தமிழக வரலாற்று வரிசை – 7 களப்பிரர் காலத் தமிழக வரலாறு ஆசிரியர்கள் இரா. பன்னீர் செல்வம், மயிலை சீனி வேங்கடசாமி, மு. அருணாசலம், நடன. காசிநாதன் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 15, தெற்கு போக் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017 தொ.பேசி: 24339030 நூற் குறிப்பு நூற்பெயர் : தமிழக வரலாற்று வரிசை - 7 களப்பிரர் காலத் தமிழக வரலாறு ஆசிரியர் : இரா. பன்னீர் செல்வம், மயிலை சீனி வேங்கடசாமி, மு. அருணாசலம், நடன. காசிநாதன் பதிப்பாளர் : இ. வளர்மதி முதற்பதிப்பு : 2008 தாள் : 18.6 கி. வெள்ளை மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 12 புள்ளி பக்கம் : 24 + 328 = 352 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 220 /- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : செல்வி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் “பெரியார் குடில்” பி-11, குல்மோகர் குடியிருப்பு, 15, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017 களப்பிரர் காலத் தமிழக வரலாறு (கி.பி.300-600) நம் நாட்டு வரலாற்றிலும் சரி, பிறநாட்டு வரலாறு களிலும் சரி, சில நிலப்பகுதிகளின் சில கால வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்து ஓரளவுக்காகவது தெளிவாக விரிவாகக் கூறவதற்கான சான்றுகள் கூடக் கிடைப்பதில்லை. அக்காலங்களைச் சிலர் இருண்ட காலங்கள் என்பர். சில எடுத்துக்காட்டுகள் வருமாறு: i. கி.மு.1700 க்குப் பின் சிந்துவெளித் தொல் தமிழ நாகரிகம் ஏன் முற்றிலும் அழிந்தது? எப்படி? ii. சீனாவில் சௌ பரம்பரையினர் ஆண்ட கி.மு. 900-300 காலத்தில் சிற்றரசர் மிகப்பலர் ஆண்டனர். ஆனால் விவரங்கள் தெரியவில்லை. iii. வடஅமெரிக்காவில் மெக்சிகோவில் கி.பி. 3-9 நூற்றாண்டுகளில் சிறந்து விளங்கிய மயா நாகரிகம் அதன்பின் அடியோடு அழிவுற்றமை தமிழகவரலாற்றில் கி.பி. 300- 600 காலத்தையும் அத்தகைய இருண்ட காலமாகப் பலரும் கருதுகின்றனர். 2. களப்பிரர் காலத் தமிழக வரலாற்றைப் பற்றி விரிவான நூல்எழுதியுள்ளவர்கள் இரா.பன்னீர் செல்வம் (1973); மயிலை சீனி வேங்கடசாமி (1975); மு.அருணாசலம் (1979); நடனகாசிநாதன் (1981) ஆகியோர் ஆவர். பிறர் எழுதியுள்ள சிறிய கட்டுரைகள் பல; வேறு பொருள் நுதலிய பல வரலாற்று நூல்களிலும் களப்பிரர் கால நிகழ்ச்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளன; அவற்றின் விவரங்களையெல்லாம் இந் நான்கு நூல்களிற் காணலாம். மூன்று நூல்கள் அப்படியே அச்சிடப்பட்டுள்ளன. அருணாசலத்தின் ஆங்கில நூலுக்கு தமிழ்ச் சுருக்கம் தரப்பட்டுள்ளது. 3. சங்க இலக்கியங்கள் குறித்துள்ள பாண்டிய சோழ சேர மன்னருள் மிகப் பிற்பட்டவர்கள் காலம் கி.பி. 250 - 300 அளவில் முடிவுற்றது. பிற்காலப் பாண்டியர் ஆட்சி கி.பி.560- 590 முதல் ஆண்ட கடுங்கோன் காலம் முதல் தொடங்கியது. பிற்காலச் சோழர் ஆட்சி விசயாலயன் (கி.பி.848 - 881) முதல் தொடங்கியது. பல்லவ, பாண்டிய மன்னர்கள் ஆளுகையில் சோழநாடுகி.பி. 848வரைத் தொடர்ந்ததால் தான் சோழ பரம்பரை கி.பி. 600 லிருந்தே பாண்டியரைப் போல மீண்டும் உயிர் பெற இயலவில்லை. 4. கன்னட நாட்டவராகிய சிரவணபௌகொள வட்டாரத்து களிப்பு நாட்டுக் களப்பிரர் (=களப்பாளர்) ஏறத்தாழ கி.பி. 250ல் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர் தமிழகத்தைக் கைப்பற்றி பாண்டிய சோழ சேர நாடுகளை கி.பி. 575 வரை ஆண்டனர் என்பர் ம.சீ. வெங்கடசாமி. க.அ. நீலகண்ட சாத்திரி, ந. சுப்பிரமணியன் ஆகியோரும் இக்கருத்தினரே. அவர்கள் கன்னடர் என்பதற்குச் சான்றுகள் வருமாறு. ‘கானக் கடிசூழ்வடுகக் கருநாடர் மன்னன்’ - திருத்தொண்டர் புராணம் - மூர்த்தி நாயனார் புராணம். “மதுரை வவ்விய கருநடர் வேந்தன்” -கல்லாடம் 5. கி.பி. 574 ஐ ஒட்டி களப்பிரரிமிடருந்து பாண்டிய நாட்டைப் பாண்டியன் கடுங்கோன் மீண்டும் கைப்பற்றினான். “ அளவரிய ஆதிராஜரை அகலநீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னுங் கலி அரைசன் கைக்கொண்டதனை இறக்கியபின் ................. கடுங்கோனென்னுங் கதிர்வேற்றென்னன்” - பராந்தக நெடுஞ்சடையன் (கி.பி 756-815) உடைய வேள்விக்குடி செப்பேடு. “களப்பாழரைக் களைகட்ட மற்றிரண்டோள் மாக்கடுங் கோன்” - பராந்தக வீரநாராயணன் (860-905) தளவாய்புரம் செப்பேடு. தங்களைக் களப்பிரர் தோற்கடித்த வெறுப்பில் பாண்டியர் அன்னாரைக் கலியரைசர் (தீய அரசர்) என இக்கல்வெட்டில் பழித்தனர் போலும்; மேலும் களப்பிரருக்கு சமண - புத்தர்களோடு இருந்த தொடர்புகளைத் தமிழக வரலாற்றாசிரியர் மிகைப்படுத்திக்கூறு கின்றனர். எனவே தான் களப்பிரர் “தீய அரசர்” ஆக்கப்பட்டுவிட்டனர் என்பார் பர்டன் ஸ்டெய்ன்.சமணமத உந்துதலால் தான் பண்டைத் தமிழ். வேந்தரைக் களப்பிரர் வென்றனர்; பிராமணிய நிறுவனங்களுக்கு இக்கட்டு ஏற்பட்டது என்று நீலகண்ட சாத்திரி கூறுவதற்கும் ஆதாரம் இல்லை என்பர் ஸ்டெய்ன். ‘All the King’s Mana: perspectives on medieval South India’ July 1974 Seminar paper published in J.F. Richard ( King Ship and authority in South Asia University of Wisconsin; Madison 1978/81). கி.பி. 575 ஐ ஒட்டி களப்பிரரிடமிருந்து சோழ நாட்டை பல்லவ சிம்மவிஷ்ணு கைப்பற்றிக் கொண்டான். 6. பிற்காலத்தில் முத்தரையர் என்று வழங்கிய குறுநிலமன்னரும் களப்பிரரும் பொதுவான ஒரு குடியிலிருந்து பிரிந்து வளர்ந்தவர் என்பார் நடன. காசிநாதன் (1976 “முத்தரையர்”) 7. மேலே 4 ஆம் பத்தியிற் கண்டதற்கு மாறாக, களப்பிரர் தமிழரே என்று கருதியவர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், மு. இராகவையங்கார், பி.டி. சீனிவாச ஐயங்கார், க.ப. அறவாணன் முதலியோர் ஆவர். கருநாடகத்தில் சிரவண பௌகுள பகுதியிலிருந்து தமிழகம் புகுந்த வந்தேறிகளே களப்பிரர் என்பது கே.ஆர். வெங்கடராமன் (1956-57 Journal of Indian History XXXIV Part II பன்னீர் செல்வம், வேங்கடசாமி, நடன காசிநாதன், அருணாசலம் போன்றோர் கருத்தாகும். பின்னவர்கள் கருத்தே இதுவரைக் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்ததாகத் தோன்றுகிறது என்பதை இந்நூற்றொகுப்பைப் படிப்பவர்கள் உணர்வர். 8. பி.ஜி.எல். சுவாமி 1976 ‘Kalabhra Interregnum’ a retropect and prospect Bulletin of the Institute of Traditional cultures; Madras (pages 81 - 148) கருத்து “களப்பிரர் படையெடுப்பு” என்பது கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் (கன்னடிய) கங்க அரசர்களுடைய ஒருபடை திண்டுக்கல்லுக்கும் மதுரைக்கும் இடைப்பட்டதான பாண்டிய நாட்டின் ஒரு சிறு நிலப்பகுதியைக் கைப்பற்றி ஒரு சில ஆண்டுகள் ஆண்டதைக் குறிப்பதுதான் என்ப தாகும்! களப்பிரர் சமயம் 9. களப்பிரர் சமயம் பெரும்பாலும் சமணம்; சோழ நாட்டைக் கைப்பற்றியவர்கள் மட்டும் பௌத்தம் என வேங்கடசாமியும் அருணாசலமும் காட்டும் ஆதாரங்கள் மறுக்கக் கூடியவையாகத் தோன்றவில்லை. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் - குறிப்பாக முன்னவர் - சமண பௌத்த சமயங்களைத் தம் தேவாரப் பதிகங்களில் கடுமையான வசவு மொழிகளால் தாக்குவதும், சமணரைக் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் கழுவேற்றிய செய்திகளை சேக்கிழாரும் பிறரும் சாதனையாக மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதும் முக்கியமான ஆதாரமாகும். களப்பிரர் காலத்தில் தமிழ் இலக்கியம், கலைகள் 10. களப்பிரர் தாய்மொழி கன்னடம். (அவர்கள் காலத்தில் சமணமும் பௌத்தமும் அரசின் ஆதரவுடன் வளர்ந்திருக்க வேண்டும்.) எனவே கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இவ்விரு சமயங்களை ஒழிக்க ஞான சம்பந்தர், நாவுக்கரசர் போன்றோர் பல கொடுமைகளைச் செய்ய வேண்டியதாயிற்று. எனினும் தமிழ்மொழி இலக்கியத் துறைகளில் களப்பிரர்களால் பெருமளவுக்கு பாதிப்பு இருந்திருக்காது என்பர் வேங்கடசாமி பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுக்கு அவர் தரும் காலவரையறை வருமாறு : திருக்குறள், களவழி நாற்பது, கி.பி.250க்கு முற்பட்ட முதுமொழிக் காஞ்சி சங்ககால நூல்கள் நாலடியார் - கி.பி. 7 ம் நூற்றாண்டு ஏனைய 14 நூல்களும் - கி.பி. 3- 6 நூற்றாண்டுகள் களப்பிரர் ஆட்சியில் சமண, புத்த சமயங்கள் சிறப் படைந்திருந்தன. எனவே கி.பி. 600க்குப் பின்னர் சைவ வைணவ சமயங்கள் தழைத்த பொழுது களப்பிரர் காலத்திய சமண, புத்த சமயம் சார்ந்த தமிழ்கள் பல அழிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பர் வேங்கடசாமி. திருஞான சம்பந்தர் சமணருடன் நிகழ்த்திய அனல்வாத, புனல்வாதச் செய்திகள் இதைக் குறிப்பனவேயென்க. 11. மாறாகக் களப்பிரர் காலத்தில் தமிழ் மொழியும் இலக்கியமும் தாக்குண்டன; பின்னர் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் சைவ சமயத்தின் கை ஓங்கிய பின்னரே தமிழ் பழைய நிலையைப் பெற்றது என்பது அருணாசலத்தின் நிலை ஆகும். அவருக்கு முன்னர் இது பற்றிய எழுதிய சதாசிவ பண்டாரத்தார், ஒளவை துரைசாமிப்பிள்ளை போன்றவர்கள் கருத்தும் இதுவே. பொதுவாக வரலாறு பற்றிய அறிஞர்களின் கருத்துக்களை -கீழே 14 - 15 பத்திகள் காண்பவர்களுக்கு இவ்விரு வகையினரின் முரண்பட்ட நிலை வியப்பைத் தராது. இசை, நாடகம் முதலியன வாழ்ந்தன வளர்ந்தன என்பார் வேங்கடசாமி; வீழ்ந்தன என்பார் அருணாசலம்! 12. இவ்விடத்தில் பின்வரும் கருத்துகளை நினைவு கூறலாம் சார்லஸ் ஈ கோவர் : தென்னிந்திய நாட்டார் பாடல்கள் (The Folk songs of Southern India) 1871 : திட்டமிட்டு சிதைக்கப்படாத அல்லது மாற்றி யெழுதப்படாத தொல்பழங்காலத் தமிழ். நூல் எதையும் இன்று காண்பது அரிது. தமிழ் மக்கள் - திராவிட (பழந்தமிழ்) இலக்கியத்தைக் கைவிட்டு புராணக்கதைகளை நம்பினால்தான் தங்களுக்குப் பிழைப்பு உண்டு என்று உணர்ந்தவர்களே இவ்வாறு பழந்தமிழ் இலக்கியத்தைச் சிதைத்தவர்கள் ஆவர். (தனித்) தமிழ்ச் செய்யுள் நூல்கள் பல மதிப்பிழந்து ஒழியும்படி அவர்கள் செய்தனர். அறவே ஒழிக்க முடியாத நேர்வுகளில் அந்நூல்களை அயோக்கியத்தனமாக சிதைத்து உருமாற்றி உலவவிட்டு மூலநூலின் கருத்தை உணர முடியாதவாறு செய்து விட்டனர். ஹயூநெவில் : தி தப்ரொபேனியன் ( The Taprobanian) சூன் 1896 “மதுரைத் தமிழ்ச் சங்கமும் அதன் நூலகமும் அழிக்கப்பட்ட பொழுது பழந்தமிழ் நூல்கள் சகட்டுமேனிக்கு அழிக்கப்பட்டன. (அவற்றுள் சமணக் கொள்கை வாடை இருக்கலாம் என்ற கருத்தில்). ஈழத்தில் மகாவம்சம் இருந்தது போல் பாண்டியர்கள் வரலாற்றைக் கூறும் ஒரு நூல் மதுரைச் சங்க நூல்களில் ஒன்றாக இருந்து அழிக்கப் பட்டு அதற்குப் பதிலாக திருவிளையாடற் புராணம் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். அழிக்கப்பட்ட வரலாற்று நூலின் சிதைவுகளுடன், ஐங்கமர்கள் (பார்ப்பனிய சிவ மதத்தவர்கள்) எண்ணம், சமயம் ஆகியவற்றுக்குப் பொருத்தமான புனைகதைகளுடன் பின்னிப் பிணைந்து அப்புராணம் உருவாக்கப்பட்டது.” மு.ரா. பெருமாள் முதலியார் “ஏட்டளவில் நின்று விட்ட குறள் நெறி” கட்டுரையில் (செந்தமிழ்ச் செல்வி 59:5 சனவரி 1985; பக் 130-4) கூறும் கருத்து பொருள் பொதிந்ததாகவே உள்ளது. “பார்ப்பனர் தமது மேம்பாட்டை இழந்தனர் என்பதால் தான் அக்காலத்தை இருண்டகாலம் என்று சொல்கின்றவர். திருக்குறளும் சிலப்பதிகாரமும் எழுதப்பட்ட காலம் இருண்ட காலமாய் இருக்க முடியுமா?” 13. வேங்கடசாமி நூலின் இணைப்பு “இ. இறையனார் அகப்பொருள் - வரலாற்று ஆய்வு” என்னும் பகுதியில் கண்ட கருத்து பொருத்தமாகவே தோன்றுகிறது. 14. பர்டன் ஸ்டெய்ன் தமது 1978 ஆய்வுக்கட்டுரையில் கூறும் மற்றொரு கருத்தும் முக்கியமானது:- களப்பிரர் ஆதிக்கம் முடிந்தவுடன் தமிழ்நாட்டில் சமணமதத்தின் கதை முடிந்து விட்டது போல தமிழ்நாட்டினரான வரலாற்றாசிரியர் சுளுவாகக் கருதிவிடுகின்றனர், மகேந்திரவர்மன், பாண்டிய வேந்தன் ஆகிய பெருமன்னர் மதமாக இருந்த அதனை அவ்வளவு சீக்கிரமாக ஒழித்துக் கட்டியிருக்க முடியாது; அரசவைகளில் செல்வாக்கு போய்விட்டாலும் வேறு பல துறைகளிலும் (பண்பாடு இலக்கியம் உட்பட) தமிழ்நாட்டில் சமணச் செல்வாக்கு மேலும் சில நூற்றாண்டுகள் வலுவாக இருந்திருக்கவேண்டும். ஆந்திர, கருநாடகப் பகுதிகளில் அச்செல்வாக்கு மேலும் சிலநூற்றாண்டுகள் நீடித்தது; என்பார் அவர். இறுதியாக வரலாறு பற்றிய அறிஞருலகத்தின் கருத்தை இந்நூலிற் படிப்போர் பார்வைக்குக்கொண்டு வர இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறோம். வரலாறு சில பொதுக் கருத்துக்கள்: 15. இறுதியாக, வரலாறு பற்றிய அறிஞருலகத்தின் கருத்தை இந்நூலைப் படிப்போர் பார்வைக்குக் கொண்டு வர இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறோம். வரலாறு என்பது என்ன? முற்காலத்தில் என்ன நடந்திருக்கலாம் என்பதைப் பற்றி பிந்தைய தலைமுறையைச் சார்ந்த மாந்தன் ஒருவன் தனது மனத்தில் உருவாக்கித் கொள்ளும் எண்ணமே அது. எழுதுபவனுடைய அறிவுநிலை. மனநிலை, அவனுடைய சமுதாயப் பார்வை, அவனுக்குத் கிட்டும் ஆதாரங்கள் ஆகியவற்றுக்கேற்பவே ஒரு காலத்தைப் பற்றி அல்லது ஒரு பொருளைப்பற்றி ஒருவன் வரலாறு எழுதுகிறான். எனவே ஒவ்வொரு காலம், பொருள் பற்றி பல்வேறு வரலாறுகள் இருக்கக் கூடியனவே. வரலாற்றாசிரியன் பட்டறிவு, பற்பல விஷயங்களைப் பற்றிய அவனுடைய கண்ணோட்டம் ஆகியவற்றால் உருவான அவனுடைய மனம் தான் அவன் எப்படி வரலாற்றை எழுதுகிறான் என்பதை நிர்ணயிக்கிறது. விருப்பு வெறுப்பற்ற வரலாற்றாசிரியன் முயற்கொம்பு தான். எனவே எந்த வரலாற்று நூலும் முழுமையான அப்பட்டமான உண்மையைக் கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் நிர்ணயித்து விட்டதாக எண்ணிவிடக் கூடாது. வரலாற்றாசிரியன் அல்லது அவனைப் பயன்படுத்துபவர்கள் உள்ளத்தில் வெளிப்படையாகவோ (அல்லது அவர்களுக்கே தெரியாமல் ஆழ்மனத்திலோ) உள்ள குறிக்கோள்களுடன்தான் வரலாறு எழுதப்படுகிறது. அக்குறிக் கோள்கள் பிற இனங்களை, குழுக்களைக் கட்டுப்படுத்துதலும் வசப்படுத்துதலும்; சமுதாயத்திற்கு இலக்கு களைக் காட்டி ஊக்குவித்தல்; குழுக்கள், வர்க்கங்களுக்கு உணர்ச்சி யூட்டுதல், அதிகாரத்தை ஏற்கெனவே கையிற் கொண்டுள்ளவர்களுக்கு வலுவூட்டுதல்; அதிகாரமில்லாதவர்களிடையே ‘இப்பொழுதுள்ள நிலைமையே சரி, என்னும் பொந்திகை மனநிலையை ஏற்படுத்துதல் போன்றனவாம். ஆளுபவர்கள், அரசுகள் சார்பாக எழுதப்படும் வரலாறுகளை நம்புவது கொலைகாரன் சொல்வதை அப்படியே நம்புவது போல. வரலாற்றை மறப்பவர்கள் தாங்கள் பட்ட இன்னல் களை இடைவிடாது மீண்டும் பெறுவர். இப்பத்திக்கான ஆங்கில மூலங்கள் வருமாறு: History is a reconstruction of elements of the past in the mind of a human being of a later generation..... In principle there will be multiple histories of any given period, each congruent to the mental world, social purposes, and sources available to the person who creates it. ** Since the recreation of the past takes place in the mind of the individual historian which has been shaped by his personal experience and world view the unbiased historian is an unattainable ideal. *** By the very nature of the historical discourse there can be no final truth - Gary Bechman “Thd limits of credulity Journal of the American Oriental Society 125.3 (2005)” (“History”) is always a created ideology with a purpose, designed to control individuals or motivate societies, or inspire classes... to strengthen the purpose of those who possessed power... and reconcile those who lacked it. - J.H. Plumb (1969) The death of the past (quoted by Beckman) official history is believing the murderers at their word - Simone Weil Those who disregard the past are bound to repeat it - George Santayana 16, களப்பிரர் ஆட்சி நல்லதா, கெட்டதா என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இந்த முன்னுரை கூறவில்லையே எனக் கருதலாம்! இத்தகைய சிக்கலான பொருண்மைகளில் அப்படிக் கூற இயலாது, கூறுவதும் சரியல்ல என்பதே சிறந்த வரலாற்றறிஞர் கருத்து ஆகும். இலட்சக்கணக்கான ஆவணங்களும் பல ஆயிரக் கணக்கான ஆதார நூல்களும் 1789 பிரெஞ்சுப்புரட்சி பற்றி இருக்கின்றன. இருந்தும் அப்புரட்சியின் தோற்றம், விளைவுகளைப் பற்றி இன்றைய நிலையிலும் கூடக் கறாரான முடிவுகளைக் கூற இயலாது என்பர் வரலாற்றிஞர் ஜி.எம். டிரெவெல்யன் :- “இத்தகைய மிக முக்கியமான கடுஞ்சிக்கலான விஷயங்களைப் பற்றி “இது தான் வரலாற்றின் தீர்ப்பு” என்று எந்தக் காலத்திலும் கறாராகக் கூறிவிட இயலாது” “ [இத்தகைய விஷயங்களில்]” கிடைத்துள்ள வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் அவரவர் தமக்குத் தாமே சிந்தித்து ஓரளவுக்கு ஒரு முடிவுக்கும் வர இயலும். அப்படிச் சிந்தித்து முடிவுக்கு வர முயல்வது நமது சிந்தனையாற்றலுக்குச் சிறந்த பயிற்சியாகும்; நம் அனைவருக்கும் இன்றியமையாத பயிற்சியும் கூட.” “வரலாற்றைப் பயில்வதன் மூலம் மாந்த இனத்தின் அனைத்துப் பிரச்னைகளையும் அகன்ற நுண்ணிய பார்வையுடனும் அமைதி யாகவும் சிந்தித்து முடிவு செய்யும் திறனும் வழக்கமும் நமக்கு வரும். பண்டைய வரலாற்றுச் செய்திகளை எல்லாக் கோணங்களி லிருந்தும் அமைதியாக எண்ணிப் பார்த்து எடை போடும் பொழுது மனம் நமது அன்றாடப் பிரச்சினைகளைக் கூர்ந்த நுண்ணறிவுடன் புரிந்து கொள்ளும் திறனை எய்தும். மாந்த இனத்தின் இடியாப்பச் சிக்கல்களைச் செய்தித் தாள் திரைப்படம் [இப்பொழுது, இவற்றையும் விட மிக மோசமான தொல்லைக் காட்சியையும் சேர்த்துக் கொள்ளலாம்] ஆகிய புல்லறி வாண்மைமிக்க ஊடகங்கள் அரைவேக்காட்டுத் தனமாக (ஏன் 1/100 வேக்காட்டுத் தனமாகக் கூட) “எளிமைப்படுத்தி” பரப்புரை செய்து தகிடுதத்தம் பண்ணுவதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள அத்திறன் உதவும்.” “On such great and complex issues there can never be a final verdict of history. But at least it is possible to have an opinion of some value. and the attempt to form such an opinion in all the historical light now available, is an education to the mind, the sort of education we all most terribly need.” ‘But, if we calmly study the past from as many angles as possible, we shall all of us gain in wisdom and understanding. We shall acquire a mentality which, when we return to our own problems, will be less at the mercy of newspapers and films. trying to make us take short cuts to truth and to oversimplify the tangled skein of human affairs.” - G.M. Trevelyan: An autobiography and other essays. பதிப்புரை ‘வரலாறு என்பது உணர்ச்சிகளின் தொகுப்பு அல்ல. உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு.’ ‘வரலாறு என்பது ஓர் இனத்தின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் சான்று கூறும் நினைவுச் சின்னம்’. ‘வரலாறு என்பது மாந்த இனத்தின் அறிவுக்கருவூலம்’. ‘தமிழினத்தின் வரலாறு நெடியது; நீண்டது; பழம்பெருமை மிக்கது; ஆய்வுலகிற்கு அரிய பாடங்களைத் தருவது.’ வரலாறு என்பது கடந்த காலத்தின் நிகழ்வுகளையும், வாழும் காலத்தின் நிகழ்வுகளையும், எதிர்காலத்தின் நிகழ்வுகளையும் உயிர்ப்பாகக் காட்டுவது. ‘வரலாறு என்பது என்ன? முற்காலத்தில் என்ன நடந்திருக்கலாம் என்பதைப்பற்றி பிந்தைய தலைமுறையைச் சார்ந்த மாந்தனொருவன் தன் மனத்தில் உருவாக்கிக் கொள்வதே வரலாறாகும் என்பர் காரி பெக்மன் (Gary Bachman: JAOS - 2005) . இவ்வரலாற்றை எழுதுபவர் அறிவுநிலை, மனநிலை, சமுதாயப் பார்வை,பட்டறிவு, கண்ணோட்டம், பிறசான்றுகளை முன்வைத்து எழுதுவர். அஃது அறிவியல், கலை, சமயம் ஆகியவற்றின் ஊற்றாகத் திகழ்வது. ஓர் இனத்தின் வாழ்வும் தாழ்வும் அந்த இனம் நடந்து வந்த காலடிச்சுவடுகளைப் பொறுத்தே அமையும். ஒரு நாட்டின் வரலாற்றிற்கு அந் நாட்டில் எழுந்த இலக்கியங்கள், கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுக்கள், புதைபொருள்கள், செப்பேடுகள், நாணயங்கள், பழங்காலக் கட்டடச் சிதைவுகள், சிற்பச் சின்னங்கள், சமயங்கள் தான் சான்று பகர்வன. அத்தனையும் பெருமளவு உள்ள மண் தமிழ் மண்ணே ஆகும். மொழி, இன, நாட்டு வரலாறு என்பது ஒரு குடும்பத்திற்கு எழுதப்படும் ஆவணம் போன்றது. இவ்வரலாறு உண்மை வரலாறாக அமைய வேண்டும் என்பார் மொழிநூல் மூதறிஞர் பாவாணர். இந்தியப் பெருநிலத்தின் வரலாறு வடக்கிலிருந்து எழுதப்படக் கூடாது. அந்த வரலாறு இந்தியாவின் தென்முனையிலிருந்து எழுதப் படவேண்டும். அதுவே உண்மை வரலாறாக அமையும் என்பது மனோண்மணீயம் சுந்தரனார் கூறியது; வின்சென்ட் சுமித் ஏற்றது. தமிழினத்தின் பழமையைப் பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்து, தொல்காப்பியம் உட்பட்ட சங்கநூல்கள் அனைத்தையும் முழுமையாகச் செவ்வனே பயன்படுத்தி ஆங்கிலத்தில் முதன் முதலில் 1929இல் தமிழர் வரலாறு எழுதியவர் பி.டி.சீனிவாசய்யங்கார் ஆவார். அந்நூலில் தமிழரே தென்னாட்டில், ஏன் இந்தியாவில், தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் மண்ணின் மைந்தர்கள் என்பதைத் தம் ஆழ்ந்த ஆய்புல அறிவால் நிறுவினார். தமிழ்நாட்டில் இன்று வரலாறு, மொழியியல் போன்ற துறைகளில் வல்லுநராகத் திகழும் அறிஞர் பி. இராமநாதன் அவர்கள் அந்நூலினை தமிழாக்கம் செய்துள்ளார். அதனைத் தமிழர் வரலாறு (கி.பி.600 வரை) எனும் நூலாகத் தமிழ்மண் பதிப்பகம் 2008இல் வெளியிட்டுள்ளது. இவ்வரலாற்று வரிசைக்கும் திரு. இராமநாதன் அவர்கள் அறிமுகவுரைகள் வழங்கி அணிசேர்த்துள்ளார். பாண்டியர் வரலாறு, பிற்காலச் சோழர்சரித்திரம், பல்லவர் வரலாறு, களப்பிரர் காலத் தமிழகம் (வரலாற்றாசிரியர் நால்வர் நூல்களின் தொகுப்பு), கொங்கு நாட்டு வரலாறு, துளு நாட்டு வரலாறு, தமிழக வரலாறு எனும் நூல்களைத் தேடி எடுத்து தமிழக வரலாற்றுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக வரலாற்று வரிசை எனும் தலைப்பில் வெளியிடுகிறோம். இவற்றுள் பெரும் பாலானவை இன்றும் வரலாற்று மாணவர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் படிக்க வேண்டிய கருவிநூல்களாகவும், என்றும் பயன்தரும் (classic) நூல்களாகவும் கருதப்படவேண்டியவை. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழக வரலாற்றுத் துறைகள் ஆகியவற்றின் மாணவர்களும், கல்லூரி/பல்கலைக்கழக ஆய்வுத்துறைகளும் இந்நூல்களை வாங்கிப் பயன்கொள்வாராக. தமிழக வரலாற்றுக்கு அணிகலனாக விளங்கும் இவ்வரலாற்றுக் கருவூலங்களைப் பழமைக்கும் புதுமைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தி.வை.சதாசிவப்பண்டாரத்தார், ஒளவை துரைசாமிப் பிள்ளை, மா.இராசமாணிக்கனார், இர,பன்னீர்செல்வம், மயிலை சீனி.வேங்கடசாமி, மு.அருணாசலம், புலவர் குழந்தை, நடன.காசிநாதன் போன்ற பெருமக்கள் எழுதியுள்ளனர். இவ்வருந் தமிழ் பெருமக்களை நன்றி உணர்வோடு நினைவுகூர்கிறோம். தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வந்த அரிய செய்திகளை தம் அறிவின் ஆழத்தால் விருப்பு வெறுப்பு களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை நின்று உண்மை வரலாறாக எழுதி யுள்ள இந் நூல்கள் ஆய்வுலகிற்கும், தமிழ் உலகிற்கும் பெரிதும் பயன் படத் தக்க அரிய வரலாற்றுப் பெட்டகமாகும். பண்டைத் தமிழ்க்குலம் நடந்து வந்த பாதையை அறிந்து கொள்ளவும், இனி நடக்கவேண்டிய பாதை இது என அறுதியிட்டுக் கொள்ளவும், தள்ள வேண்டியவை இவை, கொள்ளவேண்டியவை இவை எனத் திட்டமிட்டுத் தம் எதிர் கால வாழ்வுக்கு வளமானவற்றை ஆக்கிக் கொள்ளவும், தமிழ் இனத்தைத் தாங்கி நிற்கும் மண்ணின் பெருமையை உணரவும், தொலைநோக்குப் பார்வையுடன் இவ்வரலாற்று வரிசையைத் தமிழர் முன் தந்துள்ளோம். வாங்கிப் பயன் கொள்ளுங்கள். தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெ ழுந்தே! செயல்செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் சீறி வந்தே. ஊழியஞ்செய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் உணர்ச்சி கொண்டே. பணிசெய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் பழநாட் டானே. இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தர் வரிகளை நெஞ்சில் நிறுத்துங்கள். மொழியாலும், இனத்தாலும் அடிமைப்பட்ட வரலாறு தமிழரின் வரலாறு. இவ்வரலாற்றை மீட்டெடுக்க உழைத்த பெருமக்களை வணங்குவோம். அவ்வகையில் உழைத்து நம் கண்முன்னே வாழ்ந்து மறைந்த பெருமக்களுள் தலைசிறந்தோர் தந்தை பெரியாரும், மொழி ஞாயிறு பாவாணரும் ஆவர். இப்பெருமக்கள் அனைவரையும் நன்றி யுணர்வுடன் இந்த நேரத்தில் வணங்குவோம். அவர்கள் வழி பயணம் தொடருவோம். தமிழ் இனமே! என் தமிழ் இளையோரே! நம் முன்னோரின் வாழ்வையும் தாழ்வையும் ஆழ நினையுங்கள். இனத்தின் மீளாத் துயரை மீட்டெடுக்க முனையுங்கள். - பதிப்பாளர். நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் பெரும்புலவர் இரா. இளங்குமரனார், முனைவர் ஒளவை. நடராசன், முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி, பி. இராமநாதன், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு - மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர் அச்சுக்கோப்பு முனைவர் கி. செயக்குமார், ச.அனுராதா, மு.ந.இராமசுப்ரமணிய ராசா, மெய்ப்பு சுப.இராமநாதன், புலவர் மு. இராசவேலு, அரு.அபிராமி, அ. கோகிலா ——— உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், ரெ. விசயக்குமார், இல.தருமராசு, ——— எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் நூல்கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . பொருளடக்கம் களப்பிரர் காலத் தமிழகம் (கி.பி. 3-6 நூற்றாண்டுகள்) முகவுரை 3 I கடைச்சங்கம் அழிந்தது 5 II வேற்றுப் புலத்தவர் நுழைந்தனர் 12 III களப்பிரர் யார் 15 IV. தமிழ் நாட்டில் களப்பிரர் 26 V. களப்பிரர் கலைகள் 32 VI. களப்பிரர் - சமணம் சீரழிவு 39 VII. பிற்காலத்தில் களப்பாளர் 42 வேள்விக்குடிச் செப்பேடுகள் 47 குறிப்புக்களும் விளக்கங்களும் 49 சாசனப் பகுதி 51 மேற்கோள் நூல்கள் 60 களப்பிரர் ஆட்சியில் தமிழகம் முகவுரை 63 தோற்றுவாய் 65 களப்பிரர் காலத்து இரேணாட்டுச் சோழர் 86 களப்பிரர் காலத்து இரேனாட்டுச் சோழர் 93 களப்பிரர் காலத்து இலங்கை அரசர் 96 களப்பிரர் காலத்து இருக்குவேள் அரசர் 119 களப்பிரரின் வீழ்ச்சி 124 களப்பிரர் ஆட்சியில் சமயங்கள் 131 களப்பிரர் காலத்தில் தமிழ்மொழி 153 களப்பிரர் காலத்தில் நுண்கலைகள் 189 இணைப்பு 1 196 இணைப்பு - 2 204 இணைப்பு - 3 219 இணைப்பு - 4 236 நூலடைவு 241 பாண்டிய நாட்டில் களப்பிரர் பாண்டிய நாட்டில் களப்பிரர் : 247 பிரிவு I - பாண்டி நாட்டில் களப்பிரர் 249 பிரிவு II பாண்டிய நாட்டு வாழ்வியலிலும் இலக்கியத்திலும் களப்பிரர் தாக்கம் 254 களப்பிரர் வருகை முன்னுரை 259 களப்பிரர் வருகை 261 பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் களப்பிரர் 304 களப்பிரர் சமயம் 311 களப்பிரர் காசு 315 களப்பிரர் பற்றிய வாழ்த்துப் பாக்கள் 317 கொங்குநாட்டுத் தனிப்பாடல் 325 கொங்கு நாட்டுத் தனிப்பாடல் 326 களப்பிரர் காலத் தமிழக வரலாறு களப்பிரர் காலத் தமிழகம் (கி.பி. 3-6 நூற்றாண்டுகள்) இர. பன்னீர் செல்வம் (1973) முகவுரை தமிழக வரலாற்றில் சங்க காலத்தின் பின்னர் சுமார் 2, 3 நூற்றாண்டுகளை இருண்டகாலம் என்ற பெயரிலேயே வரலாற்றா சிரியர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இக்காலப் பகுதியில் களப்பிரர் என்போர் தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்ற குறிப்புக்கள் பல கிடைத்த போதிலும் இவர்கள் யார்? எங்கிருந்து, எவ்வாறு தமிழகப் பகுதியைக் கைப்பற்றினர்? என்ற பல செய்திகள் தெளிவாக்கப் படவில்லை. இதுவரை கிடைத்துள்ள செய்திகளையும், செய்யப்பட்டு வந்துள்ள ஆராய்ச்சிகளையும் துணையாகக் கொண்டு களப்பிரர் வரலாற்றை விளக்குவதே இந்நூலின் நோக்கம். சங்கம் - சங்ககாலம் பற்றிய செய்திகளைப் பல தமிழ்ப் பேராசிரியர்களும், வரலாற்றாசிரியர்களும் ஆய்ந்து கூறியுள்ளனர். களப்பிரர் வரலாற்றைப் படிக்கும்போது அவர்களுக்கு முன்புள்ள தமிழகச் செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக, அவர்களின் ஆராய்ச்சிக் கருத்துக்களைச் சுருக்கமாக முற்பகுதி கூறுகின்றது. இதில் கூறப்படும் செய்திகள் சில திரும்பத் திரும்பச் சொல்லப் பட்டுள்ளன. அவை அந்ததந்த இடங்களுக்கு ஏற்ப அமைக்கப் பட்டுள்ளன. அதனால் அவை கூறியது கூறல் என்ற குற்றத்தின் பாற் படுமெனக் கொள்ளாது அவ்வப்பகுதிகளை விளக்கும் கருவியாகக் கொள்க. சுமார் நான்கு ஆண்டுகள் முதுகலை வகுப்பு மாணவர் களுக்கு வரலாற்றுப் பாடம் சொல்லி வரும்போது அவர்கள் எழுப்பிய வினாக்களும், நடத்திய விவாதங்களும், இவர்களைப் பற்றி விளக்க மாகக் கூற வேண்டும் என்ற அவர்கள் தம் விருப்பமும் இந்நூல் வெளிவருவதற்கு அடிநிலையாக அமைந்தன. அவர்கள் தம் வினாக்களுக்கு விடையாகவும், அவர்கள் தம் விருப்பத்தின் நிறைவாகவும் உண்மை காணவேண்டும் என்ற எனது உள்ளத்தின் ஆத்ம திருப்தியாகவும் இந்நூல் அமைந்தது என்றால் மிகையாகாது. அதனால், அவர்களுக்கு நான் மிகவும் நன்றி செலுத்த வேண்டிய நிலையிலுள்ளேன். தமிழகத்தின் இருண்ட காலச் சூழ்நிலை எனப் பல்லோராலும் விட்டு விடப்பட்ட ஒரு வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு இந்நூலில் காணும் செய்திகள் ஏதாவது ஒரு வகையில் துணை செய்யுமானால் அதுவே இந்நூல் எழுதியதன் பயனாகும். இதனைப் படிக்கும் நண்பர்கள், திறனாய்வாளர்கள் இந்நூலில் காணும் முன்னுக்குப் முன் முரணான செய்திகளைச் சுட்டிக் காட்டிப் புதிய செய்திகள், விளக்கங்கள் இருந்தால் கூறுவார்களாயின் அவற்றை மகிழ்வுடன் ஏற்று வேண்டிய இடங்களில் சேர்த்து இந்நூலினை மேலும் செப்பமுடையதாக்கி அடுத்த பதிப்புக்களை வெளியிட முயல்வேன். இந்நூல் வெளிவரக் காரணமாக இருந்த நண்பர்கள், மாணவர்கள் அனைவருக்கும் நான் நன்றிக் கடப்பாடுடையேன். இதன் அச்சுத் திருத்தங்களை உடனிருந்து சரிபார்த்துக் கொடுத்த செல்வி ஏ.வி.ஜோசபின் டோரதிக்கும், இதை நன்முறையில் வெளியிட்ட மாணிக்கம் கம்பெனி நூல்-வெளியீட்டாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை 2.10.1972 இர.பன்னீர்செல்வம் கடைச்சங்கம் அழிந்தது இலக்கியம், இலக்கணம், இயல், இசை, நாடகம் முதலான அரிய நூற்களைப் பற்றித் தொடர்ந்து நடந்து வந்த ஆராய்ச்சியும், சங்கமும் எவ்வாறு அழிந்தன? திருக்குறள் அரங்கேறியதன் விளைவாகச் சங்கம் அழிந்தது என்றும், கண்ணகி மதுரையைத் தீக்கிரையாக்கிய பின் சங்கத்தைப் புரப்போர் யாருமில்லை என்றும், களப்பிரர் இடை யீட்டினால் சங்கச் செய்திகள் அறிய முடியாது போய்விட்டன என்றும் பல வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. ஆயினும், சங்கம் அழிந்தது என்று கருதுவதினும், அரசன் வலியற்றவனாக ஆட்சி சிறப்புற நடக்க வழியில்லை, அத்துடன் தொடரும் புலவர் தமிழாராய்ச்சியும், தொடர்ந்து நடத்தும் முயற்சியும் இல்லாமல் போய்விட்டது என்று கருதுவதே ஏற்புடையதாகும். அதற்காக சூழ்நிலைகள் என்ன என்பதை ஈண்டு நோக்குவோம். கடைச் சங்கத்தின் இறுதியில் ஆண்ட அரசன் அல்லது கடைச் சங்கத்தைப் புரந்த அரசன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. இது இறையனார் களவியல் கூறும் செய்தி. அவன் காலத்தில்தான் பாண்டிய நாடு பன்னிரண்டு ஆண்டுகள் வறுமையினால் வாடியது. அரசன் புலவர்களை விளித்துத் தாங்களே தங்களுக்கு வேண்டிய இடம் சென்று வாழச் சொல்லி அனுப்புகின்றான். இந்த வறுமை நிலை இருந்தமைக்கு இலக்கியங்களேயன்றிப் பிற்காலத்தில் தோன்றிய கல்வெட்டுச் சாசனம் ஒன்றும் சான்றாக உள்ளது. அதில் சில புராணச் செய்திகள் இருந்தாலும் வரலாற்றுப் பகுதி இன்றியமையாதது. இதில், அரசன் தேவகன்னியர் மக்களைக் கொணர்ந்து, அவர்களைக் கொண்டு கேணிகள் வெட்டி, நாட்டினை வளமாக்கி வறுமையைப் போக்கினான் என்ற செய்தியைக் காணலாம். கல்வெட்டுப் பகுதியை நோக்குக, ‘ விசுவாவசு வைகாசி மீ(உ) யசஉ திங்கட்கிழமையும் உத்தராடமும் பெற்றநாள் தேவேந்திர குடும்பன் பலாத்துப்படி: முன் துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும் சோழனும், சேரனும் உலகம் வறுமைப்பட்டு இருக்கின்ற காலத்திலே தேவேந்திரன் பக்கல் மழை கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம் மகிழ்ந்து ‘இரும்’ என்ன, சேரனும், சோழனும் வணங்கியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல கவடு நினைக்க, பாண்டியன் கோபித்து எழுந்து தேவகன்னிகைகள் மக்கள் நாலு குடும்பத்தாரைக் கைப்பிடியாகக் பிடித்துக் கொண்டு சென்னெல் விதையும், கன்னல் விதையும், (கதலி) விதையும், பனை விதையும் முதலான பல வித்தும், ஒரு ரிஷபமும் ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான். நால்வரில் முதல்வனுக்குத் தேவேந்திரக் குடும்பப் பட்டமும் கட்டி மூன்று பேருக்கு வாரியன், அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப் பட்டமும் கட்டி, ஒரு நாளையிலே 1200 கிணறு வெட்டி வேளாண்மை கண்டபடியினாலே,.... (தென்னிந்தியக் கோயில் சாசனங்கள்) பாகம் II எண்.8637 என்று அந்தக் கல்வெட்டுப் பகுதி அமைந்துள்ளது. இக் கல்வெட்டு திருநெல்வேலி ஜில்லா சங்கரநாயினார் கோவில் கோபுரவாசல் உட்புறம் கீழ்ப் பக்கத்திலுள்ளது. பழைய திருவிளையாடற் புராணத் திலும் பெரும்பற்றப் புலியூர் நம்பிகள் இந்த வறுமையினை ஆங்காங்குக் குறித்துச் செல்லுகிறார். 12:3, 44:30. இலீலா சங்கிரக அத்தியாயம் 44இல் இவ்வறுமை குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மூவேந்தரும் இந்திரனை நாடி மழை வேண்டிச் செல்கின்ற செய்தி குறிக்கப் பட்டுள்ளது. எனவே, உக்கிரப் பெருவழுதி காலத்தில் நாட்டில் வறுமைநிலை மிகுந்திருந்தது என்பதும், அதனால் மக்கள் பெரிதும் துன்புற்றனர் என்பதும் தெளிவாகிறது இதையே இறையனார் களவியலுரையிலும் கண்டோம். இவ்வாறு கொடிய வறுமையில் வாடிப் பன்னிரண்டாண்டுகள் தமிழகத்தின் பல்வேறிடங்களையும் அடைக்கலமாகச் சென்றடைந்த புலவர்கள், அவ்வறுமை நீங்கிய பின் மீள்கின்றனர். அதுகாலைப் பாண்டிய மன்னன் அவர்கள் எவ்வாறு அக்காலப் பகுதியில் வாழ்ந்தார்கள் என்ற செய்தியினை அறிய வேண்டியவனாக, அவர் களும் அயிந்தன் என்பான் தங்களைக் காத்தருளியதாகக் கூறுகின்றனர். இதனைப் பின்வரும் தனிப்பாடல் ஒன்றால் அறியலாம். “ காலை ஞாயிறு கடுங்கதிர் பரப்பி வேலையும் குளனும் வெடிபடச் சுவறித் தந்தையை மக்கள் முகம் பாராமல் வெந்த சாகம் வெவ்வே றருத்திக் குணமுள தனையும் கொடுத்து வாழ்ந்த கணவனை மகளிர் கண்பா ராமல் விழித்த விழியெல்லாம் வேற்றுவிழி யாகி அறவுரை யின்றி மறவுரை பெருகி உரைமறந் தொழிந்த வூழிக் காலத்தில் தாயில்லா தவர்க்குத் தாயே யாகவும் தந்தையில் லாதவர்க்குத் தந்தையே யாகவும் இந்த ஞாலத் திடுக்கண் தீர வந்து தோன்றினன் மாநிதிக் கிழவன் நீலஞ் சேரு நெடுமால் போல்வான் ஆலஞ் சேரி அயிந்தன் என்பான் தன்குறை சொல்லான் பிறர்பழி யுரையான் மறந்தும் பொய்யான் வாய்மையும் குன்றான் இறந்து போகாது எம்மைக் காத்தான் வருந்தல் வேண்டாம் வழுதி இருந்தனம் இருந்தனம் இடர்கெடுத் தனனே.’ (தனிப்பாடல் திரட்டு பாகம் I பாடல் 9) ஆயினும், எத்தனை புலவர்கள் மீண்டு வந்திருக்க முடியும்? வறுமையுற்றலைந்த புலவர்களில் சிலர் மேற்கூறிய அயிந்தனால் காப்பாற்றப்பட்டாலும் எத்தனையோ பேர் ஆங்காங்குத் தங்கியிருத்தல் தான் இயல்பு. ஒரு சிலரே மதுரைக்கு மீண்டு வந்திருக்க முடியும். மேலும், முச்சங்க வரலாற்றை நோக்கும்போது சங்கத்துக்குச் சங்கம் புலவர்தம் எண்ணிக்கை குறைந்து கொண்டுதான் வந்திருக்கிறது. கடைச் சங்கத்தில் ஆராய்ந்தவர்கள் 49 பேர்தானே. இனி, அவ்வாறு மீண்டுவந்த சிலரில் அனைவருமே சிறந்த புலமையுடையவர்களாக இருந்திருப்பார்கள் என்றும் நாம் எண்ண இடமில்லை. ஒருசிலரே நற்புலமை வாய்ந்தவர்களாக இருந்திருக்க முடியும். ஏன்? அரசன் பொருள் இலக்கணம் வல்லாரைக் காணேன் என்று வருந்தியிருக்கின்ற நிலையில் அக்குறையைத் தீர்த்து வைக்கக் கூடிய அளவுக்குப் புலமை பெற்றவர்கள் இல்லை என்பதைக் கல்லாடச் செய்யுட் பகுதியால் தெளிவாக உணரலாம். ‘ உலகியல் நிறுத்தும் பொருள் மரபு ஒடுங்க மாறனும் புலவரும் மயங்குறு காலை முந்துறும் பெருமறை முளைத்து அருள்வாக்கால் அன்பின் ஐந்திணை என்று அறுபது சூத்திரம் கடல்அமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல் பரப்பின் இன் தமிழ்ச் சுவைதிரட்டி மற்றவர்க்குத் தெளிதரக் கொடுத்த தென்தமிழ்க் கடவுள்’ கடவுளே நூல் செய்து தந்தான் என்பது பற்றிய விவாதத்தை விடுத்து ஆராயினும், இறைவன் அளித்த அகப்பொருள் நூலுக்கு முன் பொருள் இலக்கணம் கூறும் நூல் இல்லாது போயிற்றா? தொல்காப்பியப் பொருளதிகாரத்தை அவர்கள் அறியாது போயினரா? என்ற பல வினாக்கள் எழுகின்றன. மேலும், இறையனார் களவியலுக்கு உரை கூறத் தெரியாமல் உள்ளம் அழிகின்றனர் அவைப்புலவர்கள். பொருள் காண இறைவனையே நாடுகின்றனர். பின்னர் ஒவ்வொருவராக முயற்சி செய்கின்றனர் உரை கூறுவதற்கு. இறுதியில் உருத்திர சன்மனைக் கொண்டு நல்ல உரையினைத் தேர்கின்றனர் என்ற கதையெல்லாம் எழுகின்றன. எனவே, பன்னிரண்டு ஆண்டுகள் வறுமையில் வாடிக்களைத்துத் திரும்பிய புலவர்கள் பழைய இலக்கண நூல்களுக்கு ஏற்ற உரைப் பொருள் காணும் திறனற்றுப் போய்விட்டனர். உரையின் தேவையினைப் பற்றிப் பழம் பாடல் ஒன்று குறிப்பிட்டதை முன்னர்க் கண்டோம். வற்கடத்தின் பின்னர் மீண்டு வந்துற்ற புலவர்கள் இலக்கண, இலக்கிய அறிவு, நிரம்பப் பெற்றவர்கள் அல்லர் என்பதையே இச்செய்திகளால் அறிகிறோம். ஆக, நல்ல தமிழ்ச் சான்றோர்களைச் சங்கம் இழந்து விட்டது. புலவர் தம் அடைமொழி களைக் கொண்டு, பின்னர் அவர்கள் தத்தம் கருமங்களையே தலைக் கொண்டனர் என்பதையும், பாடல் செய்தலைப் பொழுது போக்காகவே கொண்டனர் என்பதையும் நாம் அனுமானிக்க முடியும். அதனால், வறுமையின் பின் சங்கம் கூடியதாக அறிய உதவும் நிகழ்ச்சி இறையனார் அகப் பொருளுக்கு உரைகாணக்கூடிய புலவர் கூட்டம் ஒன்றே. அதில்தான் அகப்பொருளும் காணப் படுகிறது. அதற்கு உரையும் வகுக்கப்படுகிறது. நூலும் உரையும் வற்கடத்தின பின்னர் ஒரே காலத்தில் தோன்றுகின்றன. அதன்பின் சங்கத்தின் செய்தி களை உணருதற்கு ஏற்ற ஆதாரங்கள் இல்லை. பின்னர் நன்மாறனது ஆட்சி துவங்குகிறது. இதனை நக்கீரர் அவனைப் பாடிய பாடலால் அறியலாம்.(புறநானூறு:56) இவன் சேரன் செங்குட்டுவன் பத்தினிச் சிலைக்குக் கல்லெடுக்க வடநாடு சென்று வடபுலத்தரசராம் கனக விசையரை வென்று அவர் தம் தலையிலே கல்லையேற்றிக் கொணரப்போன காலத்து, மதுரையில் கண்ணகி வழக்குரைக்க, “ பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்! மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்.’ (சிலம்பு: வழக்குரை காதை 74-76) எனக்கூறி இறந்துபட்ட தன் தந்தையின் அரசாட்சியினைக் கைப்பற்றி முடி சூடுகின்றான். இவன் காலத்திலும் வறுமையின் நிழல் தொடருகின்றது. அதனால் கண்ணகி வழிபாட்டில் கலந்து நாட்டினைச் செழிக்கச் செய்தான் என்பதனை, “அன்று தொட்டு, பாண்டியன் நாடு மழை வறம் கூர்ந்து, வறுமை எய்தி, வெப்பு நோயும் குருவும் தொடர, கொற்கையில் இருந்த வெற்றி வேற்செழியன், நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமும் நீங்கியது.” என்ற சிலப்பதிகார உரை பெறு கட்டுரைப் பகுதியால் அறியலாம். சாசனங்களில் பூதத்துணை கொண்டு கேணி, குளங்களும் வெட்டி நாட்டை வளமாக்கினர் பாண்டியர் என்று பார்க்கின்றோம். மேலே காட்டிய (தென்னிந்தியக் கோயில் சாசனங்கள் பாகம் II, எண்: 8637) கல்வெட்டில் தேவகன்னியர் குடும்பத்தில் நால்வரைக் கொண்டு வந்து பணித்து நாட்டைக் காத்தனர் என்று பார்த்தோம். பழைய திருவிளை யாடலில் மேக மன்னர் நால்வரைப் பிடித்துப் பணிகொண்டு நாட்டைச் செழிக்கச் செய்தனர் என்று பார்க்கின்றோம். இங்கு நன்மாறன் கண்ணகி வழிபாட்டில் கலந்து நாட்டை வளப்படுத்த முயலுகின்றான். ஆயினும், நாடு பழைய சாயலிலிருந்து விடுபடவில்லை. சங்கத்தைப் புரக்கவும் வாய்ப்பில்லை. பையப்பையச் சங்கச் செய்திகளும் நம்மைவிட்டு மறையலாயின.  II. வேற்றுப் புலத்தவர் நுழைந்தனர் வற்கடத்தால் மக்களும் மன்னனும் செயலிழந்து வலி குன்றியிருக்கின்ற காலத்தில் தான் காலம் கருதியிருந்த வேற்றுப் புலத்தவர், வறுமைக் காலச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு எழுச்சி பெற்றுப் பாண்டிய நாட்டினைக் குலைத்து மேலோங்கியிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு எழுச்சி பெறத் தக்கவாறு தங்கள் செல்வாக்கினையும் சிறிது சிறிதாகப் பெற்றிருக்க வேண்டும். தங்களின் எழுச்சிக்கு எதிர்ப்புக்கள் தோன்றா வண்ணம் நாட்டில் அவர்கள் நிலை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறில்லையாயின் இனந்தெரியாத ஒரு கூட்டம் திடீரென நுழைந்து, வென்று ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்குச் செல்வாக்குப் பெற முடியாது. அவ்வாறு வேற்றுப் புலத்தவர் தமிழகத்தின் தென் பகுதியான பாண்டிய நாட்டைக் கொள்ளை கொள்ளும் போது பிறதமிழ் அரசர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? எங்கிருந்தார்கள்? அவர்கள் வேற்றுப் புலத்தாரின் தலையீட்டினைத் தடுக்க முற்படவில்லையா? அல்லது அவர்கள் பாண்டிய நாடு அழிவுபடும் முன்பேயே அடிமைகளாகிச் சுருங்கி விட்டிருந்தனரா? என்ற கேள்விகள் எல்லாம் ஆராய்வதற்குரியனவே. நுழைந்தவர் களப்பிரர் அவ்வாறு காலம் கருதியிருந்த வேற்றுப் புலத்தவர் யார்? பாண்டியரின் பழம்பெரும் சாசனமான வேள்விக் குடிச் செப்பேட்டுச் சாசனம் இதற்கு விடையிறுக்கும் முதல் மூலமாகும். (இச்சாசனம் நூல் வடிவில் முழு வடிவில் சேர்க்கப்பட்டுள்ளது) அச்சாசனத்தின் முன் பகுதியின் சாரம் பின்வருமாறு: பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன், சில பார்ப்பனர்களுக்கு வேள்வித் தானமாகப் பாகனூர்க் கூற்றத்துட்படும் சில பகுதிகளை வேள்விக்குடி என்ற பெயரில் நீர் வார்த்துத் தானமாகக் கொடுக்கின்றான். அவனுக்குப் பின்னர் அளவற்ற பல அரசர்களின் ஆட்சி நடக்கின்றது. பின்னர் களப்பிரன் என்ற ஒரு கலி அரசன் நாட்டைக் கைப்பற்றி, அந்த நிவந்தத்தையும் பறிமுதல் செய்து விடுகின்றான். அதன்பின் சில ஆண்டுகள் கழிகின்றன. களப்பிர வம்சத்தவரின் ஆட்சியாகிய பனியினை நீக்கும் பகலவன் போலத் தோன்றிய கடுங்கோன் என்ற பாண்டியன் களப்பிரரை அழித்து மீண்டும் பாண்டியப் பேரரசினை நிலை நாட்டுகின்றான். வேள்விக் குடிச் செப்பேடுகளில், “ வேந்தன் அப்பொழுதேய் நீரோடு அட்டிக் கொடுத்தமையால் நீடு புக்தி துய்த்தபின் அளவரிய ஆதிராஜரை அகலநீக்கி அகலிடத்தைக் களப்ரன் என்னும் கலியரைசன் கைக்கொண்டு அதனை இறக்கியபின், படுகடன் முளைத்த பருதி போல பாண்டியாதி ராஜன் வெளிற்பட்டு ஒடுங்கா மன்னர் ஒளிநகர் அழித்த கடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னன்’. என்ற பகுதியும் பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பரமேசுவரனால் வேள்விகுடி எனப்பட்டது; கேள்வியில் தரப்பட்டதனை துளக்கம் இல்லாக் கடல் தானையாய் களப்பிரரால் இறக்கப்பட்டது.’ என்ற பகுதியும் இச்செய்திகளை நன்கு தெளிவாக்கும். எனவே, பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிக்குப் பின்னர் நீண்ட காலம் அத்தானத்தை அனுபவிக்கின்றனர் அவ்வந்தணர்கள். பல வேறு அரசர்கள் பாண்டிய ஆட்சியை ஏற்று நடத்தியிருக்க வேண்டும். இறுதியில் வலியற்ற ஒருவனது காலத்தில் களப்பிரர் அளவரிய ஆதிராசரை அகல நீக்கி நாட்டைக் கைப்பற்றியிருக்க வேண்டும். இங்கு ஆதிராசர் என்ற பன்மைக்குப் பல அரசர்கள் ஆண்ட ஆட்சியினை நீக்கி என்றே கொள்ள வேண்டும். இவ்வாறாகக் களப்பிரர்கள் நுழைந்து பிரமதேயங்களைக் கைக் கொண்டக்காலை மீண்டும் எழுச்சி பெற்று வந்திருக்கின்ற பாண்டிய குலத்தில் கடுங்கோன் என்பவன் தோன்றிக் களப்பிரர் ஆட்சியை அழித்து மீண்டும் பாண்டியப் பேரரசினை நிறுவுகின்றான். ‘களப்ரரைக் களைகட்ட மாக் கடுங்கோன்’ என்றும் ‘‘களப்பாழர் குலம் களைந்தும்’ என்றும் வருகின்ற பிற்காலச் சாசனத் தொடர் களிலும் கடுங்கோன் களப்பிரரை வென்றான் என்ற செய்தியைக் காணலாம். எனவே, கடுங்கோன் என்ற பாண்டிய மன்னனுக்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள் தமிழ் மன்னர்கள் அல்லர் என்ற செய்தியும், அவர்கள் அந்தணர்களுக்குக் கொடுக்கப்பட்ட தானங்களைப் பறித்துக் கொண்ட வேற்றுச் சமயத்தவர் என்பதும் புலனாம். இவ்வாறான அரசியல் குழப்பத்தின் காரணமாகப் பண்டு கொடுக்கப்பட்ட தானமானது, களப்பிரர் ஆட்சி ஒழிந்த பின்னரும், பாண்டியன் நெடுஞ்சடையன் காலம் வரை யாராலும் கவனிக்கப் படாமல் அல்லது உணரப்படாமல் இருந்திருக்கின்றது. கி.பி.8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் முன்பு தானம் பெற்ற கொற்கைக் கிழான் நற்கொற்றன் என்பவனின் வழிவந்தவனாகிய கொற்கைக் கிழான் சுவரன் சிங்கன் என்பவன் இப்பழைய தானம் பற்றி அரசனிடம் சென்று முறையிடுகிறான். இது சாசனம் கூறும் செய்தி. இவற்றை யெல்லாம் கொண்டு பாண்டிய நாட்டில் தமிழ் வேந்தர் ஆட்சிக்குப்பின் நுழைந்தவர் களப்பிரர் என்பதைத் தெளியலாம்.  III. களப்பிரர் யார் களப்பிரர் தாயகம் நுழைந்தவர் களப்பிரர் எனின், இவர்கள் எவ்வாறு பாண்டிய நாட்டுக்குள் நுழைந்தனர்? எங்கிருந்து வந்தனர்? அரச குடியினரா? என்ற பல வினாக்கள் எழுகின்றன. செப்பேடுகளில் ‘கலி அரசன்’ என்று குறிப்பிடப் பெற்றுள்ளது. ஆனால், கலி அரசன் என்பதற்குக் கொடிய அரசன் என்ற விளக்கத்தையே பலரும் கூறிப் போந்தனர். இவர்கள் ஓர் அரச குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்று திரு கிருஷ்ண சாஸ்திரி கருதுகின்றார். சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியின் கொப்பரம் செப்பேடுகள் ‘கலிகுலம்’ என்று குறிப்பிடுகின்றன. மேலும், வட நாட்டில் ‘கல்கி அப்தம்’ என்ற ஒரு ஆண்டு முறையினைச் சமண சமய அடிப்படையில் தழுவுகின்ற காலத்துத் தென் பகுதியில் ‘கலியப்தம்’ என்ற ஒரு ஆண்டு முறையினைப் பௌத்த சமய அடிப்படையில் ஏற்படுத்தினர் என்ற கருத்தினையும் இங்கு நாம் குறிப்பிடல் வேண்டும். கௌதம புத்தரது சிலையினைச் சாமுண்டராயன் என்பவன் கி.பி.4ஆம் நூற்றாண்டில் நிலைபெறச் செய்தான் என்ற செய்தியைக் கூறும் கல்வெட்டு கலியப்தம் 983இல் வெட்டப்பட்டது என்று ஆய்வாளர் கூறுகின்றனர். மேலும், கலி, கலிய என்ற சொற்களின் பயிற்சி பெரும்பாலும் கன்னட நாட்டில் மிகுதி. கலி தேவ வணக்கம் இருத்தலையும் அப்பெயர் கொண்ட தேவனுக்குத் தானங்கள் வழங்கிய செய்தி களையும் அந்நாட்டுக் கல்வெட்டுக்களிலிருந்து அறியலாம். எனவே, கலி தேவன் தொடர்பால் ஏற்பட்ட ஒரு குலம் கலிகுலம் என்பதும், அவர்கள் கலியப்தம் என்ற ஒரு ஆண்டு முறையினைக் கொண்டிருந்தனர் என்பதும், அவர்கள் பூர்வீகம் தமிழகத்தின வட எல்லைக்கு அப்பால் கன்னடத்தின் தென் பகுதியாகும் என்பதும் புலனாகின்றன. ஆயின், கலிக்கும் களப்பிரருக்கும் உள்ள தொடர்பு என்ன? கலியரசன் களப்ரன் என்று கொள்ளினும் ‘களப்ரரால் இறக்கப்பட்டது’ என்ற தொடர் களப்பிரர் என்ற ஒரு இனத்தைக் குறிப்பிடுவதாக உள்ளதே அன்றித் தனித்த ஒரு அரசனைக் குறிப்பதாகத் தோன்ற வில்லை. எனவே, கலிகுலம் என்பதும், களப்ரர் குலம் என்பதும் ஒன்றோ வேறோ என்ற ஐயமும் எழுகின்றது. இனி, சிரவணபல்கோலா மலையில் உள்ள கல்வெட்டு ஒன்றில் ‘களவப்பு அல்லது களபப்பு’ என்ற சொல் பயின்று வந்துள்ளது. அதன் வடமொழி மூலம் ‘களவப்ர’ என்பது. பேலூர்ப் பகுதியில் வாழும் ஒரு பழங்குடிக்குக் ‘களபோரா’ என்ற பெயர் இருப்பதாக ஒரு பழைய கன்னடக் கல்வெட்டுக் கூறுகின்றது. கி.பி.5ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த கதம்ப குலத்தரசன் காகுத்தனுக்குக் ‘களபோரர்’ பகையாக இருந்தார்கள். ஹோஸ்கெடெ வீரக்கல் சாசனம் ‘களவர நாடு’ என்று குறிப்பிடு கின்றது. ஒரு அரசனுக்குப் பகைவனாக இருக்கும் நிலையை நோக்கும் போதும், களவர நாடு என்று ஒரு நிலப் பகுதியைக் குறிக்கும் போதும் அவர்களை ஒரு நாட்டினை ஆளும் தகுதிபெற்ற அரச குடியினராகத் தான் கருத முடியும். களபப்பு நாட்டை ஆட்சி செய்த திண்டீகன் மேலைக் கங்கனுடன் உறவுகொண்டு பல தானங்களைச் செய்தான் என்று பார்க்கின்றோம். இவன் கி.பி. 3, 4 ஆம் நூற்றாண்டில் இருந்தவன். இத் திண்டீகன் மேலைக் கங்கர் ஆட்சியில் கிருஷ்ணவர்ம மகாதிராயனுக்குப் பின், அரச குமாரர் இன்மையால் அவ் வம்சத்தைத் தன் பாலதாக்கிக் கொண்டு ஆட்சி செய்தவன் என்ற செய்தியைக் ‘கொங்கு தேச ராசாக்கள் சரிதம்’ கூறுகின்றது. எனவே, தென் கன்னடப் பகுதியில் இவர்கள் வாழ்ந்தவர் களாதல் வேண்டும் என்றும், அரச குடி நிலையில் இருந்த முதுகுடி யினராக மலைப் பகுதியில் பரவியிருந்திருக்க வேண்டும் அல்லது கதம்பர்களால் விரட்டப்பட்டு தென் கன்னடப் பகுதியில் புகுந்து நிலை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறியலாம். மேலும், ‘ பெரும்புகழ் அச்சுதக் கோவே! நந்திமா மலை சிலம்ப! நந்தி நிற்பரவுதல் நாவலர்க் கரிதே! என்று வருகின்ற செய்யுட்பகுதி இவர்கள் நந்திமலைப் பகுதிக்குத் தலைவர்களாக இருந்திருக்க வேண்டும் என்ற செய்தியை உறுதிப் படுத்துகின்றது. அதற்குத் தலைவனாக இருந்தவன் ‘அச்சுதன்’ என்பதையும் அறிகிறோம். இது பின்னர் விளக்கப்படும். எனவே, களப்பிரர்கள் தென் கன்னடப் பகுதியினைத் தாயகமாகக் கொண்டு மலைவாழ் அரச குடி மக்களாகத் தனித்த ஆட்சியமைப்பில் வாழ்ந்தவர்களாக இருந்திருத்தல் வேண்டும். ஆயினும், கதம்பர்களின் வன்மையால் இவர்கள் விரட்டப்பட்டுக் கோலார் - நந்திமலைப் பகுதிகளில் புகுந்திருக்கின்றனர். சிரவண பல்கோலா சமண சமயத்துக்குப் பெரும் ஆதரவு அளிக்கும் இடம், ஆதலின், இவர்களும் அச்சமயத்தைத் தழுவியிருத்தல் வேண்டும். ஆயினும், புத்த மதத்தையும் இவர்கள் ஆதரித்துப போற்றியுள்ளனர் என்பதை அச்சமய நூல்களின் குறிப்புக்களால் அறியலாம். தமிழ் இலக்கியங்களில் வடுகர் மேல், தமிழ் நாட்டின் வட எல்லைக்கு அப்பால் கன்னடப் பகுதியில் வாழ்ந்தவர்களாதல் வேண்டும் இக் களப்பிரர்கள் என்று கண்டோம். தமிழ் இலக்கியங்களில் தமிழக வட எல்லையாக வேங்கடமும், வேங்கடத்தின அப்பால் இருந்தது மொழி பெயர் தேயம் என்றும் காணப்படுகின்றது. ‘ வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ (தொல்காப்பியம் - சிறப்புப்பாயிரம்) என்று தொல்காப்பியமும், “ வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும் குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்” என்று புறநானூறு 6ஆம் பாடலும்: “ தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலா வெல்லை குன்று மலை காடு நாடு ஒன்று பட்டு வழி மொழிய” என்று புறநானூறு 17ஆம் பாடலும்; “ தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலாவெல்லைத் தொன்று மொழிந்து தொழில் கேட்ப” (மதுரைக் காஞ்சி : 70-72) என்று மதுரைக் காஞ்சியும் தமிழகத்தின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய திசைகளுக்குரிய எல்லைகளை விளக்குகின்றன. “ ....வடுகர் முனையது வல்வேற் கட்டி நன்னாட்டும்பர் மொழி பெயர் தேஎம்” (குறுந்தொகை: 11) என்று வேங்கடத்தின் அப்பாற்பட்ட பகுதிகள் மொழிபெயர் தேயம் எனக் குறிக்கப்பட்டதைக் குறுந்தொகையில் மாமூலனார்குறித்துள்ளார். எனவே, தமிழ் மொழியல்லாத வேற்று மொழி பேசும் மக்களையுடையது அந்நாடு என்பதையும், அவ்வாறு அவர்கள் வேற்று மொழியினராயினும் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தனர் என்பதையும், புலவர்கள் தமிழகத்தின வட எல்லையைக் குறிக்கும்போது வேங்கடமலையைக் கூறுவதோடு அப்பால் உள்ளது மொழி பெயர் தேயம் என்றும் அறிந்திருந்தனர் என்பதையும் தெளிவாக உணரலாம். அந்த மொழி பெயர் தேயத்தை ஆண்டவன் ‘புல்லி’ என்ற அரசன் என இலக்கியங்கள் கூறும். “ புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து நடையருங் கானம் விலங்கி நோன்சிலைத் தொடையமைபகழித் துவன்றுநிலை வடுகர் பிழியார் மகிழர் கலிசிறந் தார்க்கும் மொழிபெயர் தேஎம்.” (அகம்: 295) என்னும் பாடல் இதற்குக் காட்டாக அமைந்துள்ளது. இப்புல்லியைக் ‘கள்வர் கோமான் மாவண் புல்லி’ என்று புலவர்கள் சிறப்பித் துள்ளனர். இதனை “ கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடைய விழுச்சீர் வேங்கடம்” (அகம்:61) என்னும் மாமூலனார் பாடலால் அறியலாம். கள்வர்-- களவர் என்பதன் மரூஉ; அல்லது கள்வர் என்று புள்ளி கொடுத்து எழுதியுள்ளனர் என்று கருதவும் இடமுண்டு. கள்வர் நாடு என்பது கன்னடக் கல்வெட்டுக் களில் ‘களவர நாடு’ என்று குறிப்பிடப்பெற்றுள்ளது. களப்ர என்பது பகர வகரப் பரிமாற்றத்தால் ‘களவர்’ எனத் திரிந்து, தமிழிலக்கியங்களில் களவர் அல்லுது கள்வர் என்று எழுதப் பெறலாயிற்று எனக் கொள்ளலாம். இனிக் ‘கள்வர்’ என்ற தமிழ் ‘களவர்’ என்றும் ‘களப்ர’ என்றும் திரிந்தது என வாதித்திடலும் ஒன்று. இவர்களது பெயரடைகளைக் கொண்டும், இவர்களது நாடு வேங்கடமும், வேங்கடத்தும்பரும் என்பது கொண்டும், அது தமிழ் மொழியல்லாத வேற்று மொழி பயிலப் பெற்ற மொழி பெயர் தேயம் என்பது கொண்டும் களப்பிரர் புல்லியினத்தவராக வேங்கடமலைச் சாரல் பகுதியினை ஆண்டு வந்த ஒரு மலைவாழ் அரசகுடியினராக இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். எனவே, திடீரென்று ஒரு மரபினர் தோன்றி நாட்டைக் கைப்பற்றி ஆண்டனர் என்று கொள்வதினும், களவர் குலத்துப் புல்லியரசன் வழியினர் தமிழ்நாட்டின் சீர் கேடுற்ற நிலையினைப் பயன்படுத்திக் கொண்டு அதைக் கைப்பற்றியிருக்க வேண்டும் எனவோ, பல்லவர் ஆதிக்கம் வடபால் மேலோங்கியது களவர் குலத்தார் நாடு பிடிக்க வேற்றிடம் நாடிச் செல்லக் காரணமாக இருந்திருக்க வேண்டும் எனவோ கொள்ளலாம். ஆகவே, தொண்டை நாட்டில் செல்வாக்குப் பெற முடியாமல் தமிழ்நாட்டைக் கைப்பற்றும் எண்ணத்துடன் தெற்கு நோக்கி வந்து சோணாட்டைக் கைப்பற்றி அவ்வழியே பாண்டிய நாட்டுக்குள் புகுந்திருக்க வேண்டும் என்பதை ஒருவாறு தெரியலாம். எனின், களவரப் புல்லியினத்தரசர்களின் சமய நிலை என்ன? என்ற வினா எழுகின்றது சங்க இலக்கியங்களைக் கொண்டு ஆராயு மிடத்து அன்றைய வாழ்வில் மக்களால் வணங்கப்பட்ட அல்லது போற்றப்பட்ட கடவுளர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமே அன்றிச் சமய நிலைகள் - சமய தத்துவங்கள் - கொள்கைகள் முதலான வற்றைத் தெளிவாக அறிந்து கொள்வது என்பது உண்மையில் இயலாத ஒன்று. அவ்வாறான ஒரு குறிப்பிட்ட தத்துவநிலை அன்று இல்லாததால்தான் பௌத்த - சமண சமயங்கள் எளிதின் நுழைந்து செல்வாக்குப் பெற முடிந்தது. அவ்வாறு செல்வாக்குப் பெற்ற நிலையில் அவை தத்தம் கோட்பாடுகளைப் பரப்ப அவர்கள் மொழியினையே பயன்படுத்தியிருத்தல் வேண்டும். எனவே, மொழி பெயர் தேயத்துக் களவர் தலைவன் புல்லியும் அவன் இனத்தாரும் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தனர் என்பது ஒரு புறமிருக்க, தம் நாட்டு மொழியினையும், சமயத்தினையும், சமயச் செல்வாக்கினால் இடம் பெற்ற பாகதம், பாலி மொழிகளையும் போற்றியிருத்தல் வேண்டும் என்பதும் ஒருதலை. இப்புல்லியின் பெயருடன் ஓரூர் கன்னட நாட்டில் இருந்ததையும், அங்கு அருகக் கடவுள் கோயில் இருந்தததையும், அங்கு அருகக் கடவுள் கோயில் இருந்ததையும் கன்னட நாட்டு ஹொஸக் கோட்டைச் செப்பேடுகள் (பல்லவர் செப்பேடுகள் முப்பது பக்.378) குறிப்பிடுகின்றன. ‘கொங்கணியதிராசனது பன்னிரண்டாவது ஆட்சியாண்டில், பல்லவ சிம்ம விஷ்ணுவின் தாய் புல்லியூர் என்ற கிராமத்தில் எழுந்தருளுவித்த அருகக் கடவுளின் கோயிலுக்கு நிவந்தமாக அவ்வூர் ஏரியின் கீழ்ப்பகுதிகளில் நஞ்சை நிலம், வீடு முதலானவற்றை வழங்குகின்றாள்’ என்று அச்செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இதில் ‘புல்லியூர்’ என்பது ‘புல்லி’ என்று தமிழ் இலக்கியப் பாடல்கள் குறிக்கும் அரசனது பெயரின் பின் தோன்றியிருக்க வேண்டும் என்பதை நாம் துணியலாம். இதுபோன்ற காரணங்களால் ‘களவர்’ தமிழ்நாட்டின் வட எல்லையில் வாழ்ந்த தென்னிந்திய அரசகுடியினரே என்பது போதரு கின்றது. தமிழகத்தின் வட எல்லையில் மேற்கிலிருந்து கிழக்காக எடுத்துக் கொண்டால் கொங்கணர், கதம்பர், களவர், தொண்டையர்கள் ஆண்டு வந்திருக்கின்றனர் என்பது தெளிவு. ‘ .....தெனாஅது வெல்போர்க் கவுரியர் தருப்புழை திறப்பின் ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன் ஏவலிளையர் தலைவன் மேவார் அருங்குறும் பெறிந்த ஆற்றலொடு பருந்துபடப் பல்செருக் கடந்த செல்லுறழ் தடக்கைக் கெடாஅ நல்லிசைத் தென்னன்’ (அகம்: 342) என்ற அக இலக்கியப் பாடல் ஒன்றில் பாண்டியனை மதுரைக் கணக்காயனார் ‘கள்வர் பெருமகன்’ என்று குறிப்பிடுகின்றார். ஒரோவழி இப்பாண்டியன் கள்வர் புல்லியை வென்றதால் ஏற்பட்ட சிறப்பு அடைமொழியாகவும் இருக்கலாம். களப்பிரரும் முத்தரையரும் கி.பி. எட்டாம் நூற்றாண்டளவில் தஞ்சை, வல்லம், புதுக்கோட்டைப் பகுதிகளை முத்தரையர்கள் என்ற ஒரு இனத்தவர் ஆண்டு வந்தனர். இவர்கள் பல்லவருக்குத் துணையாகப் பாண்டியனை எதிர்த்துச செய்த பெரும்போரினை விளக்கும் பாடல்கள் செந்தலையில் உள்ள கோயில் தூண்களில் காணப்படுகின்றன. அவை ‘கள்வார கள்வன்’ என்றும், கள்வர் பெருமகன் என்றும் இவர்களைக் குறிப்பிடுகின்றான். மேலும், விஜயாலய சோழன் கி.பி.9ஆம் நூற்றாண்டளவில் சோழ நாட்டை மீண்டும் கைப்பற்றுகின்ற காலை, இம்முத்தரையரிடமிருந்துதான் கைப்பற்றினான் என்று சோழர் கல்வெட்டுச் சாசனங்கள் கூறுகின்றன. இதனைத் ‘தஞ்சை கொண்ட கோப்பரகேசரி’ என்று வீரசோழபுரம் கல்வெட்டுக் கூறுகின்றது. ஆகவே, விஜயாலயனுக்கு முன்பு தஞ்சை வேற்றரசர் கைப்பிடியில் இருந்தது என்பதையும் அவர்கள் முத்தரையர்களாக இருக்க வேண்டும் என்பதையும் அறியலாம். எனின், முத்தரையர் யார்? அவர்களுக்கு இப்பெயர் எவ்வாறு வந்தது? மேல் குறிப்பிடப்பட்ட களவர்கள் மூவேந்தர்களையும் வென்று ஒரு குடைக்கீழ் நாட்டை ஆண்டனர் என்று பாடல்களில் காணப்படு கின்றது. அவ்வாறு மூவேந்தரையும் வென்று மூன்று நாட்டையும் கைப்பற்றிய சிறப்புக் கருதி இவர்கள் முத்தரையர்கள் என்று வழங்கப்பட்டிருத்தல் வேண்டும் என்ற ஒரு விளக்கத்தினையும் கூறமுடியும். இவ்விடத்தில் வடவடுகர் பற்றித் தமிழிலக்கியத்தில் வருகின்ற, “ தென்பரதவர் மிடல் சாய வடவடுகர் வாளோட்டிய தொடையமை கண்ணித் திருந்து வேற்றடக்கைக் கடுமாகடைஇய விடுபரி வடிம்பின் நற்றார்க் கள்ளின் சோழன் கோயில் புதுப் பிறையன்ன சுதை செய் மாடம்” (புறம் : 378) என்ற பகுதி நோக்கற் பாலது. ‘பெரும்பிடுகு’ ‘மாற்பிடுகு’ என்று அடைமொழிகளாலும், ‘காடக்க முத்தரையர்’ என்று வருகின்ற தொடராலும முதலில் இவர்கள் பல்லவரின் கீழ் இருந்தனர் என்பதையும், ‘வாள்வரி வேங்கை குத்தியது’ என்று காணப்படுகின்ற சாசனத் தொடரால் இவர்கள் பின்னர் சோழரின் கீழ் இருந்தனர் என்பதையும் துணிய முடியும். இவ்வாறு தம் பேரரசு நிலை தளர்ந்து, வலிகுன்றி வேற்றரசர்களின் கீழ் சிறு தலைவர்களாக இருந்த காலத்தும் ‘முத்தரையர்’ என்ற சிறப்பு அடைமொழியுடனேயே வழங்கப்பட்டு வந்துள்ளனர். ‘மாறன்’ என்று இவர்களைச் சாசனங்கள் கூறுகின்றன. பல்லவ-பாண்டியப் போரில் துணை சென்று பாண்டியரை வெற்றி கொண்ட காரணத்தால், அப்பெயரை இவர்களுக்கு இட்டு வழங்கி யிருக்கின்றனர் பாடல் ஆசிரியர்கள். இனி, இவர்கள் களவர் மரபினர் என்பதற்கு, ‘கள்வர் கள்வன்’, ‘களவார கள்வன், என்ற தொடர்களும் ‘முத்தரையர்’ என்ற பெயரும, கல்வெட்டுக்களில் ஒரு சேரப் பயிலப் பெற்றிருத்தலே சான்றாகும். கன்னடக் கல்வெட்டுக்களில் முத்தரையர் கன்னட நாட்டுப் பகுதிகளை ஆண்டுவந்த கங்க அரசர்களுக்கு ‘முத்தரசர்’ என்ற சிறப்பு அடைமொழி இருந்துள்ளது. கங்கன் ஸ்ரீபுருஷ மகாராசனை இவ்வாறான அடைமொழியுடன் குறிப்பிட்ட இடங்கள் கன்னடச் சாசனங்களில் காணப்படுகின்றன. “ ஸ்வஸ்திஸ்ரீ கொங்கணி முத்தரச ஸ்ரீ புருஷ மஹா ராஜhதிராஜ பரமேஸ்வர...” (HGOK:P:118, No:24) “ ஸ்வஸ்தி ஸ்ரீமத் கொங்கொணி முத்தரச ர் அயிசதே....” (I Bid:P:124) என வருகின்ற தொடர்களை நோக்குமிடத்து, கன்னட நாட்டை ஆண்ட கங்க அரசர்களுக்கு முத்தரசர் என்ற சிறப்புண்மையை அறியலாம். இவர்களுக்கும் கதம்பர்களுக்கும் அரசியல் போராட்டம் இருந்துள்ளது என்பதைச் சரித்திரம் கூறும். இவர்கள் சமண சமயச் சார்புமிக்கவர்கள் என்பதையும் சமண சமயத் தத்துவங்களில் துறை போகியவர்கள் என்பதையும் கொங்குதேச ராசாக்கள் என்ற சரித நூல் கூறுகின்றது. எனவே, களவர நாட்டினராகிய கங்கர்கள், களப்பிரர் என்றும், முத்தரையர் என்றும் சிறப்புடன் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதும், களவர நாடு மைசூர்ப்பகுதியில் உள்ளதால் அதுவே அவர்கள் தாயகம் ஆகலாம் என்பதும், களவர நாடு என்தே திரிந்து ‘கன்னாடு’ என்றும், ‘கன்னட நாடு’ என்றும் வழங்குவதாயிற்று என்பதும், அது வடுகர் நாடு என்று தமிழிலக்கியங்களில் பண்டு குறிப்பிடப்பெற்றுள்ளது என்பதும், அது தமிழ்மொழியல்லாத மொழி பெயர் தேயம் என்பதும் தெளிவாக அறியக் கிடக்கின்றன. “ நேரா வன்தோள் வடுகர் பெருமகன் பேரிசை யெருமை நன்னாட் டுள்ளதை அயிரியா றிறந்தனர்....” (அகம் 253) என்ற இந் நக்கீரர் பாடலால் வடுகர் நாடு மைசூர் (எருமை நன்னாடு) என்பதனைத் தெளியலாம். ஆகவே, களப்பிரர் என்பார் தமிழகத்தின் வடஎல்லைக்கு அப்பால் வாழ்ந்த வேற்று மொழியினர் என்பதும், கலிதேவ வணக்கம் கொண்டு, சமண சமயத் தொடர்புடன் நந்திமலைப் பகுதியினைக் கைப்பற்றி வாழ்ந்த அரசகுடி மக்களே என்பதும், களவர் இனத்த ‘புல்லி’ என்ற அரசன் ஒரோவழி இவ்வமிசத்தினைச் சார்ந்தவனாகல் வேண்டும் என்பதும், அரசியல் குழப்பமும், நாடு பிடிக்கும் எண்ணமும், இவர்கள் தெற்கு நோக்கி வரக் காரணமாக இருந்துள்ளன என்பதும், அவ்வாறு தெற்கு நோக்கி வந்து முத்தரையர் என்ற சிறப்பினைக் கி.பி.7-8ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பே பெற்று விட்டனர் என்பதும், பின்னர் அவர்கள் செல்வாக்கிழந்து சிறு தலைவர்களாகப் பேரரசுகளின் கீழ் அடங்கி விட்டனர் என்பதும், அவ்வாறு சிறு தலைவர்களாக ஆயினபோதும் செல்வாக்குடன் இருந்தனர் என்பதற்கு அவர்கள் வெளியிட்ட சாசனங்களும், அவர்களைப் பற்றிய சாசனப் பாடல்களும் சான்று பகர்கின்றன என்பதும் இதுவரை கூறிவந்த செய்திகளால் ஒரு தலையாத் துணியப்படும் முடிவுகளாகும்.  IV. தமிழ் நாட்டில் களப்பிரர் தொண்டை நாட்டில் களப்பிரர் இக் களப்பிரர் தமிழ் நாட்டுக்குள் எவ்வாறு நுழைந்தனர்? என்ற வினாவை நோக்குவோம். இவர்கள் ஆதி பூர்வம் தென் கன்னடப் பகுதி எனப் பார்த்தோம். அவ்வாறாயின் அன்றைய சூழ்நிலையில் தமிழ் நாட்டுக்குள் வந்திருக்க வேண்டும். காரணம் அன்றைய பல்லவநாடு ஆந்திரப் பகுதியை விட்டுத் தெற்கில் பாலாறு வரை பரவியிருந்தது. பப்பதேவன் என்ற முதற் பல்லவ மன்னன் இவர்களை எதிர்த்து விரட்டியிருக்கிறான். பின்னர் சிவஸ்கந்த வர்மன் தென் பெண்ணை வரை தன் நாட்டை விரிவாக்கப் பகைவரை மேலும் விரட்டியிருத்தல் வேண்டும். அன்றியும், ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் சிம்ம விஷ்ணு பல்லவனைக் ‘களப்பிரரை வெற்றிகண்ட மாவீரன்’ என்று இரண்டாம் நந்திவர்மனின் காசாக்குடிச் சாசனம் (சுலோகம் 20) புகழ்கின்றது. இரண்டாம் நந்தி வர்மப் பல்லவன் களப்பிரருடன் போரிட்டு வென்றான் என்ற செய்திகளை அவனது புல்லலூர்ச் செப்பேடுகளும் (சுலோகம் 6) பட்டத்தாள் மங்கலம் செப்பேடுகளும் (சுலோகம் 9) கூறுகின்றன. இவையெல்லாம் அவர்கள் பல்லவ நாட்டில் நுழைந்து நிலை பெற முடியாமல் தெற்கில் வந்துவிட்டனர் என்பதையே காட்டுகின்றன. சோணாட்டில் களப்பிரர் அவ்வாறு தென் கன்னடப் பகுதியிலிருந்து விரட்டப்பட்டுப் பல்லவ நாட்டில் நுழைந்து, அங்கும் நிலைபெற இயலாது மேலும் தெற்கு நோக்கி ஓடிவந்த களப்பிரர் சோணாட்டுக்குள் நுழைந்து விட்டனர். தமிழ்நாடு வறுமையில் தொடர்ந்து இருந்த காலப்பகுதியே அக்காலம் எனக் கொள்ளலாம். இக்காலப் பகுதியில் கரிகாலனுக்குப் பின்னர் நிகழ்ந்த சோணாட்டு அரசியல் நிலை என்ன என்பதை அறிதற்கு ஏற்ற ஆதாரங்கள் இல்லை. செல்வாக்கு இழந்த நிலையினைத்தான் நாம் உணரமுடியும். தாயாதிச் சண்டை யெல்லாம் நடந்து கொண்டிருந்தன என்றும் சேரன் செங்குட்டுவன் அவற்றில் தலையிட்டு முறைசெய்தான் என்றும் இலக்கியச் செய்திகள் கூறு கின்றன. எனவே, குழப்பமும் இருந்திருக்க வேண்டும். அது களப்பிரர் சோணாட்டில் நிலைபெற எளிதாக ஓர் சூழ்நிலையைத் தந்திருக்க வேண்டும். மேலும், புகார் நகரில் தங்கள் தலைமையை ஏற்படுத்தும் அளவுக்கு அவர்கள் உயர்ந்திருக்க வேண்டும் என்பதும் ஒருதலை. ஏனெனில், கி.பி.4ஆம் நூற்றாண்டின் பகுதிகளில் இருந்த புத்ததத்தர் என்ற அரசனது அவையில் தனது அபிம்மாவதாரம் என்ற நூலை அரங்கேற்றியதாக அந்நூலில் கூறிச் செல்கின்றார். எனவே, களப்பிரது ஆட்சி நிலை பெற்றுவிட்டது என்பது தெளிவாகின்றது. மேற்கண்ட காரணங்களிலிருந்து களப்பிரர் கன்னடப் பகுதியி லிருந்து தொண்டை நாடு வழியாகவே சோணாட்டுப் புகார்வரை வந்திருத்தல் வேண்டும் என்பதையும், அதுகாலைச் சோணாட்டில் சிறந்த ஆட்சி ஏற்படாததால் இவர்கள் எளிதில் அந்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றி யிருத்தல் வேண்டும் என்பதையும், அச்சுதன் ஆட்சிக்கு முன்பே களப்பிரர் ஆட்சி தெற்கில் கால்கொண்டு விட்டது என்பதையும் அவர்கள் கி.பி.2-3 ஆம் நூற்றாண்டுகளில் தங்கள் அரச யாத்திரையினைத் துவங்கி 4-5ஆம் நூற்றாண்டுகளில் சோணாட்டில் நிலையாக ஆட்சி புரிந்துள்ளனர் என்பதையும் தெளிவாக உணரலாம். தமிழ்நாட்டில் தலைநகரை அமைத்து ஆட்சி செய்த களப்பிரர் அரசர் களில் பெயர் தெரிந்தவன் புகாரைத் தலைநகராக்கி ஆண்ட அச்சுதக் களப்பாளன் என்ற ஒருவனே என்பதை நாம் கருதுதல் வேண்டும். அச்சுத களப்பாளன் இவனைப் புகழ்வனவாகப் பல பாடல்கள் தமிழ் நூற்களில் காணக் கிடக்கின்றன. இவனது தாயகம் நந்திமாமலைப் பகுதியாகும். இவன் தன் ஆட்சியில் மக்களை ஆதரித்துச் சிறந்த புகழைப் பெற்றிருக்கின்றான். அதனால்தான், ‘ பெரும்புகழ் அச்சுதக் கோவே நந்திமா மலை சிலம்ப நந்தி நிற்பரவுதல் நாவலர்க் கரிதே.’ என்று பாடியுள்ளனர் புலவர்கள். இவனைப் போற்றிப் புகழுதல் மிக அரிது. ஏனெனில், அவனது புகழை அளவிட முடியாது. அவ்வாறு புகழுடன் நந்தி மலைப் பகுதியினை ஆண்ட அவன் சிறிது சிறிதாகத் தொண்டை மண்டலப் பகுதியைக் கடந்து புகாரினைக் கைப்பற்றிப் பேரரசனாக வாழ்ந்திருக்கின்றான். தமிழ் மூவேந்தரும் தம் சிறப்புக்களை இழந்து வாழ்கின்றனர். அச்சுதன் மூவேந்தரையும் வென்று ஒரு மொழி - ஓராணை செல்லும் ஆட்சியினை நிலை நாட்டுகின்றான். இக் கருத்தினை, ‘ அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன் தொடு கழற்கொம்பூட்டு பகட்டெழின் மார்பிற் கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வே லச்சுதன் தொன்று முதிர்கட லுலகம் ஒன்றுபுரி திகிரி யுருட்டுவோ னெனவே’ (காரிகை பக்.:112-113) என்று வரும் பாடற் பகுதியால் அறியலாம். தமிழ் நாவலர் சரிதையில் அச்சுத களப்பாளன் மூவேந்தரையும் வென்றான் என்ற குறிப்பும் காணப்படுகிறது. அச்சுதனைப் பற்றிக் காணப்படும் பிறிதொரு பாடலை நோக்குவோம் அது, ‘ துவைக்குந் துளிமுன்னீர்க் கொற்கை மகளிர் அவைப்பதம் பல்லுக்கு அழகொவ்வா முத்தம் மணங்கமழ்தார் அச்சுதன் மண்காக்கும் வேலின் அணங்கமுத மந்நலார் பாட்டு’’ (காரிகை பக்.178) என்று அமைந்துள்ளது. இவ்வாறு ஒரு களப்பிர அரசன் புலவர் பெருமக்களால் போற்றிப் புகழப்படுகின்றான் எனின், அவனது ஆட்சியின் சிறப்பு எந்த அளவுக்கு உயர்ந்திருக்க வேண்டும்? அதை விடுத்து அவர்களது ஆட்சியில் நலம் அழிந்து, தீமைகள் மலிந்து மக்கள் அவதிப்பட்டனர் என்று கூறுவது எவ்வாற்றானும் ஏற்புடைத்தன்று. அரசியல் அமைப்பினைப் பொது நிலையில் நின்று நோக்குவோமாயின் எந்த ஒரு அரசும் தனது செல்வாக்கினைப் பரப்பத்தான் முயன்றிருக்கிறதே அன்றி வென்ற நாட்டின் அரசியல், சமுதாய நிலைகளைப்போற்றி ஏற்றுக்கொண்டதாக இல்லை. தமது கொள்கைகளைப் புகுத்தி நிலை நாட்டிய பின்னர் தான் வென்ற நாட்டின் சமுதாய அமைப்பினை நோக்குகின்றனர். ஏற்புடைய தாயின் அதனையும் ஏற்றுக் கொள்கின்றனர். அந்த நிலையில்தான், சொந்த நாட்டிலிருந்து கதம்பர்களாலும், தொண்டை நாட்டிலிருந்து பல்லவர்களாலும், விரட்டி ஓட்டப்பட்ட களப்பிரர்கள், வலிகுன்றியிருக்கின்ற சோணாட்டரசர்களை எளிதில் வென்று புகாரைத் தலைநகராக்கி ஆண்டிருக்கின்றனர். வறுமையின் கொடுமையில் மயங்கிக் கிடந்த பாண்டிய நாட்டினையும் கைப்பற்று கின்றனர். இவையனைத்தும் கி.பி. 2-3ஆம் நூற்றாண்டுகளில் களப்பிரர் கால்கொள்கின்ற காலத்திய நிகழ்ச்சிகள். அவர்களில் சிறப்பாக ஆண்டு புகழ்பெற்ற அரசன் - பெயர் தெரிந்த பழைய அரசன் அச்சுத களப்பாளன் என்பவனே. தமிழ் இலக்கண நூல்களில் காணும் பல உதாரணச் செய்யுட்கள் களப்பாளனைப் பற்றிச் சிறப்பித்துக் கூறு கின்றன. பாண்டிய நாட்டில் களப்பிரர் பாண்டிய நாட்டில் களப்பிரர் ஆட்சி இருந்தது என்பதற்கும், அவ்வாட்சி இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக நின்று நிலவியது என்பதற்கும், சமுதாயத்தில் சீர்கேடுகள் ஏற்பட்டு நாடு குழப்ப நிலையில் விடப்பட்டது என்பதற்கும், சமய நெறிகள் எல்லாம் நிலை தடுமாறி விட்டன என்பதற்கும், வேள்விக்குடி, மதுரகர நல்லூர்ச் சாசனங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. ஆனால், குறிப்பிட்ட ஒரு அரசன் அல்லது எந்த எந்த அரசர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி ஆண்டார்கள் என்ற செய்தி தெளிவாகத் தெரிந்திலது. ஆயினும், ‘கருநாடர்’ என்ற தொடர் கன்னட நாட்டவர்களைக் குறிக்கும் எனின் பெரிய புராணத்தில் சேக்கிழார் குறிக்கும் ‘கருநாடர்’ என்பதும் கன்னட தேசத்தவரையே சுட்டும் என்பதில் ஐயமில்லை. அந்தக் கருநட வேந்தன் நாட்டைக் கைப்பற்றும் எண்ணத்துடன் தமிழ் நாடுடை மன்னன் பாண்டியனை வென்று மதுரையைக் கைப்பற்றினான் என்று சேக்கிழார் குறித்துச் செல்கின்றார் “ கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவல் மானப் படைமன்னன் வலிந்து நிலங்கொள் வானாய் யானைக் குதிரைக் கருவிப்படை வீரர் திண்தேர் சேனைக் கடலுங் கொடுதென் திசைநோக்கி வந்தான். (பெ.மூ.நா.பு.11) என்றும், ‘ வந்துற்ற பெரும்படை மண்புதையப் பரப்பிச் சந்தப்பொதி யில்தமிழ் நாடுடை மன்னன் வீரம் சிந்தச்செரு வென்று தன்னாணை செலுத்து மாற்றால் கந்தப்பொழில்சூழ் மதுராபுரி காவல் கொண்டான்’ (பெ.மூ.நா.பு.12) என்றும் வருகின்ற பாடல்கள் இச்செய்திகளைக் குறிப்பனவே. இவ்வாறு பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய இவர்கள் அருக சமயத்தினைச் சார்ந்து நின்றவர்களாய்ச் சைவ நெறிகளையும் பணிகளையும் தடை செய்கின்றனர். அந்தணர்களுக்குக் கொடுக்கப் பட்ட பிரமதேயங்களைப் பறிமுதல் செய்தனர் என்று முன்பு பார்த்தோம். சைவ வழிபாடுகளை நிகழாதவாறு தடுத்த செய்திகளை, ‘ படைநான் குடன்று பஞ்சவன் துரந்து மதுரை வவ்விய கருநடர் வேந்தன் அருகர்ச் சார்ந்து நின்று அரன்பணி அடைப்ப’ என்று வரும் ‘கல்லாடச் செய்யுட் பகுதி தெளிவாகக் கூறுகின்றது. எனவே, பாண்டிய நாட்டை இவர்கள் வென்றனர்; சைவ சமய நெறிகளைத் தடுத்தனர்; தங்கள் அருக சமயத்தைத் தழுவிப் போற்றினர் என்ற செய்திகளையும், மதுரை ஆட்சியினையும் கைப்பற்றிக் காவல் கொண்டனர் என்பதையும் நாம் உணரலாம்.  V. களப்பிரர் கலைகள் களப்பிரர் சமயம் இவர்கள் சமயம் சமணம் என்பதைக் கண்டோம். சோணாட்டிலும், பாண்டிய நாட்டிலும் தங்களது அரசியல் செல்வாக்கினைப் பரப்பிய இவர்கள் தாங்கள் தழுவியிருந்த சமண சமயத்தைப் போற்றியும், மொழியினைப் புகுத்தியும் வளர்க்கப் பெருமுயற்சி செய்தனர். சமண சங்கங்கள் ஆங்காங்கு எழுந்தன. சமண முனிவர்கள் மக்களால் மதிக்கப் பெற்றனர். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சமண நோன்பிகளைப் பற்றி ஆங்காங்குக் கூறிச் செல்வதை நோக்கச் சமண சமயம் தமிழ்நாட்டில் செல்வாக்குடன் திகழ்ந்தது என்பதை எளிதில் உணரலாம். இவர்கள் காலத்தில் சிலம்பை ஒட்டிய காலத்தில், எழுந்த மணிமேகலை பௌத்த சமயச் செல்வாக்கினை உணர்த்தி நிற்கின்றது. எனவே, சமணமும், பௌத்தமும் ஓங்கிய நிலையில் இருந்தன என்பதை அறியலாம். கி.மு.2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கும் பிராமித் தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்பெறும் செய்தி களைக் கொண்டு, கடைச் சங்க காலத்திலேயே தமிழ் மன்னர்களின் செல்வாக்கில் சமண, பௌத்த சமயங்கள் ஓங்கியிருந்தன என்பதை அறியலாம். சிலவற்றைப் பார்ப்போம். கருவூர் அருகில் ஆரநாட்டார் மலையில் கிடைத்த ஒரு கல்வெட்டு சேர அரசர்கள் காலத்துச சமணச் செல்வாக்கினைக் காட்டு கின்றது. ‘ அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய கோ ஆதன் சேரல்லிரும் பொறை மகன் பெருங்கடுங்கோ மகனிளங் கடுங்கோ இளங்கோ ஆகஅறுத்த கல்’ (கல்வெட்டுக்கள் பக்.7) இதுவே அந்தச் சாசனம். செங்காயபன் என்ற அமண்ணன் பதிற்றுப்பத்தின் ஏழு, எட்டு, ஒன்பது ஆகிய பத்துக்களில் பாடப் பெறும் வாழியாதன், பெருஞ்சேரலிரும்பொறை, இளஞ்சேரல் இரும் பொறை ஆகிய அரசர்களின் காலத்தில் வாழ்ந்தவன். இச் சாசனம் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. செங்குட்டுவன் காலத்துச் சமணச் செல்வாக்கினைச் சிலப்பதிகாரத்தால் உணரலாம். பின்வரும் சாசனம் பாண்டிய நாட்டில் சமணச் செல்வாக் கிருந்தமையைக் காட்டும், ‘ கணி நந்த ஆசிரிய இ குவன்கெ தம்மம் இ த்தஅ நெடிஞ் சழியன் ப ணஅன் கடலஅன் வழுத்தி ய் கொட்டு பித்த பளிஇய்.’ (தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள்) இது கணி நந்த ஆசிரிகன் என்ற சமணனுக்குக் கொடுக்கப் பட்ட தர்மம். இதைச் செய்து தந்தவன் நெடுஞ்செழியன். இவனுக்கு பணஅன், கடலஅன், வழுத்தி என்ற சிறப்புப் பெயர்களைக் கொடுத்துக் கல்லில் வெட்டியிருக்கின்றனர். ‘ செம்மலுள்ளந் துரத்தலிற் கறுத்தோர் ஒளிறு வேலழுவங் களிறு படக்கடக்கும் மாவண் கடலன் விளங்கில்’ (அகம்:81) என்ற அகநானூற்றுப் பாடற் பகுதியில் ஆலம்பேரி சாத்தனார் தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனை ‘மாவண் கடலன்’ என்று விளித்திருப்பதையும், இச் சாசனத்தில் கடலன் என்று வருவதையும் ஒப்பு நோக்குக. மேலும், இதே புலவர் ‘வானவன் மறவன் பிட்டனை’ப் பாடியிருப்பதும், கருவூர்க் கருகில் பிட்டங் கொற்றன் சாசனம் ஒன்று கிடைத்திருப்பதும் தமிழ் நாட்டுப் பண்டை வரலாற்றில் ஒரு காலக் குறிப்பினை உறுதிப் படுத்து வதற்கு ஏற்ப உள்ளன. இச் சாசனத்தின் காலம் கி.மு. 100 எனக் கருது கின்றனர். ‘ வசையில் வெம்போர் வானவன் மறவன் நசையின் வாழ்நர்க்கு நன்கலஞ் சுரக்கும் பொய்யா வாய்வாட் புனைகழற் பிட்டன்’ (அகம்: 143) என்பது ஆலம்பேரி சாத்தனார் வானவன் மறவன் பிட்டனைப் பற்றி அகநானூற்றில் பாடிச் செல்லும் செய்தி. செங்கற்பட்டு மாவட்டம் திருநாதர் குன்றில் கிடைக்கும் ஒரு பிராமி - வட்டெழுத்துத் தமிழ்ச சாசனம் சமண ஆசிரியர் ஒருவர் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த செய்தியைத் தெரிவிக் கின்றது. இச் சாசனத்தின் காலம் பிராமி எழுத்து வளர்ச்சியின் இறுதி நிலையையும் வட்டெழுத்துத் தோற்றத்தின் முதல் நிலையையும் காட்டும் காலம் என்கின்றனர். அது கி.பி.4-5ஆம் நூற்றாண்டாகலாம். சாசனம் பின்வருமாறு அமைந்துள்ளது. ‘ ஐம்பத் தேழ் அன சனந் நோற்ற சந்திர நந்திஆ சிரிகர் நிசீதிகை’ சமண முனிவர்கள் உண்ணா நோன்பு இருந்து உயிர் துறப்பர் என்ற செய்தியினையும், அதன் நினைவாக மக்கள் அவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்புகின்றனர் என்பதையும் இச் சாசனத்தால் அறியலாம். ‘உண்ணா நோன்போ டுயர் பதிப்பெயர்த்ததும்’ (சிலப்பதிகாரம்; நீர்ப்படைக் காதை:83) என்ற சிலப்பதிகாரச் செய்தியினையும், சங்கப்பாடல்களில் காணும் வடக்கிருத்தலையும், இதனுடன் ஒப்பிட்டால் இப்பழக்கம் அனை வராலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது என்பதைத் தெரியலாம். எனவே, கி.மு.முதல் நூற்றாண்டளவிலேயே சமண சமயம் தமிழ் நாட்டில் கால் கொண்டு விட்டது என்பதையும், அரசியல் இடையீடு ஏற்படுமுன்னே சமயம் புகுந்துவிட்டது என்பதையும் தெளிவாக உணரலாம். இவ்வாறு இவர்கள் அருக சமயத்தைச் சார்ந்திருந்ததோடு, சைவ நெறிகளை வளராமல் தடை செய்தனர் என்பதையும் அறிகிறோம். ‘ மதுரை வவ்விய கருநட வேந்தர் அருகர்ச் சார்ந்து அரன்பணி அடைப்ப’ என்று வருகின்ற கல்லாடச் செய்யுட் பகுதி இச்செய்தியினை உறுதிப் படுத்தும். இக்காலப் பகுதியிலேயே சமண சமயத்துடன் பௌத்தமும் தமிழ் நாட்டில் பரவியிருந்தது. ‘ஆலம் பேரி சாத்தனார்’,ஆவூர்க் காவிதிகள் சாதேவனார், ‘கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்’, ‘பெருந்தலைச் சாத்தனார்’ ‘சீத்தலைச் சாத்தனார்’ என்றெல்லாம் பயிலப்படுகின்ற புலவர் பெயர்கள் பௌத்த சமயச் சார்பினைக் காட்டுகின்றன. மணிமேகலை பௌத்தச் செல்வாக்கில் தோன்றிய காவியம் அன்றோ? இச்சமயமும் இவர்கள் ஆட்சியில் சிறப்பாகவே இருந்துள்ளது. புத்ததத்தர் வாழ்ந்ததும், அவரது ‘அபிம்மாவதாரம்’ தோன்றி அரங்கேறியதும் இக்காலத்தில்தான். இந்நூலில் அவர் களப்பிர அரசன் அச்சுத விக்ரந்தன் புகார் நகரைத் தலைநகராகக் கொண்டு சோணாட்டை ஆண்டான் என்ற குறிப்பினை நூலில் தந்துள்ளார் என்பதையெல்லாம் முன்னர் கண்டோம். களப்பிரர் அரசியல் இவ்வாறாகச் சமயமும், சமயக் கொள்கைகளும் நாட்டில் பரவி வந்ததுபோல, முறையானதொரு ஆட்சி அமைத்து ஆண்டனர் என்று சொல்வதற்கேற்ற ஆதாரங்கள் இல்லை எனலாம். களப்பிரர் ஆட்சி பற்றி அறியத் துணையாகும் ஒரே நூல் புத்ததத்தரது அபிம்மாவ தாரமே. மேலே இதைப் பற்றிக் கூறினோம். தமிழ் இலக்கியங்களிலும் இலக்கண மேற்கோள் பாடல்களிலும் ஆங்காங்கு அச்சுதனைப் பற்றியும் அவனது சிறப்பான ஆட்சி யினைப் பற்றியும் கூறப்பட்டுள்ளன. ஆனால், சிறந்த அரசியல் அமைப்பில் தொடர்ந்து ஆட்சி செய்து தம்புகழ் பரப்பினர் என்று சொல்ல முடியாது. பாண்டிய நாட்டில் இவர்கள் ஓரளவு செல்வாக்குப் பெற்ற காலத்தில் தான் சமண சங்கம் கூடியிருக்க வேண்டும். அக்காலம் கி.பி.4-5 ஆம் நூற்றாண்டாகலாம். எனினும், இக்காலப் பகுதியில் களப்பிரர் ஆட்சி முறை, அரசியல் நிர்வாகங்கள் எவ்வாறு இருந்தன? யார்யார் ஆட்சிபீடம் ஏறி ஆளும் நிலையினைப் பெற்றனர்? அக்காலச் சூழ்நிலையில் மக்களின் நிலை எவ்வாறு இருந்தது? என்ற செய்திகள் யாவும் இன்னும் விளங்காத புதிராகவே உள்ளன. மொழி இலக்கியம் இக்காலப் பகுதியில் செல்வாக்குப் பெற்ற இச்சமயங்கள் பாகதம், பாலி ஆகிய மொழிகளால் ஆன இலக்கியங்களைப் பெற்றிருந்தன. நாட்டில் இம் மொழிகளின் வளர்ச்சியும் ஆதிக்கமும் பரவின. தமிழ்மொழி அமைப்பு அம்மொழியமைப்புக்கு ஏற்பத் திரியத் தொடங் கிற்று. சமண, பௌத்த முனிவர்கள் பாகத மொழியில் எண்ணித் தமிழ் மொழியைப் பொறித்தனர். இதற்குச் சான்றாகக் கி.பி.2ஆம் நூற்றாண்டில் வெளியிடப் பெற்றதாகிய சாதவாகனச் சதகர்ணியின் பாகதத் தமிழ் இருமொழி நாணயம் இவ்வமைப்பினை அல்லது மொழி பெயர்ப்பினைக் கொண்டிருக்கின்றது. ‘ வஸிடி புதஸ ஸிரி ஸதகணிஸ ராஞோ வசிட்டி மகன்கு திரு சதகணிரு அரசன்கு.’ இக்காசு வசிட்டி புத்ர ஸ்ரீசதகர்ணி அரசனுடையது என்பதைப் பாதகம், தமிழ்ஆகிய மொழிகளில் பொறித்துள்ளனர். பின்னர் இக் குரவர்கள் வட்டார மொழியிலேயே தமது கருத்துக் களைப் பரப்ப எண்ணி நல்ல தமிழ்ப் புலவர்களாகத் தங்களை ஆக்கிக் கொண்டனர். இக்களப்பிரர் ஆட்சிக் காலத்தை ஒட்டி எழுந்தவையே பதினெண்கீழ்க் கணக்கு நூற்கள். இவற்றில் சில சமண சமயக் கொள்கைகளைக் கொண்டும், சில சமண முனிவர்களால் இயற்றப் பெற்றும் உள்ளன. நால்வகை உறுதிப் பொருள்களில் அறமும், வீடும் இவ்வகை நூல்களில் பெரிதும் போற்றப்பட்டன. எனினும், தமிழ் இலக்கண, இலக்கிய மரபுக்கு ஏற்பட அகத்திணைப் பாடல்களையும், யாப்பு, அணி இலக்கண நூற்களையும் வகுத்தனர். சீவக சிந்தாமணி, பெருங்கதை, சூளாமணி முதலானவை 8, 9 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய சமணக் காவியங்களே. யாப்பருங்கலம் தந்த புலவரும ஒரு சமண முனிவரே. சமயக் கல்வி பாண்டிய நாட்டில் கழுகு மலையில் காணப்பெறும் நூற்றுக் கணக்கான வட்டெழுத்துச் சாசனங்கள் சமண சமயக் குரவர்களின் பெயர்களைக் கூறுகின்றன. இவை கி.பி. எட்டாம் நூற்றாண்டளவில் தோன்றியவை. இவற்றை நோக்கும்போது, இவர்களின் கீழ் சமயக் கல்வி - பொதுக் கல்வி பெறப் பல மாணாக்கர்களும், மாணக்கியர் களும் இருந்தனர் என்பதையும், சமயக் குரவர்களாக ஆடவரேயன்றிப் பெண்பாலரும் இருந்திருக்கின்றனர் என்பதையும் தெளியலாம். இவை யெல்லாம் சமண சமயம் மக்களிடையே கொண்டுள்ள பெருமதிப்பைக் காட்டுகின்றன. அரசியல் நிலை நீடித்து நிலைபெற முடியாமல் போய் விட்டாலும் கூட சமயநிலை அக்காலச் சூழ்நிலையில் வேரூன்றி யிருந்தது என்பது ஒருதலை. வேற்றுப் புலத்தவரான களப்பிரர் தமிழ்நாட்டுப் பண்பாட்டு முறைகளை ஏற்றுக் கொள்ளாததில் வியப்பொன்றுமில்லை. தமிழ் மன்னர்கள் செய்த தானங்களையெல்லாம் நடவாமல் தடுத்துப்பறித்துத் தம் சமயத்துக்குக் கொடுத்தனர் என்ற செய்திகளைக் கண்டோம். சைவ சமயம் இவர்கள் காலத்தில் ஆதரிப்பார் அற்றுத் தாழ்ந்த நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பதை அருகர்ச் சார்ந்து அரன் பணி அடைத்த நிகழ்ச்சிகளால் உணரலாம். பிற்காலத்தில் பல்லவர்கள் சமண சமயத்தை ஒரோ காலங்களில் தழுவியிருந்தாலும், வளர்ந்து வந்து கொண்டிருந்த பக்தி இயக்கத்தின் வேகத்தினால் சமண சமயமும் தன் செல்வாக்கினை இழக்கலாயிற்று. பல்லவ வேந்தன் மகேந்திரவர்மன் வரலாற்றினையும், பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் வரலாற்றினையும் அதற்குச் சான்றுகளாகக் காட்டலாம்.  VI. களப்பிரர் - சமணம் சீரழிவு பிற்காலத்தில் இவர்களில் சிலர் சமணம் விட்டுச் சைவ சமயத்தினைத் தழுவினர் என்பதை அறிகிறோம். திருநாவுக்கரசர் தருமசேனர் என்ற பெயருடன் சமணத்திலே சிறப்பான நிலையில் இருந்ததையும் பின்னர் இறைவன் திருவருளால் சைவ சமயத்துக்கு மாறினார் என்பதையும், அதுகாலைக் காஞ்சியில் ஆட்சி நடத்தி வந்த மகேந்திர வர்ம பல்லவனும் சமண சமயம் விட்டுச் சைவன் ஆயினான் என்பதையும் பெரிய புராணச் செய்திகளால் அறியலாம். இதுபோழ்து பாண்டி நாடு எப்படியிருந்தது என்பதை, ‘ பூழியர் தமிழ்நாட் டுள்ள பொருவில் சீர்ப் பதிகள் எல்லாம் பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவுமாகிச் சூழிருட் குழுக்கள் போலத் தொடைமயிற் பீலியோடு மூழிநீர் கையிற் பற்றி அமணரே யாகி மொய்ப்ப ’ (பெரிய புராணம் தி.ச.பு.: 601) என்ற பாடலால் அறியலாம். பாண்டிய மாறவர்மன் முன்பு சமணனாக இருந்து ஞானசம்பந்தராலும், மந்திரி குலச்சிறையார், மனைவி மங்கையர்க்கரசியாராலும் சைவனாகினான். இவனது நிலையை, ‘ வரிச்சிலைத் தென்ன வன்தான் உய்தற்கு வடவர் கோமான் திருவுயிர்த் தருளும் செல்வப் பாண்டிமா தேவி யாரும் குரைகழல் அமைச்ச னாராம் குலச்சிறை யாரும் என்னும் இருவர்தம் பாங்கு மன்றிச் சைவம்அங் கெய்தா தாக’ (பெரியபுராணம் தி.ச.பு. 603) என்று விளக்குகின்றார் சேக்கிழார். இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் அந்தணர்களுக்கு இறையிலி யாக நிலப் பகுதிகளைத் தரும்போது சைனக் கடுங் கோட்பாடுகளை அல்லது அதர்மக் கோட்பாடுகளை நீக்கிக் கொடுத்தான் என்று உதயேந்திரம் சாசனம் கூறுகிறது. ‘இந்த எல்லைகட்குள் பட்ட இடங்களையும், நீர்ப்பாசன உரிமையோடும், சைனக் கடுங்கோட்பாடுகளை விலக்கியும்மன்னன் கொடுத்தான்’ இது உதயேந்திரச் செப்பேட்டுப் பகுதி. கங்க அரசன், ஸ்ரீ ராமானுஜரால் சமண சமயம் விட்டு வைணவ நெறியைத் தழுவினான் என்று ‘கொங்கு தேச ராஜாக்களின் சரிதம்’ கூறுகின்றது. இவையெல்லாம் சமண சமயத்தின் செல்வாக்கு சிறிது சிறிதாக மறைந்து வருகின்றதென்பதையும், அதை ஊக்கவும், வளர்த்து ஆதரவு தரவும் கூடியவர்கள் இல்லாதொழிந்தனர் என்பதையும் காட்டுகின்றன. சமணர்களுக்குப் பல வழிகளிலும் எதிர்ப்புகளும் இடையூறுகளும் தோன்றின. பல்லவர் காலத்தில் தோன்றிய சமயப் புரட்சி இந்து சமய வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றது. சமணர்கள் கழுவேற்றப் பட்டார்கள் பாண்டி நாட்டில் இக்கருத்தினை, ‘ பண்புடை அமைச்ச னாரும் பாருளோர் அறியும் ஆற்றால் கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற நண்புடை ஞானம் உண்டார் மடத்துத்தீ நாடி இட்ட எண்பெருங் குன்றத் தெண்ணா யிரவரும் ஏறி னார்கள்’ (பெரியபுராணம் தி.ச.பு. 855) என்ற பெரிய புராணப் பாடல் விளக்கும். போலிச் சமணர்களால் அனல் வாதம், புனல் வாதம் என்ற வாதங்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. தத்துவ விசாரங்கள் சமணர்களிடம் குறைந்துவிட்டன. அவர்களது திகம்பரத்தன்மை மக்களால் வெறுக்கப்பட்டது. ஞானசம்பந்தரும், அப்பரும் மிகக் கடுமையாகவும் இழிசொற்களாலும் அவர்களை ஏசி மக்களிடம் மதிப்பிழக்கச் செய்தனர். இவ்வாறாக அரசியல் நிலையிலிருந்தும், சமுதாயத்தினின்றும், அவர்கள் தங்கள் சமயச் செல்வாக்கினையும் இழந்து சீரழியலாயினர்.  VII. பிற்காலத்தில் களப்பாளர் நாடோடிகளாக வந்த இக்களப்பிரர் தங்களது ஆட்சியும், அரசியலும், சமயமும் எல்லாம் கால வெள்ளத்தில் மூழ்கத் தாழ்ச்சி யுற்றுத் தமிழர் தம் வாழ்க்கை முறைகளுடன் இணைந்துவிட்டனர் என்றே சொல்லலாம். அவ்வாறு தமிழர் வாழ்வுடன் இணைந்து தமிழ் நாட்டுப் பகுதிகளில் நிலைத்து வாழத் தலைப்பட்ட காலத்தில்தான் தமிழ் மக்கள் கலாசாரத்துடன் ஒன்றி வேறுபாடுணர முடியாத அளவுக்குக் கலந்து வாழ்கின்ற சூழ்நிலையை அடைகின்றனர். பிற்கால அரசர்களிடம் செல்வாக்குப் பெற்று அரசியல் அலுவல் களை ஏற்றும், பணிந்தும் வாழ்ந்தனர். அரசர்கள் ‘களப்பாளராசர்’ என்ற பட்டம் கொடுத்துச் சிறப்புக்கள் செய்கின்ற அளவுக்குத் தங்கள் செல்வாக்கினை உயர்த்திக் கொண்டனர். சிலர் தமிழ்ப் புலவர் களாகவும், சிலர் தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் வள்ளல்களாகவும் இருந்திருக்கின்றனர். பெருமன்னர்களின் படைகளுக்குத் தலைமை தாங்கித் துணைபுரிந்து வந்திருக்கின்றனர். வேளாண் மரபு அவர்களின் சமுதாய வாழ்வில் தனியிடத்தைப் பெற்றதென்றே சொல்லலாம். தமிழ்நாட்டின் வேளாண் மரபில் களப்பிரர்கள் கலந்த பின்னர் களப்பிரரைக் களப்பாளர் என்ற பெயரில் அழைக்கலாயினர். தமிழ் நாட்டுக் களப்பாளர்தான் களப்பிரர் என்று சிலர் மயங்கித் தலை தடுமாறிக் கூறியுள்ளதையும் நோக்குக. பிற்காலச் சாசனங்கள் ‘களப்பாழர்’ என்றே அவர்களைக் குறிக்கின்றன. இவ்வாறு அவர்கள் தமது பழைய செல்வாக்குகளையெல்லாம், இழந்து - மறந்து - புதிய அமைப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வாழத் தலைப்பட்டனர். அவ்வாறு களப்பாளராக வாழ்ந்த ஒரு சில தலைவர்களைப் புராணங்களும், இலக்கிய நூற்களும் குறிப்பிடு கின்றன. கூற்றுவ நாயனார் இவர் பெரிய புராணத்தில் சேக்கிழாரால் பாடப்பெற்ற அரசர். இவர் தம் ஆட்சிக் காலத்தில் உலகெலாம் தமது ஒரு குடைக்கீழ்க் கொணர்ந்து காவல் செய்தார் என்று அவர் கூறுகின்றார். ‘ காதற் பெருமைத் தொண்டின் நிலைக்கடல்சூழ் வையம் காத்தளித்துக் கோதங் ககல முயல்களந்தைக் கூற்ற னார்தம் கழல் வணங்கி..’ (பெரிய புராணம் கூற்:நா:8) என்று அவர் தனது நூலில் குறித்துள்ளார். ‘ ஓதம் தழுவிய ஞாலமெல்லாம் ஒரு கோவில் வைத்தான் கோதை நெடுவேல் களப்பாளன் ஆகிய கூற்றுவனே’ எனவே, கூற்றுவ களப்பாளன் உலகைத் தன்னடிக் கீழ்க் கொண்டு ஆண்ட செய்தி தெளிவாக உள்ளது. மூர்த்தி நாயனார் இவரும் சேக்கிழாரால் பெரிய புராணத்தில் பாடப் பெற்றவரே. இவரைக் கருநட வேந்தன் என்று அவர் குறிக்கின்றார். ‘ கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவல் மானப் படைமன்னன் வலிந்து நிலங்கொள் வானாய் யானைக் குதிரைக் கருவிப்படை வீரர் திண்தேர் சேனைக் கடலும் கொடுதென் திசைநோக்கி வந்தான்’ (பெரிய புராணம் மூர்த்தி நாயனார் : 11) என்பது பாடல். இவர் நால்வகைப் படையும் பரப்பி வடக்கினின்றும் போந்து மதுரையைக் கைப்பற்றி ஆண்டதாகக் கூறுகின்றார். இவரது மதுரைப்படையெடுப்பினைப் பற்றிப் ‘பாண்டிய நாட்டில் களப்பிரர்’ என்ற பகுதியில் முன்பும் குறிப்பிட்டோம். சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயர் இவர் பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார் பெருமானின் தம்பியாவார். இரண்டாம், மூன்றாம் குலோத்துங்க சோழனின் இரண்டாவது ஆட்சி ஆண்டில் கோட்டூர்ச் சிவன் கோயிலில் நந்தா விளக்கு எரிய வைக்கப் பொற்காசுகள் நிவந்தமாக அளித்துள்ளார். களப்பாளராசன் நெற்குன்ற வாணன் இவரது பெயரைக் கொண்டே இவர் நெற்குன்றம் என்ற ஊருக்குத் தலைவராக இருந்தார் என்பதை அறியலாம். இவர் குலோத்துங்கன் காலத்தவர். சிறந்த வள்ளலாகவும், புலவராகவும், நல்ல ஒழுக்க சீலராகவும் விளங்கியவர். சோழனது ஆட்சிக் காலத்தில் எழுந்த திருப்புகலூர்க் கல்வெட்டு இச்செய்திகளைத் தெரிவிக்கின்றது. இவர் இக்கோயிலில் குடி கொண்டிருக்கும் இறைவன் மீது ஒரு அந்தாதி பாடியுள்ளார். அவ்வந்தாதியின் இறுதியில் அந்நூலைப் பாடினவன் நெற்குன்ற வாணன் என்று குறிப்பிடப் பெற்றுள்ளது. ‘களப்பாளன் நெற்குன்ற வாணன் அந்தாதிக் கலித்துறையே. என்ற வரியினைக் கொண்டு அச்செய்தியைத் தெளியலாம். இவரது அரும்பெரும் பண்புகளை விளக்க வந்த புலவர் புராண ஆசிரியர் குமணன், தெள்ளா றெறிந்த நந்திவர்மன் ஆகிய மன்னர்களுடன் ஒப்பிட்டுப் பாடுகின்றார். ‘ தலைகொடுத்த குமணனிலும் உயிர்கொடுத்த நந்தியிலும் தமிழ்காத்தான் போய் விலைபடுமிந் நெற்குன்ற வாணனைமேல் எனத்துணிந்து விளம்ப லாகி நிலைபொறுத்த புலமையுற்று மானத்தும் புகழ் பெரிதா நினைத்தாலும் கலையுணர்ச்சி சிறிதுறினும் இனத்தொ டிகல்கொடுங் குணமும் கடந்தானம்மா’ என்று அவனது தமிழ்ப் பற்றின் பெருமையினைச் சிறப்பித்துப் பாடிச் சென்றுள்ளார். களப்பாளராசன் சாலை திருப்புகலூர்க் கல்வெட்டு, களப்பாள ராஜர் என்பார் சாலை செய்வித்தார் என்றும், அங்குப் பிராமணர்கள் உண்பதற்காகச் சாலைப்புறமாக இறையிலி நிலம் அளித்தார் என்றும் கூறுகின்றது. இதைச் செய்த களப்பாளராசன் நெற்குன்ற வாணன். ஆதியில் களப்பிரர் தமிழரசர்களால் கொடுக்கப்பட்ட பிரம தேயங்களைக் கைப்பற்றிக் கொண்டனர் என்று வேள்விக்குடி சாசனம் கூறுகிறது. ‘ அளவரிய ஆதிராசரை அகலநீக்கி அகலிடத்தைக் களப்ரன் என்னும் கலியரைசன் கைக் கொண்டதனை இறக்கியபின்’ என்று வேள்விக்குடிச் சாசனப் பகுதி ஈண்டு ஒப்பு நோக்கற் பாலதே. அச்சுத களப்பாளர் இவர் மேற்கூறிய அச்சுத களப்பாளனிலும் வேறுபட்டவர். இவரது காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு சிவஞானபோதம் எழுதிய மெய் கண்டாரின் தந்தையாவர். எனவே, மெய்கண்டாரையும் இக்குலத்த வராகவே கொள்ள இடமேற்படுகிறது. சமண சமய தத்துவங் கொண்ட பழைமையினையும் சைவ சித்தாந்த நெறிகண்ட இக்காலச் சூழ்நிலையினையும் ஒப்பு நோக்கி உணர்க. முடிவு இது காறும், களப்பிரர்கள் எவ்வாறு மொழி பெயர் தேயத்து வேங்கடத்தும்பர் கருநடநாட்டின் அரசியல் செல்வாக்கினைப் பெற்றுச் சிறப்புற்றும்,பின் பல்வேறு அரசியல் சூழலில் தங்களை இழந்து தமிழ் மக்களுடன் கலந்து தமிழ் நாட்டில் சங்கமம் ஆயினர் என்பதையும், இதேபோலச் சமண சமயமும் எவ்வாறு நிலைபெற முடியாமல் போயிற்று என்பதையும் ஒருவாறு ஆராய்ந்து கூறினோம்.  வேள்விக்குடிச் செப்பேடுகள் ‘வேள்விக்குடிச் செப்பேடுகள்’ இந்தியக் கல்வெட்டு பதினேழாம் தொகுதியில் பதினாறாவது எண்ணாகப் பதிப்பிக்கப்பெற்றுள்ளன1.இதை ஆங்கில எழுத்தாக்க முறையில் பதிப்பித்தவர் எச்.கிருஷ்ண சாஸ்திரி, பி.ஏ., ஆவார். இதை எஸ். இராஜம் நூல் வெளியீட்டுக் குழுவினர் ‘சாசனமாலை’ என்ற சிறு நூலில் வெளியிட்டுள்ளனர்.2 காலஞ்சென்ற திரு.கூ.ஏ. சதாசிவ பண்டாரத்தார் தமது ‘பாண்டியர் வரலாறு’ என்னும் நூலில் சேர்க்கை 1ல் பதிப்பித்துள்ளார்.3 இவைகள் அனைத்தும், செப்பேட்டினை வெளியிட்டு உலகுக்கு அறிவிக்க வேண்டும் என்ற நோக்கமும், வரலாற்றுக்குத் துணையாக அமைந்திருப்பதைக் காட்டும் நோக்கமும் உடையன. எனவே, அவர்கள் சாசனத்தின் செய்யுள் நடையினை அவ்வளவு கருதவில்லை. தமிழ்ச் செய்யுள் எட்டாவது நூற்றாண்டில் எவ்வாறு அமைந்திருந்தது. அது சாசனங்களில் பெற்றிருந்த இடம் எத்தகையது என்பதையெல்லாம் ஆராய்வதற்கு இச்சாசனம் ஒரு சிறந்த கருவியாக மிளிருகிறது. இச்சாசனம் காட்டுகின்ற அரச வழியினர், போர் நிகழ்ச்சிகள் முதலியவற்றையும், அரசு முறையினையும் கூர்ந்து நோக்கினால் எட்டாம் நூற்றாண்டு வரையுள்ள தமிழ்நாட்டு வரலாற்றினை மிகத் தெளிவாக உணரலாம். இச்சாசனத்தின் வரலாற்றுச் சிறப்பினையும் நன்கு உணரலாம். இவ்வாறான பல தெளிவுகளுக்காகச் சாசனத்தைப் பல பகுதிகளாகத் தலைப்பிட்டுள்ளேன். முதல் பகுதி, சங்ககாலப் பாண்டியன் என்று கருதப்படுகின்ற பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி1 என்பான் வேள்வி செய் வதற்காகக் கொற்கைக் கிழானான நற்கொற்றன் என்பானுக்குப் ‘பாகனூர்’2 என்ற செழிப்பு மிக்க ஊரை ‘வேள்விக்குடி’ என்று பெயரிட்டுத் தானம் செய்ததையும், பின்னர் ‘களப்பிரர்’3 என்ற ஓர் இனத்தவர் நாட்டினைக் கைப்பற்றிக் கொள்ள, அந்தத் தானம் பறிக்கப்பட்டதையும் கூறுகின்றது. அடுத்த பகுதி, கி.பி. 575 முதல் 700 வரை ஆண்ட பாண்டிய மன்னர்களின் பரம்பரையையும், அவர்கள் சேர, சோழ, பல்லவ, சாளுக்கிய மன்னரோடும், சிறு தலைவர்களோடும் செய்த போர்களைப் பற்றியும், அவர்கள் செய்த தானச் செய்திகள் முதலியவற்றைக் குறித்தும் கூறுகிறது. இந்தப் பகுதியே வரலாற்றுக்கு இன்றியமையாத பகுதியாகும். பின்னர் வருகின்ற பகுதி, நெடுஞ்சடையனது மூன்றாவது ஆட்சியாண்டில் ‘காமக்காணி நற்சிங்கன்’ என்பவன் பழைமையதான அந்தக் கொடைக்கு உரிமை கோரி முறையிடுவதையும் அதற்கு அரசன் சான்று காட்டும்படி கூற, அவனும் அரசனது ஆணையின் படி சான்று காட்டிட மன்னன் மகிழ்ந்து, தம் முன்னோர் கொடுத்த படியே எல்லா வகையான உரிமைகளோடும் தாரை வார்த்துக் கொடுத்ததையும் கூறுகின்றது. அதன்பின், தானம் செய்த நிலத்தின் எல்லைகளை வரையறுக் கின்ற செய்தியையும், இந்தத் தானத்தைச் செயல்படுத்தித் தந்தவன் நெடுஞ்சடையனது அமைச்சன் ‘மாறங்காரி’4 என்பதையும் கூறுகின்றது. இறுதியில் தானத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டியவர்கள் இன்னின்னார் என்பதையும், அளவினையும் இச்சாசனத்தை எழுதியவன் பெயரையும் காணலாம்.  குறிப்புக்களும் விளக்கங்களும் 1. EPigraphia India Volume 17, No.16 2. சாசனமாலை: பக்:7, எஸ்.இராஜம், 5, தம்புச் செட்டித் தெரு, சென்னை - 1 (1960) 3. பாண்டியர் வரலாறு, பக்:193, 5ஆம் பதிப்பு கூ.ஏ. சதாசிவ பண்டாரத்தார் (1966) 4. பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி இவனைப் பாடுவனவாகப் புறநானூற்றில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவன் யாகம் பல செய்தவன் என்பதைப் புறம் 15ஆவது பாடலில் நெட்டிமையார் என்ற புலவர் குறிப்பிடுகின்றார். மதுரைக் காஞ்சியிலும் இவனைப் பற்றிய குறிப்பு உள்ளது. இலக்கியச் சான்றுகள் கொண்டு அறியலாகும். பாண்டிய அரசர்களுள் தொன்மை சான்றவன் இவனே. 5. பாகனூர் தொன்மைப் பெருமை வாய்ந்தது. கி.பி.2ஆம் நூற்றாண்டுப் பிராமித் தமிழ்க் கல்வெட்டுக்களில் இப்பெயர் குறிக்கப் பெற்றுள்ளது. இன்றைய பாகனேரியே பண்டு பாகனூர் என வழங்கப்பட்டது. 6. களப்பிரர் கடைச் சங்க காலத்துக்குப் பின் கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6ஆம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் ஆட்சி செய்தவர்கள். இவர்களது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் நிலை, தமிழ்மொழியின் நிலை, தமிழ்மன்னர்களின் நிலை யாவும் விளக்கமற்றுக் கிடந்தன. இவர்களைப் பற்றி ஒரு தெளிவான செய்தியும் கிட்டிற்றில்லை. அதனால் அக்காலப் பகுதியைத் தமிழ் நாட்டின் இருண்டகாலம் என்பர். 7. மாறங்காரி இவன் களக்குடி (இன்றைய களக்காடு) நாட்டைச் சார்ந்தவன். வைத்திய குலத்தில் பிறந்தவன். பாண்டியன் நெடுஞ்சடையனது அமைச்சனும், சேனாதிபதியுமாவான். இவன் மதுரை நரசிங்கபுரத்தில் ஒரு கற்கோயில் கட்டத் தொடங்கி அது முடியாத போதே இறந்து பட்டான். பின் அவன் தம்பி மாறன் எயினன் அப்பணியைச் செய்து முடித்தான் என்று ஆனைமலைக் கல்வெட்டுக் கூறுகின்றது.  சாசனப் பகுதி தானத்தின் வரலாறு ‘கொல்யானை பல ஓட்டிக் கூடாமன்னர் குழாம் தவிர்த்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியாதி ராஜனால் நாகமாமலர்ச் சோலை நளிர்சினை மிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றம் என்னும் பழனக் கிடக்கை நீர்நாட்டுச் சொற்கண்ணாளர் சொலப்பட்ட சுருதி மார்க்கம் பிழையாத கொற்கைகிழான் நற்கொற்றான் கொண்ட வேள்வி முற்றுவிக்கக் கேள்வி அந்தணாளர் முன் ‘கேட்க’ என்றெடுத்துரைத்து வேள்விக் சாலை முன்பு நின்று ‘வேள்விக்குடி’ என்று அப்பதியைச் சீரோடு திருவளரச் செய்தார் வேந்தன். அப்பொழுதேய் நீரோடு அட்டிக் கொடுத்தமையால் நீடு புக்தி துய்த்தபின் அளவரிய ஆதிராஜரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்ரன் என்னும் கலியரைசன் கைக்கொண்டதனை இறக்கிய பின்- பாண்டியர்கள் கடுங்கோன் படுகடன் முளைத்த பருதி போல பாண்டியாதி ராஜன் வெளிற்பட்டு விடுகதிர் அரொளி விலக வீற்றிருந்து வேலை சூழ்ந்த வியலிடத்துக் கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச் செங்கோல் ஓச்சி வெண்குடை நீழல் தங்கொளி நிறைந்த தரணி மங்கையைப் பிறர்பால் உரிமை திறவிதின் நீக்கித் தன்பால் உரிமை நன்கனம் அமைத்த மானம் பேர்த்த தானை வேந்தன் ஒடுங்கா மன்னர் ஒளிநகர் அழித்த கடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னன் மாறவர்மன் அவனி சூளாமணி மற்றவர்க்கு மகனாகி மஹீதலம் பொது நீக்கி மலர்மங்கையொடு மணன் அயர்ந்த அற்றம்இல் அடல்வேல் தானை ஆதிராஜன் அவனி சூளாமணி எத்திறத்தும் இகல் அழிக்கும் மத்தயானை மாறவர்மன் சேந்தன் செழியன் மற்றவர்க்கு மருவினிய ஒருமகனாகி மண்மகளை மருக்கடிந்து விக்ரமத்தின் வெளிற்பட்டு விலங்கல் வேல்பொறி வேந்தர் வேந்தன் சிலைத் தடக்கைக் கொலைக் களிற்றுச் செழியன் வானவன் செங்கோற் சேந்தன். மாறவர்மன் (கூன்பாண்டியன்) மற்றவர்க்குப் பழிப் பின்றி வழித் தோன்றி உதயகிரி மத்யமத்து உறுசுடர் போலத் தெற்றென்று திசைநடுங்க மற்றவன் வெளிற்பட்டுச் சூழி யானை செலவுந்திப் பாழிவாய் அமர்கடந்து வில்வேலிக் கடற்றானையை நெல்வேலிச் செருவென்றும் விரவி வந்து அடையாத பரவரைப் பாழ் படுத்தும் அறுகால் இனம் புடைதிளைக்கும் குறுநாட்டவர் குலங் கெடுத்தும் கைந்நலத்த களிறுந்திச் செந்நிலத்துச் செருவென்றும் பாரளவுந் தனிச் செங்கோல் கேரளனைப் பலமுறையும் உரிமைச் சுற்றமோடு அவர் யானையும் புரிசைம் மதில் புலியூர் பகல் நாழிகை இறவாமை இகலாழியுள் வென்று கொண்டும் வேலாழியும் வியன் பறம்பும் ஏலாமை சென்று எறிந்தழித்தும் ஹிரண்ய கர்ப்பமும் துலாபாரமும் தரணிமிசைப் பல செய்து அந்தணர்க்கும் அசக்தர்க்கும் ‘வந்தணைக!’ என்று ஈத்தளித்த மகரிகை அணிமணி நெடுமுடி அரிகேசரி அசமசமன் ஸ்ரீமாறவர் மன் கோச்சடையன் ரணதீரன் மற்றவர்க்கு மகனாகிக் கொற்றவேல் வலன் ஏந்தி பொருதூரும் கடல் தானையை மருதூருள் மாண்பழித்து ஆம்வேளை அகப்பட ‘ஏய்’ என்னாமை எறிந்தளித்து செங்கொடியும் புதான் கோட்டும் செருவென்றவர் சினம் தவிர்த்துக் கொங்கலரும் நறும் பொழில் வாய்க் குயிலோடு மயிலகவும் மங்கலபுரம் என்னும் மஹா நகருள் மஹாரதரை எறிந்தழித்து அறைகடல் வளாகம் பொது மொழி அகற்றி சிலையும் புலியும் கயலும் சென்று நிலையமை நெடுவரை இடவயிற் கிடாய் மண்ணினிது ஆண்ட தண்ணளிச் செங்கோல் தென்ன வானவன் செம்பியன் சோழன் மன்னர் மன்னன் மதுரகரு நாடகன் கொல்நவின்ற நெடுஞ்சுடர்வேல் கொங்கர் கோமான் கோச்சடையன் மான் தேர் மாறன் மற்றவர்க்குப் புத்ரனாய் மண்மகளது பொருட்டாக மத்தயானை செலவுந்தி மானவேல் வலன்ஏந்திக் கடுவிசையால் எதிர்த்தவரை நெடுவயல்வாய் நிகர் அழித்துக் கருவடைந்த மனத்தவரைக் குறுமடைவாய்க் கூர்ப்பழித்து மண்ணிக் குறிச்சியும் திருமங்கையும் முன்னின்றவர் முரண் அழித்து மேவலோர் கடற்றானையோடு ஏற்றெதிரேய் வந்தவரைப் பூவலூர்ப் புறங் கண்டும் கொடும்புரிசை நெடுங்கிடங்கின் கொடும் பாளூர்க் கூடார் கடும் பரியும் கருங்களிறும் கதிர்வேலிற் கைக்கொண்டும் செழும்புரவிப் பல்லவனைக் குழும்பூருள் தேசழிய எண்ணிறந்த மால்களிறும் இவுளிகளும் பலகவர்ந்தும் தரியலராய்த் தரித்தவரைப் பெரியலூர்ப் பீடழித்தும் பூவிரியும் பொழிற் சோலைக் காவிரியைக் கடந் திட்டு அழகமைந்த வார்சிலையின் மழகோங்கம் அடிப் படுத்தும் ஈண் டொளிய மணிஇமைக்கும் எழில் அமைந்த நெடும்புரிசைப் பாண்டிக் கொடுமுடி சென்றெய்தி பசுபதியது பன்மபாதம் பணிந்தேத்திக் கனகராசியும் கதிர்மணியும் மனமகிழக் குடுத்திட்டும் கொங்கரவ நறுங்கண்ணிக் கங்க ராஜனொடு சம்பந்தம் செய்தும் எண்ணிறந்தன கோசஹஸ்ரமும் ஹிரண்ய கர்ப்பமும் துலாபாரமும் மண்ணின்மிசைப் பலசெய்து மறை நாவினோர் குறைதீர்த்தும் கூடல் வஞ்சி கோழி என்னும் மாட மாமதில் புதுக்கியும் அறை கடல் வளாகம் குறையாது ஆண்ட மன்னர் மன்னன் தென்னவர் மருகன் மான வெண்குடை மான்தேர் மாறன் பராந்தக நெடுஞ்சடையன் மற்றவற்கு மகனாகி மால் உருவின் வெளிற்பட்டு கொற்றம் மூன்றுடன் இயம்ப குளிர்வெண்குடை மண்காப்ப பூமகளும் புலமகளும் நாமகளும் நலன் ஏத்த கலியரைசன் வலிதளரப் பொலிவினொடு வீற்றிருந்து கருங்கடல் உடுத்த பெருங்கண் ஞாலத்து நாற்பெரும் படையும் பாற்படப் பரப்பிக் கருதாது வந்து எதிர்மலைந்த காடவனைக் காடடையப் பூவிரியும் புனற் கழனிக் காவிரியின் தென்கரை மேல் தண்ணாக மலர்ச் சோலைப் பெண்ணா கடத்து அமர்வென்றும் தீவாய் அயில் ஏந்தித் திளைத் தெதிரேய் வந்திறுத்த ஆய் வேளையும் குறும்பரையும் அடல் அமருள் அழித்தோட்டிக் காட்டுக் குறும்பு சென்றடைய நாட்டுக் குறும்பில் செருவென்றும் அறைகடல் வளாகம் ஒரு மொழி கொளீஇ சிலைமலி தடக்கைத் தென்ன வானவன் அவனேய் ஸ்ரீவரன் ஸ்ரீமனோகரன் சினச் சோழன் புனப் பூழியன் வீத கல்மஷன் வினய விஸ்ருதன் விக்ரம பாரகன் வீரபுரோகன் மருத்பலன் மான்ய சாசனன் மனுபமன் மார்த்தித வீரன் கிரிஸ்திரன் கீதிகின்னரன் க்ரிபாலயன் க்ரிதாபதானன் கலிப்பகை கண்டக நிஷ்டூரன் கார்ய தத்ஷிணன் கார்முக பார்த்தன் பராந்தகன் பண்டித வத்ஸலன் பரிபூர்ணன் பாபபீரு குரையறு கடல் படைத்தானை குணக்ரிஹ்யன் கூட நிர்ணயன் நிரையுறு மலர்மணி நீண்முடி நேரியர்கோன் நெடுஞ்சடையன் மற்றவன் தன் ராஜ்ய வத்ஸரம் மூன்றாவது செலா நிற்ப பழைய கொடைக்குப் புதிய உரிமை ஆங்கு ஒருநாள் மாட மாமதில் கூடல் பாடு நின்றவர் ஆக்ரோதிக்கக் கொற்றவனே மற்றவரைத் தெற்றென நன்கு கூவி, ‘என்னேய் நும்குறை’ என்று முன்னாகப் பணித்தருள “மேல்நாள் நின்குரவரால் பால் முறையின் வழுவாமை மாகம் தோய்மலர்ச் சோலைப் பாகனூர்க் கூற்றத்துப் படுவது ஆள்வதானை அடல்வேந்தேய் ‘வேள்விகுடி’ என்னும் பியருடையது ஒல்காத வேல்தானையோடு ஒதவேலி உடன்காத்த ‘பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி’ என்னும் பரமேஸ்வரனால் வேள்விகுடி என்னப் பட்டது கேள்வியில் தரப்பட்டதனை துளக்கம் இல்லாக் கடல்தானையாய் ‘களப்ரரால்’ இறக்கப்பட்டது என்று நின்று அவன் விஜ்ஞாப்யஞ் செய்ய ‘நன்று நன்று’ என்று முறுவலித்து, ‘நாட்டால் நின்பழமை யாதல் காட்டி நீ கொள்க’ என்ன நாட்டால் தன்பழமை யாதல் காட்டினான் அங்கப் பொழுதேய் காட்ட “மேனாள் எங்குரவரால் பான்முறையின் தரப்பட்டதை எம்மாலும் தரப்பட்டது” என்று செம்மாந்து அவன் எடுத்தருளி விற்கைத் தடக்கை விறல்வேந்தன் கொற்கை கிழான் காமக் காணி நற்சிங்கற்குத் தேரோடுங் கடல்தானையான் நீரோடு அட்டுக் கொடுத்தமையின் எல்லை மற்றிதற்குப் பெருநான்கு எல்லை தெற்றென விரித்து ரைப்பின் புகரறு பொழின் மருங்குடுத்த நகரூர் எல்லைக்கும் மேக்கும் மற்றிதற்குத் தென் னெல்லை குளந்தைவங் கூழ்வந்தை செய்க்கும் களந்தைக் குளத்தில் ஆலுக்கு வடக்கும் மற்றிதற்கு மேல் எல்லை அற்றம் இல்லாக் கொற்றன் புத்தூர் ஒடுமை இருப்பைச் செய்யிடை மேல்தலைப் பெருப்பிற்குக் கிழக்கும் மற்றிதற்கு வடபால் எல்லை காயலுள் கமலம் மலரும் பாயலுள் வடபாலைப் பெருப்பிற்குத் தெற்கும் உரிமை இவ்வியைத்த பெருநான்கு எல்லையில் பட்டபூமி காராண்மை, மீயாட்சி உள்ளடங்க மேல் எங்குரவரால் குடுக்கப்பட்ட பரிசேய் எம்மாலும் கொடுக்கப் பட்டது. ஆணத்தி மாறங்காரி மற்றிதற்கு ஆணத்தி குற்றமின்றிக் கூறுங்காலைக் கொங்கரவ நறுங்கண்ணிக் கங்கராஜனது கந்யா ரத்னம் கொங்கர் கோற்குக் குணந்து கொடுப்ப ஆர்ப்பறா அடல்தானைப் பூர்வராஜர் புகன்றெழுந்து வில்விரவும் கடல்தானை வல்லவனை வெண்பைவாய் ஆள் அமருள் அழிந்தோட வாள் அமருள் உடன்வவ்விய ஏனப்பொறி இகல் அமருள் இடியுரும் என வலனேந்தி மலைத்த தானை மதவிகலன் மன்னர்கோன் அருளிற் பெற்றும் கொல்வளைக்கும் வேல்தானைப் பல்வளைக் கோன் குணரப்பட்டு பொரவந்தவர் மதம் தவிர்க்கும் கரவந்த புரத்தவர் குலத்தோன்றல் மாவேந்துங் கடல் தானை மூவேந்த மங்கலப் பேரரையனாகிய வைத்ய சிகாமணி மாறங்காரி பங்கீடும் சாசனம் எழுதுதலும் இப்பிரமதேயம் உடைய கொற்கைகிழான் காமக்காணி சுவரன் சிங்கன் இதனுள் மூன்றில் ஒன்றுந் தனக்கு வைத்து இரண்டு கூறும் ஐம்பதினவர் ப்ராஹ்மணர்க் குநீரோடு அட்டிக் கொடுத்தான் இதனுள் மூர்த்தி எயினன் சவையோடு ஒத்தது நான்கரைப் படாகாரம் உடையன இதனுள் தனக்கு வைத்த ஒரு கூற்றிலும் தம்பிமார்க்கு நான்கும், தம்சிற்றப்பனார் மக்களுக்கு ஆறும் சபையோடு ஒத்த படாகாரம் கொடுத்தான் இப்பிரசஸ்தி பாடின சேனாபதி ஏனாதி ஆயின சாத்தஞ் சாத்தற்கு மூன்று கூற்றாருமாய்த் தங்களோடு ஒத்த நான்கு படாகாரம் கொடுத்தார் ‘மற்றிதனைக் காத்தார் மலரடி என்முடிமேல’ என்று கொற்றவனே பணித் தருளித் தெற்றெனத் தாம்ர சாசனஞ் செய்வித்தான் இய்து எழுதின சுத்த கேசரிப் பெரும்பணைக்காரனுக்கு பெருமக்கள் அருளாற் பெற்றது ஒரு இல்ல வளாவும் இரண்டுமாச் செய்யும் ஒரு புன்செய்யும் பெற்றான் இவை யுத்த கேசரிப் பெரும்பணைக்காரன் எழுத்து.  மேற்கோள் நூல்கள் 1. அகநானூறு 2. இறையனார் களவியலுரை 3. கல்லாடம் 1. கல்வெட்டுக்கள் - இர.பன்னீர்செல்வம் 2. கொங்குதேச ராசாக்கள் சரிதம் 3. சிலப்பதிகாரம் 4. செந்தலைக் கல்வெட்டுக்கள் 8. தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் - ஐ.மகாதேவன் 9. தனிப்பாடல் திரட்டு - கழக வெளியீடு 10. திருக்குறள் 11. தேவாரம் 12. நற்றிணை 13. பட்டினப்பாலை 14. பதிற்றுப் பத்து 15. பல்லவர் செப்பேடுகள் முப்பது 16. புலவர் புராணம் 17. புறநானூறு 18. பெரிய புராணம் 19. யாப்பருங்கலக் காரிகை 20. Historical Grammar of old Kannada (H.G.O.K.) 21. South Indian Inscriptions (S.I.I.) 22. Travancore Archaeological Series (T.A.S.) களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மயிலை. சீனி. வேங்கடசாமி (1975) முகவுரை தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாகவும் தெளிவாகவும் சரியாகவும் இன்னும் எழுதப்படாமலிருப்பது தமிழரின் பெருங்குறை யாகும். தமிழகத்தின் மிக நீண்ட வரலாற்றில் களப்பிரரின் ஆட்சிக் காலம் முக்கியமானது. களப்பிரர் ஆட்சிக்காலம் தமிழ் நாட்டு வரலாற்றில் ‘இருண்ட காலம்’ ஆக இருந்து வந்தது. ஒரு காலத்தில் களப்பிரர் தமிழகத்தை அரசாண்டார்கள் என்னும் வரலாற்றுச்செய்தியே நெடுங் காலமாக மறைந்து கிடந்தது. வேள்விக்குடிச் செப்பேடு கிடைத்து, இது வெளியிடப்பட்ட பிறகுதான் களப்பிரர் என்னும் அரசர் இருந்தனர் என்றும் அவர்கள் தமிழகத்தை அரசாண்டனர் என்றும் தெரிய வந்தது. அதற்கு முன் அப்படி ஒரு அரசர் பரம்பரை இருந்தது என்பதை அறியாமலே இருந்தோம். 1920 ஆம் ஆண்டுக்குப் பிறகு வேள்விக்குடிச் செப்பேட்டு வாசகம் வெளிவந்த பிறகு 55 ஆண்டுகளாகத்தான் களப்பிரரைப் பற்றிக் கொஞ்சங்கொஞ்சமாக அறிந்து வருகிறோம். ஐம்பத் தைந்து ஆண்டு களாகியும் இன்னும் அவர்களைப் பற்றிய முழு வரலாறு தெரியா மலிருக்கிறது. அறிஞர்கள் களப்பிரரைப் பற்றிச் சில கட்டுரைகள் எழுதினார்கள். சில வரலாற்றுப் பேராசிரியர்கள் தங்களுடைய வரலாற்று நூல்களில் களப்பிரரின் ‘இருண்ட காலத்தை’ ஒரே வரியில் குறிப்பிட்டுள்ளனர். அவ்வளவுதான். களப்பிரர் வரலாறு எழுதப்படாததன் காரணம், அவர்கள் காலத்துக் கல்வெட்டுச் சாசனங்களோ, செப்பேட்டுச் சாசனங்களோ, அவர்கள் காலத்துக் காசுகளோ, வேறு பழம்பொருள் சான்றுகளோ கிடைக்காததுதான். இந்த நிலையில் அவர்களைப் பற்றி அறியக்கூடிய ஒரே சான்று அக்காலத்துச் சமய, இலக்கிய நூல்களேயாகும். இந்தச் சான்றுகளை இதுவரையில் யாரும் அதிகமாகக் கையாளவில்லை. பெரிய புராணமும் யாப்பருங்கல உரை மேற்கோள் செய்யுட்களும் ஓரளவு பயன்படுத்தப்பட்டன. இதுவரை வெளிவந்த களப்பிரரைப் பற்றிய கட்டுரைகளும் அவர்கள் வரலாற்றை ஓரளவே தெரிவிக் கின்றன. அக்காலத்தில் இருந்த (சைவ, வைணவ, பௌத்த, சமண) சமயங்களின் வரலாறு, சமய நூல்களின் (பதினோராம் திருமுறை) வரலாறு, செய்யுள் இலக்கண (யாப்பருங்கலம்) வரலாறு ஆகிய வற்றைப் பற்றி ஆராய்ந்தபோது களப்பிரர் ஆட்சிக் காலத்தைப் பற்றிச் சில செய்திகள் புதிதாகப் புலனாயின. ஆகவே, இந்நூலை எழுதினேன். களப்பிரர் காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன என்பதை இந்நூலைப் படிப்பவர் அறிந்துகொள்ளலாம். களப்பிரரின் ‘இருண்டகாலம்’ இந்த நூலினால் ‘விடியற் காலம்’ ஆகிறது. மேலும் புதைபொருள் சான்றுகள், பழங்காலச் சான்றுகள் கிடைக்குமானால் களப்பிரர் வரலாற்றில் பகற் காலத்தைக் காணக் கூடும். வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கவலையும் துன்பமும் நோயும் தொடர்ந்து வருத்துகிற காலத்தில் இந்நூலை எழுதினேன். இந்நூல் வெளிவர முழு முயற்சிகள் எடுத்துக்கொண்ட சென்னைப் பல்கலைக்கழகத் தொல்பொருள் துறை ஆய்வு மாணவர் திரு. ர. ராமசாமி அவர்களுக்கு என் நன்றி உரியதாகும். இந்த நூலை அச்சிட்டு வெளியிடும் மக்கள் வெளியீடு நிறுவனத்தைச் சேர்ந்த திரு. மே. து. ராசுகுமார் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். மயிலாப்பூர் மயிலை சீனி. வேங்கடசாமி சென்னை - 4 20-10-1975 தோற்றுவாய் கடைச்சங்க காலத்துக்குப் பிறகு தமிழகத்தின் அரசியல் நிலைமை இன்னதென்று தெரியாமல் சரித்திரத்தில் ‘இருண்ட கால’ மாக இருந்தது. கடைச்சங்க காலத்தின் முடிவு ஏறத்தாழ கி. பி. 250 என்று கருதப்படுகிறது. கடைச்சங்க காலத்தின் இறுதியில் இருந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெயர்கள் சங்கச் செய்யுட்களி லிருந்து கிடைக்கின்றன. சங்க நூல்களில் காணப்படுகிற கடைசி சேர அரசன் பெயர் கோக்கோதைமார்பன் என்பது. இவனைக் கோதை என்று கூறுவர். கோக்கோதை மார்பன், சேரன் செங்குட்டுவனுடைய மகன். இவன் சிறுவனாக இருந்தபோது இவனுக்குக் குட்டுவன் சேரல் என்று பெயர் இருந்தது. தன் மேல் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்துப் பாடிய பரணருக்குச் செங்குட்டுவன் உம்பர்காடு என்னும் நாட்டின் வருவாயையும் தன்னுடைய மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகக் கொடுத்தான். (பதிற்றுப்பத்து, ஐந்தாம் பத்துப் பதிகத்தின் அடிக்குறிப்பு). புலவராகிய பரணருக்குச் செங்குட்டுவன் தன்னுடைய மகனான குட்டுவன் சேரலைப் பரிசாகக் கொடுத்தான் என்பதன் பொருள், புலவரிடத்தில் கல்வி கற்பதற்கு மாணாக்கனாகக் கொடுத்தான் என்பதாகும். இளமையில் குட்டுவன் சேரல் என்று பெயர் பெற்றிருந்த இவன் முடிசூடின பிறகு கோக்கோதை மார்பன் என்று பெயர் பெற்றான் என்று அறிகிறோம். கடைச்சங்க காலத்தில் கொங்கு நாட்டைச் சேர அரசர் களின் இளைய வழியினரான பொறையர் அரசாண்டார்கள். கொங்கு நாட்டை ஆண்ட கடைசிப் பொறையன் கணைக்கால் இரும்பொறை. இவன் கோக்கோதை மார்பனுடைய தாயாதி உறவினன். இருவரும் சம காலத்தில் இருந்தவர்கள். கணைக்காலிரும்பொறை, சோழன் செங்கணானோடு போர் செய்து தோற்றுப் போரில் பிடிக்கப்பட்டடுச் சிறை வைக்கப்பட்டான். பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் கொங்கு நாட்டையரசாண்டான். அதாவது, சோழன் செங்கணானுக்குக் கீழடங்கிக் கணைக்காலிரும்பொறை அரசாண்டனான். ஆகவே, சோழன் செங்காணானும் சேரமான் கோக்கோதை மார்பனும் கணைக்கால் இரும்பொறையும் சமகாலத்தவர் என்று தெரிகின்றனர். கடைச்சங்க காலத்தின் இறுதியில் பாண்டிய நாட்டையர சாண்டவன் நெடுஞ்செழியன். இந்த நெடுஞ்செழியன், கோவலன் கண்ணகி காலத்திலிருந்த நெடுஞ்செழியன் அல்லன். அவனுக்குப் பிறகு இருந்த நெடுஞ்செழியன். இவனைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று வரலாறு கூறுகிறது. இந்த நெடுஞ்செழியன், சேர நாட்டுக் கடற்கரையோரத்தில் பேரியாற்றின் புகுமுகத்தில் இருந்த முசிறிப்பட்டினத்தை முற்றுகைசெய்து அங்கிருந்த ஒரு தெய்வத் திருமேனியை எடுத்துக்கொண்டு மதுரைக்குப் போனான் (அகநானூறு 57: 14-16; 11-14). இவனுடைய சமகாலத்திலிருந்த சேர அரசன் மேற்சொன்ன கோக்கோதைமார்பனே. கோக்கோதை மார்பன், கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கணான், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகிய இவர்கள் கடைச்சங்க காலத்தின் இறுதியில் சமகாலத்தில் இருந்த அரசர்கள். இவர்களுக்குப் பிறகு இவர்களுடைய மக்கள் அல்லது உறவினர் சேர, கொங்கு, சோழ, பாண்டிய நாடுகளை அரசாண்டார்கள். இவர்களுடைய பெயர்கள் தெரியவில்லை. இவர்கள் காலத்தில் அயல் நாட்டவர் வந்து இவர்களை வென்று தமிழகத்தைக் கைப்பற்றி யரசாண்டார்கள். அவர்கள் களப்பிரர் என்று கூறப்பட்டார்கள். களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றி யரசாண்ட வரலாறு மறைந்து போய் நெடுங்காலமாகப் பல நூற்றாண்டு வரையில் தெரியாமல் இருந்தது. கி. பி. 20ஆம் நூற்றாண்டு வரையில் மறைந்து போயிருந்த களப்பிர அரசரைப் பற்றின வரலாற்றுச் செய்தி, பாண்டியருடைய செப்பேடுகள் கிடைத்த பிறகு அவைகளிலிருந்து தெரியவந்தன. திரு. கே. ஜி. சங்கரன் அவர்கள், வட்டெழுத்தில் எழுதப்பட்ட வேள்விக்குடிச் செப்பேட்டை இக்காலத் தமிழ் எழுத்தில் செந்தமிழ்த் திங்களிதழில் வெளியிட்டார். (செந்தமிழ், 20 ஆம் தொகுதி, பக்கம் 205-216). அதன் பிறகு, இந்திய சாசன இலாகா 1923ஆம் ஆண்டில் எபிகிறாபியா இந்திகா என்னும் ஆங்கில வெளியீட்டில் வேள்விக்குடிச் சாசனத்தை ஆங்கில (இலத்தீன்) எழுத்தில் வெளியிட்டது. (Epigraphia Indica, Vol. XVII, 1923 pp. 291-309). சில ஆண்டுகளுக்குப் பிறகு தளவாய்ப்புரச் சாசனம் கிடைத்ததும் இந்தச் செப்பேடுகளிலிருந்து களப்பிர அரசர்களைப் பற்றி அறிகிறோம் (பாண்டியர் செப்பேடுகள் பத்து, தமிழ் வரலாற்றுக் கழக வெளியீடு, 1967). வேள்விக்குடிச் செப்பேடு வெளியான பிறகுதான் களப்பிரரைப் பற்றின செய்தி தெரியவந்தது. அதன் பிறகு களப்பிரரைப் பற்றிப் பல அறிஞர்கள் எழுதத் தொடங் கினார்கள். ஆனால், களப்பிரரைப் பற்றின முழு வரலாறு இன்றுங் கிடைக்கவில்லை. களப்பிரர் வேறு, களம்பாளர் (களப்பாழர்) வேறு என்று சில வரலாற்று அறிஞர்கள் கருதினார்கள். சிலர் இருவரும் ஒருவரே என்று கருதினார்கள். திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியும் திரு. மு. இராகவையங்காரும், களப்பிரரும் களம்பாளரும் ஒருவரே என்று கருதினார்கள். திரு. டி. வி. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் இருவரும் வெவ்வேறு இனத்தவர் என்று கருதினார். பண்டாரத்தார் இதுபற்றி இவ்வாறு எழுதினார் : “அன்றியும் தமிழ்நாட்டுக் குறுநில மன்னர் குடியினராகிய முத்தரையர் என்போர் களப்பிரரேயாவர் என்று சிலர் கூறுவது சிறிதும் ஏற்புடைத்தன்று. களப்பாள் என்ற சோணாட்டூ ரொன்றில், முற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரசியல் தலைவன் ஒருவன் களப்பாளன் என்று சிறப்பித்து வழங்கப் பெற்றமையால், அவன் வழியினர் களப்பாளர் எனவும் களப்பாளராயர் எனவும் குடிப்பெயர் பெற்றுப் பெருமையோடு வாழ்ந்து வருவாராயினர். எனவே, தமிழராகிய களப்பாளரும் ஏதிலராகிய களப்பிரரும் ஒருவரே யாவரென்னும் முடிவு எவ்வாற்றானும் ஒத்துக்கொள்ளத் தக்கதன்று” (பாண்டியர் வரலாறு, டி. வி. சதாசிவ பண்டாரத்தார்; ‘பாண்டி நாட்டில் களப்பிரர் ஆட்சி’ என்னும் தலைப்புக் காண்க). தளவாய்புரச் செப்பேடு கிடைப்பதற்கு முன்பு திரு. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் இவ்வாறு எழுதினார். அந்தச் செப்பேடு கிடைத்த பிறகு களப்பிரரும் களப்பாளரும் ஒருவரே என்பது தெரிந்து விட்டது. வேள்விக்குடிச் செப்பேடு களப்பிரர் என்று கூறுவதைத் தளவாய்புரச் செப்பேடு களப்பாழர் (களப்பாளர்) என்று கூறுகிறது. “கடிராறு கவனலங்கல் களப்பாழர் குலங்களைந்தும்” என்றும் (வரி 99) “களப்பாழரைக் களை கட்ட மற்றிரண்டோள் மாக்கடுங்கோன் மானம் பேர்த்தருளிய கோன்” என்றும் தளவாய்ப்புரச் செப்பேடு (வரி 131 - 132) கூறுகிறது. எனவே, களப்பிரரும் களப்பாளரும் ஒருவரே என்பது தெளிவாகத் தெரிகிறது. இனிக் களப்பிரரைப் பற்றித் தொடர்ந்து ஆராய்வோம். களப்பிரர் யார்? களப்ரர், களப்பரர், களப்பிரர், களப்பாளர், களப்பாழர் என்றெல்லாம் கூறப்படுகிற இவர்களைக் களப்பிரர் என்று கூறுவோம். களப்பிரர் தமிழர் அல்லர். ஆனால், அவர்கள் ஆரியரோ என்றால் ஆரியரும் அல்லர். அவர்கள் வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர் என்று திரு. சதாசிவ பண்டாரத்தார் கருதுகிறார். “. . . . .அன்னோர் (களப்பிரர்) பிராகிருதம். பாலி ஆகியவற்றைத் தமக்குரிய மொழிகளாகக் கொண்டு ஆதரித்துள்ளமையால் அம்மரபினர் தமிழர் அல்லர் என்பதும் வடபுலத்தினின்றும் போந்த ஏதிலர் ஆவர் என்பதும் நன்கு தெரியப் படும்” என்று அவர் எழுதுகிறார் (பாண்டியர் வரலாறு, 1969, பக். 32). களப்பிரர் சைன மதத்தையும் பௌத்த மதத்தையும் ஆதரித்தனர். இந்த மதங்களின் ‘தெய்வ பாஷை’ பிராகிருதம் (சூரசேனியும் பாலி மொழியும்) ஆகையால், இயற்கையாகவே இந்தப் பிராகிருத மொழி களுக்கு ஆக்கம் ஏற்பட்டது. ஆனால், அவர்களுடைய தாய்மொழி பிராகிருதம் அன்று, கன்னட மொழியே. களப்பிரர் வட இந்தியாவி லிருந்து வந்தவர் அல்லர். அவர்கள் தமிழகத்துக்கு அண்மையில் இருந்த கன்னட வடுகர். எனவே, அவர்கள் திராவிட இனத்தவரே. களப்பிரரைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் அவர்களைப் பற்றித் தங்கள்தங்கள் கருத்துகளை எழுதியுள்ளனர். பழந் தமிழகத்தின் வடக்கில் இருந்த வேங்கட நாட்டை அரசாண்ட சிற்றரசர் புல்லி என்று கூறப்படுகின்றனர். ‘கள்வர் கோமான் புல்லி’ என்று அவர்கள் கூறப்படுகிறார்கள். (அகநானூறு 61 : 11-13). கள்வர் என்பதைக் களவர் என்றும் படிக்கலாம். பழைய ஏட்டுச் சுவடிகளில் புள்ளியிட வேண்டிய எழுத்துக்களுக்குப் புள்ளி இடாமலே எழுதும் வழக்கம் இருந்தது. ஆகவே, இந்தச் சொல் களவர் என்பதா கள்வர் என்பதா என்பதை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. இந்தச் சொல்லைக் களவர் என்று கொண்டு திரு. மு. இராகவையங்கார் களவர் என்பது களப்பிரரைக் குறிக்கிறது என்று எழுதினார். (Journal of Indian History, Vol. VIII). டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்காரும் இதே கருத்தைக் கூறியுள்ளார். வேங்கட நாட்டையாண்ட களவர் அல்லது கள்வர்தான் (புல்லி அரசர்) களப்பிரர் என்று இவர் கூறுகிறார். (The Age of Imperial Unity, Vol. II, Bharatiya Vidya Bhavan, 1951, pp. 223-33). இந்த அறிஞர்கள் கூறுவது ஏற்கத் தக்கது அன்று. வேங்கட நாட்டிலிருந்த களவர் அல்லது கள்வர் என்பவர் தமிழர். களப்பிரரோ தமிழர் அல்லாத கன்னடர். மற்றும், சங்க காலத்து வேங்கட நாடு தொண்டை மண்டலத்தைச் சேர்ந்து தமிழகத்தின் பகுதியாக இருந்தது. ஆகவே, தமிழராகிய கள்வர் (களவர்) வேறு. கன்னடராகிய களப்பிரராக இவர்கள் இருக்க முடியாது. கள்வர் (களவர்) வேறு, களப்பிரர் வேறு. பல்லவ அரசர் ஆண்ட தொண்டை மண்டலம் தவிர, சோழ, பாண்டிய, சேர நாடுகளைக் கைப்பற்றி யரசாண்ட களப்பிரர் கருநாட நாட்டுக் கன்னடர் என்பதில் ஐயமில்லை. பாண்டி நாட்டில் இருந்த மூர்த்திநாயனார் காலத்தில் பாண்டி நாட்டை யரசாண்ட மன்னன் கன்னட நாட்டு அரசன் என்று சேக்கிழார் கூறுகிறார். “கானக்கடி சூழ் வடுகக் கருநாடர் மன்னர்” என்று அவர் கூறுகிறார் (திருத்தொண்டர் புராணம், மூர்த்திநாயனார் புராணம் 11, 24). ‘வடுகக் கருநாடர் மன்னன்’ என்பதன் பொருள் வடுக நாடாகிய கன்னட நாட்டைச் சேர்ந்த அரசன் என்பது பிற்காலத்து நூலாகிய கல்லாடம் ‘மதுரை வவ்விய கருநடர் வேந்தன்’ என்று கூறுகிறது (கல்லாடம், செய்யுள் 56). கன்னட நாட்டை அக்காலத்தில் ஒரே அரசன் ஆட்சி செய்யவில்லை. வெவ்வேறு பகுதிகளை வெவ்வேறு அரசர் ஆண்டனர். கருநாடர் மன்னர், கன்னட நாட்டில் எந்த ஊரை யரசாண்டவன் என்பதைப் பெரியபுராணமும் கல்லாடமும் கூறவில்லை. அவர்கள் கன்னட தேசத்தில் களபப்பு என்னும் நாட்டையாண்ட சிற்றரசர் என்பது கன்னட நாட்டுக் கல்வெட்டுகளிலிருந்தும் கன்னட நூலிலிருந்தும் தெரிகிறது. சந்திரகுப்த மௌரியன் (அசோகச் சக்கரவர்த்தியின் பாட்டன்) அரசாட்சியைத் துறந்து சைன சமயத்தைச் சார்ந்து பத்திரபாகு முனிவருடனும் அவரைச் சார்ந்த சமண சமயத் துறவிகளுடனும் தென்னாட்டுக்கு வந்து களபப்பு நாட்டில் உள்ள களபப்பு மலையில் தங்கினார்கள் என்று சமண சமய நூலாகிய வட்டாராதனெ என்னும் நூல் கூறுகிறது. அவர்கள் கழ்ப்பு நாட்டுக்கு வந்தார்கள் என்று இந்நூல் கூறுகிறது. (வட்டாராதனெ, பத்ரபாஹூ பட்டாரா கதெ). கழ்பப்பு என்பதும் கள்பப்பு என்பதும் ஒன்றே. கழ்பப்பு (களபப்பு) என்பதைச் சமஸ்கிருதத்தில் கடவப்ர என்று கூறினார்கள். இப்போதைய சிரவண பௌகொள என்னும் பிரதேசமே பழங்காலத்தில் கள்பப்பு நாடு என்று பெயர் பெற்றிருந்தது (கன்னட ஸாஸனகள ஸாம்ஸ்கிருதிக அத்யயன, கி. பி. 450-1150, டாக்டர் எம். சிதானந்த மூர்த்தி, 1966, பக்கம் 70, 78). களபப்பு நாட்டில் உள்ள சத்திரகிரி மலையின் பழைய பெயர் களபப்பு பெட்ட (பெட்ட - மலை) என்று கூறப்பட்டது (கர்நாடக இதிஹாஸ தர்ஸன (கன்னட தேசத்தின் வரலாறு), டாக்டர் எம். வி. கிருஷ்னராவ், எம். கேசவபட்ட, 1970, பக். 13, 14). ஹொஸகோட்ட தாலுகாவில் கிடைத்துள்ள பழைய வீரக்கல் சாசனம் கன்னட மொழியில் பழைய கன்னட எழுத்தில் எழுதப் பட்டிருக்கிறது. இதில் களப்பிர இராச்சியம் கூறப்படுகிறது. இதன் வாசகம் இது : ஸ்வஸ்திஸ்ரீ மதுராளக் களவர திருராஜ்யதல் மள்ளே கவுண்டரும் சாவா காவுண்ரு துயீநாத பல்கனிளலுதுவ காமூண்ட ஸத்த எர்ரதயக் கர்ளனபூழ்திகம் (Epi. Car., Vol. IX, Hoskote, 13, p. 198). இதனால், களபப்பு நாடு களவர இராச்சியம் என்பது மைசூர் தேசத்தில் இப்போது சிரவணபௌகொள என்று கூறப்படுகிற வட்டாரத்தைச் சேர்ந்திருந்தது என்பது தெரிகிறது. களவர் நாடு, களப்பிரர் நாடு என்னும் பெயர்கள் வேறு சாசனங்களிலும் கூறப்படுகின்றன (Epi. Car., Vol. X, Chintamani, 9). திருத்தொண்டர் புராணம் கூறுகிற ‘வடுகக் கருநாடர் மன்னன்’ இந்தக் களபப்பு நாட்டைச் சேர்ந்தவன் என்று கருதலாம். கருநாட தேசத்தில் இருந்த களப்பிரரின் களபப்பு இராச்சியம் மைசூர் நாட்டைச் சேர்ந்த கோலார் (கோலாலபுரம்) வரையிலும் பரவியிருந்தது. கோலாலபுரத்திலுள்ள நந்தி மலை களப்பிரர் மலை என்று கூறப்படுகிறது. (Epi. Car., Vol. X, Chickbalpur, 9). பழைய தமிழ்ச் செய்யுட்கள், தமிழகத்தை யாண்ட களப்பிரரை நந்தி என்றும் நந்திமலையையுடையவர் என்றும் கூறுகின்றன : “நந்தி மால்வரைச் சிலம்பு நந்தி,” “புகழ்துறை நிறைந்த பெருவேல் நந்தி.” கன்னட நாட்டுக் களபப்பு இராச்சியத்தை யாண்ட களப்பிரர் எப்பொழுதும் சுதந்தரராக இருக்கவில்லை. அவர்கள் கடம்பர், கங்கர் போன்ற வேறு அரசர்களுக்கு வெவ்வேறு காலத்தில் அடங்கி யிருந்தனர் என்பது தெரிகிறது. கடம்ப அரசனான சாகுஸ்தன் (கி. பி. 425-450) களபோரருக்குப் (களப்பிரர்) பகைவன் என்று பேலூர் தாலுகாவில் ஹல்மிடி என்னும் ஊரிலுள்ள கல்வெட்டு எழுத்துக் கூறுகிறது. (Mysore Archaeological Report, 1936, No. 16). களபப்பு நாட்டின் அரசனான திண்டிகன் என்பவன், மேலைக்கங்க அரசனான ஸ்ரீபுருஷனுடைய அனுமதி பெற்று ஒரு தானத்தைக் கொடுத்தான் என்று ஒரு சாசனம் கூறுகிறது. (Mysore Arch. Rep. 1927, No. 118). இதிலிருந்து களபப்பு அரசர் சில காலம் கங்க அரசருக்குக் கீழடங்கி யிருந்தனர் என்பது தெரிகிறது. மேற்கூறிய சான்றுகளினாலே கன்னட நாட்டவராகிய களப்பிர அரசர் அங்கு ஒரு பகுதியான களப்பிர நாட்டையர சாண்டனர் என்பது தெரிகிறது. அவர்கள் ஏறத்தாழ கி. பி. 250இல் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர் தமிழகத்தைக் கைப்பற்றிச் சேர, சோழ, பாண்டிய நாட்டையரசாண்டனர் என்று கருதலாம். களப்பிரர் எப்போது வந்தனர்? வடுகக் கருநாடராகிய களப்பிரர் தமிழகத்தைக் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில், ஏறத்தாழ கி. பி. 250இல் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர் கைப்பற்றினார்கள் என்று கூறினோம். பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி, தமிழ்நாட்டில் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது கி. பி. 275இல் என்று கூறுகிறார் (A Comprehensive History of India, Vol. II, Edited by K. A. Nilakanta Sastri, 1956, p. 550). கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டிருக்க வேண்டும் என்று திரு. சதாசிவப்பண்டாரத்தார் கூறுகிறார் (பாண்டியர் வரலாறு, டி. வி. சதாசிவப்பண்டாரத்தார், 1966, பக். 32). திரு. எம். எஸ். இராமசாமி அய்யங்கார், கி. பி. 6 ஆம் நூற்றாண்டில் களப்பிரர் தமிழ் நாட்டைக் கைப்பற்றி அரசாண்டார்கள் என்று கூறுகிறார். “சங்கம் (வச்சிரநந்தி கி. பி. 470இல் நிறுவின திராவிட சங்கம்) கி. பி. 5 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமைக்கப்பட்டது. கி. பி. 6 ஆம்நூற்றாண்டு தொடங்கினபோது தமிழ்நாட்டின் அரசியல் விரைவாக மாறுதல் அடைந்தது. இந்தக் காலத்தில் தான் களப்பிரரின் படையெடுப்பும் அவர்கள் பாண்டி நாட்டைக் கைப்பற்றியதும் நிகழ்ந்தன” என்று அவர் எழுதுகிறார் (Studies in South Indian Jainism, M. S. Ramasami Ayengar, 1922, pp. 52-53). இவர் கூறுவது ஏற்கத்தக்கது அன்று. களப்பிரர் தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்கிய பிறகுதான் வச்சிரநந்தியின் திராவிட சங்கம் ஏற்பட்டதே தவிர, வச்சிரநந்தியின் திராவிட சங்கம் ஏற்பட்ட பிறகு களப்பிரர் ஆட்சி ஏற்படவில்லை. ஆகவே, கி. பி. 6 ஆம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது என்று இவர் கூறுவது தவறு. கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது என்பதில் ஐயம் இல்லை. மேலும், இராமசாமி அய்யங்கார் இன்னொரு செய்தியையும் கூறுகிறார். “தமிழ்நாட்டில் ஜைன மதத்தை மேலும் உறுதியாக நிலை நாட்டுவதன் பொருட்டு ஜைனர் களப்பிரரைப் படையெடுத்து வருமாறு அழைத்தார்கள் என்று தோன்றுகிறது” என்று இவர் எழுதுகிறார் (Ibid, p. 56). இவ்வாறு இவர் கூறுவதற்குச் சான்று இல்லை. கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலும் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலும் தமிழகத்தில் இருந்த அரசியல் சூழ்நிலை கன்னட நாட்டுக் களப்பிரர் தமிழகத்தின் மேல் படையெடுத்து வருவதற்கு ஏற்றதாக இருந்தது. கடைச்சங்க காலத்தில் இருந்த தமிழரசர்களும் குறுநில மன்னர்களும் ஒருவர்மேல் ஒருவர் அடிக்கடி போர் செய்து கொண்டிருந்ததைச் சங்கச் செய்யுட்களிலிருந்து அறிகிறோம். காரணம் இல்லாமலே தங்களுடைய போர் வல்லமையைக் காட்டுவதற்காகவே அரசர்கள் அக்காலத்தில் அடிக்கடி ஒருவர் மேல் ஒருவர் போர் செய்தனர். போர் செய்வது அவர்களின் வழக்கமாகவும் குறிக்கோளாகவும் இருந்தது. தமிழ் நாட்டு வேந்தர்களுக்குள்ளாகவே போர் செய்வதைப் பெருமையாகக் கருதினார்கள். போர் செய்வதை ஒரு கலையாகவே அமைத்துக் கொண்டனர். அரசர்களின் போர்ச் செயல்களைப் புலவர்கள் புகழ்ந்து பாடினார்கள். போர் முறைகளில் பல முறைகளை வகுத்துக்கொண்டு அதற்குப் புறத்திணை என்றும் புறத்துறை என்றும் போர்க்கலையை வகுத்தனர். போர்த்துறைகளைக் கலையாகவே போற்றிவந்தனர். காரணம் இருந்தாலும் இல்லை யானாலும் ஒவ்வொரு அரசனும் போர்செய்துதான் ஆக வேண்டும் என்னும் வழக்கம் ஏற்பட்டு விட்டது. தம்முடைய போர் வெற்றிகளைப் புலவர்கள் புகழ்ந்து பாடவேண்டும் என்னும் ஆசை அரசர்க்குள் ஏற்பட்டுவிட்டது. போர்க்களத்துக்குப் போகாமல் அரசன் இறந்து விட்டால் அவனுடைய உடலைத் தருப்பைப் புல்லின் மேல் கிடத்தி வாளினால் மார்பை வெட்டி ‘விழுப்புண்’ உண்டாக்கிய பிறகு அடக்கம் செய்த நிலையும் ஏற்பட்டுவிட்டது. இந்தப் ‘போர்க்களச் சூழ்நிலை’ தமிழ்நாட்டையும் தமிழரசர்களையும் பலவீனப்படுத்தி விட்டபடியால், அயல்நாட்டரசர்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டு படையெடுத்து வரக் காரணமாக இருந்தது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த இந்தச் சூழ்நிலை களப்பிர அரசரைத் தமிழகத்தின் மேல் படையெடுத்து வரத் தூண்டியது. அன்னிய நாட்டவர் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த ஆற்றல்மிக்க பேரரசர் இல்லாத நிலை களப்பிரரின் ஆட்சி தமிழகத்தில் ஏற்படக் காரணமாக இருந்தது. முன்பு கூறியபடி பாண்டியன் உக்கிரப்பெருவழுதி, சோழன் செங்கணான், சேரமான் கோக்கோதைமார்பன், கொங்கு நாட்டுக் கணைக்கால் இரும்பொறை ஆகியோர் கடைச்சங்க காலத்தின் இறுதியில் இருந்த தமிழரசர்கள். இவர்கள் காலத்துக்குப் பிறகு இவர்களுடைய மக்கள் அல்லது உறவினர் ஆட்சிக் காலத்தில் ஏறத்தாழக் கி. பி. 250 இல் களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றித் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள் என்று அறிகிறோம். களப்பிரர் வென்ற சேர, சோழ, பாண்டிய மன்னரின் பெயர்கள் தெரியவில்லை. மூவேந்தர்களையும் இவர்களின் கீழடங்கியிருந்த சிற்றரசர்களையும் களப்பிரர் வென்றனர் என்று வேள்விக்குடிச் செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது. “அளவரிய ஆதிராஜரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னுங் கலி அரைசன் கைக்கொண்ட”னன் என்று வேள்விக்குடிச் செப்பேட்டு வாசகம் கூறுகிறது (வேள்விக்குடிச் செப்பேடு, வரி 39-40). களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றின பிறகு ‘கடைச்சங்க காலம்’ முடிவடைந்தது. களப்பிரர், மேற்கூறியபடி, கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கி. பி. 250இல் தமிழகத்தைக் கைப்பற்றினார்கள் என்று கொள்வதில் தவறு இல்லை. சில களப்பிர அரசர்கள் களப்பிரர் முன்னூறு ஆண்டுகள் அரசாண்டார்கள். அவர் களுடைய ஆட்சிமுறை எப்படி இருந்தது, அவர்களுடைய ஆட்சி செங்கோல் ஆட்சியாக இருந்ததா, அடக்கி அரசாண்டார்களா என்பது தெரியவில்லை. அவர்கள் எத்தனை பேர் அரசாண்டார்கள், அவர் களுடைய பெயர் என்ன என்னும் வரன்முறையான சரித்திரம் கிடைக்க வில்லை. சங்க காலத்துச் சேர, சோழ, பாண்டியர் வரலாறே வரன் முறையாகக் கிடைக்காத போது அன்னியராகிய களப்பிரரைப் பற்றின வரன்முறையான வரலாறு எப்படிக் கிடைக்கும்? முன்னூறு ஆண்டு ஆட்சிக் காலத்தில் அவர்கள் எழுதிவைத்த செப்பேடுகளோ கல்வெட்டுகளோ இதுவரையில் ஒன்றேனும் கிடைக்கவில்லை. அவர்கள் வழங்கின காசு - அவர்கள் காசுகளை வெளியிட்டிருந்தால் - ஒன்றேனும் இதுவரையில் கிடைக்க வில்லை. அக்காலத்தில் வரலாறு எழுதும் வழக்கமும் இல்லை. அவர்கள் கட்டின கோயில் கட்டடங்களோ சிற்பங்களோ எதுவும் காணப்படவில்லை. ஆகவே, அவர்களுடைய வரலாற்றையறிவதற்கு யாதொரு சான்றும் கிடைக்க வில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு இலக்கியச் சான்றுகள் மட்டுங் கிடைக்கின்றன. அவ்வளவுதான். களப்பிரரின் போர்க்கள வெற்றியைப் பழைய வெண்பா ஒன்று கூறுகிறது. மிகத் தொன்மை வாய்ந்த அந்த வெண்பா கி. பி. 10ஆம் நூற்றாண்டு நூலாகிய யாப்பருங்கலம் என்னும் யாப்பிலக்கண நூலின் விருத்தியுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. படுபருந்தும் சூர்ப்பேயும் பல்லிலங்கும் நாயும் கொடியும் கழுகுமிவை கூடி - வடிவுடைய கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு போமாறு போமாறு போம் என்பது அந்தப் பாடல். களப்பாள (களப்பிர)அரசனுடைய யானை சேனைகள் போர்க்களத்துக்குப் போகும்போது, பேய்களும், நரி, ஓநாய், நாய், பருந்து, கழுகு முதலான பிணந்தின்னிப் பிராணிகளும் அந்தச் சேனையோடு போயின என்று இச்செய்யுள் கூறுகிறது. அதாவது, போர்க்களத்தில் போர்வீரர்களும் யானை, குதிரைகளும் செத்து மடியுமாகையால் இந்தப் பிணந்தின்னிப் பிராணிகளுக்கு இறைச்சி விருந்து கிடைத்தது என்பது இதன் கருத்து. களப்பாள அரசன் மற்ற அரசர்களோடு போர் செய்து வெற்றி பெற்றான் என்பது இதன் திரண்ட பொருள். மற்றும் நான்கு பழைய வெண்பாக்களை யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள் காட்டுகிறது. அந்தப் பழைய வெண்பாக்கள், களப்பிர அரசன் சேர, சோழ, பாண்டியரை வென்று அவர்களைச் சிறையிலிட்டுத் தளை (விலங்கு) இட்டபோது அந்த மூவரசர்களால் பாடப்பட்டவை. யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள் காட்டுகிற அந்தப் பழம் பாடல்கள், பிற்காலத்தில் தனிப்பாடற்திரட்டு, புலவர் புராணம் முதலான நூல்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன. அப்பழம் பாடல்கள் இவை: சேர மன்னன் பாடியது: தினை விதைத்தார் முற்றந் தினை யுணங்கும், செந்நெல் தனை விளைத்தார் முற்ற மதுதானாம் - கனைசீர் முரசுணங்கும் சங்குணங்கும் மூரித்தேர்த் தானை அரசுணங்கும் அச்சுதன்தன் முற்றத்து சோழ அரசன் பாடியது: அரசர்குல திலகன் அச்சுதன் முற்றத்தில் அரச ரவதரித்த வந்நாள் - முரசதிரக் கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் காற்றளையை வெட்டிவிடும் ஓசை மிகும் பாண்டிய மன்னன் பாடியது: குறையுளார் எங்கிரார் கூர்வே லிராமன் நிறையறு திங்கள் இருந்தான் - முறைமையால், ஆலிக்குத்தானை யலங்குதார் அச்சத! முன் வாலிக் கிளையான் வரை இதைக் கேட்ட அச்சுதக் களப்பாளன் பாண்டியனுக்கு இன்னொரு தளை இட்டான். அப்போது பாண்டியன் இன்னொரு வெண்பாவைப் பாடினான். குடகர் குணகடலென் றார்த்தார் குடகர்க் கிடகர் வடகடலென் றார்த்தார் - வடகடலர் தென்கடலென் றார்த்தார் தில்லையச் சுதானந்தன் முன்கடை நின்றார்க்கும் முரசு இந்தக் களப்பிர அரசனை இப்பாடல்கள் அச்சுதன் என்று கூறு கின்றன. அச்சுதன் என்பது களப்பிர அரசர்களின் பொதுப் பெயர் என்று தோன்றுகிறது. பாலி மொழியில் எழுதப்பட்ட ஒரு பௌத்தச் செய்யுள் ஒரு களப்பிர அரசரை அச்சுதன் என்று கூறுகிறது. இன்னொரு தமிழ்ச் செய்யுள் ஒன்று இன்னொரு களப்பிர அரசனை அச்சுதன் என்று கூறுகிறது. ஆகையால், களப்பிர அரசர்கள் ஒவ்வொருவரும் அச்சுதன் என்று பெயர் கொண்டிருந்தனர் என்பது தெரிகின்றது. சேர, சோழ, பாண்டியர் களப்பாளரைத் (களப்பிரரைத்) தமிழ்ச் செய்யுளில் பாடினபடியால், களப்பிரரும் தமிழரசரே என்று பி. டி. சீனிவாச அய்யங்கார் கூறுகிறார் (History of the Tamils, 1929, p. 535). இவர் கூற்றுத் தவறு. களப்பிரர் தமிழரல்லர்; கன்னடர் என்பதில் ஐயமில்லை. யாப்பருங்கலம் என்னும் செய்யுள் இலக்கண நூலின் விருத்தியுரையாசிரியர் தம்முடைய உரையில் நான்கு அழகான செய்யுட்களை மேற்கோள் காட்டியுள்ளார். அந்தச் செய்யுட்கள் களப்பிர அரசரைப் பற்றியவை (இணைப்பு 1 காண்க). அச்செய்யுட்களில் ‘கெடலரு மாமுனிவர்’ என்று தொடங்குகிற செய்யுள் அச்சுதன் என்னும் களப்பிர அரசனைக் காத்தருள வேண்டும் என்று திருமாலை வேண்டுகிறது (‘புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன், தொன்று முதிர் கடலுலகம் முழுதுடன் ஒன்றுபுரி திகிரி உருட்டுவோன்எனவே’). ‘அலைகடற் கதிர்முத்தம்’ என்று தொடங்கும் இன்னொரு செய்யுள், களப்பிர அரசன் சங்கு சக்கரம் ஏந்திய திருமாலை வழிபட்டு அவன் அருளினால் பெரிய நிலத்தை ஆளும் பேறுபெற்றான் என்றும் அந்த அரசனை அருகக் கடவுள் காத்தருள வேண்டும் என்று தொடங்குகிற இன்னொரு செய்யுள் ஒரு களப்பிர அரசனுடைய ஆற்றல், கொற்றம், வீரம் முதலியவற்றைப் புகழ்கிறது. அதில் அந்தக் களப்பிர அரசன் ‘அச்சுதர்கோ’ என்று கூறப்படுகிறான். அதாவது, அச்சுத குலத்தில் பிறந்த அரசன் என்று கூறப்படுகிறான். ‘நலங்கிளர் திருமணியும்’ என்று தொடங்குகிற இன்னொரு செய்யுள், செங்கோல் விண்ணவன் (விண்ணவன் - விஷ்ணு) என்றும் களப்பிர அரசனுடைய ஆட்சி ஓங்கவேண்டும் என்றும் அருகக் கடவுளை வேண்டுகிறது. விண்ணவன் (விண்ணு - விஷ்ணு) என்று பெயர் பெற்றிருப்பதனால் இவ்வரசன் வைணவ சமயத்தவன் என்று தெரிகிறான். சேர, சோழ, பாண்டியர் களப்பிர அரசனைப் பாடிய பாடல்களில் களப்பிரன் அச்சுதன் என்று கூறப்பட்டதை முன்னமே கண்டோம். கி. பி. 5ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் வாழ்ந்திருந்த ஆசாரிய புத்ததத்ததேரர் சோழ நாட்டுத் தமிழர். அவர் பேர் போன பௌத்தப் பெரியார். அவர் பாலி மொழியில் புத்தவம் சாட்டகதா, அபிதம்மாவதாரம், வினயவினிச்சயம், உத்தரவினிச் சயம், ரூபாரூபவிபாகம், ஜினாலங்காரம் முதலான நூல்களை எழுதியுள்ளார். சோழ நாட்டுப் பூதமங்கலம் என்னும் ஊரில் வேணுதாசர் கட்டின பௌத்த விகாரையில் இவர் தங்கியிருந்த போது வினயவினிச்சயம் என்னும் நூலை களம்ப (களப்ர) அரசன் காலத்தில் இவர் எழுதி முடித்ததாக இவர் அந்த நூலில் கூறியுள்ளார் (‘Contemporary Buddha Gosha’ A. P. Buddha Datta, University of Ceylon Review, 1945, Vol. III, No. 1, pp. 34-70). பஸாத ஜனனே ரம்மே பாஸhதே வஸதா மயா புத்தஸ்ஸ புத்தஸீஹேன வினயஸ்ஸ வனிச்சயோ புத்தஸீஹம் ஸமுத்திஸ்ஸ மம ஸத்தி விஹாரிம் கதோ யம் பன பிக்கூனம் ஹிதத்தாய ஸமாஸதோ வியைஸ்ஸாவ பொத்தந்தம் ஸுகேனே வாசிரேன ச அச்சுதச்சுத விக்கந்தே களப்ப குலநந்தனே மஹிம் ஸமனு ஸாஸந்தே ஆர்த்தோ ச ஸமாபிதோ இதில் அச்சுத விக்கந்தன் களப்ப (களப்பிர) குலத்தில் பிறந்தவன் என்று கூறப்படுகிறான். இந்தச் சான்றுகளினாலே களப்பிர அரசர் வைணவர் என்றும் வைணவப் பெயராகிய அச்சுதன் என்னும் சிறப்புப் பெயரைக் கொண்டிருந்தார்கள் என்பதும் தெரிகின்றன. களப்பிர அரசர் தொண்டை நாட்டைத் தவிர சேர, சோழ, பாண்டிய நாடுகளை வென்று அரசாண்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. இவர்கள் சேர, சோழ, பாண்டியரின் கொடிகளைத் தங்களுடைய கொடிகளாகக் கொண்டிருந்தனர் என்பதைக் ‘கெடலருமா முனிவர்’ என்று தொடங்கும் செய்யுளினால் அறிகிறோம் (இணைப்பு 1 காண்க). அந்தச் செய்யுளின் இறுதிப் பகுதி இவ்வாறு கூறுகிறது. அடுதிறல் ஒருவ! நிற் பரவுதும், எங்கோன் தொடுகழற் கொடும்பூண் பகட்டெழில் மார்பிற் கயலொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன் ஒன்றுகடல் உலகம் முழுவதும் ஒன்றுபு திகிரி யுருட்டுவோன் எனவே இதனால், கயல் (மீன்), சிலை (வில்), கொடுவரி (புலி) ஆகிய அடையாளங்களைக் களப்பிரர் கொண்டிருந்தனர் என்பது தெரிகின்றது. அதாவது, பாண்டியனுடைய மீன் கொடியையும் சேரனுடைய வில் கொடியையும் சோழனுடைய புலிக் கொடியையும் களப்பிரர் தங்களுடைய கொடியாகக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிகிறது. சேர, சோழ, பாண்டியரின் அடையாளங்களைக் கொண்டிருந்தபடியால் இம்மூன்று நாடுகளையும் அவர்கள் கைப்பற்றி அரசாண்டார்கள் என்று ஐயமறத் தெரிகின்றது. களப்பிரர் எத்தனை பேர் அரசாண்டார்கள் அவர்கள் நாட்டுக்கு என்னென்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை. பாண்டி நாட்டில் மதுரையைத் தலைநகரமாக்கிக்கொண்டு களப்பிரர் அரசாண்டதை அறிகிறோம். உறையூர், காவிரிப் பூம்பட்டினங்களிலும் இருந்து சோழ நாட்டைக் களப்பிரர் அரசாண்டனர் என்பதும் தெரிகின்றது. தில்லையில் (சிதம்பரம்) இருந்தும் அரசாண்டதையறிகிறோம். சோழ நாட்டிலே களப்பாள் என்னும் ஊரில் ஒரு களப்பாளன் இருந்ததை யறிகிறோம். சேர நாட்டில் எந்த ஊரில் இருந்து களப்பிரர் ஆட்சி செய்தனர் என்பது தெரியவில்லை. களப்பிரர் ஆட்சி, தொண்டை மண்டலத்தைத் தவிர ஏனைய தமிழ்நாடெங்கும் இருந்தது என்பது தெரிகிறது. களப்பிரர் தமிழ்நாட்டைக் கைப்பற்றிய போதே பல்லவ அரசர் தமிழகத்தின் வட பகுதியாகிய தொண்டை நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். ஆகவே, களப்பிரர் ஆட்சி தொண்டை நாட்டில் ஏற்படவில்லை. அவர்களுடைய ஆட்சி தென்பெண்ணை யாற்றுக்குத் தெற்கே சேர, சோழ, பாண்டிய நாடுகளில் இருந்தது. களப்பிர அரசனுக்குக் கீழ், அவனுக்கு அடங்கிக் களப்பிர குலத்து அரசர் சேர, சோழ, பாண்டிய நாடுகளை யரசாண்டனர் என்பது தெரிகிறது. மூர்த்தியார் பாண்டிய நாட்டில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் சில காலம் மூர்த்திநாயனார் என்னும் ஒரு வணிகர் அரசாண்டதைப் பெரியபுராணம் கூறுகிறது. மதுரையை ஆண்ட களப்பிர அரசன் பிள்ளைப்பேறு இல்லாமல் இறந்துபோனான். அவன் சைவ சமயத்துக்கு இடையூறுகளைச் செய்தவன். அவன் இறந்தபோது, அமைச்சர்கள் பட்டத்து யானையின் கண்ணைத் துணியினால் கட்டி மறைத்து நகரத்தில் போகவிட்டனர். அந்த யானை யாரைத் தன்மேற் ஏற்றிக்கொண்டு வருகிறதோ அவரை அரசனாக்கிப் பட்டம் கட்டுவது அக்காலத்து மரபு. நகர வீதிகளில் சென்ற யானை சொக்கநாதர் ஆலயத்தருகில் நின்றுகொண்டிருந்த மூர்த்தியாரைத் தன் மேல் ஏற்றிக் கொண்டு சென்றது. அமைச்சர்கள் அவருக்கு முடிசூட்டி அரசனாக்கத் தொடங்கினார்கள். மூர்த்தியார் தமக்குப் பொன்முடி வேண்டாம் என்று மறுத்துவிட்டார். சிவனடியார் ஆகையால், அவர் திருநீற்றையும் உருத்திராக்கத்தையும் சடை முடியையும் அணிந்து பட்டங்கட்டப் பெற்றார். அதனால் அவர் ‘மும்மையால் உலகாண்ட மூர்த்தியார்’ என்று கூறப்பட்டார். இவருடைய வரலாற்றைப் பெரியபுராணத்தில் (மூர்த்திநாயனார் புராணம்) காணலாம். மூர்த்தியார் எத்தனை யாண்டுகள் அரசாண்டார், அவருக்குப் பிறகு களப்பிரர் ஆட்சி மீண்டும் எப்படி மதுரையில் ஏற்பட்டது என்பது தெரிய வில்லை. இது நிகழ்ந்த காலமும் தெரியவில்லை. கூற்றனார் சோழ நாட்டை யரசாண்ட களப்பிர அரசர்களில் கூற்றனாரும் ஒருவர். இவரைக் கூற்றனார் என்றும் கூற்றுவ நாயனார் என்றுங் கூறுவர். இவருடைய வரலாற்றைப் பெரிய புராணத்தில் (கூற்றுவ நாயனார் புராணம்) அறிகிறோம். ‘ஆர் கொண்ட வேற்கூற்றன் களந்தை கோன் அடியேன்’ என்று சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் இவரைக் கூறுகிறார். இவர் களப்பாளன் (களப்பிரன்) குலத்தவர் என்று திருத்தொண்டர் திருவந்தாதியில் நம்பியாண்டார் நம்பி கூறுகிறார் (திருத்தொண்டர் திருவந்தாதி 47). நாதன் திருவடியே முடியாகக் கவித்து நல்ல போதங் கருத்திற் பொதிந்தமை யாலதுகை கொடுப்ப ஓதந்தரு வியஞான மெல்லாம் ஒரு கோலின் வைத்தான் கோதை நெடுவேற் களப்பாள னாகிய கூற்றுவனே களப்பிர அரசர்கள் பொதுவாகச் சைன சமயத்தவர் என்றாலும், அவர் குலத்தைச் சேர்ந்த கூற்றுவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தார். சோழ நாட்டிலிருந்த இவர், சோழ அரசர்களுடைய முடியைத் தரித்து அரசாள வேண்டும் என்று விரும்பினார். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பழைய சோழ அரசபரம்பரையார் களப்பிரருக்குக் கீழடங்கியிருந்தார்கள். அவர்களுடைய முன்னோரான சோழர் அணிந்திருந்த மணிமுடி தில்லை வாழ் அந்தணர்களிடத்தில் இருந்தது. ‘முடிஒன்று ஒழிய அரசர் திருவெல்லாம்’ உடையராக இருந்த கூற்றுவர், சோழ அரசருடைய பழைய முடியைத் தரித்து அரசாள விரும்பினார். அவர் சோழ அரசருடைய முடியைக் கொண்டு தனக்கு முடிசூட்டும்படி கேட்டார். அவர்கள், ‘சோழ அரசர் குடியில் பிறந்தவர் களுக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு முடிசூட்டமாட்டோம்’ என்று சொல்லி, சோழர் முடியைத் தம்மில் ஒரு குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு மற்றவர் எல்லோரும் சேர நாட்டுக்குப் போய் விட்டார்கள் (கூற்றுவ நாயனார் புராணம் 4, 5). மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணிமா மவுலி புனைவதற்கு தில்லைவா ழந்தணர் தம்மை வேண்ட அவரும் ‘செம்பியர் தம் தொல்லை நீடுங்குல முதலோர்க் கன்றிக் கட்டோம்முடி’ என்று நல்கா ராகிச் சேரலன்தன் மலைநா டனைய நண்ணுவார் ஒருமை உரிமை தில்லைவா ழந்தணர்கள், தம்மில் ஒரு குடியைப் பெருமை முடியை அருமைபுரி காவல் கொள்ளும்படி இருத்தி இருமை மரபுந் தூயவர்தாம் சேரர் நாட்டில் எய்தியபின் வரும்ஐயுற வால்மனந் தளர்ந்து மன்றுள் ஆடும் கழல்பணிவார் இதனால், கூற்றுவனார், முடிசூடாமலே சோழ நாட்டை யரசாண்டார் என்று தெரிகின்றது. ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளாகத் தமிழகத்தை யரசாண்ட களப்பிர அரசர்களைப் பற்றி வரன்முறையான வரலாறு கிடைக்காமல், மேற்காட்டியபடி, அங்கொரு துணுக்கும் இங்கொரு துணுக்குமாகக் கிடைக்கிறது. ஆனால், தமிழ்நாட்டு அரசியலில் களப்பிர அரசருக்குப் பெரிய எதிர்ப்புகளும் அரசியல் கலகங்களும் குழப்பங்களும் நாட்டில் இருந்துகொண்டிருந்தன என்பதைச் சில குறிப்புகளைக் கொண்டு அறிகிறோம். தமிழகத்தை யரசாண்ட களப்பிர அரசர்கள் எத்தனை பேர், அவர்களுடைய பெயர் என்ன, அவர்கள் ஒவ்வொருவர் காலத்திலும் நடந்த நிகழ்ச்சிகள் எவை என்னும் வரலாறு ஒன்றும் தெரியவில்லை.  களப்பிரர் காலத்து இரேணாட்டுச் சோழர் தமிழகத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் சோழ அரசர்கள் களப்பிரருக்குக் கீழடங்கியிருந்தனர். அக்காலத்தில் சோழர் குலத்தைச் சேர்ந்த ஒரு சோழன் தமிழகத்துக்கு வடக்கே இருந்த வடுக (தெலுங்கு) நாட்டுக்குச் சென்று அங்கு ஒரு சிறு இராச்சியத்தை அமைத்துக் கொண்டு அரசாண்டான். அவன் அமைத்துக்கொண்ட அந்த இராச்சியத்தை அவனுடைய பரம்பரையினர் சில நூற்றாண்டுகள் வரையில் அரசாண் டார்கள். இந்த வரலாற்றுச் செய்தி கல்வெட்டுச் சாசனங்களில் இருந்து புதிதாகக் கிடைத்திருக்கிறது. தெலுங்கு நாட்டில் கடப்பை மாவட்டத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுச் சாசனங்களும் செப்பேட்டுச் சாசனங்களும் இந்த வரலாற்றுச் செய்தியைக் கூறுகின்றன. இப்போதைய கடப்பை, கர்னூல் மாவட்டங்கள் அக் காலத்தில் சோழர்களுடைய ஆட்சியில் இரேணாடு ஏழாயிரம் என்று பெயர் பெற்றிருந்தன. இரேணாடு ஏழாயிரத்தை யாண்ட சோழர், இரேணாட்டுச் சோழர் என்றும் தெலுங்குச் சோழர் என்றும் பெயர் பெற்றிருந்தனர். பிற்காலத்தில் சோழர் என்னும் பெயர் சோடர் என்று திரிந்துவிட்டது. அவர்கள் பிற்காலத்தில் ரேணாட்டுச் சோடர் என்றும் தெலுங்குச் சோடர் என்றும் கூறப்பட்டனர். தமிழராகிய அந்தச் சோழர் தெலுங்கு நாட்டையரசாண்ட படியால், நாட்டு மொழியாகிய தெலுங்கு மொழியைத் தங்களுடைய அரசாங்க பாஷையாக அமைத்துக்கொண்டு தெலுங்கிலேயே கல்வெட்டுச் சாசனங்களையும் செப்பேட்டுச் சாசனங் களையும் எழுதினார்கள். பிற்காலத்தில் அவர்கள் தெலுங்கராகவே மாறி விட்டார்கள். இரேணாட்டுச் சோழர் தங்களைத் தமிழ்ச் சோழர் பரம்பரையினர் என்று தங்களுடைய கல்வெட்டிலும் செப்பேட்டிலும் எழுதியுள்ளனர். காவிரியாற்றுக்குக் கரை கட்டின பேர்போன கரிகாற் சோழனுடைய குலத்தினர் என்றும் உறையூரிலிருந்து வந்தவர் என்றும் தங்களை இவர்கள் கூறியுள்ளனர். மற்றும், சோழர்களுடைய அடையாளமாகிய புலியையே இவர்களும் தங்களின் அடையாளச் சின்னமாகக் கொண்டிருந்தார்கள். ஆகவே, இவர்கள் காவிரி பாயும் சோழ நாட்டையாண்ட சோழர்களின் பரம்பரையினர் என்பதில் சற்றும் ஐயமில்லை. இரேணாடு ஏழாயிரம் சோழர்களின் ஆட்சியில் இருந்தபடியால் அந்த நாடு சோழ நாடு என்றும் கூறப்பட்டது. சீன தேசத்திலிருந்து பாரத தேசத்துக்கு வந்து பல நாடுகளைச் சுற்றிப் பார்த்த யுவான் சுவாங் என்னும் பௌத்தன் தன்னுடைய யாத்திரைக் குறிப்பில் இரேணாட்டை சு-லி-ய என்று எழுதியுள்ளார். சு-லி-ய என்பது சோழிய அல்லது சோழ என்னும் சொல்லின் திரிபு. பாரத நாட்டில் தல யாத்திரை செய்த யுவான் சுவாங் ஆந்திர நாட்டில் அமராவதி நகரத்தில் சில காலம் தங்கியிருந்து, பிறகு தெற்கே யாத்திரை செய்து தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரத்துக்கு வந்து தங்கினார். கி. பி. 639-40ஆம் ஆண்டில் இவர் அமராவதியிலும் காஞ்சியிலும் தங்கியிருந்தார். அமராவதியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு வந்த போது இடைவழியில் சுலிய (சோழ) நாடு இருந்தது என்று இவர் தம்முடைய யாத்திரைக் குறிப்பில் எழுதியுள்ளார். தொண்டை நாட்டுக்குத் தெற்கே காவிரியாறு பாய்கிற சோழ நாடு இருக்கிறது என்பதை அறிவோம். ஆனால், சீனராகிய யுவான் சுவாங், தொண்டை நாட்டுக்கு வடக்கே சோழ நாடு இருந்தது என்று எழுதியுள்ளார். இவர் கூறுவது தவறாக இருக்குமோ என்னும் ஐயம் இருந்தது. ஆனால், அண்மைக் காலத்தில் தெலுங்கு நாட்டில் கடப்பை மாவட்டத்தில் கிடைத்த கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அந்தப் பகுதி நாட்டைச் சோழ குலத்து மன்னர் அரசாண்டனர் என்னும் வரலாற்றுச் செய்தியைக் கூறுகின்றன. எனவே, தொண்டை நாட்டுக்கு வடக்கே சோழ நாடு இருந்தது என்று யுவான் சுவாங் கூறியுள்ளது தவறு அன்று என்பதும் உண்மையான செய்தி என்றும் தெரிகின்றது. அவர் சு-லி-ய என்று கூறுவது இரேணாட்டையாகும். தமிழ்நாட்டின் வட எல்லையில் இருந்த திருவேங்கடக் கோட்டத்துக்கு (வேங்கட மலைக்கு) வடமேற்கேயுள்ள இப்போதைய கடப்பை, கர்னூல் மாவட்டங்களே அக்காலத்தில் இரேணாடு என்றும் சோழநாடு என்றும் பெயர் பெற்றிருந்தது என்பதையறிகிறோம். இரேணாட்டைச் சோழ அரசர் பரம்பரையார் அரசாண்டனர் என்னும் வரலாறு அண்மைக் காலம் வரையில் தெரியாமல் மறைந்திருந்தது. இரேணாட்டுச் சோழர் தங்களுடைய சாசனங்களிலே தங்களைச் சோழன் கரிகாலனுடைய பரம்பரையில் வந்தவர் என்று கூறுகிற படியினாலே, கரிகாற் சோழன் காலத்திலிருந்து இரேணாட்டைச் சோழர் அரசாண்டு வந்தனர் என்று சில வரலாற்று ஆசிரியர் கருதுகிறார்கள். இவர்கள் கருத்து சரியன்று. கடைச்சங்க காலத்தில் கி. பி. முதலாம் நூற்றாண்டில் இருந்த கரிகாற் சோழன் தமிழகத்துக்கு வடக்கே இருந்த நாடுகளையும் வென்றான் என்று சங்கச் செய்யுட்கள் கூறுகின்றன (பட்டினப் பாலை 275, 276; சிலப்பதிகாரம் 5 ஆம் காதை). ஆகவே, கரிகாற் சோழன் காலத்திலிருந்து இரேணாட்டைச் சோழர் அரசாண்டு வந்தனர் என்று சிலர் கருதுகின்றனர். சோழன் கரிகாலன் அடைந்த வெற்றிகள் போர்க்கள வெற்றியே. அவர் வென்ற வடநாட்டு நாடுகளை அவன் தன்னுடைய ஆட்சியில் வைத்து அரசாளவில்லை. ஆகவே, இரேணாட்டைச் சோழர் கரிகாற் சோழன் காலத்திலிருந்து அரசாண்டனர் என்பது ஏற்கத்தக்க தன்று. களப்பிர அரசர் சோழ நாட்டைக் கைப்பற்றி யரசாண்ட போது அவர்களுக்குக் கீழடங்கியிருந்த சோழர் பரம்பரையைச் சேர்ந்த ஒரு சோழன் இரேணாட்டை வென்று தன்னுடைய ஆட்சியை நிறுவினான் என்பதும் அவனுடைய பரம்பரையார் சில நூற்றாண்டுகள் அந்நாட்டை யரசாண்டனர் என்பதும் வரலாற்று உண்மை என்று தோன்றுகின்றது. இரேணாட்டுச் சோழர் தங்களைக் கரிகாற் சோழனுடைய பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார்களே தவிர, அவன் காலத்தைத் தொடர்ந்து இரேணாட்டை யரசாண்டதாகக் கூறவில்லை. இரேணாட்டுச் சோழர்கள் எழுதியுள்ள சாசனங்களில் சிலவற்றை இங்குச் சுருக்கமாக அறிமுகப்படுத்துவது பொருத்தமாகும். கடப்பை மாவட்டம் ஜம்மல் மடுகு தாலுகாவில் கோசினெ பள்ளி கிராமத்தில் ஒரு களத்து மேட்டில் கருங்கற்றூண் ஒன்று இருக்கிறது. இந்தத் தூணின் மூன்று பக்கங்களில் தெலுங்கு எழுத்தில் சாசனம் எழுதப்பட்டுள்ளது. இதில் சோழ மகாராசன் என்னும் அரசன் பெயர் காணப்படுகிறது. இந்த அரசன், கரிகாற் சோழனுடைய பரம்பரையில் சூரிய குலத்தில் காசிப கோத்திரத்தில் பிறந்தவன் என்று தன்னைக் கூறிக்கொள்கிறான் (408 டிக 1904). மேற்படி தாலுகாவில் முட்டானூருக்கு அருகில், சிலம்கூரிலிருந்து வருகிற சாலையின் ஓரத்தில் உள்ள கருங்கற் சாசனம், சோழ மகாராசன் ஆதித்தபட்டார கருக்கு நிலத்தையும் பொன்னையும் தானஞ் செய்ததைக் கூறுகிறது (405 டிக 1904). இந்த ஊரிலேயே உள்ள சிவன் கோயில் முற்றத்தில் கிடக்கிற கல்லில் சோழ அரசனுடைய கல்வெட்டெழுத்துச் சாசனம் காணப்படுகிறது. இந்தச் சாசனக் கல்லின் அடிப்புறம் உடைந்து கிடக்கிறது. கல்லின் மேற்புறத்தில் சாசன எழுத்துக்கு மேலே, வாலைச் சுருட்டிக் கொண்டு நிற்கிற புலியின் உருவம் பொறிக்கப் பட்டிருக்கிறது (406 டிக 1904). புலியின் உருவம் சோழருடைய அடையாளக் குறி என்பதை யறிவோம். இரேணாட்டுச் சோழரும் புலியின் அடையாளத்தைக் கொண்டிருந்தபடியால் இவர்கள் சோழர் குலத்தவர் என்பது தெளிவாகிறது. கடப்பை மாவட்டம் ஜம்மலமடுகு தாலுக்காவில் பெத்த முடியம் என்னும் ஊரில் சிதைந்து போன கல் எழுத்துச் சாசனம் காணப் படுகிறது. இந்தச் சாசனத்தில் சோழ மகாராசன் என்னும் பெயர் காணப் படுகிறது. சாசனக் கல்லின் மேற்புறத்தில் புலியின் உருவம் பொறிக்கப் பட்டிருக்கிறது. இந்தப் புலி வாயைத் திறந்து கொண்டு (உறுமிக் கொண்டு) நிற்பதுபோலக் காணப்படுகிறது (351 of 1905). இந்த மாவட்டத்தில் சமயபுரம் தாலுகாவில் சிலம்கூர் என்னும் ஊரில் ஒரு வயலில் உடைந்து கிடக்கிற கற்றூணில் தெலுங்கு எழுத்துச் சாசனங்கள் காணப்படுகின்றன. இதில் சோளமஹாதேவுலு (சோழ மகாதேவர்) என்னும் பெயர் காணப்படுகிறது (396 of 1904). இவ்வூர் அகத்தீஸ்வரர் கோவிலின் முன்புறத்தில் விழுந்து கிடக்கிற கற்றூணில் மூன்று பக்கங்களில் தெலுங்கு எழுத்துச் சாசனம் எழுதப் பட்டுள்ளது. இச்சாசனத்தில் விக்கிரமாதித்திய சோள மஹாராஜூலு எளஞ்சோள மஹாதேவி (இளஞ்சோழ மகாதேவி) என்னும் சோழ அரச அரசியரின் பெயர்கள் காணப்படுகின்றன (400 of 1904). கலமள்ள என்னும் ஊரில் உள்ள சென்னகேசவ கோவிலின் முற்றத்தில் உடைந்து கிடக்கிற கற்றூணில் இரண்டு பக்கங்களில் தெலுங்கு எழுத்துச் சாசனம் காணப்படுகிறது. இதில் இரேணாட்டு அரசன் தனஞ்சயேண்டு என்பவன் பெயர் காணப்படுகிறது (380 of 1904). கடப்பை மாவட்டம் கமலபுரம் தாலுக்கா மலெபாடு என்னும் ஊருக்கு மேற்கேயுள்ள கிணற்றின் அருகில் கிடக்கிற கற்றூணில் இரேணாட்டுச் சோழ அரசர்கள் சாசனம் எழுதப்பட்டுள்ளது. சித்தி ஆயிரம், இரேணாடு, ஏழாயிரம் ஆகிய நாடுகளை அரசாண்ட சக்தி கோமார விக்கிரமாதித்தியனின் மகனான சோள மகாராஜாதிராஜ விக்கிரமாதித்திய சத்யாதிதுன்று என்னும் அரசன் நிலங்களைத் தானங்கொடுத்ததை இந்தச் சாசனம் கூறுகிறது (399 of 1904). மலெபாடு என்னும் இந்த ஊரிலேயே 1905ஆம் ஆண்டில் இரேணாட்டுச் சோழன் புண்ணிய குமாரனுடைய செப்பேட்டுச் சாசனம் கிடைத் துள்ளது. இந்தச் செப்பேட்டுச் சாசனம் எபிகிறாபியா இந்திகா என்னும் சஞ்சிகையின் பதினொன்றாம் தொகுதியில் திரு. கிருஷ்ண சாஸ்திரியால் வெளியிடப்பட்டுள்ளது (Epigraphia Indica, Vol. XI, pp. 337-46). இரணிய இராஷ்ட்ரத்தில் சுப்ரயோக ஆற்றின் தென்கரையில் உள்ள பிரிபாறு என்னும் கிராமத்தில் சில நிலங்களைப் போர்முகராமன் புருஷசார்த்துல புண்ணிய குமாரன் என்னும் அரசன் தானங் கொடுத்ததை இந்தச் செப்பேடு கூறுகிறது. இந்தப் புண்ணிய குமாரனுக்கு மார்த்த வசித்தன், மதனவிலாசன் என்னும் சிறப்புப் பெயர்களும் இருந்தன. இவன், சூரிய குலத்தில் பிறந்த கரிகாலச் சோழனுடைய பரம்பரையில் வந்த சோள மகாராசனுடைய மகன் என்றும் தனஞ்சயவர்மனுடைய பேரன் என்றும் நந்திவர்மனுடைய இரண்டாம் பேரன் என்றும் தன்னை இச்செப்பேட்டில் கூறிக் கொள்கிறான். இந்தச் சாசனம் கி. பி. 8ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்டது. இந்தச் செப்பேட்டின் தலைப்பில் புலியின் உருவம் எழுதப் பட்டிருக்கிறது. இதைக் கிருஷ்ணசாஸ்திரி சிங்கம் என்று கூறுகிறார். திரு. வெங்கையா அவர்கள் இது புலி என்று கூறுகிறார். சோழர் களுக்குப் புலி அடையாளக் குறியாக இருந்தது. சில கல்வெட்டுச் சாசனங்களிலும் புலியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதை முன்னமே காட்டினோம். நன்னிச் சேடன் (நன்னிச்சோழன்) என்னும் பெயருள்ள இரேணாட்டு அரசன் ஒருவன் தெலுங்கு மொழியில் குமார சம்பவம் என்னும் சிறந்த செய்யுள் இலக்கியத்தை எழுதி யுள்ளான். அது மிகச் சிறந்த தெலுங்கு இலக்கியமாகப் புகழப்படுகிறது. இந்த நூலில் இந்த அரசன் தன்னுடைய சோழர் குலத்தைக் கூறுகிறான். தான், கரிகால் சோழனுடைய பரம்பரையைச் சேர்ந்தவன் என்றும், உறையூர் சோழ மரபைச் சேர்ந்தவன் என்றும் கூறிக் கொள்கிறான். கற்கோழி கூவிற்று என்றும் கூறுகிறான். உறையூருக்குக் கோழி என்றும் பெயருண்டு. உறையூரில் கோழிச் சேவல் ஒன்று யானையோடு போர் செய்து வென்றபடியால் உறையூருக்குக் கோழி (கோழியூர்) என்று பெயர் வந்தது என்றும் கூறுவர். ஆனால், கல்லினால் செய்யப்பட்ட கோழி கூவிற்று என்று கூறுவது வியப்பாக இருக்கிறது. இந்தக் குமார சம்பவம் என்னும் நூலில் பல தமிழ்ச் சொற்கள் உள்ளன என்றும் அச்சொற்களின் பொருள் விளங்கவில்லை என்றும் கூறுகின்றனர். தெலுங்குச் சோழர்களின் கல்வெட்டுக்கள் எல்லாவற்றையும் இங்குக் கூறவேண்டுவதில்லை. தமிழ்நாட்டை யரசாண்ட களப்பிர அரசர் ஆட்சிக் காலத்தில் இரேணாட்டை யாண்ட சோழர்களைப் பற்றி மட்டும் இங்குக் கூறுவோம். இரேணாட்டை யரசாண்ட சோழர் அங்கு நிலைத்து நெடுங்காலம் அரசாண்ட போதிலும் அவர்கள் முழுச் சுதந்தரராக இருக்கவில்லை. தங்களைவிடப் பேரரசரின் துணையை நாடி வாழ வேண்டியவராக இருந்தனர். முதலில் அவர்கள் தொண்டை நாட்டை யரசாண்ட பல்லவ மன்னர்களுக்கு அடங்கியிருந்தனர். அவர்கள் தங்களுக்கு, அக்காலத்துப் பல்லவ மன்னர்கள் பெயரைச் சூட்டிக் கொண்டதிலிருந்து இதனை அறிகிறோம். பிறகு, மேலைச் சளுக்கியர் வலிமை பெற்று ஓங்கினபோது இவர்கள் சளுக்கிய மன்னரைச் சார்ந்து வாழ்ந்தனர். களப்பிரரின் ஆட்சிக் காலத்தில் இரேணாட்டை யாண்ட தெலுங்குச் சோழர்களின் பெயரையும் அவர்கள் சூட்டிக் கொண்டிருந்த பல்லவ அரசர் பெயர்களையும் கீழே தருகிறோம் (பக்கம் 270). அவர்கள் ஆண்ட காலத்தையும் உத்தேசமாகத் தருகிறோம். இந்தச் சோழருடைய காலங்களைத் திரு. எம். இராமராவ் அவர்களின் ஆந்திர தேசத்தின் பழைய வரலாற்று ஆய்வுகள் என்னும் நூலிலிருந்து (பக்கம் 148, 149) எடுத்துள்ளோம் (Studies in the Early History of Andhradesa, M. Rama Rao, pp. 148, 149). மற்ற இரேணாட்டுச் சோழர்களைப் பற்றி இங்குக் கூறவில்லை. இங்குக் கூறப்பட்ட முதல் ஆறு அரசர்கள் பல்லவ அரசர்களைச் சார்ந்து இருந்ததை அறிகிறோம். கி. பி. 5ஆம் நூற்றாண்டின் கடைசியில் இருந்த ஒரு சோழன் இரேணாட்டில் சோழ இராச்சியத்தை நிறுவினான். இவன், முதலாம் நந்திவர்மன் என்னும் பல்லவனுடைய சமகாலத்தில் இருந்தவன். இவன் தன்னுடைய மகனுக்குப் பல்லவ நந்திவர்மனுடைய பெயரைச் சூட்டினான். நந்திவர்ம சோழன், சிம்ம விஷ்ணு என்னும் பல்லவ அரசனுடைய சமகாலத்தில் இருந்தவன். இவன் தன்னுடைய மூத்த மகனுக்குச் சிம்மவிஷ்ணுப் பல்லவனுடைய பெயரைச் சூட்டினான். நந்திவர்ம சோழனுடைய முதலாம், இரண்டாம், மூன்றாம் மகன்களான சிம்ம விஷ்ணுவும் சுந்தசனந்தனும் தனஞ்சயனும் பல்லவ சிம்மவிஷ்ணு காலத்தில் இருந்தவர்கள் என்பதை அறிகிறோம். சோழன் தனஞ்சயவர்மனின் ஆட்சிக் காலத்தில் பல்லவ சிம்மவிஷ்ணு, காவிரி பாய்கிற சோழ நாட்டை யரசாண்ட களப்பிரனோடு போர் செய்து வென்று சோழ நாட்டைக் கைப்பற்றி அதனைத் தன்னுடைய பல்லவ இராச்சியத்தோடு இணைத்துக் கொண்டான். இந்தப் பல்லவ - களப்பிரப் போரில் இரேணாட்டுத் தனஞ்சயவர்மன் சிம்மவிஷ்ணுப் பல்லவனுக்கு உதவியாக இருந்திருக்கக்கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு வேளை இந்தப் போரில் தனஞ்சயவர்மன் போர்க்களத்தில் இறந்திருக்க கூடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இரேணாட்டுச் சோழன் தனஞ்சயவர்மன் தன்னுடைய மகனுக்கு மகேந்திர விக்ரமன் என்று, முதலாம் மகேந்திர விக்கிரமவர்மனின் பெயரைச் சூட்டினான். இரேணாட்டுச் சோழன் மகேந்திர விக்கிரமன் ஆட்சிக் காலத்தில் மேலைச் சளுக்கிய அரசனான புலிகேசி (இரண்டாம் புலிகேசி) மகேந்திரவர்மப் பல்லவன் மேல் படையெடுத்து வந்து அடிக்கடி தொண்டை நாட்டில் போர்செய்தான். அந்தக் காலத்தில் புலிகேசியின் கை ஓங்கியிருந்தபடியால், இரேணாட்டு மகேந்திரவிக்கிரம சோழன், பல்லவர் சார்பை விட்டுச் சளுக்கியர் சார்பைச் சேரவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆகவே, அவன் பல்லவ அரசர் சார்பிலிருந்து நீங்கிச் சளுக்கியரைச் சார்ந்தான் என்று அறிகிறோம். இவனுடைய பேரனுக்கு இவன் விக்கிரமாதித்தன் என்று சளுக்கிய அரசனுடைய பெயரைச் சூட்டியிருப்பதிலிருந்து இதனை யறியலாம். இரேணாட்டை யரசாண்ட முதல் ஐந்து சோழர்கள் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தெலுங்கு நாட்டை யரசாண்டார்கள். இவர்கள் ஏறத்தாழ கி. பி. 475 முதல் 575 வரையில் அரசாண்டார்கள். பல்லவ சிம்மவிஷ்ணு களப்பிரரை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட காலத்தில், பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை வென்று பாண்டி நாட்டைக் கைப்பற்றிப் பாண்டியர் ஆட்சியை நிலை நாட்டினான் என்பதை வேள்விக்குடிச் செப்பேட்டிலிருந்து அறிகிறோம். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் சோழ நாட்டுச் சோழரில் ஒரு கிளை இரேணாட்டில் அரசாட்சி செய்து கொண்டிருந்தபோது, சோழ நாட்டுச் சோழ பரம்பரையார் சோழ நாட்டிலேயே சில ஊர்களைக் களப்பிரருக்குக் கீழடங்கி அரசாண்டார்கள். பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை வென்று பாண்டி நாட்டை மீட்டுக்கொண்ட போது சோழர் களப்பிரரை வென்று தங்கள் சோழ நாட்டை மீட்டுக் கொள்ள வில்லை. களப்பிரருடன் போர் செய்து சோழ நாட்டைக் கைப்பற்றியவன் சிம்மவிஷ்ணு பல்லவன். ஆகவே, களப்பிரருக்குக் கீழடங்கியிருந்த சோழர், சிம்மவிஷ்ணு சோழ நாட்டை வென்ற பிறகு பல்லவருக்குக் கீழடங்கிவிட்டனர்.  களப்பிரர் காலத்து இலங்கை அரசர் களப்பிரர் தமிழகத்தை ஆண்ட காலத்தில் பக்கத்து நாடாகிய இலங்கையின் அரசியல் நிலை எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம். இலங்கையிலும் நிலைத்த ஆட்சி யில்லாமல் அரசியல் குழப்பங்களும் கலகங்களும் இருந்தன. தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் நெடுங்காலமாக அரசியல் தொடர்பும் வாணிகத் தொடர்பும் சமயத் தொடர்பும் இருந்து வந்தன. ஏறத்தாழ கி. மு. 5ஆம் நூற்றாண்டிலிருந்து, இலங்கை - தமிழ்நாடு உறவு இருந்தது. களப்பிரர் காலத்திலும் இரு நாடுகளுக்கும் தொடர்பு இருந்தது. அந்தத் தொடர்பைச் சுருக்கமாகக் கூறுவோம். களப்பிர அரசர்களைப் பற்றின வரலாற்றுச் செய்திகள் வரன்முறையாகத் தெரியவில்லை யானாலும் அக்காலத்து இலங்கையரசருடைய வரலாறு வரன்முறையாவும் தொடர்ச்சியாகவும் தெரிகின்றது. சூல வம்சம் என்னும் நூலிலே இலங்கை வரலாறு தெரிகின்றது. பாண்டிய நாட்டைக் களப்பிர அரசர் ஆண்ட காலத்திலே பாண்டிய அரச குலத்தார் இலங்கையைக் கைப்பற்றிச் சிலகாலம் அரசாண்ட செய்தியை இலங்கை வரலாற்றிலிருந்து அறிகிறோம். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இலங்கையை யரசாண்ட அரசர்களைக் கூறுவோம். இந்த அரசர்கள் ஆண்ட காலத்தை இலங்கை வரலாற்றுச் சுருக்கம் என்னும் நூலிலிருந்து எடுத்துள்ளோம். (A Short History of Ceylon, H. W. Codringtion, 1929). திஸ்ஸன் திஸ்ஸன் என்னும் இவன் ஸ்ரீதாசனுடைய மகன். இவன் விவகாரம் (சட்டம்) அறிந்தவனாகையால் ஓகாரிக திஸ்ஸன் என்று பெயர் பெற்றான். இவன் இருபத்திரண்டு ஆண்டுகள் அரசாண்டான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் இலங்கையில் மகாயான பௌத்த மதம் நுழையத் தொடங்கிற்று. இலங்கையில் பழைய தேரவாதப் பௌத்தத்துக்கு மாறானது மகாயான பௌத்த மதம். தேரவாதப் பௌத்தத்துக்கு இடையூறாக இருந்த மகாயான பௌத்தம் இலங்கையில் நுழைந்தபோது, ஓகாரிக திஸ்ஸன் தன்னுடைய அமைச்சனான கபிலன் என்பவனைக் கொண்டு மகாயானத்தை அடக்கி தேரவாதப் பௌத்தத்தை நிலைக்கச் செய்தான். அபயநாகன் இவன் ஓகாரிக திஸ்ஸனுடைய தம்பி. இவனுக்கும் இராணிக்கும் கூடா ஒழுக்கம் இருந்தது. இது கண்டறியப்பட்ட போது இவன் தமிழ்நாட்டுக்கு ஓடிவிட்டான். தமிழ்நாட்டில் எங்குத் தங்கினான் என்பது தெரியவில்லை. ஆனால், களப்பிர அரசனுடைய ஆதரவில் தங்கியிருந்தான் என்று கருதலாம். தமிழ்நாட்டில் தங்கியிருந்த இவன் சில காலத்துக்குப் பிறகு பெரிய சேனையை அழைத்துக்கொண்டு இலங்கைக்குப் போய் அண்ணனாகிய அரசனோடு போர் செய்தான். ஓகாரிக திஸ்ஸன் தன்னுடைய இராணியுடன் இலங்கையின் மத்தியில் உள்ள மலைநாட்டுக்கு ஓடினான். அபயநாகன் அவனைத் தொடர்ந்து சென்று போர் செய்து ஓகாரிக திஸ்ஸனைக் கொன்று அவனுடைய இராணியைக் கைப்பற்றிக் கொண்டுவந்து அவளை இராணியாக்கி அரசாண்டான். இவன் எட்டு ஆண்டுகள் அரசாண்டான். ஸ்ரீநாகன் II இவன் ஓகாரிக திஸ்ஸனுடைய மகன். இவனை இரண்டாம் ஸ்ரீநாகன் என்றும் கூறுவர். அபயநாகன் இறந்த பிறகு ஸ்ரீநாகன் இலங்கையை இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். விஜயகுமரன் ஸ்ரீநாகனுக்குப் பிறகு அவனுடைய மகனான விஜயகுமாரன் அரசனானான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் சங்க திஸ்ஸன், கங்கபோதி, கோதாபயன் என்னும் மூன்று பேர் வந்து அரசாங்க ஊழியராக அமர்ந்தார்கள். இவர்கள் அரசகுலமல்லாத இலம்பகன்னர். ஸ்ரீகங்கபோதி (கி. பி. 252 - 254) இவனுடைய ஆட்சியின் இரண்டாம் ஆண்டில், இவனுக்கு அமைச்சனாகவும் பொக்கிஷதாரனுமாக இருந்த கோதாபயன் என்னும் இலம்பகன்னன், நாட்டில் இவனுக்கு எதிராகக் கலகஞ்செய்தான். நாட்டிலே கலகமும் குழப்பமும் ஏற்பட்டன. கோதாபயன் சேனை யோடு வந்து இவன் மேல் போர் தொடுத்தான். அரசனான ஸ்ரீகங்க போதி இவனோடு போர் செய்யாமல் ஓடினான். ஓடிய இவனைப் பிடித்து ஒரு சேனைத் தலைவன் இவன் தலையை வெட்டிக் கோதாபயனிடம் அனுப்பினான். கோதாபயன் அதைத் தக்க முறையில் அடக்கஞ் செய்து விட்டு, மேகவண்ணாபயன் என்று பெயர் சூட்டிக் கொண்டு அரசனானான். மேகவண்ணாபயன் (கி. பி. 254 - 267) கோதாபயன், மேகவண்ணாபயன் என்று பட்டப்பெயர் கொண்டு பதின்மூன்று ஆண்டுகள் அரசாண்டான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் இலங்கையில் வேதுல்லியமதம் (மகாயான பௌத்தம்) பரவத் தொடங்கிற்று. பழைய தேரவாதப் பௌத்தத்துக்கு மாறுபட்ட தான வேதுல்லியமதத்தை நீக்கி இவ்வரசன் பழைய தேரவாதப் பௌத்தத்தை நிலை நிறுத்தினான். மகாயான பௌத்தத்தைச் சார்ந்த பௌத்தப் பிக்குகளை இவ்வரசன் நாடு கடத்தினான். நாடுகடத்தப்பட்ட பிக்குகள் தமிழ்நாட்டுக்கு வந்து சோழ நாட்டில் தங்கினார்கள். அக்காலத்தில் சோழ நாட்டில் மகாயானப் பௌத்தத் தலைவராக இருந்த சங்கமித்திரன் என்னும் தமிழப் பிக்கு, நாடுகடத்தப்பட்டு வந்த சிங்கள நாட்டுப் பிக்குகள் கூறியதைக் கேட்டுத் தான் இலங்கைக்குப் போய் மேகவண்ணாபய அரசனுடைய சபையில் தேரவாதப் பௌத்தர் களோடு சமயவாதஞ்செய்து வென்றார். மேகவண்ணாபயன் வெற்றி பெற்ற சங்கமித்திரரை ஆதரித்தான். தன்னுடைய மக்களான ஜேட்டதிஸ்ஸன், மகாசேனன் என்பவர்களைச் சங்கமித்திரரிடத்தில் கல்வி கற்க விட்டான். மேகவண்ணாபயன் காலமான பிறகு அவன் மகனான ஜேட்டதிஸ்ஸன் அரசனானான். ஜேட்டதிஸ்ஸன் (கி. பி. 267 - 277) இவன் மேகவண்ணாபயனுடைய மூத்த மகன். இவன் பத்து ஆண்டுகள் அரசாண்டான். இவன் சங்கமித்திரரிடம் கல்வி பயின்ற மாணவன். ஆனால், அவரிடத்தில் இவன் பகை கொண்டிருந்தான். ஆகையால், சங்கமித்திரர் இவன் காலத்தில் இலங்கையிலிருந்து சோழ நாட்டுக்கு வந்துவிட்டார். மகாசேனன் (கி. பி. 277 - 304) ஜேட்டதிஸ்ஸனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான மகாசேனன் அரசனானான். இவன் அரசனாவதையறிந்த இவனுடைய குருவாகிய சங்கமித்திரர் சோழ நாட்டிலிருந்து இங்கு வந்து தம்முடைய கையினாலே இவனுக்கு முடி சூட்டினார். இவ்வரசனுடைய ஆதரவைப் பெற்ற இவர், மகாயான பௌத்த மதத்தை இலங்கையில் பரவச் செய்தார். இலங்கையில் தேரவாத (ஈனயான), மகாயானச் சமயப் பூசல்கள் ஏற்பட்டன. மகாசேனன் இலங்கையில் அக்காலத்தில் இருந்த பேர் போன சிவன் கோயில்களை இடித்து அழித்தான். ஸ்ரீமேகவண்ணன் (கி. பி. 304 - 332) இவன் இலங்கையின் பழைய தேரவாதப் பௌத்தத்தை ஆதரித்தான். பல பரிவேணைகளையும் விகாரைகளையும் கட்டினான். இவனுடைய ஒன்பதாம் ஆட்சியாண்டில் கலிங்க நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட புத்தருடைய பல் தாதுவை அநுராதபுரத்தில் வைத்துச் சிறப்புச் செய்தான். வட இந்தியாவை இவன் காலத்தில் ஆட்சி செய்தவன் சந்திரகுப்தன் (கி. பி. 345 - 380). ஸ்ரீமேகவண்ணன், சந்திகுப்த அரசனிடத்தில் இரண்டு பௌத்தப் பிக்குகளைத் தூது அனுப்பி, புத்தகயாவுக்கு யாத்திரை போகிற இலங்கைப் பௌத்தப்பிக்கு களுக்குப் பாதுகாப்புக் கொடுத்து ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டான். இவன் இருபத்தெட்டு ஆண்டு ஆட்சி செய்தான் (சூலவம்சம் 37ஆம் பரிச்சேதம் 51 - 99, Culavamsa, Part I Translated by Wilhelm Geiger, 1929). இவனுடைய கல்வெட்டுச் சாசனங்கள் இலங்கையில் கிடைத்துள்ளன. அந்தச் சாசனங்களில் இவ்வரசன் கிரி மேகவண்ண என்றும் கிரி மேகவன என்றும் கூறப்படுகிறான். ஜேஸ்ரீட்டதிஸ்ஸன் II (கி. பி. 332-341) ஜேட்டதிஸ்ஸன், ஸ்ரீமேகவண்ணனுடைய தம்பி. இவன் யானைத் தந்தத்தில் அழகான உருவங்களையும் கலைப் பொருள்களையும் செய்வதில் வல்லவன். அந்தத் தொழிலைப் பலருக்கு கற்பித்தான். இவன் இலங்கையை ஒன்பது ஆண்டுகள் அரசாண்டான் (சூலவம்சம் 37ஆம் பரிச்சேதம் 100 - 104). புத்ததாசன் (கி. பி. 341 - 370) இவன் ஜேட்டதிஸ்ஸனுடைய மகன். மருத்துவக் கலையில் வல்லவனான இவன் மனிதரின் நோயைத் தீர்த்ததுமல்லாமல் ஒரு பாம்பின் நோயையும் தீர்த்தானாம். நாட்டில் ஆங்காங்கே மருத்துவர் களை நியமித்து நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய ஏற்பாடு செய்தான். மருத்துவருக்கு மருத்துவ விருத்தி நிலங்களைக் கொடுத்தான். யானை, குதிரைகளின் நோய்களையும் போரில் புண்பட்ட வீரர்களின் நோயையும் போக்க வைத்தியர்களை நியமித்தான். இவ்வரசன் காலத்தில் மகாதம்ம கீர்த்தி என்னும் பிக்கு பௌத்த சூத்திரங்களைச் சிங்கள மொழியில் பெயர்த் தெழுதினார். இவ்வரசனுக்கு எண்பது மக்கள் இருந்தார்களாம். ப-ஹியன் (Fa-Hain) என்னும் சீன யாத்திரிகர் இவ்வரசன் காலத்தில் இலங்கைக்கு வந்து தங்கினார். ப-ஹியன் இலங்கையில் கி. பி. 411 - 12 ஆம் ஆண்டு தங்கினார் என்று அறியப்படுகிறது. புத்ததாச அரசன் இருபத்தொன்பது ஆண்டுகள் அரசாண்டான் (சூலவம்சம் 37 ஆம் பரிச்சேதம் 105 - 178). உபதிஸ்ஸன் (கி. பி. 370 - 412) புத்ததாசன் காலமான பிறகு அவனுடைய மூத்த மகனான உபதிஸ்ஸன் இலங்கையை யரசாண்டான். இவனை இரண்டாம் உபதிஸ்ஸன் என்பர். பௌத்தப் பள்ளிகளுக்கும் பௌத்தப் பிக்கு களுக்கும் இவன் தான தருமங்களைச் செய்தான். அங்கு ஊனம் உள்ளவர்க்கும் குருடர் நோயாளிகளுக்கும் மருத்துவ மனைகளை அமைத்தான். இவன் 42 ஆண்டுகள் அரசாண்டான். இவனுடைய இராணி, இவனுடைய தம்பியான மகாநாமன் என்பவனோடு கூடாவொழுக்கங் கொண்டிருந்தாள். மகாநாமன் பௌத்தப் பள்ளியில் சேர்ந்த பௌத்தப் பிக்குவாகத் துறவு கொள்ள இருந்தான். அவன் புத்தப் பள்ளியில் பப்பஜா என்னும் நிலையில் இருந்தான். பப்பஜா என்பது துறவு பூணுவதற்கு முந்திய புகுநிலை. (முழுத்துறவு கொள் வதற்கு உபசம்பதா என்பது பெயர்.) மகாநாமனோடு கூடாவொழுக்கங் கொண்டிருந்த இராணி அரசனைக் (உபதிஸ்ஸனை) குத்திக் கொன்று விட்டாள். இதையறிந்த பௌத்தப் பள்ளியில் இருந்த மகாநாமன் அரண்மனைக்கு வந்து அரசாட்சியைக் கைக்கொண்டான் (சூலவம்சம் 37ஆம் பரிச்சேதம் 179 - 210). மகாநாமன் (கி. பி. 412 - 434) உபதிஸ்ஸனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான மகாநாமன் அரசனானான். இவன் தன்னுடைய அண்ணனுடைய இராணியைத் தன்னுடைய பட்ட மகிஷியாக்கிக் கொண்டான். இவர்களுக்கு ஆண் மக்கள் இல்லை. ஒரே ஒரு பெண்மகள் சங்கா என்பவள் இருந்தாள். மகாநாமனுக்கு இன்னொரு மனைவி இருந்தாள். அவள் தமிழ் குலத்தைச் சேர்ந்தவள். ஆகவே, அவள் தமிழமகிஷி என்று கூறப் பட்டாள். அந்தத் தமிழ் இராணிக்கு சொத்திசேனன் என்னும் ஒரு மகன் இருந்தான். மகாநாமனுடைய ஆட்சிக் காலத்தில் புத்த கோஷர் என்னும் பெயருள்ள பேர் போன பௌத்தப் பிக்கு இலங்கைக்கு வந்தார். அவர் இலங்கைக்கு வருவதற்கு முன்பு ஆந்திர நாட்டிலும் பிறகு தமிழ்நாட்டிலும் இருந்தார். தமிழ்நாட்டுப் பௌத்த விகாரைகளில் தங்கியிருந்தபோது, அப்பள்ளியில் இருந்த சுமதி, ஜோதிபாலர் என்னும் தமிழ்ப் பிக்குகள் புத்தகோஷரை இலங்கைக்குப் போய் அங்குச் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த பௌத்த மத உரை நூல்களைக் கற்கும்படித் தூண்டினார்கள். புத்தகோஷர், மகாநாமன் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு வந்து தங்கி பௌத்த விகாரைகளில் இருந்த சிங்கள உரை நூல்களைக் கற்றார். இலங்கையில் மகா விகாரையில் இருந்த பௌத்த சங்கத்தலைவரான சுங்கபாலர் என்னும் மகாதேரர் புத்தகோஷருக்குச் சிங்கள மொழியில் இருந்த திரிபிடக உரைகளைக் கூறினார். அவற்றையறிந்த பிறகு புத்தகோஷர் விசுத்திமக்கம் முதலான நூல்களைப் பாலி மொழியில் எழுதினார். புத்தகோஷர் தம்முடைய நூலில், சோழ நாட்டை யரசாண்ட அச்சுதவிக்கந்தன் என்னும் களப்பிர அரசரைக் குறிப்பிடுகிறார். மகாநாமன் இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு காலமானான் (சூலவம்சம் 37ஆம் பரிச்சேதம் 210 - 247). சொத்திசேனன் (கி. பி. 434) மகாநாமன் இறந்த பிறகு அவனுடைய ஒரே மகனான சொத்திசேனன் இலங்கையில் அரசனானான். இவன் மகாசேனனுக்கும் அவனுடைய தமிழ மகிஷிக்கும் பிறந்த மகன். சொத்திசேனன் முடிசூடின அதே நாளில் அவனுடைய மாற்றாந்தாயின் மகளான சங்கா என்பவளால் கொலை செய்யப்பட்டிறந்தான். சங்காவின் தாய் சிங்களவள். அவள் தன்னுடைய முதல் கணவனான உபதிஸ்ஸனைக் கொன்று அரசாட்சியைத் தன்னுடைய காதலனான மகாநாமனுக்குக் கொடுத்ததையறிந்தோம். அவளுடைய மகளான சங்காவும் தன் தாயைப் போலவே, கொலைக்கு அஞ்சாதவளாய்த் தன்னுடைய தம்பியான தமிழசொத்திசேனனைக் கொன்றுவிட்டாள். தாயைப் போல சேய் என்னும் பழமொழிக்கு ஏற்பத் தாயினுடைய கொலையுள்ளம் சங்காவுக்கும் இருந்தது. சத்தக்காகசன் (கி. பி. 434) இவனுடைய இயற்பெயர் தெரியவில்லை. சத்தக்காகசன் என்பது சத்திரக்காகசன் என்பதன் சிதைவு. சத்திரம் என்றால் அரசனுடைய கொற்றக்குடை என்பது பொருள். இவன் மகாநாமனின் கொற்றக்குடை ஏந்தும் அலுவலனாக இருந்தான். மகாநாமன் தன்னுடைய சிங்கள மனைவியின் மகளான சங்கா என்பவளை இவனுக்கு மணஞ் செய்வித்தான். மகாநாமன் இறந்த பிறகு அவனுடைய மகனான சொத்திசேனன் அரசனானான். சொத்திசேனன், மகாநாமனுடைய தமிழ மகிஷியின் மகன் என்பதையறிந்தோம். இவன் முடிசூடின அன்றைய தினமே இவனுடைய சிங்களச் சகோதரியினால் கொல்லப்பட்டிறந் ததையும் அறிந்தோம். சொத்திசேனனுக்குப் பிறகு சத்தக்காகச னாகிய இவன் சிங்கள அரசின் சிம்மாசனம் ஏறினான். இவன் ஓராண்டு காலம் அரசாண்டான். இவன் இறந்த பிறகு இவனுடைய உடம்பை அமைச்சன் அரண்மனையிலேயே கொளுத்தி விட்டு, மித்தசேனன் என்பவனை அரசனாக்கினான் (சூலவம்சம் 38ஆம் பரிச்சேதம் 3-4). மித்தசேனன் (கி. பி. 435 - 436) சத்தக்காகசன் இறந்த பிறகு, அமைச்சன் (அவன் பெயர் தெரியவில்லை) மித்தசேனன் என்பவனைச் சிங்கள நாட்டுச் சிம்மாசனத்தில் அமர்த்தினான். அக்காலத்தில் சிங்கள அரச குலத்தைச் சேர்ந்தவர் ஒருவருமிலர் என்று தோன்றுகிறது. அரசனாக அமர்ந்த மித்தசேனன் யார், இவன் எந்த முறையில் அரசாட்சிக்கு உரியவன் என்பது தெரியவில்லை. நிச்சயமாக இவன் அரசுக்கு உரியவனல்லன். ஏனென்றால், இந்த மித்தசேனன் பேர்போன அரிசிக் கொள்ளைக் காரனாக இருந்தவன். இவனை அரசனாக்கிய அமைச்சன் இவனை வெளியில் காட்டாமலே மறைத்து வைத்திருந்தான். அரசன் நோயாக இருக்கிறபடியால் அரண்மனையை விட்டு வெளியே வர இயலாமல் இருக்கிறான் என்று அமைச்சன் நாட்டு மக்களிடம் கூறினான். எத்தனை நாள் ஒளிந்திருக்க முடியும்? நாட்டு மக்கள் வற்புறுத்தலின்மேல், மித்தசேனன் திருவிழாக் காலத்தில் யானை ஏறி உலா வந்தான். இவன் ஆட்சிக் காலத்தில், ஓராண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டிலிருந்து பாண்டிய அரச குலத்துப் பாண்டியன் ஒருவன் படையெடுத்து வந்து மித்தசேனனைப் போரில் கொன்று சிங்கள ஆட்சியைக் கைப்பற்றி யரசாளத் தொடங்கினான் (சூலவம்சம் 38ஆம் பரிச்சேதம் 4 - 11). இலங்கையில் பாண்டியர் ஆட்சி (கி. பி. 436 - 463) தமிழகத்தைச் (சேர, சோழ, பாண்டிய நாடுகளை) களப்பிர அரசர் ஆட்சி செய்தபோது பழைய சேர, சோழ, பாண்டிய அரச பரம்பரையார் களப்பிரருக்குக் கீழடங்கிச் சிற்றரசர்களாக இருந்தார்கள். அவர்களைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. பாண்டி நாட்டில் கீழடங்கியிருந்த பாண்டிய பரம்பரையில் ஒரு பாண்டியன், தன்னுடைய இரண்டு மகன் களையும் ஒரு தமிழ்ச் சேனையையும் அழைத்துக்கொண்டு, இலங்கைக்கு வந்தான். அங்கு அரசாண்டு கொண்டிருந்த மித்தசேன னோடு போர் செய்தான். மித்தசேனன் போரில் இறந்து போனான். பாண்டியன் இலங்கையாட்சியைக் கைப்பற்றி அனுராத புரத்திலிருந்து இலங்கையை யரசாண்டான். இந்தப் பாண்டியனுடைய பெயர் தெரியவில்லை. இவனைப் பாண்டு (பாண்டியன்) என்று இலங்கை வரலாறு கூறுகிறது. பாண்டு (பாண்டியன், கி. பி. 436 - 441) பாண்டியன் இலங்கையை யரசாண்டபோது தலைநகர மான அநுராதபுரத்திலிருந்த சிங்கள அரச குடும்பத்தவரும் பெருங்குடி மக்களும் தெற்கே உரோகண நாட்டுக்குப் போய் விட்டார்கள். இலங்கையின் தென்கிழக்கிலிருந்த உரோகண நாடு அந்தக் காலத்தில் கலகக்காரர்களுக்குப் புகலிடமாக இருந்தது. உரோகண நாட்டுக்குச் சென்றவர்கள் தனக்கு எதிராகக் கலகஞ் செய்வார்கள் என்பதையறிந்த பாண்டியன் தன்னுடைய சிங்கள இராச்சியத்தின் தெற்கெல்லைகளில் பல கோட்டைகளை அமைத்துப் பாதுகாப்புகளைச் செய்தான். அவன் தெற்கு எல்லையில் இருபத்தொரு கோட்டைகளை அமைத்துப் பாதுகாத்தான். பாண்டியனுடைய இலங்கை இராச்சியம் வழக்கம் போல இராஜரட்டம் (இராஜ ராட்டிரம்) என்று கூறப்பட்டது. அதன் எல்லை கிழக்கு மேற்கு வடக்குப் புறங்களில் கடல்களும் தெற்கே மாவலிகங்கையாறும் ஆக அமைந்திருந்தன. மாவலிகங்கை என்பது இலங்கையின் பெரிய ஆறு. இதன் சரியான பெயர் மாவாலுக கங்கை என்பது. மா - பெரிய, வாலுகம் - மணல், கங்கை - ஆறு. மாவாலுக கங்கை என்பது மாவலிகங்கை என்று வழங்கப்படுகிறது. அநுராதபுரத்தில் மகாவிகாரை என்னும் பௌத்தப் பள்ளியில் மோரிய குலத்தைச் சேர்ந்த ஒரு பௌத்தப் பிக்கு இருந்தான். அவனுடைய தங்கை மகனான தாதுசேனன் என்பவன், மகாவிகாரையைச் சேர்ந்த தீக சந்தனப் பரிவேணையில் (பரிவேணை - பௌத்த மதக் கல்லூரி) பௌத்த மத நூல்களைப் படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு அரசாளும் ஊழ் இருக்கிறது என்று நம்பிய அந்தப் பிக்கு அவனுக்கு மதக்கல்வியைப் போதிக்காமல் அரசியல் நூல்களைக் கற்பித்துக் கொண்டிருந்தான். தனக்கு எதிராகப் பௌத்த விகாரையில் தாதுசேனன் மறைவாக இருக்கிறான் என்பதையறிந்த பாண்டியன் அவனைப் பிடித்துக் கொண்டுவரும்படி தன்னுடைய வீரர்களை அனுப்பினான். பிடிக்க வருகிறார்கள் என்பதை முன்னமேயறிந்த தாதுசேனனும் அவனுடைய மாமனான பிக்குவும் நகரத்தை விட்டுப் புறப்பட்டுத் தெற்கு எல்லையான மாவலிகங்கையைக் கடந்து தெற்கே போய்விட்டார்கள். அவர்கள் தெற்கு சென்று கோணஓயாவைப் (இபோதைய காளஓயா) கடந்து உரோகண நாட்டுக்குப் போய்விட்டார்கள். அவர்கள் உரோகண நாட்டில் கலகக்காரர்களோடு சேர்ந்துகொண்டு அரசனுக்கு எதிராகக் கலகஞ்செய்யும் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் இலங்கை இராச்சியத்தை ஐந்து ஆண்டுகள் அரசாண்ட பிறகு காலமானான் (சூலவம்சம் 38ஆம் பரிச்சேதம் 11 - 29). பரிந்தன் (கி. பி. 441 - 444) பாண்டியன் காலமான பிறகு அவனுடைய மூத்த மகனான பரிந்தன் இலங்கையை யரசாண்டான். இவனுடைய ஆட்சிக் காலத்து வரலாறு தெரியவில்லை. இவனுடைய ஆட்சிக் காலத்தில் உரோகண நாட்டிலிருந்த தாதுசேனன் கலகக்காரர் களைச் சேர்த்துக் கொண்டு படை திரட்டிக் கொண்டிருந்தான் என்று தோன்றுகிறது. பாண்டியன் பரிந்தன் மூன்று ஆண்டுகள் அரசாண்டான் (சூலவம்சம் 38ஆம் பரிச்சேதம் 29). இளம்பரிந்தன் (குட்டபரிந்தன், கி. பி. 444 - 460) பாண்டியன் பரிந்தன் காலமான பிறகு அவனுடைய தம்பியான இளம்பரிந்தன் அரசாண்டான். இவனைக் குட்டபரிந்தன் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன. குட்டபரிந்தன் என்றால் இளம் பரிந்தன் என்பது பொருள். அதாவது பரிந்தனுடைய தம்பி என்பது பொருள். இவன் பதினாறு ஆண்டுகள் அரசாண்டான். இவனுடைய ஆட்சிக் காலத்தில், கலகக்காரனான தாதுசேனன் படை திரட்டிக் கொண்டு வந்து இவனோடு போர் செய்தான். குட்டபரிந்தன் அவனோடு போர் செய்து வென்றான். தோற்றுப் போன தாதுசேனன் போர்க் களத்தைவிட்டு ஓடினான். போரின்போது தாதுசேனனை ஆதரித்துக் கலகஞ் செய்தவர்களை அடக்கினான். குட்டபரிந்தன் பல நன்மையான காரியங்களையும் தீமையான காரியங்களையும் செய்தான் என்று சூலவம்சம் கூறுகிறது. (சூலவம்சம் 38ஆம் பரிச்சேதம் 30 - 31). என்ன நன்மைகளைச் செய்தான், என்ன தீமைகளைச் செய்தான் என்று கூறவில்லை. கலகக்காரர்களை அடக்கியது தீமையாகாது. பாண்டியன் குட்டபரிந்தன் இலங்கை நாட்டின் மதமான பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் என்று தெரிகிறான். இவனுடைய கல்வெட்டுச் சாசனம் கிடைத்திருக்கிறது. இந்தச் சாசன எழுத்து இலங்கையின் பழைய தலைநகரமான அநுராதபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்டு இப்போது அநுராதபுரத்து ஆர்க்கியாலஜி இலாகாவின் காட்சிச் சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சாசனத்தில் இவன், பரிதேவன் என்றும் பரிததேவன் என்றும் புததாசன் (புத்ததாசன்) என்றும் கூறப்படுகிறான். இவனுடைய இராணி பௌத்த விகாரைக்குத் தானஞ் செய்ததை இந்தக் கல்வெட்டுக் கூறுகிறது (‘Annuradhabura Slab Inscription of Kuddha Parinda’ by S. Paranavitana, Epigraphia ணeylonica, Vol. IV, 1934 - 41, pp. 111 - 115). திரிதரன் (ஸ்ரீதரன் கி. பி. 460) இவன் குட்டபரிந்தனுக்குப் பிறகு அரசாண்டான். இவன் இளம்பரிந்தனுக்கு எந்த வகையில் உறவினர் என்பது தெரிய வில்லை. இவன் அரசனான இரண்டாம் மாதத்தில் கலகக்காரனான தாதுசேனன் இவன் மேல் படையெடுத்து வந்து போர் செய்தான். அந்தப் போரில் இவன் இறந்து போனான். போர்க்களத்தில் இறந்து போனாலும் வெற்றி இவனுக்குக் கிடைத்தது. தாதுசேனன் தோற்று ஓடினான் (சூலவம்சம் 38ஆம் பரிச்சேதம் 32). தாட்டியன் (கி. பி. 460 - 463) திரிதரன் போர்க்களத்தில் இறந்த பிறகு பாண்டியன் தாட்டியன் அரசனானான். இவனுக்கும் முந்திய அரசனுக்கும் உள்ள உறவு தெரியவில்லை. இவன் தாட்டியன் என்றும் தாட்டிகன் என்றும் மகாதாட்டிக மகாநாகன் என்றும் மகாதானிக மகாநாகன் என்றும் கூறப்படுகிறான். இவன் மேல் போர் செய்ய வந்த தாது சேனனை இவன் வென்று துரத்தினான். உரோகண நாட்டில் உள்ள பேர் போன கதரகாம (கதிர்காமம்) நகரத்தில் தாட்டிகனுடைய கல்வெட்டுச் சாசனம் சிதைந்து காணப்படுகிறது. இந்தச் சாசனம் இவன் கிரிவிகாரை என்னும் பௌத்தப் பள்ளிக்குத் தானஞ்செய்ததைக் கூறுகிறது. எனவே, இவனும் பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் என்று தெரிகிறான். இலங்கையின் தென்கிழக்குக் கோடியில் இவனுடைய கல்வெட்டுச் சாசனம் கிடைத்திருக்கிறபடியால், இவன் தாதுசேனன் இருந்த உரோகண நாட்டில் மேல் படையெடுத்துச் சென்று அவனோடு போர் செய்து வென்றான் என்பது தெரிகிறது. அங்கு வெற்றியடைந்த போது இந்தத் தானத்தைச் செய்து இக்கல்வெட்டெழுத்தை எழுதினான். உரோகண நாட்டில் இவன் சில காலந் தங்கியிருந்தான் என்று தெரிகிறது (Epigraphia ணeylonica, Vol.III, pp. 216 - 219). இந்தப் பாண்டியனுக்கும் கலகக்காரனான தாது சேனனுக்கும் பல போர்கள் நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அந்தப் போர்களைப் பற்றிச் சூலவம்சம் ஒன்றும் கூறவில்லை. கூறாதபடியினால் தாதுசேனன் பல தடவை தோற்றுப் போனான் என்று ஊகிக்கலாம். கடைசியாக நடந்த போரிலே பாண்டியன் மகாதாட்டிக மகாநாகன் இறந்து போனான். இறந்து போனாலும் வெற்றி இவனுக்கே கிடைத்தது (சூலவம்சம் 38 ஆம் பரிச்சேதம் 33). பிட்டியன் (கி. பி. 463) தாட்டிகனுக்குப் பிறகு பிட்டியன் அரசனானான். களப்பிரர் காலத்தில் இலங்கையை யரசாண்ட பாண்டியர்களில் இவன் கடைசிப் பாண்டியன். இவன் ஆட்சிக் காலத்தில் ஏழாம் மாதத்தில் தாதுசேனன் இவன் மேல் படையெடுத்து வந்து போர் செய்தான். அந்தப் போரில் பிட்டியன் இறந்து போனான். ஆகவே, தாதுசேனன் இலங்கை யாட்சியைக் கைப்பற்றினான். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பாண்டிய மரபைச் சேர்ந்த ஆறு பாண்டியர்கள் இலங்கையை இருபத்தேழு ஆண்டுகள் அரசாண்டார்கள் (சூலவம்சம் 38ஆம் பரிச்சேதம் 3 - 4). களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இலங்கையை யரசாண்ட வேறு சிங்கள அரசர்களைப் பற்றிக் கூறுவோம். தாதுசேனன் (கி. பி. 463 - 479) பாண்டியருக்கு எதிராக இருபத்தேழு ஆண்டுகளாக கலகஞ் செய்துகொண்டிருந்த தாதுசேனன் கடைசியில் இலங்கையின் அரசனானான். ஆனால், தாதுசேனனுடைய வாழ்க்கை துன்பகரமாகவும் இரங்கத்தக்கதாகவும் இருந்தது. இவனுக்கு இரண்டு மனைவியர் இருந்தனர். இவர்களில் ஒருத்தி இவனுக்குச் சமமான குலத்தைச் சேர்ந்தவள். இவளுக்கு ஒரு அழகான பெண்மகளும் மொக்கல்லானன் என்னும் ஒரு மகனும் பிறந்தனர். தாதுசேனனுடைய இன்னொரு மனைவி இவனை விடச் சற்றுத் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவள். இவளுக்குக் கஸ்ஸபன் என்னும் ஒரு மகன் பிறந்தான். தாழ்ந்த குலத்தில் பிறந்தவனாகையினால் கஸ்ஸபனுக்கு அரசாளும் உரிமை இல்லை. தாதுசேனன் தன்னுடைய அருமை மகளைத் தன்னுடைய மருமகனுக்குத் (தங்கையின் மகனுக்கு) திருமணஞ் செய்து கொடுத்தான். கொடுத்து அவனைத் தன்னுடைய சேனாபதியாக்கிக் கொண்டான். இவனுடைய பெயர் உபதிஸ்ஸன். இவ்வாறு இருந்த போது, தன்னுடைய மருமகனும் சேனாபதியுமான உபதிஸ்ஸன் தன்னுடைய மனைவியைச் (அரசனுடைய மகளை) சவுக்கினால் துடைகளிலே அடித்துவிட்டான். இரத்தம் பீறிட்டு வெளிப்பட்டது. இதனைக் கண்ட அரசன், தன் மகளைக் கண்போல நேசித்த வனாகையினால், பெருஞ்சினங் கொண்டான். அடித்த காரணத்தை விசாரித்தான். காரணம் இல்லாமலே தன்னுடைய மகள் அடிக்கப் பட்டாள் என்று அறிந்தபோது, இதற்குக் காரணமான தன்னுடைய தங்கையை (சேனாதிபதியின் தாயை) உயிரோடு நெருப்பில் இட்டுக் கொளுத்திக் கொன்றுவிட்டான். தன்னுடைய தாய் பதைபதைத்துத் தீயில் வெந்து இறந்த கொடுமையைக் கண்ட மருமகனாகிய சேனாதிபதி அரசன் மேல் பெருஞ்சினங்கொண்டான். தன்னுடைய தாயைச் சுட்டுக் கொன்ற அரசனைப் பழிக்குப்பழி வாங்கத் தீர்மானஞ் செய்துகொண்டான். அரசனை ஆட்சியிலிருந்து விலக்கி அவனைத் துன்புறுத்திக் கொல்லத் திட்டம் இட்டான். தன்னுடைய திட்டத்துக்கு உதவியாக, கருவியாக அரசனுடைய மகனான கஸ்ஸபனைப் பயன்படுத்திக் கொண்டான். அரசு உரிமை இல்லாத கஸ்ஸபனுக்கு அரசாட்சி ஆசையை உண்டாக்கி அரசனுக்கு எதிராகக் கலகஞ் செய்து ஆட்சியைக் கைப்பற்றும் படித் தூண்டிவிட்டான். உபதிஸ்ஸனுடைய பேச்சைக் கேட்டு அரசாட்சிப் பதவியைப் பெறுவதற்கு ஆசை கொண்ட கஸ்ஸபன் நகர மக்களைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு தன்னுடைய தந்தையான தாதுசேன அரசனைப் பிடித்துச் சிறைச்சாலையின் இருட்டறையில் அடைத்துவிட்டுத் தான் ஆட்சியைக் கைப் பற்றிக் கொண்டான். அரசனைச் சார்ந்தவர்களை யெல்லாம் துன்புறுத்தி அடக்கினான். அரசாட்சிக்கு உரிமை யுள்ள வனான மொக்கல்லானனை விஷம் இட்டுக் கொல்ல முயன்றான். மொக்கல்லானன் உயிர் தப்பித் தமிழ்நாட்டுக்கு ஓடி அடைக்கலம் புகுந்தான். அவன் தமிழ்நாட்டிலிருந்து சேனையைச் சேர்த்துக்கொண்டு வந்து கஸ்ஸபன் மேல் போர் செய்து ஆட்சியைப் பெறுவதற்காகத் தமிழ்நாட்டுக்குப் போனான். போனவன் களப்பிர அரசரின் ஆதரவைப் பெற அவர்களிடம் சென்றான் போலும். சிறைச்சாலையில் தாதுசேன அரசனுக்குச் சரியாக உணவும் கிடைக்கவில்லை. தன்னுடைய மகனான மொக்கல்லானன் தமிழ்நாட்டுக்குப் போய் விட்டதையறிந்து அவன் மனக்கவலையும் துன்பமும் அடைந்தான். பழிக்குப்பழி வாங்கத் திட்டமிட்ட சேனாபதியான உபதிஸ்ஸன் தன்னுடைய திட்டத்தில் வெற்றியடைந்தான். ஆனால், சேனாபதி இதோடு நிற்கவில்லை. அரசனைச் சித்திரவதை செய்து கொல்லத் திட்டமிட்டான். அவன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள கஸ்ஸபனிடஞ் சென்று, ‘உம்முடைய தந்தை தாதுசேன மன்னன் அரண்மனையில் இரகசியமாகப் பெருஞ்செல்வத்தை வைத்திருக்கிறாரே, அது பற்றி அவர் உம்மிடம் ஒன்றும் சொல்லவில்லையா?’ என்று கேட்டான். கஸ்ஸபன் ‘ஒன்றுஞ் சொல்லவில்லை’ என்று கூறினான். அதற்குச் சோனபதி ‘அவருடைய உள்நோக்கம் உமக்குத் தெரியவில்லையா? அவர் தம்முடைய செல்வமகனான மொக்கல்லானனுக்குக் கொடுக்க அதை வைத்திருக்கிறார்’ என்று கூறினான். சேனாபதி கூறியதை உண்மை என்று நம்பிய கஸ்ஸபன், பொருளாசை கொண்டவனாகித் தன்னுடைய ஆட்களைச் சிறைச்சாலை யிலுள்ள தாதுசேனனிடம் அனுப்பி அவர் பொருள் வைத்திருக்கும் இடத்தையறிந்து வரும்படி சொன்னான். அவர்கள் சென்று கேட்டபோது அரசன் ‘இந்தக் கொடியவன் என்னைக் கொன்றுவிடுவதற்குச் செய்யும் சூழ்ச்சி இது’ என்று எண்ணி, பதில் ஒன்றும் பேசாமலிருந்ததைக் கூறினார்கள். கஸ்ஸபன் பலமுறை தன்னுடைய ஆட்களை அனுப்பிக் கேட்டான். கடைசியாக வந்து கேட்டபோது, காலவாபிவரியில் என்னை நீராட அழைத்துக் கொண்டு போனால் அங்குச் சென்று அந்த இடத்தைக் காட்டுவேன் என்று கூறினான். ஆட்கள் வந்து அரசன் கூறியதைச் சொன்னார்கள். கஸ்ஸபன், தாதுசேனனை காலவபியில் நீராட அனுமதி கொடுத்தான். தாதுசேனன் காலவபியில் நீராடின பிறகு, அரசனுடைய ஆட்களிடம் ஏரியைக் காட்டி, ‘இதுதான் நான் பொருள் வைத்துள்ள இடம்’ என்று கூறினான். தாதுசேனன் பொருள் உள்ள இடத்தைத் தெரிவிக்காமல் இருப்பதை அறிந்த கஸ்ஸபன் அரசனைக் கொன்றுவிடும்படி சேனாபதிக்குக் கட்டளையிட்டான். இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சேனாபதி, தன்னுடைய பழிவாங்கும் எண்ணம் நிறைவேறிற்று என்று மகிழ்ச்சியடைந்து அரண்மனைக் கட்டடத்தின் ஓரிடத்தில் சுவரில் உயரமாக அமைந் திருந்த மாடத்தில், தாதுசேன அரசனைக் கொண்டுபோய், அவனுடைய ஆடைகளைக் களைந்து அவனை அம்மணமாக மாடத்தில் சுவரோடு சுவராக நிறுத்திச் செங்கல்லினால் மாடத்தை மூடிக் கட்டிவிட்டான். தன்னுடைய தாயைத் தீயிட்டுக் கொன்ற தாதுசேனனை உயிரோடு சுவரில் வைத்துக் கட்டிப் பழி தீர்த்துக் கொண்டான் (சூலவம்சம் 38ஆம் பரிச்சேதம் 37 - 110). கஸ்ஸபன் I (கி. பி. 479 - 497) தன் தந்தையான தாதுசேன அரசனிடமிருந்து அரசாட்சியைக் கைப்பற்றிக்கொண்டு அவனைச் சிறையில் அடைத்துப் பிறகு கொன்றுவிட்டுக் கஸ்ஸபன் இலங்கையின் அரசனானான். இவனை முதலாம் கஸ்ஸபன் என்று கூறுவர். இவனுடைய தம்பியான மொக்கல்லானன் தமிழ்நாட்டுக்குச் சென்றிருப்பதையறிந்த இவன், எப்படியும் மொக்கல்லானன் தமிழ்ச் சேனையோடு வந்து தன்னைக் கொன்றுவிடுவான் என்று அஞ்சித் தன்னுடைய பாதுகாப்புக்காகச் சீககிரி மலைமேல் கோட்டையமைத்து அதனுள் அரண்மனை கட்டிக்கொண்டு அங்கிருந்து அரசாண்டான். (சீககிரி என்பது இப்போது சிகிரிம் என்று கூறப்படுகிறது. இந்த மலை அநுராதபுரத்திலிருந்து தென்கிழக்கே 38 கல் தூரத்திலும் தம்புல்லா என்னும் ஊரிலிருந்து வடகிழக்கே பத்துக் கல் தூரத்திலும் இருக்கிறது. கஸ்ஸபன் இந்த மலை மேல் கட்டின கோட்டைக் கொத்தளங்களும் அரண்மனைக் கட்டடமும் இன்றும் சிதைந்த நிலையில் உள்ளன.) கஸ்ஸபன் பதினெட்டு ஆண்டுகள் அரசாண்டான். உதவியை நாடித் தமிழகத்துக்குச் சென்ற மொக்கல்லானன் தமிழகத்தில் களப்பிரருடைய உதவியை நாடியிருக்க வேண்டும் என்று தோன்று கிறது. ஆனால், உடனே அவனுக்கு உதவி கிடைக்கவில்லை. பதினெட்டு ஆண்டு அவன் தமிழ்நாட்டிலே தங்கிவிட்டான். பன்னிரண்டு தமிழ நண்பர்கள் அவனுக்கு உதவியாக வந்தனர். அவர்கள் போர் செய்வதில் தேர்ந்த சேனைத் தலைவர்கள் என்று தோன்றுகிறது. மொக்கல்லானன் சேனையோடு வந்து கஸ்ஸபனோடு போர் செய்தான். போரில் கஸ்ஸபன் தோல்வியடையும் நிலை ஏற்பட்ட போது அவன் தன்னுடைய யானை மேல் இருந்தபடியே வாளால் குத்திக் கொண்டு தற்கொலை செய்துகொண்டான். மொகல்லானன் ஆட்சியைக் கைப்பற்றினான் (சூலவம்சம் 39 ஆம் பரிச்சேதம் 1 - 28) கஸ்ஸபனுடைய காலத்தை ஒருவாறு நிச்சயிக்கலாம். இவன் சீன நாட்டு அரசனுக்கு எழுதின திருமுகம் கி. பி. 572இல் போய்ச் சேர்ந்தது என்று தெரிகிறபடியால் இவன் அந்த ஆண்டில் வாழ்ந்திருக்கிறான் என்பது தெரிகிறது (J.R.A.S. Ceylon Branch, XXIV, p. 85). மொக்கல்லானன் I (கி. பி. 497 - 515) கஸ்ஸபனுக்குப் பிறகு மொக்கல்லானன் அரசாண்டான். இவன், கஸ்ஸபனால் துரத்தப்பட்டுத் தமிழ்நாட்டுக்குப் போய் அடைக்கலம் புகுந்தான் என்பதை அறிந்தோம். கஸ்ஸபனுடைய பதினெட்டாம் ஆட்சியாண்டில் மொக்கல்லானன் என்னும் வீர மன்னன் நிகந்தர்களின் செய்தியறிந்து பன்னிரண்டு வீரர்களான நண்பர்களோடு ஜம்புத்தீவி லிருந்து (தமிழ்நாட்டிலிருந்து) இங்கே (இலங்கைக்கு) வந்தான் என்று சூலவம்சம் கூறுகிறது (சூலவம்சம் 39ஆம் பரிச்சேதம் 20). நிகந்தர் என்பது இங்குக் களப்பிரரைக் குறிக்கிறது. நிகந்தர் என்றால் சமணர் அல்லது ஜைனர் என்று சூலவம்சம் கூறுகிறது. எனவே, மொக்கல்லானன் தமிழ்நாட்டிலிருந்தும் களப்பிர அரசரின் உதவி பெற்று இலங்கைக்குப் போனான் என்பது தெரிகிறது. மொக்கல்லானன் அரசனானவுடனே தன்னுடைய தந்தையான தாதுசேனனைக் கொல்வதற்குக் கஸ்ஸபனோடு உதவியாக இருந்த ஆயிரம் பேரைக் கொன்றுவிட்டான். மற்றும் அவனுக்கு உதவியாக இருந்த பலரைப் பிடித்து அவர்களுடைய காதையும் மூக்கையும் அரிந்து அவர்களை நாடுகடத்திவிட்டான். தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மேல் போர் செய்யப் படையெடுத்து வருவார்கள் என அஞ்சி இவ்வரசன் இலங்கையின் மேற்குக் கடற்கரையோரங்களில் ஆங்காங்கே பாதுகாப்புகளை அமைத்தான். மொக்கல்லானன் பதினெட்டு யாண்டு அரசாண்டான் (சூலவம்சம் 39ஆம் பரிச்சேதம் 29 - 58). குமார தாதுசேனன் (கி. பி. 515 - 524) மொக்கல்லானன் இறந்த பிறகு அவனுடைய மகனான குமார தாதுசேனன் அரசாண்டான். இவனும் காளிதாசன் என்பவனும் நெருங்கிய நண்பர்கள். காளிதாசன் மொக்கல்லானனுடைய அமைச்சனுடைய மகன். குமார தாதுசேனன் ஒன்பது ஆண்டு அரசாண்டான் (சூலவம்சம் 41 ஆம் பரிச்சேதம் 1 - 3). இவன் தன்னுடைய நண்பனான காளிதாசன் இறந்தபோது அந்தத் துயரம் பொறுக்க முடியாமல் அவனுடைய ஈமத்தீயில் விழுந்து உயிர் விட்டான் என்பர். கீத்திசேனன் (கி. பி. 524) பிறகு, குமார தாதுசேனனுடைய மகனான கீத்திசேனன் அரசனானான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் 9ஆம் மாதம் இவனுடைய தாய்மாமனான சிவன் என்பவன் இவனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றி யரசாண்டான் (சூலவம்சம் 41ஆம் பரிச்சேதம் 4). சிவன் (கி. பி. 524) தன்னுடைய மருமகனான கீத்திசேனனைக் கொன்று அரசனான சிவன் இருபத்தைந்தாம் நாளில் உபதிஸ்ஸன் என்பவனால் கொல்லப் பட்டு இறந்தான் (சூலவம்சம் 41ஆம் பரிச்சேதம் 5 - 6). உபதிஸ்ஸன் III (கி. பி. 525 - 526) சிவனைக்கொன்று இலங்கையாட்சியைக் கைப்பற்றின உபதிஸ்ஸன், மொக்கல்லானனுடைய தங்கையை மணந்தவன். கஸ்ஸபனுக்கு அரசாட்சி ஆசையை யுண்டாக்கித் தாதுசேன அரசனைச் சிறையில் அடைக்கச் செய்து, பிறகு அவ்வரசனைச் சுவரில் வைத்துக்கட்டிக் கொன்றவன். இவன் ஆட்சியைக் கைப்பற்றிய வுடன் முக்கியமானவர்களுக்கு அரசாங்க அலுவல்களைக் கொடுத்து அவர்களைத் தன்வசப்படுத்திக் கொண்டான். இவன் தன்னுடைய மகளைச் சிலாகாலன் என்பவனுக்கு மணஞ்செய்து கொடுத்தான். இவனுக்குக் கஸ்ஸபன் என்று ஒரு மகன் இருந்தான். உபதிஸ்ஸனுடைய மகளை மணஞ்செய்த சிலாகாலன் ஆட்சியில் அமர்ந்து அரசனாக இருக்க ஆசைப்பட்டுத் தன்னுடைய மாமனாரான உபதிஸ்ஸனோடு போர் செய்தான். உபதிஸ்ஸன் வயதானவனாகை யால் அவனுடைய மகனான கஸ்ஸபன் சிலாகாலனோடு போர் செய்தான். சில போர்களில் கஸ்ஸபன் வெற்றி பெற்றுச் சிலாகாலனைத் துரத்திவிட்டான். கடைசியில் சிலாகாலன் போரில் வெற்றியடைந்தான். தோல்வி யடைந்த கஸ்ஸபன் (சிலாகாலனுடைய மைத்துனன்) போர்க்களத்தில் தற்கொலை செய்துகொண்டிறந்தான். இச்செய்தியை யறிந்த வயது தளர்ந்தவனான உபதிஸ்ஸன் மனம் உடைந்து இறந்து போனான். உபதிஸ்ஸன் ஒன்றரை யாண்டு அரசாண்டான் (சூலவம்சம் 41ஆம் பரிச்சேதம் 7 - 26). சிலாகாலன் (கி. பி. 526 - 539) தன்னுடைய மாமனாரான உபதிஸ்ஸனை வென்று ஆட்சியைக் கைப்பற்றி அரசனான சிலாகாலன் பதின்மூன்று ஆண்டு இலங்கையை அரசாண்டான். இவனை அம்பாசாமணேர சிலாகாலன் என்றும் கூறுவர். இவ்வரசனுக்கு மூன்று மக்கள் இருந்தனர். அவர்களின் பெயர் மொக்கல்லானன், தாட்டாபபூதி, உபதிஸ்ஸன் என்பது. மூத்த மகனான மொக்கல்லானனுக்கு ஆதிபத என்று சிறப்புப் பெயர் சூட்டி அவனைக் கிழக்கு நாடுகளின் அதிபதியாக்கினான். இரண்டாவது மகனான தாட்டாபபூதிக்கு மலையராஜன் என்று சிறப்புப் பெயர் கொடுத்து அவனை மலைய நாட்டுக்கும் தக்கிண தேசத்துக்கும் அதிபதி யாக்கினான். கடைசி மகனான உபதிஸ்ஸனைத் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான். இவன் அரசாண்ட காலத்தில், மகாநாகன் என்னும் வழிப் பறிக் கொள்ளைக்காரன் இருந்தான். அவன் சிலாகாலனிடம் வந்து அரசாங்க அலுவலில் அமர்ந்தான். அலுவலில் அமர்ந்த மகாநாகனைச் சிலாகாலன், தென்கிழக்கேயுள்ள உரோகண நாட்டுக்கு அனுப்பி இறை (வரி) தண்டிவரும்படி நியமித்தான். அவன் சென்று இறை தண்டிவந்து கொடுத்தான். அவனுக்கு அரசன் அண்ட சேனாபதி என்னும் பெயர் கொடுத்து உரோகண நாட்டின் வரி தண்டும் அலுவலனாக அமைத்தான். உரோகண நாட்டுக்குச் சென்ற அண்டசேனாபதி மகாநாகன் அங்கேயே தங்கியிருந்து வரிப்பணத்தைத் தானே வைத்துக் கொண்டு சுதந்தரனாக இருந்தான் (சூலவம்சம் 41ஆம் பரிச்சேதம் 69 - 89, 26 - 41). தாட்டாபபூதி (கி. பி. 539 - 540) சிலாகாலன் காலமான பிறகு அவனுடைய இரண்டாவது மகனான தாட்டாபபூதி தக்கண நாட்டிலிருந்து வந்து ஆட்சியைக் கைப் பற்றிக் கொண்டான். மூத்த மகனான மொக்கல்லானன் முறைப்படி அரசுக்கு உரியவன். அவனுக்குரிய ஆட்சியை அவனுடைய தம்பியான தாட்டாபபூதி கைப்பற்றிக் கொண்டதைக் கடைசித் தம்பியான உபதிஸ்ஸன் கண்டித்தான். கண்டித்தவனைத் தாட்டாபபூதி கொன்று விட்டான். கிழக்கு நாட்டிலிருந்து மொக்கல்லானன், தனக்குரியதான ஆட்சியைத் தன்னுடைய தம்பியான தாட்டாபபூதி கைப்பற்றிக் கொண்டதையறிந்து படை யெடுத்து வந்து போர் செய்யத் தொடங்கினான். இருவர் சேனையும் போர்க்களத்தில் சந்தித்தன. அப்போது மொக்கல்லானன், தாட்டாபபூதிக்கு இவ்வாறு செய்தி அனுப்பினான்: “நமக்காகப் போர் வீரர்கள் வீணாக மடிய வேண்டாம். நாம் இருவர் மட்டும் போர் செய்வோம். போரில் வென்றவருக்கே அரசாட்சியுரியதாகும்” என்று சொல்லியதற்குத் தாட்டாபபூதியும் இசைந்தான். இருவரும் தங்கள்தங்கள் யானை மேல் அமர்ந்து போர் செய்யத் தொடங்கினார்கள். மொக்கல்லானனுடைய யானை தாட்டாப பூதியின் யானையைத் தன்னுடைய தந்தங்களினால் குத்திற்று. குத்துண்ட யானை அஞ்சிப் புறங்கொடுத்து ஓடிற்று. அப்போது தனக்குத் தோல்வி நேரிடப் போவதைஅறிந்த தாட்டாபபூதி தன்னுடைய போர்வாளை எடுத்துத் தன்னையே குத்திக்கொண்டு இறந்து போனான். தாட்டாபபூதி ஆறு திங்கள் ஆறு நாட்கள் அரசாண்டான் (சூலவம்சம் 41 ஆம் பரிச்சேதம் 42 - 53). மொக்கல்லானன் II (கி. பி. 540 - 560) தாட்டாபபூதி இறந்த பிறகு அவனுடைய அண்ணனான மொக்கல்லானன் இலங்கையை அரசாண்டான். இரண்டாம் மொக்கல்லானனாகிய இவனைச் சுல்ல மொக்கலானன் (சிறிய மொக்கல்லானன்) என்று கூறுவர். இவன் இருபது ஆண்டு அரசாண்டான் (சூலவம்சம் 54 - 63). கீர்த்தி ஸ்ரீமேகன் (கி. பி. 560 - 561) மொக்கல்லானன் இறந்த பிறகு அவனுடைய இராணி, உறவினர் களை நஞ்சு இட்டுக் கொன்றுவிட்டு அரசாட்சியைத் தன்னுடைய மகனான கீர்த்தி ஸ்ரீமேகனுக்குக் கொடுத்தாள். அவள் அரசாட்சியைத் தானே நடத்தினாள். கீர்த்தி ஸ்ரீமேகவண்ணனுக்கு முன்பு ஒரு கீர்த்தி ஸ்ரீமேகவண்ணன் இருந்தபடியால் இவனைக் குட்டகீர்த்தி ஸ்ரீமேக வண்ணன் என்று கூறுவர். இவனுடைய தாய் அரச காரியங்களில் அடிக்கடி தலையிட்டபடியால் அரசாட்சி முறையாகவும் ஒழுங்காகவும் நடைபெறவில்லை. ஆட்சி முறையில் குழப்பங்கள் நேர்ந்தன. அரசாங்கத்து அலுவலர்கள் கைக்கூலி வாங்கியபடியால் ஆட்சி ஒழுங்கீனமாக இருந்தது. வலியோர் எளியோரை அச்சுறுத்தி வருத்தினார்கள். ஆட்சியில் குழப்பமும் கலகமும் ஏற்பட்டன. கீர்த்தி ஸ்ரீமேகனுடைய பாட்டனான சிலாகால அரசனால் உரோகண நாட்டில் இறை தண்டும் அலுவலில் நியமிக்கப் பட்டிருந்த மகாநாகன் என்பவன், இராஜராட்டிரத்தில் குழப்ப மான ஆட்சி நடப்பதையறிந்து இதுவே தக்க சமயம் என்று கண்டு உரோகண நாட்டிலிருந்து படையெடுத்து வந்து கீர்த்தி ஸ்ரீமேகனோடு போர் செய்து வென்று அரசாட்சியைக் கைப்பற்றினான். கீர்த்தி ஸ்ரீமேகன் இலங்கையைப் பத்தொன்பது நாட்கள் அரசாண்டான் (சூலவம்சம் 91 - 92). களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் இருந்த அரசியல் நிலையை இதனோடு நிறுத்துகிறோம். அரசனை ஊழியர் கொன்று ஆட்சியைக் கைப்பற்றுவதும் தந்தையை மகன் கொன்றும் அரசனை இராணி கொன்றும் தமயனைத் தங்கை கொன்றும் மருகனை மாமன் கொன்றும் இவ்வா றெல்லாம் இலங்கை அரசியலில் கொலைகள் மலிந்து இருந்த காலம் அது.  களப்பிரர் காலத்து இருக்குவேள் அரசர் பாண்டி நாட்டின் வடக்கு எல்லைக்கும் சோழ நாட்டுத் தெற்கு எல்லைக்கும் இடைநடுவே கொடும்பாளூர் இருந்தது. கொடும் பாளூரைக் கொடும்பை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இப்போதைய புதுக்கோட்டை மாவட்டத்தில் அடங்கியுள்ள கொடும்பாளூர் புதுக்கோட்டை நகரத்துக்கு இருபத்தைந்து கல் தொலையில் இருக்கிறது. சங்க நூல்களில் கொடும்பாளூரைப் பற்றியும் அதனை யரசாண்ட அரசர்களைப் பற்றியும் கூறப்படவில்லை. அக்காலத்தில் கொடும்பாளூர் வட்டாரம் மிழலைக் கூற்றம் என்று பெயர் பெற்றிருந்ததாகத் தோன்றுகிறது. தமிழ்நாட்டைக் களப்பிரர்அரசாண்ட காலத்தில் கொடும் பாளூர் வட்டாரத்தை இருக்குவேள் அரசர் அரசாண்டனர். இருக்கு வேளிர், களப்பிரருக்குக் கீழடங்கி அரசாண்டனர் என்று தெரிகின்றனர். கொடும்பாளூர் மூவர் கோவில் கல்வெட்டு இருக்குவேள் பரம்பரையில் வந்த அரசர்களின் பெயர்களைக் கூறுகிறது. மூவர் கோவில் கல்வெட்டுச் சாசனம் கி.பி. 1907 ஆம் ஆண்டில் பழம்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டுபிடிக்கப் பட்டது. 1907- 08 ஆம் ஆண்டு அறிக்கையில் இந்தச் சாசனத்தைப் பற்றிய செய்தி வெளியிடப்பட்டது (யnnual சeport on நpigraphy, madras, 1907-08). இந்தச் சாசனத்தில் தொடக்கமும் இறுதியும் உடைந்து போனபடியால் இது எழுதப்பட்ட காலத்தை யறிய இயலவில்லை. இது சோழக் கிரந்த எழுத்தினால் சமஸ்கிருத மொழியில் எழுதப் பட்டுள்ளது. இந்தச் சாசனத்தை ஆராய்ந்து திரு. நீலகண்ட சாஸ்திரி 1933 ஆம் ஆண்டில் ஒரு கட்டுரை எழுதினார் (Journal of Oriental Research, Madras, 1933, pp. 1-10). பிறகு இதை இவர் தாம் எழுதிய சோழர் என்ற வரலாற்று நூலிலும் எழுதினார் (k. a. nilakanta sastri, வhe உolas, vol. I, 1935). மூவர் கோவில் சாசனத்தின் எழுத்து அமைப்பைக் கொண்டு, இது கி.பி. 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று சாஸ்திரி கருதினார். மூவர் கோவில் கல்வெட்டுச் சாசனத்தை ஆராய்ந்த ஹீராஸ் அடிகள், இச்சாசனத்தில் காணப்படுகிற வரலாற்றுச் செய்திகளைக் கொண்டு இது கி.பி. 7ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று கூறி ஒரு கட்டுரை எழுதினார் (rev. h. heras, தournal of the சoyal யsiatic ளociety, January 1934). ஹீராஸ் அடிகள் கூறியதே சரி என்று ஏற்றுக் கொள்ளப் பட்டது. அடிகளுடைய மாணவரான டாக்டர் எம். ஆரோக்கியசாமி அவர்கள் தாம் எழுதிய வெள்ளாறு வட்டாரத்தின் பழைய வரலாறு என்னும் நூலில், மூவர் கோவில் சாசனம் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று கொண்டார். இந்தச் சாசனத்தில் கூறப்படுகிற இருக்குவேள் அரசர்களில் பரதுர்க்க மர்தனன் என்பவன் வாதாபிஜி (வாதாபி நகரத்தை வென்றவன்) என்று கூறப்படுகிறான். சளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசியோடு போர் செய்து வென்று அவனுடைய வாதாபி நகரத்தைக் கைப்பற்றின முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் (மாமல்லன் காலத்தில்) இந்தப் பரதுர்க்க மர்தனன் இருந்தான் என்பதும், இவன் நரசிம்மவர்மன் சார்பாகப் புலிகேசியோடு போர் செய்து வாதாபியை வென்று ‘வாதாபிஜித்’ என்று பெயர் பெற்றான் என்பதும் தெரிகின்றன. வாதாபி நகரம் கி.பி. 642ஆம் ஆண்டில் வெல்லப்பட்டது என்பதை வரலாற்றாசிரியர் யாவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆகவே, இருக்குவேளாகிய பரதுர்க்க மர்த்தனன் கி.பி. 642இல் இருந்தவன் என்பதில் சற்றும் ஐயமில்லை. இவனுடைய காலத்தை அடிப்படையாகக் கொண்டு இவனுக்கு முன்னும் பின்னும் இருந்த இருக்குவேள் அரசர் காலங்களை ஒருவாறு அறியலாம். தலைமுறை யொன்றுக்கு 30 ஆண்டு என்று கணக்கிட்டால் கீழ்வருமாறு இவர்களின் காலம் தெரிகிறது: இருக்குவேள் அரசர் உத்தேசமான காலம் கி. பி. 1. இருக்குவேள் (பாண்டியனுடைய யானைப்படையை முறியடித்தவன்; இவனுடைய பெயர் கல்வெட்டில் மறைந்துவிட்டது) 435-465 2. பரவீரஜித்து 465-495 3. வீரதுங்கன் 495-525 4. அதிவீரன் 525-555 5. அநுபமன் (சங்ககிருத்து) 555-585 6. நிருப கேசரி 585-615 7. பரதுர்க்கமர்த்தனன் 615-645 8. சமராபிராமன் 645-675 9. பூதிவிக்கிரம கேசரி 675-705 10. பராந்தகன் 705-735 11. ஆதித்திய வர்மன்1 735-765 இதில் கூறப்படும் ஆட்சி ஆண்டுகளில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் கூடுதல் குறைதலாக இருக்கக்கூடும். இதில் கூறப்பட்ட இருக்குவேள்களில் முதல் ஐந்து பேர் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்குக் கீழடங்கியிருந்தவர் என்று தெரி கின்றனர். 6, 7, 8 எண்ணுள்ள அரசர் பல்லவ அரசர்களைச் சார்ந்து அவர்களுக்கு அடங்கியிருந்தனர். 9, 10, 11 எண்ணுள்ள அரசர், அக்காலத்தில் சிற்றரசர் நிலையில் இருந்த சோழர் குலத்தோடு உறவுகொண்டு பல்லவ அரசருக்கு எதிரிகளாக இருந்தனர். இங்கு, நம்முடைய ஆராய்ச்சிக்கு உரிய களப்பிரர் காலத்தில் கொடும்பாளூரை யாண்ட இருக்குவேள் அரசரைப் பற்றிக் கூறுவோம். முதலாமவனாகிய இருக்குவேளின் பெயர் சாசனக் கல்லில் மறைந்து போய்விட்டபடியால், அவனுடைய பெயர் தெரியவில்லை. இவன் களப்பிர அரசனுக்கு அடங்கிக் கொடும்பாளூரை அரசாண்டான். களப்பிரருக்கு அடங்கியிருந்த பாண்டியர், அடிக்கடி மேலெழுந்து களப்பிர அரசனுடன் போர் செய்து சுதந்தரம் பெற முயன்றனர் என்று தெரிகிறது. அவ்வாறு பாண்டியர், களப்பிரரோடு செய்த போர் ஒன்றில், களப்பிரர் சார்பாக இந்த இருக்குவேள் அரசன் பாண்டியனோடு போர் செய்து பாண்டியரின் யானைப்படையை வென்றான் என்று தெரிகிறது. இவனைப் பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை. இவனுக்குப் பிறகு ஆண்ட பரவீரஜித்து என்பவன் பகைவரான வீரர்களைப் போரில் வென்றவன் என்று அவனுடைய பெயரில் தெரிகிறது. அவனுக்குப் பிறகு ஆண்ட வீரதுங்கனும் அவனுக்குப் பிறகு ஆண்ட அதிவீரனும் போரில் வல்லவர்கள் என்பதை அவர் களுடைய பெயரிலிருந்து அறிகிறோம். இவர்களுக்குப் பிறகு அரசாண்டவன் இருக்குவேள் அநுபமன் என்பவன். இவனுக்குச் சங்ககிருத்து (சங்கத்தைச் செய்தவன்) என்று சிறப்புப் பெயர் இருந்தது. இதனால், இவன் சைன சங்கத்தை ஆதரித்தவன் என்று தோன்று கிறான். மலையத்துவஜன் என்னும் ஜைன முனிவர் தேனிமலைக் குகையில் (தேனூர் மலைக் குகையில்) தவஞ் செய்துகொண்டிருந்தார். கொடும்பாளூர் இருக்குவேள் அரசன் இந்த முனிவரைக் கண்டு வணங்கி இவருக்கு நிலத்தைத் தானஞ்செய்தான் என்று இங்குள்ள சாசனம் கூறுகிறது (புதுக்கோட்டைச் சாசனங்கள் எண் 9.) இந்தக் கல்வெட்டெழுத்து இந்தக் குகைக்கு எதிரில் உள்ள பாறையில் எழுதப்பட்டுள்ளது. அதன் வாசகம் இது: ஸ்வஸ்தி ஸ்ரீ மலையத் துவஜன் தேனூர் மலையில் தவஞ் செய்யக் கண்டு இருக்குவேள் வந்தித்து அவிப்புறஞ் செய்த பள்ளிச் சந்தத் நாலே கால். இவ்வறங் காத்தான் அடி நித்தஞ் சென்னி. அன. இந்தக் கல்வெட்டில் தானஞ்செய்த அரசன் பெயர் இருக்குவேள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அரசனின் சொந்தப் பெயர் எழுதப்பட வில்லை. ஆனால், இந்த இருக்குவேள் அநுபமன் என்பவன் என்று கருதப்படுகிறான். இவனுடைய சங்ககிருத்து (ஜைன சங்கத்தைச் செய்தவன், ஆதரித்தவன்) என்ற சிறப்புப் பெயர் இதை உறுதி செய்கிறது. இவனுடைய ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில் (இறுதியில்) சிம்மவிஷ்ணு என்னும் பல்லவ அரசன் காஞ்சியிலிருந்து படை யெடுத்து வந்த களப்பிர அரசனோடு போர் செய்து வென்று சோழ நாட்டைக் கைப் பற்றினான். அப்போது இந்த இருக்குவேள் (முன்பு களப்பிரரைச் சார்ந்திருந்தவன், பிறகு சிம்மவிஷ்ணுக்குக் கீழடங்கிப்) பல்லவரைச் சார்ந்து இருந்தான் என்று தோன்றுகிறான். இவனுடைய பின் சந்ததியர் பல்லவ அரசர்களைச் சார்ந்து இருந்தனர். இருக்குவேள் அரசரும் இருங்கோவேள் அரசரும் ஒருவரே என்று ஆரோக்கியசாமி தம்முடைய நூலில் கூறுகிறார் (M. Arokiaswamy, The Early History of the Vellar Basin). சங்க காலத்தில் இருந்த இருங்கோவேள் அரசருக்கும் பிற்காலத்தில் இருந்த இருக்குவேள் அரசருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. அவர்கள் வேறு; இவர்கள் வேறு. பெயர்களில் காணப்படுகின்ற ஒற்றுமை பற்றி இருவரையும் ஒருவராக ஊகிப்பது கூடாது. களப்பிரருக்குக் கீழடங்கியிருந்த வேறு சிற்றரசர்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.  களப்பிரரின் வீழ்ச்சி களப்பிரர் தமிழகத்தை ஏறாத்தாழ முன்னூறு ஆண்டுகள் அரசாண்டார்கள். அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் சைன மதமும் பௌத்த மதமும் நெடுகப் பரவி வளர்ந்து செல்வாக் கடைந்து பெரும் பான்மையோர் மதங்களாக இருந்தபடியாலும் களப்பிரரும் சைன சமயத்தவரானபடி யாலும் அவர்களுக்கு நாட்டில் ஆதரவு இருந்தது. களப்பிரர் முக்கியமாகச் சைன சமயத்தை ஆதாரித்தார்கள். சைன சமயத்துக்கு அடுத்தபடி யாகப் பௌத்த மதத்துக்குச் செல்வாக் கிருந்தது. களப்பிரரை சூலவம்சம் என்னும் சிங்கள நாட்டு நூல் நிகந்தர் (ஜைனர்) என்று கூறுகிறது. மொக்கல்லானன் என்னும் சிங்கள அரசகுமரன் தமிழ்நாட்டுக்கு வந்து களப்பிர அரசரை உதவி கேட்ட போது அவர்கள் அவனுக்குச் சேனைத் தலைவரைக் கொடுத்து உதவினார்கள். இதைக் கூறுகிற சூலவம்சம் களப்பிரர் பெயரைக் கூறாமல் நிகந்தர் (ஜைனர்) என்று கூறுவதை முன்னமே காட்டினோம். ஆகவே. களப்பிரர் நிகந்தர் என்று அழைக்கப் பட்டனர் என்பது தெரிகிறது. களப்பிரருக்குப் பெரும்பான்மை மதமான ஜைன மதத்தின் ஆதரவு இருந்த போதிலும். நாட்டில் அரசியல் ஆதரவு இல்லை யென்றே தோன்றுகிறது. சேர, சோழ, பாண்டியர் களப்பிரரை வீழ்த்து வதற்குச் சமயம் பார்த்திருந்தார்கள். தொண்டை நாட்டிலிருந்த பல்லவ அரசர் களப்பிரரை வென்று அவர்களுடைய ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு நேரத்தைப் பார்த்திருந்தனர். களப்பிரருக்குக் கீழடங்கியிருந்த பாண்டியர் தாங்கள் சுதந்திரம் பெறுவதற்குப் பெரு முயற்சி செய்ததாகத் தெரிகிறது. களப்பிரர் ஆட்சிக் காலத்திலேயே, பாண்டிய அரசர் குலத்தைச் சேர்ந்த ஒரு பாண்டியன் இலங்கைக்குப் படையெடுத்துப் போய் சிங்கள அரசனை வென்று இலங்கையை அரசாண்டான். அவனுடைய பிள்ளைகளும் பேரர்களும் அவனுக்குப் பிறகு அரசாண்டதை முன்னமே அறிந்தோம். கி.பி. 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டியர் களப்பிரரை வென்று தங்களுடைய பாண்டிய இராச்சியத்தை மீட்டுக்கொண்டார்கள். பாண்டியன் கடுங்கோன் பாண்டி நாட்டு ஆட்சியைக் களப்பிரரிடமிருந்து மீட்டுக்கொண்டான் என்று பாண்டியர் செப்பேடுகள் கூறுகின்றன. “அளவரிய ஆதிராஜரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னுங் கலி அரைசன் கைக்கொண்டதனை இறக்கிய பின் படுகடன் முளைத்த பரிதி போல பாண்ட்யாதி ராஜன் வெளிற்பட்டு விடுகதி ரவிரொளி விலக வீற்றிருந்து வேலை சூழ்ந்தவியலிடத்துக் கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச் செங்கோலோச்சி வெண்குடை நீழற் றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப் பிறர்பாலுரிமை திறவிதி நீக்கித் தன்பாலுரிமை நன்கனமமைத்த மானம் பேர்த்த தானைவேந்தன் னொடுங்கா மன்னரொளி நகரழித்த கடுங்கோ னென்னுங் கதிர்வேற்றென்னான்” என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது (வேள்விக்குடிச் செப்பேடு, வரி 39-46). “கற்றறிந்தோர் திறல் பரவக் களப்பாழரைக் களைகட்ட மற்றிரண்டோள் மாக்கடுங்கோன் மானம் பேர்த்தருளிய கோன்” என்று தளவாய்ப்புரச் செப்பேடு கூறுகிறது (தளவாய்புரச் செப்பேடு, வரி 131-132). பாண்டியன் கடுங்கோன், ‘மானம் பேர்த்த தானை வேந்தன்’ என்றும் ‘ மானம் பேர்த்தருளிய கோன்’ என்றும் செப்பேடுகளின் தமிழ் வாசகம் கூறுவதைப் போலவே, சமஸ்கிருதச் சுலோகமும் அவனை மானம் பேர்த்த கடுங்கோன் என்று கூறுகிறது (தளவாய்புரச் செப்பேடு, சுலோகம் 23, வரி 39-40) எனவே ‘மானம் பேர்த்த கடுங்கோன்’ என்பது அவனுடைய சிறப்புப் பெயர் என்று தோன்றுகிறது. பாண்டியன் கடுங்கோன் பாண்டிய நாட்டைக் களப்பிரரிட மிருந்து மீட்டுக்கொண்டபோது, ஏறக்குறைய அதே காலத்தில் தொண்டை நாட்டு அரசனான பல்லவ சிம்மவிஷ்ணு சோழ நாட்டைக் களப்பிரரிடமிருந்து கைப்பற்றிக்கொண்டான். இந்த வரலாற்றைப் பள்ளன்கோவில் செப்பேடும் வேலூர்ப் பாளையம் செப்பேடும் கூறுகின்றன. “சிம்மவர்மனுடைய மகன் சிம்மவிஷ்ணு. அந்தச் சிம்ம விஷ்ணு, மற்றொரு சிம்மவிஷ்ணு என்னும் அரசனை வென்றான். அவன், பலத்தில் வெற்றி வீரனாகிய அர்ச்சுனனைப் போன்றவன். வில் வித்தையிலும் வீரன். போரிலே வெற்றி கொள்வதில் சமர்த்தன்” என்றும், “உண்மை ‘ தியாகம்’ வணக்கம் போன்ற பரிசுத்தமான நற்குணங்கள் யாரிடத்தில் உள்ளனவோ, வீர குணங்கள் யாரை அடைக்கலமாகக் கொண்டுள்ளனவோ, (அந்தச் சிம்மவிஷ்ணு) கவேரன் மகளான காவிரி ஆற்றை மாலையாகவும் செழுமை யான நெல் வயல், கரும்பு வயல்களை ஆடையாகவும் கமுகத் தோட்டம், வாழைத் தோட்டங்களை ஒட்டியாணமாகவும் அணிந்த சோழ நாட்டைக் கைப்பற்றினான்” என்றும் பள்ளன்கோயில் செப்பேடு கூறுகிறது (பள்ளன்கோயில் செப்பேடு, சுலோகம் 4, 5.). “புகழ்வாய்ந்த திறலையுடையவனும் பகைவர்களின் ஆற்றலை யடக்கும் பலமுள்ளவனுமான சிம்மவர்மனுக்கும் வெற்றி வீரனான சிம்மவிஷ்ணு மகனாகப் பிறந்தான். அவன், கமுகத் தோட்டங்களும் நெல் வயல்களும் நிறைந்துள்ள கவேரன் மகளான காவிரி ஆற்றினால் அலங்கரிக்கப்பட்ட சோழ நாட் டைக் கைப்பற்றினான்” என்று வேலூர்ப் பாளையச் செப்பேடு கூறுகிறது (வேலூர்பாளையச் செப்பேடு, சுலோகம் 10). இவ்வாறு பல்லவ அரசருடைய செப்பேடுகள் கூறுகின்றன. இவற்றி லிருந்து சிம்மவிஷ்ணு என்னும் பல்லவ அரசனுடைய மகனான சிம்மவிஷ்ணு, சோழ நாட்டையாண்ட சிம்மவிஷ்ணு என்னும் அரசனை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்றும் அறிகிறோம். சிம்மவிஷ்ணு பல்லவன் சோழ நாட்டைச் சோழரிட மிருந்து வென்றுகொண்டானா, களப்பிரரிடமிருந்து வென்று கொண்டானா என்று செப்பேடுகள் கூறவில்லை. களப்பிரரிடமிருந்து சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுவது முற்றிலும் உண்மை. அக்காலத்தில் சோழநாட்டைச் சோழ மன்னன் ஆளவில்லை. சங்க காலத்தின் இறுதியில் களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டபோது சோழர் அவருக்குக் கீழடங்கியிருந்தார்கள். ஆகவே, சிம்மவிஷ்ணு களப்பிரரிட மிருந்து தான் சோழ நாட்டை வென்றான் என்பது வெளிப்படை. களப்பிரருக்குக் கீழடங்கியிருந்த சோழர், பல்லவர் சோழ நாட்டை வென்ற பிறகு பல்லவருக்குக் கீழடங்கினார்கள். பாண்டியன் கடுங்கோனும் பல்லவச் சிம்மவிஷ்ணுவும் களப்பிரரை வென்று வீழ்த்தியது ஏறத்தாழ கி.பி. 575 என்று கருதப் படுகிறது. கி. பி 575இல் அல்லது அதற்குச் சற்று முன் பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை வென்றிருக்கவேண்டும் என்று திரு. சதாசிவ பண்டாரத்தார் கூறுகிறார் (சதாசிவ பண்டாரத்தார், பாண்டியர் வரலாறு. பக்கம் 34). கி.பி. 590 இல் களப்பிரர் வெல்லப்பட்டனர் என்று திரு. நீலகண்ட சாஸ்திரி கருதுகிறார் (K. A. N. Sastry, The Pandyan Kingdom). கி.பி. 575 இல் களப்பிரர் வீழ்ச்சியடைந்தனர் என்று கொள்வதே சரி என்று தோன்றுகிறது. கி.பி. 450க்கும் 550க்கும் இடையில் களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் இருந்தது என்று திரு. பி.தி. சீனிவாச அய்யங்கார் கூறுகிறார். பிறகு கி.பி. 6ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியர் களப்பிரரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள் என்று கூறுகிறார் (P.T. Srinivasa Iyengar, History of the Tamils, 1929,p.534). அதாவது, கி.பி. 450 முதல் 600 வரையில் 150 ஆண்டு களப்பிரர் ஆட்சி இருந்ததென்று கூறுகிறார். இவர் கூற்று தவறு என்று தோன்றுகிறது. ஏறத்தாழ கி.பி. 250 முதல் 575 வரையில் தமிழ் நாட்டைக் களப்பிரர் ஆண்டனர் என்று கருதுவது தவறாகாது. பாண்டி நாட்டைக் கடுங்கோனும் சோழ நாட்டைச் சிம்ம விஷ்ணுவும் வென்றுகொண்டபோது சேர நாட்டைச் சேர அரசன் களப்பிரரிடமிருந்து வென்றுகொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், அந்தச் சேரனது பெயர் தெரியவில்லை. களப்பிரர் தங்கள் இராச்சியத்தைச் சேர, பல்லவ, பாண்டியர்களுக்கு இழந்துவிட்ட பிறகு அவர்கள் பேரரசர் நிலையிலிருந்து வீழ்ச்சியடைந்து சிற்றரசர் நிலையை அடைந்தனர். அவர்கள் சோழ நாட்டிலே தஞ்சாவூர், செந்தலை முதலான ஊர்களில் தங்கிச் சிற்றரசர்களாகப் பல்லவ அரசருக்கு அடங்கிவிட்டனர். மாமல்லன் (முதலாம் நரசிம்மவர்மன்), இரண்டாம் நந்தி வர்மன் ஆகிய பல்லவ அரசர் களப்பிரரை வென்றதாகக் கூறிக்கொள்கின்றனர் (கூரம் செப்பேடு, வரி 15; புல்லூர்ச் செப்பேடு; பட்டத்தால் மங்கலம் செப்பேடு, சுலோகம் 9). சளுக்கிய அரசர்களான முதலாம் விக்கிர மாதித்தன், வியாதித்தன் முதலான அரசர்கள் களப்பிரரை வென்றதாகக் கூறிக்கொள்கின்றனர். இவர்கள் வென்ற களப்பிரர் பேரரசராகத் தமிழ் நாட்டை ஆண்ட களப்பிரர் அல்லர், அரசை இழந்து சிற்றரசர் நிலையையடைந்த பிற்காலத்துக் களப்பிரர் ஆவார். பிற்காலத்தில் களப்பிரர் முத்தரையர் என்று பெயர் பெற்றிருந்தனர் என்று அறிகிறோம். முத்தரையர் என்னும் பெயர் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூன்று தரைகளை அரசாண்டவர் என்னும் பொருளுள்ள சொல்லாக இருக்கலாம். முத்தரையர், செந்தலை, தஞ்சாவூர் நாடுகளை யரசாண்டார்கள். முத்தரையர் களப்பிரர் அல்லர் என்று திரு. சதாசிவ பண்டாரத்தார் கருதுகிறார். “அன்றியும் தமிழ்நாட்டுக் குறுநில மன்னர் குடியினராகிய முத்தரையர் என்போர் களப்பிரரே யாவர் என்று சிலர் கூறுவது சிறிதும் ஏற்புடைத்தன்று” (பண்டாரத்தார், பாண்டியர் வரலாறு. பக்கம் 32) செந்தலைத் தூண் சாசனங்களிலிருந்து முத்தரையரும் களப்பிரரும் ஒருவரே என்று அறிகிறோம். திருக்காட்டுப் பள்ளிக்கு (தஞ்சை மாவட்டம்) இரண்டு கல் தொலைவில் செந்தலைக் கிராமத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மண்டபத் தூண்களில் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் காணப் படுகின்றன. இவை செந்தலைத் தூண் கல்வெட்டுகள் என்று கூறப்படுகின்றன. இந்தச் சாசனங்களைத் திரு. டி. ஏ. கோபிநாதராவ் செந்தமிழ் ஆறாம் தொகுதியில் வெளி யிட்டுள்ளனர். திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இந்தத் தமிழ்ச் சாசனங்களை ஆங்கில எழுத்தில் எபிகிறாபியா இந்திகா என்னும் இதழில் வெளியிட்டுள்ளார். (Epigraphia Indica, Vol. XIII, ‘Sendalai Pillar Inscriptions’, pp.134-149). இந்தச் சாசனத்தில், பெரும்பிடுகு முத்தரைய னாயின குவாவன் மாறன் அவன் மானிளங் கோவதியரையனாயின மாறன் பரமேஸ்வரன் அவன் மகன் பெரும்பிடுகு முத்தரைய னாயின சுவரன் மாறன் அவன் எடுப்பித்த படாரிகோயில் அவன் எறிந்த ஊர்களும் அவன் போர்களும் அவனைப் பாடினார் பேர்களுமித் தூண்கண்மே லெழுதின இவை என்று காணப் படுகிறது. நான்கு தூண்களிலும் பெரும்பிடுகு முத்தரையனுடைய சிறப்புப் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. அப்பெயர்களில் ‘ஸ்ரீகள்வர கள்வன்’ என்று நான்கு தூண்களிலும் எழுதப் பட்டுள்ளது. கள்வர கள்வன் என்பதைக் களவர கள்வன் என்றும் படிக்கலாம். இதிலிருந்து முத்தரையரும் களவர கள்வரும் (களப்பிரரும்) ஒருவரே என்பது தெரிகிறது. முத்தரையரை நாலடியார் கூறுகிறது (நாலடியார், தாளாண்மை 10, மானம் 6). விடேல் விடுகு முத்தரையன். சத்துருபயங்கர முத்தரையன் என்னும் முத்தரையர் பெயர்கள் சாசனங்களில் காணப் படுகின்றன. களப்பிரரின் பின் சந்ததியார் களப்பாளர் என்னும் பெயர் பெற்றிருந்தனர். சிவஞானபோதத்தை எழுதிய மெய்கண்ட தேவருடைய தந்தையாரின் பெயர் அச்சுத களப்பாளர் என்பதாகும். நெற்குன்றம் கிழான் என்னும் ஒரு களப்பாளச் சிற்றரசன் ஒரு சாசனத்தில் கூறப்படுகிறான் (செந்தமிழ், தொகுதி 12, பக்கம், 268),  களப்பிரர் ஆட்சியில் சமயங்கள் தமிழ் நாட்டிலே இருந்த பழமையான மதங்கள் சைவமும் வைணவமும் ஆகும். கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலே சந்திர குப்த மௌரியன் காலத்திலும் அவனுடைய பேரனான அசோகச் சக்கரவர்த்தி காலத்திலும் ஜைன மதமும் பௌத்த மதமும் தமிழ் நாட்டுக்கு வந்தன. வந்த மதங்கள் பையப்பையத் தமிழகத்தில் பரவிக்கொண்டிருந்தன. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் ஜைனமும் பௌத்தமும் மேன்மேலும் சிறப்புப் பெற்றுப் பெருகி வளர்ந்தன. பொதுவாகக் களப்பிர அரசர்கள் ஜைன, பௌத்த மதங் களுக்குச் சார்பாக இருந்தார்கள். களப்பிர அரசர் அச்சுதப் பரம்பரையினர் என்று கூறப்படுகிறபடியால் அவர்கள் வைணவ சமயத்தார் என்று கருத வேண்டியிருக்கிறது. கூற்றுவ நாயனார் போன்ற ஒன்றிரண்டு களப்பிர அரசர் சைவ சமயத்தவராக இருந்தனர் என்பதும் உண்மையே. ஆனால், பொதுவாகக் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் ஜைன, பௌத்த மதங்கள் சிறப்படைந்திருந்தன. இந்த மதங்கள் சிறப்படைந்ததற்குக் காரணம் இந்த மதங்களின் பிரச்சாரம் என்று தோன்றுகிறது. சைவ சமயம் சிறப்படையாமல் மங்கிக் கிடந்தது. வைதிக மதமும் மங்கியிருந்தது. களப்பிரரும் பிராமணரும் களப்பிரர் பிராமணருக்குப் பகைவர் என்று சிலர் எழுதியுள்ளனர், பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி, கொற்கைகிழான் நற்கொற்றன் என்னும் பிராமணனுக்கு முற்காலத்தில் வேள்விக்குடி என்னும் ஊரைத் தானங் கொடுத்ததை அவனுடைய குடும்பத்தார் பரம்பரையாக அனுபவித்து வந்ததைக் களப்பிரர் தங்கள் ஆட்சிக் காலத்தில் அந்த ஊரைப் பிடுங்கிகொண்டனர் என்னும் சாசனச் சான்றை ஆதாரமாகக் காட்டுகின்றனர். வேள்விக்குடிச் செப்பேடு இந்தச் செய்தியைக் கூறுகிறது. “ கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர் குழாந் தவிர்த்த பல்யானை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்ட்யாதிராசன் நாகமா மலர்ச் சோலை நளிர்சினை மிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச் சொற்கண்ணாளர் சொலப்பட்ட ச்ருதி மார்க்கம் பிழையாத கொற்கை கிழானற் கொற்றன் கொண்ட வேள்வி முற்றுவிக்க கேள்வி அந்தணாளர் முன்பு கேட்க என்றெடுத்துரைத்து வேள்விசாலை முன்பு நின்று வேள்விக்குடி என்றப் பதியைச் சீரோடு திருவளரச் செய்தார். வேந்தனப் பொழுதேய் நீரோடட்டிக் கொடுத்தமையால் நீடுபுக்தி துய்த்த பின் னளவரிய ஆதிராஜரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னும் கலியரைசன் கைக்கொண்டதனை இறக்கிய பின்.........” (பாண்டியர் செப்பேடுகள் பத்து, வேள்விக்குடிச் செப்பேடு 31-40). “அங்கொருநாண் மாடமாமதிற் கூடற்பாடு நின்றவர் ஆக்ரோதிக்கக் கொற்றனேய் மற்றவரைத் தெற்றென நன்கு கூவி ‘என்னேய் நுங்குறை’ என்று முன்னாகப் பணித்தருள ‘மேனாணின் குரவராற் பான்முறையின் வழுவாமை மாகந்தோய் மலர்ச் சோலைப் பாகனூர்க் கூற்றத்துப் படுவது, ஆள்வ தானை அடல் வேந்தாய்! வேள்விக்குடி என்னும் பியர் உடையது ஒல்காத வேற்றானை ஓடோதவேலி உடன் காத்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பரமேச்வரனால் வேள்விக்குடி என்னப்பட்டது. கேள்வியாற்றரப்பட்ட தனை துளக்கமில்லாக் கடற்றானை யாய் களப்ர ராலிறக்கப்பட்டது என்று நின்றவன் விஞ்ஞாப்யஞ் செய்ய.....” (வேள்விக்குடிச் செப்பேடு, வரி 104-112) களப்பிரர், வேள்விக்குடி தானத்தை இறக்கினார்கள் என்று செப்பேடு கூறுவது உண்மைதான். ஆனால், அதன் காரணம் பார்ப்பனர் மாட்டுப் பகையன்று. அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. களப்பிரர் பிராமணருக்குப் பகைவர் அல்லர். களப்பிரர் பிராமணருக்குத் தானங்கொடுத்து ஆதரித்ததை ‘அகலிடமும் அமருலகும்’ எனத் தொடங்குகிற செய்யுள் (இணைப்பு 1 காண்க) கூறுகிறது. பொருகடல் வளாகம் ஒரு குடை நிழற்றி இருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து மனமகிழ்ந்து அருள்புரி பெரும் அச்சுதர் கோவே என்று அந்தச் செய்யுள் கூறுவது காண்க. இதனால் களப்பிரர் பார்ப்பனரை வெறுத்தவர் அல்லர் என்பது தெரிகிறது. ஜைன சமய வளர்ச்சி ஜைன, பௌத்த மதங்கள் செழித்து வளர்ந்ததையும் சைவ வைதிக மதங்கள் ஒடுங்கிப் போவதையும் சேக்கிழார் பெரிய புராணத்தில் தெளிவாகக் கூறுகிறார். மேதினிமேல் சமண்சையர் சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே ஆதி அரு மறைவழக்கம் அருகி அரன் அடியார் பால் பூதிசாதன விளக்கம் போற்றல் பெறாதொழியக் கண்டு ஏதமில் சீர் சிவபாத விருதயர்தாம் இடருழந்தார் (திருஞான சம்பந்த நாயனார் புராணம் 18) (சமண்-சமணர், சாக்கியர்- பௌத்தர், அருவறை வழக்கம்-வேத வேள்வி செய்யும் வைதிக மதம், அரன்-சிவன், பூதிசாதனம்-திருநீற்றுச் சாதனம்) களப்பிரர் காலத்தில் வளர்ந்து சிறப்படைந்திருந்த ஜைன, பௌத்த மதங்கள் அவர்களின் ஆட்சிக்குக் காலத்துக்குப் பிறகும் சிறப்படைந்திருந்ததைச் சேக்கிழார் கூறுகிறார். மெய்வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்குக் கைவகை முறைமைத் தன்மை கழியமுன் கலங்குங்காலை (திருஞானசம்பந்த நாயனார் புராணம் 599) என்றும் பூழியர் தமிழ்நாட்டுள்ள பொருவில் சீர்ப்பதிகள்- எல்லாம் பாழியும் அருகர்மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச் சூழிருட் குழுக்கள் போலத் தொடை மயிற்பீலி யோடு மூழிநீர் கையிற்பற்றி அமணரே யாகி மொய்ப்ப (திருஞான சம்பந்த நாயனார் புராணம் 601) (பூழியார் தமிழ்நாடு-பாண்டிநாடு; பாழி-குகை; அருகா- ஜைனர்) என்றும் பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச் செறியு முக்குடையுமாகித் திரிபவர் எங்கும் ஆகி அறியுமச் சமயநூலின் அளவினில் அடங்கிச் சைவ நெறியினில் சித்தஞ் செல்லா நிலைமையில் நிகழுங்காலை (திருஞானசம்பந்த நாயனார் புராணம் 602) என்றும் சேக்கிழார் கூறுகிறார். இது களப்பிரர் வீழ்ச்சிக் காலத்துக்குப் பின் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சமயங்கள் இருந்த நிலை. இந்த நிலை களப்பிரர் காலத்திலிருந்து தொடர்ந்து இருந்தது. மதுரையை யாண்ட களப்பிரர் அரசன் ஒருவன் சிவன் கோவில் களில் வழிபாடு செம்மையாக நடக்காதபடி தடை செய்தான். சிவன் கோவிலில் சந்தனக் காப்பு வழிபாடு நடக்காத படி தடைசெய்தான் (மூர்த்தி நாயனார் புராணம் 17). அவன் சடையன் (சிவன்) அடியாரை வன்மை செய்தான். மலைக்குகைகளிலே சமண (ஜைன) சமயத்து முனிவர்கள் தங்கித் தவஞ்செய்தார்கள். அவர்கள் பாண்டி நாட்டிலே எட்டுக் குன்று களில் இருந்தனர். அந்த மலைகளை ‘எண்பெருங் குன்றம்’ என்றும், அங்கிருந்து தவஞ்செய்தவர்களை ‘எண்பெருங் குன்றத்து எண்ணா யிரவர்’ என்றும் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகிறார் (திருஞான சம்பந்த நாயனார் புராணம் 631,855). ஆனைமாமலை ஆதியாய இடங் களில்’ ஜைன முனிவர் இருந்ததைத் திருஞானசம்பந்தர் கூறுகிறார் (திருவாலவாயப் பதிகம்). ‘எண்பெருங் குன்றத்து எண்ணாயிரம் சமணர்’ என்று கூறுவதன் பொருள் மலை யொன்றுக்கு ஆயிரம் பேராக எட்டு மலைகளில் எட்டாயிரம் சமணர் என்று கருதக்கூடாது. ஆயிரம் என்பது இங்குப் பெருந்தொகையைக் குறிக்கிறது. ஆனைமலை, அழகர்மலை, திருப்பரங்குன்றம், சமணர் மலை, கழுகுமலை, சித்தன்னவாசல், கொங்கர் புளியங்குளம், கீழைவளவு, முத்துப்பட்டி, நாகமலை (விக்கிரம மங்கலம்), சித்தர்மலை, விருச்சியூர், மருகால்தலை முதலான மலைக்குன்று களில் ஜைனத் துறவிகள் தங்கித் தவஞ்செய்ததற்கு அடையாள மாக இன்றும் அங்கெல்லாம் ஜைனத் தீர்த்தங்கரர்களின் திருமேனிகளும் வட்டெழுத்துச் சாசனங் களும் காணப் படுகின்றன. களப்பிரர் வருவதற்கு முன்னேயே இந்தக் குகைகளில் ஜைன முனிவர் இருந்து தவஞ்செய்தனர். சில குகைகளில் பௌத்தப் பிக்குகளும் தங்கித் தவஞ்செய்தார்கள். களப்பிரர் ஆட்சிக் காலத்திலே ,பல்லவ அரசர் ஆட்சி செய்த தொண்டை நாட்டிலும் ஜைன மதம் சிறப்பாக இருந்தது. குணபரன் என்றும் குணதரன் என்றும் சிறப்புப் பெயர் படைத்த மகேந்திர வர்மனும் ஜைன சமயத்தவனாக இருந்தான் என்று அறிகிறோம். தொண்டை நாட்டிலே பாடலிநகரத்தில் (திருப்பாதிரிப்புலியூரில்) அந்தக் காலத்தில் பேர் போன திகம்பர ஜைன மடம் இருந்தது. அந்த ஜைன மடத்தில் சிம்ம சூரி என்னும் ஜைனப் பெரியார் இருந்து லோகவிபாகம் என்னும் பெயருள்ள ஜைன மத நூலைச் சமஸ்கிருத பாஷையில் மொழிபெயர்த்தார் என்று அறிகிறோம். பாணராஷ்டிரத்தில் (தொண்டை நாட்டில்) பாடலி நகரத்தில் இருந்தபோது அவர் சகர ஆண்டு 380இல் (கி.பி.458இல்) சிம்ம வர்மன் என்னும் அரசனுடைய 22ஆம் ஆட்சி யாண்டில் இந்த நூலை அவர் பெயர்த்தெழுதினார் (Mysore Archaeological Report for the year 1909-10). இந்த ஜைன மடத்திலே கி.பி. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மருள்நீக்கியhர் என்பவர் (பிற்காலத்தில் திருநாவுக்கரசர்) தருமசேனர் என்னும் பெயர்பெற்று மடத்தலைவராக இருந்தார் (திருநாவுக்கரசு நாயனார் புராணம் 38,39,40). தேவசேனர் என்னும் ஜைன சமய ஆசாரியர், விக்கிரம சம்வத்சரம் 909இல் (கி.பி. 853இல்) திகம்பரதர்சனம் என்னும் நூலை எழுதினார். அந்த நூலில் அவர், பாண்டி நாட்டில் வச்சிரநந்தி ஆசாரியர் திரமிள (திராவிட- தமிழ்) சங்கத்தை நிறுவினதாக எழுதியுள்ளார். பூஜ்ஜிய பாதர் என்னும் தேவநந்தி ஆசாரியரின் மாணாக்கர்களில் வச்சிரநந்தி ஆசாரியாரும் ஒருவர். வச்சிரநந்தி விக்கிரம ஆண்டு 525இல் (கி.பி. 470இல்) தக்கிண மதுரையில் (பாண்டி நாட்டு மதுரையில்) திரமிள சங்கத்தை நிறுவினார். இந்தக் காலம் மதுரையில் களப்பிர அரசர் ஆட்சிசெய்த காலம். களப்பிரர் ஜைன மதத்தை ஆதரித்த வராகையால் அவர்கள் காலத்தில் வச்சிரநந்தி திராவிட சங்கத்தை (ஜைன முனிவர்களின் திராவிட சங்கத்தை) நிறுவினார். ஏற்கனவே பாண்டி நாட்டில் வேர் ஊன்றி நிலைத்திருந்த சமண சமயம், ஜைனத் துறவிகளைக் கொண்ட திராவிட சங்கத்தை வச்சிரநந்தி மதுரையில் நிறுவினபோது, மேன்மேலும் தழைத்து வளர்வதற்குக் காரணமாக இருந்தது. சமண சமயத்தை வளர்ப்பதற்காக வச்சிரநந்தி அமைத்த திரமிள சங்கத்தையும் சங்க காலத்தில் பாண்டியர் தமிழ் மொழியை வளர்க்க அமைத்த தமிழ்ச் சங்கத்தையும் ஒன்று என்று கருதுவது தவறு. இந்த இரண்டு சங்கங்களும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு காரணத்துக்காக அமைக்கப்பட்ட சங்கங்கள். இரண்டையும் ஒன்றாக இணைத்துக் கூறுவது வரலாறு அறியாதவரின் தவறான கூற்றாகும் (இணைப்பு 2 காண்க). பௌத்த சமய வளர்ச்சி பௌத்த மதம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகச் சக்கரவர்த்தியின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்துக்கு வந்தது என்று கூறினோம் (மயிலை சீனிவேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்) பௌத்தப் பிக்குகள் நாடெங்கும் பிரசாரஞ் செய்து பௌத்த மதத்தை வளர்த்தார்கள். ஆகவே, பௌத்த மதம் பையப்பைய வளர்ந்து தமிழ் நாட்டில் சிறப்படைந்து, களப்பிரர் ஆட்சிக்காலத்தில் பௌத்தம் தமிழ் நாட்டில் மேலும் பரவி வளர்ந்தது. தமிழகத்துக்குப் பக்கத்தில் உள்ள இலங்கையிலும் பௌத்த மதம் பரவியிருந்தபடியால் அதன் காரணமாகவும் பௌத்தம் வலிவு பெற்றிருந்தது. திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தங்களுடைய தேவாரப் பாடல்களில் பிண்டியர் போதியரையும் சாக்கியர் சமணரையும் கூறுகிறார்கள் (பிண்டியர்-சமணர், போதியர்- பௌத்தர், சாக்கியர்-பௌத்தர், சமணர்-ஜைனர்). தேவார காலத்துக்கு முன் (கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முன்பு) களப்பிரர் காலத்தில் சமண சமயத்தைப் போலவே பௌத்த மதமும் செழித்திருந்தது. களப்பிரர் காலத்தில் இருந்த பௌத்தர்களின் ஊர்கள் சில தெரிகின்றன. காவிரிப் பூம்பட்டினம், உறையூர் (உரகபுரம்), பூதமங்கலம், சங்கமங்கை, நாகைப் பட்டினம், மயூர பட்டணம், மதுரை, பாண்டி நாட்டுத் தஞ்சை, காஞ்சிபுரம் முதலான ஊர்கள் பௌத்த மதம் வேரூன்றியிருந்த ஊர்களாகும். சாக்கிய நாயனார் திருத்தொண்டர் புராணத்தில் (பெரியபுராணத்தில்) சாக்கிய நாயனார் புராணமும் ஒன்று. சாக்கிய நாயனார் பௌத்த மதத்தவர் (சாக்கியம்-பௌத்தம்). இவர் பழைய சிவனடியார்களில் ஒருவர். பௌத்தராக இருந்துகொண்டே சிவனை வழிபட்டவர். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த திருநாவுக்கரசருக்குச் சில நூற்றாண்டு களுக்கு முன் இருந்தவர். சாக்கிய நாயனார், தொண்டை நாட்டில் சங்கமங்கை என்னும் ஊரில் பிறந்தார். பிறகு காஞ்சிபுரத்துக்குப் போய் அங்கு அக்காலத்தில் பேர்போன பௌத்த ஆசிரியர்களிடம் சென்று சமயக்கல்வி பயின்றார். வயது வந்த பிறகு துறவு பூண்ட இவர் ஆடையணிந்து பௌத்தப் பிக்கு ஆனார் (சாக்கியநாயனார் புராணம் 2,3,4). சில காலஞ்சென்ற பிறகு சைவ சமயத்தை மேற்கொண்டார். சிவலிங்க வழிபாடலைச் செய்ய எண்ணினார். ஆனால், அக்காலத்தில் பௌத்த மதம் பலமாக இருந்தபடியால், வெளிப்படையாகப் பௌத்த மதத்தை விட்டுச் சைவ சமயத்திற்கு வர இயலாமற்போயிற்று. சிவலிங்கப் பூசை செய்த பிறகு உணவு கொள்ள வேண்டும் என்று அவர் உறுதிகொண்டார். இவர் அணிந்த பௌத்தத் தோற்றத்தை மாற்றாமலே ஒரு பொட்டலில் இருந்த சிவலிங்கத்தைச் சிறு கல்லால் எறிந்து, அக்கல்லை மலர் போலப் பாவித்துப் பூசை செய்தார். இவ்வாறு நாள்தோறும் தவறாமல் செய்து வந்தார். இச்செயலைக் கண்ட பௌத்தர் சிவலிங்கத்தைக் கல்லால் எறிகிறார் என்று எண்ணி மகிழ்ந்தனர். இதனால், அக்காலத்தில் பௌத்த மதம் ஆதிக்கம் பெற்றிருந்தது என்பதும், சைவ சமயம் எளிய நிலையில் இருந்த தென்பதும் தெரிகின்றன. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் பேர்போன பௌத்தர்கள் இருந்தார்கள். அவர்களுடைய முழுவரலாறு தெரிய வில்லை. அங்குமிங்குமாகச் சில பௌத்தப் பெரியார் களுடைய வரலாறுகள் தெரிகின்றன. சங்கமித்திரர் இவர் சோழ நாட்டில் இருந்த தமிழ்ப் பௌத்தர்.கி.பி 4ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் இருந்தவர். மகாயான பௌத்த மதத்தைச் சேர்ந்த இவர் இலங்கைக்குச் சென்று தம்முடைய மகாயான பௌத்தக் கொள்கையை அங்குப் பிரசாரஞ் செய்தார். இவர் காலத்தில் இலங்கையில் கோதாபயன் (மேகவண்ணாபயன்) என்னும் அரசன் (கி.பி.302-315) அரசாண்டிருந்தான். அக்காலத்தில் இலங்கையில் தேரவாதப் பௌத்தம் (ஈனயானம்) நெடுங்காலமாக இருந்து வந்தது. அப்போது அநுராதபுரத்தில் அபயகிரி விகாரையில் இருந்த அறுபது பௌத்தப் பிக்குகள் வைதுல்ய மதத்தை (மகாயான பௌத்தத்தை) மேற்கொண்டனர். அது கண்ட மகாவிகாரையில் இருந்த தேரவாத பௌத்தப் பிக்குகள் அரசனிடஞ்சென்று அபயகிரி விகாரைப் பிக்குகள் மகாயான பௌத்தத்தை மேற்கொண்டதையும் பழைய தேராவாதப் பௌத்தத்தைக் கைவிட்டுவிட்டதையும் கூறினார்கள். கோதாபய அரசன், மகாயான பௌத்தத்தைக் கைக்கொண்ட அறுபது பிக்கு களையும் நாடுகடத்திவிட்டான். நாடு கடத்தப்பட்ட பிக்குகள் சோழ நாட்டுக்கு வந்து சங்க மித்திரரைக் கண்டனர். சங்கமித்திரர், இலங்கைக்குப் போய்த் தம்முடைய மகாயான பௌத்தத்தைப் போதித்தார். அப்போது தேரவாதப் பௌத்தப் பிக்குகள் இவரைப் பற்றி அரசனிடம் கூறினார்கள். அரசன் சங்கமித்திரரை அழைத்துத் தேரவாத பௌத்தரின் தலைவரான சங்கபாலருடன் சமய வாதம் செய்யும்படிக் கூறினான். சங்கபாலரும் சங்கமித்திரரும் அரசசபையில் வாதம் செய்தார்கள். வாதத்தில் மகாயான பௌத்தரான சங்கமித்திரர் வெற்றியடைந்தார். அரசன் இவருடைய ஆழ்ந்த புலமையையும் கல்வியையும் பாரட்டினான். தன்னுடைய பிள்ளைகளான ஜேட்டதிஸ்ஸன், மகாசேனன் என்பவர்களை இவரிடம் கல்விகற்க மாணாக்கராக விட்டான். இதனால், சங்கமித்திரரின் மகாயான பௌத்தம் இலங்கையில் பரவத் தொடங்கிற்று. கோதபயன் இறந்த பிறகு அவனுடைய மகனான ஜேட்டதிஸ்ஸன் முடி சூடி அரசாண்டான் (கி.பி. 323-333). அவன் காலத்தில் சங்கமித்திரர் சோழ நாட்டுக்கு வந்துவிட்டார். ஜேட்டதிஸனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான மகாசேனன் அரசனானான் (கி.பி 334-361). இந்த அரசன் காலத்தில் சங்கமித்திரர் சோழ நாட்டிலிருந்து இலங்கைக்குப் போய் மீண்டும் தம்முடைய மகாயான பௌத்த மதத்தைப் பிரசாரஞ்செய்து பரப்பினார். அரசனுடைய அமைச்சனான சோணன் என்பவன் இவருக்கு உதவியாக இருந்தான். தேரவாத (ஈனயான) பௌத்தருக்கும் மகாயான பௌத்தருக்கும் சமயச் சார்பாகப் பகைமை முற்றிற்று. அதன் காரணமாக சங்கமித்திரர் கொல்லப்பட்டு இறந்தார் (மகாவம்சம் 37ஆம் பரிச்சேதம் 36). புத்ததத்த மகாதேரர் புத்ததத்த மகாதேரர் சோழ நாட்டுத் தமிழர். பௌத்த மதத் துறவியாக வாழ்ந்தவர். பாலி மொழியில் எழுதப்பட்ட பௌத்த மத நூல்களையும் திரிபிடகங்களையும் நன்றாகக் கற்றவர். பாலி மொழியில் இனிமையாகக் கவி இயற்றும் ஆற்றல் பெற்றவர். கி. பி. 5ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் வாழ்ந்திருந்தார். தேரர் என்பது பௌத்தப் பிக்குகளில் சிறந்தவருக்கு வழங்கும் பெயர். ஆசாரியர் என்றும் தேரர் என்றும் இவர் சிறப்புப் பெயர் பெற்று ஆசாரிய புத்ததத்த தேரர் என்று பெயர் கொண்டிருந்ததிலேயே இவருடைய சிறப்பும் உயர்வும் நன்கு தெரிகிறது. இலங்கையை யாண்ட சிறிகுட்டன் (கி.பி. 409-430) காலத்தில் இவர் இலங்கைக்குச் சென்று அநுராதபுரத்திலிருந்த மகாவிகாரை என்னும் பௌத்த விகாரையில் தங்கியிருந்தார். சிறிகுட்ட அரசனுக்கு மகாநாமன், ஸ்ரீநிவாகன் என்னும் பெயர்களும் இருந்தன. புத்ததத்த மகாதேரர் கவீரபட்டினம் (காவிரிப் பூம்பட்டினம்), உரகபுரம் (உறையூர்), பூதமங்கலம், காஞ்சிபுரம் முதலான ஊர்களில் இருந்த பௌத்த விகாரைகளில் தங்கியிருந்தார். அநுராதபுரத்து மகாவிகாரையில் இருந்தபோது அந்த விகாரையின் தலைவரான சங்கபால மகாதேரரின் வேண்டுகோளின்படி இவர் உத்தரவினிச்சயம் என்னும் நூலை எழுதினார். காவிரிப்பூம்பட்டினத்தில் களப்பிர அரசனுடைய அமைச்சனாக இருந்த கண்ணதாசன் கட்டின பௌத்த விகாரையில் இவர் தங்கியிருந்தபோது தம்முடைய மாணவரான புத்தசிகா என்பவரின் வேண்டுகோளின்படி இவர் மதுராந்த விலாசினீ என்னும் நூலை எழுதினார். இது திரிபிடகத்தில் ஒன்றான சூத்திர பிடகத்தில் குட்டக நிகாயம் என்னும் பிரிவில் புத்தவம்சம் என்னும் உட்பிரிவுக்கு உரையாகும். ஆகையால் இந்த நூலுக்கு புத்தவம் சாட்டகதா (புத்த வம்சத்தின் அர்த்த கதை) என்றும் பெயர் உண்டு. இவர் தம்முடைய சீடரான புத்திசிகா என்பவரின் வேண்டுகோளின்படி வினயவினிச்சயம் என்னும் நூலை எழுதினார். சோழ நாட்டில் பூதமங்கலம் என்னும் ஊரில் வேணுதாசர் என்பவர் கட்டிய பௌத்த விகாரையில் தங்கியிருந்தபோது இவர் இந்த நூலை எழுதினார். இந்த நூல், களப்பிர அரசன் அச்சுத விக்கந்தன் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டது (பௌத்தமும் தமிழும் என்னும் நூலைக் காண்க). புத்ததத்த மகாதேரர் தம்முடைய இன்னொரு மாணவரான சுமதி என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்கி அபிதம்மாவதாரம் என்னும் நூலையும் எழுதினார். இது திரிபிடகங்களில் ஒன்றான அபிதம்ம பிடகத்துக்குப் பாயிரம் போன்றது. ரூபா ரூப விபாகம் என்னும் நூலையும் இவர் எழுதியுள்ளார். புத்த பெருமானைப் பற்றி ஜினாலங் காரம் என்னும் நூலையும் இவர் எழுதியதாகக் கூறுவர். இவர் எழுதிய இந்த நூல்கள் எல்லாம் பாலி மொழியில் எழுதப்பட்டவை. புத்ததத்த மகாதேரரும் புகழ்பெற்ற புத்தகோஷ மகாசாரியரும் சம காலத்தவர். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துள்ளனர் (பௌத்தமும் தமிழும்). சுமதி, ஜோதிபாலர் இவர்கள் இருவரும் தமிழப் பௌத்தப் பெரியார்கள். புத்ததத்த மகாதேரர் வாழ்ந்த கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இருந்தவர்கள். காஞ்சிபுரத்தில் ஒரு பௌத்த விகாரையில் இவர்கள் இருந்தனர். புத்தகோஷ ஆசாரியர் காஞ்சிபுரத்துக்கு வந்து இவர்கள் இருந்த விகாரையில் தங்கியிருந்தார். இவர்களின் விருப்பப்படி புத்த கோஷாசாரியர் ஸாரத்த பகாசினீ, மனோரத பூரணீ என்னும் இரண்டு பௌத்த மத நூல்களைப் பாலி மொழியில் எழுதினார். சுமதியும் ஜோதிபாலரும் புத்தகோஷரை இலங்கைக்குப் போய் அநுராதபுரத்து மகாவிகாரையில் இருந்த பௌத்த மத நூல்களை ஆராயும்படி தூண்டினார்கள். அப்படியே அவர் அங்குப் போய்ப் பௌத்த மத நூல்களை எழுதினார். இந்தச் செய்தியை அவர் எழுதிய மனோரத பூரணீ என்னும் நூலில், ஆயாசிதோ ஸூ மதினாதேரேன பத்தந்த ஜோதிபாலேன காஞ்சீபுரா திஸூமயா புப்பே ஸத்திம் வஸம்தேன என்றும் கூறியுள்ளார் (பௌத்தமும் தமிழும்). புத்தமித்திரர் புத்தமித்திரர் என்று பெயர் பெற்ற பௌத்த தேரர்கள் சிலர் இருந்தனர். அவர்களில் வீரசோழியம் என்னும் இலக்கண நூலை எழுதிய புத்தமித்திரர் களப்பிரர் காலத்தவர் அல்லர்; பிற்காலத்தில் இருந்தவர். இங்குக் கூறப்படுகிற புத்தமித்திரர் மயூரப்பட்டணத்தில் ஒரு பௌத்த விகாரையில் இருந்தவர். மயூரப் பட்டணம் என்பது இப்போது ‘மாயவரம்’ என்று கூறப்படுகிற மாயூரமாக இருக்கலாம். புத்தகோஷாசாரியர் மயூரபட்டணத்துப் பௌத்த விகாரைக்கு வந்து தங்கியிருந்த போது இந்தப் புத்தமித்தரரின் விருப்பப்படி பஞ்ச சூடானீ என்னும் நூலைப் பாலி மொழியில் எழுதினார். இந்த நூல் திரிபிடகத்தின் ஒரு பகுதியாக மஜ்ஜிம நிகாயத்துக்கு உரைநூல் ஆகும். ஆசாரிய திக்நாகர் இவரைத் தின்னாகர் என்றுங் கூறுவர். காஞ்சிபுரத்துக்குத் தெற்கே இருந்த சிம்மவக்தரம் என்னும் ஊரில் இவர் பிறந்தார். சிம்மவக்தரம் என்பது சீயமங்கலம் என்னும் ஊராக இருக்கலாம் என்று தோன்று கிறது (சிம்மம்- சிங்கம்- சீயம்). சீயமங்கலம் செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ளது. இவ்வூரில் பிராமண குலத்தில் பிறந்தவராகிய இவர் வைதிக நூல்களைக் கற்றுப் பிறகு காஞ்சிபுரத்தில் பௌத்த நூல்களைக் கற்றுப் பௌத்தப் பிக்கு ஆனார். பிறகு, வடஇந்தியாவுக்குப் போய் அங்குப் பேர் போன வசுபந்து என்னும் பௌத்த ஆசிரியரிடத்தில் மகாயான பௌத்த நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். பின்னர், நளாந்தா பல்கலைக்கழகத்துக்குச் சென்று பல நாள் தங்கி அங்குப் பல நூல்களைக் கற்றார். இவருடைய மாணவர்களில் காஞ்சிபுரத்திலிருந்த தருமபால ஆசாரியரும் ஒருவர். ஆசாரிய திக்நாகர் தர்க்க நூல்களை நன்கு கற்றவர். நியாயப் பிரவேசம், நியாயத்துவாரம் என்னும் இரண்டு தர்க்க நூல்களை இவர் வடமொழியில் எழுதினார். இவர், பௌத்த மதத்தில் விஞ்ஞானவாதப் பிரிவை உண்டாக்கினார் என்பர். வசுபந்து கி.பி. 420 முதல் 500 வரையில் வாழ்ந்திருந்தார் என்று கூறப்படுகிற படியால் அவரிடம் பயின்ற இவரும் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராதல் வேண்டும். இவர், பற்பல நாடுகளுக்குச் சென்று பலரோடு தர்க்கவாதம் செய்து மீண்டும் காஞ்சிபுரத்துக்கு வந்தார் என்பர். காஞ்சிபுரத்துக்கு வருவதற்கு முன்பே ஒருயா நாட்டில் காலமானார் என்று சிலர் கூறுவர். (பௌத்தமும் தமிழும் என்னும் நூலில் ‘தமிழ் நாட்டுப் பௌத்தப் பெரியார்’ என்னும் தலைப்புக் காண்க.) போதிதருமர் இவர் காஞ்சிபுரத்தை யரசாண்ட ஓர் அரசனுடைய மகன். இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்து பௌத்தப் பிக்கு ஆனார்; பௌத்த மதத்தில் தியானமார்க்கம் என்னும் பிரிவைச் சேர்ந்தவர். கி.பி. 520 இல் இவர் சீன நாட்டுக் கான்டன் பட்டினம் போய்ச் சேர்ந்தார். கி.பி. 525இல் சீன தேசத்துக்குப் போனார் என்று சிலர் கூறுவர். சீன நாட்டிலும் ஜப்பான் தேசத்திலும் இவர் தம்முடைய பௌத்தக் கொள்கையைச் பரப்பினார். இவர் போதித்த பௌத்தக் கொள்கையைச் சீனர் சா’ன் மதம் என்பர். ஜப்பானியர். ஜென்மதம் என்பர். போதிதருமரைச் சீனர் தமக்குரிய இருபத்தெட்டுச் சமயக் குரவர்களில் ஒருவராகப் போற்றுகிறார்கள். ஜப்பான் தேசத்திலும் சீன தேசத்திலும் இவருடைய நினைவாகக் கோவில்கள் உண்டு (பௌத்தமும் தமிழும்) காஞ்சி தருமபால ஆசாரியர் இவர் காஞ்சிபுரத்தில் பிறந்து வாழ்ந்தவர். காஞ்சிபுரத்து அரசனுடைய அமைச்சராக இருந்த ஒருவரின் மகன். பெற்றோர் இவருக்குத் திருமணஞ்செய்யத் தொடங்கினபோது இவர் திருமணத்துக்கு உடன்படாமல் பௌத்த மதத்தைச் சேர்ந்து பௌத்தத் துறவியானார். பல நாடுகளுக்குச் சென்று தம்முடைய கல்வியை வளர்த்துக்கொண்டார். திக்நாகரிடத்திலும் இவர் சமயக் கல்வி பயின்றார் வடநாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்தபோது கௌசாம்பி நகரத்தில் பௌத்தருக்கும் வேறு மதத்தாருக்கும் சமயவாதம் நடந்த போது பௌத்தர் எதிர்வாதம் செய்ய முடியாத நிலையில் இருந்ததைக் கண்டு இவர் தனித்து நின்று எதிர்வாதம் செய்து வெற்றி பெற்றார். எதிர்வாதம் செய்தவர்களையும் தலைமை தாங்கிய அரசனையும் பௌத்த மதத்தை மேற்கொள்ளச் செய்தார். இவர் மகாயான பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். ஈனயான பௌத்தரோடு ஏழு நாட்கள் சமயவாதஞ் செய்து அவர்களை வென்று தம்முடைய மகாயான பௌத்தக் கொள்கையை நிலைநாட்டினார். தருமபால ஆசாரியர் பல நூல்களைக் கற்றுத் தேர்ந்து பேராசிரியராக விளங்கினபடியால், அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த நாளந்தாப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இவர் நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி எளிதில் வாய்ப்பது அன்று. துறைபோகக் கற்ற பேரறிஞர்கட்கே இந்தப் பதவி கிடைக்கும். இவர் இளமையிலேயே காலமானார் என்பர். கி.பி.528 முதல் 560 வரையில் இவர் உயிர்வாழ்ந்திருந்தார் என்று தெரிகிறது. இவருக்குப் பிறகு இவருடைய மாணாக்கரான சீலபத்திரர் நளந்தாப் பல்கலைக்கழகத்தின் தலைவரானார் (பௌத்தமும் தமிழும்). தஞ்சை தருமபால ஆசாரியர் இவர் பாண்டி நாட்டுத் தஞ்சாவூரில் இருந்தவர். ‘தம்பரட்டே வசந்தேன நகரே தஞ்சா நாமகே’ என்று கூறப்படுகிறபடியால், தம்பராட்டிரமான தாம்பிரபரணி பாய்கிற திருநெல்வேலியில் இருந்த தஞ்சை நகரத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறார். சோழ நாட்டுத் தஞ்சாவூரில் இவர் இருந்தார் என்று திரு. பி.ஸி. லா அவர்கள் கருதுவது தவறு (B.C. Law, Geography of Early Buddhism). தருமபால ஆசாரியர் பாலி மொழியிலுள்ள பௌத்த மத நூல்களை நன்குக் கற்றவர். தமிழ், சிங்களம், பாலி மொழிகளை நன்றாகக் கற்றவர். பௌத்த உரையாசிரியர்களில் சிறந்தவர். இலங்கையின் அநுராத புரத்தில் இருந்த மகாவிகாரை என்னும் பௌத்தப் பள்ளிக்குப் போய் அங்குத் திரிபிடகங்களுக்குச் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த உரைநூல்களைப் பயின்றார். பிறகு. தமிழ்நாட்டுக்குப் பௌத்தப் பள்ளிகளில் இருந்த பிடக நூல்களின் திராவிட (தமிழ்) உரை நூல்களைப் பயின்றார். சூத்திரபிடகத்தின் ஐந்தாவது பிரிவாகிய குட்டக நிகாயத்தைச் சேர்ந்த உதான, இதிவுக்தக, விமானவத்து, பேதவத்து, தேரகாதா, தேரிகாதா, சரியாபிடகம் என்னும் பகுதிகளுக்கு தருமபால ஆசாரியர் பாலி மொழியில் சிறந்த உரை எழுதினார். இவர் எழுதின உரைக்குப் பரமார்த்த தீபனி என்று பெயர். மற்றும் பரமார்த்த மஞ்சுஸா, நெட்டிப கரணாட்டகதா என்னும் நூல்களையும் இவர் எழுதினார். ‘இதிவுத்தோதான சரியாபிடக தேர தேரீ விமானவத்து பேதவத்து நெட்டியட்டகதாயோ ஆசாரிய தம்மபால தேரோ அகாஸீ ஸோ ச ஆசாரிய தம்ம பால தேரோ ஸீஹள தீபஸ்ஸ ஸமீபே தமிள நாட்டே படராதித்தமிஹி நிவாஸித்தா ஸீஹளதீபே ஏவ ஸங்கஹேத்வா வத்தபோ’ என்று சாசன வம்சம் என்னும் நூல் இவரைப் பற்றிக் கூறுகிறது. இதன் கருத்து: ‘ஆசாரிய தம்ம பாலதேரர் சிங்களத் (இலங்கை) தீவுக்கு அருகில் உள்ள தமிழ் நாட்டில் படராதித்த விகாரையில் இருந்தபோது இதிவுத்தகம், உதானம், சரியாபிடகம், தேரகதா, தேரிகதா, விமானவத்து, பேதவத்து, நெட்டியட்டகதா என்னும் உரை நூல்களை எழுதினார். இந்த ஆசாரியதம்ம பாலிதேரர் சிங்களத் தீவுக்கு அருகில் உள்ள தமிழ் தேசத்தில் படராதித்த விகாரையில் இருந்தபோது இவற்றை எழுதினார்’ என்பது. இவர் கி.பி. 6ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்தவர் எனத் தெரிகிறது. களப்பிரர் ஆட்சிக் காலத்தில், பௌத்த மதம் சமண சமயத்தைப் போலவே நாட்டில் பரவி வளர்ந்திருந்தது. பௌத்த மத நூல்கள் பிற்காலத்தில் அழிந்துபோனபடியால் பௌத்த மதத்தின் முழு வரலாற்றையறிய முடியவில்லை. முரண்பட்ட மூன்று மதங்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சமண சமயமும் பௌத்த மதமும் வட நாட்டிலிருந்து தென்னாட்டுக்கு வந்தன என்பதை யறிவோம். அந்தக் காலத்திலேயே இன்னொரு மதமும் தமிழ் நாட்டுக்கு வந்தது. அது வடமொழி வேதத்தை முதன்மையாகக் கொண்ட மதம். இருக்கு, யஜுர், சாமம், அதர்வனம் என்னும் நான்கு வேதங்களை அடிப்படையாகக் கொண்ட வைதிக மதம் அக்காலத்தில் தமிழ் நாட்டுக்கு வந்தது. வைதிக மதத்தைப் பிரமாணர் போற்றினார்கள். வேள்வி (யாகம்) செய்வதையே முதன்மையாகக் கொண்டது வைதிக மதம். பிராமணர் மிகச் சிறு தொகையினர். அன்றியும் சாதி வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்ட குறுகிய நோக்கமுடையது. பிராமணரைத் தவிர வேறு சாதியார் வேதம் ஓதுவது கூடாது, பிராமணர்தான் உயர்ந்த சாதி, இவ்வாறு குறுகிய சிறிய கொள்கையுடைய வைதிக பிராமணர் மதம் நாட்டில் செல்வாக்கடையாமல்- மக்களிடையே பரவாமல் மூலையில் முடங்கிக் கிடந்தது. ஜைன மதமும் பௌத்த மதமும் தத்தம் மதக் கொள்கையை நாடெங்கும் பிரசாரஞ் செய்து மக்களைத் தங்கள் மதத்தில் சேரும்படி அழைத்தன. தங்கள் மதக் கொள்கைகளை நாடெங்கும் பரப்பின. எந்தச் சாதியரானாலும் இந்த மதங்களைச் சேர்ந்து ஒழுகினால் அவர்களைச் சிறப்புப் செய்து போற்றின. சமய நூல்களை நன்கு கற்று அதன்படி ஒழுகிறவர்களைச் சமய காரியரர்களாக உயர்த்தி வைத்தன. ஆகவே, பௌத்த மதமும் சமண சமயமும் நாட்டில் செல்வாக்குப் பெற்றுப் பரவி வளர்ந்தன. வைதிக மதமாகிய பிராமண மதமோ வேதத்தைப் பிறருக்குப் போதிக்கவில்லை. பிறர் வேதத்தைப் படிக்கவும் விட வில்லை. பிராமணப் பதவி என்னும் பதவியை அமைக்காமல் பிராமணப் பிறப்பு என்று ஜாதிக்கு ஏற்றம் தந்தது. ஆகவே, வைதிகப் பிராமண மதம் தாழ்ந்து மங்கி மூலையில் கிடந்தது. பௌத்தம், சமணம், வைதிகம் என்னும் இந்த மூன்று மதங்கள் ஆதிகாலம் முதல் பிறவிப் பகைமையுடைய மதங்கள். பிராமணர், பௌத்த சமண சமயங்களைப் பகைத்து வெறுத்து விஷம் போலக் கருதினார்கள். பிராமணர், பௌத்த சமண சமயங்களைத் தாக்கிப் பிரசாரஞ் செய்தார்கள். அது போலவே, பௌத்த மதம் வைதிக மதத்தையும் சமண மதத்தையும் கண்டித்து ஒதுக்கியது. வைதிகம், சமண சமயக் கொள்கைகளைத் தாக்கிக் கண்டித்தது. சமண சமயமும் வைதிக மதத்தையும் பௌத்த மதத்தையும் பகைத்து அந்த மதக் கொள்கைகளை வெறுத்துப் பிரசாரஞ்செய்தது. இவ்வாறு வைதிக மதம், சமண சமயம், பௌத்த மதம் ஆகிய மூன்று மதங்களும் ஒன்றையொன்று பகைத்துக் கண்டித்து முரண்பட்டு இருந்தன. வடநாட்டிலும் சரி தென்னாட்டிலும் சரி இந்த மூன்று மதங்களும் ஒன்றையொன்று வெறுத்துப் பகைத்துவந்தன. களப்பிரர் ஆட்சிக் காலத்திலும் இந்த நிலைமைதான் இருந்தது. பௌத்தமும் சமணமும் விரிந்து பரந்த கருத்துள்ள மதங்களாகையால் நாட்டில் செழித்து வளர்ந்தன. வைதிக மதமான பிராமண மதம் குறுகிய கொள்கையும் சுருங்கிய கருத்தும் கொண்டிருந்தபடியால் நாட்டில் செல்வாக்குப் பெறாமலும் வளர்ச்சியடையாமலும் முடங்கிக் கிடந்தது வைணவ சமயம் சைவ சமயத்தைப் போலவே வைணவ சமயமும் மிகப் பழமை யானது. களப்பிர அரசர் வைணவ சமயத்தவர் என்பதை முன்னமே கூறினோம். திருமாலுக்கு அச்சுதன் என்னும் பெயரும் உண்டு. களப்பிர அரசர் தங்களை அச்சுத குலத்தவர் என்று கூறிக்கொண்டனர். அதாவது. திருமாலின் வழிவந்தவர் என்பது பொருள். அவர்கள் திருமாலை (விஷ்ணுவை) வழிபட்டு திருமாலின் அருளினால் பெரிய இராச்சியத்தைப் பெற்றார்கள் என்பதை முன்னமே கூறினோம். இருளறு திகிரியொடு வலம்புரித் தடக்கை ஒருவனை வேண்ட இருநிலம் கொடுத்த நந்திமால்வரை சிலம்பு நத்தி என்று களப்பிர அரசர் கூறப்பட்டதைக் கூறினோம். திகிரியையும் (சக்கரம்) வலம்புரியையும் (வலம்புரிச்சங்கு) கையில் ஏந்தியுள்ள திருமாலை வேண்ட அவர் இவனுக்குப் பெரிய நிலத்தைக் (இராச்சியத்தை) கொடுத்தார் என்பதை அறிந்தோம். இதனால் களப்பிரர், அச்சுதனை (திருமாலை) வழிபட்டவர் என்பது தெரிகிறது. களப்பிரர் சமண சமயச் சார்புடையவர் என்று வரலாற்றா சிரியர் பலரும் எழுதியுள்ளனர். அது தவறான கருத்து என்று தோன்று கிறது. கன்னட நாட்டில் களபப்பு (சிரவண பௌகொள) என்னும் நாட்டைக் களப்பிரர் ஆதிகாலம் முதல் அரசாண்டவர் ஆனபடியாலும், களபப்பு நாட்டைச் சேர்ந்த சிரவணபௌகொளத்தில் பத்திரபாகு முனிவரும் சந்திர குப்த மௌரிய அரசரும் ஜைன முனிவர்களோடு வந்து தங்கின இடமாகையால் ஜைன மதச் சூழலில் நெடுங்காலம் இருந்த படியாலும் களப்பிரர் சமண சமயச் சார்பு கொண்டிருந்தனர் என்று கருதுவது தவறாகாது. ஆனால் அவர்களின் சொந்தச் சமயம் வைணவம் என்பது ஐயமில்லாமல் bதிரிகிறது. ஆனால், வைணவ மதம், பௌத்த சமண சமயங்களின் வளர்ச்சி யினால் சிறப்புப் பெறாமல் தாழ்ந்த நிலையை யடைந்திருந்தது என்பதை அறிகிறோம். சைவ சமயம் களப்பிரர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் சைவ சமயம் குன்றிக் குறைந்திருந்தது என்பதை அறிகிறோம். களப்பிர அரசர்கள் சைவ சமயத்துக்கு மாறுபட்டவர் என்றும் சமண சமயத்துச் சார்புடையவர் என்றும் பொதுவாகக் கருதப்படுகின்றனர். ஒரு களப்பிர அரசன், பாண்டி நாட்டில் சிவன் கோவிலில் வழிபாடு நடைபெறாதபடிச் செய்தான் என்பதைப் பெரிய புராணம், மூர்த்தி நாயனார் புராணத்தில் அறிகிறோம். என்றாலும், சைவ சமயத்தைக் சார்ந்த கூற்றுவன் என்னும் களப்பிர அரசன் சிவன் கோவில்களுக்குச் சிறப்புச் செய்து வழிபட்டதைக் கூற்றுவ நாயனார் புராணத்தில் அறிகிறோம். ஏதோ ஒரு களப்பிர அரசன் சைவ சமயத்துக்கு மாறுபாடாக இருந்தான் என்பது பற்றி எல்லாக் களப்பிர அரசர்களும் சைவ சமயத்துக்கு மாறுபட்டவர் என்று கருதுவது கூடாது. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் சைவ சமயம் பொதுவாக மங்கி மறையும் நிலையில் இருந்ததற்குக் காரணம் பௌத்த, சமண சமயங்களின் பிரசாரமே என்று கருதலாம். தத்தம் மதங்களைப் பிரசாரஞ் செய்து வளர்த்த சமண, பௌத்தப் பிரசாரகர் தங்கள் மதங்களை உயர்த்திப் பேசி, அதே சமயத்தில் சைவத்தைத் தாழ்த்திக் குறைத்துப் பேசிப் பிரசாரம் செய்தார்கள். இதனால் சைவ சமயம் செல்வாக்குப் பெறாமலும் உயர்வு அடையாமலும் குன்றிக் குறைவதாயிற்று. பௌத்த, சமண சமயத்தாரைப் போலச் சைவ சமயத்தார் சைவ சமயத்தைப் பற்றிப் பிரசாரஞ் செய்யாததும் சைவ சமய வீழ்ச்சிக்கு இன்னொரு காரணமாகும். கி.மு. நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து சைவ சமயத்தைப் பௌத்தரும் சமணரும் தாக்கினார்கள் என்பது தெரிகிறது. அக்காலத்தில் இலங்கையை யரசாண்ட மகாசேனன் என்னும் சிங்கள அரசன், இலங்கையில் அக்காலத்தில் பேர்போன சிவன் கோயில்களை இடித்து அழித்து அந்த இடங்களில் பௌத்த விகாரைகளைக் கட்டினான். கோகன்ன (கோகர்ண) விகாரை, எரகாவில்ல விகாரை, கலந்த விகாரை, மிக்காம விகாரைகளைக் கட்டினான் என்று மகாவம்சம் கூறுகிறது (மகாவம்சம் 37ஆம் பரிச்சேதம் 40-41). கோகர்ண விகாரை இலங்கையின் கிழக்குக் கரையோரமாக இருந்தது என்றும் மற்ற இரண்டு விகாரைகள் இலங்கையின் தென்கிழக்கே உரோகண நாட்டில் இருந்தன என்றும் இதனுடைய டீகை (உரை) கூறுகிறது. மற்றும் இந்த உரை இதனைக் கீழ்வருமாறு விளக்குகிறது: ‘ஏவம் ஸப்பத்த லங்க தீபமிஹி குதிட்டகானம் ஆலயம் வித்தம்nஸத்வர ஸிவலிங்காயதோ நாஸேத்வர புத்த ஸாஸனம் ஏவ பதிட்டபேஸி’. இதன் பொருள், இலங்கைத் தீவெங்கும் ஆலயங்களை அழித்துச் சிவலிங்கம் முதலானவை களை நாசஞ் செய்து புத்த சாசனத்தை நிறுவினான்’ என்பது. இதனால், அக்காலத்தில் மதப் பூசல்கள் இருந்தது தெரிகிறது. பக்தி இயக்கம் சைவ சமயம் நாளுக்கு நாள் நலிவடைந்து குன்றிக் குறைந்து மங்கிவருவதைக் கண்ட சைவ சமயத்தார் விழிப்படைந்தனர். சைவ சமயத்தை வளர்த்து ஓங்கச் செய்வதற்கு முயன்றார்கள். நாட்டில் பொது மக்களின் ஆதரவு பெற வழிவகைகளைத் தேடினார்கள். தேடி நல்லதோர் கொள்கையைக் கண்டார்கள். அதுதான் பக்தி இயக்கம். செல்வாக்குப் பெற்று வளர்ந்து கொண்டிருந்த பௌத்த, சமண சமயங்களை வீழ்த்தவும் சைவ சமயத்தை ஓங்கச் செய்யவும் பக்தி இயக்கம் அரியதோர் சாதனமாக அமைந்தது. பக்தி இயக்கம் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் கி.பி 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (வச்சிர நந்தியின் திராவிட ஜைன சங்கம் ஏற்பட்ட பிறகு) தோன்றியது. பக்தி இயக்கத்தில் வைணவரும் சேர்ந்து தங்கள் வைணவ மதத்தை வளர்க்க முயன்றார்கள். பக்தியால் முக்தி எளிதாகும், பக்தியினால் இம்மை மறுமைப் பயன்களை எளிதில் பெறலாம் என்பதே பக்தி இயக்கத்தின் அறைகூவலாக இருந்தது. பக்தி இயக்கம் நாட்டு மக்களின் மனத்தைக் கவர்ந்தது. இந்த இயக்கம் நாளடைவில் பௌத்த சமண சமயங்களை வீழ்த்துவதற்கும் சைவ வைணவ மதங்களை வளர்ப்பதற்கும் ஏற்றதோர் கருவியாக அமைந்தது. அடுத்த நூற்றாண்டில் சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் தோன்றிப் பௌத்த, சமண சமயங்களை அழிக்கவும் சைவ, வைணவ மதங்களை வளர்க்கவும் பக்தி இயக்கம் காரணமாக இருந்தது. பக்தி இயக்கம் நாட்டில் மக்களிடையில் செல்வாக்குப் பெற்று சைவ, வைணவ மதங்களின் வளர்ச்சிக்கும் பௌத்த, சமண சமயங்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தது. தெய்வ வழிபாட்டில் நாயக - நாயகி பாவக் கொள்கை ஏற்படுவதற்கும் பக்தி இயக்கம் காரணமாக இருந்தது. அதாவது, சிவனை நாயகனாகவும் (தலைவனாகவும்) அவனை வழிபடும் அடியார்களை நாயகிகளாகவும் (தலைவிகளாகவும்) பாவிக்கும் வழிபாட்டு முறை ஏற்பட்டது. வைணவர்களும் நாயக-நாயகி பாவத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால், சைன சமயத்தவரும் பௌத்த மதத்தவரும் நாயக- நாயகி பாவத்தை (பேரின்பக் காதலை) ஏற்றுக்கொள்ளவில்லை அவர்கள் இந்தக் கொள்கைக்கு மாறுபட்டிருந்தனர். சைவ, வைணவ பக்தர்கள் தங்கள் கடவுளை நாயகனாகவும் தங்களை நாயகியாகவும் பாவித்து அகத்துறையமைந்த பாடல்களைப் பாடியது போல சைன, பௌத்த சமய இலக்கியங்களில் காணப்படவில்லை. பக்தி இயக்கம் தோன்றுவதற்கு முன்புள்ள அகப்பொருள் இலக்கண இலக்கிய நூல்கள் மனிதக் காதலைக் கூறுகின்றனவே யல்லாமல் தெய்வ-மனிதக் காதலைக் கூறவில்லை. சைன பௌத்த மதத்தவர் நாயக-நாயகி பக்திக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதது போலவே, சைன,பௌத்தரல்லாத ஏனைய தமிழர்களும் இந்தப் புதிய நாயக- நாயகிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். ஆகையால், இந்தக் கொள்கைக்கு ஆதாரமான நூல் வேண்டியிருந்தது. அந்த ஆதார நூல்தான் இறையனார் அகப்பொருள் என்னும் களவியல் நூல் (இந்த இறையனார் அகப்பொருள் என்னும் களவியல் நூலைப் பற்றி இந்நூலில் இணைப்பு 3இல் காண்க.) பக்தி இயக்கமும் பேரின்பக் காதல் (நாயக - நாயகி பாவம்) கொள்கையும் சைவ, வைணவ மதத்துக்குப் பேருதவியாக இருந்தன. இந்தக் கொள்கைகள் சைன. பெத்த மதங்களை வீழ்த்திச் சைவ வைணவ மதங்களை வளர்ப்பதற்குப் பேருதவியாக இருந்தன. சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் சைவ, வைணவ மதங்களை ஓங்கி வளரச் செய்யவும் சைன, பௌத்த மதங்களைத் தாழ்த்தவும் செய்ததற்கு முதற்காரணமாக இருந்தது பக்தி இயக்கந்தான் என்பதில் சற்றும் ஐயமில்லை.  களப்பிரர் காலத்தில் தமிழ்மொழி கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட களப்பிரர் ஆட்சிக்காலத்தில் தமிழ் மொழிக்கு அவர்கள் ஆக்கம் அளித்ததாகத் தெரியவில்லை. ஆனால்,களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழர், தமிழ் மொழியைப் புதிய முறையில் வளர்த்தார்கள்.இந்த முயற்சியில் அக்காலத்துத் தமிழர் மதபேதம் பாராட்டாமல் ஒன்றாக இணைந்து தாய்மொழியை வளர்த்தனர். பௌத்த, சமண, சைவ, வைணவ சமயத்துத் தமிழ்ப் புலவர் அனைவரும் தமிழை வளர்த்தார்கள்.புது வகையான பாக்களும் புது வகையான இலக்கியங்களும் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் உண்டாக்கப்பட்டன. அந்த வளர்ச்சி புதுமையான வளர்ச்சியாகவே இருந்தது. வட்டெழுத்து சங்க காலத்தில் வழங்கி வந்த பிராமி எழுத்து சங்க காலத்தின் இறுதியில் மாற்றம் அடையத் தொடங்கியது. இந்த மாற்றம் எழுது கருவிகளின் மூலமாக ஏற்பட்ட மாற்றம். பனையோலையும் எழுத்தாணியுமே அக்காலத்து எழுது கருவிகளாக இருந்த படியால் இந்த மாற்றம் ஏற்பட்டது. களப்பிரர் ஆட்சிக்காலத்தில் பிராமி எழுத்தின் மாற்றம் முழுமாற்றமாகிப் பையப்பையப் புது வகையான எழுத்தாயிற்று. இப்புது வகையான எழுத்து வட்டெழுத்து என்று பெயர் பெற்றது. வட்டெழுத்து தமிழ் நாடெங்கும் பரவி வழங்கிற்று. சேர, சோழ, பாண்டிய நாடுகளிலும் தொண்டை நாட்டிலும் வட்டெழுத்து நெடுங்காலம் வழங்கிவந்தது. வட்டெழுத்து கி.பிஇ 10ஆம் நூற்றாண்டு வரையில் வழக்கத்தில் இருந்தது. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் வட்டெழுத்து வழங்கியது என்பதில் ஐயம் இல்லை. பிராகிருத மொழியையும் சமஸ்கிருத மொழியையும் எழுது வதற்காகப் புது வகையான கிரந்த எழுத்துகளைப் பௌத்தரும் சைனரும் உண்டாக்கினார்கள். அந்தக் கிரந்த எழுத்து தென்னிந்தி யாவில் குமரி முதல் விந்தியம் வரையில் வழங்கிவந்தது. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பிராகிருத, சமஸ்கிருத மொழிச் சொற்கள் பௌத்த, சமண சமயங்களின் வழியாகத் தமிழில் கலந்துவிட்டன. புது வகைப் பாக்கள் களப்பிரர் காலத்துக்கு முன்பு கடைச்சங்க காலத்தின் இறுதி வரையில் தமிழில் நான்கு வகைப் பாக்களே இருந்தன. அவை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை. ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே என்று தொல்காப்பியம் கூறுகிறது (தொல்காப்பியம், செய்யுளியல் 101). கடைச்சங்க இறுதிக் காலம் ஏறத்தாழ கி.பி. 250 என்று கொள்ளலாம். அதற்குப் பிறகு களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டது. அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் சைன சமயமும் பௌத்த மதமும் தமிழகத்தில் பரவலாகவும் விரைவாகவும் வளர்ந்தன. அவர்களுடைய ‘தெய்வ பாஷை’ பிராகிருத மொழி. சைன சமயத்தாரின் ‘தெய்வ பாஷை’ சூரசேனி என்னும் பிராகிருதம். பௌத்த மதத்தாரின் ‘தெய்வ பாஷை’ பாலி என்னும் பிராகிருதம். பிராகிருத மொழிகள், சமஸ்கிருதம் தோன்றுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்னமே இந்தியாவில் வழங்கி வந்தன. சமண சமய நூல்களும் பௌத்த மத நூல்களும் முறையே சூரசேனி, பாலி என்னும் பிராகிருத மொழிகளில் எழுதப்பட்டிருந்தன. ஆகவே, அந்த மதத்தவர் தங்கள் மத நூல்களைச் சூரசேனியிலும் பாலியிலும் ஓதினார்கள். அந்த மதங்கள் தமிழ்நாட்டில் பெருவாரியாகப் பரவின. களப்பிரர் ஆட்சிக் காலத்தில், பிராகிருத மொழிகளின் தொடர்பு காரணமாகத் தமிழ்ப் பா வகையில் புதிய செய்யுட்கள் தோன்றத் தொடங்கின. பிராகிருத மொழிகளோடு சமஸ்கிருத மொழியும் அக்காலத்தில் அந்த மதத்தவரால் பயிலப் பட்டது. இந்த மொழிகளின் தொடர்பு காரணமாகத் தமிழ்ச் செய்யுள் வகையில் புதிய பாவினங்களை உண்டாக்கினார்கள். புதியன வாகத் தோன்றிய பாவினங்கள் தாழிசை, துறை, விருத்தம் எனப் பெயர் பெற்றன. பழமையான நான்கு வகைப் பாக்களோடு புது வகையான மூன்று பாவினங்களை அமைத்துப் பன்னிருவகையான செய்யுட்களை உண்டாக்கினார்கள். பழைய ஆசிரியப்பாவோடு ஆசிரியத் தாழிசை, ஆசிரியத் துறை, ஆசிரிய விருத்தம் என்றும் வெண்பாவோடு வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் என்றும், கலிப்பாவோடு கலித்தாழிசை, கலித்துறை, கலி விருத்தம் என்றும் வஞ்சிப்பாவோடு வஞ்சித்தாழிசை, வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம் என்றும் பாவகை களை வளர்த்தார்கள். பாவினங்களின் அமைப்பு திடீரென்று அமைந்து விடவில்லை. அவை சரியானபடி முழு உருவை அடைவதற்குப் பல ஆண்டுகள், சில தலைமுறைகள் சென்றிருக்க வேண்டும். புத்தம் புதிய முயற்சியில் தொடக்கக் காலத்தில் சில பல குறைகள் இருக்கும் . அக்குறைபாடுகள் நீங்கி நிறைவான வடிவம் அமைவதற்குப் பல ஆண்டுகள் சென்றிருக்க வேண்டும். புதிய பாவினங்களைப் புலவர் உலகம் சம்மதித்து ஏற்றுக்கொள்வதற்குப் பல ஆண்டுகள் சென்றிருக்க வேண்டும். இந்தப் புதிய ஆக்கம், தமிழர் சமஸ்கிருத, பிராகிருத மொழிகளைப் பயில வாய்ப்பு ஏற்பட்ட காலத்தில் உண்டான வளர்ச்சியாகும். இந்தப் புதிய முயற்சியில் அக்காலத் தமிழர் தமிழ் மொழியின் தனித்தன்மையும் இயல்பும் கெடாதபடி பார்த்துக் கொண்டார்கள். கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் பிராகிருத - சமஸ்கிருத எழுத்துகளையும் சொற்களையும் அப்படிஅப்படியே சேர்த்துக்கொண்டு கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளின் தூய்மையையும் தனித்தன்மையையும் கெடுத்துக்கொண்டது போல, பாவினங் களை அமைத்த காலத்தில் தமிழர் பிராகிருத- சமஸ்கிருத மொழிச் சொற்களையும் எழுத்துக்களையும் அப்படிஅப்படியே எடுத்துக் கொண்டு தமிழின் தூய்மையையும் தனித் தன்மையையுநம் கெடுத்துவிடவில்லை. பிராகிருத - சமஸ்கிருத மொழிச் சொற்கள் ஓரளவு தமிழில் கலந்தபோதிலும், அச்சொற்கள் தமிழ் மரபுக்கேற்ப கிருதம் பெற்றபடியால் தமிழ், திராவிட இயல்பை இழக்காமல் இருக்கிறது. புறப்பொருளும் அகப்பொருளும்- புதிய கருத்துக்கள் பழமையான நான்கு வகைப் பாக்களோடு புது வகையான பாவினங்கள் உண்டாக்கப்பட்டதைக் கூறினோம். இது தமிழ் மொழியில் ஏற்பட்ட நல்லதோர் ஆக்கமாகும். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இன்னொரு மாற்றமும் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்டது. அது அகப்பொருள் புறப்பொருள்களில் உண்டான புதிய கருத்துகள் ஆகும். சங்க காலத்தில் அகப்பொருளையும் புறப்பொருளையும் மக்களின் வாழ்க்கையோடு அமைத்துச் செய்யுட்களைப் பாடினார்கள். போர் வீரர் தங்களுடைய வீரத்தினால் பகைவரை வென்றதைப் பாராட்டிச் சங்கப் புலவர் செய்யுட்களைப் பாடினார்கள். அவ்வாறே, மக்களின் காதல் வாழ்க்கையைச் சிறப்பித்துச் செய்யுட்களை இயற்றினார்கள். இந்தப் பழைய புறப்பொருள் அகப்பொருள்களுக்குப் புதிய கருத்துகள் தோன்றின. புறப்பகைவரைப் போரிலே கொன்று வெற்றி பெறுகிற உலகியல் வெற்றியைவிட அகப்பகையை வென்று வெற்றி கொள்வது சிறந்த உயர்ந்த வெற்றி என்னும் புதிய கருத்தைச் சைனரும் பௌத்தரும் உண்டாக்கினர். மெய், வாய், கண், மூக்கு, செவி, ஆகிய ஐம்புலன்களையும் அடக்கிக் காமம், வெகுளி, மயக்கம் என்னும் அகப்பகைகளை வெல்கிற வெற்றி போர்க்களத்தில் பகைவரைக் கொல்கிற வெற்றியைவிட மேலான வெற்றி என்று புறப்பொருளுக்குப் புதிய கருத்துத் தோன்றிற்று. அகப் பகையை வென்ற அருகரும் (தீர்த்தங்கரரும்) புத்தர் பெருமானும் ஜினர் (வெற்றி பெற்றவர்) என்றும் அந்த வெற்றியே மனிதன் உயர்கதிக்குச் செல்லக்கூடிய சிறந்த வெற்றி என்றும் சைனரும் பௌத்தரும் தங்கள் மதச் சார்பாகப் புறப் பொருளுக்குப் புதுப் பொருள் கூறினார்கள். அதாவது. மாந்தனின் போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து பாடுவதைவிட ஜினர்களின் ஐம்புல வெற்றியைப் பாடுவது சிறந்தது என்னும் கருத்தைத் தோற்றுவித்தனர். பௌத்தரும் சைனரும் புறப்பொருளுக்குப் புதிய கருத்தை உண்டாக்கியதைப் போல, சைவ, வைணவர் அகப்பொருளுக்குப் புதியதோர் கருத்தைக் கூறினார்கள். மனித வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் காதலித்துப் பெறுகிற சிற்றின்பத்தை விட உயிர்கள் கடவுளைக் காதலித்துப் பெறுகிற பேரின்பம் சிறந்தது என்னும் புதிய கருத்தை அகப்பொருளுக்குக் கற்பித்தார்கள். உயிர்கள் (அதாவது ஆணும் பெண்ணும் ஆகிய உயிர்கள்) தலைவிகள் (காதலிகள்) என்றும் கடவுள் (சிவனும் திருமாலும்) தலைவன் (காதலன்) என்றும் இந்த முறையில் காதலி-காதலன் பாவத்தில் கடவுளிடம் பக்தி செய்தால் பேரின்பமாகிய மோட்சம் (வீடுபேறு) பெறலாம் என்றும் சைவ, வைணவர் அகப்பொருளுக்குப் புதிய கருத்துக் கூறினார்கள். அதாவது, நாயகி- நாயகன் பாவத்தில் அகப்பொருள் கருத்து அமையக் கடவுளின்மேல் பக்திப்பாடல் பாடுவது சிறந்தது என்று கூறினார்கள். ஆனால், பௌத்தரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் நாயகி- நாயகன் பாவத்தில் தங்களுடைய கடவுளின்மேல் அகப்பொருட்டுறையமைந்த செய்யுட்களை இயற்றவில்லை. சைவ, வைணவ சமயத்தார் மட்டும் அகப்பொருட்டுறை யமைந்த பாடல் களைத் தங்கள் கடவுளின் மேல் பாடினார்கள். இந்த மாற்றங்கள் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் உண்டாயின என்று தோன்றுகின்றது. பக்தி இயக்கம் தோன்றின காலத்திலிருந்து அகப்பொருள் துறைகள் அமைத்த தோத்திரப் பாடல்களைச் சைவ, வைணவர்கள் இயற்றத் தொடங்கினார்கள். இவ்விதப் பாடல்களைச் சங்க காலத்தில் சங்கப் புலவர்கள் பாடவில்லை. பிற்காலத்து நாயன்மார்களும் ஆழ்வார்களும் அகப்பொருட்டுறை யமைந்த பாடல்களைத் தங்கள் கடவுள்மேல் பாடினார்கள். இந்த மரபு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. சைன, பௌத்தர்களுக்கு இந்தக் கருத்து உடன்பாடில்லை யாகையால் அவர்கள் தங்கள் கடவுளின்மேல் அகப்பொருட்டுறைப் பாடல்களைப் பாடவில்லை. யாப்பிலக்கண நூல்கள் பழமையான நால்வகைப் பாக்களுக்குப் புதிதாகப் பாவினங்கள் உண்டாக்கப்பட்டன என்று கூறினோம். புதிய பாவினங்களுக்கு இலக்கணம் தேவைப்பட்டது. ஆகவே, யாப்பிலக்கணம் ( செய்யுள் இலக்கணம்) எழுதப்பட்டது. அந்தக் காலத்தில் புலவர்கள் புதிதான செய்யுள் இலக்கண நூல்களை எழுதினார்கள். பல செய்யுள் இலக்கண நூல்கள் எழுதப் பட்டன. அந்தச் செய்யுள் இலக்கண நூல்கள் பிற்காலத்தில் வழக்கிழந்து மறைந்து போயின. மறைந்துபோன அந்நூல்களைப் பற்றிச் சிறிதளவு, பிற்காலத்து நூலாகிய யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருப்பதிலிருந்து அறிகிறோம். மறைந்து போன அந்த நூல்களைப்பற்றி நாம் அறிந்தவரையில் கூறுகிறோம். அவிநயம் அவிநயம் என்னும் இந்த நூலை எழுதியவர் அவிநயனார். இவர் சைன சமயத்தவர் என்று தெரிகிறார். அவிநயனார்யாப்பு என்னும் பெயரும் இதற்கு உண்டு. இராசப்பவுத்திரப் பல்லவ தரையன் என்னும் புலவர் இந்நூலுக்கு உரை எழுதினார். கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரையில் இந்த நூல் வழங்கிவந்து பிறகு மறைந்து போயிற்று. இந்த நூலிலிருந்து உரையாசிரியர் சிலர் சில சூத்திரங்களை மேற்கோள் காட்டியுள்ளனர். அவிநயப் புறனடை என்றும் நாலடி நாற்பது என்றும் பெயருள்ள இன்னொரு நூலை அவிநயனாரே எழுதியுள்ளார். இந்நூலும் பிற்காலத்தில் மறைந்து போயிற்று. இந்நூற் செய்யுட்கள் சில உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப் பட்டுள்ளன (இந்த நூல்களைப் பற்றின விவரங்களை மறைந்து போன தமிழ் நூல்கள் என்னும் புத்தகத்தில் காண்க). காக்கைபாடினியம் இந்த யாப்பிலக்கண நூலை எழுதியவர் காக்கை பாடினியார். காக்கைபாடினியார் என்னும் பெயருள்ளவர் இருவர் இருந்தனர். குறுந்தொகை 210ஆம் செய்யுளையும், புறநானூறு 278ஆம் செய்யுளையும். பதிற்றுப்பத்து ஆறாம் பத்தையும் பாடினவர் சங்க காலத்துக் காக்கைபாடினியார். காக்கைபாடினியம் என்னும் செய்யுளிலக்கண நூலை எழுதிய இவர் பிற்காலத்திலிருந்த காக்கை பாடினியார், சிறுகாக்கை பாடினியம் என்று இன்னொரு யாப்பிலக்கண நூலும் உண்டு. இந்த நூலை எழுதியவர் சிறுகாக்கைபாடினியார். இந்த இரண்டு செய்யுளிலக்கண நூல்களிலிருந்து சூத்திரங்களைப் பிற்காலத்து உரையாசிரியர் தங்களுடைய உரையில் மேற்கோள் காட்டியுள்ளனர் (மறைந்து போன தமிழ் நூல்கள்). நக்கீரர் அடிநூல், நக்கீரர் நாலடி நானூறு என்னும் செய்யுள் இலக்கண நூலை யாப்பருங்கல விருத்தியுரைகாரர் தம்முடைய உரையில் குறிப்பிடுகிறார். இவ்விரண்டும் ஒரே நூலாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த நக்கீரர் சங்க காலத்து நக்கீரர் அல்லர். பிற்காலத்தில் (பக்தி இயக்கம் தோன்றின காலத்தில்) இருந்த நக்கீரர் என்று தோன்றுகிறார். நத்தத்தம் இப்பெயருள்ள செய்யுள் இலக்கண நூலை இயற்றியவர் நத்தத்தனார். (இவர் பெயர் நற்றத்தனார் என்றும் இவருடைய நூல் நற்றத்தம் என்றும் கூறப்படுகிறது). தத்தனார் என்பது இவருடைய பெயர் என்பதும் ந என்னும் சொல் சிறப்புப் பெயரை உணர்த்துகிறது என்றும் தோன்றுகிறது. இந்த நூலும் மறைந்து போயிற்று. இந்நூலி லிருந்து சில சூத்திரங்கள் யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை உரைகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன (மறைந்து போன தமிழ் நூல்கள்). பல்காப்பியம், பல்காப்பியப் புறனடை இந்த இரண்டு யாப்பிலக்கண நூல்களை எழுதியவர் பல் காப்பியனார். இந்த நூல்கள் பிற்காலத்தில் மறைந்து போயின. இந்நூல்களிலிருந்து சில சூத்திரங்கள் உரையாசிரியர் களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன (மறைந்து போன தமிழ் நூல்கள்). பல்காயம் பல்காயனார் என்னும் புலவர் இந்நூலை இயற்றினார். இந்நூல் பிற்காலத்தில் மறைந்து போயிற்று. இந்நூலிலிருந்து சில நூற்பாக்கள் உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப் பட்டுள்ளன (மறைந்து போன தமிழ் நூல்கள்). இலக்கிய நூல்கள் (சமணர் இயற்றியவை) களப்பிரர் ஆட்சிக் காலத்தில், கி.பி. 250 முதல் 575 வரையில் என்னென்ன தமிழ் இலக்கிய நூல்கள் உண்டாயின என்பதற்கு முழு விவரங்கள் கிடைக்கவில்லை. அந்தக் காலத்தில் புது வகையான பாவினங்கள் தோன்றின என்பதை அறிந்தோம். புதிய பாக்களினாலே புதிய தமிழ் நூல்கள் பல தோன்றியிருக்க வேண்டும் என்பது உறுதி. நமக்குத் தெரிகிற வரையில் அக்காலத்தில் தோன்றின தமிழ் இலக்கிய நூல்களைக் கூறுவோம். நரிவிருத்தம் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசு சுவாமிகள் தம்முடைய தேவாரப் பதிகத்தில் நரிவிருத்தம் என்னும் நூலைக் கூறுகிறார். எரிபெருக்குவர் அவ்வெரி ஈசனது உருவருக்க மாவது உணர்கிலர் அரி அயற்கு அரியானை அயர்த்துபோய் நரிவிருத்தம் தாகுவர் நாடரே (நாவுக்கரசர் தேவாரம், ஆதிபுராணத் திருக்குறுந்தொகை 7) நரி விருத்தம் என்பதன் பொருள் நரியின் வரலாறு என்பது (விருத்தம்- விருத்தாந்தம், வரலாறு). விருத்தம் என்பதற்கு விருத்தப் பாவாலான நூல் என்றும் கூறலாம். இந்நூலாசிரியர் திருத்தக்கதேவர் என்று பெயர் பெற்ற புலவர். சோழ அரசர் குலத்தில் பிறந்தவரான திருத்தக்கதேவர் சமண சமயத்துத் துறவியாகிச் சமண சமயத்துத் தேவகணத்தைச் சேர்ந்திருந்தார். இவர் சீவகன் என்னும் அரசனுடைய வரலாற்றைச் சீவகசிந்தாமணி என்னும் பெயரினால் பாட எண்ணித் தம்முடைய சமய குருவின் அனுமதியைக் கோரினார். சீவகன் சரிதையில் சிற்றின்பச் செய்திகளும் உலகியல் செய்திகளும் அதிகமாக இருப்பதால் அதை எழுத முன்வந்த திருத்தக்க தேவர் தம்முடைய துறவு நிலையில் உறுதியுள்ளவராக இருக்கிறாரா என்பதை அறிய விரும்பின குரு. இவரை முதலில் நிலையாமையைப் பற்றிஒரு நூல் எழுதிக்காட்டும்படி கட்டளையிட்டார். அவர் கட்டளையை மேற் கொண்டு எழுதப்பட்டதுதான் நரி விருத்தம். நரிவிருத்தத்தைப் படித்த ஆசிரியர் திருத்தக்கதேவரின் உறுதியான துறவு நிலையை அறிந்து சீவகசிந்தாமணிக் காவியத்தை இயற்றுவதற்கு அனுமதி கொடுத்தார். ஆகவே நரிவிருத்தம், சீவகசிந்தாமணிக்கு முன்னோடியாகச் செய்யப் பட்ட நூல் என்பது தெரிகிறது, நூறு செய்யுட்களைக் கொண்ட நரிவிருத்தம் இப்போதும் இருக்கிறது. சீவகசிந்தாமணி நரிவிருத்தத்தைப் பாடிய திருத்தக்கதேவர் தம்முடைய ஆசிரியரின் அனுமதிப்படி சிந்தாமணிக் காவியத்தை இயற்றினார். இது சீவகசிந்தாமணி என்றும் மணநூல் என்றும் பெயர் பெற்று விளங்குகிறது. சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரக் காவியத்துக்கு அடுத்தபடி, சிறந்த காவியமாகப் போற்றப் படுகிறது. புதிய விருத்த யாப்பினால் இயற்றப்பட்ட முதல் காவியம் இது. சீவகசிந்தாமணியின் தலைவனான சீவக குமாரன் வர்த்தமான மகாவீரரின் காலத்தில் இருந்தவன். மகாவீரர் நிர்வாண மோட்சம் அடைந்து இப்போது 2500 ஆண்டுகள் ஆகின்றன. எனவே, சீவகனும் அந்தக் காலத்தில் இருந்தவன் ஆவன். இவ்விடத்தில் ஒரு செய்தியை விளக்கிக் கூறவேண்டும். சீவக குமாரன். பல்லவ தேசத்தின் அரசன் மகளை மணஞ்செய்தான் என்று கூறப்படுகிறான். பல்லவ தேசம் என்பது எது என்பதை அறிய வேண்டும். பல்லவ அரசர் தமிழ்நாட்டுத் தொண்டை மண்டலத்தை கி.பி.6ஆம் நூற்றாண்டு முதல் சிறப்பாக அரசாண்டதை வரலாற்றினால் அறிகிறோம். கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்த சீவகன் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்த பல்லவ அரசன் மகளை மணஞ்செய்ய இயலுமா? “படுமழை பருவம் பொய்யா பல்லவ தேயம் என்னும், தடமலர்க் குவளை பட்டந்தழுவிய யாணர் நன்னாடு” (1185) என்றும், “கோங்குபூத்துதிர்ந்த குன்றிற் பொன்னணி புளகம் வேய்ந்த, பாங்கமை பருமயானைப் பல்லவ தேசமன்னன்”(2253) என்றும், “பாகத்தைப் படாத நெஞ்சிற் பல்லவ தேயமன்னன், சேவகன் சிங்கநாதன் செருக்களம் குறுகினானோ” (2278) என்றும் பல்லவ தேசமும் பல்லவ தேய மன்னனும் சீவகசிந்தாமணியில் கூறப்படுகிறனர். இங்குக் கூறப்பட்ட பல்லவ தேசம் தமிழ்நாட்டில் இருந்த பல்லவ தேயம் அன்று. சீவகன் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டில் பல்லவ தேசமும் பல்லவ அரசரும் இருந்திலர். இதில் கூறப்படுகிற பழைய பாரசீக தேசமாகும். பழைய பாரசீக தேசத்தை யாண்டவர் பஃலவர் என்றும் அந்த நாடு பஃலவ நாடு என்றும் கூறப்பட்டது. பஃலவ தேசம் என்றது தமிழில் பல்லவதேசம் என்றாயிற்று. சீவகசிந்தாமணி கூறுகிற பல்லவ தேசம் பழையபாரசீக நாடாகிய பஃலவ தேசம் ஆகும். சீவகசிந்தாமணி களப்பிரர் ஆட்சிக் காலத்தில், சமண சமயம் ஓங்கி வளர்ந்திருந்த காலத்தில், கி.பி. 5அல்லது 6ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூலாகும்.1 எலிவிருத்தம், கிளிவிருத்தம் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இருந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய தேவாரப் பதிகத்தில் எலிவிருத்தம், கிளிவிருத்தம் என்னும் இரண்டு நூல்களைக் கூறுகிறார். “கூட்டினார் கிளியின் விருத்தம் உரைத்ததோர் எலியின் தொழில், பாட்டு மெய்கொலிப் பக்கமே செலுத்தும்” (திருவாசகம் 5). நரிவிருத்தம் போன்று இந்த நூல்களுள் சமண சமய நூல்களே. இந்த நூல்கள் பிற்காலத்தில் மறைந்துபோயின. இந்நூல் செய்யுட்களில் கலித்துறைச் செய்யுட்களும் பயின்றுள்ளன என்பது தெரிகின்றது. “குண்டலகேசி விருத்தம் கிளிவிருத்தம் எலிவிருத்தம் நரிவிருத்தம் முதலாயுள்ள வற்றுள் கலித்துறைகளும் உளவாம்” என்று வீரசோழிய உரையாசிரியர் எழுதிஉள்ளார். விளக்கத்தார் கூத்து இது கூத்து நூல். இதைச் செய்தவர் விளக்கத்தார் (விளக்கத் தனார்) என்னும் புலவர், இந்த நூல் பிற்காலத்தில் மறைந்துவிட்டது. இந்த நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுளை யாப்பருங்கல விருத்தி யுரையாசிரியர் தம்முடைய உரையில் மேற்கோள் காட்டியுள்ளார் (இணைப்பு 1இல் முதல் செய்யுள் காண்க). இந்தக் கடவுள் வாழ்த்துச் செய்யுளில் இவர் அச்சுதன் என்னும் களப்பிர அரசனை வாழ்த்துகிறார். அடுதிறல் ஒருவ நிற் பரவுதும், எங்கோன் தொடுகழற் கொடும்பூண் பகட்டெழு மார்பிற் கயலொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் பேர்வேல் அச்சுதன் ஒன்றுகடல் உலகம் முழுவதும் ஒன்றுபு திகிரி யுருட்டுவே னெனவே இதனால், இந்த நூல் களப்பிர அரசன் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டது என்பது தெரிகிறது. இந்த நூலின் வரலாற்றை மறைந்து போன தமிழ் நூல்கள் என்னும் புத்தகத்தில் காண்க. பெருங்கதை பெருங்கதை என்னும் இந்த நூலுக்கு மாக்கதை என்றும் உதயணன் கதை என்றும் சுருக்கமாகக் கதை என்றும் பெயர் உண்டு. இதனை இயற்றியவர் கொங்கு நாட்டில் வாழ்ந்திருந்த கொங்குவேள். இதனால் இதனைக் கொங்குவேள் மாக்கதை என்றும் கூறுவர். கொங்குவேள் கொங்கு நாட்டு விசயமங்கலம் என்னும் ஊரில் இருந்தவர்.பெருங்கதையின் தொடக்கமும் அதன் முதற்காண்டமும் இறுதிக்காண்டமும் இப்போது கிடைக்கவில்லை. இவற்றைத் தவிர மற்ற பகுதிகள் எல்லாம் கிடைத்துள்ளன. இந்த நூலில் திரி சொற்கள்அதிகம். சற்றுக் கடினமான நடைதான். மணிமேகலை காவியம் போலவே பெருங்கதையின் செய்யுட்கள்ஆசிரியப் பாவாலானவை. இப்பாக்களின் இறுதியில் மணிமேகலை காவியம் போன்றே ‘என்’ என்று முடிகின்றன. இந்த நூலைக் கொங்குவேள் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இயற்றியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில்இருந்த திருமங்கையாழ்வார் பெருங்கதையைப் படித்திருக்கிறார் என்பது அவருடைய சிறிய திருமடல் என்னும் செய்யுளில் பெருங்கதையின் தலைவியாகிய வாசவதத்தையைப் பற்றிக் கூறுவதிலிருந்து அறிகிறோம். ஆரானும் ஆதானும் அல்லன் அவள்காணீர் வாரார் வனமுலை வாசவ தத்தை என்று ஆராலும் சொல்லப் படுவாள்- அவளுந்தன் பேராயம் எல்லாம் ஒழியப் பெருந்தெருவே தாரார் தடந்தோள் தனைக்காலன் பின்போனாள் ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே (திருமங்கையாழ்வார், சிறுத்திருமடல்) கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்ட மணி மேகலை காவியத்தில் பெருங்கதையின் குறிப்புக் காணப்படுகிறது (மணிமேகலை 15:58-66). அக்காலத்திலேயே பெருங்கதையைத் தமிழர் அறிந்திருந்தனர் என்பது தெரிகிறது. ஆனால், அவர்கள் காலத்தில் கொங்குவேளின் பெருங்கதை எழுதப்படவில்லை. வேறு யாரோ எழுதிய பெருங்கதையை அவர்கள் அறிந்திருந்தனர். பெருங்கதையின் மூல நூல் பிருஹத்கதை என்பது (பிருஹத் கதை - பெருங்கதை). பிருஹத்கதையை குணாட்டியர் என்னும் புலவர் பைசாச பாஷையில் எழுதினார். குணாட்டியர் தக்கண தேசத்தை அரசாண்ட சாதவாகன அரசனுடைய அமைச்சராக இருந்தவர். சாதவாகன அரசர்களாகிய சதகர்ணியாரைத் தமிழர் நூற்றுவர்கன்னர் என்று கூறினார்கள். ஏறத்தாழக் கி.பி. முதல் நூற்றாண்டில் குணாட்டியர் என்னும் அமைச்சர் பிருஹத்கதையைப் பைசாச பாஷையில் எழுதினார். இது விந்தியமலைத் திராவிட இனத்தைச் சேர்ந்த மொழி என்பர். பைசாச பாஷை என்பது பிராகிருத பாஷையைச் சேர்ந்தது. பிருஹத்கதையின் பெரும் பாகம் அழிந்து போயிற்று. எஞ்சி இருக்கும் பகுதியே இப்போதுள்ள பெருங்கதை. பிருகத்கதையைத் தமிழில் எழுதியவர் கொங்குவேள் என்னும் சைனர். சைனர்கள் பிராகிருத பாஷைகளைக் கற்றவர்கள். எப்படி என்றால் சைன சமய நூல்கள் பிராகிருத பாஷையில் எழுதப் பட்டுள்ளபடியால் அக்காலத்து சைனர் பிராகிருத பாஷைiயயும் நன்கு கற்றிருந்தார்கள். அந்த முறையில் சைனராகிய கொங்குவேள் நேரே, பைசாச பாஷையில் எழுதப்பட்ட குணாட்டியரின் பெருங்கதையைப் படித்து அதைத் தமிழில் பெயர்த்தெழுதினார் என்பதில் தவறு இல்லை. துர்வினிதன் என்னும் கன்னட நாட்டு அரசன் குணாட்டி யருடைய பிருகத்கதையை வடமொழியில் பெயர்த்து எழுதினான் என்றும் அந்த வடமொழியிலிருந்து கொங்குவேள் பெருங்கதையைத் தமிழில் எழுதினார் என்றும் சிலர் கூறுவர். இவர்கள் கூற்று ஏற்கத்தக்கதன்று. பிராகிருத பாஷையை அறிந்தவரான சைனராகிய கொங்குவேள்,நேரே பைசாச பாஷையிலிருந்து பெருங்கதையைப் பெயர்த்தெழுதினார். நூல்களும் கருத்துகளும் (சொற்களும்கூட) சமஸ்கிருதத்தில் வந்த பிறகுதான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது என்னும் முட்டாள் தனமான மூடக்கொள்கை, ஆராய்ச்சி இல்லாத சமஸ்கிருதப் பண்டிதர் களிடம் இருந்து வருகிறது. இந்தக் மூடத்தனத்தைத் தமிழப் பண்டிதர் சிலர் உண்மை எனக் கருதிக்கொண்டுள்ளனர். பௌத்த, சைனர் காலத்தில் பிராகிருத மொழியிலிருந்து தமிழில் நூல்களும் கருத்து களும் வெளி வந்தன. சமஸ்கிருதம் போலக் காணப்படுகின்ற பல சொற்கள் உண்மையில் பிராகிருத மொழியிலிருந்து தமிழில் வந்தவை. சைனப் புலவர்களில் தமிழ், பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை நன்கு கற்றவர்கள் பலர் அக்காலத்தில் இருந்தார்கள். சைன சமயத்துத் தமிழராகிய கொங்குவேள் பிராகிருதப் பாஷையைக் கற்றவராகையினால் அவர் பைசாச மொழியிலிருந்த பிருகத்கதையை நேராகத் தமிழில் எழுதினார். களப்பிரர் காலத்தில் பௌத்த மதமும் சிறப்புற்றிருந்தது. அக்காலத்தில் பௌத்தர்களும் நூல் எழுதினார்கள். அவர் களுடைய நூல்கள் முழுவதும் மறைந்து போயின. இலக்கிய நூல்கள் (iசவ சமய நூல்கள்) சமண சமய நூல்களைப் பற்றி மேலே கூறினோம். இனி, களப்பிரர் காலத்தில் தோன்றிய சைவ இலக்கியங்களைப் பற்றிக் கூறுவோம். தமிழ்நாட்டில், முக்கியமாகப் பாண்டிநாட்டில் சமண சமயமும் பௌத்த மதமும் பரவி ஆதிக்கம் செலுத்தியதைக் கண்ட சைவ சமயத்தார் தங்கள் சமயம் ஓங்கி வளர வழிவகைகளைத் தேடிக் கடைசியில் பக்தி என்னும் புதிய இயக்கத்தை உண்டாக்கினார்கள் என்று கூறினோம். அகப்பொருளுக்குப் பேரின்பத் தொடர்பான கருத்தைக் கற்பித்து மாந்தருக்கும் (உயிர்களுக்கு) கடவுளுக்கும் தெய்வீகக் காதலைப் பொருத்தி அதைப் பக்தியுடன் இணைத்தார்கள். இந்தப் புதிய கொள்கைக்கு ஆதாரமாக ஒரு நூல் வேண்டுமல்லவா? அதற்காக இறையனார் அகப்பொருள் என்றும் களவியல் என்றும் பெயருள்ள ஒரு நூலை எழுதினார்கள். அது தெய்வீகக் களவியலுக்கு ஆதார நூல் என்று கூறினார்கள். அந்த நூலைச் சிவபெருமானே (இறையனார்) இயற்றினார் என்று கூறினார்கள் ( இது பற்றி இணைப்பு 3 காண்க). இனி அக்காலத்தில் உண்டான சைவ சமய நூல்களைப் பார்ப்போம். மூத்த திருப்பதிகங்கள் திருவாலங்காட்டுச் சிவபெருமான் மேல் பாடப்பட்ட படியால் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் என்று கூறப்படும் இந்தப் பதிகங்களைப் பாடியவர் காரைக்கால் அம்மையார் என்னும் அடியார். இவர் அறுபத்து மூன்று சைவ அடியார்களில் ஒருவர். இவருடைய வரலாற்றைத் திருத்தொண்டர் புராணத்தில் , காரைக்கால் அம்மையார் புராணத்தில் காண்க. திருப்பதிகங்களைப் பாடியவர் திருநாவுக்கரசு நாயனார். அவர் காலத்திலே திருப்பதிகங்களைப் பாடியவர் அவருக்கு வயதில் இளையவராகிய திருஞான சம்பந்த மூர்த்திநாயனார். இவர்கள் பாடிய பதிகங்களுக்குத் தேவாரத் திருப்பதிகங்கள் என்பது பெயர். இவர்களுக்கு முன்பு முதன்முதலாகத் திருப்பதிகம் பாடியவர் காரைக்கால் அம்மையாரே. ஆகையினால், அம்மையார் பாடிய திருப்பதிகங்களுக்கு மூத்த திருப்பதிகங்கள் என்று பெரியோர் பெயரிட்டுள்ளனர். அம்மையார் பாடிய மூத்த திருப்பதிகங்கள் இரண்டே. இவற்றில் முதலாம் மூத்ததிருப்பதிகம் ‘கொங்கை திரங்கி நரம்பெழுந்து’ என்று தொடங்கும் பதிகம். இதன் பண் நட்டபாடை. இந்தப் பதிகம் பதினொரு செய்யுட்களைக் கொண்டது. இரண்டாவது மூத்ததிருப்பதிகம் ‘எட்டி இலவம் ஈகை சூரை’ என்று தொடங்குவது. இதன் பண் இந்தளம். இதுவும் பதினொரு பதிகங்களைக் கொண்டது. காரைக்கால் அம்மையார் 7ஆம் நூற்றாண்டிலிருந்த திருநாவுக்கரசருக்கு முந்தியவர் ஆகையால் இவர் கி.பி 5 அல்லது 6ஆவது நூற்றாண்டில் இருந்தவராதல் வேண்டும். பழைய தேவாரப் பதிப்புகளில் காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகங்களை முதலில் அச்சிட்டுப் பிறகு மற்ற தேவாரப் பதிகங்களை அச்சிடுவது வழக்கமாக இருந்தது. திருவிரட்டை மணிமாலை இதனையியற்றியவரும் காரைக்கால் அம்மையாரே. இது கட்டளைக் கலித்துறையும் வெண்பாவும் ஆக இரண்டு செய்யுட்களால் ஆனது, அந்தாதியாகப் பாடப்பட்டது. இருபது செய்யுட்களைக் கொண்டது. அற்புதத் திருவந்தாதி இதை இயற்றியவரும் காரைக்கால் அம்மையாரே. நேரிசை வெண்பாவினால் அந்தாதியாக நூற்று ஒன்று செய்யுட்களைக் கொண்ட நூல். சிவபெருமான் மேல் பாடப்பட்டது. காரைக்கால் அம்மையார் இயற்றிய இந்தத் தோத்திரப் பாடல்கள் பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன. கயிலைபாதி காளத்திபாதித் திருவந்தாதி இது நேரிசை வெண்பாவினால் அந்தாதித் தொடையாகச் செய்யப் பட்ட நூறு செய்யுட்களையுடையது. கயிலை மலையிலும் காளத்தி மலையிலும் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மேல் பாடப்பட்டது. இதனைப் பாடியவர் நக்கீரதேவநாயனார். இவர் கடைச்சங்க காலத்திலிருந்த நக்கீரர் அல்லர்; களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்த மற்றொரு நக்கீரர். திரு ஈங்கோய்மலை எழுபது ஈங்கோய்மலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மேல் பாடப்பட்ட எழுபது வெண்பாக்களால் ஆன நூல். இதில் 49 முதல் 61 வரையில் உள்ள பதின்மூன்று பாடல்கள் மறைந்து போயின. இந்த நூலைப் பாடியவரும் நக்கீரதேவ நாயனாரே. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை இது திருவலஞ்சுழியில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் மேல் பாடப்பட்ட தோத்திர நூல். அகவல், வெண்பா, கலித்துறை என்னும் மூன்று வகைச் செய்யுட் களினால் அந்தாதித் தொடை யமையப் பாடப்பட்ட பதினைந்து செய்யுட்களையுடையது. இதுவும் நக்கீரதேவநாயனாரால் இயற்றப்பட்டது. திருவெழுகூற்றிருக்கை இது அகவற்பாவினால் இயற்றப்பட்ட 56 அடிகளைக் கொண்டது. கடைசியில் ஒரு வெண்பாவையும் உடையது. இச்செய்யுளை யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் ஒழிபு இயல் உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். அதில் இதனை, இணைக்குறள் ஆசிரியப்பா என்று கூறுகிறார். பதினோராந் திருமுறையில் அச்சிடப்பட்டுள்ள இந்தச் செய்யுளுக்கும் யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள இச்செய்யுளுக்கும் பாடபேதங்கள் உள்ளன. இதனை இயற்றியவர் நக்கீரதேவநாயனார். பெருந்தேவபாணி இது அறுபத்தேழு அடிகளைக் கொண்ட ஆசிரியப் பாவாலானது. இதன் இறுதியில் ஒரு வெண்பாவும் உண்டு. இதனை இயற்றியவரும் நக்கீரதேவநாயனாரே. கோபப்பிரசாதம் இது தொண்ணூற்றொன்பது அடிகளைக் கொண்ட அகவற் பாவாலான நூல். சிவபெருமான் மேல் பாடப்பட்டது. நக்கீர தேவநாயனாரால் இயற்றப்பட்டது. காரெட்டு இது எட்டு வெண்பாக்களால் ஆன சிறு நூல். காருக்கும் (மழைக்கும்) சிவபெருமானுக்கும் உவமை கூறுமுகத்தான் சிவனை வாழ்த்துகிறது இந்நூல். இதுவும் நக்கீரதேவ நாயனாரால் இயற்றப்பட்டது. போற்றிக் கலிவெண்பா கலிவெண்பாவினால் சிவபெருமானைப் போற்றிக் கூறுகிறது இந்நூல். இதுவும் நக்கீரதேவநாயனாரால் இயற்றப்பட்டது. திருக்கண்ணப்பதேவர் திருமறம் நூற்று ஐம்பத்தெட்டு அடிகளைக் கொண்ட அகவற் பாவினா லானது. இந்நூல் கண்ணப்ப நாயனார் சிவபெருமானிடம் பக்தி (அன்பு) செய்து முக்தி பெற்ற வரலாற்றைக் கூறுகிறது. இறுதியில் ஒரு வெண்பாவையும் உடையது. நக்கீர தேவநாயனாரால் பாடப்பட்டது. இந்தச் செய்யுட்களைப் பாடிய நக்கீரதேவநாயனார், சங்க காலத்தில் இருந்த நக்கீரர் அல்லர். ஆனால், அவரும் இவரும் ஒருவரே என்று கூறுகின்றனர். இது தவறான கருத்து. நக்கீர தேவநாயனார் பாடிய மேற்காட்டிய செய்யுட்கள் எல்லாம் பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன. பதினோராந் திருமுறையை முதன்முதலாக அச்சிற்பதிப்பித்த திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்புராய செட்டியார் அவர்கள், “மதுரைக் கடைச்சங்கத்துத் தெய்வப் புலவர்களு ளொருவராகிய நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த கயிலை பாதி காளத்தி பாதித் திருவந்தாதி” என்று ஏட்டுச் சுவடியில் இருந்தபடியே எழுதியுள்ளார். கடைச்சங்க காலத்தில் இருந்த சங்கப் புலவரான நக்கீரரைப் பிற்காலத்தில் (களப்பிரர் காலத்தில்) இருந்த நக்கீரதேவநாயனார் என்பவருடன் இணைத்து இருவரும் ஒருவரே என்று கூறுவது பொருந்தாது. சங்க காலத்து நக்கீரருக்குத் தேவர் என்றும் நாயனார் என்றும் சிறப்புப் பெயர்கள் இருந்ததில்லை. கடைச்சங்க காலத்துப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை, பதினோராந்திருமுறையில் தொகுக்கப் பட்டுள்ளது. அதில் “நக்கீரதேவ நாயனார் அருளிச்செய்த திருமுருகாற்றுப்படை” என்று குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சங்க காலத்து நக்கீரரையும் பிற்காலத்திலிருந்த நக்கீரதேவ நாயனாரையும் சைவ சமயத்தவர் பிற்காலத்தில் ஒருவரே என்று தவறாகக் கருதினார்கள். (திருமுருகாற்றுப்படை கடைச்சங்க காலத்திலிருந்த நக்கீரரால் இயற்றப்பட்டது. திருமுருகாற்றுப்படை பிற்காலத்து நூல் என்று சிலர் கருதுவர். இவர்கள் கருத்துத் தவறானது (இணைப்பு 4 ‘நக்கீரர் காலம்’ காண்க). (திருமுருகாற்றுப்படை கடைச்சங்க காலத்தில் இருந்த நக்கீரரால் இயற்றப்பட்டது. அது பற்றிய ஆராய்ச்சி இங்கு வேண்டா.) நக்கீரர் அடிநூல், நக்கீரர் நாலடி நானூறு என்னும் இரண்டு செய்யுள் இலக்கண நூல்களைப் பற்றி முன்பு கூறினோம். அந்நூற்களின் ஆசிரியராகிய நக்கீரரே, இங்கு கூறப்பட்ட நக்கீர தேவநாயனார் என்று தோன்றுகிறது. நக்கீரதேவநாயனார் வேறு, நக்கீரர் வேறு என்பதையறிய வேண்டும். திருக்கண்ணப்பதேவர் திருமறம் நக்கீரதேவநாயனார் இயற்றிய திருக்கண்ணப்பதேவர் திருமறம் என்னும் நூலை மேலே கூறினோம். இந்தத் திருக்கண்ணப்ப தேவர் திருமறத்தைப் பாடியவர் கல்லாட தேவ நாயனார். இது முப்பத்தெட்டு அடிகளைக்கொண்ட அகவற் பாவாலானது. கண்ணப்ப நாயனாருடைய பக்தியைப் புகழ்ந்து பேசுகிறது இந்நூல். இந்தச் செய்யுள், சைவத் திருமுறைகளில் ஒன்றான பதினோரந் திருமுறையில் தொகுக்கப் பட்டிருக்கிறது. கடைச்சங்க காலத்தில் இருந்த கல்லாடதேவநாயனார் வேறு. அகநானூற்றில் ஏழு செய்யுட்களையும் குறுந்தொகையில் ஒரு செய்யுளையும் புற நானூற்றில் ஐந்து செய்யுட்களையும் பாடிய கல்லாடனார் என்னும் சங்கப் புலவர், தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் இருந்தவர். அந்தப் பாண்டியனை நேரில் பாடியவர். கண்ணப்ப தேவர் திருமறம் பாடிய கல்லாடதேவநாயனார் பிற்காலத்தில் (களப்பிரர் அரசர் காலத்தில்) இருந்தவர். இருவரும் வெவ்வேறு காலத்திலிருந்த வெவ்வேறு புலவர்கள். இருவரையும் ஒருவராகக் கருதுவது தவறு. மூத்த நாயனார் இரட்டை மணிமாலை இது, மூத்தநாயனார் (ஆனைமுகன்) மேல் பாடப்பட்ட வெண்பாவும் கலித்துறையும் ஆகிய செய்யுட்களினால் செய்யப் பட்ட இருபது செய்யுட்களையுடைய அந்தாதி நூல். இதனைச் செய்தவர் கபிலதேவநாயனார். இது பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை வெண்பாவும் கலித்துறையும் ஆகிய இரண்டு வகைச் செய்யுட்களினால் சிவபெருமான் மேல் பாடப்பட்ட தோத்திர நூல். முப்பத்தேழு செய்யுட்களைக் கொண்டது. கபிலதேவ நாயனாரால் பாடப்பட்டது. பதினோராந் திருமுறையில் தொகுக்கப் பட்டுள்ளது. சிவபெருமான் திருவந்தாதி வெண்பாக்களினால் அந்தாதித் தொடையாகச் செய்யப் பட்ட நூறு செய்யுட்களைக் கொண்ட தோத்திரநூல். கபில தேவநாயனார் செய்தது. இதுவும் பதினோராந் திருமுறையில் தொகுக்கப் பட்டிருக்கிறது. இந்த மூன்று செய்யுட்களையும் (மூத்த நாயனார் இரட்டை மணிமாலை, சிவபெருமான் இரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி) பாடியவர் கபிலதேவநாயனார். இவர் கடைச்சங்க காலத்தில் இருந்த கபிலர் அல்லர். பிற்காலத்தில் இருந்த கபிலதேவநாயனார். சங்க காலத்தில் இருந்த கபிலர் ஐங்குறு நூற்றில் குறிஞ்சித்திணையையும் கலித்தொகையில் குறிஞ்சிக் கலியையும் பாடியவர். அகநானூற்றில் பதினெட்டுச் செய்யுட்களையும், குறுந்தொகையில் இருபத்தேழு செய்யுட்களையும், புறநானூற்றில் இருபத்தெட்டுப் பாடல்களையும், பத்துப்பாட்டில் குறிஞ்சிப் பாட்டையும் பாடினார். மற்றும் பதிற்றுப்பத்து ஏழாம் பத்தைச் செல்வக்கடுங்கோ வாழியாதன் மேல் பாடியுள்ளார். அவர் வேறு, களப்பிரர் காலத்தில் பக்தி இயக்கம் தோன்றிய காலத்தில் இருந்த கபிலதேவநாயனார் வேறு. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பது என்னும் நூலைச் செய்தவர் கபிலதேவநாயனாரே. சங்க காலத்தில் மூத்த நாயனார் (கணபதி, பிள்ளையார்) வணக்கம் ஏற்படவில்லை மூத்த நாயனார் இரட்டை மணிமாலையை ஆனைமுகன் மேல் பாடிய கபிலதேவ நாயனார் பிற்காலத்தவர் என்பது வெளிப்படை, இவர் இயற்றிய இன்னா நாற்பது என்னும் நூலைப் பற்றிப் பதினெண் கீழ்க்கணக்கு என்னும் தலைப்பில் இந்நூலில் வேறு இடத்தில் காண்க. வித்துவான் திரு. வேங்கடராஜுலு ரெட்டியாரும் இக்கருத்தையே கூறுகிறார். “ பிற்காலத்து நூல்களிலேயே முதலில் விநாயக வணக்கம் காணப்படுகின்றது. இவற்றால், கி.பி.6ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ்நாட்டில் விநாயக வழிபாடு நடைபெற்றிலது என்பது அறியலாகும். ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ என்னும் நூலிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளது. இவற்றால், பண்டைத் தமிழ்ப் புலவராய் விளங்கிய கபிலர், தமது காலத்தில் வழக்காற்றிலில்லாத கடவுளை வழிபட்டுப் பாடியுள்ளார் என்று கூறுதல் பொருத்த முடையதாகாது. அன்றியும் இரட்டை மணிமாலை போன்ற பிரபந்தங்களும் அவர் காலத்தில் தோன்றியிருக்கவில்லை. கட்டளைக் கலித்துறைப் பாட்டுக்களும் கபிலர் காலத்தில் வழங்கவில்லை. அவ்வாறே பிரபந்தங்கள் பலவும், கபிலர் வாழ்ந்த காலத்தில் வழங்கின என்றல் பொருந்தாதே. அவை, அவர் காலத்துக்குப் பல நூற்றாண்டுகளின் பின்னர்த் தோன்றியனவே. ஆசிரியர் நச்சினார்க்கினியர் கருத்தும் இதுவேயாதலறிக. இவை யெல்லாவற்றையும் ஆராயாது பெயரொற்றுமை யொன்று மட்டும் கருதி, கபிலதேவநாயனாரைக் கபிலர் என்றும் பழம் புலவர் என்றும் கோடல் மயக்க உணர்வேயாகும்” (வித்துவான் வே. வேங்கடராஜுலு ரெட்டியார், கபிலர், 1936, பக்கம் 45). “பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பது என்னும் நூலைச் செய்தவரும் கபிலதேவநாயனாரே. இவர் இந்நூலில் கபிலர் என்று கூறப்படுகின்றார். இவர் சங்க காலத்துக் கபிலர் அல்லர். மூத்த நாயனார் இரட்டைமணிமாலை, இவற்றைச் செய்தவரே இந்தக் கபிலர் என்று தோன்றுகிறது” (மேற்படி நூல், கபிலரகவல் தலைப்பில்). சிவபெருமான் திருவந்தாதி பரணதேவநாயனார் இயற்றியது சிவபெருமான் திருவந்தாதி. இது நூறு வெண்பாக்களினால் அந்தாதித் தொடையாகப் பாடப்பட்டுள்ளது. பதினோராந்திருமுறையில் தொகுக்கப் பட்டுள்ளது. இவ்வந்தாதியின் கடைசியில் இதன் சிறப்பைக் கூறுகிற வெண்பா ஒன்று காணப் படுகிறது. இவர் சங்க காலத்தில் இருந்த பரணர் அல்லர். பக்தி இயக்கக் காலத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்த நக்கீரதேவநாயனார், கல்லாட தேவநாயனார், கபிலதேவநாயனாரைப் போலவே இந்தப் பரண தேவநாயனாரும் பிற்காலத்தில் இருந்தவர். சங்க காலத்துப் பரணர் அகநானூற்றில் 34 செய்யுட் களையும் குறுந்தொகையில் 16 பாடல்களையும் நற்றிணையில் 12 செய்யுட் களையும் புறநானூற்றில் 13 செய்யுட்களையும் பாடி யுள்ளார். மற்றும் சேரன் செங்குட்டுவன் மேல் பதிற்றுப்பத்து ஐந்தாம்பத்தைப் பாடினார். சோழன் உருவப்பஃறேரிளஞ்சேட் சென்னியையும் வையாவிக் கோப்பெரும் பேகனையும் பாடியுள்ளார். அவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கடைச்சங்க காலத்தில் இருந்தவர். சிவபெருமான் திருவந்தாதி பாடிய இந்தப் பரணதேவநாயனார் பிற்காலத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்தவர்.இவர் வேறு, அவர் வேறு. கீழ்க்கணக்கு நூல்கள் இதுவரையில் களப்பிரர் காலத்தில் சைவ, சமண சமயத்தவர் எழுதிய தமிழ் நூல்களைக் கூறினோம். களப்பிரர் காலத்தில் எழுதப் பட்ட வேறு நூல்களும் உள்ளன. அவை கீழ்க்கணக்கு நூல்கள். கீழ்க் கணக்கு நூல்களைப் பதினெட்டாகப் பிற்காலத்தில் தொகுத் துள்ளனர். பதினெட்டு கீழ்க்கணக்கு நூல்களில் காலத்தால் முற்பட்டவையும் பிற்பட்டவையும் உள்ளன. ஆனால், அவைகளில் பெரும்பான்மை யானவை களப்பிரர் ஆட்சிக்காலத்துக்குள்ளாக எழுதப்பட்டவை. பதினெண் கீழ்கணக்கு நூல்களாவன: 1. நாலடியார், 2. நான்மணிக் கடிகை, 3. இன்னாநாற்பது, 4. இனியவை நாற்பது, 5. கார்நாற்பது, 6. களவழிநாற்பது, 7. ஐந்திணை ஐம்பது, 8. திணைமாலை நூற்றைம்பது, 9. திணைமாலை ஐம்பது, 10. திணை மொழி ஐம்பது, 11. ஐந்திணை எழுபது, 12. முப்பால் (திருக்குறள்), 13. திரிகடுகம், 14. ஆசாரக்கோவை, 15. சிறுபஞ்ச மூலம், 16. முதுமொழிக் காஞ்சி, 17. ஏலாதி, 18. கைந்நிலை. இந்தக் கீழ்க்கணக்குப் பதினெட்டு நூல்களில் திருக்குறள், களவழிநாற்பது, முதுமொழிக்காஞ்சி ஆகிய மூன்றும் கடைச்சங்க காலத்தில் கி.பி 250க்கு முன்பு எழுதப்பட்ட நூல்கள். நாலடியார். என்னும் நூல் கி.பி. 7ஆம் நூற்றாண்டில், களப்பிரர் ஆட்சிக்குச் சற்றுப் பின்பு எழுதப்பட்டது. பிற பதினான்கு நூல்களும் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்கும் 6ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. திரு. பி.தி. சீனிவாச அய்யங்கார் போன்ற சிலர் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் கி. பி. 8 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டன என்று கூறுவர் (P. T. Srinivasa Aiyangar, History of the Tamils). இவர் கூறுவது தவறு. இது பற்றிய ஆய்வுரையை இணைப்பு 5இல் காண்க. கீழ்கணக்கு என்பதன் பொருள் என்ன என்பதைப் பார்ப்போம். மாந்தர் தம்முடைய உலக வாழ்க்கையில் அடைய வேண்டியவை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பயன்களாகும். இந்த நான்கு பயன்களில் வீடு (மோட்சம்) என்பது மறுமையில் பெறப்படுவது. மற்ற அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் இம்மையில் (இவ்வுலக வாழ்க்கையில்) அடையப் படுவன. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் கூறுகிற நூல்களுக்குக் கீழ்கணக்கு என்று பெயர் கூறினார்கள். இதைப் பழைய உரையாசிரியர்களும் திருநாவுக்கரசரும் கூறியுள்ளனர். அவற்றைக் காட்டுவோம். பேராசிரியர் என்னும் உரையாசிரியர், தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளில் 547 ஆம் சூத்திரத்துக்கு உரையில் இவ்வாறு கூறுகிறார்; வனப்பியல் தானே வகுக்குங் காலை சின்மென் மொழியாற் றாய பனுவலொடு அம்மை தானே அடிநிமிர் பின்றே “தாய பனுவலொ” டென்பது அறம் பொருள் இன்பமென்னும் மூன்றிற்கும் இலக்கணஞ் சொல்லும்; வேறிடையிடை அவை யன்றியும்தாய்ச் செல்வ தென்றவாறு. அஃதாவது பதினெண் கீழ்க்கணக்கென உணர்க. அதனுள் இரண்டடியானும் ஐந்தடி யானும் ஒரே செய்யுள் வந்தவானும், அவை சிலவாய மெல்லிய சொற்களான் வந்தவானும், அறம் பொருள் இன்பமென அவற்றுக்கு இலக்கணங் கூறிய பாட்டுப் பயின்று வருமாறும் கார்நாற்பது களவழிநாற்பது முதலாயின வந்தவாறுங் கண்டு கொள்க.” திருநாவுக்கரசு சுவாமிகள் கீழ்க்கணக்கைப் பற்றிக் கூறுவதைப் பார்ப்போம். திருக்குறுந்தொகை இன்னம்பர் பதிகத்தில் அடிகள் இவ்வாறு கூறுகிறார்; தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று அழுது காமுற்று அலற்று கின்றாரையும் பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும் எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே இம்மை வாழ்க்கையில் அறம், பொருள், இன்பங்களைப் பெற்று மறுமைக்கு அடையவேண்டிய கடவுள் வழிபாட்டைச் செய்யாதவர் களைக் கடவுள் கணக்கு எழுதிவைக்கிறார் என்று கூறுகிறார். அறம், பொருள், இன்பம் என்னும் இம்மைப் பயன்களைக் கீழ்க்கணக்கு என்று கூறுவது காண்க. அடிநிமிர் வில்லாச் செய்யுட் டொகுதி அறம் பொருள் இன்பம் அடுக்கி அவ்வகைத் திறம்பட வருவது கீழ்க்கணக் காகும் என்பது பன்னிருபாட்டியல். உலக வாழ்க்கையில் பெறவேண்டிய அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் கீழ்க்கணக்கு என்று கூறப்பட்டதைக் கண்டோம். இனி, களப்பிரர் காலத்தில் எழுதப்பட்ட கீழ்க்கணக்கு நூல்களைக் கூறுவோம். நான்மணிக்கடிகை இது 104 செய்யுட்களையுடையது. விளம்பிநாகனார் என்பவரால் செய்யப்பட்டது.இப்பெயரைக் கொண்டு இவர் விளம்பி என்னும் ஊரில் இருந்தவர் என்பது தெரிகிறது. ஒவ்வொரு வெண்பாவிலும் நான்கு நான்கு நீதிகளைக் கூறுகிறபடியால் நான்மணிக்கடிகை என்று பெயர் பெற்றது. இவர் வைணவ சமயத்தவர் என்பது இந்நூல் கடவுள் வாழ்த்தினால் அறிகிறோம். மதிமன்னு மாயவன் வாண்முகம் ஒக்கும் கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும் முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின் எதிர்மலர் மற்றவன் கண்ணொக்கும் பூவைப் புதுமலர் ஒக்கும் நிறம் என்பது இந்நூலின் கடவுள் வாழ்த்து. இன்னா நாற்பது இன்னாதவைகளைத் (துன்பந்தருகிற செயல்களை) தொகுத்துக் கூறுகிறபடியால் இந்நூல் இன்னாநாற்பது என்று பெயர் பெற்றது. நாற்பது வெண்பாக்களையுடையது. தனியாகக் கடவுள் வாழ்த்து ஒன்றைப் பெற்றுள்ளது. சிவபெருமான், பலராமன், மாயவன்(திருமால்), சத்தியான் (வேலாயுதனாகிய முருகன்) ஆகியோரைக் கடவுள் வாழ்த்தில் இதன் ஆசிரியர் கூறுகிறார். முக்கட் பகவன் அடிதொழாதார்க் கின்னா பொற்பனை வெள்ளையை யுள்ளாது ஒழுகின்னா சக்கரத் தானை மறப்பின்னா ஆங்கின்னா சத்தியான் தாள்தொழா தார்க்கு என்பது இந்நூல் கடவுள் வாழ்த்து. இதன் ஆசிரியர் பெயர் கபிலர். இந்த ஆசிரியரும் முன்பு கூறப்பட்ட கபிலதேவநாயனார் என்பவரும் ஒருவரே. இந்தக் கபிலர் (கபிலதேவநாயனார்) சங்க காலத்தில் பாரிவள்ளலின் நண்பரும் அவ்வள்ளல் இறந்த பிறகு செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பதிற்றுப்பத்து 7ஆம் பத்தில் பாடியவருமான சங்க காலத்துக் கபிலர் அல்லர். இந்தக் கபிலர் களப்பிரர் காலத்தில் இருந்த கபிலர். இந்தக் கபிலரும் மூத்தநாயனார் இரட்டை மணிமhலை, சிவபெருமான் திருவந்தாதி முதலான செய்யுட்களை இயற்றிய கபிலதேவநாயனாரும் ஒருவரே. இன்னாநாற்பது பாடிய கபிலரும் மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை,சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்ற நூல்களைப் பாடிய (பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டவை) கபிலதேவநாயனாரும் வெவ்வேறு கபிலர்கள் என்று திரு. சதாசிவபண்டாரத்தார் கருதுகிறார். இவர் மூன்று கபிலர்களைக் கூறுகிறார். சங்க காலத்தில் இருந்த கபிலர், அவருக்குப் பிறகு இன்னாநாற்பது பாடிய கபிலர், மூத்தநாயனார் இரட்டை மணிமாலை முதலான நூல்களை இயற்றிய கபிலதேவநாயனார் ஆகிய மூன்று கபிலர்கள் என்று கூறுகிறார். இதற்கு இவர் கூறும் காரணம், கபிலதேவநாயனார் மூத்த பிள்ளையார் மீது இரட்டை மணிமாலை பாடியிருப்பதும் சிவபெருமான் திருவந்தாதியில் திருச்சிராப்பள்ளி மலையில் சிவபெருமான் எழுந்தருளியிருப்பதாகக் கூறியிருப்பதும் ஆகும். அதாவது, மூத்தபிள்ளையார் (கணபதி) கி.பி. 7ஆம் நூற்றாண்டில் நரசிம்மவர்மன் மாமல்லன் காலத்தில், சிறுத் தொண்ட நாயனார் (பரஞ்சோதியார்) வாதாபியிலிருந்து கணபதி உருவங்களைக் கொண்டுவந்து தமிழ்நாட்டில் முதல் முதலாகக் கணபதி வணக்கத்தை உண்டாக்கினார் என்று பொதுவாகக் கூறப்படும் கருத்தை உடன்பட்டு, மூத்த பிள்ளையார் இரட்டைமணிமாலை பாடிடியிருப்பதனாலும் அந்தாதியில் திருச்சிராப்பள்ளிமலையில் சிவனுக்குக் கோயில் இருந்ததைக் கூறியிருப்பதனாலும், (திருச்சி மலையில் முதலாம் மகேந்திரவர்மன் ஒரு குகைக்கோவிலை அமைத்தான் என்பது கொண்டும்) சதாசிவ பண்டாரத்தார் கபிலதேவநாயனார் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கருதுகிறார் (பண்டாரத்தார், தமிழ் இலக்கிய வரலாறு கி.பி. 250-600,1965). மாமல்லன் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் சேனாதிபதியான பரஞ்சோதியhர் (சிறுத்தொண்டநாயனார்) இரண்டாம் புலிகேசியின் நகரமான வாதாபியை வென்று அங்கிருந்து கணபதி உருவங்களைக் (வாதாபி கணபதி) கொண்டுவந்து கணபதீச்சரம் என்னும் ஊரில் கணபதிக்குக் கோவில் கட்டினார் என்பது வரலாற்றறிஞரின் பொதுவான கருத்து. ஆனால், சிறுத்தொண்ட நாயனாருக்கு முன்பே களப்பிரர் ஆட்சிக் காலத்தில் கணபதி வழிபாடு தமிழகத்தில் இருந்தது என்று இப்போது ஆராய்ச்சியினால் அறியப்படு கிறது. மற்றும், கபிலதேவநாயனாரின் சிவபெருமான் திருவந்தாதியில் சிவபெருமான் திருச்சிராப்பள்ளி மலையில் எழுந்தருளியிருப் பதாகக் கூறியிருப்பது கொண்டு, அந்த மலையைக் கூறுகிற கபிலதேவநாயனார் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று திரு. சதாசிவபண்டாரத்தார் கருதுகிறார். சிவபெருமான் திருவந்தாதியில் காவிரி வந்தேறு மறுகிற்சிராமலையெங் கோமான் என்று சிராமலையில் இருந்த சிவபெருமானைக் கபிலதேவநாயனார் கூறினார் (சிவபெருமான் திருவந்தாதி, செய்யுள் 42). இதில், மகேந்திரவர்மன் அமைத்த குகைக் கோவிலைத்தான் இவர் கூறுகிறார் என்றுகருத வேண்டியதில்லை. அதற்கு முன்பு அம்மலைமேல் இருந்த சிவன் கோவிலைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆகவே, கபில தேவநாயனாரும், இன்னா நாற்பது கபிலரும் வெவ்வேறு கபிலர்கள் என்று கருதுவது வேண்டா. இருவரும் ஒருவரே என்பது எம்முடைய கருத்து. இனியவை நாற்பது இந்த நூலை இயற்றியவர் பெயர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனர். இது நாற்பது வெண்பாக்களையும் ஒரு கடவுள் வாழ்த்தையும் உடையது. மாந்தர் செய்யவேண்டிய இனிய (நல்ல) செயல்களைக் கூறுகிறது இந்நூல். இதன் கடவுள் வாழ்த்து இது: கண்மூன் றுடையான் தாள்சேர்தல் கடிதினிதே தொன்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே முந்துறப் பேணி முகநான் குடையானைச் சென்றமர்ந் தேத்தல் இனிது. திரிகடுகம் இது நூறு வெண்பாக்களையும் ஒரு கடவுள் வாழ்த்தையும் உடைய நூல். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துச் சரக்குகளைத் தனித்தனியே பொடி செய்து, இப்பொடிகளைச் சம அளவாகச் சேர்த்து, அமைக்கப்பட்ட மருந்து திரிகடுகம் என்பது. இதைத் திரிகடுகு சூரணம் என்றும் கூறுவர். இது காரமாக இருக்கும் . இதனால் இது திரிகடுகம் (மூன்று காரமான பொருள்) என்று பெயர் பெற்றது. இதை நாள்தோறும் காலையில் சிறு அளவாக உட்கொண்டால் உடல் நோயை நீக்கி நலம் உண்டாக்கும். திரிகடுக மாகிய சுக்கு, மிளகு, திப்பிலியைச் சமனளவாகச் சிதைந்து நீர்விட்டுக் காய்ச்சிய கியாழத்தையும் உட்கொள்ளலாம். திருகடுகக் கியாழமும் சூரணமும் உடல் நோயைப் போக்குவதுபோல, திரிகடுகம் என்னும் இந்நூலைப் படிப்பவரின் உள்ள நோய் (மனநோய்) நீங்கும் என்னும் கருத்தினால் இந்நூல் திரிகடுகம் என்று பெயர் பெற்றது. ஒவ்வொரு செய்யுளிலும் மும்மூன்று கருத்துகள் கூறப்படு கின்றன. இதன் கடவுள் வாழ்த்துச் செய்யுள் இது: கண்ணகன் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த் தண்ணறும் பூங்குருத்தம் சாய்த்ததூஉம்- நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும் பூவைப் பூவண்ணன் அடி ஆசாரக் கோவை இந்நூல் நூறு செய்யுட்களையும் ஒரு சிறப்புப் பாயிரத்தையும் உடையது. இந்நூல் வெண்பாவின் வகைகளான குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா ஆகிய வெண்பாக்களால் அமைந்த நூல். மனிதர் ஒழுகவேண்டிய ஒழுக்கங்களைத் தொகுத்து இதில் இதன் ஆசிரியர் கூறுகிறார். இதன் ஆசிரியர் பெருவாயில் முள்ளி என்பவர். கயத்தூர்ப் பெருவாயில் முள்ளி என்று கூறப்படுவதால், இவர் கயத்தூரைச் சேர்ந்த பெருவாயில் என்னும் ஊரில் இருந்தவர் என்று கருதலாம். புதுக்கோட்டையில் அன்னவாயில், சித்தன்னவாயில், பெருவாயில் என்னும் ஊர்கள் உள்ளன. ஆகவே, இவர் சிறப்புப்பாயிரம் இது: ஆரெயில் மூன்றும் அழித்தான் அடியேத்தி ஆரிடத்துத் தானறிந்த மாத்திரையான், ஆசாரம் யாரும் அறிய, அறனாய மற்றவற்றை ஆசாரக் கோவைஎனத் தொகுத்தான்; தீராத் திருவாயிலாய திறல்வண் சயத்தூர்ப் பெருவாயில் முள்ளி என்பான் பழமொழி நானூறு முன்றுறையரையர் என்பவர் இந்நூலின் ஆசிரியர். இந்நூல் கடவுள் வாழ்த்து உட்பட நானூறு வெண்பாக்களை யுடையது. ஒவ்வொரு வெண்பாவின் இறுதியிலும் ஒவ்வொரு பழமொழி கூறப் படுகிறது. எனவே, இதில் நானூறு பழமொழிகள் கூறப்படுகின்றன. இந்தப் பழமொழிகள் எல்லாம் இந்நூலாசிரியர் காலத்துக்கு முன்பு (களப்பிரர் ஆட்சிக் காலத்துக்கு முன்பு) வழங்கிவந்தவை. இந்நூலாசிரியர் ஆருகத மதத்தைச் சேர்ந்தவர். பிண்டியின் நீழற் பெருமான் அடிவணங்கிப் பண்டைப் பழமொழி நானூறும்- கொண்டினிதா முன்னுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான் இன்றுவை வெண்பா இவை! என்பது இந்நூல் தற்சிறப்புப் பாயிரம். சிறுபஞ்சமூலம் இந்நூல் நூற்றிரண்டு செய்யுட்களையும் இரண்டு சிறப்புப் பாயிரச் செய்யுட்களையும் உடையது. பஞ்சமூலம் என்பது ஐந்து வகையான வேர்கள். அவை கண்டக்கத்திரிவேர், சிறுவழு துணைவேர், சிறு மல்லிவேர், பெருமல்லிவேர், நெருஞ்சிவேர் என்பவை. இந்த ஐந்து வேர்களைக் கொண்டு சிறுபஞ்சமூலம் என்னும் மருந்து செய்யப்பட்டு நோயாளிகளுக்குத் தரப்பட்டது. இந்தச் சிறுபஞ்சமூலம் என்னும் நூலில் ஒவ்வொரு செய்யுளிலும் ஐந்துஐந்து பொருள்கள் கூறப்படு கின்றன. இவை உடல் நோயைத் தீர்க்கிற சிறுபஞ்சமூலம் போன்று மன நோயைத் தீர்ப்பன ஆகையால் சிறுபஞ்சமூலம் என்று பெயர் பெற்றது. இந் நூலாசிரியரின் பெயர் காரியாசான். இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் இது: முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம் பழுதின்றி யாற்றப் பணிந்து - முழுதேத்தி மண்பாய ஞாலத்து மாந்தர்க் குறுதியா வெண்பா உரைப்பான் சில ஏலாதி எண்பத்தேழு பாடல்களையுடைய இந்த நூலை எழுதியவர் பெயர் கணிமேதாவியார். கணி என்னும் சிறப்புப் பெயர், இவர் வானநூலைக் கற்றவர் என்பதைத் தெரிவிக்கிறது. வான நூலைப் பயின்றவர்கட்குக் கணி, கணியன் என்று பழங்காலத்தில் பெயர் இருந்தது. கணிதமேதாவியார் தமிழ்ப் புலமை பெற்றிருந்ததோடு வானநூலையும் கற்றிருந்தார் என்பது தெரிகிறது. ஏலாதி என்பது, திரிகடுகம், சிறுபஞ்சமூலம் என்பவை போன்று ஒரு மருந்தின் பெயர். ஏலம், இலவங்கப்பட்டை, நாகேசசுரம், மிளகு., திப்பிலி, சுக்கு என்று ஆறு வகையான சரக்குகளை மருத்துவ நூல் கூறும் அளவுப்படி ஒன்றாகச் சேர்த்துச் செய்யப்பட்ட சூரணத்துக்கு ஏலாதி என்பது பெயர். ஏலாதி என்னும் பெயருடைய இந்த நூலில் ஒவ்வொரு செய்யுளிலும் ஆறு பொருள்கள் கூறப்படுகின்றன. இவர் சமண சமயத்தவர். இல்லறநூல் ஏற்ற துறவறநூல் ஏயுங்கால் சொல்லறநூல் சோர்வின்றித் தொக்குரைத்து-நல்ல அணிமேதை யாய்நல்ல வீட்டு நெறியுங் கணிமேதை செய்தான் கலந்து என்பது இந்நூலின் பாயிரச் செய்யுள். கார் நாற்பது இது நாற்பது வெண்பாக்களையுடைய நூல். இது, அகப் பொருளில் முல்லைத்திணையைக் கூறுகிறது. அலுவல் காரணமாக வெளியூருக்குச் சென்ற தலைவன் தான் கார் காலத்தில் திரும்பி வருவதாகத் தன் தலைவிக்குக் (காதலிக்கு) கூறிச்சென்றான். அவன் சொன்ன கார் காலம் வந்ததும் அவன் திரும்பி வராதபடியால் தலைவி கவலைப்பட்டாள். தோழி அவளுக்கு ஆறுதல் கூறினாள். கடைசியில் காதலன் திரும்பி வந்தான். இவற்றைக் கூறுகிறது இந்தச் செய்யுள். இதனை இயற்றிய ஆசிரியர் பெயர் மதுரைக் கண்ணன் கூத்தனார். பொருகடல் வண்ணன் புளைமார்பில் தார்போல் திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானம் கருவிருந் தாலிக்கும் போழ்து என்பது இந்நூலின் பாயிரச் செய்யுள். ஐந்திணை ஐம்பது அகப்பொருளைப் பற்றிய ஐந்திணைகளும் பத்துப்பத்துப் பாக்களினால் இயற்றப்பட்டதாதலின் இந்நூல் ஐந்திணை ஐம்பது என்று பெயர் பெற்றது. இதைப் பாடியவர் மாறன் பொறையனார் என்னும் புலவர். இதன் பாயிரச் செய்யுள், பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரிய வன்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியார்த்த ஐந்திணை யைம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதவர் என்று கூறுகிறது. இதில் செந்தமிழ் என்பது அகப்பொருளைக் குறிக்கிறது. தமிழ் என்பதற்கு அகப்பொருள் என்னும் பொருளும் உண்டு. அகப்பொருளைத்தான் இச்செய்யுள் செந்தமிழ் என்று கூறிகிறது. திணைமொழி ஐம்பது அகத்திணை ஐந்துக்கும் திணையொன்றுக்குப் பத்துச் செய்யுளாக அமைத்து ஐம்பது பாக்களினால் இயற்றப்பட்டது இந்நூல். இந்நூலை இயற்றியவர் கண்ணன் சேந்தனார். இவருடைய தந்தையாரின் பெயர் சாத்தந்தையார். ஆகவே, இவர் சாத்தந்தையார் மகனார் கண்ணஞ் சேர்ந்தனார் என்று கூறப்பட்டார். ஐந்திணை எழுபது இந்நூலும் அகப்பொருள் ஐந்திணைகளைப் பற்றிக் கூறுகிறது. ஒவ்வொரு திணைக்கும் பதினான்கு பாக்களாக ஐந்து திணைகளுக்கு எழுபது பாடல்களைக் கொண்டது. இதன் ஆசிரியர் பெயர் மூவாதியார். இதன் கடவுள் வாழ்த்துக் கணபதியாகிய பிள்ளையாருக்குரியது. எண்ணும் பொருளினிதே யெல்லா முடித்தெமக்கு நண்ணுங் கலையனைத்து நல்குமால் -கண்ணுதலின் முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் ஆலஞ்சேர் கண்டத்தான் ஈன்ற களிறு என்பது இதன் கடவுள் வாழ்த்து. இந்தப் பிள்ளையார் கடவுள் வாழ்த்து இந்நூலாசிரியர் செய்த தன்று என்றும் பிற்காலத்தவர் யாரோ செய்தமைத்தது என்றும் திரு. சதாசிவ பண்டாரத்தார் கருதுகிறார். இதற்கு இவர் கூறும் காரணம் இது: “பிள்ளையாரென்று வழங்கப்பெற்று வரும் விநாயகக் கடவுளின் வழிபாடு கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழ்நாட்டில் தொடங்கியது என்பது ஆராய்ச்சியால் அறிந்ததோர் உண்மையாகும். எனவே, அக்கடவுளுக்கு வாழ்த்துக் கூறப்பட்டுள்ள பாடல் இந்நூலா சிரியரால் இயற்றப்பட்டதன்று என்பது தேற்றம். அக்கடவுள் வாழ்த்துச் செய்யுள் நூலின் புறத்தேயுள்ளமையும் அதற்குப் பழைய உரை காணப்படாமையும் இவ்வுண்மையை நன்கு வலியுறுத்துதல் அறியற்பாலதாம்” (சதாசிவப்பண்டாரத்தார், தமிழ் இலக்கிய வரலாறு கி.பி. 250-600, பக்கம் 65). விநாயகர் வழிபாடு தமிழகத்தில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் அவ்வரசனுடைய சேனாதி பதியான பரஞ்சோதியார் (சிறுத்தொண்டநாயனார்) காலத்தில் முதன் முதலாக உண்டாயிற்று என்னும் கொள்கையை ஆதாரமாகக் கொண்டு பண்டாரத்தார் அவர்கள் இவ்வாறு கூறுகிறார். விநாயகர் வணக்கம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் உண்டாயிற்று என்னும் கருத்து அண்மைக் காலத்தில் இருந்தது. ஆனால், கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முன்பே களப்பிரர் ஆட்சிக் காலத்திலேயே ஏற்பட்டிருந்தது என்பது இப்போது ஆராய்ச்சியினால் தெரிகிறபடியால் இக்கடவுள் வாழ்த்து இந்நூலுக்கு உரியதே எனக் கொள்ளலாம் (இது பற்றி இன்னா நாற்பது என்னும் தலைப்பில் விளக்கிக் கூறியிருப்பது காண்க). பண்டாரத்தார் அவர்களே இந்நூலாசிரியராகிய மூலாதியார் “கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தவர் ஆவார்” என்று கூறுகிறபடியால், இந்நூல் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டது என்பது தெளிவாகிறது. திணைமாலை நூற்றைம்பது இதுவும் அகப்பொருள் ஐந்திணைகளைக் கூறுகிற நூல். குறிஞ்சிக்கு 31 செய்யுளும் நெய்தலுக்கு 31 செய்யுளும் பாலைக்கு 30 செய்யுளும் முல்லைக்கு 31 செய்யுளும் மருதத்துக்கு 30 செய்யுளும் ஆக 153 செய்யுட்களைக் கொண்டிருக்கிறது. ஆனால், நூலின் பெயரி லிருந்து 150 செய்யுட்கள்தாம் இதற்கு ரியவை என்று தோன்றுகிறது. எஞ்சியுள்ள மூன்று செய்யுட்கள் பிற்காலத்து இடைச்செருகலாக இருக்குமோ, அல்லது, நூலாசிரியரே இச்செய்யுட்களையும் இயற்றியிருக்கலாமோ என்று ஐயம் ஏற்படுகிறது. இந்நூலாசிரியரின் பெயர் கணிமேதாவியார். இவரே ஏலாதி என்னும் நூலின் ஆசிரியர் என்பதை முன்பு அறிந்தோம். இந்நூலின் பாயிரம் இது: முனிந்தார் முனிbவாழியச் செய்யுட்கண் முத்துக் கனிந்தார் களவியற் கொள்கைக்-கணிந்தார் இணைமாலை யீடிலா வின்றமிழால் யாத்த திணைமாலை கைவரத் தேர்ந்து இந்தப் பாயிரத்தைப் பற்றித் திரு. சதாசிவ பண்டாரத்தார் தம்முடைய கருத்தைக் கூறியுள்ளார்கள். “அதனை (பாயிரத்தை) நோக்குமிடத்து, இவ்வாசிரியர் காலத்தில் அகப்பொருளாகிய களவியலை வெறுத்துக் கொண்டிருந்த ஒரு குழுவினர் நம் தமிழ்நாட்டில் இருந்திருத்தல் வேண்டும் என்பதும் அவர்கட்கு அதன் சிறப்பினை விளக்கி அவர்கள் கொண்டிருந்த வெறுப்பினைப் போக்க வேண்டியே இவ்வினிய நூலை இவர் இயற்றியிருத்தல் வேண்டும் என்பதும் நன்கு வெளியாகின்றன.” சைவ வைணவருக்கும் பௌத்த சமணருக்கும் அகப் பொருள் பற்றிக் கருத்து வேற்றுமை அக்காலத்தில் இருந்தது. பக்தி இயக்கம் தோன்றிய அக்காலத்தில் அகப்பொருளுக்குப் பேரின்பக் (தெய்வ) காதல் கொள்கையைச் சைவ, வைணவ சமயத்தார் புதியதாகக் கற்பித்துத் தங்கள் சமயத்தில் செய்யுட் களை இயற்றினார்கள். ஆனால், இந்தக் கொள்கையைப் பௌத்த சமயத்தாரும் சமண சமயத்தாரும் ஏற்றுக் கொள்ளாமல் இக்கொள்கைக்கு மாறுபட்டிருந்தார்கள். இந்தப் பாயிரச் செய்யுளில் ‘ஈடிலா இன்தமிழால் யாத்த திணைமாலை’ என்று கூறப்படுகிறது. இதில்‘இன்தமிழ்’ என்பது அகப்பொருளைச் சுட்டுகிறது. என்பது தெரிகிறது. ஐந்திணை ஐம்பது என்னும் நூலின் பாயிரச்செய்யுளில் செந்தமிழ் என்பது அகப்பொருளைச் சுட்டுகிறது என்பதைக் காண்டோம்.1 கைந்நிலை இதுவும் அகத்திணை பற்றிய நூல். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடல்களையுடைய அறுபது வெண்பாக்களைக் கொண்ட சிறு நூல். இதன் ஆசிரியர் மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார். இச்சிறு நூலிலுள்ள சில வெண்பாக்கள் அழிந்து மறைந்துபோயின. இந்த நூலை 1931ஆம் ஆண்டு திரு. அநந்தராமையர் அவர்கள் அச்சிட்டு வெளியிட்டார்கள். இதுவும் பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல் (மயிலை சீனி. வேங்கடசாமி, 19-ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம், 1962; பதினெண் கீழ்க்கணக்கு வரலாற்றைக் காண்க). களப்பிரர் காலத்தில் நுண்கலைகள் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் நுண்கலைகள் நன்றாக வளர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், அந்தக் கலைகளைப் பற்றிய விவரமான செய்திகள் கிடைக்க வில்லை. சங்க காலத்திலே வளர்ந்திருந்த நுண்கலைகளைப் பற்றிச் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் நூல்களிலிருந்து அறிகிறோம். அதன் பிறகு களப்பிரர் ஆட்சிக் காலத்தில் அந்தக் கலைகள் மேலும் வளர்ந்திருக்க வேண்டும் என்று நம்பலாம். ஆனால். அந்தக் காலத்துக் கலைகளைப் பற்றி அறிவதற்கு ஆதாரமான சான்றுகள் கிடைக்கவில்லை. கிடைத்துள்ள சான்றுகளும் குறைவாகவே கிடைத்துள்ளன. நுண்கலை என்னும் அழகுக்கலைகளை ஐந்தாகக் கூறுவர். அவை கட்டடக் கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை என்பவை. நமது நாட்டுச் சிற்பக்கலை நூல்கள் கட்டடக் கலையையும் சிற்பக் கலையையும் ஒன்று சேர்த்துச் சிற்பக்கலை என்றே கூறுகின்றன. இசைக்கலை என்பதில் கூத்தும் நாடகமும் அடங்கும். களப்பிரர் காலத்தில் இருந்த இந்த நுண்கலைகளைப் பற்றிப் பார்ப்போம். கட்டடக்கலை சைவம், வைணவம், பௌத்தம், சமணம் ஆகிய நான்கு மதங் களும் இருந்த களப்பிரர் காலத்துத் தமிழகத்தில் கட்டடக்கலை வளர்ந்திருக்க வேண்டும். இந்த மதங்களின் கோயிற் கட்டடங்கள் கட்டாயம் இருந்திருக்க வேண்டும். அந்தக் கட்டடங்கள் செங்கல், சுண்ணாம்பு, மரம், இரும்பு ஆகிய பொருள்களைக் கொண்டு கட்டப் பட்டவையாகையால் அவை இக்காலத்தில் நிலைபெற்றிருக்கவில்லை. கருங்கற்களை ஒன்றின் மேல் அடுக்கிக் கட்டப்படுகிற கற்றளிக் கோயில் கட்டடங்களும் பாறைகளைக் குடைந்து அமைக்கப்படும் குகைக் கோவில்களும் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் மகேந்திரவர்மன் காலத்தில் உண்டாகவில்லை. அவை பிற்காலத்தில் முதல் மகேந்திர வர்மன் காலத்தில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் உண்டாக்கப்பட்டவை. (பிள்ளையார்பட்டி குகைக்கோவில் களப்பிரர் காலத்தில் உண்டாக்கப் பட்ட குகைக்கோயிலாக இருக்கலாமோ என்னும் ஐயம் தோன்றுகிறது. இதுபற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.) களப்பிரர் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இருந்த திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தங்களுடைய தேவாரப் பதிகங்களில் கூறுகிற கோவிற் கட்டட வகைகளான கரக் கோவில், நாழற்கோவில், கோகுடிக்கோவில், பெருங்கோவில், இளங்கோவில், மாடக்கோவில், தூங்கானை மாடம், மணிக்கோவில் முதலான கட்டட வகைகள் களப்பிரர் காலத்திலேயே தோன்றி இருக்க வேண்டும். ஏனென்றால், இந்தக் கட்டட வகையெல்லாம் திடீரென்று 7ஆம் நூற்றாண்டிலே தோன்றியிருக்க முடியாது. அக்காலத்தில் அவை செங்கற் கட்டடங்களாக இருந்தன. கி.பி. 7ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முதல் மாமல்லன் நரசிம்மவர்மன் என்னும் பல்லவ அரசன் காலத்தில் மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்ட பஞ்சபாண்டவ ரதங்கள் முதலான கோவில் அமைப்புகள் அவன் காலத்துக்கு முன்பு களப்பிரர் ஆட்சிக் காலத்தில் அல்லது அதற்கு முன்பு இருந்த செங்கற் கட்டடங்களின் மாதிரியைக் காட்டுகிற பாறைக்கல் அமைப்புகள். இந்தப் பாறைக் கற்கோவில்களில் பல அகநாழிகை (கர்ப்பக்கிருகம்) இல்லாமலே கட்டடத்தின் மேற்புறத் தோற்றம் மட்டும் பாறைக் கல்லில் அமைத்துக் கட்டப்பட்டுள்ளன. ஆகையால், மாமல்லபுரத்து இரதக் கோவில்கள், செங்கற்கட்டடங்களாக இருந்த பழைய கோவில்களின் தத்ரூப உருவ அமைப்புகள் என்பதில் ஐயமில்லை. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பௌத்தரும் சமணரும் பள்ளி களையும் விகாரங்களையும் கட்டியிருந்தனர். அந்தக் கட்டடங்களின் உருவ அமைப்பும் இந்தக் கட்டங்களின் அமைப்புப் போலவே இருந் திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சமண சமயக் கோவில் களுக்குச் சினகரம் என்று பெயர் இருந்தது (ஜினன் + நகரம் = ஜினகரம், சினகரம்). விஷ்ணுவின் கோயிலுக்கு விண்ணகரம் என்று பெயர் இருந்தது. சமண, பௌத்தக் கோவிலுக்குச் சேதியம் என்னும் பெயரும் உண்டு. பௌத்தப் பிக்குகள் இருந்த ஆசிரமம் அல்லது விகாரைகள் பெரிய கட்டடங்கள். அவை காஞ்சி, நாகை, உறையூர், காவிரிப் பூம்பட்டினம் முதலான நகரங்களில் இருந்தன. காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்த பௌத்த விகாரை, நெடுஞ்சுவர்களும் பெரிய வாயில்களும் உடையதாக வெண்சுதை பூசப்பெற்றுக் கயிலாயம் போன்று இருந்ததென்றும் அது கண (கண்ண) தாசன் என்னும் அமைச்சனால் (களப்பிர அரசனுடைய அமைச்சன்) கட்டப்பட்ட தென்றும் அபிதம்மாவதாரம் என்னும் பௌத்த மத நூல் கூறுகிறது. சோழ நாட்டில் பூதமங்கலம் என்னும் ஊரில் இருந்த பௌத்த விகாரையைக் கட்டியவர் வேணுதாசர் (விஷ்ணுதாசர்) என்று வினயவினிச்சயம் என்னும் நூல் கூறுகிறது. இவையெல்லாம் செங்கற்கட்டடங்களே. சிற்பக்கலை சிற்பக்கலை என்பது தெய்வங்கள், மனிதர், மிருகம், பறவை, மரம், செடி, கொடி முதலியவைகளின் உருவங்களைச் சுதை, மரம், கல் முதலியவற்றில் அமைப்பது. சிற்பக்கலையையும் கட்டடக் கலையையும் சிற்பம் என்றே நமது நாட்டுக் கலை நூல்கள் கூறுகின்றன. களப்பிரர் காலத்துச் சிற்பங்களும் கிடைக்க வில்லை. சுதை, மரங்களினால் செய்யப்பட்டபடியால் அவை அழிந்து போயின. கருங்கல்லில் சிற்பவடிவங்கள் புடைப்புச் சிற்பமாக (புடைப்புச் சிற்றம் - Basrelief) அமைக்கப்பட்டன. ஓவியக்கலை ஓவியம் என்பது சித்திரம். ஓவியம் பலவித நிறங்களினால் எழுதப்பட்டது. அந்தக் காலத்து ஓவியங்கள் பெரும்பாலும் சுவர்களில் எழுதப்பட்ட சுவர் ஓவியங்களே. பௌத்த, சைன விகாரைகளிலும் பள்ளிகளிலும் கோவில்களிலும் சுவர் ஒவியங்கள் எழுதப்பட்டன. கடைச்சங்க காலத்தில் திருப்பரங்குன்றத்தின் மேல் இருந்த முருகக் கடவுளின் ஆலயத்தின் மண்டபச் சுவர்களில் வண்ண ஓவியங்கள் எழுதப்பட்டிருந்ததைப் பரிபாடல் கூறுகிறது. ‘சுவரை வைத்தல்லவோ சித்திரம் எழுத வேண்டும்’ என்னும் பழமொழி, கட்டடச் சுவர்களில் சித்திரங்கள் எழுதப்பட்டதைத் தெரிவிக்கிறது. படத்தில் (படம் - துணி) சித்திரம் எழுதும் பழக்கமும் இருந்தது. படம் என்னும் சொல் துணியில் எழுதப்பட்ட ஓவியத்துக்குப் பெயராம். இக்காலத்தில் பலகை, காகிதம் ஆகிய பொருள்களில் எழுதப்பட்ட ஓவியங்களுக்குப் படம் என்று கூறப்படுகிறது. ஓவியக்கலை எளிதில் மறைந்துவிடக் கூடிய இயல்புடையது. களப்பிரர் காலத்துக் கட்டடங்கள் அழிந்து போனபடியால் அக்காலத்துச் சுவர் ஓவியங்களும் மறைந்து போயின. துணியில் எழுதப்பட்ட படங்களும் மறைந்து போயின. இசைக்கலை நுண்கலைகளில் ஓவியக்கலைக்கு அடுத்தபடியாகக் கூறப்படுவது இசைக்கலை. இசையில் யாழ், குழல், முடிவு முதலான இசைக் கருவிகளும் அடங்கும். இசைக்கலையோடு கூத்துக் (நாடகம்) கலையும் அடங்கும். கூத்துக்கலையைப் பரத நாட்டியம் என்று இக்காலத்தில் வழங்குகிறோம். இசையும் கூத்தும் சங்க காலத்திலே பெரிதும் வளர்ந்திருந்ததைச் சிலப்பதிகாரத்தினால் அறிகிறோம். களப்பிரர் காலத்தில் இந்தக் கலைகள் மேலும் வளர்ந்திருந்தன என்பதை அறிகிறோம். களப்பிரர் காலத்தில் இருந்த காரைக்கால் அம்மையார் பதிகம் என்னும் இசைப் பாடலைப் பாடியுள்ளார். தேவாரப் பதிகங்கள் இசைப்பாடல்களே. தேவாரப் பதிகங்களைப் பாடிய அப்பர், சம்பந்தர் காலத்துக்கு முன்னே களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்த காரைக்கால் அம்மையார் முதல்முதல் பதிகம் (இசைப் பாடல்) பாடினார். அவர் பாடியவை இரண்டு பதிகங்கள். அவை திருவாலங்காட்டுச் சிவபெருமான் மேல் பாடப்பட்டவை. அப்பதிகங் களுக்கு திருவாலங்காடு மூத்த திருப்பதிகங்கள் என்று பெயர். திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் ஆகிய சைவ சமயக் குரவர்கள் பதிகம் பாடுவதற்கு முன்பு பாடியதால் இப்பதிகங்களுக்கு மூத்த திருப்பதிகங்கள் என்று பெயர் உண்டாயிற்று. முதல் பதிகத்தின் பண் நட்ட பாடை. இரண்டாம் பதிகத்தின் பண் இந்தளம். காரைக்கால் அம்மையார் பாடிய முதலாம் மூத்த திருப்பதிகத்தில் 9ஆம் பாடலில் பண்களின் பெயர்களையும் இசைக்கருவிகளின் பெயர்களையும் கூறுகிறார். அப்பாடல் வருமாறு: துத்தம் கைக்கிளை விளரி தாரம் உழை இளி ஓசை பண்கெழுமப் பாடிச் சச்சரி கொக்கரை தக்கையோடு தகுணிச்சற் துந்துமி தாளம் வீணை மத்தளங் காடிகை முன்கை மென்தோல் தமருகம் குடாமுழா மொந்தை வாசித் தத்தன்மை வினோ டாடு மெங்கள் அப்பனிடம் திருவாலங்காடே களப்பிரர் காலத்தில் இசைக்கலை முன்பிருந்ததைவிட அதிக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றின் விவரம் தெரிய வில்லை. கூத்துக்கலையும் களப்பிரர் காலத்தில் வளர்ந்திருந்தது. இசையும் கூத்தும் தமிழரின் பழமையான செல்வங்கள். சங்க காலத்தில் இசையும் கூத்தும் வளர்ந்திருந்ததைச் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டு காவியங்களினால் அறிகிறோம். களப்பிரர் காலத்தில் கூத்துக்கலையும் இசைக்கலையைப் போலவே வளர்ந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. களப்பிரர் காலத்தில் கூத்துக் கலையைப் பற்றி ஒரு நூல் எழுதப்பட்டிருந்தது. அந்நூலை எழுதியவர் விளக்கத்தார் (விளக்கத்தனார்) என்பவர். அந்நூலின் பெயர் விளக்கத்தனார் கூத்து என்பது. அது அச்சுதன் என்னும் களப்பிர அரசன் காலத்தில் எழுதப்பட்டது. அந்நூலின் கடவுள் வாழ்த்துக் கிடைத் திருக்கிறது (இணைப்பு 1இல் காண்க). வாழ்த்தைத் தவிர பிற பகுதிகள் முழுதும் கிடைக்கவில்லை (மயிலை சீனி. வேங்கடசாமி, மறைந்து போன தமிழ் நூல்கள், 1967, பக்கம் 221; விளக்கத்தனார் கூத்து காண்க). காவியக்கலை ஐந்து நுண்கலைகளில் மிகவும் சிறந்தது காவியக்கலை. கட்டடக்கலையும் சிற்பக்கலையும் ஓவியக்கலையும் கண்ணால் கண்டு இன்புறத்தக்கவை. இசைக்கலை காதால் கேட்டு இன்புறுவது. காவியக்கலை அறிவினால் உணர்ந்து இன்புறத்தக்கது. ஆகவே, காவியக்கலை அழகுக் கலைகளில் சிறந்தது என்பர். காவியத்தில் ஒன்பது வகையான சுவைகளைக் (நவரசங் களை) காணலாம். களப்பிரர் காலத்துக் காவியங்களில் தலைசிறந்தது சீவகசிந்தாமணி. அதற்கு அடுத்ததாக உள்ளது பெருங்கதை எனப்படும் உதயணன்கதை. கவிச்சக்கரவர்த்தி யாகிய கம்பன் சிந்தாமணிக் காவியத்திலிருந்து பல கருத்துகளை முகந்து கொண்டான் என்பர். பெருங்கதையில் அதிகமாகத் திரிசொற்கள் இருப்பதனால் அதனைப் படித்து விளங்கிக் கொள்வது சற்றுக் கடினந்தான். பலாப்பழத்தை அறுப்பது கடினம். பிசுபிசுப்பையும் அதனுள்ளிருக்கும் நார்களையும் அப்புறப்படுத்துவதும் கடினம். பிறகு பலாச்சுளைகளை உண்பது இன்பம். அதுபோலத்தான் பெருங்கதையைப் படித்து இன்புறுவதும். களப்பிரர் காலத்தில் உண்டான இந்தச் சிந்தாமணியும் பெருங்கதையும் சமணர் செய்த காவிய நூல்களாகும்.  இணைப்பு 1 களப்பிரர் பற்றிய வாழ்த்துப் பாக்கள் 1 அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா (தரவு) கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் தொழுதேத்தக் கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைஇ அழலவிர் சுழல்செங்கண் அரிமாவாய் மலைந்தானைத் தாரோடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க ஆர்புனல் இழிகுருதி அகலிடம் உடனனைப்பக் கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்! (தாழிசை) முரைசதிர் வியன்மதுரை முழுவதூஉம் தலைப்பனிப்பப் புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த - மறமல்லர் அடியோடு முடியிறுப்புண் டயர்ந்தவன் நிலஞ்சேரப் பொடியெழ வெங்களத்துப் புடைத்துநின் புகழாமோ? கவியொலி வியனுலகம் கலந்துட னனிநடுங்க வலியியல் அவிராழி மாறெதிர்ந்த மருட்கோவும் மாணாதார் உடம்போடு மறம்பிதிர வெதிர்கலங்கச் சேணுயர் இருவிசும்பிற் செகுத்ததுநின் சினமாமோ? படுமணி இனநிரைகள் பரந்துடன் இரிந்தோடக் கடுமுரண் எதிர்மலைந்த காரொலி எழிலேறு வெரிநொடு மருப்பொசிய வீழ்த்துதிறல் வேறாக எருமலி பெருந்தொழுவின் இறுத்ததுநின் இல்லாமோ? (அம்போதரங்கம்) (பேரெண்) இலங்கொளி மரகதம் எழில்மிகு வியன்கடல் வலம்புரித் தடக்கை மாஅல் நின்னிறம் விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும் பொருகளி றட்டோய்! புரையும் நின்னுடை (சிற்றெண்) கண்கவர் கதிர்மணி கனலும் சென்னியை தண் சுடர் உறுபகை தவிர்த்த ஆழியை ஒலியியல் உவணம் ஓங்கிய கொடியினை வலமிகு சகடம் மாற்றிய அடியினை (இடையெண்) போரவுணர்க் கடந்தோய் நீ புணர் மருதம் பிளந்தோய் நீ நீரகிலம் அளந்தோய் நீ நிழல்திகழும் படையோய் நீ (அளவெண்) ஊழி நீ உலகு நீ உருவு நீ அருவு நீ ஆழி நீ அருளு நீ அறமு நீ மறமு நீ (தனிச்சொல்) எனவாங்கு (சுரிதகம்) அடுதிறல் ஒருவநிற் பரவுதும் எங்கோன் தொடுகழற் கொடும்பூட் பகட்டெழில் மார்பிற் கயலொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன் தொன்று முதிர்கட லுலகம் முழுதுடள் ஒன்றுபுரி திகிரி உருட்டுவோன் எனவே. 2 தலையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா பெருந்தேவபாணி (தரவு) அலைகடற் கதிர்முத்தம் அணிவயிரம் அவையணிந்து மலையுறைமா சுமந்தேந்தும் மணியணைமேல் மகிழ்வெய்தி ஓசனைசூழ் திருநகருள் உலகொருமூன் றுடனேத்த ஈசனையாய் இனிதமர்ந்தங் கிருடிகட்கும் இறையவர்க்கும் அருளறமே அறமாக அயலார்கண் மயலாக இருளறநன் கெடுத்தியம்பி இருவினை கடிந்திசினோய்! (தாழிசை) துன்னாத வினைப்பகையைத் துணிசெய்யும் துணிவினையாய் இன்னாத பகைமுனைபோல் எரித்தடக்கும் நினைப்பினால் இருளில்லா உணர்வென்னும் இலங்கொளியால் - எரித்தனையாய் அருளெல்லாம் அடைந்தெங்கண் அருளுவதுன் - அருளாமோ? மதிபுரைமுக் குடைநீழல் மகிழ்வெய்தி அடைந்தோரைக் கதிபொருதக் கருவரைமேல் கதிர்பொருத முகம்வைத்துக் கொன்முனைபோல் வினைநீங்கக் குளிர்நிழற்கண் மகிழ்ந்தனிர்போல் நின்மினீர் எனவுணர்த்தல் நிருமல நின் பெருமையோ? மனைதுறந்து வனம்புகுமின் மலமறுக்கல் உறுவீரேல் வினையறுக்கல் உறுவார்க்கு விழுச்செல்வம் பழுதென் றீங் கலகில்லாப் பெருஞ்செல்வத் தமரரசர் புடைசூழ உலகமெல்லாம் உடன்றுறவா உடைமையுநின் உயர்வாமோ (அராகம்) அரசரும் அமரரும் அடிநிழல் அமர்தர முரசதிர் இமிழிசை முரணிய மொழியினை (அம்போதரங்கம்) (பேரெண்) அணிகிளர் அவிர்மதி அழகெழில் அவிர்சுடர் மணியொளி மலமறு கனலி நின்னிறம் மழையது மலியொலி மலிகடல் அலையொலி முழையுரை அரியது முழக்கம் நின்மொழி (இடையென்) வெலற்கரும் வினைப்பகை வேரொடும் வென்றனை சொலற்கரு மெய்ப்பொருள் முழுவதும் சொல்லினை அருவினை வெல்பவர்க் கரும்புணை ஆயினை ஒருவினை ஆகி உலகுடன் உணர்ந்தனை (சிற்றெண்) உலகுடன் உணர்ந்தனை உயிர் முழு தோம்பினை நிலவுறழ் ஆக்கையை மாதவர் தாதையை மலர்மிசை மகிழ்ந்தனை புலவருட் புலவனை (தனிச்சொல்) எனவாங்கு (சுரிதகம்) அருளுடை ஒருவர் நிற் பரவுதும் எங்கோ இருளறு திகிரியொடு வலம்புரித் தடக்கை ஒருவனை வேண்ட இருநிலம் கொடுத்த நந்தி மால்வரைச் சிலம்பு நந்தி ஒற்றை செங்கோல் ஓச்சிக் கொற்ற வெண்குடை நிழற்றுக எனவே. 3 அம்போதரங்க ஒரு போகு (தாழிசை கரைபொருநீர்க் கடல்கலங்கக் கருவரைமத் ததுவாகத் திரைபொருது புடைபெயரத் திண்டோளாற் கடைந்தனையே முகில்பெரு துடல்கலங்க முழவுத்தோள் புடைபெயர வரைபெரிய மத்தாக வாளரவம் கயிறாகத் திரையிரியக் கடல்கடைந்து திருமகளைப் படைத்தனையே (அராகம்) (பேரெண்) அமரரை அமரிடை அமருல கதுவிட நுமரது புகழ்மிக மிகவிகல் அடுத்தனை அலைகடல் உலகமும் அந்தணர்க் கீந்தனை உலகொடு நிலவிய ஒருபுகழ் சுமந்தனை (இடையெண்) ஆதிக்கண் அரசெய்தினை நீதிக்கண் மதிநிரம்பினை விளங்கெரி முதல்வேட்டனை துளங்கெரியவர் புகழ்துளக்கினை (அளவெண்) அலகு நீ உலகு நீ அருளு நீ பொருளு நீ நிலவு நீ வெயிலு நீ நிழலு நீ நீரு நீ (தனிச்சொல்) எனவாங்கு (சுரிதகம்) பவழம் எறிதிரைப் பரதைக் கோவே! புகழ்துறை நிறைத்த பொருவேல் நந்தி! உலகுடன் அளந்தனை நீயே, உலகொடு நிலவுமதி உதயவரை ஒத்தே. 4 வண்ணக ஒரு போகு (அராகம்) அகலிடமும் அமருலகும் அமர்பொருதும் அறந்தோற்றுப் புகலிடநின் குடைநிழலாப் புகுமரணம் பிறிதின்றி மறந்தோற்று நிறங்கருகி மாற்புகழும் நிறைதளரப் புறந்தோற்றுக் கழலார்ப்பப் பொருதகளம் வெறிதாக மண்ணுலகும் மறிகடலும் மாமலையும் நிலைகலங்க விண்ணுலகம் வியப்பெய்த வெஞ்சமத்துள் அலைத்தனையே அதனால், கனைகடல் உடைதிரை கரைபொரக் கடைந்தனை முனைவரும் அமரரும் முறைமுறை வந்துநின் இணைமலர் பலர்புகழ் பயில்வருதார் பண்பினை மருளுறு துதைகதிர் மணியது மணிநிற மருளும் நின்குடை குடையது குளிர்நிழல் அடைகுன உயிர்களை அளிக்கும் நின்கோல் கோலது செம்மையிற் குரைகடல் வளாகம் மாலையும் காலையும் மகிழ்தூங் கின்று (பேரெண்) ஆருயிர்க் கெல்லாம் அமிழ்தின் றமையா நீரினும் இனிதுநின் அருள் அருளும் அலைகடலும் ஆயிரண்டும் ஒக்கும் இருள்கொடிமேற் கொண்டாய் நினக்கு (சிற்றெண்) நீரலகம் காத்தோய் நீ நீலவுலகம் ஈந்தோய் நீ போரமர் கடந்தோய் நீ புனையெரிமுன் வேட்டோய் நீ ஒற்றைவெண் குடைபோய் நீ கொற்றச்செங் கோலாய் நீ பாகையந் துறைவனீ பரியவர் இறைவனீ. (தனிச்சொல்) எனவாங்கு (சுரிதகம்) பொருகடல் வளாகம் ஒருகுடை நிழற்றி இருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து மனமகிழ்ந்து அருள்புரி பெரும்புகழ் அச்சுதர் கோவே! இனையை ஆதலின் பனிமதி தவழும் நந்தி மாமலைச் சிலம்ப நந்திநிற் பரவுதல் நாவலர்க் கரிதே! 5 அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா (தரவு) நலங்கிளர் திருமணியும் நன்பொன்னும் குயின்றழகார் இலங்கெயிற் றழலரிமான் எருத்தஞ்சேர் அணையின்மேல் இருபுடையும் இயக்கரசர் இணைக்கவரி எடுத்தெறிய விரிதாமம் துயரரூஉம் வெண்குடைமூன் றுடனிழற்ற வண்டாற்ற நாற்காதம் வகைமாண உயர்ந்தோங்கும் தண்டளிர்ப்பூம் பிண்டிக்கீழ்த் தகைபெறவீற்றிருந்தனையே (தாழிசை) ஒல்லாத பிறப்புணர்த்தும் ஒளிவட்டம் புடைசூழ எல்லார்க்கும் எதிர்முகமாய் இன்பஞ்சேர் திருமுகமோ ஏர்மலர மணிப்பொய்கை எழிலாம்பற் பொதியவிழ ஊர்கோளோ டுடன்முளைத்த ஒளிர்வட்டம் உடைத்தன்றே! கனல்வயிரம் குறடாகக் கனற்பைம்பொன் சூட்டாக இனமணி ஆரமா இயன்றிருள் இரிந்தோட அந்தரத் துருளுநின் அலர்கதிர் அறவாழி இந்திரர்கள் இனிதேத்த இருவிசும்பிற் றிகழ்ந்தன்றே! வாடாத மணமாலை வானவர்கள் உள்ளிட்டார் நீடாது தொழுதேத்த நிற்சேர்ந்த பெருங்கண்ணு முகிழ்பருதி முகநோக்கி முறுவலித் துண்ணெகிழ்ந்து திகழ்தகைய கோட்டைசூழ் திருநதிகள் திளைத்தன்றே! (அம்போதரங்கம்) (பேரெண்) மல்லல் வையம் அடிதொழு தேத்த அல்லல் நீக்கற் கறப்புனை ஆயினை ஒருதுணி வழிய உயிர்க்காண் ஆகி இருதுணி ஒருபொருட் கியல்வகை கூறினை (இடையெண்) ஏடலர் தாமரை ஏந்தும் நின்னடி வீடொடு கட்டினை விளக்கும் நின்மொழி விருப்புறு தமனிய விளக்கு நின்னிறம் ஒருக்குல கூடுற உஞற்றும் நின்புகழ் (சிற்றெண்) இந்திரர்க்கும் இந்திரன் நீ இணையில்லா இருக்கையை நீ மந்திர மொழியினை நீ மாதவர்க்கு முதல்வனும் நீ அருமை சால் அறத்தினை நீ ஆருயிரும் அளித்தனை நீ பெருமைசால் குணத்தினை நீ பிறர்க்கறியாத் திறத்தினை நீ (தனிச்சொல்) எனவாங்கு (சுரிதகம்) அருள்நெறி ஒருவ! நிற் பரவுதல் எங்கோத் திருமிகு சிறப்பிற் பெருவரை அகலத் தென்மிகு தானைப் பண்ணமை நெடுந்தேர் அண்ணல் யானைச் செங்கோல் விண்ணவன் செபிமனை செறுக்கறத் தொலைச்சி ஒருதனி வெண்குடை ஓங்குக எனவே.1  இணைப்பு - 2 வச்சிரநந்தியின் திரமிள சங்கம் மூன்று வகையான சங்கங்கள் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் (கி.பி. 470ஆம் ஆண்டில்) மதுரை நகரத்தில் திரமிள (திராவிட- தமிழ) சங்கத்தை வச்சிரநந்தி அமைத்தார் என்று அறிந்தோம். வச்சிரநந்தி ஏற்படுத்திய சங்கம் சைன மதத்தை வளர்ப்பதற்கான சங்கமாகும் (சங்கம்- கூட்டம்). பௌத்தப் பிக்குகளின் கூட்டத்துக்குப் பௌத்த சங்கம் என்பது பெயர். பௌத்தப் பிக்குகளின் சங்கத் தலைவர் சங்க பாலர் என்று பெயர் கூறப்பெற்றார். பௌத்தர்களுடைய மும்மணி களில் பௌத்தப் பிக்குகளின் சங்கமும் ஒன்று. சங்கம் சரணம் கச்சாமி என்பது காண்க. இதன் பொருள் பௌத்த சங்கத்தைச் சரணம் அடைகிறேன் என்பது. சைனத் துறவிகளின் கூட்டத்துக்கும் சங்கம் என்பது பெயர். சங்கத்தைச் (கூட்டத்தை) சைனர் கணம் என்றும் கூறுவர். கணம் என்றாலும் சங்கம் என்றாலும் ஒன்றே. களப்பிரர் ஆட்சிக்கு முன்னே பாண்டியர் தமிழ் மொழியை ஆராய்வதற்குப் புலவர்களின் கூட்டத்தை ஏற்படுத்தினார்கள். அந்தக் கூட்டத்துக்குத் தமிழ்ச் சங்கம் என்பது பிற்காலத்துப் பெயர். அதன் பழைய பெயர் தமிழ்க் கழகம் என்பது. பிற்காலத்துப் பாண்டியர் அமைத்திருந்த சங்கம் மதச் சார்பான சங்கம் அன்று. அது தமிழ் மொழியை ஆராய்வதற்கு ஏற்பட்ட சங்கம். அந்தச் சங்கத்தில் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் ஆராயப்பட்டது. சங்கப் புலவர்கள் முக்கியமாக அகத்தையும் (காதலையும்) புறத்தையும் (போர் அல்லது வீரத்தையும்) ஆராய்ந்து செய்யுட்களை இயற்றினார்கள். சைன சங்கம் சைன சமயத்திலே பழங்காலத்தில் சைனத் துறவிகளின் கூட்டம் பெரிதாக இருந்தது. சைனத் துறவிகளின் சங்கத்தை அக்காலத்தில் நான்கு பிரிவாகப் பிரித்திருந்தார்கள். அந்தப் பிரிவுகளுக்கு நந்திகணம், சேனகணம், சிம்மகணம், தேவகணம் என்று பெயர். ஒவ்வொரு கணத்திலும் கச்சை என்றும் அன்வயம் என்றும் உட்பிரிவுகள் இருந்தன. இந்த நான்கு கணங்களிலே நந்திகணம் பேர் போனது. வச்சிரநந்தி ஆசாரியர் நந்திகணத்தை இரண்டாகப் பிரித்தார். புதிய பிரிவுக்குத் திராவிடகணம் (தமிழசங்கம்) என்று பெயர் இட்டு அதனை மதுரையில் அமைத்து நிறுவினார். இது கி.பி. 470 இல் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் நடந்தது. இதுதான் வச்சிரநந்தி அமைத்த திரமிள சங்கம். இந்தத் திரமிள சங்கத்தில் சைன சமயத் துறவிகள் மட்டுமே இருந்தார்கள். இவர்களுடைய வேலை, முன்னமே சொல்லியது போல சைன சமயத்தைப் பரப்பியதாகும். வச்சிரநந்தியின் தமிழ்ச் சங்கம் கி.பி. 470இல் நிறுவப் பட்டது என்று வரலாற்று ஆசிரியர் எல்லோரும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், பழங்கால இந்திய வரலாற்றுக்குச் சைன மூலங்கள் என்னும் நூலை எழுதிய ஜியோதி பிரசாத் ஜெயின், வச்சிரநந்தி திராவிட சங்கத்தை அமைத்தது கி.பி 604ஆம் ஆண்டு என்று கூறுகிறார் (Jyoti Prasad Jain, The Jaina Sources of the History of Ancient India (100 B.C- 900 A.D.) 1964, pp. 160, 167). இவர் கூறுவது தவறு. விக்கிரம ஆண்டு 526 என்பதை சாலிவாகன ஆண்டு 526 என்று கணக்கிடுவதால் இவர் தவறுபடுகிறார். விக்கிரம ஆண்டு 526 என்பது கி.பி. 470 அல்லது 496 ஆகும். சாலிவாகன சகம் 526 என்று கணக்கிட்டால் அது. கி.பி.604 ஆகிறது. வச்சிரநந்தி விக்கிரம ஆண்டு 526இல் (கி.பி.470) மதுரையில் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார் என்பதே சரியாகும். களப்பிரர் ஆட்சி ஏறத்தாழ கி.பி. 575இல் முடிந்துவிட்டது. களப்பிரர் ஆட்சிக்குப் பிறகு கி.பி. 604 இல் வச்சிரநந்தி மதுரையில் தமிழ்ச் சங்கம் நிறுவியிருக்க முடியாது. எனவே, வச்சிரநந்தி கி.பி 470 இல் திராவிட சங்கத்தை நிறுவினார் என்பதே சரி எனத் தோன்றுகிறது. முற்காலத்தில் பாண்டியர் மதுரையில் மொழி வளர்ச்சிக்காக அமைத்த சங்கம் வேறு, பிற்காலத்தில் சைன சமய வளர்ச்சிக்காக வச்சிரநந்தி ஆசாரியர் ஏற்படுத்திய சங்கம் வேறு. வெவ்வேறான இரண்டு சங்கங்களையும் ஒன்று எனக் கருதுவது தவறு. திரு. பி.தி. சீனிவாச அய்யங்கார் தமிழர் வரலாறு என்னும் நூலில் இது பற்றித் தெளிவாகவும் சரியாகவும் எழுதியுள்ளார். “இது (வச்சிரநந்தியின் திரமிள சங்கம்) நாம் அறிந்துள்ள தமிழ்ச் சங்கம் (பாண்டியரின் தமிழ்ச் சங்கம்) அன்று; சாதாரண மக்களுக்கு சைன மதத்தைப் போதிப்பதற் காகத் தமிழ் நாட்டில் சைன சமயத்தாரால் அமைக்கப்பட்ட ஒரு நிறுவனம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் எழுதியுள்ளார் (P.T. Srinivasa Iyangar, History of the Tamils, 1929,p. 247). திரு. எம். எஸ். இராமசாமி அய்யங்கார் இது சம்பந்தமாக வரலாற்றுக்கு மாறுபட்ட கருத்தைக் கூறுகிறார். களப்பிரர் ஆட்சிக்கு முன்பே, பாண்டியர் ஆட்சிக் காலத்திலேயே வச்சிரநந்தி மதுரையில் திராவிட சங்கத்தை அமைத்தார் என்று இவர் கூறுகிறார். இவர் கூறுவது வருமாறு: “திகம்பர தர்சனம் என்னும் சைன சமய நூல் ஒரு பெரிய செய்தியைக் கூறுகிறது. விக்கிரம ஆண்டு 526 இல் (கி.பி 470) பூச்சிய பாதரின் மாணாக்கரனான வச்சிரநந்தி என்பவர் தென் மதுரையிலே ஒரு திராவிட சங்கத்தை நிறுவினார் என்று அந்த நூல் கூறுகிறது. சைன சமயத்தைப் பரப்புவதற்காகத் தெற்கே வந்த திகம்பர சைனரின் கூட்டந்தான் அந்தச் சங்கம் என்று அந்த நூலிலிருந்து அறிகிறோம். பாண்டிய நாட்டை அரசாண்ட அரசர்களின் ஆதரவு இல்லாமற் போனால், சைன சமயத்தார் கொடுந் தண்டனை கொடுக்கப்பட்ட அந்த நாட்களிலே, ஒரு சங்கத்தை நிறுவியிருக்கமாட்டார்கள். இந்தச் சங்கம் அமைக்கப் பட்டதில் (பாண்டிய) அரசருடைய ஆதரவு சைனருக்கு இருந்தது என்பதையறிகிறோம். இந்த ஆதரவு பிராமணியத்தின் தலைவர்களுக்குப் பொறாமையை உண்டாக்கியிருக்க வேண்டும். அதனால் சமயச் சண்டை உண்டாகித்தான் இருக்கவேண்டும். ஆனால், தற்காலிகமாகச் சமயப் பூசல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த வச்சிரநந்தியின் சங்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் அமைக்கப் பட்டது என்பதை யறிந்தோம் கி.பி. 6ஆம் நூற்றாண்டு தொடங்கிய போது, தமிழகத்தின் அரசியலில் விரைவான மாறுதல்கள் ஏற்பட்டன. களப்பிரரின் படையெடுப்பும் அவர்கள் பாண்டி நாட்டைக் கைப் பற்றியதும் இந்தக் காலத்தில் தான் நேரிட்டன” (M.S. Ramaswami Ayyangar, Studies in South Indian Jainism, 1922, pp.52 -53). பாண்டியருடைய ஆட்சிக் காலத்திலே வச்சிரநந்தி திராவிட சங்கத்தை அமைத்தார் என்றும் அதைப் பாண்டியரின் ஆதரவு பெற்று அமைத்தார் என்றும் வச்சிரநந்தி இந்தச் சங்கத்தை அமைத்த பிறகுதான் களப்பிரர் தமிழகத்தில் வந்து தங்களுடைய ஆட்சியை நிலைநிறுத்தினார்கள் என்றும் ஐயங்கார் கூறுகிறார். இவர் கூற்று வரலாற்றுக்கு முற்றிலும் மாறுபடுகிறது. கி.பி. 470 இல் வச்சிரநந்தி திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார். அந்தக் காலத்தில் பாண்டி நாட்டில் பாண்டியர் ஆட்சி இல்லை, களப்பிரர் ஆட்சி தான் இருந்தது. பாண்டிய, சேர, சோழர்களின் ஆட்சி கடைச்சங்க காலத்தின் இறுதியிலே, ஏறத்தாழக் கிபி 250இல் முடிவடைந்து விட்டது. ஆகவே, பாண்டியர் ஆட்சிக் காலத்திலேயே வச்சிரநந்தி திராவிட சைன சங்கத்தை அமைத்தார் என்று இவர் கூறுவது தவறு. இனி, திரு. எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் வச்சிர நந்தியின் திராவிட சங்கத்தைப் பற்றிக் கூறுவதைப் பார்ப்போம். இவர் கூறுகிற சில கருத்துகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். தொல்காப்பியம் வச்சிரநந்தியின் திராவிட சங்கத்தில் எழுதி வெளியிடப்பட்ட நூல் என்று வையாபுரியார் எழுதுகிறார். இதற்குச் சான்று, தொல் காப்பியத்தில் ஓரை என்னுஞ்சொல் காணப்படுகிறதாம்! இவர் இதுபற்றி எழுதுவது வருமாறு: “வச்சிரநந்தியின் பேர்போன சங்கம் கி.பி. 470இல் நிறுவப் பட்டது. தொல்காப்பியம் அந்தச் சங்கத்திலிருந்து வெளிவந்த முதல் இலக்கியமாக இருக்கக்கூடும். இதன் ஆசிரியர் ஓரை என்னும் சொல்லை (பொருள் 135) ஆள்கிறார். ஓரை (சமஸ்கிருத ஹோரா) என்னும் சொல்லைக் கிரேக்க மொழியிலிருந்து கி.பி. 3ஆவது அல்லது 4ஆவது நூற்றாண்டில் சமஸ்கிருத மொழிக்காரர் கிரேக்க மொழியி லிருந்து எடுத்துக்கொண்ட ஹோராவைத் தொல்காப்பியம் கூறுகிற படியால் இந்நூல் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும்” (S. Vaiyapuri Pillai, History of Tamils Language and Literature, 1956, p.14). வையாபுரியார் கூறுகிற இந்தக் கருத்து இவருடைய சொந்தக் கருத்து அன்று. திரு. கே. என். சிவராசபிள்ளை இந்தத் தவறான கருத்தை முன்னமே வெளியிட்டுள்ளார். அவரிடமிருந்து எடுத்துக் கொண்ட இந்தத் தவறான கருத்தை வையாபுரியார், தான் எங்கிருந்து இக்கருத்தைப் பெற்றுக்கொண்டார் என்பதைக் கூறாமல் தன்னுடைய சொந்தக் கருத்தாகக் கூறுகிறார். சிவராசபிள்ளை கூறியுள்ளது இது: ஹோரா என்னும் கிரேக்க மொழிச் சொல் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியில் சென்று பிறகு அந்தச் சொல் தொல் காப்பியத்தில் ஓரை என்று வழங்கப்பட்டது. ஆகவே, அந்தச் சொல்லை வழங்குகிற தொல்காப்பியர் கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்தவர் என்று அவர் 1932 ஆம் ஆண்டில் எழுதிவைத்தார் (K.N. Sivaraja Pillai, The Chronology of the Early Tamils, 1932, pp. 263-264). சிவராச பிள்ளை கூறிய இந்தக் கருத்தை வையாபுரிப்பிள்ளை எடுத்துக் கொண்டு, ஓரையைக் கையாளும் தொல்காப்பியர் வச்சிரநந்தியின் திராவிடச் சங்கத்தில் இருந்தவர் என்று எழுதிவிட்டார். ஓரையும் ஹோராவும் ஒன்றா? ஒலி வடிவில் ஒன்று போலத் தோன்றுகிற இரண்டு சொற்களும் ஒன்றுதானா? கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்த தொல்காப்பியர், கி.பி. 5ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் வழங்கிய ஹோராவை எப்படி எடுத்திருக்க முடியும்? ஹோராதான் ஓரை ஆயிற்றா? ஓரை என்பது வேறு; ஹோரா என்பது வேறு அல்லவா? குதிரைக்குக் குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம் என்று கூறினானாமே ஒரு மேதை, அது போன்றல்லவா இருக்கிறது இது! ஓரை என்னும் தமிழ்ச் சொல் வேறு, ஹோரா என்னும் கிரேக்க- சமஸ்கிருதச் சொல் வேறு. ஒலி வடிவில் இரண்டும் ஒரே சொல்லைப் போலக் காணபட்டாலும் இரண்டுக்கும் பொருள் வெவ்வேறு. ஹோரா என்னும் கிரேக்கச் சொல்லுக்கு இராசி அல்லது முகுத்தம் என்று வானநூலில் பொருள் கூறப்படுகிறது.ஓரை என்னும் தமிழ்ச் சொல்லுக்கு மகளிர் கூட்டம் (ஆயம்) என்பது பொருள். பழைய சொற்கள் சிலவற்றின் பொருள் மறைந்து போய்விட்டதுபோல ஓரையின் பொருளும் பிற்காலத்தில் மறைந்து போயிற்று. மிகப் பிற்காலத்தவரான உரையாசிரியர்கள் இச்சொல்லின் பழைய பொருளை (கருத்தை) அறியாமல், இதை ஹோராவின் திரிபு என்று கருதித் தவறான உரையை எழுதிவிட்டனர். மறைத்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோர்க் கில்லை (தொல்.பொருள் 135) என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தில் வருகிற ஓரை என்பதற்குப் பிற்காலத்தவரான உரையாசிரியர்கள் எழுதிய பிழையான உரைகளைக் காண்க. உரையாசிரியர்கள் காட்டிய தவறான வழியில் சென்ற சிவராசரும் வையாபுரியாரும் இவ்வாறு தவறான கருத்துக் கொண்டதில் வியப்பொன்றும் இல்லை. இதற்குப் பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் எழுதியுள்ள நேரான உரை காண்க (சோமசுந்தர பாரதியார், ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’, அண்ணாமலைப் பல்கலைக்கழக இதழ், ஆறாம் தொகுதி, பக். 142-143. இதே கருத்தை அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரையிலும் காணலாம்: (Journal of the Annamalai University, Vol. VI, p. 138). ஓரை என்னும் சொல்லுக்குப் பேராசிரியர் பாரதியார் அவர்கள் கூறும் விளக்கம் வருமாறு: “ஓரை - விளையாட்டென்பது, சங்க இலக்கியம் முழுவதும் அச்சொல்லுக்கு அப்பொருளாட்சியுண்மையால் விளங்கும். ஓரைக்கு இராசி அல்லது முகூர்த்தம் எனும் பொருளுண்மைக்குத் தொல் காப்பியத்திலேனும் சங்க இலக்கியம் எதிலேனும் சான்று காணு தலரிது. மிகவகன்ற பிற்காலப் புலவர் சிலர் முகூர்த்தம் (அதாவது ஒரு நாளினுள் நன்மை தீமைகளுக்குரியதாகப் பிரித்துக் கொள்ளப் படும் உட்பிரிவு) என்ற பொருளில் இச்சொல்லைப் பிரயோகிக்கலானார். அக்கொள்கைக்கே சான்றில்லாத சங்க இலக்கியத்தில், ‘ஓரை’ என்னுந் தனித் தமிழ்ச் சொல்லுக்கு, அக்காலத்திலக்கியங்களால் அதற்குரிய பொருளாகக் காணப்பெறும் விளையாட்டையே அச்சொல் குறிப்பதாகக் கொள்ளுவதே முறையாகும். அதை விட்டுப் பிற்கால ஆசிரியர் கொள்கையான இராசி அல்லது முகூர்த்தம் எனும் பொருளை இத்தமிழ்ச் சொல்லுக்கு ஏற்றுவதே தவறாகும். அதற்கு மேல் அச்சொல்லைக் கொண்டு தொல்காப்பியம் அடையப் பிற்காலத்து நூலென்று வாதிப்பது அறிவுக்கும் ஆராய்ச்சியறத்திற்கும் பொருந்தாது.” ஓரை என்னும் தமிழ்ச் சொல்லுக்குப் பேராசிரியர் சோம சுந்தர பாரதியாரவர்கள் விளையாட்டு என்று பொருள் கூறியுள்ளார். இது அச்சொல்லுக்கு மிக அண்மையான பொருளே. இதற்குச் சரியான பொருள் சிறுவர் சிறுமியர் வாழும் இடம் என்று தோன்றுகிறது. பழங்காலத்துத் திராவிட இனத்தார் தாங்கள் வாழ்ந்த கிராமத்திலுள்ள சிறுவர் கூட்டத்தையும் சிறுமியர் கூட்டத்தையும் வெவ்வேறாகப் பிரித்து அவர்களைத் தனித்தனியே வெவ்வேறு இடங்களில் வைத்து வளர்த்தார்கள். வடஇந்தியாவில் வாழ்ந்த திராவிடர்களும் இவ்வாறு சிறுவர் சிறுமியரை வெவ்வேறாகப் பிரித்து வைத்துள்ள இடத்துக்கு ஓரை என்று பெயர் கூறினார்கள் என்று தெரிகிறது. வடஇந்தியாவிலும் ஆதிகாலத்தில் திராவிட இனமக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தார்கள். அந்தத் திராவிடர் இக்காலத்தில் ஆரியரோடு கலந்து மொழி, கலை, பண்பாடு களில் மாறிப் போனார்கள். அவர்களில் சில இனத்தார் இன்றும் உள்ளனர். அவர்கள் தங்கள் பழைய இடங்களிலிருந்து துரத்தப்பட்டு வேறு இடங்களில் போய் வாழ்கிறார்கள். அவர்களில் முண்டா என்னும் திராவிட இனத்தார் சோட்டா நாகப்பூரில் இருக்கிறார்கள். அவர் களுடைய திராவிட மொழியில் இக்காலத்தில் மைதிலி, வங்காளி, இந்தி முதலான மொழிகளின் சொற்களும் கலந்துவிட்டன. ஆனாலும், பழைய திராவிட இனத்தவரின் முண்டாரி மொழியில் ஓரை என்னும் சொல் இன்றும் வழங்குகிறது. இது ஹோரா என்னும் சொல்லின் திரிபு அன்று; பழைய திராவிடச் சொல்லாகும். முண்டா இனத்து மணமாகாத இளைஞர்களும் மணமாகாத இளம் பெண்களும் தங்கள் வீடுகளில் படுத்து உறங்குவதில்லை. அவர்களுக்கென்று தனித்தனியே பெரிய கொட்டகை அமைக்கப்பட்டு அந்தக் கொட்டகையில் போய்ப் படுத்து உறங்குகிறார்கள். இந்தக் கொட்டகைகளுக்கு கிதிஓரா என்று அவர்கள் பெயர் கூறுகிறார்கள். ஆண் மக்களுக்குத் தனியாகக் கிதிஓராவும் இருக்கின்றன. முண்டாரி மொழியின் கிதிஓராவுடன் தமிழ் மொழியின் ஓரையை ஒப்பிட்டு நோக்குக. கிதிஓரா என்பதில் கிதி என்பதன் பொருள் தெரியவில்லை. ஓரா என்பது ஓரை என்பதில் சற்றும் ஐயமில்லை. எனவே, ஓரை என்பது திராவிட இனமொழிச் சொல் என்பது தெளிவாகத் தெரிகிறது. தொல்காப்பியர் இந்த ஓரையைத்தான் கூறியுள்ளார். இந்த ஓரை கிரேக்க - சமஸ்கிருத ஓரை அன்று. மிகப் பழங்காலத்திலேயே திராவிட இனமக்கள் வாழ்ந்த ஊர்களில் சிறுவர்களுக்குத் தனியாகவும் சிறுமிகளுக்குத் தனியாகவும் ஓரா (ஓரை) என்னும் பெரிய கொட்டகைகளை அமைத்திருந்தனர் என்பது தெரிகிறது. இக்காலத்தில் பழங்குடி மக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறவர்கள் இதுபற்றியும் ஆராய்ந்தால் உண்மை கிடைக்கும். தொல்காப்பியர் காலத்திலும் தமிழ்த் திராவிடர்கள் தங்கள் இளைஞர் களுக்கும் மகளிர்க்கும் தனித்தனி ஓரைகளைக் கட்டி வைத்திருந்தனர் என்பதைத் தொல்காப்பியர் கூறுகிற ஓரை என்னுஞ் சொல்லிலிருந்து ஊகிக்கலாம். சங்கச் செய்யுட்களில் ஓரை (ஓரா) என்னுஞ் சொல் காணப்படுகிறது. சங்கப் புலவரான உலோச்சனாரும் ஓரை என்னுஞ் சொல்லை ஆள்கிறார். “ ஓரை மகளிரும் ஊரெய்தினரே” (நற்றிணை 398: 5) என்று அவர் கூறுவது காண்க. ஆகவே, சிவராசபிள்ளையும் வையாபுரிப் பிள்ளையும் மற்றவர்களும் தவறாகக் கருதுகிறபடி ஓரை என்னுஞ் சொல் கிரேக்க - சமஸ்கிருதச் சொல் அன்று. அது தூய திராவிட மொழிச் சொல் என்பதை அறிகிறோம். ஓரை என்னும் திராவிடச் சொல்லின் பழமையை அறியாத சிவராசர்களும் வையாபுரியார்களும் ஓரையைக் கூறுகிற தொல்காப்பியரை மிகமிகப் பிற்காலத்து வச்சிரநந்தி சங்கத்தில் இருந்தவர் என்று கூறுவது வரலாறு அறியாத போலிவாதம் ஆகும். திராவிட இனத்து மக்கள் பழங்காலத்தில் வழங்கிவந்த ஓரா - ஓரையைக் கூறுகிற தொல் காப்பியர் மிகமிகப் பழங்காலத்தில் இருந்தவர் என்பது இதிலிருந்து நன்றாகத் தெரிகிறது. வையாபுரியார், தொல்காப்பியரைப் பிற்காலத்து வச்சிரநந்தி சங்கத்தில் இருந்தவர் என்று அறியாமல் கூறியது போலவே வேறுசில சங்கப் புலவர்களையும் பிற்காலத்து வச்சிரநந்தி சங்கத்தில் இருந்தவர்கள் என்று போலிக் காரணங் காட்டிக் கூறுகிறார். ஆழ்ந்து பாராமல் மேற்போக்காகக் கூறுகிற இவருடைய கருத்து இதிலும் போலிவாதமாகக் காணப்படுகிறது. கடைச்சங்க காலத்துப் புலவர்களான உலோச்சனார், மாதீர்த்தனார் முதலானவர்களைப் பிற்காலத்து வச்சிரநந்தியின் திராவிடச் சங்கத்தோடு இவர் இணைக்கிறார். “தமிழ் மொழி தமிழ் இலக்கிய வராலற்றிலே முதல் தரமான முக்கிய நிகழ்ச்சியொன்று கி.பி. 470 இல் நிகழ்ந்தது. அதுதான் மதுரையிலே வச்சிரநந்தியின் மேற்பார்வையில் நிறுவப்பட்ட தமிழ்ச் சங்கம். பழைய புலவர்களிலே உலோச்சனார். மாதீர்த்தனார் முதலான ஜைனப் புலவர் களைப் பார்க்கிறோம். புறநானூறு 175ஆம் பாடலிலும் அகநானூறு 59ஆம் பாடலிலும் மறுபிறப்பும் புராணக்கதையும் கூறப்படுகின்றன. அகம் 193இல் மதக்கொள்கையைப் பற்றின குறிப்பைக் காண்கிறோம். ஆனால், தமிழ் மொழி தமிழ் இலக்கியங்களை ஆராயும் பழைய ஜைன நிறுவனத்தைப்பற்றி இதற்கு முன்பு கேள்விப்படவில்லை” (S. Vaiyapuri Pillai, History of Tamil language and Literature, pp. 58-59). (வச்சிரநந்தியின் ஜைன நிறுவனத்தைத்தான் முதல் முதலாகக் கேள்விப்படுகிறோம்.) இவருடைய இந்தக் கூற்றையும் அலசி ஆராய்வோம். உலோச்சனாரும் மாதீர்த்தனாரும் சைன சமயப் புலவராகையால் அவர்கள் வச்சிரநந்தியின் சைன சங்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது இவர் கூறும் காரணமாகும். உலோச்சனாரும் மாதீர்த்தனாரும் சைனரா அல்லரா என்னும் ஆராய்ச்சியில் நுழையவேண்டியதில்லை. அவர்கள் சைன சமயத்தவர் என்றே வைத்துக்கொள்வோம். அவர்கள் சைனர் என்ற காரணத்தினாலே அவர்கள் வச்சிரநந்தியின் சைனத் திராவிட சங்கத்தில்தான் இருந்தார்கள் என்று கூறுவது உண்மை இல்லாத போலிக் காரணமாகும். பாண்டியரின் தமிழ்ச் சங்கத்தில் சைன, பௌத்த மதத்தவர் உட்பட எல்லாச் சமயத்துப் புலவர்களும் தமிழ் ஆராய்ந்தார்கள். வச்சிரநந்தியின் தமிழ்ச் சங்க காலத்திலேதான் சைன மதம் தமிழ் நாட்டுக்கு வரவில்லை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சந்திரகுப்த மௌரியன், அசோகச் சக்கரவர்த்தி காலத்திலேயே சைன மதமும் பௌத்த சமயமும் தமிழகத்துக்கு வந்து விட்டதை வரலாறு கூறுகிறது. ஆகவே, பாண்டியரின் கடைச் சங்கத்திலே சைனப் புலவரும் இருந்தனர் என்பதில் ஐயமில்லை. இந்த வரலாற்று உண்மையை அறியாமல் வையாபுரியார் வச்சிரநந்தியின் தமிழ்ச் சங்கத்தில்தான் உலோச்சனார், மாதீர்த்தனார் போன்ற சைன சமயப் புலவர்கள் இருந்திருக்க வேண்டும் என்று கூறுவது ஆதாரமற்ற போலிக் கூற்றாகும். வச்சிரநந்தியின் தமிழ சைனச் சங்கம் சைன சமயத்தாருக்கே உரியது. அதில் சைனத் துறவிகள் மட்டுமே இருந்தார்கள். வேறு சமயத்தவருக்கு அதில் இடம் இல்லை. வச்சிரநந்தியின் சங்கத்துச் சைனத் துறவிகள் சிற்றின்பத்தில் (அகப்பொருளில்) ஈடுபடக் கூடாது; கள், இறைச்சி உண்ணக்கூடாது; கொலை செய்வது கூடாது. இவையெல்லாம் சைன சமயத்தின் அடிப்படையான, கண்டிப்பான கொள்கைகள். ஆனால், வையாபுரியார், வச்சிரநந்தி சைனத் தமிழச் சங்கத்தில் இருந்தவர் என்று கூறுகிற உலோச்சனார் எதையெதைப் பாடினார் என்பதைப் பார்ப்போம். அகநானூற்றில் எட்டுப் பாடல்களும் குறுந்தொகையில் நான்கு செய்யுட்களும் நற்றிணையில் இருபது பாடல்களும் ஆக முப்பத் திரண்டு செய்யுட்களை உலோச்சனார் பாடியுள்ளார். இந்தப் பாடல்கள் எல்லாம் அகப்பொருள் துறையமைந்த காதற்பாட்டுகள், சைன முனிவர் எதைப் பாடக்கூடாதோ அந்த அகப்பொருள் காதற்பாட்டுகளை இவர் பாடியுள்ளார்! இந்தப் புலவர் சைனராக இருக்க முடியுமா! அதிலும் துறவிகள் மட்டும் உள்ள வச்சிரநந்தியின் திரமிளச் சைன சங்கத்தில் இவர் இருந்திருக்க முடியுமா? மேலும், இந்தக் காதற் பாட்டுகளிலே கொலையையும் இறைச்சியையும் சிறப்பித்துப் பாடுகிறார் இந்தச் சைனத் துறவி! மீன்களை மணலில் பரப்பி வெயிலில் உலர்த்துவதைக் கூறு கிறார் (அகம் 20, நற்றிணை 63, 331). மீன்பிடிக்கும் வலையைப் பாடு கிறார் (அகம் 300). மீனைச் சுடுகிற நெருப்பிலிருந்து வருகிற புகையைப் பாடுகிறார் (நற்றிணை 311), பனங்கள்ளைப் பாடுகிறார் (நற்றிணை 38). மதுபானம் செய்து மகிழ்ந்திருக்கும் பெரியன் என்பவனைப் பாடுகிறார் (நற்றிணை 131). ஊனைத் தின்ற எச்சிற்கையில் உள்ள இறைச்சியின் கொழுப்பை வீட்டுச் சுவரில் தேய்த்துவிட்டுப் போர்க்கூத்துக்குச் சென்ற வீரனையும். அவன் திரும்பிவந்து குடிப்பதற்காக வைத்துள்ள கட்சாடியையும் பாடுகிறார் (புறம் 258). மற்றும் இவர் பாடியுள்ள காதற் செய்திப் பாட்டுக்கள் பல உள்ளன. சைனத் துறவிக்கு விலக்கப் பட்டவை களையெல்லாம் பாடுகிற உலோச்சனாரை வையாபுரிப் பிள்ளை, வச்சிரநந்தியின் சைனத் துறவிகளின் சங்கத்தில் இருந்தவர் என்று கூறுகிறார். இவர் கூற்று நம்பத்தக்கதா? இதை ஒப்புக்கொள்ள முடியுமா? களப்பிரர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வச்சிரநந்தியின் சைன முனிவர் சங்கத்தில் இருந்தவர் என்று வையாபுரிப்பிள்ளை கூறுகிற உலோச்சனார், களப்பிரர் காலத்துக்குச் சில நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்திருந்த சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாடுகிறார் (புறம் 377). கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வச்சிரநந்தியின் சங்கத்தில் உலோச்சனார் இருந்தவர் என்றால், அவருடைய செய்யுட்கள் கடைச்சங்க காலத்துத் தொகை நூல்களில் எப்படி இடம் பெற்றிருக்கக்கூடும்? மாதீர்த்தன் என்னும் கடைச்சங்கப் புலவரையும் வையா புரியார் வச்சிரநந்தியின் தமிழ்ச் சைன சங்கத்தவர் என்று கூறுகிறார். மாதீர்த்தனார் குறுந்தொகை 113ஆம் செய்யுளைப் பாடியவர். இந்தப் பாட்டு அகப்பொருளைப் பற்றிய காதற்பாட்டு. இந்தக் காதற்பாட்டைப் பாடிய மாதீர்த்தனார் வச்சிரநந்தி சங்கத்தைச் சேர்ந்த சைன முனிவராக இருக்க முடியுமா? இவற்றையெல்லாம் கருதாமல், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை இவர்களைச் சைன முனிவர்களின் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்! பகுத்தறிவு உள்ளவர் இவர் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியுமா? புறம் 175ஆம் செய்யுளிலும் அகம் 59ஆம் செய்யுளிலும் அகம் 193ஆம் செய்யுளிலும் சைனரின் மதக் கொள்கைகள் கூறப்படுகின்றன. என்றும் ஆகவே அந்தச் செய்யுட்களைப் பாடிய புலவர்கள் வச்சிரநந்தியின் சைனத் தமிழச் சங்கத்தைச் சார்ந்தவர்கள் என்றும் வையாபுரியார் குறிப்பாகக் கூறுகிறார். ‘ புறம் 175ஆம் பாட்டிலும் அகம் 59ஆம் பாட்டிலும் மறுபிறப்புப் பற்றியும் ஒரு புராணக்கதையைப் பற்றியும் அகம் 193இல் சைனருடைய சமயக் கொள்கை பற்றியும் குறிப்புகள் காணப் படுகின்றன. தமிழ் மொழி தமிழ்இலக்கிய வளர்ச்சியைப் பற்றின பழைய சைன நிறுவனத்தைப் பற்றி நாம் கேள்விப்படவில்லை” (வச்சிரநந்தியின் சங்கத்தைத்தான் கேள்விப்படு கிறோம்) என்று வையாபுரியார் எழுதுகிறார் (S. Vaiyapuri, Pillai, History of Tamil Language and Literature, p.5). அதாவது. புறம் 175, அகம் 59, 193 ஆகிய செய்யுட்களைப் பாடியவர்களும் சைன சமயத்தார் என்றும் அவர்கள் வச்சிரநந்தியின் தமிழச் சைன சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வையாபுரியார் கூறுகிறார். இவர் கூறுவதை ஆராய்ந்து உண்மை காண்போம். புறம் 175ஆம் செய்யுளைப் பாடியவர் கள்ளில் ஆத்திரை யனார். இவருடைய பெயரே இவர் பிரமாணர் என்பதைத் தெரிவிக்கிறது. இவருக்கு உதவி செய்த ஆதனுங்கன் என்பவனை இவர் இச்செய்யுளில் பாடுகிறார். என் உயிர் போமளவும் என் மனம் உன்னை மறக்காது என்று இவர் கூறுகிறார். இதில் சைன சமயக் கொள்கை என்ன இருக்கிறது? இது எல்லாச் சமயத்தாருக்கும் உரிய கருத்துத்தானே! வையாபுரியார் சுட்டிக்காட்டுகிற இன்னொரு செய்யுள் (அகம் 59) மருதன் இளநாகனார் பாடியது. யமுனையாற்றில் நீராடிய மகளிரின் ஆடைகளைக் கண்ணன் ஒளித்து வைத்ததை இச்செய்யுள் குறிப்பிடுகிறது. வண்புனல் தொழுநை வார்மணல் அகன்றுறை அண்டர் மகளிர் தண்டழை உடீஇயர் மரஞ்செல மிதித்த மாஅல் போல (அகம் 59: 4- 6) இது சைன சமயக் கருத்து என்று வையாபுரியார் கூறுகிறார். இது தமிழ்நாட்டில் அக்காலத்தில் வழங்கிவந்த எல்லாச் சமயத் தாருக்கும் உரிய பொதுக் கருத்து. இதை வையாபுரியார் சைனரின் புராணக் கதை என்று கூறுகிறார். இதைப் பாடியவர் மருதனிள நாகனார். இவர் சைனர் அல்லர். கடைச் சங்கப் புலவரான அவர் எப்படி வச்சிரநந்தியின் சைன சங்கத்தில் (கி.பி.5ஆம் நூற்றாண்டில்) இருக்க முடியும்? வையாபுரியார் சுட்டிக் காட்டுகிற இன்னொரு அகம் 193ஆம் செய்யுளும் மருதன் இளநாகனார் பாடியதே. பருந்து ஒன்று இறைச்சித் துண்டைக் கொண்டுபோய் மலையுச்சியில் மரத்தின்மேல் இருந்த தன்னுடைய குஞ்சுக்கு ஊட்ட, அவ்விறைச்சி நழுவிக் கீழேவிழுந்ததை அங்கிருந்த நரி கவ்விக்கொண்டு ஓடியது என்னும் இயற்கை நிகழ்ச்சியை இப்புலவர் இப்பாடலில் கூறுகிறார். செஞ்செவி எருவை குறும்பொறை எழுந்த நெடுந்தாள் மராஅத்து அருட்கவட் டுயர்சினை பிள்ளை யூட்ட விரைந்துவாய் வழுக்கிய கொழுங்கண் ஊன்றடி கொல்பசி முதுநரி வல்சி யாகும் (அகம் 193: 6-10) இது எப்படிச் சைனருக்கு மட்டும் சிறப்பானது? எல்லாச் சமயத் தாருக்கும் இந்த நிகழ்ச்சி பொதுவன்றோ? இந்தச் செய்யுட்களைப் பாடிய மருதனிளநாகனார் சைனரல்லர், அவர் சைவ சமயத்தவர். அன்றியும் கடைச்சங்கப் புலவர். இவரைச் சைனர் என்றும் வச்சிரநந்தி அமைத்த பிற்காலத்துச் சைன சமயச் சங்கத்தைச் சேர்ந்தவர் என்றும் வையாபுரியார் எழுதுகிறார். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வச்சிரநந்தியின் சைனத் தமிழச் சங்கத்தில் இவர் இருந்தார் என்று, ஆராயாமல் வையாபுரியார் கூறுகிறார். ஆனால், மருதனிள நாகனார், வச்சிரநந்தி சங்கம் ஏற்படுவதற்குப் பல நூற்றாண்டுக்கு முன்பு கடைச்சங்க காலத்தில் இருந்தவர் என்பதை அவர் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியையும் (புறம் 52), பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் (புறம் 55) நாஞ்சில் வள்ளுவனையும் (புறம் 138, 139) பாடிய செய்யுட்கள் வெள்ளிடைமலை போலவும் உள்ளங்கை நெல்லிக் கனி போலவும் தெரிவிக்கின்றன. ஆனால்? இவற்றையெல்லாம் பாராமல் வையா புரியார், கடைச்சங்க காலத்தில் இருந்த புலவர்களை இழுத்துக் கொண்டுவந்து, பல நூற்றாண்டுகளுக்குப் பின் இருந்த வச்சிரநந்திச் சங்கத்தில் விடுகிறார். வையாபுரிப்பிள்ளை தாம் எழுதிய தமிழ் மொழி தமிழ் இலக்கிய வரலாற்றில் கூறுகிற இவை போன்ற வேறு பல போலிச் செய்திகளை இங்கு ஆராயாமல் இதனோடு நிறுத்துகிறோம். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.  இணைப்பு - 3 இறையனார் அகப்பொருள் - வரலாற்று ஆய்வு களப்பிரர் ஆட்சிக் காலத்தில், பக்தி இயக்கம் தோன்றிய போது இறையனார் அகப்பொருள் என்னும் களவியல் நூல் எழுதப்பட்டது என்று கூறினோம். தொல்காப்பியப் பொருளதி காரம் இருக்கும்போது இந்தப் புதிய அகப்பொருள் நூலை எழுதிய நோக்கம் என்ன? யாது காரணம் பற்றி இந்தப் புதிய நூல் எழுதப்பட்டது என்பதை ஆராய்வோம். களவியல் உரைப்பாயிரம் இந்த ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. மூன்று தமிழ்ச் சங்கங்களின் வரலாற்றைக் கூறிய பிறகு கடைச் சங்கத்தின் இறுதியில் நிகழ்ந்ததைக் களவியல் உரைப்பாயிரம் கூறுகிறது. “அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமுமென்க. அவர்களைச் சங்கம் இரீஇயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெரு வழுதியீறாக நாற்பத் தொன்பதின்மர் என்ப. அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்திர மதுரை (இப்போதைய மதுரை) என்ப” என்று உரைப்பாயிரங் கூறுகிறபடியால் கடைச்சங்க காலம் முடிந்த பிறகு இறையனார் அகப்பொருள் என்னும் நூல் இயற்றப்பட்டது என்பது தெரிகிறது. இறையனார் அகப் பொருள் எழுதப்பட்ட வரலாற்றை இந்நூல் உரைப்பாயிரம் கூறுகிறது. அதன் வாசகம் இது: அக்காலத்துப் பாண்டிய நாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது. செல்லப் பசி கடுகுதலும், அரசன் சிட்டரையெல்லாங் கூவி வம்மின் யான் உங்களைப் புறந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்து கின்றது; நீயிர் போய் நுமக்கறிந்தவாறு புக்கு, நாடு நடாயின ஞான்று என்னையுள்ளி வம்மின் என்றான் என, அரசனை விடுத்து எல்லாரும் போயினபின்றைக் கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்த பின்னர், நாடு மலிய மழை பெய்தது. பெய்த பின்றை அரசன் இனி நாடு நாடாயிற்றாகலின் நூல் வல்லாரைக் கொணர்க வென்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க, எழுத்ததிகாரமுஞ் சொல்லதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலேமென்று வந்தார். வர, அரசனும் புடைபடக் கவன்று என்னை? எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேமெனின் இவைபெற்றும் பெற்றிலேம் எனச் சொல்லா நிற்ப, மதுரை ஆலவாயில் அழனிறக் கடவுள் சிந்திப்பான்; என்னை பாவம்! அரசற்குக் கவற்சி பெரிதாயிற்று. அதுதானும் ஞானத்திடையதாகலான் என்று, இவ்வறுபது சூத்திரத்தை யுஞ் செய்து மூன்று செப்பிதழகத்தெழுதிப் பீடத்தின் கீழிட்டான். இங்குப் பொருளதிகாரம் என்பது அகப்பொருளைச் சுட்டுகிறது. அகப்பொருள் கற்க, அது ஞானத்தைத் தரும் என்றும் கூறப்படுவது காண்க. மேலும் உரை கூறுகிறது: இட்ட பிற்றை ஞான்று. தேவர் குலம் வழிபடுவான் தேவர் கோட்டத்தை எங்குந் துடைத்து, நீர் தெளித்துப், பூவிட்டுப் பீடத்தின் கீழ்ப் பண்டென்றும் அலகிடாதான் அன்று தெய்வத் தவக் குறிப்பினான் அலகிடுவனென்று உள்ளங் குளிர அலகிட்டான். இட்டாற்கு அவ்வலகினோடும் இதழ் போந்தன. போதரக் கொண்டுபோந்து நோக்கினாற்கு வாய்ப்புடைத் தாயிற்றோர் பொருளதிகாரமாய்க் காட்டிற்று. காட்டப் பார்ப்பான் சிந்திப்பான்: அரசன் பொருளதிகாரம் இன்மையிற் கவல்கின்றானென்பது பட்டுச் செல்லா நின்றதுணர்ந்து நம்பெருமான் அருளிச் செய்தானாகும் என்று தன் அகம் புகாதே கோயிற் றலைக்கடைச் சென்று நின்று கடைக் காப்பார்க் குணர்த்தக் கடைக்காப்பார் அரசர்க்குணர்த்த, அரசன் புகுதருக வென்று பார்ப்பானைக் கூவச் சென்று புக்குக் காட்டக் கொண்டு நோக்கி, இது பொருளதிகாரம்! நம்பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச் செய்தானாகற்பாலது என்று, அத்திசை நோக்கித் தொழுதுகொண்டு நின்று, சங்கத்தாரைக் கூவுவித்து நம்பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச்செய்த பொருளதிகாரம்! இதனைக் கொண்டுபோய்ப் பொருள் காண்மின் என அவர்கள் அதனைக் கொண்டு போந்து கன்மாப்பலகை ஏறியிருந்தாராய்வுழி, எல்லாரும் தாந்தாம் உரைத்த உரையே நன்றென்று சில நாளெல்லாஞ் சென்றன. செல்ல நாம் இங்ஙனம் எத்துணையுரைப்பினும் ஒரு தலைப்படாது. நாம் அரசனுழைச் சென்று நமக்கோர் காரணிகளைத் தரல் வேண்டும் என்று கொண்டு போந்து, அவனாற் பொருளெனப்பட்டது பொருளாய் அன்றெனப் பட்டது அன்றாயொழியக் காண்டுமென, எல்லாரும் ஒருப் பட்டு அரசனுழைச் சென்றார். செல்ல அரசனும் எதிர் எழுந்து சென்று, ‘ என்னை? நூற்குப் பொருள் கண்டீரோ?’ என, ‘ அது காணுமாறு எமக்கோர் காரணிகனைத் தரல்வேண்டும்’எனப், ‘போமின். நுமக்கோர் காரணிகனை எங்ஙனம் நாடுவேன்? நீயிர் நாற்பத்தொன்பதின்ம ராயிற்று. நுமக்கு நிகாராவார் ஒருவர் இம்மையினின்றே’ என்று அரசன் சொல்லப் போந்து பின்னையும் கன்மாப்பலகை ஏறியிருந்து அரசனும் இது சொல்லினான்‘ யாங் காரணிகனைப் பெறுமாறு என்னைகொ’ வென்று சிந்தித் திருப்புழிச் சூத்திரஞ் செய்தான் ஆலவாயி லவிர்சடைக் கடவுளன்றோ! அவனையே காரணிகனையுந் தரல் வேண்டுமென்று சென்று வரங்கிடத்தும்’ என்று சென்று வரங்கிடப்ப, இடையாமத்து, ‘ இவ்வூர் உப்பூரிகுடி கிழார் மகனாவான் உருத்திரசன்மன் என்பான், பைங்கண்ணன் புன்மயிரான் ஐயாட்டைப் பிராயத்தான் ஒரு மூங்கைப் பிள்ளை உளன்; அவனை அன்னனென் றிகழாது கொண்டு போந்து ஆசனமேலிரீஇக் கீழிருந்து சூத்திரம் பொருளுரைத்தாற் கண்ணீர் வளர்ந்து மெய்ம்மயிர் சிலிர்க்கும் மெய்யாயின உரை கேட்டவிடத்து; மெய்யல்லா உரைகேட்டவிடத்து வாளா இருக்கும். அவன் குமார தெய்வம், அங்கோர் சாபத்தினாற் றோன்றினான் என முக்காலிசைத்த குரல் எல்லார்க்கும் உடன்பாடா யிற்றாக, எழுந்திருந்து தேவர் குலத்தை வலங்கொண்டு போந்து, உப்பூரிகுடிகிழாருழைச் சங்க மெல்லாஞ் சென்று, இவ்வார்த்தை யெல்லாஞ் சொல்லி ஐயனாவான் உருத்திர சன்மனைத் தரல் வேண்டுமென்று வேண்டிக் கொடுபோந்து, வெளியதுடீஇ, வெண்பூச்சூட்டி, வெண்சாந்தணிந்து, கன்மாப்பலகையேற்றி இரீஇக் கீழிருந்து சூத்திரப் பொருளுரைப்ப, எல்லாரும் முறையே உரைப்பக் கேட்டு வாளா இருந்து, மதுரை மருதனிளநாகனார் உரைத்த விடத்து ஒரோ வழிக் கண்ணீர் வார்த்து மெய்ம்மயிர் நிறுத்திப் பின்னர்க் கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்த விடத்துப் பதந்தோறுங் கண்ணீர் வார்த்து மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான். இருப்ப, ஆர்ப்பெடுத்து மெய்யுரை பெற்றாம் இந்நூற்கென்றார். அதனால் உப்பூரிகுடிகிழார் மகனாவான் உருத்திரசன் மனாவான் செய்தது இந்நூற்குரை யென்பாருமுளர்; அவர் செய்திலர், மெய்யுரை கேட்டாரென்க. மதுரை ஆலவாயிற் பெருமானடிகளாற் செய்யப்பட்ட நூற்கு நக்கீரனாரால் உரைகண்டு, குமாரசுவாமியாற் கேட்கப்பட்ட தென்க.” (இறையனாரகப் பொருள், முதற் சூத்திர உரைப்பாயிரம்) இறையனார் அகப்பொருளும் அதன் உரையும் எழுதப் பட்ட வரலாற்றை அறிந்தோம். இனி இவை பற்றி ஆராய்வோம். முரண்பட்ட செய்திகள் கடைச்சங்கத்தார்க்கு இலக்கண நூலாகத் தொல்காப்பியம் இருந்தது என்று உரைப்பாயிரம் கூறுகிறது. இன்னொரு இடத்தில் பொருளிலக்கணம் கிடைக்காமல் இடர்ப்பட்டனர் என்று கூறுகிறது. இது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. தொல்காப்பியப் பொருளதி காரம் அக்காலத்தில் மறைந்து போயிற்றா? அப்படிக் கருதுவதற்கு இடமில்லை. ஏனென்றால், தொல்காப்பியம் பொருளதிகாரம் உட்பட முழுவதும் இப்போதும் இருக்கிறது. தொல்காப்பியப் பொருளதிகாரம் கிடைத்திருக்க ஆலவாயிற் கடவுள் அறுபது சூத்திரங்கள் அடங்கிய புதியதோர் அகப்பொருள் நூலை உண்டாக்கிக் கொடுத்த காரணம் என்ன? ஒரு விளக்கம் இந்த முரண்பாட்டுக்கு விளக்கங் கூறுவதுபோல உரைப் பாயிரம் இன்னொரு இடத்தில் இவ்வாறு கூறுகிறது: “ அரசன் இனி நாடு நாடாயிற்றாகலின் நூல்வல்லாரைக் கொணர்க வென்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க, எழுத்ததி காரமும் சொல்லதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலே மென்று வந்தார்” என்று உரைப் பாயிரம் கூறுவதிலிருந்து தொல் காப்பியப் பொருளதிகாரம் கிடைத்திருந்தும் அதற்குப் பொருள் கூற வல்லார் கிடைக்கவில்லை என்பது தெரிகிறது. மீண்டும் ஓர் ஐயம் தொல்காப்பியம் பொருளதிகாரத்துக்குப் பொருள் கூறவல்லார் கிடைக்காமற்போனார்கள் என்று உரைப்பாயிரம் கூறுவது வியப்பாக இருக்கிறது. இருக்கட்டும். பொருளதி காரத்துக்கு உரை காணவல்லார் கிடைக்காமற்போனபோது ஆலவாயிற்கடவுள், பொருள் கூற வல்லவரை அளித்திருக்க வேண்டும் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரத்துக்கு உரைஎழுதிக் கொடுத்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாமல் அறுபது சூத்திரங்களைக் கொண்ட ஒரு புதிய நூலைக் களவியல் என்னும் பெயர் கொடுத்து ஆக்கித் தந்தார். இப்படிச் செய்ததேன்? தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரங்கள் இருக்கும் போது, புதிய அகப்பொருள் சூத்திரங்களை எழுதித் தந்ததேன்? இந்தப் புதியஅகப்பொருள் நூலுக்குச் சங்கப் புலவர் பொருள் கண்டார்களா என்றால் காணவில்லை. தங்களுக்கோர் காரணிகனைத் தரவேண்டும் என்று தவங்கிடந்து சிவபெருமானை வேண்டினார்கள். அவரும் ஒரு காரணிகனைக் காட்டினார். அந்தக் காரணிகனும் ஊமைப்பிள்ளை! இந்தக் காரணிகன், இந்தப் புதிய அகப்பொருளுக்கு நக்கீரர் உரைத்த உரைதான் உண்மையான உரை என்று மெய்ம்மயிர் சிலிர்த்துக் கண்ணீர் வடித்ததன் மூலம் மெய்யுரைக்குச் சான்று தந்தார். களவியல் சூத்திரங்களும் அகப்பொருள் சூத்திரங்களும் மேற்கொண்டு ஆராய்ச்சியைச் செலுத்துவதற்கு முன்பு இறையனார் அகப்பொருள் (களவியல்) சூத்திரங்களைப் பற்றிக் காண்போம். இறையனார் புதிதாகச் செய்து கொடுத்த களவியல் அறுபது சூத்திரங்கள் முழுவதும் புதியவை அல்ல. அவர் தொல்காப்பியத்திலிருந்தும் சில சூத்திரங்களை எடுத்துத் தம்முடைய புதிய களவியலில் சேர்த்துக்கொண்டார். அவை: (1) தொல். வேற்றுமை. 114 - இறையனார் அகம் 59; (2) தொல். வேற்றுமை 174 - இறையனார் அகம் 54; (3) தொல். கற்பியல் 187 - இறையனார் அகம் 43; (4) தொல். களவியல் 130- இறையனார் அகம் 18; (5) தொல். களவியல் 133 - இறையனார் அகம் 17; (6) தொல். களவியல் 27- இறையனார் அகம் 7. தொல்காப்பிய அகப்பொருள் இருக்கும்போதே இறையனார் அகப்பொருளைப் புதிதாகச் செய்தார். ஏன்? தொல்காப்பிய அகப்பொருளுக்கும் இறையனார் அகப்பொருளுக்கும் வேறு பொருள்கள் உண்டா? பழைய கருத்துகளுக்குப் பதிலாகப் புதிய கருத்துகள் கூறப்பட்டுள்ளனவா? ஒன்றும் இல்லை. இறையனார் அகப்பொருளின் காலம் இறையனார் அகப்பொருளின் உரையாசிரியர் அதனுடைய உரைப்பாயிரத்தில் இந்நூல் இயற்றப்பட்ட காலம் கடைச்சங்கக் காலம் என்று கூறுகிறார். “இனிக் காலமென்பது கடைச் சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்டது. இனிக் களமென்பது உக்கிரப் பெருவழுதியார் அவைக்களமென்பது. காரண மென்பது அக்காலத்துப் பாண்டியனாருஞ் சங்கத்தாரும் பொருளிலக்கணம் பெறாது இடர்ப்படுவாரைக் கண்டு ஆலவாயிற் பெருமானடிகளால் வெளியிடப்பட்டது”என்று பாயிரம் கூறுகிறது. இங்கும் முரண்பாடு காணப்படுகிறது. கடைச்சங்கத் தார்க்குத் தொல்காப்பியம் இலக்கண நூலாக இருந்தது என்பதைக் கூறி, அத்தொல்காப்பியத்தில் பொருளதிகாரமும் இருந்தது என்று கூறிய பிறகு ‘காரணம் என்பது அக்காலத்துப் பாண்டியனாரும் சங்கத்தாரும் பொருளிலக்கணம் பெறாது இடர்ப்படுவாரைக் கண்டு வெளியிடப் பட்டது’ என்று கூறுவது முன்னுக்குப் பின் முரண்படுகிறது. பாண்டியன் உக்கிரப் பெருவழுதி கடைச்சங்க காலத்தின் இறுதியில் இருந்த பாண்டியன். அவன் ஏறத்தாழக் கி.பி. 200இல் இருந்தவன். தொல்காப்பியம் முழுவதும் அகப்பொருள் இலக்கணம் உட்பட இன்றளவும் நின்று நிலவுகிறது. ஆனால், உரைப்பாயிர ஆசிரியர் முன்னுக்குப் பின் முரணாக, உக்கிரப்பெருவழுதியும் சங்கத்தாரும் பொருளிலக்கணம் பெறாது இடர்ப்பட்டனர் என்றும் அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்கும் இறையனார் களவியலைஉண்டாக்கினார் என்றும் எழுதுகிறார். தொல்காப்பியப் பொருளதிகாரத்துக்குப் பொருள் காண வல்லார் கிடைத்திலர் என்று முன்பு கூறிய இவர், பிறகு‘பொருளதிகாரம் பெறாது இடர்ப்பட்டனர்’என்று கூறுகிறார். இங்கும் முன்னுக்குப் பின் முரண்படுகிறார். முதல் நூல் இறையனார் அகப்பொருள் முதல் நூலா வழி நூலா என்னும் கேள்வி எழுகிறது. தொல்காப்பியம் பொருளதிகாரம் இருக்கும் போதே இறையனார் இந்தக் களவியல் நூலைப் (அகப்பொருளை) புதியதாகப் பிற்காலத்தில் எழுதினார். இதனால் இது வழிநூல் எனப்படும் என்று கூறுவார்க்கு விடையாக உரைப்பாயிரம் எழுதியவர் இது முதல் நூல் என்று கூறுகிறார். “வழியென்பது இந்நூல் இன்னதன் வழித்து என்பது. இது வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவனாற் செய்யப்பட்டமையால் வழிநூலென்று சொல்லப்படாது, முதனூல் எனப்படுமென்பது.” இறைவனே செய்த நூலாகையினால், பிற்காலத்து வழி நூலானாலும், இது முதல் நூல் என்று கூறுகிறார். முதல் நூல் இருக்கும்போது வழிநூல் (அல்லது இன்னொரு முதல் நூல்) செய்யப்பட்ட காரணம் என்ன? தொல்காப்பியம் பொருளதி காரத்துக்கு உரை கூறுவோர் இல்லாமற் போனார்கள் என்று ஓரிடத்திலும் அது (பொருளிலக்கணம்) கிடைக்காமற் போயிற்று என்று இன்னொரு இடத்திலும் எழுதுகிற உரைப்பாயிரம் இந்த இடத்தில் குழப்புகிறது. தொல்காப்பிய அகப்பொருளும் இறையனார் அகப்பொருளும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் அகத்திணை இயல், களவியல், கற்பியல் ஆகிய மூன்று இயல்களும் உலகில் வாழ்கிற மாந்தரின் காதல் வாழ்க்கையைக் கூறுகின்றன; மாந்தருக்கும் கடவுளுக்கும் உள்ள தெய்வீகக் காதலைக் கூறவில்லை. இறையனார் அகப்பொருளும் மாந்தரின் உலகக் காதலைத்தான் கூறுகிறது. மாந்தருக்கும் தெய்வத்துக்கும் காதல் உண்டென்று இறையனார் அகப்பொருள் கூறவே இல்லை. ஆனால், அதனுடைய உரை மட்டும், மாந்தருக்கும் தேவருக்கும் உள்ள காதலைக் (பக்தியை) கூறுகிறது. உரை கூறுகிறதேயல்லாமல் நூல் கூறவில்லை. பழைய தொல்காப்பியம் மனிதக் காதலை மட்டும் கூறுகிறபடியால் அது பக்தி இயக்கத்தைச் சேர்ந்த பேரின்பக் காதலுக்கு ஓர் ஆதார நூலாகக் கொள்ளப்பட வில்லை. பேரின்பக் காதலுக்கு ஆதார நூல் ஒன்று தேவைப் பட்டபடியால் இறையனார் அகப்பொருள் நூல் புதிதாக உண்டாக்கப்பட்டது. இந்த நூலை மக்கள் நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்வதற்காக இறைவனே இந்த நூலை இயற்றினார் என்று கதை கற்பிக்கப்பட்டது. தமிழ் - அகப்பொருள் தமிழ் என்னுஞ் சொல்லுக்குத் தமிழ் மொழி, இனிமை, அழகு என்னும் பொருள்கள் உண்டு. இச்சொல்லுக்கு அகப் பொருள் என்னும் இன்னொரு பொருளும் உண்டு. ஆனால், இக்காலத்தில் இந்தச் சொல்லும் பொருளும் மறைந்து போயின. பழங்காலத்தில் இந்தப் பொருளில் தமிழ் என்னும் சொல்லாட்சி இருந்தது. கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த கபிலர், ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் (அகப்பொருள்) கற்பிக்கக் குறிஞ்சிப் பாட்டைப் (பெருங்குறிஞ்சி) பாடினார். இச்செய்யுளின் அடிக்குறிப்பு‘ ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குப் பாடியது’என்று கூறுகிறது. இங்குத் தமிழ் என்பதன் பொருள் அகப்பொருள் என்பது. பரிபாடல் 9ஆம் பாடலைப் பாடிய குன்றம்பூதனார் இச்செய்யுளில் அகப்பொருளைத் தண்தமிழ் என்று கூறுகிறார் (பரிபாடல் 9: 25- 26). இதற்கு உரை எழுதிய பரிமேலழகர் ‘தமிழ்’ என்பதற்கு அகப்பொருள் என்று உரை எழுதியுள்ளார். சீவகசிந்தாமணி பதுமையார் இலம்பகம் 163ஆம் செய்யுளில் அகப்பொருள் தென்தமிழ் என்று கூறப்படுகிறது. இதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை காண்க. ஐந்திணை ஐம்பது என்னும் நூல் அகப்பொருளைச் செந்தமிழ் என்று கூறுகிறது. திணைமாலை நூற்றைம்பதின் பாயிரம் அகப்பொருளை இன்தமிழ் என்று கூறுகிறது. பாண்டிக் கோவை 25ஆம் செய்யுள் அகப்பொருளைக் கொழுந்தமிழின் ஒண்துறை என்று கூறுகிறது. திருக்கோவையார் 20ஆம் செய்யுள் அகப்பொருளைத் தீந்தமிழின்துறை என்று கூறுகிறது (மயிலை சீனி. வேங்கடசாமி, ‘தமிழ் - அகம்’, Journal of Tamil Studies, No. 3, September 1973, pp. 1-3). இறையனார் அகப்பொருள் உரையும் அகப்பொருளைத் தமிழ் என்று கூறுகிறது. “ இனி நுதலிய பொருள் என்பது நூற் பொருளைச் சொல்லுதலென்பது. இந்நூல் என்னுதலிற்றோ வெனின் தமிழ் நுதலியதென்பது” என்றும், “இனி நூனுதவிய தூஉம் உரைக்கற்பாற்று. அது பாயிரத்துள்ளே உரைத்தாம்; தமிழ் நுதலியதென்பது” என்றும் அகப்பொருள் உரை கூறுகிறது. அகப்பொருளின் பயன் இறையனார் அகப்பொருளைக் கற்பதனால் உண்டாகும் பயன் என்ன என்பதை இந்நூலின் உரை கூறுகிறது.“ இனிப் பயன் என்பது இது கற்க இன்னது பயக்கும் என்பது. . . என்பயக்குமோ இது கற்கவெனின் வீடுபேறு (மோட்சம்) பயக்கும் என்பது” என்றும் ,“இங்குப் பிறவுங் களவுண்மை சொல்லி அக்களவுகட்கெல்லாம் இக்களவு சிறப்புடைமை சொல்லும், துறக்கம் வீடு பேறுகளை முடிக்குமாகலான்” என்றும் உரை கூறுகிறது. அதாவது, பக்திக் காதல் மறுமையில் வீடுபேற்றை அளிக்கிறது என்று உரை கூறுகிறது. இறையனார் அகப் பொருள் ஞான நூல் என்றும் கூறப்படுகிறது. “மதுரைஆலவாயில் அழனிறக் கடவுள் சிந்திப்பான்;என்னை பாவம் அரசற்குக் கவற்சி பெரிதாயிற்று அது தானும் ஞானத்திடையாகலான், யாம் அதனைத் தீர்க்கற்பாலம்” என்று கூறியது காண்க. இந்த உரையின் கருத்துப்படி, இறையனார் அகப்பெருள் நூலைக் கற்றால் ஞானமும் அதன் பயனாகிய வீடுபேறும் பெறலாம் என்பது தெரிகிறது. இறையனார் களவியல் தோன்றியதேன்? தொல்காப்பிய அகப்பொருள் இலக்கணம் இருக்கும் போது இறையனார் அகப்பொருள் (களவியல்) என்னும் பேரால் ஒரு புதிய அகப்பொருள் இலக்கணம் எழுதப்பட்டதேன்? பிற்காலத்தில், களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பக்தி இயக்கம் தோன்றியபோது அகப்பொருளுக்குப் பக்திக் காதல் என்ற புதிய பொருள் கற்பிக்கப்பட்டது. தொல்காப்பிய அகப்பொருள் உலகியல் காதலை மட்டும் கூறுகிறபடியால், அது புதிய பக்திக் காதல் கருத்துக்கு உரிய ஆதார நூலாகப் பயன்படவில்லை. ஆகவே, பக்திக் காதலாகிய பேரின்பக் காதலுக்கு ஆதாரமான ஓர் இலக்கண நூல் தேவைப்பட்டது. இந்தத் தேவையை நிறைவு செய்ய இறையனார் அகப்பொருள் என்னும் களவியல் புதிதாக உண்டாக்கப் பட்டது. ஆனால், இறையனார் அகப்பொருள் சூத்திரங்கள் பக்திக் காதலைப்பற்றி எழுதிக்கொண்டு போகிறது. இந்த உரையைக் கேட்டுத்தான் உப்பூரிகுடிகிழான் மகன் உருத்திரசன்மன் மெய்ம்மயிர் சிலிர்த்துக் கண்ணீர் வடித்தார் என்று கூறப்படுகிறது. களவியல் உரை கூறுவதைப் பார்ப்போம்: இறையனார் அகப்பொருள் - வரலாற்று ஆய்வு “அஃதேயெனின் . . . அவ்வெட்டும் (எண்வகை மணமும்) உலகினுள்ளன; இஃது (இறையனார் அகப்பொருள்) அன்ன தன்று. இல்லது இனியது நல்லதென்று புலவரால் நாட்டப்பட்டதோர் ஒழுக்கமாகலின், இதனை (இறையனார் அகப்பொருளை) உலகவழக்கி னோடு இயையானென்பது” (களவியல் முதலாம் சூத்திர உரை). 15ஆம் சூத்திர உரையில் “எனவே, இவ்வாற்றானும் உலகக்களவு (களவியல்) அன்று என்பதும் பெற்றாம்” என்றும், 31ஆவது சூத்திர உரையில் “ இல்லதனையே இல்லை என்றார்; இவன் உலகத்துத் தலைமகன் அல்லன்- புலவரால் நாட்டப்பட்ட தலைமகன் என்பதனை யாப்புறுத்தற்கு” என்றும் உரை கூறிச் செல்கிறது. 32ஆவது சூத்திர உரையில் “இவ்வாற்றானும் இஃது (இறையனார் களவியல்) உலகத்து இயல்பன்றென்பது பெற்றாம். மூப்புப்பிணி உள்வழிச் சாக்காடும் உண்மையாம் என்பது கடா. அதற்கு விடை எங்ஙனமோவெனின், இருதிங்கட் புக இவளும் பன்னீராட்டைப் பிராயத்தாய் இவனும் பதினாறாட்டைப் பிராயத்தனாய்ச் செல்வ தல்லது, மற்றைய நிகழா; உலகத்தி னொடு இத்துணை மாத்திரையே ஒத்து மற்றை விகற்பமெல்லாம் ஒவ்வாவெனக் கொள்க” என்றும், 39ஆவது சூத்திர உரையில், “இந்நூல் (களவியல்) உலகினோடு ஒத்தும் ஒவ்வாதும் நடக்கின்ற தாகலின், உலகியல் நோக்கிச் சாதிவரையான் இழிந்தாரெனப் பட்டது” என்றும், 60ஆவது சூத்திர உரையில், “அஃது இவ்வுலகினும் இயற்கையான் நிலைபெறாது புலவரான் இல்லது இனியது நல்லதென நாட்டப்பட்டதோர் ஒழுக்க மென்பார் ‘ கண்ணிய’ என்றார்” என்றும் களவியல் உரை கூறுகிறது. இதனால், புதியதாக உண்டாக்கப்பட்ட களவியல், உலகியல் அல்லாத இல்லது இனியது நல்லது என்று புலவரால் புனைந் துரைக்கப்பட்ட காதலைக் கூறுகிறதென்பது தெரிகிறது. சமண சமயமும் பௌத்த சமயமும் தமிழகத்தில் பெருகி வளர்ந்து சைவ, வைணவச் சமயங்கள் தாழ்ந்து குன்றியிருந்த களப்பிரர் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 5ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில்) சைவரும் வைணவரும் தங்கள் சமயங்களை வளர்ப்பதற்காகப் புதிய பக்தி இயக்கத்தை உண்டாக்கினார்கள். அதன் காரணமாக அகப் பொருளுக்குப் புதிய கருத்துகளைக் கற்பித்தார்கள். சிவபெருமானை அல்லது திருமாலைத் தலைவனாகவும் பக்தனாகிய உயிரைத் தலைவியாகவும் கற்பித்து நாயகன்- நாயகி பாவத்தை யமைத்தார்கள். இந்த முறையில் செய்யுள் பாடுவதற்கு இலக்கணச் சான்று உண்டா என்ற கேள்வி எழுந்திருக்க வேண்டும். இக்கேள்விக்கு விடையாக இறையனார் அகப்பொருள் என்னும் நூலைப் புதிதாக உண்டாக்கி அதற்குத் தெய்வத்தன்மை கற்பித்தார்கள் போலும். இந்த நூலில் பேரின்பக் காதலைப் பற்றி வெளிப்படையாகவோ மறைமுக மாகவோ சான்றுகள் இல்லையானாலும் உரையாசிரியர்கள் உரையில் சான்று காட்டினார்கள். ஆனால் - அந்த உரை ஏட்டில் எழுதப்படாமல் பத்துத் தலைமுறை வரையில் மந்திரம் போல மறை பொருளாகவே வைக்கப்பட்டு ஆசிரிய - மாணவர் பரம்பரையாகச் செவிவழியாக வந்தது. இதற்குள்ளாகப் புலவர்கள் களவியல் துறையமைத்துப் பாடல் களை இயற்றினார்கள். களவியல் துறையமைந்த பக்தித் தோத்திரப் பாடல்கள் வெளிவந்து வழக்கத்தில் ஒன்றினபிறகு களவியல் நூலையும் அதன் உரையையும் எழுதினார்கள். அதாவது, கி.பி. 8ஆம் நூற்றாண்டில், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் ஆகியோரின் தேவாரப் பாடல்கள் தோன்றிய பிறகுதான் இந்நூலையும் உரையையும் ஏட்டில் எழுதினார்கள். பத்தாவது தலைமுறையில் வந்த முசிறியாசிரியர் நீலகண்டனார் இறையனார் களவியலையும் அதன் உரையையும் ஏட்டில் எழுதி வெளியிட்டார். அந்த உரையில் இடையிடையே மாறவர்மன் பராங்குசன் என்னும் பாண்டியன்மேல் பாடப்பட்ட பாண்டிக்கோவை செய்யுட்கள் (ஏறத்தாழ 350 செய்யுட்கள்) மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. மாறவர்மன் பராங்குசன் கி.பி. 770 இல் பாண்டி நாட்டை யரசாண்டான். எனவே, கி.பி. 8ஆம் நூற்றாண்டில் இவன் இருந்தான் என்பது தெரிகிறது. இவனுக்கு முன் பத்துத் தலை முறைக்கு முன்பு இறையனார் களவியல் உண்டாயிற்று என்று கூறப் படுவதால், தலைமுறை யொன்றுக்கு 30 ஆண்டுகள் என்று கணக்கிட்டால் 30 ஒ 10 = 300 ஆண்டுகள் ஆகின்றன. எனவே, கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்கு 300 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இறையனார் அகப்பொருளும் அதன் உரையும் எழுதப்பட்டன என்பது தெரிகிறது. கி.பி. 5ஆம் நூற்றாண்டில் தமிழகத்தைக் களப்பிர அரசர்கள் அரசாண்டார்கள். களப்பிரர் ஆட்சிக் காலத்துக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 2ஆம் நூற்றாண்டில் கடைச்சங்க காலத்தில் நக்கீரர் வாழ்ந்திருந்தார். அந்த நக்கீரர் இறையனார் களவியலுக்கு உரை கண்டிருக்க முடியாது. கி. பி. 2ஆம் நூற்றாண்டில் இருந்தவர். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் எப்படி இருக்க முடியும்? ஆனால், இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம் சங்க காலத்து நக்கீரர் இந்நூலுக்கு உரை கண்டார் என்றும் அவ்வுரையைக் கேட்டவர் காரணிகன் உருத்திரசன்மர் என்றும் கூறுகிறது! நக்கீரர், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் காலத்தில் இருந்தவர். இந்த நெடுஞ்செழியன் காலத்துக்குப் பிறகு பாண்டியன் உக்கிரப் பெருவழுதி இருந்தான். இந்தப் பாண்டியன் அகநானூற்றைத் (நெடுந் தொகையை) தொகுப்பித்தான். தொகுத்தவர் உருத்திரசன்மன். இவர்கள் எல்லாரும் கி.பி. 250க்கு முன்பு இருந்தவர்கள். நக்கீரர், உருத்திரசன்மனுக்கு முன்பு இருந்தவர். உருத்திரசன்மன், இறையனார் அகப்பொருளுக்கு உரை கேட்டார் என்றும் நக்கீரர் உரை கூறினார் என்றும் களவியல் உரைப் பாயிரம் கூறுவது வரலாற்றுக்குப் பொருந்தாது. உருத்திர சன்மருக்கு முன்பே நக்கீரர் காலமாய்விட்டார். நக்கீரர், உருத்திரசன்மர், உக்கிரப் பெருவழுதி ஆகியோர் ஒரே காலத்தில் இருந்தவர்கள் என்று கொண்டாலும், கடைச்சங்க காலத்தில் இருந்த இவர்கள், களப்பிரர் காலத்தில், கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வெளிவந்த இறையனார் அகப்பொருளுக்கு எப்படி உரை கண்டிருக்க முடியும்? ஆகவே, உரைப்பாயிரம் கூறுகிற செய்திகள் நம்பத்தக்கனவல்ல, பக்தி இயக்கக் காலத்தில் இருந்த நக்கீரதேவநாயனாரைக் கடைச்சங்க காலத்தில் இருந்த நக்கீரரோடு தவறாக இணைத்துக் கூறுகிறது உரைப்பாயிரம் (இணைப்பு 4 காண்க). பக்தி இயக்கக் காலத்தில் கீரன் என்றும் நக்கீரதேவ நாயனார் என்றும் பெயர் கூறப்பட்ட ஒரு சிவபக்தர் இருந்தார். அவருடைய பாடல்கள் பதினோராம் திருமுறையில் தொகுக்கப் பட்டுள்ளன. இந்த நக்கீரனாரையும் இவருக்கு முன்பு சங்க காலத்தில் இருந்த நக்கீரனாரையும் பொருத்திக் கூறுகிறது இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம். ஆனால், இது வரலாற்றுக்குப் பொருந்தாத கற்பனை யாகும். முடிவுரை இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம் கூறுகிற முரண்பட்ட செய்திகள், விழிப்புடன் படிக்கிறவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்து கின்றன என்பதைக் கண்டோம். இதன் காரணத்தை விளக்குவோம். களப்பிரர் காலத்துக்கு முன்பு, சங்க காலத்தில் அகப் பொருள், புறப்பொருள் என்று இரண்டு கொள்கைகள் நாட்டிலும் ஏட்டிலும் இருந்தன. இவை பற்றிப் புலவர்கள் பாடிய செய்யுட்கள் நற்காலமாக இப்போதும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இவற்றிற்கு இலக்கணமாக இருந்தது தொல்காப்பியம் (தொல். பொருளதிகாரம்- புறப்பொருளியல், அகப்பொருளியல்). சங்க காலத்துக்குப் பிறகு களப்பிரர் ஆட்சி ஏற்பட்ட பின்னர் முத்தமிழை ஆராய்வதற்காகப் பாண்டியர் அமைத்த தமிழ்ச் சங்கம் கலைந்துவிட்டது. பௌத்த, சைன சமயங்கள் களப்பிரர் காலத்தில், முன்னைவிடச் செல்வாக்கும் சிறப்பும் பெற்று வளர்ந்தன. அப்போது புறப்பொருளைப் பற்றிய புதிய கருத்துச் செல்வாக்கடைந்தது. அதாவது, போரில் புறப் பகைவரை வென்று வெற்றி பெறுவதைவிட, அகப்பகையான மனமாசுகளையும் ஐம்புலன்களையும் அடக்கிப் பெறுகின்ற வெற்றியே சிறந்த வெற்றியென்னும் சைன- பௌத்த மதக் கொள்கை பரவிற்று. (அகப்பகையை வென்று வீரராக விளங்கிய புத்தர் பெருமானுக்கும் அருகக்கடவுளுக்கும் ஜீனன்- வெற்றி கொண்டவன் என்று பெயர் உண்டு.) புலன்களையும் மனத்தையும் அடக்கி அகப்பகையை வெல்லும் கொள்கை சைனருக்கும் பௌத்தருக்கும் புதியவையன்று. இக்கொள்கை அவர்களுக்குப் பழமையானது. ஆனால், அந்தக் கொள்கை சங்க காலத்தில் தமிழகத்தில் சிறப்புப் பெறவில்லை. புற வெற்றியே- போர்க்கள வெற்றியே பெரிதும் போற்றப்பட்டது. களப்பிரர் ஆட்சிக் காலத்தில். சைன, பௌத்த சமயங்கள் சிறப்பும் செல்வாக்கும் பெற்ற காலத்தில், அப்பகையை வென்று வீரனாகும் சமயக் கொள்கை வலுப்பெற்றுப் பரவிற்று. இது புறப்பொருளுக்குப் புதிதாக ஏற்பட்ட புது மாற்றம் ஆகும். அந்தக் காலத்திலே சைவ, வைணவ சமயங்கள் சமயப் பிரசாரத்துக்காகப் பக்திக் கொள்கையைப் புத்தம் புதிதாக உண்டாக்கின. இக்கொள்கைக்கு ஆதரவாக அகப் பொருளில் புதிய கொள்கையைப் புகுத்தினார்கள். புறப்பகையை வென்று வெற்றி வீரனாகத் திகழ்வதைவிட அகப்பகையை வென்று வீரனாவதே சிறந்தது என்று சைனரும் பௌத்தரும் புறப் பொருளுக்குப் புதிய கருத்துக் கூறியது போல, சைவரும் வைணவரும் உலகியல் அகப்பொருள் பற்றிச் சிற்றின்பக் காதலைப் பாடுவதைவிடக் கடவுளுக்கும் பக்தருக்கும் உள்ள தெய்வீகக் காதலைப் (பேரின்பக் காதலை) பாடுவது சிறந்தது என்று அகப்பொருளுக்குப் புதிய பொருள் கற்பித்தார்கள். அதாவது, கடவுளைக் காதலனாகவும் (தலை மகனாகவும்) பக்தர்களைக் காதலியாகவும் (தலைவிகளாகவும்) கற்பித்துப் பாடுகிற பேரின்பப் பக்திப் பாடல்களைப் புதிதாகத் தோற்று வித்தார்கள். இந்தப் பக்திக் காதலைச் சைனரும் பௌத்தரும் ஏற்றுக் கொள்ளவில்லை. தெய்வத்துக்கும் மனிதருக்கும் காதல் உறவு கற்பிப்பது சரியன்று என்பது அவர்களது கொள்கை. ஆனால், சைவ - வைணவர், சமணருக்கும் பௌத்தருக்கும் மாறுபாடான பக்திக் காதலை வற்புறுத்தி அகப்பொருள் துறை யமைந்த பக்திப் பாடல்களைப் பரப்பினார்கள். தொடக்கக் காலத்தில் இந்தக் கொள்கை தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்று தோன்றுகிறது. பொது மக்கள், முக்கியமாகப் புலவர்கள், தொல்காப்பிய இலக்கணம் கூறுகிற உலகியல் அகப் பொருளையே பின்பற்றினார்கள். ஆகவே, தெய்வீகக் காதலுக்கு இலக்கணச் சான்று பக்தி இயக்கத்தாருக்குத் தேவைப்பட்டது. ஆகவே, இறையனார் அகப்பொருள் அல்லது களவியல் என்னும் புதிய நூலை எழுதி அதை இலக்கணச் சான்றாகக் காட்டினார்கள். இதற்குத் தெய்வீகமும் பழமையும் கற்பிப்பதற்காகக் கதைகளைக் கற்பித்துக் கூறினார்கள். இது இறைவனால் (சிவபெருமானால்) உண்டாக்கப்பட்ட நூல் என்றும், தொல்காப்பியத்துக்குப் பின்னர் இயற்றப்பட்ட நூலானாலும் இது முதல்வனால் செய்யப்பட்டபடியால் ‘முதல் நூல்’ என்றும் இது பேரின்பக் காதலைக் கூறுகிறபடியால் ‘ஞான நூல்’ என்றும் கூறினார்கள். இதற்குப் பழமை கற்பிப்பதற்காக இந்த நூலுக்கு உரை கேட்ட காரணிகன், கடைச்சங்க காலத்தில் இருந்தவரும் அகநானூறு என்னும் அகப்பொருள் செய்யுட் களைத் தொகுத்தவரும் ஆன உருத்திரசன்மன் என்றும், இதற்கு ‘மெய்யுரை’ கண்டவர் சங்கப் புலவர் என்றும், ஆனால் சங்கப்புலவரான நக்கீரர் கூறிய உரையே இதற்கு ‘மெய்யான உரை’ என்றும் கற்பித்தார்கள். ஆனால், இந்த உரை உடனே ஏட்டில் எழுதப்படாமல், மந்திர உபதேசம் செய்வதுபோல, பரம்பரை பரம்பரையாகப் பத்துத் தலைமுறை வரையில் ஆசிரியர் - மாணவர் வழியில் ஓதப்பெற்றது என்றும் பத்தாவது தலைமுறையில் முசிறியாசிரியர் நீலகண்டனாரால் இவ்வுரை ஏட்டில் எழுதப்பட்டது என்றும் கதைகள் கற்பிக்கப்பட்டன. இவ்வாறு, புதிய கருத்துக்குப் பழமையும் சிறப்பும் கற்பிப்பதற்காகவும் இறையனார் அகப்பொருளும் அது பற்றிய கதைகளும் கற்பிக்கப்பட்டன என்று தோன்றுகிறது. இவர்கள் புதிதாக உண்டாக்கிய பேரின்ப அகப்பொருள் கொள்கை நாட்டில் ஊன்றிப் பரவுவதற்கு ஒரு நூற்றாண்டு சென்றிருக்க வேண்டும். ஏனென்றால், கி. பி. 7ஆம் நூற்றாண்டில் தான் அப்பர், சம்பந்தர் ஆகிய சைவ நாயன்மார்களும் ஆழ்வார்களும் அகப்பொருள் துறையமைந்த பக்திப் பாடல்களைப் பாடினார்கள் என்பதை அறிகிறோம். பக்தி இயக்கமும் பேரின்பமான அகப்பொருள் கொள்கையும் தோன்றிய பிறகே இத்தகைய பாடல்களைக் காண்கிறோம். இதற்கு முன்பு, கடவுளுக்கும் பக்தனுக்கும் உண்டான பேரின்பக் காதல் பற்றிய செய்யுள் ஒன்றேனும் கிடையாது. இது தமிழிலக்கிய வரலாற்றில் முக்கியமான செய்தியாகும்.  இணைப்பு - 4 நக்கீரர் காலம் சங்க காலத்தில் கி. பி. 200-க்கு முன்பு இருந்த நக்கீரர் வேறு, களப்பிரர் காலத்தில் இருந்த நக்கீரதேவநாயனார் வேறு என்பதைக் கண்டோம். ஆனால், சில அறிஞர்கள் இரண்டு நக்கீரரும் ஒருவரே என்று கருதிக்கொண்டு இவர்கள் இருவரும் கி. பி. 5ஆம் நூற்றாண்டில் களப்பிரர் காலத்தில் இருந்தவர்கள் என்று எழுதியுள்ளனர். இவர்கள் இவ்வாறு எழுதுவதற்குக் காரணம் என்னவென்றால், இறையனார் அகப்பொருள் என்னும் களவியலுக்கு உரை எழுதியவர், அந்நூலின் உரைப்பாயிரத்தில், சங்க காலத்து நக்கீரரும் களவியலுக்கு முதன் முதல் உரை கண்ட நக்கீரரும் ஒருவரே என்று கருதும்படி எழுதி யுள்ளது தான். களவியல் உரைப்பாயிரம் கூறுவதை முழு உண்மை என்று இவர்கள் கருதிக்கொண்டு ஆராய்கிறபடியால் இரண்டு வேறு நக்கீரர்களும் ஒருவரே என்று எழுதியுள்ளனர். திரு. எம். எஸ். இராமசாமி அய்யங்கார் தாம் எழுதிய தென்னிந்திய சைன ஆய்வுகள் என்னும் ஆங்கில நூலில் (M. S. Ramaswamy Ayyangar, Studies in South Indian Jainism, ‘Date of Nakkirar’, 1922) இவ்வாறு எழுதுகிறார்: “நக்கீரரும் செங்குட்டுவனும் சாத்தனாரும் ஆகிய இவர்கள் சமகாலத்தில், சங்க காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை எல்லோரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த நக்கீரர் இறையனாரின் களவியலுக்கு உரை எழுதிய நக்கீரர் ஆவார்; இந்த உரையை அவர் எழுதாமல் வாய்மொழியாகவே கூறினார். ஆசிரியர் - மாணவர் என்னும் வழிமுறையில் பத்துத் தலைமுறை வரையில் இந்த உரை வாய் மொழியாகவே கூறப்பட்டு வந்தது. இந்தச் செய்தியை, பின்னர் உரையை ஏட்டில் எழுதிவைத்த ஆசிரியர் கூறுகிறார். உரையை ஏட்டில் எழுதிய உரையாசிரியர் எந்தக் காலத்தில் இருந்தவர் என்பதை, அவர் தம்முடைய உரையில் அடிக்கடி கூறுகிற நெல்வேலியிலும் சங்க மங்கையிலும் போரில் வென்றவனும் அரிகேசரி பராங்குசன் நெடுமாறன் என்னும் பெயர்களைக் கொண்டவனும் ஆகிய பாண்டியன் இருந்த காலத்தைக் கொண்டு தீர்மானிக்கலாம். வேள்விக்குடிச் செப்பேட்டிலிருந்து இந்தப் பாண்டியன் கி. பி. 770இல் வாழ்ந்திருந்த ஜடிலவர்மன் பராந்தகனுடைய தந்தை என்பதை அறிகிறோம். ஆகையினாலே களவியல் உரையை ஏட்டில் எழுதிய ஆசிரியர் கி. பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வராதல் வேண்டும். இவர் காலத்தி லிருந்து பத்துத் தலை முறைகளைக் கணக்கிடுவோமானால், முதல்முதல் உரை கூறிய நக்கீரர் காலம் கி. பி. 5ஆம் நூற்றாண்டு என்றாகிறது. கி. பி. 770இல் இருந்து 10 * 30ஐக் கழிக்க வேண்டும். ஆகவே, இந்த நூற்றாண்டே சங்கம் (கடைச்சங்கம்) இருந்த காலமாகும்.” இவர் ஆராய்ந்து கண்ட முடிவு சரியே. இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரத்தின்படி ஆராய்ந்து, களவியலுக்கு உரை கண்ட நக்கீரர் கி. பி. 5ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கூறியது முற்றிலும் சரியே. இதையே நாமும் கூறியுள்ளோம். நக்கீரர் அடிநூல், நக்கீரர் நாலடி நானூறு, கயிலைபாதி காளத்திபாதித் திருவந்தாதி, திரு ஈங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருவெழுக்கூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், காரெட்டு, போற்றிக் கலிவெண்பா, கண்ணப்ப தேவர் திருமறம் ஆகிய நூல்களைப் பாடிய (இந்நூல்கள் சைவ சமயத் திருமுறைகளில் ஒன்றான பதினோராம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன) நக்கீர தேவநாயனார் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்தவர் என்று கூறினோம். ஆனால், இந்த நக்கீரர் கடைச்சங்க காலத்தில் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனையும் நெடுநல்வாடை முதலான சங்கச் செய்யுட் களையும் பாடிய சங்க காலத்து நக்கீரர்களும் ஒருவரே என்று தெரிகின்றனர். இது வரலாற்றுக்குப் பெரிதும் மாறுபாடாக இருக்கிறது. ஆகவே, இறையனார் அகப்பொருள் உரை இரண்டு வேறு நக்கீரர்களை ஒருவரே என்று இணைத்துக் கூறுவது தவறு என்பது நன்றாகத் தெரிகிறது. சங்க காலத்தில் திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரரை நக்கீரதேவநாயனாருடன் பிணைத்துக் கூறினால் இறையனார் அகப்பொருள் உரைக்குப் பெருமதிப்பு ஏற்படும் என்னும் காரணம்பற்றி இரு நக்கீரர்களையும் ஒருவராகப் பிணைத்துக் கூறினார்கள் போலும். ஆனால் இரண்டு நக்கீரர்களும் வெவ்வேறு காலத்தில் இருந்தவர்கள் என்பதும் இருவரும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பும் பின்பும் இருந்த வெவ்வேறு நக்கீரர்கள் என்பதும் தெரிகின்றன. திரு. பி. தி. சீனிவாச அய்யங்கார், தாம் எழுதிய தமிழர் வரலாறு என்ற ஆங்கில நூலில் நான்கு நக்கீரர்கள் இருந்தனர் என்று கூறுகிறார். அவர்களில் முதல் நக்கீரர் திருமுருகாற்றுப் படையையும் பத்துப்பாட்டில் நெடுநல்வாடையையும் சங்கத் தொகைகளில் பல செய்யுட்களையும் பாடியவர். இரண்டாம் நக்கீரர், நாலடி நாற்பது என்னும் செய்யுள் இலக்கணம் எழுதியவர். மூன்றாம் நக்கீரனார், அகப்பொருளுக்கு (இறையனார் அகப்பொருளுக்கு) முதன்முதல் உரை கண்டவர். நான்காம் நக்கீரர், பிற்காலத்தில் (பதினோராந் திருமுறையில்) சைவப் பாடல்களைப் பாடியவர். இந்த நால்வரையும் தமிழ்ப் புலவர்கள் ஒருவர் என்று இணைத்துக் கூறுகிறார்கள் என்று எழுதுகிறார் (P. T. Srinivasa Aiyangar, History of the Tamils, 1929, p. 409). இவர் கூறுகின்ற நான்கு நக்கீரர்களை இரண்டு நக்கீரர் களாக அடக்கலாம். ஒருவர் சங்கச் செய்யுட்களையும் நெடுநல் வாடையையும் திருமுருகாற்றுப்படையையும் பாடிய கடைச் சங்க காலத்து நக்கீரர். இவர் கி. பி. 2 ஆம் நூற்றாண்டில் இருந்தவர். இரண்டாம் நக்கீரர் நாலடிநாற்பது என்னும் யாப்பிலக்கண நூலை எழுதியவர் என்று யாப்பருங்கல உரைகாரர் கூறுகிறவரும் இறையனார் அகப்பொருள் உரைக்கு முதன்முதல் உரைகண்டவரும் பதினோராம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ள தோத்திரப் பாடல்களைப் பாடியவரும் ஆவர். திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, இறையனார் அகப்பொருள் உரை கூறுகிற நக்கீரர் காலத்தையறிய முடியாமலிருப்பது பற்றித் தம்முடைய பாண்டிய இராச்சியம் என்னும் நூலில் இவ்வாறு எழுதுகிறார்: “இறையனார் அகப்பொருளுக்குத் தலைமுறை தலை முறையாகத் தொடர்ந்து வந்த நக்கீரனாருடைய உரை, இப்போதுள்ள படி சங்கச் செய்யுட்களிலிருந்து மேற்கோள் காட்டுவதோடு கி. பி. 7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு நடக்காத நிகழ்ச்சிகளையும் மேற்கோள் காட்டுகிறது. இந்த மேற்கோள்களிலிருந்து (இவர் காலத்தைப் பற்றி) ஒன்றும் அறிய முடியவில்லை” என்று எழுதுகிறார். மேலும் அவர் எழுதுவது வருமாறு: “தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் சமகாலத்தில் இருந்தவரும் அவனுக்கு வயதில் இளையவருமான நக்கீரரின் காலத்தையறிய இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படுகிற பாண்டிய அரசர் காலத்திலிருந்து பத்துத் தலைமுறையைப் பின்னால் கொண்டு கணிக்கும் முயற்சியும் அவர் காலத்தைத் திருப்திகரமாகக் கூறமுடிய வில்லை” (K. A. Nilakanta Sastri, The Pandian Kingdom). இவர், நக்கீரனாரின் காலத்தை அறியமுடியாத காரணம் என்ன? இறையனார் அகப்பொருளின் உரைப்பாயிரம் பழைய காலத்து நக்கீரரையும் பிற்காலத்து நக்கீரரையும் ஒருவராக இணைத்துப் பொருத்திக் கூறுகிற தவறு காரணமாகக் காலத்தை அறிய முடிய வில்லை. இரண்டு நக்கீரர்களையும் தனித்தனிப் பிரித்துவிட்டுக் கவனித்துப் பார்த்தால் காலத் தெளிவாகத் தெரிகிறது. இறையனார் அகப்பொருளுக்கு உரை கண்ட நக்கீரர் கி. பி. 5ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்பதும் தெளிவாகத் தெரிகின்றன.  நூலடைவு இலக்கியம் 1. அகநானூறு 2. குறுந்தொகை 3. சிலப்பதிகாரம் 4. சீவகசிந்தாமணி 5. நற்றிணை 6. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 7. பதிற்றுப்பத்து 8. பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் 9. பட்டினப்பாலை 10. பரிபாடல் 11. பன்னிரு திருமுறைகள் 12. பாண்டிக்கோவை 13. புறநானூறு 14. பெரியபுராணம் 15. பெருங்கதை 16. மணிமேகலை இலக்கணம் 17. இறையனார் களவியல் உரை 18. கல்லாடம் 19. தொல்காப்பியம் 20. யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரைகல்வெட்டுகள் 21. பல்லவர் செப்பேடுகள் முப்பது 22. பாண்டியர் செப்பேடுகள் பத்து 23. Annual Report on South Indian Epigraphy (from 1887) 24. Epigraphia Carnatica 25. Epigraphia Indica 26. Epigraphia Zeylonica 27. Inscriptions of Pudukottai State 28. Mysore Archaeological Report 29. Rangacharya, V., A Topographical List of the Inscriptions of the Madras Presidency (Three Volumes) 30. South Indian Inscriptions தமிழ் நூல்கள் 31. சதாசிவப் பண்டாரத்தார், டி. வி., தமிழ் இலக்கிய வரலாறு, கி. பி. 250 - 600), 1965 32. பாண்டியர் வரலாறு, 1969 33. பன்னீர் செல்வம், இரா., தமிழ்நாடும் களப்பிரரும், 1973 34. மயிலை சீனி. வேங்கடசாமி, சமணமும் தமிழும் 35. பௌத்தமும் தமிழும் 36. மறைந்து போன தமிழ் நூல்கள் 37. 19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 38. வேங்கடராஜூலு ரெட்டியார், வே., கபிலர், 1936 ஆங்கில நூல்கள் 39. Arokiaswamy, M., The Early History of the Vellar Basin, 1954 40. Codrington, H. W., A Short History of Ceylon 41. Jyothi Prasad Jain, ‘The Jaina Sources of History of Ancient India’, Ancient India (100 BC - 900 AD), 1964 42. Krishna Rao, N., A History of the Early Dynasties of Andhra Desa 43. Krishnaswamy Ayyangar, The Age of Imperial Unity, Vol. II 44. Law, B.C., Geography of Early Buddhism 45. Nilakanta Sastri, K. A., The Colas 46. A Comprehensive History of India, Vol II 47. Foreign Notices of South India 48. Pandyan Kingdom 49. Rama Rao, M., Studies in the Early History of Andradesa 50. Ramaswamy Ayengar, M. S., Studies in South Indian Jainism 51. Sivaraja Pillai, K. N., The Chronology of the Early Tamils 52. Srinivasa Iyangar, P. T., History of the Tamils, 1929 53. Subramaniam, N., History of TamilNadu (to AD 1336) 54. Vaiyapuri Pillai, S., History of Tamil Language and Literature, 1959 55. Wilhelm Geiger (Translation), Sulavamsa, 1929 மலர்கள் 56. அண்ணாமலைப் பல்கலைக்கழக இதழ், தொகுதி 6 57. சீவகசிந்தாமணி சொற்பொழிவு மலர், 1952 58. செந்தமிழ், தொகுதி 12, 20 59. Journal of History, VIII, XXXIV 60. Journal of Oriental Research, Madras, 1993 61. Journal of Royal Asiatic Society, 1934 62. Journal of Royal Asiatic Society, Ceylon Branch, XXIV 63. Journal of Tamil Studies, III 64. Madras Christian College Magazine, January 1929 65. University of Ceylon Review, Vol, III, Pt. I கன்னட நூல்கள் 66. கிருஷ்ண ராவ், டாக்டர் எம். வி., கேசவபட்ட, எம்., கர்நாடக இதிஹாஸ தர்ஸன (கன்னட தேசத்தின் வரலாறு), 1970 67. சிதானந்த மூர்த்தி, டாக்டர் எம்., கன்னட ஸாஸனகள ஸாம்ஸ்கிருதிக அத்யயன (கி. பி. 450 - 1150), 1966 பாலி மொழி நூல்கள் 68. ஆசாரிய புத்ததத்ததேரர், வினய வினிச்சயம் 69. வட்டாரதனெ; பத்ராபாஹூ பட்டாரா கதெ. பாண்டிய நாட்டில் களப்பிரர் மு. அருணாசலம் பாண்டிய நாட்டில் களப்பிரர் அந்நாட்டு வாழ்வியலிலும் இலக்கியத்திலும் அவர்கள் தாக்கம். [ 1976-77ஆம் ஆண்டிற்கான சங்கரா -பார்வதி அறக்கட்டளைச் சொற்பொழிவின் சுருக்கம்: சென்னைப்பல்கலைக்கழக ஆய்விதழ்: பிரிவு அ : கலைப் புலங்கள்; தொகுதி 51, சனவரி 1979 இதழில் பக்கங்கள் 1-168இல் வெளிவந்தது. Journal of the Madras University; Section A: Humanities Vol.LI No.1] அறிமுகம் தமிழக வரலாற்றில் ஏறத்தாழ கி.பி.250-575 ஆண்டுகள் சமயம்., வரலாறு, இலக்கியம் மூன்று துறைகளிலும் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது. எனினும் பின்வரும் இரண்டு கோணங்களிலிருந்து ஓரளவு இவ்விருளைப் போக்க விழைகிறேன். (i) களப்பிரர் பற்றிக் குறிப்பிடும் பராந்தக நெடுஞ்சடையன் (கி.பி.756-815) உடைய வேள்விக்குடிச் செப்பேடு (ARE 1908) & எபிகிராபியா இண்டிகா 17 (1923) பக்.291-309; மற்றும் பராந்தக வீர நாராயணன் ) (860-905) உடைய தளவாய்புரம் செப்பேடு. (ii) பெரியபுராணம் மூர்த்தி நாயனார் புராணம் பாடல்கள் 11-14: (கானக்கடிசூழ் வடுகக் கருநாடர் மன்னன் மதுரையைப் பற்றி, வலிந்து நிலங்கொண்டு, அருகர்தம் திறத்தினில் சிந்தை தாழ்ந்து, சடையான் அடியாரை வன்மை செய்ததாகக் கூறுவன) பிரிவு I - பாண்டி நாட்டில் களப்பிரர் சங்ககாலப் பாண்டியர் 1. பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி (கி.மு.4-3 நூற்.?) தொடங்கி தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (கி.பி.2ம் நூற்.) வரை யாரும் சமண, புத்த சமயங்களைச் சார்ந்தவர் எனக் குறிப்பிடப்படவில்லை. எட்டுத்தொகை, பத்துப்பாட்டுப் பாடல்கள் 2381 எவையும் சமண புத்த சமயங்களைப் பற்றி குறிப்பிடவில்லை. எனவே கி.பி.250இல் களப்பிரர் பாண்டி நாட்டைக் கைப்பற்றும் வரை பாண்டி நாட்டில் சமணசமயம் பரவவில்லை. (கி.மு.2-1 நூற்றாண்டு எனக் கூறப்படும் மதுரைப் பக்கக் குகைக் கல்வெட்டுகள் - தமிழ்க் கல்வெட்டுகள்- சமணரைச் சார்ந்தனவாகத் தோன்ற வில்லை; சார்ந்தனவாக இருப்பினும் சல்லேக்கணம் செய்ய வந்த நாடோடிச் சமணமுனிவர் பற்றியனவே யென்க.) வேள்விக்குடிச் செப்பேடு ( 155 வரிகள்: 1-30; 99-101; 142-150 சம்ஸ்கிருதத்தில்; ஏனையவை தமிழ் வட்டெழுத்தில்) 2. முதுகுடுமிப் பெருவழுதி (கி.மு.4-3? நூற்.) பாகனூர்க் கூற்றத்து (சோழவந்தான் அருகே) வேள்விக்குடியில் கொற்கை கிழான் நற்கொற்றனுக்கு கொடுத்த நிலம் கி.பி.250-575இல் ஆண்ட களப்பிரர் காலத்தில் பறிக்கப்பட்டது. பின்னர் பாண்டியர் ஆட்சியைக் கடுங்கோன் மீண்டும் நிறுவி சில தலைமுறைகள் ஆனபின்னர் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் நற்கொற்றன் வழிவந்தவனுக்கு பாண்டியன் நெடுஞ்சடையன் அந்நிலத்தை மீண்டும் கொடுத்தான். களப்பிரர் யார்? 3. களப்பிரர் தமிழரே; ஆயினும் பிராமணத் எதிர்ப்பாளர் என்பர் க.ப.அறவாணன். (சைனரின் தமிழ் இலக்கண நன்கொடை 1974) பிஜி.எல் சுவாமி தனது “Kalabhra Interregnum - a retrospect and Prospect Bulletin of the institute of Traditional cultures; Jan-June 1976) கட்டுரையில் களப்பிரர் எனக் குறிக்கப்படுபவர் கங்கமன்னர்களே; அவர்கள் சைவர்கள்; பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை (வடக்கே கரூர்-திருச்சி; தெற்கே சோழவந்தான்-திருமங்கலம் வரையுள்ள ஒரு சிறு பகுதியைக் கைப்பற்றி ஒரு சில ஆண்டுகள் ஆண்டவர்கள் என்று கூறுகிறார். அறவாணன், சுவாமி கருத்துக்கள் அபத்தமானவை. களப்பிரர் தமிழரும் அல்லர்; கங்கரும் அல்லர். கன்னட வந்தேறிகளான களப்பிரர் காலத்தில் தமிழ் செழிப்புற்று விளங்கியதாகக் கூறுவது சரியல்ல. (வேள்விக்குடிச் செப்பேட்டு நெடுஞ்சடையன் “கங்க ராஜனொடு சம்பந்தஞ் செய்ததாக” அச்செப்பேடு குறிப்பிடுகிறது. களப்பிரர் கங்கராயின் செப்பேடு களப்ரன் என்னும் கலியரசன் எனக் கூறுமா? கங்கர் இலச்சினை யானை; களபம் - (வடமொழியில்) யானை. எனவே களப்பிரர் கங்கர் என்பது சரியல்ல.) 4. களப்பிரர் கள்வர் என்பதும் தவறு. அவர்கள் கள்வராயின் செப்பேடு அவ்வாறே குறிப்பிட்டிருக்கும். “களப்ர” என கிரந்த எழுத்தில் குறிப்பிட்டிராது. 5. களப்பிரர் தமிழரல்லர். கருநாடக எருமைநாடு (மைசூர்) பகுதியில் சிரவணபௌகுள வட்டாரம் களபப்பு (Kalabappu) நாடு என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது; அங்கிருந்து வந்த வந்தேறிகளே களப்பிரர். அவர்கள் அரசகுலத்தவரும் அல்லர். கொள்ளை தேடிவந்த இனக்குழுவினரே “merely a sort of marauding tribe” (ப.120) பாண்டிய அரச குலத்தை மதுரையை விட்டு ஓட்டிவிட்டு பாண்டி நாட்டை அரசாளலாயினர். (பாண்டி நாடு முழுவதையுமோ, சோழநாடு முழுவதையுமோ களப்பிரர் முற்றாகத் தம் ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்ததாகக் கூற இயலாது. ஆயினும் அவர்கள் தம் ஆட்சிக்குப் பின் கீழ்வந்த தமிழகப் பகுதிகளின் மொழி (தமிழ்மொழி), பண்பாடு, சமயம் (சைவ - வைணவ சமயம்) ஆகியவற்றைச் சீரழிக்க முயன்றனர். ‘they were total strongers to the language, culture and religion of the land they conquered and their policy of suppression created all these problems and more. 6. முத்தரையர் களப்பிரரில் ஒரு பிரிவினர் ஆக கி.பி.3ஆம் நூற்றாண்டு இடைப்பகுதியிருந்தே இருந்திருக்கலாம். (சேர, சோழ, பாண்டிய - மூன்று நாடுகளையும்) ஆண்டதால் “முத்தரையர்” என அழைக்கப்பட்டனர் என்பது சரியல்ல; கி.பி.9ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஓரிரு நூற்றாண்டுகளே - பிற்காலச் சோழமன்னர் காலத்தில் மூன்று நாடுகளும் ஒருசேர ஆளப்பட்டன) பாண்டி நாட்டில் களப்பிரர் ஆட்சி வீழ்ந்த பின்னர் தஞ்சை - வல்லம் பகுதியில் வாழ்ந்த முத்தரையர் பல்லவர்/பாண்டியர் உடன் நட்புறவு கொண்டு சிற்றரசு ஆக நீடித்துப் பின்னர் விஜயாலய சோழன் பரம்பரையினர் காலத்தில் ஆட்சியிழந்தனர் எனக் கொள்ளலாம். களப்பிரர் மொழியும் சமயமும் களப்பிரர் மொழி 7. கன்னட நாட்டிலிருந்து வந்த களப்பிரருள் சாமானியர் பேசியது பழங்கன்னடமாக (அதுவும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்தபடி) இருந்திருக்கும். அவர்கள் சமயம் சமணம். சமணத்துறவிகளும் படித்தவர்களும் அர்த்தமாகதி பாகதத்தை (பிராகிருதத்தை)ப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. எனவேதான் ஞானசம்பந்தர் தேவாரம் 3:39.4ல் “மந்திபோல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலாஅந்தகர்...” என்று சமணரைப் பழிக்கிறார். கன்னடமொழிக் களப்பிரர் பாண்டிய நாட்டில் புகுந்து நிலை பெற்றதால் சில கன்னடமொழிக் களப்பிரர் பாண்டிய நாட்டில் புகுந்து நிலை பெற்றதால் சில கன்னடச் சொற்கள் நாளடைவில் தமிழிலக்கியத்திலும ஏறின. ஸஎ.கா. திருவாசகம் : அருள்பத்து பாடல்கள் பத்தில் ஒவ்வொன்றும் “அதெந்துவே என்று அருளாயே” என முடிகிறது. அதெந்து = அது என்ன (கன்னடத்தில்)] களப்பிரர் சமயம் களப்பிரர் காலத்துக்கு முந்திய தமிழர், சைவரும் வைணவரும் வேதமதத்தை ஏற்றவர்கள் - யக்ஞம் முதலியவற்றைச் செய்திலர் ஆயினும். (The Tamils of the day were a race of people who accepted the authority of the vedas. p.103) பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய களப்பிரர் சமண சமயத்தவர். கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்லாடத்தின் 57ஆம் பாடல் வருமாறு: “ படை நான்கு உடன்று பஞ்சவர்த் துரந்து மதுரை வெளவிய கருநடவேந்தன் அருகர்ச் சார்ந்து அரன்பணி அடைப்ப” கி.பி.6ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஞானசம்பந்தர் தன் தேவாரப் பதிகம் ஒவ்வொன்றிலும் பத்தாம் பாடலில் சமணரையும் பௌத்தரையும் கடுமையாக நிந்தனை செய்கிறார். சோழ நாட்டில் வந்தேறிய களப்பிரர் புத்தமதத்தைப் பின்பற்றினர். கிபி.5ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியில் காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டு வந்த களபகுல(களப்பிர) அரசன் அச்சுதவிக்கந்தன் புத்த சமயத்தைச் சார்ந்தவன். 9. அச்சுத விக்கந்தன் காலத்தில் உறையூரில் இருந்து சோழநாட்டின் ஒரு சிறுபகுதியை ஆண்டு வந்த சோழன் செங்கணான் (இவன் புறநானூற்றில் வரும் செங்கணான் அல்லன்; பிந்நாளில் அப்பெயர் கொண்டு ஆண்டவன்) “எண்தோளீசர்க்கு எழில்மாடம் எழுபது செய்தான்” இவனைத் திருமங்கையாழ்வார் பாராட்டுகிறார். சோழ அரச குலத்தினர் சிலர் ஆந்திரநாட்டுக்குச் சென்று இந்நாள் கடப்பை கர்நூல் பகுதிகளில் “இரேனாட்டுச் சோழர்” என்ற பெயரில் பல நூற்றாண்டுகள் ஆண்டு வந்தனர். தெலுங்கில் “சோழர்” என்பது “சோடர்” என மாறிவிட்டது. 10. சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் “கூற்றன் களந்தைக் கோன்” என்று அழைக்கும் மன்னனை நம்பியாண்டர் நம்பி திருத் தொண்டர் அந்தாதியில் ‘களப்பாளன் ஆகிய கூற்றுவன்’ என அழைக்கிறார்; (களந்தை இன்று திருத்துறைப்பூண்டி அருகே உள்ள களப்பால் ஆகும்.) சேக்கிழார் பெரிய புராணத்தில் ‘களந்தை முதல்வனார்’ ‘களந்தைக் கூற்றனார்’ என்று அழைக்கிறார். ம.சீ.வேங்கடசாமி போன்றோர் கூற்றுவநாயனாரைக் களப்பாளர் குலத்தவர் என்று சொல்வதற்கு ஆதாரமில்லை. களந்தையைக் “களப்பு” எனத்திரிந்து “களப்பாளன்“ (களந்தையை ஆண்டவன்) என்று நம்பி கூறினார். கூற்றுவர் களப்பாள குலத்தவர் என சுந்தரரும் கூறவில்லை; நம்பியும் கூறவில்லை. ஆகவே கூற்றுவ நாயனார் களப்பிரர் அல்லர். பிற்காலத்தில் தமிழக வரலாற்றில் வரும், களப்பாளராயர் நெற்குன்றம் கிழார் அச்சுத களப்பாளராயர் (சிவஞானபோதம் எழுதிய மெய்கண்டார் தந்தை) 13ஆம் நூற்றாண்டு சார்ந்த சில களப்பாளராயர்கள் ஆகியோரும் களப்பாளர் குலத்தவர் அல்லர். களப்பிரர்/களப்பாளரை கி.பி.575க்குப் பின் அடக்க உதவிய “தமிழ்ச் சாதியினரூர்” களப்பாளராயர் எனப்பட்டவராவர். பிரிவு II பாண்டிய நாட்டு வாழ்வியலிலும் இலக்கியத்திலும் களப்பிரர் தாக்கம் 11. சமணர் ஆகிய களப்பிரர் கி.பி.3-6 நூற்றாண்டுகளில் அகப்பொருள் இலக்கணத்தையும் இலக்கியங்களையும் நலிவடையச் செய்தனர் என உன்னிக்கலாம். கி.பி.250க்குப் பின்னர் மதுரைத் தமிழ்ச் சங்கமும் நலிவுற்று விரைவில் இல்லாதொழிந்தது. (பக்.128) பாண்டி நாட்டில் அக்கால கட்டத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரம் வழக்கற்றது போலும். கி.பி. 8ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் எழுந்த இறையனார் அகப்பொருளின் உரைகாரர் “பொருளதிகாரம், வல்லாரைக் கண்டிலம்” என்றதன் உட்பொருள் இதுவே எனலாம். 13. நாயன்மார்கள் 63வரில் பாண்டியநாட்டைச் சார்ந்தவர் நால்வர் மட்டுமே: (கூன்) பாண்டியன் நெடுமாறன், மங்கையர்க்கரசி, அமைச்சர் குலச்சிறை, மூர்த்திநாயனார். பாண்டியநாட்டில் ஏறத்தாழ 300 ஆண்டுகள் களப்பிரர் ஆதரவுபெற்ற சமணம் ஓங்கியும், சைவமதம் ஒடுங்கியும் இருந்தது இதற்குக் காரணம். 14. இறந்துபட்ட பல நூல்களைப் பற்றி இறையனார் களவியலுரை கூறுகிறது. இழப்பிற்குக் காரணம் களப்பிரர் ஆட்சி எனலாம். தமிழ்மொழியும் இலக்கியமும் நலிவுற்றது மட்டுமன்றித் தமிழிசையும் நலிந்தது. கி.பி.7ஆம் நூற்றாண்டில் இசைப்பாணர் குலத்தினரைக் காண்பது அரிதாயிற்று. (“முத்தமிழ்” என்ற வழக்காறு தொல்காப்பியத்திலும் இல்லை; சங்க இலக்கியத்திலும் இல்லை. (கி.பி.7ஆம் நூற்.) சம்பந்தர் தேவாரத்திலும் (8ஆம் நூற்.) முத்தொள்ளாயிரத்திலும் தான் உள்ளது. 15. திருக்குறள் (கி.பி.2ஆம் நூற்.) ஆசாரக்கோவை, முதுமொழிக் காஞ்சி (இரண்டும் கி.பி.7ஆம் நூற்.) ஆகிய மூன்றைத் தவிர பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஏனைய 15ஆம் களப்பிரர் காலத்தில் எழுந்தவை - அவர்கள் ஆதரவோடு எழுந்தன எனக் கூற ஆதாரமில்லையெனினும் களப்பிரர் காலம் சார்ந்த ஏனைய நூல்கள் மணிமேகலை (6ஆம் நூற்.) சோழ நாட்டில் திருமூலர் எழுதிய திருமந்திரம்; காரைக்காலம்மையார் பதிகங்கள் (கி.பி.5ஆம் நூற்.) முதலாழ்வார்கள் மூவரின் பாடல்கள் (கி.பி.6ஆம் நூற்.) 16. கி.பி. 470இல் வஜ்ரநந்தி மதுரையில் களப்பிரர் ஆதரவில் நிறுவியது சமண சமயம் பரப்புவதற்கு நிறுவிய “திரமிட சங்கம்” இலக்கிய அமைப்பு அல்ல (இச்சைன சங்கத்தை கி.பி. 853இல் எழுதிய திகம்பர தர்சனத்தில் தேவசேனர் குறிப்பிடுகிறார்.  களப்பிரர் வருகை நடன காசிநாதன் (1981 முன்னுரை களப்பிரர் பற்றி திரு. கிருஷ்ணசாமி அய்யங்கார் முதல் பல வரலாற்றாசிரியர்கள் சிறு குறிப்பு அளவில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அண்மைக் காலங்களில் திரு. இரா. பன்னீர் செல்வம், “தமிழ்நாடும் களப்பிரர் ஆட்சியும்”, என்றும், திரு. மு. அருணாசலம் ‘பாண்டி நாட்டில் களப்பிரர்’ என்றும் நூல்கள் எழுதி யுள்ளனர். கி.பி. 3ம் நூற்றாண்டு முதல் கி.பி. 10ஆம் நூற்றாண்ட வரையிலான களப்பிரர் பற்றிய முழு வரலாறு இந்நூலில் எழுதப் பட்டிருக்கிறது. களப்பிரர்கள் யாவர் என்பது கல்வெட்டு ஆதாரங்களுடன் ஆராயப்பட்டுள்ளது. கள்வர், களப்பிரர், களப்பாளர் ஆகிய மூன்று சொற்களுமே களப்பிரர் குலத்தைக் குறிக்கிறது எனில் தவறில்லை. களப்பிரர் பற்றிய ஒரு புதிய நோக்கை இந்நூலில் அளிக்க முயன்றுள்ளேன். இது மேலும் பல ஆராய்ச்சிக்கு உதவும் என எண்ணுகிறேன். அன்பன். நடன காசிநாதன் களப்பிரர் வருகை தமிழக வரலாற்றைக் கற்காலம் தொட்டு தற்காலம் வரை வரலாற்றாசிரியர்கள் எழுதி வருகின்றனர் என்றாலும் சங்க காலத்தை அடுத்து மூன்று நூற்றாண்டு காலத்தில் தமிழகத்தின் நிலை என்ன என்பதைச் சரிவரக் கூறமுடியாத நிலையிலேயே உள்ளனர். அக்கால கட்டத்து வரலாற்றை அறிந்து கொள்வதற்குப் போதிய சான்றுகள் குறிப்பிட்ட அளவில் கிடைக்காத காரணத்தால் அதனை ‘இருண்ட காலம்’ என்று கூறுகின்றனர். அக்கால கட்டத்தில் ‘களப்பிரர்கள்’ என்னும் அரச பரம்பரையினர் ஆண்டிருக்கக்கூடும் என்பதை வேள்விக்குடிச் செப்பேடுகள் குறிப்பால் உணர்த்துவதால் ‘களப்பிரர் காலம்’ என்றும் கூறுவர். பொதுவாகக் களப்பிரர்கள் கி. பி. 3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி. பி. 6-ஆம் நூற்றாண்டு வரை ஆண்டவர் என்பர். அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில கல்வெட்டுக்களால் அவர்கள் கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரையிலும் தமிழகத்தில் சிறுபகுதியையேனும் ஆண்டிருக்க கூடும் என்பது தெரியவருகிறது. அதற்குப் பிற்பட்ட காலத்தில் அவர்கள் ஓரளவுக்குத் தம் நிலை தாழ்ந்து சோழ, பாண்டிய மன்னர்களிடத்தில் அரசு அதிகாரிகளாகப் பணிபுரிந்து வந்திருக்கின்றனர் என்பதற்கும் போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. சங்ககாலத்தில் களப்பிரர் சங்க காலத்தில் கள்வர் கோமான் புல்லியைப் பற்றிய செய்தி காணப்படுகிறது. அவன் வேங்கட மலைக்குத் தலைவன் என்றும் தமிழ்ப் புலவர்களுக்கு வரையாது வழங்கிய வள்ளல் என்றும் புகழப்ப கிறான். அவ்வேங்கடமலை மொழி பெயர் தேயத்தைச் சேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து நடையருங் கானம் விலங்கி நோன்சிலைத் தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர் பிழியார் மகிழர் கலிசிறந் தார்க்கு மொழிபெயர் தேஎயம் (அகம். 295) என்ற அகப்பாட்டால் மேற்கூறப்பெற்ற உண்மைகள் புலனா கின்றன. அப்புல்லியானவன் மழநாட்டை வென்றவன் என்பதை மற்றொரு அகப்பாடல் கீழ்க்காணுமாறு எடுத்துரைக்கின்றது. கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம். (அகம். 61) மழ நாடு என்பது தற்காலத்திய தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் அடங்கிய பகுதியாகும். இப்பகுதி புல்லியின் நாட்டுக்கு அண்மையி லிருந்த காரணத்தினால் அவன் வென்றிருக்கிறான். இதனையும் தன்னாட்சியின் கீழ் கொண்டு வந்திருக்கிறான். மழநாட்டை அதியர்கள் ஆண்டு வந்திருக்கின்றனர். சங்க காலத்தில் அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் அதியர் மன்னன் தகடூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்திருக்கிறான். அவன் வழியில் வந்த ஒருவனை வென்று புல்லி இப்பகுதியைக் கைப்பற்றியிருக்கக்கூடும். ஆதலால்தான் அவன் மழநாடு வென்றமை பற்றி புகழ்ந்து பேசப்படுகிறது. மொழி பெயர் தேயத்தவனாக இருந்தாலும் தமிழறிந்த வனாகவே அவன் இருந்திருத்தல் வேண்டும். காரணம் அவன் தமிழ்ப் புலவர்களைப் பெரிதும் ஆதரித்திருக்கிறான். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என்னு வட எல்லையாக விளங்கியிருக்கிறது. எனவே வேங் ம் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தின்படி வேங்கடம் தமிழ்நாட்டின் கடத்தின் தென்பகுதி தமிழ் நாடாகவும், வேங்கடத்தின் வடபகுதி மாற்றுமொழிபேசும் நிலமாகவும் இருந்திருக்கும். தமிழ்மொழி பேசுவோரும் வேற்று மொழி பேசுவோரும் கலந்து உறைகின்ற நாடாகப் புல்லியின் நாடு இருந்திருக்கும். ஆதலால்தான் தமிழ்ப் புலவர்கள் அந்நாட்டை மொழிபெயர் தேயம் என்று கூறிப் போந்தனர். . . . . . . . . . . வடுகர் பிழியார் மகிழர் கலிசிறந் தார்க்கும் மொழிபெயர் தேஎயம் என்று கூறுவதிலிருந்து வடுகர்கள் வாழும் இடம் மொழிபெயர் தேயம் என்பதை உணரலாம். அம்மொழி பெயர்தேயத்தில் கலி சிறந்து எக்காளமிடுகிறது என்று கூறுகிறார் கவிஞர். கலி என்பது இங்கு கலி குலத்தைக் குறிப்பதாகலாம். அங்கு கலி அரசனாகிய கள்வர் கோமான் புல்லி ஆள்வதையே புலவர் அவ்வாறு குறிப்பாலுணர்த்துகிறார். ஆதலால் புல்லி, வடுகர் நாட்டில் உள்ள கள்வர் குலத்தைச் சேர்ந்தவன் என்பதையும்; அவன் தமிழ்ப் புலவர்களைப் புரக்கும் அளவுக்குத் தமிழறிவு மிக்கவன் என்பதையும் நாம் எளிதில் உணரலாம். தமிழகத்தில் களப்பிரர் வருகை முடியுடைமூவேந்தர்களின் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்ததும் குறுநில மன்னர்கள் செல்வாக்குப் பெறலாயினர். அந்தக் சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வேங்கடமலைப் பகுதியி லிருந்து சிறுகத் தெற்கு நோக்கி நுழைய ஆரம்பித்தனர் களப்பிரரின் ஒருபிரிவினர். அதன் முதல்கட்டம்தான் மழபுலத்தை வென்றதாகும். மழநாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியதும் சோழநாடு, பாண்டி நாடு, கொங்குநாடு என்று அவர்கள் தங்கள் ஆட்சிப் பரப்பை விரிவு படுத்தியிருக்கிறார்கள். தொண்டை நாட்டுப் பகுதியில் அவர்களது நுழைவு ஆரம்பக் கட்டத்தில் ஏற்படவில்லை. காரணம் அச்சமயம் பல்லவர்கள் வலிவு பெற்றிருந்ததாலேயே யாகும். களப்பிரரின் ஆதி இருப்பிடம் கி. மு. நான்காம் நூற்றாண்டளவில் கருநாடக மாநிலத்தில் தற்போதுள்ள சிரவணபௌகொள என்று வழங்கப்படும் பகுதி ‘கள்பப்பு நாடு’ என்று அழைக்கப்பட்டுள்ளது.1 மௌரிய மன்னன் அசோகப் பேரரசனின் பாட்டனாரான சந்திரகுப்த மௌரியர் தம் அரசைத் துறந்து சமணசமயத்தை ஏற்றுத் துறவு பூண்டு அக் களப்பு நாட்டில் உள்ள களபப்பு மலையில் வந்து தங்கினார் என்று சமண சமய நூலான ‘வட்டாரதனே’ என்னும் நூல் கூறுகிறது.2 தற்போதுள்ள சந்திரகிரி மலைக்குப் பழைய பெயர் களபப்புபெட்ட என்பதாகும்.3 ஆதலால் சிரவணபௌ கொள பகுதியே களப்பிரர்களின் ஆதி இருப்பிடமாகும். நாளடைவில் அவர்கள் கோலாரிலுள்ள நந்திமலை, தமிழகத்தின் வடபகுதியான வேங்கடமலை ஆகிய பகுதிகளுக்குக் குடியேறி சிறுசிறு பகுதிகளுக்குத் தலைவர்களாகவும் விளங்கியிருக் கின்றனர். கி. பி. 3ஆம் நூற்றாண்டளவில் வேங்கடமலையை ஆட்சி செய்ததாகப் புல்லி குறிக்கப்படுகிறான். கி. பி. 5-ஆம் நூற்றாண்டில் கதம்ப அரசனான காகுத்தன் களப்பிரருக்குப் பகைவன் என்று பேலூர் தாலுக்காலைச் சேர்ந்த ஹல்மிடி என்னும் ஊரிலுள்ள கல்வெட்டு கூறுகிறது.4 அதே காலத்தில் தமிழகத்தில் சோழ நாட்டில் அச்சுத விக்ராந்தன் என்னும் களப்பிர மன்னன் ஆண்டு வந்ததாகப் புத்தமத நூல் ஒன்றினால் புலனாகிறது. அச்சுதவிக்கந்தன் கி. பி. 5- ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்த ஆசாரிய புத்ததத்ததேரர் சோழநாட்டைச் சேர்ந்தவர். பௌத்தத் துறவிகளில் அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவர் பாலி மொழியில் புத்தவம்சாத்த கதா, அபிதம்மாவதாரம், வினய வினிச்சியம், உத்தரவினிச்சியம் ரூபா ரூபானிபாகம். ஜினாலங்காரம் முதலான நூல்களை எழுதியுள்ளார். இவர் காவிரிப்பூம்பட்டினம், உறையூர், பூதமங்கலம், காஞ்சிபுரம் முதலான ஊர்களில் இருந்த பௌத்த விஹாரங்களில் தங்கி யிருந்திருக்கிறார். சோழநாட்டைச் சேர்ந்த பூதமங்கலம் என்னும் ஊரில் வேணுதாசர் எடுப்பித்த பௌத்த விஹாரத்தில் இவர் தங்கியிருந்தபோது வினயவினிச்சயம் என்ற நூலை களப்ப குல மன்னர் அச்சுதவிக்கந்தன் என்பான் ஆட்சியில் இயற்றிய தாக அவரே எழுதியுள்ளார்.1 பஸாத ஜனனே ரம்மே பாஸாதே வஸதா மயா புத்தஸ்ஸ புத்தஸீஹேன வினயஸ்ஸ வனிச்சயோ புத்த ஸீஹம் ஸமுத்திஸ்ஸ மம ஸத்தி விஹாரிம் கதோ யம் பன பிக்கூனம் ஹிதத்தாய ஸமாஸதோ வியைஸ்ஸாவ பொத்தந்தம் ஸுகேனே வாசிரேன அச்சுதச்சுத விக்கந்தே களப்பகுல நந்தனே மஹிம் ஸமனு ஸாஸந்தே ஆரத்தோ சஸமாபிதோ என்பது அப்பகுதியாகும். இப்புத்ததத்ததேரர் இலங்கை மன்னன் சிறிகுட்டன் (கி. பி, 409-430) காலத்தில் வாழ்ந்தவர். புத்ததத்தரின் சமகாலத்தவரான புத்தகோஷரும் தம்முடைய நூலின் சோழ நாட்டை ஆட்சிபுரிந்த அச்சுதவிக்கந்தன் என்னும் களப்பிர அரசனைக் குறிப்பிடுகிறார். சேர, சோழ, பாண்டியர்களை வென்றவன் இவ்வச்சுதன் சேர, சோழ, பாண்டியர்களை வென்று தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தன்னாட்சிக்குக் கொண்டு வந்திருக்கிறான். முப்பெரும் பேரரசர்களை வென்றதனால் அவர்களின் இலச்சினை களான வில், புலி, கயல் ஆகியவற்றைத் தன் அடையாங்களாகக் கொண்டு விளங்கியிருக்கிறான் என்பதை இலக்கண நூலான யாப்பருங்கல விருத்தியுரை யாசிரியர் மேற்கொள்காட்டியுள்ள ஒரு பாடல் கீழ்வருமாறு விவரிக்கிறது. அடுதிறல் ஒருவ நிற்பரவுதும் எங்கோன் தொடுகழற் கொடும்பூண் பகட்டெழில் மார்பிற் கயலொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன் ஒன்றுகடல் உலகம் முழுவதும் ஒன்றுபு திகிரி யுருட்டுவோன் எனவே இம்மன்னன் மூன்று பெரும் வேந்தர்களையும் வென்று அவர் களைச் சிறையிலிட்டு தளையிட்டபோது அம்மூவரும் இவனைப் புகழ்ந்து பாடியதாகக் கீழ்க்காணும் பாடல்கள் யாப்பருங்கல விருந்தி யுரை மேற்கோள்களாகக் காணப்படு கின்றன. சேர மன்னன் பாடியது தினைவிதைத்தார் முற்றம் தினையுணங்கும், செந்நெல்தனைவிதைத்தார் முற்றமது தானாம் - கனைசீர் முரசுணங்கும் சங்குணங்கும் மூரித்தேர்த் தானை அரசுணங்கும் அச்சுதன்தன் முற்றத்து சோழ அரசன் பாடியது அரசர் குலதிலகன் அச்சுதன் முற்றத்தில் அரச ரவதரித்த வந்நாள் - முரசதிரக் கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் காற்றளையை வெட்டிவிடும் ஓசை மிகும். பாண்டிய மன்னன் பாடியது குடகர் குணகடலென் றார்த்தார் குடகர்க் கிடகர் வடகடலென் றார்த்தார் - வடகடலர் தென்கட லென்றார்த்தார் தில்லையச்சு தானந்தன் முன்கடைநின் றார்க்கும் முரசு. அச்சுதன் முற்றத்தில் முரசு, சங்கு, தேர்ப்படை ஆகியவை நிரம்பியிருக்கும் என்றும்; முரசு கொட்டுகின்ற ஓசையைவிட மாற்று அரசர்களின் கால் தளையை வெட்டிவிடும் ஓசையே அதிகமாகக் கேட்கும் என்றும் அவர்களது பாடல்களால் தெரிய வருகின்றன. மேலும் இவன் தில்லையச்சுதன் என்று பாராட்டப்படுகிறான். தில்லைக்கும் இவனுக்கும் எந்த வகையிலோ தொடர்பு இருந்திருக் கிறது. தில்லை நடராசப் பெருமானிடத்தில் ஈடுபாடு கொண்டிருந் தானோ அல்லது தில்லையம் பதியில் இவனது முன்னோர்களில் சிலர் தங்கியிருந்தார்களோ என்னவோ அறிய முடியவில்லை. ஆனால் களப்பிரர் சிலர் தில்லையை அடுத்துள்ள பகுதியில் இருந்திருக் கின்றனர் என்பதை பிற்காலச் சான்றுகளால் உணர முடிகிறது. அச்சுதனின் சமயப் பொறை அச்சுதன் சமயப்பொறை நிரம்பியவனாக இருந்திருத்தல் வேண்டும் என்று தெரிகிறது. இவனது காலத்தில் சோழ நாட்டில் பூதமங்கலம், காவிரிப்பூம்பட்டினம், உறையூர் ஆகிய இடங்களில் பௌத்த விஹாரங்கள் இருந்தன என்பதை முன்னரே பார்த்தோம். இவன் சைவ சமயத்திலும் நாட்ட முடையவனாக இருந்திருக்கலாம் என்பது தில்லையோடு இவனைத் தொடர்பு படுத்திக் கூறுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இவனைக் காத்தருள வேண்டும் என வைணவக் கடவுளான திருமால் சமணக் கடவுளான அருகன் ஆகியோரிடம் வேண்டிப் பாடப் பெற்ற பாடல்கள் இவன் வைணவ, சமண மதத்திலும் ஈடுபாடு கொண்டவன் என்பதைப் புலப்படுத்துகிறது. யாப்பருங்கல விருத்தி என்னும் இலக்கண நூலின் உரையாசிரியர் தம்முடைய உரையில் நான்கு செய்யுட்களை மேற்கோள் காட்டியுள்ளார் அவை களப்பிர அரசனின் ஆட்சி ஓங்க வேண்டுமென்று விஷ்ணுவையும், அருகப் பெருமானையும் வேண்டிப் பாடப்பட்டனவாகும். ‘கெடலரு மாமுனிவர்’ என்று தொடங்குகிற பாடல் அச்சுதன் என்னும் களப்பிர அரசனைக் காத்தருள வேண்டும் என்று திருமாலை வேண்டுகிறது. ‘அலைகடற் கதிர்முத்தம்’ என்று தொடங்கும் மற்றொரு செய்யுள் களப்பிர அரசன் சங்கு, சக்கரம் ஏந்திய திருமாலை வழிபட்டு அவன் அருளினால் பெரிய நிலத்தை ஆளும் பேறு பெற்றான் என்றும் அந்த அரசனைக் காத்தருள வேண்டும் என்றும் முறையிடுகிறது. ‘அகலிடமும் அமருலகும்’ என்று தொடங்கும் மற்றுமொரு பாடல் அச்சுதர்கோனினுடைய ஆற்றல், வீரம், கொற்றம் ஆகியவற்றைப் புகழ்கிறது. ‘நலங்கிளர் திருமணியும்’ என்று தொடங்கும் நான்காம் செய்யுள் களப்பிர அரசனுடைய ஆட்சி ஓங்கவேண்டுமென்று அருகக் கடவுளைத்துதிக்கிறது. வேள்விக்குடிச் செப்பேட்டில் களப்பிரர் கி. பி. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து கி. பி. 8-ஆம் நூற்றாண்டு வரை அரசாண்ட பாண்டிய மன்னர்களின் வழிமுறையை அறிந்து கொள் வதற்கு மிகவும் இன்றியமையாததான வேள்விக்குடிச் செப்பேடுதான் களப்பிரர் என்ற ஒரு இனம் தமிழ் நாட்டைச் சில காலம் ஆண்டிருக் கிறது என்ற செய்தியை முதன் முதலில் கூறியதாகும். அதுவரையில் தமிழக வரலாற்றில் ‘இருண்ட காலமாகக்’ கருதப்பட்ட காலப்பகுதி, அதற்குப்பின் ‘களப்பிரர் வருகைக் காலமாக’ வரலாற்றாசிரியர்களால் சித்தரிக்கப்பட்டது. களப்பிரர் பற்றி செப்பேடு தரும் செய்தியைக் கீழே காண்போம். . . . . . . . அளவரிய ஆதிராஜரை அகல நீக்கி, அகலிடத்தை க் களப்ர னென்னுங் கலி அரசன் கைக்கொண்ட தனை இறக்கியபின் படுகடல் முளை த்த பருதிபோல பாண்டியாதிராஜன் வெளிற் பட்டு விடுகதிரவிரொளி விலக வீற்றி ருந்து வேலை சூழ்ந்த வியவிடத்துக் கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச் செ ங்கோலோச்சி வெண்குடை நீழற்றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப் பிறர் பாலுரிமை திறவிதி னீக்கித் தன்பாலுரிமை நன்கன மமைத்த மானம்பே ர்த்த தானை வேந்தன் னொடுங்கா மன்னரொளி நகரழித்த கடுங்கோனென்னுங் கதி ர்வேற் றென்னன் . . . . . . . 1 மேலே தரப்பட்டுள்ள பகுதியில், அளவரிய ஆதிராஜரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னுங் கலி அரசன் கைக்கொண்டு, எனும் தொடர் மிகவும் முக்கியப்பகுதியாகும். எண்ணற்ற ஆதி அரசர்கள் ஆண்டுகொண்டிருந்த நிலப்பரப்பை கலி மன்னனாகிய களப்பிரன் கைப்பற்றிக் கொண்டான் என்று கூறுகிறது. இங்கு ஓர் உண்மை புலனாகிறது. களப்பிரர் தமிழ்நாட்டுப் பகுதியைக் கைப் பற்றுகையில் ஒரு நிலையான அரசு இல்லாது, பல அரசர்கள் பல சிறு சிறு பகுதிகளை ஆண்டு வந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. சங்க கால மூவேந்தர்களுக்குப்பின் தமிழகத்தில் குறுநில மன்னர்களின் செல்வாக்கு ஓங்கியிருக்கிறது. அந்த காலக் கட்டத்தில் தான் களப்பிரர்கள் அவர்களில் சிலரது உதவியைக் கொண்டு தமிழகத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள். 2 தளவாய்புரச் செப்பேடு களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் நிலவி, அதைப் பாண்டிய மன்னன் பராந்தக வீரநாராயணனின் முன்னோர் மாற்றி, திரும்பவும் பாண்டியர் ஆட்சியை நிலைக்கச் செய்ததைக் ‘களப்பாழன் குலங்களைந்தும்’ என்ற தொடரால் தளவாய் புரச் செப்பேடு உணர்த்துகிறது. . . . தென்மதுராபுரஞ் செய்தும் ஆங்கதினில்லருந் தமிழ் நற்சங்கம் இரீஇத் தமிழ்வளர்த்தும் ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன் கெய்தியும் கடி ஞாறு கவினலங்கற் களப்பாழர் குலங்களைந்தும் முடி சூடிய முர ண் மன்னர் ஏனைப்பலரு முன்னிகந்தபின் இடையா றையும் எழில் வெண்பைக் குடி யிலும் வெல்கொடி எடுத்த குடைவேந்தன் றிருக்குலத் துலக் கோமன்னர் பலர் கழிந்தபின். . . 1 . . . களப்பாழரைக் களைகட் டமற்றிரண்டோண் மாக்கடுங்கோன் மானம் பேர்த்தருளிய கோன் . . . (த. பு. செப்பேடு வரி, 131 - 132) ஆகவே களப்பிரர் கி. பி. 3-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் வலிமை வாய்ந்த அரசர்களாக இருந்திருக்கின்றனர் என்பதும், கி. பி. 6-ஆம் நூற்றாண்டளவில் பாண்டியர் அவர்களை வென்று தாம் ஆளத் தொடங்கியிருக்கின்றனர் என்பதும் – உணரற் பாலது. களப்ரர், களப்பாழர் வேள்விக்குடிச் செப்பேட்டில் ‘களப்ர’ ரென்றும் தளவாய்புரச் செப்பேட்டில் ‘களப்பாழர்’ என்றும் களப்பிரர் குறிக்கப்படுகின்றனர். சங்க காலத்தில் ‘கள்வர்’ என்று குறிக்கப்படுவதாகப் புல்லி பற்றி குறிப்பிட்ட இடத்தில் கூறினோம். பிற்காலக் கல்வெட்டுகளில் ‘களப்பாளர்’ என்று சிலர் குறிக்கப்படுகின்றனர். இச்சொற்கள் அனைத்தும் ஒரே இனத்தைத்தான் குறிக்கின்றனவா? அல்லது வெவ்வேறு இனத்தைக் குறிக்கின்றனவா? என்பதில் அறிஞர்களிடையே பெரும் கருத்து வேறுபாடு நிலவியது. முதன் முதலில் வேள்விக்குடிச் செப்பேட்டின் மூலம் ‘களப்பிரர்’ என்னும் சொல் தெரியவந்தது. பின்னர் கல்வெட்டுகள் சிலவற்றில் ‘களப்பாளர்’ என்னும் சொல் வழங்கப் பெற்றிருப்பது தெரியவந்தது. அந்தக் காலக்கட்டத்தில் வரலாற்றாசிரியர்களில் சிலர் களப்ரரென்பாரும் களப்பாளர் என்பாரும் ஒரே இனத்தவர்தான் என்று முடிவு செய்தனர்.1 ஆனால் சதாசிவ பண்டாரத்தார் போன்றோர் களப்ரர் வேறு களப்பாளர் வேறு என்றும், களப்ரர் வடபுலத்திலிருந்து வந்தோர் என்றும்; களப்பாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும் வாதிட்டனர்.2 இவ்வாக்குவாதங்கள் தளவாய்புரச் செப்பேடு கிடைக்காத காலம் வரை நிகழ்ந்தது. தளவாய்புரச் செப்பேடு கிடைத்தது, அதில் களப்ரர், களப்பாழர் என்று குறிக்கப் பட்டிருப்பதை அறிந்ததும் களப்ரரும் களப்பாளரும் ஒரே இனம்தான் என்ற முடிவுக்கு வந்தனர். 3 களப்பாழர் என்னும் சொல் களப்பாளர் என்று மாறக்கூடியதே ஆகையால் அவர்கள் அவ்வாறு தீர்மானிக்க நேர்ந்தது. கள்வரும் களப்ரரும் நாம் முன்னரே கூறியிருப்பது போல் கள்வர் கோமான் என்று குறிப்பிடப்படும் புல்லியும் களப்ரனே என்று சிலர் கருதினர். அதற்கு அவர்கள் ஆதாரமாகச் செந்தலையிலுள்ள முத்தரையு மன்னன் கல்வெட்டில் 1 காணப்படும் ‘கள்வர் கள்வன்’ என்ற பட்டப்பெயரை உதாரணம் காட்டினர். ‘கள்வர்கள்வன்’ என்பதைக் ‘களவர களவன்’ என்றும் படிக்கலாம் என்றும் கள்வர் கோமான் என்பதற்குக் களவர கோமான் என்ற பாட பேதமும் உண்டு என்றும், களவர என்பது களப்ர என்னும் சொல்லின் திரிபு என்றும் வலிந்து ஆதாரங்ளைத் தேடலாயினர்2. ஆனால் களப்ரரும், கள்வரும் ஒரே இனம்தான் என்தை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொன்னி வாடிக் கல்வெட்டு தெளிவாக உணர்த்திவிட்டது. அக்கல்வெட்டின் வாசகம், 1. ஸ்வஸ்திஸ்ரீ சந்த்ராதித்ய குலதிலகன் சவா 2. ர்வ பௌமன் கலிநிருவ (ப) கள்வனாயின கோ 3. க்கண்டன இரவி...... 3 என்பதாகக் காணப்படுகிறது. இக்கல்வெட்டில் ‘கலிநிருப கள்வனாயின கோக்கண்டன் இரவி’ என்று வருவது கள்வனாயின கோக்கண்டன் இரவி என்னும் அரசன் கலி அரசன் தான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இதே போன்றுதான் வேள்விக்குடிச் செப்பேட்டிலும் ‘களப்ர னென்னும் கலி அரசன்’ என்று எழுதப் பட்டிருக்கிறது. ஆகவே களப்ரர், கள்வர் ஆகியோர் ஒரே இனத்தவர்கள் தான் என்பது தெளிவாகிறது.4 பல்லவர்களின் எதிரி களப்பிரர் வேங்கடமலைப் பகுதியிலிருந்து தெற்கே நுழைந்த களப்பிரர்கள் முதலில் மழநாட்டை வென்று பின்னர் மேலும் தெற்கு நோக்கிச் சென்றிருக்கக் கூடும் என்று முன்னதே தெரிவித்தோம். அவர்கள் அவ்வாறு தெற்குத் திசையை நோக்கிச் சென்றதற்குப் பல்லவர்கள் வலிமைவாய்ந்தவர்களாக இருந்ததுதான் காரணமாக இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அடிக்கடி பல்லவர்களுக்கும் களப்பிரர் களுக்கும் போர் நிகழ்ந்திருக்கிறது. அதில் களப்பிரர்கள் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார்கள். சிம்மவிஷ்ணு காலம் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு தன் ஆ.ட்சிக் காலத்தில் மாளவத்தையும், பிறகு களப்ர, மாளவ, சோழ, பாண்டியர்களையும், சிங்கள மன்னனையும், கேரள மன்னனையும் வென்றதாகக் காசாக் குடிச் செப்புப்பட்டயம் கூறுகிறது1 இதில் இருமுறை மாளவர்கள் குறிக்கப்படுகின்றனர். முதலில் குறிக்கப்படுவது மட்டும் மாளவர் களைக் குறிக்கத்தான் என்று கொள்ளலாம். களப்ரர்களை அடுத்துவரும் சொல் மழவர்களைச் சுட்டுவதாக இருக்கலாம் என்று டி.என். சுப்பிரமணியம் அவர்கள் கருதியிருக்கிறார்.2 அது சரியான யூகமாகவே தோன்றுகிறது. ஏனெனில் களப்பிரர் ஆண்ட பகுதியை அடுத்து மழநாடே இருந்திருக்கிறது. ஆதலால்தான் களப்பிரர்களை அடுத்து மழவர்கள் குறிக்கப்படுகிறார்கள் என்று கருத இடமுண்டு. முதலாம் நரசிம்மவர்மன் காலம் சிம்மவிஷ்ணுவின் பெயரனும், மகேந்திரவர்மனின் மகனுமான முதலாம் நரசிம்மவர்மனும் களப்பிரர்களை வென்றிருப்பதாகக் கூறும் செய்தி செப்பேடுகளில் காணப்படுகிறது. அச்செப்பேடுகளில் ‘எதிரி மன்னர்களாகிய யானைக் கூட்டங்களுக்குச் சிங்கம் போன்றவனும், நரசிம்ம பகவான் தாமே அரசன் உருவத்தில் பூலோகத்திற்கு வந்தவரே போன்றவனும், திரும்பத் திரும்பச் சோழ கேரள, களப்ர, பாண்டியர் களை வெற்றி கொண்டவனும்”1 என்று புகழப்படுகிறான். இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டியுள்ளது. சோழ, கேரள, களப்ர, பாண்டிய மன்னர்களைப் பலமுறை வென்றவன் என்று குறிக்கப்படுகிறான். அவ்வாறாயின் மற்ற மன்னர்களைப் போன்றே களப்பிரர்களும் பல்லவர்களுக்குப் பெரும் இடையூறாக இருந்திருக்கின்றனர் என்பது புலனாகிறது. களப்பிரர்களும் பல்லவர்களை அடிக்கடி எதிர்க்கும் அளவுக்கு வலிமை வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது. இராஜசிம்மன் காலம் பல்லவ மன்னன் இராஜசிம்மன் சூட்டியிருந்த பல பட்டப்பெயர் களில் ‘காலகாலன்’, ‘காலவிக்ரமன்’ என்பவைகளும் அடங்கும். கால காலன் என்பது ‘கூற்றுவனுக்குக் கூற்றுவன்’ என்றும், காலவிக்ரமன் என்பது ‘கூற்றுவனையும் வெற்றி கண்டவன்’ என்று பொருள் கொள்ளப்படும். இங்கு கூற்றுவன் என்பது உயிர்களைப் பறிப்பதாகக் கருதப்படும் யமனைக் குறிக்கிறதா? அல்லது கூற்றுவன் என்னும் பெயர் தாங்கியிருந்த ஒரு மன்னனைக் குறிக்கிறதா? என்பது ஐயப்பாடே. ஆனாலும் சிலர் கூற்றுவன் என்னும் மன்னனையே குறிப் பிடுகிறது என்று பொருள் கொண்டு கூற்றுவ நாயனார் என்று நாயன் மார்களுள் ஒருவராகக் கருதப்படுபவரோடு தொடர்புபடுத்தியிருக் கின்றனர்.2 இக்கூற்றுவர் களப்பாளர் ஆனதால் இராஜசிம்மனும் களப்பிர அரசரை வென்றதாகக் கருதப்படுகிறது. கூற்றுவநாயனர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் கூற்றுவநாயனாரும் ஒருவராகப் பெரியபுராணத்தில் குறிக்கப்படுகின்றார். இவர் களப்பிரர் குலத்தைச் சேர்ந்தவர் என்று திருத்தொண்டர் திருவந்தாதியில் நம்பியாண்டார் நம்பி கூறுகிறார். நாதன் திருவடி யேமுடி யாகக் கவித்துநல் போதங் கருத்திற் பொதிந்தமை யாலது கைகொடுப்ப ஓதந் தழுவிய ஞாலமெல் லாம்ஒரு கோலின் வைத்தான் கோதை நெடுவேற்களப்பாள னாகிய கூற்றுவனே1 இவர் களந்தை என்னும் பகுதியை அரசாண்டவர் என்பதைச் சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் காணப் பெறும், ஆர்கொண்ட வேர்கூற்றன் களந்தைகோன் அடியேன் என்னும் வரியால் உணரலாம் இக்கூற்றுவன் சோழநாட்டு முடியைச்சூடி அரசாள வேண்டு மென்று விரும்பி, சோழர்தம் முடியை சூட்டுவிப் போராகிய தில்லை வாழ் அந்தணர்களிடம் சென்று, தமக்குச் சோழர் தம்முடியைச் சூட்டுமாறு கேட்டான். அவர்கள் சோழ அரசர்குடியில் பிறந்தவர்களுக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு முடிசூட்ட மாட்டோம் என்று கூறிவிட்டு சேரலன் நாடாகிய மலைநாட்டுக்குச் சென்றுவிட்டனர் என்றும், அதனால் மனம் தளர்ந்த கூற்றுவனார் சோழர்தம் முடியைச் சூட்டிக் கொள்ளாமலேயே அரசாண்டார் என்றும் பெரியபுராணம் விரித்துரைக்கிறது. மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணிமா மவுலி புனைவதற்குத் தில்லை வாழந் தணர்தம்மை வேண்ட அவருஞ் செம்பியர்தம் தொல்லை நீடுங் குலமுதலோர்க் கன்றிச் சூட்டோம்முடியென்று நல்கா ராகிச் சேரலன்தன் மலைநா டணைய நண்ணுவார் ஒருமை உரிமை தில்லைவா ழந்தணர்கள் தம்மில் ஒருகுடியைப் பெருமை முடியை அருமைபுரி காவல் பேணும்படி இருத்தி இருமை மரபுந் தூயவர்தாம் சேரர் நாட்டில் எய்தியபின் வரும்ஐ யுறவால் மனந்தளர்ந்து மன்றுள் ஆடும் கழல்பணிவார்1 என்பவைகளாகும் அப்பாடல்கள். ‘திருத்தொண்டர் புராணப் பயன்’ என்னும் திருத் தொண்டர் புராணச்சாரத்தில், கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார். குன்றாத புகழாளர் களந்தை வேந்தன், கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முடிவேண்டப், புலியூர் வாழும், பூசுரர்கள் கொடாதகலப், புனித னீந்த மன்றாடுந் திருவடியே முடியாச் சூடி, மாநிலங்காத் திறைவனுறை மாடக் கோயில் சென்றா சையுடன் வணங்கிப் பணிகள்செய்து, திருவருள்ளா லமருலகஞ் சேர்ந்து ளாரே2 என்று பாடுகிறார். இதில் கூற்றுவனாரைக் ‘களந்தை வேந்தன்’ என்று தெரிவித்திருக்கிறார். களந்தை எங்குளது? களந்தை என்னும் ஊர் எந்த நாட்டில் இருந்தது என்பதும் சரிவர ஆராயப்படவில்லை. மயிலை சீனி, வேங்கடசாமி சோழ நாட்டிலிருந்தது எனக்கொண்டு கூற்றுவனாரைச் சோழ நாட்டைச் சேர்ந்தவர் என்கிறார்.3 சோழ நாட்டிலேயே ஒரு பகுதியாகக் களந்தை இருக்க அப்பகுதிக்குத் தலைவனாகக் கூற்றுவன் ஆண்டிருப்பின் தில்லைவாழ் அந்தணர்கள் அவருக்குச் சோழரது முடியைச் சூட்டாது மலைநாடு ஏகியமை வியப்பாக உள்ளது. அடுத்து, கே.கே. பிள்ளை, களந்தை தொண்டை நாட்டைச் சேர்ந்த ஊர் என்று கருதுகிறார்.1 அவ்h கூறுவது ஓரளவுக்குப் பொருத்தமே என்றாலும் தொண்டை நாட்டில் எந்த இடத்தில் உள்ள களந்தை என்பதை அவர் ஆராய முற்படவில்லை. ஆனால் மேலே கூறிய இரு கூற்றுக்களுக்கும் மாறாகப்பாண்டிய நாட்டில்தான் அக்களந்தை இருந்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. பாண்டிய நாட்டில் களந்தை என்ற ஊர் இருந்திருக்கிறது. அதற்கு கரவந்தபுரம் என்று மற்றொரு பெயரும் உண்டு. அவ்வூரைச் சார்ந்தவர்கள் பாண்டிய மன்னர்களிடத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்திருக்கிறார்கள். பாண்டிய மன்னன் ஜடிலவர்மப் பராந்தக நெடுஞ்சடையனிடம் உத்தரமந்திரியாக இருந்த மாறங்காரி, இவனது உடன் பிறந்தவனான மாறன்எயினன் ஆகியோர் களந்தையைச் சேர்ந்தவர்களே. மேலும் இம்மன்னனின் காலத்தில் இருந்த மகாசா மந்தர்களான மூர்த்திஎயினன், சாத்தங் கணபதி ஆகியோரும் இவ்வூரினின்றும வந்தவர்களே2 ஆகவே பண்டியர் காலத்தில் சிறந்த அரசு அதிகாரிகளை அளித்து வந்த களந்தையே கூற்றுவ நாயனாருடைய நாடாகவும் இருக்கலாம். பாண்டி நாட்டுக்காரரான அவருக்குச் சோழர் தம் முடியைச் சூட்டமாடோம் என்று தில்லைவாழ் அந்தணர்கள் மறுத்திருப்பது பொருள் உள்ளதாகப் புலப்படுகிறது. ஆதலால் கூற்றுவநாயனாரின் களந்தை பாண்டிய நாட்டைச் சார்ந்த தாகக் கொள்ளலாம். பூலாங்குறிச்சி கல்வெட்டு அண்மையில் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை, இராமநாதபுர மாவட்டம், பூலாங்குறிச்சியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரிய கல்வெட்டைக் கண்டுபிடித்துள்ளது.1 அக்கல்வெட்டு கி.பி. 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப் படுகிறது. அது சேந்தங் கூற்றன் என்னும் ஒரு மன்னனின் காலத்தில் எழுதப் பட்டிருக்கிறது. அம்மன்னன் சேந்தன் என்பவனின் மகனாக இருக்கலாம் என்றும் கருதுவர். இக்கல்வெட்டு பலவகையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. அக்காலத்தில் தமிழகத்தில் நிலவிய அரசியல் அமைப்பு, நீதி, நிர்வாகம், நாட்டுப் பிரிவு ஆகியவைகளைப் பற்றித் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டு கிறது. அதில் காணப்பெறும் மன்னன் கூற்றனுக்கும் கூற்றுவ நாயனாருக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பது தெரியவில்லை. கல்வெட்டில் காணப்படும் ஆண்டு பற்றிய குறிப்பைப் பார்த்தால் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குத்தான் கணக்கிட முடிகிறது. ஆனால் எழுத்தமைதியைக் கொண்டு பார்க்கையில் கி.பி. 4 அல்லது கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று கூறலாம். அவ்வாறாயின் இந்தக் கூற்றன்தான் சைவசமய நாயன்மாராக மாறிய கூற்றுவ நாயனாரோ? என்று உறுதியாகக் கூறமுடியவில்லை. களப்பிரர்கள் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தைச் சார்ந்ததாக இக்கல்வெட்டு இருப்பதாலும், கூற்றுவநாயனார், களப்பாள மன்னன் என்று கூறப்படுவதாலும் கூற்றன் தான் கூற்றுவ நாயனாரோ என்று ஐயம் மேலும் வலுப்பெறு கிறது. மூர்த்தி நாயனார் இங்கே மற்றொரு நாயனாரான மூர்த்திநாயனாரைப் பற்றியும் குறிப்பிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மதுரை நகரத்தில் வணிகர் குலத்தில் பிறந்து சிவத்தொண்டு புரிந்து வந்தார் மூர்த்தி என்னும் சிவபக்தர். சிவபெருமானுக்கு நாள்தோறும் சந்தனக் காப்பு சாத்துவதற்கு வேண்டிய சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் பணியை அவர் மேற்கொண்டிருந்தார். அவ்வாறு நடைபெற்றுவரும் நாளில் பாண்டிய நாட்டைக் கருநாடக மன்னன் ஒருவன் கைப்பற்றிக் கொண்டான். அவன் சமண சமயத்தைத் தழுவியவன். அம்மதத்தைப் பரப்புவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலானான். பிற மதத்தைச் சார்ந்த ஆலயங்களில் பூசை நடவாதவாறு பல்வித இன்னல்களை ஏற்படுத்தினான். சந்தனம் அரைத்துச் சாத்துவதற்கு வேண்டிய சந்தனம் கூட கிடைக்காமல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தினான். பெரும் சிவ பக்தரான மூர்த்தி நாயனார், ஒருநாள் சந்தனக்கட்டைகாத காரணத்தால் தன் முழங்கையைக் கல்லில் தேய்க்கலானார். இரக்கம் பீறிட்டது. பக்தனின் துயர் பொறுக்காத இறைவன் ‘அன்பனே எம்மிடம் நீ கொண்டுள்ள பக்தியால் செய்யத் துணிந்த இக்கொடிய செயலினை நிறுத்து. உனக்கு இடர் விளைவித்த அரசன் இறந்துபோவான். அவன் அரசை நீயே கைப்பற்றிக் கொண்டு எமக்குச் செய்துவரும் திருப்பணியை நன்றாக நடத்தி நம்மிடம் சேர்வாயாக’ என்று அசரீரியாகக் கூறச் செய்தார். அதேபோன்று கொடுஞ்செயல் புரிந்த அம்மன்னன் இறந்தான். மூர்த்தி மன்னனாக்கப்பட்டார். திரும்பவும் சிவவழிபாடு சிறப்புற நடந்தேறின. இது மூர்த்தி நாயனாரது கதை. கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவல் மானப் படைமன்னன் வலிந்து நிலங்கொள் வானாய் யானைக் குதிரைக் கருவிப்படை வீரர் தின்தேர் சேனைக் கடலுங் கொடுதென்திசை நோக்கி வந்தான். வந்துற்ற பெரும்படை மன்புதையப் பரப்பிச் சந்தப் பொதியில் தமிழ்நாடுடை மன்னன் வீரம் சிந்தச் செருவென்று தன்னாணை செலுத்து மாற்றால் கந்தல் பொழில்சூழ் மதுராபுரி காவல்கொண்டான்1 என்று பெரியபுராணம் கருநாடக மன்னன் மதுரையின் ஆட்சியைக் கைப்பற்றியதைக் குறிப்பிடுகிறது. இதே செய்தியைக் கல்லாடம் என்னும் இலக்கியமும், படைநான் குடன்று பஞ்சவன் துரந்து மதுரை வவ்விய கருநடர் வேந்தன் அருகர்ச் சார்ந்துநின்று அரன்பணி அடைப்ப என்று கூறுகிறது. இம்மன்னன் கருநாடகத்தைச் சார்ந்தவன் என்பதாலும், சமண மதத்தைத் தழுவியவன் என்பதாலும், களப்பிர மன்னனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனை அடிப்படை யாகக் கொண்டு களப்பிரர்கள் சமய மதம் அல்லா த பிற மதங்களைக் கடுமையாக எதிர்த்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.2 இக்கருத்து எந்த அளவுக்குத் தவறான கருத்து என்பதை களப்பிரர் சமயம் என்னும் பகுதியில் விரிவாக விளக்கப்படும். சாளுக்கியர்களுக்கும் களப்பிரர்கள் எதிரி சாளுக்கிய மன்னர்களுள் சிலர் தம் செப்பேடுகளில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வென்றதோடு களப்பிரர் களையும் வென்ற தாகக் கூறிக்கொள்கின்றனர் முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 655081) பல்லவ மன்னர்களான முதலாம் நரசிம்மவர்மன், இரண்டாம் மகேந்திர வர்மன், முதலாம் பரமேஸ்வரவர்மன் ஆகியோரை வென்றவன் என்று ஹைதராபாத் செப்பேடு தெரிவிக்கிறது. அவனது வழிவந்த பிற்கால மன்னர்களின் செப்பேடுகளில் சோழ, பாண்டிய, கேரள அரசர்களையும் அவன் சென்றதாகப் புகழப்படுகிறான். இன்னும் சில செப்பேடுகளில் அவன் களப்பிரரையும் வென்றதாகக் குறிக்கப்படுகிறான்.1 அவனது அருமை மைந்தனான வினயாதித்யன் கி.பி. 681-96 தம்முடை செப்பேடுகளில் பல்லவர் வளர்பிரர் கேரளவர், கைஹேயர், விளர், மழவர், சோழர், பாண்டியர் ஆகியோரைத் தோற்கடித்ததாகக் கூறிக் கொள்கிறான்.2 இரண்டாம் நந்திவர்மப் பல்லவமல்லனை வெற்றி கொண்டு, காஞ்சிக்குள் புகுந்து அம்மாபெரும் நகரத்தையே அழித்து, மண் மேடாக்கி விடவேண்டும் என்ற வெறியோடு வந்த வெற்றி வீரனை வெற்றி கொண்ட பெரிய திருக்கற்றளியாகிய, இராஜசிம்ம ஈஸ்வரத்தின் அழகில் மயங்கி அதனை அழிக்காது, அதற்கு மேலும் பல பொற்றானங்களை வழங்கிய கலாரசிகள் இரண்டாம் விக்கிரமாதித்தனும் (கி.பி.733-745) பாண்டியர், சோழ, கேரளர், களப்பிரர் மற்றும் பல அரசர்கள் ஆகியோரை வென்றதாகச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.”3 ஆகவே சாளுக்கியர்களைப் பல்லவர், பாண்டியர், சோழர் கேரளர் ஆகியோர் எதிர்த்ததைப் போன்றே களப்பிரர்களும் எதிர்த்திருக்கின்றனர் என்பது புலனாகிறது. மேலும் களப்பிரர்கள் தமிழ்நாட்டில் ஒரு பகுதியில்தான் ஆண்டு வந்திருக்கிறார்கள் என்பதையும் ஊகிக்க முடிகிறது. நந்திவர்மப் பல்லவ மல்லன் காலத்தில் கி.பி.8ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான இரண்டாம் நந்திவர்மப் பல்லவமல்லனும் களப்பிரர்களை வென்றதாக அவனது பட்டத்தாள்மங்கலச் செப்பேடு”4 தெரிவிக்கிறது. “புகழ்மிக்க வலிமை கொண்டவனும் ஒளி வீசும் வாளை உருவிக் கையிலேந்தியவனும் ஒப்பற்ற தனி வீரருமான” அந்த அரசன் இளைஞனாக இருக்கும்போதே ராஜ்யத்தை அடைந்து, எல்லா எதிரிகளையும் வென்று, வணங்கிய எல்லா அரசர்களுடைய முடிகளையே தன் திருவடிப் பீடமாகக் கொண்டான். அவனுடைய (அரண்மனை) வாயிற்புறத்தில் வல்லபர், களப்பிரர், கேரளர், பாண்டிய, சோழர், துளுவர், கொங்கணர், இன்னும் மற்றோர் உள்ளே நுழைந்து சேவிக்கச் சமயத்தை எதிர்பார்த்து நெருங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது அதில் காணப்பெறும் கலோகங்களின் மொழி பெயர்ப்பாகும்”. ஆகவே கி.பி. 8ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சாளுக்கிய மன்னனான இரண்டாம் விக்கிரமாதித்தனும், சற்று பின்பு பல்லவ மன்னன் நந்திவர்மப் பல்லவனும் களப்பிரர்களை வென்றிருக்கின்றனர். கி.பி. 8ஆம் நூற்றாண்டிலும் களப்பிரர்கள் வலிமை வாய்ந்தவர்களாகத் தமிழகத்தில் விளங்கியிருக் கிறார்கள் என்பதை ஒருவாறு புரிந்து கொள்ளலாம். திருமங்கையாழ்வார் களப்பிரரா? வைணவப் பெரியார்களுள் திருமங்கையாழ்வார் மன்னராக இருந்து ஆழ்வாராக மாறியவராவார். அவர் பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தைச் சார்ந்தவர் என்ற கருதப்பட்டது.1 தற்போது நந்திவர்மனின் தந்தையான நந்திவர்மன் பல்லவ மன்னன் காலத்தைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. 2 களப்பிரரைக் களவர் என்றும் அழைக்கப்படுவதால் திருமங்கை யாழ்வாரும் களப்பிரரே என்று கருதப்படுகிறது.3 களப்பிரர்களும் முத்தரையர்களும் ஒரே இனத்தவரே என்று கருதுவோர் திருமங்கையாழ்வாரை முத்தரையர் என்றும் கூறுகின்றனர். செந்தலைக் கல்வெட்டில் மாறனுக்குக் காணப்பெறும் பல பட்டப் பெயர்களுள் “கள்வர் கள்ளன்” என்பதும் ஒன்றாகும். அந்தப் பட்டப்பெயரைக் கொண்டு சிலர் முத்தரையர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்று வாதாடுகின்றனர்.1 அப்பட்டப் பெயரை கள்வர்களுக்கு கள்ளன் என்ற பொருளில் எடுத்துக் கொண்டு முத்தரையர் களப்பிரர் களுக்கு எதிரியாவார் என்ற ஓரு கருத்தும் தற்போது நிலவுகிறது.2 எது எவ்வாறாக இருப்பினும் திருமங்கையாழ்வார் சபர குலத்தில் அவதரித்தவர் என்று திவ்யசூரி சரிதம் தெரிவிப்பது கள்வர் குலத்தையே எனக் கருதப்படுவதால் அவரைக் களப்பிரர் என்று கருத வாய்ப்புண்டு”3. மேலும் தற்காலத்தில் தஞ்சைப் பகுதியில் வாழ்ந்து வரும் கள்ளர்மரபினர் களப்பிரர்களின் வழி வந்தவர்களே என்று கருதப்படுவதாலும் திருமங்கையாழ்வாரும் களப்பிரராக இருக்கலாம் என்னும் கருத்து வலுப்பெறுவதாக உள்ளது. திருமங்கை ஆழ்வார் சிறந்த தமிழ்ப்புலவர் பெற்றோர்களால் செல்லமாக நீலன் என்று பெயர் பெற்றிருந்த இவர் தம் இளம் வயதில் “நாற்கவிப் பெருமாள்” என்னும் தமிழ்ப் புலவர் ஒருவரை வாதில் வென்று நாற்கலிப் பெருமாள் என்னும் பட்டப் பெயரை அப்புலவரால் அளிக்கப் பெற்றார். அதனை அறிந்த சோழ அரசனும் இவரை அழைத்து மேலும் பல பரிசுகள் அளித்துச் சிறப்பித்தான். ஆலி நாட்டு மன்னன் இவருடைய போர்த் திறமையை அறிந்து சோழநாட்டு மன்னன் சோழநாட்டில் உள்ள ஆலிநாடு என்னும் பகுதியை இவருக்கு அளித்து அப்பகுதிக்குத் திருமங்கை என்னும் ஊரைத் தலைநகராக்கிப் பரகாலன் என்னும் வீரப் பட்டத்தையும் அளித்துச் சிறப்பித்தான்.1 திருமங்கை என்னும் ஊரைத் தம் நாட்டின் தலைநகராகக் கொண்டி ருந்ததால் தான் திருமங்கை மன்னன் என்று அழைக்கப் பெற்றார். ஆழ்வார்களில் ஒருவர் ஆட்சி நிர்வாகத்தில் மூழ்கி இருந்த திருமங்கை மன்னனுக்கு வைணவ சமயத்தில் பற்று ஏற்பட்டது. இறைவனே இவரின் காதில் மந்திரங்களை ஓதினார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு வைணவத் தலங்களுக்கெல்லாம் சென்று ஆங்காங்குள்ள இறைவன் மீது பக்திப் பாசுரங்கள் பாடி மகிழ்ந்திருக்கிறார். இவரது பாசுரங்கள் ‘பெரிய திருமொழி’ என்று கூறப் படுகின்றன. வைணவ ஆழ்வார்களுள் ஒருவராக இவர் மதிக்கப்பட்டு திருமங்கை ஆழ்வார் என்று அழைக்கப்பட லானார். அபராஜிதன் காலம் நந்திவர்மப் பல்லவ மன்னனுக்குப் பிறகு அவனது வழி வந்தோனான அபராஜிதப் பல்லவன் காலத்திலும் களப்பிரர்கள் செல்வாக்கு பெற்றிருந்திருக்கின்றனர். தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையால் அண்மையில் கண்டுபிடிக்கப் பெற்ற வேலஞ்சேரிச் செப்புப் பட்டயத்தில் களப்பிரர் குலமான ஆகாயத்தில் உலவும் சூரியனாக அபராஜிதன் குறிக்கப் படுகிறான்.2 அபராஜித் பல்லவன் கி.பி. 870 முதல் 890 வரை ஆண்ட தாகக் கருதப்படுகிறது.3 அவ்வாறெனில் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் கூட களப்பிரர்கள் தமிழ்நாட்டில் ஒரு பகுதியை ஆண்டு வந்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை. முத்தரைய மன்னர் சுவரன்மாறன் காலம் தமிழகத்தில் முத்தரையர்களும் வலிமைபெற்ற அரசர் களாக இருந்திருக்கின்றனர். அவர்களும் கி.பி. 7ஆம் நூற்றாண்டி லிருந்து கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் சிறுபகுதியை ஆண்டு வந்திருக்கின்றனர். கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு பகுதியை ஆண்டு வந்திருக்கின்றனர். சோழ மன்னன் விஜயாலயன் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றியிருக்கிறான். முத்தரைய மன்னர்களுள் மிகவும் புகழ் வாய்ந்தவன் சுவரன்மாறன் என்னும் அரசனாவான். இவன் பல்லவ மன்னன் தெள்வhறெறிந்த நந்திவர்மனுக்கும், பாண்டிய மன்னன் மாறஞ் சடையனுக்கும் சமகாலத்தவ னாவான். அதாவது கி.பி 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். சுவரன் மாறன் பல போர் புரிந்து பல ஊர்களை வென்றிருக் கிறான். கொடும்பாளூர், மணலூர், திங்களூர், காந்தளூர், அழுந்தியூர், காரை, மறங்கூர், அண்ணல்வாயில், செம்பொன் மாரி, வெண்கோடை, புகழி, கண்ணனூர் ஆகிய இடங்களில் போரிட்டுப் பகைவர்களை வென்றிருக்கிறான். இம்மன்னன் நியமத்தில் பிடாரிக்குக் கோயில் எடுப்பித் திருக்கிறான். அக்கோயில் எடுப்பித்த செய்தியைத் தெரிவிக்கையிலேயே தான் வெற்றி கொண்ட ஊர்களின் பெயர்களையும், தனது பட்டப்பெயர்களையும் கல்லில் பொறிக்கும்படி கட்டளையிட்டிருக்கிறான். “சுகவரன் மாறனவன் எடுப்பித்த பிடாரி கோயில் அவனெறிந்த ஊர்களு மவன் பேர்களும் அவனைப் பாடினார் பேர்களும் இத்தூண்கண் மேலெழுதின இவை”, என்று செந்தலையில் ஒரு தூணில் பொறிக்கப் பட்டுள்ளதை இன்றும் காணலாம். அதே தூணில் மறு பக்கத்தில் அவனது பட்டப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. அப்பட்டப் பெயர்களுள் ஒன்று “கள்வர் கள்வன்” என்பதாகும். ஆதலால் அவன் களப்பிரரை வென்றிருத்தல் வேண்டும் என்று கருதப்படுகிறது. கள்வர் கள்வன் என்பதில் பொருள் என்ன? ‘கள்வர் கள்வன்’ என்னும் இப்பட்டப் பெயர் பலவாறாகப் பொருள் கொள்ளப்படுகிறது. டி.எ. கோபிநாதராவ் அவர்கள் முதலான பலவரலாற்றாசிரியர்களால் களப்பிரர்களின் தலைவன் என்றே இதற்குப் பொருள் கொள்ளப்பட்டது. அவ்வாறு பொருள் கொண்டதால் சுவரன் மாறன் என்ற முத்தரைய மன்னனும் களப்பிரர் வழி வந்தவன் என்று வாதிட்டனர். ரா. இராசுவையங்கார் போன்றோர் களப் பிரர்களும் முத்தரையர்களும் வெவ்வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறினர். முத்தரையர் என்னும் நூலில் இந்நூலாசிரியர் கள்வர் கள்ளன் என்பதற்கு கள்ளர்களுக்குக் கள்வன், கள்வர்களின் எதிரி என்று பொருள் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதை மறுக்கும் வகையில் ‘கள்வர் கள்வன்’ என்பதைக் களப்பிரர்களுக் கெல்லாம் களப்பிரனாக விளங்கினான் எனப் பொருள் கொள்ள வேண்டும் என்றும் மன்னாதி மன்னன் சூராதி சூரன் வில்லாதி வில்லன் ஆகிய சொற்களோடு இணைத்துப் பார்த்திடல் வேண்டும் என்றும் இராசசேகர தங்கமணி எழுதியுள்ளார்.2 பொருள் அற்ற வாதம் அவர் எடுத்துக் காட்டியிருக்கின்ற மன்னாதி மன்னன், சூராதி சூரன், வில்லாதி வில்லன் ஆகிய மூன்று சொற்களுமே அவருடைய வாதத்துக்குப் பொருந்தாதலைகளாக உள்ளன. மன்னாதி மன்னன் என்றால் பிற மன்னர்களுக்கெல்லாம் அவன் அரசன் என்றும், சூராதி சூரன் என்றால் மற்ற சூரர்களுக் கெல்லாம் அவன் சூரன் என்றும், வில்லாதி வில்லன் என்றால் மற்ற வில்லாளிகளெல்லாரையும் வெல்லும் ஆற்றல் வாய்ந்த வில்லாதி என்றும் பொருள் கொள்ளப் படும். அவ்வாறெனில் கள்வர் கள்வன் என்பதை கள்வர்களை யெல்லாம் வெல்லக் கூடிய கள்வன் என்று தானே பொருள்கொள்ள வேண்டும். காலகாலன் என்று ஒரு சொல் உண்டு. அதனை எமனை யெல்லாம் நடுங்கச் செய்யும் எமன் என்று தானே பொருள் கூறுகின்றனர். அதேபோன்று கண்டர் கண்டன் என்ற சொல்லுக்கு கண்டர்களை எல்லாம் வென்று அடக்கியவன் என்று தானே வரலாற்றாசிரியர்கள் பொருள் புகலுகின்றனர். இராசசேகரதங்கமணி பொருள் கொள்வதைப் போன்று பார்த்தால் சோழசோழன், பாண்டிய பாண்டியன் முத்தரைய முத்தரையன் என்று மற்ற மன்னர்களும் பட்டம் சூட்டிக் கொண்டிருத்தல் வேண்டும். அவ்வாறு எந்த மன்னனும் பட்டம் சூட்டிக் கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. மாறாகப் பல்லவர் காவலன், சோழர் காவலன் என்று தங்களை அழைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். பல்லவர் குலத்துக்கு அவன் தலைவன் சிறந்தவன் என்றால் பல்லவர் காவலன் என்றுதான் கூறிக்கொள்வானே தவிர பல்லவர் பல்லவன் என்று கூறிக் கொள்ளமாட்டான். களப்பிரர், முத்தரையர் பாண்டிய மன்னன் கடுங்கோன் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு ஆகியோர் காலம் முதல் களப்பிரர்கள் பற்றிய ஆதாரபூர்வமான குறிப்புகள் தமக்குக் கிடைக்கின்றன. முதலாம் நரசிம்மவர்மன் காலத்திய ஒரு கல்வெட்டில் முத்தரையர், அவனுக்கு அடங்கிய சிற்றரசராக அவனது தலைமையை ஏற்றுக் கொண்டவராகக் காணப்படுகின்றனர்.1 ஆனால் அதே நேரத்தில் நரசிம்மவர்மன் களப்பிரர்களை வென்றதாகச் செப்பேடுகளில் குறிக்கப்படுகிறான்.2 அதே போன்று இரண்டாம் நந்திவர்மப் பல்லவ மல்லனை காஞ்சிபுரத்தில் பல்லவர்களின் அரியாசனத்தில் அமர்த்து வதற்குத் துணை புரிந்தவர்களிலே காடக முத்தரையன் ஒருவனும் குறிக்கப் படுகிறான்.1 ஆனால் பட்டத்தாள் மங்கலச் செப்புப் பட்டயத்தில், நந்திவர்மப் பல்லவ மன்னனின் கால்களில் வீழ்ந்து வணங்கும் சமயத்தை எதிர்பார்த்திருந்தவர்களில் களப்பிரனும் ஒருவனாகக் குறிக்கப்படுகிறான்.2 ஆகவே தொடக்கம் முதல் களப்பிரர்கள் பல்லவர்களுக்கு எதிரிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் முத்தரையர் ஆரம்ப கால முதல் பல்லவர்களுக்கு உதவுபவர்களாக, சிற்றரசர்களாக இருந்திருக்கின்றனர். இதிலிருந்தே முத்தரையர் களும், களப்பிரர்களும் வெவ்வேறானவர் என்று தெரிந்து கொள்கிறார். மேலும் செந்தலைக் கல்வெட்டில் குறிக்கப்படும் முத்தரைய மன்னர்கள் ‘கலி அரைசர்’ என்று குறிக்கப்படவில்லை. அதேபோன்று களப்பிரர்களும் களப்பாளர், கள்வர் என்று குறிக்கப்படுகிறார்களே தவிர ‘முத்தரையர்’ என்று எந்த இடத்திலும் குறிக்கப்படுவதாகக் காண முடியவில்லை. கொங்கு நாட்டின் களப்பிரர் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கிலிருந்து களப்பிர மன்னர்கள் சிலரை கொங்குப் பகுதியில் காணமுடிகிறது. இம்மன்னர்கள் இதுநாள்வரை சேர மன்னர்களாக வரலாற்றாசிரியர் களால் கருதப்பட்டு வந்தனர்.3 மத்திய அரசின் கல்வெட்டிலாக்காவினர் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு கல்வெட்டு பொன்னிவாடியைச் சேர்ந்ததாகும். இக்கல்வெட்டின் துணையாக இவர்கள் களப்பிரர்கள் என்று உணரமுடிகிறது.4 கோயம்புத்தூர் மாவட்டம் பொன்னிவாடியில் கிடைத் துள்ள இக்கல்வெட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இக்கல்வெட்டில் வாசகம் கீழ்வருமாறு காணப்படுகிறது. 1. ஸ்வஸ்தி ஸ்ரீ சந்த்ராதித்ய குல திலகன் சா 2. ர்வ பௌமன் கலிநிருவ (ப) கள்வனாஇன கோ 3. க்கண்டனிரவி அடியாளாக மணியன் சேகெரி (த) 4. ல்லூர்த் தான் வயக்கின நிலத்திற் பள்ளப் போ- 5. ழி (யி) ற் (நெற்) பெட்டுப் போழியின் வடக்குமணி 6. யன் வயக்குக்குப் போந்த கவ(ரி)ன் மேக்கு நீர்மிணிவா- 7. ய்க்(கா)லின் கிழக்கு செ(ங்) கந்(தி) டர்காக(க்) 8. ழிகைப் புறமாக அட்டினேன் 9. மணியன் வய........”1 கல்வெட்டில் கோக்கண்டன் இரவி என்னும் மன்னன் “கலிநிருப கள்வனாயின கோக்கண்டன் இரவி” என்று குறிப்பிடப்படுகிறான். இத்தொடர் களப்பிரமன்னன்தான் இவன் என்பதை உறுதிப்படுத்துகிறது. “கலிநிருப” என்னும் சமஸ்கிருதம் சொல் ‘கலிஅரசன்’ என்னும் பொருளைத் தருவதாகும். அத்தோடு கள்வனாயின கோக்கண்டன் இரவி என்றும் குறிக்கப்படுவதால் கலிஅரசன் கள்வன் கோக்கண்டன் இரவி என்று பொருளாகிறது. இது வேள்விக்குடிச் செப்பேட்டில் ஆளப்படும். ‘களப்பிரனென்னும் கலிஅரசன்’ என்பதில் மாறுபட்ட வடிவமாகவே உள்ளது. வேள்விக்குடிச் செப்பேட்டில் காணப்பெறும் கலிஅரசன் என்பது கல்வெட்டில் கலிநிருப என்றும் களப்ரனென்னும் சொல் கல்வெட்டில் கள்வன் என்றும் வழங்கப் பெறுகிறது. ஆதலால் களப்ரர்கள் கள்வர் என்றும் அழைக்கப்பட்டனர் என்பது தெளிவாகிறது. களவர கள்வனா? கள்வர் கள்வனா? செந்தலைக் கல்வெட்டில் காணப்படுவதைச், சிலர் குறிப்பிட்டதைப்போல் ‘களவர கள்வன்’1 என்று, படிப்பதைக் காட்டிலும் கள்வர் கள்வன் என்று படிப்பதே சாலச்சிறந்தது என்பது இக் கல்வெட்டினால் புலனாகிறது. செந்தலைக் கல்வெட்டிலும் ஒற்றுக்குப் புள்ளியிட்டே காணப்படுகிறது. அத்தோடு வேங்கடமலையை ஆண்டு வந்த புல்லியைக் களவரகோமான் என்று குறிப்பதைவிடக் கள்வர் கோமான் என்று குறிப்பதும் நல்லது. சந்திர சூரிய குலம் பொன்னிவாடிக் கல்வெட்டின் மூலம் கண்டன் இரவி களப்பிர வம்சத்தைச் சார்ந்தவன் என்பதற்கு சந்திராதித்ய குலத்துக்குத் திலகம் போன்றவன் என்பதும் பெறப்படுகிறது. சோழர்கள் சூரிய குலத்தையும், பாண்டியர்கள் சந்திர குலத்தையும் சார்ந்தவர்கள் என்று தங்களது செப்பேடுகளில் கூறிக்கொள்வர். அதுபோன்று கண்டன் ரவி சந்திரசூரிய குலத்தைச் சேர்ந்தவன் என்று தெரிவித்துக் கொள்கிறான். கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் என்னுமிடத்திலிருந்து கிடைத்துள்ள மற்றொரு கல்வெட்டாலும் இம்மன்னன் சந்த்ராதித்ய குலத்தைச் சேர்ந்தவன் என்பதைக் காணலாம். வெள்ளலூர்க் கல்வெட்டு 1. ஸ்வஸ்தி ஸ்ரீ சந்த்ரா 2. தித்ய குல (தி) லக 3. சார்வபௌம(னா) 4. கியஸ்ரீகோக்கண்ட 5. ன்னிரவிக்குச் செ 6. ல்லாநின்ற யாண்டு 7. இருபத்து நான் 8. கு இவ்வாண்டு வெளி 9. லூர்த் தென்னூ 10. ர் நக்கனார் மண்ட 11. பத்துக்கு ஓம 12. (யிந்த்ர) ன்மா கலூ 13. ர்கிழெ (ழா) ன் கண் 14. ணங் காவஅனன் 15. னான் நடுவித்த 16. கற்றூண்1 கோக்கண்டன் இரவியின் முன்னோரும் பின்னோரும் கோயம்புத்தூர் மாவட்டப் பகுதியில் காணப்பெறும் பிற கல்வெட்டுகளில் குறிக்கப்படும் மன்னர்களில் சேர மன்னர் களைச் சார்ந்ததாகக் குறிக்கப்படுவனவற்றில் இக்கோக்கண்டன் இரவிக்கும் அவர்களுள் ஒரு சிலருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அத்தோடு அந்த ஒரு சிலரின் கல்வெட்டுகளில் காணப்பெறும் எழுத்தமைதியும் இதற்குத் துணை புரிவதாக உள்ளது. சில கல்வெட்டுக்கள் கண்டன் வீரநாராயணனுடைய தாகவும்,2 சில இரவிகண்டனுடையதாகவும்,3 சில இரவி கோதையின் காலத்தைச் சார்ந்ததாகவும்4 உள்ளன. இக் கல்வெட்டுக்களின் எழுத்தமைதியும் கோக்கண்டன் இரவியின் கல்வெட்டுக்களின் எழுத்தமைதியும் பெரும் பாலும் ஒற்றுமை யாகக் காணப்படுகின்றன. ஆகவே கோக்கண்டன் வீர நாராயணன், இரவிகண்டன், இரவி கோதை ஆகியோர் கண்டன் இரவிக்குச் சற்று முன்பின்னாக ஆட்சி செய்திருக்க வேண்டும் என்று கருதலாம். மேலும் அவர்களின் பெயர்களுக்கும் கோக் கண்டன் இரவியின் பெயருக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கக் கூடும் என்ற எண்ணமேற்படுகிறது. அரசர் வரிசை அந்த அடிப்படையில் பார்த்தால் கண்டன் வீர நாராயணனும், கண்டன் இரவியும் உடன் பிறந்தார்களாக இருக்கலாம். கண்டன் இரவியின் புதல்வர்களாக இரவி கண்டனும், இரவிகோதையும் இருக்கலாம். கண்டன் வீர நாராயணனுக்கும், கண்டன் இரவிக்கும் தந்தையாகக் கண்டன் என்பவன் வாழ்ந்திருக்கலாம். இவர்களுக்குப் பிறகு வரகுண பராந்தகன் என்னும் மன்னன் ஒருவனும் ஆண்டிருக்கிறான். மேலே கொள்ளப்பட்ட கருத்தைப் பட்டியல் வடிவில் கீழே காணலாம். கண்டன் கண்டன் வீரநாராயணன் கண்டன் இரவி இரவி கண்டன் இரவி கோதை வரகுண பராந்தகன் கண்டன் வீரநாராயணன், கண்டன் இரவி ஆகியோரின் கல்வெட்டுக்கான எழுத்தமைதியை அடிப்படையாகக் கொண்டு சுமார் கி.பி. 900-ம் ஆக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவ்வாறெனில் அவர்களின் தந்தையான கண்டன் கி.பி. 9-ம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் ஆட்சி புரிந்திருத்தல் கூடும். இரவி கண்டன் கி.பி.10-ஆம் நூற்றாண்டின் மைய வாக்கிலும், இரவி கோதை கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் இறுதி வாக்கிலும் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். வரகுண பராந்தகனும் பத்தாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்திருக்கிறான். அவனது காலத்திய இரண்டு கல்வெட்டுக்கள் கோயம்புத்தூர் மாவட்டம் பிரமியத்திலிருந்து கிடைத்துள்ளன.1 ஒன்று 15-ஆம் ஆட்சி ஆண்டிலும் மற்றொன்று 22ஆம் ஆண்டிலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இவனும் தம்மை சந்திர சூரிய குலத்தைச் சார்ந்தவன் என்று கூறிக் கொள்கிறான். பிரமியத்தில் காணப்படும் கல்வெட்டுகளுள் இவனுடைய கல்வெட்டுக்கள் தாம் மிகவும் பழமையானவை என்று கே.வி. சுப்பிரமண்ய அய்யர் குறிப்பிட்டுள்ளார். கல்வெட்டுக்கள் காணப்பெறும் இடங்கள் இவர்களுடைய கல்வெட்டுக்கள் கோவை மாவட்டத்தில் பொன்னிவாடி, வெள்ளலூர், கீரனூர், பழநி, ஈரோடு, பிரம தேசம், பேரூர் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. ஆகவே கி.பி.9ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரை களப்பிரர் கோவை மாவட்டத்தில் அதாவது பழைய கொங்கு நாட்டில் ஆண்டு வந்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. அத்தோடு அவர்களது கல்வெட்டுக்கள் காணப்படும் இடங்களை நோக்கும்போது ஒரு கணிசமான நிலப்பரப்பு அவர்களது ஆளுகையின் கீழிருந்திருக்கிறது என்பதும் தெரிய வருகிறது. களப்பிரர் வைதீக மதத்துக்கு எதிர்ப்பானவர்கள் என்பது தவறானது என்பதும் அவர்களது கல்வெட்டுக்களினால் தெளிவாகிறது. களப்பிரர் சமயம் என்னும் தலைப்பில் இது பற்றி விரிவாகக் காணலாம். தமிழகத்துப் பிற பகுதிகளில் அப்போதைய சூழ்நிலை கி.பி. 9ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தமிழகத்தின் வட பகுதியில் பல்லவனான அபராஜிதன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவன் தன் செப்பேட்டில் களப்பிரரை வென்றதாகக் கூறிக் கொள் கிறான்.1 அவன் கூறிக்கொள்வது உண்மையானால் கொங்கு நாட்டின் தன்னாட்சி புரிந்து கொண்டிருந்த களப்பிர மன்னன் கோக்கண்டனைத் தான் வென்றிருக்க வேண்டும். அவ்வெற்றி நிலைத்த வெற்றியாக இருந்திருக்காது. திரும்பவும் களப்பிரர் தன்னாட்சி புரிய முற்பட்டிருப்பார். ஆதலால் தான் அவர்கள் தங்கள் பெயரிலேயே கல்வெட்டுக்களை எழுதியிருக்கின்றனர். கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் சோழ நாட்டில் முத்தரையர்கள் ஆண்டு கொண்டிருந்தனர். முத்தரைய மன்னன் சுவரன்மாறனும் களப்பிரரை வென்றிருத்தல் வேண்டும். ஆதலால்தான் அவன் கள்வர்கள்வன் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டுள்ளான். சுவரன் மாறன் காலத்தில் வாழ்ந்த களப்பிரர் கோக்கண்டனுக்கு முன்பாக ஆட்சி புரிந்தவனாக இருத்தல் வேண்டும். கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சோழ மன்னன் ஆதித்யன், பல்லவ மன்னன் அபராஜிதனை வென்று சோழ ராஜ்யத்தையும் பல்லவ நாட்டையும் இணைத்து ஆளத்தொடங்கி விடுகிறான். இவன் கொங்கு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அதனைக் கைப்பற்றிக் கொண்டான் என்று கொங்கு தேச ராசாக்கள் என்ற வரலாற்று நூல் கூறுகிறது. அந்நுலில், சோழ வம்சத்திலே விசயாடராயன் மகன் ஆதித்தவர்மராயன் சோழ தேசம் தஞ்சாவூரிலே பட்டம் கட்டிக் கொண்டு கொங்க தேசத்துக்கு வந்து ராசா வேடர் களைச் செயம் பண்ணித் தலைக்காடு என்ற பட்டணங்கட்டிக் கொண்டு இந்த இராச்சியங்களிலேயே அநேக அக்கிரிகாரம் சர்வமானியமாய்த் தருமம் பண்ணி அந்த அரசை ஆண்டனன் என்று குறிக்கப்பட்டுள்ளது.2 கொங்கு நாட்டில் அப்பொழுது வேடராசாக்கள் ஆண்டு வந்ததாக கொங்கு தேச ராசாக்கள் என்ற நூல் குறிப்பிடுவது களப்பிரரைத்தான் என்று கருதலாம். கி.பி.9ஆம் நூற்றாண்டின் இறுதியில் கண்டன் கொங்கு நாட்டை ஆண்டிருக்கிறான் என்பதை முன்னரே கூறினோம். அவனைத் தான் ஆதித்யனும் வென்றிருக்கவேண்டும். பல்லவ மன்னன் அபராஜிதனுக்காக ஆதித்யன் களப்பிரனை வென்றிருக்கலாம். ஆதலால்தான் அபராஜிதன் தான் களப்பிரனை வென்றதாகக் கூறிக் கொள்ள, ஆதித்யன் கல்வெட்டுகள் ஏதும் கொங்கு நாட்டில் அவன் படையெடுத்துச் சென்றதைக் கூறாமல் இருக்கின்றன என்று யூகிக்க இடம் ஏற்படுகிறது. எவ்வாறிருப்பினும் ஆதித்யன் களப்பிரனாகிய கண்டனைத் தோற்கடித்திருக்கிறான். அதன் காரணமாகத்தான் “பல்யானை கோக் கண்டன்” என்ற பட்டப் பெயரை ஆதித்தனுக்குத் திருநெய்த்தானம் கல்வெட்டில்”1 காணமுடிகிறது. போலும், ஆனாலும் அவ்வெற்றி நிலைத்த வெற்றியல்ல என்பதைக் கோக்கண்டனின் புதல்வர்கள் சுயேச்கையாகக் கல்வெட்டுகள் பொறித்திருப்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் சோழர் வரலாற்றிலிருந்து ஒரு புதிர் நீங்கிவிடுகிறது. கொங்கு நாட்டிலிருந்து பொன் கொண்டுவந்து தில்லைச் சிற்றம்பலத்துக்கு ஆதித்யன் பொன் வேய்ந்தான் என்று திருத் தொண்டர் திருவந்தாதி கூறுகிறது.2 ஆனால் இவன் கொங்குநாட்டுக்குப் படையெடுத்துச் சென்றான் என்ற செய்தி கொங்குதேச இராசாக்கள் என்ற பிற்கால நூலில் தவிர, இவனது செப்புப் பட்டயங்களிலோ, கல்வெட்டுகளிலோ காணமுடியவில்லை. அதேபோன்று பராந்த கனுடைய கல்வெட்டுக்கள் சில கொங்கு நாட்டில் காணப்பட்டாலும் பராந்தகன் கொங்கு நாட்டில் காணப்பட்டாலும் பராந்தகன் கொங்கு நாட்டின் மீது படையெடுத்துச் சென்றதற்கான எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை. இவ்விரண்டு செயல்களும் பெரும் புதிராகவே வரலாற்றாசிரியர்களுக்கு இருந்து வந்தது. ஆதித்யன் கொங்கு நாட்டுக்குப் படையெடுத்துச் சென்றிருக் கிறான்; ஆனால் பல்லவ மன்னன் அபராஜிதனுக்காகச் சென்று களப்பிரரைத் தோற்கடித்திருக்கிறான் என்று கருதுவோமானால் இப்போதைக்கு ஒரு தீர்வு கண்டவர்கள் ஆகிறோம். வேலஞ் சேரி செப்பேட்டில் அபராஜிதன், “களப்பிரர் என்ற ஆகாயத்தில் உலவும் சூரியனாகத் திகழ்ந்தான்” என்று கூறப்படுவதிலிருந்து களப்பிரரை அபராஜிதன் வென்றிருப்பது நிரூபணமாகிறது. அபராஜிதனை ஆத்தியன் வென்றபிறகு அபராஜிதனால் வெல்லப்பட்ட பகுதிகளும் ஆதித்யனின் ஆட்சியின்கீழ் சேர்ந்துவிடுவது இயற்கைதானே. ஆதலால்தான் பராந்தக சோழன் காலத்திலும் அப்பகுதி சோழர்கள் காலத்திலும் அப்பகுதி சோழர்கள் வசம் இருந்திருக்கிறது. அங்கு சுய ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள் என்பதையும் மறுக்க இயலாது. கொங்குச் சோழர்களா? கோநாட்டு மன்னர்களா? கொங்குப் பகுதியில் கி.பி. 10, 11ஆம் நூற்றாண்டு வாக்கில் இரு பெரும் மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். அவர்களை வரலாற்றா சிரியர்கள் கொங்குச் சோழர் என்று குறிப்பிடுவர். ஆனால் கே.வி. சுப்பிரமணிய அய்யர் அவர்கள், அவர்களைக் கோனாட்டு மன்னர்கள் என்று அழைப்பதே பொருத்தமானது என்று வலியுறுத்தியுள்ளார்கள்.1 அம்மன்னர்கள் தங்களைக் கோநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றுதான் கூறிக் கொள்கின்றனர். ஆகவே அவர்கள் கோனாட்டிலிருந்து வந்து கொங்கு நாட்டை ஆண்டவர்கள் என்று கொள்வதே சாலப் பொருத்தமாகும். அவர்களின் பெயர்கள் (1) வீரசோழ கலிமூர்க்கன், 2. கலிமூர்க்க விக்ரமசோழன் என்பதாகும். வீரசோழ கலிமூர்க்கன் தந்தையாகவும், கலிமூர்க்க விக்ரம சோழன் அவனது மகனாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.1 இருக்குவேளிரா? முத்தரையரா? இவர்கள் கோநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கண்டோம். கோ நாட்டில் இருக்குவேளிர்கள் கொடும்பாளுரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் வழி வந்தவர்கள் இவர்கள் என்றால், இருக்குவேளிர் மன்னர்களில் யாருக்கும் கலிமூர்க்கன் என்ற பட்டம் இருந்ததாகச் சான்று கிடைக்கவில்லை. கோநாட்டில் இருந்த மற்றொரு இனம் முத்தரையர் ஆவார். கோநாட்டைச் சேர்ந்த திருமயத்தில் தான் முத்தரையர்களின் மிகப் பழமையான கல்வெட்டு கிடைத்துள்ளது. விடேல் விடுகு விழுப்பேரதி அரைசன் என்னும் சாத்தன் மாறனின் தாய் பெரும்பிடுகுபெருந்தேவி என்பாள். திருமயம் சத்யகிரிநாதப் பெருமான் கோயிலைப் புதுப்பித்ததைத் தெரிவிக்கிறது.2 சாத்தன் மாறன் இரண்டாம் நந்திவர்மன் காலத்தைச் சார்ந்தவனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.3 அடுத்து குவாவன் சாத்தனின் கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்டம் மலையடிப்பட்டியில் கிடைத்திருக்கிறது. இவன் பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் திருவாலத்தூர் மலையைக் குடைந்து கோயில் அமைத்து பிடாரரை பிரதிஷ்டை செய்ததை அக்கல்வெட்டு புலப்படுத்துகிறது.4 இவன் வழி வந்த சாத்தம்பூதி, சாத்தம்பழியிலி, பூதிகளரி போன்றோர்கள் இப்பகுதியிலேயே ஆண்டு வந்திருக்கிறார்கள். இங்கு பல கோயில்களையும் எடுப்பித்திருக்கிறார்கள். மேலும் பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் மாற்பிடுவனார் என்னும் பேரதியரையனின் அடியான் ஒருவன் வாலிவடுகன் என்னும் கலிமூர்க்க இளவரையன் என்ற பெயரோடு திகழ்ந்திருக்கிறான். அவன் குன்னாண்டார் கோயிலில் வாலி ஏரி என்று ஒரு ஏரியை அமைத்திருக்கிறான்.1 மாற்பிடுவனார் பேரதியரையன் முத்தரைய மன்னனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.2 முத்தரையர்கள் பேரதியரையர் என்றும் இளவரையர் என்றும் பட்டம் பூண்டிருக் கின்றனர். அடியாளான வாலிவடுகன் கலிமூர்க்க இளவரையன் என்றும் பெயர் பெற்றிருப்பதால் மாற்பிடுவனார் பேரதியரையனுக்கோ அல்லது அவனது முன்னோனுக்கோ கலிமூர்க்கன் என்று ஒரு பட்டப் பெயர் இருந்திருக்கலாம். சோழர் காலத்தில் மன்னன்களது பெயரைக் குறுநில மன்னர்களும் அரசியல் அதிகாரிகளும் பெற்றிருந்ததை நிரம்பக் காணமுடியும். அதே போன்று பல்லவர்களின் மாற்பிடுகு, விடேல்விடுகு போன்ற பட்டப் பெயர்களை அவர்களது குறுநில மன்னர்கள் தாங்கியிருந்ததையும் காணமுடிகிறது. ஆதலால் முத்தரைய மன்னன் ஒருவன் தந்திவர்மப் பல்லவன் காலத்தில் ‘கலிமூர்க்கன்’ என்ற பட்டப் பெயரைப் கொண்டிருந்தான் என்று கருத இடமேற்படுகிறது. அம்மன்னன் பெரும்பாலும் குவாவன் சாத்தனாக இருக்கலாம். ஆகவே அந்த முத்தரையர் குலத்தைச் சார்ந்தவர்களாகக் கொங்கு நாட்டை ஆட்சி செய்த வீரசோழ கலிமூர்க்கனும் கலிமூர்க்க விக்கிரம சோழனும் இருக்கலாம். கலிமூர்க்கன் என்ற பட்டம் எவ்வாறு வந்தது? பல்லவ மன்னர்களிடம் முத்தரையர்கள் நேசமாகவே இருந்து வந்தனர். ஆதலால்தான் இரண்டாம் நந்திவர்மப் பல்லவமல்லன் காலத்தில் குவாவன் என்னும் முத்தரையன் சமண்ப்பள்ளிக்குக் கொடை யளித்ததைக் குறிக்கும் கல்வெட்டில் நந்திவர்மனின் ஆட்சியாண்டைக் காணமுடிகிறது. அதே போன்று தந்திவர்வனின் காலத்தில் தான் குவாவன் சாத்தன் மலையடிப்பட்டியில் குடைவரைக் கோயிலை அமைத் திருக்கிறான். மேலும் நிருபதுங்கவர்மன் காலத்தில் தான் சாத்தம்பழியிலிநார்த்தாமலையில் பழியிலீச்சுரம் என்னும் குடைவரைக் கோயிலைக் குடைவித்திருக்கிறான். ஆகவே முத்தரையர்கள் பல்லவ மன்னர்களுக்கு அடங்கிய சிற்றரசர் களாக இருந்திருக்கின்றனர் என்பது தெளிவு. ஆனால் களப்பிரர் பல்லவர்களுக்கு தீராப் பகைவர் களாக இருந்திருக்கின்றனர். சிம்மவிஷ்ணு காலம் தொட்டு அபராஜிதன் காலம்வரை பெரும்பாலான பல்லவ மன்னர்கள் களப்பிரரை வென்றதைச் செப்புப்பட்டயங்கள் பறைசாற்றும். செந்தலைக் கல்வெட்டில் காணப்படும் முத்தரைய மன்னன் சுவரன் மாறன் கள்வர் கள்வன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்தான் என்பதை முன்னரே கண்டோம். அது போன்று மற்றொரு முத்தரையன் ‘கலிமூர்க்கன்’ என்ற பட்டத்தைப் பெற்றிருக்கலாம். களப்பிரர்கள் கலி அரசர்கள் அவர்களைச் சின்னாபின்னமாகச் செய்துவிட்டான் என்பதைக் கலிமூர்க்கன் என்ற பட்டப் பெயரால் தெரிவிக்க அம்மன்னன் நினைத் திருக்கலாம். ஆகவே களப்பிரரை வென்றதைக் குறிப்பதற்காகக் ‘கலிமூகர்க்கன்’ என்ற பட்டப் பெயர் வழங்கியிருக்கலாம். நாயன்மார்களில் ஒருவர் மூர்க்கர் சைவ மதத்தைப் பரப்பி வந்த அறுபத்துமூன்று நாயன் மார்களுள் ஒருவர் மூர்க்கர் என்று பெயர் பெற்றிருந்தார். அவர் தொண்டை நாட்டிலே திருவேற்காட்டில் வேளாண் குடியில் பிறந்தவர். அடியார் களுக்கு உணவு அளித்து மகிழ்வதில் பெரு விருப்பு கொண்டவர். அவரிடம் இருந்த செல்வம் எல்லாம் அழிந்த பின்னர், தம் சூதாடும் திறமையால் பொருள் ஈட்டி அடியார்களுக்கு அமுதிடும் பணியைத் தொடர்ந்து நடத்தலானார். இறைவன் திருவிளையாடலால் சூதாட்டத்திலும் தோல்வி ஏற்பட ஆரம்பித்தது. இருப்பினும் மனம் தளராமல் சூதாடி இறுதியில் வெற்றி பெற்று வந்தார். எதிராளிகள் அவருடன் தகராறு செய்யத் தொடங்கினர். அடியாரோ சிறிதும் மனம் தளராமல் எதிராளிகளைத் தம் உடைவாளால் குத்திப் பணியச் செய்தார். இனதால் அவருக்கு மூர்க்கர் என்ற பெயர் ஏற்படலாயிற்று என்று அறிய முடிகிறது”.1 அதே போன்று களப்பிரர்களைக் கொஞ்சமும் தயக்கமின்றிப் போரிலே தம் வாளால் குத்தித் தோற்கடித்ததால் முத்தரைய மன்னன் ஒருவனுக்கு ‘கலிமூர்க்கர்’ என்ற பட்டம் ஏற்பட்டிருக்கலாம். நில இயல்பு கூறும் உண்மை கொங்கு நாட்டுக்குக் கிழக்கே அணித்தாக உள்ள நிலப்பரப்பு கோநாடு ஆகும். ஆகவே கோநாட்டார் கொங்கு நாட்டாரோடு போரிடுவது தவிர்க்கமுடியாததாக இருந்திருக்கும். காரணம் ஒவ்வொரு மன்னனும் பண்டைக் காலத்தில் தம் அண்டை நாட்டாரோடு அடிக்கடி சண்டையிட்டுத் தம் ஆட்சிப் பரப்பை அகலப்படுத்த எண்ணிய எண்ணம்தானாகும். பல்லவமன்னன் அபராஜிதனுக்காகச் சோழ மன்னன் ஆதித்யன் கொங்கு நாட்டை ஆண்ட களப்பிரர்களோடு போரிட்டிருக்கிறான். கொங்கு நாடு பின்னர் சோழர் ஆதிக்கத்தில் வந்து விட்டது. நாளடைவில் கொங்கு நாட்டை ஆளும் உரிமையைக் கோநாட்டாராகிய மூத்தரையருக்குச் சோழமன்னன் தந்திருக்கலாம். அவ்வாறு ஆளத் தொடங்கியவர்கள்தான் கோநாட்டு மன்னர்கள் என்று கருதலாம். வீர சோழ கலிமூர்க்கன் (கி.பி. 967-1005) இவனது காலத்தது என்று இதுவரை நான்கு கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் கொடுவாயிலிருந்து ஒரு கல்வெட்டும்2 “பிரமியத்திலிருந்து இரு கல்வெட்டுகளும்”3 வள்ளி எறிச்சலிலிருந்து ஒருகல்வெட்டும்”1 ஆகும். கொடுவாய்க் கல்வெட்டு இவனது 14-ஆம் ஆட்சி ஆண்டிலும், பிரமியம் கல்வெட்டுகள் 17, 24-ஆம் ஆட்சி ஆண்டுகளிலும், வள்ளி எறிச்சல் கல்வெட்டு 38-ஆம் ஆண்டிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இவனுக்குப் பின் ஆட்சி புரிந்த- பெரும்பாலும் இவனது மகன் என்று கருதப்படுகிற - கோக்கலிமூர்க்க விக்கிரமசோழனின் 40-ஆம் ஆண்டுக் கல்வெட்டு சக ஆண்டு 967 உடன் திங்களூரில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதன் மூலம் கோக்கலிமூர்க்க விக்கிரமசோழன் கி.பி.1005-ல் ஆட்சி புரியத் தொடங்கியிருக்க வேண்டும். அவ்வாறெனில், கோவீரசோழ கலிமூர்க்கன் 38 ஆண்டுகளே ஆண்டுள்ளதாகத் தெரிவதால் கி.பி.967-ல் ஆட்சி புரியத் தொடங்கியிருத்தல் கூடும். வீரசோழன் என்பது சோழ மன்னன் முதலாம் பராந்தகளின் பட்டப் பெயராகும். அவன் கி.பி.907 முதல் 955 வரை சோழ நாட்டை ஆட்சி புரிந்திருக்கிறான். அவனது கல்வெட்டுக்கள் தமிழ்நாடு பூராவும் காணப்படுகின்றன. கொங்கு நாட்டிலும் அவனது கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. பராந்தகனது ஆட்சிக் காலத்தில் கொங்கு நாடு அவனது ஆளுகையின் கீழ்தான் இருந்தது என்றாலும் களப்பிர மன்னனும் அங்கு தமது கல்வெட்டுக்களைச் சுயேச்சையாகப் பொறித் துள்ளதைக் காணமுடிகிறது. பராந்தகன் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு சுமார் 12 ஆண்டுகள் கழித்து கோநாட்டானாகிய வீர சோழ கலி மூர்க்கன் கொங்கு நாட்டை ஆளத் தொடங்கிருக்கிறான். அவனது பெயர் அவன் பராந்தகச் சோழனுக்கு அடங்கியவனாகக் கோநாட்டில் இருந்தவன் என்பதையும், பின்னர் தான் கொங்கு நாட்டை ஆளும் வாய்ப்பைப் பெற்றான் என்பதையும் தெளிவாக உணர்த்துகிறது. கலிமூர்க்க விக்கிரம சோழன் (கி.பி. 1005-1047) இவன் கொங்கு நாட்டைச் சிறந்த முறையில் நெடுங் காலம் ஆட்சி புரிந்திருக்கிறான். இவனது கல்வெட்டுக்கள் இவனின் 2ஆம் ஆட்சி ஆண்டிலிருந்து 42-ஆம் ஆட்சி ஆண்டு வரை கிடைத்திருக்கின்றன. இவனுடைய கல்வெட்டுக்கள் கோயம் புத்தூர் மாவட்டம் முழுவதுமின்றி, மதுரை மாவட்டம், பழநி தாலுக்காவிலும் கிடைக்கின்றன. பேரூர், வெள்ளலூர், போளுமாம்பட்டி, திங்களூர், விஜயமங்கலம், திருமுருகன் பூண்டி, கண்ணாடிப்புத்தூர், குமார மங்கலம், சோழமாதேவி, தாராபுரம், கீரனூர், பெரியகோட்டை, களந்தை, சமத்தூர் அண்ணூர், கோவில்பாளையம், பிரமியம் ஆகிய ஊர்களில் அக்கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலே காட்டப்பட்டுள்ளவாறு இவன் கி.பி. 1005 முதல் அரசாளத் தொடங்கி கி.பி. 1047 வரை ஆட்சி புரிந்திருக்கிறான். அக்காலத்தில் கொங்கு நாட்டில் இருந்த முக்கியமான ஆலயங்களில் எல்லாம் இவனது கல்வெட்டுக்களைக் காணமுடிகிறது. இவனுக்கென ஒரு மெய்க்கீர்த்தி இருந்தது என்பது இவனது கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வருகிறது. செங்கோலோச்சி வெள்ளி வெண்குடை மிளிரவேந்தி நாடு வளம்படுத்து நைய குடி ஓம்பி ஆறில் ஒன்று கொண்டு அல்லவை கடிந்து கோவீற்றிருந்து குடி புறங்காத்து பெற்ற குழவிக்குற்ற நற்றாய் போல் திருமிகு சிறப்பிற் செல்லா நின்ற திரு நல்லியாண்டு. பிரமயித்தில் காணப்பெறும் இவனது கல்வெட்டுக் களிலிருந்து கோநாட்டு மன்னர்களுக்கும் சோழ மன்னர் களுக்கும் இருந்த திருமண உறவுபோன்ற செய்திகளை அறியமுடிகிறது. ஒரு கல்வெட்டு ‘நம்பிராட்டியார் வளவன் மாதேவியார் என்னும் இட்டி மூத்தர்’ அளித்த தானம் பற்றிக் குறிப்பிடுகிறது. இவன் பெரும்பாலும் கலிமூர்க்க விக்கிரம சோழனின் பட்டத்தரசியாக இருக்கவேண்டும். ஆதலால் ‘நம்பிராட்டியார்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘வளவன் மாதேவியார்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘வளவன் மாதேவியார்’ என்பது சோழ இளவரசி என்பதைக் காட்டும். மற்றொரு கல்வெட்டு, கலிமூர்க்க விக்கிரம சோழன் தன் மகள் இறந்தபோது அவனது ஆத்மாசாந்தி பெறும் பொருட்டு அளித்த ‘தானம் பற்றி தெரிவிக்கிறது. அதில் அவள் சோழ மன்னன் விக்கிரம சோழனின் பட்டத்தரசி என்று காணப் படுகிறது. சோழ மன்னன் முதலாம் இராஜேந்திரனுக்கு விக்கிரம சோழன் என்ற ஒரு பெயரும் உண்டு.1 ஆதலால் முதல் இராஜேந்திரனுக்குத் தன் மகளைக் கலிமூர்க்க விக்கிம சோழன் தந்திருக்கிறான் என்பது இதனால் புலப்படுகிறது.  பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் களப்பிரர் கி.பி. 3ஆம் நூற்றாண்டிலிருந்து செல்வாக்குப் பெறத் தொடங்கிய களப்பிரர் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரை தம் ஆட்சியின் எல்லைப் பரப்பை அகலப்படுத்திக் கொண்டிருந் திருக்கிறார்கள். தென்பகுதியை பாண்டிய மன்னன் கடுங் கோனும் வடபகுதியில் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணுவும் அவர்களது அளவற்ற வளர்ச்சிக்குத் தடை ஏற்படுத்தினர். சோழ நாட்டுப் பகுதியில் எந்தவித எதிர்ப்புமின்றி நிலை பெற்றிருந்த களப்பிரர் பாண்டியர், பல்லவர் ஆதிக்கம் சோழநாட்டின் மீது மாறி மாறி ஏற்படத் தொடங்கியதும் வேறு வழியின்றி கொங்குநாட்டுப் பகுதியில் குடிபெயரத் தொடங்கினர். கி.பி.10 ஆம் நூற்றாண்டு வரை அப்பகுதியில் ஒரு சிறு பகுதியைத் தாங்கள் முழுச் சுதந்திரத்தோடு ஆண்டு வந்திருக்கின்றனர். கொங்குநாட்டின்மீது பிற்காலச் சோழரின் ஆதிக்கம் பரவத் தொடங்கியதும் களப்பிரர் செல்வாக்கு முழுமையாகக் குறைந்தது. கி.பி.12-13ஆம் நூற்றாண்டளவில் சிலர் அரசு அதிகாரிகளாகவும், ஊர்த் தலைவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். முதலாம் இராஜராஜன் காலம் இடையள நாட்டுச் சிறிஞார் என்ற ஊரில் அவ்வூர்த் தலைவனாக இருந்த களப்பாளன் தன்னிச்சையும், பெரும் புலிபூரைத் சார்ந்த ஐயாறன் அம்பலத்தையும் திருமறைக் காட்டு புவனிவிடங்க தேவர் கோயிலில் இரண்டு நுந்தா விளக்கு எரிப்பதற்காக, நூற்றென்பது ஆடுகளை வழங்கியிருக்கிறார்கள். களப்பாளன் தன்னிச்சை “சிறிஞார் கிழவன்” என்று கல்வெட்டில்1 குறிக்கப்படுவதால் சிறிஞாரின் தலைவனாக அவன் இருந்திருத்தல் வேண்டும் என்பதை ஊகிக்கலாம். இக்கல்வெட்டு முதலாம் இராஜராஜனின் காலத்தில் (கி.பி.1000) பொறிக்கப் பட்டிருத்தலால் பெருமன்னன் இராஜராஜன் காலத்தில் களப்பிரர்கள் அரச பரம்பரை என்ற நிலையிலிருந்த தாழ்ந்து கிராமத் தலைவர்கள் என்ற முறையில் திகழ்ந்திருக்கிறார்கள் என்று உணரலாம். முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் எய்தளூர் என்னும் ஊரைச் சார்ந்த களப்பாளன் செல்லையன் தொண்ணம்பி என்பான் தம் மனைவி உமைநங்கையின் நன்மைக்காகக் கங்கை கொண்ட சோழ வளநாட்டுப்பட்டான் பாக்கைநாட்டு சோழகுல வல்லி நல்லூரில் உள்ள திருக்கண்ணின்வரமுடைய மாதேவற்கு நுந்தா விளக்கு எரிப்பதற்காகக் கொடை அளித்திருக்கிறான். இந்நிகழ்ச்சி முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் (கி.பி.1092) நடைபெற்றிருக்கிறது.2 இம்மன்னன் ஆட்சிக் காலத்திலேயே (கி.பி.1905) மற்றொரு களப்பாளனின் மகள் தியாகவல்லி வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருமழபாடி உடைய மகாதேவர்க்கு நுந்தாவிளக்கு அமைத்தும் தெரிய வருகிறது. இக்களப்பாளன் இராஜேந்திர சோழ வளநாட்டு வண்டாழைக் கூற்றத்துச் சிற்றாமூர் என்னும் ஊரைச் சார்ந்தவன். இவனைக் கல்வெட்டு ‘சிற்றாமூர் உடையான் பெருமான் கற்பகமான களப்பாளராஜர்’ என்று குறிப்பிடுகிறது.3 உடையான் என்று வருவதால் இவன் தமக்குச் சொந்தக் காணி உடையவனாக இருந்திருத்தல் வேண்டும். அவ்வாறெனில் ஓரளவுக்குச் செல்வம் நிரம்பியவனாகத் திகழ்ந்திருக்கின்றான் என்று கருதலாம். இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலம் சோழ மன்னன் இரண்டாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் (கி.பி.1133-1150) களப்பாளன் ஒருவன் அரசு அதிகாரியாக இருந்திருக் கிறான். அவனது பெயர் கங்கை கொண்ட சோழன் களப்பாளன் ஆகும். அரசனால் வரி நீக்கப்பட்டு அளிக்கப்படும் நிலங்கள் சம்பந்தப்பட்ட தானங்களில் இவனது கையெழுத்தும் இன்றியமையாததாகக் கருதப்பட்டிருக்கிறது.1 எனவே இவன் வருவாய்த் துறையைச் சேர்ந்த அதிகாரியாக விளங்கியிருக்கலாம். களப்பாளராயர் நெற்குன்றங்கிழார் ஏறக்குறைய இதே காலத்தில் தொண்டை நாட்டில் நெற்குன்றம் என்ற ஊரில் களப்பாளன் ஒருவன் வாழ்ந்தி ருக்கிறான். இவன் ‘நெற்குன்றம் கிழான்’ என்று குறிக்கப்படுவ திலிருந்து அவ்வூருக்குத் தலைவனாக விளங்கியிருக்க வேண்டும். இவன் சிறந்த கவிஞனாகவும் திகழ்ந்திருக்கிறான். தஞ்சை மாவட்டத்திலுள்ள திருப்புகலூர் இறைவன் மீது ‘திருப்புகலூர் அந்தாதி’ என்னும் நூலை யாத்திருக்கிறான். அவ்வந்தாதியின் இறுதியில் ‘களப்பாளன் நெற்குன்றவாணன் அந்தாதிக் கலித்துறையே’ என்று எழுதி அதைப் பாடினவன் நெற்குன்ற வாணன் என்பதைப் புலப்படுத்தியுள்ளான். களப்பான ராசன் சாலை இவன் தனது பெயரால் திருப்புகலூரில் ஒரு சாலை அமைத்து அதில் பிராமணர்களுக்கு உணவு அளிப்பதற்காகச் சாலைபுறமாக இறையிலி நிலம், அளித்திருக்கிறான் என்ற செய்தி திருப்புகலூர்க் கல்bவட்டினால் தெரியவருகிறது.2 அச்சுதகளப்பாளன் இவன் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து ஆட்சி புரிந்த களப்பிரமன்னன் அச்சுதவிக்கிராந்தனின்றும் வேறுபட்டவன். இவன் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் வாழ்ந்து வந்த சாதாரண குடிமகன். சிவதத்துவ விளக்க நூலான சிவஞானபோதம் என்ற நூலின் ஆசிரியரான மெய்கண்டார் இவனது அருமை மகனாவார். இரண்டாம் இராஜாதி இராஜன், மூன்றாம் குலோத்துங்கன் காலங்கள் இம்மன்னர்கள் காலங்களில் இவர்களால் வரிவிலக்கு செய்யப்பட்டு அளிக்கப்படும் நிலக் கொடைகளில் விழுப்பாதி ராயர், நுளம்பாதிராயர், பாண்டியாதிராயர், பல்வவராயர் போன்ற அதிகாரி களோடு களப்பாளராயர் என்பாரும் கையொப்பமிட்டிருக்கிறார். ஆகவே களப்பாளராயர் என்பவர் இம்மன்னர்களின் காலத்தில் சோழ அரசு அதிகாரியாக விளங்கியிருக்கிறார் என்பது உண்மை. இவர் வருவாயத் துறையைச் சார்ந்த அதிகாரியாக இருந்திருத்தல் வேண்டும். ஆதலால் தான் நிலக்கொடை அளிக்கையில் இவரது கையொப்பமும் தேவையாக இருந்திருக்கிறது. தென்னாற்காடு மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் இரண்டாம் பிரகாரத்தின் மேற்குச் சுவரில் எழுதப் பட்டிருக்கும் ஒரு கல்வெட்டில், கேரள ராஜன் என்பவன் நடராஜர் கோயிலுக்கு நிலக்கொடை அளிப்பதை அரசன் அனுமதித்த செய்தியும் அவ்வனுமதிப்புப் பத்திரத்தில் விழுப்பாதிராயர், நுளம் பாதிராயர், பாண்டியாதிராயர், களப்பாளராயர், நந்தியராஜர், ராஜவல்லப பல்லவராயர், வயிராதிராயர் ஆகியோர் கையெழுத்திட்ட செய்தியும் காணப்படுகிறது.1 களப்பாளராயன் என்னும் இவ்வதிகாரி எந்தெந்த நிலங்கள் யார் யாருக்குச் சேர வேண்டும் என்று வரையறுக்கும் பெறும் பொறுப்பிலும் இருந்திருக்கிறான் என்பது மற்றொரு கல்வெட்டால் புலனாகிறது.1 தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர், மகாலிங்கசுவாமி கோயில் இரண்டாம் பிரகாரத் தெற்கு மதிலில் எழுதப்பட்டிருக்கும் அக்கல்வெட்டில் காணப்பெறும் கீழ்வரும் பகுதி களப்பாளராயனின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது. இந்நிலம் உட்பட நிலம் பதினேழரையே நாலுமாக்காணி யும் பதினெட்டாவது முதல் இத்தேவர்க்குதிருநாமத் துக்காணியும் தேவதான இறையிலியுமாய் நிற்க்க கடவதாகபெறவேணுமென்று களப்பாள ராயன் நமக்குச் சொன்னமையில் இப்படி செய்யக் கடவதாக சொல்லி கணக்கிலும் இட்டுக் கொள்ளக் கடவர்களாக வரிக்குக் கூறு செய்வார்களுக்கும் சொன்னோம். பதினேழரையே நாலுமாக்காணி நிலம் திருநாமத்துக் காணி யாகவும் தேவதான இறையிலியாகவும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமிக்குச் சேர வேண்டும் என்பதைத் களப்பாள ராயன் என்ற அதிகாரி அரசனிடம் கூறியதன் பேரில் அரசன் அவ்வாறே செய்வதற்கு ஆணைப் பிறப்பித்து அதனைக் கணக்கில் குறித்துக் கொள்ளும்படி நில வரி நிர்ணயிக்கும் அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறான். ஆகவே களப்பாளராயன் என்ற அதிகாரி மூன்றாம் குலோத்துங்கன் கீழ் பெரும் பொறுப்புடைய அதிகாரியாக விளங்கி வந்திருக்கிறான். சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன் இவன் திருத்தொண்டர் புராணம் பாடிய சேக்கிழார் பெருமானின் தம்பி. தஞ்சை மாவட்டம், மன்னார்குடி வட்டத்திலுள்ள கோட்டுரில் காணப்படும் கல்வெட்டு, இவன் குன்றத்தூர் நாட்டு குன்றத்தூரைச் சேர்ந்தவன் என்று தெரிவிக்கிறது.1 மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கோட்டூர் மூலஸ்தானமுடையோர் கோயிலுக்கு விளக்கு எரிப்பதற்காக பொன் அளித்திருக்கிறான். இவனே மூன்றாம் இராஜராஜன் காலத்தில் திருஅறத்துறை என்னும் ஊரிலுள்ள கோயிலில் ஞானசம்பந்தர் சிவபெருமானிடமிருந்து முத்துப் பல்லக்கு பெறும் விழாவைக் கொண்டாடும் பொருட்டு நிலக்கொடை அளித்திருக்கிறான்”.2 மூன்றாம் இராஜேந்திரன் காலம் சுத்தமல்லி வளநாட்டு, பாம்புணி கூற்றத்தில் இருந்த சிறுநாங் கூரைச் சேர்ந்த அழகப்பெருமாளான, களப்பாள ராயனும் பாண்டி குலாசினி வளநாட்டு ஆற்காட்டுக் கூற்றத்து திருவிடைமருதைச் சேர்ந்த விசையபாலனும் திருவாரூரில், ராஜாக்கள் தம்பிரான் சன்னதித் திருவீதியின் தெற்குப் பக்கத்தில் அழகிய திருச்சிற்றம் பலமுடையாரையும், பொற்பதிக்கு நாயக ஈஸ்வரமுடையாரையும் எழுந்தருளிவித்ததையும் அக்கோயில்களில் பூஜை சிறப்புற நடப்பதற்காகக் கொடை அளித்ததையும் ஒரு கல்வெட்டு கூறுகிறது. இந்த கல்வெட்டு மூன்றாம் இராஜேந்திர காலத்தில் திருவாரூர் தியாகராசசுவாமி கோயில் பிரகார மேற்குச் சுவரில் எழுதப்பட்டு இன்றும் நல்ல நிலையில் உள்ளது. மேலே கூறப்பட்டுள்ள கல்வெட்டில் அரையன் அழகப் பெருமாளான களப்பாளராயன் என்று குறிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் அவன் குறுநிலத் தலைவனாக இருந்திருத்தல் கூடும். குறுநிலத் தலைவனாக இருந்த காரணத்தினால் தான் களப்பாளாராயன் என்று பெயர் காணப்படுகிறது போலும். சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலம் (கி.பி.1251-1278) இம்மன்னன் காலத்தில் சிதம்பரத்தில் களப்பாளராயன் என்பவன் இருந்திருக்கிறான். அவன் தில்லை மாகாளிக்குச் சில அறக்கொடைகள் அளித்திருக்கிறான்.1 சடையவர்மன் வீரபாண்டியன் காலம் சோழபுரத்தைச் சேர்ந்த உத்தமசோழபுரச் சதுர்வேதி மங்கலத்தில் நுழைவாயில் மண்டபம் ஒன்றைக் களப்பாளராயர் என்பவர் வீரபாண்டியன் காலத்தில் எடுப்பித்திருக்கிறார்”2 அம்மண்டபம் உடையார் களப்பாளராயர் மண்டபம் என்று அழைக்கப்பட்டது. சடையவர்கள் விக்ரமபாண்டியன் காலம் தென்னாற்காடு மாவட்டம், திருச்சாபுரம் மங்கலபுரீச்வரர் கோயில் கருவறையின் வடக்குப் பக்கச் சுவரில் சடையவர்மன் விக்ரமபாண்டியன் காலத்தில் (கி.பி.1403) ஒரு கல்வெட்டு எழுதப் பட்டிருக்கிறது”.3 அது நிலக் கொடையைப் பற்றி விளக்கும் கல்வெட்டாகும். அத்தானத்தை அளித்து கையொப்பமிட்டவர் களில் களப்பாளராயன் என்பானும் காணப்படுகிறான். இவன் விக்ரம பாண்டியன் காலத்தில் இருந்த அதிகாரியாவான். விஜயநகர மன்னன் கிருஷ்ணதேவராயன் காலம் இரு சமய விளக்கம் என்னும் சிறந்த தமிழ்நூல் எழுதிய ஹரிதாசர் களப்பாளராயர் என்று குறிக்கப்படுகிறார்4 இவர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இந்நூலை எழுதியுள்ளார்.  3. களப்பிரர் சமயம் களப்பிரர்கள் சமண சமயத்தைத் தழுவியவர்கள் என்ற ஒரு கருத்து நிலவிவருகிறது. களப்பிரர்கள் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, அச்சமயத்தைத் தமிழகத்தில் பரப்புவதற்குத் தீவிரமாக ஈடுபட்டவர்கள் என்றும்; அதன் காரணமாகத் தமிழ்நாட்டில் முன்பு வேரூன்றியிருந்த சைவ வைணவ சமயங்களை அழிக்கவும் முயன்றனர் என்றும் சிலர் கருதுகிறார்கள். களப்பிர அரசர் அச்சுதப் பரம்பரையினர் என்று கூறப்படுவதால் அவர்கள் வைணவ சமயத்தார் என்று கருதப்பட்டது. மேலும் களம்பிர அரசர்கள் பௌத்த மதத்துக்கும் சார்பாக இருந்திருக்கின்றனர் என்றும் கூறப்பட்டது. கூற்றுவ நாயனார் போன்ற ஒன்றிரண்டு களப்பிர அரசர் சைவ சமயத்த வராகவும் இருந்திருக்கின்றனர் என்று மயிலை சீனி-வேங்கடசாமி கூறுகிறார்”.1 ஆகவே களப்பிரர் எச்சமயத்தைச் சார்ந்தவர் என்பது இன்னமும் அறுதியிட்டுக் கூறமுடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. களப்பிரர்களில் பெரும்பாலோர் எந்த சமயத்தைச் சார்ந்திருந்தனர் என்று ஓரளவுக்குத் திடமாகக் கூறலாம். களப்பிரர் சமண சமயத்தவரா? களப்பிளர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்று கூறுவதற்கு நமக்கு எந்தவித ஆதாரங்களும் இதுவரையில் கிடைத்தில் (1). அவர் களது ஆதி இருப்பிடமான மைசூர் மாநிலத்தில் சிரவண பௌகொள பகுதியானது சமண சமயம் தழைத்தோங்கிய பகுதி என்பதனாலும் (2) அவர்கள் தமிழகத்தில் ஆட்சி செய்த நாளில் தமிழ்நாட்டில் சமண சமயம் செழித்து வளர்ந்திருந்த காரணத்தாலும் களப்பிரர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்று கருதப்படுகிறார். (3) மேலும் வேள்ளிக்குடிச் செப்பேட்டில் வேள்வி முற்றுவிப்பதற்காகப் பாண்டிய மன்னரால் தரப்பட்ட ‘வேள்விக்குடி’ என்னும் ஊர் களப்பிரர் காலத்தில் திரும்பப் பெறப்பட்டு விட்டது என்று கூறப்படுவதால் களப்பிளர் சமண சமயத்தவர் என்று கூறப்படுகிறது. மேலே கூறப்பட்டுள்ள மூன்று காரணங்களும் சரியானவைதானா என்பதை ஆராய்வோம். 1. சிரவணபௌகொளப் பகுதியிலிருந்து களப்பிரர்வந்தது உண்மை. ஆனால் சமண சமயத்தவராகத்தான் வந்திருப்பார்கள் என்று கருதுவதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. 2. களப்பிரர்கள் தமிழ் நாட்டுக்கு வந்த பின்னர்தான் தமிழ்நாட்டில் சமண சமயம் பரவ ஆரம்பித்தது என்று கூறுவதற்கில்லை. அவர்கள் வருகைக்கு முன்னமேயே தமிழ்நாட்டில் சமண சமயம் நல்ல செலவாக்குப் பெற்றிருந்தது என்பதைத் தமிழ் இலக்கியங்களிலும் பழமையான தமிழ்க் கல்வெட்டுக்களிலும் காணலாம்.1. வேள்வி முற்றுவிப் பதற்காகப் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னனால் தரப்பட்ட வேள்விக்குடி என்னும் ஊரைக் களப்பிரர் திரும்பப் பெற்றுக் கொண்டது சமயக் காழ்ப்பினால் தான் என்பதை ஒப்புக் கொள்ள இயலவில்லை. இதற்குவேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூட கருதியிருக்கிறார்.2 அவ்வாறே சமயக் காழ்ப்பாக இருந்தாலும் சமண சமயத்தவராக இருந்து தான் செய்திருக்க வேண்டுமென்பதில்லை. பௌத்த சமயத்தவராக இருந்தும் செய்திருக்கலாம் அல்லவா? எதையும் நாம் திட்ட வட்டமாகக் கூறமுடியவில்லை. அதனால் களப்பிரர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்று கூறுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பiத உணரலாம். களப்பிரர் பௌத்த சமயத்தவரா? முதன் முதலில் தமிழ்நாட்டுக்கு வந்த களப்பிரர் பௌத்த சமயத்தைத் சார்ந்து இருக்கலாம் என்று கருத இடமேற்படுகிறது. கி.பி. 5ஆம் நூற்றாண்டில் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து ஆட்சி புரிந்த அச்சுத விக்கிராந்தன் என்பான் பௌத்த சமயத்தைச் சார்ந்தவனாகத் தெரிவதாலும் பௌத்த நூல்கள் அவனது ஆட்சிக் காலத்தில் எழுதுவதற்குப் பலவித உதவிகள் புரிந்திருக்கிறான் என்பதாலும் கொள்ளலாம். மேலும் காவிரிப்பூம்பட்டினத்தில் பௌத்த மதம் சிறப்புற்று விளங்கியிருக்கிறது என்பதற்கு அங்கு நடைபெற்றுள்ள அகழ் வாய்வில் புத்தவிகாரை, புத்தபாதம் போன்ற பௌத்த மதத்தைச் சார்ந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவையும்; மேலையூரில் கிடைத்துள்ள மைத்ரேயர் உருவமும் இதற்குச் சான்றாக நிற்கின்றன. இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் காவிரிப் பூம்பட்டினத்தில் பௌத்த மதம் பெற்றிருந்த செல்வாக்கினைக் காணலாம். கி.மு. கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் காஞ்சிபுரம் பௌத்த மதத்தின் தலைமைப் பீடமாகத் தமிழகத்தில் விளங்கியிருக் கிறது. அங்கிருந்து புத்த பிக்குகள் சிலர் சீனம் முதலிய கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று புத்த மதத்தைப் பரப்பியிருக்கின்றனர். அதே போன்று காவிரிப்பூம்பட்டி னத்துக்கு அண்மையிலுள்ள நாகப்பட்டினத் திலும் புத்த ஸ்தூபா கி.பி.8-ஆம் நூற்றாண்டுக்கு முன்னமேயே இருந்தி ருக்கிறது என்றும் வரலாறு கூறுகிறது. சாக்கிய நாயனார் புராணத்தின் வாயிலாக, திருவாரூரிலும் பௌத்த மடங்கள் இருந்தன என்பதும், அங்கு பல பௌத்த பிக்குகள் வாழ்ந்தனர் என்பதும் தெரிய வருகின்றன. ஆகவே கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6ஆம் நூற்றாண்டுவரை வாழ்ந்த களப்பிரர் பௌத்தர்களாக இருந்திருக்கலாம் எனக் கருதலாம். கி.பி.6-ஆம் நூற்றாண்டுக்குப் பின் இருந்த களப்பிரர் வைதீக சமயத்தை வெறுத்தவர்களல்லர் கி.பி.6ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின் வாழ்ந்த களப்பிரர் வைதீக சமயத்தைச் சார்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். நமக்குக் கிடைத் துள்ள சான்றுகள் அனைத்தும் அவ்வாறே காட்டுகின்றன. கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகும் களப்பிரர்கள் தமிழகத்தின் ஒரு பகுதியில் ஆட்சி செய்திருக்கின்றனர் என்பதைப் பல்லவர் செப்பேடுகளும், சாளுக்கியர் செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் காட்டா நிற்கின்றன. அவர்களைப் பற்றி விளக்கமாகத் தெரிவிக்கும் முதற் கல்வெட்டு பொன்னிவாடிக் கல்வெட்டாகும். அக்கல்வெட்டு கோக்கண்டன் இரவியின் அடியான் மணியன் சேகரி என்பான் பொன்னிவாடி செங்கண்டர்க்கு (சிவனுக்கு) உண்ணாழிகைப் புறமாக நிலம் தானம் அளித்ததைக் குறிக்கிறது. கோக்கண்டன் இரவியின் அடியாள் என வருவதால் கோக்கண்டன் இரவியினுடைய பணியாளர்களில் ஒருவனாகக் கொள்ளலாம். அவன் சிவன் கோயிலுக்குக் கொடை அளித்திருப்பதால் கோக்கண்டன் இரவி சைவ மதத்தையும் ஆதரித்திருக்கிறான் என்று நாம் உணரலாம். இவனுடைய காலத்தில் மற்றொரு கல்வெட்டில் வெளிலூர்த் தென்னூர் நக்கனார் மண்டபத்திற்கு ஓமயிந்திரன் மாகலூர்க் கிழான் கண்ணன் காவன் என்பான் ஒரு கற்றூண் அளித்த செய்தி குறிக்கப்படுகிறது. வெளிலூர்த் தென்னூர் நக்கனார் கோயிலும் சிவன் கோயிலேயாகும். ஆகவே கோக்கண்டன் இரவி சைவ மதத்தைச் சிறப்புறவே வளர்த்திருக்கிறான் என்று நாம் கருதலாம். ஆதலால் பிற்காலத்தியக் களப்பிர மன்னர்கள் சைவ சமயத்தை ஆதரித்து வந்திருக்கின்றனர் என்று திடமாகக் கூறுலாம்.  களப்பிரர் காசு கி.பி.3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரையில் தமிழகத்தில் ஓரளவுக்குச் செல்வாக்கோடு இருந்த களப்பிரர் தங்கள் காசுகளை வெளியிட்டிருப்பார்கள் என்று வரலாற்றாசிரியர்கள் எண்ணுவது இயற்கையே.. சில ஆண்டுகளுக்கு முன்பு காசுகளைப் பற்றி ஆய்வு செய்யும் திரு.எஸ். இராமையா என்பவர், காவிரிப்பூம் பட்டினத்தில்களப்பிரர்காசு ஒன்றை அங்குள்ள மீனவரிடமிருந்து விலைக்கு வாங்கியாதாகவும், அதன் முன்புறம் புத்த சைத்யமும், வேலிக்குள் இருக்கும் மரமும் காணப்படுவதாகவும், பின்புறம் கி.பி.3-4ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி எழுத்தில் ‘களப்ர’ என்று எழுதப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டு எழுதி யிருந்தார்.1 அக்காசின் படம் அக்கட்டுரையோடு வெளியிடப்படாததால் அதைப் பற்றி நாம் ஒன்றும் கூறமுடியாத நிலையில் உள்ளோம். தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் பெரும்பாலான பகுதி களில், முன்பக்கம் ‘விரகேரளஸ்ய’ என்று தேவ நாகரி எழுத்திலும் பின் பக்கம் ‘கண்டராங்குஸஸ்ய’ என்று தேவ நாகரி எழுத்திலும் எழுதப்பெற்றுள்ள காசுகள் கிடைத்திருக்கின்றன. இவ்வகையான காசுகள் அண்மையில் செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள கடப்பாக்கம் பகுதியிலும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. இக்காசுகள் யார் காலத்தில் வெளியிடப்பட்டன என்பது பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. பெரும்பாலான அறிஞர்கள் முதலாம் இராஜாதிராஜன் காலத்தில் வாழ்ந்த வீரகேரளன் என்னும் சேர அரசன் வெளியிட்டிருக்க வேண்டும் என்று கருது கின்றனர். காசுகளைப்பற்றி ஆய்வு செய்துவரும் திரு லஷ்மி நாராயணராவ் என்பவரும் இக்காசுகள் கி.பி.1127ல் ஆட்சிக்கு வந்த வீரகேரளன் தான் வெளியிட்டிருக்க வேண்டும் என்று எழுதியுள்ளார். ஆனால் அண்மையில் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை மதுரைக்கு அருகில் படியெடுத்துள்ள ஒரு கல்வெட்டில் முதலாம் இராஜராஜன் காலத்திலேயே ஒரு வீரகேரளன் குறிக்கப் படுகிறான். ஆகவே எந்த வீரகேரளன் இக்காசுகளை வெளியிட்டான் என்பது இன்னமும் ஐயப்பாடாகவே உள்ளது. அத்தோடு கொங்குப் பகுதியில் ஆட்சிபுரிந்த சில மன்னர்கள் கண்டன் என்ற பெயரோடு விளங்கியிருக்கிறார்கள். உதாரணமாகக் கண்டன் கண்டன் வீரநாராயணன், கண்டன் ரவி, ரவிகண்டன் ஆகியவர்களைக் குறிப்பிடலாம். ‘கண்டராங்குஸஸ்ய’ என்று இக்காசுகளில் காணப்படுவதால் அவர்களில் யாராவது இக்காசுகளை வெளியிட்டிருக்கலாம் என்று டாக்டர் இரா. நாகசாமி அவர்கள் கருதுகிறார்கள். மேலும் கண்டராங்குஸஸ்ய என்பதற்கு ‘கண்டர் என்பவன் அங்குசத்தைப் போன்றவன்’ என்று விளக்கம் அளித்துள்ளார்கள். ஆதலால் இவைகளைக் களப்பிரர் குலத்தைச் சேர்ந்த கொங்குச் சேர மன்னர் வெளியிட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்கள்.1 அவர்கள் கூற்று பொருத்தமாக உள்ளது.  களப்பிரர் பற்றிய வாழ்த்துப் பாக்கள் அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா தரவு கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் தொழுதேத்தக் கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைய அழலவிர் சுழல்செங்கண் அரிமாவாய் மலைந்தானைத் தாரொடு முடிபிதிர்த்த தமனியப் பொடிபொங்க வார்புனல் இழிகுருதி அகலிடம் உடனனைப்பக் கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்! தனதரள தாழிசை முரைசதிர் வியன்மதுரை முழுவதூஉம் தலைபனிப்பப் புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறுமல்லர் அடியொடு முடியிறுப்புண் டயர்ந்தவர் நிலஞ்சேரப் பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ? கலியொலி வியனுலகம் கலந்துட னனிநடுங்க வலியில் அவிராழி மாறெதிர்ந்த மருட்சோர்வு மாணாதார் உடம்போடு மறம்பிதிர வெதிர்மலைந்து சேணுயர் இருவிகம்பிற் செகுந்ததுநின் சினமாமோ? படுமணி இனநிரை பரந்துடன் இரிந்தோடக் கடுமுரண் எதிர்மலைந்த காரொலி எழிலேறு வெரிநொடு மருப்பொசிய வீழ்த்துதிறம் வேறாக எருமலி பெருந்தொழுவின் இறுத்ததுநின் னிகலாமோ? அம்போதரங்கம் பேரெண் இலங்கொளி மரகதம் எழில்மிகு வியன்கடல் வலம்புரித் தடக்கை மாஅல் நின்னிறம் விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும் பொருகளி றட்டோய்! புரையு நின்னுடை சிற்றெண் கண்சுவர் கதிர்முடி கனலும் சென்னியை தண்சுடர் உறுபகை தவிர்த்த ஆழியை ஓலியியல் உவணம் ஓங்கிய கொடியினை வலிமிகு சகடம் மாற்றிய அடியினை இடையெண் போரவுணர்க் கடந்தோய் நீ புணர் மருதம் பிளந்தோய் நீரகலம் அளந்தோய் நிழழ்திகழைம் படைபோய் நீ அளவெண் ஊழி நீ உலகு நீ உருவு நீ அருவு நீ ஆழி நீ அருளு நீ அறமு நீ மறமு நீ தனிச்சொல் என வாங்கு சுரிதகம் அடுதிறல் ஒருவதிற் பரவுதும் எங்கோன் தொடுகழற் கொடும்பூட் பகட்டெழில் மார்பிற் கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன் தொன்று முதிர்கட் லுலகம் முழுதுடன் ஒன்றுபுரி திகிரி உருட்டுவோன் எனவே. அம்போதரங்க ஓத்தாழிசைக் கலிப்பா தரவு அலைகடற் கதிர்முத்தம் அவையணிந்து மலையிறைமா சுமந்தோறும் மணியனைமேல் மகிழ்வெய்தி ஓசனைசூழ் திருநகருள் உலகொருமூன் றுடனேத்த ஈசனையாய் இனிதமர்ந்தங் கிருடிகட்கும் இறையவர்க்கும் அருளறமே அறமாக அயலார்கண் மயலாக இருளறதன் கெடுத்தியம்பி இருவினை கடிந்திசினோய்! தாழிசை துன்னாத வினைப்பகையைத் துணி செய்யு துணிவினையாய் இன்னாத பகைமுனைபோல் எரித்தடக்கும் நினைப்பினால் இருளில்லா உணர்வென்னும் இலங்கொளியாய் எரித்தனையாய் அருளெல்லாம் அடைத்தெங்கண் அருளவதுன் அருளாமோ? மதிபுரைமுக் குடைநீழல் மகிழ்வெய்தி அடைந்தோரைக் கதிபொருதக் கருவரைமேல் கதிர்பொருத முகம்வைத்துக் கொன்முனைபோல் வினைநீங்கக் குளிர்நிழற்கண் மகிழ்ந்தனிர்போல் நின்மினீர் எனவுணர்த்தும் திருமல நின் பெருமையோ? மனைதுறந்து வனம்புகுமின் மலமறுக்கல் உறுவீரேல் வினையறுக்கல் உறுவார்க்கு மலமறுக்கல் உறுவீரேல் கலகில்லாப் பெருஞ்செல்வத் தமரரசர் புடைசூழ உலகெல்லாம் உடன்றுறலா உடைமையுநின் உயர்வாமோ அராகம் அரசரும் அமரரும் அடிநிழல் அமர்தர முரசதிர் இமிழிசை முரணிய மொழியினை பேரெண் அணிகிளர் அளிர்மதி அழகெழில் அளிர்சுடர் மணியொளி மலமறு கனலி நின்னிறம் மழையது மலியொலி மலிகடல் அலையொலி முழையுறை அரியது முழக்கம் நின்மொழி இடையெண் வெலற்கரும் வினைப்பகை வேரொடும் வென்றனை சொலற்கரு மெய்ப்பொருள் முழுவதும் சொல்லினை அருவினை வெல்பவர்க் கரும்புணை ஆயினை ஒருவினை ஆகி உலகுடன் உணர்ந்தனை சிற்றெண் உலகுடன் உணர்ந்தனை உயிர்முழு தோம்பினை நிலவுறழ் நிலத்தனை நிழலியல் ஆக்கையை மாதவர் தாதையை மலர்மிசை மகிழ்ந்தனைஷ போதிவர் பிண்டியை புலவரும் புலவனை தனிச்சொல் என வாங்கு சுரிதகம் அருளுடை ஒருவ! நிற் பரவுதும் எங்கோ இருளறு திகிரியொடு வலம்புரித் தடக்கை ஒருவனை வேண்ட இருநிலம் கொடுத்த நந்தி மால்வரைச் சிம்பு நந்தி ஒற்றைச் செங்கோல் ஓச்சிக் கொற்ற வெண்குடை நிழற்றுக எனவே. அம்போதரங்க ஒரு போகு தாழிசை கரைபொருநீர்க் கடல்கலங்கை கருவரைமத் ததுவாகத் திரைபொருது புடைபெயரத் திண்டோளாற் கடைந்தனையே முகில்பொரு துடல்கலங்க முழவுத்தோள் புடைபெயர அகல்விகம்பின் அமரர்க்கும் ஆரமுதல் படைத்தனையே வரைபெரிய மத்தாக வாளரவம் கயிறாகத் திரையிரியக் கடல்கடைந்து திருமகனைப் படைத்தனையே அராகம் பேரெண் அமரரை அமரிடை அமருல கதுவிட நுமரது புகழ்மிக மிகவிகல் அடுத்தனை அலைகடல் உலகமும் அந்தணர்க் கீந்தனை உலகொடு நிலவிய ஒருபுகழ் சுமந்தனை இடையெண் ஆதிக்கண் அரசெய்தினை நீதிக்கண் மதிநிரம்பினை விளங்கெரி முதல்வேட்டனை துளங்கெரியவர் புகழ்துளக்கினை அளவெண் அலகுநீ உலகுநீ அருளுநீ பொருளுநீ நிலவுநீ வெயிலுநீ நிழலுநீ நீருநீ தனிச்சொல் என வாங்கு சுரிதகம் பவழம் எறிதிரைப் பரதைக் கோவே! புகழ்துறை நிறைந்த பொருவேல் நந்தி! உலகுடன் அளந்தனை நீயே உலகொடு நிலவுமதி உதயவரை ஒத்தே வண்ணக ஒரு போகு அராகம் அகலிடமும் அமருலரும் அமர்பொருதும் அறந்தோற்றுப் புகலிடநின் குடைநிழலாப் புருமரணம் பிறிதின்றி மறந்தோற்று நிறங்கருதி மாற்புகழும் நிறைதளரப் புறந்தோற்றுக் கழலார்ப்பப் பொருதகனம் வெறிதாக மண்ணுலகும் மறிகடலும் மாமலையும் நிலைகலங்க விண்ணுலகம் வியப்பெய்த வெஞ்சமத்துள் அலைத்தனையே அதனால், கனைகடன் உடைதிரை கரைபொரக் கடைத்தனை முனைவரும் அமரரும் முறைமுறை வந்துநின் இணைமலர் பலர்புகழ் பயில்வருதார் பண்பினை மருளுறு துதைகதிர் மணியது மணிநிற மருளும் நின்குடை குடையது குளிர்நிழல் அடைகுன உயிர்களை அளிக்கும் நின்கோல் கோலது செம்மையிற் குரைகடல் வளாகம் மாலையும் காலையும் மகிழ்தூங் கின்று பேரெண் ஆரூயிர்க் கெல்லாம் அமிழ்தின் றமையா நீரினும் இனிதுநின் அருள் அருளும் அலைகடலும் ஆயிரண்டும் ஒக்கும் இருள்கொடிமேற் கொண்டாய் நினக்கு சிற்றெண் நீரகலம் காத்தோ.ய் நீ நிலவுலகம் ஈந்தோய் நீ போரமர் கடந்தோய் நீ புனையெரிமுன் வேட்டோய் நீ ஒற்றைவெண் குடையோய் நீ கொற்றச்செங் கோலாய் நீ தனிச்சொல் எனவாங்கு சுரிதகம் பொருகடல் வளாகம் ஒருகுடை நிழற்றி இருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து மனமகிழ்ந்து அருள்புரி பெரும்புகழ் அச்சுதர் கோவே! இனையை ஆதலின் பனிமதி தவழும் நந்தி மாமலைச் சிலம்ப நந்திதிற் பரவுதல் நாவலர்க் கரிதே அம்போதரங்க ஒத்தாழிசைச் கலிப்பா தரவு நலங்கினர் திருமணியும் நன்பொன்னும் குயின்றழகார் இலங்கெயிற் றழலரிமான் எருத்தஞ்சேர் அணையின்மேல் இருபுடையும் இயக்கரசர் இணைக்கவரி எடுத்தெறிய விரிதாமம் துயருஉம் வெண்குடைமூன் றுடனிழற்ற வண்டாற்ற நாற்காதம் வகைமாண உயர்ந்தோங்கும் தண்டளிர்ப்பூம் பிண்டிக்கீழ்த் தகைபெறவீற் றிருந்தனையே. தாழிசை ஒல்லாத பிறப்புணர்த்தும் ஒளிவட்டம் புடைசூழ எல்லார்க்கும் எதிர்முகமாய் இன்பஞ்சேர் திருமுகமோ ஏர்மலர மணிப்பொய்கை எழிலாம்பற் பொதியவிழ ஊர்கோனோ டுடன்முளைத்த ஒளிர்வட்டம் உடைத்தன்றே! கனல்வயிரம் குறடாகக் கனற்பைம்பொன் சூட்டாக இனமணி ஆரமா இயன்றிருள் இரிந்தோட அந்தரத் துருளுநின் அலர்கதிர் அறவாழி இந்திரர்கள் இனிதேத்த இருவிகம்பிற் றிகழ்ந்தன்றே! வாடாத மணமாலை வானவர்கள் உள்ளிட்டோர் நீடாது தொழுதேத்த நிற்சேர்ந்த பெருங்கண்ணு முகிழ்பருதி முகநோக்கி முறுவலித் துண்ணெகிழ்ந்து திகழ்தகைய கோட்டைசூழ் திருநதிகள் திளைத்தன்றே? அம்போதரங்கம் பேரெண் மல்லல் வையம் அடிதொழு தேத்த அல்லல் நீக்கற் கறப்புனை ஆயினை ஒருதுணி வழிய உயிர்க்காண் ஆகி இருதுணி ஒருபொருட் கியல்வகை கூறினை இடையெண் ஏடலர் தாமரை ஏந்தும் நின்னடி வீடொடு கட்டினை விளக்கும் நின்மொழி விருப்புறு தமணிய விளக்கு நின்னிறம் ஒருக்குல கூடுற உஞற்றும் நின்புகழ் சிற்றெண் இந்திரர்க்கும் இந்திரன் நீ இணையில்லா இருக்கையைநீ மந்திர மொழியினை நீ மாதவர்க்கு முதல்வனும் நீ அருமை சால் அறத்தினைநீ ஆருயிரும் அளித்தனைநீ பெருமைசால் குணத்தினைநீ பிறர்க்கறியாத திறத்தினைநீ தனிச்சொல் என வாங்கு சுரிதகம் அருள்நெறி ஒருவ! நிற் பரவுதல் எங்கோத் திருமிகு சிறப்பிற் பெருவரை அகலத் தென்மிகு தானைப் பண்ணமை நெடுந்தேர் அண்ணல் யானைச் செங்கோல் விண்ணவன் செபிமனை செறுக்கறத் தொலைச்சி ஒருதனி வெண்குடை ஒங்குக எனவே”.1 கொங்குநாட்டுத் தனிப்பாடல் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்களையும் அச்சுதக் களப்பாளன் வென்று அவர்களைத் தளையிலிட்டு வைத்திருந்தபோது தங்களது தளையை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் பாடியதாகக் காணப்படும் சில வெண்பாக்கள் யாப்பருங்கல விருத்தி உரையில் மேற்கோளாகக் காட்டப் படுகின்றன. அந்நிகழ்ச்சியை உறுதிப்படுத்தும் வண்ணம் பெரியார் மாவட்டம் கொடுமலையில் அண்மையில் கிடைத்த ஓலைச்சுவடியில் ஒரு தனிப்பாடல் காணப்படுகிறது. இத்தனிப்பாடலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வென்ற அச்சுதக் களப்பாளனைத் தென்கரை நாட்டுக் களத்தூரைச் சேர்ந்த பூசகுலநல்லவன் என்பவன் வென்றதால் அவனுக்கு ஆதொண்டை மான் என்ற மன்னன் கொங்குநாட்டில் 24 நாடுகளையும் ஆதொண்டை நாட்டில் 24 கோட்டங்களையும் பரிசாக அளித்துப் பட்டங்கள் பல வழங்கியமை குறிக்கப்படுகிறது. இங்கு குறிக்கப்படும் ஆதொண்டமான் என்பவன் பல்லவ மன்னனாக இருக்கலாம்.1 எழுத்தமைதியைக் கொண்டு பார்க்கையில் இந்த ஓலைச் சுவடியின் காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டின் இறுதி எனக் கூறலாம். கொங்கு நாட்டுத் தனிப்பாடல் மூலனூர் தொண்டமானுக்குப் பட்டம் சூட்டியது பார்மீதில் வருகின்ற பரிதாபி வருஷத்தில் பங்குனிமூன் றாந்தியதியில் பாண்டியன் சேரனுடன் சோழரைஅச் சுதக்களப் பாளன்சிறை யில்லைத்துமே ஆராய்ந்து வருகின்ற போர்மன்ன ரவர்வெல்வாய் ஆதொண்டை மானழைத்து அன்புபெறு மூவெட்டு நாமுனக் கெய்தவே ஆதொண்ட மண்டலத்தில் தீராத இருப்பது நாலுகோட் டமுமளித்துத் தென்திசைச் கேகுநாளில் திறமான பூசகுல நல்லவ னெந்நாளும் செம்பொனால் செய்தமுடியால் தோராத வெற்றிபுனை ஆதொண்ட மான்வந்து தொண்டமான் நீயென்றுதான் சூழலகில் இருபத்து நாலுநா டுங்கண்டனது தொண்டமாப்பட்டம் சூட்டினாரே! காராளர் குலதிலக ராசபர மேசுரன் காளத்தி மலைக்காவலன் காவேரி வாசகன் வாழரச மணவாளன் களத்தூரில் பூசகுலனே பாராளர் மூவர்சபை அச்சுதன் தன்னினால் பார்வேந்தர் முடிகள் சூட்ட பனிரண்டு பட்டமுள அன்றுகத் தொண்டைமான் பலவரிசை பாரில்நல்கி வாராளர் வருகடல் தொண்டைமண் டலங்கொங்கு வாளையார் ரிஷபகிரியும் வையாறு வடகிழக்கு துகள்செய் யாறுதெற்கு வடதிசைத் திருவேங்கடம் சீராளர் நல்லவன் செம்பமுனை மெச்சியே சேருமா மதுக்கரைக்கு தென்திசைத் தொண்டைமான் அண்டநா டும்புரக்க செயபன்றி யுள்ளளவுமே! முன்னமொரு காவலில் சிறைவிடுக ராயர்புர மூதூரில் வருராயர்முன் முன்பாக வேபகுதி செல்வழிச் செலுத்தி முனைபெற்ற ராயர்புதல்வன் தன்னுடைய கைக்கிடாய்ச் செவிதனை அறுத்து நனியினில் சங்கிலியுடன் சவுரியத்துடனே யறுத்துநால் விடுத்தவன் யிவர்மகா தாட்டீகன் எனமகிழ்ந்து அன்னகரில் வருராயர் பலவரிசை நல்கியே அருள்மூல னூர்விளங்க அச்சுதத் தொண்டைமான் செம்பமுனைத் தொண்டைமான் நல்லதம் பித்தொண்டைமான் மன்னர்சிறை விடுகுரா சத்தொண்டை மான்அருள் மாத்தியப் பத்தொண்டைமான் மைந்தனான வருசோழி யப்பத் தொண்டைமான் மதுராதென் கரைநாடனே!  டாக்டர். எம். சிதானந்த மூர்த்தி, கன்னட ஸாஸனகள் ஸம்ஸ்கிருதிக அத்யயன கி. பி. 450 - 1150 (1966), பக்கம் 70, 78. வட்டாரதனெ, பத்ரபாஹு பட்டாரா கதெ. டாக்டர். எம். வி. கிருஷ்ணராவ். எம். கேசவப்பட்ட, கர்நாடக இதிகாஸ தர்ஸன (1970), பக்கம் 13, 14. Mysore Archaeological Report 1936, No. 16 A. P. Buddhadatta, Contemporary Buddha Gosha, University of Ceylon Review (1945) Vol. III, No. 1. பாண்டியர் செப்பேடுகள் பத்து, வேள்விக்குடிச் செப்பேடு, வரிகள் 39 - 46. இதுபற்றி மேலும் அறிய படிக்க; முத்தரையர், நடன, காசிநாதன். பாண்டியர் செப்பேடுகள் பத்து, தளவாய்ப்புரச் செப்பேடுகள், வரிகள். 97-102@ மு. இராகவையங்கார், இலக்கிய சாசன வழக்காறுகள், பக்கம் 78. டி.வி. சதாசிவ பண்டாரத்தார், பாண்டியர் வரலாறு (1969) பக்கங்கள் 32-33. பாண்டியர் செப்பேடுகள் பத்து, பிற்சேர்க்கை 4 பக்கம் அ. 44. Epigraphia Indica vo. XIII, No. 134 Journal of Indian History Vol. VIII Epigraphia Indica Vol. XXXVIII, No. 6 page. 39. “Kalabhras identified’, South Indian Studies Vol. II, P. 184. பல்லவர் செப்பேடுகள் முப்பது, காசாக்குடி செப்பேடுகள், சுலோகம் 20 பக்கம் 174 பல்லவர் செப்பேடுகள் முப்பது, பக்கம் 12. பல்லவர் செப்பேடுகள் முப்பது, கூரம் செப்பேடுகள், சுலோகம் 4, வரி 12, பக்கம் 55. கலைமகள் தீபாவளி மலர் 1959. திருத்தொண்டர் திருவந்தாதி 47. கூற்றுவ நாயனார் புராணம் 4, 5. திருத்தொண்டர் புராணப்பயன். மயிலை, சீனி, வேங்கடசாமி, களப்பிரர் ஆட்சியில் தமிழகம், பக்கம் 26. கே.கே. பிள்ளை, தமிழக வரலாறும் - மக்களும் பண்பாடும், பக்கம் 182. ஈங்கிதனுக் காணத்தியாய்த் தாம்ரசானஞ் செய்வித்தான் வாத்யகேயசங்கீதங்களான் மலிவெய்திய வண்களத்தை வைத்ய குலம் விளங்கத் தோன்றி மன்னவற்கு மகாசாமந்தனாய் மாற்றரசரை வலிதுலைக்கும் வீரமங்கலப் பேரரைசனாகிய தீரதரன் மூர்த்தி எயினன்’. பாண்டியர் செப்பேடுகள் முப்பது, சீவரமங்கலச் செப்பேடுகள், வரிகள் 75-81. டி. துளசிராமன், தொல்பொருள் அலுவலர், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை, இக்கல்வெட்டைக் கண்டுபிடித்தார். பெரியபுராணம், மூர்த்தி நாயனார் புராணம், பாடல் 11, 12. இரா. பன்னீர்செல்வம், தமிழ்நாடும் களப்பிரர் ஆட்சியும், பக்கம். 45. R.C. Majumdar, The Classical Age. Bharatiya Vidya Bhavan, Series Volume III, Page 249. Harihar grant of Vinayaditya. R.C. Majumdar, The Classical Age, Bharatiya Vidya Bhavan Series, Volume III, Page 247. பல்லவர் செப்பேடுகள் முப்பது, பட்டத்தான்மங்கலம் செப்பேடு, சுலோகம், 7, 9; பக்கம் 246. T.A. Gopinath Rao, Sri Subrahnanya Ayyar Lectures on the History of Srivaishnavas. (1923), P.26. Dr. R. Nagaswamy, Studies in Ancient Tamil Law and Society. அரிசமயதீபம், பரகாலச் சருக்கம் Epi. India. Vol. XIII, p.135. நடன, காசிநாதன், முத்தரையர், பக்.54-53. மு. இராகவைய்யங்கார், இலக்கிய சாசன வழங்காறுகள் பக். 100. 2-ஆம் பத்து, 4-ம் திருமொழி, பா.10. Dr. R. Nagaswamy, Thiruttani and Velancheri Copper - Plates, Velancheri Plates of Aparajita, translation, P.III. Ibid.P8. ம. இராசசேகரதங்கமணி, பாண்டியர் வரலாறு (பாகம்.1), பக். 230. டாக்டர் இரா. நாகசாமி, செங்கம் நடுகற்கள்; பல்லவர் செப்பெடுகள் முப்பது, கூரம் செப்பேடுகள், சுலோகம் 4. வரி 12, பக்.55. S.I.I. Vol. IV. No.135, Section 1. பல்லவர் செப்பேடுகள் முப்பது, பட்டத்தான்மங்கலம் செப்பேடு, சுலோகம் 9, பக் .216. K.V. Subrahmanya Ayyar, Historical Sketches of Arcient Dekhanï Vol. II P.53 Epi. Indica-Vol. XXXVIII, No.6, P.39 Ibid. M. Raghava Iyangar, Journal of Indian History, Vol. VIII. Epigraphia Indica Vol. XXXIII, P41. A.R.E. 147 of 1910. A.R.E. 252 of 1964-65. DAMILICA Vol. I, Page A.R.E. 208 and 209 of 1920 Dr. R. Nagaswamy; Tiruttani and Velanjeri copper - plates, Velanjery plates of Aparajita, translation, p.III. சதாசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர் வரலாறு, தொகுதி-ஐ, A.R.E. 286 of 1911. SII. III, No.89, P.221 திருத்தொண்டர் திருவந்தாதி பாடல் 65. Historical sketches of Ancient Dekhan, Vol. II, Page -61 நடன, காசிநாதன், யார் இந்த கவிமூர்க்கன், கோவை மாவட்ட வரலாற்றுக் கருத்தரங்கு (நூல் வெளிவரவில்லை). I.P.S. No.13. நடன, காசிநாதன், முத்தரையர் I.P.S. No.18 Ibid No.17. K.V. Subramanya Iyer, Historical sketches of Ancient Dekhan. பெரியபுராணம், மூர்க்கர் நாயனார் புராணம் A.R.E. 111 of 1920. Ibid 189, 204 of 1920 Damilica Vol. I, Page Thiruvalangadu copper plate A.R.E. 1906, Part - II para 18. S.I.I. Vol. XVII, No.509. S.I.I. Vol. XVII, No.164 S.I.I. Vol. V. No.640 S.I.I. Vol. VII. No.460, S.I.I. Vol. XVII, No.136. Ep, Ind. Vol. No.31 S.I.I.Vol. III No.86 S.I.I. Vol. V. No.708 Journal of the Madras University Vol. LI. No.1, The Kalabhras in the Pandya Country by M. Arunachalam, Page 59. S.L.L. Vol. XVII, No.600602. Journal of Madras University. The Kalabhras in the Pandya country by M. Arunachalam, Page 59. Ibid. S.I.I. Vol. XVII No.130. Journal of Madras University, Kalabhras in the Pandya Country by M. Arunachalam, Page. 59. மயிலை சீனி. வேங்கடசாமி, களப்பிரர் ஆட்சியில் தமிழகம், பக்கம் 26. Iravatam Mahadeva, Corpus of Tamil Brahmi Imscriptions. களப்பிரர் ஆட்சியில் தமிழகம். S. Ramaiyya, First Kalabra Coin, Mail 1976. Dr. R. Nagaswamy, Tamil Coinage, Page 15-16. இப்பாடல்கள் யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கொள் காட்டப்பட்டுள்ளன. இச்சுவடியை ஈரோடு புலவர் சே. இராசு எம்மிடம் காண்பித்து உதவினார்.