பது திண்ணம். இப்போதுள்ள குறிப்புரைகூட முதலில் சில பாடல்களுக்கு மாத்திரம் உளது. முற்காலத்தில் சோழமண்டலத்திலிருந்த பெரும்புலவர் ஒருவர் இத்தொகை நூலுக்குக் கருத்து அகவலால் பாடியுள்ளார் என்பது, நின்ற நீதி வென்ற நேமிப் பழுதில் கொள்கை வழுதியர் அவைக்கண் அறிவுவீற் றிருந்த செறிவுடை மனத்து வான்றோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ அருந்தமிழ் மூன்றுந் தெரிந்த காலை ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள் நெடிய வாகி அடிநிமிர்ந் தொழுகிய இன்பப் பகுதி யின்பொருட் பாடல் நானூ றெடுத்து நூனவில் புலவர் களித்த மும்மதக் களிற்றி யானைநிரை மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம் மேவிய நித்திலக் கோவை யென்றாங்கு அத்தகு பண்பின் முத்திற மாக முன்னினர் தொகுத்த நன்னெடுந் தொகைக்குக் கருத்தெனப் பண்பினோர் உரைத்தவை நாடின் அவ்வகைக் கவைதாஞ் செவ்விய வன்றி அரியவை யாகிய பொருண்மை நோக்கிக் கோட்ட மின்றிப் பாட்டொடு பொருந்தத் தகவொடு சிறந்த அகவல் நடையாற் கருத்தினி தியற்றி யோனே பரித்தேர் வளவர் காக்கும் வளநாட் டுள்ளும் நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பிற் கெடலருஞ் செல்வத் திடையள நாட்டுத் தீதில் கொள்கை மூதூ ருள்ளும் ஊரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச் செம்மை சான்ற தேவன் தொன்மை சான்ற நன்மை யோனே. என்னும். பாடலால் அறியப்படுகிறது. அன்றியும், இப்பாடலின் கீழ் ஓர் உரைநடைப் பகுதியும் உளது. அஃது இத் தொகைக்குக் கருத்து அகவலாற் பாடினான் இடையளநாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்பது. இவற்றால் நெடுந்தொகை நானூற்றுக்குக் கருத்து அகவலாற் பாடியவர் சோழமண்டலத்தில் இடையளநாட்டிலே யுள்ள மணக்குடியென்ற ஊரில் வாழ்ந்தவர் என்பதும், இவரது இயற்பெயர் பால்வண்ணதேவன் என்பதும், அரசனால் அளிக்கப்பெற்ற வில்லவ தரையன் என்ற பட்டமுடையவர் இப்புலவர் என்பதும் நன்கு வெளியா கின்றன. இவர் அகநானூற்றிலுள்ள ஒவ்வொரு பாடலின் கருத்தையும் தெள்ளிதின் விளக்கிச் சிறந்த அகவல் நடையில் கூறியிருத்தல் வேண்டும் என்று தெரிகிறது. அகநானூற்றுப் பாடல்களின் கருத்தை விளக்கினமை ஒன்றே இவ்வாசிரியர் புலத்துறை முற்றிய புலவர் பெருமான் என்பதை இனிது புலப்படுத்து கின்றது. இத்தகைய தமிழ்ப் பேராசிரியர் அரிதின் எழுதித் தமிழகத்திற்கு உதவிய அந்நூல் இந்நாளில் கிடைக்காமற் போனமை பெரிதும் வருந்தத்தக்கது. இனி, இவ்வாசிரியர் பிறந்து வாழ்ந்துவந்த ஊர் யாது என்பது ஈண்டு ஆராயற்பாலதாகும். சோழமண்டலத்தில் மணக்குடி என்ற பெயருடன் இந்நாளில் பல ஊர்கள் உள்ளன. அவற்றுள் நம் புலவர் பிரானது ஊர் யாது என்பதைத் துருவிப் பார்த்தல் வேண்டும். நின்ற நீதி என்று தொடங்கும் பாயிரப் பாடலால் அவ்வூர் இடையளநாட்டில் உள்ளது என்பது பெறப் படுகின்றது. சோழமண்டலத்தில் முற்காலத்தில் பல உள்நாடுகள் இருந்தன என்பது பண்டைத் தமிழ் நூல்களாலும் கல்வெட்டுக்களாலும் அறியப்படுகின்றது. அவற்றுள், இடையள நாடு என்னும் பெயருடைய நாடு ஒன்றும் இருந்தது என்பது தஞ்சை இராசராசேச்சுரத்திலுள்ள1 கல்வெட்டுக்களால் புலப் படுகின்றது. தஞ்சாவூர்க் கோட்டத்திலுள்ள திருத்தருபூண்டிக் கூற்றத்திலேதான் இவ்விடையள நாடு இருந்தது என்பதும் அக்கல்வெட்டுக்களால் நன்கு அறியக்கிடக்கின்றது. அன்றியும், திருத்தரு பூண்டிக்குக் கிழக்கில் ஆறு கல் தூரத்திலுள்ள கொறுக்கை என்னும் ஊரில் காணப்படும் கல்வெட்டும் அவ்வூர் சோழ மண்டலத்தில் இடையள நாட்டில் உள்ளது என்று கூறு கின்றது. இச்செய்தி, தஞ்சைப் பெரிய கோவிலிலுள்ள ஒரு கல்வெட்டாலும் உறுதியெய்துகின்றது. எனவே, இடையள நாட்டிலுள்ள இக்கொறுக்கைக்கு அண்மையிலேதான் அகநானூற்றுரை யாசிரியரது ஊராகிய மணக்குடியும் இருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இக்கொறுக்கைக்கு வடக்கே ஒரு கல் தூரத்தில் ஐங்குறு நூற்றில் குறிக்கப் பெற்றுள்ள சோழர் ஆமூர் உளது (ஐங்குறு. 56) இவ்வாமூர்க்கு வடக்கே இரண்டுகல் தூரத்தில் அரிச்சந்திர நதியின் தென்கரையில் மணக்குடி என்ற பெயருடன் ஓர் ஊர் உளது. இதுவே, இடையள நாட்டுக் கொறுக்கைக்கு அணித்தாகவுள்ள மணக்குடியாகும். எனவே, இம்மணக் குடியே அகநானூற்றுரையாசிரியரது ஊராகிய இடையள நாட்டு மணக் குடி என்பது தேற்றம். திருவாரூரி லிருந்து திருத்தரு பூண்டிக்குச் செல்லும் இருப்புப்பாதையி லுள்ள பொன்னறை என்னும் புகைவண்டி நிலையத்தில் இறங்கி அரிச்சந்திர நதியின் தென்கரை வழியாகக் கிழக்கே எட்டுக்கல் சென்றால் இவ்வூரை அடையலாம். இவ்வூர்க்குச் சென்று யான் நேரிற் பார்த்த போது இது சோழ மண்டலத்திலுள்ள தொன்மை வாய்ந்த ஊர் களுள் ஒன்றாகவே காணப்பட்டது. இதில் கல்வெட்டுக்கள் உள்ள கோயில் இல்லாமையால் பழைய செய்திகளுள் ஒன்றும் புலப்பட வில்லை. ஆயினும், இஃது ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர் என்று சொல்லப் படுவதோடு அவர் பிறந்து வளர்ந்த வீடும் காண்பிக்கப்படுகிறது. இக்காலத்திலும் இம் மணக்குடியில் வாழ்ந்து வரும் மக்கள் செங்குந்தர் மரபினரே யாவர். இனி, கி.பி. 1063 முதல் கி.பி 1070 வரை ஆட்சிபுரிந்த வீர ராசேந்திர சோழன் காலத்தில் இவ்வூரிலிருந்த தலைவன் ஒருவனைக் குறிக்கும் ஒரு கல்வெட்டு, செங்கற்பட்டுக் கோட்டம் திருமுக்கூடலில் உள்ளது. அது இந்நாடு கூறுசெய்த அதிகாரிகள் சோழமண்டலத்து விஜய ராஜேந்திர நாட்டு இடையள நாட்டு மணக்குடியான் பசுவதி திருவரங்க தேவரான ராஜேந்திர மூவேந்தவேளார் என்பதாம். எனவே, சோழர்கள் காலத்தில் இம்மணக்குடி பெருமை வாய்ந்த ஊராக இருந்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது.  21. இடவையும் இடைமருதும் சைவசமயகுரவருள் ஒருவராகிய மணிவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருவார்த்தை என்னும் பதிகத்திலுள்ள, மாலயன் வானவர் கோனும்வந்து வணங்க அவர்க்கருள் செய்த ஈசன் ஞாலம் அதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலந்திகழும் கோல மணியணி மாடநீடு குலாவும் இடவை மடநல்லாட்குச் சீலமிகக் கருணையளிக்குந் திறமறி வார்எம் பிரானாவாரே என்ற பாடலுக்கு உரைகண்ட பேராசிரியர் ஒருவர், இதில் கூறப் பெற்றுள்ள இடவை என்னுந் திருப்பதி சோழநாட்டிலுள்ள திருவிடை மருதூரேயாம் என்று எழுதியுள்ளனர். அன்றியும், திருப்பதியிலிருந்து வெளிவரும் கீழ்த்திசைக்கலைக் கழகப் பத்திரிகையில் காணப்படும் மாணிக்கவாசகர் காலம் என்ற கட்டுரையிலும் இடவை என்பது திருவிடைமருதூர் என்று வரையப்பெற்றுள்ளது.1 எனவே, திருவாசக உரையாசிரியரும் மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சியாளரும் இடைமருது என்ற ஊர் இடவை என்று மருவி வழங்கியிருத்தல் வேண்டும் எனக் கருதியுள்ளனர் என்பது வெளிப்படை. இடைமருதும் இடவைவும் ஓர் ஊரேயாகும் என்னும் அன்னோர் கருத்திற்கு முரணாக அவை இரண்டும் வெவ்வேறு ஊர்கள் என்பதற்குத் தக்க சான்றுகள் காணப்படுகின்றன. ஆகவே, அதனை ஈண்டு ஆராய்வாம். திருநாவுக்கரசு அடிகள் பாடியருளி க்ஷேத்திரக் கோவைத் திருத் தாண்டகத்திலுள்ள இடைமரு தீங்கோய் இராமேச்சரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப் பேரூர், சடைமுடி சாலைக் குடி தக்களூர் தலையாலங் காடு தலைச் சங்காடு, கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர் கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு, கடைமுடி கானூர் கடம்பந் துறை கயிலாய நாதனையே காணலாமே என்னுந் திருப்பாட்டில் இடைமருதும் இடவையும் வெவ்வேறு திருப்பதிகளாகக் கூறப்பட்டிருத்தல் காணலாம். அவற்றுள், இடைமரு திற்குச் சமயகுரவர் மூவரும் பாடியருளிய திருப்பதிகங்கள் இப்போதுள்ளமையால் அது பாடல் பெற்ற தலமாகும்; இடவைக்குத் தனிப்பதிகம் இல்லாமையாலும் க்ஷேத்திரக்கோவைத் திருத் தாண்டகத்தில் அவ்வூர் கூறப்பட்டிருத் தலாலும் அது வைப்புத்தலங் களுள் ஒன்றாகும். எனவே, அப்பரடிகள் திருவாக்கினால் இடைமருதும் இடவையும் வெவ்வேறு ஊர்கள் என்பது தெளிவாகப் புலப்படுதல் காண்க. இனி, திண்டுக்கல் தாலுக்காவிலுள்ள இராமநாதபுரத்தில் வரையப் பெற்ற கல்வெட்டொன்று,1 மாறஞ்சடையன் என்னும் பாண்டியன் ஒருவன் சோழ மண்டலத்திலுள்ள இடவை என்ற ஊரின் மேல் படை யெடுத்துச் சென்றான் என்று கூறுகின்றது. ஆகவே, இடவை என்பது சோழ நாட்டிலுள்ளதோர் ஊர் என்பது தெள்ளிது. அவ்வூர், சோழமண்டலத்தில் இராசேந்திர சிங்கவளநாட்டின் உள் நாடுகளுள் ஒன்றாகிய மண்ணி நாட்டில் முற்காலத்தில் இருந்துளது என்பது தஞ்சைப் பெரியகோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. அதனை, இராசேந்திர சிங்கவளநாட்டு மண்ணிநாட்டு ஏமநல்லூ ராகிய திரை லோக்கிய மகாதேவிச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் இடக் கடவத் திருமெய்காப்பு ஒன்றும் இந்நாட்டு வேம்பற்றூராகிய அவனி நாராயணச் சதுர்வேதிமங்கலத்துச் சபையார் இடக்கடவத் திருமெய்காப்பு ஒன்றும் இந்நாட்டு இடவை சபையார்2 இடக்கடவத் திருமெய்காப்பு ஒன்றும் எனவும். இராசேந்திர சிங்க வளநாட்டு மண்ணிநாட்டு இடவை3 யிலிருக்கும் இடையன் கூத்தன் தேவனும் ஆடவல்லானால் நிசதம் அளக்கக்கடவ நெய் உழக்கு எனவும், போதரும் தஞ்சைப் பெரிய கோயிற் கல்வெட்டுக் களால் நன்கறியலாம். இனி, இடைமருது என்னுந் திருவிடைமருதூர், சோழ மண்டலத்தில் உய்யக்கொண்டார் வளநாட்டின் உள் நாடுகளுள் ஒன்றாகிய திரைமூர் நாட்டில் உள்ளது என்பது அவ்வூரிலுள்ள திருக் கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. அவ்வுண்மையை, மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மற்கு யாண்டு க ஆவது தென்கரைத் திரைமூர் நாட்டுத் திருவிடைமருதில்1 ஸ்ரீ மூலதானத்துப் பெருமானடிகளுக்கு எனவும். திரிபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் உய்யக் கொண்டார் வளநாட்டுத் திரைமூர்நாட்டு உடையார் திருவிடை மருதுடையார்2 கோயில் எனவும் போதரும் திருவிடை மருதூர்க்கோயிற் கல்வெட்டுக்களால் உணர்ந்துகொள்ளலாம். இக்கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ள இராசேந்திரசிங்கவளநாடும் உய்யக்கொண்டார் வளநாடும் சோழ மண்டலத்தில் முற்காலத்திலிருந்த வளநாடு களாகும். அவற்றுள், இராசேந்திர சிங்கவளநாடு என்பது காவிரியாற்றிற்கு வடக்கே வெள்ளாறு வரையில் பரவியிருந்த ஒரு வளநாடாகும். உய்யக் கொண்டார் வளநாடு என்பது காவிரியாற்றிற்குத் தெற்கே அப்பேராற்றிற்கும் அரிசிலாற்றிற்கும் இடையிலிருந்தது.3 வளநாடுகளை ஜில்லாக்கள் போலவும் நாடுகளைத் தாலுக்காக்கள் போலவும் கொள்வதே அமைவுடைத்தாம். எனவே, காவிரியாற்றிற்கு வடக்கே இராசேந்திர சிங்கவள நாட்டில் மண்ணிநாட்டிலிருந்த இடவை என்னும் ஊரும் அப்பேராற்றிற்குத் தெற்கே உய்ய கொண்டார் வள நாட்டில் திரைமூர் நாட்டிலிருந்த இடைமருது என்னும் ஊரும் வெவ்வேறு நாடுகளிலிருந்த வெவ்வேறு ஊர்களேயாம், என்பது ஐயமின்றித் துணியப் படும். ஆகவே, இடவையும் இடைமருதும் வெவ்வேறு ஊர்கள் என்பது அப்பரடிகளது க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகத் தாலும் தஞ்சைப் பெரிய கோயிலிலும் திருவிடை மருதூர்க் கோயிலிலும் வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களாலும் நன்கு வெளியாதல் காண்க. திருவிடைமருதூர் என்பது கும்பகோணத்திற்குக் கிழக்கே ஐந்து மைல் தூரத்தில் காவிரியாற்றின் தென்கரையில் தென்னிந்திய இருப்புப் பாதையில் ஒரு புகைவண்டி நிலையமாக இந்நாளில் சிறந்து விளங்குவதைப் பலரும் அறிவர். இடவை என்னும் ஊர் இந்நாளில் காணப்படவில்லை. எனவே, அஃது அழிந்து போயிருத்தல் வேண்டும்; அன்றேல் வேறு பெயருடன் இக்காலத்திலிருத்தல் வேண்டும். எனினும் மண்ணிநாட்டிலுள்ள திருமங்கலக்குடி, திருக்குடித்திட்டை, வேம்பற்றூர், திரைலோக்கி, திருப் பனந்தாள் ஆகிய ஊர்கட்கு அண்மையில் தான் இடவையும் இருந் திருத்தல் வேண்டும். அன்றியும், திருப்பனந் தாளுக்கருகில் மண்ணியாற்றிலிருந்து பிரிந்து சென்ற கால்வாய் ஒன்று இடவை வாய்க்கால் என்னும் பெயரு டையதாயிருந்தது என்பது அவ்வூர்க் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. ஆகவே இடவை என்பது கும்பகோணம் தாலுக்காவில் திருப்பனந்தாளுக்குத் தென் கிழக்கில் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.  22. கிராமம் தென்னார்க்காடு மாவட்டத்தில் கிராமம் என்ற பெயருடைய ஊர் ஒன்றுள்ளது. இது விழுப்புரத்திற்குத் தென்மேற்கே பத்துக்கல் தூரத்தி லுள்ள திருவெண்ணெய் நல்லூர் ரோடு என்ற புகைவண்டி நிலையத்திற்கு அண்மையில் இருக்கின்றது. இவ்வூரிலிருந்து வடக்கே இரண்டுகல் சென்றால் சுந்தரமூர்த்தி சுவாமிகளை இறைவன் தடுத்தாட் கொண்ட தலமாகிய திருவெண்ணெய் நல்லூரைக் காணலாம். நகரங்களும் பட்டினங்களும் தவிர எஞ்சியுள்ள தமிழ் நாட்டுச் சிற்றூர்கள் எல்லாம் கிராமங்களென்றே பொதுவாக வழங்கப்படுகின்றன. இந்நிலையில் ஓர் ஊர் மாத்திரம் கிராமம் என்ற சிறப்புப் பெயரால் வழங்கிவருவது வியப்பைத் தருகின்றது. ஆகவே, இவ்வூர் எவ்வாறு இப்பெயர் எய்தியது என்பது ஆராய்தற்குரிய தொன்றாம். தமிழ் நாட்டூர்களின் பழைய பெயர் களையும் அவ்வூர்கள் இடைக்காலத்தில் எய்திய வேறுபெயர்களையும் அவற்றின் வரலாற்றையும் அறிந்துகொள்வதற்குத் தக்க ஆதாரங்களாக இருப்பவை, பன்னிரு திருமுறைகளும் தமிழ்வேந்தர்கள் காலத்தில் வரையப்பெற்ற கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் ஆகும். எனவே, அவற்றின் துணை கொண்டு இவ்வூரின் பழைய பெயரை ஆராய்ந்தறிய முயலுவோம். இவ்வூரிலுள்ள திருக்கோயில் சைவசமய குரவர் நால்வருள் ஒருவராகிய திருநாவுக்கரசு அடிகளால் பாடப்பெற்ற பெருமை யுடைய தாகும். இவ்வடிகளது திருப்பதிகத்தால் இத்திருக் கோயில் திருமுண்டீச் சரம் என்ற பெயருடையது என்பதும் இதில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் சிவலோகநாதர் என்று அக்காலத்தில் வழங்கப் பெற்றனர் என்பதும் இவ்வூர் தென்பெண்ணை யாற்றங்கரையிலுள்ளது என்பதும் நன்கு புலனாகின்றன. இச்செய்திகளை, உரிந்தவுடை யார்துவரால் உடம்பைமூடி உழிதருமவ் வூமரவர் உணரா வண்ணம் பரிந்தவன்காண் பனிவரைமீப் பண்ட மெல்லாம் பறித்துடனே நிரந்துவரு பாய்நீர்ப் பெண்ணை நிரந்துவரும் இருகரையும் தடவா வோடி நின்மலனை வலங்கொண்டு நீளநோக்கித் திரிந்துலவு திருமுண்டீச் சரத்துமேய சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே என்ற அடிகளது திருப்பாடல் இனிது உணர்த்துதல் காண்க. திருநாவுக்கரசு அடிகளது திருமுண்டீச்சரப் பதிகத்தில் இக்காலத்தில் கிடைத்துள்ளவை ஒன்பது திருப்பாடல்களே யாகும். இவற்றுள் திருக்கோயிலின் பெயரும் இறைவன் திருநாமமும் கூறப்பட்டுள்ளன வேயன்றி, ஒன்றிலேனும் ஊரின் பெயர் காணப்படவில்லை. திருஞான சம்பந்த சுவாமிகளும் தம் க்ஷேத்திரக் கோவையில் மாட்டூர் மடப் பாச்சிலாச்சிராமம் முண்டீச்சரம் வாதவூர் வாரணாசி என்ற அடியில் முண்டீச்சரம் என்னுந் திருக்கோயிற் பெயரைக் குறித்துள்ளனரே யன்றி, இக்கோயில் அமைந்துள்ள ஊரின் பெயரைக் கூறவில்லை. இனி, கல்வெட்டுக்களின் துணைகொண்டுதான் ஊரின் பழைய பெயர் யாதெனக் காண்டல் வேண்டும். கிராமம் என்னும் ஊரிலுள்ள இத்திருக்கோயிலில் பத்தொன்பது கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றுள், மூன்று கல்வெட்டுக்கள் பாண்டியர் ஆட்சிக்காலத்திலும் இரண்டு கல்வெட்டுக்கள் விசயநகரவேந்தர் ஆட்சிக்காலத்திலும் வரையப் பெற்றவை. எஞ்சிய கல்வெட்டுக்கள் எல்லாம் சோழ மன்னர்களின் காலத் தனவாகும். இக்கல் வெட்டுக்களுள் மிக்க பழமை வாய்ந்தவை முதற் பராந்தக சோழன்காலத்துக் கல்வெட்டுக்களேயாம். இவற்றுள் ஒன்று, பல வரலாற்றுண்மைகளை நன்கு விளக்குவதாக உள்ளது. இக்கல்வெட்டின் முற்பகுதி, மூன்று வடமொழிச் சுலோகங்களிலும் பிற்பகுதி தமிழ் மொழியிலும் அமைந்துள்ளன. முற்பகுதி, கேரளதேயத்தில் புத்தூரில் பிறந்தவனும் இராசாதித்தனுடைய படைத்தலைவனுமாகிய வெள்ளங் குமரன் என்பான் பெண்ணை யாற்றங்கரையிலுள்ள மௌலி கிராமத்தில் மந்தரமலை போன்ற கற்றளி ஒன்று மாதேவர்க்கு அமைத்தனன் என்று உணர்த்துகின்றது. தமிழ்மொழியிலுள்ள கல்வெட்டுப் பகுதியை அடியிற் காண்க: (1) வதிஸ்ரீ கலியுக வர்ஷம் நாலாயிரத்து நாற்ப (2)த்து நாலு மதுரைகொண்ட கோப்பரகேசரிவன்மற் (3) கு யாண்டு ஆவது fÈíf..ன்wh நாள் (4) பதினான்கு நூறாயிரத்து எழுபத் தேழாயிரத்து (5) முப்பத்து ஏழுஆக திருமுடியூர் ஆற்றுத்தளி (6) பெருமானடிகள் cila...ம் திரு (7) க் கற்றளியாக அமைப்பித்து இவ்வாட்டைம (8) கர நாயற்றுச் சனிக்கிழமை பெற்ற இரேவதி ஞான் (9) று கும்பதாரையால் (10) மூன்றுச்சி பதினாறு (11) அடியில் ஸ்ரீ ஆற்றுத்தளிப் (12) பெருமானடிகளை (13) த் திருக்கற்றளியினுள் (14) ளே புக எழுந்தருளுவித்து பிரதிஷ்டை செய்வி (15) த்தார் சோழர்கள் மூலப் (16) ருத்யர் ஸ்ரீ பராந்தக தேவரான (17) ஸ்ரீ வீர சோழப் பெருமானடிகள் (18) மகனார் ராஜாதித்த தேவர் பெரும் (19) படை நாயகர் மலைநாட்டு நந் (20) திக்கரைப்புத்தூர் வெள்ளங் (21) குமரன் இது பன்மாகேவர (22) ரக்ஷை ரக்ஷிப்பார் ஸ்ரீ பாதம்தலை (23) மேலன1 இக் கல்வெட்டுப்பகுதியால் மதுரை கொண்ட கோப் பரகேசரி வர்மனாகிய முதற் பராந்தக சோழனது ஆட்சியின் 36-ம் ஆண்டாகிய கலியப்தம் 4044ல் திருமுடியூரிலுள்ள ஆற்றுத் தளிப்பெருமானடிகளின் திருக்கோயில் கருங்கற்கோயிலாக அமைக்கப்பெற்றது என்பதும் அதனை அவ்வாறு அமைப்பித்தவன், முதற்பராந்தக சோழன் புதல்வன் இராசாதித்த சோழனுடைய பெரும்படைத்தலைவனும் சேரநாட்டு நந்திக்கரைப் புத்தூரனுமாகிய வெள்ளங்குமரன் என்பதும் நன்கு வெளியா கின்றன. இதில் குறிக்கப்பெற்றுள்ள கலியுக ஆண்டு, கி.பி. 943 ஆகும்.2 பெண்ணை யாற்றங் கரையிலிருத்தல் பற்றி இத்திருக் கோயில் ஆற்றுத்தளி என்று அந்நாளில் வழங்கப்பட்டுள்ளது. அன்றியும், இற்றைக்கு ஆயிரத்துப் பத்து ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் அமைந்துள்ள ஊர் திருமுடியூர் என்ற பெயருடன் விளங்கியது என்பது தமிழ்க் கல்வெட்டுப்பகுதியால் தெளிவாக அறியக்கிடத்தல் காணலாம். இக்கல்வெட்டின் முற்பகுதியி லுள்ள வடமொழிச் சுலோகத்தில் இவ்வூர் மௌலி கிராமம் என்று கூறப்பட்டிருத்தல் உணரற்பாலதாகும். எனவே, திருமுடியூர் என்பது மௌலிகிராமம் என வடமொழியில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது என்று தெரிகிறது. மௌலி என்ற வடசொல், முடி என்று பொருள்படும் என்பது கற்றார் பலரும் அறிந்ததேயாகும். சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் திருமுடியூர் என்று வழங்கப்பெற்ற இவ்வூர், பிற்காலத்தில் மௌலிகிராமம் என்னும் வடமொழிப் பெயர் எய்தி இறுதியில் கிராமம் என்று வழங்கப்பட்டு வருதல் அறியத்தக்கது. ஆகவே, திருமுடியூர் எனப்படுவதே இதன் பழைய பெயர் என்பது நன்கு துணியப்படும்.  ஈ. இலக்கிய ஆய்வு 23. திருவிளையாடற்புராணம் 64-வது படல ஆராய்ச்சி பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்தருளிய, திருவிளை யாடற் புராணம் 64-வது படலத்தில், திருஞானசம்பந்த சுவாமிகள் திருப்புறம் பயத்தின்கண் ஒரு வணிகமாதின் துயரொழிக்கும் வண்ணம் அரவாலிறந்த வணிகனுக்கு ஆருயிர்வழங்கி, அவ்விருவரையும் மணம் புணரும்படி செய் தருளினார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், திருஞான சம்பந்த சுவாமிகள் திருமருகலில் அங்ஙனம் செய்தருளியதாகத் திருத் தொண்டர் புராணத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது. இவ்விரு சரிதங் களையும் சென்ற 19-ம் நூற்றாண்டில் ஆராய்ச்சி செய்த சில சுதேசவிற் பன்னர்கள், திருவிளையாடற் புராண முடையார் கூறுவது சரித்திர ஆராய்ச்சியிற் சிறிதும் நம்பத்தக்க உண்மையாக மாட்டாதென்றும், திருத்தொண்டர் புராணத்திற் சொல்லப்பட்டிருப்பதே உண்மையாக விருக்க வேண்டு மென்றும், மேற்கூறிய இருபுராணங்களிலும் சொல்லப் படும் சரித்திரங்களிரண்டும் ஒரே சரித்திரமாகத் தானிருக்க வேண்டு மென்றும் தத்தமக்குத் தோன்றியவாறு கூறிப் போந்தனர். இதனை, ஆராயப்புகு முன்னர் அவ்விருபுராணங் களிலும் கூறப்படும் சரித்திரங்களைச் சுருக்கமாய் அடியில் வரைகின்றேன். திருத்தொண்டர் புராணத்தில், (திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணத்தில்) சொல்லப்பட்டிருக்கும் சரித்திரமாவது :- வைப்பூரின்கண் ஏழுபுதல்விகளையுடைய தாமன் என்னும் ஒருவணிகன், தனது மருமகனுக்கு மூத்த குமாரத்தியை விவாகஞ்செய்து கொடுப்பதாய் வாக்களித்துப் பிறகு வேறொருவனிடம் பெருந்தனம் பெற்று, அவனுக்குக் கொடுத்து, பின்னரும் அப்படியே மற்றைய ஐந்துபுத்திரிகளையும் அயலார்க்கே மணஞ்செய்விக்க, இதனையுணர்ந்த ஏழாவது குமாரத்தி தனது தந்தையாரது வஞ்சகச் செயலைக் கண்டு, பொறாது, மனம் வருந்தி, பெற்றோர்கட்குத் தெரியாமல் அவனுடன் புறப்பட்டு வெளியே செல்லும்போது, வழியில் ஓரிரவில் திருமருகல் திருக்கோயிற்குப் புறத்தில் ஒருமடத்தின் கண் நித்திரை செய்யுங்கால் அவ்வணிகன் அரவத்தினால் தீண்டப்பட்டிறக்க, அதனைக் கண்ட அக்கன்னியானவள் அவனைச் சர்பந்தீண்டியுந் தான் தீண்டாளாய் அவனருகே வீழ்ந்து கதறிவருந்த அக்காலத்து அவண் எழுந்தருளிய ஆளுடையபிள்ளையார் நிகழ்ந்ததையறிந்து, அவள் துயரொழிப்பத் திருமருகற் பெருமானைச் சிந்தித்துச் சடையாயெனுமால் என்னும் அருட்பதிகமோதி அவ்வணி கனை யுயிர்பெற்றெழச் செய்ததுடன், அவ்விரு வரையும் மணம்புணரச் செய்து, அவர்கட்கு விடை கொடுத்தனுப்பின ரென்பதேயாம். இனி, திருவிளையாடற் புராணத்திற் கூறப்படும் சரித்திரமாவது:- கடற்புறத்துள்ள ஒருபட்டினத்திற் செல்வ மிகுந்த ஒருவணிகன் தான் தவங்கிடந்து பெற்ற ஒரே புதல்வியை மதுரையம்பதியில் முதன் மண முடித்து வாழ்ந்து கொண்டிருந்த தனது மருகற்கு மணஞ்செய் விக்கும்படி சுற்றத்தாருக்கு அறிவித்து, ஊழ்வினை வலியால் மனைவியுந் தானும் உயிர்துறக்க, அதனையறிந்தமருகன், மிக்க துயரத்துடன் அப்பட்டினத்தை யடைந்து, மாமன்மனையிற் சின்னாளிருந்து, தனது மாமன்புதல்வியை மதுரைக்குக் கொண்டுபோய், ஆங்கு உறவினர் முன்னிலையில் மணந்து கொள்வோமென்று, அக்கன்னியையும் அழைத்துக் கொண்டு, அவ்விடத்து விடைபெற்று, மதுரையைநோக்கிச் செல்லுங்கால், வழியில் ஓரிரவில் திருப்புறம்பயம் என்னும் மூதூரின்கண் தங்கி, ஆண்டுச் சிவபெருமான் திருக்கோயிற்கருகில் வன்னிமரத்தடியிற் போனகமமைத்துண்டு, கோயில் வாயிற்படியின் மீது தலைவைத்துறங்கும் போது அவ்வணிகன் ஓரரவால் தீண்டப் பட்டிறக்க, அதனையுணர்ந்த அவ்வணிக மாதும் மற்றையோரும் பக்கத்திருந்து வருந்தியலறுகையில், அவ்வூர் மடாலயத்தெழுந் தருளியிருந்த ஆளுடைய பிள்ளையார் இந்நிகழ்ச்சி யறிந்து, திருக்கோயிலையடைந்து, சிவபெருமானைத் துதித்துப் பதியமோதி, அவனை உயிர்பெற்றெழச் செய்து, பின்னர் அவ்விரு வரையும் அவ்விடத்திலேயே திருமணஞ் செய்து கொண்டு செல்ல வேண்டு மென்று திருவாய் மலர்ந்தருளலும், இதனைக் கேட்ட வணிகன் தனது உறவினர்களும் மன்றற்குரிய சான்றுகளுமின்றி மணமுடித்தற் குடன் படானாய்நிற்க, கருணையங் கடலாங் காழிவள்ளலார், உன்மன்றற்கு ஈண்டுக் காணப்படும் வன்னியும் கிணறும் இலிங்கமும் சான்றுகளாகு மென் றுரைத்துத் திருமணம் புணரும்படி கூறலும், அவ்விருவரும் அப்பெருமானாணையைக் கடத்தற் கஞ்சினோர் களாய் அவ்விடத்து மணஞ்செய்து கொண்டு, மதுரையை யடைந்து வாழ்ந்துவரும் நாளில், அவ்வணிகன் மூத்தமனைவியின் புத்திரர்களும் இளையாள் மைந்தனும் சண்டையிட்டுக் கொள்ள, அதனால் மூத்தாள் கோபமூண்டு இளையாளை நோக்கி, முறைமையான ஜாதி, குலம், ஊர், பேர் முதலியன வின்றி எனது கணவனைக் காதலித்துப் பின்றொடர்ந்து வந்த காமக்கிழத்தியாகிய நீ என்மணாளனை மணந்ததற்குச் சான்றுகள் உளவாயின், சொல்லுக! என்று கூறலும், இதனைக் கேட்ட இளையாள் நாணமுற்று, என்னாயகன் அரவாவிறந்த ஞான்று ஆருயிரீந்தருளிய ஆளுடைபிள்ளையாரருளினால் ஆண்டருகே யிருந்த வன்னியும் கிணறும் இலிங்கமும் எம்மன்றற்குச் சான்றுகளாயுள என்று கூறலும், இதனைக்கேட்ட மூத்தாள் நகைத்து நின்மன்றற்கேற்ற சான்று களுரைத்தனை! நல்லது! அவை யீண்டுவருமாகில் அதுவும் மெய்யே! என்றுரைக்க, இளையாள் மிக்க துயரத்துடன் சிவ பெருமானை நினைந்து அற்றைநாளிரவு உண்டியு முறக்கமு மொழிந்து பிற்றை நாளிற் பொற்றாமரையில் மூழ்கி, புனித வெண்ணீறணிந்து ஆலவாயுறை யிறைவனைப் பன்முறைவணங்கி யெழுந்து அடியார்க்கு நல்லாய்! நச்சினார்க்கினியாய்! ஆலமுண்ட வருட்பெருங்கடலே! எனது நாயகன் என்னை மணந்தஞான்று ஆண்டுச் சான்றுகளாயிருந்த நீயும் வன்னியும் கிணறும் இவண் எழுந்தருளி என்மாற்றாள் நகைப்பையும் ஐயத்தையும் ஒழித்து எளியேனைக் காத்தருளா யேல், யான், எனதாருயிர் துறப்பேன் என்று வருந்திக் கூறலும், பெருங்கருணைத்தடங்கடலாகிய இறைவனதருளால் அம்மூன்றும் அவ்வாலயத்து வடகீழ்த் திசையில் வந்து தோன்ற, அவற்றை இளையாள் தன்மாற்றாட்குக் காட்டி, அவளுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தனளென்பதேயாம். திருத்தொண்டர்புராணத்தில் கூறப்படும் சரித்திரம் உண்மையில் நடைபெற்றதே யென்று நல்லறிஞர்பலரும் அங்கீகரித்துள்ளாராதலின், யான், ஈண்டு ஆராய்ச்சிக் கெடுத்துக் கொண்டது திருவிளையாடற் புராணத்துச் சொல்லப்படும் சரித்திரமே. ஐம்பெருங்காப்பியங்களி லொன்றாயதும், களவியற்பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரனார் முதலிய தொல்லுரையாசிரியர்களால் எடுத்துக் காட்டப்படும் பிரமாண நூல்களிலொன்றாயதும், சேரமுனியாகிய இளங் கோவடி களாலியற்றப் பெற்றதுமாகிய சிலப்பதிகாரத்தில் அவ்வணிக மாது வன்னி முதலியவற்றைத் தன்மன்றற்குச் சான்றுகளாக நிருபித்திக்காட்டிய விஷயம் மிகச்சுருக்கமாய்க் கூறப்படுகின்றது.1 இனி, திருப்புறம்பய புராணத்தை நோக்குங் கால், இச்சரித்திரம் தெளிவாகவும் விரிவாகவும் ஆறாவது சருக்கத்திற் சொல்லப்படுகின்றது.2 அன்றியும், சைவசமயா சாரியராகிய திருஞானசம்பந்தசுவாமிகள், தாம், திருப்புறம் பயத்தில் திருவாய் மலர்ந்தருளிய தேவாரப் பதிகத்தில் இச்சரித்திரத்தைச் (ஒரு பாகத்தை மாத்திரம்) சுருக்கமாய்க் குறித்திருக்கின்றனர்.3 இதுகாறுங் கூறியவாற்றால் இஃதுண்மை யாக நடந்துள்ளதொரு தனிச் சரித்திர மென்பது நன்குபுலப்படும். இதனால், திருத்தொண்டர் புராணத்திலும், திருவிளையாடற் புராணத்திலும் சொல்லப்படும் சரித்திரங்கள் இரண்டும் வெவ்வேறென்பது தெற்றென விளங்கும். இவ்வுண்மை யுணர்ந் தன்றோ 800 வருடங்கட்கு முன்னிருந்தவராகிய பெரும்பற்றப் புலியூர் நம்பியார் தமது பழைய திருவிளையாடற் புராணத்தில் மேற்கூறிய இரண்டு சரித்திரங்களும் வெவ்வேறென்று கூறிப்போந்தனர்.1 இனி, இவ்விருசரித்திரங்கட்கும் பற்பலவேறுபாடு களுண் மையால், இவற்றைக் காய்த லுவத்த லகற்றி ஒப்பநாடி ஒருங்கேயாராயும் ஆன்றோர் பலர்க்கும் இவை வெவ்வே றென்பது நன்குவிளங்குமென்க. திருப்புறம்பயபுராணம் 6-வது சருக்கத்திலும் திருவிளை யாடற் புராணம் 64 வது படலத்திலும் கூறப்படும் சரித்திரங் களிரண்டும் ஒன்றேயா யினும் சிற்சிலவிடங்களில் ஒன்றற் கொன்று முரணு கின்றமை யால், அவற்றின் வன்மை மென்மைகளை ஈண்டு ஆராய் கின்றேன். 1. திருவிளையாடற்புராணத்தில் அரவுகடித்திறந்த வணிகனுக்கு ஆருயிரளித்துத் திருமணஞ்செய்வித்தவர் திருஞான சம்பந்த சுவாமிகள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.2 ஆனால், திருப்புறம்பயபுராணத்தில் அங்ஙனம் செய்தருளியவர் புறம்பயத்துறை இறைவனேயென்று கூறப் பட்டிருக்கிறது.3 இவற்றுள் எது வன்மையுடைத்தென்பதை ஆராய வேண்டும். திருஞானசம்பந்த சுவாமிகள் காலத்தினராகிய திருநாவுக் கரசு சுவாமிகள் பாண்டிநாட்டுத் திருப்புத்தூர் தேவாரப் பதிகத்தில் மூன்றாஞ் சங்கத்து1 நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியைக் குறித்திருக்கின்றனர்.2 இதனால் சுவாமிகள் இருவரும் மூன்றாஞ்சங்க காலத்திற்குப் பின்னரே தமிழ் நாட்டில் விளங்கியவர்களென்பது போதரும். அன்றியும், திருஞான சம்பந்தசுவாமிகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் விளங்கிய வரென்று காலஞ்சென்ற திருவனந்தபுரம் ப்ரொபஸர் சுந்தரம் பிள்ளைய வர்கள் நன்காராய்ந்து தமது திருஞான சம்பந்தர் காலம் என்னும் ஆங்கில நூலிற் கூறியிருக்கின்றனர்.3 மூன்றாஞ்சங்கம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும் அதற்கு முந்திய காலங்களிலும் நின்று நிலவியதாகலின், திருஞான சம்பந்தசுவாமிகள் மூன்றாஞ்சங்ககாலத்திற்குப் பன்னூற்றாண்டு கட்குப் பின்னர்இருந்தவரென்பது நன்கு விளங்குகின்றது. இன்னும் தமிழ்மாது செழிப்புற்று மகோன்னத நிலைமையி லிருந்த மூன்றாஞ்சங்ககாலத்தில், தனித்தமிழ்ச் செய்யுளாகிய ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, என்னும் நான்கனுள், பெரும்பான்மை ஆசிரியப்பாவும் வெண்பாவும் சிறுபான்மை எஞ்சியவிரண்டு பாக்களும் நடைபெற்று வந்தனவேயன்றி, நம் சுவாமிகள் காலத்துப் பெருவழக் காகக் காணப்படும் விருத்தப்பாக்கள் நடைபெற்றதில்லையென்பதும் மேற் கூறியதை வலியுடைத்தாமாறு செய்தலைக் காண்க. இதுகாறுங் கூறிய வற்றாற் சுவாமிகள் மூன்றாஞ்சங்கத்திற்குப் பிந்தியவரென்பது நன்கறியக் கிடக்கின்றது. மூன்றாஞ் சங்ககாலத்தில் (அதாவது கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில்) இயற்றப்பெற்ற நூலாகிய சிலப்பதி காரத்தில் மேற்கூறிய சரிதம் மிகச்சுருக்கமாய்ச் சொல்லப் பட்டிருக் கின்றமையால் இந்நூல் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்னரே இச்சரிதம் நடை பெற்றிருக்க வேண்டுமென்பது தெற்றென விளங்குகின்றது. இதனாற் சிலப்பதிகாரமியற்றப் பெற்ற காலத்திற்கு (அதாவது மூன்றாஞ் சங்ககாலத்திற்குப்) பன்னூற் றாண்டுகட்குப் பின்னிருந்த திருஞான சம்பந்தசுவாமிகள் இச்சரித்திரத்திற் சொல்லப்படும் வணிகருக்கு ஆருயிரளித் தருளினார் என்று திருவிளையாடற் புராணத்துச் சொல்லப் பட்டிருப்பது சிறிதும் பொருந்தவில்லை யென்க.1 அன்றியும் திருஞானசம்பந்த சுவாமிகள் திருவாய்மலர்ந் தருளிய திருப்புறம்பயத்தேவாரப் பதிகத்திற் காணப்படும் விழுங்குயிரு மிழ்ந்தனை என்னும் வாக்கியத்தினால் அரவாலிறந்த வணிகனுக்கும் புறம்பயத்துறை இறைவன் இன்னுயிரீந்தருளினா ரென்பது சுவாமி கட்கும் உடன்பாடாதலுணர்க. இனி, மிகப் பழைய காலத்தில், புறம்பயத் துறை சிவபெருமான் சனகாதி நால்வர்க்கு அறம்பயனுரைத்தருளிய விஷயத்தை நால்வர்க் கறம்பயனுரைத்தனை புறம்பயமமர்ந்தோய்2 என்று முதலாவது பாசுரத்தில் சுவாமிகள் இறந்தகாலத்திற் கூறிய ருளியது போல், மூன்றாவது பாசுரத்திலும் விழுங்குயிருமிழ்ந்தனை3 என்று இறந்தகாலத்திற் கூறியிருத்தலே, புறம்பயத்துறையிறைவன் அரவாலிறந்த வணிகனுக்கு ஆருயிரீந் தருளியது சுவாமிகள் காலத்திற்குப் பன்னூற் றாண்டுகட்கு முன்னரே யென்பதற்குத் தக்க சான்றாகும். இதுகாறுங் கூறியவாற்றால், திருப்புறம் பயபுராணத்திற் சொல்லப்பட்டிருப்பதே வன்மையுடைத் தாதலறிக. 2. திருவிளையாடற் புராணமுடையார் வன்னி, கிணறு, இலிங்க மாகிய மூன்றுமே அவ்வணிகமாதின் மன்றற்குரிய சான்றுகள் எனக் கூறியிருக்கின்றனர்.1 திருப்புறம்பயபுராண முடையார் மடைப் பள்ளியுஞ் சேர்த்து நான்கென்கின்றனர்.2 பண்டைத்தமிழ் நூலாகிய சிலப்பதிகாரத்தில் தன்மன்றற்குச் சான்றாக மடைப்பள்ளியும் அவ்வணிகமாதாற் காட்டப்பட்ட தென்று கூறப்பட்டிருக்கிறது.3 இதனால், திருப்புறம்பயபுராண முடையார் கூற்று வன்மையுடைத் தென்பது நன்கறியக்கிடக் கின்றது. ஆனாற் சிலப்பதிகார மியற்றியருளிய ஆசிரியர் இளங்கோவடிகள் அம்மாது, வன்னியும் மடைப்பள்ளியும் தன்மன்றற்குச் சான்றாகக் காட்டினா ரென்றுரைத்து எஞ்சிய விரண்டையுங் கூறாதுவிடுத்தமைக்குக் காரணம் தற்காலத்துப் புலப்படவில்லை. 3. வணிகமாதுபிறந்தநகரம் கடற்புறத்துள்ள ஒருபட்டினம் என்று திருவிளையாடற் புராணத்திற் சொல்லப்பட்டிருக்கிறது.4 திருப்புறம் பய புராணத்திலோ காவிரிப்பூம்பட்டினமென்று கூறப்பட்டிருக்கிறது.5 இதற்கு ஒருசாரார் கூறும் சமாதனமாவது தற்காலத்துப் பட்டினம் என்பது அநேகபட்டினங்களிருப்பச் சென்னையை மாத்திரங் குறிப்பது போல், பண்டைக்காலத்திற் பட்டின மென்பது காவிரிப் பூம் பட்டினத்தையே குறித்ததாகலின் மேற்கூறிய இருபுராணங்களும் இவ்விஷயத்தில் முரணவில்லை யென்பதேயாம். இனி இவர்கள் கூற்றை யங்கீகரித்துக் கொண்டு, வேறுநூல்களில் இதைப்பற்றி ஏதாவது சொல்லப் பட்டிருக் கிறதா வென்பதை யாராயுங்காற் சிலப்பதிகாரமும் (அம்மங்கை பிறந்தநகரம்) காவிரிப்பூம்பட்டின மென்று கூறுவதாக வெளியா கின்றது.1 இதனால் அம்மங்கை பிறந்த நகரம் காவிரிப் பூம்பட்டினமென்பது நன்கு புலனாகின்றது. இதுகாறும் என் சிற்றறிவுக்கெட்டியவரை யான்செய்த ஆராய்ச்சி யால், திருவிளையாடற் புராணத்திலும் திருத் தொண்டர் புராணத்திலும் கூறப்படுஞ்சரிதங்களிரண்டும் வெவ்வேறென்பதும், திருஞானசம்பந்த சுவாமிகள் அரவாலிறந்த வணிகனுக்கு ஆருயிரளித் தருளினாரென்று திருவிளையாடற் புராணங்கூறுவது ஆராய்ச்சியிற் சிறிதும் பொருந்த வில்லை யென்பதும், புறம்பயத்துறையிறைவனே அங்ஙனஞ் செய்தருளி னாரென்று திருப்புறம்பயபுராணங்கூறுவதே வன்மையுடைத் தென்பதும், மன்றற்குக்காட்டப்பட்ட சான்றுகள் மடைப் பள்ளியுடன் நான்கென்பதும், அவ்வணிகமாதுபிறந்தநகரம் காவிரிப் பூம்பட்டினமென்பதும் விளங்கி நிற்றல் காண்க.  24. திருவள்ளுவரும் ஞானவெட்டியும் நமது தமிழகஞ்செய்த தவப்பயனாகத் தோன்றித் திருக்குறளெனும் தெய்வப்பனுவலையருளிய ஆசிரியர் திருவள்ளுவனாரின் அருமை பெருமைகளை யறியாதார் மிகவுஞ் சிலரேயாவர். இப்பெரியார் அருளிய திருக்குறளை, அதுதோன்றியநாண் முதல் எம்மதத்தினரும் தம்மதத்திற் குரிய நூலென்று கூறி வருவதுடன், தமிழ்மொழிவழங்காப் பிறதேயத் தினரும் அதனை நன்கு படித்துத் தத்தம்பாஷைகளில் மொழிபெயர்த்து மிகப் பாராட்டியும் வருவாராயினர். இம்மகானது தெய்வப்புலமையையும் இவரருளிய நூலினருமையையும் நன்குணரப்பெறாத மாந்தர்சிலர், இற்றைக்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்குள் இயற்றப் பட்டு வெளிவந்துள்ள ஞானவெட்டி யென்னும் நூலைக்கண்டு மயக்கமுற்று இந்நூலியற்றி னோரும் திருக் குறளருளிய திருவள்ளுவனாரென்றே உண்மை யறியாமற் கூறிவருகின்றனர். அன்னோர் கூற்று வலியுடைத்தா வென்பதை யீண்டாராய்வாம். ஞானவெட்டியின் ஆசிரியர், ஆரியத்திலும் தமிழிலும் ஒப்பற்ற புலமையும் தெய்வத்தன்மையும் வாய்ந்த சில பெரியோர்களையும், அன்னோர் நம்மவர்கட்குப் பெரிதும் பயன்படும் வண்ணம் இயற்றியருளிய நூல்களையும், பொறாமை செருக்காதி குறும்புகள் விளைப்பதாய் முக்குணக்கடைநிற்குந் தாமதக்குணச் சேட்டையாலோ அன்றிப் பிறிதென்கொண்டோ, தம்நூலில் வாய்கூசாது நிந்தித்திருக்கின்றனர். அச்செய்யுட் களைக் கீழே தருகின்றோம். வியாசர்சொல்லும்பாரதத்தில் வெகு பொய்வீணாம் மேதினியோர் மாய்கையினில்விருப்பஞ் சொன்னார் ஆய்ந்துகளி பாடிவிட்டான் கம்பன்வம்பன் அதீதராமாயணத்தில நேகம் பொய்தான் சாயாமலதிவீரபாண்டியன் சொல்லும் தமயந்திசரித்திரநைடதமுஞ் சொன்னார் சுயமாகாது திகவிகள்சுத்தப் பொய்தான் தொடுகவிமாணிக்கவாசகர் சொன்னாரே. (ஞானவெட்டி 579) தேவாரமானதிருவாசகத்தைச் செகத்தோர்கள் படித்து மெத்தத்தியங்கினார்கள் பேயானவாண்டிகட்குப் பிழைப்புக்காகப் பேசிவைத்தார்மற்றொன்றும்பிச கேயில்லை (மேற்படி 600) மேலேவரைந்துள்ள செய்யுட்களில் வியாசர்பாரதமும், கம்பர் இராமாவதாரமும், அதிவீரராமபாண்டியர் நைடதமும், சைவ சமயா சாரியர் நால்வரும் திருவாய்மலர்ந்தருளிய தேவார திருவாசகங்களும், மக்கட்குப் பயன்படாப் பொய்ந்நூல்களென்று சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள், இராமாவதாரமியற்றி யருளிய கம்பர். (1120 கி.பி. - 1200 கி.பி) கி.பி. 12-ஆம் நூற்றாண்டினிடையில் விளங்கியவராதல் வேண்டு மென்று சேது ஸமதானத்தின் வித்வான் ப்ரும்மஸ்ரீ உ.வே.ரா. இராகவையங் காரவர்கன் செந்தமிழ் 3-ஆம் தொகுதி 6-ஆம் பகுதியில் நிரூபணஞ் செய்துள்ளார்கள். தமிழில் நைடதமியற்றி யருளிய அதிவீர ராமபாண்டியரே, கூர்மபுராணம், இலிங்க புராணம், வாயுசங்கிதை, காசிகாண்டம் முதலிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடிய ருளிய அரசரேறென்ப. இம்மன்னர் பெருமான், சகம் 1486-ல் தென்காசியில் முடிசூட்டப் பெற்று சகம் 1514 வரை ஆட்சிபுரிந்தன ரென்று தென்காசிக் கோயிற் கோபுரத்திற்காணப்படுஞ் சிலாசாசனங்கள் அறிவிக்கின்றன.1 ஆகவே, இவ்வரசர் கி.பி. 16-ஆம் நூற்றாண்டி னிறுதியில் (கி.பி. 1564 - கி.பி. 1592) வாழ்ந்தவராதல் வேண்டும். இனி, திருக்குறளருளிய திருவள்ளுவனார் தம்நூலை, அக்காலத்தே தென்மதுரையகத்துத் தமிழுக்கரசராய் வீற்றிருந்தருளிய மூன்றாஞ் சங்கப்புலவர் நாற்பத்தொன் பதின்மரது முன்னிலையில் அரங்கேற்றி யுள்ளாரென்பது, அச்சங்கத்துச் சான்றோர் அதனைத் தங்கள் செவியாரக் கேட்டு மனமார வுவந்து வாயாரப் புகழ்ந்துபாடியுள்ள திருவள்ளுவ மாலைப் பாடல்களால் நன்கு விளங்கும். மூன்றாஞ்சங்கம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டிலும் அதற்கு மத்தியகாலங்களிலும் நின்று நிலவிய தாகலின் அச்சங்கத் திறுதிக்காலத்தில் தம் நூலையரங் கேற்றிய திருவள்ளுவனாரும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் விளங்கியவராகற்பாலர். இதுகாறுஞ் செய்த வாராய்ச்சியால், திருக்குறளருளிய திருவள்ளுவனார் கி.பி. 2-ஆம் நூற்றாண்டிலும் இராமாவதார மருளிய கம்பர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டி னிடையிலும், நைடதமி யற்றிய அதிவீரராம பாண்டியர் கி.பி. 16-ஆம் நூற்றாண்டினிறு தியிலும் வாழ்ந்தவர் களென்பது நன்கு வெளியாதல் காண்க. இதனால், கம்பரும் அதிவீரராமபாண்டியரும் திருவள்ளுவனார்க்குப் பல நூற்றாண்டுகட்குப் பிற்பட்டவர்களென்பது இனிது விளங்கும். ஆகவே, மேற்கூறிய கம்பரையும் அதிவீரராம பாண்டியரையும் தம் ஞான வெட்டியில் நிந்தித்துப் போந்த ஆசிரியர் திருக்குறளருளிய திருவள்ளு வனாரென்று கூறல் சிறிதும் பொருந்தாதென்க. அன்றியும், திருக்குறளுக்குச் சிறந்தவுரைவரைந்தவரும் இருபெரு மொழியினும் நுண்மாணுழை புலன் படைத்த பேரறிவாளருமாகிய ஆசிரியர் பரிமேலழகர் நம் தெய்வப் புலவரியற்றிய வேறு நூல் களிருப்பின், திருக்குறளுக்குத் தாம் எழுதியவுரையில், அந்நூல்களி லிருந்து ஆங்காங்கு மேற்கோள்கள் எடுத்துக்காட்டி ஆசிரியர்கருத்தை விளக்கிச் செல்வார். அவர் அங்ஙனம் எடுத்துக்காட்டாமையால் நமது பெருநாவலர் திருக்குறளைத் தவிர வேறுநூலொன்றும் இயற்றினாரில்லை யென்பது நன்குபுலனாம். இனி, ஞானவெட்டியின் ஆசிரியர் தம்நூலிற் சில பெரியோர் களை நிந்தித்திருப்பது போல் வேதத்தையும் அந்தணரையும் பல்காலும் நிந்தித்திருக்கின்றனர். நமது திருவள்ளுவனார் அங்ஙனம் செய்யா ரென்பது. அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான் (3-வது அதிகாரம் 10) மறப்பினு மொத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் (14-வது 4) அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன் கோல் (55-வது 3) ஆபயன் குன்றுமறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின் (56-வது 10) என்னும் குறள்வெண்பாக்களா ளினிதுவிளங்கும். இனி, ஞானவெட்டியுடையார் தம் நூலில் தம்பெயர் திருவள்ளுவ ரென்றும், தாமே 1300 குறள்வெண் பாக்களை யுடைய திருக்குறளியற்றி வைத்தவரென்றும் கூறியிருத்தல் ஈண்டுக் கவனிக்கத்தக்கது.1 இவ்வாசிரியர் திருவள்ளுவரென்னும் பெயருடைய வராயிருக்கலாம். ஆனால், திருக்குறளைத் தாமியற்றியதாகக் கூறல் சிறிதும் பொருந்தாது. தம்மைத் தத்துவங்களுணர்ந்த சிறந்த ஞானியென்றும் தம்நூலே உலகிற்குப் பயன்படக்கூடிய அரிய நூலென்றும் வாய்ப்பறை சாற்றிச் செல்கின்ற இவ்வாசிரியர் இங்ஙனம் பொய்கூறற்கு எங்ஙனம் துணிவுற்றனரோ அறியேம். அன்றியும், உலகிற்குபகார மாய்த் திருக்குறளைத் தாமியற்றி வைத்ததாகச் சிறிதும் அஞ்சாது பொய்கூறுகின்ற இந்நூலுடையார், பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற செய்யாமை செய்யாமை நன்று எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா ருள்ளத்து ளெல்லா முளன் மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு தானஞ்செய் வாரிற் றலை யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும் வாய்மையி னல்ல பிற என்னும் குறள்வெண்பாக்களைச் சிறிதும் படித்தறிந்த வராகக் கூடத் தோன்றவில்லையே யென்று மிக வருந்த வேண்டியதாயிருக்கிறது. இந்நூலுடையார் மருத்துவமுறைகளிற் சிலவற்றையறிந் துள்ளா ரென்பதுண்மையே, ஆனால் அருமையும் பெருமையும் வாய்ந்த பழைய நூலாகிய திருக்குறளைத் தாமியற்றியதாகக் கூறினால் அக்கூற்றைத் தமிழகத்தினர் அங்கீகரிப்பாராவென்று ஆராயாது இங்ஙனம் கூறியது இவரது அறியாமையின் பாற்படுமேயன்றிப் பிறிதின்றென்க. அன்றியும் இவரியற்றிய ஞானவெட்டி யென்ற நூலில் எத்தனையோ செய்யுட்கள் பிழையுடையனவாகக் காணப்படுகின்றன. இனி, ஞானவெட்டி என்னும் சொற்றொடரில் வெட்டி யென்பதின் பொருள் வழியாம்; தஞ்சை ஜில்லாவிற் கடலைச் சார்ந்த பிரதேசங்களில் வழியை வெட்டியென்று இன்றும் வழங்கி வருகின்றனர். ஆகவே, இந்நூலும் அப்பிரதேசங்களில், இற்றைக்கு இருநூறு (200) வருடங்கட்கு முன்னரிருந்த ஒருவராலியற்றப் பெற்றதாதல் வேண்டும். இதுகாறும் கூறியவாற்றால், ஞானவெட்டியையியற்றி னோர் திருக்குறளருளிய திருவள்ளுவனாரல்லரென்பதும் அந்நூல், இற்றைக்கு இருநூறு வருடங்கட்குமுன்னர், தஞ்சை ஜில்லாவிற் கடலைச் சார்ந்த பிரதேசத்திருந்த ஒருவராலியற்றப் பெற்ற தென்பதும், தெய்வப்புலமைத் திருவள்ளுவனார் திருக்குறளைத் தவிர வேறொரு நூலும் இயற்றவில்லை யென்பதும் நன்கு விளங்கி நிற்றல் காண்க.  25. கல்லாடமும் அதன் காலமும் கல்லாடம் என்பது ஆலவாயுறை இறைவனைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அகப்பொருட்டுறையில், கல்லாடரென்னும் ஒரு நல்லிசைப் புலவராலியற்றப் பட்ட தோரரிய நூல். இது கடவுள் வாழ்த்தோடு நூற்றுமூன்று ஆசிரியப்பாக்களையுடையது; சொல்லழகும் பொருளழகும் ஒருங்கே வாய்ந்தது. இவ்வரிய நூலியற்றினோர் மதுரை யம்பதியில்விளங்கிய கடைச்சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின்மருள் ஒருவராய கல்லாடனாரென்பர் ஒருசாரார். இதற்கு அன்னோர் எடுத்துக் காட்டும் பிரமாணம் இந்நூலின் சிறப்புப்பாயிரச் செய்யுட்களேயாம். அச்செய்யுட்களை யடியில் வரைகின்றேன். வாய்ந்தபொருட்கொரு பொருளாய்க் கலைவாணிக்கருள் கொழிக்கு மன்பர்ப்பாரி வாய்ந்தமுதுதமிழ்வடித்துக்கல்லாடமெனவொருநூ லருளியிட்டார் தேய்ந்த மதிச்சடைப்பரமர்கருணைபெறச்சங்கமுது செல்வர்வாழ்த்தக் காய்ந்தபுலனடக்கியுயர் பெருஞானம்பழுத்தருள்கல் லாடனாரே. கல்லாடர் செய்பனுவற் கல்லாட நூறுநூல் வல்லார் சங்கத்தில் வதிந்தருளிச் - சொல்லாயு மாமதுரையீசர் மனமுவந்து கேட்டுமுடி, தாமசைத்தார் நூறு தரம்.1 மற்றொருசாரார், இந்நூல் சங்கமருவிய நூல்வரிசையிற் சேர்க்கப் பெறாமையால், கடைச்சங்கப்புலவராய கல்லாடனார் இயற்றியதன் றென்பர். அன்றியும், சைவசமயாசாரியராகிய மணிவாசகப் பெருமான் திருவாய்மலர்ந்தருளிய திருச்சிற்றம் பலக்கோவையார், அகப்பொருளி யலுக்கு மாறுபடுகின்றமையின் குற்றமுடைத்தென்று கடைச்சங்கப் புலவர்கள் கூறிய கடுமொழியைக் கேட்கப் பொறாது, அன்னோர் கூற்றை மறுத்து, அப்புலவர்களோடு முரண்பட்ட கல்லாடர் என்பார் ஆலவாயில் அருட்பெருங்கடவுளின் றிருவருள்பெற்றுத் திருச்சிற்றம்பலக் கோவையாரின் மாட்சியுந் தெய்வத்தன்மையும் அன்னோர்க்கு நன்கு புலப்படுத்துவான், அந்நநூலினின்று ஒருநூறு செய்யுட் களைத் திரட்டி அவற்றின் கருத்துக்களகப்பட இந்நூலையியற்றி, அப்புலவர்களைக் கூட்டிச்சென்று, இறைவன்றிருமுன்னர் ஓதியபோது அப்பெருமான் சால மகிழ்ந்து ஒவ்வொருபாவும் முடியுந்தோறும் தந்திருமுடியைத் துளக்கி யருளினாரென்றுஞ் சிலர் கூறுப. இக்கூற்றை மேலேவரைந் துள்ள வெண்பா ஆதரிக்கின்றது. ஆனால் கடைச்சங்கப் புலவர்கள் திருச்சிற்றம் பலக்கோவையார் குற்றமுடைத்தென்று கூறினரென்பது சிறிதும் பொருந்த வில்லை; எங்ஙனமெனில் மணிவாசகப் பெருமான் கடைச்சங்க காலத்திற்குப் பிந்தியவர்களென்பதற்குப் பிரமாணம் அவர்கள் வாக்கினின்றே நாம் காட்டலாம்.1 அன்றியும், திருச்சிற்றம்பலக் கோவையார்க்குச் சிறந்த வுரைவரைந்த புலவர்பெருமானாகிய பேராசிரியரும் தமது அரியவுரையில், இச்செய்தியைக் கூறினாரில்லை. இனி, இந்நூலாசிரியர் கடைச்சங்கப்புலவருள் ஒருவராய கல்லாடனாரா? அல்லது அப்பெயரேதரித்துப் பிற்காலத்து விளங்கிய வேறு பெரியோரா? என்பதே ஈண்டு ஆராயவேண்டிய விஷயமாம். இந்நூலுடையார் கடைச்சங்க காலத்து நிகழ்ந்துள்ள சில நிகழ்ச்சிகளைத் தம்நூலில் குறித்திருக் கின்றனர். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் மிக அழகாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. அவற்றைக் கீழே தருகின்றேன். எழுமலையொடித்த கதிரிலைநெடுவேல் வள்ளிதுணைக்கேள்வன் புள்ளுடன் மகிழ்ந்த கறங்குகாலருவிப் பரங்குன்றுடுத்த பொன்னகர்க்கூடற் சென்னியம்பிறை யோன் பொதியப்பொருப்பன் மதியக்கருத்தினைக் கொங்குதேர்வாழ்க்கைச் செந்தமிழ்கூறிப் பொற்குவைதருமிக் கற்புடனுதவி என்னுளங்குடிகொண் டிரும்பயனளிக்குங் கள்ளவிழ்குழல்சேர் கருணையெம் பெருமான் என்பது ஆலவாயெம்பெருமான் கொங்குதேர்வாழ்க்கை1 என்னுஞ் செந் தமிழ்ப் பாடலருளித்தருமிக்குப் பொற்கிழியுதவி யதை யுரைக்கின்றது. உலகியனிறுத்தும் பொருண்மரபொடுங்க மாறனும்புலவரு மயங்குறுகாலை முந்துறும்பெருமறை முளைந்தருள்வாக்கா லன்பிணைந்திணையென் றதுபதுசூத்திரங் கடலமுதெடுத்துக் கரையில்வைத்ததுபோற் பரப்பின்றமிழ்ச்சுவை திரட்டிமற்றவர்க்குத் தெளிதரக்கொடுத்த தென்தமிழ்க்கடவுள் என்பது கூடல்வாழிறைவன் களவியல் அருளிய வரலாற்றைக் கூறு கின்றது. சமயக்கணக்கர் மதிவழிகூறா துலகியல்கூறிப் பொருளிதுவென்ற வள்ளுவன்றனக்கு வளர்கவிப்புலவர்முன் முதற்கவிபாடிய முக்கட்பெருமான் என்பது தமிழ்ச்சங்கப்புலவர்முன் இறைவன் திருக்குறளுக்குச் சிறப்புக் கவியாக முதற்கவிகூறியருளியதை யுணர்த்துகின்றது. அருந்தமிழ்க்கீரன் பெருந்தமிழ்ப்பனுவல் வாவியிற்கேட்ட காவியங்களத்தினன் என்பது சோமசுந்தரக்கடவுள் பொற்றாமரைக்கரையி லெழுந் தருளிக் கடைச் சங்கப்புலவர் தலைவராய நக்கீரனார் கூறிய கோபப் பிரசாதம் பெருந்தேவபாணி முதலிய செந்தமிழ் நூல்களைக் கேட்டருளியதைக் குறிக்கின்றது. அருமறைவிதியு முலகியல்வழக்குங் கருத்துறை பொருளும் விதிப்படநினைத்து வடதொன் மயக்கமும் வருவனபுணர்த்தி யைந்திணைவழுவா தகப்பொருளமுதினைக் குறுமுனிதேறவும் பெறுமுதற்புலவர்க ளேழெழுபெயருங் கோதறப்பருகவும் புலனெறிவழக்கில் புணருலகவர்க்கு முற்றவம்பெருக்க முதற்றாபதர்க்கு நின்றறிந்துணர்த்தவுந் தமிழ்ப்பெயர்நிறுத்தவு மெடுத்துப்பரப்பிய விமையவர்நாயகன் என்பது ஆலவாயெம்பெருமான் களவியல் அருளிய வரலாற்றை விளக்குகின்றது. மேற்காட்டிய சரித்திரங்களை மிக்க அழகாகத் தம்நூலில் கூறிப் போந்த இவ்வாசிரியர் கடைச்சங்ககாலத்திற்குப் பிற்பட்ட வராயிருத்தல் வேண்டுமென்பது நன்கு விளங்கும்.1 இனி ஆலவா யெம்பெருமான் அறுபத்துநான்கு திருவிளையாடல் களையும் செய்தருளியபின்னரே நம்மாசிரியர் இந்நூலியற்றியுள்ளா ரென்பது, எட்டெட்டியற்றிய கட்டமர் சடையோன் என்னுங் கல்லாடச் செய்யுளடியால் அறியப்படும். அறுபத்திரண்டு அறுபத்து மூன்றாவது திருவிளையாடல்கள், திருஞான சம்பந்த சுவாமிகள் கூன்பாண்டியற்குச் சுரந்தீர்த்ததையும் சமணரைக் கழுவேற்றியதையும் பற்றியனவாகலின், இந்நூலுடையார், கடைச் சங்ககாலத்திற்குப் பிந்தியவராகிய திருஞானசம்பந்த சுவாமிகட்குப் பிற்பட்டவராத லுணர்ந்துகொள்க. அன்றியும், பரிபுரக்கம்பலை விருசெவியுண்ணுங் குடக்கோச்சேரன் கிடைத்திதுகாண்கென மதிமலிபுரிசைத் திருமுகங்கூறி யன்புருத்தரித்த வின்பிசைப்பாணன் பெறநிதிகொடுக்கென வுறவிடுத்தருளிய மாதவர்வழுத்துங் கூடற்கிறைவன் என்னும் செய்யுளடிகளில் கூடல்நாயகன் தமது அன்பனாகிய பாணபத் திரர்க்குப் பொருளளிக்கும் வண்ணம் சேரமாற்கு, மதிமலிபுரிசை மாடக் கூடல் என்னுந் திருமுகப்பாசுரம் விடுத்தருளியதைக் கல்லாடமுடையார் கூறியிருக்கின்றனர். சேரநாட்டில் திருவஞ்சைக்களத்திற்கருகிலுள்ள கொடுங் கோளூரி லிருந்து ஆட்சிபுரிந்தவரும், சைவசமயாசாரியாராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகட்குப் பெருநட்பினரும், அவர்களுடன் திருக்கைலாயஞ் சென்று ஆங்குச் சிவபெருமான் றிருமுன்னர்த் தாமியற்றிய திருக்கைலாய ஞானவுலாவை யரங்கேற்றியவரும் கழறிற்றறிவார் என்னுந் திருநாமத்துடன் சிவனடியார் அறுபத்து மூவரில் ஒருவராக விளங்கு கின்றவரும் இச்சேரர் பெருமானே யென்பது திருத்தொண்டர் புராணத்தி லுள்ள கழறிற்றறிவார் புராணத்தால் நன்கறியக் கிடக்கின்றது. இனி நடராஜப் பெருமானை நாடோறும் பூசித்து வந்த இச்சேரமான் அவ்விறைவன் திருச்சிலம்பொலியை நாளும் தஞ்செவியாரக் கேட்டு வந்தனரென்பதை, வாசந்திருமஞ்சனம்பள்ளித்தாமஞ்சாந்தமணித்தூபந் தேசிற்பெருகுஞ்செழுந்தீபம் முதலாயினவுந்திருவமுது மீசற் கேற்றபரிசினாலருச்சித்தருள்வெந்நாளும் பூசைக்கமர்ந்த பெருங்கூத்தர் பொற்பார்விளம்பினொலியளித்தார் என்னுந் திருத்தொண்டபுராணச் செய்யுளாலறியலாம். இதனை, நமது கல்லாடனாரும் பரிபுரக்கம்பலையிரு செவி யுண்ணுங் - குடக்கோச்சேரன் என்று தம்நூலில் மிகச்சுருக்க மாய்க் குறித்திருக்கின்றனர். ஆகவே, இச்சேரலற்குப் பிந்தியவரே நமது கல்லாடனா ரென்பது இனிதுவிளங்கும். இச்சேரர் பெருமானும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பெருநட்பினர் களென்றும், இருவருஞ் சேர்ந்து ஒரே காலத்தில் திருக்கைலாயஞ் சென்றவர் களென்றும் முன்னரே கூறியுள்ளேன். இதனால், சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகாலத்திற்குப் பிந்தியவரே கல்லாடமுடையா ரென்பது நன்கு வெளியாதல் காண்க. பொய்யடிமையில்லாத புலவர்க்கு மடியேன் என்று கடைச்சங்கப் புலவர்கட்குத் தமது திருத்தொண்டத் தொகையில் வணக்கங்கூறிப் போந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் அச்சங்க காலத்திற்குப் பின்னரே விளங்கியவராதல் வேண்டும்.1 அன்றியும், சுந்தரமூர்த்தி சுவாமிகள், கி.பி. 9-ஆம் நூற்றாண்டினிடையில் விளங்கிய வராதல் வேண்டுமென்று ஸ்ரீமான் T.A.nfhã நாதராயவர்கள் M.A.brªjÄœ 3-ஆம் தொகுதி 9-ஆம் பகுதியில் நிரூபணஞ் செய்துள்ளனர். கடைச்சங்கம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும் அதற்கு முந்திய காலங்களிலும் நின்று நிலவியதாகலின், சுந்தரமூர்த்திசுவாமிகள் கடைச்சங்க காலத்திற்குப் பன்னூற்றாண்டுகட்குப்பின்னரே விளங்கிய வராகற்பாலர். இனி, சுந்தர மூர்த்தி சுவாமிகள் காலத்தினராய சேரமான் பெருமாணாயனார்க்கு ஆல வாயுறை யிறைவன் றிருமுகமனுப் பியருளிய செய்தியைத் தம் நூலிற் குறித்துப் போந்த கல்லாடனாரும் கடைச்சங்க காலத்திற்குப் பல நூற்றாண்டுகட்குப்பின்னரே இத்தமிழகத்தில் வாழ்ந்த வராவரென்பது இனிதுவிளங்கும். இதுகாறுங்கூறியவற்றால், கல்லாடமுடையார் சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின்மருள் ஒருவராய கல்லாடனாரல்ல ரென்பதும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே கல்லாட ரென்னும் பெயர்பூண்டு விளங்கிய வேறொரு புலவரேயா மென்பதும் புலப்படுதல் காண்க. இனி, நச்சினார்க்கினியர், பேராசிரியர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் முதலிய தொல்லுரையாசிரியர் பலரானும் அன்னோர் உரைகளில், இக்கல்லாடச் செய்யுட்கள் எடுத்தாளப் படவில்லை யாதலின், இந்நூலுடையார் மேற்கூறிய உரையாசிரி யர்களின் காலத் திற்குப் பிற்பட்டவரென்றுகூறல் சாலப்பொருந்து மென்க. இவர்களுள், பேராசிரியரும் அடியார்க்குநல்லாரும் நச்சினார்க்கினி யருக்கு முந்தியவர் களென்பது சரித்திர வாராய்ச்சி செய்யும் அறிஞர் பலரும் அறிந்தவிஷயம். நச்சினார்க் கினியரும் பரிமேலழகரும் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாதலின், நம்மாசிரியரும் கி.பி. 13ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே இத்தமிழகத்தில் விளங்கிய வராதல் வேண்டும். இனிக் கல்லாடத்துக்கலந்தினிதருளி யென்னுந் திருவாசகச் செய்யுளடியால், கல்லாடமென்னுந்திருப்பதி யொன்றுள தென்று தெரிகிறது. கடைச்சங்கப்புலவராய கல்லாடனாரும் கல்லாடமியற்றிய விரண்டாங்கல்லாடனாரும் அத்திருப்பதியிற் றோன்றியவர்களா யிருத்தலும் கூடும். கல்லாடமுடையார் குமாரதெய்வத்தை வழிபடு கடவுளாகக் கொண்டவரென்பதும், மதுரையைச் சார்ந்த திருப்பரங் குன்றத்திடத்து மிக்க அன்புடைய வரென்பதும், இந்நூலாராய்வார்க்கு இனிது புலனாம். இனி, இக்கல்லாடமியற்றப் பெற்றகாலத்திற்குப் பன்னூறாண்டு கட்குப் பின்னர் விளங்கிய ஒரு புலவர் இந்நூலில் சொற்செறிவும் பொருளாழமுங் கண்டு வியந்து, இதனை யியற்றியவர் கடைச்சங்கப் புலவராய கல்லாடனாரே யென்றெண்ணி, முற்குறித்துள்ள சிறப்புப் பாயிரச் செய்யுட் களையின்றி, இந்நூலோடு சேர்த்தெழுதிவைத்தனராதல் வேண்டும். இதனால், கல்லாடனார் இருவரிருந்தன ரென்னும் உண்மை தெரியாத காலத்து, இந்நூற்குச் சிறப்புப்பாயிரச் செய்யுட் களியற்றப் பெற்றன வென்பது நன்கு வெளியாகிறது. இதுகாறுங்கூறியவற்றால், கல்லாடரென்னும் பெயர்பூண்ட புலவர்கள் இருவரிருந்துள்ளார்களென்பதும், அவர்களுள் இரண்டாம் கல்லாடனாரே கல்லாட மென்ற நூலியற்றியவ ரென்பதும், இவர் கி.பி. 13-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே இத்தமிழகத்தில் வாழ்ந்தவரென்பதும் பிறவும் நன்கு விளங்கி நிற்றல் காண்க.  26. காளமேகப் புலவரது காலம் ஆசுகவியால் அகிலவுலகெங்கும் - வீசுபுகழ்க் காளமேகம் எனவும், வசைபாடக் காளமேகம் எனவும் அறிஞர்களால் புகழ்ந்து கூறப்பெற்றுள்ள காளமேகப் புலவர் பாடிய பாடல்களைப் பலரும் படித்தின்புறுதலை யாண்டுங் காணலாம். இத்தகைய பெருமை வாய்ந்த புலவர் பெருமானது வாழ்க்கையின் வரலாறு நன்கறியப்பட வில்லையாயினும் இயன்ற வரையில் அதனை யாராய்ந்து சிலர் வெளியிட்டுள்ளனர். அங்ஙனம் வெளியிட்டுள்ளோர் நம்புலவர் வாழ்ந்த காலம் யாது என்பதைச் சிறந்த சான்றுகளுடன் விளக்கினாரில்லை. எனவே, அவர் வாழ்ந்த காலத்தை ஆராய்ந்து துணிதல் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய்வார்க்குப் பெரிதும் பயன்படும் என்பது திண்ணம். இனி, காளமேகப்புலவர் பாடியுள்ள சிலேடைப் பாடல்களில் திருமலைராயன் என்ற மன்னன் ஒருவன் குறிக்கப்பட்டிருத்தல் யாவரும் அறிந்த செய்தியாகும். அப்புலவர் அவ்வேந்தன் தமக்குச் செய்த பேருதவியைப் பாராட்டிப் பாடிய பாடல் ஒன்று தமிழ் நாவலர் சரிதையில் காணப்படுகின்றது. அஃது, 1 இந்திரன் கலையா யென்மருங் கிருந்தான் அக்கினி யுதரம்விட் டகலான் எமனெனைக் கருதா வரவெனைக் கருதி நிருதிவந் தென்னையென் செய்வான் அந்தமாம் வருண னிருகண்விட் டகலான் அகத்துமக் களுக்குமப் படியே அநிலமா மரியே யமுதமாய் வருவன் ஆரெனை யுலகினி லொப்பார் சந்தத மிந்த வரிசையே பெற்றுத் தரித்திர ராசனை வணங்கித் தலைசெயு மென்னை நிலைசெய் கல்யாணிச் சாளுவத் திருமலை ராயன் மந்தரப் புயனாங் கோப்பைய னுதவு மகிபதி விதரண ராமன் வாக்கினாற் குபேர னாக்கினா னிவனே மாசிலீ சானனா னவனே என்பதாம். வறுமை நோயினால் பற்றப்பட்டு வருந்திக் கொண்டிருந்த தம்மைப் பெரிதும் ஆதரித்துக் குபேரன் போன்ற செல்வமுடைய வனாகும்படி செய்தவன் சாளுவமன்னனாகிய திருமலை ராயன் என்பதையும் அவன் விதரண ராமன் என்ற வேறொரு பெயரும் உடையவன் என்பதயும் கோப்பையனது புதல்வன் என்பதையும் இப்பாடலில் இப்புலவர் கூறியுள்ளார். திருமலை ராயன் என்ற ஓர் அரசனது கல்வெட்டுக்கள் நம் சோழமண்டலத்தில் பாபநாசம், தஞ்சாவூர், திருவானைக்கா முதலான இடங்களில் காணப்படுகின்றன. எனவே, இவ்வேந்தன் இந்நிலப்பரப்பை ஒரு காலத்தில் ஆட்சி புரிந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு புலப்படுகின்றது. அரிசிலாற்றுக்கும் முடி கொண்டான் ஆற்றுக்கும் இடையில் ஓடுகின்ற திருமலைராசன் என்ற ஆறு இவனது ஆட்சிக்காலத்தில் வெட்டப் பெற்றதேயாகும். அன்றியும், காரைக்காலுக்குத் தெற்கே ஆறு மைல் தூரத்திலுள்ள திருமலைராசன் பட்டினமும் இவ்வேந்தன் பெயரால் அமைக்கப் பெற்ற நகரமாகும். இவனது ஆட்சிக்காலத்தை நன்கு விளக்கக்கூடிய கல்வெட்டொன்று தஞ்சையிலுள்ள இராசராசேச்சுரம் என்ற திருக்கோயிலில் உள்ளது. அது (2) சுபமது சகாப்தம் ஆயிரத்து முன்னூற்று எழுபத்தேழின் மேல் செல்லாநின்ற பவ வருஷத்துக்குச் செல்லும் (3) யுவ வருஷம் சித்திரை மாதம் v...ஸ்ரீk¤ மகாமண்டலே வரன் மேதினீவரன் கண்ட கண்டாசி சாகுவ சாளுவத் திருமலை தேவ (4) மகாராசர் தஞ்சாவூர். வ... ண்டயம் தஞ்சை மாமணிகண்டங்குறை, நாகளாபுரம், பழமாறன் ஏரி, அன்பதின் மேலகரம் (5) வேலங்குடி, அம்மையப்புரம், தென்அளூர், கருப்பூர், மருவூர், இராசேந்திர சோழநல்லூர், சுங்கந்தவிர்த்த சோழ நல்லூரான (6) திருமலைராசபுரம், சமுத்திர... புரம், ஆக இந்த அகரங்களில் வாரியன் கரணத்தானுக்கு நிருபம் தங்கள் அவதாவக (7) க்களை ராஜ ஸபீக்கனை பிரதாநிஜோடி கரணிக்கஜோடி தலையாரிக்கும் மாவடை மரவடை குளவடை மற்றும் (8) எப்பேர்ப்பட்ட பல உபாதிகளும் இழித்துவிட்ட அளவுக்குச் சந்திராதித்தவரையும் சர்வ மானியமாக சுகமே இருக்கவும் (9) ராஜாவின் அருளிச் செயல்படிக்கு மந்திரமூர்த்தி வெட்டியது1 என்பதாம். இக்கல்வெட்டு, சாளுவமன்னனாகிய திருமலைராயன் என்பான் சுகம் 1337-ஆம் ஆண்டில் சில ஊர்களைச் சர்வமானியமாக விட்ட செய்தியை உணர்த்துகின்றது. எனவே, இது, கி.பி. 1455-ஆம் ஆண்டில் நிகழ்ந்த தொன்றாம். இக்கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ள சாளுவத் திருமலைராயன் என்பவனே காளமேகப்புலவரால் கல்யாணிச் சாளுவத் திருமலைராயன் - மந்தரப் புயனாங் கோப்பையனுதவு மகிபதி விதரணராமன் என்று புகழ்ந்து பாடல்பெற்ற பெருமை வாய்ந்தவன் என்பது நன்கு துணியப்படும் சாளுவமன்னனாகிய இத்திருமலைராயன் என்பான் விசயநகர வேந்தர்களது பிரதிநிதியாகவிருந்து சோழ மண்டலத்தை ஆட்சிபுரிந்தவன் என்பது ஆராய்ச்சியால் புலப் படுகின்றது. இவன் காலத்தில் விசய நகரத்தில் வீற்றிருந்து அரசாண்ட மன்னர்கள் மல்லிகார்ச் சுனராயர் விருபாக்ஷராயர் என்போர். இவர்களது பிரதிநிதியாக விருந்து தமிழ் நாட்டை ஆட்சிபுரிந்து சாளுவத் திருமலை ராயன் கி.பி. 1455-ஆம் ஆண்டில் நிலவிய செய்தி மேலே குறித்துள்ள தஞ்சைக் கல்வெட்டால் நன்கு அறியப்படுகின்றது. ஆகவே, இம்மன்னனால் ஆதரிக்கப்பெற்ற நம் காளமேகப் புலவர் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இடையில் வாழ்ந்தவராதல் வேண்டும். இங்ஙனம் கல்வெட்டுக்களின் துணைகொண்டு உறுதிசெய்யக்கூடிய பிற புலவர்களது காலங்களையும் ஆராய்ந்து அமயம் நேர்ந்துழி நம் தமிழ்ப் பொழிலில் வெளியிடுவேன். 27. வேம்பையர்கோன் நாராயணன் இயற்றிய சிராமலை அந்தாதி வேம்பையர்கோன் நாராயணன் என்பார் மதுரை மாநகருக்கு வடகிழக்கே இரண்டுகாத தூரத்தில் வையை யாற்றின் வடகரையிலுள்ள வேம்பற்றூரில் முற்காலத்தில் நிலவிய புலவர் பெருமக்களுள் ஒருவர் ஆவர். இவ்வேம்பற்றூரை இக்காலத்தில் வேம்பத்தூர் என்று வழங்கு கின்றனர். இதனை நிம்பை என்றுங் கூறுவதுண்டு. புறநானூற்றிலுள்ள 317 ஆம் பாடலை இயற்றியவராகிய வேம்பற்றூர்க் குமரனார் என்பவரும் இவ்வூரினரே யாவர். எனவே, கடைச்சங்க காலத்தில் இவ்வூர் சிறந்த செந்தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்துவந்த இடமாக இருந்தது என்பது அறியத் தக்கது. அதற்குப் பின்னரும் பல அரிய தமிழ்நூற்களைப் பாடிய புலவர்கள் இவ்வூரில் இருந்துள்ளனர். பாகவத புராணத்தை இனிய செந்தமிழ்ப் பாக்களாக இயற்றியுள்ள செவ்வைச்சூடுவாரும், தமிழ்மொழியில் ஞானவாசிட்டம்பாடிய ஆளவந்தான் மாதவபட்டரும், ஆநந்த லகரி சௌந்தரியலகரி முதலான தமிழ் நூற்களை அருளிய வீரைக்கவிராச பண்டிதரும், பாடுதுறை முதலான நூற்களுக்கு ஆசிரியராகிய தத்துவ ராயரும், பகவத் கீதையைத் தமிழ்மொழியில் பாடியுள்ள ஸ்ரீபட்டரும், வரதுங்கராம பாண்டியரது ஆசிரியராகிய ஈசான முனிவரும் இவ்வேம்பத்தூரில் முற்காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமான்களே யாவர். அந்ளில் இவ்வூரில் செந்தமிழ்ப் புலமையிற் சிறந்து வாழ்ந்து வந்த புலவர் கூட்டத்தை வேம்பத்தூர் சங்கத்தார் என்று வழங்கி வந்தனர் என்பது நன்கு அறியப்படுகின்றது. புலவர் பெருமக்கள் பலர்க்குப் பிறந்தக மாகவுள்ள இப்பழம்பதியில் மணியன் என்பவருக்குப் புதல்வராகத் தோன்றியவரே சிராமலை அந்தாதிபாடிய நாராயணன் என்னுங் கவிஞர். இவர் பாடியுள்ள சிராமலை அந்தாதி நூற்றிரண்டு கட்டளைக் கலித்துறை களை யுடையது. சொற்சுவையும் பொருட் சுவையும் ஒருங்கே அமையப் பெற்றது; அகப்பொருள்துறைகள் அமைந்த பல இனிய பாடல்களை யுடையது; பக்திச்சுவையொழுகும் தன்மையது. இத்துணைச் சிறப்பு வாய்ந்த இவ்வந்தாதியைச் சிராமலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்மீது இயற்றியருளிய கவிஞர் கோமானாகிய நாராயணன் என்பார் ஒப்பற்ற சிவபக்தியுடைய வராயிருத்தல் வேண்டுமென்பது திண்ணம். இவர் இவ்வந்தாதியிலுள்ள பாடல்கள் எல்லா வற்றையும் திருச்சிராப் பள்ளியிலுள்ள மலையில் பொறித்திருப்பது குறிப்பிடத்தக்க தாகும். அவற்றைக் கல்வெட்டு இலாகாவிலுள்ள அறிஞர்கள் படிஎடுத்துத் தென்னிந்தியக் கல்வெட்டுப் புத்தகம் நான்காம் தொகுதியில் வெளியிட்டிருக்கின்றனர். (South Indian Inscriptions Vol. IV No. 167) அவற்றுள், சில பாடல்களில் சீர்களும் சிலவற்றில் சில எழுத்துக்களும் உதிர்ந்து போயிருந்தமையின் அவ்விடங்களில் புள்ளியிட்டுப் பதிப்பித் துள்ளனர். கல்லில்வரையப் பெற்றுள்ள இவ்வந்தாதியின் பதினைந்து பாடல்களை ஒருவாறு திருத்திப் பொழில் அன்பர்கள் படித்தின்புறுமாறு ஈண்டு வெளியிட்டுள் ளேன். இவ்வந்தாதியின் இறுதியிலுள்ள கட்டளைக் கலித்துறை யொன்றும் வெண்பாவொன்றும் இதனை இயற்றிய புலவரது வரலாற்றைச் சிறிது உணர்த்துகின்றன. அவை, மற்பந்த மார்பன் மணியன் மகன்மதின் வேம்பையர்கோன் நற்பந்த மார்தமிழ் நாராயணனஞ் சிராமலைமேற் கற்பந்த னீழலில் வைத்த கலித்துறை நூறுங்கற்பார் பொற்பந்த நீழ லரன்றிருப் பாதம் பொருந்துவரே மாட மதுரை மணலூர் மதிள்வேம்பை யோடமர்சே (ய்)ஞலூர் குண்டூரிந் நீடிய நற்பதிக்கோ னாரா யணனஞ் சிராமலைமேற் கற்பதித்தான் சொன்ன கவி என்பனவாம். இவற்றால், சிராமலையந்தாதியின் ஆசிரிய ராகிய நாராயணன் என்பார் மணியன் என்பவரது புதல்வர் என்பதும் வேம்பத்தூரில் பிறந்தவர் என்பதும் மதுரை, மணலூர், வேம்பத்தூர், சேய்ஞலூர், குண்டூர் என்ற ஊர்களில் வாழ்ந்தவர் என்பதும் வெளியாகின்றன. இவர் பாடிய சிராமலை அந்தாதியின் ஏட்டுப் பிரதி எவ்விடத்திலேனும் உளதா என்று ஆராய்ந்துணர்த்துமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள் கின்றேன். மொழிந்திடு மெய்ம்மை முனிந்திடும் பொய்ம்மை முயன்றிடுமின் கழிந்திடும் யாக்கையைக் கைப்பணி கோடல் கருமுகில்வான் 1பொழிந்திடு மெல்லருவிச் சிராமலைப் புகுந்திடுமின் இழிந்திடு நும்வினை யீசனங் கேவந் தெதிர்ப்படுமே. (3) நிற்குந் துயர்கொண் டிருக்கும் பொழுதின்றி நெஞ்சநுங்கித் தெற்கும் வடக்குந் திரிந்தே வருந்திச் சிராமலைமேற் பொற்குன் றனைக்கண்டு கொண்டே வினிப்புறம் போகவொட்டேன் கற்குன் றனையநெஞ்சிற்செல்வ ராவில்லை காரியமே. (5) வடிக்கும் கருங்குழல் மேலும்வைத் தாள்மொய்த்த வண்டகற்றிக் கொடிக்குங் குமக்கொங்கை மேலுங்கொண் டாள்கொண் டலந்தி மந்தி பிடிக்குஞ் சிராமலை யாதிதன் பேரருள் போலநன்று நீ தடிக்குங் கலையல்கு லாளன்ப நீதந்த தண்டழையே. (16) தழைகொண்ட கையர் கதிர்கொண்ட மெய்யர் தளர்வுகண்டு பிழைகொண்டு பொய்யென்று பேசிவிட் டேற்கலர் பேரருளால் மழைகொண்ட கண்டர்தம் மானிற் சிராமலை வந்துநின்றார் உழைகொண்ட நோக்கியின் றென்னுரைக் கேனவ ருற்றிடிலே. (17) பொன்வண்ண மாளிகைப் பூந்தண் சிராமலைப் பள்ளிகொண்ட மன்வண்ண மால்கட னஞ்சம் மிருந்த மறைமிடற்றான் றன்வண்ணந் தீவண்ணங் கண்டு தளிர்வண்ணம் வாடிச்சென்றான் முன்வண்ண நுண்ணிடை யாளெங் ஙனேசெய்யு மெய்ப்பணியே. (22) அயிர்ப்புடை யாய்நெஞ் சமேயினித் தேறர மங்கையல்லள் செயிர்ப்புடை யார்தந் திரிபுரஞ் செற்றான் சிராமலைவாய்ப் பயிர்ப்புடை யாளடிப் பார்தோய்ந் தனபடைக் கண்ணிமைக்கும் உயிர்ப்புடை யாளிவ் வுலகுடை யார்பெற்ற வொல்கிடையே. (24) மதியும் பகைமுன்னை யாயும் பகைமனை யும்மனைசூழ் பதியும் பகைபகை யன்றினென் றும்பகை பான்மைதந்த விதியும் பகையெனிலுமன்ப ரன்பினர் வெள்ளக்கங்கை பொதியுஞ் சடையன் சிராமலை போலுமெம் பூங்குழற்கே. (33) பெண்ணமிர் தைப்பார் பெருந்தே னமிர்தைப் பிறைநுதலை வண்ணப் பயலை தணிவித்தி சேல்வம்மின் செம்மனத்துக் கண்ணப் பனுக்கருள் செய்த சிராமலை யானைக்கண்டு விண்ணப்பமுஞ் செய்து வேட்கையுங் கூறுமின் வேறிடத்தே. (37) காலால் வலஞ்செய்து கையாற் றொழுதுகண் ணாரக்கண்டு மேலா னவருடன் வீற்றிருப் பானெண்ணில் மெய்ப்புலவீர் சேலார் கழனிச் சிராமலை மேயசெம் பொற்சுடரைப் பாலா னறுநெய் யொடாடியை பாடிப் பணிமின்களே (39) பணிமின்கள் பாதம் பகர்மின்க ணாமங்கள் பாரகத்தீர் தணிமின்கள் சீற்றந் தவிர்மின்கள் பொய்ம்மை தவம்புகுநாள் கணிமின்க ளேனற் கிளிகடி மாதர்தங் கைவிசைத்த மணிமின்கள் போலொளிர் வான்றோய் சிராப்பள்ளி வள்ளலுக்கே (40) இழிவு நரகமு மேலுந் துறக்கமு மிவ்விரண்டும் பழியு புகழுந் தரவந் தனவினைப் பற்றறுத்துக் கழியு முடம்பு கழிந்தவர் காணுங் கழலன்கண்டீர் பொழியுங் கருமுகில் போர்க்குந் திருமலைப் புண்ணியனே. (49) மருந்தே சிராமலை மாமணி யேமரு தாடமர்ந்தாய் குருந்தேய் நறம்பொழிற் கற்குடி மேய கொழுஞ்சுடரே முருந்தேய் முறுவ லுமைகண வாமுதல் வாவெனநின் றிருந்தே நிறையழிந் தேன்வினை யேன்பட்ட வேழைமையே. (75) பொய்யினைப் பேசிப் பொருளினைத் தேடிப் புழுப்பொதிந்த மெய்யினைக்காத்து வெறுத்தொழிந் தேன்வியன் பொன்மலைமேல் அய்யனைத் தேவர்தங் கோனையெம் மானையம் மான்மறிசேர் கையனைக் காலனைக் காய்ந்த பிரானைக் கழல்பணிந்தே. (97) ஒக்கிய கையொ டொருக்கிய வுள்ளத்து யோகியர்தம் வாக்குயர் மந்திரம் வானரங் கற்றுமந் திக்குரைக்குந் தேக்குயர் சாரற் சிராமலைக் கூத்தன்செம் பொற்கழன்மே லாக்கிய சிந்தை யடியர்க்கென் னோவின் றரியனவே. (101) அரியன சால வெளியகண் ஊரரு வித்திரள்கள் பரியன நேர்மணி சிந்துஞ் சிராமலைப் பால்வண்ணனைக் கரியன செய்யன நுண்புகர்ப் பைங்கட் கடாக்களிற்றின் உரியனை நாழிகை யேத்தவல் லார்க்கிவ் வுலகத்துளே. (102)  28. சோழர்களும் தமிழ் மொழியும் நாளது வெகுதானிய, ஐப்பசி, எ. (23-10-38)ம் நாள் ஞாயிறு மாலை ரு மணிக்குக் கரந்தைத் தமிழ்ப் பெருமன்றத்தில் கும்பகோணம் வாணாத் துறை உயர்தரப்பள்ளித் தலைமைத் தமிழாசிரியர், புலவர் திருவாளர் தி.வை. சதாசிவப் பண்டாரத் தாரவர்கள் சோழர்களும் தமிழ் மொழியும் என்பதுபற்றி ஓர் அரிய விரிவுரையாற்றினார்கள். அவர்கள் ஆற்றிய விரிவுரையின் சுருக்கம் வருமாறு :- சோழர்கள் தமிழ்ப் பழங்குடியினர், தமிழைப் போன்று சிறப்பு ழ கரம் பெற்ற பெயருடையவர். இவர் தம் தொன்மைக்கால எல்லை காண்டலரிது. பழந்தமிழிலக்கண நூலாசிரியரான தொல்காப்பியனாரே, வண்புகழ் மூவர்தண் பொழில் வரைப்பின், போந்தை வேம்பே ஆரென வரூஉ மாபெருந் தானையர் என்ற சூத்திரங்களால் இச்சோழ வரசர் களையும் அவர்தம் மாலையாகிய ஆத்தியினையும் குறிப்பிட்டுள் ளார். இவர்கள் தமிழைப் போற்றுவதிற் பாண்டியரின் பிற்பட்டவரல்லர். புலவர் புலமையறிய அரசரும் புலவராதல் வேண்டும். பாண்டியருட் கவியரங் கேறினாரைப் போன்று சோழரும் புலமை பெற்றிருந்தனர். கடைச் சங்கநாளிற் றொகுக்கப் பெற்ற தொகைநூல்களில் சோழன் நலங்கிள்ளி, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நல்லுருத்திரன் முதலிய சோழ மன்னர்களாற் பாடப்பெற்ற பாக்கள் பலவுள. கற்றறிந்தா ரேத்துங் கலித்தொகையுள் முல்லைத் திணையைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன் ஆவார். படையும் கொடியு மென்ற தொல்காப்பியச் சூத்திரத்துள் வேந்தரது பூவைப் போர்ப்பூ, தார்ப்பூ என இருவகையாகப் பிரித்து சோழரது போர்ப்பூ ஆத்தியெனவும் அவரது தார்ப்பூ முல்லை யெனவும் கூறுவர். அதனுரையாசிரியரான பேராசிரியர். அத்தகைய தர்ப்பூவாகிய முல்லைப் பூ பயின்றது கருதி இவ்வரசர் முல்லைத் திணையைப் பாடினார்போலும். சோழர் புலவராயிருந்து தமிழை வளர்த்த தோடு புலமை மிக்கோரியற்றிய நூல்களையும் போற்றி அப்புலவர்களைப் போற்றினார்கள். கரிகால் வளவனாகிய பெருவேந்தன் பட்டினப் பாலை யென்னும் நூலை இயற்றிய ஆசிரியருக்குப் பதினாறு நூறாயிரம் பொன்னளித்துப் போற்றினமை காரணமாகக் கலிங்கத்துப் பரணியிற் புகழப்படு கின்றான். பொருநராற்றுப் படையென்ற நூலும் இவனைப் பற்றிப் பாடப்பெற்றதே. ஆகவே பத்துப்பாட்டு என்னுந் தொகைநூலுள் இரண்டு சோழருடையனவென்பது புலனாம். பாண்டியர் மேற் பாடப்பெற்றனவுமிதன் கணிரண்டேயுள. சோழன்கோச் செங்கணான் சேரனாகிய கணைக்காலிரும் பொறையைச் சிறைப்படுத்திய பொழுது பொய்கையார் என்ற புலவர் செங்கணானைக் களவழிக் கவிதையாற் பாடிச் சேரமானைச் சிறைவீடுசெய்தார். கோச்செங்கணான் என்ற சோழன் இவர் பாடிய நூலைக்கேட்டுத் தன் பகைவனைச் சிறையினின்று விடுவித்ததனால் அவனது தமிழ்ப் பற்று நன்கு புலனாகின்றது. பண்டைச் சோழர்கள் தனித் தமிழையே வளமுற வளர்த்தனர். பிற்காலச் சோழர் பல்லவராட்சியிற் பட்டுப் பிறமொழியை மிகுதியாக வழங்கினர். கி.பி. 750-ல் சோழநாடு பல்லவர்பாற்பட்டது. பல்லவர்கள் வடமொழியார் வத்தால் கோயிற்பூசனையில் அதனை நிலைநிறுத்தினர். அவரது ஆட்சியில் மதச்செயல்களே மல்கின. மதங்கருதிவந்த சமணர் முதலாயினோரும், 7, 8-ம் நூற்றாண்டுகளில் தமிழை வளம் படுத்தினர். விசயாலயனுக்குப் பின்வந்த ஆதித்தசோழன் காலத்தும் பராந்தகசோழன் காலத்தும் தேவாரத் திருமுறை களைக் கோயில்களிற் பாடற்கேற்ற செவ்வி யளிக்கப் பட்டிருந்தது. பின்னர் முதலாம் இராசராச சோழதேவரால் சைவத்திருமுறைகளிற் பதினொன்றும் கண்டு முறைப்படுத்தப் பெற்றன. இவன் காலத்துக் கண்டராதித்த சோழதேவரும், அவருடைய மனைவியார் செம்பியன் மாதேவியாரும் தமிழுடன் சமயத் தொண்டிலீடு பட்டுச் சைவத்திருமுறைகளை யெங்கும் பரப்பினார்கள். இக்காலத்தே இராசராசேசுவர நாடகம், இராசராசவிசயம் ஆகிய தமிழ் நூல்கள் தோன்றின. இராசராசன் மகனும் பண்டிதசோழனும் ஆகிய கங்கை கொண்ட சோழன் காலத்தில் கருவூர்த்தேவர் என்பவர் திருவிசைப் பாவினைப் பாடியுள்ளார். இவன் காலமுதற் கொண்டு முதற் குலோத்துங்கன் காலம்வரை மேலைச் சாளுக்கியரோடு சோழர்கள் ஓயாது போர்புரிய வேண்டியிருந்தமையால் புதிதாக நூல்கள் தோன்று வதற்கியைபில்லாமற் போயிற்று. வீரரா சேந்திர சோழன் காலத்து அவ்வரசன் வேண்டுகோட் கொண்டு பொன்பத்திக் காவலன் புத்த மித்திரன் என்ற ஆசிரியர் வீரசோழியம் என்ற இலக்கணநூலை இயற்றினார். தமிழில் ஐந்திலக்கணம் அமைந்த நூலாக முதன் முதற்றோன்றியது இந்நூலேயாம். அன்றியும் இவன் காலத்துத் திருவாரூரில் வாழ்ந்த புலவரொருவரால் வீரசோழ அணுக்க விசயம் என்ற இலக்கிய நூலுமியற்றப் பெற்றது. பின்னர் வந்த முதற் குலோத்துங்க சோழன் தமிழ், தெலுங்கு, வடமொழி ஆகிய மும்மொழியிலும் வல்லவன். இவன் தன் அம்மானாகிய வீரராசேந்திர சோழனது உதவியைப் பெற்றான். இவன் காலத்துப் புலவராய சயங் கொண்டார் இவனது கலிங்கத்து வெற்றியைக் கலிங்கத்துப் பரணியாற் பலபடப் பாராட்டி யுள்ளார். இவர் சோழரது பெருந் திறலையும் பிற உயர்பண்புகளையும் அந்நூலின் இராச பாரம்பரியத்திற் கூறியுள்ளார். கம்பருக்குப்பின் கவிச்சக்கரவர்த்தியென்ற பட்டத்தைப் பெற்றவர் இவரே. இவர் பாடிய பரணியை ஒட்டக்கூத்தர், குலோத்துங்கன் பிள்ளைத் தமிழில் பாடற்கரும்பரணி தேடற்கருங்கவி எனப் பாராட்டியதோடு இவரைக் கவிச் சக்கரவர்த்தி யென்றும் புகழ்ந்து போற்றுகின்றார். விக்கிரம சோழன் ஆட்சியில் கூத்தர் இளம் புலவராக இருந்தார். இவர் அவனது ஆறாவதாட்சியாண்டில் விக்கிரம சோழனுலா வைப் பாடியிருத்தல் வேண்டும். இவனால் பூந்தோட்டத்திற் கடுத்த கூத்தனூர் என்பது கூத்தருக்குக் கொடுக்கப் பெற்றது. இவர் காலிங்கராயன் அரும்பைக் கூத்தனைப் பற்றி அரும்பைத் தொள்ளாயிரம் என ஒன்று பாடியிருக் கிறார். அது கிடைத்திலது. காலிங்கராயனாகிய இவன் சயங்கொண்டார் காலத்திலிருந்து விக்கிரமனது ஆறாவதாட்சியாண்டு வரையிலும் அரசியல் வினையியற்றிப்பின்னர் ஓய்வெடுத்துக் கொண்டவன். இவன் இருவராலும் பாடப்பெற்றுள்ளான். ஆதலால் சயங் கொண்டார் காலத்தில் கூத்தருமிருந்திருப்பர் எனக் கருதலாம். கூத்தர் காலத்து விக்கிரம சோழனால் தென் கலிங்கப்போர் நடத்தப் பெற்றது. அதுபற்றி இவர் பரணி பாடியதாகவும் தெரிகிறது. விக்கிரமன் பேரன் இரண்டாம் இராசராசன் காலத்து இவரியற்றிய தக்கயாகப் பரணியில் விக்கிரமனைப் பற்றி இவர் பாடிய தென்கலிங்கப் பரணி குறிப்பிடப்பட்டுள்ளது. அடியார்க்கு நல்லார் எடுத்துக் காட்டிய தாழிசையுட் சில இப்பரணியினைச் சேர்ந்தனவாகலாம். கூத்தர் இரண்டாம் குலோத்துங்கனைப் பிள்ளைத் தமிழுலா ஆகிய வற்றால் பாராட்டியுள்ளார். விக்கிரமன் காலத்துச் செஞ்சியை யாண்ட சிற்றரசனாகிய செஞ்சியர் கோன்காடவன் என்பவன் விக்கிரமன் காலத்துச் சாசனத்தில் கையெழுத்திட்டுள்ளான். இவனைச் செஞ்சிக் கலம்பகத்தாற் போற்றியவர் புகழேந்திப் புலவர். ஆதலால் கூத்தரும் புகழேந்தியும் ஏறக்குறைய ஒரு காலத்தவராகலாம். இரண்டாம் குலோத் துங்கனுக்குப்பின் அவன் மகன் இரண்டாம் இராசராசன் பட்டத்திற்கு வந்தான். தன் தந்தையைப் போன்று தமிழார்வமுடைய வனாயிருந்தான் இவன். இவனது மெய்க்கீர்த்தியில் முத்தமிழ்க்குத் தலைவனெனவும் முடிசூடு மிராச பண்டிதனெனவும் புகழப்படுகின்றான். இவனைப் பற்றிய உலாவாகிய இராச ராசனுலாவும், ஈட்டியெழுபதும் இவன் காலத்துக் கூத்தராற் பாடப்பெற்றன. வீழ்ந்த அரிசமயத்தை எடுத்தவன் இவனே. இவனைப்பற்றிய உலாவில் கண்ணியொன்றிற்கு ஆயிரம் பொன் கூத்தற்களித்தான் என்பர் சங்கர சோழனுலாவுடையார். இவனுக்குப் பின் 1162ல் இரண்டாம் இராசாதிராசன் பட்டம் பெற்றான். இவன் திருவொற்றியூர்க் கோயிலுட் சென்றபொழுது வாகீச பண்டித ரென்பவர் எதிர்கொண்டழைத்தார் என்பது சாசனத்துட் காணப்படுகிறது. இவ்வாகீச பண்டிதர் என்பவரே ஞானாமிர்தம் என்னும் சைவசித்தாந்த சமய நூலையியற்றியுள்ளார். இந்நூல் சங்கச் செய்யுளின் நடையையுடையது. சிவஞான முனிவராற் பாடியத்தில் பாராட்டப் பெற்றுள்ளது. பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்துத்தான் சேக்கிழாராற் பெரியபுராணம் பாடப்பெற்ற தென்பது என் கருத்து, அதுபற்றிய காரணம் பலவுள. இன்னும் இவன் காலத்திலேயே நன்னூல், வச்சணந்திமாலை, வெண்பாப்பாட்டியல், நேமிநாதம் ஆகிய இலக்கண நூல்கள் இயற்றப் பெற்றன. குமார குலோத்துங்கன் கோவை யென்பது இவனைப் பற்றியதே. இவன், இதன்கண் தமிழ்வாணர் தெய்வக்கலியா வாணன் என்றாங்கு சிறப்பிக்கப்படுகின்றான். திரிபுவனம் திருவிடைமருது முதலிய பெருங்கோயில்களெல்லாம் இவன் காலத்துத்தான் எழுந்தன. அறுபான் மும்மையடியார்களைக் கோயில்களில் எழுந்தருளி வித்தவன் இவனே. தமிழை வளர்த்த சோழ மன்னர்களில் இவனே பிற்காலத்தவனெனலாம். இவனுக்கு பிற்பட்ட சிற்றரசர் தமிழை வளர்த்திலர். இடைக்காலத் தமிழரசர்களில் பரணி, உலா, பிள்ளைத்தமிழ், கோவை முதலிய பிரபந்தம் பெற்றுப் புலவர்களைப் போற்றித் தமிழை வளர்த்தவர் சோழர்களே, பாண்டியர்களைவிடச் சோழர்களே பிற்காலத்துத் தமிழ் வளர்ச்சியி லீடுபட்டவ ரென்னலாம் என்பதாம். பின், அமைச்சர் அவர்கள் விரிவுரையாளருக்கு நன்றிகூறக் கூட்டம் இனிதே நிறைவேறியது.  29. தமிழிசை வளர்ந்த வரலாறு நம் தாய் மொழியாகிய தமிழ், இயல் இசை, நாடகம் என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டு அறிஞர்களால் ஆராயப்பட்டு வந்தது என்பதைப் பண்டைத் தமிழ் நூல்களால் அறியலாம். வடவேங்கடம் தென்குமரிக்கு இடைப்பட்ட பெருநிலப் பரப்பை ஆட்சிபுரிந்த தமிழ் வேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர் மூவரும் முத்தமிழையும் போற்றி வந்தனர் என்பது கடைச்சங்க நூல்களாலும் கோயில்களில் காணப்படும் பல கல்வெட்டுக் களாலும் நன்கறியப்படுகின்றன. எனினும், தமிழ்ச் சங்கம் நிறுவி முத்தமிழையும் வளர்த்த பெருமையுடையவர்கள் பாண்டிய வேந்தரே யாவார். கடைச்சங்க நாளில் இயற்றமிழ் நூல்களைப் போல் எத்தனையோ இசைத்தமிழ் நூல்களும் இயற்றப்பட்டு வழக்கிலிருந்து வந்தன என்பது தொல்லுரை யாசிரியர்களின் கூற்றுக்களால் வெளியாகின்றது. அந்த நாட்களில் இசைத்தமிழ் எய்தியிருந்த உயர்நிலையை உணர்தற்கு முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் ஒன்றே போதுமானது எனலாம். அப்பெருங் காப்பியத்திற்குப் பேருரை கண்ட அடியார்க்கு நல்லார் தம் காலத்திற்கு முன்னரே பழைய இசைத் தமிழ் நூல்கள் இறந்து விட்டமையால் எஞ்சியிருந்த இசை நுணுக்கம், இந்திர காளியம் முதலான சில நூல்களின் துணைகொண்டு அப்பெருநூலுக்குத் தாம் ஒருவாறு உரை எழுத முடிந்தது என்று உரைப்பாயிரத்தில் கூறியிருப்பது இசைத்தமிழின் வீழ்ச்சியை உணர்த்துவதாக உளது. இனி, அடியார்க்கு நல்லார் காலத்தில் இசைத்தமிழ் அத்தகைய நிலையிலிருந்ததற்குக் காரணம் யாதெனில், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதி முதல் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரையில் நம் தமிழ்நாடு முழுவதும் பிறமொழி பேசும் அயலார் ஆட்சிக்கு உட்பட்டிருந்தமையேயாம். பாண்டிய நாட்டைக் களப்பிரரும் தொண்டைநாடு சோழநாடுகளைப் பல்லவரும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் கைப்பற்றிக் கொண்டு அவற்றை அரசாண்ட செய்திகள் வரலாற்றாராய்ச்சியால் அறியக் கிடக்கின்றன. அவர்கள் வேறு மொழிகளைப் பேசுவோராதலின் தம் ஆட்சியில் தமிழ் மொழியை அரசாங்க மொழியாக வைத்துக் கொள்ளவில்லை. ஆகவே, அன்னோர் ஆளுகையில் தமிழ்மொழி தாழ்ந்த நிலையை எய்திப் போற்றுவாரற்றுப் புறக்கணிக்கப்பட்டது. அக்காலத்தேதான் இசைத்தமிழ் நூல்களின் பயிற்சியும் ஒழிந்தது. கற்போர் இல்லாமையால் அவ்வரிய நூல்களும் அழிந்தன. எனவே, தமிழிசையும் தமிழ்நாட்டில் வீழ்ச்சியடைந்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுவரையில் அத்தகைய நிலையில் நம் தமிழகம் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியன் கடுங்கோன் என்பான் களப்பிரரைப் போரில் வென்று பாண்டி நாட்டைக் கைப்பற்றினான். அக்கால முதல் அந்நாடு பாண்டியரது ஆட்சிக்குள்ளா யிற்று. அவர்கள் ஆளுகையில் தமிழ்மொழி அரசாங்க மொழியாகிச் சீரும் சிறப்பும் எய்தியது. அந்நாட்களில் பாண்டி வேந்தர்கள் தம் தலைநகராகிய மதுரையம்பதியில் இசைத்தமிழ்ச் சங்கம் ஒன்று தனியாக அமைத்துத் தமிழிசையை வளர்த்து வந்தனர் என்று தெரிகிறது. அச்செய்தியை, உயர் மதிற்கூடலினாய்ந்த ஒண்டீந்தமிழின் - துறைவாய் நுழைந்தனையோ அன்றி ஏழிசைச் சூழல் புக்கோ - இறைவா தடவரைத் தோட்கென்கொலாம் புகுந்தெய்தியதே1 என்னும் மணிவாசகப் பெருமான் திருவாக்கினாலும், ஆழி வடிம் பலம்ப நின்றானும் அன்றொருகால் - ஏழிசை நூற்சங்கத் திருந்தானும்2 என்னும் நளவெண்பாப் பாடலாலும் தெள்ளிதின் உணர்ந்து கொள்ளலாம். அவற்றில் கூறப்பட்டுள்ள ஏழிசைச் சூழல், ஏழிசைச்சங்கம் ஆகிய இரண்டும் மதுரைமாநகரில் அக்காலத்தில் நிலவிய தமிழிசைச் சங்கத்தைக் குறித்தல் அறியத்தக்கது. அன்றியும், பாண்டி மன்னன் ஒருவன் மதுரை யம்பதியில் தான் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய அரியணைக்கு இசையளவு கண்டான் எனப் பெயரிட்டிருந்தனர் என்று சோழவந்தானுக் கண்மையிலுள்ள தென்கரையில் காணப்படும் கல்வெட்டொன்று உணர்த்துகின்றது.1 எனவே, பாண்டியர்க்கு அக்காலத்தில் இசையளவு கண்டான் என்ற பட்டம் வழங்கி வந்தமை காண்க. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடையில் சோழ நாட்டில் சீகாழிப் பதியில் தோன்றியருளிய திருஞான சம்பந்தப் பெருமான் தம் மூன்றாம் ஆண்டில் அருட்பாக்கள் இயற்றத் தொடங்கி, அவற்றைத் தமிழ்ப் பண்களில் பாடித் தமிழிசையைத் தமிழகம் முழுதும் பரப்பி வருவாரா யினர். அவ்வடிகளோடு உடன் சென்ற திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர் மனைவியார் மதங்க சூளாமணியாரும் அவ்வருட்பாடல்களைத் தம் யாழில் அமைத்துத் தமிழ்ப் பண்களில் பாடி வந்தனர். அந்நூற்றாண்டில் விளங்கிய திருநாவுக்கரசு அடிகளும் தம் அருட்பாக்களைத் தமிழ்ப் பண்களில் பாடித் தமிழிசையை யாண்டும் பரப்பினர். அந்நாட்களில் தொண்டை நாட்டையும், சோழநாட்டையும் ஒருங்கே ஆட்சிபுரிந்த பல்லவ மன்னனாகிய முதல் மகேந்திர வர்மன் என்பான் இசைச்கலையில் புலமையுடைவன் ஆதலின் இசைத் தமிழைப் போற்றி வளர்த்து வந்தான். ஆகவே, தமிழ்நாடு முழுவதும் தமிழிசை உயர்நிலை எய்திற்று. மேலே குறிப்பிட்ட சைவப் பெரியார் இருவரும் பத்தி நெறியைத் தமிழிசை மூலமாக நாட்டில் பரப்பி வந்தமை உணரற்பாலது. கி.பி. எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகளில் சுந்தர மூர்த்திகளும் பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கை மன்னன், சடகோபர் ஆகிய திருமாலடியார்களும் அருட்பாக்கள் பாடித் தமிழிசையையும் பத்தி நெறியையும் வளர்த்து வந்தனர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதல் ஆதித்த சோழனால் நம் தமிழகத்தில் சோழர் பேரரசு நிறுவப் பெற்றது. சோழ மன்னர்களின் ஆட்சியும் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் சற்றேறக்குறைய 400 ஆண்டுகளுக்கு மேல் இனிது நடைபெற்றது. அவர்கள் தம் ஆட்சிக் காலங்களில் தமிழ்நாட்டிலுள்ள சிவன் கோயில்களிலும் திருமால் கோட்டங் களிலும் சமய குரவர்களின் பாடல்களைத் தமிழ்ப் பண்களில் நாள்தோறும் பாடி வருதற்கு நிவந்தங்கள் வழங்கியுள்ளனர். அச்செய்திகளைக் கோயில்களில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களால் அறியலாம். தஞ்சைப் பெரியகோயிலில் திருப்பதிகம் பாடுவதற்கு முதல் இராசராச சோழன் (கி.பி.985-1014), நாற்பத்தெண்மரை அமர்த்தி யிருந்தானென்று அங்குள்ள கல்வெட்டொன்று கூறுகின்றது.1 முதல்குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120) ஓர் இசைத்தமிழ் நூல் இயற்றியிருந்தமை கலிங்கத்துப் பரணியால் அறியப்படுகின்றது. அப்பெரு வேந்தனுடைய மனைவி ஏழிசைவல்லபி என்பாள் அவ்விசை நூலை நன்கு கற்று இசையிற் சிறந்த புலமை பெற்றுத் தமிழிசையை வளர்த்து வந்தாள் என்று தெரிகிறது. அது பற்றியே அவ்வரசி ஏழிசை வல்லபி என்று சிறப்புப் பெயருடன் வழங்கப்பெற்றனள். அதனால் அக்கோப்பெருந் தேவியின் இயற் பெயர் கூடமறைந்துவிட்டது எனலாம். கோயில்களில் திருப்பதிகம் பாடும் தேவரடியார்களுக்கும் தளியிலார்க்கும் தமிழ்ப் பண்களைக் கற்பித்தற் பொருட்டுச் சோழ மன்னர்கள் பாணர்களை நியமித்திருந்தனர் என்று திருவிடைமருதூரிலுள்ள கல்வெட்டொன்று கூறுகின்றது.2 அதன் பொருட்டுப் பாணர்களுக்கு அவ்வேந்தர்கள் அளித்திருந்த இறையிலி நிலம் பாணப்பேறு என அந்நாளில் வழங்கப்பெற்றது என்பது அக்கல்வெட்டால் அறியப்படுகின்றது. ஆகவே, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழிசை ஈடும் எடுப்புமற்ற நிலையில் சிறப்புற்று மக்கட்கு இன்பப் பேற்றிற்கு ஏதுவாயிருந்தது என்பது நன்கு தெளியப்படும். கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்த சாரங்க தேவர் என்பார் வடமொழியில் இயற்றிய சங்கீத ரத்நாகரம் என்ற நூலில் சோழ மன்னர்களின் காலத்தில் வழங்கிய தேவாரப் பண்களைக்குறித்துள்ளமை உணரற்பாலதாம். இவ்வாறு மிக்க உயர்நிலையிலிருந்த தமிழிசை, கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் மீண்டும் வீழ்ச்சி எய்திக் கேட்பாரற்றுப் போயிற்று. அதற்குக் காரணம் அப்போது நிகழ்ந்த முகம்மதியர் படையெழுச்சியும் அதனால் நாட்டில் ஏற்பட்ட குழப்பமுமேயாம். பிறகு, விசயநகர வேந்தனாகிய குமார கம்பண்ணன் என்பான் தமிழகத்தின் மீது படையெடுத்து அதனைத் தன்னடிப்படுத்தினான். அக்கால முதல் விசயநகர வேந்தர்களின் பிரதிநிதிகள் தமிழ் நாட்டிலிருந்து கொண்டு ஆட்சிபுரிவாராயினர். அவர் களுள் சிலர் கன்னடத்தையும் மற்றையோர் தெலுங்கையும் தாய்மொழி களாகக் கொண்டவர்கள். அவ்வரசப் பிரதிநிதிகளையும் பிறகு அரசாண்ட நாயக்க மன்னர்களையும் மகிழ்வித்தல் பொருட்டுத் தமிழகத்தில் கன்னடக் கீர்த்தனங்களும் தெலுங்குக் கீர்த்தனங்களும் பத்தியங்களும் பாடப்பட்டுவந்தன. தெலுங்கர்களோடு நட்புக்கொண்ட தமிழருள் சிலரும் அவற்றையே பாடி, சங்கீதத்தைப் பிறமொழி வாயிலாக வளர்த்து வருவாராயினர். அந்நிலை இவ்விருபதாம் நூற்றாண்டிலும் மாறா மலிருந்ததை யாவரும் அறிவர். எனவே பண்டைத் தமிழிசையும் மறைந்து போய்விட்டது. இத்தகைய நிலையில் பேராசிரியர் உயர்திரு விபுலானந்த அடிகள், சிலப்பதிகாரம் முதலான பழைய தமிழ் நூல்களை நன்காராய்ந்து யாழ் நுல் என்ற ஓர் அரிய இசைத் தமிழ் நூல் இயற்றிக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூலமாக வெளியிட்டி ருப்பது தமிழ் மக்கள் யாவரும் போற்றற்குரிய பெருஞ் செயலாகும். இனி, நம் தாய் மொழியல்லாத பிற மொழிகளில் பாடப்படும் இசைப்பாடல்களெல்லாம் கேட்போரது காதைத் துளைக்குமேயன்றி அவர்கள் உள்ளத்தைக் கவர்ந்து உணர்ச்சியை யுண்டு பண்ண மாட்டா என்பது பலரும் அறிந்ததோர் உண்மையாகும். பொருளுணர்ச்சிக் கிடமில்லாத பிறமொழிப் பாடல்கள் இசைவளம் பெற்றாலும் அம்மொழி யுணராத நம் நாட்டு மக்கள் உள்ளத்தை எங்ஙனம் கொள்ளை கொள்ள முடியும்? இதனை நன்குணர்ந்த அரசியல் பேரறிஞர் டாக்டர் ஸர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியர் அவர்களும் பெருங் கொடை வள்ளல் டாக்டர் ராஜா ஸர்.எம். அண்ணாமலைச் செட்டியார் அவர்களும் தமிழிசை இயக்கம் தொடங்கி அதனை யாண்டும் பரப்பினார்கள். அதன் வளர்ச்சியின் பொருட்டுப் பெரும் பொருள் சேர்த்து, சென்னைமாநகரில் தமிழிசைக் சங்கம் நிறுவினார்கள். அச்சங்கம், தமிழிசை எங்கும் பரவுமாறு பல்வகை யானும் தொண்டாற்றி வருதலைத் தமிழ்நாடு நன்கறிந் துள்ளது என்று ஐயமின்றிக் கூறலாம். ஆகவே, கி.பி.பதினான் காம் நூற்றாண்டில் வீழ்ச்சி யடைந்த தமிழிசை, இவ்விருபதாம் நூற்றாண்டில் அப்பெரியோர் இருவரது பேரூக்கத் தாலும் உழைப்பாலும் புத்துயிர் பெற்று, சிற்றூர் களிலும் பேரூர்களிலும் நகரங்களிலும் ஒலித்துக் கொண்டிருப்பதைப் பலர் அறிவர். அதற்குறுதுணை யாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவர்கள் ஆதரவினால் தமிழிசைப் பாடல்கள் தொகுதி தொகுதியாக வெளியிடப் பெற்று வருகின்றன. எனவே, தமிழிசை தமிழ் வேந்தர் ஆட்சியில் பெற்றிருந்த உயர்நிலையை விரைவில் எய்தும் என்பது திண்ணம். எல்லோரும் இனிய தமிழிசை கேட்டின்புறுமாறு அவ்வியக்கத்தைத் தோற்றுவித்த செட்டிநாட்டரசர் அண்ணா மலை வள்ளலார்க்குத் தமிழ் மக்கள் என்றென்றும் நன்றி பாராட்டும் கடப்பாடுடையவர் ஆவர்; அவர்களது புகழ் ஞாயிறும் திங்களும் உள்ளவரையில் உலகில் நின்று நிலவுவதாக!  30. வீர சைவர்களின் தமிழ்த்தொண்டு நம் தமிழ் நாட்டில் தமிழ் வளர்ச்சியில் பெரிதும் ஈடுபட்டுத் தொண்டு புரிந்த பெருமக்களை ஆராயுங்கால், அவர்களுள் வீரசைவர் பலர் இருத்தலைக் காணலாம். எனவே, தமிழ் வளர்த்த பெருமையில் வீர சைவர்க்கும் பெரும் பங்குண்டு என்று ஐயமின்றிக் கூறலாம். கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் வேந்தர்களின் ஆட்சி வீழ்ச்சியுற்ற பின்னர் நம் தமிழகம் சற்றேறக்குறைய அறுநூறு ஆண்டுகள் வரையில் பிறமொழியாளர்களாகிய ஏதிலாரது ஆட்சிக்குள்ளாகி எல்லை யற்ற துன்பங்களை நாளும் அனுபவித்து வந்தமையோடு தன் பெருமை குன்றித் தாழ்ந்த நிலையிலும் இருந்தமை வரலாற்றாராய்ச்சியால் நன்கறியக் கிடக்கின்றது. அந்நியர் ஆட்சி நடைபெற்ற அக்காலப்பகுதியில் நம் தாய்மொழியாகிய தமிழ் அரசாங்க மொழியாக ஏற்றுக்கொள்ளப் படாமல் அவ்வயலாரது மொழியே அரசாங்க மொழியாக அமைந்து போயினமையால் தமிழ்மொழி ஆதரவற்ற நிலையை எய்தியது. எனவே, அதனைப் போற்றுவாரும் கற்பாரும் கற்பிப்பாரும் மிக மிகக் குறைந்து போயினர். அக்கொடிய காலங்களிலே இளம் பிள்ளைகளுக்கு எழுத்தறி வித்துக் கல்வி கற்பித்து வந்தவர்கள் ஊர்தோறும் வாழ்ந்துகொண்டிருந்த வீரசைவப் பெருமக்களாகிய பாலாசிரியன்மாரேயாவர். அவர்கள் எல்லோரும் சிறந்த தமிழ்ப்புலமையும் கடவுட்கொள்கையும் சீலமுமுடைய வர்களாகத் திகழ்ந்தமையால் கிராமத்திலிருந்த செல்வர்களாலும், பொது மக்களாலும் பெரிதும் மதிக்கப் பெற்று இளம் பாலாசிரியர்களாக இனிது வாழ்ந்து வந்தனர். அன்னோர், தமிழ்மொழியோடு வாழ்க்கைக்கு இன்றி யமையாத கணக்கு முதலியவற்றையும் இளஞ்சிறார்க்குக் கற்பித்து வந்தமை குறிப் பிடத்தக்கது. அவர்கள் உவாத்திமைத் தொழிலில் பேரூதியம் பெறுவதற்கு வாய்ப் பில்லாத அக்காலத்தில் தாம் பெற்றது கொண்டு அமைதியாகத் தூய வாழ்க்கை நடத்திவந்தமையோடு தமிழ்த் தொண்டினை இயன்ற வரையில் புரிந்துவந்தமையும் தமிழ்நாடு என்றும் மறவாமல் போற்றத்தக்கதோர் அருஞ் செயலாகும். அவர்களுடைய தமிழ்த் தொண்டினை இரண்டுவகையாகப் பிரிக்கலாம்; அவ்விரண்டினுள், தம்பால் கல்வி பயின்ற சிறுவர்களுள் நுண்மதியும் ஆர்வமுமுடையவர்களுக்குத் தமிழ் இலக்கண இலக்கியங் களை எத்தகைய ஊதியமும் பெறாமல் இலவசமாகக் கற்பித்து அன்னோரைத் தமிழ்ப் புலவராக்கியமை ஒன்று; பிறிதொன்று, தாம் வாழ்ந்துவந்த ஊர்களில் திருக் கோயில்களில் எழுந்தருளியுள்ள இறைவன்மீது அந்தாதி, மாலை, கலம்பகம், உலா, கோவை முதலியனவும் தலபுராணங் களும் பாடி யரங்கேற்றி யாண்டும் தெய்வ மணங்கமழச் சமயத் தொண்டு புரிந்து வந்தமையேயாம். அப்புலவர் பெருமக்கள் ஊர்தோறும் நடத்திவந்த திண்னைப் பள்ளிக்கூடங்களும் குருகுலங் களுமே. அந்நியர் ஆட்சியில் தாழ்வுற்றிருந்த நம் தாய் மொழியைக் காப்பாற்றிவந்தன என்று உறுதியாகக் கூறலாம். நாட்டில் ஆங்காங்கு வாழ்ந்துகொண்டிருந்த பரம்பரைச் செல்வர்களும் பாலாசிரியன்மார்களாகிய அப்புலவர்களின் தன்னலமற்ற தொண்டினைப் போற்றி அன்னோரைப் புரந்துவந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் நம் நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டு, அதன் பயனாக அரசாங்க உதவி பெற்ற ஆரம்பப் பள்ளிக் கூடங்கள் தோன்றிய காலத்தேதான் வீரசைவப் புலவர்கள் நடத்திவந்த பழைய பள்ளிக்கூடங்கள் மறைந்து போயின. அப்பள்ளிக்கூடங்கள் மறைந்தபின்னர், தமிழறிஞர்களைக் கிராமங்களில் காண்பது அரிதாயிற்று. அங்கிருந்த இளைஞர்களுள் ஆர்வ முடையவர்கள், தமிழ்ப் புலமை பெறுவதற்கும் இடமில்லாமற் போயிற்று. பிறகு, ஆங்கிலமே முதல் மொழியாகக் கற்பிக்கப்படும் பள்ளிக் கூடங்களும், கல்லூரிகளும் நம்நாட்டில் ஆங்காங்கு அரசாங்க வுதவிகொண்டு அமைக்கப் பெற்றன. அவற்றில் கல்வி பயின்ற மாணவர்கள், ஆங்கில மொழியை நன்கு கற்றுத் தேர்ச்சி எய்திப் பட்டமும் பதவியும் பெற்றுத் தம் தாய்மொழியாகிய தமிழில் பற்றும் பயிற்சியும் இல்லாதவர்களாகப் போய் விட்டனர். அவர்கட்குப் பண்டைத் தமிழ் நூல்களைப் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்காமற் போயினமையால் அன்னோர் பண்டைத் தமிழரின் பண்பாடு, நாகரிகம், வீரம் முதலான வற்றை அறியாதவர்களாகவே யிருந்து கொண்டு நம் தமிழகத்தில் தம் வாழ்க்கையை நடத்தி விட்டனர். இக்குறைபாடு, தம் தாய்மொழி இலக்கியங்களைப் படிக்காமல் அந்நிய மொழி நூல்களை மாத்திரம் கற்று அவற்றில் ஈடுபாடுடையவர்களாயிருந்தமையால் உண்டாயிற்று என்பது தேற்றம். இவ்வுண்மையை, ஆங்கிலம் ஒன்றையே கற்றார் அதற்கு ஆக்கையோ டாவியும் விற்றார் தாங்களும் அந்நிய ரானார் செல்வத் தமிழின் தொடர்பற்றுப் போனார் என்று ஓர் அறிஞர் கூறி வருந்தியிருத்தலாலும் நன்கறிந்து கொள்ளலாம். இதனையுணர்ந்த பெரியோர் சிலர் இத்தகைய நிலைமை இனி ஏற்படாதவாறு தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஆதரவும் தேட முற்பட்டனர். அவர்களது அரிய முயற்சியினால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது என்று கூறலாம். இண்டர் மீடியேட், பீ.ஏ. வகுப்புக் களுக்குத் தமிழ்ப் பாடங்கள் கற்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப் பட்டது. அன்றியும், தமிழ் வித்வான் தேர்வும் ஏற்படுத்தப் பட்டது. அத்தேர்விற்குப் பயிற்சியளிக்கும் பொருட்டுத் தமிழ்க் கல்லூரி களும் சில இடங்களில் அமைக்கப் பெற்றன. அவற்றுள் மயிலத்தில் நிறுவப்பெற்றுள்ள ஸ்ரீ சிவஞான பாலய தேசிக சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரி, யாவரும் பாராட்டற்குரிய பெருமையுடையதாகும் இக்கல்லூரியை மயிலத்தில் அமைத்துச் சிறப்பாக நடத்திவருபவர்கள் பொம்மபுரம் ஆதீனத் தலைவர் களாக வுள்ள ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய தேசிக சுவாமிகளவர் களேயாவர். இவர்கள் தம் கல்லூரி மாணவர் களுக்குத் தமிழ்ப் புலமையோடு நல்லொழுக்கமும் தெய்வ பக்தியும் அமையுமாறு தக்க பயிற்சியளித்து வருவது எல்லோரும் போற்றுதற் குரிய அருஞ் செயலாகும். இவர்களுடைய செயற்கரிய செயல்கள், முன்னர் ஊருக்கொரு குடியினராயிருந்து கொண்டு பல ஊர்களில் தமிழ் வளர்த்து வந்த வீரசைவப் புலவர்கள் அருந்தொண்டுகளை இந்நாளில் நம்மனோர்க்கு நினைப்பூட்டி மகிழ்விக்கின்றன எனலாம். இவர்களுடைய தமிழ்த் தொண்டையும், சமயத்தொண்டையும் நம் தமிழ்நாடு என்றென்றும் மறவாமல் போற்றும் என்பது திண்ணம். அன்பும் அருளும் நிறைந்த ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய தேசிக மகா சந்நிதானம் அவர்களுக்கு அறுபதாண்டு நிறைவு விழா நடைபெறுவ துணர்ந்து பெருமகிழ்ச்சியுறுகின்றேன். இவர்கள், சைவமும் தமிழும் தழைத்தோங்க அரும்பெருந் தொண்டுகள் புரிந்து பல்லாண்டுகள் வாழ்ந்தருளுமாறு புறம்பயத் தெம்பெரு மான் திருவடிகளைப் பன்முறை வணங்குகின்றேன். 31. வழுக்கி வீழினும் சோழ நாட்டிலேயுள்ள தஞ்சாவூரைப் பலர் பார்த்திருக்கலாம். அப்பெருநகர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் சோழர் பேரரசை நிறுவிச் சிறப்புடன் ஆட்சிபுரிந்த பிற்காலச் சோழ மன்னர்களுக்குத் தலைநகராக விளங்கிய பெருமையுடையது. கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் இராசராசசோழன் எடுப்பித்த இராச ராசேசுவரம் என்னும் பெருங்கோயில் அந்நகரை இக்காலத்தும் அழகுபடுத்திக் கொண்டிருப்பதைக் காணலாம். பிற்காலத்தில் அரசாண்ட நாயக்கரும் மராட்டியரும் அந்நகரையே தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தமை சரித்திரம் படித்தோர் அறிந்ததே. அங்கு அவர்களுடைய அரண்மனையை இன்றும் காணலாம். அதில் கல்வி கேள்விகளில் வல்ல இரண்டாம் சரபோஜி மன்னன் அமைத்த சரவதி மஹால் என்ற நூல் நிலையம் ஒன்று, பல்லாயிரக்கணக்கான வடமொழி, தென் மொழி, தெலுங்கு ஏட்டுப் பிரதிகளையும் அச்சிட்ட புத்தகங் களையும் தன்னகத்துக் கொண்டு நிலவுகின்றது. அப்புத்தகசாலை எத்திசையிலுமுள்ள அறிஞர் களைத் தன்பால் இழுக்கும் இயல்பினதாகும். டாக்டர் பர்னல் என்ற பேரறிஞர் அதிலுள்ள வடமொழி ஏட்டுப் பிரதிகளுக்கு ஒரு பட்டியும், திருவையாற்றுக் கல்லூரியில் தமிழாசிரியராயிருந்த காலஞ்சென்ற எல்.உலகநாத பிள்ளை தமிழ் ஏட்டுப் பிரதிகளுக்கு ஒருபட்டியும் தயாரித் துள்ளமை அறியத்தக்கது. இவ்வாறு பண்டைப் பெருமைகளோடு இக்காலத்தும் சிறந்து விளங்கும் அம்மாநகரின் வடபால் அதன் வட எல்லையாக வடவாறு என்ற ஆறு ஒன்று ஓடுகின்றது. அது, முற்காலத்தில் வீரசோழ வடவாறு என வழங்கி வந்தது என்று தஞ்சை இராசராசேசுவரத்துக் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. எனவே, அது, கி.பி. 907 முதல் 953 வரையில் தஞ்சாவூரிலிருந்து அரசாண்டவனும் வீரசோழன், வீர நாராயணன் முதலான சிறப்புப் பெயர்களையுடையவனும் ஆகிய முதற் பராந்தக சோழன் ஆட்சிக்காலத்தில் வெட்டப் பட்டதாகும். அதன் வடகரையில் கருந்திட்டைக்குடி என்னும் வைப்புத்தலமும் அதனருகில் கரந்தைத் தமிழ்ச் சங்கமும், தென்கரையில் தஞ்சை மாநகரின் வடமேற்குப் பகுதியாக வம்புலாஞ்சோலை1 என்னும் வைணவத் திருப்பதியும் அமைந்திருத்தல் வடவாற்றின் இரு மருங்கிலும் சோலைகள் செறிந்து காண்போர் கண்களைக் கவரும் இயல்பினவாய்க் குளிர்ந்த நிழலைத்தந்து கொண்டிருக்கும். அவற்றின் இரு கரைகளிலும் இடையிடையே படித்துறைகளும் பிள்ளையார் கோயில்களும் மணம்புரியப் பெற்ற வேம்பும் அரசும் நிலைபெற்ற மேடைகளும் உண்டு. அவ்விடங்களில் எண்ணெய்தேய்த்துக் கொள்வோரும் நீராடுவோரும் உடையுலர்த்து வோரும் உடையணிவோரும் கடவுள் வழிபாடு புரிவோரும் ஆகப் பலர் தம்தம் காரியங்களில் ஈடுபட்டிருப் பார்கள். ஆதலால் அப்பிரதேசங்கள் காலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையில் ஆரவாரமுடையனவாகவே இருக்கும். அவ்வாற்றின் தென்கரை வழியாகவும் வடகரை வழியாகவும் மாலை நேரங்களில் சிலர் உடல் நலங்கருதி நெடுந்தூரம் சென்று வருவதுண்டு. இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்குமுன், இளவேனிற் காலத் தொடக்கத்தில் ஒருநாள் மாலை நேரத்தில் முழுமதி தோன்றித் தன் குளிர்ந்த நிலவால் உலகை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் வேளையில் மூவர் வடவாற்றின் தென்கரை வழியாக மேற்கே போய்க் கொண்டி ருந்தனர். அவர்களுள் ஒருவர் வயது முதிர்ந்தவர்; தமிழ், சமகிருதம், ஆங்கிலம், மராட்டி, இந்துதானி, இந்தி ஆகிய மொழிகளில் நல்ல புலமை யுடையவர்; தருக்க நூல்களையும் வேதாந்த நூல்கலையும் நன்கு பயின்று சிறந்த பண்பும் சீலமும் உடையவராக அந்நாளில் விளங்கியவர்; வடமொழியிலும் இந்தியிலுமுள்ள சிறந்த வேதாந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்; அன்றியும், தம்மை அடுத்த மாணவர்கட்குக் கைம்மாறு கருதாமல் தமிழ் இலக்கண இலக்கியங் களையும் தருக்க நூல்களையும் வேதாந்த நூல்களையும் முறையாகப் பாடஞ்சொல்லி வந்தவர். அப்பெரியாரது பெயர் குப்புசாமிராசு என்பது; பின்னர் அவ்வறிஞர் பிரமானந்த சுவாமிகள் என்று வழங்கப் பெற்று வந்தனர். மற்றவர் நடுத்தர வயதினர்; சிறந்த தமிழ்ப் புலமை யுடையவர்; அக்காலத்தில் சென்னையிலிருந்த ஓர் ஆங்கிலக் கலாசாலையில் தமிழாசிரியராயிருந்து புகழுடன் விளங்கியவர். மூன்றாமவர் இருபத்தைந்து வயதிற்குட்பட்ட இளம் பருவத்தினர்; மேலே குறிப்பிட்ட பிரமாநந்த சுவாமிகளிடம் தமிழ் இலக்கண இலக்கியங் களும் தருக்க நூலும் முறையாகப் பயின்று புலமை எய்தியவர்; கும்பகோணம் டவுன் ஹைகூலில் கி.பி. 1899 முதல் 1932 வரையில் தமிழாசிரியராயிருந்து பாடஞ்சொல்லும் வகையில் மாணவர்கள் உளத்தைப் பிணித்து அவர்களது அன்பிற்கு உரியவராய்ப் புகழுடன் நிலவியவர். அவ்வறிஞரது பெயர் அ.பாலசுப்பிரமணிய பிள்ளை என்பது. வடவாற்றின் தென்கரை வழியாக மேற்கே சென்ற அறிஞர் மூவரும் வம்புலாஞ் சோலைவரையிற் சென்று அங்குச் சிறிதுநேரம் தங்கி உரையாடிய பின்னர் அவ்வழியே திரும்பினார்கள். அவ்வாறு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது தஞ்சைப் பெரியார், சென்னை ஆசிரியரையும் தம் மாணவரகிய பிள்ளை அவர்களையும் பார்த்து நாம் மூவரும் இவ்வாற்றங்கரை வழியே போய்க்கொண்டிருக்கிறோம். நமது செயல் இவ்வாறு உள்ளது. ஆனால் உள்ளம் ஏதேனும் ஒன்றை எண்ணிக் கொண்டுதானே இருக்கும். உங்கள் மனம் இப்போது எதனைப் பற்றிக் கொண்டிருக்கிறது? என்று பொதுவாகக் கேட்டனர். பிள்ளை அவர்கள் :- நாளைக்கு எனக்குப் பள்ளிக்கூடம் உண்டு. ஆதலால் தஞ்சையிலிருந்து கும்பகோணத்திற்குக் காலை 9 மணிக்குப் புறப்படும் புகைவண்டியில் தவறாமல் செல்ல வேண்டும். அதன் பொருட்டுப் பொழுது விடிவதற்கு இரண்டு மூன்று நாழிகைக்கு முன்னரே வலம்புரியிலுள்ள என் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிடுதல் வேண்டும்; அதற்குரிய ஏற்பாட்டை முன் இரவிலேயே செய்து வைத்தல் வேண்டும் என்ற எண்ணங்கள் என் உள்ளத்தை இப்போது பற்றிக் கொண் டிருக்கின்றன. சென்னை ஆசிரியர் அவர்கள்:- என் உள்ளம் இறைவன் திருவடியைப் பற்றிக்கொண்டு நிற்கின்றது. புறக்கரணங்கள் எவ்வேலையில் ஈடுபட்டிருந்தாலும் என் உள்ளம் மாத்திரம் இறைவன் திருவடியில்தான் பதிந்து நிற்கும். தஞ்சைப் பெரியார் அவர்கள்:- மிக நல்லது! உங்கள் நிலை பெறுதற்கரியது, இந்நிலை யாருக்கும் எளிதில் கிட்டுவதன்று; திரு வருளால் இதனை நீங்கள் பெற்றிருப்பது பற்றிப் பெரிதும் மகிழ்கின்றேன். என் உள்ளம் இப்போது எதனைப் பற்றிக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிய விரும்புவீர்கள் அல்லவா? அதனையும் சொல்லிவிடுகிறேன். இப்போது மணி ஏழுக்குமேல் இருக்கலாம். பாடங்கேட்கும் மாணவர்கள் வந்து காத்துக் கொண்டிருப்பார்களே; அரை மணிக்கு முன்னரே போயிருக்கலாமே என்ற எண்ணங்கள் என் உள்ளத்தில் ஊடாடிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு வடலாற்றின் தென்கரை வழியாக உரையாடிக் கொண்டு வந்த மூவரும் மாலைக்கடன் ஆற்றும் பொருட்டு ஒரு படித்துறையில் இறங்கினார்கள். அப்போது சென்னை ஆசிரியர் தம் கால் வழுக்கி விட்டமையால் திடீரென்று அப்பாடா என்னும் சப்தத்துடன் படித் துறையில் வீழ்ந்தனர்; அடிபட வில்லை; ஆனால் ஆடைகள் மாத்திரம் தண்ணீரில் நனைந்து போய்விட்டன. பிறகு, அவர் எழுந்து அவற்றைப்பிழிந்து கட்டிக்கொண்டனர். பின்னர் மூவரும் திருநீறணிந்து மாலை வழிபாடு புரிந்து, வீட்டிற்குத் திரும்பினார்கள். அப்போது, தஞ்சைப் பெரியார், சென்னை ஆசிரியரையும் தம் மாணவரையும் பார்த்து, படித்துறை நிகழ்ச்சி எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது; அது அந்த அளவில் எளிதாகப் போய்விட்டமை மனத்திற்கு ஓர் ஆறுதல் அளிக்கின்றது. அந்நிகழ்ச்சி நமக்கு ஓர் உண்மையை உணர்த்தும்பொருட்டு இறைவன் திருவருளால் நிகழ்ந்தது என்றே எண்ணுகிறேன். சைவசமயாசாரியருள் ஒருவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவொற்றியூரில் பாடியருளிய அழுக்குமெய்கொடுன் திருவடியடைந்தேன் அதுவும் நான்படப் பாலதொன் றானால் பிழுக்கைவாரியும் பால்கொள்வர் அடிகேள் பிழைப்பனாகிலுந் திருவடிப்பிழை யேன் வழுக்கி வீழினுந் திருப்பெயரல்லால் மற்று நான் அறியேன் மறுமாற்றம் ஒழுக்க என்கணுக்கொரு மருந்துரையாய் ஒற்றியூரெனும் ஊருறைவானே என்னும் திருப்பாடலை நீங்கள் அறிவீர்கள், இதில் வழுக்கி வீழினும் திருப்பெயரல்லால் மற்றுநான் அறியேன் மறுமாற்றம் என்னும் மூன்றாம் அடியின் பொருள் இப்போது சிந்தித்தற்கு உரியது. இறைவன் திருவடியில் பதிந்து நிற்கும் உள்ளமுடைய சுந்தரமூர்த்திகள் தாம் வழுக்கி வீழினும் அப்பெருமான் திருப்பெயரையே தம் நா உரைக்கும் என்றும் மறுமாற்றம் ஒன்றும் அஃது அறியாதென்றும் தெளிவாகக் கூறியிருப்பது அறியத் தக்கது. இறைவன் திருவடியில் பதிந்து நிற்கும் உள்ளமுடைய வர்கள் அத்தகைய நிகழ்ச்சிகள் நேருமானால் அப்பா அம்மா என்று கூற மாட்டார்கள் என்பது இதனால் நன்கு பெறப்படுகின்றதல்லவா? எனவே நம் பட்டினத்தாசிரியரின் கூற்று, அவர் உள்ளக் கிடக்கைக்கு முற்றும் மாறுபட்டிருந்தமையால் அதனை வெளிப்படுத்தவே இறைவன் அவ்வாறு செய்தருளினார் என்று தோன்றுகிறது; ஆயினும் பெருந்துன்பத்திற்கு உள்ளாக்காமல் எளிதாக அதனை வெளிப்படுத்தி யமைக்குக் காரணம் இறைவனது எல்லையற்ற கருணையே எனலாம். தம்மிடம் அன்புடைய வர்கள் தவறுமிடத்து, இறைவன் அவர்களைத் திருத்தி ஆட்கொள்ளும் பேரருளாள ரன்றோ? அதுவும் பெறுதற்கரிய பெரும்பேறேயாகும் என்று ஒரு சிறு சொற்பொழிவு செய்து அரியதோர் உண்மையை விளக்கினார்கள். பிறகு மூவரும் தம் தம் இருப்பிடஞ் சென்றனர். 32. இரு பெரும் புலவர்கள் நம் தமிழ்நாட்டில் அரசு வீற்றிருந்து செங்கோல் செலுத்திய தமிழ் வேந்தர்களின் ஆட்சி கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் வீழ்ச்சியுற்றமை அறிஞர் பலரும் அறிந்ததேயாம். அதன் பின்னர் நம் தமிழகம், பிறமொழி யாளர்களாகிய ஏதிலாரது ஆட்சிக்குள்ளாகி எல்லை யற்ற துன்பங்களை நாளும் அனுபவித்து வந்தமையோடு தன் பெருமை குன்றித் தாழ்ந்த நிலையையும் எய்தியது. அன்னியர் ஆட்சி நடைபெற்ற காலங்களில் நம் தாய்மொழியாகிய தமிழ் அரசாங்க மொழியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அக்காலங்களில் அவ்வய லாருடைய மொழிகளே அரசியல் மொழிகளாக அமைந்து பெருமை யுற்றன. எனவே, தமிழ்மொழி ஆதரவற்ற நிலையை அடைந்தது. அதனைப் போற்றுவோரும், கற்பாரும், கற்பிப்பாரும் மிகக்குறைந்து போயினர். அக்கொடிய காலங்களில் ஊர்தோறும் இளம்பிள்ளைகளுக்கு எழுத்தறி வித்துக் கல்விகற்பித்து வந்தவர்கள் பாலாசிரியன்மாரே எனலாம். அவர்களுள் ஒரு பகுதியினர் வீரசைவப் பெருமக்கள் ஆவர். அவர்கள் தமிழ்ப்புலமையும் கடவுட் கொள்கையும் சீலமும் உடையவர்களாகத் திகழ்ந்தமையால், பேரூர் களிலும் சிற்றூர்களிலும் செல்வர்களாலும் பொதுமக்களாலும் பெரிதும் மதிக்கப்பெற்று வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்கள் தமிழ்மொழியோடு மக்களது வாழ்க்கைக்கு இன்றியமையாத கணக்கு முதலியவற்றையும் இளஞ்சிறார்க்குக் கற்பித்து வந்தனர். ஆகவே, இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்விற்கு அடிகோலியவர்கள் அவ்வாசிரியர்களே என்று கூறலாம். உவாத்திமைத் தொழிலில் நல்ல ஊதியம் பெறுவதற்கு வாய்ப்பில்லாத அக்காலத்தில் பாலாசிரியர்கள், தாம் பெற்றது கொண்டு அமைதியாக வாழ்க்கை நடத்தி வந்தமையோடு தமிழ்த்தொண்டினை இயன்ற வரையில் புரிந்தும் வந்தனர். அவ்வாசிரியர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டு இரண்டு வகைப்படும். ஒன்று, தம்பால் கல்வி பயின்ற சிறுவர்களுள் ஆர்வமும் நுண்மதியும் உடையவர்களுக்குத் தமிழ் இலக்கண இலக்கியங்களை ஊதியம் விரும்பாமல் இலவசமாகக் கற்பித்து இவ்விளைஞர்களைப் புலவர் களாகச் செய்தமை ஆகும். மற்றொன்று, தாம் வாழ்ந்து கொண்டிருந்த ஊர்களிலும் சார்ந்துள்ள பிற ஊர்களிலும் திருக்கோயில் கொண்டுள்ள இறைவன்மீது மாலை, அந்தாதி, கலம்பகம், உலா, பிள்ளைத் தமிழ், கோவை முதலான நூல்களும், தலபுராணங்களும் பாடி அரங்கேற்றி யாண்டும் தமிழ்மணம் கமழுமாறு செய்தமையாம். பாலாசிரியன்மார்களாகிய அப்புலவர் பெருமக்கள் ஊர்தோறும் நடத்திவந்த திண்ணைப் பள்ளிக்கூடங்களாகிய குரு குலங்களே அன்னியர் ஆட்சியில் தாழ்ந்த நிலையிலிருந்த நம் தாய்மொழியாகிய தமிழை இயன்றவரையில் காத்துவந்தன என்று சொல்லலாம். அவ்வாசிரியர் களுள் ஒருவரது குடும்ப நிகழ்ச்சி யொன்றை அடியிற் காணலாம். தமிழ்நாட்டின் வடபகுதியாகவுள்ள தொண்டை மண்டலத்தில் சித்தூர் மாவட்டத்தில் திருத்தணிகை என்னும் பேரூர் ஒன்று உளது. அது குன்றமெறிந்த குமரவேள் மலைமேல் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள தலம்; திருப்புகழ் ஆசிரியராகிய அருணகிரிநாதரால் பாடப்பெற்ற பெருமை யுடையது. அது திருத்தணியல் என்று பழைய கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டிருப்பினும் இக்காலத்தில் திருத்தணி என்றே வழங்கப்படுகிறது. அவ்வூர், சென்னையிலிருந்து வடமேற்கே செல்லும் இருப்புப்பாதையில் அரக்கோணத்திற்கு வடக்கே எட்டுமைல் தூரத்தில் ஒரு புகைவண்டி நிலையமாக இருக் கின்றது. அதனைச் சூழ்ந்து கிழக்கே வடதிருவாலங்காடும், தெற்கே காஞ்சிமாநகரும், மேற்கே விரிஞ்சிபுரம் சோழசிங்கபுரம் என்ற ஊர்களும், வடக்கே திருப்பதி எனப்படும் திருவேங்கடமும் திருக்காளத்தியும் உள்ளன. இத்தலங் களுக்கு நடுவே முருகக் கடவுள் எழுந்தருளியுள்ள திருத்தணிகையைப் புவிக்குயிராகும் திருத்தணி என்று அருணகிரியார் பாராட்டியிருத்தல் அறியத்தக்கது. இத்துணைச் சிறப்பு வாய்ந்த அப்பேரூரில் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வீரசைவ மரபில் தோன்றிய நல்லாசிரியர் ஒருவர் இருந்தனர். அப்புலவர்பிரான் கந்தப்பையர் என்னும் பெயரினர்; சிவஞான முனிவரின் முதல் மாணவரும், கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புப் பெயருடையவரும், தணிகைப்புராணத்தின் ஆசிரியருமாகிய கச்சியப்ப முனிவர் பால் இலக்கண இலக்கியங்களைப் பயின்று சிறந்த புலமை படைத்தவர்; தணிகை அந்தாதி, தணிகைக்கலம்பகம், தணிகை உலா, தணிகைப் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்கள் இயற்றிப் புகழ் எய்தியவர். அவர் தம் மனைவியாருடன் இல்வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த காலத்தில், மகப்பேறின்மையால் மனம் வருந்தி அவ்வம்மையாரின் தங்கையையும் மணந்துகொண்டார். மனைவியர் இருவருக்குமே பிள்ளை இல்லை. புலமைவாய்ந்த குடும்பத்தினரைப் புதல்வனில்லாக்குறை பெரிதும் வருத்தியது. எனினும், தமக்கையும் தங்கையுமாகிய இருவரும் தம் நாயகன் மனம் உவக்கும்படி தம்முள் ஒற்றுமையுடையவர்களாகவே வாழ்ந்து வந்தனர்.1 ஒருநாள் இருவரும் தண்ணீர் முகந்துவரும் பொருட்டுத் திருத்தணிகையிலுள்ள ஓர் ஊருணிக்குச் சென்றனர். அப்போது வடக்கேயுள்ள திருவேங்கட மலை அவ்விருவர்க்கும் கட்புலனாயிற்று. அச்சமயத்தில் தங்கைக்கும் தமக்கைக்கும் ஓர் உரையாடல் நிகழ்ந்தது. தங்கை :- அக்கா, நாம் நாள்தோறும் வழிபட்டுவரும் தணிகாசலப் பெருமான் மக்கட்பேறு அடையுமாறு அருள் புரிந்தாரில்லை; இப்போது நம் கண்களுக்கு எதிரே தோன்றும் திருவேங்கட மலையிலுள்ள பெருமாளாவது நமக்கு அப்பேற்றை அளித்தருளினால் குழந்தைக்கு அவருடைய திருப்பெயரையே வைத்து வழங்கலாம். தமக்கை :- அருடைய திருவருளால் மகப்பேறுண்டாயின் அப்படியே செய்வோம்; யானும் அங்ஙனமே வேண்டுகின்றேன். தங்கை :- அக்கா, நாம் மறந்தும் பிறதெய்வம் தொழாத வீரசைவ மரபினர். இந்நிலையில் திருவேங்கடப் பெருமான் அருளினால் நமக்கு மகப்பேறுண்டாயின் இப்போது கூறியதை நிறைவேற்ற இயலுமா என்பது பற்றி எனது உள்ளம் ஊசலாடுகின்றது. தமக்கை :- நீ அதைப்பற்றிச் சிறிதும் கவலையுறவேண்டா; யான் அதில் உறுதியாகவே இருக்கின்றேன்; பார்த்துக் கொள்ளுகிறேன். பெருமாள் தான் நமக்கு அருள்புரிதல் வேண்டும். இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டு தண்ணீர்க்குடங் களுடன் தம் இல்லத்திற்குப் போயினர்; இச்செய்தியைத் தம் கணவனார்க்குக் குறிப்பாகக் கூட உணர்த்தவில்லை; மற்றை யோரும் அறியார். சிலதிங்களுக்குப் பிறகு இருவரும் கருவுற்றுப் பத்தாந் திங்களில் ஒரே நாளில் ஒவ்வோர் ஆண்மகனைப் பெற்றனர். கந்தப்பையர் எல்லை யற்ற மகிழ்ச்சி எய்தினர். மெல்ல மெல்ல ஓர் ஆண்டும் கழிந்தது. புலவர் பெருந்தகையார் தம் அருமைப் புதல்வர்களுக்கு ஆண்டு நிறைவு விழா நிகழ்த்திப் பெயரும் இடவேண்டும் என்று முடிவு செய்தார்; அப்போது, புதல்வர் இருவருக்கும் சரவணன், விசாகன் என்ற பெயர்களை வைக்க வேண்டுமென்றும் தம் கருத்தினை வெளியிட்டார். அச்சமயத்தில் அவருடைய மனைவியார் இருவரும் திருவேங்கட மலையில் எழுந்தருளியுள்ள திருமாலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒருநாள் தாம் வேண்டிக் கொண்ட பழைய நிகழ்ச்சியை எடுத்துரைத்துப் புதல்வர் களுக்குப் பெருமாள் பெயரை வைத்துத் தம் உறுதிமொழியை நிறை வேற்ற வேண்டுமென்று தம் கணவனாரைப் பணிவோடும் பரிவோடும் கேட்டுக் கொண்டனர். புலவர் பிரானும் தம் மனைவிமாரின் உணர்ச்சி மிக்க வேண்டுகோளை மறுக்கவில்லை; அங்கனமாயின் விசாகப் பெருமாள், சரவணப் பெருமாள் என்ற பெயர்களை நம் புதல்வர்களுக்கு இடுவோம் என்று கூறினர். அவர்களும் தம் வேண்டுகோள் நிறை வேற்றப்பட்டு விட்டது என்று மகிழ்ந்தனர். பிறகு குறித்த நாளில் புதல்வர் களுக்கு அப்பெயர்களே இடப்பட்டன. ஆண்டு நிறைவு விழாவும் இனிது நிறைவேறியது. முருகக் கடவுளுக்கு மயிலேறும் பெருமாள், ஆறுமுகப் பெருமாள், பன்னிருகைப்பெருமாள், சரவணப் பெருமாள், விசாகப் பெருமாள் முதலான பெயர்கள் உண்டு. எனவே, புலவர் பெருமானாகிய கந்தப்பையர் தம் வீரசைவக் கொள்கை தவறாமல் மனைவிமாரின் உளம் உவக்குமாறு நடந்து கொண்டமை குறிப்பிடத் தக்கதோர் அரிய நிகழ்ச்சியாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சென்னை மாநகரில் தமிழ்த் தொண்டாற்றிக் கொண்டு புகழுடன் விளங்கிய விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையர் என்ற புலவர் பெருமக்கள் இருவரும் இவர்களே என்பது ஈண்டு அறியத்தக்கதாகும். இவர்களுள் விசாகப் பெருமாளையர் என்பார் இலக்கணப் பயிற்சி மிக்கவர்; இயற்றமிழாசிரியர் என்னும் சிறப்புப்பெயர் பெற்றவர்; சென்னையிலிருந்த அரசியலார் கலாசாலையில் தமிழாசிரியராகத் திகழ்ந்தவர்; பஞ்ச இலக்கண வினாவிடை, பாலபோத இலக்கணம் என்ற இலக்கண நூல்களை இயற்றியவர்; வடமொழியிலுள்ள சந்திராலோகம் என்னும் அணியிலக்கணத்தைத் தமிழில் உரைநடையில் மொழி பெயர்த்து உதாரணச் செய்யுட்களையும் அமைத்தவர்; பல தமிழ் நூல் களைத் தம் மாணவர்கட்குப் பாடஞ்சொல்லியமையோடு அச்சிட்டும் வெளியிட்டவர். சரவணப் பெருமாளையர் என்பார் சிறந்த தமிழ்ப் புலமை படைத்தவர்; பிரபுலிங்கலீலை, திருவள்ளுவமாலை முதலான பல நூல்களுக்கு உரை எழுதியவர்; 1838-ஆம் ஆண்டில் முதன்முதல் திருக்குறளை உரையுடன் அச்சிட்டு வெளியிட்ட பெருமையுடையவர். தமிழ்நாட்டில் ஆங்காங்குக் கிடைத்த தனிப்பாடல்கள் பலவற்றையும் தேடித்தொகுத்து ஆசிரியர் பெயர்களுடன் தனிப் பாடற்றிரட்டு என்ற நூலை முதலில் வெளியிட்ட தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராசபண்டிதரும், சென்னை யம்பதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் புகழுடன் நிலவிய தமிழாசிரியர் மழவை மகாலிங்கையரும் இவ்விரு புலவர் பெருமான்களின் மாணவர்களே என்பது உணரற்பால தொன்றாம். 33. தமிழ் இலக்கியச் சரிதச் சுருக்கம் நம் தமிழ்மொழி பழமைவாய்ந்த சிறந்த மொழிகளுள் ஒன்று; இலக்கண வரம்பும் சொல் வளமும் ஒருங்கே அமையப் பெற்றது; தொன்றுதொட்டுப் பேரறிஞர்களால் போற்றி வளர்க்கப்பெற்றுவரும் பெருமையுடையது; இயல், இசை, நாடகம் என முத்தமிழாக அறிஞர்களால் ஆராயப்பெற்றது; கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகளுக்குத் தாய்மொழியாயுள்ளது. இவ்வுண்மையினை அம்மொழி யாளர்கள் ஏற்றுக் கொள்ளாவிடினும், காய்தல் உவத்தலின்றி நடுவு நிலைமையுடன் மொழிகளை ஆராயும் பேரறிஞர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். வடநாட்டு மொழிகள் எல்லாவற்றிற்கும் வடமொழி தாய்மொழியாயிருத்தல் போல், தென்னாட்டி லுள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகட்குத் திராவிடி என்ற தாய்மொழி ஒன்று இருந்தது என்பது தமிழரல்லாத பிற மொழியாளர் சிலருடைய கொள்கை. அஃதுண்மையாயின் பல மொழிகட்குத் தாய் மொழியாகவுள்ள வடமொழி இக்காலத்தும் தன் பெருமை குன்றாமல் சிறந்த நிலையில் இருத்தல் போல், தென்னாட்டு மொழிகளுக்குத் தாய்மொழியாக ஒரு சிலரால் சொல்லப்படும் திராவிடி என்ற மொழியும் இந்நாளில் நம் தென்னாட்டில் நூலளவிலாவது இருத்தல் வேண்டுமன்றோ? அத்தகைய மொழி ஒன்று முற்காலத்தில் நம் நாட்டில் வழக்கில் இருந்தது என்பதற்கு எத்தகைய சான்றுகளும் யாண்டும் கிடைக்கவில்லை என்பது அறிஞர்கள் பலரும் அறிந்த தொன்றாகும். எனவே, திராவிடி என்ற மொழி யொன்றை அதன் பெயரளவில் தாமே புதிதாகப் படைத்துக் கொண்டு, அது தமிழ், தெலுங்கு முதலான மொழிகளுக்குத் தாய்மொழி என்று கூறுவதற்குச் சிலர் முன் வந்தமை அறியாமையால் நிகழ்ந்த தன்று; வேண்டுமென்றே அக்கருத்தை அன்னோர் எங்கும் பரப்புவதற்குமுயன்று கொண்டிருத்தல் அறியத் தக்கது. அவர்கள் அவ்வாறு செய்வதற்குக் காரணம் தமிழ்மொழியைத் தென்னாட்டு மொழிகளுக்குத் தாய்மொழியாக ஏற்றுக் கொண்டு அதற்கு முதன்மையும், தனிச்சிறப்பும் அளித்தற்குச் சிறிதும் இடங்கொடுத்தல் கூடாது என்ற எண்ணமேயாம். அவர்களுடைய கருத்தும் முயற்சியும் எவ்வாறிருப்பினும் உண்மைக்கு மாறான கொள்கை எதுவும் நிலை பெறாது; காலப்போக்கில் மறைந்து ஒழிந்துவிடும் என்பது திண்ணம். ஆதிகாலம் இனி, தமிழ்மொழியின் இலக்கியப் பரப்பினைக் காண்போம். இம்மொழி, பண்டைக்காலத்தில் முதல், இடை, கடை என்னும் முச்சங்கங் களிலும் சான்றோர்களால் ஆராயப் பெற்று ஒப்பற்ற இலக்கிய இலக்கணங்களையும் இசை நாடக நூல்களையும் பல்வகைப்பட்ட வேறு நூல்களையும் தன்பாற் கொண்டு சிறந்து விளங்கியது. அவற்றுள் பெரும் பாலான நூல்கள், இருமுறை நம் தமிழகத்தில் நிகழ்ந்த கடல்கோள் களாலும் அன்னியர்களின் படையெழுச்சிகளாலும் அழிந்து போய் விட்டன. அந்நூல்களுள் சிலவற்றின் பெயர்கள் மாத்திரம் பழைய உரையாசிரியர்களின் உரை மேற்கோள்களால் அறியக் கிடக்கின்றன. இப்போதுள்ள நூல்களுள் மிக்க பழமை வாய்ந்தது தொல்காப்பியம் என்ற இலக்கண நூலேயாகும். அஃது ஆசிரியர் தொல்காப்பியனாரால் முதற் சங்கத்திறுதிக்காலத்தில் இயற்றப் பெற்று, இடைச்சங்கத்தார்க்கும், கடைச்சங்கத்தார்க்கும் இலக்கணமாயிருந்தது; தனித்தனியே ஒன்பது ஒன்பது இயல்களையுடைய எழுத்து,சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களையும் உடையது. அதிலுள்ள பொருளதிகாரம் ஒரு தனிச் சிறப்புடையது; அது பிறமொழிகளில் காணப்படாதது மாகும். பண்டைத் தமிழ் மக்களுடைய வழக்க ஒழுக்கங்களையும், நாகரிக நிலையினைவும், வரலாற்றினையும், பிற இயல்புகளையும் பொருளாதிகாரச் சூத்திரங் களால் நன்கு உணர்ந்து கொள்ளலாம். தமிழ் மொழியிலுள்ள பல்வகைப் பட்ட செய்யுட் களுக்கு உரிய இலக்கணங்களையும் அப்பொருளதிகாரத்தி லுள்ள ஒன்பது இயல்களுள் ஒன்றாகிய செய்யுளியல் விரித் துரைப்பது அறியத்தக்கதாகும். தொல்காப்பியம் இயற்றப்பெற்ற காலத்தில் புதிய ஆண்டு ஆவணி மாதத்தில் தொடங்கியிருத்தல் வேண்டும் என்பது அதிலுள்ள சூத்திரத்தால் அறியக்கிடத் தலால், அது பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர்த் தோன்றிய பழந்தமிழ் நூலாதல் வேண்டுமென்று அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே, அது தமிழ்மொழியிலுள்ள ஆதிகால நூலாதல் தெள்ளிது. அதற்கு இளம்பூரண அடிகள், பேராசிரியர், கல்லாடர், தெய்வச்சிலையார், சேனாவரையர், நச்சினார்க் கினியர் ஆகிய புலவர் பெருமக்கள் அறுவர் உரை எழுதியிருப்பதே அதன் பழமையை நன்கு உணர்த்துவதாகும். இனி, தொல்காப்பியத்திற்குப் பிற்பட்ட கால இலக்கியச் சரிதத்தைக் கடைச் சங்க காலம், இருண்டகாலம், பல்லவ பாண்டியர் காலம், சோழர் காலம், பிற்காலப் பாண்டியர் காலம், அன்னியர் ஆட்சிக் காலம் என்று பிரித்து ஆராய்வது அமைவுடையதாகும். கடைச்சங்க காலம் மதுரை மாநகரில் பாண்டிய அரசர்களால் நிறுவப்பெற்று நடை பெற்று வந்த தமிழ்ச்சங்கம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடையில் நிகழ்ந்த களப்பிரர்களின் படையெழுச்சியால் அழிந்து போய் விட்டது. அதற்கு முற்பட்ட காலத்தைத் தான் கடைச்சங்ககாலம் என்பர். கிருது பிறப்பதற்கு முன் சில நூற்றாண்டுகளாவது இச்சங்கம் நடை பெற்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இதற்கு முன்னர் முதற் சங்கமும் இடைச் சங்கமும் வெவ்வேறுகாலங்களில் நடை பெற்றுள்ளமை யால் இது கடைச்சங்கம் என்று வழங்கப்படுகிறது. முதல் இடைச்சங்க நூல்களுள் தொல்காப்பியம் தவிர வேறு நூல்கள் இக்காலத்தில் கிடைக்காமையால், அவ்விரு சங்ககாலங்களின் இலக்கியச் சரிதம் ஆதிகாலப் பகுதியில் கூறப்பட்டது. கடைச்சங்கத்திலிருந்து தமிழாராய்ந்த புலவர் பெருமக்கள் நாற்பத்தொன்பதின்மர் எனவும், அவர்களுள்ளிட்டுப் பாடினோர் நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எனவும் இறையனார் அகப் பொருளுரை கூறுகின்றது. அவர்களுள் பெரும்பாலோர் முத்தமிழிலும் வல்லவர்கள். அவர்கள் பாடியவற்றுள் இறந்தவை போக, எஞ்சி யுள்ளவை சங்கக் செய்யுட்கள் என்று வழங்கப்பெறும். அவை பத்துப் பாட்டு, எட்டுத்தொகை என்ற தொகை நூல்களாகத் தொகுக்கப் பட்டிருக்கின்றன. அவற்றுள் பத்துப்பாட்டு என்பது திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும் பாணாற்றுப் படை, முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடு கடாம் ஆகிய பத்துப் பாடல்களைத் தன்பாற் கொண்டதாகும்; எட்டுத்தொகை என்பது நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டு வகைப்பட்ட தொகை நூல்களாகும். எட்டுத்தொகையில் ஒவ்வொரு தொகை நூலும் பல புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல் களையுடையது. சங்கச் செய்யுட்கள் எல்லாம் அகப்பொருள் புறப்பொருள் இலக்கணங்களுக்கு இலக்கியமாக அமைந்தவையே எனலாம். அப்பாடல் களுள் பெரும்பாலானவை அகவற்பாவாலும், எஞ்சியவை கலிப்பா வாலும், பரிபாடலாலும் ஆகியவை. அவற்றால் அக்காலத்து தமிழ் மக்கள் நிலையையும், கொள்கைகளையும், ஒழுகலாற்றினையும், நாட்டு வரலாற்றையும் ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். அக்காலத்திலிருந்த புலவர் பெருமக்களுள் நக்கீரர், கபிலர், பரணர், மாமூலனார், கடியலூர் உருத்திரங் கண்ணனார், மாங்குடி மருதனார், ஔவையார், நல்லந்துவனார் மருதனிளநாகனார் முதலானோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இனி, கடைச்சங்கநாளில் தோன்றிய வேறு நூல்கள் ஆசிரியர் திருவள்ளுவனாரது திருக்குறளும், இளங்கோவடிகளது சிலப்பதிகாரமும், மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரது மணிமேகலையும், இறையனாரது களவியலும் ஆகும். இந்நூல்களுள் திருக்குறள் உலகிலுள்ள அறிஞர் பலராலும் போற்றப்படும் பெருமை வாய்ந்ததாகும். இருண்டகாலம் கடைச்சங்கத்தின் இறுதிக்காலத்திற்குப் பிறகு கி.பி. 600 வரையிலுள்ளது இருண்டகாலமாகும். எனவே, இது கி.பி. 250 முதல் கி.பி. 600 வரையில் அமைந்த ஒரு காலப் பகுதியாம். இக்காலப் பகுதியில் தமிழ்நாடு களப்பிரர், பல்லவர் ஆகிய அந்நியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தமையால், தமிழ் மொழி போற்றுவாரற்று, வளர்ச்சி யடையாமல் தாழ்ந்த நிலையை அடைந்தது. பிற மொழியாளராகிய அயலாரது ஆளுகையில் தமிழ்ப் புலவர்கட்கு ஆதரவின்மையால் சிறந்த தமிழ் நூல்கள் தோன்றுவதற்கு இடமில்லாமற் போயிற்று. எனினும், அந்நியர்களின் கூட்டுறவினால் சிதையத் தொடங்கிய தமிழ் மக்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் காப்பாற்றும் பொருட்டு அறிஞர் சிலர், இக்காலப் பகுதியில் சில நீதி நூல்கள் இயற்றியுள்ளமை குறிப்பிடத் தக்கது. அவை விளம்பிநாகனாரது நான்மணிக்கடிகையும், கபிலரது இன்னா நாற்பதும், பூதஞ்சேந்தனாரது இனியவை நாற்பதும், நல்லா தனாரது திரிகடுகமும் ஆகும். அரசாங்க ஆதரவோடு தம் சமயத்தைப் பரப்பும் பொருட்டுத் தமிழ்நாட்டில் தங்கியிருந்த சமண முனிவர் களுடைய மாணவர்களாகிய சைனப் புலவர் சிலர் பொது நீதிகளோடு தம் சமயத்திற்குரிய சிறப்பு நீதிகளையும் சேர்த்து, சில நீதி நூல்கள் இயற்றி யுள்ளனர். அவை முன்றுறையரையரது பழமொழியும், காரியாசானது சிறு பஞ்சமூலமும், கணிமேதாவியாரது ஏலாதியும் ஆகும். அகப்பொருளிலக் கணத்திற்கு இலக்கியங்களாயுள்ள மதுரைக் கண்ணங்கூத்தனாரது கார்நாற்பதும், மாறன் பொறையனாரது ஐந்திணை ஐம்பதும், கண்ணன் சேந்தனாரது திணைமொழி ஐம்பதும், மூவாதியாரது ஐந்திணை எழுபதும், கணிமேதாவியாரது திணைமாலை நூற்றைம்பதும், புல்லங்காடனாரது கைந்நிலையும் இக்காலப் பகுதியில் தோன்றியனவே யாம். இவற்றுள் சில, கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் பூஜ்யபாதருடைய மாணாக்கர் வச்சிர நந்தி என்ற சமண முனிவர் மதுரை மாநகரில் நிறுவிய தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த புலவர்களால் இயற்றப்பெற்றிருத்தலும் கூடும். இனி, காரைக்காலம்மையார் நூல்களும், திருமூல நாயனாரது திருமந்திரமும், முத்தொள்ளாயிரம் என்ற நூலும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலாதல் ஆறாம் நூற்றாண்டிலாதல் இயற்றப் பட்டிருத்தல் வேண்டும். இவற்றுள் முத்தொள்ளா யிரத்தில் இப்போது கிடைத்துள்ள பாடல்கள் நூற்றொன்ப தாகும். எனவே, அஃது இறந்துபோன தொன்னூல் களுள் ஒன்று என்பது தேற்றம். பல்லவ பாண்டியர் காலம் இது, தமிழ் நாட்டின் வடபகுதியில் பல்லவர் பேரரசும், தென் பகுதியில் பாண்டியருடைய முதற் பேரரசும் நடைபெற்ற காலமாகும். இக்காலப் பகுதி கி.பி. 600 முதல் கி.பி. 900 வரையில் அமைந்தது எனலாம். இந்நூற்றாண்டுகளில் சமயகுரவர்கள் தோன்றி ஊர்தோறும் சென்று, இறைவன் மீது திருப்பதிகங்கள் பாடியருளிப் பத்தி நெறியை யாண்டும் பரப்பிவந்தமை குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முதல் இடைப்பகுதிகளில் திருநாவுக்கரசரும், அந்நூற்றாண்டின் இடைப் பகுதியில் திருஞான சம்பந்தரும், அந்நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் சுந்தரமூர்த்திகளும் திகழ்ந்தவர்கள் ஆவர். அப்பெருமக்கள் மூவரும் பாடியருளிய திருப்பதிகங்கள் தேவாரப் பதிகங்கள் என வழங்கப் பெறும். அவை, சைவத் திருமுறைகள் பன்னிரண்டுள் முதல் ஏழு திருமுறைகளில் அடங்கியிருத்தல் அறியத் தக்கது. திருக்கயிலாய ஞானஉலா பொன்வண்ணத் தந்தாதி முதலிய வற்றைப் பாடிய சேரமான் பெருமாளும் இக்காலத்தவரே. இனி, வைணவ சமய குரவராகிய பொய்கையார், பூதத்தார், பேயார், திருமழிசையாழ்வார் என்போர் நிலவிய காலமும் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப் பகுதியேயாம். கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார் ஆகிய வைணவ சமயப் பெரியார் இருந்துள்ளனர். அவர்கள் பாடிய நூல்களும் பதிகங்களும் நாலாயிரப் பிரபந்தத்தில் உள்ளன. திருவாசகமும் திருக்கோவையாரும் இயற்றி யருளிய மாணிக்க வாசகர் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்தமை உணரற்பாலது. அவ்வடி களின் நூல்கள் இரண்டும் எட்டாந் திருமுறையாக உள்ளன. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் நம்மாழ்வாரது திருவாய் மொழிப் பிரபந்தம், பட்டினத்தடிகளின் பிரபந்தங்கள், பாரதவெண்பா, நந்திக்கலம்பகம், ஔவையாருடைய நீதி நூல்கள் ஆகியவை இயற்றப் பெற்றன. அவற்றுள், திருவாய் மொழி நாலாயிரப் பிரபந்தத்தில் உளது; பட்டினத்தடிகளின் பிரபந்தங்கள் பதினோராந் திருமுறையில் தொகுக்கப் பட்டிருக்கின்றன; நந்திக்கலம்பகம், தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்ற பல்லவவேந்தன் மீது பாடப்பெற்ற நூலாகும். அதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இப்போது தமிழிலுள்ள கலம்பக நூல்களுள் அதுவே பழமை வாய்ந்தது. அப்பல்லவ அரசன் ஆதரவினால் தோன்றிய பாரத வெண்பாவின் ஆசிரியர்யாவர் என்பதும் புலப்படவில்லை. அந்நூலில் சில பருவங்களே இக்காலத்தில் உள்ளன. நம்பியாண்டார் நம்பியின் பிரபந்தங் களுள் சிலவும் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி யவையாகும். சோழர் காலம் இது கி.பி. 900 முதல் கி.பி. 1279 முடியச் சோழர் பேரரசு நடைபெற்ற காலம் ஆகும். இக்காலப் பகுதியில் சிறந்த தமிழ் நூல்கள் தோன்றி யுள்ளன எனலாம். கி.பி. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நம்பி யாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியும் சில பிரபந்தங் களும், திருத்தக்க தேவரால் இயற்றப்பெற்றதும் ஐம்பெருங் காப்பியங் களுள் ஒன்றாயதும் ஆகிய சீவகசிந்தாமணியும், தோலா மொழித் தேவரது சூளாமணியும் தோன்றியிருத்தல் வேண்டும். அந்நூற்றாண்டி னிடையிலே, முதல் கண்டராதித்த சோழரது திருவிசைப் பாப்பதிகமும் கல்லாடனாரது கல்லாடமும், அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் கம்பரது இராமயணமும், அமித சாகரருடைய செய்யுள் இலக்கண நூல்களாகிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய நூல்களும் இயற்றப் பெற்றன வாதல் வேண்டும். திவாகரம், பிங்கலந்தை என்ற நிகண்டுகளும் அந்நூற்றாண்டில் தோன்றியவை என்பது அறிஞர் சிலருடைய கருத்தாகும். கி.பி. பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் கருவூர்த் தேவருடைய திருவிசைப்பாப் பதிகங்களும், இராசராச விசயம், இராசராசேசுவர நாடகமும் இயற்றப் பெற்றுள்ளன. பின்னிரண்டு நூல்களும் முறையே முதல் இராசராச சோழனையும் அவன் தஞ்சை மாநகரில் எடுப்பித்த பெரிய கோயிலையும் பற்றிய வரலாறு களாக இருத்தல் வேண்டும். அவை இக்காலத்தில் கிடைக்கவில்லை. பொன் பற்றிக் காவலன் புத்தமித்திரனுடைய வீரசோழியம் என்ற இலக்கண நூல் அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் வீரராசேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் இயற்றப் பெற்றதாகும். தமிழிலுள்ள பிற்கால இலக்கண நூல்களும் ஐந்திலக்கணமும் ஒருங்கே யமைந்த பழைய நூல் அதுவே எனலாம். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதற் குலோத்துங்க சோழன் மீது சயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணியும், அந்நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஒட்டக்கூத்தர் பாடிய விக்கிரம சோழன் உலா, கலிங்கப்பரணி1 அரும்பைத் தொள்ளாயிரம், குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், குலோத்துங்க சோழன் உலா, இராசராசசோழன் உலா, தக்கயாகப்பரணி ஆகிய நூல்களும் வச்சத் தொள்ளாயிரம், கண்டனலங்காரம், தண்டியலங்காரம் என்ற நூல்களும், அந்நூற்றாண்டின் இறுதியில் சேக்கிழாரது பெரியபுராணம், பவணந்தி முனிவரது நன்னூல், குணவீர பண்டிதருடைய நேமிநாதம், வச்சணந்தி மாலை, வெண்பாப் பாட்டியல், நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கம் ஆகிய நூல்களும் இயற்றப்பட்டுள்ளன. அவற்றுள், கலிங்கத்துப் பரணி, அரும்பைத் தொள்ளாயிரம், கண்டனலங்காரம், வச்சத் தொள்ளயிரம் என்பன இப்போது கிடைக்க வில்லை. இந்நாளில் தமிழ் மொழியிலுள்ள பரணி நூல்களுள் சயங்கொண்டாரது கலிங்கத்துப் பரணியும், பிள்ளைத் தமிழ்களுள் குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழுமே பழமை வாய்ந்தவையாகும். கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அறநிலை விசாகனாகிய வத்சராசனது பாரதம், பெரும்பற்றப்புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், காங்கேயன் பிள்ளைக் கவி, மெய்கண்டாரது சிவஞான போதம், அருணந்தி சிவாசாரி யரின் சிவஞான சித்தியார்,இருபா இருபஃது, மனவாசகங்கடந்தாரது உண்மை விளக்கம் என்னும் நூல்கள் தோன்றியுள்ளன. அவற்றுள், வத்சராசனது பாரதமும் காங்கேயன் பிள்ளைக் கவியும் இந்நாளில் கிடைத்தில. தமிழ் மொழியிலுள்ள சைவசித்தாந்த நூல்கள் பதினான்கினுள் சிவஞான போதமே தலைமை வாய்ந்ததாகும். பிற்காலப் பாண்டியர் காலம் இது கி.பி. 1216 முதல் 1342 வரையில் பாண்டியரது இரண்டாம் பேரரசு நடைபெற்ற காலமாகும். கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் புகழேந்தியாரது நளவெண்பாவும் பொய்யா மொழிப் புலவரது தஞ்சைவாணன் கோவையும் இயற்றப்பெற்றுள்ளன. திருக்குறள், பரிபாடல் இவற்றின் உரையாசிரியராகிய பரிமேலழகரும், தொல்காப்பியச் சொல்லதிகார உரையாசிரியராகிய சேனாவரையரும் இக்காலத்தில் இருந்தவர்களே யாவர். கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் உமாபதி சிவாசாரியார் இயற்றிய சிவப்பிரகாசம் முதலான சைவ சித்தாந்த நூல்கள் எட்டும், கோயிற் புராணமும், இரட்டையர்கள் பாடிய தில்லைக் கலம்பகமும், திருவாமாத்தூர்க் கலம்பகமும், ஏகாம்பரநாதர் உலாவும் தோன்றியவையாதல் வேண்டும். அந்நியர் ஆட்சிக் காலம் கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் இடையில் நம் தமிழ்நாடு மகமதியரது ஆட்சிக்கு உள்ளாயிற்று. பிறகு, கன்னடம், தெலுங்கு, மராத்தி ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்ட அரசர்களால் ஆளப்பெற்று, இறுதியில் ஆங்கிலேயரது ஆட்சிக்கு உட்பட்டிருந்தமையால் இக்காலப் பகுதி அந்நியர் ஆட்சிக்காலம் எனக் கொள்ளப் பட்டது. கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வில்லி புத்தூராழ் வாரது பாரதம், வேதாந்த தேசிகரது தேசிகப் பிரபந்தம் என்ற நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அருணகிரி நாதருடைய திருப்புகழ், கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி என்ற நூல்களும் பிற்பகுதியில் காளமேகப் புலவரது திருவானைக்கா உலாவும் பாடப்பெற்றன எனலாம். கி.பி. பதினாறாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிய உலா, கோவை, கலம்பகம், பிள்ளைத் தமிழ் முதலான பிரபந்தங் களும் பல ஊர்களுக்குத் தலபுராணங்களும் மிகுதியாக இயற்றப் பெற்றிருத்தல் காணலாம். அவற்றுள் பல, இலக்கியச்சுவை அமைந்த சிறந்த நூல்கள் என்பதில் ஐயமில்லை. கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களுள் செவ்வைச் சூடுவாரது பாகவதமும், மண்டல புருடரது சூடாமணி நிகண்டும், திருக் குருகைப் பெருமாள் கவிராயரது மாறனலங்காரமும், மறைஞான சம்பந்தரது சிவதருமோத்தரமும், நிரம்பவழகிய தேசிகரது சேது புராணமும், அதிவீரராம பாண்டியரது நைடதமும், வீரகவிராயரது அரிச்சந்திர புராணமும், வரதுங்க ராம பாண்டியரது கருவை அந்தாதிகளும், எல்லப்பநயினாருடைய அருணாசலப் புராணமும் திருவாரூர்க் கோவையும் குறிப்பிடத் தக்கனவாகும். கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களுள் குமரகுருபர சுவாமிகளின் நீதிநெறிவிளக்கமும், மீனாட்சியம்மை பிள்ளத் தமிழ் முதலான பிரபந்தங்களும், சிவப்பிரகாச சுவாமிகளின் நன்னெறியும் பிரபுலிங்க லீலையும், வெங்கைக் கோவை, வெங்கை யுலா முதலான பிரபந்தங்களும், அந்தகக்கவி வீரராகவ முதலியாருடைய திருவாரூர் உலா, கழுக்குன்றக் கோவைமுதலியனவும் சிறந்த நூல்களாகும். கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களுள் பரஞ்சோதி முனிவரது திருவிளையாடற் புராணமும் தாயுமான அடிகள் பாடலும், சிவஞான முனிவர் இயற்றிய காஞ்சிப்புராணம் முதற்காண்டமும் பிரபந்தங்களும் சிவஞான போதமாபாடியம் என்ற பேருரையும் அம்முனிவருடைய மாணாக்கர் கச்சியப்ப முனிவருடைய தணிகைப் புராணமும் காஞ்சிப்புராணம் இரண்டாம் காண்டமும் குறிப்பிடுதற்குரிய பெருமை வாய்ந்தவை எனலாம். கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களுள் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் புராணங்களும் பல பிரபந்தங்களும் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவும் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் மனோன் மணியமும் சிறந்தவைகளாகும். இவ்விருபதாம் நூற்றாண்டில் நம் நாடு சுதந்திர நாடாகிச் சிறப்புற்று விளங்குகிறது. பேரறிஞர்களும், தமிழ்ப் புலவர்களும், சிறந்த எழுத்தாளர்களும் கவிஞர்களும் பல்வகைப்பட்ட நூல்கள் எழுதித் தமிழ்த் தொண்டுபுரிந்து வருவது யாவரும் அறிந்ததேயாகும். தமிழ் எழுத்தாளர் சங்கமும், தமிழ்த் தொண்டு புரியும் அறிஞர்களும் நீடுவாழுமாறு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக!  34. ஒட்டக்கூத்தர் (12ஆம் நூற்றாண்டு) கவிஞர் பெருமானாகிய ஒட்டக்கூத்தருடைய இயற்பெயர் கூத்தர் என்பது. இது நடராசப் பெருமானுடைய பெயர். இப்புலவர் பிறந்தது மலரி என்னும் ஊர். இவ்வூர் திருச்சிராப் பள்ளிக்கு அண்மையில் இக்காலத்தில் திருவரம்பூர் என்று வழங்கிவரும் திரு எறும்பியூரே என்பது அங்குள்ள கோயிற் கல்வெட்டால் உறுதி எய்துகின்றது. இவர் செங்குந்த மரபினர் என்பது மட்டும் தெரிகிறது. இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் சிறந்த புலமை பெற்றிருந்த தோடு வடமொழி நூல்களையும் நன்கு பயின்றிருந்தா ரென்று தெரிகிறது. அன்றியும் இவர் செய்யுள் இயற்றும் ஆற்றல் மிக்கவர் என்பதும், சிவபக்தி உடையவர் என்பதும், கலைமகளிடத்தும் திருஞானசம்பந்த மூர்த்தி யிடத்தும் அன்பு வாய்ந்தவர் என்பதும் இவர் இயற்றியுள்ள நூல்களால் விளங்கும். இவர் முதற்குலோத்துங்க சோழனுடைய புதல்வன் விக்கிரம சோழனுக்கு அவைக்களப் புலவராகவும், அவன் மகன் இரண்டாங் குலோத்துங்க சோழனுக்கும் அவன் புதல்வன் இரண்டாம் இராசராச சோழனுக்கும் தமிழாசிரியராகவும் அவைக்களப்புலவராகவும் விளங்கிப் பெருவாழ்வு பெற்று நெடுங்காலம் இருந்தவர் என்று தெரிகிறது. அவர் களுள் விக்கிரம சோழன் (ஆ.கா 1118-1133) மீது உலா ஒன்றும், கலிங்கப் பரணி என்ற நூல் ஒன்றும் இவர் பாடியுள்ளார். அவற்றுள், கலிங்கப் பரணி இந்நாளில் கிடைக்காமையின் இறந்ததுபோலும். விக்கிரம சோழனுலா விலுள்ள ஒரு கண்ணியை ஒட்டி ஒரு செய்யுள் பாடும்படி வேந்தன் கூற, அவ்வாறே விரைந்து பாடியமைபற்றி இப்புலவர் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப்பெற்றனர் எனக் கூறுவர். இப்பெயருக்கு வேறு காரணம் கூறுவாரும் உண்டு. விக்கிரம சோழன் இவருக்கு யானை, காளம் முதலிய வரிசைகள் அளித்துப் பாராட்டிய போது, இவர் அவற்றைப் பெறுவதற்குத் தமக்குத் தகுதி இல்லை என்றுரைத்துத் தம் பணிவுடைமையைத் தெரிவித்தனர். இப்புலவர் இரண்டாங் குலோத்துங்கசோழன் (ஆ.கா. 1133-1150) மீது தாம் கொண்ட அன்பினால் பிள்ளைத் தமிழ் ஒன்றும், உலா ஒன்றும், பாடியிருப்பதோடு அவனுக்குத் தமிழாசிரியராக அமர்ந்து, அவனைச் செந்தமிழ்ப் புலமை வாய்ந்த வேந்தனாக ஆக்கியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் அம்மன்னனது பேராதரவிற்குரியவராகிச் செல்வம், புகழ், மதிப்பு ஆகியவற்றை மிகுதியாகப் பெற்று, எத்தகைய கவலையுமின்றி இனிது வாழ்ந்துவந்தனர் எனலாம். ஒருமுறை அவ்வரசர் பெருமான், நித்தநவம் பாடுங் கவிப்பெருமானொட்டக் கூத்தன் பதாம் புயத்தைச் சூடுங் குலோத்துங்க சோழனென் றேயெனைச் சொல்லுவரே என்று தன் ஆசிரியராகிய இக்கவிஞர் கோமானைப் புகழ்ந்து பாடியிருத்தல் அறியத்தக்கது. இவர் இரண்டாம் இராசராச சோழன் (ஆ.கா. 1146 - 1163) மீது ஓர் உலாவும், அவனைச் சார்த்துவகையால் சிறப்பித்துத் தக்கயாகப்பரணி என்ற ஒரு நூலும் இயற்றியுள்ளனர். இவர் இராசராச சோழனுலாவைப் பாடி அரங்கேற்றியபோது அவ்வரசன் அந்நூலிலுள்ள ஒவ்வொரு கண்ணிக்கும் ஆயிரம் பொன் வீதம் இவருக்குப் பரிசில் வழங்கினான் என்று தெரிகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் ரெயில் நிலையத்திற்கு அணித்தாக அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள கூத்தனூர்க் கலைமகள் கோயிலில் காணப்படும் கல்வெட்டொன்றால், அவ்வூர் அவ்வேந்தர் மூவருள் ஒருவனால் இவருக்குப் புலவர் முற்றூட்டாக அளிக்கப் பட்டிருத்தல் வேண்டும் என்பது வெளியாகின்றது. தன் ஆசிரியர் பெயரை அவ்வூர் உடையதா யிருத்தலாலும் தான் இவர்பால் கொண்ட அன்பின் பெருக்கி னாலும் இரண்டாங் குலோத்துங்க சோழனே கூத்தனூரை இப்புலவர் பெருமானுக்கு வழங்கியிருத்தல் வேண்டுமென்று எண்ணு வதற்கு இடம் உண்டு. அவ்வூரில் கலைமகளுக்கு ஒரு கோயில் அமைத்து இவர் வழிபாடு புரிந்துவந்தனர். அக்கோயில் இன்றும் உளது. அதில் எழுந்தருளியுள்ள தேவியை இவர் ஆற்றங்கரைச் சொற்கிழத்தி வாழியே என்று தம் தக்கயாகப் பரணியில் வாழ்த்தியிருப்பது அறியற் பாலதாம். இவ்வாறு சோழமன்னர் மூவர்க்கும் அரசவைப்புலவராக விளங்கிய இக்கவிஞர்க்குக் கௌடப் புலவர், கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி, காளக்கவி, சருவஞ்ஞ கவி என்னும் சிறப்புப் பெயர்கள் அக்காலத்தில் வழங்கி வந்தன. இவர் உலக இயல்பைக் கடந்து, வருணனைகள் அமைத்துச் செய்யுட்கள் பாடிவந்தமை பற்றிக் கௌடப்புலவர் எனப் பட்டனர். செய்யுள் இயற்றும் ஆற்றலில் அக்காலத்திலிருந்த புலவர் பெருமக்களுள் சிறந்து விளங்கியமையால் கவிராட்சசன் எனவும் கவிச்சக்கரவர்த்தி எனவும் வழங்கப் பெற்றனர்; சோழ மன்னர்கள் அளித்த காளம் என்னும் விருது பெற்றிருந்தமையால் காளக்கவி என்று சொல்லப் பட்டனர். தமிழ்மொழி வடமொழி ஆகிய இரண்டிலுள்ள நூல்களை நன்கு பயின்று தாம் உணர்ந்த அரிய கருத்துக்களைத் தெளிவாகப் புலப்படுத்தித் திறம்படச் செய்யுள் அமைக்கும் ஆற்றல் பெற்றிருந்த காரணத்தால் சருவஞ்ஞகவி என்றும் வழங்கப் பெற்றனர். இங்குக் கூறப்பட்ட சிறப்புப் பெயர்கள் எல்லாம் தக்கயாகப் பரணியாலும் அதன் உரையாலும் சோழ மண்டல சதகத்தாலும் அறியப்படுவன ஆகும். இவர் இருவேறுலகத்தியற்கைக்கு முரணாகத் திருமகள், கலை மகள் ஆகிய இருவரது திருவருட் பேற்றிற்கும் உரியவராய்ப் பெருஞ் செல்வமும் அருங்கல்வியும் எய்திச் சிறந்து வாழ்ந்தவர். செய்ந் நன்றியறிதல், பிறபுலவர் பெருமக்களை உளம் உவந்து பாராட்டுதல், மாணாக்கர்கட்குப் பாடஞ்சொல்லி அன்னாரை நல்வழிப்படுத்தல் ஆகிய உயர்ந்த குணங்கள் இவர்பால் நன்கு அமைந்திருந்தன என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இவர் காலத்திருந்த புலவர்கள் நம்பிகாளியார், நெற் குன்றவாண முதலியார், தமிழ்த் தண்டியாசிரியர், தக்கயாகப் பரணி உரையாசிரியர், தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பேராசிரியர் முதலானோர் ஆவர். கம்பர், புகழேந்தி, சேக்கிழார் ஆகியோர் இவர் காலத்தில் இருந்தவர்கள் என்பது சிலருடைய கொள்கையாகும்; அதற்குத்தக்க ஆதாரங்கள் இல்லை என்பது அறியத்தக்கது. அவர்களுள் புகழேந்திப் புலவர் இவருக்குச் சற்றேறக் குறைய நூறாண்டுகளுக்குப் பிற்பட்டவர். எனவே, இவருக்கும் அப்புலவருக்கும் வாதப் போர் நிகழந்தது என்றும், இவர் தூண்டுதலால் அவர் சோழமன்னனால் சிறையிலிடப் பட்டார் என்றும் கூறப்படும் செய்திகள் எல்லாம் வெறுங் கற்பனைக் கதைகளேயன்றி உண்மையான சரித்திர நிகழ்ச்சிகள் ஆகமாட்டா என்பது திண்ணம். இவர் புலவர் பெருமக் களிடத்தில் பேரன்பும் பெருமதிப்பும் வைத்திருந்தவர் என்பதை இவருடைய நூல்களால் நன்குணரலாம். இவரை ஆதரித்தவர்கள் மேலே குறிப்பிடப் பெற்ற சோழ மன்னர் மூவரும் அவர்களுடைய அமைச்சர்களும் படைத் தலைவர்களுமான அரும்பாக்கிழான் மணவிற் கூத்தன் காலிங்கராயன், திருச்சிற்றம்பல முடையான் பெருமானம்பி என்பவர்களும் காவிரிப்பூம்பட்டினத்து வீரர்கள் புதுவைக் காங்கேயன், திரிபுவனைச் சோமன் ஆகியோரும் ஆவர். இவர் இயற்றியனவாக இப்போது அறியப்படும் நூல்கள், விக்கிரம சோழனுலா, கலிங்கப்பரணி, அரும்பைத் தொள்ளாயிரம், குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், குலோத்துங்க சோழனுலா, இராசராச சோழனுலா, தக்கயாகப் பரணி, காங்கேயன் நாலாயிரக் கோவை என்பனவாம். அன்றியும், இவர் சில சமயங்களில் பாடியனவாகச் சொல்லப்படும் சில செய்யுட்கள் தமிழ் நாவலர் சரிதை முதலியவற்றில் உள்ளன. விக்கிர சோழனுலா முதற்குலோத்துங்க சோழனுடைய புதல்வனும் அவனுக்குப் பிறகு சோழ இராச்சியத்தில் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து அரசாண்டவனுமாகிய விக்கிரம சோழன்மீது இயற்றிய உலா. இந்நூல் அவ்வேந்தன் வீதியில் பவனிவருங்கால் நகரிலுள்ள எழுபருவப் பொதுமகளிரும் அவனைக் கண்டு காமுற்றதாகக் கலிவெண்பாவில் பாடப் பெற்றது. அவன் முன்னோரான பண்டைச் சோழர்களுடைய வரலாறுகளும் வீரச்செயல்களும் கூறப்பட்டிருத்தலால் இது வரலாற்று ஆராய்ச்சிக்குப் பயன்படும் அரிய நூலாகும். இது 684 அடிகளையுடையது; இந்நூலின் இறுதியில் வெண்பா ஒன்றும் உளது. கலிங்கப் பரணி மேலே குறிப்பிட்ட விக்கிரம சோழன் தென்கலிங்க மன்னனாகிய தெலுங்கு வீமனைப் போரில் வென்ற வீரச்செயலைப் பாராட்டிப் பாடிய பரணி நூலாகும். இது இக்காலத்தில் கிடைக்கவில்லை. இந்நூல் ஒன்று இருந்த செய்தி, தக்கயாகப் பரணியாலும் அதன் உரையாலும் தெளிவாகப் புலப்படுவதாயிற்று. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லாரால் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்ட பரணித் தாழிசைகளுள் சில இந்நூலிலிருந்தவை என்று கருதப்படு கின்றன. அரும்பைத் தொள்ளாயிரம் விக்கிரமசோழன் படைத் தலைவனும் தில்லையம்பதி திருவதிகை வீரட்டானம் முதலான ஊர்களிலுள்ள திருக்கோயில்களுக்குப் பல திருப்பணிகள் புரிந்தவனுமாகிய அரும்பாக் கிழான் மணவிற்கூத்தன் காலிங்க ராயன் மீது இயற்றிய ஒரு நூல். இது தொள்ளாயிரம் பாடல்கள் உடையதாயிருத்தல் வேண்டும். இந்நூல் இந்நாளில் கிடைக்க வில்லை. குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ் விக்கிரம சோழன் மகனும் ஒட்டக்கூத்தருடைய மாணவனுமாகிய இரண்டாங் குலோத்துங்க சோழன் மீது பாடிய பிள்ளைத்தமிழ். இது சொற்சுவை பொருட்சுவைகளிற் சிறந்த ஓர் அரிய நூல். இதில் சோழமன்னர் சிலருடைய வீரச் செயல் களும் இரண்டாம் குலோத்துங்க சோழனுடைய பல சிறந்த குணங்களும் கூறப் பட்டிருக்கின்றன. இது நூற்று மூன்று பாடல்களை உடையது. இடையில் சில பாடல்கள் சிதைந்துள்ளன. குலோத்துங்க சோழன் உலா இரண்டாங் குலோத்துங்க சோழன் மீது இயற்றிய உலா. இதில் அவ்வேந்தனுடைய முன்னோர்களின் வரலாறு களையும் வீரச்செயல்களையும் காணலாம். இது 774 அடிகளை உடையது. இதன் இறுதியில் ஒரு வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் உள்ளன. இராசராச சோழன் உலா இரண்டாங்குலோத்துங்க சோழனுடைய மகன் இரண்டாம் இராசராச சோழன் மீது ஒட்டக்கூத்தர் தம் முதுமைப் பருவத்தில் பாடிய ஓர்அரிய உலா. இது மேலே கூறப்பட்ட இரண்டு உலாக்களிலும் அளவாலும் சுவையாலும் மிகுந்தது. இதிலும் இரண்டாம் இராசராச சோழனுடைய முன்னோர்களின் வரலாறுகள் சொல்லப் பட்டிருக்கின்றன. இது 782 அடிகளை உடையது. இதன் இறுதியில் ஒரு வெண்பா உளது. தக்கயாகப் பரணி தக்கன் சிவபெருமானை அவமதித்துச் செய்த யாகத்தை வீரபத்திரக் கடவுள் அழித்து, அவனையும் அவனுக்கு உதவி புரிந்த தேவர்களையும் வென்ற வரலாற்றைப் பொருளாகக் கொண்டு இயற்றிய பரணி நூலாகும். இவர், இதன் இறதி உறுப்பாகிய வாழ்த்து என்ற பகுதியில்இரண்டாம் இராசராச சோழனைத் தனியே வாழ்த்தியும், அவ்வேந்தனுடைய வீரச்செயல் முதலானவற்றை உவமை முகத்தாலும் வேறுவகை யாலும் இந்நூலில் ஆங்காங்குப் பாராட்டியு மிருக்கிறார். ஒட்டக்கூத்தர் தம் வாழ்நாளில் இயற்றிய நூல்களில் இதுவே இறுதி நூலாக இருத்தலுங்கூடும். இது 814 தாழிசைகளை யுடையது. இதற்குச் சிறந்த பழைய உரை ஒன்றுள்ளது. அவ்வுரையும் இவருடைய மாணவர் ஒருவர் எழுதியதாதல் வேண்டும் என்பதற்கு அதில் சான்றுகள் காணப்படுகின்றன. காங்கேயன் நாலாயிரக் கோவை தம்மை இளமையில் வளர்த்து ஆதரித்த காங்கேயன் மீது ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல் என்பது சோழ மண்டல சதகத்தால் அறியப்படுகிறது. இக்காலத்தில இந்நூல் கிடைக் காமையால் இதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. இவையேயன்றி, ஈட்டியெழுபது என்னும் நூலையும் ஒட்டக் கூத்தர் பாடியதாகக் கூறிவருகின்றனர். ஆனால் அந்நூலைப் படித்துப் பார்க்கு மிடத்து, அது கூத்தர் வாக்காகத் தோன்றவில்லை.  35. அன்பைப் பற்றிய பாடல்கள் (இப்பாடல்கள் கனம் பொருந்திய திவான் இராமையங்கார் அவர்கள் C.S.I. விரும்பியபடி, மனோன்மணீயம், திருஞான சம்பந்தர் காலம் முதலிய நூல்களின் ஆசிரியரான காலஞ்சென்ற திருவனந்தபுரம் ப்ரொபஸர் சுந்தரம்பிள்ளை M.A. அவர்களால், ஸெயின்ட்பால் என்பவர் அன்பைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதியிருந்த பாடல்களின் கருத்தைத் தழுவி இயற்றப்பெற்றன வாம்; 1891-ஆம் வருஷத்து மார்ச்சு மாதத்திய ஜநவிநோதிநிப் பத்திரிகையில் வெளிவந்துள்ள இப்பாடல்களை நம் செந்தமிழ் நேயர்களும் படித்து மகிழுமாறு ஈண்டு வெளியிடுகின்றேன். கட்டளைக் கலித்துறை பிறங்கும் பிறர்குறை பேணாது நற்குணம் பேணலுறும் அறந்திகழ் நெஞ்சின ரன்றே லவர்விண் ணமிர்தினையும் மறந்திடும் வண்ணம் வடித்துப் படிக்கின்ற வார்த்தையெல்லாம் வெறுங்கல கல்லென்னும் வெங்கல வோசையின் வேறலவே. (1) எழுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் வருபொரு ளுரைக்கும் வல்லபம் பெறிலென் மண்ணிடை விண்ணிடை மறைந்த பெருரக சியங்கள் யாவையு முணரும் பெருமையும் ஞானமும் பெறிலென் பருவத மெடுத்துப் பந்தென வாடும் பத்தியுஞ் சித்தியும் பெறிலென் பரவனு கூல திருட்டியென் றுரைக்கும் பண்புறு மன்பிலை யெனிலே. (2) இல்லவர் யாரும் புசித்துநற் சுகமே யெய்திடப் பொருளெலா மீந்தென் நல்லமெய் தனையுஞ் சிபியெனத் தன்கோள் நாட்டிட நல்கியு மென்னை அல்லவர் தமையும்நல்லவ ரெனவே யனுதின மதித்துகந் திடுமோர் சொல்லிடும் பிரிய வன்புமற் றிலையேற் சுகமில்லை யென்பது துணிபே. (3) பிறர்க்கெலா மின்பம் பெருக்குவ தன்பே பிறர்செயுந் தீங்கனைத் தினையும் பொறுத்துமேன் மேலும் மகிழ்வது மன்பே போற்றிய பிறர்வயி னுற்ற சிறப்பது கண்டங் கழுக்கறா விடுத்துச் சித்தமுட் களிப்பது மன்பே அறச்சிறி தேனு மன்புதன் பெருமை யறிந்திறு மாப்படை யாதே. (4) அன்னியர் குணமா மன்பெனு மணங்கி னழகினை யின்னமுங் கேண்மோ தன்னியல் நடக்கை தக்கவா றன்றித் தவறுறாத் தன்மைய டனது மன்னிய வுரிமைப் பொருடனக் காக மறந்துமே வழங்கிட வறியாள் என்னை செயினு மெளிவரு கோப மில்லடீங் கொன்றுமே யெண்ணாள். (5) கலிவிருத்தம் கொடுமை யென்றெவர் கூறினுங் கேட்டுளம் நடுந டுங்குவள் நாணமுற் றஞ்சுவள் கெடல ரும்புகழ் மெய்ம்மை கிளத்தல்கேட் டுடல மெங்கும் புளகித் துவப்பளே (6) வந்த வெல்லாம் பொறுத்து மகிழ்வளே நந்தல் செய்யினும் நம்புதல் விட்டிடாள் எந்த வேளையு மேல்வரு மின்பமே சிந்தை செய்குவள் தீங்கு கவனியாள் (7) அறுசீரடியாசிரிய விருத்தம் இப்படி யாவ ராலு மெய்துதற் கரிதாய் நின்ற செப்பிய பரானு கூல தெரிசன சித்த மொன்றே மெய்ப்பட நிற்கும் மேலால் விளைவதோ ருணர்வு மோர்கால் பொய்ப்படும் புலமை போகும் போய்விடு மறிவுந் தானே (8) பாலியத் தன்மை யாலே பற்றிய கழற்சி பந்து போலவு மாடி யூடே பொருந்திய பார்வை போலும் ஏலவு மென்மை யானே நேர்பட வறிதற் கேற்ற காலையில் துச்ச மாகிக் கழியுமே கண்டவெல்லாம் (9-12) உற்றவிவ் வனைத்து மேகி லொழிவிலா தேதென் றோதில் முற்றிலும் நம்பு பத்தி கைவிடான் முதலோ னென்று பற்றிய வுறுதி முன்னம் பகர்ந்திடு மன்புமாமே மற்றவை தம்மின் மேலாய் மன்னுவ தன்பே யம்ம! (13)  ஊ. பண்பாட்டாய்வு 36. துடிக்குறி ஒவ்வொருவரும் தத்தம் வாழ்நாளில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களைச் சோதிட சாத்திரத்தின் வலிமையினால் முன்னரே அறிந்து கொள்ளலாம்; இஃது நம்முன்னோர்கள் கொண்ட முறை யென்பது யாவரும் அறிந்த விஷயம். அன்றியும் கண், தோள், மார்பு முதலிய உறுப்புகள் துடித்தலினாலும் பின்னர்ச் சம்பவிக்கும் சுகதுக்கங்களைத் தூலமாக அறிந்துகொள்ளலாம். இஃதும் நம்முன்னோர்கள் கொண்ட முறைகளில் ஒன்றென்பது யான் அடியில்வரையும் ஆராய்ச்சியால் நன்கு விளங்கும். இராவணனாற் சிறையிடப் பெற்று அசோகவனத்திருந்த சீதாபிராட்டி, ஆண்டு அருகேயிருந்த தாயினுமினியவளாம் திரிசடையை நோக்கி, தூயை நீ கேட்டியென் துணைவியா மெனா - மேயதோர் கட்டுரை பகர்ந்தனள். அக்கட்டுரையை ஈண்டு வரைகின்றேன். சுந்தரகாண்டம் காட்சிப்படலம் 32. நலந்துடிக்கின்ற தோநான் செய்தீவினைச் சலந்துடித்தின்னமுந்தருவ துண்மையோ பொலந்துடிமருங்குலாய் புருவங்கண்முதல் வலந்துடிக்கின்றிலவருவ தோர்கிலேன். இதன் கருத்து : எனது கண் புருவம் முதலியன இடது பக்கத்திற் றுடிக்கின்றன; இதனால் நன்மையுண்டாமோ அல்லது தீமையுண்டாமோ யான் அறிகின்றிலேனென்பதாம். சுந்தரகாண்டம் காட்சிப்படலம் 33. முனியொடுதிலையின் முதல்வன்முந்துநாள் துனியறுபுருவமுந்தோளுநாட்டமும் இனியன துடித்தன வீண்டுமாண்டென நனிதுடிக்கின்றனவாய்ந்து நல்குவாய். இதன் கருத்து :- விசுவாமித்திரமுனிவருடன் இராமபிரான் என்னை மனம் புணர மிதிலைக் கெழுந்தருளியநாளில் என்னுடைய கண், தோள், மார்பு முதலியன என்பக்கந் துடித்தனவோ அப்பக்கத் தீண்டுந் துடிக்கின்றன; இதன்பலனை ஆராய்ந்து கூறக்கடவாய் என்பதாம். சுந்தரகாண்டம் காட்சிப்படலம் 34. மறந்தனெனிதுவுமோர்மாற்றங்கேட்டியால் அறந்தருசிந்தை யென்னா விநாயகன் பிறந்தபார்முழுவதுந் தம்பியேபெறத் துறந்துகான்புகுந்த நாள்வலந்துடித்ததே. இதன் கருத்து :- என்னாருயிர் நாயகன் தனது இராஜ்ய முழுதுந் தம்பிக் களித்து நாடுதுறந்து காடுசென்ற நாளில் என் கண் முதலியன வலப்பக்கத்திற் றுடித்தன என்பதாம். சுந்தரகாண்டம் காட்சிப்படலம் 35. நஞ்சனையநன்வனத்திழைக்கு நாளிடை வஞ்சனையால்வலந்துடித்தவாய் மையால் எஞ்சலவீண்டு தாமிடந்துடித்ததால் அஞ்சலென்றிரங்குதற் கடுப்பதியாதென்றாள். இதன் கருத்து :- வனத்தின் கண் இராவணன் எனக்குத் தீங்கிழைத்த நாளில் என் கண் முதலியன வலப்பக்கத்திற் றுடித்தன; ஈண்டு இடத்திற் றுடித்தன; இதனால் எனக்குண்டாகும் நன்மை யாது என்றன ளென்பதாம். இவ்வண்ணம் சீதாபிராட்டியார் கூறிய கட்டுரையைச் செவி சாய்த்துக் கேட்டுக் கொண்டிருந்த திரிசடையென்னு மன்பினாள் உன்றுணைக்கணவனையுறுதலுண்மையால் என்று அதன்பலனைத் தெரிந்து கூறினாள். இதுகாறுஞ் செய்த ஆராய்ச்சியால் கண், தோள் முதலிய இடத் திற்றுடித்தால் நன்மையும் வலத்திற்றுடித்தால் தீமை யுண்டாகு மென்பது அறியக்கிடக்கின்றது. இனி, பாண்டுவின் மகனாகிய பார்த்தன்; தன்புத்திரன் போரிலுயிர் துறந்ததையறியானாய், பாசறைக்குத் திரும்பி வருங்கால், கண்ண பிரானை நோக்கி, என்கணுந்தோளுமார்பு மிடனுறத் துடிக்கைமாறா னின்கணுமருவிசோரநின் றனையின்று போரிற் - புன்கணுற்றவர்கண் மற்றென்றுணைவரோ புதல்வர் தாமோ என்று வினாவினான். இதனாற் கண் தோள் முதலியன இடத்திற்றுடித்தால் தீமையும் வலத்திற்றுடித்தால் நன்மையு முண்டாகு மென்பது அறியப்படுகிறது. ஆனால் இம்முடிபு முன்னர் வரைந்துள்ள முடிபுடன் பொருந்தாது முரணுகின்றதே யெனின், இம்முடிபு ஆண்பாலார்க்கும், முன்னர் வரைந்துள்ள முடிபு பெண்பாலார்க்கு முரித்தாகலின் உண்மையில் முரணா தென்க. இதனால் ஆண்பாலார்க்குக் கண் தோள் முதலியன இடத்திற்றுடித்தால் தீமையும் வலத்திற்றுடித்தால் நன்மையு முண்டாகு மென்பதும் பெண்பாலார்க்கு இடத்திற்றுடித்தால் நன்மையும் வலத்திற்றுடித்தால் தீமையு முண்டாகு மென்பதும் நன்குவிளங்கும். அன்றியும், காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழா நடந்த நாளில் கோவலன் மனைவியாகிய கண்ணகிக்கு இடதுகண்ணும் அவன் காதற்பரத்தையாகிய மாதவிக்கு வலது கண்ணும் துடித்தன வென்பதை, சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்தகாதை 236 - 240, கண்ணகிகருங்கணுமாதவி செங்கணு முண்ணிறைகரந்தகத் தொளித்துநீ ருகுத்தன வெண்ணுமுறையிடத் தினும்வலத் தினுந்துடித்தன விண்ணவர்கோமான்விழவு நாளகத்தென என்னும் செய்யுளடிகளில் ஆசிரியர் இளங்கோவடிகளும் கூறிப் போந்தனர். அங்ஙனந் துடித்ததனாற் கண்ணகிக்குண்டாகிய நன்மை யாவது தனது ஆருயிர் நாயகன் காதற்பரத்தையாகிய மாதவியை விட்டகன்று தன்பாலடைந்தமையே; மாதவிக் குண்டாகிய தீமையாவது கோவலன் தன்னட்பையொழித்து அகன்றமையே. 37. எனது ஆராய்ச்சியிற் கண்ட சில செய்திகள் 1. பண்டைக்காலத்தில் திருவிழாக்கள் எத்தனை நாட்கள் நடைபெற்றன என்பது. தற்காலத்தில் நம் தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் திங்கள்தோறும் திருவிழாக்கள் நடை பெறுவதை யாரும் அறிவர், இவற்றுட்சில, மார்கழித் திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்தரம் என்று வழங்கப்படுகின்றன. இவ்விழாக்களில் ஒவ்வொன்றும் இக்காலத்தில் பத்து நாட்கள் முடிய நடைபெறுகின்றது. தமிழ் வேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர் ஆட்சிபுரிந்த நாட்களில் இவ்விழாக்கள் பத்து நாட்கள் நடைபெறவில்லை என்பது சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. ஆனால் அக்காலத்தில் இவை எத்தனை நாட்கள் நடைபெற்றன என்பதை யுணர்த்தக் கூடிய மூன்று கல்வெட்டுக்களை அடியிற் குறிக்கின்றேன். * I (1) வதி ஸ்ரீ கோப்பரகேசரி வன்மற்கு யாண்டு க ஆவது இவ்வாண்டு (2) குன்றியூர் நாட்டு தேவதானம் திரு நிலக்குன்றத்துத் திரு (3) மேற்றளிப் பெருமானடிகளுக்கு மாசிமகந்திருவிழா வொடுக்கிய (4) ன்று ஏழு நாளும் பதினைவர் மாகேவரர் பெறுபடி உண்ணப் (5) பரம்பையூர் சடையனன் பியைச் சார்த்திச் சடையன் கலைச்சி (6) வைத்த துளைப் பொன் ஐங்கழஞ்சின் பலிசையால் உண்ணவைத்தது - இது மாகேவர ரக்ஷை-2 (புதுக்கோட்டை நாட்டிலுள்ள குளத்தூர் தாலூகா குடுமியான் மலைக்கல்வெட்டு) * II (1) வதி ஸ்ரீ கோப்பரகேசரி வன்மற்கு யாண்டு 22 திருநிலக் குன்றத்துப் பெருமானடிகளுக்குப் பங்குனி உத்தரம் ஏழுநாளும் நிதி இருபது பிராமணருண்ண ஒரொருத்தற்கு (2) ... ஒரு பிடி தயிர் நாழி பாக்கொன்றுமாக செவெலூர் பட்டம் படாரியான் பாண்டியதியரசி வைத்த துளைப்பொன் ரு-ம் பன்மாகே ... (3) ஒராருத்... தற்கு நாடுரியரிசி தயிர் மூழக்கு கறி ஒன்று வேள்கோவுக்கு நாடுரி அடுவர்க்கு முந்நாழி விறகுக்கு நாழி ஆக பொன் ரு-ம் முதல் ... (குடுமியான் மலைக் கல்வெட்டு). * III (1) திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் - தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் - காந்தளூர்ச் சாலைக் கலமறுத்தருளி - வேங்கை நாடுங் கங்க பாடியும் - நுளம்ப பாடியும் தடிகை வழியும் - குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும் - எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் - திண்டிறல்வென்றி தண்டாற் கொண்ட - தன்னெழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டும் தொழுதகை விளங்கும் யாண்டேய் செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோவி ராஜராஜ கேசரிவன்மராகிய ஸ்ரீ ராஜராஜ தேவற்கு யாண்டு 20 ஆவது கேரளாந்தக வளநாட்டு உறத்தூர்க் கூற்றத்து பிரம தேயம்விக்கிரமகேசரி சதுர்வேதிமங் கலத்துப் பால் திருவிறை யான்குடி மகாதேவற்கு... சேனாபதி உத்தம சோழ நல்லூருடைய யான்பாளூர் அம்பலத்தாடியான் முடிகொண்ட சோழ விழுப்பரையன் தாயார் பாசூர் நங்கையார் பேரால் பாசூர் நங்கைநல்லூர் என்னும் பெயராலும் இவ்வூர் ஏரி அத்தாணிப் பேரேரி என்றும் பெயராய் இப்பாசூர் நங்கை நல்லூர் நாங்கள் இறையிலியாக விற்றுக் கொடுத்தோம். இவ்வூர், நிலம் முன் இத்தேவற்குவேண்டும் நிவந்தங்களுக்கு செய்கின்றமையில் சித்திரைத் திருநாள் திருவாதிரைத் திருநாள் ஏழுநாளும் திருஉத்ஸவம் எழுந்தருளி தீர்த்தமாடியருள வேண்டும் அழிவுகளுக்கும் இத்தேவற்கு முன் திருப்பதியம் விண்ணப்பஞ் செய்யும் அடிகள் மார்க்கு நிவந்தம் மிலாமையால் இத்திருப்பதியம் விண்ணப்பஞ் செய்வார் ஒருவர்க்கு நிசதம் நெல்லு பதக்காக நால்வர்க்கு நிசதம் இருதூணிக்கப்பட முதல் ஒராட்டைக்கு காசு ஆக நால்வர்க்குக் காசு நிவந்தமாக செய்தோம்... (குளத்தூர் தாலூகா திருவிளாங்குடியிலுள்ள கல்வெட்டு). மேலே குறித்துள்ள மூன்று கல்வெட்டுக்களும் மாசித் திங்களில் நடத்தப் பெறும் மக விழாவும் பங்குனித் திங்களில் நடத்தப்பெறும் உத்தர விழாவும் சித்திரைத் திங்களில் நடத்தப் பெறும் சித்திரை விழாவும் மார்கழித் திங்களில் நடத்தப் பெறும் திருவாதிரை விழாவும் முற்காலத்தில் எவ்வேழு நாட்களே நடந்தன என்பதை நன்கு விளக்கு கின்றன. (2) தெலுங்கு மொழியில் முதலில் செய்யுளும் செய்யுள் நூலும் தோன்றிய காலம். குண்டூர் ஜில்லா ஓங்கோல் தாலுகாவிலுள்ள ஆதங்கி (Adanki) என்ற ஊரில் ஒரு வயலில் கிடக்கும் கல்லில் இரு செய்திகள் பொறிக்கப் பெற்றுள்ளன. அதில் ஒரு தெலுங்குச் செய்யுளும் உளது. அக்கல்வெட்டு கி.பி. 844 முதல் கி.பி. 888 முடிய ஆட்சி புரிந்த கீழைச்சாளுக்கிய மன்னனாகிய மூன்றாம் கனகவிசயாதித்தனது ஆளுகையின் முதலாம் ஆண்டாகிய கி.பி. 845 இல் பாண்டரங்கன் என்பான் அவ்வேந்தன்பால் படைத் தலைவனாக அமர்ந்தான் என்பதைத் தெரிவிக்கின்றது. அக்கல்வெட்டிற் காணப்பெற்ற தெலுங்குச் செய்யுளுக்கு முன்னர் இயற்றப்பட்ட வேறு தெலுங்குச் செய்யுட்கள் இதுகாறும் கிடைத்தில. எனவே, தெலுங்கு மொழியில் முதலில் செய்யுள் இயற்றப்பெற்ற காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியாகும். தெலுங்கு நாட்டிலுள்ள வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் விசய வாடையில் (Bezwada) காணப்படும் யுத்த மல்லனது கல்வெட்டிலுள்ள தெலுங்குச் செய்யுட்களே எல்லாவற்றிற்கும் முந்தியனவாய் மிகப் பழமை வாய்ந்துள்ளன என்றும் அவை இயற்றப்பெற்ற காலம், கி.பி. பத்தாம் நூற்றாண்டாக விருத்தல் வேண்டும் என்றும்கருதி வந்தனர்.. பின்னர், மேற்குறித்த ஆதங்கிக் கல்வெட்டுக் கிடைக்கவே, அதிலுள்ள ஒரு தெலுங்குச் செய்யுளைக்கண்டு அது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்றதாதல் வேண்டும் என்றும், தெலுங்குமொழியில் செய்யுள் இயற்றத் தொடங்கிய காலமும் அதுவே யாகும் என்றும் உணர்ந்து பெருமகிழ்ச்சியுற்றனர். ஆந்திரரது தாய் மொழிப் பற்று நம்மனோர் நன்குணர்ந்து பின்பற்றுதற்குரிய தொன்று. முதலில் செய்யுள் தோன்றியகாலம் யாதென ஆராய்ந்து காண முடியாத அத்துணைத் தொன்மையும் பெருமையும் வாய்ந்த நம் தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள நம்மனோர், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன்னர் இயற்றப்பெற்ற செய்யுளே இல்லாத தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள ஆந்திரர் பாற் காணப்படும் தாய்மொழிப் பற்றைப் பார்த்தாயினும் தாய்மொழித் தொண்டில் ஈடுபட்டு உண்மைத் தொண்டாற்று வார்களாக. இனித் தெலுங்கு மொழியில் இயற்றப்பெற்ற முதல் செய்யுள் நூல் நன்னயப்பட்டர் எழுதியுள்ள மகாபாரதமாகும். இதற்கு முந்திய செய்யுள் நூற்கள் அம்மொழியில் இல்லை என்று அம்மொழியில் வல்ல அறிஞர்கள் கூறுகின்றனர். மகாபாரதத்தைத் தெலுங்கு மொழியில் செய்யுளாக எழுதிய நன்னயப்பட்டர் என்பார் கி.பி. 1022 முதல் கி.பி. 1063 வரையில் கோதாவரி கிருஷ்ணன் என்ற இருபேராறுகளுக்கும் இடை யிலுள்ள வேங்கை நாட்டில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த கீழைச் சளுக்கிய மன்னனாகிய முதல் இராசராசனது அவைக்களப் புலவராக விளங்கியவர். ஆகவே, இவ்வாசிரியர் வாழ்ந்தகாலம் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் இடைப் பகுதியாகும். எனவே தெலுங்கு மொழியில் செய்யுள் நூல் முதலில் தோன்றிய காலமும் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியேயாகும் என்பது நன்கு வெளியா கின்றது. நம் தமிழ்மொழியிலுள்ள சிறந்த இலக்கியங்கள் எல்லாம் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே இயற்றப் பெற்றவை என்பது ஈண்டு யாவரும் அறிந்துகொள்ளுதற் குரியதொன்றாம். 3. சேனாவரையர். தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், கல்லாடர், தெய்வச்சிலையார், சேனாவரையர், நச்சினார்க் கினியர், பேராசிரியர் முதலானோர் உரை எழுதியுள்ளார். சேனாவரையரது உரை சொல்லதி காரத்திற்கு மாத்திரம் உளது. சொல்லதிகார உரைகளுள் சேனாவரையரது உரையே திட்பநுட்பம் வாய்ந்து கற்போர்க்குக் கழி பேருவகை பயக்கும் பெருமை பெற்றதென்பர். இச்சேனாவரையரது வரலாறு சிறிதும் புலப்படவில்லை. ஆனால் பாண்டிநாட்டில் பழைய காலத்தில் சேனாவரையன் என்ற பெயர் வழங்கியுள்ளது என்பது ஒரு கல்வெட்டால் அறியப்படுகின்றது. அது, *(1) வதி ஸ்ரீகோமாறஞ் சடையர்க்கு (2) யாண்டு இரண்டு இதனெதிர் (3) மூன்று இவ்வாண்டு மிதுன நாய (4) ற்றுத் திருச்சி விந்திரத்து (5) எம்பெருமானுக்கு நியதம் (6) உழக்குநெய் முட்டாமல் (7) சந்திராதித்தனல் எரிவதாகத் (8) திருவழுதி வளநாட்டு திரு (9) வெள்ளூரில் சேனாவரையனாயின (10) தத்தன் அந்தரி வைத்த திருநொ (11) ந்தா விளக்கு ஒன்று இதற்கு விட்ட (12) சாவா மூவாப் பேரெருமை அஞ்சு (13) இவை மூலபரடை சபையார்க்குக் காட்டிக் கொடுத்தன என்பதாம். சில பெயர்கள் சில நாடுகளில் மாத்திரம் வழங்கி வருகின்றது. பிறநாடுகளில் அவை காணப்படவில்லை. எனவே, சேனா வரையன் என்ற பெயர் பாண்டி நாட்டில் மாத்திரம் வழங்கி யுள்ளது. என்று அறியப்படுகின்றமையின் அப்பெயருடன் விளங்கிய தொல் காப்பியச் சொல்லதிகார உரையாசிரியரும் பாண்டி நாட்டினராக விருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரப் படுகின்றது. 4. புடவை :- இந்நாளில் புடவை என்பது பெண் மக்கள் உடுத்தும் உடையை உணர்த்துகின்றது என்பது யாவரும் அறிந்த தொன்றே. ஆனால், முற்காலத்தில் ஆண்மக்கள் உடுத்திய உடையும் புடவை என்றே வழங்கி வந்ததென்பது பல கல்வெட்டுக் களால் புலப்படுகின்றது. இவ்வுண்மையை அடியில் வரையப் படும் உத்தம சோழனது செப்பேட்டின் ஒரு பகுதியால் உணர்ந்து கொள்க... ஆராதிக்கம் (43) வேதபிராமணன் ஒருவனுக்கு நெல் பதக்கம் இவனுக்கு புடவை முதல் (44) ஓராட்டை நாளைக்குப் பொன் ஐங்கழஞ்சும் பரிசாரகஞ் செய்யும் மாணி ஒருவனுக்கு (45) நெல் அறுநாழியும், இவனுக்குப் புடவை முதல் ஓராட்டை நாளைக்குப் பொன் (46) கழஞ்சும் திருமெய் காப்பான் ஒருவனுக்கு நிசதம் நெல் குறுணியும் இவனு (47)க்கு புடவை முதல் ஓராட்டை நாளைக்கு பொன்னிரு கழஞ்சும் நந்தவன உழைப் (48) பார் இருவர்க்கு நிசதம் நெல் குறுணி நானாழியும் இவர்களுக்குப் புடவைக்குப் பொன் கழஞ்சும்... 5. கொல்லம் ஆண்டின் வரலாறு :- இக்காலத்தில் கிருதவாப்தம் நம் நாட்டில் வழங்கி வருதல்போல முற்காலத்தில் சகாப்தம், கலியாப்தம் முதலியன வழங்கி வந்தன என்பது கல்வெட்டுக்களாலும் செப்பேடு களாலும் அறியப்படு கின்றது. மலைமண்டலமாகிய மலையாள தேசத்தில் மாத்திரம் கொல்லம் ஆண்டு முன்னர் வழங்கி வந்ததோடு இன்றும் வழங்கி வருகின்றது. இக்கொல்லம் ஆண்டு எப்போது எவ்வாறு தொடங்கிற்று என்பதைப் பற்றி ஆராய்ச்சிகள் நிகழ்த்திச் சரித்திராசிரி யர்கள் ஒரு முடிபிற்கு வந்துள்ளனர். அறுபத்து மூன்று அடியார்களுள் ஒருவரும் சேரநாட்டில் திருவஞ்சைக் களத்தில் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய முடிமன்னரும் சிவபெருமான் மீது திருக்கைலாய ஞானவுலா, பொன்வண்ணத் தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை என்னும் பிரபந்தங்கள் இயற்றியவரும் ஆகிய சேரமான் பெருமாள் நாயனார் சுந்தர மூர்த்தி சுவாமிகளோடு கைலாயஞ் சென்றது கி.பி. 825 ஆம் ஆண்டில் நிகழ்ந்த நிகழ்ச்சி என்பதும் அது முதல் தான் கொல்லம் ஆண்டு மலை யாள தேசத்தில் வழங்கத் தொடங் கிற்று என்பதும் அன்னோரது முடிபு களாகும்.1 ஆனால், மலைநாட்டில் வரையப் பட்டுள்ள கல்வெட்டுக்களைப் படித்துப் பார்த்தால் கொல்லம் ஆண்டின் வரலாறு அஃது அன்று என்பது நன்கு வெளியாகின்றது. அன்றியும், கொல்லம் ஆண்டு தோன்றி யமைக்குக் காரணமும் அக்கல்வெட்டுக்களால் புலனா கின்றது. அவற்றுள் இரண்டு கல்வெட்டுக்களை அடியிற்காண்க. II. (1) வதிஸ்ரீ கொல்லந்தோன்றி யிருநூற்றைம் பத்திரண்டா மாண்டு நாஞ்சி நாட்டதியனூரான அழகிய பாண்டியபுரத்து கண்ணன் தேவனான உத்தம பாண்டியச் சிலைசெட்டியேன் இந்நகரத் (2) தே... விலை கொண்டுடைய பூமிகொட்டியார் குளத்தில் தெற்கடைந்த நெடுங்கண்ணும் மேலைத்தடியும் பேய் கோட்டில் நீர் பாய்கிற காலுக்கு வடக்கும் பிராயோடு குழிக்கு மே (3) ற்கும் மாப்பாண்டி வயக்கலுக்கு தெற்கும் இந்நான்கெல்லைக்குட்பட்ட பூமி இந்நகரத்து பவிதிர மாணிக்க விண்ணகரெம் பெருமானுக்கு நித்தம் நானாழி அரிசி திருவமுதுக்கு சந்திராதித்த வரை செல்வதாக வைச்சு கொடுத்தேன் கண்ணன் (4) தேவனான உத்தம பாண்டியச் சிலைசெட்டியேன். (Travancore Archaelolgical Series Vol. III P.57.) II. (1) வதிஸ்ரீ கொல்லந் தோன்றி இருநூற்றுத் தொண்ணூற் றொன்பதாமாண்டு மிதுனத்தில் வியாழன் நின்ற ஆண்டு நாஞ்சி நாட்டதியனூரான அழகிய பாண்டியபுரத்து நகரத்தோம் இந்நகரத்து திருமேற்கோயில் பவித் (2) திர மாணிக்க விண்ணக ரெம்பெருமானுக்கு இந்நகரத்தோம் சந்திராதித்த வரை செல்வதாக நீர் வார்த்துக் கொடுத்த நிலமாவது (11) இந் நகரத்துப் புறவிளாகத் தூவச் செய்யும் கோன் கேரளன் திருத்துக்கும் இந்நிலத்துக்கும் பெருநான் கெல்லை கீழெல்லை இடைக் கோ (3) ட்டில் நின்று அணைக்குப் போகிற வழிக்கும் படாபாறைக்கு மேற்கும் தென்னெல்லை அய்யன்கோயிலுக்குஞ் சாலார் விளாகத்தில் நின்று இறங்குகிற ஆற்றுக்கும் படாபாறைக்கும் வடக்கும் ஆற்றுக்கு கிழக்கும் வடவெல்லை ஆற்றுக்கு தெற்கும் இவ்விசைந்த பெரு நான் கெல்லைக்குட் பட்ட (4) தூவச்செய்யும் திருத்தின பள்ளக் காலால் நீர் பாயும் நிலமுட்படக் கொடுத்த நிலம் பதின்மூன்று மாவுக்கும் ஊர்காலால் மாத்தால் எழு கலநெல்லும் காற் காசும் கடமையிறுப்பானாக இந்நகரத்துக் கோன் கேரளனுக்கு இந்நிலம் அட்டிப் பெற்றுக் காராண்மையாக நீரோடு மட் (5) டிக் கொடுத்தோம் அழகிய பாண்டியபுரத்து நகரத்தோம். கோன் கேரளனுக்கு (11) இக்கடமை கோயிலி லிட் டளந்து கொடுப்பது (11). (Travancore Archaeological Series Vol. III P. 58.) இக்கல்வெட்டுக்களால் புதிய கொல்லம் அமைக்கப்பெற்ற ஆண்டு முதல் தான் கொல்லம் ஆண்டு வழங்கத் தொடங்கிற்று என்பது நன்கு அறியக்கிடக்கின்றது. இனி, செந்தமிழ் சேர்ந்த பன்னிருநிலத்தும் தங் குறிப்பினவே திசைசொற்கிளவி என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தின் உரையில் தெய்வச்சிலையார் கூறியிருப்பது கொல்லத்தைப் பற்றிய சில செய்திகளை இனிது புலப்படுத்துகின்றது. அது பன்னிரு நிலமாவன; - குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குட்பட்ட கொங்கணமும் துளுவமும் கொடகமும் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும். இவற்றுள், கூபகமும் கொல்லமும் கடல் கொள்ளப்படுதலின் குமரியாற்றின் வடகரைக் கண் அப்பெயரானே கொல்லமெனக் குடி யேற்றினார் போலும் :- என்பதாம் (1). (1) நம் தமிழ் மொழியில் கலந்து வழங்கும் திசைச்சொற்கள் எவ்வெந்நாடுகளிலிருந்து வந்துள்ளன என்பதை விளக்க வந்த உரையாசிரிய ராகிய தெய்வச்சிலையார், குமரியாற்றின் தென்கரையில் கொல்லம் என்னும் நாடுமுன்னர் இருந்தது என்றும், அதனைக் கடல்கொண்ட பின்னர் அவ்வாற்றிற்கு வடக்கே புதிய கொல்லத்தை அமைத்து, மக்கள் அங்குக் குடியேறினர் என்றும், நுண்ணிதின் ஆராய்ந்து எழுதியிருப்பது அரியதோர் உண்மைச் செய்தியாகும். எனவே, இப்போதுள்ள கொல்லத்தைப் புதிதாக அமைத்து மக்கள் குடியேறிய காலத்தில்தான் கொல்லம் ஆண்டும் முதலில் வழங்கத் தொடங்கிற்று என்பது உறுதியெய்துதல் காண்க. இவ்வுண்மைக் கொல்லந் தோன்றி இரு நூற் றைம்பத்திரண்டாம் ஆண்டு என்ற கல்வெட்டுத் தொடர்மொழிகள் வலியுறுத்தி நிற்றல் உணரற்பாலதாகும். கி.பி. 822 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு கடல் கோளால் பழைய கொல்லம் அழிந்துவிட்டது என்றும் கி.பி. 825 ஆம் ஆண்டில் புதிய கொல்லம் அமைக்கப்பட்டது என்றும் துடிசைக் கிழார் திருவாளர் அ.சிதம்பரனார் அவர்கள் எழுதியிருப்பது ஈண்டு அறிந்து கொள்ளுதற் குரியதாகும் (1). கி.பி. எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே சுந்தரமூர்த்தி சுவாமிகளோடு சேரமான் பெருமாள் நாயனார் கைலாயஞ் சென்றனர் என்பது ஆராய்ச்சியால் அறியப்படுதலின் (2) அக்காலத்தில் கொல்லம் ஆண்டு தொடங்கியிருத்தற்கு ஏது சிறிதும் இல்லை என்க. 6. ஒரு பழைய வழக்கம் :- இக்காலத்தில் இயற்பெயருக்கு முன்னர் மகாராஜராஜஸ்ரீ என்பதை மரியாதைக்கு அறிகுறியாகச் சேர்த்து எழுது கின்றனர். நமது தமிழன்னைக்குத் தொண்டு புரிவதில் முன்னணியில் நிற்கும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் இயற்பெயருக்கு முன்னர் மரியாதைக்கு அறிகுறியாகத் திருவாளர் என்பதை முதலில் எழுதத் தொடங்கி இதனை வழக்கத்திற் கொணர்ந்தனர். இங்ஙனம் எழுதும் முறை நம் தமிழகத்தில் யாண்டும் பரவி இதுபோது நிலைபே றெய்தி யுள்ளது. இவ்வாறு முற்காலத்திலும் எழுதி வந்தனர் என்பது ஒரு பழைய கல்வெட்டால் புலப்படுகின்றது. அஃது அடியில் வருமாறு:- (1) வதிஸ்ரீ கோமாற வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சோணாடுகொண்டு அருளிய சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு உ - ஆவது தென் கோணாட்டுக் குன்று சூழ் நாட்டுச் சிகாநல்லூர் திருவாளன் சோழ மூவேந்தவேளானும் திருவுடை (2) யான் கோதண்டனும் சுந்தன் கொழுந்தும் சுந்தன் கணியும் நம்பி கொழுந்தும் நம்பி பன்மனும் பொன்னன் ஒன்றாயிரமுடையானும் இவ்வனைவோம் எங்கள் கீழைப் புன்செய் விலைக்குற விற்கக் கொள்விருளிரோ வென்று ஒருகாலாதும் இருகாலா(3) வதும் முக்காலாவது முற்கூறப் பிற்கூறி சோழபாண்டிய வளநாட்டு ஆற்றூருடையான் நம்பி பொன்னம்பலக் கூத்தனான உடையார் காங்கேயராயர் கொள்வேனென்று அருளிச்செய்ய முன் சொல்லப்பட்ட இவ்வனைவரோம் நாங்கள் விற்கிற பு (4)ன் செய்க்குப் பெருநான் கெல்லை யாவன கீழ்பாற் கெல்லை மேல்மண நல்லூர் ஊர்ப்பொது எல்லைக்கும் மேற்கும் தென்பாற் கெல்லை திருவாளன் சோழ மூவேந்த வேளான் செய்க்கு வடக்கும் மேற்பாற் கெல்லை சுந்தன் கொழுந்து நம்பிகொழுந்(5)து திருவன் சோழமூவேந்த வேளான் இவர்கள் செய்க்குக்கிழக்கும் வடபாற்கெல்லை பொன்னன் ஒன்றாயிர முடையான் சுந்தன் கொழுந்து நம்பிகொழுந்து இவர்கள் புன்செய்க்கு தெற்கும் ஆக இசைந்த பெருநான்கெல் (6) லைக்கு உட்பட்ட புன்செய் விற்றுக் கொடுத்து எம்மில் இசைந்த விலைப் பொருள் அன்றாடு நற்பழங்காசு இப்பழங்காசு இரண்டரையும் ஆவணக்களத்தே காட்டேற்றி கைச்செலவறக் கொண்டு விலைப் பிரமாணம் பண்ணிக் கொடுத்தோம் (7) உடையார் காங்கேயராயர் பிள்ளைக்கு திருவன் சோழ வேந்தவேளானும் திருவுடையான் கோதண்டனும் சுந்தன் கொழுந்தும் சுந்தன்கணியும் நம்பி கொழுந்தும் நம்பியன்மனும் (8) பொன்னன் ஒன்றாயிர முடையானும் இவ்வனை வோமும் பன்மாகேவரரட்சை (புதுக்கோட்டை நாட்டுக் குடுமியான் மலைக் கல்வெட்டு). இக்கல்வெட்டு, முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியனது ஆட்சிக் காலத்தில் கி.பி. 1219ஆம் ஆண்டில் வரையப்பெற்றது. இதில் இரண்டிடங்களில் திருவாளன் சோழமூவேந்த வேளான் என்றும் இரண்டிடங்களில் திருவன் சோழமூவேந்த வேளான் என்றும் வந்திருத்தல் அறியத்தக்கது. இக்கல்வெட்டில் ஒருவனையே ஓரிடத்தில் திருவாளன் என்றும் மற்றோரிடத்தில் திருவன் என்றும் கூறியிருத்தலால் இவ்விரண்டும் மரியாதைக் குரியனவாக முற்காலத்தில் வழங்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது வெளிப்படை. அன்றியும் மற்றொரு வனைத் திருவுடையான் என்று இரண்டிடங்களில் குறித்திருப்பது ஈண்டு உணரற்பாலதாகும். எனவே, முற்காலத்தில் மரியாதைக்குரிய அடை மொழியாக இயற்பெயருக்கு முன்னர்ச் சேர்த்து வழங்கப் பெற்றவை திருவாளன், திருவன், திருவுடையான் முதலியன என்பது இக்கல்வெட்டால் நன்கு வெளியாதல் காண்க. இவற்றுள், நமது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் வழக்கிற் கொணர்ந்து நிலைபெறச் செய்துள்ள திருவாளர் என்பது பழையகாலத்திலும் இதே பொருளில் வழங்கி வந்தமை அறிந்து மகிழ்தற்குரியதாகும். 7. காயம் :- இந்நாளில் காயம் என்னுஞ் சொல் பெருங்காயம் (Asafoetida) என்ற பொருளில் வழங்கி வருகின்றது. பழைய தமிழ் நூல்களில் பயின்றுவரும் அச்சொல் இப்பொருளை யுணர்த்தவில்லை. எனவே, அச்சொல்லுக்கு இப்பொருள் உலக வழக்கில் மாத்திரம் இக்காலத்தில் இருந்து வருதல் உணரத்தக்கது. படைகொண்டார் என்று தொடங்கும் 253ஆம் குறட்பாவின் விசேடவுரையில், சுவைப்பட வுண்டல் காயங் களால் இனிய சுவைத்தாக்கி யுண்டல் என்று ஆசிரியர் பரிமேலழகர் கூறியுள்ளனர். இதனால் இனிய சுவையைக் கொடுத்தற்குக் காயங்கள் சேர்க்கப்படுதல் வேண்டும் என்பது வெளியாகின்றது. அன்றியும். இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினு மென்றும் அடங்காதா ரென்று மடங்கார் - தடங்கண்ணாய் உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும் கைப்பறா பேய்ச் சுரையின் காய் என்னும் நாலடியாரில் வந்துள்ள காயம் என்ற சொல் இனிய சுவையைத் தரும் பொருள்களையே உணர்த்துதல் காண்க. இப்பாடலுக்கு உரை எழுதியவர்கள், பேய்ச்சுரைக்காய்கள் உப்பும் நெய்யும் பாலும் தயிரும் காயமும் போட்டுச் சமைத்தாலும் கசப்பு நீங்காதனவாகும் என்று வரைந் திருத்தலால் அன்னோர் காயம் என்பதன் பொருளை விளக்கிக் கூறி னாரில்லை. ஒருகால், அதனை அவர்கள் பெருங்காயம் என்று கருதிப் பொருள் கூறாமல் விட்டிருத்தலுங்கூடும்; ஆனால், ஆசிரியர் பரிமேலழகர் அங்ஙனம் கருதவில்லை என்பது காயங்கள் என்று பன்மையில் கூறி யிருத்தலால் பெறப்படு கின்றது. நாலடியார் எழுதப்பெற்ற காலத்தில் இந்நாளிலுள்ள பெருங்காயம் இல்லை என்பது திண்ணம். ஆகவே, நாலடியாரின் ஆசிரியரும் பரிமேலழகரும் கொண்ட பொருள் யாது என்பது ஈண்டு ஆராய்தற்குரியதாகும். இனி; திருநெல்வேலி ஜில்லாவில் திருச்செந்தூரிலுள்ள ஒரு கல்வெட்டு, காயம் என்பதின் பொருளை மிகத் தெளிவாக உணர்த்துகின்றது, அஃது அடியில் வருமாறு:- (41) ... காயம் மிளகமுது (42) மஞ்சளமுது சீரகவமுது சிறுகடுகமுது (43) கொத்தமலிஅமுது ஏற்றிக் காயம் ஐந்து இவை ஒருபோதைக்கு முச்செவிடாக நான்கு போதைக்குக் காயம் உழக்கே இருசெவிடு (Tiruchendur Inscription of Varaguna Maharaja II; Epigraphia Indica Vol XXI No. 17.) இக்கல்வெட்டினால் காயங்கள் ஐந்துள்ளன என்பதும் அவை மிளகும் சீரகமும் மஞ்சளும் சிறுகடுகும் கொத்தமல்லியு மாம் என்பதும் நன்கு புலப்படுகின்றன. காய மிளகமுது எனவும் காயம் ஐந்து எனவும் இக்கல்வெட்டில் வந்துள்ளமையால் இவ்வைந்தனுள் ஒவ்வொன்றையும் காயம் என்று முற்காலத்தார் வழங்கி வந்தனர் என்பது தெள்ளிதின் உணரப்படும். எனவே, நாலடியாரின் ஆசிரியரும் பரிமேலழகரும் காயம் என்பதற்குக் கொண்டபொருள் மேலே குறித்துள்ள கல்வெட்டினால் விளக்கமுறுதல் காண்க. 8. சாத்தனூரும் திருவாவடுதுறையும் :- சோழ மண்டலத்தில் சாத்தனூர் என்ற ஊர் ஒன்றுளது. இதுவே அறுபத்து மூன்று அடியார்களுள் ஒருவராகிய திருமூல நாயனார் வாழ்ந்த தலமாகும். இதற்கு அண்மையில் திருவாவடு துறை என்ற தலம் உளது. இது திருஞான சம்பந்த சுவாமிகளுக்குச் சிவபெருமான் ஆயிரம் பொன் அடங்கிய பொற்கிழி யொன்றை அளித்தருளிய தலமாகும். இங்குள்ள ஒரு கல்வெட்டு1 இவ்வாலயத்தின் பெயரே திருவாவடுதுறை என்றுணர்த்து வதோடு இஃது அமைந்துள்ள ஊர் சாத்தனூர் என்றும் கூறுகின்றது. எனவே, சாத்தனூர் என்னும் திருப்பதியிலுள்ள சிவாலயமே திருவாவடு துறை என்னும் பெயருடன் முற்காலத்தில் நிலவிற்று என்பது ஒரு தலை. இதனை வலியுறுத்தும் மற்றொரு சான்றுசேந்தனார் பாடியுள்ள திருவிசைப்பாவில் திருவாவடுதுறைப் பதிகத்தில் உளது. அஃது, ஒழிவொன்றிலாவுண்மை வண்ணமும் உலப்பிலளு றின்ப வெள்ளமு மொழிவொன்றிலாப் பொன்னித்தீர்த்தமு முனிகோடி கோடியாமூர்த்தியும் அழிவொன்றிலாச் செல்வச்சாந்தையூர் அணியாவடுதுறையாடினாள் இழிவொன்றிலா வகையெய்திநின் றிறுமாக்கு மென்னிள மானனே. என்பதாம். இப்பாடலில் வந்துள்ள சாந்தை என்பது சாத்தனூர் என்பதின் மரூஉ ஆகும். சாந்தையூர் அணியாவடுதுறை என்னுந் தொடர் மொழிகள் சாத்தனூரில் உள்ளது ஆவடுதுறை என்னுந் திருக்கோயில் என்பதை விளக்கி நிற்றல் ஈண்டு அறிதற்குரியதாகும். சமய குரவர்களது தேவாரப் பதிகங்களை ஆராயின், சிலதிருப்பதிகளிலுள்ள திருக்கோயில்களுக்குத் தனிப் பெயர்கள் இருத்தல் புலனாம். காவிரிப் பூம்பட்டினத்துக் திருக் கோயில் பல்லவனீச்சுரம் எனவும், கோவந்த புத்தூரிலுள்ள திருக்கோயில் விசயமங்கை எனவும், கருவூரிலுள்ள திருக்கோயில் ஆனிலை எனவும், சாத்த மங்கையிலுள்ள திருக்கோயில் அயவந்தி எனவும் பெயரெய்தி யிருத்தலைத் தேவாரப் பதிகங் களால் அறியலாம். பிற்காலத்தில், சில ஊர்களில், திருக்கோயிலின் பெயர் அதனைச் சூழ்ந்துள்ள ஊர்ப்பெயராக மாறி வழங்கப்பெற்று வருகின்றது. ஊரின் எஞ்சிய பகுதிமாத்திரம் பழைய பெயருடன் நின்று நிலவுவதாயிற்று. இதற்கு எடுத்துக் காட்டாகப் பழையாறை நகரை எடுத்துக் கொள்ளலாம்; பழைய காலத்தில், இது மிகப் பெரிய நகரமாயிருந்தது. பல்லவர், சோழர் முதலான அரசர் குடும்பத்தினர் இந்நகரில் வதிந்து வந்தனர் என்பது பல கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. பட்டீச்சுரம், திருச்சத்தி முற்றம், திருமேற்றளி, வடதளி, தென்றளி என்பன இந்நகரத்தி லிருந்த திருக் கோயில்கள் ஆகும். இவற்றுள், பட்டீச்சுரம், திருச்சத்திமுற்றம் என்பவை தனித்தனி ஊர்களாக இந்நாளில் வழங்கப்பட்டு வருகின்றன. திருமேற்றளி என்ற திருக்கோயிலின் பெயர் திருமத்தடி என்ற ஊர்ப் பெயராக மாறிப் போயிற்று. அன்றியும், இது இக்காலத்தில் தனி ஊராக உள்ளது. இவைகளுக்கு அணித்தாகப் பழையாறை நகர் இந்நாளில் ஒரு சிற்றூராக இருக்கின்றது. பழையாறை நகரிலிருந்து பட்டீச்சுரமும் திருச்சத்தி முற்றமும் திருமேற்றளியும் வேறு வேறு ஊர்களாயின்மை போல, சாத்தனூரிலிருந்த திருக்கோயிலாகிய திருவாவடுதுறை என்பதும் ஒரு தனி ஊராகப் பிற்காலத்தில் வழங்கிவருதல் அறியத்தக்கது. திருவா வடுதுறை என்னும் பெயரும் இத்திருக்கோயிலைச் சூழ்ந்துள்ள சாத்தனூரின் ஒரு பகுதிக்கு மாத்திரம் வழங்கப் பெற்றுள்ளமையின், எஞ்சிய பகுதி சாத்தனூர் என்னும் பழைய பெயருடன் இதற்கு அண்மையில் இன்றும் நிலை பெற்றிருத்தல் உணரற் பாலதாகும். 38. புறநாட்டுப் பொருள்கள் 1. வெற்றிலை :- வெறு+இலை; சமைத்தற்குப் பயன்படாத இலை என்பது இதன் பொருள். தெலுங்கில் இதனை ஆக்கு என்று வழங்குவர்; ஆக்கு என்பது இலை என்று பொருள்படும். வடநாட்டு மொழிகளில் இதனைப் பான் என்று கூறுகின்றனர்; இலை என்று பொருள்படும் பர்ணம் என்ற ஆரிய மொழி பான் என்றாயிற்றுப் போலும். தாம்பூலம், தம்பலம் என்பனவும் இலை என்ற பொருளையே உணர்த்தும். இது, மலேயாவி லிருந்து நம் நாட்டிற்குக் கொண்டு வரப்பெற்றதாகும். கோவலன், மதுரையிலுள்ள ஆயர்பாடியில் உண்டபிறகு அவனுக்கு கண்ணகி வெற்றிலைச்சுருள் அளித்தாள் என்று சிலப்பதிகாரம் கூறு கின்றது. இதனை உண்டினி திருந்த உயர்பே ராளற் - கம்மென் றிரையலோ டடைக்கா யீந்த - என்னும் சிலப்பதிகார அடிகளால் உணர்க (XVI. 54-55) எனவே, இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முன்னரே வெற்றிலை நம் தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது நன்கறியக் கிடக்கின்றது. 2. சர்க்கரை :- வடமொழியில் இச்சொல் மணல் என்று பொருள்படும். மணல் போன்றிருக்கும் காரணம் பற்றி இப்பெயர் எய்தியது போலும். இஃது இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் நம் நாட்டிற்குச் சீனாதேயத்தினின்று கொண்டுவரப்பட்டது என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். 3. மிளகாய் :- இது நானூறு ஆண்டுகட்கு முன்னர்த் தென் அமெரிக்காவிலுள்ள சில்லி என்ற மாகாணத்திலிருந்து நம் தமிழ் நாட்டிற்குக் கொண்டுவரப் பெற்றதாகும். சுவையில் இது மிளகைப் போல் உரைப்பாயிருத்தலால் தமிழ்மக்கள் முதலில் இதனை மிளகுகாய் என்று வழங்கத் தொடங்கினர். பின்னர், இது மிளகாய் என்று மருவி வழங்கலாயிற்று. தெலுங்கில் இதனை மிரியபுகாய் என்று கூறுவார்; மிரியம் என்பதற்கு மிளகு என்று பொருளாம். மலையாளத்தில் இதனைக் கப்பல் மிளகு என்று வழங்குவர். இது அமெரிக்காவிலிருந்து கப்பல் மூலமாய் அங்குவந்த காரணம்பற்றி அங்ஙனம் வழங்கி வருகின்றனர் போலும். இராசராசன் குலோத்துங்கன் முதலான சோழ மன்னர்கள் சர்க்கரை, மிளகு, சீரகம், புளி முதலியவற்றை வாங்குவதற்குத் திருக்கோயில்களுக்கு நிபந்தங்கள் விட்டிருக் கின்றனர். ஆனால் அதில் மிளகாய் மாத்திரம் காணப் படாமைக்குக் காரணம் அந்நாளில் நம் தமிழகத்தில் அஃது இல்லாமையே யாகும். 4.கத்தரிக்காய்:- இஃது அமெரிக்காவிலிருந்து மரக்கலத்தின் வழியாய் வங்களாத்திற்குக் கொண்டு வரப்பட்டுப் பிறகு தெலுங்கு நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் வந்தது. தெலுங்கில் இதனை வங்காய என்று வழங்குவர்; வங்காளத்திலிருந்து வந்தது என்பது இதன் பொருளாகும். 5. காப்பி :- இஃது அரபிமொழியாகும். இஃது அரேபியா விலிருந்து முதலில் பிரஞ்சு தேயத்திற்குக் கொண்டு போகப்பட்டது. அந்நாட்டினரும் இதனைப் பருகப்பழகினர். பின்னர், பிரஞ்சுதேய மக்கள் நம் தமிழ்நாட்டிற்கு வாணிகத்தின் பொருட்டு வந்தபோது அவர்களால் இது நம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. நம் நாட்டினரும் இதனைப்பருக நன்குபழகினர். வடநாட்டினர் இதனைப் பருக இன்னும் பழகாமைக்குக் காரணம் அவர்கள் பிரஞ்சு தேய மக்களோடு நெருங்கிப் பழகாமையே யாகும். நம் தமிழ் மக்கள் முன்னாளில் பிரஞ்சு தேயத்தாரோடு பெரிதும் நெருங்கிப்பழகியவர்கள் என்பதும் சிலகாலம் நம் தமிழ்நாடும் அன்னோர்களது ஆட்சியின் கீழ் இருந்ததென்பதும் இந்து தேயத்தின் பண்டை வரலாற்றை அறிந்தோர் யாவரும் நன்குணர்ந்தனவேயாம். ஆகவே, பிரஞ்சு மக்களிடத்திருந்தே நம் தமிழகத்தினர் காப்பியைப் பருகக் கற்றுக் கொண்டனர் என்க. 6. தேயிலை :- இது சீனதேயத்துப் பொருளாகும். இதனை அங்குத் தே என்று வழங்குவர். ஆங்கிலேயர் சீனர்களிடமிருந்து தேயிலை நீரைப் பருகக் கற்றுக்கொண்டனர். பின்னர், ஆங்கிலே யரிடத்திலிருந்து இதனைப் பருகுவதற்குத் தமிழ்மக்கள் கற்றனர். எனவே நம் தமிழ்நாட்டில் தேயிலையும் காப்பியும் பருகும் வழக்கம் நன்கு நிலைபெறுவதாயிற்று. ஆனால் வடநாட்டினர் தேயிலை நீரை மாத்திரம் பருகுதலை ஆங்கிலேயரிடமிருந்து பழகியுள்ளார். 7. உருளைக்கிழங்கு :- இஃது அமெரிக்காவில் முதலில் பயிரிடப் பட்டு வந்தது; 300 ஆண்டுகளுக்கு முன் இதனை ஐரோப்பாவிற்குக் கொண்டு வந்து பயிரிடத்தொடங்கினர்; நூறு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவிலிருந்து நம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. 8. புகையிலை :- இது முதலில் அமெரிக்காவில் பயிரிடப் பெற்று வந்தது. பிறகு அமெரிக்காவிலுள்ள வர்ஜீனியா என்னும் நாட்டிலிருந்து எலிசபெத் அரசியின் காலத்தில் கி.பி. 1586 ஆம் ஆண்டில் சர் வால்டர் ராலி என்பவனால் இங்கிலாந்திற்குக் கொண்டுவரப் பட்டது; இதனையுட் கொண்டால் பசியின்மை, மந்தம் முதலியவற்றைப் போக்கும் என்று அந்நாளில் ஆங்கிலேயர் பெரிதும் நம்பினர். ஆனால் இதன் விலை மிகுதி யாயிருந்தமையால் செல்வமிக்கவர்களே இதனை வாங்கி உபயோகித்து வந்தனர். பிறகு அமெரிக்காவில் இது பயிரிடப் படும் நாட்டை ஆங்கிலேயர் பிடித்துக் கொண்டு இதை மிகுதியாகப் பயிரிட்டு இங்கிலாந்திற்கு அனுப்பி வந்தமையால் இதன் விலையும் குறைந்தது. ஆங்கிலேயர் எல்லோரும் இதனை எளிதில் வாங்கி உபயோகிக்கத் தொடங்கினர். முதலாம் ஜேம் மன்னன் ஆட்சிக்காலத்தில் இதனை உபயோகிக்கும் தீயவழக்கம் இங்கிலாந்தில் எங்கும் பரவிற்று. அம்மன்னர் இதனைத்தடுக்கச் சட்டம் ஏற்படுத்தினன். ஆனால் இதனை உபயோகிக்கும் வழக்கம் ஒழியவில்லை. இதற்குக் காரணம் இது அந்நாட்டின் மக்களது மனத்தைப் பிணித்துத் தனக்குஅடிமையாக்கிக் கொண்டமையேயாம். உரோமாபுரியிலுள்ள போப் கோயில் களில் இதனை உபயோகிப்பவர்களைச் சாதியினின்று விலக்க வேண்டுமென்று ஒரு சட்டம் செய்தார். முதலாம் சார்ல வேந்தன் காலத்தில் (1625 கி.பி. - 1649 கி.பி.) உப்பு, கஞ்சா, அபின் முதலியவற்றைப் போல் இதன் வாணிகமும் அரசாங்கத்தாரின் பக்கத்தில் இருந்தது. பின்னர் இதனை மாத்திரம் விலக்கி விட்டனர். மூன்றாம் ஜார்ஜ் மன்னன் காலத்தில் (1760 - 1820) பொடியின் பெருமை மேனாட்டில் எங்கும் பரவலாயிற்று. ஆனால் இந்நாளில் பொடியைக் காட்டிலும் புகைச் சுருட்டை உபயோகித்தலே சிறந்த நாகரிகம் என்று மேனாட்டார் கருதுகின்றனர். இது அமெரிக்காவிலுள்ள பிரேசில் என்ற நாட்டிலிருந்து நம் நாட்டிற்குக் கி.பி. 1617 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. ஜிஹாங்கீர் சக்கரவர்த்திக்கு ஐரோப்பியன் ஒருவன் முதலில் இதனைப் பரிசிலாகக் கொணர்ந்து கொடுத்தனன் என்று கூறுகின்றனர். இப்போது இது நம்நாட்டில் எங்கும் பரவியுள்ளது.  இணைப்பு இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வெளிவந்த இதழ்கள், மலர்கள் பற்றிய விவரம் (அடிப்படை - கட்டுரைத் தலைப்பு அகரநிரல்) அகநானூற்றின் உரையாசிரியரது ஊர், செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 19 பரல் 7, 1941 - 42. அதிகமான் நெடுமானஞ்சி, செந்தமிழ்த்தொகுதி 12 பகுதி 9, 1914. அறந்தாங்கி அரசு, தமிழ்ப்பொழில் துணர் 16 மலர் 5, 1940-41. அன்பைப் பற்றிய பாடல்கள், செந்தமிழ்த் தொகுதி 14 பகுதி 3, 1916. இடவையும் இடைமருதும், செந்தமிழ்ச்செல்வி சிலம்பு 24 பரல் 3, 1949. இருபெரும் புலவர்கள், தமிழ்ப்பொழில் துணர் 34 மலர் 11, 1959. இளங்கோவடிகள் குறித்துள்ள பழைய சரிதங்கள், செந்தமிழ்ச் செல்வி தொகுதி 13 பகுதி 6, 1935. எனது ஆராய்ச்சியிற் கண்ட சில செய்திகள், தமிழ்ப் பொழில் துணர் 7, மலர் 12, 1931-32 & துணர் 12 மலர் 8. ஏர் என்னும் வைப்புத் தலம், செந்தமிழ்த் தொகுதி 41 பகுதி 6, 7, 8, 1944 ஒட்டக்கூத்தர், கலைக்களஞ்சியம் தொகுதி 2, 1955. ஓரி, தமிழ்ப் பொழில் துணர் 1 மலர் 10, 1925-26. கரந்தைத் தமிழ்ச் சங்கச் செப்பேடுகள், தமிழ்ப் பொழில் துணர் 33 மலர் 3. 1957. கல்லாடமும் அதன் காலமும், செந்தமிழ்த் தொகுதி 15 பகுதி 3, 1917. காளமேகப் புலவரது காலம், தமிழ்ப்பொழில் துணர் 7, மலர் 12. கிராமம், செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 28, 1953-54. கோவிந்தபுத்தூரிலுள்ள திருவிசயமங்கைக் கல்வெட்டுக்கள், தமிழ்ப்பொழில் துணர் 7, மலர் 7, 1931-32. சம்புவராய மன்னர், தமிழ்ப்பொழில் துணர் 2, மலர் 3,4 செருத்துணையாரும் புகழ்த்துணையாரும் அவதரித்த திருப்பதிகள், தமிழ்ப் பொழில் துணர் 12, மலர் 4, 1936-37, & துணர் 12 மலர் 5. சோழர்களும் தமிழ்மொழியும், தமிழ்ப் பொழில் துணர் 14, மலர் 7, 1938 - 39. சோழர் குடி, செந்தமிழ்த் தொகுதி - 13 பகுதி 5, 1915. சோழன் கரிகாலன் செந்தமிழ்த் தொகுதி 12 பகுதி 2, 1914 சோழன் செங்கணான், செந்தமிழ்த் தொகுதி 12 பகுதி 5, 1914. தமிழிசை வளர்ந்த வரலாறு, தமிழிசைச் சங்க மலர், 1948-49. தமிழ் இலக்கியச் சரிதச் சுருக்கம், பாரதி ஆறாவது தமிழ் எழுத்தாளர் மகாநாட்டு மலர், 1958. திருப்புறம்பயத்துக் கல்வெட்டுக்கள், தமிழ்ப்பொழில் துணர் 1 மலர் 4, 1925-26. திருவள்ளுவரும் ஞானவெட்டியும், செந்தமிழ்த் தொகுதி 14 பகுதி 4, 1916. திருவிளையாடற்புராணம் 64-வது படல ஆராய்ச்சி, செந்தமிழ்த் தொகுதி 12 பகுதி 7, 1914. துடிக்குறி, செந்தமிழ்த் தொகுதி 12 பகுதி 5, 1914. தொண்டைமான் சாசனம், செந்தமிழ்த் தொகுதி 12 பகுதி 11, 1914. பழைய காலத்திய இருபெருங் கிணறுகள், தமிழ்ப் பொழில் துணர் 8 மலர் 10, 1932-33. புறநாட்டுப் பொருள்கள், தமிழ்ப்பொழில் துணர் 4 மலர் 10,11, 12, 1928-29. பெருமிழலைக் குறும்ப நாயனாரது திருப்பதி, செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 8 பரல் 4, 1930. மழவர் வரலாறு,தமிழ்ப்பொழில் துணர் 1 மலர் 1, 1925-26 & துணர் 2, மலர் 1,2. முதற் கண்டராதித்த சோழ தேவர், செந்தமிழ்த் தொகுதி 21 பகுதி 8, 1923. வழுக்கி வீழினும், தமிழ்ப் பொழில் துணர் 33 மலர் 1, 1957. விரையாக்கலியும் விடேல் விடுகும், தமிழ்ப் பொழில் துணர் 10 மலர் 10, 1934-35. வீர சைவர்களின் தமிழ்த்தொண்டு, சிவஞான பாலய சுவாமிகள் மணிவிழா மலர், 1954. வேம்பையர்கோன் நாராயணன் இயற்றிய சிராமலை அந்தாதி, தமிழ்ப்பொழில் துணர் 11 மலர் 1, 1935-36.  தொல்காப்பியப் பொதுப் பாயிரம் மூலமும் உரையும் முகவுரை இப்பொதுப் பாயிரம் இயற்றியவர், ஆத்திரையர் பேராசிரியர் என்பார். இஃது ஆசிரியர் சிவஞான முனிவர் அருளிய தொல்காப்பியப் பாயிர விருத்தி யாலும், சங்கர நமச்சிவாயப் புலவர் அருளிய நன்னூல் விருத்தி யானும் இனி துணரப்படும்; அன்றியும் இச்செய்தி தொல்காப்பிய மரபியலுரையிலும் அவ்வுரைசிரியரால் குறிக்கப் பெற்றுள்ளது. இதுகாறும் ஆராய்ந்து கண்ட வளவில், தமிழ் நூற்களில் பேராசிரியர் எனக் குறிக்கப் பெற்றோர் மூவருளர். அவர்களுள் யாப்பருங்கல விருத்தியின் ஆசிரியராகிய குணசாகரனாரால், பிறை நெடுமுடிக் கறை மிடற்றரனார் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் எனவும், நீர் மலிந்த வார் சடையயோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர் எனவும், காமவேளைக் கறுத்த புத்தேள் நாமந்தங்கிய நல்லாசிரியர் எனவும், வடவேங்கடந் தென் குமரி என்னுஞ் சிறப்புப் பாயிரஞ் செய்தார் பனம்பாரனார் எனவும், வலம் புரிமுத்திற் குலம்புரி பிறப்பும். என்னும் பொதுப் பாயிரஞ்செய்தான் ஆத்திரையன் பேராசிரியன் எனவும் பாயிரம் செய்தார் பெயர் கூறியவாறு என்பது இவ்வுரைப் பகுதியில் சிறப்புப் பாயிரஞ் செய்தார் பனம்பாரனார் என இவ்வாசிரியரது இயற்பெயரோடு தலைமைச் சிறப்புணர்த்தும், ஆர் விகுதியும், புணர்த்திக் கூறியுள்ள இவ்வுரையாசிரியர், பொதுப் பாயிரஞ் செய்தாரைக் குறிக்குங்கால் அங்ஙனம் ஆர் விகுதி புணர்த்தாது பேராசிரியன் என்றே கூறியுள்ளனர். இதனை நுணுகி ஆராயின், இவ்வுரையாளர் தம்மையே அங்ஙனம் படர்க்கையில் வைத்துக் கூறியுள்ளனரோ வென்று கருதற்கிடந் தருகின்றது. அன்றியும், இப்பொதுப் பாயிரச்சூத்திரத்தையும் இதன் உரையையும் எழுதியவர் ஆத்திரையர் பேராசிரியர் என்று இவை எழுதப் பெற்றுள்ள ஏடுகளில் வரையப்பட்டிருக்கிறது. பொதுப் பாயிரச் சூத்திரத் திற்குத் தாம் உரை வரைந்துள்ள செய்தியைத் தொல்காப்பியத்திற்கு உரை கண்ட பேராசிரியர், மரபியலுரையில் குறித்துள்ளனர். இவற்றால் தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பேராசிரியரும், ஆத்திரையர் பேராசிரியரும் இருவர் அல்லர் என்பது இனிது பெறப்படு கின்றது. ஆகவே, இவ்விருவரும் ஒருவரே யாவர் என்பது தேற்றம். இனித் தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பேராசிரியரே, ஆசிரியர் தொல்காப்பியனார் மரபியலில் நூலிலக்கணம் கூறியுள்ளமையால், அதனை யொழித்து அவர் கூறாது விடுத்துள்ள ஈவோன் தன்மை, ஈதல் இயற்கை, கொள்வோன் தன்மை, கோடன் மரபு எனும் நான்கின் இலக்கணங்களையும் அறிவுறுத்துவான். இப்பொதுப் பாயிரச் சூத்திரத்தை உரையுடன் இயற்றிவைத் துள்ளனர் எனக் கோடலே பொருத்த முடைத்து. இனி, இவ்வுரையாசிரியர் எக்காலத்தே இத்தமிழகத்தில் வாழ்ந்தவர் என்பதை ஆராயலாம். தமிழ் நாவலர் சரிதையில் பேராசிரியர் நேமிநாதர் பட்டோலை பிடிக்க, ஒட்டக்கூத்தர் பாடியது என்ற தலைப்பின் கீழ் ஒரு பாடல் காணப்படுகிறது. இதனால் பேராசிரியரும் ஒட்டக்கூத்தரும் ஒரே காலத்தவர் என்பது பெறப்படுகின்றது. அன்றியும், பேராசிரியர் தொல் காப்பியச் செய்யுளியல் உரையில், மடலையும் உலாவையும் பற்றி வரைந்துள்ள குறிப்புக்கள், இவர், ஒட்டக் கூத்தர் காலத்தினராய் இருத்தல் வேண்டும் என்பதை விளக்குகின்றன. கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர், விக்கிரமசோழன், அவனது மகனாகிய இரண்டாங் குலோத்துங்க சோழன், அவனது மகனாகிய இரண்டாம் இராஜராஜ சோழன் இவர்கள் காலத்து வாழ்ந்தவர் என்பது, இவர், அம்மூன்று சோழ மன்னர் மீதும் மூன்று உலாக்கள் பாடி யுள்ளமையானே நன்கறியப்படுகின்றது. எனவே, இந்நல்லிசைப் புலவரது காலம், அம்மூவேந்தரது ஆட்சிக்காலமாகிய கி.பி. 1118க்கும் 1178க்கும் இடைப்பட்டதாதல் வேண்டும். இக்காலத்தேதான், தொல்காப்பியத்திற்கு உரை கண்டவரும், இப்பொதுப் பாயிரத்தை உரையுடன் இயற்றியவரு மாகிய நமது பேராசிரியர் வாழ்ந்தவராவர். ஆகவே, இவ்வாசிரியரது காலம், கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும். இவ்வாசிரியாது இயற்பெயர், ஊர் முதலியவற்றை அறிவிக்கும் கருவிகள், இதுகாறுங் கிடைத்தில வாதலின், அவற்றை அறிந்துகொள்ளக் கூடவில்லை! இப்பொதுப் பாயிர உரைப்பிரதி யொன்று, திருவாரூர் அரசாங்க உயர்தரக் கலாசாலையின் தமிழாசிரியரும் எனது நண்பருமான மணக்கால் திருவாளர் செ.முத்துரத்ந முதலியார் அவர்களிடமிருந்து சில ஆண்டுகட்கு முன்னர்க் கிடைத்தது. இதனோடு ஒப்புநோக்குவதற்கு வேறு பிரதி பெறமுயன்றும் கிடைக்கவில்லை. வேறு பிரதிக்காகக் காலந் தாழ்த்து வதிற்பயனில்லையென்றுணர்ந்து, கிடைத்த பிரதியை, இறவாதுகாத்தல் வேண்டி, இதனை ஒருவாறு ஆராய்ந்து வெளியிடத்துணிந்தேன். இதன் பெருமையை யுணர்ந்துள்ள நல்லறிஞர், எனது அறியாமையினால் இப்பதிப்பிற் காணக் கிடக்கும் குற்றங்களை எனக்கு அறிவிப்பதோடு, இதனை ஆராய்ந்து வெளியிடத் துணிந்த எனது தறுகண்மையைப் பொறுத்தருளவும் வேண்டுகிறேன். இவ்வுரைப் பிரதியை எனக்கு அன்புடன் உதவிய நண்பர் திரு.செ.முத்துரத்ந முதலியார் அவர்களையும் இப்பதிப்பின் செலவை அன்புடன் ஏற்றுக்கொண்டு, விரைவில் இதனை அச்சியிற்றி வெளிப் படுத்தியவரும் என்பால் பேரன்புடைய வருமாகிய திருப்புறம்பயம் திரு.சொ.சிவானந்தம் பிள்ளை அவர்களையும் என்றும் மறவேன். மக்களது நன்முயற்சிகட்குத் துணையாய் இருந்து அவற்றை இனிது முடிப்பித் தருளும் எல்லாம் வல்ல இறைவனது திருவடித்தாமரைகளை வாழ்த்தி வணங்குகின்றேன். - தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் தொல்காப்பியப் பொதுப் பாயிரம் மூலமும் உரையும் கடவுள் துணை வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும் வான்யா றன்ன தூய்மையும், வான்யாறு நிலம்படர்ந் தன்ன நலம்பட ரொழுக்கமுந், திங்க ளன்ன கல்வியுந், திங்களொடு ஞாயி றன்ன வாய்மையும், யாவது மஃகா வன்பும், வெஃகா வுள்ளமுந், துலைநா வன்ன சமநிலை யுளப்பட, வெண்வகை யுறுப்பின ராகித் திண்ணிதின் வேளாண் வாழ்க்கையுந், தாஅ ளாண்மையு, 10. முலகிய லறிதலு, நிலைஇய தோற்றமும், பொறையு நிறையும், பொச்சாப் பின்மையு மறிவு முருவு மாற்றலும் புகழுஞ் சொற்பொரு ளுணர்த்துஞ் சொல் வன்மையுங் கற்போர் நெஞ்சங் காமுறப் புனைதலு 15. மின்னோ ரன்ன தொன்னெறி மரபினர் பன்னருஞ் சிறப்பி னல்லா சிரிய ரறனே பொருளே யன்பெனு மூன்றின் றிறனறி பனுவல் செப்புங் காலை முன்னர்க் கூறிய வெண்வகை யுறுப்பினு 20. ளேற்பன வுடைய ராகிப் பாற்படச் சொல்லிய பொருண்மை சொல்லியாங் குணர்தலுஞ் சொல்லிய வகையொடு சூழ்ந்துநன் கறிதலுந் தன்னோ ரன்னோர்க்குத் தான்பயன் படுதலுஞ் செய்ந்நன்றி யறிதலுந் தீச்சார் வின்மையு 25 .மடிதடு மாற்ற மானம்பொச் சாப்புக் கடுநோய் சீற்றங் களவே காம மென்றிவை யின்மையுங் சென்றுவழி படுதலு மறந்துரை வழாமையுங் குறிப்பறிந் தொழுகலுங் கேட்டவை நினைத்தலும் பாடம் போற்றலு 30. மீட்டவை வினவலும் விடுத்தலு முடைத்தலு முடைய ராகி நடையறிந் தொழுகு நன்மா ணாக்க ரென்ப மண்மிசைத் 33. தொன்னூற் பரவைத் துணிபுணர்ந் தோரே என்றது பொதுப் பாயிரம். உரை:எந்நூலுரைப்பினும் அந்நூற்குப் பாயிரமுரைக்க வென்பது மரபாகலிற். பாயிரமுரைத்தே, நூலுரைக்கப்படும். என்னை? ஆயிர முகத்தானகன்ற தாயினும் - பாயிர மில்லது பனுவலன்றே என்பதாகலின், பொதுப் பாயிரமென்ற வதனானே, சிறப்புப் பாயிரமும் பெற்றாம். அவை அவ்வந் நூல்களிற் கண்டு கொள்ளப்படும். இப்பொதுப் பாயிரம் என்னுதலிற்றோ வெனின், ஈவோன்றன்மையு மீதலியற்கையுங் கொள்வோன்றன்மையுங் கோடன் மரபுங் கூறுதனு தலிற்று. என்னை? ஈவோன்றன்மை ஈதலியற்கை கொள்வோன்றன்மை கோடன் மரபென - வீரிரண் டென்ப பொதுவின் றொகையே என்றா ராகலின். அங்ஙனம் பொதுவுஞ் சிறப்பு மென்றிருவகைப்பட்டது பாயிர மென்றார்க்குப் பாயிர மென்ற பொருண்மை என்னையெனின், பாயிரம், புறவுரை, முகவுரை, தந்துரை, அணிந்துரை, பதிகம், நூன்முகம், புனைந் துரை (என்பன) ஒரு பொருட்கிளவி; இவையெல்லாம் காரணப் பெயர்; அப் பாயிரந்தான், நூலோ வேறோவெனின், நூலின் வேறெனப்படும். அஃதேயெனின் கேட்பான் புகுந்தோன் நூல்கேளானாய்ப் புறவுரை கேட்கப் பயந்த தென்னை யெனின், பாயிரங் கேட்டார்க் கன்றி நூல் கேட்கலாகாது; என்னை? நூல் கேட்கப் படுமாசிரியனையும் நூல் சொல்லு முறைமை யினையும் அறிந்து, தாம் நூல் கேட்கப்படுவோராதலு முணராது நூல் கேட்பவே யெனிற், கல்லார் பக்கங் காலமுமிடனுமறியாது எல்லாரு மவ்வாற்றான் நூல் கேட்கத் தொடங்குவார். ஆகவே பயந்தவைப் படாது பலராலு மெள்ளப்படு மென்பது; அதனா லீவோன் றன்மையும் ஈதலியற்கையுங் கொள்வோன் றன்மையுங் கோடன் மரபும் உணர்ந்தே, நூல் கேட்கவேண்டு மென்பது; அல்ல தூஉம் நூல், உலகத்தினின்று நிலவல் வேண்டில், ஆசிரியரும் மாணாக்கருமாகியொருவ ரொருவர்க் குரைத்து நடைகாட்டல் வேண்டும். ஆகவே, அவ்வாசிரியருரையு மாணாக்கருரையு மின்னராகல் வேண்டுமெனவும், அவ்வாறு கற்பிக்கவும் இவ்வாறு கேட்கவும் வேண்டுமெனவுங் கூறுதல், எந்நூற்கு முபகாரமுடைத்து, அதனானும் பாயிரம் கூறல் வேண்டுமென்பது; மற்றுச் சிறப்புப் பாயிரம் எற்றுக்கோ வெனின், அதனது பயனுமாண்டே கூறுதும், அவ்விரு வகைப் பாயிரமும் மாடத்தினை யூடு காண்பார்க்கு வாயின் மாடம் போல நூலின் வேறாயு நூலுணர்வார்க் கின்றியமையாவாயின வென்பது; மற்றுப் பொதுப் பாயிரம் என்ற பொருண்மை யென்னை எனின், தன்னால் உரைக்கப்படு நூற்குச்சிறந்த தெனப்படா தெல்லா நூற்கும் பொதுவாகத் தந்துரைக்கப் படுவ தென்றவாறு. வலம்புரிமுத்திற் குலம்புரி பிறப்பும் என்பது, இலங்கு நீர்ப் பரப்பின் வளையை மீதிக் கூறிய வலம்புரி பயந்த நித்திலம் போலச் சிறப்புடைய மரபிற் பிறப்பும் என்றவாறு. எனவே, ஆசிரியரெனப் படுவார், இவ்வாறு குடிப்பிறந்தராதல் வேண்டும் என்பது கருத்து. இனிக் கூறுவனவும் அவர்க்குக் இன்றியமையாதன. என்னை? வான்யாறன்ன தூய்மையும் என்பது, நிலத்திய லாற்றிரியாத நீர் போலுந் தூய்மையு மென்றவாறு, வான்யாறு நிலம் படர்ந்தன்ன நலம்படரொழுக்கமும் என்பது, ஆகாயத்துக் கங்கை யொத்த வகலிடத் தோர்க்குத் தீர்த்தமாகி யிடையறா தொழுகியாங் கொருவகையா னென்று மொழுகு மொழுக்கமு மென்ற வாறு. திங்களன்ன கல்வியு மென்பது, திங்கள் போல வழிமுறை வளர்ந்து நிரம்பிய கல்வியு மென்றவாறு. திங்களோடு ஞாயிறன்ன வாய்மையு மென்பது, எழுச்சியுந் தாழ்ச்சியு மென்றும் பொய்யாத திங்களு ஞாயிறும் போலத் திரிவுபடாத வாய்மையு மென்றவாறு. யாவதுமஃகாவன்பு மென்பது, எவ்விடத்துஞ் சிறைப்படாத வன்பு மென்றவாறு. அஃதாவது எல்லார் மாட்டும் அழுக்காறின்றி நிகழுமுள்ள நிகழ்ச்சி. வெஃகாவுள்ளமு மென்பது, அவாவின்மையு மென்றவாறு. துலைநாவன்ன சமநிலையுளப்பட வென்பது துலாக் கோலது நாப்போல, நட்டார் மாட்டும் பகைவர் மாட்டும் ஒப்ப நிற்கு நடுவு நிலைமைப்பட வென்றவாறு. எண்வகை யுறுப்பினராகி யென்பது, இச்சொல்லப்பட்ட வெண்வகை யுறுப்பு முடையராகி யென்றவாறு. மற்றும் நல்லாசிரியர் குணமின்னுங் கூறுவன வுளவன்றே. இவ்வெட்டி னையுந் துணிந்த தென்னையெனின், இவற்றைப் புறத்திணை யியலுள் அவைக்குரிய மாந்தர்க்குச் சிறப் புறுப்பாக வோதினா ராசிரியர் தொல்காப்பியனார் (சூத்திரம் 75). அஃது நோக்கி இவற்றை வேறு துணிந்தார். இனிக் கற்பிக்குமாசிரியர்க் கின்றி யமையாதன குணம் பிறவு முளவாகலி னவையும் வேறு கூறுகின்றாரென்பது. வேளாண் வாழ்க்கையு மென்பது. விருந் தோம் பற்றொடக்கத்தில் வாழ்க்கையு மென்றவாறு, இது சொல்லிய காரண மாணாக்கற்கோ ரிடுக்கண் வந்தஞான்று மவனைப் பாதுகாப்பது மாசிரியர்க்குக் கடனென்றவாறு. தாஅளாண்மையு மென்பது, மாணாக்கரை மிடியின்றிக் கற்பித்தலு மென்றவாறு. உலகியலறிதலுமென்பது, சாதித் தருமமேயன்றி யுலகத் தருமமு மறிந்து உலகத்தோ டொட்ட வொழுகும் ஒழுக்கமு மென்றவாறு. அதனது பயன் மாணாக்கர்க்கு நூலுரைக்குங் காற் கோள்கணீங்கிய நிறைமதி யேய் பக்கத்து நாளுமோரையு நல்லன தெரிந்து துளங்கா வுள்ளமொடு கடவுள் வாழ்த்திக் கொள்வோனுணர் வகையறிந்து கொடுத்தற் றொடக்கத்தன வுடையனாதல் வேண்டு மென்றவாறு. நிலைஇய தோற்றமுமென்பது, கடலுமலையும் போலப் பிறரால் அளத்தற் கரியனாகி எல்லாப் பொருளுந் தன்னகத் தடக்கி நிற்றலு மென்றவாறு. பொறை யென்பது, மலையு நிலனும் போலப் பொறுக்க வல்லனாகையு மென்றவாறு. நிறையு மென்பது, மறை புலப்படாமை நிறுக்கு முள்ளமு மென்றவாறு. பொச்சாப்பின்மையு மென்பது, அற்றப்படாத செறி வுடைமையு மென்றவாறு. அறிவு மென்பது, நன்றாயினும் தீதாயினு மொன்றினையுள்ள வகையா னுணர்வதல்லது, நல்லதனைத் தீதாகவுந் தீயதனை நன்றாகவுங் கொள்ளாது, செவ்வனுணர்தலு மென்றவாறு. உருவு மென்பது, அவர்போலக் காண்பார்க் கினிதாகிய தோற்றமு மென்றவாறு. ஆற்றலுமென்பது, எவ்விடத்துந் துளங்காது கேட்போர்க்குப் பயன்படுதலு மென்றவாறு. புகழு மென்பது, மணி போல வின்னா னென்றுல கறியப் படு மொளியுடைமையு மென்றவாறு. சொற்பொருளுணர்த்துஞ் சொல்வன்மையு மென்பது, தன்னா லுணர்த்தப்படும் பொருள் மாணாக்கருக் கினிதுணருமாறு சொல்லும் வன்மையு மென்றவாறு. எனவே, குண்டிகை பருத்திப் போலச் சொல்ல நினைந்த பொருள் சொல்ல மாட்டாதானு, மடற்பனை போல விடர்ப்படச் சொல்லுவானுங், கழற் குடம் போலத் தனக்குள்ள தெல்லா மொருகாலே சொல்லி மாணாக்கன் மனங்கொள்ளாமை மயங்கக் கூறுவானுமல்ல னென்றவாறு. கற்போர் நெஞ்சங் காமுறப் புனைதலு மென்பது, முடத் தெங்குபோல யான் வழிபடப் பிறர்க்குரைத்தா னென்றானும், யான் வழிபாடு பிழைத்தற்குக் கேடு சூழ்ந்தா னென்றானு நினையாமன் மாணாக்க ரன்பு செய்யப்படுதலு மென்றவாறு. இன்னோரன்ன தொன்னெறி மரபின ரென்பது, இங்ஙன மோதியன போலுந் தொன்னெறியினைத் தமக் கிலக்கணமாக வுடைய ரென்றவாறு. பல பெருஞ் சிறப்பி னல்லாசிரிய ரென்பது, நல்லாசிரிய ரல்லாதாரு முளர். கற்பிக்கப்படாதாரென்றது பெற்றாம். கற்கப்படுமாசிரியர் நால்வரெனவும், அவர்தாம், மலை நிலம்பூ துலாக்கோல்; கழற்குடம், மடற்பனை, முடத்தெங்கு,குண்டிகைப் பருத்தியெனுமிவற்றோ டொப்ப ரெனவுங் காட்டி இலக்கணங் கூறுவாரு முளர். அவருள், கற்கப்படாதார் ஆசிரிய ரெனப்படார். என்னன? அவர் நூற்குபகாரப் படாமையி னென்பது, கற்கப்படாத மாணாக்கரு மவ்வாறே ஆராயப்படாரென்பது. இனிக் கற்கப் படுமாசிரியரும் இந்நால்வகையான் வரையறுக்கப்பட்டார். என்னை? எட்டுவகை நுதலிய வவையகத் தானுமென் றோதினமை யானு மற்றவர்க் கின்றியமையாக் குணம் பலவாகலானுமென்பது. இனிக் கற்பிக்கப்படு மாணாக்கரு மவ்வாறே வரையறை யின்மையின், இத்துணைப் பகுதியரென வரை யறுக்கப்படா ரென்பது கொள்க என்றாராகலின், ஈவோன் றன்மை யென்புழி ஒருமை கூறியவாறு போல, வீண்டு மொருமை கூற வமைவதனைப் பல்பெருஞ் சிறப்பினல்லாசிரிய ரெனச் சிறப்பித்துப் பன்மை கூறிய தென்னை யெனின், ஓதப்பட்ட விலக்கண முழுது முடை யாரைத் தலையாயினா ரெனவும் நல்லாசிரியர் மூவகைப்படுவ ரென்றற்குப் பல்பெருஞ் சிறப்பினல்லாசிரியர் ரென்பது கொள்வோன் றன்மை யென்றற் போல வாராதோ வெனின், வொருமை கூறவமைவதனை மாணாக்கரெனச் சிறப்பித்துப் பன்மை கூறுபவாகலான் அவர்க்கு மவ்வாறே தலை, யிடை, கடையென மூன்று பகுதியுங் கொள்க. அறனே பொருளே யன்பெனு மூன்றி னென்பது, அவ்வாசிரி யராற் கற்பிக்கப்படுவா ரித்துணைப் பகுதிய ரென்றவாறு. திறனறி பனுவல் செப்புங் காலை யென்பது, இம்மூன்றுங் காரணமாக வொருவர்க் கறிவு தோன்ற நூலுணர்த்து காலை யென்ற வாறு. அதனுதலிச் சொல்லப்படுவோ ராசான் மகனுந் தன்மகனும் வழிபடுவோர் முதலாயினாரும்; என்னை? அறனென்ப தொழுக்க மாதலின்; பொருள் கருதிச்சொல்லப் படுவார், அரசன் மகன் முதலாக யாவராயினும்பொருள் கொடுப்போ ரென்றவாறு,அன்பு கருதிச் சொல்லப்படுவோர் உரைகோளாளருந் தமரி லுறுப்பொத்த மாக்களுமென வித் தொடக்கத்தார்; இனி யவர திலக்கணங் கூறுகின்றவாறு. முன்னர்க் கூறிய வெண்வகை யுறுப்பினு ளேற்பவை யுடையராகி யென்பது, முன்னராசிரியர்க் கோதப்பட்ட வெண்வகை யுறுப்பினுட் கல்வியு நடுவு நிலைமையும் போல்வன சில வொழிந்தன வெல்லா முடையாராகல் வேண்டு மாணாக்கர்க்காசிரியர் திறனறி பனுவல் செய்யுங்காலை யென்றவாறு. இன்னு மாணாக்கர்க் குரியனவே சொல்லுகின்றார். பாற்படச் சொல்லிய பொருளைச் சொல்லியாங் குணர்தலு மென்பது, பூவையுங் கிளியும் போல வாசிரியன் சொன்ன வகையானே யிது பொருளெனக் கொண்டுணர்தலு மென்றவாறு. இவ்வாசிரியனே, நன்றுந் தீதுந் தெரிந்துணர்த்தப்படார். சொல்லிய வகையொடு சூழ்ந்து நன்கறிதலு மென்பது, ஆசிரியனிவ் விரண்டு மிச் சூத்திரத்திற் குரையென்று ணர்த்தியக் கால், நன்று தீதென் றாய்ந்து நன்றறிதலு மென்றவாறு. எனவே அன்னமும் பன்னாடையும் போலக் குற்றமுங் குணனும் வேறுபடுக்கவல்லா னென்றவாறு. தன்னே ரன்னோர்க்குத் தான் பயன்படுதலு மென்பது, தன்னோ டொருசாலை மாணாக்கருக்குத் தானொரு பயன் படுதலு மென்றவாறு. அஃதாவது இனங் காக்கும் யானை போல வெல்லார்க்கும் நன்னெறி காட்டலும், பெருமிதப்படுந் துகடீர்க்குமாறு போல விடர்ப்பட்ட பொருள் வயினுணர்வும் அடுத்தினிது செலுத்தலும் வல்லா னென்றவாறு. செய்ந் நன்றியறிதலு மென்பது, ஆசிரியனாற் பெற்ற தனைக் குரங்கெறி விளங்காய் போலக் கொள்ளா திவனாற் பெற்ற திதுவென்று கடைப்பிடித்தலு மென்றவாறு. தீச்சார் வின்மையு மென்பது, கற்கத் தொடங்கிய நூல் கிடப்ப மற்றொன்றின் மேன் மனம் வையாமையு மென்றவாறு. எனவே, எருமையுந் தோணியும் போனின்று பயன் கொள்வுழிக் குன்றுவ செய்யமையும், நின்றுழி நில்லாமற் பிறரான் வேறிடத் துய்க்கப்படாமையு மென்றவாறு. மடிதடுமாற்ற மானம் பொச்சாப்புக் கடுநோய் சீற்றங் களவே காம மென்றிவை யின்மையு மென்பது, இவ்வெட்டு மில்லாமையு மென்ற வாறு. மடியென்பது, கூற்றின்மை, தடுமாற்ற மென்பது, நூற்கற்குங்காற் சிதைய வெல்லா நூலுள்ளுஞ் சிறிது தொடங்கித் தடுமாறுதல்; மானமென்பது, ஆசிரியர்க்குக் குற்றேவன் முதலான வற்றுக் கண் மானங்கோடல், பொச்சாப் பென்பது, ஆசிரியனையும் நூலையுந் தெய்வம் போல் மதித்திருப்பச் செய்யா திகழ்ந்திருத்தல். இவையுங் கல்விக் கிடையூறாகிய பெரும் பிணியுஞ் சினமுங் களவுங் காமமு மென்றிவை யில்லாதாயும் என்றவாறு. அறத்துறை வழாமையு மென்பது, அங்ஙனம் வழிபடுங்கால் தன்னிலைமைக்கும் ஆசிரிய னிலைமைக்குந் தக்கவாற்றான் வழிபடுதலு மென்றவாறு. குறிப்பறிந்த தொழுகலு மென்பது, ஆசிரியன் சொல்லாது குறித்தனவாயின வெவையு மவன் குறிப்பறிந்து செய்தலு மென்றவாறு. கேட்டவை நினைத்தலும் பாடம் போற்றலு மீட்டவை வினாதலும், விடுத்தலு முரைத்தலு முடையராகி என்பது. கேட்ட பொருளைப் பின்னும் மாராய்தலும் பாதுகாத்தலும், மறித்துப் பிறரை வினாதலும் வினாவுவார்க்கு விடை கூறுதலும் பிறர்க்குரைக்கு மியல்பு முடையாராகி யென்றவாறு. நடையறிந்தொழுகு நன்மாணாக்கரென்ப சொல்லப் பட்ட விலக்கணங்களொடு வழக்கறிவு நன்மாணாக்கர் மூவகைப் படுவரென்று சொல்லுவாராசிரிய ரென்றவாறு. மண்மிசைத் தொன்னூற் பரவைத் துணிபுணர்ந் தோரே என்பது, உலகத்துப் பழைய நூற்பரப்புக்களிற் றுணிந்து பொளுணர்ந்து துறை போகுவரென்றவாறு. ஈவோன்றன்மையும் ஈதலியற்கையுங் கொள்வோன்றன்மையுங் கோடன்மரபு மென நான்கு மிப்பொதுப் பாயிரத்துள்ளே கண்டு கொள்க. ஒழிந்தன வுளவாயினு முரையிற் கொள்க. பொதுப் பாயிரம் முற்றும்  இவர்களைச் சூரியவம்சத்தினர் என்று கூறும் தமிழ்நூல் வழக்கிற்கு முரணாய் அக்கினி வம்சத்தினரென்றும் வன்னியரென்றும் தக்க பிரமாணங்களின்றி ஒரு சாரார் சொல்லியும் எழுதியும் வருகின்றனர்; அன்னோர் கூற்றும் பொருந்தாதென்க. முறஞ்செவி வாரணமுன் சமமுருக்கிய புறஞ்சிறை வாரணம் என்பது சிலப்பதிகாரம் (பக். 247 - 248) சீகாழி இந்நூல் கடைச்சங்கமருவிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திருமங்கையாழ்வார் பெரியதிருமொழி ஆறாம் பத்து 6-ஆவ அம்பரம் 6-வது பாசுரம். திருமங்கையாழ்வார் பெரியதிருமொழி ஆறாம் பத்து 6-வது அம்பரம் 5-வது பாசுரம். திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி ஆறாம் பத்து 6-வது அம்பரம் 3-வது பாசுரம். திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி ஆறாம் பத்து, ஆறாவது அம்பரம் 4-ஆவது பாசுரம். திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி ஆறாம் பத்து, ஆறாவது அம்பரம்,9-ஆவது பாசுரம். திருமங்கையாழ்வார் பெரியதிருமொழி ஆறாம் பத்து,ஆறாவது அம்பரம், 8-ஆவது பாசுரம் பெரியபுராணம் கோச்செங்கட்சோழநாயனார் புராணம், 14ஆம் பாசுரம் இவன் வழித்தோன்றல்களே பிற்காலங்களில் மழவராயன் என்னும் பெயர் புனைந்த சிற்றரசர் களாகவும், மந்திரிகளாகவும், சோழசக்கரவர்த்திகளின் கீழ்த் தென்னாடுகளில் இருந்து வந்தனரென்று தெரிகிறது. தற்காலத்திலும் இப்பெயர் புனைந்தோர் சிலர் தஞ்சை திருச்சிமுதலிய ஜில்லாக்களில் வசிக்கின்றனர். இவர்களெல்லாம் மேலே சொல்லப் பட்டவர்களின் வம்சத்தினர்களென்ற புராதனசரித்திர ஆராய்ச்சி செய்யும் அறிஞர் பலரும் கருதுகிறார்கள். அதிகமான் வீரமுங் கொடையும் பற்றிப் பரணராற் புகழ்ந்து பாடப்பட்டுள்ளான் என்பது கீழ்க்குறித்த அகநானூற்றுச்செய்யுட்களால் விளங்கும். .beLbe¿¡F திரைக்கூர் வேலஞ்சி கடுமுனையலைத்த கொடு விலாடவராகொள் பூசலிற்பாடு சிறந்தெரியும் பெருந்தொடி (அகம். 372) வாய்மொழி நல்லிசைபிழைப்பறியக் கழறொடியதியன் (அகம். 162) அவர்களது நாடுகளையும் கைப்பற்றிக் கொண்டனன் என்பர் புறநானூற்றுரையாசிரியர். அகநானூறு 1, 35, 91, 101, 119, 121, 127, 129, 131, 187, 251, 269, 309, 337 புறநானூறு. 90 பதிற்றுப்பத்து 21, 55, 60 - பதிகம். ஏரணம் உருவம் போகம்இசைகணக் கிரதஞ் சாலம் தாரண மரமே சந்தந் தம்பநீர்நிலம் உலோகம் ஆரணம் பொருளென் றின்ன மானநூல் பலவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள. தொல் - பொருளதிகாரம், அகத்திணையியல், சூத் - 25. கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம் (அகம். 61) அகநானூற்றின் முற்பகுதியிலுள்ள சில பாடல்களுக்குக் குறிப்புரை எழுதியுள்ள பண்டையாசிரியர் மழபுலம் என்பதற்கு மழநாடு என்று பொருள் எழுதியுள்ளார். கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டாவன :- தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண், பூழி, பன்றி, அருவா, அருவாவடதலை, சீதம், மலாடு, புனனாடு. தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் சூத்திரம் - 1. சோழநாட்டில் பல உண்ணாடுகள்உளவென்பதை அடியிற் குறித்துள்ளவற்றால் அறிக. அகன்பாணைநீர் நன்னாட்டு மேற்காநாட்டாதனூர் பெரியபுராணம். திருநாளைப்போவார். 1 தள்ளும் பொன்னி நீர்நாட்டு மருகநாட்டுத் தஞ்சாவூர் பெ.பு.செருத்துணையார். 1. நீதிவழுவா நெறியினராய் நிலவுங் குடியானெடுநிலத்து மீதுவிளங்குந் தொன்மையது மிழலைநாட்டுப் பெருமிழலை பெ.பு. பெருமிழலைக்குறும்பர் - 1. செழுந்தளிரின் புடைமறைந்த பெடைகளிப்பத் தேமாவின் கொழுந்துணர் கோதிக்கொண்டு குயினாடு கோனாடு பெ.பு.இடங்கழியார் -1. திருத்தொண்டர் திருவந்தாதி - 15. பெரியபுராணம் திருஞானசம்பந்தநாயனார் புராணம் 310. 2-3 மேற்படி ஆனாயநாயனார் புராணம். 1, 7. இத்திருப்பதி இப்போது கோவிந்தபுத்தூர் என்ற பெயருடன் கொள்ளிடத்தின் வட கரையில் திருப்புறம்பயத்திற்கு வடமேற்கில் இரண்டுமைல் தூரத்தில் இருக்கிறது. மழவர் மெய்ம்மறை என்று சேரனைப்புகழும் பதிற்றுப் பத்து அடிகளால் மழநாடு சேர நாட்டின் உட்பிரிவுகளிலும் ஒன்றாயிருந்ததென்பது புலனாகின்றது. மழவர்பெருமானாகிய அதிகமான் நெடுமானஞ்சியினது தலைநகராகிய தகடூரும் அவனது குதிரை மலையும் அக்குடியிற்றோன்றிய குறுநிலமன்னனாகிய வல்வில்லோரியினது கொல்லிக் கூற்றமும் சேரநாட்டின் கீழ்ப்பகுதியிலுள்ளமை எமது கொள்கையையே வலியுறுத்துகின்றது. அன்றியும், பூவிரியும் பொழிற்சோலைக்காவிரியைக் கடந்திட்டழ கமைந்த வார்சிலையின் மழகொங்கமடிப்படுத்தும் என்ற வேள்விக்குடிச் செப்பேட்டிற்கண்ட அடிகளால் கொங்குநாட்டின் ஒரு பகுதியும் மழவர்க்குரித்தா யிருந்ததென்பது வெளியாகின்றது. தொல் பொருள் அகத்திணையியல் 30 - ஆம் சூத்திரம் உரை. பறம்பு நாடு பிற்காலத்தில் திருமலை நாடு என்று வழங்கப் பெற்று வந்தது என்பது சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. செந்தமிழ் 12-ஆம் தொகுதி. 441-ஆம் பக்கத்தில் நான் வெளியிட்டுள்ள தொண்டைமான் சாசனம் பார்க்க. The piranmalai Inscription of Ponnamolanatha - EPi.ind. Vol. xxi, No.3 Ins. 19. இவன் கடைச்சங்கநாளில் கச்சிநகரத்திருந்து ஆட்சிபுரிந்து தொண்டைமான் இளந்திரையன் வழித்தோன்றினோனாவன். இப்பகுதியினர் சோழர் வழித்தோன்றி நாடாட்சி தனியேயளிக்கப் பெற்றோராவர். இதனை நன்கு விளக்கக்கூடிய பழஞ்சரித மொன்றுளது. அதாவது நாகப்பட்டினத்துச் சோழனொருவன் நாகலோகஞ் சென்று ஓர் நாககன்னியைப்புணர, அவள் யான் பெற்ற புதல்வனை என்செய்வே னென்றபோது தொண்டைக் கொடியை யடையாளமாகக்கட்டிக் கடலில்விட (டு) அவன் வந்து கரையேறின் அவனுக்கு யான் அரசுரிமையும் நாடாட்சியும் நல்குவேனென்று அச்சோழன் கூற அவளும் தன் புதல்வனை அங்ஙனம் வரவிட, அவனைத் திரை கொணர்ந்தமையால் அவனும் அவன் வழித் தோன்றினோரும் திரையன் திரையர் எனப் பெயர் பெற்றதோடு அவன் வழியினரெல்லாம் தொண்டைமேசூடிப் போந்தகாரணத் தால் தொண்டை மான்கள் எனவும் வழங்கப்பட்டரென்பதேயாம். இவ்விஷயம் மேற்கூறிய தொண்டைமான் இளந்திரையன்மீது கடியலூருத்திரங்கண்ணனார் பாடியுள்ள பெரும்பாணாற்றுப் படையானும் அதற்கு நச்சினார்க்கினியர் கூறிய வுரையானும் நன்கு தெளியப்படும். இனி, தொண்டைமான்கள் ஆட்சி புரிந்த நாடும் தொண்டைநாடென வழங்கப் பெற்றது போலும். இச்சாசனத்தில் சொல்லப்படும் அருணாசல வணங்காமுடித் தொண்டைமானது வம்சத்தினர், தஞ்சை ஜில்லா பட்டுக்கோட்டைத்தாலூகாவில், இக்காலத்துமிருக்கிறதாகச் சிலர் கூறுகின்றனர். மெய்கீர்த்தி என்பது பேரரசனுடைய மெய்ப் புகழையும் வரலாற்றையும் சிறப்புப் பெயர்களோடு இயற் பெயரையும் மாதேவியரின் பெருமையையும் ஆட்சியாண்டையும் கூறும் பல அடிகளாலமைந்த ஒரு செய்யுள் ஆகும். இது பெரும்பான்மை அகவலோசையும் சிறுபான்மை கலியோசையுங் கொண்டமைந்தது. தமிழ்வளம் நிறைந்த இம்மெய்க்கீர்த்திகள் எல்லாம் அவ்வவ் வேந்தர்களின் அவைக்களப் புலவர்கள் பாடியனவேயாம். இப்பாடலில் ஏகார நெட்டெழுத்திற்குப் பிறகு யகரமெய் வந்திருத்தல் ஆராய்தற்குரியது. Epigraphia Indica Volume XVIII No. 14 இவ்விடத்தில் நெல்லையுணர்த்தும் குறியுள்ளது. குறிப்பு :- இக்கல்வெட்டிற் காணப்படும் வடமொழி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களாக மாற்றி வரையப்பெற்றுள்ளன. பெரியபுராணம், ஆனாயநாயனார் புராணம் - 7. பெரியபுராணம், ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 1 பெரியபுராணம், அரிவாள்தாய நாயனார் புரணம் - 1. South Indian Inscriptions Vol II Part III PP.331 Travancore Archaeological Series Vol. I. Pages 92 & 110. South Indian Inscriptions. Vol. II. Ins. No.1. ஒரு வணிகனுக்குத் திருஞானசம்பந்த சுவாமிகளால் திருமருகலில் விடந் தீர்க்கப் பெற்று மணஞ் செய்விக்கப் பெற்ற வரலாற்றில் வரும் வைப்பூர் இதுவேயாகும். (பெரியபுராணம், திருஞானசம்பந்த மூர்த்திகள் புராணம், பா.480) புண்ணியர்கள் புகழ் ஆழகார் திருப்புத் தூர்வாழ் புகழ்த்துணையார். (அகத்தடிமைப் புனிதர்சின்னாள் மண்ணிகழ மழைபொழியா வற்காலத்தால் வருந்துடலம் நடுங்கிடவு (மணிநீரேந்தி அண்ணல் முடி பொழிகலசம் முடிமேல்வீழ அயர்ந்தொருநாள் (புலம்பவான் அருளாவீந்த நண்ணலரும் ஒருகாசுப்படியால் வாழ்ந்து நலமலிசீர் அமருலகம் (நண்ணீனாரே திருந்தொண்டர் புராணசாரம். பா. 61. (S.I.I. Vol. II. Nos. 17, 18 and 70 Journal of Sir Venkateswara Oriental Institute. Vol. IV. page 165 Inscripti No. 690 of 1950 S.I.I. Vol. II. Page 331. Ibid. p. 466 SII Vol. V. No. 7. 10. Ibid No. 706 Ibid Vol. II. No. 4. Archaeological Survey of India, Annual Report 1905-06. 182 - 3. Epigraphia Indica. Vol. VII. p. 261. வன்னிமரமுமடைப்பளியுங் சான்றாக முன்னிறுத்திக்காட்டிய மொய்குழலாள் சிலப்பதிகாரம் 21-வது வஞ்சினமாலை 5,6. இப்புராணம் இன்னும் அச்சிட்டு வெளிவரவில்லை. விரிந்தனைகுவிந்தனை விழுங்குயிருமிழ்ந்தனை திருஞான சம்பந்த சுவாமிகள் திருப்புறம்பயப்பதிகம் 3-வது பாசுரம். மருத்தயில்பாப்புக்காப்புவள்ளலைமனத்துவைத்துத் தருக்கமார் காழிவேந்தர் சடையெனும் யாப்பெடுத்து விரைத்திருமருகறன்னில் வெவ்விடந்தீர்த்ததன்றித் திருப்புறம்பயத்தலத்திற்றீர்த்தனர் திருக்கண் சாத்தி. வேம்பத்தூரார் திருவிளையாடற் புராணம் 62-வது படலம் 39-வது செய்யுள். பரஞ்சோதியார் திருவிளையாடல் 64-வது படலம் 24 முதல் 32 வரை. கருணையாலிரங்கிக்கரும்படு சொல்லி கண்ணுதற்கடவுளை நோக்கித் தருணமானனையாள் கணவனையிழந்து தவிப்பது கண்டுளஞ்சகியேன் வருணமார்வணிகனா ருயிர்மீளவழங்கிட வேண்டுமென்றிரப்ப முரணிலாவிடங்கள் தீர்ப்பவன், போலமுதல்வனு மாங்குவந்தடைந்தான். திருப்புறம்பயபுராணம் 6வது சருக்கம் 35வது செய்யுள். உருத்தவெவ்விடத்தை நீக்கலும் வணிகனுறங்கினன் போல்விழித் தெழுந்தான் பெருத்தபூண்டு முலையாண் மங்கலநாணும் பெற்றனள் பெரியமாலிமையோர் கரத் தனென்றிரப்பக்கடுவிடமுண்டு கமலமான் முதலியமடவார். திருத்துமங்கலநாணீந்தவனிந்தச்சில் விடந்தீர்ப்பது மரிதோ. மேற்படி மேற்படி மேற்படி. 36. கசிந்தவெம்பிரான்றன்னுருவெளிப்படக்காட்டி வசந்தகுத்தன் மாமகடனைவணிகனை மகிழ்ந்தே விசைந்தநல்லியாழ்க்காந்தருவத்தினர்விவாக மிசைந்துகாதலித்திருவருமணத்திரென்றிசைத்தான். மேற்படி மேற்படி 39. கடைச்சங்கம் நற்பாட்டுப்புலவனாய்ச் சங்கமேறிநற் கனகக்கிழி தருமிக்கருளினேன் காண் திருநாவுக்கரசு சுவாமிகள் திருப்புத்தூர்ப்பதிகம் 3-ம் செய்யுள். Cf. Tamilian Antiquary No.3 பழையதிருவிளையாடலியற்றியருளிய நம்பியார் கூற்றும் பொருந்தவில்லை யென்பது ஈண்டுக் கவனிக்கத்தக்கது. மறம்பயமலைந்துவர்மதிற்பரிசுறுத்தனை நிறம்பசுமைசெம்மையொடிசைந்துன துநீர்மைத் திறம்பயனுறும்பொருள் தெரிந்து ணருநால்வர்க் கறம்பயனுரைத்தனை புறம்பயமமர்ந்தோய். திருஞானசம்பந்தர் - திருப்புறம்பயப்பதிகம் - 1வது பாசுரம். ஈண்டு புறம்பயமதனிலறம்பலவருளியும் என்னும் ஸ்ரீமத் - மாணிக்க வாசகசுவாமிகள் அருமைத் திருவாக்கை நோக்குக. விரிந்தனைகுவிந்தனைவிழுங்குயிருமிழ்ந்தனை திரிந்தனை குருந்தொசி பெருந்தகையுநீயும் பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகுமயானம் புரிந்தனைமகிழ்ந்தனை புறம்பயமமர்ந்தோய். திருஞானசம்பந்தர் - திருப்புறம்பயப்பதிகம் - 3வது பாசுரம். திருவிளையாடற்புராணம் 64 வது படலம் 31. 2. அன்னதன்மையின் மதுரையிற்போந்து நின்னருளாற் பின்னர்நன் மணம்புரிகுது மென்றதும் பெரியோன் வன்னிவன்னிசேர்மடைப்பளிமலிபுனற்கூறு மின்னநம்வடிவிவையெலாங்கரியெனவெண்ணி. திருப்புறம்பயபுராணம் 6வது சருக்கம் 41. புதுமணந்தனையாழினோர் தன்மையிற்புணர்வீர் முதியபுன்மொழிகிளையினோர் மொழிந்திடுநாளின் மதுரையம்பகுதியிவையுடன் கூடயாம்வந்தே வுதவிச்சாக்கியங்குணர்த்துவதுண்மை யென்றுரைத்தார். மேற்படி மேற்படி 42. வஞ்சினமாலை - 5, 6. திருவிளையாடற்புராணம் 64-வது படலம்.2 பற்பலவைகல்கழிந்த பின்னெவரும் பழிச்சிடும் பூம்புகார் வசியன் பொற்புளநாகமங்கையர் தாழப்பூதல மடந்தையர்பரவ வற்புதவானத்தரம்பையர் நாணவழகொருவடிவெடுத்தனைய கற்பகம்படர்ந்தகாமர்பூங்கொடியிற் கன்னியையரிதினிற் பயந்தான். மேற்படி மேற்படி 19. சிலப்பதிகாரம் வஞ்சினமாலை 5 முதல் 36 வரை. (அடிகள்) Travancore Archaeological Series No. VI. p.p. 26 பெருநூல்களாயிரத்தைந் நூறிந்நூல் முன்னமேயான் பாடிவிட்டேனாயிரத்து முந்நூறு முடித்துவைத்தேன் குறளதுவாயுல கோர்க்காண்டே (ஞானவெட்டி 1737.) *1. இது, கரந்தைத்தமிழ்ச் சங்கத்தின் நான்காவதாண்டு நிறைவுவிழாவில் சிதம்பரம் மகா - ரா ஸ ஸ்ரீ திவான்பஹதூர் சா.இரா.மு. இராமசாமிச் செட்டியார் அவர்கள் அக்கிராசனத்தின் கீழ் நடைபெற்ற சபையிற் படிக்கப்பட்டது. சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்து மென்சிந்தையுள்ளுமுறைவானுயர்மதிற்கூடலினாய்ந்தவொண்டீந்தமிழின்றுறைவாய்நுழைந்தனையோவன்றியேழிசைச்சூழல்புக்கோவிறைவாதடவரைத்தோட்கென்கொலாம்புகுந்தெய்தியதோ.....v‹Dª திருக்கோவை யாரிற் காணப்படும் இச்செய்யுளில் மணிவாசகப்பெருமான் கூடன்மாநகரிšநிலவிaகடைச்சங்கத்தை¡குறித்திருக்கின்றனர். முந்தியசங்கங் களிரண்டும்கடலாற்கொள்ளப்பட்டதென்மதுரையகத்தும்கபாடபுரத்தும்விளங்கியமையால்,கூடலில்ஒண்டீந் தமிழாய்ந்தசங்கம்கடைச்சங்கமாகத்தா Åருத்தல்nவண்டும்.m‹¿í« ஆŒந்தtண்டீந்தமிழ் எ‹னுஞ்rற்றொடரினால்சுtமிகள்கhலத்துஅ¢சங்கம்நiடபெறவில்லைaன்பதும்ந‹குவிளங்கும்.நி‰f, காலஞ்சென்ற திருவனந்தபுரம் ப்ரொபெஸர் சுந்தரம்பிள்ளை அவர்கள் கூன்பாண்டியனும் திருஞான சம்பந்த சுவாமிகளும் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் விளங்கியவர் களென்று நிரூபணஞ் செய்துள்ளனர். இக்கூன் பாண்டியற்குப் பத்துத்தலைமுறைகட்கு முன்னிருந்த அரிமர்த்தன பாண்டியனே நம் மாணிக்கவாசக சுவாமிகளை மந்திரியாகக் கொண்டவனென்பது திருவிளையாடற் புராணத்தா லறியப்படுகிறது. தலைமுறை ஒன்றிற்குச் சராசரி ஆட்சிக்காலம் 25 வருடமாக 10தலைமுறைகட்குச் சென்றது 250வருடங்களாம். இவ்விரு நூற்றைம்பதைக் கூன்பாண்டியன் காலமாகிய அறுநூற்றுமுப்பதில் கழிக்க எஞ்சியது முந்நூற்றெண்பதாம். இதனால், மாணிக்கவாசக சுவாமிகளும் அரிமர்த்தன பாண்டியனும் கி.பி. நான்காம் நூற்றாண்டினிறுதியில் விளங்கியவர்களென்பது புலப்படுதல் கண்டுகொள்க. கொங்குதேர்வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ்செப்பாது கண்டது மொழிமோ பயிலியதுகெழீ இய நட்பின்மயிலியற் செறியெயிற்றரிவை கூந்தலி னறியவுமுளவோ நீயறியும்பூவே. -குறுந்தொகை இந்நூலுடையார், கூடல்நாயகன் களவியல் அருளியவரலாற்றைக் கூறுமிடங்களில், மாறனும்புலவரு மயங்குறுகாலை - அன்பினைந்திணையென் றறுபது சூத்திரந் -தெளிதரக்கொடுத்த னரென்றும், ஐந்திணைவழுவாதகப் பொருளமுதினைக் குறுமுனி தேறவும் பெறுமுதற்புதல்வர்க - ளேழெழுபெயருங் கோதறப் பருகவும் - எடுத்துப்பரப்பினரென்றும் உரைக்கின்றனர். அன்றியும் திருக்குறட்கு அப்பெருமான் சிறப்புக்கவியருளியதைக் குறிக்குங்கால், வள்ளுவன் றனக்குவளர்க விப்புலவர் முன் - முதற்கவிபாடிய ருளினரென்றும் கூறுகின்றனர். இவற்றால் இவ்வாசிரியர் கடைச்சங்கப்புலவருள் ஒருவரல்ல ரென்பது நன்கு தெளியப்படும். எங்ஙனமெனில், இவர் கடைச் சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின்மருள் ஒருவராயிருப்பின், மாறனும் புலவருமயங்குறு காலை யென்னாது, எம்முன் என்றுங் கூறல்வேண்டும். இவர், அங்ஙனங் கூறாமையின், கடைச்சங்கப்புலவருள் ஒருவரல்லரென்பது இனிதுணரப்படும். திருவனந்தபுரம் ஸ்ரீமான் சேஷையரவர்கள் தாம் எழுதியுள்ள மாணிக்கவாசகர் காலம் என்னு மாங்கிலநூலில், பொய்யடிமை யில்லாதபுலவர் என்னுஞ் சொற்றொடர் மாணிக்க வாசக சுவாமிகளையே குறிக்குமென்றும், நம்பியாண்டார் தமது திருத் தொண்டர் திருவந்தாதியிற் கூறியுள்ளபடி கடைச்சங்கப் புலவர் களைக் குறியாதென்றும் எழுதியிருக் கின்றனர். அதற்கு அவர்கள் கூறுங்காரணம் கடைச்சங்கத்தில் ஜைனர், பௌத்தர் முதலிய புறப்புறச்சமயிகளுமிருந்தமையால், அப்புலவர்கட்கு நம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வணக்கம் கூறியிருக்கமாட்டார்களென்பதே. இஃதுண்மையே. ஆனால் நக்கீரர், கபிலர்: பரணர்முதலிய சிவாநுபூதிச் செல்வர்களும் அச்சங்கத்து வீற்றிருந்தமை யால், அப்புலவர்களையே, பொய்யடிமையில்லாத புலவர் என்று நம்சுவாமிகள் கூறியுள்ளதாகக் கோடற்குத் தடையென்னை? இங்ஙனங்கொள்ளாது, அச்சொற்றொடர் மாணிக்கவாசகப் பெருமானையே குறிக்குமெனக்கூறின், தொகையடியார் ஒன்பதின்மரென்னும் வழக்கொழித்து எண்மரெனவும், தனியடியார் அறுபத்துமூவ ரென்னும் வழக்கொழித்து அறுபத்துநால்வரெனவுங் கொள்ள வேண்டும். இது முன்னோர்கொள்கைக்கு முற்றிலும் முரணாகின்றது. இனி, நம்பியாண்டார், மணிவாசகப் பெருமானையும், அவர்களருளிய நூலினருமையையும் நன்கறிந்துள்ளா ரென்பது. “ tUthrf¤âÅ‹K‰Wz®ªnjhidt©ošiyk‹id¤ âUthjñ®¢átgh¤âa‹ brŒâU¢á‰w«gy¥ bghUsh®jUâU¡nfhitf©nlk‰w¥bghUis¤ bjUshjîŸs¤jt®fÉgho¢áÇ¥ã¥gnu.”* என்னுஞ் செய்யுளால் இனிதுவிளங்கும். பொய்யடிமை யில்லாதபுலவர் என்னுஞ் சொற்றொடர் மாணிக்கவாசகரைக் குறிக்குமாயின், அப்பெருமானை நன்கறிந்துள்ள நம்பியாண்டார் தமது திருவந்தாதியில், அங்ஙனங்கூறிச் செல்லலாம்; அவர் அங்ஙனங்கூறாமையின், அச்சொற்றொடர் அப்பெரியாரையே குறிக்கு மென்றுரைத்தல் சிறிதும் பொருத்தமுடைத்தன்று. அன்றியும் சுந்தரமூர்த்திகட்கு மிகச் சமீபகாலத்து விளங்கிய நம்பியாண்டார் காலத்து அச்சொற்றொடர் சங்கப்புலவர்களைக்குறித்து வழங்கி வந்தமையால், அப்பெரியார் தமது திருவந்தாதியில் அங்ஙனங்கூறினாரென்க. ஆகவே, நம்மையரவர்கள் கூற்றுச் சிறிதும் பொருந்தாதென்க. (கோயிற்றிருப்பண்ணியர் விருத்தம் 58.) இந்திரன் கலையாய் என்மருங்கிருந்தான் என்பது இந்திரனுக்கு ஆயிரங்கண்களாதலின் நான் கட்டியிருக்குந் துணி ஆயிரம் பீறல்களையுடையது என்றதாம். அக்கினியுதரம் விட்டகலான் என்பது வயிற்றில் பசி நீங்காதென்றதாம். வருணன் இருகண் விட்டகலான் என்பது கண்கள் எப்பொழுதும் அழுது நீரோடிக் கொண்டிருக்கும் என்றதாம். அநிலமாம் அரியே அமுதமாய் வருவன் என்பது வயிற்றுக்குணவு வாயுவே என்றதாம். இப்பாட்டில் இந்திரன் முதலான அட்டதிக்குப் பாலகர் பெயரும். வரிசையாய் வந்தமை காண்க. S.I.I. Vol. II No. 23, Page 118. இவ்வடி அலகிட முடியாமலிருக்கின்றது: சிராமலை என்பது சிரபுரம் என்றிருப்பின் பொருந்தும். திருக்கோவையார், பா. 20. நளவெண்பா, சுயம்வர கா, பா. 137. இவ் வெண்பாவின் உண்மைப் பொருளைச் செந்தமிழ் ஏழாந் தொகுதியிற் காணலாம். Inscription No. 130 of 1910. S.I.I.Vol II. No. 65. Ibid, Vol. V. No. 705. வடவாற்றின் தென்கரையிலமைந்த வம்புலாஞ்சோலை என்ற திருக்கோயில், பிற்காலத்தில் நாயக்கர் ஆட்சியில் வெண்ணாற்றின் தென் கரையில் இடம்பெற்றுவிட்டது. குறிப்பு : கும்பகோணம் டவுன் ஹைகூலில் தலைமைத் தமிழாசிரியராயிருந்தவர்களும் என்னுடைய ஆசிரியருமாகிய காலஞ்சென்ற திரு. அ. பாலசுப்பிரமணிய பிள்ளை அவர்கள் கூறியதே இவ்வரலாறாகும். பின்வரும் மகப்பேறு பற்றிய வரலாறு செவிவழிச் செய்தி கொண்டு எழுதப்பட்டது. இப்பரணி விக்கிரம சோழன் தென் கலிங்கத்தை வென்றமை பற்றி ஒட்டக்கூத்தரால் பாடப் பெற்றது. *** (Page 549) Inscriptions of the Pudukottai State No. 57, 70 and 90. Travancore Archacological Series Vol. III No. 27. ** (South Indian Inscriptions Vol. III No. 128) தமிழ் வரலாறு (திரு. ராவ்பகதூர் நி.வு. சீனிவாசபிள்ளை) பிற்பாகம். பக்கம். 4 தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை - பக்கம். 219. செந்தமிழ்த்தொகுதி 33 பக்கம் 63. தமிழ்ப பொழில் துணர் மூன்றில் யான் எழுதியுள்ள சுந்தரமூர்த்தி களது காலம் என்ற கட்டுரையைப் பார்க்க. Inscription No. 117 of 1925