நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 13 திருவிளையாடற் புராணம் கூடற் காண்டம் - 2 உரையாசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 13 உரையாசிரியர் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 312 = 342 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 215/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : மு. இராமநாதன், வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் 124 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு வல்லுனர் குழு 1. முனைவர் கு.திருமாறன் 2. முனைவர் இரா.கலியபெருமாள் 3. பேராசிரியர் சண்முக.மாரி ஐயா 4. பேராசிரியர் நா.பெரியசாமி 5. முனைவர் பி.தமிழகன் 6. முனைவர் மு.இளமுருகன் பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற்காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “ சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “ சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரியவர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர் களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்விகளிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப்பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக் குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921 -இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல்களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக் கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரணமாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த் தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர் களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். 17.07.2007 பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 அணிந்துரை 1. புராண இலக்கியம் தமிழில் தோன்றி வளர்ந்துள்ள இலக்கிய வகைகளில் புராணம் என்பதும் ஒன்றாகும். புராணம் என்ற சொல்லிற்குப் பழமை, தொன்மை என்பது பொருள். தொல்பழங்காலத்திற்கு முன்பிருந்தே மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கைகள், கற்பனைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு படைப்பாற்றல் மிக்க பாவலர்களால் படைக்கப்பெற்றவை புராண இலக்கியங்கள் ஆகும். புராணம் என்ற சொல்லினைப் புராணி, நவீனாம் என்று விரித்துப் பழைய பொருள் பேசப்படினும் புதுப்பொருள் பொருந்தியது என்று ஒரு விளக்கம் கூறப்படுதல் உண்டு. ( It is though old ever new ) . மிகப் பழைய காலத்தில் நடந்ததாகக் கருதப்படும் கதை விளக்கமாகவும், பழைய நம்பிக்கைகளையும் மரபுகளையும் உரைப்பதாகவும் அமைவது புராணம். இவை தெய்வங்கள், முனிவர்கள், அரசர்கள் பற்றிய புனைவுகளாக இலங்குவன. இதிகாசத்துடன் புராணத்தையும் சேர்த்து ஐந்தாம் வேதமாகச் சாந்தோக்கிய உபநிடதத்தில் ஏழாம் இயலில் ( முதற் காண்டம்) சொல்லப்பெற்றது. உண்மையான நண்பன் நல்ல அறிவுரையினை உரிமையோடு கூறி நெறிப்படுத்துதல் போலப் பழைய கதைகளின் வழியே நீதிகளைப் புகட்டி மக்களை நல்வழிப்படுத்துதலின், புராண இதிகாசங்கள் யாவும் சுஹ்ருத் சம்மிதை ஆகும் என்று பிரதாபருத்தரீயம் என்ற அணியிலக்கணப் பனுவலில் வித்தியாநாதர் ( கி.பி.13 நூ.) குறித்துள்ளார். சுஹ்ருத் - நண்பன்; சம்மிதை - போன்றது என்று பொருள் கூறுவர். எல்லாப் புராணங்களையும் வேதவியாசரே தொகுத்துச செய்தனர் என்பது ஒரு கருத்து. இவையாவும் நைமிசாரண்யத்தில் இருந்த முனிவர்களுக்குச் சூதன் என்னும் பாடகன் கூறியவை என்பது மற்றொரு கருத்து. புராணங்களை 1. மகாபுராணம் 2. உபபுராணம் 3. தலபுராணம் என்று மூன்று வகையாகப் பாகுபடுத்துவர். முன்னைய இருவகைப் புராணங்களும் வடமொழியில் தோன்றியவை; அவற்றுள் ஒரு சில தமிழில் மொழி பெயர்க்கப்பெற்றவை. எனின், மூன்றாவதாகக் குறிக்கப் பெற்றுள்ள தலபுராணங்கள் பலவும் தமிழில் மூல இலக்கியமாக முகிழ்த்தவை. இவற்றுள் ஒரு சில வடமொழியில் மொழி பெயர்த்துக் கொள்ளப் பெற்றவை. கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடியுள்ள திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் தமிழில் முழுமையாகக் கிடைத்துள்ள முதல்தல புராணமாக ஆராய்ச்சி அறிஞர்களால் கருதப்படுகின்றது. இறைவன் கோயில் கொண்டுள்ள தலத்தின் சிறப்புக்களையும் அங்குவங்கு வழிபட்டோர் பெற்ற நற்பேறுகளையும் எடுத்துரைக்கும் பாங்கில் கற்பனை வளமும் கருத்து வளமும் சிறக்கச் சீரிய விருத்த யாப்பில் புனையப் பெறும் தலபுராணத்தினைக் காப்பியமாகக் கருதுவோரும் உளர். பிரபந்த மரபியல், “காப்பியம் புராணமாய்க் கருதப் பெறுமே” என்று இயம்புதலின், காப்பியமும் புராணமும ஒருவகை இலக்கியப் படைப்பாக எண்ணப் பெற்றமை புலனாகும். 2. தல புராணங்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றினாலும் புனிதத் தன்மை பொருந்திய தலத்திற்குப் பாடப் பெற்றுள்ள தல புராணங்களில் அருணாசலப் புராணம், சிதம்பரப் புராணம், சேது புராணம், திருவாரூர்ப் புராணம், திருவானைக்காப் புராணம், திருக்காளத்திப் புராணம், திருவிரிஞ்சைப் புராணம், திருவெண்காட்டுப் புராணம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. பெரும்பாலும் தலத்தின் பெயரினாலேயே புராணங்கள் பெயர் பெற்றன. எனின், சிராமலை நாதரின் மீது சைவ எல்லப்ப நாவலர் பாடியது செவ்வந்திப் புராணம் ஆகும். இது தலத்தின் பெயரால் அமையவில்லை. சிராமலையில் (திருச்சி மலைக்கோட்டையில்) கோயில் கொண்டுள்ள ஈசனுக்கு உகப்பான செவ்வந்தி மலரின் பெயரினால் இப்புராணம் வழங்கப்பெற்றது. தல புராணங்களை மிகுதியாகப் பாடிய சிறப்புக்குரியவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆவர். 3. திருவிளையாடல் திருவிளையாடற் புராணம் மதுரையில் கோயில் கொண்டுள்ள சொக்கநாதரின் அரும்பெரும் அருள் விளையாடல்களைக் காவியச் சுவையுடனும் கற்பனை வளத்துடன் பத்தி உணர்வுஉடனும் கலைச் சிறப்புடனும் பாரித்துரைக்கும் பாங்கில் பரஞ்சோதி முனிவரால் பாடப்பெற்றது. இப்படைப்பும் தலத்தின் பெயரால் வழங்கப்பெறாமல் இறைவனின் அற்புத விளையாட்டின் பெயரினால் வழங்கிவருதல் நோக்கத்தக்கது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐவகைத் தொழில்களையும் ஈசன் ஒரு விளையாட்டாக நிகழ்த்துகிறான் என்பதை விளக்க முற்பட்ட மாதவச் சிவஞான முனிவர், “ஐங்கலப் பாரம் சுமத்தல் சாத்தனுக்கு ஒரு விளையாட்டாதல் போல” என்று சிவஞான சித்தியார் உரையில் உவமை கூறித் தெளிவுறுத்தினார். மாணிக்கவாசகர், “காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி” என்று இறைவனின் விளையாட்டினைக் குறித்துள்ளார். ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு படைத்த மாந்தர் வரையுள்ள எல்லா உயிர்க்கும் அருள் சுரக்கும் வரம்பற்ற ஆற்றலும் எல்லை இல்லாப் பெருங்கருணைத்திறமும் வாய்ந்த முதல்வன் பல்வேறு கோலங்கொண்டு மன்பதைக்கு அருளிய வியத்தகு செயல்களைத் திருவிளையாட்டு, திருவிளையாடல் எனப் பெயரிட்டு வழங்கினர். இதனை வடமொழிவாணர் லீலை என்று கூறினர். பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரை மாநகரில் சிவபிரான் புரிந்துள்ள பற்பல அருள் விளையாடல் களில் அறுபத்து நான்கினை மட்டும் தேர்ந்தெடுத்துச் செல்லி நகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தினைச் செந்தமிழ் அமுதமாகப் பாடினார். இதுவே கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர்க்கு மூலமாதல் வேண்டும். எனினும், தம் நூலுக்கு மூலம் வடமொழியில் ஈசசங்கிதை என்று பாயிரத்தின் தொடக்கத்தில் குறித்துள்ளார். மூலம் தமிழாகவே இருப்பினும், வடமொழியிலிருந்து பாடுவதாகக் கூறுதல் நூலுக்குப் பெருமைதரும் என்று எண்ணிய காலத்தில் வாழ்ந்தவர் பரஞ்சோதியார் எனக் கருத வேண்டியுள்ளது. சைவப் பெருமக்கள் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், கந்தபுராணம் என்ற மூன்றினையும் சிவபிரானின் முக்கண்ணாகப் போற்றுதல் மரபு. இவற்றுள் நடுவணதாகிய திருவிளையாடற் புராணத்தினைப் பாடிய பரஞ்சோதியாரின் புலமைத் திறத்தையும் புராணத்தின் அமைப்பியல் அழகினையும் முதற்கண் சுருக்கமாகக் காண்போம். 4. பரஞ்சோதியார் படைப்புக்கள் பரஞ்சோதியார் திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் தோன்றியவர். இவர்தம் தந்தையார் மீனாட்சி சுந்தர தேசிகர் ஆவர். இளமையிலேயே பரஞ்சோதியார் செந்தமிழையும் வடமொழியையும் குறைவறக் கற்றார். இலக்கணம், இலக்கியம், அளவை நூல், நிகண்டு, நீதி நூல், வானூல், கலை நூல்கள் முதலியன பயின்று வரம்பிலாப் புலமை நிரம்பப் பெற்றார். சாத்திர, தோத்திரங்களிலும் தேர்ச்சி பெற்றுச் சிவநேசம் பூண்டு விளங்கினார். கவிபாடும் ஆற்றலும் பெற்றனர்.இவர் பாடியவை திருவிளையாடற் புராணம், மதுரை அறுபத்து நான்கு திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா, மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி, வேதாரணிய புராணம் என்பன. இப்படைப்புக்கள் பரஞ்சோதியாரின் புலமை வளத்திற்கும் கற்பனைத் திறத்திற்கும் படைப்பாற்றலுக்கும் கட்டியங் கூறுவன எனலாம். 5. திருவிளையாடற் புராணம் அமைப்பியல் வனப்பு ஒரு பெருங்காப்பியத்திற்குரிய அமைப்பியல் முழுமையும் வாய்க்கப் பெற்ற இலக்கியமாகத் திருவிளையாடற் புராணம் திகழ்கின்றது. மதுரைக்காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று காண்டங்களையும் 64 படலங்களையும் இப்புராணம் கொண்டுள்ளது. பெரும்பான்மையும் அறுசீர் ஆசிரிய விருத்தங்களும், கலிநிலைத்துறையில் அமைந்த பாடல்களும், கலிவிருத்தங்களும் செவிக்கின்பம் பயக்கும் பாங்கில் ஓசை நலம் தளும்பப் பரஞ்சோதி முனிவரால் பாடப்பெற்றவை. இப்பாடல்களின் தொகை 3363 ஆகும். இம்முனிவர், “ விரிமுறை விருத்தச் செய்யுள் வகைமையால் விளம்பலுற்றேன் ” என்று இயம்புதல் எண்ணத்தக்கது. நீர்பிரித்துத் தீம்பாலினை மட்டும் பருகக் கூடிய அன்னப் பறவையினைப் போல, இந்நூலினைப் பயில்வோர் குற்றத்தை நீக்கிக் குணத்தினைக் கொள்ளுதல் வேண்டும் என்று முனிவர் அவையடக்கம் கூறுதல் அறியத்தக்கது. இப்புராணத்தின் முதற்பாடல் “சத்தியாய்ச் சிவமாகி ” எனத் தொடங்குவது; விநாயகர்க்கு வணக்கம் கூறுவதாய் அமைந்தது. வாழ்த்துச் செய்யுளும் நூற்பயன் நுவலும் பாடலும் தொடர்ந்து வருவன. பெரும்பாலும் நூற்பயன் கூறுதல் நூலின் முடிவில் இடம் பெறும்; எனின், இங்குத் தொடக்கத்தில் இடம்பெறுதல் சுட்டுதற் குரியது. தொடர்ந்து சிவம், சத்தி உள்ளிட்ட கடவுள் வணக்கப் பாடல்களும், சிவனருட் செல்வராகிய அடியார்க்குரிய பாடல்களும் அமைந்துள்ளன. பாயிரப் பகுதியின் எச்சமாக நூல் செய்தற்குரிய காரணமும், முறையும், அவையடக்கமும், அரங்ககேறிய வரலாறும் சொல்லப்பெற்றன. திருநாட்டுச் சிறப்பு, திருநகரச் சிறப்பு என்ற பகுதிகளில் பாண்டிய நாட்டு வளமும், இயற்கை எழிலும், திணைக் காட்சிகளும், மதுரை மாநகரின் அமைப்பழகும், வீதிகளின் வனப்பும், மக்களின் செழுமையும் சிறப்பாகப் புனையப் பெற்றுள்ளன. இவற்றைப் படிப்பவரின் மனத்தில் சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தில் இளங்கோவடிகள் படைத்துள்ள மதுரை மாநகரின் மாண்புகள் தோன்றுதல் கூடும். புராண வரலாறு, தலம், தீர்த்தம், மூர்த்தி விசேடங்களும், புராணச் சுருக்கமாக அமையும் பதிகப் பகுதியும் படித்து மகிழத்தக்கவை. பரம்பொருளே விண்ணகத்தினின்றும் மண்ணகத்தில் தோன்றி நீதிநெறி நிலைபெறவும் யாவரும் இன்புறவும் அரசு புரிந்த திருவிளையாடல்கள் சுட்டத்தகுவன. இவற்றை நன்கு கற்றறிந்தவராகிய குமரகுருபரர், தமரநீர்ப் புவனம் முழுதொருங் கீன்றாள் தடாதகா தேவியென் றொருபேர் தரிக்கவந் ததுவும் தனிமுத லொருநீ சவுந்தர மாறனா னதுவும் குமரவேள் வழுதி உக்கிரன் எனப்பேர் கொண்டதும் தண்டமிழ் மதுரம் கூட்டுண வெழுந்த வேட்கையால் எனில்; இக் கொழிதமிழ்ப் பெருமையையார் அறிவர்! என வியந்து போற்றுதல் எண்ணி இன்புறத்தக்கது. இறைவன் திருவருட் சிறப்புடன் அருந்தமிழ்ச் சிறப்பும் இப்புராணத்தில் எங்கும் இடம்பெறக் காணலாம். மூவேந்தரும் செந்தமிழ்மொழியைப் பேணி வளர்த்தனர். எனினும், பாண்டியரின் பணியே விஞ்சி நிற்பது. முச்சங்கம் அமைத்துப் புலவர்களைப் புரந்து முத்தமிழ்ப் பணிபுரிந்த பாண்டியரின் சிறப்பு இப்புராணத்தின் பல இடங்களிலும் பரவியும் விரவியும் வந்துள்ளது. சங்கப் பலகை கொடுத்த படலம், தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம், கீரனைக் கரையேற்றிய படலம், கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம், சங்கத்தார் கலகம் தீர்த்த படலம், இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் என்பன எண்ணற்பாலன. “நெற்றிக் கண்ணினைக் காட்டினும் குற்றம் குற்றமே” என்ற அஞ்சா நெஞ்சம் கொண்ட அருந்தமிழ்க் கவிஞன் நக்கீரனின் குரல் இப்புராணத்தில் ஒலிக்கிறது. அகத்தியர் தென்னாடு வருதற்கு முன்பே செந்தமிழ் வளம் பெற்று விளங்கியது என்ற கருத்தினை, விடைகொடு போவான் ஒன்றை வேண்டினான்; ஏகும்தேயம் தொடைபெறு தமிழ்நாடு என்று சொல்லுப; அந்த நாட்டின் இடைபயில் மனித்த ரெல்லாம் இன்தமிழ ஆய்ந்து கேள்வி உடையவர் என்ப கேட்டார்க்(கு) உத்தரம் உரைத்தல் வேண்டும் காண்க (கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்.1) என்ற பாடலில் பரஞ்சோதியார் புலப்படுத்தியுள்ளார். கம்பரும் என்றுமுள தென்தமிழை இயம்பி இசை கொண்டான் என்று தமிழ்மொழியின் தொன்மைச் சிறப்பினைக் கூறுதல் இயைபு கருதி இவண் எண்ணிப் பார்த்தற்குரியது. தமிழிசையின் தனிப்பெரும் சிறப்பினையும் ஆற்றலையும் விறகுவிற்ற படலத்தில் பரஞ்சோதியார் சுவைபடப் பாடியுள்ளார். தன்னடியார் ஆகிய பாணபத்திரனின் பொருட்டு ஏமநாதன் என்னும் வடநாட்டுப் பாணனை அடக்கி ஆளும் பாங்கில் ஈசன் முதியனாகத் தோன்றிப் பண்ணிசைத்த பாங்கினப் பரஞ்சோதியார், “ பாணர்தம் பிரானைக் காப்பான் பருந்தொடு நிழல்போக் கென்ன யாணரம் பிசைபின் செல்ல இசைத்தவின் னிசைத்தேன் அண்ட வாணர்தம் செவிக்கா லோடி மயிர்த்துள்ள வழியத் தேக்கி யாணரின் அமுத யாக்கை இசைமயம் ஆக்கிற் றன்றே” “ தருக்களும் சலியா; முந்நீர்ச் சலதியும் சலியா; நீண்ட பொருப்பிழி அருவிக் காலும் நதிகளும் புரண்டு துள்ளா; அருட்கடல் விளைத்த கீத வின்னிசை அமுதம் மாந்தி மருட்கெட அறிவன் தீட்டி வைத்தசித் திரமே ஒத்த” என வரும் பாடல்களில் பயில்வோரின் உள்ளம் இன்புறப் படைத்திருத்தல் காணத்தக்கது. யாழ் + நரம்பு - யாணரம்பு எனப்புணர்ச்சி பெறுதற்கு வீரசோழிய இலக்கண நூலில் விதியுள்ளது. தேவர்க்கும், வேந்தர்க்கும், புலவர்க்கும் அருள் சுரக்கும் முதல்வன் அஃறிணையாகிய பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் பொருட்டுத் தாய்ப் பன்றியாக அவதாரம் கொண்ட அருட்செயலையும் இப்புராணம் ஒரு திருவிளையாடலாகப் போற்றியுள்ளது. பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம், பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம் என்பன ஆலவாயண்ணலின் அரிய அருள் விளையாட்டிற்குச் சான்றாவன. பரஞ்சோதியார், என்னையா ளுடைய கூடல் ஏகநா யகனே யுங்கட்(கு) அன்னையாய் முலைதந்(து) ஆவி யளித்துமே லமைச்ச ராக்கிப் பின்னையா னந்தவீடு தருமெனப் பெண்ணோர் பாகன் தன்னையா தரித்தோன் சொன்னான் பன்னிருதனயர்தாமும் எனவரும் பாடலில் நான்முகன் கூற்றில் வைத்துக் கூறும் திறம் காணத்தக்கது. மாணிக்கவாசகரின் பொருட்டுச் சோமசுந்தரக்கடவுள் புரிந்த திருவிளையாடல்கள் பற்பல. நரி பரியாக்கிய படலம், பரி நரியாக்கிய படலம், மண் சுமந்த படலம் என்பன எண்ணு தற்குரியன. வந்தி மூதாட்டிக்கு ஏழைபங்காளன் ஆகிய ஈசன் ஏவலனாக மண்சுமந்த திருவிளையாடலையும் பரஞ்சோதியார் பாடியுள்ளார். இத்திருவிளையாடலை மாணிக்கவாசகப் பெருமான், பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய் என்று குழைந்துருகிப் பாடியிருத்தல் இயைபு கருதி இவண் எண்ணத்தக்கது. திருஞானசம்பந்தர் மதுரைமாநகரில் சமணர்களுடன் சொற்போர் புரிந்து சைவத்தினை நிலைநாட்டிய வரலாற்றினையும் பரஞ்சோதி முனிவர் புராணத்தின் இறுதிப்பகுதியில் பாடியுள்ளார். இவர் நோக்கில், மாணிக்கவாசகர்க்குப் பிற்பட்டவராகச் சம்பந்தர் தோன்றுகிறார் எனலாம். கலைக் களஞ்சியமாகக் காட்சிதரும் திருவிளையாடற் புராணத்தில் இறைவனின் அளப்பரிய அருள்திறம், சிவநெறியின் மாட்சி, செந்தமிழின் சிறப்பு, நீதிகள், அரசியல்நெறி, இல்லற நெறி, சமுதாய ஒழுங்கு, பல்வேறு நம்பிக்கைகள், தொன்மங்கள் முதலியன சிறப்பாகப் பாடப்பெற்றுள்ளன. இதில் இடம் பெறும் இயற்கைக் காட்சிகள், கற்பனைகள், அணிகள், யாப்பியல் வனப்பு, ஓசைநலம் என்பன இதன் இலக்கியத் தரத்தினை உயர்த்துவன எனலாம். இத்தகைய சீரிய இலக்கியப் படைப்பிற்கு உரைகள் பல எழுந்தன. இத்திறம் பற்றிச் சுருங்கக் கூறலாம். 6. திருவிளையாடற் புராணம் உரைமரபு இப்புராணம் தோன்றிய காலம் முதல் இதில் இடம் பெறும் கதைகளைப் பொதுமக்களும் கற்றோரும் கேட்டின்புறும் வகையில் சொற்பொழிவு புரிவோர்க்காகப் பெருஞ்செல்வரும் சைவச் சான்றோரும் பொருளுதவி தந்துவந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் உரையில்லாமல் இதில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்குத் தெளிவான பொருள் அறிய முடியாத நிலை ஏற்பட்டது.அதன்விளைவாக உரைகள் தோன்றலாயின. அவற்றுள் ஒரு சிலவற்றைக் குறிப்பிடுதல் தகும். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணாக்கர் சோடசாவதானம் சுப்புராயச் செட்டியாரவர்கள் எழுதிய உரை பலராலும் பயிலப் பெற்று வந்துள்ளது. இவ்வுரையினைப் பின்பற்றி ஈக்காடு இரத்தினவேலு முதலியார் பொழிப்புரை எழுதி வெளியிட்டனர். மதுரைக் காண்டத்திற்கு மட்டும் மதுரை ஞானசம்பந்தப் பிள்ளை என்பார் பொழிப்புரை எழுதினார். இவர்கள் உரை திருவிளையாடற் புராணத்தின் பொருளைப் புரிந்து கொள்ளு தற்குப் பயன்தந்தன. எனினும் பல்வேறு பதிப்புக்களையும் ஒப்புநோக்கித் தக்க பாடங்களைத் தேர்ந்தெடுத்து ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் முறையிலும் ஆர்வலர் அனைவரும் பயின்று மகிழும் பாங்கிலும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் மூன்று காண்டங்களுக்கும் முறையாக எழுதிய உரை அட்சய ஆண்டு, தைத்திங்கள் 8 ஆம் நாள் (1927) சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரால் செப்பமுற வெளியிடப் பெற்றது. கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பயிலும் மாணாக்கர்க்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் அறிஞர்க்கும் பெரிதும் பயன்படும் பாங்கில் எழுதப் பெற்றுள்ள இவ்வுரையின் சிறப்புக்களைச் சுருக்கமாக இங்குக் காண்போம். 7. நாவலர் ந.மு.வே. உரைத்திறம் இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற அறிஞர் பெருமக்களில் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடத்தக்க புலமைச் செல்வராவர். இவர்களிடம் பயின்ற என் பேராசிரியப் பெருமக்கள் வகுப்பறையில் இவர்தம் நுண்மாண் நுழைபுலச் சிறப்பினையும் உரைகூறும் மாண்பினையும் பன்முறையும் எடுத்துரைத்த நினைவுகள் என் மனத்திரையில் எழுகின்றன. அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பழைய இலக்கியங்களுக்குப் பேருரை கண்ட இப்பெருமகனார் திருவிளையாடற் புராணத்திற்கும் சிறந்த உரை வரைந்திருத்தல் எண்ணுதற்குரியது. நாலடியாரில் பொழிப்பு, அகலம், நுட்பம், நூலெச்சம் என்ற நான்கு வகையான் நூலிற்கு உரை அமைதல் வேண்டும் (32.9) என்ற வரையறை காணப்படுகிறது. நாட்டார் ஐயா அவர்கள் உரை இக்கூறுகள் யாவும் பொருந்தி நூலின் சிறப்பினை வெளிக்கொணர்ந்து பயில்பவர் மனத்தில பதியச் செய்தல் சுட்டுதற்குரியது. சங்க இலக்கியப் பாக்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்கள், திருமுறைகள், மெய்கண்ட சாத்திரங்கள் என்பன இவர்தம் உரையில் மேற்கோளாக எடுத்தாளப் பெறுவன. உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உள்ளிட்ட உரையாசிரியர்களின் கருத்துக்களையும் இடையிடையே எடுத்துக் காட்டித் தம்உரைக்கு ஆக்கம் சேர்த்தல் இவர்தம் இயல்பு. பாக்களுக்குரிய யாப்பினைச் சுட்டுதலும் அணிகளை விரித்து விளக்குதலும் தனிச்சிறப்பு. பாக்களில் அகன்று கிடக்கும் சொற்களை அணுகிய நிலையில் கொணர்ந்து பொருளியைந்து முடிய உரைவரைதல் சுட்டுதற்குரியது. ஒருபாடலில் பயின்றுள்ள தொடர்களை இயைபுறுத்தி வினை முடிபு காட்டுதலும், இலக்கணக் குறிப்புக்கள் தருதலும் உரையின் சிறப்பினை மேலும் உயர்த்துவன எனலாம். சைவசித்தாந்தச் செம்பொருளை ஏற்புழி இவர்தம் உரை இயைபுறுத்திக் காட்டுதல் எண்ணி இன்புறத்தக்கது. புலமை விருந்தாக அமையும் இவர்தம் உரையிலிருந்து ஒரு சில பகுதிகளைப் பயில்வார் பார்வைக்கு வழங்குதல் சாலும். பாயிரப்பகுதியில் “ திங்களணி திருவால வாய்எம் அண்ணல் திருவிளையாட்டு இவை” என்ற பகுதிக்கு நாட்டார் அவர்கள் நவிலும் உரைப்பகுதி காண்போம். திங்களணி அண்ணலென இயைக்க. திருவிளையாட்டு என்றது அதனைக் கூறும் நூலுக்கு ஆயிற்று. இறைவன் செய்யும் செயலெல்லாம் எளிதின் முடிதல் நோக்கி அவற்றை அவனுடைய விளையாட்டுக்கள் என்ப. “காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி” என்னும் திருவாசகமும்; “ சொன்னவித் தொழில்கள் என்ன காரணம் தோற்ற என்னின் முன்னவன் விளையாட் டென்று மொழிதலுமாம்” என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தமும் நோக்குக. இப்பகுதியில் தோத்திரமும் சாத்திரமும் மேற்கோளாக அமைந்து பாடற்பொருளை விளங்க வைத்தன. கல்லாலின் தோத்திரமும் சாத்திரமும் மேற்கோளாக அமைந்து பாடற்பொருளை விளங்க வைத்தன. கல்லாலின் புடையமர்ந்து என்ற தென்முகக் கடவுள் வாழ்த்துச் செய்யுள் உரையில், “ வேதம் முதலிய கலைகளெல்லாம் பாச ஞானமாகலானும் இறைவன் ‘பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரன்’ ஆகலானும் ‘மறைக்கு அப்பாலாய்’ என்றார்.” என்று சாத்திர விளக்கம் தந்து, ‘இருநிலனாய்த்தீயாகி நீருமாகி’ ‘விரிகதிர் ஞாயிறல்லர்’ எனவரும் அப்பரடிகளின் பாடல்களை மேற்கோள் தந்து தம் உரைக்கு வலிமை சேர்த்தனர். ‘உள்ளமெனும் கூடத்தில்’ என்ற பாடலின் உரையில், விநாயகக் கடவுளை வேழம் என்றதற் கேற்ப உள்ளம் முதலியவற்றைக் கூடம் முதலியவாக உருவகப்படுத்தினார் என்று எழுதுதல் எண்ணத்தக்கது. மதுரைக் காண்டத்தில் திருமணப் படலத்தில், “கள்ளவிழ் கோதை” எனவரும் பாட்டின் உரையில், “மிகுதியை உணர்த்தக் காடு என்றார். தெள்விளி - தெளிந்த ஓசை. “ஆம்பலம் தீங்குழல் தெள்விளி பயிற்ற” என்னும் குறிஞ்சிப் பாட்டு அடிக்கு நச்சினார்க்கினியர் கூறிய உரை காண்க.” என்று சங்க இலக்கியஉரை மேற்கோள் தருதல் காணத்தக்கது. இதே பாடலைத் தொடர்ந்து வரும், “மீனவன் கொடியும் கான வெம்புலிக் கொடியும் செம்பொன் மானவிற் கொடியும்” என்ற பாடற் பகுதிக்கு நாவலர் நாட்டார் தரும் விளக்கம் காண்போம். “மீன், புலி, வில் இவை முறையே பாண்டிய சோழ சேரர்கட்குக் கொடிகள். மூவேந்தருள் வலியுடைய ஒருவரைக் கூறுங்கால் அவருடைய கொடிமுதலியவற்றுடன் ஏனை இருவரின் கொடி முதலியவற்றையும் அவர்க்குரியவாகச் சேர்த்துக் கூறுதல் மரபு. “ வடதிவை மருங்கின் மன்னர்க் கெல்லாம் தென்தமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி மண்டலை யேற்ற வரைக வீங்கென” எனச் சிலப்பதிகாரத்து வருதலும் காண்க.” என்பது உரைப்பகுதியாகும். திருவிளையாடற் புராணப் பாடற்பகுதிக்குச் சிலப்பதிகார மேற்கோள் தந்து விளக்குதல் வேந்தரின் வலிமை மரபினைப் புலப்படுத்தும் பாங்கினைப் புரிந்து கொள்ளுதற்கு உதவும். கூடற்காண்டத்தில் “எல்லாம் வல்லசித்தரான படலத்தில்,” அகரமாதி எனத் தொடங்கும் பாடல் உரையில், “இடையிட்டு நின்ற ஏகாரங்கள் எண்ணுப் பொருள் குறித்தன. எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும் எண்ணுக் குறித்தியலும் என்மனார் புலவர் என்பது தொல்காப்பியம் என்று இலக்கண விளக்கம் கூறுதல் எண்ணற்பாலது. இக்காண்டத்தில் உலவாக்கோட்டை யருளிய படலத்தில், கூடற், படியார்க்கும் சீர்த்திப் பதியேருழவோருள் நல்லான் அடியார்க்கு நல்லான் (38.2) என்ற பாடற் பகுதிக்கு நாவலர் அவர்களின் உரை காண்போம். “ புவிமுழுதும் நிறைந்த கீர்த்தியையுடைய மதுரைப்பதியிலே ஏரான் உழுதலைச் செய்யும் வேளாளரில் சிறந்தவன் ஒருவன் அடியார்க்குநல்லான் என்னும் பெயரினன் .... கூடலின் புகழ் புவிமுழுதும் நிறைதல், “நிலனாவிற்றிரிதரூஉம் நீண்மாடக் கூடலார்” எனக் கலித்தொகையுள்ளும் குறிக்கப்பட்டது. சிலப்பதிகாரத்திற்குப் பேருரை கண்ட அடியார்க்கு நல்லாரும் வேளாண்குடி விழுச்செல்வராதல் கூடும். இப்பெயர் குறித்து மேலும் ஆராய்ந்து, “ அடியார்க்கு நல்லார் என்பது இறைவன் திருப்பெயருமாம், கருவூருள் ஆனிலை, அண்ணலார் அடியார்க்கு நல்லரே என்னும் ஆளுடையபிள்ளையார் திருவாக்கும் காண்க.” என்று நாட்டார் ஐயா தெளிவுறுத்தல் எண்ணி இன்புறத்தக்கது. சங்க வரலாற்றுத் தொடர்புடைய தொன்மங்களைக் கொண்டு விளங்கும் இப்புராணத்தின் மூன்றாம் பகுதியாகிய திருவாலவாய்க் காண்டத்தில் ‘தருமிக்குப் பொற்கிழியளித்த படலத்தில், தண்டமிழ் மூன்றும் வல்லோன் தான்எனக் குறியிட் டாங்கே புண்டர நுதலிற் பூத்துப் பொய்யிருள் கிழித்துத் தள்ள (52.99) என்ற பாடற்பகுதிக்கு அவர்களின் விளக்கம் நோக்குவோம். “ தண்ணிய மூன்று தமிழிலும் வல்லவன்தானே எனக் குறியிட்டது போலத் திரிபுண்டரம் ( - மூன்று கீற்றுத்திருநீறு) நெற்றியின்கண் இடப்பெற்று நிலையில்லாத அஞ்ஞான இருளைக் கிழித்து ஓட்டவும்.” என்பது உரைப்பகுதியாகும். வடமொழியினைத் தேவபாடை எனக் கூறிக்கொண்ட காலத்தில், எங்கள் செந்தமிழும் தெய்வமொழியே என்பதை நிலைநாட்டும் பாங்கில் சிவபிரான் முத்தமிழிலும் வல்லவன் என்றும், தலைச்சங்கத்துப் புலவருடன் கூடியிருந்து தமிழாராய்ந்தான் என்றும் தொன்மச் செய்தி வழங்கி வருதற்கு இறையனார் களவியலுரையும் சான்றாக அமைகின்றது. மேலே சுட்டப்பெற்ற உரைப்பகுதிகள் நாவலர் ந.மு.வே. அவர்களின் கூர்த்த மதிநலத்தினையும் சீர்த்த புலமை வளத்தையும் புரிந்துகொள்ளப் போதுமானவை. கற்றோர்க்குத் தாம் வரம்பாகத் திகழ்ந்த நாட்டார் ஐயா அவர்களின் ஆராய்ச்சித்திறனுக்கு ஒரு சான்று கூறுதல்சாலும். திருவிளையாடற்புராணத்தின் ஆராய்ச்சி முன்னுரையில், திருவிளையாடற் கதைகளில் எவை எவை பழைய இலக்கியங் களில் பொதிந்துள்ளன என்பதை அகழ்ந்தெடுத்துக் காட்டியுள்ள பகுதி அறிஞர்களால் உற்றுநோக்கத்தக்கது. சிலப்பதிகாரம், கல்லாடம், தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களிலிருந்து அவர்கள் கூறியுள்ள திருவிளையாடற் கதைகளை (ப.8) அவர்கள் கூறிய வரிசையிலேயே திருவிளையாடற் புராணப் பதிப்பில் ( அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, 1991) அதன் பதிப்பாசிரியர் ஆராய்ச்சி முன்னுரை என்ற பெயரில் அமைந்துள்ள பகுதியில் II , III - இல் மாற்றமின்றித்தாமே முதன்முதல் கண்டறிந்து கூறியதுபோல் எழுதியுள்ளார். நாவலர் நாட்டாரின் பெயரினை அவர் சுட்டாது போயினமையினை இங்குச் சுட்டுதல் நம் கடமை ஆயிற்று. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திருவிளையாடற் புராணத்திற்கு நாவலர் ந.மு.வே. அவர்களின் உரையினை ஏழு தொகுதிகளில் தமிழ் கூறு நல்லுலகிற்கு வழங்கும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் காலத்திற்கேற்ற பணி பாராட்டற்பாலது. இப்பணிக்கு உறுதுணையாக விளங்கும் உழுவலன்பு கெழுமிய பேராசிரியர் பி.விருத்தாசலம் அவர்கள் நாட்டார் பெயரினால் விளங்கும் திருவருள் கல்லூரியின் தாளாளராக ஆற்றிவரும் அரும்பணி அனைவராலும் பாராட்டற் பாலது. நாட்டார் ஐயாவின் ஏனைய நூல்களையும் தமிழ்மண் பதிப்பகம் வெளியிடும் செய்தியறிந்து உவகையுற்றேன். இந்நூல் வரிசையினைத் தமிழ்மக்களும் நூலகங்களும் பெற்றுப் பயன்கொள்ள வேண்டுகிறேன். 19.07.2007 முனைவர் சோ.ந.கந்தசாமி தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறைத் தலைவர் (ஓய்வு) தஞ்சாவூர். பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங்களை யெல்லாம் தேடியெடுத்துத் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மையாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக்கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்டதால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும்போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு..., செயல் செய்வாய் தமிழுக்கு......,ஊழியஞ் செய் தமிழுக்கு......., பணி செய்வாய்! தமிழுக்கு........, இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.”எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர் தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங்களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலம் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற் குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடுவதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப்பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப்புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத் தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகுகுரு.செயத்துங்கன், பேரா. கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெருமக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டு கின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை iv அணிந்துரை xi பதிப்புரை xxv 34. விடையிலச்சினையிட்ட படலம் 1 35. தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம் 17 36. இரசவாதஞ் செய்த படலம் 37 37. சோழனை மடுவில் வீட்டிய படலம் 53 38. உலவாக்கோட்டை யருளிய படலம் 65 39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம் 76 40. வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய படலம் 97 41. விறகு விற்ற படலம் 137 42. திருமுகங் கொடுத்த படலம் 176 43. பலகையிட்ட படலம் 192 44. இசைவாது வென்ற படலம் 203 45. பன்றிக்குட்டிக்கு முலைகொடுத்த படலம் 229 46. பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம் 260 47. கரிக்குருவிக்குபதேசஞ் செய்த படலம் 271 48. நாரைக்கு முத்திகொடுத்த படலம் 283 செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை 294 திருவிளையாடற்புராணம் கூடற் காண்டம் - 2 முப்பத்து நான்காவது விடையிலச்சினையிட்ட படலம் [எழுசீரடி யாசிரிய விருத்தம்] சந்து சூழ்மல யச்சி லம்பர் தவம்பு ரிந்த வியக்கிமார்க் கந்த நாலிரு சித்தி தந்த தறைந்த னந்தன தடிதொழா வந்து மீள்வள வன்பொ ருட்டு வடாது வாயிறி றந்தழைத் திந்து சேகரன் விடையி லச்சினை யிட்ட வாறுவி ளம்புவாம். (இ - ள்.) சந்து சூழ்மலயச் சிலம்பர் - சந்தன மரங்கள் சூழ்ந்த பொதியின் மலையையுடைய சோமசுந்தரக் கடவுள், தவம்புரிந்த இயக்கி மார்க்கு - தவமியற்றிய இயக்க மாதர் அறுவர்க்கு, அந்தநா லிருசித்தி தந்தது அறைந்தனம் - அந்த எட்டுச் சித்திகளையும் அருளிச் செய்த திருவிளையாடலைக் கூறினாம்; வந்த தனது அடி தொழா மீள் வளவன் பொருட்டு - வந்து தன் திருவடிகளை வணங்கித் திரும்பும் சோழமன்னன் பொருட்டு, வடாது வாயில் திறந்து அழைத்து - வடக்கு வாJலைத் திறந்து உள்ளே அழைத்து, இந்து சேகரன் விடை இலச்சினை இட்டவாறு விளம்புவாம் - பிறை முடியனாகிய இறைவன் இடபக் குறியினைப் பொறித்த திருவிளையாடலை (இனிக்) கூறுவாம். எண் சித்திகளும் முன் கூறினமையால் ‘அந்த’ எனச் சுட்டினார். வளவன் பொருட்டு அங்ஙனந் தொழுதற்குத் திறந்தழைத்து இலச்சினை யிட்டவாறு என்க. வடாது - வடக்கிலுள்ளது. (1) தோடு வெட்டி மலைத்து வாள்விதிர் துணைவி ழிக்குயி லிளமுலைக் கோடு வெட்டிய குறிகொண் மேனியர் குடிகொண் மாநகர் கடிகொள்பைங் காடு வெட்டிய கார ணக்குறி காடு வெட்டிய சோழனென் றேடு வெட்டிய வண்டு சூழ்பொழி லெயில்கொள் கச்சியு ளானவன். (இ - ள்.) தோடு மலைத்து வெட்டி - (காதின்) தோட்டினைப் போர் புரிந்து வெட்டி, வாள் விதிர் துணைவிழிக் குயில் - வாளை அசைத்தா லொத்த இரண்டு விழிகளையுடைய குயில்போலும் உமைப் பிராட்டியின், இளமுலைக்கோடு வெட்டிய குறிகொள் மேனியர் - இளமையாகிய கொங்கை யென்னுங் கொம்பினாற் போழப்பட்ட குறியினைக்கொண்ட திருமேனியையுடைய ஏகம்பவாணர், குடிகொள் மாநகர் - எழுந்தருளி யிருக்கும் பெருமை பொருந்திய காஞ்சி நகரில், கடிகொள் பைங்காடு வெட்டிய காரணக்குறி - (கண்டோர்க்கு) அச்சம் விளைத்தலைக் கொண்ட பசிய காடுகளை வெட்டிய காரணக் குறியினானே, காடு வெட்டிய சோழன் என்று - காடு வெட்டிய சோழனென்று பெயர் கூறப்பட்டு, ஏடு எட்டிய வண்டு சூழ்பொழில் எயில்கொள் கச்சியுளான் - இதழ்கள் பொருந்திய வண்டுகள் மொய்க்கும் சோலைகளை யுடைய மதிலையுடைய காஞ்சிநகரி லுள்ளான் ஒருவன்; அவன் - அம்மன்னன். மாநகரைச் சூழவென்க. கடி - மணமுமாம். ஏடுவெட்டிய வண்டு - இதழினைக் கிண்டிய வண்டு என்றுமாம். சிவபெருமான் உமையின் தனக்குறி யணிந்த வரலாற்றைக் காஞ்சிப் புராணம் - தழுவக் குழைந்த படலத்திலும், திருத்தொண்டர் புராணம் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்திலும் காண்க. (2) உத்த மச்சிவ பத்த ரிற்பெரி துத்த மன்புது விரைகலன் மித்தை யென்றுவெ ணீறு கண்டிகை யார மென்றணி மெய்யினான் நித்த வேத புராண மாதி நிகழ்த்தி டும்பொருள் கண்ணுதல் அத்த னேபர தத்து வப்பொரு ளென்ற ளந்தறி கேள்வியான். (இ - ள்.) உத்தமச் சிவபத்தரில் பெரிது உத்தமன் - உத்தமமாகிய சிவபத்தியுடைய அடியாருள் மிகவும் உத்தமன்; புது விரைகலன் மித்தை என்று - புதிய மணமுடைய சந்தனமும் அணிகலனும் அழியும் பொருளென்று கருதி, வெள் நீறு கண்டிகை - வெள்ளிய திருநீறும் உருத்திராக்க மாலையுமே, ஆரம் என்று மெய்யினான் - சந்தனமும் முத்தாரமு மென்று அணிந்த மேனியை யுடையவன்; நித்த வேதம் புராணம் ஆதி - அழியாத மறைகளும் புராணங்களும் முதலிய நூல்கள், நிகழ்த்திடும் பொருள் கண்நுதல் அத்தனே - கூறும் பொருள் நுதற்கண்ணை யுடையராகிய சிவபெருமானே; பரதத்துவப் பொருள் என்று அளந்து அறி கேள்வியான் - (ஆகலின் அவனே) உண்மைப் பொருள் என்று அளந்தறிந்த கேள்வியை யுடையவன். மித்தை - பொய்; ஈண்டு அநித்த மென்னும் பொருட்டு. அவற்றால் விளையும் இன்பம் நிலையற்ற தென்றபடி. ஆரம் என்பது இரட்டுற மொழிதலாற் சந்தனத்தையும் முத்தையும் உணர்த்திற்று. வெண்நீறு சாந்தமும், கண்டிகை முத்து வடமும் எனக் கொள்க. அளந்தறி - வேதம் முதலிய அளவைகளால் அளந்தறிந்த. (3) அங்க மாறொடு வேத நான்கு மறிந்து மெய்ப்பொரு ளாய்ந்துளஞ் சங்கை கொண்டனு தினம ரன்புகழ் சாற்றி சைவபு ராணநூல் பொங்கு மின்சுவை யமுது தன்செவி வாய்தி றந்து புகட்டியுண்1 டெங்க ணாயக னடியி ணைக்க ணிருத்து மன்பு கருத்துளான். (இ - ள்.) அங்கம் ஆறொடு வேதம் நான்கும் அறிந்து - இங்ஙனம் ஆறு அங்கங்களையும் நான்கு மறைகளையும் கற்று, மெய்ப்பொருள் ஆய்ந்து - உண்மைப்பொருளை ஆராய்ந்து துணிந்து, உளம் சங்கை கொண்டு - உள்ளத்தால் (அப்பொருளைச்) சிந்தித்தல் செய்து, அனுதினம் - எப்பொழுதும், அரன் புகழ் சாற்று - சிவபெருமான் புகழைக் கூறுகின்ற, சைவ புராண நூல் - சிவ புராண நூல்களாகிய, பொங்கும் இன் சுவை அமுது - மிக்க இனிய சுவையோடு கூடிய அமுதினை, தன் செவிவாய் திறந்து - தனது செவி யாகிய வாயினைத் திறந்து, புகட்டி உண்டு - (பெரியோர்) ஊட்ட உண்டு, எங்கள் நாயகன் அடி இணைக்கண் - எங்கள் பெருமானாகிய அவ்விறைவனுடைய இரு திருவடியின் கண்ணும், இருத்தும் அன்பு கருத்துளான் - பதிய வைத்த அன்பு மிக்க மனத்தினையுடையவன். அங்கம் ஆறு - சிட்சை, வியாகரணம், நிருத்தம், கற்பம், சந்தம், சோதிடம் என்பன; இவை வேதத்திற்கு உறுப்புக்கள் போறலின் அங்கம் எனப்படும்; இவற்றின் இயல்பு முன் உரைக்கப்பெற்றமை காண்க. சங்கை - ஈண்டுச் சிந்தித்தல் என்னும் பொருட்டு. புகட்டி- ஊட்டப்பெற்று. (4) முக்க ணாயகன் முப்பு ரத்தை முனிந்த நாயகன் மங்கையோர் பக்க நாயகன் மிக்க வானவர் பரவு நாயக னரவணிச் சொக்க2 நாயக னாட லுஞ்செவி யான்மு கந்து சுவைத்தருந்3 தக்க பாலொடு தேன்க லந்து தருக்கி யுண்பவ னாயினான். (இ - ள்.) முக்கண் நாயகன் - மூன்று கண்களையுடைய இறைவனும், முப்புரத்தை முனிந்த நாயகன் - திரிபுரங்களை எரித்தருளிய இறைவனும், மங்கை ஓர்பக்க நாயகன் - உமையை ஒரு கூற்றில் வைத்த இறைவனும், மிக்க வானவர் பரவும் நாயகன் - சிறந்த தேவர்கள் வழிபடும் இறைவனுமாகிய, அரவு அணிச்சொக்க நாயகன் ஆடலும் - பாம்பாகிய அணியினையுடைய சொக்கலிங்க மூர்த்தியின் திருவிளையாடலையும், செவியால் முகந்து - செவியினால் மொண்டு, சுவை தரும் தக்க பாலொடு தேன் கலந்து - சுவையினைத் தருகின்ற சிறந்த பாலுந்தேனுங் கலந்து, தருக்கி உண்பவன் ஆயினான் - உண்டு களிப்பானாயினன். ஒரு பொருள்மேற் பல பெயர் வந்தன. அரவணி சொக்கநாயகன் என இயல்பாயின் வினைத் தொகையாகும். சைவ புராணங்களுடன் சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடலைக் கேட்டலைப் பாலுந் தேனும் கலந்துண்பதாகக் கூறினார். உண்டு தருக்குபவனாயினான் எனப் பிரித்துக் கூட்டுக. (5) அங்க யற்கண் மடந்தை பாக னடித்த லந்தொழு மாசைமேற் பொங்கி மிக்கெழு மன்ப னாய்மது ரேசன் மின்னு பொலங்கழற் பங்க யப்பத மென்று நான்பணி வேனெ னப்பரி வெய்தியே கங்கு லிற்றுயில் வான்க யற்புரை கண்ணி பங்கனை யுன்னியே. (இ - ள்.) அங்கயற்கண் மடந்தை பாகன் - அங்கயற்கண்ணம்மையை ஒரு பாகத்திலுடைய சோமசுந்தரக்கடவுளின், அடித்தலம் தொழும் ஆசைமேல் பொங்கி மிக்கு எழும் அன்பனாய் - திருவடிகளைக் கண்டு தொழவேண்டுமென்னும் ஆசை மேலே பொங்கி எழுதலால் அதிகரித் தெழுகின்ற அன்புடையனாகி, மதுரேசன் மின்னு பொலம் கழல் பங்கயப்பதம் - மதுரைப்பிரானின் விளங்குகின்ற பொன்னலாகிய வீரக்கழலணிந்த தாமரை மலர்போலுந் திருவடிகளை, நான் என்று பணிவேன் எனப் பரிவு எய்தி - யான் என்று கண்டு வணங்குவேன் எனப் பரிவுகூர்ந்து, கயல்புரை கண்ணி பங்கனை உன்னி - கயல்போலும் கண்களையுடைய உமை பாகனாகிய அப்பெருமானைச் சிந்தித்துக் கொண்டே, கங்குலில் துயில்வான் - இரவில் உறங்குவானாயினன். பரிவு - அன்பு, துன்பம். கயற்புரை கண்ணிபங்கன் என்பதனைச் சுட்டாகக் கொள்க. (6) அன்று செம்பியர் கோம கன்கன வின்க ணேயருள் வெள்ளிமா மன்று ணின்றவர் சித்த ராயெதிர் வந்து மன்னவ நின்னுளத் தொன்று மஞ்ச லொருத்த னாகி யுருத்தி ரிந்துத னித்துவந் தின்று வந்தனை செய்து போதி யெனப்பு கன்றன ரேகினார். (இ - ள்.) அன்று - அப்பொழுது, செம்பியர் கோமகன் கனவின் கண் - காடு வெட்டி என்னும் சோழர் பெருமானது கனவினிடத்து, அருள் வெள்ளி மாமன்றுள் நின்றவர் சித்தராய் எதிர் வந்து - அருள் மயமாகிய பெரிய வெள்ளியம்பலத்திலே நின்றருளிய இறைவர் சித்த மூர்த்தியாய் எதிரே வந்து, மன்னவ - அரசனே, நின் உளத்து ஒன்றும் அஞ்சல் - நின் மனதின்கண் சிறிதும் அஞ்சற்க; ஒருத்தனாகி உருதிரிந்து - நீ ஒருவனாய் மாறுவேடம் பூண்டு, தனித்து வந்து இன்று வந்தனை செய்து போதி என - துணையின்றி வந்து இன்று வணங்கிப் போவாயாக என்று, புகன்றனர் ஏகினார் - திருவாய்மலர்ந்தருளிச் சென்றனர். போதி, த் : எழுத்துப்பேறு. புகன்றனர் : முற்றெச்சம். (7) கேடடு வேந்தன் விழித்து ணர்ந்து கிளர்ந்த வற்புத னாகிய ஈட்டு சேனை யமைச்சு ளார்பிறர் யாரு மின்றி வழிக்கொளீஇ நாட்ட மூன்றவ னாம வாள்கொடு நல்ல ருட்டுணை யாய்வழி காட்ட வன்பெனு மிவுளி மேல்கொடு கங்குல் வாய்வரு வானரோ. (இ - ள்.) வேந்தன் கேட்டு விழித்து உணர்ந்து - சோழமன்னன் (அவ்வருளிப் பாட்டினைக்) கேட்டு விழித்து அறிந்து, கிளர்ந்த அற்புதனாகி - மிக்க வியப் புடையவனாய், ஈட்டு சேனை அமைச்சுளார் பிறர் யாரும் இன்றி -தொகுக்கப்பட்ட சேனைகளும் மந்திரிகளும் வேறு யாரும் இல்லாமல், கங்குல்வாய் - அவ்விரவிலேயே, நல் அருள் துணை யாய் வழிகாட்ட - நல்ல திருவருள் துணையாய் நின்று வழிகாண்பிக்க, அன்பு எனும் இவுளி மேல்கொடு - அன்பு என்னுங் குதிரையிலேறி, நாட்டம் மூன்று உடையவன் நாமவாள் கொடு - கண்கள் மூன்றுடைய இறைவனது திருநாமமாகிய திருவைந்தெழுத்தென்னும் வாட்படையேந்தி, வழிக்கொளீஇ வருவான் - வழிக்கொண்டு வருவானாயினன். இறைவன் திருநாமம் பஞ்சாக்கர மென்பதனையும், அஃது அடியார்களின் இடையூறு களையும் வாள்போல்வ தென்பதனையும், " படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்செ னாவிற் கொண்டேன்" என்று திருநாவுக்கரசர் அருளிச்செய்தலால் அறிக. நாமம் முதலியவற்றை வாள் முதலியவாக உருவகஞ் செய்தமையால் இஃது உருவகவணி. அரோ : அசை. (8) கல்லு மாரழ லத்த மும்பல கலுழி யுங்குண கனைகடற் செல்லு மாநதி பலவும் வானிமிர் கன்ன லுஞ்செறி செந்நெலும் புல்லு மாநில னுங்க ழிந்து புறங்கி டக்கந டந்துபோய் வல்லு மாமுலை யார்க ணம்பயில் வையை யந்துறை யெய்தினான். (இ - ள்.) கல்லும் - மலைகளும், ஆர் அழல் அத்தமும் - நிறைந்த நெருப்புப்போலும் பாலைநிலமும், பல கலுழியும் - பல காட்டாறுகளும், குண கனைகடல் செல்லும் மாநதி பலவும் - ஒலிக்கின்றன கீழ்க்கடலிற் சென்று கலக்கும் பெரிய பல நதிகளும், வான்நிமிர் கன்னலும் செந்நெலும் புல்லும் மாநிலனும் - வானை யளாவிய கரும்பும் செந்நெற் பயிரும் பொருந்திய பெருமை பொருந்திய மருத நிலங்களும், கழிந்து புறம் கிடக்க நடந்துபோய் - பிற்பட்டுப் புறத்தே கழிய கடந்து சென்று, வல்லு மா முலையார் கணம்பயில் வையை அம் துறை எய்தினான் - சூதாடு கருவிபோன்ற பெரிய கொங்கையினையுடைய மகளிர் கூட்டம் நீராடிப் பயிலும் வையையாற்றின் அழகிய நீர்த்துறையை யடைந்தனன். ஆர் அழல் அத்தம் - இயங்குதற்கரிய அழலையுடைய சுரம் என்றுமாம். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம் என்பன முறையே கூறப்பட்டன. (9) குறுகு முன்ன ரதிர்ந்து வையை கொதித்த கன்கரை குத்திவேர் பறிய வன்சினை முறிய விண்டொடு பைந்த ருக்களை யுந்தியே மறுகி வெள்ள மெடுத்த லைத்தர மன்ன வன்கரை தன்னினின் றிறுதி யில்லவ னைத்தொ ழற்கிடை யூறி தென்றஞ ரெய்துவான். (இ - ள்.) குறுகு முன்னர் - அரசன் அங்கு வருவதற்கு முன்னரே, வையை வெள்ளம் எடுத்து - வையையாறு வெள்ளம் பெருகி, கொதித்து அதிர்ந்து - கொந்தளித்து ஆரவாரித்து, அகன்கரை குத்தி - அகன்ற கரையை அகழ்ந்து, விண் தொடு பைந் தருக்களை- வானை யளாவிய பசிய மரங்களை, வேர் பறிய வன்சினை முறிய உந்தி - வேர் அறவும் வலிய கிளைகள் முறியவும் தள்ளி, மறுகி அலைத்தர - சுழன்று அலைக்க, மன்னவன் கரைதன்னில் நின்று- சோழமன்னன் கரையின் கண்ணே நின்று கொண்டு, இறுதி இல்லவனைத் தொழற்கு - அழிவில்லாத சோமசுந்தரக் கடவுளை வணங்குதற்கு, இது இடையூறு என்று அஞர் எய்துவான. -இஃது இடையூறா யிராநின்றதென்று துன்புறுவானாயினன். வெள்ளமெடுத்து - பெருக்கெடுத்து. அலைத்தர - அலைத்தலைச் செய்ய; அலைவீச. (10) இழுதொ டுஞ்சுவை யமுது பொற்கல னிட்டு ணாதிரு கண்கணீர் வழிய வந்து விலக்கு வாரின் வளைந்த தாறு பகற்செயும் பொழுதெ ழும்பொழு தோம றுக்கம் விளைக்கு மேயிகல் பூழியன் வழுதி யன்றியும் வையை யும்பகை யான தென்று வருந்துவான். (இ - ள்.) இழுதொடும் சுவை அமுது பொன்கலன் இட்டு - நெய்யோடு சுவை மிக்க அமுது (பசித்தவனுக்குப்) பொற்கலத்தில் இட்டிருக்க, உண்ணாது இரு கண்கள் நீர் வழிய - (அவன் அதனை) உண்ணப் பெறாமல் இரண்டு விழிகளினின்றும் நீர் சொரியுமாறு, வந்து விலக்கு வாரின் - வந்து தடுப்பவரைப்போல, ஆறு வளைந்தது - இந்நதி தடுத்தது, பகல் செயும் பொழுது எழும் பொழுதோ- பகலைச் செய்யும் சூரியன் உதிக்கும் பொழுது வந்தாலோ, இகல் பூழியன் மறுக்கம் விளைக்கும் - பகை கொண்டுள்ள பாண்டியன் துன்பஞ் செய்வான், வழுதி அன்றியும் வையையும் பகை ஆனது என்று வருந்துவான் - பாண்டியனே அல்லாமல் இவ் வையை யாறும் பகையாயிற்று என்று வருந்தினான். இட்டு என்பதற்கு இடப்பட்டிருக்க என்று பொருள் கூறுக. ‘கைக்கெட்டியது வாய்க் கெட்டவில்லை’ என்னும் உலக வசனம் இங்கே கருதற்பாலது. பகற் செயும் பொழுது - பகலைச் செய்யும் ஞாயிறு. இகல் பூழியன் - மாறுபாடு கொண்ட பாண்டியன் : வினைத்தொகை. (11) வெள்ள நோக்கி யழுங்கு செம்பியன் மெலிவு நோக்கி விரைந்தெழீஇக் கள்ள நோக்கி லகப்ப டாதவர் கனவு போலவ னனவில்வந் துள்ள நோக்குடை யன்ப ருக்கரு ளுருவ மாகிய சித்தர்தாம் பள்ள நோக்கி வரும்பெ ரும்புனல் வற்ற நோக்கினர் பார்த்தரோ. (இ - ள்.) கள்ள நோக்கில் அகப்படாதவர் - கரவினையுடைய பார்வைக்குக் கிட்டாதவராகிய சோமசுந்தரக் கடவுள், வெள்ளம் நோக்கி அழுங்கு செம்பியன் மெலிவு நோக்கி - வெள்ளத்தைக் கண்டு மனம் வருந்தும் சோழனது துன்பத்தைப் பார்த்தருளி, கனவு போல் அவன் நனவில் விரைந்து எழீஇ வந்து - கனவின்கண் வந்தது போல அவன் நனவின் கண்ணும் விரைந்து எழுந்து வந்து, உள்ள நோக்கு உடை அன்பருக்கு - ஞானக் கண்ணாகிய அகப் பார்வையினையுடைய அன்பர்கட்கு, அருள் உருவம் ஆகிய சித்தர்தாம் - கருணை வடிவாய்த் தோன்றி யருளும் சித்தமூர்த்தி, பள்ளம் நோக்கி வரும் பெரும் புனல் - பள்ளத்தினை நோக்கி வருகின்ற வெள்ளநீரை, பார்த்து வற்ற நோக்கினர் - நோக்கி வற்றுமாறு திருவுளங் கொண்டனர். கள்ள நோக்கில் அகப்படார் என்ற கருத்தை, " உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலாற் கள்ள முள்ளவ ருக்கருள் வானலன்" என்பது முதலிய அருள் வாக்குகளிற் காண்க. நோக்கினர் - கருதினார். அரோ : அசை. (12) வறந்த வாறுக டந்து வந்து வடக்கு வாயிறி றந்துபோய் நிறைந்த காவல்க டந்து வீதிக ணீந்தி நேரியர் வேந்தனைச் சிறந்த வாடக புனித பங்கய திப்பி யப்புன லாடுவித் திறந்த வாதறை சாம கண்டர்த1 மால யம்புகு வித்தரோ. (இ - ள்.) வறந்த ஆறு கடந்து வந்து - (அங்ஙனந் திருவுளங் கொண்ட வளவில்) வற்றிய ஆற்றினை (அச்சோழ மன்னனோடும்) கடந்து வந்து, வடக்கு வாயில் திறந்து போய் - வடக்கு (மதில்) வாயிலைத் திறந்து உள்ளே சென்று, நிறைந்த காவல் கடந்து வீதிகள் நீந்தி - (போர் வீரர்கள்) நிறைந்த காவல்களைக் கடந்து பல வீதிகளையுந் தாண்டி, நேரியர் வேந்தனை - சோழமன்னனை, சிறந்த புனித ஆடக பங்கயத் திப்பியப் புனல் ஆடுவித்து - மேலான தூய பொற்றாமரையின் இனிய நீரில் மூழ்குவித்து, அறம் தவாது அறை சாம கண்டர் - அறத்தினைப் பிறழாது கூறுஞ் சாமகானஞ் செய்யும் கண்டத்தினையுடைய இறைவர், தம் ஆலயம் புகுவித்து தமது திருக்கோயிலுட் புகச் செய்து. ஆடக புனித பங்கய திப்பியம் : வட சொற்களாகலின் இயல் பாயின. திப்பியம் - இனிமை. அரோ : அசை. (13) [அறுசீரடி யாசிரிய விருத்தம்] வெம்மைசெய் கதிர்கால்1 செம்பொன் விமானசே கரத்தின் மேய தம்மையும் பணிவித் தெண்ணில் சராசர மனைத்து மீன்ற அம்மையங் கயற்க ணாளா மணங்கையும் பணிவித் துள்ளுஞ் செம்மைசெய் தின்ப வெள்ளத் தழுத்தினார் சித்த சாமி. (இ - ள்.) சித்தசாமி - அச் சித்தமூர்த்தியாகிய பெருமான, வெம்மை செய்கதிர்கால் செம்பொன் - வெப்பத்தைச் செய்கின்ற ஒளியினை வீசும் சிவந்த பொன்னாலாகிய, விமான சேகரத்தில் மேய தம்மையும் பணி வித்து - விமானங்களுள் முடிபோல்வதாகிய இந்திர விமானத்தி லெழுந்தருளிய தம்மையும் வணங்கச் செய்து, எண் இல் சர அசரம் அனைத்தும் ஈன்ற - அளவிறந்த சராசங்களனைத்தையும் பெற்றருளிய, அம்மை - தாயாகிய, அங்கயற்கண்ணாளாம் அணங்கையும் பணிவித்து - அங்கயற்கண்ணியாகிய அணங்கினையும் வணங்கச்செய்து, உள்ளம் செம்மை செய்து இன்ப வெள்ளத்து அழுத்தினார் - உள்ளத்தைத் தூய்மை செய்து பேரின்பப் பெருக்கில் ஆழச்செய்தருளினார். வெம்மை - விருப்பமுமாம.. உள்ளம் என்றது ஈண்டு உயிரைச. செம்மை செய்தல் - ஆணவமல வழுக்கைப்போக்கித் தூய்மை செய்தல். (14) எண்ணிய வெண்ணி யாங்கே யான்பெற முடித்தாய் போற்றி பண்ணியன் மறைக டேறாப் பான்மொழி மணாள போற்றி புண்ணியர் தமக்கு வேதப் பொருளுரை பொருளே போற்றி விண்ணிழி விமான மேய சுந்தர விடங்க போற்றி. (இ - ள்.) எண்ணிய எண்ணியாங்கே யான் பெற முடித்தாய் போற்றி - எண்ணியவற்றை எண்ணியவண்ணமே யான் பெறுமாறு முடித்தவனே வணக்கம்; பண் இயல் மறைகள் தேறா - பண் அமைந்த மறைகளால் அறியப்படாத, பால் மொழி மணாள போற்றி - பால்போலும் இனிய மொழிகளையுடைய அங்கயற்கணம்மையின் தலைவனே வணக்கம்; புண்ணியர் தமக்கு வேதப் பொருள் உரை பொருளே போற்றி - கண்ணுவர் முதலிய முனிவர்கட்கு வேதத்தின் பொருளை அருளிச்செய்த மெய்ப்பொருளே வணக்கம்; விண்இழி விமானம் மேய சுந்தர விடங்க போற்றி - வானினின்றும் இறங்கிய விமானத்தின்கண் எழுந்தருளிய சோமசுந்தரரென்னும் பேரழகுடையவனே வணக்கம். ‘ எண்ணிய வெண்ணியாங் கெய்துப’ என்னும் திருக்குறட்டொடர் இங்கே கருதற்பாலது. தேறாமணாள என்க. பான்மொழி: அன்மொழித்தொகை. உரை பொருள் - உரைத்த மெய்ப்பொருள் : வினைத்தொகை. (15) எவ்விட லெடுத்தேன் மேனா ளெண்ணிலாப் பிறவி தோறும் அவ்வுட லெல்லாம் பாவ மறம்பொருட் டாக வன்றோ தெவ்வுடல் பொடித்தா யுன்றன் சேவடிக் கடிமை பூண்ட இவ்வுட லொன்றே யன்றோ வெனக்குட லான தையா. (இ - ள்.) மேல்நாள் எண் இலாப் பிறவிதோறும் - முன்னாளில் எண்ணிறந்த பிறவிகள்தோறும், எவ்வுடல் எடுத்தேன் - எவ்வெவ்வுடல்கள் எடுத்தேனோ, அவ்வுடல் எல்லாம் - அவ்வுடல்களனைத்தும், பாவம் அறம் பொருட்டாக அன்றோ - தீவினையும் நல்வினையுமாகிய அவ்விரண்டின் பொருட்டாக அல்லவா, தெவ் உடல் பொடித்தாய் - பகைவனாகிய மதவேளின் உடலைநீறாக்கியவனே, உன்றன் சேவடிக்கு அடிமைபூண்ட இவ்வுடல் ஒன்றே அன்றோ - உனது சிவந்த திருவடிக்கு அடிமைபூண்ட இந்த உடல் ஒன்றுமட்டுமல்லவா, ஐயா - ஐயனே, எனக்கு உடல் ஆனது - எனக்கு உடலாய்நின்று பயன் தந்தது. பிறவி எண்ணிலாதன என்பதை, " தொல்லைநம் பிறவி யெண்ணிற் றொடுகடல் மணலுமாற்றா எல்லைய" என்னும் சிந்தாமணிச் செய்யுளாலும், பல்வகை உடலெடுத்தலை, " புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்" என்னும் வாதவூரடிகளின் மணிவாசகத்தாலுமஅறிக. அவ்வுடலெல்லாம் இருவினைப் பயன்களை நுகர்தற் பொருட்டன்றி, என் உயிர்க்கு உறுதி பயத்தற்பொருட்டு வந்தனவல்ல என்றார். பாவ மறம், செவ்வெண்; இரண்டென்னும் தொகை விகாரத்தாற் றொக்கது. (16) இன்னன பலவு மேத்தி யிறைஞ்சிப்பல் வரமும் வேண்டும் மின்னகு வேலி னானை வேந்தநீ போந்த வண்ணந் தென்னவ னறிந்தா லேதஞ் செய்யுமென் றார்த்தார்க் கண்ணி மன்னனைச் சித்த சாமி யுத்தர வழிக்கொண் டேகா. (இ - ள்.) இன்னன பலவும் ஏத்தி இறைஞ்சி - இவைபோன்ற பலவுங்கூறித் துதித்து வணங்கி, பல் வரமும் வேண்டும் - பல வரங்களையும் வேண்டுகின்ற, மின் நகு வேலினானை - மின்னலைப்போல விளங்கும் வேற்படையினை யுடைய சோழனை, வேந்த - மன்னனே, நீ போந்த வண்ணம் - நீ இங்கு வந்த செய்தியை, தென்னவன் அறிந்தால் ஏதம் செய்யும் என்று - பாண்டியன் அறிவனேல் துன்பஞ் செய்வான் என்று கூறி, ஆர் தார் கண்ணி மன்னனை - ஆத்திமாலையை யணிந்த அச் சோழ மன்னனை, சித்தசாமி - சித்த மூர்த்திகள், உத்தர வழிக் கொண்டு ஏகா - வடக்கு வழிக்கொண்டு சென்று. மேல் இரண்டு செய்யுளிலும் கூறியவற்றைச் சுட்டி ‘இன்னன’ என்றார். மின்நகு - மின்னலை எள்ளி நகும் என்றுமாம். தாராகிய கண்ணி யென்க. (17) மண்ணினை வளர்க்கும் வையை வடகரை யளவு நண்ணிப் புண்ணிய நீற்றுக் காப்புப் புண்டர நுதலிற் சாத்தி உண்ணிறை கருத்துக் கேற்ப வுறுதுணை யுனக்குண் டாகி நண்ணுக வென்று பொன்னி நாடனை விடுத்து மீண்டு. (இ - ள்.) மண்ணினை வளர்க்கும் வையை - நிலவுலகின்கண் உள்ள உயிர்களை யூட்டி வளர்க்கும் வையை யாற்றின், வடகரையளவும் நண்ணி - வடகரை வரையுஞ்சென்று, புண்ணிய நீற்றுக் காப்பு புண்டரம் நுதலில் சாத்தி - புண்ணிய வடிவாயுள்ள திரு நீற்றுக் காப்பினைத் திரிபுண்டரமாக நெற்றியில் அணிவித்து, உள் நிறை கருத்துக்கு ஏற்ப - உனது உள்ளத்தில் நிறைந்த கருத்துக்குப் பொருந்த, உறு துணை உனக்கு உண்டாகி - மிக்க துணை உனக்கு உண்டாகப்பெற்று, நண்ணுக என்று - செல்லக் கடவாய் என்று, பொன்னி நாடனை விடுத்து - காவிரி நாடனை அனுப்பி, மீண்டு - மீள. திருநீறு துன்பம் புகுதாமற் காப்பதாகலின் ‘காப்பு’ எனப்பெறும்; "ஆனநீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள்" என்பது திருவாசகம். கருத்து - சிவநேயம். உறுதுணை - இறைவன் றிருநாமம் முதலியன : மேல், " நாட்ட மூன்றவன் நாம வாள்கொடு நல்ல ருட்டுணை யாய்வழி காட்ட அன்பெனு மிவுளி மேல்கொடு கங்குல்வாய் வருவான்" என்று கூறினமையுங் காண்க. (18) [கலிவிருத்தம்] காப்புச் செய்து1 கதவில் விடைக்குறி யாப்புச் செய்தமைத் தீர்ஞ்சடைச் சித்தர்போய்த் தூப்புக் கைவரை சூழ்வட மேருவிற் கோப்புச் செய்தபொற் கோயிலின் மேயினார். (இ - ள்.) காப்புச் செய்து - முன் திறந்த கதவினைச் சாத்தி, கதவில் விடைக்குறி யாப்புச்செய்து அமைத்து - அதன்கண் இடப முத்திரையைப் பொறித்தமைத்து, ஈர்ஞ்சடைச் சித்தர்போய் - குளிர்ந்த சடையையுடைய சித்தசாமி சென்று, தூப்புக் கைவரை சூழ் - துளையையுடைய துதிக்கையையுடைய யானைகள் சூழ்ந்து நின்று சுமக்கும், வடமேருவில் கோப்புச் செய்த - வடக்கின்கண் உள்ள மேருமலையைப்போல் இயற்றிய, பொன் கோயிலில் மேயினார் - அழகிய விமானத்தின்கண் எழுந்தருளினார். தூம்பு, தூப்பு என வலித்தது; கைக்கு அடை. கைவரைசூழ் மேருவின் என இல்பொருளுவமை யாக்கலுமாம். கோப்புச்செய்த - ஒழுங்குற இயற்றிய. (19) கங்கு லின்கருங் கைகுறைப் பானெனச் செங்கை நீட்டித் தினகரன் றோன்றலும் எங்க ணாயக னிட்ட குறியறிந் தங்கண் வாயி றிறப்பவ ரையுறா. (இ - ள்.) கங்குலின் கருகை குறைப்பான் என - இரவாகிய அரக்கியின் கருமையாகிய கையினைத் தறிப்பவன்போல, தினகரன் செங்கை நீட்டித் தோன்றலும் - சூரியன் சிவந்த கிரணமாகிய கைகளை நீட்டித் தோன்றுதலும், அங்கண் வாயில் திறப்பவர் - அவ்விடத்து அவ்வாயிலைத் திறப்பவர்கள், எங்கள் நாயகன் இட்ட குறி அறிந்து ஐயுறா - எங்கள் பெருமானாகிய சோமசுந்தரக்கடவுள் இட்ட விடைக் குறியினைக்கண்டு ஐயுற்று. கருங்கை செங்கை என்றது சொல் முரண். (20) மற்றை வாயில்கண் மூன்றினும் வல்லைபோய் உற்று நோக்கினர் தாநென்ன லொற்றிய கொற்ற மீனக் குறிபிழை யாமைகண் டெற்றி தாங்கொலென் றேந்தன்மு னெய்தினார். (இ - ள்.) மற்றை மூன்று வாயில்களினும் - ஏனை மூன்று வாயில் களினும், வல்லைபோய் உற்று நோக்கினர் - விரைந்துசென்று உற்றுப் பார்த்து, தாம் நென்னல் ஒற்றிய - தாம் நேற்று வைத்த, கொற்ற மீனக்குறி பிழையாமை கண்டு - வெற்றி பொருந்திய கயல் முத்திரை பிறழாமையைக் கண்டு, இது எற்று ஆம் கொல் என்று - இது யாதாய் முடியுமோ என்று, ஏந்தல் முன் எய்தினார் - மன்னன் முன்னே சென்றனர். நோக்கினர் : முற்றெச்சம். ஒரு புறம் குறி பிறழ்ந்திருத்தலின் முடிபு யாதாகுமோ எனத் துணுக்குற்றா ரென்க. (21) போற்றி மன்னநம் பொன்னங் கயற்குறி மாற்றி யுத்தர வாயிற் கதவதில் ஏற்றி லச்சினை யிட்டவர் யாரையென் றாற்றல் வேந்த வறிகிலம் யாமென்றார். (இ - ள்.) மன்ன போற்றி - வேந்தனே வணக்கம், உத்தரவாயில் கதவில் - வடக்கு வாயிற் கதவின்கண், நம் பொன் அம் கயற்குறி மாற்றி - நமது அழகிய மீனக்குறியை மாற்றி, ஏற்று இலச்சினை இட்டவர் யார் என்று - விடைக் குறியினை இட்டவர் யார் என்று, ஆற்றல் வேந்த அறிகிலம் யாம் என்றார் - வலியமைந்த வேந்தனே! யாங்களறியோம் என்று கூறினர். கயற்குறி மாற்றி ஏற்றிலச்சினை இடப்பட்டுளது, அங்ஙனம் இட்டவர் யாரென அறிகிலம்; என விரித்துரைக்க. பொன் அம் எனும் இரண்டும் அழகினை உணர்த்தின; அம் சாரியையுமாம். கதவதில், அது : பகுதிப்பொருள் விகுதி. யாரை, ஐ : சாரியை. (22) வையை நாடனும் வந்தது நோக்குறீஇ ஐய வின்னதோ ரற்புத மாயையைச் செய்ய வல்லவர் யாரெனத் தேர்கிலான் ஐய மெய்தி யகன்மனை நண்ணினான். (இ - ள்.) வையை நாடனும் வந்து அது நோக்குறீஇ - வையை யாறு பாயும் நாட்டையுடைய பாண்டியனும் வந்து அதனை நோக்கி, ஐய இன்னது ஓர் அற்புத மாயையை - வியப்பினையுடைய இந்த அதிசய மாயையை, செய்ய வல்லவர் யார் எனத் தேர்கிலான் ஐயம் எய்தி - செய்தற்கு வல்லவர் யாரென்று தெரியாது ஐயுற்று, அகல்மனை நண்ணினான் - அகற்சி பொருந்திய தனது கோயிலை அடைந்தான். அளபெடை சொல்லிசை நிறைக்க வந்தது. ஐய ஐ என்னும் வியப்புணர்த்தும் உரிச்சொல்லடியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம். தேர்கிலான் : முற்றெச்சம். (23) மறுத்த வுண்டியன் மாமலர்ப் பாயலை வெறுத்த கன்றரை மேற்பள்ளி கொள்ளவும் பொறுத்த னன்றுயின் றானிருட் போழ்தினிற் கறுத்த கண்டர் கனவினிற் கூறுவார். (இ - ள்.) மறுத்த உண்டியன் - உணவை மறுத்தவனாய், மாமலர்ப் பாயலை வெறுத்து - பெருமை பொருந்திய மலர்ப் படுக்கையை வெறுத்து, அகன் தரைமேல் பள்ளிகொள்ளவும் பொறுத்தனன் துயின்றான் - அகன்ற தரையின் மீது பள்ளி கொள்ளவும் மனம் பொறுத்து உறங்கினன்; இருள் போழ்தினில் - இருட் போதில், கறுத்த கண்டர் கனவினில் கூறுவார் - கரிய திருமிடற்றினையுடைய சோமசுந்தரக் கடவுள் கனவில்கண் வந்து கூறியருளுவார். உணவு மறுத்தல் - உணவுண்ணாமை. மலர்ப்பாயல் - பூவணை; மலர் பரப்பிய பாயலுமாம். மலரணையிற் றுயிலுதற் குரியோர் தரையிற் றுயிலுதல் அரிதாகலின் ‘பொறுத்தனன் றுயின்றான்’ என்றார். இருட் போழ்தினில் கனவினிற் கூறுவார் என்க; இருட் போழ்துபோலக் கறுத்த கண்டம் என்றுமாம். பொறுத்தனன் ; முற்றெச்சம். (24) மட்ட லம்பிய தாதகி மாலையான் உட்ட தும்பி யொழுகிய வன்பினாற் கட்டி லங்கெயிற் கச்சியிற் காடெலாம் வெட்டி நம்புடை வித்திய பத்தியான். (இ - ள்.) மட்டு அலம்பிய தாதகி மாலையான் - தேன் சிந்தும் ஆத்தி மாலையை யணிந்த சோழன், உள் ததும்பி ஒழுகிய அன்பினால் உள்ளத்தில் நிறைந்து வழிந்த அன்பினாலே, கட்டு இலங்கு எயில் கச்சியில் - காவலாக விளங்கும் மதிலையுடைய காஞ்சிமா நகரின்கண், காடு எலாம் வெட்டி நம்புடை வித்திய பத்தியான் - காடு அனைத்தையும் வெட்டி நம்மிடத்தும் பத்தியாகிய விதையை விதைத்தவன். கட்டு - காவல் என்னும் பொருட்டு; கட்டப்பட்ட என்றுமாம். காடெலாம் வெட்டி என்றதற்கேற்பப் பத்தி வித்தியவன் என்றார்; காட்டினை அழித்து நாடாக்கி அந்நாடு முழுதும் சிவபத்தி வளரச் செய்தவன் என்பது கருத்து. (25) வந்து நம்மை வழிபட வேண்டினான் இந்த வாயி றிறந்தழைத் தின்னருள் தந்து மீள விடுத்துப்பின் றாட்கொளீஇ நந்த மால்விடை நாம்பொறித் தேமெனா. (இ - ள்.) வந்து நம்மை வழிபட வேண்டினான் - (அவன் இங்கு) வந்து நம்மை வணங்க விரும்பினான், நாம் இந்த வாயில் திறந்து - நாம் இந்த வடக்கு வாயிலைத் திறந்து, அழைத்து இன் அருள் தந்து - (அவனை உள்ளே) அழைத்து இனிய அருள் பாலித்து, மீள விடுத்துப் பின் தாள் கொளீஇ - மீண்டும் அனுப்பிவிட்டுப் பின் தாளிறுக்கி, நந்தம் மால் விடை பொறித்தேம் எனா - நமது பெரிய விடை யிலச்சினையை வைத்தோமென்று. தாள் - தாழக்கோல்; கொளீஇ - கொளுவி; செறித்து, நந்தம்: தம் சாரியை. (26) அருளி னானையந் தேற்றி யகன்றபின் மருளி னீங்கி மலர்க்கண் விழித்தெழீஇ வெருளி னான்வெயர்த் தான்விம்மி னான்பல பொருளி னாற்றுதித் தான்குல பூடணன். (இ - ள்.) அருளினான் - அருளையுடைய சோமசுந்தரக் கடவுள், ஐயம் தேற்றி அகன்ற பின் - ஐயத்தைத் தெளிவித்து நீங்கிய பின், குல பூடணன் - குல பூடண பாண்டியன், மலர்க் கண் விழித்து எழீஇ - மலர்போலும் கண்டுயி லுணர்ந்து எழுந்து, மருளின் நீங்கி - ஐயுறவினின்றும் நீங்கி, வெருளினான் வெயர்த்தான் விம்மினான் - அஞ்சி வியர்த்து உடல் பூரித்து, பல பொருளினால் துதித்தான் - பொருள் நிறைந்த பல பாக்களாலே துதித்தான். அருளினான் என்பதனை எச்சமாக்கி, அருள்புரிந்து என்றுரைத்தலுமாம். ஐயம் தேற்றி -ஐயத்தின் நீக்கித் தெளிவித்து. வெருளினான் முதலிய மூன்றும் முற்றெச்சம். பொருள் - பொருளையுடைய பாடல்; சொற்களுமாம். (27) வள்ள லன்புக் கெளிவந்த மாண்புகண் டுள்ள வுள்ளநின் றூற்றெழு மற்புத வெள்ள மும்பர மானந்த வெள்ளமுங் கொள்ளை கொண்டுதன் கோமனை நீங்கினான். (இ - ள்.) வள்ளல் - சோமசுந்தரக்கடவுள், அன்புக்கு எளிவந்த மாண்பு கண்டு - அன்பினுக்கு எளியனாய் வெளிவந்த மாட்சியை நோக்கி, உள்ள உள்ள நின்று ஊற்று எழும் அற்புத வெள்ளமும் - நினைக்குந்தோறும் இடையறாது சுரந்து எழுகின்ற அதிசய வெள்ளமும், பரமானந்த வெள்ளமும் கொள்ளை கொண்டு - சிவானந்த வெள்ளமும் தன்னைக் கொள்ளை கொள்ள, தன் கோமனை நீக்கினான் - தனது அரண்மனையை நீங்கினான். உள்ள உள்ளத்தினின்று ஊற்றெழும் என உரைத்தலுமாம். அற்புதத்தைச் சிவஞானம் என்றும், பரமானந்தத்தைச் சிவபோகம் என்றும் உரைப்பாரு முளர். அளவின்மை தோன்ற வெள்ளம் என்றார். கொண்டு என்பதைக்கொள்ள வெனத் திரிக்க. (28) அளிய றாமனத் தன்புடை யன்பருக் கெளிய ராடலை யார்க்கும் வெளிப்படத் தெளியு மாறு தெளிவித்துத் தன்னைப்போல் விளிவிலா வின்ப வெள்ளத் தழுத்தினான். (இ - ள்.) அளி அறா மனத்து அன்பு உடை அன்பருக்கு - உயிர் களிடத்து அருள் நீங்காத மனத்தின்கண் அன்பு நிறைந்த அடியார் கட்கு, எளியர் ஆடலை - எளியராயுள்ள சோமசுந்தரக்கடவுளின் திருவிளையாடலை, யார்க்கும் வெளிப்படத் தெளியுமாறு தெளிவித்து - யாவருக்கும் புலப்படத் தெளியும் வண்ணம் தெளிவித்து, தன்னைப் போல் விளிவு இலா இன்ப வெள்ளத்து அழுத்தினான் - தன்னைப்போல யாவரும் அழியாத பேரின்ப வெள்ளத்தில் முழுகும்படி அழுத்தினான். அளி - கனிவுமாம். தன்னைப்போல் முழுகுமாறு அழுத்தினான் என விரிக்க. (29) [கொச்சகக்கலிப்பா] கோடாத செங்கோலும் வெண்குடையுங் கோமுடியும் ஏடா ரலங்க லிராசேந் திரற்களித்துத் தோடா ரிதழியான் றாட்கமலஞ் சூடிவான் நாடா ளரசுரிமை பெற்றா னரபதியே. (இ - ள்.) நரபதி - குலபூடண பாண்டியன், கோடாத செங்கோலும் வெண்குடையும் - கோணாத செங்கோலையும் வெண்கொற்றக் குடையையும், கோ முடியும் - அரசு முடியையும், ஏடு ஆர் அலங்கல் இராசேந்திரற்கு அளித்து - இதழ்கள் நிறைந்த மலர் மாலையை யணிந்த இராசேந்திர பாண்டியனுக்குக் கொடுத்து, தோடு ஆர் இதழியான் - இதழ்கள் நிறைந்த கொன்றை மாலையையுடைய இறைவனது, தாள் கமலம் சூடி - திருவடித் தாமரையைத் (தனது முடியில்) அணிந்து, வான் நாடு ஆள் அரசு உரிமை பெற்றான் - வான நாட்டை ஆளும் அரசுரிமையைப் பெற்றனன். கோடாத என வந்தமையால் செங்கோல் என்பது கோல் என்னுந் துணையாய் நின்றது; என்றும் கோடுதலில்லாத என்றுமாம். செங்கோல் வெண்குடை என்பன சொல் முரண். இராசேந்திரனை முடிசூட்டி என்பார் ‘இராசேந்திரற் களித்து,’ என்றார். (30) ஆகச் செய்யுள் - 1818. முப்பத்தைந்தாவது தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம் [அறுசீரடி யாசிரிய விருத்தம்] சம்பு மதுரைப் பரனிரவு தனியே வந்து தனைப்பணிந்த வெம்பு கதிரோன் மருமானை விடுத்து மீண்டு தாழிறுக்கி அம்பொற் கதவின் விடைபொறித்த தறைந்துந் தென்ன னடுபடைக்கு வம்பு மலர்தோய் புனற்பந்தர் வைத்துக் காத்த வகைசொல்வாம். (இ - ள்.) சம்பு மதுரைப் பரன் - சம்புவாகிய மதுரைச் சோமசுந்தரக் கடவுள், இரவு தனியே வந்து தனைப் பணிந்த - இரவில் ஒருவனாய் வந்து தன்னை வணங்கிய, வெம்பு கதிரோன் மருமானை- வெப்பமாகிய கிரணத்தையுடைய சூரியன் மரபினனாகிய சோழனை, விடுத்து - அனுப்பி, மீண்டு தாழ் இறுக்கி - திரும்பித் தாழிட்டு, அம்பொன் கதவின் விடை பொறித்தது அறைந்தும் - அழகிய பொன்னாலாகிய கதவின்கண் விடை யிலச்சினையிட்ட திருவிளை யாடலைக் கூறினோம்; தென்னன் அடுபடைக்கு - பாண்டியனது போர் செய்யும் படைகளுக்கு, வம்பு மலர் தோய் புனல் பந்தர் வைத்துக் காத்த வகை சொல்வாம் - மணத்தினையுடைய மலர் தோய்ந்த தண்ணீர்ப் பந்தர் வைத்துக் காத்தருளிய திருவிளையாடலை (இனிக்) கூறுவாம். அறைந்தும்; இறந்தகாலத் தனித் தன்மைப் பன்மைமுற்று. தண்ணீர்க்கு மலரால் மண மூட்டுதலை, " ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு" என்னும் நாலடியார்சசெய்யுளா னறிக. (1) தென்ன னரச புரந்தரன்கோல் செலுத்து நாளிற் காடெறிந்த மன்னன் பின்னர் வெளிப்படையாய்ப் போந்து போந்து மதுரேசன் பொன்னங் கமலத் தாள்வணங்கிப் போவான் முன்னிப் பொரும்பொருநைக் கன்னி நாடன் கேண்மைபெற விடுத்தான் வரிசைக் கையுறையே. (இ - ள்.) தென்னன் அரச புரந்தரன் கோல் செலுத்து நாளில்- பாண்டியனாகிய இராசேந்திரன் செங்கோல் செலுத்தும் நாளில், காடு எறிந்த மன்னன் - காடுவெட்டிய சோழன், பின்னர் வெளிப்படையாய்ப் போந்து போந்து - பின் யாவருமறிய வெளிப் படையாய் வந்துவந்து, மதுரேசன் பொன் அம் கமலத்தாள் வணங்கிப் போவான் கருதி - சோம சுந்தரக்கடவுளின் அழகிய பொற்றாமரை மலர்போன்ற திருவடிகளை வணங்கிப் போகக் கருதி, பொரும் பொருநைக் கன்னி நாடன் - கரையை மோதும் பொருநையாற்றினை யுடைய கன்னி நாடனாகிய இராசேந்திர பாண்டியனது, கேண்மை பெற - நட்பைப் பெறுதற்கு, வரிசைக் கையுறை விடுத்தான் - வரிசையாகிய கையுறையை அனுப்பினான. இந்திரனுக்குப் புரந்தரன் என்பது ஒரு பெயராகலின் இராசேந்திரனை அரசபுரந்தரன் என்றார். போவான் : வினையெச்சம். வரிசை, கையுறை என்பன காணிக்கை என்னும் பொருளன.(2) பொன்னி நாடன் வரவிடுத்த பொலம்பூ ணாடை முதற்பிறவுங் கன்னி நாடன் கைகவர்ந்து தானுங் கலக்குந் தொடர்பினால் உன்னி வேறு கையுறையுய்த் துறவு செய்ய வுவப்பெய்திச் சென்னி காதன் மகட்கொடுப்ப னிசைந்தா னந்தச் செழியற்கு. (இ - ள்.) பொன்னி நாடன் வரவிடுத்த - காவிரி நாடனாகிய சோழ மன்னன் வரவிடுத்த, பொலம் பூண் ஆடை முதல் பிறவும்- பொன்னாலாகிய அணிகலன்களையும் பொன்னாடை முதலாக வுள்ள பிற பொருளையும், கன்னிநாடன் கைகவர்ந்து - கன்னி நாடனாகிய பாண்டியன் ஏற்றுக்கொண்டு, தானும் கலக்கும் தொடர்பினால் கையுறை உய்த்து உறவுசெய்ய - வேறு காணிக்கை விடுத்து நட்புச் செய்ய, சென்னி - சோழன், உவப்பு எயதி- மகிழ்ச்சியுற்று, அந்தச் செழியற்கு - அந்த இராசேந்திர பாண்டியனுக்கு, காதல் மகள் கொடுப்பான் இசைந்தான் - தன் அன்புள்ள மகளைக் கொடுத்தற்கு மனமிசைந்தான். பொலம், பொன் என்பதன் றிரிபு. கலக்குந் தொடர்பு - ஒருவர் ஒருவ ரோடு அளவளாவும் தொடர்பு. தானும் வேறு கையுறையுய்த்து என்க.(3) செழியன் றனக்கு வரையறுத்த செய்தி கேட்டுச் செம்பியர்கோன் கழியன் புடைய குலமகளைத் தான்போய்க் கொள்வான் கருதிமதி வழிவந் தவற்குத் தம்பியென வந்த வரச சிங்கமெனும் பழியஞ் சாதான் வஞ்சித்துப் பழனக் காஞ்சிப் பதிபுகுவான். (இ - ள்.) செழியன் தனக்கு வரையறுத்த செய்தி கேட்டு- இராசேந்திர பாண்டியனுக்கு உறுதி செய்த செய்தியினைக் கேட்டு, செம்பியர்கோன் கழி அன்பு உடைய குலமகளை - சோழ மன்னனது மிக்க அன்புடைய சிறந்த புதல்வியை, தான் போய்க் கொள்வான் கருதி - தான் போய் மணந்து கொள்ளக் கருதி, மதி வழிவந்த அவற்குத் தம்பி என வந்த - சந்திரன் மரபில் வந்தவனாகிய அவனுக்குத் தம்பி என்று சொல்லத் தோன்றிய, அரசசிங்கம் எனும் பழி அஞ்சாதான் - அரச சிங்கனென்னும் பெயரினையுடைய பழியினை அஞ்சாத ஒருவன், வஞ்சித்துப் பழனக் காஞ்சிப்பதி புகுவான் - (முன்னவனை) வஞ்சித்து வயல்சூழ்ந்த காஞ்சிநகரிற் செல்வானாயினன். கொள்வான் : வினையெச்சம். வந்த அவற்கு என்பது வந்தவற்கு எனத் தொகுத்தலாயிற்று. தம்பி யெனற்குத் தகாதவன் என்பார் ‘தம்பி யென வந்த’ என்றார். அரச சிங்கம் - இராச சிம்மன். தமையனுக்கு மனைவியாக வரையறுக்கப் பட்டவள் தனக்கு அன்னை போல்வாளாகவும் அவளை மணக்கக் கருதினமையின் ‘பழியஞ்சா தான்’ என்றார். (4) காஞ்சிப் பதிமுன் குறுகுமிளங் காவ லோனைக் கடற்சேனை தாஞ்சுற் றியவந் தெதிர்கொடுபோய்த் தன்முன் றனக்கென் றிருந்தமகள் ஆஞ்சிற் றிடையை மணம்புணர்த்தி யந்த மருகற் கரசுநிலை வாஞ்சித் தரச புரந்தரனைப் பிடிக்க மதித்தான் வனமெறிந்தான். (இ - ள்.) காஞ்சிப்பதிமுன் குறுகும் - காஞ்சி நகரை நோக்கி வரும்,இளங்காவலோனை - சிற்றரசனாகிய அரச சிங்கனை, வனம் எறிந்தான் - காடு வெட்டிய சோழன், கடல்சேனை தாம் சுற்றிய வந்து எதிர்கொடுபோய் - கடல்போன்ற சேனைகள் சூழ எதிர்வந்து அழைத்துச் சென்று, தன் முன் தனக்கு என்று இருந்த மகள் ஆம் சிற்றிடையை - அவன் தமையனுக்கு என்று வரையறுத்திருந்த சிறிய இடையை யுடையவளாகிய தன் புதல்வியை, மணம் புணர்த்தி- மணம் புரிவித்து, அந்த மருகற்கு அரசு நிலை வாஞ்சித்து - அந்த மருமகனுக்கு அரசுரிமை (கிடைத்தலை) விரும்பி, அரச புரந்தரனைப் பிடிக்க மதித்தான் - இராசேந்திரனைப் பிடிக்கக் கருதினான். சுற்றிய : செய்யிய வென்னும் வினையெச்சம். அவன்றன் முன்றனக்கு என்க.வனமெறிந்தான் : பெயர். (5) [எழுசீரடி யாசிரிய விருத்தம்] மரும கன்ற னுடனெ ழுந்து மாம னான வளவர்கோன் பொரும கன்ற சேனை யானை புடைநெ ருங்க மதிவழித் திரும கன்றன் மேல மர்த்தி றங்கு றித்து முரசறைந் துரும கன்ற பல்லி யம்மொ லிப்ப வந்து ளானரோ. (இ - ள்.) மாமனான வளவர்கோன் - மாமனாகிய சோழ மன்னன், மருமகன் உடன் எழுந்து - மருமகனோடு புறப்பட்டு, பொரும் அகன்ற சேனை யானை புடை நெருங்க - போர் செய்தற்குரிய பரந்த சேனையும் யானையும் பக்கத்தில் நெருங்கிவர, மதிவழித் திருமகன்மேல் அமர்த்திறம் குறித்து - சந்திரன் மரபினனாகிய இராசேந்திர வழுதியின்மேல் போர் செய்தலைக் குறித்து. முரசு அறைந்து - முரசு அறைவித்து, உரும் அகன்ற பல்இயம் ஒலிப்ப வந்துளான் - இடியும் அஞ்சி அகலுதற் கேதுவாகிய பல இயங்களும் ஒலிப்ப வந்தனன். சிறப்பு நோக்கி யானையை வேறு பிரித்துச் சேனை யானை என்றார். மருமகன்றன், திருமகன்றன் என்பவற்றில் தன் : சாரியை. அகன்ற - அகலுதற்கேதுவாகிய. அரோ : அசை. (6) திரண்ட திர்ந்தெ ழுந்து வந்த சென்னி சேனை தன்னகர்க் கிரண்டு யோச னைப்பு றத்தி றுக்கு முன்ன ரொற்றால் தெருண்டு தென்னன் மாட நீடு கூடன் மேய சிவனதாள் சரண்பு குந்து வேண்டு கென்று சார்ந்து தாழ்ந்து கூறுவான். (இ - ள்.) எழுந்து திரண்டு அதிர்ந்து வந்த சென்னி சேனை - (போர்குறித்து) எழுந்து நெருங்கி முழங்கி வந்த சோழனுடைய அப் படைகள், தன் நகர்க்கு இரண்டு யோசனைப் புறத்து இறுக்கும் முன்னர் - தனது நகருக்கு இரண்டு யோசனையில் வந்து தங்குதற்கு முன்னரே, ஒற்றரால் தென்னன் தெருண்டு - ஒற்றர்களாலே பாண்டியன் அறிந்து கொண்டு, மாடம் நீடு கூடல்மேய சிவனதாள் - மாடங்கள் நிறைந்த கூடலின்கண் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுளின் திருவடிகளில், சரண்புகுந்து வேண்டுகு என்று - அடைக்கலம் புகுந்து குரையிரப்பேனென்று கருதி, சார்ந்து தாழ்ந்து கூறுவான் - சென்று வணங்கிச் சொல்லுவான். சிவன, அகரம் ஆறனுருபு. "சிவன தாட் சிந்தியாப் பேதைமார் போல" என்பது தேவாரம். வேண்டுகு - வேண்டுவேன்; கு : தன்மை யொருமை யெதிர்கால விகுதி. (7) அன்று பாதி யிரவில் வந்து னடிப ணிந்து தமியனாய்ச் சென்ற சென்னி யென்னு நின்ன திருவ டிக்க ணன்பினான் இன்று மந்நி லைய னா1யெ னக்கு வேண்டு வனவிடுத் தொன்று கேண்மை புரிகு வானுளத்தி லொன்றை யுன்னினான். (இ - ள்.) அன்று பாதி இரவில் தமியனாய் வந்து - அன்று அரையிரவில் ஒருவனாய் வந்து, உன் அடி பணிந்து சென்ற - நினது திருவடியை வணங்கிப்போன, சென்னி என்னும் நின்ன திருவடிக்கண் அன்பினான் - காடு வெட்டிய சோழனென்னும் உன் திருவடியின் கண் அன்புடையவன், இன்றும் அந்நிலையன் ஆய் - இப்பொழுதும் அந் நிலையை யுடையவனாதற்கு, எனக்கு வேண்டுவன விடுத்து -எனக்கு வேண்டும் பொருள்களை அனுப்பி, ஒன்று கேண்மை புரிகுவான் - கலந்த நட்பினைப் பெற விரும்பியவன், உளத்தில் ஒன்றை உன்னினான் - மனத்தின்கண் மற்றொன்றைக் கருதினான். நின்ன, அகரம் ஆறனுருபு. நிலையனாய், நிலையனாக. ஒன்று- அதற்கு மாறாய தொன்று. (8) அறத்தி னுக்கு ளாகி யன்று நின்ற நீய வன்செயும் மறத்தி னுக்கு ளாகி யின்று வன்மை செய்வ தேயறப் புறத்தி னார்பு ரம்பொ டித்த புண்ணி யாவெ னக்கரைந் துறைத்து வேண்டி னான் வேலை யும்பர் நாத னருளினால். (இ - ள்.) அறப்புறத்தினார் புரம்பொடித்த புண்ணியா - அறத்திற்கு வேறாகிய மறத்தினையுடையார் முப்புரங்களையும் நீறாக்கிய புண்ணியனே, அன்று அறத்திற்கு உள்ளாகி நின்ற நீ- அவன் வந்து வணங்கிய அப்பொழுது அறத்திற்கு உடன் பட்டு நின்ற நீ, இன்று அவன் செய்யும் மறத்தினுக்கு உள்ளாகி வன்மை செய்வதே எனக் கரைந்து - இன்று அவன் செய்யும் தறுகண்மைக்கும் உடன்பட்டு நின்று கொடுமை செய்வது நன்றோ எனக் கூறி, உறைத்து வேண்டினான் - உறைப்புடன் குறையிரந்தான், அவ்வேலை - அப்போது, உம்பர் நாதன் அருளினால் - தேவர்க்கு நாயகனாகிய சோமசுந்தரக்கடவுளின் திருவருளால். செய்வதே - செய்வது அழகிதோ என்றபடி அறப்புறம் - பாவம்; "அறங்கடை" என்புழிப்போல. தீயோரை யொறுத்தல் அறமாகலின் ‘புரம் பொடித்த புண்ணியன்’ என்றார். உறைத்து - அழுத்தமுற்று; "திருத்தொண்டி னுறைப்பாலே" என்பது காண்க. உள்ளாகி, அவ்வேலை என்பன ளகர வகரம் தொக்கு நின்றன. அறப் புறத்தினார் புரம் பொடித்த என்னும் அடை இன்றும் அறத்திற்கு மாறாகியவனை அழிக்கற்பாலை என்னும் கருத்துடன் கூடி யிருத்தலால் இது கருத்துடை யடையணி. (9) மெய்து றந்த வாய்மை யொன்று விண்ணி னின்று மண்ணலே ஐது நுங்கள் சேனை யோடு1 மாக வத்து நாளைநீ எய்தி வந்த தெவ்வ ரோடெ திர்ந்து ருத்து நின்றுபோர் செய்தி வென்றி நின்ன தாதல் செய்து மென்றே ழுந்ததால். (இ - ள்.) விண்ணின் நின்றும் மெய்துறந்த வாய்மை ஒன்று- வானினின்றும் அசரீரி மொழி ஒன்று, அண்ணலே - வேந்தனே நாளை நீ நுங்கள் ஐது சேனையோடும் ஆகவத்து எய்தி - நாளை நீ நும் அற்பமாகிய சேனையோடும் போர்க்களஞ் சென்று, வந்த தெவ்வரோடு எதிர்ந்து, உருத்து நின்று போர் செய்தி - வந்த பகைவரோடு எதிர்த்துச் சினந்து நின்று போர் புரிவாயாக; வென்றி நின்னது ஆதல் செய்தும் - வெற்றி நின்னுடையதாகச் செய்வோம்; என்று எழுந்தது - என்று உண்டாயது. மெய் துறந்த வாய்மை - அசரீரி வாக்கு; அசரீரி - சரீரம் இல்லது. வாய்மை ஈண்டு மொழியென்னும் பொருட்டு. ஐது - நுண்ணியது. அழகியதாக என்றுமாம். நுங்கள் நீ எனப் பன்மை யொருமை மயங்கிற்று. ஆகவம் - போர்க்களம். ஆல் : அசை. (10) காய வாணி செவிநு ழைந்த காலை வேந்த ரிந்திரன் நாய னார டிக்கணே நயந்த வன்பு முவகையும் ஆய வேலை வீழந்து தாழ்ந்த கன்று தன்னி ருக்கைபோய் மேயி னானி மிர்ந்த கங்குல் விடியு மெல்லை நோக்குவான். (இ - ள்.) காயவாணி செவி நுழைந்த காலை - ஆகாய வாக்குச் செவியிற் புகுந்த பொழுது, வேந்தர் இந்திரன் - இராசேந்திர பாண்டியன், நாயனார் அடிக்கண் நயந்த - இறைவரது திருவடிக்கண் விரும்பிய, அன்பும் உவகையும, ஆயவேலை வீழ்ந்து தாழ்ந்து அகன்று - அன்பும் மகிழ்ச்சியுமாகிய கடலுள் வீழ்ந்து வணங்கி அங்கு நின்றும் நீங்கி, தன் இருக்கைபோய் மேயினான் - தனது இருப்பிடஞ் சென்று அடைந்து, நிமிர்ந்த கங்குல் விடியும் எல்லை நோக்குவான்- மிகுந்த இரவு விடியுமெல்லையை நோக்குவானாயினன். காயம் - ஆகாயம்; முதற்குறை; இது காயமென்றே தொல்காப்பியம் முதலியவற்றில் வழங்குவது ஆராய்தற் குரியது. வாணி- வாக்கு. இராசேந்திரனை முன்பு அரச புரந்தரன் என்றதுபோல் ஈண்டு வேந்த ரிந்திரன் என்றார். நாயன் - தலைவன். விடியலை எதிர் நோக்கினா னாகலின் இரவு மிக்குத் தோன்றிற் றென்பார் ‘நிமிர்ந்த கங்குல்’ என்றார். (11) கழித்த கங்கு லிறவி சும்பு கண்வி ழிக்கு முன்னரே விழித்தெ ழுந்து சந்தி யாதி வினைமு டித்து வானநீர் சுழித்துலம்பு வேணி யண்ண றூய பூசை செய்தெழீஇத் தெழித்தெ ழுந்த சேனை யோடு செருநி லத்தை நண்ணினான். (இ - ள்.) கழித்த கங்குல் இற - மிக்க இராப் பொழுது ஒழிய, விசும்பு கண்விழிக்கு முன்னரே - ஆகாயம் கண் விழிக்கு முன்னரே, விழித்து எழுந்து சந்தி ஆதிவினை முடித்து - விழித்தெழுந்து சந்தி முதலிய வினைகளை முடித்துக்கொண்டு, வான நீர் சுழித்து அலம்பு வேணி அண்ணல் - கங்கைநீர் சுழித்து ஒலிக்கும் முடியினையுடைய இறைவனது, பூசை செய்து - பூசையை முடித்து, எழீஇ - எழுந்து, தெழித்து எழுந்த சேனையோடு செரு நிலத்தை நண்ணினான்- ஆரவாரித்தெழுந்த படையுடன் போர்க்களத்தை அடைந்தான். கழிந்த என்பது கழித்த என வலித்தலாயிற்று. ஞாயிற்றை விசும்பிற்குக் கண்ணாக்கி, ஞாயிறு தோன்றுதலை விசும்பு கண்விழித்தல் என்றார்; "வான்கண் விழியா வைகறை யாமத்து" என்றார் இளங்கோவடிகளும். காலை மாலையாகிய சந்திகளிற் செய்யப் படும் நாட்கடன் சந்தி எனப்படும். தெழித்தல் - உரப்புதல். (12) அலைசி றந்த சலதி மீதொ ராறு செல்லு மாறுபோல் மலைசி றந்த நேரி வெற்பன் மள்ளர் சேனை வெள்ளமேற் கலைசி றந்த மதிநி றைந்த கன்னி நாடு காவலான் சிலைசி றந்த சிறிய சேனை சென்ற லைத்து நின்றதே. (இ - ள்.) அலை சிறந்த சலதி மீது ஒரு ஆறு செல்லு மாறுபோல் - அலைமிக்க கடலின்மேல் ஒரு நதி சென்று பாயுமாறுபோல, மலைசிறந்த நேரி வெற்பன் - மலைகளிற் சிறந்த நேரி மலையினையுடைய சோழனது, மள்ளர் சேனை வெள்ளமேல் - படை வீரராகிய கடலின்மேல், கலை சிறந்த மதி நிறைந்த கன்னி நாடு காவலான் - கலைப்பயிற்சியாற் சிறந்த அறிவு நிறைந்த கன்னி நாட்டு மன்னனாகிய பாண்டியனது, சிலை சிறந்த சிறிய சேனை சென்று அலைத்து நின்றது - விற்போரிற் றலைசிறந்த சிறியதாகிய சேனை சென்று வருத்தி நின்றது. சிறத்தல் - மிகுதல், மேம்படுதல். சோழன் சேனையின் பெருமையும் பாண்டியன் சேனையின் சிறுமையும் தோன்றக் கடலின்மேல் ஆறு செல்லுமாறுபோல் என உவமை கூறினார். மள்ளர் - வீரர். கலை சிறந்த மதி நிறைந்த என்னும் அடை நாட்டிற்கும் காவலானுக்கும் பொருந்தும். (13) [அறுசீரடியாசிரிய விருத்தம்] உருமு வன்ன குரலினா ருலவை யன்ன செலவினார் வெருவு தீயின் வெகுளியார் வெடித்த வீர நகையினார் செருவின் மான வணியினார் சினைஇ மடித்த வாயினார் இருவர் சேனை மள்ளரும் மெதிர்ந்து கைக லந்தனர். (இ - ள்.) உருமு அன்ன குரலினார் - இடிபோன்ற குரலினை யுடைய வரும், உலவை அன்ன செலவினார் - காற்றினைப் போன்ற கடிய செலவினையுடையவரும், வெருவு தீயின் வெகுளியார் - அஞ்சப்படும் தீப்போன்ற சினமுடையவரும், வெடித்த வீர நகையினார்- வெடிப்புடன் தோன்றிய வீர நகையினை உடையவரும், செருவில் மான அணியினார் - போரின்கண் மானமாகிய அணியினையுடையவரும், சினைஇ மடித்த வாயினார் - சினந்து மடித்த வாயினை யுடையவருமாகிய, இருவர் சேனை மள்ளரும் எதிர்ந்து கை கலந்தனர் - இருவர் படை வீரரும் நேர்ந்து போர்புரியத் தொடங்கினர். இருதிறத்து வீரரும் ஒரு பெற்றியே ஆற்றலும் தறுகண்மையு முடையராய் எதிர்ந்தமை கூறினார். வெடித்தல் - ஒலியுடன் புறப்படுதல். சினைஇ : சொல்லிசை யளபெடை. கை : துணை மொழி. குரலினார் முதலியன வினையெச்சப் பொருளன. (14) மன்ற லந்தெ ரியனேரி மலையவன்ற மர்க்கெலாந் தென்ற லம்பொ ருப்பினான் றிரண்ட நான்கு கருவியும் மின்ற யங்கு செய்யவேணி விடைய வன்ற னருளினால் ஒன்ற னந்த மாகவந் துருத்தெ திர்ந்து தோன்றுமால். (இ - ள்.) மன்றல் அம் தெரியல் நேரி மலையவன் தமர்க்கு எலாம் - மணம் பொருந்திய அழகிய மாலையை யணிந்த நேரி மலையையுடைய சோழன் படை வீரர்கட் கெல்லாம், தென்றல் அம் பொருப்பினான் - தென்றலுக்கிடமாகிய அழகிய பொதியின் மலையையுடைய பாண்டியனது, திரண்ட நான்கு கருவியும் - திரண்ட நால்வகைப் படையும், மின்தயங்கு செய்ய வேணி விடையவன் தன் அருளினால் - மின்போல விளங்குஞ் சிவந்த சடையையும் இடபவூர் தியையுமுடைய சோமசுந்தரக் கடவுளின் திருவருளால், ஒன்று அனந்தமாக உருத்துவந்து எதிர்ந்து தோன்றும் - ஒன்று அளவில்லவாஉருக்கொண்டு வந்து எதிரே தோன்றா நிற்கும். அம் இரண்டும் சாரியையுமாம். கருவி - சேனை - வேணியையுடை யவனாகிய விடையவன் என்க. அனந்தம் - முடிவின்மை. உருத்து - உருக்கொண்டு : தன், சாரியை, ஆல் : அசை. (15) தேரி னோதை கந்துகஞ் சிரிக்கு மோதை சொரிமதக் காரி னோதை பேரியங் கறங்கு மோதை மறவர்தம் போரி னோதை வீரர்தோள் புடைக்கு மோதை யோடுமுந் நீரி னோதை யொன்றெனக் கலந்தொ டுங்கி1 நின்றதே. (இ - ள்.) தேரின் ஓதை - தேர்செல்லும் ஒலியும், கந்துகம் சிரிக்கும் ஓதை - குதிரைகள் கனைக்கு மொலியும், சொரிமதக் காரின் ஓதை - மதஞ்சொரிகின்ற யானைகளின் பிளிறொலியும், பேர் இயம் கறங்கும் ஓதை - பெரிய வாத்தியங்கள் ஒலிக்கு மொலியும், மறவர்தம் போரின் ஓதை - வீரர்கள் புரியும் போரினொலியும், வீரர் தோள்புடைக்கும் ஓதையோடு - அவர்கள் தோளினைத் தட்டு மொலியுமாகிய இவற்றோடு, முந்நீரின் ஓதை ஒன்று எனக்கலந்து ஒடுங்கி நின்றது - கடலினொலி ஒன்றென்று கூறுமாறு அஃது அவ்வொலிகளிற் கலந்து அடங்கிநின்றது. சொரிமதம் என்னும் அடையால் கார் யானையாயிற்று. தம் : சாரியை. தேரொலி முதலியவற்றோடு கடலொலியும் ஒன்றென்னும்படி அது அவற்றில் ஒடுங்கியது என்றது தேரொலி முதலிய ஒவ்வொன்றும் கடலொலிபோல் விஞ்சியிருந்தமை கூறிய வாறாயிற்று. ஒன்றென என்பதற்கு அற்பமென்ன என்றுரைத்தலுமாம். (16) சிலைப யின்ற வீரரோடு சிலைப யின்ற வீரரே கலைப யின்ற வாளரோடு கலைப யின்ற வாளரே கொலைப யின்ற வேலரோடு கொலைப யின்ற வேலரே மலைப யின்ற மல்லரோடு மலைப யின்ற மல்லரே. (இ - ள்.) சிலை பயின்ற வீரரோடு சிலை பயின்ற வீரர் - விற்றொழில் பயின்ற வீரர்களோடு விற்றொழில் பயின்ற வீரர்களும், கலைபயின்ற வாள்வீரரோடு கலைபயின்ற வாளர் - படைக்கல நூன்முறையிற் பயின்ற வாள்வீரரோடு அங்ஙனம் பயின்ற வாள்வீரர் களும், கொலை பயின்ற வேலரோடு கொலை பயின்ற வேலர்- கொல்லுதலைப் பழகிய வேல் வீரரோடு வேல் வீரர்களும், மலை பயின்ற மல்லரோடு மலை பயின்ற மல்லரே- மற்போரிற் பழகிய மல்லரோடு மற்போரிற் பழகிய மல்லர்களும். கலை ஒளியுமாம். மல் என்பது ஐ என்னும் பகுதிப் பொருள் விகுதி பெற்று மலை யென நின்ற தென்க; இரண்டனுருபாயின் மலைப்பயின்ற என ஒற்று இரட்டுதல் வேண்டும்; மலையை யொத்த என்றலுமாம். வீரரே முதலியன வருஞ்செய்யுளில் மலைவர் என்பது கொண்டு முடியும். (17) கரியு கைத்த பாகரோடு கரியு கைத்த பாகரே பரியு கைத்த மறவரோடு பரியு கைத்த மறவரே கிரியு கைத்த1 வலவரோடு கிரியு கைத்த வலவரே எரியு கைத்தெ திர்ந்தகா லெனக்க லந்து மலைவரால். (இ - ள்.) கரி உகைத்த பாசரோடு கரி உகைத்த பாகரே - யானையைச் செலுத்திய வீரரோடு யானையைச் செலுத்திய வீரரும், பரி உகைத்த மறவரோடு பரி உகைத்த மறவரே - குதிரையைச் செலுத்திய வீரரோடு குதிரையைச் செலுத்திய வீரரும், கிரி உகைத்த வலவ ரோடு கிரி உகைத்த வலவரே - மலை போலும் தேரைச் செலுத்திய வீரரோடு தேரைச் செலுத்திய - வீரரும், எரி உகைத்து எதிர்ந்து கால் எனக் கலந்து மலைவர் - நெருப்பினை மூட்டி எதிர்த்த காற்றைப்போல எதிர்ந்து போர் செய்வாராயினர். யானைவீரரும் தேர்வீரரும் அவற்றைச் செலுத்துதல் நோக்கி முறையே பாகர் எனவும் வலவர் எனவும் கூறப்பட்டனர். கிரி. உவமையாகு பெயராய்த் தேரினைக் குறித்தது; திகிரி என்பது முதற் குறையாயிற்றென்பாரு முளர். வடவைத்தீயை மூட்டி யெழுந்த ஊழிக்காற்றுப்போல் எனலுமாம். தீயுங் காற்றுங் கூடி எதிர்ந்து பொருதாற்போல வென்க. ஆல் அசை. (18) விடுக்கும் வாளி யெதிர்பிழைப்பர் வெய்ய வாளி யெய்துபின் தொடுக்கும் வாளி வில்லொடுந் துணிப்பர் பின்க ணிப்பற மடுக்கும் வாளி மார்புதைப்ப வாங்கி மற்றவ் வாளி2 கொண் டடுக்கு மேவ லாரையெய் தடர்ப்பர் கிள்ளி மள்ளரே. (இ - ள்.) கிள்ளி மள்ளர் - சோழனுடைய சேனை வீரர், விடுக்கும் வாளி எதிர் பிழைப்பர் - பாண்டியன் வீரர் விடும் கணைகளை எதிர் நின்று தப்புவர்; வெய்ய வாளி எய்து - கொடிய அம்புகளைத் தாம் விடுத்து, பின் தொடுக்கும் வாளி வில்லொடும் துணிப்பர் - பின் அவர்கள் தொடுக்கும் அம்புகளை வில்லோடும் துண்டு படுத்துவர்; பின் கணிப்பு அற மடுக்கும் வாளி மார்புதைப்ப - பின் அவர்கள் அளவின்றிச் செலுத்தும் அம்புகள் தம் மார்பிற்றைக்க, வாங்கி - அவற்றைப் பிடுங்கி, அவ்வாளி கொண்டு - அவ்வம்புகளால், அடுக்கும் மேவலாரை எய்து அடர்ப்பர் - நெருங்கும் பகைவரை எய்து கொல்லுவர். எதிர் பிழைத்தல் - அவை தம்மீது படாது தப்பச்செய்தல். மற்று : அசை; வினைமாற்றுமாம். வாங்கி என்பதற்கு ஏற்று என்றுரைத்தலுமாம். தன் உடம்பிற்றைநத்த அம்புகளைப் பிடுங்கிப் பகைவர் மேற் செலுத்தினர் என்பது நூழிலாட்டு எனப்படும்; " களங்கழுமிய படையிரிய உளங்கழிந்தவேல் பறித்தோச்சின்று" என்பது அதன் இலக்கணம். " கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்" என வள்ளுவரகூறுதலுங் காண்க. (19) சோனை மாரி யிற்சரஞ் சொரிந்து நின்று துள்ளுவார் ஆன வாளி யெதிர்பிழைத் தொதுங்கி நின்ற ழற்சரங் கூனல் வாளி சிலையிறத் தொடுத்தெ றிந்து கூவுவா மீன கேத னத்துவேந்தன் வீரர் சென்னி வீரர்மேல். (இ - ள்.) மீன கேதனத்து வேந்தன் வீரர் - கயற்கொடியினை யுயர்த்திய பாண்டியன் படை வீரர்கள், சென்னி வீரர்மேல் - சோழன் படை வீரர்களின்மேல், சோனை மாரியில் சரம் சொரிந்து- சோனை மழையைப்போல வாளிகளைப் பொழிந்து, நின்று துள்ளுவார் - களித்து நின்று துள்ளுவார்கள்; ஆனவாளி எதிர் பிழைத்து ஒதுங்கி நின்று - அங்ஙனமே பகைவர் சொரிந்த அம்புகளுக்கு எதிர்தப்பி ஒதுங்கி நின்று, வாளி கூனல் சிலை இற - அவர்களுடைய அம்பும் வளைந்த வில்லும் முறியுமாறு, அழல் சரம் தொடுத்து எறிந்து கூவுவார - கொடிய கணைகளைத் தொடுத்து விடுத்து வீர முழக்கஞ் செய்வார்கள். சோனைமாரி - விடாது பெய்யும் மழை. எறிந்து - துணித்து என்றுமாம். (20) தறிந்த தாட கர்ந்தசென்னி தரையு ருண்ட வரையெனச் செறிந்த தோள்ச ரிந்ததேர் சிதைந்த பல்ப டைக்கலம் முறிந்த யானை கையிறா முழங்கி வீழ்ந்த செம்புனல் பறிந்த பாறு பாரிடங்கள் பைத்த கூளி மொய்ததவே. (இ - ள்.) தாள் தறிந்த - (படைவீரர்களின்) கால்கள் முறிந்தன; தகர்ந்த சென்னி தரை உருண்ட - அறுபட்ட தலைகள் நிலத்தில் உருண்டன; வரை எனச்செறிந்த தோற் சரிந்த - மலைபோலத் திரண்ட தோள்கள் துண்டாகிச் சரிந்தன; தேர் சிதைந்த - தேர்கள் அழிந்தன; பல்படைக்கலம் முறிந்த - பல படைக்கலங்களும் முறிந்தன; யானை கைஇறா முழங்கி வீழ்ந்த - யானைகள் துதிக்கை அறுபடுதலால் அலறி வீழ்ந்தன; செம்புனல் பறிந்த - குருதிவெள்ளம் ஓடின; பாறு பாரிடங்கள் பைத்தகூளி மொய்த்த - பருந்துகளும் பூதங்களும் கரிய பேய்களும் (போர்க்களமெங்கும்) நெருங்கின. தறிந்த முதலியன அன்பெறாத பலவின்பால் முற்றுக்கள். இறா : செய்யா என்னும் எச்சம். பறிதல் - செல்லுதல். பைத்த- பரந்த என்றுமாம். (21) மடலி னீடு தாரலங்கன் மன்னர் சேனை யின்னவா றுடலி னீழ லடியகத் தொடுங்க வும்ப ருச்சியிற் கடலி னீடு கதிர்பரப்பு கடவு ளெய்து மளவுநின் றடலி னீடி யிடைவிடாம லமரு ழந்த தாலரோ.1 (இ - ள்.) மடலின் நீடு தார் அலங்கல் மன்னர்சேனை - இதழ்கள் பொருந்திய (மண) மிக்க மாலையை யணிந்த இரண்டு மன்னர்களின் சேனைகளும், இன்னவாறு - இவ்வகையாக, உடலின் நீழல் அடியகத்து ஒடுங்க - உடம்பின் நிழல் அடியின்கண் ஒடுங்குமாறு, உம்பர் உச்சியில் - வானின் நடுவிடத்திற்கு, கடலின் நீடு கதிர் பரப்பு கடவுள் எய்தும் அளவும் - கடல்போல அளவின்றிப் பரந்த கிரணங்களை வீசுகின்ற சூரியன் வரும் அளவும், அடலின் நீடி நின்று இடைவிடாமல் அமர் உழந்து - வெற்றியில் மிக்கு நின்று இடைவிடாது போர் செய்தன. சேனை இன்னவாறு எய்துமளவும் நின்று அமருழந்த தென்க. சேனை என்றதற்கேற்ப உழந்ததென ஒருமையாற் கூறினார். ஆல், அரோ என்பன அசைகள். (22) அந்த நாள னைத்தையும் மழிக்க நின்ற வரனுதற் சிந்து தீயெ னக்கனன் றுருத்து நின்று தெறுதலால் எந்த யாறு மறவறப்ப விம்ப ரன்றி யும்பரும் வெந்து வான யாறும்வற்ற வேனில் வந்தி றுத்ததால். (இ - ள்.) அந்தம் நாள் - முடிவுநாளில், அனைத்தையும் அழிக்க நின்ற - எல்லாவற்றையும் அழிக்குமாறு நின்ற, அரன் நுதல் சிந்து தீ என - உருத்திரமூர்த்தியின் நெற்றியினின்று சிந்திய தீயைப்போல, கனன்று உருத்துநின்று தெறுதலால் - (ஞாயிறு) கொதித்துச் சினந்து நின்று எரித்தலால், எந்த யாறும் அறவறப்ப - எல்லா நதிகளும் முற்றும் வற்ற, இம்பர் அன்றி உம்பரும் வெந்து - இந்நிலவுலகமல்லாமல் வானுலகும் கருகி, வானயாறும் வற்ற - ஆகாய கங்கையும் வற்ற, வேனில்வந்து இறுத்தது - வேனிற் பொழுது வந்து தங்கியது. அந்த நாள் - உக முடிவாகிய நாள்; அந்நாளில் வேனில் வந்திறுத்தது என்றுமாம். நுதல் - நுதற்கண்; ஆகுபெயர். ஆல் : அசை. (23) மண்பி ளந்து பிலநுழைந்து வரைபி ளந்து நிரையவாய் எண்பி ளந்து நின்றபொங்க ரிலையு கப்பி ளந்துமேல் விண்பி ளந்து பரிதிநீடு வெங்க ரங்கள் யாரையுங் கண்பி ளந்த ழன்றுவீசு கான லெங்கு மானதே. (இ - ள்.) பரிதி நீடு வெங்கரங்கள் - சூரியனுடைய நீண்ட வெய்ய கிரணங்கள், மண்பிளந்து - நிலவுலகைப் பிளந்து, பிலம் நுழைந்து - பாதலவுலகிற் சென்று, வரைபிளந்து - மலைகளைப் பிளந்து, நிரைய வாய் எண்பிளந்து நின்ற பொங்கர் - ஒழுங்குபட்டன வாய் அளவிறந்து நின்ற சோலைகளின், இலை உகப்பிளந்து - இலைகள் உதிருமாறு வெதுப்பி, மேல் விண்பிளந்து - மேலுள்ள வானுலகையும் பிளந்து, யாரையும் கண்பிளந்து - யாவரையும் கண்ணைப் பிளந்து, அழன்று வீசுகானல் - கொதித்து வீசும் கானல், எங்கும் ஆனது - எவ்விடத்தும் ஆயிற்று. எண் பிளந்து - எண்ணைக் கடந்து. இலை உக மரக்கோடுகளைப் பிளந்தென்றுமாம். கண் பிளந்து என்பது ஒரு சொல்லாய் இரண்டாவதற்கு முடிபாயிற்று; யாருடைய கண்ணையும் என மாற்றி யுரைத்தலுமாம். கண்பிளந்து - கண் கூசச்செய்து. வீசுகானல் - வீசுதலாலாகிய கானல். பேய்த்தேரைக் கானல் என்பது பிற்கால வழக்கு. (24) [அறுசீரடி யாசிரிய விருத்தம்] ஆயிடை யலகைத் தேரு மடைந்தவர் வெயர்வு மன்றித் தூயநீர் வறந்த வந்தச் சுடுபுலந் தோய்ந்த காலும் மீயுயர் மதிநி லாவும் வெய்யவாய்ச் சுடுநல் லோருந் தீயவர் தம்மைச் சேர்ந்தாற் றீயவ ராவ ரன்றோ. (இ - ள்.) ஆயிடை - அவ்விடத்து, அலகைத்தேரும் - பேய்த் தேரும், அடைந்தவர் வெயர்வும் அன்றி - அங்குச் சென்றவர்களின் வியர் நீருமல்லாமல், தூயநீர் வறந்த - நல்ல நீர்கள் சிறிதுமின்றி வற்றின; அந்தச் சுடுபுலம் தோய்ந்த காலும் - அந்த வெப்பு நிலத்திற் படிந்துவரும் காற்றும், மீ உயர்மதி நிலாவும் - வானின்கண் உயர்ந்து விளங்கும் திங்களின் ஒளியும், வெய்யவாய்ச் சுடும் - கொடியனவாய்ச் சுடா நிற்கும்; நல்லோரும் - நல்லவரும், தீயவர் தம்மைச் சேர்ந்தால் - தீயவரைக் கூடினால், தீயவர் ஆவர் அன்றோ - தீயவராவரல்லவா? அலகைத்தேர் நீர்போலும் தோற்றமுடைத் தாகலின் ‘அலகைத் தேரும் வெயர்வும், என்றார. கால் ஈண்டுக் காற்று, தட்பமுடைய காற்றும் மதியின் கிரணமும் வெப்பமுடைய நிலத்தைச் சார்ந்து வெய்யவாய்ச் சுடும் என்ற பொருளைச் சாதித்தற்கு நல்லோரும் தீயவரைச் சேர்ந்தால் தீயவராவர் என்னும் வேறு பொருளைக் கூறினமையால் வேற்றுப் பொருள் வைப்பணி. (25) விளைமத வூற்று மாறி வெகுளியுஞ் செருக்கு மாறித் துளையுடைக் கைம்மான் றூங்கு நடைய வாய்ச் சாம்பிச் சோர்ந்த உளர்தரு மூழிக் காலி னோடுவாம் புரவி யெய்த்துத் தளர்நடை யுடைய வாகித் தைவரு தென்றல் போன்ற. (இ - ள்.) துளைஉடைக், கைமான் - துளை பொருந்திய கையையுடைய யானைகள், விளைமத ஊற்று மாறி - இடையறாதொழுகும் மதநீர் சுரத்தல் மாறி, வெகுளியும் செருக்கும் மாறி - சினமும் செருக்கும் ஒழிந்து, தூங்கு நடையவாய் சாம்பிச் சோர்ந்த - மந்த நடையையுடைய ஊழிக்காற்றைப் போல ஓடும், வாம்புரவி - தாவுங் குதிரைகள், எய்த்து - இளைத்து, தளர்நடை உடையவாகி - தளர்ந்த நடையினை உடையனவாய், தைவரு தென்றல் போன்ற - தவழ்ந்து செல்லுந் தென்றலை ஒத்தன. விளைதல் - உண்டாதல். உளர்தல் - அசைதல். காலின், இன் : ஒப்புப் பொருட்டு. சோர்ந்த, போன்ற என்பன அன்பெறாத பலவின் பால் முற்றுக்கள். (26) கானலந் தேர்மேற் சூறைக் காலெனும் பாகன் றூண்ட வேனில்வேந் தேறிக் கீறி வெப்பமாம் படைகள் வீச மாநிலங் காவல் பூண்ட மன்னவ ரிருவர்1 தங்கள் தானையு முடைந்து தண்ணீர் நசைசுடச் சாம்பிற் றன்றே (இ - ள்.) கானல் தேர்மேல் - கானலாகிய தேரின்மேல், சூறைக் கால் எனும் பாகன் தூண்ட - சூறைக்காற்று என்னும் பாகன் செலுத்த, வேனில் வேந்து ஏறி - வேனிலாகிய வேந்தன் ஏறி, சீறி வெப்பமாம் படைகள் வீச - சினந்து வெப்பமாகிய படைக் கலங்களை வீச, மாநிலம் காவல் பூண்ட மன்னவர் இருவர் தங்கள் தானையும் உடைந்து - பெரிய நிலவுலகத்தை மேற்கொண்ட இரண்டு மன்னர்களின் சேனையும் (அவ் வெம்மைக்குத்) தோற்று, தண்ணீர் நசைசுட சாம்பிற்று - நீர் வேட்கை வருத்த வாடியது. வேனிற் காலத்தில் கானலும் சூறைக்காற்றும் வெப்பமும் மிக்கமையை இங்ஙனங் கூறினார். அம், அன்று, ஏ : அசைகள். கானல் முதலியவற்றைத் தேர் முதலியவாக உருவகப் படுத்தினமையால் இஃது உருவகவணி. (27) இரக்கமில் கொடிய செல்வர் மருங்குபோ யிரப்பார் போல உருப்பமொண் டிறைக்குங் கள்ளி நீழல்புக் கொதுங்கு வாரும் தருக்கற நிரப்பா லெய்த்தோர் தம்மினும் வறியர் பாற்சென் றிரப்பபோ லிலைதீந் துக்க மரநிழ லெய்து வாரும். (இ - ள்.) இரக்கம் இல் கொடிய செல்வர் மருங்குபோய் - இரக்க மற்ற கொடிய செல்வரிடஞ் சென்று, இரப்பார்போல - இரப்பவரைப் போல, உருப்பம் கொண்டு இறைக்கும் - வெப்பத்தை முகந்து வீசுகின்ற, கள்ளி நீழல் புக்கு ஒதுங்குவாரும் - கள்ளி நிழலிற் சென்று ஒதுங்குப வரும், தருக்கு அற நிரப்பால் எய்த்தோர் - களிப்பு நீங்க வறுமையால் மெலிந்தோர்கள், தம்மினும் வறியர்பால் சென்று இரப்பபோல் - தம்மைக் காட்டிலும் வறுமையை யுடையாரிடஞ் சென்று இரத்தலைப் போல, இலை தீந்து உக்க மரம் நிழல் எய்துவாரும் - இலைகள் உதிரப் பட்ட மரத்தின்கண் நிழலுக்குச் செல்பவரும். உருப்பம் - வெப்பம். மொண்டு, முகந்து என்பதன் மரூஉ. உருப்ப மொண்டிறைக்கும் என்னும் பொருளடையால் கொடிய செல்வர் கடுஞ் சொற்களைப் பெய்வரென்பது பெறப்படும். இரப்ப : தொழிற் பெயர். குளகம். (28) கொல்லிபம் பரிமான் றேரின் குறுநிழ லொதுங்கு வாரும் அல்லிருள் வட்டத் தோல்வெண் கவிகையு ளடங்கு வாருஞ் செல்லிடம் பிறிது காணார் வீரவான் சென்றோர் நின்ற கல்லுட்1 னிழல்சேர் வாரு மாயினார் களம ரெல்லாம். (இ - ள்.) கொல் இபம் பரிமான் தேரின் - கொல்லுதற் றொழிலை யுடைய யானையும் குதிரையும் தேருமாகிய இவற்றின், குறுநிழல் ஒதுங்குவாரும் - சிறு நிழலில் ஒதுங்குகின்றவரும், அல் இருள் வட்டத் தோல் வெண்கவிகையுள் அடங்கு வாரும்- மிக்க இருள் போன்ற கேடகத் துள்ளும் வெள்ளிய குடையினுள்ளும் சென்று ஒடுங்குவாரும், செல் இடம் பிறிது காணார்- செல்லுதற்கு இடம் வேறு காணாதவராய், வான் சென்றார் நின்ற கல் உடல் நிழல் சேர்வாரும் - வீர சுவர்க்கஞ் சென்ற வீரர்கள் நின்ற கல்லாகிய உடம்பின் நிழலை அடைவாரும், ஆயினார் களமர் எல்லாம் - ஆயினர் வீர ரனைவரும். அல் இருள் - நள்ளிரவின் இருள். வட்டத்தோல் - பரிசை. வீரவான் சென்றோர் - போரிற் புறங் கொடாது உயிர் துறந்து வீர சுவர்க்க மடைந்தோர. அங்ஙனம் துறக்க மெய்திய வீரர்க்குக் கல்லில் உருச்செய்து பெயரும் பீடும் எழுதி நடுதல் பண்டை வழக்கமாகும்; " என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின் றவர்" எனத் திருக்குறளிலும் இது கூறப்படுதல் காண்க. களமர் - போர்க் களத்தி லிருப்போர், வீரர். (29) ஆயதோ ரமையந் தன்னி லளவிலா வுயிர்க்கு மீன்ற தாயனார் துலைபோல் யார்க்குஞ் சமநிலை யாய கூடல் நாயனார் செழியன் றானை நனந்தலை வேத நாற்காற் பாயதோர் தண்ணீர்ப் பந்தர் பரப்பியப் பந்தர் நாப்பண். (இ - ள்.) ஆயது ஓர் அமையம் தன்னில் - இவ்வாறான அமையத்தில், அளவு இலா உயிர்க்கும் ஈன்ற தாய் அன்னார் - அளவிறந்த உயிர் களனைத்திற்கும் பெற்ற தாய் போன்றவராகிய, துலைபோல் யார்க்கும் சமநிலை ஆய - தராசின் நாவினைப் போல் யாவரிடத்தும் நடுவு நிலையைப் பொருந்திய, கூடல் நாயனார்- மதுரைப் பெருமானாகிய சோமசுந்தரக் கடவுள், செழியன் தானை நனந்தலை - பாண்டியன் படையின் நடுவுள், வேதம் நால்கால் பாயது ஓர் தண்ணீர்ப் பந்தர் பரப்பி - நான்கு வேதங்களும் நான்கு கால்களாகப் பொருந்தியதொரு தண்ணீர்ப் பந்தர் வைத்து, அப்பந்தர் நாப்பண் - அப்பந்தரின் நடுவில். ஓர் : அசை. எல்லாவுயிர்களிடத்தும் பேரருளுடைய இறைவனுக்குப் பகையும் நொதுமலும் நண்பும் இல்லை யென்பார் ‘யார்க்கும் சம நிலையாய’ என்றார். யாவர் கண்ணும் நடுவுநிலையுடைய பெருமான் ஈண்டுச் செழியன்றானை நாப்பண் தண்ணீர்ப் பந்தர் வைத்துச் செழியற்கு வெற்றியும் சோழற்குத் தோல்வியும் எய்துவித்தது ஆன்மாக்களின் வினைகட் கீடாக அறக்கருணையால் அருளலும் மறக்கருணையால் ஒறுத்துக் குற்றந் தீர்த்தலுமாகிய அவரது அருட்செயலின் பெற்றியே யாமென்க. பாயது - பொருந்திய தென்னும் பொருட்டு. பரப்பி - பரப்புடைத்தாக வைத்து. பந்தர் : ஈற்றுப்போலி. (30) புண்டர நுதலுங் காதின் புறத்தணி மலரும் பாத முண்டக மலர்மே லொற்றைக் கிண்கிணி முழக்குக் கச்சியாப் புண்டதோ லுடையுங் கண்டோ ருள்ளமுங் கண்ணுங் கொள்ளை கொண்டபுன் னகையு முள்ளக் கருணையின் குறிப்புந் தோன்ற. (இ - ள்.) புண்டர நுதலும் - திரிபுண்டர மணிந்த நெற்றியும, காதின் புறத்து அணி மலரும் - காதின் மீது அணிந்த மலரும், பாத முண்டக மலர் மேல் - திருவடியாகிய தாமரை மலர் மேல், ஒற்றைக் கிண்கிணி முழங்கும் - ஒற்றைச் சதங்கையின் ஒலியும், கச்சு யாப்புண்ட தோல் உடையும் - கச்சினால் இறுகக் கட்டப்பட்ட புலித்தோலாடையும், கண்டோர் உள்ளமும் கண்ணும் - நோக்கினவர்களின் உள்ளத்தையும் விழிகளையும், கொள்ளை கொண்ட புன்னகையும் - கொள்ளை கொண்ட புன்முறுவலும், உள்ளக்கருணையின் குறிப்பும் தோன்ற - திருவுள்ளத்தி லெழுந்த அருட் குறிப்பும் புலப்பட. புறம் என்பதை ஏழனுரு பாக்கிக் காதினிடத் தணிந்த என்றலுமாம். கச்சியாப்பு : குற்றிகரம். கருணையின் குறிப்பு - கருணையை வெளிப்படுத்தும் தோற்றம். (31) அருமறை யகத்து ணின்றாங் கருந்தவ ராகி வேணிப் பொருபுனல் பூரித் தாங்கோர் புண்ணியச் சிரகந் தாங்கி ஒருவருக் கொன்றே யாகி யிலக்கருக் கிலக்க மாகித் தருகுறும் புழையால் வாக்கித் தணித்தனர் தண்ணீர்த் தாகம். (இ - ள்.) அருமறை அகத்துள் நின்றாங்கு - அரிய வேதத்தினுள்ளே நின்ற நிலைபோல, அருந்தவர் ஆகி - அரிய தவக்கோல முடையராகி, ஓர் புண்ணியச் சிரகம் - ஒரு புண்ணிய வடிவாகிய நீர்க் கரகத்தினை, வேணிப் பொரு புனல் பூரித்துத் தாங்கி - சடையிலுள்ள (அலைகள்) மோதுங் கங்கை நீரை நிறைத்து ஏந்தி, ஒருவருக்கு ஒன்றே ஆகி இலக்கருக்கு இலக்கம் ஆகித்தரு - ஒருவருக்கு ஒரு தாரையாகவும் இலக்கம் பேருக்கு இலக்கந் தாரையாகவு மிருந்து நீரைத் தருகின்ற, குறும் புழையால் வாக்கி - (அதன்) சிறிய துவாரத்தால் நீரை வார்த்து. தண்ணீர்த் தாகம் தணித்தனர் - நீர் வேட்கையைப் போக்கினார். வேதத்துள் நின்ற நிலை - வேதத்தாற் கூறப்படும் நிலை; இறைவன் தவ வடிவினனாகக் கூறப்படுதலை, " நீரற வறியாக் கரகத்துத் தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே" என்னும் புறப்பாட்டானு மறிக. பூரித்தாங்கு என்பதில் ஆங்கு அசை; பூரித்தாற்போல என்பாருமுளர். இலக்கர் - நூறாயிரவர்; எண்ணிலார் என்றபடி. வாக்கி - வார்த்து. இங்ஙனம் இறைவன் தண்ணீர்ப்பந்தர் வைத்த அருட் செயல், " தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும்" எனத் திருவாசகத்திறகுறிக்கப் பெற்றுளது. (32) சுந்தரப் புத்தேள் வைத்த துறுமலர் வாசத் தெண்ணீர்ப் பந்தாபுக் கடைந்து நன்னீர் பருகியெய்ப் பகல வாற்றல் வந்தபின் செழியன் றன்னோர் வளவன்மே லேறிச் சீறி அந்தமி லனிகஞ் சிந்தித் தும்பைவேய்ந் தடுபோர் செய்தார். (இ - ள்.) சுந்தரப் புத்தேள்வைத்த - சோமசுந்தரக் கடவுள் வைத்தருளிய, துருமலர் சவாத் தெள்நீர்ப் பந்தர்புக்கு அடைந்து - மணமிக்க மலரால் மணம் ஊட்டிய தெளிந்த நீரினையுடைய பந்தர் சென்று அடைந்து, நல்நீர்பருகி - நல்ல நீரினைப் பருகி, எய்ப்பு அகல - இளைப்பு நீங்க, ஆற்றல் வந்தபின் - முன் இழந்த வலிமை மீண்ட வளவில், செழியன் தன்னோர் - பாண்டியன் சேனைவீரர், வளவன்மேல் ஏறி - சோழன்மேற் போருக்கெழுந்து, சீறி - சினந்து, அந்தம்இல் அனிகம் சிந்தி - அளவிறந்த அவன் படைகள் சிதறும்படி, தும்பை வேய்ந்து அடுபோர் செய்தார் - தும்பைமாலை யணிந்து கொல்லுதலையுடைய போரினைப் புரிந்தனர். வீறு - நெருங்கிய. தன்னோர் - தமர்; படைவீரர். சிந்த வென்பது சிந்தியெனத் திரிந்து நின்றது. அடுபோர் செய்து சிந்தினார் என விகுதி பிரித்துக் கூட்டலுமாம். (33) கடலுடைந் தென்னப் பொன்னிக் காவலன் றானை சாய மடலுடை வாகை வேய்ந்து வளவனை மருக னோடும் மிடலுடைத் தறுகட் சேனை வீரர்வெங் கையாற் பற்றி அடலுடைக் கன்னி நாடர்க் கரசன்முன் கொண்டு போந்தார். (இ - ள்.) கடல் உடைந்து என்ன - கடற்பெருக்கு நிலை கடந்து புறம் போனாற்போல, பொன்னிக் காவலன் தானை சாய - காவிரியை யுடைய சோழ மன்னன் சேனைகள் புறங்கொடுக்க, மடல் உடை வாகை வேய்ந்து - இதழ்களையுடைய வாகை மாலை சூடி, வளவனை மருகனோடும் - காடு வெட்டிய சோழனை அவன் மருமகனாகிய இராச சிங்க பாண்டியனோடு, மிடல் உடைத் தறுகண் சேனை வீரர் - வலிமை யுடைய அஞ்சாமை மிக்க படை வீரர்கள், வெங்கையால் பற்றி - தம் வெவ்விய கையாற் பிடித்து, அடல் உடைக் கன்னி நாடர்க்கு அரசன் முன் - வெற்றியையுடைய கன்னி நாட்டிலுள்ளவர்கட்கு அரசனாகிய இராசேந்திர பாண்டியன் முன்பு, கொண்டுபோந்தார் - கொண்டு வந்தனர். கடல் போலுஞ் சேனையாகலின் அது நிலை கெட்டோடுதலைக் கடலுடைந் தென்ன என்றார். உடைந்ததென்ன என்பது விகாரமாயிற்று. மடலுடை வாகை, சினைக்கேற்ற அடையடுத்தது. அடலுடை அரசன் என்க. (34) கொடுவந்த வளவன் றன்னைக் கோப்பெருஞ் செழியர் கோமான் வடுவந்த தம்பி யோடு மாடநீள் கூடன் மேய கடுவந்த மிடற்றார் முன்போய் விடுத்தெந்தை கருத்தியா தென்ன நடுவந்த நிலையான் கேட்ப நாயக னிகழ்த்து மன்னோ. (இ - ள்.) கோப்பெரும் செழியன் கோமான் - பெரிய தலைமையை யுடைய செழியர் பெருமானாகிய இராசேந்திர பாண்டியன், கொண்டு வந்த வளவன் தன்னை - அங்ஙனங் கொண்டு வரப்பட்ட சோழனை, வடுவந்த தம்பியோடு - (தனது குடிக்கு) வடுவாகத் தோன்றிய தம்பியோடு, மாடம்நீள் கூடல்மேய - மாடங்கள் மிக்க கூடலில் எழுந்தருளிய, கடுவந்த மிடற்றார் முன்போய் விடுத்து - நஞ்சு தங்கிய திரு மிடற்றினையுடைய இறைவன் திருமுன் கொடுபோய் விடுத்து, எந்தை கருத்து யாது என்ன - எந்தையே நின் திருவுள்ளம் யாதென்று, நடுவந்த நிலையான் கேட்ப - நடுவு நிலைமை பொருந்திய பாண்டியன் வினவ, நாயகன் நிகழ்த்தும் - இறைவன் கூறியருளுவான். கோ - தலைமை. தமையனுக்கு மனைவியாகக் குறித்தவளை மணஞ் செய்தமையாலும் தமையனது அரசினை வௌவப் போர்க்கு வந்தமை யாலும் ‘வடுவந்த தம்பி’ என்றார். கடுவந்த - கடுப்பொருந்திய. நடுவந்தநிலை - நடுவாகப் பொருந்திய நிலை. என்ன என்பதற்கு என்று வினவ என்று கூறி, கேட்ப என்பதற்குச் செவியேற்க என்றுரைத்தலுமாம். மன்னும் ஓவும் அசைகள். (35) அறவனீ யல்லை யோவுன் னகத்தினுக் கிசைந்த செய்கென் றிறைவன தருளால் வானின் றெழுமொழி கேட்டு வையைத் துறைவனு மறத்தி னாற்றாற் சோழனைச் சிலமால் யானை மறவயப் பரிபூண் மற்றும் வழங்கினான் விடுத்தான் பின்னர். (இ - ள்.) நீ அறவன் அல்லையோ - நீ அறநெறி பிழையாதவ னல்லையோ, உன் அகத்தினுக்கு இசைந்த செய்க என்று - உன் உள்ளத்திற்குப் பொருந்திய செய்கையைச் செய்யக் கடவை என்று, இறைவனது அருளால் வான் நின்று எழும் மொழிகேட்டு - இறைவன் திருவருளால் வானினின்று உண்டாகும் மொழியைக்கேட்டு, வையைத் துறைவனும் - வையையின் நீர்த்துறையையுடைய பாண்டியனும், அறத்தின் ஆற்றால் - அறநெறியால், சோழனை - காடு வெட்டிய சோழனை, சிலமால் யானை மறவயப்பரி பூண்மற்றும் வழங்கினான் விடுத்தான் - சில மத யானைகளையும் வெற்றியையும் வன்மையையுமுடைய குதிரைகளையும் அணிகளையும் பிறவற்றையும் கொடுத்து விடுத்து, பின்னர் - பின்பு. போரில் அகப்பட்ட வேந்தரைக் கொடுமையாக நடத்துதல் தகா தென்பதும், சோழனும் தமக்கு அன்பனாயும் பாண்டியற்கு நண்பனாயும் இருந்தவனென்பதும் தோன்ற ‘அறவன் நீ அல்லையோ’ எனக் கூறியருளினார். செய்கென்று, அகரம் தொகுத்தல், எழுந்தது அங்ஙனம் எழுந்த மொழியைக் கேட்டு என விரிக்க. வழங்கினான், விடுத்தான் என்பன எச்சங்களாயின. (36) வள்ளறன் றம்பி யென்னு மன்னவர் சிங்கந் தன்னைத்1 தள்ளருந் தறுக ணாண்மைத் தருக்கறத் தானாள் செல்வ முள்ளன சிறிது மாற்றி யொதுக்கியெவ் வுயிர்க்குந் தாயாய்ப் பள்ளநீ ரகிலங் காத்துப் பல்வளம் பழுக்க வாழ்ந்தான். (இ - ள்.) வள்ளல் - இராசேந்திர பாண்டியன், தன் தம்பி என்னும் மன்னவர் சிங்கம் தன்னை - தன் இளவல் என்று சொல்லப்படும் இராச சிங்கனை, தள் அருந் தறுகண் ஆண்மைத் தருக்கு அற - தள்ளுதற் கரிய அவனது அஞ்சாமையும் ஆண்மைச் செருக்கும் நீங்க, தான் ஆள் செல்வம் உள்ளன - தான் ஆளுஞ் செல்வங்களாயுள்ளவற்றுள், சிறிது மாற்றி ஒதுக்கி கொடுத்து- அவனை வேறாக ஒதுக்கி விட்டு, எவ்வுயிர்க்கும் தாயாய் - எல்லா வுயிர்களுக்கும் அன்னையாய், பள்ள நீர் அகிலம் காத்து- கடல் சூழ்ந்த நிலவுலகினைப் புரந்து, பல்வளம் பழுக்க வாழ்ந்தான் - பல வளங்களும் சிறக்க வாழ்ந்தனன். பிறர் செய்த தீங்கினைப் பொறுத்ததன்றி அவர்க்கு உதவி செய்யவும் முற்பட்டா னாகலின் ‘வள்ளல்’ என்றார். தம்பி யாதற்குத் தக்கவனல்ல னென்பார் ‘தம்பி யென்னும்’ என்றார். மாற்றி - அவனுக்குரியதாகச் செய்து. எல்லா வுயிர்களிடத்தும் தலையளி யுடையவனாய் என்பார் ‘எவ்வுயிர்க்குந் தாயாய்’ என்றார். 37) ஆகச் செய்யுள் 1855. முப்பத்தாறாவது இரசவாதஞ் செய்த படலம் [கலி நிலைத்துறை] வரதன் மீனவன் படையிடை வந்துநீர்ப் பந்தர் விரத னாகிநீ ரருத்திய வினையுரை செய்தும் பரத நூலிய னாடகப் பாவையா ளொருத்திக் கிரத வாதஞ்செய் தருளிய வாடலை யிசைப்பாம். (இ - ள்.) வரதன் - வள்ளலாகிய சோமசுந்தரக் கடவுள், மீனவன் படையிடை - பாண்டியன் சேனை நடுவுள், நீர்ப்பந்தர் விரதனாகி வந்து - தண்ணீர்ப் பந்தர் வைக்கு முனிவனாய் வந்து, நீர் அருத்திய வினை உரைசெய்தும் - நீரைப் பருகுவித்த திருவிளையாடலைக் கூறினோம்; பரத நூல் இயல் நாடகப்பாவையாள் ஒருத்திக்கு - பரத நூல் இலக்கண மமைந்த நாடகத்தில் வல்ல பதுமைபோல்வாளாகிய பொன்னனையாளுக்கு, இரத வாதம் செய்தருளிய ஆடலை இசைப்பாம் - இரச வாதஞ் செய்த திருவிளையாடலை (இனிக்) கூறுவாம். வரதன் - வேண்டுவன அளிப்போன். விரதன் - நோன்பினை மேற் கொண்டுளோன். (1) பருக்கை மால்வரைப் பூழியன் பைந்தமிழ் நாட்டின் இரங்கு தெண்டிரைக் கரங்களா லீர்ம்புனல் வையை மருங்கி னந்தன மலர்ந்தபன் மலர்கடூய்ப் பணியப் புரங்க டந்தவ னிருப்பது பூவண நகரம். (இ - ள்.) பருகை மால்வரை பூழியன் - பருத்த கையையுடைய கரிய மலைபோலும் யானைப் படையையுடைய பாண்டியனது, பைந் தமிழ்நாட்டின் - அழகிய தமிழ் நாட்டின்கண், ஈர்புனல் வையை- குளிர்ந்த நீரையுடைய வையை யாறு, இரங்கு தெள் திரைக் கரங்களால் - ஒலிக்கின்ற தெளிந்த அலையாகிய கைகளால், மருங்கில் நந்தனம் மலர்ந்த - பக்கங்களிலுள்ள நந்தனவனங்கள் மலர்ந்த, பல் மலர்கள் தூய்ப்பணிய - பல மலர்களையும் தூவி இறைஞ்ச, புரம் கடந்தவன் இருப்பது - திரிபுரங்களையும் நீறாக்கிய இறைவன் வீற்றிருக்கப் பெறுவது, பூவண நகரம் - திருப் பூவண மென்னும் பதியாகும். மால் - பெருமையும், மத மயக்கமும் ஆம். பூழியர் என்னும் பெயர் பூழி நாட்டையுடைய காரணத்தால் முன்பு சேரர்க்குளதாகிப் பின் பாண்டியர்க்கு வந்திருத்தல் வேண்டும் : பூழி - கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டனுள் ஒன்று; மேற்குக் கடலோரத்தில் உள்ளது. பசுமைத் தமிழுக்கு அடை; தமிழ் மொழியானது மென்மையும் ஒண்மையும் இனிமையும் வளமையும் செம்மையும் சீர்மையும் உடையதாய் விளங்குதலால் இதனைச் சான்றோர்கள் பலவாறு அடையடுத்து வழங்குவாராயினர் என்க. தூவி என்பது விகாரமாயிற்று. பூவணம்- பாண்டி நாட்டிலுள்ள தேவாரம் பெற்ற பதினான்கு திருப்பதிகளிலொன்று. இருப்பது - இருக்கும் இடனாவது. (2) எண்ணி லங்குறை சராசர மிலிங்கமென் றெண்ணி விண்ணி னாள்களுங் கோள்களும் விலங்குவ தியாக்கைக் கண்ணி னான்கதிர் முதற்பல கடவுளர் பூசை பண்ணி வேண்டிய நல்வர மடைந்ததப் பதியில். (இ - ள்.) அங்கு உறை எண் இல் சர அரசம் - அங்கு வசிக்கும் அளவற்ற சரா சரங்களனைத்தும், இலிங்கம் என்று எண்ணி - சிவலிங்க மூர்த்தமென்று கருதி, விண்ணின் நாள்களும் கோள்களும் விலங்குவது - வானின்கணுள்ள நாண்மீன்களும் நவக் கோள்களும் விலகிச் செல்லப் பெறுவது; ஆக்கைக் கண்ணினான் கதிர் முதல் பல கடவுளர் - உடலில் கண்களையுடைய இந்திரனும் சூரியனு முதலிய பல தேவர்கள், பூசை பண்ணி - வழிபட்டு, வேண்டிய நல்வரம் அடைந்தது - தாம் விரும்பிய நல்ல வரங்களை அடையப்பெற்றது; அப்பதியில் - அத்தன்மை வாய்ந்த அந்நகரில், எண்ணில் சராசரங்களையும் என்றியைத்து விரிக்க. சிவலிங்க மாகத் தோன்றுதலின் எண்ணி விலங்குவவாயின; பதியின் மேன்மை கூறியவாறு. பூவணநகரம் விளங்கப்பெறுவது, அடையப்பெற்றது என்க. (3) கிளியு ளார்பொழிற் பூவணக் கிழவர்தங் கோயிற் றளியு ளார்தவப் பேறனா டாதுகு பூந்தார் அளியு ளார்சூழ லணங்கனா ளந்தரத் தவர்க்குங் களியு ளார்தர மயக்குறூஉங் கடலமு தனையாள். (இ - ள்.) கிளி உள் ஆர் பொழில் பூவணக் கிழவர்தம் - கிளிகள் உள்ளே நிறைந்துவாழும் சோலைசூழ்ந்த திருப்பூவண நாதருடைய, கோயில தளியுளார் தவப்பேறு அனாள் - திருக் கோயிற் பணிபுரியும் உருத்திரகணிகையர் தவப்பயன்போலும் ஒரு நங்கை உளள்; தாது உகு பூந்தார் உள் அளி ஆர் குழல் அணங்கு அனாள் - அவள் மகரந்தஞ் சிந்தும் மலர்மாலையுள் வண்டுகள் பொருந்தி இசைபாடுங் கூந்தலை யுடைய அணங்கினை யொப்பாள்; அந்தரத்தவர்க்கும் - தேவர்கட்கும், களிஉள் ஆர்தர - உள்ளத்திற் களிப்புமிக, மயக்குறூஉம் - மயக்குகின்ற, கடல் அமுது அனையாள் - கடலிற் றோன்றிய அமுதம்போல்வாள். (4) நரம்பி னேழிசை யாழிசைப் பாடலு நடநுல் நிரம்பு மாடலும் பெண்ணல நீர்மையும் பிறவும் அரம்பை மாதரை யொத்தன ளறனெறி யொழுகும் வரம்பி னாலவர் தமக்குமே லாயினாண் மன்னோ. (இ - ள்.) நரம்பின் ஏழு இசை யாழிசைப் பாடலும் - நரம்பின் கண்ணமைந்த குரல் முதலிய ஏழிசைகளையுடைய யாழின் வழியே பாடும் மிடற்றுப்பாடலும், நடநூல் நிரம்பும் ஆடலும் - பரத நூலிற் கூறும் இலக்கணம் நிரம்பிய ஆடலும், பெண் நல நீர்மையும் - பெண் கட்குரிய அழகின் றன்மையும், பிறவும் - ஏனையவுமாகிய இவற்றால், அரம்பை மாதரை ஒத்தனள் - அரம்பை மகளிரை நிகர்த்தனள், அறன் நெறி ஒழுகும் வரம்பினால் - சிவபுண்ணிய நெறியில் நடக்குங் கடப்பாட்டால், அவர் தமக்கு மேல் ஆயினாள் - அவ்வர மகளிரினும் மேம்பட்டவளானாள். ஏழிசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. யாழ்ப்பாடலும் அதன்வழியே அதனை யொத்துப் பாடும் மிடற்றுப் பாடலும் என்பார், ‘ஏழிசை யாழிசைப் பாடலும்’ என்றார். பெண்ணலம் - பெண்டிர்க்குரிய அழகு. நாடக மகளிர் ஆடல் பாடல் அழகு என்பவற்றாற் சிறந்திருக்க வேண்டுமென்பதனை, " ஆடலும் பாடலு மழகு மென்றிக் கூறிய முறையி னொன்றுகுறை படாமல்" என்னும் சிலப்பதிகார அரங்கேற்று காதை யடிகளானறிக. பிறவென்றது இன்சொல் முதலியவற்றை. அரம்பை மாதர் - ஊர்வசி முதலாயினார். தவப்பேறனாள் ஒருத்தியுள் அவள் அணங்கனாள் அமுதனையாள் ஒத்தனள் மேலாயினாள் என முடிக்க. மன்னும் ஓவும் அசைகள். (5) ஆய மாதர்பேர் பொன்னனை யாளென்ப வவடன் நேய வாயமோ டிரவிரு ணீங்குமு னெழுந்து தூய நீர்குடைந் துயிர்புரை சுடர்மதிக் கண்ணி நாய னாரடி யருச்சனை நியமமு நடாத்தி. (இ - ள்.) ஆய மாதர்பேர் பொன்னனையாள் என்ப - அன்னளாகிய மாதின் பெயர் பொன்னனையாள் என்று கூறுவர், அவள் தன் நேய ஆயமோடு - அவள் தன்னுடைய அன்புள்ள தோழியர் கூட்டத்தோடும், இரவு இருள் நீங்குமுன் எழுந்து - இரவின் இருள் புலர்தற்குமுன்னரே துயிலுணர்ந் தெழுந்து, தூயநீர் குடைந்து - புனிதமான நீரில் மூழ்கி, உயிர் புரை - உயிரையொத்த, சுடர்மதிக்கண்ணி நாயனார் - ஒளி பொருந்திய பிறைமதியைக் கண்ணியாகச் சூடிய சிவபெருமானுடைய, அடி அருச்சனை நியமமும் நடத்தி - திருவடிகளை அருச்சித்தலாகிய கடனையும் இயற்றி. என்ப, அசையுமாம். இருணீங்குமுன் - வைகறையில், கண்ணி - முடியிற்சூடும் மாலை. நாயனார் - தலைவர். உயிர்புரை நாயனார் என்க. (6) திருத்தர் பூவண வாணரைச் சேவித்துச் சுத்த நிருத்த மாடிவந் தடியரைப் பொருளென நினையுங் கருத் ளாயருச் சித்தவர் களிப்பவின் சுவையூண் அருத்தி யெஞ்சிய தருந்துவா ளஃதவ ணியமம். (இ - ள்.) திருத்தர் பூவணவாணரைச் சேவித்து - தூயராகிய திருப் பூவணநாதரை வணங்கி, சுத்த நிருத்தம் ஆடி - சுத்தநாடகம் ஆடி, வந்து - இல்லிற்கு வந்து, அடியரைப்பொருள் என நினையும் கருத்தளாய் - சிவனடியார்களை மெய்ப்பொருளென்று கருதும் உள்ளமுடையாளாய், அருச்சித்து - பூசித்து, அவர் களிப்ப இன்சுவை ஊண் அருத்தி - அவர் மகிழுமாறு இனிய சுவையோடு கூடிய உணவினை உண்பித்து, எஞ்சியது அருந்துவாள் - எஞ்சிய உணவினை உண்பாள்; அஃது அவள் நியமம் - அஃது அவள் நாடொறும் இயற்றும் கடனாகும். வாணர், வாழ்நர் என்பதன் மரூஉ. சுத்த நிருத்தம் - சொக்கம்; சாந்தமாக ஆடும் சாந்திக் கூத்தின் வகை நான்கனுள் ஒன்று; நூற் றெட்டுக் கரணமுடையது. இனி மத்தள முதலியனவின்றிச் செய்யப்படும் கூத்து என்றுமாம். அடியர் - வினைத்துயர் தீர்க்கும் திருவேட முடைய சிவனடியார். எஞ்சியது - மிச்சில். நியமம் - தவிராக்கடன். (7) மாத ரிந்நெறி வழங்குநாண் மற்றவ ளன்பைப் பூத லத்திடைத் தெருட்டுவான் பொன்மலை வல்லி காத னாயகன் றிருவுருக் காணிய வுள்ளத் தாத ரங்கொடுத் தருளினார் பூவணத் தையர். (இ - ள்.) மாதர் இந்நெறி வழங்கும் நாள் - பொன்னனையாள் இந்த நெறியில் ஒழுகும் நாளில், பூவணத்து ஐயர் - திருப்பூவணத்து இறைவர், மற்றவள் அன்பை - அப்பொன்னனையாள் அன்பினை, பூதலத்திடைத் தெருட்டுவான் - நிலவுலகிலுள்ளாருக்கு அறிவிக்க, பொன்மலை வல்லி காதல் நாயகன் - உமையம்மையின் அன்புள்ள நாயகனாகிய சிவபெருமானுடைய, திரு உருக்காணிய - திருமேனியைச் சமைக்க, உள்ளத்து ஆதரம் கொடுத்தருளினார்- (அவள்) மனத்தின்கண் ஆசையைக் கொடுத்தருளினார். காதல் எனப் பொருள்படும் மாதர் என்னும் உரிச்சொல்லே பின் மகளிரைக் குறித்ததாகலின், அஃது ஒருமையிலும் வழங்கும். மற்று : அசை. தெருட்டுவான் : வானீற்று வினையெச்சம். பொன்மலைவல்லி காதனாயகன் றிருவுரு - தமது திருவுரு.. காணிய - இயற்ற : செய்யிய என்னும் வினையெச்சம.. ஐயர் அவள் அன்பைத் தெருட்டுவான் திருவுருக் காணிய ஆதரங் கொடுத்தருளினார் என்க. (8) ஐயர் தந்தபே ரன்புரு வாயினாண் மழுமான் கையர் தந்திரு வுருவினைக் கருவினாற் கண்டு மைய கண்ணினாள் வைகலும் வரும்பொரு ளெல்லாம் பொய்யி லன்புகொண் டன்பர்தம் பூசையி னேர்வாள். (இ - ள்.) மைய கண்ணினாள் - மைதீட்டிய விழிகளையுடைய பொன்னனையாள், ஐயர் தந்தபேர் அன்பு உரு ஆயினாள் - இறைவர் கொடுத்தருளிய பெரிய அன்பே வடிவமாகியவளாய், மழுமான் கையர் தம் திரு உருவினை - மழுவையும் மானையும் திருக்கரத் திலேந்திய சிவபெருமானது திருமேனியை, கருவினால் கண்டு- கருவில் உளதாக்கி, வைகலும் வரும் பொருள் எல்லாம் - நாள்தோறும் வருகின்ற பொருள் முழுதையும், பொய்இல் அன்பு கொண்டு - பொய்யில்லாத (மெய்) அன்பினால், அன்பர்தம் பூசையில் நேர்வாள் - அடியார் பூசையிலே செலுத்துவாள். ஆயினாள் : முற்றெச்சம். தம் இரண்டும் சாரியை. கரு - குழவியுருத் தோன்றும் தாயின் கருப்போன்று உலோகங்களினாய உரு வார்க்கப்படுதற்கு மெழுகினால் அமைக்கப்படும் வடிவம். இம் மெழுகுருவமைத்தலைக் கருக்கட்டுதல் என்பர். மைய : குறிப்புப் பெயரெச்சம். வரும்பொருள் - ஆடல் பாடல் முதலியவற்றால் வரும் பொருள். (9) அடியார் பூசனைக் கன்றியெஞ் சாமையா லடிகள் வடிவு காண்பதெப் படியென்று மடியிலச் செழியற் கொடிவில்1 பொற்கிழி நல்கிய வள்ளலை யுன்னிப் பிடிய னாளிருந் தாளஃ தறிந்தனன் பெருமான். (இ - ள்.) அடியர் பூசனைக்கு அன்றி - அடியார்களின் வழி பாட்டிற்கே யல்லாமல், எஞ்சாமையால் - பொருள் மிஞ்சாமையினால், அடிகள் வடிவுகாண்பது எப்படி என்று - இறைவரின் திருவுருவ மைத்தல் எங்ஙனமென்று கருதி, மடிஇல் அச்செழியற்கு - சோம்பலில்லாத அக்குல பூடண பாண்டியனுக்கு, ஒடிவு இல் பொற்கிழி நல்கிய வள்ளலை உன்னி - குறையாத பொற்கிழியினையருளிய சோமசுந்தரக் கடவுளைச் சிந்தித்து, பிடிஅனாள் இருந்தாள் - பெண் யானைபோல்பவளாகிய அப் பொன்னனையாள் இருந்தனள்; பெருமான் அஃது அறிந்தனன்- இறைவன் அதனைத் திருவுளங் கொண்டான். அகரம் பண்டறிசுட்டு. ஒடிவில் கிழி - உலவாக் கிழி. தனக்கும் பொன்னருளுவர் என்னுங் கருத்துடன் சித்தித்தாள் என்பார் ‘பொற்கிழி நல்கிய வள்ளலை யுன்னி’ என்றார். (10) துய்ய நீறணி மெய்யினர் கட்டங்கந் தொட்ட கையர் யோகபட் டத்திடைக் கட்டினர் பூதிப் பையர் கோவண மிசையசை யுடையினர் பவளச் செய்ய வேணிய ரங்கொரு சித்தராய் வருவார். (இ - ள்.) துய்யநீறு அணி மெய்யினர் - தூய திருநீறு தரித்த மெய்யினையுடையவரும், கட்டங்கம் தொட்ட கையர் - மழு ஏந்திய திருக்கரத்தையுடையவரும், யோகபட்டத்து இடைக்கட்டினர் - யோக பட்டிகையை இடையிற் கட்டியவரும், பூதிப்பையர் - திருநீற்றுப் பையினையுடையவரும், கோவணமிசை அசை உடையினர் - கோவண மீது கட்டிய ஆடையையுடையவரும், பவளச்செய்ய வேணியர் - பவளம் போன்ற சிவந்த சடையையுடையவருமாகி, ஒரு சித்தராய் அங்கு வருவார் - ஒரு சித்தமூர்த்தியாய் அங்கு வருவாராயினர். கட்டங்கம் - மழு; முன்னர் உரைத்தமை காண்க. அசை - அசைத்த, கட்டிய. மெய்யினர் முதலிய குறிப்பு முற்றுக்கள் எச்சமாயின. (11) வந்து பொன்னனை யாண்மணி மாளிகை குறுகி அந்த மின்றிவந் தமுதுசெய் வாரொடு மணுகிச் சிந்தை வேறுகொண் டடைந்தவர் திருவமு தருந்தா துந்து மாளிகைப் புறங்கடை யொருசிறை யிருந்தார். (இ - ள்.) வந்து பொன் அனையாள் மணிமாளிகை குறுகி - (அங்ஙனம்) வந்து பொன்னனையாளின் அழகிய திருமாளிகையை அடைந்து, சிந்தை வேறு கொண்டு அடைந்தவர் - வேறு கருத்துடன் வந்த அச்சித்த மூர்த்திகள், அந்தம் இன்றிவந்து அமுது செய்வாரொடும் அணுகி - அளவில்லாமல் வந்து உண்பவரோடும் கூடி, திரு அமுது அருந்தாது - திருவமுது செய்யாமல், உந்தும் மாளிகைப் புறங்கடை - ஒளிவீசும் மாளிகையின் கடைவாயிலில், ஒருசிறை இருந்தார் - ஒரு பக்கத்தில் இருந்தருளினார். சிந்தை வேறுகொண்டு அடைந்தவர் - ஏனையடியார் போலத் திருவமுதருந்துங் கருத்தின்றி இரசவாதஞ் செய்யுங் கருத்துடன் போந்தவர். உந்துதல் - (ஒளி) வீசுதல்; மேல் நிவத்தலுமாம். வந்து குறுகி அருந்தாது ஒரு சிறையிருந்தார் என்க. (12) அமுது செய்தருந் தவரெலா மகலவே றிருந்த அமுத வாரியை யடிபணிந் தடிச்சிய ரைய அமுது செய்வதற் குள்ளெழுந் தருள்கென வுங்கள் அமுத னாளையிங் கழைமினென் றருளலு மனையார். (இ - ள்.) அமுதுசெய்து அருந்தவர் எலாம் அகல - அரிய தவத்தினையுடைய அடியவரெல்லாருந் திருவமுதுசெய்து செல்ல, வேறு இருந்த அமுதவாரியை அடிச்சியர் அடிபணிந்து - வேறாக இருந்த அமுத வெள்ளமாகிய சித்த மூர்த்திகளைத் தாதியர் அடிவணங்கி, ஐய - ஐயனே, அமுதுசெய்வதற்கு உள் எழுந்தருள்க என - திருவமுது செய்வதற்கு உள்ளே எழுந்தருளவேண்டுமென்று வேண்ட, உங்கள் அமுது அன்னாளை இங்கு அழைமின் என்று அருளலும் - அவர் உங்கள் அமுதம் போன்ற தலைவியை இங்கே அழைமின்கள் என்று அருளிச் செய்யவும், அனையார்- அந்த ஏவன்மகளிர். அடிபணிந்து என்பது ஒரு சொல்லாய் இரண்டாவதற்கு முடிபாயிற்று. அடிச்சியர் - அடித்தொண்டு புரியும் தாதியர், குற்றேவன் மகளிர். அருள்கென, அகரம் தொகுத்தல். (13) முத்த ராமுகிழ் வாணகை யல்குலாய் முக்கண் அத்த ரானவர் தமரெலா மமுதுசெய் தகன்றார் சித்த ராயொரு தம்பிரான் சிறுநகை யினராய் இத்த ராதலத் தரியரா யிருக்கின்றா ரென்றார். (இ - ள்.) முத்து அரா - முத்தினையும் பாம்பின் படத்தினையும் முறையே நிகர்த்த, வாள்முகிழ் நகை அல்குலாய் - ஒள்ளிய புன்னகையையும் அல்குலையுமுடைய அம்மையே, முக்கண் அத்தர் ஆனவர் தமர் எலாம் - மூன்று கண்களையுடைய சிவபெருமானுடைய சுற்ற மாகிய அடியார்களனைவரும் அமுதுசெய்து அகன்றார் - திருவமுது செய்து நீங்கினர்; ஒரு தம்பிரான் சித்தராய் - ஒரு தம்பிரான் சித்த மூர்த்தியாய், சிறுநகையினராய் - புன்னகையுடையராய், இத்தராத லத்து அரியராய் இருக்கின்றார் என்றார் - இந்நிலவுலகின்கண் கிடைத்தற் கரியராய் இருக்கின்றார் என்று கூறினர். முத்துப்போலும் நகை அராப்போலும் அல்குல் என நிரனிறை. இருக்கின்றார் - அமுது செய்யாதிருக்கின்றார். (14) நவம ணிக்கலன் பூத்தபூங் கொம்பரி னடந்து துவரி தழ்க்கனி வாயினாள் சுவாகதங் கிலவென் றுவமை யற்றவர்க் கருக்கிய மாசன முதவிப் பவம கற்றிய வடிமலர் முடியுறப் பணிந்தாள். (இ - ள்.) துவர் இதழ்க்கனி வாயினாள் - பவளம்போன்ற இதழையும் கொவ்வைக் கனிபோன்ற வாயையுமுடைய பொன்னனையாள், நவமணிக்கலன் பூத்த - நவரத்தினங்களாலாகிய அணிகலன்கள் மலர்ந்த, பூங்கொம்பரின் நடந்து - பூங்கொம்புபோல நடந்து, சு ஆகதம் கில என்று - (தேவரீர் வரவு) நல்வரவல்லவா என்று கூறி, உவமை அற்றவர்க்கு - ஒப்பற்ற சித்த மூர்த்திகளுக்கு, அருக்கியம் ஆசனம் உதவி - அருக்கியமும் ஆசனமுங் கொடுத்து, பவம் அகற்றிய அடிமலர்- அடியார் பிறப்பை நீக்கிய திருவடி மலர்கள், முடி உறப் பணிந்தாள்- முடியிற் பொருந்த வணங்கினாள். முதலடி இல்பொருளுவமை. கொம்பர் : ஈற்றுப்போலி. அருக்கிய என்றதனால் இனம் பற்றிப் பாத்தியம் ஆசமனீயம் என்பவும் கொள்க. அகற்றிய என்பதனைச் செய்யியவென்னும் வினையெச்சமாக்கித், தனது பிறப்பைப் போக்குதற்கு என்றுரைத்தலுமாம். அடிமலரை முடி பொருந்த என்றுமாம். (15) எத்த வஞ்செய்தே னிங்கெழுந் தருளுதற் கென்னாச் சித்தர் மேனியும் படிவெழிற் செல்வமு நோக்கி முத்த வாணகை யரும்பநின் றஞ்சலி முகிழ்ப்ப அத்தர் நோக்கினா ரருட்கணா லருள்வலைப் பட்டாள். (இ - ள்.) சித்தர்மேனியும் - சித்தமூர்த்திகளின் திருமேனியையும், படிவு எழில் செல்வமும் நோக்கி - வடிவினது அழகின் செல்வத்தையுங் கண்டு, முத்தவாள் நகை அரும்ப நின்று - முத்துப்போன்ற ஒள்ளிய புன்னகை தோன்ற நின்று, இங்கு எழுந்தருளுதற்கு எத்தவம் செய்தேன் என்னா - (தேவரீர்) இங்கு எழுந்தருளுதற்கு என்ன தவம் செய்தேனோ வென்று, அஞ்சலி முகிழ்ப்ப - கையைச் சென்னியிற் குவித்து வணங்க, அத்தர் நோக்கினார் அருள் கண்ணால் - இறைவர் திருவருள் நாட்டத்தால் நோக்கி யருளினார்; அருள் வலைப்பட்டாள் - (பொன்னனையாள்) திருவருளாய வலையில் அகப்பட்டனள். படிவு - படிவம் : ஈறு தொக்கது. செல்வம் - பெருக்கம். நோக்குதல் - சட்சு தீட்சையாகும். பத்தி வலையிற்பட்ட பரமனது அருள் வலையிற் பட்டாள் பொன்னனையாள் என்க. அருள் வலைப்பட்டாள் என்பதனை வினையாலணையும் பெயராக்கி வருஞ் செய்யுளிற் கூட்டி யுரைத்தலுமாம். (16) ஐய 1உள்ளெழுந் தருளுக வடிகணீ ரடியேன் உய்ய வேண்டிய பணிதிரு வுளத்தினுக் கிசையச் செய்ய வல்லனென் றஞ்சலி செய்யவுண் ணகையா மைய னோக்கியை நோக்கிமீ னோக்கிதன் மணாளன். (இ - ள்.) ஐய - ஐயரே, உள் எழுந்தருளுக - உள்ளே எழுந்தருளக் கடவீர்; அடிகள் நீர் - அடிகளாகிய நீர், அடியேன் உண்ண- அடியாளாகிய யான் ஈடேற, வேண்டிய பணி - விரும்பிய தொண்டினை, திருவுளத்தினுக்கு இசையச் செய்யவல்லன் என்று - திருவுள்ளத்திற்குப் பொருந்துமாறு செய்யவல்லேன் என்று கூறி, அஞ்சலி செய்ய - வணங்க, மீன் நோக்கி தன் மணாளன் - அங்கயற்கண்ணி மணாளனாகிய சோமசுந்தரக் கடவுள், உள் நகையா - உள்ளே நகைத்து, மையல் நோக்கியை நோக்கி - மையல் விளைக்கும் பார்வையுடைய பொன்னனையாளைப் பார்த்து. ஐய அடிகள் என ஒருமையும் பன்மையும் விரவிவந்தன; ஐய, அசையுமாம். யான் உய்ய நீர் வேண்டிய பணி என்க. உள்நகையா என்றும், மையல் நோக்கியை என்றும் கூறிய குறிப்பால், அவர் தம்மை அணைய வேண்டினாரெனக் கருதி, வேண்டிய பணி திருவுளத்தினுக் கிசையச் செய்ய வல்லன் என்று மறைத்துக் கூறினள் என்க. உள் நகையா - புன் முறுவல் செய்து. தன் : சாரியை. (17) வடியை நேர்விழி யாய்பெரு வனப்பினை சிறிதுன் கொடியை நேரிடை யெனவிளைத் தனையெனக் கொன்றை முடியி னானடி யாரமென் முகிழ்முலைக் கொடிதாழ்ந் தடிய னேற்குவே றாயொரு மெலிவிலை யையா. (இ - ள்.) வடியை நேர்விழியாய் - மாவடுவின் பிளவினையொத்த விழிகளையுடையாய், பெருவனப்பினை - பேரழகுடைய நீ, உன் கொடியை நேர் இடை எனச் சிறிது இளைத்தனை என - உனது கொடி போன்ற இடைபோலச் சிறிது உடல் மெலிந்திருக் கின்றாய் (அதன் காரணம் யாது) என்று வினவ, மெல்முகிழ் முலைக் கொடி - மெல்லிய அரும்பாகிய கொங்கை முகிழ்த்த கொடிபோன்ற அவள், கொன்றை முடியினான் அடி ஆரத்தாழ்ந்து - கொன்றை மலரணிந்த திருமுடியை யுடைய சிவபிரான் திருவடிகளைப் பொருந்த வணங்கி, ஐயா - ஐயனே, அடியனேற்கு வேறாய் ஒரு மெலிவு இலை - அடியேற்கு வேறொரு மெலிவு இல்லை (ஆனால்). இளைத்திருப்பதன் காரணம் யாதென்று வினவ என விரித்துரைக்க. வேறாயொரு மெலிவிலை என்றதனால் ஒரு மெலிவுண்டென்பது குறிப்பிட்டவாறாயிற்று. அது வருஞ் செய்யுளிற் பெறப்படும். மெலிவின் காரணம் மெலிவு எனப்பட்டது. (18) எங்க ணாயகர் திருவுரு க்காண்பதற் கிதயந் தங்கு மாசையாற் கருவுருச் சமைத்தனன் முடிப்பேற் கிங்கு நாடொறு மென்கையில் வருபொரு ளெல்லாம் உங்கள் பூசைக்கே யல்லதை யொழிந்தில வென்றாள். (இ - ள்.) எங்கள் நாயகர் - எங்கள் தலைவராகிய சிவபெருமானுடைய, திரு உருக் காண்பதற்கு - திருவுருவத்தை ஆக்குவதற்கு, இதயம் தங்கும் ஆசையால் - உள்ளத்தில் நிலை பெற்ற விருப்பத்தினால், கரு உருச் சமைத்தனன் - மெழுகினாற் கருக்கட்டி வைத்தேன்; முடிப் பேற்கு - அதனைப் பொன்னினால் (செய்து) முடிக்கக் கருதிய எனக்கு, இங்கு நாள்தொறும் என்கையில் வருபொருள் எல்லாம் - இங்கு நாள் தோறும் என் கையில் வருகின்ற பொருள் முழுதும், உங்கள் பூசைக்கே அல்லது - அடியார்களாகிய உங்கள் பூசனைக்கே சரியாவதல்லாமல், ஒழிந்தில என்றாள் - எஞ்சவில்லை என்று கூறினாள். சிவபெருமானாகிய சித்த மூர்த்திகளைச் சிவனடியாராகக் கருதி ‘உங்கள் பூசைக்கே’ என்றாளென்க. அல்லதை, ஐ : சாரியை. (19) அருந்து நல்லமு தனையவ ளன்புதித் திக்கத்1 திருந்து தேனென விரங்குசொற் செவிமடுத் தையர் முருந்து மூரலாய் செல்வமெய் யிளமைநீர் மொக்குள் இருந்த வெல்லையு நிலையில வென்பது துணிந்தாய். (இ - ள்.) அருந்து நல் அமுது அனையவள் - உண்ணுதற்குரிய இனிய அமிழ்தம்போன்ற பொன்னனையாள், அன்பு - அன்போடு, தித்திக்க - இனிமை பொருந்த, திருந்து தேன் என - இனிமை திருந்திய தேன்போல, இரங்குசொல் - கூறுஞ் சொற்களை, ஐயர் செவிமடுத்து - சித்தமூர்த்திகள் கேட்டு, முருந்து மூரலாய் - மயிலிறகினடி போன்ற பற்களையுடையவளே, செல்வம் மெய் இளமை - செல்வமும் யாக்கையும் இளமையும், நீர்மொக்குள் இருந்த எல்லையும் நிலை இல என்பது துணிந்தாய் - நீரிற் றோன்றுங் குமிழி இருந்த அளவும் நிலைபெறுவன அல்லவென்பதனை நன்கு உணர்ந்தாய். சித்திக்க என்னும் பாடத்திற்கு அன்பு கைகூட என்றுரைக்க. இரங்கு சொல் - இரக்கந் தோன்றக் கூறுஞ்சொல் எனலுமாம். (20) அதிக நல்லற நிற்பதென் றறிந்தனை யறத்துள் அதிக மாஞ்சிவ புண்ணியஞ் சிவார்ச்சனை யவற்றுள் அதிக மாஞ்சிவ பூசையு ளடியவர் பூசை அதிக மென்றறிந் தன்பரை யருச்சனை செய்வாய். (இ - ள்.) நல் அறம் அதிகம் நிற்பது என்று அறிந்தனை - நன்றாகிய அறமே சிறப்புடையதும் நிலைபெறுவதும் என்று உணர்ந்தனை; அறத்துள் - அவ்வறங்களுள்ளே, சிவபுண்ணியம் அதிகம் ஆம் - சிவ புண்ணியங்கள் சிறந்தனவாகும் (என்றும்), அவற்றுள் சிவார்ச்சனை அதிகம் ஆம் - அச் சிவ புண்ணியங்களுள்ளும் சிவபூசை சிறந்ததாகும் (என்றும்), சிவபூசையுள் அடியவர் பூசை அதிகம் என்று அறிந்து - அச் சிவ பூசையினும் அடியார் பூசை சிறந்தது என்றும் அறிந்து, அன்பரை அருச்சனை செய்வாய் - அடியார்களைப் பூசிப்பாயாயினை (அதனால்), என்று என்பதனைப் பிறவிடத்துங் கூட்டுக. ஏனை அறங்களினும் சிவ புண்ணியம் சிவார்ச்சனைகளினும் அடியார் பூசை சிறந்ததென்பதனைப் பின்வரும் திருமந்திரங்களால் அறிக: " ஆறிடும் வேள்வி யருமறை நூலவர் கூறிடு மந்தணர் கோடிபே ருண்பதில் நீறிடுந் தொண்டர் நினைவின் பயனிலை பேறெனி லோர்பிடி பேறது வாகுமே" " அகர மாயிர மந்தணர்க் கீயிலென் சிகர மாயிரஞ் செய்து முடிக்கிலென் பகரு ஞானி பகலூண் பலத்துக்கு நிகரிலை யென்பது நிச்சயந் தானே" " படமாடக் கோயிற் பகவற்கொன் றீயின் நடமாடக் கோயி னம்பர்க்கங் காகா நடமாடக் கோயி னம்பர்க்கொன் றீயிற் படமாடக் கோயிற் பகவற்க தாமே." (21) உறுதி யெய்தினை யிருமையு முன்பெயர்க் கேற்ப இறுதி யில்லவன் றிருவுரு வீகையாற் காணப் பெறுதி யாகநின் மனைக்கிடைப் பித்தளை யீயம் அறுதி யானபல கலன்களுங் கொணர்தியென் றறைந்தார். (இ - ள்.) இருமையும் உறுதி எய்தினை - இம்மை மறுமை இரண்டிலும் பயன் பெற்றனை; உன் பெயர்க்கு ஏற்ப - பொன்னனை'a3ள் என்னும் உன் பெயருக்குப் பொருந்த, இறுதி இல்லவன் திரு உரு - அழிவில்லாத இறைவன் திருமேனியை, ஈகையால் காணப் பெறுதியாக - பொன்னாற் செய்யப் பெறுவாயாக; நின் மனைக் கிடை - நினது மனையிற் கிடக்கும், பித்தளை ஈயம் அறுதியான பல் கலன்களும் - பித்தளையும் ஈயமு முடிவாவுள்ள பல உலோகங்களாற் செய்யப்பட்ட கலன்களையும், கொணர்தி என்று அறைந்தார் - கொண்டு வருவாய் என்று கூறினார். ஈகை - பொன். தாழ்ந்த உலோகங்களைக் கூறி அவை முடிவாகவுள்ள என ஏனையவற்றைத் தழுவினார். (22) ஈயஞ் செம்பிரும் பிரசித மென்பவும் புணர்ப்பாற் றோயும் பித்தளை வெண்கலந் தராமுதற் றொடக்கத் தாயும் பல்வகை யுலோகமுங் கல்லென வலம்பத் தேயுஞ் சிற்றிடை கொண்டுபோய்ச் சித்தர்முன் வைத்தாள். (இ - ள்.) ஈயம் செம்பு இரும்பு இரசிதம் என்பவும் - ஈயமும் செம்பும் இரும்பும் வெள்ளியும் என்பனவும், புணர்ப்பால் தோயும் பித்தளை வெண்கலம் தராமுதல் தொடக்கத்து - ஒன்றோ டொன்று கலத்தலால் உண்டாகும் பித்தளையும் வெண்கலமும் தராவு முதலிய தொடக்கத்தை யுடையவும் ஆகிய, ஆயும் பல்வகை உலோகமும் - ஆராயும் பலவகை உலோகங்களையும்; கல் என அலம்ப - கல்லென்று ஒலிக்க, தேயும் சிற்றிடை - தேய்ந்த சிறிய இடையையுடைய பொன்னனையாள், கொண்டு போய்ச் சித்தர்முன் வைத்தாள் -கொண்டுபோய்ச் சித்த மூர்த்திகள் முன்னர் வைத்தனள். ஈயம் முதலியன தனியுலோகமும், பித்தளை முதலியன கலப்புலோகமும் என்றார். கல்லென : ஒலிக்குறிப்பு. சிற்றிடை: அன்மொழித் தொகை. (23) வைத்த வேறுவே றுலோகமு மழுவுழை கரந்த சித்த சாமிக ணீற்றினைச் சிதறினர் பாவித்1 தித்தை நீயிரா வெரியிலிட் டெடுக்கினன் பொன்னாம் அத்தை நாயகன் றிருவுருக் கொள்கென வறைந்தார். (இ - ள்.) வைத்த வேறுவேறு உலோகமும் - (அங்ஙனம் கொண்டு வந்து) வைத்த வெவ்வேறு வகையான உலோகங்க ளெல்லாவற்றிலும், மழு உழை கரந்த சித்தசாமிகள் - மழுவையும் மானையும் மறைத்து வந்த சித்தமூர்த்திகள், நீற்றினைச் சிதறினர் - திருநீற்றைச் சிதறி பாவித்து - (இவை பொன்னாகவென்று) சிந்தித்து, இத்தை நீ இரா எரியில் இட்டு எடுக்கில் - இவற்றை நீ இரவில் நெருப்பிலிட்டு எடுத்தாயானால். நன்பொன் ஆம் - நல்ல பொன்னாகும்; அத்தை - அப் பொன்னினால், நாயகன் திரு உருக்கொள்க என அறைந்தார் - இறைவன் திருமேனி செய்யக்கடவை எனக் கூறியருளினார். உலோகங்களிலும் என ஏழனுருபு விரிக்க. சிதறினர் : முற்றெச்சம். இது அது என்பன அன்சாரியை பெறாமல் இரட்டித்தன. உலோகமென்னும் பொதுமையால் இத்தை என ஒருமையாற் கூறினார். எரியிலிடுதல் - புடமிடுதல். அத்தை - அதனால் : வேற்றுமை மயக்கம். கொள்கென : தொகுத்தல். (24) மங்கை பாகரை மடந்தையு மிங்குநீர் வதிந்து கங்குல் வாயமு தருந்தியிக் காரிய முடித்துப் பொங்கு காரிருள் புலருமுன் போமெனப் புகன்றாள் அங்க யற்கணா டனைப்பிரி யாரதற் கிசையார். (இ - ள்.) மங்கைபாகரை - அங்ஙனங் கூறியருளிய உமை பாகராகிய சிவபெருமானை, மடந்தையும் - பொன்னனையாளும், இங்கு நீர் வதிந்து - இங் நீர் தங்கி, கங்குல்வாய் அமுது அருந்தி - இரவிற் றிருவமுதுசெய்து, இக்காரியம் முடித்து - இவ்வினையையும் முடித்து, பொங்குகார் இருள் புலருமுன் போம் எனப் புகன்றாள்- மிக்க கரிய இருள் விடியுமுன் போவீராகஎன்று வேண்டினள்; அங்கயற்கணாள் தனைப் பிரியார் - அங்கயற் கண்ணம்மையைப் பிரியாதவராகிய இறைவர், அதற்கு இசையார் - அதற்கு உடன் படாமல். என்னுடன் கலந்து செல்லும் என்பதனை இடக்க ரடக்கலாக ‘இங்குநீர் வதிந்து . . . . . . போம்’ என்றாளென்க. கங்குல்வாய் அமுதருந்தி என்பதற்கு இரவின்கண் அடிசில் உண்டு என்றும், இரவில் என் வாயிலுண்டாகும் ‘வாலெயி றூறிய நீர்’ ஆகிய அமுதினை யுண்டு என்றும் சிலேடைப்பொருள் கொள்க. இக்காரியம் - உலோகங்களைப் பொன்னாக்கும் காரியம். நீர் என்னுடன் அணைந்தமையைப் பிறர் அறிதலால் நுமக்குப் பழியுண்டாகாதவாறு செல்லும் என்பாள் ‘காரிருள் புலருமுன் போமெனப் புகன்றாள்’ என்க. ஒரு காதலியைப் பிரியாதுறையும் இயல்பினர் மற்றொருத்தியைக் கூடுதல் அரிதென்பார் ‘அங்கயற் கணாள் தனைப்பிரியார் அதற்கிசையார்’ என்றார். இறைவன் அருளாகிய சத்தியைப் பிரியாமை யுணர்க. பிரியார் : பெயர். இசையார் : முற்றெச்சம். (25) சிறந்த மாடநீண் மதுரையிற் சித்தர்யா மென்று மறைந்து போயினார் மறைந்தபின் சித்தராய் வந்தார் அறைந்த வார்கழ லலம்பிட வெள்ளிமன் றாடி நிறைந்த பேரொளி யாயுறை நிருத்தரென் றறிந்தாள். (இ - ள்.) சிறந்த மாடம் நீள் மதுரையில் சித்தர் யாம் என்று - சிறப்புடைய மாடங்கள் உயர்ந்த மதுரையில் வசிக்குஞ் சித்தர் யாம் என்று கூறி, மறைந்து போயினார் - மறைந்து சென்றனர்; மறைந்தபின் - (அங்ஙனம் அவர்) மறைந்தருளியபின், சித்தராய் வந்தார் - இங்குச் சித்தசாமியாய் வந்தவர், அறைந்த வார்கழல் அலம்பிட - (பலரும்) புகழும் நீண்ட வீரக்கழல் ஒலிக்க, வெள்ளிமன்று ஆடி - வெள்ளியம் பலத்திலே திருக்கூத்தாடி, எங்கும் நிறைந்தபேர் ஒளியாய் உறை நிருத்தர் என்று அறிந்தாள் - எங்கும் நிறைந்த பெரிய ஒளிவடிவாய்த் தங்கிய திருக்கூத்தர் என்று உணர்ந்தனள். அறைந்த - ஒலிக்கின்ற என்றுமாம். வந்தவர் வெள்ளிமன்றிலே ஆடி உறையும் நிருத்தரென் றறிந்தாள் என முடிக்க. மதுரையிற் சித்தர் என்று கூறி மறைந்த குறிப்பால் இங்ஙனம் அறிந்தாள் என்க. (26) மறைந்து போயினா ரெனச்சிறி தயர்ச்சியு மனத்தில் நிறைந்த தோர்பெருங் கவற்சியை நீக்கினா ரென்னச் சிறந்த தோர்பெரு மகிழ்ச்சியு முடையளாய்ச் சித்தர் அறைந்த வாறுதீப் பெய்தன ளுலோகங்க ளனைத்தும். (இ - ள்.) மறைந்து போயினார் எனச் சிறிது அயர்ச்சியும்- மறைந்து போனாரே என்று சிறிது வருத்தமும், மனத்தில் நிறைந்தது ஓர் பெருங் கவற்சியை நீக்கினார் என்ன - மனத்தில் நிறைந்துள்ள தாகிய ஒரு பெரிய கவலையைப் போக்கினாரென்று, சிறந்தது ஓர் பெரு மகிழ்ச்சியும் - சிறந்ததாகிய ஒரு பெரிய மகிழ்ச்சியும், உடையளாய் - உடையவளாகி, சித்தர் அறைந்தவாறு - சித்த மூர்த்திகள் கட்டளை யிட்ட வண்ணமே, உலோகங்கள் அனைத்தும் தீப் பெய்தனள் - உலோகங்கள் அனைத்தையும் தீயிற் புடமிட்டனள். அயர்ச்சி - சோர்வு. கவர்ச்சி - திருவுருச் சமைத்தற்குப் பொன் னில்லையே என்னும் கவலை. (27) அழல டைந்தபி னிருண்மல வலிதிரிந் தரன்றாள் நிழல டைந்தவர் காட்சிபோ னீப்பருங் களங்கங் கழல வாடக மானதா லதுகொண்டு கனிந்த மழலை யீர்ஞ்சொலாள் கண்டனள் வடிவிலான் வடிவம். (இ - ள்.) அழல் அடைந்த பின் - (உலோகம்) நெருப்பினைச் சேர்ந்தபின், இருள்மல வலிதிரிந்து - ஆணவமல சத்திகெட்டு, அரன் தாள் நிழல் அடைந்தவர் காட்சிபோல் - இறைவனது திருவடி ஞானத்தை அடைந்தவர் சிவமாக விளங்குதல்போல, நீப்பருங் களங்கம் கழல - நங்குதலில்லாத களிம்பு நீங்க, ஆடகம் ஆனது - பொன்னாகியது; அது கொண்டு - அப்பொன்னினால், கனிந்த மழலை ஈர்ஞ்சொல்லாள் - சுவைமுதிர்ந்த தண்ணிய மழலைச் சொற்களையுடைய பொன்னனையாள், வடிவு இலான் வடிவம் கண்டனள் - ஒரு வடிவமுமில்லாத இறைவனுக்கு ஒரு திருவுருவம் சமைத்தனள். இருள் மலம் - உயிரின் அறிவை மறைக்கும் இருளாகிய ஆணவ மலம். தாள்நிழல் என்றது ஈண்டுத் திருவடி ஞானத்தை. ஆன்மாத் திருவடி ஞானத்தால் ஆணவமாகிய பசுத்துவம் நீங்கிச் சிவத்தன்மை யெய்தினாற்போல உலோகம் எரியாற் களிம்பு நீங்கிப் பொன்னாகியது என்க. ஆணவம் செம்பிற் களிம்பு போல் அனாதியே உயிரைப்பற்றி யிருப்பதென்பதும், அது ஞானத்தால் நீங்கவே ஆன்மா சிவமாய் விளங்கு மென்பதும் உண்மை நூற் கொள்கை. அழலடைந்த பின் களங்கம் கழல ஆடகமானது எனக் கூட்டுக. ஆல் : அசை. கொண்டு : மூன்றாம் வேற்றுமைச் சொல். (28) [அறுசீரடி யாசிரிய விருத்தம்] மழவிடை யுடையான் மேனி வனப்பினை நோக்கி யச்சோ அழகிய பிரானோ வென்னா வள்ளிமுத் தங்கொண் டன்பிற் பழகிய பிரானை யானாப் பரிவினாற் பதிட்டை செய்து விழவுதேர் நடாத்திச் சின்னாள் கழிந்தபின் வீடு பெற்றாள். (இ - ள்.) மழவிடை உடையான் மேனி வனப்பினை நோக்கி- (அங்ஙனம் சமைக்கப்பெற்ற) இளமையாகிய இடப வூர்தியை யுடைய இறைவன் திருமேனியின் அழகினைப் பார்த்து, அழகிய பிரானோ என்னா - சுந்தரநாதனோ இவன் என்று, அள்ளி முத்தம் கொண்டு - (கபோலத்தில்) அள்ளி முத்தமிட்டு, அன்பில் பழகிய பிரானை - தனது மெய்யன்பில் இடைவிடாதிருந்த இறைவனை, ஆனாப் பரிவினால் பதிட்டை செய்து - நீங்காத அன்பினாலே பிரதிட்டை செய்து, விழவுதேர் நடாத்தி - திருவிழாவுந் தேரும் நடாத்தி, சிலநாள் கழிந்தபின் வீடு பெற்றாள்- சில நாட்கள் சென்றபின் பொன்னனையாள் வீடு பேற்றினை யெய்தினாள். அச்சோ : வியப்பிடைச் சொல்; பிரானோ என்பதில் ஓகாரமும் அப்பொருட்டு. பதிட்டை : வடசொற் சிதைவு. தேர் - இரதோற்சவம். (29) நையுநுண் ணிடையி னாளந் நாயகன் கபோலத் திட்ட கையுகிர்க் குறியுஞ் சொன்ன காரணக் குறியுங் கொண்டு வெய்யவெங் கதிர்கால்1 செம்பொன் மேனிவே றாகி நாலாம் பொய்யுகத் தவர்க்குத் தக்க பொருந்துரு வாகி மன்னும். (இ - ள்.) நையும் நுண் இடையினாள் - தேய்ந்த நுண்ணிய இடையையுடைய பொன்னனையாள், அந்நாயகன் கபோலத்து இட்ட கை உகிர்க்குறியும் - அவ்விறைவன் கபோலத்தின்கண் அள்ளுதற்கிட்ட கையிலுள்ள நகக்குறியையும், சொன்ன காரணக் குறியும் கொண்டு - அவள் கூறிய அழகிய பிரான் என்னும் காரணப் பெயரையுங் கொண்டு, வெய்ய வெம் கதிர்கால் செம்பொன் மேனி வேறு ஆகி - மிக்க விருப்பந் தருதலையுடைய ஒளிவீசும் சிவந்த பொன்னாலாகிய திருமேனி வேறு பட்டு, நாலாம் பொய் உகத்தவர்க்கு - பொய்மிக்க கலியுகத்தார்க்கு, தக்க பொருந்து உரு ஆகி மன்னும் - தக்க பொருந்திய திருவுருவமாய் நிலைபெறும். உலகிற்கு இறைவனும் அவளால் விரும்பப்பட்டவனும் என்பது தோன்ற ‘அந்நாயகன்’ என்றார் : வெய்ய வெம் : ஒருபொரு ளிருசொல். விருப்பத்தைச் செய்யும் ஞாயிற்றின் கதிர் என்னலுமாம். உகிர்க் குறியும் காரணக் குறியும் கொண்டு மன்னும், பொருந்துருவாகி மன்னும் எனத் தனித்தனி கூட்டுக. (30) ஆகச் செய்யுள் - 1885. முப்பத்தேழாவது சோழனை மடுவில் வீட்டிய படலம் [அறுசீரடி யாசிரிய விருத்தம்] மின்னனை யார்பூங் கொன்றை வேணிய ரிரத வாதம் பொன்னனை யாண்முன் செய்து போந்தது புகன்றே மார்த்தார் மன்னனை மடுவில் வீட்டி மலரடிக் கன்ப னான தென்னனை யமரிற் காத்த திருவிளை யாடல் சொல்வாம். (இ - ள்.) நனை ஆர் பூங் கொன்றை மின்வேணியர் - தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையை யணிந்த மின்போலும் சடையையுடைய சோமசுந்தரக் கடவுள், பொன்னனையாள்முன் இரதவாதம் செய்து போந்தது புகன்றேம் - பொன்னனையாள் முன்னர் இரசவாதஞ் செய்து சென்றருளிய திருவிளையாடலைக் கூறினோம்; ஆர்தார் மன்னனை - (இனி) ஆத்திமாலையை யணிந்த சோழமன்னனை, மடுவில்வீட்டி - மடுவின்கண் வீழ்த்தி, மலர் அடிக்கு அன்பன் ஆன தென்னனை - மலர்போன்ற திருவடி கட்கு அன்பனாகிய சுந்தரபாத சேகர பாண்டியனை, அமரில் காத்த திருவிளையாடல் சொல்வாம் - போரின்கண் காத்தருளிய திருவிளையாடலைக் கூறுவாம். மின்போலும் வேணி என்க; சித்தராய் வந்து தோன்றி மறைதலின் மின்னையொத்தவராகிய வேணியர் என்றுரைத்தலுமாம். வீட்டி, வீழ்த்தி என்பதன் மரூஉ. (1) பொன்னெடுந் தேரி ராச புரந்தரன் பரந்த ராதி மன்னெடுந் தேவ ரேத்தப் பரனுல கடைந்தா னிப்பால் அந்நெடுந் தகையோன் மைந்த னடலிரா சேசனென்போன் இந்நெடுந் தகையோன் மைந்த னிராசகம் பீர னென்போன். (இ - ள்.) பொன் நெடுந் தேர் இராச புரந்தரன் - பொன்னாலாகிய பெரிய தேரினையுடைய இராசேந்திர பாண்டியன். புரந்தர ஆதி பல் நெடும் தேவர் ஏத்த - இந்திரன் முதலிய பல பெரிய தேவர்களும் புகழ, பரன் உலகு அடைந்தான் - சிவலோகமடைந்தனன்; இப்பால் - பின், இந்நெடுந் தகையோன் மைந்தன் - அப்பெரிய தகுதியை யுடையான் புதல்வன், அடல் இராசேசன் என்போன்- வெற்றியையுடைய இராசேச பாண்டியன் என்று சொல்லப் படுவோன்; அநெடுந் தகையோன் மைந்தன் - இந்த நெடுந்தகையின் மகன், இராச கம்பீரன் என்போன் - இராச கம்பீரனென்று சொல்லப்படுவோன். (2) மற்றிவன் குமரன் பாண்டி வங்கிய தீப னன்னான் பொற்றிணி தடந்தோண் மைந்தன் புரந்தர சித்தா மன்னான் வெற்றிகொள் குமரன் பாண்டி வங்கிய பதாகன் வீரம் பற்றிய சுந்த ரேச பாதசே கரன வன்சேய். (இ - ள்.) இவன் குமரன் - இந்த இராச கம்பீரபாண்டியன் புதல்வன், பாண்டிவங்கிய தீபன் - பாண்டிவங்கிய தீபனென்பவன்; அன்னான் பொன்திணி தடந்தோள் மைந்தன் - அவனுடைய பொன்னிறம் வாய்ந்த திண்ணிய பெரிய தோள்களை யுடைய புதல்வன், புரந்தரசித்தாம் - புரந்தரசித்து என்பான்; அன்னான் வெற்றிக்கொள் குமரன் மகன், பாண்டி வங்கிய பதாகன் - பாண்டிவங்கிய பதாகனென்பேன், அவன் சேய் - அவன் மைந்தன், வீரம் பற்றிய - வீரத்தைப் பொருந்திய, சுந்தரேச பாதசேகரன் - சுந்தரேச பாத சேகர னென்பவன். மற்று : அசை. வங்கியம் - வமிசம். (3) பலர்புகழ் சுந்த ரேச பாதசே கரனாந் தென்னன் அலைபுன லுடுத்த கூட லடிகளுக் கன்ப னாகிக் கொலைபுணர் வேலால் வெங்கோற் குறும்பெனும் களைக டீர்த்து மலர்தலை யுலக மென்னும் வான்பயிர் வளர்க்கு நாளில். (இ - ள்.) பலர்புகழ் சுந்தரேச பாதசேகரனாம் தென்னன் - பலரும் புகழ்கின்ற சுந்தரேச பாதசேகரன் என்னும் அப்பாண்டியன், அலைபுனல் உடுத்த கூடல் அடிகளுக்கு அன்பனாகி - அலையும் நீரையுடைய வையை சூழ்ந்த கூடலின்கண் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுளுக்கு அன்பனாகி, கொலைபுணர் வேலால்- கொலைத் தொழில் பொருந்திய வேற்படையால், வெங்கோல் குறும்பு எனும் களைகள் தீர்த்து - கொடுங் கோலையுடைய குறுநில மன்னரென்னுங் களைகளைப் போக்கி, மலர்தலை உலகம் என்னும் வான்பயிர் வளர்க்கு நாளில் - பரந்த இடத்தையுடைய உலகிலுள்ள உயிர்கள் என்னுஞ் சிறந்த பயிரை வளர்க்கு நாளில். சுட்டு வருவிக்க. குறும்பு - குறுநில அரசு. உலகம் ஈண்டு உயிர்களை யுணர்த்திற்று. வளர்க்கலுற்றான் அங்ஙனம் வளர்க்கு நாளில் என விரித்துரைக்க. (4) பத்துமான் றடந்தேர் நூறு பனைக்கைமா நூற்றுப் பத்துத் தத்துமா னயுத மள்ளர் தானையிவ் வளவே யீட்டி இத்துணைக் கேற்ப நல்கி யெஞ்சிய பொருள்க ளெல்லாஞ் சித்துரு வான கூடற் சிவனுக்கே செலுத்து மன்னோ. (இ - ள்.) மான்தடந் தேர்பத்து - குதிரை பூட்டிய பெரிய தேர் பத்தும், பனைக்கைமாநூறு - பனைபோன்ற துதிக்கையையுடைய யானைகள் நூறும், தத்துமான் நூற்றுப் பத்து - தாவுகின்ற குதிரைகள் ஆயிரமும், மள்ளர் அயுதம்- காலாள் பதினாயிரமு மாகிய, இவ்வளவே தானை ஈட்டி - இவ்வளவு படைகளையே தொகுத்து வைதது, இத்துணைக்கு ஏற்ப நல்கி - இவ்வளவிற்குப் பொருந்திய பொருள்களைக் கொடுத்து, எஞ்சிய பொருள்கள் எல்லாம் - மிஞ்சிய பொருள் முழுதையும், சித்து உருவான - அறிவே வடிவமாகிய, கூடல் சிவனுக்கே செலுத்தும் - மதுரையில் எழுந்தருளிய சிவபெருமானுக்கே செலவிடுவான். அயுதம் - பதினாயிரம். அரசன் பொருளிற் பெரும்பகுதி படையின் பொருட்டுச் செலவிடப்படுதல் வழக்காகவும் இவன் அதனைக் குறைத்து இறைவன் பொருட்டுச் செலவிட்டனன் என்க; இதனால், இவன்பகை வெல்லுதற்கன்றி அரசன் என்பதற்கு ஓர் அறிகுறி யாகவே சிறிது படை வைத்திருந்தனன் என்பதும், தனக்கும் தனது நாட்டிற்கும் பகைவரால் நலிவுண்டாகாமல் இறைவன் காத்தருள்வன் எனக் கருதி யிருந்தனன் என்பதும் பெறப்படும். ஏற்ப - ஏற்றவளவாக; சிறிதென்றபடி. மன், ஓ : அசைகள். (5) கண்டிகை மகுட மாதிக் கலனிரை குயின்றுந் திங்கண் மண்டல மிடறுஞ் சென்னிக் கோபுர மாட மாதி எண்டிசை யிருள்கால் சீப்ப வெரிமணி யிழைத்து வேய்ந்துந் திண்டிற லுடையா னின்ன திருப்பணி பிறவுஞ் செய்தான். (இ - ள்.) கண்டிகை மகுடம் ஆதி - கண்டிகையும் முடியு முதலாகிய, கலன் நிரை குயின்றும் - அணிகல வரிசைகளை இயற்றியும், திங்கள் மண்டலம் இடறும் - சந்திர மண்டலத்தை இடறும்படி யோங்கிய, சென்னி - சிகரத்தையுடைய, கோபுரம் மாடம் ஆதி - கோபுரமும் திருமாளிகையு முதலியவற்றை, எண்திசை இருள் கால் சீப்ப - எட்டுத் திக்கிலுமுள்ள இருளைப் போக்குமாறு, எரிமணி இழைத்து வேய்ந்தும் - மாணிக்க மணிகள் இழைத் தியற்றியும், திண்திறல் உடையான் - மிக்க வலியினை யுடைய சுந்தரபாத சேகர பாண்டியன், இன்ன திருப்பணி பிறவும் செய்தான் - இவைபோன்ற பிற திருப்பணிகளையும் செய்தனன். கால் சீப்ப - ஓட்ட; துணைச்சொல்; கால் என்பதனை ஒளி யாக்கி, ஒளியால் இருளையோட்ட என்றுரைத்தலுமாம். கோபுர மாட மாதி வேய்ந்தும் என்க. எரிமணி - நெருப்புப் போலும் ஒளியுடைய மாணிக்க மணி. (6) கல்லுமா றகன்ற மார்பன் கருவியின் சிறுமை நோக்கி மல்லுமா றாத திண்டோள் வளவர்கோ னொருவன் காலிற் செல்லுமா யிரம்ப ரிக்கோர் சேவக னென்போன் றானே வெல்லுமா றெண்ணி வஞ்சி வேய்ந்துகொண் டெழுந்து போந்தான். (இ - ள்.) கல்லு மாறு அகன்ற - (திண்மையாலும் பரப்பினாலும்) மலையுடன் மாறுபட்டு அகன்ற, மார்பன் - மார்பினையுடைய பாண்டியனது, கருவியின் சிறுமை நோக்கி - சேனையின் சிறுமையைக் கருதி, மல்லு மாறாத திண்தோற் - மற்போர் இடையறாது செய்யும் திண்ணிய தோளையுடைய, வளவர்கோன் ஒருவன் - சோழர் மன்னர் ஒருவன், காலில் செல்லும் - காற்றைப்போல விரைந்து செல்லும், ஆயிரம் பரிக்கு ஓர் சேவகன் என்போன் - ஆயிரங் குதிரைகட்கு ஒரு சேவகனென்று சொல்லப்படுவோன், தானே வெல்லுமாறு எண்ணி - தானே வெற்றி பெறுமாறு துணிந்து, வஞ்சி வேய்ந்து கொண்டு எழுந்து போந்தான் - வஞ்சிமாலை சூடிப் புறப்பட்டு வந்தான். கல்லு - மலை; உ : சாரியை; கல்லுடன் என விரிக்க. கல்லு மாறு - மலை தோற்கும்படியான என்றுரைத்தலுமாம். கருவி - படை. சேவக னென்போனாகிய ஒருவன் என்க. தானே - வேறு துணையின்றியே. ஆயிரம் பரிக்கோர் சேவகன் என்பது சிறப்பினாய பெயர். (7) பல்வகைக் கருவி யீட்டப் படையொடும் பரவை சீறிச் செல்வது போலக் கன்னித் தீம்புன னாடு நோக்கி மல்வரை யாத தோளான் வரவறிந் தெழுந்து மேருக் கல்வரி சிலையான் முன்போய்க் கைதவன் றாழ்ந்து கூறும். (இ - ள்.) பல்வகைக் கருவி ஈட்டப் படையொடும் - பல்வகைப் படைக்கலங்களை ஏந்திய சேனையோடும், பரவை சீறிச் செல்வது போல - கடலானது சினந்து செல்வது போல, கன்னித் தீம்புனல் நாடு நோக்கி - இனிய பொருநை யாற்றின் நீரையுடைய கன்னி நாட்டை நோக்கி, மல் வரையாத தோளான் வரவு - மற்போர் நீங்காத தோளையுடைய சோழன் வருதலை, கைதவன் அறிந்து எழுந்து - பாண்டியன் (ஒற்றரால்) அறிந்து எழுந்து, மேருக்கல் வரிசிலையான் முன்போய் - மேருமலையைக் கட்டமைந்த வில்லாகக் கொண்ட இறைவன் திருமுன் சென்று, தாழ்ந்து கூறும் - வணங்கிக் கூறுவான். கருவி - படைக்கலப் பொது. செல்வது போல வரவு என்க. மேருக்கல் - மேருமலை. (8) பொன்னது வனைய வேணிப் புனிதவிப் பூமி நேமி உன்னது வலத்தி னாலே யுருட்டுமென் வலத்தை நோக்கான் தன்னது வலத்தி னாலென் றானையின் சிறுமை நோக்கி என்னது தேயங் கொள்வா னெண்ணினான் போலு மன்னோ. (இ - ள்.) பொன் அனைய வேணிப் புனித - பொன்போன்ற சடையையுடைய புனிதனே, இப்பூமி - இந்நிலவுலகில், உன்னது வலத்தினாலே நேமி உருட்டும் - உன்னுடைய திருவருள் வலியால் ஆணைத் திகிரியை உருட்டுகின்ற, என் வலத்தை நோக்கான் - என் வலிமையைக் கருதாது, என் தானையின் சிறுமை நோக்கி- எனது சேனையின் குறையை மட்டுங் கருதி, தன்னது வலத்தினால்- தன்னுடைய வலியினால், என்னது தேயம் கொள்வான் - எனது நாட்டைக் கைப்பற்றிக் கொள்வதற்கு, எண்ணினான் போலும் - கருதிப் போலும். பொன்னது, து : பகுதிப்பொருள் விகுதி. பூமியில் நேமி யுருட்டும் என்க. வலம் - வலிமை. உன்னது முதலிய மூன்றிலும் னகரம் விரித்தல். நோக்கான் : முற்றெச்சம். கொள்வான் : வான் ஈற்று வினையெச்சம். எண்ணிப்போலும் காவிரி நாடன் மேவினன் என வருஞ் செய்யுளோடு முடியும். மன், ஓ : அசைகள். (9) காவிரி நாடன் சேனைக் கடலிடை யெரிபோன் மூண்டு மேவின னென்று கூறி மீனவன் வேண்ட வானிற் பூவிரி வாகை நீயே புனையநாம் பொருது மென்னா நாவிரி யாத மாற்ற நாயகன் கூறக் கேட்டான். (இ - ள்.) காவிரி நாடன் - காவிரி நாட்டையுடைய சோழன், சேனைக் கடல் இடை - சேனையாகிய கடலின் நடுவில், எரிபோல் மூண்டு மேவினன் என்று கூறி - வடவைத் தீப்போல மூண்டுவந்தன னென்று கூறி, மீனவன் வேண்ட - பாண்டியன் குறையிரப்ப, பூவிரி வாகை நீயே புனைய - மலர்விரிந்த வாகைமாலையை நீயே அணியுமாறு, நாம் பொருதும் என்னா - நாம் போர் செய்வோமென்று, நாயகன் - இறைவனாகிய சோமசுந்தரக் கடவுள், நாவிரி யாத மாற்றம் - நாவாற் கூறாத மொழியால், வானில் கூறக் கேட்டான் - விசும்பின்கண் கூறியருளப் பாண்டியன் கேட்டனன். சேனையைக் கடலென்றமையால் எரி என்றது வடவைத் தீயாயிற்று. பூ விரி - பொரிவு மிக்க என்றுமாம். நாவிரியாத மாற்றம் - அசரீரி மொழி. வானிற் கூறவென இயைக்க. (10) எல்லியங் கமலச் செவ்வி யெனமுக மலர்ந்து நாதன் அல்லியங் கமலச் செந்தா ளகந்தழீஇப் புறம்பு போந்து பல்லியந் துவைப்பத் தானைப் பரவையுட் பரிமா வூர்ந்து கொல்லியம் பொருப்பன் சேனைக் கடலெதிர் குறுகி னானே. (இ - ள்.) எல்லி அம் கமலச் செவ்வி என - சூரியனைக் கண்ட அழகிய தாமரை மலரின் பொலிவைப் போல, முகமலர்ந்து - முக மலர்ச்சி யுடையவனாய், நாதன் அல்லி அம்கமலச் செந்தாள் - இறைவனுடைய அகவிதழையுடைய அழகிய தாமரை மலர்போன்ற சிவந்த திருவடிகளை, அகம்தழீஇ - உள்ளத்தில் இருத்தி, புறம்பு போந்து - வெளியே வந்து, பல் இயம் துவைப்ப - பல வாத்தியங்களும் ஒலிக்க, தானைப் பரவையுள் பரிமா ஊர்ந்து -சேனையாகிய கடலினுள்ளே குதிரையைச் செலுத்தி, கொல்லி அம் பொருப்பன்- அழகிய கொல்லி மலையையுடைய சோழனது, சேனைக்கடல் எதிர் குறுகினான் - சேனைக் கடலின் எதிரே சென்றனன். எல்லி - எல்லையுடையது, ஞாயிறு; எல் - ஒளி. எல்லி - பகலுமாம். தழீஇ : சொல்லிசையளபெடை. கொல்லி மலை சேரர்க்குரிய தாயினும் ஓரொருகால் சோழரால் வென்று அடிப்படுத்தப் பெற்ற தென்று கருதிச் சோழனைக் கொல்லியம் பொருப்பன் என்றார் போலும். அதனை மூவேந்தர்க்கும் உரியதாகக் கூறிய செய்யுட்களும் உண்டு. கேட்டவன் மலர்ந்து போந்து ஊர்ந்து குறுகினான் என வினை முடிக்க. (11) பண்ணுத லிசைவண் டார்க்கும் பசுந்தொடைச் செழியன் றானை எண்ணுத லிலவாஞ் சென்னி யிரும்படைக் கடனே ராறாய் நண்ணுத லெனப்போய்ப் பொன்னி நாடவன் றமர்கட் கெல்லாங் கண்ணுத லருளா லங்கோர் கடலெனத் தோன்றிற் றம்மா. (இ - ள்.) பண்நுதல் இசை வண்டு ஆர்க்கும் - பண்ணோடமைந்த இசையினையுடைய வண்டுகள் ஒலிக்கும், பசுந்தொடைச் செழியன் தானை - பசிய மாலையையணிந்த பாண்டியன் சேனையானது, எண்ணுதல் இலவாம் சென்னி இரும்படைக் கடல் நேர் - எண்ணுதற்கு இயலாத சோழனது பெரிய சேனைக்கடலுக்கு நேரே, ஆறாய் நண்ணுதல் எனப் போய் - ஓர் ஆறு செல்லுதல் போலச் சென்று, பொன்னி நாடவன் தமர்கட்கு எல்லாம் - காவிரி நாடனாகிய சோழனது போர் வீரர்கள் எல்லார்க்கும், கண்ணுதல் அருளால் - சோமசுந்தரக்கடவுளின் திருவருளினாலே, ஓர் கடல் என அங்கு தோன்றிற்று - ஒரு கடல்போலப் போர்க்களத்திலே தோன்றியது. பண்ணுதலையுடைய இசை யென்றுமாம். பசுமை - வாடாமை. இலவாம் படைகளாகிய கடல் என்க. ஆறு நண்ணுதல் எனப் பாடங் கொள்ளுதல் நேரிது. தமர் - போர் வீரர். ஆறு போலச் சிறிதாய்ச் சென்று கடல் போலப் பெரியதாய்த் தோன்றிற்று என்றார். அம்மா : வியப்பிடைச்சொல். (12) கடலென வருமா வூர்ந்து கைதவன் சேனை முன்போய் அடலணி மேருக் கோட்டி யாலவாய் நெடுநாண் பூட்டி மடலவிழ் துழாய்க்கோ னாட்டி வாயெரி புரத்தி லூட்டி மிடலணி கூடற் கோமான் வேடுரு வாகி நின்றான். (இ - ள்.) அடல் அணி மேரு கோட்டி - வலிமை மிக்க மேரு மலையாகிய வில்லை வளைத்து, ஆலவாய் நெடுநாண் பூட்டி - வாசுகி யாகிய நீண்ட நாணைப் பூட்டி, மடல் அவிழ் துழாய்க்கோன் நாட்டி - இதழ் விரிந்த துழாய் மாலை யணிந்த திருமாலாகிய வாளியை ஏறிட்டு, வாய் எரி புரத்தில் ஊட்டி - நகையாலாகிய நெருப்பினை முப்புரங்களில் மூள்வித்து, மிடல் அணி கூடல் கோமான்- வெற்றி பூண்ட கூடற் றலைவனாகிய சோமசுந்தரக்கடவுள், வேடு உருவாகி - வேட்டுவ வடிவந் தாங்கி, கடல் என வருமா ஊர்ந்து - (புடை பெயர்ந்த) கடல்போல விரைந்துவரும் குதிரையைச் செலுத்தி, கைதவன் சேனை முன்போய் நின்றான்- பாண்டியனது சேனையின் முன்னணியிற்சென்று நின்றான். கடல் - திரையுமாம். ஊர்ந்த என்று பாடமிருப்பின், மாவூர்ந்த கைதவனது கடலென வரும் சேனை முன்போய் என்றியைத் துரைத்தல் பொருந்தும். ஆலவாய் - பாம்பு; ஆலத்தை வாயிலுடையது என அன் மொழித்தொகை. கோனாகிய கோல் என இரட்டுற மொழிதலாகக் கொள்க. அவ்வம்பின் வாயிலிருந்த அக்கினி யென்றுமாம். ஊட்டி அணிந்த கோமான் என்க. (13) கங்குல்வாய்த் திங்கள் போலக் காதணி தந்தத் தோடுங் கங்குல்வாய் முளைத்த மீன்போற் கதிர்முத்த வடமுங் குஞ்சிக் கங்குல்வாய்ச் சிலைபோல் வெட்சிக் கண்ணிசூழ் கலாபச் சூட்டுங் கங்குல்வாய் கிழிக்குந் தந்தக் கடகமு மின்னுக் கால. (இ - ள்.) கங்குல்வாய்த் திங்கள்போல - இரவில் நிலவிய சந்திரனைப்போல விளங்கும், காது அணி தந்தத் தோடும் - காதின் கண் அணிந்த தந்தத்தாலாகிய தோடும், கங்குல்வாய் முளைத்த மீன்போல் - இரவிற் றோன்றிய நாண்மீனைப்போல, கதிர் முத்த வடமும் - ஒளி வீசும் முத்து மாலையும், கங்குல் வாய்ச் சிலைபோல் - இரவின் கண் தோன்றிய இந்திர வில்லைப்போல, குஞ்சி வெட்சிசக் கண்ணி சூழ் கலாபச் சூட்டும் - சிகையிலணிந்த வெட்சி மாலையுடன் சூழ்ந்த மயிற் பீலியாலாகிய நுதலணி மாலையும், கங்குல் வாய் கிழிக்கும் தந்தக் கடகமும் - இரவின் வாயினைக் கிழித்து விளங்கும் தந்தவளையும், மின்னுக்கால - ஒளி வீசா நிற்க. வடிவு முழுதும் கருமையாயிருந்தமையின் கங்குலை உவமை கூறினார். சூட்டு - நுதலில் அணியும் மாலை. இருளை யோட்டு மென்பதனை இரவின் வாயைக் கிழிக்கும் என்றார். (14) அண்டத்தா ரமரர் நாம மன்றுதொட் டடையத் தோற்று கண்டத்தா ரிருளே யெங்கும் கலந்தெனக் கறுத்த மேனி கொண்டத்தா ராரி னாற்கோர் கூற்றெனக் கொல்வே லேந்திச் சண்டத்தீ யென்ன நின்றான் காவிரித் தலைவன் காணா. (இ - ள்.) அண்டத்தார் - தேவர்கள், அன்று தொட்டு - (நஞ்சுண்ட) அந்நாள் தொடங்கி, அமரர் நாமம் அடைய - அமரர்- என்னும் பெயரைப் பெறும்படி, கண்டத்துத் தோற்று ஆர் இருளே- திருமிடற்றிலே தோன்றிய நஞ்சாகிய மிக்க இருளே, எங்கும் கலந்தென - உடல் முழுதுங் கலந்தாற்போல, கறுத்தமேனி கொண்டு - கறுத்த திருமேனி கொண்டு, அ ஆர் தாரினாற்கு- அந்த ஆத்தி மாலையையணிந்த சோழனுக்கு, ஓர் கூற்றென - ஒரு கூற்றுவனைப்போல, கொல்வேல் ஏந்தி - கொல்லுதற் றொழிலையுடைய வேற்படையினை ஏந்தி, சண்டத்தீ என்ன நின்றான் - ஊழித்தீப்போல நின்றருளினான்; காவிரித் தலைவன் காணா - (அதனைக்) காவிரித் தலைவனாகிய சோழன் கண்டு. அமரர் என்னுஞ் சொல்லுக்கு மரணமில்லாதவர் என்பது பொருள். ஆலாலம் உண்டாய போழ்து இறைவன் அதனை உண்டருளி வானோரனைவரும் மரித்தொழியாது காத்தமையின் ‘அண்டத்தார் அமரர் நாமம் அடையத் தோற்று’ என்றார். அண்டத்திலே பொருந்திய தேவர்கள் அன்று தொட்டு அச்சமடையும்படி தோன்றிய என்றுமாம்; இதற்கு, அச்சப்பொருட்டாய நாம் என்னும் உரிச்சொல் அம்முப் பெற்ற தெனக்கொள்க. அஞ்சுதல் - இறைவனது முதன்மையும் தமது சிறுமையும் உணர்ந்து ஒடுங்குதல். கலந்தென : விகாரம். ஆர்த்தார்என மாறுக. வேடுருவாகி நின்றவன் மின்னுக்கால மேனி கொண்டு வேல் ஏந்தி நின்றான் என்க. (15) சீறியா யிரம்ப ரிக்கோர் சேவகன் வந்தே னென்னாக் கூறினா னெதிர்த்தான் வெள்ளிக் குன்றவன் பத்து நூறு மாறிலப் பரிக்கு மட்டோர் வயவனீ யன்றோ வெண்ணில் ஈறிலாப் பரிக்கு மொற்றைச் சேவகன் யானே யென்றான். (இ - ள்.) சீறி - சினந்து, ஆயிரம் பரிக்கு ஓர் சேவகன் வந்தேன் என்னா - ஆயிரம் குதிரைகட்கு ஒரு வீரனாகிய யான் வந்தேனென்று, கூறினான் எதிர்த்தான் - சொல்லி எதிர்த்தான்; வெள்ளிக் குன்றன் - வெள்ளி மலையையுடைய இறைவன், நீ மாறு இலா பத்து நூறு பரிக்கு மட்டு ஓர் வயவன் அன்றோ- நீ பகைமையில்லாத ஆயிரங் குதிரைகளுக்கு மட்டும் ஒரு சேவகன் அல்லவா, எண்ணில் ஈறு இலா பரிக்கும் - எண்ணில் முடிவு பெறாத குதிரைகளுக்கும், ஒற்றைச் சேவகன் யானே என்றான் - ஒற்றைச் சேவகன் யானே என்று கூறியருளினான். சேவகன் எனத் தன்மையிற் படர்க்கை வந்தது. கூறினான் : முற்றெச்சம். நீ ஆயிரம் பரிக்கோர் வீரனென இறுமாந்தாய், யானோ எண்ணில்லாத பரிக்கோர் வீரனாவேன் என இறைவனாகிய வேடுவன் தன்னைப் புகழ்ந்து கூறினன் என்க. (16) என்றசொல் லிடியே றென்ன விருசெவி துளைப்பக் கேட்டு நின்றவ னெதிரே மினனு நீட்டிச்சென் மேகம் போலச் சென்றுவேல் வலந்தி ரித்துச் செயிர்த்தன னதிர்த்துச் சீற வன்றிற னூற்றுப் பத்து வயப்பரிக் கொருவ னஞ்சா. (இ - ள்.) என்ற சொல் இடி ஏறு என்ன - என்று இறைவனாகிய வேடன் கூறிய சொல்லானது இடியேற்றின் ஒலியைப் போல, இரு செவி துளைப்ப - இரண்டு காதுகளையுந் துளைக்க, கேட்டு நின்றவன் எதிரே - கேட்டு நின்ற சோழனெதிரே, மின்னு நீட்டிச் செல் மேகம் போலச் சென்று - மின்னலை நீட்டிச் செல்லும் முகில் போலச் சென்று, வேல் வலம் திரித்துச் செயிர்த்தனன் - வேற்படையை வலமாகச் சுழற்றிச் சினந்து, அதிர்த்துச் சீற - முழங்கிச் சீற, வன்திறல் நூற்றுப் பத்து வயப்பரிக்கு ஒருவன் அஞ்சா - மிக்க வலிமையுடைய ஆயிரங் குதிரைகட்கு ஒரு சேவகனாகிய சோழன் பயந்து. நின்றனன் அங்ஙனம் நின்றவனெதிரே என விரித்துரைக்க. செயிர்த்தனன் : முற்றெச்சம். வன்றிறல்:ஒருபொருளிருசொல். (17) யாமினி யிந்த வேலா லிறப்பதற் கைய மில்லை யாமென வகன்றான் மாவோ டாயிரம் பரிக்கோர் மன்னன் காமனை வெகுண்ட வேடன் மறைந்தனன் கங்குற் சோதி மாமக னதுகண் டோடும் வளவனைத் துரத்திச் சென்றான். (இ - ள்.) யாம் இனி இந்த வேலால் இறப்பதற்கு - இனி யாம் இந்த வேற்படையால் மாளுவதற்கு, ஐயம் இல்லையாம் என - ஐயுறவு இல்லை என்று கருதி, ஆயிரம் பரிக்கு ஓர் மன்னன் மாவோடு அகன்றான் - ஆயிரங் குதிரைகளுக்கு ஒரு சேவகனாகிய சோழன் குதிரையோடு புறங்கொடுத்து ஓடினான்; காமனை வெகுண்ட வேடன் மறைந்தனன் - மன்மதனை எரித்த வேடனாகிய இறைவன் மறைந்தருளினான்; கங்குல் சோதி மாமகன் - இரவில் விளங்கும் சந்திரன் மரபில் வந்த சுந்தரபாத சேகர பாண்டியன், அது கண்டு ஓடும் வளவனைத் துரத்திச் சென்றான் - அதனைக் கண்டு ஓடுகின்ற சோழனைத் துரத்திச் சென்றான். கங்குற்சோதி - இரவில் ஒளிவிடும் திங்கள். மா - பெருமை. மகன் - வழித் தோன்றல். (18) துரந்திடு மளவி லோடுஞ் சோழனுந் திரும்பி நோக்கிக் கருந்தடங் கண்ணி பாகங் கரந்தவே டுவனைக் காணான் வருந்துய ரச்சந் தீர்ந்து மருரையி னளவும் பற்றிப் புரந்தரற் புறங்கண் டானைப் புறங்கண்டு முடுக்கிப் போனான். (இ - ள்.) துரந்திடும் அளவில் - அங்ஙனம் துரத்திச் செல்லுமளவில், சோழனும் திரும்பி நோக்கி - சோழன் திரும்பிப் பார்த்து, கருந்தடம் கண்ணி பாகம் கரந்த - கரிய நீண்ட கண்களையுடைய உமையுடன் கூடிய பாகத்தை மறைத்து வந்த, வேடுவனைக் காணான் - வேடனைக் காணாமையால், வரும் துயர் அச்சம் தீர்ந்து - உண்டாகிய துன்பமும் அச்சமும் நீங்கி, புரந்தரன் புறங்கண்டானை - இந்திரனைப் புறங்கண்ட பாண்டியனை, மதுரையின் அளவும் பற்றி - மதுரை வரையிலும் தொடர்ந்து, புறம் கண்டு முடுக்கிப் போனான் - முதுகு கண்டு முடுக்கிச் சென்றனன். காணாமையால் தீர்ந்து முடுக்கிப் போனான் என்க. முன்னோன் புரிந்த வீரச் செயலை அவன் மீது ஏற்றிப் 'புரந்தரற் புறங்கண் டானை' என்றார். (19) காலொன்று முடுக்கப் பட்ட கனலொன்று நடந்தா லொத்து வேலொன்று தடக்கை நேரி வேந்தனான் முடுக்குண் டோடுஞ் சேலொன்று கொடியி னான்றன் செழுநகர் விரைந்து செல்வான் மாலொன்று களிற்றி னாங்கோர் மதுமலர்க் கிடங்கில் வீழ்ந்தான். (இ - ள்.) கால் ஒன்று முடுக்கப்பட்ட - காற்றொன்றினாலே துருத்தப்பட்ட, கனல் ஒன்று நடந்தால் ஒத்து - நெருப்பு ஒன்று நடந்தாற்போல, வேல் ஒன்று தடக்கை நேரி வேந்தனால் முடுக்குண்டு - வேற்படை ஏந்திய நீண்ட கையையுடைய நேரி மலையையுடைய சோழ மன்னனாற் துரத்தப்பட்டு, ஓடும் சேல் ஒன்று கொடியினான் - ஓடுகின்ற கயல் எழுதிய கொடியையுடைய பாண்டியன், தன் செழுநகர் விரைந்து செல்வான் - வளம் பொருந்திய தனது நகர்க்கண் விரைந்து செல்லுகின்றவன், மால் ஒன்று களிற்றின் - மதமயக்கமுடைய யானை போல, ஆங்கு ஓர் மதுமலர்க்கிடங்கில் வீழ்ந்தான் - அங்குள்ள தேன் நிறைந்த பூக்களையுடைய ஓர் அகழியில் வீழ்ந்தனன். காலொன்று என்புழி ஒன்று எண்ணுப்பெயர்; ஏனைய பெயரெச்ச முதனிலை. சோழனைக் காற்றோடும் பாண்டியனைக் கனலோடும் ஒப்பித்தார். (20) மீனவன் மதுரை மூதூர் மேற்றிசைக் கிடங்கில் வீழ மானவெம் புரவி யோடும் வளவனும் வீழ்ந்தான் கூடற் கோனவ னருளால் வானோர் குரைகடல் கடையத் தோன்றும் ஆனையி னெழுந்தான் றென்னன் கோழிவேந் தாழ்ந்து போனான். (இ - ள்.) மீனவன் மதுரை மூதூர்மேல் திசைக்கிடங்கில் வீழ - பாண்டியன் மதுரையாகிய பழைய நகரின் மேற்புறத்துள்ள அகழியில் விழ, மானவெம் புரவியோடும் வளவனும் வீழ்ந்தான்- பெருமையையுடைய கொடிய குதிரையோடு சோழனும் விழுந்தனன்; கூடல் கோனவன் அருளால் - மதுரைப் பெருமானாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவருளால், வானோர் குரைகடல் கடைத் தோன்றும் ஆனையின் - தேவர்கள் ஒலிக்கின்ற பாற்கடலைக் கடையத் தோன்றிய வெள்ளானைபோல, தென்னன் எழுந்தான் - பாண்டியன் எழுந்தான்; கோழிவேந்து ஆழ்ந்து போனான் - உறையூர் வேந்தனாகிய சோழன் ஆழ்ந்திறந்தனன். விரைந்து துரந்து சென்றானாகலின் அவன் வீழ்ந்தவுடன் இவனும் வீழ்ந்தான். அருளால் எழுந்தான் என்றியையும். இறைவனருளால் எழுந்தான் எனவே விழுந்ததும் அவனருளால் என்பது பெற்றாம். மேற்செய்யுளில் மாலொன்று களிற்றின் வீழ்ந்தான் எனக் கூறி, இதில், ஆனையின் எழுந்தான் என்ற நயம் பாராட்டற்குரியது. இதனால் அகழியின் பெருமையும் கூறியவாறாயிற்று. கோழி - உறையூர். ஒரு கோழி யானையைப் போர் வென்ற இடத்தில் இயற்றப்பட்டதாகலின் இப் பெயரெய்திற்று; " முறஞ்செவி வாரண முன்சம முருக்கிய புறஞ்சிறை வாரணம் புக்கனர்" எனச் சிலப்பதிகாரம் கூறுதலுங் காண்க. (21) [எழுசீரடி யாசிரிய விருத்தம்] பிலத்தள வாழ்ந்த கடிமலர்க் கிடங்கிற் பெருந்தகை யவிந்தவன் றுகில்பூண் கலத்தரும் பேழை படைபரி மான்றேர் கரியெலாங் கவர்ந்துதண் பொருநைத் தலத்தவன் றங்க ணாயக ரணியத் தக்கதூ சணிகல னல்கி நலத்தகை யவர்பே ரருட்கடற் கன்பு நதியெனப் பெருகிவீற் றிருந்தான். (இ - ள்.) தண்பொருநைத் தலத்தவன் பெருந்தகை - தண்ணிய பொருநை சூழ்ந்த நாட்டையுடையவனாகிய பெருந் தகுதியுடைய சுந்தரபாத சேகர பாண்டியன், பிலத்து அளவு ஆழ்ந்த கடிமலர்க் கிடங்கில் அவிந்தவன் - பாதலம்வரை ஆழ்ந்துள்ள மணமிக்க மலர்களையுடைய அகழியில் வீழ்ந்து இறந்த சோழனுடைய, துகில் பூண் - ஆடையும் அணியும், கலத்து அரும் பேழை - அரிய அணிகலப் பெட்டியும், படை பரிமான் தேர் கரிஎலாம் கவர்ந்து - காலாளும் குதிரையும் தேரும் யானையும் ஆகிய இவையெல்லாவற்றையும் கொண்டு, தங்கள் நாயகர் அணியத்தக்க தூசு அணிகலன் நல்கி - தங்கள் தலைவராகிய சோமசுந்தரக் கடவுள் அணியத்தக்க ஆடைகளையும் அணிகலங் களையும் தந்து, நலத்தகையவர் பேர் அருள் கடற்கு - உயிர்களுக்கு நன்மையே புரியுந் தகுதியையுடைய அவ் விறைவரது பேரருளாய கடலுக்கு, அன்பு நதி எனப் பெருகி வீற்றிருந்தான் - தனது அன்பானது ஆறு போலப் பெருக வீற்றிருந்தான். பெருந்தகை என்பதனைப் பிரித்துக் கூட்டுக. கடி - காவலுமாம். அன்பு அன்பினாலே திருவருளைத் தலைக்கூட வேண்டுதலின் 'அருட் கடற்கு அன்பு நதியெனப் பெருகி' என்றார். பெருகி - பெருக. (22) ஆகச்செய்யுள் - 1907. முப்பத்தெட்டாவது உலவாக்கோட்டை யருளிய படலம் [எழுசீரடி யாசிரிய விருத்தம்] மின்ப னிக்கதிர் வேணி வானவன் மீன வன்றனை மானவேல் முன்ப னிக்க வலந்தி ரித்து முடுக்கி நேரி யடுக்கலான் பின்ப னிக்கம லத்த டத்திற விட்ட வாறிது பெருமைசால் அன்ப னுக்குல வாத கோட்டை யளித்த வாறு கிளத்துவாம். (இ - ள்.) பனிக் கதிர் மின் வேணி வானவன் - குளிர்ச்சி பொருந்திய கிரணங்களையுடைய சந்திரனையணிந்த மின் போலும் சடையையுடைய சோமசுந்தரக் கடவுள், மீனவன் தனை - பாண்டியன் பொருட்டு, மானவேல் - பெருமை பொருந்திய வேற்படையினை, முன் - எதிரே, பணிக்க - நடுங்குமாறு, வலம் திரித்து - வலமாகச் சுழற்றி, நேரி அடுக்கலான் - நேரி மலையை யுடைய சோழனை, முடுக்கி - துரத்தி, பின் - பின்பு, பனிக்கமலத் தடத்து இறவிட்டவாறு இது - (அவன்) குளிர்ந்த தாமரைகளையுடைய அகழியில் வீழ்ந்திறக்கச் செய்த திருவிளையாடல் இதுவாகும்; பெருமை சால் அன்பனுக்கு - பெருமை நிறைந்த அடியார்க்கு நல்லானுக்கு, உலவாத கோட்டை அளித்தவாறு - குறையாத அரிசிக் கோட்டையினை (அக் கடவுள்) அளித்தருளிய திருவிளையாடலை, கிளத்துவாம் - (இனிக்) கூறுவாம். மின்வேணி எனக் கூட்டுக. பனிக்கதிர் - திங்கள். தன் : சாரியை. மீனவனை - மீனவனுக்கு : வேற்றுமை மயக்கம். முன் முடுக்கிப் பின் இறவிட்டவாறு என்றுமாம். (1) [கலிநிலைத்துறை] பொடியார்க்கு மேனிப் புனிதர்க்குப் புனித வேற்றுக் கொடியார்க்கு வேதக் குடுமிக்கிணை யான கூடற் படியார்க்குஞ் சீர்த்திப் பதியேருழ வோரு ணல்லான் அடியார்க்கு நல்லா னறத்திற்கும் புகழ்க்கு நல்லான். (இ - ள்.) பொடி ஆர்க்கும் மேனிப் புனிதர்க்கு - திருநீறு நிறைந்த திருமேனியையுடைய தூயவரும், புனித ஏற்றுக் கொடியார்க்கு - வெள்ளிய இடபக் கொடியையுடையவரும் ஆகிய சோம சுந்தரக் கடவுளுக்கு, வேதக் குடுமிக்கு இணையான - வேத சிகைக்குச் சமமான, படி ஆர்க்கும் சீர்த்தி கூடற்பதி - புவி முழுதும் நிறைந்த கீர்த்தியையுடைய மதுரைப் பதியிலே, ஏர் உழவோருள் நல்லான் - ஏரான் உழுதலைச் செய்யும் வேளாளரில் சிறந்தவன் ஒருவன், அடியாரக்கு நல்லான் - அடியார்க்கு நல்லான் என்னும் பெயரினன்; அறத்திற்கும் புகழுக்கும் நல்லான் - அறத்திற்கும் (அதனாலாம்) புகழுக்கும் நல்லனாயுள்ளான். புனிதர்க்கு ஏற்றுக் கொடியார்க்கு என ஒரு பொருண்மேற் பல பெயர் வந்தன. வேதக் குடுமியானது எங்ஙனம் இறைவர் வசிக்கும் தூய இடமாமோ அங்ஙனமே கூடற்பதியுமாமென்றார். சீர்த்தியையுடைய கூடற்பதி என இயைக்க. படியார்க்கும் என்பதில் கு : சாரியை. கூடலின் புகழ் புவி முழுதும் நிறைதல், " நிலனாவிற் றரிதரூஉ நீண்மாடக் கூடலார்" எனக் கலித்தொகை யுள்ளும் குறிக்கப்பட்டது. அடியார்க்கு நல்லான் என்பதனைக் காரணப் பெயராகக் கொண்டவன் என்க. அடியார்க்கு நல்லார் என்பது இறைவன் றிருப் பெயருமாம்; "கருவூரு ளானிலை, அண்ணலா ரடியார்க்கு நல்லரே" என்னும் ஆளுடையபிள்ளையார் திருவாக்கும் காண்க. (2) அனையா னறத்திற் கருள்போன்றவ ளான்ற கற்பின் மனையாண் மரபின் வழுவாத தரும சீலை எனையாரு நன்கு மதிக்க விருக்கு நீராள் தனையாள் பதிக்குக் கதிக்குத்தனிச் சார்பு போல்வாள். (இ - ள்.) அனையான் அறத்திற்கு அருள் போன்றவள் - அவள் செய்யும் அறத்திற்கு அருள் போன்றவளாகிய, ஆன்ற கற்பின் மனையாள் - நிறைந்த கற்பினையுடைய மனைவி, மரபின் வழுவாத தருமசீலை - மரபிற்குரிய ஒழுக்கத்தினின்றுந் தவறாத தருமசீலை என்பவள்; எனை யாரும் நன்கு மதிக்க இருக்கும் நீராள் - (அவள்) தன் கணவனேயன்றி ஏனை யாவரும் நன்கு மதிக்குமாறு மனையறம் புரிந்திருக்குந் தன்மையையுடையவள்; தனை ஆள்பதிக்குக் கதிக்குத் தனிச் சார்பு போல்வாள் - தன்னை ஆளும் நாயகனுக்கு வீடெய்துதற்குரிய ஒப்பற்ற பற்றுக்கோடு போல்பவள். அறத்திற்குச் சிறந்த துணையாவது அருள் ஆகலின் 'அறத்திற்கு அருள் போன்றவள்' என்றார். எனையாரும் - யாவரும்; 'வாழுமூர் தற் புகழும் மாண்கற்பின் இல்லாள்' என்றவாறு. வீடெய்துதற்குச் சிறந்த துணையாகிய மெய்யுணர்வு போல்வாளென்பார் 'கதிக்குத் தனிச்சார்பு போல்வாள்' என்றார். (3) பல்லே ருழவின் றொழில்பூண்டு பயன்கள் கொள்வான் வில்லே ருழவன் கடன்கொண்டு மிகுந்த வெல்லாம் இல்லே ருழத்தி மடைச்செல்வ மியற்றி யேந்த அல்லேறு கண்ட னடியாரை யருத்து நீரான். (இ - ள்.) பல் ஏர் உழவின் தொழில் பூண்டு - பல ஏர்களால் உழுதற்றொழிலை மேற்கொண்டு, பயன்கள் கொள்வான் - மிக்க ஊதியத்தைப் பெறும் அடியார்க்கு நல்லான், வில் ஏர் உழவன் கடன் கொண்டு - அரசன் ஆறிலொன்றாகிய கடமையைக் கொள்ள, மிகுந்த எல்லாம் - எஞ்சிய பொருளனைத்தையும், இல் ஏர் உழத்தி- மனைக்கிழத்தியாகிய தரும சீலை, மடைச் செல்வம் இயற்றி ஏந்த - அடிசில் அமைத்து அளிக்க, அல் ஏறு கண்டன் அடியாரை அருத்தும் நீரான் - இருள் நிறைந்த திருமிடற்றினையுடைய இறைவன் அடியார்களை உண்பிக்குந் தன்மையை யுடையான். உழவின், இன் : சாரியை அல்வழிக்கண் வந்தது. வில்லேருழவன்- வில்லாகிய ஏரால் மாற்றாரை வெல்லுதலாகிய உழவினைச் செய்வோன்; அரசன். இல்லே ருழத்தி - இல்லிற் செய்யும் விருந்தோம்புதல் முதலியவற்றால் அறப்பயன் விளைப்பவள்; மனையாள். எல்லாத் தொழில்களையும் உழவாக உருவகித்துக் கூறுதல் வழக்கு. கொண்டு - கொள்ள. மடை - சோறு; அதனைச் செல்வமெனச் சிறப்பித்துக் கூறினார். (4) தொகைமாண்ட தொண்டர் சுவையாறு தழீஇய நான்கு வகைமாண்ட மாறு படுமுண்டி மறுத்த ருந்த நகைமாண்ட வன்பின் றலையாயவ னல்க நல்கப் பகைமாண்ட செல்வ மணற்கேணியிற் பல்கு நாளின். (இ - ள்.) தொகை மாண்ட தொண்டர் - அளவிறந்த அடியார்கள், அறுசுவை தழீஇய - அறுவகைச் சுவையும் பொருந்திய, நான்கு வகை மாண்ட மாறுபடும் உண்டி - நான்கு வகையால் மாட்சிமைப்பட்ட (தம்முள்) மறுதலையாய உணவுகளை, மறுத்து அருந்த- மறுத்து உண்ணும்படி, நகை மாண்ட அன்பின் தலையாயவன் நல்க நல்க - மகிழ்ச்சி மிக்க தலையன்பினையுடைய அடியார்க்கு நல்லான் கொடுக்குந்தோறும், பகை மாண்ட செல்வம் - பகையில்லாத செல்வமானது, மணல் கேணியில் பல்கும் நாளில்- மணற் கேணியில் (இறைக்குந் தோறும்) நீர் சுரத்தல் போல இடையறாது பெருகு நாளில். மாண் என்பது மிகுதிப் பொருள் தருதலை 'ஞாலத்தின் மாணப் பெரிது' என்பதனால் அறிக. ஆறு சுவை - தித்திப்பு, புளிப்பு, கார்ப்பு, கைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என்பன. நால்வகை உண்டி - உண்பன, தின்பன, நக்குவன,பருகுவன என்பன. மாறுபடுதலாவது வெவ்வேறு வகையினதாதல். மறுத்தருந்தல் - போதுமென்று தடுத்துண்ணுதல்; மிகுதியாக இடுதலின் மறுப்பரென்க; "மறு சிகை நீக்கி யுண்டாரும்" என்பது காண்க. இச் செல்வம் யாவர்க்கும் களிப்பை விளைத்தலின் 'பகைமாண்ட செல்வம்' என்றார். மாறுபடுவ தொன்றில்லாத செல்வம் என்றுமாம். (5) இந்நீர வாய வளங்குன்றினு மின்மை கூறாத்* தன்னீர்மை குன்றா னெனுந்தன்மை பிறர்க்குத் தேற்ற நன்னீர் வயலின் விளைவஃகி நலிவு செய்ய மின்னீர வேணி மதுரேசர் விலக்கி னாரே. (இ - ள்.) இந்நீரவாய வளம் குன்றினும் - இத்தன்மையவாகிய செல்வங்கள் குறைந்தாலும், இன்மை கூறாத் தன் நீர்மை குன்றான் எனும் தன்மை - வறுமையைக் கூறாமையாகிய தன் இனிய பண்பினின்றும் குன்ற மாட்டான் (இவ்வடியார்க்கு நல்லான்) என்னுந் தன்மையை, பிறர்க்குத் தேற்ற - அஃதுணராத மற்றையோருக்குத் தெளிவிக்க, நல் நீர் வயலின் விளைவு அஃகி நலிவு செய்ய - நல்ல நீர்வள மிக்க வயல்களில் விளைவு குறைந்து வருத்துமாறு, மின் நீர வேணி - மின்போலும் ஒளி வீசுந் தன்மையையுடைய சடையையுடைய, மது ரேசர் விலக்கினார்- சோமசுந்தரக் கடவுள் அவ்விளைவை விலக்கியருளினார். இன்மை கூறாமை - தன்பால் வந்து இரந்தவர்க்கு 'என்னிடம் பொருளில்லை' யென்று கூறாமை; ஈதல். "இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்" என்பது காண்க. அன்பன் இயல்பு ஆண்டவனுக்குத் தெரியுமாயினும், அவ்வியற்கையை ஏனையோர்க்கும் தெரிவித்து உய்வித்தற் பொருட்டு அங்ஙனஞ் செய்தனர் என்றார். மின் ஈர வேணி எனபிரிந்து, குளிர்ச்சி பொருந்திய, மின்போலும் வேனி என்றுரைத்தலும் பொருந்தும். மதுசேரர் தேற்ற நலிவு செய்யும்படி விலக்கினார் என்க. " செல்வ மேவிய நாளி லிச்செயல் செய்வ தன்றியு மெய்யினால் அல்ல னல்குர வான போதினும் வல்ல ரென்றறி விக்கவே மல்ல னீடிய செல்வ மெல்ல மறைந்து நாடொறு மாறிவந் தொல்லை யில்வறு மைப்ப தம்புக வுன்னி னார்தில்லை மன்னினார்" என்னுந் திருத்தொண்டர் புராணச் செய்யுள் இங்கு நினைக்கற்பாலது.(6) குன்றா விருத்திக் கடன்கொண்டுகொண் டன்பர் பூசை நன்றா நடாத்தத் தொடுத்தான்கடன் றானுங் கிட்டா தொன்றாலுங் கொண்ட விரதத்துக் குறுதி யின்றி நின்றா னுடம்பை யொறுக்கின்ற நியமம் பூண்டான். (இ - ள்.) குன்றா விருத்திக் கடன் கொண்டு கொண்டு - குறையாத வட்டிக் கடனை வாங்கி வாங்கி, அன்பர் பூசை நன்றா நடாத்தத் தொடுத்தான் - அடியார் பூசையைச் செவ்வனே நடத்தத் தொடங்கினான்; கடன் தானும் கிட்டாது - பின் அக்கடனும் கிடைக்காமல், ஒன்றாலும் கொண்ட விரதத்துக்கு உறுதி இன்றி நின்றான் - வேறொன்றினாலுந் தான் மேற்கொண்ட விரதத்தை முடிப்பதற்கு வலியில்லாமல் நின்ற அடியார்க்கு நல்லான், உடம்பை ஒறுக்கின்ற நியமம் பூண்டான் - உடலை (உணவின்றியிருத்தலால்) வருத்தும் கடப்பாட்டினை மேற்கொண்டான். விருத்தி - வட்டி. தொடுத்தான் - தொடங்கினான். நின்றான்: பெயர் (7) கொடுப்பா ரவரே விளைவுக்கடன் கோளு மாற்றித் தடுப்பா ரெனின்மற் றதையாவர் தடுக்க வல்லார் அடுப்பார் விழுமங் களைவாரடி யார்க்கு நல்லூண் மடுப்பா னியமந் தடைப்பட்டு வருந்து கின்றான். (இ - ள்.) கொடுப்பார் அவரே - கொடுக்கின்ற இறைவரே, விளைவும் கடன் கோளும் மாற்றித் தடுப்பார் எனில் - விளைவையுங் கடன் கோடலையும் மாற்றி விலக்குவாராயின், அதை யாவர் தடுக்க வல்லார் - அதனைத் தடுக்க வல்லவர் யாவர் (ஒருவருமில்லை; அதனால்), அடுப்பார் விழுமம் களைவார் அடியார்க்கு - தம்மை அடுத்தவரின் துன்பத்தைப் போக்கும் சிவபிரான் அடியார்க்கு, நல் ஊண் மடுப்பான் - நல்ல உணவுகளை அளிக்கும் அடியார்க்கு நல்லான், நியமம் தடைப்பட்டு வருந்துகின்றான் - அந்நியமம் தடைப்பட்டு வருந்துகின்றனன். கோள் : முதனிலைத் திரிந்த தொழிற்பெயர். மற்று : அசை: யாவர் தடுக்க வல்லார் என்றது கவிக்கூற்று. விழுமம் - துன்பம். நியமம் உணவளித்தலாகிய கடன். (8) விண்ணாறு சூடும் விடையான்றமர்க் கூட்டி யன்றி உண்ணாத வன்றன் னுயிர்க்குத்துணை யாய1 கற்பிற் பண்ணார்மொழி தன்னொடும் பட்டினி விட்டு நெஞ்சம் புண்ணாக வாகம் பசித்தீயிற் புழுங்கப் பட்டான். (இ - ள்.) விண் ஆறு சூடும் விடையான் தமர்க்கு - ஆகாய கங்கையை அணிந்த இடபவூர்தியையுடைய சிவபெருமான் அடியார்கட்கு, ஊட்டி அன்றி உண்ணாதவன் - திருவமுது செய்வித்தல்லாமல் உண்ணுதல் இல்லாத அடியார்க்கு நல்லான், தன் உயிர்க்குத் துணையாய - தனது உயிர்க்குத் துணையாகிய, கற்பின் பண் ஆர் மொழி தன்னொடும் பட்டினி விட்டு - கற்பினையும் இசை போலுஞ் சொல்லையுமுடைய மனைவியோடும் பட்டினி கிடந்து, நெஞ்சம் புண்ணாக - மனம் புண்ணாக, ஆகம் பசித் தீயில் புழுங்கப்பட்டான்- உடம்பு பசி என்னும் நெருப்பினால் வெதும்பப்பட்டான். ஊட்டியன்றி உண்ணாதவன் - உண்பித்து மிச்சிலை அருந்துவதன்றி வேறுண்ணாத நியமமுடையான். பண்ணார் மொழி : ஆகுபெயர். விட்டு - இருந்து, கிடந்து. (9) இறக்கும் முடம்பாற் பெறும்பேறினி யாவ தென்னா அறக்குன் றனையான் மனையோடு மடைந்திச் செய்தி நிறக்கின்ற செம்பொற் சிலையார்க்கு நிகழ்த்தி யாவி துறக்கின் றதுவே துணிவென்று துணிந்து போனான். (இ - ள்.) அறக்குன்று அனையான் - புண்ணிய மலை போன்ற அடியார்க்கு நல்லான், இறக்கும் உடம்பால் - இறந்து படுகின்ற இவ்வுடம்பினால், இனி பெறும் பேறு யாவது என்னா- (நமது விரதந் தடைப்பட்ட) பின் நாம் அடையும் பயன் யாது என்று கருதி, மனையோடும் அடைந்து - மனைவியோடுஞ் சென்று, இச்செய்தி - இச் செய்தியை, நிறக்கின்ற செம்பொன் சிலையார்க்கு நிகழ்த்தி - விளங்குகின்ற சிவந்த பொன்மலையை வில்லாகவுடைய சோமசுந்தரக் கடவுளுக்குக் கூறி, ஆவி துறக்கின்றதுவே துணிவு என்று துணிந்து போனான் - உயிரை விடுதலே முடிவு என்று மனம் துணிந்து சென்றனன். என்றேனும் அழியும் இயல்பினதாகிய இவ்வுடம்பை நியமந் தவறிய பின்னரும் வைத்திருத்தலால் எய்தலாகும் பயனொன்றுமின்மையால், இப்பொழுதே அதனை விடுத்தல் செயற்பாலதாமென்று துணிந்தனன் என்க. உடல் என்றேனும் அழியுமென்பதனை, " மின்போ லழியும் வயிற்றாமை வடிவா யழியு மெய்யுருவாய் முன்போ லழியும் பிறந்தழியு மடவா ருடனே முயங்கியதன் பின்போ யழியு நரைத்தழியும் பேய்போற் றிரிந்து பெயர்ந்தழியும் பொன்போல் வளர்த்து மிவ்வுடலம் நிலையா தழிந்து போய்விடுமே" என்னும் செவ்வந்திப் புராணச் செய்யுள் நன்கு விளக்குகின்றது. சலியாமையும் பெருமையும் பற்றி "அறக்குன் றனையான்" என்றார். நிறக்கின்ற : பெயரடியாகத் தோன்றிய வினை. அனையான் யாவதென்னா, துணிவென்று துணிந்து போனான் என்க. (10) ஐயன் றிருமுன்ன ரடைந்தடி தாழ்ந்து வானோர் உய்யும் படிநஞ் சமுதுண்ட வொருவ வுன்றன் மெய்யன்பர் பூசைக் கிடையூறு விளைய வென்றன்1 செய்யும் புலமும் விளைவின்றிச் சிதைந்த வென்னா. (இ - ள்.) ஐயன் திருமுன்னர் அடைந்து - சிவபெருமானது திருமுன்னர்ச் சென்று, அடிதாழ்ந்து - திருவடியில் வீழ்ந்து வணங்கி, வானோர் உய்யும்படி நஞ்சு அமுது உண்ட ஒருவ - தேவர்கள் உய்யுமாறு நஞ்சினை அமுதாக உண்டருளிய ஒப்பற்றவனே, உன் தன் மெய் அன்பர் பூசைக்கு இடையூறு விளைய - உனது மெய்யடியார்கள் பூசைக்கு இடையூறுண்டாக, என் தன் செய்யும் புலமும் விளைவு இன்றிச் சிதைந்த என்னா - என்னுடைய நன் செய்யும் புன் செய்யும் விளைவு சுருங்கிக் கெட்டன என்று கூறி (மற்றும்). வானோர் உய்யும் பொருட்டு நஞ்சையும் உண்ட பேரருளாள னாகிய நின்னடியார் பூசை முட்டின்றி முடியும்படி அருள் செய்தல் கடன் என்னும் கருத்தினைக் கொண்டிருத்தலால் நஞ்சமுதுண்ட ஒருவ என்றது கருத்துடை யடையணி. தன் இரண்டும் சாரியை. செய்யும் புலமும் என வேறு கூறினமையால் நன்செயும் புன் செயும் என்க. (11) விடனல்கு சூலப் படையாயக் கடன் வேறு காணேன் கடனல்க வல்லார் தமைக்காட்டுதி காட்டி லாயேல் மடனல்கு மிந்த வுடம்பின்சுமை மாற்று வேனென் றுடனல்கு கற்புக் குரியாளொடும் வேண்டு மெல்லை. (இ - ள்.) விடன் நல்கு சூலப் படையாய் - நஞ்சினை உமிழுஞ் சூலப் படையையுடைய பெருமானே, கடன் வேறு காணேன் - கடன் கொடுப்பார் வேறு ஒருவரையும் யான் அறிந்திலேன்; கடன் நல்க வல்லார் தம்மைக் காட்டுதி - (ஆதலின்) கடன் கொடுக்க வல்லவரை நீ காட்டக் கடவை; காட்டிலாயேல் - காட்டாவிடிலோ, மடன் நல்கும் இந்த உடம்பின் சுமை மாற்றுவேன் என்று - அறியாமை பொருந்திய இந்த உடற்பொறையை மாற்றி விடுவேனென்று கூறி, உடன் அல்கு கற்புக்கு உரியாளொடும் வேண்டும் எல்லை - தன்னுடனுறையும் கற்புக்குரிய மனைவியோடும் நின்று குறையிரக்கும் பொழுது. விடன் அல்கு, மடன் அல்கு எனப் பிரித்தலுமாம். அல்கல்- பொருந்தல். கடன் வேறு காணேன் என்பதற்கு வேறு செய்யத் தக்கது அறியேன் என்னலுமாம். உடம்பின் : இன் சாரியை அல்வழிக் கண் வந்தது. (12) பஞ்சாதி வேதப் பொருள்சொன்ன பரமன் வாக்கொன் றஞ்சாதி வேளாண் டலைவாவு னகத்தி லின்றோர் செஞ்சாதி யாய1 செழுவாலரிக் கோட்டை யுய்த்தேம் எஞ்சா திருக்கு மெடுக்குந்தொறு மென்று மாதோ. (இ - ள்.) பஞ்சாதி வேதப் பொருள் சொன்ன பரமன் வாக்கு ஒன்று - பஞ்சாதி என்னும் உறுப்பினையுடைய வேதத்திற்குப் பொருளருளிச் செய்த இறைவன் திருவாக்கு ஒன்று, வேளாண் தலைவா அஞ்சாதி - வேளாண்குடித் தலைவனே! நீ அஞ்சாதே; உன் அகத்தில் இன்று - உன் வீட்டில் இன்று, ஓர் செஞ்சாதி ஆய செழுவால் அரிக் கோட்டை உய்த்தேம் - ஒரு செந்நெல்லாலாய அழகிய வெள்ளிய அரிசிக் கோட்டையைச் செலுத்தினோம்; என்றும் எடுக்குந் தோறும் எஞ்சாது இருக்கும் - (அது) எஞ்ஞான்றும் எடுக்க எடுக்கக் குறையாமலிருக்கும். பஞ்சாதி - சந்தை கூட்டி ஓதுவோர் நிறுத்துதற் பொருட்டு வேதத்தில் வகுக்கப்பட்ட ஐம்பது பதங்கொண்ட ஒரு முடிவு. அஞ்சாதி : எதிர்மறை யேவல்; த் : எழுத்துப்பேறு. அரி - அரிசி. மாது, ஓ : அசைகள். (13) நீநாளும் பூசித் ததில்வேண்டிய கொண்டு நித்தம் ஆனாத வன்பர்க் கமுதூட்டி யெவர்க்கு மன்ன தானாதி நானா தருமங்களுஞ் செய்தி வீடு மேனா ளளிக்கின் றனமென்று விசும்பிற் கூற. (இ - ள்.) நீ நாளும் பூசித்து - நீ தினந்தோறும் வழிபட்டு, அதில் வேண்டிய கொண்டு - அக் கோட்டையில் வேண்டுமளவு பெற்றுக் கொண்டு, நித்தம் ஆனாத அன்பர்க்கு அமுது ஊட்டி- நாடோறும் நீங்காத நமது அடியார்கட்கு உணவு அருத்தி, எவர்க்கும்- யாவருக்கும், அன்னதான ஆதி-அன்னதானம் முதலிய, நானா தருமங்களும் செய்தி - பலவேறு வகையான அறங்களையுஞ் செய்யக்கடவை; வீடு மேல் நாள் அளிக்கின்றனம் என்று - முடிவில் வீடு பேறு அளிக்கின்றோமென்று, விசும்பில் கூற - வானின்கண் அசரீரியாகக் கூறியருள. வேண்டிய : வினையாலணையும் பெயர். ஆனாத அன்பர்- குறையாத அன்பினையுடையவர் என்றுமாம். தானாதி : நெடிற்சந்தி. நானா - பல. (14) கேட்டின்ப மெய்திக் கிளர்விம்மித னாகி வேதப் பாட்டின் பயனைப் பணிந்தில்ல மடைந்து பண்டை ஈட்டுந் தவப்பே றெனக்கண்டனன் றொண்டர்க் கெந்தை கூட்டுங் கதிபோ லுலவாமற் கொடுத்த கோட்டை. (இ - ள்.) கேட்டு இன்பம் எய்தி - (அதனைக்) கேட்டு மகிழ்ச்சியடைந்து, கிளர் விம்மிதனாகி - மேலெழுந்த விம்மிதத்தை யுடையவனாய், வேதப் பாட்டின் பயனைப் பணிந்து - வேதப் பனுவலின் பொருளாயுள்ள இறைவனைப் பணிந்து, இல்லம் அடைந்து - மனையையெய்தி, பண்டை ஈட்டும் தவப்பேறு என - முற்பிறப்புக்களிலே தேடிய தவத்தின் பயனைக் கண்டாற்போல, தொண்டர்க்கு - அடியார்கட்கு, எந்தை - எம் பெருமான், கூட்டும் கதிபோல் - அடைவிக்கும் பேரின்பம் (என்றுங் குறையாதிருத்தல்) போல, உலவாமல் கொடுத்த கோட்டை - குறையாதிருக்கக் கொடுத்தருளிய கோட்டையை, கண்டான் - கண்டனன். விம்மிதம் - அதிசயம். கோட்டையைத் தவப்பேறெனக் கண்டனன் என முடிக்க. கோட்டையை என்னும் இரண்டனுருபு இறுதிக்கண் தொக்கது; " ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின் மெய்யுருபு தொகாஅ விறுதி யான" என்பது தொல்காப்பியம். (15) வானாறு சூடி தருகோட்டையை வைக றோறும் பூநாறு சாந்தம் புகையொண்சுடர் கொண்ட ருச்சித் தானாத செவ்வி யடிசிற்கு மதற்கு வேண்டும் நானா கருவி விலைக்கும்மது நல்க வாங்கா. (இ - ள்.) வான் ஆறு சூடி - கங்கையைத் தரித்த சோம சுந்தரக் கடவுள், தரு கோட்டையை - அருளிய கோட்டையை, வைகல் தோறும் - நாள்தோறும், பூ நாறு சாந்தம் புகை ஒண்சுடர் கொண்டு அருச்சித்து - மலரும் நறிய சந்தனமும் தூபமும் ஒள்ளிய தீபமும் என்னும் இவற்றாற் பூசித்து, செவ்வி ஆனாத அடிசிற்கும் - பதம் நீங்காத அன்னத்திற்கும், அதற்கு வேண்டும் நானா கருவி விலைக்கும் - அவ்வன்னத்திற்கு வேண்டிய கறிப் பொருள் முதலிய பல்வேறு உபகரணங்கள் விலைப் பொருட்கும், அது நல்க - அக் கோட்டை கொடுக்க, வாங்கா - கைக்கொண்டு. சூடி - சூடுதலையுடையான்; இ : வினை முதற்பொருள் விகுதி. கொண்டு : மூன்றாம் வேற்றுமைச் சொல். (16) மின்னார் சடையான் றமராய்ந்தவர் வேதச் செல்வர் தென்னாடர் தெய்வம் விருந்தொக்கல் செறிந்து நட்டோர் முன்னா மெவர்க்கு முகில்போல் வரையாம னல்கி எந்நாளு நோயின் றளகாதிப னென்ன வாழ்ந்தான். (இ - ள்.) மின் ஆர் சடையான் தமர் - மின் போன்ற சடையை யுடைய சிவபெருமானது அடியார்களும், ஆய்ந்தவர் வேதச் செல்வர்- வேதத்தை ஆராய்ந்தவர்களாகிய அந்தணர்களும், தென்னாடர் தெய்வம் விருந்து ஒக்கல் - பிதிரரும் தெய்வமும் விருந்தும் சுற்றத்தாரும், செறிந்து நட்டோர் - நெருங்கி நட்புச் செய்தோரும், முன் ஆம் எவர்க்கும் - முதலாகிய யாவர்க்கும், முகில் போல் வரையாமல் நல்கி - மேகம் போல் வரைவின்றிக் கொடுத்து, எந்நாளும் நோய் இன்று அளகாதிபன் என்ன வாழ்ந்தான் - எஞ்ஞான்றும் வறுமை நோயின்றிக் குபேரன் போல வாழ்ந்து வந்தான். கலைகளை ஆய்ந்தவரும் வேதச் செல்வரும் என்றுமாம். " தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங் கைம்புலத்தா றோம்ப றலை" என்பவாகலின், தென்னாடர் முதலாயினோர்க் களிப்பது இல்வாழ்வுக்குரிய பொது வறமாகும். சிவனடியார் முதலாயினார்க் களிப்பது சிறப்பறம். மேகம் யாவரையும் நீக்காது பெய்தல் போல நீக்காமற் கொடுத்தென்க. நோய் - துன்பமுமாம். அளகாதிபன் - அளகைப்பதிக் கிறைவன் : தீர்க்க சந்தி. (17) [மேற்படி வேறு] அன்பன் னடியார்க் கினியா னனிநா ளளந்தல்கித் தன்பன் னியொடு மயலார் சுற்றந் தமரோடும் பின்பந் நிலையே யிமவான் மகளைப் பிரியாத இன்பன் னுருவாய்ச் சிவமா நகர்சென் றிறைகொண்டான். (இ - ள்.) அன்பன் அடியார்க்கு இனியான் - அன்பனாகிய அடியார்க்கு நல்லான், தன் பன்னியொடும் - தன் மனைவியோடும், அயலார் சுற்றம் தமரோடும் - பக்கத்திலுள்ளார் சுற்றத்தார் நட்டார் என்னும் இவர்களோடும், நனிநாள் அளந்து அல்கி - நீண்ட நாள் அறஞ் செய்திருந்து, பின்பு - அதன் பின்னர், அந்நிலையே - அங்கிருந்தவாறே, இமவான் மகளைப் பிரியாத இன்பன் உருவாய் - மலைமகளைப் பிரியாத இன்ப வடிவினனாகிய சிவபெருமான் உருவாகி, சிவமாநகர் சென்று இறை கொண்டான் - பெருமை பொருந்திய சிவபுரமெய்தித் தங்குதலுற்றான். அளந்து - அறஞ்செய்து; நாட்களை அளந்து என்றுமாம். அந்நிலையே - கடவ நாட்கழித்த அப்பொழுதே என்றுமாம். உரு - சிவசாரூபம். இமவான் மகளைப் பிரியாத இன்பன் உருவாய் என்றமையால் அவன் பத்தினி உமையின்சாரூபம் பெற்றமையும் கொள்க. இறை கொண்டான் - ஒரு பெற்றியே இன்பம் நுகர்ந்திருந்தான். (18) ஆகச் செய்யுள் - 1925. முப்பத்தொன்பதாவது மாமனாக வந்து வழக்குரைத்த படலம் [அறுசீரடி யாசிரிய விருத்தம்] தாமநா றிதழி யார்தந் தமர்க்கன்பன் வறுமைப் பட்டோன் ஆமநா ளுலவாக் கோட்டை யருளிய முறையீ தையன் தேமனாண் முல்லைத் தீந்தார்ச் சிறுதகை வணிகற் காக மாமனாம் படிவங் கொண்டு வழக்குரை வண்ணஞ் சொல்வாம். (இ - ள்.) நாறு தாம இதழியார்தம் தமர்க்கு அன்பன் - மணங் கமழும் கொன்றை மாலையையணிந்த இறைவன் தம்முடைய அடியார்க்கு நல்லான், வறுமைப் பட்டோன் ஆம் அ நாள் - வறுமையுடையனாகிய அந்த நாளில், உலவாக் கோட்டையருளிய முறை ஈது - உலவாக் கோட்டையருளிய திருவிளையாடல் இது; ஐயன் - அப்பெருமான், தேம் மன்நாள் முல்லைத் தீந்தார் - தேன் பொருந்திய அன்றலர்ந்த முல்லை மலராகிய இனிய மாலைய யணிந்த, சிறு தகை வணிகற்கு ஆக - இளம்பருவமுடைய வணிகனுக்காக, மாமனாய் படிவம் கொண்டு வழக்கு உரைவண்ணம் வணிகனுக்காக, மாமனாய் படிவம் கொண்டு வழக்கு உறைவண்ணம் சொல்வாம் - அவனுக்கு மாமனாகிய வடிவந்தாங்கி வந்து வழக்குரைத்த திருவிளையாடலை (இனிக்) கூறுவாம். தாமம் நாறு இதழி என்பதற்கு மாலை போலத் தோன்றும் கொன்றைத்துணர் என்றுமாம். அநாள் : தொகுத்தல். தகை - பருவத்தை யுணர்த்திற்று. (1) கன்னிநான் மாடக் கூடற் கடிநகர் வணிக மாக்கள் தன்னின்மா நிதிக்கோ னன்னான் றனபதி யென்னும் பேரான் மன்னினா னனையான் கற்பின் மடவரல் சுசீலை யென்பாள் பொன்னினாண் முளரிச் சேக்கைப் புண்ணியத் திருவி னன்னாள். (இ - ள்.) கன்னிநான் மாடக் கூடல் கடிநகர் - என்றும் அழியாத நான்மாடக் கூடலென்னுங் காவலையுடைய மதுரைப் பதியின்கண் வசிக்கும், வணிக மாக்கள் தன்னில் - வாணிக மக்களுள், மாநிதிக் கோன் அன்னான் - குபேரனையொத்த செல்வமுடையனாகிய, தனபதி என்னும் பேரான் மன்னினான் - தனபதி என்னும் பெயரினையுடைய ஒருவன் இருந்தான்; அனையான் கற்பின் மடவரல் சுசீலை என்பாள் - அவனுடைய கற்பினையுடைய மனைவி சுசீலை என்னும் பெயரினையுடையாள்; பொன்னின் நாள் முளரிச் சேக்கை - பொன் போன்ற புதிய தாமரை மலராகிய தவிசில் இருக்கும், புண்ணியத் திருவின் அன்னாள் - புண்ணிய வடிவாகிய திருமகளையொத்தவள். கன்னி - அழிவின்மை. தம்மின் எனற்பாலது தன்னின் என எதுகை நோக்கி வந்தது. அன்னானாய் என வினையெச்சமாக்கலுமாம். மடவரல் - மடப்பத்தையுடையாள். திருவின், சாரியை நிற்க உருபு தொக்கது. (2) எனவிவர் தமக்கு மைந்தற் பேறின்றி யிரங்கு நாளிற் றனபதி மருகன் றன்னைத் தகவுசான் மகவாக் கொண்டு மனமகிழ் சிறப்பா னல்க மனைவியுந் தொழுது வாங்கிப் புனைவன புனைந்து போற்றிப் பொலிவுற வளர்த்துக் கொண்டாள். (இ - ள்.) என இவர் தமக்கு - என்று கூறப்பட்ட இவர்கட்கு, மைந்தன் பேறு இன்றி இரங்கு நாளில் - புதல்வற்பேறு இல்லாமல் வருந்தும் பொழுது, தனபதி மருகன் தன்னை - தனபதி என்பவன் தன் மருமகனை, தகவுசால் மகவாக் கொண்டு - தகுதியமைந்த புதல்வனாக ஏற்றுக் கொண்டு, மனமகிழ் சிறப்பால் நல்க - மனமகிழ்ந்து சிறப்போடு கொடுக்க, மனைவியும் தொழுது வாங்கி - மனைவியாகிய சுசீலையும் வணங்கிக் கையில் வாங்கி, புனைவன புனைந்து போற்றி - அணியத்தக்க அணிகளை அணிவித்துப் பேணி, பொலிவுஉற வளர்த்துக் கொண்டாள் - பொலிவு மிக வளர்த்தனள். மருகன் - தங்கை மகன். மகனாக் கொள்ளுதல் புதல்வனாக முறைப்படி ஏற்றுக் கொள்ளுதல். (3) தனபதி மகப்பே றற்றா னாயினுந் தணவாக் காதன் மனைவிமேல் வைத்த வாசை மயக்கினால் வருந்தி யீன்ற தனையனை மகவாத் தந்த தங்கைமேற் றீராப் பூசல் வினைவிளைத் தொழுக வோர்நா ளிளையளும் வெகுண்டு சொல்வாள். (இ - ள்.) தனபதி - தனபதி என்பான், மகப்பேறு அற்றான் ஆயினும் - பிள்ளைப் பேறு இல்லாதவனாயினும், தணவாக் காதல் மனைவி மேல் வைத்த - நீங்காத காதலையுடைய மனைவியினிடத்து வைத்த, ஆசை மயக்கினால் - ஆசையாற் போந்த மயக்கத்தினால், வருந்தி ஈன்ற தனையனை - தான் வருந்திப் பெற்ற புதல்வனை, மகவாத் தந்த தங்கை மேல் - பிள்ளை யாகக் கொடுத்த தங்கையின் மேல், தீராப் பூசல் வினைவிளைத்து ஒழுக - நீங்காத போர்த் தொழிலைச் செய்து வர, ஓர் நாள் இளையளும் வெகுண்டு சொல்வாள் - ஒரு நாள் தங்கையும் சினந்து கூறுவாளாயினள். மனைவி வயிற்று மகப் பேறின்றித் தங்கை மகனை மகவாக் கொண்டவன் அவளுடன் பூசல் விளைத்தல் சிறிதும் தகாதென்பார் 'மகப் பேறற்றானாயினும்...............பூசல் வினைவிளைத்து' என்றார். மயக்கினால் பூசல் வினைவிளைத்து என இயைக்க. இதனால் அவன் மனைவி தனது நாத் தூண் நங்கையொடு மனம் பொருந்தாதிருந்தமை பெறப்படும். (4) பெருமித முனக்கேன் பிள்ளைப் பேறற்ற பாவி நீயென் அருமைநன் மகனா லன்றோ விருமையு மடைவா யென்னப் பெரிதுநா ணடைந்து மேலைக் காயினும் பிள்ளைப் பேறு தருதவம் புரிவே னென்னாத் தனபதி தவமேற் செல்வான். (இ - ள்.) பிள்ளைப் பேறு அற்ற பாவி உனக்குப் பெருமிதம் ஏன் - மகப்பேறற்ற பாவியாகிய உனக்குப் பெருமிதம் எதற்கு, என் அருமை நன் மகனால் அன்றோ - எனது அருமைப் புதல்வனாலல்லவா, நீ இருமையும் அடைவாய் என்ன - நீ இம்மைப் பேற்றினையும் மறுமைப் பேற்றினையும் அடைவாய் என்று கூற, பெரிதும் நாண் அடைந்து - மிகவும் வெட்கமுற்று, மேலைக்கு ஆயினும் பிள்ளைப் பேறு தருதவம் புரிவேன் என்னா - மறு பிறப்பிலாயினும் மகப் பேற்றினைத் தருதற்குரிய தவத்தினைச் செய்வேனென்று, தனபதி தவமேல் செல்வான் - தனபதி தவம் புரிதற் பொருட்டுச் செல்வானாயினன். பெருமிதம் - செருக்கு. புதல்வற்பேறு மறுமைக்கும் காரணமாதலை, " எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்" என்னும் பொய்யா மொழியால் அறிக. மேலை - ஈண்டு மறுமை.(5) தன்பெருஞ் செல்வ மெல்லா மருமகன் றனக்கே யாக்கி அன்புகொண் மனைவி யோடு மருந்தவ நெறியிற் சென்றான் பின்பவன் வரவு தாழ்ப்ப மருமகன் பெற்ற வெல்லாம் வன்பினால் வழக்குப் பேசி வௌவினார் தாய மாக்கள். (இ - ள்.) தன் பெருஞ் செல்வம் எல்லாம் - தனது பெரிய செல்வ முழுதையும், மருமகன் தனக்கே ஆக்கி - மருகனுக்கே உரிமையாக்கி, அன்பு கொள் மனைவியோடும் - அன்பு கொண்ட தன் மனைவியோடும், அருந்தவ நெறியில் சென்றான் - அரிய தவநெறியிற் சென்றனன்; பின்பு அவன் வரவு தாழ்ப்ப - பின்பு அத் தனபதியின் வருகை காலந் தாழ்க்க, மருமகன் பெற்ற எல்லாம் - அவன் மருகன் அடைந்த செல்வமனைத்தையும், வன்பினால் வழக்குப் பேசி - வலிமையினால் வழக்குரைத்து, தாய மாக்கள் வௌவினார் - தாயத்தார் வௌவிக் கொண்டனர். வரவு தாழ்ப்ப - நெடுநாள் வாராதிருந்தமையால். வன்பு - வலிமை; வன்கண்மையுமாம். (6) விளைநில னடிமை பைம்பூண் வெறுக்கைநன் பசுக்க ளேனை வளனுமாற் றவர்கைக் கொள்ள வன்சிறை யிழந்த புட்போற் றளர்வுறு மகனுந் தாயுஞ் சார்பிலாத் தம்ம னோர்க்கோர்1 களைகணா யிருக்குங் கூடற் கடவுளே சரண மென்னா. (இ - ள்.) விளை நிலன் - விளை நிலங்களையும், அடிமை - அடிமைகளையும், பைம்பூண் - பசிய அணிகளையும், வெறுக்கை- பொருள்களையும், நன் பசுக்கள் - நல்ல பசுக்களையும், ஏனை வளனும் - பிற வளங்களையும், மாற்றவர் கைக்கொள்ள - பகைவர் கவர்ந்து கொள்ள, வன்சிறை இழந்த புள்போல் - வலிய சிறைகளை இழந்த பறவை போல, தளர்வு உறு மகனும் - மெலிவுற்ற புதல்வனும், தாயும் - அவனையீன்ற அன்னையும், சார்பு இலாத் தம்மனோர்க்கு - பற்றுக் கோடில்லாத தம் போல்வார்க்கு, ஒரு களை கணாய் இருக்கும் - ஒரு பற்றுக்கோடாயிருக்கும், கூடல் கடவுளே - கூடலம்பதியில் வீற்றிருக்கும் இறைவனே, சரணம் என்னா - அடைக்கலம் என்று கருதி. அடிமை - ஏவலாட்கள். வெறுக்கை - பொன் முதலியன, ஏனை வளன் - மனை, தோட்டம் முதலியன. (7) வந்துவா னகடு போழ்ந்த மணிமுடி விமானக் கோயிற் சுந்தர நாதன் பாதத் துணைதொழு திறைஞ்சி யார்க்குந் தந்தையுந் தாயு மாகுந் தம்பிரா னீரே யெங்கட் கெந்தையும் யாயு மென்னா விரங்கிநின் றினைய சொல்வாள். (இ - ள்.) வந்து - வந்தெய்தி, வான் அகடு போழ்ந்த மணிமுடி விமானக் கோயில் - விசும்பின் வயிற்றைக் கிழித் துயர்ந்த அழகிய முடியினையுடைய இந்திர விமானமாகிய கோயிலில் வீற்றிருக்கும், சுந்தரநாதன் பாதத்துணை தொழுது இறைஞ்சி - சோமசுந்தரக் கடவுளின் இரண்டு திருவடிகளையும் கும்பிட்டு வணங்கி, யார்க்கும் தந்தையும் தாயும் ஆகும் தம்பிரான் - யாவர்க்கும் அத்தனும் அன்னையுமாகிய தம்பிரானே, நீரே எங்கட்கு எந்தையும் யாயும் என்னா - தேவரீரே அடியேங்கட்கும் தந்தையும் தாயுமாவீர் என்று, இரங்கி நின்று இனைய சொல்வாள் - வருந்தி நின்று இத்தன்மையனவாய குறைகளைக் கூறுவாளாயினள். தம்பிரானாகிய நீரேயென்றுமாம். யாய் - தாய். மகனும் தாயும் வந்து வணங்கினர் எனவும், பின்பு தாய் இனைய சொல்வாள் எனவும் கொள்க. (8) என்மகன் றன்னை மைந்த னின்மையா லெவருங் காணத் தன்மக னாகக் கொண்டு தகுதியா லன்றே காணி பொன்மனை பிறவு நல்கிப் போயினா னென்மு னிப்பால் வன்மையாற் றாயத் தார்க ளவையெலாம் வௌவிக் கொண்டார். (இ - ள்.) என் முன் - என் தமையன், மைந்தன் இன்மையால்- தனக்குப் பிள்ளையில்லாமையால், என் மகன் றன்னை - என் மகனை, எவரும் காண - யாவருமறிய, தகுதியால் - கொள்ள வேண்டிய முறைப்படி, தன் மகனாகக் கொண்டு - தன் புதல்வனாகக் கொண்டு, அன்றே - அப்பொழுதே, காணி பொன் மனைபிறவும் நல்கிப் போயினான் - விளை நிலம் பொன் மனை என்பவைகளையும் பிறவற்றையும் கொடுத்துப் போயினான்; இப்பால் - பின்பு, தாயத்தார்கள், பங்காளிகள் அவை எலாம் - அப்பொருள்களனைத்தையும், வன்மையால் வௌவிக் கொண்டார் - தங்கள் வலியினாலே கவர்ந்து கொண்டார்கள். என் முன் நல்கிப் போயினான் பின் தாயத்தார் வௌவிக் கொண்டனர் என்க. (9) ஒருத்திநா னொருத்திக் கிந்த வொருமக னிவனுந் தேருங்1 கருத்திலாச் சிறியன் வேறு களைகணுங் காணே னைய அருத்திசா லறவோர் தேறு மருட்பெருங் கடலே யெங்கும் இருத்திநீ யறியாய் கொல்லோ வென்றுபார் படிய வீழ்ந்தாள். (இ - ள்.) ஐய - ஐயனே, ஒருத்தி நான் - நானோ யாருமற்ற ஒருத்தி, ஒருத்திக்கு இந்த ஒரு மகன் - ஒருத்தியாகிய எனக்கு இவன் ஒரே புதல்வன், இவனும் தேரும் கருத்து இலாச் சிறியன்- இவ்வொரு புதல்வனும் நன்மை தீமைகளை ஆராயுங் கருத்து இல்லாத இளைஞன்; வேறு களைகணும் காணேன் - வேறு பற்றுக் கோடும் காணேன்; அருத்திசால் அறவோர்தேறும் அருள் பெருங் கடலே - அன்பு நிறைந்த முனிவர்கள் தெளியும் பெரிய கருணைக் கடலே, நீ எங்கும் இருத்தி - நீ யாண்டும் இருப்பாய்; அறியாய்கொல்லோ என்று - (ஆதலின் இதனை) அறியாயோ என்று, பார் படிய வீழ்ந்தாள் - நிலம்படிய வீழ்ந்தனள். தேறும் கருத்து என்பது பாடமாயின் தெளியும் கருத்தென்றுரைக்க. ஒருத்தியென்ற தனாலும் வேறு களைகணும் காணேன் என்றதனாலும் இவட்குக் கணவனும், வேறு துணையாகும் சுற்றத்தாரும் இலரென்பது பெற்றாம். அருத்தி - ஆர்வம், அன்பு. கொல் அசை நிலை. (10) மாறுகொள் வழக்குத் தீர்க்க வல்லவ ரருளி னாலே சீறுகொள் வடிவேற் கண்ணாள் சிறுதுயி லடைந்தாள் மெய்யில் ஊறுகொள் கரண மைந்து முற்றறி கனவிற் கங்கை யாறுகொள் சடையார் வேதச் செல்வரா யடுத்துச் சொல்வார். (இ - ள்.) மாறுகொள் வழக்குத் தீர்க்க வல்லவர் அருளினால் - மாறுபட்ட கொடிய வழக்கினைத் தீர்க்க வல்ல பெருமானது திருவருளினால், சீறுகொள் வடிவேல் கண்ணாள் சிறுதுயில் அடைந்தாள் - சினங்கொண்ட வடித்த வேல்போலுங் கண்களை யுடையவள் சிறிய உறக்கங் கொண்டனள்; மெய்யில் ஊறுகொள் கரணம் ஐந்தும் உற்று அறி கனவில் - உடலின்கட் பொருந்திய ஐம்பொறிகளும் ஒடுங்கி நிற்க (ஆள்மாவானது சூக்கும உடம்பினின்று) அறியும் கனவின்கண், கங்கை ஆறுகொள் சடையார் - கங்கை யாற்றையணிந்த சடையினையுடைய இறைவர், வேதச் செல்வராய் அடுத்துச் சொல்வார் - ஓர் அந்தணராய் வந்து கூறுகின்றார். ஊறுகொள் - உறுதலைக் கொண்ட, பொருந்திய. உற்று - ஒடுங்கி நிற்க; எச்சத்திரிபு. கனவின் இயல்பினை "பொறிகளும் தமது சத்தி மடங்கி, அவை மடங்கவே, அவற்றின் வழியவாகிய வாக்காதிகளும் தமது சத்தி மடங்கி, அவ்விருவகை இந்திரியங் களும் தொழிற்பாடின்றி ஆண்டு நின்றொழியும் அவத்தையின், ஏனை அந்தக்கரண முதலியன தொழிற்படினும் புறப்பொருள் விடயமாகாமையின் அகத்தே சூக்கும தேகத்தோடு நின்று ஆண்டைக் குரிய இருவினைப் பயன்களை நுகர்ந்து நிற்கும் அவத்தை சொப்பனம்" என்னும் சிவஞான போதமா பாடியத்தாலுணர்க. (11) புலர்ந்தபின் றாயத் தோரைப் புரவல னாணை யாற்றால் வலந்தரு மன்றத் தேற்றி மறித்தனை யிருத்தி யாம்போந் தலந்தரு மறிவான் மூத்தோ ரனைவரு மிசைய 1வந்தச் சலந்தரு வழக்குத் தீர்த்துத் தருகுவம் போதி யென்றார். (இ - ள்.) புலர்ந்தபின் - விடிந்த பின்னர், தாயத்தோரை - பங்காளிகளை, புரவலன் ஆணை ஆற்றால் - அரசன் ஆணை வழியால், மறித்தனை - மறித்து, வலம்தரு மன்றத்து ஏற்றி இருத்தி- வெற்றியைத் தரும் அவையின்கண் ஏற்றி இருப்பாயாக; யாம் போந்து - யாம் வந்து, அலம் தரும் அறிவால் மூத்தோர் அனைவரும் இசைய - அமைந்த உணர்வினால் முதியோரனைவரும் உடன்பட, அந்தச் சலம் தரு வழக்குத் தீர்த்துத் தருகுவம் - அந்தப் பொய் வழக்கினை ஒழித்து உன் பொருளைக் கொடுப்போம்; போதி என்றார் - நீ போகக் கடவை என்றருளிச் செய்தார். அரசன் ஆணை கூறியழைப்பின் மீறிச் செல்லாராகையால் 'புரவலன் ஆணையாற்றால் மறித்தனை மன்றத் தேற்றி' என்றார். வலந்தரு மன்றம் - உண்மையுணர்த்தி வெற்றியைத் தரும் மன்றம்; அறங்கூறவையம். மறித்தனை : முற்றெச்சம். அலம் - அமைவு. அனைவருக்கும் பொருந்த என்றுமாம். சலம் - பொய். இருத்தி, போதி என்பவற்றில் த் : எழுத்துப் பேறு. (12) வேரியங் குவளை யுண்கண் விழித்தனள் வியந்து கெட்டேன் ஆருமில் லார்க்குத் தெய்வந் துணையென்ப தறிந்தே னென்னாக் காரிருங் கயலுண் கண்ணாள் கணவனைத் தொழுது வாழ்த்திச் சீரிளங் குமர னோடுந் தெரிவைதன் மனையிற் சென்றாள். (இ - ள்.) வேரி அம் குவளை உண்கண் விழித்தனள் - தேனையுடைய அழகிய குவளை மலரை வென்ற கண்கள் விழித்து, வியந்து - அதிசயித்து, கெட்டேன் - ஆ கெட்டேன்!, ஆரும் இல்லார்க்குத் தெய்வம் துணை என்பது அறிந்தேன் என்னா - அகதிக்குத் தெய்வந்துணை என்னும் பழமொழியை அறிந்தேனென்று கூறி, கார் இருங்கயல் உண்கண்ணாள் கணவனை - கரிய பெரிய மையுண்ட கயல்போலுங் கண்களையுடைய அம்மையின் நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளை, தொழுது வாழ்த்தி - வணங்கித் துதித்து, சீர் இளங் குமரனோடும் - சீரிய இளமை பொருந்திய புதல்வனோடும், தெரிவை தன் மனையில் சென்றாள்- அம்மாது தனது இல்லின்கட் சென்றனள். விழித்தனள் : முற்றெச்சம். கெட்டேன் : வியப்புணர்த்தும் இடைச்சொல். (13) சென்றவள் கங்கு லெல்லை தெரிந்தபி னெழுந்து வெள்ளி மன்றவன் கோயில் வாயில் வந்துவந் தனைசெய் தம்பொற் குன்றவ னுரைத்த வாற்றாற் கொடுமைசால் வழக்குப் பூட்டி வென்றவ ரிருக்கை யெய்தி விளம்புவாள் பலருங் கேட்ப. (இ - ள்.) சென்றவள் கங்குல் எல்லை தெரிந்த பின் எழுந்து- அங்ஙனஞ் சென்றவள் இரவு புலர்ந்தவுடன் எழுந்து, வெள்ளி மன்றவன் கோயில் வாயில் வந்து - வெள்ளியம்பல வாணனது திருக்கோயில் வாயிலை யடைந்து, வந்தனை செய்து - வணங்கி, அம்பொன் குன்றவன் உரைத்த ஆற்றால் - அழகிய பொன்மலையை (வில்லாக) உடைய பெருமான் கூறியருளியவாறே, கொடுமைசால் வழக்குப் பூட்டி வென்றவர் - கொடுமை மிக்க வழக்கினைத் தொடுத்து வென்ற ஞாதிகளின், இருக்கை எய்தி - இருப்பிடத்தை அடைந்து, பலருங் கேட்ப விளம்புவாள் - பலருங் கேட்கக் கூறுவாள். கங்குல் எல்லை தெரிதல் - இரவின் முடிவு தெரிதல்; இருள் புலர்தல். சென்றவள் எழுந்து வந்து வந்தனை செய்து இருக்கையெய்தி விளம்புவாள் என முடிக்க. (14) அட்டில்வாய் நெருப்பி டேலோ ரடியிடே லறத்தா றன்றிப் பட்டிமை வழக்கால் வென்று போகொட்டேன் பலருங் கேட்க இட்டன னரச னாணை யறத்தவி சேறி யான்றோர் ஒட்டிய படிகேட் டெங்க ளுரிப்பொரு டந்து போமின். (இ - ள்.) அட்டில் வாய் நெருப்பு இடல் - அடுக்களையில் நெருப்பு மூட்டாதே, ஓர் அடி இடேல் - ஓர் அடியும் பெயரத்து வையாதே, அறத்து ஆறு அன்றி - அறநெறியால் அல்லாமல், பட்டிமை வழக்கால் வென்று போக ஒட்டேன் - பொய் வழக்கினால் வென்று போக விடமாட்டேன், பலரும் கேட்க அரசன் ஆணை இட்டனன் - அனைவருஞ் சான்றாக அரசன் மீது ஆணையிட்டேன், அறத்தவிசு ஏறி - தருமாசனத்தில் ஏறி, ஆன்றோர் ஒட்டியபடி கேட்டு - நூலோர் ஆய்ந்து கூறுந் தீர்ப்பினைக் கேட்டு, எங்கள் உரிப்பொருள் தந்து போமின் - எங்கள் உரிமைப் பொருளைக் கொடுத்துச் செல்வீராக. அடுக்களையில் நெருப்பிடாதே, அடியெடுத்து வையாதே என ஆணை கூறி மறிப்போர் உரைத்தல் வழக்கு. பட்டிமை - படிறு, வஞ்சம். போகொட்டேன் : அகரந் தொக்கது. ஒட்டியபடி - வாதித்துக் கூறும் தீர்ப்பு; பலரும் ஒன்று கூடியுரைக்கும் தீர்ப்புமாம். ஒட்டியபடி கேட்டு எங்களுரிப்பொருள் தந்து என்றமையால் வெற்றி தமக்கேயெனத் துணிந்து கூறினாளாயிற்று. மகனை உளப்படுத்தி 'எங்கள்' என்றாள். உரி - உரிய. இடேல் எனத் தனித்தனியே நோக்கிக் கூறி, போமின் என அனைவரையும் நோக்கிக் கூறினாள் என்க. (15) என்றனள் மறித்த லோடு மிழுக்குரை யாடி வைது வன்றிறல் வலியார் தள்ளி யடித்தனர் மைந்த னோடுஞ் சென்றனன் முறையோ வென்னாத் திருந்தறத் தவிசி னோர்முன் நின்றுரை யாடி னாள்கேட் டறிந்தனர் நீதி நூலோர். (இ - ள்.) என்றனள் மறித்தலோடும் - என்று கூறி (அவர் செலவைத்) தடுத்தவளவில், வன்றிறல் வலியார் - மிக்க வலியுடைய ஞாதியர், இழுக்கு உரை ஆடி வைது தள்ளி அடித்தனர் - தீய சொற்களைக் கூறி வைது நிலத்திற் றள்ளி அடித்தார்கள்; மைந்தனோடும் சென்றனள் - (அவள்) புதல்வனோடுஞ் சென்று, முறையோ என்னா - இது முறையோ என்று கூவி, திருந்து அறத்தவிசினோர் முன் நின்று உரையாடினாள் - திருந்திய தரும பீடத்துள்ளார் முன் நின்று வழக்கினைக் கூறினாள்; நீதி நூலோர் கேட்டு அறிந்தனர் - நீதி நூல் வல்ல மன்றத்தார் அதனைக் கேட்டறிந்தனர். என்றனள், சென்றனள் என்பன முற்றெச்சம். வன்றிறல்: ஒரு பொருட் பன்மொழி. திருந்துதல் - சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபாற் கோடாதிருத்தல். (16) அறத்தவி சிருப்போ ரேவ லாடவ ரோடும் போந்து மறித்தவைக் களத்திற் கூட்டி வந்தனள் வந்த வெல்லை அறக்கொடி பாகர் வெள்ளி யம்பல வாணர் தாமத் திறத்தன பதியே யென்னத் திருவுருக் கொண்டு செல்வார். (இ - ள்.) அறத் தவிசு இருப்போர் - தரும பீடத்தில் இருப்போருடைய, ஏவல் ஆடவரோடும் போந்து - ஏவலாளரோடுஞ் சென்று, மறித்து அவைக் களத்தில் கூட்டி வந்தனள் - மறித்து மன்றின்கண் (அஞ்ஞாதிகளைக்) கூட்டி வந்தாள்; வந்த எல்லை - வந்த பொழுது, அறக்கொடி பாகர் - தரும வல்லியாகிய உமையை ஒரு பாகத்திலுடைய வரும், வெள்ளி அம்பலவாணர் - வெள்ளி மன்றுடையாருமாகிய சோமசுந்தரக் கடவுள், தாம் அத்திறம் தனபதியே என்ன - தாம் தவமேற் சென்ற தனபதியே போல, உருக்கொண்டு செல்வார் - திருவுருவந் தாங்கிச் செல்வாராயினர். கேட்டறிந்த அறத் தவிசினோர் ஏவலாளரை அனுப்பினரென்பது உடம்பொடு புணர்த்துரைக்கப்பட்டது. அறக்கொடி - அறமே உருவமாகிய கொடிபோல்வாள்; அறம் வளர்த்தாள் என்றுமாம். திறம் - தன்மை, அத்திறத் திருவுருக் கொண்டு என்று கூட்டுதலுமாம். (17) [கலிவிருத்தம்] பெருவிலைக் குண்டலம் பிடரிற் பத்திபாய்ந் தெரிகதிர் கவிழ்ப்பவா ளெறிக்கு மங்கதம் அருவரைத் தோள்கிடந் திமைப்ப வாகமேற் குருமணிக் கண்டிகை குலாய்ப்பின் கோட்டவே. (இ - ள்.) பெருவிலைக் குண்டலம் - பெரிய விலையினையுடைய குண்டலங்கள், பிடரில் பத்தி பாய்ந்து எரிகதிர் கவிழ்ப்ப- பிடரியில் நிரைபட விளங்கும் ஒளியினை உமிழவும், வாள் எறிக்கும் அங்கதம் - ஒளி வீசும் தோளணி, அருவரை தோள் கிடந்து இமைப்ப - அரிய மலை போன்ற தோளிற் பொருந்தி ஒளி விடவும், ஆகம் மேல் குருமணிக் கண்டிகை குலாய்ப்பின் கோட்ட - மார்பிற் கிடக்கும் நிறம் பொருந்திய மணிக் கண்டிகை விளங்கிப் பின்னே வளைந்து கிடக்கவும். காதிலும் மார்பிலும் அணிந்த குண்டலங்களும் கண்டிகையும் அசைதலால் முறையே பிடரிலும் முதுகிலும் ஒளி வீசி விளங்கின என்றார். அங்கதம் - வாகுவலயம். அருமை - ஈண்டுப் பெருமை. (18) முரலளி புறவிதழ் மொய்ப்பச் செய்யதா மரைசிறி தலர்ந்தென மணிசெய் மோதிரக் கரதலம் வீசியோர் கடுங்க ணேறெனப் பெருமித நடைகொடு நடக்கும் பெற்றியார். (இ - ள்.) முரல் அளி புற இதழ் மொய்ப்ப - ஒலிக்கின்ற வண்டுகள் புற இதழில் மொய்த்துக் கிடப்ப, செய்ய தாமரை சிறிது அலர்ந்தென - செந்தாமரைப் போது சிறிது மலர்ந்தாற்போல் விளங்கும், மணி செய் மோதிரக் கரதலம் வீசி - நீலமணியாற் செய்த மோதிரங்களையணிந்த கைகளை வீசி, ஓர் கடுங்கண் ஏறு என - ஒரு வெகுளி நோக்கினையுடைய இடபம் போல, பெருமித நடை கொடு நடக்கும் பெற்றியார் - செம்மாந்த நடையால் நடக்குந் தன்மையுடையராய். விரல்கள் இதழ்கள் போலவும், விரல்களின் புறத்தணிந்த நீல மணி மோதிரங்கள் இதழ்களின் புறத்து மொய்த்துள்ள வண்டுகள் போலவும் விளங்கினவென்க. அலர்ந்தென; விகாரம். விளங்கும் என ஒரு சொல் விரிக்க. ஏறு - சிங்கவேறுமாம். (19) வாடிய முளரிபோன் மாறிட் டாரிடத் தூடிய மலர்ந்தபோ தொப்ப மைந்தன்மேல் நாடிய தண்ணளி நயந்து முட்கிடை கூடிய முகத்தினர் குறுகு வாரவை. (இ - ள்.) வாடிய முளரிபோல் - வாட்டமுற்ற தாமரை மலரைப் போல, மாறு இட்டார் இடத்து ஊடியும் - பகைவிளைத்த ஞாதிகளிடத்துப் பிணக்கினைக் காட்டியும், மலர்ந்த போது ஒப்ப - மலர்ந்த தாமரை மலரைப் போல, மைந்தன் மேல் நாடிய தண் அளி நயந்தும் - புதல்வனிடத்துக் கொண்ட தண்ணிய அருளை விருப்புடன் காட்டியும், உட்கிடை கூடிய முகத்தினர் - உட்கருத்தைப் புலப்படுத்துவது போலும் முகத்தினராய், அவை குறுகுவார் - மன்றின்கண் வருகின்ற பெருமானார். " அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சம் கடுத்தது காட்டு முகம்" என்னும் பொய்யா மொழியால், உள்ளத்தே மிக்கு நிகழ்வதனை முகம் காட்டுதல் பெற்றாம். இறைவர் தாம் கொண்ட கோலத்திற்கேற்ப மாறிட்டா ரிடத்து ஊடுதலும் மைந்தனிடத்து நயத்தலுமுடையார் போல் நடிப்பாராய் முறையே முகவாட்டமும் மலர்ச்சியுமுடையவராய்த் தோன்றினார் என்க. உட்கிடை - உள்ளக்கருத்து. கவிழ்ப்ப, இமைப்ப, கோட்ட, பெற்றியராய், முகத்தினராய் அவை குறுகுபவர் எனக் கூட்டி முடிக்க. (20) [அறுசீரடி யாசிரிய விருத்தம்] அரசனிங் கில்லை கொல்லோ வான்றவ ரில்லை கொல்லோ குரைகழல் வேந்தன் செங்கோல் கொடியதோ கோதி னூல்கள் உரைசெயுந் தெய்வந் தானு மில்லைகொ லுறுதி யான தருமமெங் கொளித்த தேகொ லென்றறத் தவிசிற் சார்வார். (இ - ள்.) இங்கு அரசன் இல்லை கொல்லோ - இந்நகரில் மன்னன் இல்லையோ, ஆன்றவர் இல்லை கொல்லோ - அறிவால் அமைந்த முதியோர் இல்லையோ, குரை கழல் வேந்தன் செங்கோல் கொடியதோ - ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த அரசனது செங்கோல் கொடுங் கோலானதோ, கோது இல் நூல்கள் உரை செயும் தெய்வம் தானும் இல்லைகொல் - குற்றமற்ற வேத சிவாகமங்களை அருளிய கடவுளும் இல்லையோ, உறுதியான தருமம் எங்கு ஒளித்ததே கொல் - நிலைபேறுடைய அறமும் எங்கே சென்று ஒளித்ததோ, என்று - என்று முறையிட்டு, அறத் தவிசில் சார்வார் - அறமன்றினைச் சார்வாராயினர். செங்கோல் வேந்தனோ ஆன்றவரோ தெய்வமோ அறமோ இருப்பின் இத்தீமை நிகழாதென்பார் அவை இல்லையோ என்றாரென்க. கொடியதோ - கோடியதோ; குறுக்கல் விகாரம்; கொடுமையுடையதாயிற்றோ என்றுமாம். நூல்களால் உரை செய்யப்படும் தெய்வம் என்றுரைத்தலும் அமையும். முன்னுள்ள கொல் இரண்டும் அசைகள். (21) தனபதி வரவு நோக்கி வஞ்சனைத் தாயத் தார்கள் இனைவுறு மனத்த ராகி விம்மித மெய்தி வெல்லும் மனவலி யிழந்து பண்டு வழக்கலா வழக்கால் வென்ற வினைநினைந் துள்ள மச்ச நாணினால் விழுங்கப் பட்டார். (இ - ள்.) தனபதி வரவு நோக்கி - தனபதியின் வருகையைப் பார்த்து, வஞ்சனைத் தாயத்தார்கள் - வஞ்சனையையுடைய பங்காளிகள், இனைவு உறு மனத்தர் ஆகி - வருத்தமிக்க மனத்தினையுடையராய், விம்மிதம் எய்தி - வியப்புற்று, வெல்லும் மனவலி இழந்து - வெல்லக் கருதிய மனவலியை இழந்து, பண்டு வழக்கு அலா வழக்கால் வென்ற வினை நினைந்து - முன்பு கொடுவழக்கால் வென்ற தீச் செய்கையை நினைந்து, உள்ளம் அச்சம் நாணினால் விழுங்கப்பட்டார் - நெஞ்சம் அச்சத்தினாலும் வெட்கத்தினாலும் விழுங்கப்பட்டார். வரவு நோக்கி முதலில் வியப்பும் பின் வருத்தமும் எய்தினர் என்க. முன் போன்றே மீட்டும் வெல்லலாமென்னும் மனவலியுடையராயிருந்து பின் அதனை இழந்தனரென்பார் 'வெல்லும் மனவலி யிழந்து' என்றார். வழக்கு அலா வழக்கு - மெய் வழக்கல்லாத வழக்கு; கொடு வழக்கு. தமது தீமை புலனாதல் குறித்து நாணமும், அரசன் ஒறுப்பன் என்பது கருதி அச்சமும் உள்ளத்தே மிக்கனரென்க. (22) மாதுல ராகி வந்தோர் மருகனைத் தம்பின் வந்த தாதுல ராத கோதை தன்னொடுந் தழீஇத்தங் கண்ட மீதுல ராத சாம வேதமார்ப் பவர்போல் வாய்விட் டாதுல ரானீ ரந்தோ வையவென் றழுது நைந்தார். (இ - ள்.) மாதுலர் ஆகி வந்தோர் - மாமனாகி வந்த இறைவர், மருகனை - மருமகனை, தம் பின் வந்த - தமக்குப் பின் தோன்றிய, தாது உலராத கோதை தன்னொடும் தழீஇ - தங்கையோடும் தழுவி, தம் கண்டம் மீது உலராத சாம வேதம் ஆர்ப்பவர் போல் - தமது திருமிடற்றினின்றும் நீங்காத சாமவேதத்தினைப் பாடுபவர் போல, வாய் விட்டு - வாய் திறந்து. ஆதுலர் ஆனீர் - (நீங்கள்) வறியரானீர்கள்; அந்தோ ஐய என்று அழுது நைந்தார் - ஐயகோ வென்று புலம்பி வருந்தினார். மருகனையும் தங்கையையும் தழுவியென்க. கோதை - பெண். தம்பின் வந்த கோதை - தங்கை. கோதை என்பது மாலையும் ஆகலின் அப்பெயருக் கேற்பத் 'தாதுலராத' என அடை கொடுத்தார். தாது உலராத - மகரந்தம் அறாத. அவரது அழுகையொலியும் சாமவேத இசை போல இனிமையா யிருந்ததென்பார் 'சாம வேத மார்ப்பவர் போல் வாய்விட்டு' என்றார். அந்தோ, ஐய என்பன இரக்கப் பொருளில் வந்த இடைச் சொற்கள். (23) குடங்கையி னெடுங்க ணாளுங் குமரனும் வணிகர் தாளிற் றடங்கணீ ராட்ட வீழ்ந்தார் தடக்கையா லெடுத்துப் புல்லி மடங்கலே றனையார் தாமு மற்றவர் தமைத்தங் கண்ணீர் நெடுங்கடல் வெள்ளத் தாழ்த்திக் குமரனை நேர்ந்து நைவார். (இ - ள்.) குடங்கையின் நெடுங்கணாளும் - உள்ளங் கைபோல் அகன்ற நீண்ட கண்களையுடைய தங்கையும், குமரனும் - புதல்வனும், வணிகர் தாளில் - வணிகரின் திருவடிகளில், தடம் கண் நீர் ஆட்ட - தம் பெரிய கண்கள் அவற்றை நீராட்டும்படி, வீழ்ந்தார் - வீழ்ந்தனர்; தடக்கையால் எடுத்துப் புல்லி - நீண்ட திருக்கரத்தினால் எடுத்துத் தழுவி, மடங்கல் ஏறு அனையார் தாமும் - சிங்கவேற்றினையொத்த அவ்வணிகரும், அவர்தமை - அவர்களை, தம் கண் நீர் நெடுங்கடல் வெள்ளத்து ஆழ்த்தி - தமது கண்ணீராகிய பெரிய கடற்பெருக்கில் மூழ்குவித்து, குமரனை நேர்ந்து நைவார் - பின் புதல்வனைப் பார்த்து வருந்துவாராயினர். அகன்ற என வருவிக்க. தாளில் வீழ்ந்தார் என இயையும். தாம், மற்று என்பன அசைகள். கண்ணீர் பெருக விடுத்தமையைத் தடங்கணீராட்ட என்றும், கண்ணீர் வெள்ளத் தாழ்த்தி என்றும் கூறினார். (24) ஐம்படை மார்பிற் காணேன் சிறுசிலம் படியிற் காணேன் மொய்ம்படை மதாணி காணேன் முகத்தசை சுட்டி காணேன் மின்படு குழைகள் காணேன் வெற்றுடல் கண்டே னப்பா என்பெறு மென்று பிள்ளைப் பணிகளுங் கவர்ந்தா ரென்னா. (இ - ள்.) மார்பில் ஐம்படை காணேன் - மார்பின்கண் ஐம்படை யென்னும் அணியைக் கண்டிலேன்; அடியில் சிறு சிலம்பு காணேன் - காலின்கண் சிறிய சிலம்பினைக் கண்டிலேன்; மொய்ம்பு இடை மதாணி காணேன் - தோளின்கண் தோளணியைக் கண்டிலேன்; முகத்து அசை சுட்டி காணேன் - முகத்தின் கண் அசையும் சுட்டியைக் கண்டிலேன்; மின்படு குழைகள் காணேன் - (காதுகளில்) ஒளி வீசுங் குண்டலங்களைக் கண்டிலேன்; வெற்று உடல் கண்டேன் - (பின் இவை நீங்கிய) வெறும் உடலைக் கண்டேன்;அப்பா - அப்பனே, என் பெறும் என்று - எத்துணை விலை பெறுமென்று கருதி, பிள்ளைப் பணிகளும் கவர்ந்தார் என்னா - குழந்தையின் அணிகளையும் வௌவினார் என்று கூறி. ஐம்படை - காவற் கடவுளாகிய திருமாலின் சக்கரம், தனு, வாள், தண்டு, சங்கம் என்னும் பஞ்சாயுதங்களின் உருவமைக்கப் பெற்றதோர் அணி; குழந்தைகட்குக் காவலாக ஐந்தாவது திங்களில் இதனைத் தரிப்பது மரபென்பர்; இது தாலி எனவும், ஐம்படைத் தாலி எனவும் வழங்கப் பெறும்; " தாலி களைந்தன்று மிலனே பால்விட்டு அயினியு மின்றயின் றனனே" எனப் புறப்பாட்டிலும், " அமளித் துஞ்சு மைம்படைத் தாலிக் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்" என மணிமேகலையிலும், " தாலி யைம்படை தழுவு மார்பிடை மாலை வாயமு தொழுகு மக்களை" என இராமாயணத்திலுமவருதல் காண்க. மதாணி - ஈண்டுத் தோள் வளை. சுட்டி - உச்சியிலணிந்து முகத்திற்றொங்கும் அணி. அப்பா : மரபு வழுவமைதி; இரக்கத்தில் வந்ததுமாம். (25) அனைவரு மிரங்க வாய்விட் டழுதவ ரிளையா டன்னைத் தனையனைக் கண்ணீர் மாற்றித் தடக்கையான் முதுகு தைவந் தினையன்மி னென்முன் வேறொன் றெண்ணன்மி னெண்ணா வஞ்ச1 வினைஞர்வல் வழக்குச் சோர்ந்து விடுவதுங் காண்மி னென்னா. (இ - ள்.) அவர் - அவ்வணிகேசர், அனைவரும் இரங்க வாய்விட்டு அழுது - கண்டாரெல்லாரும் மனமிரங்கும்படி வாய்விட்டழுது, இளையாள் தன்னைத் தனையனை - தங்கையையும் புதல்வனையும், கண் நீர் மாற்றி - கண்ணீரைத் துடைத்து, தடக்கையால் முதுகு தைவந்து - நீண்ட கையினால் முதுகினைத் தடவி, இனையன் மின் - வருந்தாதீர்கள் என்முன் வேறு ஒன்று எண்ணன்மின் - என் முன்னே வேறொன்றினையும் கருதாதீர்கள்; எண்ணா வஞ்ச வினைஞர் - (நான் வருவேனென்று சிறிதும்) நினையாத வஞ்சத் தொழிலை யுடைய ஞாதிகளின், வல் வழக்குச் சோர்ந்து விடுவது காண்மின் என்னா - கொடு வழக்குத் தோற்றுவிடுவதைக் காணுங்கள் என்றும். எண்ணும்மை விரிக்க. கண்ணீர் மாற்றி, முதுகு தைவந்து என்பன ஒரு சொன்னீரவாய் இரண்டாவதற்கு முடிபாயின. தனையனை நோக்கி என ஒரு சொல் வருவித் துரைத்தலுமாம். தைவரல் - தடவுதல். வேறொன் றெண்ணன்மின் என்பதற்கு இத்துணை நாள் உங்களை விடுத்து மறந்திருந்தேன்என நினையன்மின் என்றேனும், இவ்வழக்குத் தோற்றுவிடுமோ என நினையன்மின் என்றேனும் கருத்துக் கொள்க. எண்ணா - அறத்தினியல்பைச் சிறிதும் நினையாத என்றுமாம். (26) நட்பிடை வஞ்சஞ் செய்து நம்பினார்க் கூன்மா றாட்டத்1 துட்படக் கவர்ந்து மேற்றோர்க் கிம்மியு முதவா ராயும் வட்டியின் மிதப்பக் கூறி வாங்கியுஞ் சிலர்போ லீட்டப் பட்டதோ வறத்தா றீட்டு நம்பொருள் படுமோ வென்னா. (இ - ள்.) நட்பு இடை வஞ்சம் செய்தும் - நண்பர் மாட்டும் வஞ்சனை புரிந்தும், நம்பினார்க்கு ஊன் மாறாட்டத்து உட்படக் கவர்ந்தும் - நம்பிப் பொருளை வைத்தவர்க்கு உயிர் மயங்குமாறு அப்பொருளைக் கவர்ந்தும், ஏற்றோர்க்கு இம்மியும் உதவாராயும் - இரந்தவர்க்கு இம்மியளவுங் கொடாதவராயும், வட்டியில் மிதப்பக் கூறி வாங்கியும் - வட்டியில் வரம்பின்றிச் சொல்லி அங்ஙனமே வாங்கியும், சிலர் போல் ஈட்டப்பட்டதோ - சிலர் தேடுதல் போலத் தேடப்பட்டதோ (அன்று); அறத்து ஆறு ஈட்டும் நம் பொருள் படுமோ என்னா - அற நெறியால் ஈட்டிய நமது பொருள் அழியுமோ என்றும் கூறி (ப் பின்பு). நட்பிடை வஞ்சஞ் செய்தல் - நண்பர் பொருளைக் கவர்ந்து கொள்ளுதல். ஊன், உயிருக்கு ஆகுபெயர். மாறாட்டம் - தடுமாற்றம்; மயக்கம். நம்பி வைத்தார் பொருளைக் கவர்ந்த ஞான்று அவர் தடுமாற்றமடைதல் இயற்கை. ஊண் மாறாட்டத்துட்பட என்னும் பாடத்திற்கு நஞ்சு முதலிய கலந்த உணவால் மயங்கச் செய்து என்பது பொருள். இம்மி - மத்தங்காய்ப் புல்லரிசி; ஒரு சிற்றெண்ணுமாம்; " இம்மியரிசித் துணையானும்" என்பது நாலடி; " இம்மியன நுண்பொருள்க ளீட்டி" என்னும் சிந்தாமணிச் செய்யுளின் உரையும் நோக்குக. தீ நெறியானும் அறமின்றியும் அங்ஙனம் ஈட்டப்பட்டதாயின் அழிதல் கூடும் என்றவாறாயிற்று. (27) மங்கல மாட மோங்கு மதுரைநா யகனை நோக்கிச் செங்கரஞ் சிரமேற் கூப்பி மாணிக்கந் தேற்றி விற்கும் எங்குல வணிக ரேறே யெம்மனோர் வழக்கை யிந்தப் புங்கவ ரிடனாத் தீர்த்துத் தருகெனப் புலம்பி யார்த்தார். (இ - ள்.) மங்கல மாடம் ஓங்கும் மதுரை நாயகனை நோக்கி - மங்கலம் நிறைந்த மாடங்கள் ஓங்கிய மதுரை நாயகனாகிய சோம சுந்தரக் கடவுளை நோக்கி, செங்கரம் சிரம் மேல் கூப்பி - சிவந்த திருக்கரங்களைத் திருமுடிமேற் குவித்து, மாணிக்கம் தேற்றி விற்கும் எம் குல வணிகர் ஏறே - மாணிக்கங்களின் இலக்கணங்களைத் தெளிவித்து விற்றருளிய எமது வணிகர் குலச் சிங்கமே, எம்மனோர் வழக்கை - எங்கள் வழக்கை, இந்தப் புங்கவர் இடனாத் தீர்த்துத் தருக எனப் புலம்பி ஆர்த்தார் - இந்த அற மன்றத்தவர் வாயிலாகத் தீர்த்து எமது பொருளைத் தருக என்று புலம்பி முறையிட்டார். நோக்கி - எழுந்தருளியிருக்கும் திசையை நோக்கி. தேவரீர் எம் வழக்குத் தீர்த்து அருள் புரிதற்கு உரிமையுடையீர் என்பார் 'எங்குல வணிகரேறே' என்றார். புங்கவர் - உயர்ந்தோர். இடனா- வாயிலாக. தருகென : அகரம் தொகுத்தல். 28) ஆவலித் தழுத கள்வர் வஞ்சரை வெகுண்டு நோக்கிக் காவலன் செங்கோ னுண்ணூல் கட்டிய தருமத் தட்டில் நாவெனுந் துலைநா விட்டெம் வழக்கையு நமராய் வந்த மேவலர் வழக்குந் தூக்கித் தெரிகென விதந்து சொன்னார். (இ - ள்.) ஆவலித்து அழுத கள்வர் - இங்ஙனம் அவலங் கொட்டி அழுத பொய் வேடமுடைய இறைவர், வஞ்சரை வெகுண்டு நோக்கி - கொடியராகிய ஞாதிகளைச் சினந்து பார்த்து (ப்பின்), காவலன் செங்கோல் நுண்நூல் கட்டிய தருமத் தட்டில் - புரவலனது செங்கோலாகிய நுண்ணிய நூலினால் யாத்த அறமாகிய தட்டின் கண், நா எனும் துலைநா இட்டு - உங்கள்நாவாகிய துலைநாவை இட்டு, எம் வழக்கையும் - எமது வழக்கையும், நமராய் வந்த மேவலர் வழக்கும் - எமது பங்காளிகளாய் வந்த இப்பகைவர்களின் வழக்கையும், தூக்கித் தெரிக என - தூக்கி அறிவீர் என்று, விதந்து சொன்னார் - (நூலோரை நோக்கித்) தெளிவுபடக் கூறியருளினார். ஆவலித்தல் - வாய் புடைத் தார்த்தல். அரசன் செங்கோலுக்கும் அறத்திற்கும் பழுதுண்டாகாமல் நடுவு நிலையுடன் ஆராய்ந்து கூறுக என்பார், இங்ஙனம் உருவகப்படுத்திக் கூறினார்; " சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி" என்னும் குறள் இங்கே சிந்திக்கற்பாலது. தெரிகென : தொகுத்தல். விதத்தல் - வெளிப்படுத்தல். (29) நரைமுது புலியன் னான்சொற் கேட்டலு நடுங்கிச் சான்றோர் இருவர்சொல் வழக்கு மேற்கொண் டநுவதித் திரண்டு நோக்கித் தெரிவழி யிழுக்கு ஞாதி வழக்கெனச் செப்பக் கேட்டு வெருவினர் தாயத் தார்கள் வலியரின் வேறு சொல்வார். (இ - ள்.) நரைமுதுபுலி அன்னான் சொல் கேட்டலும் - நரைத்த முதிய புலியையொத்த வணிகனது சொல்லைக் கேட்டவளவில், சான்றோர் நடுங்கி - அறத்தவிசில் இருக்கும் பெரியோர் நடுங்கி, இருவர் சொல் வழக்கும் மேற் கொண்டு - இரு திறத்தார் கூறுகின்ற வழக்கினையும் ஏற்றுக் கொண்டு, அநுவதித்து இரண்டும் நேக்கித் தெரிவழி - அநுவாதஞ் செய்து இரண்டு வழக்கினையுஞ் சீர் தூக்கி உண்மை தெரிந்த விடத்து, ஞாதி வழக்கு இழுக்கு எனச் செப்ப - தாயத்தாரின் வழக்கு இழுக்குடைய தெனக்கூற, தாயத்தார்கள் கேட்டு வெருவினர் - ஞாதிகள் அதனைக் கேட்டு அஞ்சி, வலியரின் வேறு சொல்வார்- அஞ்சாத வலியுடையார் போல வேறு சொல்வாராயினர். முதுமையும் ஆண்மையும் உடைமையால் 'நரை முது புலியன்னான்' என்றார். தாம் வழுவின்றியுரைக்க வேண்டுமென்னும் அச்சத்தால் நடுங்கினர் என்க. அநுவதித்தல் - முற்கூறியதனைப் பின்னும் எடுத்துரைத்தல். நோக்கித் தெரிதல் - தடை விடைகளாற் கேட்டவற்றைச் சீர்தூக்கி ஊழான் உள்ளவா றுணர்தல். அகத்தே வெருவினராயும் புறத்தே வெருவிலர் போலச் சொல்வார் என்க. வெருவினர் : முற்றெச்சம. (30) தவலருஞ் சிறப்பி னான்ற தனபதி வணிக ரல்லர் இவரென வவையங் கேட்ப விருகையும் புடைத்து நக்குக் கவளமா னுரித்துப் போர்த்த கண்ணுதல் வணிகர் கோமான் அவரவர் குடிப்பேர் பட்டங் காணிமற் றனைத்துங் கூறும். (இ - ள்.) இவர் தவல் அருஞ்சிறப்பின் ஆன்ற தனபதி வணிகர் அல்லர் என - இவர் கெடுதலில்லாத சிறப்பினால் நிறைந்த தனபதி வணிகர் அல்லரென்று கூற, அவையம் கேட்க - அவையிலுள்ளார் கேட்குமாறு, இருகையும் புடைத்து நக்கு - இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று தாக்கிச் சிரித்து, கவள மான் உரித்துப் போர்த்த கண்ணுதல் வணிகர் கோமான் - கவளமாகிய உணவினையுடைய யானையை உரித்துத் தோலைப் போர்த்த சோம சுந்தரக் கடவுளாகிய வணிகர் தலைவன், அவர் அவர் குடிப்பேர் பட்டம் காணி மற்று அனைத்தும் கூறும் - அவரவரின் குடிப்பெயரும் பட்டமும் காணியும் பிற அனைத்துங் கூறி. இவர் அல்லரென்று ஞாதியர் கூற என்க. அவை : ஆகுபெயர்; அம் : அசை. இவர் இங்ஙனம் முழுப்பொய் கூறியவாறென்னென்று கைகொட்டி நக்கார். அவரவர் - ஞாதியர் எல்லாருடைய. குடிப்பேர் - கோத்திரப் பெயர். பட்டம் - சிறப்புப் பெயர். கூறும் என்பதனை எச்சமாக்குக. (31) தந்தைதாய் மாமன் மாமி தாயத்தா ரவரை1 யீன்றார் மைந்தர்க ளுடன்பி றந்தார் மனைவியர் கிளைஞர் மற்றும் அந்தமில் குணங்கள் செய்கை யாதிய வடையா ளங்கள் முந்தையின் வழுவா வண்ண முறையினான் மொழிந்தான் முன்னோன். (இ - ள்.) தந்தை தாய் மாமன் மாமி - அவரவருடைய தந்தையும் தாயும் மாமனும் மாமியும், தாயத்தார் - ஞாதிகளும், அவரை ஈன்றோர் - அவர்களைப் பெற்றோரும், மைந்தர்கள் உடன் பிறந்தார் மனைவியர் கிளைஞர் - புதல்வர்களும் உடன் பிறந்தாரும் மனைவியரும் சுற்றத்தாருமாகிய இவர்களையும், மற்றும் அந்தம் இல் குணங்கள் செய்கை ஆதிய அடையாளங்கள் - மற்றும் அவர்களின் அளவிறந்த குணங்களும் செய்தொழிலும் முதலிய அடையாளங்களையும், முந்தையின் வழுவாவண்ணம் முறையினால் முன்னோன் மொழிந்தான் - முன்னுள்ள படியே சிறிதுந் தவறாத வண்ணம் முறைப்படி முதல்வனாகிய வணிகன் மொழிந்தனன். தந்தை முதல் கிளைஞர் ஈறாய அனைவரையும், அவர்கள் குணம் செயல் முதலிய அடையாளங்களையும் கூறினன் என்க. (32) அனையது கேட்ட வான்றோ ரனைவரு நோக்கி யந்தத் தனபதி வணிகர் தாமே யிவரெனச் சாற்ற லோடும் மனவலித் தாயத் தார்தம் வழக்கிழுக் கடைந்த தீது நனைவழி வேம்பன் றேரிற் றண்டிக்கு நம்மை யென்னா. (இ - ள்.) அனையது கேட்ட ஆன்றோர் அனைவரும் நோக்கி- அதனைக் கேட்ட பெரியோரனைவரும் (ஞாதிகளைப்) பார்த்து, இவர் அந்தத் தனபதி வணிகரே எனச் சாற்றலோடும் - இவர் அந்தத் தனபதி வணிகரே யாவர் என்று கூறியவளவில், மனவலித் தாயத்தார்தம் வழக்கு இழுக்கு அடைந்தது - மன வன்மையுடைய ஞாதியரின் வழக்குத் தோல்வியுற்றது; ஈது -இதனை, நனைவழி வேம்பன் தேரில் - தேன் வழியும் வேப்பமலர் மாலையையுடைய பாண்டியன் அறிந்தானாயின், நம்மைத் தண்டிக்கும் என்னா - நம்மைத் தண்டிப்பான் என்று கருதி. தாம் : அசை; ஏகாரம் தேற்றம். (33) இல்லினுக் கேகி மீள்வன் யானென்றுங் குளத்திற் கேகி ஒல்லையில் வருவே னென்று மொவ்வொரு வார்த்தை யிட்டு வல்லெழு வனைய தோளா ரனைவரும் வன்கா றள்ளச் செல்லெழு முகில்போற் கூட்டஞ் சிதைந்தன ரொளித்துப் போனார். (இ - ள்.) யான் இல்லினுக்கு ஏகி மீள்வன் என்றும் - யான் வீட்டிற்குச் சென்று வருவேன் என்றும், குளத்திற்கு ஏகி ஒல்லையில் வருவேன் என்றும் - பொய்கைக்குப் போய் விரைவில் வருவேனென்றும், ஒவ்வொரு வார்த்தை இட்டு - ஒவ்வொரு புகலைக் கூறிவிட்டு, வல் எழு அனைய தோளார் அனைவரும் - வலிய தூணையொத்த தோளினையுடைய ஞாதிகளனைவரும், வன்கால் தள்ள - வலிய காற்றுத் தள்ளுதலால், எழு செல் முகில் போல் - எழுந்து சிதறியோடும் முகிலைப் போல, கூட்டம் சிதைந்தனர் ஒளித்துப் போனார் - கூட்டங் கலைந்து ஒளித்துப் போயினர். ஒவ்வொருவரும் தனித்தனி ஒவ்வொரு புகல் கூறிச் சென்றொளித் தன ரென்க. எழு என்னும் முதனிலை எழுந்து என வினையெச்சப் பொருட்டாயது. எழுந்து செல் முகில் என இயைக்க. சிதைந்தனர் : முற்றெச்சம். (34) அனையவர் போக நின்ற வறனவின் மன்றத் துள்ளோர் தனபதி வணிகர் தந்த தனமெலாந் தத்த மைந்தற் கெனமனை யெழுதி வாங்கி யீந்தன ரீந்த வெல்லை மனமொழி கடந்த நாய்கர் மறைந்துதங் கோயில் புக்கார். (இ - ள்.) அனையவர் போக - அங்ஙனம் அந்த ஞாதிகள் மறைந்தொழிய, நின்ற அறன் நவில் மன்றத்து உள்ளோர் - அங்கிருந்த அறங்கூறும் அவையிலுள்ளார், தனபதி வணிகர் தந்த தனம் எலாம் - தனபதி வணிகர் முன் கொடுத்த பொருள் அனைத்தும், தத்த மைந்தற்கு என - தத்துப் புதல்வனுக்கே உரியவென்று, மனை எழுதி வாங்கி ஈந்தனர் - அவராற் சாதனம் எழுதி வாங்கிக் கொடுத்தனர்; ஈந்த எல்லை - அங்ஙனங் கொடுத்தவளவில்; மனம் மொழிகடந்த நாய்கர் மறைந்து - உள்ளத்தையும் உரையையும் கடந்த வணிகர் தமது திருவுருக் கரந்து, தம் கோயில் புக்கார் - தமது திருக்கோயிலுட் புகுந்தருளினர். அறனவில் மன்றம் - அறங்கூறவையம். மனை - சாதனம் என்னும் பொருட்டு. முன் ஞாதியர் கைப்பற்றி யிருந்தமையால் மீட்டு எழுத வேண்டிற்று. (35) இம்மெனப் பலருங் காண மறைந்தவ ரிருந்தண் கூடற் செம்மலென் றறிந்து நாய்கச் சிறுவனுக் குவகை தூங்க விம்மித மடைந்து வேந்தன் வரிசைகள் வெறுப்ப1 நல்கிக் கைம்மறி வணிகர் கோயில் புதுக்கினான் கனகங் கொண்டு. (இ - ள்.) இம்மெனப் பலரும் காண மறைந்தவர் - ஒல்லையில் அனைவருங் காண மறைந்தருளியவர், இருந்தண் கூடல் செம்மல் என்று வேந்தன் அறிந்து - பெரிய தண்ணிய கூடல் நாயகனாகிய சோம சுந்தரக் கடவுள் என்று அரசன் அறிந்து, விம்மிதம் அடைந்து - வியப்புற்று, நாய்கச் சிறுவனுக்கு - வணிக இளைஞனுக்கு, உவகை தூங்க - மகிழ்ச்சி மிக, வரிசைகள் வெறுப்ப நல்கி - வரிசைகளை மிகக் கொடுத்து, கைம்மறி வணிகர் கோயில் - கையில் மானையுடைய வணிகராய் வந்த இறைவன் திருக்கோயிலை, கனகம் கொண்டு புதுக்கினான் - பொன்னினாலே புதுப்பித்தான். இம்மென : விரைவுக்குறிப்பு. அறத்தவிசோராற் கேட்டறிந் தென்க. வெறுத்தல் செறிதலாகலின் வெறுப்ப என்பதற்கு மிக எனப் பொருள் கொள்க. உள் வெறுப்ப என்னும் பாடத்திற்கு மனம் வெறுக்க என்றுரைத்துக் கொள்க. வேந்தன் அறிந்து அடைந்து நல்கிப் புதுக்கினான் என வினை முடிவு செய்க. (36) [கலி நிலைத்துறை] பூத நாயகன் பூரண சுந்தரப் புத்தேள் பாத சேகரன் வரகுண பாண்டியன் புயத்தில் ஓத நீருல கின்பொறை சுமக்கவைத் தும்பர் நாதர் சேவடித் தாமரை நகைநிழ லடைந்தான். (இ - ள்.) பூதநாயகன் - பூதங்களுக்குத் தலைவனும், பூரண சுந்தரப் புத்தேள் - எங்கும் நிறைந்துளோனுமாகிய சோம சுந்தரக் கடவுளுடைய, பாத சேகரன் - திருவடியை முடியிற் கொண்ட சுந்தரேச பாத சேகர பாண்டியன், வரகுணபாண்டியன் புயத்தில் - வரகுணபாண்டியன் தோளின்கண், ஓத நீர் உலகின் பொறை சுமக்க வைத்து - கடல் சூழ்ந்த புவியின் சுமையைத் தாங்க வைத்து, உம்பர் நாதர் சேவடித் தாமரை நகை நிழல் அடைந்தான் - தேவ தேவராகிய சிவபெருமான் திருவடித் தாமரையின் ஒள்ளிய நிழலிற் கலந்தனன். பூதம் - ஆன்மா; ஐம்பூதம் என்றும், சிவகணம் என்றும் கொள்ளலுமாம். புயத்தில் பொறை வைத்து என்க; சுமக்க : இடைப்பிற வரல். (37) ஆகச் செய்யுள் - 1962. நாற்பதாவது வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய படலம் [எழுசீரடி யாசிரிய விருத்தம்] பண்கொண்ட வேதமுத லிடையீறு நாடரிய பரன்மாம னாகி1 யொரு வணிகன் எண்கொண்ட காணிபொருள் கவர்ஞாதி மாதுலரை யெதிரேறி வென்றபடி யிதுவாந் தண்கொண்ட நேமிவர குணதேவ னெய்துபழி தன்னைத் துடைத்தனைய மனவன் கண்கொண்டு காணவுயர் சிவலோக மதுரைதனில் வருவித்த காதையினி மொழிவாம். (இ - ள்.) பண் கொண்ட வேதம் - இசையினைக் கொண்ட மறையினாலும், முதல் இடை ஈறு நாடரிய பரன் - முதலும் நடுவும் ஈறும் நாடுதற்கரிய இறைவன், மாமனாகி - மாமனாக வந்து, ஒரு வணிகன் - ஒரு வணிகச் சிறுவனது, எண் கொண்ட காணி பொருள் கவர் ஞாதி மாதுலரை - மதிப்பினையுடைய விளை நிலங்களையும் பிற பொருளையும் வௌவிய ஞாதிகளாகிய மாமன்மாரை, எதிர் ஏறி வென்றபடி இது ஆம் - எதிர்த்து மன்றில் ஏறி வென்றருளிய திருவிளையாடல் இதுவாகும், தண்கொண்ட நேமி வரகுண தேவன் - தண்ணிய ஆக்கினா சக்கரத்தையுடைய வரகுண தேவன், எய்து பழி தன்னைத் துடைத்து - அடைந்த கொலைப் பாவத்தினைப் போக்கி, அனைய மன்னவன் - அந்த மன்னன், கண் கொண்டு காண - கண்களாற் றரிசிக்க, உயர் சிவலோகம் - உயர்ந்த சிவலோகத்தை, மதுரைதனில் வருவித்த காதை - மதுரையில் வருவித்துக் காட்டிய திருவிளையாடலை, இனி மொழிவாம் - இனிக் கூறுவாம். வேதத்தின் முதல் இடை ஈறுகளால் நாடரிய என்றுரைப் பாருமுளர். தனபதிக்கு ஞாதிகளும், அவன் தங்கை மைந்தனுக்கு மாமன்மாரும் என்பார் 'ஞாதி மாதுலர்' என்றார். தேவர் என்பது சோழ, பாண்டிய வேந்தர்களுக்குச் சிறப்புப் பெயராக வழங்கியுளது. இம் மன்னனைப் 'பெரிய அன்பின் வரகுண தேவர்' என்பர் பட்டினத் தடிகளும். மன்னவன் என்பதில் னகரம் தொக்கு நின்றது. கண் கொண்டு என விதந்தோதினார், காண்டலருமை நோக்கி. (1) இயமான னிந்திரவி யெரிவா னிலஞ்சலில மெறிகா லெனும்பகுதி யிருநான் மயமான சுந்தரனை மனம்வாய்மெய் யன்பினிறை வழிபா டடைந்தவர குணனாய்ச் சயவேளை வென்றவடி வினனீரில் வென்றிபெறு சதவேள்வி யிந்திரனை நிகர்வோன் இயன்மேனி கொண்டவொளி யினிலேழ் பசும்புரவி யினன்றேசு1 வென்றவர குணனே. (இ - ள்.) இயமானன் இந்து இரவி - ஆன்மாவும் திங்களும் ஞாயிறும், எரிவான் நிலம் சலிலம் எறி கால் எனும் - நெருப்பும் வானும் நிலமும் நீரும் வீசுகின்ற காற்றுமாகிய, இரு நால் பகுதி மயமான சுந்தரனை - எண் பகுதியின் மயமாகிய சோமசுந்தரக் கடவுளை, மனம் வாய் மெய் அன்பில் நிறை வழிபாடு அடைந்த வரகுணனாய் - மனம் மொழி மெய்யென்னும் மூன்று கரணங் களினாலும் மெய்யன்பு நிறைந்த வழிபாட்டினைப் பொருந்திய சிறந்த குணத்தையுடையவனாய், இயல் மேனி கொண்ட ஒளியினில்- இலக்கணமமைந்த வடிவத்திலுள்ள ஒளியினால், ஏழ் பசும் புரவி இனன் தேசு வென்ற வரகுணன் - ஏழு பச்சைக் குதிரைகளை யுடைய சூரியன் ஒளியையும் வென்ற வரகுண பாண்டியன் என்பான், சயவேளை வென்ற வடிவினன் - (அழகினால்) வெற்றியையுடைய மதவேளையும் வென்ற வடிவத்தையுடையவன்; ஈறு இல் வென்றி பெறு சதவேள்வி இந்திரனை நிகர்வோன் - (வேள்வி யியற்றுதலால்) அழிவில்லாத வெற்றி பொருந்திய நூறு வேள்வியினையுடைய இந்திரனையொப்போன். இயமானன் - எஜமானன் என்பதன் றிரிபு. எஜமானன் - வேள்வியியற்றிய ஆன்மா. இருநாற் பகுதி மயமான என மாறுக. அட்ட மூர்த்தத்தை, " இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாயெறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாயட்ட மூர்த்தி யாகி" என்று தாண்டக வேந்தர் அருளிச் செய்தலுங் காண்க. வரகுணன்- மேலாகிய குணமுடையவன். வழிபாடடைந்த வரகுணனாய் என்றமையால் அவன் பெயர் அக்காரணத்தாலெய்தியதென்பது குறிப்பித்தவாறாயிற்று. வேள்வியால் இந்திரனை நிகர்வோன் என ஏது வருவிக்க. இனன் - சூரியன். (2) மறையாதி கலைபலவு மகமாதி பலவினையும் வழுவாது நிறுவுதலின் மலர்மேல் இறையாகி மலர்வனிதை பிரிவான1திருமகளி ரிகபோகம் விளையமுறை செயலாற் கறையாழி வளைகளணி கரனாகி யிகல்செய்பொறி கரணாதி பகைகளையு நெறியால் அறைவாய்மை யுரையின்முழு துணர்வாலெவ் வுயிருநிறை யரனாகி யுலகுமுறை செயுநாள். (இ - ள்.) மறை ஆதிகலை பலவும் - வேத முதலிய பல நூல் களையும், மகம் ஆதி பலவினையும் - வேள்வி முதலிய பல கருமங்களையும், வழுவாது நிறுவுதலின் - தவறாது நிலைபெறச் செய்தலால், மலர்மேல் இறை ஆகி - தாமரை மலரில் இருக்கும் பிரமனாகியும், மலர்வனிதை பிரிவான திருமகளிர் - பூமகளின் கூறாகிய அட்டலக்குமிகளால், இகபோகம் விளைய - இம்மையின்பம் விளைய, முறை செயலால் - செங்கோலோச்சுவதால், கறை ஆழிவளைகள் அணிகரன் ஆகி - குருதிக்கறை தோய்ந்த திகிரிப் படையையும் சங்கினையும் ஏந்திய கரத்தை யுடையவனாகிய திருமாலாகியும், இகல் செய் பொறிகரண ஆதி பகைகளையும் நெறியால் - மாறுபாட்டினைச் செய்யும் ஐம்பொறியும் அந்தக் கரணமு முதலிய பகையினைக் களையும் ஒழுக்கத்தாலும், அறைவாய்மை உரையின் - கூறுகின்ற மெய்யுரையாலும், முழுது உணர்வால் - முற்று முணர்தலினாலும், எவ்வுயிரும் நிறை அரன் ஆகி - எல்லாவுயிர்களிலும் நிறைந்த சிவபெருமானாகியும், உலகுமுறை செயும் நாள் - உலகினை ஓம்பிவரு நாளில். வழுவாது பயின்றும் செய்தும் நிறுவுதலின் என்க. இலக்குமி வேறு வேறு உருவெடுத்து வந்தாலொத்த மகளிர் பலரால் இன்பம் விளைய என்றுமாம். வாய்மையுரை - அரசற்கு மெய்ம்மை கூறுதலும் அரனுக்கு வேத சிவாகமங்களை அருளிச் செய்தலும் ஆம். முழுதுணர்வு - அரசற்கு எல்லாக் கலைகளையும் உணர்தலும் அரனுக்கு இயல் பாகவே முழுதுமுணர்தலும் எனக் கொள்க. வேத முதலிய நூல்கள் கூறும் பொருளால் முற்று முணரு முணர்ச்சியாலும் என ஒன்றாக்கியுரைப்பாரு முளர். இறைவன் பொறிகரணாதி பகை களைதலை, "பொறிவாயி லைந்தவித்தான்" என்பதனாலுணர்க. இஃது ஏது உருவகவணி. (3) வேட்டஞ்செய் காதலொரு நாட்டங்க வேகிவன மேட்டெங்கு மாதடவி யெரியா நாட்டஞ்செய் காயுழுவை நீட்டுங்கை யானைமுக நாட்டும்ப லேனமிவை முதலா ஓட்டஞ்செய் தேரிரவி கோட்டின்க ணேறியிரு ளூட்டந்தி மாலைவரு மளவாக் கோட்டஞ்செய் வார்சிலையின் மாட்டம்பி னூறியுயிர் கூட்டுண்டு மாநகரில் வருவான். (இ - ள்.) வேட்டம் செய்காதல் ஒரு நாள் தங்க - வேட்டையாடும் விருப்பம் ஒரு நாள் உள்ளத்தில் வந்து பொருந்த, ஏகி - சென்று, வனம் மேட்டு எங்கும் - காடு மலையுமாகிய எவ்விடத்தும், மாதடவி - விலங்குகளைத் துருவி, எரி ஆம் நாட்டம் செய் காய் உழுவை - நெருப்புப் பரக்கும் கண்களையுடைய சினத்தையுடைய புலிகளும், கை நீட்டும் யானை - துதிக்கையை நீட்டும் யானைகளும், முகம் நாட்டும் பல் ஏனம் இவை முதலா- முகத்தை நிலத்தில் நாட்டி உழுகின்ற பற்களையுடைய பன்றிகளுமாகிய இவை முதலாகப் பல விலங்குகளை, ஓட்டம் செய் தேர் இரவி - விரைந்து செல்லுந் தேரினையுடைய சூரியன், கோட்டின் கண் ஏறி - அத்தகிரியின் மீது ஏறுதலால், இருள் ஊட்டும் அந்தி மாலை வரும் அளவா - இருளைப் புகுவிக்கும் அந்திப் போது வருங்காறும், கோட்டம் செய் வார்சிலையின் மாட்டு அம்பின் நூறி - வளைந்த நீண்ட வில்லிற் பூட்டிய கணைகளாற் கொன்று, உயிர் கூட்டுண்டு மாநகரில் வருவான் - அவற்றின் உயிர்களைக் கொள்ளை கொண்டு பெரிய நகரை நோக்கி வருவானாயினன். மேடெங்கும் என்பது சந்தம் நோக்கி விரிந்து நின்றது. முகத்தில் நாட்டப்பட்ட பல்லையுடைய ஏனம் என்றுமாம். உம்பல் ஏனம் எனப் பிரித்து ஆண் பன்றி என்றுரைப்பாருமுளர். கோடு - மலை. (4) காலிற் கடும்புரவி மேலிற் கடிந்துவரு காலக் கடந்தனிலொர் மறையோன் மாலுற் றயர்ந்துமுகம் வேர்வைக் குறுந்தி வலை வாரக் கிடந்துவிழி துயில்வோன் மேலக் கடும்புரவி கால்வைப்ப வந்தணனும் வீவுற் றவிந்தனன தறியான் கோலிற் செலும்பரியின் மீனத்த னுந்தனது கோயிற் புகுந்தனன வளவே. (இ - ள்.) காலில் கடும்புரவி மேலில் கடிந்து வருகால் - காற்றைப் போலும் கடிய செலவினையுடைய குதிரையின் மேல் விரைந்து வரும் பொழுது, அக்கடம்தனில் - அக்காட்டின்கண், மால் உற்று அயர்ந்து - துயில் மயக்கங்கொண்டு சோர்வெய்தி, வேர்வைக் குறுந் திவலை முகம் வாரக் கிடந்து துயில்வோன் - வேர்வையாகிய குறுந்துளி முகத்தினின்றும் ஒழுகக் கிடந்து உறங்குவோனாகிய, ஒரு மறையோன் மேல் - ஓர் அந்தணன் மேல், அக்கடும்புரவி கால் வைப்ப - அந்தக் கடுமையையுடைய குதிரை காலை வைக்க, அந்தணனும் வீவுற்று அவிந்தனன் - அம்மறையோனும் இறந்தொழிந்தான்; அது அறியான் - அதனை அறியாமல், கோலில் செலும் பரியின் - அம்பு போலச் செல்லும் குதிரையோடு, மீனத்தனும் தனது கோயில் புகுந்தனன் - மீனக் கொடியையுடைய பாண்டியனும் தன் அரண்மனையை யடைந்தான்; அவ்வளவே - அப்பொழுதே. காலின், கோலின் என்பவற்றின் இன்னுருபு ஒப்புப் பொருட்டு. துயில்வோனாகிய மறையோன் என்க. வீவுற்று அவிந்தனன் : ஒரு பொருளிருசொல், அதறியான், அவளவே என்பன விகாரம். (5) [மேற்படி வேறு] கனவட்டத் தடியிடறப் பொறிவிட்டுப் புலனவியக் கரணத்துட் பொதியுயிர்விட் டவனாகந் தனையொக்கற் பனவரெடுத் தனர்கிட்டிக் குரிசில்கடைத் தலையிட்டத் திறமொழியத் தமிழ்மாறன் இனைவுற்றுப் பனவர்கையிற் கனகக்குப் பைகணிறைவித் தெமதிக்குற் றவனையெடுத் தெரிமாலை புனைவித்தக் கடன்முடிவித் தனன்மற்றப் பழிபடரிற் புதையப்பற் றியதிடைவிட் டகலாதே. (இ - ள்.) கனவட்டத்து அடி இடற - கனவட்டம் என்னுங் குதிரையின் காலிடறுதலால், பொறி விட்டுப் புலன் அவிய - பொறிகளை விடுத்துப் புலன்கள் ஒழிய, கரணத்துள் பொதி உயிர் விட்டவன் ஆகம் தனை - கரணங்களுட் பொதிந்த உயிரை விட்டவனது உடலை, ஒக்கல் பனவர் எடுத்தனர் கிட்டி - கிளைஞராகிய அந்தணர்கள் எடுத்துச் சென்று, குரிசில் கடைத் தலையில் இட்டு அத்திறம் மொழிய - பாண்டியனது கடைவாயிலிற் போட்டு அச்செய்தியைக் கூற, தமிழ் மாறன் - தமிழை வளர்க்கும் பாண்டியனாகிய அவ்வரகுணன், இனைவுற்று - வருந்தி, பனவர் கையில் கனகக் குப்பைகள் நிறைவித்து - அவ்வேதியர் கையில் பொற்குவைகளை நிரப்பி, எமதிக்கு உற்றவனை எடுத்து எரிமாலை புனைவித்து - எமபுரஞ் சென்றவன் உடலை எடுத்துத் தகனஞ்செய்வித்து, அக்கடன் முடிவித்தனன் - அந்த ஈமக்கடன்களை முற்றுவித்தான்; அப்பழி . அக்கொலைப் பாவமானது, படரில் புதைய - அவன் துன்பத்தில் அழுந்துமாறு, இடைவிட்டு அகலாது பற்றியது - சிறிதும் நீங்காது தொடர்ந்தது. கனவட்டம் - பாண்டியன் குதிரையின் பெயர், புலன் - பொறியுணர்வு. பொறிவிட்டு என்பதற்குப் பொறிகள் நிலை கெட்டு என்றுரைத்தலுமாம். அரசன் அமைச்சர் வாயிலாகத் தொழில் நடாத்துதல் போல ஆன்மாவானது கரணங்களினுள்ளே பொருந்தி அவற்றின் வாயிலாகத் தனது தொழிலை நடாத்துதலின் 'கரணத்துட் பொதியுயிர்' என்றார். எடுத்தனர் : முற்றெச்சம். எரிமாலை புனைவித்து - அக்கினிச் சுவாலையாகிய மாலை புனைவித்து; தீச்சுடர் மெய்ம் முழுதும் போர்க்கும்படி தகனஞ் செய்வித்து என்றவாறு. மாலை என்பதற்கு முறைப்படி என்றுரைப்பாருமுளர்: மற்று, அசை. (6) [அறுசீரடி யாசிரிய விருத்தம்] பற்றிய பழிக்குத் தீர்வு பழமறைக் கிழவர் சொன்ன பெற்றியி னைவே றுண்டி நதிக்கரைப் பெருநூற் கேள்வி முற்றிய மறையோர்க் கீந்து மூவராந் தாரு வேந்தைச் சுற்றியுற் தூர்வை கொய்து சுரபிகள் சுவைக்க வீந்தும். (இ - ள்.) பற்றிய பழிக்குத் தீர்வு - அங்ஙனந் தொடர்ந்த கொலைப் பாவத்திற்குக் கழுவாயாக, பழமறைக் கிழவர் சொன்ன பெற்றியின் - தொன்று தொட்டுள்ள வேதத்திற்குரிய அந்தணர் கூறிய வண்ணமே, ஐவேறு உண்டி - ஐவகைப்பட்ட உணவினை, நதிக்கரை - ஆற்றங் கரையின் கண், பெரு நூல் கேள்வி முற்றிய மறையோர்க்கு ஈந்தும் - வேத நூற் கேள்வி மிக்க அந்தணர்க்கு அளித்தும், மூவர் ஆம் தாரு வேந்தைச் சுற்றியும் - மும் மூர்த்திகளின் வடிவமாகிய அரச மரத்தை வலம் வந்தும், தூர்வை கொய்து- அறுகம் புல்லைக் கொய்து, சுரபிகள் சுவைக்க ஈந்தும் - பசுக்கள் உண்ணக் கொடுத்தும். தீர்வு - கழுவாய்; பிராயச்சித்தம். ஐவேறுண்டி - கறிப்பன, நக்குவன, பருகுவன, விழுங்குவன, மெல்லுவன, தாருவேந்து - அரசமரம். அரச மரத்தின் அடிப்பகுதி பிரமன் வடிவும், நடுப்பகுதி திருமால் வடிவும், இறுதிப் பகுதி உருதிரன் வடிவும் உடையன என்பர். தூர்வை - அறுகு. பசுவுக்கு உணவளித்தல் சிறந்த அறமாதலை, "யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை" என்னும் திருமந்திரத்தாலறிக. (7) அகமரு டணத்தா லோம மாற்றியு மானைந் தாவின் நகைமணிக் கோடு தோய்ந்த 1 நளிர்புனல் குடித்துந் தான வகைபல கொடுத்து நீங்கா வலியதா யிழுது பெய்த புகையழ லெனமே லிட்டுப் புலப்பட வளைந்த தன்றே. (இ - ள்.) அகமருடணத்தால் ஓமம் ஆற்றியும் - அகமருடண மந்திரத்தால் ஓமஞ் செய்தும், ஆன் ஐந்து - பஞ்சகவ்வியத்தையும், ஆவின் நகை மணிக்கோடு தோய்ந்த நளிர் புனல் குடித்தும் - பசுவின் விளக்கமாகிய அழகிய கொம்பிற்றோய்ந்த குளிர்ந்த நீரினைப் பருகியும், தானவகை பல கொடுத்தும் - பல வகையான தானங்களைச் செய்தும், நீங்கா வலியதாய் - (அப்பழி) நீங்காத வலியினையுடையதாய், இழுது பெய்த புகை அழல் என்ன மேலிட்டு - நெய் சொரிந்த புகையினையுடைய நெருப்பைப் போல மேலோங்கி, புலப்பட வளைந்தது - கண்ணுக்குப் புலனாம்படி சூழ்ந்தது. அகமருடணம் - பாவத்தைப் போக்கும் ஒரு வேத மந்திரம். பசுவின் பெருமையை, " தங்கு மகில யோனிகட்கு மேலாம் பெருமைத் தகைமையன பொங்கு புனித தீர்த்தங்க ளெல்லா, மென்றும் பொருந்துவன துங்க வமரர் திருமுனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத அங்க மனைத்துந் தாமுடைய வல்ல வோநல் லானினங்கள்" என்பது முதலிய திருத்தொண்டர் புராணச் செய்யுட்களாலும், சிவ தருமோத்தரத்தாலும் உணர்க. ஆனின் கோட்டில் புண்ணிய தீர்த்தங்களெல்லாம் இருப்பனவாக நூற்கள் கூறுதலின் கோடு தோய்ந்த புனல் குடித்தனன் என்க. அன்று, ஏ : அசை. (8) [கலி நிலைத்துறை] ஏங்கும் பெருமூச் செறியுங்கை யெறியுங் குன்றின் ஓங்குஞ் சிறுகு முடன்றார்த்திடு முன்னும் பின்னும் பாங்குந் தொடருஞ் சிரிக்கும்பகு வாயை மெல்லும் நீங்குங் குறுகும் பழிதாவென நேர்ந்து பற்றும். (இ - ள்.) ஏங்கும் - இரங்கும்; பெருமூச்சு எறியும் - பெருமூச்சு விடும்;கை எறியும் - கையோடு கைதாக்கும்; குன்றின் ஓங்கும் - மலை போல வளரும்; சிறுகும் - (அணுவாகத்) தேயும்; உடன்று ஆர்த்திடும் - வெகுண்டு ஆரவாரிக்கும்; முன்னும் பின்னும் பாங்கும் தொடரும் - முன்னிலும் பின்னிலும் இரு பக்கங்களிலும் தொடரும்; சிரிக்கும் - நகைக்கும்; பகுவாயை மெல்லும் - பிளந்த வாயை மெல்லும்; நீங்கும் - (சிறிது) விலகும்; குறுகும் - (பின்) நெருங்கும்; பழிதா என நேர்ந்து பற்றும் - பழிதா என்று கூறி எதிர்ந்து பிடிக்கும். அப்பழி உருக்கொண்டு வந்து இங்ஙனமெல்லாம் செய்யா நின்றன. பழிக்குப் பழி கொடு என்னும் பொருள்படப் 'பழிதா' என்று கூறுமென்க. (9) மாசுண்ட தெய்வ மணிபோற்பணி வாயிற் பட்ட தேசுண்ட தீந்தண் மதிபோலொளி தேம்பி வண்டு மூசுண்ட தான முகமாவுண்ட வெள்ளில் போலக் காசுண்ட பூணா னறைபோய கருத்த னானான். (இ - ள்.) மாசு உண்ட தெய்வ மணி போல் - மாசு படிந்து (கழுவப்படாத) தெய்வத் தன்மையுடைய மாணிக்கம் போலவும், பணி வாயில் பட்ட - இராகுவென்னும் பாம்பின் வாய்ப்பட்ட, தேசுஉண்ட தீந்தண் மதி போல் - ஒளியிழந்த இனிய தண்ணிய சந்திரன் போலவும், ஒளி தேம்பி - பொலிவு குன்றி, வண்டு மூசு உண்ட தானம் முகம்மா உண்ட - வண்டுகள் மொய்க்கும் மதநீர் ஒழுகும் முகத்தினையுடைய வேழத்தால் உண்ணப்பட்ட, வெள்ளில் போல - விளங்கனிபோல, காசு உண்ட பூணான் - மணிகள் இழைத்த அணிகளையுடைய வரகுண பாண்டியன், அறை போய கருத்தன் ஆனான் - உள்ளீடில்லாத மனமுடையவனானான். தேசுண்ட என்பதற்கு ஒளி பொருந்திய என்றுரைத்து மதிக்கு இயற்கையடை ஆக்கலுமாம். விளவிற்கு வருவதோர் நோய் யானை என்னும்பெயருடையது; அப்பெயருக் கேற்பவே 'வண்டு மூசுண்ட தான முகம்' என அடை கொடுக்கப்பட்டது; இந்நூலின், மாபாதகந் தீர்த்த படலத்தில், "வெருவரு வேழமுண்ட வெள்ளில் போல் வறியனாகி" என்பதன் உரையை நோக்குக. அறை போதல்- அறிவின்றிட்பமாகிய உள்ளீடொழிதல். (10) மறையோர்கள் பின்னும் பழிமேலிடு வண்ண நோக்கி இறையோ யிதுநான் முகன்சென்னி யிறுத்த கூடல் அறவேதியனைத் தினமாயிரத் தெண்காற் சூழல் உறவே யொழிக்கப் படு1 மின்ன முரைப்பக் கேட்டி. (இ - ள்.) பின்னும் பழி மேலிடும் வண்ணம் - மீண்டும் கொலைப் பாவம் ஓங்கி வளருந் தன்மையை, மறையோர்கள் நோக்கி - அந்தணர்கள் கண்டு, இறையோய் - மன்னனே, இது - இந்தக் கொலைப்பாவம், நான் முகன் சென்னி இறுத்த - பிரமன் தலையைக் கிள்ளிய, கூடல் அறவேதியனை - மதுரையில் வீற்றிருக்கும் அறிவுருவினனாகிய சோம சுந்தரக் கடவுளை, தினம் ஆயிரத்து எண்கால் சூழ உற ஒழிக்கப்படும் - நாள்தோறும் ஆயிரத்தெட்டு முறை வலம் வருதலால் ஒழிக்கப்படும்; இன்னம் உரைப்பக் கேட்டி - இன்னுஞ் சொல்லக் கேட்பாயாக. பிரமச்சாயை ஒழிதற்குப் பிரமன் சென்னியைக் கிள்ளிய பெருமானை வணங்குதலே ஏற்புடைத்தென்றார் என்க. (11) ஆனா விரத நெறியாலிரண் டைந்து வைகல் வானா டனையம் முறையால் வலஞ் செய்து வந்தாய் ஆனா லதற்கு வழிகாட்டுமென் றையர் கூறப் போனா னரசன் புனிதன்றிருக் கோயில் புக்கான். (இ - ள்.) ஆனா விரத நெறியால் - நீங்காத நோன்பின் வழி நின்று, இரண்டு ஐந்து வைகல் - பத்து நாட்கள், வான் நாடனை - சிவலோக நாயகனாகிய சோம சுந்தரக் கடவுளை, அம்முறையால் வலம் செய்து வந்தாய் ஆனால் - மேற்கூறிய எண்ணின்படி வலம் வருவாயாயின், அதற்கு வழி காட்டும் என்று - அவன் அக்கொலைப் பாவம் நீங்கும் நெறியைக் காட்டியருளுமென்று, ஐயர்கூற - அவ்வந்தணர்கள் சொல்ல, அரசன் போனான்- வரகுண மன்னன் சென்று, புனிதன் திருக்கோயில் புக்கான் - இறைவனது திருக்கோயிலையடைந்தான். போனான் : முற்றெச்சம். (12) விழியா யிரத்தோன் பழிதீர்த்தனை வேதி யன்றன் கழியாத மாபா தகந்தீர்த்தனை கௌவைக் கங்கைச் சுழியா றலைக்குஞ் சடையாயெனைத் தொட்ட லைக்கும் பழியா னதுந்தீர்த் தருளென்று பணிந்து வீழ்ந்தான். (இ - ள்.) கௌவைக் கங்கைச் சுழி ஆறு அலைக்கும் சடையாய்- ஒலியினையுடைய கங்கையாகிய சுழித்தல் பொருந்திய ஆறு அலைக்கின்ற சடையையுடையவனே, விழி ஆயிரத்தோன்பழி தீர்த்தனை - ஆயிரங் கண்களையுடைய இந்திரன் பழியை நீக்கியருளினை; வேதியன் தன் கழியாத மாபாதகம் தீர்த்தனை- ஓர் மறையோனுடைய (எவ்வாற்றானும்) நீங்காத மாபாதகத்தையும் நீக்கியருளினை; எனைத் தொட்டு அலைக்கும் பழியானதும் தீர்த்தருள் என்று - (அதுபோல) என்னைப் பற்றி வருத்தும் பழியினையுந் தீர்த்தருளுவாயென்று கூறி, பணிந்து வீழ்ந்தான்- வீழ்ந்து வணங்கினான். இந்திரனும் ஒரு வேதியனும் அறிந்து செய்த கொலையாலாய பழியைப் போக்கிய பேரருளாளனாகிய நினக்கு அடியேன் அறியாமல் நேர்ந்த கொலையானாய பழியைப் போக்குதல் முறைமையே என்பான் அவற்றையெடுத்துரைத்தனன் என்க. கங்கைச் சடையனென்றதும் பாவத்தைக் கழுவும் இயல்புடையனென்பது குறிப்பிட்டபடி.. பணிந்து வீழ்ந்தான் என்பதற்குக் கும்பிட்டு வீழ்ந்தான் எனலுமாம். (13) எண்ணும் படியம் முறையால்வளைந் தேத்த வையன் விண்ணின் றியம்பு மரசேபரி மேத வேள்வி நண்ணும் பயனோ ரடிவைப்பினி னண்ண வெம்மைப் பண்ணும் வலத்தான் மகிழ்ந்தேம்பழி யஞ்சன் மன்னோ. (இ - ள்.) எண்ணும்படி - ஆயிரத்தெட்டு என்று எண்ணுமாறு, அம்முறையால் வளைந்து ஏத்த - அந்நெறியால் வலம் வந்து துதிக்க, ஐயன் - இறைவன், விண் நின்று இயம்பும் - வானின் கண் நின்று (அசரீரியாகக்) கூறியருளுவன்; அரசே - வேந்தனே, பரிமேத வேள்வி நண்ணும் பயன் - துரங்க வேள்வியினால் வரும் பயன், ஓர் அடிவைப்பினில் நண்ண - ஓர் அடி பெயர்த்து வைத்தலாலே பொருந்துபடி, எம்மைப் பண்ணும் வலத்தால் மகிழ்ந்தேம் - எம்மை வலஞ் செய்தலாற் களிப்புற்றேம்; பழி அஞ்சல் - (இனிப்) பழிக்கு அஞ்சுதலொழிக. வலஞ்செய்தற்கு ஓர் அடியெடுத்து வைத்தல் ஓர் அசுவமேதப் பயனை அளிக்கும் என அதன் மேன்மை கூறினார். மன்னும் ஓவும் அசை நிலை. (14) பொன்னோடு முத்தங் கொழிக்குந்துறைப் பொன்னி நாடன் நின்னோ டமராற்ற நினைந்தெழு நீயு நேர்வாய் அன்னோ னுனக்குப் புறகிட்டகன் றோடு நீயும் பின்னோடி யெட்டிப் பிடிப்பாரிற் றுரத்து மெல்லை. (இ - ள்.) பொன்னோடு முத்தம் கொழிக்கும் துறை - பொன்னையும் முத்தையும் (அலைகள்) ஒதுக்கும் நீர்த் துறைகளையுடைய, பொன்னி நாடன் - காவிரி நாடனாகிய சோழன், நின்னோடு அமர் ஆற்ற நினைந்து எழும் - நின்னுடன் போர் புரியக் கருதி வருவான்; நீயும் நேர்வாய் - நீயும் எதிர்ப்பாய்; அன்னோன் உனக்குப் புறகிட்டு அகன்று ஓடும் - அச்சோழன் - உனக்குப் புறங்காட்டிப் (போர்க்களத்தினின்றும்) நீங்கி ஓடுவன்; நீயும் பின் ஓடி - நீயும் அவன் பின்னேயே ஓடி, எட்டிப் பிடிப்பாரின் துரத்தும் எல்லை - எட்டிப் பிடிப்பவரைப் போல அவனைத் துரத்தும்பொழுது. புறகிட்டு - முதுகாட்டி; தோற்று. அணிமையிற் சென்று துரத்துதலை 'எட்டிப்பிடிப்பாரின் துரத்து மெல்லை' என்றார். (15) எமையா மருச்சித் திருக்குந்தல மெய்து வாயால் அமையா தவன்கட் பழியாற்றுது 1 மென்னச் சேற்கண் உமையாண் மணாள னருள்வாழ்த்தி யுரக னுச்சிச் சுமையாறு தோளான் றொழுதான்ற னிருக்கை புக்கான். (இ - ள்.) எமையாம் அருச்சித்து இருக்கும் தலத்து எய்துவாய்- எம்மை யாமே அருச்சித்து வழிபட்டிருக்குந் தலமாகிய திருவிடை மருதூரை அடைவாய், அமையாதவன்கண் பழி ஆற்றுதும் என்ன- (அங்கு உனது) தணியாத கொடிய பழியைத் தணிவிப்போ மென்று கூறியருள, உரகன் உச்சிச் சுமை ஆறு தோளான் - அனந்தன் முடிப்பொறை ஆறுதற்கேதுவாகிய தோளையுடைய வரகுண வேந்தன், சேல்கண் உமையாள் மணாளன் அருள் வாழ்த்தி - அங்கயற் கண்ணம்மையின் மணாளனாகிய சோம சுந்தரக் கடவுளின் திருவருளை வாழ்த்தி, தொழுதான் - தொழுது, தன் இருக்கை புக்கான் - தனது இருப்பிடஞ் சென்றனன். சிவபெருமான் எல்லா ஆன்மாக்களும் தம்மை வழிபட்டுய்யுமாறு மறையாதி நூல்களால் அருளிச் செய்தமையன்றித் தாமே அருச்சித்தும் காட்டுவாராயினர். 'எமையாம் அருச்சித்திருக்கும்' என்பதனால் அவ்விறைவனால் அருச்சிக்கத்தக்க வேறு தெய்வமின் றென்பது பெற்றாம். இறைவன் திருவிடைமருதூரில் தம்மைத் தாம் பூசித்த வரலாற்றை அத்தல புராணம் நோக்கியுணர்க. சுமையானாய வருத்தம் ஆறுதற்குக் காரணமாகிய தோள் என்க. அவன் தலையாற் பொறுக்கும் புவிப்பொறை முழுதையும் இவன் தோளாற் பொறுக் கின்றனன் என்றபடி. தொழுதான், முற்றெச்சம் :ஆல் : அசை. (16) ஆர்த்தார் முடியோன் சிலநாள்கழித் தாற்ற லேற்ற போர்த்தாவு வேங்கைக் கொடித்தானை புடவி போர்ப்பப் பேர்த்தார் கலிவந் தெனப்பேரிய மார்ப்பக் கன்னிப் பார்த்தாம வேன்மீ னவனாட்டிற் படர்ந்த வெல்லை. (இ - ள்.) சில நாள் கழித்து - சில நாள் சென்ற பின், ஆர்த்தார் முடியோன் - ஆத்திமாலையணிந்த முடியையுடைய சோழன், ஆற்றல் ஏற்ற - வலிமை மிக்க, போர்த் தாவு வேங்கைக் கொடித்தானை- போரின்கண் தாவுகின்ற புலிக் கொடியை உயர்த்திய தனது சேனை யானது, புடவி போர்ப்ப - புவியை மறைக்கும்படி, ஆர்கலி பேர்த்து வந்தென - கடல் நிலை பெயர்ந்து வந்தாற்போல, பேர் இயம் ஆர்ப்ப - பெரிய முரசங்கள் ஒலிப்ப, கன்னிப்பார் - கன்னி நாட்டினையுடைய, தாமவேல் மீனவன் நாட்டில் - மாலையணிந்த வேற்படையேந்திய பாண்டியனது நாட்டின்கண், படர்ந்த எல்லை - சென்ற பொழுது. சேனையின் பரப்பாலும் முழக்கத்தாலும் எழுச்சியாலும் கடல்புடை பெயர்ந்து வந்தாற்போல என்க. முடியோன் தானை போர்ப்ப அதனுடன் பேரியம் ஆர்ப்ப ஆர்கலிவந்தெனப் படர்ந்த வெல்லை என வினை முடிக்க. தாமம் - ஒளியுமாம். (17) மிடைந்தேறு நேரிப் பொருப்பன்படை வேலை மேற்சென் றடைந்தேறி மீனக் கொடியானம ராட வாழி கடைந்தேறு வெற்பிற் கலங்கிற்றெனக் கிள்ளி சேனை உடைந்தேக வெந்நிட் டுடைந்தோடின னுள்ளம் வெள்கா. (இ - ள்.) மிடைந்து ஏறும் நேரிப்பொருப்பன்படை வேலை மேல் - நெருங்கி முன்னேறிய நேரி மலையையுடைய சோழனது சேனைக் கடலின் மேல், ஏறிச் சென்று அடைந்து - எதிர்த்துச் சென்று பொருந்தி, மீனக்கொடியான் அமர் ஆட - மீனக்கொடியு யர்த்திய பாண்டியன் போர் செய்ய, ஆழி - கடலானது, கடைந்து ஏறு வெற்பின் - கடைந்து எழுந்த மந்தர மலையினால், கலங்கிற்று என - கலங்கினாற்போல, கிள்ளி சேனை உடைந்து ஏக - சோழன் படை தோற்று ஓட, உடைந்து வெந்இட்டு உள்ளம் வெள்கா ஓடினன் - (சோழனும்) தோற்றுப் புறங்காட்டி மனம்வெள்கி ஓடினான். பாற்கடலை மந்தர வெற்புக் கலக்கினாற் போலச் சோழனது சேனையைப் பாண்டியன் கலக்கினான் என்க. (18) சுறவக் கொடியண்ண றுரந்துபின் பற்றிச் செல்வோன் புறவக் கடிமுல் லையுந்தாமரைப் போது மேந்தி நறவக் கழிநெய்தலங் கானலின் ஞாங்கர் மொய்த்த இறவப் புலவு கழுவீர்ந்துறைப் பொன்னி சேர்ந்தான். (இ - ள்.) பின்பற்றி துரந்து செல்வோன் - (அங்ஙனம் ஓடிய சோழனைப்) பின் பற்றித் துரந்து செல்வோனாகிய, சுறவக்கொடி அண்ணல் - மீனக் கொடியுயர்த்திய வரகுண பாண்டியன், புறவக்கடி முல்லையும் - முல்லை நிலத்து மணமிக்க முல்லை மலரையும், தாமரைப் போதும் ஏந்தி - தாமரை மலரையும் ஏந்தி, நறவம் கழி செய்தல் கானலின் ஞாங்கர் - தேன் சிந்தும் கழிசூழ்ந்த நெய்தல் நிலத்துச் சோலையின் மருங்கில், மொய்த்த இறவு புலவுகழுவு- நெருங்கிய இறால் மீனின் புலால் நாற்றத்தைப் போக்கும். ஈர்துறைப் பொன்னி சேர்ந்தான் - குளிர்ந்த நீர்த் துறையையுடைய காவிரியையடைந்தான். பாண்டியன் கொடியை மீன் என்னும் பொதுமையால் கயல் எனவும் சுறா எனவும் கூறுவர். இறவு - இறான் மீன். முல்லை நிலத்துப் பூவையும் மருத நிலத்துப் பூவையும் கொண்டு சென்று நெய்தனிலத்துப் புலாலை யொழிக்கும் எனக் காவிரியின் சிறப்புக் கூறினார். செல்வோனாகிய அண்ணல் பொன்னி சேர்ந்தான் என்க. 19) பூசத் துறையிற் புகுந்தாடியப் பொன்னித் தென்சார் வாசத் திடைமா மருதைப்பணி தற்கு வையைத் தேசத் தவன்கீழ்த் திசைவாயில் கடந்து செல்லப் பாசத் தளையும் பழியும்புற நின்ற வன்றே. (இ - ள்.) வையைத் தேசத்தவன் - (அங்ஙனம் அடைந்த) வையையாறு சூழ்ந்த பாண்டி நாட்டையுடைய வரகுண வேந்தன், பூசத் துறையில் புகுந்து ஆடி - பூசத் துறையிற் சென்று நீராடி, அப்பொன்னித் தென்சார் - அக்காவிரியின் தென் பக்கத்தில், வாசத்து மா இடை மருதைப் பணிதற்கு - மணமிக்க பெருமை பொருந்திய திருவிடை மருதூர் இறைவனை வணங்குதற்கு, கீழ்த் திசைவாசல் கடந்து செல்ல - கீழைத் திசை வாயிலைக் கடந்து உள்ளே செல்ல, பாசத் தளையும் பழியும் புறம் நின்ற - பாச பந்தமும் கொலைப் பாவமும் (உடன் செல்லாது) புறத்தே நின்றன. பூசத் துறை - தைமாதம் பூச நாளிலே மருதவாணர் தீர்த்தமாடும் திருக்காவிரித்துறை; இதனை, " பூசம் புகுந்தாடிப் பொலிந்தழ காய ஈச னுறைகின்ற இடைமரு தீதோ" எனத் திருஞான சம்பந்தப்பெருமானும், " ஈசனெம்பெரு மானிடை மருதினில் பூச நாம்புகு தும்புன லாடவே" எனத் திருநாவுக்கரசுகளும் அருளிச் செய்தல் காண்க. வாசம் மருதுக்கு அடை. எழுந்தருளியுள்ள என்றுமாம். அன்றும், ஏயும் அசைகள். (20) சுருதிச் சுரும்பு புறஞ்சூழ்ந்து குழறத் தெய்வ மருதிற் சிறந்த பெருந்தேனைக்கண் வாயங் காந்து பருகிப் படிந்து தழல்வாய் வெண்ணெய்ப் பாவையொப்ப உருகிச் செயலற் றுரையற்றுணர் வாகி நின்றான். (இ - ள்.) சுருதிச் சுரும்பு புறம் சூழ்ந்து குழற - வேதமாகிய வண்டுகள் புறத்திற் சூழ்ந்து ஒலிக்க, தெய்வமருதில் சிறந்த பெருந்தேனை - தெய்வத் தன்மை பொருந்திய இடைமருதிற் சிறந்த பெருமையுடைய தேனை, கண்வாய் அங்காந்து பருகி - கண்ணாகிய வாயைத் திறந்து பருகி, படிந்து - அதிலே தோய்ந்து, தழல்வாய் வெண்ணெய்ப் பாவை ஒப்ப உருகி - நெருப்பிற்பட்ட வெண்ணெயாலாகிய பாவை போல உருகி, செயல் அற்று உரை அற்று உணர்வு ஆகி நின்றான் - செயலும் சொல்லும் ஒழிந்து உணர்வு வடிவாகி நின்றான். மருதடியில் வீற்றிருக்கும் பெருமானை மருத மரத்தில் உள்ள தேனாக உருவகப்படுத்தி, அதற்கேற்ப வேதத்தை வண்டாக உருவகித்தார். மரத்தின் பொந்தில் தேன் இறால் வைப்பது காண்க. நினைத்தொறும் காண்டொறும் பேசுந்தொறும் எப்பொழுதும் இன்பஞ் செய்வதாகலின் 'பெருந்தேன்' என்றார். " அந்த விடைமருதி லானந்தத் தேனிருந்த பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ" என்னும் திருவாசகமும், " மன்று ளாடுமது வின்னசை யாலே மறைச்சு ரும்பறை புரத்தின் மருங்கே" என்னும் பெரிய புராணச் செய்யுளும் இங்கே சிந்திக்கற்பாலன. தழல்வாய் வெண்ணெய்ப் பாவை உருகி உருத்தோன்றா தொழிதல் போல அன்பால் உருகிக் கருவி கரணமெல்லாம் கெட்டு தற்போதமிழந்து நின்றானென்க. பெருந்தேனை மிகப் பருகின னென்பது 'அங்காந்து பருகிப்படிந்து' என்னுஞ் சொல்லாற்றலாற் பெறப்படும். தேனை மிகவுண்டார்க்கு உரைசெயல் ஒழிதலாகிய நயமும் போற்றுக. சிவபெருமான் தாம் எழுந்தருளியிருக்கும் திருப்பதிகளை உமாதேவியார்க்குக் காட்டிக் கொண்டு திருவிடை மருதூர்க்கு நேரே வருகையில், திருக் கைலை அவரது பிரிவாற்றாது மருதமாகி அங்கு நின்றதென்ப. (21) [அறுசீரடி யாசிரிய விருத்தம்] நிராமய பரமா னந்த நிருத்தநான் மாடக் கூடற் பராபர விமையா முக்கட் பகவபார்ப் பதிம ணாள புராதன வகில நாத புண்ணிய மருத வாண அராவணி சடையா வென்றென் றளவிலாத் துதிகள் செய்தான். (இ - ள்.) நிராமய - நோயற்றவனே, பரம ஆனந்த நிருத்த- பேரின்பத் திருக்கூத்தனே, நான் மாடக்கூடல் பராபர - நான்மாடக் கூடலில் வீற்றிருக்கும் பராபரனே, இமையா முக்கண் பகவ - இமையாத மூன்று கண்களையுடைய பகவனே, பார்ப்பதிமணாள - பார்வதி மணாளனே, புராதன - பழமையானவனே, அகிலநாத - எல்லாவற்றுக்கும் இறைவனே, புண்ணிய - அறவடிவனே, மருதவாண - இடைமருதில் வாழ்பவனே, அரா அணி சடையா - பாம்பை அணிந்த சடையையுடையானே, என்று அளவு இலாத் துதிகள் செய்தான் - என்று சொல்லிச் சொல்லி அளவிறந்த துதிகளைக் கூறினான். நிராமயன் - பிறவி நோயில்லாதவன்; ஆமயம் - நோய். மதுரையில் அருள்புரிந்த இறைவனே இப்பெருமான் என்று கொண்டு 'நான்மாடக் கூடற் பராபர' என்றான். பகவன் - ஆறு குணங்களையுடையவன். (22) சொற்பதங் கடந்த சோதி துதித்தடி பணிந்த வேந்தை மற்பெருந் தோளாய் கீழை வாயிலிற் பிரம சாயை நிற்பதந் நெறியாற் செல்லே னிழன்மதி யுரிஞ்சு மேலைப் பொற்பெரு வாயி னீங்கிப் போதிநம் மதுரைக் கென்றான். (இ - ள்.) சொல் பதம் கடந்த சோதி - சொல்லின் நிலையைக் கடந்து நின்ற ஒளிவடிவான இறைவன், துதித்து அடிபணிந்த வேந்தை - துதி செய்து அடி வணங்கிய வரகுணவேந்தனை (நோக்கி), மல் பெருந்தோளாய் - மற்போரிற் றேர்ந்த பெரிய தோள்களை யுடையவனே, கீழைவாயிலில் பிரமசாயை நிற்பது - கீழைவாயிலில்கண் பிரம சாயை நிற்கின்றது (ஆகலின்), அந்நெறியால் செல்லேல் - அவ்வழியாற் போதலொழிக; நிழல்மதி உரிஞ்சு மேலைப் பொன் பெருவாயில் நீங்கி - ஒளியினையுடைய சந்திரமண்டலத்தை உரிஞ்சுகின்ற பொன்னாலாகிய பெரிய மேலை வாயிலினின்று நீங்கி, நம் மதுரைக்குப் போதி என்றான்- நமது மதுரைப் பதிக்குச் செல்வாயாக என்று கூறியருளினான். 'சொற்பதம்' என்புழிப் பதம் என்பது நிலைமையென்னும் பொருட்டு. "சொற்பதங் கடந்த தொல்லோன்" என்பது திருவாசகம். போதி, த் எழுத்துப்பேறு. (23) வரகுண னதுகேட் டையன் மருதினை வளைந்து நீங்கற் கருமையால் வாயி றோறு மடிக்கடி வீழ்ந்து வீழ்ந்து வரைதொளைத் தன்ன மேலை வாயிலாற் போவா னன்ன திருமணிக் கோபு ரந்தன் பெயரினாற் செய்து சின்னாள். (இ - ள்.) வரகுணன் அது கேட்டு - வரகுண பாண்டியன் அதனைக் கேட்டு, ஐயன் மருதினை வளைந்து - இறைவன் வீற்றிருக்கும் இடை மருதினை வலம் வந்து, நீங்கற்கு அருமையால் - பிரிதற்கு அருமையால், வாயில் தோறும் அடிக்கடி வீழ்ந்து வீழ்ந்து - வாயில்கள் தோறும் பன்முறையும் வீழ்ந்து வீழ்ந்து வணங்கி, வரை தொளைத்தன்ன மேலை வாயிலால் போவான் - மலையைத் தொளைத்தாலொத்த மேலை வாயிலாற் போகின்றவன், அன்ன திருமணிக் கோபுரம் - அந்த அழகிய மணிகளழுத்திய கோபுரத்தை, தன் பெயரினால் செய்து - தனது பெயரினாற் செய்து, சில் நாள்- சில நாள் (அங்குத் தங்கி). தொளைத்ததன்ன என்பது விகாரமாயிற்று. மலையைத் தொளைத்தது போலும் வாயில் என்னும் இக்கருத்து, " வென்றெழு கொடியொடு வேழஞ் சென்றுபுகக் குன்று குயின்றன்ன வோங்குநிலை வாயில்" என நெடுநல்வாடையில் வந்துளது. (24) திருப்பணி பலவுஞ் செய்து தென்றிசை வழிக்கொண் டேகிச் சுருப்பணி நெடுநாண் பூட்டுஞ் சுவைத்தண்டச் சிலையாற் காய்ந்த மருப்பணி சடையான் கோயில் வழிதொறுந் தொழுது போற்றிப் பொருப்பணி மாடக் கூடற் பொன்னக ரடைந்தான் மன்னோ. (இ - ள்.) திருப்பணி பலவும் செய்து - பல திருப்பணிகளையுஞ் செய்து முடித்து, தென் திசை வழிக் கொண்டு ஏகி - தென்றிசையின் வழிக் கொண்டு சென்று, சுரும்பு அணி நெடு நாண் பூட்டும் - வண்டுகளின் வரிசையாகிய நெடிய நாண் பூட்டிய, சுவைத்தண்டச் சிலையான் காய்ந்த - கரும்பு வில்லையுடைய மதவேளை எரித்தருளிய, மருப்பு அணி சடையான் கோயில் - பன்றிக் கொம்பினை அணிந்த சடையையுடைய சிவபெருமான் வீற்றிருக்குந் திருக்கோயிலை, வழிதொறும் தொழுது போற்றி - வழிதோறும் வணங்கித் துதித்து, பொருப்பு அணிமாடக் கூடல் பொன் நகர் அடைந்தான் - மலைகளின் வரிசை போல (ஓங்கிய) மாடங்களையுடைய மதுரை என்னுந் திருநகரை அடைந்தனன். சுருப்பு - சுரும்பு : வலித்தல். சுவைத்தண்டம் - கரும்பு. சடையான் கோயில் வழிதொறும் தொழுது என்பதற்கு மருதவாணர் கோயிலை வழிதொறும் திரும்பி நோக்கித் தொழுது என்றுரைக்க; அன்றி, வழிதொறும் உள்ள இறைவன் கோயில்களைத் தொழுது என்றுமாம். மன்னும் ஓவும் அசைகள். வரகுணதேவரது அன்பின் பெருக்கையும், அவர் இடைமருதில் இயற்றிக் கொண்டிருந்த திருத்தொண்டின் திறத்தையும், " வெள்ளை நீறு மெய்யிற் கண்டு கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும் ஓடும் பன்னரி யூளைகேட் டரனைப் பாடின வென்று படாம்பல வளித்தும் குவளைப் புனலிற் றவளை யரற்ற ஈசன் றன்னை யேத்தின வென்று காசும் பொன்னுங் கலந்து தூவியும் வழிபடு மொருவன் மஞ்சனத் தியற்றிய செழுவிதை யெள்ளைத் தின்னக் கண்டு பிடித்தலு மவனிப் பிறப்புக் கென்ன இடித்துக் கொண்டவ னெச்சிலை நுகர்ந்தும் மருத வட்டத் தொருதனிக் கிடந்த தலையைக் கண்டு தலையுற வணங்கி உம்மைப் போல எம்மித் தலையும் கிடத்தல் வேண்டுமென் றடுத்தடுத் திரந்தும் கோயின் முற்றத்து மீமிசைக் கிடப்ப வாய்த்தன வென்று நாய்க்கட்ட மெடுத்தும் காம்புகுத் துதிர்ந்த கனியுருக் கண்டு வேம்புகட் கெல்லாம் விதான மமைத்தும் விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று புரிகுழற் றேவியைப் பரிவுடன் கொடுத்த பெரிய வன்பின் வரகுண தேவரும்" என்று திருவிடை மருதூர் மும்மணிக் கோவையில், பட்டினத்தடிகள் அருளிச் செய்தல் காண்க. (25) தொடுபழி தொலைவித் தாண்ட சுந்தரத் தோன்றல் பாதக் கடிமல ரடைந்து நாளுங் கைதொழு துலக மெல்லாம் வடுவறு செங்கோ லோச்சும் வரகுண னறவோர் நாவால் அடுசுவை யமுத மன்ன வரன்புகழ் செவிம டுப்பான். (இ - ள்.) தொடுபழி தொலைவித்து ஆண்ட - விடாது தொடர்ந்த பழியைப் போக்கிக் காத்தருளிய, சுந்தரத் தோன்றல் பாதக் கடிமலர் அடைந்து - சோம சுந்தரக் கடவுளின் திருவடியாகிய மணமிக்க தாமரை மலரைச் சார்ந்து, நாளும் கைதொழுது - நாள்தோறும் வணங்கி, உலகம் எல்லாம் வடு அறு செங்கோல் ஓச்சும் வரகுணன் - உலகம் முழுதும் குற்றமற்ற செங்கோல் செலுத்தும் வரகுண பாண்டியன், அறவோர் நாவால் - அந்தணர்கள் நாவினால், சுவை அடு அமுதம் அன்ன அரன் புகழ் - சுவை பொருந்திய அமுதத்தையொத்த இறைவன் புகழை, செவிமடுப்பான் - கேட்பான். தொடுபழி - விடாது தொடரும் பழி; தொடுத்த என விரித்து வளைத்துக் கொண்ட பழி என்றுரைத்தலுமாம்; இஃது இப்பொருட்டாதலை, " தொடுத்துங் கொள்ளா தமையலென்" என்று புறப்பாட்டுள் வருதலானறிக. நாவைக் கலமாகவும், புகழை உணவாகவும், செவியை வாயாகவும் உருவகங் கொள்க. அடு - அடுத்த, பொருந்திய. ஏனைச் சுவைகளை வெல்லும் சுவை யென்றுமாம்; நாவால் அட்ட என்றுரைப்பாருமுளர். (26) வேதமா கமம்பு ராண மிருதிகண் முதலா நூலும் ஓதுவ துலகின் மிக்க துருத்திர வுலக மென்னும் போதம தகங்கொண் டந்தப் பொற்பதி காண வேண்டுங் காதல்செல் வழியே யீசன் கங்குலிற் கோயி லெய்தா. (இ - ள்.) வேதம் ஆகமம் புராணம் மிருதிகள் முதலாம் நூலும் - வேதமும் ஆகமமும் புராணமும் மிருதிகளு முதலாகிய நூல்கள் அனைத்தும், ஓதுவது - கூறுவதாகிய, உலகில் மிக்கது உருத்திர உலகம் என்னும் - உலகங்களில் மேம்பட்டது சிவலோகமென்னும், போதம் அகம் கொண்டு - அறிவினை மனத்திற் கொண்டு, அந்த பொன்பதி காண வேண்டும் காதல் செவ்வழியே - அந்த அழகிய சிவலோகத்தைக் காண எழுந்த விருப்பத்தின் வழியே, ஈசன் கங்குலில் கோயில் எய்தா - சிவராத்திரியில் திருக்கோயிலை அடைந்து. ஓதுவதாகிய போதம் என்க. உலகின் - பிரமன் முதலாயினார் உலகங்களிலும். போதமது என்பதில் அது : பகுதிப்பொருள் விகுதி. (27) [கலிநிலைத்துறை] மாழை மான்மட நோக்கிதன் மணாளனை வணங்கிப் பீழை யேழ்பவங் கடந்துநின் னடிநிழல் பெற்றோர் சூழ நீசிவ புரத்தில்வீற் றிருப்பது தொழுதற் கேழை யேற்கொரு கருத்துவந் தெய்திய தெந்தாய். (இ - ள்.) மாழைமான் மட நோக்கி தன் மணாளனை வணங்கி - இளமை பொருந்திய மான் போலும் பார்வையை யுடைய மடப்பத்தையுடைய உமையம்மையின் நாயகனாகிய சோம சுந்தரக் கடவுளை வணங்கி, பீழை ஏழ்பவம் கடந்து - துன்பத்தையுடைய எழுவகைப் பிறவியையுங் கடந்து, நின் அடி நிழல் பெற்றோர் - நினது திருவடி நிழலை அடையப் பெற்றோர்கள், சூழ - சூழா நிற்க, நீ சிவபுரத்தில் வீற்றிருப்பது - நீ சிவலோகத்தின்கண் வீற்றிருக்குங் காட்சியை, தொழுதற்கு - கண்டு வணங்குதற்கு, எந்தாய் - எம் தந்தையே, ஏழையேற்கு ஒரு கருத்து வந்து எய்தியது- அறிவில்லாத அடியேனுக்கு ஓர் எண்ணம் வந்து தோன்றியது. மாழை - இளமை; இஃது இப்பொருட்டாதலை, " மைபூத்தலர்ந்த மழைக்கண் மாழைமானேர் நோக்கின்" என்னும் சிந்தாமணிச் செய்யுள் உரை நோக்கியுணர்க. மடப்பத்தை யுடையாள் என விகுதிப் பொருளோடு இயைக்க; மருட்சியும் மடப்பமும் உடைய நோக்கு என்றுமாம். (28) என்ற காவல னன்பினுக் கெளியராய் வெள்ளி மன்ற வாணரவ் வுலகையவ் வுலகிடை வருவித் தின்று காட்டுது மிவற்கெனத் திருவுளத் தெண்ணம் ஒன்றி னாரஃ துணர்ந்ததா லுருத்திர வுலகம். (இ - ள்.) என்ற காவலன் அன்பினுக்கு எளியராய் - என்று கூறிக் குறையிரந்த வரகுண வேந்தன் அன்பிற்கு எளியவராகி, வெள்ளி மன்றவாணர் - வெள்ளியம்பலமுடைய சோம சுந்தரக் கடவுள், அவ்வுலகை இவ்வுலகிடை வருவித்து இன்று இவற்குக் காட்டுதும் என - அச்சிவலோகத்தை இந்த நிலவுலகின்கண் வருவித்து இன்று இவ்வன்பனுக்குக் காட்டுவேமென்று, திருவுளத்து எண்ணம் ஒன்றினார் - திருவுள்ளத்தின்கண் எண்ணியருளினார்; உருத்திர உலகம் அஃது உணர்ந்தது - அச்சிவலோகம் அதனை உணர்ந்தது. எண்ணம் ஒன்றினார் - எண்ணம் பொருந்தினார்; எண்ணினார். ஆல் : அசை. (29) கோடி மாமதிக் கடவுளர் குரூஉச்சுடர் பரப்பி நீடி யோரிடத் துதித்தென மின்மினி நிகர்த்து வாடி வானிரு சுடரொளி மழுங்கவா னிழிந்து தேடி னார்க்கரி யானுறை சிவபுரந் தோன்ற. (இ - ள்.) தேடினார்க்கு அரியான் உறை சிவபுரம் - தேடிய திருமாலுக்கும் பிரமனுக்கும் அரிய இறைவன் தங்கியருளிய சிவலோகமானது, கோடிமா மதிக்கடவுளர் - நிறைந்த கோடி திங்கட் புத்தேளிர், குரூஉச்சுடர் பரப்பி - நிறம் பொருந்திய ஒளியினைப் பரப்பி, நீடி ஓர் இடத்து உதித்தென -குறைவின்றி ஒரேயிடத்தில் உதித்தாற்போல, வான் இரு சுடர் - வானின்கண் உள்ள பரிதியும் மதியுமாகிய இரண்டு சுடர்களும், மின் மினி நிகர்த்து வாடி ஒளி மழுங்க - மின்மினிப் பூச்சியை ஒத்து வாடி ஒளி மழுங்குமாறு, வான் இழிந்து தோன்ற - விண்ணினின்றும் இறங்கித் தோன்றா நிற்க. கோடி - எண்ணிறந்த என்னும் பொருட்டு. ஒளியுடன் தட்பமும் உடைமையால் மதிக் கடவுளரைக் கூறினார். உதித்தென : விகாரம். தேடினார்க்கு என்பதற்குத் தற்போதத்தால் ஆராயலுற்றார்க்கு எனப் பொதுவாக உரைத்தலுமாம். சிவபுரம் இருசுடரொளி மழுங்க வாளிழந்து தோன்ற என வினை முடிவு கொள்க. (30) ஆண்ட நாயக னந்தியை யழைத்தெமக் கன்பு மாண்ட காதலான் வரகுண வழுதிநம் முலகங் காண்டல் வேண்டினான் காட்டெனக் கருணையா லேவல் பூண்ட வேத்திரப் படையினான் றொழுதனன் போனான். (இ - ள்.) ஆண்ட நாயகன் - எம்மை ஆண்டருளிய சோம சுந்தரக் கடவுள், நந்தியை அழைத்து - நந்திப்புத்தேளை அழைத்து, எமக்கு அன்பு மாண்ட காதலான் வரகுணவழுதி - எமக்கு அன்பு சிறந்த விருப்பத்தை யுடையனாகிய வரகுண பாண்டியன், நம் உலகம் காண்டல் வேண்டினான் காட்டு என - நமது உலகத்தைக் காண விரும்பினான் ஆகலின் காட்டுவாயாக என்று கூறியருள, கருணையால் - அவன் திருவருளினால், ஏவல் பூண்ட வேத்திரப் படையினான் - அவ்வேலை மேற்கொண்ட பிரம்புப் படையையுடைய திருநந்திதேவன், தொழுதனன் போனான் - வணங்கிச் சென்றான். ஆண்ட நாயகன் - தம்மை ஆண்ட நாயகன் என்றும், உயிர் களை ஆண்ட நாயகன் என்றும் உரைத்தலுமாம். காதல் - அன்பின் முதிர்ச்சி, ஏவல் பூண்ட என்பதற்குப் பணி செய்தலை மேற்கொண்ட எனப் பொதுவின் உரைத்தலுமாம். கருணையான் என்னும் பாடத்திற்கு இறைவன் என்பது பொருள். தொழுதனன் - முற்றெச்சம். (31) வருதி யாலெனப் பணிந்தெழு வரகுணற் கொடுபோய்க் கருதி யாயிரம் பெயருடைக் கடவுணான் முகத்தோன் சுருதி யாதியீ றளப்பருஞ் சொயம்பிர காசப் பரிதி யாள்சிவ புரமிது பாரெனப் பணித்தான். (இ - ள்.) வருதி என - (அங்ஙனஞ் சென்ற நந்திதேவன்) வருவாய் என்றருள, பணிந்து எழு வரகுணன் கொடு போய் - வணங்கி எழுந்த வரகுண பாண்டியனைக் கொண்டு சென்று, ஆயிரம் பெயர் உடைக் கடவுள் நான்முகத்தோன் - ஆயிரம் பெயருடைய திருமாலும் பிரமனும், சுருதி ஆதி கருதி - வேத முதலிய அளவைகளால் ஆராய்ந்து, ஈறு அளப்பு அரு - முடிவு காண்பரிய, சொயம்பிரகாசம் பரிதி ஆள் - இயற்கையாகிய பேரொளியினையுடைய ஞான சூரியனாகிய சோம சுந்தரக் கடவுள் ஆண்டருளுகின்ற, சிவபுரம் இது - சிவலோகம் இது; பார் எனப் பணித்தான் - இதனைக் காண்பாயாக எனப் பணித்தருளினான். வருதியென்று கூறி அங்ஙனம் கூறியவளவிற் பணிந்தெழுந்த வரகுணனைக் கொண்டு போய் என விரித்துரைக்க. கடவுளாகிய பரிதி எனலுமாம்; இதற்கு, கருதிப் பார் எனப் பணித்தான் என்றியைத்துரைக்க. நான்முகத்தோனும் சுருதி முதலியவும் ஈறு அளப்பரும் என்றும், நான்முகத்தோனும் சுருதியும் முதலு முடிவும் அளத்தற்கரிய என்றும் உரைத்தலுமாம்; "மறையினா லயனான் மாலான் மனத்தினால் வாக்கால் மற்றும் குறைவிலா வளவி னாலுங் கூறொணா தாகி நின்ற இறைவனார்" என்று சிவஞான சித்தியார் கூறுதல் அறியற் பாலது, ஞாயிறு முதலிய ஒளிகட்கெல்லாம் ஒளி கொடுத்து இயல்பின் விளங்கும் பேரொளியாகலின் 'சொயம்பிரகாசப் பரிதி' என்றார். ஆல் : அசை. (32) கருப்பு ரங்கமழ்ந் துளர்பசுங் கால்களா லுதையுண் டருப்பி னஞ்சிதைந் தாயிரப் பத்தியோ சனைபோய் மருக்க மழ்ந்துநூ றாயிரம் வாலிதழ்க் கமலம் இருக்கு மோடைகள் புடைதொறுந் தழுவிய யாறும். (இ - ள்.) கருப்புரம் கமழ்ந்து - கருப்புர மணம் வீசி, உளர் பசுங் கால்களால் - அசைகின்ற தென்றற் காற்றுகளால், உதையுண்டு- மொத்துண்டு, அருப்பு இனம் சிதைந்து - அரும்புக் கூட்டங்கள் முறுக் கவிழ்ந்து, ஆயிரப் பத்து யோசனை போய் மருக்கமழ்ந்து- பதினாயிரம் யோசனை தூரஞ் சென்று மணம் வீசி, நூறாயிரம் வால் இதழ்க் கமலம் இருக்கும் ஓடைகள் - நூறாயிரம் இதழ் களையுடைய வெண்டாமரை மலர்கள் இருக்கின்ற ஓடைகள், புடை தொறும் தழுவிய யாறும் - பக்கந்தோறும் பொருந்திய ஆறுகளும். பசுங்கால் - இளங்காற்று. கால் என்றதற்கேற்ப உதையுண்டு என நயம்படக் கூறினார். வால் - தூய்மையுமாம். (33) வரம்பின் மாதரார் மதுரவாய் திறந்துதேன் வாக்கும்1 நரம்பி னேழிசை யாழிசை நகைமலர்த் தருவின் சுரும்பி னேரிசை நாரதர் தும்புரு2 விசைக்கும் இரும்பு நீர்மெழு காக்கிய வின்னிசை யெங்கும். (இ - ள்.) வரம்பு இல் மாதரார் - அளவிறந்த மாதர்கள், மதுரவாய் திறந்து - இனிய வாயினைத் திறந்து, தேன் வாக்கும் ஏழ் இசை - தேனைச் சொரிவது போற் பாடும் ஏழிசைகளும், நரம்பின் யாழ் இசை - நரம்புகளையுடைய யாழின் இசைகளும், நகை மலர்த் தருவின் - விளங்குகின்ற மலர்களையுடைய மரங்களில் உள்ள, சுரும்பின் ஏர் இசை - வண்டுகளின் அழகிய இசையும், நாரதர் தும்புரு இசைக்கும் - நாரதரும் தும்புருவும் பாடுகின்ற, இரும்பு நீர் மெழுகு ஆக்கிய இன் இசை - இரும்பினை மெழுகு போல இளகுந் தன்மையாக்கிய இனிய இசையுமுள்ள, எங்கும் - எல்லா விடங்களும். தேன் வாக்கும் என்பதற்கேற்ப வாயை மலராக்குக. வாக்கும் ஏழிசையும் நரம்பின் யாழிசையும் எனக் கூட்டுக; யாழுடன் கூடிய வாக்கும் இசை என்றியைத்துரைத்தலுமாம். ஏழிசை முற்கூறப்பட்டமை காண்க. மெழுகு நீர் என மாறுக. எங்கும் என்பதனை எல்லா இடங் களும் எனக் கொண்டு யாறு முதலியவற்றோடு எண்ணுக. (34) அமுத வாவியும் பொன்மல ரம்புயத் தடமுங் குமுத வாயர மாதராங் குயிலினம் பயிலும் நிமிர வாள்விடு மரகத நெடியபைங் காவுந் திமிர மாசறக் கழுவிய தேவர்வாழ் பதமும். (இ - ள்.) அமுத வாவியும் - அமிழ்த மயமான நீரினையுடைய நடைக்கிணறும், பொன் அம்புய மலர்த்தடமும் - பொன் போன்ற தாமரை மலர்கள் நிறைந்த தடாகங்களும், குமுதவாய் அரமாதர் ஆம் குயில் இனம் பயிலும் - செவ்வல்லி மலர் போலும் வாயினையுடைய தேவ மகளிராகிய குயிற் கூட்டங்கள் விளையாடும், நிமிரவாள் விடும் மரகதம் - நிரம்ப ஒளிவிடும் மரகதம் போன்ற, நெடிய பைங்காவும் - நீண்ட பசிய சோலைகளும், திமிரம் மாசு அறக் கழுவிய - இருளாகிய களங்கம் ஒழியுமாறு கழுவிய, தேவர் வாழ் பதமும் - தேவர்கள் வாழ்கின்ற பதங்களும். வாவி - நடைக் கிணறு, நிமிர - மிக. தேவர் ஒளி வடிவினராகலின் 'திமிர மாசறக் கழுவிய தேவர்' என்றார்; ஆணவ இருளுமாம். (35) அலம்பு பாற்கடல்1போற்புறத் தமுதநீ ரகழும் பொலஞ்செய் ஞாயில்சூழ் புரிசையும் பொன்செய்கோ புரமும் நலங்கொள் பூவியல் வீதியு நவமணி குயின்ற துலங்கு மாளிகைப் பந்தியுஞ் சூளிகை நிரையும். (இ - ள்.) அலம்பு பால் கடல் போல் - ஒலிக்கின்ற பாற்கடல் போல, புறத்து அமுத நீர் அகழும் - புறத்தின்கண் அமுதம் போன்ற நீரினையுடைய அகழியும், பொலம் செய்ஞாயில் சூழ் புரிசையும் - பொன்னாற் செய்த சூட்டுக்கள் சூழ்ந்த மதிலும், பொன்செய் கோபுரமும் - பொன்னாற் செய்த கோபுரமும், நலம் கொள்பூ இயல் வீதியும் - நன்மையைக் கொண்ட பொலி வமைந்த வீதிகளும், நவமணி குயின்ற - ஒன்பது மணிகளும் பதிக்கப்பட்ட, துலங்கு மாளிகைப் பந்தியும் - விளங்கா நின்ற மாளிகை வரிசைகளும், சூளிகை நிரையும் - அவற்றின் இறப்பு வரிசைகளும். ஞாயில் - மதிலுறுப்பு; ஏப்புழைக்கு நடுவாக எய்து மறையும் சூட்டு என்பர். சூளிகை - நிலா முற்றமுமாம். (26) ஐம்பு லங்களும் வைகலும் விருந்ததா வருந்த2 வெம்பு நால்வகை யுண்டியும் வீணையுஞ் சாந்துஞ் செம்பொ னாரமு மாடலின் செல்வமுந் தெய்வப் பைம்பொன் மேகலை யோவியப் பாவையொப் பாரும். (இ - ள்.) ஐம்புலங்களும் - ஐந்து புலன்களும், வைகலும் - நாள் தோறும், விருந்ததா அருந்த - விருந்தாக உண்ணுதற்கு அமைந்த, வெம்பு நால்வகை உண்டியும் - வெம்மையுள்ள நான்கு வகையாகிய உணவுகளும், வீணையும் - யாழும், சாந்தும் - சந்தனமும், செம்பொன் ஆரமும் - சிவந்த பொன்னாற் செய்த மாலைகளும், ஆடலின் செல்வமும் - ஆடலாகிய செல்வமும், தெய்வப் பைம்பொன் மேகலை - தெய்வத் தன்மை பொருந்திய பசிய பொன்னாலாகிய மேகலையணிந்த, ஓவியப் பாவை ஒப்பாரும் - சித்திரப் பாவையை ஒத்த மகளிரும். ஐம் புலங்கள் - ஐம் பொறிகள். விருந்தது, அது : பகுதிப் பொருள் விகுதி. ஆக என்பது தொக்கது. வெம்பு - விருப்பஞ் செய்கின்ற என்றுமாம். உண்டி நாவிற்கும், வீணை செவிக்கும், சாந்து மூக்கிற்கும் மெய்க்கும், ஆரமும் ஆடலும் கண்ணிற்கும் விருந்தாக அமைந்தன. பாவையொப்பார் ஐம்பொறிகட்கும் விருந்தாக அமைந்தனர் என்க; " கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள" என்பது முப்பால். (37) படர்ந்த வார்சடை யுருத்திரர் பணைத்திறு மாந்த வடங்கொள் பூண்முலை யுருத்திர மகளிரோ டமரும் இடங்கொண் மாளிகைப் பந்தியு மிகல்விளை துன்பங் கடந்த செல்வமுங் கவலையில் போகமுங் காட்டி. (இ - ள்.) படர்ந்த வார்சடை உருத்திரர் - விரிந்த நீண்ட சடையையுடைய உருத்திரர்கள், பணைத்து இறுமாந்த - பருத்து இறுமாந்த, வடம்கொள் பூண்முலை உருத்திர மகளிரோடு அமரும் - முத்து வடமாகிய அணியை அணிந்த கொங்கையையுடைய உருத்திர மகளிரோடு பொருந்தியிருக்கும், இடம் கொள் மாளிகைப் பந்தியும் - இடம் பரந்த மாளிகை வரிசைகளும், இகல் - பகையையும், விளை துன்பம் - பிறரால் விளையுந் துன்பங்களையும், கடந்த செல்வமும் - நீங்கிய செல்வமும், கவலை இல் போகமும் - கவலையின்றித் துய்க்கும் போகங்களும் ஆகிய இவை அனைத்தையும், காட்டி - (தனித்தனி) காண்பித்து. ஏனை யுலகங்களில் உள்ள செல்வம் பகைமையுடனும் துன்பங்களுடனும் பொருந்தியதும், போகம் கவலையுடன் கூடியதும் ஆம். ஆகலின் ஈண்டு அவையொழிந்த செல்வமும் போகமும் என்றார். சிவபுரம் இது பார் எனப் பணிந்து, அங்குள்ள இவற்றைத் தனித்தனி காட்டியென்க. (38) முண்ட காசனன் பதமிது மூவுல களந்த தண்டு ழாயவன் புரமிது தனிமுதல் வடிவங் கொண்டு வீறுசா லுருத்திரர் கோப்பதி யின்ன எண்டி சாமுகங் காவல ருறைவிட மிவைகாண். (இ - ள்.) முண்டக ஆசனன் பதம் இது - தாமரைத் தவிசினையுடைய பிரமன் வாழும் பதம் இதுவாகும்; மூவுலகு அளந்த தண் துழாயவன் புரம் இது - மூன்றுலகங்களையும் அளந்த குளிர்ந்த துழாய் மாலையையுடைய திருமாலின் பதி இதுவாகும்; தனி முதல் வடிவம் கொண்டு - ஒப்பற்ற முதற் கடவுளாகிய சிவபெருமான் திருவுருவத்தைப் பெற்று, வீறு சால் உருத்திரர் கோப்பதி இன்ன- பெருமை மிக்க உருத்திரர்களின் சிறந்த நகரங்கள் இவை; எண் திசாமுகம் காவலர் உறைவிடம் இவை காண் - எட்டுத் திக்கு களையும் காவல் செய்கின்ற திக்குப் பாலகர்களின் இருப்பிடங்கள் இவையாகும். முண்டகாசனன் : வடமொழி நெடிற் சந்தி. கோ - தலைமை; சிறப்பு. திசாமுகம்- திசையின் இடம். காண், முன்னிலையசை; தனித் தனி கூட்டி, காண்பாயாக என்றுரைத் தலுமாம்; வருஞ் செய்யுட்களிலும் இங்ஙனங் கொள்க. (39) புலரு முன்புன லாடிநீ றாடிநம் புனிதன் இலகு மாலயம் விளக்கிநந் தனப்பணி யியற்றி மலர்கொய் தாய்ந்தனர் தொடுத்தரன் புகழ்செவி மடுத்திவ் வுலக வாணராய்ப் போகமுற் றுறைகுவ ரிவர்காண். (இ - ள்.) புலருமுன் - விடிவதற்கு முன்னரே, புனல் ஆடி- நீராடி, நீறு ஆடி - திருநீறு தரித்து, நம்புனிதன் இலகும் ஆலயம் விளக்கி - நமது இறைவன் விளங்கும் திருக்கோயிலைத் திருவலகிட்டு, நந்தனப் பணி இயற்றி - திருநந்தனப்பணி செய்து, மலர் கொய்து ஆய்ந்தனர் தொடுத்து - மலரெடுத்து ஆய்ந்து திருப்பள்ளித்தாமம் தொடுத்துச் சாத்தி, அரன் புகழ் செவி மடுத்து - இறைவன் புகழைச் செவி நிரம்பக் கேட்டு, இவ்வுலக வாணர் ஆய் - இவ்வுலகத்தில் வாழ்பவராய், போகம் உற்று உறைகுவர் இவர்காண் - போகந்துய்த்திருப்போர் இவர். ஆய்ந்தனர் : முற்றெச்சம். தாதமார்க்கமாகிய சரியை நெறியினின்று சாலோக முற்றோர் இதிற் கூறப்பட்டனர். சரியையின் இயல்பினையும் பேற்றையும், " தாதமார்க்கஞ் சாற்றிற் சங்கரன்றன் கோயிற் றலமலகிட் டிலகுதிரு மெழுக்குஞ் சாத்திப் போதுகளுங் கொய்து பூந்தார் மாலை கண்ணி புனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்துபாடித் தீதிறிரு விளக்கிட்டுத் திருநந்த வனமும் செய்துதிரு வேடங்கண் டாலடியேன் செய்வ தியாதுபணி யீரென்று பணிந்தவர்தம் பணியும் இயற்றுவதிச் சரியைசெய்வோ ரீசனுல கிருப்பர்" என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தத்தால் அறிக. (40) தூய ராகியைஞ் சுத்திசெய் தகம்புற மிரண்டின் நேய ராய்விதி நெறியினான் முகமனீ ரெட்டாற் காயம் வாய்மன வொருமையா லர்ச்சித்துக் கடவுள் நாய னாரரு குறைபத நண்ணினா ரிவர் காண். (இ - ள்.) தூயர் ஆகி ஐஞ் சுத்தி செய்து - புனிதமுடையராய் ஐவகைச் சுத்தி செய்து, அகம்புறம் இரண்டின் நேயராய் - உள்ளும் புறம்பும் அன்புடையராய், விதி நெறியினால் - ஆகம நெறியினால், முகமன் ஈர் எட்டால் - பதினாறு வகை உபசாரத் தாலும், காயம் வாய் மன ஒருமையால் - உடல் உரை உள்ளமாகிய இம்மூன்றின் ஒருமைப்பாட்டுடன், அர்ச்சித்து - பூசித்து, கடவுள் நாயனார் அருகு உறைபதம் நண்ணினார் இவர்காண் - எல்லாத் தேவர்களுக்கும் இறைவனாகிய சிவபிரான் அணிமையில் உறையும் பதத்தினை அடைந்தவர் இவர். ஐஞ்சுத்தி - பூதசுத்தி, ஆன்ம சுத்தி, திரவிய சுத்தி, மந்திர சுத்தி, இலிங்க சுத்தி என்பன. பூத சுத்தியாவது தத்துவங்களைச் சடமென்றறிதல்; ஆன்ம சுத்தியாவது அவ்வாறறிதல் ஆன்ம போதத் தாலன்று, திருவருளா லென்றுணர்தல்; திரவிய சுத்தியாவது ஆன்மா அறிவித்தாலன்றி அறியாதென வுணர்ந்து கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் பொருள் முழுதும் திருவருள் என்றுணர்தல்; மந்திர சுத்தியாவது திருவைந்தெழுத்தை முறைப் படி மாறி யுச்சரித்து அதன் உண்மையை உணர்தல்; இலிங்க சுத்தியாவது பதியாகிய சிவம் பசு பாசங்களின் பிரிவின்றி நின்று அவற்றைச் சேட்டிப்பிக்குந் தன்மையை உணர்ந்து அச் சிவம் இலிங்கத்தினும் எழுந்தருளியிருக்கு மென்றுணர்தல். சரியை புறத் தொண்டும், கிரியை புறம் அகம் இரண்டினும் செய்யுந் தொண்டும் ஆகலின் 'அகம்புற மிரண்டின் நேயராய்' என்றார். முகமன் ஈரெட்டு- சோடச வுபசாரம். கடவுளர்க்கு நாயனார் என்க. புத்திர மார்க்கமாகிய கிரியை நெறியினின்று சாமீப முற்றோர் இதிற் கூறப்பட்டனர். கிரியையின் இயல்பையும் பேற்றையும், ' புத்திரமார்க் கம்புகலின் புதியவிரைப் போது புகையொளிமஞ் சனமமுது முதல்கொண் டைந்து சுத்திசெய்தா சனமூர்த்தி மூர்த்தி மானாஞ் சோதியையும் பாவித்தா வாகித்துச் சுத்த பத்தியினா லர்ச்சித்துப் பரவிப் போற்றிப் பரிவினொடு மெரியில்வரு காரியமும் பண்ணி நித்தலுமிக் கிரியையினை யியற்று வோர்கள் நிமலன்ற னருகிருப்பர் நினையுங் காலே" என்னுமசிவஞானசித்தித் திருவிருத்தத்தால் அறிக. (41) கிளர்ந்த காலினா லங்கியை நிமிர்த்துமேற் கிடைத்து வளர்ந்த பிங்கலை யிடைநடு வழியுகு மதியின் விளைந்த வின்னமு துண்டுநம் விடையவன் வடிவங் குளந்த னிற்குறித் தவனுருக் கொண்டவ ரிவர்காண். (இ - ள்.) கிளர்ந்த காலினால் - மேலெழுந்த பிராண வாயுவால், அங்கியை நிமிர்த்து - (மூலாதாரத்திலுள்ள) நெருப்பினை மேலே எழுப்பி, மேற் கிடைத்து - மேற் சென்று, வளர்ந்த பிங்கலை இடை நடுவழி உகும் - வளர்ந்த பிங்கலைக்கும் இடைக்கும் நடுவிலுள்ள சுழுமுனையின் வழியாகச் சொரிகின்ற, மதியின் விளைந்த இன் அமுது உண்டு - சந்திர மண்டிலத்தில் விளைந்த இனிய அமுதினை அருந்தி, நம் விடையவன் வடிவம் குளந்தனில் குறித்து - நம் இறைவனது திருவுருவத்தினைப் புருவ மத்தியில் தியானித்து, அவன் உருக்கொண்டவர் இவர்காண் - அவன் வடிவத்தை அடைந்தவர் இவர். அங்கி - உடல் நடுவில் அக்கினி மண்டலத்தில் உள்ள மூலாக்கினி. பிராண வாயுவாலும் வன்னி பீசமந்திரத்தாலும் மூலக்கனலை மேலெழுப்பி என்க. மேல் - பிரமரந்திரம், பிங்கலை - வலது நாடி. இடை - இடது நாடி. நடு - சுழிமுனை நாடி. சுழி முனை வழியாக மேற் சென்று என்றுமாம். குளம் -நெற்றி; புருவ நடு. இவற்றின் இயல்புகளை யோக நூல்களில் விரிவாகக் காண்க. சகமார்க்கமாகிய யோக நெறியினின்று சாரூபமுற்றோர் இதிற் கூறப்பட்டனர். யோகத்தின் இயல்பையும் பேற்றையும், " சகமார்க்கம் புலனொடுக்கித் தடுத்துவளி யிரண்டுஞ் சலிப்பற்று முச்சதுர மூலாதா ரங்கள் அகமார்க்க மறிந்தவற்றி னரும்பொருள்க ளுணர்ந்தங் கணைந்துபோய் மேலேறி யலர்மதிமண் டலத்தின் முக மார்க்க வமுதுடல முட்டத் தேக்கி முழுச்சோதி நினைந்திருத்தன் முதலாக வினைகள் உகமார்க்க வட்டாங்க யோக முற்றும் உழத்தலுழந் தவர்சிவன்ற னுருவத்தைப் பெறுவர்" என்னும் சிவஞான சித்திததிருவிருத்தத்தால் அறிக. (42) முக்க ணாயகன் பொருட்டென வேள்விகள் முடித்துத் தொக்க வேதிய ரிவர்புனற் சாலையித் தொடக்கத் தக்க பேரறம் புகழ்பயன் றமைநன்கு மதிக்கும் பொக்க மாறிய நிராசையாற் புரிந்தவ ரிவர்காண். (இ - ள்.) முக்கண் நாயகன் பொருட்டு என - மூன்று கண்களை யுடைய இறைவன் பொருட்டாக, வேள்விகள் முடித்துத் தொக்க வேதியர் இவர் - வேள்விகளைச் செய்து சிவபதம் அடைந்த அந்தணர்களிவராவர்; புனற்சாலை இத்தொடக்கம் தக்கபேர் அறம் - நீர்ச் சாலை வைத்தலாகிய இது முதலான தகுந்த பெரிய அறங்களை, புகழ் பயன் தமை நன்கு மதிக்கும் பொக்கம் மாறிய நிராசையால் - புகழையும் பயனையும் நன்கு கருதிச் செய்யும் பொய் நீங்கிய நிராசையுடன், புரிந்தவர் இவர்காண் - செய்தவர் இவர். புனற்சாலை - தண்ணீர்ப்பந்தர். புகழ் பயன் கருதிச் செய்யும் அறம் உண்மை யறம் அன்றென்பார் 'புகழ்பயன்றமை நன்கு மதிக்கும் பொக்க மாறிய' என்றார். மேல் மூன்று செய்யுளிலும், சிவாகமங் கூறும் நான்கு நெறிகளுள் முன் மூன்று நெறியினின்றும் பதமுத்திகள் எய்தினோர்களைக் கூறி, இச்செய்யுள் முதலியவற்றாற் பிறவாறு சிவனுல கடைந்தவர்களைக் கூறுகின்றார். மறைநூல் கூறும் வேள்விகளைச் சிவன் பொருட்டுச் செய்த அந்தணர் களும், அறநூல் கூறும் பொது வறங்களைப் பயன் கருதாது செய்தவர்களும் சிவனுலகில் வாழ்தல் இதிற் கூறப்பட்டது. (43) மறையி னாற்றினாற் றந்திர மரபினான் மெய்யில் நிறையு நீற்றினர் நிராமய னிருத்தனைந் தெழுத்தும் அறையு நாவினர் பத்தரா யரன்புகழ் கேட்கும் முறையி னாலிவர் வினைவலி முருக்கினார் கண்டாய். (இ - ள்.) மறையின் ஆற்றினால் - வேத நெறியினாலும், தந்திர மரபினால் - ஆன்ம நெறியினாலும், மெய்யில் நிறையும் நீற்றினர் - உடலில் நிறைந்த திருநீற்றினையுடையவரும், நிராமயன் நிருத்தன் ஐந்து எழுத்தும் அறையும் நாவினர் - நோயற்றவனாகிய கூத்தப்பிரானது திருவைந்தெழுத்தையும் உச்சரிக்கின்ற நாவினையுடையாருமாய், பத்தராய் அரன் புகழ் கேட்கும் முறையினால் - அன்பராகி இறைவன் புகழைக் கேட்கின்ற முறைமையினால், வினைவலி முருக்கினார் இவர் - வினையின் வன்மையைக் கெடுத்தவர் இவர். வேத நெறியிலும் சிவாகமத்துறையில் நின்று சிவபிரானை வழிபட்டுப் பேறெய்தினோர் இதிற் கூறப்பட்டனர். (44) மறைக ளின்சத வுருத்திர மந்திர நவின்றோர் நிறைகொள் கண்டிகை நீறணி நீரரியா ரேனுங் குறிகு ணங்குலன் குறித்திடா தன்பரைச் சிவனென் றறியு மன்பினாற் பிறவிவே ரறுத்தவ ரிவர்காண். (இ - ள்.) மறைகளின் சத உருத்திர மந்திரம் நவின்றோர்- வேதங்களிலுள்ள சதவுருத்திர மந்திரத்தைக் கூறினோரும், நிறை கொள் கண்டிகை நீறு அணி நீரர் - நிறைந்த உருத்திராக்க மாலையும் திருநீறும் அணிந்த தன்மையையுடையாரும், யாரேனும் - யாவராயினும், குறிகுணம் குலன் குறித்திடாது - அவர் பெயரையுங் குணத்தையுங் குலத்தையுங் கருதாது, அன்பரைச் சிவன் என்று அறியும் அன்பினால் - அடியார்களைச் சிவபிரானே என்று அறிகின்ற அன்பினாலே, பிறவிவேர் அறுத்தவர் இவர் காண்- பிறவியின் மூலத்தை அறுத்தவர் இவர். வேத புருடனுக்கு உருத்திரம் கண்ணும், அதனுள்ளிருக்கும் திருவைந்தெழுத்துக் கண்மணியுமாம் என்று பெரியோர் கூறுவர். கண்டிகையும் நீறு மணிந்தார் எவராயினும் அவரை இன்னவாறு வழிபட வேண்டுமென்பதனை, " எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமு கண்டா லுள்கி உவராதே யவரவரைக் கண்ட போதங் குகந்தடிமைத் திறம்பேணி யுவந்து போற்றி இவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி யிரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே" என்னும் தேவாரத்தால் அறிக. (45) ஆனஞ் சாடிய பரஞ்சுட ரிறைசிவ ஞான தானஞ் செய்தவர் தருப்பணஞ் செய்தவர் சாம கானஞ் செய்தவற் காலயங் கண்டுதா பித்தோர் ஊனஞ் சேர்பிறப் பறுத்துவா ழுத்தம ரிவர்காண். (இ - ள்.) ஆன் அஞ்சு ஆடிய பரஞ்சுடர் இறை - பஞ்ச கவ்வியமாடிய பரஞ்சோதியாகிய இறைவனுடைய, சிவஞான தானம் செய்தவர் -சிவஞானத்தைத் தானஞ் செய்தவரும், தருப் பணம் செய்தவர் - தருப்பணஞ் செய்தவரும், சாமகானம் செய்வதற்கு- சாமகானம் பாடும் சிவபெருமானுக்கு, ஆலயம் கண்டு தாபித்தோர்- திருக்கோயில் எடுத்துப் பிரதிட்டை செய்தவருமாய், ஊனம் சேர் பிறப்பு அறுத்து வாழ் உத்தமர் இவர் காண் - குற்றம் பொருந்திய பிறப்பினைப் போக்கி வாழும் உத்தமர் இவர். சிவஞான தானமாவது அபர ஞானமாகிய மெய்ந் நூல்களை ஈதலும், அவற்றின் பொருளைப் பக்குவமுடையார்க்கு அறிவுறுத்தலும் முதலியன செய்தல். தருப்பணம் - சிவனைக் கருதி மந்திர நீர் இறைத்தல். (46) சிவனை யர்ச்சனை செய்பவர்க் கிசைவன செய்தோர் அவனெ னக்குறித் தடியரைப் பூசைசெய் தாறு சுவையு வின்னமு தருத்தினோர் தொண்டர்தம் பணியே தவமெ னப்புரிந் துயர்ச்சியைச் சார்ந்தவ ரிவர்காண். (இ - ள்.) சிவனை அர்ச்சனை செய்பவர்க்கு - சிவபெருமானைப் பூசிப்பவருக்கு, இசைவன செய்வோர் - பொருந்தும் காரியங்களைச் செய்தவரும், அடியரை அவன் எனக் குறித்து - அடியார்களை அச்சிவ பெருமானே எனக் கருதி. பூசை செய்து - பூசித்து, ஆறு சுவைய இன் அமுது அருத்தினோர் - அறுவகைச் சுவையமைந்த இனிய உணவினை உண்பித்தவருமாய், தொண்டர்தம் பணியே தவம் எனப் புரிந்து - அடியார் பணியைச் செய்தலே தவமென்று கருதிச் செய்து, உயர்ச்சியைச் சார்ந்தவர் இவர்காண் - மேன்மையை அடைந்தவர் இவர். இசைவன - பொருந்திய உபகரணங்களையளித்தலும் பணி செய்தலுமாம். (47) ஆதி சுந்தரக் கடவுளுக் காலயம் பிறவும் நீதி யாலருச் சனைபிற பணிகளு நிரப்பிப் பூதி சாதன வழிநிலம் புரந்திவ ணடைந்த கோதி லாதநின் குடிவழிக் கொற்றவ ரிவர்காண். (இ - ள்.) ஆதி சுந்தரக் கடவுளுக்கு - முதல்வராகிய சோம சுந்தரக் கடவுளுக்கு, ஆலயம் பிறவும் - திருக்கோயிலும் மற்றுள்ளனவும், நீதியால் அருச்சனை பிற பணிகளும் நிரப்பி - விதிப்படி அருச்சனையும் பிற திருப்பணிகளும் குறைவறச் செய்து, பூதி சாதன வழி - திருநீறு முதலிய சிவசாதன நெறியினால், நிலம் புரந்து - புவியினைக் காத்து, இவண் அடைந்த - இங்கு வந்த, கோது இலாத - குற்றமில்லாத, நின் குடிவழிக் கொற்றவர் இவர் காண் - நின் மரபிற்றோன்றிய மன்னவர் இவர். ஆலயமும் பிறவும் அமைத்து என ஒரு சொல் வருவித் துரைத்தலுமாம. (48) என்று வேத்திரங் கொடுகுறித் தெம்மிறை நந்தி கொன்றை வேணியா னடியர்தங் குழாத்தினைத் தேற்றி நின்று வீழ்ந்துவீழ்ந் தஞ்சலி முகிழ்த்திட நெறியே சென்று வானவர் நாயகன் றிருமுன்பு விடுத்தான். (இ - ள்.) என்று - என்று கூறி, வேத்திரம் கொடு குறித்து- பிரம்பினாற் சுட்டிக் காட்டி, எம் இறை நந்தி - எம் தலைவனாகிய திரு நந்தி தேவன், கொன்றை வேணியன் - கொன்றை மாலையையணிந்த முடியையுடைய இறைவனது, அடியர்தம் குழாத்தினைத் தேற்றி - அடியார் கூட்டத்தினைத் தெரிவித்து, நெறியே - முறைப்படியே, நின்று வீழ்ந்து வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்திட - (பாண்டியன்) ஒவ்வோரிடத்தினும் நின்று பல முறை விழுந்து வணங்கிக் கைகூப்ப, சென்று - (அவனைக் கொண்டு) சென்று, வானவர் நாயகன் திருமுன்பு விடுத்தான் - தேவர்கள் தலைவனாகிய சிவபெருமான் திருமுன் விடுத்தனன். பிரமன் முதலாகப் பாண்டியர் ஈறாக இதுகாறும் கூறப் பெற்றோரை அடியர் தங்குழாம் என்றார். நந்தி குறித்துத் தேற்றிச் சென்று விடுத்தான் என வினைமுடிக்க. (49) மறைக ளாகமம் வடிவெடுத் திருபுடை வாழ்த்த நறைகொள் யாழ்தழீஇத் தும்புரு நாரதர் பாட அறைகொள் வண்டிமிர் கொம்பரி னரம்பைய ராடக் குறைகொள் வானவர் பதங்கிடை யாதிறை கொள்ள. (இ - ள்.) மறைகள் ஆகமம் வடிவு எடுத்து - வேதங்களும் ஆகமங்களும் உருவங்கொண்டு, இருபுடை வாழ்த்த - இரண்டு பக்கங்களிலும் நின்று வாழ்த்தவும், நறைகொள் யாழ்தழீஇ - இனிய இசையமைந்த யாழினைத் தழுவி, தும்புரு நாரதர் பாட - தும்புருவும் நாரதரும் நின்று பாடவும், அறைகொள் வண்டு இமிர் கொம்பரின் - இசை பாடும் வண்டுகள் ஒலிக்கும் பூங்கொம்பு போல; அரம்பையர் ஆட - தேவ மகளிர் ஆடவும், குறை கொள் வானவர் பதம் கிடையாது இறை கொள்ள - குறையிரக்குந் தேவர்கள் காண்டற்குரிய செவ்வி பெறாது காத்திருக்கவும். நறை - தேன்; தேன் போலும் இன்னிசைக் காயிற்று. தழீஇ : சொல்லிசை யளபெடை. அறை - பாடுதல் : முதனிலைத் தொழிற் பெயர். இறை கொள்ள - தங்க; ஒரு சொல். (50) மதங்க விழ்க்குமால் வரைமுக மைந்தனுஞ் சூரன் கதங்க விழ்த்தவேற் கந்தனுங் கருதலன் வேள்வி விதங்க விழ்த்தவாள் வீரனும் வெயின்முடித் தார்தேன் பதங்க விழ்ப்பவீழ்ந் தேயின பணிவழி நிற்ப. (இ - ள்.) மதம் கவிழ்க்கும் மால்வரை முகம் மைந்தனும் - மதத்தைக் கொட்டும் பெரிய மலை போன்ற யானையின் முகத்தையுடைய மூத்த பிள்ளையாரும், சூரன் கவிழ்த்த வேல் கந்தனும் - சூரபன்மனது சினத்தை அறக்கெடுத்த வேற்படையேந்திய முருகக் கடவுளும், கருதலன் வேள்வி விதம் கவிழ்த்த வாள் வீரனும் - பகைவனாகிய தக்கன் வேள்வி வகையினை அழித்த வாட்படையேந்திய வீரபத்திரக் கடவுளும், வெயில் முடித்தார் - ஒளி யினையுடைய முடியிலணிந்த மாலைகள், பதம் தேன் கவிழ்ப்ப - செவ்வியுள்ள தேனைச் சிந்தும்படி, வீழ்ந்து ஏயின பணிவழி நிற்ப - வீழ்ந்து வணங்கி ஏவின பணியின் வழியே நிற்கவும். மதங்கவிழ்க்கும் என்ற அடையால் வரை யானையாயிற்று. கவிழ்த்த வேல் என்க. பதம் - செவ்வி. ஏயின - ஏவின. (51) தூங்கு தானையை யொதுக்கிவாய் துணைக்கரம் பொத்தி ஓங்கு மாலயன் றங்குறை யொதுங்கிநின் றுரைப்ப வாங்கு வான்சிலை யிந்திரன் முதற்றிசை வாணர் தாங்க டாம்புரி காரியக் குறைநின்று சாற்ற. (இ - ள்.) தூங்கு தானையை ஒதுக்கி - தொங்குகின்ற முன்னாடையை ஒதுக்கி, வாய் துணைக்கரம் பொத்தி - வாயினை இரண்டு கைகளாலும் பொத்தி, ஒதுங்கி நின்று - ஒரு புறமாக ஒதுங்கி நின்று, ஓங்கும் மால் அயன் தம் குறை உரைப்ப - சிறந்த திருமாலும் அயனும் தங்கள் குறையினைக் கூறவும், வாங்குவான் நிலை இந்திரன் முதல் திசை வாணர் - வளைந்த வானவில்லை யுடைய இந்திரன் முதலிய திசைக் காவலர்கள், நின்று - ஒரு புறமாக நின்று, தாங்கள் புரி காரிய குறை சாற்ற - தாங்கள் புரிந்து வரும் காரியங்களின் குறைகளைக் கூறவும். மாலயன் ஒதுக்கிப் பொத்தி ஒதுங்கி நின்று குறை உரைப்ப என்க. தாம் : அசை. (52) எழுவி னோடுதண் டேந்திவாய் மென்றெயி றதுக்கிக் குழுமு பாரிடத் தலைவருங் கோடிகூற் றொதுங்கி விழும மூழ்கிமெய் பனித்திட விதிர்க்குமுக் குடுமிக் கழுமு ளேந்திய கணத்தவர் கடைதொறுங் காப்ப. (இ - ள்.) எழுவினோடு தண்டு ஏந்தி - வளைதடியையும் தண்டத்தையும் ஏந்தி, வாய் மென்று எயிறு அதுக்கி - வாயினை மென்று பற்களை அதுக்கி, குழுமு பாரிடத் தலைவரும் - கூடிய பூதகணத் தலைவரும், கோடி கூற்று ஒதுங்கி - அளவிறந்த கூற்றுவர்கள் ஒதுங்கி, விழுமம் மூழ்கி மெய் பனித்திட - துன்பத்துள் முழுகி உடல் நடுங்க, விதிர்க்கும் - அசைக்கின்ற, முக்குடுமிக் கழுமுள் ஏந்திய கணத்தவர் - மூன்று சிகையினையுடைய சூலப்படை ஏந்திய சிவகணத் தலைவர்களும், கடைதொறும் காப்ப - வாயில்தோறும் காவல் பூண்டு நிற்கவும். பாரிடம் - பூதகணம். கணத்தவரும் என எண்ணும்மை விரிக்க. (53) சித்தர் வானவர் தானவர் சாரணர் திணிதோள் வைத்த யாழினர் கின்னரர் மாதவ ரியக்கர் பைத்த பாரிடர் காருடர் பாதல வாணர் சுத்த யோகியர் முதற்கணத் தொகையெலாம் பரவ. (இ - ள்.) சித்தர் வானவர் தானவர் சாரணர் - சித்தரும் வானவரும் அவுணரும் சாரணரும், திணிதோள் வைத்த யாழினர்- வலிய தோளின்கண் வைத்த யாழினையுடைய விஞ்சையரும், கின்னரர் மாதவர் இயக்கர் - கின்னரரும் மாதவரும் இயக்கரும், பைத்த பாரிடர் காருடர் - பரவிய பூத கணத்தலைவரும் கருடரும், பாதல வாணர் - நாகரும், சுத்த யோகியர் முதல் கணத் தொகை எலாம் பரவ - தூய சிவயோகியரும் முதலாகிய பல கணங்களும் துதிக்கவும். பைத்த - பரந்த என்னும் பொருட்டு. (54) இனிவ ரும்பிறப் பறுத்தெமைக் காத்தியா லெனத்தங் கனிவ ரும்பிய வன்பெழு கருணையா ரமுதைப் பனிவ ருந்தடங் கண்களாற் பருகிமெய் பனிப்ப முனிவர் சங்கர சிவசிவ வெனமுறை முழங்க. (இ - ள்.) இனி வரும் பிறப்பு அறுத்து - மேல் வரும் பிறப்பினை வேரறுத்து, எமைக் காத்தி என - எங்களைக் காக்கக் கடவை என்று வேண்டி, தம் கனிவு அரும்பிய அன்பு எழு கருணை ஆர் அமுதை - தங்கள் கனிவு தோன்றிய அன்பின்கண் விளைந்த அருள் நிறைந்த அமுதினை, பனி வரும் தடம் கண்களால் பருகி - ஆனந்த நீர்த்துளி வருகின்ற பெரிய கண்களாகிய வாயாற் பருகி, மெய் பனிப்ப - உடல் நடுங்க, முனிவர் சங்கர சிவ சிவ என முறை முழங்க - முனிவர்கள் சங்கர சிவசிவ என்று முறையே முழங்கவும். அன்பெழு கருணை யாரமுது என்ற கருத்தினை, " அம்மையே யப்பா வொப்பிலா மணியே அன்பினில் விளைந்த வாரமுதே" என்னும் திருவாசகத்திற் காண்க. ஆல் : அசை. (55) வரந்த வாதன யாவர்க்கும் வரன்முறை வழங்கி முருந்த வாநகை1 மலைக்கொடி முகிழ்நகை யரும்பத் திருந்த வாயிரங் கதிர்விடு சிங்கமெல் லணைமேல் இருந்த நாயக னிருக்கைகண் டிறைஞ்சினா னிறைவன். (இ - ள்.) யாவர்க்கும் வரன் முறை - அனைவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப, தவாதன வரம் வழங்கி - கெடாதனவாகிய வரங்களை அருளிச் செய்து, முருந்து அவாம் நகை மலைக்கொடி- மயிலிறகின் அடியும் விரும்பும் பல் வரிசைகளையுடைய மலை வல்லியாகிய உமையம்மையார், முகிழ் நகை அரும்ப - புன்னகை செய்ய, திருந்த ஆயிரம் கதிர் விடு சிங்க மெல் அணைமேல் - திருத்தமாக அளவிறந்த ஒளி விடுகின்ற மெல்லிய சிம்மாதனத்தின்மேல், இருந்த நாயகன் இருக்கை கண்டு - வீற்றிருந்த இறைவனுடைய இருப்பினைத் தரிசித்து, இறைவன் இறைஞ்சினான் - வரகுண வேந்தன் வணங்கினான். முருந்த வாணகை என்னும் பாடத்திற்கு முருந்து போலும் ஒள்ளிய நகை என்றுரைத்துக் கொள்க; இதற்கு அ அசை. ஆயிரஞ் சிங்கஞ் சுமந்த அணையென்றுமாம். (56) உரைக ளுந்தடு மாறமெய் யுரோமமுஞ் சிலிர்ப்பக் கரையி றந்தவின் னருட்பெருங் கடலிலன் பென்னுந் திரையி றந்தவா றீர்த்திட மிதந்துபோய்ச் செப்பின் வரையி றந்தவா னந்தவா ரமுதைவாய் மடுத்தான். (இ - ள்.) உரைகளும் தடுமாற - சொற்கள் குழற, மெய் உரோமமும் சிலிர்ப்ப - உடல் புளகம் போர்ப்ப, கரை இறந்த இன் அருள் பெருங் கடலில் - எல்லையில்லாத இனிய பெரிய அருட்கடலின் கண், அன்பு என்னும் திரை இறந்த ஆறு ஈர்த்திட- அன்பாகிய அலையில்லாத ஆறு இழுத்துச் செல்ல, மிதந்து போய் - அதில் மிதந்து சென்று, செப்பின் வரை இறந்த - சொல்லின் எல்லையைக் கடந்த, ஆனந்த ஆர் அமுதை வாய் மடுத்தான் - பேரின்பமாகிய அரிய அமிழ்தத்தை உண்டான். உரை தடுமாறல் முதலியன அன்பின் மிகுதியால் விளைவன. மணிவாசகரும் 'அன்பெனும் ஆறு கரையது புரள' என அன்பை ஆறாகக் கூறினார். கலக்கமற்ற பேரன்பானது இழுத்துச் செல்ல வருத்தமின்றிச் சென்று இறைவனைக் கண்டு சிவானந்தத்திற்றிளைத்தமையை இங்ஙனம் உருவகித்தார். கடலென்றதற்கேற்ப அமுதென்றார்; இதன் நயம் பாராட்டற்பாலது. (57) தன்பு லன்களுங் கரணமுந் தன்னவே யாக்கி அன்பு டம்புகொண் டவனெதி ரருட்சிவ லோகம் பின்பு பண்டுபோன் மதுரையாப் பிராட்டியுந் தானும் முன்பி ருந்தவா றிருந்தனன் சுந்தர மூர்த்தி. (இ - ள்.) தன் புலன்களும் கரணமும் தன்னவே ஆக்கி - தன் இந்திரியங்களையும் அந்தக் கரணங்களையுந் தன்னுடையனவாகவே செய்து, அன்பு உடம்பு கொண்டவன் எதிர் - அன்பே வடிவமாகக் கொண்டு நின்ற வரகுண பாண்டியனெதிரே, அருள் சிவலோகம் - கருணை வடிவமாகிய சிவலோகமானது, பின்பு பண்டு போல் மதுரையா - பின் முன்பு போல மதுரையாக, சுந்தர மூர்த்தி - சோம சுந்தரக் கடவுள், பிராட்டியும் தானும் - உமையம்மையும் தானும், முன்பு இருந்தவாறு இருந்தனன் - முன்பு இருந்தது போலவே இருந்தருளினன். தன்னவாக்குதல் - விடயங்களிற் செல்லாது தனக்கு அடங்கியிருக்கச் செய்தல். ஆக என்பது ஈறு தொக்கது. பிராட்டியும் தானும் இருந்தனன் என்றது வழுவமைதி; " தானுந்தன் றையலும் தாழ்சடையோ னாண்டிலனேல்" என்புழிப் போல. (58) வேந்தர் சேகரன் வரகுணன் விண்ணிழி கோயில் ஏந்தல் சேவடி யிறைஞ்சிநின் றிறையருட் பெருமை ஆய்ந்த வாவுதன் னகம்புக வின்பமோ டன்பு தோய்ந்து தாரைநீர் துளும்பநாக் குழறிடத் துதிப்பான். (இ - ள்.) வேந்தர் சேகரன் வரகுணன் - மன்னர்கட்கு ஒரு முடி போல்பவனாகிய வரகுண பாண்டியன், விண் இழி கோயில் ஏந்தல் சேவடி இறைஞ்சி - வானினின்றும் இறங்கிய இந்திர விமானத்தின்கண் வீற்றிருக்கும் சோம சுந்தரக் கடவுளின் சிவந்த திருவடிகளைப் பணிந்து, நின்று - திருமுன் நின்று, இறை அருள் பெருமை - இறைவனது திருவருட் பெருக்கம், ஆய்ந்து அவாவு தன் அகம்புக - ஆராய்ந்து விரும்பும் தனது உள்ளத்திற் புகுந்த வளவில், இன்பமோடு அன்பு தோய்ந்து - பேரின்பத்திலும் அன்பினும் அழுந்தி, தாரை நீர் துளும்ப - கண்களில் ஆனந்த நீர் ததும்பவும், நாக்குழறிட - நாவானது குழறவும், துதிப்பான் - பரவுவானாயினான். அவன் கண்ட காட்சியும் எய்திய இன்பமும் கனவுபோல் உள்ளத்திற்றோன்ற அதனை ஆராய்ந்தவிடத்து இறைவனது திருவருட் பெருமை புலனாயினமையின் துதிப்பானாயினான் என்க. (59) [கொச்சகக் கலிப்பா] நாயினே னென்னை1 நடுக்கும் பழியகற்றித் தாயினே ராகித் தலையளித்தாய் தாள்சரணஞ் சேயினேன் காணச் சிவலோகங் காட்டிப்பின் கோயினேர் நின்றவருட் குன்றேநின் றாள்சரணம். (இ - ள்.) நாயினேன் என்னை - நாய் போன்ற அடியேனை, நடுக்கும் பழி அகற்றி - வருத்துகின்ற கொலைப் பாவத்தினின்றும் நீக்கி, தாயின் நேராகி - தாயே போன்று, தலையளித்தாய் தாள் சரணம் - தலையளி செய்து ஆண்டவனே நின் திருவடிகட்கு வணக்கம்; சேயினேன் காண - நின் திருவருளுக்குச் சேய்மையிலுள்ள யானுங் கண்டுகளிக்க, சிவலோகங் காட்டி - சிவபுரத்தைக் காண்பித்தருளி, பின் - பின்னர், கோயில் நேர் நின்ற - திருக்கோயிலில் என்னெதிரே நின்றருளிய, அருள் குன்றே - கருணை மலையே. நின்தாள் சரணம் - நின் திருவடிகளுக்கு வணக்கம். " பானினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்து" என்ற திருவாசகம் இங்கே சிந்திக்கற் பாலது. சேய்மை - தூரம். (60) மாழாந்து செய்யும் வினைவழிபோய் வன்னரகிற் றாழா தடியனேற் கன்புந் தாய் தாள்சரணம் ஏழாகி நான்கு வகையா யெழுபிறப்பும் பாழாக வென்னைப் பணிகொண்டாய் தாள்சரணம். (இ - ள்.) மாழாந்து செய்யும் வினை வழிபோய் - மயங்கிச் செய்கின்ற வினையின் வழியே சென்று, வல் நரகில் தாழாது - கொடிய நரகத்தில் அழுந்தாத வண்ணம், அடியனேற்கு அன்பு தந்தாய் - அடியேனுக்கு அன்பினையளித்தவனே, தாள் சரணம்- நின் திருவடிகளுக்கு வணக்கம்; ஏழு ஆகி நான்கு வகையாய் எழு பிறப்பும் பாழாக - ஏழு வகைப்பட்டு நால்வகைத் தோற்றமாக வாரா நின்ற பிறவிகள் அனைத்தும் பாழ்பட, என்னைப் பணி கொண்டாய் தாள் சரணம் - அடியேனை ஏவல் கொண்டவனே நின் திருவடிகட்கு வணக்கம். ஏழு - தேவர், மக்கள், விலங்கு, புள், ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் என்பன. நான்கு வகை - அண்டசம், சுவேதசம், உற்பிச்சம் சராயுசம் என்பன. எழு - எழுகின்ற; உண்டாகின்ற. (61) வெங்கட் பழியின் வினையேனை வேறாக்கித் திங்கட் குலக்களங்கந் தீர்த்தாய்நின் றாள்சரணம் அங்கட் சிவபுரமுண் டன்புடையார்க் கென்பதையின் றெங்கட்குக் காட்டி யிசைவித்தாய் தாள்சரணம். (இ - ள்.) வினையேனை - தீவினையுடைய என்னை, வெங்கண் பழியின் வேறு ஆக்கி - கொடிய பழியினின்றும் வேறுபடுத்தி, திங்கள் குலக் களங்கம் தீர்த்தாய் - சந்திர குலத்திற்கு வந்த மறுவைத் தொலைத்தவனே, நின் தாள் சரணம் - நின் திருவடிகளுக்கு வணக்கம்; அன்பு உடையார்க்கு அங்கண் சிவபுரம் உண்டு என்பதை - அன்புடையார்களுக்கு அழகிய இடத்தையுடைய சிவலோகம் உண்டு என்று நூல் கூறுவதை, இன்று - இப்பொழுது, எங்கட்குக் காட்டி இசைவித்தாய் - அடியேங்களுக்குக் காண்பித்து இசையச் செய்தவனே, தாள் சரணம் - நின் திருவடிகட்கு வணக்கம். தானுற்ற பழியால் தனது குலத்திற்கே களங்கமுண்டாகுமெனக் கருதினானாகலின் 'திங்கட்குலக் களங்கம் தீர்த்தாய்' என்றான். அங்கண் என்பதற்கு அவ்விடம் என்றும், மறுமை என்றும் உரைத்தலுமாம். ஆகம வளவையால் அறியப்படுவதைக் காட்சியளவையானும் அறியச் செய்தாய் என்றனனென்க. (62) [கலி நிலைத்துறை] என்ன வேத்தியின் னருள்முகந் தீறிலா வன்பாற் பின்னர் வேறுபல் பூசையும் பிறக்குவித் திருந்தான் மன்ன ரேறடை யார்க்கொரு மடங்கலே றடல்வேற் றென்ன ரேறெனத் தோன்றிய வரகுண தேவன். (இ - ள்.) என்ன ஏத்தி - என்று துதித்து, மன்னர் ஏறு - அரசர்களுள் ஆண் சிங்கம் போன்றவன், அடையார்க்கு ஒரு மடங்கல் ஏறு - பகைவர்களுக்கு ஓர் இடியேறு போன்றவன், அடல்வேல் தென்னர் ஏறு - வெற்றி பொருந்திய வேற்படையேந்திய பாண்டியர்களுள் ஏறு போன்றவன், என தோன்றிய வரகுணதேவன்- என்னும்படி பிறந்த வரகுண தேவனென்னும் பாண்டியன், இன் அருள் முகந்து - இனிய திருவருளை முகந்துண்டு, ஈறு இலா அன்பால் - அழிவில்லாத அன்பினால், பின்னர் வேறு பல் பூசையும் பிறக்குவித்து இருந்தான் - பின் பல வேறு வகைப்பட்ட பூசனைகளையும் விளங்கச் செய்வித்து இருந்தனன். பிறங்குவித்து என்பது வலித்தலாயிற்று. மடங்கல் - இடி. தென்னர் ஏறு - பாண்டியருட் சிறந்தவன். (63) என்ற தென்மலை முனிவனை யிருடிக ணோக்கி அன்று வாசவன் பழிகரி சாபமந் தணனைக் கொன்று தாயொடுங் கூடிய கொடுவினை முதலாத் துன்று பாவமு மதுரையிற் றொலைத்தன னன்றோ. (இ - ள்.) என்ற - என்று கூறியருளிய, தென்மலை முனிவனை- பொதியின் மலையையுடைய அகத்திய முனிவனை, இருடிகள் நோக்கி - முனிவர்கள் பார்த்து, அன்று - முன்பு, வாசவன் பழி - இந்திரன் பழியையும், கரிசாபம் - வெள்ளை யானை சாபத்தையும், அந்தணனைக் கொன்று தாயொடுங் கூடிய கொடுவினை முதலாத் துன்று பாவமும் - தந்தையாகிய அந்தணனைக் கொன்று தாயுடன் கலவி செய்த மாபாதக முதலாக மிக்க பாவங்களையும், மதுரையில் தொலைத்தனன் அன்றோ - மதுரையிலேயே போக்கியருளினான் அல்லவா. வேறிடங்களிற் செய்த பாவ முதலாயினவும் முன்பு இம்மதுரையிலே போக்கப்பட்டன என்றவாறு. தேவர், மனிதர், விலங்கு என்னும் எவ்வுயிரின் பாவத்தையும் இந்நகரிற் போக்கினன் என்பதற்கு வாசவன், கரி, மாபாதகன் வரலாறுகள் சுட்டப் பெற்றன. இத் திருவிளையாடற் சரிதம் அகத்தியரால் முனிவர்கட்குக் கூறப்பட்டதென்பதனைப் புராண வரலாற்றுட் காண்க. (64) பரம னெண்குணன் பசுபதி வரகுணற் பற்றும் பிரம வன்பழி யிடைமரு திடைவிட்டுப் பெயர வரம ளித்தவா றென்னைகொல் வள்ளலே யிதனைத் திரமு றப்புக லெமக்கென முனிவர்கோன் செப்பும். (இ - ள்.) பரமன் எண்குணன் பசுபதி - (அங்ஙனந் தீர்த்தருளிய) பரமனும் எட்டுக் குணங்களையுடையவனும் பசுபதியுமாகிய சோம சுந்தரக் கடவுள், வரகுணன் பற்றும் பிரம வன்பழி - வரகுணனைப் பிடித்த கொடிய பிரமசாயை, இடைமருது இடைவிட்டுப் பெயர வரம் அளித்தவாறு என்னை கொல் - திருவிடை மருதூரின்கண் விட்டு நீங்குமாறு வரங் கொடுத்தது என்னையோ, வள்ளலே இதனைத் திரம் உற எமக்குப் புகல் என - வள்ளலே இச்செய்தியை எங்களுக்கு ஐயுறவு நீங்கக் கூறியருளுவாயாக என்று வேண்ட, முனிவர்கோன் செப்பும் - முனிவர் வேந்தனாகிய அகத்தியன் கூறியருளுவான். திரம் - உறுதி. கொல், அசை. (65) பூத நாயகன் சுந்தரன் புண்ணிய மூர்த்தி யாத லாலன்ன தலத்துறை யடியவ ரஞ்சிப் பாத கஞ்செயா தொழுகுறூஉம் படிநினைந் தினைய தீது றூஉம்பழி தனையிடை மருதினிற் றீர்த்தான். (இ - ள்.) பூதநாயகன் சுந்தரன் - பூதங்கட்கு இறைவனாகிய சோம சுந்தரக் கடவுள், புண்ணிய மூர்த்தி ஆதலால் - அறவடிவினன் ஆதலின், அன்னதலத்து உறை அடியவர் - அந்தப் பதியில் உறையும் அடியார்கள், அஞ்சி பாதகம் செய்யாது ஒழுகுறூஉம்படி நினைந்து - பயந்து பாவஞ் செய்யாது ஒழுகுமாறு திருவுளங்கொண்டு, இனைய தீது உறூஉம் பழிதனை - இந்தத் தீமை மிக்க பழியினை, இடைமருதினில் தீர்த்தான் - திருவிடைமருதூரில் தீர்த்தருளினான். பூதம் - ஆன்மா. அன்ன, இனைய என்பன சுட்டுத் திரிபுகள். அளபெடைகள் இன்னிசை நிறைக்க வந்தன. (66) என்ற கத்திய முனியிறை யிறைகொடுத் தியம்ப நன்றெ னச்சிரம் பணிந்து1மெய்ஞ் ஞானவா னந்தந் துன்றி நற்றவர் சுந்தரச் சோதிசே வடிக்கீழ் ஒன்று மற்புத வானந்த வுததியுட் குளித்தார்2. (இ - ள்.) என்று அகத்தியமுனி இறை - என்று அகத்தியனாகிய முனி மன்னன், இறை கொடுத்து இயம்ப - விடை கொடுத்தருள, நல்தவர் - நல்ல தவத்தினையுடைய முனிவர்கள், நன்று எனச் சிரம் பணிந்து - நன்று என்று சிரமசைத்து, மெய்ஞ்ஞானம் ஆனந்தம் துன்றி - உண்மையறி வானந்தத்தில் தோய்ந்து, சுந்தரச் சோதி சேவடிக் கீழ் ஒன்றும் - சோம சுந்தரக் கடவுளின் சிவந்த திருவடியின்கீழ்ப் பொருந்தும், அற்புத ஆனந்த உத்தியுள் குளித்தார் - அற்புதமாகிய பேரின்பக் கடலில் மூழ்கினார்கள். அகத்தியனாகிய முனியிறை என்க. இறை - விடை. மெய்ஞ் ஞானவானந்தம் - சச்சிதானந்தம். (67) [கொச்சகக் கலிப்பா] அன்னதனித் தொன்மதுரை யன்றுதொடுத் தின்றெல்லை தன்னனைய தாயகில தலங்கள்சிகா மணியாகிப் பொன்னகரின் வளஞ்சிறந்து பூவுலகிற் சிவலோகம் என்னவிசை படப்பொலிந்த தேழிரண்டு புவனத்தும். (இ - ள்.) அன்னதனி தொல் மதுரை - அந்த ஒப்பற்ற பழைய மதுரைப்பதி, அன்று தொடுத்து இன்று எல்லை - அன்று முதல் இன்று வரையும், தன் அனையதாய் - தனக்குத் தானே நிகரானதாய், அகில தலங்கள் சிகாமணியாகி - எல்லாத் தலங்களுக்கும் ஒரு முடி மணியாய், பொன் நகரின் வளம் சிறந்து - தேவ உலகத்தினும் வளம் மிக்கு, ஏழ் இரண்டு புவனத்தும் பூ உலகில் சிவலோகம் என்ன இசைபடப் பொலிந்தது - பதினான்கு உலகங்களினும் பூலோக சிவலோகமென்று கூறப் புகழுடன் விளங்கியது. வேறு ஒப்பாவ தில்லையென்பார் 'தன்னனையதாய்' என்றார். இதனால் மதுரைக்குப் பூலோக சிவலோகம் என்னும் பெயருண்டானமை கூறப்பட்டது. (68) ஆகச் செய்யுள் வரிசை 2030. நாற்பத்தொன்றாவது விறகுவிற்ற படலம் [அறுசீரடியாசிரிய விருத்தம்] நெடியவன் பிரமன் றேட நீண்டவன் றென்னற் கேழின் முடியதாஞ் சிவலோ கத்தைக் காட்டிய முறையீ தையன் படிமிசை நடந்து பாடிப் பாணன்றன் விறகா ளாகி அடிமையென் றடிமை கொண்ட வருட்டிற மெடுத்துச் சொல்வாம். (இ - ள்.) நெடியவன் பிரமன் தேட நீண்டவன் - திருமாலும் பிரமனுந் தேட (அவர்கட்குக் கிட்டாமல் ஒளிப்பிழம்பாய்) வளர்ந்த சோம சுந்தரக் கடவுள், தென்னற்கு - வரகுண பாண்டியனுக்கு, ஏழின் முடியதாம் சிவலோகத்தை - ஏழு உலகங்கட்கும் முடியாகவுள்ள சிவபுரத்தை, காட்டிய முறை ஈது - காட்டியருளிய திருவிளையாடல் இதுவாகும்; ஐயன் - (இனி) அவ் விறைவனே, படிமிசை விறகு ஆள் ஆகி நடந்து பாடி - புவியின் மேல் விறகு சுமந்து விற்கும் ஆளாகி நடந்து இசை பாடி, பாணன் தன் அடிமை என்று அடிமை கொண்ட - பாணபத்திரனுக்கு அடிமை என்று கூறி அவனை அடிமை கொண்டருளிய, அருள் திறம் எடுத்துச் சொல்வாம் - திருவருளின் திறத்தை எடுத்துக் கூறுவாம். ஏழு - ஏழுலகங்கள் : ஆகுபெயர். முடியது, அது: பகுதிப் பொருள் விகுதி. ஏழுலகங்களையும் அவற்றின் முடியாகச் சிவலோகம் விளங்குதலையும், " புவலோகங் கடந்துபோய்ப் புண்ணியருக் கெண்ணிறந்த போக மூட்டுஞ் சுவலோகங் கடந்துபோய் மகலோகஞ் சனலோகந் துறந்து மேலைத் தவலோகங் கடந்துபோய்ச் சத்தியலோ கங்கடந்து தண்டு ழாயோன் நவலோகங் கடந்துலக நாயகமாஞ் சிவலோக நண்ணி னாரே" என, மேல் மலயத்துவசனையழைத்த படலத்திற் கூறியிருப்பது காண்க. வானோர்க்கும் அரியனாம் இறைவன் அடியார்க்கு எளியனாயிருக்குந் தன்மை தோன்ற 'நெடியவன் பிரமன் றேட நீண்டவன்.......விறகாளாகி அடிமையென்று' என்றனர். நெடியவன் றேட நீண்டவன், அடிமையென்று அடிமை கொண்ட என்பவற்றின் நயம் ஓர்ந்துணர்க. தன: சாரியை. (1) மன்றலந் தெரியன் மார்பன் வரகுணன் செங்கோ லோச்சிப் பொன்றலங் காவ லானிற் பொலியுநா ளேம நாதன் என்றொரு விறல்யாழ்ப் பாணன் வடபுலத் திருந்தும் போந்து வென்றிகொள் விருதி னோடும் விஞ்சைசூழ் மதுரை சார்ந்தான். (இ - ள்.) மன்றல் அம் தெரியல் மார்பன் வரகுணன் - மணம் பொருந்திய அழகிய மாலையையணிந்த மார்பினையுடைய னாகிய வரகுண பாண்டியன், செங்கோல் ஓச்சி - செங்கோல் நடாத்தி, பொன்தலம் காவலானில் பொலியுநாள் - பொன்னுலகினைப் புரக்குந் தேவேந்திரனைப் போல விளங்கு நாளில், ஏமநாதன் என்று ஒரு விறல் யாழ்ப்பாணன் - ஏமநாதன் என்னும் ஒரு வெற்றியையுடைய யாழ்ப்பாணன். வடபுலத்திருந்தும் போந்து - வடநாட்டினின்றும் வந்து; வென்றி கொள் விருதினோடும் - வெற்றியினாற் கொள்ளப்பட்ட விருதுகளோடும், விஞ்சை சூழ் மதுரை சார்ந்தான் - கல்வி மிக்க மதுரையை அடைந்தான். யாழ்ப்பாணன் - யாழாற் பாடும் பாணன். முன் பலரை இசையில் வென்று விருதுகள் பெற்றவனென்பது. 'வென்றிகொள் விருதினோடும்' என்பதனாற் பெறப்பட்டது. விருதினோடும் போந்து மதுரை சார்ந்தான் என்க. (2) பூழியர் பெருமான் கோயில் புகுந்துவேத் தவையத் தெய்திச் சூழிமால் யானை யானைத் தொழுதுபல் புகழ்கொண் டாடி ஏழிசை மழலை வீணை யிடந்தழீஇச் சுருதி கூட்டி வாழியின் னிசைத்தேன் மன்ன னஞ்செவி வழியப் பெய்தான். (இ - ள்.) பூழியர் பெருமான் கோயில் புகுந்து - பாண்டியர் தலைவனாகிய வரகுண தேவன் மாளிகையிற் சென்று, வேத்து அவையத்து எய்தி - அரசவையை அடைந்து, சூழிமால் யானை யானைத் தொழுது - முகப் படாமணிந்த பெரிய யானைகளையுடைய வேந்தனை வணங்கி, பல்புகழ் கொண்டாடி - பல புகழ்களையும் பாராட்டி, ஏழ் இசை மழலை வீணை - ஏழு இசைகளையுடைய மழலை போலும் இனிமையைப் பயக்கும் யாழினை, இடம் தழீஇச் சுருதி கூட்டி - இடப்பக்கங் கொண்டு சுருதி கூட்டி, இன் இசைத்தேன் - இனிய இசையாகிய தேனை, மன்னன் அஞ்செவி வழியப் பெய்தான் - அரசனது அகஞ் செவி நிரம்பி வழியுமாறு சொரிந்தான். தழீஇ, சொல்லிசை யளபெடை. சுருதி கூட்டி - பண்ணமைத்து. வாழி, மங்கலப் பொருட்டாய அசைச்சொல். அஞ்செவி - அகஞ்செவி. (3) முகையுடைந் தவிழ்ந்த மாலை முடித்தலை துளக்கித் தூசு பகலவிர் மணிப்பூ ணல்கிப் பல்லுணாக் கருவி நல்கி அகன்மனை வேறு காட்டி யரசர்கோன் வரிசை செய்ய இகலறு களிப்பி னோடு மிசைவல்லா னில்லிற் புக்கான். (இ - ள்.) முகை உடைந்து அவிழ்ந்த மாலை முடித்தலை துளக்கி - அரும்பின் முறுக்குடைந்து விரிந்த மலராலாகிய மாலையையணிந்த முடியினையுடைய தலையை அசைத்து, தூசு- பல ஆடைகளையும், பகல் அவிர் மணிப்பூண் நல்கி - சூரியன் போல விளங்கும் மணிக்கலன்களையும் கொடுத்து, பல் உணாகருவி நல்கி - உணவுக்கு வேண்டிய பல பொருள்களையும் அளித்து, அகன்மனை வேறு காட்டி - அகன்ற இல்லம் வேறு காண்பித்து, அரசர் கோன் வரிசை செய்ய - மன்னர் மன்னனாகிய வரகுண பாண்டியன் சிறப்புச் செய்ய, இகல் அறு களிப்பினோடும் - பகையற்ற மகிழ்ச்சியோடும், இசை வல்லான் இல்லில் புக்கான்- இசையில் வல்ல ஏமநாதன் தனக்கு அமைத்த வீட்டிற் சென்றான். கருவி - உபகரணம். அரசன் வரிசை செய்தமையால் இங்கும் தன்னை வெல்லவல்லார் இலரெனக் கருதி மகிழ்ந்தனனென்பார் 'இகலறு களிப்பினோடும்' என்றார். (4) மீனவன் வரிசை பெற்ற செருக்கினும் விருதி னானும் மானமேல் கொண்டு தன்னோ டின்னிசை பாட வல்ல தானயாழ்ப் புலவர் வேறிங் கில்லெனத் தருக்குஞ் செய்தி கோனறிந் துழையர்க் கூவிப்பத்திரற் கொணர்தி ரென்றான். (இ - ள்.) மீனவன் வரிசை பெற்ற செருக்கினும் - பாண்டியன் செய்த வரிசைகளைப் பெற்ற செருக்கினாலும், விருதினாலும்- (முன் பல அரசர்களிடம் பெற்ற) விருதினாலும், மானம் மேல் கொண்டு - பெருமை மிக்கு, தன்னோடு இன் இசை பாடவல்ல - தன்னுடன் இனிய இசை பாடுவதற்கு வல்ல, தான யாழ்ப்புலவர்- தானமமைந்த யாழ்ப் புலவர், இங்கு வேறு இல் எனத் தருக்கும் செய்தி - இங்கு வேறு ஒருவருமில்லை என்று கருதி இறுமாக்குஞ் செய்தியை, கோன் அறிந்து - பாண்டி மன்னன் அறிந்து, உழையர்க் கூவி - ஏவலாளரை விளித்து, பத்திரன் கொணர்திர் என்றான் - நமது பாணபத்திரனை அழைத்து வாருங்கள் என்று ஏவினான். தானம் - இசை தோன்றுமிடம். தருக்கினான் அங்ஙனந் தருக்குஞ் செய்தியை என விரித்துரைக்க. உழையர் - ஒற்றர். (5) உழையரால் விடுக்கப் பட்ட பத்திர னுவரி வென்றோன் கழல்பணிந் தருகு நிற்பக் கௌரிய னோக்கிப் பாணி பழகிசை வல்லா னோடும் பாடுதி கொல்லோ வென்ன மழலையா ழிடந்தோ ளிட்ட பாணர்கோன் வணங்கிச் சொல்வான். (இ - ள்.) உழையரால் விடுக்கப்பட்ட பத்திரன் - அவ்வொற்றரால் அழைத்து வரப்பட்ட பாணபத்திரன், உவரி வென்றோன் கழல் பணிந்து - கடலை வென்ற பாண்டியன் அடிகளை வணங்கி, அருகு நிற்ப - பக்கத்தில் நிற்க, கௌரியன் நோக்கி - பாண்டியன் அவனைப் பார்த்து, பாணி பழகு இசை வல்லானோடும் - பாடுதல் பயின்ற இசை வல்லனாகிய ஏம நாதனோடும், பாடுதி கொல்லோ என்ன - நீ பாடவல்லையோ என்று வினவ, மழலை யாழ் இடந்தோள் இட்ட பாணர் கோன் வணங்கிச் சொல்வான் - இனிய யாழை இடது தோளிலிட்ட பாணர் தலைவன் வணங்கிக் கூறுவான். உழையர் அழைத்து வந்துவிட அங்ஙனம் விடுக்கப்பட்ட பத்திரன் என விரித்துக் கொள்க. உவரி - உவர்ப்புடையது; கடல். இ : வினை முதற் பொருள் விகுதி. முன்னோன் செயல் இவன் மீது ஏற்றிக் கூறப்பட்டது. பாணி - பாட்டு; தாளமுமாம். அடிப்பட்ட பயிற்சியுடையன் எனற்கு 'பாணி பழகிசை வல்லான்' என்றனன். கொல் : அசை. இடந்தோள்; மெலித்தல். (6) தென்னவர் பெரும யானுன் றிருவுள வலனுங் கூடன் முன்னவ னருளுங் கூட்டு முயற்சியான் முயன்று பாடி அன்னவன் விருது வாங்கி யவனைவீ றழிப்ப னென்றான் மன்னவ னாளைப்பாடு போகென வரைந்து சொன்னான். (இ - ள்.) தென்னவர் பெரும - பாண்டியர் பெருமானே, யான் - அடியேன், உன் திரு உள வலனும் - உனது திருவுள்ளத்தின் வலிமையும், கூடல் முன்னவன் அருளும் - கூடலில் வீற்றிருக்கும் முதல்வனாகிய சோம சுந்தரக் கடவுளின் திருவருளும், கூட்டும் முயற்சியால் முயன்று பாடி - கூட்டுகின்ற முயற்சியின் நெறியே சென்று பாடி, அன்னவன் விருது வாங்கி - அந்த ஏமநாதன் விருதினை வாங்கி, அவனை வீறு அழிப்பன் என்றான் - அவன் தருக்கினையும் ஒழிப்பேன் என்று கூறினான்; மன்னவன் - வேந்தன், நாளை பாடு போக என வரைந்து சொன்னான் - நாளை வந்து பாடுவாய் இன்று போகக் கடவை என்று வரையறுத்துச் சொன்னான். நின் திருவுள்ளத்தின் அன்பும் இறைவன் அருளும் அவனை வெல்லுதற்கேற்ற முயற்சித் திறனை எனக்களிப்பது ஒரு தலையாகலின் யானும் அவ்வாறு முயன்று பாடி வெல்வேன் என்றானென்க. தோற்றவன் விருதினையிழக்க வேண்டுமாகலின் 'விருது வாங்கி' என்றார். போகென, அகரந் தொகுத்தல். வரைந்து - காலம் வரையறுத்து. (7) இற்கண்ணே யிசைவல் லான்போ யிருந்துழி யனையான் பாங்கர்க் கற்கும்பாண் மக்கண் மல்ல லாவணங் கவலை மன்றம் பொற்குன்ற மனைய மாட மருகெங்கும் போகிப் போகிச் சொற்குன்றா வகையாற் பாடித் திரிந்தனர் வீறு தோன்ற. (இ - ள்.) இசை வல்லான் இல் கண் போய் இருந்துழி - இசையில் வல்ல பாணபத்திரன் தனது வீட்டின்கண் சென்று இருந்தபொழுது, அனையான் பாங்கர் பாண் கற்கும் மக்கள் - அவ்வேமநாதனிடம் இசை கற்கின்ற மாணவர்கள், மல்லல் ஆவணம் கவலை மன்றம் - வளமிக்க கடை வீதியும் கவர் வழியும் மன்றங்களும், பொன்குன்றம் அனைய மாடம் மறுகு - பொன்மலையை ஒத்த மாடங்களையுடைய வீதிகளும், எங்கும்- ஆகிய எவ்விடத்தும், போகிப் போகி - சென்று சென்று, சொல்குன்றா வகையால் பாடி - இசை நூலிற்குரிய சொற்கள் மாத்திரை குறையா வகை பாடி, வீறு தோன்றத் திரிந்தனர் - தமது இசை வன்மை புலப்பட உலாவினர். பாண் கற்கும் மக்கள் என்க. மக்கள் - மாணவர்; பாண் மக்கள் என்றுமாம். கவலை - கவர் வழி; இரண்டு தெருக்கூடுமிடம். மன்றம் - பலர் கூடும் இடம். தங்கள் ஆசிரியனுடைய பெருமை தோன்ற என்றுமாம். (8) இவ்விசை கேட்டு நன்றென் றதிசயித் திசைவல் லான்பால் வவ்விசை மைந்தர் பாடும் வண்ணமீ தென்னை கெட்டேன் அவ்விசை வல்லான் பாடு முறையெற்றோ வவனை நாளைச் செவ்விசை1பாடி வெல்வ தெவனெனத் திவவுக் கோலான். (இ - ள்.) திவவுக்கோலான் - நரம்பின் கட்டமைந்த வீணையில் வல்ல பாணபத்திரன், இவ்விசை கேட்டு - இந்த இசையினைக் கேட்டு, நன்று என்று அதிசயித்து - நல்லது என்று வியந்து, இசை வல்லான்பால் இசை வவ்வு - ஏமநாதனிடம் இசை கற்கின்ற, மைந்தர் பாடும் வண்ணம் ஈது - மாணவர் இசை பாடுந் தன்மை இது; என்னை - இவர்கள் இசை வன்மையிருந்தவாறென்னை, கெட்டேன்- ஆ கெட்டேன், அவ்விசை வல்லான் பாடும் முறை எற்றோ - அந்த ஏமநாதன் பாடும் முறைமை எத்தன்மைத்தோ, நாளை செவ்விசை பாடி அவனை வெல்வது எவன் என - நாளைச் செவ்விய இசை பாடி அவனை வெல்வது எங்ஙனமென்று கருதி. வவ்வுதல் - பற்றுதல்; கற்றுக் கொள்ளல். கெட்டேன், வியப்பிடைச் சொல். இவர் பாடுவது இவ்வாறாயின் அவன் பாடுவது எத்தன் மைத்தோ அவனை வெல்வதெங்ஙனமெனக் கவலை கொண்டனனென்க. தெவ்விசை பாடி என்னும் பாடத்திற்குப் பகையாக இசை பாடி என்றும், யாவரும் ஏற்றுக் கொள்ளும் இசை பாடி என்றும் பொருள் கொள்ளலாகும். " தெவுக் கொளற் பொருட்டே" என்பது தொல்காப்பியம். (9) மையணி மிடற்றி னானை மதுரைநா யகனை வந்தித் தையனே யடியேற் கின்று னருட்டுணை செய்யல் வேண்டும் மெய்யனே யென்று போற்றி வேண்டுகொண் டன்புதோய்ந்த பொய்யறு மனத்தா னில்லம் புக்கினி திருந்தா னிப்பால். (இ - ள்.) மை அணி மிடற்றினானை மதுரைநாயகனை வந்தித்து - கரிய அழகிய திருமிடற்றினையுடையனாகிய சோம சுந்தரக் கடவுளை வணங்கி,ஐயனே - அப்பனே, அடியேற்கு - அடியேனுக்கு, இன்று உன் அருள் துணை செய்யல் வேண்டும்- இப்பொழுது நினது திருவருளாகிய துணையை அளித்தல் வேண்டும்; மெய்யனே என்று - உண்மை வடிவனே என்று, போற்றி வேண்டு கொண்டு - வணங்கி வேண்டிக் கொண்டு. அன்பு தோய்ந்த பொய் அறு மனத்தான் - அன்பில் மூழ்கிய பொய்யற்ற உள்ளத்தையுடைய பாணபத்திரன், இல்லம் புக்கு இனிது இருந்தான் - மனையை அடைந்து கலலையின்றி இருந்தனன்; இப்பால் - பின். கருமையை அணிந்த மிடறு என்றுமாம். ஒரு பொருண்மேற் பல பெயர் வந்தன. அருட்டுணை - அருளாகிய துணை. வேண்டு - வேண்டுதல்; முதனிலைத் தொழிற்பெயர். (10) [கலிநிலைத்துறை] வருத்த னாகிவந் திரந்தவ னிசைப்பகை மாற்ற விருத்த னாம்விற காளென விண்ணிழி விமானத் தொருத்த னாரறி வாகிய வுண்மையா னந்தத் திருத்த னார்தம திச்சையாற் றிருவுருக் கொள்வார். (இ - ள்.) வருத்தனாகி வந்து இரந்தவன் - துன்பமுடையவனாகி வந்து குறையிரந்த பாணபத்திரனது, இசைப் பகை மாற்ற - இசையில் வல்ல பகைவனை ஓட்ட, விருத்தனாம் விறகு ஆள் என - மூப்புடையனாகிய விறகாளைப் போல, விண் இழி விமானத்து ஒருத்தனார்- வானினின்றும் இறங்கிய இந்திர விமானத்தில் எழுந்தருளிய ஒப்பற்றவரும், உண்மை அறிவு ஆனந்தம் ஆகிய திருத்தனார் - சச்சிதானந்த வடிவமுடையவருமாகிய சோம சுந்தரக் கடவுள், தமது இச்சையால் திரு உருக்கொள்வார் - தமது இச்சையானே திருமேனி கொள்வாராயினர். இசைப் பகை - இசைவல்ல பகைவன். உண்மையறிவானந்தமாகிய என மாறுக. திருத்தன் - தீர்த்தன். இறைவன் கொள்ளும் திருமேனிக்குக் காரணம் அவனது இச்சையே எனல் போந்தது. (11) அழுக்கு மூழ்கிய சிதரசைத் தவிர்சடை யமுதம் ஒழுக்கு வெண்மதி1 வாங்கியே செருகிய தொப்ப மழுக்கு கூனல்வெள் வாய்க்குயம் வலம்படச் செருகி இழுக்கு தேய்செருப் பருமறை கடந்ததா ளேற்றி. (இ - ள்.) அழுக்கு மூழ்கிய சிதர் அசைத்து - அழுக்கு நிறைந்த கந்தையை உடுத்தி, அவிர்சடை அமுதம் ஒழுக்கு - விளங்கிய சடையிலிருந்து அமிழ்தினைப் பொழிகின்ற, வெண்மதி வாங்கியே செருகியது ஒப்ப - வெள்ளிய சந்திரனையே வாங்கி இடையிற் செருகியது போல, கூனல் - வளைந்த, மழுக்கு வெள்வாய்க் குயம் - மழுங்கிய வெள்ளிய வாயையுடைய அரிவாளை, வலம்படச் செருகி - வலப்புறத்து இடையிற் செருகி, இழுக்கு தேய் செருப்பு - இழுத்துத் தேய்ந்த செருப்பின்கண். அருமறை கடந்த தாள் ஏற்றி - அரிய வேத முடியைக் கடந்த திருவடிகளை ஏற்றி. சிதர் - கிழிந்த துணி. மதியையே என ஏகாரம் பிரித்துக் கூட்டுக. மழுக்கு : வலித்தல் விகாரம். கூனல் குயம் - கொடுவாள். செருப்பினைத் தாளில் இயைத்து என்றுமாம். (12) பழைய தோர்பொல்லம் பொத்திய பத்தர்யாழ்க் கோறோள் உழைய தாகவிட் டெருத்தலைத் தூசலா டியவொண் குழைய காதினிற் களவிணர்க் 1குறியகாய் தூக்கித் தழையும் வார்சிகை சரிந்திடச் சுமையடை தாங்கி. (இ - ள்.) பழையது - பழையதாகிய, பொல்லம் பொத்திய- தைக்கப்பட்ட, ஒர் பத்தர் யாழ்க்கோல் - ஒரு பத்தரையுடைய வீணையின் தண்டானது, தோள் உழையது ஆகவிட்டு, - தோளினிடத் ததாகத் தொங்க விட்டு, எருத்து அலைத்து ஊசல் ஆடிய - பிடரியை அலைத்து ஊசல் போல் அலைந்தாடிய, ஒண்குழைய காதினில் - ஒள்ளிய குண்டலத்தை யணிந்த திருச்செவியில், கள இணர்க்குறிய காய் தூக்கி - களாவின் பூங்கொத்தோடு கூடிய சிறிய காயினைத் தொங்கவிட்டு, தழையும் வார்சிகை சரிந்திட - தழைந்த நீண்ட சிகை சரிய, சுமையடை தாங்கி - சும்மாடு தாங்கி. பொல்லம் பொத்தல் - கிழிந்ததனை மூட்டுதல்; தைத்தல். பத்தர் - யாழின் உறுப்புகளுள் ஒன்று. - சுமையடை என்பது சும்மாடு என வழங்குகிறது. (13) தறிந்த விந்தனந் தினந்தொறுந் தாங்கிநீள் பங்கி பறிந்து தேய்ந்தழுந் தியதலை யுடையராய்ப் பரிந்து மறிந்த கங்கையும் பங்குறை மங்கையுங் காணா தெறிந்த விந்தனச் சுமைதிரு முடியின்மே லேற்றி. (இ - ள்.) தறிந்த இந்தனம் - முறியுண்ட விறகினை, தினந்தொறும் தாங்கி - நாள்தோறுஞ் சுமந்து, நீள்பங்கி பறிந்து தேய்ந்து அழுந்திய தலையுடையராய் - நீண்ட மயிர் கழியப்பட்டுத் தேய்ந்து பள்ளமாகிய தலையினை உடையவராய், பரிந்து மறிந்த கங்கையும் - அன்பு கூர்ந்து (முடியில்) மடங்கிய கங்கையும், பங்கு உறை மங்கையும் காணாது - பாகத்தில் உறையும் அங்கயற்கண் ணம்மையும் காணாமல், எறிந்த இந்தனச் சுமை திருமுடியின்மேல் ஏற்றி - வெட்டிய விறகின் சுமையைத் திருமுடியின் மேல் ஏற்றி. தறிந்த - தறியுண்ட; தறிக்கப்பட்ட. தினந்தோறும் தாங்கினமையாற் பறிந்து தேய்ந்தழுந்திய தலை போன்று தலையுடையராய் என்பது கருத்து. மறிந்த - அலை மடங்குகின்ற. அவர் காணின் பொறாராகலின் காணாதபடி முடியின் மேல் ஏற்றினர் என்க. (14) என்பு தோன்றியூ னின்றியே யிளைத்தயாக் கையராய் அன்பு தோன்றியே கண்டவ ரகங்கனிந் திரங்க வன்பு தோன்றிய மனமொழி கடந்ததாண் மலர்பார் முன்பு தோன்றிய தவத்தினான் முடிமிசைச்2 சூட. (இ - ள்.) என்பு தோன்றி - எலும்புகள் வெளிப்பட்டு, ஊன் இன்றி இளைத்த யாக்கையராய் - தசை சிறிதுமின்றி இளைத்த உடம்பினை யுடையராய், அன்பு தோன்றியே கண்டவர் அகம் கனிந்து இரங்க - பார்த்தவர்கள் அன்பு மிக்கு மனங் கனிந்திரங்க, வன்பு தோன்றிய மனம் மொழி கடந்த தாள் மலர் - கடினமான மனத்தையும் மொழியையுங் கடந்த திருவடித் தாமரைகளை, பார் - நிலமகள், முன்பு தோன்றிய தவத்தினால் - முன்பு செய்த தவத்தினால், முடிமிசை சூட - தன் முடியின் கண்ணே சூட. வன்பு தோன்றிய - கடினம் பொருந்திய; அன்பால் உருகுதலில்லாத. (15) திருமு கத்துவேர் வரும்பவாய் குவிந்தொலி1செய்ய வருவர் கற்சுமை தாங்கிமேற் சார்த்துவர் மடுநீர் பருகு வாரெடுப் பார்தலை வெம்மைவேர் பறிய இருகை யாலடிக் கடியெடுத் தேந்தியூர் புகுவார். (இ - ள்.) திருமுகத்து வேர்வு அரும்ப - திருமுகத்தின்கண் வேர்வை தோன்ற, வாய் குவிந்து ஒலி செய்ய - திருவாய் கூம்பி ஒலி செய்ய, வருவர் - வாரா நிற்பர்; சுமை தாங்கி மேல் சார்த்துவர்- கல்லாலாகிய சுமை தாங்கி மேல் சுமையைச் சார்த்தா நிற்பர்; மடு நீர் பருகுவார் - மடுவிலுள்ள நீரைக் குடிப்பர்; எடுப்பார் - சுமையை எடுத்துத் தலையின்மேல் வைப்பர்; தலை வெம்மை வேர் பறிய - தலையில் வெப்பத்தாலாகிய வேர்வை நீங்க, இரு கையால் - இரண்டு திருக்கரங்களாலும், அடிக்கடி எடுத்து ஏந்தி ஊர் புகுவார் - அடிக்கடி சுமையை மேலே எடுத்து ஏந்தி ஊருட் புகுவாராயினர். உடம்பாலுழந்து தொழில் செய்வோர் களைப்புற்றபொழுது வாய் குவித்து ஒலி செய்தல் இயற்கை, இச்செய்யுள் விறகு சுமப்பார் தொழிலினியல்பை விளக்குதலின் தொழிற்றன்மையணி. (16) நடந்து கொள்ளுநர்க் கறாவிலை பகர்ந்துநான் மாடம் மிடைந்த வீதியுங் கவலையு முடுக்கரு மிடைந்து தொடர்ந்த வேதமும் பிரமன்மால் சூழ்ச்சியும் பகலுங் கடந்து போகியவ் விசைவலான் கடைத்தலைச் செல்வார். (இ - ள்.) நடந்து - அங்ஙனஞ் சென்று; கொள்ளுநர்க்கு அறாவிலை பகர்ந்து - வாங்குபவர்க்கு மிக்க விலை சொல்லி, நால் மாடம்மிடைந்த வீதியும் - பல மாடங்கள் நெருங்கிய வீதிகளையும், கவலையும் - இரண்டு தெருக்கள் கூடுமிடங்களையும், முடுக்கரும்- குறுந் தெருக்களையும், மிடைந்து தொடர்ந்த வேதமும் - நெருங்கிப் பின் பற்றிய மறையையும், பிரமன் மால் சூழ்ச்சியும்- பிரமனும் திருமாலுமாகிய இவர்கள் சூழ்ச்சியையும், பகலும் - பகற்பொழுதையும், கடந்து போகி - கடந்து சென்று, அவ்விசைவலான் கடைத்தலைச் செல்வார் - அந்த இசையில் வல்ல ஏமநாதன் கடைவாயிலின்கண் செல்வாராயினர். அறாவிலை - விலைப்படலாகாத விலை; மிக்க விலை. நான்கு மாடம் கூடிய என்றுமாம். முடுக்கர் - குறுந்தெரு; இக்காலத்தில் இது சந்து என வழங்கும். பகல் முழுதும் வீதி முதலியவற்றில் நடந்து அவற்றைக் கடந்து பகல் கழிந்த பின் இசைவலான் கடைத்தலைச் செல்வாராயினர்; அங்ஙனஞ் செல்லுதற் பொருட்டே அறாவிலை பகர்ந்தனரென்க. வேதமும் பிரமன் மால் சூழ்ச்சியும் இறைவன் இங்ஙனம் எழுந்தருளுதலை அறியும் வலியிலவாயின வென்பார் அவற்றைக் கடந்து என்றார். (17) வரவு நேர்ந்தழைப் பவரென வாம்பல்வாய் மலர இரவு கான்றுவெண் மதிநகைத் தெழவுயிர்த் துனைவர் பிரிவு நோக்கினா ரெனக்கணீர் பில்குதா மரையின் நிரைகள் கூம்பிடக் கதிரவன் குடகட1னீந்த. (இ - ள்.) உயிர்த் துணைவர் வரவு நேர்ந்து அழைப்பவர் என - உயிர் போன்ற தலைவரது வருகையை நோக்கி அழைப்பவர் போல, ஆம்பல் வாய் மலர - ஆம்பல்கள் வாய் மலர, இரவு கான்று - இரவினைத் தோற்றுவித்து, வெண்மதி - வெள்ளிய சந்திரன், நகைத்து எழ - புன்முறுவல் செய்து தோன்றவும், (உயிர்த் துணைவர்) பிரிவு நோக்கினர் என - கணவரது பிரிவினைக் கண்ட மகளிர் கண்ணீர் உகுத்து முகம் வாடுதல் போல, கள் நீர் பில்கு தாமரையின் நிரைகள் கூம்பிட, - தேனாகிய நீர் பெருகுந் தாமரையின் வரிசைகள் குவிய, கதிரவன் குடகடல் நீந்த - சூரியன் மேலைக் கடலில் நீந்திச் செல்லவும். உயிர்த் துணைவர் என்பதனை முன்னுங் கூட்டியுரைக்க. மாலைப் பொழுதில் கூடினார்க்கு இன்பமும் பிரிந்தார்க்குத் துன்பமும் உளவாதலும் குறிப்பிட்டவாறாயிற்று. கண்ணீர் - கள்ளாகிய நீர் எனவும், விழி நீர் எனவும் இரட்டுற மொழிதல். (18) பறவை வாயடைத் தருகணை பார்ப்பொடும் பெடையைச் சிறிக ராலணைத் திருபொழிற் குடம்பையுட் செறிய நறவ வாய்ப்பெடை யுண்டதே னக்கிவண் டோடைப் பொறைகொ டாமரைப் பள்ளியுட் புகுந்துகண் படுக்க. (இ - ள்.) பறவை வாய் அடைத்து - ஆண் பறவைகள் வாய் திறந்து ஒலிக்காமல், அருகு அணை பார்ப்பொடும் பெடையை -பக்கத்தில் வந்து அணையும் குஞ்சுகளையும் பெட்டையையும், சிறகரால் அணைத்து - சிறகினால் அணைத்து, இரும்பொழில் குடம்பையுள் செறிய - பெரிய சோலையிலுள்ள தங்கள் கூட்டில் அடங்கவும், நறவம் உண்ட பெடைவாய் தேன் - தேனை உண்ட பெண் வண்டின் வாயிலுள்ள தேனை, வண்டு நக்கி - ஆண் வண்டு நக்கி, ஓடைப் பொறைகொள் தாமரைப் பள்ளியுள் - ஓடையிலுள்ள தம்மைச் சுமத்தலையுடைய தாமரையாகிய படுக்கையுள், புகுந்து கண் படுக்க - புகுந்து உறங்கவும். மாலைப் பொழுதில் பறவைகள் ஒலியடங்குதல் இயல்பு. சிறகர: போலி. (19) புல்லெ னீணிலைக் குரங்கினம் பொதும்பர்புக் குறங்க முல்லை யாய்மகா ருய்த்தரக் கன்றுள்ளி முந்திக் கொல்லை யானிரை மனைதொறுங் குறுகிடச் சிறுபுன் கல்வி மாணவச் சிறார்பயில் கணக்கொலி யடங்க. (இ - ள்.) நீள் புல்லென் நிலைக் குரங்கு இனம் - மிக்க புல்லென்ற தன்மையுடைய குரங்கின் கூட்டங்கள், பொதும்பர் புக்கு உறங்க - சோலை சென்று தூங்கவும,. முல்லை ஆய் மகார் உய்த்தர - முல்லை நிலத்திலுள்ள ஆயச் சிறுவர்கள் செலுத்த, கொல்லை ஆன் நிரை - அந்நிலத்துப் பசுவின் கூட்டங்கள், கன்று உள்ளி - கன்றுகளை நினைத்து, மனைதொறும் முந்திக் குறுகிட - வீடுகள் தோறும் முற்பட்டுச் செல்லவும், சிறுபுள் கல்வி மாணவச் சிறார் - ஆரம்பக் கல்வி பயிலும் மாணவச் சிறுவர்கள், பயில் கணக்கு ஒலி அடங்க - பயிலுகின்ற நெடுங்கணக்கின் ஒலி அடங்கவும். புல்லெனல் - பொலிவின்றியிருத்தல். ஆய் - ஆயச்சாதி. சிறுபுன் சிறார் என்றுமாம். சிறுபுன், ஒரு பொருளிருசொல். கணக்கொலி - நெடுங்கணக்கை முறைவைத் தோதும் ஒலி. (20) புனைந்த வாழ்கடற் கரும்படா முடம்பெலாம் போர்த்து வனைந்த பூண்முலை நிலமக டுயில்வது மானக் கனைந்த காரிருண் மெல்லெனக் கவிதரப் பிரிவால் இனைந்த காதலர் நெஞ்சில்வே ளெரிகணை நாட்ட. (இ - ள்.) பூண் வனைந்த முலை நிலமகள் - ஆரம் அணிந்த முலைகளையுடைய நிலமாது, புனைந்த - தான் உடுத்தியிருந்த, ஆழ்கடல் கரும்படாம் - ஆழ்ந்த கடலாகிய கரிய ஆடையை, உடம்பு எலாம் போர்த்து - உடம்பு முழுதும் போர்த்து, துயில்வதுமான - உறங்குவதுபோல, கனைந்த கார் இருள் - செறிந்த கரிய இருளானது, மெல்லெனக் கவி தர - மெல்லென வந்து உலகினைப் போர்க்கவும், பிரிவால் இனைந்த காதலர் நெஞ்சில் - பிரிவினால் வருந்திய காதலர்களுடைய நெஞ்சின் கண், வேள் எரிகணை நாட்ட - மன்மதன் எரிகின்ற அம்புகளை நாட்டவும். அருவியாகிய ஆரம்பூண்ட மலைகளாகிய கொங்கைகளையுடைய நிலமகள் என்க. மருங்கில் உடுத்த கரிய ஆடையை உடல் முழுதும் போர்த்து உறங்கினாற் போல எனக் கூறிய நயம் பாராட்டற்பாலது. இரவில் உயிர்களெல்லாம் வினையொழிந்திருத்தலின் 'நிலமகள் துயில் வதுமான' என்றது மிக்க பொருத்தமுடைத்து. (21) திங்கள் வாணுதன் முயற்கறைத் திலகமுஞ் சிவந்த மங்கு லாடையு மயங்கிரு ளோதியும் வான்மீன் பொங்கு மாரமும் பொலிந்துதன் கொண்கனைப் பொருப்பன்1 மங்கை தேடிவந் தாளென வந்தது மாலை. (இ - ள்.) திங்கள் வாள் நுதல் - சந்திரனாகிய ஒள்ளிய நெற்றியில், முயற்கறைத் திலகமும் - முயற்களங்கமாகிய பொட்டும், சிவந்த மங்குல் ஆடையும் செவ்வானமாகிய ஆடையும், - மயங்கு இருள் ஓதியும் - மயங்கிய இருளாகிய கூந்தலும், வான்மீன் பொங்கும் ஆரமும் - விண்மீன்களாகிய விளங்குகின்ற ஆரமுமாகிய இவைகளால், பொலிந்து - விளங்கி, பொருப்பன் மங்கை - மலையரையன் புதல்வியாகிய உமை, தன்கொண்கனை - தனது நாயகனாகிய சோம சுந்தரக் கடவுளை, தேடி வந்தாள் என - தேடி வந்தாள் என்னும் படி, மாலை வந்தது - மாலைப் பொழுது வந்தது. சிவந்த மங்குல் - செவ்வானம். மயங்குதல் - கலத்தல்; மயக்கஞ் செய்தலுமாம். கரிய நிறமுடைய உமை செவ்வாடையுடுத்துக் கூந்தலை ஒப்பனை செய்து திலகமும் ஆரமும் பூண்டு, தன்னைப் பிரிந்து விறகு சுமந்து போந்த இறைவனைத் தேடி வந்தாற் போல என்க. வரவு நேர்ந்து என்னுஞ் செய்யுள் முதலாகக் கூறி வந்த செயவெனெச்சங்கள் இச் செய்யுளிலுள்ள வந்தது என்னும் வினை கொண்டு முடியும். மாலை பொலிந்து வந்தது என முடிக்க. (22) எடுத்த விந்தன மொருபுறத் திறக்கியிட் டூன்றி அடுத்த வன்புறந் திண்ணைமீ தமர்ந்திளைப் பாறித் தொடுத்த வின்னிசை சிறிதெழீஇப் பாடினார் சுருதி மடுத்தி யாரவன் பாடுவா னென்றிசை வல்லான். (இ - ள்.) எடுத்த இந்தனம் - சுமந்து வந்த விறகுக் கட்டை, ஒரு புறத்து இறக்கி ஊன்றி இட்டு - ஒரு பக்கத்தில் இறக்கி ஊன்றி வைத்து, அடுத்தவன் புறம் திண்ணை மீது அமர்ந்து - வந்தவனாகிய சோமசுந்தர கடவுள் ஏமநாதனது வெளித் திண்ணையின் மேல் அமர்ந்து, இளைப்பாறி - வந்த இளைப்பினைப் போக்கி, தொடுத்த இன் இசை சிறிது எழீஇப் பாடினார் - தொடுத்த இனிமையையுடைய இசையைச் சிறிது எழுப்பிப் பாடினார்; இசை வல்லான் - இசையில் வல்ல ஏமநாதன், சுருதி மடுத்து - அவ்விசையினைக் கேட்டு, பாடுவான் அவன் யார் என்று - பாடுவானாகிய அவன் யாவன் என்று கருதி. அடுத்தவன் - வெற்று நாட்டிலிருந்து வந்தவன். எழீஇ, சொல்லிசை யளபெடை. சுருதி மடுத்து என்பதற்குப் பண்ணமைத்து என்றுரைத்தலுமாம். அவன் இசை பாடுவான் வல்லான் யாவன் என்று கருதியென்னலுமாம். (23) [அறுசீரடி யாசிரிய விருத்தம்] வண்டறை கொன்றை யான்முன் வந்துநீ யாரை யென்றான் பண்டரு விபஞ்சி1 பாண2பத்திர னடிமை யென்றான் முண்டக மலரோன் மாயோன் புரந்தரன் முதன்மற் றேனை அண்டருந் தன்குற் றேவ லடிமையாக் கொண்ட வம்மான். (இ - ள்.) வண்டு அறை கொன்றையான் முன் வந்து - வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மாலையையணிந்த இறைவன் திருமுன் வந்து, நீ யார் என்றான் - நீ யாவன் என்று வினாவினான்; முண்டகமலரோன் - தாமரை மலரை இருக்கையாகவுடைய பிரமனும், மாயோன் - திருமாலும், புரந்தரன் முதல் மற்று ஏனை அண்டரும்- இந்திரன் முதலிய ஏனைய தேவர்களுமாகிய இவர்களை, தன் குற்றேவல் அடிமையாக் கொண்ட அம்மான் - தனது குற்றேவல் செய்யும் அடிமைகளாகக் கொண்ட இறைவன், பண்தரு விபஞ்சி- பண்ணமைந்த யாழ் வல்லோனாகிய, பாண பத்திரன் அடிமை என்றான் - பாணபத்திரன் அடிமை என்று கூறியருளினான். யாரை, ஐகாரம் முன்னிலைக் கண் வந்தது. விபஞ்சி - யாழ்; ஈண்டு யாழ் வல்லான் என்னும் பொருட்டு. மற்று : அசை. அடிமையென்றான் இஃதொருவிய ப்பிருந்தவாறென்னை யென்க. "எப்புன்மையரை மிகவேயுயர்த்தி விண்ணோரைப் பணித்தி" என்னும் திருவாசகமஇங்கே சிந்திக்கற்பாலது. (24) கனியிசைக் கிழவன் றன்கீழ்க் கற்பவ ரநேகர் தம்முள் நனியிசைக் கிழமை வேட்டு நானுமவ் வினைஞ னானேன் தனியிசைக் கிழவ னோக்கித் தசையெலா மொடுங்க மூத்தாய் இனியிசைக் கிழமைக் காகா யென்றெனைத் தள்ளி விட்டான். (இ - ள்.) கனி இசை கிழவன் தன் கீழ்க் கற்பவர் அநேகர் தம்முள் - சுவை கனிந்த இசையில் வல்ல அப்பாண பத்திரனிடத்து இசை கற்கும் மாணவகர் பலருள், இசைக்கிழமை - இசை கற்றற்கு உரியனாதலை, நனி வேட்டு - மிகவும் விரும்பி, நானும் அவ்வினைஞன் ஆனேன் - நானுங் கற்குந்தொழிலுடையனானேன்; தனி இசைக் கிழவன் நோக்கி - ஒப்பற்ற இசைக்குரிய அப்பாணபத்திரன் என்னைப் பார்த்து, தசை எல்லாம் ஒடுங்க மூத்தாய்- தசை முற்றும் ஒடுங்குமாறு முதியவனாயினை (ஆகலின்), இனி இசைக் கிழமைக்கு ஆகாய் என்று - இனி நீ இசை கற்றற்கு உரியனாக மாட்டாய் என்று கூறி, எனைத் தள்ளிவிட்டான் - என்னை நீக்கிவிட்டான். கற்குந்தொழில் முற்றுப் பெறுமுன் என்னை நீக்கி விட்டனனென்க. (25) வெவ்விற கெறிந்து கட்டி விலைபகர்ந் தேனு மைய இவ்வயி றோம்பு கேனென் றித்தொழில் பூண்டே னென்ன நைவளந் தெரிந்த வேம நாதனும் விறகு மள்ளா அவ்விசை யொருகா லின்னும் பாடென வையன் பாடும். (இ - ள்.) ஐய - ஐயனே, வெவ்விறகு எறிந்து கட்டி விலை பகர்ந்தேனும், - உலர்ந்த விறகினை வெட்டிக் கட்டி விற்றாயினும், இவ்வயிறு ஓம்புகேன் என்று - இந்த வயிற்றை ஓம்பக் கடவேனென்று கருதி, இத் தொழில் பூண்டேன் என்ன - இந்தத் தொழிலை மேற் கொண்டேன் என்று கூற, நைவளம் தெரிந்த ஏமநாதனும் - இசை நூலில் வல்ல அவ்வேமநாதனும், விறகு மள்ளா - விறகு விற்கும் மள்ளனே, அவ்விசை - முன் பாடிய அந்த இசையை, இன்னும் ஒருகால் பாடு என - இன்னும் ஒரு முறை பாடுவாயாக என்று கூற, ஐயன் பாடும் - இறைவன் பாடியருளுவான். இசையால் வயிறோம்புதல் கூடாமையின் இத்தொழில் பூண்டேன் என்றான். நைவளம் - நட்டபாடை என்னும் பண்; ஈண்டு இசைப் பொதுமையை உணர்த்திற்று; சிறப்பாக நட்ட பாடையில் வல்லவன் என்றுமாம். மள்ளர் என்னுஞ் சொல் பழைய நாளில் வீரரைக் குறித்து, பின் உடற்றிண்மையுடைய ஏவன்மாக்களைக் குறிப்பதாயிற்று. (26) குண்டுநீர் வறந்திட் டன்ன நெடுங்கொடிக் குறுங்காய்ப் பத்தர்த் தண்டுநீ ணிறத்த நல்யா ழிடந்தழீஇத் தெறித்துத் தாக்கிக் கண்டுமா டகந்தி ரித்துக் கௌவிய திவவிற் பாவ விண்டுதே னொழுகிற் றென்ன வீக்கிமென் சுருதி கூட்டி. (இ - ள்.) குண்டு நீர் வறந்திட்டன்ன - மடுவின் நீர் வறந்தாற் போன்ற, நெடுங்கொடி குறுங்காய்ப் பத்தர் - நீண்ட கொடியிலுள்ள சிறிய காயாகிய பத்தரமைந்த, தண்டு - கோட்டினையும், நீள் நிறத்த - மிக்க நிறத்தினையுமுடைய, நல்யாழ் - நல்ல யாழினை, இடம்தழீஇ - இடது பக்கத்தில் தழுவி, தெறித்துத் தாக்கிக் கண்டு - நரம்பை எறிந்து தாக்கி (ப்பண்ணை எழுப்பி)ப் பார்த்து, மாடகம் திரித்து - முறுக்காணியைச் சுழற்றி, திவவில் கௌவிய வீக்கி - வார்க்கட்டிலே கவ்வும்படி நரம்பைப் பிணித்து, விண்டு தேன் ஒழுகிற்று என்னப் பாவ - இறாலினீங்கித் தேன் ஒழுகினாற் போலப் பரவும்படி, மென்சுருதி கூட்டி - மென்மையாகச் சுருதியை எழுப்பி. வறந்திட்டதன்ன என்பது விகாரமாயிற்று. நீர் வறந்த குட்டம் போல் எனக் கொள்க : குறுங்காய் - சுரைக்காய். உள்ளீடும் நீரும் வற்றிய சுரைக்காய்க்கு நீர் வற்றிய குண்டு உவமம். நிறம் ஐந்து; அவற்றை, " மாத்திரைக ளொன்பானுந் தானங்க ளெட்டானும் ஏத்துங் கிரியையென் நீரைந்தும் - கோத்துப் பதின்மூன் றெழுத்தாற் றொழிலைந்தும் பண்ணின் மதியோர்க ளைந்துநிற மாம்" என்னுஞ் செய்யுளாலறிக. நல்யாழ் - குண முழுதும் பொருந்திக் குற்ற முழுதும் நீங்கின யாழ். குணங்களை, " சொல்லிய கொன்றை கருங்காலி மென்முருக்கு நல்ல குமிழும் தணக்குடனே - மெல்லிலாய் உத்தம மான மரங்க ளிவை யென்றார் வித்தக யாழோர் விதி" " தளமாய்ச் சமநிலத்துத் தண்காற்று நான்கும் உளதா யொருங்கூன மின்றி - அளவ முதிரா திளகாது மூன்றாங்கூ றாய அதுவாகில் வீணைத்தண் டாம்" " கோடே பத்த ராணி நரம்பே மாடக மெனவரும் வகையின வாகும்" என்பன முதலியவற்றால் அறிக. குற்றம் - நரம்பின் குற்றம்; அவை செம்பகை, ஆர்ப்பு, கூடம், அதிர்வு என்பன : அவற்றின் இயல்பை, " செம்பகை யென்பது பண்ணோ டுளரா இன்பமி லோசை யென்மனார் புலவர்" " ஆர்ப்பெனப் படுவ தளவிறந் திசைக்கும்" " கூட மென்பது குறியுற விளம்பின் வாய்வதின் வாராது மழுங்கியிசைப் பதுவே" " அதிர்வெனப் படுவ திழுமென வின்றிச் சிதறி யுரைக்குந ருச்சரிப் பிசையே" என்பவற்றாலறிக. இவை மரக் குற்றத்தால் வருவன என்பதை, " நீரிலே நிற்ற லழுகுதல் வேத னிலமயங்கும் பாரிலே நிற்ற லிடிவீழ்த னோய்மரப் பாற்படல்கோ ணேரிலே செம்பகை யார்ப்பொடு கூட மதிர்வுநிற்றல் சேரினேர் பண்க ணிறமயக் கம்படுஞ் சிற்றிடையே" என்பதனாலறிக. இம்மேற்கோள்கள் சிந்தாமணி உரையில் நச்சினார்க்கினியராற் காட்டப் பெற்றன. தேனொழுகிற்றென்ன நரம்பை வீக்கி என்றுமாம். (27) விசையொடு தானந் தோறும் விரனடந் தூச லாட இசைமுத லேழிற் பல்வே றின்னிசை யெழுஞ்சா தாரி அசையொடு வீதிப் போக்கு முடுகிய லராகம் யார்க்கும் நசைதரு நரம்பு கண்ட மொற்றுமை நயங்கொண் டார்ப்ப. (இ - ள்.) தானந்தோறும் - சுரங்கள் எழும் தானங்கடோறும், விசையொடு விரல் கடந்து ஊசல் ஆட - விசையுடன் விரல் சென்று போக்கு வரவு செய்ய, இசை முதல் ஏழில் - ஏழிசைகளுக்கும் முதலாயுள்ள ஏழு சுரங்களில், பல்வேறு இன் இசை எழும் சாதாரி - பலவேறு வகைப்பட்ட இனிய இசைகளில் ஒன்றாயெழுஞ் சாதாரிப் பண்ணினை, அசையொடு வீதிப் போக்கு முடுகியல் அராகம் - அசையும் வீதிப் போக்கும் வண்ணமும் திறமுமாகிய இவைகளால், யார்க்கும் நசைதரும் நரம்பு கண்டம் ஒற்றுமை நயம் கொண்டு ஆர்ப்ப - எவருக்கும் விருப்பந் தரும் நரம்பின் ஒலியும் மிடற்றின் ஒலியுந் தம்முள் வேறின்றி ஒலிக்க. சாதாரி - முல்லைப்பண்; இதனைத் தேவகாந்தாரம் என்பர். சாதாரி பாடினார் என 32-ஆம் செய்யுளில் முடிக்க. அசை -தாள நான்கனுள் ஒன்று. வீதிப் போக்கு - நகர முதலிய நாலெழுத்துக்கள் நேராய்ச் செல்லுதல். முடுகியல் - பெருவண்ணம், இடைவண்ணம், வனப்பு வண்ணம் என்னும் வண்ணங்கள். அராகம் - பாலை யாழ்த்திறம். (28) வயிறது குழிய வாங்க லழுமுகங் காட்டல் வாங்குஞ் செயிரறு புருவ மேறல் சிரநடுக் குறல்கண் ணாடல் பயிரரு 1மிடறு வீங்கல் பையென வாயங் காத்தல் எயிறது காட்ட லின்ன வுடற்றொழிற் குற்ற மென்ப. (இ - ள்.) வயிறு குழிய வாங்கல் - (பாடும்போது) வயிறு குழிபட மேல் வாங்குதலும், அழுமுகம் காட்டல் - அழுமுகங் காட்டுதலும், வாங்கும் செயிர் அறுபுருவம் ஏறல் - வளைந்த குற்றமற்ற புருவம் மேலேறுதலும், சிரம் நடுக்குறல் - தலை அசைத்தலும், கண் ஆடல் - கண் ஆடுதலும், பயிர் அருமிடறு வீங்கல் - பாடுகின்ற அரிய மிடறு வீங்குதலும், பை என வாய் அங்காத்தல் - பையைப் போல வாய் திறத்தலும், எயிறு காட்டல்- பற்களைக் காட்டுதலும், இன்ன - இவை போல்வன பிறவுமாகிய, உடல் தொழில் குற்றம் - உடம்பின் தொழிற் குற்றங்களும். வயிறது எயிறது என்பனவற்றில் அது பகுதிப் பொருள் விகுதி. பயிர் - பாடுகின்ற. என்ப, அசை; உடற்றொழிற் குற்றம் என்பனவாகிய இவைகளும் என்றுரைத்தலுமாம். இக் குற்றங்களின்றிப் பாட வேண்டுமென்பதனை, " கருங்கொடிப் புருவ மேறா கயனெடுங் கண்ணு மாடா அருங்கடி மிடறும் விம்மா தணிமணி யெயிறுந் தோன்றா" என்னும் சிந்தாமணிச் செய்யுளாலும், " கண்ணிமையா கண்டந் துடியா கொடிறசையா பண்ணளவும் வாய்தோன்றா பற்றெரியா - எண்ணிலவை கள்ளார் நறுந்தெரியற் கைதவனே கந்தருவர் உள்ளாளப் பாட லுணர்" என்னும் இசைமரபுசசெய்யுளாலும், " விரனான் கமைத்த வணிகுரல் வீங்காது நான்மறை துள்ளும் வாய்பிள வாது காட்டியுள் ளுணர்த்து நோக்கமா டாது பிதிர்கனல் மணிசூழ் முடிநடுக் காது வயிறு குழிவாங்கி யழுமுகங் காட்டாது" என்னும் கல்லாடசசெய்யுளாலும் அறிக. (29) வெள்ளைகா குளிகீ ழோசை வெடிகுர னாசி யின்ன எள்ளிய வெழாலின் குற்ற மெறிந்துநின் றிரட்ட லெல்லை தள்ளிய கழிபோக் கோசை யிழைத்தனெட் டுயிர்ப்புத் தள்ளித் துள்ளலென் றின்ன பாடற் றொழிற்குற்றம் பிறவுந் தீர்ந்தே. (இ - ள்.) வெள்ளை - நிறமில்லாத வெள்ளோசையும், காகுளி- இன்னாவோசையும், கீழோசை - கட்டையிசையும், வெடிகுரல் - வெடித்த குரலும், நாசி - மூக்கோசையும், இன்ன - இவை போல்வனவுமாகிய, எள்ளிய எழாலின் குற்றம் - (இசை நூலார்) விலக்கிய மிடற்றோசையின் குற்றங்களும், எறிந்து நின்று இரட்டல் - விலங்கி நின்று ஒலித்தலும், எல்லை தள்ளிய கழி போக்கு - அளவு கடந்த கழி போக்கும், ஓசை இழைத்தல் - ஓசை புரிதலும், நெட்டுயிர்ப்புத் தள்ளித் துள்ளல் - பெருமூச்செறிந்து துள்ளலும், என்று இன்ன பாடல் தொழில் குற்றம் - என்று சொல்லப்பட்ட இவை முதலான பாடற்றொழிற் குற்றங்களும், பிறவும் - பிற குற்றங்களும், தீர்ந்து - நீங்கி. காகுளி - பேய் கத்தினாற்போற் பாடுதல். கீழோசை - நிறமும் தானமும் குறைந்த கட்டையிசை. நாசி - ஒரு தானத்தே பாட ஒரு தானத்தே நழுவுதல் என்றுமுரைப்பர். எறிந்து நின்றிரட்டல்- ஒரு பண்ணைப் பாட வேறொரு பண்ணில் விலங்கி நின்றொலித்தல. கழிபோக்கு - ஓசை பலவாய் மிக்குச் செல்லுதல். ஓசை பிழைத்தல் - காக்கை கத்தினாற்போற் கத்துதல் என்பர். " நாசி காகுளி வெடிகுரல் வெள்ளை பேசாக் கீழிசை யொருபுற மோடல் நெட்டுயிர்ப் பெறிதல் எறிந்துநின் றிரட்டல் ஓசையிழைத்தல் கழிபோக் கென்னப் பேசுறு குற்ற மசைவொடு மாற்றி" என்று கல்லாடத்துள் வருதல் காண்க. (30) எழுதுசித் திரம்போன் மன்னி யிழுமெனு மருவி யோதை முழவொலி கஞ்ச நாதம் வலம்புரி முரலு மோசை கொழுதிசை வண்டின் றாரி யெனவிசைக் குணனும் வேரல் விழுமிலை சிரன்மீன் மேல்வீழ் வீழ்ச்சிபோற் பாடற் பண்பும். (இ - ள்.) எழுது சித்திரம் போல் மன்னி - எழுதிய ஓவியம் போல அசைவற விருந்து, இழுமெனும் அருவி - ஓதை இழுமென்றொலிக்கும் அருவியின் ஓசையும், முழவு ஒலி - முழவின் ஓசையும், கஞ்சநாதம் - கஞ்சக் கருவியின் ஒலியும், வலம்புரி முரலும் ஓசை- வலம்புரிச் சங்கு முழங்கும் ஓசையும், கொழுது இசை வண்டின் தாரி என - மலர்களைக் கிண்டி ஒலிக்கும் வண்டின் ஒலியும் என்று சொல்லப்பட்ட, இசைக் குணனும் - மிடற்றோசையின் குணமும், வேரல் விழும் இலை - மூங்கிலினின்று வீழா நின்ற இலையின் வீழ்ச்சியும், சிரல் - மீன்குத்திப் பறவையானது, மீன் மேல் வீழ் வீழ்ச்சி போல் - மீனின் மேல் வீழ்கின்ற வீழ்ச்சியும் போல, பாடல் பண்பும் - பாடற் குணமும். மூங்கில் இலையின் வீழ்ச்சி மேலிருந்து மெத்தெனக் கீழிறங்குதற்கும், சிரல் வீழ்ச்சி மேலே அசைந்து நின்று விரைந்து கீழிறங்கிச் செல்லுதலுக்கும் உவமம். இசைக் குணம் பாடற் குணங்களை, " துய்யமொழி மென்குயிலுஞ் சோலைவரி வண்டினமும் வைய முழங்கும் வலம்புரியும் - கைவைத்துத் தும்புருவு நாரதரும் பாடியமூ வோசையென நம்புநீர் நால்வேதத் துள்" " சிச்சிலி பூனை குடமுழக்கஞ் செம்மைத்தாம் உச்சிமலை நீர்விழுக்கா டெண்பருந்து - பச்சைநிற வேயினிலை வீழ்ச்சியுடன் வெங்கானிழற்பறவை யேயுங்கா லோசை யியல்பு” என்னும் இசை மரபாலும், “ வண்டின் றாரியுங் கஞ்ச நாதமும் சிரல்வா னிலையுங் கழையிலை வீழ்வதும் அருவி யோசையு முழவின் முழக்கமும் வலம்புரிச் சத்தமும் வெருகின் புணர்ச்சியும் இன்னுமென் றிசைப்பப் பன்னிய விதியொடு" என்னும் கல்லாடத்தாலும் அறிக. (31) பொருந்தமந் தரத்தினோடு மத்திமந் தாரம் போக்கித் திருந்திய துள்ள றூங்கன் மெலிவது சிறப்பச் செய்து மருந்தன செய்யு ளோசை யிசையோசை வழாமல் யார்க்கும் விருந்தெனச் செவியின் மாந்தப் பாடினார் வேத கீதர். (இ - ள்.) பொருந்த - இசைய, மந்தரத்தினோடு மத்திமம் தாரம் போக்கி - படுத்தல் நலிதல் எடுத்தல் என்பவற்றில் இசையை நடாத்தி, திருந்திய துள்ளல் தூங்கல் மெலிவது சிறப்பச் செய்து- திருத்தமாகிய துள்ளலும் தூங்கலும் மெலிவதுமாகிய இவற்றைச் சிறக்கச் செய்து, மருந்து அன செய்யுள் ஓசை இசை ஓசை வழாமல் - அமுதத்தை ஒத்த பாடலோசையும் இசையோசையும் வழுவுதலில்லாமல், யார்க்கும் விருந்து என - யாவர்க்கும் விருந்தென்னும்படி, செவியின் மாந்த - அவர்கள் காதினாற் பருக, வேத கீதர் பாடினார் - சாமகானராகிய இறைவர் பாடியருளினார். இசைக் குணனும் பாடற் பண்பும் பொருந்த என மேற்செய்யு ளோடு இயைக்க. மந்தரம் - கீழ் இசை; படுத்தல். மத்திமம் - சமனிசை; நலிதல். தாரம் - உச்சவிசை; எடுத்தல், இவற்றை, " மந்தரத்து மத்திமத்துந் தாரத்தும் வரன்முறையால் தந்திரிகண் மெலிவித்துஞ் சயங்கொண்டும் வலிவித்தும்" என்னும் திருத்தொண்டர்புராணச் செய்யுளால் அறிக. (32) [கொச்சகக்கலிப்பா] விரைசார் மலரோ னறியா விகிர்தன் அரசாய் மதுரை யமர்ந்தா னென்னே அரசாய் மதுரை யமர்ந்தா னவனென் புரைசார் மனனும் புகுந்தா னென்னே. (இ - ள்.) விரைசார் மலரோன் அறியா விகிர்தன் - மணம் பொருந்திய தாமரை மலரில் இருக்கும் பிரமனால் அறியப்படாத பெருமான், அரசாய் மதுரை அமர்ந்தான் என்னே - பாண்டி மன்னனாக மதுரையின்கண் வீற்றிருந்தான் இது என்னே; அரசாய் மதுரை அமர்ந்தான் அவன் - அங்ஙனம்அரசனாய் மதுரையிலமர்ந்த அவ்விறைவனே, என் புரைசார் மனனும் புகுந்தான் என்னே - எனது குற்றம் பொருந்திய உள்ளத்தின் கண்ணும் குடிப்புகுந்தான் இது என்னே. இது முதல் மூன்றும் அவர் பாடிய இசைப் பாட்டுக்கள். தலைவி கூற்றாகவுள்ளன. விகிர்தன் - வேறுபட்ட தன்மையன். (33) பாடன் மறையுந் தெளியாப் பரமன் கூடல் கோயில் கொண்டா னென்னே கூடல் போலக் கொடியே னகமும் ஆட லரங்கா வமர்ந்தா னென்னே. (இ - ள்.) பாடல் மறையும் தெளியாப் பரமன் - துதித்தலையுடைய வேதமும் தெளிந்துணராத இறைவன், கூடல் கோயில் கொண்டான் என்னே - கூடலின்கண் திருக்கோயில்கொண்டெழுந்தருளினன் இது என்னே, கூடல்போல - அக்கூடலில் எழுந்தருளியது போல, கொடியோன் அகமும் - கொடியேனது உள்ளத்திலும், ஆடல் அரங்கா அமர்ந்தான் என்னே - நிருத்தம் புரியும் அம்பலமாக வீற்றிருந்தான்! இது என்னே, அகமும் அரங்காக அதில் அமர்ந்தான் என்க. (34) நீல வண்ணன் றேறா நிமலன் ஆல வாயி லமர்ந்தா னென்னே ஆல வாயா னலரில் வாசம் போலென் னுளமும் புகுந்தா னென்னே. (இ - ள்.) நீலவண்ணன் தேறா நிமலன் - நீல நிறத்தையுடைய திருமாலானும் அறியப்படாத இறைவன், ஆல வாயில் அமர்ந்தான் என்னே - திருவாலவாயின்கண் வீற்றிருந்தான் இது என்னே, ஆல வாயான் - அங்ஙனம் திருவாலவாயிலமர்ந்த அவ்விறைவன், அலரில் வாசம் போல் - மலரில் மணம் போல, என் உளமும் புகுந்தான் என்னே - எனது உள்ளத்தின் கண்ணும் புகுந்தான், இது என்னே! இம்மூன்று செய்யுளிலும் மலரோனாலும் மறையாலும் மாலாலும் அறியப்படாதவன் என இறைவன் பெருமை கூறி, அவன் எளிவந்த தன்மையையும் விளக்கினமை காண்க. இந்நகரப் மதுரையும் கூடலும் ஆலவாயும் ஆன முறைப்படியே இவற்றிலும் பெயர்கள் கூறப்பட்டன. என்னே, என்றது இங்ஙனம் பெரியனாய இறைவன் இத்துணையெளியனாகியது என்ன வியப்பு என வியந்தபடி. சிந்தாமணியில் இங்ஙனம் மூன்றாக வந்த செய்யுட்களை'தாழிசைக் கொச்சக வொருபோகுகள் கந்தருவ மார்க்கத்தான் இடை மடக்கின' என நச்சினார்க்கினியரகூறினர். (35) [அறுசீரடி யாசிரிய விருத்தம்] பாணர்தம் பிரானைக் காப்பான் பருந்தொடு நிழல்போக் கென்ன யாணரம் பிசைபின் செல்ல விசைத்தவின் னிசைத்தே னண்ட வாணர்தஞ் செவிக்கா லோடி மயிர்த்துளை வழியத் தேக்கி யாணரின் னமுத வாக்கை யிசைமய மாக்கிற் றன்றே. (இ - ள்.) பாணர் தம் பிரானைக் காப்பான் - பாணர்களின் தலைவனாகிய பத்திரனைக் காத்தற் பொருட்டு, பருந்தொடு நிழல் போக்கு என்ன - பருந்தினோடு அதன் நிழல் செல்லுதல் போல, யாழ் நரம்பு இசை பின் செல்ல இசைத்த - வீணை நரம்பிலெழும் இசை பின்றொடரப் பாடியருளிய, இன் இசைத்தேன்- இனிய இசையாகிய தேனானது, அண்ட வாணர்தம் செவிக்கால் ஓடி - தேவர்களுடைய செவியாகிய காலின் வழியே ஓடி, மயிர்த் துளை வழியத் தேக்கி - மயிர்த் துளைகளின் வழியே கசியுமாறு நிரப்பி, யாணர் இன் அமுத ஆக்கை - அழகிய இனிய அமுத மயமாகிய அவர்கள் உடலை, இசை மயம் ஆக்கிற்று - இசைமயமாகச் செய்தது. காப்பான், வினையெச்சம். காப்பான் இசைத்த வென்க ' பருந்து மதனிழலும் பாட்டு மெழாலும் திருந்துதார்ச் சீவகற்கே சேர்ந்தன' என்னும் சிந்தாமணிச் செய்யுளும், “பருந்து பறக்கு மிடத்து முறையே உயர்ந்து அந்நிலத்தின்கண் நின்று ஆய்ந்து பின்னும் அம்முறையே மேன் மேல் உயர்கின்றார் போலப் பாட வேண்டுதலின் அஃது உவமையாயிற்று” என்னும் அதனுரையும் இங்கு நோக்கத் தக்கன. மிடற்றிசையை யாழிசை தொடர்ந்து செல்லுதற்குப் பருந்தினிழலியக்கம் உவமை. யாணரம்பு, வாணர் என்பன முறையே யாழ்நரம்பு, வாழ்நர் என்பவற்றின் மரூஉக்கள். தம் இரண்டும் சாரியை. அன்று, ஏ அசைகள். (36) தருக்களுஞ் சலியா முந்நீர்ச் சலதியுங் கலியா நீண்ட பொருப்பிழி யருவிக் காலு நதிகளும் புரண்டு துள்ளா அருட்கடல் விளைத்த கீத வின்னிசை யமுத மாந்தி மருட்கெட வறிவன் றீட்டி வைத்தசித் திரமே யொத்த. (இ - ள்.) தருக்களும் சலியா - மரங்களும் அசையாவாய், முந்நீர்ச் சலதியும் கலியா - மூன்று நீரினையுடைய கடல்களும் ஒலியாவாய், நீண்ட பொருப்பு இழி அருவிக்காலும் - உயர்ந்த மலையினின்றும் இழியும் அருவியாகிய கால்களும், நதிகளும் புரண்டு துள்ளா - ஆறுகளும் புரண்டு துள்ளாவாய், மருள்கெட - மயக்கம் நீங்க, அருள் கடல் விளைத்த- கருணைக் கடலாகிய இறைவன் பாடியருளிய, கீத இன் இசை அமுதம் மாந்தி - இன்னிசைக் கீதமாகிய அமுதத்தைப் பருகி, அறிவன் - சிற்ப நூல் வல்லான், தீட்டி வைத்த சித்திரமே ஒத்த - எழுதி வைத்த சித்திரங்களையே ஒத்திருந்தன. தருக்கள் முதலியன மாந்திச் சலித்தல் முதலியன செய்யாவாய்ச் சித்திரமேயொத்த என வினை முடிக்க. மருள் - அறியாமையுமாம். " மருவியகால் விசைத்தசையா மரங்கண்மலர்ச் சினைசலியா கருவரைவீ ழருவிகளுங் கான்யாறுங் கலித்தோடா பெருமுகிலின் குலங்கள்புடை பெயர்வொழியப் புனல்சோரா இருவிசும்பி னிடைமுழங்கா வெழுகடலு மிடைதுளும்பா" என்னும் திருத்தொண்டர் புராணசசெய்யுள் இங்கே நோக்கற் பாலது. (37) வீணைகை வழுக்கிச் சோர்வார் சிலர்சிலர் விரன டாத்தும் யாணரம் பெழாலுங் கண்டத் தெழாலும்வே றாக வேர்ப்பர்1 நாணமோ டுவகை துள்ள நாத்தலை 2நடுங்கித் தங்கள் மாணிழை யவர்மேல் வீழ்வார் விஞ்சையர் மயங்கிச் சில்லோர். (இ - ள்.) விஞ்சையர் சிலர் - யாழ் விஞ்சைவல்ல காந்தருவருட் சிலர், வீணைகை வழுக்கிச் சோர்வார் - வீணை கையினின்றும் நழுவி வீழச் சோர்வடைவர், சிலர் - மற்றுஞ் சிலர், விரல் நடாத்தும் யாழ் நரம்பு எழாலும் - விரலால் வருடியெழுப்பப்படும் யாழ் நரம்பின் இசையும், கண்டத்து எழாலும் வேறாக வேர்ப்பர் - மிடற்றினது இசையும் வேறாகுமாறு வேர்ப்பார்கள்; சில்லோர்- வேறு சிலர், நாணமோடு உவகை துள்ள - நாணம் ஒரு பாலும் மகிழ்ச்சி ஒருபாலும் ஓங்க, நாத்தலை நடுங்கி மயங்கி - நாவும் தலையும் நடுங்கி மதிமயங்கி, தங்கள் மாண் இழையவர் மேல் வீழ்வார் - தத்தம் சிறந்த அணிகளையுடைய மகளிர் மேல் வீழ்வர். விஞ்சையர் - விச்சாதரர் என்றுமாம். எழால் - இன்னிசை. யாணரம்புக்கு மேல் உரைத்தது காண்க. (38) போதுளான் பரமன் பாதப் போதுளா னானான் வேலை மீதுளான் பரமா னந்த வேலைமீ துள்ள னானான் தாதுளாங் கமலக் கண்போற் சதமக னுடல மெல்லாங் காதுளா னல்லே னென்றான் கண்ணுளான் கானங் கேட்டு. (இ - ள்.) கண்ணுளான் கானம் கேட்டு - நுதற் கண்ணுடைய சிவபெருமான் பாடியருளிய தேவகானத்தினைக் கேட்டு, போதுளான் பரமன் பாதம் போதுளான் ஆனான் - தாமரை மலரில் இருக்கும் பிரமன் அவ்விறைவனுடைய திருவடித் தாமரையின் கீழுள்ளவனானான்; வேலை மீதுளான் - கடலின் மேல் அறிதுயில் கொள்ளுந் திருமால், பரமானந்த வேலை மீது உள்ளான் ஆனான் - பேரின்பக் கடலில் உள்ளவனானான்; சதமகன் - இந்திரன், தாது உள் ஆம் கமலக் கண்போல் - அகத்தே மகரந்தத்தையுடைய தாமரை மலர் போன்ற கண்களைப் போல, உடலம் எல்லாம் - உடல் முற்றும், காது உளான் அல்லேன் என்றான் - செவிகளையுடைய னல்லேனாயினேன் என்று கூறி வருந்தினான். இசையானது சிவானந்தத்தை விளைத்தமையின் இறைவன் திருவடியிற் கலந்தார் போலாயினான் என்பார் 'பாதப் போதுளானானான்' என்றார். போதுளான் பாதப் போதுளான் என்றும், வேலை மீதுள்ளான் பரமானந்த வேலை மீதுள்ளான் என்றும் கூறிய நயம் பாராட்டற்பாலது. கண்ணுளான் என்பதற்குக் கூத்தி யற்றுபவன் என்றுரைப்பாருமுளர். (39) முனிவருந் தவத்த ராதி முத்தர்மா சித்த ரன்பன்1 துனிவரும் பழங்கண் டீர்ப்பான் சுந்தரத் தோன்றல் கீதம் கனிவருங் கருணையென்னுங் கடலிலன் பென்னு மாற்றிற் பனிவருங் கண்ணீர் வெள்ளம் பாய்ந்திட வின்பத் தாழ்ந்தார். (இ - ள்.) முனிவு அரும் - வெறுப்பு, (விருப்பு) அற்ற, தவத்தர் ஆதிமுத்தர் மாசித்தர் - தவத்தரும் சீவன் முத்தரும் பெரிய சித்தரும், அன்பன் - பாணபத்திரனது, துனி வரும் பழங்கண் தீர்ப்பான் சுந்தரத் தோன்றல் - துன்பத்தையும் அதனால் வந்த மெலிவையும் நீக்குவானாகிய சோம சுந்தரக் கடவுளின், கீதம் கனிவரும் கரணை என்னும் கடலில் - இசையாகக் கனிந்த கருணையாகிய கடலில், அன்பு என்னும் ஆற்றில் - அன்பாகிய ஆற்றோடு, பனி வரும் கண்ணீர் வெள்ளம் பாய்ந்திட - குளிர்ந்த ஆனந்தக் கண்ணீர் வெள்ளம் பாய, இன்பத்து ஆழ்ந்தார் - இன்பத்தில் ஆழ்ந்தனர். முனிவு - வெறுப்பு. இறைவன் அனாதி முத்தனாகலின் சீவன் முத்தரை ஆதி முத்தர் என்றார்; தவத்தர் முத்தர் சித்தர் ஆதியானவர்கள் என்றுமாம். பழங்கண் - மெலிவு. தீர்க்கும்படி சுந்தரத் தோன்றல் பாடிய என விரித்துரைத்தலுமாம். கடலில் ஆற்றாலே செள்ளம் பாய; கடலிற் செல்லும் ஆற்றிலே வெள்ளம் பாய என்றுமாம். (40) ஊடிவே றொதுங்கித் துன்ப வுவரியுட் குளித்தார் தம்மிற் கூடிவே றற்ற வின்பக் குளிர்கடல் வெள்ளத் தாழ்ந்தார் நாடிவே றிடைப்பி ரிந்தார் மேன்மன நடாத்தி மேனி வாடிவே ளலைப்பச் சோர்ந்து மம்மர்நோ யுழந்தார் மண்ணோர். (இ - ள்.) மண்ணோர் - நிலவுலகிலுள்ளவருள், ஊடி வேறு ஒதுங்கி - பிணங்கி வேறாக ஒதுங்கி, துன்ப உவரியுள் குளித்தார்- துன்பக் கடலுள் மூழ்கிய மகளிர், தம்மில் கூடி வேறு அற்ற இன்பக் குளிர் கடல் வெள்ளத்து ஆழ்ந்தார் - தாமாகவே தலைவர் களைக் கூடி வேறில்லாத இன்பமாகிய குளிர்ந்த கடல் வெள்ளத்துள் ஆழ்ந்தார்கள்; நாடி வேறு இடைப் பிரிந்தார் மேல் மனம் நடாத்தி- தலைவரைப் பிரிந்த மகளிர் பொருள் முதலியவற்றை நாடி மறுபுலத்துப் பிரிந்து சென்ற தலைவர் மேல் மனத்தைச் செலுத்தி, வேள் அலைப்ப - மன்மதன் வருத்துதலைச் செய்ய, மேனி வாடி சோர்ந்து - உடல் வாடி உள்ளஞ் சோர்ந்து, மம்மர் நோய் உழந்தார் - காம நோயால் வருந்தினார்கள். வேறு வாயிலின்றி என்பார் 'தம்மில்' என்றார். வேறற்ற - உடம்பு ஒன்றாய. பிரிந்த மகளிர் என வருவிக்க. ஊடின ஆடவரும் மகளிரும் என்றும், பிரிந்த ஆடவரும் மகளிரும் என்றும் பொதுவாக உரைத்தலுமாம். (41) பைத்தலை விடவாய் நாகம் பல்பொறி மஞ்ஞை நால்வாய் மத்தமா னரிமான் புல்வாய் வல்லிய மருட்கை யெய்தித் தத்தமா றறியா வாகித் தலைத்தலை மயங்கிச் சோர இத்தகை மாவும் புள்ளு மிசைவலைப் பட்ட வம்மா. (இ - ள்.) பைத்தலை விடவாய் நாகம் பல்பொறி மஞ்ஞை- படத்தையுடைய தலையையும் நஞ்சு பொருந்திய வாயினையுமுடைய பாம்புகளும் பல பொறிகளையுடைய மயில்களும், நால்வாய் மத்தமான் அரிமான் - தொங்குகின்ற வாயினையும் மத மயக்கத்தையு முடைய யானைகளும் சிங்கங்களும், புல்வாய் வல்லியம் - மான்களும் புலிகளும், இத்தகை மாவும் புள்ளும் - இங்ஙனம் ஒன்றுக்கொன்று பகைமையுடையஏனைய விலங்குகளும் பறவைகளும், மருட்கை எய்தி - இசையால் மயங்கி, தத்தம் மாறு அறியாவாகி - தம் தம் பகைமையை அறியாவாய், தலைத் தலை மயங்கிச் சோர - இடங்கள் தோறும் ஒன்றோடொன்று கலந்து சோர்ந்து; இசை வலைப்பட்ட - இசையாகிய வலையின்கட்பட்டன. பாம்புக்கு மஞ்ஞையும் யானைக்குச் சிங்கமும் மானுக்குப் புலியும் பகையாவன. இங்ஙனம் பகையான விலங்குகளும் பறவை களும் இசையால் மருட்கையெய்தினமையால் தம் பகைமையறிய மாட்டாமல் ஒன்றோடொன்று விரவிச் சோர்ந்து நின்றன என்றார். சோர்தல் - ஒன்றின் மீது ஒன்று சாய்தலுமாம். சோர - சோர்ந்து; சோரும்படி என்றுமாம். மாவும் புள்ளும் வலைப்பட்டன என்பது நயமுடைத்து. அம்மா: வியப்பிடைச் சொல். (42) வன்றரை கிழிய வீழ்போய் வான்சினை கரிந்து நின்ற ஒன்றறி மரங்க ளெல்லாஞ் செவியறி வுடைய வாகி மென்றளி ரீன்று போது விரிந்துகண் ணீருஞ் சோர நன்றறி மாந்தர் போல நகைமுக மலர்ந்த மாதோ. (இ - ள்.) வன்தரை கிழிய வீழ்போய் - வலிய நிலம் பிளக்கு மாறு விழுது வீழ்த்தி, வான் சினை கரிந்து நின்ற - பெரிய கிளைகள் உலர்ந்து நின்ற, ஒன்று அறிமரங்கள் எல்லாம் - ஊறு என்னும் ஓரறிவுடையவாகிய மரங்கள் அனைத்தும், செவி அறிவு உடையவாகி - ஓசையறி வினையு முடையனவாய், மென்தளிர் ஈன்று- மெல்லிய தளிரினை ஈன்று, போது விரிந்து - பூக்கள் மலர்ந்து, கண்ணீரும் சோர - கண்ணீரும் பொழிய, நன்று அறிமாந்தர் போல- தமக்கு உறுதியாவன அறிந்த மக்களைப் போல, நகைமுகம் மலர்ந்த- நகையொடு முகமலர்ந்தன. வீழ் - விழுது. ஒன்று அறி - ஊறு என்னும் ஒன்றனையே அறியும்; "ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே" என்பது தொல்காப்பியம். செவியறிவு - ஐந்தாவதாகிய ஓசையை அறியும் அறிவு. இசை செவியால் அறியப்படுவதாகலின் அதற்கேற்பச் செவியறிவுடையவாகி என்றார். ஓரறிவுடையதன் மேலும் கரிந்தும் போன மரங்கள் செவியறிவுடையன போல இசையையேற்றுத் தளிர்த்து அவ்வளவேயன்றி மனத்தால் நன்றினையறியும் மக்கள் போலக் கண்ணீர் சொரிந்து முக மலர்ந்தன என வியந்து கூறினார். வற்றல் மரமானது தளிரீன்று அரும்பிப் போதாகி மலர்ந்து தேனுஞ் சிந்திற்றென்றால் இசையின் பெருமையை யாரால் இயம்பலாகும். மரத்திற்குக் கள்ளாகிய நீர் எனவும், மாந்தர்க்கு விழிநீர் எனவும் கொள்க. மாது, ஓ : அசைகள். (43) வாழிய வுலகின் வானோர் மனிதர்புள் விலங்கு மற்றும் ஆழிய கரண மெல்லா மசைவற வடங்க வையன் ஏழிசை மயமே யாகி யிருந்தன வுணர்ந்தோ ருள்ளம் ஊழியி லொருவன் றாள்புக் கொடுங்கிய தன்மை யொத்த. (இ - ள்.) உலகின் வானோர் - வானுலகிலுள்ள தேவர்களும், மனிதர் - மனிதர்களும், புள் விலங்கு மற்றும் - பறவையும் விலங்கும் ஏனையவும், ஆழிய கரணம் எல்லாம் - இசையிற் பதிந்த மன முதலிய கரணங்கள் அனைத்தும், அசைவு அற அடங்க - அசைவின்றி அடங்க, ஐயன் - இறைவனது, ஏழ் இசை மயமே ஆகி இருந்தன - ஏழாகிய இசையின் மயமேயாகி இருந்தன (அங்ஙனமிருந்த தன்மை), உணர்ந்தோர் உள்ளம் - மெய்யுணர்ந்தோரின் உள்ளம், ஊழிஇல் ஒருவன் தாள்புக்கு - இறுதியில்லாத ஒருவனாகிய இறைவன் திருவடியின்கண் சென்று, ஒடுங்கிய தன்மை ஒத்த - ஒடுங்கிய தன்மையை ஒத்தது. வாழிய : மங்கலப் பொருட்டாய அசைச்சொல். வானுலகினோர் எனப் பிரித்துக் கூட்டுக; உலகங்களில் உள்ள எனப் பொதுப்படவுரைத்தலுமாம். ஆழிய - அழுந்திய. உணர்ந்தோர் - பரஞானத்தாலே பரத்தைத் தரிசித்தோர். உலகமெல்லாம் ஒடுங்கிய ஊழியிலும் எஞ்சி நிற்கும் ஒருவனாகிய இறைவன் என்றுமாம். ஒடுங்கிய தன்மை - சிவமேயான தன்மை. (44) கண்ணிறை நுதலோன் சாம கண்டத்தி னெழுந்த முல்லைப் பண்ணிறை தேவ கீதஞ் சராசர வுயிரும் பாரும் விண்ணிறை திசைக ளெட்டும் விழுங்கித்தன் மயமே யாக்கி உண்ணிறை யுயிரு மெய்யு முருக்கிய திசைவல் லானை. (இ - ள்.) கண் நிறை நுதலோன் - கண் நிறைந்த நெற்றியையுடைய சோம சுந்தரக் கடவுளின், சாம கண்டத்தின் எழுந்த - சாம வேதம் பாடுந் திருமிடற்றினின்றும் எழுந்த, முல்லைப் பண் நிறை தேவ கீதம் - சாதாரியாகிய நிறைந்த தேவகானமானது, சர அசர உயிரும் - இயங்குவனவும் நிற்பனவுமாகிய உயிர்களையும். பாரும் - நிலவுலகத்தையும், விண் - விண்ணுலகத்தையும், நிறை திசைகள் எட்டும் - நிறைந்த எட்டுத் திக்குகளையும், விழுங்கித் தன் மயமே ஆக்கி - விழுங்கித் தன் மயமாகவே செய்து, இசை வல்லானை உள் நிறை உயிரும் மெய்யும் உருக்கியது - இசையில் வல்ல ஏமநாதனை உள்ளே நிறைந்த உயிரையும் உடலையும் உருக்கியது. வல்லானுடைய உயிரையும் மெய்யையும் உருக்கியதென்க. (45) [கலிநிலைத்துறை] சிந்தை தோயுமைம் பொறிகளுஞ் செவிகளாப் புலன்கள் ஐந்து மோசையா விசைவலா னிருந்தன னாகப் பந்த நான்மறை நாவினாற் பத்திர னாளாய் வந்து பாடினா ரிந்தனச் சுமையொடு மறைந்தார். (இ - ள்.) சிந்தை தோயும் ஐம்பொறிகளும் - மனத்துடன் பொருந்தும் ஐம்பொறிகளும், செவிகளா - காதுகளாகவும், புலன்கள் ஐந்தும் - ஐம்புலன்களும், ஓசையா - ஓசையாகவும், இசை வலான் இருந்தனனாக - இசையில் வல்ல ஏமநாதன் இருந்தானாக; பந்தம் நான்மறை நாவினால் - பந்த முதலிய உறுப்புக்களையுடைய நான்மறைகளைக் கூறியருளிய நாவினால், பத்திரன் ஆளாய் வந்து பாடினார் - பாணபத்திரன் அடிமையாக வந்து பாடியருளிய இறைவர், இந்தனச் சுமையொடும் மறைந்தார் - விறகுச் சுமையோடும் மறைந்தருளினார். மனத்துடன் கூடாவிடத்துப் பொறிகள் உணராவாகலின் 'சிந்தை தோயும் ஐம்பொறிகளும்' என்றார். ஐம்பொறிகளும் செவிகளாப் புலன்களைந்தும் ஓசையா என்றது கண் முதலிய ஏனைப் பொறிகள் உருவம் முதலிய புலன்களைச் சிறிதும் உணராதிருக்க என்றதன்றி, அவற்றின் ஆற்றல்களையெல்லாம் செவியே கொண்டு அனைத்தையும் ஒடுக்கி நிற்கின்ற ஓசையொன்றையே யுணர என்றதுமாயிற்று; " ஐந்து பேரறிவுங் கண்களே கொள்ள" என்னும் பெரிய புராணசசெய்யுள் இங்கே சிந்திக்கற்பாலது. பந்தம் - தளை; வேதத்தின் உறுப்பு. பாடினார: பெயர். அவன் இசையொன்றையே உணர்ந்து கொண்டிருந்தமையின் அவர் மறைந்த தன்மையையும் உணரானாயினான் என்க. (46) யான றிந்தசா தாரியன் றிம்பரு ளிதனை நான றிந்ததென் றொருவரு நவின்றிலர் தேவ கான மீதிவற் குணர்த்தினோன் கடவுளே யன்றி ஏனை மானுடர் வல்லரோ விதுவியப் பென்னா. (இ - ள்.) யான் அறிந்த சாதாரி அன்று - (இது) யான் அறிந்த சாதாரிப் பண் அன்று; இம்பருள் - இந்நிலவுலகில், நான் அறிந்தது என்று ஒருவரும் இதனை நவின்றிலர் - என்னால் அறியப்பட்டது என்று ஒருவரேனும் இதனைக் கூறிற்றிலர்; ஈது தேவகானம் - இது தேவ கானமாகும் (ஆதலின்), இவற்கு உணர்த்தினோன் - இவனுக்கு இதனை அறிவித்தவன், கடவுளே அன்றி - கடவுளே அல்லாமல், ஏனை மானுடர் வல்லரோ - மற்றை மனிதர்கள் அறிவிக்க வல்லரோ, இது வியப்பு என்னா - இது வியக்கத்தக்க செய்தி என்று கூறி. ஒருவரும் தாம் அறிந்ததாகக் கூறிற்றிலர் என்க. மானுடனாகிய பாணபத்திரனுடைய மாணாக்கனாகக் கூறினமையின் 'இது வியப்பு' என்றான். (47) இழுக்கி விட்டவிக் கிழமக னிசையிதே லந்த வழுக்கில் பத்திரன் பாடலெற் றோவென மதியா அழுக்க முற்றெழுந் திசைவலா னடுத்ததன் பண்டர் குழுக்க ளுங்குலை குலைந்திட விருள்வழிக் கொண்டான். (இ - ள்.) இழுக்கிவிட்ட இக்கிழமகன் இசை இதேல் - நீக்கிவிடப்பட்ட இம்முதியோன் இசை இதுவாயின், அந்த வழுக்கு இல் பத்திரன் - அந்தக் குற்றமில்லாத பாணபத்திரனது, பாடல் எற்றோ என மதியா - பாடல் எத்தன்மைத்தோ என்று கருதி, அழுக்கம் உற்று - வருந்துதலுமுற்று, இசைவலான் எழுந்து - இசையில் வல்ல ஏமநாதன் அவணின்றும் எழுந்து, அடுத்த தன் பண்டர் குழுக்களும் குலை குலைந்திட - தன்னை அடுத்த பாண் மக்களின் கூட்டங்களும் தலை தடுமாறிச் செல்ல, இருள் வழிக் கொண்டான் - இரவிலேயே ஓடத் தலைப்பட்டான். இழுக்கி - கடிந்து. இதேல் : விகாரம். அழுக்கம் - அழுங்குதல். பண்டர் - பாண்மக்கள். (48) மடக்கு பல்கலைப் பேழையு மணிக்கலம் பிறவும் அடக்கு பேழையுங் கருவியாழ்க் கோலுமாங் காங்கே கிடக்க மானமு மச்சமுங் கிளர்ந்துமுன் னீர்த்து நடக்க வுத்தர திசைக்கணே நாடினா னடந்தான். (இ - ள்.) பல்கலை மடக்கு பேழையும் - பல் வகை ஆடைகளை மடித்து வைத்துள்ள பெட்டிகளும், மணிக்கலம் பிறவும் அடக்கு பேழையும் - மணிகள் இழைத்த அணிகளையும் பிற பொருளையும் அடக்கிய பெட்டிகளும், கருவியாழ்க் கோலும் - கருவியாகிய யாழ்க்கோலும், ஆங்காங்கே கிடக்க -அங்கங்கே கிடக்க, மானமும் அச்சமும் கிளர்ந்து முன் ஈர்த்து நடக்க - மானமும் பயமும் முன்னே இழுத்துச் செல்ல, உத்தர திசைக்கணே நாடினான் நடந்தான் - வட திசைக் கண்ணே நாடிச் சென்றான். மானம் அழிந்து விடுமென்னும் அச்சத்தால் விரைந்து சென்றானென்பார், மானமும் அச்சமும் ஈர்த்து 'நடக்க' என்றார். மிக விரைந்து செல்லுங் கருத்தால் பேழை முதலியவற்றை எடாது சென்றனன் என்க. நாடினான் : முற்றெச்சம். (49) சிவிகை யோர்வழி விறலிய ரோர்வழி செல்லக் கவிகை யோர்வழி கற்பவ ரோர்வழி கடுகக் குவிகை யேவல ரொருவழி கூடநா ணுள்ளத் தவிகை யோவரு மொருவழி யகன்றிட வகன்றான். (இ - ள்.) சிவிகை ஓர் வழி விறலியர் ஓர் வழி செல்ல - பல்லக்கு ஒரு வழியிலும் பாடினிகள் ஒரு வழியிலுஞ் செல்லவும், கவிகை ஓர் வழி கற்பவர் ஓர் வழி கடுக - குடை ஒரு வழியிலும் மாணவகர் ஒரு வழியிலும் விரைந்து செல்லவும், கை குவி ஏவலர் ஒரு வழி கூட - கை கூப்பி வணங்கும் ஏவலாளர் ஒரு வழியிற் செல்லவும், உள்ளத்து நாண் அவிகை ஓவரும் ஒரு வழி அகன்றிட- உள்ளத்தின் கண் நாண் ஒழிந்த பாண் மக்களும் ஒரு வழி அகல, அகன்றான் - தானும் நீங்கினான். விறலியர் - பாடினிகள்; பாடுமகளிர்; விறல்பட ஆடு மகளிர் என்பர் நச்சினார்க்கினியர். அவிகை - அவிதலுடைய. ஓவர் - ஏத்தாளர்; அரசர்களை ஏத்துவோர்; பாணர். (50) அன்று பத்திரன் கனவில்வந் தாடலேற் றழகர் இன்று பத்திர விசைவலா னிடைவிற் காளாய்ச் சென்று பத்திர னடிமையா மென்றுபாண் செய்து வென்று பத்திரஞ் செய்துநின் வேண்டுகோ ளென்றார். (இ - ள்.) ஆடல் ஏற்று அழகர் - வெற்றியையுடைய இடபவூர்தியையுடைய சோம சுந்தரக் கடவுள், அன்று பத்திரன் கனவில் வந்து - அன்று பாணபத்திரன் கனவில் வந்து, பத்திர - பாணபத்திரனே, நின் வேண்டுகோள் - உன் வேண்டுகோளின்படியே, இசைவலான் இடை - இசையில் வல்ல அவ்வேமநாதனிடத்து, விறகு ஆளாய் இன்று சென்று - விறகாளாக இன்று போய், யாம் பத்திரன் அடிமை என்று - யாம் பாணபத்திரன் அடிமை என்று கூறி, பாண் செய்து - இசை பாடி, வென்று பத்திரம் செய்தும் என்றார் - வென்று நின்றைக் காத்தனம் என்றருளிச் செய்தார். பாண் செய்து - என்பதனை இரட்டுற மொழிதலாகக் கொண்டு தாழ்ச்சி செய்து என்றும் உரைத்துக் கொள்க. "பணிந்து பாண்செய்த தன்றே" என்னும் சிந்தாமணித் தொடருக்கு நச்சினார்க்கினியர் இங்ஙனம் பொருள் கூறினமை காண்க; "பாண்பேசிப் படுதலையிற் பலி கொள்கை தவிரீர்" எனத் தேவாரத்திலபாண் பேசி என்பது தாழ்ச்சி சொல்லி என்னும் பொருளில் வந்திருத்தலும் கருதுக. செய்தும் - செய்தோம். வேண்டுகோளால் என மூன்றனுருபு விரிக்க. (51) குஞ்சி நாண்மலர்க் கொன்றையா ரங்ஙனங் கூறும் நெஞ்சி னானினைப் பரியசொற் கேட்டலு நெஞ்சம் அஞ்சி னானிது செய்யவோ வடியனேன் மறைகட் கெஞ்சி னாரையின் றிரந்தவா றென்றுகண் விழித்தான். (இ - ள்.) குஞ்சி நாள்மலர்க் கொன்றையார் - முடியின்கண் அன்றலர்ந்த கொன்றை மலர் மாலையையுடைய இறைவர், அங்ஙனம் கூறும் - அவ்வாறு கூறியருளிய, நெஞ்சினால் நினைப்பரிய சொல் - நெஞ்சினாலும் நினைத்தற்கரிய சொல்லை, கேட்டலும் - கேட்டவளவில், நெஞ்சம் அஞ்சினான் - மனந் துணுக்குற்று, இது செய்யவோ - இக்காரியம் செய்தற்கோ, அடியனேன் மறைகட்கு எஞ்சினாரை இன்று இரந்தவாறு என்று -அடியனேன் வேதங்களுக்கு மெட்டாத இறைவரை இன்று குறையிரந்தபடி யென்று, கண் விழித்தான் - கண் விழித்தெழுந்தான் நெஞ்சினால் நினைப்பரிய சொல் - விறகாளாய்ச் சென்று 'பத்திர னடிமையாம்' என்று கூறிய சொல். (52) கண்ம லர்ந்தெழு பத்திரன் கரையிலா வுவகை உண்ம லர்ந்தெழு மன்புகொண் டூக்கவெங் கதிரோன் விண்ம லர்ந்தெழு முன்புபோய் விசும்பிழி கோயிற் பண்ம லர்ந்தநான் மறைப்பொரு ளடித்தலம் பணிந்தான். (இ - ள்.) கண் மலர்ந்து எழு பத்திரன் - அங்ஙனங் கண் விழித்தெழுந்த பாணபத்திரன், கரை இலா உவகை உள் மலர்ந்து - அளவிறந்த மகிழ்ச்சியால் அகமலர்ந்து, எழும் அன்பு கொண்டு ஊக்க - மேலெழுந்த அன்பு தன் மயமாக்கிச் செலுத்த, வெங்கதிரோன் - வெவ்விய கதிர்களையுடைய சூரியன், விண்மலர்ந்து எழுமுன்பு போய் - வானிலே உதித்தெழுதற்கு முன்னரே சென்று, விசும்பு இழிகோயில் - விண்ணினின்றும் இழிந்த இந்திர விமானத்தில் எழுந்தருளிய, பண் மலர்ந்த நான் மறைப் பொருள் - இசை நிறைந்த நால் வேதங்களின் பொருளாயுள்ள சோம சுந்தரக் கடவுளின், அடித்தலம் பணிந்தான் - திருவடிகளை வணங்கினான். (53) கடிய கானகம் புகுதவோ கட்டிய விறகை முடியி லேற்றவோ முண்டகத் தாள்கணொந் திடவந் தடிய னேன்பொருட் டடாதசொற் பகரவோ வஞ்சக் கொடிய னேன்குறை யிரந்தவா விளைந்ததே குற்றம். (இ - ள்.) கடிய கானகம் புகுதவோ - கொடிய காட்டின்கண் செல்லவோ, கட்டிய விறகை முடியில் ஏற்றவோ - கட்டப்பட்ட விறகு சுமையைத் திருமுடியில் ஏற்றுதற்கோ, முண்டகத் தாள்கள் நொந்திட வந்து - தாமரை மலர் போன்ற திருவடிகள் நோவுமாறு நடந்து வந்து, அடியனேன் பொருட்டு - அடியேன் நிமித்தம், அடாத சொல் பகரவோ - தகாத சொல்லைக் கூறுதற்கோ, வஞ்சக் கொடியனேன் குறையிரந்தவா - வஞ்சகத்தையுடைய கொடியேன் குறையிரந்தபடி, குற்றம் விழைந்ததே - அதனால் அடியேனுக்குப் பெரும் பிழை விளைந்து விட்டதே (இதற்கு என் செய்வேன்). கொடியனேன் குறையிரந்தது அடியேன் பொருட்டுப் புகுதவோ ஏற்றவோ பகரவோ என இரங்கினான் என்க. (54) நெடிய னேமுதல் வானவர் நெஞ்சமுஞ் சுருதி முடிய னேகமுங் கடந்தநின் முண்டகப் பாதஞ் செடிய னேன்பொருட் டாகவிச் சேணிலந் தோய்ந்த அடிய னேற்கெளி தாயதோ வையநின் பெருமை. (இ - ள்.) நெடியனே முதல் வானவர் நெஞ்சமும் - திருமால் முதலிய தேவர்களின் உள்ளங்களையும், சுருதி முடி அனேகமும் கடந்த - எண்ணிறந்த வேதங்களின் முடிகளையுங் கடந்தருளிய, நின் முண்டகப் பாதம் - தேவரீரது தாமரை மலர் போன்ற திருவடிகள், செடியனேன் பொருட்டாக - பாவியேன் பொருட்டாக, இச்சேண்நிலம் தோய்ந்த - இந்தப் பெரிய நிலத்தின்கண் தோய்ந்தன; ஐயநின் பெருமை - (ஆதலால்) ஐயனே நினது பெருமை, அடியனேற்கு எளிது ஆயதோ - அடியேனுக்கு எளிதாயிற்றோ? செடியனேன் - பாவியேன்; செடி - குற்றம.. தோய்ந்த : அன்பெறாத பலவின்பால் முற்று. எத்தனையும் அரிய நின் பெருமை ஒன்றுக்கும் பற்றாத புன்மையேன் திறத்தும் எளிதாயிற்றோ என்றபடி. (55) பநாத வந்தமுங் கடந்தமெய்ஞ் ஞானவா னந்த போத மென்பரஃ தின்றொரு புடவிமா னுடமாய் ஆத பந்தெற வெறிந்த1 விந்தனஞ்சுமந் தடியேன் பேதை யன்பள வாயதோ பெருமநின் னுருவம். (இ - ள்.) பெரும - பெருமானே, நின் உருவம் - தேவரீரின் உருவம், நாத அந்தமும் கடந்த - நாதாந்தத்தினையுங் கடந்தருளிய, மெய் ஞான ஆனந்த போதம் என்பர் - உண்மையறிவானந்த மென்று கூறுவர் பெரியோர்; அஃது இன்று ஒரு புடவி மானுடமாய் - அவ்வுருவம் இன்று இந்நிலவுலகின்கண் ஒரு மனித வடிவாய், ஆதபம் தெற - வெய்யில் சுட்டு வருத்த, எறிந்த இந்தனம் சுமந்து- வெட்டிய விறகினைச் சுமந்து, பேதை அடியேன் அன்பு அளவு ஆயதோ - பேதையாகிய அடியேனது அன்பின் அளவாகியதோ. நாத அந்தம் - குடிலை. போதம் - தெளிவு என்னும் பொருட்டு. ஆதபம் - வெய்யில். பேதையாகிய அடியேன் என மாறுக; பொய்யன்பு எனலுமாம். (56) மறிந்த தெண்டிரை கிடந்தவ னுந்தியில் வந்தோன் அறிந்த தன்றரும் பொருள்வரம் பகன்றெழு விசும்புஞ் செறிந்த வண்டமுங் கடந்தது சிறியனேன் பொருட்டாத் தறிந்த2விந்தனஞ் சுமந்ததோ தம்பிரான்3முடியே. (இ - ள்.) தம்பிரான்முடி - இறைவனது திருமுடியானது, மறிந்த தெண்திரை கிடந்தவன் - மடங்கி வீசுந் தெளிந்த அலைகளையுடைய பாற்கடலிற் பள்ளி கொண்டவனாகிய திருமாலும், உந்தியில் வந்தோன் - அவனது உந்தியிற்றோன்றியவனாகிய பிரமனும், அறிந்தது அன்று - அறிந்ததன்று; அரும் பொருள் வரம்பு - அரிய பொருள்களின் முடிவாயது; அகன்று எழு விசும்பும் செறிந்த அண்டமும் கடந்தது - பரந்த வானினையும் நெருங்கிய அண்டங்களையுங் கடந்தது; சிறியனேன் பொருட்டா - (அஃது) இன்று சிறியனாகிய என் பொருட்டு, தறிந்த இந்தனம் சுமந்ததோ - வெட்டப்பட்ட விறகினைச் சுமந்ததோ. அரும்பொருள் - மறைப்பொருள்; தத்துவங்கள்; "போதார் புனைமுடியும் எல்லாப் பொருண் முடிவே" என்று திருவாசகம் கூறுதல் காண்க. அரும்பொருள் என்பதற்கு அணு என்றுரைத்து, அணுவுக் கணுவாயது என்பாரு முளர்; அது சிறப்பின்றாதல் உணர்க. 'பாதாள மேழினுங் கீழ் பாதமலர்' என்பதனால் முடி அண்டமனைத்துங் கடந்ததென்பது பெறப்படுதல் காண்க. (57) என்ன வந்தனை செய்துநின் றேத்தியங் கயற்கண் மின்ன மர்ந்தபங் கொருவனை வலங்கொடு மீண்டு மன்னர் தம்பிரா னாகிய வரகுண தேவன் தன்னை வந்தடி பணிந்தனன் றந்திரிக் கிழவோன். (இ - ள்.) என்ன - என்று, வந்தனை செய்து நின்று ஏத்தி- வணங்கி நின்று துதித்து, அங்கயற்கண் மின் அமர்ந்த பங்கு ஒருவனை - அங்கயற் கண்ணம்மை அமர்ந்த பாகத்தையுடைய சோம சுந்தரக் கடவுளை, வலங் கொடு மீண்டு - வலஞ்செய்து திரும்பி, மன்னர் தம்பிரானாகிய வரகுண தேவன் தன்னை - மன்னர் மன்னனாகிய வரகுண தேவனை, தந்திரிக் கிழவோன் -யாழுக்குரிய பாணபத்திரன், வந்து அடி பணிந்தனன் - வந்து வணங்கினான். மின் - மின்போல்வாள். தந்திரி - நரம்பு : யாழுக்கு ஆகுபெயர .(58) வந்த வேழிசைத் தலைமகன் வரவறிந் தரசன் அந்த வேழிசைக் கிழவனை யழையென வுழையோர் பந்த யாழ்மக னிருக்கைபோய்ப் பார்த்தனர் காணார் சிந்தை யாகுல மடைந்தவன் போனவா தெரியார்.1 (இ - ள்.) வந்த ஏழ்இசைத் தலைமகன் வரவு - அங்ஙனம் வந்த ஏழிசையிலும் வல்ல பாணபத்திரனது வருகையை, அரசன் அறிந்து - வரகுண பாண்டியன் தெரிந்து, அந்த ஏழ் இசைக் கிழவனை அழை என - (வட புலத்தினின்றும் வந்த) அந்த ஏழிசை வல்ல ஏமநாதனை அழையாய் எனப் பணிக்க, உழையோர் - ஏவலாளர், பந்தம் யாழ் மகன் இருக்கை போய் - கட்டமைந்த யாழ்மகனாகிய ஏமநாதன் இருப்பிடஞ் சென்று, பார்த்தனர் காணார் - பாரத்துக் காணாது, சிந்தை ஆகுலம் அடைந்து அவன் போனவர் தெரியார்- மனம் வருந்தி அவ்வேமநாதன் போன விதத்தைத் தெரியாதவர்களாய். அழையென ஒருவனை நோக்கிக் கூற உழையோர் பலர் சென்றனரென்க. .பந்தம் - யாழ்வலிக்கட்டு. அடைந்து போனவா என இயையும்; அடைந்து காணார் எனினும் பொருந்தும். போனவாறு என்பது ஈறு தொக்கது. பார்த்தனர், காணார், தெரியார் என்பன முற்றெச்சங்கள். (59) எங்கு ளானெனத் தேடுவா ரிவரெதி ரயல்வாய் அங்கு ளார்சில ரறிந்தவா றறைகுவா ரவனேற் றிங்கு ளான்விற கெடுத்தொரு முதுமக னிவன்பாற் பொங்கு மேழிசைப் பத்திர னடிமையாய்ப் போந்தான். (இ - ள்.) எங்கு உளான் எனத் தேடுவார் இவர் எதிர் - எங்கு இருப்பான் எனத் தேடுவாராகிய இவரெதிரே, அயல்வாய் அங்குளார் சிலர் - அங்கே அருகிலுள்ளார் சிலர், அறிந்தவாறு அறைகுவார் - தெரிந்தவாறு சொல்வார், அவன் நேற்று இங்கு உளான் - அவன் நெரு நல் இங்கு இருந்தான், ஒரு முதுமகன் - ஒரு கிழவன், விறகு எடுத்து - விறகு சுமந்து. இவன்பால் - இவ்வேம நாதனிடத்து, பொங்கும் ஏழ் இசைப் பத்திரன் - விளங்குகின்ற ஏழு இசையிலும் வல்ல பாண பத்திரனது. அடிமையாய்ப் போந்தான் - அடிமையாகி வந்தான். அயல்வாய் - பக்கத்து மனையிடங்கள். அடிமையாய் - அடிமை யென்று கூறி. அறைகுவார் என்பது வருஞ்செய்யுளில் 'என' என்பதனைக் கொள்ளும். (60) பாடி னான்பின்பு பட்டது தெரிகிலேம் பானாள் ஓடி னானெனக் கேட்டலு மொற்றர்போய்க் கொற்றஞ் சூடி னானவை யடைந்தவர் சொல்லிய வாறே ஆடி னார்வியப் படைந்தனு மானமுற் றரசன். (இ - ள்.) பாடினான் - (வந்து) பாடினான், பின்பு பட்டது தெரிகிலேம் - பின்னர் நிகழ்ந்த செய்தியை அறியோம். பால் நாள் ஓடினான் - பாதி இரவில் அவ்வேமநாதன் ஓடினான், என - என்று கூற, கேட்டலும் - கேட்டவளவில், ஒற்றர் போய் - உழையோர் சென்று, கொற்றம் சூடினான் அவை அடைந்து - வெற்றி மாலையைச் சூடிய பாண்டியனது அவையைச் சார்ந்து, அவர் சொல்லியவாறே ஆடினார் - அவ்வயலோர் கூறியவாறே கூறினார்; அரசன் வியப்பு அடைந்து அனுமான முற்று - பாண்டியன் அதிசயித்து ஐயமுற்று. பட்டது - நிகழ்ந்தது. கொற்றம் - வெற்றி; வாகை. ஆடினார்- கூறினார். அநுமானம் - ஐயம்; கருதுதலுமாம். (61) தன்ன டைந்தவத் தந்திரித் தலைவனை நோக்கி என்ன வாறவன் போனவா றிங்கினும் போன பின்னை யாதுநீ செய்தனை யெனவிசைப் பெருமான் தென்னர் கோனடி தொழுதுதன் செய்தியை மொழிவான். (இ - ள்.) தன் அடைந்த அத்தந்திரித் தலைவனை நோக்கி- தன்னைச் சார்ந்து நின்ற அந்த யாழ்த் தலைவனாகிய பாணபத்திரனைப் பார்த்து, அவன் போனவாறு என்னவாறு - அவன் போன விதம் என்ன வகை, இங்கினும் போன பின்னை - இங்கு நின்றும் போயினபின், நீ யாது செய்தனை என - நீ என்ன செய்தாய் என்று வினவ, இசைப் பெருமான் - இசைத் தலைவனாகிய பத்திரன், தென்னர் கோன் அடிதொழுது -பாண்டியர் மன்னனாகிய வரகுணனின் அடிகளை வணங்கி, தன் செய்தியை மொழிவான்- தனது செய்தியைக் கூறுவானாயினன். இங்கினும் - இவ்விடத்தினின்றும்; இன் : நீக்கப்பொருட்டு. (62) நென்னல் வாயடி யேனின தாணிழ னீங்கிப் பின்னல் வார்சடை மௌலியெம் பிரானடி பணிந்தேன் இன்ன லார்குறை யிரந்துமீண் டிருக்கைபுக் கிருந்தேன் கன்ன லார்மொழி பங்கரென் கனாவில்வந் தருளி. (இ - ள்.) நென்னல் வாய் - நேற்றைப் பொழுதில், அடியேன் நினதாள் நிழல் நீங்கி - அடியேன் உன்னுடைய அடி நிழலை நீங்கிச் சென்று, பின்னல் வார் சடை மௌலி - பின்னிய நீண்ட சடையாகிய முடியினையுடைய, எம்பிரான் அடி பணிந்தேன் - எம் பிரானாகிய சோம சுந்தரக் கடவுளின் திருவடிகளைப் பணிந்து, இன்னல் ஆர் குறை இரந்து மீண்டு - துன்ப மிக்க குறைபாடுகளை இரந்து கூறி மீண்டு, இருக்கை புக்கு இருந்தேன்- இல்லிற் புகுந்து இருந்தேன்; கன்னல் ஆர்மொழி பங்கர் - கரும்பு போலும் மொழியினையுடைய உமையைப் பாகத்திலுடைய அவ்விறைவர், என் கனாவில் வந்தருளி - எனது கனவின்கண் வந்தருளி. வாய் : ஏழனுருபு. நின : அகரம் ஆறன் பன்மையுருபு. பணிந்தேன் : முற்றெச்சம். ஆர் : உவமச் சொல்லாக நின்றது. மொழி : ஆகு பெயர். (63) ஓடி யுன்பொருட் டாகநாம் விறகெடுத் துழன்று வாடி நின்பகைப் புறங்கடை வந்துசா தாரி பாடி வென்றுநின் பகைவனைத் துரந்தன மெனச் சொல் ஆடி னார்விழித் தேனிது நிகழ்ந்ததென் றறைந்தான். (இ - ள்.) உன் பொருட்டாக - உன் நிமித்தமாக, நாம் ஓடி விறகு எடுத்து உழன்று வாடி - நாம் ஓடி விறகு சுமந்து திரிந்து வாடி, நின் பகைப் புறங்கடை வந்து - நின் பகைவனாகிய ஏமநாதன் தலைவாயிலிற் சென்று, சாதாரி பாடி வென்று - சாதாரிப் பண்ணைப் பாடி வென்று, நின் பகைவனைத் துரந்தனம் எனச் சொல் ஆடினார் - அவனை ஓட்டி விட்டேமெனக் கூறியருளினார்; விழித்தேன் - யானுங் கண் விழித்தேன்; இது நிகழ்ந்தது என்று அறைந்தான் - இது தான் நடந்த செய்தி என்று கூறினான். பகைப் புறங்கடை - பகைவனது இல்லின் புறங்கடை. சொல்லாடினார் - சொல்லினார். சொல்லியவளவில் விழித்தேன் என்க. (64) ஏவன் மைந்தர்போய் விளங்கிவந் திசைத்ததும் வீணைக் காவ லன்கனா நிகழ்ச்சியு மொத்தலிற் கைக்கும் பூவ லங்கலா னிஃதுநம் பொன்னகர்க் கூடற் றேவர் தம்பிரான் றிருவிளை யாட்டெனத் தெளிந்தான். (இ - ள்.) ஏவல் மைந்தர்போய் - ஏவலாளர் சென்று, விளங்கி வந்து இசைத்ததும் - தெரிந்துவந்து கூறியதும், வீணைக்காவலன் கனா நிகழ்ச்சியும் - வீணை வேந்தனாகிய பாணபத்திரனது கனா நிகழ்ச்சியும, ஒத்தலின் - ஒத்திருத்தலால், கைக்கும் பூ அலங்கலான்- வேப்ப மலர் மாலையை யணிந்த பாண்டியன், இஃது நம் பொன்நகர்க் கூடல் - இது நமது அழகிய நகரமாகிய கூடலின்கண் எழுந்தருளிய, தேவர் தம்பிரான் திருவிளையாட்டெனத் தெளிந்தான்- தேவதேவனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடல் என்று தெளிந்தான். விளங்கி என்பது விளங்க அறிந்து என்னும் பொருளில் வந்தது. கைக்கும்பூ - கசக்கும் பூ; வேப்பம் பூ. (65) இகழ்ந்த கூற்றெறி சேவடிக் கிடையறா நேயந் திகழ்ந்த பத்திர னன்பையுந் தேவரைக் காப்பான் அகழ்ந்த வாழிநஞ் சுண்டவ னருளையும் வியந்து புகழ்ந்து போய்மது ராபுரிப் புனிதனைப் பணியா. (இ - ள்.) இகழ்ந்த கூற்று எறி சேவடிக்கு - அவமதித்து வந்த கூற்றுவனை உதைத்த சிவந்த திருவடிக்கு, இடையறா நேயம் திகழ்ந்த - இடைவிடாத அன்பு விளங்கிய, பத்திரன் அன்பையும் - பாணபத்திரனது அன்பையும், தேவரைக் காப்பான்- தேவர்களைக் காக்கும் பொருட்டு, அகழ்ந்த ஆழி நஞ்சு உண்டவன் அருளையும் - (சகரர்) தோண்டிய கடலின் நஞ்சினை உண்ட இறைவனது அருளையும், வியந்து புகழ்ந்து - பாராட்டிப் புகழ்ந்து, போய் - சென்று, மதுராபுரிப் புனிதனைப் பணியா - மதுரைப்பதியி லெழுந்தருளிய இறைவனை வணங்கி. இகழ்ந்த - தன்னைச் சரண் புகுந்த அடியான்மீது தன்னை மதியாது அடர்ந்து வந்த. காப்பான் : வினையெச்சம். நஞ்சுண்டவன் என்றதனாலும் அருளை விளக்கினார். (66) பத்தர் யாழிசைக் கிழவனைப் பனைக்கைமா னெருத்தில் வைத்து மாடநீ ணகர்வலஞ் செய்வித்து மலர்ந்த சித்த மாழ்ந்திட வரிசைகண் மிதப்புறச் செய்து தத்து மான்றொடைத் தேரினான் றன்மனை புகுவான். (இ - ள்.) பத்தர் யாழ் இசைக்கிழவனை - பத்தரையுடைய யாழிசைக்கு உரிய பாணபத்திரனை, பனைக்கைமான் எருத்தில் வைத்து - பனைபோன்ற துதிக்கையையுடைய யானையின் பிடரில் வைத்து, மாடம் நீள்நகர் வலம் செய்வித்து - மாடங்கள் நிறைந்த நீண்ட நகரினை வலஞ் செய்வித்து, மலர்ந்த சித்தம் ஆழ்ந்திட - மலர்ந்த அவன் மனம் உவகைக் கடலில் அமிழ்ந்த, வரிசைகள் மிதப்புறச் செய்து - வரிசைகளை நிறையச் செய்து, தன்மனை புகுவான் - தனது மனையிற் புகுகின்றவனாகிய, தத்தும் மான் தொடைத் தேரினான் - தாவுகின்ற குதிரைகள் பூட்டிய தேரையுடைய பாண்டியன். மிதப்புற - மிக. தொடை - பூட்டு. புகுவானாகிய தேரினான் என்க. (67) தேவ ருந்தவ முனிவருந் தேவரிற் சிறந்தோர் யாவ ருந்தமக் காட்செய விருப்பவ ரிருதாள் நோவ வந்துமக் காட்செய்து நுங்குறை முடிப்பார் ஆவ ரேலுமக் கனைவரு மேவல ரன்றோ. (இ - ள்.) தேவரும் தவமுனிவரும் தேவரில் சிறந்தோர் யாவரும்- தேவர்களும் தவத்தினையுடைய முனிவர்களும் தேவர்களிற் சிறந்த திருமால் முதலிய அனைவரும், தமக்கு ஆள்செய்ய இருப்பவர்- தமக்குக் குற்றேவல் செய்ய வீற்றிருப்பவராகிய இறைவர், இருதாள் நோவ வந்து - இரண்டு திருவடிகளும் வருந்த வந்து, உமக்கு ஆள்செய்து - உமக்கு ஏவல் செய்து, நும்குறை முடிப்பார் ஆவரேல்- உமது குறையினை முடிப்பாராயின், உமக்கு அனைவரும் ஏவலர் அன்றோ - உமக்கு அனைவரும் ஏவலாளர் அல்லவோ? அனைவரும் - அத்தேவர் முதலாயினாரும் புவியின் மாந்தரனை வரும். (68) ஆத லாலெனக் குடையர் நீ ருமக்குநா னடியேன் ஈத லாலெனக் கும்மொடு வழக்குவே றிலைநான் ஓத லாவதோர் குறையுள தின்றுதொட் டுமக்கு வேத நாதனைப் பாடலே கடனென விடுத்தான். (இ - ள்.) ஆதலால் - ஆகையால், எனக்கு உடையர் நீர் - என்னை யுடைய தலைவர் நீர்; நான் உமக்கு அடியேன் - நான் நுமக்கு அடிமை; ஈது அல்லால் - நீர் தலைவரும் யான் அடிமையுமாகிய இந்த முறையே யன்றி, எனக்கு உம்மொடு வேறு வழக்கு இலை - அடியேனுக்கு உம்முடன் வேறு வழக்கு இல்லை; நான் ஓதல் ஆவதோர் குறை உளது - இன்னும் நான் கூறக்கடவதாகிய குறை ஒன்று உளது; (அது), இன்று தொட்டு - இன்று முதல், உமக்கு வேத நாதனைப் பாடலே கடன் என விடுத்தான் - உமக்கு வேதநாதனாகிய இறைவனைப் பாடுதலே கடமை என்று வேண்டி அனுப்பினான். நீர் முன்போல் அரசவைக் கண் வந்து பாடுதல் மரபன்றென்பார் ‘எனக் கும்மொடு வழக்கு வேறிலை’ என்றார். (69) அரச னல்கிய வெறுக்கைபூ ணாடைகள் பிறவும் பரசு நாவலர் மாணவர் யாவர்க்கும் பகிர்ந்து வரிசை யாலிசைக் கிளையொடு மனையில்வந் தெய்திக் கரைசெ யாமகிழ் சிறந்திசைக் காவல னிருந்தான். (இ - ள்.) அரசன் நல்கிய - வரகுண பாண்டியன் கொடுத்த, வெறுக்கை பூண் ஆடைகள் பிறவும் - செல்வமும் அணியும் ஆடைகளும் பிறவுமாகிய அனைத்தையும், பரசும் நாவலர் மாணவர் யாவர்க்கும் பகிர்ந்து - துதிக்கின்ற நாவலர்க்கும் மாணவர்கட்கும் பகிர்ந்து கொடுத்து, இசைக்கிளையொடு - பாண் சுற்றத்தோடு, வரிசையால் - அரசன் செய்த வரிசையோடும், மனையில் வந்து எய்தி - மனையின்கண் வந்தடைந்து, கரை செயா மகிழ் சிறந்து - அளவிறந்த மகிழ்ச்சியிற் சிறந்து, இசைக் காவலன் இருந்தான் - யாழ் வேந்தனாகிய பாணபத்திரன் இனிதிருந்தான். ஆடைகளும் பிறவும் என்க. பரசு நாவலர் - வந்தியர். வரிசை - ஊர்தி கொடி முதலியன. (70) ஆகச் செய்யுள் 2100 நாற்பத்திரண்டாவது திருமுகங் கொடுத்த படலம் [அறுசீரடியாசிரிய விருத்தம்] முன்னவன் மதுரை மூதூர் முழுமுத லிசைவ லானை இன்னிசை பாடி வென்ற தின்றுரை செய்தே1 மந்தத் தென்னவன் சேரன் மாடே திருமுகங் கொடுத்துப் பாணர் மன்னவன் றனக்குச் செம்பொன் வழங்கிய வழக்கஞ் சொல்வாம். (இ - ள்.) முன்னவன் - (திருமால் முதலியோர்க்கு) முன்னவனும், மதுரைமூதூர் முழு முதல் - மதுரை என்னும் பழம் பதியில் எழுந்தருளிய முழுமுதற் பொருளுமாகிய சோமசுந்தரக் கடவுள், இசை வலானை - இசையில் வல்ல ஏமநாதனை, இன் இசை பாடி வென்றது - இனிய இசை பாடி வென்ற திருவிளையாடலை, இன்று உரை செய்தேம் - இப்பொழுது கூறினேம்; அந்தத் தென்னவன் - (இனி) அவ்விறைவனே; சேரன் மாடே திருமுகம் கொடுத்து - சேரமான் பெருமாளிடந் திருமுகங் கொடுப்பித்து, பாணர் மன்னவன் தனக்கு - பாணர் வேந்தனாகிய பத்திரனுக்கு, செம்பொன் வழங்கிய வழக்கம் சொல்வாம் - செம்பொன் அளித்த திருவிளையாடலைக் கூறுவோம். முன்னவனென்ற கருத்தை, " மாலு நான்முகத் தொருவன் யாரினும் முன்ன வெம்பிரான் வருக" என்னும் திருவாசகத்தால் அறிக என்னுரை செய்தேம் என்பது பாடமாயின் யாதினையறிந்து கூறினேம் என்றுரைத்துக் கொள்க. சுந்தர பாண்டியனாக வந்தமையின் ‘அந்தத் தென்னவன்’ என்றார். வழக்கம் - வரலாறு. (1) இனிமதி யெமக்கீ தென்னா யாழ்வல்லோ னன்று தொட்டுப் பனிமதி மருமான் கோயிற் பாணிசைக் கிழமை நீத்துக் குனிமதி மிலைந்த நாதன் கோயின்முப் போது மெய்திக் கனிமதி யன்பிற் பாடுங் கடப்படு நியமம் பூண்டான். (இ - ள்.) இனி எமக்கு மதி ஈது என்னா - இனி எமக்கு அறிவாவது இதுவே என்று கருதி, யாழ் வல்லோன் - யாழில் வல்ல பாணபத்திரன், அன்று தொட்டு - அந்நாள் முதல், பனிமதி மருமான் கோயில் பாண் இசைக் கிழமை நீத்து - குளிர்ந்த சந்திரன் மரபினனாகிய வரகுண பாண்டியனது அரண்மனையில் இசை பாடுகின்ற உரிமையைவிட்டு, குனி மதி மிலைந்த நாதன் - வளைந்த மதியினை அணிந்த இறைவனது, கோயில் முப்போதும் எய்தி - திருக்கோயிலை மூன்று காலங்களினும் அடைந்து, மதிகனி அன்பில் பாடும் - உள்ளத்திற் கனிந்த அன்பினாலே பாடுகின்ற, கடப்படு நியமம் பூண்டான் - கடமையாகிய நியதியை மேற்கொண்டான். அரசன் கூறிய இந்நெறியில் ஒழுகுதலே எமக்கு அறிவென்று கொண்டென்க. முப்போது - காலை நண்பகல் மாலை. (2) இத்தொழி லன்றி வேறு தொழிலிவற் கின்மை யாலே பத்திர னிலம்பா டெய்தப் பொறுப்பரோ பழனக் கூடற் சித்தவெம் மடிகள் வேந்தன் பொன்னறைச் செல்வம் வௌவிப் பத்தர்யா ழிடத்தோ ளேந்திப் பாடுவான் காண வைப்பார். (இ - ள்.) இத்தொழில் அன்றி - இங்ஙனம் இறைவன் திருமுன் பாடுதலேயன்றி, வேறு தொழில் இவற்கு இன்மையாலே - வேறு தொழில் இவனுக்கு இல்லாமையினால், பத்திரன் இலம்பாடு எய்த - பாணபத்திரன் வறுமையை அடைய, பழனக்கூடல் சித்த எம் அடிகள் பொறுப்பரோ - வயல் சூழ்ந்த கூடலிலுள்ள சித்தராகிய எம்மிறைவர் அதனைப் பொறுப்பரோ (பொறாராகலின்), வேந்தன் பொன் அறைச் செல்வம் வௌவி - மன்னனது கருவூலத்திலுள்ள செல்வங்களைக் கவர்ந்து, பத்தர் யாழ் இடத்தோள் ஏந்தி - பத்தரை யுடைய யாழினை இடது தோளிலேந்தி, பாடுவான் காணவைப்பார் - பாடுகின்ற பாண பத்திரன் காணுமாறு எதிரில் வைப்பாராயினர். வேறு தொழில் - அரசவையிற் பாடுதல் மாணவர்க்குக் கற்பித்தல் முதலிய பொருள் பெறுந் தொழில். (3) சிலைபொலங் காசு சின்னாண் மணிக்கலன் சின்னாள் செம்பொற் கலைவகை சின்னா ளம்பொற் சாமரைக் காம்பு சின்னாள் அலர்கதி ரரிமான் சேக்கை யாடகத் தகடு சின்னாள் குலமணி வருக்கஞ் சின்னாள் கொடுத்திடக் கொண்டு போவான். (இ - ள்.) சில நாள் பொலங்காசு சில - சில நாள் பொற்காசு சிலவும், சில் நாள் மணிக்கலன் - சில நாள் மணிகள் இழைத்த அணிகளும், சில் நாள் செம்பொன் கலைவகை - சில நாள் சிவந்த பொன்னாடை வகைகளும், சில் நாள் அம்பொன் சாமரைக் காம்பு - சில நாள் அழகிய பொன்னாலாகிய சாமரைக் காம்புகளும், சில் நாள் - சில நாள், அரிமான் சேக்கை - சிம்மாசனத்தில் வேய்ந்த, அலர் கதிர் ஆடகத்தகடு - விரிந்த ஒளியினையுடைய பொற்றகடும், சில் நாள் குர மணி வருக்கம் - சில நாள் பலசாதி மணிக் குவியல்களும், கொடுத்திட - அளிக்க, கொண்டு போவான் - பெற்றுக்கொண்டு போவானாயினன். குலம் - சிறப்புமாம். (4) கைவரும் பொருளைத் தந்த கள்வருந் தானு மன்றி எவ்வெவர் தமக்குந் தோற்றா தெரியிலிட் டழித்துஞ் சின்னஞ் செய்வன செய்துந் தன்னைச் சேர்ந்தவ ரிரந்தோர் கைபார்த் துய்பவர் பிறர்க்கு மாறா துதவியுட் கவலை தீர்ப்பான். (இ - ள்.) கைவரும் பொருளை - அங்ஙனம் கையில்வந்த பொருளை தந்த கள்வரும் தானும் அன்றி - தனக்கு அளித்த கள்வரும் தானுமே அல்லாமல், எவ்வெவர் தமக்கும் தோற்றாது - எவ்வகையினர்க்கும் புலப்படாமல், எரியில் இட்டு அழித்தும் - நெருப்பில் இட்டு உரு வழித்தும் சின்னம் செய்வன செய்தும் - உருமாற்ற வேண்டிய வகைகளை அங்ஙனமே செய்தும், தன்னைச் சேர்ந்தவர் இரந்தோர் - தன்னைச் சார்ந்தவர்க்கும் இல்லை யென்றிரந்தவர்க்கும், கை பார்த்து உய்பவர் பிறர்க்கும் - தன் கை வரவு பார்த்துப் பிழைப்போர்க்கும், இவரொழிந்த பிறர்க்கும், மாறாது உதவி உள்கவலை தீர்ப்பான் - இடையறாது கொடுத்து அவர்களின் உள்ளக் கவலையைப் போக்கி வருவான். அழித்தல் - உருக்குதல். சின்னஞ் செய்தல் - முன்னையுருத்தோன்றா வகை பேதித்தல். தன்னைச் சேர்ந்தவர் - சுற்றத்தார். கைபார்த்துய்பவர் - பரவுவோர், ஏவல் செய்வோர் முதலாயினார். (5) வைகலுங் கொடுப்போர் பின்னாண் மறுத்தன ராகப் போய்ப்போய்க் கைதொழு திறைஞ்சி வாளா வருமவன் கலியின் மூழ்கி உய்வகை வேறு காணா தொக்கலு மொக்க வாடிக் கையற வடைய நோனா துறங்கினான் கனவி னெல்லை. (இ - ள்.) வைகலும் கொடுப்போர் - இங்ஙனம் நாள்தோறும் கொடுத்துவரும் இறைவர், பின்நாள் மறுத்தனராக - பிந்திய நாட் களில் கொடாது மறுத்தாராக; போய்ப்போய் - சென்றுசென்று, கை தொழுது இறைஞ்சி - கைகூப்பி வணங்கி, வாளா வரும் அவன்- ஒன்றும் பெறாது வருகின்ற அப்பாணபத்திரன், கலியில் மூழ்கி- வறுமைக் கடலிலழுந்தி, உய்வகை வேறுகாணாது - பிழைக்கும் வகை வேறு காணாமல், ஒக்கலும், - சுற்றத்தாரும், ஒக்க வாடிக் கையறவு அடைய - ஒரு சேர வாடித் துன்பமுற, நோனாது உறங்கினான் - பொறுக்க லாற்றாது துயின்றான்; கனவின் எல்லை- அப்பொழுது அவன் கனவின் கண். ஒக்க - உடன் என்றுமாம். கையறவு - கையாறு; செயலறுதி யாகிய துன்பம். நோன்றல் - பொறுத்தல். (6) சித்தவெம் பெருமான் வந்து செப்புவா ரப்பா நிம்பத் தொத்தவன் கோசந் தன்னிற் றும்பியுண் கனியின் வௌவி இத்தன மின்று காறு மீந்தன மெம்பா லன்பு வைத்தவ னறிந்தாற் சங்கை மனத்தனாய் விகற்பங் கொள்வான். (இ - ள்.) சித்த எம்பெருமான் வந்து செப்புவார் - சித்த மூர்த்தி களாகிய எம் பெருமானார் தோன்றியருளிக் கூறுவார்; அப்பா - அப்பனே, நிம்பத் தொத்தவன் - வேப்பமலர் மாலையை யணிந்த பாண்டியனது, கோசம் தன்னில் - பொன்னறையில், தும்பி உண் கனியின் வௌவி - வேழம் உண்ட விளாங்கனிபோல (அது ஆகுமாறு) கவர்ந்து, இத்தனம் இன்றுகாறும் ஈந்தனம் - இந்தப் பொருளை இந்நாள் வரையும் கொடுத்தருளினோம்; எம்பால் அன்பு வைத்தவன் அறிந்தால் - எம்மிடத்து அன்புவைத்த வரகுணபாண்டியன் அறிந்தானாயின், சங்கை மனத்தனாய் விகற்பம் கொள்வான் - ஐயமுற்ற மனத்தினனாய் வேறுபட்டு. அப்பா என அன்பால் விளித்தார். தொத்து - பூங்கொத்து. கோசம் - பொன்னறை. கனியின் - கனிபோல வறிதாக. சங்கை - ஐயம். விகற்பங் கொள்ளல் - தடுமாற்ற மடைதல். கொள்வான் என்பதனை எச்சமாக்குக. (7) மயலறக் கற்புக் காக்கு மகளிர்போற் றுறவு காக்க முயலும்யோ கரிலுட் காப்பு முரசெறி புறஞ்சூழ் காப்புங் கயலிலச் சினையு நிற்கக் கவர்ந்ததற் புதமிக் கள்வன் உயிர்தொறு மொளித்து நின்ற வொருவனோ1வறியே னென்பான். (இ - ள்.) மயல் அறக் கற்புக் காக்கும் மகளிர்போல் - (வேறு ஆடவரிடத்து) ஆசை இல்லையாகக் கற்பினைக் காக்கின்ற மகளிர் போலவும், துறவு காக்க முயலும் யோகரில் - துறவினைக் காக்க முயலுகின்ற சிவயோகிகளைப் போலவும், உள்காப்பும் - அகக்காவலும், முரசு எறிபுறம் சூழ்காப்பும் - எறிகின்ற முரசொலியுடன் சூழ்தரும் வெளிக்காவலும், கயல் இலச்சினையும் நிற்க - மீன முத்திரையும் உள்ளவாறேஇருக்க, கவர்ந்தது அற்புதம் - பொருளை வௌவியது வியக்கத்தக்கது; இக்கள்வன் - இங்ஙனம் கவர்ந்த கள்வன், உயிர் தொறும் ஒளித்துநின்ற ஒருவனோ - உயிர்கள் தோறும் ஒளித்துநின்ற ஒருவனாயிருப்பானோ, அறியேன் என்பான் - அறியேனே என்று கருதுவான். மயல் - மையல்; ஆசை. கற்புக் காக்கும் மகளிர்க்கு நாண் முதலியன அகத்தே நீங்காது நின்று காத்தல்போலவும் துறவுகாக்க முயல்வார்க்குப் புறத்திலுள்ள ஐம்பொறிகளும் விடயங்கள் புகுதாது தடுத்து நிற்றல்போலவும் உட்காப்பும் புறஞ்சூழ் காப்பும் என முறை நிரனிறையாகக் கொள்க. உயிர்தொறு மொளித்து நின்ற வொருவனோ எனத் தன்னை ஐயுறுதலுஞ் செய்வான் என்றபடி. (8) கோமக னினைய செய்தி யறியுமெற் கோசங் காப்போர்க் காமுறு1தண்ட நின்போ லன்பகத் தெம்மை வைத்த தெமரு போந்தின் கண்ணிச் சேரமான் றனக்கிப் போது நாமொரு முடங்க றீட்டி நல்குவம் போதி யென்னா. (இ - ள்.) கோமகன் இனையசெய்தி அறியுமேல் - மன்னவன் இச் செய்தியை அறிவானேல் (அங்ஙனங் கருதுவதன்றி), கோசம் காப்போர்க்கு உறுதண்டம் ஆம் - கருவூலங் காப்போர்க்கு மிக்க தண்டமும் உண்டாகும்; (ஆதலால்), நின்போல் உன்னைப் போல், அன்பு அகத்து எம்மை வைத்த - அன்போடு உள்ளத்தின்கண் எம்மை வைத்துள்ள, தேம் மரு போந்தின் கண்ணிச் சேரமான் தனக்கு - தேன்பொருந்திய பனம் பூமாலையை யணிந்த சேர மானுக்கு, இப்போது - இப்பொழுது, நாம் ஒரு முடங்கல் தீட்டி நல்குவம் - நாம் ஓர் ஓலை எழுதிக்கொடுப்போம், போதி என்னா- நீ அங்குப் போகக்கடவை என்று கூறி. முடங்கல் - திருமுகம். (9) மறைக்குரை செய்த வாக்கான் மதிமலி புரிசை யென்னுஞ் சிறப்பியல் சீர்சால் செய்யுட் பாசுரஞ் செப்பித் தீட்டிப் பிறைச்சடைப் பெருமானல்கி மறைந்தனன் பெரும்பாண் செல்வன் உறக்கநீத் தாடிப் பாடி யுவகைமா கடலி லாழ்ந்தான். (இ - ள்.) மறைக்கு உரைசெய்த வாக்கால் - வேதத்துக்குப் பொருளருளிச் செய்த திருவாக்கினால், மதிமலி புரிசை என்னும்- ‘மதி மலிபுரிசை’ என்னு முதலையுடைய, சிறப்பு இயல் சீர்சால்- சொற் பொருட் சிறப்புடைய விழுப்பமிக்க, செய்யுள் பாசுரம் செப்பி தீட்டி - செய்யுளாகும் திருப்பாசுரம் ஒன்றினைக் கூறி அதனை எழுதி, நல்கி - கொடுத்தருளி, பிறைச்சடைப் பெருமான் மறைந்தனன்- பிறையினை யணிந்த சடையையுடைய இறைவன் மறைந் தருளினான்; பெரும்பாண் செல்வன் - பெருமையுடைய இசையாகிய செல்வத்தையுடைய பாண பத்திரன், உறக்கம் நீத்து - துயிலினின்றும் நீங்கி, ஆடிப்பாடி - ஆனந்தக்கூத்தாடிப் பாடி, உவகைமா கடலில் ஆழ்ந்தான - உவகை என்னும் பெரிய கடலுள் அமிழ்ந்தினான். திருமுகப்பாசுரம் " மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவும் பானிற வரிச்சிறை அன்னம் பயில்பொழி லால வாயின் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் குரிமையி னுரிமையி னுதவி யொளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க பண்பால் யாழ்வல பாண பத்திரன் தன்போ லென்பா லன்பன் றன்பாற் காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே" என்பது. வரிச்சிறகு, சிவன்யாம், ஒருமையினுரிமையின், யாழ்பயில், தன்போலெம்பால் என்பன பாசுரத்தின் பாடபேதங்கள். இது 11-ஆம் திருமுறையில் முதலதாகவுள்ளது. " பரிபுரக் கம்பலை யிருசெவி யுண்ணும் குடக்கோச் சேரன் கிடைத்திது காண்கென மதிமலி புரிசைத் திருமுகங் கூறி அன்புருத் தரித்த வின்பிசைப் பாணன் பெறநிதி கொடுக்கென வுறவிடுத் தருளிய மாதவர் வழுத்துங்கூடற் கிறைவன்" எனக் கல்லாடத்தும் இவ்வரலாறு குறிக்கப் பெற்றுள்ளது. (10) [கலிவிருத்தம்] வாங்கிய திருமுக மணிப்பட் டாடையிட் டாங்கிறை யடிபணிந் தகன்று பத்திரன் ஓங்கிய கோயிலை வலங்கொண் டொல்லென நீங்கிமேல் வரைப்புல நெறிக்கொண் டேகுவான். (இ - ள்.) வாங்கிய திருமுகம் - பெற்ற திருமுகத்தை, மணி - அழகிய, பட்டு ஆடை இட்டு - பட்டாடையில் வைத்து, இறை அடி பணிந்து - இறைவன் திருவடியை வணங்கி, ஆங்கு அகன்று - அங்கு நின்றும் நீங்கி, பத்திரன் - பாணபத்திரன், ஓங்கிய கோயிலை வலம் கொண்டு - உயர்ந்த திருக்கோயிலை வலம்வந்து, ஒல்லென நீங்கி - விரைந்து அகன்று, மேல்வரைப் புலம் நெறிக்கொண்டு ஏகுவான் - மேற்றிசையிலுள்ள மலைநாட்டிற்கு வழிக்கொண்டு செல்வானாயினன். ஒல்லென : விரைவுக்குறிப்பு. வரைப்புலம் - மலைநாடு. (11) கொல்லையுங் குறிஞ்சியுங் கொதிக்கும் வெம்பரற் கல்லத ரத்தமுங் கடந்து முட்புறப் பல்சுளைக் கனியடி யிடறப் பைப்பைய நல்வளங் கெழுமலை நாடு நண்ணினான். (இ - ள்.) கொல்லையும் குறிஞ்சியும் - முல்லைநிலத்தையும் குறிஞ்சி நிலத்தையும், கொதிக்கும் வெம்பரல் கல் அதர் அத்தமும் கடந்து - கொதிக்கின்ற வெய்ய பருக்கைக் கற்களையுடைய வழியினையுடைய பாலை நிலத்தையும் கடந்து, முள்புறம் பல் சுளைக்கனி அடி இடற - புறத்தில் முட்களையும் பல சுளைகளையுமுடைய பலாக்கனிகள் அடியில் இடற, பைப்பைய - மெல்லமெல்ல, நல்வளம்கெழு மலை நாடு நண்ணினான் - நல்ல வளங்கள் நிறைந்த மலைநாட்டினை அடைந்தான். மலைவளங் கூறுவார் ‘கனியடியிடற’ என்றார். பையப் பைய என்பது முன் மொழியிறுதி அகரம் மெய்யொடுங் கெட்டுப் பைப்பைய என்றாயது. (12) அலைகட னெடுந்துகி லந்த நாடெனுந் தலைமக டனக்குவான் றடவு குன்றுபூண் முலையென விளங்கின முகத்திற் றீட்டிய திலகமே யானது திருவஞ் சைக்களம். (இ - ள்.) அலை கடல் நெடுந்துகில் - அலைக்கின்ற நெடிய கடலினை ஆடையாகவுடைய, அந்த நாடு எனும் தலைமகள் தனக்கு - அந்த நாடு என்கின்ற தலைவிக்கு, வான் தடவு குன்று - விண்ணினை அளாவிள மலைகள், பூண்முலை என விளங்கின - அணிகளையுடைய கொங்கைகள் போல விளங்கின; திருவஞ்சைக்களம் - திருவஞ்சைக்களம் என்னும் பதி, முகத்தில் தீட்டிய திலகமே ஆனது - அம்மாதின் முகத்தில் இட்ட திலகமே போன்று விளங்கியது. பூண்முலையும் திலகமும் மகளிர்க்கு இன்றியமையாச் சிறப்பினவாதல் உணர்க. (13) அறமக ளாக்கமு மலரின் மேயசெந் நிறமக ளாக்கமு நீதி சான்றபோர் மறமக ளாக்கமும் வடசொற் றென்கலைத் திறமக ளாக்கமுஞ் சிறந்த தந்நகர்1. (இ - ள்.) அறமகளாக்கமும் - அறமகளாலாய தருமச்செல்வமும், அலரில்மேய செந்நிறமகள் ஆக்கமும் - தாமரை மலரில் வசிக்குந் திரு மகளாலாய பொருட் செல்வமும், நீதிசான்ற போர் மறமகள் ஆக்கமும் - நீதியமைந்த போருக்குரிய கொற்றவை யாலாய வீரச்செல்வமும், வட சொல் தென்கலைத் திறமகள் ஆக்கமும் - வடமொழி தென்மொழி யென்னும் பகுப்பினையுடைய கலைமகளாலாய கல்விச் செல்வமும், சிறந்தது அந்நகர் - சிறக்கப்பெற்றது அந்நகரம். அறமகள் - தருமதேவதை. செந்நிறமகள் - செய்யாள்; இலக்குமி. நீதியுடன் கூடாத போர் வென்றி வீரமாகாதென்பார் ‘நீதிசான்ற போர்’ என்றார். ஆக்கம் - ஆகியது. (14) மண்புக ழந்நகர் மறுகின் மாடொரு தண்புனற் சாலையிற் சார்ந்து ளானிப்பால் விண்புகழ் நீதியவ் வேந்தற் கன்றிராக் கண்புனை நுதலினார் கனவிற் றோன்றினார். (இ - ள்.) மண்புகழ் அந்நகர் மறுகின் மாடு - புவி முழுதும் புகழும் அந்த நகரின் வீதியின்கண், ஒரு தண்புனல் சாலையில் சார்ந்துளான் - ஒரு தண்ணீர்ப் பந்தரிற் றங்கினன்; இப்பால் - இப்புறம், விண் புகழ் நீதி அவ்வேந்தற்கு - வானுலகும் புகழும் நீதியினையுடைய அச் சேர வேந்தற்கு, அன்று இரா - அன்று இரவில், கண்புனை நுதலினார் கனவில் தோன்றினார்- கண் பொருந்திய நெற்றியையுடைய இறைவர் கனவிலே தோன்றியருளினார். மலைநாடு நண்ணினபத்திரன் அஞ்சைக்களத்து மறுகிலே தண்ணீர்ப் பந்தலிற் சார்ந்திருந்தனன் என்க. மண், விண் என்பன ஆகுபெயர்கள். (15) தென்னவன் மதுரையி லிருக்குஞ் சித்தர்யாம் நின்னிடை வந்துளே நின்னைக் கண்டுதான் நன்னிதி வேண்டநம் மோலை கொண்டுநம் இன்னிசைப் பாணபத் திரனிங் கெய்தினான். (இ - ள்.) நின்னிடை வந்துளேன் யாம் - நின்னிடத்து வந்துளே மாகிய யாம், தென்னவன் மதுரையில் சித்தர் - பாண்டியனது மதுரையிலுள்ள சித்தராவேம்; நின்னைக் கண்டு - உன்னைப் பார்த்து, நல்நிதி வேண்ட - நல்ல பொருள் வேண்டுதற் பொருட்டு, நம் ஓலைகொண்டு - நமது திருமுகம் பெற்றுக்கொண்டு, நம் இன் இசைப் பாணபத்திரன் - நமது இன்னிசை பாடும் பாணபத்திரன், இங்கு எய்தினான் - இங்கு வந்தனன். (16) மற்றவற் கருநிதி கொடுத்து மன்னநீ தெற்றென வரவிடு கென்று சித்தர்தாஞ் சொற்றனர் போயினார் சுரக்குந் தண்ணளி ஒற்றைவெண் குடையினா னுறக்க நீங்கினான். (இ - ள்.) மன்ன நீ - மன்னனேநீ, அவற்கு அருநிதி கொடுத்து- அப்பத்திரனுக்கு அரிய பொருள் கொடுத்து, தெற்றென வரவிடுக என்று - விரைந்து வரவிடக்கடவை என்று, சித்தர் தாம் சொற்றனர் போயினார் - சித்தமூர்த்திகள் கூறி மறைந்தனர்; சுரக்கும் தண் அளி - உயிர்களிடத்துச் சுரந்தெழும் தண்ணிய அருளையுடைய, ஒற்றை வெண் குடையினான் - ஒப்பற்ற வெண்குடையையுடைய சேரமான் பெருமாள், உறக்கம் நீங்கினான் - துயிலுணர்ந்தனன். தெற்றென : விரைவு குறித்தது. விடுகென : அகரந்தொக்கது. சொற்றனர் : முற்றெச்சம். மற்று, தாம் என்பன அசைகள். (17) கங்குல்வாய்க் கண்டவக் கனவைப் பெண்ணையந் தொங்கலான் றமரொடு சொல்லிச் சேற்கணாள் பங்கினான் றிருமுகங் கொணர்ந்த பத்திரன் எங்குளான் கொல்லெனத் தேட வெண்ணுவான். (இ - ள்.) பெண்ணையந் தொங்கலான் - அழகிய பனம் பூ மாலையை யணிந்த அவ்வேந்தன், கங்குல்வாய்க் கண்ட அக்கனவை- இரவிலே கண்ட அக்கனவினை, தமரோடு சொல்லி - அமைச்சரோடு கூறி, சேல் கணாள் பங்கினான் திருமுகம் கொணர்ந்த பத்திரன்- அங்கயற் கண்ணியார் பங்கனது திருமுகத்தைக்கொண்டு வந்த பாணபத்திரன், எங்குளான் கொல்லென - எங்கிருக்கின்றானோ என்று, தேட எண்ணுவான் - தேடக் கருதுவான். அம், சாரியையுமாம். கொல் : ஐயப்பொருட்டு. (18) மற்றவர் தமைத்துரீஇ வருக தில்லெனக் கொற்றவ னேவலோர் குறுகி மாடமுந் தெற்றியு நியமமு மன்றுஞ் சென்றுசென் றெற்றிகழ் மணிநக ரெங்குந் தேடுவார். (இ - ள்.) அவர் தமைத் துரீஇ வருகதில்லென - அப்பாண பத்திரரைத் தேடிக் கண்டு வருக என்று கட்டளையிட, கொற்றவன் ஏவலோர் - அரசன் ஏவலாளர், குறுகி - சென்று, மாடமும் தெற்றியும்- மாடங்களிலும் திண்ணைகளிலும், நியமமும் மன்றும் - கடைவீதிகளிலும் மன்றங்களிலும், எல் திகழ் மணி நகர் எங்கும்- சூரியனைப்போல விளங்கும் அழகிய நகரின் எவ்விடத்தும், சென்று சென்று தேடுவார் - போய்ப்போய்த் தேடுவாராயினர். மற்று : அசை, துரீஇ - துருவி; சொல்லிசை யளபெடை. தில்: விழைவுப்பொருளில் வந்த இடைச்சொல்; கால விரைவுப் பொருளில் வந்ததென்பாரு முளர். தெற்றி - அம்பலமுமாம். நியமம் - கடைவீதி. சென்று சென்று : தொழிற் பயில்வுப் பொருளில் வந்த அடுக்கு. (19) தருமநீர்ப் பந்தரி னிருக்குந் தந்திரி வருமிசைக் கிழவனைக் கண்டு வல்லைபோய்த் திருமகற் குணர்த்தினார் சேனையோ டெழீஇப் பெருமகன் பாணர்தம் பிரானை நண்ணினான். (இ - ள்.) தரும நீர்ப் பந்தரின் இருக்கும் - அறத்தின் பொருட்டு வைத்த நீர்ச்சாலையில் இருக்கும், தந்திரி வரும் இசைக்கிழவனைக் கண்டு - யாழ் கைவந்த பாண பத்திரனைக் கண்டு, வல்லை போய்- விரைந்து சென்று, திருமகற்கு உணர்த்தினார் - வேந்தனுக்குத் தெரிவித்தனர்; பெருமகன் - அவ்வரசர் பெருமானும், சேனையோடு எழீஇ - நால்வகைப் படையோடும் எழுந்து, பாணர்தம் பிரானை நண்ணினான் - பாணர் பெருமானை அடைந்தனன். தந்திரி : ஆகுபெயர். வரும் - கைவரும. எழீஇ, சொல்லிசை யளபெடை, (20) கண்டனன் முகிழ்த்தகைக் கமலஞ் சென்னிமேற் கொண்டனன் பாடினன் கூத்து மாடினன் தண்டென வீழ்ந்தன னன்பிற் றண்ணறா வண்டென மகிழ்ந்தனன் மன்னர் மன்னனே. (இ - ள்.) மன்னர் மன்னன் - அரசர்க்கரசனாகிய சேரமான், கண்டனன் - பத்திரனைக் கண்டு, அன்பில் - அன்பினால், முகிழ்த்த கைக்கமலம் - கூப்பிய கைத்தாமரைகளை, சென்னிமேல் கொண்டனன் - தலையின்மேற் கொண்டு, பாடினன் கூத்தும் ஆடினன் தண்டு என வீழ்ந்தனன் - பாடி ஆனந்தக்கூத்தாடித் தண்டம் போற் கீழே வீழ்ந்து, தண் நறா வண்டு என மகிழ்ந்தனன் - குளிர்ந்த தேனைக் கண்டு வண்டு மகிழ்வது போல மகிழ்ந்தான். மகிழ்ந்தனன் என்பதொழிந்த ஏனை முற்றுக்களெல்லாம் எச்ச மாயின; முற்றாகவே நிறுத்தித் தனித்தனி முடித்தலுமாம. வருஞ்செய்யுளிலும் இங்ஙனங் கொள்க. (21) வாங்கினன் றிருமுக மலர்க்க ணொற்றினன் தாங்கினன் முடிமிசைத் தாமம் போன்மகிழ் தூங்கினன் றடங்கணீர் துளிப்ப மெய்யெலாம் வீங்கினன் பொடிப்பெழ வேந்தர் வேந்தனே. (இ - ள்.) வேந்தர் வேந்தன் - மன்னர் பெருமானாகிய சேரமான், திருமுகம் வாங்கினன் - திருமுகத்தினை ஏற்று, மலர்க்கண் ஒற்றினன் - மலர் போன்ற கண்களில் ஒற்றி, முடிமிசை தாமம் போல் தாங்கினன் - தலையின் மேல் மாலைபோல் தாங்கி, மகிழ்தூங்கினன் - மகிழ்ச்சிமிக்கு. தடம் கண் நீர்துளிப்ப - பெரிய கண்களினின்றும் ஆனந்த வருவி சொரியவும், மெய் எலாம் பொடிப்பு எழ - உடல் முழுதும் புளகம் போர்ப்பவும், வீங்கினன் - பூரித்தான். பொடிப்பு - மயிர் முகிழ்ப்பு. திருத்தொண்டர் புராணத்தில் இவ்வரலாறு கூறு மிடத்துள்ள, " அடியேன் பொருளாத் திருமுகங்கொண் டணைந்த தென்ன வவர்தாமும் கொடிசேர் விடையார் திருமுகங்கைக் கொடுத்து வணங்கக் கொற்றவனார் முடிமேற் கொண்டு கூத்தாடி மொழியுங் குழறிப் பொழிகண்ணீர் பொடியார் மார்பிற் பரந்துவிழப் புவிமேற் பலகால் விழுந்தயர்வார்" என்னுஞ்செய்யுள் இங்கு நோக்கற்பாலது. (22) [எண் சீரடியாசிரிய விருத்தம்] மின்னவிருஞ் செம்பொன்மணி மாடக் கூடன் மேயசிவன் யாமெழுதி விடுக்கு மாற்றம் நன்னர் முகி லெனப்புலவர்க் குதவுஞ் சேர நரபாலன் காண்கதன்போ னம்பா லன்பன் இன்னிசையாழ்ப் பத்திரன்றன் மாடே போந்தா னிருநிதியங் கொடுத்துவர விடுப்ப தென்னத் தென்னர்பிரான் றிருமுகத்தின் செய்தி நோக்கிச் சேரர்பிரான் களிப்பெல்லை தெரியா னாகி. (இ - ள்.) மின் அவிரும் செம்பொன் மணிமாடக் கூடல் - ஒளி விளங்கும் சிவந்த பொன்னாலாகிய அழகிய மாடங்கள் நெருங்கிய கூடற்பதியின்கண், மேய சிவன் யாம் - எழுந்தருளியிருக்கும் சிவபெருமானாகிய யாம், எழுதிவிடுக்கும் மாற்றம் - எழுதி அனுப்புஞ் செய்தி, நன்னர் முகில் என - நல்ல மேகம்போல, புலவர்க்கு உதவும் சேர நரபாலன் காண்க - புலவர்களுக்கு வரையா தளிக்கும் சேரவேந்தன் காண்க; இன் இசை யாழ்ப்பத்திரன் - இத்திருமுகங் கொண்டு வரும் இனிய இசையினையுடைய யாழில் வல்ல பாணபத்திரன், தன்போல நம்பால் அன்பன் - தன்னைப்போல நம்மிடத்து அன்புடையான், தன் மாடே போந்தான் - அவன் தன்னிடத்து வருகின்றான், இரு நிதியம் கொடுத்து வரவிடுப்பது என்ன - (அவனுக்கு) மிக்கபொருள் கொடுத்து அனுப்புவது என்று, தென்னர் பிரான் - பாண்டியர் பெருமானாகிய சோமசுந்தரக் கடவுள் (வரைந்தருளிய), திருமுகத்தின் செய்தி நோக்கி - திருமுகத்தின் செய்தியை நோக்கி, சேரர்பிரான் களிப்பு எல்லை தெரியானாகி - சேரர்பெருமான் மகிழ்ச்சியின் வரம்பினை அறியாதவனாகி. நரபாலன் எனவும், தன் எனவும் படர்க்கையாற் கூறினார். திருமுகத்தில் இங்ஙனங் கூறுவது மரபு. தன்போல் - நின்னைப்போல். தம்மாடு - நின் பக்கல். விடுப்பது. வியங்கோள: எல்லை தெரியாத களிப்புடையனாகி யென்க. (23) [அறுசீரடி யாசிரிய விருத்தம்] பொன்னின் றளிகை மிசைவைத்துப் புழைக்கை மதமான் றலையேற்றி மன்னுங்கொளையாழ்ப் புலவனைமுன் வைத்துப் பின்னே தானிருந்து மின்னுங் கதிர்கா லிணைக்கவரி வீசிப் பலவே றியங்கலிப்பத் தென்னென் றளியா ரிசைத்தாரான் றிருமா நகரை வலஞ்செய்யா. (இ - ள்.) பொன்னின் தளிகை மிசை வைத்து - (அத்திருமுகத்தைப்) பொற்பீ'a6டத்தின் மேல் வைத்து, புழைக்கை மதமான் தலை ஏற்றி- துளை பொருந்திய கையையும் மதத்தையுமுடைய யானையின் தலையில் ஏற்றி, மன்னும் கொளையாழ்ப் புலவனை முன்வைத்து- பெருமை பொருந்திய இசையமைந்த யாழ்ப் புலவனாகிய பாண பத்திரனை முன்னர் வைத்து, தான் பின்னே இருந்து - தான் பின்னே அமர்ந்து, மின்னும் கதிர்கால் இணைக் கவரி வீசி - விளங்கும் ஒளியினை வீசும் இரட்டைக் கவரிகளை வீசி, பல்வேறு இயம் கலிப்ப - பலவகை வாச்சியங்களும் ஒலிக்க, தென்னென்று அளி ஆர் இசைத்தாரான் - தென்னென்று வண்டுகள் மொய்த்து இசை பாடும் மாலையை யணிந்த சேரமான் பெருமான், திருமா நகரை வலம் செய்யா - அழகிய பெரிய நகரை வலஞ் செய்வித்து. கொளை - இசைப்பாட்டு. இரண்டு கையாலும் இரு பக்கத்தும் கவரி வீசினான் என்க. தென்னென்று: இசைக் குறிப்பு. (24) பஞ்சு தடவுஞ் சீறடியார் பலமங் கலங்கொண் டெதிர்போத மஞ்சு தடவு நீள்குடுமி மாட மனையிற் கொடுபோகி நஞ்சு தடவு மணிகண்ட னன்பன் றனை1நன் னீராட்டி அஞ்சு தடவி யோவியஞ்செய் தமைத்த மணிமண் டபத்தேற்றி. (இ - ள்.) மஞ்சு தடவும் சீறடியார் - செம்பஞ் சூட்டிய சிறிய அடியினையுடைய மகளிர், பல மங்கலம் கொண்டு எதிர்போத - அட்ட மங்கலங்களையும் ஏந்தி எதிர் வர, மஞ்சு தடவு நீள் குடுமி மாடம் மனையில் - முகிலை அளாவும் உயர்ந்த சிகரம் பொருந்திய மாடத்தை யுடைய அரண்மனையின்கண், கொடு போகி - கொண்டுசென்று, நஞ்சு தடவும் மணி கண்டன் அன்பன் தனை - நஞ்சு அளாவிய நீலகண்டத்தையுடைய சிவபெருமானுக்கு அன்பனாகிய பத்திரனை. நல் நீர் ஆட்டி - மணம் பொருந்திய நீரால் மஞ்சனஞ் செய்வித்து, அஞ்சு தடவி ஓவியம் செய்து அமைத்த - ஐவகை நிறங்களும் தடவி ஓவியம் வரைந் தமைத்த, மணி மண்டபத்து ஏற்றி - மணிகள் அழுத்திய மண்டபத்தில் எழுந்தருள்வித்து. மணிகண்டன் - நீல மணிபோலும் கரிய திருமிடற்றையுடையன். அஞ்சு, ஐந்து என்பதன் போலி; நிலத்திற்கு ஆகு பெயர். (25) அம்பொற் றவிசிட் டருச்சனைசெய் தாறு சுவையின் னமுதருத்திச் செம்பொற் கலவை நறுஞ்சாந்தந் தீம்பூ வாதி முகவாசம் பைம்பொற் கலத்து வெள்ளிலைதீம் பழுக்காய் பிறவு முறைநல்கி உம்பர்க் கிறைவன் றிருமுகத்தி லுய்ப்ப தெனலா லுய்த்துமென. (இ - ள்.) அம்பொன் தவிசு இட்டு - அழகிய பொன்னாலாகிய தவி சளித்து, அருச்சனை செய்து - அருச்சித்து, அறுசுவை இன் அமுது அருத்தி - அறுவகைச் சுவையுமுடைய இனிய அமுதினை உண்பித்துச், செம்பொன் கலவை நறுஞ் சாந்தம் - சிவந்த பொன்னிறம் வாய்ந்த நறிய கலவைச் சந்தனமும், தீம்பூ ஆதி முகவாசம் - தீம்பூ முதலிய முகவாசமும், பைம்பொன் கலத்து - பசிய பொற்றட்டின்கண், வெள்ளிலை தீம்பழுக்காய் பிறவும் - வெற்றிலையும் இனிய பாக்கும் பிறவுமாகியவற்றை, முறை நல்கி - முறைப்படி கொடுத்து, உம்பர்க்கு இறைவன் திருமுகத்தில் - தேவர்கட்குத் தலைவனாகிய சோமசுந்தரக் கடவுள் அருளிய திருமுகத்தின் கண், உய்ப்பது எனலால் - வரவிடுப்பது என்று கட்டளை யிருத்தலால், உய்த்தும் என - அங்ஙனமே செய்வோமென்று கருதி. தவிசிட்டு - தவிசில் இருக்கச்செய்து என்க. செம்பொற் கலவை, பொற்சுண்ணம் முதலியன கலந்தவையுமாம். முகவாசம் இவை யென்பதனை, " தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம் கற்பூரம் சாதியோ டைந்து" என்பதனால் உணர்க. (26) செம்பொ னறையைத் திறந்தழைத்துக் காட்டி யினைய திருவெல்லாம் உம்பர் பெருமா னடியீர்நீ ருடையீர் கவர்ந்து கொண்மினென இம்பர்நிழற்றும் வெண்குடையா னிசைப்ப வெதிர்தாழ்ந் திசைக்கிழவன் நம்ப னருளுக் குரியீர்நீர் நல்கிற் றமையு மெனக்கென்ன. (இ - ள்.) செம்பொன் அறையைத் திறந்து - கருவூலத்தைத் திறந்து, அழைத்து - (பாணபத்திரனை) அழைத்து, காட்டி - காண்பித்து, இனைய திரு எல்லாம் - இந்தச் செல்வம் அனைத்தையும், உம்பர் பெருமான் அடியீர் - தேவர் பெருமானாகிய இறைவனுக்கு அடியீராகிய, நீர் உடையீர் - நீரே உடையீர், கவர்ந்து கொள்மின் என - கைக் கொள்ளுமென்று, இம்பர் நிழற்றும் வெண்குடையான் இசைப்ப - இந்நிலவுலகிற்கு நிழல் செய்யும் வெள்ளிய குடையையுடைய சேர மன்னன் கூற, எதிர் தாழ்ந்து இசைக் கிழவன் - இசைக்கு உரிய பாணபத்திரன் எதிர் வணங்கி, நம்பன் அருளுக்கு உரியீர் நீர் - இறைவன் திருவருளுக் குரியீராகிய நீர், நல்கிற்று எனக்கு அமையும் என்ன - தந்தது எனக்குப் போதிய தென்று கூற. யாவும் உம்முடையனவே கைக்கொள்ளும் என்ன அங்ஙனம் வேண்டாம் நீர் கொடுககுமளவு அமையுமென்று பாணர் கூற வென்க.(27) மன்னன் றானெண் ணியவாற்றால் வழங்க வழங்க மறுத்துமறுத் தின்ன றீரு மிசைக்கிழவ னிலங்கும் பொலம்பூ ணிருநிதியம் பொன்னஞ் சிவிகை கரிபரிமான் பொற்பட் டாடை பலபிறவுந் தன்ன வென்னு1 மளவாற்றாற் றானே கொள்ளத் தார்வேந்தன். (இ - ள்.) மன்னன் - சேரமான் பெருமாள், தான் எண்ணிய வாற்றால் வழங்க வழங்க - எல்லாப் பொருளும் அவருடையன வென்று தான் கருதியபடி கொடுக்கக் கொடுக்க, இன்னல் தீரும் இசைக்கிழவன் மறுத்து மறுத்து - துன்பம் நீங்கும் பாணபத்திரன் அவற்றை மறுத்து மறுத்து, இலங்கும் பொலம் பூண் - விளங்குகின்ற பொன்னணிகளையும், இருநிதியம் - பெரிய நிதியையும், பொன் அம்சி விகை - பொன்னாலாகிய அழகிய சிவிகைகளையும், பல கரி பரி மான் பொன்பட்டு ஆடை - பல யானைகளையும் குதிரைகளையும் பொன்னாலாகிய பட்டாடைகளையும், பிறவும் - பிறவற்றையும், தன்ன என்னும் அளவாற்றால் கொள்ள - தனக்கு அமைவன வென்னும் அளவின் வகையால் ஏற்றுக்கொள்ள, தார் வேந்தன் - மாலையை யணிந்த மன்னனாகிய சேரமான். அரசன் யாவற்றையும் கொடுக்கக் கொடுக்க அவையனைத்தையும் கொள்ளாது மறுத்துத் தனக்கு அமையுமளவாகக் கொள்ள வென்க. தன்னம் என்பது பாடமாயின் அரசன் கருத்துக்குச் சிறியவென்று தோன்றுமளவாக என உரைக்க. தன்னம் - சிறுமை. தான், ஏ அசைகள். " பரந்த நிதியின் பரப்பெல்லாம் பாண னார்பத் திரனார்க்கு நிரந்த தனங்கள் வெவ்வேறு நிரைத்துக் காட்டி மற்றிவையும் உரந்தங் கியவெங் கரிபரிகண் முதலா வுயிருள் ளனதனமும் புரநத் வரசுங் கொள்ளுமென மொழிந்தார் பொறையர் புரவலனார்" " பாண னார்பத் திரனாரும் பைம்பொன் மௌலிச் சேரலனார் காணக் கொடுத்த விவையெல்லாம் கண்டு மகிழ்வுற் றதிசயித்துப் பேண வெனக்கு வேண்டுவன வடியேன் கொள்ளப் பிஞ்ஞகனார் ஆணை யரசு மரசுறுப்புங் கைக்கொண் டருளு மெனவிறைஞ்ச" என்பன திருத்தொண்டர் புராணசசெய்யுட்கள். (28) பின்னே ழடியோ சேட்சென்று பெருமை சான்ற வரிசையினாற் றன்னே ரிசையான் றனைவிடுத்து மீண்டா னாகத் தமிழ்மதுரை மின்னேர் சடையா ரிசைத்தொண்டன் றானு மீண்டு வெயில்விரிக்கும் பொன்னேர் மௌலி நிதிக்கிழவன் போல மதுரை நகர்புக்கான். (இ - ள்.) பின் ஏழ்அடியோ - பின்னே ஏழு அடி தூரமோ (சென்றது), சேண் சென்று - அதிக தூரஞ் சென்று, பெருமை சான்ற வரிசையினால் - பெருமை நிறைந்த சிறப்புடன், தன்நேர் இசையான் தனைவிடுத்து மீண்டானாக - தனக்குத்தானே ஒத்த இசைவல்ல பாணபத்திரனை அனுப்பி மீண்டு வந்தனனாக; தமழ் மதுரை மின்நேர் சடையார் - தமிழ் வளர்க்கும் மதுரைப் பதியில் எழுந்தருளிய மின்னலை யொத்த சடையினையுடைய சோமசுந்தரக் கடவுளது, இசைத் தொண்டன்தானும் மீண்டு - இசைபாடுந் தொண்டனாகிய பாணபத்திரனுந் திரும்பி, வெயில்விரிக்கும், ஒளிவீசுகின்ற, பொன்ஏர் மௌலிநிதிக் கிழவன் போல - பொன்னாலாகிய அழகிய முடியினையுடைய குபேரன்போல, மதுரைநகர் புக்கான் - மதுரைப்பதியிற் புகுந்தனன். தம்மிடம் வந்து செல்லும் பெரியார்கட்கு ஏழடிதூரம் பின் சென்று வழியனுப்புதல் மரபு; சேரலனாரோ அங்ஙனமன்றி ஆரா அன்பினால் நகர்ப்புறங்காறுஞ் சென்று அவர் விடுக்க மீண்டார் என்க. " பண்பு பெருகும் பெருமாளும் பாணனார்பத் திரனார்பின் கண்கள் பொழிந்த காதனீர் வழியக் கையாற் றொழுதணைய நண்பு சிறக்கு மவர்தம்மை நகரின் புறத்து விடைகொண்டு திண்பொற் புரிசைத் திருமதுரை புக்கார் திருந்து மிசைப்பாணர்" என்பது பெரியபுராணம். (29) வந்து மதுரைப் பெருமானை வணங்கிக் கொணர்ந்த நிதியெல்லாம் இந்து மருமா னகருள்ளார் யாரு மறிய யாவர்க்கும் முந்தை வேத முதல்வர்க்கும் புலவோர் தமக்கு முறைநல்கிச் சந்த யாழி னிசைப்பாணர் தரும மனையான் வைகினான். (இ - ள்.) சந்தம் யாழின் இசைப்பாணர் தருமம் அனையான்- சந்தமமைந்த யாழின் இசையில் வல்ல பாணர்கள் செய்த அறமே யனைய பத்திரன், வந்து மதுரைப் பெருமானை வணங்கி - வந்து மதுரை நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளை வணங்கி, கொணர்ந்த நிதி எல்லாம் - கொண்டுவந்த பொருள் அனைத்தையும், இந்து மருமான் நகருள்ளார் யாரும் அறிய - சந்திரன் மரபினனாகிய பாண்டியனது நகரில் உள்ளாரனைவரும் அறிய, முந்தை வேதமுதல்வர்க்கும் புலவோர் தமக்கும் - முற்பட்ட மறையினையுணர்ந்த அந்தணர்க்கும் புலவர்களுக்கும், யாவர்க்கும் - இரவலர் முதலிய ஏனை யாவர்க்கும், முறைநல்கி- வரிசையால் அளித்து, வைகினான் - வாழ்ந்து வந்தனன். மருமானும் நகருள்ளாரும் என்றுமாம். யாருமறிய என்பதற்கு யாவரும் அறஞ் செய்யு முறைமையை அறிய என்றும் கருத்துக் கொள்க. (30) ஆகச் செய்யுள் - 2130 நாற்பத்து மூன்றாவது பலகையிட்ட படலம் [கொச்சகக்கலிப்பா] கருந்துழாய் முகிலொருபாற் கலந்தவர்1பத் திரற்குநிதி திருந்தியா ருதியனிடைத் திருமுகமீந் தளித்ததிது வருந்தியா ழவனிசைப்ப மழைதூங்கு நள்ளிரவில் இருந்துபா டெனப்பலகை யிட்டதூஉ மினிப்பகர்வாம். (இ - ள்.) கருந்துழாய் முகில் - கரிய துழாய் மாலையை யணிந்த முகில்போன்ற திருமால், ஒருபால் கலந்தவர் - ஒரு பக்கத்திற் பொருந்தப்பெற்ற இறைவர், பத்திரற்கு - பாணபத்திரனுக்கு, திருந்துதார் உதியனிடை - திருத்தமாகிய மாலையை யணிந்த சேரமானிடம், திரு முகம் ஈந்து - திருமுகங் கொடுப்பித்து, நிதி அளித்தது இது - பொருள் அளித்தருளிய திருவிளையாடல் இது; அவன் - அப்பாணபத்திரன், மழை தூங்கும் நள்இரவில் வருந்தி யாழ் இசைப்ப - மழைபொழியும் நடு இரவில் வருந்தி யாழ் இசைபாட, இருந்து பாடு என - இதன்மீது இருந்து பாடுகவென்று, பலகை இட்டதூஉம் - (அப்பெருமானார்) பலகையிட்டருளிய திருவிளையாடலையும், இனிப் பகர்வாம் - இனிக் கூறுவாம். இறைவனது ஒரு கூற்றிலே திருமால் இருத்தலை, "இடமால் வலந்தான்" என்னும் பொன்வண்ணத்தந்தாதியிற் காண்க. " அரனாரண னாமம் ஆன்விடைபுள் ளூர்தி உரை நூல் மறையுறையுங் கோயில் - வரைநீர் கரும மழிப்பளிப்புக் கையதுவேல் நேமி உருவமெரி கார்மேனி யொன்று" என்னும் முதலாழ்வார் பாட்டாலும் பெறப்படுகின்றது. அவன் யாழ் இசைப்ப என இயையும். (1) முன்புடைய நாயகனை முப்போதும் புகுந்திறைஞ்சி இன்புறுமே ழிசைக்கிழவ னிருநிதிய மருளியபின் அன்புசிறந் தரையிரவு மடைந்துபணிந் தடல்விடையின் பின்புறநின் றேழிசையும் பாடிவரும் பேறடைவான். (இ - ள்.) உடைய நாயகனை - தம்மை ஆளாகவுடைய சோம சுந்தரக் கடவுளை, முன்பு - முன்னமே, முப்போதும் புகுந்து இறைஞ்சி- மூன்று காலங்களினும் சென்று வணங்கி, இன்புறும் ஏழ் இசைக்கிழவன் - இன்பமிகும் பாணபத்திரன், இருநிதியம் அருளியபின் - பெருஞ்செல்வத்தை அருளிய பின்னர், அன்பு சிறந்து - அன்புமிகுந்து, அரையிரவும் அடைந்து பணிந்து - நடுயாமத்திலுஞ் சென்று வணங்கி, அடல்விடையின் பின்புறம் நின்று - வெற்றி பொருந்திய திருநந்தி தேவரின் பின்புறத்தில் நின்றுகொண்டு, ஏழ் இசையும் பாடிவரும் பேறு அடைவான் - ஏழிசைகளையும் பாடி வருதலாகிய பயனை அடைவான். நிதியம் அளிப்பதற்குமுன் காலை நண்பகல் மாலை என்னும் முப் பொழுதும் சென்றிறைஞ்சி வந்தவன் நிதியம் அளித்தபின் ஆரா அன்பினால் அரையிரவிலும் சென்று பணிந்து பாடுவானாயினன் என்க. முன்புடைய என்று கொண்டு எல்லாவல்லமையுமுடைய என்றும், முன்னமே தன்னை ஆளாகவுடைய என்றும் உரைப்பாருமுளர். (2) தொழுந்தகையன் பருந்தேவர் தொகுதிகளுந் தொழத்திங்கட் கொழுந்தலைய நதியலையக் குனிக்கின்ற தனிக்கடவுள் செழுந்தரளச் சிவிகையின்மேற் றேவிதிருப் பள்ளியறைக் கெழுந்தருளும் போதுபணிந் தேத்துவா னோரிரவில். (இ - ள்.) தொழும் தகை அன்பரும் - யாவரும் வணங்குந் தகுதி யுடைய அடியார்களும், தேவர் தொகுதிகளும் - தேவர் குழாங்களும், தொழ - வணங்கவும், திங்கள் கொழுந்து அலைய- பிறைச் சந்திரன் ஒரு பால் அலையவும், நதி அலைய - கங்கை ஒருபால் அலையவும், குனிக்கின்ற - வெள்ளிமன்றுள் ஆடியருளும், தனிக்கடவுள் - ஒப்பற்ற இறைவன், செழுந்தரளச் சிவிகையின்மேல்- செழிய முத்துவிமானத்தின்மேல், தேவி திருப்பள்ளியறைக்கு - உமையம்மையாரின் திருப்பள்ளியறைக்கு, எழுந்தருளும்போது- எழுந்தருளும் நடுயாமத்தில், பணிந்து ஏத்து வான் - வணங்கி இசைபாடுவானாயினன்; ஓர் இரவில் - ஒருநாள் இரவில். ஏத்துவான் - அங்ஙனம் ஏத்துநாள் ஓர் இரவில் என்க. (3) இன்னிசையாழ்ப் பெரும்பாண னெவ்விடையூ றடுத்தாலுந் தன்னியம நெறியொழுக்கந் தவானென்ப துலகறியப் பொன்னியலுஞ் சடைமௌலிப் புராணர்திரு விளையாட்டால் அன்னிலையிற்1 கருங்கொண்மூ வார்த்தெழுந்த திசையெல்லாம். (இ - ள்.) இன் இசை யாழ்ப் பெரும் பாணன் - இனிய இசை யமைந்த யாழில் வல்ல பெருமையையுடைய பாணபத்திரன், எவ்விடையூறு அடுத்தாலும் - எவ்வகை இடையூறு நேர்ந்தாலும், தன் நியமநெறி ஒழுக்கம் தவான் என்பது உலகு அறிய - தனது கடப்பா டாகிய ஒழுக்க நெறியினின்றுந் தவறான் என்பதை உலகினரனைவரும் அறியுமாறு, பொன் இயலும் சடைமௌலிப் புராணர் திருவிளையாட்டால் - பொன்போன்ற சிவந்த சடைமுடியை யுடைய பழம் பொருளாயுள்ள சோமசுந்தரக்கடவுளின் திருவிளையாட்டினால், அந்நிலையில் - இருள்மிக்க அப்பொழுதில், திசையெல்லாம் - எட்டுத் திக்குகளிலும், கருங்கொண்மூ ஆர்த்து எழுந்த - கரிய முகில்கள் முழங்கி எழுந்தன. தவான் - கெடான். உலகளியும்படி திருவுளங்கொண்ட புராணர் திருவிளையாட்டால் என விரிக்க. அன்னிலையில் - ஓர் இரவின் இருளில். அந்நிலையில் எனப் பாடங்கொண்டு பத்திரன் புறப்படும் பொழுதில் என்றுரைத்தலுமாம். (4) தடித்துநிரை புடைபரப்பித் தடுமாறித் திசைமயங்கத் துடித்துவிட வாயரவஞ் சோர்ந்துசுருண் டளையொதுங்க இடித்துடுவின் கணம்புதைப்ப விருள்கான்று சலபதிமுன் முடித்திடுவான் வரவிடுத்த2 முகிலேழும் வளைந்தவென3 (இ - ள்.) விடவாய் அரவம் - நஞ்சு பொதிந்த வாயினையுடைய பாம்புகள், துடித்து சோர்ந்து சுருண்டு அளை ஒதுங்க - உடல் துடித்துச் சோர்ந்து சுருண்டு புற்றில் நுழையுமாறு, தடித்து நிரைபுடை பரப்பி இடித்து - மின் வரிசைகளைப் பக்கங்களிற் பரப்பி இடித்து, திசை தடுமாறி மயங்க - (உயிர்கள்) திசைதடுமாறி மயங்கும்படி, உடுவின் கணம் புதைப்ப இருள் கான்று - விண்மீன்களின் கூட்டம் புதைபட இருளினைச் சொரிந்து, சலபதி - நீர்க்கடலாகிய வருணன், முன் - முன்னொருநாளில், முடித்திடுவான் வரவிடுத்த முகில் ஏழும் வளைந்த என - (மதுரையை) அழித்தற் பொருட்டு ஏவிய ஏழுமுகில்களும் வளைந்தாற்போல வளைந்து. தடித்து - மின். தடுமாறி திசைமயங்க என்பதற்கு எட்டுத்திசையில் உள்ளவர்களும் தடுமாறி மயங்க என்றுரைத்தலுமாம். புதைப்ப - புதைபட. சலபதி - வருணன். முடித்திடுவான் : வினையெச்சம். (5) கருங்கடலை விசும்பெடுத்துக் கவிழ்ப்பதென வெண்டாரை நெருங்கிருளி னிருப்புக்கோ னிரைத்ததென நிறங்கருக ஒருங்குசொரிந் துள்ளுணரா ருள்ளம்போ லுட்புறம்பு மருங்கொடுகீழ் மேலென்று தெரியாத மயங்கிருள்வாய். (இ - ள்.) வெண்தாரை - வெள்ளிய தாரைகள், நெருங்கு இருளின் - செறிந்த இருளினால், இருப்புக்கோல் நிரைத்தது என நிறம் கருக - இருப்புக் கோல்களை நிரைபட நட்டுவைத்தாற் போல நிறம் கருகித்தோன்ற (அவற்றை), கருங்கடலை விசும்பு எடுத்துக் கவிழ்ப்பது என - கரிய கடல் நீர் முழுதையும் வான் எடுத்துக் கவிழ்ப்பது போல, ஒருங்கு சொரிந்து - சேரப்பொழிதலால், உள் உணரார் உள்ளம்போல் - ஆன்மாவாகிய தம்மையும் (தலைவனையும்) அறியாதவர்கள் உள்ளம் போல, உள்புறம்பு மருங்கொடு கீழ் மேல் என்று தெரியாத- உள்ளென்றும் வெளியென்றும் பக்கமென்றும் கீழென்றும் மேலென்றும் அறியலாகாத, மயங்கு இருள்வாய் - மயங்கிய இருளின்கண். தாரைகள் வெண்ணிற முடையன வாயினும் இருளின் செறிவாற் கருகின என்றார். " விசும்புற வெள்ளிவெண் கோல் நிரைத்தன போற்கொழுந் தாரைகள்" என்று திருத்தக்க தேவரும், " வான், வெள்ளிவீழிடை வீழ்த்தெனத் தாரைகள்" என்று கம்பருமகூறுவன காண்க. உள் - உள்ளம் : ஆன்மா. (6) மாமாரி யிடைநனைந்து வருவானம் மாரிதனைப் பூமாரி யெனநினைந்து திருக்கோயில் புகுந்தெய்திக் காமாரி தனைப்பணிந்து கருணைமா ரியினனைந்து தேமாரி பொழிவதெனத் தெள்விளியாழ் வாசிப்பான். (இ - ள்.) மாமாரி இடை நனைந்து வருவான் - அந்தப் பெரு மழையில் நனைந்து வருவானாகிய பாணபத்திரன், அம்மாரிதனைப் பூமாரி என நினைந்து - அம் மழையை மலர் மழையெனக் கருதி, திருக்கோயில் புகுந்து எய்தி - திருக்கோயிலுட் சென்று புகுந்து, காமாரிதனைப் பணிந்து - சோமசுந்தரக் கடவுளை வணங்கி, கருணை மாரியில் நனைந்து - (அப்பெருமானது) அருள் மழையில் நனைந்து, தேம்மாரி பொழிவது என - தேன்மழை பொழிவதுபோல. தெள்விளி யாழ் வாசிப்பான் - இசை யமைந்த யாழினை வாசிப்பானாயினன். ஓரிரவில் மயங்கிருள்வாய் நனைந்து வருவான் என்க. மழையில் நனைதலால் வருந்துதலன்றி உவகையுடன் சென்றனன் என்பார் ‘பூமாரியென நினைந்து’ என்றார். காமாரி - காமனை யெரித்தவன் : தீர்க்க சந்தி. தெள்விளி - ஒரு பண்; தெளிந்த இசையென்றும் உரைப்பர். (7) விடைக்கடவுள் பின்னின்று வீணையிடத் தோள்கிடத்திப் புடைத்துநரம் பெறிந்துமிடற் றொலிபோக்கிப் பொலங்கொன்றைச் சடைக்கடவுள் செவிவழிபோ யருட்பைங்கூழ் தலையெடுப்பத் தொடைத்தமிழி னிசைப்பாணிச் சுவையமுத மடைதிறந்து. (இ - ள்.) விடைக்கடவுள் பின் நின்று - இடப தேவரின் பின்னே நின்று, வீணை இடத்தோள் கிடத்தி - யாழினை இடது தோளில் அணைத்து, நரம்பு புடைத்து எறிந்து - நரம்பை அமுக்கித் தெறித்து, மிடற்று ஒலி போக்கி - மிடற்றின் ஒலியை எழுப்பி, தமிழின் தொடை இசைப்பாணி - தமிழினால் தொடுக்கப்பட்ட இசைப்பாட்டாகிய, சுவை அமுதம் மடை திறந்து - சுவைமிக்க அமிழ்தம் மடை யுடைத்து, பொலம் கொன்றைச் சடைக் கடவுள்- பொன் போன்ற கொன்றை, மாலையை யணிந்த சடையையுடைய சோமசுந்தரக் கடவுளின், செவி வழிபோய் - செவியாகிய கால் வழியாகச் சென்று பாய்தலால், அருள் பைங்கூழ் தலையெடுப்ப- திருவருளாகிய பயிர் ஓங்கும்படி. (8) நரம்புநனைந் திசைமழுங்க நனைந்துடலம் பனிப்பவிசை வரம்பொழுகு விரன்மிறைத்து வலிவாங்க மயிர்சிலிர்ப்ப1 நிரம்பியசே றடிபுதைப்ப நின்றுநிறை யன்பிசையாய் அரும்புதல்போ லென்புருக்கு மமுதவிசை பாடுமால். (இ - ள்.) நரம்பு நனைந்து இசைமழுங்க - யாழின் நரம்பு நனைந்து சுருதி குறையவும், உடலம் நனைந்து பனிப்ப - உடம்பு நனைந்து நடுங்கவும், இசை வரம்பு ஒழுகு விரல் - (குரல் முதலிய) இசையினெல்லை கடவாது போக்கு வரவு செய்யும் விரல்கள், மிறைத்து வலிவாங்க - விறைத்து வலிகொள்ளவும், மயிர் சிலிர்ப்ப - (குளிரால்) மயிர் சிலிர்க்கவும், நிரம்பிய சேறு அடி புதைப்ப - நிரம்பிய சேறு அடிகளை மூடவும், நின்று - (பெயராது) நின்று, நிறை அன்பு இசையாய் அரும்புதல் போல்- நிறைந்த அன்பே இசை மயமாய் வெளிப்படுதல் போல, என்பு உருக்கும் அமுத இசைபாடும் - எலும்பினையும் உருக்குகின்ற அமுதம் போன்ற இசையினைப் பாடுவானாயினன். மழையால் இவை நிகழவும் நிறைந்த அன்பினால் இம் பெயராது நின்று அருட் பைங்கூழ் இசைபாடும் என்க. ஆல் : அசை. (9) [இடைமடக்கி வந்த கொச்சகவொருபோகு] மாதர் நகையாய் மதுரேச ருண்பலிக்கெம் மனைவாய் வந்து காதன் முகத்தரும்பிக் காட்டியென் சிந்தை கவர்ந்தார் போலுங் காதன் முகத்தரும்பக் கையறவு தீரக் கலப்பேன் பாதி பேதையுரு வாயிருந்தார் நாணிவிழித் தாவி பிழைத்தேன் போலும். (இ - ள்.) மாதர் நகையாய் - அழகிய பல் வரிசைகளையுடைய தோழியே, மதுரேசர் உண் பலிக்கு - மதுரையில் எழுந்தருளிய இறைவர் உண்ணும் பலியின் பொருட்டு, எம்மனைவாய் வந்து - நமது மனையின்கண் வந்து, முகத்து காதல் அரும்பிக் காட்டி - முகத்தின் கண் காதற்குறியை வெளிப்படுத்திக் காட்டி, என் சிந்தை கவர்ந்தார் போலும் - எனது உள்ளத்தைக் கொள்ளைகொண்டனர் போலும்; காதல் முகத்து அரும்ப - அங்ஙனம் காதற் குறிப்பு முகத்திலே தோன்ற, கையறவு தீரக் கலப்பேன் - காமநோய் தீருமாறு கலக்கத் தொடங்கினேன்; பாதி பேதை உருவாய் இருந்தார் - ஒரு கூறு பெண் வடிவா யிருந்தனர் (அதனால் அது நீங்கி), நாணி விழித்து ஆவி பிழைத்தேன் போலும் - வெள்கி விழித்து உயிர் பிழைத்தேன் போலும். கனவின் கண், பலிக்குவந்த இறைவர்மேற் காதலுற்றாளொருத்தி அதனைத் தன் தோழிக்குக் கூறுவது பொருளாகக் கொண்ட இது முதலிய மூன்றும் பாணனார் பாடிய இசைப்பாட்டாக ஆசிரியர் இயற்றியன வென்க. கையறவு - துன்பம்; காம நோய். போலும் என்பன ஒப்பில் போலி. (10) ஒண்ணுதலாய் வெண்டலைகொண் டுண்பலிக்கு நம்மனையி னூடே கூடற் கண்ணுதலா ருள்ளாளக் கானமிசைத் தென்னுள்ளங் கவர்ந்தார் போலுங் கண்ணுதலார் பாடு மவிநயங்கண் டாகங் கலப்பேன் பாதி பெண்ணுருவ மாயிருந்தார் வெள்கிவிழித் தாவி பெற்றேன் போலும் (இ - ள்.) ஒள்நுதலாய் - ஒள்ளிய நெற்றியினையுடைய தோழியே,. வெண்தலை கொண்டு - வெள்ளிய தலையோட்டினை ஏந்தி, உண்பலிக்கு - உண்ணும் பலியின் பொருட்டு, நம்மனையின் ஊடே - நமது இல்லின் கண் (வந்து), கூடல் கண்ணுதலார் - கூடலில் எழுந்தருளிய நெற்றிக் கண்ணையுடைய இறைவர், உள்ளாளக் கானம் இசைத்து - உள்ளாள இசை பாடி, என் உள்ளம் கவர்ந்தார் போலும் - எனது சிந்தையைக் கொள்ளை கொண்டார் போலும், கண்ணுதலார் பாடும் அவிநயம் கண்டு - அவர் பாடும் இன்பச் சுவையவிநயத்தைக் கண்டு, ஆகம் கலப்பேன் - அவரது திருமார்பிற் கலக்கத் தொடங்கினேன்; பாதி பெண் உருவமாய் இருந்தார் - ஒரு கூறு பெண் வடிவமாயிருந்தனர்; வெள்கி விழித்து ஆவி பெற்றேன் போலும் - (அதனால்) நாணி (அக்கலவி ஒழிந்து) விழித்து நீங்கி உயிர் பெற்றேன் போலும். உள்ளாளம் இன்னதென்பது முன் கூறப்பட்டது. அவிநயம்- காம அவிநயம்; இதன் இயல்பினை, " காம வவிநயம் கருதுங் காலைத் தூவுள் ளுறுத்த வடிவுந் தொழிலும் காரிகை கலந்த கடைக்கணுங் கவின்பெறு மூரன் முறுவல் சிறுநிலா வரும்பலும் மலர்ந்த முகனும் இரந்தமன் கிளவியும் கலந்தன பிறவுங் கடைப்பிடித் தனரே" என்பதனால் அறிக. (11) ஐயரியுண் கண்ணாய் திருவால வாயுடையா ரையங் கொள்வான் மையனகை செய்தென் வனமுலையின் மேற்செங்கை வைத்தார் போலும் மையனகை செய்தென் வனமுலைமேற் கைவைப்ப மாழ்கிச் சோர்வேன் தையலிடங் கண்டு நடுநடுங்கி விழித்தாவி தரித்தேன் போலும். (இ - ள்.) ஐ அரி உண் கண்ணாய் - அழகிய செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களை உடைய தோழியே, திருவாலவாய் உடையார் - திருவாலவாயினையுடைய சோமசுந்தரக்கடவுள், ஐயம் கொள்வான்- பலி ஏற்கும் பொருட்டு (எம்மில்லில் வந்து), மையல் நகை செய்து- காமக்குறிப்புடன் நகைத்து, என் வனம் முலைமேல் - எனது அழகிய கொங்கையின்மேல், செங்கை வைத்தார் போலும் - தமது சிவந்த திருக்கரத்தை வைத்தனர் போலும்; மையல் நகைசெய்து என்வனம் முலை மேல் கை வைப்ப - அவர் அங்ஙனம் செய்ய, மாழ்கிச் சோர்வேன் - மயங்கிச் சோர்வேனாகிய யான், தையல் இடம் கண்டு - ஒருபெண்ணை அவரது இடப்பாகத்திற்கண்டு, நடு நடுங்கி விழித்து ஆவி தா'a4த்தேன் போலும் - துணுக்குற்று விழித்து உயிர்தரித்தேன் போலும். வனம் - சந்தனக்கோலமுமாம். மாழ்கிச் சோர்வேன் என்றது நானும் அவரைக் கூடுதலுற்றேன் என்னும் பொருட்டு. இவை மூன்றிலும் ‘போலும்!’ எனச் சிறிது ஐயறவு தோன்றக் கூறுதலானும், விழித்து என்பதனாலும் இவை கனவு நிலையுரைத்தல் என்பது பெறப்படும். விறகு விற்ற படலத்தில் இறைவர் பாடியனவாகவுள்ள பாட்டுக்களிற் போலவே ஈண்டும் மதுரையுங் கூடலும் ஆலவாயும் முறையே கூறப்பட்டன. இவற்றில் முறையே காதல் முகத்தரும்பி என்றும், கான மிசைத்து என்றும், செங்கை வைத்து என்றும், கூறியிருப்பன பக்குவ மெய்திய ஆன்மாவுக்கு ஆசானாக வந்து அருள் செய்யும் இறைவன் பாவனையானும் வாசகத்தானும் பரிசத்தானும் புரியும் தீக்கைகளைக் குறிப்பின் உணர்த்துவன வாதல் காண்க. இதற்குப் பலி என்றது உடல் பொருள் ஆவிகளைக் கொள்ளுதல் ஆகும். (12) [அறுசீரடி யாசிரிய விருத்தம்] பாடுவா ரிருவர்க் கன்று பரிசிலாக் கொடுத்த சங்கத் தோடுவார் செவியி லூட்டுந் தொண்டுகண் டிதன்மே னின்று பாடுவா யுனக்கே யிந்தப் பலகையென் றாழ்ந்த வன்பின் நாடுவார் விசும்பிற் கூறி நவமணிப் பலகை யிட்டார். (இ - ள்.) பாடுவார் இருவர்க்கு - இசை பாடும் இருவர்க்கு, அன்று பரிசிலாக் கொடுத்த - அந்நாளிற் பரிசிலாகக் கொடுத்தருளிய சங்கத்தோடுவார் செவியில் - சங்கத்தோட்டினையணிந்த நீண்ட திருச் செவிகளில், ஊட்டும் தொண்டு கண்டு - இசையை ஊட்டும் திருத் தொண்டினைக் கண்டருளி, இதன்மேல் நின்று பாடுவாய் - நீ இந்தப் பலகைமேல் நின்று பாடக் கடவை, இந்தப் பலகை உனக்கே என்று - இது உனக்கே உரியது என்று, ஆழ்ந்த அன்பின் நாடுவார்- அழுந்திய அன்பினாலே நாடி அறியப் படுபவராகிய இறைவர், விசும்பில் கூறி - வானிலே அசரீரியாகக் கூறியருளி, நவமணிப பலகை இட்டார் - நவ மணியிழைத்த பலகையொன்று இட்டார். இருவர் - ஆகா, ஊகூ என்னும் கந்தருவர்கள். இவர்கள் பாட்டிற்குப் பரிசிலாக என்றும் இவர்கள் தோட்டின் வடிவாகவிருந்து பாடும்படி தமது திருச்செவியைக் காணியாக அளித்தருளினர் என்க. அங்ஙனம் பாடுவார்க்குத் திருச்செவியையே இடமாக அளித்தவர் இன்று பாணர் சேற்றிலே கால்புதைய நின்று பாடுதலைப் பார்த்தும் தரித்திரார் என்பது தோன்ற ‘பரிசிலாக் கொடுத்த செவியிலூட்டும் தொண்டு கண்டு பலகை யிட்டார’என்றார். (13) இறையரு ளாணை யஞ்சி யிட்டபொற் பலகை யேறி நறைகெழு மதுர கீதம் பாடிநான் மறைகள் சூடும் அறைகழ லகத்துட் கொண்டு பலகையு மங்கை கொண்டு மறைவழி யாழ்வல் லோன்றன் மனைவயிற் செல்லு மெல்லை. (இ - ள்.) இறை அருள் ஆணை அஞ்சி - இறைவன் அருளிய ஆணையை (மறுத்தற்கு) அஞ்சி, இட்ட பொன்பலகை ஏறி - அவன் இட்டருளிய பொன்னாலாகிய பலகையில் ஏறி, நறை மதுரம் கெழு கீதம் பாடி - தேனின் சுவை பொருந்திய இசையினைப் பாடி, நான்மறைகள் சூடும் - நான்கு வேதங்களும் முடியிற் சூடிய, அறைகழல் அகத்துள் கொண்டு - ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த திருவடியை உள்ளத்திற் கொண்டு, பலகையும் அங்கை கொண்டு - அப்பலகையையும் கையிலேந்தி, மறைவழி யாழ்வல்லோன் - இசை நூலின் வழியே யாழ் வாசித்தலில் வல்லவனாகிய பாணபத்திரன், தன் மனையில் செல்லும் எல்லை - தனது இல்லிற்குச் செல்லும் பொழுது. இசை நூலும் மறை எனப்படுதலை. " நரம்பின் மறைய வென்மனார் புலவர்" என்று தொல்காப்பியர் கூறுதலானறிக. (14) மின்னுமா மேக நீங்கி விசும்புவாய் விளங்கித் தென்றல் மன்னுமா மலய மேய1 மாதவன் குடித்த வைகற் பொன்னுமா மணியு முத்தும் புலப்படக் கிடந்த வேலை என்னமீன் விளங்கித் தோன்ற வேகியில் புகுந்தா னிப்பால். (இ - ள்.) தென்றல் மன்னும் மாமலயம் மேய - தென்றற் காற்று நிலை பெற்ற பெரிய பொதியின் மனையிற்றங்கிய, மாதவன் குடித்த வைகல்- பெரிய தவத்தினையுடைய அகத்திய முனிவன் பருகிய ஞான்று, வேலை - கடலின்கண், பொன்னும் மாமணியும் முத்தும் புலப்படக் கிடந்த என்ன - பொன்னும் சிறந்த மணிகளும் முத்தும் வெளிப்படக் கிடந்தாற்போல, மின்னும் மாமேகம் நீங்கி- மின்னுகின்ற கரிய முகில்கள் நீங்கப்பெற்று, விசும்புவாய் விளங்கி - வானம் விளக்க முறுதலால், மீன் விளங்கித் தோன்ற - விண் மீன்கள் புலப்பட்டுத் தோன்றா நிற்க, ஏகி இல்புகுந்தான் - சென்று வீட்டிற் புகுந்தனன்; இப்பால் பின்பு. விசும்புவாய் - வானின் இடம். விளங்கி : காரணப பொருட்டாய செய்தெனெச்சம். வேலையிற் புலப்படக் கிடந்தவென்ன விசும்பிலே விளங்கித்தோன்ற என்க. மேக நீங்கிய விசும்பிற்கு நீர்வறந்த கடலும், விண்மீன்களுக்குப் பொன் முதலியவும் உவமம் (15) பாயிருட் படலங் கீண்டு பரிதிகண் விழித்துச் செங்கை ஆயிரம் பரப்பி முந்நீ ரலைகட னீந்து மெல்லை மாயிரு ஞாலங் காக்கும் வரகுண னிரவு தங்கள் நாயகன் பாடற் கீந்த நல்லருட் பரிசில் கேட்டான். (இ - ள்.) பரிதி கண் விழித்து - சூரியன் கண் விழித்து, பாய் இருள் படலம் கீண்டு - பரந்த இருட்கூட்டத்தைக் கிழித்து, செங்கை ஆயிரம் பரப்பி - சிவந்த கிரணமாகிய ஆயிரங் கரங்களையும் விரித்து, முந்நீர் அலைகடல் நீந்தும் எல்லை - மூன்று நீர்களையுடைய அலைக்கின்ற கீழைக் கடலை நீந்தும்பொழுது, மா இரு ஞாலம் காக்கும் வரகுணன் - மிகப்பெரிய நிலவுலகினைப் புரக்கும் வரகுண பாண்டியன், இரவு - இராப்போதில், தங்கள் நாயகன் - தங்கள் குலதெய்வமாகிய சோமசுந்தரக்கடவுள், பாடற்கு ஈந்த நல் அருள் பரிசில் கேட்டான் - பத்திரனது பாடலுக்கு அளித்தருளிய நல்ல அருட் கொடையைக் கேட்டறிந்தனன். உதித்தலைக் கண் விழித்து என்றும், இருளை யோட்டுதலை இருட்படலங் கீண்டு என்றும், கதிர் வீசுதலைச் செங்கை பரப்பி என்றும், கீழைக்கடலைத் தாண்டி வருதலைக் கடல் நீந்தும் என்றும் கூறியது குணவணி. கீண்டு : கீழ்ந்து என்பதன் மரூஉ. நீரில் நீந்துவார் கை பரப்புதல்இயல்பாகலின் அதற்கேற்ப ‘செங்கையாயிரம் பரப்பி முந் நீரலைகட னீந்து மெல்லை’ என்றார. மாயிரு, உரிச்சொல்லாகலின் யகரம் வந்தது. அருட்பரிசில் - அருளாகிய பரிசில்; அருளால் அளித்த பரிசில். (16) இன்னிசைக் கரசை யிட்ட பலகைமீ திருத்தி மன்னர் மன்னவ னிவனே யெங்கண் மதுரைநா யகனென் றுன்னி மின்னிவர் மணிப்பூ ணல்கி விளைநில மிகவு நல்கி நன்னிதி வெறுப்ப நல்கி வரிசையா னடத்தி1 வந்தான். (இ - ள்.) இன் இசைக்கு அரசை - இனிய இசைக்கு அரசனாகிய பாணபத்திரனை, இட்ட பலகைமீது இருத்தி - இறைவன் இட்டருளிய அப்பலகைமேல் இருக்கச்செய்து, மன்னர் மன்னவன்- வேந்தர் வேந்தனாகிய வரகுணதேவன், இவனே எங்கள் மதுரை நாயகன் என்று உன்னி - இவனே எங்கள் சோமசுந்தரக் கடவுள் என்று கருதி, மின் இவர் மணிப்பூண் நல்கி - ஒளிபரந்த மணிகள் அழுத்திய அணிகளைக் கொடுத்தும், விளை நிலம் மிகவும் நல்கி - விளை நிலங்களை மிகுதியாகத் தந்தும், நல் நிதி வெறுப்ப நல்கி - நல்ல பொருள்களை (அவன்) உவர்ப்ப அளித்தும், வரிசையால் நடத்தி வந்தார் - முறைமையால் (இங்ஙனமே பல நாளும்) நடத்தி வந்தான். சிவனடியாரைச் சிவனெனவே நினைக்க வேண்டுமென்பது உண்மை நூற்றுணிபாகலின் அவனை இறைவனாகவே உன்னினன் என்க. வெறுப்ப - மிக என்றுமாம். (17) [எழுசீரடி யாசிரிய விருத்தம்] இறையருள் வரிசை பெற்றபத் திரனு மேறுயர்த் தவரைநாற் போதும் முறையினால் வழிபட் டொழுகுவா னாக முடிகெழு வரகுண வேந்து மறைமுத லடிகள் வந்துவந் தனையால் வழுத்துவான் சில்பகல் கழிய நிறைபெருஞ் சுடரோன் றிருவுரு வடைந்து நெறியினாற் சிவபுர மடைந்தான். (இ - ள்.) இறை அருள் வரிசை பெற்ற பத்திரனும் - வரகுண மன்னன் அருளிய வரிசைகளைப் பெற்ற பாணபத்திரனும், ஏறு உயர்த்தவரை - இடபக்கொடியினை யுயர்த்திய சோமசுந்தரக் கடவுளை, நாற்போதும் - நான்கு காலங்களிலும், முறையினால் வழிபட்டு ஒழுகு வானாக - முறைப்படி வழிபாடு செய்து ஒழுகுவானாக; முடிகெழு வரகுண வேந்து - முடியுடைய வேந்தனாகிய வரகுண தேவன், மறை முதல் அடிகள் வந்து வந்தனையால் வழுத்துவான்- வேத முதல்வனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவடிகளைத் (திருக்கோயிலின்கண்) வந்து வணங்கித் துதிப்பானாகி, சில் பகல் கழிய - சின்னாட்கழிய, நெறியினால் முறைமையால், நிறைபெருஞ் சுடரோன் திரு உரு அடைந்து - எங்கும் நிறைந்த பேரொலியாகிய இறைவனது திருவுருவத்தை அடைந்து, சிவபுரம் அடைந்தான் - சிவலோகத்தை அடைந்தான். நாற்போது - காலை, நண்பகல், மாலை, நடுயாமம், வந்தனையால்- வணங்குவதோடு : ஆல் ஒடுவின் பொருட்டு. வழுத்துவான் : முற்றெச்சம். திருவுரு - சாரூபம். (18) ஆகச் செய்யுள் - 2148 நாற்பத்து நான்காவது இசைவாது வென்ற படலம் [எண்சீரடி யாசிரிய விருத்தம்] கூட லம் பதியி லாடக மேருக் கொடியவிற குரிசி லடியவ னுக்குப் பாட லின்பரிசி லாசிய செம்பொற் பலகையிட் டபடி பாடின மன்னான் வீடரும் பொருவில் கற்புடை யாளோர் விறலி யைப்பரம னிறையருள் பற்றி மாட கஞ்செறியும் யாழ்வழி பாடி வாது வென்றவர லாறு மிசைப்பாம். (இ - ள்.) அம் கூடல் பதியில் - அழகிய மதுரைத் திருநகரில் எழுந்தருளிய, ஆடக மேருக்கொடிய வில்குரிசில் - பொன்மேருவாகிய வளைந்த வில்லையேந்திய சோமசுந்தரக் கடவுள், அடியவனுக்கு - அடியானாகிய பாணபத்திரனுக்கு, பாடலின் பரிசில் ஆகிய - (அவன்) பாட லுக்குப் பரிசிலாக, செம்பொன் பலகை இட்டபடி பாடினம் - சிவந்த பொற்பலகை அருளிய திருவிளையாடலைக் கூறினேம்; அன்னான் - (இனி) அப் பாணபத்திரனது, வீடு அரும் பொருஇல் கற்பு உடையாள் - அழிதலில்லாத ஒப்பற்ற கற்பினை யுடைய மனைவியார், பரமன் நிறை அருள்பற்றி - இறைவனது நிறைந்த திருவருளைப் பற்றுக்கோடாகக் கொண்டு, மாடகம் செறியும் யாழ்வழி பாடி - முறுக்காணி செறிந்த யாழின் வழியே பாடி, ஓர் விறலியை வாது வென்ற வரலாறும் இசைப் பாம் - ஒரு பாடினியை வாதில் வென்ற திருவிளையாடலையுங் கூறுவாம். கொடிய - வளைவுடைய; கொடுமை - வளைவு; கோடிய என்பதன் விகாரமுமாம். ஆகிய : செய்யிய வென்னும் வினையெச்சம். (1) வரகு ணன்கதி யடைந்தபி னம்பொன் மௌலி சூடிய விராச விராசப் புரவ லன்புவி மடந்தையை வேட்டுப் புயந்த ழீஇக்கொடு நயந்தரு நாளிற் பரவு மன்பதை புரந்தொழு கந்தப் பஞ்சவற் குரிய ரஞ்சன வுண்கண் மரபின் வந்தமட வார்பல ரேனை மையல் செய்யுமட வார்பலர் மாதோ. (இ - ள்.) வரகுணன் கதி அடைந்தபின் - வரகுணபாண்டியன் சிவகதி அடைந்தபின், அம்பொன் மௌலி சூடிய - அழகிய பொன்னா லாகிய முடிசூடிய, இராச விராசப் புரவலன் - இராசராச மன்னன் என்பான், புவிமடந்தையை வேட்டுப் புயம் தழீஇக் கொடு - நிலமகளை மணந்து தோளிற் றழுவிக்கொண்டு, நயம் தரும் நாளில் - (குடிகளுக்கு) இன்பமளித்து வரும்பொழுது, பரவும் மன்பதை புரந்து ஒழுகு - பரவிய அந்தப் பாண்டியனுக்கு உரியராயுள்ளார், அஞ்சன் உண் கண் மரபின் வந்த மடவார் பலர் - மையுண்ட கண்களையுடைய தனது மரபில் வந்த மகளிர் பலர்; ஏனை மையல் செய்யும் மடவார் பலர் - மற்றை மயக்கஞ் செய்யுங் காமக்கிழத்தியர் பலர். மரபின் வந்த மடவார் - குடிப்பிறந்தவராகிய மனைக்கிழத்தியர். மையல் செய்யு மடவார் - கணிகையருள்ளே காமக்கிழத்தியர். மாது. ஓ : அசைகள். (2) அன்ன போகமட வாரு ளொருத்தி யரச னுக்கமுது மாவியு மாகும் மின்ன னாண்மதுர கீத மிசைக்கும் விஞ்சை யின்றுறைவ லாளவ ளுக்கும் பன்ன காபரண னின்னிசை பாடும் பத்திரன் பொருவில் கற்புடை யாட்கும் மன்னு கீதவினை யாலிகன் மூள வழுதி காதன்மட மாது பொறாளாய். (இ - ள்.) அன்னபோக மடவாருள் ஒருத்தி - அந்தக் காமக் கிழத்தியருள் ஒருத்தி, அரசனுக்கு அமுதும் ஆவியும் ஆகும் மின்னனாள் - மன்னனுக்கு அமுதும் உயிருமாகிய மின்னலை ஒத்தவள்; மதுரகீதம் இசைக்கும் விஞ்சையின் துறைவலாள் - இனிய இசை பாடும் கல்வியின் துறையில் வல்லவள்; அவளுக்கும் - அம்மாதுக்கும், பன்னக ஆபரணன் இன் இசை பாடும் - பாம்பணியினையுடைய இறைவன்திருமுன் இனிய இசையினைப் பாடுகின்ற, பத்திரன் பொரு இல் கற்பு உடையாட்கும் - பாணபத்திரனது ஒப்பற்ற கற்பினை யுடைய மனைவிக்கும், மன்னுகீத வினையால் - (இன்பம்) நிலைபெற்ற இசைபாடுஞ் செயலால், இகல்மூள - பகைமூள, வழுதி காதல் மடமாது பொறாளாய் - பாண்டியனது காதலுக்குரிய இளமையாகிய மாது மனம் பொறாதவளாய். போக மடவார் - இன்பம் விளைக்கும் காமக்கிழத்தியர். (3) பாடி னிக்கெதிரொர் பாடினி தன்னைப் பாட விட்டிவள் படைத்த செருக்கை ஈடழிப்பலென வெண்ணி யெழிஇத்தன் னிறைமகற்கஃ திசைத்தலு மந்தத் தோடி றப்பொரு கயற்கணி னாடான் சொன்ன வாறொழுகு மன்னவர் மன்னன் நாடி யத்தகைய விறலியை யீழ நாட்டி னும்வர வழைத்து விடுத்தான். (இ - ள்.) பாடினிக்கு எதிர் ஓர் பாடினிதன்னைப் பாடவிட்டு- இந்தப் பாடினிக்கு எதிராக ஒரு பாடினியைப் பாடவிட்டு, இவள் படைத்த செருக்கை ஈடு அழிப்பல் என எண்ணி எழீஇ - இவள் கொண்ட செருக்கினை வலியழிப்பேனென்று கருதி எழுந்து, தன் இறைமகற்கு அஃது இசைத்தலும் - தன் மன்னனுக்கு அச்செய்தியைக் கூறியவளவில், அந்தத் தோடு இறப்பொரு கயல்கணினாள் - தோடு இற்றொழியும்படி போர்புரியுங் கயல்போன்ற கண்ணையுடைய அக் காமக்கிழத்தி, சொன்னவாறு ஒழுகும் மன்னவர் மன்னன் - சொன்னபடி நடக்கும் மன்னர் மன்னனாகிய அப்பாண்டியன், அத்தகைய விறலியை நாடி - அங்ஙனம் பாடி வெல்லுந் தகுதியையுடைய பாடினியை ஆராய்ந்து கண்டு, ஈழ நாட்டினும் வரவழைத்து விடுத்தான் - ஈழ நாட்டினின்றும் வரவழைத்தான். ஈடழிப்பல் என்பது ஒரு சொல்லாய் இரண்டாவதற்கு முடிபாயிற்று; ஈடு - வலிமை. எழீஇ : சொல்லிசை யளபெடை. தோடு- காதணி. கண் காதள வோடுதலை இங்ஙனங் கூறினார். நாட்டினும்- நாட்டினின்றும். விடுத்தான், விட்டான் என்பதுபோலத் துணிவுப் பொருளில் வந்தது. (4) பந்த யாழ்முதுகு தைவர விட்டுப் பாட லாயமிரு பக்கமு மொய்ப்ப வந்த பாடினி மடந்தையு மன்னர் மன்னனைத் தொழுதொர் கின்னரமாதிற் சந்த வேழிசைமி ழற்றின ணின்றா டன்னை நோக்கியொரு மின்னிடை யாண்மேற் சிந்தை போக்கிவரு தீப்பழி நோக்காத் தென்ன ருக்கரச னின்னது செப்பும். (இ - ள்.) பந்தம் யாழ் முதுகு தைவரவிட்டு - கட்டமைந்த யாழ் முதுகினைத் தடவுமாறு தொங்கவிட்டு, பாடல் ஆயம் இருபக்கமும் மொய்ப்ப - பாடும் மகளிர் கூட்டம் இரண்டு பக்கங் களிலும் மொய்ப்ப, வந்த பாடினி மடந்தையும் - வந்த விறலியாகிய மாதும், மன்னர் மன்னனைத் தொழுது - வேந்தர் வேந்தனாகிய பாண்டியனைத் தொழுது, ஓர் கின்னரமாதில் - ஒரு கின்னர மங்கைபோல, சந்த ஏழ் இசை மிழற்றினள் நின்றாள் - பண்ணமைந்த ஏழிசைகளையும் பாடி நின்றாள்; தன்னை நோக்கி - அங்ஙனம் நின்ற அவளை நோக்கி, ஒரு மின் இடை யாள்மேல் சிந்தை போக்கி- ஒரு மின்போலும் இடையினையுடையாள் மேல் மனத்தைப் போக்கினமையால், வரு தீப்பழி நோக்கா - மேலே விளையுங் கொடிய பழியினைக் கருதாது, தென்னருக்கு அரசன் - பாண்டியருக்கு வேந்தனாகிய இராச ராசன், இது செப்பும் - இதனைச் சொல்லுவான். கின்னரர் - இசைபாடும் ஒரு தேவ சாதியார். நின்றாள் அங்ஙனம் நின்றவளை நோக்கி என விரித்துரைக்க. (5) பத்தி ரன்மனைவி தன்னையெம் முன்னர்ப் பாடு தற்கழை யதற்கவ ளாற்றா துத்த ரஞ்சொலினும் யாமவள் சார்பா யுனைவி லக்கினும் விடாது தொடர்ந்தே சித்த நாணமுற வஞ்சின மிட்டுச் செல்லனில் லென வளைந்துகொ ளென்னா எய்த்த நுண்ணிடையி னாளை யிருக்கைக் கேகி நாளைவரு கென்று விடுத்தான். (இ - ள்.) பத்திரன் மனைவிதன்னை எம்முன்னர் - பாணபத்திரன் மனைவியை எமது முன்னே, பாடுதற்கு அழை - பாடுதற்கு அழைப்பாயாக, அதற்கு அவள் ஆற்றாது உத்தரம் சொலினும்- அதற்கு அவள் உன்னோடு பாட ஆற்றாமல் வேறு போக்குச் சொல்லினும், யாம் அவள் சார்பாய் உனை விலக்கினும் - யாம் அவள் சார்பாய் இருந்து உன்னைத் தடுத்தாலும். விடாது தொடர்ந்தே - நீ அவளை விடாது பின்பற்றி, சித்தம் நாணம் உற - அவள் மனம் வெள்குமாறு, வஞ்சினம் இட்டு - சூளுறவுசெய்து, செல்லல் நில் என வளைந்துகொள் என்னா - செல்லாதே நில் என்று வளைந்து கொள்வாயாக என்று கூறி, எய்த்த நுண் இடையினாளை - இளைத்த நுண்ணிய இடையினையுடைய அப்பாடினியை, இருக்கைக்கு ஏகி நாளை வருக என்று விடுத்தான் - இருப்பிடஞ் சென்று நாளை வரக்கடவாய் என்று அனுப்பினான். செல்லல் - செல்லாதே; அல் விகுதி எதிர் மறையில் வந்தது. வருகென்று : அகரந் தொக்கது. (6) [கலிநிலைத்துறை] பின்ன ரின்னிசைப் பத்திரன் பெருந்தகை விறலிதன்னை யங்கழைத் துளத்தொன்று புறத்தொன்று சாற்றும் என்னொ டின்னிசை பாடுவா ருளர்கொலோ விங்கென் றுன்னி வந்திருக் கின்றன ளிசைவலா ளொருத்தி. (இ - ள்.) பின்னர் - பின்பு, இன் இசைப் பத்திரன் பெருந்தகை விறலிதன்னை - இனிய இசைபாடுதலில் வல்ல பாணபத்திரன் மனைவி யாகிய மிக்க கற்பினையுடைய பாடினியை, அங்கு அழைத்து - தன்முன் அழைத்து, உளத்து ஒன்று புறத்து ஒன்று சாற்றும் - அகத்தொன்றும் புறத்தொன்றுமாகக் கூறுகின்றான்; இசைவலாள் ஒருத்தி - இசையில் வல்ல ஒரு பெண், உன்னி - தன்னை நன்கு மதித்தமையால், இங்கு என்னொடு இன்இசை பாடுவார் - இங்கு என்னுடன் இனிய இசை பாடுகின்றவர், உளர்கொலோ என்று வந்திருக்கின்றனள் - உளரோ என்று சொல்லிக்கொண்டு வந்திருக்கின்றனள். தகை - ஈண்டுக் கற்பு. உள்ளத்தில் ஒன்று கருதி வாயால் மற்றொன்று கூறுகின்றான் என்பார் ‘உளத்தொன்று புறத்தொன்று சாறறும்’ என்றார். என்னொடு - எனக்கு ஒப்பாக. (7) ஆட மைத்தடந் தோளினா யவளொடுங் கூடப் பாட வல்லையோ பகரெனப் பாடினி பகர்வாள் கோட ருந்தகைக் கற்புமிக் கூடலெம் பெருமான் வீட ருங்கரு ணையுமெனக் கிருக்கையால் வேந்தே. (இ - ள்.) ஆடு அமைத்தடம் தோளினாய் - அசையும் மூங்கிலை ஒத்த பெரிய தோளினையுடையாய், அவளொடும் கூடப் பாட வல்லையோ - அவளுடன் ஒப்பாக நின்று பாடுதற்கு வலியுடையையோ, பகர் என - கூறுவாயாக என்று வினவ, பாடினி பகர்வாள் - விறலி கூறுவாள்; வேந்தே - அரசே, கோடு அரும் தகைக் கற்பும் - மாறுதலில்லாத பெருமையையுடைய கற்பும், இக்கூடல் எம்பெருமான் - இந்த நான்மாடக் கூடலில் எழுந்தருளிய எம் பெருமானது, வீடு அருங் கருணையும் - அழிதலில்லாத அருளும், எனக்கு இருக்கையால் - எனக்குத் துணையாக இருத்தலினால். கூட - ஒப்பாக. கோள்தரும் எனப் பிரித்து உறுதியைத் தருகின்ற என்றுரைத்தலுமாம். (8) பாடி வெல்வதே யன்றிநான் பரிபவ முழந்து வாடு வேனலே னென்றுரை வழங்கலு மதுக்கால் ஏடு வார்குழ லவளையு மிருக்கையுய்த் திருந்தான் நீடு வார்திரைப் பொருநையந் தண்டுறை நிருபன். (இ - ள்.) பாடி வெல்வதே அன்றி - அவளொடு பாடி நான் வெற்றி பெறுவதேயல்லாமல், பரிபவம் உழந்து வாடுவேன் அலேன் என்று உரை வழங்கலும் - தோல்வியினால் வருந்தி வாட்டமுறேன் என்று கூறிய வளவில், மதுக்கால் ஏடு வார் குழல் அவளையும் - தேன்பொழியும் மலரிதழை யணிந்த நீண்ட கூந்தலையுடைய அப் பாடினியையும், இருக்கை உய்த்து இருந்தான்- அவள் இருப்பிடத்திற்குப் போக விடுத்து இருந்தான்; நீடு வார் திரைப்பொருநை அம் தண்துறை நிருபன் - நீண்ட பெரிய அலைகளையுடைய தாமிரபன்னியின் அழகிய தண்ணிய துறைகளையுடைய பாண்டிமன்னன். பரிபவம் - துன்பம்; மானக்கேடுமாம். நீடு வார் என்பன ஒரு பொருள் குறித்தன; மிக்க என்றபடி. பாடினி உரை வழங்கலும் நிருபன் அவளையும் உய்த்து இருந்தான் என்க. (9) மற்றை வைகலவ் விருவரைப் பஞ்சவன் மதுரைக் கொற்ற வன்றன தவையிடை யழைத்துநேர் கூட்டிக் கற்ற வேழிசை கேட்குமுன் கலத்தினும் போந்த வெற்றி வேன்மதர் நெடுங்கணாள் விறலியை வைதாள். (இ - ள்.) மற்றைவைகல் - மறுநாளில், அவ்விருவரை - அவ்விருவரையும், பஞ்சவன் மதுரைக் கொற்றவன் - பாண்டியனாகிய மதுரை மன்னன், தனது அவையிடை அழைத்து - தன் அவையின்கண் வருவித்து, நேர்கூட்டி - ஒருவருக்கொருவர் நேரில் இருக்குமாறு செய்து, கற்ற ஏழ் இசை கேட்குமுன் - அவர்கள் கற்ற ஏழு இசைகளையும் பாடுமாறு ஏவிக் கேட்டற்கு முன்னரே, கலத்தினும் போந்த - மரக் கலத்தினின்றும் வந்த, வெற்றிவேல் மதர் நெடுங்கணாள் - வெற்றி பொருந்திய வேல்போன்ற மதர்த்த நீண்ட கண்களையுடையவள், விறலியை வைதாள் - பாணபத்திரன் மனைவியாகிய பாடினியை இகழ்ந்துரைத்தாள். இருவரையும் என்னும் முற்றும்மை விகாரத்தாற் றொக்கது, கலம் - நாவாய். கலத்தினால் வந்தவளைக் கலத்தினின்றும் வந்தவள் என்றார். (10) குற்ற மெத்தனை யெத்தனை குணங்கள் யாழ்க் கோலுக் குற்ற தெய்வம்யா1 விசைப்பதெவ் வுயிருடம் புயிர்மெய் பெற்ற வோசையெவ் வளவவைக் குத்தரம் பேசி மற்றெ னோடுபா டில்லையேல் வசையுனக் கென்றாள். (இ - ள்.) யாழ்க்கோலுக்கு - வீணைக்கு, எத்தனை குற்றம் - எவ்வளவு குற்றங்கள்; எத்தனை குணங்கள் - எவ்வளவு குணங்கள்; உற்ற தெய்வம் யா - பொருந்திய தெய்வங்கள் யாவை; இசைப்பது எவ்வுயிர் உடம்பு உயிர்மெய் - ஒலிப்பது எந்த உயிரெழுத்து எந்த மெய்யெழுத்து எந்த உயிர்மெய்யெழுத்து; பெற்ற ஓசை எவ்வளவு - (அவைகட்கு) அமைந்த ஒலி எவ்வளவின; அவைக்கு உத்தரம் பேசி - அவைகட்கு விடைகூறி, மற்று எனோடு பாடு- பின் என்னுடன் பாடு வாயாக; இல்லையேல் உனக்கு வசை என்றாள் - இன்றேல் உனக்கு அது குற்றமாகும் என்று கூறினாள். குற்றம் - செம்பகை, ஆர்ப்பு, கூடம், அதிர்வு என்பன; இவை மரக்குற்றத்தால் வருவன என்பதை, " நீரிலே நிற்றல் அழுகுதல் வேதல் நில மயங்கும் பாரிலே நிற்றல் இடிவீழ்தல் நோய்மரப் பாற்படல் கோள் நேரிலே செம்பகை ஆர்ப்பொடு கூடம் அதிர்வு நிற்றல் சேரில்நேர் பண்கள் நிறமயக் கம்படும் சிற்றிடையே" என்னுஞ் செய்யுளா லறிக. குணங்களாவன : மேற்கூறிய குற்றங்க ளொழிந்த கொன்றை, கருங்காலி முதலிய மரங்களால் இயன்றிருப்பனவாகும்; " சொல்லிய கொன்றை , கருங்காலி மென்முருக்கு நல்ல குமிழுந் தணக்குடனே - மெல்லியலாய் உத்தம மான மரங்க ளிவையென்றார் வித்தக யாழோர் விதி" என்பது காண்க. யாழ்க்கோல் - யாழாகிய கோல். தெய்வம் - விசு வாமித்திரன் முதலாகக் கூறுவர். என்னோடு என்பது விகார மாயிற்று. (11) இருமை யும்பெறு கற்பினா ளியம்புவாள் கலத்தின் வரும ரும்பெறற் கல்வியும் வாதின்மே லூக்கப் பெருமை யும்பலர் விரும்புறு பெண்மையின் செருக்குந் திரும கன்சபை யறியவாய் திறக்கவேண் டாவோ. (இ - ள்.) இருமையும் பெறுகற்பினாள் இயம்புவாள் - இம்மைப் பயனையும் மறுமைப் பயனையும் அடைதற்குரிய கற்பினையுடையாள் கூறுவாள்; கலத்தின் வரும் பெறல் அருங்கல்வியும்- மரக்கலத்தினின்றும் வந்த பெறுதற்குரிய கல்வியினையும், வாதின்மேல் ஊக்கப் பெருமையும் - வாதின்மேற் சென்ற மனவெழுச்சியின் பெருமையினையும், பலர் விரும்புறு பெண்மையின் செருக்கும் - பலரும் விழைகின்ற பெண்ணலத்தின் செருக்கினையும், திருமகன் சபை அறிய - பாண்டியனது அவையிலுள்ளார் அறியுமாறு, வாய் திறக்க வேண்டாவோ - உன் வாயினைத் திறந்து காட்ட வேண்டாமா? கலத்தின் வருங்கல்வி என உடையாள் தொழில் உடைமை மேல் ஏற்றிக் கூறப்பட்டது. கற்பின் றன்மை வாய்க்கப் பெறாதாள் என்பாள்‘ பலர் விரும்புறு பெண்மையின் செருக்கும்’ என்றாள். பெண்டிர்க்குரிய நாண் சிறிதுமின்றி அரசவையில் இங்ஙனம் பேசுகின்றாய் என்பாள் ‘சபை யறியவாய் திறக்க வேண்டாவோ’ என்று பாடினி கூறினாள் என்க. (12) நெய்யுண் பூங்குழன் மடவரா னின்னொடும் வாது செய்யும் பூசலுக் கெதிரலாற் றீயவாய் திறந்து வையும் பூசலுக் கெதிரலேன் மானம்விற் றுன்போல் உய்யும் பாவைய ரேயதற் கெதிரென வுரைத்தாள். (இ - ள்.) நெய் உண் பூங்குழல் மடவரால் - நெய் பூசிய மலர்களை யணிந்த கூந்தலையுடைய பெண்ணே, நின்னொடும் வாது செய்யும் பூசலுக்கு எதிர் அலால் - நின்னோடும் இசைவாது செய்யும் போருக்கு நான் எதிரே அல்லாமல், தீயவாய் திறந்து வையும் பூசலுக்கு எதிர் அலேன் - கொடிய வாயினைத் திறந்து இகழும் போருக்கு எதிரல்லேன்; உன்போல் - உன்னைப் போல, மானம் விற்று உய்யும் பாவையரே - மானத்தை விற்றுப் பிழைக்கும் மகளிரே, அதற்கு எதிர் என உரைத்தாள் - அப்பூசலுக்கு எதிராவார் என்று கூறினாள். மடவரல் என்பது விளியில் மடவரால் என்றாயது. பூசல் - போர். மானம் விற்று உன்போல் உய்யும் பாவையர் என்றதனால் நீ மானத்தை விற்றுப் பிழைக்க வந்துளாய் என்றவாறாயிற்று. (13) வென்றி மீனவன் விலக்குவான் போலெதிர் விலக்கித் துன்று தார்க்குழன் மடந்தைமீர் பாடுமின் றோற்றோர் வென்ற மாதரார்க் கடிமையாய் விடுவதே சபதம் என்று மானமுண் டாக்கலு மீழநாட் டரிவை. (இ - ள்.) வென்றி மீனவன் - வெற்றியையுடைய பாண்டியன், விலக்குவான்போல் - விலக்குகின்றவனைப்போல் அவிநயித்து, எதிர் விலக்கி - எதிர் நின்று தடுத்து, துன்று தார்க்குழல் மடந்தைமீர்- நெருங்கிய மாலையை யணிந்த கூந்தலையுடைய மங்கைமீர், பாடுமின் - (நீவிர் இப்பூசலை ஒழித்துப்) பாடுவீர்களாக; தோற்றோர் - அவ்விசையில் தோற்றவர், வென்ற மாதரார்க்கு அடிமையாய் விடுவதே - வெற்றிபெற்ற மடந்தைக்கு அடிமையாகி விடுவதே, சபதம் என்று மானம் உண்டாக்கலும் - சூளுறவாவது என்று கூறி இருவருக்கும் மானத்தை மூட்டிய வளவில், ஈழநாட்டு அரிவை - ஈழ நாட்டினின்றும் போந்த அரிவை. நடுவு நிலையுடன் அவர்கள் பூசனை விலக்கினானல்லன் என்பார் ‘விலக்குவான்போ லெதிர்விலக்கி’ என்றார். (14) முந்தி யாழிடந் தழீஇக்குரல் வழிமுகிழ் விரல்போய் உந்த வேபெரு மிதநகை யுட்கிடந் தரும்பச் சந்த வேழசை யிறைமகன் றாழ்செவிக் கன்பு வந்த காதலாண் மழலையி னமுதென வார்த்தாள். (இ - ள்.) முந்தி - தான் முற்பட்டு, யாழ்இடம் தழீஇ, யாழினை இடத்தோளிற் றழுவி, குரல்வழி முகிழ் விரல்போய் உந்த - குரல் என்னும் நரம்பின்வழியே முகிழ்த்த விரல்சென்று தாக்கவும், பெருமித நகை உள் கிடந்து அரும்ப - பெருமிதத்தை வெளிப்படுத்தும் புன்னகை உள்ளே கிடந்து சிறிது தோன்றவும், சந்த ஏழ்இசை - பண்ணமைந்த ஏழிசைகளையும், இறைமகன் தாழ் செவிக்கு - பாண்டி மன்னனது வார்ந்து நீண்ட காதில், அன்பு வந்த காதலாள் - அன்பு வளர்தற் கேதுவாகிய காதல் காட்டும் அவனது காமக் கிழத்தியின், மழலை இன் அமுது என வளர்த்தாள் - இளஞ்சொல்லாகிய இனிய அமுதம் போல் வாக்கினாள். அன்புவந்த காதலாள் - அன்பு வளர்தற் கேதுவாகிய காதலைச் செய்பவள்; காமக்கிழத்தி. காமக்கிழத்தியின் இளஞ்சொற்போலவும் அமுதம் போலவும் எனலுமாம். செவிக்கு - செவிக்கண். (15) வீணை வாங்கினண் மாடக முறுக்கினள் விசித்து வாண ரம்பெறிந் திருசெவி மடுத்தன ரியக்கர் நாண மெல்விர னடைவழி நாவிளை யமுதம் பாணர் கோமகன் விறலியும் பலர்செவி நிறைத்தாள். (இ - ள்.) பாணர் கோமகன் விறலியும் - பாணர் பெருமானாகிய பத்திரன் மனைவியாகிய பாடினியும், வீணை வாங்கினள் மாடகம் முறுக்கினள் - யாழினை எடுத்து மாடகத்தை முறுக்கி, விசித்து வாள்நரம்பு எறிந்து - கட்டமைத்து ஒள்ளிய நரம்பினைத் தாக்கி, இயக்கர் இருசெவி மடுத்தனர் நாண - இயக்கர்களும் இரண்டு செவிகளிலுங் கேட்டு வெள்க, மெல்விரல் நடைவழி - மெல்லிய விரல் நடத்துதலா லுண்டாகும் ஓசையின் வழியே, நாவிளை அமுதம் - தனது நாவால் விளைக்கும் இசை யமுதத்தை, பலர் செவி நிறைத்தாள் - பலர் செவிகளிலும் நிரப்பினாள். வாங்கினள், முறுக்கினள், மடுத்தனர் என்பன முற்றெச்சம். விரல் நடைவழி நாவிளை அமுதம் - யாழினிசையோடு பொருந்த மிடற்றாற் பாடும் இசை. விறலியும் வாங்கி முறுக்கி விசித்து எறிந்து நாண அமுதம் நிறைத்தாள் என வினைமுடிக்க. விறலியும் என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சப் பொருட்டு. (16) அரச னுட்கிடை யறிந்தில ரவைக்களத் துள்ளார் விரைசெய் வார்குழற் பாடினி பாடலை வியந்தார் புரைசை மானிரைப் பூழிய னிலங்கையிற் போந்த வரைசெய் குங்குமக் கொங்கையாள் பாடலை மகிழ்ந்தான். (இ - ள்.) அவைக் களத்து உள்ளார் - அவையிலுள்ள அனைவரும், அரசன் உட்கிடை அறிந்திலர் - மன்னனது மனக்கருத்தை யறியாது, விரைசெய் வார்குழல் பாடினி பாடலை வியந்தார் - மணங் கமழ்கின்ற நீண்ட கூந்தலையுடைய விறலியின் பாடலைக் கொண்டாடினார்; புரசை மான் நிரைப் பூழியன் - கழுத்துக் கயிற்றினை யுடைய யானைக் கூட்டங்களையுடைய பாண்டியன், இலங்கையில் போந்த- இலங்கையினின்றும் வந்த, வரைசெய் குங்குமக் கொங்கையான் பாடலை மகிழ்ந்தான் - மலையை ஒத்த குங்குமக் குழம்பணிந்த கொங்கையை யுடைய ஈழப் பாடினியின் பாடலைப் பாராட்டினார். அறிந்திலர் : முற்றெச்சம். புரைசை; இடைப்போலி. புரசை யானைக்கழுத்திடு கயிறு. வரைசெய், செய் : உவமப்பொருட்டு. (17) [அறுசீரடி யாசிரிய விருத்தம்] தென்னவ னுட்கோ ளெல்லை தெரிந்தன ரவையத் துள்ளார் அன்னவன் புகழ்ந்த வாறே புகழ்ந்தன ரவளைத் தானே முன்னவ னருளைப் பெற்று மும்மையுந் துறந்தோ ரேனும் மன்னவன் சொன்ன வாறே சொல்வது வழக்கா றன்றோ. (இ - ள்.) அவையத்துள்ளார் - அவையிலுள்ளவர்கள், தென்னவன் உட்கோள் எல்லை தெரிந்தனர் - பாண்டியன் உள்ளக்கிடையின் முடிவைத் தெரிந்து, அன்னவன் புகழ்ந்தவாறே - அவன் புகழ்ந்த வண்ணமே, அவளைத் தானே புகழ்ந்தனர் - அவ்வீழப் பாடினியின் பாடலையே புகழ்ந்தார்கள்; முன்னவன் அருளைப் பெற்று - இறைவனது திருவருளைப் பெற்று, மும்மையும் துறந்தோரேனும் - மூவாசைகளையுந் துறந்த பெரியாராயினும், மன்னவன் சொன்னவாறே சொல்வது வழக்காறு அன்றோ - அரசன் கூறியவாறே கூறுவது வழக்காறு அல்லவா. மும்மை - மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மூவாசைகள். மன்னவன் சொன்னவாறே சொல்வது வழக்காறு என்பதனை, " இகழி னிகழ்ந்தாங் கிறைமக னொன்று புகழினு மொக்கப் புகழ்ப" என்பதனாலு மறிக. தெரிந்தனர் : முற்றெச்சம். தான் : ஏ, அசைகள். இச்செய்யுள் வேற்றுப்பொருள்வைப்பணி. (18) பொன்றளி ரனையாண் மையற் புதுமது நுகர்ந்து தீது நன்றறி யாத கன்னி நாடவ னவையை நோக்கி இன்றொரு நாளிற் றேரத் தக்கதோ விதுவென் றந்த வென்றடு வேற்க ணாரைப் போமென விடுத்தான் மன்னோ. (இ - ள்.) பொன் தளிர் அனையாள் - பொன் தளிர்த் தாலொத்த மேனியை யுடைய காமக்கிழத்தி மேல்வைத்த, மையல் புதுமது நுகர்ந்து - காமமாகிய புதிய நறவினைப் பருகியதால், தீது நன்று அறியாத கன்னி நாடவன் - தீமையையும் நன்மையையும் அறியமாட்டாத கன்னி நாட்டினையுடைய பாண்டியன், அவையை நோக்கி - அவையிலுள்ளாரைப் பார்த்து, இது - இவ்விசை வாதின் முடிபு, இன்று ஒரு நாளில் - இன்று ஒரே நாளில், தேரத்தக்கதோ என்று - ஆராய்ந்தறியத் தக்கதோ என்று கூறி, அந்த வென்று அடுவேல் கணாரை - வென்று பகைவரைக் கொல்லும் வேல்போன்ற கண்களையுடைய இம்மடவார்களை, போம் என விடுத்தான் - இருக்கைக்குப் போவீராக என்று அனுப்பினான். பொன்னினது தளிர் என்றுமாம்; இதற்குப் பொற்றளிர் என்பது மெலிந்து நின்றதாகக் கொள்க. புது மது - மயக்கஞ் செய்வதிற் புதுமை யுடைய தொரு மது. காமம் மதுப்போல் வதென்பது, "கள்ளுண்டல் காம மென்ப கருத்தறை போக்குச் செய்வ" என முன் கூறப்பட்டவாறும் காண்க. மன்னும் ஓவும் அசைகள். (19) மருவிய வாய மேத்த விருந்தினாண் மனைவந் தெய்திப் புரவலன் றனது பாட்டைப் புகழ்ந்ததே புகழ்ந்த தாகப் பெருமிதந் தலைக்கொண் டானாப் பெருங்களிப் படைந்து மஞ்சத் திருமல ரணைமே லார்வந் திளைத்தினி திருந்தா ளிப்பால். (இ - ள்.) மருவிய ஆயம் ஏத்த - தன்னைச் சூழ்ந்த மகளிர் கூட்டம் புகழ, விருந்தினாள் - புதிதாக வந்த ஈழப்பாடினி, மனைவந்து எய்தி - தன் விடுதி வந்தடைந்து, புரவலன் - இராசராச பாண்டியன், தனது பாட்டைப் புகழ்ந்ததே புகழ்ந்ததாக - தன் பாட்டினை வியந்த தனையே ஒரு புகழ்ச்சியாகக் கருதி, பெருமிதம் தலைக்கொண்டு- இறுமாப்பு மேற்கொண்டு, ஆனாப் பெருங்களிப்பு அடைந்து - நீங்காத பெருஞ் செருக்குற்று, மஞ்சத் திருமலர் அணைமேல் - தூங்குமஞ்சத்திற் பரப்பிய அழகிய மலர்ப்படுக்கையின்மேல், ஆர்வம் திளைத்து இனிது இருந்தாள் - மகிழ்ச்சிமிக்குக் கவலையின்றி இருந்தாள், இப்பால் - பின். அரசன் நெறி திறம்பித் தன்னைப் புகழ்ந்தது உண்மைப் புகழ்ச்சி யன்றாகவும் அதனைப் புகழ்ச்சியாகக் கொண்டாள் என்பார் ‘புகழ்ந்ததே புகழ்ந்ததாக’ என்றார். மஞ்சம் - கட்டில். (20) வணங்குறு மருங்கிற் கற்பின் மடவரன் மதங்கி தானும் அணங்கிறை கொண்ட நெஞ்ச ளங்கயற் கண்ணி பாகக் குணங்குறி கடந்த சோதி குரைகழ லடிக்கீ ழெய்தி உணங்கினள் கலுழ்கண் ணீர ளொதுங்கிநின் றிதனைச் சொன்னான். (இ - ள்.) வணங்குறு மருங்கின் கற்பின் - வளையும் இடையினையும் கற்பினையுமுடைய, மடவரல் மதங்கிதானும் - பாணபத்திரன் மனைவி யாகிய பாடினியும், அணங்கு இறைகொண்ட நெஞ்சள் - துன்பங் குடி கொண்ட நெஞ்சினையுடையளாய், அங்கயற் கண்ணிபாகம் - அங்கயற் கண்ணம்மையை ஒருபாகத்திலுடைய, குணம் குறிகடந்த சோதி - குணத்தையுங் குறியையும் கடந்து நின்ற ஒளிவடிவினனாகிய சோம சுந்தரக் கடவுளின், குரைகழல் அடிக்கீழ் எய்தி - ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த திருவடிக்கீழ் அடைந்து, உணங்கினள் - வாட்டமுற்று, கலுழ் கண்ணீரள் - கலங்கியழுங் கண்ணீரையுடையவளாய், ஒதுங்கிநின்று இதனைச் சொன்னாள் - ஒருபுற மொதுங்கி நின்று இதனைக் கூறுவாளாயினள். அணங்கு - வருத்தம். இறைகொள்ளல் - தங்குதல். உணங்கினள் என்னும் தெரிநிலை முற்றும் நீரள் என்னும் குறிப்புமுற்றும் எச்சமாயின. (21) தென்னவ னாகி வையஞ் செய்யகோல் செலுத்திக் காத்த மன்னவ வழுதி வார வழிவழக் குரைப்ப தானான் அன்னவன் கருத்துக் கேற்ப வவையரு மனைய ரானார் பின்னடு நிலைமை தூக்கிப் பேசுவார் யாவ ரையா. (இ - ள்.) தென்னவனாகி - சுந்தர பாண்டியனாகி, வையம் செய்ய கோல் செலுத்திக் காத்த மன்னவ - நிலவுலகைச் செங்கோ லோச்சிப் புரந்தருளிய மன்னவனே, வழுதி - இராசராச பாண்டியன், வாரவழி வழக்கு உரைப்பதானான் - அன்பு சென்ற வழியே வழக்குப் பேசுவானாயினன்; அன்னவன் கருத்துக்கு ஏற்ப - அவன் உட்கோளுக் கிசைய, அவையரும் அனையர் ஆனார் - அவையிலுள்ளாரும் அத் தன்மையாராயினார்; பின் - இங்ஙனமாயபின், ஐயா நடுநிலைமை தூக்கிப் பேசுவார் யாவர் - ஐயனே! நடுநிலைமையினின்று ஆராய்ந்துரைப்பார் யாவருளர்? வாரவழி - பட்சபாதம் : ஒருபக்கம் அன்புடையனாய் அழிவழக் குரைப்பதானான் எனலுமாம். நின்னையன்றி வேறுயாரும் இல்லையென்பாள் ‘பேசுவார் யாவரையா’ என்றாள் என்க. (22) உன்னருட் டுணை1செய் தென்பா லுறுகணோய் துடைப்ப தென்ன மின்னனாய் நீயே நாளை வெல்லுமா செய்து மஞ்சேல் என்னவா காய வாணி யீறிலா னருளாற் கேட்டு மன்னருங் கற்பி னாடன் மனைபுகுந் திருந்தாண் மன்னோ. (இ - ள்.) உன் அருள் துணைசெய்து - உனது திருவருளாகிய துணையை நல்கி, என்பால் உறுகண் நோய் துடைப்பது என்ன- என் பாலுள்ள துன்ப நோயைப் போக்கக் கடவாய் என்று குறையிரப்ப, ஈறு இலான் அருளால் - அழிவில்லாத இறைவன் திருவருளால், ஆகாயவாணி - அசரீரி, மின் அனாய் - மின் போல்வாய், நீயே நாளை வெல்லுமா செய்தும் - நாளை நீயே வெல்லுமாறு செய்வோம், அஞ்சேல் - நீ அஞ்சற்க, என்ன - என்று கூற, கேட்டு - அதனைக் கேட்டு, மன் அருங் கற்புளாள் தன் மனை புகுந்து இருந்தாள்- நிலைபெற்ற அரிய கற்பினை யுடைய விறலி தன் இல்லிற்சென்று இருந்தாள். உன்னரு டுணைசெய்து என்னும் பாடத்திற்கு உன்னருளே துணை செய்து துடைப்பதாகும் என்றுரைக்க. முற்பொருளில் துடைப்பது வியங்கோள்; "மறப்ப தறிவிலென் கூற்றுக்களே" என்புழிப் போல. மன், ஓ : அசைகள் (23) அன்றுபோன் மற்றை ஞான்று மழைத்தனன் பாடல் கேட்டுக் குன்றுபோற் புயத்தா னென்னற் கூறிய வாறே கூற மன்றுளார் பலரு மன்ன வண்ணமே சொன்னார் கேட்டு நின்றபாண் மடந்தை பாண்டி நிருபனை நோக்கிச் சொல்வாள். (இ - ள்.) குன்றுபோல் புயத்தான் - மலைபோலுந் தோளினை யுடைய பாண்டியன், அன்றுபோல் மற்றை ஞான்றும் - அன்று போலவே அடுத்த நாளும், அழைத்தனன் பாடல் கேட்டு - அவ்விரு விறலிகளையும் அழைப்பித்து அவர்கள் பாடல் கேட்டு, நென்னல் கூறியவாறே கூற - நேற்றுப் புகன்ற வண்ணமே புகல, மன்றுளார் பலரும் அன்ன வண்ணமே சொன்னார் - அவையிலுள்ள அனைவரும் அவ்வரசன் கூறியவாறே கூறினார்; கேட்டு நின்ற பாண் மடந்தை - இதனைக் கேட்டு (மனம் புழுங்கி) நின்ற பாடினி, பாண்டி நிருபனை நோக்கிச் சொல்வாள் - பாண்டி வேந்தனைப் பார்த்துக் கூறுவாளாயினள். அழைத்தனன் : முற்றெச்சம். (24) தென்னரே றனையாய் ஞால மனுவழிச் செங்கோ லோச்சும் மன்னரே றனையாய் வார வழக்கினை யாத லானீ சொன்னவா றவையுஞ் சொல்லத் துணிந்தது துலைநா வன்ன பன்னகா பரணர் முன்போய்ப் பாடுகேம் பாடு மெல்லை. (இ - ள்.) தென்னர் ஏறு அனையாய் - பாண்டியருள் ஆண்சிங்கம் போல்வாய், ஞாலம் - இந்நில வுலகில், மனுவழி செங்கோல் ஓச்சும் மன்னர் ஏறு அனையாய் - மனுவறத்தின் வழியே செங்கோல் செருத்தும் மன்னர்களுள் ஏறுபோல்வாய், வாரவழக்கினை - நீதான் அன்பின் வழி நின்று வழக்கினை ஒருந் தன்மையை யுடையையாயினை; ஆதலால் நீ சொன்னவாறே - ஆதலினால் நீ நடுநிலை யிகந்து கூறியவண்ணமே, அவையும் சொல்லத் துணிந்தது - அவையிலுள்ளாரும் கூறத் துணிந்தனர்; துலைநா அன்ன- தராசின் நாப்போலும் நடுநிலைமையுள்ள, பன்னக ஆபரணர் முன்போய்ப் பாடுகேம் - அரவினை அணியாகக் கொண்ட சோமசுந்தரக் கடவுளின் திருமுன் சென்று யாங்கள் பாடுவேம்; பாடும் எல்லை - அங்ஙனம் பாடுங்கால். நடுநின்று முறைபுரியும் இறையாகிய நீயும் எம்மில் ஒரு புறத்து வாரம்பற்றி வழக்குரைப்பாயாயினை, அவை மாந்தரும் நின்வழிக் கூறினர; ஆகலின் இனி என்றும் கோடாத வாய்மையுடைய சிவபிரான் திருமுன் சென்று பாடுவோம் என்றாள் என்க. பன்னகா பரணர் : வட மொழி நெடிற் சந்தி. (25) இருவரேம் பாட்டுங் கேட்டுத் துணிந்திவள் வென்றா ளென்னா ஒருவர்சந் நிதியிற் சொன்னாற்போதுமென் றுரைத்தாள் பாண்டித் திருமக னனைய வாறே செய்மினீர் செய்மி னென்ன மருவளர் குழலி னார்த மனைபுகுந் திருந்தார் பின்னாள். (இ - ள்.) இருவரேம் பாட்டும் கேட்டு - எங்களிருவரின் பாடலையும் கேட்டு, ஒருவர் துணிந்து - யாரேனும் ஒருவர் மனந்துணிந்து. இவள் வென்றாள் என்னா - இருவருள் இவள்தான் வென்றனள் என்று, சந்நிதியில் சொன்னால் போதும் என்று உரைத்தாள் - அவ்விறைவன் திருமுன் சொன்னால் அமையும் என்று கூறினாள், பாண்டித் திருமகன் - இராசராச பாண்டியன், அனைய வாறே நீர் செய்மின் செய்மின் என்ன - அங்ஙனமே நீர் செய்யுமென்று கூற, மருவளர் குழலினார் தம் மனை புகுந்து இருந்தார் - மணம் ஓங்கும் கூந்தலையுடைய அவ்விறலியர் இருவரும் தத்தம் இல்லிற் சென்று தங்கினர்; பின் நாள் - மறுநாளில். செய்மின் செய்மின் : துணிவுப்பொருளில் வந்த அடுக்குத்தொடர். (26) [கலி விருத்தம்] தென்ற னாடனு மந்திரச் செல்வரும் நன்று தீதுணர் நால்வகைக் கேள்வியோர் ஒன்ற வேகி யொளிவிடு வெள்ளிமா மன்ற வாணர்ம மண்டபத் தெய்தினார். (இ - ள்.) தென்றல் நாடனும் - தென்றற்காற்றின் பிறப்பிடமாகிய பொதியின் மலையையுடைய பாண்டிநாடனும், மந்திரச்செல்வரும் - அமைச்சர்களும், நன்று தீது உணர் - (இருவகை இசையின்) குணத்தினையும் குற்றத்தையும் அறிதற் கேதுவாகிய, நால்வகைக்கேள்வியோர் ஒன்ற - கீத ஞான முதலிய நால்வகைஞானமுடையார் சூழ, ஏகி - சென்று, ஒளி விடு வெள்ளிமாமன்ற வாணர் - ஒளி வீசுகின்ற பெரிய வெள்ளி யம்பல வாணரது, மாமண்டபத்து எய்தினார் - பெரிய மண்டபத்தை அடைந்தனர். நால்வகைக்கேள்வி - கீதஞானம், இலயஞானம், சுருதிஞானம், தாளஞானம் என்பனவாம். (27) எய்தி யம்மட மாதரை யிங்குறச் செய்தி ரென்னத் திருமக னேவலோர் நொய்தி னோடி நொடித்தழைத் தாரொடு மைதி கழ்ந்த விழியார் வருவரால். (இ - ள்.) எய்தி - அங்ஙனம் அடைந்து, திருமகன் - பாண்டி மன்னன், அம்மடமாதரை இங்குறச் செய்திர் என்ன - அந்த இளமையையுடைய விறலிகளை இங்கு வரச்செய்மின் என்று கட்டளையிட. நொய்தின் ஓடி நொடித்து - விரைந்து ஓடி மன்னன் கட்டளையைக் கூறி, ஏவலோர் அழைத்தாரொடு - அழைத்தா ராகிய அவ்வேவலாளருடன், மைதிகழ்ந்த விழியார் வருவர் - மைவிளங்கிய விழியினை யுடைய அவ்விருவரும் வருவாராயினர். செய்திர், த் எழுத்துப்பேறு. நொடித்து - கூறி, ஏவலோர் அழைத்தார் அங்ஙனம் அழைத்தவாரே என விரித்துரைக்க. ஆல் : அசை. (28) படிமை யார்தவப் பாடினி வந்தெனக் கடிமை யாவளின் றையமின் றாலெனக் கொடுமை யார்மனக் கோட்டச் செருக்கொடுங் கடுமை யாகவந் தாள்கலத் தின்வந்தாள். (இ - ள்.) கலத்தின் வந்தாள் - மரக்கலத்தில் வந்த பாடினி, இன்று தவப்படிமை ஆர் பாடினி வந்து - இன்று தவவேடம் நிறைந்த விறலி வந்து, எனக்கு அடிமையாவள் - எனக்கு அடிமையாவாள், ஐயம் இன்று என - இதற்கு ஓர் ஐயுறவில்லை என்று கருதி, கொடுமை ஆர் கோட்டம் மனச்செருக்கொடும் - கொடுமை நிறைந்து நெறி பிறழ்ந்த மனத்தின் கண் உள்ள செருக்கோடும், கடுமையாக வந்தாள் - விரைவாக வந்தனள். படிமை - தவக்கோலம்; தவவொழுக்கமுமாம். ஆல் : அசை, கடுமை- விரைவு. கலத்தின் வந்தவள் கடுமையாக வந்தாள் என்க. (29) கற்பின் மிக்கெழு1 கற்புங் கருத்தினிற் சிற்ப ரஞ்சுடர் சேவடி மேல்வைத்த அற்பு மிக்கெழ மெல்லவந் தாளரோ பொற்பின் 2மிக்குள பத்திரன் பொன்னனாள். (இ - ள்.) பொற்பின் மிக்குள பத்திரன் பொன்அனாள் - அழகினால் மேம்பட்ட பாணபத்திரன் மனைவியாகிய திருமகளை ஒத்த பாடினி, கற்பின்மிக்கு எழுகற்பும் - கல்வியறிவால் மேம்பட்டெழுந்த நிறையும், கருத்தினில் - தனது உள்ளத்தில், சிற்பரஞ் சுடர் சேவடிமேல் வைத்த அற்பும் - ஞானப் பரஞ்சோதியாகிய சோமசுந்தரக் கடவுளின் சிவந்த திருவடிமேல் வைத்த அன்பும், மக்கு எழ - பொலிந்து தோன்ற, மெல்ல வந்தாள் - மெதுவாக வந்தனள். கற்பிற்குரிய அமைதியோடு வந்தாளென்பார் ‘மெல்லவந்தாள்’ என்றார். அரோ : அசை. (30) அலங்கு மாரமோ டங்கத மாதிபல் கலன்க டாங்கிக் கலைஞர் குழாத்திடை இலங்கு மாட மதுரைக் கிறைவரும் புலன்கொ ணாவலர் போல்வந்து வைகினார். (இ - ள்.) இலங்கு மாட மதுரைக்கு இறைவரும் - விளங்கா நின்ற மாடங்களையுடைய மதுரைக்கு இறைவராகிய சோமசுந்தரக் கடவுளும், புலன்கொள் நாவலர் போல் - (இசை நூலில்) உணர்வு மிக்க புலவர்போல, அலங்கும் ஆரமோடு - அசைகின்ற முத்துமாலை யோடு, அங்கதம் ஆதிபல் கலன்கள் தாங்கி - தோளணி முதலிய பல அணிகளைத் தரித்து, கலைஞர் குழாத்திடை வந்து வைகினார் - புலவர் குழுவின் நடுவில் வந்து தங்கினர். அலங்குதல்- அசைதல்; ஒளிவிடுதலுமாம். நாவலர்போல் - நாவலருள் ஒருவர்போல். (31) அந்த வேத்தவை தன்னி லருங்கலம் வந்த வேய்த்தடந் தோளிசை மாதராள் முந்த வேத்திசை பாடினள் முந்தையோர் சிந்தை வேட்டொன்றுஞ் செப்பின ரில்லையால். (இ - ள்.) அந்த வேந்து அவைதன்னில் - அந்த அரசவையின் கண், அருங்கலம் வந்த - அரிய மரக்கலத்தில் வந்த, வேய்த்தடம் தோள் இசைமாதராள் - மூங்கில் போலும் பருத்த தோளையுடைய பாடினி, முந்த - முற்பட, வேத்திசை பாடினள் - அரசர்க்குரிய இசையைப் பாடினள்; முந்தையோர் - முன் கொண்டாடினவர், சிந்தை வேட்டு - மனம் விரும்பி, ஒன்றும் செப்பினர் இல்லை- யாதும் கூறா திருந்தனர். வேந்து வேத்து என்றாயது. ஏத்திசை எனப்பிரித்து, நால்வகை வருணப் பூதரை வாழ்த்தினள் என்று கூறி, " அந்தணர் வேள்வியோ டருமறை முற்றுக வேந்தன் வேள்வியோ டியாண்டுபல வாழ்க வணிக ரிருநெறி நீணிதி தழைக்க பதினெண் கூலமும் உழவர்க்கு மிகுக அரங்கியற் கூத்து நிரம்பிவினை முடிக வாழ்க நெடுமுடி கூர்கவென் வாய்ச்சொலென் றிப்படிப் பலிகொடுத் திறைவனிற் றொக்குச் சேட்பட வமைத்துச் செழும்புகை காட்டிச் சேவடி தேவரை யேத்திப் பூதரை மூவடி முக்கால் வெண்பா மொழிந்து செவியிழுக் குறாமை வேந்தனை யேத்திக் கவியொழுக் கத்து நின்றுழி வேந்தன் கொடுப்பன கொடுக்க வமையு மென்ப" என்னும் சூத்திரத்தைக் காட்டுவாருமுளர். வேத்திசை என்பதில் அஃது அடங்குதலுங் காண்க. ஆல் : அசை. (32) வீணை தோளிட னேந்திய வெண்மலர் வாணி பாட விருக்கையின் வைகியே யாண ரம்பெறிந் தின்னிசை யோர்ந்தெழீஇப் பாணர் கோமகன் பன்னியும் பாடுமால். (இ - ள்.) வீணை தோள் இடன் ஏந்திய வெண்மலர்வாணி- யாழினை இடத்தோளிலேந்திய வெண்டாமரைமலரில் வீற்றிருக்கும் கலைமகள், பாடு அ இருக்கையின் வைகி - பாடும் அவ்வாசனத்திலே தானும் இருந்து, யாழ் நரம்பு எறிந்து - யாழின் நரம்பினை விரலினாற் றாக்கி, இன் இசை ஓர்ந்து எழீஇ - இனிய இசையினை ஆராய்ந்து எழுப்பி, பாணர் கோமகன் பன்னியும் பாடும் - பாணர் பெருமானாகிய பத்திரன் மனைவியும் பாடுவாளாயினள். பாடு அவ்விருக்கை எனப் பிரிக்க. வாணி பாடும் இருக்கையாவது ஒன்பான் விருத்தியுட் டலைக்கண் விருத்தியாகிய பதுமாசனமாகும். ஒன்பான் விருத்தியாவன : பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படியிருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம் என்பன. யாழ் நரம்பு என்பது மருவிற்று. எழீஇ, சொல்லிசையளபெடை. ஆல் : அசை. (33) குடங்கை நீரும் பச்சிலையு மிடுவார்க் கிமையாக் குஞ்சரமும் படங்கொள் பாயும் பூவணையுந் தருவாய் மதுரைப் பரமேட்டி படங்கொள் பாயும் பூவணையுந் தருவாய் கையிற் படுதலைகொண் டிடங்க டோறு மிரப்பாயென் றேசு வார்க்கென் பேசுவனே. (இ - ள்.) குடங்கை நீரும் பச்சிலையும் இடுவார்க்கு - அகங்கை யளவான நீரையும் பசிய இலையையும் இட்டு வழிபடுவார்க்கும், இமையாக் குஞ்சரமும் - ஐராவதமும், படம் கொள் பாயும் - படத்தைக் கொண்ட அனந்தசயனமும், பூ அணையும் - தாமரை மலர்த் தவிசுமாகிய இவற்றை, மதுரைப் பரமேட்டி தருவாய் - மதுரையில் எழுந்தருளிய பெருமானே! நீ அளித்தருள் வாய்; படம்கொள் பாயும் பூ அணையும் தருவாய் - (அவருக்கு) அவற்றை அருள்பவனாகிய நீயே, கையில் படுதலைகொண்டு - திருக்கரத்தில் கபாலத்தை ஏந்தி, இடங்கள்தோறும் இரப்பாய் என்று - இல்லங்கள்தோறுஞ் சென்று ஏற்பாயென்று கூறி, ஏசுவார்க்கு என் பேசுவனே - பழிக்கின்ற புறச்சமங்களுக்கு (யான்) யாது கூறுவேன். தேவர்கள் இமையா நாட்டம் உடையராகலின் தேவர்க்கரசனது யானையை ‘அமையாக் குஞ்சரம்’ என்றார். குஞ்சரமும் பாயும் அணையும் தருவாய் என்றது இந்திரன் பதமும் திருமால் பதமும் பிரமன் பதமும் தருவாய் என்றபடி. குடங்கை நீரும் பச்சிலையும் இடுவார்க்கு அவை தருவாய் என்றது எவ்வளவு நல்குரவாளரும் இறைவனை வழிபடுதற்கு இழுக்கின்று என்பதனையும், அடியார்கள் அன்புடன் இடும் அத்துணை நீருக்கும் பச்சிலைக்குமே இறைவன் அவ்வளவு பெரிய பதங்களை யளிக்கும் பேரருளாளன் என்பதனையும், இந்திரன் மால் பிரமன் என்போ ரெல்லாம் அங்ஙனம் இறைவனை வழிபட்டே அப்பதவிகளை அடைந்தன ராவர் என்பதனையும் காட்டுகிறது. வழிபடுவார்க்கு அத்துணைப் பெருஞ் செல்வங்களை ஈயும் நீ படுதலை கொண்டிருப்பது ஆன்மாக்களின் உடல் பொருள் ஆவிகளை யெல்லாம் ஏன்றுகொண்டு அவற்றுக்கு அருள் புரியும் காரணத்தால் என்பதனை அறியாது புறச்சமயிகள் நின்னைப் பழித்துரைப்பர். அவர்க்குக் கூறும் விடை யாதுமில்லை யென்க. (34) தேனார் மொழியார் விழிவழியே செல்லா தவர்க்கே வீடென்று நாணா வேதப் பொருளுரைத்தாய் நீயே மதுரை நம்பரனே நானா வேதப் பொருளுரைத்தாய் நீயே பாதி நாரியுரு ஆனா யென்று பிறர்பழித்தா லடியேன் விடையே தறைவேனே. (இ - ள்.) தேன் ஆர் மொழியார் விழி வழியே செல்லாதவர்க்கே- தேனின் சுவை போலுஞ் சுவைநிரம்பிய சொற்களையுடைய மகளிரின் பார்வையால் மயங்கி அவர் பின்சென்று அலையாத வர்க்கே, வீடு என்று - வீடுபேறு உரியதென்று, நானாவேதப் பொருள் - பலவகைப் பட்ட மறைப்பொருளை விரித்து, மதுரை நம்பரனே நீயே உரைத்தாய் - மதுரயிலெழுந்தருளிய நம்பரனே நீயே கூறியருளினாய்; நானா வேதப் பொருள் உரைத்தாய் நீயே - அங்ஙனங் கூறியருளிய வனாகிய நீயே, பாதிநாரி உரு ஆனாய் என்று - ஒருபாதி பெண்வடிவமாயினை என்று கூறி, பிறர் பழித்தால் - புறச்சமயிகள் ஏசினால், அடியேன் விடை ஏது அறைவேன் - (அவருக்கு) அடியேன் யாது விடை யிறுப்பேன்? " அரவக லல்கு லார்பா லாசைநீத் தவர்க்கே வீடு தருவமென் றளவில் வேதஞ் சாற்றிய தலைவன்" என, இப்புராணத்து நம்பியாரூரர் துதியிற் கூறியிருத்தல் இங்கு நோக்கற் பாலது. நானா - பல, மகளிராசையை நீத்தல் வேண்டுமென்று கூறிய நீயே பாதி நாரியுருவானது ஆன்மாக்களுக்குப் போகத்தை யூட்டிக் கன்மந்தொலைத்து அருள்புரிதற் கென்னும் உண்மையுணராது புறச்சமயிகள் நின்னைப் பழித்துரைப்பார்; அவர்க்குக் கூறும் விடை யாதும் இல்லை யென்க. " தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடி பெண்பா லுகந்திலனேற் பேதா யிருநிலத்தோர் விண்பா லியோகெய்தி வீடுவர்காண் சாழலோ" என்னும் திருவாசகம் இங்கே சிந்திக்கற்பாலது. (35) வரத னாகி யெவ்வுயிர்க்கு மாயா விருத்தி வலியடக்கிச் சரத மான வீட்டின்பந் தருவாய் மதுரைத் தனிமுதலே சரத மான வீட்டின்பந் தருவாய் வீடு பெறுவார்போல் விரத யோக நிலையடைந்தா யென்பார்க் கென்னான் விளம்புவளே. (இ - ள்.) வரதனாகி - அருட்கொடை யுடையவனாகி, எவ்வுயிர்க்கும் மாயாவிருத்தி வலி அடக்கி - எல்லா வுயிர்களுக்கும் மாயாமலத்தின் தொழில் வலியை அடக்கி, சரதமான வீட்டு இன்பம்- அறியாத வீட்டின்பத்தினை, மதுரைத் தனிமுதலே தருவாய் - மதுரையில் அமர்ந்தருளிய ஒப்பற்ற முழுமுதற் கடவுளே நீயே அருளுவை யாயினை; சரதமான வீட்டின்பம் தருவாய் - (அவற்றுக்கு) அவ் வின்பத்தை அருளும் நீயே, வீடு பெறுவார்போல் - வீட்டினை விரும்பி யோகுசெய் வாரைப்போல, விரத யோகநிலை அடைந்தாய் என்பார்க்கு - (அரிய) நோன்புகளையுடைய யோகநிலையை அடைந்தனை என்று பழிப்பார்க்கு, நான் என் விளம்புவன் - யான் யாது கூறுவேன். நீ யோகநெறியில் நிற்பது ஆன்மாக்களை யோகநெறியிற் புகுத்திப் பேரின்பவீடு அளித்தற்கு என்னும் உண்மை யுணராது புறச்சமயிகள் நின்னைப் பழித்துரைப்பர்; அவர்க்குக் கூறும் விடை யாதும் இல்லை யென்க. இவ்வியல்பினரை நோக்கியே, " போகியா யிருந்து யிர்க்குப் போகத்தைப் புரிய லோரார் யோகியா யோக முத்தி யுதவுத லதுவு மோரார் வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்ட லோரார் ஊகியா மூட ரெல்லா மும்பரி லொருவ னென்பார்" என்பது முதலிய சிவஞான சித்தியார்த் திருவிருத்தங்கள் எழுந்தன. இம் மூன்றும் பத்திரன் மனைவியாகிய பாடினி பாடிய இசைப் பாட்டுக்களாக ஆசிரியர் பாடியன; இவை கந்தருவ மார்க்கத்தான் இடை மடக்கிவந்தன. (36) [எழுசீரடி யாசிரிய விருத்தம்] கண்ணுதன் மதுரைப் பிரானையிவ் வாறு கருதிய பாணியாற் கனிந்து பண்ணுதல் பரிவட் டணைமுத லிசைநூல் பகர்முதற் றொழிலிரு நான்கும் எண்ணுறு வார்தல் வடித்திடன் முதலா மெட்டிசைக் கரணமும் பயப்ப மண்ணவர் செவிக்கோ வானவர் செவிக்கும் வாக்கினா ணாவிளை யமுதம். (இ - ள்.) கண் நுதல் மதுரைப்பிரானை - நெற்றியிற் கண்ணையுடைய மதுரை நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளை, இவ்வாறு கருதிய பாணியால் - இங்ஙனம் கருதிய இசைப்பாட்டினால், கனிந்து - மனங் கனிந்து, பண்ணுதல் பரிவட்டணை முதல் - பண்ணுதல் பரிவட்டணை ஆதியாக, இசைநூல் பகர்முதல் தொழில் இருநான்கும் - இசை நூல் கூறுகின்ற முதற்றொழில் எட்டும், எண்ணுறு வார்தல் வடித்திடல் முதலாம் - எண்பொருந்திய வார்தல் வடித்திடல் முதலாகிய, எட்டு இசைக்கரணமும் பயப்ப- எட்டு இசைக்கரணங்களும் பொருந்த, நாவிளை அமுதம் - தனது நாவால் உண்டாக்கிய அமுதத்தை, மண்ணவர் செவிக்கோ - நிலவுலகோர் செவிகட்கு மட்டுமோ, வானவர் செவிக்கும் வாக்கினாள் - தேவர்கள் செவிக்கும் வார்த்தாள். மதுரைப்பிரானை இவ்வாறு கருதி பாணி என்றமையால் இது பெருந்தேவபாணி என்க. முதற்றொழில் எட்டாவன - பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, கையூழ், விளையாட்டு, குறும் போக்கு என்பன. அவற்றுள் பண்ணலாவது இணை, கிளை, பகை, நட்பான நரம்புகள் பெயருந்தன்மை மாத்திரை யறிந்து வீக்குதல். பரிவட்டணை - வீக்கின நரம்பை விரல்களால் அகமும் புறமும் கரணஞ் செய்து தடவிப்பார்த்தல், ஆராய்தல் - ஆரோகண அவரோகண வகையால் இசையைத் தெரிதல். தைவரல் - அநுசுருதியேற்றல். செலவு - ஆளத்தியிலே நிரம்பப்பாடுதல், கையூழ் - பாட நினைத்த வண்ணத்திற் சந்தத்தை விடுத்தல். விளையாட்டு - வண்ணத்திற் செய்த பாடல்களை இன்பமாகப் பாடுதல். குறும் போக்கு - குடகச் செலவும் துள்ளற் செலவும் பாடுதல். இசைக்கரணம, எட்டாவன - வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், எள்ளல், பட்டடை என்பன. (37) இடையினோ டேனைப் பிங்கலை யியக்க மிகந்துமூ லந்தொடுத் தியக்கி நடுவுறு தொழிலாற் பிரமரந் திராந்த நடைபெற விசைக்கு முள்ளாளம் மிடறுவீங் காள்கண் ணிமைத்திடா ளெயிறு வெளிப்படாள் புருவமே னிமிராள் கொடிறது துடியாள் பாடலு மதுகேட் டனைவருங் குதூகல மடைந்தார். (இ - ள்.) இடையினோடு - இடைகலையோடு, ஏனைப் பிங்கலை இயக்கம் இகந்து - மற்றைப் பிங்கலையிலும் இயங்கும் இயக்கம் ஒழிந்து, மூலம் தொடுத்து இயக்கி - மூலாதாரத்தினின்றுங் காற்றினை எழுப்பி, நடுவுறு தொழிலால் - சுழுமுனையின் தொழிலினால், பிரமரந்திர அந்தம் நடைபெற இசைக்கும் உள்ளாளம் - பிரமரந்திரம் முடிய நடக்குமாறு இசைக்கின்ற உள்ளாள கீதத்தினை, மிடறு வீங்காள் - மிடறு வீங்காமலும், கண் இமைத்திடாள் - கண்மூடாமலும், எயிறு வெளிப்படாள் - பற்கள் வெளிப்படாமலும், புருவம் மேல் நிமிரான் - புருவங்கள் மேல் ஏறாமலும், கொடிறது துடியாள்- கபோலந் துடியாமலும், பாடலும் - பாடியவளவில, அதுகேட்டு அனைவரும் குதூகலம் அடைந்தார் - அதனைக்கேட்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். நடுவுறு தொழில் - சுழுமுனாமார்க்கத்தில் வாயுவை இயக்கிச் செய்யும் கிரியை. உள்ளாளம், இச்செய்யுளிற் கூறிய இலக்கணத்தோடு கந்தருவராற் பாடப்படுவது. " கண்ணிமையா கண்டந் துடியா கொடிறசையா பண்ணளவும் வாய்தோன்றா பற்றெரியா - எண்ணிலிவை கள்ளார் நறுந்தெரியற் கைதவனே கந்தருவர் உள்ளாளப் பாட லுணர்" என்பது காண்க. கொடிறது, அது : பகுதிப் பொருள் விகுதி. (38) கன்னிநா டுடையான் கைதவ னெனும்பேர்க் காரணந் தேற்றுவா னெனத்தான் இன்னிசை யறிஞ னாகியு முன்போ லியம்புவா னொருப்படு கின்றான் முன்னவ னருளாற் றன்மனக் கோட்ட முரண்கெடப் பொதுமையா னோக்கி இன்னவ டானே வென்றன ளென்றா னினையவா றனைவரு மொழிந்தார். (இ - ள்.) கன்னிநாடு உடையான் - கன்னி நாட்டினையுடைய பாண்டியன், கைதவன் எனும் பேர்க்காரணம் தேற்றுவான் போல- கைதவன் என்னும் தனது பெயரின் காரணத்தை அறிவிப்பவனைப் பேல, தான் இன் இசை அறிஞன் ஆகியும் - தான் இனிய இசை நூல் அறிஞனாயிருந்தும், முன்போல் இயம்புவான் ஒருப்படுகின்றான் - முன்போலவே கூறுதற்கு மனந்துணிகின்றவன், முன்னவன் அருளால் - சோமசுந்தரக் கடவுளின் திருவருளால், தன் மனக் கோட்ட முரண் கெட - தனது மனக்கோணலின் வலிகெட, பொதுமையால் நோக்கி - நடுநிலையோடு பார்த்து, இன்னவள் தானே வென்றனள் என்றான் - இந்தப் பாடினியே வென்றனள் என்று கூறினான்; இனையவாறு அனைவரும் மொழிந்தார் - இங்ஙனமே எல்லாருங் கூறினர். பாண்டிவேந்தரைக் குறிக்கும் கைதவன் என்னும் பெயர்க்கு வஞ்சகன் என்றும் பொருளுண்டாகலின் அப் பொருள்பற்றியே அப்பெயர் உண்டாயிற்றென்று தெளிவிப்பான்போல நடுநிலை திறம்பிக் கூற ஒருப்படுகின்றவன் என்றார். (39) கரியுரை மொழிந்த கைதவ னிலங்கைக் கைதவப் பாடினி கழுத்திற் புரிகுழன் மாதை யிருத்தென விருத்தும் போதுமை யிடங்கரந் திருந்த அரியநா வலரீ தற்புத மீதற் புதமென வறைந்தவை காண விரிகதிர் மின்போன் மறைந்தனர் யாரும் வியந்தனர் பயந்தனன் வேந்தன். (இ - ள்.) கரி உரைமொழிந்த கைதவன் - சான்று மொழி பகர்ந்த பாண்டியன், கைதவ இலங்கைப் பாடினி கழுத்தில் - வஞ்சக ஒழுக்க முடைய ஈழப் பாடினி கழுத்தில், புரிகுழல் மாதை இருத்து என - கட்டமைந்த கூந்தலையுடைய பாடினியை இருத்துக என்று ஏவ, இருத்தும் போது - (ஏவல் மகளிர் அங்ஙனமே) இருத்துங்காலையில், உமை இடம் கரந்து இருந்த - உமாதேவியார் பொருந்திய இடப்பாகத்தை மறைத்து வந்திருந்த, அரிய நாவலர்- அரிய புலவராகிய சோமசுந்தரக் கடவுள், ஈது அற்புதம் ஈது அற்புதம் என அறைந்து - இது வியப்பு இது வியப்பு என்று கூறியருளி, அவைகாண - அவையிலுள்ளோர் அனைவருங் காண, விரிகதிர் மின்போல் மறைந்தனர் - விரிந்த ஒளியினையுடைய மின்னலைப் போலமறைந்தனர்; யாரும் வியந்தனர் - யாவரும் வியப்புற்றனர்; வேந்தன் பயந்தனன் - அரசன் அச்சமெய்தினான். அடுக்கு உவகையின்கண் வந்தது. (40) செங்கணே றழக ராடலீ தென்றே யாவருந் தெளிந்தன ரேத்தி அங்கணா யகர்தங் கருணையின் றிறனு மடியவ ரன்பையுந் தூக்கித் தங்கணா ரருவி பெருகவா னந்தத் தனிப்பெருஞ் சலதியி லாழ்ந்தார் வங்கமேல் வந்தாள் பிடர்மிசை யிருந்த மாணிழை விறலியை மன்னன். (இ - ள்.) யாவரும் - அனைவரும், ஈது செங்கண் ஏறு அழகர் ஆடல் என்று தெளிந்தனர் - இது சிவந்த கண்களை யுடைய இடபத்தின் மேல் இவர்ந்தருளும் சோமசுந்தரக்கடவுளின் திருவினையாடலென்று அறிந்து, ஏத்தி - துதித்து, அங்கண் நாயகர் தம்கருணையின் திறனும் - அருட்பார்வையினையுடைய இறைவரது திருவருளின் திறத்தையும், அடியவர் அன்பையும் தூக்கி - அடியாரின் அன்பையும் சீர்தூக்கி, தம் கண் ஆர் அருவி பெருக- தம் கண்களினின்றும் நிறைந்த ஆனந்த வருவி பெருக்கெடுக்க, ஆனந்தத் தனிப் பெருஞ் சலதியில் ஆழ்ந்தார் - இன்பமாகிய ஒப்பற்ற பெரிய கடலுள் அமிழ்ந்தனர்; வங்க மேல் வந்தாள் பிடர்மிசை இருந்த - மரக்கலத்தில் வந்த ஈழப் பாடினியின் தோளின்மேல் ஏறி யிருந்த, மாண் இழை விறலியை - மாட்சிமையுடைய அணிகளை யணிந்த பாடினியை, மன்னன் - அரசன். ஏற்றழகர் எனற்பாலது தொக்குநின்றது. தெளிந்தனர் : முற்றெச்சம். வந்தாள் : வினைப்பெயர். (41) இறக்குவித் தவட்கு முந்தமுத் தார மெரிமணிக் கலன்றுகில் வரிசை பெறக்கொடுத் தேனை யவட்குமுண் மகிழ்ச்சி பெறச்சில வரிசைதந் தவையிற் சிறக்கவந் தொருங்கு வைகிவா னிழிந்த தெய்வதக் கோயில்புக் கிருந்த அறக்கொடி யிடஞ்சேர் பெரும்புல வோர்க்கு மருங்கல னாதிக ணல்கா. (இ - ள்.) இறக்குவித்து - இறக்கி, அவட்கு - அப்பாடினிக்கு, முந்த - முற்பட, முத்து ஆரம் - முத்துமாலைகளையும், எரிமணிக்கலன் - நெருப்புப் போன்ற மணிகளழுத்திய கலன்களையும், துகில் - ஆடை களையும், வரிசைபெறக் கொடுத்து - வரிசையாகக் கொடுத்து, ஏனைய வட்கும் - மற்றை ஈழப்பாடினிக்கும், உள் மகிழ்ச்சி பெறச் சில வரிசை தந்து - உள்ளம் மகிழச் சில வரிசைகளை அளித்து, அவையில் சிறக்க வந்து ஒருங்கு வைகி- அவையின்கண் மேன்மையுற வந்து அனைவரோடும் ஒருங்கு எழுந்தருளியிருந்து, வான் இழிந்த தெய்வதக் கோயில்புக்கு இருந்த - விண்ணினின்றும் இறங்கிய தெய்வ விமானத்தின்கன் புகுந்து இருந்த, அறக்கொடி இடம்சேர் - தரும வல்லியாகிய இறைவியை இடப்பாதியிற் கொண்ட, பெரும்புலவோர்க்கும் - பெரும் புலவராகிய சோமசுந்தரக் கடவுளுக்கும், அருங்கலன் ஆதிகள் நல்கா - அரிய அணிகலன் முதலியவைகளை அளித்து. ஈழப்பாடினி தோற்றவளாயினும் தன்னால் வருவிக்கப்பட்டவளாதலால் அவட்கும் வரிசை தந்தனன் என்க. அவையில் வந்து ஒருங்கு வைகிப் பின் கோயில்புக்கிருந்த புலவோர் என்க. (42) [அறுசீரடி யாசிரி விருத்தம்] மன்னவர் வலிக ளெல்லாந் தெய்வத்தின் வலிமுன் னில்லா அன்னமா தெய்வஞ் செய்யும் வலியெலா மரண்மூன் றட்ட முன்னவன் வலிமுன் னில்லா வெனப்பலர் மொழிவ தெல்லாம் இன்னபாண் மகளிற் காணப் பட்டதென் றிறும்பூ தெய்தா. (இ - ள்.) மன்னவர் வலிகள் எல்லாம் - அரசருடைய வலிமை யெல்லாம், தெய்வத்தின் வலிமுன் நில்லா - தெய்வத்தின் வலிமை முன் நில்லா; அன்னமா தெய்வம் செய்யும் வலிஎலாம் - அப்பெரிய தெய்வங்கள் செய்யும் வலிமுழுவதும், அரண்மூன்று அட்ட முன்னவன் வலிமுன் நில்லா - மூன்று புரங்களையும் அழித்த இறைவன் வலிமுன் நில்லாவாம்; எனப் பலர் மொழிவது எல்லாம் - என்று ஆன்றோர் பலரும் கூறுவதெல்லாம், இன்னபாண்ம களின் காணப்பட்டது என்று - இந்தப் பாடினி வாயிலாகக் காணப்பட்டதென்று, இறும்பூது எய்தா - வியப்புற்று. மொழிவதெல்லாம் : ஒருமைப் பன்மை மயக்கம். பாண்மகளின் - பாடினி வாயிலால். (43) மின்னியல் சடையி னானை விடைகொடு வலஞ்செய் தேகி இன்னிய மியக்கஞ் செய்ய வெழில்கொடன் கோயி வெய்தித் தொன்னிதி பெற்றான் போலச் சுகுணபாண் டியனைப் பெற்று மன்னிய மகிழ்ச்சி வீங்க வைகினா னிராச ராசன். (இ - ள்.) இராசராசன் - இராசராச பாண்டியன், மின் இயல் சடையினானை - மின்போன்ற சடையையுடைய சோமசுந்தரக் கடவுளை, வலஞ்செய்து - வலம்வந்து, விடைகொடு ஏகி - அப்பெருமானிடம் விடைபெற்றுச் சென்று, இன் இயம் இயக்கம் செய்ய - இனிய வாத்தியங்கள் ஒலிக்க, எழில்கொள் தன் கோயில் எய்தி - அழகிய தனது மாளிகையை அடைந்து, தொல்நிதி பெற்றான் போல - சேமநிதி பெற்றவனைப்போல, சுகுண பாண்டியனைப் பெற்று - சுகுண பாண்டியன் என்னும் மைந்தனைப் பெற்று, மன்னிய மகிழ்ச்சி வீங்க வைகினான் - நிலைபெற்ற மகிழ்ச்சி மிக இருந்தனன். இயக்கஞ் செய்ய - ஒலிக்க. (44) ஆகச் செய்யுள் - 2192 நாற்பத்தைந்தாவது பன்றிக்குட்டிக்கு முலைகொடுத்த படலம் [அறுசீரடி யாசிரிய விருத்தம்] இருளைக்கந் தரத்தில் வைத்தோன் றன்னிடத் தென்று மன்பின் தெருளைத்தந் தவட்கு மாறாந் தெரிவையை யிசையால் வெல்ல அருளைத்தந் தளித்த வண்ண மறைந்தனந் தாயாய்ப் பன்றிக் குருளைக்கு முலைதந் தாவி கொடுத்தவா றெடுத்துச் சொல்வாம். (இ - ள்.) இருளைக் கந்தரத்தில் வைத்தோன் - நஞ்சினைத் தனது திருமிடற்றின்கண் வைத்தருளிய சோமசுந்தரக்கடவுள், தன்னிடத்து என்றும் அன்பின் தெருளைத் தந்தவட்கு - எஞ்ஞான்றும் தன்னிடத்தில் உண்மை யன்பினை வைத்த பாடினிக்கு, மாறுஆம் தெரிவையை - அவள் பகையாகிய ஈழப் பாடினியை, இசையால் வெல்ல - இசையினால் வெல்லுமாறு, அருளைத் தந்து அளித்தவண்ணம் அறைந்தனம் - திருவருளைத் தந்து ஆண்டருளிய திருவிளையாடலைக் கூறினேம்; தாயாய் - இனி (அப்பெருமானே) தாய்ப்பன்றியாய் வந்து, பன்றிக் குருளைக்கு முலைதந்து ஆவி கொடுத்தவாறு - பன்றிக்குட்டிகளுக்கு முலை கொடுத்து உயிரைப் புரந்த திருவிளையாடலை, எடுத்துச் சொல்வாம் - எடுத்துக் கூறுவோம். அன்பின் தெருள் - தெளிந்த அன்பு; உண்மை யன்பு. குருளை - குட்டி. " நாயே பன்றி புலிமுயல் நான்கும் ஆயுங் காலைக் குருளை யென்ப" என்பது தொல்காப்பியம். (1) முறையென விமையோர் வேண்ட முளைத்தநஞ் சயின்று சான்றாய் உறையென மிடற்றில் வைத்த வும்பரான் மதுரைக் காரந் திறையென வெறிநீர் வையைத் தெற்கது குருவி ருந்த துறையென வுளதோர் செல்வத் தொன்மணிமாட மூதூர். (இ - ள்.) இமையோர் முறையென வேண்ட - தேவர்கள் முறையோ வென்று குறையிரக்க, முளைத்த நஞ்சு அயின்று - கடலிலே தோன்றிய நஞ்சினை உண்டு, சான்றாய் உறை என - சான்றாக நீ இங்கே தங்குவாய் என்று, மிடற்றில் வைத்த உம்பரான் - அதனைத் திருமிடற்றின்கண் வைத்தருளிய சிவலோகநாதன் எழுந்தருளிய, மதுரைக்குத் திறை என ஆரம் எறி - மதுரைப்பதிக்குத் திறையாக முத்துக்களை வீசும், நீர் - நீரினையுடைய, வையத் தெற்கது - வையை யாற்றின் தெற்கிலே, ஓர் செல்வம் தொல்மணி மாடமூதூர் - ஒரு செல்வமிக்க பழைய அழகிய மாடங்கள் நிறைந்த பெரிய ஊர், குரு விருந்த துறை என உளது - குருவிருந்ததுறை என்னும் பெயருடன் உள்ளது. இமையோர் முறையிட்டமையை, "நஞ்சமஞ்சி, ஆவெந்தாயென் றவிதாவிடு நம்மவரவரே" எனத் திருவாதவூரடிகள் அருளிச் செய்தலுங் காண்க. சான்றாய்- சிவபெருமானே பரமபதி என்பதற்குச் சான்றாய். (2) தருநாத னாதி வானோர் தங்குரு விருந்து நோற்பக் குருநாத னெனப்பேர் பெற்றுக் கோதிலா வரந்தந் தேற்றில் வருநாதன் சித்தி ரத்தேர் வலவனா ருடனே கஞ்சத் திருநாதன் பரவ வைகி யிருக்குமச் சிறந்த வூரில். (இ - ள்.) தருநாதன் ஆதிவானோர்தம் குரு - கற்பகத்தருவின் தலைவனாகிய இந்திரன் முதலிய தேவர்களின் குரவனாகிய வியாழன், இருந்து நோற்ப - தங்கியிருந்து தவம் புரிதலால், குருநாதன் எனப்பேர் பெற்று - குருநாதன் என்னுந் திருநாமம் பெற்று, கோது இலாவரம் தந்து - குற்றமில்லாத வரங்களை அருளி, ஏற்றில் வருநாதன் - இடபவூர்தியில் வரும் இறைவன், சித்திரத் தேர்வலவனா ருடனே - விசித்திரமாகிய தமது தேரைச் செலுத்தும் பாகனாகிய பிரமனுடன், கஞ்சத் திருநாதன் பரவ - தாமரைமலரில் வீற்றிருக்கும் இலக்குமிக்கு நாயகனாகிய திருமால் போற்ற, வைகி இருக்கும் -எழுந்தருளியிருப்பன்; அச்சிறந்த ஊரில் - அத்தகைய சிறந்த பதியிலே. நோற்றல் - சிவபிரானைக் குறித்துத் தவஞ் செய்தல். சித்திரத்தேர்- திரிபுரங்களை அழித்தற்கு எழுந்தருளுதற் பொருட்டுத் தேவர்களால் இயற்றப்பட்ட தேர். கஞ்சத்திரு - இலக்குமி. (3) சுகலனென் றொருவே ளாள னவன்மனை சுகலை யென்பாள் இகலருங் கற்பி னாள்பன் னிருமகப் பெற்றாள் செல்வப் புகலருஞ் செருக்கா லன்ன புதல்வரைக் கடியா ராகி அகலருங் களிப்பு மீதூ ரன்பினால் வளர்க்கு நாளில். (இ - ள்.) சுகலன் என்று ஒரு வேளாளன் - சுகலன் எனப் பெயரிய ஒரு வேளாளன் (உளன்); அவன்மனை சுகலை என்பாள்- அவன் மனைவி சுகலை என்று சொல்லப்படுவாள்; இகல் அருங்கற்பினாள் - மாறுபாடில்லாத கற்பினையுடைய அவள், பன்னிரு மகப்பெற்றாள் - பன்னிரண்டு பிள்ளைகளைப் பெற்றாள்; செல்வப் புகல் அருஞ்செருக்கால் - செல்வத் தாலாகிய சொல்லுதற்கரிய செருக்கினால், அன்ன புதல்வரைக் கடியாராகி - அந்தப் பிள்ளை களைக் குற்றங்கண்டவழி ஒறுக்காதவர்களாய், அகல் அருங் களிப்பு மீதூர் அன்பினால் - நீங்காத களிப்பு மிக்க அன்போடு, வளர்க்கு நாளில் - வளர்த்துவரும் பொழுது. ஒரு வேளாளன் உளன் என வருவித்து முடிக்க. செல்வச் செருக்கால் என்க. கடியாராகி - குற்றங் கண்டுழி ஒறுத்து நல்வழிப் படுத்தாராகி. (4) தந்தையுந் தாயு மாயத் தறுகண்மிக் குடைய ராகி மைந்தரும் வேட ரோடு கூடிவெங் கானில் வந்து வெந்தொழில் வேட்டஞ் செய்வார் வெயில்புகாப் புதற்கீ ழெய்தி ஐந்தவித் திருந்து நோற்குங் குரவனை யங்குக் கண்டார். (இ - ள்.) தந்தையும் தாயும் மாய - தம் அப்பனும் அன்னையும் இறந் தொழிய, மைந்தரும் - புதல்வர்களும், தறுகண்மிக்கு உடையராகி- வன்கண்மை மிகவும் உடையராய், வேடரோடு கூடி வெங்கானில் வந்து - வேடர்களோடு கூடிக் கொடிய காட்டில் வந்து, வெந்தொழில் வேட்டம் செய்வார் - கொடுந் தொழிலாகிய வேட்டை யாடுவோர், வெயில் புகாப் புதல் கீழ்எய்தி - வெய்யில்புகாத புதலின் கீழ்ச்சென்று, ஐந்து அவித்து இருந்து நோற்கும் - ஐம்புலன்களையும் வென்று தியானத்திலிருந்து நோற்கின்ற, குரவனை அங்கு கண்டார் - வியாழபகவானை அங்கே கண்டனர். ஐந்து, ஐம்புலனுக்கு ஆகுபெயர். எய்தி இருந்து நோற்கும் குரவனை வேட்டஞ் செய்வார் அங்குக் கண்டார் என்க. (5) கைத்தலம் புடைத்து நக்குக் கல்லும்வெம் பரலும் வாரி மெய்த்தவன் மெய்யிற் றாக்க வீசினார் வினையை வெல்லும் உத்தமன்1 வீக்கஞ் செய்தார் தவத்தினுக் குவரென் றுன்னிச் சித்தநொந் தினைய வஞ்சத் தீயரைச் செயிர்த்து நோக்க. (இ - ள்.) கைத்தலம் புடைத்து நக்கு - இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று தாக்கி நகைத்து, கல்லும் வெம்பரலும் வாரி - கற்களையும் கொடிய பருக்கைகளையும் அள்ளி, மெய்த்தவன் மெய்யில் தாக்க - உண்மைத் தவத்தினையுடைய வியாழனது உடம்பிலே தாக்குமாறு, வீசினார் - எறிந்தார்கள்; இனையவஞ்சத் தீயரை - இந்த வஞ்சக் கொடி யோரை, வினையை வெல்லும் உத்தமன் - வினையைப் புறங்காணும் அவ்வுத்தமன், உவர்தவத்தினுக்கு வீக்கம் செய்தார் என்று உன்னி - இவர் நமது தவத்திற்கு இடையூறு செய்தனரே என நினைந்து, சித்தம் நொந்து - மனம் நொந்து, செயிர்த்து நோக்கா - சினந்து நோக்கி. வீக்கம் - அழிவு; வீ என்பதன் அடியாகப் பிறந்தது; விக்கம் எனப் பாடங் கொண்டு விக்நம் என்பதன் சிதைவு என்பாருமுளர். உவர் - இவர். (6) தொழுந்தொழின் மறந்து வேடத் தொழிலுவந் துழல்வீர் நீர்மண் உழுந்தொழி லுடைய நீராற் பன்றியி னுதரத் தெய்திக் கொழுந்தழ லனையவேனக் குருளையாய்த் தந்தை தாயை இழந்தல முறுமி னென்னா விட்டனன் கடிய சாபம். (இ - ள்.) தொழும் தொழில் மறந்து - (பெரியாரைக்காணின்) வணங்குங் கடப்பாட்டினை மறந்து, வேடத்தொழில் உவந்து உழல்வீர் - வேடர்களின் தொழிலை விரும்பி உழல்கின்றீர், நீர்மண் உழுந்தொழில் உடைய நீரால் - நீர் நிலத்தினை உழுதலாகிய தொழிலை யுடைய தன்மையால், பன்றியின் உதரத்து எதி - பன்றியின் கருப்பத்திலுற்று, கொழுந்தழல் அனைய - கொழுவிய நெருப்பினை ஒத்த (சினத்தினை யுடைய), ஏனக் குருளையாய் - பன்றிக்குட்டிகளாய்த் தோன்றி தந்தை தாயை இழந்து அலமுறுமின் என்னா - தந்தையையுந் தாயையும் இழந்து துன்ப மெய்துவீராகஎன்று, கடிய சாபம் இட்டனன் - கொடிய சாப மிட்டனன். உழல்வீர் : விளி. உழுங்குலத்திற் பிறந்து அத்தொழிலைக் கை விட்டுக் கொடுமைசெய் துழலும் நீர் நிலத்தை உழுமியல் புடைய பன்றிக் குருளைகளாகப் பிறப்பீர் என்றான் என்க. அலமுறுமின் - துன்பம் எய்துமின்; அலம் - துன்பம். (7) பாவத்தை யனைய மைந்தர் பன்னிரு பேரு மஞ்சிச் சாவத்தை யேற்றெப் போது தணிவதிச் சாப மென்ன ஆவத்தை யகற்று மீச னருட்கழ னினைந்து வந்த கோவத்தை முனிவு செய்தக் கடவுளர் குரவன் கூறும். (இ - ள்.) பாவத்தை அனைய மைந்தர் பன்னிருபேரும் - பாவமே உருவெடுத்தாற் போன்ற மைந்தர் பன்னிருவரும், அஞ்சி- பயந்து, சாவத்தை ஏற்று - சாபத்தினை ஏற்று, இச்சாபம் தணிவது எப்போது என்ன - இந்தச் சாபம் நீங்குவது எப்பொழுது என்று வேண்டி வினவ, அக்கடவுளர் குரவன் - தேவகுருவாகிய அவ் வியாழன், வந்த கோவத்தை முனிவுசெய்து - தனக்கு வந்த சினத்தினை வெறுத்து, ஆவத்தை அகற்றும் ஈசன் அருள் கழல் நினைந்து கூறும் - உயிர்களுக்கு (நேர்ந்த) இடையூற்றினை நீக்கும் இறைவனது அருளுருவாகிய திருவடியைச் சிந்தித்துக் கூறுவான். சாபம் முதலியவற்றிலே பகரம் வகரமாய்த் திரிந்து நின்றது. சினத்தினைச் சினந்தான் என்க. (8) என்னை'a3 ளுடையகூட லேகநா யகனே யுங்கட் கன்னையாய் முலைதந் தாவி யளித்துமே லமைச்ச ராக்கிப் பின்னையா னந்தவீடு தருமெனப் பெண்ணோர் பாகன் தன்னையா தரித்தோன் சொன்னான் பன்னிரு தனயர் தாமும். (இ - ள்.) என்னை ஆள் உடைய கூடல் ஏக நாயகனே - என்னை ஆளாகவுடைய கூடலம்பதியில் எழுந்தருளிய தனித் தலைவனாகிய சோமசுந்தரக் கடவுளே, உங்கட்கு அன்னையாய் முலைதந்து ஆவி அளித்து - உங்களுக்குத் தாயாய்வந்து முலைகொடுத்து உயிரைப் புரந்து, மேல் - பின், அமைச்சர் ஆக்கி - பாண்டியனுக்கு அமைச்சர் களாகச் செய்தருளி, பின்னை - அதன்பின், ஆனந்த வீடுதரும் என - பேரின்ப வீட்டினையும் அருளுவான் என்று, பெண் ஓர் பாகன் தன்னை ஆதரித்தோன் சொன்னான்- உமையை ஒரு பாகத்திலுடைய அவ்விறைவனைப் பேணி வழிபடும் குரவன் கூறினான்; பன்னிரு தனயர் தாமும் - (பின்) பன்னிரு மைந்தர்களும். (9) தொன்மைசால் குருவி ருந்த துறையதன் புறத்த வான பன்மைசால் கான வாழ்க்கைப் பன்றிகட் கரசாய் வைகுந் தன்மைசா றனியே னத்தின் றன்பெடை வயிற்றிற் சென்று வன்மைசால் குருளை யாகிப் பிறந்தனர் வழக்கான் மன்னோ. (இ - ள்.) தொன்மைசால் குருவிருந்த துறையதன் புறத்தஆன- பழமை மிக்க குருவிருந்த துறையின் புறத்தில் உள்ளனவாகிய, பன்மைசால் கான வாழ்க்கைப் பன்றிகட்கு - பலவாகிய காட்டில் வாழுதலையுடைய பன்றிகளுக்கு, அரசாய் வைகும் தன்மைசால்- வேந்தாயிருக்கும் தன்மையுடைய, தனி ஏனத்தின் - ஒப்பற்ற பன்றியின், பெடை வயிற்றில் சென்று - பெண்ணின் வயிற்றிற் சென்று, வழக்கால் - சாப நெறியாலே, வன்மைசால் குருளையாகிப் பிறந்தனர் - வலிமை மிக்க குட்டிகளாய்ப் பிறந்தனர். ஏனத்தின் பெடை என்பதனை இலேசாற் கொள்க. துறையது, அது: பகுதிப் பொருள் விகுதி. தன: சாரியை. மன், ஓ : அசைகள். (10) ஆனநா ளொருநா ளெல்லை யரசருக் கரசனான மீனவன் மதுரை நீங்கி மேற்றிசைக் கான நோக்கி மானமா வேட்டஞ் செய்வான் மத்தமா வுகைத்துத் தண்டாச் சேனை1 தன் புறம்பே மொய்ப்பச் செல்கின்றான் செல்லுமெல்லை. (இ - ள்.) ஆனநாள் - இவ்வாறான காலையில், ஒருநாள் எல்லை- ஒருநாளளவில், அரசருக்கு அரசனான மீனவன் - மன்னர்களுக்கு மன்னனாகிய இராச ராசபாண்டியன், மதுரைநீங்கி - மதுரையைவிட்டு, மேல்திசைக் கானம் நோக்கி - மேற்குத் திக்கிலுள்ள காட்டினை நோக்கி, மானம்மா வேட்டம் செய்வான் - பெரிய விலங்குகளை வேட்டையாடுதற் பொருட்டு, மத்தமா உகைத்து - மதமயக்கத்தையுடைய யானையைச் செலுத்தி, தண்டாச் சேனை தன்புறம்பே மொய்ப்பச் செல்கின்றான் - நீங்காத தானைகள் தன்மருங்கிற் சூழப்போகின்றான்; செல்லும் எல்லை - அங்ஙனம் போகும்போது. இராச ராச பாண்டியன் என்பார் ‘அரசருக் கரசனான மீனவன்’ என்றார் எனலுமாம். மானம் - பெருமை. (11) மாவழங் கிடங்க டேர வல்லதோல் வன்கா லொற்றர் பாவடிச் சுவடு பற்றிப் படர்ந்துநா றழல்பு லால்வாய்த் தீவிழி யுழுவை யேனந் திரிமருப் பிரலை புல்வாய் மேவிட னறிந்து வல்லே விரைந்துவந் தெதிரே சொன்னார். (இ - ள்.) மா வழங்கு இடங்கள் தேரவல்ல - விலங்குகள் பயிலும் இடங்களை ஆராய்ந்து அறியவல்ல, தோல்வன்கால் ஒற்றர்- தொடு, தோலணிந்த வலிய காலையுடைய ஒற்றர்கள். பா அடிச் சுவடுபற்றிப் படர்ந்து - (விலங்குகளின்) பரந்த அடிச்சுவட்டினைப் பின்பற்றிச் சென்று, நாறு அழல்புலால் வாய்த்தீவிழி உழுவை- தோன்றும் சினத்தீயினையும் புலால் நாறும் வாயினையும் நெருப்புப்போன்ற கண்களையுமுடைய புலிகளும், ஏனம் - பன்றிகளும், திரிமருப்பு இரலை - திருகிய கொம்புகளையுடைய கலைமானும், புல்வாய் - மானினங்களும், மேவு இடன் அறிந்து - தங்கிய இடங்களை அறிந்து, வல்லே விரைந்து வந்து எதிரே சொன்னார - மிக விரைந்து வந்து மன்னனெதிரே நின்று புகன்றனர். (12) மறத்துறை வேட்ட மாக்கள் வல்லைபோ யொடியெ றிந்து புறத்துவார் வலைகள் போக்கி நாயதன் புறம்பு போர்ப்ப நிறைத்துமா வொதுக்கி நீட்டும் படைஞராய்ச் 1சூழ்ந்து நிற்ப அறத்துறை மாறாக் கோலா னானைமேல் கொண்டு நிற்ப. (இ - ள்.) மறத்துறை வேட்ட மாக்கள் - கொலை நெறிபயின்ற வேட்டை யாடுதல் வல்லார், வல்லைபோய் - விரைந்துசென்று, ஒடியெறிந்து - காடுகளை வெட்டிச் சரித்து, புறத்துவார் வலைகள்போக்கி - புறம்பே நெடிய வலைகளைக் கட்டி, நாய் அதன் புறம்பு போர்ப்ப நிறைத்து - நாய்கள் அவ்வலையில் புறம்பு சூழ்ந்து நிற்குமாறு அவற்றை நிறைத்து, மா ஒதுக்கி நீட்டும் படைஞராய்ச் சூழ்ந்துநிற்ப - விலங்குகளை ஒரு வழிப்படுத்தி அவற்றின்மேல் விடும் படைகளையுடையராய்ச் சுற்றிலும் நிற்கவும், அறத்துறைமாறாக் கோலான் - அறநெறியினின்றும் மாறாத செங்கோலையுடைய பாண்டியன், ஆனைமேல் கொண்டுநிற்க - யானைமேலேறி ஒருபால் நிற்கவும். ஒடியெறிதல் - காடுவெட்டிச் சரித்தல். (13) சில்லரித் துடி2கோ டெங்குஞ் செவிடுறச் சிலையா நிற்பப் பல்வகைப் பார்வை காட்டிப் பயில்விளி யிசையா நிற்ப3 வல்லிய மிரலை மையன் மானினன் வெருளா நிற்ப வில்லிற வலித்து வாங்கி மீளிவெங் கணைக டூர்த்தார். (இ - ள்.) சில் அரித்துடி - சில்லென அரித்தெழும் ஓசையை யுடைய உடுக்கைகளும், கோடு - கொம்புகளும், எங்கும் செவிடுறச் சிலையாநிற்ப - எவ்விடத்தும் செவிடுபடுமாறு ஒலியா நிற்கவும், பல்வகைப் பார்வைகாட்டி - பலவகையான பார்வை விலங்கு களைக் காட்டி, பயில்விளி இசையாநிற்ப - அவ்விலங்குகள் பயின்ற அழைப்பொலியை ஒலியா நிற்கவும், வல்லியம் இரலை மையல் மான் இனம் வெருளா நிற்ப - புலிகளும் மான்களும் மதமயக்கத்தை யுடைய யானைக் கூட்டங்களும் அஞ்சுமாறு, வில் இற வலித்து வாங்கி - வில் முறியுமாறு வலிபெற வளைத்து, மீளிவெங் கணைகள் தூர்த்தார் - வலிய கொடிய கணைகளைப் பொழிந்தனர். சில்லரிதுடி எனப் பாடங்கொண்டு, சில்லரியாவது ஒலிக்கும் ஒரு வகைப்பறை யென்பாரும் உளர். பார்வை - விலங்குகளைப் பிடித்தற்கு வளர்க்கப்பட்ட இனமாகிய விலங்குகள். பயில் விளி- அவை பயின்ற அழைப்பொலி. மையல் மான் - யானை. நன்கு வளைத்து என்பார் "வில்லிற வலித்து வாங்கி" என்றார். (14) [எழுசீரடி யாசிரிய விருத்தம்] செறிந்த மான்மு றிந்த தாள்சி தைந்த சென்னி செம்புனற் பறிந்த வாறு வெண்ணி ணம்ப ரிந்து வீசு கையிறா மறிந்த வேழு யர்ந்த வேழ மாண்ட வெண்கு வல்லியம் பிறிந்த வாவி யோடும் வாய்பி ளந்த வாய்வி ழுந்தவே. (இ - ள்.) செறிந்த மான் - நெருங்கிய மான்கள், தாள்முறிந்த; (சில) கால் முறிந்தன; சென்னி சிதைந்த - (சில) தலை சிதைந்தன- செம்புனல் ஆறு பறிந்த - குருதி ஆறு ஓடியது; ஏழு உயர்ந்த வேழம் - ஏழு முழ உயர்ந்த யானைகள், வீசு கை இறா - வீசுகின்ற துதிக்கை அற்று, வெண்நிணம் பரிந்து - வெள்ளிய நிணம் சிந்தி, மறிந்த மாண்ட - (செல்நெறி) தடைப்பட்டு மடிந்தன; எண்கு வல்லியம்- கரடிகளும் புலிகளும், பிறிந்த ஆவியோடும் - நீங்கின உயிரோடும், வாய் பிளந்தவாய் விழுந்த - வாய் பிளந்தனவாகி விழுந்தன. பறிந்தது என்பது துவ்வீறு தொக்கது. செம்புனல் ஆறு பறிந்த தென்க. யானை ஏழுமுழம் உயர்ந்திருத்தல் உத்தம இலக்கணம். வேழம் மறிந்தன எண்கு மாண்டன வல்லியம் விழுந்தன என்றுரைத்தலுமாம். (15) தொட்ட புற்கி ழங்கு வாடை தொடவி ரைந்து கண்ணியுட் பட்ட வும்பொ றித்து வைத்த பார்வை வீழ்ந்த டுத்தவுங் கட்டி யிட்ட வலையி ழைத்து ஞமலி கௌவ நின்றவும் மட்டி லாத வொட்டி நின்ற மள்ளர் வேலின் மாய்ந்தவே. (இ - ள்.) தொட்ட புல்கிழங்கு வாடை தொட - தோண்டிய புல்லின் மணமும் கிழங்கின் மணமும் வீச, விரைந்து கண்ணியுள் பட்டவும் - விரைந்து சென்று வலையுட்பட்டனவும், பொறித்து வைத்த பார்வை வீழ்ந்து அடுத்தவும் - செய்து வைத்த பார்வை விலக்கினை விரும்பிவந்து பொருந்தியனவும், கட்டி இட்ட வலை பிழைத்து - கட்டி வைத்த வலையினின்றுந் தப்பி, ஞமலி கௌவநின்றவும் - நாய்கள் கௌவ நின்றனவுமாகிய, மட்டிலாத - அளவிறந்த விலங்குகள், ஒட்டி நின்ற மள்ளர் வேலின் மாய்ந்தவே - கிட்டிநின்ற வீரர்களின் வேற்படையால் மாய்ந்தன. கண்ணியின் நடுவே புல்லும் கிழங்கும் தோண்டி வைத்திருக்க அவற்றின் மணத்தால் ஈர்க்கப்பட்டுவந்து கண்ணியுட் பட்டன என்க. பொறித்து வைத்த பார்வை - பார்வை விலங்குகளாக இயற்றிவைத்த உருக்கள். பட்ட, அடுத்த, நின்ற என்பன வினையாலணையும் பெயர்கள். மட்டிலாத வேலின் என இயைத்தலுமாம். மாய்ந்த: அன்பெறாத பலவின்பால் முற்று. (16) பட்ட மாவொ ழிந்து நின்ற மறவி லங்கு பல்சில வட்ட மாவ ளைந்து டுத்த வலையி னுந்தி யப்புறத் தெட்டி நின்ற கொலைஞர்மே லெதிர்ந்து மீள்வ வெயில் வளைந் தொட்டி னாரை மலையு மாப்பொ றிக்க ணங்க ளொத்தவே. (இ - ள்.) பட்டமா ஒழிந்துநின்ற - இறந்தொழிந்த விலங்குகள் நீங்க இறவாது நின்ற, மறவிலங்கு பல்சில - பலவும் சிலவுமாய கொடிய விலங்குகள், வட்டமா வளைந்து உடுத்த - வட்டமாக வளைந்து சூழ்ந்த, வலையின் உந்தி - வலையினின்றுந் தாவி, அப்புறத்து எட்டிநின்ற - புறத்தே அடுத்துநின்ற, கொலைஞர்மேல் எதிர்ந்து மீள்வ - வேட்டுவ மாக்கள் மீது பாய்ந்து மீள்வன, எயில் வளைந்து - மதிலைச் சூழ்ந்து, ஒட்டினாரை - எதிர்த்த பகைவரை, மலையும் - பொராநிற்கும், மாப் பொறிக் கணங்கள் ஒத்த - பொறிகளாகிய விலங்குக் கூட்டங்களை ஒத்தன. ஒழிந்து - ஒழிய; எச்சத்திரிபு. மாப்பொறி - விலங்குப்பொறி. (17) வல்லி யந்து ளைத்த கன்று மான்று ளைத்த கன்றுவெங் கல்லி யங்கு மெண்கி னைத்து ளைத்த கன்று கயவுவாய் வெல்லி பந்து ளைத்து மள்ளர் விட்ட வாளி யிங்ஙனஞ் சொல்லி னுங்க டிந்து போய்த்து ணித்த மாவ ளப்பில. (இ - ள்.) மள்ளர்விட்ட வாளி - வீரர்விட்ட வாளிகள், சொல்லினும் கடிந்துபோய் - முனிவரிடுஞ் சாப மொழியினும் விரைந்து சென்று, வல்லியம் துளைத்து அகன்று - புலிகளைத் துளைத்துருவியும், மான் துளைத்து அகன்று- மான்களைத் துளைத்துருவியும், வெங்கல் இயங்கும் எண்கினைத் துளைத்து அகன்று - வெப்ப மமைந்த மலைகளில் இயங்கும் கரடிகளைத் துளைத் துருவியும், கயவுவாய் வெல்இபம் துளைத்து - பெரிய வாயினை யுடைய வெற்றி பொருந்திய யானைகளைத் துளைத்தும், இங்ஙனம் துணித்தமா அளப்பில - இவ்வாறு துண்டித்த விலங்குகள் அளவிறந்தன. கயவு - பெருமை; " தடவும் கயவும் நளியும் பெருமை" என்பது தொல்காப்பியம். சொல் - முனிவரின் சாபமொழி; அஃது அக் கணத்தே விரைந்து சென்று தாக்குதலின் உவமமாயிற்று; "சொல்லொக்குங் கடிய வேதச் சுடுசரம்" எனக் கம்பநாடர் கூறுதலுங் காண்க. (18) மடுத்த வாளி யிற்பி ழைத்து வலையை முட்டி யப்புறத் தடுத்த மானை வௌவி நாய லைத்து நின்ற வாதிநாள் உடுத்த பாச வலையி னின்று முய்கு வாரை யொய்யெனத் தடுத்த வாவி ளைத்து நின்ற தைய லாரை யொத்தவே. (இ - ள்.) மடுத்த வாளியில் பிழைத்து - பாய்ந்த வாளிகளினின்றுந் தப்பி, வலையை முட்டி அப்புறத்து அடுத்த மானை- வலையை மோதி அப்புறஞ்சென்ற மான்களை, வௌவி அலைத்துநின்ற நாய் - கௌவி வருத்தி நின்றனவாகிய நாய்கள், ஆதிநாள் உடுத்த பாசவலையினின்றும் உய்குவாரை - முன்னாளிலே சூழ்ந்த பாசமாகிய வலையினின்றும் தப்பிப் பிழைத்துச் செல்லும் பெரியோரை, ஒய்யெனத் தடுத்து - விரைந்து தடுத்து, அவா விளைத்து நின்ற - ஆசையை விளைத்து நின்ற, தையலாரை ஒத்தவே- பெண்களை ஒத்தன. அலைத்து நின்ற நாய் என மாறுக. ஆதிநாள் என்றது அனாதி காலமாக என்றபடி. ஒய்யென : விரைவுக் குறிப்பு. " பலதுறைகளின் வெருவரலொடு பயில்வலையற நுழைமா உலமொடுபடர் வனதகையுற வுறுசினமொடு கவர்நாய் நிலவியவிரு வினைவலையிடை நிலைசுழல்பவர் நெறிசேர் புலனுறுமன னிடைதடைசெய்த பொறிகளினள வுளவே" என்னும் திருத்தொண்டர் புராணசசெய்யுளோடு இஃது ஒப்புநோக்கற் பாலது. (19) மதியை நேர்வ கிர்ந்து கௌவி யனைய வான்ம ருப்புவெங் கதிய வேழ மீது தாது காலு நீல முகையினீள்1 நுதிய வேனு ழைந்த செம்பு ணூழில் வீழு முதிரநீர் முதிய கான வரையின் மீது மொய்த்த தீயை யொத்தவே. (இ - ள்.) மதியை நேர் வகிர்ந்து கௌவியனைய - சந்திரனை இரு கூறாகப் பிளந்து கௌவினாற்போன்ற, வான் மருப்பு வெம்கதிய வேழம் மீது - வெள்ளிய மருப்பினையும் வெய்ய நடையையுமுடைய யானையின் மேல், தாதுகாலும் நீலமுகையின்- மகரந்தஞ் சிந்தும் நீலோற்பலத்தின் அரும்புபோல (நஞ்சுபூசிய), நீள்நுதிய வேல் நுழைந்த - நீண்ட முனையையுடைய வேற்படை ஊடுருவியதா லாகிய, செம்புண் நூழில் வீழும் உதிரநீர் - பசும் புண்ணின் தொளையினின்று பொழியுங் குருதி நீர், முதிய கான வரையின்மீது -முற்றிய மரங்களையுடைய காடு அடர்ந்த மலையின்மேல், மொய்த்த தீயை ஒத்த - சூழ்ந்த நெருப்பினை ஒத்தது. கதிய, நுதிய, முதிய என்பன குறிப்புப் பெயரெச்சங்கள். நுழைந்த : காரணப்பொருளில் வந்த பெயரெச்சம். நூழில் - துளை. ஒத்தது : துவ்வீறு தொக்கது; குருதிகள் ஒத்தன எனலுமாம்; " வீழ்தரு மொண்குருதி கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்குப் போன்றவே" என்னும் களவழிச் செய்யுள் இங்கு நோக்கற்பாலது. (20) மள்ள ரோசை துடியி னோசை வயிரி னோசை வாளிபோய்த் தள்ள வீழ்வி லங்கி னோசை தப்பி யோடு மானின்மேற் றுள்ளு நாய்கு ரைக்கு மோசை கானமூடு தொக்குவான் உள்ளு லாயு டன்றொ லிக்கு முருமி னோசை புரையுமால். (இ - ள்.) மள்ளர் ஓசை - வீரர்களின் ஆர்ப்பொலியும், துடியின் ஓசை - உடுக்கையின் ஒலியும், வயிரின் ஓசை - ஊதுகொம்பின் ஒலியும், வாளிபோய்த் தள்ள வீழ் விலங்கின் ஓசை - வாளிகள் சென்று தைத்து வீழ்த்தலால் வீழ்கின்ற விலங்குகளின் ஒலியும், தப்பி ஓடும் மானின்மேல் - வலையைத் தப்பியோடும் மான்களின்மேல், துள்ளும் நாய் குரைக்கும் ஓசை - தாவுகின்ற நாய்கள் குரைக்கின்ற ஒலியும், கானம் ஊடு தொக்கு - காட்டின்கண் ஒருசேரத் திரண்டு, வானுள் உலாவி உடன்று ஒலிக்கும் உருமின் ஓசை புரையும் - வானின்கண் உலாவி வெகுண்டு ஒலிக்கும் இடியோசையினை ஒக்கும். எண்ணும்மைகள் விரிக்க. ஆல் : அசை. (21) இன்ன வேறு பல்வி லங்கெ லாம லைத்தி லங்குவேல் மன்ன ரேறு தென்னர் கோம கன்கு டக்கி னேகுவான் அன்ன போதொ ரேன மேன வரசி ருக்கு மடவிவாய் முன்ன ரோடி வந்து நின்று வந்த செய்தி மொழியுமால். (இ - ள்.) இன்ன பல்வேறு விலங்கு எலாம் அலைத்து - இங்ஙனம் பல்வேறு வகையான விலங்குகளை யெல்லாம் வருத்தி, மன்னர் ஏறு - அரசருள் ஏறுபோன்ற, இலங்கு வேல் தென்னர் கோமகன் - விளங்குகின்ற வேற்படை யேந்திய பாண்டியர் கோமான், குடக்கின் ஏகுவான் - மேற்றிசை நோக்கிச் செல்வானாயினன்; அன்ன போது - அதுபோது, ஓர் ஏனம் - ஒரு பன்றி, ஏன அரசு இருக்கும் அடவிவாய் - பன்றி யரசன் இருக்குங் காட்டின்கண், முன்னர் ஓடி வந்து நின்று - முற்பட்டு ஓடி வந்து நின்று, வந்த செய்தி மொழியும் - தான் வந்த செய்தியைக் கூறும். ஆல் : அசை. (22) [அறுசீரடி யாசிரிய விருத்தம்] எங்களுக் கரசே கேட்டி யிங்குள விருக மெல்லாந் திங்களுக் கரசன் கொன்று வருகின்றா னென்று செப்ப வெங்களிப் படைந்து பன்றி வேந்தனு மடுபோ ராற்றச் சங்கையுற் றெழுந்து போவான் றன்னுயிர் பெடையை நோக்கா. (இ - ள்.) எங்களுக்கு அரசே கேட்டி - எங்களுக்கு அரசனே கேட்பாயாக, இங்கு உள விருகம் எல்லாம் - இங்குள்ள விலங்கு களனைத்தையும், திங்களுக்கு அரசன் கொன்று வருகின்றான் என்று செப்ப - சந்திர மரபிற்கு மன்னனாகிய பாண்டியன் கொன்று வாராநின்றான் என்று சொல்ல, பன்றிவேந்தனும் - அப்பன்றியரசனும், வெங்களிப்பு அடைந்து - மிக்க களிப்பெய்தி, அடுபோர் ஆற்றச் சங்கையுற்று - கொல்லுதலையுடைய போர் புரிய எண்ணி, எழுந்து போவான் - எழுந்து செல்பவன், தன் உயிர்ப் பெடையை நோக்கா - தனது உயிர் போன்ற பெண் பன்றியைப் பார்த்து. கேட்டி, ட் : எழுத்துப்பேறு; இ : எதிர்கால விகுதி. விருகம்- விலங்கு. திங்கள் மரபிற்றோன்றிய அரசனைத் திங்களுக்கரசன் என்றார். வெம்மை மிகுதி மேற்று. போர் பெற்றமை கருதிக் களிப்படைந்தது என்க. சங்கையுற்று - எண்ணங்கொண்டு. வேந்தன் என்பதற் கேற்பப் போவான் என்றார். (23) இன்றுபாண் டியனை நேரிட் டிருஞ்சம ராடி வென்று வன்றிறல் வாகை யோடு வருகுவ னேயோ வன்றிப் பொன்றுவ னேயோ நீயுன் புதல்வரைப் பாது காத்து நன்றிவ ணிருத்தி யென்ன நங்கைப்பே டின்ன கூறும். (இ - ள்.) இன்று பாண்டியனை நேரிட்டு - இன்று பாண்டியனை எதிர்த்து, இருஞ்சமர் ஆடி வென்று - பெரிய போர் புரிந்து வென்று, வன்திறல் வாகையோடு வருகுவனேயோ - மிக்க வலியாற் பெற்ற வெற்றி மாலையுடன் வருவேனோ, அன்றிப் பொன்றுவனேயோ- அல்லாமல் இறந்து படுவேனோ (அறியேன்); நீ உன் புதல்வரைப் பாதுகாத்து நன்று இவண் இருத்தி என்ன - நீ உன் புதல்வர்களை நன்றாகப் பேணி இங்கு இருப்பாயாக என்று கூற, நங்கைப் பேடு இன்ன கூறும் - பெண் பன்றி இங்ஙனங் கூறா நிற்கும். வன்றிறல் : ஒருபொரு ளிருசொல். (24) ஆவியங் கேக விந்த வாகமிங் கிருப்ப தேயிப் பாவியோ மேனா ளிந்தப் பறழினை வகுத்த தெய்வம் மாவம ராடி வென்று வருதியேல் வருவே னன்றி நீவிளிந் திடத்து மாய்வே னிழலுக்குஞ் செயல்வே றுண்டோ. (இ - ள்.) ஆவி அங்கு ஏக இந்த ஆகம் இங்கு இருப்பதே- உயிர் அங்குச்செல்ல இந்த உடல் இங்கு இருப்பது வழக்காமோ, மேல் நாள் - முன்னாளில், இந்தப் பறழினை வகுத்த தெய்வம் இப் பாவியோ - இந்தக் குட்டிகளை வகுத்த தெய்வம் இந்தப் பாவியோ, (அது வேறு ஆகலின் யானும் வந்து) மா அமர் ஆடி வென்று வருதியேல் வருவேன் - நீ பெருஞ்சமர் புரிந்து வெற்றி பெற்று வருவாயேல் உடன் மீளுவேன்; அன்றி - அல்லாமல், நீ விளிந்த இடத்து மாய்வேன் - நீ இறந்து படுவாயேல் அவ்விடத்திலேயே யானும் இறந்தொழிவேன்; நிழலுக்கும் செயல் வேறு உண்டோ - உடம்பின் நிழலுக்கு அவ்வுடம்பைத் தொடர்ந்து செல்வதன்றி வேறு செயலும் உளதோ? எனக்கு நின்னையன்றி வேறு உயிரில்லை யாகலின் யான் நின்னைப் பிரிந்து வாழ்தல் கூடாதென்பாள் ‘ஆவியங் கேக இந்த வாக மிங்கிருப்பதே’ என்றாள். ஏகாரம் எதிர்மறைப் பொருட்டு. இக்குட்டிகளை இங்ஙனம் விதித்த தெய்வம் வேறுண்டாகலின் அதுவே அவற்றைப் புரக்க வல்லதன்றி யான் அல்லேன் என்பாள் ‘இப் பாவியோ மேனாள் இந்தப் பறழினை வகுத்த தெய்வம்’ என்றாளென்க. விளிவையேல் விளிந்த விடத்து என விரிக்க. விளிந்த என்பதன் அகரம் தொக்கது. (25) போதுக மெழுக வென்னாப் பொருக்கென வெழுந்து நீலத் தாதுற ழேனப் பாட்டி தன்புடை தழுவிச் செல்லும் பேதுறு பறழை நூக்கிப் பின்றொடர்ந் தணைந்து செல்லக் காதெயிற் றெறுழி வேந்தன் காலென நடந்தா னன்றே. (இ - ள்.) போதுகம் எழுக என்னா - (ஆகலின்) செல்வோம் எழுக என்று கூறி, பொருக்கென எழுந்து - விரைந்து எழுந்து, நீலத் தாது உறழ் பாட்டி ஏனம் - இரும்பினை யொத்த நிறத்தினையுடைய பெண் பன்றி, தனபுடை தழுவிச்செல்லும் - தனது மருங்கில் தழுவி வாரா நின்ற, பேதுறு பறழை நூக்கி - மன மயங்குதற் கேதுவாகிய குட்டிகளைத் தள்ளி, பின் தொடர்ந்து அணைந்து செல்ல - பின்பற்றி நெருங்கிச் செல்லாநிற்க, காது எயிற்று எறுழி வேந்தன் கால் என நடந்தான் - கொல்லுகின்ற பற்களையுடைய பன்றியரசன் காற்றைப் போல விரைந்து சென்றான் பொருக்கென : விரைவுக்குறிப்பு. நீலத்தாது - நீலோற்பலத்தின் மகரந்தமுமாம். பாட்டி என்பது பெண்பன்றியைக்குறிக்கும் மரபுப்பெயர்; "பாட்டி என்பது பன்றியும் நாயும்" என்பது தொல்காப்பியம். பேதுறு - மருளுகின்ற என்றுமாம். அன்று, ஏ : அசைகள். (26) பல்வகைச் சாதி யுள்ள பன்றியின் கணங்க ளெல்லாம் வெல்படைத் தறுகட் சேனை வீரராய் முன்பு செல்லச் செல்லெனத் தெழித்துச் செங்கட் டீயுக மான மென்னும் மல்லல்வாம் புரவி மேல்கொண் டெழுந்தனன் வராக வீரன். (இ - ள்.) பல்வகைச் சாதி உள்ள - பல்வேறு சாதியான, பன்றியின் கணங்கள் எல்லாம் - பன்றிக் கூட்டங்கள் அனைத்தும், வெல்படைத் தறுகண் சேனைவீரராய் முன்பு செல்ல - வெல்லும் படைக்கலமும் அஞ்சாமையுமுடைய படை வீரராய் முன்னே செல்லாநிற்க, வராகவீரன் - பன்றிவீரன், செல் எனத் தெழித்து - இடிபோல ஒலித்து, செங்கண் தீ உக - சிவந்த கண்களினின்றுஞ் சினத்தீ சிந்த, மானம் என்னும் மல்லல் வாம் புரவிமேல் கொண்டு எழுந்தனன்- மானமென்கின்ற வலிய தாவுங் குதிரைமேலேறிப் போருக்கு எழுந்தனன். மானமானது ஈர்க்கச் சென்றமையின் அதனைப் புரவியாக உரு வகித்தார். (27) முற்படு தூசி யாக நடக்கின்ற முரட்காற் பன்றி மற்படு சேனை நேரே வருகின்ற மன்னர் மன்னன் வெற்படு தடந்தோள் வன்றாள் வீரர்மேற் சீறிச் செல்லப் பிற்பட வொதுங்கி வீரர் பெய்தன ரப்பு மாரி. (இ - ள்.) முற்படு தூசியாக நடக்கின்ற - முன்னணியாக நடக்கின்ற, முரண் கால் பன்றி மல்படுசேனை - முருட்டுக் கால்களையுடைய பன்றியாகிய வலிமிக்க படை, நேரே வருகின்ற மன்னர் மன்னன்- எதிரே வருகின்ற வேந்தர் வேந்தனாகிய பாண்டியனது, வெற்பு அடு தடந்தோள் வன் தாள் வீரர்மேல் - மலையைப் பொருது வென்ற பெரிய தோள்களையும் வலிய தாள்களையுமுடைய வீரர்கள்மேல், சீறிச்செல்ல - சினந்து செல்ல, வீரர் பிற்பட ஒதுங்கி - அவ்வீரர்கள் பின்னே ஒதுங்கி நின்று, அப்பு மாரிபெய்தனர் - அம்பு மழையினைப் பொழிந்தனர். தூசி - முன்னே செல்லும் படை. நடக்கின்ற சேனை வீரர்மேற் செல்ல அவர் அப்புமாரி பெய்தனர் என்க. அப்பு, அம்பு என்பதன் வலித்தல். (28) சொரிந்தன சோரி வெள்ளஞ் சொரிந்தன வீழ்ந்த யாக்கை சரிந்தன குடர்க ளென்பு தகர்ந்தன வழும்பு மூளை பரிந்தன சேனங் காகம் படர்ந்தன வுயிரு மெய்யும் பிரிந்தன வேன நின்ற பிறைமருப் பேன வீரர். (இ - ள்.) சோரி சொரிந்தன வெள்ளம் சொரிந்தன - குருதிகள் பொழிந்து வெள்ளமாகப் பெருகின; யாக்கைவீழ்ந்த - உடல்கள் வீழ்ந்தன; குடர்கள் சரிந்தன - குடர்கள் சரிந்தன; என்பு தகர்ந்தன - எலும்புகள் முறிந்தன; வழும்பு மூளை பரிந்தன - வழும்பும் மூளையும் அற்றன; சேனம் காகம் படர்ந்தன - பருந்துங் காகமும் பரவின; ஏனம் உயிரும் மெய்யும்பிரிந்தன - பன்றிகள் (இங்ஙனம்) உயிர்வேறு உடல் வேறாகப் பிரிந்தன; நின்ற பிறைமருப்பு ஏன வீரர் - பிழைத்து நின்ற பிறைபோலும் கோட்டினையுடைய பன்றிவீரர். பின்னுள்ள சொரிந்தன என்பது பெருகின என்னும் பொருட்டு. வீரர் என்பது வருஞ்செய்யுளில் உள்ள சிதைத்தனர் முதலிய வினைகளைக் கொள்ளும். (29) பதைத்தன ரெரியிற் சீறிப் பஞ்சவன் படைமேற் பாய்ந்து சிதைத்தனர் சிலரைத் தள்ளிச் செம்புனல் வாயிற் சோர உதைத்தனர் சிலரை வீட்டி யுரம்புதை படக்கோ டூன்றி வதைத்தனர் சிலரை நேரே வகிர்ந்தனர் சிலரை மாதோ. (இ - ள்.) எரியில் சீறிப் பதைத்தனர் - நெருப்பைப் போலச் சினந்து உடல் பதைத்து, பஞ்சவன் படைமேல் பாய்ந்து சிலரைச் சிதைத்தனர் - பாண்டியன் படைமீதுபாய்ந்து சிலரைச் சிதைத்தார்கள்; சிலரைத் தள்ளி - சிலரைக் கீழே தள்ளி, வாயில் செம்புனல் சோர உதைத்தனர் - அவர் வாயினின்றும் குருதிபொழியுமாறு உதைத்தார்கள்; சிலரை வீட்டி - சிலரை வீழ்த்தி, உரம் புதைபடக் கோடு ஊன்றி வதைத்தனர் - அவர்மார்பிற் புதையுமாறு கொம்பினை அழுத்திக் கொன்றார்கள்; சிலரை நேரே வகிர்ந்தனர் - சிலர் உடலைச் சரிபாதியாகக் கிழித்தார்கள். பதைத்தனர் : முற்றெச்சம். மாது, ஓ : அசைகள். (30) தாள்சிதைந் தாருஞ் சில்லோர் தலைசிதைந் தாருஞ் சில்லோர் தோள்சிதைந் தாருஞ் சில்லோர் தொடைசிதைந் தாருஞ் சில்லோர் வாள்சிதைந் தாருஞ் சில்லோர் வரையறுத் தலரோன் றீட்டும் நாள்சிதைந் தாருஞ் சில்லோர் நராதிபன் சேனை வீரர். (இ - ள்.) நர அதிபன் சேனைவீரர் - பாண்டிவேந்தனுடைய படை வீரர்களில், தாள் சிதைந்தாரும் சில்லோர் - கால் முறிந்தவர்களுஞ் சிலர்; தலை சிதைந்தாரும் சில்லோர் - தலையுடைந்தவருஞ் சிலர்; தோள் சிதைந்தாரும் சில்லோர் - தோள் முறிந்தவருஞ் சிலர்; தொடை சிதைந்தாரும் சில்லோர் - தொடை நொறுங்கினவருஞ் சிலர்; வாள் சிதைந்தாரும் சில்லோர் - வாட்படை அற்றாருஞ் சிலர்; அலரோன் வரையறுத்துத் தீட்டும் நாள் சிதைந்தாரும் சில்லோர்- பிரமன் வரை யறுத்து எழுதிய வாழ்நாள் உலந்தாருஞ் சிலர். நராதிபன் - மனிதர்களுக்குத் தலைவன்; அரசன். (31) கண்டனர் கன்னி நாடு காவல னமைச்சர் சீற்றங் கொண்டனர் முசல நேமி கூற்றென வீசி யார்த்தார் விண்டனர் மாண்டார் சேனை வீரரு மனைய வெல்லைப் புண்டவ ழெயிற்று வேந்தைப் புடைநின்ற பேடை நோக்கா. (இ - ள்.) கன்னிநாடு காவலன் அமைச்சர்கண்டன் - கன்னி நாட்டினைக் காவல் செய்யும் பாண்டி மன்னனது அமைச்சர் இதனைக் கண்டு, சீற்றம் கொண்டனர் - சினங்கொண்டு, கூற்றுஎன - கூற்றுவனைப் போல, முசலம் நேமி வீசி ஆர்த்தனர்- இருப்புலக்கைகளையும் திகிரிகளையும் எறிந்து ஆரவாரித்தனர்; சேனை வீரரும் விண்டனர் மாண்டார் - (அவற்றால்) படைவீரரனைவரும் உயிர் உண்டு மாண்டனர், அனைய எல்லை- அப்பொழுது, புண்தவழ் எயிற்று வேந்தை - (பகைவரின்) புலாலில் உலாவும் பற்களையுடைய பன்றிவேந்தனை, புடைநின்ற பேடை நோக்கா - பக்கத்தில் நின்ற பெண் பன்றி பார்த்து. கண்டனர், கொண்டனர், விண்டனர் என்பன முற்றெச்சங்கள். புண்தவழ் - தசை பொருந்திய என்றுமாம். எயிறு - பன்றிக் கோடு. (32) ஏவிய சேனை யெல்லா மிறந்தன வினிநாஞ் செய்யல் ஆவதென் வாளா நாமு மழிவதிங் கென்னை தப்பிப் போவதே கரும மென்று புகன்றதத் துணையை நோக்கிச் சாவதை யஞ்சா வேனத் தனியர சொன்று சாற்றும். (இ - ள்.) ஏவிய சேனை எல்லாம் இறந்தன - ஏவிய படை முழுதும் மாண்டன; இனி நாம் செய்யலாவது என் - இனி நாம் செய்யக்கடவது என்னை, நாமும் வாளா இங்கு அழிவது என்னை - நாமும் கொன்னே இங்கு மடிவது என் கருதி, தப்பிப்போவதே கருமம் என்று புகன்றது - உயிர் தப்பி ஓடிப்பாவேதே நமக்குரிய செயலாகும் என்று கூறியது; சாவதை அஞ்சா ஏனத் தனி அரசு - இறப்பினை அஞ்சாத ஒப்பற்ற பன்றியரசு, அத்துணையை நோக்கி ஒன்று சாற்றும் - அங்ஙனங் கூறிய மனைவியை நோக்கி ஒன்று கூறாநிற்கும். ஏவிய - ஏவப்பட்ட : செயப்பாட்டு வினைப்பொருளில் வந்த செய்வினை. அழிவது என்னை - அழிதலாற் பயன் யாது. சாவது - சாதல் : தொழிற்பெயர். (33) நுண்ண றிவுடைய ராகி நூலொடு பழகி னாலும் பெண்ணறி வென்ப தெல்லாம் பேதைமைத் தாத லாலுன் கண்ணறி வுடைமைக் கேற்ற காரிய முரைத்தாய் மானம் எண்ணறி வுடையோர்க் கெல்லா மிழுக்குடைத் தன்றோ வீதால். (இ - ள்.) நுண் அறிவு உடையராகி - நுண்ணிய அறிவினை யுடையராய், நூலொடு பழகினாலும் - பல நூல்களோடு பன்னாட் பழகினும், பெண் அறிவு என்பது எல்லாம் பேதைமைத்து - பெண்ணறிவு என்று சொல்லப்படுவ தெல்லாம் பேதைமையை யுடையது; ஆதலால் - ஆதலினால், உன்கண் அறிவுடைமைக்கு ஏற்ற காரியம் உரைத்தாய் - உன்னிடத்துள்ள அறிவுடைமைக்குப் பொருந்திய கருமத்தைக் கூறினாய்; மானம் எண் அறிவு உடையோர்க்கு எல்லாம் - மானத்தைப் பொருளாகக் கருதும் அறிவுடையோர் அனைவர்க்கும், ஈது இழுக்கு உடைத்து அன்றோ - இது குற்றமுடைய தல்லவா? " நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும் பெண்ணறி வென்பது பெரும்பே தைமைத்தே" என்பது தொன்மொழி. என்பதெல்லாம் ஒருமைப்பன்மை மயக்கம்; "உள்ளுவதெல்லாம்" என்புழிப்போல. உன்கண் அறிவுடைமைக்கு ஏற்ற - உனக்கு இயல்பாகிய பேதைமையறிவுக்கேற்ற, ஈது - போரிற் புறங்காட்டுதலாகிய இச்செயல். ஆல் : அசை. (34) தூங்கிருள் வறுவாய்ச் சிங்க மிரண்டுறை துறையின் மாடோர் வாங்கிரு மருப்புக் கேழல் வந்துநீர் பருகி மீளும் வீங்கிரு ளுடற்கா ரேன மொன் றுறை துறையில் வீரந் தாங்கிரு மடங்க னீர்க்குத் தலைப்பட வஞ்சு மன்றே. (இ - ள்.) இருள் தூங்கு வறுவாய்ச் சிங்கம் இரண்டு - இருள் தங்கிய வறி வாயையுடைய இரண்டு சிங்கங்கள், உறை துறையின் மாடு - உறைகின்ற நீர்த்துறையின்கண், வாங்கு இருமருப்பு ஓர் கேழல் - வளைந்து இரண்டு கொம்புகளையுடைய ஒரு பன்றி, வந்து நீர் பருகி மீளும் - அஞ்சாது வந்து நீர் குடித்துச்செல்லும்; வீங்கு இருள் உடல் கார்ஏனம் ஒன்று உறை- செறிந்த இருள் போன்ற கரிய உடலையுடைய ஒரு பன்றி உறையும், துறையில் - நீர்த்துறையின்கண், வீரம் தாங்கு இரு மடங்கல்- வீரத்தை அணியாகத் தாங்கிய இரண்டு சிங்கங்கள், நீர்க்குத் தலைப்பட அஞ்சும் - நீர் பருகுதற்கு வர அஞ்சா நிற்கும். முழை போலும் வாயென்பார் 'தூங்கிருள் வாய்' என்றார். வறுவாய் - உணவு பெறாதிருக்கும் வாய். வீங்கிருள் போலும் காருடல் என்க. இரு சிங்கம் உறையுந் துறையில் ஓர் கேழல் அஞ்சாது வந்து பருகி ஏதமின்றி மீளும்; ஓர் ஏனம் உறையுந் துறையில் இரு சிங்கம் தலைப்படவும் அஞ்சும் எனத் தன் குலத்திற்குரிய வீரத்தையும் வெற்றியையும் எடுத்துக் காட்டிற்று. அன்று, ஏ : அசைகள். (35) அத்திட மரபின் வந்து பிறந்துளே னாத லாலே கைத்திடு தாரான் வீரங் கவர்ந்திசை திசையும் வானும் வைத்திட வல்லே னன்றி மடிந்திட வல்லே னாகிற் பொய்த்திடு முடம்பே யன்றிப் புகழுடம் பழிவ துண்டோ. (இ - ள்.) அ திடம் மரபின் வந்து பிறந்துளேன் - யான் அத்தகைய வீரம் வாய்ந்த குடியில் (மேலைத் தவத்தால்) வந்து பிறந்தேன்; ஆதலாலே - ஆகையால், கைத்திடு தாரான் வீரம் கவர்ந்து - கைப்பினையுடைய வேப்ப மலர் மாலையையணிந்த இப்பாண்டியனுடைய வீரத்தைக் கொள்ளை கொண்டு, இசை திசையும் வானும் வைத்திட வல்லேன் - எனது புகழை எட்டுத் திக்குகளிலும் விண்ணுலகினும் நாட்டுதற்கு வல்லவனாவேன்; அன்றி - அங்ஙனஞ் செய்யாது, மடிந்திட வல்லேனாகில் - புறங்கொடாது மடியவல்லேனானால், பொய்த்திடும் உடம்பே அன்றி - என்றும் அழியுந் தன்மையையுடைய இப்பூதவுடம்பு அழிவதேயன்றி, புகழ் உடம்பு அழிவது உண்டோ - புகழுடம்பும் அழிவதுண்டோ? (இல்லை யென்றபடி.) கைக்கும் பூவாலாகிய மாலையைக் கைக்கும் மாலை என்றார். பொய்த்திடும் உடம்பு - நிலைபெறாத உடம்பு; என்றேனும் அழியும் உடம்பு. புகழ் உடம்பு - புகழாகிய உடம்பு. ஓகாரம் எதிர் மறைப் பொருட்டு. (36) [கலிநிலைத்துறை] நீநில் லெனத்தன் பெடைதன்னை நிறுத்தி நீத்தென் கானில் லெனவாழ் கருமாவின் கணங்க ளெல்லாம் ஊனில் லுயிருண் டனமென்றினி யோடல் கூடற் கோனில் லெனவார்ப் பவன்போலக் கொதித்து நேர்ந்தான். (இ - ள்.) நீ நில் என - அஞ்சுகின்ற நீ நிற்கக் கடவை என்று கூறி, தன் பெடைதன்னை நிறுத்தி - தனது பெண் பன்றியை நிறுத்தி, நீத்து - அதனின் நீங்கி, என் கான் இல் என வாழ் - எனது காட்டினை இல்லமாகக் கொண்டு வாழ்ந்த, கருமாவின் கணங்கள் எல்லாம் - பன்றிக் கூட்டங்கள் முழுதையும், ஊன் நில் உயிர் உண்டனம் என்று இனி ஓடல் - உடம்பிலுள்ள உயிரைக் கவர்ந்தனம் என்று மகிழ்ந்து இனி ஓடற்க; கூடற்கோன் நில் என ஆர்ப்பவன் போல - கூடற்றலைவனாகிய பாண்டியனே நிற்பாயாக என்று கூறி ஆரவாரிப்பவனைப் போல, கொதித்து நேர்ந்தான் - வெகுண்டு எதிர்ந்தான். கருமா - பன்றி. கணங்களெல்லாவற்றையும் என இரண்டனுருபு விரித்து, உயிருண்டனம் என்பதை ஒரு சொல்லாக்கி முடிக்க. ஊனில் : இடைப்பிறவரல், ஓடல், அல் : எதிர்மறைக்கண் வந்தது; "மகனெனல்" என்புழிப் போல. கோன் : விளி. (37) நிலத்தைக் கிளைத்துப் பிலங்காட்டி நிமிர்ந்த தூள்வான் தலத்தைப் புதைப்பத் தனியேன வரவு நோக்கி வலத்தைப் புகழ்ந்தான் வியந்தான் சிலைவாங்கி வாளிக் குலத்தைச் சொரிந்தான் பொருநைத்துறைக் கொற்கை வேந்தன். (இ - ள்.) நிலத்தைக் கிளைத்துப் பிலம் காட்டி - நிலத்தைக் கீறிப் பாதலத்தைக் காண்பித்து, நிமிர்ந்த தூள் - மேலெழுந்த புழுதிப் படலம், வான் தலத்தைப் புதைப்ப - விண்ணுலகினை மறைக்க (வருகின்ற), தனி ஏன வரவு - ஒப்பில்லாத பன்றியின் வருகையை, பொருநைத்துறைக் கொற்கை வேந்தன் நோக்கி - பொருநையாற்றின் துறையையும் கொற்கைப் பதியையும் உடைய பாண்டி வேந்தன் கண்டு, வலத்தைப் புகழ்ந்தான் வியந்தான் - அதன் வீரத்தைப் புகழ்ந்து பாராட்டி, சிலை வாங்கி - வில்லை வளைத்து, வாளிக் குலத்தைச் சொரிந்தான் - அம்புக் கூட்டத்தைச் சொரிந்தான். புதைப்ப வருகின்ற ஏன வரவு என விரித்துரைக்க. புகழ்ந்தான், வியந்தான் என்பன முற்றெச்சங்கள். குலம் - கூட்டம். (38) குறித்துச் செழியன் விடுவாளியைக் கோல வேந்தன் பறித்துச் சிலவாளியை வாய்கொடு பைம்பு லென்னக் கறித்துச் சிலவாளியைக் கால்கொடு தேய்த்துத் தேய்த்து முறித்துச் சிலவாளியை வாலின் முறித்து நின்றான். (இ - ள்.) செழியன் - பாண்டியன், குறித்து விடு வாளியை - தன்னைக் குறியாகக் கொண்டு விட்ட அம்புகளை, கோலவேந்தன் பறித்து - பன்றியரசன் (உடம்பினின்றும்) பிடுங்கி, சில வாளியை வாய்கொடு பைம்புல் என்னக் கறித்து - (அவற்றுள்) சில வாளிகளை வாயாலே பசிய புல்லைக் கறித்தல் போலக் கடித்தும், சில வாளியைக் கால் கொடு தேய்த்துத் தேய்த்து முறித்து - சில கணைகளைக் காலாலே தேய்த்துத் தேய்த்து முறித்தும், சில வாளியை வாலின் முறித்து நின்றான் - சில அம்புகளை வாலினால் முறித்தும் நின்றனன். கோலம் - பன்றி. உடம்பினின்றும் பறித்தென்க. கொடு - கொண்டு : மூன்றாம் வேற்றுமைச் சொல். (39) மானம் பொறாது மதியின்வழி வந்த வேந்தன் தானம் பொறாது கவிழ்க்கும்புகர்த் தந்தி கையில் ஊனம் பொறாத முசலங்கொடுத் தேறி யுய்த்தான் ஏனம் பொறாதார்த் திடியேற்றி னெழுந்த தன்றே. (இ - ள்.) மதியின் வழி வந்த வேந்தன் - சந்திரன் மரபில் வந்த இராசராச பாண்டியன், மானம் பொறாது - மானம் மீக்கூர, தானம் பொறாது கவிழ்க்கும் - மதநீரைப் பொறுக்கலாற்றாது கொட்டுகின்ற, புகர்த் தந்தி கையில் - முகத்திற் புள்ளிகளையுடைய யானையின் கையில், ஊனம் பொறாத முசலம் கொடுத்து - குற்றமில்லாத இருப்புலக்கையைக் கொடுத்து, ஏறி உய்த்தான் - ஏறிச் செலுத்தினான்; ஏனம் பொறாது - (அதனைக் கண்ட) பன்றி பொறுக்கலாற்றாது, இடி ஏற்றின் ஆர்த்து எழுந்தது - இடியேறு போல முழங்கி எழுந்தது. மானத்தாற் பொறுக்கலாற்றாது என்றுமாம். ஓர் விலங்கினால் அலைப்புண்டனன் எனப் பிறர் கூறும் பழிக்கு ஆற்றாது நொந்தனன் என்பார் 'மானம் பொறாது' எனவும் வீரமில்லாத ஒரு விலங்கினால் வீர மிக்க எம்மைக் கொல்லக் கருதினன் என்று வெகுண்டதென்பார் 'ஏனம் பொறாதார்த்து' எனவும் கூறினார். தானம்- மதநீர். ஏற்றின், இன் : ஒப்புப் பொருட்டு. அன்று, ஏ : அசைகள். (40) தந்திப் பொருப்பைத் துணிக்கென்று தழன்று சீற்றம் உந்திக் கதலிக் கொழுந்தண்டென வூசற் கையைச் சிந்திப் பிறைவா ளெயிறோச்சிச் சிதைத்து வீட்ட முந்திக் கடுந்தேர் மிசைப்பாய்ந்தனன் மூரித் தாரான். (இ - ள்.) தந்திப் பொருப்பைத் துணிக்கு என்று - யானையாகிய மலையைத் துணிப்பேன் என்று, தழன்று - கொதித்து, சீற்றம் உந்தி - சினமானது செலுத்த, கதலிக் கொழுந்தண்டு என - வாழையின் கொழுவிய தண்டைப் போல, ஊசல் கையைச் சிந்தி - ஊசல் போல் அசைகின்ற துதிக்கையைத் துணித்து, பிறைவாள் எயிறு ஓச்சி - பிறை போன்ற ஒள்ளிய மருப்பினைக் கடாவி, சிதைத்து வீட்ட - உடலைச் சிதைத்துக் கொல்ல, மூரித்தாரான் - வலிய சேனையினையுடைய பாண்டியன், முந்தி - முற்பட்டு, கடுந்தேர்மிசைப் பாய்ந்தனன் - விரைந்த செலவினையுடைய தேரின்மேற் பாய்ந்தேறினான். துணிக்கு - துணிப்பேன்; கு : தன்மை யொருமை எதிர்கால விகுதி. உந்தி - உந்த; எச்சத்திரிபு. தார் - படை. (41) திண்டேர் மிசைநின் றடனேமி திரித்து விட்டான் கண்டேன வேந்தன் விலக்கிக் கடுங்காலிற் பாய்ந்து தண்டே ருடையத் தகர்த்தான்பரி தன்னிற் பாய்ந்து வண்டேறு தாரான் விடவேலை வலந்தி ரித்தான். (இ - ள்.) திண்தேர் மிசை நின்று - வலிய தேரின் மேல் நின்று, அடல் நேமி திரித்து விட்டான் - கொல்லுதலையுடைய திகிரிப்படையைச் சுழற்றி விட்டான்; ஏன வேந்தன் கண்டு விலக்கி - பன்றியரசன் பார்த்து (அதனைத்) தடுத்து, கடுங்காலில் பாய்ந்து - கடிய காற்றைப் போல விரைந்து பாய்ந்து, தண்தேர் உடையத் தகர்த்தான் - தண்ணிய (நிழலையுடைய) தேர் சிதையும்படி உடைத்தான்; வண்டு ஏறு தாரான் - வண்டுகள் மொய்க்கும் மாலையை யணிந்த பாண்டியன், பரி தன்னில் பாய்ந்து - (பின்பு) குதிரைமேற் பாய்ந்து ஏறி, விடவேலை வலம் திரித்தான் - நஞ்சு பூசிய வேற்படையை வலமாகச் சுழற்றினான். (42) சத்திப் படைமேல் விடுமுன்னர்த் தறுகண் வீரன் பத்திச் சுடர்மா மணித்தார்ப்பரி மாவின் பின்போய் மொத்திக் குடர்செம் புனல்சோர முடுகிக் கோட்டாற் குத்திச் செகுத்தான் பொறுத்தானலன் கூடல் வேந்தன். (இ - ள்.) சத்திப்படை - (அங்ஙனஞ் சுழற்றிய) வேற்படையை, மேல் விடு முன்னர் - தன் மீது விடுதற்கு முன்னரே, தறுகண் வீரன் - அஞ்சாமையையுடைய அப்பன்றி வீரன், பத்திச் சுடர் மாமணித்தார்ப் பரிமாவின் பின் போய் - ஒளி வரிசையையுடைய பெரிய மணிகளையுடைய கிண்கிணி மாலையையணிந்த அந்தக் குதிரையின் பின் சென்று, மொத்தி - தாக்கி, குடர் செம்புனல் சோர - குடரும் குருதியும் சோர, கோட்டால் முடுகிக் குத்தி - கொம்பினால் விரைந்து குத்தி, செகுத்தான் - அதனைக் கொன்றனன்; கூடல் வேந்தன் பொறுத்தான் அலன் - பாண்டியன் அது கண்டு பொறுக்கலாற்றாது. பரிமா : இருபெயரொட்டு. குடரும் புனலும் சோரக்குத்தி என்க. குடர் : போலி. (43) மண்ணிற் குதித்து வலிகண்டு வராக வேந்தை எண்ணித் தலையிற் புடைத்தான்கை யிருப்புத் தண்டாற் புண்ணிற் படுசெம் புனலாறு புடவி போர்ப்ப விண்ணிற் புகுந்தான் சுடர்கீறி விமான மேலால். (இ - ள்.) மண்ணில் குதித்து - நிலத்திலே குதித்து, வலி கண்டு வராக வேந்தை எண்ணி - வலியினைக் கண்டு பன்றியரசனை மதித்து, கை இருப்புத் தண்டால் தலையில் புடைத்தான் - கையிலுள்ள இருப் புலக்கையாலே தலையில் அடித்தான்; புண்ணில்படு செம்புனல் ஆறு புடவி போர்ப்ப - அந்தப் புண்ணினின்று பொழியும் குருதியாறு புவியை மூட, சுடர் கீறி விமான மேலால் விண்ணில் புகுந்தான் - சூரிய மண்டலத்தைக் கிழித்து விமான மீதேறி விண்ணுலகடைந்தனன். எண்ணி என்பதற்கு அடிக்குமிடத்தை ஆராய்ந்து எனப் பொருள் கொண்டு, வலி கண்டு எண்ணி வேந்தைத் தலையிற் புடைத்தான் என்றியைத் துரைத்தலுமாம். போரிற்புறங் கொடாது உயிர் துறந்த வீரர் ஞாயிற்றின் மண்டிலம் வழியாகச் சென்று துறக்கம் புகுவர் என்ப. (44) வேனிற் கிழவோனில் விளங்கி வியந்து வானோர் தேனிற் பொழிபூ மழைபெய்ய நனைந்து தெய்வக் கானத்1 தமுதுண் டிருகாது2களித்து வீர வானத் தமுதுண் டரமங்கையர் கொங்கை சேர்ந்தான். (இ - ள்.) வேனில் கிழவோனில் விளங்கி - வேனிற் காலத்துக்கு உரிமை பூண்ட மன்மதன் போல் விளங்கி, வானோர் வியந்து பொழிபூ - தேவர்கள் வியப்புற்றுப் பொழியும் பூக்கள், தேனின் மழை பெய்ய நனைந்து - தேனாகிய மழையினைப் பொழிய அதில் நனைந்து, தெய்வக் கானத்து அமுது இரு காது உண்டு களித்து - தெய்வத் தன்மை பொருந்திய இசையாகிய அமுதினை இரண்டு செவிகளாலும் பருகி மகிழ்ந்து, வீரவானத்து அமுது உண்டு - வீர சுவர்க்கத்துள்ள தேவ அமுதினை உண்டு, அரமங்கையர் கொங்கை சேர்ந்தான் - அரமாதர்களின் கொங்கையை அணைந்தான். அங்ஙனம் துறக்கம் புக்கவன் பேரழகுடைய திப்பிய யாக்கை யுடையனாய் ஐம்புல இன்பங்களும் ஆரத்துய்த்தனன் என்றார். விளங்கி நனைந்து உண்டு உண்டு சேர்ந்தான் என வினை முடிக்க. (45) [கலிவிருத்தம்] பின்றுணை யாய பெடைத்தனி யேனம் என்றுணை மாய விருப்பது கற்போ வென்றில னேனும் விசும்படை வேனால் என்றிகல் வேந்தை யெதிர்த்த துருத்தே. (இ - ள்.) பின் - பின்னர், துணையாய தனிபெடை ஏனம் - துணை யாக நின்ற ஒப்பற்ற பெண் பன்றி, என் துணை மாய - என் துணைவன் இறந்தொழிய, இருப்பது கற்போ - யான் உயிருடன் இருப்பது கற்பு நெறியாமோ, வென்றிலனேனும் விசும்பு அடைவேன் என்று - வெல்லா விடினும் என் துணைவனோடு விண்ணுலகைச் சேர்வேனென்று கருதி, இகல் வேந்தை உருத்து எதிர்த்தது - பகைமையையுடைய பாண்டி மன்னனைச் சினந்து எதிர்த்தது. கணவன் துஞ்சியக்கால் உடன்றுஞ்சுதல் உத்தமக் கற்புடை மகளிர் இயல்பு; இதனை, " காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி ஊதுலைக் குருகி னுயிர்த்தகத் தடங்காது இன்னுயி ரீவர்" என்னும் மணிமேகலையானறிக. ஆல் : அசை. (46) விறனவில் பேட்டை விளிப்பது வேந்தர்க் கறனல வென்றவ னாள்வினை மள்ளர்க் கிறைமக னான சருச்சர னென்றோர் மறமக னேர்ந்தம ராட வளைந்தான். (இ - ள்.) விறல் நவில் பேட்டை - வீரங்கூறி எதிர்த்த அப்பெண் பன்றியை, விளிப்பது வேந்தர்க்கு அறன் அல என்று - மாய்ப்பது மன்னருக்கு அறமல்ல என்று கருதி, அவன் - அம்மன்னனுடைய, ஆள் வினை மள்ளர்க்கு இறைமகனான - போர்த் தொழிலை யுடைய வீரர்க்குத் தலைவனான, சருச்சரன் என்ற ஓர் மற மகன் - சருச்சரனென்ற பெயரினையுடைய ஒரு வேடன், நேர்ந்து அமர் ஆட வளைந்தான் - எதிர்த்துப் போர் புரிதற்குச் சூழ்ந்தான். விளிப்பது - விளியச் செய்வது; சொல்வது. என்ற என்பதன் அகரம் தொக்கது. (47) நனிபொழு தாடம ராடின னஞ்சிற் கனிசின வன்பெடை காய்சின வேடத் தனிமக னைத்தரை வீட்டின தாற்றல் இனியிலை யென்ன விளைத்துயிர் சோர்வான். (இ - ள்.) நனி பொழுது ஆடு அமர் ஆடினன் - நெடும் பொழுது வெற்றியைத் தரும் போர் புரிந்தான்; நஞ்சில் கனி சினவன் பெடை - நஞ்சினும் முதிர்ந்த சினத்தையுடைய வலிய அப் பெண் பன்றி, காய்சின வேடத் தனி மகனை - காய்கின்ற சினத்தை யுடைய வேடனாகிய ஒப்பற்ற சருச்சரனை, தரை வீட்டினது - தரையில் வீழ்த்தியது; இனி ஆற்றல் இலை என்ன - இனிப் போர் புரிய வலியில்லை என்று சொல்லுமாறு, இளைத்து உயிர் சோர்வான் - மெலிந்து உயிர் சோர்வானாகிய அவன். ஆடமர் - வென்றியைச் செய்யும் போர்; கொல்லும் போர் என்றுமாம். (48) இரும்புசெய் தண்டினை யிம்மென வோங்கிப்1 பொரும்பெடை சென்னி புடைத்து விளிந்தான் விருந்தின ராயிரு வோரும் விமானத் தருந்திறல் வான மடைந்தன ரன்றே. (இ - ள்.) இரும்பு செய் தண்டினை - இரும்பாற் செய்த தண்டத்தை, இம்மென ஓங்கி - விரைந்து ஓங்கி, பொரும் பெடை சென்னி புடைத்து விளிந்தான் - போர் புரியும் பெண் பன்றியின் தலையில் அடித்து இறந்தனன்; இருவோரும் - அவ்விருவரும், விமானத்து - விமானத்திலேறி, அருந்திறல் வானம் விருந்தினராய் அடைந்தனர் - வீரசுவர்க்கத்துக்கு விருந்தினராகச் சென்றனர். இம்மென : விரைவுக் குறிப்பு. உயிர்சோர்கின்றவன் விரைய இருப்புத் தண்டினைப் பெடையின் தலையிற் புடைத்துக் கொன்று தானும் உயிர் துறந்தான் என்க. அருந்திறல் வானம் - வீரசுவர்க்கம். அன்று, ஏ :அசைகள்; அப்பொழுதே என்றுமாம். (49) வன்றிறன் மன்னவர் மன்னவ னுந்தன் பொன்றிகழ் மாநகர் புக்கன னிப்பாற் பன்றி விழுந்து பருப்பத மாகா நின்றது பன்றி நெடுங்கிரி யென்ன. (இ - ள்.) வன்திறல் மன்னவர் மன்னவனும் - மிக்க வலியினை யுடைய இராசராச பாண்டியனும், தன்பொன் திகழ் மாநகர் புக்கனன் - தனது அழகு விளங்கா நின்ற பெரிய நகரிற் புகுந்தான்; இப்பால் - இப்புறம், பன்றி விழுந்து - அப்பன்றி கீழே விழுந்து, பன்றி நெடுங்கிரி என்ன - நெடிய பன்றி மலை என்று அனைவருங் கூற, பருப்பதம் ஆகா நின்றது - மலையாகி நின்றது. வன்றிறல் : ஒருபொருட் பன்மொழி. மன்னவர் மன்னவன்: பெயர். (50) அன்று தொடுத்தத னுக்கது பேராய் இன்றும் வழங்குவ திம்பரி னந்தக் குன்றி லருந்தவர் விஞ்சையர் கோபம் வென்றவ ரெண்ணிலர் வீடுற நோற்பார். (இ - ள்.) இம்பரில் - இந்நிலவுலகில், அன்று தொடுத்து- அக்காலந்தொட்டு, அதனுக்கு அது பேராய் - அம்மலைக்கு அதுவே பெயராகி,இன்றும் வழங்குவது - இஞ்ஞான்றும் வழங்கா நின்றது; அந்தக் குன்றில் - அந்தப் பன்றி மலையில், அருந்தவர் விஞ்சையர் எண்ணிலர் - முனிவரும் விஞ்சையருமாகிய அளவிறந்தோர், கோபம் வென்றவர் - சினத்தைக் களைந்தவராகி, வீடு உற நோற்பார் - வீடுபேற்றினை அடையத் தவஞ் செய்வார்கள். தொடுத்து - தொடங்கி. அருந்தவர் - முனிவர். கோபம் வென் றெனவே காம மயக்கங்களை வென்றென்பதும் உபலக்கணத்தாற் பெறப்படும். (51) [கலிநிலைத்துறை] என்று கூறிய வருந்தமிழ்க் கிறைவனை நோக்கித் துன்று மாதவ ரறிவிலாச் சூகர வுருவக் குன்றின் மீதிருந் தவரெலாங்1 கோதற நோற்று நின்ற காரணம் யாதெனக் குறுமுனி2நிகழ்த்தும். (இ - ள்.) என்று கூறிய அருந்தமிழ்க்கு இறைவனை நோக்கி - என்று இங்ஙனங் கூறியருளிய அரிய தமிழுக்கு இறைவனாகிய அகத்திய முனிவனைப் பார்த்து, துன்றும் மாதவர் - நெருங்கியிருந்த முனிவர்கள், அவர் எலாம் - அம்முனிவர் விச்சாதர ரெல்லாம், அறிவு இலாச் சூகர உருவக் குன்றின் மீது இருந்து - அறிவில்லாத பன்றி வடிவாகிய அம்மலையின்மேல் இருந்து, கோதற நோற்று நின்ற காரணம் யாது என - குற்றம் நீங்கத் தவஞ் செய்து நின்ற காரணம் யாதென்று வினவ, குறுமுனி நிகழ்த்தும் - அகத்திய முனிவன் கூறும். தமிழை வளர்த்தோருள் முதன்மை பூண்டிருத்தலின் அகத்தியனைத் 'தமிழுக்கிறைவன்' என உபசாரமாகக் கூறினார். இருந்தவர் எலாம் என்பதற்குப் பெரிய தவத்தோரெல்லாம் என்றுரைத் தலும் பொருந்தும். நின்ற காரணம் - நின்றமைக்குக் காரணம். (52) வேனில் வேளென விளங்குவிச் சாதர னென்னுந் தான யாழ்மகன் புலத்தியன் றவத்தினுக் கிடையூ றான பாண்செயப் பன்றியாச் சபித்தன னறவோன் ஏன மாகுவோ னுய்வதென் றெனக்கென முனிவன். (இ - ள்.) வேனில் வேள் என விளங்கு - வேனிற் காலத்துக் குரிய காமனைப் போல வடிவம் பெற்று விளங்கும், விச்சாதரன் என்னும் தான யாழ் மகன் - விச்சாதரன் என்று கூறப்படும் தானங்கள் அமைந்த யாழில் வல்ல இயக்கன் ஒருவன், புலத்தியன் தவத்தினுக்கு இடையூறு ஆன பாண் செய - புலத்திய முனிவன் தவத்துக்கு இடையூறு விளைத்தலையுடைய இசைப்பாட்டினைப் பாட, அறவோன் பன்றியாச் சபித்தனன் - அம்முனிவன் அவனைப் பன்றியாமாறு சபித்தனன்; ஏனம் ஆகுவோன் - அங்ஙனம் பன்றியாகும் அவன், உய்வது எனக்கு என்று என - எனக்கு இச்சாபத்தினின்று நீங்குதற்குரிய காலம் யாதென்று வினவ, முனிவன் - அப் புலத்திய முனிவன். பாண்செய என்பதற்குக் கீழ்மை செய்ய என்றும் உரைக்க. முன்னரும் கூறப்பட்டது. ஆக என்பது ஈறு தொக்கது. ஆக - ஆகும்படி. (53) மன்னர் மன்னனாந் தென்னவன் வந்துநின் வனத்திற் றுன்னு பல்வகை விலங்கெலாந் தொலைத்துனை மாய்க்கும் பின்ன ரிவ்வுருப் பெறுகெனப் பணித்தன னியக்கன் அன்ன வாறுவந் திறந்துபின் பழவுரு வடைந்தான். (இ - ள்.) மன்னர் மன்னனாம் தென்னவன் வந்து - இராசராச பாண்டியன் வந்து, நின் வனத்தில் துன்னு பல்வகை விலங்கு எலாம் தொலைத்து - நின் காட்டில் நெருங்கிய பல வகையான விலங்குகளையெலாம் மாய்த்து, உனை மாய்க்கும் - உன்னையுங் கொல்லுவான்; பின்னர் இவ்வுருப் பெறுக எனப் பணித்தனன்- பின் இந்த வடிவத்தைப் பெறக்கடவை என்று அருளிச் செய்தனன்; இயக்கன் - அந்த இயக்கன், அன்னவாறு வந்து இறந்து பின் பழ உரு அடைந்தான்; அங்ஙனமே பன்றியாக வந்து இறந்து பின் பழைய வடிவத்தைப் பெற்றனன். மன்னர் மன்னன் என்பதற்கு மேல் உரைத்தமை காண்க; இரட்டுற மொழிதலாக்கி, அரசர்க்கு அரசனாகிய இராசராச பாண்டியன் என்றுரைத்தலும் பொருந்தும். பெறுகென : அகரந்தொகுத்தல். முனிவன் பணித்தனன் என்க. (54) ஆய புண்ணிய விஞ்சைய னாகமாய்க் கிடந்த தூய நீரதா லவ்வரை மீமிசைத் துறந்த பாய கேள்விய ரிறைகொளப் பட்டதெவ் வுயிர்க்கும் நாய னார்மது ரேசரு நயந்தவ ணுறைவார். (இ - ள்.) ஆய புண்ணிய விஞ்சையன் - அந்தப் புண்ணிய வடிவினனாகிய இயக்கனுடைய, ஆகமாய்க் கிடந்த தூய நீரதால்- உடலாகக் கிடந்த தூய தன்மையை யுடையதாதலால், அவ்வரை- அம்மலை, மீமிசை - தன்மேல், துறந்த பாய கேள்வியர் இறை கொள்ளப்பட்டது - முற்றத் துறந்த பரந்த நூற்கேள்வியினை யுடைய முனிவர் முதலியோரால் தங்கப்பட்டது; எவ்வுயிர்க்கும் நாயனார் மதுரேசரும் - எல்லாவுயிர்கட்கும் இறைவராகிய மதுரை நாயகரும், அவண் நயந்து உறைவார் - அவ்விடத்தில் விருப்பத்துடன் எழுந்தருளியிருப்பர். நீரது - நீர்மையுடையது. ஆல் - ஆகையால். மீமிசை ஒரு பொருட் பன்மொழி. இறைகொளல் - தங்கல். (55) என்ற கத்தியன் விடைகொடுத் தியம்பின னிப்பாற் பன்றி யேற்றையும் பாட்டியும் பைம்புனத் திட்டுச் சென்ற விந்தபின் பன்னிரு குருளையுந் திகைப்புற் றன்ற லக்கணோ யுழந்தமை யாரளந் துரைப்பார். (இ - ள்.) என்று அகத்தியன் விடை கொடுத்து இயம்பினன்- என்று அகத்திய முனி விடை கூறியருளினன்; இப்பால் - பின், பன்றி ஏற்றையும் பாட்டியும் - ஆண் பன்றியும் பெண் பன்றியும், பைம் புனத்து இட்டுச் சென்று அவிந்த பின் - பசிய காட்டின்கண் விட்டுப் போய் மாண்ட பின்னர், பன்னிரு குருளையும் - பன்னிரண்டு குட்டிகளும், திகைப்புற்று - திகைத்து, அன்று அலக்கண் நோய் உழந்தமை - அந்நாள் துன்பநோயிற்பட்டு வருந்தியதை, அளந்து உரைப்பார் யார் - வரையறுத்துக் கூறவல்லார் யார் (ஒருவருமில்லை என்றபடி.) ஏற்றை - விலங்கின் ஆண்; " ஏறும் ஏற்றையும்" என்னும் தொல்காப்பியச்சூத்திரத்தால் ஏற்றை பெயராதல் அறிக. (56) ஓடு கின்றன தெருமர லுறுவன நிழலைத் தேடு கின்றன தாய்முலைத் தீயபால் வேட்டு வாடு கின்றன தாகவெம் பசிநனி வருத்த வீடு கின்றன வெயில்சுட வெதும்புகின் றனவால். (இ - ள்.) ஓடுகின்றன - (அக்குட்டிகள் தாய் தந்தையரைத் தேடி) ஓடுகின்றன; தெருமரல் உறுவன - (காணாமையால்) சுழலுகின்றன; நிழலைத் தேடுகின்றன - நிழலைத் தேடி அலைகின்றன; தாய் தீயமுலைப் பால் வேட்டு வாடுகின்றன - தாயினது இனிய முலைப் பாலை விரும்பி வாட்டமடைகின்றன; தாகம் வெம்பசி நனிவருத்த வீடுகின்றன - நீர் வேட்கையும் கொடிய பசியும் மிகவுந் துன்புறுத்தலால் உயிர் சோருகின்றன; வெயில் சுட வெதும்புகின்றன - வெயில் சுடுதலால் வெதும்பி வருந்துகின்றன. தீய - இனிய. ஆல் : அசை. (57) இன்ன வாறிவை யணங்குறு மெல்லைவேல் வல்ல தென்ன ராகிய தேவர்க டேவரங் கயற்கண் மின்ன னாளொடு மின்னவிர் விமானமீ தேறி அன்ன கானகத் திச்சையா லாடல்செய் திருந்தார். (இ - ள்.) இவை இன்னவாறு அணங்குறும் எல்லை - இக்குட்டிகள் இங்ஙனந் துன்புறும் பொழுது, வேல்வல்ல - வேலாற் செய்யும் போரில் வல்ல, தென்னராகிய தேவர்கள் தேவர் - சுந்தர பாண்டியராகிய தேவர்கள் தேவராகும் இறைவர், அங்கயற்கண் மின் அனாளொடு - மின்னலை ஒத்த அங்கயற் கண்ணம்மையோடு, மின் அவிர் விமான மீது ஏறி - ஒளி விளங்கும் விமானத்தின் மேலேறியருளி, அன்ன கானகத்து - அந்தக் காட்டின்கண், இச்சையால் ஆடல் செய்திருந்தார் - தமதிச்சையினால் திருவிளையாடல் புரிந்து கொண்டிருந்தார். இச்சையாவது உயிர்க்கு அருள் நேசமாகும். (58) ஏன மென்பற ழுறுகணோய்க் கிரங்கினா ரிச்சை ஆன வன்புதந் தத்துய ரகற்றுவா னீன்ற1 மான வன்புடைப் பேடையின் வடிவெடுத் தயருங் கான வன்பறழ் கலங்கஞர் கலங்கநேர் வந்தார். (இ - ள்.) ஏனம் மென் பறழ் உறுகண் நோய்க்கு இரங்கினார்- மென்மையுடைய அப்பன்றிக் குட்டிகளின் துன்ப நோய்க்கு இரங்கி, இச்சை ஆன அன்பு தந்து - விருப்பமாகிய அன்பினை வைத்து, அத்துயர் அகற்றுவான் - அத்துன்பத்தையொழித்தருள, ஈன்ற மான அன்பு உடைப் பேடையின் வடிவு எடுத்து - அவற்றை ஈன்ற மிக்க அன்பினையுடைய பெண் பன்றியின் வடிவினை எடுத்து, கானம் அயரும் - காட்டின்கண் சோருகின்ற, வன்பறழ் - வலிய அக்குட்டிகளின், கலங்கு அஞர் கலங்க - கலங்குதற் கேதுவாகிய பசித்துன்பம் கலங்கி நீங்குமாறு, நேர் வந்தார் - எதிரே வந்தருளினார். இளமை பற்றி மென்பறழ் என்றும், சாதி பற்றி வன்பறழ் என்றும் கூறினாரெனக் கொள்க. மானம் ஈண்டு மிகுதியை உணர்த்திற்று. (59) கிட்டு கின்றதந் தாயெதிர் குட்டியுங் கிட்டி முட்டு கின்றன மோப்பன2 முதுகுறத் தாவி எட்டு கின்றன கால்விசைத் தெறிவன நிலத்தை வெட்டு கின்றன குதிப்பன வோடுவ மீள்வ. (இ - ள்.) கிட்டுகின்ற தம் தாய எதிர் - அங்ஙனம் நெருங்கி வருகின்ற தங்கள் தாயினெதிரே, குட்டியும் - குட்டிகளும், கிட்டி முட்டுகின்றன - நெருங்கி மோதுவனவும், மோப்பன - மோப்பனவும், முதுகு உறத் தாவி எட்டுகின்றன - முதுகிற் பொருந்தத் தாவி எட்டுவனவும், கால் விசைத்து எறிவன நிலத்தை வெட்டுகின்றன - காலை விசைந்துப் பின் எறிந்து நிலத்தை வெட்டுவனவும், குதிப்பன ஓடுவ மீள்வ - குதிப்பனவும் ஓடுவனவும் மீள்வனவும் ஆயின. எறிவனவாய் வெட்டுகின்றன என்க. தாயைக் கண்ட உவகையால் இங்ஙனம் செய்தன. பன்றிக் குட்டிகளின் தொழிற்றிறங்களை நன்கு விளக்குதலால் இச் செய்யுள் தன்மை நவிற்சியாகும். (60) ஏன மின்னமுங் காண்பரி தாகிய வேனம் ஆன மெய்ம்மயிர் முகிழ்த்திடத் தழுவிமோந் தருளின் மான மென்முலை யருத்திமா வலனும்வன் றிறனும் ஞான மும்பெருந் தகையுநற் குணங்களு நல்கா. (இ - ள்.) ஏனம் இன்னமும் காண்பரிதாகிய ஏனம் - திருமாலாகிய பன்றி இன்னமுங் காண்டற் கரிதாகிய பன்றி, மெய் ஆன மயிர் முகிழ்த்திட - மெய்யிலுள்ள மயிர் முகிழ்க்க, தழுவி மோந்து- அவற்றை அணைத்து மோந்து, அருளின் மானம் மென்முலை அருத்தி - அருளினாற் சுரந்த பெரிய மெல்லிய முலைப்பாலை ஊட்டி, மாவலனும் வன்றிறனும் - சிறந்த வெற்றியும் மிக்க வலியும், ஞானமும் பெருந்தகையும் நற்குணங்களும் நல்கா - ஞானமும் பெருந்தகைமையும் ஏனை நற்குணங்களுமாகிய இவற்றைத் தந்தருளி. திருமால் பன்றியுருவெடுத்துத் தேடி இன்னமும் காண்டற்கரிய பரம் பொருளாகிய சிவபெருமான் தான் ஒரு பெண் பன்றியாகிப் பன்றிக் குட்டிகள் இருக்குமிடம் தேடி வந்து அவற்றிற்கு முலை கொடுத்தருளினன் என இறைவன் வானோர்க் கரியனாயும் ஏனோர்க் கெளியனாயும் இருக்குந் தன்மையை நயம்படக் கூறினார். இறைவன் அளித்த பால் திருவருள் ஆகையால் வலம் முதலிய யாவும் அவற்றிற்கு எய்துவனவாயின என்க : குழவிகள் பின் எய்தும் நலங்களுக்கெல்லாம் முன் உண்ட தாய்ப்பால் காரணமாமென்பதும் இதனாற் பெறப்படுதல் ஓர்க. (61) துங்க மாமுக மொன்றுமே சூகர முகமா அங்கம் யாவையு மானுட யாக்கைய வாக்கிக் கங்கை நாயகன் கடவுளர் நாயகன் கயற்கண் மங்கை நாயகன் கருணையாந் திருவுரு மறைந்தான். (இ - ள்.) துங்கமாமுகம் ஒன்றுமே சூகர முகமா - சிறந்த பெரிய முகம் ஒன்றனையும் பன்றி முகமாக (வைத்து), அங்கம் யாவையும் - ஏனைய உறுப்புக்களனைத்தையும், மானுட யாக்கைய ஆக்கி - மக்கள் உடலிலுள்ள உறுப்புக்களாகச் செய்து, கங்கை நாயகன் - கங்கையின் கேள்வனும், கடவுளர் நாயகன் - தேவர்கள் தலைவனும், கயற்கண் மங்கை நாயகன் - அங்கயற்கண் ணம்மையின் நாதனுமாகிய சோம சுந்தரக் கடவுள், கருணையாம் திருஉரு மறைந்தான்- அருளாற் கொண்ட அத்திருவுருவம் மறைந்தருளினான். யாக்கையவாக ஆக்கி என விரிக்க. (62) இம்மை யிப்பவத் தன்னையா யினிவரு பவமுஞ் செம்மை செய்தசே தனத்தையுஞ் சேதனஞ் செய்தார் எம்மை யெப்பவத் தாயினு மெனைப்பல வுயிர்க்கும் அம்மை யப்பராய்க் காப்பவ ரவரலா லெவரே. (இ - ள்.) இம்மை இப்பவத்து அன்னையாய் - இந்நிலவுலகில் இப் பன்றியாகிய பிறப்பின்கண் தாயாய் வந்து முலை கொடுத்து, அசேதனத்தையும் சேதனம் செய்து - அறிவில்லாத பன்றிக் குட்டிகளையும் அறிவுடை மக்களாகச் செய்து, இனி வரு பவமும் செம்மை செய்தார் - மேல் வரும் பிறவியையுந் தூய்மையாக்கினார்; எம்மை எப்பவத்து ஆயினும் - எவ்வுலகத்தில் எப்பிறவியிலாயினும், எனைப் பல உயிர்க்கும் - பல வகையான உயிர்களெல்லாவற்றுக்கும், அம்மை அப்பராய்க் காப்பவர் - தாயும் தந்தையுமாகி நின்று காப்பவர். அவர் அலால் எவர் - அவரேயல்லால் வேறு யாவர்? (ஒருவருமில்லை என்றபடி.) அசேதனம் - பகுத்தறிவில்லது. சேதனம் - பகுத்தறிவுள்ளது. சேதனஞ் செய்து செம்மை செய்தார் என விகுதி பிரித்துக் கூட்டுக. எவ்விடத்து எப்பிறப்பிலும் அருள் செய்பவர் சிவபெருமான் என்பதனை, " எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க் கிங்கேயென் றருள்புரியு மெம்பெருமான்" என ஆளுடைய பிள்ளையாரஅருளிச் செய்தல் காண்க. அம்மையப்பராய் என்னும் தொடர் "அம்மையே அப்பா” என்னும் திருவாசகத்தை நினைவூட்டுகின்றது. இங்ஙனம் இறைவன் பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுத்தருளிய பெருங்கருணைத் திறத்தை; " ஏவுண்ட பன்றிக் கிரங்கி யீசன் எந்தை பெருந்துறை யாதி யன்று கேவலங் கேழலாய்ப் பால்கொ டுத்த கிடப்பறி வாரெம் பிரானாவாரே" எனத் திருவாதவூரடிகள் அருளிச் செய்தல் காண்க. (63) ஆகச் செய்யுள் 2255 நாற்பத்தாறாவது பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம் [கலிநிலைத்துறை] தந்தை தாயிழந் தலமரு குருளையைத் தாயாய் வந்து நாயகன் முலைகொடுத் தருளிய வகையீ தந்த வாறிரு மைந்தரு மந்திர ராகி எந்தை யார்சிவ புரம்புகுந் திருந்தவா றிசைப்பாம். (இ - ள்.) தந்தை தாய் இழந்து - தந்தையையும் தாயையும் இழந்து, அலமரு குருளையை - வருந்திய பன்றிக் குட்டிகளுக்கு, நாயகன் தாயாய் வந்து - இறைவன் தாய்ப் பன்றியாக உருவெடுத்து வந்து, முலை கொடுத்தருளிய வகை ஈது - முலை கொடுத்த திருவிளையாடல் இது; அந்த ஆறிரு மைந்தரும் - (இனி) அந்தப் பன்னிரண்டு குமரர்களும், மந்திரர் ஆகி - பாண்டியனுக்கு அமைச்சர்களாகி(ப்பின்), எந்தையார் சிவபுரம் புகுந்து இருந்தவாறு இசைப்பாம் - எம் தந்தையாராகிய இறைவரது சிவலோகத்தை அடைந்திருந்த திருவிளையாடலைக் கூறுவோம். (1) குருளையை குருளைக்கு : வேற்றுமை மயக்கம். ஆதி நாயகன் றிருவுரு மறைந்தபி னனைய கோதி லாறிரண் டேனமாக் குமரருங் காலைச் சோதி யாறிரண் டருக்கர்போற் றோன்றியப் பொருப்பில் ஓதி யாய்ந்தபல் கலைஞரா யொருங்குவீற் றிருந்தார். (இ - ள்.) ஆதிநாயகன் திரு உரு மறைந்த பின் - முதற் கடவுளாகிய இறைவன் திரு உருவம் மறைந்தருளி பின்னர், அனைய கோது இல் மா ஆறீரண்டு ஏனக் குமரரும் - அந்தக் குற்றமில்லாத பெருமையையுடைய பன்னிரண்டு பன்றி வீரர்களும், காலை - காலையில் எழுந்த, சோதி ஆறிரண்டு அருக்கர் போல் தோன்றி - ஒளி மிக்க பன்னிரண்டு இளஞ் சூரியர்களைப் போலக் காணப்பட்டு, அப்பொருப்பில் - அம்மலையின்கண், ஓதி ஆய்ந்த பல்கலைஞராய் - கற்று ஆராய்ந்து தெளிந்த பல கலைகளிலும் வல்லுநராகி, ஒருங்கு வீற்றிருந்தார் - ஒரு சேர வீற்றிருந்தார்கள். திருவுரு - தாயாய் வந்த உருவம். ஆதித்தர் பன்னிருவரும் ஒருங் குதித்தாற் போல் இப்பன்னிரு குமரரும் விளங்கினரென்றார். அப்பொருப்பு - அந்தப் பன்றி மலை. (2) அனைய ராயவர் வைகுநா ளறைபுனற் கூடற் புனித நாயக னருட்டிற முயிர்க்கெலாம் பொதுவாய் இனிய வாவன வென்பதை யாவருந் தேற வனிதை பான்மொழி மங்கைதன் மணாளனை வினவும். (இ - ள்.) அவர் அனையராய் வைகுநாள் - அவர்கள் அத்தன்மையராய் இருக்கும் நாளில், அறை புனல் கூடல் புனித நாயகன் - ஒலிக்கும் நீர் சூழ்ந்த மதுரையில் எழுந்தருளிய நின்மலனாகிய சோம சுந்தரக் கடவுளின், அருள் திறம் - திருவருளின் வகைகள், உயிர்க்கு எலாம் பொதுவாய் இனிய ஆவன என்பதை - எல்லா உயிர்கட்கும் பொதுவாய் நின்று இன்பந்தருவன என்று ஞான நூல்கள் கூறுவதனை, யாவரும் தேற - அனைவருந் தெளிந்துய்ய, வனிதை பால் மொழி மங்கை தன் மணாளனை வினவும் - சத்தியாகிய பால் போலும் மொழிகளையுடைய அங்கயற்கண்ணம்மை தன் கேள்வனை வினவா நிற்கும். மங்கையாகிய வனிதை என்றுரைத்தலுமாம். (3) வெவ்வி லங்கினும் வெய்யதா1 யசேதன விலங்காம் இவ்வி லங்கெயிற் றேனமென் குருளைகட் கிரங்கிக் கைவி லங்கினை யெய்தநீ கருணையாய் முலைதந் திவ்வி லங்கறி வகற்றிய தியாதென விறைவன். (இ - ள்.) வெவ்விலங்கினும் வெய்யதாய் - கொடிய விலங்குகளினுங் கொடியதாய், அசேதன விலங்கு ஆம் - அறிவில்லாத விலங்காகிய, இவ் இலங்கு எயிற்று ஏனம் மென் குருளைகட்கு - இந்த விளங்கும் பற்களையுடைய பன்றியின் இளமை வாய்ந்த குட்டிகளுக்கு, இரங்கி - இரக்கமுற்று, கைவிலங்கினை எய்த நீ - (சமணரேவிய) யானையை எய்து வீழ்த்திய நீ, கருணை - அருளாலே, ஆய் - தாய்ப் பன்றியாகி, முலை தந்து - முலைப் பால் கொடுத்து, இவ்விலங்கு அறிவு அகற்றிது யாது என - இந்த விலங்கின் அறிவைப் போக்கியருளியது என்னை என்று வினவ, இறைவன் - சோம சுந்தரக் கடவுள். முன்பு ஒரு பாண்டியனுக்கிரங்கி யானையைக் கொன்றருளிய தேவரீர் இன்று ஒரு பாண்டியனால் வேட்டத்திற் கொல்லப்பட்ட கொடிய விலங்காகிய பன்றியின் குருளைகட்கு இரங்கி முலை தந்ததும் அவற்றிற்கு இழிந்த அறிவை நீக்கி நல்லறிவு தந்ததும் எக்காரணத்தால் என வினவினரென்க. கை விலங்கு - யானை, கருணையாய் என்பதற்கு இரக்கமுடையையாய் என்றுமாம். எய்தநீ இரங்கி முலை தந்து அறிவகற்றியது என இயையும். (4) அகில வேதமு மாகம பேதமு நம்மைச் சகல சீவத யாபர னென்றுரை சால்பால் இகலில் சேதன மசேதன மாகிய விரண்டும் புகலில் வேறல வெமக்கவை பொதுமைய வதனால். (இ - ள்.) அகில வேதமும் ஆகம பேதமும் - எல்லா வேதங்களும் பல வகைப்பட்ட ஆகமங்களும், நம்மை சகல சீவதயாபரன் என்று உரை சால்பால் - நம்மை எல்லா உயிர்களிடத்தும் ஒரே தன்மையான அருளையுடைய இறைவன் என்று கூறுந் தகுதியால், இகல் இல் - வெறுப்பில்லாத, சேதனம் அசேதனம் ஆகிய இவை இரண்டும் - அறிவுள்ளதும் அறிவில்லாததுமாகிய அவ்விரண்டும், புகலில் - கூறுமிடத்து, எமக்கு வேறு அல - எமக்கு வேறல்ல; பொதுமைய - ஒரு தன்மையனவே; அதனால் - அக்காரணத்தால். சேதனம் அசேதனமாகிய இரண்டும் எமக்கு வேறல என்பது வேதாகமங்கள் எம்மைச் சகல சீவதயாபரன் என்றுரைத்தலால் தெளியப்படும் என்றான் என்பது கருத்தாகக் கொள்க. (5) தாயி ழந்துவெம் பசித்தழ லகஞ்சுடத் தழன்று காயு மாதபம் புறஞ்சுடக் கானிடைக் கிடந்து தீயு மேனமென் குருளைக டெருமர விரங்கி ஆயு மாய்முலை யளித்துயி ரளித்தன மதனால். (இ - ள்.) தாய் இழந்து வெம்பசித் தழல் அகம் சுட - தாயை இழந்து கொடிய பசித்தீ அகத்தின்கண் சுட்டு வருத்தவும், தழன்று காயும் ஆதபம் புறம்சுட - கொதித்து எரிக்கின்ற வெய்யில் புறத்திற் சுட்டு வருத்தவும், கானிடைக் கிடந்து தீயும் - காட்டின்கண் பற்றுக் கோடின்றிக் கிடந்து வெதும்பா நின்ற, ஏனம் மென் குருளைகள் - இளமையாகிய பன்றிக் குட்டிகள், தெருமர இரங்கி- அங்ஙனம் வருந்தியதனால் இரங்கி, ஆயுமாய் முலை அளித்து உயிர் அளித்தனம் - தாயுமாகி முலைப்பால் கொடுத்து உயிரைப் புரந்தனம், அதனால் - அங்ஙனம் நாம் அருளினமையால், ஆயும் என்பதன் உம்மை இழிவு சிறப்பு. (6) அளவி லாற்றலுந் திறனுநல் லரும்பெறற் கல்வி விளைவு ஞானமுங் கிடைத்தனர் மீனவற் கினிமேல் வளைவி லாதகோ லமைச்சராய் வளம்பல பெருக்கிக் களைவில் பாசநீத் தெம்பெருங் கணத்தவ ராவார். (இ - ள்.) அளவு இல் ஆற்றலும் திறனும் - அளவிறந்த வலியும் வெற்றியும், பெறல் அரும் நல் கல்வி விளைவும் - பெறுதற்கரிய நல்ல கல்வியின் முதிர்வும், ஞானமும் - மெய்யுணர்வும், கிடைத்தனர் - கைவரப் பெற்றனர்; இனிமேல் மீனவற்கு - இனி இராசராச பாண்டியனுக்கு, வளைவு இல்லாத கோல் அமைச்சராய் - செங்கோல் ஓச்சும் அமைச்சர்களாகி, பல வளம் பெருக்கி - பலவகை வளங்களையும் பெருக்கி, களைவு இல் பாசம் நீத்து - போக்குதற்கரிய பாசங்களை ஒழித்து, எம் பெருங்கணத்தவராவார் - எமது பெரிய சிவகணத்தவராவர். கிடைத்தனர் - கிடைக்கப் பெற்றனர். வளைவிலாத கோல்- செங்கோல். (7) என்று நாயக னாயகிக் கிறைகொடுத் தியம்பி அன்று மீனவன் கனவில்வந் தரசகேள் பன்றிக் குன்றி லேனமா முகத்தராய்ப் பன்னிரு குமரர் வென்றி வீரராய் வைகுநர் மிக்கறி வுடையார். (இ - ள்.) என்று நாயகன் நாயகிக்கு இறை கொடுத்து இயம்பி - என்று இங்ஙனம் இறைவன் இறைவிக்கு விடை கூறியருளி, அன்று மீனவன் கனவில் வந்து - அன்று பாண்டியன் கனவின்கண் வந்து, அரச கேள் - மன்னனே கேட்பாயாக; பன்றிக்குன்றில் - பன்றி மலையில், மா ஏன முகத்தராய் - பெரிய பன்றி முகத்தினையுடையராய், வென்றி வீரராய் - வெற்றிமிக்க வீரர்களாய், பன்னிரு குமரர் வைகுநர் - பன்னிரண்டு மைந்தர்கள் இருக்கின்றனர்; மிக்க அறிவு உடையார் - அவர் நிரம்பிய அறிவினையுடையராவர். இறை - விடை. மிக்க என்பதன் அகரம் தொக்கது. (8) அவரை நின்கடைக் கமைச்சராக் கோடியென் றளவில் சிவப ரஞ்சுட ரருள்செயச் செழியர்கோ வேந்தன் கவல ருங்களிப் புடையனாய்க் கண்மலர்ந் தெழுமான் தவழ்நெ டுந்திரைக் கருங்கட றத்திநீந் தெல்லை. (இ - ள்.) அவரை - அம்மைந்தர்களை, நின் கடைக்கு அமைச்சராக் கோடி என்று - நினது வாயிலுக்கு அமைச்சராகக் கொள்ளக் கடவையென்று, அளவு இல் சிவபரஞ் சுடர் அருள்செய - அளவிறந்த பரஞ்சோதியாகிய சிவபெருமான் அருளிச் செய்ய, செழியர் கோ வேந்தன் - பாண்டியர் பெரு வேந்தனாகிய இராசராசன், கவல் அருங்களிப்பு உடையனாய் - கவற்சியில்லாத மகிழ்ச்சியுடையனாய், கண் மலர்ந்து - துயிலுணர்ந்து, எழுமான் - (சூரியன் தேரிற் பூட்டிய) ஏழு குதிரைகளும், நெடுந்திரை தவழ் கருங்கடல் - நெடிய அலைகள் தவழுங் கரிய கீழைக்கடலை, தத்தி நீந்து எல்லை - தாவி நீந்தும் வைகறைப் பொழுதில். கடை என்றது ஈண்டு அரண்மனை அல்லது வினைசூழ் மன்றைக் குறிக்கும். கோவேந்தன் - பெருவேந்தன். (9) மாண்ட கேள்விசான் மந்திரர்க் குணர்த்தியம் மலைமேற் காண்ட கேனமா வீரரைக் கொணர்கெனக் கருணை பூண்ட காவல னமைச்சரும் போயவர்க் கண்டு வேண்ட வீரரு மீண்டினார் மீனவன் றிருமுன். (இ - ள்.) மாண்ட கேள்வி சால் மந்திரர்க்கு உணர்த்தி - மாட்சிமைப் பட்ட கேள்வி நிறைந்த மந்திரிகளுக்கு (அக்கனவினை) அறிவித்து, அம்மலை மேல - அப்பன்றி மலையிலுள்ள, காண்தகு மா ஏன வீரரைக் கொணர்க என - அழகு பொருந்திய பெருமைமிக்க அப்பன்றி வீரரைக் கொணர்தி'a3 என்று கட்டளையிட, கருணை பூண்ட காவலன் அமைச்சரும் போய் - அருளையே தனக்கு அணிகலமாகப் பூண்ட அம் மன்னனுடைய மந்திரிகள் அங்குச் சென்று, அவர்க் கண்டு வேண்ட - அவரைக் கண்டு வருமாறு வேண்ட, வீரரும் மீனவன் திருமுன் ஈண்டினார் - அவ்வீரர்களும் பாண்டியன் திருமுன் வந்தனர். கொணர்கென : அகரந் தொகுத்தல். கருணை பூண்ட காவலன் அமைச்சர் என்பதற்கு அரசன் ஆணையை மேற்கொண்ட அமைச்சர் என்றுரைத்தலும் பொருந்தும். (10) வந்திறைஞ்சிய வராகமா மைந்தரை நேர்கண் டந்த மில்களிப் படைந்துவேந் தமைச்சியற் கிழமை தந்துவேறுபல் வரிசையுந் தக்கவா நல்கிக் கந்து சீறிய கடகரிக் கைதவன் பின்னர். (இ - ள்.) வந்து இறைஞ்சிய மாவராக மைந்தரை - அங்ஙனம் வந்து வணங்கிய பெருமை பொருந்திய அப்பன்றி வீரரை, வேந்து- இராசராசபாண்டியன், நேர் கண்டு அந்தம்இல் களிப்பு அடைந்து - எதிர் கண்டு அளவில்லாத மகிழ்ச்சியுற்று, அமைச்சு இயல் கிழமை தந்து - அமைச்சியல் உரிமையை நல்கி, பல்வேறு வரிசையும் தக்கவா நல்கி - பல வேறு வரிசைகளையுந் தக்கவாறு கொடுத்து, கந்து சீறிய கடகரிக் கைதவன் - கட்டுத்தறியைச் சினந்த மத யானையையுடைய பாண்டியன், பின்னர் - பின் (அவர்க்கு.) தக்கவா - தகுதிக் கேற்றவாறு; றுவ்வீறு தொக்கது. (11) பழைய மந்திரக் கிழார்மடப் பாவைபோல் வாரை விழவு சால்கடி மங்கலம் விதியினாற் புணர்த்தி அழகி தாமென நடத்தினா னனையரும் வீரக் கழலி னாற்கொரு கவயமுங் கண்ணுமாய் நடப்பார். (இ - ள்.) பழைய மந்திரக் கிழார் மடப்பாவை போல் வாரை - முன்னரே மந்திரக் கிழமையுடைய அமைச்சர் பெற்ற இளமை வாய்ந்த பதுமை போன்ற பெண்களை, விதியினால் - மறைநூல் விதிப்படி, விழவு சால் கடிமங்கலம் புணர்த்தி - சிறப்பு மிக்க கடிமணம் செய்வித்து, அழகிது ஆம் என நடத்தினான் - (பார்த்தவர்) அழகிது என்று சொல்லுமாறு நடத்தினான்; அனையரும் வீரக் கழலினாற்கு - அவ்வீரர்களும் வீரக் கழலையணிந்த பாண்டியனுக்கு, ஒரு கவயமும் கண்ணுமாய் நடப்பார் - ஒப்பற்ற கவசமுங் கண்ணும்போல நடப்பாராயினர். பாவைபோல்வாரை மங்கல விதியினாற் சேர்த்து என்றுரைப்பாருமுளர். அரசற்கு இடையூறு வராது தடுத்தலின் கவயம் போன்றும், மேல்வரக் கடவனவற்றை முன் அறிந்து தெரிவித்தலின் கண் போன்றும் நடப்பார் என்க; "சூழ்வார் கண்ணாக வொழுகலான்" என முப்பால் கூறுவதுங் காண்க. (12) [மேற்படி வேறு] உடம்பா றிரண்டிற் குயிரொன்றென வொன்றி யைவாய் விடம்பா யரவம் விழுங்கும்மிரை யொத்து நெஞ்சந் திடம்பாடு கொள்ள வினைவாங்கிச் செழியன் கல்வி இடம்பாடு நல்கும் பயன்போன்மகிழ் வெய்த நின்றார். (இ - ள்.) உடம்பு ஆறிரண்டிற்கு உயிர் ஒன்று என ஒன்றி- இவ்வுடல் பன்னிரண்டிற்கும் உயிர் ஒன்றே என்று அனைவருங் கருதுமாறு அப்பன்னிருவரும் ஒன்றுபட்டு, விடம்பாய் ஐவாய் அரவம் - நஞ்சு பரந்த ஐந்து வாய்களையுடைய பாம்பானது, விழுங்கும் இரை ஒத்து - விழுங்கும் உணவினைப் போன்று, நெஞ்சம் திடம்பாடு கொள்ள - நெஞ்சம் உறுதியைப் பொருந்த, வினை வாங்கி - வினையினை ஏற்றுக் கொண்டு, செழியன் கல்வி இடம்பாடு நல்கும் பயன் போல் - பாண்டியனது கல்விப் பொருளும் செல்வப் பொருளும் (அவனுக்குப்) பயன் அளித்தல் போலப் (பயனை நல்கி), மகிழ்வு எய்த நின்றார் - (அதனால்) அவன் மகிழ்ச்சியடையத் தமக்குரிய அமைச்சியனெறியில் தவறாது ஒழுகினர். அரவின் ஐந்து வாயுள் ஒருவாய் இரை விழுங்குதற்கு ஏனை வாய்கள் அமைந்திருத்தல் போன்று ஒருவர் பெறும் சிறப்பு முதலியவற்றுக்கு ஏனையர் அமைந்திருத்தலாகிய திண்ணிய நெஞ்சு உடையராய் என்பார், 'ஐவா யரவம் விழுங்கும் இரை யொத்து நெஞ்சம் திடம்பாடு கொள்ள' என்றார். வினை வாங்கி - கருமத்தை ஏற்று நடாத்தி. இடம்பாடு - செல்வம். இச்செய்யுளுக்குப் பிறர் கூறிய உரை சிறிதும் பொருந்தாமை ஓர்க. (13) நல்லாவின் பாலி னறுந்தேன்கலந் தென்னப் பன்னூல் வல்லாரு மாகி மதிநுட்பரு மாகிச் சோர்வில் சொல்லா லடையார் மனமுங்களி தூங்கச் சொல்லிப் பல்லார் பிறர்சொற் பயனாய்ந்து கவர வல்லார். (இ - ள்.) நல் ஆவின் பாலில் நறுந்தேன் கலந்தென்ன - நல்ல ஆனின் பாலில் நறுந்தேன் கலந்தாற்போல, பல்நூல் வல்லாருமாகி மதிநுட்பருமாகி - பல நூல்களும் கற்று வல்ல செயற்கையறிவுடையராய் அதனோடு இயற்கையாகிய நுண்ணறிவும் கலத்தலுடையராய், சோர்வு இல் சொல்லால் - சோர்வில்லாத சொற்களால், அடையார் மனமும் களிதூங்கச் சொல்லி - பகைவர் மனமுங் களிப்படையுமாறு பேசி, பிறர் பல்லார் சொல் பயன் ஆய்ந்து கவர வல்லார் - பிறர் பலருங் கூறுஞ் சொற்களிலுள்ள குற்ற நோக்காது அவற்றின் பயனை மட்டும் ஆராய்ந்து கொள்ளுதலில் வல்லார். இச்செய்யுளானது, " மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை" " ஆக்கமுங் கேடு மதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு" " வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள்" என்னும் திருக்குறட் பாக்களின் பொருளைத் தழுவியுள்ளது. (14) பழையே மிறையுட் கொளப்பட்ட 1மென் றேமாப் பெய்தார் உழையேவல் செய்யுஞ் சிறார்போல வொதுங்கி வேந்தன் விழைவே ததனை விடம்போல வெறுத்து வெஃகார் அழல்போ லணுகா ரகலார்நிழ லன்ன நீரார். (இ - ள்.) நிழல் அன்ன நீரார் - அரசனது உடல் நிழல் போன்று விடாது நிற்கும் அவ்வமைச்சர், பழையேம் - நாம் பழைமை உடையேம், இறை உட்கொள்ளப்பட்டம் என்று ஏமாப்பு எய்தார் - அரசனால் நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதிக் களிப் படையாமல், உழை ஏவல் செய்யும் சிறார்போல ஒதுங்கி - அருகிலிருந்து ஏவியவற்றைச் செய்யுஞ் சிறுவர்களைப் போல ஒரு சிறை ஒதுங்கி நின்று, வேந்தன் விழைவு ஏது - வேந்தனால் விரும்பப்பட்ட பொருள் எதுவோ, அதனை வெஃகார் விடம் போல வெறுத்து - அதனை விரும்பாது நஞ்சினை வெறுத்தல் போல வெறுத்து, அழல் போல் அணுகார் அகலார் - அவனைத் தீயைப் போலக் கருதி நெருங்கவுமாட்டார் நீங்கவுமாட்டார். பட்டேம் என்றாவது பட்டனம் என்றாவது இருக்கற்பாலது பட்டம் என விகாரமாயிற்று. அழல் என்றது குளிரைப் போக்குதற்குக் காயும் தீயினை. இச் செய்யுள், " பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும்" " கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர்" " இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோ டொழுகப் படும்" " மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய வாக்கந் தரும்" " அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்" என்னும் பாக்களின் பொருளைத் தழுவி வந்தது. இவ்விரு செய்யுளிலும் காட்டிய திருக்குறடபாக்களுக்குப் பரிமேலழகரகூறிய உரையும் உணரற்பாலது. (15) மறுக்குஞ் செயனீத்து நடக்கையின் வையத் தோரை ஒறுக்கும் பொருளும் பணிகேட்கையி னொன்ன லாரைச் செறுக்கும் பொருளுங் கவரார்விளை செல்வ மாக்கள் இறுக்கும் பொருளே யிறைவர்க்கிவ ரீட்டுஞ் செல்வம். (இ - ள்.) மறுக்கும் செயல் நீத்து நடக்கையின் - குடிகள் தாம் மறுக்கப்பட்ட செயல்களை விலக்கி விதித்த வழி நடத்தலால், வையத்தோரை ஒறுக்கும் பொருளும் - அவரை ஒறுத்தலான் வரும் பொருளையும், பணி கேட்கையின் - பகைவர் தாம் ஏவிய ஏவலைக் கேட்டு ஒழுகுதலால், ஒன்னலாரைச் செறுக்கும் பொருளும் - அவரைச் செறுத்தலான் வரும் பொருளையும், கவரார் - விரும்பாராய், விளை செல்வமாக்கள் இறுக்கும் பொருளே - விளைதலாலாகிய செல்வத்தையுடைய குடிகள் அவ்விளைவில் ஆறிலொரு கடமையாக இறுக்கும் பொருளே, இவர் இறைவற்கு ஈட்டும் செல்வம் - இவ்வமைச்சர் தம் அரசனுக்குத் தொகுக்குஞ் செல்வமாகும். ஒறுக்கும் பொருள் - தண்டமாக விதிக்கும் பொருள். ஒன்னலாரைச் செறுக்கும் பொருள் - பகைவரை வென்று பெறும் திறைப் பொருள். பெரும்பான்மை பற்றி ஆறிலொன்றாகிய விளைபொருளைக் கூறினார்; உடையா ரின்மையின் தானே வந்துற்ற பொருளும், சுங்கப் பொருளும் அரசர்க்குரியவெனக் கொள்க. " உறுபொருளும் உல்கு பொருளுந்தன் னென்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்" என்பதிலுள்ள ஒன்னார்த்தெறு பொருளுடன் குடிகளை ஒறுக்கும் பொருள் இவர் ஈட்டும் பொருளல்ல என விலக்கினார். விளை செல்வ மாக்கள் இறுக்கும் பொருள் என்றமையால் விளைவுகுன்றி வறுமையுற்றுக் குடிகள் உவகையுடன் கொடுக்க வியலாவிடத்து ஆறிலொன்றாகிய கடமையும் கொள்ளார் என்பதாயிற்று. (16) மறத்தாம வேலான்1 மனக்கொள்கைதந் நெஞ்சுள் வான நிறத்தாடி நீழ லெனத்தோற்ற நிறுத்து மற்ற தறத்தா றெனிலாற் றுவரன்றெனி லாக்க மாவி இறத்தான் வரினு மனத்தானு மிழைக்க வெண்ணார். (இ - ள்.) மறத்தாம வேலான் - கொலையிற் பயின்ற ஒளியினையுடைய வேற்படையேந்திய மன்னனது, மனக்கொள்கை- மனக் கருத்து, தம் நெஞ்சுள் - தமது நெஞ்சின்கண், வானம் நிறத்து ஆடி நிழல் எனத் தோற்ற - வானம் போன்றதும் ஒளியையுடையதுமாகிய கண்ணாடியில் நிழல் போல விளங்கித் தோன்ற, நிறுத்து - அதனைச் சீர்தூக்கி, அது அறத்து ஆறு எனில் ஆற்றுவர் - அஃது அறநெறியிற்பட்ட தாயின் செய்வர்; அன்று எனில் - அந்நெறியிற்படாதாயின், ஆக்கம் ஆவி இற வரினும் - (அது செய்யாவழி) தம் பொருளும் உயிரும் அழிய வருமாயினும், மனத்தானும் இழைக்க எண்ணார்- (அக்கேடு வருதலையஞ்சி) அதனைச் செய்ய மனத்தினாலுங் கருதார். தனக்கென உருவமின்மையாற் கண்ணாடி வானம்போல்வதாயிற்று. ஆடியில் அடுத்த பொருளின் நிழல் விளங்கித் தோன்றுதல் போல அரசன் மனக்கருத்து இவர் நெஞ்சிலே தோன்றிற்று என்றார்; அகத்து நிகழ்வதனை ஐயப்படாதுணரும் தெய்வத் தன்மை கூறியவாறு. " அறிகொன் றறியா னெனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன்" என்னும் திருக்குறளும், " தம்முயிர்க் குறுதி யெண்ணார் தலைமகன் வெகுண்ட போதும் வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின் றுரைக்கும் வீரர்" என்னும் இராமாயணசசெய்யுளும் இங்கு நோக்கற்பாலன. (17) [எழுசீரடி யாசிரிய விருத்தம்] இன்னவா றொழுகும் பன்னிரு வோரு மீகையுந் தருமமும் புகழுந் தென்னர்கோ மகற்கு வைகலும் பெருகத் திசையெலாம் விசயமுண் டாக்கிப் பன்னகா பரணன் சிவபுர மடைந்து பரன்கண நாதருட் கலந்து மன்னிவீற் றிருந்தார் மன்னர்மன் னவனும் வான்பத மடைந்துவீற் றிருந்தான். (இ - ள்.) இன்னவாறு ஒழுகும் பன்னிருவோரும் - இங்ஙனம் ஒழுகும் அமைச்சர் பன்னிருவரும், தென்னர் கோமகற்கு - பாண்டியர் பெருமகனுக்கு, ஈகையும் தருமமும் புகழும் வைகலும் பெருக - பொருளும் அறமும் புகழும் நாடோறும் பெருகுமாறு, திசை எலாம் விசயம் உண்டாக்கி - திசைதோறும் வெற்றியை விளைத்து, பன்னக ஆபரணன் சிவபுரம் அடைந்து - பாம்பணியையுடைய வனாகிய இறைவனது சிவலோகத்தை அடைந்து, பரன்கண நாதருள் கலந்து மன்னி வீற்றிருந்தார் - அவனது சிவகணங்களுட் கலந்து நிலை பெற்று வீற்றிருந்தனர்; மன்னர் மன்னவனும் - வேந்தர் வேந்தனாகிய இராசராச பாண்டியனும், வான்பதம் அடைந்து வீற்றிருந்தான் - இந்திர பதவியைப் பெற்று வீற்றிருந்தான். ஈகை - பொன். பொருளால் அறமும் அறத்தாற் புகழும் அவற்றால் வெற்றியும் உண்டாதலின் அம்முறையே கூறினார். பன்னகாபரணன் : தீர்க்க சந்தி. (18) ஆகச் செய்யுள் - 2273. நாற்பத்தேழாவது கரிக்குருவிக் குபதேசஞ்செய்த படலம் [கொச்சகக்கலிப்பா] வரிக்குருகிப் பத்திரற்குப் பலகையிட்ட மணிகண்டன் அரிக்குருளை வடிவான வடல்வீரர்க் கரசன்பார் பரிக்குமமைச் சியலளித்த பரிசுரைத்தாம் பசுபதிபாற் கரிக்குருவி குருமொழிகேட் டருளடைந்த கதைபகர்வாம். (இ - ள்.) வரிக்கு உருகிப் பத்திரத்திற்குப் பலகையிட்ட மணிகண்டன்- இசைப் பாட்டிற்கு நெகிழ்ந்து பாணபத்திரனுக்குப் பலகையிட்டருளிய நீலமணி போலுந்திருமிடற்றினையுடைய இறைவன், அரிக்குருளை வடிவான அடல் வீரர்க்கு - பன்றிக் குட்டிகளின் வடிவாகிய வெற்றி வாய்ந்த பன்னிரண்டு வீரர்களுக்கும், அரசன் பார்பரிக்கும் அமைச்சு இயல் அளித்த பரிசு உரைத்தாம் - பாண்டியனது நாட்டினை ஓம்பும் அமைச்சியலை அளித்தருளிய திருவிளையாடலைக் கூறினோம்; பசுபதியால் - அவ்விறைவனிடத்து, கரிக்குருவி குரு மொழி கேட்டு அருள் அடைந்த கதை பகர்வாம் - கயவாயென்னும் பறவை குரு மொழியினைக் கேட்டு அவன் திருவருளைப் பெற்ற திருவிளையாடலை (இனிக்) கூறுவோம். வரி - இசைப்பாட்டு. அரி - பன்றி. பசு - பாசத்தாற் கட்டுண்ட உயிர்கள்; பசுபதி - ஆன்மகோடிகளுக்கெல்லாம் இறைவன். (1) [அறுசீரடி யாசிரிய விருத்தம்] மன்னவ னிராச ராசன் வானவர்க் கரச னான பின்னவன் குமர னான பெருவலி மடங்க லன்னான் துன்னல ரடுபோர் சாய்க்குஞ் சுகுணபாண் டியனீர் ஞாலம் இன்னறீர்த் தறக்கோ லோச்சி யீர்ங்குடை நிழற்று நாளில். (இ - ள்.) மன்னவன் இராசராசன் - வேந்தனாகிய இராசராச பாண்டியன், வானவர்க்கு அரசனான பின் - இந்திர பதவியைப் பெற்ற பின்னர், அவன் குமரனான சுகுண பாண்டியன் - அவன் புதல்வனாகிய சுகுண பாண்டியனென்பான், துன்னலர் அடுபோர் சாய்க்கும் பெருவலி மடங்கல் அன்னான் - பகைவரது அடுகின்ற போரினை அழிக்கும் பெரிய வலியினையுடைய சிங்கம் போல்வனானாய், நீர் ஞாலம் இன்னல் தீர்த்து - கடல் சூழ்ந்த புவியிலுள்ள உயிர்களின் துன்பத்தைப் போக்கி, அறக்கோல் ஓச்சி - செங்கோல் நடாத்தி, ஈர் குடை நிழற்றும் நாளில் - தண்ணிய குடையால் நிழலைச் செய்யுங் காலையில். குமரனான பாண்டியன் அடுபோர் சாய்க்கும் பாண்டியன் எனத் தனித் தனி இயைத்தலுமாம். அறக்கோல் - அறத்தின் வழுவாத கோல்; செங்கோல். (2) ஆற்றல்சா லொருவன் மேனா ளாற்றவு மறனே யாற்றி மாற்றமில் சிறிது பாவஞ் செய்ததன் வலத்தால்1 வந்து தேற்றமில் கயவா யாகிச் செனித்தலாற் காக மாதி கூற்றென வூற்றஞ் செய்யக் குருதிசோர் தலைய தாகி. (இ - ள்.) ஆற்றல் சால் ஒருவன் - வலிமைமிக்க ஒருவன், மேல் நாள் - முன் பிறப்பில், அறன் ஆற்றவும் ஆற்றி - அறத்தை மிகவுஞ் செய்து, மாற்றம் இல் சிறிது பாவம் செய்து - மாறுதலில்லாத சிறிது பாவத்தையுஞ் செய்து, அதன் வலத்தால் வந்து - அதன் வலியால் வந்து, தேற்றம் இல் கயவாயாகி - அறிவில்லாத கரிக்குருவியாய், செனித்தலால் - பிறத்தலால், காகம் ஆதி - காக்கை முதலிய பறவைகள், கூற்றென ஊற்றம் செய்ய - கூற்றுவனைப் போல (அதற்கு) இடையூற்றினை விளைக்க, குருதி சோர் தலையதாகி - (அதனால் அது) குருதி வடிகின்ற தலையினையுடைதாகி. மாற்றம் இல் - தன் பயனை விளைத்தன்றி நீங்குதல் இல்லாத. அது என்னும் எழுவாய் வருவித்துரைக்க. (3) புட்கெலா மெளிதா யூறு பாடஞ்சிப் புரத்துள்2வைகி உட்கிநீள் வனத்துட் போகி வழிமருங் கொருசார் நிற்கும் கட்கவிழ்ந் தொழுகப் பூத்த கவிழிணர் மரமேல் வைகி வெட்கமீ தூரச் சாம்பி வெய்துயிர்த் திருக்கு மெல்லை. (இ - ள்.) புட்கு எலாம் எளிதாய் - பறவைகள் அனைத்திற்கும் எளிய பறவையாய், ஊறுபாடு அஞ்சி - (அவை செய்யும்) இடையூற்றினுக்குப் பயந்து, புரத்துள் வைகி - ஊருள் இருந்து, உட்கி - (பின் அங்கிருத்தற்கும்) அஞ்சி, நீள்வனத்துள் போகி - நீண்ட காட்டினுட் சென்று, வழி மருங்கு ஒரு சார் நிற்கும் - வழியருகின் ஒரு புறத்தில் நிற்கும், கள்கவிழ்ந்து ஒழுகப் பூத்த கவிழ் இணர் மரமேல் வைகி - தேன் கவிழ்ந்து ஒழுகுமாறு மலர்ந்த கவிழ்ந்த பூங்கொத்துக்களையுடைய மரத்தின் மேலே தங்கி, வெட்கம் மீதூரச் சாம்பி - நாணம் மீதுரச் சோர்ந்து, வெய்துயிர்த்து இருக்கும் எல்லை - சுடுமூச்செறிந்து இருக்குமளவில். புரம் - ஊர். சாம்பி - கூம்பி (4) விடையவ னீறு பூசு மெய்யவன் பூண்ட கண்டித் தொடையவன் புறம்பு முள்ளுந் தூயவன் குடையுங் கையில் உடையவன் றரும தீர்த்த யாத்திரை யொழுக்கம் பூண்ட நடையவ னொருவ னந்த நறுந்தரு நிழலிற் சார்ந்தான். (இ - ள்.) விடையவன் நீறுபூசும் மெய்யவன் - இடபவூர்தியையுடைய இறைவனது திருநீற்றினை அணிந்த மெய்யினையுடையவனாய், பூண்ட கண்டித் தொடையவன் - உருத்திராக்க மாலையையுடையவனாய், புறம்பும் உள்ளும் தூயவன் - புறமும் அகமுந் தூய்மையுடையவனாய், கையில் குடையும் உடையவன் - (இவையே யன்றிக்) கையின்கண் குடையும் உடையவனாய், தரும தீர்த்த யாத்திரை ஒழுக்கம் பூண்ட நடையவன் ஒருவன் - தூய நதிகளிற் சென்று நீராடு ஒழுக்கத்தை மேற்கொண்ட நடையினையுடைய ஒருவன், அந்த நறுந்தரு நிழலில் சார்ந்தான்- அந்த நறிய மர நிழலை அடைந்தான். தரும தீர்த்தம் - புண்ணிய தீர்த்தம். நடையவன் - நடந்து செல்லுதலையுடையவன். (5) இருந்தவன் சிலரை நோக்கி யியம்புவா னெவர்க்கும் பேறு தருந்தலந் தீர்த்த மூர்த்தித் தன்மையிற் சிறந்த வன்பு வருந்தமிழ் மதுரை பொற்றா மரைத்தடஞ் சுந்த ரேசப் பெருந்தகை யென்று சான்றோர் பேசுவ ராத லாலே. (இ - ள்.) இருந்தவன் சிலரை நோக்கி இயம்புவான் - (அங்ஙனஞ் சார்ந்து) இருந்த அப்படிவத்தன் அங்குள்ள சிலரைப் பார்த்துக் கூறுவான்; எவர்க்கும் பேறு தரும் - யாவர்க்கும் விரும்பிய பயன்களை நல்கும், தலம் தீர்த்தம் மூர்த்தித் தன்மையில் சிறந்த - தலமும் தீர்த்தமும் மூர்த்தியுமாகிய தன்மையிற் சிறந்தன, அன்பு வருந்தமிழ் மதுரை - (முறையே) அன்பு வளர்தற்குரிய தமிழையுடைய மதுரையும், பொற்றாமரைத்தடம் - பொற்றாமரை வாவியும், சுந்தரேசப் பெருந்தகை என்று - சோமசுந்தரப் பெருமானும் என்று, சான்றோர் பேசுவர் ஆதலால் - பெரியோர் கூறுவர் ஆதலால். இருந்தவன் என்பதனை இரட்டுறமொழிதலாக்கி இருந்த பெரிய தவவொழுக்க முடையான் என்றுரைக்க. தலத்தன்மை தீர்த்தத் தன்மை மூர்த்தித் தன்மையிற் சிறந்த தலமும் தீர்த்தமும் மூர்த்தியும் என விரித்துரைக்க. (6) ஓரிடத் தினைய மூன்று1 விழுப்பமு முள்ள தாகப் பாரிடத் தில்லை யேனைப் பதியிடத் தொன்றே யென்றுஞ் சீருடைத் தாகுங் கூடற் செழுநக ரிடத்தம் மூன்றும் பேருடைத் தாகு மென்றாற் பிறிதொரு பதியா தென்றான். (இ - ள்.) ஓர் இடத்து இனைய மூன்று விழுப்பமும் உள்ளதாக - ஒரேயிடத்தில் இந்த மூன்று சிறப்பும் உடையதாக, பாரிடத்து இல்லை - இந்நிலவுலகின் கண் (வேறுபதி) இல்லை; ஏனைப்பதி இடத்து - மற்றைப் பதிகளில், என்றும் ஒன்றே சீர் உடைத்தாகும் - எஞ்ஞான்றும் அம் மூன்றில் ஒன்றே சிறப்புடையதாகும்; கூடல் செழுநகர் இடத்து - கூடலாகிய செழிய பதியின்கண், அம்மூன்றும் பேர் உடைத்தாகும் என்றால் - அம்மூன்றுந் தனித்தனி பெருமையுடையது என்றால், பிறிது ஒரு பதியாது என்றான் - அதனை யொப்பதாகிய வேறொரு பதி யாதுளது என்றான். பாரிடத்து வேறு பதி இல்லை என்றும், அதனையொப்பதாகிய பிறிதொரு பதி என்றும், விரித்துரைக்க. (7) இம்மது ரேசன் சேவித் தேத்துவோர்க் கெளிய னாகிக் கைம்மலர் நெல்லி போலக் கருதிய வரங்க ளெல்லாம் இம்மையி னுடனே நல்கு மேனைய தலத்து வானோர் அம்மையி னன்றி நல்கா ராதலா லதிக2மென்றான். (இ - ள்.) இம் மதுரேசன் சேவித்து ஏத்துவோர்க்கு - இந்த மதுரை நாயகனாகிய சோம சுந்தரக் கடவுள் தன்னை வணங்கித் துதிப்போர்க்கு, கைம்மலர் நெல்லி போல எளியனாகி - கையாகிய மலரின்கண் உள்ள நெல்லிக்கனியின் தோற்றம் போல் எளிமையுடையவனாய்த் தோன்றி, கருதிய வரங்கள் எல்லாம் - அவர் கருதியவரங்கள் அனைத்தையும், இம்மையின் உடனே நல்கும் - இப்பிறப்பிலே உடன் தந்தருளுவன்; ஏனைய தலத்து வானோர் - மற்றைய தலத்துக் கடவுளர், அம்மையின் அன்றி நல்கார் - மறு பிறப்பிலன்றி இப்பிறப்பில் நல்கார்; ஆதலால் அதிகம் என்றான் - ஆகையால் சோம சுந்தரக் கடவுளே மேன்மையுடைய மூர்த்தியாகும் என்று கூறினான். நன்கு விளங்குவதென்பதற்கு எடுத்துக்காட்டாக ஆன்றோரால் நிறுவப் பெற்று வழங்கி வருவதொரு வசனம் 'உள்ளங்கை நெல்லிக் கனி' என்பது. இது 'கரதலாமலகம்' என வடமொழியிற் கூறப்படும். " தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்" என்னும் திருவாசகமஇங்கே சிந்திக்கற்பாலது. வரங்களெல்லாம் கைம்மலர் நெல்லிபோல நல்கும் என இயைத்துரைத்தலும் பொருந்தும். (8) மற்றது கேட்டுக் கொம்பர் வைகிய கயவாய் ஞானம் பெற்றது பறவை யாகிப் பிறந்ததும் பிறவுந் தேற்றம் உற்றது நாமிச் சன்ம மொழிப்பதற் கறவோ னிங்ஙன் சொற்றதே யுறுதி யென்று துணிவுகொ டெழுந்த தன்றே. (இ - ள்.) கொம்பர் வைகிய கயவாய் - அம்மரக்கிளையிற் சாம்பியிருந்த கரிக்குருவி, அது கேட்டு ஞானம் பெற்றது - அவன் கூறியதைக் கேட்டலால் ஞானத்தைப் பெற்றது; பறவையாகிப் பிறந்ததும் பிறவும் தேற்றம் உற்றது - (அதனால்) தான் பறவையாய்ப் பிறந்த காரணமும் பிறவும் தெளிந்தது; இச்சன்மம் நாம் ஒழிப்பதற்கு- இக் கொடிய பிறவியை நாம் ஒழிப்பதற்கு, இங்ஙன் அறவோன் சொற்றதே உறுதி என்று - இங்கு இவ்விரத வொழுக்கினன் கூறியதே உறுதியாவதென்று கருதி, துணிவு கொடு எழுந்தது- துணிந்து எழுந்தது. ஞானம் - மூன்று காலமும் அறியும் அறிவு. கொம்பர் : ஈற்றுப் போலி. மற்று, அன்று, ஏ : அசைகள். அன்றே என்பதற்கு அப்பொழுதே என்றுரைத்தலும் ஆம். (9) ஆய்மலர்க் கான நீங்கி யாடக மாடக் கூடற் போய்மலர்க் கனக கஞ்சப் புண்ணியப் புனறோய்ந் தாம்பல் வாய்மலர்க் கயலுண் கண்ணாண் மணாளனை வலஞ்செய் தன்பிற் றோய்மலர்க் கழலி னானை யகத்தினாற் றொழுதர்ச் சித்தே. (இ - ள்.) ஆய் மலர்க்கானம் நீங்கி - வண்டுகளாராயுந் தேனை யுடைய மலர்கள் நிறைந்த காட்டை நீங்கி, ஆடகமாடக் கூடல் போய் - பொன்னாலாகிய மாடங்கள் நிறைந்த மதுரைப்பதியிற் சென்று, மலர்க் கனக கஞ்சப் புண்ணியப் புனல் தோய்ந்து - மலர் களையுடைய பொற்றாமரையின் புண்ணிய நீரில் மூழ்கி, ஆம்பல் மலர்வாய் - ஆம்பல் போன்ற திருவாயினையும், கயல் உண்கண்ணாள் - கயல் போன்ற மையுண்ட கண்களையுமுடைய உமையம்மையின், மணாளனை வலம் செய்து - நாயகனாகிய சோம சுந்தரக் கடவுளை வலஞ் செய்து, அன்பில் தோய்மலர்க் கழலினானை - அன்பாகிய நீரிற்றோயும் தாமரை மலர் போன்ற திருவடிகளையுடைய அவ்விறைவனை, அகத்தினால் தொழுது அர்ச்சித்து - மனத்தினால் வணங்கிப் பூசித்து. ஆய்மலர் என்பதற்கு மெல்லிய மலர் என்றும் அழகிய மலர் என்றும் உரைத்தலுமாம். (10) இன்னண மூன்று வைகல் கழிந்தபி னெம்பி ராட்டி தன்னமர் காத லானைத் தாழ்ந்தெதிர் நோக்கி யைய என்னையிக் கயவாய் செய்யுஞ் செயலிதன் வரவியா தென்ன முன்னவ னதன்றன் செய்தி வரவெலா முறையாற் கூறா. (இ - ள்.) இன்னணம் மூன்று வைகல் கழிந்த பின் - இங்ஙனம் மூன்று நாட்கள் சென்ற பின், எம்பிராட்டி - எம் பிராட்டியார், தன் அமர் காதலானைத் தாழ்ந்து - தம்மால் விரும்பப் பட்ட காதலராகிய சோம சுந்தரக் கடவுளை வணங்கி, எதிர்நோக்கி- நேரே பார்த்து, ஐய - ஐயனே, இக்கயவாய் செய்யும் செயல் என்னை - இக்கரிக்குருவி செய்யும் வழிபாடு எதன் பொருட்டு, இதன் வரவு யாது என்ன - இதன் வரலாறு என்னை என்று வினவ, முன்னவன் - இறைவன், அதன் செய்தி வரவு எலாம் முறையால் கூறா- அதனது செய்தியும் வரலாறுமாகிய அனைத்தையும் முறைப்படி கூறி. வரவியாது என்புழி இகரம் குறுகி நின்றது. அதன்றன், தன் : சாரியை. (11) பத்திமை நியமம் பூண்ட பறவைமேற் கருணை நாட்டம் வைத்திமை யாத முக்கண் மறைமுத லொருசேய்க் கன்று நித்திய நிலைமை நல்கி நேர்ந்தவெங் கூற்றைக் காய்ந்த சத்திய ஞான மிர்த்திஞ் சய1த்தினை யுபதே சித்தான். (இ - ள்.) இமையாத முக்கண் மறை முதல் - இமையாத மூன்று கண்களையுடைய வேத முதல்வனாகிய அச் சோம சுந்தரக் கடவுள், பத்திமை நியமம் பூண்ட பறவை மேல் - அன்பு செய்தலையே கடப்பாடாகக் கொண்ட அப் பறவையின் மேல், கருணை நாட்டம் வைத்து - அருள் நோக்கம் வைத்து, ஒரு சேய்க்கு - ஒரு மாணியாகிய மார்க்கண்டனுக்கு, அன்று - அந்நாளில், நித்திய நிலைமை நல்கி - அழிவற்ற தன்மையைக் கொடுத்து, நேர்ந்த வெங்கூற்றைக் காய்ந்த - எதிர்த்த கொடிய கூற்றுவனை ஒறுத்த, சத்திய ஞான மிர்த்திஞ்சயத்தினை - உண்மை ஞானமாகிய மிர்த்திஞ்சய மனுவை, உபதேசித்தான் - உபதேசித்தருளினான். மிர்த்திஞ்சயம் - மூன்றெழுத்தான் முடிந்ததொரு வேத மந்திரம். (12) [கலிவிருத்தம்] உவமை யற்றவ னுரைத்த மந்திரஞ் செவிம டுத்தலுஞ் சிற்று ணர்ச்சிபோய்ப் பவம கற்றிடப் படுக ரிக்குரீஇ கவலை விட்டரன் கழல்வ ழுத்துமால். (இ - ள்.) உவமை அற்றவன் - ஒப்பற்றவனாகிய இறைவன், உரைத்த மந்திரம் செவிமடுத்தலும் - உபதேசித்தருளிய அம்மனுவைக் காதிற் கேட்டவளவில், சிற்றுணர்ச்சி போய் - சிற்றறிவு நீங்கி, பவம் அகற்றிடப்படு கரிக்குரீஇ - பிறவி நீங்கப் பெற்ற அக்கயவாய், கவலை விட்டு - துன்பமொழிந்து, அரன் கழல் வழுத்தும் - அவ்விறைவன் திருவடிகளைத் துதிக்கும். அகற்றிடப்படு - நீக்கப்பட்ட; நீக்கிய. குரீஇ : இயற்கையளபெடை. ஆல் : அசை. (13) எண்ணி லாவுயிர்க் கிறைவ போற்றிவான் தண்ணி லாமதிச் சடில போற்றியென் புண்ணி யப்பயன் போற்றி யங்கயற் கண்ணி நாதநின் கருணை போற்றியால். (இ - ள்.) எண் இலா உயிர்க்கு இறைவ போற்றி - அளவிறந்த உயிர்களுக்குத் தலைவனே வணக்கம்; வான்தண் நிலாமதிச்சடில போற்றி - வானின்கண் உலாவும் குளிர்ந்த நிலாவையுடைய சந்திரனைத் தரித்த சடையையுடையானே வணக்கம்; என் புண்ணியப் பயன் போற்றி - எனது சிவ புண்ணியத்தின் பயனானவனே வணக்கம், அங்கயற் கண்ணி நாத - அங்கயற் கண்ணம்மையின் நாதனே, நின் கருணை போற்றி - நினது திருவருளுக்கு வணக்கம். போற்றி என்பதற்குக் காக்க என்றுரைத்தலுமாம். என் புண்ணியப் பயன் - யான் முற்பிறப்புகளிற் செய்த சிவபுண்ணியத்தின் பயனாக வெளிப்பட்டருளியவன் என்றபடி. ஆல் : அசை. (14) தெளித லின்றியே செய்த தீமையால் விளியு மென்னையு மாளல் வேண்டுமோ எளிய ரெங்குளா ரென்று தேர்ந்துதேர்ந் தளியை யாவதுன் னருளின் வண்ணமே. (இ - ள்.) செய்த தீமையால் - யான் புரிந்த தீவினையால், தெளிதல் இன்றியே விளியும் என்னையும் - நின் கருணைத் திறத்தை அறியாது மாளா நிற்கும் நாயேனையும், ஆளல் வேண்டுமோ - ஆளுதல் வேண்டுமோ, எளியர் எங்குளார் என்று தேர்ந்து தேர்ந்து அளியை ஆவது - களை கணற்ற எங்குளார் என்று தேடித் தேடி அவர் மீது அருளுடையையாய் இருத்தல் உன் அருளின் வண்ணமே - நின் திருவருளின் தன்மை போலும். இச் செய்யுள், " பித்த னென்றெனை யுலகவர் பகர்வதோர் காரண மிதுகேளீர் ஒத்துச் சென்றுதன் றிருவருட் கூடிடு முபாயம தறியாமே செத்துப் போயரு நரகிடை வீழ்வதற் கொருப்படு கின்றேனை அத்த னாண்டுதன் னடியரிற் கூட்டிய வதிசயங் கண்டாமே" என்னும் திருவாசகககருத்தைத் தழுவியிருத்தல் காண்க. (15) உம்மை நல்லற முடைய நீர்மையால் இம்மை யிம்மனு வியம்பி னாயிது அம்மை நன்னெறிக் கேது வாதலான் மும்மை யுந்நல முடைய மொய்ம்பினேன். (இ - ள்.) உம்மை நல் அறம் உடைய நீர்மையால் - முற்பிறப்பிற் செய்த நல்ல அறத்தினையுடைய தன்மையால், இம்மை இம்மனு இயம்பினாய் - இப்பிறப்பில் இம் மந்திரத்தை உபதேசித் தருளினை; இது அம்மை நல்நெறிக்கு ஏது ஆதலால் - இது மறுமையிற் சிவகதியிற் செல்லுதற்குக் காரணமாதலால், மும்மையும் - மூன்று பிறப்பிலும், நலம் அடைந்த மொய்ம்பினேன் - பயன் பெற்ற வலியனாயினேன். இப்பிறப்பில் இம்மந்திரம் உபதேசிக்கப் பெற்றமையால் முற் பிறப்பில் இதற்கேதுவாகிய சிவ புண்ணியமும், வரும் பிறப்பிற் இதனாலெய்தும் சிவகதிப்பேறும் உடையேனாகலின் அடியேன் மும்மையும் பெரு நலமுடையனாயினேன் என்றது; " சென்ற காலத்தின் பழுதிலாத் திறனு மினியெதிர் காலத்தின் சிறப்பும் இன்றெழுந் தருளப் பெற்ற பேறிதனா லென்றைக்குந் திருவரு ளுடையோம்" என்னும் பெரிய புராணச் செய்யுட் கருத்துடன் இஃது ஒற்றுமையுறுதல் காண்க. (16) ஆயி னும்மெனக் கைய வோர்குறை தீய புள்ளெலா மூறு செய்தெனைக் காயு மானமுங் கழியக் கண்டபேர் ஏயெ னும்படிக் கெளிய னாயினேன். (இ - ள்.) ஆயினும் - ஆனாலும், ஐய - ஐயனே, எனக்கு ஓர் குறை - எனக்கு ஒரு குறைபாடு உள்ளது; தீயபுள் எலாம் - கொடிய பறவைகளெல்லாம், எனை ஊறு செய்து காயும் - என்னைத் துன்புறுத்தி வருத்தா நிற்கும், மானமும் கழிய - மானமும் நீங்க, கண்ட பேர் ஏ எனும்படிக்கு - பார்த்தவர்கள் ஏ என்று இகழுமாறு, எளியனாயினேன் - யான் அனைத்திற்கும் எளியேனாயினேன். ஓர் குறை உளது என விரித்துரைக்க. ஏ : இகழ்ச்சிக் குறிப்பிடைச் சொல். (17) என்ன வக்குரீஇ யியம்ப வெம்பிரான் அன்ன புட்கெலாம் வலியை யாகெனப் பின்னு மக்குரீஇ தாழ்ந்து பேதையேற் கின்னு மோர்வரந் தருதி யென்றதால். (இ - ள்.) என்ன அக்குரீஇ இயம்ப - என்று அந்தக் குருவி கூற, எம்பிரான் - எம் இறைவனாகிய சோம சுந்தரக் கடவுள், அன்ன புட்கு எலாம் வலியை ஆக என - அந்தப் பறவைகள் அனைத்திற்கும் வன்மையை யுடையையாகக் கடவையென்றருள, அக்குரீஇ பின்னும் தாழ்ந்து - அந்தக் கரிக் குருவி மீண்டும் வணங்கி, பேதையேற்கு - அறிவில்லாத எனக்கு, இன்னும் ஓர் வரம் தருதி என்றது - இன்னும் ஒரு வரம் தந்தருள்வாய் என இரந்து வேண்டியது. புட்கு எலாம் - புட்கள் எல்லாவற்றிற்கும்; எல்லாவற்றினும். ஆல் : அசை. (18) வலியை யென்பதென் மரபி னுக்கெலாம் பொலிய வேண்டுமெப் போது நீசொன ஒலிய மந்திர மோதி யோதிநாங் கலியை வெல்லவுங் கருணை செய்கென. (இ - ள்.) வலியை என்பது - வலியை யாகவென்று நீ அருளியது, என் மரபினுக்கு எலாம் பொலிய வேண்டும் - என் மரபில் வரும் பறவைகள் அனைத்திற்கும் விளங்க வேண்டும்; எப்போதும் - (அதுவன்றி அவைகள்) எஞ்ஞான்றும், நீ சொன ஒலிய மந்திரம் - நீ கூறியருளிய ஒலியையுடைய மந்திரத்தை, ஓதி ஓதி நாம் கலியை வெல்லவும் - இடை யீடின்றிப் பயின்று அச்சத்தையும் துன்பத்தையும் ஒழிக்கவும், கருணைசெய்க என - அருள் செய்வாயாக என்று வேண்ட. நாம் - அச்சம்; யாங்கள் என்றுமாம். செய்கென : அகரம் தொகுத்தல் : (19) ஆவ தாகவென் றமரர் நாயகன் மூவெ ழுத்தினான் முடிந்த வம்மனு தாவி றெய்வத மிருடி சந்தமோ டோவி லோசைமூன் றொடுதெ ருட்டினான். (இ - ள்.) அமரர் நாயகன் - தேவர் தேவனாகிய இறைவன், ஆவதாக என்று - அங்ஙனமே ஆகக் கடவது என்று கூறியருளி, மூவெழுத்தினால் முடிந்த அம்மனு - மூன்று எழுத்தினால் முடிந்த அம்மந்திரத்தை, தாவு இல் தெய்வதம் இருடி சந்தமொடு- கெடுதலில்லாத தெய்வம் முனி பண் என்பவற்றோடும், ஓவு இல் ஓசை மூன்றொடு தெருட்டினான் - நீங்குதலில்லாத எடுத்தல் முதலிய மூன்று ஓசையோடும் தெளிவுறுத்தான். மனு - மந்திரம். இம்மந்திரத்தைத் திரியம்பகம் என்றும் கூறுவர். ஒவ்வொரு மந்திரத்திற்கும் தெய்வமும் இருடியும் சந்தமும் உண்டாகையால் இதனை அவற்றோடு தெளிவித்தார் என்க. ஓசை மூன்று - எடுத்தல் படுத்தல் நலிதல்; இவை வடமொழியில் உதாத்தம் அநுதாத்தம் சொரிதம் என்று கூறப்படும். (20) [அறுசீரடி யாசிரிய விருத்தம்] குருமொழி பயின்று முள்வாய்க் குருவிதன் குலனுந் தன்போல் அருமறை முதல்வ னீந்த வாற்றலாற் பறவைக் கெல்லாம் பெருமைசால் வலியா னென்னும் பெயரவா யுலகின் மன்னக் கருமணி கண்டன் செம்பொற் கனைகழ லடிசேர்ந் தன்றே. (இ - ள்.) முள்வாய்க் குருவி - முள் போலக் கூரிய வாயையுடைய அக்கரிக் குருவி, குருமொழி பயின்று - குரவன் உபதேச மொழியை இடைவிடாது பயின்று, தன் குலனும் - தனது சாதிப் பறவைகளும், தன் போல் - தன்னைப் போலவே, அருமறை முதல்வன் ஈந்த ஆற்றலால் - அரிய வேத முதல்வனாகிய சோம சுந்தரக் கடவுளருளிய வலியால், பறவைக்கு எல்லாம் - பறவைகள் அனைத்திற்கும், பெருமை சால் வலியான் என்னும் பெயரவாய் - பெருமைமிக்க (வலியையுடைமையால்) வலியானென்னும் பெயரினையுடையவாய், உலகின் மன்ன - உலகிலே நிலை பெற்றிருக்க, கருமணி கண்டன்- நீலமணி போலுந் திருமிடற்றையுடைய அவ்விறைவனது, செம்பொன் கனை கழல் அடிசேர்ந்தன்று - சிவந்த பொன்னாலாகிய ஒலிக்கின்ற வீரக் கழலணிந்த திருவடியைச் சேர்ந்தது. ஒரு குருவியும் இத்தகைய பெறற்கருபேற்றினை எய்திற்றென வியப்பாராய் 'முள்வாய்க் குருவி' என்றார். முதல்வன் ஈந்த அருமறை ஆற்றலால் என இயைத்துரைப்பாருமுளர். குருவி சேர்ந்தன்று என முடிக்க. சேர்ந்தன்று - சேர்ந்தது : உடன்பாட்டு முற்று. (21) இக்கரிக் குருவி தானோற் றெய்திய வரத்தைத் தன்போல் ஒக்கலு மெளிதா வெய்தப் பெற்றதா லுலகின் மேன்மைத் தக்கவ1 னொருவன் வாழத் தன்கிளை வாழ்வ தென்ன மிக்கவ ரெடுத்துக் கூறும் பழமொழி விளக்கிற் றன்றே. (இ - ள்.) இக்கரிக் குருவி - இந்தக் கரிக்குருவி, தான் நோற்று எய்திய வரத்தை - தான் வருந்தி நோற்றுப் பெற்ற வரத்தினை, தன் போல் ஒக்கலும் எளிதா எய்தப் பெற்றதால் - தன்னைப் போல் தன் இனமும் எளிதாக அடையுமாறு வேண்டிப் பெற்ற அதனால், உலகில் மேன்மைத் தக்கவன் ஒருவன் வாழ - உலகின்கண் மேலாகிய தகுதியுடையான் ஒருவன் வாழ, தன் கிளை வாழ்வது என்ன - அவனது சுற்றம் வாழ்வதாகுமென்று, மிக்கவர் எடுத்துக் கூறும் பழமொழி விளக்கிற்று - அறிவுடையோர் எடுத்துக் கூறுகின்ற பழமொழியை விளக்கியது. தான் வருந்தி எய்திய வரத்தை ஒக்கல் எளிதாகத் தன் போல் எய்த என்க. பெற்றதால் - பெற்ற அதனால். குருவி பெற்றவதனால் பழமொழி விளக்கிற்று என முடிக்க. அன்று, ஏ : அசைகள். (22) [மேற்படி வேறு] ஈச னடிக்கன் பில்லார்போ லெளியா ரில்லை யாவர்க்கும் ஈச னடிக்கன் புடையார்போல் வலியா ரில்லை யாவர்க்கும் ஈச னடிக்கன் பின்மையினா லெளிதாய்த் திரிந்த விக்கயவாய் ஈச னடிக்கன் புடைமையினால் வலிதா யிற்றே யெவ்வுயிர்க்கும். (இ - ள்.) ஈசன் அடிக்கு அன்பு இன்மையினால் - இறைவன் திருவடியில் அன்பு இல்லாமையினால், எளிதாய்த் திரிந்த இக்கயவாய் - வலியற்றுத் திரிந்த இந்தக் கரிக்குருவி, ஈசன் அடிக்கு அன்பு உடைமையினால் - அவன் திருவடியில் அந்த அன்பு உண்டாகப் பெற்றமையினால், எவ்வுயிர்க்கும் வலிது ஆயிற்று - பறவைகள் எல்லாவற்றுக்கும் வலியையுடையதாயிற்று (ஆதலால்), ஈசன் அடிக்கு அன்பு இல்லார் போல் - அவ்விறைவன் திருவடியில் அன்பில்லாதார் போல, யாவர்க்கும் எளியார் இல்லை - அனைவர்க்கும் எளியார் (பிறரொருவர்) இல்லை; ஈசன் அடிக்கு அன்புடையார் போல் - அவன் திருவடியில் அன்புடையார் போல, யாவர்க்கும் வலியார் இல்லை - அனைவருக்கும் வலியார் யாரும் இல்லை (என்பது தேற்றம்). உயிர் என்றது ஈண்டுப் பறவைகளை, அன்பிலார் போல் எளியாரில்லை என்பதற்கும் அன்புடையார் போல் வலியாரில்லை என்பதற்கும் இக்கயவாயொன்றே எடுத்துக் காட்டாயிற்றென்க. (23) ஆகச் செய்யுள் - 2296. நாற்பத்தெட்டாவது நாரைக்கு முத்திகொடுத்த படலம் [கலி விருத்தம்] அத்தி தந்த விமான வழகியார்1 பத்தி தந்த பறவைக்கு மந்திர சித்தி தந்த திறனிது நாரைக்கு முத்தி தந்த கருணை மொழிகுவேம். (இ - ள்.) அத்தி தந்த விமான அழகியார் - எட்டு யானைகளால் தாங்கப் பெற்ற விமானத்தின்கண் எழுந்தருளிய சுந்தர விடங்கப் பெருமானார், பத்தி தந்த பறவைக்கு - அன்பு செய்த கரிக் குருவிக்கு, மந்திர சித்தி தந்த திறன் இது - மந்திர சித்தி அருளிய திருவிளையாடல் இதுவாகும்; நாரைக்கு முத்தி தந்த கருணை மொழிகுவேம் - (இனி) நாரைக்கு முத்தி கொடுத்த திருவிளையாடலைக் கூறுவோம். அத்தி - யானை. தந்த - சுமக்கப் பெற்ற. (1) தேக்கு நீர்வையை நாட்டொரு தென்புலத் தாக்கு மாடவைப் பொன்றுள தவ்வயின் வீக்கு யாழ்செயும் வண்டுக்கு வீழ்நற வாக்கு தாமரை வாவியொன் றுள்ளதால். (இ - ள்.) தேக்கும் நீர்வையை நாட்டு - நிரம்பிய நீரையுடைய வையையாறு சூழ்ந்த பாண்டி நாட்டின், ஒரு தென் புலத்து - ஒரு சார் தெற்கின்கண், ஆக்கும் மாட வைப்பு ஒன்று உளது - நிருமிக்கப் பெற்ற மாடங்களையுடைய பதி ஒன்று உள்ளது; அவ்வயின் - அப்பதியின்கண், வீக்கும் யாழ் செயும் வண்டுக்கு - நரம்பின் கட்டமைந்த யாழ் இசை போல இசைபாடும் வண்டுகளுக்கு, வீழ் நறவாக்கு தாமரை வாவி ஒன்று உள்ளது - விரும்பும் தேனை வாக்குகின்ற தாமரை மலர்கள் நிறைந்த வாவி ஒன்று உள்ளது. தேங்கும் என்பது வலித்தலாயிற்று. நற : குறியதன் இறுதிச் சினை கெட உகரம் பெறாது நின்றது. ஆல் : அசை. (2) ஆழ மிக்க கயந்தலை யத்தலை வாழு மீன மனைத்தையும் வாய்ப்பெய்து சூழ நந்துமுத் தீனுந் துறைக்கணே தாழ்வ தோர்செய்ய தாண்மட நாரையே. (இ - ள்.) ஆழம் மிக்க அக்கயந்தலைத் தலை - மிக்க ஆழத்தையுடைய அவ்வாவியின்கண், வாழும் மீனம் அனைத்தையும் - வாழுகின்ற மீன்கள் அனைத்தையும், வாய்ப் பெய்து - விழுங்கி, நந்து சூழ முத்து ஈனும் துறைக்கணே - சங்குகள் சுற்றிலும் முத்துக் களை ஈனுகின்ற அத்துறையின்கண், ஓர் செய்ய தாள் மடநாரை தாழ்வது - ஒரு சிவந்த கால்களையுடைய இளமை பொருந்திய நாரை தங்கா நின்றது. கயந்தலை - கயம்; வாவி. தாழ்தல் - தங்குதல். நாரை வாய்ப்பெய்து தாழ்வது என முடிக்க. (3) சிறிய நாண்மழை யின்றியச் சேயிதழ் வெறிய தாமரை யோடை வியன்கரை இறைகொணாரை யிருவினைப் பௌவமும் வறிய தாகி வறப்ப வறந்ததால். (இ - ள்.) சிறிய நாள் மழை இன்றி - சில நாள் மழையின்மையால, அச்சேய் இதழ் வெறிய தாமரை ஓடை - அந்தச் சிவந்த இதழ்களையும் மணத்தையுமுடைய தாமரை மலர்கள் நிறைந்த வாவி, வியன்கரை இறைகொள் நாரை - அதன் அகன்ற கரையின்கண் தங்கிய நாரையின், இருவினைப் பௌவமும் வறியதாகி வறப்ப - இரு வினையாகிய கடலும் பயனற்றதாய் வறக்குமாறு, வறந்தது - நீர் வற்றியது. வெறிய : வெறி என்னும் பண்படியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம். நல்வினையும் பிறவிக்கேதுவாகலின் 'இருவினைப் பௌவமும்' என்றார். வறியதாகி வறத்தல் - பயனின்றியொழிதல். இந்நாரை வேறிடஞ் சென்று முனிவர்கள் கூறும் புராணப் பொருள் கேட்டு அறியாமை நீங்கி இறைவனை வழிபட்டு முத்தி பெறுதற்கு முதலிற் காரணமாயிருந்தது இவ்வோடை நீர் வற்றியது ஆகலின் 'இருவினைப் பௌவமும் வறப்ப வறந்தது' என்றார். ஓடை வறந்தது என முடிக்க. ஆல் : அசை. (4) நுரைசெ றித்தன்ன நோன்சிறை நாரையும் இரைவி ரும்பியவ் வாவி யிகந்தொரீஇ விரைய வந்தொரு கானிடை வீழ்ந்ததால் புரையி லோர்க்கிட னாகுமப் பொங்கர்வாய். (இ - ள்.) நுரை செறித்தன்ன நோன்சிறை நாரையும் - நுரையினைச் செறித்து வைத்தாலொத்த வலிய சிறைகளையுடைய அந்நாரையும், இரை விரும்பி - இரை அருந்துதலை விரும்பி, அவ்வாவி இகந்தொரீஇ - அந்த வறண்ட வாவியினின்று நீங்கி, விரைய வந்து ஒரு கானிடை வீழ்ந்தது - விரைந்து வந்து ஒரு காட்டிலே சோர்ந்து விழுந்தது; புரை இலோர்க்கு இடன் ஆகும் அப்பொங்கர்வாய் - குற்றமில்லாத முனிவர்களுக்கு இடமாகிய அக்காட்டின்கண். செறித்தாலன்ன என்பது செறித்தன்ன என்றாயிற்று. இகத்தல் - கடத்தல். புரை - குற்றம். ஆல் : அசை. (5) முத்த ரான முனிவர் குழாத் தொடுஞ் சுத்த வானந்த வாரியுட் டோய்ந்துதன் சித்த மாசு கழீஇச்சிவ மாகிய சத்தி யத்தவ மாமுனி தங்குமால். (இ - ள்.) முத்தரான முனிவர் குழாத்தொடும் - சீவன் முத்தர்களான முனிவர் கூட்டத்துடன், சுத்த ஆனந்த வாரியுள் தோய்ந்து - சிவானந்தக் கடலில் மூழ்கி, தன் சித்தமாசு கழீஇ - தனது மன அழுக்கைப் போக்கி, சிவமாகிய சத்தியத் தவமா முனி தங்கும் - சிவமாந் தன்மை பெற்ற சத்தியன் என்னும் பெயரையுடைய பெரிய தவமுனிவன் தங்கியுள்ளான். முத்தர் - சீவன் முத்தி பெற்றவர். கழீஇ : சொல்லிசை யளபெடை. சிவமாதல் - சிவத்துவ விளக்கம் பெறுதல், இதிலும் பின்வரும் மூன்று செய்யுட்களிலும் ஆல் : அசை. (6) கூப்பி டெல்லை குணித்துச் சதுரமா யாப்ப மைந்துசுற் றெங்கும் படித்துறைக் கோப்ப மைந்து குளிர்சந்தி யாமடங் காப்ப மைந்தோர் கயந்தலை யுள்ளதால். (இ - ள்.) கூப்பிடு எல்லை குணித்துச் சதுரமா யாப்பு அமைந்து - ஒரு கூப்பிடு தூரம் வரையறுத்துச் சதுரமாகக் கட்டப்பட்டு, சுற்று எங்கும் படித்துறைக்கோப்பு அமைந்து - சுற்று முழுதும் படித்துறைக் கோவை அமையப் பெற்று, காப்பு - காவலோடு கூடிய, குளிர் சந்தியா மடம் அமைந்து - தண்ணிய சந்தியா மடம் அமையப்பட்டு, ஓர் கயந்தலை உள்ளது - ஒரு தடாகம் உள்ளது. குணித்து - வரையறுத்து, சந்தியாமடம் - சந்திக் கடன் செய்தற்குரிய மடம். (7) விரைசெய் சண்பகம் பாதிரி வேங்கைதேன் இரைசெய் வஞ்சி யிலஞ்சி குராமரா நிரைசெய் கிஞ்சுக நீண்மரு தாதியா உரைசெய் பன்மர மும்புறத் துள்ளவால். (இ - ள்.) விரை செய் சண்பகம் பாதிரி வேங்கை - மணம் வீசுஞ் சண்பகமும் பாதிரியும் வேங்கையும், தேன் இரை செய்வஞ்சி இலஞ்சி குராமரா - வண்டுகள் ஒலித்தலைச் செய்யும் வஞ்சியும் மகிழும் குராவும் மராவும், உரைசெய் கிஞ்சுகம் நீள் மருது ஆதியா - வரிசையாகவுள்ள முருக்கும் நீண்ட மருதும் முதலாக, உரை செய் பல்மரமும் - சொல்லப்பட்ட பல மரங்களும், புறத்து உள்ள - (அவ்வாவியின்) புறத்திலுள்ளன. தேன் - வண்டு. இரை, முதனிலைத் தொழிற் பெயர். (8) அந்த வாவியின் பேரச்சோ தீர்த்த1மென் றிந்த ஞால மியம்புவ தாலிரை உந்த வாவுகொ டூக்க2வெழுந்துமுன் வந்த நாரை யதன்கரை வைகுமால். (இ - ள்.) அந்த வாவியின் பேர் அச்சோ தீர்த்தம் என்று- அந்த ஓடையின் பெயர் அச்சோ தீர்த்தமென்று. இந்த ஞாலம் இயம்புவது - இந்நிலவுலகத்தாராற் கூறப்படுவது; இரை உந்து அவாவு கொடு ஊக்க - உணவில் மீதூர்ந்து எழுந்த விருப்பம் தன்னைப் பற்றிச் செலுத்த, எழுந்து முன் வந்த நாரை - புறப்பட்டு அவ்வாவியின் முன் வந்த நாரை, அதன் கரை வைகும் - அதன் கரையின்கண் தங்கா நின்றது. அவாவு, உ : சாரியை. (9) ஆய்ந்த மாதவ ரப்புனி தத்தடந் தோய்ந்து தோய்ந்தங் கெழுந்தொறுந் தோட்புறஞ் சாய்ந்த வார்சடைக் கற்றையிற் றத்துமீன் பாய்ந்து பாய்ந்து புரள்வன பார்த்தரோ. (இ - ள்.) ஆய்ந்த மாதவர் - உண்மைப் பொருளை ஆராய்ந்துணர்ந்த பெரிய முனிவர், அப்புனிதத்தடம் தோய்ந்து தோய்ந்து - அத்தூய வாவியின் கண் மூழ்கி மூழ்கி, எழுந் தொறும் - மேலே எழுந்தொறும், தோட்புறம் சாய்ந்த வார் சடைக்கற்றை யில் - பிடரிலே சாய்ந்து கிடக்கும் நீண்ட சடைத்திரளில், தத்தும் மீன் பாய்ந்து பாய்ந்து புரள்வன பார்த்து - குதிக்கின்ற மீன்கள் பாய்ந்து பாய்ந்து புரளுதலைப் பார்த்து. அடுக்குகள் பன்மை குறித்தன. அங்கு அரோ, என்பன அசை நிலைகள். (10) ஈண்டை யித்தவத் தோர்திரு மேனியைத் தீண்ட வெத்தவஞ் செய்தன வேகொலென் றாண்டை மீனமக் காகா வெனவிரை வேண்டு நாரை வெறுத்தங் கிருந்ததால்.1 (இ - ள்.) ஈண்டை இத்தவத்தோர் திருமேனியை - இங்கு இந்த முனிவர்கள் திருமேனியை, தீண்ட - தொடுதற்கு, எத்தவம் செய்தனவே கொல் என்று - (இந்த மீன்கள்) எத்துணைத் தவம் புரிந்தனவோ என்று கருதி, ஆண்டை மீன் நமக்கு ஆகா என - (அங்ஙனம் தவம் புரிந்து) அங்கு வசிக்கும் மீன்கள் நமக்கு இரையாகத் தகாதன என்று, இரை வேண்டும் நாரை - இரையை விரும்பி வந்த நாரை, வெறுத்து அங்கு இருந்தது - அதனை வெறுத்து அங்கு இருந்தது. வெறுத்து - உணவை வெறுத்து. ஆல் : அசை. (11) [அறுசீரடி யாசிரிய விருத்தம்] தன்னிகர்2 தவத்தோர் யாருந் தடம்படிந் தேறி நித்த மன்னிய கரும முற்றிச் சந்தியா மடத்தில் வைகி மின்னிய மகுடஞ் சூடி வேந்தனா யுலகங் காத்த பொன்னியல் சடையான்3கூடற் புராணநூ லோது கின்றார். (இ - ள்.) தன் நிகர் தவத்தோர் யாரும் - தனக்குத் தானே ஒப்பாகிய தவத்தினையுடைய முனிவரனைவரும், தடம்படிந்து- வாவியில் நீராடி, ஏறி - கரையேறி, நித்தம் மன்னிய கருமம் முற்றி - நாள் தோறும் நிலைபெற்ற வினைகளைக் குறைவறச் செய்து, சந்தியா மடத்தில் வைகி - சந்தியா மடத்திலே தங்கி, மின்னிய மகுடம் சூடி - விளங்கா நின்ற திருமுடி தரித்து, வேந்தனாய் உலகம் காத்த- சுந்தர பாண்டியனாய் உலகினைப் புரந்தருளிய, பொன் இயல் சடையான் - பொன் போலும் அழகிய சடையையுடைய சோம சுந்தரக் கடவுளின், கூடல் புராணநூல் ஓதுகின்றார் - மதுரை மான்மிய நூலினை ஓதி வருவாராயினர். தனக்குத் தானேயொப்பாகிய தவம் என்க. தந்நிகர் என்று பாடமாயின் தம் என்பது தவத்தோரைக் குறிக்கும். (12) அண்ணலெம் பெருமான் செய்த வருள்விளை யாட்டு மாதிப் பண்ணவன் சிறப்புங் கூடற் பழம்பதிச் சிறப்புந் தீர்த்தத் தெண்ணருஞ் சிறப்புஞ் சேர்ந்தோர்க் கெளிவரு மிறைவ னென்னும் வண்ணமு மெடுத்துக் கூறக் கேட்டங்கு வதியு நாரை. (இ - ள்.) அண்ணல் எம்பெருமான் செய்த அருள் விளையாட்டும் - இறைவனாகிய எம் பெருமான் செய்தருளிய திருவிளையாடல்களையும், ஆதிப் பண்ணவன் சிறப்பும் - முதற் கடவுளாகிய சொக்கலிங்க மூர்த்தியின் சிறப்பினையும், கூடல் பழம் பதிச் சிறப்பும் - அவனது பழம் பதியாகிய கூடல் என்னும் தலத்தின் சிறப்பினையும், தீர்த்தத்து எண் அருஞ் சிறப்பும் - பொற்றாமரைத் தீர்த்தத்தின் அளவிறந்த சிறப்பினையும், சேர்ந்தோர்க்கு -அம் மூர்த்திதலம் தீர்த்தங்களை அடைந்தோர்க்கு, இறைவன் எளி வரும் என்னும் வண்ணமும் - அவன் எளிதில் வந்து அருள் புரிவான் என்னுந் தன்மையையும், எடுத்துக்கூற - எடுத்துச் சொல்ல, அங்கு வதியும் நாரை கேட்டு - அங்கே தங்கியிருக்கும் நாரை அவற்றைக் கேட்டு. (13) மடம்படு மறிவு நீங்கி வல்வினைப் பாசம் வீசித் திடம்படு மறிவு கூர்ந்து சிவபரஞ் சோதி பாதத் திடம்படு மன்பு வாவென் றீர்த்தெழ வெழுந்து நாரை தடம்படு மாடக் கூடற் றனிநக ரடைந்து மாதோ. (இ - ள்.) மடம்படும் அறிவு நீங்கி - அறியாமையோடு கூடிய அறிவு நீங்கப் பெற்று, வல்வினைப்பாசம் வீசி - வலிய வினைக்கட்டை அறுத்து, திடம்படும் அறிவு கூர்ந்து - உறுதியாகிய மெய்யுணர்வு பெற்று, சிவபரஞ்சோதி பாதத்து இடம்பாடும் அன்பு - சிவபரஞ் சுடரின் திருவடிக்கண் பரந்த அன்பு, வா என்று ஈர்த்து எழ - வருவாயாக என்று இழுக்க, நாரை எழுந்து - நாரையானது புறப்பட்டு, தடம்படும் மாடக் கூடல் தனி நகர் அடைந்து - அகன்ற மாடங்கள் நிறைந்த கூடலாகிய ஒப்பற்ற பதியை அடைந்து. மடம்படும் அறிவு - சிற்றறிவு. திடம்படும் அறிவு - மெய்யுணர்வு. மாது, ஓ : அசைகள். (14) வாங்கிய திரைசூழ் பொற்றா மரைபடிந் திமையா வேழந் தாங்கிய விமான மேய தலைவனைத் தாழ்ந்து சூழ்ந்து தேங்கிய வருட்க ணோக்கத் தெரிசித்துத்1 திருமுன் வைகி ஓங்கிய கருணை மேனி யுள்ளுறத் தியானஞ் செய்து. (இ - ள்.) வாங்கிய திரைசூழ் பொற்றாமரை படிந்து - வளைந்த அலைகள் சூழ்ந்த பொற்றாமரையின்கண் நீராடி,. இமையா வேழம் தாங்கிய விமானம் மேய - இமையாத யானைகளால் தாங்கப்பட்ட விமானத்தின் கண் எழுந்தருளிய, தலைவனை - சோம சுந்தரக் கடவுளை, தாழ்ந்து சூழ்ந்து - வணங்கி வலம் வந்து, தேங்கிய அருள் கண் நோக்க - அவ்விறைவன் நிறைந்த அருளையுடைய திருக்கண்ணாற் பார்த்தருள, தெரிசித்து - அவனது அருளுருவைத் தரிசனஞ் செய்து, திருமுன் வைகி - திருமுன் இருந்து, கருணை ஓங்கிய மேனி - கருணை நிறைந்த திருமேனியை, உள்ளுறத் தியானம் செய்து - உள்ளே பொருந்தத் தியானித்து. இறைவன் அருட்கண்ணால் நோக்க அதனாற் றரிசித்தலை, " கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா வெழிலார் கழலிறைஞ்சி" எனத் திருவாதவூரடிகளஅருளிச் செய்தல் காண்க. (15) இந்நிலை நியம மூவைந் தெல்லைஞான் றியன்று பின்னாள் அந்நிலை யொழுகு நாரை யாடக கமலந் தோய்வான் வன்னிலை மதில்சூழ் ஞாங்கர் வந்துழிப் பசியால் வெந்து மின்னிலை வேல்போற் றுள்ளு மீன்கவர்ந் துண்கு மென்னா. (இ - ள்.) மூவைந்து ஞான்று எல்லை - பதினைந்து நாள் வரை, இந்நிலை நியமம் இயன்று - இவ்வொழுக்கமாகிய கடப்பாட்டிற் பொருந்தி நின்று, பின்னாள் - வழி நாள், அந்நிலை ஒழுகும் நாரை - அங்ஙனம் ஒழுகிய நாரை, ஆடக கமலம் தோய்வான் - பொற்றாமரையின்கண் நீராடுதற் பொருட்டு, வல்நிலை மதில் சூழ ஞாங்கர் வந்துழி - வலிய நிலையையுடைய சுற்று மதிலின் மருங்கு வந்த பொழுது, பசியால் வெந்து - பசித் தீயினால் வெந்து கருகுதலால், மின் இலை வேல் போல் துள்ளும் மீன் கவர்ந்து உண்கும் என்னா - ஒளியையுடைய தகட்டு வடிவமான வேற்படையைப் போலத் துள்ளுகின்ற மீன்களைப் பிடித்து உண்பேமென்று. தோய்வான் : வினையெச்சம்.. மின் நிலைத்த வேல் என்றுமாம். (16) சிறிதுளத் துள்ளி நாதன் றிருவருள் வலத்தாற் பின்னர் அறிவுவந் தச்சோ விந்த வறப்பெருந் தீர்த்தத் துள்ளே எறியுமீ னருந்த வாசை யெழுந்ததே யெனக்கிப் போதிப் பிறவியென் றொழிவ தென்னாப் பேரஞ ரடைந்து பின்னும். (இ - ள்.) உளத்து சிறிது உள்ளி - உள்ளத்தே சிறிது கருதி, நாதன் திருவருள் வலத்தால் - இறைவன் திருவருள் வலியால், பின்னர் அறிவு வந்து - பின்பு அறிவு வரப்பெற்று, அச்சோ - ஐயோ, இந்த அறப் பெருந் தீர்த்தத்துள்ளே - இந்த அறவடிவாகிய பெரிய தீர்த்தத்தினுள்ளே, எறியும் மீன் அருந்த - தாவுகின்ற மீனை அருந்த, ஆசை எழுந்ததே - எனக்கு இப்போது அவா உண்டாயிற்றே (இங்ஙனம் ஆனால்), இப்பிறவி என்று ஒழிவது என்னா - இந்தக் கொடிய பிறவி எப்பொழுது ஒழியுமோ என்று, பேர் அஞர் அடைந்து - பெருந் துன்பமுற்று, பின்னும் - மீண்டும். இங்ஙனம் பசி முதலிய துன்பம் உண்டாய வழிப் பழைய பயிற்சி வயத்தால் ஒரோ வழி நினைவு புலன்கள் மேற்செல்லுதலும், தமது மெய்யுணர்வால் அதனையொழித்துப் பிறப்பறுத்தலும் மெய்யுணர்ந்தார் கண் நிகழ்வனவென்க. அச்சோ : இரக்கப் பொருளில் வந்த இடைச் சொல். (17) சுந்தரச் செம்மல் பாதத் துணைமல ரன்பிற் றோய்ந்து சிந்தைவைத் திருக்கு மெல்லை தேவரு மறையுஞ் செய்யும் வந்தனைக் கரியா னாரை மனநினை வடிவாய்த் தோன்றி எந்தமக் கினியாய் வேண்டும் வரமென்கொ லியம்பு கென்றான். (இ - ள்.) சுந்தரச் செம்மல் பாதத்துணை மலர் - சோம சுந்தரக் கடவுளின் திருவடிகளாகிய இரண்டு தாமரை மலர்களிலும் வைத்த, அன்பில் தோய்ந்து - அன்பிற் படிந்து, சிந்தை வைத்திருக்கும் எல்லை - அந்நிலையில் மனத்தைப் பதியவைத்திருக்கும் போது, தேவரும் மறையும் செய்யும் வந்தனைக்கு அரியான் - தேவர்களும் வேதங்களுஞ் செய்யும் வழிபாட்டுக்கும் எட்டாத அவ்விறைவன், நாரை மனம் நினை வடிவாய்த் தோன்றி - அந்நாரை தன் மனத்து நினைத்த வடிவமாகத் தோன்றி, எந்தமக்கு இனியாய் - எனக்கு இனிய நாரையே, வேண்டும் வரம் என்கொல் இயம்புக என்றான் - உனக்கு வேண்டிய வரம் யாதோ அதனைக் கூறக்கடவாய் என்று கூறியருளினான். இறைவன் தேவரும் மறையும் செய்யும் வந்தனைக்கு அரியனாயும் இந்நாரைக்கு எளிவந்தனன் என வியந்து கூறினார் என்க. நினை - சிந்தித்த; தியானித்த. கொல் : அசை. இயம்புக என்பதன் அகரம் தொக்கது. (18) [கலிநிலைத்துறை] செய்ய கான்மட நாரையுஞ் சென்றுதாழ்ந் தைய னேயிப் பிறவி யறுத்துநின் மெய்யர் வாழ்சிவ லோகத்தின் மேவிநான் உய்ய வேண்டுமொன் றின்னமு முண்டரோ. (இ - ள்.) செய்யகால் மட நாரையும் - சிவந்த தாளையுடைய அவ்விள நாரையும், சென்று தாழ்ந்து - திரு முன்சென்று வீழ்ந்து வணங்கி, ஐயனே இப்பிறவி அறுத்து - ஐயனே இக்கொடிய பிறவியைப் போக்கி, நான் - அடியேன், நின் மெய்யர் வாழ் சிவலோகத்தின் மேவி - நினது உண்மை அன்பர்கள் வாழுஞ் சிவலோகத்திற் சென்று, உய்ய வேண்டும் - பிழைக்க வேண்டும்; இன்னமும் ஒன்று உண்டு - இன்னமும் வேண்டும் வரம் ஒன்று உள்ளது. " வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை" என்பது மறையாகலின் முதற்கண் பிறவியறுத்தல் கூறிற்று. அரோ : அசை. (19) வள்ள லென்மர புள்ளவு மற்றைய புள்ளு மிந்தப் புனித மலர்த்தடத் துள்ள மீனுயி ருண்ணினெக் காலமும் தள்ளொ ணாத பழிவந்து சாருமால். (இ - ள்.) வள்ளல் - கருணை வள்ளலே, என் மரபு உள்ளவும் மற்றைய புள்ளும் - எனது மரபில் உள்ளனவும் மற்றையவுமான பறவைகள், இந்தப் புனித மலர்த்தடத்து உள்ள - இந்த மலர் நிறைந்த தூய வாவியிலுள்ள, மீன் உயிர் உண்ணின் - மீன்களின் உயிரை உண்டால், எக்காலமும் - எஞ்ஞான்றும், தள்ளொணாத பழி வந்து சாரும் - நீக்க முடியாத பாவம் வந்து (அவற்றைச்) சேரும் (ஆதலால்.) மற்றையவுமாகிய புள் என உம்மையை மாறுக. ஆல் : அசை. (20) என்று மித்தட மீனில வாகநீ நன்று சால்வர நல்கென வெள்ளிமா மன்று ளானும் வரந்தந்து போயினான் சென்று நாரை சிவலோகஞ் சேர்ந்ததால். (இ - ள்.) என்றும் இத்தடம் மீன் இலவாக - எஞ்ஞான்றும் இவ்வாவியின்கண் மீன்கள் இல்லையாகுமாறு, நன்று சால்வரம் நீ நல்கு என - நன்மை நிறைந்த அவ்வரத்தினை நீ அருளக் கடவை என்று வேண்ட, மாவெள்ளி மன்றுளானும் வரம் தந்து போயினான் - பெரிய வெள்ளியம் பலத்தையுடைய சோம சுந்தரக் கடவுளும் அவ்வரத்தை அருளி மறைந்தனன்; நாரை சிவலோகம் சென்று சேர்ந்தது - நாரை சிவலோகத்தைச் சென்றடைந்தது. ஆல் : அசை. (21) இயங்க ளைந்து மியம்ப விமானமேற் புயங்க ணான்குமுக் கண்களும் பொற்பவான் வியங்கொள் பூமழை வெள்ளத்து ளாழ்ந்துபோய் வயங்கொ ணந்தி கணத்துள் வதிந்ததே. (இ - ள்.) இயங்கள் ஐந்தும் இயம்ப - தேவ துந்துபிகள் ஐந்தும் ஒலிக்க, விமானமேல் - விமானத்தின் மேலேறி, புயங்கள் நான்கும் முக் கண்களும் பொற்ப - நான்கு தோள்களும் மூன்று கண்களும் அழகு செய்ய, வான் வியம் கொள் பூமழை வெள்ளத்துள் ஆழ்ந்து போய் - வானுலகோர் பொழிந்த பெருமை பொருந்திய மலர் மழையாலாகிய வெள்ளத்தில் மூழ்கிச் சென்று, வயம் கொள் நந்தி கணத்துள் வதிந்தது - வெற்றியையுடைய நந்தி கணங்களுள் ஒன்றாய்த் தங்கியது. புயங்கள் நான்கும் முக்கண்களும் பொற்ப என்றமையால் சிவச ரூபம் பெற்றுச் சென்றதென்க. வியம் - பெருமை. நந்தி கணம் - சிவ கணம். (22) அன்று தொட்டின் றளவும்பொற் றாமரை என்று ரைக்கு மெழின்மல ரோடையிற் சென்று கைத்துத் திரிகின்ற மீனலால் ஒன்று மற்றன நீர்வா ழுயிர்களும். (இ - ள்.) அன்று தொட்டு இன்று அளவும் - அன்று முதல் இந்நாள்காறும், பொற்றாமரை என்று உரைக்கும் - பொற்றாமரை என்று சொல்லப்படும், எழில் மலர் ஓடையில் - அழகிய மலர்களையுடைய அவ்வாவியின்கண், சென்று உகைத்துத் திரிகின்ற மீன் அலால் - ஓடித் துள்ளி விளையாடும் மீன்களேயன்றி, நீர் வாழ் உயிர்களும் ஒன்றும் அற்றன - ஏனைய நீர் வாழ் உயிர்களும் சிறிதுமின்றி ஒழிந்தன. (23) [அறுசீரடி யாசிரிய விருத்தம்] தன்கிளை யன்றி வேற்றுப் பறவைக டாமுந் தன்போல் நன்கதி யடைய வேண்டிற் றேகொலிந் நாரை செய்த அன்பினில் வியப்போ வீச னருளினில்*வியப்போ வன்பர்க் கின்புரு வான வீச னன்பருக் கெளிதே யைய.+ (இ - ள்.) தன் கிளை அன்றி - தனது இனமாகிய பறவைகளே யல்லாமல், வேற்றுப் பறவைகள் தாமும் - வேறு இனப் பறவைகளும், தன் போல் - தன்னைப் போல, நன்கதி அடைய வேண்டிற்றே - சிவகதி அடையுமாறு இறைவனிடத்து வரம் வேண்டியதே, இந்நாரை செய்த அன்பினில் வியப்போ - இந்த நாரை புரிந்த அன்பினில் வியப்புளதோ (அன்றி), ஈசன் அருளினில் வியப்போ- (அதற்கு எளிவந்த) இறைவன் அருளின்கண் வியப்புளதோ, அன்பர்க்கு இன்பு உருவான ஈசன் - அன்பர்கட்கு இன்ப வடிவமாய் விளங்கும் சிவபிரானது அருள், அன்பருக்கு எளிதே- அன்பர்களின் அன்புக்கு எளிதே. முன் கரிக் குருவி தன் கிளையெல்லாம் தன் போல் மேன்மையெய்த வரம் பெற்றது. இந்நாரையோ அவ்வளவன்றி வேற்று இனப் பறவைகளும் நற்கதியடைய வேண்டிற்று, இதனது அன்பிருந்தவாறென்னே என வியந்தபடி. அன்பினில் வியப்போ அருளினில் வியப்போ என்னும் வினாவுக்கு ஈசனருள் அன்பர் அன்புக் கெளிதே எனவச் சமற்காரமாக விடை கூறப்பட்டது. " முட்டி லன்பர்த மன்பிடுந் தட்டுக்கு முதல்வர் மட்டு நின்றதட் டருளொடுந் தாழ்வுறும் வழக்கால்" என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுள் இங்கு நோக்கற்பாலது. கொல், ஐய என்பன அசைகள். (24) மறக்கு றும்புக் களைகட்டு மண்ணின்மேல் அறப்பெ ரும்பயி ராக்கி யதன்பயன் சிறக்க நல்கிட வுண்டு செருக்குவான் துறக்க மெய்தி யிருந்தான் சுகுணனும். (இ - ள்.) சுகுணனும் - சுகுண பாண்டியனும், மறக் குறும்புக் களைகட்டு - பாவமாகிய சிறிய களையைப் பிடுங்கி, மண்ணின் மேல் - நிலவுலகின் மேல், அறப்பெரும் பயிர் ஆக்கி - அறமாகிய பெரிய பயிரை வளர்த்து, அதன் பயன் சிறக்க நல்கிட உண்டு செருக்குவான் - அதன் பயன் மிகவும் கைகூட (அதனை) உண்டு களித்தற் பொருட்டு, துறக்கம் எய்தி இருந்தான் - துறக்க நாட்டினை அடைந்திருந்தான். இவ்வுலகிற் புரிந்த அறத்தின் பயனை நுகர்ந்து களித்தற் பொருட்டுத் துறக்க மெய்தினன் என்றார். செருக்குவான் : வினையெச்சம். (25) ஆகச் செய்யுள் - 2321. கூடற்காண்டம் முற்றிற்று. செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை (எண் : பக்க எண்) அகமரு டணத்தா 103 அகில வேதமு 262 அங்க மாறொடு 3 அங்க யற்கண் 4 அடியர் பூசனைக் 42 அட்டில்வாய நெருப்பி 83 அண்டத்தா ரமரர் 60 அண்ணலெம் பெருமான் 288 அதிக நல்லற 47 அத்திட மரபின் 246 அத்தி தந்த 283 அந்த நாள 28 அந்த வாவியின் 286 அந்த வேத்தவை 219 அப்போ திளமூர அமுத வாவியும் 118 அமுது செய்தருந் 43 அம்பொற் றவிசிட் 188 அரச னல்கிய 174 அரசனிங் கில்லை 86 அரச னுட்கிடை 212 அருந்து நல்லமு 46 அருமறை யகத்து 33 அருளி னானையந் 14 அலங்கு மாரமோ 219 அலம்பு பாற்கடல் 119 அலைகட னெடுந்துகி 182 அலைசி றந்த 23 அவரை நின்கடைக் 263 அழல டைந்தபி 51 அழுக்கு மூழ்கிய 143 அளவி லாற்றுலுந் 263 அளிய றாமனத் 15 அறத்தவி சிருப்போ 85 அறத்தி னுக்கு 21 அறமக ளாக்கமு 183 அறவனீ யல்லை 35 அனையது கேட்ட 94 அனைய ராயவர் 261 அனையவர் போக 95 அனையா னறத்திற் 66 அனைவரு மிரங்க 89 அன்பன் னடியார்க் 74 அன்று செம்பியர் 4 அன்று தொடுத்தத 253 அன்று தொட்டின் 292 அன்று பத்திரன் 166 அன்று பாதி 20 அன்றுபோன் மற்றை 216 அன்னதனித் தொன் 135 அன்ன போகமட 204 ஆடமைத்தடந் 207 ஆண்ட நாயக 116 ஆத லானெனக் 174 ஆதி சுந்தரக் 126 ஆதி நாயகன் 260 ஆயதோ ரமையந் 32 ஆய புண்ணிய 255 ஆய மாதர்போர் 40 ஆயிடை யலகைத் 29 ஆயி னும்மெனக் 279 ஆய்ந்த மாதவ 286 ஆய்மலர்க் கான 275 ஆர்த்தார் முடியோன் 108 ஆவ தாகவென் 280 ஆவலித் தழுத 91 ஆவவென்னு 174 ஆவியங் கேக 241 ஆழ மிக்க 284 ஆற்றல்சா லொருவன் 272 ஆன்ஞ் சாடிய 125 ஆனநா ளொருநா 234 ஆனா விரத 105 இகழ்ந்த கூற்றெறி 172 இக்கரிக் குருவி 281 இடையினோ டேனைப் 224 இத்தொழி லன்றி 177 இந்நிலை நியம 289 இந்நீர வாய 68 இம்மது ரேசன் 274 இம்மெனப் பலருங் 95 இம்மை யிப்பவத் 258 இயங்க ளைந்து 292 இயமான னிந்திரவி 98 இரக்கமில் கொடிய 31 இருந்தவன் சிலரை 273 இருமை யும்பெறு 210 இரும்புசெய் தண்டினை 252 இருவரேம் பாட்டுங் 217 இருளைக்கந் தரத்தில் 229 இல்லினுக் கேகி 94 இவ்விசை கேட்டு 141 இழுக்கி விட்டவிக் 164 இழுதொ டுஞ்சுவை 6 இறக்கும் முடம்பாற் 70 இறக்குவித் தவட்கு 226 இறையரு ளாணை 200 இறையருள் வரிசை 202 இற்கண்ணே யிசைவல் 141 இனிமதி யெமக்கீ 177 இனிவ ரும்பிறப் 129 இன்றுபாண் டியனை 240 இன்னண மூன்று 276 இன்ன வாறிவை 256 இன்னாவா றொழுகும் 269 இன்ன வேறு 239 இன்னன பலவு 10 இன்னிசைக் கரசை 201 இன்னிசையாழ்ப் பெரும் 194 ஈச னடிக்கன் 281 ஈண்டை யித்தவத் 287 ஈயஞ் செம்பிரும் 48 உடம்பா றிரண்டிற் 265 உடன் றிறைகொள் 223 உதித்த செங்க 208 உத்த மச்சிவ 2 உம்மை நல்லற 278 உருமு வன்ன 24 உரைக ளுந்தடு 130 உவமை யற்றவ 277 உழையரால் விடுக்கப் 140 உறுதி யெய்தினை 48 உன்னருட் டுணை 215 ஊடிவே றொதுங்கித் 160 எங்க ணாயகர் 46 எங்களுக் கரசே 240 எங்கு ளானெனத் 170 எடுத்த விந்தன 149 எண்ணிய வெண்ணி 8 எண்ணி லங்குறை 38 எண்ணி லாவுயிர்க் 277 எண்ணும் படியம் 106 எத்த வஞ்செய்தே 44 எமையா மருச்சித் 107 எய்தி யம்மட 218 எல்லியங் கமலச் 58 எவ்வுட லெடுத்தேன் 9 எழுதுசித் திரம்போன் 154 எழுவி னோடுதண் 128 எனவிவர் தமக்கு 77 என்பு தோன்றியூ 144 என்மகன் றன்னை 80 என்ற கத்திய 135 என்ற கத்தியன் 255 என்ற காவல 115 என்றசொல் லிடியே 61 என்ற தென்மலை 134 என்றனள் மறித்த 84 என்று கூறிய 253 என்று நாயக 263 என்று மித்தட 291 என்று வேத்திரங் 126 என்ன வக்குரீஇ 279 என்ன வந்தனை 169 என்ன வேத்தியின் 133 என்னையா ளுடையகூட 233 ஏங்கும் பெருமூச் 104 ஏவன் மைந்தர்போய் 172 ஏவிய சேனை 244 ஏன மின்னமுங் 257 ஏன மென்பற 257 ஐம்படை மார்பிற் 88 ஐம்பு லங்களும் 119 ஐய உள்ளெழுந் 45 ஐயரியுண் கண்ணாய் 198 ஐயர் தந்தபே 41 ஐயன் றிருமுன்ன 71 ஒண்ணுதலாய் வெண் 197 ஒருத்திநா னொருத்திக் 80 ஓடி யுன்பொருட் 172 ஓடு கின்றன 256 ஓரிடத் தினைய 274 கங்கு லிங்கருங் 11 கங்குல்வாய்க் கண்டவந்த 184 கங்குல்வாய்த் திங்கள் 59 கடலுடைந் தென்னப் 34 கடலென வருமா 59 கடிய கானகம் 167 கண்டனர் கன்னி 244 கண்டனன் முகிழ்த்தகைக் 185 கண்டிகை மகுட 55 கண்ணிறை நுதலோன் 163 கண்ணுதன் மதுரைப் 223 கண்ம லர்ந்தெழு 167 கரியு கைத்த 26 கரியுரை மொழிந்த 225 கருங்கடலை விசும் 195 கருந்துழாய் முகிலொரு 192 கருப்பு ரங்கமழ்ந் 117 கல்லு மாரழ 5 கல்லுமா றகன்ற 56 கழித்த கங்கு 23 கற்பின் மிக்கெழு 218 கனவட்டத் தடியிடறப் 101 கனியிசைக் கிழவன் 150 கன்னிநா டுடையான் 225 கன்னிநான் மாடக் 76 காஞ்சிப் பதிமுன் 19 காப்புச் செய்து 11 காய வாணி 22 காலிற் கடும்புரவி 100 காலொன்று முடுக்கப் 63 காவிரி நாடன் 57 கானலந்தேர் 30 கிட்டு கின்றதந் 257 கிளர்ந்த காலினா 123 கிளியு ளார்பொழிற் 38 குஞ்சி நாண்மலர்க் 166 குடங்கை நீரும் 220 குடங்கையி ணெடுங்க 88 குண்டுநீர் வறந்திட் 151 குருமொழி பயின்று 280 குறித்துச் செழியன் 248 குறுகு முன்ன 6 குற்ற மெத்தனை 209 குன்றா விருத்திக் 69 கூட லம்பதியி 203 கூப்பி டெல்லை 285 கொல்லிபம் பரிமான் 31 கொல்லையுங் குறிஞ் 182 கோடாத செங்கோலும் 16 கோடி மாமதிக் 115 கோமக னினைய 180 சித்தர் வானவர் 129 சித்தவெம் பெருமான் 179 சிந்தை தோயுமைம் 163 சிலபொலங் காசு 177 சிலைப யின்ற 25 சில்லரித் துடிகோ 235 சிவனை யர்ச்சனை 126 சிவிகை யோர்வழி 165 சிறந்த மாடநீண் 50 சிறிதுளத் துள்ளி 290 சிறிய நாண்மழை 284 சுருதிச் சுரும்பு 110 சுறவக் கொடியண்ண 108 செங்கணே றழக 226 செம்பொ னறையைத் 189 செய்ய கான்மட 291 செழியன் றனக்கு 18 செறிந்த மான்மு 236 சென்றவள் கங்கு 83 சொரிந்தன சோரி 243 சொற்பதங் கடந்த - சோ 111 சோனை மாரி 27 தடித்துநிரை புடைபரப் 194 தந்திப் பொருப்பைத் 249 தந்தை தாயிழந் 260 தந்தைதாய் மாமன் 93 தந்தையுந் தாயு 231 தருக்களுஞ் சலியா 158 தருநாத னாதி 230 தருமநீர்ப் பந்தரி 185 தவலருஞ் சிறப்பி 93 தறிந்த தாட 27 தறிந்த விந்தனந் 144 தனபதி மகப்பே 77 தனபதி வரவு 87 தன்கிளை யன்றி 292 தன்பு லங்களுங் 131 தன்பெருஞ் செல்வ 78 தன்ன டைந்தவத் 171 தன்னிகர் தவத்தோர் 287 தாக்க வேத 303 தாதக நிறைந்த 194 தாதை தன்றவக் 96 தாதை தன்றன 173 தாமநா றிதழி 76 தாயி ழந்துவெம் 262 தாள்சிதைந் தாருஞ் 243 திங்கள் வாணுதன் 148 திண்டேர் மிசைநின் 249 திரண்ட திர்ந்தெ 20 திருத்தர் பூவன 40 திருப்பணி பலவுஞ் 112 திருமு கத்துவேர் 145 துங்க மாமுக 258 துய்ய நீறணி 42 துரந்திடு மளவி 62 தூங்கிருள் வறுவாய்ச் 245 தூங்கு தானையை 128 தூய ராகியைஞ் 122 தெவ்வடு மகிழ்ச்சி 255 தெளித லின்றியே 278 தென்ற னாடனு 217 தென்னரே றனையாய் 216 தென்னவர் பெரும 140 தென்னவனாகி 215 தென்னவ னுட்கோ 213 தென்னவன் மதுரையி 184 தென்ன னரச 17 தேக்கு நீர்வையை 283 தேரி னோதை 25 தேவ ருந்தவ 173 தேனார் மொழியார் 221 தொகைமாண்ட தொண்ட 67 தொடுபழி தொலைவித் 113 தொட்ட புற்கி 236 தொழுந்தகையன் பருந் 193 தொழுந்தொழின் மறந்து 232 தொன்மைசால் குருவி 233 தோடு வெட்டி 1 நடந்து கொள்ளுநர்க் 145 நட்பிடை வஞ்சஞ் 90 நரம்பி னேழிசை 39 நரம்புநனைந் திசைமழுங் 196 நரைமுது புலியன் 92 நல்லாவின் பாலி 266 நவம ணிக்கலன் 44 நனிபொழு தாடம 252 நாத வந்தமுங் 168 நாயினே னென்னை 132 நிராமய பரமா 111 நிலத்தைக் கிளைத்துப் 247 நீநாளும் பூசித் 72 நீநில் லெனத்தன் 247 நீல வண்ணன் 157 நுண்ண றிவுடைய 245 நுரை செறித்தன்ன 285 நெடியவன் பிரமன் 137 நெடிய னேமுதல் 167 நெய்யுண் பூங்குழன் 210 நென்னல் வாயடி 171 நையு நுண் ணிடையி 52 பஞ்சாதி வேதப் 72 பஞ்சு தடவுஞ் 188 படர்ந்த வார்சடை 120 படிமை யாமவதப் 218 பட்ட மாவொ 237 பண்கொண்ட வேத 97 பண்ணுத லிசைவண் 58 பதைத்தன ரெரியிற் 243 பத்தர் யாழிசைக் 173 பத்திமை நியமம் 276 பத்தி ரன்மனைவி 206 பத்துமான் றடந்தேர் 55 பந்த யாழ்முதுகு 205 பரம னெண்குணன் 134 பருங்கை மால்வரைப் 37 பலர்புகழ் சுந்த 54 பல்லே ருழவின் 67 பல்வகைக் கருவி 56 பல்வகைச் சாதி 242 பழைய தோர்பொல்லம் 144 பழைய மந்திரக் 265 பழையே மிறையுட் 267 பறவை வாயடைத் 147 பற்றிய பழிக்குத் 102 பாடன் மறையுந் 156 பாடி வெல்வதே 208 பாடி னான்பின்பு 170 பாடி னிக்கெதிரொர் 205 பாடுவா ரிருவர்க் 199 பாணர்தம் பிரானைக் 157 பாயிருட் படலங் 201 பாவத்தை யனைய 232 பிலத்தள வாழ்ந்த 64 பின்றுணை யாய 251 பின்ன ரின்னிசைப் 207 பின்னே ழடியோ 190 புட்கெலா மெளிதா 272 புண்டர நுதலுங் 33 புலரு முன்புன 121 புலர்ந்தபின் றாயத் 82 புல்லெ னீணிலைக் 147 புனைந்த வாழ்கடற் 145 பூசத் துறையிற் 109 பூத நாயகன் சுந்தரன் 135 பூத நாயகன் பூரண 96 பூழியர் பெருமான் 138 பெருமித முனக்கேன் 78 பெருவிலைக் குண்டலம் 85 பைத்தலை விடவாய் 161 பொடியார்க்கு மேனிப் 65 பொருந்தமந் தரக் 155 பொன்றளி ரனையாண் 213 பொன்னது வனைய 57 பொன்னி நாடன் 18 பொன்னின் றளிகை 187 பொன்னெடுந் தேரி 53 பொன்னொடு முத்தங் 106 போதுக மெழுக 241 போதுளான் பரமன் 159 மங்கல மாட 91 மங்கை பாகரை 49 மடக்கு பல்கலைப் 165 மடம்படு மறிவு 288 மடலி னீடு 28 மடுத்த வாளி 238 மட்ட லம்பிய 13 மண்ணிற் குதித்து 250 மண்ணினை வளர்க் 10 மண்பி ளந்து 29 மண்புக ழந்நகர் 183 மதங்க விழ்க்குமால் 127 மதியை நேர்வ 238 மயலறக் கற்புக் 179 மரும கன்ற 19 மருவிய வாய 214 மழவிடை யுடையான் 51 மள்ள ரோசை 239 மறக்கு றும்புச் 293 மறத்தாம வேலான் 268 மறத்துறை வேட்ட 235 மறிந்த தெண்டிரை 168 மறுக்குஞ் செயனீத்து 267 மறுத்த வுண்டியன் 13 மறைக ளாகமம் 127 மறைக ளின்சத 124 மறைக்குரை செய்த 180 மறைந்து போயினா 50 மறையாதி கலைபலவு 99 மறையி னாற்றினாற் 124 மறையோர்கள் பின்னும் 105 மற்றது கேட்டுக் 275 மற்றவர் தமைத்துரீஇ 185 மற்றவற் கருநிதி 184 மற்றிவன் குமரன் 54 மற்றை வாயில்கண் 12 மற்றை வைகலவ் 208 மன்ற லந்தெ 138 மன்றலந் தெரியன் 24 மன்னர் மன்னனாந் 254 மன்னவர் வலிக 227 மன்னவ னிராச 271 மன்னன் றானென் 189 மாசுண்ட தெய்வ 104 மாண்ட கேள்விசான் 264 மாத ரிந்நெறி 41 மாதர் நகையாய் 197 மாதுல ராகி 87 மாமாரி யிடைநனைந்து 195 மாவழங் கிடங்க 234 மாழாந்து செய்யும் 132 மாழை மாண்மட 114 மாறுகொள் வழக்குத் 81 மானம் பொறாது 248 மிடைந்தேறு நேரிப் 108 மின்ப னிக்கதிர் 65 மின்னவிருஞ் செம்பொன் 186 மின்னனை யார்பூங் 53 மின்னார் சடையான் 74 மின்னியல் சடையி 228 மின்னுமா மேக 200 மீனவன் மதுரை 63 மீனவன் வரிசை 139 முகையுடைந்த தமிழ்ந்த 139 முக்க ணாயகன் பொருட் 123 முக்க ணாயகன் முப்பு 3 முண்ட காசனன் 120 முத்த ராமுகிழ் 43 முத்த ரான 285 முந்திய யாழிடந் 211 முரலளி புறவிதழ் 85 முறையென விமையோர் 229 முற்படு தூசி 242 முனிவருந் தவத்த 160 முன்புடைய நாயகனை 193 முன்னவன் மதுரை 176 மெய்து றந்த 22 மையணி மிடற்றி 142 யாமினி யிந்த 62 யான றிந்தசா 164 வடியை நேர்விழி 45 வணங்குறு மருங்கிற் 214 வண்டறை கொன்றை 149 வந்த வேழிசைத் 169 வந்தி றைஞ்சிய 264 வந்து நம்மை 14 வந்து பொன்னனை 42 வந்து மதுரைப் 191 வந்துவா னகடு 79 வயிறது குழிய 153 வரகுண னதுகேட் 112 வரகு ணன்கதி 204 வரத னாகி 222 வரதன் மீனவன் 37 வரந்த வாதன 130 வரம்பின் மாதரார் 118 வரவு நேர்ந்தழைப் 146 வரிக்குருகிப் பத்திரற்குப் 271 வருதி யாலெனப் 116 வருத்த னாகிவந் 143 வலியை யென்பதென் 279 வல்லி யந்து 237 வள்ள லன்புன் 15 வள்ள லென்மர 291 வள்ளறன் றம்பி 36 வறந்த வாறுக 7 வன்றரை கிழிய 161 வன்றிறன் மன்னவர் 253 வாங்கிய திருமுக 181 வாங்கிய திரைசூழ் 289 வாங்கினன் றிருமுக 186 வாடிய முளரிபோன் 86 வாழிய வுலகின் 162 வானாறு சூடி 73 விசையொடு தானந் 152 விடனல்கு சூலப் 71 விடுக்கும் வாளி 26 விடைக்கடவுள் பின் 196 விடையவ னீறு 273 விண்ணாறு சூடும் 70 விரைசார் மலரோ 156 விரைசெய் சண்பகம் 286 விழியா யிரத்தோன் 105 விளைநில னடிமை 79 விளைமத வூற்று 30 விறனவில் பேட்டை 251 வீணைகை வழுக்கிச் 159 வீணை தோளிட 220 வீணை வாங்கினள் 212 வெங்கட் பழியின் 133 வெம்மைசெய் கதிர் 8 வெவ்வி லங்கினும் 261 வெவ்விற கெறிந்து 150 வெள்ள நோக்கி 7 வெள்ளைகா குளிகீ 154 வென்றி மீனவன் 211 வேட்டஞ்செய் காத 100 வேதமுதற் கலை 37 வேந்தர் சேகரன் 131 வேரியங் குவளை 82 வேனில் வேளென 254 வேனிற் கிழவோனில் 250 வைகலுங் கொடுப்போர் 178 வைத்த வேறுவே 49 வையை நாடலும் 13 ந.மு.வே.நாட்டார் வாழ்க்கைச் சுவடுகள் பிறப்பு: - நடுக்காவிரி, 12. 3. 1884 திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தந்தை - வீ.முத்துசாமி நாட்டார் தாய் - திருமதி தைலம்மை இளமைக் கல்வி: திண்ணைப்பள்ளி - நடுக்காவிரி தொடக்கப்பள்ளி - 3,4 ஆம் வகுப்புகள் நடுக்காவிரி தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் மதுரைத் தமிழ்ச் சங்கம் 1905 - பிரவேச பண்டிதம் 1906 - பாலபண்டிதம் 1907 - பண்டிதம் ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டியதை மூன்றே ஆண்டுகளில் படித்து முதல் வகுப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற பாராட்டுக்குரியவர். பொற் பதக்கம், தங்கத்தோடா, அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர். ஆசிரியர் பணி 1908 - பிசப் ஈபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. 1909 - தூய மைக்கேல் உயர் நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் 1910-1933 - தமிழ்ப் பேராசிரியர் பணி (22 ஆண்டுகள்) எஸ்.பி.ஜி. கல்லூரி , திருச்சிராப்பள்ளி 1933-1940 - தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் 1940 - சென்னை மாகாண தமிழர் மாநாட்டில் ‘நாவலர்’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டவர். 1941-1944 - மதிப்பியல் முதல்வர் கரந்தைப் புலவர் கல்லூரி தஞ்சாவூர் 28.3.1944 - இவ்வுலக வாழ்வில் இருந்து மறைந்தார். குறிப்பு : நாட்டார் தொடர்பான வரலாற்றுச் சுவடுகளின் விரிவான செய்திகளை பதிப்பாசிரியர் உரையிலும், நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண். 22 லும் பார்க்க) L L L நாவலர் ந.மு.வே நாட்டார் எழுதிய நூல்கள் / உரைகள் நூல்கள் 1915 - வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 1919 - நக்கீரர் 1921 - கபிலர் 1923 - கள்ளர் சரித்திரம் 1926 - கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் 1928 - சோழர் சரித்திரம் உரைகள் 1925 - இன்னாநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, உலகநீதி, நல்வழி, நன்னெறி திரிகடுகம் - கையெழுத்துப் படியாகக் கிடைத்து முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண் : 20 இல் பார்க்க. 1925 - 1932 - திருவிளையாடற்புராணம் 1940 - சிலப்பதிகாரம் 1942 - மணிமேகலை 1940 - 42 - கட்டுரைத்திரட்டு (இரண்டு தொகுதிகள்) 1944 - அகநானூறு உரைத்திருத்தம் : 1940 - தண்டியலங்காரப் பழைய உரை யாப்பருங்கலக்காரிகை அகத்தியர் தேவாரத்திரட்டு 1930 - பிப்ரவரி 11,12,13,14 ஆகிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளை சார்பாக தொல்காப்பிய ஆராய்ச்சி சொற்பொழிவு. (இந்த சொற்பொழிவு இதுவரை வெளிவராதவை கையெழுத்துப் படியாகக் கிடைத்தது. முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ்உரைகள் தொகுதி எண் - 17 இல் 15-வது கட்டுரையில் பார்க்க .) நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் நூல்கள் / கட்டுரைகள் 24 தொகுதிகளாக வெளிவருகின்றன. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் சிலப்பதிகாரம் தொகுதி 1 1) புகார்க் காண்டம் தொகுதி 2 2) மதுரைக் காண்டம் தொகுதி 3 3) வஞ்சிக் காண்டம் மணிமேகலை தொகுதி 4 4) மணிமேகலை 1 தொகுதி 5 5) மணிமேகலை 2 அகநானூறு தொகுதி 6 6) களிற்றியானைநிரை தொகுதி 7 7) மணிமிடை பவளம் தொகுதி 8 8) நித்திலக் கோவை திருவிளையாடற்புராணம் தொகுதி 9 9) மதுரைக் காண்டம்-1 தொகுதி 10 10) மதுரைக் காண்டம்-2 தொகுதி 11 11) மதுரைக் காண்டம்-3 தொகுதி 12 12) கூடற் காண்டம் -1 தொகுதி 13 13) கூடற் காண்டம் -2 தொகுதி 14 14) திருவாலவாய்க்காண்டம் -1 தொகுதி 15 15) திருவாலவாய்க்காண்டம் -2 தொகுதி 16 16) இலக்கியக் கட்டுரைகள் 17) இலக்கணக் கட்டுரைகள் தொகுதி 17 18) சொற்பொழிவுக் கட்டுரைகள் 19) வரலாற்றுக் கட்டுரைகள் தொகுதி 18 20) வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 21) சோழர் சரித்திரம் 22) கள்ளர் சரித்திரம் தொகுதி 19 23) நக்கீரர் 24) கபிலர் 25) அகத்தியர் 26) இளம்பூரணம் நீதிநூல்கள் + பதிணென்கீழ்க் கணக்கு நூல்கள் தொகுதி 20 27) ஆத்திசூடி 28) கொன்றைவேந்தன் 29) மூதுரை 30) நன்னெறி 31) நல்வழி 32) உலகநீதி 33) நறுந்தொகை 34) இன்னா நாற்பது 35) களவழி நாற்பது 36) கார்நாற்பது 37) திரிகடுகம் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 21 38) நாட்டார் நாட் குறிப்பு -1 - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 22 39) நாட்டார் நாட் குறிப்பு -2 மற்றும் வாழ்க்கை வரலாறு - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 23 40) கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 24 41) நாட்டார் புலமையும் பண்பும் L L L குறிப்புகள் குறிப்புகள் குறிப்புகள் (பாடம்.) 1. புகட்ட வண்டு (பாடம்.) 2. அராணி சொக்க (பாடம்.) 3. சுவைத்தருந் (பாடம்.) 1. காளகண்டர்த (பாடம்.) 1. கதிர்காய் (பாடம்.) 1. காப்புச்செய்த (பாடம்.) 1. என்று மந்நிலையனாய் (பாடம்.) 1. சேனை யேனும் (பாடம்.) 1. ஒடுங்க (பாடம்.) 1. தேர்க்கிரியுகைத்த (பாடம்.) 2. மற்றை வாளி (பாடம்.) 1. உழந்தவாலரோ (பாடம்.) 1. மாணவரிருவர் (பாடம்.) 1. கல்லிடை (பாடம்.) 1. சிங்கன் றன்னை (பாடம்.) 1. மடிவில் (பாடம்.) 1. ஐயருள் (பாடம்.) 1. அன்பு சித்திக்க (பாடம்.) 1. சிதறினர் பார்த்தே (பாடம்.) 1. கதிர்காய் (பாடம்.) 1. கூராத் (பாடம்.) 1. உயிர்த்துணையாய (பாடம்.) 1. இன்றென் (பாடம்.) 1. செஞ்சாலியாய (பாடம்.) 1. சார்பிலார் தம்மனோர்க்கோர் (பாடம்.) 1. இவனுந் தேறும் (பாடம்.) 1. அனைவரு மறிய (பாடம்.) 1. என்னா வஞ்ச (பாடம்.) 1. ஊண் மாறாட்டத் (பாடம்.) 1. தாயத்தா ரிவரை (பாடம்.) 1. வரிசையுள் வெறுப்ப (பாடம்.) 1. பரமாமனாகி (பாடம்.) 1. இனதேசு (பாடம்.) 1. பிறிவான (பாடம்.) 1. தோய்த்த (பாடம்.) 1. ஒழியப்படும் (பாடம்.) 1. பழிமாற்றுதும் (பாடம்.) 1. வார்க்கும், (பாடம்.) 2. நாரத தும்புரு (பாடம்.) 1. அலங்கு பாற்கடல் (பாடம்.) 2. விருந்தவா வருந்த (பாடம்.) 1. முருந்தவாணகை (பாடம்.) 1. நாயினேன் றன்னை (பாடம்.) 1. பனித்து (பாடம்.) 2. களித்தார் (பாடம்.) 1. தெவ்விசை (பாடம்.) 1. வான்மதி (பாடம்.) 1. கனவினற் குறிய (பாடம்.) 2. முடிமிசை சூட (பாடம்.) 1. குவித்தொலி (பாடம்.) 1. குரைகட நீந்த. (பாடம்.) 1. பொருப்பின் மங்கை (பாடம்.) 1. விபஞ்சிப்பாண (பாடம்.) 2 பாணன் பத்திரன் (பாடம்.) 1. பயிரறு பயிறரு (பாடம்.) 1. வேறாக வோர்ப்பார் (பாடம்.) 2. நாத்தல நடுங்கி (பாடம்.) 1. அன்பின் துனிவரும் (பாடம்.) 1. தெறத்தறிந்த (பாடம்.) 2. எறிந்த (பாடம்.) 3. எம்பிரான் (பாடம்.) 1. தெளியார் (பாடம்.) 1. என்னுரை செய்தேம் (பாடம்.) 1. ஒளித்த கள்வ னொருவனோ (பாடம்.) 1. ஆமுறுந் தண்டம் (பாடம்.) 1. சிறந்தவந்நகர் (பாடம்.) 1. நன்பன்றனை (பாடம்.) 1. தன்னதென்னும் (பாடம்.) 1. கரந்தவர் (பாடம்.) 1. அந்நிலையில் (பாடம்.) 2. வரவழைத்த (பாடம்.) 3. வளைந்ததென (பாடம்.) 1. மயிர் சிலும்ப (பாடம்.) 1.மலையின் மேய (பாடம்.) 1. வரிசையா நடத்தி. (பாடம்.) 1. தெய்வ மேது (பாடம்.) 1. உன்னருடுணை (பாடம்.) 1. கற்பு மிக்கெழு (பாடம்.) 2. பொற்புமிக்குள (பாடம்.) 1. விக்கம் (பாடம்.) 1. தண்டார்ச்சேனை (பாடம்.) 1. ஈட்டும் படைஞராய் (பாடம்.) 2. சில்லரி துடி (பாடம்.) 1. இசையாநிற்பர் (பாடம்.) 1. முகையினின் (பாடம்.) 1. தெய்வகானத்து (பாடம்.) 2. இருகாதும் (பாடம்.) 1. ஓச்சி (பாடம்.) 1. அருந்தவரெலாம் (பாடம்.) 2. குடமுனி (பாடம்.) 1. அகற்றுவானின்ற (பாடம்.) 2. மொய்ப்பன (பாடம்.) 1. வெய்யவாய் (பாடம்.) 1. இறையூழ் கொளப்பட்டம் (பாடம்.) 1. மறத்தான வேலான் (பாடம்.) 1. செய்தந்த வலத்தால் (பாடம்.) 2. புறத்துள் (பாடம்.) 1. அனைய மூன்று (பாடம்.) 2 அதிகன் (பாடம்.) 1. மித்திஞ்சயம் (பாடம்.) 1. மேன்மை தக்கவன் (பாடம்.) 1. விமான மழகியார் (பாடம்.) 1. அதோ தீர்த்தம் (பாடம்.) 2. கொடுக்க முந்தவாவு முடுக்க (பாடம்.) 1. இறுத்ததால் (பாடம்.) 2. தந்நிகர் (பாடம்.) 3. பொன்னியற் சடையான் (பாடம்.) 1. நோக்கந் தெரிசித்து (பாடம்.) 1. ஈசனருளன்பர்க்கு (பாடம்.) 2. எளிதேயை