நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 22 நாட்டார் நாட்குறிப்புக்கள் ஆசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 22 ஆசிரியர் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 288= 312 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 195/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் 124 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு வல்லுனர் குழு 1. முனைவர் கு.திருமாறன் 2. முனைவர் இரா.கலியபெருமாள் 3. பேராசிரியர் சண்முக.மாரி ஐயா 4. பேராசிரியர் நா.பெரியசாமி 5. முனைவர் பி.தமிழகன் 6. முனைவர் மு.இளமுருகன் பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற் காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “ சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “ சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரிய வர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர் களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்வி களிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப்பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக் குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921 -இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல் களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக்கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரணமாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த் தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர் களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள் கின்றேன். 17.07.2007 பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 அணிந்துரை நாட்டாரய்யா - நிகழ்வும் நினைவும் சிறந்த நூல்களைச் செம்மையாகப் பதிப்பிக்கும் பழக்கம் கொண்ட தமிழ்மண் பதிப்பகத்தார் நாட்டுடை மையாக்கப் பட்டுவிட்ட நாட்டாரய்யாவின் நூல்கள னைத்தையும் தாங்கள் வெளியிட விரும்புவதாகவும், இப்பெரும் பணிக்கு என்னுடைய ஒத்துழைப்புத் தேவையெனவும் பதிப்பாளர் நண்பர் இளவழகன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதோடு நேரில் சந்தித்துத் தன் முயற்சியைத் தொடங்கிவிட்ட நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டபோது நெகிழ்ந்து போன நான் என்னால் இயன்ற தனைத்தையும் செய்ய உறுதியளித்ததோடு நாட்டாரய்யா எழுதியவை, அவர் குறித்துப் பிறர் பதிவு செய்தவை போன்ற வற்றோடு கையெழுத்துப்படியாக இருந்த ‘தொல்காப்பிய ஆராய்ச்சிக் கட்டுரை’, நாட்குறிப்பு போன்றவற்றையும் அவரிடம் கொடுத்த போது அவற்றைக் கண்டு வியந்து, மகிழ்ந்து தமிழறிஞர்களின் கையெழுத்துப் படிகள் கிடைக்காத நிலையில் இது ‘பெருஞ்சொத்து’ எனக் கூறியதோடு ‘குடும்ப நினைவுகள்’ குறித்து என்னையும் எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார். நாட்டாரய்யாவின் இளையமகள் மங்கையர்க்கரசி அவர்களை என் சிற்றப்பா புலவர் (வித்வான்) திருநாவுக்கரசு மணம்புரிந்து கொண்டபோது தொடங்கிய எங்கள் குடும்ப உறவு திருமதி. மங்கையர்க்கரசி அவர்களின் மறைவிற்குப் பின் தொய்வுற்றது. ஆயினும் புலமைமிக்க ஆசிரியராகவும், சிறந்த சொற்பொழி வாளராகவும், ஆய்ந்தறிந்த கட்டுரை யாளராகவும், தெளிந்த உரையாசிரியராகவும் சிறந்து விளங்கிய நாட்டாரய்யாவின் திறன் எனக்குள் என் இளமைப் பருவத்திலேயே ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. செங்கரையூர் சேதிராயர் வீட்டுச் சம்பந்தியாக நாட்டாரய்யா நடுக்காவிரியிலிருந்து வந்து திரு.ஜான் களத்தில் வென்றார் தன் தோட்டத்திலே ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசியபோது நான் கண்ட அந்தத் தோற்றப் பொலிவும், சொற்றிறனும், குரல் வளமும் ‘கன்னல் பொருள் தரும் தமிழே! நீ ஓர் மலர்க்காடு, நான் ஓர் தும்பி’ எனும் உண்மையை உணராத வயதிலேயே நாட்டாரய்யாவின் தமிழ்ப்பேச்சைத் துய்க்கும் தும்பியானேன். தஞ்சையில் ‘ நாட்டார் பேரவை’ ஆண்டுதோறும் பள்ளிகளுக்கிடையேயான பேச்சுப் போட்டியை சிறப்பாக நடத்தி வந்தபோது நான் பயின்ற ‘தூய பேதுரு உயர்நிலைப்பள்ளி’ யின் சார்பாகக் கலந்து கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் நானடைந்த மகிழ்ச்சியை சொல்லில் வடித்துவிடவோ, அடக்கிவிடவோ முடியாது. போட்டியின் போது கொடுக்கப் பட்ட தலைப்பு ‘அழியாச் செல்வம்’. அவர் ஈட்டிய புகழே அழியாச் செல்வம் தானே என்று வலியுறுத்தும் நோக்கத்திலே மேடையேறினேன். “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றையவை” என்ற குறட்பா நினைவிற்கு வரவே, ‘தாமே பயின்ற கல்வியே அவருக்குப் புகழ் சேர்த்தது என்றும், கல்வியும் அதன் வழிப்பெற்ற புகழும் அழியாச் செல்வமென்று பேசினேன். அந்த நாள் முதலாய் நாட்டாரய்யா பற்றிப் படிப்பதிலும் அவர் குறித்து அறிஞர் பலர் சொல்லக் கேட்பதிலும் ஒரு தாகம் ஏற்பட்டது. அவர்மகன் வழிப் பெயர்த்தி அங்கயற்கண்ணியின் கைத்தலம் பற்றியபோது (1961இல்) அதுவரை தொய்ந்து போயிருந்த உறவு துளிர்க்கத் தொடங்கியது போன்ற செய்திகளைச் சொல்வதால் யாருக்கு என்ன நன்மை ஏற்படப் போகிறது என்ற அய்யுறவு ஏற்படவே நாட்டாரய்யாவின் சிறப்பியல்பு சில குறித்து எழுதத் துணிந்தேன். பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தன் தம்பிகளுக்குக் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைக் கற்றுத் தந்ததோடு தெளிவு, துணிவு, கனிவு என்ற பண்புகளையும் கைக்கொள்ளு மாறு வலியுறுத்தினார். எந்தக் கருத்தையும் கசடறக் கற்றுத் தெளிவு பெறவேண்டும், கற்றுத் தெளிந்த கருத்தை துணிவோக எடுத்துச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்லும் போதுதெளி வோடும், துணிவோடும், கனிவும் கட்டாயம் தேவையென்று வலியுறுத்தினார். ‘இலக்கியத்திற்கே இலக்கணம் கண்டனர்’ என்பதற்கேற்ப இலக்கியமாய் வாழ்ந்த நாட்டாரய்யாவைக் கண்டுதான் அண்ணா அவர்கள் இந்தப் பண்புகளைத் தன் தம்பிகளுக்குக் கற்றுக் கொடுத்திருப்பாரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. நாட்டாரய்யா அவர்கள் இளமையில் வேளாண் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் தமிழ்பால் தான் கொண்டிருந்த தணியாத தாகத்தால் முறையாகத் தமிழ் கற்க விரும்பினார். கல்லூரியில் சேர்ந்து பயின்றால் ‘பண்டித’ பட்டம் பெற ஆறு ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில் தானே முயன்று மூன்றே ஆண்டுகளில் முடித்துத் தங்கப்பதக்கமும், முதன்மை இடத்தைப் பெற்றதால் மன்னர் சேதுபதி அவர்களால் தங்கத்தோடா அணிவிக்கப்பட்ட பெருமையும் பெற்றவர். தன்னிடம் கற்க வந்தவர்களுக்குத் தெளிவும் திறனும் ஏற்படுமாறு கற்றுத் தந்த பேராசிரியர் அவர். ‘அவரிடம் பாடம் கேட்டவர்’ என்ற தகுதியொன்றே பாடம் கேட்டவர்களுக்கு வேலைவாய்ப்பைத் தேடித் தந்திருக்கிறது என்பதும், அவர் பணியாற்றிய கல்விக் கூடங்கள் தமிழ்ப் பாடத்தில் மாநிலத்தில் முதல் இடத்தைப் பெற்றமையும் அவரின் மொழித் திறனுக்கும், பயிற்றுவிக்கும் ஆற்றலுக்கும் சான்று பகரும். 1940ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் திருப்பதியில் நடைபெற்ற அனைத்து இந்திய பத்தாவது கீழ்த்திசை கலை மாநாட்டில்’ சேரர் தலைநகர் எது என்று பேசுதற்பொருட்டு பல அறிஞர் பெருமக்கள் குழுமியிருந்தனர். சேரர் தலைநகர் திருவஞ்சைக்களமே என்று நிலைநாட்டச் சென்றிருந்த நாவலரைச் சொற்போர் தொடங்கு முன் திரு.இராகவ அய்யங்கார் அணுகித் தன் சார்பாகப் பேசும்படியும், இல்லையெனில் மையமாக விட்டுவிடும் படியும் வேண்டிக் கொண்டார்.வரலாற்றில் வழுவான தகவல் பதிவாகி விடக் கூடாது என்பதில் அக்கறைமிகுந்திருந்த நாட்டாரய்யா அவர்கள் தம் அறிவுக்கூர்மையாலும் வாதத்திறத்தாலும் சேரர் தலைநகர் திருவஞ்சைக்களமே என்பதை நிலைநிறுத்தினார். இந்நிகழ்ச்சி நாட்டாரய்யாவின் அறிவுத் தெளிவை வெளிப் படுத்தும். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அய்ந்தாம் ஆண்டு விழா இராமநாதபுரம் மன்னர் இராஜ இராஜேஸ்வர சேதுபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மன்னருடன் வந்திருந்த அவைப்புலவர் திரு.இரா.இராகவ அய்யங்கார் அவர்கள் விழா நடைமுறைவிதிகளை மீறிச் சொற் பொழிவாளரின் கருத்துக்கு மறுப்புக் கூறியபோது நாவலர் எழுந்து, “தாங்கள்சமத்தானப் புலவராய் இருக்கலாம், ஆயினும் ஒருவர் உரையாற்றும்போது இவ்வாறு குறுக்கே எழுந்து பேசுவது சால்பாகாது” என்று கூறவே இராகவ அய்யங்காரும் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்ட செய்தி மன்னர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரின் அவைப்புலவரே தவறு செய்தபோதும் தயக்கமின்றி அதனைக் கண்டித்த செய்தி நாட்டாரய்யாவின் துணிவைப் புலப்படுத்தும். இளங்கோவடிகள் இலக்கிய மன்றச் சார்பில் கரந்தைப் புலவர் கல்லூரியில் நாட்டாரய்யா தலைமையில் ‘சங்க இலக்கியச் சிறப்பு’ எனும் பொருள் பற்றித் திருவையாறு அரசர் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த பேராசிரியர் சி.இலக்குவனார் பேசும்போது ‘பிற்காலப் புலவர்கள் சங்ககாலப் புலவர்களைப் போல் இயற்கைப் பொருட்களை ஊன்றி நோக்கி, உணர்ந்து, உள்ளது உள்ளவாறு விளக்கிப் பாடும் திறன் பெற்றிலர் எனக் கூறி, தன் கூற்றுக்குச் சான்றாகக் காஞ்சிப் புராணத்திலிருந்து ‘குரா அளித்திடு பாவையை’ எனவரும் பாடலில் ‘வன்முருங்கை’ என வரும் தொடரைச் சுட்டி முருங்கைக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் ‘வன்’ என்ற அடைமொழி அறவே பொருந்தாது, அம்மரத்தின் தன்மைக்கு முற்றிலும் முரணானது என்று கூறி அப்பாடலைப் பாடிய கவிஞரை எள்ளற் குறிப்பு அடையச் சுட்டிக் காட்டினார். அதன்பின் பேசிய கூட்டத்தலைவர் நாவலர் அவர்கள் முருங்கைமரம் மருத்துவ நலங்கள் செறிந்த சிறந்த மூலிகைமரம், ஏழைகளின் கற்பக மரம். எனவே அச்சிறப்பியல்புகள் கருதி வண் முருங்கை ( வண்மை - வளப்பம்) எனப் பாட அது அச்சிட்டவரின் கவனக் குறைவால் வன்முருங்கை என்று பிழையாய் அச்சேறிவிட்டது இப்பிழையும் குறையும் பதிப்பித்தவர் களைச் சாருமேயன்றி இப்பாடலைப் பாடிய சிவஞான சுவாமி களைச் சாராது என்று விளக்கி திரு.இலக்குவனாரின் அரும் பெரும் புலமைத் திறனையும், சொல்வன்மையினையும் பாராட்டிப் போற்றிப் புகழ்ந்த தலைமையுரை அவர்தம் கனிவைத் தெரிவிக்கும். நாட்டாரய்யாவின் பேச்சும் போக்கும் தெளிவும், துணிவும், கனிவும் நிறைந்ததாகவே இருந்த தென்பதைத் தெள்ளிதின் உணரலாம். இப்படிப் பல்லாற்றானும் சிறந்து விளங்கிய செம்மலின் திறனும் தெளிவும் கருத்தும் எழுத்தும் சென்று சேராத திசையில்லை என்பதை நிலைநிறுத்த வேண்டுமென்ற வேட்கை எழுந்தது. நாட்டாரய்யா எழுத்து நடை, பேச்சுநடை இரண்டிற்கும் தூய நடை எடுத்து வைத்தார். உயர்வான தமிழ் வளர்த்தார், உலகில் நல்ல பேர் வளர்த்தார், தமிழுக்குப் பெருமை தனைத் தான் வளர்த்தார்’ என்ற செய்தியினையும்; அவரின் அகன்ற அறிவு, ஆழ்ந்த புலமை, தேர்ந்த ஞானம், தெளிந்த ஆய்வு, எழுத்தாற்றல், பேச்சாற்றல், படைப்பாற்றல், உரைவளம் போன்ற சிறப்புகளையெல்லாம் ஊரும் உலகும் உணர வேண்டுமென்பதற்காகவும், குறிப்பாக எதிர்கால இளைய சமுதாயம் மொழிப் பற்றுக் கொள்ள இவரின் வாழ்வு வழிகாட்டியாகத் திகழ வேண்டுமென்பதற்காகவும், அவர் மறைந்து அறுபது ஆண்டுகள் ஆனபின்னரும் அவரைத் தமிழ் நெஞ்சங்கள் மறக்கவில்லையென்பதை உணர்த்துவதற்காகவும் தஞ்சை வெண்ணாற்றங்கரை கபிலர் நகரில் அவர் பெயரில் நிறுவப்பட்டுள்ள ‘நாவலர் ந.மு.வே.நாட்டார் திருவருள் கல்லூரி’ வளாகத்தில் அவர்தம் முழுஉருவ வெண்கலச் சிலையினை வெற்றிகரமாக அமைத்துப் பலரும் வியக்கும் வண்ணம் ‘நாவலர் பண்டித ந.மு.வே. நாட்டார் நினைவு அறக்கட்டளையினர் விழாவெடுத்தனர். அதன் தொடர்ச்சியாக ஏதாவது குறிப்பிட்டுச் சொல்லும்படியாகச் செய்யவேண்டுமென்ற ஆர்வமெழுந்தது. வாசித்துப் பெற்ற அறிவினாலும், வாழ்ந்து கற்ற அனுபவத் தாலும் பழமையைப் போற்ற வேண்டும், அவற்றைக் காக்க வேண்டும் என்ற விழைவும் வேட்கையும் ஏற்படவே அவர் சேமித்து வைத்த சுவடிகள், எழுதிக் குவித்த படைப்புகள், பரிசாகப் பெற்ற விலை மதிக்க முடியாத தங்கப்பதக்கங்கள், தோடா போன்றவை கூட அவர் குடும்பத்தாரிடையே இல்லையே என்ற வருத்தமும், பழம் பெருமைகளை உணர்த்த வல்ல சான்றுகளைச் சேர்க்க வேண்டும், போற்றிக் காக்க வேண்டுமென்று நாடும் நல்லோரும் உணரும் நேரத்தில் இருந்த செல்வத்தை இழந்துவிட்டோமே யென்ற ஏக்கமும், 1799ஆம் ஆண்டு மேத் திங்கள் 4ஆம் நாள் ஸ்ரீரங்கப் பட்டினத்தில் நடந்த போரில் ‘மைசூர் புலி’ என்று போற்றப்பட்ட திப்பு சுல்தான் இறந்த போது போரின் வெற்றிச் சின்னமாக ஆங்கிலேயரால் கவர்ந்து செல்லப்பட்ட திப்புசுல் தான் பயன்படுத்திய வாளை 205 ஆண்டுகளுக்குப் பிறகு அது தன் மாநிலத்தின் உடைமையென்ற உரிமையுணர்வோடும், நான் ஒரு கன்னடியன், இந்த வாள் என் மாநிலத்துப் பெருமை பேசும் களஞ்சியம். எனவே இது என் மாநிலத்தில்தான் இருக்க வேண்டுமென்ற உள்ளக் கிளர்ச்சியோடும் ஏறத்தாழ 1 1/2 கோடி ரூபாய்க்கு ஏலமெடுத்துத் தன் மாநிலத்திற்குக் கொண்டு வந்த தனிமனிதனின் ஆர்வமும்,உரிமை வேட்கையும் எனக்குப் பல உண்மைகளை உணர்த்தியதோடு பல்வகை உணர்வுகளையும் ஏற்படுத்தியது. அத்துடன் திப்புசுல்தான் ஆய்வு, தொல்பொருள் மையத்தின் தலைவர் திரு. முகமது மொய்னுதீன், ‘கர்நாடக அரசு வரலாற்றுப் பெருமையுணர்வு கொண்டதாக இல்லாததோடு எல்லாவற்றையும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்ப் பதால் இலண்டனில் ஏலம் விடப்பட்ட திப்புசுல்தானின் வாளில் நாட்டம் செலுத்தவில்லை’ என்று கூறியது போன்ற பழி ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டுமென்ற கிளர்ச்சி தந்த எழுச்சிதான் நாட்டாரய்யா பற்றியவற்றைச் சேர்க்க வேண்டு மென்ற ஆர்வமெழக் காரணமாயிற்று. அந்த உணர்வுத் தீக்கு நெய்யூற்றிய நண்பர் இளவழகன் காட்டிய ஆர்வமும் கொண்டிருந்த அக்கறையும் பல இடங்களில் இருந்தும், பல்லோரிடமிருந்தும் பலவற்றைத் தேடிப் பெறச் செய்தன. இப்பணியைச் செம்மையாகவும் முழுமையாகவும் செய்ய முடியவில்லையேயென்ற ஏக்கமிருந்தாலும் இந்த அளவிற்காவது செய்ய முடிந்ததே என்ற பெருமையும் மனநிறைவும் ஏற்படத்தான் செய்கிறது. எப்போதும் போலவே அரியதும் பெரியதும் பெருமை சேர்க்க வல்லதுமான பணியை இப்போதும் செய்து முடித்திருக்கின்ற தமிழ்மண் பதிப்பகத்தார் தணியாத ஆர்வமும், தளராத மன உறுதியும் கொண்டு மேலும் பல நற்பணியாற்ற வாழ்த்துகிறேன். - குரு.செயதுங்கன். பி-2/1, பாஸ்கரா அடுக்ககம் முதல்மாடி பிச்சாண்டார் கோயில், 1, டோல்கேட் திருச்சிராப்பள்ளி- 621 216 தொ.பேசி: 0431 2591580 பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங் களை யெல்லாம் தேடியெடுத்துத் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மை யாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக் கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்டதால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும் போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு..., செயல் செய்வாய் தமிழுக்கு......,ஊழியஞ் செய் தமிழுக்கு......., பணி செய்வாய்! தமிழுக்கு........, இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.”எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர் தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர் களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந் தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங் களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலம் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற் குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடு வதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப் புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத் தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகுகுரு.செயத்துங்கன், பேரா. கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெரு மக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டு கின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் இவர்களுக்கு எம் நன்றி என்றும் . . . உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை iv அணிந்துரை xi பதிப்புரை xvii நாட்குறிப்புக்கள் 1-181 வாழ்க்கை வரலாறு 183-246 நாட்டாரின் கையெழுத்து பிரதி மற்றும் நிழற்படங்கள் 247-281 நாட்டார் நாட்குறிப்புக்கள் 08.1.1933 முதல்31.12.33 01.01.1936 முதல் 31.12.36 1.1.37 முதல் 19.12.37 24.5.1940 முதல் 28.3.44 திரு. குரு. செயதுங்கன் அவர்கள் நாட்டார் அய்யாவின் மகன் வழிப் பெயர்த்தி திருமதி. அங்கயற்கண்ணியை திருமணம் செய்து கொண்டவர். இவர் பல ஆண்டு காலம் கையெழுத்துப் படியாக இருந்த ந.மு.வே. நாட்டாரின் நாட்குறிப்புக்களையும் மற்றும் பல செய்திகளையும் எங்களுக்கு கொடுத்து உதவினார் அவருக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றி. 1933ஆம் ஆண்டு 8 - 1 - 1933 அன்னையார் உத்தர கிரியை. 11 - 1 - 33 திருச்சிராப்பள்ளி வந்தது. 13 - 1 - 33 நேற்றுக் காலை புறப்பட்டுத் தரங்கம்பாடி சென்ற பிரின்சி பால் பர்பாஸ் நேற்று மாலை ஓர் மாணவனோடு கடலில் மூழ்கி இறந்து விட்டாரென்ற துயரமான செய்தி இன்று வந்தது. மிக்க உழைப்புள்ளவர். எல்லோருடைய அன்புக்கும் பாத்திர ராயிருந்தவர். 21 - 1 - 33 கரந்தைத் தமிழ்ச்சங்க ஆண்டுவிழா தலைவர் ஸ்வாமி விபுலாநந்தர். 22 - 3 - 33 கரந்தை விழாத் தொடர்ச்சி. 23 - 1 - 33 தமிழராய்ச்சிக் கழகத்தில் R. P. சேதுப்பிள்ளையவர்கள் சொற்பொழிவிற்குத் தலைமை வகித்தது. “சிறையிருந்த செல்வி”. 28 - 1 - 33 அப்பூதியடிகள் திருநாள். சைவசித்தாந்த சபையில் தலைமை. 5 - 2 - 33 அன்னையார் 2-வது ஊனமாசியம். 9 - 2 - 33 விருதைச் சிவஞானயோகிகளின் ‘சத்துச் செந்தூரம்’ என்னும் மருந்தினை, ஆடாதோடைச் சாறும் தேனும் கலந்த அநுபானத்துடன் உண்ணத் தொடங்கியது. 19 - 2 - 33 நேற்றிரவு கனவில் ஓர் சிவாலயத்திலிருந்து விபூதி உருத்தி ராக்க வடம் மிகுதியாக அணிந்து பெருந்திரளான சிவனடியார் கூட்டம் வரக்கண்டு, வடக்கு நோக்கிய திண்ணையில் ஒருதாள் மண்டியிட்டு வணங்கிக் கொண்டி ருந்தேன். இக்காலத்தில் இப்படியிருக்குமேல் ஞானசம்பந்தர் காலத்தில் எப்படியிருந் திருக்குமோ என நினைந்து மிக மனம் உருகினேன். 22 - 2 - 33 இன்று மகாசிவராத்திரி. சென்ற ஆண்டு சிவராத்திரிக்குக் குடும்பத்துடன் மலைக்கோயில் சென்று வழிபட்டு வந்தேன். அதன்பின் போகமுடியவில்லை. இன்றும் போகவில்லை. ஆனால் நாகநாத சுவாமி கோயிலில் தரிசனஞ் செய்துவிட்டு, மலைவலம் வந்தேன். இன்று முழுதும் சில ஆராய்ச்சியுரை களைப் படித்துக் கொண்டிருந்தேன். 7 - 3 - 33 இவ்வாண்டு ஜூனியர் B. A. வகுப்பிற்குத் தமிழ்ப்பாடம் சொல்வது இன்றுடன் முடிகின்றது. இன்று நற்றிணை பாடம் நடத்தவேண்டும். ஆனால், பாடமொன்றும் நடத்தாமல் நான் கல்லூரிக்கு வந்த வரலாறு முதலியவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தேன். 8 - 3 - 33 இன்று பகல் 12-1மணிக்கு ஜூனியர் இண்டர்மீடியேட் வகுப்பு. நான் பாடமொன்றுஞ் சொல்லாது கல்லூரியின் பழைய வரலாறு முதலியவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தேன். நான் இக்கல்லூரியில் தமிழ் கற்பிக்கும் செயல் இன்றுடன் முடிவுறு வதாதல் ஒருதலையென எண்ணுகிறேன். யாவும் திருவருட் செயல். 12 - 3 - 33 இன்று கரந்தைத்தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் திருநாட் கொண்டாட்டம். நான் தலைமை வகித்ததுடன் “நல்லந்துவனார்” என்னும் பொருள் பற்றிப் பேசினேன். திரு. பூவராகம் பிள்ளை, திரு. அ. மு. சரவண முதலியார், திரு. அ. கந்தசாமி பிள்ளை ஆகியவர்கள் முறையே திருவள்ளுவர், நம்பியாரூரர், திருக்குறள் மூன்றாம் பால் என்பன பற்றிப் பேசினார்கள். 14 - 3 - 33 கரந்தை போய் வந்ததன் பயனாக நேற்று இரவு முதல் நோய் பெரிதும் துன்புறுத்துகிறது. 15 - 3 - 33 சென்ற புதன்கிழமை கல்லூரியில் பாடம் கற்பிப்பது முடிவுற்றது. இன்று பகல் 12-மணிக்குப் பிரின்சிபால் முடிவு கூறிவிட்டனர். 1908ன் பிற்பகுதியில் இங்கு வேலை பார்த்து விட்டு, பின் 1910 ஜனவரி 15-ம் தேதி முதல் தொடர்ச்சியாய் வேலை பார்த்துளேன். வாழ்நாளின் நடுப்பகுதி இங்கே சென்றது. வாழ்க்கையில் இஃது ஓர் பெரியமாறுதலாகும். 31-மே 1933 வரையில் இக்கல்லூரியின் தொடர்பு உளது. 15-ம் தேதி இன்று மாலை 5-மணிக்கு, ஏறக்குறைய என் வயதுள்ள என் அத்தை மகன் உரத்தூர் திருவேங்கடநாட்டார் காலஞ் சென்றனர் என இரவு 8-மணிக்கு ஆள் வந்து சொன்னான். 6 - 4 - 33 இணைவு. 7 - 4 - 33 சிந்தாமணிப் படித்துறையில் இருக்கும் புதுக்கோட்டை சாம்பவசிவ சாஸ்திரியார் என்பவரின் மருந்துண்ணத் தொடங்கியது. 12 - 4 - 33 இன்று காலை 9-மணிக்குப் புறப்பட்டுப் பூதலூர் வந்து அங்கே பகலுணவுண்டு, மாலை 6½ மணியளவுக்கு நடுக்காவேரி சேர்ந்தோம். பூதலூரில் என் சகலையின் தாயின் கனவில் நேற்றிரவு என் அன்னையார் வந்து, “பிள்ளைகள் வந்தார்களா” என்று விசாரித்து, “நாளைக் காலை வருவார்கள்” என்று பதில் சொல்லக்கேட்டு, “நடுக்காவேரியில் போய்ப் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி மீண்டார்களாம். 13 - 4 - 33 சித்தாந்த சாஸ்திரங்களை ஒருமுறை உரையுடன் முறை யாகப் படிக்க வேண்டுமென்னும் கருத்துடன், வருடப் பிறப்பாகிய இன்று திருவுந்தியார் தொடங்கியுள்ளேன். 24 - 4 - 33 கல்லடிவயல் 50-கலம் என்று பேசி, செ. தண்டாயுதபாணி நாட்டாரிடம் குத்தகைக்கு விடப்பெற்றது. 25 - 4 - 33 1935-இண்டர்மீடியட் தமிழ் செலக்ஷன் புரூப் முடிந்து அச்சடிக்க ஆர்டர் கொடுத்தது. 27 - 4 - 33 வித்துவான் பரீஷை ரிசல்ட் அநுப்பியது. பேப்பர் 128. Rs. 112-0-. 8 - 5 - 33 மகாத்மா காந்தியடிகள் இன்று பகல் 12-மணி முதல் 21-நாட்கள் உபவாசம் இருப்பதெனச் சங்கற்பித்துக் கொண்டு, அங்ஙனமே தொடங்கிவிட்டார். இச்செய்தி 4-நாளின் முன் “ஆநந்தபோதினி” வாரப் பத்திரிகையில் பார்த்தேன். 9 - 5 - 33 ரவீந்திர நாதர், மாளவியா, ஜெனரல் ஸ்மட்ஸ் முதலிய எத்தனையோ பேர் வேண்டிக்கொண்டும், காந்தியடிகள் தமது சங்கற்பப்படி நேற்று நண்பகல் உண்ணாவிரதம் தொடங்கி விட்டாரெனவும், அரசாங்கத்தார் இன்று சிறையினின்றும் காந்தியடிகளை விடுதலை செய்து விட்டாரெனவும் இன்றிரவு அறிந்தேன். கடவுள் காக்க 11 - 5 - 33 இன்று காலை திருவையாறு சென்று, ஐயாறப்பர் ஏழூர். உலாப் போந்து மீண்டு திருகோயிலுட் புகும் பொழுது தரிசித்தது. 14 - 5 - 33 இன்று இரண்டு நற்செய்திகள் கிடைத்தன. 1. நடராஜன் S.S.L.C. பரீஷையில் தேறினமை தனித்த வகையில் அறிந்தது. 2. காலேஜில் வேலையினின்று நீங்குவோர்க்கு நன்றியறிவுப் பொருள் (Bonus) கொடுப்பதெனத் தீர்மானித்து வந்த கடிதம். 18 - 5 - 33 “மூக்கபிள்ளை” என்ற நிலம் ரூபாய் 490க்குச் சாசனம் வாங்கியது. 23 - 5 - 33 காப்பி நிறுத்தியது. 24 - 5 - 33 இன்று பகலில் உறங்கும் பொழுது, காந்தியடிகள் மிக மெலிந்த உடம்புடன் வரக்கண்டு அவரைத் தொடர்ந்து சென்று ஆற்றுமணலில் இருக்கக் கனவு கண்டேன். 29 - 5 - 33 காந்தியடிகள் உபவாச முடிவு. 30 - 5 - 33 நேற்றுப் பகல் 12-30 மணிக்குக் காந்தியடிகள் தமது 21-நாள் உபவாசத்தை முடித்து ஆரஞ்சுப் பழரசம் அருந்தினார் என்னும் நற்செய்தி இன்று பத்திரிகையில் வந்தது. 31 - 5 - 33 சென்னை ரிஜிஸ்டரார் அநுப்பியிருந்த ரூ.200 “செக்” அவரது கையெழுத்தின்றி இருந்தமையால். பள்ளியக்கிர காரத்திலிருந்து இன்று அது திருப்பி அநுப்பப் பெற்றது. 1 - 6 - 33 இன்று மாலை என் அரிய நண்பராகிய திரு. உமாமகேசுவரம் பிள்ளையவர்களுடன் தஞ்சையிலுள்ள சிவராம இரத்ன பிள்ளை என்னும் மருத்துவரிடம் சென்று, இயல்பினைக் கூறி அவரிடம் வாங்கி வந்த ‘முத்து பஸ்பம்’ என்னும் மருந்தினை இன்று காலை உண்ணத்தொடங்கினேன்...... 3 - 6 - 33 திருச்சி, பிஷப் ஹீபர் காலேஜில் எனக்குக் கடைசியாக ஏற்பட்டிருந்த ரூ.140 சம்பள விகிதம் 6-மாதத்திற்கு வெகுமதி (Bonus) ரூ.840க்கு Cheque நேற்றுத் தேதியிட்டு அநுப்பப் பெற்றது இன்று வந்தது. பதிவு செய்யாத சாதாரணத் தபாலிலேயே இது வந்தது. 6 - 6 - 33 ‘செக்’ மாற்றுதற்காக இன்று மாலை கரந்தை சென்றேன். இன்று நம்மாழ்வார் திருநாளாகலின் அப்பெரியாரைக் குறித்து க. த. சங்கத்தில் ஸ்ரீநிவாசாசாரியார் என்பவர் செய்த உபந்நியாசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அன்பர் பலரைச் சந்தித்தேன். 7 - 6 - 33 இன்று காலை மெயிலில் திருச்சி சென்று, ‘செக்’ மாற்றிக் கொண்டு, 12-மணிக்குப் புறப்பட்டு, மாலையில் நடுக்காவேரி வந்து சேர்ந்தேன். திருச்சி ம. பெ. கடன் கொடுக்கப்பெற்றது. 8 - 6 - 33 நடுக்காவேரியில் செ. தெ. நாடார் கடனும், மு. சா. நாடார் கடனும் தீர்க்கப் பெற்றன. 31 - 5 - 33இல் சென்னைக்குத் திருப்பியநுப்பிய ‘செக்’ இன்று வந்தது. நாளை திருப்பாதிரிப் புலியூரில் ஞானியார் சுவாமிகளின் 60 ஆண்டு நிறை விழாக் கொண்டாடப் பெறும். அதற்கு ஆறு செய்யுட்கள் எழுதி இன்று அநுப்பியுள்ளேன். 9 - 6 - 33 திருஞானசம்பந்தப் பெருமான் திருநாள். உப்பிலி பாளையம் வா. வி. நிதியிலிருந்து சென்ற டிசம்பர் மாதத்தில் வரவேண்டிய டிபாசிட் பாக்கித் தொகை இன்று வந்தது. 10 - 6 - 33 அன்பர்கள் திரு. R. வேங்கடாசலம் பிள்ளையவர்களும், திரு. த. வே. உமாமகேசுவரம் பிள்ளையவர்களும் நடுக்காவேரி வந்து சிறிது நேரம் அளவளாவிச் சென்றார்கள். 13 - 6 - 33 நான்கு நாளின் முன் கூத்தாநல்லூர் சென்ற தம்பி, சிர. மு. கோவிந்த ராஜாவுக்கு வாயு உபத்திரவத்தால் மூச்சு விட முடியாமலும், உணவருந்த முடியாமலும், படுக்க முடியாமலும் இருப்பதாக இன்று கடிதம் வந்தது. அங்கே துணைக்கு ஒருவரும் இல்லாமலும், நாங்களும் போக முடியாமலும் உள்ள நிலையில் இப்படியிருப்பது குறித்து மனம் கலங்குகிறது. 14 - 6 - 33 தம்பி, மு. தியாகராஜாவும், அவன் மனைவியும் இன்று கூத்தாநல்லூர் போயிருக்கின்றனர். மருந்துண்டதில் பாதிகுண மெனக் கடிதம் வந்துளது. 18 - 6 - 33 அன்னையார் 3-வது ஊனமாசியம். (நடுக்காவேரி) 20 - 6 - 33 இன்று, நடுக்காவேரி சு. இராமசாமி சாஸ்திரியாரிடம் எனது ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, நோய் நிவர்த்திக்காக ஜெபிக்க வேண்டி, மிருத்தியுஞ்சய மந்திரம் அவரிடம் எழுதி வாங்கி வந்து, ஜெபிக்கத் தொடங்கினேன். சுமார் ஒரு மாதத்தின் மேலாகத் திருஎழுகூற்றிருக்கை, கோளறுபதிகம், திருநெடுங்களப் பதிகம் முதலியன பாராயணஞ் செய்து வருகிறேன். 22 - 6 - 33 இன்று தந்தையாரின் 2-வது வருட சிரார்த்தம் நடுக் காவேரியில் நடைபெற்றது. 24 - 6 - 33 து. வைத்திலிங்க நாடான் என்னும் மூர்க்கனொருவன் வாய்க்கால் மண்ணை வெட்டி எனது வயலில் போட்டு இடைஞ்சல் செய்தமையால் அதனைப் போக்குவதற்குச் சில மனிதர்களுடனும் ஆட்களுடனும் இன்று மாலை வயலுக்குப் போய் வன்மை காட்ட நேர்ந்தது. 26 - 6 - 33 யாவரும் திருச்சிராப்பள்ளி வந்தது. 28 - 6 - 33 சிர. நடராஜன் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தது. 2 - 7 - 33 இன்று, சிர. நடராஜன் தவிர, யாவரும் லாலுகுடி சென்று, அரிய நண்பர் திரு. அ. மு. சரவண முதலியாரவர்கள் வீட்டில் தங்கி, பகற்பொழுது விருந்துண்டு, மாலை மீண்டோம். 5 - 7 - 33 சிதம்பரம் என்ற மாணவர்க்கு உதவியது. ரூ. 5-0-0 (கல்வி நிதியில்) 6 - 7 - 33 இன்று மாலை தஞ்சைமானம்புச்சாவடி சென்று, ஞான முத்துபிள்ளை என்பவர் இறந்ததை விசாரித்து விட்டு, கரந்தை சென்றேன். நேற்று பெந்தகப் பத்திரம் எழுதி ரிஜிஸ்டர் செய்த தாகத் தியாகராஜாவிடம் கடிதம் வாங்கி வந்த சு. அப்பாசாமி நாடாருக்கு ரூபாய் இருநூறு இன்று கொடுக்கப் பெற்றது. 9 - 7 - 33 திரிசிரபுரம் சைவ சித்தாந்த சபையில் பொது இலவச வாசகசாலை வைப்பதென, காலை நிர்வாக கூட்டத்தில் தீர்மானித்தபடி, இன்று மாலை 6½ மணிக்குத் தொடக்கம் செய்யப் பெற்றது. உபவாசத்திற்குக் கடவுள் கட்டளை எப்படிப் பிறந்தது என்பதைக் காந்தியடிகள் விளக்கியுள்ளது இன்று வந்த சுதேச மித்திரனில் காணப்பட்டது. தூரத்தில் ஒரு மனிதர் பேசுவது போலவும், தெளிவாகவும் உள்ள குரலைத் தாம் கேட்டதாகவும், இது கற்பனையாலோ, மயக்கத்தாலோ ஏற்பட்டது அன்று எனவும், கடவுளின் குரலே அது எனவும், பரிபக்குவமடைந்தவர் யாரும் கடவுளின் குரலைக் கேட்கலா மெனவும் காந்தியடிகள் கூறியுள்ளார். 14 - 7 - 33 நேற்றிரவு 11-மணிக்குப் புறப்பட்டு, இன்று காலை 7½ மணிக்குச் சென்னை வந்து சேர்ந்தேன். சென்னையில் R. பழனியாண்டி பிள்ளையவர்களின் மனைவியார் இறந்தமையை விசாரிக்க இந்திராணியும் உடன் வர நேர்ந்தது. 15 - 7 - 33 சென்னை, செனெட் மண்டபத்தில் பகல் 2-மணிக்கு மேல் தமிழ்ப்பாட போர்டின் கூட்டம் நடந்தது. “நக்கீரர்” இண்டர் மீடியட்டுக்குப் பாடமாக வைக்கப் பெற்றது. 16 - 7 - 33 இன்று காலை 8½ மணிக்கு மேல் தமிழ்ப்பாட போர்டின் கூட்டம் (தொடர்ச்சி) திரு. கா. ந.. முதலியாரவர்கள் இல்லில் நடந்தது. 17 - 7 - 33 நேற்றிரவு 8¼ மணிக்கு நீலகிரி மெயிலில் புறப்பட்டு, இன்று காலை உப்பிலிபாளையம் வந்து சேர்ந்தேன். மாலையில் பீளமேட்டில் நடந்த ஓர் விசேடக் கூட்டத்திற்கு என் அருமை அன்பர் திரு. R.V. இலக்ஷ்மைய நாயுடுவோடும் சென்று வந்தேன். இன்று கார்த்திகை. 18 - 7 - 33 சிறுவாணி மலையிலிருந்து கொண்டு வரப்படும் கோயம் புத்தூர்க் குழாய் நீரானது மிக்க தூய்மையும் சத்தும் உள்ள தென்றும், அதனைப் பருகினால் குற்றமொன்றும் செய்யா தென்றும் என் அன்பர் கூறினமையின் நேற்றிரவு முதல் அதனைக் காய்ச்சாது பருகி வருகின்றேன். ஏறக்குறைய இருபது ஆண்டு களாக வெந்நீரே பருகும் வழக்கமுடையேன். 22 - 7 - 33 இன்று கோவைத் தமிழ்ச்சங்கத்தில் இருவர் உபந்நிய சித்தனர். நான் தலைமை வகித்தேன். 24 - 7 - 33 இன்று மாலை 4-30 மணிக்கு மேல் பீளமேடு சர்வஜன ஹைஸ்கூலில் “மாணவர் கடமை” என்னும் பொருள் குறித்து ஓர் உபந்நியாசம் செய்தேன். 26 - 7 - 33 இன்று மாலை 7-மணிக்குத் திருச்சிராப்பள்ளி வந்து சேர்ந்தேன். 27 - 7 - 33 கோயமுத்தூரில் எட்டு நாளாக மிகவும் தேறிவந்த என் உடம்பு திருச்சி வரும்பொழுதே நலங்குன்றத் தொடங்கியது. நேற்றிரவு முதல் கபத்தின் தொந்தரை மிகுதி. 28 - 7 - 33 இன்றும் நோயின் தொந்தரை மிகுதி. 29 - 7 - 33 திரிசிரபுரம் சைவசித்தாந்த சபையின் 48-ம் ஆண்டு விழா இன்று எனது தலைமையில் தொடங்கிற்று. முன்னுரையை எழுத மூன்று மாதமாக எண்ணியும் முடியவில்லை. நூற்றுக்கால் மண்டபத் திற்கு மேளவாத்தியத்துடன் அழைத்துச் செல்லப் பெற்றேன். கண்டோர் பரிதபிக்கும்படி முகவுரைப் பிரசங்கம் செய்தேன். 2- விரிவுரைகள் நிகழ்ந்தன. அவற்றுள் ஒன்று பண்டிதமணி மு. கதிரேச செட்டியார் “சேக்கிழார் நூல்நயம்” என்று செய்தது. 30 - 7 - 33 இன்று நூற்றுக்கால் மண்டபத்திற்கு நாற்காலியில் வைத்துத் தூக்கிச் செல்லப் பெற்றேன். அ. மு. சரவண முதலியார் T.S. வேலாயுதம் பிள்ளை, வரத நஞ்சப்பக் கவிராயர், ஜெக வீரபாண்டியக்கவிராயர் என்னும் நால்வரும் விரிவுரை செய்தனர். நேற்றினும் இன்று உடல் சிறிது நலமுற்றமையால் சிறிது நன்றாகப் பேசினேன். எல்லாம் திருவருட் செயல். 31 - 7 - 33 இன்று பின்னும் உடல் சிறிது நலம் பெற்றுளது. பொதுவாக உடல் மிகவும் இளைத்து விட்டது. 1 - 8 - 33 காந்தியடிகள் ‘ராஸ்’ என்னுமிடத்திற்கு 36-பேருடன் இன்று யாத்திரை புறப்பட இருந்தார். ஆனால் இன்று விடியுமுன் இரவு 1-மணிக்கு அவர் எதிர்பார்த்தபடியே கைது செய்யப் பெற்றார். 2 - 8 - 33 அண்ணாமலைப் பல்கலைக் கழக ரிஜிஸ்டரார் இன்று மாலை திருச்சி வந்து, வேலை விஷயமாக என்னைக் கண்டு பேசினர். ஆரம்பச் சம்பளம் ரூ.150 வேண்டுமென்று கூறினேன். 130 கொடுக்க இசைந்தனர். அண்ணாமலை நகர் வந்து வசதி களைத் தெரிந்து கொண்டு முடிபு கூறுவதாகத் தெரிவித்து அநுப்பிவிட்டேன். 3 - 8 - 33 இன்று மாலை கரந்தை சென்று அன்பர் த. வே. உ. அவர்களைக் கண்டு பேசிக்கொண்டிருந்தேன். 4 - 8 - 33 இன்று மாலை 4-மணிக்கு அண்ணாமலை நகர் சென்று சேர்ந்தேன். வீட்டு வசதிக்காக ஆராய்ந்து பார்த்தேன். மாலையில் திருவேட்களம் தரிசித்து விட்டு இரவு 8½ மணிக்கு மேல் சிதம்பரஞ் சென்று சபாநாதரைத் தரிசித்து, அருச்சனை செய்வித்து வந்தேன். 5 - 8 - 33 இன்று வைஸ்சான்சலர் அவர்களுடன் பேசினேன். அன்புடன் பேசினர். நான் வருவதில் மிக்க விருப்பமுடைய வராகக் காணப் பட்டனர். ரிஜிஸ்டராருடனும் பேசிக் கொண்டிருந்தேன். இன்னும் முடிபு ஏற்படவில்லை. எப்படியும் வேலையை ஏற்றுக் கொள்வதென்ற கருத்துடன் இன்றிரவு ஊர் திரும்புகிறேன். 6 - 8 - 33 இன்று காலை பத்து மணிக்குத் திருச்சி வந்து சேர்ந்தேன். 8 - 8 - 33 இன்று பத்திரிகை படித்ததில், காந்தியடிகளை 4-ஆம் நாள் காலை 9-மணிக்கு விடுதலை செய்து, மீண்டும் அவசரச் சட்டப்படி கைது செய்து விசாரித்து ஒரு வருட தண்டனை விதித்துள்ளார்கள் எனத் தெரிந்தது. 12 - 8 - 33 திரிசிரபுரம் சைவசித்தாந்த ஆண்டு விழாவிற்கு நன்கொடை கல்விநிதியிலிருந்து கொடுத்தது. ரூ. 5-0-0 13 - 8 - 33 இன்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து ஆர்டர் வந்தது. திரிசிரபுரத்திலுள்ள தமிழ்ப் பண்டிதர்களும் அன்பர்களும் கூடி இன்று மாலை ஓர் சிற்றுண்டி விருந்து நடத்தி, உபசாரப் பத்திரமும், வெள்ளிக் கூசாவும் அளித்தார்கள். T.M. நா. பிள்ளை அவர்கள் தலைமை வகித்தனர். பலர் பேசினர். கூட்டத்தில் அன்பு நிறைந்திருந்தது. 15 - 8 - 33 இன்று பகலில் அன்பர் T. S. தாயுமான முதலியார் வீட்டில் விருந்துண்டோம். இரண்டு நாளாக எங்கள் பிரயாணத்திற்கு ஆயத்தம் செய்வதில் இவர் எடுத்துக் கொண்டுள்ள உழைப்பு அதிகம். எமது வேலையைத் தமது சொந்த வேலையாகவே கருதும் இயல்புடையர். 16 - 8 - 33 இன்று காலை 6-மணிக்கு முன் திருச்சியை விட்டுப் புறப் பட்டோம். அன்பர் பலர் வழியநுப்ப ஜங்ஷனுக்கு வந்தனர் பொன்மலையில் பிரியும் பொழுது அன்பர் திரு அ. மு. ச. அவர்கள் அழுது விட்டனர். நாங்களும் அழ நேர்ந்தது. மாலை 3-40க்குச் சிதம்பரம் ஸ்டேஷனில் உருத்திரபதி, ஏகாம்பரம் என்ற மாணவ அன்பர் இருவரும் காத்திருந்து உதவி புரிந்தனர். இன்றே கல்லூரியிற் சேர்ந்து விட்டேன். சிதம்பரத்திற்குக் கல்வி நிதியிலிருந்து கொடுத்த ரூ. 5-0-0. 17 - 8 - 33 இன்று கல்லூரி சென்று பாடம் நடத்தும் கால அட்டவணை குறித்துக் கொண்டேன். 18 - 8 - 33 இன்று கல்லூரியில் முதன் முதலாகப் பாடம் நடத்தினேன். உடல் நிலைமையாற் சிறிது சிரமமாக இருந்தது. நடராஜனும் இன்று வகுப்பிற்குச் சென்றனன். 19 - 8 -33 இன்று வீட்டில் யாவரும் சிதம்பரம் போய் வந்தனர். உடல் நலமில்லாமையால் நான் போகவில்லை. 22 - 8 - 33 மூன்று நாளாகப் பெரிதும் உடல் நலங்குன்றியிருந்தது. இன்று சிறிது நலமுற்றமையால் பாடம் நடத்த முடிந்தது. 23 - 8 - 33 பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையில் தலைமை வகித்தது. 25 - 8 - 33 சுரத்தின் பொருட்டுப் பேதிமாத்திரை சிறிதுண்டு பெரிதும் துன்புற்றேன். கல்லூரிக்கும் சென்று வந்தேன். 27 - 8 - 33 கத்தரியிலை அடை உண்டது. 29 - 8 - 33 ஆட்டுப்பால் உண்ணத் தொடங்கியது. 10 - 8 - 33 சிதம்பரம் வெ. சா. தேவார பாடசாலைப் பக்தஜன சபையின் ஆண்டு விழாவில் “தேவார மகிமை” என்னும் பொருள் குறித்து விரிவுரை செய்தது. 11 - 9 - 33 இன்று பகல் மணி 2-14 அளவில் தனுசு லக்கினத்தில் திரு. மங்கையர்க்கரசி அறிவு வரப் பெற்றது. திரு. மு. கதி. செட்டியார் ‘கம்பர்’ என்னும் பொருள் குறித்துச் செய்த அரிய விரிவுரையைச் செவிமடுத்தது. 14 - 9 - 33 பெண்டிர்களை நடுக்காவேரிக்கு அநுப்பியது. 16 - 9 - 33 நடராஜனுடன் கரந்தை சென்று, நடுக்காவேரி சென்றது. 17 - 9 - 33 மீட்டும் உடல் நலங்குன்றல். வித்துவான் பரீஷகர் நியமனச்சீட்டுப் பெற்றது. 25 - 9 - 33 திரு. அ. மு. ச. அவர்கள் வருகை. 26 - 9 - 33 திரு. மங்கையர்க்கரசியை வீட்டிற்கு அழைத்தது. 27 - 9 - 33 கலைமகள் விழா. 28 - 9 - 33 விஜயதசமி. திருநாவுக்கரசை நடுக்காவேரியில் பள்ளியில் வைத்த சிறப்பு. 23 - 10 - 33 அம்மை வார்த்துச் சுரங்கண்டு, பின் கட்டிகள் புறப் பட்டுச் சுமார் 20-நாட்களாக வருந்திய சிரஞ்சீவி ஆலால சுந்தரத்திற்குக் கையிலும், காலிலும் இருந்த கட்டிகள் இன்று கிழிக்கப் பெற்றன. 24 - 10 - 33 வித்துவான் பரீஷை வினாக் கடிதங்கள் இன்று அநுப்பப் பெற்றன. 17 - 11 - 33 தில்லையம்மன் கோயில், கனகசபை, திருப்புலீச்சரம் மூன்றும் குடும்பத்துடன் சென்று தரிசித்தது. 9 - 12 - 33 திரு. குக. மணிவாசக சரணாலய சுவாமிகள் வருகை. வித்துவான் 7-B பைனல் பேப்பர் அநுப்பியது. சென்னை ரிஜிஸ்டராருக்கு ‘செக்’ திருப்பியநுப்பியது. 10 - 12 - 33 கமலம் சிற்றன்னையுடன் வருகை. அவர்களுடன் சிதம்பராலயம் சென்று தரிசித்தது. 11 - 12 - 33 குக. மணி சுவாமிகளுடன் சிதம்பரஞ் சென்று தரிசித்தது. 12 - 12 - 33 குக. மணி சுவாமிகளின் காந்த செந்தூரம் உண்ணத் தொடங்கியது. 13 - 12 - 33 திரு. குக. மணி சுவாமிகள் சிதம்பரஞ் சென்றது. 14 - 12 - 33 இன்று விடியுமுன் வீட்டிலுள்ள பெட்டிகளெல்லாம் களவு போனதாகவும், ஒரு சாதிக்காய்ப் பெட்டியையும் படுக்கையையும் மாத்திரம் எடுத்துச் சென்ற திருடனொரு வனைப் பிடித்த தாகவும் கனவு கண்டேன். 15 - 12 - 33 ஒரு வாரமாகவே குளிர்காற்று மிகுதியாக வீசிக் கொண்டிருந்தது. இன்று பகல் 11-மணிக்கு மேல் மழையும் காற்றும் மிகுதியாயின. வீட்டின் ஓடுகளெல்லாம் சரிந்து விட்டன. இரவு முழுதும் புயலின் கொடுமை மிகுதியாயிருந்தது. வீடுகளையிழந்து ஓடி வந்த சிற்சிலருடன் நாங்கள் எல்லோரும் ஒரே தூரீசு உள்ளில் கடவுளைப் பிரார்த்தித்துப் புலம்பிய வண்ணமாக இருந்தோம். 16 - 12 - 33 கடவுளருளால் இரவு உயிர் தப்பினோம். புயலின் கடுமையால் அண்ணாமலை நகரம் அலங்கோலமாகிவிட்டது. காலேஜிலும் ஹாஸ்டலிலும் மேலே போட்டிருந்த ஓடுகளெல்லாம் சிதறிவிட்டன. ஊர் ஜனங்கள் காலேஜ் அடித்தளத்தில் கூடிக் கொண்டிருந்தார்கள். சிதம்பரத்தில் புகைவண்டியொன்று கவிழ்ந்து விட்டது. இரவு R. P. சேதுப்பிள்ளை வீட்டில் படுக்கை. 17 - 12 - 33 பகல் 12-மணிக்கு எல்லோரும் சிதம்பரம் ஸ்டேஷன் வந்து காத்திருந்து மாலையில் வண்டியேறி, இரவு 12-மணிக்குத் தஞ்சை வந்து சேர்ந்தோம். 18 - 12 - 33 தஞ்சையில் பல இடங்களிலும் வாடகை வீட்டுக்காக அலைந்து கொண்டிருந்தது. 19 - 12 - 33 இன்று பகல் 12-மணிக்கு மேல் கரந்தையில் நாராயணக் கொத்தன் தெருவில் திரு. உமா - பிள்ளையவர்களுக்குச் சொந்த மான வீட்டில் குடிவந்தது. நாலைந்து நாளாக ஏற்பட்ட உணவு உறக்கக் குறைவாலும், அலைச்சலாலும் இன்று மாலை நோயின் தொந்தரை தோன்றியுளது. 20 - 12 - 33 நாள் முழுதும் பிணியின் தொந்தரை. 26 - 12 - 33 இல்லிற்கு வந்த அன்பினர் ‘க’வுடன் புதுமுறையிற் சரசமாகப் பழகியது. 29 - 12 - 33 சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் 28-ம் ஆண்டு நிறைவிழா கரந்தைத் தமிழ்ச்சங்கக் கல்லூரியில் நடைபெற்றது. பெருந்திரளான கூட்டம். தலைமை வகித்தது. 30 - 12 - 33 விழாவின் தொடர்ச்சி. 31 - 12 - 33 விழாவின் தொடர்ச்சி. மூன்று நாளும் பிணியால் வருந்தாவாறு இறைவன் அருள் புரிந்தனர். விழா இனிது நிறைவேறியது. ஞாபகக் குறிப்புகள் நடராஜன் No. 14941. P. அருணாசலம் 1651. Rs. 100 நோட் S/49 964630. ஊன் மாசியங்கள்:- (1) நாள் 27 to 29. (2) நாள் 40 to 45. (3) நாள் 170 to 180. (4) நாள் 345 to 360. தம்பி. மு. பஞ்சநதம் சிவபதம்:- பிரபவ வருஷம் ஆனி மாதம் - 19-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை, சுக்கில பக்ஷ சதுர்த்தி. மகம். பஞ்சநதத்தின் மனைவி ஜெகதாம்பாள் சிவபதம்:- பிரபவ வருஷம் ஐப்பசி மாதம் 2-ம் தேதி செவ்வாய்க் கிழமை, கிருஷ்ண பக்ஷ நவமி பூசம். தந்தையார் சிவபதம்: பிரசோற்பத்தி ஆனி 5-ம் தேதி (15-6-31) திங்கட் கிழமை, அமாவாசை திதி, உரோகிணி நாள் மாலை 6-மணி . அன்னையார் சிவபதம்: ஆங்கீரஸ, மார்கழி மாதம் 10-ம் தேதி (24-12-32) சனிக்கிழமை, கிருஷ்ண பக்ஷ துவாதசி. விசாக நாள். இரவு 7½ மணி. 1936ஆம் ஆண்டு 1 - 1 - 36 திருவண்ணாமலை காலை 9-மணிக்கு மேல், சுவாமி விபுலானந்தர், ம. பா. முதலியார் ஆகியவர்களுடன் காரிலேறிச் சென்று, ரமண அடிகளைத் தரிசித்து, அண்ணாமலையை வலமாகச் சூழ்வந்தது. மாலையிற் புறப்பட்டு இரவு 4½ மணிக்குச் சிதம்பரம் வந்துற்றது. 7 - 1 - 36 சிதம்பரத்தில் திருத்தேர்விழா தரிசித்ததும், தேர் இழுத்ததும். 8 - 1 - 36 சிதம்பரத்தில் நடராஜர் திருவாதிரைத் தரிசனம். 9 - 1 - 36 சென்ற ஆண்டு நடுக்காவேரி, ரூ.650-க்கு ஒற்றி வாங்கிய நன்செய் நிலத்தை ரூ.950-க்குச் சாசனம் பேசி முடித்து, ரூ.175 கொடுக்கப்பெற்றது. 14 - 1 - 36 பொங்கல் விழா. 15 - 1 - 36 கோ பூஜை. 16 - 1 - 36 யூனிவர்சிட்டி மறு திறப்பு. 18 - 1 - 36 வேலை நாள். மு. கோ. வந்து திரும்பியது. 20 - 1 - 36 காலை 7-மணிக்குப் புதிய கறவை வந்ததும், பழைய கறவையை அநுப்பியதும். 21 - 1 - 36 பிரிட்டிஷ் அரசரும் இந்திய சக்கரவர்த்தியுமாகிய 5-ஆம் ஜார்ஜ் அரசர் பெருமான் இறந்து விட்டரெனத் தந்தி கிடைக்கப் பெற்று, யூனிவர்சிட்டி, ஆசிரியர்களும் மாணாக்கர்களும் அடங்கிய துயரக் கூட்டம் ஒன்று இன்று காலை 11½ மணிக்கு மேல் நடந்தது. வைஸ்சான்சலராகிய மகாகனம் P. S. சீனிவாச சாஸ்திரிகள் சக்கரவர்த்தியின் குண விசேடங்களைப் பாராட்டி ஒரு மணிநேரம் வரை பேசினர். வருமானவரி ரீபண்டு ரூ. 8-14-0க்கு வவுச்சர் வந்தது. 22 - 1 - 36 புதிய பசுக் கறவாமையின் திருப்பியநுப்பியது. திங்கட் கிழமை இரவு ஜார்ஜ் மன்னர் இறந்தார். அவருக்கு வயது 71. வேல்ஸ் இளவரசர் 8-ம் எட்வர்ட் மன்னராக நேற்றே பிரகடனஞ் செய்யப்பெற்றார். 24 - 1 - 36 பழைய கறவை (மங்களம்) மீண்டு வந்தது. இரவு மெயிலில் சென்னைக்குப் புறப்பாடு. 25 - 1 - 36 தண்டையார்ப் பேட்டையில் தங்கியது. C.R.N. முதலியவர் களைப் பார்த்தது. நடராஜனுக்கு ரிஸ்டு வாட்ச் (ரூ.30) வாங்கியது. 26 - 1 - 36 வண்ணைத் தமிழபிவிருத்திக் கழகத்தின் முதல் ஆண்டு விழா - காலை - தலைவர் திரு. S.S. பாரதியார். 1. திருக்கோவையார் - ந. மு. வே, 2. புத்தகமும் வித்தகமும் - பா. குணமாணிக்கம் M.A.L.T. மாலை; தலைவர் - ந. மு. வே. 1. கம்பன் பெண்மையறம் பேணல் - S.S. பாரதியார். இரவு சிதம்பரம் திரும்பியது. 28 - 1 - 36 ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உடல் அடக்கஞ் செய்தல் காரணமாக இன்று எல்லா அரசியல் மன்றங்களுக்கும் பிறவற்றிற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று கல்லூரிக்கும் விடுமுறை. உலக முழுதும் துக்கக் கொண்டாட்டங்கள். 30 - 1 - 36 புதிய ரிஸ்டு வாட்சு நேற்றே நன்கு ஓடாது பழுதுற்றமை யின் இன்று சென்னைக்குத் திருப்பியநுப்பப் பெற்றது. 1 - 2 - 36 இன்று கார்த்திகை விரதம் எனினும் உள்ளம் குற்ற மற்றிருக்க வில்லை. எனினும், மாலையில் வைத்தீசுவரன் கோயில் போய் வந்தவர்கள், விபூதி, குங்குமப் பிரசாதம் கொணர்ந்து கொடுத்ததும், இரவு 7-மணியளவில், தில்லை, மகாகணபதி தீக்ஷிதர் வீட்டிற்கு வந்து பிரசாதங்கள் அளித்ததும் நற்குறி களாயிருந்தன. தீக்ஷிதர் குடும்ப விசேடத்திற்கு ரூ.2 தரப்பெற்றது. 2 - 2 - 36 ஒவ்வொரு மாதமும் ஜென்ம நக்ஷத்திரமாகிய விசாகத்தில் தஞ்சை க. ஞானமுத்துவிடம் வாங்கி வந்த மேக எண்ணை இன்று காலை உண்ணப் பெற்றது. பின்னும் இரண்டுநாள் தொடர்ந்து உண்ணுதல் வேண்டும். பத்தியம் - கடுமை .நடராஜப் பெருமானுக்கு அருச்சனை செய்து பிரசாதம் அநுப்புமாறும் கேட்டுக் கொண்டேன். இதற்கு ஆண்டுக்கு ரூ.3 தருதல் வேண்டும். 6 - 2 - 36 கா. நமச்சிவாய முதலியாரவர்கள் 60-ம் ஆண்டு நிறைவு விழாவுக்குக் கையொப்பமிட்டது. ரூ.4-0-0 திரிசிரபுரம் சைவ சித்தாந்த சபையின் பொன்விழாச் செலவுக்கு நன்கொடை ரூ.30-0. 8 - 2 - 36 வேலைநாள். 14 - 2 - 36 ச. இராஜகோபாலாச்சாரியாரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட “மார்க்க அரேலியர் ஆத்ம சிந்தனை” என்னும் நூலைச் சென்ற புதன் கிழமை தொடங்கி இம்மூன்று நாளில் படித்து முடித்தேன். மார்க்கர் என்பவர் கி. பி. 161 முதல் 180 வரை அரசுபுரிந்த உரோம சக்கரவர்த்தியாம். இவர் உபதேசங்கள் யாவும் எல்லையற்ற சிறப்புடையனவாகக் காணப்படுகின்றன. இந்நூலைப் படித்து வந்ததில் இம்மூன்று நாளும் என் மனம் தூய்மை அடைந்து வந்துளது. இங்ஙனமே என் உள்ளம் உறைத்து நின்று வழுவாதிருக்குமாயின் என் வாழ்க்கை பயனுடையதேயாகும். 17 - 2 - 36 திரு. கா. நமச்சிவாய முதலியார் 60-ஆம் ஆண்டு நிறைவிழா நினைவு மலரிற் சேர்ப்பதற்காக “பசிப்பிணி மருத்துவன்” என்னும் பெயருடன், பண்ணன் என்பானைக் குறித்து ஒரு கட்டுரை எழுதினேன். 21 - 2 - 36 மகாசிவராத்திரியாகிய இன்று குடும்பத்துடன் சிதம்பரஞ் சென்று நடராஜப் பெருமானுக்கு அருச்சனை செய்வித்துத் தரிசித்துத் திருவேட்களமும் தரிசித்து வீடு வந்தேன். இந்திராணி உணவு கொண்டது இரவு தரிசனத்திற்குப் பின்பே. 25 - 2 - 36 ‘ஹொமோபின்’ என்ற மருந்து உண்டது. 26 - 2 - 36 இருமல் தொந்தரை இரவு மிகுதியாயிருந்தமையின் மருந்து தொடர்ந்து உண்ணப்படவில்லை. சிர. சுந்தரம் சின்னம்மை வார்த்து இரண்டு நாளாக வருந்துவது. வித்துவான் பாடமுடிபு. 27 - 2 - 36 14 முதல் தூய்மையுற்றிருந்த மனம் இன்று சலனமுற்றது. சிந்தாமணி முத்தியிலம்பகத்தில் 150 பாட்டுக்கள் வரை மூன்று நாளாகப் படித்தேன். 28 - 2 - 36 கார்த்திகை விரதம் லீவு எடுத்துக் கொண்டு கல்லூரிக்குப் போகாதிருந்து விட்டேன். 29 - 2 - 36 பண்டித ஜவஹர்லால் நேரு. தரும பத்தினி கமலா நேரு நேற்று ஜெர்மனியில் இறந்து விட்டார் என்ற துக்கச்செய்தி தெரிந்து, இன்று கல்லூரியில் அநுதாபக் கூட்டம் நடந்தது. வேலை நாள். 1 - 3 - 36 மூதண்டகஷாயம் உண்ணத் தொடங்கியது. மாலையில் யூனியன் தேக்கச்சேரி. V.C.யின் பிரசங்கம். மனம் தூய்மைகுன்றி வருவது. 5 - 3 - 36 “மங்களம்” எனப் பெயரிய கறவை பால் வற்றினமையின் இன்று மாட்டுக்குரியவனிடம் சேர்ப்பிக்கப் பெற்றது. தான் செல்லவிருப்பதை முன்னரே தெரிந்து கொண்டு தாரை தாரையாகக் கண்ணீர் விட்டு அழுதது. இப்பசுவின் அறிவு எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியளித்து வந்தது. 6 - 3 - 36 இன்று தற்செயலாக வேறு கறவை வந்து சேர்ந்தது. எல்லாம் சிவபெருமான் திருவருளே. கறவைக்கு ரூ. 1-4-0. 15 - 3 - 36 13 வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் கா. நமச்சிவாய முதலியார் உயிர்நீத்தனர் என்ற செய்தி இன்று அறியப் பெற்றது மிகுந்த வருத்தம் விளைத்தது. பிப்ரவரி இறுதியில் அவரது 60-வது ஆண்டு நிறை கொண்டாட இருந்தது அவரது நலக்குறைவால் மாற்றி வைக்கப் பெற்றது. முடிபு இவ்வாறாயிற்று. 18 - 3 - 36 சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சிப் பிரிவில், ரீடர், ஸீனியர் லெக்சரர் என்னும் இருவேலைகட்கும் சென்ற மாதம் விளம்பரம் வெளியாயிற்று. மனுச் செய்வோர் ஆங்கிலப் பட்டதாரிகளாகவே இருக்க வேண்டுமெனக் குறித்திருந் தமையின் நான் கவனியாமலே இருந்தேன். எனினும், தவணை இன்னும் 2-நாளே இருத்தலின் எதற்கும் மனுப்போட்டு வைப்போம் என்றெண்ணி, இன்று ஸீனியர்லெக்சரர் வேலைக்கு மனு அநுப்பியுள்ளளேன். 20 - 3 - 36 உடல் நலிவுடன் மாலை 3-மணிக்குக் குளித்தலைக்குப் புறப்பட்டது. 21 - 3 - 36 குளித்தலை ‘கம்பர் செந்தமிழ்ச் சங்க’த்தின் 11-ம் ஆண்டு விழாத் தலைமை வகித்தது. 22 - 3 - 36 மேற்படி விழாவில் “தம்பிரான்றோழர்” என்னும் பொருள் குறித்துச் சொற்பொழிவு செய்தது. 23 - 3 - 36 பகல் 12-மணிக்கு மலைக்கோட்டை வந்து, மாலை 5-மணிக்கு அன்பர்கள் திரு. அ.மு.ச; ம.பெ. முதலானவர்களுடன் காரில் லாலுகுடி சென்று ஹைஸ்கூலில் ‘சங்க இலக்கியம்’ என்னும் பொருள் குறித்துச் சொற்பொழிவு செய்து, இரவு 8-மணிக்கு மீண்டு மலைக்கோட்டை வந்து சேர்ந்தது. 24 - 3 - 36 காலை 9-மணிக்குப் புறப்பட்டு, மாலை 5-மணி அளவில் திருவேட்களம் வந்து சேர்ந்தது. இறைவன் திருவருளே 3-நாட்களாக என் உடலையும் காத்துக் காரியத்தையும் நிறை வேற்றிய தாகும். 26 - 3 - 36 மகாத்மா காந்தியடிகள் சில மாதமாக நோயுற்றிருந்து, குணமடைந்துள்ளார். அவர் ‘ஹரிஜன்’ பத்திரிகைக்கு எழுதியுள்ள கட்டுரையில், தமது நோய் வரலாற்றையுரைத்து விட்டுத் திடுக்கிடக் கூடிய மற்றொரு செய்தியும் குறிப் பிட்டுள்ளார். 1899-ஆம் ஆண்டு முதல் அவர் பிரமச்சரிய விரதம் மேற்கொண்டுள்ளார். இடைப்பட்ட 36 ஆண்டுகளில் ஒரேமுறை மனதில் சிறிது விகாரம் ஏற்பட்டதாம். ஆனால் இப்பொழுது நோயுற்ற பொழுது மன விகாரம் பெரிதாயிற்று என்கின்றனர். அதனை வைத்தியர்களும் அவருடைய நண்பர்களும் விளக்கமாக அறிந்திருப்பர். தூய்மையே உருவாகியவர் 66-ஆம் வயதில் விகாரமடைவரேல் எம்மனோர் நிலைமையாதாம்? “என்னை வருத்திய நோய் மேன்மேலும் கடவுள் நம்பிக்கையை உறுதிப்படுத்திவிட்டது. என் குறைகள் யாவை? எனது சக்தியின் எல்லை யாவை என்பதை நான் அறிந்து கொண்டேன். கடவுளின் அருளின்றி, அநுபவம் கைகூடாதென கீதையே ஐயமின்றிக் கூறுகின்றது” என்கின்றார். 30 - 3 - 36 சிவபுரி - கையுறை. கழிப்பாலை, நெல்வாயில் தரிசனம். 3 - 4 - 36 பரீக்ஷை விடைப் பேப்பர்கள் திருத்தி முடித்து, மார்க்குகள் குறித்து அநுப்பியது. 5 - 4 - 36 பங்குனி உத்தரமாகிய இன்று திருவேட்களம் தரிசித்தது. அருச்சனை செய்யக் கோயிற் குருக்கள் அகப்படவில்லை. 6 - 4 - 36 காலை 6½ மணிக்குப் புறப்பட்டு மாலை 3-மணிக்கு மேல் யாவருமே நடுக்காவேரி வந்து சேர்ந்தது. பேரக்குழந்தை மணிக்கு வயிற்றுப் போக்கும் வாந்தியும் மிகுந்து வருத்துவது. 9 - 4 - 36 டாக்டர் குருசாமி முதலியாரின் மிக்சரை இடைவிடாது வாங்கி உண்டு வருதலின் எனக்கு இருமல் தொந்தரை நீங்கி, உடல் நலம் பெற்று வருகிறது. இன்று, மூங்கில் குத்தும், படுகையும் போய்ப் பார்த்து வந்தேன். 10 - 4 - 36 காங்கிரஸ் தலைவராகும் பண்டிட் ஜவகர்லால் நேருவை ஊர்வலமாக அழைத்துச் சென்ற வைபவத்தினை இன்று பத்திரிகையிற் படித்தேன். 11 - 4 - 36 குழிமாத்தூர் கிராமம் வாங்கியிருக்கும் சிதம்பரஞ் செட்டியாரை நடுக்காவேரியிலுள்ள சிலருடன் இன்று பகல் 11-மணிக்குத் திருவாலம்பொழிலிற் சென்று கண்டு, தேவஸ்தான வழக்கு விஷயமாகப் பேசிவிட்டு வந்தேன். 12 - 4 - 36 நேற்றிரவு கனவில் சிவபுரி ரா-செ உடன் சிறந்த இன்பம் துய்க்கலுற்றேன். தம்பி மு. கோ. பம்பாய்க்கு வேலையாய்ப் புறப்படுகின்றவர், எனக்கும் அங்கு வேலையாகியிருப்பதாகவும், நான் வேலை விபரங்களை அறிந்து கொண்டு நாளை வரலாம் என்று சொல்லிவிட்டு, ஸ்டேஷனுக்குப் போய்விட்டதாகவும், நான் தம்பியைப் பார்ப்பதற்கு ஸ்டேஷனுக்குப் போக முயன்றதாகவும் கனவு கண்டேன். 15 - 4 - 36 பகல் 11-மணிக்குப் புறப்பட்டு இரவு 6-மணிக்குச் சிதம்பரம் சென்றது. கையிலெடுத்துச் சென்ற இருமல் மருந்து தஞ்சை காபி ஓட்டலில் விழுந்து சிதைவுற்றது. 16 - 4 - 36 அண்ணாமலை நகரில் ‘தமிழ் வித்துவான்’ பரீக்ஷகர்கள் கூட்டம். மாலை பாவநாசம் வந்து சேர்ந்தது. 17 - 4 - 36 காலை 5-மணிக்குப் போட் மெயிலில் புறப்பட்டுப் பகல் 12-மணிக்கு மேலைச் சிவபுரி வந்துற்றது. 18 - 4 - 36 மேலைச் சிவபுரிச் சன்மார்க்க சபையின் ஆண்டுவிழா திரு. சோமசுந்தர பாரதியார் தலைமையில் மாலை 3½ மணிக்கு ஆரம்பமாயிற்று. மூன்று நாளாக மருந்துண்ணாமையாலும், பிரயாணத்தாலும் நேற்றிரவு முதல் எனக்கு இருமல் தொந்தரை உண்டாயிற்று. மாலை 3½ மணிக்கு டாக்டர் வேணுகோபால் நாயுடு ஊசிமருந்தேற்றினார். சபையில் இருக்கும் பொழுது மாலை 4½ மணிக்கு, பேரக்குழந்தை மணி இறந்து விட்டான் என்று தந்தி வந்தது. 6-மணிக்கு மேல் ‘அப்பர் அருண்மொழி’ என்ற சொற்பொழிவைச் செய்துவிட்டு, இரவே அன்பர் அ. மு. ச. உடன் காரில் புதுக்கோட்டை வந்து, காலை 6-மணிக்குள் புகைவண்டியில் தஞ்சை வந்து சேர்ந்தேன். 19 - 4 - 36 காலை 8-மணிக்கு நடுக்காவேரி வந்து சேர்ந்தேன். நாள் முழுதும் வீட்டில் அழுகை யொலியாயிருந்தது. உறவினர் யாவரும் துக்கம் விசாரிக்க வரலாயினர். யுவ ஆவணி 4இல் பிறந்த குழந்தை ஏழெட்டு மாதமாக அடைந்த துன்பங்கள் அளவில்லன. எப்படியும் பிழைத்துக் கொள்வான் என எண்ணியிருந்தோம். இறைவன் செயல் இவ்வாறாயிற்று. 24 - 4 - 36 நடுக்காவேரி, கொல்லைப்புறத்து வயலில் கிணறு கட்டத் தீர்மானித்து, இன்று உடனே கற்களும் கொண்டு வரலாயின. 25 - 4 - 36 காசி இந்து யூனிவர்சிட்டியின் B.A. தமிழ் வியாச விடைப் பத்திரங்கள், மார்க்குப் புத்தகம் முதலியன இன்று ரிஜிஸ்டர் பார்சலில் அநுப்பப் பெற்றன. இன்று காலை 5½ மணிக்குக் கிணறு முகூர்த்தம் செய்யப்பெற்றது. பார்வதி யம்மாள், குழந்தைகள் முதலாயினார் இளங்காட்டுப் படுகை சென்றனர். 3 - 5 - 36 திருப்பூந்துருத்திச் சிவாலயத்தில் திரு. உமாமகேசுவரம் பிள்ளையவர்கள் தலைமையில் நடந்த ‘அப்பர் மாணவர் கழக’ ஆண்டு விழாவில், ‘அப்பரும் சம்பந்தரும்’ என்னும் பொருள் குறித்துப் பேசினேன். 4 - 5 - 36 காலையில் திருவையாறு சென்றேன். ஐயாற்றப்பர் திருத்தேர்ப் பவனி தரிசித்தேன். மாலையில் அன்பர் R. வே. பிள்ளையவர் களுடன் தஞ்சை சென்று, குடந்தை சென்றேன். இருவருமாக மலை போல்வதொரு தவற்றினைச் செய்ய நேர்ந்தது. 5 - 5 - 36 காலையில் தஞ்சை வந்தோம். காசி இந்து யூனிவர் சிட்டியில் சட்ட ஆசிரியராக இருக்கும் என் மாணவரும் அன்பருமாகிய L. R. சிவசுப்பிரமணிய ஐயர், தஞ்சை மேல் வீதியில் வந்திருந்த வரைச் சென்று கண்டு பேசிக் கொண்டிருந்து, அங்கேயே பகலுணவு உண்டு, மாலையில் நடுக்காவேரி வந்துற்றேன். தம்பி. மு. கோ. குடும்பத்துடன் வந்துளார். 6 - 5 - 36 திருநாவுக்கரசு என்னும் பையனுக்கு மங்கையர்க்கரசியை மணம் பேசும் பொருட்டாகப் பொன்னண்ணாகளத்து வென்றார் முதலிய மூவர் இன்று வந்தனர். இங்கே பகலுணவு நிகழ்ந்தது. மாலையில் விடைபெற்றுச் சென்றனர். 8 - 5 - 36 சப்தஸ்தலத் திருவிழாவிற்கு நேற்றுப் போக முடியா விடினும் இன்றேனும் சென்று தரிசிக்கலாமென எண்ணி யிருந்தேன். அதுவும் கூடிற்றில்லை. 13 - 5 - 36 திரு. மங்கையர்க்கரசி திருமணம் துணிபுற்றது. 16 - 5 - 36 இன்று பத்திரிகையில் நடராஜன் ஹானர்ஸ் பிரிலிமினரியில் தேறவில்லை என்ற செய்தி அறிந்தது மிகுந்த ஏமாற்றமாயிற்று. நெடுநேரம் வரையில் துன்பவுணர்ச்சியால் மாறுபட்ட முகத்துடன் இருந்தேன். 23 - 5 - 36 திரு. பார்வதியம்மாளுடன் திருச்சி வந்துற்றது. 24 - 5 - 36 திருமணப் பத்திரிகை அச்சிடப்பெற்றது. நகைகள் செய்யப் பரமசிவ ஆசாரியாரிடம் ஒப்படைத்தது. குக. மணி சுவாமிகள் அ. மு. ச. அவர்கள் ஆகிய அன்பர்களின் வருகை. அ. ச. சம்பந்தன் வரும்பொழுது காலில் ஆணி ஆழமாகக் குத்தி வேதனை உண்டாக்கியது. 25 - 5 - 36 பட்டு வாங்கியதும், திருச்சி அன்பர்களுக்குப் பத்திரிகை அநுப்பியதும் மலையடி விநாயகர்க்கு நூறு தேங்காய் காணிக்கை செலுத்தி, அருச்சித்தது. 26 - 5 - 36 நடுக்காவேரி வந்தது. 27 - 5 - 36 கல்யாண அலுவல்கள். 28 - 5 - 36 மேற்படி. 29 - 5 - 36 மேற்படி. 30 - 5 - 36 மேற்படி. 31 - 5 - 36 காலையில் முகூர்த்தக் கால் நாட்டியது. மாலை 4-மணி அளவில் துலா லக்கினத்தில் மங்கல நாண் பூட்டப்பெற்றது. திரளான உறவினர்களின் வருகை. யாவும் கடவுளருளால் இனிது நிறைவேறின. 1 - 6 - 36 காலையில் மணமக்கள் மணமகன் ஊராகிய செங்கரையூர் சென்றதும், மாலையில் யாங்கள் சென்றதும். 2 - 6 - 36 யாவரும் நடுக்காவேரி வந்துற்றது. 6 - 6 - 36 திருஞானசம்பந்தர் திருநாளாகிய இன்று, திருப்பெண்ணா கடம் என்னும் திருப்பதியில் நிகழும் ‘குடந்தைத் தமிழ்ச் சங்க’ ஆண்டு விழாவுக்குத் தலைமை வகித்தற்குக் காலை 6-மணிக்கு நடுக்காவேரியினின்றும் புறப்பட்டு, மாலை 5-மணிக்குப் பெண்ணாகடம் அடைந்தேன். திரு. S. சச்சிதானந்தம் பிள்ளையவர்கள் சம்பந்தரைப் பற்றிப் பேசினர். 7 - 6 - 36 இன்று, தூங்கானை மாடச்சுடர்க் கொழுந்தையும், நெல்வாயில் அரத்துறையப்பரையும் தரிசித்தேன். பண்டிதர் அ. கந்தசாமி பிள்ளை, திருநாவுக்கரசு, ஞானப்பிரகாசம், நாராயணசாமி நாயுடு முதலிய அன்பர்கள் உடன் வந்தனர். மாலையில் விழாவின் கூட்டத்திற்கு நான் இருக்க முடியாது, அ. க. பிள்ளையவர்களைத் தலைமையிடத்தில் அமரச்செய்து, திருச்சியை அடைந்து, சிவப்பிரகாசம் முதலானவர்களுடன் கோவைக்குப் புறப்பட்டேன். 8 - 6 - 36 நானும், சிவப்பிரகாசம், பார்வதியம்மாள், குழந்தைகள், திருநாவுக்கரசு, சம்பந்தன் ஆகியவர்களும் போத்தனூரில் இறங்கி, அங்கு அநுப்பப் பெற்றிருந்த காரில் ஏறி உப்பிலி பாளையம் சென்றோம். அன்பர் R.V. இலக்குமை நாயுடு உடல் நலங்குன்றி மிகவும் இளைத்திருந்தனர். 9 - 6 - 36 இன்று, உப்பிலிபாளையத்திலிருந்து சாமான்களை ஒரு காரில் ஏற்றிக் கொண்டு நாங்கள் யாவரும் ஒரு காரில் ஏறி அருவங்காடு வந்துற்றோம். குளிர் மிகுதி, மழை. 10 - 6 - 36 திரு. சிதம்பரம் பிள்ளை என்ற பழைய மாணவர் சந்திப்பு. இரவில் கடுங்காற்றும், குளிரும். 11 - 6 - 36 கு. மருதப்பச் செட்டியார் என்னும் மாணவ அன்பர் சந்திப்பு. 13 - 6 - 36 அன்பர் திரு. சிதம்பரம்பிள்ளை வீட்டில் யாவரும் விருந்துண்டது. பார்வதியம்மாள் மயக்கமுற்றிருந்தது. 14 - 6 - 36 திரு. சிதம்பரம்பிள்ளை காரில் ஏற்றிக் கூனூர் கொண்டு வந்து ரயிலேற்றிச் சென்றனர். புறப்படும் பொழுது திரு. பார்வதி யம்மாள் துயரத்தால் வருந்தியது. இரவு பயணம் மன விகாரம். 15 - 6 - 36 காலையில் நடுக்காவேரி வந்து சேர்ந்தது. 18 - 6 - 36 தந்தையார் திதி நடுக்காவேரியில் நடைபெற்றது. 19 - 6 - 36 காலையில் திருவையாறு சென்று, மாலை திருச்சிராப்பள்ளி அடைந்தது. 20 - 6 - 36 மலைக்கோட்டை, சைவ சித்தாந்த சபையின் பொன்விழா. தலைவர் உயர்திரு. ஞானியார் சுவாமிகள் மாலையில் சபை. யான் திருவள்ளுவர் என்னும் பொருள் பற்றிப் பேசினேன். திரளான கூட்டம். 21 - 6 - 36 காலையும், மாலையும் சபை. இரு நாளும் ஞானியாரடி களின் கடல் மடை திறந்தாற் போன்ற விரிவுரைகளை நுகர்ந்து உள்ளம் குளிர்ந்தது. மாலையில் தாயுமானேசுவரரைத் தரிசித்தும் உள்ளம் குளிர்ந்தது. பல ஆண்டுகளாகத் தரிசிக்கும் பேறிலேனை இன்று அவனருள் ஈர்த்து ஆண்டது. இரவில் சிதம்பரம் பிரயாணம். 22 - 6 - 36 காலையில் அண்ணாமலை நகர் வந்து, நெருநலே போந்துள்ள குடும்பத்தினரைக் கண்டது. 23 - 6 - 36 மாப்பிள்ளை திருநாவுக்கரசு பண்டிதர் பயிற்சிக்கு முதற் குறிப்பில் சேர்க்கப் பெறாதிருந்து, பின் சேர்க்கப் பெற்றது. பண்டித மணி அவர்களின் உதவி. 24 - 6 - 36 பல்கலைக் கழகத் திறப்பு. மாணிக்கவாசகர் திருநாள், வகுப்பில் திருவாசகத்தில் - சிவபுராணம் படிக்கச் செய்தது. 25 - 6 - 36 சிதம்பரம், மெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலையில் பண்டிதமணியவர்கள் தலைமையில் கூட்டம். சைவ சமயம் என்பது பற்றி நான் பேசியது. திருத்தேர் தரிசனம். 26 - 6 - 36 ஆனித் திருமஞ்சனம். குடும்பத்துடன் சென்று நடராஜரைத் தரிசித்தல். நடராஜப் பெருமான் திருமுன் நின்று திருவாசகத்தின் முன் நான்கு அகவல்களும் பாராயணம் செய்தது. 28 - 6 - 36 அறுகவேர்க் கஷாயம் உண்ணத் தொடங்கியது. 30 - 6 - 36 5-ஆவது ஹானர்ஸ் வகுப்பில் இன்று குறிஞ்சிக்கலி பாடந் தொடங்கி, ஒரு மணிநேரமும் அகப்பொருள் பற்றி முன்னுரை கூறினேன். மாணவ மாணவிகள் அன்புடன் கேட்டுக் குறிப்பும் எழுதிக் கொண்டனர். இவர்கட்குச் சென்ற இரண்டு ஆண்டிலும் நான் பாடங்கற்பிக்குமாறு பாட அட்டவணை குறிப்பிடவில்லை. 1 - 7 - 36 இன்று, திரு. சித. நாராயண சுவாமிகளும், நானும் மாலை 7-மணிக்குப் புறப்படும் வண்டியில் பாகனேரிக்குப் புறப்பட்டோம். நாராயண சுவாமிகள் என்பால் வைத்துள்ள அன்பு அளவிடற்கரிதாகும். திரு. சி. உ. சுப. பில்லப்ப அம்பலம் அவர்கள் என்னை அழைத்து வரும்படி நாராயண சுவாமி களுக்குத் தந்தி கொடுத்திருந்தார். 2 - 7 - 36 இன்று காலை சிவகங்கையில் இறங்கி, 10-மணிக்குப் பாகனேரி அடைந்தோம். புலவாய் நாயகியம்மையின் திருவிழாவில் இன்று தேர்த்திருநாளாகும். திரளான கூட்டத்தையும், நாட்டார்கள் விருதுகளுடன் வரும் முறைமையையும் கண்டேன். 3 - 7 - 36 இன்று காலை 10½ மணிக்குப் பாகனேரி நாட்டார் விடுதியில் ஓர் அவை கூடிற்று. என்னையும் பண்டித நாராயண சுவாமி களையும், விருதுகளுடனும், ப்யாண்டு, தம்பட்டம், கொம்பு ஆகிய வாத்தியங்களுடனும் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். இருவரும் சமூக முன்னேற்றம் என்னும் பொருள் பற்றிப் பேசினோம். மாலை 4½ மணிக்குக் கண்டர் மாணிக்கம் என்னும் ஊரில் மகாநாடு கூடியது. அங்கும், பல்வகை விருதுகளுடனும், வாத்திய முழக்கத்துடனும் ஆடம்பரமாக எங்களை அழைத்துச் சென்றார்கள். சமூக முன்னேற்றம் பற்றியே பேசினோம். திரு. உடையப்பாவும் பேசினர். 4 - 7 - 36 இன்று காலை பாகனேரியிலுள்ள திருவள்ளுவர் நூல்நிலையம் என்னும் அழகிய புத்தகசாலையைப் பார்த்தோம். மாலையில் சிதம்பரத்திற்குப் புறப்பட்டோம். 5 - 7 - 36 காலை 8-மணிக்கு அண்ணாமலை நகர் வந்து, பகல் முழுதும் தூங்கினேன். வெய்யிலின் கொடுமை பொறுக்க முடியவில்லை. இரவில் இருமலின் தொந்தரை மிகுதியாய் இருந்தது. 11 - 7 - 36 பசுவொன்று 13 ரூபாய் விலைக்கு வந்தது. 16 - 7 - 36 திருநீற்றுப் பச்சையும் துளசியும் அறைத்து உண்ணத் தொடங்கியது. 31 - 7 - 36 திருவேட்களம் தரிசனம். 4 - 8 - 36 திருவேட்களம் தரிசனம். 7 - 8 - 36 திருவேட்களம் தரிசனம். 12 - 8 - 36 நெல் விற்பதற்காக மாப்பிள்ளை திருநாவுக்கரசு நடுக் காவேரிக்குச் சென்றது. 14 - 8 - 36 திருவேட்களம் தரிசனம். 18 - 8 - 36 திருநாவுக்கரசு வந்து சேராமலும் கடிதமெழுதாமலும் இருப்பது குறித்து இரண்டு நாட்களாகக் கவலை. மாலையில் வந்து சேர்ந்தார். 19 - 8 - 36 நோயின் காரணமாக ஒழுக்கத்திற்கு மாறான மருந்துகள் உண்ணத் தொடங்கியது. 20 - 8 - 36 நீலகிரியில் பேரக்குழந்தை சிர. சம்பந்தனுக்குத் தொடையிற் புறப்பட்ட கட்டி இரண்டாவது முறை கிழித்து விட்டதும், பார்வதியம்மாள் நலமின்மையும் குறிக்கும் கடிதம் பெற்ற கவலை. இரண்டு மூன்று நாட்களாக உற்சாகமின்றி முக வாட்டத்துடன் பாடம் நடத்த நேர்ந்தது. 21 - 8 - 36 17 - 8 - 36 முதல் 55 வயது முடிய வேலைகாயஞ் செய்யப் பெற்ற ஆர்டர் இன்று வந்தது. 29 - 8 - 36 இண்டர்மீடியட் வகுப்பில் படிக்கும் S. தங்கையன் என்னும் கள்ளர் குலப் பையன் நம் வீட்டிற்கு வந்து சேர்ந்தது. 30 - 8 - 36 தங்கையனுடன் சிதம்பரஞ் சென்று, ஜவுளி முதலியன வாங்கிக் கொண்டு, உச்சிக் காலத்தில் நடராஜப் பெருமானைத் தரிசித்து வந்தது. திரு. மங்கை - சாந்தி. 2 - 9 - 36 காலையில் உடல்நலமின்மை. இரவு இந்திராணியுடனும், குழந்தை சுந்தரத்துடனும் லாலுகுடிக்குச் சென்றது. 3 - 9 - 36 இரவு முழுதும் பிரயாணஞ் செய்து விடியுமுன் லாலுகுடி அடைந்தது. காலை குழந்தை திரு. கருணாம்பிகையின் திருமணம். மாலையில் ‘அன்பு’ என்னும் பொருள் பற்றி 30-நிமிடம் பேசியது. திரு. சுந்தர ஓதுவா மூர்த்திகளின் தேவாரக் கச்சேரி. 4 - 9 - 36 மாலையில் போர்டு ஹைஸ்கூல் தமிழ் மாணவர் சங்கத் திறப்பு விழாப்பிரசங்கமாக ‘இராமபிரான் குணாதிசயம்’ என்பது பற்றிப் பேசியது. பிரசங்க நடுவில் சிறிது தளர்ச்சி இறைவனருளால் இருநாளும் நோயின் துன்பமின்றி இருந்தது. பத்திரப் பதிவாளராயிருக்கும் அருமை மாணவர் சோமசுந்தரம் பிள்ளை இல்லில் இரவில் விருந்து. அவரது விரிந்த உளப்பான்மை. 5 - 9 - 36 காலையில் சிற்றுண்டியுண்ணும் பொழுது அருமை நண்பர் திரு. அ. மு. ச. அவர்கள் தமது அன்பை நெய்யின் வடிவாகச் சொரிந்தது. தீயளவு தெரியாது அதனை உண்டது. காலையிற் புறப்பட்டுப் பகல் 12-மணிக்குப் பூதலூர் வந்தது. மாலை 6-மணிக்குத் திடீரென நோய் பற்றியது. இரவு தூக்கமின்மை. 6 - 9 - 36 பகல் 11-மணிக்குச் சிதம்பரம் புறப்பாடு. புகைவண்டியில் நோயின் அதிகரிப்பு. வண்டி தஞ்சையின் கிழக்கே செல்லுந் தோறும் கண்டோரெல்லாம் இரங்கும் என் பரிதாப நிலை. அளவற்ற திகைப்பு. சிதம்பரம் போய்ச் சேரமுடியுமோ என்னும் ஐயப்பாடு, மனைவியின் கண்ணீர். இறையருள் கூட்டம் எப்படியோ மாலை 4½ மணிக்குச் சிதம்பரம் வந்து சேர்ந்தது. இரவிலும் நோயின் கடுமை பலமுறை மருந்துண்டல். 7 - 9 - 36 கல்லூரி சென்று பாடம் நடத்தாதிருந்து திரும்பியது. 8 - 9 - 36 நோயின் துன்பு. 9 - 9 - 36 நோயின் துன்பு. 10 - 9 - 36 ராஜம்மாள் என்னும் மாணவி அளித்த பூநாக செந்தூரம், இலிங்க செந்தூரம், காளமேக, நாராயண செந்தூரம் என்னும் மூன்றும் கலந்த மருந்தை இரவு 7-மணிக்கு யாதொரு குற்றமுமில்லாத மீன லக்கினத்தில் உண்ணத் தொடங்கியது. 11 - 9 - 36 கல்லூரி போகாது லீவு பெற்று இருந்தது. 13 - 9 - 36 மருந்தை நிறுத்தியது. 14 - 9 - 36 உணவு மாற்றம். காபியும், அரிசிச்சோறும் நீக்கம். கேழ்வரகுமா, கோதுமை, ஆரஞ்சுப்பழரசம். 16 - 9 - 36 உணவு மாற்றத்தால் உடல் நலனடைந்து வருவது. 18 - 9 - 36 திருவேட்களம் தரிசனம். 21 - 9 - 36 பரீட்சகர் நியமனம். 25 - 9 - 36 திருவேட்களம் தரிசனம். 27 - 9 - 36 சிவபுரி சென்றதும் (இரேணக) மெய்தீண்டலும். குடும்பத்தில் யாவருடனும், ‘டாக்கீஸ்’ என்னும் பேசும் படக்காட்சிக்குச் சென்று, பட்டினத்தார் சரிதை பார்த்து வந்தது. 28 - 9 - 36 காசி இந்து யூனிவர்சிட்டியிலிருந்து பரீட்சகராக இவ்வாண்டும் நியமனப் பத்திரம் வரப்பெறுதல். 3 - 10 - 36 காசியிலிருந்து, விஸ்வேச்வரருக்கு அருச்சித்த பிரசாதமும், இந்து யூனிவர்சிட்டி ‘செக்’ மாற்றிய பணமும் அன்பர் L.R. சிவசுப்ரமணிய ஐயரால் அநுப்பப் பெற்று வந்தன. 4 - 10 - 36 கார்த்திகை. சிறிது உடல் நலக்குறைவு. 5 - 10 - 36 திருவேட்களம் தரிசனம். 6 - 10 - 36 இந்து யூனிவர்சிட்டிக்கு B.A. வினாக்கடிதம் அநுப்பியது. 9 - 10 - 36 திரு. மங்கையர்க்கரசியும், மாப்பிள்ளை திரு. திருநாவுக்கரசும் நேற்றிரவு மெயிலில் நீலகிரிக்குப் புறப் பட்டார்கள். 11 - 10 - 36 உயர்திரு. பண்டித சிர. நாராயண சுவாமிகள் அளித்த பச்சிலை உண்ணத் தொடங்கியது. 12 - 10 - 36 நடராஜன் நேற்றிரவு யூனிவர்சிட்டி சம்பந்தமாக ஓர் தவறு செய்துவிட்டமை இன்று மாலை அறிந்து, ரிஜிஸ்டராரிடம் சென்று பேசியது. விடுமுறை தொடக்கம். 13 - 10 - 36 சிவபுரியில் அன்பினர் சந்திப்பு. 17 - 10 - 36 காங்கிரஸ் தலைவராகிய பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தமிழ்நாடு சுற்றுப்பிரயாணத்தில் இன்று காலை 8-மணிக்குச் சிதம்பரம் வந்து, டவுன்ஹால் முற்றத்தில் பிரசங்கம் செய்தனர். சத்தியமூர்த்தி தமிழில் மொழிபெயர்த்துரைத்தார். பெருந்திரளாக மக்கள் கூடியிருந்தனர். இன்று நேருவைக் காணும் பேறு பெற்றேன். அ. பல்கலைக்கழக வினாக்கடிதங்கள் இன்று அநுப்பப்பெற்றன. 25 - 10 - 36 மங்கையர்க்கரசியும், மாப்பிள்ளையும் வந்து சேர்ந்தது. 26 - 10 - 36 யூனிவர்சிட்டி திறப்பு. 31 - 10 - 36 கார்த்திகை. பரீக்ஷகர் கூட்டம். 1 - 11 - 36 பரீக்ஷகர் கூட்டம். மழை மிகுதி. 29 - 11 - 36 ஸ்பெயின் தேசத்துக் கலகக்காரர்களும், அரசாங்கத்தாரும் புரிந்து வரும் போரின் கொடுமை நினைத்தற்கு மரிதாகும். இம்மாதம் முழுதும் இக்கொடிய செய்தி பத்திரிகைகளிற் காணப்படலாயிற்று. மேல் நாட்டு நாகரிகத்தில் நாகரிகம் என்னும் சொற்பொருள் தொலைந்து விட்டது. பெண்டிர் களையும் குழந்தைகளையும் நூற்றுக்கணக்காகக் கொல்கின்றனர். என்ன கொடுமை. 30 - 11 - 36 திருவாங்கூர் மகாராஜா தமது சொந்தக் கோயில்களிலும், தமது அரசாங்க நிர்வாகத்திலுள்ள எல்லாக் கோயில்களிலும் இந்துக்களாகவுள்ள அனைவரும் ஏற்றத்தாழ்வின்றிச் சென்று வழிபடுதற்கு உரிமையளித்துப் பிரகடனம் செய்தது இம் மாதத்திய மிகப் பெரிய சிறப்பு நிகழ்ச்சியாம். இந்தியாவின் பல பாகங்களிலும் உள்ள பெரியார் அனைவரும் மகாராஜாவை அளவு கடந்து பாராட்டுகின்றனர். முன்பு மாறுபட்டிருந்த வைதீகர்களும் பாராட்டுகின்றனர். இந்து மதத்திற்கு இச்செயல் பெரியதோர் ஆக்கம் அளிப்பதாகும். 7 - 12 - 36 இங்கிலாந்து மன்னராகிய 8-ஆம் எட்வர்டு அமெரிக்க நாட்டுப் பெண் ஒருத்தியை மணந்துகொள்ளத் தீர்மானித் துள்ளார் என்றும், இதுபெரிய அரசியல் சர்ச்சையை உண்டு பண்ணக் கூடியதென்றும் பத்திரிகை பலவும் இதுபற்றி எழுதியுள்ளன. முதல் மந்திரி, எட்வர்டு அரசரோடு சம்பாசித்து வருகின்றனர். இந்த விவாகத்தை ஒப்புக்கொள்ள முடியாதென மந்திரிசபையினர் அழுத்தமாகக் கூறுகின்றனர். அரசரும் பிடிவாதமாகவுள்ளார். அவள் அந்நிய நாட்டினளாகவும், சாதாரண மாதாகவும் இருப்பதன்றி, முன் இருவரை மணந்து விவாகரத்துச் செய்தவளாக இருப்பதும், அவ்விரு கணவரும் உயிருடனிருப்பதும் பெருங்குறைவாகக் கருதப்படுகின்றன. மேரி அரசியும், விக்டோரியா மகாராணியும் மறு விவாகம் செய்து கொண்ட பெண்களைச் சிறிதும் மதிக்கமாட்டார்களாம். எட்வர்ட் அரசர் இந்தக் கல்யாணத்தின் பொருட்டுப் பட்டத்தைத் துறக்கவும் துணிந்துளார் எனத் தெரிகிறது. 9 - 12 - 36 நேற்றுக் கல்லூரியில் இரு ரா. காட்டிய அன்பு என் உள்ளத்தைக் கவர்ந்துளது. இரவிலும் அடிக்கடி நினைப்பு வந்தது. 10 - 12 - 36 நீலகிரியிலிருந்து சௌ. பார்வதியம்மாளும், சிவப் பிரகாசமும், குழந்தைகளுடன் நேற்று மாலை புறப்பட்டு இன்றிரவு 9-மணிக்குத் திருவேட்களம் வந்து சேர்ந்தார்கள். குழந்தை சம்பந்தனைப் பார்த்த பின்பே மனம் அமைதியுற்றது. 12 - 12 - 36 தில்லைத் திருச்சித்திர கூடத்தில் திருமாலுக்கு அருச்சனை செய்வித்தது. 8-ம் எட்வர்டு மன்னர் பட்டத்தைத் துறந்து விட்டார். அவருடைய விளம்பரமும், முதன் மந்திரியின் பிரசங்கமும் உருக்கம் விளைப்பன. அடுத்த தம்பியானவர் 6-வது ஜார்ஜ் என்னும் பெயருடன் பட்டம் ஏற்றுக் கொண்டார். 18 - 12 - 36 ஒவ்வொரு நாளும் உடல்நிலை வருத்தம் தருவதாகவே இருக்கிறது. இன்று கல்லூரிக்குப் போக முடியாது லீவு வாங்கிக் கொண்டேன். சின்னாட்களாக, சிவ . . . அன்பினரால் இரண்டு ரோஜா மலர்கள் நாடொறும் அநுப்பப்படுகின்றன. 24 - 12 - 36 கல்லூரி விடுமுறை. 25 - 12 - 36 இரவு 9-மணிக்கு மேல் நோயின் கடுந்துன்பம். இரவு நாழிகை 11-30க்கு இராகுக்கேதுக்கள் பெயர்தல். கந்தரலங்காரம் முழுதும் சிவப்பிரகாசத்தைக் கொண்டு படிப்பித்துக் கேட்டது. இரவு மணி 11-க்கு மேல் தொந்தரையின்றித் துயின்றது. 26 - 12 - 36 காலை 11-மணிக்குத் தம்பி மு. தியாகராஜாவும், மரகதமும் வந்து சேர்ந்தது. 27 - 12 - 36 பல் வைத்தியரிடம் பற்களைத் தூய்மை செய்து, இரண்டு பற்களைப் பிடுங்கிக் கொண்டது. சிதம்பரம் திருத்தேர். மரகதத்தின் தேக அசௌக்கியம். மாலையில் தம்பி மு. கோ. குடும்பத்துடன் வந்து சேர்ந்தது. 28 - 12 - 36 நடராஜ தரிசனம். 29 - 12 - 36 நடுக்காவேரியிலுள்ள ‘வன்னி நாச்சி’ என்னும் நன்செய் நிலத்தைக் கிரயத்திற்கு வைத்துக் கொள்ளும்படி ஒரு ஆண்டின் முன்றொட்டு வேண்டி வந்தார்கள். இன்று இரவு 7-மணிக்கு மேல் ரூ.950+50க்கு விலை தீர்த்து ஸ்டாம்புக்குப் பணம் கொடுக்கப்பெற்றது. பெரிய புராணத் திருமுறையில் பார்த்த பொழுது “காணமோடு பொன் வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும், யாணர்ப் பதிகம் எடுத்தேத்தியெண்ணினிது பெற்றினி திருந்தார்” என்பது போந்த திருவருட் குறிப்பால் இதனை வாங்குவதற்கண் உள்ளக்கிளர்ச்சியுண்டாயது. ஞாபகக் குறிப்புகள் பிராவிடன் பண்டு திருச்சியிலிருந்து அண்ணாமலை யூனிவர்சிட்டிக்கு மாற்றப் பெற்ற பிராவிடன் பண்டுக் கணக்கு:- தேதி: 23-10-35ல் ரொக்கம் ரூ.109-13-7. 5-11-35ல் அக்கவுண்ட் 1428-13-3. 28-1-36ல் கவர்ன்மெண்ட் கண்ட்றிப்பூஷன் 464-6-0 மொத்தம் ரூ.2003-0-10. 100ரூ நோட்கள்:- T/19 252292 T/4 335514 லீவு பெற்ற நாட்கள் 1935 ஆகஸ்டு 8, 9. 1935 நவம்பர் 11, 29. 1936 பிப்ரவரி 28. 1936 ஜூலை 2, 3. 1936 செப்டம்பர் 3, 4. 1936 செப்டம்பர் 11. 1936 டிசம்பர் 18. 1937ஆம் ஆண்டு 1 - 1 - 1937 இந்நாட்குறிப்பு கழகத்தாரால் இலவசமாக அளிக்கப் பெற்றது. அன்பினர்களாகிய இரு‘ரா’வும் தபாலில் அநுப்பிய புது ஆண்டு வாழ்த்துக்கள் இன்று கிடைத்தன. நேற்று முதலே எனக்கு உடம்பு காய்ச்சல் போன்றிருத்தலின் இன்று குளிக்கவு மில்லை. 4 - 1 - 37 யூனிவர்சிட்டித் திறப்பு. சுரத்திற்கு மருந்துண்டுகொண்டே இன்று கல்லூரி சென்றேன். 5 - 1 - 37 நடராஜனும் சுரத்தால் வருந்துதல். ஊருக்குச் சென்றிருந்த தங்கையன் வந்து சேராமலும் கடிதமெழுதாமலுமிருப்பது பற்றிக் கவலை. 7 - 1 - 37 தங்கையன் உடல் மெலிவுடன் வந்து சேர்ந்தமை. 8 - 1 - 37 அபிதான சிந்தாமணி முதலிய நூல்கள் ரூ.17க்குக் கழகத்திலிருந்து வந்து சேர்ந்தமை. 9 - 1 - 37 அன்னையார் திதி இன்று திருவேட்களத்தில் நடைபெற்றது. தம்பி மு. கோ.வும் வந்திருந்தார். 12 - 1 - 37 நேற்றிரவு வீட்டுத் திண்ணையில் படுத்தற்கு வந்த ஓர் பரதேசி யால் அளிக்கப் பெற்றதொரு பச்சிலை உண்ணத் தொடங்கியது. மேற்படியார், வல்லம் படுகையில் இருப்பவரென்றும், மாணிக்க சாமி என்னும் பெயரினரென்றும் அவரால் அறியலாயிற்று. 13 - 1 - 37 மேற்படி சாமியாரால் இந்திராணிக்காக ஓர் இலேகியம் பனைமட்டை காய்ந்ததனை எரித்துக் கோழி முட்டையொன்று சேர்த்து இன்று செய்யப்பெற்றது. 14 - 1 - 37 தைப் பொங்கல். மாலை 5-மணிக்குமேல் சிதம்பரத்திலுள்ள ‘தில்லைத் தமிழ்க் கழக’த்தின் சார்பில் நடைபெற்ற ‘தமிழ்த்திருநாள்’ கொண்டாட்டத்திற்குத் தலைமை வகித்தல். எண்மர் பேச்சுடன் இரவு 8-20 மணிக்குச் சபை முடிபுற்றது. சுந்தரத்திற்காக முருங்கக்காய் இலேகியம் மேற்படி சாமியாரால் செய்யப் பெற்றது. 15 - 1 - 37 மேற்படி சாமியாரிடம் சிற்சில மருந்துகள் பெற்றுக் கொண்டு அநுப்பியது. 19 - 1 - 37 மாணிக்க சாமியார் என்பவர் அளித்த பச்சிலையை எட்டு நாட்களாக உண்டு முடித்து, இன்று அவர் கொண்டுவந்து கொடுத்ததொரு பஸ்பத்தை இரவில் உண்ணத் தொடங்கினேன். 21 - 1 - 37 இந்தக் கார்த்திகை மிக்க தொந்தரையின்றிக் கழியலுற்றது. சாமியாரின் மருந்தால் சிறிது நலனுண்டாகின்றதென நினைக் கிறேன். 7 - 2 - 37 பக்கிரியிடமிருந்து கறவை வந்தது. குறிப்பு: இது பற்று - (வரவு) அடையாளம். ரூ 2-0-0 11 - 2 - 37 ரா ரா.விற்கு அன்புக்கடிதம். 12 - 2 - 37 இருவரின் மாறா அன்பு. 18 - 2 - 37 சென்னைச் சட்ட சபையின் அசெம்பிளித் தேர்தலுக்குச் சிதம்பரத்தில் காங்கிரஸ் சார்பில் நின்றவர்க்கு வாக்குரிமை யளித்தது. 27 - 2 - 37 12 - 12 - 1936 முதல் இன்று வரை 12 சனிக்கிழமைகளில் தில்லைத் திருச்சித்திரகூடப் பெருமாளுக்குக் கிரகதோட பரிகார நிமித்தம் அருச்சனை செய்விக்கப் பெற்றது. 7 - 3 - 37 மாணிக்க சாமியாரின் செந்தாடை பற்பம் உண்டது. 8 - 3 - 37 இன்றும் பற்பம் உண்டது. கறவை (மங்களம்) வந்தது. ரூ.0-4-0. 9 - 3 - 37 கல்கத்தா, கவிராஜ் N. N. சென் இடமிருந்து வருவித்த ‘சித்த மகரத்துவஜம்’ என்னும் மருந்து உண்ணத் தொடங்கியது. 11 - 3 - 37 சிவராத்திரி, நடராஜ தரிசனமும், அருச்சனையும். 12 - 3 - 37 கரந்தைக் கட்டுரைக்கு மணிமேகலை என்னும் பொருள் பற்றி எழுதிய கட்டுரை எழுதி முடிக்கப் பெற்றது. 15 - 3 - 37 சைவ சித்தாந்த மகாசமாஜத்தார் வெளியிட்ட ‘சிவஞான போதமாபாடியம்’ இரண்டு புத்தகம் அன்பர்கள் R.R.; R.M. இருவர்க்கும் அளித்தது. அன்பர்கள் பிரிதலாற்றாது கண்விதுப் பழிந்து நின்ற காட்சி உள்ளம் விட்டகல்வதன்று. 17 - 3 - 37 கார்த்திகை. சிறிது தொந்தரையுடன், பரீட்சை மேற்பார்வைக்குப் போய் வந்தேன். 31 - 3 - 37 இன்றிரவு மணி 10-20 க்கு திரு. பார்வதியம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்து, தாயும் சேயும் நலமுடனிருக்கிறார்கள். சிதம்பர நாதர் திருவருள் துணை. 6 - 4 - 37 பொய்ம்மையின் வரம்பின்மை. 9 - 4 - 37 திருவேட்களம் தரிசனம். 10 - 4 - 37 அன்பினர் R.R. இன்று செட்டி நாட்டிலுள்ள ஓர் பெண்கள் கலாசாலையில் தலைமையாசிரியைப் பதவியை ஏற்றுக் கொள்வதாக நெருநல் ஆள்வசம் அநுப்பிய ஆங்கிலக் கடிதத்தால் தெரிந்தது. இருவரும் தேர்வு முடிந்து என்னைப் பார்க்காது போயிருக்கின்றனர். தேர்வு ரிசல்ட் அநுப்பியது. 16 - 4 - 37 வே. வேங்கடராஜலு ரெட்டியார் எழுதிய ‘கபிலர்’ என்னும் நூல் சென்ற ஆண்டு வந்தது இரண்டு வாரத்தின் முன்றொட்டே படித்துப் பார்க்க முடிந்தது. அதிலுள்ள கொள்கைகள் சிலவற்றை மறுத்தெழுதக் கருதி, ஐந்தாறு நாட்களாக எழுதிவந்த முதற்கட்டுரையை இன்று முடித்தேன். 17 - 4 - 37 இன்று காலை 7-மணிக்கு அண்ணாமலை நகரினின்று யாவரும் புறப்பட்டு கடவுளருளால் யாவரும் மாலை 4-மணிக்கு நடுக்காவேரி வந்து சேர்ந்தோம். 21 - 4 - 37 காசி இந்து யூனிவர்சிட்டி பி. ஏ. தமிழ் ரிசல்ட் இன்று அநுப்பப் பெற்றது. 23 - 4 - 37 இன்று நான் சிதம்பரம் புறப்படும் தறுவாயில், உயர்திரு கு. க. மணி சுவாமிகளுக்குப் பெருந்துறைப் பெருமான் கனவிலே தோன்றித் திருப்பெருந்துறைக்குத் திருவாசகக் கூட்டத்துடன் வரும்படி அருள் செய்ததைக் குறிப்பிட்ட கடிதம் வந்தது. பகல் 1-மணிக்கு நடுக்காவேரியினின்றும் புறப்பட்டு, இரவு 7-மணிக்குத் தஞ்சையில் ரயிலேறி இரவு 11-மணிக்குச் சிதம்பரம் போய்ச் சேர்ந்தேன். 24 - 4 - 37 பகல் 11-மணிக்கு மேல் அண்ணாமலை நகரில் பரீக்ஷகர் கூட்டம். என் அன்பினர்கள் எதிர்பார்த்தபடி முதல் வகுப்பிலன்றி 2-வது வகுப்பிலேயே தேறினர். வித்வான் வகுப்பிலும் எண்மரில் மூவரே தேறினர். அவருள்ளும் முதல் வகுப்பில் தேறுதற்குரிய இருவர் 2-வது வகுப்பிலேயே தேறியுள்ளனர். இரவு திருவேட்களம் தரிசனம். 25 - 4 - 37 சித்திரா பருவமாகிய இன்று பகல் திருக்கழிப்பாலையும் திருநெல்வாயிலும் தரிசித்து, அன்பினர் இல்லில் விருந்துண்டேன். அவர் கையுறையாக அளித்த பசும் பட்டாலாகிய கைக்குட்டை மிக்க மகிழ்ச்சியளிப்பதொன்றாம். மாலை 3-மணிக்குச் சிதம் பரத்தில் ரயிலேறி இரவு 8-மணிக்கு மழையுடன் கரந்தை வந்து, அன்பர் திரு. த. வே. உ. அவர்கள் இல்லில் தங்கினேன். 26 - 4 - 37 பகல் 12-மணிக்குத் திருவையாறு சென்று, அன்பர் திரு R. வே. அவர்களுடன் அளவளாவி இருந்தேன். இரவு ஐயாறப்பர் தரிசனம். 27 - 4 - 37 காலையில் சப்தஸ்தல உத்சவங் கொண்டருளும் ஐயாறப் பரையும் அறம் வளர்த்த நாயகியையும் பல்லக்கில் தரிசித்து, நடுக்காவேரி அடைந்தது. 2 - 5 - 37 இன்று திருவையாற்றில் கும்பாபிடேகம். பெருந்திரளான கூட்டமாம். கூட்டத்திற்கு அஞ்சி நாங்கள் யாரும் சென்றிலேம். 3 - 5 - 37 தஞ்சை சிவராமகிருஷ்ணபிள்ளை கொடுத்த மருந்தை நேற்று உண்டதில் நேற்று முழுதும் குமட்டலும் தலைவலியுமாக இருந்தது. இன்று அம்மருந்தினை உண்ணவில்லை. 5 - 5 - 37 திருநாவுக்கரசர் திருநாள். களிமேடு என்னும் ஊரில் உள்ள அப்பர் அவையின் ஆண்டு விழாவிற்குத் தலைமையாக மாலை 5-மணிக்குக் காரிலே புறப்பட்டுச் சென்று, இரவு 12-மணிக்கு நடுக்காவேரி வந்து சேர்ந்தேன். சொற்பொழிவுக்குக் குறிப்பிட்ட நால்வருடன், வேறு சில அன்பர்களும் பேசினர். இவ்வூர் இந்நிலைமையுற்றது இறும்பூதே. 7 - 5 - 37 மீட்டும் உடல் நலங்குன்றியது. 9 - 5 - 37 மங்கையர்க்கரசி செங்கரையூர் சென்றது. 15 - 5 - 37 இங்கு வந்திருந்த மாமியாரின் உடல் நலங்குன்றியது. சிகிற்சைகள் பயனளியாமை. 17 - 5 - 37 சிவப்பிரகாசம் விடுமுறையில் வந்து சேர்ந்தது. 25 - 5 - 37 செங்கரையூரில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாட் கொண்டாட்டத்திற்குத் தலைவராய்ச் சென்றது. மழை. 27 - 5 - 37 மாலையில் லாலுகுடி சென்று தங்கியது. 28 - 5 - 37 திருச்சிராப்பள்ளி அடைந்தது. 31 - 5 - 37 நடுக்காவேரி வந்து சேர்ந்தது. 6 - 6 - 37 மாப்பிள்ளை S. திருநாவுக்கரசுச் சேதிராயரிடமிருந்து, கடனாக வரவு ரூ.750-0-0 N.R. பாலசுப்பிரமணிய ஐயர் 2- நோட்டுக் கடன் செல்லு ரூ. 475-0-0. 7 - 6 - 37 சில ஆண்டுகளாகக் கிரிமினல், சிவில் வழக்குகளால் பொருட் செலவு முதலிய இன்னலுக்கு ஏதுவாயிருந்த மனையின் கீற்றுக் கொட்டகை பிரித்து, இன்று வசப்படுத்தப் பெற்றது. செலவு தொகைக்காக ரூ எண்பது பெற்றுக் கொண்டு எதிரிகளுக்கு மனையின் சில பகுதிகள் விட்டுக்கொடுப்பதாக ராஜியாயிற்று. 10 - 6 - 37 கடனுக்காகப் படுகை நிலம் சில சாசனம் வாங்கிய பத்திரம் இன்று ரிஜிஸ்டர் செய்யப்பெற்றது. 11 - 6 - 37 பேரக்குழந்தை சிதம்பரநாதனுக்கு 2-வாரத்தின் முன் காதோரத்தில் தோன்றிய கட்டி இன்று தஞ்சை பெரிய ஆஸ்பிடலில் ஆபரேஷன் செய்யப்பெற்றது. 13 - 6 - 37 குழந்தைக்குக் கிழித்துவிட்ட புண் விரைவில் ஆறிவந்தமை யால் இன்று நடுக்காவேரிக்குக் கொண்டு வந்தோம். 21 - 6 - 37 சர்வரோக கண்டன க்ஷண்முக தைலம் என்னும் மருந்துண்டது. 22 - 6 - 37 இன்றும் மேற்படி மருந்து உண்ணப் பெற்றது. 23 - 6 - 37 இ . . . ணி கலப்பு. 24 - 6 - 37 இவ்விடுமுறை நாட்களில் மாப்பிள்ளைகளுக்கு வேலை தேடுவதற்காக ஏராளமான மனுக்களும் கடிதங்களும் எழுதப் பெற்றன. தென்னந்தோட்டம் உண்டாக்குவதிலும் ஒரு பகுதி நேரம் கழிந்தது. எஞ்சிய நேரங்களில் காந்தியடிகளின் சுயசரிதை, மார்க்கர் அரேலியரின் ஆத்ம சிந்தனை, தொல் - சொல்லதிகாரச் சேனாவரையம் என்பன முற்றிலும் படிக்கப் பெற்றன. 25 - 6 - 37 இன்று காலை 8- மணிக்கு நடுக்காவேரியினின்றும் புறப்பட்டு, மாலை 7-மணிக்கு யாவரும் திருவேட்களம் வந்துற்றோம். 26 - 6 - 37 இன்று முழுதும் பண்டங்களை ஒழுங்குபடுத்துவதில் நேரம் கழிந்தது. நல்ல காற்றினால் இருமல் துன்புறுத்தாதிருந்தது. 27 - 6 - 37 சர்வ . . . தைலம் உண்டது. அருட்பாவின் மகாதேவ மாலை நூறு பாட்டும் படித்தது. எவ்வளவு அரிய நூல்களைப் படித்தும் மனம் ஒரோவழி காம அளற்றிலே விழுந்து விடுகிறது. இன்று பகலில் சிறிது நேரம் மனம் மிக இழிந்த நிலையை எய்தியது. 28 - 6 - 37 திருவேட்களம் தரிசனம். பல்கலைக்கழகம் மறுதிறப்பு. 1 - 7 - 37 நேற்றிரவு கனவில் உயர்திரு குக. மணி சுவாமிகள் மருந்தொன்று செய்தளிக்க அதனை உண்டேன். அப்பொழுது வேறு சில சாமியார்களும் இருந்தார்கள். “சர்வ . . . தைலம்” உண்டது. 4 - 7 - 37 இரண்டு நாட்களாக உடல் நலங்குன்றியிருந்தது. இன்று மிக்க உபத்திரவமின்றிக் கார்த்திகை விரதம் இனிது நிறைவேறியது. 9 - 7 - 37 திருவேட்களம் தரிசனம். 13 - 7 - 37 ஆனித்திருமஞ்சனம். சிதம்பரம் தரிசனம். 16 - 7 - 37 உயர்திரு குக. மணிசுவாமிகள் திருவாசகக் கூட்டத்துடன் திருப்பெருந்துறை சென்று ஆனித் திருமஞ்சனம் தரிசனம் செய்து கொண்டு, திரு. காசி விஸ்வநாத பிள்ளை என்னும் மருத்துவம் வல்ல அன்பர் ஒருவருடன் இன்று இங்கு வந்து சேர்ந்தார்கள். 18 - 7 - 37 இன்று காலை திரு. குக. மணி சுவாமிகளும், மற்றை அன்பரும் இங்குநின்றும் புறப்பட்டுள்ளார்கள். அவர்கள் அளித்த பூநாக செந்தூரம் இன்று உண்ணத் தொடங்கினேன். 27 - 7 - 37 காலையில் பல் துலக்கிய பின்னும், இரவில் படுக்கைக்குச் செல்லு முன்னும் நாடொறும் திருவாசகம் ஓதுவது என்ற நினைவுடன் இன்று ஓதத் தொடங்கியுள்ளேன். 6 - 8 - 37 திருவேட்களம் தரிசனம். 10 - 8 - 37 கறவைப்பசு விலைக்கு வாங்கியது. ரூ. 16-0-0. 13 - 8 - 37 மாப்பிள்ளை திருநாவுக்கரசு திருவள்ளூரில் தமிழ்ப் பண்டிதர் வேலை கிடைக்கப் பெற்று இன்று சென்னை செல்கின்றார். திருவேட்களம் தரிசனம். 14 - 8 - 37 நாள் முழுதும் கடிதம் எழுதும் வேலையே. 9 - 9 - 37 மங்கையர்க்கரசிக்குச் சூற்காப்பு அணிந்தது. 13 - 9 - 37 4-நாள் லீவு பெற்றுக் கொண்டு பார்வதியம்மாளுடன் நடுக்காவேரி வடக்கு வீட்டுக் கல்யாணத்திற்குச் சென்றது. இராஜகிரி. 14 - 9 - 37 நடுக்காவேரி. 16 - 9 - 37 நோயுடன் சிதம்பரம் மீண்டது. 20 - 9 - 37 கற்பம் தேய்த்து முழுகியது. 21 - 9 - 37 காய்ச்சல் மிகுதி. 23 - 9 - 37 காய்ச்சல் நீங்கியது. 24 - 9 - 37 கார்த்திகை விரதம் இனிது கழிந்தது. 28 - 9 - 37 இ. . . . ணி கூட்டம். 14 - 10 - 37 புதுக்கோட்டைக்குச் சிவப்பிரகாசத்துடன் சென்றது. புதுக்கோட்டை மன்னர் ஊர்வலம். 15 - 10 - 37 புதுக்கோட்டையில் தமிழ்ப்பார்லிமெண்டு திறந்து வைத்தது. திவான் தலைமையில் நடந்த புத்தகாலய மகாநாட்டில் ‘தமிழரின் மொழிப்பற்று’ என்னும் பொருள் பற்றிச் சொற்பொழிவு செய்தது. 16 - 10 - 37 சிதம்பரம் போந்தது. 30 - 10 - 37 தமிழ்ப் பரீக்ஷகர் கூட்டம். 31 - 10 - 37 தமிழ்ப் பரீக்ஷகர் கூட்டம். 4 - 11 - 37 இன்று காலை மணி 8-36க்கு திருவளர்செல்வி மங்கையர்க் கரசிக்குப் பெண்மகவு பிறந்துளது. இரட்டைப் பெண் குழந்தை களில் மற்றொன்று 4-நிமிடத்தின் முன் மரித்துப் பிறக்க இது பின்னர்ப் பிறந்தது. குழந்தை பிறக்குமுன் வீட்டில் அனைவரும் எய்திய துன்பம் அளவிடற்பாலதன்று. கடவுளின் எல்லை யில்லாத கருணையானது எப்பொழுதும் போலவே இன்றும் காப்பாற்றியது. 5 - 11 - 37 மங்கையர்க்கரசிக்குக் காய்ச்சல். 13 - 11 - 37 இன்று நள்ளிரவில் திடீரென்று மங்கையர்க்கரசிக்கு ஜன்னி முதிர்ந்து விட்டது. நாங்கள் அனைவரும் எய்திய வருத்தமும், செய்த பணிகளும் எல்லையில்லன. ஜன்னியில் நினைவு தவறு முன் அருமைச் செல்வி இறைவனை வழுத்திய பாட்டு “ஆறிரூதடந்தோள் வாழ்க” என்பது. 14 - 11 - 37 என் அருமைச் செல்வி மங்கையர்க்கரசி 10 நாட்களாக ஆங்கில மருத்துவர்களாலும் மருத்துவச்சியாலும் மருந்துண்பித்தல், ஊசிமருந்தேற்றுவித்தல் முதலிய பலவகை சிகிற்சைகளும் செய்விக்கப் பெற்றும், இன்று காலை 9-மணியளவில் இறைவன் திருவடியடைந்தது. மங்கையர்க்கரசி குணமடைய வேண்டுமென யானும், என் மூத்த புதல்வி திரு பார்வதியம்மாளும் செய்த கடவுட் பிரார்த்தனைகளும், மன்றாட்டுக்களும் அளவில்லன. முழுமனதுடனும் முழு வலிமையுடனும் மன்றாடினோம். நேற்று நள்ளிரவில் ஜன்னி மிகுந்தவுடன் அதனைத் தணிப்பதற்கு என் மூத்த மாப்பிள்ளையும், குழந்தை நடராஜனும், ஞானசம்பந்தனும், யானும், என்மனைவியும், என் தம்பிகளும் உடனிருந்து மிகவிரை வுடன் தயிலம் பூசுதல் முதலிய சிகிற்சைகளைத் தெய்வ ஆவேசம் கொண்டவர்களைப் போல் செய்து வந்தோம். சோதிடர்களின் சோதிடமும், நம்பிக்கையுமெல்லாம் பழுதாயின. உயிர் நீங்கும் கணம் வரை பிழைக்குமென நம்பிக்கை கொண்டிருந்தேன். என் அருமை மாப்பிள்ளை திருநாவுக்கரசின் துயரத்திற்கும், ஏமாற்றத் திற்கும் எல்லை சொல்ல முடியாது. ஈசன் திருவுளம் இருந்தவாறு! ஞாயிறு மாலை 5-மணிக்கு மேல் தகனம் நிகழ்ந்தது. திங்கட்கிழமை (கடைமுழுக்கு) என்புகள் மாயூரத்தில் திருக்காவிரியில் சி. தங்கையனால் கொண்டு போய் இடப் பட்டன. ஞாயிற்றுக் கிழமை முதல் இடையறாத துயரில் மூழ்கியிருந்தோம். விட்டுப்பிரிந்த பச்சிளங்குழவியைப் பாதுகாக்கும் பொறுப்பு ஏற்பட்டுளது. 17 - 11 - 37 பல நாட்களாகப் பெய்து வரும் கடுமழையினால் உண்டாய வெள்ளங் காரணமாக நேற்று இரவு அனைவரும் போந்து கல்லூரியின் அறையிற் புகுதலுற்றோம். இன்றும் வெள்ளம் பெருகியே வருகிறது. 21 - 11 - 37 நடுக்காவேரி வள்ளிநாச்சி நிலம் சாசனம் வாங்கியதில் சாட்டுதல் போட்ட வகையில் தஞ்சை K.H. ஸ்கூல் டீச்சர் R. வைத்தினாதை யருக்குக் கொடுக்க வேண்டிய கடன்தொகை 2 - 9 - 37ல் MO. மூலம் ரூ.25ம், இந்தத் தேதியில் அண்ணாமலை நகரில் நேரே ரொக்கம் ரூ. 555ம் (மொத்தம் வட்டி முதல் ரூ. 580) கொடுத்துத் தீர்த்துப் பெந்தகப் பத்திரம் ரத்துச் செய்து வாங்கப் பெற்றது. 27 - 11 - 37 மங்கையர்க்கரசி உயிர் நீத்தது முதல் நாடொறும் உறவினர் வருகையும், வீட்டில் அழுகையொலியும் நிறைந்துள்ளன. 28 - 11 - 37 திரிசிரபுரம் சைவசித்தாந்த சபையில் பெரியபுராண விரிவுரையின் நிறைவிழா. அதனை ஆற்றிவந்த திரு. அ. மு. சரவண முதலியாரவர்கட்கு நூற்றுக்கால் மண்டபத்தில் பண்டிதமணி மு. கதி. தலைமையில் நடந்த அவையில் ‘பெருஞ் சொல் விளக்கனார்’ என்ற பட்டமும், பதக்கமும் அளிக்கப் பெற்றன. யான் மேற்படி சிறப்புப் பெயரை முன் மொழிந்தேன். 29 - 11 - 37 செங்கரையூரில் மங்கையர்க்கரசியின் பிற்கடன் நடை பெற்றது. துயர் மிகுதி. மலைக்கோட்டை பரமசிவம் ஆசாரியாரிடம் வாங்கிய கடனில் ரூ. 150 நேற்றுக் கொடுக்கப் பெற்றது. பாக்கி ரூ. 100. 30 - 11 - 37 மாலை 2½ மணிக்குப் புறப்பட்டு இரவு 11-மணிக்கு அ. நகர் வந்து சேர்ந்தேன். திருக்காட்டுப் பள்ளியில் இருமல் தொந்தரைக்காக ஊசிமருந்தேற்றப் பெற்றது. 12 - 12 - 37 செங்கரையூர் போய் வந்தபின் 10 நாட்களாகவே உடல் நலங்குன்றியுளது. 13 - 12 - 37 ‘சித்தமகரத்துவஜம்’ உண்ணத் தொடங்கியது. 19 - 12 - 37 சிதம்பரம் தரிசனம். நினைவுக் குறிப்புகள் 1937 - ஏப்ரல் மாதம் 24ம் தேதி அண்ணாமலை நகரில் தமிழ்ப் பரீக்ஷகர் கூட்டம். 1. பூநாக செந்தூரம் தேனில் குழைத்து உண்பது. 2. ஆறுமுக செந்தூரம் திரிகடுகு திரிபலைச் சூர்ணங்களுடன் தேன்விட்டுக் குழைத்து உண்பது. பத்தியம் - புளி. நல்லெண்ணெய் கடுகு நீக்கம். 6 - 6 - 37ல் S. திரு. கொணர்ந்த 100 ரூ நோட்டுகள் T/4. 714011 T/9. 601800 T/20. 548485 T/24. 092446 T/24. 948249 T/31. 302710 T/31. 962842 T/37. 156694 1937 - அக்டோபர் மாதம் 30 தேதி சனிக்கிழமை 11- மணிக்குப் பரீக்ஷகர் கூட்டம். விடுமுறைப் பெற்றது செப். 13, 14, 15, 16 - 37. நவம்பர் 6, 12, 15, 16 - 37. நவம்பர் 29, 30 - 37. மங்கையர்க்கரசி சிவபதம் அடைந்த நாள் - ஈஸ்வர ஆண்டு ஐப்பசி திங்கள் 29-ஆம் நாள் (14 - 11 - 37) ஞாயிற்றுக் கிழமை, சுக்கில பக்ஷம், ஏகாதசி திதி, உத்திரட்டாதி 1940ஆம் ஆண்டு 24 - 5 - 1940 திருவையாற்று அரசர் கல்லூரியிற் பயின்று இவ்வாண்டு வித்துவான் தேர்வுக்கு எழுதிய கள்ளர்குல மாணவர் மூவரில் ஒருவர் 3-வது வகுப்பிலும், ஒருவர் 2-வது வகுப்பிலும், ஒருவர் முதல் வகுப்பிலும் தேறியுள்ளனர் என்றும், முதல் வகுப்பில் தேறிய விண்ணமங்கலம் அரங்கசாமி என்பவர் முதன்மையாகத் தேறி (ஆயிரம் ரூபாய்) பரிசு பெறுதற்குரியராயினர் என்றும் அறிய மகிழ்வுண்டாகின்றது. 25 - 5 - 1940 கள்ளர், மறவர், அகபடியர் என்னும் மூன்று குலத்தவரும் சேர்ந்த கூட்டம் ஒன்று ‘அகில இந்திய முக்குலத்தோர் மகாநாடு’ என்னும் பெயருடன் மதுரையில் இன்று நடைபெறுவ தாகும். இதற்கு பூண்டி திரு. அ. கிருஷ்ணசாமி வாண்டையார் தலைவராகவும், வி. நாடிமுத்து பிள்ளை கொடியேற்று பவராகவும், சி. உ. சுப. உடையப்பா திறப்பாளராகவும் சிற்சிலர் படங்களைச் சிற்சிலர் திறப்பவராகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. பாண்டித்துரைத் தேவர் படம் திறப்பதற்கு என் பெயர் குறிப்பிடப் பெற்றிருந்தது. அப்படியிருந்தும் நான் இதற்கு போகாதிருந்துவிட்டேன். சில ஆண்டுகளின் முன் சென்னையில் முதன்முறையாக இங்ஙனமே நடைப்பெற்றது. ‘முக்குலத்தோர்’ என்ற பெயரும் மூன்று குலத்தினர் சேர்ந்து மகாநாடு நடத்துவதும் எனக்குப் பிடிக்கவில்லை. சென்னையில் நடந்த பொழுது நான் செல்லவில்லை. எனினும் இம்முறை நான் வருவதாகவும், மேற்படி படம் திறப்பதாகவும் இசைந்திருந்தேன். இசைந்தபின் அதனை நிறைவேற்றுவதே கடமை. செல்வதா? செல்லாதிருப்பதா? என மனம் ஊசலாடிக் கொண்டிருந்தது; செல்லாது இருந்துவிட்டேன். இங்ஙனம் நின்றமை கடமை வழு என்றும் உண்மைக்கு மாறு என்றும் தோன்றிக் கொண்டிருக் கின்றன. 30 - 5 - 40 அள்ளூரிலுள்ள துளசியையா நாட்டார் என்பவர் எழுதிக் கொடுத்திருக்கும் புரோ நோட்டின் தொகையைப் பலமுறை கேட்டும் அவர் கொடாமையால் இன்று திருவையாறு சென்று அன்பர் திரு. R. வேங்கடாசலம் பிள்ளையவர்கட்கு அதனை மேடோல் செய்து, வக்கீல் சுப்பிரமணிய ஐயரைக் கொண்டு பிராது கொடுக்குமாறு ஏற்பாடு செய்து விட்டு வந்தேன். இவ்வூர் மேலைத் தெருவிலுள்ள துரைசாமி என்பவர் எழுதிக் கொடுத்த புரோநோட்டும் அங்ஙனமே மேடோல் செய்யப்பெற்றது. 31 - 5 - 40 இன்று பகல் 12-மணிக்குப் புறப்பட்டு மாலை 5-மணிக்கு மருதூர் போய்ச் சேர்ந்தேன். பூதலூரிற் புகைவண்டியேறி, வாளாடியில் இறங்கி மாட்டுவண்டியிற் சென்றேன். 1 - 6 - 40 மருதூரில் இளைஞர்களால் ஏற்படுத்தப் பெற்றுள்ளதான ‘செந்தமிழ்ச் சங்கம்’ என்னும் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா இன்றுமாலை 4-மணிக்கு மேல் நடந்தது. சில இளைஞர்கள் பேசினார்கள். நான் இன்று மிகுதியான கால அளவு பேசினேன். 3 - 6 - 40 மருதூரினின்றும் இன்று பகல் 12-மணிக்குத் திருக்காட்டுப் பள்ளி வந்து சேர்ந்தேன். ஒன்பத்து வேலியில் உள்ள ‘வள்ளலார் வாசக சாலை’ என்பதன் முதலாம் ஆண்டு விழா இன்று மாலை 4-மணி முதல் எனது தலைமையில் நடந்தது. அன்பர்கள் சிலர் சொற்பொழிவு செய்தனர். இன்றும் யான் மிகுதியாகவே பேசியுள்ளேன். இரவு 10-மணிக்குக் காரில் நடுக்காவேரி வந்து சேர்ந்தேன். விழாவானது இளைஞர்களால் ஊக்கத்துடன் நடத்தப் பெற்ற தொன்றாகும். 4 - 6 - 40 மைந்தன் திரு. நடராஜனுக்குத் திருமணம் செய்விக்க மணமகளைத் தேர்ந்தெடுப்பது குறித்துக் குழப்பமாக இருந்து வந்தது. அவன் சென்னையில் உறவினர் குடும்பத்திலுள்ள ஓர் பெண்ணின்பால் காதல் கொண்டு, சில நிகழ்ச்சிகளால் அப்பெண் தன்னையே மணந்து கொள்ளும் என்ற நம்பிக்கை யுடையனா யிருந்தான். அந்நம்பிக்கை பயனிலதாதல் தெரிந்த பின், செங்கிப்பட்டியில் உள்ள உரிமையுடைய பெண்ணினை மணம் செய்விப்பது பற்றித் தன் அண்ணன் கேட்டபொழுது, முன்பெல்லாம் மறுத்துக் கொண்டிருந்தவன் பின்பு ஒருவாறு இணங்கினன். எனினும், பெண்ணின் அழகைத் தான் நேரில் பார்த்து அறியவேண்டும் என்றும், அவ்வாறில்லா விடினும், தன் நண்பனாகிய சம்பந்தனாவது பார்த்துச் சொல்ல வேண்டும் என்றும் பிடிவாதமாகக் கூறினான். சில காலமாக இவன் தவறான வழியிற் போய் விடலாகாது என்ற கவலையுடை யேமாய் இருந்தோம். ஆதலின், இச்சமயத்தில் இப்பெண்ணை மணம் செய்விப்பது நல்லது என்ற எண்ணத்துடன் அ. ச. ஞான சம்பந்தனை உடனே வரும்படியாகக் கடிதம் எழுதினேன். அவனும் நான்கு நாளின் முன் வந்து சேர்ந்தனன். நடராஜன் அன்னையும் சம்பந்தனும் ஞாயிற்றுக் கிழமை செங்கிபட்டி சென்று, நேற்று மாலை வந்து சேர்ந்தனர். பெண்ணின் அழகு பற்றித் திருப்தியாகக் கூறினர். தக்க செல்வக் குடும்பத்தில் மணம் நிகழுமென்றே நான் எண்ணிக் கொண்டிருந்தேன். இறைவன் திருவருட் குறிப்பு எம்மால் அறிதற்கு எளியதொன்றோ? திருமணத்தை விரைவில் நிறைவேற்றும் கருத்துடன் இன்று திரு. வே. ஐயாக்கண்ணு மேற் கொண்டார் அவர்கட்குக் கடிதம் எழுதியுள்ளேன். இந்நிகழ்ச்சி யானது திருமணத்தை ஒருவாறு உறுதிசெய்வதா கின்றது. சில நாட்களாக நான் வெளியூர்கட்குச் சென்று சொற் பொழிவுகள் செய்தும் உடல்நலம் குன்றாதிருப்பது திருவருட் செயலே. இன்று கார்த்திகை விரதம் இனிது நிறைவேறியது. 10 - 6 - 40 ஐரோப்பியப் பெரும் போரில் செருமானியர் மிக்க கடுமையுடன் வடபகுதியையும் பலநகரங்களையும் கைப்பற்றிய துடன், பாரிஸ் பட்டணத்தையும் நெருங்கிவிட்டனர் என்றும், பாரிஸில் உள்ள அரசாங்க நிலையம் முதலியவற்றைக் காலி செய்து வேறிடத்திற்கு மாற்றுகின்றனர் என்றும் தெரிகின்றது. 11 - 6 - 40 வீட்டில் சலதாரை முதலியன பழுது பார்க்கவும் மேலக் கட்டு மனையில் புதிய கட்டிடம் கட்டுதற்கு அடிப்படை கோலி ஓர்புறம் சுவர் எழுப்பவும் வேலைகள் தொடங்கப் பெற்றுள்ளன. மிகுதியான இடிகளுடன் இன்று மழைபெய்தது. 12 - 6 - 40 இன்று காலை 10 மணிக்கு நடுக்காவேரியினின்றும் புறப்பட்டு மாலை 3-மணிக்கு மேல் திருச்சி சென்று, இரவு மணி 7-க்கு, திருச்சி அகில இந்திய வானவசனியில் ‘பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் சுடுசொல் ஆட்சி (Satire)’ என்னும் பொருள் பற்றிப் பேசினேன். இதனுடன் திருச்சி ஒலிப்பரப்பியில் 6-முறை பேசியுள்ளேன். இத்தாலியானது நேசநாடுகளுக்கு எதிராகப் போர் தொடங்கி விட்டதென நேற்று முன்னாள் மாலை 4½ மணிக்கு முசோலினி அறிவித்து விட்டார் என்பது பற்றி, ரேடியோவில் ஒருவர் பேசியதனைக் கேட்டேன். போர் உலகெங்கிலும் பரவிவருகின்றது. ஆண்டவன் திருக்குறிப்பு யாதோ? இரவு மணி 8-க்கு இலங்கை வண்டியிற் புறப்பட்டுப் பூதலூர் வந்தேன். பெரியதோர் மழை பெய்தது. அறிவித்திருந்த படி புகைவண்டி நிலையத்திற்கு ஒருவரும் வண்டி கொண்டு வரவில்லை. ஊருக்கு விளக்குடன் சென்ற ஒருவரைப் பின்பற்றி நடந்து சென்று முத்தண்ணா விருதுளார் வீடு சேர்ந்தேன். 13 - 6 - 40 செங்கிபட்டியினின்றும் நேற்றிரவே பூதலூர் வந்திருந்த திரு. ஐயாக்கண்ணு மேற்கொண்டார் அவர்களோடும், திரு. கு. இராஜகோபாலுடனும் இன்று காலை கலந்து பேசி மைந்தன் திரு. நடராஜனது திருமணம் சம்பந்தமாக முடிபுகள் செய்யலாயின. ஆனி மாதம் 10ஆம் தேதி திருமணம் நடத்தலாம் என முன் எண்ணியிருந்தது. இடையே போதிய நாட்கள் இல்லாமையால் 10-அல்லது 11-ம் தேதி திருமணம் நடத்துவது என்றும் இன்று தீர்மானிக்கலானோம். மாலையில் ஊர் வந்து சேர்ந்தேன். இன்றும் மழை பொழியலாயிற்று. 15 - 6 - 40 பாரிஸ் பட்டணத்தை எதிர்ப்பில்லாமல் திறந்து விட்டனர் என்றும், செருமானியர் உள்ளே புகுந்துவிட்டனர் என்றும் தெரிகிறது. 17 - 6 - 40 பிரஞ்சு மந்திரிசபை மாற்றி அமைக்கப்பட்டு, போரை நிறுத்திச் செருமனியுடன் சமாதானத்திற்கு நிபந்தனைகள் கேட்டுள்ளனர் எனத் தெரிகிறது. பிரிட்டன் இறுதிவரையில் போர் புரிந்து வெற்றி பெறுவதென்ற உறுதியுடன் இருப்பதாக முதல் மந்திரி சர்ச்சில் பேச்சினால் தெரிகின்றது. 20 - 6 - 40 பிரஞ்சுப் பிரதிநிதிகள் ஹிட்லருடன் சமாதானம் பேசிக் கொண்டிருக்கின்றனராம். 23 - 6 - 40 நேற்றுமாலை நடுக்காவேரியினின்றும் A.S. ஞான சம்பந்தனுடன் புறப்பட்டு இரவு திருக்காட்டுப்பள்ளியில் தங்கி இன்று காலை திருச்சி வந்தேன். இன்று பகல் முழுதும் அன்பர்கள் அ.மு.ச., ம.பெ., தோ. சுப்பிரமணியபிள்ளை முதலானவர்களுடன் திருமணத்திற்கு வேண்டிய முகூர்த்தப் பட்டும், ஏனைய உடைகளும் வாங்கும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். 24 - 6 - 40 திருச்சியினின்றும் பகல் 2-மணிக்குப் பூதலூர் வந்து, ஊரிலிருந்து வந்தவர்களோடு மாலை 5½ மணிக்குச் செங்கிபட்டி சேர்ந்தோம். இரவு 7-மணிக்கு மேல், குழந்தையையா மேற் கொண்டார் புதல்வி திரு. இராஜாம்பாளை, திரு. நடராஜனுக்குத் திருமணம் செய்விக்க நிச்சய தாம்பூலம் செய்யப் பெற்றது. பெண்ணின் மாமனாகிய திரு. K. M. வல்லத்தரசுடன் இரவு 11-மணிவரையில் பார்ப்பனப் புரோகிதரின்றி மணம் செய்வது பற்றி விவாதம் நடந்தது. 25 - 6 - 40 செங்கிபட்டியினின்றும் புறப்பட்டு மாலை 3½ மணிக்கு நடுக்காவேரி வந்து சேர்ந்தேன். 26 - 6 - 40 மாலை 6½ மணிக்குத் தஞ்சாவூர் ஸ்டேஷன் வந்து, இரவு 11-மணிக்குத் தங்கையனுடன் அண்ணாமலை நகர் வந்து சேர்ந்தேன். 27 - 6 - 40 இங்கு வந்தவுடன் எனக்கு வேலை இல்லை என்பது பலருக்கும் தெரிந்திருப்பது அறிந்தேன். தலைப்பாகை இன்றியே கல்லூரிக்குச் சென்று கையெழுத்திட்டேன். திரு. கா. சு. பிள்ளை M.A., M. L., தமிழ்ப் புரொபசராக நியமனம் பெற்று வந்திருப்பது கண்டு என் மனம் மகிழ்ச்சியுற்றது. எவ்வளவோ உயர்நிலையில் இருக்க வேண்டிய அவர் இடையே பல ஆண்டுகள் மிகவும் இன்னலுழந்தார். எனக்கு வேலையின்மை பற்றி என் உள்ளத்தில் சிறிதும் கவலை தோன்றவில்லை; இன்றே வீட்டினைக் காலிசெய்ய எண்ணியும், சில ஏதுக்களால் திங்கட்கிழமை பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். இவ்வாண்டு வித்துவான் தேர்வுக்கு எழுதிய மாணவர்களில் சிங்காரவேல் என்ற ஒருவர் என்னிடம் அளவு கடந்த அன்பு வைத்திருப்பவர். இன்று மாலை வீட்டுக்கு வந்து என்னை வணங்கிவிட்டு, துயரமே உருவெடுத்தாற் போல் நின்றனர். அவர் தேர்தலில் வெற்றியுறாமைக்காக அங்ஙனம் துயருற்றுக் கண்ணீர் வடிக்கவில்லை. நான் வேலையினின்று விலகுவதறிந்து இங்ஙனம் துயருற்றனர். அவரது அன்பின் பெருக்கு என்னை உருகச் செய்தது. அவரை அணைத்துத் தேறுதல் கூறி அனுப்பினேன். ‘அன்பென்ப தொன்றின் தன்மை யமரரும் அறிந்ததன்றால்’ 29 - 6 - 40 என் வேலை நாளையுடன் முடிவெய்துவது குறித்த அறிவிப்புக் கடிதம் இன்று காலையே யூனிவர்சிட்டியினின்றும் வந்தது. மாலை 4-மணிக்குத் தமிழ்ப் பகுதியாசிரியர்கள் எனக்குச் சிற்றுண்டியளிப்ப தென்ற அறிவிப்பும் காலையில் வந்தது. மாலை 4-மணிக்குச் சிற்றுண்டி முடிந்தபின், பண்டிதமணி, A. சிதம்பரநாதச் செட்டியார், கந்தசாமியார், நவநீத கிருஷ்ண நாயுடு என்பவர்கள் முகமனுரை கூறினார்கள். யானும் அவர்கள் அன்பைப் பாராட்டிச் சிறிது பேசினேன். என் மனம் அமைதி யுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதனையும் அவ்வுரையிற் குறிப்பிட்டேன். 30 - 6 - 40 வீட்டினைக் காலிசெய்து சாமான்களை ஊருக்கு எடுத்துச் செல்லுதற் பொருட்டு இன்று முழுதும் அவற்றைப் பெட்டி களில் அடைக்கலாயிற்று. மாலையில் திரு. நடராஜனும் வந்து சேர்ந்து வேலை செய்தனன். 1 - 7 - 40 காலை 8-மணிக்குத் தமிழ் மாணவர்கள் சிற்றுண்டி விருந்து நடத்தினர். உபசாரப் பத்திரமும் படித்தளித்தனர். கந்தையா என்ற பெயருடைய (வித்துவான் 4-வது வகுப்பு) யாழ்ப்பாணத்து மாணவர் என்னைப் பாராட்டிப் பேசினர். மாணவர்கள் வேறு யாரையும் காட்டில் என்னிடம் மிகுதியான அன்பும் மதிப்பும் வைத்திருந்தனர் என்பதனை ஏனைய ஆசிரியர்கள் முன்னிலையிலேயே அவர் பேசிய பேச்சுக்களிலிருந்து அறியலாகும். ஆசிரியர்களில் தனியானதொரு பெருமை எனக்குண்டென அவர் விளக்கியது சிலருக்குச் சங்கடத்தையும் உண்டுபண்ணலாம். ஆனால் என்னிடத்தில் ஆசிரியர்களும் அன்புடையவர்களாதலின் யாவரும் மகிழ்ச்சியே எய்தினர். பண்டிதமணி மு. கதி. அவர் களும் என்னைப் புகழ்ந்துரைத்தனர். யான் மாணவர் களிடத்திலும், அவர்கள் என்னிடத்திலும் பண்டுதொட்டு எப்படி அன்பு செய்து வந்தோம் என்பதனை யானும் சற்று விரித்துரைக்கலானேன். மாலையில் ஸ்டாப் கிளப்பில் எனக்கும், ஆங்கில ஆசிரியர் இராஜகோபாலையங்கார் முதலிய சிலர்க்கும் சிற்றுண்டி விருந்து நடத்தி உபசரித்தார்கள். வைஸ்சான்சலர் சர். கே. வி. ரெட்டியும் வந்திருந்தனர். என்னைப் பற்றிப் பல நண்பர்கள் சிறப்பாகக் கூறக் கேள்வியுற்றதாக உரைத்தனர். இரவு 7-மணிக்கு மேல் சிதம்பரத்தில் ‘தில்லைத் தமிழ்க் கழக’த்தினர் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தினர். மு. கதி. தலைமை வகித்தனர். தமிழ்ப் புரொபஸராக வந்துள்ள திரு. கா. சுப்பிரமணிய பிள்ளையவர்களையும், என்னையும் பாராட்டுதற்கு அக்கூட்டம் நிகழ்ந்தது. பலர் பாராட்டுரை கூறினர். சிறப்பாக S. K. கோவிந்தசாமி பிள்ளை கூறியவை நெஞ்சை உருக்கின. யானும் சற்று விரிவாகவே பேசினேன். இரவு 9-மணிக்கு மேல் சித்திரான்னங்களாலாய உணவினை விருந்துண்டோம். 2 - 7 - 40 இன்று வைகறை 4½ மணி வண்டிக்குப் புறப்படத் தீர்மானித் திருந்தும், யாவரும் உறங்கி விட்டமையால் காலை 7½ மணி வண்டியிற் புறப்பட நேர்ந்தது. மாலையில் யானும் நடராஜனும் நடுக்காவேரி வந்து சேர்ந்தோம். 32-ஆண்டுகளாகத் தொடர்புற்று வந்த ஆசிரிய வாழ்க்கை மாறுதலுற்றது. இறைவன் திருவருள் இருந்தவாறு. 4 - 7 - 40 திருமண அழைப்பிதழ் அனுப்பாதிருந்த இடங்கட்கு இரண்டு நாட்களாக அனுப்பினோம். ஊர்களுக்குப் பாக்கு வைக்கலாயிற்று. 5 - 7 - 40 சாமான்கள் சேகரிக்கலாயின. வீடு துப்புரவு செய்யப் பெற்றது. 4-நாளின் முன்பே மாப்பிள்ளை சிவப்பிரகாசம் லீவு எடுத்து வந்து எல்லா வேலைகளையும் கவனிக்கலானார். தந்தையாரின் திதி இன்று நிகழ்ந்தது. 6 - 7 - 40 நெருங்கிய உறவினர் பலர் திருமணத்தின் பொருட்டு இன்றே வந்திருந்தனர். இரவில் கூட்டமாக இருந்தது. பார்ப்பனச் சமையற்காரர்கள் இன்று மாலைவந்து சேர்ந்து இரவு சமைத்தனர். சிவப்பிரகாசமும், உலகநாயகியும் செங்கிபட்டி சென்று காரில் பெண்ணை அழைத்துக் கொண்டு இரவு 8-மணியளவுக்கு வந்து சேர்ந்தனர். 7 - 7 - 40 காலை 7-மணிஅளவில் முகூர்த்தக்கால் நடப்பெற்றது. அடுத்து அரசாணி எடுத்து வரப்பெற்றது. காலை 8-மணிக்குத் தம்பி புதல்வன் திருஞானசம்பந்தனுக்குக் காதணி மங்கலம் நிகழ்ந்தது. வந்திருந்தோர் அனைவர்க்கும் (இட்டலி, காபி) காலையுணவு அளிக்கப்பெற்றது. காலை 9½ மணிக்குத் திருமண வினை தொடங்கப் பெற்றது. திரு. அ. மு. சரவண முதலியாரவர் களைக் கொண்டு தமிழ் வாயிலாகத் திருமணம் நிகழ்த்துவ தென்றும், புரோகிதர்கட்கு வரும் படியை மாத்திரம் கொடுத்து விடுவதென்றும் முதலில் எண்ணியிருந்தது. நள்ளிரவில் பூதலூர் ஸ்டேஷன் வந்திருந்த அ. மு. ச. அவர்கட்குக் கார் அனுப்பி இரவே வந்து சேரும்படியும் செய்திருந்தது. ஆனால் அவர்கள் முன்பு யாருக்கும் செய்து பழக்கமில்லை எனத் தெரிந்தமை யாலும், அவரது உடல் நலிவினால் இதனைச் செய்விப்பது ஒல்லாது எனத் தோன்றினமையாலும் பார்ப்பனப் புரோகிதரைக் கொண்டே நிகழ்த்தப் பெற்றது. ஆனால் அவர்கள் மந்திர மெல்லாம் பிரமன் ஆயுள் முதலாகக் கொண்டு சொல்லும் காலமும், சம்புத்தீவு முதலாகச் சொல்லும் இடவெல்லையும், பாட்டன் பெயர், தந்தை பெயர் முதலாயினவுமாகவே பெரும் பாலும் அமைந்துள்ளன. அவற்றை ஒவ்வொன்றுக்கும் அடுத்தடுத்துச் சொல்கின்றனர். நான், அவ்வாறு சொல்லிக் காலத்தைப் போக்காதபடி வற்புறுத்திக் குறித்திருந்த சிங்க இலக்கினத்தில் மங்கல நாண் பூட்டுமாறு செய்வித்தேன். திருவளர் செல்வன் நடராஜன் திருவளர் செல்வி இராசம்மையை முற்பகல் 10¾ மணியளவில் திருமங்கல நாண் பூட்டி மகிழ்ந்தனன். எரிவலம் வருதல் முதலியன நிகழ்ந்தன. எதிர்மனையில் அமைந்திருந்த கொட்டகையில் திருமணத் திற்கு வந்திருந்த ஆடவர் பலரையும் குழுமச் செய்து, அவர் கட்குச் சந்தனம், பூ, சர்க்கரை, கற்கண்டு, தாம்பூலம், தேங்காய், பழம் முதலியன தனித்தும், உறையிலிட்டும் வழங்கப் பெற்றன. அன்பர்கள் பலர் வெள்ளிப் பாத்திரங்கள் பரிசிலாக வழங்கினர். அளவற்ற வாழ்த்துக் கடிதங்களும், தந்திகளும் வந்திருந்தன. பலர் வாழ்த்துப்பாடல்கள் பாடி அனுப்பியிருந்தனர். வாலாஜாபாத் இந்துமத பாடசாலையார் கனிந்த அன்புடன் வாழ்த்துப் பத்திரம் எழுதி அச்சிட்டு அநுப்பி யிருந்தனர். திருப்பாதிரிப்புலியூர் உயர் திரு. ஞானியார் சுவாமிகள் மணமக்கள் நல்வாழ்வு கருதி வள்ளிமணாளனை அருச்சித்துத் திருநீறு குங்குமம் அநுப்பினமை யோடு மணமகனுக்கு ரூ.10 வாழ்த்தியநுப்பியிருந்தார்கள். திருப்பனந்தாள் மடாதிபதி உயர் திரு. சுவாமிநாதத்தம்பிரான் சுவாமிகளும் பிரசாதம் அநுப்பி யிருந்தனர். யான், சபையிலே, பரிசில் முதலியன அநுப்பியவர்களைத் தெரிவித்துவிட்டு, அனைவர்க்கும் நன்றி கூறுமுகத்தால் 30-நிமிடத் திற்கு மேல் பேசினேன். திருமணம் நிகழ்த்து முறைமை குறித்து நான் எண்ணியிருந்ததையும், பின் வேறு விதமாக நிகழ்ந்ததையும், அதற்குரிய காரணத்தையும் விளக்கினேன். கூட்டத்தில் இருந்த (பெண்ணின் மாமனாகிய) திரு. மு. ஆ. வல்லத்தரசினைப் பேசும் படி கேட்டுக் கொண்டேன். அவரும் ¾ மணி நேரத்திற்கு மேல் பார்ப்பனப் புரோகிதத்தைக் கண்டித்துப் பேசினர். பாமர மக்களுக்கு அவரது பேச்சு எழுச்சியை உண்டாக்கக் கூடியதே. நான் அவருக்கு நன்றி கூறுமுகத்தால் அவர் பேசியவற்றில் உடன் பாடானவற்றைத் தெரிவித்துவிட்டு, சமய மாறுபாடான கொள்கைகளைக் கண்டித்துப் பேசினேன். இந்நிகழ்ச்சிகள் புதுமையாகவும், கூடியிருந்தவர்கட்கு மகிழ்ச்சி விளைப்பன வாகவும் இருந்தன. பந்தர், கூட்டம், உணவு முதலாய் எல்லா வகையானும் இத்திருமணம் வழக்கத்தின் மேலாகச் சிறப்புடன் விளங்கியது. நிகழ்ந்த ஒரு குறை யாது எனின், பகல் விருந்துக்கு நேரம் கடந்துவிட்டமையே. சமையற்காரர்கள் கறிவகைகள் எல்லாம் சித்தஞ் செய்து வைத்தும், அடிசில் ஆக்குவதற்குக் காலம் தாழ்த்து விட்டனர். காலையில் சிற்றுண்டி நீண்டநேரம் அளித்துக் கொண்டிருந்தது. இங்ஙனம் பொழுது தாழ்ந்தமைக்கு ஒரு காரணமாகும். உரிய பொழுதில் உணவளிக்க வேண்டுமென் பதனைச் சமையற்காரர்களுக்குக் கண்டிப்பாகத் தெரிவியா திருந்தது என் மேலுள்ள குறையாகும். இயல்பாக நடக்கு மென்றெண்ணி, நான் கொட்டகையில் இருந்து விட்டேன். உரிமையுடைய பிறரும் கவனியாதிருந்து விட்டனர். பகல் 3-மணி வரையில் உணவுண்ணாமல் யாவரும் காத்திருக்க நேர்ந்ததை நினைத்து மிக்க நாணமும், வருத்தமும் எய்தினேன். நீலகிரியி லிருந்து வருவித்த காய்கறிகள் முதலாகப் பெருஞ்செலவில் நன்கு ஆயத்தஞ் செய்தும் பொழுது தாழ்த்தமை ஓர் பெருங் குறையாயிற்று. அன்பர் சிலர் பழம், பலகாரம், கலர் முதலியன உண்டு ஊருக்கு ஏகினர். இத்தெய்தியில் (தேதியில்) பல இடங் களில் திருமணம் நிகழ்தலின் போதிய கூட்டம் வராமையால் உணவுப் பொருள் முதலியன. மிஞ்சிவிடுமே என எண்ணியதும் உண்டு. ஆனால் எப்பொழுதையினும் மிகுதியாகக் கூட்டம் வந்துவிட்டது. பெரிய கொட்டகையில் நாலைந்து முறை பந்தி வைக்க நேர்ந்தது. பகல் 3-மணி முதல் 6-மணி வரையில் உணவு நடந்தது. இதுபெரிதும் மகிழ்ச்சிக்குரிய செய்தி. உணவின் பாகம் மிக நன்றாயிருந்ததென்று பலரும் கூறினராம். என்னை நிருவாகத் திறமையுடையவனாக எண்ணியிருந்தேன். அவ்வெண்ணம் பழுதாயிற்று. வந்தோரை உபசரிப் பதிலும், விருந்தளிப்பதிலும் யான் மிக்க திறமையுடன் நடந்திருக்க வேண்டும். இம்முறை என் குறை நன்கு புலனாயிற்று. திருமணத்திற்கு வந்திருந்த (உறவினரல்லாத) நண்பர்களில் முக்கியமானவர்கள் கோயமுத்தூரைச் சேர்ந்த உப்பிலிபாளையம் திரு. ராஜுநாயுடு புதல்வர் இராமசாமி நாயுடு, இடிகரை கரிவரத ராஜலு நாயுடு. சிவகங்கை S. சோமசுந்தரம் பிள்ளை திருக்காட்டுப்பள்ளி சப் ரிஜிஸ்தரார் சோம சுந்தரம் பிள்ளை (குடும்பத்துடன்), செங்கோட்டை திரு. பெரியசாமித் தேவர், மே. சு. இராமசுவாமி, லாலுகுடி திரு. அ. மு. ச. அவர்கள், திருச்சி திரு. M. பெரியசாமி பிள்ளை, பரமசிவம் ஆச்சாரியார், கடலூர் திரு. சுப்பராய முதலியார், திருவையாறு திரு. R. வே. பிள்ளை. கரந்தை தக்ஷிணாமூர்த்தி பிள்ளை முதலானவர்கள். 8 - 7 - 40 இன்று காலை 10-மணிக்கு மேல் மணமக்களைச் செங்கி பட்டிக்கு அழைத்துச் சென்றனர். மணமக்களை அழைப்பதற் கென்று மாலை 3-மணிக்கு மூன்று நான்கு வண்டிகளில் நடுக்காவேரியிலிருந்து சென்றனர். 9 - 7 - 40 சிவப்பிரகாசமும், பார்வதியம்மாளும் இரவு 6-மணிக்கு மேல் தேவகோட்டைக்குப் புறப்பட்டார்கள். 11 - 7 - 40 மணமக்கள் வந்து சேர்ந்தனர். 12 - 7 - 40 நடராஜன் நீலகிரி போவதற்குப் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சர்டிபிகேட் பெறுவதற்காகத் தஞ்சை சென்றனன். 13 - 7 - 40 நடராஜன் காலையில் ஊர்வந்து, மாலை 4½ மணிக்கு மேற்கே செல்லும் காரில் நீலகிரி - அருவங்காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளான். 14 - 7 - 40 தஞ்சையில் வாடகை வீடுபார்ப்பதற்காக இன்று பகல் 11½ மணிக்குப் புறப்பட்டுச் சென்று சில வீடுகளைப் பார்த்துவிட்டு, இரவு கரந்தையில் தங்கினேன். 15 - 7 - 40 செல்வி இராசம்மையைப் படிப்பிப்பதற்கு இன்று இரவே தொடங்கச் செய்தேன். 16 - 7 - 40 இன்று நானே பாடம் கற்பிக்கவும் தொடங்கினேன். கையெழுத்து நன்றாக இருக்கிறது. முயற்சியுடன் பயின்றால் விரைவில் ஓரளவு கல்வி கற்கலாம் என நினைக்கிறேன். 18 - 7 - 40 நேற்றும், இன்றும் நடராஜனிடமிருந்து கடிதங்கள் வந்தன. 20 - 7 - 40 திரு. இராசம்மாளுக்குத் தொடர்ந்து பாடம் கற்பித்து வருகின்றேன். கணக்கில் நல்ல அறிவு இருப்பது தெரிகிறது. 21 - 7 - 40 ஹிட்லரின் பிரசங்கம் இன்று பத்திரிகையில் வெளிவந்துளது. பிரிட்டனைச் சமாதானத்திற்கு அழைக்கின்றார். வென்றவன் என்ற முறையிலேயே சமாதானத்திற்கு அழைப் பதாகவும் இன்னும் போர் நடந்தால் இங்கிலாந்து அழிவெய்துவது நிச்சயம் என்றும், இலட்சக்கணக்கான மக்களின் அழிவைத் தவிர்ப்பதற்காகவே தாம் இங்ஙனம் அழைப்பதாகவும், சர்ச்சில் தம் வார்த்தையை மதிக்காவிடினும் தமது மனச்சாட்சியைத் திருப்தி செய்ததாகும் என்றும் முடிவாக வெற்றி தம்முடையது என்பது உறுதி என்றும் கூறுகின்றார். காங்கிரஸ் காரியக் கமிட்டியானது காந்தியடி களின் அஹிம்ஸா தர்மக் கொள்கையைக் கைவிட்டுவிட்டது. உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், வெளிநாட்டுப் படையெடுப்பைத் தடுப்பதற்கும் அஹிம்சா முறையைக் கொள்வது பொறுப்பற்ற செயலாகும் என்று காந்தியடிகளுக்கு இருவிழி போன்ற இராசகோபாலாச்சாரியும், படேலுமே கூறியுள்ளனர். 22 - 7 - 40 இன்று காலை 7-மணிக்கு யாவருமே நடுக்காவேரி யினின்றும் புறப்பட்டுத் தஞ்சை வேங்கடேசப் பெருமாள் கோயில் தெருவில் ரூ. 25 வாடகையில் அமர்த்தப் பெற்ற வீட்டுக்குக் குடிவந்து பகல் 11-மணிக்கு மேல் சேர்ந்தோம். தம்பி மு. கோவிந்தராஜா குடும்பத்துடன் காலையிலிலேயே இவ்வீட்டிற்கு வந்திருந்தனர். வீடு பெரிதா யிருப்பினும் எனக்குப் போதிய வசதியுடையதன்று. பிள்ளைகளின் பூசல் என் அமைதியைக் கெடுக்கும் எனவும் நினைக்கிறேன். திருஞான சம்பந்தன் 3-வது பாரத்திலும் திருநாவுக்கரசு 2-வது பாரத்திலும் K. H. ஸ்கூலில் இன்றே சேர்ப்பிக்கப் பெற்றனர். 24 - 7 - 40 ஏனைய பேரப்பிள்ளைகளும் தம்பிபிள்ளைகளும் பெண்கள் ஆரம்பப் பாடசாலையில் இன்று சேர்ப்பிக்கப் பெற்றனர். சென்ற மார்கழி மாதம் யாங்கள் இராமேசுவரம் சென்ற பொழுது, அங்கே உதவியாய் இருந்த இராமன் செட்டியார் (யாத்திரிகர்களுக்கு உதவிபுரிந்து பொருள் பெற்று வாழ்பவர்) நடராஜன் திருமணப் பத்திரிகை கிடைக்கப் பெற்று, நேற்று மாலை நடுக்காவேரி சென்று பார்த்து, இன்று காலை இங்கு வந்தனர். அவருக்கு ஓர் புதிய சேலம் குண்டஞ்சியும், ரூ.5ம் கொடுத்தநுப்பினேன். இறைவன் வருவாயை நிறுத்தி இத்தகைய செலவுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இறைவனருள் எவ்வாறு நடத்துவது என்பது பின்னர்த் தெரியும். 25 - 7 - 40 இங்கு வந்து இரண்டு நாட்கள் இல்லிலேயே இருந்துவிட்டு நேற்று மாலையில் உடல் சிறிது நலமாக இருந்தமையின் அன்பர் களோடு ரயில்வே நிலையம் வரையில் நடந்து சென்று வந்தேன். ஆனால் நேற்றிரவே உடல் நலம் குன்றலாயிற்று. இன்று தொந்தரை மிகுதி. இரவில் மனைவி துணைக்கு வந்திருக்க நேர்ந்தது. இந்நிலையில் எனக்குப் புலனடக்கம் இல்லாதது வருந்தத்தக்கது. 29 - 7 - 40 நான்கு நாட்களாக இருமலின் தொந்தரை மிகுதி. இரவில் பெரும்பாலும் துயில் இல்லை. இந்நிலையில் இன்று கார்த்திகை விரதம் பாராயணங்களுடன் இனிது நிறைவேறிற்று. சில நாட்களாகச் செய்தித்தாள்கள் படிப்பதில்லை. நாடொறும் சில கடிதங்கள் எழுதுவதே வேலை. ஆனால், மயிலை சீனி - வேங்கடசாமி என்பவர் எழுதிய ‘பௌத்தமும் தமிழும்’ என்னும் புத்தகத்திற் பெரும்பகுதியை இன்று படித்து முடித்தேன். 4 - 8 - 40 திருப்பூந்துருத்தியில் திருக்கோயில் மிகவும் கிலமடைந்தி ருந்ததை அவ்வூரிலுள்ள லட்சுமண ஐயர் என்னும் அன்பர் பெருமுயற்சி யெடுத்துப் பொருள் தேடித் திருப்பணி செய்து வருகின்றனர். அவருடைய அன்பும் முயற்சியும் பலராலும் பாராட்டப்படுகின்றன. இறைவன் தன் காரியத்தை எளிய நிலையிலுள்ள அன்பர்களால் நிறைவேற்றிக் கொள்வதற்கு இஃதோர் உதாரணமாகும். அவர் வசூலுக்காக இன்று என்னிடம் வந்தனர். பலவகையிலும் எனக்குச் செலவு மிகுந்து, வருவாய் குறைந்த நிலையில் இது நேர்ந்தது வியப்பாயிருந்தது. எனினும், ஏதோ பொருள் கையிலிருக்கும் பொழுதே இதற்குப் பயன்படுத்த வேண்டுமென்னும் ஆவல் உண்டாயது. ஐந்து ரூபாய் சேர்ப்பித்தேன். அவர் போல் திருப்பணிக்கு உழைக்கும் பேறு வாய்க்காவிடினும், இது செய்த அளவில் என் நெஞ்சம் உருகியது. என் தம்பி மு. கோவிந்தராஜாவை இவ்வரிய அறச் செயலில் சிறிதேனும் ஈடுபடுத்த எண்ணினேன். அவன் சிறிதும் இதனைக் கவனிக்கவில்லை. அவனுடைய படாடோப ஆரவாரச் செய்கைகள் எனக்கு வருத்தம் விளைக்கின்றன. 16 - 8 - 40 நாடொறும் உடல்நலங் குன்றி இராப்பொழுது கழிவது அரிதாகி வந்தது. மென்டாகோ முதலிய மருந்துகளால் முன்போல் பயனில்லாமையால் பத்துப் பன்னிரண்டு நாட்களாக அவை உண்பதை நிறுத்திவிட்டேன். தொந்தரை மேன்மேலும் மிகுந்து வந்தமையால் ‘எபசோன்’ என்ற மாத்திரையை இன்று வாங்கி உண்ணத் தொடங்கினேன். நேற்றும் இன்றும் யான் குளிக்கவு மில்லை. ஆவணி முதற்றெய்தியாகிய இன்று 1933-ஆவணி முதல் நாளில் திருச்சியை விட்டு, அண்ணாமலை நகர் சென்றதை ஞாபகப்படுத்துகிறது. இன்று முதல் உடல் நலம் பெறும் என எண்ணுகிறேன். 19 - 8 - 40 உரத்தநாட்டு வைத்தியரொருவர் செய்து கொடுத்த திப்பிலிச் சூர்ணமும், கோஷ்ட ஷர்பத்தும் உண்ணத் தொடங்கினேன். 20 - 8 - 40 இன்று காலை நடுக்காவேரி சென்று மாலையில் மீண்டேன். இன்று பித்தக் கொதிப்பு மேலிட்டுச் சிறிது காய்ச்சலும் உண்டாகித் துன்புறுத்திற்று. இது புதிய மருந்தின் விளைவு போலும்? இன்று மாலை சென்னை கவர்னர் இந்நகருக்கு வந்து சென்றனர். அவரது சொற்பொழிவைக் கேட்கவும் வேடிக்கை பார்க்கவும் பெருந்திரளாக மக்கள் கூடியிருந்தனராம். கவர்னரின் பேச்சை, திரு. த. வே. உமா மகேசுவரம் பிள்ளையவர்கள் அருமையாகத் தமிழில் மொழி பெயர்த்தனராம். 21 - 8 - 40 இன்று காலை பூதலூர் சென்றோம். பகல் 2-மணிக்கு மேல் ஆற்காட்டிலுள்ள என் தங்கை சேவு என்னும் திருஞான சம்பந்தனுக்கும், கோயில் பத்தில் உள்ள என் சட்டகர் மகள் திரு. சிவகாமுக்கும் திருமணம் நடைபெற்றது. திருவையாற்றில் மணமகனுடன் கல்வி பயிலும் மாணவர் பலர் வந்திருந்ததும், அவர்கள் வாழ்த்துப் பாக்கள் பாடி அளித்ததும் மகிழ்ச்சி விளைத்தன. நான் இன்று பத்திய உணவுண்டு ஒருவாறு பொழுது கழித்தேன். 22 - 8 - 40 உடல் நலமில்லாமையால் நான் இன்று ஆற்காடு செல்லாமல் காலை 11-மணிக்குப் புறப்பட்டுத் தஞ்சை வந்தேன். மைந்தன் திரு. நடராஜன் நீலகிரியிலிருந்து இன்று காலை வந்திருந்தனன். 23 - 8 - 40 எப்பொழுது யாது நிகழும் என்பதனை யாவரே அறிய வல்லார்! இன்று என் மைந்தன் திரு. நடராஜனுக்கு வதுவைக் கல்யாணம் செய்வித்து, நான்கு நாளில் மனைவியுடன் நீலகிரிக்கு அநுப்ப எண்ணியிருந்தது. ஆனால் இன்று காலை 10-மணிக்கு மேல் ஓர் ஆள் வந்து, திருச்சினம் பூண்டியில் என் தமக்கையின் மூத்த புதல்வர் குழந்தைவேலு இறந்து விட்டதாகக் கூறினர். உடனே இறந்தவர் மகன் இங்கே படித்துக் கொண்டிருந்தவனை அழைத்துக் கொண்டு புறப்படலானேன். மூன்று நான்கு மாதமாகச் சித்தம் பேதித்து வருந்தத்தக்க நிலையில் இருந்த இவர் இன்று வைகறை 4-மணிக்கு வாய்க்காலில் விழுந்து தன்னை மாய்த்துக் கொண்டனராம். இரவு 10-மணிக்கு மீட்டும் தஞ்சை வந்தேன். குறித்தபடி நற்காரியம் இன்று நிகழாதாயிற்று. 26 - 8 - 40 சிவப்பிரகாசமும் பார்வதியம்மாளும் படுகையிலிருந்து இன்று இங்கு வந்தனர். இரவு வண்டியில் நடராஜன் ராஜத்துடன் நீலகிரிக்குப் புறப்பட்டனன். 27 - 8 - 40 இந்நகரிலுள்ள பூவராக ஐயங்கார் முதலினோர் பெசன்ட் லாட்ஜில் ‘கலைமகள் கழகம்’ என ஒன்று தொடங்கினர். நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை என்பவர் தலைவராக இருந்தனர். திருச்சி நாஷனல் கல்லூரி ஆங்கில ஆசிரியர் இராமையா என்பவர் ரவீந்திரநாதரைப் பற்றி ஆங்கிலத்தில் சொற்பொழிவு செய்தார். நான் முன்னர் எழுந்து வரமுடியாமல் இரவு 8-மணிக்கு வந்தேன். இரவு 11-மணிக்கு மேல் சிவப்பிரகாசமும் பார்வதியம்மாளும் தேவகோட்டைக்குப் புறப்பட்டனர். 28 - 8 - 40 செருமானியர் இலண்டன் நகரத்தில் இடைவிடாது குண்டுகள் பொழிகின்றனராம். அம்மாநகரம் எந்நிலையிலுள்ள தென யாவர் அறிவார் நம்மவர் பர்லின் நகரில் குண்டுகள் போடுகின்றனராம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் இராமலிங்கம் பிள்ளை என்பவர் ‘ஓர் தமிழ் இளைஞன்’ என எடுத்துக் கொண்டு நளன் சரிதையைப் புகழேந்தியின் வெண்பாவாயிலாகச் சொல்லி முடித்தனர். குறைந்த கல்வியுடையவர்களுக்கு இச்சொற் பொழிவு இன்பமாயிருக்கும். 29 - 8 - 40 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து பிராவிடன் பண்டுத் தொகை ரீபண்டாகி இன்று ‘செக்’ வந்தது. கஜானாவுக்கும், இம்பீரியல் பாங்கிற்கும் சென்று மாற்றி வந்தேன். தொகை ரூ.3527-2. 1 - 9 - 40 சில நாட்களாக ‘எபசோன்’ மாத்திரை உண்டு, போதிய பயனின்மையால், இன்று மீட்டும் ‘மென்டாகோ’ வாங்கி உண்ணத் தொடங்கியுள்ளேன். 4 - 9 - 40 தண்டியலங்காரம் பழையவுரையைத் திருத்தி வந்ததினை இன்று முடித்துக் கழகத்திற்கு அநுப்பியுள்ளேன். 5 - 9 - 40 கழகத்தார் என் வாழ்க்கைக் குறிப்புகளிற் சில வேண்டு மென்று அடிக்கடி எழுதிவந்தமையால் நேற்றும், இன்று காலையும் சிறிது எழுதி அநுப்பலானேன். நாளை, திருச்சி, சிதம்பரஞ்சேர்வை வீட்டில் நடை பெற விருக்கும் சென்னை திரு. R. ஏகாம்பரத்தின் கல்யாணத்தின் பொருட்டு இன்று பகல் 1-மணிக்குத் தம்பி மு. கோ. முதலானவர் களுடன் திருச்சிக்குப் புறப்பட்டுச் சென்றேன். விநாயக சதுர்த்தி யாகிய இன்று உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்வோர் தொகை அளவின்றியிருக்கும். நான் மாலையில் மலைக் கோட்டை சென்று, சில காரியம் பார்த்து விட்டு, மலையடிப் பிள்ளையாரைத் தரிசித்து, இரவு சபையில் தங்கினேன். 6 - 9 - 40 காலையில் சேர்வை வீட்டில் நிகழ்ந்த கல்யாணத்திற்குச் சென்று, உணவுண்டு, மாலையில் சபைக்கு வந்துவிட்டேன். சபையில் வைத்திருந்த புத்தகங்களைத் தட்டிக் கட்டி வைப்பதில் நேரம் கழிந்தது. 7 - 9 - 40 மாலை 3-மணிக்குப் புறப்பட்டு, 6-மணி அளவில் தஞ்சை வந்தேன். 8 - 9 - 40 நேற்று மாலை சிர. மாணிக்கம் இராமையனுடன் திருவையாறு சென்று, இன்று பிற்கடன் கழித்துவிட்டு, மாலையில் வீடுவந்தனன். படுகையிலிருந்து வீரையன் முதலாகப் பத்துப் பன்னிரண்டு பேர் திருவையாறு வந்திருந்தார்களாம். இன்று மாலை தொடங்கி, இரவில் இங்கு கனத்த மழை பெய்தது. அதனால் வெளியே சென்று மாணிக்கத்திற்குப் புது உடை வாங்கி வரக் கூடவில்லை. 10 - 9 - 40 இரவு 7-மணிக்குக் கோயமுத்தூர் புறப்பாடு. 11 - 9 - 40 காலை 7-மணிக்குக் கோயமுத்தூர் வந்து, உப்பிலி பாளையம் சேர்ந்தேன். இரவு 3-மணிக்கு அன்பர் R. V. லெட்சுமைய நாயுடுவின் புதல்வி சௌ. சந்தியாவல்லியின் திருமணத்திற்கு நலங்கு நடந்தது. இரவு 4-மணிக்கு மேல் திருமணம் நிகழ்ந்தது. தஞ்சைப் பக்கத்துத் திருமண நிகழ்ச்சிகளுக்கும், இந்நிகழ்ச்சிகளுக்கும் வேறுபாடு மிகுதியாய் இருந்தது. திருமணம் நிறைவேறியபின், என்னைக் கேட்டுக் கொண்டபடி ‘திருமணவாழ்க்கை’ குறித்துச் சிறிது நேரம் பேசினேன். பின்பு, மணமக்களுக்குப் பலர் பரிசில் வழங்கினர். 12 - 9 - 40 பகல் முழுவதும் திருமணம் விசாரிப்பதற்கு வந்தோர்களின் ‘கார்கள்’ அளவில்லன. தஞ்சைப் பக்கத்தில் ஒற்றைமாட்டு வண்டிகூட இவ்வளவு மிகுதியாக வருதற்கில்லை. இப்பக்கத் திலுள்ள கம்மவார் நாயுடுகளின் செல்வவளத்தையும், குணத்திற் சிறந்தவராகிய R. V. ராஜுநாயுடுவின் செல்வாக்கையும் இது புலப்படுத்திற்று. சர். R. K. சண்முகம் செட்டியார், T. A. இராமலிங்கஞ் செட்டியார், C. S. இரத்தின சபாபதி முதலியார் முதலிய கனவான்கள் பலர் வந்தனர். நேற்று மாலையில் மழை தோன்றி இடைஞ்சல் விளைவிக்கும் போல் காணப்பட்டது. ஆனால் திருமண நிகழ்ச்சியின் பொழுதும், இன்றும் மழையின்மையால் யாதொரு இடையூறுமின்றித் திருமணம் இனிது நிறைவேறியது. திருமணத்தில் உணவுண்ட எளியவர்களின் தொகை எண்ணிலடங்காது. 13 - 9 - 40 இன்று மாப்பிள்ளை வீட்டுக்கு விருந்துக்குச் சென்று வந்தோம். அங்கும் கார்கள் ஆட்டுமந்தை போல் நிறைந்திருந்தன. வெய்யிலே தோன்றாமல் காலநிலை நன்றாயிருந்தது. விருந்துணவுகளினாலும் என் உடல் பாதிக்கப்படவில்லை. 14 - 9 - 40 இன்று காலை மெயிலில் புறப்பட்டு நீலகிரி சென்று பகல் 11-மணிக்கு மேல் வெல்லிங்டனில் சிர. நடராஜன் இருக்கும் வீடு சேர்ந்தேன். நடராஜன் ஆபீசுக்குச் சென்றிருந்தனன். சௌ. இராஜம்மாள் வீட்டில் தனித்திருந்தது. அது தனியாக இருந்து குடும்பம் நடத்தி வருகின்ற திறமையும், தைரியமும் மிக்க வியப்பையும் மகிழ்ச்சியையும் விளைத்தன. எண்ணெய் தேய்த்து முழுகிவிட்டுப் பகல் உணவுண்டேன். மாலையில் 3-மணிக்கு மேல் நடராஜன் வந்து சேர்ந்தனன். கு. மருதப்பச் செட்டியார், இராதாகிருஷ்ணன் என்பவர்களும் வந்தார்கள். எல்லாரும் பலகாரமும், காப்பியும் உண்டோம். பகல் உணவில் மலைக்காய் கறிகளை மிகுதியாக உண்டமையாலும், மாலையில் பலகாரம் உண்டமையாலும் (?) என் உடல் நிலை மாறுதலைடைந்தது. மலத்தை மிகுதியாகக் கழித்தது. இரவில் குளிர் தாங்கவே முடிய வில்லை. கை, கால், தலை எல்லாவற்றையும் கம்பளி உறையால் மூடிவிட்டு, முரட்டுக் கம்பளியைவிரித்து, அத்தகைய கம்பளியால் உடல் முழுதும் போர்த்துக் கொண்டு இரவினைக் கழித்தேன். 15 - 9 - 40 இன்று பித்தத்தால் வாந்தியெடுத்தலுஞ் செய்தேன். மிளகு குழம்பு செய்யச் செய்து பத்தியமாக உண்டேன். திரு. இராஜம் வீட்டினுள்ளேயே இருந்து கொண்டிருத்தலால் மலைவளங் களைக் காட்ட எண்ணி நடராஜனுடனும், அன்பர் இருவருடனும் இராஜத்தைக் காரில் அழைத்துச் சென்று புலிமலை, சிம்ஸ்பார்க் முதலிய காட்டி அழைத்து வந்தேன். இராஜத்திற்குப் பாடம் கற்பித்தேன். 16 - 9 - 40 இன்று பகலில் திரு. A. சிதம்பரம் பிள்ளையைப் பார்த்து விட்டு, மாலை 3-மணிக்கு மெயிலில் புறப்பட்டு இரவு 7½ மணிக்கு உப்பிலிபாளையம் வந்து சேர்ந்தேன். இரவில் அன்பர் ராஜுநாயுடுவால் புதிய உடைகள் பரிசிலளிக்கப் பெற்றேன். 17 - 9 - 40 திரு. ராஜுநாயுடுவின் புதல்வர் இராமசாமி ஒரு காரியமாகத் திருச்சிக்கு வந்தாராகலின் அவருடன் காலை 5-மணிக்குப் புறப்பட்டுக் காரிலே பகல் 10½ மணிக்குத் திருச்சி ஜங்ஷன் வந்து, அங்கேயே உணவுண்டு, மாலை 3-மணிக்குத் தஞ்சை வந்து சேர்ந்தேன். திருச்சிக்குக் காரில் வரும்பொழுது பாஞ்சாலங் குறிச்சி வீரர்களைப் பற்றிய சரித்திரப்புத்தகம் ஒன்றை முழுதும் படித்தேன். பல செய்திகள் புதியனவாக அறியலானேன். 19 - 9 - 40 உப்பிலிபாளையத்தில் 12ஆம் தேதி இரவு சட்டைப் பையில் வைத்திருந்த என் வெள்ளிசம்புடம், வெள்ளியாற் கட்டிய ஜெபமாலை, பற்குத்தி என்பன கல்யாணக் கூட்டத்திற் கலந் திருந்த கள்வனொருவனால் கவரப்பட்டமையின் ஐந்தாறு நாட்களாக ஜெபம் செய்வது வருத்தமாயிருந்தது. தங்கத்தாற் கட்டி வீட்டில் வைத்திருந்த ஜெபமாலையை இன்று எடுத்துக் கொண்டேன். யான் எழுதிய கட்டுரைகள் பலவற்றில் 12-கட்டுரைகளைத் தொகுத்து ‘கட்டுரைத்திரட்டு’ (முதற்பகுதி) என்னும் பெயரால் வெளியிடுவதெனத் துணிந்து இன்று கரந்தை யிலுள்ள கூட்டுறவுப் பதிப்பகத்தில் அச்சுக்குக் கொடுத்தேன். 21 - 9 - 40 நான் வெளியிடக் கருதியுள்ள 4-வது பாரத்திற்குரிய தமிழ்ப் பாடப் புத்தகத்திற்குச் செய்யுட்களைத் தேர்ந்தெடுக்கும் வேலையில் நேற்றும் இன்றும் ஈடுபட்டேன். இன்று கார்த்திகை விரதம் இனிது நிறைவேறியது. 22 - 9 - 40 நீலகிரியில் இருந்த பொழுது நடராஜனுக்கு 16-9-40இல் கிடைத்த சம்பந்தன் கடிதத்தால் அவன் தான் விரும்பியபடி இராஜம்மாள் என்னும் பெண்ணைச் சென்னையில் ரிஜிஸ்டர்ட் மணம் செய்து கொண்டான் என்பது தெரிந்தது. இன்று விடுதலைப் பத்திரிகையில் அதுபற்றித் தலையங்கம் எழுதப் பட்டிருந்தது. ஊழினை யாவர் தவிர்க்கவல்லார்? ஆனால் உலகில் நிகழும் புரட்சிகளையும், வீழ்ச்சிகளையும் நினைக்கில் இது மிகவும் புல்லது. 25 - 9 - 40 வேட்கை விஞ்சுகின்றது. 22, 24 ஆகிய இருநாட்களிலும் விளையாட்டு. சுக்கிரனது செயல் போலும்? அவா என்று அறுமோ? 27 - 9 - 40 பேரர்களுடனும், துணைவியுடனும் நடுக்காவேரி சென்றமை. 30 - 9 - 40 விளையாட்டு. 4 - 10 - 40 நடுக்காவேரி கிருஷ்ணையர் பிள்ளை சாமியையர் நிலம் 540 குழியுள்ள குழுவஞ்சி என்ற நன்செய்யை ரூ. 500க்கு ஒற்றிவாங்க ஏற்பாடு செய்யப் பெற்றது. 5 - 10 - 40 பேரர்களுடன் தஞ்சை வந்தமை. மாலை 6-மணிக்கு மேல் க. த. சங்கத்தில் (கலைமகள் விழாச் சொற்பொழிவு வரிசையில்) பதிற்றுப்பத்து என்னும் பொருள் பற்றிச் சொற்பொழிவு செய்தேன். சங்கத்தலைவர் திரு. த. வே. உமா பிள்ளை அவர்கள் என் மீது வைத்துள்ள முழு அன்பையும் புலப்படுத்தி அளவின்றி என்னைப் புகழ்ந்து பேசினார்கள். 6 - 10 - 40 அருவங்காட்டிலிருந்து நடராஜன் எழுதிய கடிதம் இன்று வந்தது. ரயில்வே கிளார்க் வேலையின் பொருட்டு 3-ம் தேதி வியாழக்கிழமை அவன் திருச்சி ‘இண்டர்வியு’வுக்கு வந்துபோன விபரம் எழுதியுள்ளான். அவன் எண்ணப்படியே அவன் தேர்ந் தெடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளான். ரயில்வேக்கு நாலைந்து முறை மனுப் போட்டுப் பழுதாயின. 7 - 10 - 40 நடுக்காவேரி நா. கி. சுப்பிரமணிய ஐயரிடம் ரூ.1500க்கு ஒற்றி வாங்கிய நன்செய் நில ஒற்றிப்பத்திரம் இன்று திருவாதியில் ரிஜிஸ்டர் செய்யப் பெற்றது. முன் ஒற்றியை மீட்க ரூ.800ம், தஞ்சை சப் கோர்ட்டில் டிக்கிரிக்கடன் செலுத்த ரூ.600ம் பத்திரத்தில் சாட்டுதல் போடப்பட்டன. 8 - 10 - 40 கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரி ஆண்டு விழாவில் இன்று தலைமை வகித்தேன். திரு. S. K. கோவிந்தசாமி பிள்ளையவர்கள் சிலப்பதிகாரத்தில் சில நாடகப்பாத்திரங்கள் என்னும் பொருள் பற்றி ஓர் அரிய சொற்பொழிவு செய்தனர். கல்லூரி மாணவர் களால் ‘கோப்பெருஞ்சோழர்’ என்ற நாடகம் நடிக்கப் பெற்றது. விளையாட்டு. 9 - 10 - 40 வீட்டில் கலைமகள் பூசை சிறப்புற நடந்தது. 14 - 10 - 40 காலை 11-மணிக்குப் புறப்பட்டுத் திருச்சிசென்று, மாலை 4½ மணிக்கு ஹோலிகிராஸ் காலேஜ் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் என்னும் பொருள் பற்றி 1¾ மணி நேரம் சொற்பொழிவு செய்தேன். இரகுநாதையர் என்ற D. E. O. தலைமை வகித்தார். என் சொற்பொழிவு மாணவிகட்கு மிக்க இன்பம் விளைத்தது என அறிந்தேன். சில மாணவிகள் என் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். 15 - 10 - 40 மாலை 3 - மணிக்குத் தஞ்சை வந்து சேர்ந்தேன். 18 - 10 - 40 நேற்றிரவு 7-மணிக்குத் தஞ்சையினின்றும் புறப்பட்டுச் சிதம்பரம் ரயில்வே நிலையத்தில் வந்து சேர்ந்த வித்வான் திரு. அரங்கசாமி முதலியவர்களுடன் சென்னை வந்து காலை 7½ மணிக்குத் தண்டையார்ப்பேட்டை வந்து சேர்ந்தேன். யாவரும் காலையில் சிற்றுண்டி அருந்திய பின் செனெட் நிலையத்திற்குச் சென்றோம். பகல் 11 - மணியளவில் திரு. அரங்கசாமி பெறுதற் கமைந்த வித்வான் பரிசுத் தொகை ரூ. 1000 - செனெட் கூட்டத்தில் வழங்கப்பெற்றது. சில அன்பர்களுடன் பேசிவிட்டுப் பழனிவிலாசம் வந்தோம். 19 - 10 - 40 காலை 8½ மணிக்கு மேல் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவிருந்த தமிழர் மத மாநாட்டின் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. யானும், திரு. த. வே. உமா. பிள்ளைய வர்களும் சென்றிருந்தோம். திரு. உமா. பிள்ளையவர்கள் ஓர் அரிய சொற்பொழிவு செய்து மாநாட்டைத் திறந்து வைத்தனர். பாரதியார் சொற்பொழிவு செய்து கொடி ஏற்றினார். மாலை 3 - மணிக்கு மீண்டும் கூடியது. திரு. கா. சு. பிள்ளையவர்கள் வரவேற்புரையைப் படித்தனர். குறித்திருந்த படி மறைமலையடிகளைத் தலைவராகப் பலர் முன்மொழிந்து வழிமொழிந்தனர். யானும் அவர் தகுதிகளை எடுத்துக் கூறி வழி மொழிந்தேன். சுயமரியாதைக்காரர் சிலர் கலகம் விளைத்துக் கொண்டிருந்தனர். திரு. S. முத்தையா முதலியாரவர்களும், திரு. வி. கல்யாணசுந்தர முதலியாரவர்களும் பேசிச் சமாதானம் செய்துகொண்டிருந்தனர். தீர்மானங்களை ஒழுங்கு படுத்துவதற்காக இரவு 10 மணிக்கு மேல் S. முத்தையா முதலியார், திரு. வி. க. முதலியார், கி. ஆ. பெ. விசுவநாதம் முதலிய பலர் பழனி விலாசத்திற்கு வந்தனர். இரவு 1 - மணி வரையில் பேசித் தீர்மானங்களை ஒழுங்குபடுத்தினோம். 21 - 10 - 40 திருச்சியிலிருந்து சிதம்பரஞ் சேர்வை முதலானவர்கள் மணமக்களைத் தீபாவளிக்கு அழைப்பதற்கு இன்று காலை வந்து சேர்ந்தனர். திரு. இரத்தினவேலுத் தேவரும் வந்திருந்தனர். சீர்வரிசைகள் சேர்ப்பிக்கப் பெற்றன. சிறப்பாகப் பகல் விருந்து நடந்தது. நான் அரங்கசாமியுடன் பகல் 3 - மணிக்குப் புறப்பட்டுக் கழகம் சென்று, அங்கிருந்து திருவல்லிக்கேணியில் திரு. P. தியாகராஜப் பிள்ளை வீடு சென்று இரவு உணவுண்டு மணி 8 - 55 - க்கு எழும்பூரில் வண்டி யேறினோம். 22 - 10 - 40 காலை 6 - மணிக்குள் தஞ்சை வந்து சேர்ந்தோம். விளையாட்டு. 24 - 10 - 40 அள்ளூர் தொளசியையா நாட்டான் எழுதிக் கொடுத்த புரோ நோட்டு திரு. R. V. பிள்ளையவர்கட்கு மேடோல் கொடுத்துப் பிராது போட்டிருந்தது. எதிரி கீறல் காரன் ஆதலால் தான் எழுதிக் கொடுக்கவில்லை யென்று வழக்காடின மையால் நான் கோர்ட்டில் வந்து சொல்ல வேண்டுமென வழக்கறிஞர் கூறினார். அதன் பொருட்டு இன்று காலை 10 - மணிக்குமேல் புறப்பட்டுத் திருவையாறு முன்சீப் கோர்ட்டுக்குப் போய் மாலை 4½ மணி வரையில் காத்திருந்தேன். வழக்கு 14 - 11 - 40இல் மாற்றிப் போடப்பட்டிருக்கிறது. 25 - 10 - 40 திருக்காட்டுப்பள்ளி ஹைஸ்கூல் கல்வி வாரக் கொண்டாட்டத்தில் இன்று மாலை 5 - மணிக்கு மேல் ‘ஆசிரியர் பெற்றோர் தொடர்பு’ என்னும் பொருள் பற்றிச் சொற்பொழிவு செய்துவிட்டு, இன்றிரவு 9½ மணிக்கு மெயிலில் தஞ்சை வந்து சேர்ந்தேன். 27 - 10 - 40 இரண்டு நாட்களாக நீர்க்கோர்வையும் இருமலும் மிகுந்து தொண்டையைக் கம்மச் செய்தன. சிறிது காய்ச்சலும் உளது. 28 - 10 - 40 நடராஜனுக்கும், சௌ. ராஜத்திற்கும் புதிய உடைகள் வாங்கி இன்று பார்சலில் அநுப்பப்பெற்றன. 30 - 10 - 40 இரவு விளையாட்டு. 1 - 11 - 40 காசி இந்து யூனிவர்சிட்டியிலிருந்து B. A. தமிழ்ப் பரீக்ஷகராக என்னை நியமித்து விடுத்த அறிவிப்பு இன்று வந்தது. முன்பும் சில ஆண்டுகள் இதற்குப் பரீக்ஷகராக இருந்துளேன். 6 - 11 - 40 காசி - - பரீக்ஷைக்குப் பாடமுள்ள நீலாவதி சுலோசனா என்னும் நாடகத்தை இன்று படித்து முடித்தேன். 8 - 11 - 40 இன்று மாலை திருவையாற்றுக்குச் சென்றேன். இரவில் ஐயாறப்பரையும், அறம் வளர்த்த நாயகியையும் தரிசித்தேன். இரவு திரு. R. வே. பிள்ளை யவர்கள் வீட்டில் துயின்ற பொழுது இருமல் தொந்தரை மிகுதியாயிருந்தது. 9 - 11 - 40 நடுக்காவேரி சென்றேன். இரவில் இருமல் இழைப்பு மிகுதியாக இருந்தது. 10 - 11 - 40 தஞ்சை வந்தேன். 11 - 11 - 40 காசிக்கு அநுப்ப வேண்டிய பரீக்ஷை வினாத்தாளை இன்று இன்ஷியூர் செய்து அநுப்பலாயிற்று. பாகனேரி த. வை. இ. சங்க வெளியீடாக அச்சிடு தற்குச் சிலப்பதிகாரத்திற்குப் புதிய உரை எழுதித் தரும்படி திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்கள் தெரிவித்ததற்கு இணங்கி, சென்ற திங்கள் விசயதசமியில் தொடக்கம் செய்து வைத்தேன். அதன் பொருட்டுள்ள நிபந்தனைகளை அவர்கள் தெரிவித்தபின்பு இன்று உரை எழுதத் தொடங்கியுள்ளேன். 12 - 11 - 40 இரவு விளையாட்டு. 14 - 11 - 40 திருவையாற்றில் நோட் வழக்கு ஈரங்கிக்குச் சென்று காத்திருந்து, வழக்கு மாற்றப்பட்டமையின் மாலை 4 - மணிக்குத் தஞ்சை வந்து சேர்ந்தேன். கையில் தொல்காப்பிய மூலம் கொண்டு போயிருந்தமையின் பொழுது வறிதே கழியாது. அதனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 22 - 11 - 40 இரவு விளையாட்டு. 23 - 11 - 40 இன்றிரவு 7 மணிக்குத் திருச்சி அகில இந்திய வான் வசனியில் யாப்பியலமையாச் செய்யுள் என்னும் பொருள் பற்றி ஒரு விவாதம் நிகழ்ந்தது. ஸ்ரீநிவாசராகவன் என்பவர். அத்தகைய செய்யுள் வேண்டும் என்று கூற, நான் அது வேண்டிய தில்லை என்று கூறினேன். அவர் செய்யுள் என்பதன் கருத்தறியாமலே பலவாறு பேசினார். பகல் 1½ - மணிக்குத் திருச்சி புறப்பட்டுச் சென்று இரவு 9 மணிக்கு வந்து சேர்ந்தேன். 1 - 12 - 40 சில நாட்களாகக் காங்கிரசைச் சேர்ந்த சட்டசபை யுறுப்பினர்களும், அமைச்சர்களும், தலைவர்களும் சத்தியா கிரகம் செய்து தண்டனை பெறும் செய்தியே பத்திரிகைகளில் முக்கியமாகவுள்ளது. போர் எதிர்ப்புச் சொற்பொழிவு தாம் செய்யப் போவதாக அரசாங்கத்தார்க்கு அறிவிப்பதும், உடனே அவர்கள் கைதுசெய்யப் பெறுவதுமாக இது நடைபெறுகின்றது. இதனால் நாட்டில் கலவர நிகழ்ச்சி ஒன்றும் நிகழ்வதில்லை. எல்லாம் காந்தியடிகளின் தலைமையில் அவர் கருத்துப் படி நிகழ்கின்றன. முடிவு யாதாகுமோ அறியேன். 5 - 12 - 40 இன்றும், பு.நோட் வழக்கு ஈரங்கிக்காகத் திருவையாறு சென்றேன். கூண்டில் நின்று விசாரிக்கப் பெற்றேன். உண்மை வழியில் நிற்குமாறு கடவுள் உறுதியளித்து வருகின்றார். எதிரி ‘எழுதிக் கொடுக்கவே யில்லை’யென நீதிமன்றத்தில் முழுப்பொய் கூறினன். கடைசியாக, வக்கீல்கள், எதிரி ஓரளவு தொகை கொடுக்கும்படி சமரசம் பேசி முடித்தார்கள். இரவு விளையாட்டு. 6 - 12 - 40 குறுந்தொகைச் சொற்பொழிவுகள் அடங்கிய புத்தகம் இன்று வந்தது. வந்தவுடன் அதன் தலைவர் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியாரவர்களின் தலைமையுரையைப் படித்தேன். வழக்கம் போல் அவரது நுண்ணறிவுத்திறம் அதில் வெளிப்பட்டு இன்பஞ் செய்தது. 12 - 12 - 40 மனைவிக்கு நேற்றிரவு முதல் செரிமானமில்லாமல் வயிற்றுப் போக்கும் வாந்தியுமாக இருந்து, இன்று மாலை நின்றுளது. இந்நிலைமையில் இன்று திருக்கார்த்திகை யாகலின், பகல் முழுதும் பட்டினியாயிருந்து, மாலையில் நீராடிக் கோயிலுக்குப் போய் வந்து, இரவில் சிறிது பாலும் பழமும் மாத்திரம் உண்டு வைராக்கியத்துடன் விரதத்தை நிறை வேற்றினமை பாராட்டத் தக்கது. எனக்கும் விரதம் ஒருவாறு இனிது நிறைவேறியது. ஆனால் நான் கோயிலுக்குப் போகவில்லை. இரவில் ரெங்கநாதன் என்னும் அன்பர் திருவாசகத்தை இசையுடன் படித்து வரக்கேட்டு வருகின்றேன். இன்று அதனுடன், கந்தரநுபூதியும் படித்தனர். 14 - 12 - 40 சென்ற நாளில் 3-முறை இரவு கனவில் ஏதோ துயருற்று அழுது மிருக்கிறேன். யாது நிகழ்வதென்று புலனாகவில்லை. நேற்றிரவு கனவில் திருச்சியில் எனது வீட்டை முனிசிபல் சிப்பந்திகள் (வீடு தள்ளிக் கட்டியிருப்பதாகச் சொல்லி இடிக்கலுற்றனர்) நான் தாழ்மையுடன் எவ்வளவு சொல்லியும் கேளாமல் சில கற்களைப் பெயர்த்துவிட்டனர். பின்பு அவர்கள் மீது வழக்குத் தொடுப்பேன் என்று கூறியவுடன் விட்டுப் போய் விட்டனர். 15 - 12 - 40 நான் கண்ட கனவெல்லாம் மனைவியின் நோயினைக் குறிப்பனவாகு மென்றே தோன்றுகிறது. நேற்றுமுதல் மீட்டும் காய்ச்சல், தலைவலி, உடல்வலிகளால் மனைவி உணவுண்ணவு மில்லை. எழுந்து உட்காரவுமில்லை. 17 - 12 - 40 நான் நேற்று ஜுரத்திற்கு ஒரு கஷாயம் போட்டுக் கொடுத்ததில் மனைவியின் காய்ச்சல் இன்று தணிந்தது. தலைக் கனமும் குறைந்து உட்கார்ந்திருக்கும் நிலைமை ஏற்பட்டது திருவருட்செயல். பலரால் கட்டுரைகளும், பாராட்டுரைகளும் எழுதுவித்து ‘நாட்டார் அன்பு மலர்’ என்னும் பெயரால் வெளியிட்டு என்னைப் பாராட்டுதற்குச் சில நாட்களாக அண்ணாமலை நகரில் சரித்திர ஆசிரியராக விருக்கும், திரு. S. K. கோவிந்தசாமி பிள்ளை முயன்று வருகின்றனர். சங்கரநயினார் கோயிலிலிருந்து திரு. இ. மு. சுப்பிரமணிய பிள்ளை எழுதிய கடிதம் இன்று வந்ததில் ஏழாவது சென்னை மாகாணத் தமிழர் மாநாடு 24-12-1940-இல் சென்னையில் நடக்குமென்றும், அதில் சில தமிழ்ப் பெரியார்களுக்குப் பட்டங்கள் வழங்க ஏற்பாடு செய்திருப்பதில், எனக்கு ‘நாவலர்’ பட்டம் வழங்கத் தீர்மானித்திருக்கிறது என்றும், என் உடன்பாட்டைத் தந்தி மூலம் தெரிவிக்கவேண்டும் என்றும் எழுதியிருந்தது. நானும் தந்தி மூலம் என் இசைவினைத் தெரிவித்துள்ளேன். எல்லாம் திருவருட் செயல். 20 - 12 - 40 எண்ணங்களின் மாறுதல் சை. சி. ம. சமாஜ விழாவிற்குப் போவதில்லை என முதலில் எண்ணிக் கொண்டிருந்தேன். நேற்றுக் காலையில் திடீரென, இன்று காலை புறப்பட்டுச் சிதம்பரஞ் சென்று அண்ணாமலை நகரிலுள்ள அன்பர்களைப் பார்த்துவிட்டு, மாலையில் தில்லையில் ஆனந்தக் கூத்தரைத் தரிசித்து, மறுநாள் சமாஜ விழாவுக்கு மயிலஞ் சென்று, பின் சென்னை போய்த் திரும்புவதென முடிவு செய்து பயணத்திற்குச் சித்தஞ்செய்தேன். நேற்றிரவு அ. நகரினின்றும் வித்துவான் வி. அ. அரங்கசாமி உடல்நலமின்றி இங்குவந்து சேர்ந்த பின், அ. நகரின் கலவரங்களை அவராற் கேள்வியுற்றபின் நான் செல்வது பற்றிய துணிபு நெகிழ்ந்தது. இன்று காலை 8-மணிக்குப் புறப்பட வேண்டிய நான் பயணத்தை நிறுத்திவிட்டேன். இன்றிரவு ஒருக்கால் புறப்படலா மென்றிருந்ததுவும் மாறிவிட்டது. 21 - 12 - 40 திருச்சியிலுள்ள வித்துவான் ம. பெரியசாமி பிள்ளையின் அன்னை இறந்தபின் விசாரிப்பதற்காக இன்று காலை 7-மணிக்குப் புறப்பட்டுச் சென்று, சிந்தாமணி போய் விசாரித்து விட்டு, மலைக்கோட்டை வந்து உணவுண்டு பின் பகல் 1-மணிக்குப் புத்தூர் சென்றேன். அங்குள்ள டாக்டர் A. சாமுவேல் என்பவர் ஓராண்டுக்கு மேல் சிறிதும் பொருள் வாங்காமலே எனக்கு மருந்து கொடுத்தவர். அக்குடும்பத்தினரே அன்புடை யவர்கள். சில ஆண்டுகளாக அவர்களைப் பார்க்கவில்லை. திருச்சிக்குச் செல்லும் பொழுதுகளில் அவரைப் பார்க்க நினைத்தும் முன்பெல்லாம் முடியவில்லை. இன்று எப்படியும் பார்க்க வேண்டுமென்ற உறுதியுடன் போய்ப் பார்த்தேன். அவர் படுக்கையில் இருந்தது கண்டு திடுக்கிட்டேன். சுமார் 1½ ஆண்டாக அவர் நோயுற்று வயிறு முதலியன வீங்கிப் படுக்கையில் இருப்பதறிந்தேன். அவர் நலமுற வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்தித்து, இரண்டுமணி நேரம் அங்கே பேசிக் கொண்டிருந்து, சிற்றுண்டியுண்டு பின், மாலை 5-மணி வண்டியில் புறப்பட்டுத் தஞ்சை வந்துசேர்ந்தேன். இரவு 7-மணிக்குத் தஞ்சை வந்ததும், மனையாள் தன் தமக்கை இறந்தமையறிந்து காலை 10-மணிக்குப் புறப்பட்டுச் சோழகன் பட்டி போயிருப்ப தறிந்தேன். 22 - 12 - 40 நானும் இன்று காலை 7-மணிக்குப் புறப்பட்டுச் சோழகன் பட்டி சென்று, மாலை 5½ மணிக்குத் தஞ்சை வந்து சேர்ந்தேன். நடுக்காவேரியில் என் தம்பி மு. தியாகராஜாவுக்கு உடம்பு மிகவும் நலமின்றியிருப்பதாகக் கேள்வியுற்றேன். 23 - 12 - 40 மயிலத்திற்கும், சென்னைக்கும் போய் வருவதென்ற பயணம் நின்றுவிட்டது. 25 - 12 - 40 இன்று இயேசு கிறிஸ்து பிறந்தநாள். உலகமெங்கணும் கிறிஸ்தவர்களால் மிக்க விமர்சையாகக் கொண்டாடப்பெறும். ஆனால், அவருடைய உபதேசத்தை அறவே புறக்கணித்துக் கிறிஸ்தவ உலகம் - கிறிஸ்தவ இராச்சியங்கள் போரிட்டு மடிந்து கொண்டிருக்கின்றன. இன்று அன்னையார் திதி இங்கு வழக்கம்போல் நிகழ்ந்தது. பகல் உணவின் பின், தம்பி மு. கோ. திருச்சிக்கு ஒரு காரியமாய்ப் போய்விட, சிறிது நேரத்திற்கெல்லாம் நடுக்காவேரியிலிருந்து ஒருவர் வந்து, தம்பி தியாகராஜாவுக்கு நோய் மிகவும் கடுமையா யிருப்பதாகத் தெரிவித்தனர். மனையாள் உடனே வாடகைக் காரில் புறப்பட்டுப்போய் விட, நான் ஆங்கில டாக்டருடன் ஓர் பிளஷர்காரில் புறப்பட்டுச்சென்றேன். மருத்துவர் 2-ஊசி போட்டதுடன், மிக்சர் கொடுத்தார். சிறிது தொந்தரை குறைந்துளது. 26 - 12 - 40 இன்று, நடுக்காவேரியில் இருந்த ஹிந்தி : தமிழ் பாலபோதினி என்ற புத்தகத்தை ஊக்கத்துடன் படித்துக் கொண்டிருந்தேன். 27 - 12 - 40 தம்பியின் உடம்பு சிறிது குணமாகக் காணப்பட்டாலும், நலமடைந்து விட்டதென்று சொல்வதற்கில்லை. கடவுள் திருவருள் எப்படியோ? அறியேன். உரையெழுதும் வேலையைத் தொடர்ந்து செய்யாது, ஊரில் வாளா இருந்து கொண்டிருப்பது பொருந்தாமையின் இன்று காலை 8½ மணிக்குப் புறப்பட்டுத் தஞ்சை வந்து சேர்ந்தேன். 29 - 12 - 40 24-12-40ல் சென்னையில் நடந்த சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் எனக்கு ‘நாவலர்’ என்றும், பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியாருக்கு ‘முதுபெரும்புலவர்’ என்றும், வெ. ப. சுப்பிரமணிய முதலியாருக்கு ‘முதுபெரும்புலவர்’, ‘தமிழ்ப் பெருங்கவி’ என்றும், கா. சுப்பிரமணிய பிள்ளைக்குப் ‘பல்கலைப் புலவர்’ என்றும், மற்றும் சுந்தரமூர்த்தி ஓதுவார், நெல்லையப்பப் பிள்ளை, தேசிகவிநாயகம் பிள்ளை முதலிய சிலர்க்கு வெவ்வேறு பட்டங்கள் வழங்கப்பட்டனவென்று கேள்வி யுற்றேன். நான் சின்னாளாகப் பத்திரிகை பார்க்காதிருந் தமையால் முன்பே இவை அறியக் கூடவில்லை. 30 - 12 - 40 தம்பி மைத்துனராகிய R. ஏகாம்பரத்திற்கு ஆவணியில் திருமணம் நடந்த பின்பு, விருந்து நடத்தாதிருந்தமையால், திருச்சிக்கு வந்திருந்த அவரையும் மணப்பெண்ணையும் தம்பி விருந்துக்கு அழைத்து வந்தனர். நேற்றும் இன்றும் மிகச்சிறப்பாக விருந்து நடைபெற்றது. நேற்று, திரு. த. வே. உமா அவர்கள், சுயம் பிரகாசம் வரதராஜன். மருதமுத்து மூப்பனார், பட்டுக் கோட்டை - நடன சபாபதி ஆகிய வழக்கறிஞர்கள் விருந்துக்கு வந்திருந்தனர். இன்று திருச்சியிலும் இங்குமுள்ள சிலர் வந்திருந்தனர். 31 - 12 - 40 இன்று தம்பி மு. கோ. நடுக்காவேரிக்குப் போய்ப் பார்த்து வந்ததில் தம்பி தியாகராஜாவுக்கு உடம்பு நலமடைந்து வருவதாக அறிந்தேன். இது மகிழ்ச்சி விளைக்குஞ் செய்தி. நான் வழக்கமாகச் செய்தித்தாள்கள் படிப்பதை நிறுத்தி விட்டமையால் உலக நிகழ்ச்சிகளை விபரமாக அறிதற்கு இடமில்லை. எனினும் இவ்வாண்டின் போர் நிகழ்ச்சிகள் முதலியன பிண்டமாகத் தெரிகின்றன. ஆகஸ்டு 15ம் தேதியிலேயே இலண்டனில் தாம் இருக்கப் போவதாகக் கூறிய ஹிட்லர் அங்ஙனம் செய்ய முடியாதவராயினார். வான விமானங்களைக் கொண்டு இலண்டனிலும், இங்கிலாந்தின் ஏனையப் பகுதி களிலும் குண்டுகளைப் பொழிந்து எவ்வளவு கடுமையான சேதங்களை விளைத்த போதிலும் பிரிட்டனி லுள்ளவர்கள் சிறிதும் கலங்காது மேன்மேலும் உறுதி யுடையராய் எதிர்த்துப் போராடி வருகின்றனர். செருமனியிற் சென்று குண்டுபோட்டுச் சேதம் விளைத்தும் வருகின்றனர். நாளுக்கு நாள் ஆங்கிலேயர்க்கு வலிமை மிகுந்து வருகிறது. அமெரிக்காவின் உதவியும் மிகுதியா கிறது. 3-வது முறை அமெரிக்க பிரசிடெண்டாகத் தேர்ந் தெடுக்கப் பெற்ற ரூஸ்வெல்ட் ஆனவர் ஆங்கிலேயர்க்கு அனைத்துதவியும் செய்ய முனைந்துள்ளார். பிரதம மந்திரியாக இருக்கும் வின்ஸ்டன் சர்ச்சிலின் ஒப்பற்ற துணிவும் திறமையுமே பிரிட்டனைப் பாதுகாத்து வருகிறது என்னலாம். இத்தாலியானது கிரீசின் மீதும், எகிப்தின் மீதும் படை யெடுத்து வந்து படுதோல்வியடைந்துளது. கிரேக்க வீரர்கள் பல்லாயிரம் இத்தாலிய வீரர்களையும் தள கர்த்தர்களையும் சிறைப் பிடித்திருப்பதுடன், பற்பல ஊர்களையும் பிடித்துக் கொண்டுவிட்டனர். ஹிட்லர் இந்த நிலைமையில் படைகளை அநுப்பி முசோலினிக்கு உதவி செய்யாதிருப்பதன் காரணம் புலப்படவில்லை. இங்கே படைகளை அநுப்புவதனால் தமது பலம் குறைவுறும் என எண்ணியிருக்கலாம். பனிக்காலமும் வந்து விட்டது. முன்போல் இலண்டனில் குண்டு போடுவதில்லை. பொதுவாகப் பார்க்கின், இங்கிலாந்தின் கை மேலோங்கி வருகின்றது என்னலாம். ஹிட்லர் முன்போல் வீரவாதம் கூறுவதும் இல்லை. இந்தியாவில், யுத்த எதிர்ப்புத் தீர்மானஞ் செய்து காங்கிரஸ் பிரசாரம் செய்யத் தொடங்கியதன் பயனாக காங்கிரஸ் தலைவர்களாயும், சட்டசபைகளின் அங்கத்தினர் களாயுமுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் சிறைபுக்குள்ளனர். இதன் முடிபு யாதாகும் என்பதும் புலனாகவில்லை. 1941ஆம் ஆண்டு 1 - 1 - 41 சிலப்பதிகார உரையின் பொருட்டுக் கருணாமிர்தசாகரம் என்னும் புத்தகத்தில் இசையைப் பற்றிய செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன். முன்னரும் பல நாட்கள் அதனைப் படித்துளேன். சிற்சில செய்திகள் தெளிவாயின. மேலும் புத்தகத்தை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தவராகிய திரு. குணபாண்டியன் அவர்களை இன்று போய்ப்பார்த்துவந்தேன். இரவு விளையாட்டு. 4 - 1 - 41 கடமங்குடியில் என் சட்டகர் வடிவேலுச் சோழகர் காய்ச்சலால் இறந்துவிட்டனரென இன்று காலை 10½ மணிக்கு ஆள்வந்து தெரிவித்தான். உடனே நானும், தம்பி மு. கோ. வும் புறப்பட்டுச் சென்றோம். இங்கு வந்திருந்த வித்வான் வி.அ. அரங்கசாமியும் உடன் வந்தார். பகல் 2-மணிக்குள் கடமங்குடி சென்று, மாலை 5½ மணிக்கு நடுக்காவேரி வந்து, இரவு தங்கினோம். சோழகன்பட்டியில் தன் தமக்கையின் பிற்கடனுக்குச் சென்றிருந்த மனைவி அங்கிருந்து கடமங்குடி வந்தனர். இத்தகைய நிகழ்ச்சிகளால் மனைவிக்கு ஏற்படும் துன்பம் பல. வெந் நீராலேயே கைகால் கழுவும் வழக்கமுடைய நான் இன்று பல இடங்களில் தண்ணீரில் இறங்கி நடக்க நேர்ந்தது. 6 - 1 - 41 ‘கட்டுரைத் திரட்டு’ பெரிய போராட்டத்தின் மேல் பாடம் வைக்கப் பெற்றதென இன்று காலை சென்னையினின்று வந்த திரு. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் சொன்னார்களென்று கேள்வியுற்றேன். இன்று மாலை 3½ மணிக்குப்புறப்பட்டு அவர் களைப் பார்க்கச் சென்று, அவர்கள் கச்சேரியிலிருந்து வாராமையின் பார்க்காது திரும்பினேன். புறப்பட்டபின் மழை பிடித்ததுக்கொண்டது தொந்தரவாயிற்று. அதனால் இரவில் இருமலும் மிகுதியாயிற்று. 8 - 1 - 41 நேற்றிரவு கனவில் திருச்சியில் தாயுமானேச்சுரரைத் தரிசித்தேன். சிவலிங்கப் பெருமான். பெரிய தோற்றத்துடனும், முகத்துடனும் கிழக்கு முகமாக எழுந்தருளியிருக்கக்கண்டு, நான் அங்கு வந்து சேர்ந்தது குறித்து வியப்புற்று, திருச்சிராப்பள்ளித் தேவாரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். 9 - 1 - 41 இன்று வைகுந்த ஏகாதசியும், கார்த்திகையுமாகும். பக்கத் திலுள்ள வெங்கடேசப் பெருமானைச் சேவிக்க நகர முழுதிலுமுள்ள ஆடவர்களும் மகளிரும் நாள் முழுதும் வந்து கொண்டிருந்தனர். அதுவே ஒரு காட்சியாயிருந்தது. இன்று கார்த்திகை விரதம் சிறு தொந்தரையுமின்றி நிறைவேறியது. 12 - 1 - 41 திருவாதிரையாகிய இன்று சிதம்பரத்தில் தரிசனம் கண் கொள்ளாக் காட்சியாகவிருக்கும். நாங்கள் இருக்குமிடத்திற் கோயிலுக்குச் சென்று தரிசிக்கவுங்கூடவில்லை பகலுணவின் பின், பொங்கற் பண்டிகையை முன்னிட்டு யாவரும் நடுக்காவேரி சென்றோம். திரு. நடராஜனும், திரு. இராஜம்மாளும் நீலகிரியி லிருந்து இன்று காலை நடுக்காவேரிவந்து சேர்ந்திருந்தனர். 13 - 1 - 41 இன்றிரவு 8 மணிக்குமேல் செங்கிபட்டியிலிருந்து சௌ. இராஜம்மாளுக்குப் பொங்கற் சீர்கொண்டு வந்தார்கள். 14 - 1 - 41 இன்று பொங்கற் பண்டிகை நடுக்காவேரியில் எங்கள் மூவர் குடும்பமும் ஒன்றாக விருந்து கொண்டாடியது விசேட மாகும். இன்றிரவு யாவரும் சிவாலயம் சென்று அருச்சனைகள் செய்வித்து வழிபட்டு வந்தோம். 15 - 1 - 41 மாலை 3-மணிக்குப் புறப்பட்டு யாவரும் தஞ்சை வந்தோம். மாலை 4½ மணிக்குக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் சர் R.K. சண்முகஞ் செட்டியார்க்கு வரவேற்பளித்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். 17 - 1 - 41 மதுரையில் நடைபெறும் தமிழிலக்கிய மகாநாட்டிற் கலந்து கொள்ளுதற்காக இன்று காலை 10½ மணிக்கு முன் புறப் பட்டேன். புகைவண்டியில் முதலில் ஒரு மாதுளம் பழம் வாங்கி யுண்டேன். பின் ஆரஞ்சுப் பழமும், அடுத்து உப்புமாக் காபியும், பின், பிஸ்கோத்தும் உண்டேன். மாலை 6-மணிக்கு மதுரை ஜங்ஷன் சேர்ந்தேன். வித்வான் கா. கிருஷ்ணன் என்பவர் அழைக்க வந்திருந்தனர். நாளையும் மறுநாளும் ஆலய தரிசனத் திற்கு நேரம் வாய்ப்பதரிதென்று கருதி, இன்று மாலை நேரே கோயிலுக்குச் சென்று, மீனாஷியம்மையையும், சோமசுந்தரக் கடவுளையும் தரிசித்து விட்டு, அன்பர் கார்மேகக்கோனார் வீட்டுக்குச் சென்று இரவு சிற்றுண்டி யருந்தி, உறங்கத் தொடங்கினேன். கோயிலில் சட்டையிட்ட படியேதான் தரிசிக்க நேர்ந்தது. பழைய சொக்கநாதர் கோயில் வழியில் எதிர்ப்பட அதனையும் தரிசித்தேன். புகைவண்டி நிலையத்திலிருந்து சிறிது தூரம் நடந்து சென்றது களைப்பாகவே இருந்தது. எனினும் தை வெள்ளியாகிய இன்று தரிசனம் செய்ய நேர்ந்தது மகிழ்ச்சி யளித்தது. எக்காரணத் தாலோ இரவில் சிறிதும் தூக்கம் வரவேயில்லை. 18 - 1 - 41 இன்று காலை 10-மணிக்கு மேல் தமிழிலக்கிய மகா நாட்டிற்குச் சென்றேன். திவான்பகதூர் T. M. நா. பிள்ளையவர்கள் தமிழ்க் கொடியேற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். பின் S. S. பாரதியாரும், P. T. ராஜனும் திறப்புரை நிகழ்த்தினர். ராவ்சாகேப் வையாபுரிப் பிள்ளை தலைவராக இருந்து தமது தலைமையுரையைப் படித்தனர். மாலை 3-மணிக்கு மீட்டும் மகாநாடு கூடியது. ஸ்ரீமான் பொ. பாண்டித்துரைத் தேவர் திருவுருவப் படம் T. C. ஸ்ரீனிவாசை யங்காரவர்களால் திறந்து வைக்கப்பெற்றது. அடுத்து, “பரிபாடல்” என்னும் பொருள் பற்றி ஒருமணி நேரத்திற்குக் குறையாது நான் சொற்பொழிவு செய்தேன். நேற்றிரவு முழுதும் துயிலின்றியிருந்தும், இன்று சோர்வின்றியே பேசிவிட்டேன். பின்பு, அன்பர், அ. மு. ச. அவர்கள் முதலாயினோர் சொற் பொழிவுகள் நடந்தன. மகாநாட்டிற்கு வந்திருந்தோரெல்லாரும் 4-அணாவுக்குக் குறையாத கட்டணம் செலுத்திவந்திருந்தனர். தமிழ்ச் சொற்பொழிவுக்கூட்டத்திற்கு இங்ஙனம் கட்டணம் செலுத்தி வந்தமை வியத்தற்குரியதே. கூட்டத்திற்கு வந்திருந்த மாணவர் பலர் குறிப்புப் புத்தகங்களில் என் கையெழுத்தினை வாங்கிக் கொண்டனர். 19 - 1 - 41 தேவகோட்டையிலிருந்து மருகர் T. சிவப்பிரகாசச் சேதிராயர் என்னை அழைப்பதற்குக் காருடன் வந்திருந்தனர். பகல் 1½ மணிக்குப் புறப்பட்டு, மாலை 5-மணிக்குத் தேவ கோட்டை சேர்ந்தோம். அங்கே ஹைஸ்கூல் மாணவர் சங்க ஆண்டுவிழா சப்கலெக்டர் (ஓர் முகம்மதியர்) தலைமையில் நடந்தது. நான் சென்ற அரை மணிநேரத்திற் கெல்லாம் “கம்பன் வெளிப்படுத்திய காகுத்தன் பண்புகள்” என்னும் பொருள் பற்றிச் சொற்பொழிவு செய்தேன். இரவில் இருமல் நோய் கடுமையாகத் தாக்கலுற்றது. நான் கொண்டுசென்றிருந்த அரிய மருந்தெல்லாம் உண்டும் பயன் விளையவில்லை. இரவு முழுதும் துன்புற்றேன். என் அருமைப் புதல்வி திரு. பார்வதியம்மையும், மாப்பிள்ளையும் துயிலின்றி யிருந்து உபசரித்தார்கள். 20 - 1 - 41 பகலில் சிறிது நலமுற்றிருப்பினும் இரவில் பிணியின் கடுமை தணியவில்லை. எல்லாருக்கும் அச்சமும் உண்டாயிற்று. 24 - 1 - 41 சென்ற 5 இரவில் நோயினால் எனக்கும், என்னை உபசரித் தலால் என் புதல்வி பார்வதியம்மைக்கும் துயில் இல்லை. தஞ்சை போய்ச் சேர்ந்தால் நலமுண்டாகும் என்னும் எண்ணத்துடன் இன்று காலை 5-மணிக்குப் புறப்பட்டுப் பகல் 12-மணிக்குத் தஞ்சை வந்து சேர்ந்தேன். சென்ற சில நாட்களில் தேவ கோட்டையில் என் பேரப்பெண் தையல்நாயகியின் மழலை மொழிகளைக் கேட்டதே இன்பமாயிருந்தது. 25 - 1 - 41 சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் எனக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கினமை பொறித்த செப்புப் பட்டயம் திரு. இ. மு. சுப்பிரமணிய பிள்ளையவர்களால் அநுப்பப் பெற்றது இன்று வரப்பெற்றேன். 26 - 1 - 41 சப்ரிஜிஸ்தரார் A. சோமசுந்தரம் பிள்ளையின் தமையனார் செய்தநுப்பிய ‘தாளக மெழுகு’ என்னும் மருந்தினை இன்று உண்ணலானேன். பத்தியம் ஒன்றுமில்லை யெனத் தெரிவித்தி ருந்தார். மருந்துண்டு, வடை பாயசம் முதற்கொண்டு உண்ணலா னேன். விளையாட்டு. என்னிடம் புலனடக்கம் என்பது சிறிதும் இல்லா திருக்கின்றது. என் உடம்பிற்கு வரும் ஊறுபாட்டினையும் நோக்காது புலன்களுக்கு அடிமையாகின்றேன். ஏனையோர்க்குப் போதிக்கவும், செய்தபின் இரங்கவுமே என் அறிவு பயன் படுகின்றது. என் ஏழைநெஞ்சம் எஞ்ஞான்று உரனெய்துமோ அறிகிலேன். 28 - 1 - 41 உடல் வெப்பம் மிகுந்து நோய் கடுமையாயினமையின் தாளக மெழுகை இரண்டு நாள் ஒவ்வொரு வேளை உண்டு, இன்று உண்ணாது நிறுத்திவிட்டேன். இந்நிலையில் காய்ச்சலும் வந்துவிட்டது. 31 - 1 - 41 காய்ச்சலுக்கு மருந்துண்டு, ஒருவாறு நீங்கியது. கோழை மிகுதியாக உள்ளது. சுபாஷ் சந்திர போஸ் சிலநாட்களாக வீட்டில் யாரும் தம்மைப் பார்க்காதபடி தனியே இருந்து, பின்பு இரவில் எங்கோ போய்விட்டாரென்றும், அவர்மீது வாரண்டு இருத்தலின் போலீசார் பல இடங்களில் தேடுகின்றார் என்றும் பத்திரிகைச் செய்தி கூறுகின்றது. 4 - 2 - 41 மூன்று நாட்களாக ஆரஞ்சுப் பழச்சாறு எடுத்துச் சிறிது சுடவைத்து உண்பதில் உடல் சிறிது நலம் பெறுகிறது. 5 - 2 - 41 கார்த்திகை விரதம் இன்று நிறைவேறியது. காலையில் கந்தர்கலிவெண்பாவும், பின் அநுட்டானத்தின் பொழுது வழக்கம்போல் திருமுருகாற்றுப்படையும், இரவில் கந்தரநு பூதியும் பாராயணஞ் செய்தேன். இரவு கனவும் நலமாகவிருந்தது. 8 - 2 - 41 இன்று காலை முதல் தொடர்ச்சியாய் விருந்து வந்து கொண்டிருந்தது வியப்பு விளைத்தது. 9 - 2 - 41 நேற்றுத் திருவையாற்று அரசர் கல்லூரித் திருவள்ளுவர் மாணவர் கழக ஆண்டு விழாவிற்குச் சென்ற திரு. கா. சுப்பிரமணிய பிள்ளையவர்களும், திரு. அ. சிதம்பர நாதச் செட்டியாரும் நேற்றிரவு 8-மணிக்கு மேல் வந்து சேர்ந்தனர். இரவு 10½ மணிவரையிற் பேசிக்கொண்டிருந்தோம். இன்று காலை வெந்நீரில் நீராடிச் சிற்றுண்டியருந்தி அண்ணாமலை நகருக்குப் புறப்பட்டனர். 11 - 2 - 41 தஞ்சை செயின்ட் பீட்டர்ஸ் ஹைஸ்கூல் 6-வது பார மாணவர் தமிழ்க்கழக இறுதிக் கூட்டத்திற்கு இன்று மாலை 3-மணிக்கு என்னை அழைத்துச் சென்றனர். 2-மாணவர்கள் பப்பத்து நிமிடம் பேசினர். நான் 20 நிமிடம் பேசினேன். சிறிது நேரமே பேசினும் வீட்டிற்கு வந்ததும் என் உடம்பில் களைப்புத் தோன்றியது. 12 - 2 - 41 வயல் அறுவடையின் பொருட்டு மனைவியுடன் இன்று நடுக்காவேரி சென்றேன். 20 - 2 - 41 இன்று காலை மீண்டும் தஞ்சை வந்து சேர்ந்தோம். 22 - 2 - 41 சென்னையிலிருந்து (கழகம்) அன்பர் வ. சுப்பையா பிள்ளைவர்கள் மனைவியுடனும் குழந்தையுடனும் இன்று காலை 6-மணிக்கு முன் இங்கு வந்து சேர்ந்தனர். மாலை 4-மணிக்குத் திருவையாறு சென்று, அங்கிருந்தவாறே இரவு வண்டியில் நெல்லை செல்வதற்காகப் புறப்பட்டு விட்டனர். இன்று அவர்களோடு பகலுணவு உண்ணும் பொழுதே, விண்ண மங்கலத்தில் திரு. இராமையாக்காடவராயரின் மனைவி இறந்து விட்டதாக ஆள்வந்தது. உடனே மனைவி பகல் உணவின்றியும் போக நேர்ந்தது. நெருங்கிய உறவினர்களிடையே அடுத்தடுத்து மரணங்கள் நிகழ, அதனால் எங்கட்கும் அலைச்சல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 23 - 2 - 41 யானும் இன்று காலை புறப்பட்டு விண்ணமங்கலம் சென்று பகலுணவு நேரத்திற்கு மீண்டு வந்தேன். 24 - 2 - 41 இன்று சைவர்கட்கு மிகச் சிறந்த நாளாகிய சிவனிரா ஆகும். காலையில் சிற்றுண்டி அருந்தாதிருந்ததும், பகல் அநுட்டானத்தின் பொழுது சிறிது மிகுதியாக, உள்ளங்கனிந்து திருமுறைப் பாராயணஞ் செய்ததுமே யான் சிறப்பாகச் செய்தவை. திருக்கோயில் வழிபாடும் செய்யக்கூடவில்லை. மாலையில் க. த. சங்கத்தில் அன்பர் A. சோமசுந்தரம்பிள்ளை, வித்துவான் சிங்காரவேற் சேதிராயர் இருவரும் நிகழ்த்திய சொற்பொழிவுக் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். செந்தமிழ்ப் புரவலர் திரு. த. வே. உமா. பிள்ளையவர்கள் என்னிடம் காட்டிவரும் அன்பும் மதிப்பும் நாளுக்கு நாள் பெருகிவருகின்றன. இறைவன் திருவருள் இருந்தவாறு. 25 - 2 - 41 அமாவாசை. விளையாட்டு. 28 - 2 - 41 நேற்றிரவு கனவில் என் புதல்வி மங்கையர்க்கரசி தன் அன்னையுடனும் அக்காளுடனும் இருந்து பெருங்குரலிட்டு அழுததாகவும், நான் சென்று பற்றிக்கொண்டு, ‘ஊரார் யாது சொன்னால் நமக்கென்ன; நீ அழவேண்டாம்’ என்று மிகவும் தேற்றிக் கொண்டிருந்ததாகவும் கண்டேன். 9 - 3 - 41 இன்றும் நோய் கடுமையாக இருப்பினும், பதிற்றுப் பத்துப்பாடஞ் சொல்லத் தொடங்கியதனை நிறுத்த மனமின்றி, இன்று பாடம் நடத்தினேன். 3-நாட்களாக என்னால் உரை சிறிதும் எழுதக் கூடவில்லை. 16 - 3 - 41 இன்னமும் உடல் நோய் தணியவில்லை. எனினும் பதிற்றுப்பத்துப் பாடம் மெதுவாக நடத்தப் பெற்றது. 18 - 3 - 41 ஏறக்குறைய இருபது நாளாகியும் நோயின் கடுமை குறையவில்லை. இருமலுடன், காய்ச்சலும் சேர்ந்து துன்புறுத்து கின்றன. நேற்றிரவு இது பற்றிச் சிந்தனை செய்கையில் இன்று முழுப்பட்டினியாக இருப்ப தென்ற எண்ணம் தோன்றிற்று. பங்குனி முதற் செவ்வாயாக இது நேர்ந்தமையில் இனி செவ்வாய் தோறும் விரதமிருப்பது எனவுந் தீர்மானித்தேன். ஆனால் நான் நினைத்தபடி முழுப்பட்டினியாக இன்றிருக்கவில்லை. பகலில் உப்பில்லாது பொங்கிய பொங்கல் ஓர் குழவி யூண் அளவு கொண்டேன். மனைவிக்கும் இத்தகைய விரதம் உளது. ஆங்கில மருத்துவ சாலையில் வாங்கி வந்த மருந்தையுண்டு இரவில் கோதுமைத் தவிட்டொத்தடம் போட்டுக் கொண்டேன். இரவில் வேர்வை ஆறாகப் பெருகியது. 19 - 3 - 41 நேற்று முன்னாள் புனற்பாகக் கஞ்சியே உண்டமையாலும் நேற்றுப் பெரும்பாலும் பட்டினியே யாகலானும், சில நாட்களாகவே ஆகாரத்தைக் குறைத்து வந்தமையாலும் இன்று எழுந்து நிற்கவோ, சில அடி எடுத்துவைக்கவோ முடியாமல் தத்தளித்தேன். எனது நிலை மிகவும் இரங்கத்தக்கதாயிருந்தது. உடன் காலையில் கோதுமை வறுத்துத் தூள் செய்ததில் வைத்த போலிக்காப்பியை உண்டேன். பகல், இரவுகளிலும் திரவ உணவுண்டேன். 2-நாளாகக் காபி பருகவில்லை. அடியுடன் விட்டிடும் நினைவுண்டு. 20 - 3 - 41 இன்று பகலில் கெட்டியுணவும் உண்டேன். இடைவிடாது மருந்துண்டும் காய்ச்சலின் குணம் இன்னும் இருந்து வருகிறது. நா வறள்கிறது. ஏறக்குறைய 2-வாரமாக என்னால் உரையெழுதக் கூடவில்லை. என்னை இந்நிலையில் வைத்து ஒறுக்கும் இறைவன், நான் மேற்கொண்ட வேலை நடைபெறுமாறு வித்துவான் திரு. சிங்காரவேலுச் சேதிராயரவர்களைக் கொண்டு வந்து விட்டிருப்பதை நினையின் பெரியதோர் வியப்பாயிருக் கிறது. இன்று மாலையில் சில கடிதங்கள் எழுத முடிந்தன. 22 - 3 - 41 காய்ச்சல் நீங்கி இன்று எண்ணெயிட்டுத் தலை முழுகினேன். 27 - 3 - 41 நான்கு நாளாகவே உடல் நலம் பெற்று வருகிறது. படுக்கையையும் மெத்தைக்கு மாற்றியதில் நல்ல தூக்கம் வருகிறது. ஆனால் பலகீனம் மிகுதியாயுள்ளது. சில அன்பர் களோடு வீடு பார்ப்பதற்கு இன்று மாலை நீலகிரித் தோட்டம், கணபதிநகர் முதலிய இடங்கள் போய் வந்தேன். 28 - 3 - 41 நடுக்காவேரி போய் வந்தேன். நினைவுக்குறிப்பு 14 - 10 - 40 திங்கட்கிழமை மாலை திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் சொற்பொழிவு. 19, 20 - 10 - 40 சனி ஞாயிறுகளில் சென்னையில் அகிலஇந்தியத் தமிழர் மத மாநாடு. 24 - 10 - 40 வியாழன் திருவையாறு அள்ளூர் துளசியையா நோட் வழக்கு ஈரங்கி. 14 - 11 - 40 வியாழன் மேற்படி நோட் வழக்கு ஈரங்கி. 23 - 11 - 40 சனிக்கிழமை, மாலை 7-மணி திருச்சி அகில இந்திய வான்வசனியில் ‘Verse without Metre’ என்பது பற்றி Debate. 22, 23 - 12 - 40 மதுரையில் தமிழ் இலக்கிய மகாநாடு. 5 - 12 - 40 வியாழன் மேற்படி ஈரங்கி. 10 - 4 - 41 ஏறக்குறைய இருபது நாட்களாக இருமலின் தொந்தரை இல்லாதிருக்கின்றேன். உடல் மெலிவு மட்டும் உளது. காப்பி பருகுவதை விட்டு, கோதுமையாற் காப்பி போற் செய்த பருகுநீரைப் பருகி வருகின்றேன். ஆரஞ்சுப் பழச்சாறும் பருகி வருகின்றேன். தேவகோட்டையிலிருந்து பார்வதியம்மாளும், சிவப்பிரகாசமும் பாப்பா தையல்நாயகியுடன் இன்று காலை வந்து சேர்ந்தனர். பங்குனி யுத்தரமாகிய இன்று பார்வதி யம்மாள் முதலானவர்களும், மனைவியும் பெரிய கோயிலுக்குச் சென்று அருச்சனைகள் செய்வித்து வந்தனர். நான் இந்நகர்க்கு (தஞ்சை) வந்து 9-திங்கள் வரை ஆகியும் ஒருமுறை யேனும் பெரியகோயிலுக்குச் சென்று தரிசிக்கக் கூடாதிருப்பது இரங்கத்தக்கது. இவ்வூரில் வீடுஒன்று விலைக்கு வாங்க எண்ணிப் பல திங்களாக முயன்றும் இன்னும் கை கூடாதிருக்கிறது. ஐரோப்பியப் போர் இப்பொழுது கடுமையாகத் தொடங்கி யுள்ளது. யுகோ-விலும், கிரீசிலும் ஹிட்லர் கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளார். இப்போரானது வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடிய முக்கியமான தாயிருக்கும் என்று சொல்கிறார்கள். உலகநிலை யாதாகுமோ? கடவுள் திருவுள்ளம் யாதோ? 13 - 4 - 41 இன்று விஷு ஆண்டின் பிறப்பாகும். இன்று காலை 8½ மணிக்கு க. த. சங்கத்துப் புலவர் கல்லூரி நிறைவேற்றுக் கூட்டம் நடந்தது. அதில் என் பெயரையும் சேர்த்து அறிவிப்பு வந்தமையால் யானும் போய் வந்தேன். மாலையில் வழக்கம் போல் பதிற்றுப்பத்து வகுப்பு நடந்தது. 20 - 4 - 41 யுகோ - வானது போரில் சரணடைந்து விட்டதென்றும், கிரீசில் போர் கடுமை யென்றும் தெரிகிறது. 21 - 4 - 41 திருநாவுக்கரசர் திருநாளாகிய இன்று கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் நிகழ்ந்த கூட்டத்தில் தலைமை வகித்து, நாவுக்கரசரைப் பற்றி 1½ மணிநேரம் வரை பேசியுள்ளேன். என் உடல்நிலையில் சிறிதேனும் பேச வியலுமோ என ஐயுற்றிருந் தேன். யாதொரு தடையுமின்றி இவ்வளவு நீண்ட நேரம் பேசியது திருவருட் செயலே. என்பால் அன்புமிக்க திரு. உமாமகேசுவரம் பிள்ளையவர்கள், சொற்பொழிவினைக் கேட்டு விட்டு, இரவு 9-மணி மெயிலில் கல்கத்தாவிற்கு அன்பர் திரு. கணபதிப் பிள்ளையுடன் புறப்படலாயினர். காசி முதலிய இடங்கட்கும் போய் வரும் கருத்துடையர். அவரது அன்பும் எளிய தன்மையும் நெஞ்சினை உருக்குகின்றன. அவரது யாத்திரை இனிது நிறைவேறி, விரைவில் மீண்டுவரச் சிவபிரான் திருவருள் துணை செய்வதாக. சில திங்களாகவே வீடு விலைக்கு வாங்க எண்ணி முயன்றும் முடிவு பெறாதிருந்தது. இவ்வூர் மூலக்கடை இராமசாமி பிள்ளையவர்களிடம் ஓர் வீடு ஒற்றிக்குப்பேசி, இன்றிரவு 8½ மணியளவில் கரந்தையில் வைத்தே அச்சாரம் கொடுத்து வந்தேன். பண்டிதமணி திரு. மு. கதிரேசச் செட்டியாரவர்கள் தம்முடைய உரைநடைக் கோவை 2-ம் புத்தகத்திற்கு எனது முகவுரை வேண்டுமென்று மிக வற்புறுத்தி எழுதியிருந்தனர். முகவுரையெழுதி இன்று அநுப்பினேன். க. த. சங்கம் - புலவர் கல்லூரித் தொழிற் குழுவினர் கூட்டம் 13-4-41இல் நடந்ததில், மேற்படி கல்லூரிக்கு யான் பிரின்சிபாலாக இருக்க வேண்டும்மென்று கேட்டுக் கொள் வதாகத் தீர்மானம் செய்யப் பெற்றது. 15-4-41இல் கன்வீனர் அதுபற்றி எழுதிய கடிதத்திற்கு இன்று எனது உடன்பாடு தெரிவித்துப் பதில் எழுதியுள்ளேன். விருந்துக்கு வந்திருந்த என் தங்கை மகன் சிர. சேவு என்னும் திருஞான சம்பந்தத் திற்கும், அவர் வாழ்க்கைத் துணை யாகிய, என் சட்டகர் புதல்வி சௌ. சிவகாமுக்கும் முறையே மோதிரமும், புடவையும் பரிசில் வழங்கப் பெற்றன. இவ்வாற்றால் பலவகையானும் இந்நாள் சிறப்புடைய நாளாகும். 26 - 4 - 41 தஞ்சை, இராஜகோபாலசாமி தெருவிலுள்ள, கு. இராமசாமி பிள்ளையவர்களின் வீடு ஒற்றிப்பத்திரம் இன்று எழுதிக் கையெழுத்தாயிற்று. ஒற்றித் தொகை ரூ.4000ல் ரூ.2500 ரொக்கம் கொடுத்துவிட்டு ரூ.1500க்கு புரோநோட்டு எழுதிக் கொடுத்துள்ளேன். மைந்தன் சிர. நடராஜன் தனக்கு மே முதலிலிருந்து சூப்பர்வைசர் வேலைக்கு ஆர்டர் வந்திருப்பதாக எழுதிய லெட்டர் இன்று வந்தது. இம்மகிழ்ச்சியுள்ள செய்திகட்குக் காரணம் இறைவன் திருவருளே. இன்று நாழிகை 48-14-க்கு வியாழன் ரிஷபத்திற்குப் பெயர்ச்சி. அதுவரை இன்று மேடத்தில் இருக்கும் கோட்கள் - சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கரன், சனி என்னும் ஆறுமாகும். இன்று அமாவாசை. அசுவதி. 27 - 4 - 41 இன்று மாலை 6-மணிக்கு மேல் தஞ்சை இராசராசேச்சுராலய மாகிய பெரிய கோயிலில் கண்ணப்ப நாயனார் வரலாறு பற்றிச் சொற்பொழிவு செய்தேன். இவ் வூருக்கு வந்து 9-மாத மாகியும் பெரிய கோயில் தரிசனம் செய்ய முடியாதிருந்தது. இன்று நிறைவேறிற்று. பெரிய கோயிலில் இன்று நால்வர் திருநாளாக இருந்ததும், நால்வர் புறப்பாடும் மகிழ்ச்சியளித்தன. 28 - 4 - 41 இன்று கார்த்திகை, விரதம் உறுதியாக முறைப்படி அநுட்டிக்கக் கூடவில்லை. மிகுதியான தொந்தரவு இல்லை. 30 - 4 - 41 இன்று ஒற்றிப்பத்திரம் ரிஜிஸ்டர் ஆயிற்று. 2 - 5 - 41 இன்று புதிய வீட்டுக்குக் குடிப்புக எண்ணியிருந்தும், முன்பு குடியிருந்தவர் வீட்டை ஒழித்து விடாமையால் அது கூடவில்லை. 801 நம்பர் வீட்டிலேயே சாமான்களை வைத்துளோம். 3 - 5 - 41 இன்று காலை சிவப்பிரகாசம், பார்வதியம்மாள், திருநாவு முதலிய குழந்தைகள் யாவரும் தம்மூருக்குச் சென்றார்கள். இரவு 7-மணிக்கு நானும், இந்திராணியும், சுந்தரம், சிதம்பரம் என்ற குழந்தைகளுடன் நீலகிரிக்குப் புறப்பட்டோம். 4 - 5 - 41 இன்று காலை 11-மணிக்கு வெல்லிங்டன் வந்து சேர்ந்தோம். நடராஜன் முதலிய நால்வர் ஸ்டேஷனுக்கு வந்திருந்தனர். 5 - 5 - 41 வந்தவுடன் நீர்க்கோர்வையும் தலைவலியுமாக இருந்தமையின் நேற்றும் இன்றும் உடம்பு குளிக்கவும் முடியவில்லை. வேலையும் செய்யக் கூடவில்லை. இரண்டு மூன்று கடிதங்கள் எழுதினேன். 9 - 5 - 41 இரண்டு மூன்று நாட்களாக மணிமேகலை உரையைச் சிறிது செப்பஞ் செய்து கொண்டிருந்தேன். உடல் இன்னும் நலனுறவில்லை. 10 - 5 - 41 இன்று உதகமண்டலத்தில் நடந்த குதிரைப் பந்தயத்திற்கு மனைவியையும், சௌ. இராஜத்தையும், பேரக்குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போய் வந்தேன். ஒற்றையில் இரண்டு மூன்று மைல் நடக்க நேர்ந்தது. 11 - 5 - 41 இன்று சித்திராபூர்ணிமை விசாகம். திருவையாற்றில் ஐயாறப்பர் திருவுலாப் புறப்பாடு. யாங்கள் இங்குள்ளோம். பருவத்திற்கென இல்லில் சர்க்கரைப் பொங்கல் பொங்கிப் படையல் போடுந் தருணம். நான் அநுட்டானம் செய்து பாராயணஞ் செய்து கொண்டிருக்கிறேன். இந்நிலையில் கடிதம் வந்தது. செந்தமிழ்ப் புரவலர் திரு. உமாமகேசுவரம் பிள்ளை யவர்கள் காசியினின்று அரித்துவாரஞ் செல்லும் வழியில் சிவனடியடைந்தார் என 9-5-41 வெள்ளியிரவு 8-மணிக்குத் தந்திவந்ததென, தம்பி மு. கோ. எழுதியுள்ளார். நெஞ்சம் கலங்கிவிட்டது. தமிழ் நாட்டில் அவர் போலும் ஒருவரை இனிக் காணவியலுமா? தமிழ்ப் பற்றே உருவம்; தமிழ் வள்ளல்; தன்னலமற்ற துறவி; அஞ்சா நெஞ்சினர். தம் உடல் பொருள் ஆவி யெல்லாம் தமிழ்ச்சங்கத்திற்கே ஆக்கினர். சங்க மாணாக்கர்களும், திக்கற்ற குழந்தைகளுமே அவருக்கு மக்கள். என் மாட்டு வைத்திருந்த அன்பையும் மதிப்பையும் என்னென்பேன். எனக்கு அவர் செய்த உதவிதான் எத்தகையது? உயர்புகழாளர், உண்மை நெறி ஒழுகினார், உண்மையை அடைந்தார். அவருக்குப் பின் என் வாழ்க்கையில் என்ன சுவையிருக்கப் போகிறது? அவரைக் குறித்து இப்படியெல்லாம் எழுதி முடியுமா? இவ்வளவில் நிறுத்துகிறேன். 25 - 5 - 41 சென்ற இரண்டு வாரத்தில் நான் செய்த வேலைகள்: திருச்சி வானொலியிற் பேசுதற்குத் ‘தாய்மொழி’ என்னும் கட்டுரை எழுதியநுப்பினேன். பண்டிதமணி மு. க. செட்டியார் 60-ம் ஆண்டு நிறைவு வெளியீட்டுக்குத் ‘திருநாவுக்கரசர்’ என்னுங் கட்டுரை யெழுதினேன். இது நாளை முடிவுறும். செந்தமிழ்ப் புரவலர் - பிள்ளையவர்கள் பிரிவு குறித்து இரங்கற் செய்யுட்களும் உரையும் எழுதியநுப்பினேன். மணிமேகலை உரையில் இரண்டு மூன்று காதைகள் செப்பஞ் செய்தேன். நான் கருதி வந்தபடி மிகுதியாக உரையெழுத முடியாது போயிற்று. தொடக்கத்தில் இங்கு என் உடம்பு சிறிது நலமின்றியிருந்த போதிலும் சில நாட்களாக நலமென்றே கூறவேண்டும். இரண்டு மூன்று நாட்களாகச் சிறிது தூரம் நடத்தலும் செய்கிறேன். நடக்கும் பொழுது மலையின் இயற்கைவளம் கண்ணைக் கவர்கின்றது. நேற்று முன்னாள் குன்னூருக்கு நடந்து சென்றேன். கரந்தையில் நாளை நடக்கும் இரங்கற் கூட்டத்திற்குப் போக எண்ணியும் சில காரணங்களால் முடியாதாயிற்று. இன்று நிறைவேறிற்று. அண்மையிலுள்ள முருகப்பெருமான் கோயிலில் இரவு தரிசித்தேன். 2-நாளாக மழை பெய்கிறது. 26 - 5 - 41 பகலிரவு முழுதும் மழை விடாது பெய்து கொண்டி ருக்கிறது. நடராஜன் இரவு வேலைக்கு மழையிலும் இருளிலும் தனியாக அருவங்காட்டிற்கு நடந்து செல்வது எங்கட்கு மிக்க வருத்தமாயிருக்கிறது. ஐரோப்பியப் போர் வரவரக் கடுமையாகிக் கொண்டி ருக்கிறது. செருமானியர் கிரீட் தீவைப் பிடிப்பதற்கு நடக்கும் கப்பற்போர் மிகக்கடுமையானதாம். ‘ஹுட்’ என்கிற மிகப்பெரிய பிரிட்டிஷ் போர்க் கப்பல் அழிந்து விட்டதென்ற செய்தி இன்று செய்தித்தாளில் வெளியாகியுள்ளது. இந்தியாவிலோ வடக்கே பல இடங்களில் சில நாட்களாக இந்து முஸ்லீம் கலகங்கள் கடுமையாக நடந்து அடக்க முடியாதனவாயிருக் கின்றன. பலர் மாளுகின்றனர்; துன்புறுகின்றனர். உலகின் நிலைமையை என்னென்றுரைப்பது. விளையாட்டு. 27 - 5 - 41 அருவங்காடு போய் வந்தேன். 28 - 5 - 41 இன்று நண்பகலிற் புறப்பட்டு மாலையில் உப்பிலி பாளையம் சேர்ந்தோம். 29 - 5 - 41 மாலையில் யாவரும் பேரூர் சென்று தரிசித்து அருச்சனைகள் செய்வித்து மீண்டோம். 30 - 5 - 41 காலை 8-மணிக்குச் சிங்கா நல்லூரில் வண்டியேறி மாலையில் திருச்சிவந்து, மனைவி முதலானவர்களைப் பூதலூருக்கு அநுப்பி விட்டு, வானொலி நிலையம் சென்றேன். அன்பர்கள் அ. மு. ச; ம. பெ; ஆகியவர்கள் வந்திருந்தனர். இரவு 7-மணிக்கு நமது தாய்மொழி என்பது பற்றி வானொலியிற் பேசிவிட்டு, மலைக் கோட்டை சென்று, சபையிலே தங்கினேன். வெப்பமிகுதியால் இரவு நெடுநேரம் துயில் வரவில்லை. 31 - 5 - 41 காலை 9½ மணிக்குத் திருச்சி டவுன் நிலையத்தினின்றும் புறப்பட்டுக் காரைக்குடி சென்று, அங்கு வந்திருந்த காரில் மாலை 3-மணிக்குக் கண்டவராயன் பட்டி சென்றேன். அங்கே ‘பணிச்சாருடையவர் தரும கலாசாலை’ என்னும் பள்ளியின் ஆண்டு விழா இராமநாதபுரம் D. E. O. தலைமையில் நடந்தது. நான் ‘திருவள்ளுவர்’ என்னும் பொருள் பற்றிப் பேசினேன். 1 - 6 - 41 இவ்வூருக்கு மிக அண்மையில் உள்ள மகிபாலன் பட்டி சென்று பண்டிதமணி மு. கதி அவர்களைப் பார்க்க நினைந்தும் முடியவில்லை. காலை 8½ மணிக்குப் புறப்பட்டு மாலை 2½ மணிக்குத் தஞ்சை வந்தேன். கரந்தையில் திரு. வீ. சு. சிதம்பரம் பிள்ளையையும் திரு. அ. கணபதிப் பிள்ளையையும் பார்த்துத், தமிழவேள் பிரிவு பற்றிப் பேசிக் கொண்டிருந்து, இரவு 7-மணிக்கு நடுக்காவேரி வந்து சேர்ந்தேன். அதன் பின்பே குழந்தைகளுடன் பார்வதியம்மாளும், மனைவியும் வந்து சேர்ந்தார்கள். 2 - 6 - 41 வெய்யில் நேரங்களிலேயே நெடுந்தூரம் பிரயாணஞ் செய்து வந்தமையால் என் உடம்பு நலங்குன்றியது. இன்று பகலும் இரவும் இருமல் இழைப்பு மிகுதியாயிருந்தது. சின்ன மாப்பிள்ளை திருநாவுக்கரசு இன்று இங்கு வந்தவர் எனக்கு விசிறிக் கொண்டிருந்தார். 4 - 6 - 41 இன்று பகல் 12-மணிக்கு யாவரும் தஞ்சை வந்து சேர்ந்தோம். நடுக்காவேரியினின்று நான் புறப்படும் பொழுது ஓர் கன்னி நிறைகுடத்துடன் எதிர்வந்தனள். 5 - 6 - 41 இராஜகோபாலசாமி கோயில் தெருவில் ஒற்றி வாங்கி யிருந்த நம்பர் 879 c வீட்டில் இன்று பகல் 10-மணிக்கு மேல் குடிவந்தோம். இவ்வீட்டிற்கு நாங்கள் புறப்படும் பொழுது ஓர் சுமங்கலி சில குழந்தைகளுடன் எதிர்வந்தது நன்னிமித்தமாகும். இவ்வீட்டில் முன்பு குடியிருந்தவர் வீட்டைவிடாது அடஞ் செய்தமையால் இன்று குடிவர இயலுமோ என்ற ஐயத்துடனிருந் தோம். கடவுளருளால் தடையொன்றும் நிகழ்ந்திலது. சமையலுக்கு வேண்டிய சாமான்கள் இன்று எடுத்துவரப்பெற்றன. சிவப் பிரகாசம் இன்று மாலையே வந்து சேர்ந்தார். இரவு 11-மணிக்கு அவரும் பார்வதியம்மாளும் தேவகோட்டைக்குப் புறப்பட்டார்கள். செல்வர்கள் திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தன் இருவரையும் உடன் அநுப்பியுள்ளேன். விளையாட்டு. 12 - 6 - 41 கரந்தைச் சங்கத்தில் உயர்திறத் தொடக்கப்பள்ளியா யிருந்தது, நடுத்திறக் கலாசாலையாக மாற்றப்பட்டு, உமா மகேசுவரம் நடுத்திறக் கலாசாலை என்ற பெயருடன் இன்று திறக்கப் பெற்றது. யான் போய் வந்தேன். 13 - 6 - 41 விளையாட்டு. 14 - 6 - 41 கல்யாண சுந்தரம் உயர்திறப்பள்ளியின் திறப்பு நாளாகிய இன்று அதில் மாணிக்கம், சுந்தரம் இருவரும் சேர்க்கப் பெற்றனர். 21 - 6 - 41 இன்று கார்த்திகை விரதம். நோயின் தொந்தரையின்றி நிறைவேறியது. எனினும் இரவில் தொந்தரையேற்பட்டது. 22 - 6 - 41 இன்று முழுதும் இருமல் இழைப்பும் தலைவலியும் துன்புறுத்தின. இன்று பகல் 12-மணியளவில், சிதம்பரத்தில் திரு. S. K. கோவிந்தசாமி பிள்ளை உயர்நீத்தனர் என்ற செய்தி அறியப் பெற்றேன். அளவு கடந்த தமிழ்ப்பற்றுடைய சிறந்த தமிழன்பர்; சில ஆண்டுகளாக அவருடைய தமிழ்ப்பயிற்சி பெருகத் தலைப் பட்டது. தனித்தமிழ் நடையில் சொற்பொழிவுகள் செய்து வந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சரித்திரச் சொற்பொழிவாளராக விருந்த அவரைத் தமிழாராய்ச்சிப் பகுதிக்கு மாற்றி நேற்றுத்தான் உத்தரவு போட்டார்களாம். என் மாட்டு அவர் வைத்திருந்த அன்பும் அளவிடற்பால தன்று. ‘நாட்டார் அன்பு மலர்’ என ஒருநூல் வெளியிட்டு என்னைப் பெருமைப் படுத்தமுயன்று கொண்டிருந்த அவர் அது நிறைவேறுமுன் இவ்வுலக வாழ்வை நீத்தார். தமிழவேள் திரு. த. வே. உ. அவர்களை இழந்த சின்னாட் களில் இது நிகழ்ந்தது. நேற்றுப் பகல் வண்டியில் இங்கிருந்து அன்பர் சிலர் சிதம்பரஞ் சென்றனர். உடல்நல மின்மையால் யான் செல்லக்கூடவில்லை. 24 - 6 - 41 இன்று தந்தையாரின் திதி. மாலையில் 4-மணிக்குப் புலவர் கல்லூரியின் வினையாளர் கூட்டமும், 6-மணிக்கு ச. க. கோவிந்தசாமி பிள்ளையின் பிரிவுக்கு இரங்கற் கூட்டமும் (எனது தலைமையில்) நடந்தன. மாலை 3½ மணிக்கே புறப்பட்டுக் கரந்தை சென்றேன். போய்வருவதற்குச் சிறிது உடல் இடந்தந்தது. 27 - 6 - 41 திராக்ஷாஸவம் என்ற மருந்து வாங்கியுண்டது. 29 - 6 - 41 கல்கத்தாவிலிருந்து வருவித்த ‘சித்தமகரத்வஜம்’ என்னும் மருந்து உண்ணத்தொடங்கியது. 2 - 7 - 41 கரந்தைப் புலவர் கல்லூரித் திறப்புக்குப் பல பெரியோர் களைக் கேட்டும் வராமையால் எனது தலைமையில் திறப்பதாக அறிக்கை வெளியிட்டனர். எனக்குச் சிறிதும் உடல் நலமில்லா திருந்தும் இன்று மாலை 6-மணிக்கு அதனைத் திறந்து வைக்கும் பணியை ஆற்றினேன். சிறிது பேசுதலுஞ் செய்தேன். அக்கல்லூரி வளமுற வேண்டுமென்றும் சிந்தனையுடனிருக் கிறேன். இறைவனருள் அறிதற்கரியது. 5 - 7 - 41 உடலில் சிறிதும் வலிமையின்றி வீட்டினுள் நடப்பதற்கும் இயலாத நிலைமை ஏற்பட்டுளது. சென்னையிலிருந்து ‘மென்டகோ’ இன்று வந்தமையின் அதனையும் உண்ணத் தொடங்கினேன். 15 - 7 - 41 நான்கு நாட்களாக உடல்நலமுற்று வருகிறது. இன்று புலவர் கல்லூரிக்குச் சென்று வகுப்புகளைப் பார்வையிட்டு, நடைமுறைகளை ஆராய்ந்து வந்தேன். 16 - 7 - 41 திருச்சியிலிருந்து அன்பர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் என்னைப் பார்ப்பதற்கென்றே இன்று காலை இங்குவந்து அளவளாவியிருந்து, பகலுணவுண்டு, மாலையில் திருச்சி சென்றனர். 17 - 7 - 41 வீட்டில் மின்விளக்குப் போடுதற்குப் பல நாளின் முன் தொடங்கிய வேலை இன்றே நிறைவேறி, அவ்வொளியில் இதனை எழுதுகின்றேன். “அடுத்து முயன்றாலும் . . . . . . . . ளாகா” 19 - 7 - 41 இன்று கார்த்திகை விரதம் இன்னலின்றி இனிது நிறை வேறியது. உடம்பு பெரிதும் நலம்பெற்றுளது. எனினும் அளவுக்கு மிஞ்சிய உறக்கம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. 20 - 7 - 41 இன்று மூக்குக் கண்ணாடி வில்லைகள் மாற்றப்பெற்றன. இரவில் பெருமழையொன்று பெய்தது. இம்மழையால் மிக்க நன்மையுண்டாகும். இடி முழக்கமும் மிகுதி. 25 - 7 - 41 இன்று புலவர் கல்லூரி சென்று பார்வையிட்டு வந்தேன். 27 - 7 - 41 மூன்றாண்டுகளின்முன் ‘முகித்தல்’, ‘அங்கனம்’ என்பன பற்றி யான் எழுதிய மறுப்பிற்கு மறுப்பாகத் திரு. வே. வேங்கட ராஜலு ரெட்டியார் எழுதித் தமிழ்ப் பொழிலில் வெளியிட அநுப்பியது நேற்றுமாலை என் பார்வைக்கு வந்தது. இன்று அதனைப் படித்துப் பார்த்தேன். வரம்பின்றி என்னைப் பழித்து எழுதியுள்ளமை கண்டும் என் உள்ளத்தே சிறிதும் பதைப் புண்டாகா திருப்பது இறைவனருளால் என் மனம் ஒருவாறு பண்படுவதைக் காட்டுகிறது. அவர் செய்யும் இக்குற்றம் முன்பு என்னாலும் ஓரளவு செய்யப்பட்டமை வருந்தத்தக்கதே. இனியேனும் அக்குற்றம் செய்யாதிருப்பேனாக. 30 - 7 - 41 திருச்சி மலைக்கோட்டையிலுள்ள ‘திருநாவுக்கரசு தமிழகம்’ என்னும் இல்லம் 1920-ம் ஆண்டில் விலைக்கு வாங்கிப் புதுப்பிக்கப் பெற்றது. அவ்வீடு வந்தபின் பல நலங்கள் உண்டா யினமையால் அதனை விற்கலாகாதென்று வீட்டிலுள்ளோர் கூறிவந்தனர். எனினும் சில ஏதுக்களால் அதனை விற்று விடுவது நலமெனக் கருதிச் சிலகாலமாகவே விற்பதற்கு விளம்பரப்படுத்தி வந்தது. மலைக்கோட்டையிலுள்ள பக்கிரிசாமிபிள்ளை என்ற ஒருவர் (தரகு) சிங்காரம் பிள்ளையுடன் இன்று வந்து ரூ.1900-க்கு விலைபேசி முடித்துச் சென்றனர். இதில் ரூ. 50க்கு செலவு போகும். நாளை திருச்சி சென்று பத்திரம் முடிப்பதாகப் பேசியுளது. இரவு விளையாட்டு. 31 - 7 - 41 திருச்சிக்குப் புறப்படுவதற்காக இன்று காலை 5-மணிக்குக் குளிக்கத் தொடங்கிய பொழுது நேற்று வந்தவர்கள் இன்றும் வந்து சேர்ந்தனர். என் மைந்தனும் சேர்ந்து எழுதிக் கொடுக்க வேண்டுமென்று வழக்கறிஞர் ஆலோசனையின் மீது வந்து கூறினர். இன்று இங்கேயே (தஞ்சை) பத்திரம் எழுதிக் கையெழுத்திற்காக வெல்லிங்டனுக்கு அநுப்பப்பெற்றது. 8 - 8 - 41 கவியரசர் ரவீந்திரநாத தாகூர் நேற்றிரவு உயிர்நீத்தாராம். இந்தியாவுக்குப் பெருமையளித்த பெரியார்கள் சிலரில் அவர் ஒருவர். மகாத்மா காந்தியடிகளை ஒட்டிச் சொல்லக்கூடியவர் அவர் ஒருவரே. உலகெங்குமிருந்து அநுதாபச் செய்திகள் வரக்கூடும். இராஜப் பிரதிநிதி கவர்னர் முதலானவர்கள் இது பற்றிப் பேசியுள்ளார்களென்றும் சர்க்கார் ஆபீசுகள், பொது நிலையங்கள் முதலிய யாவும் மூடப்பட்டனவென்றும் ரேடியோவில் கேட்டதாகக் கேள்வியுற்றேன். இன்று எனக்குக் கிடைத்த ‘பாரததேவி’ பத்திரிகையில் அதுபற்றி ஒன்றும் வெளியாகவில்லை. கவியரசர் சில நாட்களாக நோயுற்றிருந்தார். வயது 80. 9 - 8 - 41 ‘பாண்பெரியார் மூவர்’ என்னும் பெயருடன் திரு. பார்வதியம்மாள் எழுதி, என்னால் ஒழுங்குபடுத்தப் பெற்ற நூல் இன்று ‘வெற்றிவேல்’ அச்சுக்கூடத்தில் அச்சுக்குக் கொடுக்கப் பெற்றது. 11 - 8 - 41 இன்று காலை திருச்சி சென்று 31-7-41-ல் எழுதிய மனைகிரயப் பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்வித்து, தொகையை வாங்கிக் கொண்டு, இரவு 9½ மணிக்குத் தஞ்சை வந்து சேர்ந்தேன். விளையாட்டு. 15 - 8 - 41 இன்று கார்த்திகை விரதம் இனிது நிறைவேறிற்று. 18 - 8 - 41 சிலப்பதிகாரவுரை அச்சிடுதற்குப் புகார்க்காண்டம் இன்று அநுப்பப்பெற்றது. 21 - 8 - 41 ராஜா சர். அண்ணாமலைச் செட்டியாரின் 60-ஆம் ஆண்டு நிறைவின் பொருட்டு அ. பல்கலைக்கழகம் வெளியிடும் மகிழ்ச்சி மலருக்கு ஓர் கட்டுரை வேண்டி வெளியீட்டாசிரியர் எழுதி யிருந்தனர். அதற்கு ‘வாகைத்திணை’ என்பது பற்றி எழுதி இன்று அநுப்பினேன். மைந்தன் திரு. நடராஜன், சௌ. ராஜம்மாள் முதலானவர்கள் இன்று நீலகிரியிலிருந்து வந்து சேர்ந்தனர். 23 - 8 - 41 மைந்தன் திரு. நடராஜன் இன்று மாலை நீலகிரிக்குப் புறப்படலாயினன். 24 - 8 - 41 சென்னைப் பல்கலைகழக வித்துவான் தேர்வுக்கு என்னைப் பரீட்சகராக நியமித்த கடிதம் இன்று வந்தது. 26 - 8 - 41 விநாயகர் சதுர்த்தி பூசனை நடைபெற்றது. 3 - 9 - 41 மகிபாலன் பட்டியில் பண்டிதமணி திரு. மு. கதிரேசச் செட்டியார் புதல்வியின் திருமணத்திற்குத் தஞ்சையிலிருந்து திரு. அ. கணபதி பிள்ளை நீ. கந்தசாமிப் பிள்ளை, R. வேங்க டாசலம் பிள்ளை ஆகிய மூவருடன் நானும் இன்று பகல் 1½ மணிக்குப் புறப்பட்டு மாலை 6½ மணிக்கு நமன சமுத்திரம் ஸ்டேஷனை யடைந்து நற்சாந்துப்பட்டி சென்று இரவில் தங்கினோம். நாங்கள் அங்கு வருவதையறிந்த அவ்வூர் தனவணிகச் செல்வர் திரு. சிதம்பரஞ் செட்டியார் அங்கே நடைபெற்ற ஓர் திருவிழா வினை முன்னிட்டு ஓர் கூட்டம் ஏற்படுத்தி அதற்கு என்னைத் தலைமையாகக் குறிப்பிட்டு விளம்பரஞ் செய்திருந்தனர். பாரதா வாசகசாலை என்பதன் சார்பில் நடந்த அக்கூட்டம் நாங்கள் சென்றவுடன் தொடங்கிற்று. நான் தலைமை வகித்துத் திருவிழாவைப் பற்றியும், கல்வியைப் பற்றியும் பேசினேன். R. வே. திருவிழா என்பது பற்றியும், நீ. க. கல்வி என்பது பற்றியும் பேசினர். 4 - 9 - 41 காலை 5½ மணிக்கு நற்சாந்துப் பட்டியினின்றும் யாவரும் காரில் புறப்பட்டுக் காலை 7½ மணிக்கு மகிபாலன் பட்டி சென்றோம். 8½ மணிக்குத் திருமணம் இனிது நிறைவேறியது. விருந்து சிறப்பாக நடைபெற்றது. ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் உட்படப் பற்பலர் திருமணம் விசாரிக்க வந்திருந்தனர். காலைச் சிற்றுண்டியும், பகலுணவும் அங்கு உண்டபின் நாங்கள் பண்டிதமணியிடம் விடைபெற்றுக் கொண்டு பகல் 2-மணிக்குப் புறப்பட்டு நமன சமுத்திரம் வந்து மெயிலில் ஏறி, இரவு 10-மணிக்குத் தஞ்சை வந்தோம். சென்று வந்த செலவு முழுதும் திரு. நீ. க. பிள்ளையவர்கள் செய்தமையின் எனக்குச் சிறிதும் செலவில்லை. 11 - 9 - 41 இன்று கார்த்திகை விரதம் இனிது நிறைவேறியது. 12 - 9 - 41 சிலப்பதிகார உரை 11-முதல் 20 முடிய உள்ள காதைகள் இன்று அநுப்பப்பட்டன. பண்டிதர் எல். உலகநாதபிள்ளை இன்று இறந்தனர் எனச் செய்தி தெரிந்து சவம் எடுக்கும் பொழுது அவர் வீடு சென்று அங்கிருந்து புறங்காட்டிற்கு உடன் போய்ச் சமாதிவைத்தபின் திரும்பினேன். அழுகையும் விம்மலும் மேலிட்டு என்னைப் பேச முடியாது செய்தன. அதனோடு சில சொற்கள் பேசிவந்தேன். புலவர் கல்லூரி மாணாக்கர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் வந்திருந்தனர். உலகநாதபிள்ளை சிறந்த புலவர். மிக அழகாக உரைநடை எழுதும் ஆற்றலுடையவர். வேல்ஸ் இளவரசர் சென்னை வந்தபொழுது பரிசில் பெற்றவர் களில் ஒருவர். தஞ்சை K. H. ஸ்கூலிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் பற்பல ஆண்டுகள் தலைமைப் புலவராக இருந்தவர். 14 - 9 - 41 ‘ஜண்டு’வின் மகரத்துவஜத்தூள் இன்று உண்ணத் தொடங்கினேன். உலகநாதபிள்ளை பிரிவுக்கு இரங்கற் கூட்டம் க. த. சங்கத்தில் எனது தலைமையில் நடந்தது. 20 - 9 - 41 சென்னை வித்துவான் தேர்வாளர் கூட்டம் இன்று கரந்தைப் புலவர் கல்லூரியில் நடந்தது. இன்று காலை 10-மணிக்கே உணவுண்டு அதற்குச் சென்றேன். காலையில் உணவுண்பதற்கு முன்பு இருமல் நோய் மிகவும் துன்புறுத்தியது. 22 - 9 - 41 கரந்தைச் சங்கத்தின் கலைமகள் விழாவின் முதல் நாளாகிய இன்று ‘சேக்கிழார்’ என்னும் பொருள் பற்றிச் சொற்பொழிவு செய்தேன். 24 - 9 - 41 விளையாட்டு. 25 - 9 - 41 இன்று வைகறையில் தேவகோட்டையிலிருந்து புதல்வி, மாப்பிள்ளை, பேரப்பிள்ளைகள் யாவரும் வந்தார்கள். 26 - 9 - 41 காலையில் விண்ணமங்கலஞ் சென்று நண்பகலில் மீண்டேன். 29 - 9 - 41 கலைமகள் விழா. 1 - 10 - 41 திருச்சி வானொலியிற் பேசக் கட்டுரை அநுப்பப் பெற்றது. 2 - 10 - 41 இன்று மனைவியின் கை நோய் அளவின்றி மிகுந்து அஞ்சத் தக்க நிலை ஏற்பட்டது. இது குறித்துப் பல நாட்களாகக் கவனஞ் செலுத்தாதிருந்த எனது குறை பெரிதாகும். டாக்டர் சொக்கலிங்கம் பிள்ளையை அழைத்து வர, அவர் பல மருந்துகள் கொடுத்துள்ளார். 3 - 10 - 41 இன்று மனைவியின் உடல் நிலை ஒருவாறு குணமடைந்துளது. 4 - 10 - 41 அன்பர்கள் வ. சுப்பையாபிள்ளை, காசி விசுவாநாதன் செட்டியார் ஆகியவர்கள் இன்று வந்து பார்த்து ஊர் சென்றனர். பார்வதியம்மாள் முதலியோர் தேவகோட்டைக்கு இரவு புறப் பட்டனர். 8 - 10 - 41 எனக்குக் கதர் உடைகள் வாங்கினேன். மாலை 4½ மணிக்கு அரசாங்கத்தினர் போர்முறைக் காட்சி காட்ட ஏற்பாடு செய் திருந்தனர். சென்றிருந்தேன். பெருந்திரளான கூட்டம் வந்திருந்தது. முதலில் ஆகாய விமானம் வந்து பறந்து கீழ் விழுந்து ஒடிந்து போயிற்று. அதிலிருந்தவர்கள் காயம் பட்டனர். வழியிற் சென்ற ரொட்டி விற்கும் ஏழைச் சிறுவன் மாண்டான். காட்சி அதனோடு முடிவுற்றது. 9 - 10 - 41 கார்த்திகை விரதம் நிறைவேறியது. ஆனால் பகலில் திருமுருகாற்றுப்படை பாராயணஞ் செய்யும் பொழுது தூக்கம் நிலைக் கொள்ளவில்லை. நரம்புகளின் சோர்வால் இப்பொழுது தூக்கம் மிகுதியாகின்றது. 10 - 10 - 41 மாலை திருச்சி சென்று வானொலியிற் பேசி, இரவு மீண்டேன். 18 - 10 - 41 ஒருவாரமாக ருஷியாவில் ஜெர்மன் போர் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. பல இடங்கள் பிடிபட்டு விட்டன. ருஷியாவின் தலைநகராகிய மாஸ்கோவிலிருந்து அரசாங்கம் வேறிடத்திற்குப் போய்விட்டதென்று இன்று பத்திரிகையில் வெளியாகியுள்ளது. செருமானியரின் அளவற்ற வலிமையைக் கண்டு உலகம் மருட்சி யடைகிறது. உலக நிலைமை இன்னும் சின்னாளில் என்னாகுமோ? யார் அறிவார்? 13-இரவு முதல் மருமகள் சௌ. ராஜத்திற்கு உடம்பு ஜுரமாயிருந்தது. 103½ டிகிரி வரையில் வெப்பம் எட்டிற்று. 8-திங்களாயின சூலுடன் இருக்கும் பொழுது இப்படி நேர்ந்தது மிக்க கவலையை விளைத்தது. டாக்டர்கள் பார்த்தார்கள். மருந்துகள் கொடுத்தார்கள். கடவுளருளால் குணமாகிவிட்டது. இன்று காலை சூடு அளவையால் பார்த்ததில் காய்ச்சல் சிறிதும் இல்லை. 19 - 10 - 41 இன்று காலை தீபாவளி ஸ்நானஞ் செய்து பலகாரம் உண்ணும் வரையில் என்னை இருமல் மிகவும் துன்புறுத்தியது. கரந்தைப் புலவர் கல்லூரி மாணவர்கள் ஊருக்குச் செல்லா திருந்த பதினைவர் வரையிலும் என் அழைப்பின் பொருட்டு இன்று காலை வீட்டிற்கு வந்து பலகாரம் உண்டனர். தமிழ்ப் பண்டிதர்கள் இருவரும் உடன் வந்தனர். இஃது எங்கட்கு மிக்க மகிழ்ச்சியளிப்பதாயிற்று. 24 - 10 - 41 இன்று காலையில் உடம்பு சிறிது நலங்குன்றிக் காணப் பட்டும் கந்தசஷ்டி நாட்கள் என எண்ணித் தலை முழுகி விட்டேன். காய்ச்சல் உண்டாகிவிட்டது. 25 - 10 - 41 இன்று கந்த சஷ்டி. சிக்கலில் இன்று சொற்பொழிவு செய்ய ஒப்புக்கொண்டிருந்தேன். முருகப் பிரானையும், சிவபிரானையும் இன்று சிக்கலிலும், நாளை வலிவலத்திலும் தரிசிக்கலாமென எண்ணியிருந்தேன். என் எண்ணம் பாழாயிற்று. இன்று உடம்பு குளிக்காமற் கூட வீட்டிலிருந்து மருந்துண்ண நேர்ந்தது. 26 - 10 - 41 சிக்கலுக்குச் சென்றிருந்த அன்பர்கள் அ. மு. ச. அவர்களும், ஒளவை சு. துரைசாமிப்பிள்ளையும் இன்று காலை வந்து என்னைப் பார்த்தார்கள். ‘பாண் பெரியார் மூவர்’ என்னும் நூல் இன்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பாடபோர்டு அங்கத்தினர் யாவர்க்கும் அநுப்பப்பெற்றது. 29 - 10 - 41 சென்ற மூன்று நாட்களாக நோய் மிகவும் துன்புறுத்தி விட்டது. கஞ்சிகளே உண்டுவந்ததில் உடம்பில் அணுத் துணையும் வலிமையில்லாது போய் விட்டது. 30 - 10 - 41 இன்று காய்ச்சல் முற்றிலும் நீங்கிவிட்டது. இரவில் மட்டும் சிறிது இருந்தது. அரசியலார் ஒப்புதலுக்கு அநுப்பும் புத்தக வெளியீட்டுக்காரர்கள் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணம் ரூ.200-ம் இன்று வெற்றிவேல் அச்சுக்கூடம் திரு. சுந்தரம் பிள்ளை மூலம் கட்டப்பெற்றது. 31 - 10 - 41 இன்று எண்ணெயிட்டுத் தலை முழுகி விட்டேன். பதிவுக் கட்டணஞ் செலுத்திய ரசீதும் மனுவும் இன்று பாடபுத்தகக் கமிட்டிக் காரியதரிசிக்கு அநுப்பப்பெற்றன. பாடபுத்தக சம்பந்தமான வேலைகள் செய்து கொண்டிருந்தேன். 3 - 11 - 41 மருமகள் சௌ. ராஜத்திற்கு இன்று சூல்காப்பு இடப் பெற்றது. இரண்டு வேளையும் விருந்து நடந்தது. 5 - 11 - 41 கார்த்திகை விரதம் இனிது நிறைவேறியது. ‘செந்தமிழ்ப் பூம்பொழில்’ என்னும் பெயரால் அச்சிட்ட 4, 5 ஆம் பாரப் பாட புத்தகங்கள் அச்சுவேலை முடிந்து, இன்று சில புத்தகங்கள் கைக்கு வந்தன. இனி, மனத்திற்குச் சிறிது அமைதி ஏற்படும். 6 - 11 - 41 இன்று மாலை கரந்தை சென்று, அப்படியே பள்ளியக் கிரகாரஞ் சென்று திரு. நீ. க. அவர்கள் குழவி உயிர் நீத்ததனை விசாரித்து வந்தேன். 8 - 11 - 41 நேற்றுமுதல் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுத் துன்புறுத்து கிறது. 4, 5-ஆம் பாரப் பாடப்புத்தகங்கட்குக் கமிட்டி ஆலோசனையின் பொருட்டுக் கட்டவேண்டிய ரூ. 30-ம் ரெங்கநாதன் மூலம் இன்று கட்டப் பெற்றது. 10 - 11 - 41 பாடப்புத்தகக் கமிட்டிக்கு இன்று புத்தகங்கள் நந்நான்கு (லெட்டர்களுடன்) பதிவுத் தபாலில் அநுப்பப் பெற்றன. 11 - 11 - 41 சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 11 -ம் தேதி சிலப்பதிகார உரை தொடக்கஞ் செய்யப்பெற்றது. ஓராண்டு ஆயிற்று. இடையிடை உடல் நலங்குன்றாதிருந்தால் இது வரை சிலம்பு, மணி இரண்டின் உரையும் முடிந்திருக்கும். 13 - 11 - 41 (வள்ளல் பிறந்தது) இன்று விடியுமுன்றொட்டு சௌ. ராஜத்திற்கு உடம்பு ஒருவகையாயிருந்தது. காலை 10-மணிக்குமேல் மருத்துவச்சியை அழைத்துப் பார்த்தது. மருத்துவச்சி இன்றிரவு முற் பகுதியிலேயே பிரசவம் ஏற்படும் என்று கூறி, பகல் உணவுக்குப் போய், உடன் திரும்பி விட்டனள். பகலெல்லாம் வலிஇருந்து கொண்டிருந்தது. திடீரென ஏற்பட்டமையால் ராஜத்தின் தாயாருக்கு இன்றுதான் கடிதம் போடப் பெற்றது. பகல் முழுதும் எனக்கு யாதும் வேலை செய்யத் தோன்றவில்லை. இரவின் முற்பகுதியில் அகத்தியர் தேவாரத் திரட்டுப் பாராயணஞ் செய்தேன். பின்பு பெரியபுராணத் திருமுறையைப் புரட்டிப் பார்த்த பொழுது திருஞானசம்பந்தர் புராணத்தில், “மண்ணெலாம் உய்ய வந்த வள்ளலார் தம்மைக் கண்டு, கண்ணினாற் பயன் கொண்டார்கள் கன்னி நாட்டவர்க ளெல்லாம்” என்பது தோன்றியது. மனதின்கண் ஓர் துணிபு ஏற்பட்டது. தக்க ஆண்மகவு பிறக்கும் என்னும் குறிப்பினை அது புலப்படுத்ததாகும். இரண்டு அன்பர்களையும் உடன் வைத்துக் கொண்டு துயிலின்றியே இருந்தேன். இரவு மணி 11-8க்கு ஆண் குழந்தை பிறந்தமை அறிந்து அளவற்ற மகிழ்ச்சியடையலானேன். இறைவன் திருவருள் பாதுகாத்தது. இனியும் அது பாதுகாக்கு மென்னும் துணிபுடையேன். பகலிலேயே கோட்களின் நிலையை ஒவ்வொரு இலக்கினத்துடனும் வைத்து மனதில் அமைத்துக் கொண்டிருந்தேன். நேரம் மணி 11-5 ஆகவும் இருக்கக்கூடும். பூரம் - இரண்டாங்கால், கடக லக்கினம், கோட்களின் நிலை ஒருவாறு நலமாகவே இருந்தது. பின்பு நெடுநேரம் துயிலின்றியே பேசிக் கொண்டிருந்தேன். கரந்தை மருத்துவச்சியம்மாள் மிக்க அநுபவமுடையவளே. 19 - 11 - 41 சௌ. ராஜமும் குழந்தையும் நலமாக இருந்து வருவது மகிழ்ச்சிக்குரியது. சோதிடர் இலட்சுமணராவ் குழந்தையின் ஜாதகக் குறிப்பைக் குறித்து இன்று கொண்டு வந்தார். ஜாதகம் மிகவும் சிறப்பாக இருக்கின்றது எனத் தெரிவித்தார். 20 - 11 - 41 சுந்தரத்திற்கு முழந்தாளில் ஏற்பட்ட புண் பெரிதாகித் துன்புறுத்துகின்றது. வலிபொறுக்க முடியாது இரவு பகலாகக் கதறி அழுகின்றான். சொக்கலிங்கம் பிள்ளையிடம் காட்டி வந்ததை மாற்றி, இவ்வீதியிலுள்ள மற்றொரு ஆங்கில மருத்து வரிடம் இன்று காட்டுகிறது. மக்கட்கு ஏதாவது ஒருவகையில் துன்பம். பாடப்புத்தகங்கள் பிப்ரவரியில் அங்கீகாரம் ஆனவுடன் அச்சிடுதற்கு இப்பொழுதே காகிதம் வாங்கி வைத்திருக்க வேண்டும். காகிதவிலை மிக ஏறிவிட்டதுடன் கிடைப்பது அரிதாகவும் உள்ளது. இப்பொழுதுள்ள நிலைமையில் அச்சிடாது நிறுத்த நேரினும் நேரும். 4 நாளில் நிலைமை தெளிவுபடும். 21 - 11 - 41 மணிமேகலை உரை முதல் 10 காதைகள் அச்சிடுதற்கு இன்று கழகத்திற்கு அநுப்பப்பெற்றன. 23 - 11 - 41 சுந்தரம் வலிபொறுக்க முடியாமல் கதறிக் கொண்டி ருக்கிறான். ஆங்கிலமுறையும் தெரிந்த முத்துரத்தின முதலியார் என்ற தமிழ் மருத்துவரை இன்று அழைத்து வந்தது. அவர் புண்களைத் தூய்மை செய்து, தாம் செய்து வைத்திருக்கிற ‘இரணவீர்’ என்னும் தயிலத்தைப் பூசிக்கட்டிச் சென்றார். இன்று மாலை வரையில் அழுகையின்றி இருந்தான். பின் வழக்கம் போல் அழ ஆரம்பித்தான். 27 - 11 - 41 இன்று ராஜத்திற்குத் தலைக்கு நீர் விட்டுப்புண்ணிய வாசனஞ் செய்து வீட்டிற்கு அழைத்தது. குழந்தையின் நலங்கருதி நவக்கிரக சாந்தியும் ஆயுள் ஓமமும் செய்யப்பெற்றன. இடைவிடாத மழையும் மிக்க குளிருமாயிருந்தும் ராஜத்திற்குத் தொந்தரையொன்றும் ஏற்படாமை கடவுளின் அருளே. 28 - 11 - 41 மருத்துவர் முதலியார் நாள் தோறும் வந்து கட்டி வந்ததில் சுந்தரத்திற்கு இன்றுதான் சீழ்வடிதல் நின்றிருக்கிறது. 2 - 12 - 41 இன்று கார்த்திகை விரதம் இனிது நிறைவேறியது. திருக் கார்த்திகை இன்று பகல் இரவெல்லாம் மழையும் புயற்காற்று மாக இருந்தன. 3 - 12 - 41 சிவப்பிரகாசத்திற்குத் திருவையாற்று வேலையின் பொருட்டு இன்று திரு A. கிருஷ்ணசாமிவாண்டையாரவர் களைப் பார்த்தேன். திரு. நாடிமுத்துப் பிள்ளையவர்களைப் பார்க்க முடியவில்லை. சென்னை 7 B. வித். வினாக் கடிதம் இன்று அநுப்பப் பெற்றது. 4 - 12 - 41 திரு. அப்துல்கரீம் சாகிப் புலவர் என்பவர் இன்று வந்தனர். சித்திரச் செய்யுட்கள் இயற்றும் ஆற்றலும் கணிதப் புலமையு முடையவர். ஒன்பது மக்களையுடைய குடும்ப வாழ்க்கையுடன் வறுமையால் வாடுபவர். அவருக்கு இரண்டே ரூபாய் இன்று கொடுக்கப் பெற்றன. 6 - 12 - 41 திரு. G. இராமசாமி பிள்ளை இன்று வந்து மனை சம்பந்தமான 3-ஆதரவுகளைக் கொடுத்தார். 10 - 12 - 41 டிசம்பர் 7 ஜப்பான் அமெரிக்காவோடு போர் தொடங்கிப் பல இடங்களைத் தாக்குவதாகச் செய்திகள் வருகின்றன. ஆகவே உலக முழுதும் போரில் ஈடுபட்டுவிட்டன. இனி என்னென்ன விபரீதங்கள் நிகழுமோ? 12 - 12 - 41 சிங்கப்பூரில் பிரமாண்டமான ‘பிரின்ஸ் ஆப் வேல்ஸ்’ என்னும் பிரிட்டிஷ் போர்க்கப்பலை ஜப்பான் மூழ்கடித்து விட்டதாம். 15 - 12 - 41 தேவகோட்டையில் குழந்தை பார்வதியம்மாளுக்கு உடம்பு மிகவும் அசௌகரியமாயிருப்பதாக இன்று கடிதம் வந்தது. இங்கே சுந்தரத்திற்கும் சிதம்பரத்திற்கும் உடல் நலமில்லா திருந்தமையின் மனைவி புறப்படக்கூடாமையின், உடனே நான் பகல் 1-மணிக்குப் புறப்பட்டுப் பூதலூர் சென்று, அங்கிருந்து மைத்துனியை உதவிக்கு அழைத்துக் கொண்டு இரவு 6-மணிக்குப் புறப்பட்டு, இரவு 4½ மணிக்குத் தேவகோட்டையில் வீடுபோய்ச் சேர்ந்தேன். திருச்சி ஜங்ஷனில் 4-மணி நேரத்திற்கு வண்டி கிடைக்கவில்லை. வழி விசாரிப் பதற்குத் தெருக்களில் ஆள் நடமாட்டமும் இல்லை. இந் நிலையில் எப்படியோ 1½ மைல் தூரம் நடந்து சென்று மனையை அடைந்தோம். பார்வதி யம்மாள் படுக்கையில் இருந்தது. மங்கிய குரலாகப் பேசிற்று. நோய் கடுமையாயும் அஞ்சுமாறும் இருந்து சிறிது வேகம் தணிந்திருப்பது தெரிந்தோம். 16 - 12 - 41 இன்று லேடி டாக்டரால் Aolana என்னும் பால் இஞ்சக்ஷன் பார்வதியம்மாளுக்குச் செய்யப் பெற்றது. வெட்டைச் சூட்டினால் குடல் முழுதும் வெந்திருப்பது தெரிந்து, அதனை மாற்றுவதற்கு இது செய்யப்பெற்றது. 17 - 12 - 41 ஊசிபோட்டு மருந்துண்பதனால் பார்வதியம்மாளுக்கு உடம்பு குணமடைந்து வருகிறது. ஒரு மாதமாக இருந்த தலைவலி இன்றுதான் நின்றுளதாம். 18 - 12 - 41 பகல் 12-மணிக்குப் புறப்பட்டு இரவு 8-மணிக்குத் தஞ்சை வந்து சேர்ந்தேன். 20 - 12 - 41 ஜப்பான் போர் மிகக் கடுமையாகி வருகிறது. பினாங்கு துண்டிக்கப்பட்டு விட்டதென்றும், ஜப்பானியப் படையின் வேகத்தைத் தடைசெய்ய முடியவில்லை என்றும், மற்றும் பல இடங்களில் ஜப்பான் முன்னேறி வருகிறதென்றும் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. பர்மாவிலும் அடி வைத்துள்ளார் களாம். இந்தியாவிலும் விமானப் படையெடுப்பு நிகழ்வதை எதிர்பார்த்துக் கல்கத்தாவில் உள்ளவர்களை உள்நாட்டுக்கு வெளியேற்றுகிறார்களாம். சென்னையிலும் குண்டுகட்குப் பதுங்கக் கூடிய நிலவறைகள் அமைக்கின்றார் களாம். சென்னையிலும், நாகையிலும் உள்ள ஜனங்கள் வெவ்வேறிடங் களுக்குக் குடியேறுகின்றார்களாம். இந்நிலையில் உள்நாட்டுக் குழப்பமும் மிகுகின்றது. சில நாட்களின் முன் மதுரையில் கடைகள் சூறையாடப் பெற்றன. இதுபோலும் செய்கை எங்கும் பரவிவருகிறது. நாகையிலும், சென்னையிலும் சூறையாடல் நிகழ்ந்ததாக இன்று பத்திரிகையில் வெளியாகி யிருக்கிறது. இவற்றிற்குப் பஞ்சமும் விலையேற்றமும் காரண மாகும். வியாபாரிகள் பேராசையினால் பண்டங்களின் விலையை மிக ஏற்றுவதே இதற்கு முதன்மைக் காரணமாகும். இன்றும் ஒரு மாதத்திற்குள் என்னென்ன நிகழுமோ? யார் அறிவார்? 21 - 12 - 41 திருச்சிராப்பள்ளியில் நேற்றுத் தமிழ் இசைமாநாடும் இன்று தமிழ்ப்புலவர் மாநாடும் நடைபெற்றன. யானும் இங்குள்ள அன்பர் சிலரும் இன்று வைகறை 4-மணிக்கே எழுந்து, நீராடிவிட்டுக் காலை மெயிலில் திருச்சி சென்றோம். தமிழ்ப் புலவர் மாநாட்டைத்திறக்கும் பொறுப்பு எனக்கிருந்தது. காலை 8½ மணிக்குத் தொடக்கம் கா. சு. பிள்ளையவர்கள் கொடி யேற்றினர். நான் திறந்து வைத்தேன். தலைவர் சோமசுந்தர பாரதியார். முனிசிபல் நாடகக் கொட்டகை முழுதும் கூட்டம் நிரம்பியிருந்தது. ஒலிபெருக்கியும் வைக்கப்பட்டிருந்தது. தமிழ் பற்றிய கிளர்ச்சி மிகுதியாகவே இருந்தது. தமிழ் வளர்ச்சிக்குப் பார்ப்பனர் தடையாயிருக்கின்றன ரென்பதையே பலரும் பல படியாகப் பேசினர். எது எவ்வாறாயினும், சமயப் பற்றும் சமய மரியாதையும் குறைந்து வருவது வருந்தத்தக்கது. தலைவராய் இருந்த பாரதி நாவை அடக்கியோ மரியாதையாகவோ பேசுமியல்பில்லாதவர். அவருடைய பேச்சு என்னளவில் மிக்க அருவருப்புடையதே. இம் மாநாடுகளைத் திறம்பட நடத்திய பொறுப்பு கி. ஆ. பெ. விசுவநாத பிள்ளையைச் சேர்ந்தது. இரவு மெயிலில் 10-மணிக்கு மேல் தஞ்சை வந்து சேர்ந்தோம். 22 - 12 - 41 இன்று காலை 11½ மணிக்கு என் பெயரக்குழந்தைக்குச் சிறப்பாகக் காப்பிடும் விழா நடைபெற்றது. புதல்வன் நடராஜன் 16 - 12 - 41 லேயே நீலகிரியிலிருந்து இங்கு வந்திருக்கின்றான். தேவ கோட்டையிலிருந்து மாப்பிள்ளை, புதல்வி, பேரக் குழந்தைகள் யாவரும் நேற்று வந்து சேர்ந்தனர். உறவினர்கள் இன்று வந்தனர். பகல் உணவிற்குப் புலவர் கல்லூரி மாணவர்கள் அழைக்கப் பெற்றிருந்தனர். விருந்து கூடிய வரை சிறப்பாகவே நடைபெற்றது. குழந்தைக்குத் திருஞானவள்ளல் என்னும் வேங்கடசாமி என்று பெயரிடப் பெற்றது. முற்பெயர் ஆளுடைய பிள்ளையாரின் அருளை நினைந்தும், பிற்பெயர் வேங்கடநாதன் பெயராதலோடு என் பெயரன் என்பதற்குப் பொருத்தமாதல் கருதியும் இடப் பெற்றன. திருவருள் துணை. 24 - 12 - 41 புதல்வி பார்வதியம்மாளுக்கு உள்வேக்காட்டை நீக்க வென்று தேவகோட்டையில் போட்ட ஊசியினை தஞ்சை லேடி ஆஸ்பிடலில் அம்மருந்தைக் கொண்டு இன்று போடப்பெற்றது. ஆனால் ஊசிபோட்ட சிறிது பொழுதுக் கெல்லாம் வயிற்றுப் போக்கும் வாந்தியும் படபடப்பும், மயக்கமும் ஏற்பட்டு மிகுந்த அச்சம் விளைத்தது. எல்லையம்மன் கோவில் (தெருவில்) இருக்கும் பிரசித்திபெற்ற குழந்தை மருத்துவர் அழைத்து வரப் பெற்றார். அவர் மருந்துகள் கொடுத்துள்ளார். சுந்தரத்திற்கும் காய்ச்சல் திரும்பியுளது. 25 - 12 - 41 இன்று காலை 6½ மணிக்கே திருச்சிக்குப் புறப்பட எண்ணி யிருந்தும் பார்வதியம்மாளின் உடல்நிலை தெரிந்துபோக எண்ணி, மருத்துவர் வந்தபின் பார்த்து, அபாயம் ஒன்றுமில்லை யென அறிந்து காலை 10-மணிக்குப் புறப்பட்டுச் சைவ சித்தாந்த மகாசமாஜ விழாவின் பொருட்டுத் திருச்சி சென்றேன். பகல் 1½ மணிக்குத் திருச்சி நாஷனல் கல்லூரியை அடைந்து சாமஜ வரவேற்பினர் உண்டியை அருந்தி, பகல் 2½ மணிக்கு மலைக் கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் விழாவுக்குச் சென்றேன். உயர்திரு. ஞானியாரடிகளின் பேச்சு வழக்கம் போல் பொருள் நிறைந்து மகிழ்ச்சியளித்தது. எப்படியும் தாயுமானேசரை வழிபட வேண்டும் என்ற ஆவலால் மாலை 6-மணிக்கு மேல் மலைக்கோயிலை அடைந்து வழிபட்டு மீண்டேன். 26 - 12 - 41 பகல் உணவுக்கு அன்பர் கி. ஆ. பெ. விசுவநாதத்தால் அழைக்கப் பெற்று, உடன் வந்த அன்பர்களுடன் சென்று உண்டேன். உணவின் பின் திரு. விசுவநாதம், தம் பத்தினியுடனும், குழந்தைகளுடனும் அடியில் வணங்கித் திருநீறு பெற்றுக் கொண்டமை மிக்க உருக்கமாக இருந்தது. என் மாட்டு அவர் வைத்திருக்கும் அன்பும் மதிப்பும் அளவிடற்பால வல்ல. ஆனால் என் அடியில் வணங்கித் திருநீறு பெற்றுக்கொள்ள யான் என்ன தகுதியுடையன் என்ற அச்சம் தோன்றினும், சிவபிரான் திருவருளை நினைந்து திருநீறு வழங்கினேன். வணக்கமெல்லாம் இறைவனைச் சார்தல் வேண்டும். மாலை 6-மணியளவில் சமாஜ விழாக் கூட்டத்தில் ‘திருநாவுக்கரசர்’ என்ற பொருள் பற்றிப் பேசினேன். இரண்டு நாளும் நிறைந்த கூட்டம். ஒலிபெருக்கி அமைக்கப் பெற்றிருந்தமையின் கீழ்மண்டபத்திலுங்கூடப் பலர் இருந்து கேட்டனர். 27 - 12 - 41 நேற்று இரவிலும், இன்று காலையிலும் அன்பர், திரு. மு. நடேச முதலியார் இல்லத்தில் சிற்றுண்டியருந்தினேன். தஞ்சையில் புதல்வி உடல் நலமில்லாதிருக்கும் பொழுது வந்தமையின், சமாஜக் கூட்டத்திற்கு இன்றும் இருக்க ஒருப்படாது, காலை 9-மணிக்குப் புறப்பட்டுப் பகல் 1½ மணிக்குத் தஞ்சை வந்து சேர்ந்தேன். 29 - 12 - 41 இன்றுமாலை 5-மணிக்குச் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் எட்டாவது தமிழர் மாநாடு கரந்தைத் தமிழ்ச்சங்க மன்றத்தில் கூடியது. தலைவராகக் குறிப்பிட்டிருந்த ராவ்பகதூர் சி. எம். இராமச்சந்திரஞ் செட்டியார் வந்திலாமையின் திரு. வி. நாடிமுத்துப் பிள்ளை தலைமை வகித்தனர். முதலில் அவரே கொடியேற்றுதலும் செய்தனர். அவர் தமிழில் நன்றாகவே பேசினர். செட்டி நாட்டரசர் சர் அண்ணாமலைச் செட்டியார வர்களுக்கு “பல்கலை வள்ளல்” என்னும் பட்டம் அளிக்கப் பெற்றது. நெல்லை ராவ்பகதூர் P. ஆவுடையப்பப் பிள்ளை மாநாட்டைத் திறந்து வைத்தனர். 30 - 12 - 41 இன்று காலை 9-மணிக்கு நேற்று நிகழ்ந்த சங்கச்சார்பில், தமிழ்ப்புலவர் மாநாடு அவ்விடத்திலேயே கூடிற்று. தலைவர் திரு. கா. சு. பிள்ளையவர்களும், திறப்பாளர் திவான்பகதூர் கீ. தெய்வசிகாமணி முதலியாரும் வந்திலர். தத்தம் உரைகளை எழுதியநுப்பியிருந்தனர். நான் வரவேற்புரை நிகழ்த்தினேன். மாலை 3-மணிக்கு மேல் இரு மாநாட்டின் சார்பிலும் பல தீர்மானங்கள் செய்யப் பெற்றன. இளைஞர் சிலர் உணர்ச்சியுடன் பேசினர். 31 - 12 - 41 அகநானூற்று உரை வேலை ஒரு திங்களின் மேலாக நிறுத்தியிருந்தது. இன்று தொடங்கப் பெற்றது. 1942ஆம் ஆண்டு 1 - 1 - 42 ஆங்கிலப் புதிய ஆண்டின் தொடக்கமாகிய இன்று உலகமெங்கணும், கிறிஸ்தவர்களால் சிறப்பாகக் கொண்டாடப் பெறும். ஆனால் போர் நிகழ்ச்சிகளினால் கொண்டாட்டம் குறைந்திருந்தல் ஒருதலை. என் அருமைப் பேரக் குழந்தை திருஞானவள்ளலுக்கு இன்று வைகறையிலிருந்து இசிவு ஏற்பட்டு இருந்தமையால் வீட்டில் பெண்டிர்கள் எல்லோரும் அழுது கதறினார்கள். குழந்தை மருத்துவரால் மருத்துவம் செய்யப் பெறுகின்றது. இஃது எழுதும் பகல் 12-மணியளவில் சிறிது நலம் ஏற்பட்டுளது. இறைவன் திருவருள் பாலித்தல் வேண்டும். 2 - 1 - 41 கைதேர்ந்த குழந்தை மருத்துவர் பார்த்து மருந்து கொடுத்தமையால் நேற்றிரவு 8-மணிக்கு மேல் பேரக்குழந்தைக்கு இழுப்பு ஏற்படவில்லை. யாவும் இறைவன் திருவருள். திருவாதிரை நன்னாளாகிய இன்று உடல் நலங்குன்றினமையின் தலை முழுகவுங் கூடவில்லை. 5 - 1 - 42 செட்டிநாட்டரசர் திரு. அண்ணாமலைச் செட்டியாரவர் கள் இன்று காலை திருவையாற்றில் தியாகையர் விழாவைத் தொடங்கி வைத்துத் திரும்புகாலில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு எழுந்தருளினர். செய்தியறிந்து நான் காலை 8½ மணிக்கே சென்றிருந்தேன். 11-மணிக்கு மேல் வந்து சேர்ந்தனர். மாலையிட்டு அழைத்து வந்தோம். நான் சிறிது பாராட்டிப் பேசினேன். வாழ்த்துப் பத்திரமும் அளிக்கப் பெற்றது. மிக்க அன்புடன் பேசினர். 12 - 1 - 42 பேரக்குழந்தைக்கு மீட்டும் இரண்டு மூன்று நாளாகக் கணையின் தொந்தரை மிகுதியாயிருக்கிறது. சிறிது காய்ச்சலும் உளது. கபம் மிகுந்து இழுப்பதும், இருமுவதும் பார்க்கச் சகிக்கவில்லை. இன்று மீட்டும் இசிவும் புலப்பட்டது. அதனால் பெண்டிர்கள் அடையும் துன்பங்களுக்கு அளவில்லை. இரவில் தூக்கமுமில்லை. மருத்துவர் பார்க்கிறார். பல வகையான சிகிற்சைகள் செய்யப்பெறுகின்றன. நேற்றிரவு பார்வதியம்மாள் கண்டதாகச் சொன்ன கனவினால் முருகப்பிரான் காப்பாற்றி யருள்வன் என நினைக்கிறேன். தஞ்சையிலும் மின்விளக்குகளுக்கு மேன்மூடி இன்று போடப்பட்டுளது. தெருக்களில் நல்ல வெளிச்சம் இல்லை. 13 - 1 - 42 போகிப் பண்டிகையாகிய இன்று அன்னையாரின் திதி நடைபெற்றது. திரு. பார்வதியம்மாள் புத்தகமாகிய ‘பாண் பெரியார் மூவர்’ என்பது 1945ம் ஆண்டு இண்டர்மீடியட் வகுப்புக்குப் பாடமாக வைக்கப் பெற்றதென்னும் நற்செய்தி இன்று வரலாயிற்று. 14 - 1 - 42 நேற்றிரவு முதல் குழந்தை திருஞான வள்ளலுக்குக் கபத்தின் தொந்தரை சிறிதளவு குறைந்துளது. பொங்கற் பண்டிகை இனிது நிறைவேறியது. புதல்வன் திரு. நடராஜன் மட்டுமே அருவங் காட்டில் தனித்திருக்க நேர்ந்தது. இரண்டு மூன்று நாளாகப் பஞ்சாக்கர ஜெபம் சிறிது மிகுதியாகச் செய்கின்றேன். இன்று வைகறையில் என் பெட்டியொன்று களவு போனதாகவும், அதில் என் கோட்டுகள் இருந்து போய் விட்டதாகவும் கனவு கண்டேன். முன் இவ்வாறு கனவு கண்டகாலங்களில் நான் அறிந்த பெருமைடையுடைய மக்களில் யாரேனும் மறைவது வழக்கம். இதன் பயன் யாதோ? 18 - 1 - 42 நேற்றும் இன்றும் திருச்சியில் சைவசித்தாந்த சபை ஆண்டு விழா உயர்திரு. ஞானியாரடிகள் தலைமையில் நடக்கும். இன்று யான் பேசுதற்குத் திருவள்ளுவர் என்ற பொருள் குறிப்பிடப் பட்டிருந்தது. இன்றேனும் திருச்சிபோக எண்ணியிருந்தேன். நேற்று முன்னாள் எனக்குக் காசநோய் மிகுந்து இடுக்கண் விளைத்தமையால் போக முடியாதாயிற்று. லாலுகுடி திருவள்ளுவர் கழகத்தின் ஆண்டுவிழாத் தலைமையும் (19-1-42) ஒப்புக் கொண்டிருந்தேன். அதற்கும் வரஇயலாமை தெரிவித்துக் கடிதம் எழுதியதுடன் அங்கிருந்து செலவுக்கு வந்த பணத்தையும் நேற்றுத் திருப்பியநுப்பி விட்டேன். பார்வதியம்மாள் முதலிய யாவரும் தேவகோட்டைக்கு இன்று காலை 10-மணிக்குப் புறப்பட்டுச் செல்கின்றார்கள். 20 - 1 - 42 குழந்தை மருத்துவர் கோபாலசாமி என்பவர் 3-நாளாக எனக்கு இருமலுக்காக ‘சிரப்’ மருந்து கொடுத்தார். இன்று அவர் கொடுத்த கியாழம் உண்ணத் தொடங்கியுள்ளேன். 23 - 1 - 42 கியாழம் உண்பதிலும் குணம் தெரியவில்லை. மென்டாகோவும் சிறிது உண்டு வருகிறேன். வழக்கம் போல் இரவில் சிறிது தொந்தரை இருந்து கொண்டிருக்கிறது. ஜப்பான் மலேயாவில் நிகழ்த்தும் போரானது நாளுக்கு நாள் மிக்க அச்சம் விளைத்து வருகிறது. சிங்கப்பூர் முதலிய இடங்களில் நாடொறும் நூற்றுக்கணக்கான மக்கள் குண்டுகட்கு இரையா கின்றனர். பர்மா, சென்னை முதலிய இடங்களிலுள்ளவர்கள் இந்தியாவில் வெவ்வேறிடங்கட்குச் சென்று தங்குகின்றனர். சென்னையிலும் ரெங்கூனிலும் படித்த ஹைஸ்கூல் மாணவர்கள் பலர் இவ்வூர்ப்பள்ளிக்களில் வந்து சேர்கின்றனர். சில நாட்களாக இரவு கனவில் பழனி முதலிய இடங்களில் முருகப்பிரானைத் தரிசிக்கச் செல்வதுபோல் காண்கின்றேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பாட நியமனக் குழுவில் என்னையும் சேர்த்து, அறிவிப்புக் கடிதம் இன்று வந்துளது. நான் அங்கு வேலை பார்த்து வந்த ஏழெட் டாண்டுகளில் இதிற் சேர்க்கப் பெற்றிலேன். அக்காலங்களில் தமிழ்ப் புரொபசராயிருந்தவர்கள் என் பெயரைச் சிபாரிசு செய்யாமையே அதற்குக் காரணம். 26 - 1 - 42 கார்த்திகை விரதம் ஒருவாறு இனிது கழிந்தது. 2 - 2 - 42 ஆ! என்ன துன்பம்! என்ன இழப்பு! உயர்திரு. ஞானியாரடிகள் திருச்சியிலிருந்து பழனிக்குச் சென்றிருந் தவர்கள் நேற்றுக் காலையில் பழனி முருகன் திருவடியை அடைந்தார்கள் என்னுஞ் செய்தி இங்குள்ள அவர்களடியா ரொருவர்க்கு வந்த கடிதத்தால் இன்று மாலை 6-மணிக்கு மேல் அறிந்தேன். மாரடைப்பினால் ஆவி பிரிந்ததாம். அவர் போன்ற கல்வியும் சொல்லாற்றலுமுடையாரை எங்கே எப்பொழுது காணமுடியும்? என் போன்றவர்களின் பேச்சுத் திறனெல்லாம் அவர்கள் சொல்லாற்றலின் முன் சூரியனுக்கு முன் மின்மினி போலாகுமே. எத்தனை நூறாயிரவர்கள் அவர்கள் சொற் பொழிவால் பயனெய்தியிருப்பார்கள். அப்பெரியார் சிறியேன் பால் வைத்த அன்பு நாளுக்கு நாள் பெருகி வந்ததே. முருகக் கடவுள்பால் எல்லையில்லா அன்புடைய பெரியார் தைப்பூசத் திருநாளில் பழனியாண்டவன் திருமுன் ஆண்டவனடி யடைந்தார். 14 - 1 - 42ன் வைகறையில் நான் கண்ட கனவு இவ்வளவு கொடிய பலனை விளைத்தது. சில திங்களாக இரவு படுக்கத் தொடங்குமுன் திரு. ரெங்கநாதன் என்பவரால் பெரியபுராணத்தைப் படிப்பித்துக் கேட்டு வந்தேன். 30 - 1 - 42 வெள்ளிக்கிழமை அது முற்றுப்பெற, இராமலிங்க சுவாமிகளின் அருட்பாவை அவரைக் கொண்டு முறையாகப் படிப்பித்துக் கேட்கக் கருதி, நேற்று 1 - 2 - 42 ஞாயிற்றுக் கிழமையிரவு தொடக்கஞ் செய்யப் பெற்றது. 3 - 2 - 42 இன்று மாலை க. த. சங்கத்தில் ஞானியார் அடிகளின் பிரிவுக்கு இரங்கற் கூட்டம் நிகழ்ந்தது. இன்று பலமுறை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன். 4 - 2 - 42 என் தமக்கை பேரன் மாணிக்கத்திற்கு என்னைக் கார்டியனாக ஏற்றுக்கொள்ள மனுக்கொடுப்பதற்கு இன்று வைகறையே புதுச்சேரிக்குப் புறப்பட எண்ணியிருந்தேன். நேற்று இரவு 3-மணிக்குப் பேரக் குழந்தை திருஞானவள்ளலுக்குக் காய்ச்சல்லும் இசிவும் ஏற்பட்டுக் கலங்க வைத்து விட்டது. அப்பொழுதே மருத்துவர் வீட்டிலிருந்து மருந்து வருவித்துக் கொடுக்கப் பெற்றது. பயணம் இன்று தடையுண்டது. 6 - 2 - 42 என் தமக்கையார், வீரையன், மாணிக்கம் ஆகிய மூவருடனும் நேற்றிரவு 2-மணிக்குப் புறப்பட்டுக் காலையில் திருப்பாதிரிப்புலியூர் வந்து ‘பஸ்’ வழியாகப் பகல் 11½ மணிக்குப் புதுச்சேரி சேர்ந்தேன். மாலை 4-மணிக்கு வக்கீல் சபரிநாதன் என்பவரைக் கண்டு விசாரித்ததில் கார்டியன் மனுக் கொடுப் பதற்கு மாணிக்கத்தின் ஜெனனப் பதிவுகணக்கு மேலதிகாரியின் கையெழுத்துடன் வேண்டுமெனத் தெரிந்தது. ஆதலின் இம்முறை நாங்கள் செலவு செய்து வந்தது வீண் வேலையாயிற்று. எனது விவகார அறிவின் குறைவு புலனாயிற்று. தஞ்சையிலேயே ஒரு வக்கீலிடம் கலந்து ஆலோசித்திருந்தாலும் இப்படி நேர்ந்திரா தென நினைக்கிறேன். எனது குறையே இது. 7 - 2 - 42 புதுவையில் வேலையின்மையின் இன்று காலை சிற்றுண வருந்தி ஊருக்குப் புறப்பட்டோம். காலை 10½ மணிக்குத் திருப்பாதிரிப்புலியூர் வந்தோம். 11½ மணி வண்டி எடுபட்டுப் போயிற்று. ஞானியார் மடத்திற்குச் சென்று விசாரித்துவிட்டு, புதிதாகப் பட்டத்திற்கு வந்துள்ள சுவாமியின் விருப்பப்படி யாவரும் மடத்தில் பகலுணவுண்டு, பகல் 1½ மணிக்குப் புறப்பட்டு இரவு 8-மணிக்குத் தஞ்சை சேர்ந்தோம். விளையாட்டு. 12 - 2 - 42 திருப்பாதிரிப்புலியூரில் நேற்று ஞானியாரடிகள் சமாதி சிவலிங்கப் பிரதிட்டையும், இன்று விபுலானந்தவடிகள் தலைமையில் இரங்கற் கூட்டமும் நிகழும் நிகழ்ச்சி அழைப்புகள் வந்தன. நான் போக முடியவில்லை. க. த. சங்கச் சார்பிலே கையறு நிலைச் செய்யுட்கள் மூன்று பாடினேன். நேற்று ஓர் கடிதமும் எழுதினேன். 13 - 2 - 42 மகாசிவராத்திரியாகிய இன்று விதிப்படி நான் விரத மநுட்டிக்கவில்லையேனும், இரவில் பெரிய கோயில் சென்று தரிசித்து வந்தேன். மனைவியார் வழக்கம் போல் பகல் முழுதும் பட்டினியாயிருந்து விரதமநுட்டித்தனர். 14 - 2 - 42 வயல்கள் அறுவடையைக் கவனிக்கவும், தெய்வங்கட்குப் பூசனை ஆற்றவும் வேண்டி, இன்று பகல் 1-மணிக்கு யாவரும் புறப்பட்டு, மாலையில் நடுக்காவேரி சேர்ந்தோம். 17 - 2 - 42 இன்று நடுக்காவேரியில் குல தெய்வங்கட்குச் சர்க்கரைப் பொங்கல் செய்து மாவிளக்குப் போட்டு வழிபாடு நடைபெற்றது. 19 - 2 - 42 இடையே இரண்டுநாள் செய்தித்தாள் படிக்காதிருந்து இன்று பார்த்தேன். சில நாட்களாகச் சிங்கப்பூரில் ஜப்பானியர்க்கும் ஆங்கிலேயேர்க்கும் கடுமையாகப் போர் நடந்து வந்தது. பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் இரண்டு நாளின் முன்பே ஜப்பானியரிடம் சரணடைந்து சிங்கப்பூரை விட்டுவிட்ட செய்தியும், அத்தீவிற்கே ஜப்பானியர் வேறு பெயர் வைத் திருப்பதும் இன்று அறியலானேன். பிரிட்டனுக்குக் கீழ்த் திசைப் பாதுகாப்பரணாயிருந்த இடம் போய்விட்டது. ஜப்பானியர் மலேயாவில் மேன்மேலும் வெற்றியடைந்து வருகின்றனர். பர்மாவிலும் அடிக்கடி படையெடுக்கின்றனர். இந்தியாவின் பாதுகாப்புக்காக இந்திய அரசாங்கத்தார் செய்யும் ஏற்பாடுகள் எவ்வளவு பயன்படுமோ தெரியவில்லை. கல்கத்தா, சென்னை முதலிய நகரங்கள் பெரும்பாலும் காலியாகிவிட்டன. சீன தேசத்தின் குடியரசுத்தலைவரும், நான்காண்டுகளாக ஜப்பானுடன் எதிர்த்துப் போரிட்டு வரும் வீர மிக்க தளபதியுமாகிய சியாங்கே ஷேக் என்பவர் தமது மனைவியுடனும் சில நாளின் முன் இந்தியா வந்து இந்திய அரசப்பிரதிநிதியுடன் சம்பாஷணை, நடத்திவிட்டு, இந்திய அரசியற்றலைவர்களாகிய பண்டிதர் ஜவர்ஹர்லால் நேரு முதலியவர்களுடன் கலந்து பேசி வருகின்றார். காந்தியடி களும் இவரும் சந்தித்து நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தனரென இன்று பத்திரிக்கைச் செய்தி கூறுகின்றது. என்ன உரையாடல்கள் நிகழ்ந்தனவோ தெரியவில்லை. 21 - 2 - 42 தேவகோட்டையிற்பெருஞ்செல்வராயிருந்த மே. அரு. நா. பெரியமைனர் இராமநாதன் செட்டியாருடைய வண்மையையும் சீலத்தையும் சிவபத்தி மாண்பையும் யாவரும் பாராட்டிக் கூறக்கேட்டு மகிழ்ச்சியடைந்துளேன். சீகாளத்தித் திருப்பணி செய்து கும்பாவிடேகம் செய்வித்தவர். எளியவர்கட்கு இரங்கி ஈகைத் துறையை மேற்கொண்டவர். சிவபூசையிலும் பாரா யணத்திலும் பெரும் பொழுதுகழிப்பவர். உடலின் தூய்மையும் உளத்தூய்மையும் ஒருங்குடையவர். தமது பொருளை யெல்லாம் இழந்திருக்கும் நிலைமையும் அவருக்கு ஏற்பட்டது. அதனைப் பெரியபுராணத்திற் கூறப்பட்ட சிவனடியார்களை இறைவன் சோதித்தாற் போன்ற தொன்றாகவே கொள்ள வேண்டும். செல்வம் குறைந்த பொழுதும் அவரிடத்து யாவரும் அன்பும் மதிப்பு முடையராகவே இருந்து வந்தனர். நான் முதன் முறையாகத் தஞ்சையில் வா. கோ. ராஜாளியார் விடுதியில் அவரைக் கண்டதுண்டு. இரண்டாண்டின் முன் குன்றக்குடியில் சைவ சித்தாந்த மகாசமாஜ ஆண்டு விழா நடந்தபொழுது ‘சிவஞான பாடியம்’ என்பது பற்றிப் பேசினேன். அப்பொழுது கேட்டுக் கொண்டிருந்தார். சென்ற ஆண்டிலே தேவகோட்டை ஹைஸ் கூலிலே நான் பேசிய பொழுதும் வந்திருந்தனர். இரண்டிடத்தும் அவர் என்னுடன் சிறிது உரையாடியதுண்டு. அவரைப் பார்ப்பதே எனக்கு மகிழ்ச்சி விளைத்தது. அப் பெரியார் இந்த விசு ஆண்டு மாசித்திங்கள் 2ம் நாள் (14 - 2 - 42) முதல்நாள் மகாசிவராத்திரியில் திருக்காளத்தியில் நான்கு காலத்திலும் சுவாமி தரிசினம் செய்த பின்னர், காலையில் நீராடிப் பூசைசெய்து கையில் செபமாலை வைத்துக்கொண்டு திருவைந்தெழுத் தோதிக் கொண்டே திருகாளத்தி நாதர் திருவடியை அடைந்தனராம்! என்ன புண்ணியம்! என்ன பெரும் பேறு! இக்காலத்திலும் உண்மைச் சிவனடியார்கள் ஒருவர் இருவர் இருந்து வருகின்றனரென்பதற்கு இது சான்றாகும். சிவபதம் அடைந்தோரின் புதல்வர்களாகிய ராம. நாராயணன், ராம. கண்ணப்பன், டி. ஆர். அருணாசலம் என்பவர்கள் கையொப்பத்துடன் அச்சிட்ட அறிக்கை இன்று வந்தது. 22 - 2 - 42 இன்று கார்த்திகை விரதம் இனிது நிறைவேறியது. நேற்றிரவு திருச்செந்தூரகவலும், இன்று காலை கந்தர்கலி வெண்பாவும், நண்பகல் அநுட்டானத்தின் பொழுது திருமுருகாற்றுப்படையும், இரவு கந்தரநுபூதியும் பாராயணஞ் செய்தேன். இரவு நடுக் காவேரிச் சிவாலயஞ் சென்று சிவபிரான், அம்பிகை, முருகவேள் மூவர்க்கும் அருச்சனைகள் செய்வித்து வழிபட்டு வந்தேன். 24 - 2 - 42 இன்று காலை யாவரும் தஞ்சை வந்து சேர்ந்தோம். இரவே மருத்துவர் வந்து பார்த்துக் குழந்தைக்கு மருந்து கொடுத்துளார். 26 - 2 - 42 குழந்தையின் வயிற்றுப்போக்கு நின்றுவிட்டது. இன்று 1 தேக்கரண்டியளவு ஆரஞ்சுப்பழச்சாறு கொடுக்கப் பெற்றது. நடராஜனிடமிருந்து இன்று வந்த கடிதம் எவ்வளவு பயங்கரமும் கொடுமையுமுள்ள இடத்தில் அவன் வேலை பார்க்கின்றான் என்பதை விளக்குகிறது. கொப்பரை கொப்பரையாகக் கந்தகத் திராவகம் முதலிய கொடிய வஸ்துக்கள் நிறைந்துள்ள கட்டிடத்தில் உடலுறுப்புக்களை யெல்லாம் எவ்வளவு மறைத்துப் பேணினும் திராவகப் புகை உள்நுழைந்து துன்புறுத்துகின்றதென்பதனைப் படித்துப் பார்க்கும் பொழுது மிக்க கவலையுண்டாகின்றது. இறைவன் துணைசெய்தல் வேண்டும். குழந்தை திருஞான வள்ளல் பெயரால் யுத்த நிதிச்சீட்டுக்கு 4-அணா போட்டிருந்ததில் ரூ. 10-விழுந்த தென்றும், அதில் ரூ. 6 நடுக்காவேரி மடத்தில் மண்டகப்படி செய்ய அநுப்பியதாகவும் எழுதியுள்ளான். 27 - 2 - 42 இன்றிரவு தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தேன். சந்தனக் காப்பிட்டிருந்தமையால் கோயிலுக்குத் திரளான மக்கள் வந்திருந்தனர். யான் கால் நடையாகவே சென்று திரும்பி வரும் பொழுது ஐயன் கடைப் பக்கத்தில் ஏதோ கிறுகிறுப்பு என்னை இரண்டு மூன்று முறை சாய்த்தது. நிதானமாக நடந்து வீடு சேர்ந்தேன். இரவில் இருமலும் அதிகம். 4 - 3 - 42 இன்று காலை 10-மணிக்கு மேல் சௌ. ராஜத்தையும் குழந்தை திருஞானவள்ளலையும் செங்கிப்பட்டிக்கு அழைத்துச் சென்றார்கள். சில நாள் இடம் பெயர்ந்து வருதலினாலாவது, குழந்தையின் சிரங்கும், ஓயாத அழுகையும் மாறி நல முண்டாயின் மகிழ்ச்சியாய் இருக்கும். 5 - 3 - 42 உலகனிடமிருந்து கன்றுபோட்ட தலையீற்றுப் பசு விலைக்கு வாங்கியது. இறை வந்து சேர்ந்தது. வீட்டுக்கு எதிரிலுள்ள தேவஸ்தானத்தைச் சார்ந்த காலிநிலத்தில் கொட்டகை போட்டுப் பசுவைக் கட்டிக் கொள்ளக் கேட்டி ருந்ததற்கு மானேஜர் திரு. நரசிம்மன் ஒத்துக் கொண்டிருந்தார். இன்று காலையில் ஆட்கள் வந்து கொட்டகை போடத் தொடங்கு கையில் பச்சாராம் சாஹிப் என்ற ஒரு மனிதன் வந்து அந்த மனைநிலம் தன்னால் வாடகைக்கு வாங்கப் பெற்றுத் தனது அநுபவத்தில் உள்ளதென்று கூறிக் கொட்டகை போடாமல் தடுத்தனன். பின்பு மானேஜரைக் கண்டு, அவர் வந்து ஏற்பாடு செய்ததில் பிற்பகலில் கொட்டகைப் போடப்பெற்றது. 8 - 3 - 42 திருவாங்கூர் அகில இந்திய சித்தவைத்திய சங்கத்தல மாகிய திரு. நித்தியானந்த சுவாமி என்பவர்கள் இராமலிங்கம் என்னும் இளைஞரோடு நேற்றிரவு வந்து சிறிது நேரம் பேசியிருந்து சென்றவர். இன்றும் காலை 10-மணிக்கு மேல் வந்து 12-மணி வரையில் பேசிக் கொண்டிருந்து சென்றனர். சித்தர் நூல்களில் எல்லாவகையான கலைகளும் இருக்கின்றன வென்றும், அத்தகைய சுவடிகள் நூற்றுக்கணக்காகவுள்ளன வென்றும் கூறுகின்றனர். கல்லூரியொன்று ஏற்படுத்திப் பாட முறைத்திட்டங்கள் வகுத்துச் சித்தமருத்துவத் தேர்வுகள் நடத்தி வருகின்றனரெனத் தெரிகிறது. சித்த மருத்துவத்திற்கு முதன்மை ஏற்பட வேண்டுமெனப் பெருமுயற்சி எடுப்பவராகவும் தெரிகிறது. என்னிடம் மிக்க அன்பு காட்டினர். போகும் பொழுது என்னுடைய உரைநடை நூல்களை ஒவ்வொன்று அவரது கல்லூரிக்கு நன்கொடையாகப் பெற்றுச் சென்றனர். மாலையில் க. த. சங்கம் சென்று அங்குவந்திருந்த திரு. விபுலானந்த சுவாமிக ளோடு அளவளாவியிருந்து வந்தேன். வலக்கையிலுள்ள வாயு நோய்க்காக ஈஸ்டு (yeast) என்னும் மாத்திரை மருந்து இன்றிரவு உண்ணத் தொடங்கினேன். 9 - 3 - 42 சிலப்பதிகார உரை இன்று நிறைவெய்தியது. 11 - 11 - 1940ல் தொடக்கஞ் செய்யப் பெற்றவிது திருவருட் கருணையால் இன்று நிறைவேய்தியது. இனி, அச்சிடுவதில் எஞ்சியவற்றிற்குப் பிழை திருத்தஞ் செய்து தருவதும், முகவுரை யெழுதுவதும் செய்ய வேண்டியவை. இவ்வுரை தொடங்கியபின் கட்டுரைத்திரட்டு முதற்பாகம், பாண்பெரியார் மூவர் என்ற உரைநடை நூல்களும், செந்தமிழ்ப் பூம்பொழில் I & II பாடபுத்தகங்களும் அச்சிட்டதும், அகநானூற்றுக்குத் திரு. R. வே. அவர்களுடன் சேர்ந்து பதவுரை எழுதிமுடித்ததும், மணிமேகலையுரை திரு. பார்வதியம்மாள் எழுதிய பதவுரையை வைத்துக் கொண்டு 10-காதைக்கு மேல் விளக்கவுரை யெழுதிச் செம்மை செய்ததும் ஆகியவை நிகழ்ந் துள்ளன. உடல் செம்மையாய் இருந்திருப்பின் இன்னும் மிகுதி யாகவும் வேலை நடந்திருக்கக் கூடும். சிலப்பதிகாரவுரையெழுது வதில் வித்துவான் திரு. ச. சிங்கார வேலுச்சாமி சேதிராயரவர்கள் செய்த உதவி ஒருபொழுதும் மறக்கற்பாலதன்று. 11 - 3 - 42 ரெங்கூனை ஜப்பானியரிடம் விட்டுவிட்டுப் பிரிட்டிஷ் படை பின்வாங்கிவிட்டதாம். 14 - 3 - 42 பேரக்குழந்தை திருஞானவள்ளலுக்கு உடம்பு நலமில்லையென நேற்றுக் கடிதம் வந்தமையால் அழைத்து வருவதென நானே நேற்று மோட்டார் பஸ் வழியாகச் செங்கிபட்டி சென்றேன். குழந்தை நலமுற்றிருந்தமையின் இன்னும் சின்னாள் இருந்து வரட்டு மென்று, இன்று காலை தஞ்சை வந்தேன். 18 - 3 - 42 இன்று காசநோய் மிகவும் என்னைத் துன்புறுத்தியது. இரவில் புலவர் கல்லூரி மாணவர் கலியபெருமாள் என்பவர் துணைக்கு வந்திருந்தார். 20 - 3 - 42 “குமரன்” இசை மலருக்கு நான் எழுதிய “சம்பந்தரும் தமிழிசையும்” என்ற கட்டுரையை இன்று முடித்து அநுப்பினேன். இரண்டு நாளாக நலமில்லாதிருந்தமையின் மயிலத்திற்குச் செல்வது எவ்வாறு எனத் தியங்கினேன். எனினும், இன்று பெரும்பாலும் நலமுற்றமையின் நாளையிரவு புறப்பட்டுச் செல்வதெனத் துணிந்து கடிதம் எழுதிவிட்டேன். 21 - 3 - 42 இன்று கார்த்திகை விரதம் ஒருவாறு இனிது நிறைவேறியது. வழக்கம் போல் கந்தர் கலிவெண்பா, திருமுருகாற்றுப்படை, கந்தரநுபூதி என்பவற்றை முறையே மூன்று வேளையும் பாராயணஞ் செய்தேன். இரவு 1½ மணிக்கே மயிலத்திற்குப் புறப்படலானேன். 22 - 3 - 42 பகல் 12-மணிக்குமேல் மயிலம் போய்ச் சேர்ந்தேன். புகைவண்டி நிலையத்திற்கே கல்லூரி ஆசிரியர் ஒருவர் மடத்து வண்டியுடன் வந்து அழைத்துச் சென்றார். மாலையில், “செவ்வேள்” என்ற பொருள் பற்றிப் பேசினேன். இரவில் முருகப்பிரான் ஆராதனை வழிபாடு மிக இன்பமாயிருந்தது. 23 - 3 - 42 மயிலம் மடாதிபதிகளாகிய சுவாமிகள் அளவற்ற தமிழ்ப் பற்றுடையவர்களாயும், தமிழ் வளர்ச்சியில் பெருமுயற்சியும் ஊக்கமுடையவர்களாயும் இருப்பது அளவற்ற மகிழ்ச்சி யளித்தது. திருக்கோயிற் பணியிலும் தலைசிறந்த அன்புடையவர் களாயுள்ளார்கள். அவர்கள் பக்கத்திருக்க, மயிலம் முருகப் பிரானுக்கு நடைபெற்ற அருச்சனையைப் போல் அவ்வளவு பொறுமையுடனும் அருச்சிப்பதை நான் பார்த்ததில்லை. சுவாமிகள் இன்றும் நான் இருந்து ஏதேனும் பேசவேண்டு மென மிக விரும்பினார்கள். எனினும் நான் இன்று மீளவேண்டிய இன்றியமையாமையைத் தெரிவித்து விடை பெற்றுக் கொண்டு மாலை 2-மணிக்குப் புறப்பட்டேன். இன்று காலையிலும் முருகப்பிரான் ஆராதனையைச் செவ்வனே தரிசிக்க நேர்ந்தது. முருகவேளின் அலங்காரமும் ஆராதனையும் என் உள்ளத்திலே தங்க வேண்டுமென விரும்பினேன். இரவு 12-மணிக்குமேல் தஞ்சை வந்து சேர்ந்தேன். 24 - 3 - 42 புதல்வன் நடராஜன் 1-வாரம் லீவு எடுத்துக் கொண்டு நீலகிரியிலிருந்து இன்று காலை வந்து சேர்ந்தனன். 27 - 3 - 42 தஞ்சையிலிருந்து நேற்றிரவு 7-மணிக்குப் புறப்பட்டு இன்று காலை 7-மணிக்குக் கோவை வந்து உப்பிலிபாளையம் நண்பர் R. V. ராஜுநாயுடுவின் பங்களாவுக்கு வந்து சேர்ந்தேன். பகல் 11-மணிக்கு மேல் பேரூர் தேவஸ்தானம் தருமகர்த்தா V. ஆறுமுகம் பிள்ளையவர்கள் பூ மாலையுடனும், பழங் களுடனும் வந்து கண்டு நிலத்திற் படிந்து வணங்கி முகமன் கூறினார். மாலை 3½ மணிக்குக் குறிப்பிட்ட படி பேரூர் திருக்கோயில் சென்று 5-மணிக்கு மேல் சேக்கிழார் என்னும் பொருள் பற்றிப் பேசினேன். 28 - 3 - 42 இன்று மாலை 4-மணிக்குப் பேரூர் அவைக்குச் சென்றேன், கொங்குமண்டில சைவர் மகாநாடு என்பது எனது தலைமையில் கொண்டாடப் பெற்றது. நால்வர் பெருமை என்பது பற்றிப் பேசினேன். முன்பு நான் நேரிற் பார்த்திராத உயர்திரு. ஈசான சிவாசாரியார், கிருபானந்த வாரியார் என்பவர்களை இம்முறை நேரிற்கண்டு அவர்கள் சொற்பொழிவையும் கேட்டு இன்புற்றேன். முன்பே நான் அறிந்திருந்த அ. கந்தசாமிப் பிள்ளை, வரதநஞ்சைய பிள்ளை, புரிசை முருகேச முதலியார், நாகர்கோயில் ஆறுமுகம் பிள்ளை முதலிய அன்பர்கள் பலரையும் கண்டேன். யாவரும் என்னிடம் அளவற்ற அன்புடையவர்களாக விளங்கினர். இன்று, சி. கே. சு. முதலியாரவர்களும் வந்திருந்தனர். இரவு 10-மணிக்குக் கூட்டம் முடிந்ததும், தருமகருத்தா ஆறுமுகம் பிள்ளையவர்கள் மீட்டும் தேங்காய் பழம் மாலை முதலியன வைத்து விழுந்து வணங்கினர். இவர் வழிச்செலவுக்கு முன்னர் ரூ.20 அநுப்பினதோடு, இன்றும் ரூ. 20 சம்பாவனையாக வைத்தார். இவர் மிக்க கல்வியுடையரல்ல ராயினும் கோயிற் காரியத்தில் சிரத்தையுடையராயும், என்னிடம் அளவற்ற அன்புடையராயும் காணப்படுகின்றனர். பேரூர் அவையில் மகளிர் கூட்டமும் மிகுதியாய் இருந்தது. இரவு 12-மணிக்கு உப்பிலிபாளையம் வந்து சிற்றுண்டியருந்தினேன். சிலப்பதிகாரம் புரூப் கையில் எடுத்து வந்ததை இரண்டு நாளாகத் திருத்தி, எஞ்சியதை இன்றிரவு 12½ மணிக்குத் திருத்தி, நண்பர் ராஜு நாயுடுவிடம் (சென்னைக்கு அநுப்புமாறு) கொடுத்து விட்டு, இரவு 2¼ மணிக்குச் சிங்காநல்லூரில் வண்டியேறினேன். 29 - 3 - 42 காலை 10-மணிக்குத் திருச்சி ஜங்ஷன் வந்து உணவுண்டு, பகல் 1½ மணிக்கு வண்டியேறி மாலை 6-மணிக்குத் தேவ கோட்டை சேர்ந்து மாப்பிள்ளை, புதல்வி, பேரப்பிள்ளைகள் யாவரையும் கண்டு இன்புற்றேன். தேவகோட்டைப் பிரயாணமே சற்றுக் கடுமையாயிருந்தது. 30 - 3 - 42 பகல் 2-மணிக்கு மேல் புறப்பட்டுக் காரைக்குடி வந்து, கம்பன் விழாப் பேரவையில் ‘கம்பன் கவிதையில் ஓவியக் காட்சி’ என்னும் தலைப்பில் இரவு 7-மணிக்கு மேல் பேசினேன். கூட்டம் மிகுதியாக இருந்தது. தலைவராக இருந்த நாகர்கோயில் திரு. குமரேச பிள்ளை நல்ல அறிவுடையராகத் தோற்றினர். T. K. சி. அவர்கள் கம்பராமயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டங்களில் 700-பாட்டுக்களைத் திரட்டி அச்சிட்ட புத்தகம் ஒன்று விற்பனைக்கு வந்திருந்தது. ஏனைய பாட்டுக்களெல்லாம் கம்பன் பாடியனவல்ல வென்று தம் கூர்த்த மதியால் ஆய்ந்து கழித்து விட்டனராம்! என்ன விபரீதம்! செட்டிப்பிள்ளைகளும் வேறு சிலரும் இவரைக் கட்டியழுவதன் காரணம் புலப்பட வில்லை. 31 - 3 - 42 நேற்றிரவு காரைக்குடியில் தங்கிக் காலையிற் புறப்பட்டுப் பகல் 12-மணிக்குத் தஞ்சை வந்தேன். 1 - 4 - 42 சென்னை வித்துவான் தேர்வு விடைத்தாள்களின் கட்டுக்கள் வந்தவற்றை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த பொழுது, அருவங் காட்டிலிருந்து மைந்தன் நடராஜனுக்குத் தந்தி வந்தது. அவன் கேட்டிருந்தபடி மேற்கொண்டு லீவுக்கு உத்தரவு ஆகவில்லை என்றும், உடனே புறப்பட்டு வர வேண்டுமென்றும் எழுதியிருந்தது. இதைப் பார்த்தவுடன் நடராஜன் கலக்க முற்றான். நாளை புறப்பட்டு வருவதாகக் கடிதம் எழுதப்பெற்றது. 2 - 4 - 42 மைந்தன் திரு. நடராஜன் இரவு 7-மணிக்கு நீலகிரிக்குப் புறப்பட்டுச் சென்றுளன். 5 - 4 - 42 விசாகப்பட்டினம், காக்கிநாடா துறைமுகங்களில் ஜப்பானியர் குண்டுவீசியுள்ளனராம். சென்னையில் விமான அபாய அறிவிப்புச் சங்கு ஊதினதில் நகரிலுள்ள எஞ்சிய மக்களனைவரும் புறப்பட்டுவிட்டார்களாம். இந்தியாவுக்கு அபாயம் நெருங்கிக் கொண்டிருந்தது. 8 - 4 - 42 சில நாட்களாக என் உடம்பு ஒருவாறு தேறிவந்தது. இன்று மீட்டும் நோய் கடுமையாகி வாட்டத் தொடங்கியுளது. 12 - 4 - 42 சர். ஸ்டாபோர்டு கிரிப்ஸ் என்பவர் இங்கிலாந்தின் யுத்த மந்திரி சபையின் தலைவர். அவர், இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவதென்ற பார்லிமெண்டு தீர்மானத்தை இந்திய ஜனத் தலைவர்களிடம் தெரிவித்து இந்தியாவின் சம்மதியைப் பெறவும், போரில் இந்தியாவின் பூரண ஒத்துழைப்பைப் பெறவும் சில நாட்களின் முன் இந்தியாவுக்கு வந்து பலரையும் கலந்து பேசி பார்லிமெண்டின் தீர்மானத்தை விளக்கமாகத் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர்கள் அம்முடிபினை ஆராய்ந்து பார்த்து, ஏற்றுக்கொள்ளத்தக்கதன்றென நிராகரித்து விட்டார்களாம். முஸ்லீம் லீகும் தன் கொள்கைக்குப் பொருத்தமின்மையின் ஏற்றுக் கொள்ளவில்லையாம். கிரிப்ஸ் இங்கிலாந்தின்மேல் இனி பழி கூறுவதற்கிடமில்லையென விளக்கமாகப் பேசிவிட்டுப் புறப்பட்டு விட்டனர். என் உடல் நிலை இன்னும் செம்மையுறவில்லை. 13 - 4 - 42 இன்று சித்திரபானு (தமிழ்) ஆண்டின் பிறப்பு. காலை 5-மணிக்கே விழித்துத் தேவார திருவாசகங்கள் படிக்கச் செய்து கேட்டிருந்தேன். வேறு விசேட மொன்றுமில்லை. 16 - 4 - 42 தேவகோட்டையிலிருந்து யாவரும் வந்து சேர்ந்தனர். 19 - 4 - 42 கந்தசாமிக் கவுண்டரிடம் கிரயத்திற்கு வாங்கியிருந்த நிலங்களை தஞ்சாவூர் அருணாசலம் பிள்ளை மகன் ரெங்கைய பிள்ளையிடம் ரூ. 2000 கொடுத்து ஒற்றிமீட்கப் பெற்றது. இராஜம்மாளும் திருஞான வள்ளலும் இன்று செங்கி பட்டி சென்றுள்ளார்கள். நெருநல் கார்த்திகை விரதம் இனிது நிறைவேறியது. 23 - 4 - 42 சென்னை வித்துவான் தேர்வு விடைத்தாள்கள் திருத்தி, மார்க்குகள் இன்று தலைவர்க்கு அநுப்பப்பெற்றன. மாலையில் கணபதி நகர் சென்று திரும்புகையில் பெரியகோயில் சென்று, உற்சவ மூர்த்தியைத் தரிசித்து வந்தேன். சில நாட்களாக வெய்யில் பொறுக்க முடியாதிருந்தது. இன்றிரவு மழை பெய்கிறது. 25 - 4 - 42 பார்வதியம்மாள் முதலியவர்கள் திருச்சினம்பூண்டி சென்றனர். 28 - 2 - 42 சித்திரை வளர்பிறைத் திரயோதசியாகிய இன்று கரந்தையில் திரு. உமாமகேசுவரம் பிள்ளையவர்களின் தலைத்திதிக்குச் சென்று உணவுண்டேன். மாலை 5-மணிக்கு மேல் எனது தலைமையில் அவரது நினைவுக் கூட்டம் நடந்தது. தி. பொ. வேதாசலம் பிள்ளை ‘தமிழவேள் வாழ்க்கை’ என்பது பற்றிப் பேசினர். என் உடல்நிலை மிக மோசமாயிருந்தமையின் நான் மிகுதியாகப் பேசவில்லை. இரவு சுமார் 7-மணிக்கு ஆற்றிற்கு அக்கரையிலுள்ள சங்க விளையாட்டு வெளியில் தமிழவேள் நினைவுக்குறியாக ஆலம் போத்து நடப்பெற்றது. அவ்வீட்டுப் பெரியம்மாளால் அது நடப்பெற்றது. 30 - 4 - 42 மகாமகோபாத்தியாய டாக்டர் வே. சாமிநாதையரவர்கள் 28-4-42 செவ்வாய் மாலை 3¼ மணிக்குத் திருக்கழுக்குன்றத்தி லுள்ள திருவாவடுதுறை மடத்தில் சிவபதமடைந்தனர் என்ற செய்தி இன்றிரவு பத்திரிக்கையால் அறிந்தேன். தமிழுக்கு உபகாரிகளாயுள்ள பெருமக்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர். ஐயரவர்கள் மகாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம்பிள்ளையவர்களிடம் கல்வி பயின்று, கும்ப கோணம் அரசாங்கக் கல்லூரியிலும், சென்னை இராசதானிக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்து தமிழ்ப்புலமை நடத்தியவர். சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை என்ற காப்பியங்களையும், குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், புறநானூறு என்ற சங்கத் தொகை நூல் களையும் அரிதின் ஆராய்ந்து அச்சிட்டுதவியவர். மற்றும் பல தலபுராணங்களும், பிரபந்தங்களும் அவரால் அச்சிடப் பெற்றுள்ளன. சிறிதும் ஆங்கிலக்கல்வியில்லாதவ ராயினும் இவர் நூல்களை அச்சிட்ட முறை ஆங்கிலம் கற்றவர்க்கெல்லாம் வியப்பு விளைக்கும். குறுந்தொகைக்கு விரிவாக உரையெழுதி யுள்ளார். பல நூல்கட்கு அரும்பதவுரை எழுதியுள்ளார். கல்வியநுபவத் தோடு நெடுங்கால உலக அநுபவமும் உடையவர். தமிழ் நாட்டிலுள்ள அரசர்கள், பிரபுக்கள், மடாதிபதிகள் முதலிய எல்லாருடைய பழக்கமும் உதவியும் இவருக் கிருந்தன. தமிழ்ப்புலவர்களில் மகாமகோபாத்தியாயர், டாக்டர் என்ற இரு பட்டமும் பெற்றவர் இவரே. இவருக்கு வயது 86 இருக்கும். இவ்வளவு தளர்ந்த வயதிலும் இடை யறாது நூல்கள் அச்சிடும் முயற்சி யுடையராகவே இருந்து வந்தனர். இவர் வாயிலாகத் தமிழ்மொழி மிகுந்த செம்மையும் வளமும் அடைந்துள்ள தென்பதில் ஐயமில்லை. மக்கள் யாவரிடத்தும் சிற்சில குற்றங்கள் இருத்தல் இயல்பு. இவரும் அப்பொது விதிக்கு விலக்கான வரல்லர். எனினும் அக்குறைகளைக் கருதாமல், இவரால் தமிழ் எவ்வளவு வளர்ச்சியடைந்துளது என்பதனை நோக்கி செந்தமிழ்ப் புரவலர் உமாமகேசனார் உயிர்நீத்த சித்திரை வளர்பிறைத் திரயோதசியி லேயே உயிர்நீத்துளார். இவரது தகுதிக்கு ஆயிரத்திலொரு கூறும் இணையாகாத அரசியலாரவாரக் காரர்கள் உயிர் துறந்திருந்தால் தமிழ்நாடெங்கணும், கடையடைப்புகளும், கூட்டங்களும், ஊர்வலங்களும் முதலிய ஆர்ப்பாட்டம் மிகுந்திருக்கும். தமிழ்நாடு செய்த பாவம் தமிழறிஞரைப் பாராட்டுவாரிலர். 1 - 5 - 42 சில நாட்களாக ஒழுங்காக வேலையொன்றும் நடைபெற வில்லை. சிலப்பதிகார முகவுரைதானும் எழுதி முடிக்கக் கூடவில்லை. இன்று வீட்டுக்கணக்குப் பார்த்ததில் பெரும் பொழுது கழிந்தது. ஆங்கில மாத முதல் நாளில் கையில் இருக்கும் தொகையைக் குறித்துக் கொண்டு, பின் மாத முடியவருகின்ற வரவினையும், பெருஞ் செலவுகளையும் குறித்து வந்து இறுதியில் கணக்குப் பார்த்துக் குறைகின்ற தொகையை ‘வீட்டுச்செலவு’ என்று எழுதுவது வழக்கம். வீட்டுச்செலவு என்பதில் மளிகைச்சாமான்கள், காய்கறி, எண்ணெய், நெய் முதலியவும், வண்ணான் பரிகாரிகூலி, தபால் ஸ்டாம்பு என்பனவும் அடங்கும். இந்த ஏப்ரல் மாதத்தில் வீட்டுச் செலவு ரூ. 130 ஆகக் காணப்பட்டது. இவ்வளவு செலவுக்குக் காரணம் புலப்படாமையின் திகைப்புளதாயிற்று. கணக்கைப் பலமுறை திருப்பிப் பார்த்ததில் பொழுது கழிந்தது. இன்று சித்திரை விசாகம் எனது பிறந்த நாளாகும். 2 - 5 - 42 இன்று காலை திருவையாற்றில் ஏழூர் விழாவிற்கு ஐயாறப்பர் திருவுலாப்புறப்பாடாகும். பல ஆண்டுகள் ஏழூரும் சூழ் வந்து இக்கண்கொள்ளாக் காட்சியை அநுபவித்தது உண்டு. எத்தனையோ அன்பர்களைச் சந்தித்து இன்புறுவதுமுண்டு. குடந்தை டவுன் ஹைஸ்கூலில் பண்டிதராயிருந்த பாலசுப்பிரமணிய பிள்ளையவர்கள் இறக்கும் வரை ஆண்டு தோறும் வந்து கொண்டிருந்தார். உமாமகேசுவரம் பிள்ளையவர்கள் பல ஆண்டுகள் மிகுந்த கிளர்ச்சியுடன் வந்து கொண்டிருந்தனர். டாக்டர் வே. சாமிநாதையரவர்களும் ஓராண்டு ஏழூரும் வந்து இன்புற்றார். காலமானது எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது. யான் திருவையாற்றிற்கும் செல்லாது நின்று விட்டேன். விளையாட்டு. 8 - 5 - 42 நாளை திருச்சியில் நடப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் த. வி. பரீட்சகர் கூட்டத்திற்கு சிதம்பரத்தினின்று வந்த திரு. கா. சு. பிள்ளையவர்களுடன் இரவு 7½ மணி வண்டியிற் சென்று இரவு 10½ மணிக்கு மலைக்கோட்டை சைவசித்தாந்த சபையிற்றங்கினேன். 9 - 5 - 42 இன்று சித்திரைத் சதையம் திருநாவுக்கரசர் திருநாள். கரந்தைத் தமிழ்ச்சங்க ஆண்டுவிழா இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு முறையே இயல் இசை நாடகம் என்னும் பாகுபாட்டுடன் நிகழும். நான் இன்று ‘திருக்குறட் பாயிரவியல்’ என்பது பொருளாகக் குறிப்பிட்டிருந்தது. திருச்சிக்கு வந்து விட்டமையின் சங்க விழாவிற் கலக்கவியலவில்லை. பரீட்சகர் கூட்டம் மாலை 3-மணிக்கு முடிந்தது. இரவு 8-மணி வண்டியில் இருவரும் புறப்பட்டோம். 10-மணிக்குத் தஞ்சை வந்தேன். 10 - 5 - 42 க. த. சங்க விழாவின் இரண்டாம் நாள் இன்று நிகழ்ந்தது. 11 - 5 - 42 க. த. சங்க விழாவிற்குக் குறிப்பிட்டிருந்தவர்களில் முதல் நாள் நான் சொற்பொழிவாற்றக் கூடவில்லை. 2-ம் நாள் குறிப் பிட்டிருந்த தாமரைக் கண்ணியம்மை வரவில்லை. 3-ம் நாளாகிய இன்று தலைவராகக் குறிப்பிட்ட சம்பந்த முதலியாரும், சொற்பொழிவாளராகும் பண்டிதமணி மு. கதி. செட்டியாரும் வந்திலர். விபுலானந்த வடிகள் நேற்றும் இன்றும் தலைமை வகித்தனர். S. S. பாரதியார் ‘நாடகத்தமிழ்’ என்பது பற்றி இன்று பேசினர். நான் ‘நாடகக் காப்பியம்’ என்பது பற்றிப் பேசினேன். என் மனம் இன்னும் அளற்றில் கிடந்து உழல்கின்றது; செம்மையுற்றிலது; என் செய்வேன். 15 - 5 - 42 கார்த்திகை விரதம் இனிது நிறைவேறியது. 18 - 5 - 42 காலையிற் புறப்பட்டுச் செங்கிபட்டி சென்று பேரக் குழந்தையைப் பார்த்துவிட்டு மாலை தஞ்சை மீண்டேன். 20 - 5 - 42 அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சிப் பகுதியை விரிவுபடுத்துவதாகவும், அதற்கு, முன் வேலை செய்து அநுபவமுடையவர்களின் கருத்துக்களைத் தெரிந்து கொள்வது நலமென்று வைஸ்சான்சலர் விரும்புவதாகவும், அது குறித்து என் கருத்துக்களையும், நான் என்ன உதவி செய்யக்கூடு மென்பதையும் தெரிவிக்க வேண்டுமென்றும் ரிஜிஸ்டரார் 11-5-42இல் ஓர் கடிதம் எழுதியிருந்தார். 15-5-42இல் என் கருத்துக்களைத் தெரிவித்து நான் கடிதமெழுதினேன். அக்கடிதத்தைப் பார்த்தபின், என்னை நேரிற் கண்டு பேச விரும்புவதாக 17-5-42ல் எழுதிய கடிதம் வந்தது. அதன் பொருட்டு இன்று காலை 4½ மணிக்குப் புறப்பட்டுச் சிதம்பரம் சென்றேன். ஸ்டேஷனுக்கு ப்யூன் வந்து அழைத்துச் சென்று விருந்தினர் இல்லத்தில் விடுத்தனன். பல்கலைக்கழக விருந்தினனாக இருந்து, இரவு 8-மணிக்கு மேல் தமிழ்ப் பேராசிரியர் திரு. கா. சு. பிள்ளையவர்களுடன் சென்று வைஸ்சான்சலரைக் கண்டு பேசிவிட்டு, இரவு சிதம்பரத்தில் அன்பர் திரு. பூவராகன் (சப்ரிஜிஸ்தார்) நடத்திய விருந்துக்குப் போய் மீட்டும் அண்ணாமலைநகர் வந்து தங்கினேன். சங்ககாலத்து அரசர் முதலிய தமிழ்ப்புரவலர்களின் வரலாற்றை நான் எழுதித் தருவதென்று பேசப்பெற்றது. இதனை விபரமாக நான் தெரிவித்த பின், சிண்டிகேட்டில் வைத்துப் பின்பு தெரிவிப்பதாகக் கூறப்பெற்றேன். 21-5-42 இன்று மாலை திருவையாறு, தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் தலைமை வகிக்க நான் இசைந்திருந்தமையால், வைகறையிலேயே எழுந்து, பல்கலைக்கழக வேலைக்காரனாற் போடப்பட்டிருந்த வெந்நீரிற் குளித்துக் காலை 6-மணிக்கு முன்பே புறப்பட்டுச் சிதம்பரம் கோயிலையடைந்து நடராஜப் பெருமானைத் தரிசித்து, காலை 8-மணிக்கு வண்டியேறிப் பகல் 2-மணிக்குத் தஞ்சை சேர்ந்தேன். மாலை 3½ மணிக்குப் புறப்பட்டுத் திருவையாறு சென்றேன். திருவையாற்றுத் தமிழ்ச்சங்கத்தினர் என்னையும், சொற்பொழி வாளர்களான திரு. R. வே; க. வெ. ஆகியவர் களையும் மாலையிட்டுக் காரில் வைத்து மேளவாத்தியத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இளைஞர்கள் கிளர்ச்சி மிக்கவர்களாக இருந்தனர். கூட்டம் முடிந்து இரவு 10-மணிக்கு வீடுவந்து சேர்ந்தேன். 22 - 5 - 42 திருவனந்தபுரம் பாடபுத்தகக் கமிட்டிக்காரியதரிசிக்குச் செந்தமிழ்ப் பூம்பொழில் பகுதி I-ல் 12 பிரதியும், பகுதி IIல் 12-பிரதியும் இன்று பதிவுப் பார்சலில் அநுப்பப் பெற்றன. இதன் செலவு ரூ. 2-3-0 மாலையில் சில காரியமாகச் சிவாஜி நகர் சென்று திரும்புகையில் பெரிய கோயிலையடைந்து வழிபாடு செய்து மீண்டேன். “அகல விடுமின் விளையாட்டை” என மணிவாசகப் பெருமான் வாயுறை வாழ்த்தருளியிருப்பவும் ஏழையேன் விளையாட்டை விட்டேனில்லை. ஐம்புலன்கள் என்னை ஆட்கொண்டுவிடுகின்றன. 23 - 5 - 42 திருச்சியினின்று கொணர்ந்து பல மாதங்களாகச் செங்கி பட்டியில் வைத்திருந்த பீரோவும், புத்தகக் கட்டுக்களும் இன்று தஞ்சை வந்து சேர்ந்தன. 25 - 5 - 42 கொழும்புவில் உள்ள அரசாங்க பாடபுத்தகக் கழக அமைச்சருக்குக் கபிலர் பிரதி 10-ம், ‘பாண்பெரியார்’ பிரதி 10-ம் இன்று பதிவுக் கவளிகையில் அநுப்பப்பெற்றன. செலவு ரூ. 2-1-0. 27 - 5 - 42 இன்று பகல் வண்டியிற் புறப்பட்டு, இரவு திருச்சினம் பூண்டி சேர்ந்தது. 28 - 5 - 42 இன்று வைகறையில் சிவப்பிரகாசம் முதலியவர்களுடன் புறப்பட்டுச் செங்கரையூர் சென்றேன். பகல் 11 மணியளவில் முள்ளால் அங்காளம்மன் கோயிலில் பாப்பா தையல் நாயகிக்கு முடியெடுக்கப்பெற்றது. 29 - 5 - 42 செங்கரையூரிலிருந்து சில அன்பர்களுடன் பகல் 12-மணியளவிற் புறப்பட்டு லால்குடி சென்று, மாலையில் நிகழ்ந்த திருவள்ளுவர் திருநாட்கொண்டாட்டத்திற்குத் தலைமை வகித்தேன். இருமல் இழைப்பினால் மிக வருந்தினமையின் யாதும் பேசவியலாதென்றெண்ணியிருந்தேன். ஆனால் 1½ மணி கால அளவுக்கு மேல் நான் சோர்வின்றிச் சொற்பொழிவு செய்தது திருவருட் செயலே. இரவு 1½ மணிக்கே தஞ்சைக்குப் புறப்படலானேன். திருச்சி ஜங்ஷன் வரையில் ஒருவர் துணைவந்து வண்டி மாற்றி ஏற்றிவிட்டுச் சென்றனர். மூன்று நாளாகச் சங்கம் மருத்துவரளித்த செந்தூரம் தேனில் குழைத்து உண்டு வருகின்றேன். 31 - 5 - 42 சங்க மருத்துவர் தந்த மருந்துண்ணத் தொடங்கியபின் நோயின் நலிவு மிக்கமையின் அதனை நிறுத்தி, மென்டாலோ வாங்கலாயினேன். 2 - 6 - 42 பேரக்குழந்தைகள் யாவர்க்கும் பழனியில் முடியெடுத்துக் காது குத்துதற் பொருட்டாக, இன்று பகல் வண்டியில் பூதலூர் சென்று, படுகையிலிருந்து வந்த அனைவரோடும் இரவு செங்கோட்டை வண்டியிற் புறப்பட்டுச் சென்று காலை 4-மணிக்குப் பழனி ஸ்டேஷனை அடைந்து, பழனியில் தேவஸ்தான நிருவாக அதிகாரியாயிருக்கும் அன்பர் ச. த. கா. சோமசுந்தரம் பிள்ளையால் அமர்த்தி வைக்கப்பெற்ற கவுடர் மடத்திலே தங்கினோம். 3 - 6 - 42 காலையில் குழந்தைகளுக்கு முடியெடுக்கப்பெற்றது. அபிஷேகத்திற்குத் திட்டம் போட்டுப் பண்டாரத்திடம் பணம் கொடுக்கப் பெற்றது. யாவரும் நீராடிய பின் காலை 9½ மணிக்குப் புறப்பட்டு மலையேறினோம். யான் மட்டும் டோலியில் தூக்கிச் செல்லப் பெற்றேன். இஃது எனக்கு நாணமாகவே இருந்தது. கோயிலை நடந்து வலம் வந்தோம். சோமசுந்தரம் பிள்ளையும் உடன் வந்திருந்தார். 10-மணிக்குத் தொடங்கி எல்லாவித அபிஷேகங்களும் சிறப்பாக நடைபெற்றன. பழனியாண்டவர் தண்டாயுத பாணியின் தரிசனம் மிகுந்த விசேடமாயிருந்தது. எப்பொழுதும் என் உள்ளத்தே அத்திருவுருவக்காட்சி நிலவ வேண்டுமென விரும்புகிறேன். அபிடேக அலங்கார ஆராதனைகள் நிகழ்ந்த பின்பு சந்நிதியிலேயே மலைக்கோட்டையிலிருந்து வந்திருந்த திரு. பரமசிவ ஆச்சாரியரால் குழந்தைகட்குக் காது குத்தப் பெற்றது. கீழே வந்து பகலுணவுண்டு இளைப்பாறியபின், நான் மடத்திலிருந்த பண்டாரத்துடன் கால்நடையாகவே புறப்பட்டு மலையை வலம் வந்தேன். தண்டாயுதபாணியின் திருவருள் இத்துனை உதவி புரிந்தது. இரவு 10-மணிக்கு யாவரும் பழனியிலிருந்து ஊருக்குப் புறட்டோம். 4 - 6 - 42 காலை 5-மணிக்குப் பூதலூர் வந்து, பின் திருச்சினம் பூண்டியை அடைந்தோம். இரண்டுநாட் கண் விழிப்பு அலைச்சலுடன், காலையில் திருக்காட்டுப்பள்ளியில் அன்பர் சோ. பிள்ளை வீட்டில் உண்ட சிற்றுண்டியால் மந்தமும் சேர்ந்து இரவு காய்ச்சல் வந்து விட்டது. பார்வதியம்மாள் முதலியோர் மிகவும் அஞ்சினர். 5 - 6 - 42 திருவருளால் காய்ச்சல் குணமாகிவிட்டது. உறவினர்கள் வந்திருந்தனர். விருந்து நடைபெற்றது. நான் கஞ்சியுண்டிருந்தேன். 7 - 6 - 42 காலையில் உணவுண்டு 10-மணிக்கு மேற்புறப்பட்டு மாலை 3¼ மணிக்குத் தஞ்சையை அடைந்து, மாயாண்டிச்சாமி மடத்தில் நிகழும் சைவசித்தாந்த சங்கத்தின் 12-வது ஆண்டுவிழாவுக்குச் சென்று குறிப்பிட்டபடி தலைமை வகித்து நடத்தலானேன். அன்பர் பலர் சொற்பொழிவாற்றினர். இரவு 9½ மணிக்கு வீடுவந்து சேர்ந்தேன். எல்லாம் திருவருட் செயல். 9 - 6 - 42 நான்காம் பாரப் புத்தகம் அங்கீகரிக்கப்பெற்றதென P. தி. பிள்ளை தெரிவித்ததை நம்பி அதில் 3000 பிரதி அச்சிட்டு, பல இடங்கட்கு அநுப்பிப் பாடம் வைக்க முயற்சி செய்யப் பெற்றது. அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களின் லிஸ்டு வந்ததில் அது காணப்படாமை மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. ரூ. 1200 வரையில் செலவாகியிருக்கும். இதன் பொருட்டு மேற்கொண்ட மெய்ம்முயற்சியும் வருத்தமும் பெரியன. இதுகாறும் இப்படியொன்றும் நிகழ்ந்ததில்லை. ஆண்டவன் திருவுள்ளம் இஃதாயின் யான் செய்வது என்? 10 - 6 - 42 சிவப்பிரகாசத்தின் வேலையின் பொருட்டு அன்பர் திரு. R. வே. பிள்ளையுடன் காலையிற் புறப்பட்டுப் பட்டுக்கோட்டை சென்று, திரு. நாடிமுத்துப் பிள்ளையவர்களைக் கண்டு பேசி மாலையில் தஞ்சை வந்து சேர்ந்தேன். பழனி சென்றது முதல் வேறு மருந்தொன்றும் உண்ணாமல், பழனியாண்டவர் இராக்காலச்சாத்துபடிச் சந்தன உருண்டை மட்டும் உண்டு வருகின்றேன். இன்று உடம்பு அவ்வளவு நல்ல நிலையில் இல்லை. 100ரூ நோட்கள்:- A/5 062109 A/5 102151 A/11 468828 A/18 470373 A/18 751449 A/18 906160 A/19 143366 A/29 397058 A/29 648282 A/19 722760 A/29 735923 A/29 735924 A/19 735925 A/29 779177 A/29 779179 A/19 779180 A/29 763598 A/29 763599 A/19 763600 ஆக நோட் 19. 10ரூ நோட் :- B/80 476887 5ரூ நோட்டுகள் :- D/86 290002 to 290019 ஆக 18. ஆக நோட் 38க்கு ரூ. 2000/- மேலேகண்ட விபரப்படியுள்ள தொகை முழுவதும் 19-4-42ல் தஞ்சை சின்ன அரிசிக்காரத் தெருவிலிருக்கும் அருணாசலம் பிள்ளை மகன் ரெங்கையா பிள்ளையிடம் கொடுத்து நிலம் ஒற்றி திருப்பப் பெற்றது. 1. திருச்சி வானொலியில் ‘இளங்கோவும் இயற்கையும்’ என்பது பற்றிப் பேசுவது 10-10-1941. (7-15 P. M) 2. சென்னை U. T. பரீக்ஷகர் கூட்டம் கரந்தைப் புலவர் கல்லூரியில் 20-9-41. (11 A. M) 3. மயிலத்திற் சொற்பொழிவு 22-3-42 4. பேரூரில் சொற்பொழிவு 27, 28-3-42. 5. காரைக்குடியில் சொற்பொழிவு 30-3-42. 6. திருச்சியில் தேர்வாளர் கூட்டம் 9-5-42. 7. அண்ணாமலை நகரில் வைஸ்சான்சலரைக் கண்டு பேசியது 20-5-42. 8. லால்குடி, திருவள்ளுவர் கழகத்தில் தலைமைதாங்கல் 29-5-42. 9. தஞ்சை, மாயாண்டிச்சுவாமி மடத்தில் ஆண்டு விழாத் தலைமை 7-6-42. 11 - 6 - 42 இன்று உடல் நலங்குன்றியேயுளது. கார்த்திகை விரதம் ஒருவாறு நிறைவேறிற் றென்னலாம். அநுட்டானத்தின் பொழுது திருமுருகாற்றுப்படை பாராயணஞ் செய்த காலை தூக்கம் நிலைக் கொள்ள வில்லை. பலமுறை கண்ணயர்ந்து விட்டேன். 17 - 6 - 42 இன்று கல்யாணசுந்தரம் உயர்நிலைப்பள்ளி திறக்கப் பெற்றது. பேரர்கள் பள்ளியிற் சேர்ந்தார்கள். 19 - 6 - 42 நேற்று நடுக்காவேரி சென்று 25-மூட்டை நெல்விற்றுவிட்டு, ஒருவண்டியில் நெல்லும் வைக்கோலும் ஏற்றிவிட்டு இன்று வந்து சேர்ந்தேன். 20 - 6 - 42 கரந்தை சென்று புலவர் கல்லூரி சம்பந்தமான அலுவல் களைக் கவனித்தேன். 22 - 6 - 42 மாலையிற் பெரியகோயில் சென்று வழிபட்டு வந்தேன். 23 - 6 - 42 4-ம் பாரப்பாட புத்தகம் ஒப்புதல் பெற்றது உண்மையேயென மீட்டும் P. தி. பிள்ளையிடமிருந்து செய்தி வந்தது. எனினும் பட்டியலில் வெளிவராமையின் பாடம் வைக்கப் பலரும் பின் வாங்குதல் இயல்பு. நான் உண்மையை அறிவித்தும், பாடம் வைப்பரென எதிர்பார்த்திருந்த பலருமே அங்ஙனம் செய்யாது விடுத்தனர். இப்பொழுதை முயற்சியாலேயே ஆக்கமும் கேடும் வருதல் இல்லை யென்பதனை நன்கு அறியலானேன். தஞ்சை க. சு. உயர்நிலைப்பள்ளி ஒன்றிலேயே இது பாடமாக இடம் பெற்றுளது. 24 - 6 - 42 என் மருமகள் சௌ. ராஜத்தையும், பேரக்குழந்தை சிர. திருஞானவள்ளலையும் இன்று மாலை 7½ மணி வண்டியில் அருவங்காட்டிற்கு அநுப்பினோம். ராஜத்தின் தமையனும், தாயாரும் அழைத்துச் செல்கின்றனர். நாளை உப்பிலி பாளையத் திற்றங்கிப் பேரூர் தரிசனஞ் செய்து, வெள்ளிக்கிழமை அருவங் காட்டிற்குச் செல்ல ஏற்பாடு செய்துள்ளேன். 25 - 6 - 42 சில நாட்களாகச் செய்தித்தாள் பாராதிருந்து, இன்று பார்த்தேன். லிபியாவில் செருமானியர்க்கு வெற்றி கிடைத்தி ருப்பது தெரிகிறது. செருமனியில் ஹிட்லர் சுபாஷ் சந்திர போஸுக்கு இந்திய சர்வாதிகாரி என்ற பட்டமளித் திருப்ப தாகவும் அதில் ஓர் செய்தி வந்துளது. உலகில் என்னென்ன நிகழுமோ? அறிவார் யார்? என் சிறிய மாப்பிள்ளை திருநாவுக்கரசுச் சேதிராயர்க்கு நாகத்தியில் அவர் தமக்கை மகளை இரண்டாந்தாரமாக மணம் பேசியுள்ள செய்தியை மாப்பிள்ளையின் தமையனாரும் பெண்ணின் தந்தையும் 22-6-42இல் வந்து தெரிவித்து, என்னைக் கொண்டே திருமணத்திற்குத் தேதி குறிப்பிட்டுத் திருமண அழைப்பிதழும் எழுதிவாங்கிச் சென்றனர். என் மாப்பிள்ளை இங்கு வந்தவரிடம் மங்கையர்க்கரசியின் திருமங்கிலியம் சரடு, காலாழிபிலி, முகூர்த்தப்பட்டு, ரவிக்கை என்பனவும், அவரது கை மோதிரம் ஒன்றும், நேற்றுக் கொடுத்தநுப்பினேன். மனநிறைவோடே கொடுத்தநுப்பினேன் என்றாலும் அவர் சென்றபின் மனம் கலங்கியது. 25 - 6 - 42 சிலப்பதிகார முகவுரை முதலியன இன்று எழுதி முற்றுப் பெற்றன. 1940 விக்கிரம - புரட்டாசி, விஜய தசமியில் சிலப்பதிகாரவுரைக்குத் தொடக்கஞ் செய்து, 11 - 11 - 40இல் முறையாக எழுதத் தொடங்கினேன். 9-3-42இல் உரை முற்றுப் பெற்றது. 1 - 7 - 42 இன்று புலவர் கல்லூரி திறக்கப் பெற்றது. பிற்பகல் 3-மணிக்குச் சென்று, கல்லூரியைப் பார்த்து வந்தேன். கட்டுரைத்திரட்டு 2-ம் பதிப்பு 1128 படிகள் இன்று வந்து சேர்ந்தன. 3 - 7 - 42 சிறிய மாப்பிள்ளை திருநாவுக்கரசின் திருமணத்திற்கு இன்று காலை 10-மணிக்குக் குதிரை வண்டியிற் புறப்பட்டுச் சென்று, மாலை 4½ மணிக்கு நாகத்தியினின்றும் மீண்டேன். 6 - 7 - 42 இன்று கரந்தை சென்று, மாலை மணி 3-4ல் புலவர் கல்லூரியில் புறத்திரட்டு பாடம் நடத்தினேன். காலையில் ரெயில்வே நிலையஞ் சென்று பார்சல்கள் அனுப்பிவிட்டு, வருமானவரி ஆபீசில் மில் இலாபத்தொகையின் வரி மீட்சிக்கு மனுக் கொடுத்து வந்தேன். 8 - 7 - 42 கனவு - நேற்றிரவு ஓர் பிராமணர் கடவுளர் படங்கள் வைத்திருக்கும் ஓர் அலமாரிக்கு முன் நின்று ஓர் மலர் மாலையை எனக்குச் சூட்டிச் சென்றதாகக் கனவு கண்டேன். 9 - 7 - 42 நேற்றிரவு முதல் சிறிது இருமல் இழைப்பு ஏற்பட்டுளது. கார்த்திகை விரத நாளாகிய இன்று நண்பகலில் அநுட்டானஞ் செய்து, திருமுருகாற்றுப்படை பாராயணஞ் செய்யும் பொழுது பலமுறை உறக்கம்வந்து துன்புறுத்தியது. இது நரம்புத் தளர்ச்சியாலோ தமோகுண மேலீட்டாலோ நேர்ந்ததாதல் வேண்டும். ஆனால் இன்று காலை மாலை இரவுகளில் கந்தர்கலி வெண்பா, திருச்செந்தூரகவல், கந்தரனுபூதி என்பன முறையே படிக்கப் பெற்றன. 11 - 7 - 42 நேற்று மாலை 2-மணிக்குத் தஞ்சையினின்றும் புறப்பட்டு இரவு 9-மணிக்கு அண்ணாமலை நகர் வந்து விருந்தினர் இல்லில் தங்கினேன். இன்று பகல் 11½ மணிக்கு மேல் தமிழ்ப்பாடப் போர்டின் கூட்டம் நடந்தது. அதற்குவந்திருந்த திருவனந்தை அன்பர் பன்னிருகைப் பெருவேள் முதலியாருடன் மாலை 4½ மணிக்குமேற் புறப்பட்டுச் சிதம்பரஞ் சென்று நடராஜப் பெருமானைத் தரிசித்து வரும்பேறு கிடைத்தது. 12 - 7 - 42 வைகறையில் அண்ணாமலை நகரினின்றும் புறப்பட்டுக் காலை 9-மணிக்குத் தஞ்சை சேர்ந்தேன். 19 - 7 - 42 மன்னார்குடியையடுத்த சேரங்குளம் என்ற ஊரில் ‘கிராம முன்னேற்ற சங்கத்’தின் ஆண்டுவிழாவிற்கு வந்து ஓர் சொற்பொழிவு செய்ய வேண்டுமென அவ்வூரினராகிய சப் இன்ஸ்பெக்டர் திரு. சம்பந்தம்பிள்ளையும், அவர் புதல்வர் சதானந்தம் B. A., B. L, என்பவரும் சில நாட்களின் முன்வந்து கேட்டுக் கொண்டனர். அதற்கு இணங்கினேன். நாலைந்து நாட்களாக இருமல் இழைப்பு இருந்து வந்தமையால் அங்கே செல்வதில் ஐயப்பாடு நிகழ்ந்து கொண்டிருந்தது. நேற்றிரவு சிறிது கஞ்சியுண்டு படுத்தேன். தொந்தரை சிறிது குறைந்திருந் தமையால், இன்று வைகறையிலிலேயே குளித்து விட்டு, திரு. ரெங்கநாதனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றேன். காலை 10-மணிக்குச் சேரங்குளம் அடைந்தோம். உடனே திரு. நாடிமுத்துப்பிள்ளை அவர்கள் தலைமையில் விழாக் கூட்டம் தொடங்கியது. திரு. A. கி. வாண்டையார், வடபாதிமங்கலம் திரு. தியாகராஜ முதலியார் என்பவர்களின் உருவப்படங்கள் தலைவரால் திறந்து வைக்கப் பெற்றன. கள்ளர் குலத்தினரும், பிறருமாகத் திரளான மக்கள் கூடி யிருந்தனர். சமத்துவம் என்னும் பொருள் பற்றி நான் 30 நிமிடம் பேசினேன். நான் இதற்கு வந்ததும், பேசியதும் தெய்வச் செயலேயாகும். பகலில் திரு. சம்பந்தம்பிள்ளை வீட்டில், அனைவர்க்கும் சிறப்பான முறையில் விருந்து நடைபெற்றது. மாலை 3-மணிக்கு வாண்டையாரவர்களுடன் அவர்கள் காரில் புறப்பட்டுப் பூண்டி வந்து சிறிது நேரம் இருந்து, பின்பு மாலை 6-மணிக்குத் தஞ்சை வந்து சேர்ந்தோம். பூண்டிக்கு இதற்கு முன் நான் சென்ற தில்லை. இருவரும் சேர்ந்து வந்தமையால் பல செய்திகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். சிவப்பிரகாசத் திற்குத் திருவையாற்றுப் பண்டிதர் வேலை கிடைக்குமென்ற உறுதி ஏற்பட்டது. 23 - 7 - 42 தேவகோட்டை வேலையை விட்டுவிட்டு, சிவப்பிரகாச மும், பார்வதியம்மாளும் பாப்பாவுடன் கார் வழியாக இன்று பகல் 12-மணிக்குத் தஞ்சை வந்து சேர்ந்தார்கள். 3 - 8 - 42 இன்று பிற்பகல் வாழ்க்கைத் துணைவிக்குத் தேள் கொட்டித் துன்புறுத்தியது. ஆங்கில மருத்துவசாலை சென்று ஊசிபோட்டு வந்தது. 5 - 8 - 42 மூன்று வாரத்தின் முன்றொட்டே என் உடல் நலமில்லா திருந்து வருகிறது.இன்று கார்த்திகை விரதம் இனிது நிகழ்ந்த தென்றே கூற வேண்டும். பகலில் திருமுருகாற்றுப்படை பாராயணஞ் செய்யும் பொழுது சிறிது தூக்கம் இருந்தது. ஒவ்வொருநாளும் இரவில் ம. அரங்கநாதன் அருட்பாபடிக்கக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதும் பலமுறை துயின்று விடுகிறேன். 9 - 8 - 42 மைந்தன் நடராஜன் 3 - 8 - 42 முதல் காய்ச்சலால் படுக்கையில் இருப்பதாகவும், கொஞ்சம் குணமடைந்து வருவதாகவும் இன்று கடிதம் வந்தது. நெடுந்தூரத்தில் இப்படி இருந்து கொண்டிருப்பது எங்கட்கு மிகுந்த கவலையை விளைக்கிறது. 10 - 8 - 42 நேற்றுக்காலை 5-6 மணிக்குப் பம்பாயில் காங்கிரஸ் காரியக் கமிட்டி அங்கத்தினர் அனைவரும் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்களாம். ஒவ்வொரு மாகாணத்திலும் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனராம். மகாத்மா காந்தியைக் கைது செய்து ஆகாகானுடைய சிறந்த பங்களாவில் வைத்துள்ளார்களாம். இந்தியாவினும் என்ன குழப்பங்களும் கலகங்களும் உண்டாகுமோ தெரியவில்லை. மாப்பிள்ளை T. சிவப்பிரகாசச் சேதிராயரைத் திருவையாற்று அரசர் கல்லூரியில் ஆசிரியராக நியமனஞ் செய்த உத்தரவு இன்றிரவு வந்தது. இதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிக்கு அளவில்லை. திரு. அ. கி. வாண்டையாரவர்கள் இதற்கு உதவி செய்வதில் உறுதியாய் இருந்தார்கள். ஒரு திங்களாக ஒவ்வொரு நாளும் உத்தரவை எதிர்பார்த்திருந்தது. இன்று வந்து சேர்ந்ததில் ஒரு கவலை நீங்கிற்று. எல்லாம் இறைவனருளே. 13 - 8 - 42 காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின் இரண்டு மூன்று நாட்களாக எங்கும் குழப்பமும் கலவரமும் ஏற்பட்டுள்ளமை தெரிகிறது. சிற்சில இடங்களில் போலீஸ், இராணுவத்தினர்கள் துப்பாக்கியாற் சுட்டதில் பலர் காயமடைந்தும் இறந்தும் இருக்கின்றனராம். திருவையாற்றிற் கூட இன்று கும்பல் மிகுந்து, தந்திக் கம்பியை அறுத்தும், போலீசாரை அடித்தும், முன்சீப் கோர்ட்டினுள்ளும், சப்ரிஜிஸ்தரார், ஆபீசினுள்ளும் புகுந்து சாமான்களையும், ஆதரவு களையும் எடுத்து ஆற்றில் எறிந்தும், அக்கிரமஞ் செய்தார்களாம். எங்கும் காலிகளுக்கு இடமேற்பட்டு விட்டது. இன்று, சிவப்பிரகாசம், பார்வதியம்மாள் திருவை யாற்றுக்குக் குடிப்போனார்கள். காலை 10-மணியளவில் திருவை யாற்றுக்குக் கொண்டு போகும் போது சாமான்கள் பெரிய வண்டியில் ஏற்றியிருந்ததைப் பார்க்கும் பொருட்டு வண்டியின் பின் புறத்தில் போட்டிருந்த ஸ்டூலின் மீது ஏறிப் பார்த்து, இறங்கும் பொழுது அது நொடித்துக் கீழே விழுந்து விட்டேன். வலது விலாவில் கீறலும், இடது கையில் அடியும் ஏற்பட்டன. மூக்குக் கண்ணாடி அடிபட்டுப் பிரேம் கழன்று விட்டது. புதிய பிரேம் (ரூ. 2-8-0) இரவில் போடலாயினமையின் பகல் முழுதும் புத்தகம் முதலிய ஒன்றும் பார்க்கமுடியாதிருந்து, இரவில் இதனை எழுதலானேன். திருவையாற்றுக்குப் பயணம் புறப்படும் தறுவாயில் நான் இப்படி விழுந்தது கலகத்தை விளைப் பதாயிற்று. திருவையாற்றுக்குச் சென்றவர்களும் குறித்த வீட்டில் உடன்குடிப்புக முடியாமல் சாமான்களைச் சத்திரத்தில் போட்டுவிட்டு இரவில் வீட்டில் தங்கும் படி நேரிட்டதாம். கோட்கள் தம் வினையை ஆற்றிவிடுகின்றன. 14 - 8 - 42 இன்று தஞ்சையிலும் கடையடைப்பு நிகழ்ந்தது. மாலையில் திலகர் மைதானத்தில் நடந்த பெருங்கூட்டத்தில் சில காலிகள் போலீசார் மீது கல்லெறிந்ததாயும், அதனால் போலீசார் துப்பாக்கி முனையால் குத்தி அவிழ்த்துக் கூட்டத்தைக் கலைத் ததாகவும், பலருக்குக் காயம் ஏற்பட்டு ஆஸ்பிடலுக்குக் கொண்டு போகப்பட்டதாகவும் தெரிகிறது. 21 - 8 - 42 இன்று பகல் 1-30 மணிக்குப் புறப்பட்டுத் திருச்சி சென்று இரவு 7-15க்கு மேல் வானொலியில் ‘கலித்தொகை’ என்பது பற்றிப் பேசிவிட்டு, மெயிலில் திரும்பினேன். உடல் நலமில்லாமையால் நன்கு பேசமுடியாதிருந்தது. மழை பெய்து கொண்டேயிருந்தது. எக்காரணத்தினாலோ மெயில் திருச்சி ஜங்ஷனில் நெடுநேரம் தங்கியிருந்து புறப்பட்டது. இரவு 11-30க்குத் தஞ்சை வந்தது. இரவு 1-மணிக்கு மேலேயே துயில ஆரம்பித்தேன். 25 - 8 - 42 இருமல் தொந்தரை நாளுக்கு நாள் மிகுந்து வருவதாயிற்று. சில நாட்களாகச் சில அடி நடப்பதற்கும் கூடவில்லை. பழைய மருந்துகள் பயனளிக்கவில்லை. இன்று, ‘ராஜாராம் மெடிகல் ஷாப்’ சொந்தக் காரராகிய டாக்டர் சங்கரராவ் என்பவரைக் கண்டு, அவர் குறித்துக் கொடுத்த ‘ரிகால்வ்’ என்னும் மருந்தை வாங்கி உண்ணத் தொடங்கியுள்ளேன். மூக்கிற்கு ஓர் எண்ணெய் கொடுத்துள்ளார். 30 - 8 - 42 நாலைந்து நாட்களாகப் புதிய மருந்துண்பதில் உடம்பு ஓரளவு நலம்பெற்று வருகிறது. இனிய நண்பர் திரு. அ. மு. ச. அவர்கள் நேற்றுப் பிற்பகல் இங்கு வந்து தங்கி இன்று காலை ஊருக்குப் போயினர். நேற்றிரவு அவர்கள் கனிந்த உள்ளத்துடன் திருவாசகத்தில் 3-பதிகங்கள் பாடக் கேட்டிருந்தேன். 1 - 9 - 42 அரசாங்கத்தாருடைய கட்டளையால் இன்று முதல் இந்தியாவில் மணிக்கணக்கு மாறுகின்றது. நேற்று முடிய 1-மணி என்றிருந்த காலவளவே இன்று 2-மணியெனப்படும். தஞ்சை சாசுவத நிதியில் பூதலூரிலுள்ள என் மைத்துனி மகன் கடனுக்காக ரூ. 138 செலுத்திவந்தேன். இது வரை ரூபாய் 250வரையில் அவர்கட்கு நான் இனாமாக வழங்கியுள்ளேன். இன்று பகல் கடிதங்கள் எழுதப்பெற்றன. அவற்று ளொன்று புதுவை P. M. இராஜமாணிக்கம் பிள்ளை இயற்றிய அன்புவிடுதூது என்னும் நூலைப் பற்றிய பாராட்டுரை. அவரது செய்யுளியற்றுந்திறமும், அன்பும் மிகவும் பாராட்டற்குரியன. இன்று கார்த்திகை விரதம் இனிது நிறைவேறியது. 2 - 9 - 42 சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து 2-ஆம் ஆண்டு வித்துவான் தேர்வாளராகக் குறித்த கடிதம் இன்று வந்தது. 3 - 9 - 42 நேற்றிரவு 2-மணிவரையில் தூக்கம் வரவில்லை. நடராஜனிட மிருந்து இன்று வந்த கடிதம் கவலை விளைக்கின்றது. விலை வாசிகள் மிக ஏறிவிட்டமையால் சம்பள உயர்வு வேண்டி 28-8-42 முதல் தொழிலாளிகள் யாவரும் வேலை நிறுத்தம் செய்திருப்பதாகவும், வேலை நிறுத்தம் அமைதியாகவே நடைபெறு கிறதென்றும், இனி என்ன நடக்குமோ தெரியவில்லை யென்றும் எழுதிவிட்டு, தன் செலவுக்கு ரூ. 25 உடனே அனுப்பும்படி எழுதியுள்ளான். 5 - 9 - 42 அருவருங்காட்டில் தொழிலாளிகட்குச் சம்பளவுயர்வு தருவதாகச் சொல்லிச் சமரசம் ஏற்பட்டுவிட்டதென்று கடிதம் வந்தது. 6 - 9 - 42 தஞ்சை கீழ வீதியிலுள்ள டாக்டர் P. R. நடராஜையர் என்பவர் கனகராஜையர் இயற்றிய பெரிய நாயகி பிள்ளைத் தமிழ் என்னும் நூலை என்னிடம் கொடுப்பதற்கு இன்று காலை வந்தார். அவர் அமெரிக்க முறையான ‘மின்சார வைத்தியம்’ தேர்ந்திருப்பதாகவும், எனக்கு அம்முறை வைத்தியம் செய்யலாம் எனவும் கூறினர். மருந்துகளெல்லாம் பயனின்றி யொழிதலால், இம்முறையையேனும் பார்க்கலாமென இணங்கினேன். மாலை 6-மணிக்கு மேல் சென்றேன். கைபார்த்து, மருந்து மாத்திரம் கொடுத்துவிட்டு, நாளைக் காலையிலிருந்து மின் வைத்தியம் செய்யலாமென்றார். 7 - 9 - 42 இன்று காலை மின்வைத்தியம் செய்யப் பெற்றது. இன்று முழுதும் நோயின் தொந்தரை மிகுதியாகவே இருந்தது. 10 - 9 - 42 மின்வைத்தியத்தில் 2-நாள் சிறிது குணம் போல் தெரிந்தது. இன்று மாலை சளி மிகுதியாக ஏற்பட்டது. அதனோடு, (இன்று காலையில் மருத்துவஞ் செய்யாது) மாலையிலே செய்யப் பெற்றது. இரவெல்லாம் தொண்டையும் கட்டிக் கொண்டு துன்பம் பெரிதாயிற்று. 12 - 9 - 42 நேற்று மின் மருத்துவஞ் செய்யாது நிறுத்திவிட்டு, மருந்து மாத்திரம் வாங்கிக்கொண்டேன். 3-நாளாக நோய் மிகவும் கடுமையாயிருக்கிறது. இன்று மாலையில் அன்பர் திரு. அ. மு. ச. அவர்கள் வந்து சேர்ந்தமையின் இரவில் திருமுறைப் பாடல்களை அவர்கள் பாடக் கேட்டு இன்புற்றேன். 13 - 9 - 42 இன்று காலையில் தமிழவேள் அவர்கள் மைந்தன் சிங்கார வேல் திருமணமும், சி. தா. சோமசுந்தரத்தின் திருமணமும், கரந்தையில் நிகழ்ந்தன. குடும்பத்துடன் வண்டியில் ஒருவாறு சென்று திரும்பினேன். சிறிது காய்ச்சல் ஏற்பட்டுக் குமட்டல் மிகுதியாயிற்று. காய்ச்சலுக்குக் கியாழம் போட்டுண்டு பார்லிக் கஞ்சியே உண்டிருந்தேன். 14 - 9 - 42 இன்று பிள்ளையார் சதுர்த்தி. என்னால் உடம்பு குளிக்கவும் கூடவில்லை. எனினும் விநாயகர் பூசை செவ்வனே நடைபெற்றது. இன்று விண்ணமங்கலத்தில் நடக்கும் என் மைத்துனி மகள் கல்யாணத்திற்கு என் மனைவியும் போகவில்லை. திட்டையி லிருந்து ஓர் பார்ப்பன மருத்துவர் இன்று மாலை கரந்தையன்பர் களால் அனுப்பப்பெற்று வந்து பார்த்தனர். 18 - 9 - 42 திட்டை மருத்துவர் கொடுத்த வேப்பங்கொட்டைத் தயிலம் நெஞ்சு முதலிய இடங்களில் பூசிவைத்திருந்து இரண்டு மூன்று நாளாக ஒத்தடம் கொடுக்கப்பெற்றது. இன்று அதனையே தேய்த்து முழுகினேன். சிறிது குணம் தெரிகிறது. 20 - 9 - 42 நடுக்காவேரியில் வயல் அறுவடைக்காக நேற்றுப் பகலிற் புறப்பட்டுச் சென்று இன்று இரவு தஞ்சை வந்து சேர்ந்தேன். 50 படி மூட்டை வாளியளவாக விலை ரூ. 6-6-0 என்று விலைக்குப் போடப் பெற்றது. எனக்குத் தெரிந்து கார் நெல் இவ்வளவு விலை விற்றதில்லை. 23 - 9 - 42 திட்டை மருத்துவர் 6-நாள் தொடர்ந்து உண்ண வேண்டு மென்று கொடுத்த எண்ணெய் இன்று காலை உண்டேன். 25 - 9 - 42 மூன்று நாளாக எண்ணெயுண்பதில் குணமுண்டாகிறது. மலத்துடன் கபம் கழிகிறது. இருமல் இல்லை. குளிர்ந்த நீரிலேயே தலை முழுக வேண்டுமென்று மருத்துவர் வற்புறுத்தி வந்தார். இதற்கு முன் எந்த வைத்தியரும் இங்ஙனம் துணிவாகச் சொன்னதில்லை. சென்ற 2-நாட்களில் இளஞ்சூடான வெந்நீரில் முழுகினேன். இன்று பம்புக் குழாயைத் திறந்து விட்டுத் தண்ணீரில் முழுகிவிட்டேன். நீர்க்கோவை ஏற்படவில்லை. நான் தண்ணீரிற் குளித்து 15-ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம். தந்தை, தாயார்கள் கிரியை செய்த காலத்தும் வெந்நீர் போட்டே முழுகினேன். எல்லாம் சிவபெருமான் திருவருளே. 28 - 9 - 42 இன்றுமாலை பெரிய கோயிலில் கிருபானந்தவாரி சொற் பொழிவு என்று கேள்வியுற்றேன். நாடோறும் 1-மைல் நடக்க வேண்டுமென்று வைத்தியரும் வற்புறுத்தினமையால் அதற்கு நடந்து சென்று 1-மணி நேரம் வரை கேட்டிருந்து நடந்து திரும்பினேன். சொற்பொழிவைக் கேட்க ஆடவரும் மகளிருமாக ஏராள மானவர்கள் கூடியிருந்தனர். இத்தகைய சொற்பொழிவுகளால் பொதுமக்கட்குப் பெரும்பயன் உண்டாகும். சிறப்பாகக் கடவுள் பக்தி ஏற்படும். 29 - 9 - 42 கார்த்திகை விரதம் இனிது நிறைவேறியது. 30 - 9 - 42 ஆறுநாட்களாகத் தண்ணீரிலேயே தலைமுழுகி வருகின்றேன். நோய் அடியுடன் போகவில்லை என்றாலும், சிறிது தணிந்துள தென்று தோன்றுகிறது. இன்று காலை, சென்னை தமிழ் வித்துவான் பரீட்சகர் கூட்டம் கரந்தைப் புலவர் கல்லூரியில் நடந்தது. அதற்கு நான் காலையிற் சென்று, பகலுணவை அங்கேயே உண்டு மாலை வீடு சேர்ந்தேன். 1 - 10 - 42 இன்று பகல் தைலம் தேய்த்துத் தண்ணீரில் முழுகினேன். புறத்தே சளி இல்லாமல் நெஞ்சிலே கபம் கட்டிக் கொண்டு இழுக்கத் தொடங்கிவிட்டது. இரவில் மிகவும் துன்புற்றேன். 5 - 10 - 42 3-ம் தேதி முதல் வெந்நீரிலே முழுகிவிட்டு, வைத்தியர் கொடுத்த இலேகியங்களை உண்டுவருவதில் சிறிது குண முண்டாகி வருகிறது. 9 - 10 - 42 நேற்று மாலையிற் புறப்பட்டுத் திருவையாறு வந்து சேர்ந்தேன். கோயிலுக்கணிமையிலிருந்தும் நடத்தற் கஞ்சி நேற்றிரவு கோயிலுக்குப் போகவில்லை. இன்று காலை காவிரியிற் சென்று முழுகிவிட்டு, திருக்கோயில் சென்று ஐயாறப்பரையும், அறம் வளர்த்த அன்னையையும் அருச்சித்து வழிபட்டு வந்தேன். மூச்சுத் திணறுதலால் நீரில் முழுகுவது வருத்தமாயிருந்தது. எவ்வாறேனும், மாளய பக்ஷ அமாவாசையும் வெள்ளிக் கிழமையுமாகிய இன்று துணிவுடன் காவிரியில் நீராடியதும் அம்மையப்பரை வழிபட்டதும் மனத்திற்கு மகிழ்ச்சி விளைத்தன. சிவப்பிரகாசம் தன் தந்தையைக் குறித்து இன்று திதி நடத்தினார். யாவருமாக மாலையில் தஞ்சை வந்து சேர்ந்தோம். 16 - 10 - 42 நோய் புதிய மருந்துகள் ஒன்றாலும் தணியாமல் மேலு மேலும் வருத்துகின்றது. உடம்பும் மிகுதியாக இளைத்து விட்டது. சென்னை மெண்டாகோ வருவித்து இன்று உண்ணத் தொடங்கினேன். ‘டெப் - கில்லர்’ என்ற மருந்து வருவித்தனை இன்று சிதம்பரநாதன் காதுக்கு விடத் தொடங்கியுளது. 17 - 10 - 42 க. த. சங்கத்தில் கலைமகள் விழா பத்துப்பாட்டுச் சொற்பொழிவு வாயிலாக நடைபெற்று வருகிறது. உடல் நலமில்லாமையால் சென்ற ஒரு வாரத்தில் ஒருநாளேனும் நான் போகவில்லை. இன்று குறிஞ்சிப் பாட்டைப் பற்றி நான் பேசுவதாகக் குறிப்பிட்டிருந்தது. இன்றும் போக முடியுமோ, பேச முடியுமோ என்ற ஐயம் இருந்தது. எப்படியோ இன்று சென்று 1-மணிநேரம் பேசிவிட்டு வந்தேன். நாற்காலியில் உட்கார்ந்தபடியே பேசினேன். யான் பேசுவதைக் கேட்கப் பார்வதியம்மாளும் வந்திருந்தது. 18 - 10 - 42 இன்று வீட்டில் நாமகள் பூசை இனிது நிறைவேறியது. 20 - 10 - 42 தஞ்சைப் பெரியகோயில் எடுப்பித்த இராஜராஜ சோழருடைய சதய விழாவானது இன்று மாலை பெரிய கோயிலில் நடைபெற்றது. கமிஷனர் சி. எம். இராமச்சந்திரஞ் செட்டியார் தலைமை வகித்தார். ம. பாலசுப்பிரமணிய முதலியாரும், எல். கே. துளசிராமும் சொற்பொழிவு செய்தார்கள். நான் போய் வந்தேன். பாப்பா தையல் நாயகிக்கும், சம்பந்தனுக்கும் இன்று வைத்தீசுவரன் கோயிலில் முடியெடுத்தது. பார்வதியம்மாளும் சிவப்பிரகாசமும் அழைத்துப் போய் வழிபாடு செய்து, முடியெடுப்பித்துக் கொணர்ந்தார்கள். 26 - 10 - 42 யாழ்ப்பாணத்தவராகிய திக்கம், சி. செல்லையா பிள்ளை என்பவர் இன்று காலை வீட்டிற்கு வந்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிக் கொண்டிருந்தோம். கல்வியறிவோடு, சீலமும், அன்பும் உடையவராகத் தோன்றினர். சில நாட்களாகவே நோயின் தொந்தரை மிகுந்திருப்பினும் இன்று கார்த்திகை விரதம் இனிது நிகழ்ந்தது. வழக்கம் போல் பாராயணங்கள் செய்தேன். 29 - 10 - 42 செந்தமிழ்ப் பத்திரிகையை யான் வருவியாது நிறுத்தி இருபதாண்டின் மேலாகிறது. இடையே இரண்டொரு சமயங் களில் அப்பத்திரிகை பெற்றுப் பார்த்தன்றி, மிகுதியாகவும் முறையாகவும் அது பார்க்கப் படாதிருந்தது. அதனைப் பார்க்க வேண்டுமென்னும் விருப்பமுண்டானமையின் சிலநாளின் முன் க. த. சங்கத்திலிருந்து அதன் 3-ஆவது தொகுதியை வருவித்துப் படித்தேன். இரண்டு நாட்களாக 3வது தொகுதியைப் படித்தேன். ‘வான்மீகரும் தமிழும்’ என்ற தலைப்பில் பத்திராசிரியர் திரு. நாராயணையங்கார் எழுதியிருந்த கட்டுரைகள் மிகுந்த ஆராய்ச்சியுடன் கூடி இன்பம் விளைத்தன. இன்னும் இரவில் துயில் வருவதில்லை யென்றாலும், இரண்டு மூன்று நாட்களாக உடல் சிறிது தேறி வருகிறது. மணிமேகலை அச்சுவேலை தொடங்கி முதன் முறையாக இன்று ‘புரூப்’ வந்துளது. 30 - 10 - 42 மைந்தன் நடராஜன் அருவங்காட்டிலுள்ள ஒரு மாந்திரிகர் அஞ்சனம் போட்டுப் பார்த்து எனக்குச் சனி தோஷம் இருப்பதைத் தெரிவித்து, அதற்கு ஒரு தாயற்று போட்டுக் கொண்டால், தொந்தரை குறையுமென்றார் என்று சின்னாளின், முன் எழுதியிருந்தனன். பொன்னால் தாயிற்றுச் செய்து கழுத்திலோ, கையிலோ தரித்துக் கொள்ள விருப்பமில்லாமையைத் தெரிவித்தேன். இடுப்பிலே தரித்துக் கொள்ளும் படி வெள்ளியால் ஒன்று செய்வித்து அனுப்பியது இன்று கிடைத்தது. இடுப்பிலே தரித்துக் கொண்டேன். 6 - 11 - 42 என் உடல் இடையே சிறிது தேறி வந்தது, நீடிக்கவில்லை. மீட்டும் நலிகின்றது. சிவப்பிரகாசம் இன்று மாலை திருச்சி வானொலியில் பேசியதைக் கேட்டேன். 7 - 11 - 42 தீபாவளிக்குப் பார்வதியம்மாள் முதலானோரும் வந்திருந்தனர். வைகறையில் நீராடினோம். காலையில் பலகாரம் உண்பதற்குப் புலவர் கல்லூரி மாணவர்கள் 30பேர் வரை வந்திருந்தது மகிழ்ச்சியளிப்பதாயிற்று. 10 - 11 - 42 காங்கேயன் பட்டி ஏரி முதலிய நிலங்களைச் சர்க்கார் ஏலம் போடுவதாக அறிந்து, வசதியாகக் கிடைப்பின் ஏதேனும் ஏலமெடுக்காலமென எண்ணி இன்று காலை புறப்பட்டு ஐயனாபுரம் ஸ்டேஷன் சென்றேன். டிப்டிதாசில்தார் அங்கேயே ஏலம் நடத்தினர். ஏலமெடுக்க நிலங்களும் நிலைமையும் பொருத்தமாயில்லை. ஸ்டேஷன் பக்கம் கடை வைத்திருக்கும் பழைய நண்பர் திரு. சோமசுந்தரச் சோழங்க தேவர் வீட்டில் பகலுணவுண்டு, தஞ்சை வந்து சேர்ந்தேன். 13 - 11 - 42 இன்று பார்வதியம்மாள் திருச்சி வானொலியில் ‘திருவாரூர்ப் பள்ளு’ என்பது பற்றிப் பேசியது. பேசிய முறை நன்றாயிருந்தது. 14 - 11 - 42 இன்று சித்தர் குடியில் சர்க்கார் புறம்போக்கு நிலங்கள் ஏலம் போடுவதறிந்து சென்றேன். அங்குள்ள உறவினர்கள் நான் ஏலமெடுப்பதில் அக்கறை கொண்டு முயன்றார்கள். புது ஆற்றுக்குத் தென்புறம் வயிரப் பெருமாள் பட்டிக்கு அணிமையில் 7½ ஏக்கருக்கு மிகுதியான நிலம் ரூ. 1700ம் சில்லறையும் ஆன தொகைக்கு ஏல மெடுக்கப் பெற்றது. சித்தர் குடியில் பகலுணவுண்டு, பகல் 3½ மணிக்குத் தஞ்சை வந்து சேர்ந்தேன். இரவு 7½ மணி வண்டியில் செல்வன் அரங்க நாதனுடன் புறப்பட்டுச் சிக்கலுக்குச் சென்றேன். சிக்கல் கந்தர் சஷ்டி விழாவில் தெய்வயானையார், திருமணம் சிறப்பாக நடந்தது. பிரமாண்டமான மண்டபத்திலே பெருங்கூட்டம் கூடியிருந்தது. ஏராளமான மின் விளக்குகள் ஒளிர்ந்தன. பரத நாட்டியமும் நடந்தது. 15 - 11 - 42 இன்று இரண்டு வேளையும் எனது தலைமையில் சொற் பொழிவுகள் நிகழ்ந்தன. தக்க அறிவுடையவர்கள் சொற்பொழிவு செய்தார்கள். அவர்களிற் சிலர் என்னை மிகவும் பாராட்டினார்கள். இரவு 10-மணிக்குத் திருக்கோயில் சென்று, சிவபிரான், அம்மை, சிங்கார வேலர், திருமால் ஆகிய பெருந்தெய்வங்களை வழிபட்டு வந்தேன். இரவில் நெடுநேரம் புரிசை முருகேச முதலியார், வச்சிரவேலு முதலியார் ஆகிய அன்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். சென்ற ஆண்டு ஒத்துக் கொண்டும் போக முடியாது நின்று விட்டேன். இம்முறை திருவருள் கூட்டுவித்தது. 16 - 11 - 42 காலையிற் புறப்பட்டு 10½ மணிக்குத் தஞ்சை வந்து சேர்ந்தோம். வீட்டிலே திருநாவுக்கரசு காய்ச்சலோடு படுத்திருக்கிறான். 19 - 11 - 42 திருநாவுக்கரசுக்குக் காய்ச்சல் விடாது 103.2 டிகிரி இருந்து கொண்டிருக்கிறது. பித்தவாத சுரம் என்றும், 2-வாரம் வரையில் சுரம் கடுமையாகவே இருக்குமென்றும் வைத்தியர் கூறுகிறார். எனக்கு இரண்டு மூன்று நாட்களாக நீர்க்கோவை அளவு கடந்திருக்கிறது. நா. கி. சுப்பிரமணிய ஐயர் நிலம் ஒற்றி வாங்கியிருந்தது 5-வருடக் கெடுவுள்ளதாயினும் 2-வருடத்திலேயே அவர் திருப்பிக் கொள்ள விரும்பினதால் தொகையைப் பெற்றுக் கொண்டு, அடுத்த சித்திரை முதல் நிலத்தை அவர் அநுபவித்துக் கொள்ளும்படி பத்திரத்தை ரத்து செய்து கொடுத்துவிட்டேன். 22 - 11 - 42 நீர்க்கோவையால் தலைக்கனமாயிருந்தமையால் நேற்றுத் தலை முழுகவில்லை. இன்று திருக்கார்த்திகையாதலின், எப்படியும் முழுக வேண்டுமென எண்ணி ஓமந்தேய்த்து முழுகினேன். இரவில் சிறிது காய்ச்சல் உண்டாகிவிட்டது. இவ்வாறு அடிக்கடி நேர்கிறது. இன்று திருமுருகாற்றுப் படையை மட்டும் ஒருவாறு பாராயணஞ் செய்தேன். திரு. அ. வரதநஞ்சைய பிள்ளையவர்கள் இன்று காலை வீட்டிற்கு வந்து சிறிது நேரம் அளவளாவியிருந்து சென்றார்கள். 2 - 12 - 42 நடராஜா ராஜத்துடனும் குழந்தை திருஞான வள்ளலுடனும் இன்று காலை தஞ்சை வந்து சேர்ந்தனன். மணிமேகலை உரை இரண்டாவது பத்துக்காதை இன்று அனுப்பலாயிற்று. திருவை யாற்றிலுள்ள அப்துல் கபூர் புலவரென்பார் தம் வறுமைத் துன்பத்தை இன்று வந்து கூறி வருந்தினர். அவருக்கு ரூ. 5 கொடுக்கப் பெற்றது. 3 - 12 - 42 இன்று பெரிய கோயிலுக்கு நடந்து சென்று தரிசித்துவிட்டு, ஸ்பெஷல் டிப்டிதாசில்தார் வீட்டிற்குச் சென்று வண்டி கிடைக் காமையால் நடந்தே மீண்டும் வந்தேன். நடந்தது சிரமமாக இருந்தது. 7 - 12 - 42 இன்று, சித்தர்குடியில் ஏலமெடுத்த தொகையிற் பாக்கி ரூ.1445ம் தாலூகா ஆபிசிற் செலுத்தப் பெற்றது. தாலூகா ஆபீசில் பணம் வாங்குவோரிடத்தும் செலுத்துவோரிடத்தும் அவ்வேலையைச் செய்யும் கேஷியரோ, குமாஸ்தாவோ ஒருவர் பகிரங்கமாகப் பணம் கேட்டு வாங்குவது அறிந்தேன். இரண்டு நாட்களாக மீட்டும் சிறிது இருமலிழைப்பு இருக்கிறது. 13 - 12 - 42 நடராஜா முதலியோர் இன்று மாலை அருவங் காட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்கள். 19 - 12 - 42 நேற்று மனைவி மட்டும் வைகுண்ட ஏகாதசி விரதமிருந்தனர். இன்று கார்த்திகை விரதம் வழக்கம் போல் நிறைவேறிற்று. இரவில் இழைப்பு சிறிது மிகுதியாக இருந்தது. 20 - 12 - 42 கழகத்திலிருந்து திரு. வ. சுப்பையா பிள்ளையவர்கள் இன்று காலை வந்து சேர்ந்தனர். அகநானூறு அச்சிட வேண்டிய முறைகளை விளக்கிக் கூறி, களிற்றியானை நிரை உரையினை அவரிடம் சேர்ப்பித்தேன். 22 - 12 - 42 முந்தை நாள் வந்த அன்பர் திரு. வ. சுப்பையா பிள்ளையவர்கள் என் வாழ்க்கை வரலாற்றை நாடோறும் சிறிது சிறிதாக எழுதி வர வேண்டுமெனப் பலமுறை கூறினர். முன்னரே சிலர் அங்ஙனம் கூறியிருப்பினும் நேற்று இவர் கூறியது வற்புறுத்தலாக இருந்தது. என் வாழ்க்கை இறப்ப இழிந்த தொன்றாயினும் சில துறைகளில் என்னினும் கீழானோர்க்கு ஓரோவழி இது பயன்படலாமென்னும் கருத்தால் யானும் அதனை எழுத ஒருப்படாலாயினேன். இன்று மாலை அகநானூற்று உரை எழுதிக் கொண்டிருந்து, மாலை 7-மணியளவில் சிறிது ஓய்ந்து, வாழ்க்கை வரலாறு தொடங்கு தற்கு நாட் பார்க்க நினைத்துப் பஞ்சாங்கத்தைப் பார்த்த பொழுது, பார்த்த அம்முழுத்தமே பொருத்தமாகத் தோன்றியது. ஆகலின் இறைவன் திருவருளையுன்னி, அதற்குத் தொடக்கஞ் செய்துளேன். தொடங்கிய காலம் : சித்திரபானு, மார்கழி 7 செவ்வாய் பூரணை, மிருகசீரிடம் 36-48 வரை. மிதுன இலக்கினம். 23 - 12 - 42 இன்று சைவர்கட்கு மேன்மையுடைய திருவாதிரை நன்னாளாகவும், நாங்கள் யாரும் நோன்பொன்றுமின்றியே சோர்வுற்றிருந்தோம். நண்பகலில் ஒரு ஆள் பூதலூரிலிருந்து ஈருருளியிற்போந்து, முத்தண்ணா விருதுளாருக்குக் காலராக் கண்டு கடுமையாய் இருக்கிறதென்று கூறினர். ஏறக்குறைய ஒரு திங்களாக இங்கிருந்து படித்துக் கொண்டிருந்த அவருடைய இளைய மகன் இராமச்சந்திரனையும் உடனே பகல் 2½ மணி வண்டியில் பூதலூருக்கு அனுப்பினேன். என் தம்பி கோவிந்தராஜாவும் உடன் போய் இரவு 7-மணிக்குத் திரும்பி வந்து சிறிது குணமாயிருப்பதாகக் கூறினர். 24 - 12 - 42 நேற்றிரவு மெயிலில் வந்த ஒருவர் இரவு 10-மணிக்கு மேல் வந்து, இரவு 10-மணிக்குள் முத்தண்ணா இறந்து விட்டாரெனக் கூறினர். அதன்பின் இரவில் எனக்கு நல்ல தூக்கம் வரவில்லை. இன்று காலை 7.40மணி வண்டியில் யானும் தம்பி மு. கோ. வும் சென்று மாலை 3-மணி வண்டியில் திரும்பினோம். இறந்த நாள்: மார்கழி, கிருட்டின பக்கப் பிரதமை, திருவாதிரை. 26 - 12 - 42 கோயமுத்தூர், ராஜலஷ்மி மில்லில் எனக்குள்ள 20-பங்குக்கு (ரூ. 1000) சென்ற ஆண்டில் இலாபம் ரூ. 360 கிடைத்தது. நான் வருமானவரி செலுத்தவேண்டியதில்லாமையால், என் தொகைக்குக் கம்பெனியில் செலுத்தப்பட்ட வருமான வரியைத் திருப்பித்தரவேண்டும் என இவ்வூரிலுள்ள ‘வருமான வரி ஆபீஸ’ருக்கு ரூ. 79 தரவேண்டுமெனக் குறிப்பிட்டு இன்று ஆர்டர் வந்தது. எஞ்சிய ரூ. 60க்கும் ரூ. 16 வரை வரக்கூடும். எனவே இலாபத் தொகை ரூ. 455 ஆகக்கூடும். 27 - 12 - 42 பொருள் வருவாய் ஏதோ வந்து கொண்டிருப்பினும், நோயின் துன்பம் மிகுந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் விட, மனத்தை அடக்கும் ஆற்றலின்றி, இன்னமும் புலன்களுக்கு அடிமையாவது வருந்தத்தக்க தாயிருக்கிறது. காசநோயால் எய்துந் துன்பம் இப்பிறப்பில் ஒழிந்து விடலாம். காமநோயால் உண்டாந் துன்பம் பல பிறவிகளில் தொடரக்கூடுமே. என் வாழ்க்கை வரலாறு எழுத 22-ம் தேதியே தொடங்கினும், அதன்பின் இதுகாறும் ஒன்றும் எழுதக் கூடவில்லை. 1943ஆம் ஆண்டு 1 - 1 - 1943 யாழ்ப்பாணம் பரமேசுவரக் கல்லூரியின் தலைவராகிய திருவாளர் சு. நடேசப்பிள்ளையவர்கள் இன்று மாலை 6-மணிக்குப் பெரிய கோயிலில் ‘இராஜராஜேஸ்வரர்’ என்பது பற்றிப் பேசுவார் என அறிக்கை வந்திருந்தது. அவர் அன்பராகலின், பார்த்தற் பொருட்டு R. வே. அவர்களுடன் சென்றிருந்தேன். மானேஜர் நரசிம்மம் அவர்கள் என்னைத் தலைமை வகிக்கும்படி செய்து விட்டார். என் குரல் வளையில் நடுக்கம் மிகுதியாக விருந்தும் முடிப்புரையில் உரத்த குரலில் சிறிது மிகுதியாகவே பேசி விட்டேன். இலங்கையில் ‘கபிலர்’ இவ்வாண்டு பாடம் வைத்திருப்ப தாகச் சு. ந. அவர்கள் கூறினர். இரவு விளையாட்டு. 3 - 1 - 43 அன்னையின் திதி. இன்று நோயின் நலிவு மிகுதியே. 9 - 1 - 43 வெப்பு நோயால் யாதொரு வேலையும் செய்யலாற்றாது சில நாளாக வருந்தலுற்றேன். மூக்கின் வழியே அளவின்றிச் சளி பெருகிக் கொண்டிருந்தது. ஆங்கில மருத்துவ சாலையில் வாங்கி வந்து உண்ட மருந்தால் அது குறைந்திடினும், காய்ச்சலும் தலைவலியும் தணியவில்லை. இறைவனருள் நினைப்பித்தவாறு (சனிக்கிழமையாகிய இன்று) வேப்பம் பட்டை கொணர்வித்துக் கியாழமிட்டு உண்டு, மாலையில் காப்பி உண்டதனால் சிறிது உட்கார்ந்து கடிதம் எழுத ஆற்றல் உண்டாயது. 10 - 1 - 43 நேற்றிரவு கியாழம் உண்டு, இன்று முகத் தூய்மை செய்து தலையும் முழுகிவிட்டேன். நாளைக் காலையில் கரந்தையில் நடக்கும் கூட்டத்திற்குப் போகலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுளது. அகநானூறு புரூப் முதன் முதலாக இன்று வந்துளது. பாடபுத்தகம் பற்றிப் பல கடிதங்கள் இன்று எழுதப் பெற்றது. 11 - 1 - 43 இன்று காலை 9½ மணிக்கு க. த. சங்கத்திற்கு எழுந்தருளிய, சென்னை அரசினர் கல்வி ஆலோசகராகிய ஆஸ்டீன் துரைக்கும், J. A. இராமலிங்கச் செட்டியாருக்கும் உபசரிப்புக் கூட்டம் நடந்தது. கூட்டம் நடக்கும் பொழுது நான் போய்ச் சேர்ந்தேன். 12 - 1 - 43 இன்று சித்தர் குடியில் மறுமுறை ஏலம் நடந்தது. சென்ற முறை ஏலத்தில் ஏனோர் எடுத்த நிலங்களெல்லாம் மீட்டும் ஏலத்திற்கு விடப்பட்டன. ஏலம் என்பது யாதொரு ஒழுங்கு மில்லாதது என்று நினைக்கும்படி செய்யப்படுகிறது. நான் ஏல மெடுத்ததை மறு ஏலத்திற்குக் கொண்டுவர மனுக்கொடுத் தவர்கள் இன்று பணங்கட்ட தஞ்சைக்கு வந்து விட்டார்களாம். நான் சித்தர் குடி சென்று, ஏலம் நடந்த இடத்தில் சிறிது நேரம் இருந்து, பகலுணவின்பின், சில இளைஞர்களுடன் ஏலமெடுத்த நிலத்தைச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு, மாலை 6-மணிக்கு மேல் வண்டியேறித் தஞ்சை வந்து சேர்ந்தேன். கனவு: 11ம் தேதி இரவு, சுமார் 6-வயதுடைய பெண்குழந்தை என் வீட்டிற்குள் வந்து நுழைந்தது. அதனை என் குழந்தை யென்று சொன்னார்கள். என் குழந்தை எங்கேயோ வளர்ந்து கொண்டிருந்ததை மறந்திருந்தது போன்ற உணர்ச்சி எனக்கும் உண்டாயிற்று. யானேயன்றி என் மனைவியும் பார்வதியம்மாளும் குழந்தையை மறந்து விட்டார்களே எனவும், இதுவரை பள்ளியில் வைத்திருக்கலாமே எனவும் எண்ணி வருந்தினேன். குழந்தையை அணைத்து முத்தமிட்டு அன்பு காட்ட வேண்டுமென்றும் எண்ணினேன். (ஆனால் உள்ளே புகுந்த குழந்தையைப் பின்பு நான் பார்க்கவில்லை. விழித்தேன்) இன்றிரவு எனக்குப் பெரிய பூமாலை போடுவது போன்றன கண்டேன். 13 - 1 - 43 கனவு. நான் திருச்சி ஹீபர் கல்லூரி போல்வதொன்றில் ஆசிரியராயிருப்பதாகவும், பலநாள் கல்லூரிக்குச் செல்லா திருப்பதாகவும், தமிழ் வகுப்பு மாணவர்கள் நான் வகுப்பிற்கு வராத வெறுப்பினைத் தெரிவிக்கக் கறுப்பு அங்கி தரித்துப் பலர் என் இல்லிற்கு வந்ததாகவும், அது கண்டு நான் மிக வருந்தி இரங்கிச் சென்றதாகவும் இன்றிரவு கண்டேன். 14 - 1 - 43 இன்று தைப்பொங்கல் ஆகும். மகளும் மருகரும் திருவையாற்றிலிருக்க, மகனும் மருகியும் நீலகிரியில் இருக்க, நாங்கள் சில பேரப்பிள்ளைகளோடு பொங்கலைக் கழித்தோம். இங்ஙனம் நிகழ்ந்தது இதுவே முதன் முறையாகும். 16 - 1 - 43 கார்த்திகை விரதம் இனிது நிறைவேறியது. இரவு சிறிது இழைப்பு இருந்தது. 17 - 1 - 43 ‘சித்தமகரத்துவஜம்’ உண்ணத் தொடங்கியுள்ளேன். 26 - 1 - 43 என் உடல் நாளுக்கு நாள் மெலிவுற்றே வருவதாயிற்று. இழைப்பும் குறையவேயில்லை. நேற்று முன்னாள் (ஞாயிறு) இரவு உரத்த நாட்டிலிருந்து அரங்கநாதன் கொண்டு வந்த பவளமும் சிங்கியும் கலந்த பற்பம் உண்டு வருகிறேன். அருவங்காட்டில் இராஜத்திற்கு மிகவும் நலங்குன்றி யிருப்பதாகச் சின்னாளின் முன் கடிதம் வந்தது. சற்று நலமா யிருப்பதாக இன்று கடிதம் வந்தது. 29 - 1 - 43 இன்று மாலை திருச்சி சென்று வானொலியில் ‘மானோன் மணீயம்’ என்பது பற்றிப் பேசிவிட்டு, இரவு மெயிலில் மீண்டேன். 31 - 1 - 43 இன்று மாலை 4-மணிக்கு மேல் க. த. சங்கத்தின் பொதுக் கூட்டம் நடந்தது. வினைப் பொறுப்பாளர் கூட்டத்தில் அமைச்சர் முதலானோரை மாற்ற வேண்டுமென்னும் எண்ணத்தால் தஞ்சையிலுள்ள உறுப்பினர்கள் திரளாக வந்திருந்தனர். அமைச்சரும் தலைவரை நீக்கி விட்டுத் தமக்கு வேண்டிய ஒருவரைத் தலைவராக்கவும், வேறு சிலரை விலக்கிப் புதியர் சிலரை சேர்க்கவுங் கருதி வெளியூர்கட்கு ஆள் அனுப்பி உறுப்பினர் எண்ண அறிவிப்புச் சீட்டில் கையெழுத்து வாங்கி வைத்திருந்தனர். 41-உறுப்பினர் சீட்டுக்கள் வந்திருந்தன. ஆனால் பொறுப்பாளர் கூட்டம் முன்பிருந்தபடியே அமைக்கப் பெற்றது. திருச்சியிலிருந்து கி. ஆ. பெ. விசுவநாதமும், பொன். மாணிக்கவாசகமும் நம் வீட்டிற்கு வந்து விட்டு மாலை கூட்டத்திற்கு வந்திருந்தனர். 5 - 2 - 43 சித்திரகுடி வட்டத்தில் ஏல மெடுத்திருந்த நிலத்திற்கு மறு ஏலம் இன்று மாலை 4-மணிக்குப் பூதலூரில் குறிப்பிட்டிருந்தது. நான் காலை வண்டியில் போகக் கருதியிருந்தும் நேற்றெல்லாம் உடல் நலம் பெரிதும் குன்றியிருந்தமையால், மாலை 3-மணி வண்டியிலேயே புறப்பட்டுச் சென்றேன். பர்மாவிலிருந்து பணம் மிகுதியாகக் கொண்டு வந்த ஒரு மனிதனை ஒருவன் போட்டிக்கு அழைத்து வந்து விட்டனன். முன் ரூ. 1710க்கு எடுத்திருந்த நிலம் ரூ. 4500 வரையில் உயர்த்தப்பட்டது. நிலம் எனக்குமின்றி இடையே மனுக் கொடுத்தவனுக்குமின்றி 3-வது பேர் வழிக்குப் போய் சேர்ந்தது. இம்முயற்சியால் வீண் அலைச்சலும், சிறிது பொருள் நட்டமுமே பயனாயின. கோட்களில் ஒன்று கொடுப்பதும், மற்றொன்று அதனைக் கெடுப்பதும் நன்கு புலனாயின. அல்லலாகிய அவா என்று ஒழியுமோ அறிகிலேன். 8 - 2 - 43 தாலூகா ஆபீசில் செலுத்தியிருந்த ஏலத்தொகை முழுதும் இன்று வாபீஸ் பெறப்பெற்றது. 11 - 2 - 43 காந்தியடிகட்கும் அரசப்பிரதிநிதி லின்லிகோவுக்கும் இடையே நடந்த கடிதப் போக்கு வரவுகள் இன்று பத்திரிகையில் வெளியாயிருந்தன. காந்தியடிகள் 9 - 2 - 43 முதல் 21 - நாள் உபவாசம் மேற்கொண்டு விட்டாராம். எலுமிச்சம் பழச்சாறு கலந்த தண்ணீர் மாத்திரம் உட்கொள்வாராம். 12 - 2 - 43 கார்த்திகை விரதம் இனிது நிறைவேறியது. இரவு முதல் காசநோயின் தொந்தரை பொறுக்க முடியாததாயிருக்கிறது. 18 - 2 - 43 இன்று ‘தினமணி’ பத்திரிகை வாங்கிப் படித்தேன். காந்தியடிகளின் உபவாசத்தின் 7-வது நாளில், தண்ணீர் உட்கொள்ளச் சற்றுச் சிரமப்படுகின்றனரென்றும், பேசத் தென்பில்லை யென்றும், படுத்த படுக்கையிலேயே இருக்கின்றன ரென்றும், 6 டாக்டர்கள் பார்த்துப் பரிசோதனை செய்தன ரென்றும், நாடெங்கும் அவரை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுதலும், அனுதாப உபவாச மிருத்தலும் செய்யப்படு கின்றன வென்றும் தெரிகிறது. இந்திய மத்திய அசெம்பிளியிலும், அரசாங்க சபையிலும் அவரது உபவாசத்தைப் பற்றி விவாதிக்க ஒத்திவைப்புப் பிரேரகணைகள் கொண்டுவரப்பட்டுப் பலரால் பேசப்பட்டனவாம். அரசாங்க சபையில் டாக்டர் பி. என். சாப்ரு பின்வருமாறு கூறியுள்ளார்:- “புத்தர் பிரானுக்குப் பின்னால் மகாத்மா காந்தியே மிகச் சிறந்த மகான். மனிதவர்க்கத்தின் உற்பத்திச் சக்திகளிலே காந்திஜியொருவர். இந்தியப் பிரச்சனையைச் சர்வதேச ரீதி அளவுக்கு அவர் உயர்த்தியிருக்கிறார். ஹிந்துக்களின் தர்ம லட்சியங்களெல்லாம் ஓர் உருவாய்ச் சமைந்தவர் மகாத்மா காந்தி. அவரை நாம் சாகவிட முடியாது. காந்திஜியை விடுதலை செய்ய வேண்டுமென்ற பிரச்சனையில், புதியதும் நியாயமுமான மனப்போக்கை முஸ்லீம்களும் பெற்றிருக்கிறார்கள். காரியக் கமிட்டி அங்கத்தினர் ஒருவருடைய மனைவி செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படும் காரியங்களுக்கெல்லாம் காந்திஜி எப்படி ஜவாப்தாரி யாவார் என்று விளங்க வில்லை.” புதுக்கோட்டைச் சாமியாரின் பேரரான ராதா என்பவர் கொடுத்த மருந்துகளை இன்று உண்ணத் தொடங்கியுள்ளேன். 3 - 3 - 43 காந்தியடிகள் தமது 21-நாள் உபவாசத்தை இடையூறின்றி முடித்து, இன்று காலை பாரணை செய்தது நாடெங்கணும் பெருமகிழ்ச்சி விளைத்துளது. பல சமயக் கோயில்களிலும் வழிபாடுகளும், மற்றும் பிரார்த்தனைகளும் அன்னதானங்களும் ஆண்டாண்டுச் செய்யப் பெறுகின்றன. 4 - 3 - 43 சிவனிரவாகிய இன்று திருவையாற்றில் மாப்பிள்ளை சிவப்பிரகாசமும், புதல்வி பார்வதியம்மாளும் சமய தீக்கை செய்து கொண்டனர். திரு. குருசாமி தேசிகரவர்கள் முறைப்படி தீக்கை செய்து உபதேசம் செய்தார்கள், யான் அதன் பொருட்டு இன்று திருவையாறு சென்று உடனிருந்து, இரவில் அறம் வளர்த்த நாயகியுடன் ஐயாறப்பரைத் தரிசிக்கலானேன். 5 - 3 - 43 வேலாயுதம் பாளையத்திலுள்ள சோதிடம் ந. பார்வதியம்மாள் முன்பு எனது ஜாதகத்தைக் கணித்து அனுப்பியிருந்தனர். இப்பொழுது மைந்தன் நடராஜன் ஜாதகத்தைக் கணித்துக் கொண்டு, தமிழ் பயிலும் தன் தம்பி புதல்வியுடன் நேற்று முன்னாள் தஞ்சை வந்தனர். நேற்று அவர்களும் திருவையாறு தரிசிக்க விரும்பினமையால் உடன் அழைத்துச் சென்று, இன்று காலை தஞ்சைக்கு அழைத்து வந்தேன். இன்று பெரிய கோயில் முதலியன தரிசித்தனர். 6 - 3 - 43 சோதிடம் ந. பா. இன்று காலை சிதம்பரத்திற்குப் புறப் பட்டனர். புலவர் கல்லூரி மாணாக்கர்கள் சிலர் கலகம் விளைத்துக் கொண்டு அதனைத் தெரிவித்தற்கு இரண்டு மூன்று பகுதியாக வீட்டிற்கு வந்தனர். மாணாக்கர்கள் மிகவும் தகுதியற்றவர்களாகத் தோன்றுகின்றனர். அவர்கள் செய்கை மிக வெறுக்கத்தக்கன வாயுள்ளன. 7 - 3 - 43 இன்று மாலை 6-மணிக்கு மேல் கல்லூரிக்குச் சென்று கடுமையான முறையில் மாணாக்கர்கட்கு அறிவுரை கூறிவந்தேன். 11 - 3 - 43 இன்று கார்த்திகை விரதம் இனிது நிறைவேறிற்று. 8-3-43 முதல் மாலையில் வடக்குவாசல் முருகர் கோயிலுக்குச் சென்று தரிசித்து வருகின்றேன். மிக அண்மையிலுள்ள அதற்கும் நடந்து செல்ல உடல் வலியில்லாதிருக்கிறது. புதுக்கோட்டைச் சாமியாரின் கத்தூரி மாத்திரையும் இன்று உண்ணத் தொடங்கியுள்ளேன். (12-3-43) முதல் முருகர் கோயிலுக்குப் போவது நின்றுவிட்டது. 18 - 3 - 43 திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவர் ஸ்ரீ சுவாமி நாதத்தம்பிரான் சுவாமிகள் என்னைப் பார்க்க விரும்பியதாக 3-வாரத்தின் முன் கேள்வியுற்றேன். சிறிது உடல் நலம் பெற்றவுடன் போகலாமெனப் பொறுத்திருந்து, முன்னறிவுப்புடன் இன்று காலை பேரன் திருநாவுக்கரசுடன் புறப்பட்டுப் புகை வண்டியில் கும்பகோணஞ் சென்று, பஸ் ஏறித் திருப்பனந்தாள் சென்றேன். பகலில் நீராடி உணவு உண்ட பின், 3-மணிக்கு மேல் 1½ மணி நேரம் வரையில் சுவாமியுடன் பேசிக் கொண்டிருந்தேன். தமிழ் வளர்ச்சிக்குத் தாம் செய்துள்ள ஏற்பாடுகளை விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார். என்னிடம் மிகுந்த அன்புடன் “அடிக்கடி உரிமையுடன் வரவேண்டும்” என்று கூறி, ரூ. 100-சம்பாவனை செய்தார். டாக்டர் வே. சாமிநாதையரவர் களுக்கு ஆண்டுதோறும் இத்தொகை கொடுத்து வந்ததாகவும், அவர்கள் காலஞ் சென்று விட்டமையின் அவர்கட்குப் பதிலாக எனக்குக் கொடுக்க விரும்பியதாகவும் தெரிவித்தார்கள். இதிலிருந்து என்பால் மிக்க அன்பும் மதிப்பும் வைத்துள்ளமை புலனாயிற்று. மாலை 6-மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுக் கும்பகோணம் வந்து, அங்கிருந்து புகைவண்டி இல்லாமையால் பஸ்ஸிலேயே இரவு 10-மணிக்குத் தஞ்சை வந்து சேர்ந்தோம். பயணம் மிக்க கடுமையானதே. 22 -3 - 43 அகநானூற்று உரை செய்யுள் 121-210 இன்று கழகத்திற்கு அனுப்பப் பெற்றது. 28 - 3 - 43 இந்து சமய அறநிலையைப் பாதுகாப்புக் கழகத் தலைவர் திரு. T. M. நா. பிள்ளையவர்கள் கும்பகோணம் வருவதாகவும், திருவாவடுதுறை முதலிய மடங்களிலிலிருந்து க. த. சங்கப் புலவர் கல்லூரிக்கு உதவிசெய்யும் படி கூற நிச்சயத்துள்ளார் களெனவும், சங்கத்திலிருந்து சிலர் அதன் பொருட்டுச் சென்று வரவேண்டுமெனவும் அறிந்தேன். என் உடல் நிலை திருப்பனந்தாள் போய் வந்தபின் மிக மோசமாயிருந்து வந்தது. அவ்வாறே இருப்பின் நான் எங்கும் போக இயலாது. ஆனால் நேற்றுச் சிறிது குணமாயினமையின் இதற்குச் செல்வதெனத் துணிந்து இன்று காலை 5-மணிக்கு அன்பர் திரு. R. வே. யுடன் புறப்பட்டுக் கும்பகோணம் சென்று தேவஸ்தான போர்டு நிலையத்திற்றங்கினோம். கூட்டுறவு மகாநாட்டிற்குப் பல ஊர்களிலுமிருந்து பலர் கும்பகோணத்திற்கு வந்திருந்தனர். பகல் உணவு ஓட்டலிலிருந்து வருவித்து உண்டோம். சங்கத்தலைவர் ஐ. கு. பிள்ளையவர்கள் மாலையிலேயே வந்து சேர்ந்தனர். அவருடன் சிலரைக் கண்டு பேசினோம். இரவு திரு. கந்தசாமி மூப்பனார் வீட்டில் சிற்றூண்டியருந்தினோம். 29 - 3 - 43 திரு. T. M. நா. பிள்ளையவர்கள் இரவு வந்து சேர்ந்தனர். இன்று காலை ஓர் கூட்டத்தில் மடங்களின் பிரதிநிதிகட்கு புலவர் கல்லூரியைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டது. நேற்று மாலை முதல் திரு. கந்தசாமி மூப்பனார் இல்லில் அவருடன் அளவளாவுதலிற் பொழுது சென்றது. தமிழ் நூல்களில் நல்ல பயிற்சியுள்ளவராக இருக்கின்றனர். அவர் வீட்டில் இடை விடாது விருந்தினர் வருவதும் உண்பதும் வியப்பு விளைக் கின்றன. திரு. S. சத்திய மூர்த்தி ஐயர் காலஞ்சென்று விட்டனரென வானொலிச் செய்திகளால் அறிந்தேன். தென்னிந்தியாவில் ஓர் சிறந்த பேச்சாளராக இருந்தார். இவர் தமிழரியக்கத்திற்குப் பெரும் பகைவராயினும் அரசியலுலகில் சிறந்த மனிதராக விளங்கினார். மாலை 7-மணிக்கு மேல் தஞ்சை வந்து சேர்ந்தேன். 6 -4 - 43 க. த. சங்கத்தில் மாலை 7-மணிக்கு மேல் திரு. R. P. சேதுப் பிள்ளையவர்கள் ‘அரக்கர் தமிழரா’ என்பது பொருளாக ஓர் சொற்பொழிவாற்றினர். கூட்டத்திற்கு என்னைத் தலைமை யாக இருக்கச் செய்தனர். 7 - 4 - 43 திருக்காட்டுப்பள்ளி, திருவள்ளுவர் கழக முதலாண்டு விழா இன்று மாலை எனது தலைமையில் நடைபெற்றது. அவ்வூரில் பத்திரப் பதிவாளராக இருக்கும் திரு. A. சோமசுந்தரம் பிள்ளையின் முயற்சியால் இக்கழகம் தோன்றி நடைபெறுவ தென்பதும், பள்ளிகளின் ஆசிரியர்களும் பிறருமாக இருபாலாரினும் பலர் சேர்ந்து திருக்குறளைப் பாடங்கேட்டுப் பயில்கின்றனரென்பதும் அறியலானேன். ஹைஸ்கூல் வெளியில் அமைக்கப்பட்ட பந்தலில் விழா நடைபெற்றது. கூட்டம் பெருந்திரளாக இருந்தது. திரு. R. P. சேது பிள்ளையவர்கள் ‘கம்பர் கண்ட வள்ளுவர்’ என்பது பொருளாகச் சொற்பொழி வாற்றினார். நான் முன்னுரை முடிவுரைகளை யன்றி, ‘திருக்குறளில் வீடு பேறு’ என்பது பற்றிப் பேசினேன். பகல் முழுதும் வெய்யிலின்றி, நல்ல காற்று வீசினமையால் என் உடம்பு மிகவும் துன்புறவில்லை. இரவு 4-மணிக்கே புறப்பட்டுத் தஞ்சை வந்து சேர்ந்தேன். 8 - 4 - 43 இன்று பகலில் பெருமழை பெய்தது; நான் வேலை யொன்றும் செய்ய வியலவில்லை. பெரிதும் துயிலுவதிற் பொழுது கழிந்தது. கார்த்திகை விரதம் வழக்கம் போல் நிகழ்ந்தது. 14 - 4 - 43 என் ஜாதகத்தில் சுக்கிரதிசை சுயபுத்தியில் சனி அந்தரம் நேற்று வரை நடந்தது. 6, 7க்குடைய சனி கோசாரத்தில் அட்டமத்தில் இருந்தமையாலும் சனியின் அந்தரம் நடந்தமை யாலும் 6-மாதம் 10 நாளும் நோய் இடையறாது துன்புறுத்தி வந்தது. கடைசி ஒருவாரமாக யாதொன்றுஞ் செய்ய வியலாத படிபடுக்கையிற் கிடத்திவிட்டது. இன்று சித்திரை பிறந்தது. துன்பம் ஓரளவு குறைந்தது வேலையைச் சிறிது கவனிக்கலானேன். 15 - 4 - 43 பூதலூரில் ஆனந்தகாவேரிக்குத் தென்புறமாகப் புது ஆற்றுப் பாய்ச்சலுள்ள நன்செய் 3 ஏக்கர், 65 செண்டு நிலம் தஞ்சையிலுள்ள ஓர் முகமதியருக்குச் சொந்தமாயிருந்தது. அதனை ரூ. 500 முன் பணம் கொடுத்து இன்றிரவு உடன்படிக்கை எழுதப்பெற்றது. 16 - 4 - 43 இன்று மாலை ரூ. 240 முன்பணம் கொடுத்து, 52-8-0 ரூபாய் ஸ்டாம்பில் பத்திரம் எழுதப் பெற்றது. 19 - 4 - 43 இன்று மேற்படி பத்திரம் தஞ்சையிலேயே ஸ்பெஷல் ரிஜிஸ்டராக செய்யப் பெற்றது. பாக்கித் தொகை ரூ. 2400ம் ரிஜிஸ்டரார் முன்னிலையில் செலுத்தப் பெற்றது. நான் வீட்டை விட்டு நடந்து திரிய ஆற்றல் இல்லாதிருந்த நிலைமையில், சோழகன் பட்டியிலுள்ள என் சட்டகர் மகன் திரு. இராமலிங்கச் சோழகரே நிலத்தைப் பேசி உடன்படிக்கை எழுதி, பத்திரமும் எழுதி இதனைப் பூர்த்தி செய்து வைத்தார். இதன் பொருட்டு அவர் பெரு முயற்சி எடுத்துள்ளார். 20 - 4 - 43 இன்று சித்திரா பூர்ணிமை. நாள்முழுதும் விடைத்தாள்கள் திருத்துவதிற் கழிந்தது. 21 - 4 - 43 இன்று யாவரும் திருவையாறு சேர்ந்தோம். 22 - 4 - 43 இன்று காலை அறம் வளர்த்த நாயகியுடன் ஐயாறப்பர் ஏழூர் விழாவிற்குத் திருவுலாப் புறப்பட்டார். நான் ஓரிடத்தில் நின்று பல்லக்கில் வரும் பவனியைத் தரிசித்தேன். 23 - 4 - 43 இன்று விடியுமுன் நடு இரவிலேயே பல்லக்குகள் யாவும் திருவையாறு சேர்ந்து விட்டன. இதற்குமுன் ஓராண்டும் இங்ஙனம் விரைந்து வந்தமை கண்டதில்லை. இரவில் திருக் கோயிலில் அருச்சனைகள் செய்வித்து வழிபட்டு வந்தோம். 24 - 4 - 43 இன்றிரவு நடுக்காவேரி சேர்ந்தனம். 26 - 4 - 43 வித்துவான் தேர்வு விடைத்தாள்களின் அமிசம் இன்று அனுப்பப்பெற்றது. 4 - 5 - 43 கார்த்திகை விரதம் நடுக்காவேரியில் வழக்கம் போல் நிறைவேறியது. 8 - 5 - 43 வயல் மண் வெட்டுதல், மரம் வெட்டுதல் முதலிய அலுவல்கள் யான் சென்று பார்வையிடாமலே ஒருவாறு நடந்தேறின. வீட்டில் நடப்பதற்கும் முடியாதபடி உடல்வலி குன்றினமையின் 4-5-43ல் சென்னையில் நடந்த பரீஷகர் கூட்டத்திற்கும் போகாதிருந்து விட்டேன். இது வரை இப்படி நிகழ்ந்ததில்லை. மணிமேகலை உரையெழுத வெற்றுப் புத்தகங்கள் எடுத்து வந்தேன். கை வைக்கவே இல்லை. தஞ்சையிலிருந்து கொண்டுவந்த அகநானூற்றுப் புரூப்பும் முழுதும் திருத்தியனுப்பக் கூடவில்லை. நாளை தஞ்சைக்குச் செல்ல இன்று ஆயத்தஞ் செய்கின்றேன். 9 - 5 - 43 இன்று முற்பகலில் யாவரும் தஞ்சை வந்து சேர்ந்தோம். 11 - 5 - 43 தஞ்சை இலக்கணம் இராமசாமிப்பிள்ளை என்ற அருள் பரானந்த சுவாமியின் சமாதி மீது கட்டப்பெற்ற ஏடக கோயில் கும்பாபிஷேகம் நேற்று நிகழ, இன்று மாலை அதன் சார்பில் ஓர் சைவ மகாநாடு நடந்தது. சர். பி. டி. ராஜன் திறப்பாளர். ச. சச்சிதானந்தம் பிள்ளை தலைவர். யானும் சிவநேசன் இராமசாமிச் செட்டியாரும் சொற்பொழிவாளர்கள். 2-நாளின் முன் இருந்த எனது நிலையையும், இன்று நான் பேசியதையும் நினைந்தால் வியக்க வேண்டியதே. நிற்க: - இலக்கணம் இராமசாமி பிள்ளை என்பவர் தஞ்சையை ஆண்ட சிவாஜி மன்னன் பட்டமஹிஷியாகிய காமாக்ஷிபாய் சாகேப்பினால் மிகவும் சன்மானிக்கப் பட்டவரென்றும், சுவீகாரப் பிள்ளையாகிய சரபோஜிக்கு உதவிசெய்யுமாறு விக்டோரியா மகாராணிக்குத் தூது அனுப்ப வேண்டி, இலங்கை சர். முத்துக்குமார சுவாமியிடம் சென்றவரென்றும், சர். பி. இராமநாதனுக்கும், அவர் சகோதரராகிய சர். அருணாசலத் திற்கும் ஞான குருவாய் விளங்கியவரென்றும், எட்வர்டு கார்பெண்டா என்ற ஆங்கிலப் புலவர் எழுதிய ‘நான் கண்ட ஞானி’ என்ற உலகப் பிரசித்தி பெற்ற புத்தகத்திற் புகழப்பட்டவ ரென்றும், மேல்நாடுகளிலெல்லாம் சைவ சித்தாந்தம் பரவுதற்குக் காரணராயிருந்தவரென்றும், தாயுமானவர் பாடல் போன்ற பாடல்கள் பல இயற்றியுள்ளவரென்றும், இல்லற ஞானியாய் விளங்கி 50 ஆண்டுகளின் முன் சமாதி நிலையடைந்தவர் என்றும் அவரது சரித்திரக் குறிப்புக்களாக எழுதி வெளியிடப் பெற்ற பத்திரிகையால் அறியப்படுகின்றது. அண்மைக்காலத்தில் தஞ்சையில் இவ்வளவு பெருமையுடன் விளங்கியவர் வரலாற்றில் யாதொன்றும் இங்குள்ள என்போன்றவர்களால் அறியப்படாமை பெரியதோர் வியப்பே! இச் சமாதி கோயில் லேடி இராமநாதன் அவர்களாற் கட்டப் பெற்றது. சர். இராமநாதனுக்கு மருகரும், தஞ்சை இராமசாமிப்பிள்ளையவர் களின் பேரர்க்குப் புதல்வருமாகிய திரு. சு. நடேசப்பிள்ளையவர் கள் முன்னின்று இதனை நடத்தி வைத்துள்ளார். இன்று பகலில் வானம் மப்பு மந்தாரமாயிருந்தது, இரவில் பெருமழை பெய்வதாயிற்று. 12 - 5 - 43 மழையினால் குளிரும் மிகுந்து விட்டது. மனம் மகிழ்ச்சி யடைகின்றது. 16 - 5 - 43 Albo - sang என்னும் பவுடர் மருந்து நேற்று மலையாளத்தி லிருந்து வந்தது. இன்று உண்ணத் தொடங்கியுள்ளேன். சில நாட்களாக நாடோறும் ஒவ்வொரு இளநீர் உண்டு வருகின்றேன். 20 - 5 - 43 இன்று காலை இந்நகரிலுள்ள கிருஷ்ணன் என்னும் பற்கட்டு வைத்தியரால் என் கீழ்வாயில் எஞ்சியிருந்த 4-பற்களும் அகற்றப் பட்டன. 24 - 5 - 43 மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பண்டித பரீட்சையின் தருக்கப் பேப்பர் தேர்ச்சிக் குறிப்பு இன்று அனுப்பப் பெற்றது. 26 - 5 - 43 இன்று காலை பூதலூர் சென்று புதிதாக வாங்கியுள்ள நிலத்தினைச் சுற்றிப் பார்த்துவிட்டுப் பகல் உணவுண்டு திருக் காட்டுப்பள்ளி சென்றேன். மாலையில், இளங்காட்டில் நான் ரூ. 2000க்கு வாங்கியிருந்த நன்செய் நிலங்களைப் புதல்வி, திரு. பார்வதியம்மாளுக்குச் செட்டில் மெண்டு எழுதி ரிஜிஸ்தர் செய்து கொடுத்தேன். பத்திரம் தனித்தமிழ் நடையில் திருத்தமாக எழுதப் பெற்றது. தமிழ் வித்துவான்கள் ஐவர் உடனிருந்தனர். ஆவணக்களரிப் பதிவாளர் திரு. ஆ. சோமசுந்தரம் பிள்ளை பகல் கழிந்தும் பதிவு செய்தனர். 27 - 5 - 43 நேற்றிரவு திருச்சினம் பூண்டி வந்து சேர்ந்தேன். திருக்காட்டுப்பள்ளியில் நேற்று இளநீர் மிகுதியாக உண்டதனாற் போலும் இரவு இழைப்பு ஏற்பட்டது. இன்று மாலை தஞ்சை சேர்ந்தேன். 5 - 6 - 43 கீழ்வாய்ப்பற்கள் கட்டியவை இன்று வைக்கப் பெற்றன. அவற்றை வைத்துக் கொண்டு எவ்வகை உணவும் உண்ணக் கூடவில்லை. எடுத்து வைத்துவிட்டே உண்ணலாயினேன். பேசுவதிலும் சிறிது தடை ஏற்படுகிறது. 6 - 6 - 43 இராமச்சந்திர புரத்திலுள்ள ஜோதி சங்கத்தில் இன்று மாலை ‘காரைக்காலம்மையார்’ என்னும் பொருள் பற்றிப் பேச இணங்கியதன் மேல், விளம்பரமும் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். இன்று காலை அதற்குப் புறப்பட்டிருக்க வேண்டும். நேற்றிரவு இருமல் துன்புறுத்தியதனால் போகாது நின்று விட்டேன். எனது தனிச்சொற்பொழிவுக்காக நோட்டீசு அச்சிட்டு வெளியிட்ட பின் நான் போகாதிருந்து விட்டது தகுதியல்லாதது. என் செய்வேன். 7 - 6 - 43 இன்று பகல் 2-30 மணிக்குப் புறப்பட்டுத் திருச்சி சென்று, சைவ சித்தாந்த சபையில் குறிப்பிட்டிருந்தபடி ‘திருவருட் பேறும் பெரியபுராணமும்’ என்னும் பொருள் பற்றிப் பேசினேன். இன்று சேக்கிழார் திருநாளாகும். புகைவண்டியிற் கூட்டம் அளவின்றி யிருந்தமையின் 2-வது வகுப்பிற்கு டிக்கெட் எடுத்து, அதில் இடமின்மையால் 3-வது வகுப்பிலே பிரயாணஞ் செய்தேன். 8 - 6 - 43 மாலையில் தஞ்சை சேர்ந்தேன். 13 - 6 - 43 ஒன்பத்து வேலியில், வித்துவான் திரு. ஐ. இராமையாச் சேதிராயர்க்கு நடந்த திருமணத்திற்குக் காலையிற் சென்று, மாலையில் மீண்டேன். 17 - 6 - 43 கோவை - உப்பிலிபாளையத்தில் உள்ள என் இனிய நண்பர் R. V. இலட்சுமையாநாயுடுவின் புதல்வர் திரு. இராமசாமியின் திருமணத்தின் பொருட்டு, இன்று பகல் 2½ மணி வண்டியிற் புறப்படலானேன். க. பு. கல்லூரிக்குப் பணம் சேர்ப்பதும் கருத்தா யிருந்தது. அதன் பொருட்டு திரு. ஐ. குமார சாமிப்பிள்ளையும் உடன் வந்தார். திருப்பூந்துருத்தி, P. அருணாசலம் இங்கு வந்திருந்தவர் உடன் வந்தார். இரவு 3-மணிக்குமேல் கோயமுத்தூர் சென்றோம். இரவு அருணாசலத்தின் இல்லிலே தங்கினேன். 18 - 6 - 43 நேற்றுக் காலை பெண்வீட்டில் இராமசாமியின் திருமணம் நிகழ, நேற்று மாலையே மணமக்கள் உப்பிலி பாளையத்திற்கு வந்து சேர்ந்தார்களாம். இன்று வரவேற்பு மிக்க சிறப்புடன் நடைபெற்றது. தியாகராஜபாகவதர் கச்சேரி செய்தார். அவருக்கு ஊதியம் ரூ . 750 - ஆம். அவர்பாட்டில் ஒரு சுவையும் காணப் படவில்லை. அவருக்குக் கொடுத்தது வீண் செலவே என நாயுடுவும் உணர்ந்தார். திருக்குறள் மூலம், திருவாசக மூலம், சிலப்பதிகாரவுரை என்னும் 3-புத்தகம் மணமகனுக்கு பரிசிலாக நான் வழங்கினேன். புலவர் கல்லூரிக்கு ரூ. 1001 என் அன்பர் திரு. R. V. I. நாயுடு இன்று கையொப்பஞ் செய்தார். 22 - 6 - 43 என் அன்பர் மூலம் மற்றுஞ் சில கையொப்பம் வாங்கிக் கொண்டு, மற்றுஞ் சில கையொப்பம் வாங்குவதை அவரிடமே ஒப்படைத்துவிட்டு, இன்று காலை 7-35க்குக் கோவையிலிருந்து புறப்பட்டு, பொள்ளாச்சி பழனி திண்டுக்கல் வழியாக மாலை 6-மணிக்குத் தஞ்சை வந்து சேர்ந்தோம். என் அன்பருடைய இனிய குணமும், தாராள சிந்தையும் மேன்மேலும் பெருகுகின்றன. கடவுள் அவருக்கு நீண்ட நல்வாழ்வினை அளிப்பாராக. 25 - 6 - 43 கோவையினின்று பகல் வண்டியில் வந்ததனால் உடல் நலிவுற்றது. அதனோடு, இன்று பகல் வண்டியில் நண்பகல் வெய்யிலிற் புறப்பட்டுத் திருச்சி சென்று வானொலியிற் பேசி மீண்டமையின் உடல் நலிவு மிகுதியாயிற்று. வானொலியிற் பேசுவதும் வருத்தமாயிருந்தது. 27 - 6 - 43 இன்று மாலை க. த. சங்க வினைக் குழுவினர் கூட்டம் கூடியது. நான் அதிற் சேர்ந்த பின் 2-வது முறையாக இன்று அக்கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். 29 - 6 - 43 கார்த்திகை விரதம் ஒருவாறு நிறைவேறியது. 30 - 6 - 43 இன்று புலவர் கல்லூரி திறக்கப் பெற்றது. நான் சென்று பார்வையிட்டு, அப்படியே கூட்டுறவுப் பதிப்பகம் சென்று புத்தகங்கள் எடுத்து வந்தேன். ‘பாண் பெரியார் மூவர்’ 2-ம் பதிப்பில் 2482 புத்தகங்கள் வந்து சேர்ந்தவை. 2 - 7 - 43 இன்று ஆனி அமாவாசை; தந்தையார் திதி. என் உடல்நிலை மிக மோசமாக இருந்தது. திதி ஒருவாறு நிறைவேறியது. 5 - 7 - 43 இரண்டு மூன்று நாட்களாகக் கபம் அளவின்றி வருகின்றது. சிறிது காய்ச்சலும் தலைவலியும் இருந்தன. மருத்துவ சாலையினின்று வருவித்த ஆங்கில மருந்துண்டு சிறிது குணம் ஏற்பட்டுளது. இன்று எண்ணெயிட்டு முழுகினேன். வருமான வரி மீட்சிக்காக இன்று மனுக் கொடுக்கப் பெற்றது. 7 - 7 - 43 செங்கிபட்டியில் மைத்துனர் S. தியாகராஜ மேற் கொண்டாரிடம் அவர் கொடுக்க வேண்டிய கடனுக்காக ரூ. 550 -க்கு நன்செய் புன்செய் நிலங்கள் விலைக்கு வாங்கப் பட்டிருந்தன. பல ஆண்டுகள் வரை அவற்றை அவரே அனுபவித்துக் கொண்டு, விளைபொருளில் ஒன்றும் கொடாமையோடு சில ஆண்டுகள் அரசிறையும் யானே செலுத்துமாறு விட்டுவிட்டனர். அதனால் மேற்படி நிலங்களை 2-ஆண்டின் முன் திரு. S.K.R. மேற்கொண்டார் மூலம் மாற்றியடைக் கலாயினேன். S. தி. மேற்கொண்டார் மிகவும் பிணங்கிக் கொண்டு, போக்குவர வின்றி இருந்தார். சில மாதமாக ரூ.200 வாங்கிக் கொண்டு நிலங்களைத் தம்மிடம் விட்டுவிடும்படி சிலர் மூலம் கேட்டு வந்தார். இன்று தமது இளைய மனைவியுடன் வந்து ரூ. 150 கொடுத்துவிட்டு, எஞ்சிய ரூ. 50ம் விரைவில் கொடுப்பதாகச் சொல்லிப் போயினர். மேற்படி நிலங்களைத் தமது ஆயுட்காலம் வரை அவர் அனுபவிக்கவும், பின்பு பூதலூரில் சட்டகர் பிள்ளை களைச் சாரவும் உயில் எழுதிவைப்பதென்ற நிபந்தனையின் மேல் நான் ரூ. 150ம் பெற்றுக் கொண்டேன். 9 - 7 - 43 தஞ்சை, க. சு. பள்ளியில் ஆசிரியராயிருந்த ம. அரங்கநாதன் நாகை, அரசினர் போதனா முறைப் பள்ளியில் தமக்குக் கிடைத்த வேலையை ஏற்றுக் கொள்ளுதற்கு இன்று வைகறையிற் புறப்படலாயினர். அவர் இங்கிருந்தது எனக்குப் பெரிய பேருதவி. பெரும்பாலும் பார்சல்களுக்கு முகவரி எழுதும் வேலை அவரையே சார்ந்திருந்தது. இரவு தோறும் அவருடைய இனிய குரலில் திருமுறைப் பாடல்களைப் பாடக்கேட்டு இன்புற்று வந்தேன். இஃது எளிதிற் கிடைக்கக்கூடிய பேறன்று. அவரும் என்பால் அளவுகடந்த அன்பு வைத்து அதற்கேற்ப ஒழுகினதோடு, தொண்டுகளும் செய்து வந்தனர். இறைவன் திருவருள் விரைவில் அவர் இந்நகருக்கே வருமாறு உதவி செய்ய வேண்டும். 14 - 7 - 43 இன்று காலையில், புலிசையினின்று D. ஆறுமுகம் பிள்ளை என்ற அன்பர் மிகுதியான ஆரஞ்சுப் பழங்களுடன் வந்து பார்த்துச் சென்றார். மிக்க அன்பும் பணிவும் உள்ளவராக இருக்கின்றனர். மாலையில் அவ்வாறே புலிசையினின்று M. K. ராஜகோபாலாச்சாரி (நகை வியாபாரம்) என்ற கல்வி விருப்பு மிக்க அன்பர் சிறந்த கிச்சிலிப் பழங்களுடன் வந்து கண்டு சென்றனர். இவர் சிவப்புக்கல் பதித்த மோதிரம் ஒன்றும் பரிசிலாக அளித்துச் சென்றனர். 15 - 7 - 43 மைந்தன் நடராஜன் அருவங்காட்டிலிருந்து தன் மனைவியையும், குழந்தை திருஞானவள்ளலையும் அழைத்துக் கொண்டு நேற்றுப் புறப்பட்டு வந்து இன்று காலை பூதலூரில் இறங்கியிருந்து, மாலையில் தஞ்சை வந்து சேர்ந்தனர். நெடுநாளாகக் குழந்தையைப் பார்க்க முடியாதிருந்த எங்கட்குக் களிப்பு மிகுந்தது. 16 - 7 - 43 இன்று காலை திருவையாற்றிலிருந்தும் பார்வதியம்மாள் முதலிய யாவரும் வந்திருந்தனர். எல்லோரும் அளவளாவி மகிழ்ந்தனர். 18 - 7 - 43 நேற்றும் இன்றும் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுவிழா ஆசிரியர் வரதநஞ்சைய பிள்ளை தலைமையில் நடைபெற்றது. திருவாளர்களான குமார வீரையர், இளவழகனார், T. P. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சேலம் கல்லூரித் தலைவர் இராமசாமிக் கவுண்டர் ஆகியோர் இருநாளிலும் சொற் பொழிவு செய்தோராவர். இன்று காலை சங்கமண்டபத்தில், பண்டிதமணி மு. கதிரேசசச் செட்டியாருக்கு ஓராண்டின் முன் மகாமகோபாத்தியாய பட்டம் கிடைத்ததைப் பாராட்டும் கூட்டம் நடந்தது. பண்டித மணியும் இராமசாமிக் கவுண்டரும் பகலுணவிற்கு என்னால் அழைக்கப் பெற்று வந்து உண்டு சென்றது மகிழ்ச்சிக் குரியது. இரவு 10 மணிக்கு மேலே ஆண்டுவிழாக் கூட்டம் முடிவுற்றது. 19 - 7 - 43 ராஜமும் குழந்தையும் இங்கிருக்க வேண்டிய நிலைமையில் வந்ததால் நடராஜன் மட்டும் இன்றிரவு நீலகிரிக்குப் புறப்படலாயினன். குழந்தையின்பால் அளவு கடந்த பாசம் வைத்திருப்பவன் குழந்தையைப் பிரிந்திருப்பது வருத்தமே. 20 - 7 - 43 தஞ்சை ஜில்லாக் கல்வியதிகாரி உதவியதிகாரிகளுடன் இன்று கரந்தைப் புலவர் கல்லூரிக்கு இன்ஸ்பெக்ஷனுக்கு வந்திருந்தனர். புகுமுக வகுப்பு இருத்தலாலும், அரசினர் உதவியை வேண்டுதலாலும் கல்லூரிக்கும் அவர்கள் சம்பந்தம் ஏற்படலாயிற்று. நான் காலை 11 மணிக்குச் சென்று மாலை 6-மணிக்கு வீடுவந்து சேர்ந்தேன். 24 - 7 - 43 சில நாட்களாக என் உடல் சிறிது தேறிவரினும், இரவில் இருமலால் சிறிது தூக்கங் கெடுவதும், காலையில் படுக்கையை விட்டு எழமுடியாதபடி துயில் பற்றிக் கொள்வதும் வழக்கமாக வுள்ளது. இன்று காலை, எந்தக்கோளின் கொடுமையோ தெரியவில்லை. படுக்கையினின்றும் எழுந்து உட்கார்ந்த பொழுது துயில் மயக்கத்தால் கட்டிலினின்றும் தலை கீழாய் விழுந்து தலையும் கழுத்தும் நன்கு அடிபடப் பெற்றேன். 26 - 7 - 43 இன்று கார்த்திகை விரதம் வழக்கம் போல் நடைபெற்றது. 8 - 8 - 43 ஞாயிற்றுக் கிழமையாகிய இன்று க. த. சங்கத்து வினைக் குழுவிற்குச் சென்றேன். இன்று சுந்தரர் திருநாளாகலின் புலவர் கல்லூரி மாணாக்கர்களையெல்லாம் மன்றத்தில் இருக்கச் செய்து சுந்தரரைக் குறித்துச் சொற் பொழிவு செய்தேன். சமய குரவர் நாட்களைத் தக்கவாறு கொண்டாடாத இழுக்குடையேனாயினும் இன்று இவ்வாறு செய்தது சிறிது ஆறுதலளிக்கிறது. 17 - 8 - 43 இன்று மருமகள் ராஜத்திற்குச் சிறிது உடல் நோவுற்றது. மருத்துவச்சி வந்து பார்த்து, இன்னும் நாலைந்து நாளில் குழந்தை பிறக்கலாம் என்று கூறிப்போயினள். இரவில் யாரை யேனும் அழைத்துவருதற்கு இங்குவேறு ஆள் இல்லாமையால் புலவர் கல்லூரி மாணாக்கர்கள் இவ்விருவர் நாடோறும் இரவில் வந்திருக்க ஏற்பாடு செய்திருக்கிறது. 22 - 8 - 43 இன்று கார்த்திகை விரதம் இனிது நிறைவேறியது. 30 - 8 - 43 திங்கட்கிழமை, அமாவாசையாகிய இன்று பகல் மணி 12-26க்கு நாழிகை 13-35 அளவில் சௌ. இராஜம்மாளுக்குப் பெண் குழந்தை பிறந்துளது. தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். திருவருளைப் போற்றுதல் வேண்டும். 1 - 9 - 43 பூதலூரில் ஒரு கல்யாணத்திற்குக் காலை வண்டியில் சென்று, பகல் வண்டியில் மீண்டேன். திரும்பும் பொழுது கூட்டம் மிகுதியாயிருந்தமையின் டிக்கெட் கொடுக்கப்பட வில்லை. டிக்கெட் இன்றிப் பிரயாணஞ் செய்த பலருள் யானும் ஒருவனானேன். வண்டியில் ஆடவரும் மகளிருமாய் அலங் கோலமாய் நின்று கொண்டிருந்த படியே வந்து சேர்ந்தேன். 2 - 9 - 43 வீ. சு. சிதம்பரம்பிள்ளை அளித்த அயத்தங்க செந்தூரம் இன்று உண்ணத் தொடங்கியுள்ளேன். 3 - 9 - 43 தஞ்சை நகராண்மைக் கழகத் தலைவரானமை குறித்து இராவ்பகதூர் அருளானந்தசாமி நாடாருக்கு க. த. சங்கத்தில் இன்று ஒரு வாழ்த்துப் பத்திரம் அளிக்கப்பெற்றது. யான் மூச்சுத் திணறுதலால் மிகுந்த சங்கடத்துடன் சில சொற்கள் பேசினேன். 9 - 9 - 43 புதிய மருந்துண்டதனாலோ, சந்தனாதி தயிலம் தேய்த்து முழுகிய தனாலோ நோயின் தொந்தரை மேலும் மிகுவதாயிற்று. சிறிது காய்ச்சலும் ஏற்பட்டது. நாளை 10-9-43ல் திருவையாறு அரசர் கல்லூரியில் திருவள்ளுவர் தமிழ் மாணவர் கழகத்தின் முதற் சொற்பொழிவு செய்ய ஒத்துக்கொண்டிருந்தது நிறைவேறாதெனத் தெரிந்தமையின் அவர்கட்குக் கடிதமெழுதப் பட்டது. மீட்டும் மருத்துவர் கோபாலசாமி வந்து பார்க்கிறார். 14 - 9 - 43 உடம்பு குணமடைந்து வருகிறது. மைந்தன் நடராஜன் 2-வாரம் லீவு எடுத்துக் கொண்டு இன்று வந்து சேர்ந்துளன். 19 - 9 - 43 இன்று கார்த்திகை விரதம் இனிது நிறைவேறியது. வடக்கு வாசல் முருகர்கோயிலில் இன்று அபிடேக அருச்சனைகள் செய்து வழிபட்டோம். நாடோறும் நாலைந்து வகை மருந்துகள் உண்ணுகின்றேன். 24 - 9 - 43 இன்று கொப்பனாப்பட்டி, கலைமகள் கல்லூரி, பட்டமளிப்பு விழா பண்டிதமணி மு. கதி. செட்டியார் தலைமையில் நடக்கிறது. அதில் சொற்பொழிவு செய்தற்குச் செல்வி பார்வதியம்மாளை அழைத்திருந்தனர். அதற்கிணங்கி, செல்வன் நடராஜனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு இன்று வைகறை மெயிலில் புறப்பட்டுச் சென்றுளது. மாப்பிள்ளை T. சிவ. திருச்சி வானொலியில் இன்று பேசுதற்குச் சென்றார். 25 - 9 - 43 பார்வதியம்மாளும், நடராஜனும் இன்று திரும்பி வந்தனர். கொப்பனாப்பட்டியில் பார்வதியம்மாளும், திரு. அ. மு. ச. முதலியாரவர்களும், ஒளவை, சு. து. பிள்ளையும் பேசினார்களாம். காரைக்கால் அம்மையார் என்னும் பொருள் பற்றிப் பார்வதி யம்மாள் பேசிய பேச்சு முதன்மையாயிருந்த தென்று நடராஜன் பாராட்டிப் பேசினன். 29 - 9 - 43 மைந்தன் நடராஜன் 2-வாரமாக இங்கிருந்துவிட்டு, இன்று அருவங்காட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுளான். 2 - 10 - 43 இன்று சென்னை வித். பரீட்சகர் கூட்டம் கரந்தைப் புலவர் கல்லூரியில் நடைபெற்றது. உடல் மெலிவாலும் மயக்கத்தாலும் பல நாட்களாக வினாத்தாள்கள் தயாரிக்க முடியாதிருந்தேன். செய்து முடிக்கவியலாதவளவு வேலையிருப்பதனை 2-நாளின் முன் உணர்ந்தேன். பின், பகலிலன்றி, நடுஇரவிலுங்கூட வேலை செய்து நேற்றிரவு ஒருவாறு முடித்தேன். எஞ்சிய சிறு பகுதியை இன்று கூட்டத்திலிருந்து கொண்டு எழுதி முடித்தேன். இங்ஙனம் வேலை செய்ததும், நிறைவேறியதும் வியப்பு விளைத்தன. இறைவன் அருள் இருந்தவாறு! 3 - 10 - 43 திருச்சி எஸ். பி. ஜி. கல்லூரியில் நெடுங்காலத்தின் முன் ஆசிரியராயிருந்த K. T. கிருஷ்ணசாமி ஐயங்கார் என்ற அன்பர் இன்று வீட்டிற்கு வந்து அரைமணிநேரம் வரையில் பேசிக் கொண்டிருந்து சென்றார். இவர் கிறிஸ்து சமயத்திற்குப் போய், மீண்டும் இந்துவாகத் திரும்பியவர். இவரது வாழ்க்கை விநோதமானது. சிறுபிராயத்திலிருந்தே ஏதோ பாரமார்த்திக நாட்டமுடையவராகக் காணப்படுவர். அத்தகைய பேச்சுக்களே பேசுவர். இப்பொழுது அது பின்னும் முதிர்ந்துளது. அவரே சொல்லுகிறபடி பலர் அவரைப் பித்தராக நினைக்கக்கூடும். ஆனால் அவரது பேச்சு மிகுந்த பயனுள்ளதாகும். அதன்முன் எனது சிறுமை புலனாகின்றது. 16 - 10 - 43 இன்று கார்த்திகை விரதம் இனிது நிறைவேறியது. 21 - 10 - 43 நடுக்காவேரி ஆற்றோரம் படுகையில் 9 சென்ட் நிலம் ரூ.819க்குக் கிரயத்திற்கு வாங்கி, இன்று பத்திரம் எழுதப்பெற்றது. 28 - 10 - 43 இன்று வைகறையில் தீபாவளி முழுக்கும், பகலில் பண்டிகையும் நிகழ்ந்தன. மைந்தன் நடராஜன் மட்டும் அருவங் காட்டில் இருத்தலின் உடனிருத்தற்கில்லை. மகள், மருகர், மருமகள், பேரக்குழந்தைகள் எல்லோரும் உடனிருந்தனர். இன்று பிற்பகலில், க. பு. கல்லூரி மாணவர்கள் 45பேர் வரை வந்து பலகாரம் உண்டு சென்றது மகிழ்ச்சியளித்தது. 31 - 10 - 43 நான்கு நாளாக உடல் செம்மையில்லாதிருத்தலின் யாதும் வேலை செய்யக்கூடவில்லை. 4 - 11 - 43 வாழ்க்கையின் போக்கில் பெரியதோர் மாறுபாடு. முன்பு 2-முறையோ? 3-முறையோ? சில சில யாண்டுகள் ஊனுண்டல் துறந்திருந்தேன். இம்முறை 9- ஆண்டுகளுக்கு மேலிருக்கலாம்; வீட்டில் யாருமே உண்பதில்லை. நரகத்திலிருந்து மீண்டது போற்காணப்பட்டோம். வீடு தூய்மையாக இருந்தது. இனி, உயிர் போயினும், இவ்விரதத்தை விடுவதில்லை என்னும் உறுதியோடேயே இருந்தேன். என் உறுதி பயனற்றதாயிற்று. பலமுறை விரதத்தைக் கைவிட்ட தீவினையு முடையேனா யினேன். நோயால் நாளுக்குநாள் உடல் மெலிந்து வந்ததோடு வலி குன்றிவந்தது. இரண்டொரு மாதமாக உடம்பில் சிறிதும் வலிமையிலாதாயிற்று. வீட்டினுள்ளே நடப்பது கூட மலையைச் சுமப்பது போலாயிற்று. உண்பதும் நீர் பருகுவதுங்கூடத் துன்பம் விளைத்தன. சிறிதும் பொறுக்க முடியவில்லை. என் செய்வது? எந்த மருந்தாலும் பயனுண்டாகவில்லை. சூப் (ஊன்) உண்டு பார்ப்பது தான் எஞ்சியிருந்தது. முன்பு சில வைத்தியர்களும் பிறரும் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் தெரிவித்தும் உண்பதில்லையென்று கூறினேன். இப்பொழுது யானே துணிந்து உண்ணலாயினேன். வீட்டில் இது செய்வது பொருத்தமின்றியிருந்தமையின் இன்று ஓர் கடையில் ‘சூப்’ வாங்கிவரச் செய்து உண்டேன். 7 - 11 - 43 வருகிற தாரண - சித்திரை- விசாகநாளில் என் 60-ஆம் ஆண்டு நிறைவெய்துவதால் அதனைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டி, அதன் பொருட்டு ஓர் கழகம் அமைக்கக் கருதி, இன்று மாலை கரந்தைச் சங்க மன்றத்தில் சங்கத் தலைவர் ஐ. குமாரசாமி பிள்ளை அவர்கள் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. கூட்டுவித்தோர் வித்துவான் அ. வடிவேலுச் சோழகரும், கி. ஆ. பெ. விசுவாநாதமும் ஆவர். வாழ்த்துப் பத்திரம் அளித்தல், உருவப்படம் திறந்து வைத்தல், நினைவு மலர் வெளியிடுதல், ஏழைகளுக்கு உணவளித்தல், பொற் கிழி அளித்தல், புலவர் கல்லூரி மாணவர்க்கு நிலையாக நினைவுக் குறிப் பரிசு வழங்க நிதி அமைத்தல், சொற்பொழிவு செய்வித்தல் என்ற வகையில் பிறப்பு நாளைக் கொண்டாடு வதென்று முடிபு செய்தார்களாம். பூண்டி A. வீரையாவாண்டையர் முதலாக 27-பேர் அடங்கிய வினைக்குழு அமைத்துள்ளார்களாம். கி. ஆ. பெ. விசுவநாதம் கூட்டத்தை முடித்துக் கொண்டு, வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்து விட்டுச் சென்றனர். 12 - 11 - 43 நடுக்காவேரியில் ரெகுநாத நாட்டார் என்பவர் இறந்து விட்டனரென நேற்று ஆள் வந்தனன். எங்கள் வீட்டிலுள்ள எனது சிறிய பாட்டனார் பேரன் சாமியையா இன்று இறந்து விட்டதாக ஆள் வந்தனன். யானும் இந்திராணியும் உடன் விரதத்தை முடித்துக் கொண்டு நடுக்காவேரிக்குச் சென்றோம். கார் கிடைக்காமையால் பாரவண்டியொன்றில் வருத்தத்தைப் பொறுத்துக் கொண்டு சென்றோம். கார்த்திகையாகிய இன்று பாராயணங்கள் செவ்வையாக நடக்கவில்லை. 14 - 11 - 43 மாலையில் தஞ்சை வந்து சேர்ந்தோம். 18 - 11 - 43 ஆபிரகாம் பண்டிதர் புதல்வர் வரகுண பாண்டியர், தமக்கும் தம் தம்பிக்குமாக நடுக்காவேரியில் இருந்த நிலங்களை இவ்வாண்டு உயர்ந்த விலைக்கு விற்கலானார். பெரும்பாலும் விற்றாயின. ஆங்குடி என்ற இடத்தில் சுமார் 17-மா அளவுள்ள நன்செய் எஞ்சியிருந்தது. அதனை அவருடன் பேசி ரூ. 6500க்கு முடிபு செய்து, இன்று ரூ.1000 முன்பணம் கொடுக்கலானேன். திருவருட் செயல். 20 - 11 - 43 4-11-43ல் உணவு மாற்றம் நிகழ்ந்த பின் உடம்பு தேறிவருவது போற் காணப்பட்டது. ஒருவாரத்தின் முன்றொட்டுத் தோற் சுருக்க மெல்லாம் நீங்கிப் பழைய உடம்பு போற் பருத்து விளங்கிற்று. ஆனால் நடப்பதற்குச் சிறிதும் வலிமையின்றி இருந்தது. நீர் சுரந்து உடம்பு வீங்கிவிட்டதென்று நன்கு தெரிந்தபின், வைத்தியர் கோபாலசாமியை அழைத்துக் காட்டினோம். அவர், நல்ல வேளையாக இந்நோய் முற்றுவதற்குள் காட்டிவிட்டீர்கள்; எங்கும் கிடைத்தற்கரிய நல்ல மருந்தினை நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்; அதனைஉண்டு பார்லிக் கஞ்சியை மட்டில் உணவாகக் கொள்ள வேண்டும்; 4 நாளில் வீக்கம் வடிந்து விடும் என்று கூறி, இன்று மருந்து கொடுத்துச் சென்றார். 22 - 11 - 43 வரகுணபாண்டியரென்பவர் 4-நாளின்முன் எனக்குக் கிரயஞ் செய்வதாகக் கூறிய நிலங்களுக்கு முன்பே ஒருவரிடம் முன்பணம் வாங்கியிருப்பதால், அவருக்குத் தெரிவிக்காமல் என்னிடம் விற்பது தகாது என வீட்டில் பெரியோர்கள் சொல்கிறார்கள் எனக்கூறி, அன்று வாங்கிய ஆயிரம் ரூபாயையும் இன்று திருப்பிக் கொண்டு வந்து தந்தார். சுக்கிர திசையின் சுயபுத்தி இறுதியில் அட்டமத்துச் சனியினாலோ, வேறு எக்கோட்களாலோ வியக்கத்தக்கவாறு பலன்கள் நடைபெறுகின்றன. வைத்தியர் கூறியபடி நாடொறும் லிவர் சத்து எடுத்து உண்ணப்படுகிறது. பார்லிக் கஞ்சி, சாத்துக்குடிச் சாறு, காபி என்பன உணவு. 26 - 11 - 43 வியக்கத்தக்கவாறு உடல் வீக்கம் வடிந்து விட்டது. உடல் மிக இளைத்து விட்டது. களைப்பு மிகுதியாயிருக்கிறது. நாலைந்துநாள் மேல் வீட்டிலேயே இருந்தேன். சிறிது உணவுண்ணத் தொடங்கிஉள்ளேன். 2 - 12 - 43 இன்று கல்லூரிக்கும் போய் வந்தேன். 3 - 12 - 43 வரகுணபாண்டியரிடம் நிலத்திற்கு அச்சாரம் கொடுத்த தரகு ஐயர் நேற்றிரவு என்னிடம் வந்து எனக்கே அதனை முடிப்பதாகப் பேசிச் சென்றனர். நான் அவருக்கு ரூ.100 தர இணங்கினேன். இன்று காலை அவர் வந்து பண்டிதர் வீட்டுக்கு என்னை அழைந்துச் சென்றனர். நிலத்திற்கு முன் பணம் ரூ.1000/- கொடுத்து, பத்திரஸ்டாம்பு வாங்க ரூ.195 கொடுத்து வந்தேன். 6 - 12 - 43 இன்று இரவு ஆங்குடி நிலங்களின் கிரய பத்திரம் எழுதப் பெற்றது. இன்று கிரயத் தொகையில் ரூ.1000மும், வட்டி வகைக்கு ரூ. 100ம் கொடுக்கப் பெற்றன. 8 - 12 - 43 மைந்தன் நடராஜனிடமிருந்து இன்று வந்த கடிதத்தால், 3-12-43ல் காலை 8-மணிக்கு அருவங்காடு பாகிடரியில் ஓர் கட்டிடத்தில் 3-வது மாடியில் வைத்திருந்த தேன்கூடு ஒன்றை வேலைக்காரர்கள் கலைத்துத் தேன் எடுத்துச் செல்ல, 11-மணிக்கு அக்கட்டிடத்திலிருந்து வெளியே சென்று கொண்டிருந்த நடராஜாவை அக்கூண்டிலிருந்து ஈக்கள் 1, 10, 100, 1000 ஆகக் கிளம்பிப் போய்க் கடித்துத் துன்புறுத்தினவெனவும், மைந்தன் அலறி ஓடிக் கீழே விழுந்து அரிதில் தப்பி, ஆஸ்பிடல் சென்று முகம் முதலியவற்றிலிருந்து 100 முட்கள் வரை எடுக்கப் பெற்றன என்றும், அதனால் காய்ச்சல் ஏற்பட்டு 3-நாட்கள் வருந்தினன் என்றும் அறியலானோம். தீக்கோளின் இயல்பு இருந்த வாறென்னே! கடிதம் அஞ்சத்தக்கதாயிருந்தது. கடைசியில் நலமடைந்ததாக எழுதிய செய்தி ஆறுதல் அளித்தது. சர்ச்சில், ரூஸ்வெல்டு, ஸ்டாலின் மூவரும் ஈரானில் கூடிய மகாநாட்டில் பேசி முடிவு செய்ததும், 1-12-43ல் அம்மூவரும் கையெழுத்திட்டதுமான அறிக்கை பத்திரிகையில் வந்திருந்த தனைப் பார்த்தேன். கல்கத்தாவில் 5-12-43 காலையில் ஜப்பான் விமானம் குண்டு வீசியதும் தெரிந்தது. 10 - 12 - 43 கார்த்திகை விரதம் திருவருளால் இனிது நிறைவேறியது. 23 - 12 - 43 இன்று அன்னையார் திதி நடைபெற்றது. ராஜமும் குழந்தைகளும் மாலையில் வந்து சேர்ந்தார்கள். 24 - 12 - 43 ஆங்குடி நிலங்களின் கிரயப் பத்திரம் இன்று தஞ்சையில் ரிஜிஸ்டர் செய்யப்பெற்றது. 26 - 12 - 43 நேற்றும் இன்றும் உடம்பில் வலிமைக்குறைவும் சோர்வும் மிகுந்து, வீட்டினுள் நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டுளது. உணவும் செரிமானமில்லை. முன்போல் வீக்கம் ஏற்படுமோ என்ற ஐயம் தோன்றுகிறது. 31- 12 - 43 நான்கு நாளின் முன் உடம்பில் வீக்கம் ஏற்பட்டது. நன்கு புலனாயிற்று. இரண்டு நாள் இரவில் பார்லிக் கஞ்சியே உண்டேன். வீக்கம் முற்றிலும் வடிந்து விட்டது. லிவர் சத்தும் விடாது உண்டு வருகிறேன். அதன் காப்புடையதொரு மருந்தும் உண்டு வருகிறேன். இருமல் இழைப்பும் சிறிது குறைந்துளது. இன்று மாலை 4-பர்லாங்கு வரை நடந்தும் சென்றேன். அகநானூற்றுக்கு உரையெழுதுவது சில நாளின் முன்பே முடிந்துவிட்டது. முகவுரை முதலியன இனி எழுதப் பெறல் வேண்டும். 2-நாளின் முன் அகம் 380 பாட்டுக்கள் வரை சென்னைக்கு அனுப்பியுள்ளேன். அகநானூறு புரூப் திருத்துவதுடன், பழைய தபாற் கடிதங்களைத் துருவிப் பார்த்து இன்றியமையாதவற்றை எடுத்துக் கொள்வது இரண்டு மூன்று நாளாக நடக்கும் வேலையாகும். கழகத்திலிருந்து தோல் கட்டிடம் கட்டிய அழகான திருக்குறள் நாட்குறிப்பு இன்று வந்தது. ஞாபகக் குறிப்பு ‘பாண்பெரியார் மூவர்’ என்ற புத்தகம் இலங்கை, கல்வி இலாகா டைரெக்டரால் 9-7-42ல் அது முதல் 5-வருடத்திற்கு ஸ்கூல் உபயோகத்திற்கு அப்ரூவல் செய்யப் பெற்றுளது. திக்கம் சி. செல்லையாபிள்ளை (கந்தவனாலய ஆதினகர்த்தர்) வல்வெட்டித்துறை (Proof) யாழ்ப்பாணம் சித்தர் குடியில் சர்க்கார் புறம்போக்கு நிலங்கள் ஏலம் எடுத்த தேதி 14-11-1942 (சனிக்கிழமை) தொகை ரூ. 1710 டிபாசிட் ரு. 265 பாக்கி ரூ. 1445 கெடு 13-12-1942 பாக்கித் தொகை ரூ. 1445ம் செலுத்தியநாள் 7-12-1942 மறுஏலம் விட்ட தேதி 5-2-43 ஏலம் உயர்ந்த தொகைக்கு மற்றொருவனால் எடுக்கப்பட்டு விட்டது. 11-7-1942 காலை மணி 11-30க்கு அண்ணாமலை நகரில் தமிழ்ப் பாடபோர்டு கூட்டம். 21-8-42 (7-15 to 7-30 P. M.) திருச்சி வானொலியில் ‘கலித்தொகை’ என்பது பற்றிப் பேசுவது. 30-9-42 காலை 11-மணிக்குக் கரந்தைப் புலவர் கல்லூரியில் சென்னை வித்துவான் பரீட்சகர் கூட்டம் நடப்பது. 29-1-43 (7-15 to 7-30 P. M.) திருச்சி வானொலியில் ‘மனோன்மணீயம்’ என்பது பற்றிப் பேசுவது. வருமானவரி ரீபண்டு Book No. 5942 Order for refund of tax payable at the Imperial Bank of India, Tanjore, within one month of date of issue. To, the Secretary, Bank Tanjore For the year 1942-43 No. 3747. a refund of Rs.79. Rs.19-12+59-4. Signature income - tax officer. 18-12-1942. 1944ஆம் ஆண்டு 1 - 1 - 1944 தொகுத்து வைத்திருந்த பழைய கடிதங்களில் என் வரலாற்றுக் குறிப்புக்கு உதவியாவனவற்றைத் தேர்ந்தெடுப் பதிலேயே நேற்றும் இன்றும் பொழுது கழிந்தது. இன்று மாலையில் நீர்க்கோவை ஏற்பட்டுத் தொண்டை கம்மிக் கொண்டது. 2 - 1 - 44 பழைய கடிதங்களில் வரலாற்றுக் குறிப்புக்கு உதவியா வனவற்றைத் தேர்ந்தெடுப்பதிலேயே இன்றும் பொழுது கழிந்தது. மாலை 6-மணிக்கு மேல் க. த. சங்கத்தில் உயர் திரு. விபுலானந்த சுவாமிகள் ‘செழுங் கலை நியமம்’ என்பது பொருளாக ஒரு சொற்பொழிவு செய்தனர். அதற்குப் போய் வந்தேன். இன்று பகலும் இரவும் இருமல் இழைப்பு. 6 - 1 - 44 இன்று கார்த்திகை விரதம் ஒருவாறு நிறைவேறியது. 7 - 1 - 44 மீட்டும் துன்பம் தொடங்கிற்று, சிறிதும் நடக்க முடிய வில்லை. உணவும் சரியாய் உட்கொள்ள முடியவில்லை. வீக்கம் சிறிது தோன்றுகிறது. இரவில் பார்லி கஞ்சியே உண்டேன். 8 - 1 - 44 குழந்தை மருத்துவர்க்குச் சொல்லியநுப்பியது. டாக்டர் சொக்கலிங்கம் பிள்ளை வந்து சோதித்துப் பார்த்து இருதயம் முதலியன நன்றாயிருக்கின்றன. எனினும் இன்னின்ன உணவு களை இன்னவாறு உண்ணவேண்டுமெனவும், நீர் பிடித்து அனுப்புமாறும் கூறிச் சென்றனர். 9 - 1 - 44 டாக்டர் சொக்கலிங்கம் பிள்ளை நீரைச் சோதித்துப் பார்த்துச் சர்க்கரை இல்லையென்றும், உணவினாலேயே உடல் திருந்த வேண்டுமென்றும் சொல்லியநுப்பினார். அவர் தெரிவித்த படி நேற்று முதல் கீழிறங்காது மேல் வீட்டிலேயே தங்கி எல்லாம் பார்த்துக் கொள்கிறேன். 10 - 1 - 44 கு. மருத்துவர் கோபாலசாமி வற்புறுத்தி அழைத்து வரப்பெற்றார். மருந்து கொடுத்தனுப்புகிறாhர். துன்பம் தாங்க முடியாதிருக்கிறது. 12 - 1 - 44 உண்ணும் ஊன் சத்து வகையில் ஒரு மாறுதல். 13 - 1 - 44 உடம்பில் கொதிப்பு மிக்கிருந்தமையால் 8-நாளாகக் குளிக்காதிருந்த நான் இன்று எண்ணெயிட்டு முழுகிவிட்டேன். உடல் சிறிது தெளிவும் நலமும் அடைந்துளது. 14 - 1 - 44 பொங்கற் புதுநாளாகிய இன்று நண்பகலில் கீழ்வீட்டில் இறங்கி, நீராடி அனுட்டானஞ் செய்து, குழந்தைகளோடு உணவுண்டு மேல் வந்தேன். இன்று வந்த செந்தமிழ்ச் செல்வி முழுதும் படித்தேன். (3-ம் தேதி முதல் குறிப்புகள் இன்றே எழுதப் பெற்றன) 17 - 1 - 44 இன்று புலவர் கல்லூரி திறக்கப்பெற்றது. யான் கல்லூரிக்குச் சென்று வந்தேன். வாழ்க்கை வரலாறு எழுதத் தொடங்கி, தோற்றுவாய் எழுதி முடித்தேன். 22 - 1 - 44 சிலநாட்களாக நாட்குறிப்புகளிலுள்ள சிற்சில குறிப்புக் களை வாழ்க்கை வரலாற்றின் பொருட்டுத் தொகுப்பதி லேயே பொழுது கழிந்தது. திருச்செங்கோட்டி லிருந்து மாணவர் வித்துவான் வீ. உலகவூழியர் என் வாழ்க்கை வரலாறு எழுது தற்கென்றே விடுதி பெற்று வந்துள்ளார். 29 - 1 - 44 உலகவூழியர் வரலாறு எழுதி முடித்துவிட்டு, இன்று ஊருக்குப் புறப்பட்டனர். 31 - 1 - 44 நாள்தோறும் நோயின் தொந்தரை பொறுக்க முடியாத தாகவே இருக்கிறது. மேல் வீட்டிலேயே இருக்கிறேன். யான் என் செய வல்லேன். எல்லாம் இறைவன் செயல். 2 - 2 - 44 அப்துல் கபூர் சாஹிப் புலவர் தாம் பாடிய வாழ்த்தியற் கீர்த்தனப் பாமாலையை இன்று கொணர்ந்து படித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார். கார்த்திகை விரதம் நிறைவேறியது. 7 - 2 - 44 புலவர் கல்லூரி சென்று வந்தேன். 8 - 2 - 44 நடராஜன் வருகை. 11 - 2 - 44 இன்று மாலையில் செங்கிபட்டியில் இராஜகோபால், மருதையா இருவர்க்கும் கல்யாணம். மாப்பிள்ளைகளும், பெண்கள் வீட்டாரும் எங்கட்கு நெருங்கிய உறவினராகலின் நாங்கள் கட்டாயம் கல்யாணத்திற்குப் போக வேண்டும். ஆனால் என் உடல் நிலை அச்சம் விளைத்ததால் நான் போகவில்லை. என் மைந்தன் நடராஜனும் தம்பிகள் முதலானவர்களும் போயிருக்கிறார்கள். 12 - 2 - 44 நானும் மனைவியும் நேற்றே புறப்பட்டு நடுக்காவேரி வந்து சேர்ந்தோம். இன்று வயல் அறுவடை. நான் கொல்லையிலுள்ள களத்தில் நெல் அடித்து அடிக்கும் பொழுது மாத்திரம் மெதுவாகப் போயிருந்தேன். 13 - 2 - 44 இன்று கல்லடி அருவடையாயிற்று. உடம்பில் வீக்கம் ஏற்பட்டுளது. 14 - 2 - 44 சிவப்பிரகாசம் தஞ்சை சென்று மருந்து வாங்கி வந்தார். 18 - 2 - 44 இன்று தஞ்சை வந்து சேர்ந்தோம். 19 - 2 - 44 இன்று மழை பெய்து கொண்டிருக்கிறது. நடராஜன் குடும்பத்துடன் இன்று அருவருங்காட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுளான். 21 - 2 - 44 3-நாளாக விடாத மழை. 22 - 2 - 44 இன்று சிவனிரா. என்பால் விசேச அன்புணர்ச்சி காணப்பட வில்லை. 23 - 2 - 44 உடல் வீக்கம் வடிந்து விட்டது. 24 - 2 - 44 காந்தியடிகளின் மனைவியார் கஸ்தூரிபாய் அம்மையார் 22 - 2 - 44 செவ்வாய் மாலை மணி 7-35க்கு உயிர் துறந்தனரென்றும், புதன்காலை 10-30 மணிக்குத் தகனம் நடைபெற்ற தென்றும், பம்பாய் சர்க்கார் அறிக்கை பத்திரிகையில் வெளிவந்துளது. பூனாவிலுள்ள ஆகாகான் மாளிகையில் நிகழ்ந்தது. இளைய பிள்ளை தேவதாஸ் காந்தி கிரியை செய்தாராம். காந்தியடிகள் உடனிருந்தாராம். 29 - 2 - 44 கார்த்திகை விரதம் இனிது நிறைவேறியது. உரை வேலை ஒன்றும் நடவாமலே பொழுது எப்படியோ கழிந்து விடுகின்றது. 2 - 3 - 44 இன்று காலை புது மணி 7-12க்கு, மாப்பிள்ளை திருநாவுக்கரசுச் சேதிராயருக்கு நாகத்தியில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. நலம். 3 - 3 - 44 29-2-44இரவு 11 மணிக்குச் சிலோனிலும், மதுரையிலும், குன்னூரிலும் இருமுறை ½ நிமிடம் பூகம்பம் நிகழ்ந்ததாக இன்று பத்திரிகையில் வெளிவந்துளது. போபால் சமஸ்தானத்தில் போலீஸ்காரனாய் இருந்து, தன் முயற்சியால் ஜமீன்தாரனான ஒரு முகமதியற்கு வயது 125 ஆகிறதாம். அவருடைய 83-ம், கடைசிக்குழந்தைக்கு 1¼ ம் ஆகிறதாம். 5 - 3 - 44 வீ. சு. சிதம்பரம் பிள்ளை அளித்த அயத்தங்க செந்தூரம் உண்ணத் தொடங்கியுளது. 10 - 3 - 44 பங்குனியில் சென்னையில் நடைபெறவிருக்கும் கம்பர் விழாவின் மலருக்கு, ‘கம்பர் காட்டிய ஒழுக்கநெறிகளிற் சில’ என்னும் பொருள் பற்றி ஒரு கட்டுரை இன்று எழுதியநுப்பப் பெற்றது. 11 - 3 - 44 க. பு. கல்லூரியின் இளங்கோவடிகள் கழகத்தின் ஆறாம் ஆண்டு விழா இன்று எனது தலைமையில் நடந்தது. 12 - 3 - 44 இன்று க. த. சங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ராவ்பகதூர் அருளானந்தசாமி நாடார் சங்கத் தலைவராகவும், வழக்கறிஞர் வரதராஜன் அமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். ஏனைய வினைக் குழு உறுப்பினரெல்லாம் முன்பிருந்தோரே. தலைவர், அமைச்சர் மாறுதல் பெரிய செய்தியாகும். 17 - 3 - 44 நாலைந்து நாட்களாக மீட்டும் கால் முதலியன சுரந்து கொண்டு துன்புறுத்தலால், வைத்திய கோவிந்தனை அழைப்பிக் கலாயிற்று. இன்று மாலை வந்து பார்த்துவிட்டு, ஞாயிற்றுக் கிழமை வந்து மருந்து கொடுப்பதாகச் சொல்லிப் போயிருக் கின்றனன். திரு. S. D. நாயகம் இன்று காலை வந்தார். குலசேகரன் பட்டினத்தில் அவர் ஏற்படுத்தும் தமிழ்க் கல்லூரியைப் பற்றிய விபரங்களைச் சொன்னார். மிக்க நல்ல குணமுடையவரெனத் தெரிகிறது. 19 - 3 - 44 மருந்துண்டல். 20 - 3 - 44 அன்பன். ம. அரங்கநாதன் கல்யாணத்திற்கு எவ்வாற்றானும் பணம் சேகரிக்க முடியாத நிலையில் நான் கடனாகக் கொடுத்துதவும் படி திருவருள் கூட்டிற்று. ரூ. 200/- இன்று அளிக்கப் பெற்றது. கணம்புல்லநாயனார் திருப்பதி பற்றி அன்பர் T. V. ச. பண்டாரத்தார் செந்தமிழ்ச் செல்வியில் எழுதியிருந்த கட்டுரை தவறாயிருந்தமையின், அதனை மறுத்து, “சித்தாந்த”த்திற்கு இன்று எழுதியனுப்பினேன். 21 - 3 - 44 உடம்பில் இரத்தமில்லாமையால் சில திங்களாக ஏற்பட்டு வந்த வீக்கத்தின் பொருட்டு மருத்துவ கோவிந்தன் கொடுத்த மருந்தினை ஞாயிறு முதல் 3-நாளும் உண்டு, உப்புப் புளி நீக்கிக் கஞ்சி மாத்திரம் உட்கொண்டு வந்தேன். இன்று காலை மிகுதியாயிருந்தது. நாளை முதல் பத்தியமில்லை. 22 - 3 - 44 இன்று இராமசாமிபிள்ளையவர்களிடம் ரூ.4000மும் பெற்றுக் கொண்டு வீட்டு ஒற்றிப் பத்திரம் ரத்துச் செய்து கொடுக்கப் பெற்றது. இன்று ஓமம் தேய்த்து, முழுகி உணவுண்டதில் சிறிது தென்பு உண்டாயிருக்கிறது. 23 - 3 - 44 எண்ணெயிட்டு முழுகியது. 24 - 3 - 44 திருவிடை மருதூரிலிருந்து வித்துவான் பகுதித்தேர்வுக்கு எழுதத் தஞ்சை வந்த ஓர் ஏகாலியர் குலத்துச் சிறுமி என்னை வந்து பார்த்தனர். இவருடைய எழிலும், அதனினும் சிறந்த சொற்களும், உயர்குணமும், தெய்வபக்தியும் மிகவும் பாராட்டற் குரியன. இவர் போர்டு பெண் பள்ளியில் ஓர் பயிற்சி பெற்ற ஆசிரியையாவர். கடவுள் காலில் ஓர் ஊனத்தை அளித்துள்ளார். 28 - 3 - 44 Father died today by 9.30 a.m. due to heartfailure at the Tanjore house, 2659. Rajagopalasami Koil Street, Tanjore and was brought to Vadukkarai. -V. Natarajan வாழ்க்கை வரலாறு வாழ்க்கை வரலாறு ஓங்கு செந்நெலின் புடையன உயர்கழைக் கரும்பு பூங்க ரும்பயல் மிடைவன பூகமப் பூகப் பாங்கு நீள்குலைத் தெங்குபைங் கதலிவண் பலவு தூங்கு தீங்கனிச் சூதநீள் வேலிய சோலை. தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக் கொண்டல்கண் முழவி னேங்கக் குவளைகண் விழித்து நோக்கத் தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ. இச்செய்யுட்களை நினைவுகூரச் செய்வது சோழ நாட்டிலே திருவையாற்றிற்கு அணித்தாகவுள்ள நடுக்காவேரி என்னும் பதி. அப்பகுதியிலே சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் இவ்வரலாற்றுத் தலைவராகிய திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களின் பாட்டனாராகிய வீரு நாட்டார் என்பவர் இளைஞருடன் வாழ்ந்து வந்தனர். வீரு நாட்டார் போதிய கல்வியுடையர் அல்லராயினும், கற்றவர்களிடத்தில் மிக்க அன்புடையவர். தம் மக்களாகிய முத்துசாமி நாட்டார், சொக்கலிங்க நாட்டார் என்ற இருவர்க்கும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கட்கு வேண்டும் உதவிகள் எல்லாம் செய்வர். தம் மக்கள் படிக்குங் காலங்களில் அவர்களை வேறு வேலை ஒன்றிலும் ஏவுதல் செய்யார். நாள்தோறும் நீராடி ஊரில் உள்ள எல்லாக் கோயில்களுக்கும் சென்று கும்பிட்டு வந்து உணவுண்பர். ஏறக்குறைய 75 ஆண்டுகள் வரை அவர் உயிர் வாழ்ந்திருந்தனர். அவருடைய மக்கள் இருவரில் மூத்தவராகிய முத்துசாமி நாட்டார் ஓரளவில் தமிழ் இலக்கியப் பயிற்சியுடன் வேதாந்த நூற் பயிற்சியும் சோதிடப் பயிற்சியும் உடையவர். நாள்தோறும் நீராடிச் செய்கடன் முடித்துக்கொண்டு நண்பகலிலும் இரவிலுமாக இருவேளை உணவு மாத்திரம் உண்ணும் வழக்கமுடையர்; சாதுக்களிடத்தில் பற்றுள்ளவர்; தெய்வபக்தி வாய்ந்தவர். இளையவராகிய சொக்கலிங்க நாட்டார் மகாவைத்தியநாதய்யர் அவர்களிடம் இசைகற்று இசையில் வழுவாது பாடும் திறமை வாய்ந்தவர். தம்மூரிலே பார்ப்பனருள்ளும் ஏனையோருள்ளும் இசை கற்க விரும்பிய சிற்சிலர்க்கு இவர் கற்பித்தும் உள்ளார். இவராலே மகா வைத்தியநாதய்யர் குடும்பத்திலுள்ள பலரும் இக்குடும்பத் தார்க்குப் பழக்கமுடையராயினர். பிறப்பு முத்துசாமி நாட்டாருடைய மனைவியார் தையலம்மாள் என்னும் பெயரினர்; அமைதியான குணம் உடையவர்; முதுமையிலும் சோர்வின்றிக் குடித்தனத்தைச் செவ்வனே நடத்தி வந்தவர். இவர்கட்கு ஆண்மக்கள் இருவரும் பெண் மக்கள் இருவரும் பிறந்த பின்னர்த் தாரண யாண்டு, சித்திரைத் திங்கள், 2-ஆம் நாள் (12-4-1884) விசாக நாண்மீன், சிங்க ஓரையில் இவ்வரலாற்று ஆசிரியராகிய திருவாளர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் பிறந்தார். இவருக்குப்பின் ஆண்மக்கள் மூவர் பிறந்தனர். இவர்களுள் தமக்கையார் ஒருவரும், தம்பியர் இருவரும் இப்பொழுது உள்ளனர். நாட்டாருக்கு முதலில் இடப்பெற்ற பெயர் சிவப்பிரகாசம் என்பது. இளம் பருவத்தில் தொடையில் ஒரு கட்டியுண்டாகி வருத்த அதனை மருத்துவரைக் கொண்டு கிழிக்கச் செய்து திருப்பதிக்கு முடிவைத்துப் பெயரையும் வேங்கடசாமி என மாற்றினராம். எனவே இவருடைய பெற்றோர் திருமால் பத்தியும் உடையர் என்பது இதனால் புலனாகின்றது. இளமைப் பருவத்துக் கல்வி இவர் ஐந்து தொடக்கப் பள்ளிகளில் பயின்றுள்ளார். அவற்றுள் மூன்று பள்ளிகளில் இவர் பயின்றகாலம் நாட்கணக்கு அல்லது திங்கட் கணக்கினவே. இரண்டு பள்ளிகளிற்றான் சிலயாண்டுகள் கல்வி பயின்றுள்ளார். அவற்றுள் ஒன்று வல்லம் குருசாமி உபாத்தியாயர் என்பவரலே இவர்கள் வீட்டுக்கு எதிர் மனையில் வைத்து நடத்திய திண்ணைப் பள்ளியாகும். அதில் அக்கால வழக்கப்படி நெடுங் கணக்குப் பயின்ற பின்னர் இலக்கம், நெல்லிலக்கம், எண்சுவடி, குழிமாற்று என்பவற்றைச் சிற்சில நாட்களில் பயின்று முடித்தார். அதன்பின்னர் நாட்டாருடைய தந்தையார் கருத்துப்படி ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி என்னும் நீதி நூல்கள் கற்பிக்கப்பெற்றார். பின்பு திருக்குறளிலே அறுபது அதிகாரங்கள் வரையில் மனப்பாடம் செய்து ஆசிரியரிடம் ஒப்புவித்துள்ளார். இவை இவருடைய பிற்காலப் பெருங்கல்விக்கு அடிப்படையாய் இருந்தன. பின்பு சாம்பமூர்த்தி ஐயர் என்பவரால் நடத்தப்பட்ட தொடக்கப் பள்ளியில் 3, 4 ஆம் வகுப்புகள் பயின்றார். அந்நாளிலே நான்காம் வகுப்பிற்கு அரசியலார் தேர்விருந்தது. இவர் அத்தேர்விலே ஒவ்வொரு பாடத்திலும் முதன்மை எண் பெற்றுச் சிறப்புறத் தேறியுள்ளார். இவருடைய இளமைப் பருவமுதற் கொண்டு திருத்தமாகவே பேசுதலையும் எழுதுதலையும் வழக்கமாக இன்றுபோலவே உடையர். பள்ளிகளில் படிப்பின் பொருட்டு ஆசிரியரால் இவர் ஒறுக்கப்படாமையேயன்றி ஆசிரியருடைய கற்பித்தற் றொழிற்கும் உதவிசெய்து வந்தனர். இவர் பள்ளியில் பயிலும் நாட்களில் பள்ளியிலிருந்து வீட்டுக்குச் சென்ற பொழுதுகளிலும், ஓய்வு நேரங்களிலும் தம் வீட்டுத் திண்ணையில் வழக்கமாகப் படிக்கப்பட்டு வந்த பாரத, இராமாயண, கந்தபுராணக் கதைகளை இவர் விருப்புடன் கேட்டுக் கொண்டிருப்பர்; சில சமயங்களில் தாமே படிப்பவராகவும் இருப்பர். இவர் கதைச்சுவையில் ஈடுபட்டுத் தனியாக அவற்றைப் படிப்பதும் உண்டு. இவையேயன்றி அபிமன்னன் சுந்தரிமாலை போன்ற எளிய செய்யுள் நடையில் அமைந்துள்ள நூல்களையும் மிகவும் விரும்பிப் பலகாற் பயில்வர். புலமைக்கடிப்படை பள்ளிப் படிப்பை விட்டபின்பு இவர் தம் தந்தையார்பால் திருப்புகலூர் அந்தாதி, திருச்செந்தில் நீரோட்டக யமக வந்தாதி, வெங்கைக்கோவை என்னும் பிரபந்தங்களும் நைடதத்து முற்பகுதியும் பாடங் கேட்டனர். நைடதத்தின் பிற்பகுதியும், திருவிளையாடற் புராணமும், வில்லிபாரதம், கம்பவிராமாயணம் முதலியவைகளுட் சிற்சில பகுதிகளும் தந்தையார் முன் பொருளுணர்ச்சியோடு படித்தனர். அக்காலத்து இவர்களுக்கு வயது 16 இருத்தல் கூடும். அப்பொழுது தங்குடும்ப நிலைமை சீர்திருந்துதற்கு வேளாண்மை செய்யக் கருதிய இவர் அதனில் தலைப் படலாயினர். நாலைந்து ஆண்டுகள் வரையில் நன்செய் புன்செய் நிலங்களில் பயிர் செய்தற்கண் ஊக்கமும் முயற்சியும் உடையராய் உழைத்து வந்தார். அதனால் நல்லபயன் கிடைத்தது. வேளாண்மையில் ஈடுபட்டுள்ள நாட்களிலும் ஒழிந்த போதெல்லாம் படித்து வந்தார். சூடாமணி நிகண்டில் 11-ஆம் தொகுதி முழுதும் பாடம் பண்ணியுள்ளார்; வடமொழி கற்க விரும்பிக் கிரந்த எழுத்துக் களைப் பயின்றுகொண்டு நீதிசாரம் முதலிய சிலவற்றையும், ஓரளவு சப்தத்தையும் பயின்றார்; அமரத்திற் சிறு பகுதி பாடம் செய்தார். அக்காலத்து இவர் தந்தையார் கல்வி அறிவுடையார் என்பதனைக் கேட்டு அவரைப் பார்க்கவரும் புலவர்களோடு இவரும் அளவளாவுவது உண்டு. அக்காலை, மதுரையில் தமிழ்ச் சங்கம் தோன்றியபின்பு, தஞ்சைக் கல்யாணசுந்தரம் உயர் நிலைப் பள்ளியில் இருந்த சில ஆசிரியர்கள் பாப்பானாட்டு சமீன்றார் திருவாளர் சாமிநாதவிசயதேவருடைய தலைமையில் “தஞ்சைத் தமிழ்ச்சங்கம்” எனப் பெயரிய கழகம் ஒன்றினைத் தோற்றுவித்து நடத்தி வந்தனர். அக்கழக உறுப்பினருள் நம் நாட்டார் அவர்களின் தந்தையாரும் ஒருவராதலின் அங்கு நடைபெறும் சிறப்புக் கூட்டங்கட்கு வரும் அழைப்பினைப் பெற்றுத் தந்தையார் செல்லும்போது தாமும் சென்று சொற்பொழிவு களைச் செவிமடுப்பர் இங்ஙனமாகச் சிறிது இலக்கியப் பயிற்சிபெற்று வந்தாராயினும், கற்பிப்பார் யாரும் இன்மையின் இலக்கணம் பயில வாய்ப்பிலராயினர். ஜி. யு. போப்பையர் இயற்றிய சிற்றிலக்கண மட்டில் தொடக்கப் பள்ளியில் இவர் பயின்றிருந்தார். பின்பு நன்னூற் பாயிரவியலிலும், எழுத்தியலிலும் உள்ள சூத்திரங்களைத் தாமாகவே மனப்பாடம் செய்திருந்தார். இங்ஙனமாகப் போதிய இலக்கண இலக்கியப் பயிற்சி இல்லா திருப்பினும் செய்யுட்களின் பொருளைக் கூடிய வரையில் சரியாய் அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் இவர்க்கு இருந்தது. நடுக்காவிரிக்கு வந்த ஒரு புலவர் “கற்றவரே மானாரி காயரா காசினிதேர்” என்னும் ஒரு வெண்பாவின் முதலடிக்கு உண்மைப் பொருள் உணராது அவ்வெண்பாவைத் தவறு என்று கூறிய போது இவர் அதனை, “கல்தவர்; ஏமால்; நாரி காய்அரா; காசினிதேர்” எனப்பிரித்துப் பொருள் கூறி உண்மை யுணர்த்தினர். அந்நாளிலே தொடக்கப் பள்ளிகளின் மேற் பார்வையாள ராயிருந்தவரும், “சாவித்திரி வெண்பா” என்னும் நூலின் ஆசிரியரும் ஆகிய திருவாளர் ஐ. சாமிநாத முதலியார் அவர்கள் மிகுந்த தமிழ்ப்பற்றுடையராய்த் தமிழ் கற்றவர்களைக் கண்டு அளவளாவியும், பள்ளிக்கூட ஆசிரியர்கள் பலர் திங்கட்கு ஒன்றிரண்டுமுறை ஓரிடத்திற்கூடித் தமிழிற் சொற்பொழிவு செய்யும்படியாகத் தூண்டியும் யாவர்க்கும் தமிழ் கற்பதில் ஊக்கம் உண்டாகும்படி செய்து வந்தனர். அவர் நடுக்காவிரிக்கு வருங் காலங்களில் நம் நாட்டாரவர்களோடும் அவர் தந்தை யாரோடும் அளவளாவி மகிழ்வர். ஒரு நாள் அவர் இளங்காடு என்னும் ஊரிலே செவ்வந்திப் புராணத்தில் உள்ள கான வாரிசப் பொகுட்டுறை கடவுளும் கனகத் தான வாரியும் வலாரியும் காண்கிலாத் தலைவ ஞான வாரியில் அமுதமே கருணைவா ரிதியே வான நா(ட)நீ யுனைப்பிரிந் தெங்ஙனம் வாழ்கேன் என்னும் செய்யுளில் “கனகத்தான வாரி” என்னுந் தொடருக்கு உண்மைப் பொருள் காணாது ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையாகப் பொருள் கூறியது தங்கருத்துக்கு அமையாமையால் அதனை நாட்டார் அவர்களிடம் கூற, உடனே இவர் அதனை கனகத் தானவ அரி எனப்பிரித்து இரணியாசுரனுக்குப் பகைவன் என்று பொருள் கூறினர். அதனைக் கேட்ட முதலியார் மிகவும் மகிழ்ச்சியுற்று இவரிடம் மேன்மேலும் பற்றுடையராயிருந்தார். புலமையும் மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வுகளில் தேறியமையும் பின்பு முதலியார் ஒருநாள் நடுக்காவேரிக்கு வந்தபோது மதுரையில் தமிழ்ச்சங்கம் ஒன்று நடைபெற்று வருகின்றதென்றும், அதில் தமிழ்ப்புலமையின் பொருட்டுப் “பிரவேசபண்டிதர், பால பண்டிதர், பண்டிதர்” என மூன்று தேர்வுகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன என்றும், அதற்கு நீங்கள் படிக்க வேண்டும் என்றும் கூறினர். இவர் அதனைக்கேட்ட பொழுது மூன்றாவது தேர்விற்கே படிக்கலாமென, எண்ணிக் கொண்டு அதற்குரிய புத்தகங்கள் யாவை எனக்கேட்டார், தேர்வு பற்றிய விதிகளும், தேர்வுக்குரிய நூல்களின் பெயர்களும் “செந்தமிழ்”ப் பத்திரிகையில் வெளி வந்துள்ளன என்றும், அப்பத்திரிகையை அனுப்புகிறேன் என்றும் கூறிச்சென்று அதனை அனுப்பி வைத்தனர். அதனைப் பார்த்த பொழுது ஒவ்வொரு தேர்வுக்கும் உரிய இலக்கண விலக்கிய நூல் மிகப்பலவாகவும் அவற்றுட்பல அதுவரை கேட்டறியா தனவாகவும் இருந்தமையின் முதற்றேர்வாகிய “பிரவேச பண்டிதர்”க்கே முதலிற் படிப்பதென உறுதி செய்து கொண்டு படித்துவருவாராயினர். 1901-ஆம் யாண்டு, மே மாதம், 24-ம் நாள் பாலவநத்தம் சமீன்றாராகிய இராமநாதபுரம் திருவாளர் பொ. பாண்டித்துரைத் தேவர் அவர்களால் பாற்கர சேதுபதி மன்னர் அவர்கள் தலைமையில் மதுரையிலே “மதுரைத் தமிழ்ச் சங்கம்” நிறுவப்பட்டது. அதற்கு உறுப்பாகப் “பாண்டியன் புத்தக சாலை” என்னும் நூல் நிலையமும், “சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை” என்னும் தமிழ்க் கல்லூரியும் நிறுவப் பெற்றன. “செந்தமிழ்” என்னும் மாதப் பத்திரிகையும் தொடங்கப் பட்டது. ஆங்கிலகலாசாலை மாணாக்கர்கட்குத் தமிழ் கற்பதில் விருப்பமுண்டாகும்பொருட்டு ஆங்கிலத் தமிழ்த் தேர்வுகளும், தமிழில் புலமையடைதற் பொருட்டுப் பிரவேச பண்டிதர் முதலிய தனித்தமிழ்த் தேர்வுகளும் ஏற்படுத்தப்பட்டன. தனித் தமிழ்த் தேர்வு 1905-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் முதன் முதல் தொடங்குவதாயிற்று. தேர்வு நடத்தப் பெறுவதற்கும், தேர்வைப்பற்றிய செய்திகளை நாட்டார் அறிவதற்கும் இடையே பத்துத் திங்கள்களே இருந்தன. ஆதலினால் இவர் உடனே தேர்வுக்குரிய நூல்கள் அனைத்தையும் தொகுத்துக் கொண்டு இடையறா முயற்சியுடன் படிப்பாராயினர்; பிரவேச பண்டிதர் தேர்வுக்குரிய நான்மணிக்கடிகையும், விசாகப் பெருமாளையர் அணியிலக்கணமும் கிடைக்கப்பெறாமையால் அவற்றை இரவலாகப் பெற்றுக் கையால் எழுதி வைத்துக் கொண்டு படிப்பாராயினர். ஆறுமுக நாவலர் நன்னூற் காண்டிகையைத் தேர்வின்பொருட்டு வாங்கிப் பார்த்த பொழுது அதனில் நூல் முழுவதிலும் கேள்விகள் கேட்டும், அவற்றின் விடையைத் தெரிந்துகொள்ளுமாறு சூத்திர எண்கள் காட்டியும் இருந்ததும், நூலின் இறுதியில் விதிகளை நன்குணருமாறு பயிற்சிகள் அமைத்திருந்ததும் நாட்டார் ஆசிரியரின்றித் தாமே பயிலுதற்குப் பெருந்துணையாயிருந்தன. அப்பொழுது நன்னூல் முதலிய இலக்கணங்கள் எல்லாவற்றையும், நாலடியார், நான்மணிக்கடிகை என்னும் நீதி நூல்களையும் இவர் முழுதும் மனப்பாடம் செய்துவிட்டனர்; மற்றைய இலக்கியங்களிலும் சுவையுடைய பகுதிகளை எல்லாம் பாடஞ் செய்தனர். இவ்வாறாக இவர் “மெய்வருத்தம் பாரார்” என்னுஞ் செய்யுட்கு எடுத்துக் காட்டாகக் கருமமே கண்ணாயிருந்து பாடங்கள் அனைத்தையும் படித்து முடித்தார். திருச்சிராப்பள்ளி தேர்வுக்குரிய இடமாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. நாட்டார் தம் தந்தையாருடன் திருச்சிராப் பள்ளிக்குச் சென்றார். அவருடன் தஞ்சை நாட்டிலிருந்த வேறு மூவரும் தேர்வுக்குச் சென்றிருந்தனர். எஸ். பி. ஜி. கல்லூரியில் பேராசிரியர் குருராவ் எம். ஏ., தேர்வின் மேற்பார்வையாளராக இருந்தார். நாட்டார் தேர்வுக்குரிய வினாத் தாள்கள் எல்லாவற்றிற்கும் செவ்வையாக விடை எழுதி மீண்டனர். பின்பு தேர்வின்முடிவு ‘செந்தமி’ழில் வெளியாயிற்று. அவ்வாண்டில் அத்தேர்வுக்குச் சென்றவர் எண்மருள் தேறியவர் நால்வர். அவருள் முதல் வகுப்பில் தேறிய இருவருள் நாட்டார் இரண்டாம் பரிசு பெறுதற்கு உரியராயிருந்தனர். சேதுபதி செந்தமிழ்க் கலாசாலையிலேயே பயின்றவர் ஒருவர் முதற் பரிசிற்குரியராயினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழா அறிவிப்பு வந்தபொழுது பரிசில் பெறுதற் பொருட்டாக நாட்டார் தம் தந்தையாருடன் மதுரைக்குச் சென்றார். இவர் தேர்வின் பொருட்டுத் தமக்கு ஏற்படுத்தியிருந்த பரிசேயன்றி இலக்கணத்தில் முதன்மையாய்த் தேறியதற்கெனச் சிறப்புப் பரிசு ஒன்றும் பெற்றார். பரிசாகப் பெற்ற தொகை முழுவதையுங் கொண்டு நாட்டாரின் தந்தையார் அடுத்த தேர்வுகட்குரிய புத்தகங்களை அப்பொழுதே வாங்கினார். பின்னர்ப் பால பாண்டிதர்க்குரிய பாடங்களை முன்போலவே ஊக்கத்தோடு பயின்று அடுத்த ஆண்டிலேயே தந்தையாருடன் திருச்சி சென்று எஸ். பி. ஜி. கல்லூரியிலேயே தேர்வு எழுதுவாராயினர். அப்பொழுது அக்கல்லூரித் தமிழாசிரிய ராகிய பிச்சை இபுராகிம் புலவர் மேற்பார்வை யாளராக இருந்தார். அவ்வாண்டுப் பாலபண்டித தேர்வில் நாட்டார் ஒருவரே தேறியிருந்தனர். இதிலும் முதல் வகுப்பில் தேறியிருந்தமையால் முதற்பரிசிலாகப் பொற்பதக்கம் பெறுதற்குரியராயினர். இவ்வாண்டிலும் ஆண்டு விழாவின் பொழுது தந்தையாருடன் மதுரைக்குச் சென்று பரிசில் பெற்றுச் சங்கத்துக்கு வந்திருந்த புலவர் பலரோடும் அளவளாவியும் சொற்பொழிவுகளைச் செவி மடுத்தும் மீண்டனர். சேதுபதி செந்தமிழ்க் கலாசாலையில் ஒவ்வொரு தேர்விற்கும் இரண்டிரண்டாண்டுகளாகக் காலவரையறை ஏற்பட்டிருந்தது. ஆனால், வெளியிடங்களில் உள்ளோர் ஒவ்வோராண்டிலேயே தேர்வுக்கு வருதலை விதியொன்றும் தடை செய்யவில்லை. ஆதலால், நாட்டார் முதல் இரண்டு தேர்வுகளையும் ஒவ்வோராண்டிலேயே முடித்தார். எனினும் மிகப் பலவான இலக்கண இலக்கியங்கள் படிக்க வேண்டி யிருந்தமையாலும், அவற்றுட் பல மனப்பாடஞ் செய்யத் தக்கனவாக இருந்தமையாலும் சிறிது சோர்வுண்டாகிப் பண்டித தேர்வினை இரண்டாண்டுகள் படித்து எழுதுதல் வேண்டுமென எண்ணினார். நாட்டார் முன்தேர்வுகளில் சிறப்பாகத் தேறின படியால் அளவற்ற மகிழ்ச்சியடைந்து அதனைப் பலவிடங்களில் பாராட்டிக் கூறியும். அடுத்தடுத்து நாட்டாருக்கு ஊக்க மூட்டியும் வந்த ஐ. சாமிநாத முதலியார் அவர்கள் நாட்டாருடைய எண்ணத்தினையும் அவருடைய பெற்றோர்கள் அவருக்கு மணஞ்செய்விக்கவேண்டுமென முயல்வதனையும் அறிந்து மூன்று தேர்வும் முடிந்த பின்பே மணம் செய்விக்கவேண்டு மெனப் பெற்றோர்கட்குக் கூறியதுடன் இந்த ஓராண்டிலேயே பண்டித தேர்வும் எழுதி வெற்றிபெற வேண்டும் என நாட்டாரிடம் வற்புறுத்தி வந்தனர். அதனால் இவர் பெருமுயற்சியோடும் படிப்பாராயினர். அம்மூன்று தேர்வுகட்கும் படிக்குங் காலங்களில் அதற்கென்றே வீட்டுமெத்தை மேல் கட்டப்பட்ட அறையில் இவர் தனியாக விருந்து இடையறாது படிப்பர்; ஒரு கணப்பொழுதும் வீணிலே செலவழிப்பதில்லை. மூன்று தேர்வுக்கும் உரிய இலக்கணங் களையும் பாலபண்டித தேர்விற்குரிய தருக்க சங்கரக மூலத்தையும் இவர் தாமாகவே படித்தறிந்தாராயினும் பண்டித தேர்விற்குரிய தருக்க சங்கிரக தீபிகை என்னும் அதன் உரையின் சிற்சில பகுதிகள் அறிதற்கு அரியனவாய் இருந்தமையின், அந்நாளிலே தஞ்சை மாநகரிலே இருந்தவரும், பலமொழிகளில் வல்லுநரும், பற்பல வேதாந்த நூல்களைத், தமிழில் மொழி பெயர்த்தவரும் ஆகிய உயர்திரு குப்புசாமி ராசு அவர்கள் தருக்கதிலும் வல்லுநர் எனக் கேள்வியுற்றுத் தம் தந்தையாருடன் தஞ்சைக்குச் சென்று அவர்களை அடைந்து ஐந்தாறு நாட்கள் வரை தங்கி இருந்து தருக்கத்தில் உள்ள ஐயங்களை அகற்றிக் கொண்டு தம்மூர்க்கு வந்தனர். அவ் வாண்டுத் தேர்வுக்குப் புறப்படுவதற்கு முதல்நாள் இரவு வழக்கம்போல் தாம் சிவபிரான் திருக்கோயிலை அடைந்து தொழுது நின்ற பொழுது ஒரு நன்னி மித்தம் உண்டாக மகிழ்ச்சியுடன் வணங்கி மீண்டனர். அவ்வாண்டிலும் வழக்கம்போலவே தந்தையாருடன் திருச்சிராப் பள்ளிக்குச் சென்று தேர்வுக்கு எழுதியபொழுது மேற் பார்வையாளராக இருந்த பிச்சை இபுராகிம் புலவரவர்கள் இவரது திறமையை அறிந்து, மகிழ்ந்து மிகவும் அன்பு பாராட்டு வராயினர். அவ்வாண்டிலும் பண்டிதத் தேர்வில் தாம் ஒருவரே தேறி முதல்வகுப்பில் முதன்மையாகத் தேறியவர்க்குரிய தங்கத் தோடாவைப் பெறுதற்குரியராயினர். அவ்வாண்டு பரிசு பெறுதற்குத் தந்தையாருடன் மதுரைக்குச் சென்றபொழுது திருச்சியிலிருந்து பிச்சை யிப்புராகிம் புலவரும் சென்றமையால் அவருடன் நெருங்கி அளவளாவும்படி நேர்ந்தது. அவ்வாண்டு விழாவில் தலைமை தாங்கியவர் புதுக்கோட்டை மன்னருடைய இளவலாகிய தட்சிணாமூர்த்தி துரைராஜா பி. ஏ., பி. எல்., அவர்கள் ஆவர். தலைவர் தோடாப் பரிசினை நாட்டார்கையில் அளிக்கச் சேய்மையிலிருந்த பாண்டித் துரைத் தேவர் அவர்கள் விரைந்துவந்து தாமே அதனை வாங்கித் தம் கைகளால் நாட்டாருடைய கையில் அணிவித்து மகிழ்ந்தனர். நாட்டாரவர்கள் பண்டித தேர்வினை முடித்துச் சில யாண்டுகள் கழிந்தபின்னரே ஏனையோர் அத்தேர்வுக்கு எழுதுவாராயினர். தமிழ்ப் புலமையின் பொருட்டு முதன் முதலாக ஏற்படுத்தப்பட்ட தேர்வுகள் ஒவ்வொன்றிலும் நாட்டார் தனியாக முதன்மையிற்றேறி வந்தமை அவருடைய பெயர் நாடெங்கும் எளிதில் பரவுவதற்கும், பலர் அவரிடம் அன்பு கொள்ளுதற்கும் ஏதுவாயிருந்தது. இவ்வாறாக 1907-ஆம் ஆண்டிலே பண்டித தேர்வு வெற்றியுடன் முடிந்த பின்னர்த் தேர்வுக்குப் படித்த நூல்களுள் எஞ்சியிருந்த பகுதிகளையும், பிற நூல்களையும் தாமாகப் படித்துக்கொண்டு வருவாராயினர். கல்லூரிகளில் ஆசிரியராக இருக்கவேண்டுமென்ற ஆவலோ முயற்சியோ நாட்டாரிடம் இருந்ததில்லை. அந்நாளிலே புதுக்கோட்டை அரசர் கல்லூரித் தலைவராக விருந்த இராதாகிருட்டின ஐயர் அவர்கள் தம் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பண்டிதர் வேண்டுமென்றும் அதன் பொருட்டு நாட்டாரை நேரில்வந்து தம்மைப் பார்க்கும்படியும் கடிதம் விடுத்திருந்தார். நாட்டார் தம் தந்தையாரோடு புதுக் கோட்டைக்குச் சென்று கல்லூரித் தலைவர் விருப்பப்படி ஒரு வகுப்பில் பாடம் நடாத்தித் தந்திறமையைக் காட்டினர். கல்லூரிக்கு அப்பொழுது உதவிப் பண்டிதரே வேண்டு மென்றும் அதற்குச் சம்பளம் இதுவென்றும் அவர் கூறினர். அவர் குறிப்பிட்ட சம்பளம் மிகக் குறைவாக இருந்தமையால் இவர் அதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாது ஊருக்கு வந்துவிட்டனர். திருமணம் பின்பு தம்முடைய பழைய உறவினராகிய செங்கிப்பட்டித் திருவாளர் சீனு மேற்கொண்டர் அவர்களின் மகளாராகிய இந்திராணியம்மாள் என்னும் பன்னீராட்டைப் பருவமுடைய நங்கையைப் பிலவங்க ஆவணி, 24ல் 1907-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் நாட்டாருக்குத் திருமணம் செய்வித்தனர். ஆசிரியராயினமை 1908-ஆம் ஆண்டு சூலை மாதத்தில் திருச்சி எஸ். பி. ஜி. காலேஜில் தமிழாசிரியராக இருந்த பிச்சை இபுராகிம் புலவர வர்கள் தாம் கல்லூரிக்குப் போகமுடியாவாறு நோயுற்றபடியால் தாமே நாட்டாரை நடுக்காவிரியிலிருந்து அழைத்து வரச்செய்து, தமக்கீடாகத் தமிழாசிரியராக இருத்தற்குத் தகுதியுடையவர் இவரே எனவும் தாம் நலமுற்றுவரும் வரையிலும் இவரையே அவ்வேலையில் அமர்த்த வேண்டும் எனவும் அப்பொழுது கல்லூரித் தலைவராகவிருந்த ரெவரெண்டு ஷேராக்கு துரைக்குக் கடிதம் எழுதி அவர் உடன்பாடு பெற்று, இவரை வேலையில் அமர்த்தினார். இவர் 21-7-1908 முதல் அதனை ஏற்று எப். ஏ., பி. ஏ. வகுப்புகட்கு மாணாக்கர்கள் மகிழும்படி திறமையாகப் பாடங் கற்பித்து வருவாராயினர். பின்னர் ஒன்றிரண்டு திங்களில் புலவர் நோய் மிகுதியால் இவ்வுலகவாழ்வினை நீத்தனர். சிறந்த புலமையும், பெருமதிப்பும் உடையராயும், கல்லூரி ஆசிரியர் மாணவர் அனைவராலும் கொண்டாடப்படுபவராயும் இருந்த புலவருடைய பிரிவு குறித்து நாட்டார் கையறு நிலைச் செய்யுட்கள் சில இயற்றி அச்சிட்டு வழங்கினர். அந்நாளிலே டிசம்பர் மாதத்திலேயே பல்கலைக்கழகத்துத் தேர்வுகள் நடப்பது வழக்கம். கல்லுரித் தலைவர் டிசம்பர் ஏழாந் தேதிக்குப்பின் இவர் வேலை கல்லூரிக்குத் தேவையில்லை என்றும் ஆனால் 1909 ஜனவரி 15-ந் தேதிக்குப்பின் எஸ். பி. ஜி. உயர்நிலைப் பள்ளியின் பண்டிதர் வேலை காலியாகின்ற படியால் அதற்கு விருப்பமிருந்தால் தமக்கு விண்ணப்பம் செய்யலாம் என்றும் நாட்டாருக்கு அறிக்கை விடுத்தனர். அவ்வாண்டுத் தேர்வுக்குப் படித்த மாணாக்கர்கள் தக்க தருணத்தில் நாட்டார் தங்கட்குரிய பாடங்களை நடத்தி முடித்ததனையும், நாட்டாருடைய இனிய குணம், சொல்வன்மை முதலியவற்றையும் கருதி அவர்பால் மிக்க அன்பு கொண்டிருந்தார் களாதலால், ‘தாங்கள் உயர் நிலைப்பள்ளி வேலைக்குப் போகலாகாது; கல்லூரியிலேயே இருக்கவேண்டு’ மென்று சொல்லியதுடன் அனைவரும் சேர்ந்து கையெழுத்திட்டு நாட்டாரே கல்லூரியில் தமிழாசிரியராக இருக்கச் செய்ய வேண்டுமென்று நாட்டாருக்குத் தெரியாமலேயே கல்லூரித் தலைவர்க்கு மனுச் செய்தார்கள். கல்லூரி ஆசிரியர்கட்கும் இவர் கல்லூரியிலேயே இருக்க வேண்டுமென்பது விருப்பமா யிருந்தது. அவ்வாண்டு கல்லூரியை விடுத்துச் சீமைக்குப் போகவிருந்த கல்லூரித் தலைவர்க்குத் தம்முடைய உயர்நிலைப் பள்ளியில் பண்டிதராயிருந்த ஒருவர்க்குக் கல்லூரிப் பண்டிதர் வேலையைத் தருவது இன்றியமையாக் கடப்பாடாயிருந் தமையின் அவருக்கே அவ்வேலையைக் கொடுத்துவிட்டனர். உயர்நிலைப்பள்ளி வேலைக்கு மற்றொருவர் அமர்த்தப்பட்டு விட்டனர். ஆண்டுமுடிவில் ரெவரண்டு ஏ. எப். கார்டினர் துரை கல்லூரிக்கு வந்துசேர்ந்த ஞான்று நிகழ்ந்த வரவேற்புக் கூட்டத்தில் நாட்டார் இருந்துவிட்டு நடுக்காவேரி வந்து சேர்ந்தனர். வந்து சிலநாட்களுக்கெல்லாம் கோயமுத்தூர் செயிண்டு - மைக்கேல் உயர்நிலைப் பள்ளிக்கு ஒரு தமிழாசிரியர் தேவையென அறிந்து அதற்கு ஒரு மனு அனுப்பிவிட்டு எஸ். பி. ஜி. கல்லூரியில் தம்மிடம் படித்த என். வி. சின்னசாமிஐயர் என்பவர் கோயமுத்தூரினர் என்ற நினைவிருந்தமையால் அவருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்தனர். சின்னசாமி ஐயர் அப்பள்ளித் தலைவருக்கு மிக வேண்டியவரா யிருந்தமையால் உடனே நாட்டாரைப் பற்றி அவரிடம் சொல்லி உத்தரவு அனுப்பும்படி செய்தனர். கலாசாலை திறக்கும்பொழுது நாட்டார் கோயமுத்தூருக்குச் சென்று வேலையை ஒப்புக் கொண்டு சிலநாள்வரை சின்னசாமி ஐயர் வீட்டிலேயே தங்கியிருந்தார். நாட்டார் தந்தையாருடைய துணையில்லாமல் முதல் முதல் வேற்றூருக்குச் சென்றது இப்பொழுதே. அக்கலாசாலை அதற்கு முந்தின ஆண்டு கல்லூரியாக விருந்து அவ்வாண்டிலே உயர்நிலைப் பள்ளியாக மாறிற்று. நாட்டார் மூன்றாவது பாரம் முதற்கொண்டு ஆறாவது பாரம் முடியப் பாடங் கற்பித்து வந்தனர். பள்ளித்தலைவராகிய பாதர் பவுலாஞ்சர் என்பவர் நாட்டாரிடத்திலே மிகவும் அன்புபாராட்டி வேண்டும் உதவி களும் செய்து வந்தனர். பள்ளிக்கூடத்து விளையாட்டு நிலத்தில் தட்டுப்பந்து விளையாட்டில் கலாசாலைத் தலைவரும் நாட்டாரும் எதிரெதிராக முன்னணியில் நின்றுகொண்டு ஏமாற்றுதற் கருத்துடன் விளையாடி மகிழ்வார். நாட்டாரிடம் அக்கலா சாலையில் பயின்ற மாணவர்களில் ஒருவராகிய திரு. ஆர். வி. இலட்சுமையநாயுடு அவர்கள் நாட்டார்பால் மேலும் மேலும் அன்பு வளரப்பெற்றவராய் இருந்துவருகின்றார். அதனால் அவருடைய கிளைஞர் உறவினர் அனைவருமே நாட்டாருக்கு வேண்டியவரா யிருந்து வருகின்றனர். 1909-ஆம் ஆண்டு பள்ளிக் கூடந் திறந்த சில திங்கட்கெல்லாம் ஊரிலே பிளேக்கு நோய் தோன்றிப் பரவிற்று. அதனால் ஊரெல்லாம் கலைந்துவிட்டது. நாட்டார் பள்ளிக்கூடத்திலேயே ஓரறையில் உறைவிடம் வைத்துக் கொண்டனர். திருச்சி எஸ். பி. ஜி. கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர் பதவி திருவருட் செயலை அறிவார் யாவர்? அவ்வாண்டு செப்டம்பர் மாத இறுதியில் திருச்சி எஸ். பி. ஜி. கல்லூரியி லிருந்து அதன் காரியதரிசி திருவாளர்கள் அருளாநந்தமும், கணக்காசிரியர் எஸ். சோசப்பும் தனித்தனியாக எழுதிய கடிதங்கள் நாட்டாருக்குக் கிடைத்தன. அவற்றில் “அக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக இருந்தவர் வேலையைவிட்டு விலகுகிறார், தக்க திறமையும் தகுதியும் உடைய வேறு ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டு மென்று துரை எங்களிடம் சொல்ல நாங்கள் தங்களைப்பற்றித் துரையிடம் சொல்லி அவர் உடன்பாடு பெற்று இக்கடிதம் தங்கட்கு எழுதுகிறோம்; தாங்கள் கட்டாயம் இவ்வேலையை ஏற்றுக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது அவற்றைப் பார்த்தவுடன் நாட்டார் திருவருட் செயலை உன்னிப் பாதர் பவுலாஞ்சர் துரையிடம் இச்செய்தியைத் தெரிவிக்க, அவர் நாட்டாரைப் பிரிய மனமில்லாதவரா யிருந்தும் ஊருக்கு அண்மையில் கல்லூரித் தமிழாசிரியராய்ச் செல்லுவதனைத் தடுக்கலாற்றாது செல்ல உடன் பட்டனர். பின் முறைப்படி திருச்சியில் அக்கல்லூரி திறந்த 1910-ம் ஆண்டு ஜனவரி - மீ 15-ம் தேதி முதல் தமிழாசிரியராய் இருந்து வருவாராயினர். அப்பொழுதுதான் இவர் தம் மனைவியாருடன் இல்வாழ்க்கை நடத்துதலை மேற்கொண்டார். நாட்டாருடைய கடைசித் தம்பியார் மு. கோவிந்தராச நாட்டார் அதற்குமுன் இரண்டாண்டு களாக நடுக்காவிரிக்கு ஏழுகல் தொலைவிலுள்ள திருக்காட்டுப் பள்ளி உயர்நிலைப் பள்ளிக்கு நடந்து சென்று பயின்று வந்தவர் அப்பொழுது திருச்சிக்கு வந்து நாட்டாருடன் இருந்து இரண்டாவது பாரத்திற் சேர்ந்து படித்து வருவாராயினர். கற்பிக்கும் திறனும் புகழ் வளர்ச்சியும் நாட்டார் கல்லூரியில் பாடங் கற்பிக்குங் காலங்களில் அவருடைய தோற்றமும், இன்சொல்லும், சொல்வன்மையும் குணநலங்களும் மாணவர்கள் யாவருடைய உள்ளத்தையும் கவர்ந்துவிடும். அவர்கள் இவர்பால் அளவுகடந்த அன்பும் மதிப்பும் உடையராய் இருந்து வந்தனர். இன்டர்மீடியேட்டு வகுப்பிற்குக் கட்டுரைக்கு உரிய பாடங் கற்பிக்கும் பொழுது அவற்றைப் பெரும்பாலும் அவர்களையே படிக்கும்படியாக விடுத்துத் திருவள்ளுவர், கம்பர் முதலாய புலவர்களையும், மருத்துவம், சோதிடம் முதலிய கலைகளையும், சைவம், வைணவம் முதலிய மதங்களையும், வேளாண்மை, வாணிபம் முதலிய தொழில்களையும் மற்றும் அறிவு வளர்ச்சிக்குரிய பல திறப்பட்ட பொருள்களையும் பற்றிச் சொற்பொழிவு செய்து மாணவர்களுடைய பொதுவறிவை வளர்ப்பர். பி. ஏ. வகுப்பிற்கு இரண்டாவது பகுதியில் தனியே தமிழ் எடுத்துக்கொள்ளுதற்குரிய ஆறாவது பிரிவிற்குச் சென்னை மாகாணத்தில் திருச்சி எஸ். பி. ஜி. கல்லூரியில் மாத்திரமே ஆண்டுதோறும் தொடர்ச்சியாகப் பல மாணாக்கர்கள் பயின்று வந்ததுடன் அதற்குரிய பதக்கம் பரிசில்களையும் பெற்று வந்தனர். அதனால் தமிழைப் பற்றிக் கல்லூரிக்குச் சிறந்த பெயருண்டாயிற்று. கல்லூரித் தலைவரும் ஏனைய ஆசிரியர்களும் நாட்டாரிடத்தில் மேன்மேல் அன்பும் மதிப்பும் உடையவர்களாயினர். கல்லூரித் தலைவர் நாட்டாரின் திறமை கருதித் தமிழாசிரியர்கட்கு அக்காலத்தில் தந்துவந்த ஊதியத்தைவிட மிகுதியாகவே மேலும் மேலும் தந்துவருவா ராயினர். இவ்வாறிருக்கும் நாளில் 1930-ஆம் ஆண்டு சூன் மீ 20-ஆம் நாள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து 150-10-250 ஊதியமுள்ள தமிழ்ச் சொற்பொழிவாளர் வேலைக்கு நியமன உத்தரவு வந்தது. நாட்டாரவர்கள் நெடுங்காலமாகத் தாம் ஆற்றிவந்த எஸ். பி. ஜி. கல்லூரி வேலையை விடுத்து ஊதிய உயர்வு ஒன்றே கருதிப் புதிய வேலைக்குச் செல்ல அவ்வளவு விருப்பமில்லாதாராயிருந்தார். மற்றும் தம்முடைய தந்தை தாயர் முதிர்ந்த வயதினராயிருக்கும் பொழுது அவர்களைத் தனியே விடுத்து அவ்வளவு சேய்மையில் சென்றிருப்பதும் அவருக்கு அவ்வளவு பொருத்தமாகத் தோன்றவில்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட தொடக்க ஊதியத்தை மாத்திரம் எஸ். பி. ஜி. கல்லூரியில் கொடுப்பதாயின் இங்கேயே தங்கிவிடலாமென எண்ணினர். அப்பொழுது கல்லூரிக்குப் புதிய தலைவராய் வந்திருந்த சேம்ஸ் துரை ஏனைய ஆசிரியர் களோடு சூழ்ந்த போது அவர்கள் நாட்டாரால் கல்லூரிக்கு மிகவும் நல்ல பெயர் உண்டென்றும், அவர் இதனை விடுத்துச் சென்றால் எதேனும் குறைவு நேரும் என்றும் சொன்னமையால் வூதியம் ரூபாய் 150-ம் தருவதாகச் சொல்லி அக்கல்லூரியிலேயே இருக்கவேண்டுமென வேண்டினர். அதனாலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து உத்தரவில் ‘பிரபேஷன்’ எனக் குறிப்பிட்டிருந் ததாலும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்துத் திருச்சியிலேயே தங்கிவிட்டனர். பெற்றோர் மறைவு பின்பு 15-6-1931இல் நாட்டாருடைய தந்தையார் அவர்கள் நடுக்காவேரியில் சிவபதம் அடைந்தனர். 24-12-1932இல் அன்னையாரும் சிவபதமடைந்தனர். நாட்டார், அவர்களுக்குச் செய்யவேண்டிய பிற்கடன்களைக் குறைவறச் செய்துமுடித்தனர். எஸ். பி. ஜி. கல்லூரி வேலை முடிவு அந்நாளிலே சீமையிலிருந்து இந்தியாவுக்கு வந்த புராட்டஸ்டண்டு ஆராய்ச்சிக் குழுவினர் திருச்சி எஸ். பி. ஜி. கல்லூரியை மூடிவிடுவதென உறுதி செய்தனர். அதனால் 1933-ஆம் ஆண்டு, மே மீ 31-ஆம் நாளுக்குப் பின்பு நாட்டாருக்கு அக் கல்லூரி வேலை இலதாயிற்று. அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் பதவி மீட்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குத் தமிழ்ச் சொற்பொழிவாளர் தேவை என்று விளம்பரம் வெளியானமை யால் நாட்டார் அதற்கு மனுச் செய்தார். பல்கலைக்கழகத்தை நிறுவினவராகிய இராசா, சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் நாட்டாருக்கு அவ்வேலை கிடைக்குமாறு விருப்பத்துடன் ஏற்பாடு செய்தனர். 1933 ஆகஸ்டு 13-ஆம் நாள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து வேலைக்கு உத்தரவு வந்தது. அன்றே திருச்சிராப்பள்ளியிலுள்ள தமிழ்ப் பண்டிதர்களும், அன்பர் களும் பெருந்திரளாகக் கூடித் திருவாளர் திவான் பகதூர் டி. எம். நாராயண சாமிப் பிள்ளை எம். ஏ., பி. எல்., அவர்கள் தலைமையில் நாட்டாருக்குச் சிற்றுண்டி விருந்து நடத்திக் கையுறை தந்து சிறப்பித்தார்கள். அத் திங்கள் 16-ஆம் நாள் அண்ணாமலை நகர் சென்று புதிய வேலையை ஏற்றுக் கொண்டு பணியாற்றி அங்கும் மாணவர் உள்ளங்களை வழக்கம் போல் கொள்ளைகொண்டனர். இவருக்கு வயது 55 (12 - 4 - 1939) முடிந்த பின்னரும் 30 - 6 - 1940 முடிய வேலை நீட்டிப்புத் தந்திருந்தனர். அதன்பின் நாட்டார் குடும்பத்துடன் நடுக்காவேரி வந்து பின்பு 22-7-40 முதல் தஞ்சை நகரிலே உறைவிடம் அமைத்துக் கொண்டு தம் பெயரர்களை பள்ளியிற் படிப்பித்துக் கொண்டிருந்தனர். புலவர் கல்லூரித் தலைமைப் பதவி பின்பு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பாகிய கரந்தைப் புலவர் கல்லூரிக்குத் தலைவராக இருந்த செந்தமிழ்ப் புரவலர் இராவ் சாகிப்பு த. வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்களால் கேட்டுக்கொள்ளப்பெற்று, சென்னைப் பல்கலைக் கழகத்து இணைப்பினைப் பெற்று 2-7-41இல் மேற்படி கல்லூரி திறந்தது முதல் நாட்டார் அதன் தலைவராக விருந்து ஊதியம் கருதாமலே பணியாற்றி வந்தனர். நாட்டார் இங்ஙனம் ஆசிரியராக இருந்து கற்பிக்குங் காலங்களில் மாணவர்களின் தேர்வுக்குரிய தமிழ்ப் பாடங்களை அவர்கள் கற்றால் போதும் என்று எண்ணாமல் பிறபாடங் களையும் நன்கு கற்கும்படியும் அவர்கள் வாழ்க்கையில் மேம்படு தற்குரிய ஊக்கமும் முயற்சியும் உடையராய் இருக்கும்படியும் அடிக்கடி தூண்டுவர். மாணாக்கருடைய நலங் குறித்துக் கடவுளை வேண்டுதலும் செய்வர். நாட்டாரிடம் கற்ற மாணாக்கர் பலர் நெடுங்காலஞ் சென்றதும் ‘யான் நாட்டாருடைய மாணாக்கர்’ என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்வர். தொடர்புடைய கழகங்கள் தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத் தொடர்பு 1911-ஆம் ஆண்டு மே மாதம் தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பெற்றது. அச்சங்கத்தின் இன்றியமையாத உறுப்பினர் சிலர் திருச்சிராப்பள்ளியில் அலுவலில் இருந்தவர்கள் நாட்டாருக்குப் பழக்கம் ஆயினமையால் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தொடர்பு சங்கம் ஏற்பட்ட சில திங்கட் குள்ளாகவே உண்டாயிற்று. பின்னர்த் திருச்சியில் கரந்தைத் தமிழ்ச் சங்கத் திற்குக் கிளைச்சங்கம் ஒன்று நிறுவப்பெற்றது. கிளைச்சங்கத்து உறுப்பினர்களே பெரும்பாலும் தாய்ச் சங்கத்து வேலைகளையும் கவனித்து வந்தார்கள். ஒவ்வொரு செயலும் நாட்டாருடன் கலந்து சூழ்ந்து செய்யப்பட்டுவந்தது. சில பிறமொழிச் சொற்கட்கு நேரான தமிழ்ச் சொற்கள் ‘வழக்கறிஞர்’ ‘நிலக்கிழவர்’ ‘கண்காணியார்’ ‘பொறிவலாளர்’ ‘ஆவணக்களரி’ என்பன போல்வன நாட்டாராலேயே ஆக்கித்தரப்பட்டு இன்றும் பரவை வழக்கில் ஆளப்படுகின்றன. திருமண அழைப்பு முதலாயின முதன் முதல் அவராலேயே நல்ல தமிழில் எழுதப்பெற்றன. கரந்தைக் கிளைச்சங்க உறுப்பினர்கள் பலர் தமிழ்ப்பாடம் முறையாகக் கேட்டு வந்தனர். திருக்குறள், புறநானூறு, பத்துப் பாட்டு முதலியனவும், நன்னூல், தொல்காப்பிய எழுத்ததிகாரம் முதலியனவும் பாடம் நடத்தப்பட்டன. திருவாளர்கள் இராம நடேச பிள்ளை, இப்பொழுது திருச்சி ஈ. ஆர். ஐஸ்கூல் தலைமைத் தமிழாசிரியராக இருந்துவருகின்ற வித்துவான் ம. பெரியசாமி பிள்ளை, கூரத்தாழ்வார் முதலியார், என். துரைசாமி பிள்ளை, சுப்பராய முதலியார் முதலானவர்கள் அப்பொழுது பாடங் கேட்டவர்கள் ஆவர். இவர்களுள் முதன் மூவரும் இடையறாது தொடர்ந்து பாடங்கேட்டவர்கள். இராமநடேச பிள்ளை சிறந்த குணங் களுடையவர்; செயிண்டு யோசேப்பு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பதவி பெற்றுச் செவ்வனே அலுவல் பார்த்து வந்தவர்; இளம்பருவத்திலேயே அன்பர்கள் வருந்தும்படியாக இறைவனடி எய்தினர். அக்காலத்து நாட்டார் அவர்கட்கு மிகவும் பழக்கமாகவிருந்த திருவாளர் பா. வே. மாணிக்க நாயக்கர் அவர்கள் நாட்டார் வாயிலாகவே கரந்தைக் கிளைச் சங்கத்தார் கட்கும் நெருங்கிய பழக்கமுடையராயினர். நாயக்கர் அவர்கள் தொல்காப்பிய ஆராய்ச்சி செய்யும்போது தமக்கு ஏற்படும் ஐயங்களை நாட்டாரிடம் உசாவித் தெளிந்து கொள்வர். நாட்டார் கிளைச்சங்க உறுப்பினர்க்குப் பாடங்கற்பித்ததே அன்றி அடுத்தடுத்துச் சொற்பொழிவுகள் செய்தும், தாய்ச் சங்கத்தில் நிகழும் சிறப்புக் கூட்டங்கட்குச் சென்று தலைமை தாங்கியும், சொற்பொழிவாற்றியும் சங்கத்தாரையும், அவை யோரையும் மகிழ்வித்து வருவர். சங்கத்தலைவராயிருந்த திருவாளர் த. வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கட்கும், மற்றைய உறுப்பினர்கட்கும் நாட்டார்பால் அன்பு மேன்மேல் பெருகி வளர்வதாயிற்று. 1922ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் நாட்டாரை நான் (வீ. உலகவூழியன்) முதல் முதல் உரத்தூரில் கண்டேன். அப்பொழுது என்னுடைய வயது 17. நான் கல்வி கற்பதில் விருப்பமுடையேன் என்பதனை அறிந்து இவர் என்னைத் தம்முடனேயே அழைத்துச் சென்று தமிழ்ப் பாடங்கள் கற்பித்து வந்தார். யான் பயிலத் தொடங்கிய சில திங்களின் பின் திருவாளர்கள் ம. பெ. பிச்சையா நாட்டார், அ. சுயம்பிரகாச உடையார், ப. நடராசத் தென்கொண்டார், து. முத்துவேற் சுண்டையார் முதலியவர்களும் அங்கு வந்திருந்து நாட்டாரிடம் தமிழ்ப்பாடங் கேட்டு வந்தனர். நாங்கள் எல்லோரும் நாட்டாரின் வீட்டிற்கு எதிரே இருந்த ‘சைவசித்தாந்தசபை’யில் தங்கியிருந் தோம். இவர்களுள் முன்னிருவம் யான் பயின்று திருச்சியிலிருந்து நீங்கிய பின்னரும் நாட்டாரிடம் தமிழ்ப்பாடங்கேட்டு வந்தனர்; பின்னிருவரும் சில திங்கள்களே பயின்றனர். இவர்களுள் முன்னிருவரும் வித்துவான் பட்டம் பெற்று முறையே தூத்துக்குடியிலும், திருச்சியிலும், தமிழாசிரியராக உள்ளார்கள். திருச்சிராப்பள்ளிச் சைவசித்தாந்த சபையின் தொடர்பு நாட்டாரவர்கள் திருச்சிராப்பள்ளிக்குச் செல்வதன் முன்பு சரியாய் நடைபெறாதிருந்த சைவசித்தாந்த சபை நன்கு நடப்ப தற்கு ஏற்பாடு செய்து தாம் அடிக்கடி அச்சபையில் சொற் பொழிவுகள் செய்துவந்தனர்; சபை உறுப்பினர்கள் பலர் தனித்தனியே கையில் புத்தகம் வைத்துக்கொண்டு பாடங்கேட்கும் முறையில் கேட்டுணருமாறு பெரியபுராணம் முழுவதற்கும் முறையாகப் பொருள் விரித்துவந்தனர். அப்பொழுது உறுப்பினர் களேயன்றி சைவப்பற்றுடைய ஏனையரும் புராணங்கேட்டும் முறையில் வந்திருந்து கேட்டு மகிழ்வர். நாட்டார் பொருள் கூறுவது பாடஞ்சொல்லுவது போலவும், சொற்பொழிவு செய்வது போலவும் இருக்கும். திங்கட்கிழமையும் வெள்ளிக்கிழமையும் இவ்விரிவுரை நிகழும். திருச்சிராப்பள்ளித் தமிழ்பண்டிதர் மாநாடு கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் கிளைச்சங்கத்தோடும், சைவசித்தாந்த சபையோடும் தொடர்புகொண்டு பணியாற்றி வரும் நாளில் தமிழ் வளர்ச்சியும் தமிழாசிரியரின் நிலையை உயர்த்துதலும் கருதி நாட்டாரவர்கள் மற்றைய கல்லூரித் தமிழாசிரியர்களையும் சேர்த்துக்கொண்டு தமிழ்நாடு எங்கணும் உள்ள பண்டிதர்கட்கெல்லாம் அழைப்பனுப்பி வருவித்து 1923, 24, 25-ஆம் ஆண்டுகளில் திருச்சிராப்பள்ளியில் மூன்று முறை தமிழ்ப்பண்டிதர் மாநாடு சிறப்பாக நடைபெறச் செய்தார். அப்பொழுது திருவாளர் காலஞ்சென்ற பா. வே. மாணிக்க நாயக்கர் அவர்களும் திருவாளர் டி. எம். நாராயணசாமி பிள்ளை எம். ஏ., பி. எல்., அவர்களும் அவை நிகழ்வதற்கு உறுதுணையாயிருந்தனர். 24-12-40-ல் சென்னையில், சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கச் சார்பில் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடந்தது. இப்பேரவையிலே நாட்டாருக்கு ‘நாவலர்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது. இத்தமிழ்ச் சங்கத்திற்கு 41, 42-ஆம் ஆண்டு களில் உதவித்தலைவராகவும் 43-ஆம் ஆண்டில் தலைவராகவும் நாட்டார் இருந்துள்ளார். கல்லூகளின் மாணாக்கர்கட்குச் சிறப்பாக ஆற்றிய தமிழ்ப்பணி அந்நாளில் திருச்சியிலிருந்த மூன்று கல்லூரிகளின் மாணாக்கர் களிலும் விருப்பமுடையவர் படித்துத் தமிழறிவை வளர்த்துக் கொள்ளுமாறு நாட்டாரும் திருவாளர் அ. சிவப்பிரகாசம் பிள்ளை முதலிய சில தமிழாசிரியர்களும் சேர்ந்து ஒரு பொது விடத்தில் வாரத்திற் சில நாட்கள் நன்னூல், திருக்குறள் முதலாயின வற்றைக் கற்பித்து வந்தார்கள். அப்பொழுது திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களும் இப்பொழுது திருப்பூரில் வழக்கறிஞராக இருந்துவரும் டி. ஆர். சுந்தரம் பிள்ளையவர்களும் தாமும் உடன் இருந்து பயின்றதோடு அமைச்சர்கள்போல் பணியாற்றியும் வந்தார்கள். தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக்கழகத்தின் தொடர்பு இக்கழகத்தைச் சார்ந்த சைவசித்தாந்த சங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா 30-12-1922-ல் நாட்டாருடைய தலைமையில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. அது முதலாக அந்நூற் பதிப்புக் கழகத்தின் தொடர்பு நாட்டாருக்கு உளதாயிற்று. 1923-ஆம் ஆண்டு முதல் அக்கழகத்தாரால் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகின்ற “செந்தமிழ்ச்செல்வி” என்னும் திங்கள் வெளியீட்டிற்கு நாட்டார் அதன் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினருள் ஒருவராகத் தொடக்க முதல் இருந்து வந்ததுடன் 1939-ஆம் ஆண்டு முதல் அக்கூட்டத்திற்குத் தலைவராக இருந்து வருகின்றனர். தொடக்க முதல் இவருடைய கட்டுரைகள் அத்திங்கள் வெளியீட்டை அழகு செய்து வருகின்றன. கழகத்தாரின் விருப்பப்படி நாட்டார் பல நூல்கட்கு உரையெழுதி அளித்துள்ளனர். அவை பின்னர் விளக்கப் பெறும். விரிவுரைகள் நாட்டார் சொற்பொழிவு செய்யும் போது தாம் கூற எடுத்துக்கொண்ட பொருளைத் தெளிவும், இனிமையும் அமைந்த குரலில் சொற்களை நிரல்படக் கோத்துத் தங்கு தடையில்லாமல், “கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்னுங் குறட்கு இலக்கியமாகக் குறித்த கால அளவில் பேசி முடிப்பர். பேசுங்கால் நடத்தல், கையாட்டல், கனைத்தல், அசைதல் போன்ற வேண்டாச் செய்கைகளை அவர்பால் காண்டல் அரிது. சொன்ன சொற்களை மீண்டும் கூறாமலும் ஒருமைப் பன்மை மயக்கம் முதலாகிய இலக்கண வழுக்கள் இல்லாமலும், உயர்ந்த தனித்தமிழ் நடையில் பேசுவதைக் கேட்பவர்கள் அவற்றை அப்படியே அச்சுக்குக் கொடுக்கலாம் எனக் கூறுவர். எடுத்துக்காட்டாக, மகாமகோபாத்யாயர் டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் 1916-இல் இராயவரத்திலே சோழர் வரலாறு என்பதுபற்றி நாட்டார் அவர்கள் செய்த சொற் பொழிவையும், 1934-இல் கரந்தைத் தமிழ்ச்சங்கத்திலே மகா வித்துவான் பிள்ளை அவர்களைப் பற்றிச் செய்த சொற் பொழிவையும் குறித்துத் தாம் சென்னைக்குச் சென்று எழுதிய கடிதங்களில் “நீங்கள் செய்த அரிய உபந்நியாசம் யாவர்க்கும் மிக்க இன்பத்தை விளைவித்ததாதலின் எல்லோரும் மகிழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்” என்றும், ‘எல்லாருடைய மனதையும் அது கவர்ந்துவிட்ட’தென்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இங்ஙனம் சிறந்த சொற்பொழிவாளராயும், தமிழ்ப் பணி செய்வதில் விருப்பமும் அதற்கேற்ற இனிய குணமும் உடையராயும் இருந்தமையால் தமிழ்நாட்டிலுள்ள பற்பல கழகங்களிலும் நாட்டாரைச் சொற்பொழிவாற்றுவதற்கு விரும்பி அழைப்பர். இவரும் தம் உடல் உழைப்பு முதலிய வற்றைக் கருதாமல் பல இடங்கட்கும் சென்று சொற் பொழிவுகள் செய்தும் சங்க விழாக்களிலே தலைமை தாங்கியும் பணிபுரிவாராயினர். தமிழ் நாட்டில் இவர் சொற்பொழிவாற்றிய இடங்கள் நூற்றுக் கணக்காக இருக்கும். அவ்வாறே ஆண்டு விழாக்களில் தலைமை தாங்கிய இடங் களும் மிகப் பலவாகும். அவற்றுட் சிறப்பாகச் சிலவற்றை இங்கே எடுத்துக்காட்டுகின்றேன். அவை திருநெல்வேலிச் சைவசித்தாந்த சங்கம், சாத்தூர்த் தமிழ்ச் சங்கம், குளித்தலைக் கம்பன் செந்தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச்சங்கம், திருச்சிராப்பள்ளிச் சைவசித்தாந்த சபை, பூவாளூர்ச் சைவ சித்தாந்த சபை, பலவான்குடி மணிவாசக சங்கம், மேலைச் சிவபுரிச் சன்மார்க்க சபை, திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மாணவர் கழகம், சைவசித்தாந்த மகாசமாசம் இளங்காடு மாணவர் செந்தமிழ்ச் சங்கம், முருகன் செந்தமிழ்க் கழகம் முதலியனவாம். இவற்றுள் சாத்தூர்த் தமிழ்ச் சங்கத்தில் மும்முறை தலைமை தாங்கி யுள்ளனர்; கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலும், திருச்சிராப் பள்ளிச் சைவசித்தாந்த சபையிலும் பலமுறை சிறப்புக் கூட்டங்களில் தலைமை தாங்கியும், சொற்பொழிவு செய்தும் போந்துள்ளனர். பூவாளூர்ச் சைவ சித்தாந்த சபை முதலியவற்றிலும் பற்பல முறை சொற்பொழிவாற்றியுள்ளனர். 1930-ஆம் ஆண்டு, பிப்ரவரி, 11, 12, 13, 14-ஆம் நாட்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பிலே தொல்காப்பியம் என்பது பற்றி நாட்டார் நிகழ்த்திய அரிய ஆராச்சியமைந்த சொற்பொழிவுகள் அனைவராலும் பாராட்டப்பட்டன. அண்ணாமலை நகரிலும் பல்கலைக் கழகச் சார்புச் சொற் பொழிவுகளாக சிலப்பதிகார ஆராய்ச்சி முதலியன நாட்டாராற் பேசப்பட்டுள்ளன. 1939-ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்திலே கொழும்பிலுள்ள அன்பர்களாலே அழைக்கப்பெற்று இவர் ஏ. எஸ். ஞான சம்பந்தன் என்னும் மாணவருடன் சென்று ஆங்குள்ள விவேகாநந்த சங்கம் முதலியவற்றில் சொற்பொழிவு செய்து மீண்டனர். 9-3-1940-ல் சென்னையில் நடந்த கலித்தொகை மாநாட்டில் தலைவராக இருந்து நாட்டார் தம் அரிய விரிவுரையால் அவையை அழகு செய்தனர். 21, 22-3-1940ல் திருப்பதியில் நடந்த அனைத்திந்தியப் பத்தாவது கீழ்த்திசைக்கலை மாநாட்டிற்குச் சென்று இவர் வஞ்சிமா நகரைப் பற்றி நிகழ்ந்த ஆராய்ச்சிச் சொற்போரில் கலந்து கொண்டனர். தனித் தமிழ்க் கல்லூரிக்கான முயற்சிகள் 1921-ஆம் ஆண்டு நாட்டாருக்குத் தனித் தமிழ்க் கல்லூரி ஒன்று நிறுவப்பெறல் வேண்டும் என்ற விருப்பம் உண்டாயிற்று. அதற்குரிய காரணங்களை அவர் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில் காணலாம். “இந்நாட்டில் இக்காலத்தில் இருந்து வரும் கல்விமுறை பெரிதும் பிழைபாடுடையதென்று அறிஞர் பலராலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. தமது தாய் மொழியைக் கைவிடுத்து வேற்று நாட்டு மொழியாற் கல்வி கற்று வரும் புதுமை இவ்விந்திய நாட்டில் மாத்திரமே காணப்படுகிறது. பலகலையுணர்வும் பெற்று அரிய செயல்கள் செய்தற் பொருட்டன்றோ கல்வி கற்பது? இப்பொழுதோ மாணவர்கள் வெறும் மொழிப் பயிற்சியின் பொருட்டே தமது கட்டிளமைப் பருவமெல்லாம் செலவிட்டுக் கலையுணர்வு பெறுதலின்றி உடலுரமும் குன்றுகின்றனர். மாணவர்கட்கு இருக்கவேண்டிய நற்குண நல்லொழுக்கங்கள் அருகி வந்துகொண்டிருக்கின்றன. மதவுணர்வு சிறிதும் பெறுதலின்மையால் அவர்கட்குத் தெய்வ நம்பிக்கையும் குன்றிவிட்டது. ஆசிரிய - மாணவர்களின் சம்பந்தம் பெரும் பாலும் உருக்குலைந்து நிற்கிறது. இவ்வாறாக நிகழ்ந்துள்ள குறைபாடுகளுக்கு ஓர் எல்லை இல்லை. இந்நிலைமையில் வறிதே காலந்தாழ்க்காது நம் நாட்டுக் கல்வி முறையைத் திருத்துவது இந்திய நன்மக்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள கடனாகும்.” இக்கடனுணர்ச்சியுடன் நாட்டார் அவர்கள் குருகுலம் போன்ற கல்லூரி ஒன்றினைத் “திருவருட் கல்லூரி” என்னும் பெயரால் தாமே நிறுவத்துணிந்து அதன்பொருட்டுத் தமிழ் நாட்டின் சில பகுதிகளில் கையொப்பமும் வாங்கி வருவாராயினர். ஏழாயிரம் உரூபாய் வரையில் பல அன்பர்களால் கையொப்பம் இடப்பட்டன. நாட்டார் பின்னும் பிறவிடங்களிலும் முயன்றால் நூறாயிரம் உரூபாய் வரையில் எளிதில் கையொப்பம் ஆகும் என்பதனை நானும் உடனிருந்து அறிந்துள்ளேன். ஆனால் அந்நாளிலே கல்லிடைக்குறிச்சியில் திரு. வ. வே. சு. ஐயர் அவர் களால் தொடங்கப்பெற்ற “குருகுலம்” என்னும் கல்விச்சாலை நடைபெறுதற்கு ஏற்பட்ட தடைகளை நினைந்தும், தாம் குடும்பத்தையும் கல்லூரி ஆசிரியப் பதவியையும் விடுத்துத் தனியாக இதன்பொருட்டு முயலுதல் தம் நிலைக்குப் பொருத்தமிலதாதலை எண்ணியும் மேற்கொண்டு கையொப்பம் வாங்காமலும், முன்பு கையொப்பம் வைத்தவர் களிடமிருந்து அத்தொகைகளைப் பெறுதற்கும் முயலாமலும் அம்முயற்சியை நெகிழவிட்டனர். அம்முயற்சியானது இடையீடு பட்டது இவருக்குத் தோல்வியேயாயினும் ‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்’ என்னும் பெரியாரின் பொன்மொழிக் கிலக்காய் இவர்கள் உள்ளஞ் சென்றது என அமைவோமாக. தமிழ்ப் பல்கலைக்கழக முயற்சி 1925-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ம் நாளிலே தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்நாட்டு வளர்ச்சி நெறி அமைச்சர் திவான் பகதூர் டி. என். சிவஞானம் பிள்ளை அவர்களுடைய தலைமையிற் கூடிய ஒரு கூட்டத்தில் கலையறிவு, நாகரீகம், பொருட்டுறை, கைத்தொழில், வேளாண்மை முதலியவைகளில் தம் பழம்பெருமைக் கேற்ப மேம்படுதற் பொருட்டாகத் தமிழர்கட்குத் தனியே ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பெறல் வேண்டும் என முடிவு செய்து அம்முயற்சியைத் தொடர்ந்து நடத்துவதற்கெனப் பன்னிருவர் அடங்கிய கழகம் ஒன்று அமைக்கப்பெற்றது. அக்கழக உறுப்பினருள் நாட்டாரும் ஒருவராவர். பின்பு அக்கழகம் திருச்சிராப்பள்ளியில் திருவாளர் டி. என். சிவஞானம் பிள்ளையவர்கள் தலைமையில் கூடியது. அப்பொழுது பற்பல கல்லூரித் தலைவர்களும் வேறு சில தக்கவர்களும் அக்கழகத்துக்கு உறுப்பினராகச் சேர்க்கப் பெற்றனர். கழக அமைச்சராகிய திருவாளர் எம். எஸ். பூரணலிங்கம் பிள்ளை பி. ஏ., எல். டி., அவர்களால் கழக உறுப்பினர்கட்கும், ஏனையோர்க்கும் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவுதல் பற்றிய பல கேள்விகள் அனுப்பப்பட்டு அவர்கள் விடுத்த விடைகளும் தொகுக்கப்பட்டன. பின்னர்த் திருச்சியிலேயே இதன்பொருட்டு மற்றொரு மாநாடும் நடந்தது. பின்பு 1925-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் நாளிற் சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்றத்தில் (Senate) திருவாளர் டி. வி. சேஷகிரி ஐயர் அவர்களால் தமிழ்நாட்டுக் கெனக் குறைந்தது ஒரு பல்கலைக்கழகமாவது நிறுவப்படல் வேண்டும் எனவும், அதற்கு அரசியலார் உடனே முயற்சி எடுத்துக் கோடல் வேண்டும் எனவும் ஒரு தீர்மானம் கொண்டுவரப் பெற்று நிறைவேறியது. அதன்பின் அரசியலார், இராமநாதபுரம் அரசர் மாட்சிமிக்க முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் தலைமையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் பற்றி ஆய்ந்து முடிவுசெய்ய ஒரு குழுவை நிறுவினர். அக்குழுவின் செயலாளராய் இருந்த சர். பி. டி. இராசன் அவர்களால் பலருக்கும் கேள்விகள் அனுப்பப்பட்டன. பின்பு அக்குழுவினர் தமிழ் நாட்டின் பலவிடங்களிலும் சென்று நேரிலும் உசாவி அறிந்தார்கள். தமிழ்ப் புலவர் பொருட்டு முந்திய கழகங்களில் உறுப்பினராயிருந்த நாட்டார் தமக்கு அனுப்பப்பட்டிருந்த கேள்விகட்கு விடையெழுதிச் செயலாளர்க்கு அனுப்பியதோடு 8-4-1927-ல் திருச்சிக்கு வந்த அக்குழுவினர் வினாக்கட்கு எழுதிவிடுத்தனவும் நேரில் கூறியனவும் பின்னுள்ளவையாகும். தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் இன்றியமையாமை “தமிழ் நாடானது மற்றைய நாடுகளுடன் ஒத்துப்பார்க்கு மிடத்தில் இப்பொழுது பொருள்நிலை, மன்பதை ஒற்றுமை முதலியவற்றில் மிகவும் பிற்போக்கடைந்துளது. தமிழ் நாட்டிலே இரண்டொரு வகுப்பினர் தவிர மற்றைய பெரும்பாலோர் கல்வியிலும் மிகுந்த கீழ்நிலையில் இருக்கின்ற. சில வகுப்பினர். அரசியல், மதம் என்பவற்றில் சிறிதும் உரிமையில்லாதவராய் இருக்கின்றனர். அரசியல் உரிமை ஏற்பட்டு வருகின்ற இந்நாளில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தற் குரிய சொல்லுரிமையாளர் களில் நான்கில் ஒரு பங்கினராவது தங்கள் சொல்லுரிமையின் கருத்தை அறிந்திருப்பார்கள் என எண்ண இடமில்லை. கற்றவர் களுக்குள்ளும் வேலையில்லாக் குழப்பம் மிகுந்து வருகின்றது. இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்துச் சூழும்போது கல்வியை எளியவர்களும் பெறத்தக்க வகையிலும், கற்றவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பிறர் உதவியின்றி நடத்தத் திறமையுள்ளவர்கள் ஆகும் வகையிலும் திருத்தியமைத்துப் பரவச் செய்தற்கு ஒருவந்தம் ஏற்பட்டுள்ளமை புலனாகும். மேலும் கல்வி கற்பது வயிற்றுப் பிழைப்புக்கே என்னும் எண்ணம் மாறி அறிவை வளர்த்து மக்கட் பிறப்பைப் பயனடைவதற்காக என்னும் எண்ணம் ஓங்கும்படியும் கல்விமுறை திருத்தப்பெறல் வேண்டும்.” “தமிழ் நாடானது மிகப் பழைய காலத்திலேயே நாகரிகத்திற் சிறந்திருந்ததென்பது வரலாற்று ஆராய்ச்சியாளர் பலராலும் ஒத்துக்கொள்ளப்படுகிறது. சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு முதலிய தமிழ் இலக்கியங்களிலிருந்தும், பிற நாட்டிலிருந்து நாடு சுற்றிப்பார்க்கும் வேட்கையில் வந்தோர்களின் குறிப்புக்கள் முதலியவற்றிலிருந்தும் தமிழர்கள், பழங்காலத்தில் வேளாண்மை, கைத்தொழில், வாணிகம், சிற்பம் முதலியவற்றில் மேன்மை யடைந்திருந்த செய்தி நன்கு புலப்படுகிறது. இப்பொழுது கேட்போர் முடியாதது ‘பொய்’ என்று நினைக்கத் தகுந்த அருமையான மெல்லிய ஆடைகள் அப்பொழுது தமிழரால் நெய்யப்பட்டன. கி. மு. பத்துப் பன்னிரண்டு நூற்றாண்டுகளின் முன்பே தமிழர்கள் கடல்வழியாகக் கிரேக்கர், எகித்தியர் முதலானவர்களோடு வாணிகம் செய்து தமிழ் நாட்டின் செல்வத்தைப் பெருகச் செய்தனர். அக்காலத்தில் அரசியலுள்ளிட்ட எல்லா செயல்களும் தமிழ் மூலம் நடைபெற்றமையாலும் தமிழ் வேந்தர்கள் சங்கங்கள் முதலியவற்றின் வாயிலாகத் தமிழைப் போற்றி வளர்த்தமையாலும் தமிழ்மொழி மிக்க திருத்தமும், வளர்ச்சியும் அடைந்திருந்தது. சமயநெறியிலும் தமிழ்நாடு தலைமையுற்றிருந்த தென்பது சைவ வைணவப் பெரியார்கள் ஆசிரியர்கள் என்போரின் தோற்றத்தாலும் தமிழ் நாட்டிலுள்ள எண்ணிறந்த திருக்கோயில்களாலும் வெளிப்படும்.” “இப்பொழுது ஆந்திரநாடு தனக்கென ஒரு கழகம் ஏற்படுத்திக் கொண்டு விட்டது. கேரள நாடும் விரைவில் ஏற்படுத்திக் கொள்ளும் நிலைமையில் உள்ளது. 24-10-1925-ல் நடந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட்டுச் சபைக் கூட்டத்தில், காலஞ்சென்ற மதிப்புக்குரிய டி. வி. சேஷகிரி ஐயர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்படுத்துவதன் பொருட்டாகத் தீர்மானம் கொண்டு வந்து பேசியபொழுது எடுத்துக் காட்டியவாறு ஆந்திரநாடு, கேரள நாடுகளைவிடத் தமிழ் நாட்டில் கல்லூரிகளின் தொகையும், மாணாக்கர்களின் தொகையும் இரண்டு பங்கிற்கு மேலாக உள்ளன. இக்காரணங் களால், தமிழ் நாடானது பிறவற்றினும் முற்படத்தனக்கெனக் கழகம் ஏற்படுத்திக் கொண்டிருப்பின் அது மிகவும் பொருத்த மாக இருக்கும். இப்பொழுது ஆந்திரநாடு வழிகாட்டிய பின்பேனும் இதனை நிறைவேற்ற வேண்டியது தமிழ்நாட்டின் இன்றியமையாக் கடமை ஆகும்.” “இப்பொழுதுள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தைக் கொண்டே நான் மேலே காட்டிய குறைகளை எல்லாம் நீக்கித் தமிழ்நாட்டிற்கு நன்மை செய்துவிடலாமென நினைப்பது பகற்கனவாகும். அதற்கு அத்தகைய ஆற்றல் இருக்குமாயின் அது இதற்கு முன்பே வெளிப்பட்டிருக்க வேண்டும். சென்னைக் கழகமானது தமிழை எவ்வளவு புறக்கணித்துத் தாழ்த்தியும் அதன் வளர்ச்சியைத் தடுத்தும் வந்திருக்கிறது என்பதனை இப்பொழுது நான் எடுத்துக் காட்டுவது அத்துணை நாகரிகமா யிராது. அன்றியும் தமிழ் நாட்டினர்க்கு ‘யாம் தமிழர்’ என்ற உணர்ச்சியும் நாட்டுப் பற்றும் உண்டாவதற்குத் தமிழின் பேரால் தனித்த கழகம் ஏற்படுவது இன்றியமையாதது.” “தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்படுவதனால் சென்னைக் கழகத்தின் வளர்ச்சிக்குத் தடையுண்டாகுமென்றாவது, இரு கழகத்திற்கும் முரண்பாடு உண்டாகுமென்றாவது நினைக்கக் காரணமில்லை. இரு கழகத்தின் வளர்ச்சிக்கும் வெவ்வேறான நோக்கங்கள் உள்ளன. எல்லா நாடுகட்கும் பொதுவான உயர்ந்த நூலாராய்ச்சிகளும், சட்டத் தேர்வுகளும், பொறிக்கலை, கைத்தொழிற் கல்வி முதலியனவும் சென்னைக் கழகத்தின் நோக்கங்களாக இருத்தல் கூடும். தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நோக்கங்கள் “ தமிழ்மொழி தமிழரின் வரலாறு நாகரீகம், னைத்திறம் என்பனவற்றின்,” வளர்ச்சி இதன் தலைமையான நோக்கங்களில் ஒன்றாதல் வேண்டும். இதன் பொருட்டுத் தமிழானது எல்லா வகுப்பிகளிலும் கட்டாய முதன் மொழியாக வைக்கப்பெற்று, தமிழ் இலக்கிய இலக்கணங்களும் கல்வெட்டு களும் அவற்றின் ஆராய்ச்சிகளும் விரிவாகக் கற்பிக்கப் பெறவேண்டும்.” “வரலாறு, கணிதம் முதலிய எல்லாக் கலைகளும் தமிழ் வாயிலாகக் கற்பிக்கப் பெறல்வேண்டும். கற்கும் கால அளவையும், பொருட் செலவையும் சுருங்கச் செய்து கல்வியை மிகுதியாய்ப் பரப்புதற்கு இஃது இன்றியமையாதது. இக்கொள்கையே இக்கழகத்திற்கு உயிர்நிலையாகற்பாலது. கற்பிக்கப் பெற வேண்டிய எல்லாக் கலைகட்கும் இப்பொழுது தமிழில் நூல்கள் இல்லையாயினும் தமிழ் வாயிலாகக் கற்பிப்பது என்னும் கொள்கை உறுதியாகிவிட்டால் மிக விரைவில் நூல்கள் ஏற்பட்டுவிடும். அன்றியும் அதன்பொருட்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமையுடையோர்களைக் கொண்ட ஒரு குழு ஏற்படுத்தி நாலைந்து ஆண்டுகளுக்குள் நூல்கள் எழுதி வெளிப் படுத்துதல் செய்யலாம். இத்தனை ஆண்டுக்குள் எல்லாம் தமிழ் வாயிலாகக் கற்பிப்பது என்று வரையறை செய்துவிட்டு, அதுவரையில் ஒவ்வொன்றாகக் கற்பித்து வரலாம். ஆங்கிலத்திலுள்ள கலைகளை யெல்லாம் தமிழில் மொழி பெயர்க்க முடியாதென்றாவது, தமிழில் ஏற்ற சொற்கள் இல்லை என்றாவது கூறுதல் சரியன்று. தமிழில் வேண்டிய சொற்கள் உள்ளன. தக்கோர்கள் மொழி பெயர்த்தலால் எளிதில் முடியக்கூடும்.” “விருப்பப்பாடங்களில் வேளாண்மை, வாணிகம், சிற்பம், கைத்தொழில் என்பவற்றில் யாதேனும் ஒன்று கட்டாயமாக எடுத்துக்கொள்ளப் பெறவேண்டும்.” “விருப்பப் பாடங்களில் சமயக் கல்வியும் மருத்துவமும் சேர்க்கப் பெறல் வேண்டும். சமயக் கல்விக்குச் சைவத் திருமுறைகளும், வைணவப் பிரபந்தங்களும், சைவ சித்தாந்த நூல்களும் ஆராய்ச்சி செய்யப்பெறவும், மருத்துவக் கல்விக்குத் தமிழ்ச் சித்தர் நூல்கள் ஆராயப் பெறவும் வேண்டும்” “கல்வியில்லாத வகுப்பினர்களும் பெண்பாலாரும் கற்பதற்கு மிகுதியான வசதிகள் செய்யப் பெறவேண்டும்.” பிற மொழிகளின் நிலைமை “ஆங்கில மொழியானது தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவெய்திய ஆறாண்டுகள் வரை கட்டாயம் இரண்டாவது மொழியாக இருக்கலாம். அதன்பின் விருப்பப்பாடமாக அமைதல் வேண்டும். வடமொழியும் விருப்பப் பாடங்களில் ஒன்றாகச் சேர்க்கப் பெறல் வேண்டும். அன்றியும் நாட்டு மொழிப் பட்டத் தேர்வுகட்கு இப்பொழுது போன்றே அது வைத்து நடத்தப்பட வேண்டும். வடமொழியும் கட்டாயப் பாடமாக எல்லா வகுப்புகளிலும் வைப்பதென்பது இயற்கைக்கு ஒத்ததன்று. அது கல்வியை மிகுத்தல் என்னும் நோக்கத்திற்கு மாறாகக் குறைத்தலையே செய்யும். மக்களால் பேசப்படுவ தாகவோ, அரசியல் நடவடிக்கைக்குரியதாகவோ இல்லாத அம்மொழியை அங்ஙனம் வைப்பதற்குக் காரணமும் இல்லை. கட்டாயப் பாடமாக இல்லாததனால் அதன் மதிப்புக்கும், இப்பொழுதுள்ள பயிற்சிக்கும் குறைவு வருதற்கிடமில்லை. மற்றைய திராவிட மொழிகளும் விருப்பப் பாடத்தில் சேர்க்கப் படலாம்.” கழகத்தின் தலைமையிடம் “திருச்சிராப்பள்ளியில் முதல் வகுப்புக் கல்லூரி மூன்றும், இரண்டாவது வகுப்பு மாதர் கல்லூரி ஒன்றும் இருக்கின்றன; முதன்மையான தொழிற்சாலை ஒன்றும் உளது. தமிழ்நாட்டின் நடுவாகவும், நாற்புறமும் போக்குவரவு வசதியமைந்ததாகவும் இந்நகர் உளது. இவ்வளவு பொருத்தம் வேறெந்த இடத்திலும் காணப்பெற இல்லை. முன்பு தமிழ்ச் சங்கம் இருந்தது என்னும் உலகுரையானது மதுரைக்கு இதனைவிட ஏற்றங்கொடுக்கக் கூடும். திருச்சிராப்பள்ளியும் தொன்று தொட்டு அரசர்களின் தலைமையிடமாகவும், தமிழை வளர்த்த இடமாகவும் இருந்தே வருகிறது; கிறித்தவர்களுக்கும், மகம்மதியர்களுக்கும் முக்கிய இடமாகவும் இருக்கிறது. இக்காரணங்களால் திருச்சிராப் பள்ளியையே தலைமையிடமாக நான் கருதுகிறேன்.” தமிழ்நாட்டில் உள்ள பலரும் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவுவதன் இன்றியமையாமையை தெரிவித்த பின்னர் அரசியலார் அதுபற்றி முயற்சி எடுப்பதற்குள் (இராசா - சர்) அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் சிதம்பரத்தில் நிறுவி நடத்திவந்த மீனாட்சி காலேசையும், அதன் உறுப்புகளாக உள்ள கீழ்நாட்டுமொழிப் பண்டிதர் பயிற்சிக் கல்லூரியையும், கீழ்நாட்டு மொழிக் கல்லூரியையும் ஒன்று சேர்த்து அரசியலாரின் இசைவுபெற்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நிறுவினமையால் தமிழ்மொழி, தமிழர் நாகரிகம் முதலியவற்றின் வளர்ச்சிக்கு அதுவே அமையும் என்னுங் கருத்தால் முன்பு மேற்கொண்டிருந்த தமிழ்ப் பல்கலைக் கழக முயற்சி நெகிழவிடப் படுவதாயிற்று. நூல்களும் உறைகளும் நாட்டார் திருச்சி எஸ். பி. ஜி. கல்லூரியில் தமிழ்ப் புலமை நடாத்தியபொழுது தமிழ்ப் புலவர் திருவாளர் மு. இராகவ ஐயங்கார் அவர்களால் எழுதப்பெற்ற “வேளிர் வரலாறு” என்னும் ஆராய்ச்சி நூல் இரண்டாண்டுகட்கு இன்டர் மீடியேட் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. நாட்டார் அதனைப் பாடம் நடத்தியபொழுது அதன் முடிவுகளெல்லாம் மாறுபாடுள்ளனவாகத் தோன்றினமையின் அவற்றை மறுத்து 1915-ஆம் ஆண்டில் “வேளிர் வரலாற்று ஆராய்ச்சி” என்னும் பெயருடன் ஒரு நூல் எழுதிக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாவது ஆண்டுவிழாவிற் கூடிய பேரவையில் அதனைப் படித்துப் பின் அச்சிட்டு வெளியிட்டனர். அதனைக் கண்ணுற்ற தமிழ்ப் புலவர் பலரும் நாட்டாருடைய அறிவாராய்ச்சித் திறங்களை வியந்து பாராட்டினர். அக்காலை 16-9-1915இல் (பண்டிதமணி) மு. கதிரேசச் செட்டியார் அவர்கள் அதனைப் படித்து எழுதி விடுத்த கடிதமாவது: “அன்புள்ள ஐயா சுபம். தாங்கள் எழுதி வெளியிட்ட ‘வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி’ என்னும் புத்தகம் ஒன்று உரிய காலத்தே வரப் பெற்றேன். யான் குற்றால முதலிய தலங்கட்குச் சென்று வந்தமையாலப் பொழுதே பதிலெழுதக்கூடவில்லை. மன்னிக்க வேண்டும்.” “ஆராய்ச்சியை முற்றும் படித்துப் பார்த்தேன். வரலாற்றுரைகாரரின் கருத்துக்கள் பல முறையாகக் கண்டிக்கப் பட்டுள்ளன. நீங்கள் காட்டும் ஏதுக்கள் திட்பமுள்ளவை களாயும், நடுநிலை திறம்பாதனவாயு மிருக்கின்றன. கற்றுணர்ந் தோரெழுதுங் கண்டனமிதுவென்று அறிவுள்ளோருணமாறு செய்திருக்கின்றீர்கள். வரலாற்றுரைகாரர் தங்கருத்திற்கெதிர்ப் பட்டாரெல்லாரும் வேளிரென்று கூறிச் செல்லும் இயல்பைச் செவ்வனே கண்டு மறுத்திருத்தல் பெரிதும் மகிழ்ச்சி தருவதாக இருக்கின்றது. இத்தகைச் செயலில் தலையிட்டு முன்வருதல் நம் தமிழ்ப்புலவரிடத்து மிகுமாயின் நம் தமிழின் இயல் இன்னும் விசேட நலமுடையாகும்.” அன்பன், (ஒ-ம்) மு. கதிரேசன். நாட்டார் ‘வேளிர் வரலாற்றை’ இங்ஙனம் மறுத்தெழுதினா ராயினும் அதன் ஆசிரியர் அன்பும் மதிப்பும் உடையவரே என்பது பல ஏதுக்களால் அறிஞர் அறிதல் கூடும். 1919-ஆம் ஆண்டில் ‘நக்கீரர்’ என்ற அரிய ஆராய்ச்சி நூல் இவரால் எழுதி வெளியிடப்பட்டது. அதற்கு முன்பு செல்வகேசவராய முதலியார் எழுதிய திருவள்ளுவர், கம்பர் என்னும் நூல்களேயன்றி வேறு தமிழ்ப் புலவர்களைப் பற்றி ஆராய்ச்சி நூல்கள் வெளி வந்ததில்லை. பல அதிகாரங்களாகப் பாகுபாடு செய்துகொண்டு செவ்வனே ஆராய்ந்து புலவர் வரலாற்றை முதல் முதல் நாட்டாரே எழுதி வெளியிட்டராவர். பின்பு 1921-ஆம் ஆண்டில் கபிலர் என்னும் ஆராய்ச்சி நூலையும் அம்முறையிலேயே ஆராய்ந்து எழுதி வெளியிட்டனர். இவ்விரு நூல்களும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பெயரால் வெளியிடப்பட்டன. இவ்விரு நூல்களும் தமிழ் நாட்டிலுள்ள பல்கலைக்கழகத்திலும் உள்ள உயர் வகுப்புகட்கும் இலண்டன் பி. ஏ. வகுப்புக்கும் பாடமாக வைக்கப்பட்டு வருகின்றன. 1923-ஆம் ஆண்டு ‘கள்ளர் சரித்திரம்’ என்ற அரிய ஆராய்ச்சி நூல் எழுதி வெளியிடப்பட்டது. பண்டு உயர் நிலையிலிருந்து கல்வி முதலியவற்றில் பிற்போக்கடைந்து வந்த தம்முடைய மரபினரின் முன்னேற்றங் கருதி இந்நூல் இயற்றப்பெற்றதாகும். இது வெளியான பின் தமிழ்நாட்டிலன்றி இலங்கை பருமா, மலேயா நாடுகள், ஆப்பிரிக்கா, சுமத்திரா, சாவா முதலிய நாடுகளில் இருந்தும் இம்மரபினர்கள் இந்நூலை வருவித்துக் கற்பாராயினர். இந்நூலினாலே புதியதோ ருணர்ச்சியும், ஊக்கமும் உண்டாயின என்பதில் ஐயமில்லை. இந்நூல் ஒருமரபினரைப்பற்றி எழுதப்பட்ட தாயினும் தமிழர்கள் பொதுவாக அறிந்துகொள்ள வேண்டிய பல அரிய கருத்துக்களைத் தன்னகத்துக் கொண்டுள்ளது. டாக்டர் உ. வே. சாமிநாத அய்யர் அவர்கள் இதன் ஆராய்ச்சியைப் பெரிதும் பாராட்டியுள்ளார். 1930-ஆம் ஆண்டில் திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளை எம். ஏ., எம். எல்., அவர்கள் தாம் எழுதிய “தமிழ் இலக்கிய வரலாறு - முதற் புத்தகம்” என்னும் நூலில் நாட்டாரைப் பற்றி எழுதிவருமிடத்து “இவரது வரலாற்று ஆராய்ச்சியின் திட்பநுட்பங்கள் கள்ளர் சரித்திரம் என்னும் இவரது உரைநடை நூலிற் காணப்படும்” என எழுதியுள்ளனர். திருவாளர் மு. இராகவையங்கார் அவர்கள் தமது ஆராய்ச்சி நூலொன்றில் இந்நூலிலிருந்து மேற்கோள் எடுத்தாண் டிருப்பதும், ‘தமிழ் லெக்ஸின்’ அநுபந்தத்தில் இதில் உள்ள பல சொற்களை எடுத்துக் கொண்டிருப்பதும் தமிழாராய்ச்சி செய்வார்க்கு இந்நூல் பயனுடையதாய் இருக்கின்ற தென்பதனைப் புலப்படுத்தும். 1925-ஆம் ஆண்டில் திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் கேட்டுக்கொண்டதற் கிணங்கக் கீழ்க்கணக்குகளில் ‘இன்னா நாற்பது’ ‘கார் நாற்பது’ ‘களவழி நாற்பது’ என்பவற்றிற்கும், ‘ஆத்திசூடி’ ‘கொன்றை வேந்தன்’ ‘வெற்றிவேற்கை’ ‘மூதுரை’ ‘நல்வழி’ ‘நன்னெறி’ என்னும் நீதி நூல்களும் திருந்திய முறையில் உரையும், முகவுரையும் நாட்டாரால் எழுதி அளிக்கப்பட்டன. 30-11-1925-ல் மேற்படி கழகத்தினர் வேண்டுகோட்கிணங்கப் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்திற்கு நாட்டார் உரை எழுதத்தொடங்கித் தமக்குச் சிறந்த நண்பரும், கூரிய அறிவும் நல்ல புலமையும் உடையவரும் ஆகிய திருவாளர் அ. மு. சரவண முதலியாரவர்களைத் துணையாகக் கொண்டு எழுதிவந்து ஐந்தேகாலாண்டின் பின் 7-2-1931-ல் அவ்வுரையை முடித்து அளித்தனர். அடிக்கடி நோயின் நலிவுக்குட்பட்டிருந் தமையாலும் வேறு பல அலுவல்களாலும் திருவிளையாடல் உரை முற்றுப்பெறுதற்கு இத்துணைக்காலம் நீட்டிப்பதாயிற்று. இவ்வுரை தமிழ் மக்கள் பலராலும் பாராட்டிப்பயிலப் பெற்று வருகின்றது. இதற்கிடையே 1926-ஆம் ஆண்டில் “கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்” என்னும் ஆராய்ச்சி நூலும் 1928-ஆம் ஆண்டில் “சோழர் சரித்திரம் - முதற்பாகம்” என்னும் வரலாற்று நூலும் நாட்டாரால் எழுதப்பட்டன. பாகனேரித் தனவைசிய இளைஞர் சங்க வெளியீடாக அச்சிடுதற்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை, அக நானூறு என்னும் மூன்று நூல்கட்கும் உரையெழுதித்தருமாறு திருவாளர் பாகனேரி வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன் செட்டியார் அவர்களால் கேட்டுக்கொள்ளப்பெற்று 11 - 11 - 1940 - ல் சிலப்பதிகார உரையைத் தொடங்கி எழுதிவந்து 9-3-1942-ல் நாட்டார் முடித்தனர். இவ்வுரை எழுதும்பொழுது சில காலங்களில் உடன் இருந்து உதவி புரிந்தவர் நன்னிலம் போர்டு உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியரும் சிறந்த தமிழறிவுடையவரும் ஆகிய திருவாளர் வித்வான் செ. சிங்காரவேலுச் சேதிராயர் ஆவர். இவ்வுரையானது தமிழறிஞர் பலராலும் பாராட்டப்படுவதனை யாவரும் அறிவர். சிலப்பதிகார உரை தொடங்கிய சில திங்களுக்குபின் அகநானூற்று உரையும், தொடங்கிய சில திங்களின் பின் மணிமேகலையுரையும் தொடங்கப் பெற்றன. இடையே நாட்டார் திருச்சி அகில இந்திய வானொலியிற் பேசியனவும், ‘செந்தமிழ்ச்செல்வி’ ‘தமிழ்ப் பொழில்’ முதலியவற்றில் வெளி யிட்டனவுமாகிய கட்டுரை களில் சிலவற்றைத் தொகுத்துக் கட்டுரைத்திரட்டு ‘முதற்பகுதி’ என்னும் பெயரால் வெளியிட்டதுடன் நான்கு ஐந்தாம் பாரங்கட்குச் ‘செந்தமிழ்ப் பூம்பொழில்’ என்னும் பெயருடன் தமிழ்ப்பாடப் புத்தகங்களும் வெளியிட்டனர். நாட்டார் அகநானூற்றுரையினைத் திருவையாற்று அரசர் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராகவிருந்த கரந்தைக் கவியரசு திருவாளர் ஆர். வேங்கடாசலம் பிள்ளை அவர் களைத் துணையாகக் கொண்டு எழுதி முடித்தனர். இதன் அச்சுவேலை இன்னும் சில திங்களில் நிறைவெய்தக் கூடும். அகநானூற்று மூலங்களின் உண்மைப் பாடங்கள் காண்டற்கும் உண்மைப் பொருள் துணிதற்கும் நாட்டார் எவ்வளவு முயற்சி எடுத்துக் கொண்டிருப்பாhர் என்பதனைச் சங்க நூல் சிறிது பயின்றாரும் அறிவர். இப்பொழுது மணிமேகலை உரையையும் அவர்கள் புதல்வியார் வித்வான் திரு. சிவ. பார்வதியம்மையாரின் துணை கொண்டு எழுதி முக்காற் பகுதி முடித்துவிட்டனர். சில திங்களில் அதுவும் முற்றுப்பெறும். கட்டுரைகள் செந்தமிழ், தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி, சித்தாந்தம், தமிழர், கலாசிந்தாமணி, விவேகோதயம், பூரண சந்திரோதயம், குமரன், நச்சினார்க்கினியன், தாய்நாடு, ஈழகேசரி, ஆநந்தபோதினி முதலிய பத்திரிகைகளில் நாட்டார் கட்டுரைகள் எழுதியுள்ளனர். இவைகளுள் ‘தமிழ்ப்பொழில்’ ‘செந்தமிழ்ச் செல்வி’ என்பவற்றுள் இவர் எழுதிய கட்டுரைகள் மிகப் பலவாகும். இவற்றிலே பொய்கையார், இலக்கண விளக்க உரையாசிரியர், ‘நத்தம் போற்கேடும்’ என்னும் குறளுரை, வித்துவான் திருவாளர் வேங்கடராசலு ரெட்டியாருடைய ‘கபிலர் ஆராய்ச்சி’ என்பனபற்றி நாட்டார் எழுதிய ஆய்வுரை களும், மறுப்புரைகளும் நாட்டாருடைய பேராற்றலையும் கூர்த்த அறிவினையும் இனிது விளக்கி நிற்கின்றன. யாப்பருங்கல ஆசிரியர் பெயர் அமிதசாகரனார் என்றேயிருக்க வேண்டுமென நாட்டார் எழுதிய பின்பே முன் பிழைபட எழுதிவந்த பலரும் தம் பிழையினைத் திருத்திக் கொண்டனர். குடும்பம் நாட்டாருடைய அடுத்த தம்பியார் மு. தியாகராய நாட்டார் நடுக்காவேரியில் தம் மனைவியாருடன் வாழ்க்கையை நடாத்திக் கொண்டு சிறப்புடன் இருந்து வருகின்றனர். அவர்க்கு அடுத்த தம்பியாகிய மு. பஞ்சநத நாட்டார் என்பவர் மணமான பின்னர்த் தம் இளமைப் பருவத்திலேயே 1927 சூலை 3-ஆம் நாள் இறைவன் திருவடியை எய்தினர். தமக்கு நன்னெறியில் ஒழுகும் மக்கள் நால்வர் இருத்தலால் தம்மைத் தயரதர் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் முத்துச்சாமி நாட்டார் அவர்களுடைய காலத்திலேயே இத்தகையதொரு இன்னல் நிகழ நேர்ந்தது. இவருடைய கடைசித் தம்பியாராகிய மு. கோவிந்தராய நாட்டார் நாட்டாருடன் இருந்து பள்ளியிற் படித்துவருகிற காலத்தில் மிகவும் ஊக்கத்துடன் பயின்று தாம் சிறப்புறத் தேறுவதற்கேற்பவே உதவிச் சம்பளமும் பெற்றுப் படித்து வந்தனர். கல்லூரியிலேயே பி. ஏ. வகுப்பில் ஆறாவது பகுதித் தமிழ் எடுத்துக் கொண்டு, நாட்டாரிடமே கல்வி பயின்று சிறப்பாகத்தேறி டாக்டர் போப்பு nடல் பரிசில் பெற்றனர். நாட்டார் தம் இளைய தம்பியார்க்கு முதுகணாகவும், ஆசிரிய ராகவும் இருந்ததன்றி அவருக்குச் சென்னையில் தக்க தோரிடத்தில் மணம் செய்வித்தனர். கோவிந்தராச நாட்டார் ஆசிரியப்பட்டமும் பெற்றுத் தஞ்சை மாநாட்டாண்மை உயர்நிலைப்பள்ளிகளில் ஆசிரியராக இருந்து தம் மனைவி மக்களுடன் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். நாட்டாருக்கு 14-7-1911-இல் ஒரு பெண் மகவும், 19-12-1916-இல் ஒரு ஆண் மகவும், 14-3-1921-இல் ஒரு பெண் மகவும் தோன்றினர். இவருள் முதற் பெண்ணாகிய பார்வதியம்மாள் இளமை தொட்டே கூர்த்த அறிவும், சுறுசுறுப்பும் உடையவர். நாட்டாரைப்போலவே திருத்தமாகப் பேசும் இயல்பும் உடையவர். இயல்பாகத் தனித் தமிழ் நடையிலேயே எழுதும் பழக்கம் உடையவர். பள்ளியில் இரண்டாவது பாரம் வரையில் படித்துவிட்டு வீட்டிலிருந்து தம் தந்தையாரைப் போலத் தாமாகவே தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் பலவற்றையும் பயின்று தமக்கு அவ்வப்போது எழும் ஐயங்களை மாத்திரம் தந்தையாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வர். இவர் நாட்டாருடைய தமக்கை மகனாகிய வித்துவான் த. சிவப்பிரகாசச் சேதிராயர்க்கு மணம் செய்விக்கப் பெற்று 1939-ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்துத் தமிழ் வித்துவான் தேர்தலில் வெற்றிபெற்றுப் பின்பு தந்தையார் தெரிவித்தபடி பெரிய புராணத்தைச் சிறந்த உரை நடையில் எழுதியும், சீகாளத்திப் புராணத்திற்கு உரை வரைந்தும், “பாண்பெரியார் மூவர்” என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை நூலை எழுதியும் முடித்தனர். பின்பு தம் தந்தையார் உரை எழுத மேற்கொண்டுள்ள மணிமேகலைக்குத் தாம் உதவியாக இருந்து எழுதி வருகின்றனர். இப்பொழுது திருவையாற்று அரசர் கல்லூரித் தமிழாசிரியராகவிருக்கும் தம் கணவருடனும், மக்களுடனும் சிறப்பாக இல்லறம் நடத்திக் கொண்டும் தமிழ் நூல்களை ஆராய்ந்து கொண்டும் இருந்து வருகின்றனர். ஆண்மகவாகிய நடராசன் முறையே பள்ளிக்கூடங்களில் பயின்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே இண்டர் மீடியேட்டிலும், கணக்கு ஆனர்ஸ் தேர்தலிலும் தேறிச் செங்கிப் பட்டியிலே தம் மாமன் வீட்டுப் பெண்ணாகிய திரு. இராசம்மாள் அவர்களை மணம்செய்து கொண்டு அருவங்காட்டிலுள்ள போர் மருந்து செய்யும் களரியில் மேற்பார்வையாளராக அலுவல் பார்த்து வருகின்றனர். இப்பொழுது இவருக்கு மூன்றாட்டைப் பருவமுடைய ஆண்மகவும், ஓராட்டைப் பருவமுடைய பெண் மகவும் உளர். நடராச நாட்டார் திருத்தமாகத் தனித்தமிழில் பேசுந்திறனும் எழுதுந்திறனும் உடையார். தொழின் முயற்சிகளில் இவர் கூரிய அறிவும் ஊக்கமும் வாய்ந்தவர். இவர் தம் குடும்பத்துடன் இனிது வாழ்ந்து வருகின்றனர். கடைசிப் பெண்ணாகிய மங்கையர்க்கரசியார் இளமை யிலேயே நல்லறிவுடையராய்க் கல்வி கற்றுச் செங்கரையூரி லுள்ள வித்துவான் திருநாவுக்கரசுச் சேதிராயர்க்கு மணஞ் செய்விக்கப்பெற்று மகப்பேற்றின் பொழுது தையலம்மாள் என்னும் பெயருடைய ஒரு பெண் மகவை வைத்துவிட்டு உயிர் துறந்தனர். இவருடைய பிரிவு இவருடைய பெற்றோர்க்கு மிகுந்த கலக்கத்தை உண்டாக்கியது. நாட்டாருடைய வாழ்க்கைத் துணைவியாராகிய இந்திராணியம்மையார் பள்ளியிற் சிறிதளவே படித்தவராயினும் நீதி நூல்களிலும், தேவார முதலியவற்றிலும் பல பாக்கள் பாடம் செய்தவர்; பெரியபுராணக் கதை முதலியன அறிந்தவர்; குடும்பம் நடத்துவதில் மிகுந்த திறமையுடையவர்; சிறிதேனும் தன்னலம் பாராட்டாதவர்; ஆரவார வாழ்க்கையை விரும்பாதவர்; வறியவர்க்களுக்கும் சுற்றத்தார்க்கும் உதவி செய்யும் பண்புடையவர்; இரப்பவர்க்கு இல்லை என்னாது அளிக்கும் ஈகை இயைந்தவர்; கணவர்க்குத் தொண்டு செய்வதிலும், மக்களையும் பெயரர்களையும் வளர்ப்பதிலும் சலியாத உள்ளம் உடையவர்; தம் கணவரோடு சிவதீக்கைபெற்று நாடொறும் தவறாது செய்கடன் புரிந்து வருபவர். இத்தகைய நற்குண நற்செயல்களையுடையவரை வாழ்க்கைத் துணையாகப் பெற்ற நாட்டாருக்கு இல்லாதது யாது? எல்லாம் உள்ளன. தமிழ்ப்பணியும் பிறவும் நாட்டார் கல்லூரிகளிலே ஆசிரியராக இருந்து கற்பித்தும், பல நூலுரைகளும் ஆராய்ச்சி நூல்களும் எழுதி வெளியிட்டும், பற்பலவிடங்களில் உள்ள சங்கங்களில் தலைமைதாங்கியும், சொற்பொழிவாற்றியும் தமிழ்ப்பணி புரிந்து வந்ததோடு சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் பாடநூல் தெரிந் தெடுப்புக் குழுவிலும், தேர்வாளர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பணியாற்றியுள்ளார்; மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பண்டித தேர்வுக்கு ஆண்டுதோறும் தேர்வாளராக விருந்து இலக்கியம், இலக்கணம், தருக்கம் முதலியவற்றில் வினாத் தாள்கள் கொடுத்து வருகின்றனர்; காசி இந்துப் பல்கலைக் கழகத்திலும் இரண்டுமுறை தேர்வாளராக இருந்திருக்கின்றனர். இவர் எதனையும் காய்தல் உவத்தல் இன்றி நடுநின்று ஆராய்ந்து உண்மை கண்டு கூறுதலும், உண்மைக்கு மாறாய வற்றைத் தமக்கு நண்பர்களும் பெருமதிப்புடையவர்களும் கூறினும் ஏற்றுக் கொள்ளாமையும் ஆகிய இயல்புடையர். நாட்டார் சைவ சித்தாந்த நூல்களில் அழுத்தமான பயிற்சியும், சைவ சமயத்தின்பால் பெருமதிப்பும் உடையர்; சிவபிரானிடத்தும் அடியார்களிடத்தும் ஆரா அன்புடையர்; அன்னராயினும் வேறு எச்சமயத்தினையும் சமயநெறியில் நிற்போரையும் வெறுப்பவர் அல்லர்; அங்ஙனமே பிறப்பினால் உயர்வு தாழ்வு கருதாது யாவரையும் மதித்தொழுகும் தன்மை வாய்ந்தவர்; செருக்கென்பது சிறிதும் இல்லாதவர்; யாருடனும் இனிமையாகக் கலந்து பழகும் மக்கட் பண்புடையர்; அறஞ் செய்தலில் விருப்பமுடையவர். பயனில் சொல் பேசுதல், வீண்பொழுது போக்கல், பிறர் ஆக்கங்கண்டு பொறாமை முதலிய தீய இயல்புகள் அணுகுதற்கு இடங்கொடாத இவர் தம் வாழ்க்கைத் துணைவியைக் கடிந்து பேசியதையோ, அள், ஆள் விகுதியுடைய சொற்களை அவர் திறத்து வழங்கியதையோ யான் பழகிய கால முதலாக இன்றுவரை அறிந்திலேன். தமிழ் நாட்டிலே நாட்டாருக்குப் பலவாண்டுகளாக நண்பர்களாக இருந்தவர்களும், இருப்பவர்களும் அளவற்றவ ராவர். ஆங்காங்குச் சங்கங்கட்குச் செல்லும் பொழுதெல்லாம் அத்தகைய நண்பர்களோடு அளவளாவுவது அவருக்குப் பெரிய இன்பமாக இருக்கும். இருபது ஆண்டுகட்குமுன் சாத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி என்னும் இடங்களில் நடந்த சங்க ஆண்டுவிழாக்கட்குச் சென்று அவற்றிற்கு வந்த அன்பர்களுடன் திருக்குற்றாலம் பாபநாசம் என்னும் பதிகட்கும் சென்று அடைந்த இன்பம் அவர் மனத்தைவிட்டகலவில்லை என்று கூறுவர். அங்கு வந்திருந்த திருவாளர் சி. எம். இராமச்சந்திரஞ் செட்டியார் பி. எ., பி. எல்., அவர்கள் கோயமுத்தூருக்குச் சென்று நாட்டாருக்கு எழுதிய கடிதத்தில் “யான் இம்முறை வந்ததில் முதன்முதலாகத் தங்கள் நட்பு எனக்குக் கிடைத்தது பெரும்பேறு” என்றும், “பலரும் சேர்ந்து இங்ஙனம் செல்வதால் உண்டாகும் நன்மைபல” என்றும் எழுதியிருந்தனர். நாட்டார் தேர்வுகட்குப் படித்த காலத்திலும் பின்பு சில ஆண்டுகளிலும் நாள் தவறாமல் அவரைப் பற்றிப் பேசி மகிழ்ச்சியடையும் இயல்பினரா யிருந்தவர்கள் நடராச ஐயர் என்னும் ஒரு வீர சைவ ஆசிரியரும், திரு. ஐ. சாமிநாத முதலியாரவர்களும் ஆவர். அரித்துவாரமங்கலம் பெருநிலக்கிழவரும், தமிழ்ப் புலவருமாயிருந்த திருவாளர் வா. கோபாலசாமி ரகுநாத ராசாளியார் அவர்கள் நாட்டாரிடத்தில் மிக்க அன்புடையரா யிருந்தது போலவே நாட்டாரும் அவர்திறத்து அன்புடையரா யினார். இராசாளியார் நிறுவிய இந்திர குலாதிபர் சங்கத்தை நடத்துவது பற்றியும், அக் குலத்தாரின் வரலாறு பற்றியும் இருவருமாகச் சேர்ந்து சிந்திப்பதுண்டு. மதுரைத் தமிழ்ச் சங்கத்துத் தலைவர் திருவாளர் பொ. பாண்டித்துரைத் தேவர் அவர்களுடைய இனிய பண்புகளும், சொற்பொழிவாற்றலும் நாட்டார் உள்ளத்தைக் கவர்ந்திருந்தன. சோழவந்தானூரில் இருந்த நுண்மாண் நுழை புலமுடைய புலவராகிய அரசஞ் சண்முகனாரும் நாட்டாரும் ஒருவர் பால் ஒருவர் மிக்க அன்புடையராயிருந்தனர். சண்முகனாருடைய அறிவு நுட்பமும், இனிய எளிய குணமும் நாட்டாருக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் விளைத்தன. அவரும் நாட்டாருடைய நுண்ணறிவினையும் இனிய குணத்தையும் அறிந்து மகிழ்வர். சண்முகனார் திருச்சிக்கு வரும்பொழு தெல்லாம் தாம் செய்துள்ள ஆராய்ச்சிகளையும், இயற்றியுள்ள செய்யுட் களையும் நாட்டாரிடம் கூறி அறிவொப்புக் காணும் வழக்கம் உடையர். பல சங்கங்களிலே இருவரும் கூடியிருந்த அன்பின் பான்மையை டாக்டர் ஐயர் அவர்கள் கண்டு “நீங்கள் உடன் பிறப்பாளரோ” என நாட்டாரை வினவினராம். பிற்காலங்களிலே ஐ. சாமிநாத முதலியார், இராசாளியார், பாண்டித்துரைத் தேவர், அரசஞ் சண்முகனார் முதலானவர்கள் இப்பொழுது இல்லையே என நாட்டார் வருந்திக் கூறுவதுண்டு. மற்றும் அந்நாளிலே சங்கங்கட்குச் செல்லும் பொழுது பல இடங்களிலும் நாட்டாரைப் போலவே சென்று சங்கங்களில் அளவளாவுதற் குரியவராயிருந்தவர்கள் திருவாளர்கள் எஸ். சச்சிதாநந்தம் பிள்ளை பி. ஏ., எல். டி., அவர்கள், கா. சுப்பிரமணிய பிள்ளை எம். ஏ., எம். எல்., அவர்கள், திரு. வி. கல்யாணசுந்தர முதலியார் அவர்கள், ஞானியார் மாணவர் ம. ரா. குமாரசாமி பிள்ளை அவர்கள் சைவப் பிரசாரகர் பொ. முத்தையா பிள்ளை அவர்கள் முதலானோர் அ.மு. சரவண முதலியார் அவர்கள் ஆவர். மற்றும் திருவாளர்கள் மறைமலையடிகள், மகாமகோ பாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், மு. ரா. கந்தசாமிக் கவிராயர் முதலானவர்கள்பால் பழக்கமும், அன்பும் உடையவர். மற்றும் கரந்தைத் தமிழ்ச்சங்க உறுப்பினர்களாகிய திருவாளர் ஆர். வேங்கடாசலம் பிள்ளை அவர்கள் முதலிய பலர் நாட்டாருடைய பழைய நண்பராவர். நாட்டாரிம் பயின்ற மாணாக்கர்களில் எண்ணில்லா தவர்கள் மிக்க அன்புடையவர்கள் ஆயினும் நாட்டாரவர்களால் என்றும் மறக்கமுடியாதவர்களாய் இருந்துவரும் அன்பின் தொடர்ச்சியுடையவர்கள் திருவாளர்கள் சிவகங்கை எஸ். சோமசுந்தரம் பிள்ளை பி. ஏ., எல். டி., டி. எம். கோவிந்தராசன் பி. ஏ., பெங்களூரில் இருக்கும் பி. கோவிந்தசாமிக் கவுண்டர் பி. ஏ., கோலாலம்பூரில் தமிழ்நேசன் பத்திரிகை ஆசிரியராயிருந்த கே. நரசிம்ம ஐயங்கார், டி. எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் பி. ஏ., முதலானவர்கள் ஆவர். நாட்டாரால் தன்னலம் கருதாத உரிமையன்பர்களாகக் கொண்டு பாராட்டப்பட்டு வந்தோர் செந்தமிழ்ப் புரவலர் த. வே. உமாமகேசுவரம் பிள்ளையவர்கள், ஆர். வி. இலட்சுமையா நாயுடு அவர்கள் அ.மு. சரவண முதலியார் அவர்கள் ஆவர். இம்மூவரும் நாட்டாரின் உள்ளத்தினை விட்டு நீங்காத, ஒத்த உணர்ச்சி யுடைய உண்மை நட்பாளர் ஆவர். அவர்களுள் பிள்ளை யவர்கள் காலஞ் சென்றது நாட்டாருக்கு அளவற்ற துயரினை அளிப்ப தொன்றாகும். மற்றும் திருவாளர்கள் டி. வி. சதாசிவப் பண்டாரத்தார், அ. கார்மேகக்கோனார். வித்துவான் ம. பெரியசாமிப் பிள்ளை முதலாயினோரும் நாட்டாருக்குச் சிறந்த அன்பர்கள் ஆவர். நாட்டாருடைய அன்பிற்கும், மதிப்பிற்கும் உரியவர்களாய் உள்ள பெரியோர்கள் திருவையாற்றுப் பரமசிவம் என்னும் காரைப்பாக்கம் சுவாமிகள், திருப்பாதிரிப்புலியூர் உயர்திரு. சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள், கல்லல் உயர்திரு. குக. மணிவாசக சரணாலயசாமிகள் என்னும் இவர்கள் ஆவர். உயர்திரு ஞானியார் அடிகள் நாட்டாரிடத்தில் இறுதி நாட்களில் அளவுகடந்த அன்பும் மதிப்பும் உடையராயிருந்த தோடு அவற்றைப் பலவிடங்களில் வெளிப்படையாகவும் பேரவைகளில் தெரிவித்து வந்தனர். நாட்டாரின் புதலிவியார் எழுதிய “பாண் பெரியார் மூவர்” என்னும் நூலுக்கு முகவுரை எழுதியனுப்பிய பொழுது நாட்டாரைக் குறித்து “தாங்கள் மிகவும் புண்ணிய வான்கள்” என்று எழுதினார்கள். அப்பெரியாருடைய பிரிவு அவர்கள் பால் அளவு கடந்த பற்றுவைத் திருந்த நாட்டாருக்குப் பெருந்துயர் விளைப்ப தாயிற்று. தமிழ் நாட்டிலே தமிழ் நூல் வளர்ச்சியின் பொருட்டும், சைவசமய வளர்ச்சியின் பொருட்டும் பலப்பல பெரிய பரிசில்களை யேற்படுத்தியும், நூல்கள் எழுதுவோர்க்கு உதவி செய்தும் தமிழ்ப்புரவலராக விளங்கிய திருப்பனந்தாள் காசி மடத்துத் தலைவர்களாகிய உயர் திரு. காசிவாசி சாமிநாதத் தம்பிரான் சுவாமி அவர்களும் நாட்டார் அவர்கள் பால் மிக்க அன்பும் மதிப்பும் உடையராவார்கள். இறைவன் திருவடிப்பேறு பல யாண்டுகளாக இரவிலும் பகலிலும் நாட்டாரவர்களை விட்டுப் பிரியாது கூடவேயிருந்து நலிவுசெய்த காசநோய் இவர்களை விட்டு நீங்குமெனவும் இவர்கள் நோய்நீங்கிய நல்லுடலுடன் நெடுங்காலம் வாழ்வர் எனவும் எண்ணி யிருந்தேன். அன்பர்கள் நாட்டாரவர்களின் அறுபதாம் ஆண்டு நிறைவிழாவை 8-5-44-ல் மிகச் சிறப்பாகக் கொண்டாட எண்ணி அதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவந்தனர். எனினும், இறைவன் திருவுளம் வேறுவகையாக அமைந்துளது. தமிழன்னையின் தவப்புதல்வரும் சிவனடி மறவாச் சிந்தையினரு மாகிய நாட்டாரவர்கள் சுபானு ஆண்டு பங்குனித் திங்கள் 15-ம் நாள் (28-3-44) செவ்வாய்க்கிழமை சிவபிரான் திருவடி நீழலையடைந்து பேரின்பப் பெருவாழ் வெய்தினர். -வித்துவான் வீ. உலக வூழியன் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் (1884 - 1944) பிறந்த ஊர் தஞ்சைக்கு வடமேற்கில் சுமார் 12 கி. மீ. தொலைவில் உள்ள நடுக்காவேரி என்னும் ஊர் நாவலர் ந. மு. வே. பிறந்த ஊராகும். பெற்றோர் தந்தையார் திரு. வீ. முத்துச்சாமி அவர்கள்; தாயார் திருவாட்டி தைலம்மையார் அவர்கள். பிறந்த நாள் தாரண ஆண்டு சித்திரைத் திங்கள் இரண்டாம் நாள் (12-4-1884). பெயர் வைப்பு நாவலர் ந. மு. வே. அவர்களுக்குப் பெற்றோர் முதலில் வைத்த பெயர் சிவப்பிரகாசம் என்பதாகும். இவருக்கு முன் பிறந்த தட்சணாமூர்த்தி, இராமச்சந்திரன் ஆகிய இருவரும் இளமையிலேயே இயற்கை எய்தினர். எனவே கவலை கொண்ட பெற்றோர் இந்தக் குழந்தையையாவது காப்பாற்றி அருள வேண்டும் என்று திருவேங்கடப் பெருமானை வேண்டிக் கொண்டு சிவப்பிரகாசம் என்னும் பெயரை மாற்றித் திருவேங்கடப் பெருமான் நினைவாக வேங்கடசாமி என்று பெயரிட்டனர். கல்வி நடுக்காவேரியில் இருந்த தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு வரை ந. மு. வே. பயின்றார். அப்போதெல்லாம் நான்காம் வகுப்புத் தேர்வு அரசினர் தேர்வாக இருந்தது. தேர்வில் ந. மு. வே. ஒவ்வொரு பாடத்திலும் முதன்மையாகத் தேறினார். இதற்காகப் பல பரிசுகளையும் பெற்றார். தொடக்கக் கல்வி முடிந்த பின் தம் தந்தையாரிடமே சில நூல்களைப் பாடம் கேட்டார். பிறகு, பகற்பொழுதில் வேளாண்மையில் ஈடுபட்டு உழைத்துவிட்டு, இரவில் தாமாகவே நன்னூல் முதலிய இலக்கண நூல்களைக் கற்றறிந்தார். பின்னர்த் திருவாளர் ஐ. சாமிநாத முதலியார் அவர்களின் அறிவுரைப்படி 1905 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்தி வந்த பிரவேச பண்டிதத் தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதற்குரிய பரிசுகளையும் பெற்றார். அச்சங்கத்தின் இரண்டாம் தேர்வாகிய பால பண்டிதம் தேர்வினை 1906 ஆம் ஆண்டில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுப் பொற்பதக்கம் பரிசு பெற்றார். மூன்றாம் தேர்வாகிய பண்டிதத் தேர்வை 1907 ஆம் ஆண்டில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுத் தங்கத்தோடா பரிசு பெற்றார். இப்பரிசினைப் பாண்டித்துரைத் தேவர் தம் கைகளாலேயே வழங்கி நாவலருக்குப் பெருமை சேர்த்தார். மூன்று தேர்வுகளிலும் முதன்மையாளராகத் தேர்ச்சி பெற்றுப் பரிசுகளும் பெற்றதால் ந. மு. வே. அவர்களின் புகழ் தமிழ் நாடெங்கும் பரவியது. கல்வி முடிந்தபின் ந. மு. வே. அவர்கட்குத் திருமணம் ஆயிற்று. ஆற்றிய பணிகள் ந. மு. வே. அவர்கள் 1908இல் திருச்சி எஸ். பி. ஜி. கல்லூரியில் தமிழாசிரியராகச் சேர்ந்து பணியாற்றினார். பின் 1909இல் கோயம்புத்தூர் தூய மைக்கேல் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகச் சேர்ந்தார். நாவலரின் அறிவாற்றலையும் பாடம் கற்பிக்கும் திறனையும் அறிந்து மீண்டும் எஸ். பி. ஜி. கல்லூரி, தமிழாசிரியர் பணி ஏற்குமாறு வேண்டி ந. மு. வே. அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. அவர் கி. பி. 1910இல் மீண்டும் எஸ். பி. ஜி. கல்லூரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இவர் தமிழ் கற்பித்து வரும் காலத்தில் பெரும்பாலான ஆண்டுகளில் பி. ஏ. வகுப்பிற்குரிய தமிழ்த் தேர்வில் இக்கல்லூரி மாணவர்களே முதற்பரிசாகிய தங்கப்பதக்கம் பெற்று வந்தனர். உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக 1933 ஆம் ஆண்டு இக்கல்லூரி மூடப்பட்டமையால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தாரின் அழைப்பினை ஏற்று அங்குச் சென்று தமிழ்ப் பணி புரிந்தார். அங்குச் சிறப்புறப் பணியாற்றி 30-6-1940இல் ஓய்வு பெற்றார். தம் குடும்பத்துடன் தஞ்சை வந்து தங்கினார். பின்னர்க் கரந்தைப் புலவர் கல்லூரியில் முதல்வர் பணியை ஏற்றுக்கொண்டு ஊதியம் பெறாமல் சிறப்புறப் பணியாற்றினார். ந. மு. வே. இயற்றிய நூல்கள் 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி 1915இல் வெளியிடப் பட்டது. 2. நக்கீரர் என்னும் நூல் 1919இல் எழுதப்பட்டது. 3. கபிலர் என்னும் நூல் 1921இல் எழுதப்பட்டது. இவ்விரு நூல்களும் சென்னைப் பல்கலைக் கழகம், காசி இந்து பல்கலைக் கழகம், இலண்டன் பல்கலைக் கழகம் ஆகிய வற்றில் பி. ஏ. வகுப்பிற்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்தன. 4. கள்ளர் சரித்திரம் என்னும் நூல் 1923இல் எழுதப்பட்டது. கள்ளர் வகுப்பினரைப் பற்றி எழுதப்பெற்றதாயினும், தமிழ் மக்கள் அனைவரைப் பற்றியும் பொதுவாக இதில் ஆராயப்பட்டுள்ளது. 5. கண்ணகியின் வரலாறும் கற்பு மாண்பும் என்னும் நூல் 1926இல் எழுதப்பட்டது. 6. சோழர் சரித்திரம் என்னும் நூல் 1928இல் எழுதப்பட்டது. 7. கட்டுரைத் திரட்டு - I, கட்டுரைத் திரட்டு - II ஆகியவையும் வெளிவந்துள்ளன. இதில் நாவலர் ந. மு. வே. எழுதிய பற்பல கட்டுரைகள் அடங்கியுள்ளன. ந. மு. வே. எழுதிய உரைகள் 1. தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் வேண்டுகோளின்படி 1925இல் இன்னாநாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி ஆகிய நூல்களுக்கு உரையும், முகவுரையும் எழுதினார். 2. 1925 - 1931இல் திருவிளையாடற் புராணத்திற்கு உரை எழுதப்பட்டது. 3. 1940இல் அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத் திருத்தம், 4. தண்டியலங்கார பழைய உரைத்திருத்தம், 5. யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் ஆகியன எழுதப் பட்டன. 6. கரந்தைப் புலவர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது 1940 - 42இல் சிலப்பதிகார உரையும், 7. 1942-44இல் மணிமேகலை உரையும், 8. கரந்தைக் கவியரசு அரங்கவேங்கடாசலம் பிள்ளையுடன் அகநானூறு உரையும் ந. மு. வே. அவர்களால் எழுதப்பட்டன. சொற்பொழிவுத் திறன்: நாவலர் ந. மு. வே. சொற்பொழிவாற்றும் திறன் மிக்கவர். தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாத அய்யர், மு. இராகவையங்கார், இரா. இராகவையங்கார், திரு. வி. க., இரா. பி. சேதுப்பிள்ளை, அரசஞ் சண்முகனார், கந்தசாமிக் கவிராயர், அருணாசலக் கவிராயர், மு. கதிரேசன் செட்டியார், கோவிந்தராச ஐயங்கார், கவியரசு அரங்க வேங்கடாசலம் பிள்ளை முதலியோருடன் நாவலர் அவர்கள் பல்வேறு அமைப்புக்களிலும், சங்கங்களிலும், விழாக்களிலும், கல்லூரிகளிலும் ஆற்றியுள்ள சொற் பொழிவுகள் எண்ணிறந்தன. கொழும்பிலுள்ள தமிழன்பர்கள் வேண்டு கோளின்படி 1939 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் அவர் இலங்கை சென்று விவேகானந்த சங்கம் முதலிய சங்கங்களிலும் சொற்பொழிவுகளாற்றித் திரும்பினார். ந. மு. வே. அவர்களின் சொற்பொழிவு என்றால் தமிழன்பர்கள் மிக்க மகிழ்ச்சியோடு கூடிவிடுவர். தமிழ் இலக்கியங்களுக்கு அவர் பொருள் விரித்துக் கூறும் அழகை அனைவரும் மெய்ம்மறந்து சுவைப்பர். தாம் படித்துச் சுவைத்தவற்றைப் பயனுள்ள முறையில் பிறருக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லுவதில் நாவலருக்கு இணை நாவலர் அவர்களே எனில் அது மிகையாகாது. “ கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்.” என்பார் வள்ளுவப் பெருந்தகை. அவ்வாறே தம் பேச்சைக் கேட்போரைத் தன்பால் ஈர்த்துக் கொள்வதோடு கேளாதவருக்கும் அவர் பேச்சைக் கேட்க வேண்டும் என்னும் விருப்பம் ஏற்படக் கூடிய அளவுக்குச் சொற்பொழிவாற்றும் திறனை ந. மு. வே. பெற்றிருந்தார். நாவலர். ந. மு. வே. அவர்களின் சொற்பொழிவால் நல்ல தமிழ் நடை ஓங்கியது. நாவலர் பட்டம் 24-12-1940இல் சென்னையில் சென்னை மாநிலத் தமிழர் சங்கச் சார்பில் சென்னை மாநிலத் தமிழர் மாநாடு நடை பெற்றது. ந. மு. வே. அவர்களின் தமிழறிவையும் சொற் பெருக்காற்றும் திறனையும் பாராட்டிப் போற்றும் வகையில் இப்பேரவையில், அறிஞர்கள் கூடி, அவருக்கு நாவலர் என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தனர். நாவலர் ந. மு. வே. வாழ்க்கையில் சில நிகழ்ச்சிகள் நாவலரின் பண்பு நலம், புலமைத் திறன், அஞ்சா நெஞ்சம், தூய வாழ்க்கை முதலியவற்றை அனைவரும் அறிந்து கொள்ளுதல் நலம். எனவே அவற்றை உணர்த்தும் முகத்தான் அவர் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்ச்சிகள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன. 1908ஆம் ஆண்டில் காஞ்சி காமகோடி பீடாதிபதி - சங்கராச்சாரிய சுவாமிகள் நடுக்காவேரிக்கு வந்திருந்த போது ந. மு. வே. அவர்கள் பண்டிதத் தேர்வில் முதன்மையாகத் தேறி, தங்கத் தோடா பரிசு பெற்ற செய்தியை அறிந்திருந்தமையால், அவரைத் தாம் தங்கி இருந்த வீட்டிற்கு அழைத்து வரச் செய்து பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தார். 1912ஆம் ஆண்டில் நாவலர் ந. மு. வே. தம் வீட்டில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். காலை பத்து மணியளவில் ஒருவர் வந்து அவரை வணங்கி வரவேற்று ஒரு நாற்காலியில் அமரச் செய்தார். வந்தவர் சட்டை அணியாமல் ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டிருந்தார். சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் பொருள் விளங்கவில்லை என்றும், அவற்றை விளக்க வேண்டும் என்றும் நாவலரிடம் அவர் கேட்டுக் கொண்டார். அவரும் அவற்றை விளக்கினார். இதேபோல் அவர் தொல்காப்பியத்திலும் சில ஐயப்பாடுகளைத் தீர்த்துக் கொண்டார். அவர் வணங்கிச் சென்றபின் நாவலர் தம் தம்பியை நோக்கி, இப்போது வந்து சென்றவர் யார் தெரியுமா? என்று கேட்டார். நாவலரின் தம்பி இப்போது வந்து சென்றவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என்று விடையிறுத்தார். இந்நிகழ்ச்சி ந. மு. வே. அவர்களின் தமிழ்ப் புலமையைத் தெரிவிக்கின்றது. ந. மு. வே. அவர்களின் தந்தையார் வேதாந்த நூல்களை ஆழ்ந்து கற்றவர். ந. மு. வே. திருச்சியிலிந்து கோடை விடுமுறையில் நடுக்காவேரிக்கு வரும்பொழுது தம் தந்தை யாருடன் வேதாந்த சித்தாந்த வாக்கு வாதங்கள் நடத்துவார். தந்தையார் என்ற முறையில் நாவலரின் தந்தையார் அதட்டிப் பேசுவார். மகன் என்ற முறையில் ந. மு. வே. அடக்கத்தோடும், பணிவோடும் பேசுவார். ஆனாலும் தம் கருத்துக்களை ந. மு. வே. அழுத்தம் திருத்தமாய் நிலை நாட்டி விடுவார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டுவிழா இராமநாதபுரம் மன்னர் ப. இராசராசேசுவர சேதுபதி தலைமையில் நடைபெற்றுது. அவர்களுடன் வந்திருந்த அவைப் புலவராகிய திருவாளர் இரா. இராகவையங்கார் அவர்கள் விழா நடைமுறை விதிகளை மீறி மற்றொருவர் சொற் பொழிவாற்றிக் கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு மறுப்புக் கூறினார். உடனே நாவலர் எழுந்து ‘தாங்கள் சமத்தானப் புலவராய் இருக்கலாம். ஆயினும் ஒருவர் பேசும்போது இவ்வாறு குறுக்கே எழுந்து பேசுவது சால் பாகாது’ என்று கூறினார். அவையில் பரபரப்பு ஏற்பட்டது. இராகவையங்கார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அமர்ந்தார். சேலம் செவ்வாய்ப்பேட்டைத் தமிழ்ச் சங்கத்தின் ஓர் ஆண்டுவிழா தமிழறிஞர் திருவாளர் மு. இராகவையங்கார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நாவலர் ந. மு. வே. சொற்பொழிவாளராகச் சென்றிருந்தார். விழாவில் தலைமை தாங்கிய இராகவனார் அவர்கள் தம் முகவுரையில் திருமங்கையாழ்வாரின் பெருமைகளைப் பற்றிக் கூறத் தொடங்கியவர் சில தவறான சொற்களைக் கூறிவிட்டார். உடனே நாவலர் எழுந்து திருமங்கையாழ்வாரைத் திருமங்கை மன்னன் என்பர் தாங்களும் மன்னன் என்று கூறிய வாயால் இவ்வாறு பேசுவது சான்றாண்மை யாகுமா? என்று கேட்டார். தலைவர் திடுக்குற்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். பூவாளூர் சைவ சித்தாந்த சபையின் ஓர் ஆண்டுவிழா, திரு. வி. க. தலைமையில் நடைபெற்றது. நாவலர் ந. மு. வே. அவர்களும் திரு. கா. சு. பிள்ளை அவர்களும் சொற்பொழி வாற்றச் சென்றிருந்தனர். சுயமரியாதை இயக்கம் தீவிரமாக இருந்த காலம் அது. இவ்வியக்கத்தைச் சேர்ந்த பெரும் பேச்சாளர்களும் இவ்விழாவுக்கு வந்திருந்தனர். தலைவர் பேசத் தொடங்கியதும் இவர்களிடமிருந்து ஒன்றன்பின் ஒன்றாகக் கேள்விக் கணைகள் புறப்பட்டன. குழப்பம் ஏற்பட்டது. தலைவர் அமைதியை நிலை நாட்ட முயன்றார். பயனில்லை. உடனே நாவலர் எழுந்து கேள்வி கேட்பவர்களை நோக்கி, ‘உங்களுக்கு உண்மையான ஐயங்களிருந்தால் அவற்றைத்தாளில் எழுதிக் கொடுங்கள். முடிவில் அவைகளுக்கெல்லாம் யானே விடையளிக் கிறேன். இவ்வாறு செய்யாமல் அவையின் நடைமுறை விதிகளை மீறிக் கேள்விகள் கேட்டு விழா நடைபெறாமல் தடுப்பது உங்கள் நோக்கமானால் அதற்கு யான் இடம் தரேன்’ என்று கூறி அமைதி ஏற்பட வழி வகுத்தார். எந்த நேரத்திலும் எந்த ஐயப்பாட்டிற்கும் விடையளிக்கும் அளவுக்கு நாவலரின் தமிழ்ப் புலமை மேலோங்கி இருந்தது. சைவ சித்தாந்த சமாஜ ஆண்டுவிழா திருச்சி மலைக் கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் 1941இல் நடைபெற்றது. ந. மு. வே. அவர்கள் திருவாசகம் என்னும் பொருள் பற்றிச் சொற்பொழிவாற்ற இருந்தார். நிகழ்ச்சிக் குறிப்பும் இவ்வாறே அச்சிடப்பட்டு விட்டது. ஆனால் நாவலர் அவர்கள் சொற் பொழிவாற்ற எழுந்த போது தலைவர் திருப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகள் நாவலரைத் திருக்குறளைப் பற்றிப் பேசுமாறு ஆணையிட்டார். அவ்வாறே, நாவலர் ‘திருக்குறளும் விரிநூற் கேள்வி பரிமேலழகர் உரையும்’ என்னும் பொருள் பற்றி மிகச் சிறப்பாகச் சொற்பொழிவாற்றி முடித்தார். எந்த விதத் தயாரிப்பும் முன்னறிவிப்புமின்றி நாவலர் அவர்கள் தலைவர் கட்டளைக்கு இணங்கச் சிறப்பான முறையில் சொற்பொழி வாற்றியதைக் கண்டு அவையோர் வியந்து பாராட்டினார். 1940ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் திருப்பதியில் அனைத்து இந்தியப் பத்தாவது கீழ்த்திசைக் கலை மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் நடக்கவிருந்த சொற்போரில் திருவஞ்சைக் களம்தான் சேரர் தலைநகர் என நிலைநாட்ட ந. மு. வே. சென்றிருந்தார். திரு. இரா. இராகவையங்கார் கரூவூர்தான் சேரர் தலைநகர் என நிலைநாட்டச் சென்றிருந்தார். சொற்போர் தொடங்கு முன் இராகவையங்கார் நாவலரை அணுகித் தம் சார்பாகப் பேசும்படியும் இல்லையெனின் மையமாக விட்டு விடும் படியும் கேட்டுக்கொண்டார். நாவலரோ அவ்வேண்டு கோளை ஏற்க மறுத்துத் தம் வாதத் திறமையால் திருவஞ்சைக் களம்தான் சேரர் தலைநகர் என்பதை நிலை நாட்டினார். நாவலர் திருச்சி பாதிரியார் ஈபர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது 20 மாணவர்கள் சேர்ந்து மணற் பரப்பில் நிலாச்சோறு உண்பதற்காக அவரையும் உடனழைத்துச் சென்றிருந்தார்கள். உண்டு முடிந்த பின் தம் ஆசிரியரை நோக்கி ஏதாவது அறிவுரை கூறவேண்டும் என்றார்கள். நாவலர், நாராயணசாமி என்னும் மாணவரை நோக்கி, “நாராயணசாமி! நீதான் நன்றாகப் பாடுவாயே, ஏதாவது ஒன்று பாடு,” என்றார். அவர் தேவாரத்தில் ஒரு பாட்டை இசையுடன் பாடினார். பாடி முடிந்ததும் நாவலர் அப்பாடலுக்கு ஒரு மணி நேரம் பொருள் விரித்து விளக்கம் கூறினார். நாவலரின் இளவல் திரு. ந. மு. கோவிந்தராயர் பி. ஏ. எல். டி., அவர்களைச் சந்தித்தபோது இந்தச் செய்தியை நாராயணசாமி அவர்களே நேரில் கூறியதுடன், “அவர்கள் பொருள் கூறிய குரல் இன்னும் என்காதுகளில் ஒலித்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது” என்றும் கூறினாராம். நாவலரிடம் பாடம் கேட்ட பலர், “இவர் என்னிடம் தமிழ் பயின்றவர், கற்பிக்கும் திறமையுடையவர்” என்று அவர் அளிக்கும் ஒரு சான்றிதழைக் கொண்டே உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர் ஆயினர். இஃது நாவலரின் அறிவுத் திறத்தை உலகுக்குணர்த்தும் செய்தியன்றோ? நகைச்சுவை உணர்வு நாவலரின் இளவல் தொடக்கப்பள்ளி மாணவராயிருந்த போது ஒருவர் தேள்கடி மந்திரம் என்று சில புரியாத சொற்களைச் சொல்லிக் கொடுத்து ஒருவருக்கும் சொல்லி விடாதே என்று எச்சரிக்கை செய்திருந்தார். ஆனால் அவரோ உடனே அம் மந்திரத்தை ஒரு சிறு கற்பலகைத் துண்டில் எழுதி எல்லோரும் பார்க்கும்படியாக ஒரு சுவரில் பதித்துவைத்தார். இதைப் பார்த்த நாவலர் ந. மு. வே. “என் தம்பி இப்பொழுதே இராமானுசர் ஆகிவிட்டானே” என்று நகைச் சுவையோடு கூறினார். தமிழ்த் தொண்டும் மறைவும் நாவலர் ந. மு. வே. அவர்களின் தமிழ்ப்பணி அளவிடற் கரியது. தமிழாசிரியராகவும், சொற்பொழிவாளராகவும், கட்டுரையாளராகவும், உரையாசிரியராகவுமிருந்து அவர் தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் மிகப்பலவாகும். தமிழ்மொழி வரலாற்றிலும், தமிழ் வளர்ச்சியிலும் நாவலர் ந. மு. வே. அவர்களின் பங்கு என்றென்றும் போற்றப்பட வேண்டிய தாகும். தம் வாழ்நாள் முழுதும் தமிழுக்காகவே வாழ்ந்துவந்த நாவலர் ந. மு. வே. அவர்கள் கரந்தைப் புலவர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டே தமிழிலக்கியங்களுக்கும் உரைகள் எழுதி அணிசேர்த்துவந்த நேரத்தில், முப்பதாண்டுகளுக்கும் மேலாக அவரை நலிவுறுத்திவந்த ஈளைநோய் 28.3.1944 ஆம் ஆண்டில் அவரின்னுயிரைப் பறித்துக் கொண்டுவிட்டது. நாவலர் ந. மு. வே. அவர்களின் இழப்பு நற்றமிழுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவர்கள் விட்டுச் சென்ற அவர்தம் படைப்புக்கள் இறவாப் புகழுடையனவாகும். நாவலர் நாட்டாரின் தமிழ்த்தொண்டும் புகழும் 1. கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை 1911 ஆம் ஆண்டு மே மாதம் தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பெற்றது. திருச்சிராப்பள்ளியில் உத்தியோகங் களில் அமர்ந்திருந்த அச்சங்கத்தின் பல சிறந்த உறுப்பினர் நாட்டாருக்குப் பழக்கம் ஆயினமையால், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தொடர்பு சங்கம் ஏற்பட்ட சில திங்கட்குள்ளாகவே உண்டாயிற்று. பின்னர், திருச்சியில் கரந்தைத் தமிழ்ச் சங்கத் திற்குக் கிளைச்சங்கம் ஒன்று நிறுவப்பெற்றது. கிளைச் சங்கத்து உறுப்பினர்களே பெரும்பாலும் தாய்ச்சங்கத்து வேலைகளையும் கவனித்து வந்தார்கள். இவர்கள் சங்கச் சார்பான ஒவ்வொரு செயலையும் நாட்டாருடன் கலந்து சூழ்ந்தே செய்து வந்தனர். சங்கத் தொடர்பு ஏற்பட்ட பிறகு, ‘வழக்கறிஞர்’, ‘நிலக்கிழவர்’, ‘கண்காணியார்’, ‘பொறிவலாளர்’, ‘ஆவணக்களரி’, ‘கல்லூரி’, ‘திருவாளர்’ என்பன போன்ற சொற்கள் நாட்டாராலேயே முதன்முதலில் தமிழில் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டன. திருமண அழைப்பு முதலாயின முதன் முதல் அவராலேயே நல்ல தமிழில் எழுதப்பெற்றன. திருச்சியில், கரந்தைக் கிளைச்சங்க உறுப்பினர்கள் பலர் நாட்டாரிடம் தமிழ் நூல்களை முறையாகப் பாடம் கேட்டு வந்தனர். திருக்குறள், புறநானூறு, பத்துப்பாட்டு முதலியனவும், நன்னூல், தொல்காப்பிய எழுத்ததிகாரம் முதலியனவும் பாடம் நடத்தப்பட்டன. திருவாளர்கள் இராம.நடேச பிள்ளை, ம.பெரியசாமி பிள்ளை, கூரத்தாழ்வார் முதலியார், என் துரைசாமி பிள்ளை, சுப்பராய முதலியார் முதலானவர்கள் அப்பொழுது பாடங்கேட்டவர்களில் சிலர் ஆவர். அக்காலத்து நாட்டார் அவர்கட்கு, மிகவும் பழக்கமாக இருந்த பொறிவலாளர், திருவாளர் பா.வே.மாணிக்க நாயக்கர், பி.இ.,எம்.சி.ஐ.,எம்.ஐ.இ., அவர்கள் நாட்டார் மூலம் கரந்தைக் கிளைச் சங்கத்தாரிடம் நெருங்கிய பழக்கமுடையவராயினர். நாயக்கர் அவர்கள் தொல்காப்பிய ஆராய்ச்சி செய்யும்போது தமக்கு ஏற்படும் ஐயங்களை நாட்டாரிடம் உசாவித் தெளிந்து கொள்வர். நாட்டார் கிளைச்சங்க உறுப்பினர்கட்குப் பாடம் கற்பித்ததுடன் அன்றி அடுத்தடுத்துச் சொற்பொழிவுகள் ஆற்றியும் வந்தார். தாய்ச் சங்கத்தில் நிகழும் சிறப்புக் கூட்டங்கட்குச் சென்று தலைமை தாங்கியும், சொற்பொழி வாற்றியும், சங்கத்தோரையும் அவையோரையும், மகிழ்வித்து வருவர். சங்கத் தலைவராயிருந்த திருவாளர் த.வே.உமாமகேசுரம் பிள்ளை அவர்கட்கும், மற்றைய உறுப்பினர்கட்கும் நாட்டார் பால் அன்பு மேன்மேல் பெருகி வளர்வதாயிற்று. 2. திருச்சிராப்பள்ளி சைவ சித்தாந்த சபை நாட்டாரவர்கள் திருச்சிராப்பள்ளிக்கு வந்த பிறகு அதுவரை சரியாய் நடைபெறாதிருந்த சைவ சித்தாந்த சபை நன்கு நடக்கத் தொடங்கியது. நாட்டார் அடிக்கடி அச்சபையில் சொற்பொழிவுகள் செய்து வந்தனர்; சபை உறுப்பினர், பெரிய புராணம் முதலிய சைவ நூல்களை அவரிடம் முறையாகப் பாடம் கேட்டு வந்தனர். 3. திருச்சிராப்பள்ளித் தமிழ்ப் பண்டிதர் மாநாடு திருச்சியில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் கிளைச் சங்கத் தோடும், சைவ சித்தாந்த சபையோடும் தொடர்புகொண்டு பணியாற்றிவரும் நாளில் தமிழ் வளர்ச்சியையும், தமிழாசிரியரின் நிலையை உயர்த்துதலையும் குறிக்கோளாகக் கொண்டு நாட்டார் அவர்கள் 1923, 24, 25 ஆம் ஆண்டுகளில் திருச்சிராப் பள்ளியில் மூன்றுமுறை தமிழ்ப்பண்டிதர் மாநாடு சிறப்பாக நடைபெறச் செய்தார். தமிழ்நாட்டின் பல பாகங்களிலும் இருந்து தமிழாசிரியர்கள் மாநாட்டிற்கு வந்திருந்தனர். அப்பொழுது திருவாளர் பா.வே.மாணிக்க நாயக்கர், பி.இ., அவர்களும் திருவாளர் டி.எம்.நாராயணசாமி பிள்ளை, எம்.ஏ., பி.எல்., அவர்களும் மாநாடுகள் நிகழ்வதற்கு உறுதுணையாயிருந்தனர். 24.12.40 இல் சென்னையில், சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கச் சார்பில் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடந்தது. இப்பேரவையில் நாட்டாருக்கு “நாவலர்” என்னும் பட்டம் வழங்கப்பட்டது. இத் தமிழ்ச் சங்கத்திற்கு, 41, 42ஆம் ஆண்டுகளில் உதவித் தலைவராகவும், 43ஆம் ஆண்டில் தலைவராகவும் நாட்டார் இருந்தனர். 4. தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இக் கழகத்தைச் சார்ந்த சைவ சித்தாந்த சங்கத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவுவிழா 30.12.1922இல் நாட்டாருடைய தலைமையில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. அது முதலாக அந்நூற்பதிப்புக் கழகத்தின் தொடர்பு நாட்டாருக்கு உளதாயிற்று. 1923 ஆம் ஆண்டு முதல் அக்கழகத்தாரால் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகின்ற “செந்தமிழ்ச் செல்வி” என்னும் திங்கள் வெளியீட்டிற்கு, நாட்டார் அதன் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினருள் ஒருவராகத் தொடக்க முதல் இருந்து வந்தனர். 1939 ஆம் ஆண்டு முதல் அக்கூட்டத்திற்குத் தவைராக இருந்து வந்தனர். தொடக்க முதல் இவருடைய கட்டுரைகள் அத்திங்கள் வெளியீட்டை அழகுசெய்து வந்தன. 5. சைவ சித்தாந்த மகா சமாஜம் சென்னையில் சைவ சித்தாந்த மகா சமாஜம் என்னும் பெயரில் ஒரு கழகம் நிறுவப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன் சார்பில் “சித்தாந்தம்” என்னும் மாதத்தாள் நடத்தப்படுகிறது. நாட்டார் அச்சமாஜ உறுப்பினருள் ஒருவர். அவர் சைவ சமயத்தைப் பற்றிய பல கட்டுரைகளை சித்தாந்தத்தில் வரைந்துள்ளனர். கரந்தையில் நடைபெற்ற சமாஜத்தின் ஆண்டு விழாவில் தலைமை தாங்கினர். அச்சமாஜம் ஆண்டுதோறும் கூட்டும் ஆண்டுவிழாக் கூட்டங்களிற் கலந்து கொண்டு சமயச் சொற்பொழிவாற்றி வந்தனர். தமிழ்ப் பணி 1. கல்லூரி மாணாக்கர்கட்கு ஆற்றிய தமிழ்ப்பணி அந்நாளில் திருச்சியிலிருந்த மூன்று கல்லூரிகளின் மாணாக்கர்களிலும் விருப்பமுடையவர் படித்துத் தமிழறிவை வளர்த்துக் கொள்ளுமாறு நாட்டாரும், சூசையப்பர் கல்லூரித் தமிழாசிரியர் திருவாளர் அ.சிவப்பிரகாசம் பிள்ளை முதலிய சில தமிழாசிரியர்களும் சேர்ந்து ஒரு பொதுவிடத்தில் வாரத்திற் சில நாட்கள் நன்னூல், திருக்குறள், முதலாயினவற்றைக் கற்பித்து வந்தார்கள். அப்பொழுது திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களும், திருப்பூர் வழக்கறிஞர் டி.ஆர்.சுந்தரம் பிள்ளை அவர்களும் இம்மாணாக்கர்களுடன் இருந்து பயின்றதோடு அமைச்சர் களாகவும் பணியாற்றி வந்தார்கள். 2. தனித் தமிழ்க் கல்லூரிக்கான முயற்சிகள் 1921ஆம் ஆண்டு நாட்டாருக்குத் தனித் தமிழ்க் கல்லூரி ஒன்று நிறுவப்பெறல் வேண்டும் என்ற விருப்பம் உண்டாயிற்று. அதற்காக அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:- “இந்நாட்டில் இக்காலத்தில் இருந்துவரும் கல்விமுறை பெரிதும் பிழைபாடுடையதென்று அறிஞர் பலராலும் ஒப்புக்கொள்ளப் படுகிறது. தமது தாய்மொழியைக் கைவிடுத்து வேற்று நாட்டு மொழியாற் கல்வி கற்றுவரும் புதுமை இவ்விந்திய நாட்டில் மாத்திரமே காணப்படுகிறது. பல கலையுணர்வும் பெற்று அரிய செயல்கள் செய்தற் பொருட்டன்றோ கல்வி கற்பது? இப்பொழுதோ மாணவர்கள் வெறும் மொழிப் பயிற்சியின் பொருட்டே தமது கட்டிளமைப் பருவமெல்லாம் செலவிட்டுக் கலையுணர்வு பெறுதலின்றி உடலுரமும் குன்றுகின்றனர். மாணவர்கட்கு இருக்கவேண்டிய நற்குண நல்லொழுக்கங்கள் அருகி வந்துகொண்டிருக்கின்றன. மதவுணர்வு சிறிதும் பெறுதலின்மையால் அவர்கட்குத் தெய்வ நம்பிக்கையும் குன்றி விட்டது. ஆசிரிய-மாணவர்களின் சம்பந்தம் பெரும்பாலும் உருக்குலைந்து நிற்கிறது. இவ்வாறாக நிகழ்ந்துள்ள குறைபாடு களுக்கு ஓர் எல்லை இல்லை. இந்நிலைமையில் வறிதே காலந் தாழ்த்தாது நம் நாட்டுக் கல்வி முறையைத் திருத்துவது இந்திய நன் மக்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள கடனாகும்.” இக்கடனுணர்ச்சியுடன் நாட்டார் அவர்கள் குருகுலம் போன்ற கல்லூரி ஒன்றினைத் ‘திருவருட் கல்லூரி’ என்னும் பெயரால் தாமே நிறுவத் துணிந்து அதன் பொருட்டுத் தமிழ் நாட்டின் சில பகுதிகளில் கையொப்பமும் வாங்கி வருவாராயினர். ஆனால் அந்நாளிலே, திரு.வ.வே.சு.ஐயர் அவர்களால் தொடங்கப் பெற்ற ‘குருகுலம்’ என்னும் கல்விச்சாலை நடைபெறுதற்கு ஏற்பட்ட தடைகளை நினைத்தும், தாம் குடும்பத்தையும், கல்லூரி ஆசிரியப் பதவியையும் விடுத்துத் தனியாக இதன்பொருட்டு முயலுதல் தம் நிலைமைக்குப் பொருத்தமில்லாமையை உணர்ந்தும் அம்முயற்சியைக் கைவிட்டனர். 3. தமிழ்ப் பல்கலைக் கழக முயற்சி 1925-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் நாளிலே தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் அப்பொழுது சென்னை அரசாங்கத்தில் அமைச்சராயிருந்த, திவான் பகதூர் டி.என்.சிவஞானம் பிள்ளை அவர்கள் தலைமையிற் கூடிய ஒரு கூட்டத்தில், தமிழர்கட்குத் தனியே ஒரு பல்கலைக் கழகம் நிறுவப்பெறல் வேண்டும் என முடிவு செய்து அம்முயற்சியைத் தொடர்ந்து நடத்துவதற்கெனப் பன்னிருவர் அடங்கிய கழகம் ஒன்று அமைக்கப்பெற்றது. அக்கழக உறுப்பினருள் நாட்டாரும் ஒருவராவர். இக்கழகம் செய்த முயற்சியின் பயனாக, 24.10.1925 இல் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சி மன்றத்தில் ( Senate ) தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்று நிறுவுதற்கு வேண்டிய முயற்சியை அரசியலார் மேற்கொள்ள வேண்டுமென ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அரசியலார், இராமநாதபுரம் அரசர் முத்துராமலிங்கசேதுபதி அவர்கள் தலைமையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் பற்றி ஆய்ந்து முடிவு செய்ய ஒரு குழுவை நிறுவினர். அக் குழுவிற்கு Sir P.T. ராஜன் அவர்கள் செயலாளராய் இருந்தார். அக்குழுவினர் விடுத்திருந்த கேள்விகளுக்கு நாட்டார் தக்க விடையளித்தனர். நேரில் விசாரித்த பொழுதும், நாட்டார், தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இன்றியமையாமையைப் பற்றி அக் குழுவினர்க்கு விளக்கிக் கூறினர். ஆனால் இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள், சிதம்பரத்தில் நிறுவி, நடத்திவந்த மீனாட்சி தமிழ்க் கல்லூரியையும் அதன் உறுப்பாக இருந்த கீழ் நாட்டு மொழிப் பண்டிதர் பயிற்சிக் கல்லூரியையும் ஒன்று சேர்த்து அரசியலாரின் இசைவு பெற்று, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நிறுவினமையால், தமிழ்மொழி, தமிழர் நாகரிகம் முதலியவற்றின் வளர்ச்சிக்கு அதுவே அமையும் என்னும் கருத்தால் முன்பு மேற்கொண்ட முயற்சி விடப்பட்டது. 4. விரிவுரைகள் நாட்டார் சொற்பொழிவு நிகழ்த்தும்போது தாம் கூற எடுத்துக் கொண்ட பொருளை, “கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்னும் குறளுக்கு இலக்கியமாக, நிரல்படக் கோத்த சொற் களால், இனிமையும், தெளிவும் அமைந்த குரலால், குறித்தகால அளவில் பேசி முடிப்பர். பேசுங்கால், நடத்தல், கையாட்டல், கனைத்தல், அசைதல் போன்ற வேண்டாச் செய்கைகளை அவர்பால் காண்பது அரிது. கூறியன கூறாமலும், ஒருமைப்பன்மை மயக்கம் முதலாகிய இலக்கண வழுக்கள் இன்றியும், உயர்ந்த தனித் தமிழ் நடையில், பேசுவதைக் கேட்பவர்கள் அச்சொற்பொழிவை திருத்தமின்றி அவ்வாறே அச்சிட்டுவிடலாம் எனக் கூறுவர். இங்ஙனம் சிறந்த சொற்பொழிவாளராயும், தமிழ்ப்பணி செய்வதில் விருப்பமும் அதற்கேற்ற இனிய குணமும் உடையராயும் இருந்தமையால் தமிழ் நாட்டிலுள்ள பற்பல கழகங்களிலும் சொற்பொழிவாற்றுதற்கு நாட்டாரை விரும்பி அழைப்பர். இவரும் தம் உடல் உழைப்பு, நோய் முதலியவற்றைக் கருதாமல் பல இடங்கட்கும் சென்று சொற்பொழிவுகள் செய்தும் சங்க விழாக்களிலே தலைமை தாங்கியும் பணி செய்து வந்தார். தமிழ் நாட்டில் இவர் சொற்பொழிவாற்றிய இடங்கள் நூற்றுக்கணக்கானவை. நாட்டார் தலைமை தாங்கிய கழகங்களிற் சில பின்வருமாறு: - திருநெல்வேலிச் சைவ சித்தாந்த சங்கம், சாத்தூர் தமிழ்ச் சங்கம், குளித்தலைச் கம்பன் செந்தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம், திருச்சிராப்பள்ளி சைவ சித்தாந்த சபை, பூவாளூர்ச் சைவ சித்தாந்த சபை, பலவான்குடி மணிவாசக சங்கம், மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபை, திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மாணவர் கழகம், சைவ சித்தாந்த மகா சமாஜம், இளங்காடு மாணவர் செந்தமிழ்ச் சங்கம், முருகன் செந்தமிழ்க் கழகம், தென்காசி திருவள்ளுவர் கழகம். 1930 ஆம் ஆண்டு, பிப்ரவரி 11, 12, 13, 14 ஆம் நாட்களில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பிலே தொல்காப்பிய ஆராய்ச்சி என்னும் தலைப்பில் முறையே (1) நூலாசிரியர் வரலாறு (2) எழுத்தாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியும் (3) தமிழ்ச் செய்யுட்களும் நூல்களும் (4) பொருளாராய்ச்சி ( மண முறைகள் ) என நிகழ்த்திய நான்கு சொற்பொழிவுகளும் அறிஞர் அனைவ ராலும் பாராட்டப்பட்டன. அண்ணாமலை நகரிலும், பல்கலைக் கழகச் சார்புச் சொற்பொழிவுகளாக, சிலப்பதிகார ஆராய்ச்சி முதலியன நாட்டாரால் நிகழ்த்தப்பட்டன. 1939 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் கொழும்பிலுள்ள அன்பர் களால் அழைக்கப்பெற்று இவர், திரு.அ.ச.ஞானசம்பந்தனுடன் சென்று ஆங்குள்ள விவேகானந்த சங்கம், முதலியவற்றில் சொற்பொழிவு செய்து மீண்டனர். 9.3.1940 இல் சென்னையில் நடந்த கலித்தொகை மாநாட்டின் தலைவராக இருந்து அரிய விரிவுரை நிகழ்த்தினார். 1940ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம் 21, 22 ஆம் தேதிகளில், திருப்பதியில் நடந்த அனைத்திந்திய பத்தாவது கீழ்த்திசைக் கலை மாநாட்டிற்குச் சென்று இவர், வஞ்சிமா நகரைப் பற்றி நிகழ்ந்த ஆராய்ச்சிச் சொற்போரில் கலந்து கொண்டனர். 5. திருச்சி வானொலிப் பேச்சுக்கள் திருச்சி வானொலியில் பின்வரும் இலக்கியச் சொற் பொழிவுகள் நாட்டார் அவர்களால் நிகழ்த்தப் பெற்றன:- 1. 21.6.1939 தமிழிலக்கியங்களிற் காணப்படும் இசைப்பகுதிகள் 2. 29.10.1939 வீரச்சுவை 3. 1.12.1939 அவலச்சுவை 4. 16.12.1939 இன்பச்சுவை 5. 7.4.1940 நகைச்சுவை 6. 12.6.1940 பிற்காலப் புலவர்களின் சுடுசொல் ஆட்சி 7. 23.11.1940 யாப்பியல் அமையாச் செய்யுள் 8. 30.5.1941 தாய்மொழி 9. 10.10.1941 இளங்கோவடிகளும் இயற்கைப் புனைவும் 10. 21.8.1942 கலித்தொகை 11. 29.1.1943 மனோண்மணீயம் 6. நூல்களும் உரைகளும் நாட்டார் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் தமிழ் ஆசிரியராக இருந்தபொழுது செந்தமிழ்ப் புலவர் திருவாளர் மு.இராகவ ஐயங்கார் அவர்களால் எழுதப் பெற்ற “வேளிர் வரலாறு” என்னும் ஆராய்ச்சி நூல் இன்டர் மீடியேட் வகுப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. நாட்டார் அதனைப் பாடம் நடத்திய பொழுது அதன் முடிவுகளெல்லாம் தவறானவை என தமக்குத் தோன்றியமையின், அவற்றை மறுத்து 1915 ஆம் ஆண்டில் “வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி” என்னும் பெயருடன் ஒரு நூல் எழுதினார். இந்நூற்பொருள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாவது ஆண்டுவிழாவிற் கூடிய பேரவையில் சொற்பொழி வாக நாட்டாரால் விரித்துக் கூறப்பட்டது. பின்னர் நுல்வடிவில் வந்த அதனைக் கண்ணுற்ற தமிழ்ப்புலவர் பலரும் நாட்டாருடைய அறிவாராய்ச்சித் திறங்களை வியந்து பாராட்டினர். 1919 ஆம் ஆண்டில் ‘நக்கீரர்’ என்ற அரிய ஆராய்ச்சி நூல் இவரால் எழுதி வெளியிடப்பட்டது. 1921 ஆம் ஆண்டில் ‘கபிலர்’ என்னும் ஆராய்ச்சி நூலையும் அம்முறையிலேயே எழுதி வெளியிட்டார். இவ்விரு நூல்களும் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களிலும், காசி இந்து பல்கலைக் கழகத்திலும் உள்ள உயர் வகுப்புகட்கும், லண்டன் பல்கலைக் கழகத்து பி.ஏ. வகுப்புக்கும் பாடமாக வைக்கப்பட்டு வந்தன. 1923 ஆம் ஆண்டு “கள்ளர் சரித்திரம்” என்ற அரிய ஆராய்ச்சி நூல் எழுதி வெளியிடப்பட்டது. பண்டு உயர்நிலையிலிருந்து கல்வி முதலியவற்றில் பிற்போக்கடைந்து வந்த தம்முடைய மரபினரின் முன்னேற்றங் கருதி இந்நூல் எழுதப்பெற்றதாகும். இந்நூல் ஒரு மரபினரைப் பற்றி எழுதப்பட்டதாயினும் தமிழர்கள் பொது வாக அறிந்துகொள்ள வேண்டிய பல அரிய கருத்துக்களைத் தன்னகத்துக் கொண்டுள்ளது. தமிழ் ஆராய்ச்சி செய்வார்க்கு இந்நூல் மிகவும் பயனுடையதாய் இருக்கின்றது. 1925ஆம் ஆண்டில் திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்கக் கீழ்க்கணக்குகளில், “இன்னா நாற்பது”, “களவழி நாற்பது”, “கார் நாற்பது” என்பவற்றிற்கும் ‘ஆத்திசூடி’, ‘கொன்றைவேந்தன்’, ‘வெற்றிவேற்கை’, ‘மூதுரை’, ‘நல்வழி’, ‘நன்னெறி’ என்னும் பிற்கால நீதி நூல்களுக்கும் திருந்திய முறையில் உரையும், முகவுரையும் நாட்டாரால் எழுதி அளிக்கப்பட்டன. 18.4.1925 இல் அகத்தியர் தேவாரத் திரட்டு உரையைத் திருத்திக் கழகத்திற்கு அனுப்பினார். 30.11.1925 இல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் வேண்டுகோட்கிணங்கப் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்திற்கு நாட்டார் உரை எழுதத் தொடங்கித் தமக்குச் சிறந்த நண்பரும், நல்ல புலமை உடையவரும் ஆகிய திருவாளர் அ.மு.சரவண முதலியார் அவர்களைத் துணையாகக் கொண்டு எழுதி வந்து 7.2.1931 இல் அவ்வுரையை முடித்து அளித்தனர். இதற்கிடையே 1926 ஆம் ஆண்டில் “கண்ணகி வரலாறும் - கற்பு மாண்பும் ” என்னும் ஆராய்ச்சி நூலும், 1928 ஆம் ஆண்டில் “சோழர் சரித்திரம் ” என்னும் வரலாற்று நூலும் நாட்டாரால் எழுதப்பட்டன. பாகனேரித் தன வைசிய இளைஞர் சங்க வெளியீடாக அச்சிடுதற்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு என்னும் மூன்று நூல்கட்கும் உரையெழுதித் தருமாறு திருவாளர் பாகனேரி வெ.பெரி.பழ.மு.காசிவிசுவநாதன் செட்டியார் அவர்கள் நாட்டாரைக் கேட்டுக் கொண்டனர். நாட்டார் இதனை ஏற்று 11.11.1940இல் சிலப்பதிகார உரையைத் தொடங்கி எழுதி வந்து 9.8.1942இல் முடித்தனர். இவ்வுரையானது தமிழறிஞர் பலராலும் பாராட்டப்படுவதனை யாவரும் அறிவர். சிலப்பதிகார உரை தொடங்கிய சில திங்களுக்குப் பின் அகநானூற்று உரையும், அது தொடங்கிய சில திங்களின் பின் மணிமேகலையுரையும் தொடங்கப் பெற்றன. இடையே நாட்டார் திருச்சி அகில இந்திய வானொலியிற் பேசியனவும், ‘செந்தமிழ்ச் செல்வி’, ‘தமிழ்ப்பொழில்’ முதலியவற்றில் வெளியிட்டனவுமாகிய கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்துக் கட்டுரைத் திரட்டு - பகுதி 1 என்னும் பெயரால் வெளியிட்டார். நாட்டார் அகநானூற்று உரையினைத் திருவையாற்று அரசர் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்த கரந்தைக் கவியரசு திருவாளர் ஆர்.வேங்கடாசலம் பிள்ளை அவர்களைத் துணையாகக் கொண்டு எழுதி முடித்தனர். மணிமேகலைக்கு உரையெழுதத் தொடங்கி 26 காதை களுக்கு எழுதி முடித்தனர். 4.9.1940இல் தண்டியலங்காரம் பழைய உரையைத் திருத்தி முடித்துக் கழகத்திற்கு அனுப்பினார். 7. கட்டுரைகள் செந்தமிழ், தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி, சித்தாந்தம், தமிழர், கலா சிந்தாமணி, விவேகோதயம், பூரண சந்திரோதயம், குமரன், நச்சினார்க்கினியன், தாய்நாடு, ஈழகேசரி, ஆனந்தபோதினி முதலிய பத்திரிகைகளில் நாட்டார் கட்டுரைகள் எழுதியுள்ளனர். இவைகளுள் “தமிழ்ப்பொழில்”, “செந்தமிழ்ச் செல்வி” என்பவற்றுள் இவர் எழுதிய கட்டுரைகள் மிகப் பலவாகும். 8. பல்கலைக் கழகத் தமிழ்க் குழு - உறுப்பினர் தேர்வாளர் சென்னைப் பல்கலைக் கழகத்தில், கல்லூரிப் பாடத்திட்டங் களை வகுக்கவும், பாடநூல்களை வைக்கவும் பல குழுக்கள் உண்டு. அவற்றுள் தமிழ்க் குழு ஒன்று. அக்குழுவில் நமது நாட்டார் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்து நல்ல தமிழ்ப் பாட நூல்களைத் தேர்ந்தெடுக்க உதவி புரிந்தார்; வித்துவான் தேர்வுக்குரிய பாட திட்டத்தை அமைக்கவும் உதவி செய்தார். நாட்டார் பல ஆண்டுகள் இன்டர்மீடியேட், பி.ஏ. தேர்வுகட்குத் தேர்வாளராய் இருந்தார்; 1932 முதல் 1934 வரையிலும், 1942 முதல் 1944 வரையிலும் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் தேர்வாளராக இருந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்த பொழுது அதன் தமிழ்த் தேர்வுகட்குத் தேர்வாளராக இருந்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பண்டிதத் தேர்வுக்கு, ஆண்டுதோறும் ஊதியமில்லா ( Honorary ) தேர்வாளராக இருந்து இலக்கியம், இலக்கணம், தருக்கம் முதலியவற்றுக்கு வினாத்தாள்கள் கொடுத்துவந்தனர். காசி இந்து பல்கலைக் கழகத்திலும் இரண்டுமுறை தேர்வாளராக இருந்தனர். 9.நாட்டாரின் நற்பண்புகள் இவர் எதனையும் காய்தல் உவத்தல் இன்றி நடு நின்று ஆராய்ந்து உண்மை கண்டு கூறுதலும், உண்மைக்கு மாறான வற்றைத் தமக்கு நண்பர்களும் பெருமதிப்பு உடையவர்களும் கூறினும் ஏற்றுக்கொள்ளாமையும் ஆகிய இயல்புடையவர். நாட்டார் சைவ சித்தாந்த நூல்களில் அழுத்தமான பயிற்சியும், சைவ சமயத்தின்பால் பெருமதிப்பும் உடையவர்; சிவபிரானிடத்தும் அடியார்களிடத்தும் ஆரா அன்புடையர்; அன்னராயினும் வேறு எச்சமயத்தினையும் சமய நெறியில் நிற்போரையும் வெறுப்பவர் அல்லர்; அங்ஙனமே பிறப்பினால் உயர்வு தாழ்வு கருதாது யாவரையும் மதித்தொழுகும் தன்மை வாய்ந்தவர்; செருக்கென்பது சிறிதும் இல்லாதவர்; யாருடனும் இனிமையாகக் கலந்து பழகும் மக்கட் பண்பு உடையவர்; அறம் செய்தலில் விருப்பமுடையவர். பயனில்சொல் பேசுதல், வீண்பொழுது போக்கல், பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்படுதல் முதலிய தீய இயல்புகள் அணுகுதற்கும் இடங்கொடாத பண்புடையவர். 10. நாட்டாரின் நண்பர்கள் தமிழ்நாட்டிலே நாட்டாருக்குப் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தவர்கள் அளவற்றவராவர். நாட்டார் மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வுகட்குப் படித்த காலத்திலும், பின்னர் சில ஆண்டுகள் வரையிலும் நாள் தவறாமல் அவரைப் பற்றிப் பேசி மகிழ்ச்சியடையும் இயல்பினரா யிருந்தவர்கள் நடராச ஐயர் என்னும் ஒரு வீரசைவ ஆசிரியரும், திரு.ஐ.சாமிநாத முதலியார் அவர்களும் ஆவர். அரித்துவாரமங்கலம் பெருநிலக்கிழவரும் தமிழ்ப் புலவரு மாயிருந்த திருவாளர் வா.கோபால்சாமி ரகுநாத ராசாளியார் அவர்கள், மதுரைத் தமிழ்ச் சங்கத்துத் தலைவர் திருவாளர் பொ.பாண்டித்துரைத் தேவர் அவர்கள், சோழவந்தானூரில் இருந்த நுண்மாண் நுழைபுலமுடைய புலவராகிய அரசஞ் சண்முகனார் அவர்கள் நாட்டார்பால் மிக்க அன்புடையவர் களாய்ப் பழகிவந்தனர். ஐ.சாமிநாத முதலியார், இராசாளியார், பாண்டித்துரைத் தேவர், அரசஞ் சண்முகனார் முதலானவர்கள் இப்பொழுது இல்லையே எனப் பிற்காலங்களில் நாட்டார் வருந்திக் கூறுவதுண்டு. மற்றும் பல சங்க விழாக்களில் நாட்டாருடன் அளவளாவுதற்குரியவராய் இருந்தவர்கள்:- திருவாளர்கள் எஸ்.சச்சிதாநந்தம் பிள்ளை, எம்.எல்.பிள்ளை என அழைக்கப்படும் கா.சுப்பிரமணிய பிள்ளை, திரு.வி.கலியாணசுந்தர முதலியார், ஞானியார் மாணவர் ம.ரா.குமாரசுவாமி பிள்ளை, சைவப் பிரசாரகர் பொ.முத்தையாப் பிள்ளை, மறைமலையடிகள், பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார், மு.ரா, கந்தசாமிக் கவிராயர், கரந்தைக் கவியரசு ஆர்.வேங்கடாசலம் பிள்ளை, டி.வி.சதாசிவ பண்டாரத்தார், அ.கார்மேகக்கோனார், புலவர் ஏறு ஆசிரியர் அ.வரதநஞ்சைய பிள்ளை, தமிழ்ப் பெரும்புலவர் பண்டித அ.கந்தசாமி பிள்ளை முதலியவர்கள் ஆவர். 11. நாட்டாரின் மாணாக்கர்கள் நாட்டாரின் மாணாக்கன் என்று வீறுபெற்று விளங்குபவர் களில் முதன்மையானவர் வீ.உலக ஊழியர் அவர்கள் ஆவார். இவர் 1922 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாட்டார் அவர்களை உரத்தூர் என்னும் கிராமத்தில் கண்டு தனக்குக் கல்வி கற்பதில் விருப்பம் இருக்கிறது என்பதைத் தெரிவித்தவுடன் நாட்டார் அவர்கள் அப்பொழுது 17 வயதுடையவரா யிருந்த அவரைத் தம்முடன் திருச்சிக்கு அழைத்துவந்து தம் வீட்டில் உண்டியும், உறையுளும் கொடுத்து தமிழ்ப் பாடங்கள் கற்பித்து வந்தார். பிறகு ம.பெ.பிச்சையா நாட்டார், அ.சுயம்பிரகாச உடையார், ப.நடராசத் தென்கொண்டார், து.முத்துவேற் சுண்டையார் முதலியவர்களும் திருச்சி வந்திருந்து நாட்டாரிடம் தமிழ்ப் பாடம் கேட்டு வந்தனர். கல்லூரிகளில் பயின்ற மாணாக்கர்களில் எண்ணில்லா தவர்கள் மிக்க அன்புடையவர்கள் ஆயினும் சிறப்பாகக் குறிப்பிடத் தகுந்தவர்கள்:- பொன்னம்மாள், பி.ஏ., அவர்கள், சிவகங்கை சோமசுந்தரம் பிள்ளை அவர்கள், பசுபதிபாளையம் க.வேலாயுதக் கவுண்டர் அவர்கள், ஏ.இராமசாமிக் கவுண்டர், எம்.ஏ., அவர்கள், டி.எம்.கோவிந்தராஜன், பி.ஏ., அவர்கள், பெங்களூர் பி.கோவிந்தசாமிக் கவுண்டர், பி.ஏ., அவர்கள், கோலாலம்பூரில் ‘தமிழ் நேசன்’ பத்திரிகை ஆசிரியராய் இருந்த கே.நரசிம்ம ஐயங்கார் அவர்கள், டி.எஸ். மீனாட்சிசுந்தர முதலியார், பி.ஏ., அவர்கள், பூ.ஆலாலசுந்தரம் செட்டியார், எம்.ஏ, அவர்கள், எஸ்.ஆறுமுக முதலியார், எம்.ஏ., பி.ஓ.எல்., எல்.டி., அவர்கள், உருத்திரபதி, எம்.ஏ., அவர்கள், டாக்டர் ஏ.சிதம்பரநாதன் செட்டியார், எம்.ஏ., பி.எச்.டி. முதலானவர்கள். 12. உரிமை நண்பர்கள் நாட்டாரால் தன்னலம் கருதா உரிமை நண்பர்களாகக் கொண்டு பாராட்டப்பட்டு வந்தோர் செந்தமிழ் புரவலர் த.வே.உமாமகேசுவரம் பிள்ளையவர்கள், கோயம்புத்தூர் திருவாளர் ஆர்.வி. இலட்சுமைய நாயுடு அவர்கள், திருவாளர் அ.மு.சரவண முதலியார் அவர்கள் ஆவர். இம் மூவரும் நாட்டாரின் உள்ளத்தினை விட்டு நீங்காத ஒத்த உணர்ச்சியுடைய உண்மை நட்பாளர் ஆவர். நாட்டாருடைய அன்பிற்கும், மதிப்பிற்கும் உரியவர்களாய் இருந்த பெரியோர்கள், திருவையாற்றுப் பரமசிவம் என்னும் காரைப்பாக்கம் சுவாமிகள், திருப்பாதிரிப்புலியூர் உயர்திரு. சிவசண்முக மெஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள், கல்லல் உயர்திரு. குக.மணிவாசக சரணாலய சுவாமிகள் என்னும் இவர்கள் ஆவர். திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவர் களாகிய உயர்திரு.காசிவாசி சாமிநாதத் தம்பிரான் சுவாமி அவர்களும், நாட்டார் அவர்கள்பால் மிக்க அன்பும் மதிப்பும் உடையவராவார்கள். பண்டிதமணி அவர்களுக்கு மகாமகோத்யாய பட்டம் அளித்த பொழுது பண்டிதமணி அவர்களுக்கு அரசாங்கத்தாரால் “மகாமகோ பாத்யாய என்ற பட்டம் கொடுக்கப்பட்டது குறித்து அவர்களைப் பாராட்டுவான் வேண்டி சங்கப் பெருமன்றத்தே நிகழ்ந்த பாராட்டுக் கூட்டத்தில் நாவலர் அவர்கள் பண்டித மணியைப் பாராட்டிப் பேசும் பொழுது “நம் பண்டித மணியவர்கள் சிறந்த நூலாசிரியர், உரையா சிரியர், போதகாசிரியர், மேலும் கூறின் ஞானாசிரியருமா வார்கள். இத்தகைய தகுதிப் பாடுகளெல்லாம் ஒருங்கமைந்த இவர்கட்கு இப்பட்டத்தால் வரக்கூடிய சிறப்பு என்னுளது? சிலருக்கு சில பட்டங்கள் வந்துறுதலால் அப்பட்டங்களால் அவர்கள் சிறப்புப் பெறுதலையும் சில பட்டங்கள் தகுதியின் மிக்கார்பால் சென்றுறுதலால் தாம் சிறப்புறுதலையும் யாம் காணுகின்றோம். அது போன்றே மகா மகோபாத்யாய எனும் பட்டம் நம் பண்டித மணியவர்கள் பால் வந்தடைந்து தான் சிறப்புப் பெற்றது எனக்கூறுவேன்” எனமொழிந்தார்கள். பண்டிதமணியவர்கள் பாராட்டுரைகட்கு மறுமொழி கூறுங்கால் “நாட்டாரவர்கள் தன்பாலுள்ள தன்மைகளை யெல்லாம் அன்பு காரணமாக என்மேல் ஏற்றி மொழிந்தார்கள். பண்டைப் புலவர்களைப் போன்ற செந்நாப்புலவராய அவர்கள் மொழிநலன் பயக்குமாகையால் அவ்வுரைகளை அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன்” என மொழிந்தார்கள். யான் காணும் கல்யாண சுந்தரர் திரு.வி.க. அவர்கள் அறுபது ஆண்டு நிறைவு பெற்று மணிவிழா நடக்க இருக்கும் சமயம் தந்தையார் எழுதியது:- திருவாளர் திரு.வி.கல்யாண சுந்தர முதலியார் அவர்கள், அரசியல், தொழிலியக்கம், கல்விநிலை, சமயநெறி முதலிய பலநிலைகளில் நின்று பணியாற்றி வந்தோர் ஆற்றி வருவோர் ஆகலின் தமிழ் நாட்டிலே மலைவிளக்கெனத் திகழும் மாண்புடையோர் தமிழ்நாட்டின் புறத்திலும் பலரால் நன்கறியப் பட்டவர். அவர்தம் கல்வியறிவையும் சமய உணர்வையும் மக்கட்கு எவ்வாறு பயன்படுத்தி வந்தனர்? அவருமடய குணநலன்கள் யாவை? என்பவற்றிற்கு விடையான யான் அறிந்தவற்றைச் சுருங்க உரைத்தலே இக் கட்டுரையின் நோக்கமாம். அவரது கல்வி என்னுங்கால் தமிழ்க் கல்வியே என்னாற் கருதப்படுவது. அவர் புகழ்பெற்ற நல்லாசிரியர்பால் தமிழ் பயின்றுளார் என்பதும் தாமும் தமிழாசிரியராகப் பணியாற்றியுளளார் என்பதும் பல சிறந்த தமிழ் நூல்களுக்குக் குறிப்புரை முதலியன எழுதியுள்ளார் என்பதும பலர் அறிந்தவையே. ஆயின் அவையெல்லாம் அவர் பெருமைக்குத் தோற்றுவாய் மாத்திரமேயாகும். அவர் வரைந்த கட்டுரைகளும் பேசிய சொற்பொழிவுகளும், தமிழுக்கு ஆக்கந்தந்து அவருக்குப் பெருமதிப்பை விளைப்பனவாயின. அவர் முதலில் ‘தேசபக்தன்’ ஆசிரியராயமர்ந்து பின்னர் நவசக்தியைத் தோற்றுவித்து நடத்தியும் போந்தனர். அவற்றிடையே அவர் பல்வேறு பொருள் பற்றியும் அவர் வரைந்த விழுப்பமுடைய கட்டுரைகள் உலப்பில்லன. பத்திரிகைத் தமிழ் எனக் கூறப்படுவதோர் இழுக்கு நீக்கிச் செய்தித் தாள்களும் சீரிய நடையுடன் உலாவருமாறு செய்த பெருமை முதலியார் அவர்கட்கே உரியது. அவரது உரைநடை தடைபடாது செல்லும் இயல்பினது. விழுமிய இலக்கியச் சொற்களை இடையிடை கொண்டு திகழ்வது. பொருளை வற்புறுத்தும் ஆற்றல் அமைந்த அடுக்குகள் முதலியவற்றால் பொலிவது. இவ்வாற்றால் அவர் எழுதுவது கற்போரையும், பேசுவது கேட்போரையும் பிணித்து உள்ளக்கிளர்ச்சியை விளைத்து மேலும் மேலும் முறையே அவற்றைக் கற்கவும் கேட்கவும் தூண்டா நிற்கும். இளைஞர் உலகிலே முதலியார் அவர்கள் செல்வாக்கு அளவின்றிப் பெருகியது. அதற்குக் காரணம் அவரது பேசும் திறனும், எழுதும் திறனும் மட்டும் அல்ல, அவருடைய எளிமை, இன்குணம், உளத்தூய்மை முதலியனவுமாகும். அவர் ஓர் அவையின் கண் பேசத் தொடங்கும் பொழுது உள்ளக் கிளர்ச்சியுடனும், புன்முறுவல் உடனும் காட்சியளிப்பர். அவர் முகத்திலே சோர்வோ, வருத்தமோ எப்பொழுதும் காணப்படுவதில்லை. கேட்போர் தம்மையும் பொழுதையும் மறந்து அச்சொற்களிலே ஈடுபட்டு விடுவர். அவரது உள்ளம் துறவியுள்ளமாகும்; அன்றி குழவியுள்ளம் எனலுமாம். அழுக்காறு அவா, வெகுளி, இன்னாச்சொல் முதலிய தீமைகள் அவருக்குப் புறம்பானவை. ஆயின் அவர் யாவர் மாட்டும் அன்புடையவர்; மகளிர் பால் மதிப்பு மிக்கவர். இயற்கையோடு இயைந்த வாழ்வை எஞ்ஞான்றும் பாராட்டுபவர். இவையெல்லாம் அவருடைய சமய வாழ்வுடன் இயைந்தனவு மாகும். சமய வாழ்க்கையில் அவர் பால் முதன்மையுற்றிருந்தது எல்லாச் சமயங்களிலும் பொதுமை காண்டல் என்பதாகும். பற்பல ஆண்டுகளாகப் பலதுறைகளிலும் பணிபுரிந்து சிறப்பாகத் தமிழ் நாட்டெங்கணுமுள்ள தமிழ்ச் சங்கங்களிலும் சைவ சபைகளிலும், பிறகழகங்களிலும் தலைமை தாங்கியும் சொற்பொழிவுகள் செய்தும், இடையறாது தமிழ்ப் பணி புரிந்தும் தகைமைப்படுத்திய அன்பர் திரு.வி.கல்யாண சுந்தரனார் அறுபதாம் ஆண்டு நிறைவைப் பெற்று மணி விழாக் கொள்ளும் பேறுகள் தமிழ் மக்கள் அனைவரும் அகங்களிதுளும்புவர். யானும் களி கூறுவதுடன் அவர் மேலும் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்ந்து பணி புரிய அருள் சுரக்குமாறு “முருகன் குமரன் நம் குரு” ஆகிய வள்ளி மணாளன் மலரடிகளை வணங்கி வாழ்த்துகிறேன். புலவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நாட்டாரின் எண்ணம். ந.மு.வே.நாட்டார் அவர்கள் தாம் மட்டும் அன்றித் தம் காலத்தில் வாழ்ந்த தமிழாசிரியர் அனைவரும் சங்ககாலப் புலவர்களைப் போல விளங்க வேண்டும் என்று விரும்பினார்கள். அறிஞர்கள் என்பவர்கள் அச்சம் என்பதை அறியாத ஆண்மை யாளர்களாக விளங்கவேண்டும என்று விரும்பினார். குறிப்பாகத் தமிழ் அறிஞர்களாகிய புலவர்கள் விரிந்த உள்ளமும், சிறந்த பண்புகளும் உடையவர்களாக விளங்குதல் வேண்டும் என்று கருதினார். பண்டை நாளிலிருந்த புலவர்கள் பரிசில் கருதி யாரையும் எங்ஙனமும் பாடினரென்று கூறுதல் பொருந்தாது. அவர்கள் குற்றமற்ற பண்புகள் உடையராய் இருந்ததோடு வேந்தர்களாயினும் பிறராயினும் தவறுடையராகக் காணப்படின் சிறிதும் அஞ்சாது அவர்கள் நெருங்கி அறிவு கொளுத்தியும் வந்தனர். தாயத்தாராகிய சோழன் நலங்கிள்ளியும் நெடுங் கிள்ளியும் போர் செய்த காலையில் கோவூர் கிழார் என்னும் புலவர் பெருமான் அவர்கட்கு அறிவு கொளுத்துமாறு பாடிய பாட்டுக்கள் அவரது அஞ்சாமையையும் உயர் குணத்தையும் புலப்படுத்துகின்றன. பெண்பாற் புலவர்களும் அஞ்சாமையும் அருஞ் செயல் புரியும் ஆற்றலும் உடையராய் இருந்தனர் என்பதற்கு அதியமானிடமிருந்து ஒளவையார் தொண்டை மானுழைத் தூது சென்று வந்த வரலாறு சான்றாம். அத்தகைய அஞ்சாமையும் அருந்திறனும் பெருந்தன்மையும் இற்றை நாளில் தமிழ்புலவர்கட்கு வேண்டும். ஏதோ சிறிது பொருள் கிடைத்தாற் போதுமென்று தம் நிலைக்குத் தகாதவாறு பிறரைத் தொடர்ந்து அவர்களை மனை வாயிலைப் பற்றி நின்று பெருமை கெட ஒழுகுவது தமிழ்ப் புலவர்கட்குச் சிறிதும் அடாது. அத்தகைய இழிதகவு யாரிடமேனும் காணப்படின் அன்னாரைப் புலவர் கூட்டத்துக்குப் புறகு நீவிர் ஒதுக்குதல் வேண்டும். சுருங்கச் சொல்லின் பிறரெல்லாம் தம்மிடம் மதிப்பு வைக்குமாறு நடந்து கொள்வது தமிழ்ப்புலவர் கடனாகும். மற்றும் உலக நடை அறிதலும் இன்றியமையாதது என்பது ந.மு.வே. அவர்களின் வேண்டுகோள். “ அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே” என்று பாரதி எள்ளி நகையாடிய கோழைகளாய் அறிஞர்கள் வாழ்தல் கூடாது. அறிஞர்கள் என்போர் சமுதாயத்தின் பாது காவலர்கள். மக்களை வழிநடத்திச் செல்பவர்கள் அவர்கள் அறத்திற்குத் துணை நின்று அநியாயத்தை எதிர்த்துப் போரிட்டு வெல்லும் ஆற்றல் மிக்க அடலேறுகளாய் விளங்குதல் வேண்டும். அரசியல் அதிகாரங்களுக்கும் பண பலத்திற்கும் அஞ்சி அறநெறிக்கு மாறுபட்டு கொடுமைகளுக்குத் துணை போகும் கோழைகளாய் வாழ்தல் கூடாது என்பது அவரது உறுதியான எண்ணமாகும். தமிழ்ப் புலவர்கள் மட்டுமின்றித் தமிழராய்த் பிறந்த ஒவ்வொருவரும் தமிழ்மொழி, தமிழ்நாடு ஆகிய இரண்டன் சிறப்பினையும் உணர்ந்து வீறு பெறுதல் வேண்டும் என்னும் தணியாத பெரு வேட்கை உடையவர் நம் நாவலர் பெருமான்.   நாவலர் நாட்டார் அய்யா அவர்கள் தாம் வாழ்ந்த காலத்தில் பங்கேற்ற தமிழ் நிகழ்வுகளுக்கு உரையாற்றச் செல்லுமுன் சொற்பொழிவுக் குறிப்புகள் தம்கைப்பட எழுதியிருந்ததை அப்படியே ஒளிப்படிமம் (ஸ்கேன்) செய்து படிப்பாளர் பார்வைக்குக் கொடுத்துள்ளோம். (பக்கம் 249 - 250 )  நாவலர் நாட்டார் அய்யா எழுதிய நாட்குறிப்புக்கள் சிலவற்றை ஒளிப்படிமம் (ஸ்கேன்) செய்து பார்வைக்குக் கொடுத்துள்ளோம். ( பக்கம் 251 - 265)  'நாவலர் நாட்டார் யார்? உ.வே.சாமிநாதையர் யார்?' என்று விடுதலை மலரில் வெளிவந்துள்ள குறிப்பு தமிழர் அனைவரும் சிந்திக்கத் தக்கது. நாட்டார் தமிழ்ப் பற்று மிக்கவர் என்பதற்கு இக்குறிப்பே சான்றாகும். ( பக்கம் 266)  நாவலர் நாட்டார் அய்யா தொடர்பான சில நிழற்படங்களை இத்துடன் பார்வைக்குக் கொடுத்துள்ளோம். (பக்கம் 267-281) நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் நூல்கள் / கட்டுரைகள் 24 தொகுதிகளாக வெளிவருகின்றன. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் சிலப்பதிகாரம் தொகுதி 1 1) புகார்க் காண்டம் தொகுதி 2 2) மதுரைக் காண்டம் தொகுதி 3 3) வஞ்சிக் காண்டம் மணிமேகலை தொகுதி 4 4) மணிமேகலை 1 தொகுதி 5 5) மணிமேகலை 2 அகநானூறு தொகுதி 6 6) களிற்றியானைநிரை தொகுதி 7 7) மணிமிடை பவளம் தொகுதி 8 8) நித்திலக் கோவை திருவிளையாடற்புராணம் தொகுதி 9 9) மதுரைக் காண்டம்-1 தொகுதி 10 10) மதுரைக் காண்டம்-2 தொகுதி 11 11) மதுரைக் காண்டம்-3 தொகுதி 12 12) கூடற் காண்டம் -1 தொகுதி 13 13) கூடற் காண்டம் -2 தொகுதி 14 14) திருவாலவாய்க்காண்டம் -1 தொகுதி 15 15) திருவாலவாய்க்காண்டம் -2 தொகுதி 16 16) இலக்கியக் கட்டுரைகள் 17) இலக்கணக் கட்டுரைகள் தொகுதி 17 18) சொற்பொழிவுக் கட்டுரைகள் 19) வரலாற்றுக் கட்டுரைகள் தொகுதி 18 20) வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 21) சோழர் சரித்திரம் 22) கள்ளர் சரித்திரம் தொகுதி 19 23) நக்கீரர் 24) கபிலர் 25) அகத்தியர் 26) இளம்பூரணம் நீதிநூல்கள் + பதிணென்கீழ்க் கணக்கு நூல்கள் தொகுதி 20 27) ஆத்திசூடி 28) கொன்றைவேந்தன் 29) மூதுரை 30) நன்னெறி 31) நல்வழி 32) உலகநீதி 33) நறுந்தொகை 34) இன்னா நாற்பது 35) களவழி நாற்பது 36) கார்நாற்பது 37) திரிகடுகம் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 21 38) நாட்டார் நாட் குறிப்பு -1 - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 22 39) நாட்டார் நாட் குறிப்பு -2 மற்றும் வாழ்க்கை வரலாறு - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 23 40) கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 24 41) நாட்டார் புலமையும் பண்பும்  ந.மு.வே.நாட்டார் வாழ்க்கைச் சுவடுகள் பிறப்பு: - நடுக்காவிரி, 12. 3. 1884 திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தந்தை - வீ.முத்துசாமி நாட்டார் தாய் - திருமதி தைலம்மை இளமைக் கல்வி: திண்ணைப்பள்ளி - நடுக்காவிரி தொடக்கப்பள்ளி - 3,4 ஆம் வகுப்புகள் நடுக்காவிரி தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் மதுரைத் தமிழ்ச் சங்கம் 1905 - பிரவேச பண்டிதம் 1906 - பாலபண்டிதம் 1907 - பண்டிதம் ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டியதை மூன்றே ஆண்டுகளில் படித்து முதல் வகுப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற பாராட்டுக்குரியவர். பொற் பதக்கம், தங்கத்தோடா, அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர். ஆசிரியர் பணி 1908 - பிசப் ஈபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. 1909 - தூய மைக்கேல் உயர் நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் 1910-1933 - தமிழ்ப் பேராசிரியர் பணி (22 ஆண்டுகள்) எஸ்.பி.ஜி. கல்லூரி , திருச்சிராப்பள்ளி 1933-1940 - தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் 1940 - சென்னை மாகாண தமிழர் மாநாட்டில் ‘நாவலர்’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டவர். 1941-1944 - மதிப்பியல் முதல்வர் கரந்தைப் புலவர் கல்லூரி தஞ்சாவூர் 28.3.1944 - இவ்வுலக வாழ்வில் இருந்து மறைந்தார். குறிப்பு : நாட்டார் தொடர்பான வரலாற்றுச் சுவடுகளின் விரிவான செய்திகளை பதிப்பாசிரியரின் முன்னுரையிலும், நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண். 22 லும் பார்க்க)  நாவலர் ந.மு.வே நாட்டார் எழுதிய நூல்கள் / உரைகள் நூல்கள் 1915 - வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 1919 - நக்கீரர் 1921 - கபிலர் 1923 - கள்ளர் சரித்திரம் 1926 - கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் 1928 - சோழர் சரித்திரம் உரைகள் 1925 - இன்னாநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, உலகநீதி, நல்வழி, நன்னெறி திரிகடுகம் - கையெழுத்துப் படியாகக் கிடைத்து முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண் : 20 இல் பார்க்க. 1925 - 1932 - திருவிளையாடற்புராணம் 1940 - சிலப்பதிகாரம் 1942 - மணிமேகலை 1940 - 42 - கட்டுரைத்திரட்டு (இரண்டு தொகுதிகள்) 1944 - அகநானூறு உரைத்திருத்தம் : 1940 - தண்டியலங்காரப் பழைய உரை யாப்பருங்கலக்காரிகை அகத்தியர் தேவாரத்திரட்டு 1930 - பிப்ரவரி 11,12,13,14 ஆகிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளை சார்பாக தொல்காப்பிய ஆராய்ச்சி சொற்பொழிவு. (இந்த சொற்பொழிவு இதுவரை வெளிவராதவை கையெழுத்துப் படியாகக் கிடைத்தது. முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ்உரைகள் தொகுதி எண் - 17 இல் 15-வது கட்டுரையில் பார்க்க .) 