நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 24 புலமையும் பண்பும் மற்றும் கடிதங்கள் பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 24 உரையாசிரியர் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 280= 296 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 185/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் 124 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு வல்லுனர் குழு 1. முனைவர் கு.திருமாறன் 2. முனைவர் இரா.கலியபெருமாள் 3. பேராசிரியர் சண்முக.மாரி ஐயா 4. பேராசிரியர் நா.பெரியசாமி 5. முனைவர் பி.தமிழகன் 6. முனைவர் மு.இளமுருகன் பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற் காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “ சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “ சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரிய வர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர் களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்வி களிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப் பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக் குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921 -இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல் களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல் களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப் பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரை களும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற் பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத் தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக் கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரணமாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த் தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர்களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 17.07.2007 பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங் களை யெல்லாம் தேடியெடுத்துத் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மையாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக்கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்டதால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும்போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு..., செயல் செய்வாய் தமிழுக்கு......,ஊழியஞ் செய் தமிழுக்கு......., பணி செய்வாய்! தமிழுக்கு........, இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.”எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழி வழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர் தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையைஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங்களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலம் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற் குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்ட வல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப் பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடுவதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப்பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங் களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப்புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத்தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர் பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகுகுரு.செயத்துங்கன், பேரா. கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெருமக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம் பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டு கின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை iv பதிப்புரை x புலமையும் பண்பும் 1-124 கடிதங்கள் 125-170 நாட்டார் புலமையும் பண்பும் மற்றும் கடிதங்கள் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் புலமையும் பண்பும் பேராசிரியர் பி. விருத்தாசலம் எம்.ஏ., முதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி. கரும்பும் நெல்லும் காடுபோல் விளையும் கழனிகளைக் கொண்ட காவிரிநாடு கல்விக்கும், நுண்கலைகளுக்கும் பெயர் பெற்ற நாடாகும். அக்காவிரி நாடாகிய சோழநாட்டில் தஞ்சாவூருக்கு வடமேற்கே பன்னிரண்டு கல் தொலைவில் நடுக்காவிரி என்னும் சிற்றூர் உள்ளது. காவிரியின் கிளை நதியாகிய குடமுருட்டி என்னும் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள அச்சிற்றூரில் செந்தமிழ்ச் சான்றோர் ஒருவர் 12.04.1884-இல் தோன்றினார். அவர்தாம் நம் போற்றுதலுக்கும், வணக்கத்திற்கும் உரிய நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டாரையா அவர்கள் ஆவார்கள். தம் வாழ்நாள் முழுதும் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் பெருந்தொண்டாற்றி வந்த நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரையா அவர்கள் நின்ற சொல்லராகவும், நீடுதோன்று இனியராகவும், என்றும் நம் நெஞ்சத்தைவிட்டுப் பிரிந்து அகலாதவராகவும் விளங்குபவர்; ஆசிரியர் எவர் துணையுமின்றித் தாமே பயின்ற தமிழ்ப் பேராசானாக விளங்கியவர்; தமிழ் நூற்கடலை நிலைகண்டுணர்ந்த பெருமை உடையவர்; வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பண்டு வடக்கெல்லையாக வேங்கடமலை விளங்கினாற்போலே தமிழ்மொழியில் அமைந்துள்ள ஆழ்ந்து அகன்று நுண்ணியதாய் விளங்கிய புலமைத்திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாய்க் கூறத்தக்க அறிவுமலையாக விளங்கியவர்; திருமுருகாற்றுப்படையை நாளும் ஓதி வழிபாடு நிகழ்த்தி வந்த அப்புலவர் பெருமகன் அந்நூலில்வரும், “ யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” (திருமுருகாற்றுப்படை 133,134) எனவரும் அடிகளுக்கோர் எடுத்துக்காட்டாய் இலங்கினார். கபிலர், நக்கீரர் ஆகிய சங்க காலத்துப் புலவர் பெருமக்களைப் பற்றி ஆய்வு நூல் எழுதிய நாட்டாரையா அவர்கள் அச்சங்ககாலப் புலவர்களைப் போலவே பொய்தீர் புலவராகவும், அஞ்சாமை உடையராகவும் விளங்கிய பெருமையுடையவர். நாட்டாரையா அவர்கள் செந்தமிழ்ப்புலமை மிக்கவராகவும், பண்பு நலங்கனிந்த சான்றோராகவும் விளங்கியமைக்கு ஏராளமான எடுத்துக் காட்டுக்களை இயம்பமுடியும். தாம் மட்டுமன்றித் தம்காலத்தில் வாழ்ந்த தமிழாசிரியர் அனைவரும் சங்ககாலப் புலவர்களைப் போல விளங்குதல் வேண்டும் என்று நாட்டாரையா அவர்கள் விரும்பினார் என்பது துறையூரில் நடைபெற்ற தமிழ்ப்புலவர் மாநாட்டில் அவர் ஆற்றிய வரவேற்புரையால் இனிது புலனாகும். அவரது பேச்சின் சில பகுதிகள் பின்வருமாறு: “இனி, தன்னைத் தலையாகச் செய்வானும் தான்” என்றபடி தமிழ்ப் புலவர்கள் தம்மை உயர்த்திக்கொள்வதற்கு அவர்கள் நல்ல கல்வியுடையராதல் ஒன்று மட்டும்போதாது. விரிந்த உள்ளமும், சிறந்த பண்புகளும் வேண்டும். பண்டை நாளிலிருந்த புலவர்கள் பரிசில் கருதி யாரையும் எங்ஙனமும் பாடின ரென்று கூறுதல் பொருந்தாது. அவர்கள் தாம் குற்றமற்ற பண்புடையராய் இருந்ததோடு, வேந்தர்களாயினும், பிறராயினும் தவறுடையராய்க் காணப்படின் சிறிதும் அஞ்சாது அவர்களை நெருங்கி அறிவு கொளுத்தியும் வந்தனர். அத்தகைய அஞ்சாமையும் அருந்திறனும், பெருந்தன்மையும் இற்றைநாளில் தமிழ்ப்புலவர்கட்கு வேண்டும். ஏதோ சிறிது பொருள் கிடைத்தாற் போதுமென்று தம் நிலைமைக்குத் தகாத பிறரைத் தொடர்ந்து அவர்கள் மனைவாயிலைப்பற்றி நின்று பெருமைகெட வொழுகுவது தமிழ்ப் புலவர்கட்குச் சிறிதும் அடாது. அத்தகைய இழிதகவு யாரிடமேனும் காணப்படின் அன்னாரைப் ‘புலவர் கூட்டத்திற்குப் புறகு’ என நீவிர் ஒதுக்குதல் வேண்டும். “இங்ஙனம் பல்லாற்றானும் நமது நிலை சுருங்கியதாயினும் இனிப் பெருகுதற்கு வழியில்லாது போகவில்லை. கீழ்நிலையின் வரம்புகண்ட நாம் இனி மேனிலையிற்றிரும்பாது வேறென் செய்வது? கற்றோன்றி மட்டோன்றாக் காலத்தே வாளொடு முற்றோன்றி மூத்த வீரக்குடியினர் வாழ்ந்தது எமது தமிழகம் என்பதனை எண்ணின், கரிகாலனும், செங்குட்டுவனும், நெடுஞ்செழியனும் முன்னான வீரமன்னர்கள் வீறுடன் ஆண்டது எமது தமிழ் நாடென்பதனை உன்னின், நக்கீரர், கபிலர், வள்ளுவர், இளங்கோவடிகள் முதலாய நல்லிசைப் புலவர்கள் பல்லிசை நிறுத்தது எமது தண்டமிழ் நாடென்பதனை நினையின் அவை எமக்கு ஊக்கமும், உரனும் உண்டாக்காது போமா? ஆண்மைமிக்க வீரர்வழியில் - அரசர் வழியில் - வள்ளியோர் வழியில் - தெள்ளியோர் வழியில் - வந்த யாமோ அறிவுகுன்றி, ஆண்மை குறைந்து பீடிழந்து வாடி நிற்போம் என்னும் உணர்ச்சி எம்மை உயர்நெறிக்கண் உந்தாது சாமா? இனிநாம் அழுங்கிக்கிடவோம். நாடெங்கும் தமிழினை முழங்கச் செய்வோம். என்றெழுமின்; தளரா ஊக்கமுடன் உழைமின்; நாமும் உயர்ந்தோம்; நமது நாடும் உயர்ந்தது". நாட்டில் தமிழ்க்கல்வி தழைக்கவேண்டும் என்னும் பெருவிருப்புடைய நாட்டாரையா அவர்கள் சங்ககாலப் புலவர்களாகிய மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், அறுவைவாணிகன் இளவேட்டனார், மருத்துவன் தாமோதரனார் முதலியோரைப் போன்று இக்காலத்தும் புலவர் பலர் தோன்ற வேண்டுமென்னும் வேட்கையுடையவராய், தமிழ் இலக்கண இலக்கியங் களுடன் பலகலைகளையும் இணைத்துக் கற்பிக்கும் அமைப்பினைக் கொண்ட கல்லூரி ஒன்றை நிறுவி, அதற்குத் திருவருட் கல்லூரி என்று பெயர் சூட்டவும் விரும்பினார்; பலருக்கும் வேண்டுகோள் கடிதங்கள் அனுப்பினார். பலர் தம்மால் இயன்ற சிறு தொகையினை நன்கொடையாகவும் தந்தனர். திராவிடத் தன்மானப் பேரியக்கம் கண்ட தந்தை பெரியாரவர்கள் உருபாய் 50/- அக்கல்லூரி தொடங்க நன்கொடை வழங்கினார்கள் என்பது மகிழ்ச்சியுடன் குறிப்பிடத்தக்க செய்தியாகும். எனினும், கல்லூரி தொடங்குதற்குப் போதிய ஆதரவு கிட்டாத காரணத்தால் நன்கொடை வழங்கியவர்களுக்கு அத்தொகையைத் திருப்பித்தந்துவிட்டார். கல்லூரி தொடங்கும் முயற்சி அத்துடன் அமைந்தது. பின்னர் 1925, 1926, 1927ஆகிய ஆண்டுகளில் தஞ்சையில் அல்லது திருச்சியில் தமிழ்ப்பல்கலைக்கழகம் அமைப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுவதன் பொருட்டுச் செயற்குழு ஒன்று அமைக்கப்பெற்றது. சென்னை மாநில அமைச்சர் மாண்புமிகு சிவஞானம் பிள்ளை அவர்கள் தலைமையில் அமைந்த அச்செயற்குழுவில் நாவலர் வேங்கடசாமி நாட்டார் அவர்களும், தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களும் முதன்மையான உறுப்பினர் களாக விளங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். அந்தக் காலகட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைக்கப் பெற்றதும் அதுவே தமிழ்ப் பல்கலைக் கழகமாகச் செயல்படும் என்னும் எதிர்பார்ப்பின் பேரில் தனியாகத் தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைக்கும் முயற்சியும் நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழவேள் உமாமகேசுவரனாரும், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும், அவரையொத்த சான்றோர்களும் கண்ட கனவு அறுபது ஆண்டு களுக்குப் பிறகு நனவாகி உள்ளது. தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிச் சான்றோர்களின் விருப்பத்தைச் செயலாக்கிய தமிழக அரசின் தமிழ்த் தொண்டினைத் தமிழரனைவரும் வரவேற்று வாயார மனமாரப் பாராட்டுகின்றனர். தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டுச் சோறுதின்று, தமிழ் நாட்டுத் தண்ணீர்குடித்து, தமிழ் நாட்டில் வீசும் காற்றை உயிர்த்துத் தமிழ்நாட்டில் உயிர்வாழ்வோர் அனைவரும் தத்தம் குழந்தைகட்குத் தமிழிலேயே கல்வி புகட்டுதல் வேண்டும். இந்த இயற்கைக்கு மாறாகத் தாய்மொழியைப் புறக்கணித்து ஆங்கிலத்தில் கல்வி கற்பிப்பது முறையற்ற செயலாகும். தாய்மொழிக் கல்வி பற்றி நம் நாவலர் பெருமான் கூறிய கருத்துக்களை இப்பொழுது காண்போம். “கல்வியானது உலகில் வழங்கும் பல மொழிகளானும் எய்தற்பாலதே யெனினும், தாய்மொழியிற் கற்றலென்பது ஒவ்வொருவர்க்கும் பிறப்பானுரிய கடன்களுள் விழுமியதொன்றாம். அன்றியும் நாட்டு மக்களனைவரும் கல்வி கற்று அறியாமையினீங்குதற்கு வேற்றுமொழியைத் துணையாகக் கொள்ளுதல் ஆற்றுவெள்ளத்தைக் கடக்க மண்குதிரையைத் துணையாகக் கொண்டது போலும் பயனில் செயலேயாகும். இந்நாட்டிலே எத்தனை ஆண்டுகளாக எவ்வளவு பொருட்செலவும், முயற்சியும் கொண்டு ஆங்கிலக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. அங்ஙனம் கற்பித்தும் ஆடவரினும் மகளிரினும் கற்றார் எத்துணையராகவுள்ளார்? இன்னும் எத்தனை யாண்டுகள் செல்லினும் யாவரும் அம்மொழி வாயிலாகக் கல்வி பெறுதல் கூடுமோ? இதனைச் சிந்தித்துணர்வது அறிஞர் கடனாகும். அம்மட்டோ! தம் நாட்டின் பழைய நிலையினையும், தம்முன்னோரின் பல்வகைப் பெருமைகளையும் அறிந்து இன்புறுதற்கும் அவ்வாற்றால் ஊக்கமும் உரனுங்கொண்டு தம் நாட்டை வளம்படுத்த முயல்வதற்கும், முந்தையோர் கைக்கொண்டொழுகிய சீரிய நெறிகளைக் கடைப்பிடித்து இம்மை மறுமைப் பேறுகளைப் பெறுதற்கும் தாய்மொழிக் கல்விபோல் உறுதுணையாவது பிறிதுண்டோ? கூறுமின். ஒரு நாட்டிலே பண்டுதொட்டு வழங்கிவந்து மக்களுடைய குருதியிற் கலந்திருப்பதும் பின்னும் அந்நாட்டில் என்றும் நிலைபெற்றிருக்கற்பாலதுமாகிய மொழியன்றோ அங்கு வழிவழியாக வாழும் மாந்தர்க்கு அறிவின் செல்வத்தை வரையாது வழங்குதற்குரியதாகும்.” ஆகவே, நூற்றாண்டு விழா நாயகராகிய நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள், “ தன்பெண்டு தன்பிள்ளை சோறுவீடு சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு” என்போரைப்போல், “ சின்னதொரு கடுகு உள்ளம் கொண்டோராய்வாழாமல்’’ “ தமிழுண்டு தமிழ் மக்களுண்டு - இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்லதொண்டு” என்று வாழ்ந்தவர் என்பது தெளிவு. தமிழ் நாட்டில் மருத்துவக்கல்வி, பொறியியற் கல்வி உட்படக் கல்வி அனைத்தும் தமிழ்மொழி வாயிலாகக் கற்பித்தலுக்கு வழிசெய்வதே நம் நாவலர் பெருமானுக்கு நாம் செய்யும் வணக்கமும், வழிபாடும் ஆகும். தமிழராகிய நாம் இதனைத் தவறாது செய்வோமாக. உரைவேந்தர் ந.மு.வே. முனைவர் வே. காத்தையன், திரு புட்பம் கல்லூரி, பூண்டி. ஒப்பற்ற தமிழறிஞரான நாட்டாரையா அவர்கள் நூலாசிரியராகவும், உரையாசிரியராகவும், கட்டுரையாளராகவும் ஒளிரும் சிறப்பைத் தமிழகம் நன்கு உணரும். நாட்டாரையா உள்ளம் பழந்தமிழ்ப் பண்பாட்டுத் தாகம் கொண்டது; அதன் தாக்கமும் பெற்றது. நாவலர் பெருமானின் சங்கத்தமிழ்ப் பற்றும் பயிற்சியும் ‘நக்கீரர்’ ‘கபிலர்’ போன்ற நூல்கள் தோன்றக் காரணமாயின. அன்னார்தம் சிலம்புத் தோய்வின் வெளிப்பாடாகக் ‘கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்’ உருவானது. எண்ணற்ற இலக்கியங்களுக்கும், அறநூல் களுக்கும் உரைகண்ட நாவலர் தம் நுண்மாண் நுழைபுலம் ஒளிரச் சிலப்பதிகாரத்திற்கு உரைவளம் வரைந்த பெருமகனும் ஆவர். சிலம்புக்குப் பழைய உரையாக அரும்பத உரையும், அடியார்க்கு நல்லார் உரையும் அமைந்தாலும் அவையிரண்டும் கற்பார் விழைவை நிறைவு செய்யும் அமைப்பிலும் அளவிலும் அருகின என்றே கொள்ள வேண்டும். அரும்பத உரை நூல்முழுதுக்கும் இருந்தாலும் யாவரும் எளிதில் உணரத் தக்கதென அதனைக் கொள்ள முடியாது. அடியார்க்கு நல்லார் உரையோ கானல் வரி, வழக்குரைகாதை, வஞ்சின மாலை, அழற்படுகாதை, கட்டுரை காதை, ஆகியவற்றிற்கும் வஞ்சிக் காண்டம் முழுமைக்கும் இல்லை. நாட்டாரையா உரை இக்குறைபாட்டினைப் போக்கி நாம் நூல் முழுதிற்கும் தெளிவான உரை பெற உதவுகின்றது. நாவலர் உரை அரும்பதவுரை, அடியார்க்கு நல்லார் உரை இரண்டையும் மிகுதியும் தழுவியே எழுதப்பட்டது. ஆயினும், மிகுதியான இடங்களில் இருவர்தம் கருத்தினை உடன்பட்டு உரைவரையும் நாட்டாரையா சில இடங்களில் மறுத்தும், மாறுபட்டும் எழுதி மூல நூலுக்கு விளக்கம் சேர்க்கிறார். அவர்கள் இருவரும் பொதுப் பொருள் கொண்ட சொற்கள், தொடர்கள் பலவற்றுக்குக் குறிப்பு விளக்கமும், சிறப்புரையும் நாவலர் தருவதைக்கண்டு மகிழலாம். காவியம் முழுதும் நாவலர் பெருமானின் பன்னூலறிவும் பைந்தமிழ்ப் புலமையும் ஒளிரும் நிலையில் பானைச் சோற்றுக்குப் பதச் சோறாகச் சிலவற்றைக் காணலாம். மங்கல வாழ்த்துப் பாடலில் ஆசிரியர் கண்ணகியை முற்கூறியதற்குக் காரணம் காட்டும் அடியார்க்கு நல்லார் ‘கண்ணகியை முற்கூறினார் பத்தினியை ஏத்துதல் உட்கோளாகலான்’ என்று குறிப்பிடுகின்றார். அரும்பத உரைகாரர் ‘இவளை முன் கூறிற்றுக் கதைக்கு நாயகியாதலின்’ எனக் கூறுகின்றார். இவ்விரு உரைக் குறிப்பிலும் நிறைந்த பத்தினி வழிபாடு, கதைத்தலைமைணு0 இரண்டையும் உள்ளடக்கி நாட்டாரையா அவர்கள் “பத்தினியை ஏத்துதல் கருத்தாகலானும், கதைக்கு நாயகியாகலானும் கண்ணகியை முற்கூறினார் என்க.” என்று விளக்கமளிப்பார். கொலைக்களக் காதையில் கண்ணகி நல்லாள் அடிசில் ஆக்குதற்காக இடைக்குல மாதரி மடந்தை அளித்த பல்வேறு பொருள்களில் கோளிப் பாகலும் குறிப்பிடப்படுகின்றது. கோளிப்பாகல் - பூவாதே காய்க்கும் பலா என அரும்பத உரைகாரரும், கோளி - பூவாது காய்க்கும் மரம் என அடியார்க்கு நல்லாரும் கூற, நாவலர் பெருமான் சொல்லாமற் செய்யும் பெரியோர் போல், பூவாதே காய்க்கும் கோளிப் பாகலின் மாண்பைச் ‘சொல்லாமலே பெரியார்’ எனத் தொடங்கும் தனிச் செய்யுள் வழி எடுத்துக்காட்டி விளக்கம் தருகிறார். உரைபெறுகட்டுரையில், ‘அன்று தொட்டுப் பாண்டியனாடு மழைவறங் கூர்ந்து வறுமையெய்தி வெப்பு நோயுங் குருவுந் தொடர’ என்ற தொடரில் வெப்பு - தொழுநோய் என அடியார்க்கு நல்லார் உரை யெழுத, நாட்டாரையா ‘வெப்பு நோய் - வெம்மை விளைக்கும் நோய். குரு - கொப்புளம். வெம்மையால் உண்டாவது’ என விளக்கம் தருவது பொருத்தமாக உள்ளது. “ வினைவிளை காலம் ஆதலின் யாவதும், சினையலர் வேம்பன் தேரா னாகிக் கன்றிய காவலர்க் கூஉய் அக் கள்வனைக் கொன்றச் சிலம்பு கொணர்க வீங்கென” (சிலம்பு.பதிகம் 27-30)" என்பன பதிகத் தொடர்கள். இப்பகுதிக்கு உரைகண்ட அடியார்க்கு நல்லார், “அக்கள்வனைக் கொல்ல அச்சிலம்பையும், அவனையும் கொணர்கவெனச் சொல்லக் கருதினவன் வாய்சோர்ந்து, ‘கொன்று அச்சிலம்பைக் கொண்டு வருக’ என்று கூறினான்” எனக் குறிப்பிடுகின்றார். இதனை ஏற்புடைத்தன்று என மறுக்கும் நாவலர் அவர்கள் மூன்று காரணங்காட்டித் தம் கூற்றை மெய்ப்பிக்கின்றார். ‘வினைவிளைகாலமாதலின் யாவதும் தேரானாகி என்றமையானும், அச்சிலம்பு எனத் தேவியின் சிலம்பைக் கருதிக் கூறினமையானும், வழக்குரை காதையுள்ளும் கள்வனைக் கோறல் கடுங்கோலன்று என்றிறுத் தமையானும் என்க’ என்பது நாட்டாரையாவின் மறுப்புரையாகும். ஐயாண்டு தொடங்கிப் பன்னீராண்டு முடிய ஏழு ஆண்டுகள் ஆடல், பாடல், அழகு ஆகிய மூன்று கலைகளிலும் முழுமைத் தேர்ச்சியுடைய மாதவி தன் கலைநலங்காட்ட அரங்கேறியது கரிகாற் பெருவளத்தான் அவையென்பது அரும்பத உரைகாரர், அடியார்க்கு நல்லார் ஆகிய இருவரின் கருத்தாகும். நாவலர் நாட்டார் அவர்கள் இங்கும் வலிமையான மூன்று அகச்சான்றின் வழி மாதவியின் கலைக்கு அரங்கேற்றம் அளித்தவன் கரிகாலன் அல்லன் என்பதைக் காட்டுகின்றார். அச்சான்றுகளாவன: ‘கரிகாலன்’ என்ற பெயர் ஈண்டு இடம் பெறவில்லை. “ செருவெங் காதலின் திருமா வளவன் புண்ணியத் திசைமுகம் போகிய வந்நாள்” (சிலம்பு. இந்திரவிழவூரெடுத்த காதை 90,91) என இந்திர விழவூரெடுத்த காதையினும், “ மன்னன் கரிகால் வளவன் நீங்கிய நாள் இந்நகர் போல்வ தோர் இயல்பினதாகி” (மணிமேகலை 1:39,40) என மணிமேகலையுள்ளும் கரிகால்வளவன் வடதிசைச் செலவு இறந்த காலத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், மதுரைக் காண்ட இறுதிக் கட்டுரையில் பாண்டியன் நெடுஞ்செழியனையும், வஞ்சிக்காண்டத்தின் இறுதிக்கட்டுரையில் சேரன் செங்குட்டுவனையும் கிளந்தோதும் அடிகள் புகார்க்காண்டத்து இறுதிக் கட்டுரையில் சோழன் ஒருவனது பெயர் குறித்துக் கூறாமையானும் கரிகாலன் அப்போது இருந்தான் என்பது சாலாது என்க.’ என்பது நாவலர் மறுப்பாகும். இந்திர விழவூரெடுத்த காதையில் காவற்பூதம் என்ற தொடருக்குப் புகாருக்கும், அரசர்க்கும் காவலாகிய பூதம் என்று உரை கூறுவதும், காட்சிக் காதையில் முதுநீர்க் காவிரி என்ற தொடருக்குப் பொருள் கூறுங்கால் முதுமையைக் காவிரிக்கு ஏற்றுக என எழுதுவதும் நாவலர் புலமை நலம் ஒளிரும் தொடர்களுள் சில எனலாம். அரங்கேற்றுகாதை முடிவில், மாதவிபால் விடுதல் அறியா விருப்பங் கொண்ட கோவலன் தன் வடுநீங்கு சிறப்பின் மனையகம் மறந்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். வடுநீங்கு சிறப்பின் மனையகம் என்பதற்கு அடியார்க்கு நல்லாரும், அரும்பத உரையாசிரியரும் குற்றமற்ற கற்புச் சிறப்பினையுடைய மனைவியும் மனையும் என வாளாவெழுத, நாவலரோ வடுநீங்கு சிறப்பு என்பதற்கு மனையாட்குக் கற்பின் சிறப்பும், மனைக்குச் செல்வச்சிறப்பும் என விளக்கவுரை தருகின்றார். நாடுகாண் காதைத் தொடக்கத்தே ‘வான் கண் விழியா வைகறை யாமம்’ என்ற தொடரில் வான்கண் - ஆதித்தன், உலகின் கண் என்று அரும்பத வுரையும், அடியார்க்கு நல்லார் உரையும் குறிக்க, நாவலர் நாட்டாரையா அவர்களோ வான்கண் - சிறந்தகண் எனக் குறிப்பிட்டுச் சிறந்த கண்ணான அக்கதிரோனது சிறப்பைச் சுட்டும் முகத்தாற் காண்டற்குக் கருவியாகிய கண்ணொளியினும், காணப்படும் பொருளினும் ஞாயிற்றி னொளி கலப்பினன்றி ஒன்றையும் காணலாகாமையின் அதனைச் சிறந்த கண் என்றார். என விளக்கம் கூறுவர். இவ்வாறு சிலம்புக்கு நாவலர் எழுதிய நல்லுரை தொல்லுரையான அரும்பதவுரை அடியார்க்கு நல்லாருரை இரண்டையும் அடியொற்றி அமைந்ததாயினும் அவ்விரண்டின் எதிரொலியாகக் கொள்ளவோ கூறவோ முடியாது; தேவையான இடங்களில் ஒன்றியும் உறழ்ந்தும் தன் வழிச்சென்று காவிய ஆசிரியனின் கருத்தைக் காட்டும் ஒப்பற்ற தெளிவுரையாகவே ஒளிர்தலை உணரலாம். ந.மு.வே. நாட்டார் விழா இந்நாட்டார் விழா பேராசிரியர் ச. பாலசுந்தரம், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சை. 1. ஒளிவளர் விழியும், உண்மை உயிர்த்திடும் மூக்கும், நீற்றுத் தொளிவளர் நுதலும், சைவத் துறை மறை பயிலும் நாவும், அளிவளர் மொழியும், தூய அறிவொளிர் முகமும், தெய்வக் களிவளர் நெஞ்சும், கல்விக் கவினும்ஓர் உரு ந.மு.வே. 2. கற்பனைச் சுடரும் வாய்மைக் கவியமு துலகிற் கீந்து நற்புகழ் வளர்த்த கம்ப நாடனின் பின்சோ ணாட்டுப் பொற்பமை நடுக் காவேரி பூத்தசெந் தமிழ்ப்பே ராசான் விற்பனர் நயக்கும் ந.மு வேங்கடசாமி நாட்டார். 3. பைந்தமிழ்ச் சங்கம் மூன்றின் பாவலர், இளங்கோ, தெய்வச் செந்தமிழ் நால்வர், தேவர், சேக்கிழார், மற்றெல் லோரும் அந்தரத் தாசான் மாராய் அமைந் தறிவருளத் தாமே மந்திரத் தமிழ்நூல் முற்றும் மாசற உணர்ந்து தேர்ந்த 4. முதுக்குறைச் செம்மல், கூடல் முன்னவர் மதித்துத் தோடா பதக்கமொ டளிக்கப் பெற்ற பண்டிதர், தமிழ்ப்பூங் காவைப் புதுக்கிநல் லாய்வுப் பூக்கள் பூத்திசை கமழச் செய்தோன் விதிப்படி தமிழைக் காத்த வித்தகப் புலவோர் மன்னன் 5. மெல்லிதழ் முரிந்தி டாமல் மிளிர்மணங் குன்றி டாமல் சொல்லெனும் மலர்கள் தம்மைத் துறைதொறும் வண்ணந் தோன்ற எல்லுறு தொடை களாக இயற்றிமுத் தமிழன் னைக்கு நல்லுரை நடைய லங்கல் நயப்புறப் புனைந்த நம்பன் 6. வேங்கடந் தமிழகத்தின் எல்லையாம் விளைதமிழ்க் கோர் வேங்கட சாமி என்ன வியத்தகு பணிக ளாற்றி ஓங்குசெந் தமிழின் பண்பால் உயர்ந்தபன் னூல்கட் கெண்மைப் பாங்குற விளக்கந் தந்து பயின்றிடச் செய்த வள்ளல் 7. முறைபிற ழாத செஞ்சொல் முனைமழுங் காமற் கோத்து மறையிசை கமழப் பேசும் மணிமொழி நாவலன், பாத் துறைதெரிந் துரைக்கும் செம்மல், தொன்மைச் செந்நூல்கள் யாவும் குறைவற நெஞ்சிற் றேக்கிக் கொண்டல் போல் வழங்கு கோமான். 8. சிலம்பினுக் குரைவ ரைந்து செந்தமிழ் மறவர் பண்பார் நலந்திகழ் வரலா றெல்லாம் சான்றொடு நவின்று சைவப் புலந்திகழ் பன்னூல் செய்து பொய்யிலாப் புலமை யாலே வலந்தரு தமிழ்த்தொண் டாற்றி வான்சுட ராகி நிற்கும் 9. நற்றமிழ்ப் புலமை வேந்தர் ந.மு.வே யவர்நூ றாண்டு முற்றுமிவ் விழாஇந் நாட்டார் முத்தமிழ் விழாவாம், நாட்டார் வெற்றிசேர் விழாவிற் சான்றோர் வீறுசால் மாணாக் கர்நற் சுற்றமோ டளாவிச் சீர்த்த துணைசெயல் தமிழ்த்தொண் டன்றே 10. வண்மைசால் மக்கள் நாட்டார் மாண்புகழ் பரப்ப வேண்டும், ஒண்மைசேர் நினைவுச் சின்னம் ஊர்தொறுந் திகழ வேண்டும் நுண்மைகூர வர்நூல் யாவும் நூற்றாண்டில் வருதல் வேண்டும் தண்மைசால் ந.மு.வே யின் தமிழ்ப் பணி ஊழி வாழி நாட்டவர் போற்றும் நாவலர் ந.மு.வே. பேராசிரியர் கி. கோதண்டபாணி எம்.ஏ., பி.ஓ.எல்., திரு புட்பம் கல்லூரி, பூண்டி. 1. திருவளரும் சோணாட்டின் செழுமையுறு பன்னலமும் திகழ்ந்தே யோங்கி இரும்புகழ்சால் இயற்கைவளம் இலங்கியிங்கே உயர்ந்திலங்கும் எழில்சால் ஊராம் பெருமைமிகு நடுக்காவிரிப் பெரும்பதியில் பெருவளஞ்சால் பெரியோர் போற்றும் அருமைமிகு முத்துசாமி அன்பாளன் உஞற்றியதோர் அருந் தவத்தால் 2. செம்மனமும் தண்ணளியும் செழுமையுறு நல்லொழுக்கும் திகழப் பெற்றே நம்மினிய தமிழாக்கம் நலனினைந்தே நற்றொண்டை நலனாய் ஏற்ற தம்மினிய நலங்கருதாத் தகைமையராய்த் தாழ்வில்லாத் தக்கோர் போற்றும் அம்மதிபோல் அமைதிதிகழ் ஆசிரியர் அரும்பணியில் அமைந்தே யாண்டும். 3. நன்மைமிகு நந்தமிழின் சுவையுணர்ந்தே நற்றமிழர் செழித்தே யோங்க நன்மைமிகு நற்றொண்டை நன்றாற்றி நானிலத்தோர் நயந்தே போற்றும் அன்புமிகு அருந்தமிழின் ஆய்வாளர் அரியபுகழ் ஆசா னாகி இன்புறுநல் உரைவேந்தாய் இருநிலத்தோர் போற்றிட்ட ஏந்தால் வாழி! 4. நாவலராய்ப் பண்டிதராய் நானிலமே போற்றிட்ட நாட்டா ரையா பாவலராய் வளர்வதற்குப் பாங்காக யார்துணையும் பற்றார் என்றும் தாவருநற் றமிழ்ப்புலமை தன்னாலே ஆக்கிட்டார் தரணி தன்னில் யாவருமே வியந்துருக ஏற்றமிகு பேராசான் என்ன வாழ்ந்தார் 5. நாட்டாரும் நாவலரும் நனிபோற்றும் நாவலநின் நற்சீர் தன்னைப் பாட்டாலே போற்றிடவும் உரையாலே வாழ்த்திடவும் பான்மை யாமோ? ஏட்டாலே புகழ்பொறித்த ஏந்தலவர் எளிதாகத் தாமே கற்றுக் காட்டாளன் கழலிணையே கருதியநின் திருநாமம் கனிந்து வாழி! 6. நாவலரும் காவலரும் நாவினிக்க அழைத்திடுநல் நாட்டா ரையா பூவுலகில் ஆசானாய்ப் புகழுறுநல் உரைவேந்தாய்ப் பொலிந்தார் அன்னார் நாவினிக்க உரையாற்றும் நல்லமுதத் தமிழினையே நயமாய் மாந்திப் பாவினிக்கப் பாடிட்டார் வேங்கடசா மிப்புலவர் பதத்தைப் போற்றி. நாட்டார் நற்றமிழ் கவியோகி சுத்தானந்த பாரதியார், “தவக்குடில்” சோழபுரம், சிவகங்கை 623 650. 1. பாட்டாலும் உரையாலும் பயன் மிகுந்த பைந்தமிழைப் பயின்று நாளும் ஏட்டாலும் எழுத்தாலும் இனிய கனி மொழியாலும் இயம்பிநாளும் காட்டாறு போலுதவும் கலையின்பப் புலவர்மணி கருணை நண்பன் நாட்டாரின் நூற்றாண்டு நாடெல்லாம் கொண்டாட நன்மை யாமே (வேறு) 2. இனித்த நறுந் தேனுடனே இளநீரும் போலே கனிச்சாறும் கற்கண்டும் கலந்த சுவைபோலே தனித்தமிழைத் தருகின்ற தண்ணளியான் அவனே அனைத்துலகும் போற்றவளர் அறிவாளர் பெருமான்! 3. வேங்கடசாமி நாட்டார் வித்தகருள் வேந்தர் பாங்குடனே பாடுபட்டுப் பைந்தமிழைக் கற்றார் ஓங்குபுகழ்ப் பாண்டித்துரை ஒண்பரிசு நல்கத் தாங்கு புகழ் மேவியவர் தமக்குவமை யில்லார் 4. சங்க நூற்குவை யனைத்தும் தனதாக்கிக் கொண்ட சிங்கமணிப் புலவரெல்லாம் சிறந்த புகழ் செப்பும் தங்கமணிப் புலவனவன் தமிழினிக்கும் தமிழன் எங்குமவன் இசையோங்கும் இனியவிழாக் கொழிப்போம். தியாகச் சுடர் ந.மு.வே பேராசிரியர் சி. தங்கையன் எம்.ஏ., ஐ.பி.எஸ்.(ஓய்வு) நாட்டார் ஐயாவைப் போன்று சொற்பொழிவு ஆற்றுவோர் தற்காலத்து ஒருவருமிலர் என்று கூறின் மிகையாகாது. சங்க இலக்கியப் பூங்காவில் அழைத்துச் செல்வார். புராண நூற்களாம் கடலுக்கும், தேவார, திருவாசகமாம் திருக்கோயில்களுக்கும் படிப்போரை இட்டுச்சென்று பரவசமூட்டுவார். தமிழ்ச் சொல்லாக்க வல்லுநர் நாட்டார் ஐயா அவர்கள் எத்துறைச் சொற்களையும் அவற்றின் கருத்தைக் கொண்டு செம்மையுறத் தமிழில் ஆக்கிக் கொள்ளலாமென்ற பேருண்மையை நிறுவிக்காட்டினார்கள். அவர் அவ்வாறு ஆக்கியளித்த சொற்களுள் வழக்குரைஞர், நிலக்கிழார், கண்காணி, பொறியியலாளர், ஆவணக்களரி, கல்லூரி, துணைவேந்தர் போன்றவை சில. உதவும் கைகள் ஆண்டுக்கு மூன்றுமுறை நான் பல்கலைக்கழகத்திற்குச் சம்பளம் கட்ட வேண்டியிருந்தது. ஒவ்வொருமுறையும் நாவலர் நாட்டார் அவர்களிடம் கடன் வாங்கிக் கட்டிவிட்டு, உதவிச் சம்பளம் வந்ததும் அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிடுவேன். புலமைக்கு மரியாதை நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் தமிழ்ப் புலமையை அறிந்த இராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் அவர்களை நாவலர் நாட்டாரையாவை நேரில் சென்று அழைத்து வருமாறு வேண்டினார். பதிவாளரும், நடுக்காவிரிக்கே சென்று நாவலர் அவர்களை நேரில் கண்டு, செட்டியார் அவர்களின் விருப்பத்தைத் தெரிவித்து ஒப்புதல் பெற்றார். இவ்வுண்மையை இராஜா சர். முத்தையா செட்டியார் அவர்களிடம் நான் நேரில் கேட்டறிந்தேன். உடல்நலக் குறைவால் ஏற்பட்ட தடைகள் நாட்டார் ஐயா அவர்கள் பெரும் சிவபக்தர். நாள்தோறும் சிதம்பரம் போய் நடராசரைத் தொழ விரும்பி நாலைந்து நாட்கள் சைக்கிள்விடப் பழகினார்கள். ஆனால், உடல் நலக்குறைவால் அதைவிட்டு விட்டார்கள். ஆங்கிலம் தெரியாவிட்டாலும் அம்மொழியைப் படிக்க ஆவலுடையவர். நாலைந்து நாட்கள் அவர்களுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. உடல் நலக் குறைவால் அதையும் விட்டுவிட்டார். தமிழுக்கென வாழ்ந்த தகவுடைய பெரியார் வித்துவான் சிவ.பார்வதி அம்மையார் எங்கள் அருமைத் தந்தையார் ந.மு.வே.நாட்டார் அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில குறிப்புகள். என் இளமைக்காலத்திலிருந்தே என் தந்தையார் பேச்சிலும், உலக வழக்கிலும், நண்பர்களுடனும், மாணவர்களுடனும், பேரவைகளிலும் எளிய இனிய நடையில் தெளிவாகப் பேசுவார்கள். அவர்கள் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்பமொழியும் சொல்லாற்றல் உடையவர்கள். அத்துடன் ஒழுக்கநெறி சிறிதும் பிறழாது தம் வாழ்க்கையை நடத்திவந்த குணக்குன்று ஆவார்கள். அவர்கள் தம்முடைய தூய திருமேனியுடன் ஒரு நாள் பெரிய வழக்குரைஞராகவும், ஒரு பொழுது பெரும் பேராசிரியராகவும், ஒரு சமயம் அப்பர் பெருமானின் அருள் உருவத் திருமேனியைப் போலவும் இருப்பார்கள். தம் இறுதிமூச்சு உள்ளவரையில் தமிழையும், சைவத்தையும் தம்மிரு கண்களாக நினைத்து ஒழுகிவந்தார்கள். “ தூய வெண்ணீறு துதைந்த பொன்மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரு சிந்தையும் நைந்துருகிப் பாய்வதுபோல் அன்புநீர் பொழி கண்ணும் பதிகச் செஞ்சொல் மேய செவ்வாயும் உடையார் புகுந்தார் வீதியுள்ளே”” எனச் சேக்கிழார் அடிகள் அப்பர் பெருமானின் அருட்டிருமேனியை விவரித் தவாறே, எங்கள் தந்தையார் உருவம் எங்களுக்குத் தோன்றும். அவர்கள் சிறந்த நூலாசிரியராகவும், உரையாசிரியராகவும், போதக ஆசிரியராகவும் விளங்கினார்கள் எனக் கூறுதல் மிகையாகாது. அவர்களை ஓயாது துன்புறுத்தி வந்த காசநோயின் ஊடேயும் தமிழ்ப்பணியும் சைவப்பணியும் செய்வதில் சிறிதும் தவறவில்லை. என்றாவது ஒருநாள் நோயினால் மிகத் துன்புறும்போது, ஒன்றும் செய்ய இயலாவிடின் “என்னப்பா இன்று வீண்பொழுதாகி விட்டதே” என்று வருந்துவார்கள். அவர்கள்பால் பயின்ற மாணவர்களுள் உலக ஊழியனார் போன்றவர்கள் தமக்கு ஏதாவது ஐயமேற்பட்டால் அவர்களைக் கண்டு தெளிய வருவார்கள். ஆனால் அவர்கள் முன் தோன்றியவுடனே ஐயம் தெளிந்துவிட்டதாக உணர்வார்கள் என்று அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பேரவைகளில் அவர்கள் எழுந்து பேசும்போது நிமிர்ந்த நிலையும், மலர்ந்த முகமும், தெளிந்த குரலும், இனிய சொல்லும் உடையவர்களாய்ப் பலமணிநேரம் கேட்போர் விம்மிதம் எய்தும்படி பேசுவார்கள். அவர்கள் தாமே தமிழ் பயின்று பேராசிரியர் ஆனவாறே என்னையும் தமிழ்ப்பணியில் ஊக்குவித்தார்கள். தமிழ்நூல்களை என்கையில் கொடுத்து “இதனைப் படித்துவா” என்று சொல்வார்கள். அப்படிச் சில நாள் சென்றதும் அவற்றுள் கேள்வி தான் கேட்பார்கள். அவர்கள் முகத்தைக் கண்டவுடனேயே என் உளம் தெளிந்து அதற்குச் சரியான விடையளிக்க இயலும். அவ்வாறே என்னையும் ஒரு புலவராக்கித், தம் தமக்கையார் மகனும் என் கணவருமான திரு சி. சிவப்பிரகாசச் சேதிராயர் அவர்களையும் புலவராக்கினார்கள். எனவே, என் தந்தையார் தொடர்புடைய எங்கள் குடும்பத்தினர் எல்லாருமே தமிழ்ப்பற்று உடையவர்கள் ஆனோம். எங்கள் சிறிய தந்தையார் திரு ந.மு.கோவிந்தராச நாட்டார் அவர்களும் தமிழ்ப்புலமையில் சிறந்து விளங்கியமையோடு பல நூல்களையும் எழுதியுள்ளார்கள். என் அருமைத்தம்பி திரு வே.நடராச நாட்டாரும் மிகுந்த ஒழுக்க சீலராய்க், கடவுள் அன்பும், தமிழ்ப் பற்றும் கொண்டு, ‘தந்தையறிவு மகனறிவு’ என்பதற்கேற்ப விளங்குகின்றார்கள். இனி என் தந்தையாருடைய நூல் நயங்களைப் பற்றியோ, பிறவற்றைப் பற்றியோ நான் எழுதுவது மிகையாகும் என்று நினைக்கின்றேன். இந்த நூற்றாண்டு விழாவில், தஞ்சைக்கு அணித்தாக உள்ள சிற்றூரில் பிறந்து, தம் வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணியாற்றிய அவர்கள் பெயரால் ஒரு கல்வி நிறுவனம் அமையவேண்டும் என்று எண்ணுகின்றேன். அதற்கு ஆவன செய்யுமாறு தமிழக அரசைப் பணிவுடன் வேண்டுகிறேன். அப்பா அவர்கள் எனக்குத் தெரிந்த வரையில் யாரிடமும் சினந்து பேசியதே இல்லை. அப்படி ஒரு வேளை அவருக்குச் சினமேற்பட்டால் “ஏது முட்டாள் தனமாக இருக்கிறது” என்பார்கள். அப்படி ஒருமுறை என் கணவர் சேதிராயர் அவர்களிடம் “என்னப்பா முட்டாள் தனமாக இருக்கிறது” என்று சொன்னார்கள். உடனே என் கணவர் தேம்பித் தேம்பி அழுதார்கள். பின்னர், அவர்கள் பக்கத்தில் வந்து நின்று கொண்டு “என்ன சொல்லிவிட்டேன், எதற்காக அழுகிறாய்?” என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள், குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்த லரிது” (திருக்குறள் 29)” எனக்கூறி அழுதவுடன் தந்தையார் பலமாக நகைத்துவிட்டுப் “போதும் நிறுத்திவிடு” என்றார்கள். இந்த நிகழ்ச்சி என் கண்முன்னே நிற்கின்றது. இப்படி நெருங்கிய உறவினர்களிடம் நடந்துகொண்டது போலவே பகைவர்களிடமும் எளிமையும் இனிமையுமாகப் பேசி அவர்களை வசப்படுத்திவிடுவார்கள். குன்றக்குடியின் சைவசித்தாந்த மகாசமாசத்தில் என் தந்தையார் பேசுகின்றபொழுது “மையிலங்கு நற்கண்ணி பங்கனே” என்று தொடங்கும் திருவாசகப்பாட்டினை எடுத்துரைக்கும்பொழுது உணர்ச்சி வசப்பட்டு மெய் மறந்து நின்றுவிட்டார்கள். அப்பொழுது சுந்தர ஓதுவார் மூர்த்திகள் “முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே” என்ற திருவாசகத்தை ஓதி அவையினரையும், அப்பா அவர்களையும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டார்கள். இந்த நிகழ்ச்சி மறக்க முடியாத ஒன்று. என் தந்தையாரின் உயிர் நண்பர்கள் அ.மு.சரவண முதலியார் அவர்கள், தமிழவேள் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள், கரந்தைக் கவியரசு அரங்க வேங்கடாசலம் பிள்ளை அவர்கள், தமிழ்த்தாத்தா, வரத நஞ்சையபிள்ளையவர்கள், பண்டித கந்தசாமி பிள்ளையவர்கள் போன்றவர்கள் எனக்கு அன்புத் தந்தையாகவே விளங்கி வந்தார்கள். அவர்கள் அனைவரையும் என்னால் மறக்க முடியாது. இப்படியே அவருடைய அருமை மாணவர்கள் பலரும் என் உடன்பிறப்பாளராகவே விளங்கிவந்தார்கள். *இற்றைக்கு 73 ஆண்டுகள் நிரம்பிய எனக்கு என் இளமைக்கால நிகழ்ச்சிகள் எல்லாம் என் கண்முன் தோன்றி மறைகின்றன. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட என் அருமைத் தந்தையார் புகழ் பல்லாண்டு வாழ்வதாக. இத்தகைய பல செய்திகளை எடுத்துரைக்கப் புகுந்தால் “விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்” ஆகலின், இத்துடன் அமைகின்றேன். நாட்டாரையாவின் கடிதங்களும் கருத்துக்களும் ந.மு.வே. நடராசன் சட்டக் கலாசாலை போலும் பெரிய கல்லூரிகளில் ஆசிரியர்களா யிருப்போர் உயர்ந்த கல்வியும், சிறந்த குணங்களும், உலக அனுபவமும் வாய்ந்தவர்களாய் இருப்பார்கள், மற்றும் அவர்கள் பிறப்பினாலும், ஏனோரின் சேர்க்கையாலும், தங்கள் முயற்சியாலும் எவ்வளவோ சிறந்த பண்புகளுக்கு உரியவர்களாதல் கூடும். அவர்களுக்குள்ளே சிற்சில இயல்புகளால் சிற்சிலர் மேம்பட்டிருத்தலும் கூடும். அவர்கள் கற்பிக்குங்கால் பாடத்திற்குப் புறம்பான பொருள்களைக் கூறினும் அவற்றையும் கருத்துடன் கேட்கவேண்டும். மற்றும் அவர்கள் கூறும் பொருள்களைக் கேட்பதோடமையாமல், அவர்கள் தாம் கூறுவனவற்றை எவ்வாறு ஒழுங்குசெய்து எத்தகைய தோற்றத்துடன், எத்தகைய குரலில் எவ்வளவு ஆர்வத்துடன் கூறுகின்றார்கள் என்பதனையும் மற்றும் அவர்கள்பாற் காணப்படும் சிறந்த பண்புகளையும் நுட்பமாக அறிந்து உள்ளத்தே பதியவைக்கவேண்டும். மற்றும் உயர்ந்த நோக்கங்கள் கொண்ட ஆசிரியர்களிடம் அடுத்தடுத்து நெருங்கிப் பழகுதல் பொருந்தும். (27.11.1938-இல் மைந்தனுக்கு எழுதிய கடிதம்) 2. “தமிழ் நூல்களிலுள்ள உயரிய கருத்துக்களைக் கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்துவதே என் உட்கோள். பின்பு அது செய்யப் பெறுவதாக.” (கடிதம் 22.01.1939) 3. “திருக்குறள் முழுதும் பலமுறை படிக்க வேண்டிய நூல். அதில் 60, 61, 62, 63 அதிகாரங்களையாவது முதலில் மனப்பாடம் செய்து கொள்க. 60 - ஊக்கமுடைமை 61 - மடியின்மை 62 -ஆள்வினையுடைமை 63 - இடுக்கண் அழியாமை 19.12.1940-இல் எழுதிய கடிதம் 4. “பொதுவாக ஆங்கிலக் கல்லூரியில் படித்தவர்களைவிடப் படிக்காதவர்கள் நல்லரென நினைக்கும்படி இருக்கிறது.” “கடவுள் பக்தி, வாய்மை, அன்பு, ஊக்கம், சிந்தனா சக்தி, சிக்கனம், இவை போல்வன வாழ்க்கையை மேன்மைப்படுத்தும்.” (14.09.1942 -இல் மைந்தனுக்கு எழுதிய கடிதம்) 5. “குடும்ப நிருவாகம் எவ்வளவு கடினமானது என்பதை நான் நன்றாய் அறிந்து வருகிறேன். அவ்வகையில் நீ பயிற்சி பெறுதல் வேண்டும். எண்ணில் கோடிப் பொது மக்களில் ஒருவனாக நீ வாழ்ந்தால் என்ன பயன்? பகுத்தறிவுடன் உண்மையும் ஊக்கமும் உடையையாயின் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். திருக்குறளை இடைவிடாது படித்து வருக”. (13.01.1943) நக்கீரர் அந்தணர் என்பாரைக் குறித்துக் கூறியது 6. “இங்குக் கூறியவற்றால் நக்கீரர் பார்ப்பனராவர் என்பதற்கு யாதும் சான்றின்மை காண்க. அவர் அந்தணராகார் என்பது எம் கருத்தன்று. இன்ன மரபினர் அவர் எனத் துணிதற்குத் தக்க மேற்கோள் எமக்கு இதுகாறும் கிடைத்திலது. வேண்டிடின் யாம் அவரை விருந்து போற்றிய வேளாளர் என்றும், அகப்பொருள் விரித்த புகழ்ப்பெருவணிகர் என்றும், புவியரசேத்து கவியரசர் என்றும், செந்தண்மை பூண்ட அந்தணர் என்றும், பிறவாறும் பாராட்டுதல் பொருந்துவதாகும்.” (நக்கீரர்) ஆரியர் தமிழர் என்ற வேறுபாட்டைக் கருதிக் கூறியது. 7. “பல்லாயிரம் யாண்டுகளாக ஓரிடத்திலிருந்து பழக்க வழக்கங்களில் ஒன்றுதலுற்று ஒரு கடவுளை வழிபட்டு நண்பராய் வாழ்ந்து வருவோர்க்குள் காலதேச இயல்புகளுக்கேற்பச் சில காரணங்களால் பிரிவு உண்டாயினும் அதனை நீடிக்க விடாது பிரிவின் காரணங்களை அறிந்து விலக்கி ஒற்றுமையாய் வாழ்தலே கடனாம், பழைய தமிழ்ச்சங்க நாளிலே பிராமணருள்ளிட்ட அனைவரும் தமிழைத் தங்கள் தாய் மொழியாகக் கொண்டு மதித்துப் போற்றி வந்திருக்கின்றனர் என்பதும், மற்றும் சிறிது பிற்காலத்திலிருந்த திருஞான சம்பந்தர் முதலிய பெரியாரெல்லாம் தம்மைத் தமிழரென்றே பெருமையுடன் பாராட்டி வந்திருக்கின்றன ரென்பதும் அறியற்பாலவாம்.” (கள்ளர் சரித்திரம்) “தமிழ் நாட்டிலுள்ளாரில் பிராமணரை ஆரியரென்றும், ஏனையோரைத் திராவிடரென்றும் பிரித்தலும் பொருந்தாது. ஆரிய நாட்டிலிருந்து பிராமணர் மட்டும் தமிழகத்திற் குடியேறினரென்பது பொருந்தாமையின் தமிழருள்ளும் ஆரியர் கலந்திருக்கின்றனர் என்பது உண்மை. பிராமணரும் தமிழருடன் வதுவையாற் கலந்துவிட்டனர் ஆதலின் அவரை வேறுபிரிப்பதென்பது எங்ஙனம் பொருந்தும்?” (கள்ளர் சரித்திரம்) “திராவிடம் என்ற சொல்லானது தமிழ் எனத் திரிந்ததென்று ஒரு சாராரும், தமிழ் என்னும் சொல்லே திராவிடமாயிற்று என மற்றொரு சாராரும், திராவிடம் என்பது நாட்டின் பெயர், தமிழ் என்பது மொழியின் பெயர் எனப் பிறிதொரு சாராரும் இங்ஙனம் பலபடக் கூறுவர். கனகசபைப் பிள்ளையவர்களோ இரு சொல்லையும் இயைபில்லாத வேறுவேறு எனக்கொண்டு திராவிடர் வேறு, தமிழர் வேறு என்பர். அவர் திராவிடர் முன்னும், தமிழர் பின்னுமாக இந்நாட்டிற் குடியேறினர் என்பதன்றித் திராவிடராவார் இவர், தமிழராவார் இவர் என விளங்க உரைத்திலர். கங்கைக் கரையிலுள்ள தமிலித்தி என்ற இடத்திலிருந்து போந்தவர் தமிழர் என்கின்றனர். தமிழர் வடக்கினின்றும் போந்தவர் என்பது நிறுவப்படும் பொழுது அவர் கூற்று உண்மையாகலாம், பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர் உறைவிடம் தமிழகம் ஆய தென்னாடே யென்பதும், அவர்கள் ஓரொருகால் வடக்கிலும் சென்று ஆண்மை காட்டியிருக்கின்றன ரென்பதுமே நாம் காணலாகின்ற உண்மைகள். தமிழ் என்னும் சொல் தொன்று தொட்டு மொழியின் பெயராகவும், நாட்டின் பெயராகவும் வழங்கி வருகின்றது. திராவிடம் என்னும் சொல் பழைய தமிழ் வழக்கில் காணப் படுவதன்று. திராவிடன் என்பதன் திரிபு தமிழ் என்பது சிறிதும் பொருத்தமில் கூற்றாம். (கள்ளர் சரித்திரம்) 8. கல்வியால் விளையும் இன்பம் “கல்வியால் விளையும் இன்பத்தைச் சிறிது நோக்குவோம். உலகினர் பலராலும் நன்கு மதிக்கப்படுதலே இன்பம் விளைப்பதொன்று. ஆயின், உண்மைக் கல்வியுடையார்க்கு அங்ஙனம் தம்மைப் பிறர் மதித்தல் முதலியவற்றால் உண்டாகும் இன்பம் அத்துனைப் பெரிதன்று. பிற்றை நாளில் உலகெலாம் போற்றும் பெரும்புலமை யெய்தினார் சிலர் தாம் உயிர்வாழும் நாளில் யாராலும் மதிக்கப்படாதிருத்தலும் அவர் அம்மதிப்பை ஒன்றாகக் கொள்ளாது புலமை நடாத்திச் சேறலும் கண்டும் கேட்டும் அறியற்பாலனவே. கல்வியுடையார் முன் அறியாத நுண் பொருள் பலவற்றைத் தமது கலையுணர்வால் அறியுந்தோறெய்தும் இன்பமே சாலவும் பெரிது. (கட்டுரைத் திரட்டு) 9. உழவுத் தொழில் ஓங்கச் செய்யவேண்டுவன. முதலாவதாகச் செய்ய வேண்டியது மருத்துவம். “நிலங்களின் பண்புகளை உள்ளவாறு சோதித்துணர்ந்து நிலையான குறைந்த வரியை விதித்தலாகும். குறைந்த வட்டிக்குக்கடன் கொடுத்தல் வேளாண்மை நுட்பங்களை யாவரும் நன்கு அறியும்படி செய்தல் முதலியன அடுத்துச் செய்தற்குரியன. இவை ஓரளவு செய்யப்பட்டுவரினும், இன்னும் மிகுதியாகவும் விரைவாகவும் செய்யப் படவேண்டும். மற்றுக் கல்வி கற்றுப் பட்டம் பெற்றவர்களும் உழுதொழில் செய்ய முற்பட்டுத் தொழில் செய்வதைக் குறைவாக மதிக்கும் எண்ணத்தை மாற்றுதல் வேண்டும்.” ( கட்டுரைத் திரட்டு - பகுதி - 2 ) நாட்டார் ஒரு சொல்லோவியம் தமிழ்ப் பெரும்புலவர், தமிழ்ச் சான்றோர், பேராசிரியர், வித்துவான் சரவண ஆறுமுக முதலியார் எம்.ஏ., பி.ஓ.எல்., எல்.டி.* காலப் பின்னணி இருபதாம் நூற்றாண்டுப் பிற்பகுதித் தமிழ்வானில், தமிழ்ப் புலவர்கள், பேராசிரியர்களிடையே தாரகை நடுவண் தண்மதிபோல் விளங்கிப் புலமை நடாத்திய நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தனிப்பெருஞ் சிறப்புடையவராய், இன்றும் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து விளங்கி நிற்கின்றார். நாவலரவர்களின் பன்னூறு மாணாக்கர்களில் ஒருவனாகிய யான் என் நினைவிலிருக்கும் வரை அவர்களது குணநலங்கள், கற்பிக்கும் ஆற்றல் ஆகியவற்றில் சில குறிப்புக்களை அவர்களது நூற்றாண்டு விழாக்காலத்தில் புகழ் அஞ்சலியாகத் தருவது பொருத்தமானதே. 1925- 27ஆம் ஆண்டுகளில் எஸ்.பி.ஜி. (Bishop Heber) கல்லூரியில் பி.ஏ வகுப்பில் சிறப்புத்தமிழ் (Master Group vi) மாணாக்கனாகவும், 1933 - 35இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கலைத் (Arts) துறையில் முதுகலைப் படிப்பில் (Post Graduate - M.A) ஈராண்டுகள் மாணாக்கனாகவும், குடும்பநண்பன் என்னும் தனிப்பட்ட முறையிலும் யான் நாவலரவர்கள்பால் தமிழ் பயின்றுள்ளேன். தாரகை நடுவண் தண்மதிபோல் என்றேன். அதையே வேறு ஒருவிதமாகவும் கற்பனை செய்து பார்க்கலாம். விக்கிரமாதித்தன் பேரவைக் களத்தில் காளிதாசர் உள்ளிட்டு விளங்கிய ஒன்பது புலவர்கள் குழுப்போல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நாவலரவர்களை மையமாகக் கொண்டு, சுவாமி விபுலானந்தர், நாவலர் பாரதியார், டாக்டர் சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை, பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சேதுசமஸ்தான சர்க்கரை இராமசாமிப் புலவர், திருவாவடுதுறை ஆதீனஞ்சார் புலவர் பொன் ஓதுவார், சோழவந்தான் கந்தசாமியார், வரலாற்றாசிரியர் கோவிந்தசாமிப்பிள்ளை ஆகிய ஆசிரியர் குழுவை ஒப்பிட்டுக்கூறலாம். நெடுமாலென நிமிர்ந்த தோற்றம், சற்றுநீண்ட எடுப்பான மூக்கு, ஊடுருவிப் பார்க்கும் கண்கள், அகன்று பரந்த நெற்றியில் திருநீற்று முப்பட்டைகளின் நடுவில் சந்தனப் பொட்டு, தாழ்ந்து நீண்ட கைகள், உயரத்துக்கு ஏற்ற மிகு பருமனும் ஒடிசலுமில்லாத ஒத்தசதைப்பிடிப்பு, தூயவெள்ளை எட்டு முழத்தார்பாச்சு மடிப்புவேட்டிக்கட்டு, வெள்ளிய தலைப்பாகை, கழுத்தில் திறப்பு இல்லாத மூடிய முழுக்கை - தாழ்ந்த சட்டை (Close Long Coat), வலக்கையில் ஒற்றைச்சிவப்புக்கல் இழைத்தமோதிரம், நறுக்குமீசை, இன்சொல்லும் அதுகாட்டும் புன்முறுவலும் - இதுவே சுருக்கமாக மனக்கண் காணக்கூடிய நாவலரவர்களின் தோற்றப்பொலிவு. சிவபெருமான் திருவடிக்கே வைத்த நெஞ்சு. ‘குணநலம் சான்றோர் நலனே’ என்றபடி சிறந்த ஒழுக்கமுடைமை, வகுப்பில் நுழைந்தவுடனேயே மாணாக்கர்களை நோட்டம் விட்டுப் புன்முறுவலிக்கும் வாழ்த்து. ஆசிரியத்திறன் - பழமையும் புதுமையும் கலந்ததொரு பெருமை அறுபது ஆண்டுகட்கு முன்னரே இலக்கியத்திறம் ஆய்ந்து காண்பதில் புதுமை, பழமையும் போற்றுதல் ஆகிய இவ்வுத்தி நாவலரவர்களது தனிச்சிறப்பு. பண்டைத்தமிழகத்தில் நிலவிய ஆசிரியர்களின் இலக்கணங்களும், தற்கால மாணாக்கர்களுக்கு எடுத்துக்காட்டாய்த் திகழும் திறமும் இவர்கள்பால் கலந்து களிநடம் புரிந்தன. தொல்காப்பியப் பாயிரத்தில் நச்சினார்க்கினியர், நல்லாசிரியரியல்புக்கு ஆத்திரையன் பேராசிரியன் கூற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அவ்வியல்புகள் நம்மாசிரியருக்கும் பொருந்தும். “ வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும், வான்யாறன்ன தூய்மையும், வான்யாறு நிலம்படர்ந்தன்ன நலம்படர் ஒழுக்கமும், திங்களன்ன கல்வியும், திங்களொடு ஞாயிறன்ன வாய்மையும், யாவதும் அஃகா அன்பும், வெஃகா உள்ளமும், துலைநாவன்ன சமநிலை உளப்பட எண்வகை உறுப்பினர் ஆகி” என்ற எட்டு அடிப்படைத் தகுதிகளைக் கொண்டோரே நல்லாசிரியராவர். மேலும், இப்பன்னருஞ் சிறப்பின் நல்லாசிரியர் தொன்னெறி மரபும், உலகியலறிதல், பொறை, நிறை, சொற்பொருள் உணர்த்தும் சொல்வன்மை, கற்போர் நெஞ்சம் காமுறப்படுதல் ஆகிய சார்புத் தகுதிகளும் பெற்றிருப்பர். நம் நாயகர் நாட்டார் அவர்களும் இத்தன்மைத் தொன்னெறிவாய்ந்தவர். கலைபயில் தெளிவும் கட்டுரை வன்மையும் வாய்ந்த இவர், தொல்காப்பியப் புறத்திணை இயலிற்கண்ட “எட்டுவகை நுதலிய அவையத்தானும் என்பதற்கு நச்சினார்க் கினியர் மேலே காட்டிய எட்டுவகை அடிப்படைத்தகுதிகளோடு உருவகமாக அவர்களுடைய நடை, உடை, பாவனைகளை ஆசிரியமாலைச் செய்யுளில் இருந்து எடுத்துக்காட்டி உருவக ஓவியம் தீட்டியுள்ளார். “ குடிப்பிறப்பு உடுத்து, பனுவல்சூடி, விழுப்பே ரொழுக்கம் பூண்டு, காமுற வாய்மை வாய்மடுத்து மாந்தித், தூய்மைஇல் காதல் இன்பத்துத் தூங்கி, நடுவுநிலை நெடுநகர்வைகி, அழுக்காறின்மை, அவாஇன்மை என இருபெருநிதியம் ஒருதாமீட்டும் தோலாநாவின் மேலோர்.” இதில் இவர்கள் உடுப்பது, சூடுவது, பூண்பது, குடிப்பது, தூங்குவது, வாழ்வது, ஈட்டுவது முதலியவற்றை உருவகமாக விளக்கியுள்ளார். இவற்றுள் பிறர் நிலைகண்டு பொறாமைப்படாமை, பேராசை இரண்டும் இல்லாத செல்வ அமைதிநிலை மிகவும் போற்றற்குரியன. இவ்வளவும் அமைந்தவர் நாட்டார் அவர்கள் என்றே உறுதியாகக் கூறிவிடலாம். இத்தகு பேராசிரியர், தற்கால முறைக்கேற்பவே அப்போதே தாய்மொழியைப் பயிற்றுவித்தார். மாணாக்கர்களை முறைப்படி வழக்கின் இலக்கணம் இழுக்கின்றறிதல், பாடம் போற்றல், கேட்டவை நினைத்தல், ஆசான் சார்ந்தவை அமைவரக்கேட்டல், அம்மாண்புடையோர் தம்மொடு பயிறல், வினாதல், வினாயவை விடுத்தல் போன்ற கற்பித்தல் முறைகளைத் தாமும் கையாண்டு மாணாக்கர்களை, மாண்+ஆக்கர்களாகவும், நல்ல மொழித்திறமுடைய மாண்+நாக்கர்களாகவும் ஆக்கியுள்ளார். இனி அவர்கள் செய்யுள் கற்பித்த திறனைச் சுருக்கிக் கூறுவேன். நிறமும் அழகும் எழிலும் நறுமணமும் வாய்ந்தமலர் ஒன்றை அதன் இதழ்களைக் குலைத்து மோந்து கசக்கி வீசிவிடாமல், அதன் நிறம், அழகு, எழில் மணம் முதலியவற்றில் ஈடுபட்டு இன்புறுதல்போலவே செய்யுளையும் முதலிலேயே சொல் சொல்லாகப்பிரித்து உரை சொல்வது, உரைநடையாக்குவது, பொருள் கேட்பது முதலியவற்றைச் செய்து பாழ்படுத்திவிடாமல், முழுச்செய்யுளையும் முதலில் ஓரிருமுறைகள் ஏற்ற இசையோடு பொருள் விளங்குமாறு படித்துப்பாடிக் காட்டினால்தான், சொல்லும் பொருளும், சுவையும், செய்யுளின் உணர்ச்சியும் மனத்திற்படியும். செய்யுட்கு இசை உயிர்நாடியாம். “பாவென்பது சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமல் பாடம் ஓதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுள் என்று உணர்வதற்கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை”யாகும். இவ்வோசைநயம் சிதையாமல் செய்யுளைச் சுவைத்தல் முறையாகும். பின்னர்ப் பாநலம், தொடைநலம், நடை நலம், அணி நலம், இலக்கண (அமைதி)க்குறிப்புக்கள், உவமை உருவகப் பொருத்தங்கள், அணி அமைதி, மேற்கோள்கள், அரிய சொல்லாட்சி முதலியவற்றையும் விளக்கியது முறையேயாம். இக்காலத்தில் நூற்றுக்கு ஓரிருபுலவர்கள் கூட இது போன்று செய்யவல்லாரிலர். இவ்வாறு மாணவர்களின் மனத்தைச் செய்யுளில் ஈர்த்துக் கவனிக்கச்செய்யவும், செய்யுட் பகுதிகளை மேலும்மேலும் கிளர்ச்சியோடு படிக்கத் தூண்டுவதற்கும், புறத்தே சென்றுலவும் மாணவர் மனத்தைக் கவர்ந்து நடைபெறும் பாடத்தில் ஈடுபடுத்தவும், செய்யுளைக் கேள்விக்கு இன்பமாக அதற்குரிய ஓசையில், (இசை அரங்குபோல் இராகம், தாளம், சுரம்பாடுதல் போலன்று,) செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் ஓசைகளைக் கொண்ட நாற்பாக்களையும், தாழிசை, துறை, விருத்தம் போன்றவற்றின் ஓசைகளையும் தோன்ற எடுத்துப் படித்துக்காட்டுவது இவரது தனிப்பெருஞ்சிறப்பு. ஆசிரியரவர்கள் பெரும்பாலும் வெண்பாவைச் சங்கராபரணத்திலும், அகவலை ஆரபி தோடிகளிலும், கலிப்பாவைப் பந்துவராளியிலும், தாழிசையைத் தோடியிலும், துறையைப் பைரவியிலும், விருத்தத்தைக் காம்போதி கல்யாணிகளிலும் பொருத்திப்படிப்பது சிந்தைக்கும் செவிக்கும் நல்விருந்தாயிருந்ததில் வியப்பில்லை. ஓசை நயத்தையும் பொதுக் கருத்தையும் அறிந்த பின்னர்ப் பதவுரை, பொழிப்புரை, இலக்கணக் குறிப்புக்கள், அணிகள், உவமை உருவக அணிப்பொருத்தங்கள், கதைகள், சொல்பொருள் நயங்கள், நடை தொடை நலங்கள், கவிமாந்தரின் இயல்புகள் (Characteristics), பயின்ற சுவைகள் (Emotions) முதலிய இலக்கியத் திறனாய்வு முறைகளில் பாடம் தொடர்ந்து நடத்தியது இவர்களது நுண்மாண் நுழைபுலத்தையும், ஆசிரியத் திறமையையும் காட்டவல்லனவன்றோ? விரிப்பிற்பெருகும். செய்யுளைநடத்தியது போலவே இலக்கணத்தையும் மாணாக்கர்கள் தற்போதுபோல வெறுக்காமல், விரும்பிப் படிக்கும் தற்கால முறைகளை அக்காலத்தேயே இவர்கள் கையாண்ட முறைமிகவும் போற்றற்பாலது. இலக்கியம் கண்டதற்கே இலக்கணமாதலின் இலக்கியங்களில் வரும் எடுத்துக்காட்டுக்களை வழக்கத்தில் வரும் எடுத்துக்காட்டுக்களை அடிப்படையாகக் கொண்டே தெரிந்ததிலிருந்து தெரியாததற்கும், சிறப்புக்களிலிருந்து பொதுவுக்கும் (Particular to general, known to the unknown) போகும் விதிவருமுறை (Inductive) வழி அறிய இலக்கணப்பகுதிகளைக் கற்பித்தலால் மாணாக்கர்களுக்கு வெறுப்பும் சலிப்பும் இலக்கணத்தில் ஏற்பட்டதில்லை. மாறாக, “ எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழு முயிர்க்கு” (திருக்குறள் 392) என்னும் மொழி உண்மையினை நன்றாக உணர்ந்து மேலும் மேலும் கற்றனர். இவ்வாறு நல்ல தமிழாசானாய்க் கற்றவர்கள்பால் தமிழ்ப்பற்று, தமிழ்நாட்டுப் பற்று, உலகத்தோடு ஒட்ட ஒழுகும் பண்பாடு ஆகியவற்றைச் சொல்லளவில் மட்டும் அன்றிச் செயலிலும் செய்து காட்டி மாணாக்கர்களை நல்வழிப்படுத்திய ந.மு.வே நாட்டார் என்று குழைவுடன் அழைக்கப்பெறும் நாவலரவர்கள் புகழ் “ மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந்தனரே” ’(புறநானூறு 165:1,2) என்றாங்கு இன்றும் என்றும் நிலைத்து ஓங்கும் என்பதில் ஐயமில்லை. விரிவஞ்சிச் செய்யுள், இலக்கணம் நடத்தும் இவர்தம் திறமையை மட்டும் சுருக்கமாகவே கூறியுள்ளேன். தக்கவர்கள் இவரது வாழ்க்கை வரலாற்றை விரிவாக வெளியிடல் வேண்டும். பேராசிரியர் மது.ச.விமலானந்தம் (கரூர்) அல்லது பேராசிரியர் பி. விருத்தாசலம் (கரந்தை) இதற்குரியர். இனி இவர்தம் நூற்றாண்டு விழாக்காலத்தில் நாவலர் ந.மு.வே.நாட்டார் அவர்கள் பெயரில் கல்வி அறக்கட்டளை, நினைவுச் சொற்பொழிவுகள், திருவுருவச்சிலை நிறுவல், மாநகரங்களில் நூற்றாண்டு விழா எடுத்தல் முதலியவற்றைத் தமிழ்ச் சங்கங்கள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், தமிழக அரசு, கல்வி நிலையங்கள், இலக்கிய ஏடுகள் ஆகியபலவும் ஒருங்கே ஒற்றுமையுடன் செய்தல் வேண்டும் என்று கூறி அமைகின்றேன். நாட்டாரின் சங்கப் புலமை டாக்டர் வ,சுப. மாணிக்கம் பிஎச்.டி., டி.லிட்., தொல்காப்பியத் தகைஞர் (தமிழ்ப் பல்கலைக்கழகம்) என் ஆசிரியப் பெருந்தகை நாட்டாரையா தமிழாசிரியனுக்கு இன்றியமையாத இருவகைத்திறமும் வாய்ந்தவர். எவ்வகைத் தமிழ் நூல்கள் எவ்வளவு படித்திருந்தாலும் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு முதலான சங்க இலக்கியக் கல்வி இல்லாதாரைத் திறமான தமிழ்ப்புலமை பெற்றவராகச் சொல்ல முடியாது. ஆற்றுநீர் கடலிற் போய்க் கலக்கின்றது என்றாலும் ஆற்றிற் குளித்தோரைக் கடலிற் குளித்துத் திளைத்தவராகச் சொல்வதுண்டா? சொல்லாலும், பொருளாலும், பண்பாலும், செறிவாலும், நடையாலும் ஓங்கிய சங்கவிலக்கியம் கற்றாரின் புலமையே வேரோடிய தமிழ்ப்புலமையாகும். புலமையும் பண்பும் ஆசிரியர் நாட்டார் உவர்ப்பற்ற ஆழமான சங்கக் கடலில் திளைத்த புலமைச் செல்வர். சங்கப்புலமையோடு சங்கப் பண்பும் இணைந்த சான்றோர். சங்கப் பண்பு என்பது என்ன? பெருமிதமான உயர்ந்த நெஞ்சம்; தானும் தாழாது பிறரையும் தாழ்த்தாத சால்புடைமை. “ செய்யா கூறிக் கிளத்தல் எய்யா தாகின்றெஞ் சிறுசெந் நாவே” (புறம். 148) என்ற வன்பரணமே சங்கப் பண்பு. நாவலரையாவின் பேச்சுநடை பொது வழக்கு நடையாக இராது. பாவாணர் வாய்மொழி நடைபோலக் கொச்சை யில்லாத் தூய தமிழ்நடையாகவே இருக்கக் கண்டோம். இதற்கு அடிப்படை அழுத்தமான சங்கத் தோய்வு. ஆத்திசூடி முதல் அகநானூறு வரை உரைகண்ட உரைவள்ளல் நம் நாட்டார். எந்த நூலுரையிலும் சங்க இலக்கியப் பின்னலைக் காணலாம். பின்னூல்களையும் சங்க நூல்களொடு உறவாக்கும் உரையழுத்தம் இவரிடம் உண்டு. “ அறிவுடை யொருவனை அரசனும் விரும்பும்” என்னும் அதிவீரராமரின் வெற்றிவேற்கைக்கு, ‘அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்’ என்ற புறநானூற்றுக் கருத்தை ஒப்பிட்டுக் காட்டுவர். உரைக்கொடை நாட்டாரின் சங்கப் பனுவற் புலமையும் ஆராய்ச்சியும் கபிலர், நக்கீரர், கட்டுரைத்திரட்டு, வேளிர் வரலாற்று ஆராய்ச்சி நூல்களாற் பெறப்படும். எனினும் தலைசிறந்த சங்கத்தொகையான அகநானூற்றுக்கு நாட்டார் பெருமான் வரைந்த உரை தமிழுக்கு வழங்கிய பெரிய உரைக்கொடையாகும். இந்நூலுக்குச் சில குறிப்பும் உரையும் ஒருசில பாக்கட்கே முன்பு இருந்தன. பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்பவன் இந்நெடுந்தொகைக்கு அகவல் நடையில் கருத்துரைத்தான் என்னும் செய்தி காணப்படுகின்றது. எனினும் அது கிடைக்க வில்லை. தொல்காப்பியவுரை கண்ட பேராசிரியர் குறுந்தொகைக்கு உரை எழுதினார் என்ற வரலாறு உண்டு. நச்சினார்க்கினியர் கலித்தொகைக்கு உரை வரைந்தார். இடைக்கால உரையாளர் எவரும் அகநானூற்றுக்கு முழுவுரை எழுத முன்வரவில்லை. ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள் நெடிய வாகி அடிநிமிர்ந் தொழுகிய இன்பப் பகுதி இன்பொருட் பாடல் எனப் பாராட்டப்படும் அகநானூறு ஓர் முழுவுரை பெறுதற்குப் பன்னூறாண்டு தவங்கிடந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் மூவரை ஈன்றது. இருவேங்கடங்கள் என்று சொல்லத்தக்க நாவலர் வேங்கடசாமி நாட்டாரும் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையும் இவ்விரு புலவரும் உரையிரட்டையர்களாகி உரை எழுதப் பொருட்கொடை செய்த பாகனேரி காசிவிசுவநாதரும் ஒருகாலத்துத் தோன்றியமை யால், நீண்ட மலடி மகப்பெற்றாற்போல நெடுந்தொகை என்ற அகநானூறு உரைப்பேறு எய்திற்று. சங்கப் பனுவல்கட்கு, சிறப்பாக அகநானூற்றுக்கு உரைஎழுதப் புகின், இலக்கண இலக்கியவறிவு மட்டும் போதா, இயற்கை, வரலாறு, இசை, குழுமம், காலச்சூழல், பாலியல், அரசியல், தொழிலியல், தொல்லியல் என்றாங்கு அறிவுப்பன்மை வேண்டும். சங்கச் செய்யுளின் கட்டுமானம் அறிவுப் பிணையல் நிறைந்தது. நாட்டார் இளமைக்காலம் தொட்டே பல்லறிஞராக விளங்கினார். ஆதலின் திருவிளையாடற்புராணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு முதலிய தமிழ்ப்பெருநூல்கட்கு உரை எழுதத் தக்கார் ஆனார். உரை விளக்கம் நாட்டாரின் சங்கப் புலமைக்கு அகத்திலிருந்து சில பாட்டுக்கள் பார்ப்போம். ‘இரவுத் துயில் மடிந்த தானை’ (24) என்றால் போர்க்களத்தில் படைகள் இரவு தூங்கிப்போயின என்று பொருள் கொள்ளலாமா? அது மறப்படைக்கு இழுக்காகுமே என்று எதிர்நோக்கிய நாட்டார், ‘பலநாளும் துயிலின்றிப் போர் செய்து வினைமுற்றும் காலை துயின்றதானை’ என்று விளக்கம் செய்தனர். வெற்றிக்குப் பின் தூங்கினதானை என்பது கருத்து. “ மாட மாணகர்ப் பாடமை சேக்கைத் துனிதீர் கொள்கைநங் காதலி” (124) என்று பாடுவார் இளவேட்டனார். தலைவன் பிரிந்த காலத்து வெறுப்போடு இருப்பது தலைவிக்கு இயல்பு. அவ்வாறாகவும் வெறுப்பு ஒழிந்த காதலி என்று பாடுவது பொருந்துமா? பொருந்தும் என்பர் நம் நாட்டார். தலைவன் பிரிவு தலைவிக்கு வருத்தம் தருவதொன்றுதான். எனினும் குறித்த காலத்தில் வருவேன் என்ற அவன் உறுதிச்சொல்லை நம்பி ஆற்றி வீட்டுக் கடமை செய்வதே மனைமாட்சி எனப்படும். கணவர் சொற்பிழையாத கற்பினால் வருத்தத்தை மாற்றிக் கொண்டவள் என்று தலைவிக்கு ஏற்றம் கூறுவர் நாட்டார். பெண்துணை சான்றனள் இவள் (315) என்ற தாயின் கருத்துக்கு, தன் மகள் பெரிய பெண்ணாயினாள் எனவும் நினைத்தபடி வெளியில் சுற்றித் திரியும் பேதைப் பருவம் கடந்து விட்டாள் எனவும் விளக்கம் தருவதைப் பார்க்கின்றோம். நாவலர் நாட்டார்க்கு நாம் செய்யும் நன்றி சங்கவிலக்கியத்தை நன்கு மதித்தலும் வழிவழிக் காத்தலும் வரக்கற்றலும் ஆம். புரியாத நடையுடையது சங்க விலக்கியம் என்ற ஒருசாராரின் அவலக் கருத்து நீர் சுடும் என்பது போன்ற மயக்க மருளாகும். இலக்கண வழக்கு முரண்பட்ட அயல்மொழிகளைப் புரியும் என்று பொருள் கொட்டிப் படிக்கும் தமிழர்கள் தம் தாயிலக்கியம் புரியாது என்று புலம்புவது பேதைமையுள் எல்லாம் கலப்பற்ற பேதைமையாகும். சங்கத் தமிழை நீர்தெளிந்த கோதாவரிக்கு கம்பர் ஒப்பிடுவதைச் சிறிதேனும் எண்ணுங்கள், புரியும். நாவலர் நாட்டார் ஐயாவின் நல்ல பெருவிளக்கம் ந,ரா.முருகவேள், எம்.ஏ., எம்.ஓ.எல்., முன்னுரை நாவலர் பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் (1884-1944) அண்மைக் காலத்தில் இருந்த தமிழ்ப்பெரும் சான்றோர்களில் தலைசிறந்த பெரும் புலவர் ஆவார். அவர்களைச் சைவத் தமிழுலகம் நன்கு அறியும். அகநானூறு - சிலப்பதிகாரம் - மணிமேகலை - திருவிளையாடற் புராணம் முதலிய பல பெருநூல்களுக்கு அரும்பெறல் உரைகள் வகுத்த அறிஞர் பெருந்தகை திரு நாட்டார் ஐயா அவர்கள்! திருச்சி பிஷப் ஈபர் கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய திரு நாட்டார் ஐயா அவர்கள், தஞ்சாவூர்க் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த கரந்தைப் புலவர் கல்லூரியில் மதிப்பியல் முதல்வராக (1941-1944) விளங்கியிருந்தார். கரந்தைப் புலவர் கல்லூரி இளங்கோ மன்றம் கரந்தைப் புலவர் கல்லூரியில், “இளங்கோவடிகள் கழகம்” என்னும் அமைப்பு ஒன்று புலவர் வகுப்பு மாணவர்களின் பொருட்டு நடைபெற்று வந்தது. அதன் ஆண்டுவிழா ஒன்றிற்கு நாவலர் நாட்டார் ஐயா அவர்கள் தலைமை தாங்கினார்கள். வித்துவான் திரு சி.இலக்குவனார் அவ் ஆண்டு விழாவில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். அதுபோது திரு சி.இலக்குவனார் திருவையாற்று அரசர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆதலின் அவர் தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கும், கரந்தைப் புலவர்கல்லூரிக்கும் அவ்வப்போது வருவது உண்டு. அதனால் இளங்கோ வடிகள் கழக ஆண்டு விழாவில் நாவலர் திரு நாட்டார் ஐயா அவர்கள் தலைமையில் “சங்க இலக்கியச் சிறப்பு” என்னும் பொருள் பற்றி ஒரு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அறிஞர் இலக்குவனார் திரு சி. இலக்குவனார் அவர்கள் நுண்மாண் நுழைபுலம் வாய்ந்தவர்; சீரிய கூரிய ஆராய்ச்சித் திறன் மிக்கவர்; சங்க இலக்கியங்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர்; இலக்கண இலக்கியப் புலமைகள் அனைத்தும் நிரம்பியவர்; தொல்காப்பியக் கடலில் தோய்ந்து திளைத்து நீந்தி மகிழ்ந்தவர். பிறகு சில ஆண்டுகள் கழித்து, தொல்காப்பியம் பற்றி ஆங்கிலத்தில் ஆராய்ச்சி நூல் எழுதி டாக்டர் பட்டம் பெற்றவர். மதுரைத் தியாகராசர் கல்லூரியிலும், ஆந்திரநாட்டு உசுமானியப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராக விளங்கியவர். இலக்கண இலக்கிய ஆராய்ச்சிகளில் புலமை பெற்றுத் திகழ்ந்த அறிஞர் திரு சி.இலக்குவனார் அவர்கள் திரு நாட்டார் ஐயா அவர்கள்பால் அளவற்ற அன்பும் மதிப்பும் ஈடுபாடும் கொண்டவர். அவ்வாறே திரு நாட்டார் ஐயா அவர்களும் இளைஞராக இருந்த இலக்குவனார் அவர்கள்பால் மிகுந்த அன்பும் பரிவும் நன்மதிப்பும் கொண்டவர். இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் ஆண்டு விழாவில் இவ்விரு பெருமக்களும் கலந்து கொண்டது மிக்க சிறப்பும் பொருத்தமும் பெற்று விளங்கியது. விழாவிற்கு ஏராளமான தமிழ்ப் பெருமக்களும் பொதுமக்களும் வந்திருந்து சிறப்பித்தனர். சங்க இலக்கியச் சிறப்பு அறிஞர் திரு இலக்குவனார் சங்க இலக்கியங்களின் சிறப்புக்களை விரிவாக விளக்கிச் சிறப்பாகப் பேசினார். அதுபோது, “இயற்கைப் பொருள்களை உற்றுநோக்கி ஆழ்ந்துணர்ந்து, அவற்றின் இயல்புகளை உள்ளவாறு எடுத்துப்பாடுதலில் சங்க காலப் புலவர்கள் ஒப்புயர்வற்று விளங்கினர்” என்னும் கருத்து அவராற் பெரிதும் வலியுறுத்தப் பெற்றது. அதன் தொடர்பாகப் பேசிக்கொண்டு வந்தபோது, “பிற்காலப் புலவர்கள் சங்ககாலப் புலவர்களைப் போல, இயற்கைப் பொருள்களை ஊன்றி நோக்கி உணர்ந்து, உள்ளவாறு எடுத்து விளக்கிப்பாடும் திறம் பெற்றிலர்” என்று குறிப்பிட்டு, அப்போது புலவர் வகுப்பு மாணவர்களுக்குப் பாடமாக இருந்த காஞ்சிப் புராணத்தில் ஒரு பாடலை எடுத்துச் சொல்லி, “இந்தப் பாடலில் வரும் மரங்களுள் ஒன்றற்குக் கொடுக்கப் பெற்றிருக்கும் அடைமொழி அறவே பொருந்தாதது; கவிஞர் கொடுத்துள்ள அடைமொழி அம்மரத்தின் இயற்கைத் தன்மைக்கு முற்றிலும் முரணானது” என்று கூறி, அப்பாடலைப் பாடிய கவிஞரை ஒரு சிறிது எள்ளற் குறிப்பு அமையச் சுட்டிக்காட்டி, தமது உரையினை நிகழ்த்தி முடித்தார். தலைமை நிறைவுரை: அறிஞர் திரு இலக்குவனார் அவர்கள் தமது சொற்பொழிவை நிறைவு செய்த பின்னர், திரு நாட்டார் ஐயா அவர்கள் தமது தலைமை முடிவுரையைச் சுருக்கமாகவும், பொருத்தமாகவும் நிகழ்த்தினர். தமது முடிவுரையில், நாட்டார் ஐயா அவர்கள், திரு இலக்குவனார் அவர்களின் ஆராய்ச்சித் திறன் மிக்க சொற்பொழிவைப் பெரிதும் புகழ்ந்து போற்றி மகிழ்ந்தார். எனினும், இடையில் ஒரு சிறு விளக்கத்தினையும் செய்தருளினார்: “நமது சிறப்புச் சொற்பொழிவாளர் தம்முடைய கருத்தினை விளக்குவதற்குக் காஞ்சிப் புராணச் செய்யுள் ஒன்றனைத் திறம்பட எடுத்து மேற்கோள் காட்டினார். தமது கருத்தை வலியுறுத்துவதற்காகத் தகுந்த மேற்கோளை எடுத்துக் காட்டிய முறை, சொற்பொழிவாளரின் அரும்பெரும் புலமைத் திறனையும், சொல்வன்மையினையும் செவ்விதின் உணர்த்துகின்றது. எனினும், காஞ்சிப் புராணம் பயிலும் புலவர் வகுப்பு மாணவர்களாகிய நீங்கள், அவர் மேற்கோள் காட்டிய அருமைப் பாட்டினை ஓர்ந்து உணராமல், காஞ்சிப்புராண ஆசிரியரையே ஏதேனும் எளிதாகத் தவறாக எண்ணிவிடக் கூடாதே என்று கவன்று அஞ்சி, யான் ஒரு சில சொற்களைச் சொல்லலாம் என்று விரும்புகின்றேன்:” சிவஞான சுவாமிகள் “நமது தமிழ்கூறும் நல்லுலகத்தில், சைவ சமயப் பெருவானத்தில், அண்மைக் காலத்தில் விளங்கியிருந்த மாபெரும் கவிஞர்களில், சிவப்பிரகாசர் - குமரகுருபரர் - சிவஞானசுவாமிகள் என்னும் மூவரும் ஒப்புயர்வற்ற ஞானப் பெருஞ் சுடர்மணிகள் ஆவர். சிவஞானசுவாமிகள் பலதுறைகளில் வல்லவர். இலக்கணம் - இலக்கியம் - தருக்கம் - கவிதை புனைதல் - மறுப்புரை வரைதல் - காவியங்கள் இயற்றுதல் - பேருரைகள் வகுத்தல் ஆகிய பல துறைகளிலும் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றித் திகழ்ந்து தலைமைநிலை பெற்று விளங்கியவர்.” “தலபுராணங்கள் எத்துணையோ பலப்பல இருப்பினும், அவைகளுள் காஞ்சிப்புராணம், தணிகைப் புராணம் முதலியன ஈடும் எடுப்பும் அற்றவை. தணிகைப்புராணம் பாடிய கச்சியப்ப முனிவர் சிவஞான சுவாமிகளின் மாணவர்கள் பன்னிருவரில் ஒருவரே எனின், சுவாமிகளின் பெருமையினை யாவரும் இனிது எண்ணியுணரலாம். சங்கரர், இராமாநுசர், மத்துவர் முதலிய சமய தத்துவச் சான்றோர்கள், வடமொழியிற் பிரம்ம சூத்திரத்திற்குப் பேருரைகள் விரித்துள்ளனர். அவற்றைப் போல, அவற்றுக்குச் சமானமாக, நம் தமிழிலுள்ள சிவஞானபோதம் என்னும் சைவசித்தாந்தத் தத்துவ நூலுக்குப் பேருரை வகுத்தருளியவர் சிவஞானசுவாமிகள். அவர்தம் அருமை பெருமைகள் அளப்பரியன.” காஞ்சிப் புராணம் காஞ்சிப்புராணத்தில் பிற புராணநூல்களில் காணப்படாத பல புதிய புதிய நல்ல அமைப்புக்களை வகுத்து, சிவஞான சுவாமிகள் முதன் முதலாகவும் சிறப்பாகவும் அதனை இயற்றியருளி யிருக்கின்றார். பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமானைப் பின்பற்றி, ஐந்திணை நில வளங்களையும், ஐந்திணை நில மயக்கங்களையும் பற்றி நமது மாதவச் சிவஞான சுவாமிகள் பாடியிருக்கும் திறம், புலவர் பெருமக்களுக்கெல்லாம் மிகப்பெரிய அறிவு விருந்தாகும். ஐந்திணைகளை முறையே வரிசையாகப் பாடி வருங்கால், பாலைத்திணையின் இயல்பு குறித்துச் சுவாமிகள் பாடிய பாடல்களில் ஒன்றினையே இங்கு நம் சொற்பொழிவாளர் எடுத்துக் காட்டினார். பாலைத் திணையைச் சுவாமிகள் எவ்வளவு அழகாக-எத்தகைய கற்பனை நலம் பொருந்துமாறு பாடியிருக்கின்றார் என்று பாருங்கள்: பாலைத் திணை பாலைத் திணைக்கு உரிய மரங்களுள், குராமரம் - கோங்கமரம் - பாடலமரம் - மராமரம் - முருங்கைமரம் என்பன சிறப்பாக உரியன. இவ்வுண்மையை உணர்ந்து கொள்ளுதலே இந்நாளிற் பெரும் புலமையாகும். இம்மரங்கள் பாலைத் திணையில் இருக்கின்றன என்று பொதுவாகக் குறிப்பிட்டாலேபோதும். ஆனால் அது கவிதையாகாது. ஆதலின், அவற்றை யெல்லாம் இயைபுற இணைத்து, கற்பனை புனைந்து, அழகுபடுத்தி, உயிர்கொடுத்து, நாம் என்றும் மறவாவகையில், நம் உள்ளத்திற்பதிந்து மகிழ்ச்சி விளைவிக்கும் வண்ணம், நம்முடைய மனக்கண்ணின் முன்னர் அவற்றை உலவ விடுகின்றார் சுவாமிகள் (Imagnery). 1.குரவம்பாவை “குரவம் (குரா) என்னும் மரத்தின் காய், ஒரு சிறு பொம்மை (பாவை) போலக் காய்த்துத் தொங்கும். ஆதலின் குரவமரத்தின் காயினைக் “குரவம் பாவை” என்று வழங்குவர். பாவை என்றால், பெண் என்றும் ஒரு பொருள் உண்டு. ஆதலால், குரவ மரத்தின் பாவையாகிய பெண்ணை, அடுத்துள்ள கோங்கமரம் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றதாம். அழகிய பெண்ணை மணக்க யார் தாம் விரும்பி முன்வர மாட்டார்கள்? ஆனால், அழகிய பெண்ணை எளிதில் அடைந்துமணந்து விட முடியுமா? அப்பெண்ணின் தாய்தந்தையர்க்கு உரிய அளவு, முறைப்படி பொருள் கொடுத்து இசைவு பெற்றபின் அன்றோ, அழகிய அப்பெண்ணை அடைந்து மணத்தல் இயலும்?" 2. கோங்கம் பொன் “கோங்கமரத்தின் பூக்கள், பொன்னிறம் வாய்ந்து பொலிவுற்றுத் திகழும். ஆகவே, அப்பூக்களைப் பொன் என்று புலவர்கள் புகழ்ந்து கூறுவதுண்டு. ஆதலால், கோங்கமரம் தன் பூக்களாகிய பொன்னைக் குரவமரத்திற்கு ஏராளமாகக் கொடுத்து, அதனது பாவையைத் தனக்கு மணம் செய்து கொடுக்க வேண்டிற்று. பொன் கொடுத்தால் யார்தாம் நன்று என்று இசைய மாட்டார்கள்? ஏராளமான கோங்கம் பூக்களாகிய பொன்னைப் பெற்ற குரவமரம், தன் பாவையாகிய பெண்ணைக் கோங்கமரத்திற்குத் கொடுக்க இசைந்தது!” 3. பாடலம் பூந்தழல் “திருமணத்தை அங்கியங் கடவுள் சான்றாக (அக்கினி சாட்சியாக) அன்றோ செய்து கொள்ளுதல் வேண்டும்? அங்கிக்கு (நெருப்புக்கு) எங்கே போவது? எங்கும் செல்ல வேண்டுவதில்லை. அந்தப் பாலைவனத்திலேயே, பாடலம் (பாதிரி) என்னும் மரங்கள் உள்ளன. அவற்றின் மலர்கள் சிவந்த நிறம் பெற்று நெருப்புப்போலத் திகழும். எனவே பாதிரி மரங்களின் மலர்க்குவியல் ஆகிய நெருப்பின் முன்னர்க் கோங்கமரம் குரவம்பாவையை மணந்து கொள்ளுகின்றது.” 4. வண்டுகள் பாடல் “திருமண வேளையில் வேத மந்திரங்கள் ஓதப்பெறுதல் வேண்டும்; சுற்றமும் நட்பும் சூழ்ந்திருந்து வாழ்த்துதல் வேண்டும். இத்திருமணத்தில் அது நிகழ்ந்ததா? எனின், ஆம் நிகழ்ந்தது. எவ்வாறு நிகழ்ந்தது? பாலை நிலத்தில் மரவம் (மரா) என்னும் மரங்கள் உண்டு. அவற்றை வெண்கடம்பு என்றும் கூறுவர். அம்மரத்தின் மலர்கள் அழகும் மணமும் அமைந்து, தேன் நிறைந்து திகழும். அத்தேனை உண்ண வண்டுகள் இடையறாது மொய்த்துக் கொண்டிருக்கும். தேனை உண்ணும் அவ்வண்டின் கூட்டங்கள், இடையறாது, மென்மையாகவும் இனிமையாகவும் ரீங்கார ஓசையை மிழற்றும். அவ்வினிய ஓசை வேத இசைபோலவும், சான்றோர்களின் ஆசிபோலவும் அமைகின்றது.” 5. வெண்பொரி தூவுதல் “திருமண நிகழ்ச்சியில் மணமகன் மணமகளுக்கு மங்கலநாண் அணிவிக்கும் போதும், அதற்குச் சிறிது பின்னரும், மணமக்களை வாழ்த்தி வந்திருந்தோர் அனைவரும் வெண்பொரி தூவுவர். 'புன்கு மலர்ப்பொரி அட்ட மணம் செய்ய மிழலை ஆமே' என்பது சம்பந்தர் தேவாரம். அம்முறையில் பாலைநிலத்தில் இருக்கின்ற முருங்கை மரங்கள் வெண்ணிறம் வாய்ந்த தம் மலர்களைச் சொரியும் காட்சி, மணமக்களை உற்றார் உறவினர் வெண்பொரி தூவி வாழ்த்துவதுபோல விளங்கியது. இந்நிகழ்ச்சியும் காட்சியும் எத்துணைச் சிறப்பு அமைந்து, மிகவும் வியக்கத் தக்கனவாக விளங்குகின்றன! இவ்வழகிய இனிய காட்சியையே, நமது சொற்பொழிவாளர் குறிப்பிட்ட பாடலில் சுவாமிகள் பாடியருளியிருக்கின்றார்: “குரா அளித்திடு பாவையைக் கோங்குபொன் கொடுத்துப், பராரைப் பாடலம் பூந்தழற் பாங்கரின் மணப்ப, மராமரத்து உளர்வண்டு பண்பாட, வ(ன்)முருங்கை விராவி வெண்பொரி இறைத்திடும் வியப்பினது ஒருபால் - காஞ்சிப் புராணம் 6. அடைமொழிப் பிழை இவ்வழகிய இனிய அரும்பெறற் பாடலில் முருங்கை மரம் வன் முருங்கை என்று குறிப்பிடப் பெற்றிருக்கின்றது. “முருங்கை மரம் மிகவும் மென்மை வாய்ந்த மரம். அதனை வன்முருங்கை என்று குறிப்பிட்டது பொருத்தமன்று. இப்பாடலைப் பாடிய கவிஞர் இயற்கைப் பொருள்களை உண்மையிலேயே உற்று நோக்கி நுணித்து உணராமல் இருந்ததனால்தான், இத்தகைய பிழையான அடைமொழியை வழங்கினராதல் வேண்டும். இதனால் பிற்காலப் புலவர்களின் குறையும் பிழையும் தெற்றென விளங்குகின்றன என்று, நம் சொற்பொழிவாளர் சுட்டினார். சொற்பொழி வாளர் சுட்டிய குறைபாடும் பிழைபாடும், ஏதோ ஒரோவொருகால் யாரோ பிற சில பிற்காலப் புலவர்களுக்குப் பொருந்தக் கூடுமாயினும், உண்மையிலேயே சிறந்த சிவானுபூதிச் செல்வர் ஆகிய சிவஞான சுவாமிகள்பால் இத்தகைய குற்றமும் குறைபாடும் உண்டு என்று கருத, யான் சிறிதும் துணிகிலேன்.” வண்முருங்கை முருங்கை மரத்தின் பட்டை - இலை - சாறு - பூ - காய் - விதை முதலியன அனைத்துமே, மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படும் வளப்பம் (வண்மை) உடையன. முருங்கை மரம் மருத்துவ நலங்கள் செறிந்த ஒரு சிறந்த மூலிகை மரம். ஏழைகளின் கற்பக மரம். அச்சிறப்பியல்புகள் கருதி, ஆசிரியர் சிவஞானசுவாமிகள் “வண்முருங்கை” என்றே பாடியிருந்திருப்பர். ஆனால் நூலை அச்சிட்டவர்களின் கவனக்குறைவால், அது “வன் முருங்கை” என்று, நமது சொற்பொழிவாளர் குறிப்பிட்டது போல, எல்லாப் பதிப்புக்களிலும் பிழையாக அமைந்துவிட்டது. இப்பிழையும் குறையும் அச்சிற் பதிப்பிட்டவர்களைச் சாருமேயன்றி, நமது மாதவச் சிவஞான சுவாமிகளை, ஒரு சிறிதும் சாராது என்று உறுதியாகக் கருதுகின்றேன். “புலவர் வகுப்பு மாணவர்களாகிய நீங்கள் சங்கத் தமிழ் இலக்கியங்களையும், காஞ்சிப் புராணம் போன்ற கலைநலஞ் சான்ற அரும் பெரும் தமிழ் இலக்கியங்களையும் எல்லாம், நன்றாக அழுந்திக் கற்றுத் தேர்ந்து, மிகவும் சிறந்த நிறைந்த செந்தமிழ்ப் புலமை பெறுதல்வேண்டும் என்று, இறையருளை வேண்டி வாழ்த்தி, நமது சிறப்புச் சொற்பொழிவாளர் அவர்களை மனமாரப் பெரிதும் போற்றிப் பாராட்டி அமைகின்றேன்” - என்று கூறி, நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய தலைமையுரையை நிறைவு செய்தருளினார்கள். வெண்பாக்கள்: திரு நாட்டார் ஐயா அவர்கள் வழங்கிய தலைமை நிறைவுரை என் உள்ளத்தில் மிக்க மகிழ்ச்சியையும், உணர்வு எழுச்சியையும் விளைவித்தன. அதனால், அப்போது பின்வரும் வெண்பாக்களை யாத்து, அகம் மிக மகிழ்ந்தேன். ஆய கலையனைத்தும் ஆய்ந்துணர்ந்து, கற்றுவல்ல, தூயசிவ ஞான சுவாமிகள்தாம், - நேயமிக்க காஞ்சிப் புராணம் கவின்பெருகச் செய்தளித்தார், தீஞ்சுவைகள் எல்லாம் செறித்து (1) தலச்சிறப்பைச் சாற்றும் புராணங்கள் தம்முள், கலைச்சிறப்பார் காஞ்சிப் புராணம், - நலச்சிறப்புப் பற்பலவும் வாய்ந்து, பயில்வார்க்கு அறிவூற்றாம்: பொற்புமிக ஓங்கிப் பொலிந்து. (2) தொட்ட இடம்தோறும் தூயசைவ சித்தாந்த நுட்பங்கள் தோற்றி, உயர் நோக்கமைந்து, - மட்டில்லா இன்பம் விளைக்கும்; இறையுணர்வில் தோய்விக்கும்; நன்றுயர்காஞ் சிப்புரா ணம்! பசுமை நிறைந்த நினைவு கரந்தைப் புலவர் கல்லூரியில் மாணவனாக யான் பயின்று கொண்டிருந்தபோது, இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தில் இந்த விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இது நிகழ்ந்தது 1943 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன். ஏறத்தாழ 40 ஆண்டுகள் கழிந்து விட்டன வாயினும், இவ்வரிய உரைகளும், இனிய நிகழ்ச்சிகளும் சிதைந்து அழிந்து படாமல், மறக்க இயலாதபடி என்னுடைய உள்ளத்திற் பசுமை நிறைந்து பதிந்திருக்கின்றன. நாவலர் நாட்டார் ஐயா அவர்கள் அளித்த இந்த நல்ல பெருவிளக்கம், இன்றளவும் எல்லையில்லாத இன்ப உணர்வினை, எண்ணுந்தோறும் எனக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது! தமிழ்ப் பொழில் அத்தகைய பெருவித்தகராகிய நாவலர் நாட்டார் ஐயா அவர்கள் போன்ற தமிழ்ப் பெரும்புலவர் ஒருவரை, இனி நம் தமிழுலகம் என்றேனும் மீண்டும் பெறக்கூடுமா? என்று எண்ணி, என் உள்ளம் ஏங்கிக் கலங்குகின்றது. ஐயா அவர்கள் மறைந்தபொழுது (28-03-44), இருபதுக்கு மேற்பட்ட இரங்கற் பாடல்கள் எழுதியிருந்தேன். கரந்தைத் தமிழ்ச்சங்க வெளியீடாகிய தமிழ்ப்பொழில் என்னும் இதழில், இடமின்மை கருதி, அவற்றுள் ஒருசில பாடல்களை மட்டும் எடுத்து வெளியிட்டிருந்தனர். அவைகளுள் பின்வரும் பாடலும் ஒன்று: “தீஞ்சுவைகள் மிகச்சொட்டச் சிவஞான மாதவன்செய், சிறந்த நூலாம் காஞ்சிப்புராணத்தின் கவிகள் பல வற்றினுக்குக் கனிவு மிக்க வாஞ்சிப்பாற் சைவநலம் வளங்கொழிக்கும் பொருள்விரித்தாய்; மகிழ்ந்து கேட்டே யாஞ்சுவைத்தேம்; அதுநினைத்தால் யாவர்இனி உரைப்பர்? என்றே அழுங்கு கின்றேன்!” இலக்கணத்திற் கற்பனைகள்: தாம்பரம் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில், தமிழ்த் துறையில் யான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது (1957 - 1962), பி.ஏ., பி.எஸ்.சி.மாணவர் களுக்கு இலக்கணப் பாடம் கற்பிக்கும் பேறு எனக்குக் கிடைத்தது. அதன் பயனாக இலக்கணத்திற் கற்பனைகள் என்னும் ஓர் அரிய ஆய்வுநூலை, 1961-ஆம் ஆண்டில் வெளியிட்டேன். அதனை நமது நாவலர் நாட்டார் ஐயா அவர்களின் திருவடிகளுக்கே உரிமையாக்கிப் பின்வரும் பாடலை இயற்றிச் சேர்த்துப் பணிந்து மகிழ்ந்தேன். “இலக்கணத்திற் கற்பனைகள் என்னும் இந்தச் சிறுநூலை, எந்தை போல்வார், சிலப்பதிகா ரம்முதலாம் செந்தமிழ்நூற்கு உரைவகுத்த சிறப்பின் மிக்கார், நலத்தகைய பெரும்புலவர் நாவலர் வேங் கடசாமி நாட்டார் தாம், எற்கு உலப்பில்தமிழ்ச் சைவநலம் உதவுதிறம் நினைந்து, அவர்தாட்கு உரிமை செய்கேன்!” மறைமலை யடிகள், நாவலர் நாட்டார், வண்புகழ்ப் பண்டித மணியார், துறைகலை போய சுப்பிர மணியத் தோன்றலார், ஞானியார் அடிகள், முறைதிகழ் சான்றோர் சச்சிதா னந்தர், மூதறி ஞர்திரு. வி.க., பிறபிற பெரியோர் புலமையும் தொண்டும் பெரிதுணர்ந்து, அவர்அடி பணிவாம்! என் தந்தையார் நாவலர் ந.மு.வே.நாட்டார் ந.மு.வே. நடராசன் என் தமக்கை சிவ. பார்வதியம்மாள் பிறந்து 5 ஆண்டுகள் வரைக் குழந்தை யில்லாமல், பிறகு நடுக்காவேரியில் உள்ள பிள்ளையாருக்கு வேண்டுதல் செய்து கொண்ட பிறகு நான் பிறந்ததால் முதலில் என்னைக் கணேசன் என்று அழைத்து மிகவும் செல்லமாக வளர்த்தார்களாம். பின்னர்த் திண்ணைப் பள்ளியில் சேர்க்கும்பொழுது நடராசன் என்று பெயர் வைத்திருப்பார்களென்று நினைக்கிறேன். அக்காலத்தில் நர்சரிப் பள்ளிகள் கிடையாது. திண்ணைப் பள்ளிக் கூடங்களில் இரண்டு, மூன்று வருடங்கள் படிக்கவேண்டும். உயர் நிலைப்பள்ளிகள் (High School) 4ஆவது வகுப்பிலிருந்து ஆரம்பிக்கும். என் படிப்பு ஆரம்பித்தது ஒரு விஜயதசமி என்று நினைக்கிறேன். வயதான சாஸ்திரியார் ஒருவர் வந்தார். உறவினர் புடைசூழ அவர் என் முன் உட்கார்ந்து கொண்டு என் நாக்கை நீட்டச்சொல்லி அதில் ‘ஹரி ஓம் ராம்’ என்று எழுத்தாணியால் எழுதினார். பின்னர் மணலைப் பரப்பி எனது சுட்டுவிரலைப் பிடித்துக்கொண்டு ‘அ, ஆ’ என்று எழுதிக் காண்பித்தார். இவ்வாறு சிலகாலம் நடுக்காவேரியிலும், சிலகாலம் திருச்சி மலைக்கோட்டை மடத்தில் உள்ள திண்ணைப் பள்ளியிலும் படித்தபிறகு S.P.G உயர் நிலைப்பள்ளியில் 4ஆவது வகுப்பில் சேர்த்தார்கள். முழுவதும் புதிய சூழ்நிலையில் பல பாடப்புத்தகங்கள் இருந்த படியால் அந்த ஆண்டு நான் தேர்ச்சி பெறவில்லை. ஆனால் மறு ஆண்டிலிருந்து 10ஆவது வகுப்பு வரையில் ஒவ்வோர் ஆண்டும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவந்தேன். திருச்சி மலைக்கோட்டைத் தெற்குவீதியில் மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டியை ஒட்டினாற்போன்ற இடத்தைச் சுப்பிரமணிய முதலியார் என்பவரிடம் என் தந்தையார் வாங்கி அதில் ஒரு சிறிய வீடுகட்டி அதற்குத், “திருநாவுக்கரசு தமிழகம்” என்று பெயர் வைத்து இருந்தார்கள். அதில் தான் அப்பா மாற்றலாகி அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போகும் வரையில் வசித்து வந்தோம். அந்த வீட்டின் எதிரில் தாயுமான சாமிகள் மடமும், அதை ஒட்டினாற்போல, கிழக்கே சைவ சித்தாந்த சபையும் உள்ளன. பெரியசாமி பிள்ளை என்பவர் சைவ சித்தாந்த சபையின் அமைச்சராக இருந்தார். அவர் சிந்தாமணியில் வசித்து வந்தார். பலருடைய வசதியின் பொருட்டு, சபையின் சாவி எங்கள் வீட்டிலேயே இருக்கும். அப்பொழுது என் தந்தையாரிடம் உலக ஊழியர், மருதூர் பிச்சையா, மாரநேரி சுயம்பிரகாசம் முதலியவர்கள் பாடம் கேட்டுக்கொண்டு, சபையில் படுத்துக்கொள்வார்கள். ஒரு முறை பூகோளப் பாடத்திற்கு இந்தியாவின் வரைபடம் வரைந்து அதில் கூடல் பகுதியை ஒரே சீரான நீல நிறம் போடுவதற்கு ஏதுவாக அப்பாவுடைய பீரோவில் இருந்து ஒரு தடித்த புத்தகத்தின் சுரசுரப்பான அட்டையைக் கிழித்துவிட்டேன். அந்த அட்டையைக் கீழேவைத்து வர்ணம் தீட்டுவதற்குரிய பாகத்தை அதன்மேல் வைத்துக் கலர் பென்சிலால் தேய்த்தால், கலர் ஒரேசீராக நன்குதெரியும். இதற்காக நான் அந்த அட்டையைக் கிழித்து விட்டேன். புத்தகத்தின் முக்கியத்துவம் எனக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் இல்லாத சமயம் கிழித்துவிட்டேன். பின்னர் இது தெரிந்தவுடன் மிகவும் கோபம் கொண்டு என் முதுகில் ஓர் அறை அறைந்தார்கள். ஐந்துவிரல்களும் பதிந்து அந்த இடம் தடித்துவிட்டது. என் பாட்டிதான் தன்னுடைய மகனைக் கடிந்துகொண்டு முதுகில் தேங்காய் எண்ணெய் தடவிப் புண்ணை ஆற்றினார்கள். அதுதான் என் தந்தையாரிடம் நான் வாங்கிய முதல் அடியும் கடைசி அடியுமாகும். பின்னர் ஒருமுறை பம்பரம் விளையாடியதற்காக அடிக்க வந்தார்கள். பிடிபடாமற் போகவே உலக ஊழியரை விட்டுப் பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள் நான் டயர் சக்கரத்தை ஓட்டிக்கொண்டே மலைக் கோட்டையைச் சுற்றி வந்துவிட்டேன். அதற்குள் கோபம் மறைந்து விட்டது. பள்ளிக்கூட நாட்களைத் தவிர மற்ற நாட்களில் அப்பா சொற்பொழிவுக் காக எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துப் போவார்கள். பத்தாவது வகுப்பு முடிவதற்குள் நான் அப்பா கூடவேபோய், தென்னாடு முழுவதும் பார்த்திருக்கிறேன். டிசம்பர் மாதத்தில் நடக்கும் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் ஆண்டு விழாக் கூட்டங்களுக்குத் தவறாது அப்பா போவார்கள், அப்படி ஒருமுறை சமாஜக் கூட்டம் முடிந்து திரும்பும் பொழுது வண்டியில் ஏறியவுடன், சமாஜக் காரியதரிசி வந்து அப்பாவிடம் வழிச் செலவுக்கு என்று பணம் கொடுத்தார்கள், அப்பா அதை வாங்கிக் கொள்ளாமல், ‘சைவம் வளர்க்கப் பாடுபடுவது தம் கடமைக்ஷூ9’ என்று சொல்லிவிட்டார்கள். இக்காலத்தில் ஒரு கூட்டத்திற்கு வருவது என்றால் இன்ன இன்ன வசதிகள் வேண்டும் என்று வற்புறுத்தி வாங்கும் தலைவர்களின் கடமையுணர்வை இதனுடன் ஒப்பிட்டு நோக்கவேண்டும். பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும் காலங்களில் நான் வீட்டிலேயே இருந்து கொண்டு படித்திருக்கின்றேன், கல்லூரிப்படிப்பு முடிந்த பின்பு நான் வெளியில் இருந்த காலங்களில், எனக்குக் கடிதம் எழுதும் பொழுதெல்லாம் ‘அன்புள்ள குழந்தை நடராஜனுக்கு’ என்று ஆரம்பித்து எழுதி வந்தார்கள், நான் திருமணம் ஆனபின் அருவங்காட்டில் பணிபுரியச்சென்ற பிறகு ‘அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு’ என்று எழுத ஆரம்பித்தார்கள், குழந்தையாக இருந்த நான் எப்பொழுது மைந்தன் ஆனேன் என்று யோசித்தேன். அது ஒரு பெரிய மாறுதலாக என் மனத்திற்பட்டது. அப்பாவுக்குச் சரவண முதலியார் எப்படி ஆருயிர் நண்பரோ அதேபோல் சரவணமுதலியார் மகன் அ.ச.ஞானசம்பந்தன் எனக்கு ஆருயிர் நண்பனாக இருந்தான். சம்பந்தன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் படிக்கும்பொழுது எங்களுக்குச் சிறுவயது முதல் பழக்கமானவளும் மலைக்கோட்டைத் தெற்கு வீதியில் இருந்து வந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்சி., பட்டப் படிப்புப் படித்து வந்தவளும் ஆன ராஜம்மாள் என்ற பெண்ணைக் காதலித்தான். பலவிதச் சோதனைகளுக்குப் பிறகு அது ஒரு தலைக்காதல் அல்ல என்று தெளிந்தபின் இதுவெற்றியடையப் பாடுபடுவது அவசியம் என்று முடிவு செய்தோம். ஆனால் சரவண முதலியார் அவர்கள் பலவித இடையூறுகளைக் கொடுத்து இக்காதலை நிறுத்திவிடப்பார்த்தார். இதனால் ஞானசம்பந்தன் உயிருக்கு ஏதாவது நேருமோ என்று பயந்து அவ்வாறு நேரிட்டால் நானும் அவனுடன் உயிர்விட நேரிடும் என்று அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவர்கள் எழுதிய பதில் அனைவரும் படித்துணர வேண்டியது என்பதற்காக அப்படியே தருகின்றேன்:- தஞ்சாவூர் 27.07.40 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு, .................................. ........................ இறைவன் எவ்வளவு பெருங்கருணையால் இவ்வுடம்பை அளித்துள்ளான் என்பதனையும், அதன் நோக்கத்தையும் சிறிதும் அறியாத அறிவிலிகள் தாம் தற்கொலை செய்து கொள்வதை எளிதாக நினைப்பார்கள், மேலும் தம் கொள்கை தீதாயின் அதனின்று தன்னை மீட்டுக்கொள்வதும், நன்றாயின் எத்துணை முயற்சி எடுத்தும் சித்திபெறுவதுமே ஆண்மையாகும். உலகியலால் நோக்கினும் தற்கொலை என்பது அறிவும் ஆண்மையுமற்றவர்கள் செய்யும் செய்கையேயாகும். நிற்க, சம்பந்தன்யாரையும் பொருட்படுத்தாமல் தான் காதலித்த பெண்ணை மணந்து கொள்வதில் தடையென்ன விருக்கிறது? தாய் தந்தையர் அவ்வாறு செய்யாமல் எங்ஙனம் தடுக்க முடியும்? ஆனால் அவர்கள் கருத்துக்கு மாறாக அவர்களும் சம்மதிக்க வேண்டுமென்பது நியாயமாகுமா? இவன் சில உரிமைகளைக் கொண்டாடும்பொழுது அவர்களுடைய உரிமைகளையும் மதிக்கவேண்டுமல்லவா? நின் கடிதத்திலிருந்தே முதலியாரவர்கள் செய்திகளை விளக்கமாக அறிந்து கொள்வாராதலால் நான் தனியாக வேறொன்றும் எழுதவேண்டியதில்லை, அன்றியும் சில பொதுப்படையான சிறந்த பண்புகள் பற்றியே எங்கள் இருவரிடத்தும் நட்பு நிலைபெற்றிருக்கிறது. ஆனால் இருவருடைய பண்புகளிலும், கொள்கைகளிலும் எத்தனையோ வேற்றுமைகள் உண்டு, அவருக்கு என்னதான் துன்பம் நேர்ந்த போதிலும் அதற்காக என் உயிரை விடமாட்டேன். என் கொள்கையை மாற்றும்படி கேட்டால் பொருந்துமா? என்றாலும் என் மனச்சான்றுக்கு மாறாகவே ஒருவரி அவருக்கு எழுதியுள்ளேன், அதாவது என் ஆலோசனையைக் கேட்பீர் களானால் அவன் போக்கிலே விட்டு விடுங்கள் என்பதுதான்....... என் தந்தையார் இறப்பதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு (14-09-1942) ஒரு கடிதம் எழுதியிருந்தார்கள். நல்ல பொறுப்புள்ள பதவியில் கோவையில் என் தந்தையாரால் அமர்த்தப்பட்ட என் மைத்துனர் கே.மருதையாவின் பொறுப்பற்ற சில செயல்களும், நான்கு நாட்களுக்கும்மேலாக குளிப்பதற்குக் கூடமுடியாத நிலைக்குக் காரணமான நோயின் தொந்தரவும் அவர்கள் மனத்தை மிகவும் வருத்தியிருக்க வேண்டும். அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தின் பகுதி பின்வருமாறு; சிதலைதின்ற ஆலமரம் போல் உள்ள எனது நிலைமையை உணர்ந்தோ உணராமலோ பலரும் என்மேல் சுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். கூடிய விரைவில் ஒரு நாள் இம்மரம் விழுவது திண்ணமென்பதனை மனத்திற்கொண்டு அதற்கேற்றபடி குடும்ப நிருவாகப் பொறுப்பு, உத்தியோகப் பொறுப்பு என்பன பற்றி உன் எண்ணங்களையும் செயல்களையும் ஒழுங்குபடுத்திக்கொண்டு வருவது நல்லது. கடவுள்பக்தி, வாய்மை, அன்பு, ஊக்கம், சிந்தனாசக்தி, சிக்கனம் இவை போல்வன வாழ்க்கையை மேம்படுத்தும். அன்புள்ள, ந.மு.வே. எனக்கு அப்பொழுது சிதலை என்பதன் பொருள் விளங்கவில்லை. அத்துடன் அவர்களின் எண்ணத்தின் முக்கியத்துவம் (Seriousness) நான் உணரவில்லை. அதனால் நோயின் தொந்தரவினால்தான் அவ்வாறு எழுதியிருக்கக் கூடும் என்று நினைத்து உடல் நலமுண்டாவதற்காகவும் இரத்த விருத்தி ஏற்படுத்துவதற்கும் சியவனப் பிரகாசம் போன்ற மருந்துகள் வாங்கி உண்ணும்படி எழுதியிருந்தேன். அவர்கள் என் அறியாமையை எண்ணி மனத்திற்குள்ளேயே சிரித்திருக்க வேண்டும். நீலகிரியில் இருக்கும் வரையில் “சிதலை” என்பதற்கு என்ன பொருள் என்று எனக்குத் தெரியவில்லை, அவர்கள் இறந்தபிறகுதான் நிகண்டுவைப் பார்த்து "கறையான்" என்று அறிந்துகொண்டேன். கறையான் தின்ற ஆலமரம் ஒரு நாள் விழுந்துவிடும், கறையான் தின்ற ஆலமரம், கறையான் தின்ற புளியமரம், மாமரம் அல்ல, அதுதான் ஆலமரத்தின் சிறப்பு, விழுதுகளினாற் சிறப்புப் பெற்றது. அந்த விழுதுகள் மரத்தின் கிளைகளைத்தாங்கி நின்று காப்பாற்றும், அதுபோல் நானும் வேலையை விட்டு விட்டுக் கூடவந்திருந்து அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டுமென்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது. ஆனால் விதியின் வலியை யாரே அறிவார், ஒரே மகனான நான் அவர்கள் கடைசிக் காலத்தில் அவர்கள் அருகில் இல்லாதது அவர்களுக்கு எத்துணைத் துன்பத்தைக் கொடுத்திருக்கும் என்று இப்பொழுது நினைத்தாலும் கண்ணீர் ஆறாகப் பெருகுகின்றது. நாட்டார் ஐயா அவர்களின் உரைப்பணியும் ஆய்வுப்பணியும் சிவ.பார்வதி அம்மையார் “ ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய் மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த் தோன்றாத் துணையா யிருந்தனன் தன்னடி யோங்களுக்கே” (திருநாவுக்கரசர் தேவாரம்) நாவலர் பண்டித ந.மு.வே. நாட்டாரையா அவர்களின் உரைநடை நூல்களில் உள்ள ஆராய்ச்சிப் பகுதிகளில் எனக்குத் தெரிந்த சிலவற்றை ஈண்டுக் கூறுகிறேன். 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி அய்யா அவர்கள் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் தமிழாசிரியராக இருந்து பி.ஏ. வகுப்புக்குத் திரு மு.இராகவையங்கார் அவர்கள் எழுதிய வேளிர் வரலாறு என்னும் நூலைப் பாடம் நடத்தும்போது, அந்நூலின் கருத்துக்கள் தம் கருத்துக்கு ஒவ்வாமை கண்டு, அந்நூலுக்கு மறுப்புரை எழுதினார்கள். திரு ஐயங்கார் அவர்கள் ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து’ என வரும் தொல்காப்பியப் பாயிரத்திற்கு உரை கண்ட நச்சினார்க்கினியரும், பிறரும் கூறிய வரலாற்றைக் கொண்டு, வேளிர் என்பார் கண்ணபிரான் காலத்து வடக்கே இருந்து தென்புலத்திற்கு வந்த யாதவர்களில் ஒரு சாரார் ஆவர் என்பர். அக்கூற்றை நன்கு ஆராய்ந்து வேளிர் என்பவர் தமிழ்ப் பழங்குடியினரே என அறுதியிட்டு, ஐயங்கார் அவர்கள் கூறிய துவராபதி என்பது பாண்டி நாட்டில் பாரி என்னும் வேள் ஆண்ட பறம்புமலை சார்ந்த ஒரு பகுதியாகும். அது இன்றைக்கும் துவராபதி நாடு என்று அழைக்கப் படுகிறது. அந்நாட்டை வேளிர் ஆண்டனர் என்றும் கருதப்படுகின்றது. எனவே வேளிர் என்பவர்கள் தமிழ் நாட்டுப் பழங்குடியினரே எனச் சான்று காட்டி நிறுவியுள்ளார்கள். இந்நூல் 1915-ஆம் ஆண்டில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் மூன்றாவதாண்டு விழாவின்போது திரு தோ.இராமகிருட்டினப் பிள்ளையவர்கள் தலைமையில் படிக்கப் பெற்றுச் சங்கத்தாரால் பாராட்டப்பெற்றது. 2. நக்கீரர் 1919-ஆம் ஆண்டில் நக்கீரர் என்னும் ஆராய்ச்சி உரைநடை நூல் வெளியிடப்பட்டது. இந்நூல் கடைச்சங்கப் புலவர் தலைவராகிய நக்கீரனாரைப் பற்றியும், அவர் எழுதிய நூல்களின் ஆராய்ச்சிகளும் உயரிய செந்தமிழ் நடையில் அய்யா அவர்களால் எழுதப்பட்டுக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தாரால் வெளியிடப் பட்டதாகும். இந்நூலில், நக்கீரனாரின் இறையனார் அகப்பொருள் விரிவுரையையும், பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படையையும், நெடுநல்வாடையையும், பிற புறப்பொருட்பாக்களையும் நன்கு ஆராய்ந்திருப்பது கற்பாருக்குக் கழிபேருவகை தருவதாகும். இந்நூல் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங் களிலும், காசி இந்துப் பல்கலைக்கழகத்திலும், இலண்டன் பல்கலைக் கழகத்திலும் பாடமாக இருந்து ஆசிரியர்களால் பெரிதும் பாராட்டப் பெற்ற தாகும். நக்கீரர் என்னும் நூலின் உரைநடையிலிருந்து சிறிது காண்போம். “நக்கீரர், படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வந்த பழங்குடியினரான முடியுடைத் தமிழ்வேந்தர் மூவருள்ளே ஈண்டிய சிறப்பிற் பாண்டியரானோர் வழிவழியமர்ந்த பழவிறன் மூதூராகிய பீடுமிக்க மாட மதுரையில் சங்கமிருந்து தமிழாராய்ந்த நல்லிசைப் புலவர் குழாத்துப் பல்லிசை நிறுத்த படிமையோராவர். இவர் குடிப்பிறப்பாகிய உடையுடுத்துக் கல்வியாகிய மலர் சூடி, ஒழுக்கம் என்னும் விழுக்கலன் பூண்டு, வாய்மை யென்னு முணவுண்டு, நடுவுநிலை யென்னும் நகரின்கண் தூய்மை யென்னும் ஆசனத்தமர்ந்து, அழுக்காறின்மை அவாவின்மை யெனப்படும் இருபெரு நிதியமும் ஒரு தாமீட்டுந் தோலா நாவின் மேலோராகித் தமக்கொப்பாரும், மிக்காரும் இல்லையாக விளங்கினரெனவும் உரைப்பர்” 3. கபிலர் 1921-ஆம் ஆண்டு கபிலர் என்னும் ஆராய்ச்சி உரைநடை நூல் வெளியிடப்பட்டது. இந்நூலில் தமிழ்ச்சங்க வரலாறு மிகுந்த ஆராய்ச்சியுடனும், மேற்கோள்களுடனும் விளக்கப்பட்டுள்ளது. இவரைத் திருவள்ளுவருடன் பிறந்தவர் என்று சிலர் கூறுவர். அதனை மறுத்துப் பாண்டிநாட்டிலுள்ள மாணிக்கவாசகப் பெருமான் தோன்றிய திருவாதவூர் எனப்பல மேற்கோள்களுடன் விளக்கப்பட்டுள்ளது. இவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் எனவும், அந்தணர் மரபில் உதித்தவர் எனவும் அய்யா அவர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். “ செறுத்த செய்யுள் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன் (புறநானூறு 53:11,12) எனவும், “ உலகுடன் றிரிதரும் பலர் புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்” (அகநானூறு 78:15,16) எனவும், “பொய்யா நாவிற் கபிலன்” (புறநானூறு 174:10) எனவும் புலவர் பலராலும் பாராட்டப் பெற்றவர் என்பதனால் இவர் புலமை புலனாகும். மற்றும் இவர், “புலனழுக் கற்ற அந்தணாளன்” (புறநானூறு 126:11) எனவும், “யானே, பரிசிலன் மன்னும் அந்தணன்” (புறநானூறு 200:13) என்றும் கூறிக் கொள்வதால் இவர் அந்தணர் மரபில் தோன்றியவர் என்பது வெளிப்படும் என்பார்கள். இவர் இயற்றிய நூல்கள் பலவாகும். பத்துப்பாட்டில் ஒன்றாகிய குறிஞ்சிப்பாட்டு, கலித்தொகையில் குறிஞ்சிக் கலி, ஐங்குறுநூற்றில் குறிஞ்சிக் குறுநூறு, பதிற்றுப்பத்தில் ஏழாம்பத்து ஆகிய சங்கநூல்களும், நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவற்றில் பல பாடல்களும் இன்னா நாற்பது என்ற கீழ்க்கணக்கு நூலும் இவரால் இயற்றப்பட்டவையாம். மேலும், மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி போன்ற நூல்களும் இவரால் இயற்றப்பட்டவையென்றும், இந்நூல்களைப் பற்றிய அரிய ஆராய்ச்சி கற்போருக்கு இன்பம் பயப்பதாகும் எனவும் கூறுவர். குறிஞ்சிப்பாட்டு, குறிஞ்சிக்கலி ஆகியவற்றிற்கு உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரையையும், விளக்கத்தையும் அய்யா அவர்கள் எடுத்துரைப்பது மிகவும் சிறப்புடையதாகும். இவர் நூல்கள் பலவற்றில் சிவ பெருமானது இறைமையும், தலைமையும் தோன்ற எழுதியிருப்பதால் அய்யா அவர்கள் இவர் சைவ சமயத்தினர் என்றே துணிந்துரைக்கின்றார்கள். 4. கள்ளர் சரித்திரம் இந்நூல் 1923-ஆம் ஆண்டு எழுதி வெளியிடப்பட்டது. இது தமிழ் நாட்டின் ஒரு வகுப்பினரைப் பற்றி எழுதப் பெற்றதாயினும், தமிழ் மக்களைப் பற்றிப் பொது வகையில் ஆராய்ந்து எழுதப்பெற்ற நூலாகும். மகாமகோபாத்தியாயர் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் இந்நூலை மிகவும் பாராட்டியதுடன் கல்லூரி மாணாக்கர்களுக்குப் பாடமாக வைக்கக் கூடிய தகுதியுடையதென்றும் எழுதியிருந்தார்கள். திரு எம்.எல். பிள்ளையவர்கள் எழுதியுள்ள தமிழ் இலக்கிய வரலாற்றில் அய்யா அவர்களைப் பற்றி எழுதும்போது கள்ளர் சரித்திரத்தை மிகவும் பாராட்டி எழுதியுள்ளார்கள். திரு மு.இராகவையங்கார் அவர்கள் தம் நூல்களில் சில இடங்களில் கள்ளர் சரித்திரத்திலிருந்து மேற்கோள்கள் காட்டியுள்ளார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட லெக்சிகன் அனுபந்தத்திலும் கள்ளர் சரித்திரத்தில் உள்ள சொற்கள் எடுத்தாளப்பட்டுள்ளனவாம். தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தாம் எழுதிய தென்பாண்டிச் சிங்கம் என்னும் நூலுக்குத் தோற்றுவாயாக எழுதியிருப்பது அறிந்து இன்புறத்தக்கதாகும். ஆதலால் அதனையும் இங்குக் குறிப்பிடுகிறேன். “தமிழ் கூறும் நல்லுலகத்தாரால் நாட்டாரையா என்று அன்புடன் அழைக்கப்பெற்ற திரு ந.மு.வே.நாட்டார் அவர்களின் கள்ளர் சரித்திரத்தின் துணை கொண்டு இந்நூலை எழுதத் தொடங்குகிறேன்” என எழுதியுள்ளார்கள். இந்நூலை எழுதக் கல்லல் மணிவாசகச் சரணாலய சண்முகசாமிகளும், அய்யா அவர்களின் அன்பு மாணாக்கர் சிவகங்கைச் சோமசுந்தரம் பிள்ளை அவர்களும் உறுதுணையாக இருந்தார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இந்நூலுள் பழந்தமிழ் மக்கள் என்ற பகுதியில் மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களின். சதுமறையாரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின் முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே எனக் கூறியுள்ளதிலிருந்தும், கனகசபைப் பிள்ளை அவர்களும், மு.இராகவையங்கார் அவர்களும் எழுதிய வரலாற்றிலிருந்தும் ஆரியர்கள் தென்னாட்டிற்கு வருவதற்கு முன்னரே தென்னாட்டில் பழந்தமிழர்கள் வசித்து வந்தார்கள் என்பதும், ஆரியர்கள் வடபெரும் கடற்கரையில் வசித்தவர்கள் என்று உலகமான்ய பாலகங்காதர திலகரால் முடிவு செய்யப்பட்டதென்றும், வருணப்பாகுபாடு போன்றவை ஆரியர்கள் தென்னாட்டிற்கு வந்த பிறகே உண்டாயின எனக் காந்தியடிகளும், இரவீந்திரநாத் தாகூரும் கூறியிருப்பதாக எழுதியுள்ளார்கள். எங்ஙனமாயினும் ஆரியர்கள் வடக்கேயிருந்து வந்தவர்கள் என்பதனை ஆரியர் என்னும் ஆற்று வெள்ளம் இந்தியாவென்னும் தனித் தமிழ்நாட்டிலுள்ள தமிழரென்னும் பெருங்கடலில் புக்க பின்னர் ஆரியர் தமிழரே ஆயினர் என்று கூறுதலே சால்புடைத்து. பல்லாயிரம் ஆண்டுகளாக ஓரிடத்திலிருந்து, பழக்க வழக்கங்களில் ஒன்றுதலுற்று ஒரு கடவுளை வழிபட்டு நண்பராய் வாழ்ந்து வருவோர்க்குள் காலதேச இயல்புக்கேற்பச் சில காரணங்களால் பிரிவு உண்டாயினும், அதனை நீடிக்கவிடாது, பிரிவின் காரணங்களை அறிந்து விலக்கி, ஒற்றுமையாக வாழ்தலே கடனாம். பழைய தமிழ்ச்சங்கநாளிலே பிராமணருள்ளிட்ட அனைவரும் தமிழைத் தங்கள் தாய்மொழியாகக் கொண்டு மதித்துப் போற்றி வந்திருக்கிறார்கள் என்பதும், சிறிது பிற்காலத்திலிருந்த திருஞானசம்பந்தர் முதலிய பெரியாரெல்லாம் தம்மைத் தமிழரென்றே பெருமையுடன் பாராட்டி வந்திருக்கின்றார் என்பதும் அறியற்பாலவாம். இவற்றின்மூலம் அய்யா அவர்கள் ஆரியர், தமிழர் என்ற வேற்றுமையின்றிப் பொது நோக்குடையவராக இருந்தார்கள் என்பது தெளிவாகும். இந்நூலுள் “நாகபல்லவச் சோழரும் கள்ளரும்” என்ற கட்டுரை மிக்க ஆராய்ச்சியுடையதாகும். இப்பகுதி கற்போருக்கு மிக்க இன்பம் தருவதாக அமைந்துள்ளது. இந்நூல் எழுதும் காலத்தில் கள்ளர் மரபினரும், பெரும் நிலக்கிழாரும், தமிழ்ப் புலமையுடையவருமாகிய அரித்துவாரமங்கலம் கோபாலசாமி ரகுநாத இராசாளியார் என்பவரும், தமிழ்ப் பேராசிரியர் வித்துவான் சதாசிவப் பண்டாரத்தார் அவர்களும் உறுதுணையாக இருந்து ஏற்ற இடங்களில் உதவி புரிந்தார்கள் என்பது தெரியவருகின்றது. இந்நூலில் கள்ளர் மரபினரின் பட்டப் பெயர்கள் 348 என ஆராய்ந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் 1926-இல் கண்ணகி வரலாறும், கற்பு மாண்பும் என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்நூலில் எளிய இனிய செந்தமிழ் நடையில் கண்ணகியாரின் வரலாற்றையும், அவருடைய கற்பின் சிறப்பையும் தெளிவாக எடுத்துரைப்பது படிக்கத் தொடங்கியது முதல் முடிக்கும்வரை உள்ளத்தை இழுத்துச் செல்லும் பான்மையுடையது. சோழர் சரித்திரம் 1928-இல் சோழர் சரித்திரம் என்னும் உரைநடை நூல் மிகுந்த ஆராய்ச்சியுடன் வெளிவந்தது. திருவிளையாடல் புராண உரை 1925-31 வரைப் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடலுக்குப் பெருஞ்சொல் விளக்கனார் அ.மு.சரவண முதலியார் துணை கொண்டு உரை எழுதி முடித்தார்கள். 1940-இல் அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம், தண்டியலங் காரம் பழைய உரைத்திருத்தம், யாப்பருங்கலக் காரிகை உரைத்திருத்தம் ஆகியவற்றிற்கு அரிய ஆராய்ச்சி முகவுரையும் எழுதியுள்ளார்கள். யாப்பருங்கலக் காரிகையில் உள்ள ‘அளப்பரும் கடற்பெயர் அருந்தவத்தோனே’ என்ற அடிக்கு அமித சாகரர் என்று தெளிவாகப் பொருள் கூறியுள்ளார்கள். 1942-44 வரைச் சிலப்பதிகார உரையும், மணிமேகலை உரையும், அகநானூற்று உரையும் எழுதப் பெற்றனவாம். 1943-இல் பல கட்டுரைகள் அடங்கிய கட்டுரைத் திரட்டு முதலாம் பாகம் வெளியிடப்பட்டது. இந்நூலும் பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. இந்நூலுள் முதற்கண் அமைந்திருக்கும் கல்வி என்னும் கட்டுரை இனி எவராலும் தொகுத்து வெளியிடுவதற்கு அரியதாம் என்னும் பெருமையுடையதாகும். இக்கட்டுரை கல்வி கற்போர் அனைவருக்கும் பயன்படுவதோடு தமிழ் ஆராய்ச்சி செய்வோருக்கும் பெரும் துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ள சுந்தரர் செந்தமிழ் என்னும் கட்டுரையும் அரிய ஆராய்ச்சிகளுடன் அதுபற்றி வேறு ஒருவரும் எழுத முடியாதபடி சிறப்பாக அமைந்திருந்தது. பிற கட்டுரைகளும் இவ்வாறே சிறப்பாக அமைந்தன வாகும். இனி திருவிளையாடற் புராண உரையிலிருந்து ஒன்றிரண்டு பார்ப்போம். “ கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதற்கற்ற கேள்வி வல்லார்கள்நால் வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப்பாலாய் எல்லாமா யல்லதுமா யிருந்ததனை யிருந்தபடி யிருந்து காட்டிச் சொல்லாமற் சொன்னவரை நினையாம னினைந்துபவத் தொடக்கை வெல்வாம்” இந்த அரும் பெறற்பாவிற்கு அய்யா அவர்கள் எழுதிய உரை விளக்கத்தை ஈண்டுத் தருகின்றோம். நான்மறை - இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்பன: தைத்திரியம், பெளடிகம், தலவகாரம், சாமம் எனலுமாம். ஆறங்கம் - சிட்சை, வியாகரணம், நிருத்தம், கற்பம், சந்தம், சோதிடம் என்பன; இவை வேதத்திற்கு உறுப்புக்கள் போறலின் வேதாங்கம் எனப்படும்; இதனை, “ கற்பங் கை, சந்தங்கால் எண்கண் தெற்றெ னிருத்தஞ் செவி சிக் கைமூக்கு உற்ற வியாகரணம் முகம் பெற்றுச், சார்பிற் றோன்றா வாரண வேதக்கு ஆதியந்த மில்லை” என மணிமேகலை கூறுவதாலும் அறிக. முதல் என்றதனால் அறநூல், புராணம் முதலாயின கொள்ளப்படும். கேள்வி என்பது கேட்டல் எனப் பொருள்படுதலன்றிக் கல்வியெனவும், வேதம் எனவும் பொருள்படும். நால்வர் - சனகர், சனாதனர், சனத்தரர், சனற் குமாரர் எனுமிவர். இறைவன் வாக்கிறந்து நிற்றலை ‘மாற்ற மனங்கழிய நின்ற மறையோன்,’ ‘சொற்பதங்கடந்த தொல்லோன்’ என ஆளுடைய அடிகள் அருளுமாற்றானறிக. வேதம் முதலிய கலைகளெல்லாம் பாச ஞான மாகலானும், இறைவன் ‘பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரன்’ ஆகலானும் மறைக்கப் பாலாய் என்றார். இறைவன் எல்லாமாயிருத்தலை, இருநிலனாய்த் தீயாகி நீருமாகி யியமான னாயெறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி யாகாச மாயட்ட மூர்த்தி யாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம்முருவுந் தாமேயாகி நெருநலையா யின்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிக ணின்ற வாறே எனவும், அல்லதுமாயிருத்தலை, “ விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேதவிதியல்லர் விண்ணுநிலனுந் திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர் தெளிநீரு மல்லர்தெரியில் அரிதரு கண்ணியாளை யொருபாகமாக வருள் காரணத்தில் வருவார் எரியர வாரமார்ப்ப ரிமையாரு மல்ல ரிமைப்பாரு மல்லரிவரே” எனவும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்தமை காண்க. “ஒன்று நீயல்லையன்றியொன்றில்லை யாருனையறியகிற் பாரே” என்னும் திருவாசகமும் சிந்திக்கற்பாலது. இறைவன் உலகெலாமாகி வேறாயுடனுமாய் நிற்பன் என மெய்கண்ட நூல்கள் கூறா நிற்கும். இருந்ததனை - வினையாலணையும் பெயர்; தன்னையெனப் பிரித்தலும் ஆம். இருந்து காட்டிச் சொல்லாமற் சொல்லுதல் - மோனமுத்திரைக் கையுடனமர்ந்து அருளாலு ணர்த்துதல். ஒருகை மார்போடு விளங்க ஒரு கை தாரோடு பொலிய என்னும் திருமுருகாற்றுப்படைத் தொடருக்கு “முனிவர்க்குத் தத்துவங்களைக் கூறி உரையிறந்த பொருளை யுணர்த்துங் காலத்து ஒருகை மார்போடே விளங்கா நிற்க, ஒரு கை மார்பின் மாலை தாழ்ந்ததனோடே சேர்ந்து அழகு பெற, இறைவன் மோன முத்திரையத்தனாய்த் தானாயே யிருந்து காட்ட ஊமைத்தசும்புள் நீர் நிறைந்தாற் போல் ஆனந்தமயமான ஒளி மாணாக்கர்க்கு நிறைதலின், அதற்குரிய மோனமுத்திரை கூறிற்று.” என நச்சினார்க்கினியர் உரை விரித்திருப்பது இங்கு நோக்கற்பாலது. “ ஓரானிழ லோன்கழ லிரண்டும் முப்பொழு தேத்திய நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை” என்பது திருவெழுகூற்றிருக்கை. நினையாமல் நினைந்து - பிறிதொன்றையும் நினையாமல் நினைந்து, இடையறாது பாவித்து என்றபடி; சிந்திக்கு முறையிற் சிந்தித்து என்றலுமாம்; அது தற்போதத்தாற் சிந்தியாது திருவருள் வழியாற் சிந்தித்தல் என்பதாம். இதனை, “அறியாமை யறிவகற்றி யறிவி னுள்ளே யறிவுதனை யருளினா லறியாதே யறிந்து குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடுங் கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாகில்” என்னும் சிவஞான சித்தியாராலறிக. மாணிக்கவாசகப் பெருமானும் ‘நினைப்பற நினைந்தேன்’ என்றார் என விளக்கியுள்ளார்கள். இந்நூல் மதுரைக்காண்டம், கூடற்காண்டம், ஆலவாய்க் காண்டம் என்னும் மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அழகிய முறையில் சைவசித்தாந்த சபை நூற்பதிப்புக் கழகத்தாரால் அச்சிடப்பட்டுத் தமிழ் மக்கள் பலராலும் பாராட்டப் பெற்றது. சிலப்பதிகாரம் அய்யா அவர்கள் வித்துவான் சிங்காரவேல் சேதிராயர் அவர்கள் துணையுடன் சிலப்பதிகாரம் மூன்று காண்டத்திற்கும் சிறந்த விரிவுரை எழுதியுள்ளார்கள். அரும்பத உரையாசிரியர் வரலாறு, அவர் உரை பற்றிய ஆராய்ச்சி, அடியார்க்கு நல்லார் வரலாறு, அவர் உரை பற்றிய ஆராய்ச்சி, இளங்கோவடிகள் வரலாறும் சிலப்பதிகாரம் பற்றிய ஆராய்ச்சியும், ஆராய்ச்சி முகவுரையும் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்கள். அவற்றிலிருந்து சிலவற்றைக் காண்போம். சமயம் - ‘செஞ்சடை வானவ னருளினில் விளங்க, வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்’ எனவும், ‘ஆனேறூர்ந் தோனருளிற் றோன்றி, மாநிலம் விளக்கிய மன்னவனாதலின்’ எனவும் போன்றவற்றால் செங்குட்டுவனுடைய பெற்றோர் சிவனருளாலே அவனை மகனாகப் பெற்றனரென்பதும், ‘நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி, உலகு பொதியுருவத் துயர்ந் தோன் சேவடி, மறஞ்சேர் வஞ்சி மாலையொடுபுனைந் திறைஞ்சாச் சென்னியிறைஞ்சி வலங்கொண்டு’ எனவும், ‘ஆடக மாடத்தறி துயிலமர்ந்தோன், சேடங்கொண்டு சிலர் நின்றேத்தத் தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள், வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின், ஆங்கது வாங்கி யணிமணிப் புயத்துத் தாங்கினனாகி’ எனவும் போன்றவற்றால் செங்குட்டுவன் சிவபெருமானையன்றிப் பிறிதொரு தெய்வத்தையும் முடியால் வணங்காத சிவபக்தி மாண்புடையா னென்பதும் பெறப்படுதலின் அவனுக்குத் தம்பியாகிய இவரது சமயமும் சைவமே யாதல் வேண்டும். குணவாயிற் கோட்டத் தரசு துறந்திருந்த என்புழி, அடியார்க்கு நல்லார் கோட்டம் என்பதற்கு அருகன் கோயில் என்று பொருள் கூறியது அடிகள் என்னும் பெயர் சைன சமயத் துறைவிகட்குரியதென்னும் கருத்தினாற் போலும்? அடிகள் என்பது இறைவனுக்கும் அவனடியார்க்கும் வழங்கும் பொதுப்பெயராவதன்றி, அருக சமயத் துறவிகளையே குறிப்பதொன்றன்றாகலானும், இளங்கோவடிகள் பிறவா யாக்கைப் பெரியோன் எனவும், உலக பொதியுருவத் துயர்ந்தோன் எனவும் கவியின் கூற்றிலேயே சிவபிரானை முழுமுதற் பொருளாகப் பாராட்டுதலானும் அவர் சைவ சமயத்தினரென்பதே துணிபு என்றுரைப்பர். உரைவேந்தர் வித்துவான் ஒளவை சு.துரைசாமிப் பிள்ளையவர்கள் எழுதிய சிலப்பதிகார ஆராய்ச்சி என்ற நூலில் உரைநலம் என்ற பகுதியில் அய்யா அவர்களின் உரைபற்றி எழுதியிருப்பதிலிருந்து சிறிது காண்போம். “இஞ்ஞான்று நடுக்காவேரி பண்டித ந.மு.வே.நாட்டார் அவர்கள் நன்கு ஆராய்ந்து நூல் முழுமைக்கும் எழுதிய நல்லுரை தமிழ் மக்கள் தவப்பேற்றால் வெளிவந்திருக்கின்றது. இப்பெருமக்களின் உரை நலத்தைப் படித்து இன்புறவேண்டும்” எனவும், இந்நூல் மங்கல வாழ்த்துப்பாடல் பகுதியில் கண்ணகியார் கோவலனுக்கு முற்கூறப்பட்டதற்கு அரும்பதவுரைகாரர், ‘இவளை முன் கூறிற்று, கதைக்கு நாயகியாதலின்’ என்கின்றார். இவ்வாறே நச்சினார்க் கினியரும் சீவகசிந்தாமணி உரையில் சீவகனை முற்கூறினார். கதைக்கு நாயகனாதலின் என்று எழுதுகின்றார். ஆனால் அடியார்க்கு நல்லார், இவரை மறுக்காதே ‘கண்ணகியை முற்கூறினார், பத்தினியை யேத்துதல் உட்கோளாகலான்’ என்று உரைக்கின்றார். இவ்வுரை விகற்பத்தை நன்கு ஆராய்ந்து கண்ட நாட்டாரையா அவர்கள் ‘பத்தினியை ஏத்துதல் கருத்தாகலானும், கதைக்கு நாயகியா கலானும் கண்ணகியை முற்கூறினார்’ என்க என்று உரை கூறினார். கண்ணகியும், கோவலனும் மாதரி என்பவளின் அடைக்கலப் பொருளாக ஆயர்சேரியில் தங்கியிருந்த போது கண்ணகி கோவலனுக்கு அமுதூட்டும் சிறப்பினை விளக்கும் ‘அரைசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின், உரியவெல்லாம் ஒருமுறை கழித்து’ என்பதற்கு அரும்பத உரைகாரர் அருமறை மருங்கின் உரியவெல்லாம் - பலியிடுதல் முதலாயின; வாய் பூசல் முதலியனவுமாம். தன்னூரிற் செய்வன எல்லாம் செய்யப் பெறாமையின் ஒரு முறை கழித்து என்றார் என்று கூறுகிறது. அடியார்க்கு நல்லார் இப்பகுதிக்குக் கூறும் உரை ஏலாமையின் அதனை விடுத்து அரும்பத வுரைக்காரர் ஒருமுறை கழித்து என்றதற்குரைத்த விசேடத்தை நாவலர் பண்டிதரவர்கள் தாம் மேற்கொண்டிருப்பது மிக்க இன்பம் தருகிறது எனவும் குறிப்பிடுகின்றார். இந்நூல் முழுமைக்கும் ந.மு.வே. நாட்டார் அவர்கள் இனிய உரை வகுத்துள்ளார் கள். அது சர்க்கரைக் கட்டியான் இயன்ற ஓவியம் எப்பாலும் தித்திப்பது போல அவர் தம் உரையின் எப்பகுதியும் இன்பந்தருகின்றது. அவர்களது இவ்வரிய உதவிக்குத் தமிழ் மக்கள் என்றும் நன்றி செலுத்தும் கடமைப் பாடுடையர் எனவும் ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் பாராட்டியுள்ளார்கள். அகநானூறு என்னும் நெடுந்தமிழ் நூலுக்குக் கரந்தைக் கவியரசு ஐயா அரங்க.வேங்கடாசலம் பிள்ளை அவர்களின் துணைகொண்டு விரிவுரையும் விளக்கமும் எழுதி முடித்தார்கள். அகநானூறு மூன்று பகுதிகளாகக் களிற்றியானை நிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை எனப்பிரித்து எழுதி வெளியிடப்பெற்றது. இந்நூல் முற்றுப்பெறும் நிலையில் வேங்கட விளக்கம் என்னும் அகநானூற்று உரை முற்றிற்று என எழுதினார்கள். அய்யா அவர்கள் கடைசியாகச் சீத்தலைச் சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலையின் 26 காதைகளுக்கு உரை எழுதினார்கள். கடைசி நான்கு காதைகளுக்குத் திரு ஒளவை. துரைசாமிப் பிள்ளையவர்கள் உரை எழுதினார்கள். அந்நூலில் பளிக்கறை புக்க காதையில் உதயகுமாரன் மணிமேகலையை விரும்பித் தொடரும் போது, மாதவியின் தோழி சுதமதி என்பாள் “ இளமை நாணி முதுமை யெய்தி உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு அறிவுஞ் சால்பும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செப்பலு முண்டோ? அனைய தாயினும் யானொன்று கிளப்பல் வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி வினையின் வந்தது வினைக்குவிளை வாயது புனைவன நீங்கிற் புலால் புறத்திடுவது மூப்பு விளிவுடையது தீப்பிணி இருக்கை பற்றின் பற்றிடங் குற்றக் கொள்கலம் புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை அவலக் கவலை கையா றழுங்கல் தவலா உள்ளந் தன்பா லுடையது மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய்” எனவரும் அடிகளுக்கு அய்யா அவர்கள் எழுதிய விசேட உரை நோக்கத்தக்கது. இளமைநாணி முதுமையெய்தி உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு - இளமைப்பருவத்தை நாணி முதுமைப் பருவத்தை அடைந்து, தம்முள் மாறு கொண்டு வந்தார் இருவருடைய சொல்லை ஆராய்ந்து அறிந்து அவர்கட்கு அவற்றின் முடிவை விளக்கிய பேரறிவுடையோனாகிய கரிகாற் பெருவளத்தானது வழித் தோன்றலாகிய நினக்கு, அறிவும், சால்பும், அரசியல் வழக்கும், செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ - நல்லறிவினையும், அமைதியையும் அரசியல், நீதியினையும் செறிந்த வளையையுடைய மகளிர் கூறுமாறும் உண்டோ. கரிகாற் பெருவளத்தான் உரைமுடிவு காட்டிய இவ்வரலாறு, “ உரைமுடிவு காணா னிளமையோ னென்ற நரைமுது மக்க ளுவப்ப - நரைமுடித்துச் சொல்லான் முறைசெய்தான் சோழன் குலவிச்சை கல்லாமற் பாகம் படும்” என்னும் பழமொழி வெண்பாவாலும், தம்முள் மறுதலையாயினாரிருவர் தமக்கு முறைசெய்ய வேண்டி வந்து சில சொன்னால் அச்சொன் முடிவு கொண்டே ஆராய்ந்து முறை செய்ய அறிவு நிரம்பாத இளமைப் பருவத்தான் என்று இகழ்ந்த நரைமுது மக்கள் உவக்கும்வகை நரை முடித்து வந்து, முறைவேண்டி வந்த இருதிறத்தாரும் சொல்லிய சொற்கொண்டே ஆராய்ந்தறிந்து முறை செய்தான் கரிகாற் பெருவளத்தா னென்னுஞ் சோழன்; ஆதலால் தத்தம் குலத்துக்குத் தக்க விச்சைகள் கற்பதற்கு முன்னே செம்பாகம் உளவாம் என்றவாறு என்னும் அதன் உரையாலும் அறியப்படும். பொருநராற்றுப் படையிலும் ‘முதியோர், அவைபுகு பொழுதிற்றம் பகை முரண் செலவும்’ என இது கூறப்பட்டுள்ளது. மருகற்கு முன்னிலையிற் படர்க்கை. தெய்வம் தொழஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்ற அப் பொய்யில் புலவன் பொருளுரை தேராய். (மணிமேகலை சிறைசெய்கதை 59-61) இப்பாடல் வரிகளில் சீத்தலைச் சாத்தனார் வள்ளுவர் வரிகளை எடுத்தாண்டி ருப்பது இன்பம் பயப்பதாகும். 24.12.1940-இல் சென்னையில், சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கச் சார்பில் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடந்தது. இப்பேரவையில் நாட்டாரையா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் செப்பேட்டில் வழங்கப்பட்டது. 1930-ஆம் ஆண்டு பிப்பிரவரி 11,12,13,14-ஆம் நாட்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தொல்காப்பிய ஆராய்ச்சி என்னும் தலைப்பில் முறையே, 1. நூலாசிரியர் வரலாறு. 2. எழுத்தாராய்ச்சியும், சொல்லாராய்ச்சியும். 3. தமிழ்ச் செய்யுட்களும், நூல்களும். 4.பொருளாராய்ச்சி என நிகழ்த்திய நான்கு சொற்பொழிவுகளும் அறிஞர் அனைவராலும் பாராட்டப்பெற்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சார்புச் சொற்பொழிவுகளாக, சிலப்பதிகார ஆராய்ச்சி முதலியன நாட்டாரையாவால் நிகழ்த்தப்பட்டன. 1939-ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் கொழும்பிலுள்ள அன்பர்களால் அழைக்கப்பட்டு அய்யா அவர்கள், திரு அ.ச.ஞானசம்பந்தர் அவர்களுடன் சென்று அங்குள்ள விவேகானந்த சங்கம் முதலியவற்றில் சொற்பொழிவு செய்து மீண்டனர். 09.03.1940-இல் சென்னையில் நடந்த கலித்தொகை மாநாட்டின் தலைவராக இருந்து அரிய விரிவுரை நிகழ்த்தினார்கள். 1940-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21, 22-ஆம் தேதிகளில் திருப்பதியில் நடந்த அனைத்திந்தியப் பத்தாவது கீழ்த்திசை மாநாட்டில் கலந்து கொண்டு அய்யா அவர்கள் வஞ்சி மாநகரைப் பற்றி நிகழ்ந்த ஆராய்ச்சிச் சொற்போரில் கலந்து கொண்டார்கள். திருச்சி வானொலிப் பேச்சுக்கள்: திருச்சி வானொலியில் பின்வரும் இலக்கியச் சொற்பொழிவுகள் நாட்டாரையா அவர்களால் நிகழ்த்தப் பட்டன. 1) 21.06.1939 - தமிழிலக்கியங்களிற் காணப்படும் இசைப்பகுதிகள். 2) 29.10.1939 - வீரச்சுவை 3) 01.12.1939 - அவலச்சுவை 4) 16.12.1939 - இன்பச்சுவை 5) 07.04.1940 - நகைச்சுவை 6) 12.06.1940 - பிற்காலப் புலவர்களின் சுடுசொல் ஆட்சி. 7) 23.11.1940 - யாப்பியல் அமையாச்செய்யுள் 8) 30.05.1941 - தாய்மொழி 9) 10.10.1941 - இளங்கோவடிகளும் - இயற்கைப் புனைவும். 10) 21.08.1942 - கலித்தொகை. 11) 29.01.1943 - மனோன்மணீயம் அய்யா அவர்கள் முதன்முதலில் எழுதியது வேளிர் வரலாற்று ஆராய்ச்சி என்னும் கட்டுரை நூலாகும். தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய கணம்புல்ல நாயனார் திருப்பதி என்ற கட்டுரை தம் கருத்துக்கு மாறாக இருப்பது கண்டு, அதற்கு மறுப்புரையாக அரிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று எழுதிச் சித்தாந்தம் என்னும் பத்திரிகைக்கு அனுப்பியுள்ளேன் என்று என்னிடம் கூறினார்கள். அதுதான் அய்யா அவர்களின் கடைசிக் கட்டுரையாகும். நாட்டார் சிந்தனைகள்* பேராசிரியர் பி.விருத்தாசலம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அஃதாவது 12.04.1884-இல் காவிரியின் கிளை நதிகளுள் ஒன்றாகிய குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள அழகிய சிற்றூராகிய நடுக்காவிரியில் பிறந்தவர்; மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் மூன்றே ஆண்டுகளில் எழுதி முதன்மையாகத் தேர்ச்சி பெற்றவர். அத்தேர்வுகளுக்குரிய பாடநூல்களை ஆசிரியர் எவருடைய உதவியுமின்றித் தாமே முயன்று படித்தமையால் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று அழைக்கப் பெற்ற நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தம்முடைய மாணாக்கர்களால் நாட்டாரையா என்று அன்புடன் அழைக்கப் பெற்றார். திருச்சிராப்பள்ளியில் இப்போதுள்ள பிஷப் ஹீபர் கல்லூரி முன்னர் எஸ்.பி.ஜி.கல்லூரி என்று அழைக்கப் பெற்றது. அந்தக் கல்லூரியில் இருபத்து நான்கு ஆண்டுகளும், கோயம்புத்தூரில் உள்ள தூய மைக்கேல் உயர்நிலைப் பள்ளியில் ஓராண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏழு ஆண்டுகளும் ஆசிரியராகப் பணிபுரிந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைப் புலவர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் ஊதியம் எதுவும் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணிபுரிந்து சிறப்பித்தார்கள். இவ்வாறு முப்பத்து ஐந்து ஆண்டுகள் கல்லூரி மாணாக்கர்களுடன் நெருங்கிப்பழகி, அவர்களுக்கு அருமைத் தமிழ்ப் பேராசிரியராய் விளங்கி, வையத்துள் வாழ்வாங்கு வாழும் முறை இதுவெனக் காட்டி நெறிப்படுத்திய நாட்டாரையா அவர்கள் மாணாக்கருக்கு இருக்கவேண்டிய பண்புகள் குறித்தும், கல்லூரிகளில் ஏற்படுத்தப் பெற்றுள்ள மாணவர் விடுதிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய முறை பற்றியும் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் சிறப்புடையனவாகும். மக்கள் வாழ்க்கையில் மாணவப் பருவம் என்பது மகிழ்ச்சி மிக்க மாண்புடைய பருவமாகும். பெண்ணொருத்தியை மணந்து கொண்டு அவளுக்குக் கொழுநனாக விளங்கும் ஆண்மகன் அப்பெண்ணுக்குக் கண்ணாக விளங்குவதால் கணவன் என்று அழைக்கப்படுவது போலவே மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான மாண்புகளை எல்லாம் ஆக்கிக் கொள்ளுபவன் மாண் ஆக்கன் (மாணாக்கன்) என்றும், மாண்பே வடிவமாக விளங்கும் அவன் மாண் அவன் (மாணவன்) என்றும் அழைக்கப்பெறுவது தமிழ் மரபாகும். மண்ணிலே பிறந்த பொன்னும், மலையிலே பிறந்த மணியும், கடலிலே பிறந்த முத்தும் பவளமும் வெவ்வேறு இடங்களிலே பிறந்தவை யாயினும் அரியதோர் அழகிய அணிகலனைச் செய்யும்போது அவையனைத்தும் ஒன்று கூடி அணித்தாக நின்று அழகு செய்வதுபோல வேறு வேறு இடங்களிலே பிறந்தவராயினும் சான்றோர்கள் சான்றோர்களுடன் நட்புக் கொள்வர். சால்பில்லாதவர்கள் தம்மைபோன்ற சால்பில்லாதவர்களுடன் நட்புக்கொள் கின்றனர் என்று கூறும் புறநானூற்றுப் பாடலொன்று உண்டு. பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் இடைபடச் சேய வாயினும் தொடைபுணர்ந்து அருவிலை நன்கலம் அமைக்குங் காலை ஒருவழித் தோன்றியாங் கென்றும் சான்றோர் சான்றோர் பால ராப சாலார் சாலார் பாலரா குபவே (புறநானூறு - 218) என்னும் அப்பாட்டிற் கூறியவாறே ஒவ்வொரு கல்லூரி மாணவர் விடுதியிலும் பல்வேறு நாடுகளிலும் ஊர்களிலும் பிறந்தோரும், சாதியாலும் சமயத்தாலும் வேறுபட்டோருமாய மாணவர்கள் தங்கியுள்ளனர். அங்கே தங்கியுள்ள ஒவ்வொரு மாணவரும் தத்தம் இயல்புக்கேற்ற மாணவருடன் நட்புக்கொண்டு இனிதே வாழ்கின்றனர். உள்ளம் ஒன்றுபட்ட நண்பர்கள் தத்தம் ஊர்ப்பகுதிகளில் தாம் கண்டனவற்றையும் கேட்டறிந்தவற்றையும், தாம் பயின்ற நூல்களில் காணப்பெறும் நயங்களையும், புதிய செய்திகளையும், அன்புடன் ஒருவர்க்கொருவர் எடுத்துரைத்து மகிழ்தலால் வரும் இன்பத்துக்கு எல்லையுமுண்டோ? மாணவர்கள் தம்மைவிட வயதில் மூத்த பெரியோர்களைப் போல் நடக்க விரும்புவதில்லை; தம்மை ஒத்த பிற மாணவர்களைப் பின்பற்றி நடக்கும் மாணவர்களே மிகப் பலராவர். ஆதலின், மாணவர் விடுதிகளில் வாழ்வோருள் உயர்ந்த பண்புகளுடைய மாணவரைப் பார்த்து, அவருடைய நற்பண்புகளைத் தாமும் பெற்றுத் தம்மை உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்புண்டு; தம்மைவிட நன்கு பயிலும் மாணவரைப் பார்த்து நாம் ஏராளமாகப் படித்துள்ளோம் என்னும் செருக்கு அடங்கப்பெற்று, மேன்மேலும் பயிலும் இயல்பினை மாணவர் பெறுவரேல், அதனால் பெறும் பயன் மிகவும் பெரிதன்றோ? மாணவர் விடுதிகளில் ஒன்றாகத் தங்கியிருந்த நண்பர்களின் நட்பு மிகவும் உயர்ந்ததாய்-ஒருவர்க்கொருவர் பெரிதும் உதவி செய்யவல்லதாய் - உறுதிவாய்ந்ததாய் விளங்கும்; மாணவர் விடுதிகளில் மனமொன்றிப் பழகும் உயர்ந்த பண்பு நலஞ்சான்ற மாணவர்களுக்கு அவ்விடுதி வாழ்க்கை புராணங்களில் சொல்லப்படும் தேவருலக வாழ்வைவிடவும் சுவையுடையதாய் விளங்கும். நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் இந்த அரிய கருத்துக்களை யெல்லாம் தம்முடைய மைந்தர் திரு நடராசன் அவர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் மிகச்சுருக்கமாகத் தெரிவித்துள்ளார்கள். “மாணாக்கர்கள் ஓர் விடுதியில் வதிவதென்பது உயர்ந்த நோக்கம் உடையதாதல் வேண்டும்; மொழி, மதம், இனம், இடம் முதலியவற்றால் பலவாறாகப் பிரிக்கப் பட்டிருக்கிற மாணவர்கள் ஓரிடத்தில் ஒருங்கு உறைதலால் ஒருவர் ஒருவரோடு நன்கு அளவளாவவும், ஏனையோரிடமுள்ள உயர்ந்த குணங்களைக் கண்டு மகிழ்ந்து தாமும் அவற்றைக் கைக்கொள்ளவும், ஏனையோரின் அறிவு நுட்பத்தையும் கல்வித் திறத்தையும் கண்டு தமது செருக்கு அடங்கப்பெற்று அவர் போல் தாமும் சிறப்படைதற்கு முயற்சி செய்யவும், ஒருவர்க்கொருவர் உதவி செய்து ஒற்றுமையும் அன்பும் உடையராய் வாழவும் வசதிகள் உண்டு. இவ்வாறாகத் தமது மனத்தைப் பண்படுத்திக் கொண்டு விடுதியில் உறைவார்களேயானால் அதனால் உண்டாகும் இன்பத்திற்கு நிகராக வேறு எதையும் சொல்லவியலாது.” இவை மாணவர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர் அனைவருடைய நெஞ்சிலும் என்றென்றும் பசுமையாக நிலைத்திருக்க வேண்டிய சீரிய சிந்தனைகளாகும். நாட்டார் சிந்தனைகள் 2 நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தம் வாழ்நாள் முழுதும் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் பெருந்தொண்டாற்றி வந்தவர்; நின்ற சொல்லராகவும் நீடு தோன்று இனியராகவும், என்றும் நம் நெஞ்சத்தைவிட்டு அகலாதவராகவும் விளங்கும் இயல்புடையவர்; தமிழ் நூற் கடலை நிலை கண்டுணர்ந்த பெருமை உடையவர்; வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்திற்குப் பண்டு வடக்கெல்லையாக வேங்கடமலை விளங்கினாற்போலத் தமிழ் மொழிக்கண் அமைந்துள்ள ஆழ்ந்தகன்ற நுண்ணிய புலமைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாய்க் கூறத்தக்க அறிவு மலையாக விளங்கியவர். திருமுருகாற்றுப் படையை நாளும் ஓதி வழிபாடு நிகழ்த்தி வந்த அப்புலவர் பெருமகன், அந்நூலில் வரும், “ ...................................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” (திருமுருகாற்றுப்படை-132-134) என்னும் அடிகளுக்கோர் எடுத்துக்காட்டாய் இலங்கினார். இவ்வாறு தமிழ்மொழியில் முற்றிய புலமை உடையவராய் விளங்கிய நாட்டார் ஐயா அவர்கள் தமிழ்மொழியின் வளர்ச்சியில் கண்ணுங்கருத்துமாக இருந்தார். உலகில் நாடொறும் புதிது புதிதாக வளர்ந்துவரும் பல்வேறு அறிவியல் துறைகளில் எழுதப்படும் பல்லாயிரக்கணக்கான நூல்களில் காணப்படும் அறிவியல் தொழில்நுட்பக் கலைச் சொற்களையெல்லாம் அப்படி அப்படியே கடன் வாங்கிக் கொண்டு தமிழ்ச்சொல் வளத்தைப் பெருக்க வேண்டும் என்று அடிக்கடி அறிவுரை கூறுவோரை இன்றும் ஏராளமாகப் பார்க்கிறோம். மேலோட்டமாகப் பார்க்கும்போது நல்ல அறிவுரைபோல் தோன்றும் இக்கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கது அன்று. ஒருவனுடைய குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் மிகுந்த பொருட்பற்றாக்குறை ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம். பற்றாக்குறையைப் போக்க உடனே நண்பர்களிடம் கடன் வாங்கிச் சமாளிக்கிறோம். நெருக்கடி நேரத்தில் கடன் வாங்கியதில் தவறில்லை. ஆனால், தொடர்ந்து அப்படியே கடன் வாங்கிக் கொண்டேபோனால் - வந்ததெல்லாம் கொள்ளும் மகராசன் கப்பல் என்றபடி ஊரில் ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லாரிடமும் கடன் வாங்கி, வாங்கிய கடனைத் திருப்பித் தராமலேயே ஒருவன் வாழ்க்கை நடத்துவானாயின் அவன் நிலைமை யாதாகும்? “ ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை எல்லார்க்கும் கள்வனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு” (ஒளவையார் நல்வழி - 25) என்னும் பாட்டில் சொன்னபடி அவனது மானமும் கெட்டுப் போய்ப் பலரும் பழிக்கும் நிலை தோன்றுமல்லவா? அதற்குமாறாக மதிப்புடனும் மானத்துடனும் வாழ வேண்டும் என்று கருதுகிற ஒரு நன்மகன் என்ன செய்வான்? கடன் வாங்க நாணுவான், வேறு வழியில்லாத நெருக்கடி நேரத்தில் கடன் வாங்கியதற்காக உடலும் உள்ளமும் கூசுவான். அதனால், உழைப்பான்; நன்றாக உழைப்பான்; முன்பு உழைத்ததைவிடப் பன்பமடங்கு கூடுதலாக உழைப்பான்; அதனால் கிட்டிய பொருளைக் கொண்டு வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பான்; எதிர்காலத்தில் நெருக்கடி வந்தாலும் கடன் வாங்கத் தேவையில்லாதபடி பொருளாதார வளமுடையவனாகத் தன்னை உயர்த்திக் கொள்வான்; இன்னும் சொல்லப்போனால், வேறு யாருக்கேனும் பணம் தேவைப்பட்டால் கொடுத்து உதவக் கூடிய அளவிற்குத் தன் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வான். அதுவன்றோ வாழும் முறைமை. சான்றோன் ஒருவன் தன் குடும்ப வாழ்க்கையில் மேற்கொள்ளும் இத்தகைய நடைமுறையையே மொழிவளர்ச்சியிலும் பின்பற்ற வேண்டும். எவ்வாற்றானும் ஏற்பது இகழ்ச்சி; கடன் வாங்குவது கொடியது; ஈயென இரத்தல் இழிந்தது. அறிவியல் நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கும்போது அந்நூல்களில் காணப்படும் கலைச் சொற்களுக்கு உரிய பொருளுடைய சொற்கள் தமிழில் உள்ளனவா என்று தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். அவை போதாவிடத்துத் தமிழில் உள்ள வேர்ச் சொற்களிலிருந்து புதிய சொற்களைப் படைத்துக் கொள்ள வேண்டும். புதிய சொற்களைக் கண்டுபிடிக்கக் கால தாமதம் ஆகும்போது வேற்றுமொழிச் சொற்களைக் கடன் வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு கடன் வாங்கும் சொற்களையும் தமிழின் ஒலியியல்புக்கேற்பத் திரித்தே வழங்குதல் வேண்டும். இக்கருத்துக்களை எல்லாம் நமது தாய்மொழி என்னும் கட்டுரையில் நாட்டார் ஐயா அவர்கள் மிக அருமையாக எடுத்துரைக்கின்றார்கள். இப்போது அவர்கள் கருத்தினை அப்படியே கேட்போம். “பிறமொழிச் சொற்களை எடுத்துக் கொள்வது குற்றமின்றாயினும், அவற்றை வரம்பின்றிப் புகுத்துவதானது, தமிழின் தூய்மையையும் அழகையும் சிதைத்து, அதன் தொன்றுதொட்ட மாண்பினைக் கெடுப்பதாகும் என்பதனைக் கருத்திலிருத்தல் வேண்டும். இக்காலத்துப் புதிய கலைகள் பலவும் எழுதுதற்குச் சொற்கள் பல வேண்டுமென்பது உண்மையாயினும், அதன் பொருட்டுத் தமிழினைத் துருவியாராய்ந்து வேண்டுஞ் சொற்களைக் காண்டலும், அவை போதாவிடத்துத் தமிழ்ப் பகுதியினின்று புதிய சொற்களை ஆக்கிக் கொள்ளுதலும், இன்றியமையாத வழிப் பிறமொழிச் சொற்களை ஏற்றுக் கொள்ளுதலுமே அறிவும் ஊக்கமும் முயற்சியும் உடையார்க்கு அழகாவனவாம். அந்நெறியே, கலைப்பயிற்சியை எளிதாக்குவதுமாம். இனி, பிறமொழிச் சொற்களை இரவல் வாங்குமிடத்தும் அவற்றைத் தமிழியல்புக்கேற்ற ஓசையினவாகத் திரித்துக் கொள்ளுதல் ஆன்றோர் கைக்கொண்ட நெறியாகும். கல்வியிற் பெரியராகிய கம்பர், இலக்குவன், வீடணன் என்றிவ்வாறாக வடசொல்லுருவினைத் தமிழியல்புக்கேற்ப மாற்றியுள்ளமை காண்க. கிறித்துவ வேத புத்தகத்தை மொழி பெயர்த்தோர் இயேசு, யோவான், யாக்கோபு என்றிங்ஙனம் தமிழியல்புக்கேற்பச் சொற்களைச் திரித்தமையால் அதன் பயிற்சிக்குக் குறைவுண்டாயிற்றில்லை. ஒவ்வொரு மொழியிலும் இவ்வியல்பு காணப்படும். ஆகவே, பிற மொழிகளிலுள்ளவாறே அச்சொற்களைத் தமிழில் வழங்க வேண்டுமென்பது நேர்மையாகாது." நாட்டார் சிந்தனைகள் 3 நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் மிகச்சிறந்த கல்வியாளர்; நடுக்காவிரி என்னும் சிற்றூரில் பிறந்து ஆசிரியர் எவர் துணையுமின்றித் தாமே பயின்று மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வுகளை எழுதியபோது - தக்கதோர் கல்லூரியில் நல்லாசிரியர்களுக்கு மாணாக்கராய் இருந்து பாடம் கேட்கும் பேற்றினைப் பெற்றிலேமே என்று எண்ணி ஏங்கியவர்; அதனால், யாம் பட்ட துன்பம் படாது நீங்குக இவ்வையகம் என்று கருதித் தம் சொந்த முயற்சியில் திருவருட் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவக் கனவு கண்டு அதற்கான முயற்சிகளைச் செய்தவர். திராவிடத் தன்மானப் பேரியக்கம் கண்ட தந்தை பெரியார் அவர்கள் அத்திருவருட் கல்லூரி நிறுவ உரூபாய் ஐம்பது நன்கொடை வழங்கினார் என்பதும் மகிழ்வுடன் குறிக்கத்தக்க செய்தியாகும். மிகச்சிறந்த கல்வியாளராகிய நாட்டார் ஐயா அவர்கள் கல்வி என்பதற்குத் தரும் விளக்கம் மிகவும் அருமைப்பாடுடையது ஆகும். கல்வி என்பது சில நிகழ்ச்சிகளையும், பொருள்களையும் அவற்றின் இயல்புகளையும் அறிவது மாத்திரம் அன்று. ஊக்கமும் மகிழ்ச்சியும் விளைத்து, உள்ளத்தைப் பண்படுத்தி, உயர்ந்த எண்ணங்களைத் தோற்றுவித்து உயர்நெறியிற் செலுத்துவதே உண்மையான கல்வியாகும் என்று கூறும் நாட்டார் ஐயா அவர்களின் கருத்து நம் சிந்தனையைத் தூண்ட வல்லதாகும். மகாத்துமா காந்தியடிகளைப் போலவே நாட்டார் ஐயா அவர்களும் தாய்மொழி வழியாகக் கல்வி கற்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டுச் சோறு தின்று, தமிழ் நாட்டுத் தண்ணீர் குடித்து, தமிழ் நாட்டில் வீசும் காற்றை உயிர்த்துத் தமிழ் நாட்டில் உயிர் வாழ்வோர் அனைவரும் தத்தம் குழந்தைகட்குத் தமிழிலேயே கல்வி புகட்டுதல் வேண்டும். இந்த இயற்கைக்கு மாறாகத் தாய்மொழியைப் புறக்கணித்து ஆங்கிலம் முதலிய அயன்மொழிகளில் கல்வி கற்பிப்பது முறையற்ற செயலாகும். தாய்மொழிக் கல்வியை வற்புறுத்தி நாவலர் நாட்டாரையா அவர்கள் கூறிய கருத்தினைக் கேண்மின்: “கல்வியானது உலகில் வழங்கும் பல மொழிகளாலும் எய்தற்பாலதே யெனினும், தாய்மொழியிற் கற்றலென்பது ஒவ்வொருவர்க்கும் பிறப்பாலுரிய கடன்களுள் விழுமியதொன்றாம். அன்றியும் நாட்டு மக்களனைவரும் கல்விகற்று அறியாமையினீங்குதற்கு வேற்றுமொழியைத் துணையாகக் கொள்ளுதல் ஆற்று வெள்ளத்தைக் கடக்க மண்குதிரையைத் துணையாகக் கொண்டதுபோலும் பயனில் செயலேயாகும். இந்நாட்டிலே எத்தனை ஆண்டுகளாக எவ்வளவு பொருட்செலவும் முயற்சியும் கொண்டு ஆங்கிலக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது? அங்ஙனம் கற்பித்தும் ஆடவரினும் மகளிரினும் கற்றார் எத்துணையராகவுள்ளார்? இன்னும் எத்தனையாண்டுகள் செல்லினும் யாவரும் அம்மொழி வழியாகக் கல்வி பெறுதல் கூடுமோ? இதனைச் சிந்தித்துணர்வது அறிஞர் கடனாகும். அம்மட்டோ! தம் நாட்டின் பழைய நிலையினையும், தம் முன்னோரின் பல்வகைப் பெருமைகளையும் அறிந்து இன்புறுதற்கும், அவ்வாற்றால் ஊக்கமும் உரனுங் கொண்டு தம் நாட்டை வளம்படுத்த முயல்வதற்கும், முந்தையோர் கைக்கொண்டொழுகிய சீரிய நெறிகளைக் கடைப்பிடித்து இம்மை மறுமைப் பேறுகளை யெய்துதற்கும் தாய்மொழிக் கல்விபோல் உறுதுணையாவது பிறிதுண்டோ? கூறுமின். ஒரு நாட்டிலே பண்டு தொட்டு வழங்கிவந்து மக்களுடைய குருதியிற் கலந்திருப்பதும், பின்னும் அந்நாட்டில் என்றும் நிலைபெற்றிருக்கற்பாலதுமாகிய மொழியன்றோ அங்கு வழிவழியாக வாழும் மாந்தர்க்கு அறிவின் செல்வத்தை வரையாது வழங்குதற்குரியதாகும்.” தமிழறிஞர்களாக விளங்குவோர் அகநானூறு புறநானூறு போன்ற பழைய தமிழிலக்கியங்களைப் பாராட்டிப் போற்றிப் பேசும்போது, அறிவியல் வளர்ந்து வரும் இக்காலத்தில் பழைய இலக்கியங்களையே பாராட்டிப் பேசிக் கொண்டிருப்பதா? என்று குறைகூறுவோரும் உண்டு. தமிழில் உள்ள பழைய இலக்கியங்களையும் காப்பியங்களையும் படிக்காமல் விட்டுவிட்டால் அடுத்த நொடியிலேயே தமிழ் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் மாபெரும் அறிவியல் மேதைகளாகி நாள்தோறும் நோபல்பரிசு பெறுதற்குரிய புத்தம் புதிய கண்டுபிடிப்புக்களைச் செய்து குவித்துவிடுவர் என்று கருதும் விந்தைமனிதர்களுக்குத் தெளிவு ஏற்படும்படி நாட்டார் ஐயா அவர்கள் பற்பல கருத்துக்களைக் கூறியுள்ளார். பண்டைத் தமிழ்ச் சங்கத்து நல்லிசைப் புலவர்கள் பாடித் தொகுத்தவற்றுட் புறநானூறு என்னும் ஒரு நூலால் மட்டும் நாம் எய்தலாகும் உணர்ச்சி நிலத்தினும் பெரிது; வானினும் உயர்ந்தது; கடலிலும் அளத்தற்கரிது. “புதிய புதிய கலைகளும், புதிய புதிய பொறிகளும் தோன்றி, முன்பு கனவிலுங்கருதி யறியாத வியக்கத்தக்க நுண்மாண்வினைகள் எண்ணிறந்தன விரியும் இற்றை நாளிலே, மக்களுடைய ஊக்கம் நிலத்தளவில் அடங்காது திங்கள் மண்டிலத்திலும் சென்று காண்குதுமெனப் பாய்ந்தெழுகின்ற இற்றை நாளிலே பழங்கதைகளைப் படித்துப் பயனென்னோ என்றுரைப்பாருமுளர். அவர் கூற்று ஒரு புடை உண்மையுடையதே. அத்தகைய புதிய கலைநெறிகளிற் சென்று பயனடைய முயல்வது யாவர்க்குமுரிய கடனே. ஆனால், பண்டையிலக்கண விலக்கியத் தீஞ்சுவை நூற்களைக் கல்லாது விடுதலினாலே அவையெல்லாம் கைவந்து விடுமோ? அல்லதூஉம், புதிய கலைகளைப் பயிலுதல் மாத்திரத்தானே யாவும் இயற்றவல்ல அறிவு நுட்பமும் வினைத்திட்பமும் எய்தலாகுமோ? இந்நாட்டிலே புதிய கலைகளாகின்ற அறிவியனூல்களைப் படித்துப் பட்டம் பெற்றவர் எத்தனையாயிரவர் உளர்? அவரெல்லாம் கண்ட புதுப்பொறிகள் யாவை? அவரியற்றிய நுட்ப வினைத்திறங்கள் யாவை? வசுவும், இராமனும் (ஜெ.ஸி.போஸ், சர்.சி.வி.ராமன்) முதலிய இரண்டோரறிஞர்தாமே நுண்பொருள் காணும் ஆற்றல் பெற்றுளர்? அவர்களும் பழமை பாராட்டுவோராகவே உள்ளனர். ஆதலின், நுட்ப வினைகள் இயற்றுதற்குக் கல்லூரியிற் கலை பயிலுதல் ஒன்றுமே அமையாது. புதியன காண வேண்டுமென்னும் ஆர்வமும், கூரறிவும், விடாமுயற்சியும், கெடாவூக்கமும் வேண்டும். அவை பெறுதற்கு உள்ளம் உரனுடைத்தாதல் வேண்டும். மக்கள் வறுமையானும் பிணியானும் நலிவெய்தலின்றி, பாவேந்தர்களியற்றிய காப்பிய நாடகக் கவிதை நலங்களை நுகர்ந்து இன்புறும் பொழுதிலன்றி அறிவும் உள்ளமும் உரம் பெறமாட்டா. எனவே, நாம் எவ்வகையான வினைத்திறனாற்றுதற்கும் முதற்கண் வேண்டப்படுவது நல்லிசைப் புலவர்களியற்றிய சுவைபழுத்த செய்யுட்களின் இன்பங்களை நுகர்ந்தும், பன்னருஞ் சிறப்பின் முன்னையோரின் விழுமிய பண்புகளைப் பாராட்டியும் மகிழ்ச்சியிற்றிளைத்தலேயாம்.” “புதியனவாகிய அறிவியற் கலையாராய்ச்சியிற் சிறந்து புதுப்பொறிகள் கண்டு நுண்மாண் வினைபுரியும் மேனாட்டினர் ஏனோரினுஞ் சிறப்பாகத் தம் இலக்கியங் களைப் பலபட ஆராய்ந்து கற்றுக் களிகூர்ந்து, அவற்றையும் அவற்றையியற்றிய புலவர் பெருமக்களையும் எத்துணையாகப் பாராட்டுகின்றனர் என்பதனை அறியின், நம் பண்டையிலக்கியங்களைப் படித்தலிற் பயனின்றெனக் கூற எவரும் ஒருப் படாரென்க." எனவே, தமிழிலே கல்வி கற்று, தமிழ் இலக்கியங்களைப் படித்துச் சுவைத்துப் பண்பட்டு உயர்வது தமிழர் கடன் என்பதை உணர்ந்து தெளிந்து செயல்பட்டு வாழ்வோமாக. நாட்டார் சிந்தனைகள் 4 நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தமிழ் நூல்களை எழுத் தெண்ணிக்கற்றவர்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவிளையாடற் புராணம், இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்களுக்கு உரையெழுதியவர்; கபிலர், நக்கீரர், வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, கண்ணகி வரலாறும் கற்புமாண்பும், சோழர் சரித்திரம், கள்ளர் சரித்திரம், அகத்தியர் வரலாறு முதலிய ஆராய்ச்சி நூல்களை எழுதியவர். இத்தகைய பேரறிவு சான்ற நாட்டாரையா அவர்கள் தம்முடைய பட்டறிவு காரணமாகத் தமிழில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வோர் கைக்கொள்ள வேண்டிய நெறிமுறைகளை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். “காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே” என ஆன்றோர் விதித்துள்ளார். உண்மைப்பொருள் காண வேண்டுமென்பதே ஆராய்ச்சி செய்வாரின் நோக்கமாக இருக்க வேண்டும். அதனோடு இவ்வாராய்ச்சி யால் மக்களுக்கு நன்மை விளையுமா? தீமை விளையுமா? என்றும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.தமிழாராய்ச்சி செய்வோர்கள் தமிழைப் புறம்பழித்தும் தமிழ் மக்களை இழிவுபடுத்தியும் காட்ட வேண்டுமென்ற நோக்கத்துடன் ஆராய்ந்தால் அது மிகவும் கொடுமையாகும்.நம் முன்னோர்களைப் பற்றியும் மொழியைப் பற்றியும் பெருமிதமான உணர்ச்சி உண்டாகும் படியாகப் பேசுவதும் எழுதுவதுமே உண்மைத் தமிழன்பர்களின் செய்கையாதல் வேண்டும்” என்பது நாட்டாரையா அவர்களின் bவிருப்பமாகும். நோபல் பரிசு பெற்ற பாரத நாட்டுப் பெருங் கவிஞராகிய இரவீந்திரநாத் தாகூர் தாமியற்றிய கீதாஞ்சலியில் மக்களுடைய அறிவு எவ்வாறு விளங்குதல் வேண்டும் என்பது குறித்து ஓர் அருமையான கவிதை பாடியுள்ளார். எங்கே அச்சம் என்பது இல்லையோ, எங்கே அறிவு தலைநிமிர்ந்து நிற்கிறதோ, எங்கே குறுகிய சுவர்களால் சிறுசிறு சிதறல்களாக இவ்வுலகு உடைக்கப்படவில்லையோ, எங்கே உண்மையின் ஆழத்தினின்றும் சொற்கள் மலர்கின்றனவோ, எங்கே சளைக்காத முயற்சி உயர்வின் எல்லையை நோக்கிச் செல்கிறதோ எங்கே தூய்மையான பகுத்தறிவு வெள்ளம் தன்வழியை மண்மூடிப்போன பழக்கங்கள் நிறைந்த விழல் மணலில் இழக்காமல் ஓடுகிறதோ எங்கே பெருகிவரும் செயலிலும் சிந்தனையிலும் மனம் உன்னால் வழிகாட்டப்படுகிறதோ அங்கே-அந்தச் சுதந்திரத்தின் சொர்க்கத்தில் என் நாடு விழித்தெழுவதாகுக! எந்தையே! இரவீந்திரநாத் தாகூர் அவர்களைப் போலவே நாட்டார் ஐயா அவர்களும் "தமிழ் அறிஞர்களாகிய புலவர்கள் விரிந்த உள்ளமும் சிறந்த பண்புகளும் உடையவர்களாக விளங்குதல் வேண்டும் என்று கருதினார்." பண்டை நாளிலிருந்தே புலவர்கள் பரிசில் கருதி யாரையும் எங்ஙனமும் பாடினரென்று கூறுதல் பொருந்தாது. அவர்கள் தாம் குற்றமற்ற பண்புகள் உடையராய் இருந்ததோடு வேந்தர்களாயினும் பிறராயினும் தவறுடையராகக் காணப்படின் சிறிதும் அஞ்சாது அவர்களை நெருங்கி அறிவு கொளுத்தியும் வந்தனர். தாயத்தாராகிய சோழன் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் போர் செய்த காலையில் கோவூர்கிழார் என்னும் புலவர் பெருமகன் அவர்கட்கு அறிவு கொளுத்துமாறு பாடிய பாட்டுக்கள் அவரது அஞ்சாமையையும் உயர் குணத்தையும் புலப்படுத்துகின்றன. பெண்பாற் புலவர்களும் அஞ்சாமையும் அருஞ்செயல் புரியும் ஆற்றலும் உடையராயிருந்தனர் என்பதற்கு அதியமானிடமிருந்து ஒளவையார் தொண்டைமானுழைத் தூது சென்ற வரலாறு சான்றாம். அத்தகைய அஞ்சாமையும் அருந்திறலும் பெருந்தன்மையும் இற்றைநாளில் தமிழ்ப் புலவர்கட்கு வேண்டும். ஏதோ சிறிது பொருள் கிடைத்தாற் போதுமென்று தம் நிலைமைக்குத் தகாதவாறு பிறரைத் தொடர்ந்து அவர்கள் மனைவாயிலைப் பற்றி நின்று பெருமை கெட ஒழுகுவது தமிழ்ப் புலவர்கட்குச் சிறிதும் அடாது. அத்தகைய இழிதகவு யாரிடமேனும் காணப்படின் அன்னாரைப் புலவர் கூட்டத்துக்குப் புறகு என நீவிர் ஒதுக்குதல் வேண்டும், என்பது நாட்டார் ஐயா அவர்களின் வேண்டுகோள். “ அஞ்சி அஞ்சிச் சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே” என்று பாரதி பாடியதற்கேற்ற கோழைகளாய் அறிஞர்கள் எனப்படுவோர் வாழ்தல் கூடாது. அறிஞர்கள் சமுதாயத்தின் பாதுகாவலர்கள்; மக்களை வழிநடத்திச் செல்பவர் கள். அவர்கள் அறத்திற்குத் துணை நின்று அநியாயத்தை எதிர்த்துப் போரிட்டு வெல்லும் ஆற்றல் மிக்க அடலேறுகளாய் விளங்குதல் வேண்டும்; அரசியல் அதிகாரங் களுக்கும் பணபலத்திற்கும் அஞ்சி அறநெறிக்கு மாறுபட்டுக் கொடுமைகளுக்குத் துணைபோகும் கோழைகளாய் வாழ்தல் கூடாது என்பது அவரது உறுதியான எண்ணமாகும். *தஞ்சை தந்த தமிழ் அறிஞர்கள் தமிழ் நாட்டில் உள்ள புகழ்மிக்க தமிழ்ச் சங்கங்களில் தஞ்சையில் உள்ள கரந்தைத் தமிழ்ச் சங்கமும் ஒன்று. இச்சங்கத்தின் முதல் தலைவராக வீற்றிருந்து தமிழ் மொழிக்குப் பெருந்தொண்டு செய்தவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்கள் ஆவார். ‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’ என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடினார். அஃது உண்மை என்று மெய்ப்பித்தவர்களுள் தமிழவேள் உமாமகேசுவரனார் மிகவும் குறிப்பிடத்தக்கவர். தஞ்சாவூரில் 07.05.1883 இல் பிறந்த உமாமகேசுவரனார் 1911 இல் தொடங்கப்பெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராக முப்பதாண்டுகள் பொறுப்பேற்றுத் தமிழுக்குச் செய்த தொண்டுகள் ஏராளம்! ஏராளம்!! இருபதாம் நூற்றாண்டில் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்ட பெருமை கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு உண்டு. வேற்று மொழிக் கலப்பற்ற தூய தமிழ் நடையைக் கரந்தை நடை என்றே அக்காலத்தில் குறிப்பிடுவர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் வந்து பேசாத புலவர்கள் பெரும் புலவர்களாக மதிக்கப்படாத நிலைமை அக்காலத்தில் இருந்து வந்தது. இத்தகைய சிறப்புடைய கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்குப் பெயரும் புகழும் வரக் காரணமாக இருந்த தமிழவேள் உமாமகேசுவரனார் வழக்கறிஞராக இருந்து நேர்மையுடன் தொழில் செய்தவர். நேர்மைக்குப் புறம்பான வழக்குகளை அவர் ஏற்றுக் கொள்வதில்லை. தஞ்சை மாவட்ட நீதிக்கட்சித் தலைவராக விளங்கிய அவர் பன்னிரண்டு ஆண்டுகள் தஞ்சை வட்டக் கழகத் தலைவராக இருந்து சிறப்புடன் தொண்டு செய்தார்; கிராமப் புறங்களில் பள்ளிகள் அமைக்கவும், திருவையாற்று அரசர் கல்லூரியில் தமிழ்ப் புலவர் வகுப்புக்கள் தொடங்கப் பெறவும் வழி செய்தார்; சிற்றூர்களுக்கிடையே வண்டிப்பாதைகள் போட ஏற்பாடு செய்தார்; பிற்பட்டோர் சமுதாயத்தைச் சேர்ந்தோர் மாவட்டக்கழக அலுவலகங்களிலும் அரசு அலுவலகங்களிலும் பணிபெறப் பெரிதும் துணையாக இருந்தார். இளம் வயதிலேயே இவரது வாழ்க்கைத் துணைவியார் மறைந்து விட்டார். ஆகவே, இவருக்குப் பெண் கொடுக்கப் பலரும் முன் வந்தனர். ஆயினும், உமாமகேசு வரனார் இந்தப் பிறப்பில் இன்னொரு வீட்டுக்கு மருமகனாகச் செல்லமாட்டேன் என்று நகைச்சுவையாகக் கூறி மறுத்துவிட்டார். தம் துணைவியார் மறைந்த பின் நிலைக் கண்ணாடியைப் பார்த்துத் தம்முகத்தை அழகு படுத்திக்கொள்வதையே உமாமகேசுவரனார் விட்டுவிட்டார். அவரது தூய தனி வாழ்க்கைக்கு இது பெருஞ் சான்றாகும். இவ்வாறு தனி வாழ்வு, பொதுவாழ்வு இரண்டிலும் நேர்மையையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடித்துத் தமிழர்க்கும் தமிழுக்கும் பெருந்தொண்டு செய்த தமிழவேள் உமாமகேசுவரனார் என்றென்றும் நம் நினைவில் வைத்துப் போற்றத்தக்க பெருஞ் சிறப்பு உடையவர். ந.மு.வேங்கடசாமி நாட்டார் நாட்டு மக்கள் அனைவராலும் நாட்டார் ஐயா என்று அன்புடன் அழைக்கப் பெற்ற நற்றமிழ் அறிஞராகிய நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் கழனிகள் மிகுந்த காவிரி நாட்டின் ஒரு பகுதியாகிய தஞ்சை மாவட்டத்தில், திருவையாற்றுக்கு அருகில் உள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் வீ.முத்துச்சாமி நாட்டாருக்கும், தையலம்மாளுக்கும் நன்மகனாகப் பிறந்தவர் ஆவார். 12.04.1884 இல் பிறந்து, இந்நிலவுலகில் அறுபது ஆண்டுகள் வாழ்ந்து 28.03.1944-இல் மறைந்த நாட்டார் ஐயா அவர்கள் மன்னாவுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந்தனரே (புறநானூறு 165:1,2) என்னும் புறநானூற்றுப் பாடலடிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியவர் ஆவார். நாட்டார் ஐயா ஆசிரியர் எவருடைய உதவியுமின்றித் தாமே தமிழ் இலக்கண இலக்கியங்களையும், சைவ சித்தாந்த நூல்களையும் ஐயம் திரிபறப் பயின்று மதுரைத் தமிழ் சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பாலபண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907-ஆகிய ஆண்டுகளில் எழுதி முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார். இவ்வாறு முத்தேர்வும் மூவாண்டில் முறையாக எழுதி முதன்மையாகத் தேர்ச்சி பெற்றமையால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பெருமகனாராகிய பாண்டித்துரைத்தேவர் அவர்களால் தங்கப்பதக்கமும், தங்கத் தோடாவும் அணிவிக்கப் பெற்றுப் பெருமை அடைந்தார். இதனால் தாமே பயின்ற தமிழ்ப் பேராசிரியராகிய நாட்டார் ஐயா புகழ் நாடெங்கும் பரவுவதாயிற்று. கோயம்புத்தூர் தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக ஓராண்டும் (1909) திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப்பேராசிரியராக இருபத்து நான்கு ஆண்டுகளும் (1908, 1910 முதல் 1933வரை), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராக ஏழாண்டுகளும் (1933-40) பணிபுரிந்து ஓய்வு பெற்ற நாட்டார் ஐயா, தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் விரும்பியவாறு கரந்தைப் புலவர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் (1941-1944) ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணிசெய்தார். இலக்கியச் சொற்பொழிவுகளும் சமயச் சொற்பொழிவுகளும் இடையறாது செய்து வந்த நாட்டார் ஐயா அவர்களுக்கு 21.12.1940இல் சென்னையில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாவலர் என்னும் சிறப்புப் பட்டம் செப்பேட்டில் பொறித்து வழங்கப்பட்டது. எழுதிய நூல்கள் அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவிளையாடற் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி ஆகிய நூல்களுக்கு உரையெழுதித் தமிழ்க்கடலாக விளங்கிய நாட்டார் ஐயா அவர்கள், தம் நுண்மாண் நுழைபுலத்தினால் ஆராய்ந்து வெளியிட்ட தமிழ் ஆராய்ச்சி நூல்கள் பலவாகும். அவை கள்ளர் சரித்திரம், வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம், கட்டுரைத் திரட்டு என்பவனவாகும். மேலும் தமிழ்ப் பொழில், செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், சித்தாந்தம் முதலிய தமிழ் ஆராய்ச்சித் திங்கள் இதழ்களில் வெளிவந்த அவருடைய ஆய்வுக் கட்டுரைகள் பலவாகும். அண்ணன் - தம்பிபோல்! தமிழவேள் உமாமகேசுவரனாரும், நாவலர் வேங்கடசாமி நாட்டாரும் அண்ணன்-தம்பிகளைப் போல் அன்புடனும் பாசத்துடனும் பழகி நம் அன்னைத் தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள். தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடாக *ஐம்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ்ப்பொழில் என்னும் தமிழாராய்ச்சித் திங்கள் இதழைத் தொடங்கினார். அந்தத் தமிழ்ப்பொழிலில் வேங்கடசாமி நாட்டார் தொடர்ந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வந்தார். தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று 1925-26இல் போராடியவர்களில் உமாமகேசுவரனாரும், ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் முதன்மையானவர்கள். தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்வதற்காக, அப்போது சென்னை மாநில அமைச்சராக இருந்த திவான்பகதூர் டி.என்.சிவஞானம்பிள்ளை அவர்கள் தலைமையில் இருபத்திரண்டு பேர்கொண்ட செயற்குழுஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவில் தமிழவேள் உமாமகேசுவரனாரும், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் உறுப்பினர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. அந்தச் சான்றோர் இருவரும் அறுபது ஆண்டுகளுக்கு முன் கண்ட கனவு 1982-இல் நனவாகி விட்டது. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் தமிழ்ப்பணிகள் பி.விருத்தாசலம் நாட்டு மக்களால் நாட்டாரையா என்று அன்புடனும் பெருமையுடனும் அழைக்கப் பெற்ற நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட செந்தமிழ்ச் சான்றோர்களுள் தலைசிறந்த ஒருவர் ஆவார். கரும்பும் நெல்லும் காடுபோல் செழித்து வளரும் கழனிகளைக் கொண்ட காவிரி நாடு கல்விக்கும் நுண்கலைகளுக்கும் பெயர்பெற்ற நாடாகும். அந்தக் காவிரி நாடாகிய சோழ வளநாட்டில் தஞ்சாவூருக்கு வடமேற்கே 18கி.மீட்டர் தொலைவில் நடுக்காவேரி என்னும் சிற்றூர் உள்ளது. காவிரியின் கிளைநதிகளுள் ஒன்றாகிய குடமுருட்டி என்னும் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள நடுக்காவிரியில் முத்துச்சாமி நாட்டார், தையலம்மாள் என்னும் சான்றோர்களுக்கு அருமருந்தன்ன மைந்தராகத் தாரண ஆண்டு சித்திரைத் திங்கள் இரண்டாம் நாளில் (12.4.1884) பிறந்த வேங்கடசாமி நாட்டார் அவர்கள் அறுபது ஆண்டுகள் இந்நிலவுலகில் வாழ்ந்து மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்த் தனரே (புறநானூறு 165:1,2) என்னும் புறநானூற்றுப் பாடல் அடிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் 28.03.1944 -இல் தம் பூதவுடல் நீத்துப் புகழுடம்பு பெற்றார்கள். ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களுடைய நூற்றாண்டு விழா 1984ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் இரண்டாவது வாரத்தில் ந.மு.வே. பிறந்த நடுக்காவிரியிலும், ந.மு.வே. கல்வித் தொண்டு செய்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலும் சிறப்புடன் கொண்டாடப் பெற்றது. ந.மு.வே. நூற்றாண்டு விழாக்குழுவும், தமிழக அரசும் இணைந்து அவ்விழாக்களைச் சிறப்புற நடத்தின. அவ்விழாவில் ந.மு.வே. பெயரால் கல்லூரி ஒன்று நிறுவ வேண்டும் எனவும், தஞ்சாவூரில் அன்னாரது திருவுருவச் சிலை ஒன்று நாட்ட வேண்டும் எனவும், அன்னார் எழுதிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து நூல்களாக வெளியிட வேண்டும் எனவும் நூற்றாண்டு விழாக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், அம்மூன்று திட்டங்களுமே அப்போது நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் நிறைவேற்றப் பெறவில்லை. ஆயினும், ந.மு.வே. எழுதியகட்டுரைகளில் தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ் ஆகிய இதழ்களில் வெளிவந்தவற்றைத் தட்டச்சு செய்து தொகுக்கும் பணியை இக்கட்டுரை ஆசிரியர் செம்மையாகச் செய்து முடித்துள்ளார். மதுரைத் தமிழ்ச் சங்கம் அக்காலத்தில் பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் என்னும் மூன்று தேர்வுகளை நடத்தி வந்தது. இம்மூன்று தேர்வுகளுமே இரண்டிரண்டு ஆண்டுகள் படித்துப் புலமை எய்தி எழுத வேண்டிய தேர்வுகள். இவ்வாறு ஆறு ஆண்டுகள் படித்துத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெறவேண்டிய அம்மூன்று தேர்வுகளையும் மூன்றே ஆண்டுகளில் முறையே 1905, 1906, 1907 ஆம் ஆண்டுகளில் எழுதித் தேர்ச்சி பெற்ற ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களுக்கு மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பாண்டித்துரைத் தேவர் அவர்கள் பொற்பதக்கமும் தங்கத்தோடாவும் (தோளில் அணியும் அணி) அணிவித்துச் சிறப்புச் செய்தார்கள். அன்று முதல் ந.மு.வே. அவர்கள் பண்டிதர் என்னும் பட்டத்துக்கு உரிமை உடையவர் ஆனார். தமிழ்ப்புலமையின் பொருட்டு முதன்முதலாக ஏற்படுத்தப் பெற்ற, முத்தேர்வும் மூவாண்டில் முதன்மையினில் முற்றுவித்த மையால் நாட்டாரின் புகழ் நாடெங்கும் விரைந்து பரவுவதாயிற்று. பண்டித ந.மு.வே அவர்கள் பண்டிதர் பட்டம் பெற்ற பின்பு ஆசிரியர் பணிசெய்ய விரும்பினார்கள். அதனால், கோவையில் உள்ள செயிண்ட் மைக்கேல் உயர்நிலைப் பள்ளியில் சில திங்கள்கள் தமிழாசிரியராகப் பணியாற்றினார்கள்; திருச்சியில் உள்ள எஸ்.பி.ஜி. கல்லூரியில் (பிசப் ஈபர் கல்லூரி) முதலில் 21.07.1908 முதல் 07.12.1908 முடியவும், பின்னர் 15.01.1910 முதல் 31.05.1933 முடியவும் ஆக இருபத்து மூன்று ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்கள்; அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 16.08.1933 முதல் 30.06.1940 முடிய ஏழு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து தம் 56ஆம் வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்கள்; கரந்தைப் புலவர் கல்லூரியில் 02.07.1941 முதல் 28.03.1944 முடிய ஊதியம் எதுவும் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் (Honorary Principal) பணிபுரிந்தார்கள். இவ்வாறு ந.மு.வே. அவர்கள் உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும், தமிழ்க்கல்லூரியிலும் முறையே தமிழாசிரியராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் பொறுப்பேற்று முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மிகச் சிறந்த முறையில் மாணாக்கர்களுக்குத் தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ்நாட்டு வரலாறு, தமிழ்ப் புலவர்கள் வரலாறு, தமிழ் நாகரிகம், பண்பாடு முதலிய பாடங்களை எல்லாம் முறையாகவும் நிறைவாகவும் கற்பித்து மாணாக்கர் மனங்கவர்ந்தவராக விளங்கினார்கள். இவ்வாறு ந.மு.வே. அவர்கள் மாணாக்கர்களுக்குப் பாடம் கற்பித் தலுடன் நில்லாது கரந்தைத் தமிழ்ச் சங்கம், மதுரைத் தமிழ்ச் சங்கம், மேலைச் சிவபுரி சன்மார்க்க சபை, திருச்சிராப்பள்ளி சைவசித்தாந்த சபை, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகச் சார்புடைய சங்கம், சைவ சித்தாந்த மகா சமாஜம், குழித்தலைக் கம்பர் செந்தமிழ்க் கழகம், தென்காசித் திருவள்ளுவர் கழகம், சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் போன்ற தமிழ்க்கழகங்களுக்குச் சென்று அவை நடத்திய ஆண்டு விழாக்களிலும், சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுத் தமிழ் மொழியில் உள்ள தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், திருவருட்பா முதலியவற்றின் அருமை பெருமைகளையெல்லாம் வெள்ளம் போன்றும், குற்றாலத்து அருவிபோன்றும் தங்குதடையற்ற தமிழ் நடையிலும் கேட்டார்ப் பிணிக்கும் தகைமையிலும் தேனினும் இனிய தீங்குரலில் எடுத்துரைத்துச் சொற்பொழிவாற்றுதலையும் மேற்கொண்டு வருவாராயினர். ஆகவே, சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 24.12.1940இல் சென்னையில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் ந.மு.வே. அவர்களின் நாவன்மையையும் தமிழ்த் தொண்டையும் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. சொல்லின் செல்வர் என்னும் கட்டுரையில் ஞானியார் அடிகள் சொல்வன்மை உடையவர் என்பதை விளக்க வந்த ந.மு.வே. அவர்கள் சொல்வன்மை என்றால் என்ன என்பது பற்றிக் கூறும் விளக்கம் மிக அருமையானது. “சொல்வன்மை என்பது என்ன? கற்க வேண்டும் நூல்கள் பலவற்றையும் கசடறக் கற்றுணர்ந்தோர் தாம் உணர்ந்த அரிய பொருள்களையும் கேட்போர் மனங்கொள்ளுமாறு எளியவாகச் சொல்லுதல்; சிறந்த பயனுள்ளவற்றைச் சுருக்கமும் விளக்கமும் இனிமையும் பொருந்த வழுவிலவாகச் சொல்லுதல்; பருவம், நிலை, கல்வி, ஒழுக்கம், செல்வம் முதலியவற்றால் தமக்கும் கேட்போர்க்கும் உளவாய தகுதி வேறுபாடுகளை அறிந்து, நிரல்படக் கோத்துச் சொல்லுதல்; கூறும் பொருளுக்கேற்ப எடுத்தல் படுத்தல் முதலிய ஓசை வேறுபாடமையவும், மெய்ப்பாடு தோன்றவும் சொல்லுதல்; நிமிர்ந்த நிலையும், மலர்ந்த முகமும், தெளிந்த குரலும் உடையவராய்த் தடுமாற்றமின்றிச் சொல்லுதல் என்றின்னோரன்ன பண்புகளின் தொகுதியே சொல்வன்மை எனப்படும். சொல்வன்மை என்பதற்கு ந.மு.வே கூறிய விளக்கம் அனைத்தும் அவருடைய சொற்பொழிவுகளுக்கே முழுதும் பொருந்துவனவாகும். சொல்வன்மை உடையவர்களுக்கே நாவலர் பட்டம் வழங்கிச் சிறப்பிப்பது தமிழ்நாட்டு மரபாகும். அந்த வகையில் நாவலர் என்னும் பட்டம் ந.மு.வே அவர்களுக்கு முற்றிலும் பொருந்தக் கூடிய பட்டமேயாகும். தமிழ்நாட்டு மக்களுள் கள்ளர், மறவர், அகம்படியர் என்னும் முக்குலத்தோரில் கள்ளர் மரபினருக்கு ஆயிரத்து முந்நூற்றுக்கும் மேற்பட்ட பட்டப் பெயர்கள் வழங்கப் பெறுகின்றன. அவற்றுள் நாட்டார் என்பதும் ஒரு பட்டப் பெயராகும். நம்முடைய வேங்கடசாமிப் பெருந்தகையார் அவர்களும் நாட்டார் என்னும் பட்டப்பெயர் உடையவர். இவர் அறிவாலும் பண்பாலும் மேம்பட்டு விளங்கியமையின் மதிப்புக்குரிய தலைவர் என்பதைச் சுட்டும் ஐயா என்னும் விளிப்பெயரையும் சேர்த்து இவரை நாட்டாரையா என்று நாட்டு மக்களும் மாணாக்கர்களும் அன்புடன் அழைப்பார் ஆயினர். எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் மதிப்பிற்குரிய தலைவர்களையெல்லாம் இயற்பெயரால் சுட்டாது அவர்கள் பிறந்த சாதிக்குரிய பட்டப் பெயர்களால் சுட்டுவது மக்கள் வழக்கமாகும். நாவலர் ந.மு.வே அவர்களின் தமிழ்ப்பணிகளை நான்கு வகையாகப் பகுத்துக் கொள்ளலாம். அவை பின்வருமாறு :- 1. திருவருட் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவப் பாடுபட்டமை. 2. தஞ்சாவூரில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாக்கம் பெறுவதற்குப் பாடுபட்டமை. 3. தமிழ் இலக்கியங்களைக் கருவியாகக் கொண்டு சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியமை. 4. வரலாற்று நூல்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதியமை. திருவருட் கல்லூரியும், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியும் ந.மு.வே அவர்கள் மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டிதத் தேர்வுக்குப் படித்தபோது கல்லூரிகளில் சேர்ந்து முறையாகப் பயின்றவர் அல்லர்; ஆசிரியர் எவருடைய உதவியும் இன்றித் தாமாகவே அரும்பாடுபட்டுப் படித்தவர்.ஆதலால், ந.மு.வே அவர்களுக்குத் தாமே பயின்ற தமிழ்ப் பேராசிரியர் என்னும் பெருமையும் உண்டு. இப்படி நாம் பெருமையோடு கூறினாலும், தாம் இலக்கண இலக்கியங்களைத் தனியே அமர்ந்து படித்தபோது, தமக்குத் தோன்றிய ஐயந்திரிபுகளை அகற்றிக்கொள்ள நாட்டாரையா எவ்வளவு துன்பம் அடைந்திருப்பார் என்பதை நாம் ஓரளவு உய்த்துணர முடிகிறது. சான்றோர்கள் அனைவரும் தம்மைப் போலவே பிறரும் வாழ வேண்டும் என்று கருதும் இயல்பினர்; யாம்பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்று விரும்பித் தொண்டு செய்யும் மனப்பாங்கு உடையவர்; இன்னும் ஒருபடி மேலே போய் தாம்பட்ட துன்பம் பகைவரும் படக்கூடாது என்று கருதித் தொண்டு செய்வதும் அவருடைய புலமைக்கு ஏற்புடையதே. தாமே பயின்ற தமிழ்ப் பேராசிரியராகிய ந.மு.வே அவர்கள் தாம்பட்ட துன்பம் பிறரும் படக்கூடாது என்று விரும்பிக் கல்லூரி ஒன்று நிறுவப் பாடுபட்டுள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ந.மு.வே அவர்கள் தமது முப்பத்தேழாம் வயதில், அஃதாவது 1921-ஆம் ஆண்டில், தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே இப்போது சாமிநாதபுரம் என்றும் மோசஸ்புரம் என்றும் கூறப்பெறும் சிற்றூரின் மேற்புறத்தில் திருவருட் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவ விரும்பினார்கள். இப்போது திருக்காட்டுப்பள்ளி சிவசாமி ஐயர் மேனிலைப் பள்ளிக்குச் சொந்தமாக உள்ள சிவசாமி ஐயர் பண்ணையே அந்த இடமாகும். நாற்பது ஏக்கர் பரப்பளவுள்ள அந்த இடம் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலமாகும். அந்நிலத்தைக் கல்லூரிக்குத் தரும்படி தஞ்சை வட்டாட்சியரிடம் ந.மு.வே அவர்கள் வேண்டிக் கொண்டுள்ளார்கள். இதன்பொருட்டுத் தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களும் ந.மு.வே அவர்களுக்கு உதவி செய்துள்ளார்கள். அந்தக் காலகட்டத்தில் ந.மு.வே அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தமிழ் உணர்வு படைத்த செல்வர்களிடம் திருவருட் கல்லூரி நிறுவுவதற்குத் தேவையான பணத்தை நன்கொடை வழியே திரட்ட முயற்சி செய்துள்ளார்கள். செல்வர்கள் பலரும் தமது தகுதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப ரூபாய் 25, 50, 100, 200, 250 என்று நன்கொடை தர முன்வந்து உறுதிமொழிப் படிவத்தில் கையொப்பமிட்டுள்ளார்கள். இதில் ஒரு பெரிய வியப்பு என்னவென்றால் கடவுள் மறுப்புக் கொள்கையாளரும் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் திருவருட் கல்லூரி நிறுவ ரூ.50/- நன்கொடை தர ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டுள்ளார் என்பதாகும். திருவருட் கல்லூரியைத் தொடங்க வேண்டியதன் இன்றியமையாமையைக் குறித்து ந.மு.வே அவர்கள் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு. திருவருள் துணை திருவருட் கல்லூரி அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு (குறள்-1) கடவுளின் திருவருளால் மக்கட் பிறப்பெய்தினார் யாவரும் பிறப்பின் பயனை அடைவதற்கு முயலவேண்டும். அன்பு, அருள், வாய்மை, ஒப்புரவு முதலிய குணங்களுடையோராய்ப் பிறர்க்குப் பயனுண்டாக வாழ்வோரே பிறப்பின் பயன் எய்துவோராவர். எல்லாவற்றிற்கும் கருவியாக இருப்பது கல்வி. ஆதலின், மாந்தரனைவரும் ஒருதலையாகக் கல்வி கற்கவே வேண்டும். மிகப் பழைய காலந்தொட்டு இத்தேயம் கல்வியில் மேன்மையடைந்திருந்தது. கல்வியிற் சிறந்த பெரியோர்கள் அளவிலர் இருந்து வந்தனர். முற்காலத்திருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் குணவொழுக்கங்களில் மிகமேம்பட்டு விளங்கினார்கள். இந்நாட்டில் இக்காலத்திலிருந்து வரும் கல்விமுறை பெரிதும் பிழைபாடுடையதென்று அறிஞர் பலராலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. தமது தாய்மொழியைக் கைவிடுத்து வேற்று நாட்டுமொழியாற் கல்வி கற்றுவரும் புதுமை இவ்விந்திய நாட்டில் மாத்திரமே காணப்படுகிறது. பல கலையுணர்வு பெற்று அரிய செயல்கள் செய்தற் பொருட்டன்றோ கல்வி கற்பது? இப்பொழுதோ மாணவர்கள் வெறும் மொழிப் பயிற்சியின் பொருட்டே தமது கட்டிளமைப் பருவமெல்லாம் செலவிட்டுக் கலையுணர்வு பெறுதலின்றி உடலுரமும் குன்றுகின்றனர். மாணவர்களுக்கு இருக்க வேண்டிய நற்குண நல்லொழுக்கங்கள் அருகி வந்து கொண்டிருக்கின்றன. மதவுணர்வு சிறிதும் பெறுதலின்மையால் அவர்கட்குத் தெய்வ நம்பிக்கையும் குன்றிவிட்டது. ஆசிரிய மாணவர்களின் சம்பந்தம் பெரும்பான்மை உருக்குலைந்து நிற்கிறது. இவ்வாறாக நிகழ்ந்துள்ள குறைபாடுகளுக்கு ஓர் எல்லையில்லை. இந்நிலைமையில் வறிதே காலந்தாழ்த்தாது நம் நாட்டுக் கல்வி முறையைத் திருத்துவது இந்திய நன்மக்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள கடனாகும். இந்தியாவுள்ளும் தமிழ் நாடொழிந்த பிற இடங்களிலுள்ளவர்கள் தத்தம் மொழிச்சார்பாகப் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டு மென்றும், தம் தாய்மொழியாற் கல்வியை வளர்த்து நாட்டின் நலத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றும் ஊக்கத்துடன் உழைக்க முன் வந்திருக்கின்றனர். வடநாட்டிலே பழங்கால முறைப்படி கல்வி கற்பித்து மாணவர்களை அறிவொழுக்கங்களிலும், மதப்பற்று முதலியவைகளிலும் மேன்மையுடையவர்களாக்கும் நோக்கத்துடன் குருகுலம் போன்ற பல கல்லூரிகள் நடைபெற்று வருகின்றன. நமது தமிழ்நாட்டிலோ அத்தகைய கல்லூரி ஒன்றும் இல்லாதிருப்பதேயன்றி அதனை நிறுவ வேண்டுமென்னும் முயற்சியும் இதுகாறும் தோன்றவில்லை. தமிழ் மொழியானது பழைய நாளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சங்கங்களினாலே வளர்க்கப்பட்டு வந்தது. முனிவரும் மன்னரும் முதலாயினாரெல்லாம் தமிழ்ப் புலவர்களாக விளங்கினார்கள்; முடியுடை வேந்தர்களும் சிற்றரசர்களும் வள்ளல்களும் தமிழ்மொழியைப் பொன்னேபோற் போற்றி ஆதரித்து வந்தனர். ஒருகாலத்தில் தமிழ்மொழி இமய முதல் குமரிகாறும் தனிச்செங்கோல் நடத்தி வந்தது. அத்தகைய சீரும் சிறப்பும் வாய்ந்த அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழியானது தற்காலத்தில் கற்பாரும் ஆதரிப்பாருமின்றி மெலிவுற்றுத் தன் தூய தன்மையையும் இழந்து வருகின்றது. தமிழ்மக்களும் தம் பண்டைப் பெருமையிற் சுருங்கி நிற்கின்றனர். எனினும், தமிழ் நாட்டிலுள்ள செல்வர்களுள்ளும் புலவர்களுள்ளும் பலருக்குத் தமிழ்மொழியை முன்போல் வளம்பெறச் செய்து நாட்டினை மேன்மையுறுவிக்க வேண்டுமென்னும் விருப்பம் இல்லாமற் போகவில்லை. அப்படியிருந்தும் தமிழ் வளர்ச்சிக்காக ஒரு கல்லூரியேனும் இதுகாறும் நிறுவப்படாமைக்குக் காரணம் தமிழ்ப்பற்றுமிக் குள்ள செல்வர்பாற் சென்று இதனை உருவாக்குதற்கான வழிவகைகளைக்கூறி இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு நடத்துவதற்குப் புலவர் யாரும் முன்வராத குறையே என நினைக்க வேண்டி இருக்கிறது. இப்பொழுது இந்நாட்டிலுள்ள செல்வர்களும் தமிழ்ப் பற்றுடையோரும் இச்சமயத்தை நழுவவிடாது தாராளமாக உதவி புரிந்து தமிழையும், நாட்டினையும் பேணுதல் வாயிலாகத் தமது புகழை மெய்ம்மையில் நிலை நாட்டுவார்கள் என்று துணிந்தே யான் இவ்வகையான முயற்சியை மேற்கொண்டிருக் கிறேன். என் கருத்து: 1. தமிழ் நாட்டின் பல்கலைக் கழகத்துக்கு அடிப்படையான கல்லூரி ஒன்று விரைவில் நிறுவப்படல் வேண்டும்; 2. அக்கல்லூரியின் நோக்கங்கள் :- 1. தமிழிலுள்ள தொல்காப்பியம் முதலிய சீரிய இலக்கண நூல் களையும், திருக்குறள் முதலிய ஒப்புயர்வற்ற உறுதி நூல்களையும், சங்கத்துச் சான்றோரியற்றிய செழும் பொருட் செந்தமிழிலக்கியங்களையும், பெருங்காப்பியங் களையும், பத்திஞானம் கனிந்து பேரின்பப்பயன் அளிக்கவல்ல தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி முதலிய அருள் நூல்களையும், சமயச்சார்பான வேதாந்த சித்தாந்த சித்தயோக நூல்களையும், பிறவற்றையும் நன்கு கற்கும்படி ஏற்பாடு செய்தல்; 2. ஆங்கிலத்திலும் வடமொழி முதலியவற்றிலும் உள்ளனவும், தற்காலத்துக்கு ஏற்றனவுமாகிய பல்வகைக் கலைகளையும் மொழிபெயர்த்தும், தமிழிலே புதிய நூல்களை ஆக்கியும் வெளிப்படுத்தல்; 3. இன்றியமையாத பிறமொழிகளையும் ஏற்குமாறு கற்பித்தல். 4. பல மதங்களின் உண்மையான கருத்துக்களையும் நடுவு நிலைமையோடு போதித்துத் தெய்வ பத்தியும், வாய்மை, தூய்மை முதலிய நற்குணங்களும், மக்கள் யாவரிடத்தும் அன்பும், தேசாபிமானமும் உண்டாமாறு செய்தல்; 5. ஓரளவான தொழிற்பயிற்சி நடைபெறுவித்தல்; 6. அறிவு வளர்ச்சிக்கான நூல்நிலையம், ஆராய்ச்சி நிலையம் முதலிய அங்கங்களை அமைத்தல். என்பனவும்; பிறவும் ஆகல் வேண்டும் என்பதும் ஆகும். இதனை நிறைவேற்றுதற்குப் பன்னூறாயிரம் உரூபாய் வேண்டிய தாயிருக்கும் என்பது யாவரும் அறியக் கூடியதே. தொடக்கத்தில் இத்துணைப் பெரிய காரியம் சாதித்தல் அருமை உடைத்து எனினும், இவைகட்கு அடிப்படையான உண்மைகளை மேற் கொண்டுள்ள கல்லூரி ஒன்றினை விரைவில் நிறுவவேண்டுமென எண்ணியிருக்கிறேன். இதனை நிறைவேற்றுவதில் எனக்கு ஒருசிறிதும் ஆற்றல் உண்டென்று நினைத்தவனல்லேன். எனினும், இந்நற்காரியத்திற்குத் தேசாபிமானப் பெருஞ்செல்வர்களின் பேரன்புடன்கூடிய பேருதவியும், எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளின் திருவருளும் முன்னின்று நிறைவேற்றும் என உறுதியாகத் துணிந்திருக் கின்றேன். குறிப்பு:- இதற்குப் பொருள் வருவாய்களை உண்டாக்கவும் பொருளைப் பாதுகாக்கவும் வேண்டிய ஆலோசனை கூறுதற்கும், இது நடைபெறுதல் குறித்து, இதன் நோக்கங்களுக்கு உட்பட்ட மற்றுமுள்ள ஆலோசனை கூறுதற்கும், இதன் நடைபேற்று விவரங்களை அவ்வப்பொழுது உலகிற்கு வெளிப்படுத்துதற்கும் ஓர் அறிவிப்புக் கழகம் ஏற்படுத்தலாகும். அக்கழகத்தினர்களின் பெயர் பின்பு வெளிப்படுத்தப் பெறும். 2. இக்கல்லூரிக்குப் பெரும்பொருள் அளிப்பவர்களின் பெயர் கல்லூரியைச் சார்ந்து என்றும் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். 3. இது சம்பந்தமாய்க் கடிதம் எழுதுவோர் கீழ்க்குறிக்கப் பட்டிருப் போர்க்கு எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். திருவாளர் உ.க.பஞ்சரத்தினம் பிள்ளை அவர்கள், கணபதி எண்போரியம், மலைவாசல், திருச்சி இந்தக் காலகட்டத்தில் நாட்டாரையா அவர்கள் எஸ்.பி.ஜி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்; மேலும், ஈளை நோயாலும் துன்புற்று வருந்தினார்கள். ஒரு கல்லூரியில் ஆசிரியராக இருந்து கொண்டு பிறிதொரு கல்லூரியை நிறுவுவதில் உள்ள தொல்லைகளைத் தாமே பட்டுணர்ந்தமையாலும், அரசு புறம்போக்கு நிலத்தைப் பெறமுடியாமல் போனமையாலும், அக்காலத்தில் வ.வே.சு.ஐயர் அவர்கள் சேரன்மாதேவியில் குருகுலத்தை நடத்தி வந்தபோது அதற்கு ஏற்பட்ட சிக்கல்களை எண்ணிப் பார்த்தும் மிகவும் மனம் வருந்திய நிலையில் நாட்டாரையா அவர்கள் கல்லூரி நிறுவும் எண்ணத்தைக் கைவிட்டனராதல் வேண்டும். நாட்டார் ஐயா நூற்றாண்டு விழா 1984இல் நடைபெற்றபோது விழாக்குழுச் செயலாளராக நான் பொறுப்பேற்று விழாச் சிறப்புற நடைபெற ஆவன செய்தேன். அப்போதும் திருவருட் கல்லூரியை நிறுவ விரும்பி நான் முயற்சி செய்தேன். அதற்காகக் கூட்டப்பெற்ற முதல் கட்டமே அமைதியாக நடைபெற முடியவில்லை. அதனால் ந.மு.வே. அவர்களுடைய பெயரால் கல்லூரி நிறுவும் முயற்சி அப்போதைக்கு நின்றுவிட்டது. ஆயினும், நண்பர்கள் சிலரின் ஒத்துழைப்போடு நான் தஞ்சாவூரில் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரி ஒன்றை 14.10.1992 முதல் நான் நடத்தி வருகின்றேன். இக்கல்லூரிக்குப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இசைவாணை (Recognition) வழங்கியுள்ளது என்பதையும் மகிழ்வுடன் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்நாட்டில் இப்போது தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாக நடைபெறும் கல்லூரி நம்முடைய ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரி மட்டுமே. எண்ணிய எண்ணியாங் கெய்துப; எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் (குறள்-666) என்பது வள்ளுவர் வாக்கு. புலவர் தலைமகனாகிய ந.மு.வே. ஐயா அவர்கள் திருவருட் கல்லூரி நிறுவ வேண்டும் என்று 1921-இல் கண்ட கனவு 71 ஆண்டுகள் கழித்து 1992 இல் நனவாகிவிட்டது என்பதை எண்ணித் தமிழ் அறிஞர்கள் அனைவரும் பெருமைப்படலாம். 2. தமிழ்ப் பல்கலைக்கழகம் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் 1901 இல் மதுரைத் தமிழ்ச்சங்கமும், 1911 இல் கரந்தைத் தமிழ்ச்சங்கமும் தொடங்கப் பெற்றன. இவை போலவே மேலைச் சிவபுரி சன்மார்க்க சபை போன்ற கழகங்கள் தமிழ் நாட்டில் ஆங்காங்கே தோற்றம் பெற்றன. நாவலர் ந.மு.வே., தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார், பெரும்பேராசிரியர் கா.நமச்சிவாய முதலியார் போன்ற தமிழுணர்வுடைய சான்றோர் பலர் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் அல்லது திருச்சிராப்பள்ளியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப் பெறவேண்டும் என்று பேசியும் எழுதியும் வந்தனர். இது தொடர்பாக ந.மு.வே அவர்கள் கொண்டிருந்த கருத்துக்களையும் மேற்கொண்ட முயற்சிகளையும் பற்றிப் பேராசிரியர் உலக ஊழியனார் அவர்கள் நாவலர், பண்டித திரு ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் வாழ்க்கை வரலாறு என்னும் நூலில் மிக விரிவாக எழுதியுள்ளார். அது பின்வருமாறு தமிழ்ப்பல்கலைக்கழக முயற்சி 1925ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ஆம் நாளிலே தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்நாட்டு வளர்ச்சி நெறி அமைச்சர் திவான்பகதூர் டி.என்.சிவஞானம் பிள்ளை அவர்களுடைய தலைமையிற் கூடிய ஒரு கூட்டத்தில் கலையறிவு, நாகரிகம், பொருட்டுறை, கைத்தொழில், வேளாண்மை முதலியவைகளில் தம் பழம்பெருமைக்கேற்ப மேம்படுதற் பொருட்டாகத் தமிழர்கட்குத் தனியே ஒரு பல்கலைக்கழகம் நிறுவப் பெறல் வேண்டும் என முடிவு செய்து அம்முயற்சியைத் தொடர்ந்து நடத்துவதற்கெனப் பன்னிருவர் அடங்கிய கழகம் ஒன்று அமைக்கப் பெற்றது. அக்கழக உறுப்பினருள் நாட்டாரும் ஒருவராவர். பின்பு, அக்கழகம் திருச்சிராப்பள்ளியில் திருவாளர், டி.என்.சிவஞானம் பிள்ளையவர்கள் தலைமையில் கூடியது. அப்பொழுது பற்பல கல்லூரித் தலைவர்களும் வேறு சில தக்கவர்களும் அக்கழகத்துக்கு உறுப்பினராகச் சேர்க்கப் பெற்றனர். கழக அமைச்சராகிய திருவாளர். எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை, பி.ஏ., எல்.டி., அவர்களால் கழக உறுப்பினர்கட்கும் ஏனையோர்க்கும் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவுதல் பற்றிய பல கேள்விகள் அனுப்பப்பட்டு அவர்கள் விடுத்த விடைகளும் தொகுக்கப்பட்டன. பின்னர்த் திருச்சியிலேயே இதன்பொருட்டு மற்றொரு மாநாடும் நடந்தது. பின்பு 1925-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாளிற் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றத்தில் (Senate) திருவாளர் டி.வி.சேஷகிரி ஐயர் அவர்களால் தமிழ்நாட்டுக்கென குறைந்தது ஒரு பல்கலைக்கழகமாவது நிறுவப்படல் வேண்டும் எனவும், அதற்கு அரசியலார் உடனே முயற்சி எடுத்துக் கோடல் வேண்டும் எனவும் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பெற்று நிறைவேறியது. அதன் பின் அரசியலார், இராமநாதபுரம் அரசர் மாட்சிமிக்க முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் தலைமையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் பற்றி ஆய்ந்து முடிவுசெய்ய ஒரு குழுவை நிறுவினர். அக்குழுவின் செயலாளராய் இருந்த சர்.பி.டி.இராசன் அவர்களால் பலருக்கும் கேள்விகள் அனுப்பப்பட்டன. பின்பு அக்குழுவினர் தமிழ் நாட்டின் பலவிடங்களிலும் சென்று நேரிலும் உசாவி அறிந்தார்கள். தமிழ்ப் புலவர் பொருட்டு முந்திய கழகங்களில் உறுப்பினராயிருந்த நாட்டார் தமக்கு அனுப்பப்பட்டிருந்த கேள்விகட்கு விடையெழுதிச் செயலாளர்க்கு அனுப்பியதோடு, 08.04.1927ல் திருச்சிக்கு வந்த அக்குழுவினர் வினாக்கட்கு எழுதிவிடுத்தனவும் நேரில் கூறியனவும் பின்னுள்ளவையாகும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இன்றியமையாமை தமிழ் நாடானது மற்றைய நாடுகளுடன் ஒத்துப் பார்க்குமிடத்தில் இப்பொழுது பொருள்நிலை, மன்பதை ஒற்றுமை முதலியவற்றில் மிகவும் பிற்போக்கடைந்துளது. தமிழ் நாட்டிலே இரண்டொரு வகுப்பினர் தவிர மற்றைய பெரும்பாலோர் கல்வியிலும் மிகுந்த கீழ்நிலையில் இருக்கின்றனர். சில வகுப்பினர் அரசியல், மதம் என்பவற்றில் சிறிதும் உரிமையில்லாதவராய் இருக்கின்றனர். அரசியல் உரிமை ஏற்பட்டு வருகின்ற இந்நாளில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தற்குரிய சொல்லுரிமையாளர்களில் நான்கில் ஒரு பங்கினராவது தங்கள் சொல்லுரிமையின் கருத்தை அறிந்திருப்பார்கள் என எண்ண இடமில்லை. கற்றவர்களுக்குள்ளும் வேலையில்லாக் குழப்பம் மிகுந்து வருகின்றது. இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்துச் சூழும்போது கல்வியை எளியவர்களும் பெறத்தக்க வகையிலும், கற்றவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பிறர் உதவியின்றி நடத்தத் திறமையுள்ளவர்கள் ஆகும் வகையிலும், திருத்தியமைத்துப் பரவச் செய்தற்கு ஒருவந்தம் ஏற்பட்டுள்ளமை புலனாகும். மேலும், கல்வி கற்பது வயிற்றுப் பிழைப்புக்கே என்னும் எண்ணம் மாறி அறிவை வளர்த்து மக்கட் பிறப்பின் பயனடைவதற்காக என்னும் எண்ணம் ஓங்கும்படியும் கல்வி முறை திருத்தப்பெறல் வேண்டும். தமிழ் நாடானது மிகப்பழைய காலத்திலேயே நாகரிகத்திற் சிறந்திருந்த தென்பது வரலாற்று ஆராய்ச்சியாளர் பலராலும் ஒத்துக்கொள்ளப்படுகிறது. சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு முதலிய தமிழ் இலக்கியங்களிலிருந்தும், பிற நாட்டிலிருந்து நாடு சுற்றிப் பார்க்கும் வேட்கையில் வந்தோர்களின் குறிப்புக்கள் முதலியவற்றிலிருந்தும் தமிழர்கள் பழங்காலத்தில் வேளாண்மை, கைத் தொழில் வாணிகம், சிற்பம் முதலியவற்றில் மேன்மையடைந்திருந்த செய்தி நன்கு புலப்படுகிறது. இப்பொழுது கேட்போர் முடியாதது, பொய், என்று நினைக்கத் தகுந்த அருமையான மெல்லிய ஆடைகள் அப்பொழுது தமிழரால் நெய்யப்பட்டன. கி.மு.பத்துப் பன்னிரண்டு நூற்றாண்டுகளின் முன்பே தமிழர்கள் கடல்வழியாகக் கிரேக்கர், எகுபதியர் முதலானவர்களோடு வாணிகம் செய்து தமிழ் நாட்டின் செல்வத்தைப் பெருகச் செய்தனர். அக்காலத்தில் அரசியலுள்ளிட்ட எல்லாச் செயல்களும் தமிழ் மூலம் நடைபெற்றமையாலும் தமிழ் வேந்தர்கள் சங்கங்கள் முதலியவற்றின் வாயிலாகத் தமிழைப் போற்றி வளர்த்தமையாலும் தமிழ்மொழி மிக்க திருத்தமும், வளர்ச்சியும் அடைந்திருந்தது. சமயநெறியிலும் தமிழ்நாடு தலைமையுற்றிருந்த தென்பது சைவ வைணவப் பெரியார்கள் ஆசிரியர்கள் என்போரின் தோற்றத்தாலும் தமிழ்நாட்டிலுள்ள எண்ணிறந்த திருக்கோயில்களாலும் வெளிப்படும். இப்பொழுது ஆந்திரநாடு தனக்கென ஒரு கழகம் ஏற்படுத்திக் கொண்டுவிட்டது. கேரள நாடும் விரைவில் ஏற்படுத்திக் கொள்ளும் நிலைமையில் உள்ளது. 24.10.1925-இல் நடந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட்டுச் சபைக் கூட்டத்தில், காலஞ்சென்ற மதிப்புக்குரிய டி.வி.சேஷகிரி ஐயர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்படுத்துவதன் பொருட்டாகத் தீர்மானம் கொண்டு வந்து பேசியபொழுது எடுத்துக் காட்டியவாறு ஆந்திரநாடு, கேரள நாடுகளைவிடத் தமிழ் நாட்டில் கல்லூரிகளின் தொகையும் மாணாக்கர்களின் தொகையும் இரண்டு பங்கிற்கு உள்ளன. இக்காரணங்களால், தமிழ்நாடானது பிறவற்றினும் முற்படத் தனக்கெனக் கழகம் ஏற்படுத்திக்கொண்டிருப்பின் அது மிகவும் பொருத்தமாக இருக்கும். இப்பொழுது ஆந்திரநாடு வழிகாட்டிய பின்பேனும் இதனை நிறைவேற்ற வேண்டியது தமிழ்நாட்டின் இன்றியமையாக் கடமை ஆகும். இப்பொழுதுள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தைக் கொண்டே நான் மேலே காட்டிய குறைகளை எல்லாம் நீக்கித் தமிழ் நாட்டிற்கு நன்மை செய்துவிடலாமென நினைப்பது பகற்கனவாகும். அதற்கு அத்தகைய ஆற்றல் இருக்குமாயின் அது இதற்கு முன்பே வெளிப்பட்டிருக்க வேண்டும். சென்னைக் கழகமானது தமிழை எவ்வளவு புறக்கணித்துத் தாழ்த்தியும் அதன் வளர்ச்சியைத் தடுத்தும் வந்திருக்கிறது என்பதனை இப்பொழுது நான் எடுத்துக் காட்டுவது அத்துணை நாகரிகமாயிராது. அன்றியும் தமிழ் நாட்டினர்க்கு யாம் தமிழர் என்ற உணர்ச்சியும் நாட்டுப்பற்றும் உண்டாக்குவதற்குத் தமிழின்பேரால் தனித்த கழகம் ஏற்படுத்துவது இன்றியமையாதது. தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்படுவதனால் சென்னைக் கழகத்தின் வளர்ச்சிக்குத் தடையுண்டாகுமென்றவது, இருகழகத்திற்கும் முரண்பாடு உண்டாகுமென்றாவது நினைக்கக் காரணமில்லை. இரு கழகத்தின் வளர்ச்சிக்கும் வெவ்வேறான நோக்கங்கள் உள்ளன. எல்லா நாடுகட்கும் பொதுவான உயர்ந்த நூலாராய்ச்சிகளும், சட்டத் தேர்வுகளும், பொறிக்கலை, கைத்தொழிற் கல்வி முதலியனவும் சென்னைக் கழகத்தின் நோக்கங்களாக இருத்தல் கூடும். தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் நோக்கங்கள் தமிழ்மொழி, தமிழரின் வரலாறு, நாகரிகம், வினைத்திறம், என்பவற்றின் வளர்ச்சி இதன் தலைமையான நோக்கங்களில் ஒன்றாதல் வேண்டும். இதன் பொருட்டுத் தமிழானது எல்லா வகுப்புக்களிலும் கட்டாய முதன் மொழியாக வைக்கப்பெற்று, தமிழ் இலக்கிய இலக்கணங்களும் கல்வெட்டுக்களும் அவற்றின் ஆராய்ச்சிகளும் விரிவாகக் கற்பிக்கப் பெறவேண்டும். வரலாறு, கணிதம் முதலிய எல்லாக் கலைகளும் தமிழ் வாயிலாகக் கற்பிக்கப் பெறல்வேண்டும். கற்கும் கால அளவையும், பொருட் செலவையும் சுருங்கச் செய்து கல்வியை மிகுதியாய்ப் பரப்புதற்கு இஃது இன்றியமையாதது. இக்கொள்கையே இக்கழகத்திற்கு உயிர் நிலையாகற்பாலது. கற்பிக்கப்பெற வேண்டிய எல்லாக் கலைகட்கும் இப்பொழுது தமிழில் நூல்கள் இல்லையாயினும் தமிழ் வாயிலாகக் கற்பிப்பது என்னும் கொள்கை உறுதியாகிவிட்டால் மிக விரைவில் நூல்கள் ஏற்பட்டுவிடும். அன்றியும் அதன்பொருட்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமையுடையோர்களைக்கொண்ட ஒருகுழு ஏற்படுத்தி நாலைந்து ஆண்டுகளுக்குள் நூல்கள் எழுதிவெளிப்படுத்துதல் செய்யலாம். இத்தனை ஆண்டுக்குள் எல்லாம் தமிழ் வாயிலாகக் கற்பிப்பது என்று வரையறை செய்துவிட்டு, அது வரையில் ஒவ்வொன்றாகக் கற்பித்து வரலாம். ஆங்கிலத்திலுள்ள கலைகளையெல்லாம் தமிழில் மொழி பெயர்க்க முடியாது என்றாவது தமிழில் ஏற்ற சொற்கள் இல்லை என்றாவது கூறுதல் சரியன்று. தமிழில் வேண்டிய சொற்கள் உள்ளன. தக்கோர்கள் மொழி பெயர்த்தால் எளிதில் முடியக்கூடும். விருப்பப் பாடங்களில் வேளாண்மை, வாணிகம், சிற்பம், கைத்தொழில் என்பவற்றில் யாதேனும் ஒன்று கட்டாயமாக எடுத்துக்கொள்ளப் பெறவேண்டும். விருப்பப்பாடங்களில் சமயக் கல்வியும், மருத்துவமும் சேர்க்கப் பெறல் வேண்டும். சமயக் கல்விக்குச் சைவத் திருமுறைகளும், வைணவப் பிரபந்தங்களும், சைவசித்தாந்த நூல்களும் ஆராய்ச்சி செய்யப்பெறவும், மருத்துவக் கல்விக்குத் தமிழ்ச் சித்தர் நூல்கள் ஆராயப் பெறவும் வேண்டும். கல்வியில்லாத வகுப்பினர்களும் பெண்பாலாரும் கற்பதற்கு மிகுதியான வசதிகள் செய்யப்பெற வேண்டும். பிறமொழிகளின் நிலைமை ஆங்கில மொழியானது தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவெய்திய ஆறாண்டுகள் வரை கட்டாய இரண்டாவது மொழியாக இருக்கலாம். அதன்பின் விருப் பப்பாடமாக அமைதல் வேண்டும். வடமொழியும் விருப்பப் பாடங்களில் ஒன்றாகச் சேர்க்கப் பெறல் வேண்டும். அன்றியும் நாட்டு மொழிப் பட்டத் தேர்வுகட்கு இப்பொழுது போன்று வைத்து நடத்தப்பட வேண்டும். வடமொழியும் கட்டாயப் பாடமாக எல்லா வகுப்புக்களிலும் வைப்பதென்பது இயற்கைக்கு ஒத்ததன்று. அது கல்வியை மிகுத்தல் என்னும் நோக்கத்திற்கு மாறாகக் குறைத்தலையே செய்யும். மக்களால் பேசப்படுவதாகவோ, அரசியல் நடவடிக்கைக்குரிய தாகவோ இல்லாத அம்மொழியை அங்ஙனம் வைப்பதற்குக் காரணமும் இல்லை. கட்டாயப்பாடமாக இல்லாததனால் அதன் மதிப்புக்கும், இப்பொழுதுள்ள பயிற்சிக்கும் குறைவு வருதற்கிடமில்லை. மற்றைய திராவிட மொழிகளும் விருப்பப் பாடத்தில் சேர்க்கப்படலாம். கழகத்தின் தலைமையிடம் திருச்சிராப்பள்ளியில் முதல்வகுப்புக் கல்லூரி மூன்றும், இரண்டாவது வகுப்பு மாதர் கல்லூரி ஒன்றும் இருக்கின்றன; முதன்மையான தொழிற்சாலை ஒன்றும் உளது. தமிழ் நாட்டின் நடுவாகவும், நாற்புறமும் போக்குவரவு வசதியமைந்ததாகவும் இந்நகர் உளது. இவ்வளவு பொருத்தம் வேறெந்த இடத்திலும் காணப்பெற இல்லை. முன்பு தமிழ்ச்சங்கம் இருந்தது என்னும் உலகுரையானது மதுரைக்கு இதனைவிட ஏற்றங் கொடுக்கக்கூடும். திருச்சிராப்பள்ளியும் தொன்றுதொட்டு அரசர்களின் தலைமை யிடமாகவும், தமிழை வளர்த்த இடமாகவும் இருந்தே வருகிறது; கிறித்துவர்களுக்கும், மகம்மதியர்களுக்கும் முக்கிய இடமாகவும் இருக்கிறது. இக்காரணங்களால் திருச்சிராப்பள்ளியையே தலைமையிடமாக நான் கருதுகிறேன். தமிழ்நாட்டில் உள்ள பலரும் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவுவதன் இன்றியமையாமையைத் தெரிவித்த பின்னர் அரசியலார் அதுபற்றி முயற்சி எடுப்பதற்குள் இராசா.சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் சிதம்பரத்தில் நிறுவி நடத்திவந்த மீனாட்சி காலேசையும், அதன் உறுப்புக்களாக உள்ள கீழ்நாட்டுமொழிப் பண்டிதர் பயிற்சிக் கல்லூரியையும் கீழ்நாட்டு மொழிக் கல்லூரியையும் ஒன்று சேர்த்து அரசியலாரின் இசைவுபெற்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நிறுவினமையால் தமிழ்மொழி, தமிழர் நாகரிகம் முதலிய வற்றின் வளர்ச்சிக்கு அதுவே அமையும் என்னுங் கருத்தால் முன்பு மேற் கொண்டிருந்த தமிழ்ப் பல்கலைக்கழக முயற்சி நெகிழவிடப் படுவதாயிற்று. இவ்வாறு தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்று தமிழுணர்வு கொண்டோர் முயற்சிகளை மேற்கொண்டிருந்த காலையில் செட்டி நாட்டரசர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் முயற்சியால் சிதம்பரம் அருகே அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கப் பெற்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்க்கும் பல்கலைக்கழகமாகச் செயல்படும் என்று பலரும் நம்பினர். அதனால் தமிழ்ப்பல்கலைக்கழகம் ஒன்று தொடங்கப்பெற வேண்டும் என்னும் முயற்சி நெகிழ்வுற்றது. அறிவியற் கலைகளையெல்லாம் தமிழில் கற்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பெற வேண்டும் என்று தமிழ்ச்சான்றோர் வேண்டினர். அந்த நோக்கத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறைவேற்றவில்லை எனலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் செயலாளராக இருந்த திருவாளர் சி.வேதாசலம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேரவைக் (Senate) கூட்டத்தில் ஒருமுறை இதுபற்றிக் கண்டனம் தெரிவித்துப் பேசியபோது பல்கலைக்கழகச் சார்பில் விடை கூறியவர், நம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பல்கலைக்கழகம் அன்று; தமிழ் (பேசும்) மாவட்டங்களுக்கு உரிய பல்கலைக்கழகம். அவ்வளவுதான் Our University is not a Tamil University; It is a University for Tamil Districts. That’s all. என்று தெரிவித்தாராம். இந்த இரங்கத்தக்க நிலை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மட்டுமன்று. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் இந்த நிலைமையே நீடிக்கிறது. மருத்துவம், பொறியியல், வேளாண்மை முதலிய அறிவியற் கலைகளைத் தமிழில் கற்பிக்க முறையான முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை. பட்டப்படிப்பு அளவில் தமிழில் கற்பிக்கப் பெறும் இயற்பியல், வேதியியல், விலங்கியல் முதலிய அறிவியல் பாடங்கள் பட்ட மேற்படிப்பில் தமிழில் கற்பிக்கப்பெறுவதில்லை. அதனால் தமிழறிஞர்களில் ஒரு சிலர் தமிழ்ப்பல்கலைக்கழகம் தொடங்கப்பெற வேண்டும் என்று அவ்வப்போது அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர். இவ்வேண்டுகோளைச் செவிமடுத்து தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் 1981-இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். தமிழ்ப்புலவர் மாநாடுகள் நாவலர், பண்டித ந.மு.வே. அவர்கள் தம் வாழ்நாள் முழுதும் செந்தமிழ்மொழிக்கும், சைவ சமயத்திற்கும் பெருந்தொண்டாற்றி வந்தவர்; நின்ற சொல்லராகவும் நீடு தோன்று இனியராகவும், என்றும் நம் நெஞ்சத்தைவிட்டு அகலாதவராகவும் விளங்கும் இயல்புடையவர்; தமிழ்நூற் கடலின் நிலைகண்டுணர்ந்த பெருமை உடையவர்; திருமுருகாற்றுப்படையை நாளும் ஓதி வழிபாடு நிகழ்த்தி வந்த அப்புலவர் பெருமகன், அந்நூலில் வரும். ........................................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர் (திருமுருகாற்றுப்படை) என்னும் அடிகளுக்கோர் எடுத்துக்காட்டாய் இலங்கினார். மேலும், கபிலர், நக்கீரர் ஆகிய சங்ககாலத்துப் புலவர் பெருமக்களைப் பற்றி ஆய்வுநூல் எழுதிய ந.மு.வே அவர்கள் அச்சங்ககாலச் சான்றோர்களைப் போலவே பொய்தீர் ஒழுக்கம் உடைய புலவராகவும், அஞ்சாமை உடைய அறிஞர் பெருந்தகையாகவும் விளங்கினார். தமிழ்வளர்ச்சிக்கு உரிய வழிமுறைகளைக் கண்டறியவும், தமிழாசிரியர்நிலை உயரவும் பாடுபடவேண்டும் என்று விரும்பிய ந.மு.வே அவர்கள் திருச்சிராப்பள்ளியில் 1923, 1924, 1925ஆம் ஆண்டுகளில் மூன்றுமுறை தமிழ்ப்புலவர் மாநாடுகளை நடத்தினார். அந்த மாநாடுகள் சிறப்பாக நடைபெறுவதற்குப் பொறியியல் மாமேதையாகிய பா.வே.மாணிக்க நாயக்கர் அவர்களும், திருவாளர் டி.எம்.நாராயணசாமி பிள்ளை அவர்களும் பேருதவி புரிந்தனர். தாம் மட்டுமன்றித் தம் காலத்தில் வாழ்ந்த தமிழாசிரியர் அனைவரும் சங்ககாலப் புலவர்களைப் போல விளங்க வேண்டும் என்று ந.மு.வே அவர்கள் விரும்பினார்கள். நோபல் பரிசு பெற்ற பாரத நாட்டுப் பெருங் கவிஞராகிய இரவீந்திரநாத தாகூர் தாமியற்றிய கீதாஞ்சலியில் மக்களுடைய அறிவு எவ்வாறு விளங்குதல் வேண்டும் என்பது குறித்து ஓர் அருமையான கவிதை பாடியுள்ளார். எங்கே அச்சம் என்பது இல்லையோ, எங்கே அறிவு தலைநிமிர்ந்து நிற்கிறதோ, எங்கே குறுகிய சுவர்களால் சிறுசிறு சிதறல்களாக இவ்வுலகு உடைக்கப்படவில்லையோ, எங்கே உண்மையின் ஆழத்தினின்றும் சொற்கள் மலர்கின்றனவோ, எங்கே சளைக்காத முயற்சி உயர்வின் எல்லையை நோக்கிச் செல்கிறதோ எங்கே தூய்மையான பகுத்தறிவு வெள்ளம் தன்வழியை மண்மூடிப்போன பழக்கங்கள் நிறைந்த விழல் மணலில் இழக்காமல் ஓடுகிறதோ எங்கே பெருகிவரும் செயலிலும் சிந்தனையிலும் மனம் உன்னால் வழிகாட்டப்படுகிறதோ அங்கே-அந்தச் சுதந்தரத்தின் சொர்க்கத்தில் என்நாடு விழித்தெழுவதாகுக! எந்தையே! இரவீந்திரநாத் தாகூர் அவர்களைப் போலவே ந.மு.வே அவர்களும், அறிஞர்கள் என்பவர்கள் அச்சம் என்பதை அறியாத ஆண்மையாளர்களாக விளங்கவேண்டும் என்று விரும்பினார். குறிப்பாகத் தமிழ் அறிஞர்களாகிய புலவர்கள் விரிந்த உள்ளமும் சிறந்த பண்புகளும் உடையவர்களாக விளங்குதல் வேண்டும் என்று கருதினார். இதனை 1932இல் துறையூரில் நடைபெற்ற தமிழ்ப்புலவர் மாநாட்டில் அவர் ஆற்றிய வரவேற்புரையால் நாம் நன்கறியலாம். “பண்டை நாளிலிருந்த புலவர்கள் பரிசில் கருதி யாரையும் எங்ஙனமும் பாடினரென்று கூறுதல் பொருந்தாது. அவர்கள்தாம் குற்றமற்ற பண்புகள் உடையராய் இருந்ததோடு வேந்தர்களாயினும் பிறராயினும் தவறுடையராகக் காணப்படின் சிறிதும் அஞ்சாது அவர்களை நெருங்கி அறிவு கொளுத்தியும் வந்தனர். தாயத்தாராகிய சோழன் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் போர்செய்த காலையில் கோவூர்கிழார் என்னும் புலவர் பெருமகன் அவர்கட்கு அறிவு கொளுத்துமாறு பாடிய பாட்டுக்கள் அவரது அஞ்சாமையையும் உயர்குணத்தையும் புலப்படுத்துகின்றன. பெண்பாற் புலவர்களும் அஞ்சாமையும் அருஞ்செயல் புரியும் ஆற்றலும் உடையராயிருந்தனர் என்பதற்கு அதியமானிடமிருந்து ஒளவையார் தொண்டைமானுழைத் தூதுசென்ற வரலாறு சான்றாம். அத்தகைய அஞ்சாமையும் அருந்திறலும் பெருந்தன்மையும் இற்றைநாளில் தமிழ்ப் புலவர்கட்கு வேண்டும். ஏதோ சிறிது பொருள் கிடைத்தாற் போதுமென்று தம் நிலைமைக்குத் தகாதவாறு பிறரைத் தொடர்ந்து அவர்கள் மனைவாயிலைப் பற்றி நின்று பெருமைகெட ஒழுகுவது தமிழ்ப் புலவர்கட்குச் சிறிதும் அடாது. அத்தகைய இழிதகவு யாரிடமேனும் காணப்படின் அன்னாரைப் புலவர் கூட்டத்துக்குப் புறகு என நீவிர் ஒதுக்குதல் வேண்டும். சுருங்கச் சொல்லின் பிறரெல்லாம் தம்மிடம் மதிப்புவைக்குமாறு நடந்துகொள்வது தமிழ்ப்புலவர் கடனாகும். மற்றும், உலகநடை அறிதலும் இன்றியமையாதது” என்பது ந.மு.வே அவர்களின் வேண்டுகோள். அஞ்சி அஞ்சிச் சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே என்று பாரதி எள்ளி நகையாடிய கோழைகளாய் அறிஞர்கள் வாழ்தல் கூடாது. அறிஞர்கள் என்போர் சமுதாயத்தின் பாதுகாவலர்கள்; மக்களை வழிநடத்திச் செல்பவர்கள். அவர்கள் அறத்திற்குத் துணை நின்று அநியாயத்தை எதிர்த்துப் போரிட்டு வெல்லும் ஆற்றல் மிக்க அடலேறுகளாய் விளங்குதல் வேண்டும். அரசியல் அதிகாரங்களுக்கும் பணபலத்திற்கும் அஞ்சி அறநெறிக்கு மாறுபட்டு - கொடுமைகளுக்குத் துணைபோகும் கோழைகளாய் வாழ்தல் கூடாது என்பது அவரது உறுதியான எண்ணமாகும். தமிழ்ப்புலவர்கள் மட்டுமன்றித் தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரும் தமிழ்மொழி தமிழ்நாடு ஆகிய இரண்டன் சிறப்பினையும் உணர்ந்து வீறுபெறுதல் வேண்டும் என்னும் தணியாத பெருவேட்கை உடையவர் நம் நாவலர் பெருமான். இதனை முற்கூறிய தமிழ்ப்புலவர் மாநாட்டு வரவேற்புரையின் பிறிதொரு பகுதியான் அறியலாகும். “இங்ஙனம் நமதுநிலை சுருங்கியதாயினும், இனிப்பெருகுதற்கு வழியில்லாது போகவில்லை. கீழ்நிலையின் வரம்பு கண்ட நாம் இனி மேனிலையிற்றிரும்பாது வேறென் செய்வது? கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளொடு முற்றோன்றி மூத்த வீரக்குடியினர் வாழ்ந்தது எமது தமிழகம் என்பதனை எண்ணின், கரிகாலனும் செங்குட்டுவனும் நெடுஞ்செழியனும் முன்னான வீரமன்னர்கள் வீறுடன் ஆண்டது எமது தமிழ் நாடென்பதனை உன்னின், நக்கீரர் கபிலர் இளங்கோவடிகள் முதலாய நல்லிசைப் புலவர்கள் பல்லிசை நிறுத்தது எமது தண்டமிழ் நாடென்பதனை நினையின் அவை எமக்கு ஊக்கமும் உரனும் உண்டாக்காது போமா? ஆண்மை மிக்க வீரர் வழியில் - அரசர் வழியில் - வள்ளியோர் வழியில் - தெள்ளியோர் வழியில் வந்த யாமோ அறிவு குன்றி, ஆண்மை குறைந்து, பீடிழந்து வாடிநிற்போம் என்னும் உணர்ச்சி எம்மை உயர் நெறிக்கண் உந்தாது சாமா? இனிநாம் அழுங்கிக் கிடவோம்; நாடெங்கும் தமிழினை முழங்கச் செய்வோம் என்றெழுமின்; தளரா ஊக்கமுடன் உழைமின்; நாமும் உயர்ந்தோம்; நமது நாடும் உயர்ந்தது" என்று முழங்கிய அந்தப்புலவர் மறவனின் எழுச்சிமிக்க உரையைக் கேட்கும்போது நம் நாடி நரம்பெல்லாம் சிலிர்க்கின்றன. உரம்பெய்த செந்தமிழுக்கு ஒன்றிங்கே நேர்ந்ததென உரைக்கக் கேட்டால் நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி நண்ணிடீரோ? தண்டூன்றும் முதியோரே! தமிழ்த்தொண்டென்றால் இளமைதனை எய்தீரோ? என்னும் பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ்காக்கும் போர் முழக்கப்பாட்டைக் கேட்பது போன்று உணர்வு பொங்குகிறது. தஞ்சையில் நடைபெற்ற சைவர் மாநாடு சமயமும் தத்துவமும் ந.மு.வே அவர்கள் பழுத்த சைவர்; தமிழைப் போலவே சைவத்தையும் கண்ணேபோல் காத்து வளர்த்த பெருந்தகை; திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய சைவசமயக் குரவர்கள் ஓதிய தேவாரத் திருமுறைகளையும், திருவாசகத்தையும் கேட்டு நெஞ்சுருகி நிற்கும் தமிழ் நெஞ்சினர்; பண்டைய இலக்கியங்களில் சிவ'd8òமான் பிறவா யாக்கைப் பெரியோன் என்று கூறப்பெற்றுள்ள திறத்தைப் பெருமிதத்துடன் எடுத்துரைக்கும் பெற்றியர்; சைவ சமய சின்னங்களாகிய திருநீற்றையும் உருத்திராக்க மாலையையும் எப்போதும் அணிந்திருக்கும் இயல்பினர். நாட்டரையா அவர்களின் மகள் திருமதி சிவ.பார்வதி அம்மையார் அவர்கள் கட்டுரை ஒன்றில் தம் தந்தையார் தோற்றப் பொலிவுபற்றிக் கூறும் செய்திகள் பின்வருமாறு:- “ தூய வெண்ணீறு துதைந்தபொன் மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரு சிந்தையும் நைந்துருகிப் பாய்வதுபோல் அன்புநீர் பொழிகண்ணும் பதிகச்செஞ்சொல் மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே எனச் சேக்கிழார் அடிகள் அப்பர் பெருமானின் அருட்டிரு மேனியை விவரித்தவாறே எங்கள் தந்தையார் உருவம் எங்களுக்குத் தோன்றும்.” தமிழ்த்தென்றல் திரு.வி.க.அவர்கள் நாட்டரையா அவர்கள் பற்றிப் பின்வருமாறு கூறுவர்:- ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் சமய ஈடுபாடு “இந்நாளில் பழம்பெரும் புலவர் வரிசையில் வைத்து எண்ணப் படுவோர் தொகை மிகச்சிறியதாயிருக்கிறது. அச்சிறிய தொகையினருள் ஒருவராகிய ந.மு.வே நாட்டாரின் நுண்ணிய நோக்கில் அன்புப் புனலும் வீரக்கனலும் ஒருங்கே ஒழுகித் தழல் விடுதல் புலப்படும்.” “இற்றைக்குச் சுமார் முப்பதாண்டுகட்கு முன்னர் அறிஞர் வேங்கடசாமி நாட்டாரின் பேச்சை முதன் முதல் யான் தூத்துக்குடிச் சைவசித்தாந்த சபையின் ஆண்டு விழாவிலே கேட்டேன். அது புலமைப் பேச்சாகவே இயங்கிற்று. நாட்டார் வீட்டிலும், பள்ளியிலும் புலமைப் பேச்சே பேசுதல் பின்னே தெரிய வந்தது. அவர் கூட்டங்களில் பேசுவதைச் சுருக்கெழுத்தில் இறக்கிப் பெயர்த்துப் பார்த்தால் அது புலமை வாய்ந்ததாகவே காணப்படும்." “திண்டுக்கல்லுக்கும் பழனிக்கும் இடையில் ஒட்டஞ்சத்திரம் இருக்கிறது. அங்கே நாவலூற்றுச் சன்மார்க்க சங்கத்தின் இரண்டாம் ஆண்டுவிழா (1927) நடைபெற்றது. அதிலே நாட்டாரும் நானும் வாய்த்தொண்டாற்றிப் பழனி ஏகினோம். வழியில் நாட்டார் ஐயா, ‘நீங்கள் சுயமரியாதை இயக்கத்தின் சில கொள்கைகளை மறுக்கப் புகுந்தது மகிழ்ச்சியூட்டுகிறது. அக்கொள்கைகட்கு விதை விதைத்தவர்கள் நீங்களல்லவோ? சீர்திருத்தம் என்ற பெயரால் கோயில்களின் நடைமுறைகளில் சிலவற்றை வன்மையாக நீங்கள் மறுக்கப் புகுந்ததே விதையாயிற்று. நீங்கள் ஒருவிதக் கருத்துக்கொண்டு ஆபாசங்களை மறுக்கிறீர்கள். அம்மறுப்பை இராமசாமி நாயக்கர் கேட்டுக்கேட்டு அதைத் திரித்துத் திரித்து வேறுவிதமாகப் பயன்படுத்துகிறார். போனது போக, இனியாவது கோயிலைக் குறை கூறாது இருங்கள்' என்று தண்மையும் வெம்மையும் கலந்த ஒலியில் உரைத்தது என் உள்ளத்தை உறுத்தியது. பழனியில் நாட்டார் திருமுருகாற்றுப்படை ஓதி ஆண்டவனை வழிபட்டது உள்ளத்தை உருக்கியது. துறையூர், பூவாளூர் முதலிய இடங்களில் நாத்திகத்தின் பெயரால் சில குறும்புச் செயல்கள் எழுந்தன. அவைகள் எனக்கு வேடிக்கையாகவே தோன்றின. நாட்டாருக்கு அவ்வாறு தோன்றவில்லை. குறும்புகளைக் குறித்து நாங்கள் இருவரும் உரையாடினோம். சமயக்காப்புக்கு எல்லாஞ் செய்யலாம் என்ற எண்ணமுடையவர் நாட்டார் என்று உணரலானேன்.” ந.மு.வே. அவர்கள் சமயக் காப்பின் பொருட்டு எதனையும் செய்யலாம். என்ற எண்ணம் கொண்டவராயின் அவருக்குச் சைவசமயத்தின்பால் எத்துணை ஈடுபாடும் உறுதியும் இருந்திருக்க வேண்டும் என்பதை எவரும் எளிதாக உய்த்துணர முடியும். இவர் சைவசித்தாந்த மகாசமாஜம் என்னும் சைவர்சபையில் உறுப்பினராக இருந்தார். அதன்சார்பில் தமிழ்நாட்டின் பலநகரங்களிலும் நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றினார்; தாமே முன்னின்று தஞ்சையில் 1933 டிசம்பர் மாதத்தில் சைவர் மாநாடு ஒன்றை நடத்தினார். அம்மாநாட்டில் தலைமை ஏற்றுச் சமயமும் தத்துவமும் என்னும் தலைப்பில் அரியதோர் உரையாற்றினார். அதன் ஒரு பகுதியில் பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை என்னும் கொள்கையை வற்புறுத்திக் கூறியுள்ளார். அது பின்வருமாறு:- இனி, தமிழருடைய மற்றொரு சிறந்த கொள்கை பிறப்பினால் உயர்வு தாழ்வு இன்று என்பது. பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் நல்ல குலமென்றும் தீய குலமென்றுஞ் சொல்லள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை என்றிவற்றா னாகுங் குலம் என்பன தமிழருடைய அடிப்படையான கொள்கையைத் தெரிவிப்பன. பன்னிரு திருமுறைகளையும் எழுத்தெழுத்தாகச் சோதித்துப் பார்ப்பின் சைவசமயத்தில் அடிப்பட்ட கொள்கையும் இதுவே யென்பது போதரும். சமய நெறியிலே சாதிகுலம் என்னும் எண்ணம் உதித்தலே உய்தியில் குற்றமாம் என்பது சான்றோர் கருத்து. சமயக் காழ்ப்பை அறவே வெறுத்த ந.மு.வே அவர்கள் முற்கூறிய சைவர் மாநாட்டில் சமயப் பூசலை எதிர்த்து இவ்வாறு கூறினார். “எந்தக் கடவுளரையோ சமயத்தையோ இகழ்தல் என்பது பழைய தமிழரிடத்து ஒரு சிறிதும் காணப்படாத தொன்று. அத்தகைய சிறந்த பண்பினை நாமும் கொண்டு ஏனையோரும் கொள்ளுமாறு செய்யின்சமயப் பூசல் என்பது இல்லாது ஒழியும். திருமால் வழிபாடு சைவர்கட்குப் புறம்பாய தொன்றன்று, மற்றும் எச்சமயத்தினர் தங்கள் சமயமே உயர்ந்தது எனக்கூறினும் அன்னார்க்கு அவ்வுரிமை உண்டென்பதனை மதித்து நம் நிலையினின்று வழுவாதிருத்தலே நமது கடனாம். எந்தச் சமயத்தையோ சமயத் கடவுளரையோ எள்ளி நகையாடல் என்பது புன்மையாம் என்பதனைக் கருத்திற் பதிப்போமாக.” என்று தெளிவாக அறிவுரை கூறியுள்ளார்கள். திருக்கோயில் நுழைவு சாதிவேறுபாடு கருதாது ஒருசமயத்தைச் சார்ந்த அனைவரும் அச்சமயத்தார்க் குரிய கோயிலின் உள்ளே சென்று வழிபாடு நிகழ்த்த உரிமைதரப்படவேண்டும் என்பதையும் ந.மு.வே அவர்கள் சைவர் மாநாட்டில் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். “சாதிகுலம் என்பன உலகியல் நடைபேற்று முறையில் ஏற்பட்ட சில கட்டுப்பாடுகள் அல்லது சட்ட திட்டங்கள். சமயங்களோ உயிர்களின் கடைத் தேற்றத்திற்குரிய நெறிகள். உடல் பற்றுக் கோடாகத் தோன்றிய சாதி உயிரின் ஈடேற்றத்தைக் குறிக்கோளாகவுடைய சமயத்திற் புகுந்து சில மக்களை அதற்குரியர் அல்லதாக்குதல் முறையாகுமோ? நம் சைவசமய அருட்குரவர்கள் கோயில் தோறுஞ்சென்று இறைவனை வணங்கி உய்யுமாறு பதிகங்கடோறும் வற்புறுத் தருளியது சிலரை மட்டும் கருதியோ? சிவநேயர்கள் இவற்றை ஓர்ந்து பாருங்கள். வடமொழிக்கடலும் தென்மொழிக்கடலும் நிலைகண்டவரும், வேத ஆகமங்களின் விளைபொருளெல்லாம் உணர்ந்து சிவஞான போதத்திற்குத் திராவிடமாபாடியம் என்னும் ஒப்பற்ற பேருரை வகுத்தவருமாகிய மாதவச் சிவஞான முனிவர். சிவனெனும் மொழியைக் கொடிய சண்டாளன் செப்பிடின் அவனுடன் உறைக. அவனொடு கலந்து பேசுக, அவனோடு அருகிருந்துண்ணுக வென்னும் உவமையில் சுருதிப்பொருடனை நம்பா ஊமையரோடுடன்பயில் கொடியோன் இவனெனக் கழித்தால் ஐயனே கதிவே றெனக்கிலை கலைசை யாண்டகையே என்றருளிய அருமைச் செய்யுளின் பொருளைச் சிந்தனை செய்யுங்கள். காலமென்னும் கடுநீர்ப் பெருக்கானது சமய நெறியுள்ளும் முன்னும் எத்தகையோ பல மாற்றங்கள் செய்துள்ளது. இனியும் செய்யவல்லது என்பதனை உணர்ந்து அதற்கேற்பத் தலைசாய்த்துக் கொடுப்பதே அழிவினைத்தடுக்கும் சதுரப்பாடாகும்" என்று சைவர்களுக்கு அறிவுரை கூறுவது மிகவும் அருமையாக உள்ளது. இதுகாறும் கூறியவற்றால் ந.மு.வே அவர்களின் சமயப் பொறைமையும், சமுதாய சீர்திருத்தத்தை ஏற்கும் மனப்பக்குவமும் மற்றவர்களைச் சீர்திருத்தத்தை ஏற்கச்செய்யும் தூய நெஞ்சமும், சொல்வன்மையும் இனிதே புலனாகின்றன. 1. நூல்வெளியீடுகள் நாவலர் ந.மு.வே. அவர்கள் எழுதிய தமிழ் நூல்கள் இருபத்திரண்டு ஆகும். இந்த இருபத்திரண்டு நூல்கள் தவிர யாப்பருங்கலக் காரிகை, தண்டியலங்காரம் ஆகிய நூல்களைப் பதிப்பிக்கும் பணியிலும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்க்கு ந.மு.வே அவர்கள் உதவி செய்துள்ளார்கள். மேலும், உயர்நிலைப் பள்ளிகளில் நான்காம் ஐந்தாம் படிவங்களுக்குப் (9,10 வகுப்புகளுக்குப்) பாட நூலாக வைக்கப்பெற்ற செந்தமிழ்ப் பூம்பொழில் என்னும் பாட நூல்களும் இவரால் எழுதப் பெற்றவையாகும். நூல்கள் வெளிவந்த ஆண்டு 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி 1915 2. நக்கீரர் 1919 3. கபிலர் 1921 4. கள்ளர் சரித்திரம் 1923 5. இன்னாநாற்பது உரை 1925 6. களவழி நாற்பது உரை 1925 7. கார் நாற்பது உரை 1925 8. ஆத்திசூடி உரை 1925 9. கொன்றைவேந்தன் உரை 1925 10. வெற்றிவேற்கை உரை 1925 11. மூதுரை உரை 1925 12. நல்வழி உரை 1925 13. நன்னெறி உரை 1925 14. அகத்தியர் தேவாரத்திரட்டு உரைத்திருத்தம் 1925 15. கண்ணகி வரலாறும் கற்புமாண்பும் 1926 16. சோழர் சரித்திரம் 1928 17. திருவிளையாடற் புராணம் உரை 1931 18. கட்டுரைத்திரட்டு பகுதி - 1 1940 19. சிலப்பதிகார உரை 1942 20. மணிமேகலை 1942 21. கட்டுரைத்திரட்டு - தொகுதி -2 1943 22. அகநானூறு உரை 1944 2. கட்டுரைகள் ந.மு.வே. அவர்கள் எழுதிய ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் அக்காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த செந்தமிழ், தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி, சித்தாந்தம், தமிழர், கலா சிந்தாமணி, விவேகோதயம், பூரண சந்திரோதயம், குமரன், நச்சினார்க்கினியன், தமிழ்ச் செல்வி, தாய்நாடு, ஈழகேசரி, ஆனந்த போதினி முதலிய இதழ்களில் இடம் பெற்றன. இவற்றுள் செந்தமிழ், தமிழ்ப் பொழில், செந்தமிழ்ச் செல்வி என்னும் மூன்று இதழ்களிலும் வெளிவந்த எழுபத்தைந்து கட்டுரைகளைத் தொகுத்து நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்னும் பெயரில் தொகுப்பு நூலொன்றை நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி அறப்பணிக்கழகம் வெளியிட்டது. இந்நூலைத் தஞ்சையில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது 01.01.1995-இல் தமிழ்நாட்டு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார். 3. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி அறிஞர் பெருமகனாகிய மு.இராகவ ஐயங்கார் அவர்களால் எழுதப் பெற்ற வேளிர் வரலாறு என்னும் நூல் கி.பி.1913-ஆம் ஆண்டில் வெளி வந்தது. அந்நூல் சென்னைப் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் இண்டர்மீடியட் வகுப்புக்கு இரண்டு ஆண்டுகள் பாடமாக வைக்கப் பெற்றிருந்தது. அதனால், திருச்சி எஸ்.பி.ஜி.கல்லூரியில் (பிசப் ஈபர் கல்லூரி) தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்த ந.மு.வே. அவர்கள் வேளிர் வரலாற்றை மாணாக்கர்களுக்குப் பாடம் நடத்தினார்கள். அப்போது அந்நூலாசிரியரின் முடிவுகள் பல உண்மைக்கு மாறுபட்டவையாய் உள்ளன என்று ந.மு.வே. அவர்கள் உணர்ந்தார்கள். இராகவ ஐயங்கார் அவர்கள் தம் நூலில் “தமிழகத்தே சங்க நாளில் விளங்கிய வள்ளல்களான பாரி, பேகன் முதலிய வேளிர் குல முன்னோர் இன்றைக்கு 2900 ஆண்டுகளின் முன் துவாரகையினின்றும் குடியேறியவர்; கண்ணபிரான் வழிவந்தவராகிய யாதவர்; அவரெல்லாம் ஆரிய வம்சத்தினர்; அன்னவர் தெற்கில் குடியேறிய பின்னர்ப் பல்வேறு தொழில்களைச் செய்துபோந்து பல்வேறு சாதியினராயினர்; இப்பொழுது தமிழ் நாட்டகத்தேயுள்ள வேளாளர், கொல்லர், குயவர், தந்துவாயர், ஆயர் என்போரெல்லாம் அவ்வகுப்பினரேயாவர்.” என்பன போன்ற வரலாற்று உண்மைகளுக்கு மாறுபட்ட பல கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். பழந்தமிழ் இலக்கியப் புலமையும், தமிழர் வரலாறு பற்றிய தெளிவும், தம் காலத்தில் வெளிவந்த நூல்களைத் தேடிப் படித்துத் தேர்ந்தஞானமும் வாய்க்கப் பெற்றிருந்த நாவலர் பண்டித ந.மு.வே. அவர்கள் வேளிர் வரலாறு என்னும் நூலுக்கு வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி என்னும் பெயரில் தக்க மறுப்புரை ஒன்று எழுதிக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழாவில் தம் கருத்துக்களைச் சிறப்பாக எடுத்துரைத்தார்கள். அதனைப் பின்னர் 1915 ஆம் ஆண்டில் அச்சிட்டு வெளிப்படுத்தினார்கள். தம் நூலில் வேளிர் பற்றி ந.மு.வே. அவர்கள் கூறிய கருத்துக்கள் பின் வருவனவாகும்:- “நாம் இவ்வாராய்ச்சி உரைக்குப் பொருளாகக் கொண்ட வேளிர் என்பார், மேல் மன்பெறு மரபினேனோர் எனப்பட்ட குறுநில மன்னராவார். வேளிரையும் வேளாளரையும் பெயரின் ஒருபுடை ஒப்புமை கண்டு ஒருகுலத்தவராகக் கூறுதல் பொருந்தாது. நச்சினார்க்கினியரும், வேந்துவினை இயற்கை வேந்தனி னொரீஇய ஏனோர் மருங்கினு மெய்திட னுடைத்தே என்னுஞ் சூத்திரத்து ‘வேளிர்க்கும் வேந்தன்றொழில் உரித்தென்கின்றது' என அவதாரிகை எழுதியும், ‘முடியுடை வேந்தருக்குரிய தொழிலாகிய இலக்கணங்கள் அம்முடியுடை வேந்தரை யொழிந்த குறுநில மன்னரிடத்தும் பொருந்தும் இடனுடையது’ எனப் பொருள் வரைந்தும், ‘அவர்க்குரிய இலக்கணமாவன பகைவயிற்றானே சேறலும், தான் திறைபெற்ற நாடுகாக்கப் பிரிதலும், மன்னர் பாங்கிற் பின்னோரெனப்பட்ட வேளாளரை ஏவிக்கொள்ளுஞ் சிறப்புமாம்’ என விசேடமெழுதியும், வேளிர்க்கும் வேளாளர்க்குமுள்ள வேற்றுமையை நன்கு விளக்கிப் போந்தனர். மற்றும் வேளிரைப் பற்றி எழுந்த புறப்பாட்டு முதலிய சான்றோர் செய்யுட்களிலெல்லாம் அவரை வேளாளரென்று கூறுதற்கு இயைபு சிறிதும் காணப்படவில்லை. யாண்டும் வேந்தர் தொழில்களும் கருவிகளுமே அவர்க்குக் கூறப்படுகின்றன.” மேலும், வேளாளர், ஆயர், சளுக்கியர், ஹொய்சளர், துவராபதி என இராகவ ஐயங்கார் கூறிய பல செய்திகளுக்கும் ந.மு.வே. அவர்கள் இலக்கியம் மற்றும் வரலாற்றுச் சான்றுகளோடு உண்மைப் பொருள் நமக்குத் தெளிவாக விளங்கும்படி எழுதியுள்ளார்கள். அன்புள்ள ஐயா, சுபம். தாங்கள் எழுதி வெளியிட்ட வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி என்னும் புத்தகம் ஒன்று உரிய காலத்தே வரப் பெற்றேன். யான் குற்றால முதலிய தலங்கட்குச் சென்று வந்தமையாலப் பொழுதே பதிலெழுதக்கூடவில்லை. மன்னிக்க வேண்டும். ஆராய்ச்சியை முற்றும் படித்துப் பார்த்தேன். வரலாற்றுரைகாரரின் கருத்துக்கள் பல முறையாகக் கண்டிக்கப் பட்டுள்ளன. நீங்கள் காட்டும் ஏதுக்கள் திட்பமுள்ளவைகளாயும், நடுநிலை திறம்பாதனவாயு மிருக்கின்றன. கற்றுணர்ந் தோரெழுதுங் கண்டனமிதுவென்று அறிவுள்'bcáVருணருமாறு செய்திருக் கின்றீர்கள். வரலாற்றுரைகாரர் தங்கருத்திற் கெதிர்ப்பட்டாரெல்லாரும் வேளிரென்று கூறிச் செல்லும் இயல்பைச் செவ்வனே கண்டு மறுத்திருத்தல் பெரிதும் மகிழ்ச்சி தருவதாக இருக்கின்றது. இத்தகைச் செயலில் தலையிட்டு முன்வருதல் நம் தமிழ்ப்புலவரிடத்து மிகுமாயின் நம் தமிழின் இயல் இன்னும் விசேட நலமுடையாகும். அன்பன், (ஒ-ம்) மு.கதிரேசன் 4. கள்ளர் சரித்திரம் நாவலர் ந.மு.வே. அவர்கள் தமிழ்நாட்டில் வாழும் கள்ளர், மறவர், அகம்படியர் என்னும் முக்குலத்தோருள் கள்ளர் மரபினர்; நாட்டார் என்னும் பட்டப் பெயர் கொண்டவர். கள்ளர் வகுப்பைச் சார்ந்தவர்கள் இன்றும் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி முதலிய மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் செல்வாக்குடன் வாழ்ந்து வருகின்றனர். ஒரு காலத்தில் தமிழர்கள் பெருவாழ்வு வாழ்ந்தனர்; இன்று, தாழ்வுற்று வறுமை மிஞ்சி வாடுகின்றனர் என்னும் கூற்றை மெய்ப்பிக்கக் கூடியவர்களாய் தமிழ்நாட்டில் இன்று வாழ்வோர் கள்ளர்களே. தாம் பிறந்த கள்ளர் மரபின் வரலாற்றுப் பெருமையை உலகம் உள்ளவாறு உணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் நன்னோக்கம் கொண்டே ந.மு.வே அவர்கள் கள்ளர் சரித்திரம் என்னும் இந்த நூலை எழுதினார்கள். பல்லவர்கள், சோழர்கள் ஆகிய மன்னர்கள் வழிவந்தவர்களே கள்ளர்கள் என்பது இந்நூலில் ந.மு.வே. அவர்கள் கூறியுள்ள முடிவாகும். இதனை இந்நூலில் 40 ஆம் பக்கத்தில் “இதுகாறும் காட்டியவற்றிலிருந்து பல்லவர் வழியினராகிய கள்ளரோடு சோழரும் கலந்துவிட்டமை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கும். பல்லவர் வழியும் சோழர் வழியும் ஒன்றுபட்ட ஓர் வகுப்பு இஃது எனலும் பொருந்தும்” என்று ந.மு.வே. அவர்கள் எழுதியிருப்பது கொண்டு நாம் உணரலாகும்.கள்ளர் சரித்திரம் எழுதுவதற்கு வரலாற்று அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் அவர்களும், கல்லல்குக மணிவாசக சரணாலய சுவாமிகளும் இவருக்குப் பெரிதும் உதவி செய்துள்ளனர். டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் கள்ளர் சரித்திரம் என்னும் இந்நூலைப் பாராட்டிக் கடிதம் எழுதியிருக்கிறார். 1930-ஆம் ஆண்டில் திருவாளர் கா.சுப்பிரமணியபிள்ளை எம்.ஏ., எம்.எல். அவர்கள் தாம் எழுதிய “தமிழ் இலக்கிய வரலாறு - முதற் புத்தகம்” என்னும் நூலில் நாட்டாரைப்பற்றி எழுதி வருமிடத்து “இவரது வரலாற்று ஆராய்ச்சியின் திட்பநுட்பங்கள் கள்ளர் சரித்திரம் என்னும் இவரது உரை நடை நூலிற் காணப்படும்” என எழுதியுள்ளனர். திருவாளர் மு.இராகவையங்கார் அவர்கள் தமது ஆராய்ச்சி நூலொன்றில் இந்நூலிலிருந்து மேற்கோள் எடுத்தாண்டிருப்பதும், ‘தமிழ்லெக்ஸிகன்’ அநுபந்தத்தில் இதில் உள்ள பல சொற்களை எடுத்துக்கொண்டிருப்பதும் தமிழாராய்ச்சி செய்வார்க்கு இந்நூல் பயனுடையதாய் இருக்கின்ற தென்பதனைப் புலப்படுத்தும். ந.மு.வே. அவர்கள் தாம் கள்ளர் சரித்திரத்தை எழுதியதற்கான காரணங்களையும், இந்நூலைப் படிக்கும் கள்ளர் மரபினர் தாம் பிறந்த குடியின் பெருமையை உயர்த்தும் பொருட்டுச் செய்யவேண்டிய செயல்களையும், பிற இனத்தினருடன் அன்பான உறவு கொண்டு வாழ வேண்டியதன் இன்றியமையாமையையும் இந்நூலில் தெளிவாகக் கூறியுள்ளார். அவை இந்நூலின் பின்வரும் பகுதிகளால் விளங்கக் காணலாம். “இதனைப் படிக்கும் அறிஞர்கள் சில கற்பனைக் கதைபோலன்றி உண்மையிஷ்ஐள யாராய்ச்சியுடன் கூடிய சரித்திரமாக எழுதுதற்குப் பெரிதும் முயன்றுளேன் என்பதனையும், ஒரு வகுப்பினைப் பெருமைப்படுத்துதற்காக ஏனை வகுப்புக் களை இழித்துரைக்கும் குறுகிய மனப்பான்மை உடையார்க்கு இஃது அறிவு கொளுத்தக் கூடியதாம் என்பதனையும் நன்கு அறியக்கூடும். இஃது ஒரு வகுப்பினைக் குறித்து எழுதப்பெற்ற தாயினும் இதிலுள்ள செய்திகள் பெரும் பாலனவும் தமிழ் மக்கள் அனைவரும் படித்தறிய வேண்டியனவாம். தமிழ் நாட்டின் வரலாற்றில் இதுவரை யாராலும் வெளிவராத பல அரிய செய்திகளை இந்நூலின் ஐந்தாம் அதிகாரத்திற் காணலாகும்.” (முகவுரைப் பக்கம் VII) “கள்ளர் வகுப்பினர் சிற்சில இடங்களில் செல்வம், கல்வி முதலியவற்றிலும், பழக்க வழக்கங்களிலும் மிகவும் கீழ்நிலையடைந்தவர்களாய்க் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர் என்பது உண்மை. அத்தகையோர் சிறிதேனும் நன்மையடைதற்குத் துணைபுரிதலே இஃது எழுதியதன் முதல் நோக்கமாகும்.” (முகவுரைப் பக்கம் VIII) “பழைய தமிழ் இலக்கிய இலக்கணங்களையும், புராண இதிகாசங் களையும், கல்வெட்டு, பட்டயம், பிற்காலத்தோர் எழுதிய சரித்திரங்கள் என்பவை களையும் பற்றாகக் கொண்டு, இக்காலத்து மக்களியல்புகளிற் பொருந்துவனவற்றை அவற்றுடன் ஒப்பிட்டுப்பார்த்து ஒருவாறு உண்மையெனத் தோன்றுமவைகளை வெளிப்படுத்தலே இவ்வாராய்ச்சியின் நோக்கமாம். (பக்கம்.2) “இவ்வகுப்பினர் (கள்ளர்) யாவரும் கல்வியில் விருப்ப முடையவர் களாய்த் தம் பிள்ளைகட்கு எவ்விதத்திலும் கல்வி கற்பித்தல் வேண்டும். தந்தை மகற்காற்றும் நன்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல் (குறள் - 67) என்று, கல்வியொன்றைத்தானே மக்களுக்குத் தேடித்தர வேண்டுமெனத் திருவள்ளுவர் கூறிவைத்தார். கல்வியின் பிற பயன்களையெல்லாம் அறியாவிட்டாலும், ஒரு மனிதனாவது ஒரு கூட்டமாவது கல்வியினாற்றான் உலகத்தில் நாகரிகமாய் வாழ முடியும் என்பதையும், கல்வியில்லாத மனிதன் அல்லது கூட்டம் ஒரு காலத்தில் மற்றையோர்க்கு அடிமையாய்ப் போக நேரிடும் என்பதையும் சிந்தித்தாவது தம் மக்களுக்கு அழியாப் பொருளாகிய கல்வியைத் தேடி வைப்பார்களாக. இனிக் கள்ளர் நாடுகளில் ஓர் ஊரிலாவது பள்ளிக்கூடம் இல்லாதிருத்தல் கூடாது, ஒரு பிள்ளையாவது படிக்காமல் இருத்தல் கூடாது என்று பெற்றோர்களும், பெரியோர்களும் உறுதி செய்து கொள்வார்களாயின் சில ஆண்டுகளில் இவ்வகுப்பு வியக்கத்தக்க விதமாக மேன்மையடைந்துவிடும். இவ்வகுப்பினர்க்கு இயல்பிலே கூரிய அறிவும், மேற்கொண்டதைச் சாதிக்கும் உறுதியும் உண்டு. இத்தகையோர் கல்வியை மேற்கொண்டால் உலகிற்கே பெரிய நன்மையுண்டு. (பக்கம் 93) “இனி இவ்வகுப்பினரில் மதுவுண்டல் என்னும் தீய வழக்கமுடையோர் இருப்பின் அஃது எவ்வளவு இழிவானது என்பதை உணர்ந்து இனியேனும் அவர்கள் அதைக் கைவிடுவார்களாக. மது உண்போரை மிக இழிந்தவரென மதித்து, மற்றையோர் அவர்களோடு எவ்வித சம்பந்தமும் வைத்துக் கொள்ளாதிருப்பின் அவர்கள் விரைவில் திருந்துதற்கு இடனுண்டு. களவுத் தொழில் செய்வார் யாவரே யாயினும் அவர்களை அரசாங்கத்தினரிடம் பிடித்துத் தருவார்களாயின் இவர்கள் தம் வகுப்பிற்கு எவ்வளவோ நன்மை செய்தவர்களாவர்.” (பக்கம். 93) 5. சோழர் சரித்திரம் சோழர் சரித்திரம் 1928 ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்றது. இந்நூலில் தமிழகத்தின் பழமையும், சோழநாட்டின் பழமையும் சோழர் குடியின் தொன்மைச் சிறப்பும், பழங்காலத்தில் நடைபெற்ற சோழநாட்டின் அரசியல், கைத்தொழில், வாணிகம், கல்வி, சமயம் ஆகியவையும் விரிவாக ஆராய்ந்து எழுதப் பெற்றுள்ளன. மேலும், மனு, முசுகுந்தன், சிபி, காந்தன், தூங்கெயில் எறிந்த தொடித் தோட் செம்பியன், கரிகாலன், கிள்ளி வளவன், நலங்கிள்ளி, தித்தன், பெருங்கிள்ளி, நல்லுத்தரன், கோப்பெருஞ்சோழர், கோச்செங்கோட் சோழர் ஆகிய பதின்மூன்று சோழ வேந்தர்களைப் பற்றிய வரலாறுகளும் கூறப்பெற்றுள்ளன. தமிழ் இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பெற்றுள்ள இந்நூலைப் படிப்பதனால் பழந்தமிழ்நாட்டுப் பண்பாடும், நாகரிகமும், சமுதாய வரலாறும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். மேலும், உயர்ந்த குறிக்கோள்களைத் தெரிவிப்பனவும் அணிநலமும் பொருட்செறிவும் மிக்கனவும் ஆகிய பல சங்க இலக்கியப் பாடல்களையும் அவற்றின் கருத்துக்களையும் மிகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும் கூடும் என்பது உறுதி. 6. உரைச்சிறப்பு நாவலர் ந.மு.வே. அவர்கள் அகநானூறு, சிலப்பதிகாரம், திருவிளையாடற் புராணம், மணிமேகலை (முதல் 26 காதைகள்) ஆகிய பெருநூல்களுக்கும் இன்னா நாற்பது, கார்நாற்பது, களவழி நாற்பது, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை ஆகிய சிறிய நூல்களுக்கும் உரையெழுதியுள்ளார்கள். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னுமாறு போல முதல் மூன்று நூல்களுக்கும் எழுதப் பெற்ற உரைகளின் சிறப்புக்கு இரண்டு மூன்று எடுத்துக்காட்டுக்கள் கூற விழைகின்றேன். அகநானூற்று உரை சங்க இலக்கியங்களுள் நெடுந்தொகை என்னும் அகநானூற்றுக்கு ந.மு.வே. அவர்கள் கரந்தைக் கவிரயசு அரங்க.வேங்கடாசலம் பிள்ளை அவர்களின் துணையுடன் உரையெழுதினார். அறிஞர் பெரு மக்களாகிய வேங்கடசாமியும் வேங்கடாசலமும் சேர்ந்து எழுதிய உரையாதலின் இவ்வுரைக்கு வேங்கட விளக்கம் என்று பெயர் சூட்டினர். நூலின் இறுதியில் வேங்கட விளக்கம் என்னும் அகநானூற்று உரைமுற்றிற்று என்று எழுதியுள்ளமையால் இதனை அறியலாம். ந.மு.வே. நூற்றாண்டு விழா 1984 இல் கொண்டாடப் பெற்றபோது தமிழரசு இதழ் 16.04.1984 இல் சிறப்பு மலர் வெளியிட்டுப் பெருமை பெற்றது. அச்சிறப்பு மலருக்கு முனைவர் வ.சுப.அவர்கள் எழுதித்தந்த கட்டுரையில் அகம் 24, 124 ஆகிய இரண்டு பாடல்களையும் எடுத்துக்காட்டி அவற்றுக்கு ந.மு.வே. எழுதிய உரைச்சிறப்பைப் போற்றிப் பாராட்டியுள்ளார்கள். 1. அகம் 24 ஆம் பாட்டில் இரவுத்துயில் மடிந்த தானை என்னும் தொடர் வந்துள்ளது. இத்தொடருக்குப் போர்க்களத்தில் படைகள் இரவு தூங்கிப் போயின என்று பொருள்கொள்ளலாமா? அது மறப்படைக்கு இழுக்காகுமே என்று எதிர்நோக்கிய நாட்டார் பலநாளும் துயிலின்றிப் போர் செய்து வினை முற்றும்காலைத் துயின்றதானை என்று விளக்கம் செய்தனர். வெற்றிக்குப்பின் தூங்கின தானை என்னும் கருத்து. 2. அகம் 124ஆம் பாடலில் மாட மாணகர்ப் பாடமை சேக்கைத் துனிதீர் கொள்கைநங் காதலி என்று பாடுவர் இளவேட்டனார். கணவரைப்பிரிந்த பெண்டிர் அனைவரும் வருத்தத்தோடு இருப்பதே இயற்கை. இதற்கு மாறாகத் துனிதீர் கொள்கைநங் காதலி என்று பாடுவது பொருந்துமோ என்று ஐயுறுவார்க்கு விளக்கம் கூறுவது போன்று கணவர் சொற்பிழையாத கற்பினால் வருத்தத்தை மாற்றிக் கொண்டவள் என்று ந.மு.வே. உரைகூறியுள்ளார். 3. மேலும், ந.மு.வே. அவர்கள் “அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்” என்னும் அதிவீர ராமரின் வெற்றிவேற்கைக்கு “அறிவுடையோன் ஆறு அரசுஞ் செல்லும்” என்ற புறநானூற்றுக் கருத்தை ஒப்பிட்டுக் காட்டுவதையும் வ.சுப.அவர்கள் சுட்டிக் காட்டிப் பாராட்டியுள்ளார்கள். சிலப்பதிகார உரை தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூண்டி வாண்டையார் கல்லூரியில் (அ.வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி) தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிப் பணியிலிருக்கும் போதே மறைந்துபோன, பெருந்தமிழ் அறிஞரான முனைவர் வே.காத்தையன் சிலப்பதிகார உரைத்திறன் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள். அதனின் ஒரு பகுதி பின்வருமாறு:- 1. உரைபெறு கட்டுரையில், “அன்றுதொட்டுப் பாண்டியனாடு மழைவறங் கூர்ந்து வறுமை எய்தி வெப்பு நோயும் குருவும் தொடர” என்று வரும் தொடரில் வெப்புநோய் - தொழுநோய் என அடியார்க்கு நல்லார் உரையெழுத, ந.மு.வே. அவர்கள் வெப்பு நோய் - வெம்மை விளைக்கும் நோய், குரு - கொப்புளம். வெம்மையால் உண்டாவது. என விளக்கம் தருவது பொருத்தமாக உள்ளது. (வெப்பு நோய் - காய்ச்சல், குரு - அம்மைக் கொப்புளம்) 2. அரங்கேற்று காதை முடிவில், மாதவிபால் விடுதல் அறியா விருப்பங்கொண்ட கோவலன் தன் “வடுநீங்கு சிறப்பின் மனையகம் மறந்ததாக” இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். வடுநீங்கு சிறப்பின் மனையகம் என்பதற்கு அடியார்க்கு நல்லாரும் அரும்பத உரையாசிரியரும் குற்றமற்ற கற்புச் சிறப்பினை உடைய மனைவியும், மனையும் என வாளாவெழுத, நாவலரோ, வடுநீங்கு சிறப்பு என்பதற்கு மனையாட்குக் கற்பின் சிறப்பும், மனைக்குச் செல்வச் சிறப்பும் என விளக்கவுரை தருகின்றார். 3. இந்திர விழவூரெடுத்த காதையில் காவற்பூதம் என்ற தொடருக்குப் புகாருக்கும் அரசர்க்கும் காவலாகிய பூதம் என்று உரைகூறுவதும், காட்சிக்காதையில் முதுநீர்க் காவிரி என்ற தொடருக்குப் பொருள்கூறுங்கால் முதுமையைக் காவிரிக்கு ஏற்றுக என எழுதுவதும் நாவலர் புலமை நலம் ஒளிரும் தொடர்களுள் சில எனலாம். திருவிளையாடற் புராணம் - உரைச்சிறப்பு ந.மு.வே. அவர்கள் திருவிளையாடற் புராணம் முழுமைக்கும் உரையெழுதியுள்ளார்கள். இந்நூல் மதுரைக் காண்டம், கூடற் காண்டம், ஆலவாய்க் காண்டம் என்னும் மூன்று பெரும்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அழகிய முறையில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் வெளியிடப் பெற்றுள்ளது. திருவிளையாடற்புராணத்தில் கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதற் கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப் பாலாய் எல்லாமா யல்லதுமா யிருந்ததனை யிருந்தபடி யிருந்து காட்டிச் சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைந்துபவத் தொடக்கை வெல்வாம் என்னும் பாடலுக்கு ந.மு.வே. அவர்கள் எழுதியுள்ள உரையும் விளக்கமும் மிகவும் சிறப்புடையவை என்று ஐயாவின் அருமைத் திருமகளார் சிவ. பார்வதியம்மையார் அவர்கள் பெருமையுடன் கூறுகின்றார்கள். இப்பாடலின் உரையும் விளக்கமும் பின்வருமாறு:- நான்மறை இருக்கு, எசுர், சாமம், அதர்வணம், என்பன; தைத்திரியம், பெளடிகம், தலவகாரம், சாமம் எனலுமாம். ஆறங்கம் சிட்சை, வியாகரணம், நிருத்தம், கற்பம், சந்தம், சோதிடம் என்பன. இவை வேதத்திற்கு உறுப்புக்கள் போறலின் வேதாங்கம் எனப்படும்; இதனை, “ கற்பங்கை சந்தங்கால் எண்கண் தெற்றெ னிருத்தம் செவிசிக்கைமூக்கு உற்ற வியாகரண முகம்பெற்றுச் சார்பிற் றோன்றா, வாரண வேதக் காதி யந்த மில்லை” என மணிமேகலை (27:100-104) கூறுவதாலும் அறிக. முதல் என்றதனால் அறநூல், புராணம் முதலாயின கொள்ளப்படும். கேள்வி என்பது கேட்டல் எனப் பொருட்படுதலன்றிக் கல்வியெனவும், வேதம் எனவும் பொருள்படும். நால்வர் - சனகர், சனாதனர், சனத்தரர், சனற்குமாரர் எனுமிவர். இறைவன் வாக்கிறந்து நிற்றலை, “ மாற்ற மனங்கழிய நின்ற மறையோன்” “சொற்பதங் கடந்த தொல்லோன்” என ஆளுடைய அடிகள் அருளுமாற்றான் அறிக. வேதம் முதலிய கலைகளெல்லாம் பாசஞான மாகலானும், இறைவன் பாசஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரன் ஆகலானும் மறைக்கப்பாலாய் என்றார். இறைவன் எல்லாமாயிருத்தலை, இருநிலனாய்த் தீயாகி நீருமாகி யியமான னாயெறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி யாகாச மாயட்ட மூர்த்தி யாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம்முருவுந் தாமேயாகி நெருநலையா யின்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிக ணின்ற வாறே எனவும், அல்லதுமாயிருத்தலை, விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேதவிதியல்லர் விண்ணுநிலனுந் திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர் தெளிநீரு மல்லர்தெரியில் அரிதரு கண்ணியாளை யொருபாகமாக வருள் காரணத்தில் வருவார் எரியர வாரமார்ப்ப ரிமையாரு மல்ல ரிமைப்பாரு மல்லரிவரே” எனவும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்தமை காண்க. “ஒன்று நீ யல்லை யன்றி யொன்றில்லை யாருனை அறியகிற்பாரே” என்னும் திருவாசகமும் சிந்திக்கற்பாலது. இறைவன் உலகெலாமாகி வேறாயுடனுமாய் நிற்பன் என மெய்கண்ட நூல்கள் கூறாநிற்கும். இருந்ததனை - வினையால் அணையும் பெயர்; தன்னை எனப்பிரித்தலுமாம். இருந்துகாட்டிச் சொல்லாமற் சொல்லுதல் - மோன முத்திரைக் கையுடனமர்ந்து அருளாலுணர்த்துதல் ஒருகை மார்பொடு விளங்க ஒருகை தாரொடு பொலிய என்னும் திருமுருகாற்றுப்படைத் தொடருக்கு முனிவர்க்குத் தத்து வங்களைக் கூறி உரையிறந்த பொருளையுணர்த்துங்காலத்து ஒருகை மார்போடே விளங்கா நிற்க, ஒருகை மார்பின் மாலை தாழ்ந்தனோடே சேர்ந்து அழகுபெற, இறைவன் மோன முத்திரையத்தனாய்த் தானாயேயிருந்து காட்ட ஊமைத்தசும்புள் நீர் நிறைந்தாற்போல் ஆனந்தமயமானவொளி மாணாக்கர்க்கு நிறைதலின், அதற்குரிய மோனமுத்திரை கூறிற்று என நச்சினார்க்கினியர் உரை விரித்திருப்பது இங்கு நோக்கற்பாலது. “ ஓரானிழ லோன்கழல் இரண்டும் முப்பொழு தேத்திய நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை” என்பது திருவெழுகூற்றிருக்கை. நினையாமல் நினைந்து - பிறிதொன்றையும் நினையாமல் நினைந்து, இடையறாது பாவித்து என்றபடி; சிந்திக்கும் முறையிற் சிந்தித்து என்றலுமாம்; அது தற்போதத்தாற் சிந்தியாது திருவருள் வழியாற் சிந்தித்தல் என்பதாம். இதனை, அறியாமை அறிவகற்றி யறிவினுள்ளே அறிவுதனை யருளினா லறியாதே யறிந்து குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடும் கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாகில் என்னும் சிவஞான சித்தியாரால் அறிக. மாணிக்கவாசகப் பெருமானும் “நினைப்பற நினைந்தேன்” என்றார் என விளக்கியுள்ளார்கள். 7. இலக்கணத் தொண்டு தொல்காப்பியம் முதலான தமிழ் இலக்கண நூல்களை எழுத்தெண்ணிக்கற்ற ந.மு.வே. அவர்கள் தொல்காப்பியம் என்னும் கட்டுரையில் தொல்காப்பியத்தின் அருமை பெருமைகளை மிகத் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துரைக்கின்றார்; எழுத்து, சொல், பொருள் மூன்றையும் அதிகாரத்திற்கு ஒன்பது இயல்களாக வகுத்துக்கொண்டு விளக்கும் பான்மையைப் போற்றுகின்றார். “இந்நூலானது தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆராய்ந்து முந்து நூல் கண்டு முறைப்படத் தொகுத்தியற்றப்பட்ட தென்பது வடவேங்கடம் என்னும் இதன் சிறப்புப்பாயிரத்தால் அறியலாவது. இந்நூலை ஆராய்ச்சி செய்யுமிடத்து இது நன்கு தெளிவாம். இந்நூலின் எழுத்ததிகாரத்து மொழி மரபின் கண்ணே மொழிக்கு ஈறாகும் எழுத்துக்களைக் கூறிவரும் இடத்தே, சகர மெய்யூர்ந்த முற்றுகரமும். நகரவொற்றும் இவ்விரண்டு (இரண்டிரண்டு) மொழிகட்கே ஈறாகுமென்றும் (உசு,முசு; பொருந், வெரிந்), பகரமெய்யூர்ந்த முற்றுகரமும் ஞகர வொற்றும் ஒவ்வொரு மொழிக்கே ஈறாகுமென்றும், பகர மெய்யூர்ந்த வுகர வீற்றுச்சொல் (தபு என்னும் சொல்) ஒன்றே தன்வினைப் பொருளும் பிறவினைப் பொருளும் பயப்பதாம் என்றும் உணர்த்துவார்,” “ உச்ச காரம் இருமொழிக் குரித்தே” (தொல்:எழுத்து மொழிமரபு-42) “ உப்ப காரம் ஒன்றென மொழிப இருவயின் நிலையும் பொருட்டாகும்மே” (தொல்:எழுத்து மொழிமரபு-43) “ உச்ச காரமொடு நகாரம் சிவணும்” (தொல்:எழுத்து மொழிமரபு-46) “ உப்ப காரமொடு ஞகாரையும் அற்றே அப்பொரு ளிரட்டா திவணை யான” (தொல்:எழுத்து மொழிமரபு-47) என ஆசிரியர் கூறி வைத்திருப்பன சிலவற்றிலிருந்தே தமிழில் இருவகை வழக்கிலுமுள்ள சொற்பரப்பெல்லாம் ஒருங்கு தொகுத்துவைத்துக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டதென உணரலாகும். மற்றும், தொகைமரபின் கண்ணே, “ அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுதலாகி உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தே அவைதாம், கசதப என்றா நமவ என்றா அகர வுகரமோ டவையென மொழிப (தொல்:எழுத்து தொகைமரபு-28) என்னும் சூத்திரத்தால் தமிழக முழுதும் வழங்கிய அளவுப்பெயர் நிறைப் பெயர்களை அவற்றின் முதலெழுத்து எடுத்தோதிக் குறித்து வைத்ததும், பொருளதிகாரத்து மரபியலில், இளமைப்பெயர், ஆண்மைப்பெயர், பெண்மைப் பெயர் எல்லாம் எடுத்தோதி, இன்னின்னவற்றுக்கு இன்னின்ன பெயர்கள் உரியவெனக் கூறிவைத் திருப்பதும் போல்வன இவ்வுண்மையை நன்கு விளக்குவனவாகும். தமிழுக்கே உரிய சிறப்பு வாய்ந்த பொருளதிகாரத்தில் மக்களுடைய ஒழுகலாறெல்லாம் தொகுத் துணர்த்தியிருக்கும் மாட்சி அளவிடற் பாலதன்று. தமிழ் எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் என்னும் கட்டுரையில் எழுத்து என்னும் சொல் பற்றி ஆராய்ந்து, எழுதப்படுதலின் எழுத்தே என்னும் கருத்தை மறுத்து, “ இவற்றால் எழுத்தென்னும் பெயர் மொழிக்கருவியாம் ஒலியைக் குறிப்பதொன்றாகவே தொல்காப்பியனார் கொண்டுள்ளாரெனக் கருதுதல் பொருத்த முடைத்தெனத் தோன்றுகின்றது.” என்றும், “எழு என்னும் பகுதியின்று எழுத்தென்னும் பெயர் தோன்றிற்றாகக் கொள்வது பொருத்தமுடைத்தெனத் தோன்றுகிறது. அதுபின்பு அவ்வெழுத்தினை யுனர்தற்குக் கருவியாக வேண்டப்பட்ட வரிவடிவினையும் குறித்ததாகல் வேண்டும்" என்றும் ந.மு.வே. அவர்கள் தெளிவாகக் கூறுகின்றார்கள். இகரத்தின் குறுக்கம் குற்றியலிகரம் என்றும், உகரத்தின் குறுக்கம் குற்றியலுகரம் என்றும், ஒரு மாத்திரை உடைய இகர உகரங்கள் இடனும் பற்றுக்கோடும் காரணமாகக் குறுகி அரைமாத்திரை ஒலிக்கும் குற்றியலிகர குற்றியலுகரங்கள் ஆயின என்னும் ஒருசார் இலக்கண நூலார் கருத்துக்களை மறுத்து “ குற்றியலிகரம் குற்றியலுகரம் என்பன இகர வுகரங்களின் குறுக்க மாயினும், அவை முன் ஒரு மாத்திரையாய் நின்று பின் அரை மாத்திரையாய்க் குறுகின எனற்கிடனின்றி, இடமும் பற்றுக்கோடும் சார்ந்து இயற்கையாய் அரைமாத்திரை பெற்று நிற்றலானும் அப்பெயர்க் குரியவாயின." என்னும் நச்சினார்க்கினியர் கருத்தை ந.மு.வே. அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். உயிரையும் மெய்யையும் முதலெழுத்து என்றும், முத லெழுத்தைச் சார்ந்து பிறப்பன சார்பெழுத்து என்றும் கூறப்படும் கருத்தையும் நாட்டாரையா அவர்கள் ஏற்கவில்லை. உயிரெழுத்துக்களைத் தனித்து ஒலிக்கலாம். மெய்யெழுத்துக்களை அகரச் சாரியை புணர்த்தித் தனியே ஒலிக்கலாம். ஆனால், மூன்று சார்பெழுத்துக் களையும் தனித்தோ சாரியை புணர்த்தோ தனியெழுத்தாக ஒலிக்கவியலாது. மொழி யிடை வைத்தே ஒலிக்க முடியும். ஆகவே, மொழியைச் சார்ந்து ஒலிப்பனவே சார்பெழுத்துக்களாகும் என்பதும் நாட்டார் கருத்தாகும். இதனை “ அம்மூன்றும் தனித்தேனும் சாரியையோடு பொருந்தியேனும் வருதலின்றி மொழியைச் சார்ந்தே வருதலாகிய சிறப்பின்மையைப் பற்றி என்க” என்று நாட்டாரையா கூறுவதால் அறியலாம். இளம்பூரணம் “தொல்காப்பியத்துக்கு இளம்பூரணம் என்னும் உரையெழுதிய இளம்பூரணரும், உரையாசிரியர் எனப்படுபவரும் ஒருவர்தாமா? அல்லது இருவரும் வேறுவேறு உரைகாரர்களா என்பது ஓர்ஐயம். இருவரும் ஒருவரே என்பது பல அறிஞர்கள் கருத்தாகும். ஆனால், உரையாசிரியர் கருத்தாக நச்சினார்க்கினியர் குறிப்பிடும் பல செய்திகள் தொல்காப்பிய எழுத்ததி காரத்துக்கு இளம்பூரணர் உரை என்று இப்போது அச்சாகி வெளிவந்துள்ள நூல்களில் காணப்பெறவில்லை. “இன்னவேதுக்களால் உரையாசிரியரும் இளம்பூரணரும் இருவேறு உரையாளரென்றாதல், இருபெயரும் உடையார் ஒருவரே, அவருரையிற் சிலசில பகுதிகள் எழுதினோரால் விடப்பட்டன வென்றாதல் கோடலமையும். ஏட்டுப்பிரதி முதலிய சாதனங்களால் உண்மை கண்டு வைத்துளோர் வெளியிடுவாராக” என்று ந.மு.வே. அவர்கள் இளம்பூரணம் என்னும் கட்டுரையில் எழுதியுள்ளார்கள். யாப்பருங்கல நூலாசிரியர் பெயர் யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்னும் யாப்பிலக்கண நூல்களை எழுதிய ஆசிரியர் பெயர் அமிர்தசாகரர் அமுதசாகரர் என்று கூறப்பட்டு வந்தது. யாப்பருங்கலப் பாயிரம் “ அளப்பரும் கடற்பெயர் அருந்தவத் தோனே” என்று நூலாசிரியர் பெயரைக் குறிப்பிடுகின்றது. இதனை நன்கு ஆராய்ந்த ந.மு.வே. அவர்கள் “ பாயிரத்திலுள்ள ‘அளப்பரும் கடல்’ என்னும் தமிழ்ச் சொற்றொடரும், அமித சாகரம் என்னும் வடசொற்றொடரும் ஒருபொருளனவாகலின் ஆசிரியர் பெயர் அமிதசாகரர் என்பதாமென்றும், அதுவே அமிர்த சாகரர், அமுத சாகரர் எனப்பலராலும் திரித்து வழங்கப்பட்ட தென்றும் நான் கருதுகின்றேன்.” என்று யாப்பருங்கல நூலாசிரியர் பெயர் என்னும் கட்டுரையில் எழுதிஉள்ளார்கள். இலக்கண விளக்க உரையாளர் யார்? இலக்கண விளக்கம் எழுதிய வைத்தியநாத தேசிகரே அந்நூற்கு உரையும் எழுதினார் என்று சுவாமிநாத தேசிகர் தமது இலக்கணக்கொத்து என்னும் நூற்பாயிரத்தில் கூறுகின்றார். அதனை மறுத்து ந.மு.வே. அவர்கள் இலக்கண விளக்க உரையாளர் யார் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதினார்கள். அக்கட்டுரையின் இறுதியில் நாட்டாரையா அவர்கள் தம் கருத்தைக் கூறும்போது “ இதுகாறும் செய்த இவ்வாராய்ச்சியால் இலக்கண விளக்கம் உடையாரும், அதற்கு உரைகண்டாரும் வேறுவேறாவர் என்பதும், வைத்தியநாத தேசிகரே நூலும் உரையும் இயற்றினாரெனக் கொண்டு பிறர் மேற்கோள் காட்டியதும், மறுப்புரை வரைந்ததும் பிழையாம் என்பதும் அங்கை நெல்லியென விளங்குதல் காண்க.” என்று எழுதியுள்ளார்கள். ந.மு.வே. அவர்களின் கருத்தை மறுத்துத் திருவாளர் வி.சிதம்பர ராமலிங்கம் பிள்ளையவர்களாலும், பாரிப்பாக்கம் கண்ணப்ப முதலியார் அவர்களாலும் செந்தமிழ்ச் செல்வியில் மறுப்புரைகள் எழுதப்பெற்றன. அவற்றை மறுத்து இலக்கண விளக்க உரையாளர், மயக்க மறுப்பின்மேற் குறிப்பு என்னும் இரண்டு கட்டுரைகளை ந.மு.வே. அவர்கள் எழுதியுள்ளார். இப்பகுதியில் சுட்டிய ஐந்து கட்டுரைகளும் செந்தமிழ்ச் செல்வியில் வெளிவந்தவையாகும். 8. இலக்கியத் தொண்டு ந.மு.வே. அவர்கள் எழுதிய இலக்கியக் கட்டுரைகளின் சிறப்பை விளக்க ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆய்வுக்கட்டுரைகள் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள சுந்தரர் செந்தமிழ் என்னும் கட்டுரையின் சுருக்கத்தை இங்கே கூறுகின்றேன். சுந்தரர் செந்தமிழ் தேவாரம் பாடிய மூவருள் ஒருவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அருமை பெருமைகளும், அவர் ஆலாலசுந்தரர், நம்பிஆரூரர், தம்பிரான் தோழர் என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றமைக்குரிய காரணங்களும் சுந்தரர் செந்தமிழ் என்னும் கட்டுரையில் விளக்கப்பெற்றுள்ளன. இக்கட்டுரையில் வரும் சில சிறப்புடைய பகுதிகள் பின்வருமாறு:- நம் சுந்தரர்க்குக் கல்வி எங்ஙனம் இனித்தது என்பது இன்பமே உருவாகிய இறைவனைக் குறித்து, அவர் “ கற்ற கல்வியினும் இனியானை” (சுந்தரர் தேவாரம் திருநீடூர்த் திருப்பதிகம் பாட்டு-5) எனக் கூறுவதனால் இனிது விளங்கும். இங்ஙனம் பொதுப்படக் கல்வியை உவமங் கூறியதன்றி “பண்ணிடைத் தமிழ் ஒப்பாய்” (சுந்தரர் தேவாரம் திருக்கருகாவூர் வெள்ளடைத் திருப்பதிகம் பாட்டு-5) என்றும், “ பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே” (சுந்தரர் தேவாரம் திருமழபாடித் திருப்பதிகம் பாட்டு-5) என்றும் சிறப்புவகையால் தமிழின் இனிமையை இறைவன் இன்பொடு சார்த்தி யுரைத்தலின் தமிழ்க்கல்வியானது அவர்க்கு எல்லையில்லா இன்பினை அளித்ததாகல் வேண்டும். (பக்கம் 172) “ தோற்றமுண்டேல் மரணமுண்டு துயர மனைவாழ்க்கை (சுந்தரர் தேவாரம் திருவெதிர்கொள்பாடித் திருப்பதிகம் பாட்டு-2) “ இன்பமுண்டேல் துன்பமுண்டு ஏழை மனை வாழ்க்கை” (சுந்தரர் தேவாரம் திருவெதிர்கொள்பாடித் திருப்பதிகம் பாட்டு-8) “ மணமென மகிழ்வர் முன்னே மக்கள்தாய் தந்தை சுற்றம் பிணமெனச் சுடுவர் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன் (சுந்தரர் தேவாரம் திருவாரூர்த் திருப்பதிகம் பாட்டு-1:6) என்று பொதுவாகவும், உலகியலில் வைத்தும் பிறப்பின் பொல்லாங்கினை எடுத்துக் காட்டி, ஆதலால் பிறவியை வேண்டேன் என்று அறுதியிட்டுரைக்கின்றார். (பக்கம் 178) திருவைந்தெழுத்தினை அவர் நெஞ்சமும் நாவும் எங்ஙனம் பற்றி நின்றன என்பது “ வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம்” (சுந்தரர் தேவாரம் திருவொற்றியூர்த் திருப்பதிகம் பாட்டு-1) “ நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே” (சுந்தரர் தேவாரம் திருப்பாண்டிக்கொடுமுடித் திருப்பதிகம் பாட்டு-2,1) என்பவற்றால் விளக்கமாம். இதுகாறும் கூறியவற்றால் நாவலர், பண்டிதர் ந.மு.வே. அவர்கள் வடசொற் கலப்பில்லாமல் தூய தனித்தமிழில் பேசவும் எழுதவும் வல்லார் என்பதும், தமிழ் நாட்டு மக்கள் கல்வியிலும் அறிவிலும் மேம்பாடு செற்றுச் சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து ஒருதாய் வயிற்று மக்களைப் போல ஒற்றுமை உணர்ச்சி உடையவராய் இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடல் வேண்டும் என்னும் பேரார்வம் கொண்டவராய் விளங்கினார் என்பதும், தமிழகத்தின் தொல்பழங்கால வரலாறும் பழந்தமிழ்ப் புலவர்களின் வரலாறும் இன்று வாழும் பல்வேறு இனத்து மக்களின் வரலாறும் முறையாக எழுதப் பெறவேண்டும் என்று விரும்பினார் என்பதும், இளம்நிலை மாணவர்களும் சிறிதளவே கல்வி அறிவுடைய பொதுமக்களும் பண்டைத்தமிழ்ச் சான்றோர்கள் எழுதிய சங்க இலக்கியங்களையும், பிற காப்பியங்களையும், சைவ சமயக் குரவர்கள் இயற்றிய தேவார, திருவாசகங்களையும் தெளிவாகப்படித்து உணர்ந்து சுவைத்து உவப்பும் ஊக்கமும் பெறும்வகையில் எளிய தெளிவான உரைகளும் திறனாய்வு நூல்களும் வெளிவருதல் வேண்டும் என்னும் வேணவா உடையவராய் விளங்கினார் என்பதும், நாட்டு மக்கள் செய்ய வேண்டுமென்று தாம் எதிர்பார்த்த அனைத்துச் செயல்களுக்கும் தாம் ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கினார் என்பதும் எளிதில் புலனாகும். தமிழ்மண் தாங்கும் விதை! எழுத்தெண்ணிப் படித்த வாழ்வு இலக்கியம் படிந்த நெஞ்சம் அழுந்திய தமிழ்த்தேன் சிந்தும் அறிவுரு நாட்டார் அய்யா எழுந்ததால் எழுந்தோர் இன்றும் இருப்பதால் இருக்கின் றோம்நாம்! விழுந்திடா நாட்டார் நூல்கள் விதைப்பதால் தமிழ்மண் வாழும்! வாழ்வு தரும் வாழ்வு தூசகற்றிச் செந்தமிழ்த் தாய் சுவடுபதிந் திட்ட திசை தொடர்ந்து கண்டார். பேசவரும் பிழைக் குரலின் நூலறுத்து முடிச்சிட்டுப் பெருமை சேர்த்தார். நேசமுடன் தமிழ்த்தாய்க்கு நெஞ்சளிக்கும் தூயோர்க்கே நெஞ்சம் ஈந்தார். வாசமுறு ந.மு.வேங் கடசாமி நாட்டாரின் வாழ்வால் வாழ்வோம். வாழ்வு தரும் வாழ்வு நலம்வளர்க்கும் குடமுருட்டி நதியன்னை பாலூட்டும் நடுக்கா வேரி நிலம் வளர்ந்த ந.மு.வே. தமிழ்உழவால் பயிர்வளர்க்கும் நினைவில் வாழ்ந்தார். உலகறியாத் தமிழ்நூல்கள் உரைக்காலால் நடைபயில உழைப்பைத் தந்தார். புலவோர்க்கு மடியளித்தார்; புலமைக்கு முடியளித்தார்; புகழைக் காத்தார். - செந்தலை ந. கவுதமன் நாவலர் உரைநயம் நாவலர் அவர்களின் உரைநயம் குறித்துச் செல்லூர்கிழார் செ.ரெ. இராமசாமி பிள்ளை அவர்கள், “ நாவலன் வேங்கட சாமி நல்லோன்,” “ பொன்னையே ஒப்பப் பொருந்திய உரையினை வகுத்தனன்” “ முனோர் பகருரை சில்லன பொருந்திய புகழ்ந்தும், பொருந்திய மறுத்தும், திருந்திய மொழியால் சிறந்தன சேர்த்தும், விழுமிய நூல்களின் மேற்கோள் காட்டியும், தழுவிய நூலின் தன்கருத் துணரத் தந்தனன்” என்பது, ஆழ்ந்து ஆழ்ந்து எண்ணத் தக்கதாம். “இவ்வுரையின்கண், மூலத்தின் இன்ன பகுதிக்கு இது பொருள் என்று தேடி இடர்ப்படா வண்ணம், சொற்களைத் கிடந்தவாறே கொண்டு கூட்டின்றித் தனிமொழியாகவும், தொடர்மொழியாகவும் ஏற்ற பெற்றி எடுத்தமைத்துப் பொருள் கூறப் பெற்றுள்ளது; அரும்பதவுரை யாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் வேறுபடக் கொண்ட பாடங்களையும் பொருள்களையும் சீர்தூக்கிப் பார்த்து ஏற்பன கொள்ளப் பெற்றுள; ஒரோவழி அவ்வேறுபாடுகளையும் உரையின் சிறந்த பகுதிகளையும் எடுத்துக் காட்டுதலும், பொருந்தாதன எனத் தோன்றியவைகளைக் காரணம் காட்டி மறுத்தலும் செய்யப் பெற்றுள; இன்றியமையாத இலக்கணங்களும் மேற்கோள்களும் ஆண்டாண்டுக் காட்டப் பெற்றுள; இவ்வுரையின் போக்கினை ஒருவாறு தெரிவித்தல் கருதி இக்குறிப்புக்கள் ஈண்டுத் தரலாயின” என்பது நாவலர் அவர்கள் தம் முகவுரையில் தம் உரைநிலை பற்றி உரைப்பதாம். உரைச் சிறப்புப் பாயிரக் குறிப்புக்களாகவும், முகவுரைக் குறிப்புக்களாகவும் காட்டிய இவ்விரு பகுதிகளையும் நோக்குவார், மூவகைப் பயன்களாய் மூவகையர் கொள்ள உதவுவனவாம் என்பது தெளிவர். நூல் கற்பார்க்குத், தாம் கற்கும் நூலுரை பற்றிய நுண்ணிய நோக்கும் போக்கும் அறிந்து கற்க வழிகாட்டும்! நூல் ஆய்வு செய்வார்க்கும், மேனிலைப் பட்டம் பெற விழைவார்க்கும், இவ்விவ் வகைப் பகுப்புகளாய்ச் செய்து கொண்டு ஆய்க என வழிகாட்டும்! நூல் உரை காண்பார்க்கு, நும் உரை இவ்வாறு அமைதல் சிறக்குமென ஒளிமுகம் காட்டி வழிகாட்டும்! இன்னும் ஒன்று, நூலாசிரியன் திறமும் உரையாசிரியன் திறமும் ஒத்தவை அன்றி, ‘உயர்வு தாழ்வு உடையன அல்ல’ என்பதும் உணர்ந்து மதிக்கத் தகும் குறிப்பு ஒன்றனைச் செல்லூர்க்கிழார் வழங்கியமை எண்ணுக. அது, “பொன்னையே ஒப்பப் பொருந்திய உரை” என்பது. “நூல் பொன்! உரையும் பொன்! இரண்டையும் உரையாணியிட்ட ஆணிப்பொன்” எனத்தகும் என்பதாம்! -இரா.இளங்குமரன் பண்டித, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் நின்ற திருக்கோலத் திருவுருவச் சிலை நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி வளாகத்தில் தாரண வருடம் மாசி மாதம் 1 -ஆம் நாள் 13.02.2005 ஞாயிறன்று திறக்கப்பெற்ற போது நாவலர் நாட்டாரையா அவர்களின் அணுக்கத் தொண்டரும், மாணவருமாகிய கவிஞர் ம. அரங்கநாதன் அவர்களால் எழுதப்பெற்ற ‘காவிரிக்கரை வேங்கடத்தின் கவின் மிகுந்த வரலாறு’ என்னும் பெயருடைய நாட்டாரையா வரலாறு பற்றிய இக்கவிதை நூல் வெளியிடப்பெற்றது. சிவந்தொளிரும் கதிரவன் முன் தென்னை, பனை தலைநீட்டிச் செழுமை பேசும்; உவந்து,நெளிந் தோடிவரும் குடமுருட்டி நிலவளத்தின் உரிமை கூறும்; நிவந்து, நெரிந் தாங்காங்கே கரும்புடனே கைகோத்து நிற்கும் வாழை; தவம்பலித்த தெனக்கிடைத்த வேங்கடசா மிக்குரிசில் தமது மண்ணில். நல்லோரைப் பெற்றெடுத்த மண்ணுக்கே மணமுண்டு, நாட்டா ரென்றால் புல்லுக்குந் தெரியும் நெடும் பொருப்புக்கும் தெரியும் அவர் புலமை மிக்க சொல்லுக்கும், எழுத்துக்கும், ஆராயுந் திறத்துக்கும் சொந்தக் காரர், எல்லைகாண் பதற்கரிய செந்தமிழின் சுவைகண்ட இனிய ரென்றே. செல்வ நடுக் காவேரி தந்த திரு மகனாரைச் சேர்ந்த ஏழை அல்லலெலாந் தீர்ந்தனவென் றறைவேனா? தமிழறிவுச் செறிவும், இன்பும் மெல்லவிழுத் தெனையுமொரு கவிஞனென விடுத்துளதாய் விளம்பு வேனா? ஒல்லையினிற் சொலக்கூடும், ஒருங்கிணைந்த தமிழ் வாழ்வே உற்ற தென்றே! அவருண்டு, நானுண்டு, வாழ்வெனக்கு வளரவிட்டார், அவரே தெய்வம்! அவரினிய திருநாமங் கேட்டாரென் பெயர்த்தொடர்பு மறிவார்; அந்தச் சிவநெறியார் திருவுருவம் இறைமையொடு பெருமையையும் சேர்த்தே நிற்கும்; உவமைசொலற் கரியவந்தப் பேராசான் அருளமுதம் உண்டே வாழ்ந்தேன். தொண்டுபுரிந் தேனென்பார், இசைபாடி மகிழ்வித்தே னென்பார், சொல்லும் மண்டுசுவைக் கருத்துரையை எழுத்தாக்கி வானொலிக்கு வைத்தே னென்பார்; அண்டியிருந்தே, தொலைவுப் பயணத்து முடன் சென்றே னென்பார்; என்ன கண்டாலும், முற்றிலுமாய்க் காண்பரிதாம் அடியேன்பால் வைத்த காதல். தமிழ்கண்டார் என்னிடத்தே, தந்தையொடும் அளவளாய்த் தகுதி கண்டார்; உமிபதரைக் காணவிலை, மணிகண்டார்; உயிரிரக்கம் ஒன்றோ, கல்வி அமைவுமேம் படநினைந்தார், மண வினைக்குத் துணைநின்றார், அழியாச் சாதிச் சுமையுண்டே, உலகத்தே! என்படுமோ? எனநினைந்தார், சொல்லொ ணாதார். இலங்குமனைக் கிழத்தியராய், உடல் நலத்தைப் பேணுந்தாய் இந்திராணி துலங்குமனங் காண்போமா? உறவினராம் தொலையூர்த்தாய் ஒருவர் சுட்டிக் கலங்குகிலாப் பிள்ளையிது யாரென்ன “இதுதானென் சின்னப் பிள்ளை”, வலங்கொள் தமிழ்த் தாலாட்டி உறங்கவைக்கப் போகிறது, மாடிக் கென்றார். வலமிகுத்த திருமுறைகள், திருவருட்பா, தொண்டர்கள் சீர் பரவும் பாக்கள் புலனுணர்வு பூரிக்க, முதுமையிலே கேட்டுமகிழ் புண்ணி யத்தை இலமிருந்தே பெறவாய்ப்பு வாராதோ? என்றிருந்தேன், பெற்றேன் இன்று நலமிதனின் வேறுண்டோ? என வியந்து பாராட்ட, “நாணி னேனே!” மாடியிலே நான்பாட, வழிபோக்கர் தெருவோரம் நின்று கேட்பர்; நாடியதாய் நலங்கேட்டு விசிறிவிட்டு, மகிழ்வுடனே நிற்பர் அண்டை: தேடிவருந் தெய்வதமோ, கண்களினீர் குளமாகத் தேக்கி வைக்கும்; பாடிய நான் பேறுபெறப் பொருள் நயங்கள் இடையிடையே பகர்வார் ஐயா. இளைப்போடே இருமல்வரும்; சளைக்காமல் திருமுறைத்தேன் மடுக்குஞ் செம்மல் திளைத்தார்கள் வாசகத்தோர் சொற்றொடரில், பொருள் நயமும் தெரிவித்தார்கள், “விளைச்சல் பெறும் பொய்தனக்கு விச்சுக்கே டாகாதென் றென்னை வைத்தாய், உளைச்சலொடு பாடுகிறேன்” எனவிளித்தார் வாசகனார், உடையான் றன்னை. விதைநெல்போல் விதைப்பொய்யும் தோற்றுவித்த சொல்லாட்சி விழுமி தன்றோ? எதையெடுத்துச் சொன்னாலும் வகுப்பறைபோல் இருக்குமருட் பாடல் கேட்ட பதைப்போடே இறையவனின் பாங்குகளை விரித்துரைப்பார், பகலில் ஓர் நாள் துதைந்தபெரு நட்புடையார், நகரத்தார் போந்தநலம் சொல்லு வேனே. வள்ளல்சிறு பிள்ளை, துணித் தொட்டிலிலே தூங்குங்கால், வழக்கம் போலத் தெள்ளுதமிழ்த் தேவாரம், தாயுமா னவர்பாடல் தேனாய்ப் பாய, அள்ளியள்ளிப் பருகுகிறார், கண்களினீர் கசிகின்ற தந்த நேரம் துள்ளுதமிழ்க் கதிரேசர் நுழைந்தவரை இருக்கவைத்துச் சொல்லு கின்றார், வாருங்கள், இருங்க ளிரு வருமாய்க் கரந்தைக்குச் செல்வோ, மிங்கே பாருங்கள் தேனாற்றை! இதையன்றோ பழிக்கின்றார் தமிழர் என்போர்; தேருகிலா ரெனச்சொல்லச் செட்டியார் சொல்லுகிறார், “சிவனார் முன்னம், பாருளார் நக, வுரைத்தார், அதையெண்ணி விட்டுவைத்தான் காலன்”, என்றார். இச்சொல்லோ பிடிக்கவிலை நாட்டார்க்குத், தமிழ்க்கரந்தை ஏகி னார்கள். அச்சமிலார், சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்வார், இனிய சொல்லால் மெச்சுவார், குறைகாணில் நயமாகப் பேசுதலில் விரகர்; ஓர் நாள் இச்சையுடன் சிக்கலுக்குச் சென்றிருந்தோம், மாநாட்டுத் தலைமை யேற்றார். சுவைமிகுந்த சொல்விருந்து பேரறிஞர் தந்ததற்பின் தலைமைப் பேச்சும் அவைமகிழ நிறைவேற, அடுத்தநாட் காலையிலே வெளியே சென்றோம், தவச்சிறிய வாய்க்காலைத் தாண்டிவிட்டோம்; * தவித்தவரைச் சுட்டிச் சொல்வார், “இவர் வீரச் சுவைபேசி, நேற்றிரவு மகிழ்வித்தார், எங்கே வீரம்?” பெரியார்தம் தலைமையிலே பாராட்டு; பீடுமிகு பன்னீர்ச் செல்வம் அரியதொரு பயணமெனப் பறந்திட்டார்; போய்வந்தேன்; அற்றைச் செய்தி தெரியவெனப் பேச்செடுத்தேன், “பெரியார்தம் தலைமையிலே கூட்ட” மென்றேன்; பெரியாரா! யாரென்றார், தெரியார்போல்; தமிழ்காக்கும் பெரியா ரென்றேன். புரியாரா, புளகித்தார், ஆமென்றார் தமிழ்க்கடலாம் புலவ ரேறு! தெரிந்திருந்தும், வள்ளுவரை “ மேற்சாதி பண்ணுகிற” சிலரைச் சீறி, “பெரிய புரட் டிதுவாகும், பழங்குடியிற் பிறந்தவரே” என்றார் ஐயா. அரியவுரை யாம்பரிமே லழகருரை மனப்பாட மாக்கென் றார்கள். திருமுறைகள் பன்னிரண்டும் பரிசளித்தார், திருமணம் நான் பெறத்தான் வாழ்த்திப் பொருள்கொடுத்தார், அருளாளர் பால்விடுத்தே ஆசிரியர் ஆக்கி வைத்தார், பெருமை பெற அரசாங்கப் பணியினுக்கும் பரிந்துரைத்தும் பெறச்செய் திட்டார்; அருமைமிகு மண்ணலடி பரவியுழைப் பாலுயரும் ஆற்றல் பெற்றேன். சிலம்புரைநூல் பதிப்பிக்க மூலத்தைச் சீர்பிரித்தே எழுதச் செய்தார்; நலம் பெருக்கும் தமிழ்ச்செல்வர், நிலக்கிழவர் தமைச்சேரன் குளத்தில் கூட்டிப், பலம் விளக்கிப் பேசியவர், வாண்டையார் ஊர்தியிலே பயணஞ் செய்தார்; இலனென்றா வாடினேனான்? உளனென்றே உடன் சென்றேன், இன்புற் றேனே. உடனுறைய வைத்தவரோ தமிழ்ப்புலவர், உறவினரு மாவர். என்ன திடமெனக்குப், பட்டமிலேன், தமிழ்ப்பற்றே பற்றுக்கோ, டெனினு மையா விட மாட்டார்! தமிழ்ப்பணிகள் விருப்புடனே அளிப்பதனை மறிப்பார் யாரே? கடமைதவ றாதிருந்தேன், தமிழோடென் உறவினையுங் காட்டிக் கொண்டேன் தமிழுக்கோர் மணமுண்டு, சுவையுண்டு, தெய்வநலம் தாங்கும் வன்மை அமைவுண்டு, யாவரையும் ஒருகுலமாய் ஆக்குவிக்கும் ஆற்ற லுண்டு; சுமையெனவே தள்ளாது, பெரும்பணியைத் தாங்குகிற துணிவு முண்டு; தமையண்டி வந்தாரைத் தமிழெனவே தாங்கியருள் தந்தார் நாட்டார். உயிரொன்று துன்புறலைக் கண்டருளும் உருக்கத்தை அலவன், அன்னச் செயலோடு பொருந்தவைத்துப் பார்த்திட்டார் திருத்தக்க தேவர் அன்று; பெயல்போலும் தமிழுணர்வு பெருகிவர, நெகிழ்ந்தமனத் திறனை ஆய்ந்தே, அயலுள்ளார் முற்றுமறிந் திடலெளிதோ? அவரவர்க்குள் அடங்கிப் போமே. ஓடுகின்ற கடலலைகள் உருட்டிவிடும் நண்டு, கரை ஒதுங்க மாட்டா தாடுகிற அவலநிலை கண்டிருந்த அன்னந்தான் அகநெ கிழ்ந்தே, தேடிவரு முணவதனைத் தின்னாதே *அருள்புரிந்த திறந்தான் அஃது; நாடுபவர் துயர்காணில், அருள்மலரும் அதைத்துடைக்க, நல்லோர் நெஞ்சில்! கோள்நிலையைப் பார்த்தறியும் திறன்படைத்த அவர்களென்றன் குறிப்பை வாங்கித், தாளெடுத்துக் கணக்கிட்டுப் பலன் கூறித் தேற்றியதைச் சாற்று வேனா! வாளெடுத்த மறவனென வண்டமிழின் வளங்காத்த மன்னன், இந்தத் தூளினைத், தூள் என்னாமல், ஆளெனத்தான் போற்றியமை சொல்லற் பாற்றோ? கள்ளர்சரித் திரஞ்சிறந்த படைப்பாகும் தமிழ்மொழியில்; வகுப்பின் பேரால் உள்ளவதன் உட்கிடக்கை தமிழரது வரலாறே! வழக்குச் சொற்கள் வெள்ளமென வெளிப்படுத்தும், அகராதி அரைகுறையாய் விட்ட தென்றே உள்ளமிக நொந்தார்கள், உழைப்பினுக்கு மதிப்பளிக்கா உண்மை கூறி. வேங்கடமாம் திருமலைதான் சிலைவடிவில் நிற்கிறது! வேண்டு மட்டும் ஓங்கியது தமிழ்நாடு; வளர்ச்சியிலே இனியுமதற் கோய்வி ராது; தாங்கியருள் தமிழ்மொழியோ உலகமொழி! நாட்டார்தம் தகவு கண்டோம்; பாங்குபெற உணர்வொன்றி, மொழிவழியாம் பண்பாட்டைப் பாது காப்போம். வாழ்க நாட்டார் புகழ் ஓய்வுபெற்ற நல்லாசிரியர், மாமனிதர் கவிஞர் ம.அரங்கநாதன் 46-எ, காத்தாயி இல்லம், வடக்குத் தெரு உரத்தநாடு - 614 625 புலவர் பெருமானே! நின் பெரும் பிரிவைக் குறித்து யானென் சொல்லிக் கதறுவேன்! நாவலரே! எம்மினின்றும் நீவிர் பிரிந்து சென்று விட்டீர்கள். தங்கள் பிரிவு என் உள்ளத்தைப் பிளக்குகின்றது. அன்று ஒரு மன்னன் நாட்டினின்றும் பிரிந்தான். அவன் பிரிவுக்கு ஆற்றாது வருந்திய அந்நாட்டு அஃறிணைப் பொருள்களின் நெகிழ்ச்சியையும், எழுதப் போந்த புலவன் ஒருவன், “ஆவு மழுத, அதன் கன்றழுத, அன்றலர்ந்த பூவுமழுத, புனற்புள்ளழுத..... காவு மழுத” என எழுதிக் கதறினான்.இன்று நின் பெரும் பிரிவைக் குறித்து யானென் சொல்லிக் கதறுவேன்! புலவர் பெருமானே! இன்று எம் கரந்தைத் தமிழ்ச் சங்கம், ஆண்டு விழாவில் தலைமை தாங்கி அணி செய்வித்த அரும்பெருந் தலைவனை இழந்தது. கரந்தைத் தமிழ்ப் பெருமன்றம், இழுமென் மொழியால் விழுமிய நுவலும் புலவரை இழந்தது. எம் கரந்தைப் புலவர் கல்லூரி சிறந்த தலைவனை இழந்தது. எம் கரந்தைப் புலவர் கல்லூரி மாணவர்கள் திரிபொடு பஃறலை தெரிவிருள் பல்லவும், திட்ப நுட்பம் வாய்ந்த தெளிவுரைகளால் போக்கியருளும் தீந்தமிழாசானை இழந்தார்கள். தேனருவியென ஒழுகிச் செல்லும் செந்தமிழ் உரைகளைச் செவிமடுத்து மகிழும் பேற்றினை இத் தென் தமிழ்நாட்டவையோர் இழந்தனர். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் தங்கள் விருப்பின் வண்ணம் செயலாற்றி மகிழ்விக்கும் வீறுடைப் புலவனை இழந்தனர். திங்கள் வெளியீடுகளாகிய செந்தமிழ்ச் செல்வியும், தமிழ்ப் பொழிலும், சிறந்த எழுத்தாளனை இழந்தன. தமிழ்த்தாய், தன் முடிமணி யனையானை, கண்மணி யனையானை இழந்தனள். பெரும! நின்னால் சிறந்த உரை பெறவிருந்த தமிழ் நூல்கள் அப்பேற்றை இழந்தன. பெரியோனே! இவ்விருபதாம் நூற்றாண்டில் சிறந்த உரயாசிரியனாகத் திகழ்ந்தனையே! பண்டை உரையாசிரியர்களால் உரை காணாது விடப் பெற்ற சிலப்பதிகாரப் பகுதிகட்கும் அகநானூற்றிற்கும், மணிமேகலைக்கும், சிறந்தவுரையெழுதி அளித்த நின் கைகளை அந்தோ! இதுபோது மடக்கிக் கட்டி இவண் இக்கல்லறையில் வைத்துள்ளனரே! இக்காட்சியைக் கடைசியிற் காணவோ யானிவண் போந்தேன்? பெருமானே நினது அறுபதா மாண்டின் நிறைவு விழாவில் நினக்கு அணிமலர் சூட்ட எண்ணி பாவியேன் கையினால் இன்று நின் பிணவுடற்கு மாலை சூடடினேனே. கள்ளர்கோமானே! களிற்றியானை நிரைக்குக் கனிவுறும் உரை விரித்த நின்வாய் இன்று கட்டப்பெற்றுள்ள காட்சியையா காணவேண்டும்? அன்பர்களே! நம் நாவலரவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்தார்கள். “தனித் தமிழ் பயின்றோர் ஆராய்ச்சி நூல்கள் எழுதுதற்குத் தகுதியில்லாதவர்” எனக் கழறுவோர் கூற்றை வெட்டி வீழ்த்தி ஆங்கிலம் பயின்றோரும் எழுதற்காகா ஆராய்ச்சி நூல்கள் எழுதி வெளியிட்ட எம் அறிஞர் தலைவர் மறைந்தார். இத்தமிழ்நாட்டில் சிறந்த உரையாசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும், பேராசிரியராகவும் திகழ்ந்த நம் நாவலர் அவர்கட்கு நம் தமிழர்களின் ஆதரவு ஒருமுகமாகக் கிடைத்திருப்பின், முன்னரேயே எத்துணையோ சிறப்புப் பட்டங்கள் இவர்கட்கு அரசாங்கத்தாரால் அளிக்கப் பெற்றிருக்குமென்பதற்கு ஐயமுண்டோ? தமிழ்நாட்டில் சிறந்த ஆராய்ச்சி நூல்களைச் சீர்தூக்கிப் பரிசளிக்க எண்ணி அரசாங்கத்தார் நூற்றேர்வில் சிறந்த நூல் இவையெனத் தேறின், இவர்கள் எழுதியுள்ள கபிலர், நக்கீரர், கள்ளர் சரித்திரம் முதலிய ஆராய்ச்சி நூல்கட்கன்றிப் பிற நூல்களுக்கு முதற் பரிசு கிடைக்குமோ? தமிழ்நாட்டில் இவ்விருபதாம் நூற்றாண்டில் சிறந்த உரையாசிரியரைத் தேர்ந்து அவருக்குப் பரிசளிக்க எண்ணின் நம் நாட்டாரவர்கள் அன்றிப் பிறர் யார் அப்பரிசினைப் பெறவல்லார்? சங்க நூல்களில் மிகக் கடினமான பாடங்களுக்கும் எளிதின் உரை விரித்துணர்த்தும் ஆற்றல் இவர்கட்கு என அமைந்து கிடந்தது. தாமே பயின்ற தமிழ்ப் பேராசிரியர் ஆயினும், எப்பேராசிரியருக்கும் இல்லாத சிறந்த பண்புகள் பல இவர்கள்பால் காணப்பட்டன. செருநரும் விழையும் செயிர்தீர் காட்சி செம்மல் எம் நாட்டாரவர்களே யாவர்கள். பிள்ளைத் தமிழ் முதல் பெருநூல்களனைத்தும் தம் உளத்துள் கொண்டிலங்கிய பெருமகன் எம் நாட்டாரவர்களையே இன்று இக் கல்லறை மூடிக் கொண்டது. இப்பெருமகனை இக்கல்லறையுளிருத்தி இவர் முன்னின்று பேசுகின்றேன். சிறிது நேரத்திற்கு முன் நீவிர் இவர்கள் தலையில் செம்மண்ணைப் பெய்தீர்கள்; நன்றா என்னும் குன்றிலேறித் தன் கண்களில் கண்ட அளவு தன்னாட்டையெல்லாம் புலவர் பெருமானாகிய கபிலருக்குக் காட்டி உரிமையாக்கித் தந்த சேரன் செல்வக் கடுங்கோ வாழியாதன் இன்றிருந்தானாயின் இவர்கள் தலையில் செழும்பொன்னைப் பெய்து இச்செம்மலைப் போற்றாதிருப்பனோ? சற்று நேரத்திற்குமுன் இவர்கள் தலையில் மண்ணைப் பெய்தீர்கள்; பண்டு பதினாறு நூறாயிரம் பொன்கொடுத்துப் பட்டினப் பாலையை ஏற்று மகிழ்ந்த மன்னர் கரிகாற் பெருவளத்தான் இச்சோழ நாட்டிலிருந்து இன்று ஆட்சி புரிவானாயின் இவர்கள் மீது மணிகளைப் பெய்து, மார்புறத்தழீஇக் கண்ணீர் வடிக்காதிருப்பானோ? சிறிது நேரத்திற்குமுன் இவர்கள் மீது திருநீற்றை மூட்டையாகக் கொணர்ந்து பெய்தீர்கள்; “ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடிமருதன் தலைவனாக உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகவென் னிலவரை” எனப் புலவரைச் சிறப்பித்து வஞ்சினங்கூறிய பெரு மன்னனான பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இன்றிருந்தானாயின் கொற்கைத் துறைமுகத்தை கொணர்ந்து பெய்து, தன் கண்ணீர் முத்தையும் சிந்தாதொழிவனோ? நம் மன்னர்களை இழந்தோம்! புலவர் களைப் போற்றும் வள்ளல்களை இழந்தோம்! புலம்புகின்றோம்! மேனாட்டில் சிறந்த புலவர்களிலிருந்து வாழ்ந்து வந்த இல்லங்களை அவ்வரசினர் பொருள்கொடுத்து வாங்கிப் பெரிய எழுத்துக்களால் இவ்விப் புலவர் இவ்விவ் வில்லங்களில் இவ்விவ் வாண்டில் வாழ்ந்துவந்தனர் என எல்லோருமறியப் பெரும் எழுத்துக்களிற் பொறித்துப் போற்றி ஒம்படை புரிகின்றனர். தமிழ்நாட்டில் தமிழரசின்றிப் பிறர் ஆட்சி நிகழ்கின்றமையினாலே நந் தமிழ்மொழிப் புலவர்களின் பெருமையுணர்ந்து அவர்கள் போற்றார் என்பதை யாம் நன்கறிவோம். அரசினர் போற்றாவிடினும் மொழிவளன் படைத்த புலவர் மாட்டுப் பெரும் பற்றுடைய செல்வர்களும், புலவர்களும், இக்கல்லறையினைப் போற்றிக் காத்தல் கடனென அறிவிக்க விரும்புகின்றேன். வேற்று நாட்டு மன்னனொருவன் ஆங்கில நாட்டு மன்னனைக் காண அந்நாட்டிற்கு வந்தபோது முதன்முதல் உலகப் பெருங் கவியாகிய செகப்பிரியர் கல்லறை யெங்கே யுளதென வினவி அப்புலவர் பெருமான் கல்லறையின் முன் சென்று அக்கல்லறைக்கு வணக்கம் செலுத்திய பின்னரே அந்நாட்டு மன்னனைக் காணச் சென்றானென்று பெரியோர் கூறக் கேட்கின்றோம். நம் நாட்டாரையா அடங்கியுள்ள இக்கல்லறையும் பிற்காலத்தில் தமிழக மன்னர்களால், புலவர்களால், பொதுமக்களால், போற்றி வணங்குதற்குரிய கோயிலாக விளங்கலாம். இக்கல்லறையைப் போற்றிக் காத்தல் நம்மவர் கடனன்றோ? புலவரேறே! நின்போன்று சிறந்த புலவர்களை எத்துணையோ நூற்றாண்டு கழியினும் இனி காணுதற்கியலுமோ? இனி யாருளரோ! முன்னுமில்லை என்ற மொழிக்கிணங்க இலங்கினையே! எந்தையே! என்பாலன்பு கொண்டு என்னையுமோர் மகனாக்கி, கல்லூரி ஆசிரியனாக்கி, பொழிலாசிரியனாக்கிப் போற்றிய நின் திருவடிகட்குக் கடைசி முறையாக என் வணக்கத்தைச் செலுத்துகின்றேன். புகழுடலிற் பொலிவுறும் பெரியோராகிய நீவிர் என் வணக்கத்தை ஏற்றருள்வீராக!” தமிழ்நாட்டில், தற்காலத்தில், தமிழ்ப் புலவர் ஒருவருக்காக முதன்முதல் எழுப்பப்பட்ட கற்கோயில் இது ஒன்றுதான். நாட்டார் அய்யா அவர்கள் 29.3.44 அன்று அடக்கம் செய்யப்பட்ட பிறகு அப்போது தமிழ்ப் பொழில் ஆசிரியராக இருந்த கோ.சி.பெரியசாமி புலவர், கல்லறையில் ஆற்றிய சொற்பொழிவு ஆகும். இந்த சொற்பொழிவு ‘தாமே பயின்ற தமிழ்ப் பேராசிரியர் (ந.மு.வேங்கடசாமி நாட்டார்)’ என்ற நூலில் 1956 ஆம் ஆண்டு கட்டுரை வடிவில் வெளிவந்தது. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்: பெறற்கருஞ் செல்வர் இவர்களைத் தமிழுலகம் நன்கறியும். பல சிறந்த நூல்கட்கு நூலாசிரியராகவும் உரையாசிரியராகவும் விளங்குகின்ற தமிழ்நாட்டுத் தவத்தோன்றலாரான இவர்கள், தஞ்சையை அடுத்த நடுக்காவேரி என்னுந் திருவூரில் இற்றைக்கு அறுபது ஆண்டுகட்கு முன் தமிழ் தழைக்கத் தோன்றித், தமது இயற்கை மதி நுட்பத்தாலும் முயற்சியாலும் செந்தமிழ்ப் பெரும்புலமை கை வந்து, மதுரைப் பண்டிதத் தேர்வில் முதன்மையிற்றேறிப் பொற்பரிசும் பெற்றுத், திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் முதலிய உயர்ந்த இடங்களில் தமிழ்ப் புலமை நடாத்திப் பெரும்புகழ் ஈட்டி இப்போது ஆறுதல் பெற்று, இவ்வோய்வுற்ற வேளையிலும் கரந்தைப் புலவர் கல்லூரியின் தலைவராகத் தொண்டாற்றித் தஞ்சையில் திகழ்ந்துவரும் பெரியாராவர். புலமை இவ் வுலகத்தில் ஒரு பெறற்கருஞ்செல்வம்; தேர்வு வேறு, கல்வி வேறு, புலமை வேறு. தேர்வும் கல்வியும், முயல்வாரனைவர்க்கும் பொது; புலமை ஓர் இயற்கைத் திரு. மக்கள் பலவகையான கல்விகளைப் புலமையின்றியுங் கற்கலாம்; நினைவு வன்மையுடன் பல தேர்வுகளிலுந் தேர்ச்சி பெறலாம். புலமை அங்ஙனமன்று; அஃதொரு தனித்த ஆற்றல். கல்வியும் தேர்வும் உயிரறிவின் முயற்சிகளேயாக, புலமை யென்பது அவ் வுயிரறிவின் கண் மன்னி அதனை வளப்படுத்தும் இறயைருளின் ஆற்றலாகும். அருண்ஞானத்தின் ஒரு கூறே புலமை யென்பது. புலமை என்பதற்கு ‘மெய்ஞ்ஞானம்’ என்று திருமுருகாற்றுப்படையுரையில் நச்சினார்க்கினியர் பொருளுரைத்தார். ஞான ஆற்றலாகிய புலமை வீறுதானும் உலகிற் பற்பல வகையாக விளங்கிப் பயனளித்து வருகின்றது. வழுவில்லாத மொழியறிவு, வளம் வாய்ந்த அழகுநடை, மெய்காணும் நுழை நோக்கு, எதிரில்லாப் பொதுவீறு, திருந்திய பெருங்கருத்துக்கள், பயனளிக்குஞ் சொல்வன்மை, அறம் நிறுத்தும் உறுதியுரை, ஆக்கமுறுத்தும் அருள்வாய்மை முதலிய பண்புகளெல்லாம் அப்புலமையின் கூறுபாடுகளாகும். பண்டைக் காலந் தொட்டு இத்தகைய புலமைச் செல்வர்கள் நமது தமிழ்நாட்டில் பற்பலர் விளங்கி இதனை மாட்சிமைப் படுத்தி வந்திருக்கின்றனர். அச்சான்றோரெல்லாம் அங்ஙனந் தோன்றித் தோன்றித் தொண்டு செய்திராராயின் இந்நாடு வெறுங் காடாகி நாகரிகம் அற்றிருக்கும். இதனைக் கூறும்போது ஒரு வருத்தம் நமதுள்ளத்தைப் பெரிதும் வருத்துகின்றது. அறிய வேண்டிய இவ்வுண்மையை நம் தமிழ் மக்களிற் பெரும்பாலார் பெரிதும் மறந்து, நன்றி மறந்த பொல்லாத பெருங்குற்றத்துக்கு ஆளாகி, அதனாற் கொடுந் தீவினைகளாற் சூழலுற்று, ஆற்றல் மழுங்கி, உரிமைகள் குலைந்து நிற்கும் இரங்கத்தகுந்த நிலை எவருள்ளத்தைத்தான் உருக்கி ஒடித்து வருத்தாது? ஆசிரியர் தொல்காப்பியர், திருவள்ளுவர், ஏனைச் சங்ககாலச் சான்றோர் முதலிய புலமைச் செல்வர்கள் நாட்டுக்குச் செய்திருக்கும் நிலையான நாகரிகத் தொண்டை வேறு எவ்வகை இயக்கத்தால் செய்துவிட முடியும்? ஆனால் நாடு இக்காலத்தில், அவரனைய புலமைத் தொண்டர்களை எவ்வளவு மறந்து கடமையறியாது எக்களித்துச் செல்கின்றது! நாட்டின் வளர்ச்சிக்கு ஆணிவேரைப் போன்ற முதன்மையுடையவர்களாய்த் திகழும் புலமைப் பெரியோர்களைத் திறன் தெரிந்து போற்றிப் பயனுறாது, பிறவற்றிலெல்லாம் தமிழ்நாடு தனது நேரத்தையும், முயற்சியையும், பொருளையும் அளவுக்கு மேற் செலவுசெய்து அலமந்து ஏமாறும் நிலை எத்தனை இரங்கத் தக்கது! ஞானசம்பந்தர், முதலாழ்வார், சேக்கிழார், குமரகுருபரர் முதலிய புலமைச் சான்றோரை யெல்லாம் மறந்துவிட்டா இத் தமிழ்நாடு வாழவிருக்கின்றது? ஆசிரியர் மறைமலையடிகள், பண்டிதமணி, பண்டித நாட்டார் போன்ற செழும்புலமைத் திருவினர் இந்நாட்டின் பெறற்கரும் புலமையூற்றுக்கள் அல்லரோ? பண்டைக் காலத்தில் பொருளாட்சிக்குச் சேர சோழ பாண்டியரென்னும் முடியுடை மன்னர் மூவர் விளங்கின ரெனின், இற்றைக் காலத்திற் புலமை யாட்சிக்கு இம் மூவரும் முடியுடைப் புலமைக் குன்றுகளாகவன்றோ திகழ்கின்றனர்! நாடு இம்மூவர் திறத்திலும் எங்ஙனம் பாராட்டுடையதாய் இருக்கின்றது? மணிவிழாப் பாராட்டு நாட்டின் நல்லுணர்ச்சிக்குச் சிறந்த அடையாளம் என்பர். ஆசிரியர் மறைமலையடிகள் திறத்தில் இவ்வகையில் அடியோடு செய்ந்நன்றி மறந்து கடமை வழுவித் துடைக்கவொண்ணாத வடுப்பழிக்கு நாடு ஆளாகி விட்டது.பண்டிதமணியவர்கட்கு மணிவிழா நிகழ்ச்சி, நடந்தவரையிற் சிறப்புற நடந்தாலும், நாடு தனது கடமையைத் தகுமுறையில் முழுதும் புலப்படுத்திக் கொள்ளவில்லை. திரு.நாட்டாரவர்கட்கு அண்மையில் வருஞ்சித்திரைத் திங்களில் மணிவிழா நிகழ்ச்சி உறுகின்றது. நாடு எந்த அளவில் தனது நல்லுணர்ச்சியைப் புலப்படுத்திக் கொள்ளுமோ தெரியவில்லை. முன்னிருவர் திறத்தில் உற்றகுறையை இப் பெருமகனார் திறத்திலாயினும் நன்கு நிறைவு செய்யுமாயின் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழுணர்ச்சிக்கும் அது பெரும் பயனுடையதா யிருக்கும். அண்மையில் தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் இதற்கென நடைபெற்ற ஒரு கூட்டத்தில், மணிவிழா நிறைவேற்றுக் குழுவினர் அமைக்கப் பெற்றிருப்பதாகத் தெரிகின்றது. குழு இவ் விழாவினைப் பற்பல வகைகளிற் சிறப்புற நிகழ்த்தி நாட்டிற் பெரும்பயன் விளைத்திடுமென்று நம்புகின்றோம். திரு.நாட்டாரவர்கள் தமது புலமையில், எதிரில்லாத பெருவீறும் பேராற்றலும், நனி படைத்துத் திகழும் செம்மலாவர். வழுவில்லாத மொழிப் புலமையும், பயன்பட்ட சொல்வன்மையும் போல்வன பெரிதுடையார். கருத்துக்களை நடுநிலையாக எடுத்துக் கூறுதலும், நட்பில் மதிப்பும் இனிதமைந்தவர்கள். இளமை தொட்டே தன்முயற்சியும், தொடர்ந்த உழைப்பும் மிக உடையவர்கள். அவர்கள் பரந்த கல்வியும், தமிழன்பும், தனித் தமிழ் நடையும், எத்தகைய பெரு நூலுக்கும் உரைகாணும் நுண் மாண் திறனும், ஆராய்ச்சி வன்மையும் தமிழுக்குத் தக்க அணிகலன்களாய்ப் பெரிதும் பயன் விளைத்திருக்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உரையில்லாமலே இருந்த அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பெரு நூல்களுக்கெல்லாம், இத்தனை காலங் கழித்து இப் புலவர் பெருமானே உரைவகுத்து உதவும்படி வாய்ப்பிருந்த அருமையை உற்றுக் கருதுங்கால், இவர்கள் பெருமை மலையிலக்காக இனிது புலப்படுகின்றது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருத்தும் ஈளையிருமலால் உடல் பெரிதும் நலிவுற்று ஆண்டு முதிர்ந் திருக்கும் இத் தளர்ந்த காலங்களிலும் தமிழ்க்கு இங்ஙனங் கடுவுழைப்புக் கொண்டு உரை வகுத்தல் முதலிய செய்தக்கன செய்துவரும் பேருதவியை நாடு எங்ஙனம் மறக்கமுடியும்? மறந்து இனிது விளங்கவுங் கூடுமோ? திரு.நாட்டாரவர்கள் மணிவிழா நிகழ்ச்சி, ஆண்டேறியதனாலன்றி, அவர்கள் செய்திருக்கும் மணியன்ன தமிழ்ப் பணிகளாலேயே உண்மையில் மணிவிழாவாய் மிளிர்வதற்குரிய அமைப்பினைப் பெற்றிருக்கின்றது. தமிழகம் முழுதும் தமிழன்பர்கள் இவர்கள் மணிவிழாவிற் கலந்து நல்லுணர்ச்சிகள் காட்டிப் பெரும்பயன் எய்த வேண்டுமென்று விரும்புகின்றோம். அன்பர்கள் பலவகையாகச் செய்யும் மணிவிழாப் பெருமைகளோடு, ‘மணிவிழா நினைவு விரிவுரைகள்’ எனச் சில அங்கங்கும் தக்க வகையில் நிகழச் செய்து அவற்றை ஒருங்கு திரட்டிச் சிற்சில விரிவுரை மலர்களாக வெளியிட்டுத் தருதலும் பயன்தருவதாகும். தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம், திருமுறை, மெய்கண்டநூல், பிற்கால நூல், தமிழுணர்ச்சி, முயற்சி, விடுதலை, ஆக்கத் திட்டங்கள், உலகப் பணி, புதுமலர்ச்சி, மாணவருலகு, நாட்டியல், தொழிலியல், கலை வளர்ச்சி முதலிய பற்பல பொருள்கள்மேல் தனித்தனி மூன்று அல்லது ஐந்து விரிவுரைகள் தமிழகத்தின் பற்பல தலைநகர்களிலும் தனிச் சிறப்பான வல்லுநர் பலரையும் திரு.நாட்டாரவர்களையுங் கொண்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் பல இனத்தவரிடையில் நிகழ்விக்கலாம். விரிவுரைகளை, முன்னரே எழுதி வாங்கி அச்சிட்டு விரிவுரை மலர்களாக ஆக்குதல் நன்று. பெரியோர்கள் ஆவன பலவும் சூழ்ந்து இம் மணிவிழாவினை நன்கு சிறப்பிக்குமாறு வேண்டுகின்றனம். இக்கட்டுரை செந்தமிழ்ச் செல்வி - சிலம்பு 21 சுபானு - கார்த்திகை மாதம் 1943 பரல் 1 ல் வெளிவந்தது. - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் கடிதங்கள் ௳ திருச்சிற்றம்பலம் திருச்சிராப்பள்ளி 20-12-22 அன்பார்ந்த நண்பரீர், நலம், தாங்கள் கடிதம் இன்று கிடைத்தது. இன்று உடம்பு சற்றுக் குணமாயிருக்கிறது. இப்படியே நலம் பெறும் என நம்பியிருக்கிறேன். யான் எடுத்து மொழியும் பொருள் தமிழின் நிலைமை, திருக்குறள் என்பவற்றுள் யாதேனும் ஒன்றாகக் குறிப்பிடுங்கள். சனிக்கிழமை காலை வண்டியில் புறப்பட்டுச் சாத்தூர் வர எண்ணியுள்ளேன். அன்பன், மு. வேங்கடசாமி நேற்று விடுத்த பதில் தங்களுக்கு இன்று கிடைத்திருக்கும்.  ௳ திருச்சிற்றம்பலம் நடுக்காவேரி 20-06-23 அன்பார்ந்த நண்பரீர், நலம், நலம் பல்குக. உரையை ஒருவாறு பார்த்துச் சில திருத்தங்கள் செய்துள்ளேன். எழுதினவர்களுடைய கருத்து முதலியவற்றை மாற்றுதல் சரியன்று. அஃது எளிதுமன்று. எப்படியும் நன்கு கற்றவர்களுடைய உரையாகலின் வெளிவருதல் நலமே. குறியீடுகளையெல்லாம் நன்கு கவனித்தல் வேண்டும். வேறொரு நல்ல உரைப்புத்தகத்தை முன் மாதிரியாக வைத்துக் கொண்டு யாவும் செப்பம் செய்யுங்கள். நூல் முழுதும் ஒரே முறையாகக் குறியீடுகள் அமைய வேண்டும். எனக்குக் கழகத்தினின்றும் அன்புடன் உதவிய புத்தகமெல்லாம் கிடைத்தன. புத்தகங்கள் மிகவும் அழகமைந்து மிளிர்கின்றன. கழகத்தின் பதிப்புக்களால் தமிழுலகிற்கும் பெரும் பயன்விளையுமென நினைக்கின்றேன். "செந்தமிழ்ச் செல்வி" நாளடைவில் இன்னம் சிறந்து விளங்குமெனக் கருதுகின்றேன். நான் நாளை வியாழக்கிழமை திருச்சி செல்கிறேன். அன்பன் ந.மு. வேங்கடசாமி  ௳ திருச்சிற்றம்பலம் திருச்சிராப்பள்ளி 20-10-31 அன்புமிக்க ஐயா, நலம், தங்கள் 14-10-31ன் கடிதம் கிடைத்தது. தாங்கள் குறிப்பிட்ட வேலைக்குத் திரு. அ.மு.ச. அவர்களே பெரிதும் பொருத்தமுடையவர்கள். அவர்கள் தசரா லீவில் செட்டிநாடு சென்று நேற்றே மீண்டு வந்தார்கள். வந்தவுடன் வேறு ஊருக்குச் செல்ல நேர்ந்தமையின் இன்று காலை புறப்பட்டுப் போய்விட்டார்கள். செய்தி தெரியும் நான்கு நாளில் வந்தவுடன் ஆலோசித்து மனு எழுத உங்கட்கு அநுப்புவதோ தகவல் தெரிவிப்பதோ செய்யக்கூடும். அவர்கட்கு இப்பொழுது சம்பளம் ரூ. 44 கிடைக்கிறது. 60-3-75ல் ஒரு கிரேடு இருக்கிறது. அது விரைவில் கிடைக்குமெனவும் எதிர்பார்க்கிறார்கள். நெல்லையில் தாங்கள் குறிப் பிட்டு உள்ள சம்பளம் குறைவாகத் தோன்றுகிறது. காலேஜ் என்கிற ஒரு மதிப்பு உண்டு. எனினும் போக்குவரத்தால் பெருஞ்செலவு நேரக்கூடிய நெடுந்தொலைவில் தக்க சம்பளமின்றி வேலை ஒத்துக் கொள்ளின் பொருளால் இடர்பட நேருமென்று நினைப்பது இயல்பே. ஆரம்பச் சம்பளம் ரூ. 60 கிடைப்பின் வேறு ஆலோசனைக்கு இடமிராது. நீங்களும் மற்றவர்களுடன் கலந்து சூழ்ந்து பாருங்கள். அவர்கள் வந்தவுடன் நாங்கள் துணிந்து தெரிவிக்கின்றோம். அவர்களைத் தவிர இங்குள்ளோரெல்லாம் அண்மையில் 'வித்வான்' முதலியவற்றில் தேர்ச்சியுற்ற இளம்பிராயத்தினர்களே அவர்களுக்குள்ளே ஒருவர் வேண்டு மென்னின் நம் உலகவூழியர் பெரிதும் பொருத்தமுடையர். அவருக்கு வயது 26. ஆனால் பெரிய வகுப்புகளையும் நிருவகிக்கதக்க கல்வித் திறமையுடையவரே. இப்பொழுது நாமக்கல் போர்டு ஹை ஸ்கூலில் தலைமைப் பண்டிதராக இருக்கிறார். பிறபின் அன்புள்ள ந.மு. வேங்கடசாமி  ௳ N.M. Venkataswami Nattar, Lecturer in Tamil, “Thirunavukkarasu Tamilaxam” Bishop Heber College Rock Fort, Trichinopoly. 30.7.1932 அன்புள்ள ஐயா, தங்கள் இரு கடிதங்களும் கிடைத்தன. திருவாளர் ஆ.மு. முதலியாரவர்கள் தாமாகவே இருமுறை என்னிடம் தெரிவித்தமையாற்றான் நான் அவர்கட்கும், தங்கட்கும் எழுதினேன். எனக்கு எவ்வளவு வேண்டுமென்று எழுதியதும் அவர்கள் கருத்தை அநுசரித்தேதான். தாங்கள் அவர்களையும் பார்த்துப் பேச இயலாது திரும்பினமை அறிந்து வருந்துகிறேன் பின்பும் அவர்கட்கு எழுதியுள்ளேன். அவர்கள் உங்களை அழைத்துச் செய்தி தெரிவித்தால் பேசி முடிவு செய்யுங்கள். சென்ற ஆண்டிலும் கண்ணகி வரலாறு இருப்பது குறித்து நானும் ஐயுற்றதுண்டு. அதனை அவர்களிடமும் தெரிவித்தேன். நான் ஏதோ மிகுதியான ஊதியம் பெற்று விடவேண்டுமென ஆத்திரப்படவில்லை. கடவுள் எனக்கு வேண்டுவதனை வேண்டுங் காலத்தில் தந்தருள்வர் என்னும் துணிவுடையேன். நெறி தவறாதும், மதிப்பிற்கு இழுக்கின்றியும் நடந்து கொள்வதே நமது கடமை. அடியிற் குறிப்பிடும் புத்தகங்களை ரயில்வே பார்சலில் எனக்கு அனுப்புங்கள்:- 1. திருவிளையாடல் மூலம். 2. கலித்தொகை மூலம் 3. இறையனாரகப் பொருள். 4. கல்லாடம் 5. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ். அன்புள்ள ந.மு. வேங்கடசாமி  ௳ N.M. Venkataswami Nattar, Annamalai Nagar, P. o. Lecturer in Tamil, Chidamparam. Annamalai university 11-12-1939 திருவாளர், வ. சுப்பையா பிள்ளை அவர்கள், கழகம், சென்னை. அன்பார்ந்த ஐயா, நலம், தங்கள் 4-12-39ன் கடிதமும் ‘கலைச்சொற்கள்’ புத்தகப் படியும் வந்தன. தாங்கள் குறிப்பிட்டவை விரைவில் வருமென நினைக்கிறேன். திருச்சி ஒலிபரப்பியில் நான் பேசியனவும், இனிப்பேச விருப்பதொன்றும் ஆகிய நான்கு உரையினையும் தனிப்புத்தகமாக வெளியிட மேற்படி நிலையத்தார் அரசாங்கத்தாரின் அனுமதி கேட்டு இருப்பதாகவும், அனுமதி கிடைத்தால் அவ்வாறே வெளியிடப் பெறும் என்றும் சொன்னார்கள். கட்டுரை செல்விக்கு வராதிருந்தால் அதற்குக் காரணம் அதுவேயாகும். கட்டுரை வந்து சேர்ந்தால் நான் பார்த்துத் திருத்துமாறு ஒரு புரூப் அனுப்புதல் வேண்டும். நமது நடராஜன் போட்டோ எடுப்பதில் நல்ல பயிற்சி பெற்றிருப்பதோடு, அது சம்பந்தமாக மிகவும் ஆராய்ந்திருக்கின்றான். தமிழில் அது பற்றிய புத்தகம் இல்லாமையால், தான் பல கட்டுரைகளாக எழுதி வந்து, முடிவில் புத்தகமாக்கலாம் என்று கூறுகின்றான். செல்விக்கு எழுதச் செய்யலாமென நினைக்கிறேன். நமது பார்வதியம்மாள் பெரியபுராண வசனம் புதிதாக எழுதி முடித்திருக்கிறது. நாவலரவர்கள் எழுதியதில் நடை அக்காலத்திற்குப் பொருத்தமாகலாம். வட சொல் மிகுதியாக விரவியுள்ளது. மேலும், செய்யுட்களை விடுத்துத் தனியாகப் பல இடங்களில் எழுதிச் சென்றுள்ளார்கள். இப்பொழுது செய்யுட்களைத் தழுவி நல்ல தமிழ் நடையில் எழுத வேண்டுமென்று நான் தெரிவித்தபடி எழுதியிருக்கிறது. இதனை எப்படி வெளியிடலாம் என்பதை சூழ்ந்து முடிவுசெய்வோம். இதனுடன் ஒரு கடிதம் இணைக்க பெற்றுள்ளது. அன்புள்ள ந.மு. வேங்கடசாமி  ௳ தஞ்சை 24-9-42 அன்புள்ள ஐயா, நலம், இன்று சுகம். புரூப் திருத்தி அனுப்பியுள்ளேன் 260ஆம் செய்யுளில் 4,5 ஆம் அடிகள் பிறழ்ச்சியாய் இருத்தலையறிந்து திருத்தி, அதற்கேற்ப உரையெழுதி, விளக்கவுரையிலும் தெளிவாகக் காட்டியுள்ளோம். அவ்வாறாகவும், அந்த அடிகள் புத்தகத்தில் உள்ளவாறு தவறாக அச்சிடப்பட்டுள்ளன. புரூப்பில் இதனை நான் கவனியாதிருந்தால் பெரும் பிழையாகும். எழுத்தெழுத்தாகக் கவனிக்கவேண்டியிருக்கிறது. (தொல்காப்பிய மூலப்பதிப்பில் ஒரோ விடங்களில் திரு. இளவழகனார் கூட மயங்கியிருப்பது வியப்பாயிருக்கிறது நூன் மரபு உரு - ல் "தத்தம் மிசைகள்" என்பது, தத்தம் இசைகள்'. எனப்பிரிக்கப்பட்டுள்ளது) நிற்க...... கணக்கும் தொகையும் அனுப்புவதாகத் தெரிவித்து நீண்ட நாளாகியும் இன்றும் வந்திலவே. அன்புள்ள ந.மு. வேங்கடசாமி  ௳ பண்டித. ந.மு வேங்கடசாமி நாட்டார் .2650. இராஜகோபாலசாமி தலைவர். கரந்தைப் புலவர் கல்லூரி கோயில் தெரு, தஞ்சாவூர் 18-2-1944 திருவாளர் வ. சுப்பையா பிள்ளையவர்கள் செயலாளர், கழகம், சென்னை அன்புடைய ஐயா, புறநானூற்று மகாநாட்டின் அறிக்கை வரப்பெற்று அளவற்ற மகிழ்ச்சியடைகின்றேன், புறநானூறு என்பது பண்டைத் தமிழருடைய ஒப்புயர்வற்ற கலை நாகரிகம், அரசியல், வரலாறு முதலியவனைத்தையும் பளிங்குபோல் விளக்குவது. அவ்வாற்றால் அது தமிழருக்கு விலைமதிக்கலாகாத பெருஞ் செல்வமாகவுள்ளது. அதிலுள்ள ஒவ்வொரு செய்யுளையும் தமிழ் நாட்டிலுள்ள ஆடவர். பெண்டிர், முதியார், இளையார் யாவரும் படித்தறியுமாறும், பிறமொழியாளர்களும் அவற்றின் கருத்தையுணர்ந்து மதிக்குமாறும் செய்யவேண்டுவது தமிழ்த் தலைமகன் கடமை. தென்னிந்திய சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைச் சார்ந்த தென்னிந்தியத் தமிழ்ச்சங்கத்தார் தொகை நூல்கள் ஒவ்வொன்றையும் பற்றி மாநாடுகள் கூட்டித் தக்க புலவர்களைக் கொண்டு ஆராய்ச்சி உரைகள் வெளிப்படுத்தி வருவது மிகசிறந்த தோர் தமிழ்ப்பணியாகும். புறநானுற்று மாநாட்டின் சொற்பொழிவுப் பொருள்களாகப் பொறிக்கப்பெற்றவை யாவரும் அறியவேண்டுபவை. அவற்றைப் பேசுதற்கு அமைந்தவர்களும் அவர்துறையில் மிக வல்லுநர்கள் தலைவராகவுள்ளவர்களும் எல்லாத் தகுதியும் வாய்ந்தவர்கள், அங்ஙனமும், வரவேற்பு நூற்படக் காட்சித் திறப்பு மாநாட்டுத் திறப்பு என்பன நிகழ்த்துவோர்களும். பேராசிரியர் சுந்தரம்பிள்ளை முதலாகவுள்ள பெருந்தக்கார்களின் படத்திறப்புச் செய்வோர்களும் மிகவும் தகுதியுடையவர்கள். எனவே புறநானூற்று மாநாடானது கண்ணுக்கும், செவிக்கும், உளத்திற்கும், இன்பமும் உறுதியும் அளிக்க வல்லதாய்ப் பல வகையானும் இப்பயன் சிறந்து விளங்குவதாம் என்பது ஒரு தலை. இம்மாநாடு வெற்றியுடன் நடைபெறவும், அதனால் முன்னாலே எழுச்சிபெற்றுள்ள தமிழ்மக்கள் மேலும் பன்மடங்கு கிளர்ச்சியும், ஊக்கமும் கொண்டு தமிழ்ப்பணியாற்றவும் வேண்டி, தமிழ்த் தெய்வத்தின் திருவருளை வந்தித்து வாழ்த்து கிறேன். அன்புள்ள ந.மு. வேங்கடசாமி நாவலர். ந.மு வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தன் மகன் நமு.வே. நடராசன் அவர்கட்கு எழுதிய கடிதங்கள் ௳ அண்ணாமலை நகர் 3-7-38 அன்புள்ள குழந்தை நடராஜனுக்கு சிவபெருமான் திருவருளால் எல்லா நலங்களும் உண்டாக. இவண் யாவரும் நலம் அவண் எல்லோருடைய நலமும் தெரிவிக்க நின் கடிதம் பார்த்து மகிழ்ந்தேன். இரண்டு சர்டிபிகேட்டுகளும் இதனுடன் இருக்கின்றன. Games ஐப் பற்றித் தெரிவித்திருந்தால் Remarks களத்தில் ஏதேனும் எழுதப்பட்டிருக்கலாம். நிற்க- உனக்கு வேண்டிய செலவுகளுக்குப் பணம் வாங்கிக் கொடுக்கும் படியும், ஆகஸ்டு முதலில் நான் அதனை அநுப்பிவிடுவேனென்றும் மாப்பிள்ளை ஏகாம்பரத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். அப்படியே வாங்கிக் கொள்க. இடையே வேறு வேலையையும் எதிர்ப்பார்த்து முயல்வதனால் முதலில் ஒரு Term க்கு மாத்திர்ம் சம்பளம் கட்டலாம். இன்றேல் 2- Term க்குச் சேர்த்துக் கட்டுவது நலமே. ஹாஸ்டல் விஷயத்தை ஆலோசித்து ஏற்றபடி செய்து கொள்ளவும். எல்லா விபரங்கட்கும், நலத்திற்கும் அடிக்கடி கடிதம் எழுதவும். மிக்க அவரசமாக ஏதேனும் தேவை இருப்பினும் தெரிவிக்க. அன்புள்ள ந.மு. வேங்கடசாமி  ௳ Annamalai Univetsity Annamalai Nagar 13-7-1938 அன்புள்ள குழந்தை நடராஜனுக்கு இறைவனருளால் எல்லா நலன்களும் உண்டாக. இவண் யாவரும் நலம். இன்று நினது கடிதம் வரப்பெற்று யாவும் அறிந்தேன். ஹாஸ்டலில் இருந்து உடம்பினை நன்கு பேணிக்கொண்டு, ஊக்கத்துடன் படித்து வருக. மற்றும் முன் கடிதத்திற்கு குறிப்பிட்ட சால்ட் ரெவின்யு அஸிஸ்டெண்ட் இன்ஸ்பெக்டர் வேலைக்கும், பிரிவென்டிங் ஆபீஸர் வேலைக்கும் தவறாது மனுச் செய்க. சிபார்சு விஷயமாக எழுதியிருப்பது சம்பிரதாயமே. சிலர் மூலம் நானும் விசாரிக்கிறேன் அவ்வேலைகட்கு மனுச் செய்யும் விவரங்களை முழுதும் படித்துப் பார்த்தாயா?. வயது சர்டிபிகேட் அதற்கு வேண்டு வதில்லையா? சென்ற பரிட்சையில் இங்கே B.sc.இ யில் தேறின சக்கரபாணிக்கு வயது சர்டிபிகேட் இரண்டு சம்பந்தன் வாங்கியநுப்புகின்றான். சக்கரபாணி அவ்விருவேலைக்கும் மனுச் செய்வான் போலும். அவன் தமிழிலும் பிஸிக்சிலும் முதல்வகுப்பும், கெமிஸ்டிரியில் 2வது வகுப்பும் ஆகத்தேறியுள்ளான். உயரம் மார்பு அகலம் என்பனவும் பொருந்தியிருக்கக் கூடும். உனது மனுக்களில் பிற்பட்டோர் வகுப்பு என்பதையும், சில விளையாட்டுகளில் மெடல் பெற்றிருப்பதையும் குறிப்பிட வேண்டும். மதுரை தமிழ்சங்கம் சர்டிபிகேட்டும் குறிப்பிடலாம். இரண்டு நாளைக்குள் மனுக்களை அநுப்புக. வயது பற்றிய சர்டிபிகேட்டுகள் வேண்டுமாயின் அதற்கு மனு எழுதி உடனே எனக்கு அநுப்புக. அவ்வேலைகளை ஏதாவது ஒன்று நினக்குக் கிடைக்குமென நம்புகிறேன். ஆகஸ்டு முதலில் பணம் அநுப்புவேன், நானே வந்தாலும் வருவேன். பாரதி எழுதிய கடிதம் ஒன்று இதனுடன் இருக்கிறது. இனி உனக்குக் கடிதம் எழுத வேண்டிய விலாசத்தைத் தெளிவாய்த் தெரிவிக்க. இராமையா பண்டிதர் பயிற்சியிற் சேர்ந்துளான். அன்பன், ந.மு. வேங்கடசாமி திரு.க. தியாகராஜபிள்ளை இன்றும் உன்னைச் சந்திக்க இல்லை என்று எழுதியுள்ளார். திரு அமிர்த கணேச முதலியாரும் செக்ரட்டரியேட்டில் இருப்பார். அக்கவுண்டண்ட் ஜெனரல் ஆபீஸில் ஏதாவது காலியிருப்பது தெரிந்தால் திரு T சிவராம சேதுபிள்ளையவர்களைக் கொண்டும் சிபார்சு செய்து பார்க்கலாம். பாப்பா, குழந்தைகள், யாவரும் நலமே. அன்புள்ள ந.முவே  ௳ அண்ணாமலை நகர் 17-7-38 அன்புள்ள குழந்தை நடராஜனுக்கு இறைவனருளால் எல்லா நலன்களும் உண்டாக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. நேற்று நின் கடிதம் கிடைத்தபின் சர்டிபிகேட்டு கள் வாங்கி நேற்றே அநுப்பியுள்ளேன். ரிஸிஸ்தர் செய்வதற்கு நேரமாகி விட்டமையாலும் செய்யினும் இன்று நினக்குக் கிடைக்காதாகையாலும். சாதாரணத் தபாலில் தவறிவிடாமைப் பொருட்டுப் பழனி விலாசத்திற்கே நின் பெயருக்கு அநுப்பி, உன்னிடம் உடனே சேர்ப்பிக்கும்படி மாப்பிள்ளை ஏகாம்பரத்திற்குக் கார்டு ஒன்றும் எழுதினேன். இன்று உன்னிடம் சேர்ந்திருக்குமென நம்புகிறேன். புரோவிஷனல் சர்டிபிகேட் 2, வயது சர்டிபிகேட்2, மைகிரேஷன் சர்டிபிகேட் 1 ஆக ஐந்தும். திரு. சிவசங்கர நாராயணபிள்ளை சர்டிபிகேட் ஒன்றும், திரு S. ராசேந்திர ராவ் சர்டிபி கேட் ஒன்றும் அநுப்பியுள்ளேன். திரு.C.S ஸ்ரீநிவாசாச்சாரியார் சென்னை விலாசத்தையும் குறித்து வைத்திருந்தேன். ஆசிரியர்களிடம் வாங்கிய Conduct சர்டிபிகேட்டுகள் எல்லாவற்றிற்கும், விளையாட்டுக் களில் வென்றமைக்கு வாங்கிய சர்டிபிகேட்டுகளுக்கும், சங்கம் சர்டிபிகேட்டுக்கும் இரண்டிரண்டு பிரதிகள் டைப் செய்து. இரண்டு மனுக்களுக்கும் தனித்தனி சேர்ப்பிக்க. விண்ணப்பங்களில் உனக்குப் பயிற்சியுடைய சைக்கிள், டெனிகாய்டு முதலிய எல்லாவற்றையும் குறிப்பிடுக. Dr. S.S. பிள்ளையின் புதிய சர்டிபிகேட்டின் பிரதிகளில் அவர் கையெழுத்தை அடுத்து, பிராகெட்டில் B.A. D.Sc., என்னும் டைட்டிலைக் குறிப்பிடுக. நேற்று திரு. உமா பிள்ளை அவர்கள் உன்னைத் தேடிய பொழுது நீ ரூமில் இல்லையாம். திரு. மு. நடேச முதலியார் தேடிய பொழுதும் இல்லையாம். நாளையே தவறாது மனுக்களை ரிஜிஸ்டர் செய்து அநுப்பி, எனக்குத் தெரிவிக்கவும். நீ அங்கிருப்பது குறித்து அத்தான் இருவர்க்கும் கடிதம் எழுதுக. இங்கிருந்த சர்டிபிகேட் ஒன்றில் இருந்த பிழையை Y.K,G. யைக் கொண்டே திருத்துவித்து, இதனுடன் வைத்து இருக்கிறேன். சைக்கிள், டெனிக்காய்ட்டுகள் பலவும் குறிக்கும் இந்தச் சர்டிபிகேட்டின் பிரதிகளும் மனுவுடன் சேர்க்கற்பாலன. சிதம்பர நாதனுக்கு 2- நாள் காய்ச்சலாக இருந்து இன்று குணமாகிவிட்டது. பாப்பா நலமே. என் உடம்பும் நலமே. உடல் நலம் குன்றாதபடி பால் வாங்கிச் சேர்த்துக் கொள்க. அவசியமான செலவைக் குறைக்க வேண்டாம். அவசியம் இல்லாத செலவை மேற்கொள்ளவும் வேண்டாம். தங்கையனுக்கு வேறு உதவி கிடைப்பது ஒன்றும் புலனாகவில்லை. பஸ், டிராம் செல்லும் நெருக்கடியான ரோடுகளைக் கடக்கும் பொழுது மிகுந்த கவனத்துடன் கடந்து செல்ல வேண்டும். அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி  ௳ அண்ணாமலை நகர் 31-7-38 அன்புள்ள குழந்தை நடராஜனுக்கு இறைவனருளால் நலமுண்டாக. இவண் யாவரும் நலம். நின் இருகடிதங்களும் இன்று வந்தன. உணவிற்குப் பால் கட்டாயம் வாங்கிச் சேர்த்துக் கொள்க. பட்டணத்துத் தாத்தா அவர்கள் தங்கையனுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 50 கொடுப்பதாகத் தெரிவித்து ரூ. 25 அநுப்பியுள்ளார்கள். டிசம்பருக்குப் பின் ரூ. 25 அநுப்புவார்கள். இங்கே பாப்பா 'தாத்தா தாத்தா' என்று அடிக்கடி பேசுகிறது. யாவரும் நலமே. உனது நலத்திற்கும், ஏனை விசேடங்களுக்கும் அடிக்கடி எழுதுக. சர்டிபிகேட் இதனுடன் இருக்கிறது. காபி எடுத்து வைத்துக் கொண்டு அநுப்புக. நாளையே ரிஜிஸ்டர் செய்து அநுப்புவதும் நலம். பழனி விலாசத்தில் உனக்கு வரும் கடிதங்கள் உடனே உன்னிடம் சேர்ப்பிக்குமாறு சொல்லி வைக்க. அன்புள்ள, ந.மு. வே  ௳ அண்ணாமலை நகர் 2-8-38 அன்புள்ள குழந்தை நடராஜனுக்கு இறைவனருளால் நலம் பல்குக. இவண் எல்லோரும் நலமே. நினது. நலத்திற்கு எழுதுக. ஞாயிற்றுக்கிழமை வைஸ் சான்சலர் சர்டிபிகேட் நான் அநுப்பியதைப் பெற்று, சர்வீஸ் கமிஷனுக்கு அநுப்பியிருப்பாயென நம்புகிறேன். அதன் பிரதியொன்றும் இதனுடன் உள்ளது. சர்டிபிகேட்டுகள் எல்லாவற்றிற்கும் சில பிரதிகள் டைப் செய்து வைத்துக் கொள்வது நலம். ஸ்ரீ நிவாசாச்சாரியார் அவர்களும் உனக்குச் சர்டிபிகேட் அநுப்பியிருப்பதாகக் கூறினர். அதற்கும் பிரதியெடுத்துக் கமிஷனுக்கு அநுப்பியிருக்கலாமே? இங்கே பாரதியார் லீவு எடுத்துச் சென்ற பின் பண்டிதமணி ஆக்டிங்காகத் தலைமைப்பதவி வகிக்கிறார். தமிழ்ப் புரொபஸர் வேலைக்கு விளம்பரமும் செய்து விட்டார்கள். ஜூனியர் பண்டிதர் வேலைக்கு அத்தான் மனுப்போடவில்லை. அதற்குக் காரணம் இங்குள்ள நிலைமையை அறிந்து நான் தெரிவித்தமையே. உயர் தகுதியுடைய மனுக்கள் பல வந்துள்ளன. ஆனால் தகுதிக்கும் நிகழ்ச்சிக்கும் சம்பந்தம் இராது. திரு. அமிர்தலிங்க பிள்ளையவர்களும் உடல் நலமின்றிக் கல்லூரி திறந்தது முதல் லீவில் இருப்பதால், செட்டியார் ஹைஸ் கூலில் இருந்த சோமசுந்தரம் பிள்ளை என்பவரை இங்கு ஒரு மாதத்திற்கென நியமித்திருக்கின்றனர். பின்னர் அவரே இங்கு நிலைபெறக்கூடும். நீலகிரியிலிருந்து இப்பொழுது கடிதம் வந்திருக்கும் என நினைக்கிறேன். அங்கே குறிப்பிட்ட உபதலை ஹைஸ்கூல் முயற்சியும் பயன்பெறவில்லையாம். நான் ஆகஸ்டு 10ம் தேதி காலை சென்னை வந்து சேர எண்ணியுள்ளேன். நீ குறிப்பிட்டவற்றை எடுத்து வருவேன். இங்குள்ள கணிதப்புத்தகம் முதலியவற்றில் ஒன்றும் விற்பனை ஆகவில்லை. அவற்றில் எவையேனும் எடுத்து வரலாமெனின் எடுத்து வருவேன். நடுக்காவேரியில் நடு அப்பாவுக்கு இது வரையில் நீ கடிதம் எழுதாதிருப்பின் ஒரு கடிதம் எழுதுக. அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி  ௳ அண்ணாமலை நகர் 16-8-38 அன்புள்ள குழந்தை நடராஜனுக்கு இறைவனருளால் எல்லா நலன்களும் உண்டாக. நான் நேற்றுக் காலை இனிது வந்து சேர்ந்தேன். இவ்விடம் நின் அன்னையும், அக்காளும் பாப்பா முதலாகக் குழந்தைகளும், யானும் நலமே. நின் நலம் குறித்து அடிக்கடி எழுதுக. இன்று, திருச்சி, திருவாளர். P. கோவிந்தராஜ் பிள்ளை யிடம் இருந்து கடிதமொன்று வந்தது. அதில். “Special Class apprentice வேலை நல்லது. மெக்கானிகல் எஞ்சினீயரிங் வேலைக்காகப் பயிற்றப்பட்டு இங்கிலாந்தில் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டியிருக்கும்.” “இப்பொழுது S.I RY கம்பெனியில் மூன்று pupil Candidates வேலைக்காக விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. இது வரையில் ஒன்றும் தீர்மானம் ஆகாமல் இருந்தது. இதுவும் நல்ல உத்தியோகமே. தங்கள் புதல்வருக்கு இதற்கேற்ற படிப்பு இருக்கிறது. தேர்ந்து எடுக்கப்பட்ட பிறகு மூன்று ஆண்டுகள் இவ்விடமே பழகப்பெற்று, பிறகு, Asst. Trappings Supert. வேலையில் அமர்த்தப் பெறுவார்கள். இந்த வேலைக்கு கூடிய விரைவில் மனுச் செய்வது நலம். என்னால் கூடிய உதவிக்குத் தயாராய் இருக்கிறேன்.” என்று எழுதியுள்ளார். ஆதலால், இரண்டாவது குறித்த வேலைக்கு மனுச் செய்வதற்கு உடனே முயற்சி செய்க. நீ எடுத்து வைத்திருக்கும் விளம்பரத்தை நன்கு படித்துப் பார்த்து, விண்ணப்பப்பாரத்திற்கு ரூ. 4 பணங்கட்டி வருவித்து, அதிற் கண்ட விபரப்படி விண்ணப்பம் அநுப்புக. பாரத்திற்கு எழுதும் விலாசமும், விண்ணப்பம் அநுப்பும் விலாசமும் வெவ்வேறாக உள்ளமை கவனிக்கற்பாலது. பாரத்திற்கு எழுதியநுப்பி விட்டு, உன்னிடம் உள்ள சர்டிபிகேட்டுகள் எல்லாவற்றிற்கும் பிரதிகள் டைப் செய்து தயாராக வைத்துக் கொள்க. நீ மனுச் செய்தவுடன் நான் திருச்சி சென்று பார்த்து வருவேன். முன் மனுச் செய்துள்ள சர்க்கார் வேலையில் ஒன்று கிடைப்பினும், ரயில்வே உத்தியோகம் கிடைத்து விடின். முன்னதனை விட்டு விடலாம். சர்க்கார் வேலையின் இயல்பு பிடிக்காமல் இருப்பினும் இருக்கலாம். ரயில்வே வேலை எல்லா வகையிலும் சிறந்ததாகத் தோன்றுகிறது. ஆதலால் நாளையே விண்ணப்பப் பாரத்திற்குப் பணம் அநுப்பிக் கடிதம் எழுதுக. வருகிற விடுமுறையில் நீ இங்கே வருவாய் ஆதலாலும், அங்கிருக்கும் பொழுதும் ஹாஸ்டல் விலாசத்தில் கடிதம் தவறினும் தவறும் ஆதலாலும், தண்டையார்ப் பேட்டை விலாசமே ரயில்வே மனுவிலும் குறிப்பிடுக. உனக்கு வருங்கடிதங்களை உடனுக்குடன் உன்னிடம் சேர்ப்பிக்கும்படி மாமா ஏகாம்பரத்திடம் சொல்லி வைக்கவும். இம்முயற்சியை ஹாஸ்டலில் பகிரங்கப்படுத்த வேண்டாம். கூடுமாயின் குமார ராஜாவை ஒரு முறை நீ போய்ப் பார்த்து வைப்பது நலம், உன் உடல் நலத்தை நன்கு பேணிக் கொண்டு, படிப்பிலும், வேலை முயற்சியிலும் கருத்தைச் செலுத்துக. நலம். அன்புள்ள, ந.மு. வே  ௳ அண்ணாமலை நகர், 20-8-38 அன்புள்ள குழந்தை நடராஜனுக்கு இறைவனருளால் நலமுண்டாக. இவண் யாவரும் நலம். நின் கடிதம் கிடைத்தது. சர்டிபிகேட் இதனுடன் இருக்கிறது. S.S.L.C. சர்டிபிகேட்டுக்கு விண்ணப்பம் அநுப்பின் அதனையும் அநுப்பி வைப்பார்கள் நாளை திங்கட்கிழமையே இராகுகாலம் கழிந்த பின்பு ரெயில்வே வேலைக்கு மனு அநுப்புக. அக்னாலெட்ஜ்மெண்ட் ரிஜிஸ்டரில் அநுப்புக. காரெக்டர் சர்டிபிகேட் இரண்டு கேட்டு இருந்தாலும் அதிகம் அநுப்புவது குற்றமில்லை. ஆதலால் வைஸ்சான்சலர் சர்டிபிகேட்டுடன். டாக்டர் நாயுடு சர்டிபிகேட்டும், ராமச்சந்திர ராவ் சர்டிபிகேட்டும் அநுப்புக. காரெக்டர் & ஸ்போர்ட்ஸ்மேன் என்ற அயிட்டத்தின் கீழ் டாக்டர் ராவ் சர்டிபிகேட்டையும், டாக்டர்S.S பிள்ளை சர்டிபிகேட்டையும் அநுப்பினும் அநுப்பலாம். விளையாட்டுகளில் பெற்ற மெடல்களைக் குறிப்பிட்டு, மேற்படி சர்டிபிகேட்டுகள் எல்லாவற்றுக்கும் நகல் அநுப்புக. ‘பர்மனெண்ட் அட்ரஸ் என்பதில், C/o N.M.V. நாட்டார், லெக்சரர், அண்ணாமலை நகர்’ என எனது முழு விலாசத்தையும் எழுதுவதுடன், அதில் (வெகேஷனல் அட்ரஸ்: நடுக் காவேரி, தஞ்சாவூர் தாலுக்கா, தஞ்சாவூர் Dt.,) என எழுதவும். உனது தற்கால விலாசம்: பழனி விலாசம் தண்டையார்ப்பேட்டை எனவும் குறிப்பிடுக. தங்கையன் வெஸ்ட் பிளாக்கில் 38 நீ ரூமில் இருக்கிறான். நான் நாளைச் செவ்வாய்க்கிழமை பாகனேரியில் ஓர் சொற்பொழிவு செய்தற் பொருட்டுப் புறப்படுவேன். 21-8-38 ஞாயிறு இரவு வந்து சேர்வேன். திருவள்ளூரில் அத்தானுக்கு வயிற்று நோய் தணியாமையால் டாக்டர் ஊசி போட்டதாகவும் எழுதியிருந்தது. குணமாகாவிடில் உடன் பழனி விலாசத்திற்கு வந்து வைத்தியம் செய்து கொள்ளுமாறு எழுதியுள்ளேன். இங்கு பாப்பா முதலிய யாவரும் நலமே. உனது நலத்திற்கு எழுதுக. கான்வொகேஷனுக்கு நேரில் வந்து பட்டம் பெற்றுக் கொள்ள அக்டோபர் மீ 15 உ க்குள் அப்ளிகேஷன் அநுப்ப வேண்டுமென்று இன்று நோட்டீஸ் வெளியிடப் போகிறார்க.ள் அன்புள்ள, ந.மு. வே  ௳ 25உ முடிய பாகனேரியில் இருப்பேன். விலாசம் : C/o S.O.SP உடையப்பாஅவர்கள், அண்ணாமலை நகர் பாகனேரி, ராமநாதபுரம் Dt., 1-9-38 அன்புள்ள குழந்தை நடராஜனுக்கு இறைவனருளால் நலம் உண்டாக. இங்கேயானும் பாப்பாவும், எல்லோரும் நலமே நினது நலத்தை அடிக்கடி அறிவிக்க. நினது கடிதம் இன்று கிடைத்தது. பாகனேரியிலும் ஒன்று கிடைத்தது. நான் பாகனேரியில் ஆகஸ்டு 24உயும், சிவகங்கையில் 26உ யும் சொற்பொழிவுகள் செய்துவிட்டு 27உ இரவு திருச்சி வந்து, 28உ இரவு இங்கு வந்து சேர்ந்தேன். திருச்சியில் திரு. P. கோவிந்தராஜ் பிள்ளையைப் பார்த்தேன். அவர் அவ்வேலையில் தமக்கு நேரே சம்பந்தம் இல்லையாயினும் சம்பந்தமுள்ளவர்களிடம் சொல்லி முயற்சி செய்வதாகக் கூறினார். மனுக்களை யார் யாரிடம் ஒப்படைக் கிறார்கள் என்று இன்னும் தெரியவில்லை என்றும் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு (ஐரோப்பியர் போலும்) அவரிடமே செலக்ஷனுக்கு அநுப்பினால் அவரிடம் சொல்வது சற்று அருமை என்றும், எனினும் தாம் சொல்லிப் பார்க்கலாம் என்றும் தெரிவித்தார். கமிட்டியில் அவரும் இருக்க நேர்ந்தால் மிகவும் நலமாயிருக்கும். இல்லாவிடினும், அவர் செல்வாக்குடையர் ஆகலானும், நம் விஷயத்தில் உண்மையாக முயல்வர் ஆதலானும் பயன் உண்டாகலாம் என எதிர்பார்ப்புக்கு இடனுண்டு. அது மிகவும் சிறந்த வேலையே. கடவுள் திருவுள்ளப்படி நடக்கும். லயோலா காலேஜில் புரொபஸராக இருக்கும் father லீ என்பவர் வார்த்தைக்கு ரெயில்வே ஏஜண்டு மிக்க மதிப்பு கொடுப்பார் என்று மு. நடேச முதலியார் கூறினார். P. தியாகராஜ பிள்ளைக்கு அவரைத் தெரியக்கூடும். ஆனால் லீ என்பவர் சிபார்சு செய்ய உடன்பாடுவாரோ என்பது ஐயமே. நான் வேறு ஏதாவது முயற்சி செய்ய வேண்டுமோ என்று கோவிந்தராஜப் பிள்ளையைக் கேட்ட பொழுது வேண்டியதில்லை என்று சொன்னார். உனது கடிதத்தில் ‘டிப்டி’ என்பதற்குப் பதிலாய் டிஸ்ட்டிரிக்கு என்று தவறாக எழுதியுள்ளாய். டிப்டி ஆயினும் சிறந்த வேலையே. அங்குள்ளவர்களோடு ஆலோசித்து அதற்கு மனுப் போடலாம் என்றால் இம்மாதம் ஏழெட்டுத் தேதிகளுக்கு மேல் போட்டு வைக்கவும். கண்பார்வை பற்றி அதில் தெரிவித் திருப்பதை முதலிலே சோதித்துக் கொள்ளவும். அதற்கு மனுப்போடு வதென்றால் டாக்டர் நரசிம்ம ஐயரிடம் சர்டிபிகேட் வாங்கிக் கொள்ளலாம் என நினைக்கிறேன். நீ தெரிவித்தபடி இன்ஸ்பெக்டர் குருசுவாமி பிள்ளையவர்களிடம் சிபார்சு கடிதமோ சர்டிபிகேட்டோ பெற்று அநுப்பலாம். Mendaco உண்டு வருவதில் எனக்கு நோயின் தொந்தரை இல்லாதிருப்பதுடன். உடம்பு தேறியும் வருகிறது. வேலை மிகுதியாலேயே உனக்குக் கடிதமெழுதத் தாமதித்தது. லீவு விட்டவுடனோ, ஆசிரியர் அநுமதித்தவுடனோ இங்கு வந்து சேர்க. வரும்பொழுது கழகத்தில் இப்பொழுது அச்சிட்ட கலித்தொகை உரை 3 - புத்தகம் வாங்கிக் கொண்டு ‘மென்டாகோ’ வும் முன் வாங்கிய இடத்தில் 24 - நாள் டப்பி (ரூ. 5-12.) ஒன்று வாங்கிக் கொண்டு வர வேண்டும். கடிகாரம் பழுதுபார்த்து வாங்கி வைத்திருப்பாயென நினைக்கிறேன். அதனையும் எடுத்து வரவும். நாளைச் சனி அல்லது திங்கட்கிழமை பணம் இன்ஷியூர் அநுப்புவேன். டிப்டி சூப்பிரண்டெண்ட் வேலைக்கு மனுச் செய்தற்குள்ள விதிகளை எல்லாம் நன்கு கவனித்துக் கொண்டு மனுப் போடவும், அதற்குள் கமிஷனிலிருந்து ஏதேனும் தகவல் கிடைப்பினும் தெரிவிக்க. நீ வரக்கூடிய காலத்தையும் முன்னர்த் தெரிவிக்கவும், பாரதியின் செய்தியும் தெரிவிக்க. அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி கடிதங்களை வெளியில் போட்டு வைக்க வேண்டாம்  ௳ அண்ணாமலை நகர் 3-9-38 அன்புள்ள குழந்தை நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் உண்டாக. இவண் யாவரும் நலம். உனது நலம் தெரிவிக்க இரண்டு நாளின் முன் எழுதிய கடிதம் கிடைத்திருக்குமென நம்புகிறேன். ரூபாய் 75 அநுப்பியுள்ளேன். இன்னும் ஐந்தாறு நாட்களில் டிப்டி சூப்பிரெண்டெண்ட் வேலைக்கு மனுச் செய்து வைக்க, நமது முயற்சியைக் குறைவின்றிச் செய்து வைத்தால் நடக்கிற படி நடக்கட்டும். ரிட்டையர்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழுத்த மாகச் சிபாரிசு செய்யின் நலமாகும். நீ இங்கு வருவதற்குள் செட்டிநாடு குமாரராஜாவை ஒரு முறை போய்ப் பார்த்து வைக்க. அவரிடம் நீ வக்கீலுக்குப் படிப்பதும், சர்க்கார் வேலைகட்கும், ரெயில்வே வேலைக்கும் மனுச் செய்திருப்பதுமாகிய விபரங்களைச் சாதாரணமாகத் தெரிவித்து வருக. முன் கடிதத்தில் தெரிவித்தபடி Mendaco 24 - நாள் மருந்து வாங்கிக் கொண்டும், கழகத்தில் கலித்தொகை உரை 3 பிரதி வாங்கிக் கொண்டும் வருக. கழகத்திற்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை. நான் கழகத்திற்கு எழுதுகிறேன். நாடிமுத்துப் பிள்ளை சிற்றப்பாவிடத்தில் மிகுந்த பகைமை கொண்டு அடாத காரியங்கள் செய்வதாகத் தெரிகிறது. எல்லாம் காலத்தின் நிலைமையே. பழனி விலாசத்தில் யாவரும் நலமென நம்புகிறேன். அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி  ௳ அண்ணாமலை நகர் 21-10-38 அன்புள்ள குழந்தை நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் உண்டாக. இங்கு யாவரும் நலம். அவண் நலத்திற்கு அடிக்கடி எழுதுக. நினது கடிதம் கிடைத்தது. உனக்கு வேண்டிய உடைகளை வாங்கிக் கொள்க. இன்றியமையாத புத்தகங்களும் வாங்கிக் கொள்ள வேண்டியதே. அவற்றிற்கு வேண்டும் பணத்தை மாமாவிடம் வாங்கிக் கொண்டால் நீ வந்து போகும் பொழுது கொண்டு போய்க் கொடுத்து விடலாம். அத்தான் நேற்று இங்கு வந்திருக்கிறது. 25-10-38 செவ்வாய்க்கிழமை இரவு 7 - மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு அத்தானும் அக்காளும் தேவகோட்டைக்குப் போவார்கள் பாப்பாவையும் சம்பந்தனையும் அழைத்துக் கொண்டு போவார்கள். படுகையி லிருந்து அத்தையும் பூதலூர் வந்து உடன் செல்வார்கள். நிற்க சிறிய உத்யோகம் எதனையேனும் ஏற்றுக் கொண்டால் மேனிலைக்கு வருதல் எளிதன்று, பின்பு சங்கடப்பட வேண்டியிருக்கும். ஆதலால் தகுந்த வேலை ஏதேனும் கிடைப்பினன்றி, வேலையைப் பற்றி இப்பொழுது நினைக்க வேண்டாம். மேலும், சட்டப்படிப்பின் பொருட்டு ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு இப்போது செலவழித்தாகிவிட்டது. மேற்கொண்டு செலவு செய்வது பற்றியும் பின்பு வரும் படி வருமா என்பது பற்றியும் நீ ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை. செவ்வையாய்ப் படித்து வெற்றி பெற வேண்டியதே உனது கடமை. நீ B.L. பட்டமும் பெற்றுவிடின் அது நமக்கும், நமது சமூகத்திற்கும் சிறப்பை அளிப்பதாகும். சர்க்கார் வேலைக்கும் இது உதவியாகக் கூடும். எப்படியாயினும் இதனால் தீமையொன்றும் நேராது. நன்மையே உண்டாகும். கழகத்தில் அடியிற்கண்ட புத்தகங்கள் வாங்கி வருக:- 1. தொல் - பொருளதிகாரம் (நச்சினார்க்கினியமும் பேராசிரியமும்) கனகசபாபதி பிள்ளை பதிப்பு இரண்டு பாகமும் விலை ரூ. 6-00 2. கலித்தொகை உரை கழகப் பதிப்பு - 1. 3. அகநானூறு களிற்றியானை நிரை மாத்திரம் - 1. இவை கையில் வாங்கி வர வேண்டியவை. 1. திருக்குறள் பரிமேலழகர் உரை கழகப் பதிப்பில் ஒரு பிரதி எடுத்து, அதன் முகவேட்டில் presented by T.S Sethurayar என்று எழுதி, திரு. A. சிதம்பரம் பிள்ளையவர்கள், காஷியர், கார்டிட் பாக்டரி, அருவங்காடு, நீலகிரி என்ற விலாசத்திற்கு அவர்களையே அநுப்பச் செய்து, எல்லாவற்றிற்கும் சேர்ந்து Bill வாங்கி வரவும். திருநாவுக்கும், சுந்தரத்திற்கும் செருப்பு வாங்கி வரவும் சுந்தரத்தின் செருப்பைச் சம்பந்தன் எடுத்துச் செல்வன். அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி திருச்சியில் பல ஆண்டுகளின் முன் படித்த ஐயாச்சாமி என்ற ஒருவர் (முதலியார்) 13-10-38 இரவு இங்கு வந்து மிகுந்த அவசரம் ஒன்று காட்டிக் கொஞ்சம் பணம் வாங்கிப் போனார். அன்றிரவே சென்னைக்கு வந்து பணம் அநுப்புவதாகக் கூறிச் சென்றவர் அநுப்பவில்லை. அவர் சரித்திரம் ஹானர்ஸ் படித்தவர். மலைக்கோட்டை வடக்கு வீதி இறக்கத்தில் அவருக்கு வீடு. குமாரராஜாவிடம் சிலவருடம் செக்ரட்ரியாக இருந்தவர். திருச்சியில் என்னிடமும், மற்றைத் தமிழன்பர்களிடமும் நெருங்கிப் பழகியவர். அப்படியிருந்தும் அவர் சொன்னபடி நடக்கவில்லை. சென்னையில் உன்னைப் பார்ப்பதாகக் கூறிவந்தார். உலக இயல்பு அறிந்து நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் குமாரர் இளம் பூரணர் என்பவர் சென்னையில் B.L க்குப் படிப்பதாகக் கூறினர். அவர் அங்கு வந்தாரா என்று இளம் பூரணரை விசாரிக்கவும். ந.மு. வே  ௳ அண்ணாமலை நகர். 18-11-38 அன்புள்ள குழந்தை நடராஜனுக்கு இறைவனருளால் எல்லா நலன்களும் உண்டாகுக. நலம். நலம் தெரிவிக்க. நின் இரு கடிதங்களும் கிடைத்தன. எனக்கு இருமல் மீட்டும் உண்டாய பொழுது மெண்டாகோவை விடாது உண்டும் பயன் ஏற்படவில்லை. பனி சிறிதும் புகாதபடி சாளரங்களை அடைத்தும். மெண்டாகோவும், மிக்சரும் உண்டும் வந்ததில் இருமல் ஒருவாறு தணிந்தது. ஆனால் நீர்க்கோர்வையும் காய்ச்சலும் பின்பு ஏற்பட்டன. புதன் கிழமை பகல் இரவு முழுதும் காய்ச்சலும் தலைவலியுமாக இருந்தது. நேற்று லீவு எடுத்துக் கொண்டு கல்லூரிக்குப் போகவில்லை. இன்று வண்டியில் போய்த் திரும்பினேன். இன்று பெரும்பாலும் குணமாக இருக்கிறது. சிதம்பரநாதனுக்குச் சிறிது இருமல் இருக்கிறது. மற்று யாவரும் நலமே. நீ சென்ற பின், கொழும்பிலிருந்து கடிதம் வந்தது 'துணைக்கு ஒருவரை அழைத்து வருதல் நலமே' என்றும் எழுதி இருந்தார்கள். டிசம்பர் மீ 11உ யே விழா வைத்திருப்பதாகவும் அதற்கு முதல் நாளே வந்து சேர வேண்டும் என்று எழுதியிருந்தார்கள். யானும் பின்னர் இரண்டு கடிதம் எழுதியதோடு, அங்கே செல்வதற்குரிய ஏற்பாடுகளைச் சிந்திந்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் உடல் நலம் குன்றியவுடன் போதற்குத் துணிவு உண்டாகவில்லை. நெருக்கடி யான நிலையில் தடையேற்படின் என் செய்வதென்று கருதி. நேற்றுத் தான் 'வரவியலாது' என்று கடிதம் எழுதிவிட்டேன். தேவகோட்டையிலிருந்து கடிதம் வந்து கொண்டிருக்கிறது. பாப்பா நலமுடன் பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருக்கிறதாம். சம்பந்தனுக்கு ஐந்தாறு நாளின் முன் காய்ச்சல் ஏற்பட்டுத் தாடையம்மை கண்டு, பெரும்பாலும் குணமடைந்து இருப்பதாகக் கடிதம் வந்தது. மேலும் செலவுக்குப் பணம் அநுப்பிக் கொண்டிருக்கிறேன். சின்ன அத்தான் செங்கரையூருக்கு வரும் பொழுது இங்கு வருவதாகத் தெரிவித்திருந்தபடி வரவில்லை. எக்காரணத்தாலோ கடிதமும் எழுதவில்லை. சிற்றப்பா நாலைந்து நாளின் முன் எழுதிய பதிலில் 26-10-38 லிருந்து வேலை ஒப்புக் கொண்டுவிட்டதாகவும், ஆனால் வேலையில்லாதிருந்த இரு மாதங்களுக்கும் சம்பளப் பிடித்தம் செய்திருப்பதாகவும் எழுதியிருந்தது. பிரசிடெண்டு வஞ்சகமாகக் காரியம் செய்திருப்பது தெரிகிறது. மெம்பர் களிடம் தம்மை வந்து பார்க்கவில்லை, என்பதைக் குறையாகச் சொல்லிக் கொண்டு இருந்தவர், சிற்றப்பா நேரில் பார்த்த பொழுது மரியாதையாகவே பேசியிருந்துவிட்டு, உத்தரவில். சிற்றப்பா அவரிடம் சென்று விசாரணையொன்றும் செய்ய வேண்டாம் எனக் கெஞ்சினதாகக் கூறி, குற்றவாளிதான் அவ்வாறு கூறுவார் என முடிவுகட்டி யுள்ளாராம். அடுத்த நாள் பட்டுக்கோட்டையில் ஒழுங்கீனமான முறையில் ஓர் விசாரணையும் நடத்தினாராம். சிற்றப்பா விசாரணையின் ஊழல் முதலியவற்றை அவருக்கு எடுத்துக் காட்டி, அவருக்கு மற்றோர் மனுப் போடுவதாகவும், அதில் ஒன்றும் செய்யாவிடில் டைரக்டருக்கு அப்பீல் போட வேண்டும் என்றும் எழுதியிருக்கிறது. தீமைக்கு விலகிப் போகாமல் எதிர்த்து நிற்பதால் உண்டாகும் துன்பங்கள் இவை. சிற்றப்பா ஜாதகத்தில் பொதுவாகக் கோட்களின் நிலைமை இப்பொழுது நன்றாகவில்லை. சுக்கிர திசையல் சனிபுத்தி நடக்கும் பொழுது சனி 7½ நாட்டுச் சனியாக அதிலும் ஜென்மச் சனியாக இருப்பதே இதற்குக் காரணம். கோசார ரீதியாக மற்றைய கோட்களும் பொருந்தாத இடங்களிலேயே இருக்கின்றன. நான் சிற்றப்பாவுக்கு இரண்டு கடிதத்தில் இவற்றை எடுத்துக் காட்டி, திருக்கோயில்களில் விளக்கிடுதல், அருச்சனை செய்தல் முதலியன செய்ய வேண்டுமென்றும் எழுதியிருந்தேன். கூடிய விரைவில் தீமை நீங்குமென்று நம்புகிறேன். எனினும் பரிகாரங்கள் செய்து கொண்டு, இன்னும் ஜாக்கிரதையாக இருப்பது நலம். இச்செய்தியை மாமா முதலானவர்களுக்குத் தெரிவிக்கலாம். கழகத்தில் திரு சுப்பையா பிள்ளையவர்களுக்கு இதனுடன் ஒரு கடிதம் வைத்திருக்கிறேன். அதில். உன்னிடம் ரூ. 25 கொடுக்கும்படி எழுதியுள்ளேன். கடிதத்தைக் கொடுத்து, பணம் பெற்றுக் கொண்ட செய்தியை உடன் தெரிவிக்கவும். அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி  ௳ N.M. Venkataswami Nattar, Annamalai Nagar, P. o. Lecturer in Tamil, Chidamparam. Annamalai university. 27-11-1938 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு அம்பலவாணன் திருவருளால் அனைத்து நலனும் உண்டாக. இவண் யாவரும் நலன். அவண் நலன் அறிவிக்க. 22-11-38ல் எழுதிய நினது லெட்டர் கிடைத்தது. திரு. சுப்பையாபிள்ளை கணக்கு அநுப்பிக்கடிதமும் எழுதியிருந்தார். நம்மீது அதிகப் பற்றாகவே இருந்தது. கைம்மாற்றாகப் பத்து ரூபாய் கொடுப்பதாக எழுதியிருந்தார். கொடுத்த விபரம் தெரிந்திலது. இம்முறை காய்ச்சலும் என்னைத் துன்புறுத்திவிட்டது. கொழும்பு செல்லுதற்கு எடுக்கவிருந்த லீவு எல்லாம் இதற்காக எடுக்கப்பட்டன. இதற்குமுன் எப்பொழுது பிணி காரணமாக இவ்வளவு லீவு எடுத்ததில்லை. 24ம் தேதி முதல் சிதம்பரம் தீஷிதர் வந்து மருந்து கொடுக்கிறார். அவர் தமிழ் மருந்துவத்தில் பெருந்தேர்ச்சியுடையவரென்று தெரிகிறது. அவரது மருத்துவத்தின் பயனாகவே இன்று இக்கடிதம் எழுதக் கூடிய நிலையை அடைந்திருக்கிறேன். நாளை லீவு எடுக்காமலே கல்லூரி போய் வர எண்ணியுள்ளேன். எனக்குச் சரியானபடி மருந்து செய்து முடிக்க ஒரு மாதச் சம்பளம் செலவாகுமென்று கூறினார். அக்காள் உனக்குக் கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிவித்துளது. திருநாவுக்கரசிடமிருந்து யாதொரு செய்தியும் தெரியவில்லை. உனக்கு ஏதேனும் எழுதியுள்ளாரா? சம்பந்தன் நினக்குக் கடிதம் எழுதினதாகக் கூறினன். கல்லூரியின் கலவரத்தைப் பற்றி எழுதியிருப்பானென்று நினைக்கிறேன். மாணாக்கர்கள் ஓர் விடுதியில் சேர்ந்து வதிவதென்பது உயர்ந்த நோக்கமுடையதாகல் வேண்டும். மொழி, மதம், இனம், இடம் முதலியவற்றால் பலவாறாகப் பிரிக்கப்பட்டிருக்கிற மாணவர்கள் ஓரிடத்தில் ஒருங்கு உறைதலால் ஒருவர் ஒருவரோடு நன்கு அளவளாவவும். ஏனையோரிடமுள்ள உயர்ந்த குணங்களைக் கண்டு மகிழ்ந்து தாமும் அவற்றைக் கைக் கொள்ளவும், ஏனையோரின் அறிவு நுட்பத்தையும் கல்வித் திறத்தையும் கண்டு, தமது செருக்கு அடங்கப் பெற்று அவர் போல் தாமும் சிறப்படைதற்கு, முயற்சி செய்யவும், ஒருவர்க்கொருவர் உதவி செய்து ஒற்றுமையும் அன்பும் உடையவராய் வாழவும் வசதிகள் உண்டு. இவ்வாறாகத் தமது மனத்தைப் பண்படுத்திக் கொண்டு விடுதியில் உறைவார்களானால் அதனால் உண்டாகும் இன்பத்திற்கு நிகராக வேறெதையும் சொல்லவியலாது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மாணவர்கள் ஒருவாறு இத்தகைய இன்பங்களை அநுபவித்து வந்தார்கள். மாணவ வாழ்க்கையானது. தேவலோக வாழ்க்கைபோல் அவர்களுக்குத் தோன்றிற்று. நாளடைவில் மாணவர்களின் இயல்புகள் மாறி வரலாயின. இன்று இப்பல்கலைக்கழகத்து மாணாக்கர்களின் இயல்பினைப் பார்க்கும் பொழுது இது நரக வாழ்க்கையினும் தீதாகத் தோன்றுகிறது. தமது வாழ்நாளின் இன்றியமையாத பாகமும், தம் வாழ்க்கையைச் செம்மையாக நடத்துதற்கு வேண்டிய அறிவு, ஆற்றல், அடக்கம், பொறுமை முதலியவற்றைப் பெற்றுக் கொள்ளுதற்குரியதுமாகிய கட்டிளமைப் பருவத்தைப் பாழாக்குகின்றார்கள். கம்பும் கத்தியும் எடுத்துக் கொண்டு பகலிலும் இரவிலும் கூட்டம் கூட்டமாய்த் திரிவதும், ஒரு பகுதியாரை மற்றொரு பகுதியார் அடித்து விடுவதாகக் கூறி உறுமிக் கொண்டிருப்பதும் எவ்வளவு அழகாய் இருக்கின்றன? இவர்கள் கல்லூரியிற் சேர்ந்தது என்ன பயன் கருதியோ? தம் பெற்றோர்கள் வருந்தித் தேடிய பொருளையும் தொலைத்துத் தறிதலையாய்த் திரியும் இப்பேதைகளின் நிலைமை இரங்கற்குரியதே. சென்னையில் உங்கள் விடுதியில் உறைபவர்கள் பலரும் கலந்து பழகுதற்கும், உரையாடுதற்கும் வாய்ப்பு ஏற்படுவதுண்டோ? இக்காலத்தில், பிறரிடமுள்ள தீமை பற்றாதிருப்பின் அதுவே முதற் பயனாகக் கருதப்பட வேண்டும். பிறரிடம் நன்மை யிருந்து பற்றப்படின் சிறந்த பயனே. நிற்க. சட்டக் கலாசாலை போலும் பெரிய கல்லுரிகளில் ஆசிரியர்களாயிருப்போர் உயர்ந்த கல்வியும், சிறந்த குணங்களும், உலக அநுபவமும் வாய்ந்தவர்களாய் இருப்பார்கள். மற்றும் அவர்கள் பிறப்பினாலும், ஏனோரின் சேர்க்கையாலும், தங்கள் முயற்சியாலும் எவ்வளவோ சிறந்த பண்புகளுக்கு உரியவர்களாதல் கூடும். அவர்களுக்குள்ளே சிற்சில இயல்புகளால் சிற்சிலர் மேம்பட்டிருத்தலுங்கூடும் அவர்கள் கற்பிக்குங்கால் பாடத்திற்குப் புறம்பான பொருள்களைக் கூறினும் அவற்றையும் கருத்துடன் கேட்க வேண்டும். மற்றும், அவர்கள் கூறும் பொருட்களைக் கேட்பதோடமையாமல், அவர்கள் தாம் கூறுவனவற்றை எவ்வாறு ஒழுங்கு செய்து எத்தகைய தோற்றத்துடன் எத்தகைய குரலில் எவ்வளவு ஆர்வத்துடன் கூறுகின்றார்கள் என்பதையும், மற்றும் அவர்கள் பாற் காணப்படும் சிறந்த பண்புகளையும் நுட்பமாக அறிந்து உள்ளத்தே பதிய வைக்க வேண்டும். மற்றும் உயர்ந்த நோக்கங்கள் கொண்டே ஆசிரியர்களிடம் அடுத்தடுத்து நெருங்கிப் பழகுதல் பொருந்தும். மைந்தனே, நின் ஆசிரியர்களுள் அறிவாற்றலும், உயர் குணத்தாலும் உன் உள்ளத்தைக் கவர்ந்திருப்பவர் யார்? அவருடைய இயல்புகள் என்ன? அவருடன் நீ நெருங்கிப் பழகுவதுண்டா? 28-11-38 அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி  ௳ அண்ணாமலை நகர் 12-12-38 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குச் சிவபெருமான், திருவருளால் அனைத்து நலனும் உண்டாக. இவண் யாவரும் நலம். நலம் தெரிவிக்க. பழனி விலாசத்தில் யாவரும் நலமென நம்புகிறேன். எனக்கு நோயின் இன்னல் நீங்கி, மீட்டும் சிறிது உடல் தேறி வருகிறது. சிதம்பரநாதனுக்கு 4-12-38ல் அம்மை குத்திற்று. ஐந்தாறு நாளாகிச் சிறிது காய்ச்சல் இருந்து வருகிறது. நாளை மறுநாள் குணமாகிவிடக் கூடும். அவனது அறிவு நுட்பத்திற்குக் காது கேளாதிருப்பது தான் வருத்தமாய் இருக்கிறது. இங்கே எல்லோருக்கும் பாப்பாவைப் பற்றிய நினைவு மிகுதியாக இருக்கிறது. லீவு விட்டவுடன் எல்லோரும் வந்து சேரும்படி தேவகோட்டைக்கு எழுதியுள்ளேன். அவர்கட்கு எப்பொழுது லீவு என இன்னும் எழுதவில்லை. சின்ன அத்தான் ஒரு கடிதம் எழுதியிருந்தது. நடுக்காவேரியில் நடு அப்பாவுக்கு 2 வாரத்தின் முன் மூன்று நாட்கள் நோயின் தொந்தரை மிகவும் கடுமையாக இருந்து, பின் குணமாயிற்றாம். சிற்றப்பா ஒரு மாதத்தின் முன் ஒரு கடிதம் எழுதினது தான். பின்பு ஒன்றும் தெரியவில்லை. அங்கே ஏதேனும் தெரியுமா? நீ பரீட்சையில் நன்கு எழுதி இருப்பாயென நினைக்கிறேன். லீவு விட்டவுடன் வந்து சேரவும். குளிர் காலமா யிருத்தலால் அங்கே காலை 7.30 மணிக்குப் புறப்படும் செங்கோட்டைப் பாசெஞ்சரில் வருவது நலம். வழியில் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு வரலாம். விழுப்புரத்தில் 20 நிமிடம் நிற்பதால் பகல் உணவு அங்கே கொள்ளலாம். உணவு கொண்டு வந்து வண்டியில் உண்ணினும் உண்ணலாம். வரும் பொழுது சிதம்பரநாதனுக்கு ஒரு ஜோடி செருப்பு வாங்கி வருக. மிகச் சிறியதாயில்லாமல் இருக்கலாம். காளிப்ளவர் முதலியன சிறிது வாங்கி வரலாம். நீ வரும் நாளைக்கு குறிப்பிட்டு எழுதுக. அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி  ௳ அண்ணாமலை நகர். 22-1-39. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குச் சிவபிரான் திருவருளால் அனைத்து நலனும் உண்டாக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. நீ சிற்றப்பா மூலம் அநுப்பிய கடிதமும். பின்னர் எழுதிய கடிதமும் பார்த்தேன். யூனிவர்சிட்டி நடைபெற்று வருகிறது. கிளர்ச்சிக்காரர்கள் பின்னரும் இடையூறு விளைவிக்க முயன்று கொண்டு தான் இருந்தனர். கலாசாலையர் பெரு முயற்சியெடுத்து அதனைச் சமாளிக்கலாயினர். ஆனால் இந்நிகழ்ச்சிகள் ஓர் நாடகத்திற்கு நகைச்சுவைப் பகுதியாய் அமையக் கூடியவை. விபரமெல்லாம் பின்னர் அறிந்து கொள்வாய். மற்றும் மாணவர் பதின்மருக்கு மேல் நீக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர். குழப்பம் முழுதும் விரைவில் அடங்கிவிடக் கூடுமென நினைக்கிறேன். மகாகனம் சாஸ்திரிகள் உடல் நலமின்மையால் மருத்துவத்தின் பொருட்டுச் சென்னை சென்றுளார். T.R.V சாஸ்திரிகள் பதில். V.C ஆக இருக்கின்றனர். உனக்கு நீண்ட கடிதம் எழுத எண்ணியபடி எழுதக் கூட இல்லை. என் உடல் நலமின்மையே காரணம். நீ தேர்வுக்குரிய பாடங்களை ஊக்கத்துடன் படிக்க வேண்டிய காலமாதலை உன்னியும் இப்பொழுது எழுதாது நிறுத்தி விட்டேன். தமிழ் நூற்களிலுள்ள உயரிய கருத்துகளைக் கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்துவதே என் உட்கோள். பின்பு அது செய்யப் பெறுவதாக. பழனி மருந்தினை 3 நாளும், 4 நாளும் ஆக இருமுறை உண்டேன். அதனால் நோயின் துன்பம் மிகுதியாயிற்று. ஐந்தாறு நாளாக மருந்தை நிறுத்திவிட்டேன். இன்று மிக்சர் மருந்துகள் வாங்கி வரச் செய்து கலந்து உண்டேன். இனி, உடல் நலமுறும் என நம்புகிறேன். குழந்தைகளும் யாவரும் நலமே. அவகாசம் ஏற்பட்ட பொழுது நினது ஜாதகத்தை ஆங்கில முறையில் பார்க்கச் செய்வேன். A.S ஞானசம்பந்தனுக்கும் நாலைந்து நாளாகச் சிறிது காய்ச்சல். சோழகம்பட்டி அண்ணனுக்கு ஓர் ஆண்குழந்தை இருந்தது. 10 நாளின் முன் மரித்து விட்டது. உன் அம்மாள் வருகிற புதன்கிழமை சோழகன் பட்டி போய் வரக்கூடும். அன்புள்ள, ந.மு. வே  ௳ அண்ணாமலை நகர். 6-2-39 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் எல்லா நலன்களும் உண்டாக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. நினது கடிதம் கிடைத்தது. நான் அநுப்பிய ரூ. 65ம் இன்று பெற்றிருப்பாயென நினைக்கிறேன். உனக்கு வயிறு உப்பிக் கொண்டு நலமில்லாதிருந்தது என்பதை அறிந்து வருந்து கிறோம். ஓவல் டின் வாங்கிச் சேர்த்துக் கொள்க. உடம்பின் நலத்திற்கு வேண்டியதைச் செய்வதில் சிக்கனமொன்றும் செய்யாது பிறவற்றில் கூடியவரை சிக்கனமாகவிருப்பது. நலமாகும். சிதம்பரம் தாலுக்காவில் சிற்சில கிராமங்களில் காலரா இருக்கிறதாம். சிதம்பரம் டவுனிலும் சிறுபான்மையுளது. இங்கே ஒன்றும் இல்லை. நான் மீட்டும் மெண்டாகோவும், மிக்சரும் உண்டு வருகிறேன். தொந்தரை சிறிது குறைந்திருக்கிறது. இம்மருந்து தீர்ந்தவுடன் TOGO என்பதைப் பார்க்கலாம். அதனை உண்டு பார்த்தவர்கள் இருப்பினும் அதன் குணத்தை விசாரித்துத் தெரிக. Vi - Tabs என்ற மருந்தின் விலையை விசாரித்துத் தெரிவிக்க. சின்னாளின் முன் டாக்டர் நரசிம்மையர் தம்பி இங்கு வந்திருந்தார். சிதம்பரநாதனுக்கு அவர் குறித்துக் கொடுத்த மருந்தினை இங்கே ஆஸ்பிடலில் வாங்கித் தருகிறோம். அதனை 6 மாதம் வரை கொடுக்கச் சொன்னார். ஆஸ்பிடலில் தொடர்ந்து வாங்குவது சிரமமாயிருக்குமாதலால் அதனை வாங்கி வைத்துக் கொண்டு கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கு அவர் கொடுத்த சீட்டு ஒன்றையும் இதனுடன் வைத்துளேன். இதன் விலையையும் விசாரித்துத் தெரிவிப்பதுடன் இவற்றைத் தபாலில் பத்திரமாக அநுப்ப முடியுமா என்பதையும் தெரி விக்க. பாப்பா நன்கு விளையாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறது. வீட்டில் மின்சார விளக்குப் போட்டமையால் பாப்பாவும் சிதம்பரமும் இரவில் மிகுதியாக விளையாடு கிறார்கள். நீ சில்லரைக் கணக்குகளை எழுதுவதிலெல்லாம் நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை. படிப்பில் ஊக்கத்தைச் செலுத்துக நலம் தெரிவிக்க. அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி  ௳ அண்ணாமலை நகர். 16-2-39 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குச் சிவபெருமான் திருவருளால் எல்லா நலன்களும் உண்டாக. இவண் யாவரும் நலம். நினது நலத்தை அடிக்கடி தெரிவிக்க. நின் கடிதங்கள் கிடைத்தன. மெண்டாகோவும், மிக்சரும் உண்டு வருவதில் என் உடம்பு நலனுற்று வருகிறது. இதனை இன்னும் பார்த்துக் கொண்டு, வேண்டுமாயின் பின்னர் வேறு மருந்து வாங்கிக் கொள்ளலாம். சிதம்பரநாதனுக்கும் ஆஸ்பிடலில் வாங்கிக் கொடுக்கிறது. இப்பொழுது அங்கு மருந்து ஒன்றும் வாங்க வேண்டியதில்லை. ஐந்தாறு நாளின் முன் பாரதி தன் தம்பியை அழைத்துக் கொண்டு இங்கு வந்ததாகச் சம்பந்தன் கூறினான். என்னைப் பார்க்கவில்லை. ஊருக்கு போயிருப்பன் என்று நினைக்கிறேன். இங்கே 3 நாட்களாக மீட்டும் 'ஸ்ட்ரைக்' நடக்கிறது. வகுப்புகளும் அங்கும் இங்குமாக ஒருவாறு நடந்து கொண்டிருக்கின்றன. நாளை முதல் 3 நாள் லீவும் கழிந்தால் அதன் பின் நடப்பது தெரியும். இப்பொழுது போலீசை அழைக்காமலும், பலவந்தம் ஒன்றும் செய்யாமலும் காலேஜ் அதிகாரிகள் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தக் குழப்பம் தீர்ந்த பின்பு அத்தான் படம் என்லார்ஜ்மெண்டு அதிகச் செலவில்லாமல் இங்கேயே எடுக்கலாம் என்று சம்பந்தன் கூறினான். அப்படி இங்கு எடுக்க வசதியில்லாவிடின் பின்பு உனக்கு 'நெகட்டிவை' அநுப்புகிறேன். இவ்விபரத்தை அத்தானுக்குத் தெரிவித்து வைக்க. தற்சமயம் போட்டோ சம்பந்தமாக நேரத்தையோ காசையோ நீ சிறிதும் செலவழிக்கலாகாது. மேற்கொண்ட காரியத்தில் கருத்தாயிருக்க வேண்டும். கொழும்பு விவேகானந்தர் சங்கத்தில் மார்ச்சு மாதம் 11, 12 தேதிகளிலாவது, 18,19 தேதிகளிலாவது விவேகானந்தர் திருநாள் நடத்த வேண்டும் என்றும், அதற்கு நான் கட்டாயம் வர வேண்டும் என்றும் மிகவும் வற்புறுத்திக் கடிதம் வந்தது. நான் மே மாதத்தில் சாவதானமாக அப்பக்கம் வர எண்ணியிருந்தேன் என்றும், மார்ச்சு மாதத்தில் 3 நாளுக்கு மேல் நான் லீவு எடுக்க இயலாதாகையால் அங்கே வந்து சனி ஞாயிறுகளில் கூட்டம் நடத்த இயலாதென்றும், இம்முறை கட்டாயமாக நான் வரவே வேண்டுமென விரும்பினால் மார்ச்சு மாதம் 19,20 ம் தேதிகளில் விழாவை வைத்துக் கொள்ளும் படியும் எழுதியுள்ளேன். நான் வரவே வேண்டுமென அவர்கள் எழுதினால் மார்ச்சு மாதம் 20,21 22 ஆகிய 3 நாளும் லீவு எடுத்துக் கொண்டு, வெள்ளியிரவு புறப்பட்டுச் சென்று, செவ்வாயிரவு அங்கிருந்து புறப்பட்டு வரலாம் என எண்ணியுள்ளேன். அப்படியானால் நீயும் வருதல் இயலுமா? நின் படிப்பிற்கு இடையூறில்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் பதில் வந்த பின்னும் எழுதுகிறேன். அக்காள் பரீஷைக்குக் கடுமையாகப் படித்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் யாவரும் நலமே. அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி நேற்று எழுதியவுடன் இஃது அநுப்ப முடியவில்லை. கொளும்பிலிருந்து இன்று கடிதம் வந்தது. 19, 20-3-1939 ஞாயிறு திங்களிலேயே விழா வைத்துக் கொள்வதாகவும், நான் கட்டாயம் வரவேண்டும் என்றும் எழுதியுள்ளார்கள். உன் செய்தியைத் தெரிவிக்க. அன்புள்ள, ந.மு. வே  ௳ அண்ணாமலை நகர் 1-3-1939 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் எல்லா நலன்களும் உண்டாக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. ஆங்கில சோதிட முறையில் உனது ஜாதகத்தைப் பாாத்து இவ்வருட பலன் சிறப்பாகவே இருக்கிறது. 3வது பாராவில் குறிக்கப்பெற்றதே இவ்வாண்டு முழுதுக்கும் உரியதாகும். இப்பலன் முன் ஆண்டு அடுத்த ஆண்டுகளிலும் சம்பந்தப்படும். மற்றைய பாராக்களில் குறிக்கப் பெற்றவை மும்மூன்று மாதங்களுக்கு உரியனவாகும். வருகிற ஜூலை மாதம் மிகவும் சிறந்ததாகத் தோன்றுகிறது. நீ சம்பந்தனுக்கு எழுதிய கடிதத்தில், வருகிற வெள்ளிக்கிழமை இரவு அங்கிருந்து புறப்பட்டு வருகிற நரசிம்மன் என்பவரிடம் லைப்ரேரிப் புத்தகங்களை அநுப்புவதாகவும். சனிக்கிழமை 4.30 A.M. ல் ஸ்டேஷனுக்கு வந்து வாங்கிக் கொள்ளும் படியும் எழுதியிருந்தாயாம். சம்பந்தன் 4 நாள் லீவு எடுத்துக் கொண்டு நேற்று இரவே ஊருக்குப் போய் விட்டான். ஸ்டேஷனுக்குத் தங்கையனை அநுப்புகிறேன். வருகிறவர் தங்கையன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுமாறு சொல்லியநுப்புக. சம்பந்தன் ஊருக்குப் போயினமையாலும், கோவிந்தராஜனும் ஊருக்குப் போயிருத்தலாலும் அத்தானுடைய போட்டோ நெகெட்டிவை உனக்கே அநுப்பலாமென்று பெட்டிகளைப் பார்த்ததில் அவை அகப்படவில்லை. நீ பூட்டி வைத்திருக்கும் சாதிக்காய்ப் பெட்டியை வேறு சாவி போட்டுத் திறந்து பார்த்தோம், எதிலும் இல்லை. நீ எங்கே வைத்தாயோ தெரியவில்லை. உன் கணக்குப் புத்தகங்களையெல்லாம் சாதிக்காய்ப் பெட்டியில் வைத்திருப்பாயென்று நினைத்து இருந்தேன். அதில் ஒன்றும் காணாமையால் தங்கையனைக் கேட்டதற்கு இரண்டு மூன்று புத்தகம் நீ விற்றதாகவும்,€ மற்றவற்றைப் பற்றி ஒன்றும் தெரியா தென்றும் கூறினான். மற்றப் புத்தகங்களை அங்கே எடுத்துச் சென்றாயா? இதுவரை எத்தனை புத்தகம் எவ்வளவு விலைக்கு விற்றிருக்கிறாய்? இங்கே கல்வி மந்திரி நேற்று வந்து பிரசங்கித்தார். யூனிவர் சிட்டியின் குழப்ப நிலைமை இன்னும் முடிந்துவிட்டதாக இல்லை. சின்னாளில் தெரியும். கொளும்புக்குப் போவதற்கு அவர்கள் அங்கிருந்து பாஸ் போர்ட் வாங்கியநுப்ப வேண்டுமாதலால் அதில் பெயர் குறிப்பிடுதற்கு நாம் முன்பே வருகிறவர்கள் பெயரைக் குறித்து எழுதிவிட வேண்டும். ஆதலால் 10-3-39க்கு முன்பே நீ வருவதைக் குறித்து நிச்சயமாகத் தெரிவிக்க வேண்டும். தங்கையன் பரீக்ஷைக்குப் படிப்பதை விடுத்து வர விரும்பா னென்று நினைக்கிறேன். சம்பந்தனிடம் சொல்லினேன். நீ வராவிடில் அவன் வர விரும்புவதாகக் குறிப்பால் அறிந்தேன். ஆனால் அவன் இவ்வாரத்தில் 4 நாள் லீவு எடுத்துள்ளான். பின்பு 3 நாள் லீவு பெறுவதில் சிறித சங்கடம் இருக்கக் கூடும். உனக்குக் கொளும்பு பார்க்க விருப்பம் இருத்தலால், உன் படிப்பிற்குத் தடையில்லாவிடில் நீயே வருவது நலமென நினைக்கிறேன். 17-3-39 வெள்ளிக்கிழiம காலையே நீ இங்கு வந்துவிடின் வெள்ளியிரவு இங்கிருந்து புறப்படலாம். சுமார் ஒரு மாதத்திற்கு முன் ஒரு தேதியைக் குறிப்பிட்டு வாக்சினேஷன் சர்டிபிகேட் ஒன்று வாங்கிக் கொள்ள வேண்டும். செலவு விபரம் தெரிவித்து இம்மாதம் எவ்வளவு பணம் அநுப்ப வேண்டுமென்று தெரிவிக்க. சோதிடக் குறிப்புகளைப் படித்துப் பார்த்துவிட்டுப் பத்திரமாய் வைத்திருக்கவும். பாப்பா நடக்கிறது. உரத்த குரலில் அதட்டிப் பேசுகிறது. புத்தகத்தில் விருப்பம் மிகுதி. அக்காள் கடுமையாகப் படித்துக் கொண்டிருக்கிறது. யாவரும் நலமே. உனது நலத்தை நன்கு பேணிக் கொள்க. பதில் அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி  ௳ அண்ணாமலை நகர் 7-3-39 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் எல்லா நலன்களும் உண்டாக. இவண் யாவரும் நலம். நினது நலம் தெரிவிக்க. நினது கடிதம் கிடைத்தது. சம்பந்தன் தனக்கும் கடிதம் எழுதியிருப்பதாகச் சொல்லி, ரயில்வே ரசீதை என்னிடம் வாங்கிக் கொண்டனன். கடவுளிடத்தில் உனக்கு உறுதியான நம்பிக்கை இருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. உயிர்க்குயிராக இருந்து எக்காலத்தும் எந்நிலையிலும் உதவி புரிந்து வருவோர் அவரே. உண்மையாக அவரை நம்பி, அவரது திருவருளையே வழிகாட்டி யாகக் கொள்வோமாயின் அது நம்மை நன்னெறிக்கட் செலுத்தி உய்விக்குமென்பது ஒரு தலை. கொளும்பிலிருந்து, யான் குறிப்பிட்ட தேதிகளிலேயே விழா வைத்துக் கொள்வதாகவும், யான் கட்டாயம் வரவேண்டும் என்றும் முன்பு கடிதம் வந்ததன்றி யான் ஒத்துக் கொண்டு எழுதிய பின்னர் அதனை உறுதிப்படுத்திக் கடிதமாவது, விளம்பரமாவது இன்னும் வந்திலது. நான் எழுதிய கடிதத்தில், இப்பல்கலைக் கழகக் கலவரத்தைக் குறிப்பிட்டு, என் வருகைக்கு இது தடையாயிராதென்ற நம்பிக்கையுடன் ஒத்துக் கொள்கிறேன் என்றும், மார்ச்சு 'b5 2 உ க்கு மேல் பாஸ்போர்ட்டும், வழிச் செலவும் அநுப்பலாம் என்றும். அதற்குள் வேறு கடிதமும் எழுதுவேன் என்றும் குறிப்பிட்டிருந்தேன். எனது மற்றொரு கடிதத்தையும் பார்த்து எழுத எண்ணியுள்ளார்கள் போலும்? நீ வருவதனை உறுதியாகத் தெரிந்து அவர்கட்கு எழுத எண்ணியே முற்குறித்தபடி தவணை குறிப்பிட்டேன். நின் கடிதத்தில் நன்கு யோசித்ததாகக் கூறியிருப்பினும், நீ வருவதற்குள்ள தடை இன்னதென்பதனைத் தெளிவாகத் தெரிவிக்கவில்லை. நீ இங்கிருந்து சென்று நாளாயினமையின், நீ கொளும்புக்கு வருதல் மூலமாக நின்னை எல்லோரும் பார்க் கலாம் என்றும், நீயும் பாப்பா முதலாக எல்லோரையும் பார்த்துச் செல்லலாம் என்றும் எண்ணியிருந்தோம். நிற்க. சம்பந்தனை அழைத்துச் செல்வதில் எனக்கு விருப்பமே. ஆனால் அவன் இப்பொழுது தான் ஒரு வாரம் லீவில் இருந்து வந்துள்ளான். நினக்கும் இதனை முன்பே குறிப்பிட்டிருந்தேன். இங்கே தலைமையில் இருப்பவர்கள் அடிக்கடி சம்பந்தனைப் பற்றிக் குறிப்பாக அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். அதற்கேற்ப இங்கு அண்மையில் நடந்த தேர்வில் அவன் ஒன்றும் எழுதவில்லை. இப்பொழுது எடுத்த ஒரு வார லீவும் முழுமனதுடன் கொடுத்த தாகாது. அவனிடம் குற்றமொன்றும் இல்லையாயினும் அவனது காரியத்திற்குப் பழுதுண்டாகாவாறு நடந்து கொள்ள வேண்டும். மார்ச்சு இறுதியிலோ, ஏப்ரல் முதலிலோ நடக்கும் தேர்விலாவது அவன் சரியாக எழுத வேண்டும். இந்நிலையில் கொளும்புக்கு வர அவன் மீட்டும் லீவு எடுப்பானாயின் லீவு அநுமதிக்க வேண்டியவர்களுக்கு என்னிடத்திலுங் கூட அதிருப்தி ஏற்படுமோ என நினைக்கிறேன். ஆனால் இங்கிருந்து யாரையேனும் அழைத்துச் செல்வ தென்றால் இனி, அவனையன்றி வேறுயாரையும் கருதலாகாது. உன்னையோ, சம்பந்தனையோ அல்லது தேவகோட்டை யிலிருந்து அத்தானையோ நான் அழைத்துச் செல்லுதல் வேண்டும். நீ வருவதனால் உனக்கு ஏதேனும் பாதகம் ஏற்படும் என்று தோன்றினால் நீ வர வேண்டியதில்லை. அவ்வாறு ஒன்றும் இல்லையானால் நீ வருவதே தக்கது. இதனை ஆலோசித்து நாளையே எனக்குக் கடிதம் எழுதவும். உன் கடிதம் பார்த்த வுடன் நான் கொளும்புக்கு எழுத வேண்டும். நீ வருவதாயின் சென்னையிலிருந்து சாமான் ஏதேனும் வாங்கி வருவதற்கும், நீ வரும் செலவிற்கும் பணம் அநுப்புவேன். நான் அநுப்பும் பணம் போதாத சமயங்களில் அதனைத் தெரிவிக்கவும். இங்கே அக்காள் தேர்வுக்குக் கடுமையாகப் படித்து வந்ததில் 4 நாளாகச் சிறிது இருமல் முதலியன ஏற்பட்டுள. உடனே பதில் எழுதவும். அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி  ௳ அண்ணாமலை நகர் 26-3-39 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் சிவபிரான் திரு வருளால் எல்லா நலங்களும் உண்டாக, இவன் யாவரும் நலம் நினது நலமும், பழனி விலாசத்தில் உள்ளவர்கள் நலமும் தெரிவிக்க. இலங்கை சென்று வந்த விபரத்தைச் சம்பந்தன் நினக்குத் தெரிவித்திருக்கலாம். கொளும்பு அழகான பட்டணம். கண்டி நீலகிரி போல் விளங்குவது. இலங்கை முழுதுமே வளம் நிறைந்ததாகவுளது. ஆனால் நீண்ட நாட்களாக அங்கும் மழை யில்லையாம். எங்கள் பிரயாணம் இனிதே நிறைவேறியது. மார்ச்சு 31, ஏப்ரல் 3,4,5,12,13 ஆகிய நாட்களில் அக்காளுக்குத் தேர்வு நடக்கும். 30-3-39 பகல் 1 மணிக்கு அக்காளும் நானும் திருவையாற்றுக்குப் புறப்படுவோம். பாப்பாவை மாத்திரம் உடன் கொண்டுசெல்வோம். ஏப்ரல் 2ல் நான் திரும்பிவிடுவேன். 5-4-39 க்குப் பின் அக்காள் நடுக்காவேரியில் தங்கிஇருந்து எஞ்சிய பேப்பர்கள் எழுதும். 16-4-39ல் இங்கே விடுமுறை தொடங்கும். தேர்வுகள் அதன் பின்பே நடக்கும். நடுக்காவேரிக்கு எப்பொழுது செல்ல இயலுமெனத் தெரியவில்லை உனது தேர்வு எப்பொழுது முற்றுப் பெறும்? நீ எப்பொழுது புறப்பட்டு வரக் கூடும்? மேற்கொண்ட காரியத்திலேயே கருத்தாயிருப்பாயென நினைக் கிறேன். உடல் நலத்தையும் நன்கு பேணிக் கொள்க. சிற்றப்பா இன்று அங்கு வந்திருக்கலாமே? சிதம்பர நாதன் காதுக்குக் கருவி விசாரித்துத் தக்கது வாங்கி வருதல் வேண்டும்.பதில் எழுதுக. அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி  ௳ அண்ணாமலை நகர் 6-4-39. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் எல்லா நலங்களும் உண்டாக, இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. நின் கடிதம் கிடைத்தது. நேற்று ரூ. 60 அநுப்பியுள்ளேன். அக்காளுக்கு இலக்கியம் 2 பேப்பரும், இலக்கணம் 2 பேப்பரும் நடந்துவிட்டன. சரித்திரமும், கல்வெட்டும் 12,13 தேதிகளில் நடக்கும். நடந்த பேப்பர்களில் முக்காற்பங்கு விடை எழுதி யுள்ளது இரண்டில் 60 வீதமும், இரண்டில் 70,75 வீதமும் மார்க்குக் கிடைக்கலாம். முதன்மையாக வருதல் எளிதன்று. மிக்க பலஹீனமான நிலைமையில் இதைவிட அதனால் எழுதவும் முடியாது. முதல் வகுப்பில் தேறிவிடின் தனிப்பட்ட முறையில் ஓர் பரிசுக்கு ஏற்பாடு செய்யலாமென நினைக்கிறேன். இதனை வெளியிட வேண்டாம். நேற்று இரவு அக்காள் நடுக்காவேரி போய் இருக்கும் 11-4-39 மாலை திருவையாறு வந்து சேரும். 13-4-39 மாலை அத்தான் வந்து அக்காளை அழைத்துக் கொண்டு படுகைக்குப் போகும். ஊரில் நடப்பாவுக்கு உடம்பு மிகவும் மெலிந்துளது. இருமல் தொந்தரை தொடர்ந்திருக்கிறது. 30-6-39வரை எனக்கு வேலையை நீட்டித்து உத்தரவு வந்துள்ளது. மே, ஜூன் மாதங்களில் செலக்ஷன் போர்டு கூடும் பொழுது ஆலோசித்து, ஓராண்டிற்கோ, அதிகமாகவோ உத்தரவு போடக் கூடும் என நினைக்கிறேன். 17 ம் தேதி முதல் இங்கே பரீக்ஷை நடக்கும். பரீக்ஷை மேற் பார்வை விரைவில் முடிந்துவிடின் நாங்கள் முன்னரே ஊருக்குப் போகக் கூடும். 25 தேதிவரை வேலை இருப்பின், நீ வந்த பின்பு சேர்ந்து போகலாம். அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி சென்னை கிறிஸ்டியன் காலேஜில் தலைமைப் பண்டி தராக இருக்கும் திரு. பூ. ஆலாலசுந்தரம், M.A. தாம்பரத்தில் இருக்கின்றாரா? அல்லது பட்டணத்தில் இருக்கின்றாரா? என்பது தெரிந்து எழுதவும். பட்டணத்தில் லிங்கி செட்டித் தெரு, 63 நீ வீடு அவர்களுடையது என நினைக்கிறேன். ௳ அண்ணாமலை நகர் 16-4-36 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குச் சிவபிரான் திரு வருளால் அனைத்து நலனுமுண்டாக. இவண் யாவரும் நலம். நினது நலம் தெரிவிக்க. அக்காள் தேர்வுக்கு எழுதிவிட்டு அத்தானுடன் படுகைக்குப் போயிருக்கிறது. அங்கிருந்து கடிதம் வந்தது. பாப்பா நன்கு விளையாடிக் கொண்டிருக்கிறதாம். அக்காள் 6 பேப்பர்களில் சரித்திரமும், கல்வெட்டும் மிக நன்றாய் எழுதியிருக்கிறதாம். இலக்கிய, இலக்கணப் பேப்பர்கள் நான்கிலும் சிற்சில கேள்விகளுக்கு எழுதவில்லையாம். மொத்தத்தில் முதல் வகுப்பில் தேறக் கூடும் எனத் தெரிகிறது. அங்ஙனம் தேறுவோர் பலர் இருப்பராதலின் முதன்மையாக வருவது திறமையோடு அதிர்ஷ்டத்தையும் பொறுத்தது. நீ சோர்வின்றி, ஊக்கத்துடன் தேர்வுக்கு எழுதுவாய் என்று நம்புகிறேன். செங்கோட்டையில் தேவஸ்வம் ஆதரவில் நடக்கும் சமய சபை ஒன்றில் 24-4-39ல் சொற்பொழிவு செய்தற்காக 23-4-39 மாலை செங்கோட்டை பாசெஞ்சரில் நான் புறப்படுவேன். கூடுமாயின் திருநெல்வேலிப் பக்கத்தில் இன்னும் நாலைந்து சொற்பொழிவுகள் செய்து விட்டு 30ம் தேதி திருவையாறு வந்து சேர்வேன். ஏப்ரல் 30ல் திருவையாற்றுக் கோயிலிலும், மே மாதம் 1 டிச2ல் தஞ்சாவூர்ப் பெரிய கோயிலிலும் நான் சொற்பொழிவுகள் செய்யக் கூடும். இப்பொழுதைய நிலைமையும் செங்கோட்டை போய்வர என்னைத் தூண்டியது. தங்கையன் ஸ்காலர்ஷிப் பணத்தில் சிறிது மிஞ்சியிருந்தது கொண்டு இப்பொழுது இங்கு செலவு நடந்து வருகிறது. அறத் திற்கென வைத்துள்ள சிறிது தொகையினை நடுக்காவேரி செல்லும் செலவிற்கெனக் கொடுத்துச் செல்வேன். இன்னும் சில மாதங்கள் வரையில் இங்ஙனம் பொருள் முட்டுப்பாடு இருக்குமென நினைக்கிறேன். 25ம் தேதி நீ இங்கு வந்து விடின், 26-4-39 நல்ல நாளாக இருத்தலின் அன்று எல்லோரையும் அழைத்துக்கொண்டு நீ நடுக்காவேரி செல்லலாம். அன்று போக முடியாவிடின் 27ம் தேதி 4-20 A.M. ல் புறப்பட்டுச் செல்லுங்கள். வீட்டில் எல்லாக் கதவுகளையும் ஜன்னல்களையும் சரியாகத் தாழிட்டுப் பூட்டிச் செல்ல வேண்டும். நீ வைத்திருந்த ஜாதிக்காய்ப் பெட்டியில் அக்காள் புத்தகங்கள் வைத்து எடுத்துப் போயிருக்கிறது. அதில் இருந்த நினது சாமான்கள் இங்கிருந்த பழைய பெரிய டிரங்கில் வைத்துப் பூட்டியிருக்கிறது. அவற்றில் வேண்டியவற்றை எடுத்து வேறு பெட்டிகளில் வைத்துக் கொண்டு, மற்றெல்லாப் பெட்டி களையும், ஊருக்கு எடுத்துச் செல்லவும். புறப்படு முன் பெட்டி களையும் மற்றைச் சாமான்களையும் எண்ணி எழுதிக் கொண்டு, ரயிலிலும், காரிலும் ஏறும் பொழுதும் இறங்கும் பொழுதும் எண்ணிப் பார்க்க வேண்டும். தோல் பிடியுள்ள பெரிய டிரங்கில் கண்ணாயிருக்க வேண்டும். நீ எழுதி வைத்திருந்த நீண்ட கணக்கு நோட்டுகளில் 3 ஆனர்ஸ் படிக்கும் G. ஸ்ரீ நிவாசன் என்பவனுக்குச் சம்பந்தனால் எடுத்துக் கொடுக்கப் பெற்றன. அவற்றையும். பாரதி தம்பியிடம் இருக்கும் ‘முதற் குலோத்துங்கன்’ என்னும் புத்தகத்தையும் வாங்கி விடுக. சிதம்பரநாதனுக்குக் காதில் வைக்கும் கருவியைப் பற்றி அடிக்கடி சொல்கிறார்கள். அப்படி இருப்பின் ஒன்று வாங்கி வருக. முன்பு வாங்கி வந்தது போல் இரண்டு ஊற்றுப் பேனாக்கள் இன்னும் வாங்கி வருக. மே மாதத்தின் பிற்பகுதியில் நாம் இருவருமோ, நீ மாத்திரமோ வசதிக்கேற்ப எங்கேணும் போய்வரலாம். நீ வருமுன்பு கூடுமாயின் செக்ரட்டரியேட்டில் இருக்கும் திரு. அமிர்த கணேச முதலியாரைப் பார்த்து வருதல் நலம். 3-5-39ல் வித்துவான் போர்டு கூட்டம் இருக்கும். அக்காள் பரீக்ஷை நம்பர் 1149. சம்பந்தன் இன்று ஊருக்குச் சென்றனன். அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி  ௳ N.M. Venkataswami Nattar, Annamalai Nagar, P. O. Lecturer in Tamil, Chidamparam. Annamalai university Data 20-3-1940 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலமுண்டாக. இவண் யாவரும் நலம். அவண் எல்லோருடைய நலமும் தெரிவிக்க. நின் கடிதமும், திருநீறு குங்குமமும் வந்தன. சாஸ்திரியார் வேலையை விட்டு விலகுகிறார். இன்று அவருக்கு உபசரிப்பு நடக்கிறது. இன்றிரவு சென்னை புறப்படு கிறார். நேற்று, பங்களாவில் அவரைக் கண்டு பேசினேன். உனது வேலையைப் பற்றி விசாரித்தார். அவர் சென்னையில் இன்னும் 10 நாட்கள் இருப்பார். அதற்குள் நீ போய் அவரை ஒரு முறை பார்க்கவும். T. சிவராமசேதுப் பிள்ளை இப்பக்கம் வருவார் எனக் கேள்வி. ஈஸ்டரில் சென்னை வரினும் வருவார், விசாரித்து, வருவது தெரிந்தால் திரு. அமிர்த கணேச முதலியாரைக் கொண்டு பார்க்கவும். நான் திருப்பதி செல்வதில்லை என்றிருந்தேன். காரைக் குடியில் கம்பன் திருவிழாவில் சொற்பொழிவு செய்யவும் ஒத்துக் கொண்டிருந்தேன். திருப்பதியிலிருந்து நேற்றும் ஒரு கடிதம் வந்தது. ஆதலால் இன்றிரவு 10½ மணிக்குத் திருப்பதிக்குப் புறப்படுகிறேன். நான் பண்டிதமணி, ரா. இராகவையங்கார், சிக்கா முதலானவர்கள் செல்வோம். இங்கு வந்த பின்னும் உடல் நலமில்லாமலே இருந்தது. நேற்று முதல் நாள் நலமாயிருக்கிறது. திருச்சி ரேடியோவில் முன்பு பாரத்தில் பூர்த்தி செய்து அநுப்பியது கிடைக்கவில்லையாம். மீட்டும் பாரம் வந்தது. அநுப்பியாயிற்று. 7-4-40ல் ஹாஸ்யரஸம் என்பது பற்றி. திங்கட் கிழமை திரும்பக் கூடுமென நினைக்கிறேன். நன்கு படித்து வருக அன்புள்ள ந.மு.வே  ௳ N.M. Venkataswami Nattar, Annamalai Nagar, P. o. Lecturer in Tamil, Chidamparam. Annamalai university Date 27-3-1940 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலமுண்டாக. இவண் யாவரும் நலம். அவண் எல்லோருடைய நலத்திற்கும் எழுதுக. நான் முன் எழுதிய கடிதம் கிடைத்திருக்குமே? நான் திருப்பதி சென்று ஞாயிற்றுக் கிழமை இரவு 3 மணிக்கு இங்கு வந்து சேர்ந்தேன். சென்ற வெள்ளிக்கிழமை திருப்பதியில் அகில இந்திய கீழ்திசைக் கல்வி மகா நாட்டின் சார்பில் நிகழ்ந்த தமிழ்ச் சங்கத்தில் ‘வஞ்சி’ பற்றிய விவாதத்தில் யானும் கலந்து கொண்டேன். சென்னை ரேடியோக்காரர்கள் அவ்விவாதம் முழுதும் எடுத்து வந்திருக்கின்றனர். சனிக்கிழமை (பங்குனி உத்தரம்) மலைக்கு டோலியிற் சென்று தரிசித்து வந்தேன். ஞாயிற்றுக் கிழமை காலை திருத்தணிகை சென்று தரிசித்து விட்டு வந்தேன். பிரயாணத்தில் எனக்கு ஒன்றும் சிரமம் ஏற்படவில்லை. 7-4-40ல் திருச்சி ரேடியோவிற் பேசிவிட்டு, அப்படியே கோயமுத்தூர் போய்வர எண்ணியுள்ளேன். கோபிசெட்டி பாளையம் டைமண்ட் ஜூப்ளி ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர் வேலை காலியாயிருக்கிறதாம். சிற்றப்பாவுக்காக அவ்வேலைக்கு முயற்சி செய்யவே போய்வரத் தீர்மானித்துள்ளேன். பிறபின். பதில் எழுதுக. அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி திருப்பதி, திருத்தணிகைப் பிரசாதங்கள் இதனுடன் உள்ளன.  ௳ N.M. Venkataswami Nattar, Annamalai Nagar, P. O. Lecturer in Tamil, Chidamparam. Annamalai university Date: 4-4-1940 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குச் சிவபிரான் அருளால் நலம் உண்டாக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. நின் கடிதம் கிடைத்தது. நேற்று ரூபாய் 18 அநுப்பியுள்ளேன். நீ வரும் பொழுது பாப்பாவுக்கு ஒரு கவுனும், சிதம்பரத்துக்கு ஒரு ட்ரவுசரும் திருநாவுக்குப் பொருத்தமாக ஒரு ஜதை செருப்பும், எனக்கு முன்பு சென்னையில் வாங்கியதுபோல் ஒரு ஜதை செருப்பும் வாங்கி வருக. அத்தான் உடை முதலியன பற்றி ஒன்றும் எழுத வில்லை. தேவக்கோட்டையிலிருந்து எல்லோரும் 7-4-40 படுக்கைக்கு வந்து விடுவார்களாம். நான் வருகிற ஞாயிறு காலை திருச்சி செல்வேன். அங்கிருந்து அன்றிரவே புறப்பட்டு கோயமுத்தூர் செல்வேன். இங்கே என் உடல் நலம் அடிக்கடி குறைவுபடுகிறது. ஆதலால் 10 நாட்கள் வரையில் கோயமுத்தூர்ப்பக்கம் இருந்துவர எண்ணுகிறேன் கூடுமாயின் பாலக்காடு முதலிய இடங்கட்கும் போய்வரலாகும். இங்கே தங்கையன் நம் வீட்டிலேயே இருக்கின்றனன். இரவில் திருநாவுக்கும் சுந்தரத்திற்கும் பாடம் கற்பிக்கின்றனன். சனிக்கிழமை முதல் வை - வொ - சி முடியும் வரை சம்பந்தத்தையும் நம் வீட்டில் இருக்கச் சொல்லியுள்ளேன். சென்ற திங்கட்கிழமை சௌ. கருணாம்பாளுக்கு ஆண் குழந்தை பிறந் திருப்பதாகக் கடிதம் வந்தது. அதைப்பார்ப்பதற்காகச் சம்பந்தன் லாலுகுடி போய்வந்தாலும் வரலாம். நீ சாஸ்திரியைப் பார்க்கவில்லையே? திரு. அமிர்தகணேச முதலியாரையும் சந்திக்கவில்லையே? நேற்றுப் பத்திரிகைகளில் சில பெரிய வேலைகட்கு சர்வீஸ் கமிஷன் விளம்பரம் வெளிவந்ததனைப் பார்த்தாயா? எதற்கேனும் மனுச் செய்வது பொருத்தமாயின் செய்க. பரீக்ஷையில் மிகுந்த கவனம் வேண்டும். சின்னத்தானுக்கு லீவு விட்டவுடன் சென்னை வரச்சொல்லி, இருவரும் சேர்ந்து இங்கு வரவும். உப்பிலி பாளையத் திற்குக் கடிதம் எழுதுக. அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி  ௳ C/o R.V. Lakshmaiah Naidu, Uppillipalayam, Singanallur P.O Coimbatore Dt. 10-4-1940 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலமுண்டாக, நினது கடிதம் இன்று கிடைத்தது. அதனால் எனக்கு எவ்வளவு வேதனையுண்டாகும் என்பதை நீயே அறிவாய், என்னைவிட, உன் அன்னை இச்செய்திகளை அறிந்தால் சிறிதும் பொறுத்திருக்க முடியாது. உனக்கு இவ்வாறு துன்பங்கள் உண்டாகும் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. இப்பொழுதும் கடவுளருளால் உனக்கு விரைவில் நலமுண்டாகும் என்றும், பெருமையும் புகழும் படிப்படியாக உனக்கு வந்துசேரும் என்றும் உறுதியாக நம்புகிறேன். உனக்கு இவ்வளவு தைரியக்குறைவு ஏற்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. நான் எவ்வளவோ கொடிய துன்பங் களையெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்கவில்லையா?. மனோதிடமில்லாமையே நோயை அதிகப்படுத்தல் கூடும். எவ்வளவு துன்பம் நேர்ந்த போதிலும் சிறிதும் கலங்காமல், கடவுளிடத்தில் முழு நம்பிக்கை வைத்து, செய்ய வேண்டிய பரிகாரங்களைக் குறைவின்றிச் செய்து வரவேண்டும். இப்பொழுது பரீக்ஷை தவறிப் போகுமே என்ற கவலை சிறிதுமில்லாமல், தகுந்த டாக்டர்களைக் கொண்டு வேண்டும் சிகிச்சை செய்து கொள்க. பணச் செலவு பற்றியும் கவலையுற வேண்டாம். தைரியத்தைச் சிறிதும் கைவிடாதே. Vibrona (வைப்ரோனா) என்ற மருந்து வாங்கி உண்ணும் படி அன்பர் திரு. ராஜூ நாயுடு கூறுகின்றார். நரம்புத் தளர்ச் சிக்கு மிக நல்லதாம். காலை, மாலைகளில் ஒவ்வொரு அவுன்ஸ் உண்ண வேண்டுமாம். உடனே அதனை வாங்கி உண்க. பணம் தேவையாயிருப்பதைத் தெரிவித்தால் உடன் அநுப்புவேன். வெதர் வீக்கத்தின் நிலைமைக்கும் நலத்திற்கும் நாளையே கடிதம் எழுதவும் கடவுள் துணை செய்வாராக. அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி  ௳ C/o R.V. Lakshmaiah Naidu, Uppillipalayam, Singanallur P.O Coimbatore Dt. 12-4-1940 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலமுண்டாக. நலம், நலம் தெரிவிக்க. நினது கார்டு இன்று பார்த்ததில் சிறிது ஆறுதல் அடைந் துள்ளேன். எனினும் முழுதும் நலமான செய்தி தெரிதல் வேண்டும். சென்னையில் தக்க மருத்துவர்களிடம் காட்டிப் பார்த்துக் கொள்க, உனது மனத் தடுமாற்றத்திற்குப் பித்தம் மிகுதியாயிருப்பது காரணமென நினைக்கிறேன். உடனே டாக்டரிடம் பேதிக்கு மருந்துண்டு. பித்த சாந்தியாகவும் ஏதேனும் உண்ண வேண்டும். கோபிசெட்டிபாளையம் இங்கிருந்து 60 மைல் தூரத்தி லுள்ளது. நேற்று அன்பர் ராஜூ நாயுடு காரில் அவரும், நானும் C.M. இராமச்சந்திரஞ் செட்டியாரும் கோபிக்குச் சென்று, ஹெட்மாஸ்டர் வேலை பற்றி விசாரித்தோம். கமிட்டியில் 23 அங்கத்தினர் உளர். பலர் நமக்கு வேண்டியவர்கள் ஆன போதிலும் நிலைமை நம்பிக்கைக்கு இடமில்லாதிருக்கிறது. ஊரும் வசதியான தன்று. நான் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை இங்கிருந்து புறப்பட்டு, படுகை சென்று. 19-4-40 ல் திருவையாற்றில் ஒரு சொற்பொழிவு செய்துவிட்டு, 20ம் தேதி இரவு சிதம்பரம் போய்ச் சேரலாம் என எண்ணியுள்ளேன். ஆனால் நான் புறப்படுமுன் நினது கடிதம் பார்க்க வேண்டும். நினது நலம் குறித்து நாளையே இன்னுமொரு லெட்டர் எழுதுக. மன அமைதியுடனிருந்து நன்கு ஆலோசித்துத் தேர்வுக்கு எழுதுக. எது பற்றியும் மனம் குழம்ப வேண்டாம். மனோ திடமே வெற்றிக்குக் காரணம். அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி  ௳ அண்ணாமலை நகர், 24-4-40 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலமுண்டாக. இவண் யாவரும் நலம். உனது கடிதம் கிடைத்தது. இரண்டு நாளாக உன் வருகையை எதிர்ப்பார்த்து உங்க ளம்மா கவலையடைந்திருந்தது. உனது நலம் எப்படியிருக்கிறது? இம்பீரியல் பாங்கின் விபரங்கள் நீ எழுதியவற்றைப் பார்த்தேன் அதனினும் சிறந்த வேலை கிடைப்பதற்கு ஏதுவில்லாத நிலையில், அவ்வேலைக்கேனும் முயன்று பெறுவது நலமென்றே நினைக்கிறேன். உங்கள் தாத்தாவிடம் சொல்லி, அவர்கள் கருதுகிறபடி ஏதாவதொரு வேலைக்குச் சிபார்சு செய்யுமாறு கேட்டுக் கொள்க. சூளை திரு. இராமசாமி பிள்ளையவர்களை நானும் அறிவேன். திரு. வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கட்கும் மிக வேண்டியவர்கள், அவருக்கு இதனுடன் ஒரு கடிதம் வைத்து இருக்கிறேன் அக்கடிதத்துடன் நீ சென்று அவரைப் பார்க்கலாம் ஆனால் உங்கள் தாத்தா அவர்கள் பார்ப்பின் வேறொன்றும் வேண்டியதில்லை. ரூ. 1000 or 1500 செக்கியூரிட்டி கட்ட வேண்டுமாயினும் கட்டலாம். ஆனால் இந்த ஆண்டிலோ வருகிற ஆண்டிலோ பிராவிடன் பண்டுத்தொகை கிடைக்கிற வரையில் உங்கள் தாத்தா அவர்கள் ஏதேனும் ஏற்பாடு செய்யின் நலமாகும். தொடக்கத்தில் ரூ.35 சம்பளம் என்றாலும் நான்கு ஆண்டில் அதிக சம்பளம் கிடைக்கக் கூடுமென்றால் குற்றமில்லையென்றே நினைக்கிறேன். திரு T.M. நாராயணசாமி பிள்ளை அவர்களை வேலைக் காகப் பலர் நெருங்கக் கூடும். எனினும் அது பொருத்தமென்று தோன்றினால் நாமும் சொல்லிப் பார்க்கலாம். தலைவர், கமிஷனர் முதலானவர்கள் சில ஆண்டுக்கொரு முறை மாறுவார்கள். மானா மதுரை திரு. இராமலிங்க முதலியாரும் அவ்வேலையிலிருந்து பிடிக்காமல் விலகியவரே. ஆனால் தொடக்கத்தில் சிறிது உயர்ந்த சம்பளம் இருக்கக் கூடும். 28-4-40 இரவு 4ஙூ மணி வண்டிக்கு எல்லோரும் ஊருக்குப் புறப்படவேண்டும். ஆதலால் ஞாயிற்றுக் கிழமைக்கு முன்பே அல்லது ஞாயிற்றுக் கிழமையோ நீ இங்கு வந்து சேரவேண்டும். ஏதேனும் மனுக்கொடுக்க வேண்டியிருந்தால் அதனை அங்கிருந்தபடியே கொடுத்துவிட்டு, உங்கள் மாமாவிடத்திலும், தாத்தாவிடத்திலும் பொறுப்புக் கட்டிவிட்டு வந்து சேர்க. கழகம் திரு. சுப்பையா பிள்ளை அவர்கள் மு.ரா. ஆராய்ச்சிக் கட்டுரை என்னும் புத்தகம் கொடுப்பர். வாங்கிவருக. திரு. ஆ. இராசமாணிக்கம் பிள்ளையைப் பார்க்க கூடுமாயினும் பார்த்து வருக. உனது முன் கடிதம் கிடைத்த அன்றே சம்பந்தன் ரிசல்ட் தெரிந்தது. மூவரும் 2வது வகுப்பு. அவற்றுள் சம்பந்தன் முதல். மிகவும் வருத்த முற்று அன்றே ஊருக்குப் புறப்பட்டு விட்டனன். லாலுகுடி போய்ச் சேர்ந்ததும், சேராதும் தெரியவில்லை. பத்திரமாக வந்து சேர்க. அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி  ௳ நடுக்காவேரி 17-7-40 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. நினது கடிதம் பெற்று யாவும் அறிந்தேன். மிக வேண்டிய வர்களாகிய திரு. மருதப்ப செட்டியாரும், திரு. சிதம்பரம் பிள்ளையவர்களும் அங்கிருத்தலின் நீ தைரியமாக அங்கிருக் கலாம். செட்டியார் உனக்கு வேண்டிய வசதியெல்லாம் செய்து கொடுப்பர். செப்டம்பரில் நீ கருதிய வேலையும் கிடைக்கக் கூடும். திரு. இராஜம் நலமாக இருக்கிறது. இரண்டு நாட்களாகப் புத்தகம் படிக்கச் செய்து வருகிறேன். நுண்ணறிவு இருந்தால் விரைவில் நல்ல கல்வி பயிற்சி பெறக்கூடும். கணக்கில் அறிவு நுட்பமாயிருக்கிறது. நின் கடிதத்தையும் படிக்கும்படி செய்வேன். வருகிற திங்கட்கிழமை நாங்கள் எல்லோரும் தஞ்சை சென்று விடுவோம். சென்ற பின்பு அவ்வீட்டு விலாசம் தெரிவிப்பேன். நினக்கு வந்த கடிதங்கள் சில இதனுடன் உள்ளன. அடிக் கடி நலத்திற்கும், விசேடங்களுக்கும் எழுதுக. அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி காய்கறிப் பணத்தை K.M. செட்டியாரிடம் கொடுக்க.  ௳ தஞ்சாவூர் 27-7-40 அன்புள்ள நடராஜனுக்கு இறைவனருளால் நலமுண் டாகுக. இவண் யாவரும் நலம். நின் இரு கடிதங்களும் கிடைத்தன. எனக்கு இங்குவந்த பின் உடல் நலமில்லாதிருந்து வருகிறது. இந்நிலையில் இன்று வந்த நின் கடிதத்தைக் குறித்து முதலியார் அவர்களுக்காவது உனக்காவது என் கையால் கடிதம் எழுதக் கூடவில்லை. நின் கடிதத்திலுள்ள செய்திகளையெல்லாம் விவரித்து எழுதுதல் கூடாமையால் நின் கடிதத்தையே அவருக்கு அநுப்பிவிட்டேன். அதிலுள்ள சில வாங்கியங்கள் அருவறுக்கத் தக்க வாயினும் செய்திகளை அவர் தெளிவாய்த் தெரிந்துகொளச் செய்தற்கு வேறுவழியில்லாமையால் அதனையே அநுப்ப நேர்ந்தது. சம்பந்தனிடம் இயற்கையாக அன்பும் அவனுடைய சில ஆற்றல் பற்றி மதிப்பும் எனக்குண்டு. எனினும் அவனுடைய சில குணங்களுஞ் செய்கைகளும் எனக்குப் பிடிப்பதில்லை. அண்மையில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளிலிருந்து தெய்வ நம்பிக்கையோ, சத்தியத்தில் மதிப்போ அவனிடம் இல்லையென்று நினைக்கும் படி ஆயிற்று. மற்றும் தெய்வ நம்பிக்கையுடையவர்கள் தற்கொலையைப் பற்றி நினைக்கவும் மாட்டார்கள். இறைவன் எவ்வளவு பெருங்கருணையால் இவ்வுடம்பை யளித்துள்ளானென்ப தனையும் அதன் நோக்கத்தையும் சிறிதுமறியாத அறிவிலிகள் தாம் தற்கொலை செய்து கொள்வதை எளிதாக நினைப்பார்கள். மேலும் தம் கொள்கை தீதாயின் அதினின்று தன்னை மீட்டுக் கொள்வதும் நன்றாயின் எத்துணை முயற்சியெடுத்தும் சித்தி பெறுவதுமே ஆண்மையாகும். உலகியலால் நோக்கினும் தற்கொலையென்பது அறிவும் ஆண்மையுமற்றவர்கள் செய்யும் செய்கையேயாகும். நிற்க. சம்பந்தன் யாரையும் பொருட்படுத்தாமல் தான் காதலித்த பெண்ணை மணந்து கொள்வதில் தடையென்ன விருக்கிறது. தாய் தந்தையர்கள் அவ்வாறு செய்யாமல் எங்ஙனத் தடுக்க முடியும். ஆனால் அவர்கள் கருத்துக்கு மாறாக அவர் களும் சம்மதிக்க வேண்டுமென்பது நியாயமாகுமா? இவன் சில உரிமைகளைக் கொண்டாடும் பொழுது அவர்களுடைய உரிமையையும் மதிக்க வேண்டுமல்லவா? நின் கடிதத்திலிருந்தே முதலியாரவர்கள் செய்திகளை விளக்கமாக அறிந்து கொள்வராதலால் நான் தனியாக வேறொன்றும் எழுத வேண்டியதில்லை. அன்றியும் சில பொதுப்படையான சிறந்த பண்புகள் பற்றியே எங்கள் இருவரிடத்தும் நட்பு நிலை பெற்றிருக்கிறது. ஆனால் இருவருடைய பண்புகளிலும் கொள்கைகளிலும் எத்தனையோ வேற்றுமைகள் உண்டு. அவருக்கு என்னதாந் துன்பம் நேர்ந்த போதிலும் அதற்காக என் உயிரை விடமாட்டேன். என் கொள்கையையும் விடமாட்டேன். அதனால் பயித்தியம் பிடித்துப் போகவுமாட்டேன். அவருக்காக என் கொள்கையை மாற்ற முடியாத நான் என் பொருட்டு அவர் கொள்கையை மாற்றும்படி கேட்டால் பொருந்துமா? என்றாலும் என் மனச் சான்றுக்கு மாறாகவே ஒருவரி அவருக்கு எழுதி யுள்ளேன். அதாவது 'என் ஆலோசனையைக் கேட்பீர்களானால் அவன் போக்கிலே விட்டுவிடுங்கள்' என்பது தான். நான் எவ்வளவோ துன்பங்களைப் பொறுத்துக் கொண்டும் பொருட் செலவைப்பார்க்காமல் உனக்குச் செய்ய வேண்டிய வற்றை எல்லாஞ் செய்தேன். சென்னையில் படிக்கச் சென்ற பொழுது இத்தகைய செய்கைகளிலே காலத்தைப் போக்கி மேற்கொண்ட காரியத்தை நெகிழவிட்டுவிட்டாய். அது பற்றியும் உன்னை வெறுக்காமல் வேலைக்காக அளவிறந்த முயற்சிகள் செய்யப் பட்டன. வேலை எளிதில் கிடைக்காமை பற்றி நீ உன்னையே நொந்து கொண்டுமிருந்தாய். கடைசியாக கடவுளருளால் உன் திருமணம் இனிது நிறைவேறியது. அன்றே உத்தியோகத்துக்கும் ஆர்டர் வந்தது. இனி நீ காலத்தை வீண் போக்காமல் முயற்சி யுடனும் சுறுசுறுப்புடனும் உன் வேலையைத் திறமையாய்ப் பார்த்து விரைவில் மேல்நிலைக்கு வருவாயென எண்ணினேன். புறப்படும் பொழுதே உனக்கு எச்சரிக்கையுஞ் செய்தேன். இன்று வந்த உன் கடிதம் அதற்கு மாறாக இருக்கிறது. உலகிலே நீ ஒரு சிறந்த மனிதனாக விளங்க வேண்டுமானால் கடவுளருளுனக்குக் கிடைக்க வேண்டுமானால் உன்னுடைய செய்கையும் திறமையுமே அவற்றிற்குக் காரணமாதல் வேண்டும். முன்போல் நான் உனக்கு உதவி செய்து கொண்டிருப்பதென்பது இனியியலாத காரியமென்பதனையறிவாய். நீ இந்த நிலைக்கு வந்த பின்பு என் உதவியை எதிர்பார்ப்பதும் உன் ஆண்தன்மைக்கு ஏற்றதன்று. "தானே தனக்குப் பகைவனும் நட்டானும்" உன்னுடைய மறு கடிதம் பார்த்து வேறு நிகழ்ச்சிகளைப் பற்றித் தெரிவிப்பேன். அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி  ௳ தஞ்சாவூர் 4-8-40 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலம் உண்டாக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. 29-7-40ல் எழுதிய நினது கடிதம் கிடைத்தது. எனக்கு இன்னும் உடம்பு நலமில்லாமலே இருக்கிறது. மிக்சர் மருந்து முன்னரே தீர்ந்து விட்டது. மெண்டாகோவினாலும் பயன் விளைவ தில்லையாதலால், அதனை ஒரு பொழுது மாத்திரம் உண்டு வருகிறேன். வெப்பம் குறைந்து, நல்ல காற்றும் இருக்குமாயின் உடல் நலமடையும். சௌ. ராஜம்மாளை 1-8-40 வியாழனன்று செங்கிபட்டிக்கு அழைத்துப் போயிருக்கிறார்கள் இங்கிருக்கும் பொழுது 3 - ம் வகுப்புப் பாடப்புத்தகம் ஒன்று படித்து முடித்துவிட்டு, 4-ம் பாடப் புத்தகம் ஆரம்பித்தது. அது தவிர, உலக நீதி முழுதும் ஏறக்குறைய மனப்பாடம் செய்து விட்டு, ஆத்திசூடி ஆரம்பித்தது. டிக்டேஷன் எழுதுவதில் வரவரப் பிழைகள் குறைந்து வந்தன. கணக்கில் சாதாரணக் கூட்டல், கழித்தல் பெருக்கல், வகுத்தல்கள் போடத்தெரிந்து கொண்டதுடன், ரூ - அ - பை. யிலும் ஒரு வாறு போட்டு வந்தது. ஒழுங்காகக் கற்பித்து வந்தால் கணக்கில் நல்ல தேர்ச்சியடையக் கூடும். ஒரு நாள் உங்கள் அம்மாள் 'கோவிந்த ராஜா இல்லாமல் வீடு விறீர் என்றிருக்கிறது. என்று சொன்ன பொழுது. 'சின்னமாமாவும் அத்தானும் இல்லாமல் தான் வீடு விறீர் என்றிருக்கிறது' என்று ராஜம் சொல்லிற்றாம். இதிலிருந்து உன்னைப் பற்றி அது சிந்தித்துக் கொண்டிருப்பது. தெரிகிறது. இங்குள்ள வீடு இரண்டு குடும்பம் வசிக்கக் கூடிய பெரிய வீடே. ஆனால் அறைகள் மிகக் குறைவு. கீழுள்ள தெருப் பக்கத்து அறை ஒன்றில் நம்முடைய பெட்டிகள் முதலியன உள்ளன. சன்னலே இல்லாத உள் அறைகள் இரண்டில் பெட்டிகளும், சமையற் சாமான்களும் கிடக்கின்றன. மெத்தையிலும் விரிவான இடம் ஓடுவேய்ந்த கட்டிடமாக உள்ளது. ஆனால் ரூம் ஆக ஒன்று தான் (சிறு சன்னலுடன்) இருக்கிறது. இதிற்றான் சிற்றப்பா கட்டில்கள் போடப் பெற்றுள்ளன. நான் வேறு 2 கண்ணாடிப் பீரோக்கள் ரூ. 40க்கு வாங்கி, 3 பீரோவிலும் புத்தகங்கள் அடுக்கி மெத்தையில் வைத்திருக்கின்றேன். திருச்சியிலுள்ள புத்தகங்கள் வந்தால் இந்தப் பீரோக்களில் இடமில்லை. மெத்தையிலேயே கட்டில் போட்டு, நான் படுக்கை வைத்துக் கொண்டிருக்கிறேன். இரவில் சிறிது நேரம் மெத்தையிலேயே பிள்ளைகளுக்கு ட்யூட்டர் கற்பிப்பார். தென்றல் வீசினால் மெத்தையில் நல்ல காற்று வரும். திரு. வடிவேற் சோழகரவர்களும், திரு. இராமையாவும் அடிக்கடி என்னைச் சந்திப்பார்கள். அது எனக்குப் பெரிய உதவியாகும். நிற்க. உனக்கு அங்கே வீடு அமர்ந்தது தெரிந்தே அதற்கேற்றபடி எல்லாம் பார்க்க வேண்டும் வித்வான் திரு. நாராயணசாமியும் எழுதியிருந்தார். இங்கு ஒரே வீட்டில் இருவரும் தனித்தனி சமைப்பது பொருத்தமில்லை ஆதலால் ஒன்றாகவே சமையல் நடக்கிறது. செலவும் யாதொரு வரையறையுமின்றி இருவரும் செய்து வருகின்றோம். இதனால் சிற்சில சங்கடங்கள் உண்டகு மென முன்னமே கருதினேன். காலத்தின் நிலைமையால் வருந்தத் தக்க இந்தக் கூட்டுறவு ஏற்பட்டுளது. சிற்றப்பா வீட்டுக்கு அச்சாரம் ரூ 25 கொடுத்துளது தானே செலவு செய்து மின்சார விளக்குகள் போட்டு இன்று முடிந்துளது. இதற்கு ரூ 100 - க்கு மேலாகும் இவையெல்லாம் வாடகையில் கழித்துக் கொள்ளப் பெறும். வாரம் ஒரு முறை சிற்றப்பா வந்து கொண்டிருக்கிறது. வந்த பொழுது சர்க்கரை ஏழெட்டு வீசையும், காய்கறி அரைவண்டியும் போலச் சிலவற்றை வாங்கித் தள்ளி விடுகிறது. உங்கள் சின்னம்மாள் பிள்ளைகளுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுப்பதோடு சரி. மற்றச் செலவுகளெல்லாம் உங்கள் அம்மாள் பெட்டியைத் திறந்து எடுத்துப் போய்ச் செலவு செய்தாகிறது. நமது செலவு 3- பங்கு மிகுதிப் பட்டிருக்கிறது. கையிலிருந்த பணம் பெரும்பாலும் தீர்ந்துவிட்டது. இதனை வெளியிற் சொல்லக் கூடவில்லை. அவர்கட்கு அவர்கள் செலவு பெரிதாய்த் தோன்றும். நல்ல காற்றுள்ள இடத்தில் நமக்குத் தக்க தொரு வீடு கிடைக்குமாயின், மன வருத்தம் உண்டாகாமல், ஏதாவதொரு சாக்குச் சொல்லிப் போய் விடலாமென நினைத்து இருக்கிறேன். வருவாய்க்கு இடனில்லாது ஓராண்டு தானும் இங்கே காலந்தள்ள முடியாது. வருவாயின் பொருட்டுப் பாட புத்தகங்கள் சில எழுதி வெளியிட எண்ணியுள்ளேன். அதற்கும் முதலில் பணம் போட்டு ஆக வேண்டும். அடுத்த ஆண்டிலே ஊதியம் எதிர் பார்க்கலாம். திருவருள் எப்படி நடத்துமோ அறிகிலேன். அவ்விடம் வாடகை வீடு பற்றிய செய்தியும் பிறவும் அறிவிக்க. அன்புள்ள, ந.மு. வே பி.கு. நீ செங்கிபட்டிக்கு லெட்டர் எழுதுவதாயின் எல்லோர் பெயரையும் மறவாது தனித்தனி விசாரித்து எழுதுவது அரிது. காலக்கழிவும் ஆகும். 'எல்லோருடைய நலமும்' எனப் பொதுவாக எழுதி விடுவது நல்லது. ஏனையோர்க்கும் விரிவாக எழுதும் நேரத்தைப் பயனுள்ள வேலையிற் செலவிடலாம். காலம் என்பது மிகமிக அருமையான பொருள். அன்புள்ள, ந.மு. வே.  ௳ தஞ்சாவூர் 8-8-40. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுள் அருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. சின்னாளின் முன் நான் எழுதிய கடிதம் கிடைத்திருக்குமே. நினக்கு அண்ணாமலை நகர் விலாசம் இட்டு ஒரு நண்பன் எழுதிய கடிதம் இதனுடன் இருக்கிறது. நீ செங்கிபட்டிக்குக் கடிதம் எழுதிப் பூதலூருக்கு எழுதவே இல்லை என்று வருத்தப்படுகிறார்கள். இதுவரையும் பூதலூருக்கு எழுதாதிருந்தால் உடனே பூதலூர்ச் சிற்றப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதி, அதில் உன் விலாசத்தையும் தெளிவாக எழுதுக. பூதலூர்க் கல்யாணம் ஆவணி ௴ 6உ (21-8-40) நடக்கும். ஆவணியில் சாந்தி செய்வதற்கு ஆகஸ்டு 23உ வெள்ளி, செப்டம்பர் ௴ 6உ வெள்ளி ஆகிய இரண்டு நாட்களே உள்ளன. பிந்திய தேதியில் ஏகாம்பரத்தின் கல்யாணம் திருச்சியில் நடக்கும். ஆதலால் ஆகஸ்டு 23,24 வியாழன், வெள்ளி லீவு எடுத்துக் கொண்டு, புதன் கிழமை மெயிலில் புறப்பட்டு நீ வந்தால் ராஜத்தையும் அழைத்துக் கொண்டு, ஞாயிற்றுக் கிழமையிரவு புறப்பட்டு அங்கே போய்ச் சேரலாம். இல்லாவிடில் ஆவணி ௴ 31உ (15-9-40) ஞாயிற்றுக் கிழமை வைத்துக் கொள்ள வேண்டும். அக்காள் பிள்ளைகள் யாவரும், மாணிக்கமும் இங்கிருப் பதால் அவர்களை விடுத்து, உன் அம்மாளும், நானும் வெளியே வருவது சிரமமாயிருக்கும். அவர்களை இங்கு படிப்பிக்க நேர்ந்ததே பலவித அசௌகரியங்களுக்கும் காரணமாகும். நிற்க. திரு. அ.மு.ச. முதலியாரவர்களிடமிருந்து யாதொரு பதிலும் வரவில்லை. அவர்கள் மனநிலை எவ்வாறுளதோ தெரியவில்லை சம்பந்தன் எப்படியிருக்கிறான் என்பதும் தெரியவில்லை. அவன் மேன்மேல் உனக்கு எழுதிக் கொண்டிருப்பதில் நன்மை யொன்றும் இல்லை. கடவுள் அவனைப் பாதுகாத்தருள்வாராக. அவ்விடம் கால நிலையும், உன் உடல் நிலையும் தெரிவிக்க, வேலை மிகவும் கடுமையாய் இருக்கிறதோ? சௌ. ராஜம் பூதலூர்க் கல்யாணத்திற்குச் செங்கிப் பட்டியிலிருந்து நேரே வந்து சேரக்கூடும். அன்புள்ள, ந.மு. வே ௳ தஞ்சாவூர், 15-8-40 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. 9-8-40 ல் நீ எழுதிய கடிதம் கிடைத்தது. ஆகஸ்டு 'b5 22, 23, 24, 26 தேதிகளுக்கு லீவு கொடுக்க வேண்டி திரு. சிதம்பரம் பிள்ளையவர்களுக்கு நேற்றுக் கடிதம் எழுதி உள்ளேன். ஞாயிற்றுக் கிழமை வீட்டிலே சென்று பார்க்கவும். புதன் கிழமை பிற்பகல் மெயிலில் புறப்பட்டு, வியாழன் காலை நேரே தஞ்சை வந்து அன்று எண்ணெயிட்டு முழுகி, இளைப்பாறிக் கொண்டிருக்கவும். நாங்கள் புதன் கிழமை பூதலூர் சென்று, வியாழன் ஆற்காடு சென்று வெள்ளிக் கிழமை காலை தஞ்சை வந்து சேர்வோம். நீ குறிப்பிட்ட அரிசி முதலிய சாமான்களெல்லாம் இங்கிருந்து கொண்டு போகலாம். இராஜம்மாள் நேற்றிரவு இங்கு வந்து சேர்ந்தது. ஐந்தாறு நாளில் பின்னல் எவ்வளவு கற்றுக் கொள்ள முடியும்? சில மாதம் வரையில் படிப்பில் கவனத்தைச் செலுத்தினால், பின்பு பின்னல் முதலியன பழகிக் கொள்ளலாம். நீ ஆபீசுக்குச் சென்றால், வீட்டில் இராஜத்துடன் பேச்சுத் துணையாய் இருப்பதற்கு யாரேனும் இருக்கின்றார்களா? நீ நடுக்காவேரிக்கு எழுதிய கடிதங்களில் வேலையால் நீ மிகவும் சிரமப்படுவது போல் எழுதியிருக்கின்றாயாம். கீழ்விட்டு அப்புவுக்குத் திருவையாற்றுப் போர்டிங்கில் சேர்ப்பதற்கு எவ்வளவோ முயன்றும் பயனில்லாது போயிற்று. ஆனால் அவனது நடையும் கெடுதியாயுள்ளது எனத் தெரிகிறது. நீ மாடி மேசையில் குளிக்க கண்ணாடி வைத்துச் சென்றாயே, இங்கே புறப்படு முன்பு அதனைக் கவர்ந்து கொண்டு விட்டான். கேட்ட தற்குத் 'தெரியாது' என்று விழித்தான். ஆனால் நாங்கள் வந்த மறு நாளே அதனைப் போட்டுக் கொண்டு திரிந்தானாம். கிருஷ்ணசாமி கேட்டதற்குத் தஞ்சையில் விலைக்கு வாங்கினதாகச் சொன்னானாம். மற்றும் அவனது நடை பலவகையிலும் கெட்டுப் போயிருப்ப தாகத் தெரிகிறது இவை குறித்து நீ அவனுக்கு ஒன்றும் எழுத வேண்டாம். ஆராயாமலே யாருடனும் நெருங்கிய பழக்கம் வைத்துக் கொள்வதும், நம்பி விடுவதும் தீங்கு பயக்கும் என்பதை அறிவித்தற்கே இதனை எழுதினேன். பிராவிடன் பண்டுப் பணத்திற்கு முன்பே மனு அநுப் பினேன். இன்னும் பதில் வந்திலது. இம்மாதம் வரக்கூடும். ஆனால் பல ஆண்டுகளாகச் சிறிது சிறிதாய்ச் சேர்ந்த அதனை உடன் செலவு செய்து விடுவது பொருந்துமா? எனக்கு உடம்பு இன்னும் நலமில்லாமலே இருந்து வருகிறது. விரைவில் நலமுண்டாகக் கடவுள் அருள் செய்வார் என நம்புகிறேன். அன்பர் திரு. மருதப்பச் செட்டியாருக்கு என் அன்புள்ள உசாவுதலைத் தெரிவிக்கவும். நீ வரும் பொழுது பெட்டிகளைப் பத்திரமாய் வைத்து விட்டு கொஞ்சம் மலைக்காய்கறிகள் வாங்கி வரலாம். அன்புள்ள, ந.மு. வே  ௳ பண்டித ந.மு வேங்கடசாமி நாட்டார், 801, வெங்கடேசப்பெருமாள் கோயில் தெரு, தஞ்சாவூர் தேதி: 2-9-1940 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவன் அருளால் எல்லா நலங்களும் உண்டாக இவண் யாவரும் நலம். அவண் நீயும், சௌ. ராஜம்மாளும் நலமாக இருப்பதற்கும், உன் அன்பர்கள் நலத்திற்கும் எழுதுக. நீ சென்றவுடன் எழுதிய லெட்டர் கிடைத்தது. திருச்சியில் முன்பே பழக்கமுடையவர்கள் அங்கே அண்மையில் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இப்பொழுது வாடகை வீட்டில் குடிபோய் வசித்து வருகிறீர் களா? எல்லாம் வசதியாக இருக்கின்றனவா? இராஜம் குளிர் தாங்கிக் கொள்கிறதா? மகிழ்ச்சியாய் இருக்கிறதா? அடிக்கடி பேச்சுத்துணையாக வீட்டில் யாரேனும் இருந்து வருகிறார்களா? நீ உன் நலத்தைப் பேணிக் கொள்வதுடன் இராஜத்தை நன்கு பாதுகாத்து வர வேண்டும். நீங்கள் இருவரும் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருந்து வருவதுடன். அறிவினால் எதனையும் சிந்தித்து அறியும் ஆற்றலும், ஊக்கமும் உடையவர்களாய் இருத்தல் வேண்டும். நீ திருக்குறளை முதலில் ஒரு முறை விரைவாகப் படித்து விட்டு, அதன் பின் மற்ற நூல்களையும் படிக்க வேண்டும். இராஜத்திற்குக் கல்வி கற்பிப்பதில் சோர்வு இருத்தல் கூடாது. நீதி நூல்களும், நல்ல கதைகளும் கற்கச் செய்யலாம். ஆபீஸ் நிலைமையை தெரிவிக்க. திரு. ஏகாம்பரத்தின் திருமணப்பத்திரிகை நேற்று முன்னாள் வீட்டு விலாசத்திற்குத் திருப்பி விட்டேன்: அது கிடைத்ததா? வெள்ளிக்கும்பா ஆற்காட்டிலிருந்து கிடைத்து விட்டதாக இன்று கடிதம் வந்தது. அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி  ௳ பண்டித ந.மு வேங்கடசாமி நாட்டார். 801, வெங்கடேசப்பெருமாள் கோயில் தெரு, தஞ்சாவூர் தேதி: 4-9-1940 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குச் சிவபிரான் அருளால் நலங்கள் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் உங்கள் நலம் தெரிவிக்க. நின் கடிதம் கிடைத்தது. அதே நாளில் நான் எழுதிய கடிதமும் கிடைத்திருக்குமே? 'சாந்தி' இதுவரை நடந்திராவிட்டால் 6-9-40 வெள்ளி இரவு 10 மணிக்குள் நேரம் நன்றாயிருக்கிறது. ஏகாம்பரத்தின் கல்யாணத்திற்காக நான் நாளைப் பகல் 1 மணிக்குத் திருச்சிக்குப் புறப்படுகிறேன். சனிக்கிழமை திரும்பு வேன். 11-9-40 ல் அன்பர் R.V. ராஜூ நாயுடுவின் புதல்விக்குத் திருமணம் என்று கடிதம் வந்துள்ளது. அதன் பொருட்டு 10 உ செவ்வாய் இரவு கோயம்புத்தூருக்குப் புறப்பட வேண்டும். கூடுமாயின் அப்படியே நீலகிரி வந்து திரும்பலாமென நினைக்கிறேன். ஆனால் சிற்சில புத்தகங்கள் துரிதமாக வெளியிடும் எண்ணம் இருத்தலால் நான் விரைவில் திரும்புதல் வேண்டும். நலத்திற்கும், விசேடங்கட்கும் எழுதுக. அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி  ௳ பண்டித ந.மு வேங்கடசாமி நாட்டார், 801, வெங்கடேசப்பெருமாள் கோயில் தெரு, தஞ்சாவூர் தேதி: 5-9-1940 இரவு மலைக்கோட்டை, அன்புள்ள நடராஜனுக்கு நலமுண்டாக. இன்று மாலை இங்கு வந்தபின் கோவிந்தராஜ பிள்ளை யைப் பார்த்தேன். ரொட்டீன் கிளார்க் வேலைக்கு விளம்பரஞ் செய்து இருந்ததைப் பார்த்து மனு வருமென்று எதிர்பார்த் திருந்ததாகவும், 10 - ம் தேதிக்குள் மனு வந்து சேர வேண்டும் என்றும், நாளைத் தபாலில் உனக்கும் பாரம் வாங்கியநுப்புவ தாகவும் சொன்னார். இதற்குச் சம்பளம் ரூ. 25 - 1½ 40, ஆக ஆரம்பச் சம்பளம் மிகக் குறைவாக இருந்த போதிலும் முன்னுக்கு வரக்கூடிய நல்ல பிரிவுகளில் பார்த்து வேலை ஏற்பாடு செய்யலா மென்றும், இப்படியே தான் பலரும் மேல் நிலைக்கு வந்துள்ளார்கள் என்றும், செலக்ஷன் செய்து வைத்துக் கொண்டால் பின்பு நம் விருப்பம் போல் பார்த்துக் கொள்ளலாம் என்றும் இது தவறினால் பின்பு ஒரு வருஷத்திற்கு மனுச் செய்ய இடமிராதென்றும் கூறினார். ஆபீஸ் மூலமாக மனு அநுப்ப வேண்டிய அவசியம் இல்லை யென்றும், ஞாயிற்றுக் கிழமையாவது (ரிஜிஸ்டர் செய்யாவிட்டாலும்) மனு அநுப்பினால் போதும் என்றும். அன்று தவறினால் எக்ஸ்பிரஸ் டெலிவரி லெட்டராகவேனும் அநுப்ப வேண்டும் என்றும் மிகுந்த அக்கரையோடு கூறி, மனுப்பாரம் அநுப்புவதற்கு உனது ஆபீஸ் விலாசத்தைக் குறித்து வைத்துக் கொண்டார். இவ்வேலை கிடைப்பினும் போதும் என்று முன்பு அவருக்கு எழுதியிருந்தேன். செலக்ஷன் ஆகிவிட்டால் பின்பு நம் வசதிபோற் பார்த்துக் கொள்ளலாம். ஆதலால் கூடுமாயின் சனிக்கிழமையே மனு அநுப்பி வைக்கவும். கடிதம் கட்டாயம் கிடைக் வேண்டுமென்ற எண்ணத்தால் ஆபீஸ் விலாசத்திற்கும், வீட்டுவிலாசத்திற்கும் கடிதம் எழுதுகிறேன். மனுப் போட்டு உடன் கடிதம் எழுதுக. சனிக்கிழமைத் தபாலில் ஆபீஸில் ஒரு காலி பாரம் வந்து சேராவிட்டாலும் கோவிந்தராஜலு, செக்ரட்டரி, ஸ்டாப் செலக்ஷன் போர்டு, திருச்சி என்ற விலாசத்திற்கு உடன் தந்தி கொடுத்து மனுப் பாரம் அநுப்புமாறு கேள். ௳ பண்டித ந.மு வேங்கடசாமி நாட்டார், 801, வெங்கடேசப்பெருமாள் கோயில் தெரு, தஞ்சாவூர் தேதி: 5-9-1940 இரவு மலைக்கோட்டை, அன்புள்ள நடராஜனுக்கு நலமுண்டாக. இன்று ஆபீஸ் விலாசத்திற்கு எழுதியுள்ளேன். அதன் பிரதி இன்று மாலை கோவிந்தராஜ பிள்ளையைப் பார்த்தேன். அவர் ரொட்டீன் கிளார்க் வேலைக்கு மனு வருமென்று எதிர் பார்த்திருந்ததாகவும், 10 - ம் தேதிக்குள் மனு வந்து சேர வேண்டும் என்றும் நாளை உனக்கு மனுப்பாரம் வாங்கி அனுப் புவதாகவும் மனுவந்தால் தாம் செலக்ஷன் செய்து வைத்து விடுவதாகவும், இதன் சம்பளம் ரூ.25-1½-40 - ஆக இருந்த போதிலும், இதில் இருந்து கொண்டு முன்னுக்குவருவது சுலபம் என்றும், நல்ல பிரிவுகளில் பார்த்து வேலை போடலாம் என்றும், எதற்கும் செலக்ஷன் செய்து வைத்துக் கொண்டால் பின்பு நம் விருப்பம் போல் பார்த்துக் கொள்ளலாம் என்றும், ஞாயிற்றுக் கிழமையாவது மனுப் போட்டுவிட வேண்டும் என்றும், தவறினால் எக்ஸ்பிரஸ் டெலிவரியாக அநுப்ப வேண்டும் என்றும் கூறி, உனது ஆபீஸ் விலாசத்தை வாங்கி வைத்துக் கொண்டார். பாரம் வந்தவுடன் மனு எழுதி அநுப்பி வைக்க. ஆபீஸ் மூலமாக அன்றியே மனு அநுப்பலாம் என்றார். மனு அநுப்பிவிட்டு, உடன் கடிதம் எழுதுக. அன்புள்ள, ந.மு. வே  ௳ பண்டித ந.மு வேங்கடசாமி நாட்டார், 801, வெங்கடேசப்பெருமாள் கோயில் தெரு, தஞ்சாவூர் தேதி: 8-9-1940 அன்புள்ள நடராஜனுக்குக் கடவுளருளால் நலமுண்டாக இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. நின் கடிதம் இன்று கிடைத்தது. நான் 5-9-40 மாலை திருச்சியில் Mr. கோவிந்தராஜப் பிள்ளையைப் பார்த்து, மறு நாள் உனக்கு மனுப்பாரம் அநுப்பச் சொல்லிவிட்டு, நான் அன்றிரவே உனக்கு வீட்டு வீலாசத்திற்கும், ஆபீஸ் விலாசத் திற்கும் 2 கடிதம் விபரமாக எழுதி, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மேல் பாலக்கரைத் தபாலாபீசில் போடும்படி சபைப் பையனிடம் கொடுத்தேன். அவனும் போட்டுவிட்டதாகச் சொன்னான். சனிக்கிழமை உனக்குக் கட்டாயம் கிடைக்க வேண்டுமென்ற எண்ணத்தால் இரண்டு விலாசத்திற்கும் எழுதி னேன் அது கிடைக்காதது வியப்பாயிருக்கிறது. இன்றேனும் கிடைத்திருந்தால், இன்று மனுப்போட்டிருப்பாய் என்று நினைக்கிறேன். போடாதிருந்தால், நாளைத் தபாலில் தவறாது அநுப்பவும். எக்ஸ்பிரஸ் டெலிவரிக்குரிய சார்ஜ் செலுத்தி, அவ்வாறு அநுப்புவது நலம். செவ்வாய் இரவு இங்கிருந்து புறப்படுகிறேன். வெள்ளி அல்லது சனிக்கிழமை நீலகிரி வரலாமென நினைக்கிறேன். அன்புள்ள, ந.மு. வே  ௳ பண்டித ந.மு வேங்கடசாமி நாட்டார், 801, வெங்கடேசப்பெருமாள் கோயில் தெரு, தஞ்சாவூர் தேதி: 18-9-1940 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. நான் நேற்று மாலை 3 மணிக்கு இவண் இனிது வந்து சேர்ந்தேன். ராஜூ நாயுடுவின் புதல்வர் இராமசாமி ஒரு காரிய மாகத் திருச்சிக்கு வந்தார். அவருடன் நேற்று காலை 5 மணிக்கு காரில் புறப்பட்டு 10 - 30 மணிக்குத் திருச்சி ஐங்ஷன் வந்து, பின் புகைவண்டியில் வந்தேன். இன்று நீர்க்கோர்வை பெரும்பாலும் குறைந்து விட்டது. நாளை முழுதும் குணமாகிவிடும். உன் அம்மாளுக்கும் மயக்கம் இப்பொழுது இல்லை. உனக்கு விதை வலி இப்பொழுது எப்படியிருக்கிறது? அது பற்றி அசட்டையாய் இருக்கக்கூடாது. ஏதேனும் தொந்தரை ஏற்பட்டால் உடனே டாக்டரிடம் காட்டி. ஆலோசிக்க வேண்டும். நானும் மருந்து விசாரித்துப் பார்க்கிறேன். திரு. இராஜம்மாள் அவ்வளவு தூரத்தில் வந்து தனிமை யாகத் துணிவுடன் இருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. வேறு எந்தப் பெண்களும் அப்படி வந்திருக்க மாட்டார்கள். இது ஒருவாறு மகிழ்ச்சியளிப்பினும் மனத்திற்குச் சங்கடத்தையும் உண்டாக்குகிறது. வீடு ஒரு வரிசையில் அமைந்து மக்கள் புழங்கக் கூடிய வகையிலின்றித் தனித்திருப்பதும், அதில் காலை 8 1/2 மணிமுதல் இரவு 8 மணி வரையில் இராஜம் தனியாக இருந்து கொண்டிருப்பதும் நினைக்கும் பொழுது மனம் சங்கடப்படு கிறது. மருதப்பச்செட்டியார். வீட்டினர்களும், இராதா கிருஷ்ணன் தாயாரும் அங்கே இருந்து கொண்டிருந்தாலும் இவ்வளவு கவலைப்படுவதற்கு இடமிராது. எனினும் கடவுளின் பாதுகாவல் உங்களுக்குப் பூரணமாய் இருக்கும் என்றும், விரைவில் வசதியான நிலைமை ஏற்படும் என்றும் நம்புகிறேன். சூப்பர்வைசர் செலக்ஷன் சம்பந்தமான நிகழ்ச்சிகளைத் தெரிவிக்க. அன்பர் திரு. மருதப்பச் செடியார் உனக்கு வேண்டிய வசதியெல்லாம் செய்து கொடுத்து அடிக்கடி கண்காணித்து வருவதும், இராதகிருஷ்ணன் உன்னுடன் இருப்பதும் ஆறுதல் அளிக்கின்றன. அவர்கட்கு என் அன்பினைச் சேர்பிக்க. இனி மழைக்காலமாதலால், இராஜமும், நீயும் கவனத்துடன் உடம்பைப் பேணிக் கொள்ளுங்கள். அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி திருச்சி, ஜங்ஷனில் நேற்று நான் வண்டி ஏறுதற்கு இடையே 2 மணி நேரம் இருந்தமையால் கோவிந்தராஜப் பிள்ளையை ஆபீஸில் போய்ப் பார்த்தேன். உன் மனு குறித்த காலத்தில் வந்து விட்டதென்றும், உன்னைத் தேர்ந்தெடுத்து விடுவதாகவும் தெரிவித்தார். இங்கே உன் அம்மாளுக்கு, எவ்வளவு சம்பளமானாலும், நீங்கள் நீலகிரியில் இருப்பது சிறிதும் பிடிக்கவில்லை. திருச்சியில் ஒரு வேலை பார்க்கிறாய் என்று பெயரிருந்தால் போதும் என்று சொல்கிறது. இராஜத்தின் அம்மாள் கனவிலும் நினைவிலும் இதே கவலையாய் இருக்கிறதாம். ஒரு வேலை வரும் பொழுது அதை வேண்டாமென்று, சும்மா இருக்கக் கூடாது என்று எண்ணியே, நீலகிரிக்கு உன்னை அநுப்பினோம். மேலும் நீலகிரி வேலை ஸ்திரமானதாகவே இருந்தாலும், வேறிடத்திற்கு டிரான்ஸ்பர் செய்யவும் கூடியது. ஆதலால் அங்கே சூப்பர்வைசர் பதவி கிடைப்பினுங்கூட, ரயில்வேயில் வேலை கிடைப்பின் அதற்கு வந்துவிடுவதே பொருத்தமாகும். ஆரம்பத்தில் சம்பளம் சுருக்கமாக இருந் தாலும். அதிர்ஷ்டம் இருந்தால், விரைவில் உயர்ந்த சம்பளமும் செல்வாக்கும் உண்டாகக் கூடும், ஏஜெண்டு ஆபீஸில் சேர்ந்து விட்டால் முன்னேறுவதற்கு வழியுண்டென்றும், அப்படியே பார்த்துச் சேர்த்துவிடுவதாகவும் திரு.கோவிந்தராஜப்பிள்ளை கூறினார். அக்டோபர் 19உ தாம் டில்லிக்குப் போவதாகவும், அதற்கு முன்பே செலக்ஷன் முடிந்து விட வேண்டும் என்றும் அக்டோபர் முதல் வாரத்திலேயே முதல் Batch ல் உன்னை ‘இன்டர்வ்யு’வுக்கு வரும்படி கடிதம் போடுவதாகவும், ஒரு வாரம் சாவகாசம் இருக்கும்படி கடிதம் போடப்படும் என்றும் கூறினார். அப்பொழுது நீ திருச்சி வருவதற்குத் தயாராய் இருக்க வேண்டும். நீ வருகிற தேதியைக் குறிப்பிட்டு முன்னர் எனக்கு எழுத வேண்டும். நான் அப்பொழுது நடுக்காவேரியில் இருக்க நேரினும் நேரும். கூடுமாயின் நானும் திருச்சி வந்து பார்க்கலாம். இராஜத்தை இராதாகிருஷ்ணன் வீட்டிலாவது பத்திர மாய் இருக்கச் செய்து வரவேண்டும். பனிக்காலம் ஆரம்பிப் பதற்கு கடவுள் உங்களைத் திருச்சிக்கு அழைப்பர் என நம்புகிறேன். அன்புள்ள, ந.மு. வே இராஜம் அணிந்திருக்கிற அட்டிகைப் பதக்கத்தின் முத்துக் கட்டியிருக்கும் கம்பிகள் பவுன். ஆதலால் ஏதாவது இற்று விழுந்தால் பத்திரமாய் எடுத்து வைத்திருக்கும்படி உன் அம்மாள் சொல்கிறது.  ௳ பண்டித ந.மு வேங்கடசாமி நாட்டார், 801, வெங்கடேசப்பெருமாள் கோயில் தெரு, தஞ்சாவூர் தேதி: 12-10-1940 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவன் அருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நீயும் சௌ. ராஜமும் நலமாயிருத்தலை அறிய விரும்புகின்றோம். அநுப்பிய பார்சல் பெற்றுக் கொண்டாயா? செங்கிபட்டி யிலிருந்து இராஜகோபால் எழுதிய கடிதத்தில், ராஜத்திற்குக் கழுத்திலிருந்த தேமல் உடம்பு முழுதும் பரவியிருக்கிறதென்று முத்தாண்டிப்பட்டி வைத்தியரிடம் மருந்து கேட்டு நீங்கள் எழுதி இருந்ததாகவும், காற்று, மழை இல்லாத காலத்தில் 40 நாள் மருந்துண்டு பத்தியம் பிடிக்க வேண்டுமென்று அவர் சொன்ன தாகவும் எழுதியிருந்தது. இச்செய்தி வருத்தத்தைத் தருகிறது. ராஜத்திற்கு உடம்பு முழுதும் கறுப்பாய் வில்லை வில்லையாகப் படர்ந்திருக்கிறதா? அரிப்பு இருக்கிறதா? விபரமாய் எழுதவும். மேக நீர் சம்பந்தமானது குளிர் மிகுதியால் அரிக்கப்படுவது இயற்கை. தமிழ் மருந்து உண்பதைப் பின்பு பார்க்கலாம். இப்பொழுது கல்கத்தா மருந்து ஒன்று வருவித்துக் கொடுக்கவும். "அமிர்தவல்லி கஷாயம்-Amritaballi Kashaya” இதன் விலை ரூ, 1-8-0 தபாற் செலவு அணா 11. (Kaaviraj N. N. Sen&Co Ltd, 18-19-19, Lower Chitpur Road, Calcutta. என்ற விலாசத்திற்கு எழுதுக. சருமத்தைப் பற்றிய வியாதிகட்கு நல்லது. இதில் முழுதும் குணமாகாவிட்டால், பின்பு, ‘சோணித சோதகம்’ என்பது வருவித்துண்ணலாம். தீபாவளிக்கு உங்கட்கு எத்தனை நாள் லீவு உண்டு, நீங்கள் இங்கே வரக்கூடுமா? தீபாவளிக்கு முன்னாவது பின்னாவது 2 நாள் லீவு சேர்த்து எடுத்துக் கொண்டு வந்தால் நலமாயிருக்கும். நான் திங்கட்கிழமை திருச்சியில் ஓற் சொற்பொழிவு செய்து விட்டுச் செவ்வாயில் இங்கு திரும்பி, 17-10-40 வியாழன் இரவு சென்னைக்குப் புறப்படுவேன். சென்னையில் நடக்கும் தமிழர் மத மகா நாட்டிற்காகச் செல்வேன். அன்பர்கள் நலமென நம்புகிறேன். எல்லாச் செய்திகட்கும் விபரமாக உடன் பதில் எழுதுக. அன்புள்ள, ந.மு. வே  ௳ பண்டித ந.மு வேங்கடசாமி நாட்டார், 801, வெங்கடேசப்பெருமாள் கோயில் தெரு, தஞ்சாவூர் தேதி: 23-10-1940. சௌ. ராஜம்மாள் சுகமாயிருக்கிறதா? அதற்கு உடம்பில் உண்டாகிய கரும்புள்கிகள் இப்பொழுது எப்படியுள்ளன? உனக்குப் பின்பு விதை வீக்கமும் வலியும் உண்டாகவில்லையே? செங்கிபட்டியிலிருந்து சமீபத்தில் ஏதேனும் கடிதம் வந்ததா? அவர்கள் வந்து ஏதாவது தெரிவிப்பார்கள் என எதிர்பார்க் கிறோம். இன்னும் ஒரு வரும் வரவில்லை. நிற்க- சூப்பர்வைசர் வேலை பற்றி எவ்வாறு முயற்சி செய்திருக்கிறாய்? அவ்வேலை கிடைக்காவிடில் கிளார்க்காக இருந்து காலங்கழிப்பது சிரமமாக இருக்கும். நினது முந்திய கடிதம் கிடைத்த அன்றே திரு. இராமசாமி பிள்ளை அவர்கட்குக் கடிதம் எழுதினேன். நான் அங்கு வந்தபொழுது திரு. A. C. பிள்ளையிடம் பேசிக் கொண்டிருந்த காலை, அவர், தன் புதல்வனுக்கு நாலாயிரம் ஐயாயிரம் கொடுத்து வேலை வாங்க வேண்டுமென்று பலமுறை கூறினார். பாக்டரியிலும் அவ்வாறு செய்தால் வேலை கிடைக்கு மென்று குறிப்பிடுவதற்காக அங்ஙனம் சொன்னாரோ என்ற ஐயம் உண்டாகிறது. ஜாக்கிரதையாக இதனை விசாரித்துப் பார்க்க வேண்டும். இக்கடிதத்தை கிழித்து விடவும். பார்சலில் 3 புல் சூட்டுகளும், ஒரு அரை ட்யாரும், 3 ஜோடி கம்பளி சாக்ஸ்களும் இருந்தனவாக ஞாபகம். அவ்வாறு இல்லா விட்டால் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதற்கு அத்தானிடம் எழுதிக் கேட்கவும் தீபாவளிக்கு உனக்கும் ராஜத்திற்கும் புதிய உடைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். பதில். அன்புள்ள, ந.மு. வே  ௳ பண்டித ந.மு வேங்கடசாமி நாட்டார், 801, வெங்கடேசப்பெருமாள் கோயில் தெரு, தஞ்சாவூர் தேதி: 27-10-1940. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலமுண்டாக, இவ்விடம் யாவரும் நலம். அவ்விடம் நலம் தெரிவிக்க. நின் கடிதம் இன்று கிடைத்தது. செங்கிபட்டியிலிருந்து யாரேனும் வருவார்கள்; அல்லது யாதேனும் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தோம். இதுவரையில் ஒன்றுமில்லை. நானும் நாடொறும் வெளியூர்களுக்குப் போய்க் கொண்டிருந் தமையால் உங்கட்கு ஒன்றும் அநுப்ப முடியவில்லை. வெள்ளிக் கிழமை திருக்காட்டுப்பள்ளி ஹைஸ்கூலில் ஒரு சொற்பொழிவு செய்துவிட்டு வந்தேன். நேற்றுப் பகல் இரவு முழுதும் மிகுதியான நீர்க்கோர்வையும் இருமலுமாக இருந்தது. இன்று உன் கடிதம் பார்த்தவுடன் உடைகள் எடுத்து வர இராமையாவையும் சிற்றப்பாவையும் கடைக்கு அநுப்பியுள்ளேன். நான் தபால் பார்சலில் ஆபீஸ் விலாசத்திற்கு அநுப்பி வைக்கிறேன். 5 ரூபாய் மணியார்டரும் அநுப்புகிறேன். செவ்வாய் கிழமை அருவங்காட்டில் பார்சலைப் பார்த்து வாங்கிப் பண்டிகைக்குப் புதிய உடை தரித்துக் கொண்டு மகிழ்ச்சியாய் இருங்கள். விதை வீக்கம் அறிந்து வருந்துகிறோம். அங்கே டாக்டரிடம் காட்டி ஆலோசனை கேள். கூடிய விரைவில் அதற்கும் பரிகாரம் செய்ய வேண்டும். மஹாராங்நாதிக் வாதம். சந்த்ர பிரபாகுளிகை, யோகராஜகுக்குலு முதலிய மருந்துகள் இதற்கு ஏற்றவை. ஜண்டுவின் காட்லாக் வாங்கிப் பார்க்கவும். இங்கே அது காணப்படவில்லை. பார்சலில் புடவை 1, ஜாக்கெட் துணி 2 ஷர்ட் துணி 1, வேஷ்டி 2 உள்ளன. எல்லாவற்றிற்கும் பதில். அன்புள்ள, ந.மு. வே  ௳ பண்டித ந.மு வேங்கடசாமி நாட்டார், 801, வெங்கடேசப்பெருமாள் கோயில் தெரு, தஞ்சாவூர் தேதி: 6-11-1940 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் எல்லா நலங்களும் உண்டாக. இவண் யாவரும் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. 31-10-40ல் எழுதிய நினது கடிதம் கிடைத்தது. பண்டிகை அன்றைக்கு உங்கட்குப் புதிய உடைகள் கிடைக்காமற் போனது வருத்தமே. இராஜகோபால் 29-10-40 செவ்வாய் இரவு வந்து தீபாவளிக்கு என்று கொஞ்சம் பணம் கொடுத்துச் சென்றார் பயிர்ச் செலவு வேலையால் முன்னமே வரக்கூடவில்லை என்றார். ஆதலால் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று ராஜம் வருத்தப்படவேண்டாம். இங்கே 10 நாட்களாக அடை மழையாய் வெய்யிலே இல்லாதிருக்கிறது. நேற்றிரவு முழுதும் கடுமையான மழை. இப்பொழுது அங்கே எப்படியிருக்கிறதோ என்று கவலையாய் இருக்கிறோம். எனக்கு இரவில்மட்டும் சிறிது இருமல் இருக்கிறது. மிகுதி யான தொந்தரை இல்லை. நீர்க்கோர்வைக்கு ஆஸ்பிடல் மருந்து உண்கின்றேன். நீ எழுதியதையும் செய்து உண்டு பார்ப்பேன். களவுபோன கடியாரத்தைப் பற்றிப் பின்பு ஒன்றும் தெரிய வில்லையே? திரு. அ. மு. ச. முதலியாரவர்கள் 23-10-40ல் எழுதிய கடிதத்தில், தமக்கு அதற்குமுன் ஒரு மாதம் தொடங்கி இரத்தப் போக்கு ஏற்பட்டு, அதனால் உடம்பு மெலிந்து விட்டதாகவும், 22-10-40முதல் 1 ½ மாதத்திற்கு மெடிகல்லீவு எடுத்திருப்பதாகவும் எழுதியிருந்தார்கள். அவர்களைக் கூடுமாயின் தஞ்சைக்கு வர வேண்டுமென்று எழுதியிருந்தேன். இதுவரையில் பதில் ஒன்றும் வரவில்லை. சூபர்வைசர் செலக்ஷன் பற்றி ஒன்றும் தெரியாதது கவலையாய் இருக்கிறது. அன்பர் மருதப்பச்செட்டியார் வீட்டு ஜனங்கள் அங்கு வந்திருக்கலாமென நினைக்கிறேன். பதில். அன்புள்ள, ந.மு. வே  ௳ பண்டித ந.மு வேங்கடசாமி நாட்டார், 801, வெங்கடேசப்பெருமாள் கோயில் தெரு, தஞ்சாவூர் தேதி: 17-11-1940 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. சின்னாளின் முன் நீ எழுதிய கடிதம் கிடைத்தது. குளிர் மிகுதியில் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சௌ. ராஜம்மாள் இப்பொழுது என்ன படிக்கின்றது? கணக்கில் அதற்கு அறிவு செல்லுவதால் அதனையும் பயின்று வருதல் நலமே. நீ எடுத்துச் சென்ற புத்தகங்களில் ஏதேனும் படிக்கின்றாயா? வெள்ளாளர் பிரம்பூர்க் கோவிந்தனிடம் உன்னைப் பற்றியும், சௌ. ராஜத்தைப் பற்றியும் கூறினேன். மூன்று நாள் மருந்துண்டு ஒரு வாரம் சிறிது பத்தியமாக இருந்தால் நலமாகும் என்று கூறினான். நீங்கள் இங்கு வருங்காலத்தில் மருந்துண்ணலாம். டிசம்பரில் உங்கட்கு எது முதல் எது வரை லீவு இருக்கும்? எப்படியும் பொங்கலுக்கு நீங்கள் வரவேண்டும். அமெரிக்காவிலிருந்து சென்ற வாரம் வந்த கடிதத்தை நான் ஊர் போயிருந்தமையின் சிற்றப்பா உடைத்துப் பார்த்ததாம். முன்பே பெரும்பாலும் கிழிந்திருந்ததாம். அதனை இதனுடன் வைத்திருக்கிறேன். பல அலுவல்களால் எனக்குச் சிறிதும் ஒழி வில்லை. இது கிடைத்த விபரத்திற்கு எழுதுக. அன்புள்ள, ந.மு. வே  ௳ பண்டித ந.மு வேங்கடசாமி நாட்டார், 801, வெங்கடேசப்பெருமாள் கோயில் தெரு, தஞ்சாவூர் தேதி: 5-12-1940 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலமுண்டாக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. 21-11-40ல் நீ எழுதிய கடிதம் கிடைத்தது. நீ எழுதியிருந்த செய்தியை விசாரித்துத் தெரிந்து எழுதலாமென்றிருந்ததில் காலம் தாழ்ந்தது. அது இன்னும் தெரியவில்லை. விசாரிக்கச் சொல்லி வக்கீல் சுயம்பிரகாசத்திடம் கூறியுள்ளேன். தெரிந்த பின் எழுதுவேன். தஞ்சையில் டிப்டி இல்லை. D. S. P. யே உண்டு. நீங்கள் பொங்கலுக்குத்தான் அவசியம் வரவேண்டும் உங்களைப் பார்க்காதிருப்பது உன் அம்மாளுக்கு மிகுந்த ஏக்கமாய் இருக்கிறது. செங்கிப்பட்டியிலும் அப்படியே இருப்பார்கள். நீங்கள் வரும் பொழுது செங்கிப்பட்டிக்கு ஒரு நாளாவது போய் வர வேண்டும். ஜனவரி 'b5 10, 11, 15, 16 ஆகிய நான்கு நாட்களுக்கும் லீவு எடுத்துக் கொண்டு 8 ம் தேதியே புறப்பட்டு வரவேண்டும். வருகிற வண்டியைச் செங்கிப்பட்டிக்குத் தெரிவித்து, வரும் பொழுதே நேரில் செங்கிபட்டிக்குப் போய் ஒருநாள் இருந்து விட்டுத் தஞ்சைக்கு வரவேண்டும். ஒருக்கால் 8 ம் தேதி புறப்பட முடியாவிடில் பின்பாவது ஒரு நாள் சேர்த்து 11, 15, 16, 17 ௳ லீவு எடுத்துக் கொண்டு 10 ம் தேதி புறப்பட்டு நேரே தஞ்சாவூர் வர வேண்டும். லீவின் பொருட்டு திரு. சிதம்பரம் பிள்ளைக்கு நான் கடிதம் எழுத வேண்டுமாயினும் எழுதுவேன். வரும் பொழுது ஓவர் சார்ஜ், கொடுக்காமல் கொண்டுவரும் அளவு காய்கறி வகை கொண்டு வரவும். வித்துவான் நாராயணசாமி அண்மையில் வந்திருப்பது குறித்து மகிழ்கின்றேன். பாப்பு ரெட்டியார் பெரிய டாக்டர் ஆதலின் அவர் அங்கிருக்கும் பொழுது தைரியமாய் இருக்கலாம். நான் சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிக் கொண்டிருக் கிறேன். மற்றும் பலவகை அலுவல்கள் என்னைச் சூழ்ந்து கொண்டிருக் கின்றன. ஓய்வு சிறிதும் இல்லை. கோர்ட்டு அலுவலாக திருவை யாற்றுக்குப் புறப்படும் அவசரத்தில் இக்கடிதம் எழுதலானேன். சௌ. ராஜம் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறதா! இங்கே நான்குநாள் விட்டிருந்து மீண்டும் மழை தோன்றியிருக்கிறது. அங்கு எப்படி? எல்லோருடைய நலத்திற்கும் உடன் கடிதம் எழுதுக. அன்புள்ள, ந.மு. வே  ௳ பண்டித ந.மு வேங்கடசாமி நாட்டார், 801, வெங்கடேசப்பெருமாள் கோயில் தெரு, தஞ்சாவூர் தேதி: 12-12-1940 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குச் சிவபிரான் திருவருளால் அனைத்து நலனும் உண்டாக. இவண் யாவரும் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. முன்னர் நீ எழுதிய கார்டு பார்க்கு முன்பு நானெழுதிய கடிதம் கிடைத்திருக்குமே? சௌ. இராஜம்மாள் நன்கு படித்து வருகிறதா? கடிதம் எழுதக் கூடிய ஆற்றல் ஏற்பட்டுள்ளதா? ஆங்கிலப் பயிற்சியும் பெற்று வருமென நம்புகிறேன். நீ தமிழ் நூற்கள் படித்து வருகின்றாயா? நீலகிரியின் காலநிலை எவ்வாறு உள்ளது? உன் அம்மாளுக்குச் செரிமானம் இல்லாமல் நேற்று இரவில் இருந்து பலமுறை வயிற்றுப் போக்கும், வாந்தியும் ஏற்பட்டன. இன்று நண்பகலிலிருந்து குணமாகிவிட்டது. இன்று கார்த்திகை விரதமாதலின் இரவு பழமும் பாலுமே உணவாக இருக்கும். செங்கிப்பட்டியில் திதிக்கு ஒருவரும் போக முடியவில்லை. சிதம்பரத்தில் என்னைப் பாராட்டுவதற்கு S. K. J. பெரிதும் முயன்று வருகின்றார். அவர் அச்சிட்ட அறிக்கையொன்று இதனுடன் இருக்கிறது. எனது உருவப்படம் பலரால் விரும்பப்படுகிறது. நீ இங்கு வரும் பொழுது பழைய தனிப் படத்திற்குப் பிரதியெடுத்தலும், புதுப் படம் பிடித்தலும் வேண்டும். புகைப் படத்தைப் பற்றிக் கட்டுரைகள் எழுதலாமென்று சொன்னாயே. இப்பொழுது எழுதுதற்கு அவகாசமுண்டா? சுயம்பிரகாசம் இன்னும் விசாரித்துச் சொல்லவில்லை. உங்கள் நலத்திற்கு உடன் பதில் எழுதுக. உன் சோழகன் பட்டிப் பெரியம்மாளுக்கு நோய் கடுமை யாக இருக்கிறது. மற்று, இங்கு யாவரும் நலமே. அன்புள்ள, ந.மு. வே  ௳ பண்டித ந.மு வே. 801, வெங்கடேசப்பெருமாள் கோயில் தெரு, தஞ்சாவூர் தேதி: 19-12-1940. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் எல்லா நலங்களும் உண்டாக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. 14-12-40ல் எழுதிய நினது கடிதம் கிடைத்தது. புகைப் படங்களும் இருந்தன. எனது தலைப்பாகையின் மீது கோடு போட்டிருப்பது இயற்கைக்கு மாறாயுள்ளது. நிற்க- திரு. சிதம்பரம் பிள்ளைக்குக் குறிப்பிட்டவாறே இன்று கடிதம் எழுதியுள்ளேன். அன்புமலர் ஒரு கடிதமும் அதனுடன், வைத்துள்ளேன். சில தாள்களே அச்சிட்டு இங்கு இராமையன் முதலியோர்க்கு வந்தமையால் அது மிகுதியாக அநுப்புவதற் கில்லை. உனக்கும் இதனுடன் ஒரு தாள் மாத்திரம் வைத்துள்ளேன். முன் கடிதத்தில் உன் அம்மாளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நலமானதாக எழுதினேன். ஆனால் அதனையடுத்துக் காய்ச்சலும் தலைவலியும் ஏற்பட்டுத் துன்புறுத்தின. இப்பொழுது அவை நீங்கி விட்டன; எனினும் இன்னும் சரியானபடி நலமுண்டாகவில்லை. உடல் நலமில்லாத நிலைமையில் ஒரு நாள் உன் அம்மாள் மீது தெய்வம் வந்து அழுத பொழுது 'அப்பா, அப்பா' என்று பல முறை உரக்கக் கூவிற்று. அது உன்னை நினைத்திருக்குமோ என எண்ணினேன். உனக்குச் சூப்பர்வைசர் வேலை கிடைக்கவில்லை என்று ஒரு நாள் அழுது கொண்டிருந்ததாக எழுதியுள்ளாய். எதற்காக அழ வேண்டும்? ஒவ்வொருவர்க்கும் ஊழால் உள்ளவைமாற்றக் கூடாதன. உனக்கு அப்படியொன்றும் துன்புறும் நிலையைக் கடவுள் உண்டாக்கவில்லை. சாமர்த்தியமாக இருந்தால் உள்ளது கொண்டே நன்கு வாழலாம். இவ்வாண்டு ஒரு காணி சிறந்த நன்செய் நிலம் ரூ. 1500 க்கு ஒற்றி வாங்கியுள்ளேன். வருகிற சித்திரையில் இதனையும், முன்பு கிரயத்திற்கு வாங்கின காணியையும் ரூ. 2800 கொடுத்து மீட்க வேண்டும். தஞ்சையில் வசதியுள்ள ஒரு வீடு கிரயத்திற்கு வாங்கவும் எண்ணிக் கொண்டிருக்கிறேன். நீ வருகிற செப்டம்பரிலாவது F. L. பரீட்சைக்கு மீட்டும் எழுதுவது நலமென்று நினைக்கிறேன். திருக்குறள், முழுதும் பல முறை படிக்க வேண்டிய நூல். அதில் 60, 61, 62, 63 அதிகாரங் களை யாவது முதலில் மனப்பாடம் செய்து கொள்க. நான் நாளைக் காலை புறப்பட்டுச் சிதம்பரஞ் சென்று மாலையில் அம்பலவானரைத் தரிசித்து, சனிக்கிழமை மயிலத்தில் நடக்கும் சைவசித்தாந்த மகாசமாஜ விழாவிற்குச் சென்று 24-12-40ல் சென்னையில் சிந்தாத்திரிபேட்டை ஹைஸ்கூலில் நடக்கும் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டுக்குச் சென்று, 25, 26 தேதி களில் திரும்புதற்கு எண்ணியுள்ளேன். சென்னை மாநாட்டில் குமாரராஜாவைக் கொண்டு சிலருக்குப் பட்டம் வழங்குவதாகவும், அதில் எனக்கு ‘நாவலர்’ என்ற பட்டம் வழங்கத் தீர்மானித்திருப்ப தாகவும் கடிதம் வந்தது. அன்புள்ள, ந.மு. வே ௳ Pandit N. M. Venkataswami Natter, 801, Venkatesapperumal Koil Street, Tanjore, Date: 27-12-1940. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. நான் முன் கடிதத்திற் குறித்திருந்தபடி மயிலம், சென்னை முதலிய இடங்கட்குப் போகாது நின்று விட்டேன். 21-12-40 சனிக்கிழமை சோழகன்பட்டிப் பெரியம்மாள் காலஞ்சென்றுவிட்டது. உன் அம்மாவும் நானும் போய் வந்தோம். வருகிற புதன் வியாழனில் கருமம் நடத்துவார்களாம். வல்லத்தரசு ஒரே பெண்ணை வைத்துக் கொண்டிருந்தார் கல்யாணத்திற்கு நடுக்காவேரிக்கு அழைத்து வந்தார். அந்தப் பெண் இறந்து விட்டதாகக் கேள்வியுற்றோம். மிகுந்த வருத்த மாயிருக்கிறது. எக்காரணத்தாலோ நமக்கு அவர் தெரிவிக்க வில்லை. ஊரில் நடப்பாவுக்கு உடம்பு மிகவும் அசௌக்கியமா யிருக்கிறது. ஒரு வாரத்தின் முன் காய்ச்சல் ஏற்பட்டு அத னாலும், இருமலாலும் 4-நாள் வரை மிகவும் துன்புற்றதாம். சிற்றப்பா தற்செயலாக அங்கே போனபொழுது செய்தி தெரிந்தது. பின்பு காய்ச்சல் நின்று குணம் ஏற்பட்டிருப்பதாகச் சிற்றப்பா வந்து சொல்லிற்று. ஆனால் நேற்று முன்னாள் கடுமையாக இருக்கிற தென்று சின்னத்தம்பி வந்து சொல்லிற்று. நானும் உன் அம்மாளும் உடனே டாக்டரை அழைத்துக் கொண்டு பிளஷர் காரில் சென்றோம். இரண்டு ஊசிபோட்டு மிக்சர் கொடுத்துவிட்டு வந்தார். கொஞ்சம் குணமாயிருக்கிறது. இன்னும் அந்த மிக்சர் உண்கிறது. ஆகாரம் கஞ்சிதான். இன்னும் பயம் இல்லையென்று சொல்வதற்கில்லை. கடவுள் அருள் செய்தல் வேண்டும். நான் இன்று காலை இங்கு வந்தேன். உன் அம்மாள் நாளை வரும். அந்தளி ராஜகோபால், இளங்காடு ராஜரெத்தினம் முதலான வர்கள் ஊரில் வந்திருக்கிறார்கள். C. I. D. இன்ஸ்பெக்டர் உன்னைப் பற்றி மிகவும் செவ்வை யாய் எழுதியநுப்பியிருப்பதாக ஐந்தாறு நாளின் முன்பு சுயம் பிரகாசத்திடம் சொன்னாராம். ஏழெட்டு நாளின்முன் ரிப்போர்ட் அநுப்பியிருக்கக் கூடும். அங்கே ஏதாவது தெரிந்ததா? உனக்கு ஒருசமயம் தந்தி அனுப்ப நேர்ந்தால் சுருக்கமாக விலாசம் தெரிவிக்கவும். உனது நலத்திற்கும், சௌ. ராஜத்தின் நலத்திற்கும் உடன் எழுதுக. அன்புள்ள, ந.மு. வே  ௳ பண்டித ந.மு வேங்கடசாமி நாட்டார், 801, வெங்கடேசப்பெருமாள் கோயில் தெரு, தஞ்சாவூர் தேதி: 28-1-1941. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் எல்லா நலங்களும் உண்டாகுக. இவண் யாவரும் நலம். உங்கள் நலத்திற்கு எழுதுக. 21-1-41ல் எழுதிய உனது லெட்டர் கிடைத்தது. இன்று அரிசி மூட்டை கூட்சில் வெல்லிங்டனுக்கு அனுப்பி, ரசீது இதனுடன் வைத்திருக்கிறது. இது கிடைத்த விபரத்திற்கு உடன் பதில் எழுதுக. 17-1-41 வெள்ளி மாலை 6-00 மணிக்கு நான் மதுரை சேர்ந்து, நேரே கோயிலுக்குப் போய் தரிசித்துக் கொண்டு, பின் திரு. கார்மேகக் கோனார் வீட்டில் சிற்றுண்டி அருந்தித் துயிலத் தொடங்கினேன். எக்காரணத்தாலோ அன்றிரவு முழுதும் சிறிதும் தூக்கம் வரவில்லை. ஆனால் அடுத்த நாள் சோர் வின்றியே சொற்பொழிவு செய்துவிட்டேன். ஞாயிற்றுக்கிழமை பிளஷர் காருடன் அத்தான் அழைக்க வந்திருந்தது. பாகல் 2 மணிக்கு மேல் புறப்பட்டு மாலை 5 மணிக்குத் தேவக்கோட்டை வந்து, மணி 5-15க்குச் சொற்பொழிவு செய்யலானேன். அன்றிரவே நோய் கடுமையாய்த் தாக்கித் துன்புறுத்தலாயிற்று. மெண்டாகோ, மிச்சர், கம்பவுண்டர் கொடுத்த வேறு பல மருந்துகள் எல்லாம் அடுத்தடுத்து உண்டும் பயன் விளைய வில்லை. ஐந்து இரவு தூக்கமின்றியே இருந்தேன். அக்காளும் அத்தானும் இரவு துயிலாது விசிறிக் கொண்டும், தடவிக் கொண்டும் இருந்தார்கள். இங்கு வந்தாற்றான் நலமுண்டாகு மென நினைத்து, வெள்ளிகாலையில் சிறிது நலமாக இருந்த பொழுது புறப்பட்டுப் பகல் 12 மணிக்கு இவண் வந்து சேர்ந்தேன். வரும் பொழுது சிறிதும் தொந்தரையில்லை. ஆங்கில மருந்துகள் சக்தியற்றமையின் மீட்டும் தமிழ் மருந்து உண்ண நினைத்து, திருக்காட்டுப்பள்ளி சோமசுந்தரம் பிள்ளையின் தமையனார் கொடுத்திருந்த தாளகமெழுகை, ஞாயிற்றுக்கிழமையும் நேற்றும் உண்டேன். அதிக வெப்பம் ஏற்பட்டு நேற்றிரவு துன்புறுத்தியது. மீட்டும் மெண்டாகோவும் மிச்சரும் உண்ணுகிறேன். மெண்டாகோ தேவக்கோட்டையில் AJ ரூ 8-8-0க்கு வாங்கினேன். இரண்டு நாளில் குணமுண்டாகுமென நம்புகிறேன். நிற்க- சாமுவேல் பிள்ளை சம்பந்தமாக நீ துரைக்கு எழுதுவது சரியன்று. அங்குள்ள J. O. G. T. சங்கத்தில் நீ மெம்பராகி இரண்டு மூன்று கூட்டத்திற்கு நீ போய்க் கொண்டிருந்தால் அவரே வேண்டிய உதவி செய்வாரென அத்தான் சொல்லிற்று, அதுபற்றித் திரு. சிதம்பரபிள்ளையவர்கள்வருத்தப்படாதபடி, வேண்டுமானால் அவரிடம் இதனைத் தெரிவித்துக் கொள்ள லாம் என்றும் சொல்லிற்று. தேவக்கோட்டையில் அத்தான், அக்காள், பாப்பா யாவரும் நலமே, நலத்திற்கும், விசேடங்களுக்கும் எழுதுக. அன்புள்ள, ந.மு. வே  ௳ Pandit N. M. Venkataswami Natter, 801, Venkatesapperumal Koil Street, Tanjore, Date: 3-2-1941. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. நின் கடிதம் நேற்றுவந்தது. சம்பளம் வந்தவுடன் விரைவாக நடந்து சென்று நீ தெரிவித்தவற்றை வாங்கியநுப்பவேண்டும். முன் கடிதத்தால் என் உடல் நிலை உனக்குச் சிறிதேனும் விளங்கி யிருக்கலாம். அஃது எழுதியபின், காய்ச்சலும் ஏற்பட்டுத் துன்புறுத்தியது. ஆனால், நேற்று முதல் பெரும்பாலும் குணமாகிவிட்டதென்று சொல்லலாம். எல்லாம் இறைவனருள். உன்னிடம் முதலிற் சொல்லியிருந்தவர்கட்கு வாங்கிய துணிகளைக் கொடுத்துவிட்டு, அதன்பின்பே, பிறர் வேண்டிய பணத்தை வாங்கியநுப்பி வேறு துணிகளைப் பெற்றுக் கொள்ளுதல் முறை, அதுவும் துணியைச் செலவின்றியநுப்ப வழியிருப்பின், நிற்க- பூதலூர் அண்ணன் அங்குவரின் அவனது உணவுக்கேனும் வரும்படியிருத்தல் வேண்டும். இன்றேல் அவ்வளவு தூரத்தில் அவன் வருதல் தகாது என்று உன்னிடம் சொல்லியிருந்தேன். உன் கடிதத்தால் அவனுக்கு என்ன கிடைக்குமென்பது புலனாக வில்லை. அவன் இப்பொழுது வயல் அறுவடைக்கு உதவியாகச் சோழகன்பட்டியில் இருந்து கொண்டிருக்கின்றான். உன் கடிதம் கிடைத்தாலும் விபரம் ஒன்றும் தெரியாமல் அவன் வரக்கூடு மென்று நினைக்கவில்லை. வர நினைத்தாலும், செலவு எவ்வளவு ஆகும்? அதற்கு என்ன செய்வான்? அங்கே வந்து சேர்வதற்குச் செலவுக்கிருந்தால் போதும்; அப்புறம் நிருவகித்துக் கொள்ள லாம் என்ற உறுதியிருந்தாலும் யாரோ கொடுத்தநுப்பலாம். அங்கே நீங்கள் இருவரும் மாத்திரம் இருப்பதற்கு 6½மாதத்திற்கு உன்சம்பளமும், அநுப்பிய அசிரிமு தலியனவும் தவிர ரூ - 135 அநுப்பியுள்ளேன். அதாவது சராசரி மாதம் ரூ 20-க்குமேல். இவ்வளவு செலவு செய்யும் சக்தி எனக்கு எப்படி உண்டாயிற்று என்பதை அறிந்து கொள்ள, என் இளமை வரலாற்றையும், வாழ்க்கைச் செலவுகளையும் பார்த்தறிய வேண்டும். நிற்க- பூதலூர் அண்ணன் அங்கு வந்தால் உன் கைப்பொறுப் பில்லாமல் அங்கிருக்க முடியுமா என்பதை நன்கு ஆலோசித்துத் தெரிவிக்க. இனி என்னால் பணம் அநுப்ப இயலாதென்பதையும் தெரிந்துகொள்க. சௌ. ராஜம் நன்கு படித்து வருமென நம்புகிறேன் பச்சரிசி 1½ கலம் அநுப்பியிருந்தது. வந்தவுடன் அளந்து பார்த்துச் சரியாக இருக்கின்றதா என்று தெரிவிக்க. அங்கு காலநிலை எப்படியுள்ளது? அன்புள்ள, ந.மு. வே  ௳ பண்டித ந.மு வேங்கடசாமி நாட்டார், 801, வெங்கடேசப்பெருமாள் கோயில் தெரு, தஞ்சாவூர் தேதி: 6-3-1941 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். உங்கள் நலத்திற்கு அடிக்கடி எழுதுக. 3-3-41 தேதியிட்டு எழுதப்பெற்ற நினது லெட்டர் இன்று வந்தது. சௌ. இராஜம்மாள் உடம்பினைப் பேணிக்கொள்ளா மலும் போதிய நலமில்லாமலும் இருப்பதறிந்து வருந்து கிறோம். நீ ஓட்டலில் உண்ணவும், அது நாள் முழுவதும் தனித்திருந்து பட்டினி கிடக்கவும் இவ்வாறு இருவரும் அங்கிருப் பதனாற் பயன் என்ன? மேல்வேலை இல்லாவிடினும், ஆபீசுக்குப் பக்கத்தில் ஜாகையிருந்து வீட்டில் வந்து உண்ணவும், அடிக்கடி பார்க்கவும் வசதியிருந்தாலும் குற்றமில்லை. தனக்காக மட்டிலும் பகலில் சமைப்பது இராஜத்திற்குத் திருப்தியாயில்லை போலும்? செங்கிபட்டியில் இராஜத்திற்கு மருந்து செய்யச் சொல் வதற்கு என்னுடைய வசதியைக் கேட்டு எழுதியிருக்கிறார்கள். அவர்கள் எழுதியிருப்பதன் கருத்து நன்றாய் விளங்கவில்லை. இராஜம் அங்கிருந்து மருந்து உண்பதைப் பார்க்கிலும் ஊருக்கு வந்திருந்து உண்ணுவது நலமென நினைக்கிறேன். இராஜத் துடன் இதமாக நடந்துகொண்டு, அது உடம்பைக்கவனிக்கும் படியும், மகிழ்ச்சியாயிருக்கும் படியும் செய்க. உங்களத்தான் ஊட்டி முனிசிபல் ஹைஸ்கூல் வேலை பற்றி உன் மூலம் கேள்விப்பட்டு மனுப்போட்டிருப்பதாகவும், சிபார்சு செய்யும் படியும் எழுதியிருந்தார். என்னுடைய சிபார்சு எவ்வளவு செல்லும், ஏதோ சிலருக்கு எழுதியிருக்கிறேன். ஒன்றும் எங்களுக்குச் சமாதானமாயில்லை. நான் மதுரை, தேவக்கோட்டை போய் வந்தபின் இன்னும் என் உடம்பு செம்மையுறவில்லை. ஒவ்வொரு இரவும் கழிவது வருத்தமாயிருக்கிறது. புதியபுதிய மருந்துகள் தேடிக்கொண் டிருக்கிறேன். இந்நிலைமையில் அளவில்லாத வேலைகள் என்னை வந்து அடைகின்றன. சரியானபடி வேலை செய்தால் உத்தியோகம் இல்லாமலே, மாதம் ரூ.200 கிடைக்ககூடும். மாதம் இருபது, முப்பது சம்பளம் கொடுத்துச் சிலரை வைத்துக்கொண்டும் வேலை செய்யலாம். எவ்வளவு கஷ்டப்பட்டாலும், வேலை செய்யாமல் சுகமாயிருப்பதென்பது என் ஜாதகத்தில் இல்லை. நீ ஒரு வக்கீலாகத் தஞ்சையில் இருப்பின் எல்லா வகைக்கும் பொருத்தமாயிருக்குமென்று எண்ணியே சட்டப் பரீக்ஷைக்குப் படிக்கச் செய்தேன். தெய்வ சித்தம் வேறு விதமாயிற்று. இப்பொழுதும் செப்டம்பரில் F. L. பரீக்ஷைக்குச் சென்று தேறக் கூடுமாயின், மேலே செலவு செய்வது பற்றிக் கவலையில்லை. பல வேலைக்கும் மனுப் போட்டுக் கிடைக்காத நிலைமையில், வந்த ஆர்டரை விட்டுவிட வேண்டாமென்று நினைத்தே, உன்னை அருவங்காட்டுக்கு அநுப்பினேன். எல்லாம் கடவுள் திருவுள்ளப்படி நடக்கும். குன்னூரில் எந்த மாதத்தில் சொற்பொழிவுகள் வைத்துக் கொள்வது வழக்கம்? நான் எங்கும் போகாது இருந்து வேலை செய்யின் மேற்கொண்ட வேலைகள் இனிது நடைபெறும். மேலும் என் உடம்பும் நலமின்றியிருக்கிறது. பேரூர் தேவஸ் தானத்தில் 1-4-41 முதல் 10 நாட்கள் நடக்கும் சொற்பொழிவில் நான் சில சொற்பொழிவு எடுத்துக் கொள்ள வேண்டி எழுதி யிருந்தார்கள். என் உடம்பின் நிலைமையைக் குறிப்பிட்டு, வர முடியாதென்று நேற்றுத்தான் பதில் எழுதினேன். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழாசிரிய சங்கத்தார் என் வருகையைப் பெரிதும் விரும்பி, அண்ணாமலை நகரிற் பயிலும் வித்துவான் மாணவரொருவர்க்கு எழுதியுள்ளார்கள் அவ ரெழுதிய அருமைக் கடிதமொன்று இதனுடன் உள்ளது. S. K. G. அவர்கள் 15-4-41க்குப் பின் யாழ்ப்பாணம் செல்கின்றனராம். முடிந்தால் அவர் துணையாகப் போய் வரலாமென நினைக்கிறேன். க. முருகேசன் கடிதத்தைப் பத்திரமாக வைத்திருந்து அநுப்புக. ஏப்ரல் இறுதி அல்லது மே முதலில் என்னால் குன்னூருக்கு வரலாமென நினைக்கிறேன். செங்கிபட்டிக்கு என்ன தெரிவிப்பது? நடப்பா உடம்பு நலம் பெற்றுளதென அறிகிறேன். சௌ. ராஜத்திற்கு இதனுடன் ஒரு கடிதம் இருக்கிறது. அன்புள்ள, ந.மு. வே  ௳ பண்டித ந.மு வேங்கடசாமி நாட்டார், 801, வெங்கடேசப்பெருமாள் கோயில் தெரு, தஞ்சாவூர் தேதி: 6-3-1941. என் அருமை வாய்ந்த மருமகள் சௌ. இராஜம்மாளுக்கு எழுதுவது. கடவுள் உனக்குச் சகல பாக்கியங்களையும் கொடுத்து அருள்வாராக. அத்தான் பகலில் ஓட்டலில் சாப்பிடுவதால் நீ சமைக்காமலும், பகலில் உணவுண்ணாமலும் இருப்பதாக அறிந்து மிகவும் வருந்துகிறோம். நெடுந்தூரத்தில் இருப்ப தோடு, அத்தான் பகல் முழுதும் சந்திக்காமலும், பகலில் வீட்டில் உண்ணாமலும் இருப்பது உனக்குக் கஷ்டமாக இருக்கக்கூடும். இருந்தாலும் அதையெல்லாம் காட்டாமல் நீயும் சந்தோஷ மாயிருந்து, அத்தானுக்கும் சந்தோஷத்தை உண்டாக்குவது உனது கடமை. மிகுந்த புத்திசாலியாகிய உனக்கு நாங்கள் அதிகமாகச் சொல்ல வேண்டியதில்லை. முதலில் சிறிது கஷ்டப் படுவது பின்பு சுகமாவிருப்பதற்கு அடையாளமாகும். உன் உடம்பை நன்றாய்ப் பேணிக் கொள்ளவும். அங்கே நீங்கள் சஞ்சலமாய் இருந்தால் அதனால் நாங்களும் சஞ்சலப்பட நேருமல்லவா? நீ தமிழும், ஆங்கிலமும் நன்கு படித்துக் கொண்டிருப்பாய் என்று நம்புகிறேன். மருந்துண்ணுகிற விஷயமாக ஆலோசித்துத் தெரிவிக்கவும். கோடையில் சில பவுன் வாங்கி உன் நகைகளைச் செம்மை செய்ய நினைக்கிறேன். நீ திருத்தமாகக் கடிதம் எழுதும் திறமையும் பெற்றிருப்பாய் என்று நினைக்கிறேன். உன் கையால் உங்கள் அத்தைக்குக் கடிதம் எழுதினால் அது மிகுந்த மகிழ்ச்சி அடையக்கூடும். அன்புள்ள, நினது மாமா.  ௳ பண்டித ந.மு வேங்கடசாமி நாட்டார், 801, வெங்கடேசப்பெருமாள் கோயில் தெரு, தஞ்சாவூர் தேதி: 14-3-1941. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் நலம், அவண் நலத்திற்கு எழுதுக. 8-3-41ல் சௌ. ராஜம்மாள் எழுதிய கடிதம் கிடைத்தது. அவ்வளவு தூரம் எழுதக் கூடிய திறமையைவிரைவில் அடைந் தமை குறித்து மகிழ்ச்சியடைகின்றோம். இன்னும் மேன்மேலும் படித்துப் பிழையே இல்லாமல் எழுதுமென்று நம்புகிறோம். நிற்க- அக்கடிதத்தில், ஞாயிற்றுக்கிழமை கூட உனக்கு லீவு இருப்ப தில்லையென்றும், காலை மணி 8½ க்குச் சென்று இரவும் 9 or 9½ க்கு வரும் வரையில் தான் தனித்தே இருப்பதாகவும் தனக்கு ஒரு மாதமாக வயிற்று வலியும் இடுப்பு வலியுந்தான் மிகுந்த தொந்தரவாயிருக்கிறதென்றும் எழுதியிருக்கிறது. இவ்வாறு நெடுந்தூரத்தில் நீ ஒரு தகுதியற்ற வேலையிற் சிக்குண்டு மிகுந்த கஷ்டங்களை அநுபவிக்க வேண்டுமென்பதும், நான் ஒவ்வொரு நாளும் நோயின் கொடுமையைப் பொறுக்க முடியாமல் அலப்பிக் கொண்டிருக்க வேண்டுமென்பதும் இறைவன் திருவுள்ளமாயின் நாம் செய்வது என்ன? மேலும் இப்படியேதான் காலஞ் செல்லுமோ, இதற்கொரு நிவர்த்தி யுண்டோ என்பதை இன்னும் பொறுத்துப் பார்ப்போம். இந்த நிலைமைக்கு நானும் பொறுப்பாளியாகவே இருந்திருத்தலை இப்பொழுது நன்றாக உணருகிறேன். ஆனால் ஒன்றும் என் செயலில்லை என்று அமைதி செய்து கொள்ள வேண்டியது தான். சௌ. ராஜத்திற்கு மருந்து செய்து கொண்டு வரும்படி செங்கிபட்டிக்கு தெரிவித்துள்ளோம். உங்கள் அத்தையும், சீனும் கொண்டு வரக் கூடும். ஆனால் இப்பொழுதுள்ள தொந்தரவு வேறாக இருக்கிறதே. எல்லாவற்றையும் கவனித்து மருந்து கொடுக்க வேண்டும். தமிழ் வைத்தியத்தில் முரட்டு மருந் தாகவும் பத்தியம் கடுமையாகவும் இருக்கக் கூடும். மிகுந்த ஜாக்கிரதையாக மருந்துண்ண வேண்டும். பக்கத்திலுள்ள ஆஸ்பிடலில் சென்று காட்டுவதற்குக் கூட வசதியில்லா திருப்பதென்பது மிகவும் கொடுமையே. செங்கிப்பட்டியில் அத்தான் ராஜகோபாலுக்கு ஐந்தாறு நாளின் முன் சுரம் என்று கேள்வியுற்றுக் கடிதம்எழுதி விசாரித் திருக்கிறேன் இங்கே சாமியையாச் சிற்றப்பா விதைவாயுவுக்கு நேற்று ஆபரேசன் செய்யப் பேற்றுப் பெரிய ஆஸ்பிடலில் இருக்கிறது. பலரும் வந்து பார்த்துச் செல்கிறார்கள். எனக்கு வீட்டில் நடமாடுவதே அரிதாயிருத்தலால் நான் போய்ப் பார்க்கக் கூடவில்லை. இங்கே மற்று யாவரும் நலமே. நான் எழுதியன கொண்டு நீங்கள் கலக்கமுறாமல் தைரியமாக இருக்க வேண்டும். சௌ ராஜத்தின் உடல் நிலைக்கு இருவர் சுகத்திற்கும் எழுதுக. அன்புள்ள, ந. மு. வேங்கடசாமி  ௳ Pandit N. M. Venkataswami Natter, 801, Venkatesapperumal Koil Street, Tanjore, Date: 27-3-1941 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. சின்னாளின் முன் நீ எழுதிய லெட்டர் கிடைத்தது. சௌ. ராஜத்திற்கு இப்பொழுது உடம்பு நலமாயிருக்கிறதா? செங்கிப்பட்டியிலிருந்து அங்கு யாரேனும் வந்தார்களா? இன்னும் வரவில்லையா? அங்கு யாரேனும் வந்தால் அவர்கள் கூட ராஜத்தை அநுப்பி வைத்தால் 2 வாரத்தில் அதன் நகை களைச் செம்மை செய்து போட்டும், இங்கேயே மருந்துண்ணச் செய்தும் நான் வரும் பொழுது அழைத்து வந்துவிடுவேன். காது கேட்காத பிள்ளைகளைப் பேசச் செய்யும் பயிற்சியுடையவர் கோயம்புத்தூரில் ஒருவர் இருக்கிறாராம். அவரிடம் சிதம்பர நாதனைக் காட்டுவதற்காக உன் அம்மாளையும் உடன் அழைத்து வர எண்ணுகிறேன். 10-4-41ல் அக்காளும் அத்தானும் இங்கு வந்து சேர்வார்கள். அதற்குள்ளாகவே ராஜம் இங்கு வந்து சேர்ந்தால் ஏப்ரல் கடைசியில் நாங்கள் அங்கு வந்து சேரலாம். என் உடம்பு மிக நலங்குன்றி விட்டமையால் நான் யாழ்ப் பாணம் செல்வதை நிறுத்திவிட்டேன். மற்றும், காரைக்குடி, மன்னார்குடி முதலிய இடங்களிலிருந்து வந்த அழைப்பையும் மறுத்துவிட்டேன். 22-3-41ல் தான் காய்ச்சல் நீங்கித் தலை முழுகினேன். நாலைந்து நாளாகச் சிறிது நலம் பெற்று வருகிறது. இவ்வாறே நலமடைந்து வந்தால் 2 வாரத்தில் மெலிவு ஒருவாறு நீங்கலாம். இங்கே தக்க காற்றுள்ள இடத்தில் ஒரு வீடு வாங்க முயன்று கொண்டிருக்கிறேன். இன்னும் ஒன்றும் திட்டமாகவில்லை. நிற்க- உனக்கு இவ்வூரிலேயே ஹைஸ்கூலிலாவது ஜில்லா போர்டு ஆபீசிலாவது, பாங்குகளிலாவது ஒரு வேலைக்கு முயல்வது பொருத்தமாயிருக்குமா? ஆலோசித்துத் தெரிவிக்க. முதலில் சம்பளம் குறைவாயிருந்தாலும், இங்கிருப்பின் நமது சொத்துக்களைப் பாதுகாக்கவும் மற்றும் எல்லாவற்றிற்கும் நலமாயிருக்கும் என நினைக்கிறேன். பதில். குன்னூரிலிருந்து கடிதமொன்றும் வரவில்லை. அன்புள்ள, ந. மு. வேங்கடசாமி  ௳ Pandit N. M. Venkataswami Natter, 801, Venkatesapperumal Koil Street, Tanjore, Date: 6-4-1941. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் உண்டாக. இவண் நலம். நினது லெட்டர் கிடைத்தது செங்கிப்பட்டியிலிருந்து யாரேனும் வந்திருப்பார்களென நினைக்கிறேன். அவர்கள் அங்கே வர முடியாவிட்டால் நீயேனும் இரண்டு மூன்று நாள் லீவு எடுத்துக் கொண்டு சௌ. ராஜத்தை அழைத்து வந்து விட்டுச் சென்றால், பின்பு நாங்கள் அழைத்து வருவோம். பரங்கிப்பேட்டையில் தமிழாசிரியராயிருக்கும் வித்துவான் பெரியசாமிப்பிள்ளை அவர்கள் அங்கு வருகிறார்கள். அவர்கள் நமக்குச் சிறந்த அன்பர்கள். அவர்கட்கு அங்கு வேண்டிய வசதியை செய்து கொடுத்து, அவர்கள் வரும் காரியத்தையும் கவனிக்க வேண்டும். அன்புள்ள, ந. மு. வேங்கடசாமி  ௳ Pandit N. M. Venkataswami Natter, 801, Venkatesapperumal Koil Street, Tanjore, Date: 19-4-1941 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குச் சிவபிரான் திரு வருளால் எல்லா நலங்களும் உண்டாக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க.16-ம் தேதியிட்டு எழுதிய நினது லெட்டர் நேற்றுக் கிடைத்தது. நாங்கள் உடன் புறப்பட முடியா மையால், செங்கிபட்டிக்கு உனது லெட்டரையும் வைத்து நேற்றே கடிதம் எழுதியுள்ளேன். நாளைத் திங்கட்கிழமையே அவர்கள் புறப்பட்டு வெல்லிங்டன் வந்து சேர்வார்களென நம்புகிறேன். இங்கே சுந்தரம் முதலிய பிள்ளைகட்குப் பரீக்ஷை நடந்து கொண்டிருக்கிறது. படுகையிலிருந்து சின்னத்தான் வந்து பிடரியிலிருந்த கட்டியை நேற்று ஆபரேஷன் செய்து கொண்டு ஆஸ்பிடலில் இருக்கிறது. இவற்றின் பொருட்டு இன்னும் ஐந்தாறு நாள் இங்கிருக்க வேண்டும். இந்த வீட்டை விரைவில் விட்டுவிட வேண்டியிருக்கிறது. வேறு வீடு ஒன்றும் இன்னும் தீர்மானமாகவில்லை. எப்படியும் கூடிய விரைவில் வாடகை வீடேனும் பார்த்துச் சாமான்களை அதிற் சேர்த்துவிட்டே நாங்கள் இங்கிருந்து புறப்பட வேண்டும். நடுக்காவேரி போய்ச் சில காரியங்கள் பார்த்து விட்டுக் கொஞ்சம் அரிசியும் அரைத்து எடுத்துக் கொண்டு வர எண்ணுகிறோம். எல்லாவற்றிற்கும் இன்னும் 2 வாரமாவது வேண்டியிருக்கும். சௌ. ராஜம் தைரியமாகவும் உற்சாகமாகவும் இருந்து ஆகாரங் குறைவு படாமல் உண்டு வரவேண்டும். ஆரஞ்சுப் பழம் முதலியன கொடுத்து வருதல் நலம். அடிக்கடி ஆஸ்பிடலிலும் காட்டி வர வேண்டும். நாங்கள் வரும் பொழுது அரிசி எவ்வளவு கொண்டு வர வேண்டும்? மற்றும் எவையேனும் கொண்டுவர வேண்டுமா? சௌ. ராஜத்தின் சுகத்திற்கும், எல்லா விபரங்கட்கும் கடிதம் எழுதுக. செங்கிபட்டியிலிருந்து வந்து சேர்ந்த விபரத்திற்கும் எழுதுக. அன்புள்ள, ந. மு. வே  ௳ Pandit N. M. Venkataswami Natter, 801, Venkatesapperumal Koil Street, Tanjore, Date: 27-4-1941. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. நினது மூன்று லெட்டர்களும் முறையே வரப் பெற்று மகிழ்ச்சியடைகிறோம். இறைவனருளால் சூப்பர்வைசர் வேலை கிடைத்தமை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. தளராஊக்கமும், விடாமுயற்சியும், கடவுள் பால் நம்பிக்கையும் இருப்பின் யாவும் நன்மையாகவே முடியும். நான் பலமாதமாக கிரயத்திற்குப் பார்த்த வீடு ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. அடுத்துள்ள ராஜகோபாலசாமி தெருவில் ௸ கோயிலுக்குச் சிறிது தெற்கில் கீழ் சிறகில் ஒரு மெத்தை வீடு ரூ. 4000 க்குப் ஒற்றியாகப் பேசி. நேற்றுப் பத்திரம் எழுதியாகிவிட்டது. அது மூன்று வீடு தொடர்ந்த ஒரு வீடாகும். தனித்தனி வாசற்படி, தண்ணீர்க் குழாய் முதலியன இருக் கின்றன. மூன்றிலும் இப்பொழுது வாடகைக்குக் குடியிருக் கிறார்கள். அவற்றுள் ஒரு வீடு நமக்குத் தகுதியுடையது. மற்றை இரண்டிலும் சேர்ந்து வாடகை மாதம் ரூ 15 வரும். 3 வருடக் கெடுவுக்கே எழுதி உள்ளேன். இன்னும் சிறந்த இடம் கிடைப்பின் இதனை விட்டுவிடலாமென்று கருதி. வருகிற புதன்கிழமையாவது, வெள்ளிக்கிழமையாவது அவ்வீட்டிற்குக் குடிபோய்ச் சாமான்களையும் அதிற் சேர்த்து விட்டு 3-5-41 இரவு நீலகிரிக்குப் புறப்படலாமென நினைக்கிறேன். இப்பொழுது குடியிருப்பவரால் தடை ஏற்படாவிடின் முன் குறித்தபடி நாம் குடிப்புகலாம். இன்றேல், அங்கு வந்து திரும்பிய பின்பே அவ்வீட்டிற்குப் போக நேரும். குழாயில் எப்பொழுதும் தண்ணீர் வரும். மெத்தையிலும் அறை இருக்கிறது. 3-5-41ல் நாங்கள் புறப்பட முடியாவிடில் 7-5-41ல் கட்டாயம் புறப்படக்கூடும். சௌ. இராஜம் இப்பொழுது மகிழ்ச்சியாகவும் இருக்கு மென நம்புகிறேன். 7 வது மாதத் தொடக்கத்திலே அதாவது ஆவணி முதலிலே ராஜத்தை இங்கு அழைத்து வரலாமென நினைக்கிறோம். அன்றி, ஆனி மாதக் கடைசியில் அழைத்து வரினும் வரலாம். அது வரையில் உங்கட்கு வேண்டிய அரிசியைத் தெரிவிக்கவும் அங்கே அநுப்புவதற்காகக் கொஞ்சம் புழுங்கல் அரிசிதான். அரைத்திருக்கிறது. பச்சரிசி அரைப்பதென்றால் ஊருக்குப் போய் நெல்லெடுத்து அரைக்க வேண்டும். அதற்கு நேரமில்லாவிடின் விலைக்கு வாங்கியாவது அநுப்பலாம். பணம் நாளைக்கு M O. மூலம் அநுப்புகிறேன். அத்தான் சைக்கிள்எடுத்து வரவில்லை. அது வேண்டு மாயின் அவர்கள் தேவகோட்டை சென்றபின்பே அநுப்பக்கூடும். அருவங்காட்டிலேயே உங்கட்கு வீடுகிடைத்து இருக்கக் கூடுமாயின் நலமாயிருக்கும். நாங்கள் வந்தவுடன் எல்லம் யோசித்துக் கொள்வோம். உங்களம்மாள், சிற்றப்பா, அத்தான், அக்காள் நால்வரும் ஒரு காரியம் விசாரிப்பதற்காக இன்று மருதூருக்குப் போயிருக் கிறார்கள். நாளை மாலை வந்துவிடக் கூடும். அன்பு மலர் இன்னும் வெளியிடப்படவில்லை. ஜூன், ஜூலையிலே நிறைவேறுமென நினைக்கிறேன். இனி, விலாசம் எப்படி எழுத வேண்டுமென்பதைத் தெரிவிக்க. அன்புள்ள, ந.மு. வே  ௳ தஞ்சாவூர் தேதி: 2-5-1941. அன்புள்ள மைந்தன் நடராசனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். நின் கடிதம் இன்று பெற்று விபரம் அறிந்தோம். இன்று புழுங்கல் அரிசி 1½ கலமும், பச்சரிசி குறுணி அதில் முடிந்து போட்டும் வெல்லிங்டனுக்குக் கூட்சில் அனுப்பி ரசீது இதனுடன் வைத்திருக்கிறது. பத்திரமாக வாங்கிக் கொள்ளவும். நானும், உன் அம்மாளும், சுந்தரமும், சிதம்பரநாதனுடன் 3-5-41 சனிக்கிழமை இரவு புறப்பட்டு அங்கு வந்து சேர்வோம். நேரே வெல்லிங்டன் வருவோம். அக்காளும், அத்தானும், குழந்தைகளும் சனிக்கிழமை காலை படுகைக்குச் செல்வார்கள். சி. தங்கையன் இங்கு வருவதாக எழுதியிருந்தவன் வரவில்லை. அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி  ௳ நடுக்காவேரி, 2-6-1941. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலம் பல்குக. இவண் நலம். அவண் நலம் தெரிவிக்க. நாங்கள் நேற்றிரவு இங்கு வந்து சேர்ந்தோம். பிரயாணத்தில் எனக்கு இருமல் இழைப்பு ஏற்பட்டுள்ளது. அக்காளுக்கு ஒரு கண் இடையில் பெரிய கட்டி புறப்பட்டு ஆபரேஷன் செய்து கட்டுக் கட்டி வருகிறது. விரைவில் குணமாகலாம். உங்கள் அத்தை பூதலூருக்கு வந்திருந்தார்களாம். கொப்பன்பட்டி போயிருந்ததால்தான் என் முந்திய கடிதங்களுக்குப் பதிலெழுதவில்லையாம். நாளையோ புதன் கிழமையோ அங்கு வந்துசேருவதாகச் சொன்னார்களாம். அவர்கள் வந்த விபரமும், அருவங்காட்டில் வீடு பார்த்த விபரமும் சௌ. ராஜத்தின் நலமும் தெரிவிக்க. புதன்கிழமை தஞ்சை செல்வோம். அன்புள்ள, ந.மு. வே  ௳ 879-C, ராஜகோபாலசாமி கோயில் தெரு, தஞ்சாவூர். தேதி: 7-6-41. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் உண்டாக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. நினது கடிதம் இன்று பார்த்துமிக்க வருத்தமடைகின்றோம். நாங்கள் அங்கிருந்து புறப்பட்டபின் அங்கு வந்து திருப்பிவிட்ட செங்கிப்பட்டி லெட்டரைப் படித்துப் பார்த்திருப்பாயே. அதனோடு உங்களத்தை பூதலூரில் உங்களம்மாளைச் சந்தித்து 3-6-41 செவ்வாய்கிழமை கட்டாயம் போகிறேன் என்று சொல்லிற்றாம். அவர்கள் வார்த்தையை எப்படி நம்பாமல் இருக்கிறது. எல்லோரையும்விட அக்கரையாய் இருக்க வேண்டியவர்கள் அவர்கள் அல்லவா? பிரயாணம் தடைப் பட்டாலும் பிள்ளைகளில் ஒருவரை உடன் அனுப்பியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமையால் காரியத்தின் முக்கியா முக்கியம் அவர்களுக்குத் தெரியவில்லையென்றே நினைக்க வேண்டியிருக்கிறது. அங்குள்ள நிலைமையை நீ விவரித்திருப்பது அச்சத்தையும் கவலையையும் கொடுக்கிறது. கடவுள் துணை செய்வாராக. உன் கடிதத்தையும் வைத்துச் செங்கிப்பட்டிக்கு இன்று எழுதி யுள்ளேன். அவர்கள் யாரும் வரவில்லையென்றால் சௌ. ராஜத்தை நீ அழைத்து வந்துவிட்டுப் போக வேண்டும். 15-6-41 ஞாயிறு நாள் நன்றாயிருக்கிறது. அதுவரை திரு. சிதம்பரம் பிள்ளை வீட்டிலாவது வைத்திருந்து அன்று புறப்பட்டுக் கொண்டு வந்துவிடவும். அவசியமான காரியத்திற்கு லீவு வாங்கித்தான் ஆகவேண்டும். அத்தானும் அக்காளும் வியாழன் இரவு தேவகோட்டை சென்றார்கள். திருநாவும், சம்பந்தனும் உடன்போயிருக்கிறார்கள். உன் புத்தகங்கள் தனியே இருந்த இடத்தில், நீ குறிப்பிட்ட புத்தகங்கள் காணப்படவில்லை. 1933 ல் எழுதிய கெமிஸ்ட்றி நோட் புக் ஒன்றுளது. இன்னும் தேடிப் பார்க்கிறேன். பதில். அன்புள்ள, ந. மு. வே.  ௳ 879, ராஜகோபாலசாமி கோயில் தெரு, தஞ்சாவூர் தேதி: 13-6-41. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் எல்லோருடைய நலத்திற்கும் எழுதுக. அங்கே இப்பொழுது மழை மிகுதியா? காலநிலை எப்படி? உங்களத்தையும் சிர சீனும் எப்படியிருக்கிறார்கள்? சௌ. இராஜம்மாள் நலமாக இருக்கிறதா? அக்காளுக்குக் கண் மேலிமையில் ஏற்பட்ட கட்டி கிழித்துவிடப் பெற்றது இங்கி ருக்கும் பொழுதே பெரிதும் ஆறிவிட்டது. ஊட்டி முனிசிபல் ஹைஸ்கூல் வேலை விபரம் தெரிந்திலது. Hill அலவன்ஸ் இருந்தாலொழிய அத்தான் அங்கே வர இயலாது. திரு. சிதம்பரம் பிள்ளையிடம் நீயேனும் விசாரித்து அத்தானுக்கு விரைவில் செய்தி தெரிவித்தால் நலமாய் இருக்கும். இடம் உறுதியான பின்பே திருநாவுக்கரசைப் பள்ளியிற் சேர்க்கக் கூடும். 5-6-41ல் இவ்வீட்டிற் குடி வந்தோம். மின் விளக்குப் போட்டு இன்னும் பூர்த்தியாகாதிருக்கிறது. Mathematical and Physical Tables என்ற புத்தகம் மட்டும் இங்கு உளது. இதனையும், கெமிஸ்டிரி நோட்புக்கையும் ரிஜிஸ்தர் இல்லாத பார்சலில் அநுப்பலாமா? புத்தக மட்டும் அநுப்பினாற் போதுமா? பட்டணத்தி லிருந்து உன் சின்னம்மாள் குழந்தைகள் இன்னும் வரவில்லை. சிற்றப்பா நான்கு நாளாக இங்கிருக்கிறது. நலத்திற்கு உடன் எழுதுக. அன்புள்ள, நா. மு. வே.  ௳ தஞ்சாவூர் தேதி: 25-6-1941. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். நினது லெட்டர் இன்று கிடைத்தது. அத்தான் வேலை விபரம் இன்னும் தெரியாதது வருத்த மாய் இருக்கிறது. அரிசி முதலியவற்றை இங்கே வைத்து விட்டுப் போய் அங்கே விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். திருநாவைப் பள்ளியிற் சேர்ப்பதற்கும் இடம் கிடைக்காமற் போகுமாம். ஆதலால் அதனை உடனே அறிந்து அத்தானுக்குத் தந்தி மூலமேனும் தெரிவித்தால் நலம். சிவப்பிரகாச சேதிராயர், ஹைஸ்கூல் தேவகோட்டை என்று தந்தி விலாசம் எழுதினாற் போதும், உங்கள் அம்மாளுக்கு 2 வாரமாக இடது கை முழுதும் மிகுந்த வலியாகவும் ஒன்றும் செய்ய முடியாமலும் இருக்கிறது. தங்கள் வீட்டுச் சனங்கள் வெளிவேலை பார்க்கிறார்கள். மாப்பிள்ளை ராஜகோபால் நேற்றுப் புளியும் பருப்பும் கொண்டு வந்து விட்டு ஊருக்குப் போய் விட்டார். சிதம்பரத்தில் சென்ற ஞாயிறன்று S. K. கோவிந்தசாமி பிள்ளை இறந்துபோனது பெருந்துயரான செய்தி. எனது கை பின்பு சரியாயிருந்த போதிலும் இந்த லெட்டர் எழுதும் போது சரியாயில்லை. சௌ. ராஜம் படித்து வருகிறதா, எல்லாருடைய நலத்திற்கும் எழுதுக. அன்புள்ள, ந.மு. வே  ௳ நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 20-7-1941. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் எல்லா நலனும் உளவாக. இவண் யாவரும் நலம். அவண் எல்லோருடைய நலத்திற்கு எழுதுக. திரு. T. ராஜாராம் என்பவர் பாக்டரியில் வேலை பார்க்கிறாராம். அவருக்கு என்ன வேலை? உனக்க அவருடன் பழக்கமுண்டா? திருச்சி அன்பர் ம. பெரியசாமி பிள்ளையவர்கள் புதல்வியை அவருக்கு மணஞ் செய்விக்க எண்ணுகின்றார்கள். பெற்றோர்கள் தம் புதல்வர் கருத்தறிந்து சொல்வதாகச் சொன்னார்களாம். பெண் அழகும் குணமும் உடையது. குடும்பத்தில் யாவரும் கல்வியறிவும் உத்தம குணமும் வாய்ந்தவர்கள். இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் இருக்கிறதாம். கூடுமாயின் நீ ராஜாராம் என்பவரை விசாரித்து உள்ள இயல்புகளையெடுத்துச் சொல்லி, அவர் கருத்தறிந்து தெரிவிப்பாயாக. இம்மாதம் உறுதியானால் ஆவணியில் திருமணம் நடத்தக்கூடும். குடும்ப நிலை, மதிப்பு முதலிய ஒரு வகையிலும் குறைசொல்வதற்கில்லை யென் பதனையும் நீ அவருக்கு எடுத்துச் சொல்லலாம். ஆவணி 'b5 4௳ (20-8-41) புதன்கிழமை சௌ. ராஜத்தை அழைத்து வருதற்கு நாள் பார்த்து இருக்கிறது. உப்பிலி பாளையம் வந்து பேரூர் தரிசித்து, மில் முதலியன பார்த்து வருவதாயின் புதன் காலை 8-15 மணிக்குப் புறப்பட்டு உப்பிலி பாளையஞ் சென்று, அன்று மாலை பேரூர் தரிசித்து, வியாழன் இரவு மெயிலில் கோவையில் வண்டியேறி வருதல் வேண்டும். நீலகிரியிலிருந்து நேரே இங்கு வருவதாயின், புதன்கிழமை பகல் 1½ மணிக்குமேல் 2 மணிக்குள் வேறிடம் மாறியிருந்து, மாலை 3½ மணிக்கு மெயிலில் புறப்பட்டு வரவும். உப்பிலி பாளையம் செல்வதாயின் வரும் வண்டியைக் குறிப்பிட்டு அன்பர் ராஜுநாயுடுவுக்கு எழுதின் ஸ்டேஷனுக் குக்கார் அநுப்புவர். நீ சில நாள் லீவு எடுத்துக் கொண்டு, அழைத்து வந்து விட்டுப் போக வேண்டும். வருதற்கியலாவிடின் ஈரோட்டில் வண்டி மாற்றி ஏற்றிவிட்டேனும் செல்ல வேண்டும். வரும் பொழுது தேந்தலையச்சு (எல்லாத் தகட்டுடனும்), ஒழுகின. சிறிய பருப்புத் தேக்குசா இரண்டையும் எடுத்து வரவும். 2 நாளின் முன்புதான் இங்கு லைட் போட்டு முடிந்தது. அதிகப் பவருள்ள பல்ப்புகள் போட்டிருக்கிறான். உன்னிடத்தில் 15 or 20 பவருள்ள பல்ப் சும்மாவிருப்பின் கொண்டு வரவும். என் உடம்பு பெரும்பாலும் குணமாகி விட்டது. உன் அம்மாளுக்கு இன்னும் கையில் வலி இருக்கிறது. இங்கே மழை சிறிதும் கிடையாது. வெள்ளம் மிகுதியாக இருத்தலின் மேற்கே மழை அளவின்றிப் பெய்திருக்க வேண்டும். நீலகிரியில் காலநிலை எப்படியிருக்கிறது? ராஜமும் யாவரும் நலமாக இருக்கின்றீர்களா? நீ அருவங்காட்டில் இடம் பார்த்துக் கொள்வது நல்லது. வரும் பொழுது அரிசி மிச்சம் இருப்பின் தக்க விலைக்குக் கொடுப்பதாயின் கொடுக்கலாம். இன்றேல் எடுத்து வர வேண்டும் விலை மிக ஏறிக்கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் விபரமாக எழுதுக. அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி.  ௳ நாவலர்பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 30-7-1941. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் எல்லோருடைய நலத்திற்கும் எழுதுக. நினது கடிதம் கிடைத்தது. அதனை அன்பர் ம. பெ. பிள்ளைக்கு அநுப்பிச் செய்தி தெரிவித்துளேன். மலைக்கோட்டை வீடு கிரயத்திற்கு இன்றுதான் முடிந்தது. நாளை சென்று பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு வருவேன். என் உடம்பு நலமே. உங்களம்மாளுக்கு இன்னுஞ் சிறிது வலியுள்ளது. நீ குறித்த மருந்து வாங்கிக் கொடுக்க வேண்டும். அவ்விடம்மழை எப்படியிருக்கிறது? சௌ. ராஜம்நலமா யிருக்கிறதா? ஆகஸ்டு முதலில் உன் வேலை நிலைமையும், இங்கே புறப்பட்டு வரும் விபரமும் குறித்து எழுதுக. வீட்டு நம்பர் இதிற் குறிப்பிட்டுள்ளதே. முன் குறித்தது சென்ஸஸ் நம்பர். அன்புள்ள, ந.மு. வேங்கடசாமி.  ௳ நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 31-7-1941. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. நேற்று நான் எழுதிய லெட்டரில் திருச்சி வீடு கிரயஞ் செய்ததைப் பற்றி எழுதியிருந்தேன் பத்திரம் நீயும் சேர்ந்து எழுதிக் கொடுக்க வேண்டுமென்று வக்கீல் யோசனையின் மேல் வாங்குகிறவர் தெரிவித்து இன்று காலை இங்கு வந்துவிட்ட படியால், நான் இன்று திருச்சி செல்லவில்லை. இங்கிருந்தே பத்திரம் எழுதி, அதனையும், ஸ்பெஷல் பவர் பத்திரம் ஒன்று எழுதி அதனையும் அக்னாலெட்ஜ்மெண்ட் ரிஜிஸ்டரில் இன்று உனக்கு அநுப்பியுள்ளேன். அவற்றை ரிஜிஸ்டரார் முன்னிலையில் கொண்டு போய், பவர் பத்திரத்தில் அவர் கையால் தேதிபோட்டுக் கொடுத்த பின்பு அவர் முன்னிலையில் அதிலும், கிரய பத்திரத்தின் ஒவ்வொரு ஷீட்டிலும் நீ கையெழுத்திட்டு, அவரது அத்தாட்சியுடன், நீ அவற்றை அக்னாலெட்ஜ்மெண்ட் ரிஜிஸ்டர் தபாலில் எனக்கு அநுப்பிவைக்கவும். நீ கையெழுத்திடும் வழக்கம் போல் கையெழுத்துச் செய்யவும். ரிஜிஸ்டர் ஆபீஸ் வெல்லிங்டனில் இராவிடில்குன்னூரில் இருக்கும். உன் வேலைகளால் உடனே ரிஜிஸ்டர் ஆபீசிற்குச் செல்ல முடியாவிட்டால் இரண்டொரு நாள் தாமதமானாலும் குற்றமில்லை. இது சம்பந்தமாக ஏதேனும் செலவு ஏற்படின் அதனைத் தெரிவிக்கவும். பத்திரங்கள் திரும்பி வந்தபின் நான் திருச்சி சென்று ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். 4 ஷீட்டுகள் பத்திரங்களில் உள்ளன. ரிஜிஸ்டராரிடம் ஒரு ரூபாய் கொண்டு செல்லவும், பீஸ் 12 அணா இருக்கும். அன்புள்ள, ந. மு. வேங்கடசாமி  ௳ Navalar Pandit N. M. Venkataswami Nattar, 2659, Rajagopalaswami Kovil Street, Tanjore. Date: 5-8-1941 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. உனது கடிதம் இன்று கிடைத்தது. செலவுக்கில்லாது இடர்ப் படும் பொழுது முன்பே எழுதினால் ஏதேனும் அநுப்பி இருப்பேனே. இன்று மணியாடர் அநுப்ப நேரமில்லை. நாளையும் மறுநாளும் சர்க்கார் விடுமுறை நாளாதலின் M. O. எடுக்கமாட்டார்களென நினைக்கிறேன். எடுத்தால் அநுப்புவேன். இன்றேல் வெள்ளிக் கிழமை அநுப்புவேன். பணம் இல்லையென்று சௌ. ராஜம்மாளுக்கு வேண்டிய வைகளை வாங்கிக் கொடுக்கமால் இருக்கலாமா? நான் அநுப்புவது கிடைப்பதற்குள் கடன் வாங்கியாவது பழம் முதலியன கொடுக்கவும். உன் அத்தைக்கும் உடல் நலமில்லையென்று செங்கிபட்டிக்கு எழுதியிருந்தாயாம். இப்பொழுது எப்படி இருக்கிறது? எல்லோரும் உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். உனக்கு 3 மாதத்தின் பின் சம்பளம் கூடுதலாகுமென்றே நினைத்திருந்தேன். நிற்க- இன்று உன் கடிதம் வருதற்கு முன் ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். அவர் ஊர் அவளிவணல்லூர், கள்ளர். கைலாசத்தேவர் என்ற பெயரினர். திருச்சியில் என்னிடம் படித்தவர். B. A. பூர்த்தி செய்யப்படவில்லை. அவர் இந்துமத தர்ம பரிபாலனபோர்டில் ஒரு வேலைக்கு மனுச்செய்து, மனு ஆர்டர் செய்யப்பட்டு இருக்கிறதென்றும், கமிஷனர் ராவ்பகதூர் C. M. இராமச் சந்திரஞ் செட்டியாருக்கு ஓர் சிபார்சு லெட்டர் தர வேண்டு மென்றும் கேட்டு எக்சியூட்டிவ் ஆபீசர் வேலைக்கு அவர் மனுப் போட்டு இருக்கிறாராம். அதில் சம்பளம் ரூ. 150ஆக இருந்ததை இப்பொழுது ரூ. 100 ஆகச் செய்திருக்கிறார்களாம். 55வயதுக்கு மேற்பட்டவர்களெல்லாம் விலக வேண்டுமென்று உத்தரவு வந்திருப்பதால் இப்பொழுது சிலகாலிஸ்தானம் ஏற்படும் என்றும் நீடாமங்கலத்தில் இருப்பவர்க்கு வயது 60 ஆகிவிட்டபடியால் அந்த இடம் தனக்குக் கிடைக்கலாமென்றும் சொன்னார். இந்தப் பக்கத்தை C. M. R. செட்டியாரிடம் ஒப்படைத்திருப்பதாகப்பிரசிடெண்ட் திரு. T. m. நா. பிள்ளை கூறினராம். எக்சியூட்டிவ் ஆபீசர் வேலையென்பது ஒவ்வொரு தேவஸ்தானங்கட்கு 3 வருடத்திற்கோ, 5 வருடத்திற்கோ நியமிக்கப்பெறுவது. நிலையான வேலையில்லை என்றாலும் வெவ்வேறிடங்கட்கு மாற்றித் தொடர்ச்சியாய்வேலை கொடுத்து வருவது வழக்கமாயிருக்கிறது. J.M. சோமசுந்தரம் பிள்ளைக்கு முதலில் அழகர் கோயிலிலும், அடுத்துத் தஞ்சையிலும், இப் பொழுது பழனியிலும் வேலை ௸ போர்டில் சூப்பிரண் டெண்ட் வேலைகள் உண்டு. அவை நிலையானவை: சர்க்கார் வேலைகள். அவ்வேலை கீழுள்ளவர்களிலிருந்து பிரமோசன் செய்யப்படுவதாயிருக்கும். சம்பளம் ரூ. 200 or 250 இருக்கும் என்னிடம் வந்த கைலாசம் என்பவர்க்கு நாலைந்து நாளில் கடிதம் தருவதாகச் சொல்லியநுப்பியுள்ளேன். உனக்கு ௸ எக்சியூட்டிவ் ஆபீசர் வேலை பிடித்தமாயிருந்தால் உடனே பிரசிடெண்டிடம் மத தர்ம பரிபாலன போர்டு (R. F. R.) அன்புள்ள, ந. மு. வேங்கடசாமி  ௳ Navalar Pandit N. M. Venkataswami Nattar, 2659, Rajagopalaswami Kovil Street, Tanjore. Date: 15-8-1941. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலமே. நினது கடிதம் இன்று கிடைத்தது. நீங்கள் வரும் வண்டியைக் குறிப்பிட்டுப் பூதலூருக்கு ஒரு லெட்டர் போடவும். அவர்கள் ஸ்டேஷனில் வந்து பார்ப்பார்கள். வரும்பொழுது சாமான்களெல்லாம் பழைய வீட்டில் இருக்குமா? புதிய இடத்திற்கு மாற்றிவிட்டு வருவாயா? எங்காயினும் மிகவும் பத்திரமாக வைத்துவிட்டு வரவும். வெள்ளிச் சாமான்களை இங்கு எடுத்து வரவும். அவற்றுடன், இங்கிருந்து கொண்டு வந்த வெண்கலச் செம்பும், முன்பொரு கடிதத்திற் குறிப்பிட்ட பருப்புத் தேக்குசாவும், தேந்தலை அச்சும் எடுத்து வரவும். நாலைந்து முட்டைக் கோசும், மற்றுமுள்ள காய்கறிகளும் கொஞ்சமும் வாங்கி வருக. வால்பேரி மலிவாய் இருந்தால் வாங்கி வரவும். எல்லாம் தோட்டங்களில் வாங்கிவரச் சொன் னால் மலிவாக இருக்கும். நடப்பாவுக்கு எழுதுகிறேன். பத்திர மாய் வந்து சேரவும். அன்புள்ள, ந. மு. வே.  ௳ Navalar Pandit N. M. Venkataswami Nattar, 2659, Rajagopalaswami Kovil Street, Tanjore. Date: 1-9-1941 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. உன் இருகடிதங்களும் கிடைத்தன. நான் 28-8-41 லேயே உனக்கு லெட்டர் எழுதியிருந்தேன். முன்பு நீ குறித்தபடி 278/1 பாக்டரி குவார்ட்டர்ஸ் என்று முகவரிக்கு எழுதியிருந்தேன். அது கிடைக்காத காரணம் தெரியவில்லை. தபால்காரரிடம் நீ சொல்லி வைத்திருக்க வேண்டும். சௌ. ராஜம்மாள் நலமாக இருக்கிறது. 28-8-41 வியாழக்கிழமை பெரிய ஆஸ்பிடலுக்கு அழைத்துச் சென்று லேடி டாக்டரிடம் காட்டினோம். ஆஸ் பிடல் மருந்து மூன்று நாள் உண்டது. நேற்று முதல் வாட்டர் புரீஸ் காம்பவுண்டும் உண்டு வருகிறது. உன் அத்தையும் சீனும் வெள்ளிக்கிழமை செங்கிபட்டி போனார்கள். ராஜம் குழந்தைப் பேறு வரையில் வேறெங்கும் செல்லாது இங்கேயே இருக் கட்டும் என்று சொல்லிவிட்டோம். ராஜம் மகிழ்ச்சியாகவே இருக்கிறது. அடுத்த கடிதம் அது கையில் எழுதச் சொல்கிறேன். அநுப்பிய படம் இன்று பிரேம் போடப்பெற்றது. விலாசம் இன்று நான் எழுதுகிறபடி இருக்கலாமா? பாக்டரிப் பெயர் இல்லாமலும் இருக்கலாமா? நம்பர் குறிப்பிடாவிட்டாலும் உனக்குக் கிடைக்குமா? விபரமாக எழுதுக. ஒவ்வொரு வாரமும் உனது வேலை நேரமும் தெரிவிக்க. 4-9-41ல் மகிபாலன்பட்டியில் திரு. கதிரேசச் செட்டியார்புதல்வியின் திருமணம். போய் வரலாமென இருக்கிறேன். பரீக்ஷை சம்பந்தமான அலுவலும் இருக்கிறது. பல அலுவல்களால் சிறிதும் ஓய்வில்லை. அன்புள்ள, ந.மு. வே.  ௳ நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 19-9-1941. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. நினது லெட்டரும், போட்டோ பெரிய படமும் வந்தன. சௌ. ராஜம்மாள் செங்கிப்பட்டி போய் 9-நாள் இருந்து நேற்று முன்னாள்வந்தது. நலமுடனும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கல்சானா இரண்டொரு நாளைக்கு இருக்கும். பின்னும் வாங்கித் தருவேன். இங்கு அடிக்கடி மழை ஆடம்பரம் உளது. அங்கு எப்படி? நிற்க- நீ ஊரூராய்க் கடிதமும், போட்டோ படமும் அநுப்புவது நன்றன்று செலவை நிறுத்துச் செய்தல் வேண்டும். கணக்கும், பொருளாதார நூலும் படித்தவர்கள் தம் வாழ்க்கையள விலேனும் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். பழைய பொருளாதார ஆசிரியராகிய திருவள்ளுவர். " ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை" எனக் கூறியுள்ளார். 10 ரூ சம்பளத்தில் மிச்சப்படுத்தும் ஆற்றலுடை யோரே 1000 ரூ சம்பளத்திலும் மிச்சப்படுத்தக்கூடும். இப்பொழுது எல்லாப் பொருள்களும் விலை ஏறிவிட்டன. இன்னும் 2 வாரத்தில் இரண்டு மூன்று பங்கு விலை கொடுத்து உடைகள் வாங்க வேண்டும். இச்சமயத்தில் புத்தகங்கள் அச்சிடுதலும் சேர்ந்தது. காகித விலை இரண்டு மூன்று பங்கு ஏறிவிட்டது. இந்நிலைமையில் ஏதேனும் மிச்சப்படுத்தி நீ அநுப்பக் கூடுமானால் எவ்வளவு உதவியாயும் மகிழ்ச்சியாவும் இருக்கும்? இதற்காக உன் உடல் நலத்திற்கேற்ற உணவு வகை களைக் குறைக்க வேண்டாம். கோட்டும் தைத்துக் கொள்க. பொதுவாகச் சொல்லினேன். உண்மை முறையில் கணக்கெழுதி வருவது என்ற வழக்கம் இருப்பின் அதனால் நன்மையுண்டாகும். தேவகோட்டையிலிருந்து எல்லோரும் ஞாயிறு காலை இங்கு வருவார்கள். எனக்குச் சிறிதும் ஓய்வில்லை. அன்புள்ள, ந.மு. வே.  ௳ நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 25-9-1941. அன்புமிக்க தம்பி நடராஜாவுக்கு இறைவனருளால் எல்லா நலங்களும் உண்டாக. ஈண்டு அப்பா அம்மா ராஜம்மாள் குழந்தைகள் முதலிய யாவரும் நலம். நினது உடல் நலத்தை அடிக்கடி அறிவிப்பாயாக. நாங்கள் இங்கு வந்து நான்கு நாளாகின்றது. நாராயணசாமி கூறிய படியே ராஜம் முன்பிருந்த தற்கு இப்பொழுது சற்று இளைத்திருப்பதாக அம்மாளும் கூறுகின்றது. அஃது கவலை முதலியவற்றாலுண்டாகியதல்ல அவ்வாறு நீர்க்கட்டு முதலியவற்றுடன் உடல் பளபளப்பா யில்லாமல் மெலித்திருத்தலே நலமாகும். அது பற்றி நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம். இறைவன் இன்னருள் பாலிப்பான். ஏற்ற மருந்துகளும் உண்டு வருகின்றது. மருத்துவச் சாலைக்கும் அடிக்கடி அழைத்துச் சென்று காண்பிப்போம். பிறந்தநாள் தொட்டு நெடுநாள் பிரிந்திராத நின் தமக்கை நின்னைக் காண்பதற்கு எவ்வளவு ஆவலுடன் இருப்பேனென்பதை ஆண்டவன் நினக்கு அறிவுறுத்துவானாக. தமிழன்னையின் அருந்தவப் புதல்வராய் நம் அப்பாவவர்களின் உடல் மெலிவும் ஓயாத உழைப்பும் என் உள்ளத்தை உருக்குகின்றது. நெடுநாட்களாகச் சலியாத வேலையினாலும் உளக்கவலை யினாலும் உடல்மெலிந்திருக்கின்ற நம் அன்னையும் நம்மை மக்களாகப் பெற்ற பயனையடைந்து மகிழ வேண்டும். என்னென்னவோ எழுதுவதாலென்ன? நானோ அவர்கள் அருகிலிருந்து பணி செய்யும் தகுதியற்ற பெண் பிறவியுடையேனாயினேன். நீயோ பிற்கேற்ற உத்தியோகத் துறையில் முயற்சியில் ஈடுபட்டாய். அஃது உத்தம ஆண்மகனுக்குரிய செயலேயாகும் எனினும் கடவுளராய் வழிபடற்குரிய தந்தை தாயரின் மன மகிழ்வித்துப் பணி செய்தல் அனைத்திலும் சிறந்த கடமை என்பதை நீ அறிந்திருப்பாயா னாலும் நான் கூறுவது பற்றி வருந்தற்க. அப்பா நின்னை அண்மையில் ஒரு மனுப்போடச் சொல்லிய பொழுது நீ மறுத்ததாக வருத்தத்துடன் மொழிந்தார்கள். நீ தன் பக்கலில் இருந்தால் மிகவும் உதவியாக இருக்கும், ஏராளமான வேலை செய்வேன் என்று அடிக்கடி கூறுகின்றார்கள். உலகம் போற்றும் உத்தமப் பெரியாரும் முதற்குரவருமாகிய அருமைத் தந்தையாரின் கீழ் அவர்கட்கு உதவியாக வேலை செய்வதால் நினக்கு உண்டாகும் இழிவென்னை? நினக்கிருக்கும் ஆங்கிலப் பட்டத்தகுதியுடன் தமிழறிவும் கைவரப்பெற்று தமிழ்த் தொண்டாற்றுவையானால் தலைமை சான்ற தமிழ்ப் பெரியாரின் தவமகன் என்னும் பெரும் பேற்றுடன் சிறந்த பதவிகளையும் பெறுவாய் என்பதில் எட்டுணையும் ஐயமில்லை. அப்பாரவர் களின் அரிய போதனைகளையும் கேட்டு அவர்களால் வெளிவரும் அருந்தமிழ் நூல்களையும் காப்பாற்றுவதற்கு நீ தமிழறிவு பெறுதல் மிகவும் அவசியமாகும். நீ வித்துவான் தேர்விற்குச் சென்று பட்டம் பெற்றால் தமிழ்க் கல்லூரிகள் ஒன்றில் நின்னைத் தலைவராகச் செய்யும் துணிவும் உடையேன் என்று அப்பா கூறினார்கள். நீ நின் வேலையுடன் ஒருவாறு தமிழ் நூல்களைப் படித்து முன்னுக்கு வரவேண்டு மென்றே இது வரையும் எழுதினேன். பாப்பா நின் புகைப்படத்தைக் கண்டதிலிருந்து மாமா எப்பொழுது வரும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. அன்புள்ள, பார்வதி.  ௳ நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 3-10-1941 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. நீ 26-9-41ல் எழுதிய கடிதம் கிடைத்தது. நீ எழுதிய கணக்கு களில் கவனஞ் செலுத்த எனக்கு நேரம் இல்லை. பொதுவாக நீ எழுதி வைத்திருப்பது நலம். டிசம்பர் முடிந்த பின் நேரம் இருக்கும் பொழுது தொடக்கத்தி லிருந்து தொடர்ச்சியாய்க் கணக்கு எழுதி வைக்க வரவு செலவு மட்டுமன்றி ஒவ்வொரு செய்கையும் எழுதி வருவதுங்கூட எவ்வளவோ நன்மை பயக்கும். சௌ. ராஜம்மாள் நலமாகவே இருக்கிறது. வாட்டர்புரீஸ் காம்பவுண்ட் தீர்ந்து போய் ஐந்தாறு நாளின் முன் வேறொரு புட்டி வாங்கிக் கொடுத்தேன். கல்சானா தீர்ந்து விட்டது. அது இனி வேண்டாம் என்கின்றார்கள். உன் அம்மாளுக்கு ஒரு வாரமாகக் கைவலி மிகுதியாயிற்று. நேற்று உன் அம்மாளும், ராஜமும், அக்காளும் பெரிய ஆஸ் பிடல் போய் வந்தார்கள். ராஜத்திற்கு இனி மருந்துகள் கொடுக்க வேண்டாமென்றும் ஆரஞ்சுப் பழம் முதலியன மிகுதியாகச் சேர்க்கும் படியும் லேடி டாக்டர் கூறினளாம். உன் அம்மாள் மருந்து வாங்கிவந்து நேற்றுக் காலை 10 மணிக்கு ஒருமுறை உண்டவுடன் வலி பொறுக்க முடியாதாயிற்று காலையில் ஈரத்திலே புழங்கிக் கொண்டிருந்து, உணவுண்ணாமல் மருந் துண்டதில் மிகுந்துவிட்டது. மிகுந்த பயங்கரமான நிலைமை ஏற்பட்டு, எல்லோரும் அழுது விட்டார்கள். உடனே டாக்டர் சொக்கலிங்கம் பிள்ளை வந்து மருந்து கொடுத்தார். நேற்று முதல் பலவகை மருந்துகள் வாங்கிக் கொடுத்து வருகிறது. வலி குறைந்து ஒவ்வொரு சமயத்தில் வலிக்கிறது. தூக்கத்திற்காக நேற்று மருந்துகள் கொடுத்தமையால் தலை பொறுத்திருக்க முடிய வில்லை. இனி குணமாகிவிடும். டாக்டர் Yeast (மாத்திரை) என்ற மருந்தினால் இது குணமாகும் என்றதனால் அது வாங்கிக் கொடுக்கிறது. நீ முன்பு எழுதின மாத்திரை இவ்வூரில் கிடைக்கவில்லை. பின்பு அதன் பெயரும் மறந்து விட்டேன். அது பக்கவாதத்திற்கு நல்லது போலும் இது பக்கவாதமன்று. படுகை அத்தையும் ஆற்காட்டு அத்தையும் ஒரு வாரமாக இங்கிருக்கிறார்கள். செங்கிப்பட்டி அத்தை இன்று வந்துள்ளார்கள். ராஜகோபாலுக்கு உடம்பு நலமில்லா திருந்து குணமாகி விட்டதாம். அத்தான் முதலானவர்கள் ஞாயிறு இரவு தேவ கோட்டைக்குப் புறப்படுவார்கள். எனக்கு இவ்வாண்டு சென்னை வித்துவான் பரீட்சகர் பதவி கிடைத்திருக்கிறது. புத்தகங்கள் அச்சிலிருப்பவற்றைப் புரூப் பார்ப்பதில் இரவு 11 மணிவரை ஆகிறது. இங்கே எல்லோருக்கும் துணிகள் எடுத்தோம், நூறு ரூபாய் ஆகிறது. எனக்கு ஒன்றும் எடுக்கவில்லை. பழைய உடைகளும் சட்டைகளும் இருப்பதால், கதரில் வாங்க எண்ணியிருக்கிறேன். நீ பணம் அநுப்பவேண்டுமென்று உனக்கு வேண்டியவற்றை வாங்காதிருக்க வேண்டாம். கோட் தைத்துக் கொள்வதுடன்; தீபாவளிக்குப் புதிய உடைகள் வாங்கிக் கொள்க. மிச்சம் இருப்பின் நவம்பரில் சேர்த்து அநுப்பலாம். இங்கே நேற்று மழை மிகுதி. ந.மு. வே.  ௳ நாவலர்பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 9-10-1941. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் எல்லா நலங்களும் உண்டாக. இவண் யாவரும் நலம், உனது நலத்திற்கு எழுதுக. சௌ. ராஜம் நலமாக இருக்கிறது. உன் அம்மாளுக்குக் கை வலி பாதி குணமென்று சொல்லலாம். சின்னாளின் முன் நான் எழுதிய கடிதம் கிடைத்திருக்குமே? உன் அம்மாள் ஒவ்வொரு நாளும் உன் கடிதத்தை எதிர்பார்த்துக் கவலையுறுகிறது. கடிதம் வராமையால் ராஜமும் கவலையாய் இருப்பதாகத் தெரிகிறது. உடனே கடிதம் எழுதுக. அங்கே கால நிலை எப்படியுள்ளது? நான் நாளைத் திருச்சி சென்று இரவு 7-15 மணிக்கு ரேடியோவிற் பேசிவிட்டு, மெயிலில் திரும்பி விடுவேன். அன்புள்ள, ந. மு. வே.  ௳ நாவலர்பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 15-10-1941. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் எல்லா நலங்களும் உண்டாக. இவண் யாவரும் நலம், உனது நலத்திற்கு எழுதுக. 9-10-41ல் நீ எழுதிய லெட்டரும், அநுப்பிய பணமும் கிடைத்தன. உன் அம்மாளுக்கு இப்பொழுது உண்டு வரும் மருந்தால் குணம் ஏற்பட்டு வருகிறது. இதனை இன்னும் தொடர்ந்து சாப்பிட்டு, இதனால் முற்றும் குணமாகாவிடில் சானடோஜன் இங்கே கிடைக்காவிடினும் சென்னையிலிருந்து வருவித்துக் கொடுக் கலாம். நிற்க- சௌ. ராஜம்மாளுக்குத் திங்கட்கிழமை இரவு முதல் சிறிது ஜுரம் ஏற்பட்டு இப்பொழுது குணமாயிருக்கிறது. நேற்றுக் காலை 101½ டிகிரியும், நேற்று மாலை முதல் 103 டிகிரியும் இருந்து வந்தது. நேற்றுக் காலை டாக்டர் சொக்க லிங்கம் பிள்ளை வந்து கவனமாகப் பார்த்து மருந்து கொடுத் தார். இன்று காலை டாக்டர் லக்ஷ்மி நாராயணையர் என்பவரும் வந்து பார்த்தார். இருவரும் நன்றாகச் சோதித்து, இப்பொழுது ஊரில் எங்கும் இரண்டு மூன்று நாள் சாதாரண சுரம் வந்து கொண்டிருக்கிறது. இது அதுவே தவிர வேறில்லை. இதில் குற்றம் ஒன்றுமில்லை. இரண்டொரு நாளில் குணமாகிவிடும் என்று கூறி மருந்து கொடுத்தார்கள். இன்று மாலை 4 மணிக்குக் கரந்தையி லிருந்து அநுபமுள்ள நர்சும் வந்து பார்த்துவிட்டு, குற்றமொன்றும் இல்லையென்று சொல்லிற்று. இப்பொழுது 101 டிகிரிக்குக் குறைவாகவே இருக்கிறது. நாளை குணமாகிவிடும். நாளை மறுநாள் ராஜம் கடிதம் எழுதும். நீ கவலையின்றி மகிழ்ச்சியுடன் இருக்கவும். தீபாவளிக்குப் புதிய உடை வாங்கி உடுத்திக் கொள்க. அன்புள்ள, ந. மு. வேங்கடசாமி  ௳ Navalar Pandit N. M. Venkataswami Nattar, 2659, Rajagopalaswami Kovil Street, Tanjore. Date: 31-10-1941 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். நினது நலத்திற்கு எழுதுக. சௌ. ராஜம்மாள் நலமாக இருக்கிறது. உன் அம்மாளுக்கு இன்னும்வலி இருந்துகொண்டுதான் இருக்கிறது. கோவிந்த னிடத்தில் மருந்துண்ண வேண்டுமென்றும் அதுவும் ஒன்றிரண்டு மாதம் சென்றுதான் உண்ண வேண்டுமென்றும் சொல்கிறார் 24-10-41 முதல் இருமலும் காய்ச்சலும் என்னை மிகவும் துன்புறுத்தின. கஞ்சி மட்டும் உண்டு படுக்கையிலேயே இருந்தேன். காய்ச்சல் தணிந்துஇன்று தலை முழுகினேன். கபம் இன்று இருந்து கொண்டிருக்கிறது. உடல் மிக மெலிந்து விட்டது. மதுரையிலிருந்து மருதையன் கடிதம் எழுதியிருந்தது. உனக்கு கடிதம் எழுதியிருந் ததாகவும், நீ பதிலே போடவில்லை என்றும் எழுதியது. இம்மாதம் உங்கள் அத்தை இங்கு வந்திருந்த பொழுது ராஜத்திற்குச் சூல்காப்புப் போட நாள் பார்க்கும்படி சொல் லிற்று. 3-11-41 திங்கட்கிழமை நல்ல நாள் என்றும், அதற்கு தேய்பிறையாதலின் பொருந்தாதென்றும் சொல்லியநுப்பியது. ‘சமீபமாயிருந்தால் நீயும் வரலாம், தூரமாயிருத்தலால், குழந்தை, பிறந்து வீட்டுக்கழைக்கும் போது நீ வந்து போகலாம் என்று உன் அம்மாள் சொல்லிற்று. பார்வதியம்மாள் கட்டாயம் வர வேண்டும் என்று இருவரும் சொன்னார்கள். நான் தேவக் கோட்டைக்கு எழுதியுள்ளேன். ஆனால் செங்கிபட்டி சென்ற வுடன் காப்பிடுவது இந்தத் தேதியில் என்பதை நிச்சயமாக ஒரு கடித மூலம் தெரிவியுங்கள் என்று சொல்லியிருந்தேன். ராஜகோபாலிடமிருந்து நிச்சயமில்லாத வழவழவென்று ஒரு லெட்டர் வந்தது. நிச்சயமாக தெரிவிக்க வேண்டுமென்று மீட்டும் நான் இன்று மாலை வரை ஒன்றும் பதில் தெரிவிக்க வில்லை. நான்கு முறை பார்த்தாயிற்று. உரைநடைநூல் ஞானியர் சுவாமிகள் முகவுரையுடனும், கா. சுப்பிரமணியபிள்ளையவர்கள் மதிப்புரையுடனும் அச்சிட்டு முடிந்தது. பாடப்புத்தகப் போர்டு அங்கத்தினர் களுக்கு அநுப்பியுள்ளேன். நான் தொகுத்த 4, 5 ஆம் பாரத் தமிழ்ப் பாட புத்தகங்கள் பெரும்பாலும் அச்சாகிவிட்டன. இன்னும் ஒரு வாரத்திற்குள் முடித்து அப்புரூவலுக்கு அநுப்ப வேண்டும். வித்துவான் நாராயணசாமிப் பாப்பு செட்டியாரிடம் இதனைத் தெரிவித்து, அடுத்த வருடம் அவர்கள் ஹைஸ்கூலிலும், ஊட்டி, குன்னூர் இவ்விடங்களிலுள்ள ஸ்கூல்களிலும் இவற்றைப் பாடம் வைக்க முயலும்படி சொல்க. இன்று மாலை பெருங்கிளர்ச்சியுடன் இங்கு மழை ஆரம்பித் திருக்கிறது. அன்புள்ள, ந. மு. வே.  ௳ நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 11-11-1941 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலமே. நினது நலத்திற்கு எழுதுக. 7-11-41ல் எழுதிய லெட்டர் கிடைத்தது. 5-11-41ல் சௌ. ராஜம் எழுதிய லெட்டர் கிடைத்திருக்குமே? சூல் காப்பிடும் சடங்கு இனிது நிறைவேறியது. இரண்டு வேளைக்கு மேலாகவே விருந்து நடைபெற்றது. ராஜமும் நலமாக இருக்கிறது. எனக்குத்தான் காய்ச்சலும் இருமலும் 10 நாட்கள் இருந்து நீங்கியபின். வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நான்கு நாட்கள் துன்புறுத்தின. இன்று குணமாகிவிட்டது. பாட புத்தக சம்பந்தமாக நான் எழுதியதை திரு வித்துவான் நாராயணசாமிக்குத் தெரிவித்தாயா? தேவகோட்டையில் அத்தானுக்கு உடல் நலமில்லா திருந்து குணமாகிவிட்டதாம். குளிர் மிகுதியால் உடம்பை நன்குகவனித்துக கொள்ளவும். அன்புள்ள, ந. மு. வே.  ௳ நாவலர்பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 14-11-1941 நலம், நலம்பல்குக. நேற்று (13-11-41) இரவு மணி 11-5 க்கு ஆண்குழந்தை பிறந்தது. சௌ. ராஜமும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். காப்பிடுவது குறித்து பின்பு எழுதுவேன். நேற்று M.O. பெற்றுக் கொண்டேன். அன்புள்ள, ந. மு. வே.  ௳ நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 18-11-1941 தலைவர், கரந்தைப் புலவர் கல்லூரி. அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலமே. அவண் நலத்திற்கு எழுதுக. நின் கடிதங்கள் கிடைத்தன. ராஜமும் குழந்தையும் நலமாக இருக்கின்றார்கள். குழந்தை பிறக்கும்வரை திகிலாகவே இருந் தது. கடவுள் அருள்புரிந்தார். குழந்தை பிறந்தபின் யாதொரு குற்றமும் இல்லை. நலமாக இருக்கின்றார்கள் மாலையிட்டு பிறந்தமையால் வீட்டிற்கழைக்கும்பொழுது மாமன்மாரை அழைத்து ஏதோ சடங்கு செய்வார்கள். 11 அல்லது 16 ம் நாள் ஸ்நானம் செய்வித்து வீட்டிற்கு அழைக்கப்பெறும். 22-12-41ல் காப்பிட எண்ணியிருக்கிறது. அத்தானுக்கு 21-12-41 ல் விடுமுறை தொடங்குமாம். குழந்தைக்குக் காப்பிடும் பொழுது நீ இடையேயுள்ள சில நாட்கள் லீவு எடுத்துக் கொண்டு வந்து சேர வேண்டும். பாடபுத்தகங்கள் வித்வான் திரு நாராயணசாமி அவர் கட்கு 2 நாளில் நேரில் அநுப்புவேன். குளிர் மிகுதியாய் இருக் கிறது என்றும், கம்பளி டிராயர்கள் தைக்க வேண்டுமென்றும் எழுதி இருந்தாய். அது அவசியம் செய்து கொள்ள வேண்டியதே. நான் புத்தகங்கள் அச்சிடத் தொடங்கியதில் பண நெருக்கடி ஏற்பட்டுளது. 1942 ஜூலையிலிருந்து புத்தகங்கள் விற்பனை ஆகும். அதுவரை நீ கூடிய வரை சிக்கனமாக இருந்து மிச்சப்படுத்தி அநுப்புதல் வேண்டும். 1) புத்தகம் வெளியிடுவோர் பதிவு செய்தற்குக்கட்டணம் ரூ. 230.00 2) 4, 5 ம் பாரப்புத்தகங்கள் முதலில் 200+200 அச்சிட்டது ரூ. 230.00 3) அக்காள் புத்தகம் "பாண்பெரியார் மூவர்" அச்சிட்டதற்கு R. V. லெட்சுமையநாயுடுகார் வரவு ரூ 150 போக ரூ. 40.00 4) கட்டுரைத் திரட்டு அடுத்த ஆண்டிற்குப் போதா தென்று இப்பொழுது அச்சிடுவது 240.00 5) பாடபுத்தகங்கள் பிப்பரவரியில் அப்ரூவானவுடன் ஒவ்வொன்றிலும் 2000 பிரதி அச்சிட வேண்டும். அதற்கு இப்பொழுதே பேப்பர் வாங்கி யாகவேண்டும். அதற்கு மதிப்பு ரூ. 1100.00 1840.00 ஒவ்வொன்றிலும் 3000 அச்சிடின் நலமாயிருக்கும். அப்படியே எண்ணியிருந்தேன். பண நெருக்கடியால் குறைத்து அச்சிட வேண்டியிருக்கிறது. பேப்பர் விலையேற்றத்தால் ஆயிரம் ரூபாய் அதிகச் செலவு ஏற்படுகிறது. நிலம் திருப்ப வைத்திருந்த பணத்தில் ரூ. 520 எடுத்துக் கொள்ளப் பெற்றது. அத்தான் நெல்விற்ற பணத்தில் ரூ. 112 வாங்கிக் கொண்டேன். இவ்வளவும் சேர்ந்தும் போதாத நிலையில் இருக்கிறது. ஜனவரிக்குப் பின்பு நமக்கும் அத்தானுக்கும் கிஸ்திக்கு ரூ300 வரை வேண்டியிருக்கும். குழந்தைக்குக் காப்பிட நமக்கு ரூ. 150 வேண்டியிருக்கும் ஜூன் ஜூலையில் புத்தகம் விற்க ஆரம்பித்த பின்பு சிரமம் இராது. அதுவரை கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும். ஆதலால் உன்னால் எவ்வளவு மிச்சப்படுத்தக் கூடுமோ அவ்வளவும் நலமாக இருக்கும். ஆனால், உன் உடல் நலத்திற்கும், குளிருக்கும். செய்து கொள்ள வேண்டியவைகளைப் புறக்கணிக்க வேண்டாம். குழந்தையின் ஜாதகம் நன்றாக இருக்கிறது. அன்புள்ள, ந. மு. வே.  ௳ நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி தலைலர், கரந்தைப் புலவர் கல்லூரி. கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 22-11-1941 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். நினது நலத்திற்கு எழுதுக. நின் கடிதம் நேற்றுக் கிடைத்தது. குழந்தை சிவப்புத்தான். உனது நிறம் இருக்கும். என் பெயர் வைக்கவேண்டுமென்று அக்காள் சொல்லிக் கொண்டிருக்கிறது; பலர் பெயர் சொல்ல மாட்டார்கள். ஆதலால் மற்றொரு பெயர் சேர்த்து வைக்க எண்ணியிருக்கிறேன். நீ வந்த பின்புதான் பெயர் வைக்க வேண்டும். நாளை ராஜத்திற்குத் தலைக்கு நீர் விடுவார்கள் 15ம் நாள் அதாவது வருகிற வியாழக்கிழமை புண்ணியாசனம் செய்து வீட்டுக்கு அழைக்கப்பெறும். அப்பொழுது மாமன்மாரை வைத்து மாலையிட்டுப் பிறந்ததற்குச் சாந்தி கழிக்கப் பெறும். மருதையாவுக்கு எழுதியுள்ளேன். காப்பிடுவதற்குத் தேவகோட்டையிலிருந்து அக்காள், அத்தான், குழந்தைகள் எல்லோரும் வரவேண்டுமாதலால் முன் வைக்கக் கூடவில்லை. அவர்கள் உன்னைப் பார்க்க வேண்டுமென்றும் ஆவலாயிருக்கிறார்கள். வீட்டிற்கழைக்கும் பொழுதும் நீ இருக்க வேண்டும்; இருமுறை வருவது சிரமமாயிருக்குமென்று தான் காப்பிடும் பொழுது வருமாறு தெரிவித்தேன். நீ தெரிவித்தபடி லீவு நாட்களில் வேலை செய்து ஊதியம் பெறுவது நல்லதுதான் ஒன்று செய்யலாம். டிசம்பர் 22, 23 தேதிகளோடு 21 க்கு முன் நாலைந்து நாள் லீவு எடுத்துக் கொண்டு வந்தால், 23 இரவு இங்கிருந்து புறப்பட்டுப் போகலாம் கூடுமாயின் 22ம் தேதி இரவே புறப்படினும் புறப்படலாம். குழந்தையின் ஜாதகப்படி இன்னும் 1'beவருஷத்திற்குள் உனக்கு உத்தியோக உயர்வுகளெல்லாம் ஏற்படலாம். 4, 5ம் பாரம் பாடபுத்தகங்கள் ஒவ்வொன்றிலும் 200 பிரதிகளே முதலில் அச்சிடப் பெற்றன. பிப்பரவரியில் அப்ரூவலுக்குப் பின் மிகுதியாக அச்சிடல் வேண்டும். பேப்பர் விலை ஏறிக் கிடைப் பதும் அரிதாய் இருக்கிறது. சென்னையில் ஓர் கம்பெனிக்கு முன் பணம் ரூ 100 அநுப்பிப் பேப்பர் கேட்டிருந்தது. தம்பியிடம் பேப்பர் தீர்ந்துவிட்டதென்று சொல்லிப் பணத்தைத் திருப்பி யநுப்பி விட்டார்கள். விலை மிக ஏறிவிட்டாலும் அச்சிடுவதிற் பயனில்லை இங்குள்ள ஒரு கடைக்காரர் மூலம் நேற்றுச் சில இடங்கட்கு தந்தி கொடுத்திருக்கிறது. பவுண்ட் 10 அணாவுக்கு மேற்போகாமல் கிடைத்தால் வாங்கி வைப்பதென்றும் இல்லை யேல் இவ்வாண்டு மேற்கொண்டு அச்சிடாது நிறுத்திவிடுவ தென்றும் எண்ணியுள்ளn. 2 நாளில் தெரியும். பேப்பர் வாங்கினால் மாத்திரமே மாதிரிப் பிரதிகள் பள்ளிக்கூடங்கட்கு அநுப்பப்கூடும். இன்றேல் அநுப்பலாகாது. சுந்தரம் 10 நாளின்முன் பந்தடிப்பதில் விழுந்து முழங் காலில் புண் ஏற்படுத்திக் கொண்டான். நாளுக்கு நாள் புண் பெரிதாகி உபத்திரவப்படுத்துகிறது. டாக்டர் சொக்கலிங்கம் பிள்ளையிடம் நாலைந்து நாள் கட்டிற்று. பின்பு இந்தத் தெருவிலேயே தெற்குப் பக்கத்தில் டிஸ்பென்சரி வைத்திருக்கிற ஆங்கில மருத்துவரிடம் 3 நாளாகக் கட்டி வருகிறது. இவர் செவ்வையாய்ச் சுத்தம் செய்து கட்டி வருகிறார். பொங்குகிற மருந்து ஊற்றியும் சுத்தம் செய்கிறார். சீழ் பிடித்துக் கொண் டிருத்தலால் இரவு பகலாகக் கதறி அழுதுகொண்டிருக் கிறான். புண் ஆறுதற்கு இன்னும் 10 நாள் வரையில் ஆகுமென்று டாக்டர் சொல்கிறார். ஆனால் நாளுக்கு நாள் குணமாகுமென நினைக்கிறேன். பொங்கு மருந்தின் பெயர் என்ன? அன்புள்ள, ந. மு. வே.  ௳ நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 28-11-1941 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. நானெழுதிய முந்தியகடிதம் கிடைத்திருக்குமே. சௌ. ராஜத்திற்கு நேற்றுத் தலைக்கு நீர்விட்டு வீட்டிற்கு அழைத்தாயிற்று. ராஜமும், குழந்தையும் நலமாக இருக்கிறார் கள். ராஜகோபாலும், சீனும் வந்திருந்தார்கள். மருதையா வரவில்லை. அவர்கள் இருவரும் உங்களத்தையும் இன்று செங்கிப்பட்டி போகிறார்கள். ராஜகோபாலுக்கு உடல் சிறிது நலமில்லாதிருந்தது. சுந்தரம் புண்ணினால் மிகவும் துன்புற்று விட்டான். என்று மருத்துவர் 6 நாளாக வீட்டில் வந்து கட்டுக் கட்டிப் போகிறார். இன்றுதான் குணம் ஏற்பட்டிருக்கிறது. முழுதும் ஆற ஒரு வாரத்தின் மேலாகும். நீ வரும்பொழுது அங்கே இருக்கும் மெத்தையொன்று ராஜத்திற்கு எடுத்து வரவும். கைவிரலுக்குப் போட எண்ணெய் வாங்கி வைத்திருந்தாயாம்; அதனையும் எலக்ட்ரிக் பல்ப் சிறியவை இருப்பின் அவற்றையும், வொயர் இருப்பின் அதனையும் கொண்டு வரவும். நேற்று நவக்கிரக பூசை, ஆயுள் ஹோமம் முதலிய சடங்குகள் செய்யப் பெற்றன. அன்புள்ள, ந. மு. வே.  ௳ நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 6-12-1941 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. நினது 30-11-41 ன் லெட்டர் கிடைத்தது. ராஜமும் குழந்தையும் நலமே. சுந்தரத்திற்குப் புண் பெரும்பாலும் குணம். ஒரு வாரமாகப் பள்ளிக்கூடம் போய் வருகிறான். ஆனால் இன்னும் கட்டுக் கட்டி வருகிறது. உனக்கு 16 ம் தேதி முதல் லீவு கிடைப்பது அரிதா யிருந்தால் இரண்டு நாள் குறைத்து, 18 ம் தேதி முதலாவது வாங்கி வருக. நீ வருவதை உறுதியாகத் தெரிந்தே காப்பிடுந் தேதியைக் குறிப்பிட்டு வெளியிடங்கட்குத் தெரிவிக்க வேண்டும். ஆதலால் கூடிய விரைவில் மேலதிகாரியைக் கேட்டு உறுதி செய்து கொண்டு நீ வரும் நாளைத் தெரிவிக்க. வரும்பொழுது ராஜத்திற்கு மெத்தையும், தர்மா பிளாஸ்கு ஒன்றும் மறவாமல் எடுத்து வருக. காய்கறிகள் தோட்டங்களிற் சொல்லி வைத்திருந்து அதிகம் சார்ஜ் கொடுக்க வேண்டாத வளவு வாங்கி வருக. காப்பிக் கொட்டை அங்கு மலிவாயிருக்கு மாதலால் நல்ல கொட்டையாக 5 வீசைக்குக் குறையாமல் வாங்கி வருக. 2 நாளின் முன், வித்துவான் திரு நாராயணசாமி அவர்கட்குப் பாட புத்தகங்கள் அநுப்பிக் கடிதமும் எழுதி யுள்ளேன். மருதப்ப செட்டியார், இராதாகிருஷ்ணன் முதலிய யாவரும் நலமென நம்புகிறேன். சின்னாளின் முன் இப்பக்கம் கடுங்காற்று வீசிய பொழுது அங்கு எப்படியிருந்ததோ? எனது நிழற்படம் சிலர் விரும்புகின்றனர். பழைய நிழற் படத்திற்கு பிரதிகள் எடுத்தால் கொடுக்கலாம். பதில். அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சை தேதி: 30-12-1941 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. 27-12-41 ல் எழுதிய நினது லெட்டர் கிடைத்தது. கரந்தை யில் நடைபெறும் மகா நாடுகளினால் உடன் கடிதமெழுதக் கூட்டவில்லை. அக்காள், சுந்தரம், ராஜம், குழந்தை முதலிய யாவரும் நலமே. அவண் நலத்திற்கும், நிலைமைக்கும் அடிக்கடி எழுதுக. அன்புள்ள, ந. மு. வே.  ௳ Navalar Pandit N. M. Venkataswami Nattar, 2659, Rajagopalaswami Kovil Street, Tanjore. Date: 3-1-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். நினது நலத்திற்கு எழுதுக. 1-1-42 ல் நீ எழுதிய கடிதமும், படங்களும் வந்தன பணி மிகுதியாய் இருப்பதற்கேற்ப உடம்பை நன்கு பேணிக் கொள்க. வியாழக்கிழமை காலை 4 மணிக்குச் சிரஞ்சீவி திருஞான வள்ளலுக்குக் கணை இழுப்பு ஏற்பட்டது. எல்லோரும் பயந்து அலறினார்கள். உடனே குழந்தை மருத்துவர் வந்து மருந்து கொடுத்தார். பகல் முழுதும் விட்டுவிட்டு இழுப்பு இருந்து கெண்டிருந்தது. ராஜம் அழுது கொண்டே இருந்தது. அக்காள் முதலானவர்களும் அழுது கொண்டிருந்தார்கள். நான் எல்லோருக்கும் தைரியம் சொல்லிக்கொண்டு, வைத்தியரை இரண்டு மூன்று முறை அழைத்து வந்தேன். வியாழன் இரவு 8 மணிக்கு மேல் குணமாகிவிட்டது. மருத்துவர் குழந்தை வைத்தியத்திற் கைதேர்ந்தவர். கடவுள் அருள் புரிந்தார். தெய்வங்களுக்கும் அருச்சணை செய்யப் பெற்றது. வீட்டிலே பெரும்பாலும் எல்லோருக்கும் நீர்க்கோர்வையும், இருமலுமாக இருக்கிறது. அம்மருத்துவரே யாவர்க்கும் மருந்து கொடுக்கிறார். சுந்தரம் நலமே. உங்களத்தை தற்செயலாகச் செங்கிபட்டியி லிருந்து நேற்று வந்து சேர்ந்தது. தமிழ் படிக்கும் விபரம் தெரிவிக்க. அன்புள்ள, ந. மு. வே.  ௳ Navalar Pandit N. M. Venkataswami Nattar, 2659, Rajagopalaswami Kovil Street, Tanjore. Date: 12-1-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். நினது நலத்திற்கு தெரிவிக்க. 7 - நீ எழுதிய லெட்டரும், மணியார்டரும் கிடைத்தன. குழந்தை திருஞான வள்ளலுக்கு நோயுண்டான முதல் நாள் இசிவு போல் சொடுக்கிக்சொடுக்கி இழுத்தது. மருந்து கொடுத்ததில் அடுத்த நாள் அது குணமாகிவிட்டது. பின்பு அது வரவில்லை. சளி அல்லது கபமும், அதனால் சிறிது இழைப்பு இருமலும் இருந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு நாளும் மருத்துவர் மருந்து கொடுக் கிறார். இசிவு ஏற்பட்ட பின் இன்னும் தலை முழுக்காட்டவில்லை. எண்ணெயும் கொடுக்கவில்லை. இரண்டு மூன்று நாளாகக் கபம் சிறிது மிகுதியாகவும் இருந்து வருகிறது. ஆனால் இது ஒன்றுஞ் செய்யாது. பயப்பட வேண்டியதில்லை. மருந்துகளினால் கணையை அடியுடன் எடுத்துவிடலாம். ராஜத்திற்கும் நீர்க்கோவை, சிறிது காய்ச்சல், இருமல் இப்படியிருந்து வந்தது. அதற்கும் விடாது மருந்து கொடுத்து வருகிறார். இப்பொழுது பெரும்பாலும் குணமே. அக்காளுக்கும் மருந்து கொடுத்து வருகிறார். வேறு மருந்து களும் உண்டு வருகிறது. குழந்தைக்குப் பெரும்பாலும் குளுக்கோசும் ஆன்பாலுமே உணவு. மருத்துவர்க்கு ரூ 10 கொடுத் திருக்கிறேன். கவனித்தே பார்த்து வருகிறார். நேற்றிரவு அக்காள் கனவில் காவியுடை தரித்த, தலைமுண்டிதமான சாமியாரொருவர் வந்து குழந்தையைப் பார்த்து; குழந்தையின் வலது கண் புருவத்தைப் பார்த்து, ‘இவன் பெரிய மனிதனாவான்’ இந்த நோய் ஒன்றுஞ் செய்யாது; ஒருநாள் இருந்து போய்விடும்; நான் மருந்து தருகிறேன் என்று சொல்லி போயினராம். இவ்வாறு வந்தது முருகப்பிரானே. இஞ்சிச் சாரசமும் தேனும் கலந்து ராஜத்திற்கு இரண்டு வேளை கொடுத்தது. மருத்துவர் வயிற்றில் புண் உண்டானாலும் உண்டாகுமென்று கூறி, அதனைக் கொடுக்க வேண்டாமென்று சொல்லிவிட்டார். சென்ற வாரம் அத்தான் மட்டும் தேவகோட்டை போய்ச் சனிக்கிழமை காலை மீண்டும் வந்தது. வருகிற ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் தேவகோட்டை சென்றனர். குழந்தையின் நலத்திற்கு இரண்டு மூன்று நாட் சென்று மீட்டும் எழுதுவேன். உனது நலத்தைப் பேணிக் கொள்க. அன்புள்ள, ந. மு. வே.  ௳ நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், தலைவர், கரந்தைப் புலவர் கல்லூரி. 2659, இராஜகோபாலசாமி கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 15-1-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. குழந்தை நலமடைந்து வருகின்றான். நாலைந்து நாள் பார்க்கச் சகிக்க முடியாத கஷ்டத்தை அநுபவித்தான். இவ்வளவு கபம் எப்படியுண்டாயிற்றென்று வைத்தியர் பிரமித்தார். சிறிது காய்ச்சலும், தாங்க முடியாத இருமல் இழைப்பும் இருந்தன. முன் கடிதமெழுதின திங்கட்கிழமை இரவு எல்லாம் உச்ச நிலையில் இருந்தன. கடவுளருளால் செவ்வாய் இரவு முதல் படிப்படியாக நலம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவர் அடிக்கடி பார்த்து பலவகை மருந்துகள் கொடுத்து வருகிறார் மார்பில் ஒத்தடம் கொடுத்துப் பிளாஸ்திரிப் பற்றுப் போட்டு வருகிறது. பிளாஸ்திரி மருந்து மட்டும் 5 டப்பி வாங்கியாயிற்று. காய்ச்சல் முற்றிலும் நீங்கிவிட்டது. இழுப்பும் நின்று விட்டது. இன்னும் சளிக்கட்டு இருத்தலால் விட்டு விட்டுச் சிறிது இருமல் இருக்கிறது. எனினும் 2 நாளின் முன் இருந்ததை நோக்க எவ்வளவோ நலமென்று சொல்ல வேண்டும். அபாய நிலை கடந்தாயிற்று. இன்னும் விடாது வேண்டும் சிகிச்சைகள் செய்து வருவோம். நம்மால் ஆவது என்ன இருக்கிறது. கடவுள் கைவிட மாட்டார் என்று நம்பியிருப்போம். இதைப் பார்த்து நீ மனச்சோர்வும் துயரமும் அடைய வேண்டாம். கடவுள் துணை செய்வாரென்பது உறுதி. ராஜத்திற்கும் காய்ச்சல் முதலியன இல்லை. அக்காளுக்கும் உடம்பு ஒருவாறு நலமே. இரண்டு நாளாகவே குழந்தைக்கு நல்ல தூக்கம் வருகிறது. தெய்வங்கட்கு அருச்சணைகள் செய்யப் பெறுகின்றன. சொற் பொழிவின் பொருட்டு ஞாயிறு திருச்சிக்கும், திங்கள் லாலு குடிக்கும் சென்று திங்கள் இரவே திரும்பி விடுவேன். செவ்வாய்க்கிழமை குழந்தையின் நலத்திற்கு எழுதுவேன். அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சை 20-1-42 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். நினது நலத்திற்கு எழுதுக. குழந்தைக்குப் பெரும்பாலும் உடம்பு நலமாயிருக்கிறது. இரவில் மட்டும் சிறிது இருமல் இருக்கிறது. மருத்துவர் இன்னும் மருந்து கொடுத்து வருகிறார். இருமல் முற்றிலும் நீங்கின பின்பே தலை முழுக்காட்ட வேண்டும் என்கிறார். ராஜத்திற்கும் உடம்பு நலமே. நீ ராஜத்திற்கெழுதிய கடிதம் வந்தது பின்பு தான் எழுதுவாகச் சொல்லிற்று. முன் கடிதத்தில் எழுதியபடி நான் திருச்சிக்கும், லாலு குடிக்கும் செல்லவில்லை. அதற்குக் காரணம் சென்ற வெள்ளி, சனிக்கிழமைகளில் எனக்கு இருமல் தொந்தரை மிகுந்து விட்டதே. குழந்தை மருத்துவரே எனக்கும் மருந்து கொடுத்தார். இப்பொழுது குணமாகி விட்டது. உன்னுடன் சூப்பர்வைசராயிருக்கும் Mr. ஜெயராமன் என்பவர் நேற்று வந்து பார்த்துப் பேசிக் கொண்டிருந்தார். சொக்கலிங்கம் பிள்ளையிடம் கம்பவுண்டராய் இருந்தவர். அருவங்காட்டுக்கு வந்தார். உன்னைப் பார்த்திருக்க கூடுமே? அக்காள் முதலிய யாவரும் ஞாயிற்றுக்கிழமை பகல் வண்டியில் தேவகோட்டைக்குச் சென்றார்கள். உனது நலத் திற்கும், அங்குள்ள நிலைமைக்கும், உனது மனநிலைக்கும் அடிக்கடி கடிதம் எழுதுக. அன்புள்ள, ந. மு. வே.  ௳ நாவலர்பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி தலைவர். கரந்தைப் புலவர் கல்லூரி. கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 5-2-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலமே. நினது நலத்திற்கு அடிக்கடி எழுதுக. நினது கடிதம் இன்று கிடைத்தது. முன் சௌ. ராஜத்திற்கு எழுதிய கடிதமும் வந்தது. ராஜத்திற்கும் உன் அம்மாளுக்கும் சொறி சிரங்குகள் மிகுதியாக உள்ளன. குழந்தை திருஞான வள்ளலுக்குக் கணையின் தொந்தரை நீங்கியபின் உடம்பு முழுதும் சிரங்கு ஏற்பட்டு மிகவும் துன்புறுத்தியது. அதனால் ராஜமும் உன் அம்மாளும் இரவெல்லாம் கண்விழித்துப் படாதபாடு பட்டார்கள். மருத்துவர் கொடுத்த மருந்தைப் போட்டதில் இப்பொழுது சிரங்கு பெரும்பாலும் காய்ந்து உதிர்ந்து விட்டது இன்னும் ஒன்றிரண்டு முறை போட்டால் முழுதும் உதிர்ந்து விடும். முன் 2 முறை எண்ணெயிட்டு முழுக் காட்டிய பொழுது குற்றமொன்றும் செய்யவில்லை. ஆனால் 3 வது முறையாகச் செவ்வாய்க்கிழமை எண்ணெயிட்டு முழுக்காட்டியதில், இரவு காய்ச்சல் ஏற்பட்டு, செவ்வாய் இரவு 3 மணிக்குக் கடுமையான காய்ச்சலுடன் இசிவும் ஏற்பட்டது. அப்பொழுதே மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கிவந்து கொடுத்தது. நேற்றுப் பகல் இரவெல்லாம் பல மருந்துகள் கொடுத்தார். நேற்று நடுஇரவின் பின்பே குணம் ஏற்படலாயிற்று. இன்று காலை முழுதும் நலமாகிவிட்டது. நலமாகி விட்டாலும் தொடர்ந்து சில நாளைக்கு மருந்து கொடுப்பதாகக் கூறியுள்ளார். தேய்ப்பதற்கு எண்ணெய்க்குப் பதிலாகத் தைலம் கொடுப்பதாக சொல்லியுள்ளார். நான் நேற்றுக்காலை பாண்டிச்சேரி செல்வதாக இருந்தேன். முதல் நாளிரவே குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டமையின் பயணத்தை நிறுத்திவிட்டேன். இன்றிரவு 3 மணிக்குச் சின்னத்தான் வீரையன், அத்தை, மாணிக்கம் மூவரையும் அழைத்துக் கொண்டு புதுவைக்குப் புறப்பட இருக்கிறேன். மாணிக்கத்திற்கு என்னைக் கார்டியனாக ஏற்றுக் கொள்ள அங்கே மனுக் கொடுத்துவிட்டு, துரிதமாகச் செய்யும் காரியம் ஏதேனும் இருப்பின் அதனையும் பார்த்துவிட்டு நாலைந்து நாளில் திரும்பக் கூடும். தேவகோட்டையில் யாவரும் நலமெனக் கடிதம் வந்தது அக்காள் மருந்துண்டு கொண்டே இருக்கிறதாம். அதற்கு இன்னும் போதிய வலிமையேற்படவில்லையெனத் தெரிகிறது. இப்பொழுது வேலைக்கு ஆள் வைத்துள்ளார்களாம். தங்கையனிடமிருந்து கடிதம் வருகிறதா? அவனது பரிட்சையின் முடிவு என்னாயிற்றென்று தெரியவில்லை. எழுதிய லெட்டருக்கும் பதில் வரவில்லை. சுந்தரத்திற்கு அப்பொழுதே புண் ஆறிவிட்டது. பழனி விலாசத்திலுள்ள யாவரும் சிற்றப்பா வீட்டில் வந்திருக் கிறார்கள். ஞானியார் சுவாமிகள் பழனி சென்று திரும்பும்பொழுது தைப்பூசத்தன்று உயிர் பிரியப் பெற்றும் மிகுந்த வருத்தத்தை உண்டாக்கியது. தமிழுக்கும் சிறப்பாகச் சமயத்திற்கும் இது ஈடு செய்ய முடியாத நஷ்டமாகும். 40 நாளின் முன் நான் திருச்சியில் பேசிக் கொண்டிருந்த பொழுது உன்னைப் பற்றியும் விசாரித் தார்கள். கீழ்த்திசைப் போரானது இந்திய மக்கள் பலருக்கு அளவிட முடியாத துன்பத்தையும் கலக்கத்தையும் அளித்திருக் கிறது. அதன் வேகத்தைப் பார்த்தால் இன்னும் என்னென்ன நிகழுமோ என அஞ்ச வேண்டியிருக்கிறது. நீ எவ்வளவு துணி வாக எழுதின போதிலும் உன் அம்மாள் முதலானவர்களுக்குக் கவலை இருந்து கொண்டு தான் இருக்கிறது. இங்கே 2 மாதமாகச் செலவு அளவின்றிப் பெருகிக் கொண்டும் வருவாய் குறைந்து கொண்டுமிருக்கிறது நடு வீடும் காலியாகவே கிடக்கிறது. யுத்தத்தினால் ஜூன் ஜூலை மாதங்களில் புத்தக விற்பனையும் பாதிக்கப்படுமென எண்ண வேண்டியிருக்கிறது. நீ நாள்தோறும் கோளறு பதிகத்தையும், இன்னும் கூடுமாயின் பஞ்சாக்கரப்பதிகம் முதலியவற்றையும் பாராயணம் பண்ணி வருக. வேலை நேரம் பற்றியும், நலம் பற்றியும் அடிக்கடி எழுதுக. அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சை தேதி: 13-2-42 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். உனது நலத்திற்கு எழுதுக. மணியார்டர் கிடைத்தது. குழந்தைக்குச் சிரங்கு பெரும்பாலும் உதிர்ந்து விட்டது. இன்று வைத்தியர் கொடுத்த தைலம் தேய்த்த முழுக்காட்டியது. ராஜத்திற்கும் உன் அம்மாளுக்கும் சிரங்கு இருக்கிறது. எங்குமே இப்படி, விரைவில் அவர்கட்கும் நீங்கி விடும். பூதலூரில் சிவகாமுக்குப் புதன்கிழமை காலை 11 மணிக்கு ஆண் குழந்தை பிறந்து தாயும் குழந்தையும் நலமாக இருக் கிறார்கள். நாங்கள் எல்லோரும் நாளை நடுக்காவேரி செல் கின்றோம். அருவடையைப் பார்த்துக் கொண்டு, குல தெய்வங் களைக் கும்பிட்டு விட்டு ஒரு வாரத்தில் இங்கு வருவோம். அடிக்கடி எழுதுக. அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சை தேதி: 26-2-42 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். உனது நலத்திற்கு எழுதுக. நாங்கள் செவ்வாய்க்கிழமை நடுக்காவேரியிலிருந்து வந்தோம். இன்று உனக்குக் கடிதமெழுத எண்ணியிருந்த பொழுது உனது கடிதம் வந்தது. குழந்தை திருஞான வள்ளலுக்கு ஏதாவது ஒரு தொந்தரை இருந்து கொண்டேயிருக்கிறது. உச்சி முதல் உள்ளங்கால் வரையில் சிரங்குகள் உண்டாகி, மருந்தினால் உதிர்ந்து உதிர்ந்து கிளைத்துக் கொண்டிருக்கின்றன. அதனால் குழந்தை மிகவும் துன்புறுகின்றான். குப்புற்றுத் தவழ்ந்து விளையாடும் பருவம் இது. இதில் கைபிடித்து தூக்குவதற்கே அஞ்சும்படி திடமில்லா திருக்கின்றான். சிரிப்பென்பது சிறிதும் கிடையாது. நாலைந்து வகையான மருந்துகளை வாங்கிக்கொண்டு நடுக்காவேரிக்குக் கொண்டு சென்றோம். ஆனால் அம்மருந்துகளுக்குப் புறம்பான நோய் அதாவது வயிற்றுகாவு ஏற்பட்டு நாலைந்து நாள் வயிற்றுப் போக்கு போயிற்று. இங்கே கொண்டு வந்து மருந்து கொடுத்ததில் குணமாயிற்று. சிறிதும் தாய்ப்பால் சுவைத்தறியாதவன். பசுவின் பாலும், குளுகோஸ் தண்ணீருமே உணவு. அல்லேன்புரீஸ் மில்க் புட் பாண்டிச்சேரியிலிருந்து 2 புட்டி வாங்கி வந்தேன். அதுவும் முழுதும் ஒத்துக் கொள்ளாமையால் இன்னும் 1 புட்டி இருக்கிறது. இன்று ஆரஞ்சுப் பழ ரஸம் ஒரு ஸ்பூன் கொடுத்திருக்கிறது. இது ஒத்துக் கொள்ளுமானால் நாடோறும் கொடுத்து வரலாம். எப்படியும் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் முழுதும் குணமாகி நலமுறுவன் என நம்புகிறேன். தெய்வங்கட்கெல்லாம் அடிக்கடி அருச்சனை முதலியன செய்யப்படுகின்றன. நீ நீண்ட நாள் ஓட்டலில் உண்டு வருவது வருத்தமாகவே இருக்கிறது. ஆனால் என் செய்வது? ராஜம் வருவதில் தடை ஒன்றும் இல்லை. குழந்தையை அங்கே எப்படிக் கொண்டு வருவது? சிறிது திடமுண்டாகும் வரை குழந்தை அங்கே வரஇயலாது. இங்கே குழந்தையை வைத்து உங்களம்மாள் பராமரிக்கவும் இயலாது, ஆதலின் இன்னும் 2 மாதம் சென்ற பின்புதான் ராஜம் அங்கே வருவது பற்றி யோசிக்க வேண்டும். உங்களம்மாளுக்கும், ராஜத்திற்கும் சிரங்குகள் (சொறி) இருந்து கொண்டிருக்கின்றன. உன் அம்மாளுக்கு பலக்குறைவும் மிகுதி. எனக்கு இரவில் சிறிது இருமல் இருக்கிறது. ஆனால் அதனோடு வேலை செய்கிறேன். உடம்பு தேறாமலே இருக்கிறது. இம்முறை ஊரில் எல்லோருமே உடல் இளைத்திருப்பது பற்றி விசாரித்தார்கள். நிற்க- இன்று வந்த உன் கடிதம் மிகுந்த கவலையைத் தருகிறது. இரவில் கதவை அடைத்து போட்டோ படம் கழுவுங்காலங் களிலேயே அச்சத்துடன் அடிக்கடி உன்னைக் கூப்பிட்டுப் பார்க்கும் உன் அன்னைக்கு இச் செய்தி எவ்வளவு கவலையைக் கொடுப்பதாகும். ஒவ்வொரு வாரமும் நீ வேலை செய்யும் நேரத்தைக் குறிப்பிட்டு எழுத வேண்டும். இப்பொழுதும் பணிக்கர் மெஸ் என்றே விலாசம் எழுதலாமா? உனக்குத் தந்தி விலாசம் எப்படி? பொதுவாக எல்லோருக்கும் உடல் நலமில்லாதிருத்தலின் நீ லீவு எடுத்துக் கொண்டு வந்த சேர்வது நலமென எண்ணு கின்றோம். தேதி குறிப்பிடாத ஓர் கடிதம் இதனுடன் இருக்கிறது. ஏற்றபடி, செய்க. உடன் பதில் எழுதுக. வருகிற புதன், வியாழனில் ராஜத்தைச் செங்கிபட்டிக்கு அழைத்துச் செல் வார்கள். அன்புள்ள, ந. மு. வே.  ௳ நாவலர்பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி தலைவர். கரந்தைப் புலவர் கல்லூரி. கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுள் அருளால் நலமுண்டாக. இங்கே குழந்தைக்கு உடம்பு சுகமில்லாதிருப்பதுடன், உன் தாயார்க்கும் உடம்பு சுகமில்லாதிருப்பதாலும், உன் தாயார் உன்னைப் பார்க்க ஆவலாயிருப்பதாலும் உடனே லீவு எடுத்துக் கொண்டு வந்து சேரவும். அன்புள்ள, ந. மு. வேங்கடசாமி  ௳ நாவலர்பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி தலைவர். கரந்தைப் புலவர் கல்லூரி. கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 14-3-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். நினது நலத்திற்கு எழுதுக. நீ அனுப்பிய M. O. நேற்றுக் கிடைத்தது. செங்கிப்பட்டியிலிருந்து ராஜகோபால் எழுதிய கடிதம் நேற்று வந்ததில், குழந்தைக்கு உடம்பு நலமில்லாதிருந்து அங்குள்ள டாக்டர் மருந்து கொடுத்ததில் கொஞ்சம் குணமாயிருக்கிறதென்றும், இருந்தாலும் அங்கு உள்ளவர்களால் குழந்தையை அமர்த்தக்கூடவில்லையென்றும் எழுதியிருந்தது. இங்கே அழைத்து வந்துவிடுவது நலமென்ற கருத்துடன் எழுதியிருந்ததாகத் தோன்றியது. நானே சென்று இன்று அழைத்து வருவதென்று நேற்று மாலை செங்கிபட்டி சென்றேன். குழந்தை நலமாக இருக்கிறது. இடையே வயிற்றில் மப்பு ஏற்பட்டு வலியினாலே குழந்தை மிகுதியாக அழுததாகத் தெரிகிறது. செங்கிபட்டியிலுள்ள டாக்டரும் குழந்தை வைத்தியத்தில் சிறந்தவராம். அவர் மருந்து கொடுத்ததில் மப்பும், வயிற்று வலியும் நீங்கி இரண்டு நாளாக அழுகையும் பெரும்பாலும் இல்லாதிருக்கிறது. குழந்தைக்கு நோய் உண்டான பிற்பாடு இந்த இரண்டு நாளாகத்தான் அழாமலிருக்கிறது என்று ராஜம் சொல்லிற்று. சிரங்கும் பெரும்பாலும் காய்ந்துவிட்டது. அங்கே தெய் வங்களுக்குச் செய்ய வேண்டியது இன்னும் செய்யவில்லை என்றும், செய்த பின் ஐந்தாறு நாட்கழித்து அழைத்துச் சென்றால் நல்லது என்றும் சொன்னார்கள். குழந்தை நலமாக இருப்பது கருதி, அப்படியே செய்வது நலமென நானும் எண்ணி, பத்திரமாய் பார்த்துக் கொள்ளுமாறு டாக்டரிடமும் சொல்லிவிட்டு இன்று இங்கு வந்துவிட்டேன். குழந்தையின் பாலுக்காகச் செங்கிப்பட்டியில் ஒரு பசு விலைக்கு வாங்கியுள்ளார்கள். உலகன் பசு கன்று போட்டதை விலைக்கு வாங்கி இங்கும் 10 நாளாகக் கறந்து வருகிறது. சிதம்பரநாதன் மாணிக்கம் சுந்தரத்துடன் சில நாட்களாகப் பள்ளிக்குச் சென்று ரெங்கநாதன் வகுப்பில் இருந்து வருகிறான். பள்ளிக்குச் செல்வதில் அவனுக்குள்ள ஆவலால் உடல் நலமில்லாத பொழுதும் அவனை நிறுத்த முடியவில்லை. உன் அம்மாளுக்குச் சிரங்கு மிகுதியாயிருந்து, சுந்தரம் புண்ணுக்குப் போட்ட மருந்து போட்டு வந்ததில் பெரும்பாலும் காய்ந்திருக் கிறது. பலமின்மை மிகுதியாயிருக்கிறது. கவலையும் மிகுதியென நினைக்கிறேன். அக்காளுக்கும் உடம்பு இன்னும் நல்ல நிலைக்கு வரவில்லையெனத் தெரிகிறது. திருச்சியிலுள்ள ஜனங்க ளெல்லாம் புறப்பட்டு வெளியே செல்வதால் திருச்சி-தஞ்சை ‘பஸ்’ ஸில் கூட்டம் மிகுதியாயிருக்கிறது. திருச்சி வானொலிக்கு எனது படம் எப்பொழுதேனும் அநுப்பியிருந்தாயோ? வானொலியிற் அதனைப் பயன்படுத்த இடமில்லையென்று கூறி அதனைத் திருப்பியது இன்று வந்துளது. தலைப்பாகையைச் சுற்றிக் கோடுபோடாத படம் இருப்பின் உடன் ஒன்று அநுப்புக. கவனமாக இருப்பதுடன் அங்குள்ள நிலைமையை விபரமாக தெரிவிக்க. அன்புள்ள, ந. மு. வேங்கடசாமி மடத்தில் மண்டகப்படி செய்து, நாளைந்து நாட்சென்று நடப்பா இங்கு வந்தபொழுது திருநீறு குங்குமம் கொண்டு வந்தது. செங்கிபட்டிக்கு அனுப்பினேன். ந. மு. வே.  ௳ நாவலர்பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி தலைவர். கரந்தைப் புலவர் கல்லூரி. கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 18-4-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். உனது நலத்திற்கு அடிக்கடி எழுதுக. நினது லெட்டரும் மணியார்டரும் கிடைத்தன. தேவ கோட்டையிலிருந்து அக்காள் முதலிய யாவரும் வியாழக் கிழமை வந்து சேர்ந்தார்கள். சின்னத்தானும் வந்திருக்கிறது. யாவரும் நலமே. குழந்தை திருஞான வள்ளல் நலமே. என் உடம்பும் நலமடைந்திருக்கிறது. வருகிற புதன், வியாழனில் வந்து சௌ. ராஜத்தை அழைத்துக் கொண்டு போகும்படி செங்கி பட்டிக்கு இன்று எழுதுகிறேன். வைகாசி முதலில் எல்லாக் குழந்தைகளுக்கும் பழனியில் முடியெடுக்கவும், படுகையில் காது குத்தவும் எண்ணியிருக்கிறது. நிலைமைக்கு அடிக்கடி எழுதுக. அன்புள்ள, ந. மு. வேங்கடசாமி மருதையாவைக் கமலா மில்லுக்கு அநுப்பி வைக்கும்படி அன்பர் ராஜு நாயுடு ஒத்துக் கொண்டார். மே முதல் வாரத்தில் அங்கே செல்ல வேண்டுமென்று மருதையாவுக்கு எழுதியுள்ளேன். அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சை 27-4-42 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலமுண்டாக. இவண் நலம் நலத்திற்கு எழுதுக. 19-4-42 லேயே ராஜமும் குழந்தையும் செங்கிப்பட்டி சென்று விட்டார்கள். நலமாய் இருப்பதாக இன்று கடிதம் வந்தது. அக்காள் முதலிய யாவரும் நேற்று முன்னாள் படுகைக்குச் சென்றுளார்கள். திருநாவு மாத்திரம் இங்கிருக்கின்றனன். மே 'b5 11 ௳ முள்ளாலில் பாப்பாவுக்கு முடியெடுக்கவும், 18ஆம் தேதி எல்லாக் குழந்தை களுக்கும் பழனியில் முடியெடுக்கவும் 21-5-42ல் எல்லாருக்கும் படுகையில் காது குத்தவும் எண்ணியுள்ளோம். காது குத்தும் பொழுது கட்டாயம் நீ உடனிருக்க வேண்டும். பழனிக்கும் வரக்கூடுமாயின் நலமே. நீ வந்து ராஜத்தை அழைத்து செல்வதற்கு 25-5-42 நாள் பொருத்தமாயிருக்கிறது. நீ ராஜத்தை அழைத்துச் செல்வது குறித்துச் சொல்லும் பொழுதும் எழுதும் பொழுதும் குழந்தையை எப்படித் தனியே வைத்துக் கொண்டிருப்பேன் என்று ராஜம் கலக்கமடைவதுண்டு. குறிப்பிட்ட தேதிக்குள் குழந்தை இன்னும் சிறிது தேறினால், நீலகிரியில் உதவிக்கு ஆளும் இருந்தால் அழைத்துச் செல்லலாம் என நினைக்கிறேன். எதற்கும் பாக்டரிக்கு மிக நெருக்கமாயும், தூரமாயும் இல்லாமல் ஒரு வீடும் வேலைக்குத் தக்க வேலைகாரியும் பார்த்து வைப்பது நல்லது. திரு சிதம்பரம் பிள்ளை வீட்டுப் பக்கமோ, இராமலிங்கம் இருக்குமிடமோ வீடு கிடைப்பின் ராஜத்திற்கும் குழந்தைக்கும் துணையாயிருக்கக் கூடும். காது குத்தும் தேதியை நிச்சயமாகப் பின்பும் எழுதுவேன். தங்கையன் தேறவில்லையென்று இன்று கடிதம் வந்தது. ரிஸ்டு வாட்சு வாங்கி வைத்திருக்கிறது. அன்புள்ள, ந. மு. வே. ௳ நாவலர்பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி தலைவர். கரந்தைப் புலவர் கல்லூரி. கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 8-5-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் இறைவனருளால் எல்லா நலங்களும் உண்டாக. இவண் யாவரும் நலம். நினது நலத்திற்கு எழுதுக. ரிஸ்டு வாட்சு பத்திரமாக வந்து சேர்ந்ததா? சரியாய் ஓடுகிறதா? ரிப்பேருக்கு ரூ 1-8-0 கொடுத்தது. குழந்தை திருஞானவள்ளல் யாரையும் உற்று நோக்குவ தாகவும், சிரிக்கிறதாகவும் இராசகோபால் சொல்லிற்று. ஆனால் சரியானபடி சொல்லைக் காகிறதில்லையென்றும், டாக்டர் மருந்தெண்ணை கொடுக்கும் பொழுது மாத்திரம் சொல்லைக் காகிக் கத்தாமலிருக்கிறதென்றும் சொல்லிற்று. இந்த நிலைமையில் குழந்தையை நீலகிரிக்கு எப்படி அழைத்து போவதென்றும் கூறிற்று. குழந்தைகளுக்குப் பழனியில் முடியயெடுத்துக் காது குத்தும் தேதி இரண்டு நாட் சென்றே நிச்சயிக்கப்பெறும். சின்னத் தானுடைய பங்காளி ஒருவர் 30-4-42ல் இளங்காட்டில் இறந்துவிட்டதாகவும், பாப்பாவுக்கு முடியெடுக்க 30 நாள் கழிக்க வேண்டுமென்று சொல்கிறார்களெனவும் கடிதம் வந்தது. இங்கே நாளை முதல் மூன்று நாட்கள் கரந்தைச் சங்க ஆண்டு விழா நடக்கும். நாளை திருச்சியில் எங்கள் மீட்டிங்கு நடப்பதால் நான் இன்றிரவு திருச்சி சென்று நாளையிரவு திரும்புவேன். அத்தானும், சின்னத்தானும் நாளை மறுநாள் இங்கு வருவார்கள். அப்பொழுது காது குத்துவது குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம். ராஜத்தை அழைத்து வரும்படி அக்காள் பூதலூரண்ணணை 4 நாளின் முன் அநுப்பியதாம். செங்கிபட்டி டாக்டர் இரண்டு மூன்று மாதத்திற்குக் குழந்தையை எங்கும் அழைத்துப் போகக் கூடாதென்று சொன்னாராம். அதனால் காது குத்துக்கு 2 நாள் முன்பு மாத்திரம் வருவதாகச் சொல்லி யநுப்பிற்றாம். வீட்டிற்காகத் திரு சிதம்பரம் பிள்ளைக்கு எழுதும்படி தெரிவித்திருந்தாய். கடிதமெழுத எனக்கு ஓய்வேயில்லை. அன்றியும் இந்த சிறு காரியத்திற்கு நான் எழுத வேண்டுமா? எனவும் எண்ணினேன். நீயே அவரிடமும், ஷாப் இராமசாமி பிள்ளையிடமும் சொல்லினால் அவர்கள் பார்க்கக்கூடும். நான் எழுதுவது அவசியமாயின் எழுதுவேன். வித்வான் திரு நாராயணசாமி அங்கிருந்தால் 4 வது பாரத்திற்கு மட்டும் நமது புத்தகத்தை அங்குள்ள ஸ்கூல்களில் பாடம் வைக்க முயலுமாறு சொல்க. உனது பிரமோஷன் பற்றி இன்னும் ஒன்றும் தெரிய வில்லையே? வரவு செலவுகளை ஒழுங்காக எழுதி வருவதனாலே நன்மையுண்டு என்பது என் அநுபவம். ஒழுங்காக எழுதாமலும், சாவியைக் கைவசமே வைத்துக் கொள்ளாமலும அதைரியமாக இருப்பதனால் முடிவாகக்கணக்கு பார்க்கும் பொழுதுதொகை குறைந்திருப்பதான எண்ணமும், அதனால் வருகிற பேர் போகிற பேர் மேலெல்லாம் ஐயப்பாடும் ஏற்பட இடமுண்டாகின்றது. அதனால் வேலையும் கெட்டு விடுகிறது. ஆதலால் இவ் வகையில் நீ கருத்தாயிருந்தால் மிகுந்த நன்மையுண்டு; கவலைக் கிடமிராது. ஒன்றிரண்டு ஆண்டுகள் வரை தொடர்ச்சியாய் எனக்குக் கணக்கு ஒப்புவிப்பது என்ற வழக்கம் வைத்துக் கொண்டால் ஒழுங்காகக் கணக்கெழுதும் பழக்கம் ஏற்பட்டு விடும். எனக்குக் கணக்கு ஒப்புவிப்பதனாலே நீ சிரமமாய்ச் செய்ய வேண்டிய செலவுகளைக் குறைக்க வேண்டியதில்லை. உதவிக்குப் பாத்திரமான யாருக்கேனும் நீ உதவி செய்வதையும் நான் மறுக்க மாட்டேன். நிற்க- மருதையா 6-5-42ல் கமலா மில்லில் வந்து வேலை ஒப்புக் கொண்டாராம் உன்னைப் பற்றிக் கூட ராஜு நாயுடுவுக்கு நான் எழுதியிருந்தேன். கோயமுத்தூர் மில்களில் மானேஜர் வேலைக்கு மாதம் ரூ 600-700 சம்பளம் கொடுக்கிறார்களாம். ஒரு மில்லில் ரூ 1000 சம்பளம் கொடுக்கிறார்கள். ஆரம்பச் சம்பளம் ரூ 100 அல்லது 150 இருக்கலாம். ராஜு நாயுடு எனக்கெழுதிய பதிலில் மானேஜர்கள் மானேஜிங் ஏஜண்டோடு ஒத்துப் போகும் இயல்புள்ளவராயிருக்க வேண்டுமென்றும், டெக்ஸ்டைல் சம்பந்தமான சில புத்தகங்கள் படித்துக் கொண்டால் மானேஜ ராக நியமிக்கப்படலாமென்றும் கூறினார். கோயமுத்தூரைப் போன்ற இடமாக இருந்தால் ராஜத்தை இவ்வளவு காலம் பிரிந்திருப்பது போல் பிரிந்திருக்க வேண்டிய அவசியம் இராது. எல்லோருமே கூடச் சேர்ந்திருக்கலாம். இதைக் கவனத்தில் வைத்து ஆலோசிக்கவும், உன் நண்பர்களிடத்தில் இது போன்ற செய்திகளைக் கலந்து ஆலோசித்தல் தகாது. இங்கே சில நாட்களாக வெப்பம் தாங்க முடியவில்லை. அவ்விடம் நிலைமைக்கும் நலத்திற்கும் எழுதுக. அன்புள்ள, ந. மு. வே.  ௳ Navalar Pandit N. M. Venkataswami Nattar, 2659, Rajagopalaswami Kovil Street, Tanjore. Date: 19-5-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். நினது நலத்திற்கு எழுதுக. குழந்தைகளுக்கு முடியெடுத்துக் காது குத்துவது தவக்கமுற்று வருகிறது. பாப்பாவுக்கு நேற்று முள்ளாலில் முடியெடுக்க எண்ணி இருந்தோம். சின்னத்தானின் தமையனார் மனைவிக்குத் திடீரென உடல் முழுதும் வீங்கிஏதோ நோயுண்டானமையால் அது நின்றது. விரைவில் குணமாயின் வருகிற திங்கள் அல்லது வியாழனில் முடி எடுக்கலாம். பின்பு நாள் பார்த்துப் பழனிக்குச் செல்ல வேண்டும். இறைவன் திருவுள்ளம் எப்படியோ? பின் எழுதுவேன். நான் நேற்றுச் செங்கிபட்டி சென்று குழந்தையைப் பார்த்து வந்தேன். இன்னும் போதியவளவு தேறாவிட்டாலும், முன்னையினும் சிறிது தேறியுள்ளான். நன்கு பார்த்தலும் சிரித்தலும் செய்கின்றான். தலையில் சிறிது சிரங்கு இருக்கிறது. நீ தெரிவித்த செய்தியைச் சிற்றப்பாவுக்குத் தெரிவித்தேன். கும்பகோணத்தில் உள்ள மாமனாருக்கு நேற்று எழுதியிருக்கிறதாம். டெக்ஸ்டைல் படிப்புப் பற்றி நீ எழுதியதை திரு ராஜு நாயுடுவுக்கு எழுதியுள்ளேன். உறுதி கூறு வேண்டுமென்பதில்லாமலே படிக்கலாம். முதலில் இன்ஸ்டிட்யூட்டில் சேராமலே கூட இரண்டொரு புத்தகங்களை வாங்கிப் படிக்கலாம். சில புத்தகங்கள் படிப்பது நல்லதென்றே ராஜு நாயுடுவும் எழுதியிருந்தார். அண்ணாமலை யூனிவர்சிட்டியில் தமிழாராய்ச்சிப் பகுதியை விரிவு படுத்துகிறார்கள். என் ஆலோசனைக் கேட்டிருந்தனர். நான் எழுதியதன் மேல், வைஸ்சான்சலர் நேரில் சந்தித்துப் பேச விரும்பித் தெரிவித்தார். நாளைக் காலை அண்ணாமலை நகர் செல்கின்றேன். நான் இங்கிருந்தே பார்க்கும்படி என்னிடம் சில வேலைகள் ஒப்படைக்கப்படலாம். பிற பின். அன்புள்ள, ந. மு. வே.  ௳ நாவலர்பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி தலைவர். கரந்தைப் புலவர் கல்லூரி. கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி:30-5-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குச் சிவபிரானருளால் எல்லா நலங்களும் உண்டாக. இவண் யாவரும் நலம். நினது நலத்திற்கு எழுதுக. உன்னிடமிருந்து நீண்ட நாளாகக் கடிதம் வரவில்லை. பாப்பாவுக்கு வியாழக்கிழமை முள்ளாலில் முடியெடுத் தது. நான் புதன்கிழமை படுகைக்குச் சென்று, பாப்பாவையும், அத்தான் முதலானவர்களையும் அழைத்துக் கொண்டு சென்று முடியெடுத்தபின், நேற்றுச் செங்கரையூரிலிருந்து லால்குடி சென்று திருவள்ளுவர் கழக விழாவில் தலைமை வகித்து, இரவு புறப்பட்டு இன்று காலை இங்கு வந்தேன். 3-6-42 புதன்கிழமை பழனியில் எல்லாக் குழந்தைகட்கும் முடியெடுத்துக் காது குத்த நிச்சயித்திருக்கிறது. செவ்வாய்க் கிழமை பகல் 1 மணிக்கு நாங்கள் இங்கிருந்து புறப்பட்டுப் பூதலூர் செல்வோம். படுகையில் உள்ளவர்களும், சின்னத் தானும் அங்கு வந்து சேர்வார்கள். அங்கிருந்து செவ்வாயிரவு செங்கோட்டை பாசஞ்சரில் புறப்பட்டு இரவு 8½ மணிக்குப் பழனி சேர்வோம். புதன்கிழமையே முடியெடுத்துக் காது குத்தி ஆண்டவன் வழிபாட்டினை முடித்துக் கொண்டு, வியாழக் கிழமை படுகை வந்து சேர்வோம். காது குத்தும் பொழுது மாமன் உடனிருக்க வேண்டு மென்று எல்லோரும் கூறுகின்றார்கள். நீ பழனிக்கு மாத்திர மேனும் லீவு எடுத்து வந்து திரும்புதல் நலமாகும். போத்தனூரி லிருந்து பொள்ளாச்சி வழியாகப் பழனி வருதல் வேண்டும். பழனியில் J.M. சோமசுந்தரம் பிள்ளை, B.A. B.L. தேவஸ் தானம் மானேஜராக இருக்கிறார். அவர் எல்லா வசதிகளும் செய்து வைப்பர். ராஜம் சில நாளேனும்படுகையில் வந்திருக்கவேண்டு மென்று அக்காள் விரும்பிற்று. பலமுறை சொல்லியநுப்பியும் ராஜம் அங்கும் போகவில்லை; இங்கும் வரவில்லை. சென்ற வியாழக்கிழமையேனும் படுகைக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்திருந்தேன். போன விபரம் தெரியவில்லை. ராஜத்தையும், குழந்தை திருஞான வள்ளலையும் பழனிக்கு அழைத்துச் செல்வோம். பழனிக்கு வர முயல்க. அன்புள்ள, ந. மு. வே.  ௳ நாவலர்பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி தலைவர். கரந்தைப் புலவர் கல்லூரி. கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 9-6-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலமுண்டாக. இவண் யாவரும் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. 3-6-42ல் பழனியில் முருகப் பிரானுக்கு எல்லா அபிஷேக ஆராதனை களும் சிறப்பாகச் செய்வித்துச் சந்நிதியிலேயே குழந்தைகட்குப் பரமசிவம் ஆசாரியாரால் காது குத்தப் பெற்றது. தரிசனம் மிக விசேடமாக இருந்தது. அடுத்த நாளே யாவரும் படுகை சேர்ந்தோம். வெள்ளிக்கிழமை உறவினர் கூட்டத்திற்கு விருந்து நடந்தது. அத்தானுக்கு நேற்றே பள்ளிக் கூடம் திறந்தது. அத்தானை எப்படியும் இங்கே கொண்டு வருவதெனத் தீர்மானித்து, அத்தான், அக்காள், பாப்பா மூவரையுமே ஞாயிற்றுக்கிழமை தேவகோட்டைக்கு அநுப்பி விட்டு, மற்று யாவரும் அன்றே இங்கு வந்து சேர்ந்தோம். இராஜத்தையும் இங்கு அழைத்து வந்துளோம். குழந்தை திருஞானவள்ளல் நலமாக இருக்கின்றனன். சிறிது பேச முயல்கின்றனன். குழந்தை மிக மெலிவாயிருப்பது பற்றியே உறவினர் யாவரும் வியப்புறுகின்றனர். நான் நாளைக் காலை நாடிமுத்துப் பிள்ளையைப் பார்த்துக் கேட்டுவிடுவதென்று பட்டுக்கோட்டை செல்கின்றேன். அவர் திருவையாற்று வேலை கொடுக்காவிட்டால் கரந்தைப் புலவர் கல்லூரிக்கே அத்தானை அழைத்துக் கொள்ளத் தீர்மானித் துளேன். சம்பந்தன் அங்கு வந்திருந்தானெனக் கேள்வியுற்றேன், இப்பொழுது எங்குளான்? வேலைக்கு இங்கு யாரும் தகுதி உடையவர்கள் கிடைக்க மாட்டார்கள், அங்கேயே முயன்று யாரையேனும் அமர்த்திக் கொள்க. 24-6-42 புதன்கிழமை இங்கிருந்து புறப்படுவதற்கு நாள் நன்றாயிருக்கிறது. இராசகோபால் போஸ்ட்மாஸ்டர் வேலை பார்ப்பதால் அழைத்து வர இயலாது. நான் தான் அழைத்து வர வேண்டியிருக்கும். 24௳ இரவு புறப்பட்டு உப்பிலிபாளையம் வந்து, ஒரு நாள் இளைப்பாறச் செய்து, வெள்ளிக்கிழமை மருதை யாவுடன் அருவாங்காட்டிற்கு அநுப்பிவிட்டுத் திரும்ப நினைக் கிறேன். குடிபுகுவதற்கும் வெள்ளிக்கிழமை நாள் நன்றாயிருக் கிறது. ஆனால் அதற்குள்ளாக திரு இராமசாமி பிள்ளை முதலானவர்களிடம் சொல்லி வேலைக்கும், துணைக்கும் ஆள் அமர்த்திக் கொள்ள வேண்டும். வீட்டில் இருந்து சமைப்பதற்கு வேண்டிய யாவற்றையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு முடியெடுத்துக் காதுகுத்தியதில் செய் வினை தவிர, நமக்கு ரூ 230 செலவாகியிருக்கிறது. ஆனால் இது மகிழ்ச்சி விளைக்கும் செலவு. வருந்தத்தக்க பெரு நஷ்டம் ஒன்று ஏற்பட்டு விட்டது. 4 வது பார புத்தகம் அப்ரூவாயிற்று எனத் தியாகராஜபிள்ளை தெரிவித்ததை நம்பி 3000 பிரதி அச்சிடப் பெற்றது. சில நாளின் முன் வந்த, அங்கீகரிக்கப்பட்ட புத்தக லிஸ்டில் நமது புத்தகம் காணப்படவில்லை. கம்பெனிக்காரர் களின் சூழ்ச்சியாலோ, வேறு பெயருடைய பொறாமையாலோ இவ்வாறு செய்யப்பெற்றுளது. இவ்வகையில் ரூ 1300 வரையில் செலவாகிவிட்டது பணச் செலவின்றி, உடல் முயற்சியும், நண்பர்கள் பாடம் வைக்க முயன்ற முயற்சியும் வீணாயின. எல்லாம் கடவுள் செயல். நீ தெரிவித்ததைச் சிற்றப்பா பட்டினத்தாரிடம் கூறிய பொழுது, அவர் நரசிம்ம ஐயர் தம்மால் செய்யக் கூடிய ஒரு சிறு வேலைக்குத் தாம் சிபார்சு செய்தும் கவனிக்கவில்லை யென்றும். ஆதலால் அவருக்கு எழுதுவதில் பயனில்லை யென்றும் கூறிவிட்டாராம். மேலே குறிப்பிட்ட நாளில் ராஜத்தை அழைத்து வருவ தற்கு அங்கே எல்லாம் பொருத்தமாயிருப்பது குறித்து எனக்கும் செங்கிபட்டிக்கும் மருதையாவுக்கும் எழுதுக. அண்ணாமலை நகரில் சிண்டி கேட் கூட்டத்தில் ஆலோசித்து எனக்குத் தெரிவிப் பார்கள். அன்புள்ள, ந. மு. வே.  ௳ Navalar Pandit N. M. Venkataswami Nattar, 2659, Rajagopalaswami Kovil Street, Tanjore. Date: 17-6-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலமுண்டாக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. நின் கடிதங்கள் கிடைத்தன. திரு நாடிமுத்துப்பிள்ளை திருவையாற்று வேலை தருவார் போலவே தோன்றுகிறது. காலேஜ் திறந்த பின்பே நியமனஞ் செய்வாராம். அஃது இல்லாவிடினும் கரந்தையில் நியமித்து விடலாம். 5-7-42க்குள் அத்தான் இப்பக்கம் வந்து விடக்கூடும். இன்று சம்பந்தன் தவிர எல்லோரையும் N. H. Schoolல் சேர்த்தாயிற்று. குழந்தை திருஞான வள்ளலுக்கு ஏழெட்டு நாட்களாக மூலம் போல் சிறிது இரத்தம் வருகிறது. அதனால் உடல் இளைத்து மிருக்கிறது. மருத்துவம் பார்ப்பதோடு சிறிது ஆட்டுப்பாலும் கொடுத்து வருகிறோம். அங்கே வந்தால் அது குணமாகி விடுமென நினைக்கிறேன். ஆனால் குழந்தையை அமர்த்திக் கொண்டிருப்பதற்கு ராஜத்தால் மாத்திரமும் முடியவில்லை. அது தனிமையில் எப்படிப் பிள்ளையை வைத்துக் கொண்டிருக்கு மென எல்லோரும் கேட்கிறார்கள். அங்கே வேலைக்காரி அமர்த்தியாயிற்றா? நான் வெளியூர்கள் சென்று வருவதால் உடல் நலம் கெடுவதாலும், வேலைகளுமிருத்தலாலும் ராஜகோபாலே அழைத்து வந்து மருதையாவிடம் விட்டு வரும்படி சொல்லியுள்ளேன். எனக்கு ஒழிவின்மையால் சின்ன மேசையை அநுப்ப வில்லை, மேலும் அது முன்பே உடைந்துளது ட்ரெயினில் பின்னும் உடைந்துவிடும். அங்கே மருதப்ப செட்டியார் போன்றவர் போன்றவர்களிடம் சொல்லி வைத்திருப்பின் மேசை, நாற்காலி முதலியன நல்லனவாகச் சேகரித்துக் கொள்ளலாம். இன்றேல் திரு R. V. ராஜு நாயுடுவிடம் தெரிவித்தாலும் அவர் செய்வித்தோ வாங்கியோ அநுப்புவர். குறைந்த விலையில் சேகரித்தநுப்பும்படி அவருக்குத் தெரிவிக்கலாம். நீ தெரிவித்தபடி பெரிய பெட்டி அரிக்கன் லாந்தர், பற்பசை யாவும் அநுப்பி வைப்பேன். 4ம் பாரப்புத்தகம் அப்ரூவாகியுள்ளதென்றும், பின் வெளிப்படுத்தப்பெறும் என்றும் அறிகின்றேன். ஆனால் பல இடங்களில் பாடம் வைப்பதற்கில்லை. கடன் மிகுதியாய் இருக்கிறது. செலவும் மிகுதி. அன்புள்ள, ந. மு. வே.  ௳ Navalar Pandit N. M. Venkataswami Nattar, 2659, Rajagopalaswami Kovil Street, Tanjore. Date: 30-6-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் எல்லோருடைய நலத்திற்கும் எழுதுக. நினது லெட்டர் கிடைத்தது. செங்கிபட்டி சென்று இராஜகோபாலும் லெட்டர் எழுதியிருந்தது. குழந்தைக்குக் குளிர் தாங்க முடிகிறதா? சளி, கபம் உண்டாகவில்லையே? நன்கு சிரித்து விளையாடுகின்றானா? இவற்றை விபரமாகத் தெரிவிக்கவும். ராஜம் முதலானவர்கள் மில் பார்த்து, பேரூர் தரிசனம் செய்து வந்தார்களா? நாற்காலி மேஜைகட்குத் திரு ராஜு நாயுடுவுக்கு எழுதி இருந்தேன் அவர், கொஞ்ச காலம் பொறுத்துச் சல்லிசாகப் பார்த்து வாங்கிக் கொடுக்க எண்ணுவதாகத் தெரிவித்தனர். சிறிது காலஞ் சென்று மீட்டும் ஞாபகப்படுத்துவாயானால் வாங்கியநுப்பக்கூடும். விலை தெரிந்து கொடுத்துவிட வேண்டும். ராஜம் அங்கு வந்தபின் உன் அம்மாளுக்கு 2 நாள் மிகவும் தொந்தரவாக இருந்தது. இப்பொழுது சிறிது நலமடைந்துளது. அத்தானுக்கு நன்னிலம் போர்டு ஹைஸ்கூலில் வேலை கொடுப்பார் களெனத் தோன்றுகிறது. யாவரும் தேவகோட்டையை விட்டு இரண்டு மூன்று நாட்களில் வந்து சேரக்கூடும். செங்கரையூர் அத்தானுக்கு வருகிற வெள்ளிக்கிழமை நாகத்தியில் கல்யாணம். ஊட்டியில் பிளேக் என்று பத்திரிகையில் வந்திருந்தது. நிலைமை என்ன? உனது பிரமோஷன் தெரியவில்லையே. சம்பந்தனுக்கு எங்கேனும் வேலை கிடைத்ததா? ஏதேனும் பத்திரிகைக்கு உதவியாசிரியராக இருப்பது அவனியல்புக்குப் பொருத்தமாயிருக்கலாம். இந்த குளிர் மிகுதியில் குழந்தையை மிகக் கவனமாய்ப் பார்க்க வேண்டும். அடிக்கடி விபரமாகக் கடிதம் எழுதுக. வீட்டு விலாசம் தெரிவிக்க. அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சை 6-7-42 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. நின் லெட்டர் கிடைத்தது. திருஞானவள்ளல் நலம் அறிந்து மகிழ்கின்றோம் நீர்க்கோர்வைக்கு இடமில்லாதபடி கவனித்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி நலத்திற்கு எழுத வேண்டும். இன்று, குடம் ரயில் பார்சலில் அநுப்பி, ரசீது இதனுடன் வைத்திருக்கிறது. நீலகிரி ரயில்வேயில் சார்ஜ் அதிகமாயிற்று. பணம் இங்கே செலுத்தியாயிற்று. விளிம்பு வரையில் சாக்கினுள் வைத்துத் தைத்து, விலாசம் கார்டில் எழுதித் தொங்கவிட்டிருக் கிறது. பக்கத்தில் பேச்சுத் துணைக்குத் தக்க குடும்பங்கள் இருக்கின்றனவா? அரிசியின் விலை மிகக் கூடுதலாயிருக்கிறதே. அங்கு வாங்கின அரிசி எத்தனை நாளைக்கு வரும்? இங்கிருந்து 1 மூட்டை அனுப்பலாமா? நலம். அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சை 14-7-42 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்குக் கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் எல்லோருடைய நலத்திற்கும் எழுதுக. 10-7-42ன் கடிதம் பார்த்து யாவும் அதிர்ந்தேன். இன்று 1 மூட்டை அரிசியை 2 மூட்டையாக இரட்டைச் சாக்கில் தைத்து அருவங்காடு ஸ்டேஷனுக்கு அனுப்பி ரசீது இதனுடன் வைத்து இருக்கிறது. நீலகிரிக்கு அரிசி அனுப்புவதாயின் மேலே எழுதிய உத்தரவு பெற்று அனுப்ப வேண்டுமெனவும், அதற்கு 1 வாரம் ஆகுமெனவும் கூட்ஸ் கிளார்க் முதலில் தெரிவித்து விட்டாராம். பின்பு ஹெட்கிளார்க் 'திண்டுக்கல் - பொள்ளாச்சி வழி என்று போட்டு அனுப்பலாம்; சிறிது சார்ஜ் 'அதிகமாகும்' என்று தெரிவித்தாராம். அவ்வாறே இன்று பணம் செலுத்தி, அநுப்பியிருக்கிறது 48 படி சரியாய் வந்து சேர்ந்த விபரம் தெரிவிக்க. திரு நாடிமுத்துப் பிள்ளை இன்னும் ஒருவர்க்கும் வேலை போடாதிருக்கிறார். தேவகோட்டையிலும் வேறு பண்டிதரை நியமித்த பின் வரவேண்டியிருக்கிறது. அத்தான் முதலான வர்கள் இன்னும் ஐந்தாறு நாளில் வரக்கூடுமென நினைக் கிறேன். நாச்சாரம்மாள் நலமடைந்து 1 வாரத்தின் முன் ஊருக்குப் போய் விட்டது. சம்பந்தனுடன் படித்த மீனாட்சி சுந்தரம் மேலைச் சிவபுரிக் கல்லூரியில் பிரின்சிபால் வேலையும், செல்லப்பன் அண்ணா மலை நகரில் ஜூனியர் பண்டிதர் வேலையும் கிடைக்கப் பெற்றுப் பார்த்து வருகின்றனர். சம்பந்தன் சென்னையிலிருந்தும் ஒரு வேலை தேடிக்கொள்ள முடியவில்லை. ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் திரு கந்தசாமியார் வேலையினின்று விலகு வராதலின் சம்பந்தன் இப்பொழுது முதலே அவ்வேலைக்கு முயல்வது நலம். திரு கா. சுப்பரமணிய பிள்ளையவர்கட்கு நான் சொல்லலாம். ஆனால் பண்டிதமணியும் அண்ணாமலை நகருக்கு வந்து விடுவர் ஆதலின் அவரது சார்பும் பெறின் நலம். எல்லாவற்றையும் விட, ராஜா சர் அ. செட்டியாரவர்கள் நினைக்கிறபடியே எல்லாம் நடக்கும். ஆதலின் அவர்கட்கு குமாரராஜா அவர்கட்கும் தக்கவர்களைக் கொண்டு சிபார்சு செய்தல் வேண்டும். வைஸ்சான் சிலருக்கும் சிபார்சு செய்ய வேண்டும். சென்னையிலுள்ள திரு. S. முத்தையா முதலியார், T. S. நடராஜப்பிள்ளை என்பவர்கள சிபார்சு செய்யலாம். அவர்கட்கு திரு. வி. க. முதலியாரைக் கொண்டு சொல்விக்கலாம். ஜூனியர் பண்டிதர் வேலையே கொடுப்பதாயினும் 50-5-75கிரேடு ஆகலானும், மேலும் நன்மைகள் உண்டாகலானும் அது பெரிதும் விரும்பற்பாலதே. அவனுடைய முயற்சியும் அதிர்ஷ்டமும் சேரின் கிடைக்கலாம். குழந்தையின் நலத்தை நன்கு கவனித்துக் கொண்டு எல்லாவற்றிற்கும் அடிக்கடி கடிதம் எழுதவும். அன்புள்ள, ந. மு. வே.  ௳ நாவலர்பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி தலைவர். கரந்தைப் புலவர் கல்லூரி. கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 29-7-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலமுண்டாக. இவண் யாவரும் நலம். அவண் எல்லோருடைய நலத்திற்கும் எழுதுக. 22-7-42ல் எழுதிய நினது கடிதம் கிடைத்தது. உனக்கு எந்தக் காரியமும் மிகுந்த சிரமத்துடனும் காலந் தாழ்த்துமே ஆகிறது. அதற்காகக் கவலைப்படுவதிற் பயனில்லை. ஆனால் உன்னளவில் எவ்வகையிலும் குற்றம் உண்டாகாமற் பார்த்துக் கொள்வதே உனது கடமை. உன் அத்தானுடைய ஜாதகபலனும் இப்படித்தான் இருக்கிறது. ஆனால் இம்முறை திருவையாற்று வேலை கொடுப்பதாக உறுதி சொல்லி விட்டார்கள். இன்றோ நாளையோ ஆர்டர் கிடைக்கலாம். சம்பந்தன் மட்டும் இன்னும் பள்ளியில் சேர்க்கப்படாதிருக் கின்றான். குழந்தை திருஞானவள்ளலின் விளையாட்டைக் கேட்க மகிழ்ச்சியாயிருக்கிறது. என்றாலும் போதிய நலம் பெறவில்லை என்பதறிந்து கவலையுறுகின்றோம். அந்தக் குளிர் நாட்டில் வயிற்றுளைவோ, இரத்தப் போக்கோ உண்டாவதற்குக் காரணம் என்ன? கம்பளிப் போர்வைகளினால் உண்டாகுமோ? வயிற்றுப் போக்கு இருந்தால் உடம்பு எப்படித் தேறும்? தகுந்த மருத்துவரைக் கொண்டு பார்க்க வேண்டும். இருமல் இல்லாதிருக்கிறதா? இருமலும், வயிற்றுப் போக்கும் இல்லையானால் உடம்பு தேறிவிடும். பேச்சு ஏதேனும் வருகிறதா? எல்லாம் விபரமாக எழுதுக. அரிசி மூட்டைகள் சரியாய் வந்து சேர்ந்த விபரம் தெரிய வேண்டும். இராஜம் நலமாயிருக்குமே? ஏதேனும் படித்துக் கொண்டிருக்கிறதா? நீ இப்பொழுது எந்த செக்ஷனில் வேலை பார்க்கிறாய்? அதன் இயல்பு என்ன? பிரமோஷன் பற்றி சூப்பிரண்டெண்டைக் கேட்டாயா? ஆற்காட்டில் அத்தான் சேவுக்கு ஒரு கண்ணில் ஏதோ புறப்பட்டு மிகவும் கெடுதலாகிவிட்டது. கண் மிகவும் கெடுதலான பின்பு (2 வாரம் கழித்தே) இங்கே கொண்டு வந்தார்கள். கண் ஆஸ்பத்திரியில் ஒரு வாரமாகப் பார்த்து வருகிறது. நாளுக்கு நாள் குணமடைந்து வருகிறது. எனினும் பார்வை முழுதும் தெரியும்படி ஆகுமென்று சொல்லவொண்ணாது, ஒன்றரை மாதமாகவே நமதுவீட்டில் கூட்டத்திற்கு குறை வில்லை. உங்கள் அம்மாளுக்குச் சரியான வேலை இருக்கிறது. எனக்கு 10 நாட்களாக இருமல் இழைப்பு இருக்கிறது. இப்பொழுது சிறிது குணமே. பதில். அன்புள்ள, ந. மு. வே.  23-7-42ல் தேவகோட்டையிலிருந்து யாவரும் வந்து சேர்ந்தார்கள். ௳ தஞ்சாவூர் 5-8-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலமுண்டாக. இவண் யாவரும் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. 31-7-42ல் எழுதிய லெட்டர் கிடைத்தது. குழந்தைக்கு உடல் நலமில்லாதிருந்தது அறிந்து வருந் தினோம். ஏதேனும் தோஷம் இருப்பதாகக் கூறினால் தக்கவர் களைக் கொண்டு மந்திரிக்கச் செய்யவும். தகுந்த டாக்டரிடம் காட்டுவதும் அவசியம். பெரும்பாலும் இனி, தொந்தரவு இருக்காதென்று நினைக்கிறேன். பிரமோஷன் இல்லையென்றும் கவலைப்பட வேண்டாம். எல்லாம் ஆகும் பொழுது ஆகும். இன்னும் 3 மாதத்தின் பின் ஏற்படலாமென நினைக்கிறேன். ஓர் சிறந்த சோதிடர் உனது ஜாதகத்தைப் பார்த்துவிட்டு அவ்வாறு கூறினதோடு, நீ பழகுமிடங்களிலும் பிரயாணத் திலும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமென எழுதச் சொன்னார். அத்தானுக்கு ஆர்டர் கிடைத்தவுடன் எழுதலாமெனச் சில நாள் தாமதித்து இதனை எழுதலானேன். இன்னும் ஆர்டர் கைக்கு வரவில்லை. மருதையா பற்பசையும், கிரோசின் எண்ணையும் வாங்கியநுப்பியதாக எழுதியுள்ளார். குழந்தையின் நலத்திற்கு உடன் எழுதவும். அன்புள்ள, ந. மு. வே.  ௳ நாவலர்பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி தலைவர். கரந்தைப் புலவர் கல்லூரி. கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 8-8-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு கடவுளருளால் நலமுண்டாக. இவண் யாவரும் நலம். உன் கடிதம் கிடைத்தது. உன் உடல் நலக் குறை பற்றி மிகுந்த கவலையடைகின்றோம். நலமடைந்து வருவதாக எழுதியிருப்பினும், படுக்கையை விட்டு எழவேயில்லையென்றும் எழுதியுள்ளாயே? இப்படியிருக்குங் காலங்களில் நாங்கள் கவலைப்படுவோமென்று தெரிவிக்கா திருப்பது சரியன்று. படுக்கையிலுள்ள படி கடிதத்தை இவ்வளவு விரித்தெழுதவும் வேண்டியதில்லை. எனக்கும் உனக்கும் இப்பொழுது அஷ்டமத்துச் சனி, உடம்பைப் பொறுத்தளவில் கிரக நிலை சிறிது நலமில்லாமலே இருக்கிறது. ஆனால் கெடுதி யொன்றும் விளைந்துவிடாது. மன அமைதியோடு நிதானமாக இருக்க வேண்டும். ஏதேனும் கோயில் இருந்தால் அடிக்கடி விளக்குப் போடச் செய்க. கோளறு பதிகம் கந்தரனுகதி பாராயணஞ் செய்க. அத்தானுக்கு ஆர்டர் போட்டாகிவிட்டது. போர்டு ஹைஸ்கூலில் உள்ளவரும் அதற்கு வருதலால் சம்பள கிரேடு சம்பந்தமான ஆலோசனையில் இருக்கிறது. விரைவில் திருவையாறு செல்லக் கூடும். நீ பணம் ஒன்றும் அனுப்ப வேண்டாம். உன் உடம்பையும், குழந்தையின் உடம்பையும் நன்கு கவனித்துக் கொள்ளவும். சேவுக்குக் கண் பெரும்பாலும் குணமாகி விட்டது. இன்னும் கட்டி வருகிறது. உனது உடல் நலமுற்ற செய்தியை இரண்டு வரியில் தெரிவிக்க. அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சாவூர் 19-8-42 நலம் பல்குக. உனது லெட்டர் இன்று கிடைத்தது. குழந்தைக்கு நலமில்லாமையறிந்து வருந்துகிறோம். மெண்டாகோ இங்கே 7 மாத்திரைகள் இருந்தன, 3 இக்கவரில் அனுப்பியுள்ளேன். மாத்திரையை நன்றாய் நுணுக்கி, 5ல் 1 பங்கைச் சர்க்கரையில் கலந்துகொடுத்து வெந்நீர் கொடுக்கவும். நாளைக்கு 3 முறை கொடுக்கவும். அடிக்கடி டாக்டரிடம் காட்டவும். அந்த Climate பொருந்தாவிடில் உடனே கோயம்புத்தூருக்காவது கொண்டு வந்து வைத்தியம் பார்க்க வேண்டும். உங்களில் யாருக்கு உடல் நலமில்லாதிருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஒரு கார்டு எழுதி நிலைமையைத் தெரிவிக்க வேண்டும். உனக்கு ஒழிவில்லாவிட்டாலும் சௌ. ராஜத்தை எழுதச் சொல்லவும். அத்தான் சம்பளம் ரூ 40-2/2-60 தஞ்சை நகரில் இப்பொழுது கலவரமில்லை. நேற்று ஒரு கார்டு எழுதியுள்ளேன். நாளையே குழந்தையின் இருமல் நிலைமை குறித்து எழுதுக. அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சாவூர் 1-9-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலமுண்டாகுக. இவண் யாவரும் நலம். அவண் எல்லோருடைய நலத்திற்கும் எழுதுக. நான் ஒரு வாரமாக ரிகால்வின் என்ற புதிய மருந்து வாங்கி உண்பதில் சிறிது நலமடைந்து வருகிறேன். ரெயில்வேயில், எவ் விடத்திற்கும் சாமான்கள் அனுப்ப முடியாமல், பிரயாணமும் கடினமாகிக் கொண்டு வருவது வருந்தத்தக்கதாயிருக்கிறது. உங்களைப் பற்றி, உன் அம்மாளுக்குக் கவலை. உன் அத்தை அங்கு வர இருக்கிறார்களென்று இராசகோபால் சொல்லிற்று. வந்த விபரம் தெரியவில்லை. குழந்தை திருஞானவள்ளலின் நலத்தினை விபரமாகத் தெரிவிக்கவும் முன்பு மந்திரித்த ஆசாரியாருக்கு என்ன வேலை? அவர் அங்கேயே நிலையாக இருப்பவரா? அருவங்காட்டின் நிலைமை எப்படியிருக்கிறது? நலத்திற்கும், பிற செய்திகட்கும் உடன் பதில் எழுதுக. அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சாவூர் 3-9-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலமுண்டாகுக. நேற்றிரவு 3 மணி வரையில் எனக்குத் தூக்கமே வரவில்லை. இன்று வந்த உன் கடிதம் மிகுந்த கவலை விளைக்கிறது. அங்கே சிறிது பலாத்காரம் தோன்றினும் மிகுந்த சங்கடமுண்டாகுமே. உன் அம்மாள் தனக்கு உடம்பு நலமில்லையென்றும், அக் காரணம் பற்றி நீங்கள் வந்து சேரும் படியும் எழுதச் சொல்லிற்று. வந்துவிட்டால் கடன் கொடுக்க வேண்டியிருப்பினும் இங் கிருந்து அனுப்பிவிடலாம். இது பற்றிய விபரத்திற்கும், அவண் நிலைமை எப்படியிருக்கிறது என்பதற்கும் மறுதபாலில் எழுதுக. நீங்கள் வர முடியாவிட்டால் திங்கட்கிழமை பணம் அனுப்பு வேன். எனது முந்திய லெட்டரும் நேற்றுக் கிடைத்திருக்கலாமே? கடவுள் நேரான வழியில் நடத்தியருள்வாராக. அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சாவூர் 14-9-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலமுண்டாகுக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. நின் கடிதமும் வள்ளல் படங்களும் வந்தன. ராஜம் கையில் வைத்திருக்கிற படம் நன்றாயிருக்கிறது. அழுகிற பிள்ளையோடு இருக்கிற படம் காந்தி போல் ஆழ்ந்த சிந்தனையோடிருப் பதாகத் தோன்றுகிறது. மருதையா தனக்கு யாதொரு குறையுமில்லையென்றே (நான் பதிலெழுதவு முடியாதபடி) அடிக்கடி கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார் மேலும், லெட்டர் பேப்பர், கவர், கார்டு எல்லாம் அச்சிட்டு வைத்துக் கொண்டு அவர் எழுதுவது அவர் குறைவின்றி, மிகுந்த மகிழ்ச்சியோடிருக்கிறார் என்று எண்ணச் செய்தது. உனக்கு அப்படி எழுதியுள்ளார். 10ம் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில் இந்தியா சுயவாட்சி பெறுதற்காகத் தாம் சிறை செல்லத் தீர்மானித்திருப்பதாக எழுதியுள்ளார். கோவையில் 1 நாளைக்கு ஐந்தாறு ரூபாய் செலவு செய்துண்ணும் ஆகாரம் சிறையிலும் அவருக்குக் கிடைக்கும் போலும்? செங்கிபட்டியில் வீடு வசிப்பதற்கேற்ற வசதியுள்ளதா யில்லை. மூன்று பிள்ளைகளும் கல்யாணமாக வேண்டியவர்கள் குடும்பத்தைப் பற்றிய உணர்ச்சியோ பொறுப்போ மருதை யாவுக்கில்லையென்றே தோன்றுகிறது. பொதுவாக ஆங்கிலக் கல்லூரியில் படித்தவர்களைவிடப் படிக்காதவர்கள் நல்லரென நினைக்கும்படியிருக்கிறது. என் கடிதத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் நீயே அவருக்கு இதமாகப் புத்தி சொல்லியெழுதுக. இந்தப் பஞ்ச காலத்தில் 10ரூபாய் சம்பளம் வாங்கி மனைவி மக்களோடு வாழ்பவர்களை நினைக்கும் பொழுதுதான் இரங்க வேண்டியிருக்கிறது. அரிசி மூட்டை அனுப்ப முடியுமோ என்பது ஐயமாகவே இருக்கிறது. விசாரித்துப் பார்க்கிறேன்; முடியுமானால் அனுப்பு கிறேன். 4 நாளாக நான் உடம்பு குளிக்கவில்லை. இன்று பிள்ளையார் சதுர்த்திக்கும் குளிக்கவில்லை இன்று காலை விண்ணமங்கதத்தில் நடந்திருக்கும் பூதலூர்ப் பெண்ணின் கல்யாணத்திற்கு உன் அம்மாளும் போகக் கூடவில்லை. ஆனால் இன்று நலம் பெற்றுளேன். சிதலை தின்ற ஆலமரம் போல் உள்ள எனது நிலைமையை உணர்ந்தோ உணராமலோ பலரும் என் மேல் சுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். கூடிய விரைவில் ஒரு நாள் இம்மரம் விழுவது திண்ணமென்பதனை மனதிற் கொண்டு, அதற்கேற்றபடி குடும்ப நிருவாகப் பொறுப்பு, உத்தியோகப் பொறுப்பு என்பன பற்றி உன் எண்ணங்களையும் செயல்களையும் ஒழுங்குபடுத்திக் கொண்டு வருவது நல்லது. கடவுள் பக்தி, வாய்மை, அன்பு, ஊக்கம், சிந்தனை சக்தி, சிக்கனம் இவை போல்வன வாழ்க்கையை மேன்மைப் படுத்தும். அன்புள்ள, ந. மு. வே. மருதையாவுக்கு ஓட்டல் சாப்பாடு குணமில்லாமலிருக்கலாம். தனியே சிறிது நெய் வாங்கி வைத்துக் கொண்டு, அதனோடு பாலும் வாங்கி உண்டு வந்தால் அக்குற்றத்தை மாற்றும் கோவையிற் சென்று பணம் செலவழிப்பதனால் நன்மையொன்றும் உண்டாகாது.  ௳ தஞ்சாவூர் 23-9-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலமுண்டாகுக. இவண் யாவரும் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. உனது 17-9-42ன் கடிதம் கிடைத்தது. இன்று கூட்சில் 2 மூட்டைகள் அனுப்பி, ரசீது இதனுடன் வைத்திருக்கிறது. ஒன்றில் 48 படி அரிசி, மற்றொன்றில் 2 படி பருப்பு, 2 படி உளுந்தம் பருப்பு, 1½ படி பச்சரிசி, 3 வீசை புளி இவைகள் தனித்தனி முடிந்து போடப்பட்டுள்ளன. மூட்டைகள் வந்தவுடன் நிறையையும் கவனித்து வாங்கி, விபரம் தெரி விக்கவும். என் உடம்பு சிறிது நலம்பெற்று வருகிறது. ரிகால்வின் என்ற ஆங்கில மருந்துண்டதில் பயனில்லை. பின்பு, மின்சார மருத்துவம் பயின்ற டாக்டரொருவர் வைத்தியஞ் செய்தார். மின்சாரத்தில் நரம்புகளுக்கு வலிமையையுண்டாக்கினால் இரத்த ஓட்டம் ஏற்பட்டு நோய் தணியும் என்பது அவரது கொள்கை. 4 நாள் வரை மின்சாரப் பிரயோகத்தால் நரம்புகளைச் செம்மை செய்தார். நான்காம் நாள் அளவு கடந்து நீர்க்கோர்வையுண்டாகி நோய் இரட்டிப்பாகி விட்டது. அந்த நிலைமையிலேயே முன் கடிதம் எழுதினேன். நன்மையென்று கருதுவென வினையினால் தீமையாய் முடிகின்றன. பின்பு, டாக்டர் ராஜனுக்குச் சொந்தக்காரரென்று 65 வயதுக்கு மேற்பட்ட ஓர் ஐயங்கார் திட்டையிலிருந்து கொண்டு வந்து வைத்தியம் செய்கிறார். சில நாட்களாக உபசாந்தியாய்ச் சில செய்தார். நானும் சாத்துக்குட்டிப்பழம் பிழிந்து சாப்பிட்டு வருகிறேன். அதனால் வெப்பம் சரிந்து சிறிது நலம் ஏற்பட்டுளது. அவர் 6 நாளைக்குத் தொடர்ந்து ஒரு எண்ணெய் சாப்பிட்டால் நோய் நீங்கி விடும் என்றும், பின்பு ஒரு லேகியம் செய்து சாப்பிட்டு வந்தால் போதுமென்றும் கூறி, அந்த எண்ணெயைக் கொடுத்து உள்ளார். இன்று அதனைச் சாப்பிட்டேன். நல்வினை பயன்றருங்காலமாயின் இந்த ஆறு நாளிலும் இடையூறின்றி மருந்துண்டு நன்மையேற்படலாம். நாலைந்து நாட் சென்றபின் உள்ள நிலைமையைத் தெரிவிப்பேன். குழந்தை திருஞானவள்ளலின் நலத்தையும், உங்கள் இருவர் நலத்தையும் தெரிவிக்க. வள்ளலுக்குப் பேச்சு வருகின்றதா? தவழ்ந்து செல்வதுண்டா? விபரமாக எழுதுக. அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சை 29-9-42 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். உங்கள் நலத்திற்கு உடன் எழுதுக. எனது முந்திய கடிதம் கூட்ஸ் ரசீதுடன் கிடைத்திருக்குமே? ஒவ்வொரு நாளும் சிறிது பேதியாகக் கூடிய மருந்து ஆறு நாளும் உண்டு நேற்றுடன் முடிந்தது. உடம்பும் சிறிது இளைத்தது. நோயும் குறைந்திருக்கிறது. இந்த மருத்துவர் பச்சைத் தண்ணீரிலேயே குளிக்க வேண்டுமென வற்புறுத்தினமையால் நாலைந்து நாட்களாக அவ்வாறே முழுகுகின்றேன். அதனால் ஒன்றும் நீர்க்கொள்ளவில்லை. இதுவே புதிதாக ஏற்பட்ட நன்மை. பிணி முற்றிலுமோ, அல்லது சில காலம் வரையிலுமோ நீங்கியிருக்குமா என்பது இன்னுஞ் சில நாளில் தெரியும். உன்னிடம் உள்ளதமிழ் நூல்களுக்கு ஒரு பட்டியல் அனுப்புக. கலித்தொகை ஒன்று காணப்படவில்லை. அது சம்பந்தனுக்குக் கொடுத்திருக்க வேண்டும்; அல்லது உன்னிடம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். உன்னிடம் இருப்பின் உடன் தெரிவிக்க. திருஞானவள்ளல் பேச்சும் விளையாட்டும் எப்படியுள்ளன? அன்புள்ள, ந. மு. வே. உனது லெட்டர் வந்தது. ஞானவள்ளலுக்கு இருமல் தொந்தரை ஏற்பட்டதென்பதும், ராஜத்திற்கு இரண்டு மூன்று முறை மயக்கம் உண்டாயிற்றென்பதும் அறிந்து வருந்துகிறோம். இருவர் நலத்தையும் விபரமாக உடன் எழுதவும், செங்கி பட்டிக்கும் உடன் எழுதுக. ந. மு. வே. ராஜம் முழுகிக் கொண்டிருக்கிறதா? விபரம் தெரிவிக்கவும் அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சாவூர் 4-10-42 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலம் பல்குக. நலம். நலம் தெரிவிக்க செப். 28, 29 ம் தேதிகளில் எழுதிய நின் கடிதங்கள் வந்தன எனக்குக் கிரகங்களின் நிலை கடுமையாகவே இருக்கிறது. சனி தனது வலிமை முழுவதையும் காட்டுகிறது. சனிக்கிழமை தோறும் இங்கே சனீஸ்வரனுக்கு அருச்சனை செய்து வருகிறது. இதுவும் சுவாமி, அம்மன் முதலியவர்களுக்கு அருச்சனை செய்விப்பதுமே இப்பொழுது நாம் செய்யத்தக்கவை. கழுத்திலோ, கையிலோ தாயிற்றுக் கட்டிக் கொள்வது எனது நிலைமைக்குப் பொருத்தமாயில்லை. இடுப்பில் வேண்டு மானால் போட்டுக் கொள்ளலாம். அது கூட வேண்டிய தில்லையென்பதே என் எண்ணம். வளைகாப்பு இருந்தது. பிள்ளைகளுக்குக் காது குத்துவதில் செலவாகி விட்டது. இங்கே சிறிதும் பவுன் இல்லை. பத்துப் பன்னிரண்டு பவுன் வரை நமக்கு வாங்க வேண்டும். விலையை நினைத்துத் தான் வாங்காமல் இருக்கிறது. வெள்ளியிற் செய்து இடுப்பில் தரித்துக் கொள்ளும்படி அனுப்பினால் அப்படிச் செய்யலாமென நினைக்கிறேன். பச்சைத் தண்ணீரில் முழுகுவதாக எழுதியிருந்தேன் நாலைந்து நாள் முழுகியபின் ஒருநாள் கப உபத்திரவம் மிகுந்தது. 2 நாளாக வெந்நீரில் குளிக்கிறேன். இன்று தொந்தரை குறைந்து உளது. வைத்தியரும் சிரத்தையோட மருந்துகள் கொடுத்து வருகிறார். பின்பு உறை மருந்து வந்ததா? திருஞானவள்ளல் நலமும் உங்கள் நலமும் தெரிவிக்க. புத்தகங்கள் பற்றி எழுதியிருந்தேனே. கலித்தொகை உன்னிடம் இருக்கிற விபரம் உடன் தெரிவிக்கவும். அரிசி மூட்டைகள் வந்து சேர்ந்த விபரமும் தெரிவிக்க. அன்புள்ள, ந. மு. வே. ஆசாரியார் மிகவும் சிறந்தவராயிருக்கலாம். அவர் நமக்குச் செய்யும் உதவியையும் பாராட்டவே வேண்டும். ஆனால் இது பல இடங்களில் நிகழும் சாதாரண செய்தியே.  ௳ நாவலர்பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி தலைவர். கரந்தைப் புலவர் கல்லூரி. கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 14-10-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு கடவுளருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் உங்கள் நலத்திற்கும், குழந்தையின் நலத்திற்கும் எழுதுக. உன்னுடைய கடிதங்கள் கிடைத்தன. இரண்டாவது செய்த வைத்தியத்தினாலும் நோயின் தொந்தரை மிகுகின்றதேயொழியக் குறையவில்லை கிரகங்களின் வலிமையை வயித்தியத்தினால் எப்படி மாற்ற முடியும்? திருவையாற்றிலிருந்து அக்காள், அத்தான் எல்லோரும் தசரா விடுமுறைக்கு இங்கே வந்திருக்கிறார்கள். பாப்பா முதலிய யாவரும் நலமே. உங்கள் அம்மாளுக்கு நீண்ட நாளாக உங்களைப் பிரிந்திருப்பது வருத்தமாயிருக்கிறது. அதிலும் திருஞானவள்ளலைப் பற்றிய ஏக்கம் அதிகம். பிள்ளை எப்படியிருக்கிறானோ எப்படி விளையாடுகின்றானோ என்று அடிக்கடி அதே பேச்சாயிருக் கிறது. நிற்க- தீபாவளிக்கு நீ ராஜத்தையும், குழந்தையும் இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிட்டுப் போனால் குளிர் காலம் மூன்று மாதம் கழித்து அவர்களைத் திரும்ப அங்கே அனுப்பி வைக்கலாம். எனக்கும் உடம்பு மிகுந்த அசௌக்கியமா யிருப்பதால் தீபாவளிக்கு எல்லோரும் ஓரிடத்தில் இருக்கலா மென நினைக்கிறேன். ஆதலால் நாலைந்து நாள் லீவு எடுத்துக் கொண்டு தீபாவளிக்குக் கட்டாயம் வருவீர்களென எதிர் பார்க்கிறேன். அதனோடு உங்கள் இரண்டு பேருக்கும் குழந்தைக் கும் தீபாவளிக்கு எவ்வெவ் வகையான உடைகள் வேண்டு மென்று தெரிவித்தால் நாங்கள் எடுத்து வைத்திருப்போம். விபரமாக எழுதவும். சில நாட்களாகக் கடிதம் எழுதக்கூட முடியாத நிலையில் இருந்து வருகிறேன். இக்கடிதம் அக்காள் கையால் எழுதப்படுகிறது. பழைய படியும் மெண்டாகோ வாங்கியனுப்பும் படி சென்னைக்கு எழுதியுள்ளேன். அவ்விடம் கால நிலைமைக்கும், நலத்திற்கும் உடன் கடிதம் எழுதுக நீங்கள் வரும்பொழுது கலித்தொகை அங்கிருப்பதனை எடுத்து வருக. அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சை 18-10-42 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. இன்று உனது லெட்டர் வந்தது. குழந்தை திருஞான வள்ளலின் விளையாட்டுக்களை அறிந்து மகிழ்கின்றோம். குழந்தையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையும் ஏக்கமும் உன் அம்மாளுக்கு மிகுதியாக உள்ளன. சென்ற ஆண்டு ராஜம் இங்கிருந்து கொலுவைத்தது என்பது பற்றியும், வள்ளல் கொலுவில் என்ன செய்வான் என்பது பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அக்காள் வந்திருந்து வழக்கம் போல் வீட்டில் கொலு வைத்திருக்கிறது. 4 நாளின் முன் உனக்கு ஒரு கடிதம் எழுதினேன். அது கிடைத்த குறிப்பு ஒன்றும் உனது லெட்டரில் காணப்படவில்லை, கிடைத்ததா? தீபாவளிக்கு நீங்கள் வரவேண்டுமென்றும், உனக்கும், ராஜத் திற்கும், வள்ளலுக்கும் எவ்வகையான உடைகள் வாங்கி வைத்திருக்க வேண்டுமென்றும் கேட்டு அதில் எழுதியிருந்தேன். ராஜமும், குழந்தையும் தீபாவளி முதல் 3 மாதத்திற்கு இங்கிருந்து, குளிர்காலம் நீங்கிய பின் அங்கு வரலாமென்றும் எழுதியிருந்தேன். அது பற்றி உன் கருத்தை உடன் தெரிவிக்கவும். மீட்டும் மெண்டாகோ வருவித்து உண்ணுகிறேன். உடல் சிறிது நலம் பெற்று வருகிறது. டாக்டர் குருசாமி முதலியா ருடைய மிச்சர் மருந்துகள் பற்றிய சீட்டு ஒன்றும் இங்கு அகப்பட வில்லை. உனக்கு நினைவிலிருந்தால் அவற்றைக் குறித்தனுப்புக. கொசீலனா காம்பவுண்டும், மற்றொன்றும் 8 அவுன்சும், வெள்ளை மருந்து ஒன்று 4 அவுன்சும் வாங்கிக் கலந்தோம். பின்னிரண்டின் பெயர் தெரிய வேண்டும். வெள்ளை மருந்து இன்னதெனத் தெளிவாய்த் தெரிய வேண்டும். அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சாவூர். 26-10-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. உன் கடிதங்கள் வந்தன. இன்று பதிவு செய்த பார்சல் ஒன்று அனுப்பியுள்ளேன். அதில் புடவை 1, வேஷ்டி 1, ஜாக்கெட் துணி 1 வள்ளலுக்குச் சட்டை 2 உள்ளன. வாங்கித் தீபாவளிக்குத் தரித்துக் கொள்ளுங்கள். துணிகளின் விலை ஏறக்குறைய மூன்று பங்கு உயர்ந்து விட்டது. எனக்கு நோயின் தொந்தரை தொடர்ந்து இருந்து கொண்டு தானிருக்கிறது. இரவில் கெடுகிற தூக்கத்தைப் பெரும்பாலும் பகலில் நிரப்பிக் கொள்கிறேன். மெண்டாகோ தீரும் சமயத்தில் மிக்சர் மருந்துகள் வாங்க எண்ணம். அண்ணாமலை நகரில் ஆராய்ச்சி வேலைக்கு என்னைப் பின்னும் அழைத்தகாலை, நான் அங்கே வர இயலாதென்றும், வேண்டுமானால் தஞ்சையில் இருந்து கொண்டு ஏதேனும் செய்யலாமென்று எழுதினேன். அத்துடன் அது நின்று விட்டது. கலித்தொகை சின்னத்தான் புத்தகம் கேட்டிருந்தது. நீ இங்கு வரும்பொழுது கொண்டு வந்தால் அதைக் கொடுத்து விட்டு, இங்கு உள்ள உயர்ந்த பயிண்டுள்ள புத்தகத்தை எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது அனுப்ப வேண்டாம். திருச்சி ரேடியோவில், 6-11-42 வெள்ளி மாலை மணி 7-15க்கு மேல் அத்தானும். 13-11-42 வெள்ளி மாலை 7-15க்கு மேல் அக்காளும் பேசுவார்கள். அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சாவூர். 2-11-42 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. நீ அனுப்பிய பார்சல் வெள்ளிக்கிழமை வந்தது. அன்றே தரித்துக் கொண்டேன். மையும் பொட்டு வைத்துக் கொள்கிறேன். ஐந்தாறு நாளாகவே என் உடம்பு நலமடைந்து வருகிறது. சிறிது சிறிது இழைப்பு இருந்து கொண்டிருக்கிறது. நிற்க- எனது லெட்டரும் (26-10-42) பார்சலும் கிடைத்தனவா? உடன் விபரம் தெரிவிக்க. அவ்விடம் கால நிலைமைக்கும் திருஞானவள்ளலின் நலத்திற்கும். ஏனைய விசேடங்கட்டும் எழுதுக. அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சாவூர். 7-11-42 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு சிவபிரான் திருவருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. தீபாவளிக்கு அக்காள் அத்தான் யாவரும் இங்கு வந்துள்ளார்கள். புலவர் கல்லூரி மாணவர்கள் 30 பேர் வரையில் வந்து பலகாரம் உண்டார்கள். பண்டிகை இனிது நிறைவேறியது. நீங்கள் இங்கில்லாததுதான் குறை. அங்கே தீபாவளி ஸ்நானஞ் செய்து, புதிதுடுத்திப் பலகாரம் உண்டு மகிழ்ச்சியாய் இருப் பீர்கள் என நம்புகிறேன். எனக்கு இருமல் இழைப்பு நாடெறும் ஓரளவு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அன்புள்ள, ந. மு. வேங்கடசாமி  ௳ தஞ்சாவூர். 19-11-42 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. உனது லெட்டர் இன்று கிடைத்தது. அக்காள் கந்தர்சஷ்டி 6 நாள் விரதமிருந்து, பின் வானொலியில் பேசியது. ஆனால் குரல் மாற்றத்திற்குக் காரணம் கருவியின் பேதமே. நான் சார்க்கார் புறம்போக்கு நிலங்கள் ஏலம் விட்டதைப் பார்ப்பதற்கு ஒரு நாள் ஐயனார்புரம் ஸ்டேஷனுக்கும், ஒரு நாள் சித்திரகுடிக்கும், பின் கர்தர்சஷ்டிச் சொற்பொழிவுக்காகச் சிக்கலுக்கும் போய் வந்தேன். அதனாலும் வேறு வேலை களாலும் கடிதமெழுதத் தாழ்ந்தது. பூதலூர் ஸ்டேஷனுக்குக் கிழக்கே 1 மைல் தூரத்தில் புது ஆற்றுக்குத் தென்புறத்தில் நன்செய் பயிர் செய்யக்கூடிய 8 ஏக்கர் நிலம் வரையில் ரூ 1800 க்கு ஏலமெடுத்து, 100 க்கு 15 வீதம் டிபாசிட் கட்டியுள்ளேன். எஞ்சிய தொகையை 13-12-42க்குள் செலுத்த வேண்டும். நல்ல நிலமென்றும், மூன்று நான்கு பங்கு அதிக விலை பெறக்கூடியதென்றும் சொல்கிறார்கள். யாரேனும் பணங்கட்டி மறு ஏலத்திற்குக் கொண்டுவரின் போட்டியில் தொகை இன்னும் அதிகமாகக்கூடும். எல்லாம் இன்னும் 20 நாளில் தெரியும். ௸ நிலங்களைச் சொந்தத்தில் சாகுபடி செய்ய எண்ணி இருக்கிறேன். இங்கே சில நாளாகப் பனி மழை போல் பெய்கிறது. இரண்டு மூன்று நாளாக நீர்க்கோவை மிகுந்து தொண்டை கட்டிக் கொண்டிருக்கிறது. திருநாவுக்கு ஐந்தாறு நாளாகப் பித்த வாத சுரம் 103º2 டிகிரி இருந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஐந்தாறு நாட் சென்றே சுரம் குறைந்துபடும் என்று வைத்தியர் சொல்கிறார். அங்கே குளிர் எப்படி? குழந்தை திருஞானவள்ளல் எப்படியிருக்கிறது? மிகுதியான குளிரில் பரீக்ஷை பார்க்காமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உன் அம்மாளுக்குக் குழந்தை ஏக்கம் மிகுதியாயிருக்கிறது. இங்கே வந்து 2 மாதமாவது இருந் தாலொழிய ஏக்கந் தணியாது. மார்கழி மாதத்தில் கட்டாயம் அழைத்து வந்து விட்டுப் போக வேண்டும். கோடையில் அங்கிருப்பதே நல்லது. நீ வரும்பொழுது அங்குள்ள சாக்குகள் எல்லாவற்றையும் எடுத்து வர வேண்டும். சம்பள உயர்வு பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லையே. அது பற்றியும், பிரமோஷன் சம்பந்தமாக ஏதேனும் தெரிந்தால் அது பற்றியும் எழுதுக. உங்கள் எல்லோருடைய நலத்திற்கும் எழுதுக. அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சாவூர். 26-11-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. 22-11-42ல் எழுதிய நினது கடிதம் கிடைத்தது. திருநாவுக்கு இன்றுதான் சூடு நார்மலுக்கு வந்திருக்கிறது. பார்லிக் கஞ்சியும் ஆரஞ்சுச்சாறும் சோடாவுமே உணவாதலால் மிக இளைத்து விட்டான். இன்னும் 1 வாரத்தில் தலைக்கு நீர் விடக் கூடும். நாலைந்து நாளாக எனக்கும் சிறிது காய்ச்சலோடு அளவு கடந்த கபமும் இருந்து வந்தன. அடிக்கடி இப்படி நேர்கிறது. கஞ்சியுண்பதால் என் உடம்பு மிக மெலிந்துவிட்டது. இன்று இக்கடிதமெழுதுவதும் பிரயாசையாகவேயிருக்கிறது. ஆனால் இன்று காய்ச்சல் இல்லை. பாப்பாவின் படம் 'தமிழ'னில் பார்த்தோம். உன் கடிதத்தில் நீ வருவது பற்றிய குறிப்பு ஒன்றுமில்லாதிருப்பது வருத்தமாய் இருக்கிறது. 11-12-42 பகல் (27 நாழிகை) புது மணி 5-48 வரையில் அங்கிருந்து புறப்பட நாள் நன்றாயிருக்கிறது. 16-12-42 ஞாயிறு பகல் மணி 2-20க்கு மேல் நன்றாயிருக்கிறது. இந்த நாட்கலொன்றில் அவசியம் வந்து சேரவும். 17-12-42 நாள் முழுதும் நன்றாயிருப்பினும் ரயிலில் ஏகாதசிக் கூட்டம் மிகுதியாயிருக்கும். வரும் பொழுது சாமான்களைப் பத்திரப்படுத்திவிட்டு வீட்டைப் பாதுகாக்கச் செய்து, பத்திரமாக வந்து சேரவும். அங்குள்ள சாக்குகள் எல்லாமும், கலித்தொகை, பாண்டியர் வரலாறு என்ற புத்தகங்களும் எடுத்த வரவும். நீலகிரித் தைலமும் கொஞ்சம் காப்பிக் கொட்டையும் வாங்கி வரவும். வள்ளலுக்கு நடை வண்டி இங்கே செய்யச் சொல்லலாம். திரும்பும் பொழுது உனக்குச் செலவுக்கில்லையேனும் வாங்கிச் செல்லலாம். நிற்க- இளங்காட்டில் அத்தானுக்குச் சிற்றப்பா மகன் முறை யுள்ள சொக்கலிங்கம் என்பவர் S.S.L.C. தேறி நாலைந்தாண்டு களாகச் சும்மா இருக்கிறாராம். அவர் வாழ்க்கை நடத்துவதே கஷ்டமாய் இருப்பதால் கார்டைட் பாக்டரியில் கிளார்க் வேலை தரும்படி திரு சிதம்பரம் பிள்ளைக்குச் சிபார்சு செய்யுமாறு அத்தான் என்னைக் கேட்டது. அப்பொழுது எனக்குக் கடிதமெழுத முடியாமையால், உன்னைக் கொண்டு தெரிவிக்கச் செய்கிறேன் என்று சொல்லியனுப்பினேன். அவர் இன்று புறப்பட்டு வருவதாகவும் சொல்லிற்று. நாளை அங்கு வந்தால் உன்னைக் காணக்கூடும். வந்தால் அழைத்துச் சென்று, சிதம்பரம் பிள்ளையிடம் நான் கேட்டுக் கொண்டதாகச் சொல்லவும். இங்கே மழையே இன்றிப் பனி பெய்து கொண்டிருக்கிறது. இன்று தான் சிறிது மழைக் குணமாயிருக்கிறது. நலத்திற்கும், வருவது குறித்தும் கடிதமெழுதவும். அன்புள்ள, ந. மு. வே. இத்துடன் இணைத்துள்ள கடிதத் துண்டைப் பார்க்கவும்.  ௳ தஞ்சாவூர் 17-12-42 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். நின் இரு கடிதமும் வந்தன. நேற்றுக் கடிதம் பார்த்த பொழுதே வள்ளல் உடல் நிலை பற்றிக் கவலையுற்று இன்று கடிதம் வருதலை எதிர்பார்த்திருந்தேன். இன்று வந்த லெட்டர் முதலில் அச்சத்தையும் பின்பு ஆறுதலையும் விளைத்தது. ஊருக்குப் புறப்படும் அன்று உணவைக் கண்டபடி கொடுத்திருக்கிறார்கள். கபம் இல்லாதிருக்கும் பொழுது கூடச் சில நாளைக்கொரு முறை சிறிது வேப்பெண்ணை கொடுத்து வருதல் நலம். குளிர் மிக்க காலமாதலின் குழந்தையை நன்கு கவனித்து வரவும். மாணிக்கத்திற்கு உடம்பு நலமாகி, இன்று தலைமுழு கினான். எனக்கும் ஒருவாறு நலமே. நடுக்காவேரிச் செய்தி பின்பு ஒன்றும் தெரியவில்லை. உங்கள் எல்லோருடைய நலத்திற்கும் ஏனைய செய்தி கட்கும் அடிக்கடி எழுது. அன்புள்ள, ந. மு. வே.  ௳ நாவலர்பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், 2659, இராஜகோபாலசாமி தலைவர். கரந்தைப் புலவர் கல்லூரி. கோவில் தெரு, தஞ்சாவூர் தேதி: 31-12-1942 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலமுண்டாக. இவண் யாவரும் நலம். அவண் எல்லோருடைய நலத்திற்கும் எழுதுக. அம்மை குத்தியபின் குழந்தை திருஞான வள்ளல் நலமாக இருக்கின்றானா? வேப்பெண்ணை கொடுத்து வருகின்றீர்களா? உனது பூதலூர்ச் சின்னம்மாளும் விதவையானது மிக வருந்தத்தக்கது. மருதூர் மாமா பிச்சையையாவின் மனைவி தூத்துக்குடியில் காலஞ் சென்றமையால் யாவரும் மருதூர் வந்துள்ளார்கள். உன் அம்மாளும், அத்தானும் விசாரித்து வர இன்று மருதூர் போயிருக்கிறார்கள். சம்பந்தன் இங்கு வந்திருப் பவன் ஒரு நாள் வெளியே போய் வந்து, 'டோஜோ இப்படிச் சொல்லி விட்டமையால் உடனே மாமாவை வந்து விடும்படி கடிதம் போட வேண்டும்' என்று சொன்னான். சிலப்பதிகாரம் முதலியன படித்து வருகின்றாயா? என் உடம்பு முன் இருந்த படியே இருக்கிறது. மாறுதலொன்று மில்லை. உனது நலத்திற்கும், ராஜம், வள்ளல் நலங்கட்கும், பிற செய்தி கட்கும் எழுதுக. அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சை 4-1-43 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு நலமுண்டாக. இவண் யாவரும் நலம். அவண் எல்லோருடைய நலத்திற்கும் எழுதுக. 1-1-43ல் எழுதிய உனது லெட்டர் வந்தது. வள்ளலுக்கு உடம்பு நலமான செய்தி குறித்து அடுத்து உனது லெட்டர் வரும் என்று இரண்டு நாளாக எதிர்பார்த்தேன். குழந்தையின் நலங்குறித்து உடன் எழுதுக. அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சை 15-1-43 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. நினது 8-1-43ன் கடிதம் ஒரு நாள் தாழ்ந்து வந்தது. கடிதம் காணாமல் வள்ளல் உடல்நிலை குறித்துக் கவலையுடனிருந்தோம். முதலில் அத்தான் மூலம், பின் உன் கடித மூலமும் நலம் தெரிந்து மகிழ் கின்றோம். எனிமாவை எப்பொழுதும் வழக்கப்படுத்துவது நன்றன்று. அதுவும் கம்பவுண்டர் மூலமே வைக்க வேண்டும். எனக்குக் கடைசியாக அதனால் துன்பமுண்டாவது தெரிந்த மையால் 1 மாதத்தின் மேலாக அதனை விட்டு விட்டேன். வேப்பெண்ணை உபயோகித்து வருவது நல்லது. நேற்றுத்தான் ராஜகோபால் வந்து பொங்கற் சீருக்கென்று ரூ 5 கொடுத்துச் சென்றது. முன்னரே யானால் உங்களுக்கு அநுப்பியிருக்கலாம். நிழற் படமெல்லாம் செம்மை செய்தாகி விட்டதா? நன்றாயிருக்கின்றனவா? நீ போகும் பொழுது சாமிநாதன் குடும்பத்தை அழைத்துச் சென்றாயா? அவனுடைய நிலைமை எவ்வாறு உள்ளது, மேலும் நீ அவனுக்கு உதவி செய்கின்றாயா? டிசம்பர் கணக்கினை எனக்கு அனுப்பிவிட்டு ஒவ்வொரு மாதமும் அனுப்பி வருக! குடும்ப நிருவாகம் எவ்வளவு கடினமானது என்பதை நான் நன்றாய் அறிந்து வருகிறேன். அவ்வகையில் நீ பயிற்சி பெறுதல் வேண்டும். எண்ணில் கோடி பொது மக்களில் ஒருவனாக நீ வாழ்ந்தால் என்ன பயன்? பகுத்தறிவுடன், உண்மையும் ஊக்கமும் உடையையாயின் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். திருக்குறளை இடைவிடாது படித்து வருக. நமது 4ம் பாரப் பாட புத்தகம் பற்றி நாராயணசாமியிடம் கூறுக. வள்ளல் நலத்திற்கு உடன் எழுதுக. அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சாவூர். 21-1-43 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலமுண்டாக. இவண் யாவரும் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. உனது 19-1-43ன் கடிதத்தால் யாவும் அறிந்தோம். அங்கே பிளேக் உண்டானதைப் பற்றி ஏன் முன்பே எழுதவில்லை? உங்களில் ஒவ்வொருவர்க்கா உடம்பு நலமில்லாதிருப்பது வருத்தம் விளைக்கிறது. சௌ. ராஜத்திற்குச் சனி திசை கழிவு இன்னும் 10 நாள் வரை இருக்கிறது. அது சிறிது துன்பத்தையுண்டு பண்ணும். ஆனால் கெடுதியொன்றும் செய்யாது. ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்வதுடன், ஒவ்வொரு நாளும் லெட்டர் எழுதித் தெரிவிப்பாயாக. வாந்தி முன்பும் இப்படி இருந்ததல்லவா? ஆதலால் அதற்குப் பயப்பட வேண்டியதில்லை. எதற்கும் அங்குள்ள மருத்துவர்களின் ஆலோசனையையும் கேட்டு ஏற்றபடி செய்க. குழந்தையின் உடல் முழுதும் நலமாயிற்றா? அவனது பேச்சும், விளையாட்டும் எப்படியிருக்கின்றன? உங்கள் அத்தை வந்து சேர்ந்தது பற்றியும், ராஜத்தின் நலத்திற்கும் உடன் கடிதமெழுதுக. அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சாவூர். 2-2-1943 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. ராஜத்திற்குத் திரும்பவும் வாந்தி ஏற்பட்டதாக எழுதியிருந்தாய்? இப்பொழுது எப்படியிருக்கிறது? உங்கள் அத்தை அங்கேதான் இருக்கிறதா? மருதையா நேற்று அங்கு வந்ததாக அறிந்தேன். பிப்பரவரி இறுதியில் அரிசி அனுப்பக் கூடும். 5-2-43ல் மறு ஏலம் நடக்கும். சூப்பர்வைசர்கள் ஸ்ட்ரைக் என்று ஏதோ கேள்வியுற்றேன். அதனை விபரமாகத் தெரிவிக்கவும். ராஜத்தின் நலத்திற்கும், வள்ளல் முதலிய எல்லாருடைய நலத்திற்கும் உடன் பதில் எழுதுக. அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சாவூர். 10-2-43 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலமுண்டாக. இவண் யாவரும் நலம். அவண் எல்லோருடைய நலத்திற்கும் எழுதுக. நினது கடிதம் கிடைத்தது. மாதுளங்க ரசாயனம் ஒரு புட்டி வாங்கி, இன்று பார்சலில் ரிஜிஸ்டர் செய்து அனுப்பி யுள்ளேன். தெற்கு வீதியில் உள்ள ஷாப்பில் மாத்திரம் இருந்தது. நான் போய் விசாரிக்க முடியாமையால் காலந் தாழ்ந்தது. ராஜத்திற்கு இப்பொழுது எப்படியிருக்கிறதென்பதற்கும், குழந்தையின் நலத்திற்கும் உடன் கடிதம் எழுதுக. உங்கள் அத்தை அங்கேதான் இருக்கிறார்களா? ஏலமெடுத்த நிலம் மறுஏலத்திற்கு வந்ததில் பர்மாவி லிருந்து பணங் கொண்டு வந்த ஒருவன் போட்டிக்கு வந்து விட்டமையால் விட்டுவிட நேர்ந்தது. முன்பு எடுத்ததினும் ரூ 2800 மிகுதியான தொகைக்கு அவன் எடுத்து விட்டான். சிறிது பொருள் நட்டமும், வீண் அலைச்சலுமே பயனாயின ஆனால் குறைந்த விலையில் சில நிலங்களை விலைக்கே வாங்க எண்ணியுள்ளேன். ராஜலட்சுமி மில்லில் இரண்டு வருடமாக இலாபம் மிக அதிகப்பட்டு வருகிறது. நீ மில்லில் வேலைக்குச் சேர்ந்திருந்தால் இதுவரையில் ரூ 200க்கு மேல் சம்பளம் வாங்கலாம். அதிலிருந்து கொண்டே டெக்ஸ்டைல் சம்பந்த மாகப் படித்து, உயர்ந்த சம்பளத்திற்கு வழி செய்து கொண்டிருக் கலாம். ஆனால் எல்லாம் நம் முயற்சியினாலேயே நடப்பனவல்ல. உன் அம்மாள் நடுக்காவேரிக்குப் போய் 4 நாளாகிறது. நோய் என்னை மிகவும் வருத்திக் கொண்டேயிருக்கிறது. இன்னும் 2 மாதம் கழிதல் வேண்டும். உங்கட்குப் புது நெல் அரிசிதானே அனுப்ப வேண்டும்? 10 நாளைக்கு அரிசி இருக்கும் பொழுதே தெரிவிக்க. அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சாவூர். 21-2-43 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் எல்லோருடைய நலத்திற்கும் எழுதுக. நினது 18-2-43 ன் லெட்டர் கிடைத்தது. மருந்துண்பதில் ராஜம்மாளுக்குக் குணமாயிருக்கிறதென்பது அறிந்து மகிழ் கின்றேன். மாதுலங்க ரசாயனம் விலை 1-12-0 அதனை ஓரளவு உண்டால் போதுமென நினைக்கிறேன். ஊரிலிருந்து நேற்றுத்தான் நெல் வந்து சேர்ந்தது. திருநாவுக்கு அம்மை வார்த்திருந்தது. இன்று தலைக்குத் தண்ணீர் போடுகிறது. நாளை நெல் வேக வைப்பார்கள். நாலைந்து நாளில் அரிசி அனுப்பக் கூடும். உனது லெட்டரின் கடைசிப் பகுதியிலிருந்து, இந்த மாதத்தை ஜனவரி என எண்ணியுள்ளாய் என்று தோன்றுகிறது. திருஞானவள்ளலுக்குப் பேச்சு வருவது பல் முளைப்பது முதலிய விபரங்களுக்கும் எழுதுக. ராஜம் குழந்தை இவர்கள் நலத்துடன் உனது நலத்தையும் தெரிவிக்க. அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சாவூர். 26-2-43 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலமுண்டாக. இவண் யாவரும் நலம். அவண் நலத்திற்கு எழுதுக. நினது 23-2-43ன் லெட்டர் கிடைத்தது. ராஜம்மாளுக்குச் சில நாள் இவ்வாறு வாந்தியெடுத்துப் பின் நின்று விடும் என்கிறார்கள். இங்கே தானியக் கட்டுப்பாட்டுக்காக ஸ்பெஷல் டிப்டிக் கலெக்டர் ஒருவர் நியமிக்கப் பெற்றுள்ளார். இங்கிருந்து வேறு எந்த ஜில்லாவுக்கும் நெல்லோ, அரிசியோ அனுப்பக்கூடா தென்றும் அனுப்புவதாயின் கலெக்டர் உத்தரவு பெற்றுக் குறிப்பிட்ட வியாபாரி மூலமே அனுப்ப வேண்டுமென்றும் சர்க்கார் சட்டம் செய்திருப்பதாகச் சொன்னார்கள். அப் பொழுதே உனக்கு அரிசியனுப்புவதில் தடையிருக்குமோ என ஐயுற்று விசாரித்து வரச் சொன்னேன். அவர்கள் விசாரிக் காமலே, இது சாப்பாட்டுக்கு அனுப்புவதாதலில் இதில் தடையொன்றும் இல்லையென்று சொல்லிவிட்டார்கள். நேற்று மிக அவசரமாக நெல் அரைத்து இராத்திரியே புடைத்து 2 மூட்டையாகத் தைத்துக் காலையில் அனுப்புதற்குக் கொண்டு சென்றார்கள். 8 அணா வண்டிச் சத்தத்தோடு மூட்டைகள் திரும்பிவந்துவிட்டன. வேறு ஜில்லாவுக்கு அனுப்பக் கூடா தென்று கண்டிப்பான உத்தரவிருப்பதாகக் கூறித் திருப்பி விட்டாராம். ஒருக்கால் கலெக்டருக்கு எழுதி உத்தரவு பெற்று அனுப்பலாமோ என்னவோ தெரியவில்லை. நான் உடல் நலமின்றி வீட்டிலேயே இருப்பதால் எல்லாம் பிறரைக் கொண்டு ஆக வேண்டியிருக்கிறது. எனக்கு இருமலோடு அடிக்கடி காய்ச்சலும் வந்து விடுகிறது. வாரத்தில் இரண்டு நாள் கூடக் குளிக்க முடிவ தில்லை. காய்ச்சலோடு வாந்தியெடுத்துக் கொண்டிருக்கும் இடையே இக்கடிதம் எழுதுகிறேன். அரிசியைச் சாப்பாட்டிற்கு எப்படி அனுப்பலாம் என்று கேட்டதற்கு எவ்வகையிலும் அனுப்ப முடியாதென்று சொன்னானாம். எனவே, உத்தரவு பெற்று அனுப்புவதும் சிரமம் போலும்? இனி என்ன செய்வதென்று தெரியவில்லை. நீ பூதலூர்ச் சிற்றப்பா எப்படி இறந்தார் என்று கேட்டுவிட்டு அதன் பின்பு ஒன்றுமே எழுதவில்லையென்று வருத்தப் படுகிறார் களாம். இன்னும் ஒரு கடிதம் ஆறுதலாக எழுதி வைக்கவும். ராஜத்தின் உடல் நலத்திற்கும், குழந்தை நலத்திற்கும் உடன் பதில் எழுதுக. அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சாவூர். 3-3-43 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலமுண்டாக. இவண் யாவரும் நலம். அவண் நலம் தெரிவிக்க. நின் கடிதம் நேற்றுக் கிடைத்தது. நான் புதிய மருந்து உண்பதில் ஏதோ சிறிது குணம் ஏற்பட்டு வருகிறது. அங்கே மோசமான அரிசியை இரட்டிப்பு விலைக்கு வாங்கி நீங்கள் எப்படி உண்டு காலங்கழிப்பது என்று தோன்றவில்லை. சாப்பாட்டுக்கு என்று சொல்லிச் சிலர் திருட்டுத்தனமாக வியாபாரம் செய்தது தெரிந்து எதன் பொருட்டும் வெளி ஜில்லாவுக்கு அனுப்பக் கூடாதென்று கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளார்களாம். சர்க்கார் கட்டுப்பாட்டு விதியைத்தளர்த்தினாலொழிய அனுப்புவதற்கு வழியில்லை. ராஜம்மாளுக்கு வாந்தியெடுப்பதில் இரத்தமும் வருகிற தென்பது மிக்க வருத்தத்தைத் தருகிறது. அதனை நன்கு கவனித்து ஏற்றது செய்ய வேண்டும். ராஜகோபால் ராஜத்தை இங்கு அனுப்பி வைத்தால் சௌகரியப்படுத்தி அனுப்பிவைக்கிறேன் என்று எழுதியதற்கு ஒன்றும் பதில்இல்லை என்று எழுதியிருக்கிறது. குழந்தை திருஞானவள்ளல் நடப்பது, பேசுவது முதலியன குறித்து ஒன்றும் எழுதவில்லையே. நலத்திற்கும், யாவற்றிக்கும் உடன் பதில் எழுதுக. அன்புள்ள, ந. மு. வே. ௳ தஞ்சாவூர். 16-3-43 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் உங்கள் நலத்திற்கு எழுதுக. நினது லெட்டர் கிடைத்தது. ராஜம்மாளுக்கு வாந்தி எடுப்பது நின்றிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகின்றோம். ராஜம் ஏதேனும் நல்ல புத்தகங்கள் ஒழிந்த நேரங்களில் படிப்ப துண்டா? நீயும் சிலப்பதிகாரம் போன்றவை படிப்பதுண்டா? வள்ளலைச் சிறிதேனும் வெளியில் இட்டுச் செல்வ துண்டா? இங்கே ஒரு வாரத்தின் மேலாக வெய்யில் தாங்க முடியாத தாயிருக்கிறது. நான் விடாது மருந்துண்டு வருகின்றேன். சிறிது குணமாயிருக்கிறது. அன்புள்ள, ந. மு. வே.  ௳ தஞ்சாவூர். 20-3-43 அன்புள்ள மைந்தன் நடராஜனுக்கு இறைவனருளால் நலம் பல்குக. இவண் யாவரும் நலம். அவண் உங்கள் நலத்திற்கு எழுதுக. நின் கடிதங்கள் கிடைத்தன. ராஜமும், வள்ளலும் சுகமாயிருப்ப தறிந்து மகிழ்கின்றோம். என் உடம்பும் ஒருவாறு நலமடைந்து வருகிறது. 4 நாளின் முன் நான் எழுதிய லெட்டர் கிடைத்ததா? அன்புள்ள, ந. மு. வே.  * ஒய்வு பெற்ற தமிழக அரசுகல்வித்துறை முதல்பேராசிரியர் பழனி அருள்மிகு பழனியாண்டவர் இந்தியப்பண்பாட்டுக் கல்லூரி முதல் முதல்வர் திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரி. முதுகலை முதல்தமிழ்ப்பேராசிரியர். * நாட்டார் சிந்தனைகள் என்னும் தலைப்பில் பேராசிரியர் பி. விருத்தாசலம் அவர்கள் ஆற்றிய உரை திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து 3,10,17,24071984 ஆகிய நான்கு நாட்களில் ஒலிபரப்பப்பெற்றன. அச்சொற்பொழிவுகளின் தொகுப்பே இக்கட்டுரை ஆகும். * இக்கட்டுரை மாலை முரசு நாளிதழில் 21.04.1984 இல் வெளிவந்தது. * தமிழ்ப்பொழில் 1925 இல் தொடங்கப்பெற்றது. இக்கட்டுரை சென்னையில் உள்ள உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியர் பி.விருத்தாசலம் அவர்கள் 1995 இல் ஆற்றிய அறக்கட்டளைச் சொற்பொழிவு ஆகும். * தவித்தவர் - ஜெகவீரபாண்டியர் - திருக்குறள் குமரேச வெண்பா நூலாசிரியர். * “ ஓடுந்திரைகள் உதைப்ப, உருண்டுருண்டு ஆடும் அலவனை அன்னம் அருள் செய்”- சீவகசிந்தாமணி 518 பாடல்