நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 9 திருவிளையாடற் புராணம் மதுரைக் காண்டம் - 1 உரையாசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 9 உரையாசிரியர் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம், பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 288 = 320 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 200/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : மு. இராமநாதன், வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் 124 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு வல்லுனர் குழு 1. முனைவர் கு.திருமாறன் 2. முனைவர் இரா.கலியபெருமாள் 3. பேராசிரியர் சண்முக.மாரி ஐயா 4. பேராசிரியர் நா.பெரியசாமி 5. முனைவர் பி.தமிழகன் 6. முனைவர் மு.இளமுருகன் பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற் காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரிய வர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர் களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்வி களிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப்பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக் குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921 -இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல் களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக்கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரணமாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த் தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர் களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள் கின்றேன். 17.07.2007 பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 அணிந்துரை 1. புராண இலக்கியம் தமிழில் தோன்றி வளர்ந்துள்ள இலக்கிய வகைகளில் புராணம் என்பதும் ஒன்றாகும். புராணம் என்ற சொல்லிற்குப் பழமை, தொன்மை என்பது பொருள். தொல்பழங்காலத்திற்கு முன்பிருந்தே மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கைகள், கற்பனைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு படைப்பாற்றல் மிக்க பாவலர்களால் படைக்கப்பெற்றவை புராண இலக்கியங்கள் ஆகும். புராணம் என்ற சொல்லினைப் புராணி, நவீனாம் என்று விரித்துப் பழைய பொருள் பேசப்படினும் புதுப்பொருள் பொருந்தியது என்று ஒரு விளக்கம் கூறப்படுதல் உண்டு. ( It is though old ever new ) . மிகப் பழைய காலத்தில் நடந்ததாகக் கருதப்படும் கதை விளக்கமாகவும், பழைய நம்பிக்கைகளையும் மரபுகளையும் உரைப்பதாகவும் அமைவது புராணம். இவை தெய்வங்கள், முனிவர்கள், அரசர்கள் பற்றிய புனைவுகளாக இலங்குவன. இதிகாசத்துடன் புராணத்தையும் சேர்த்து ஐந்தாம் வேதமாகச் சாந்தோக்கிய உபநிடதத்தில் ஏழாம் இயலில் ( முதற் காண்டம்) சொல்லப்பெற்றது. உண்மையான நண்பன் நல்ல அறிவுரையினை உரிமையோடு கூறி நெறிப் படுத்துதல் போலப் பழைய கதைகளின் வழியே நீதிகளைப் புகட்டி மக்களை நல்வழிப்படுத்துதலின், புராண இதிகாசங்கள் யாவும் சுஹ்ருத் சம்மிதை ஆகும் என்று பிரதாபருத்தரீயம் என்ற அணியிலக்கணப் பனுவலில் வித்தியாநாதர் ( கி.பி.13 நூ.) குறித்துள்ளார். சுஹ்ருத் - நண்பன்; சம்மிதை - போன்றது என்று பொருள் கூறுவர். எல்லாப் புராணங்களையும் வேதவியாசரே தொகுத்துச செய்தனர் என்பது ஒரு கருத்து. இவையாவும் நைமிசாரண்யத்தில் இருந்த முனிவர்களுக்குச் சூதன் என்னும் பாடகன் கூறியவை என்பது மற்றொரு கருத்து. புராணங்களை 1. மகாபுராணம் 2. உபபுராணம் 3. தலபுராணம் என்று மூன்று வகையாகப் பாகுபடுத்துவர். முன்னைய இருவகைப் புராணங்களும் வடமொழியில் தோன்றியவை; அவற்றுள் ஒரு சில தமிழில் மொழி பெயர்க்கப்பெற்றவை. எனின், மூன்றாவதாகக் குறிக்கப் பெற்றுள்ள தலபுராணங்கள் பலவும் தமிழில் மூல இலக்கியமாக முகிழ்த்தவை. இவற்றுள் ஒரு சில வடமொழியில் மொழி பெயர்த்துக் கொள்ளப் பெற்றவை. கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடியுள்ள திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் தமிழில் முழுமையாகக் கிடைத்துள்ள முதல்தல புராணமாக ஆராய்ச்சி அறிஞர்களால் கருதப்படுகின்றது. இறைவன் கோயில் கொண்டுள்ள தலத்தின் சிறப்புக்களையும் அங்கு வங்கு வழிபட்டோர் பெற்ற நற்பேறுகளையும் எடுத்துரைக்கும் பாங்கில் கற்பனை வளமும் கருத்து வளமும் சிறக்கச் சீரிய விருத்த யாப்பில் புனையப் பெறும் தலபுராணத்தினைக் காப்பியமாகக் கருதுவோரும் உளர். பிரபந்த மரபியல், “காப்பியம் புராணமாய்க் கருதப் பெறுமே” என்று இயம்புதலின், காப்பியமும் புராணமும ஒருவகை இலக்கியப் படைப்பாக எண்ணப் பெற்றமை புலனாகும். 2. தல புராணங்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றினாலும் புனிதத் தன்மை பொருந்திய தலத்திற்குப் பாடப் பெற்றுள்ள தல புராணங்களில் அருணாசலப் புராணம், சிதம்பரப் புராணம், சேது புராணம், திருவாரூர்ப் புராணம், திருவானைக்காப் புராணம், திருக்காளத்திப் புராணம், திருவிரிஞ்சைப் புராணம், திருவெண்காட்டுப் புராணம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. பெரும்பாலும் தலத்தின் பெயரினாலேயே புராணங்கள் பெயர் பெற்றன. எனின், சிராமலை நாதரின் மீது சைவ எல்லப்ப நாவலர் பாடியது செவ்வந்திப் புராணம் ஆகும். இது தலத்தின் பெயரால் அமையவில்லை. சிராமலையில் (திருச்சி மலைக்கோட்டையில்) கோயில் கொண்டுள்ள ஈசனுக்கு உகப்பான செவ்வந்தி மலரின் பெயரினால் இப்புராணம் வழங்கப்பெற்றது. தல புராணங்களை மிகுதியாகப் பாடிய சிறப்புக்குரியவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆவர். 3. திருவிளையாடல் திருவிளையாடற் புராணம் மதுரையில் கோயில் கொண்டுள்ள சொக்கநாதரின் அரும்பெரும் அருள் விளையாடல்களைக் காவியச் சுவையுடனும் கற்பனை வளத்துடன் பத்தி உணர்வு உடனும் கலைச் சிறப்புடனும் பாரித்துரைக்கும் பாங்கில் பரஞ்சோதி முனிவரால் பாடப்பெற்றது. இப்படைப்பும் தலத்தின் பெயரால் வழங்கப்பெறாமல் இறைவனின் அற்புத விளையாட்டின் பெயரினால் வழங்கிவருதல் நோக்கத்தக்கது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐவகைத் தொழில்களையும் ஈசன் ஒரு விளையாட்டாக நிகழ்த்துகிறான் என்பதை விளக்க முற்பட்ட மாதவச் சிவஞான முனிவர், “ஐங்கலப் பாரம் சுமத்தல் சாத்தனுக்கு ஒரு விளையாட்டாதல் போல” என்று சிவஞான சித்தியார் உரையில் உவமை கூறித் தெளிவுறுத்தினார். மாணிக்கவாசகர், “காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி” என்று இறைவனின் விளையாட்டினைக் குறித்துள்ளார். ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு படைத்த மாந்தர் வரையுள்ள எல்லா உயிர்க்கும் அருள் சுரக்கும் வரம்பற்ற ஆற்றலும் எல்லை இல்லாப் பெருங்கருணைத்திறமும் வாய்ந்த முதல்வன் பல்வேறு கோலங்கொண்டு மன்பதைக்கு அருளிய வியத்தகு செயல்களைத் திருவிளையாட்டு, திருவிளையாடல் எனப் பெயரிட்டு வழங்கினர். இதனை வடமொழிவாணர் லீலை என்று கூறினர். பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரை மாநகரில் சிவபிரான் புரிந்துள்ள பற்பல அருள் விளையாடல் களில் அறுபத்து நான்கினை மட்டும் தேர்ந்தெடுத்துச் செல்லி நகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தினைச் செந்தமிழ் அமுதமாகப் பாடினார். இதுவே கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர்க்கு மூலமாதல் வேண்டும். எனினும், தம் நூலுக்கு மூலம் வடமொழியில் ஈசசங்கிதை என்று பாயிரத்தின் தொடக்கத்தில் குறித்துள்ளார். மூலம் தமிழாகவே இருப்பினும், வடமொழியிலிருந்து பாடுவதாகக் கூறுதல் நூலுக்குப் பெருமைதரும் என்று எண்ணிய காலத்தில் வாழ்ந்தவர் பரஞ்சோதியார் எனக் கருத வேண்டியுள்ளது. சைவப் பெருமக்கள் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், கந்தபுராணம் என்ற மூன்றினையும் சிவபிரானின் முக்கண்ணாகப் போற்றுதல் மரபு. இவற்றுள் நடுவணதாகிய திருவிளையாடற் புராணத்தினைப் பாடிய பரஞ்சோதியாரின் புலமைத் திறத்தையும் புராணத்தின் அமைப்பியல் அழகினையும் முதற்கண் சுருக்கமாகக் காண்போம். 4. பரஞ்சோதியார் படைப்புக்கள் பரஞ்சோதியார் திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் தோன்றியவர். இவர்தம் தந்தையார் மீனாட்சி சுந்தர தேசிகர் ஆவர். இளமையிலேயே பரஞ்சோதியார் செந்தமிழையும் வடமொழியையும் குறைவறக் கற்றார். இலக்கணம், இலக்கியம், அளவை நூல், நிகண்டு, நீதி நூல், வானூல், கலை நூல்கள் முதலியன பயின்று வரம்பிலாப் புலமை நிரம்பப் பெற்றார். சாத்திர, தோத்திரங்களிலும் தேர்ச்சி பெற்றுச் சிவநேசம் பூண்டு விளங்கினார். கவிபாடும் ஆற்றலும் பெற்றனர்.இவர் பாடியவை திருவிளையாடற் புராணம், மதுரை அறுபத்து நான்கு திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா, மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி, வேதாரணிய புராணம் என்பன. இப்படைப்புக்கள் பரஞ்சோதியாரின் புலமை வளத்திற்கும் கற்பனைத் திறத்திற்கும் படைப்பாற்றலுக்கும் கட்டியங் கூறுவன எனலாம். 5. திருவிளையாடற் புராணம் அமைப்பியல் வனப்பு ஒரு பெருங்காப்பியத்திற்குரிய அமைப்பியல் முழுமையும் வாய்க்கப் பெற்ற இலக்கியமாகத் திருவிளையாடற் புராணம் திகழ்கின்றது. மதுரைக்காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று காண்டங்களையும் 64 படலங்களையும் இப்புராணம் கொண்டுள்ளது. பெரும் பான்மையும் அறுசீர் ஆசிரிய விருத்தங்களும், கலிநிலைத் துறையில் அமைந்த பாடல்களும், கலிவிருத்தங்களும் செவிக்கின்பம் பயக்கும் பாங்கில் ஓசை நலம் தளும்பப் பரஞ்சோதி முனிவரால் பாடப்பெற்றவை. இப்பாடல்களின் தொகை 3363 ஆகும். இம்முனிவர், “ விரிமுறை விருத்தச் செய்யுள் வகைமையால் விளம்பலுற்றேன் ” என்று இயம்புதல் எண்ணத்தக்கது. நீர்பிரித்துத் தீம்பாலினை மட்டும் பருகக் கூடிய அன்னப் பறவையினைப் போல, இந்நூலினைப் பயில்வோர் குற்றத்தை நீக்கிக் குணத்தினைக் கொள்ளுதல் வேண்டும் என்று முனிவர் அவையடக்கம் கூறுதல் அறியத்தக்கது. இப்புராணத்தின் முதற்பாடல் “சத்தியாய்ச் சிவமாகி ” எனத் தொடங்குவது; விநாயகர்க்கு வணக்கம் கூறுவதாய் அமைந்தது. வாழ்த்துச் செய்யுளும் நூற்பயன் நுவலும் பாடலும் தொடர்ந்து வருவன. பெரும் பாலும் நூற்பயன் கூறுதல் நூலின் முடிவில் இடம் பெறும்; எனின், இங்குத் தொடக்கத்தில் இடம்பெறுதல் சுட்டுதற் குரியது. தொடர்ந்து சிவம், சத்தி உள்ளிட்ட கடவுள் வணக்கப் பாடல்களும், சிவனருட் செல்வராகிய அடியார்க்குரிய பாடல்களும் அமைந்துள்ளன. பாயிரப் பகுதியின் எச்சமாக நூல் செய்தற்குரிய காரணமும், முறையும், அவையடக்கமும், அரங்ககேறிய வரலாறும் சொல்லப்பெற்றன. திருநாட்டுச் சிறப்பு, திருநகரச் சிறப்பு என்ற பகுதிகளில் பாண்டிய நாட்டு வளமும், இயற்கை எழிலும், திணைக் காட்சிகளும், மதுரை மாநகரின் அமைப்பழகும், வீதிகளின் வனப்பும், மக்களின் செழுமையும் சிறப்பாகப் புனையப் பெற்றுள்ளன. இவற்றைப் படிப்பவரின் மனத்தில் சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தில் இளங்கோவடிகள் படைத்துள்ள மதுரை மாநகரின் மாண்புகள் தோன்றுதல் கூடும். புராண வரலாறு, தலம், தீர்த்தம், மூர்த்தி விசேடங்களும், புராணச் சுருக்கமாக அமையும் பதிகப் பகுதியும் படித்து மகிழத் தக்கவை. பரம்பொருளே விண்ணகத்தினின்றும் மண்ணகத்தில் தோன்றி நீதிநெறி நிலைபெறவும் யாவரும் இன்புறவும் அரசு புரிந்த திருவிளையாடல்கள் சுட்டத்தகுவன. இவற்றை நன்கு கற்றறிந்தவராகிய குமரகுருபரர், தமரநீர்ப் புவனம் முழுதொருங் கீன்றாள் தடாதகா தேவியென் றொருபேர் தரிக்கவந் ததுவும் தனிமுத லொருநீ சவுந்தர மாறனா னதுவும் குமரவேள் வழுதி உக்கிரன் எனப்பேர் கொண்டதும் தண்டமிழ் மதுரம் கூட்டுண வெழுந்த வேட்கையால் எனில்; இக் கொழிதமிழ்ப் பெருமையையார் அறிவர்! என வியந்து போற்றுதல் எண்ணி இன்புறத்தக்கது. இறைவன் திருவருட் சிறப்புடன் அருந்தமிழ்ச் சிறப்பும் இப்புராணத்தில் எங்கும் இடம்பெறக் காணலாம். மூவேந்தரும் செந்தமிழ்மொழியைப் பேணி வளர்த்தனர். எனினும், பாண்டியரின் பணியே விஞ்சி நிற்பது. முச்சங்கம் அமைத்துப் புலவர்களைப் புரந்து முத்தமிழ்ப் பணிபுரிந்த பாண்டியரின் சிறப்பு இப்புராணத்தின் பல இடங்களிலும் பரவியும் விரவியும் வந்துள்ளது. சங்கப் பலகை கொடுத்த படலம், தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம், கீரனைக் கரையேற்றிய படலம், கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம், சங்கத்தார் கலகம் தீர்த்த படலம், இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் என்பன எண்ணற்பாலன. “நெற்றிக் கண்ணினைக் காட்டினும் குற்றம் குற்றமே” என்ற அஞ்சா நெஞ்சம் கொண்ட அருந்தமிழ்க் கவிஞன் நக்கீரனின் குரல் இப்புராணத்தில் ஒலிக்கிறது. அகத்தியர் தென்னாடு வருதற்கு முன்பே செந்தமிழ் வளம் பெற்று விளங்கியது என்ற கருத்தினை, விடைகொடு போவான் ஒன்றை வேண்டினான்; ஏகும்தேயம் தொடைபெறு தமிழ்நாடு என்று சொல்லுப; அந்த நாட்டின் இடைபயில் மனித்த ரெல்லாம் இன்தமிழ ஆய்ந்து கேள்வி உடையவர் என்ப கேட்டார்க்(கு) உத்தரம் உரைத்தல் வேண்டும் காண்க (கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்.1) என்ற பாடலில் பரஞ்சோதியார் புலப்படுத்தியுள்ளார். கம்பரும் என்றுமுள தென்தமிழை இயம்பி இசை கொண்டான் என்று தமிழ்மொழியின் தொன்மைச் சிறப்பினைக் கூறுதல் இயைபு கருதி இவண் எண்ணிப் பார்த்தற்குரியது. தமிழிசையின் தனிப்பெரும் சிறப்பினையும் ஆற்றலையும் விறகுவிற்ற படலத்தில் பரஞ்சோதியார் சுவைபடப் பாடியுள்ளார். தன்னடியார் ஆகிய பாணபத்திரனின் பொருட்டு ஏமநாதன் என்னும் வடநாட்டுப் பாணனை அடக்கி ஆளும் பாங்கில் ஈசன் முதியனாகத் தோன்றிப் பண்ணிசைத்த பாங்கினப் பரஞ்சோதியார், “ பாணர்தம் பிரானைக் காப்பான் பருந்தொடு நிழல்போக் கென்ன யாணரம் பிசைபின் செல்ல இசைத்தவின் னிசைத்தேன் அண்ட வாணர்தம் செவிக்கா லோடி மயிர்த்துள்ள வழியத் தேக்கி யாணரின் அமுத யாக்கை இசைமயம் ஆக்கிற் றன்றே” “ தருக்களும் சலியா; முந்நீர்ச் சலதியும் சலியா; நீண்ட பொருப்பிழி அருவிக் காலும் நதிகளும் புரண்டு துள்ளா; அருட்கடல் விளைத்த கீத வின்னிசை அமுதம் மாந்தி மருட்கெட அறிவன் தீட்டி வைத்தசித் திரமே ஒத்த” என வரும் பாடல்களில் பயில்வோரின் உள்ளம் இன்புறப் படைத்திருத்தல் காணத்தக்கது. யாழ் + நரம்பு - யாணரம்பு எனப்புணர்ச்சி பெறுதற்கு வீரசோழிய இலக்கண நூலில் விதியுள்ளது. தேவர்க்கும், வேந்தர்க்கும், புலவர்க்கும் அருள் சுரக்கும் முதல்வன் அஃறிணையாகிய பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் பொருட்டுத் தாய்ப் பன்றியாக அவதாரம் கொண்ட அருட்செயலையும் இப்புராணம் ஒரு திருவிளையாடலாகப் போற்றியுள்ளது. பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம், பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம் என்பன ஆலவாயண்ணலின் அரிய அருள் விளையாட்டிற்குச் சான்றாவன. பரஞ்சோதியார், என்னையா ளுடைய கூடல் ஏகநா யகனே யுங்கட்(கு) அன்னையாய் முலைதந்(து) ஆவி யளித்துமே லமைச்ச ராக்கிப் பின்னையா னந்தவீடு தருமெனப் பெண்ணோர் பாகன் தன்னையா தரித்தோன் சொன்னான் பன்னிருதனயர்தாமும் எனவரும் பாடலில் நான்முகன் கூற்றில் வைத்துக் கூறும் திறம் காணத்தக்கது. மாணிக்கவாசகரின் பொருட்டுச் சோமசுந்தரக்கடவுள் புரிந்த திருவிளையாடல்கள் பற்பல. நரி பரியாக்கிய படலம், பரி நரியாக்கிய படலம், மண் சுமந்த படலம் என்பன எண்ணு தற்குரியன. வந்தி மூதாட்டிக்கு ஏழைபங்காளன் ஆகிய ஈசன் ஏவலனாக மண்சுமந்த திருவிளையாடலையும் பரஞ்சோதியார் பாடியுள்ளார். இத்திருவிளையாடலை மாணிக்கவாசகப் பெருமான், பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய் என்று குழைந்துருகிப் பாடியிருத்தல் இயைபு கருதி இவண் எண்ணத்தக்கது. திருஞானசம்பந்தர் மதுரைமாநகரில் சமணர்களுடன் சொற்போர் புரிந்து சைவத்தினை நிலைநாட்டிய வரலாற்றினையும் பரஞ்சோதி முனிவர் புராணத்தின் இறுதிப்பகுதியில் பாடியுள்ளார். இவர் நோக்கில், மாணிக்கவாசகர்க்குப் பிற்பட்டவராகச் சம்பந்தர் தோன்றுகிறார் எனலாம். கலைக் களஞ்சியமாகக் காட்சிதரும் திருவிளையாடற் புராணத்தில் இறைவனின் அளப்பரிய அருள்திறம், சிவநெறியின் மாட்சி, செந்தமிழின் சிறப்பு, நீதிகள், அரசியல்நெறி, இல்லற நெறி, சமுதாய ஒழுங்கு, பல்வேறு நம்பிக்கைகள், தொன்மங்கள் முதலியன சிறப்பாகப் பாடப்பெற்றுள்ளன. இதில் இடம் பெறும் இயற்கைக் காட்சிகள், கற்பனைகள், அணிகள், யாப்பியல் வனப்பு, ஓசைநலம் என்பன இதன் இலக்கியத் தரத்தினை உயர்த்துவன எனலாம். இத்தகைய சீரிய இலக்கியப் படைப்பிற்கு உரைகள் பல எழுந்தன. இத்திறம் பற்றிச் சுருங்கக் கூறலாம். 6. திருவிளையாடற் புராணம் உரைமரபு இப்புராணம் தோன்றிய காலம் முதல் இதில் இடம் பெறும் கதைகளைப் பொதுமக்களும் கற்றோரும் கேட்டின் புறும் வகையில் சொற்பொழிவு புரிவோர்க்காகப் பெருஞ் செல்வரும் சைவச் சான்றோரும் பொருளுதவி தந்துவந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் உரையில்லாமல் இதில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்குத் தெளிவான பொருள் அறிய முடியாத நிலை ஏற்பட்டது. அதன்விளைவாக உரைகள் தோன்றலாயின. அவற்றுள் ஒரு சிலவற்றைக் குறிப்பிடுதல் தகும். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணாக்கர் சோடசாவதானம் சுப்புராயச் செட்டியாரவர்கள் எழுதிய உரை பலராலும் பயிலப் பெற்று வந்துள்ளது. இவ்வுரையினைப் பின்பற்றி ஈக்காடு இரத்தினவேலு முதலியார் பொழிப்புரை எழுதி வெளியிட்டனர். மதுரைக் காண்டத்திற்கு மட்டும் மதுரை ஞானசம்பந்தப் பிள்ளை என்பார் பொழிப்புரை எழுதினார். இவர்கள் உரை திருவிளையாடற் புராணத்தின் பொருளைப் புரிந்து கொள்ளு தற்குப் பயன்தந்தன. எனினும் பல்வேறு பதிப்புக்களையும் ஒப்புநோக்கித் தக்க பாடங்களைத் தேர்ந்தெடுத்து ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் முறையிலும் ஆர்வலர் அனைவரும் பயின்று மகிழும் பாங்கிலும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் மூன்று காண்டங்களுக்கும் முறையாக எழுதிய உரை அட்சய ஆண்டு, தைத்திங்கள் 8 ஆம் நாள் (1927) சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரால் செப்பமுற வெளியிடப் பெற்றது. கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பயிலும் மாணாக்கர்க்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் அறிஞர்க்கும் பெரிதும் பயன்படும் பாங்கில் எழுதப் பெற்றுள்ள இவ்வுரையின் சிறப்புக்களைச் சுருக்கமாக இங்குக் காண்போம். 7. நாவலர் ந.மு.வே. உரைத்திறம் இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற அறிஞர் பெருமக்களில் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடத்தக்க புலமைச் செல்வராவர். இவர்களிடம் பயின்ற என் பேராசிரியப் பெருமக்கள் வகுப்பறையில் இவர்தம் நுண்மாண் நுழைபுலச் சிறப்பினையும் உரைகூறும் மாண்பினையும் பன்முறையும் எடுத்துரைத்த நினைவுகள் என் மனத்திரையில் எழுகின்றன. அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பழைய இலக்கியங்களுக்குப் பேருரை கண்ட இப்பெருமகனார் திருவிளையாடற் புராணத்திற்கும் சிறந்த உரை வரைந் திருத்தல் எண்ணுதற்குரியது. நாலடியாரில் பொழிப்பு, அகலம், நுட்பம், நூலெச்சம் என்ற நான்கு வகையான் நூலிற்கு உரை அமைதல் வேண்டும் (32.9) என்ற வரையறை காணப்படுகிறது. நாட்டார் ஐயா அவர்கள் உரை இக்கூறுகள் யாவும் பொருந்தி நூலின் சிறப்பினை வெளிக்கொணர்ந்து பயில்பவர் மனத்தில பதியச் செய்தல் சுட்டுதற்குரியது. சங்க இலக்கியப் பாக்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்கள், திருமுறைகள், மெய் கண்ட சாத்திரங்கள் என்பன இவர்தம் உரையில் மேற்கோளாக எடுத்தாளப் பெறுவன. உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உள்ளிட்ட உரையாசிரியர்களின் கருத்துக்களையும் இடை யிடையே எடுத்துக் காட்டித் தம்உரைக்கு ஆக்கம் சேர்த்தல் இவர்தம் இயல்பு. பாக்களுக்குரிய யாப்பினைச் சுட்டுதலும் அணிகளை விரித்து விளக்குதலும் தனிச்சிறப்பு. பாக்களில் அகன்று கிடக்கும் சொற்களை அணுகிய நிலையில் கொணர்ந்து பொருளியைந்து முடிய உரைவரைதல் சுட்டுதற்குரியது. ஒருபாடலில் பயின்றுள்ள தொடர்களை இயைபுறுத்தி வினை முடிபு காட்டுதலும், இலக்கணக் குறிப்புக்கள் தருதலும் உரையின் சிறப்பினை மேலும் உயர்த்துவன எனலாம். சைவசித்தாந்தச் செம்பொருளை ஏற்புழி இவர்தம் உரை இயைபுறுத்திக் காட்டுதல் எண்ணி இன்புறத்தக்கது. புலமை விருந்தாக அமையும் இவர்தம் உரையிலிருந்து ஒரு சில பகுதிகளைப் பயில்வார் பார்வைக்கு வழங்குதல் சாலும். பாயிரப்பகுதியில் “ திங்களணி திருவால வாய்எம் அண்ணல் திருவிளையாட்டு இவை” என்ற பகுதிக்கு நாட்டார் அவர்கள் நவிலும் உரைப்பகுதி காண்போம். திங்களணி அண்ணலென இயைக்க. திருவிளையாட்டு என்றது அதனைக் கூறும் நூலுக்கு ஆயிற்று. இறைவன் செய்யும் செயலெல்லாம் எளிதின் முடிதல் நோக்கி அவற்றை அவனுடைய விளையாட்டுக்கள் என்ப. “காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி” என்னும் திருவாசகமும்; “ சொன்னவித் தொழில்கள் என்ன காரணம் தோற்ற என்னின் முன்னவன் விளையாட் டென்று மொழிதலுமாம்” என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தமும் நோக்குக. இப்பகுதியில் தோத்திரமும் சாத்திரமும் மேற்கோளாக அமைந்து பாடற்பொருளை விளங்க வைத்தன. கல்லாலின் தோத்திரமும் சாத்திரமும் மேற்கோளாக அமைந்து பாடற்பொருளை விளங்க வைத்தன. கல்லாலின் புடையமர்ந்து என்ற தென்முகக் கடவுள் வாழ்த்துச் செய்யுள் உரையில், “ வேதம் முதலிய கலைகளெல்லாம் பாச ஞானமாகலானும் இறைவன் ‘பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரன்’ ஆகலானும் ‘மறைக்கு அப்பாலாய்’ என்றார்.” என்று சாத்திர விளக்கம் தந்து, ‘இருநிலனாய்த்தீயாகி நீருமாகி’ ‘விரிகதிர் ஞாயிறல்லர்’ எனவரும் அப்பரடிகளின் பாடல்களை மேற்கோள் தந்து தம் உரைக்கு வலிமை சேர்த்தனர். ‘உள்ளமெனும் கூடத்தில்’ என்ற பாடலின் உரையில், விநாயகக் கடவுளை வேழம் என்றதற் கேற்ப உள்ளம் முதலியவற்றைக் கூடம் முதலியவாக உருவகப்படுத்தினார் என்று எழுதுதல் எண்ணத்தக்கது. மதுரைக் காண்டத்தில் திருமணப் படலத்தில், “கள்ளவிழ் கோதை” எனவரும் பாட்டின் உரையில், “மிகுதியை உணர்த்தக் காடு என்றார். தெள்விளி - தெளிந்த ஓசை. “ஆம்பலம் தீங்குழல் தெள்விளி பயிற்ற” என்னும் குறிஞ்சிப் பாட்டு அடிக்கு நச்சினார்க்கினியர் கூறிய உரை காண்க.” என்று சங்க இலக்கியஉரை மேற்கோள் தருதல் காணத்தக்கது. இதே பாடலைத் தொடர்ந்து வரும், “மீனவன் கொடியும் கான வெம்புலிக் கொடியும் செம்பொன் மானவிற் கொடியும்” என்ற பாடற் பகுதிக்கு நாவலர் நாட்டார் தரும் விளக்கம் காண்போம். “மீன், புலி, வில் இவை முறையே பாண்டிய சோழ சேரர்கட்குக் கொடிகள். மூவேந்தருள் வலியுடைய ஒருவரைக் கூறுங்கால் அவருடைய கொடி முதலியவற்றுடன் ஏனை இருவரின் கொடி முதலிய வற்றையும் அவர்க்குரியவாகச் சேர்த்துக் கூறுதல் மரபு. “ வடதிவை மருங்கின் மன்னர்க் கெல்லாம் தென்தமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி மண்டலை யேற்ற வரைக வீங்கென” எனச் சிலப்பதிகாரத்து வருதலும் காண்க.” என்பது உரைப் பகுதியாகும். திருவிளையாடற் புராணப் பாடற்பகுதிக்குச் சிலப்பதிகார மேற்கோள் தந்து விளக்குதல் வேந்தரின் வலிமை மரபினைப் புலப்படுத்தும் பாங்கினைப் புரிந்து கொள்ளுதற்கு உதவும். கூடற்காண்டத்தில் “எல்லாம் வல்லசித்தரான படலத்தில்,” அகரமாதி எனத் தொடங்கும் பாடல் உரையில், “இடையிட்டு நின்ற ஏகாரங்கள் எண்ணுப் பொருள் குறித்தன. எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும் எண்ணுக் குறித்தியலும் என்மனார் புலவர் என்பது தொல்காப்பியம் என்று இலக்கண விளக்கம் கூறுதல் எண்ணற்பாலது. இக்காண்டத்தில் உலவாக்கோட்டை யருளிய படலத்தில், கூடற், படியார்க்கும் சீர்த்திப் பதியேருழவோருள் நல்லான் அடியார்க்கு நல்லான் (38.2) என்ற பாடற் பகுதிக்கு நாவலர் அவர்களின் உரை காண்போம். “ புவிமுழுதும் நிறைந்த கீர்த்தியையுடைய மதுரைப்பதியிலே ஏரான் உழுதலைச் செய்யும் வேளாளரில் சிறந்தவன் ஒருவன் அடியார்க்குநல்லான் என்னும் பெயரினன் .... கூடலின் புகழ் புவிமுழுதும் நிறைதல், “நிலனாவிற்றிரிதரூஉம் நீண்மாடக் கூடலார்” எனக் கலித்தொகையுள்ளும் குறிக்கப்பட்டது. சிலப்பதிகாரத்திற்குப் பேருரை கண்ட அடியார்க்கு நல்லாரும் வேளாண்குடி விழுச்செல்வராதல் கூடும். இப்பெயர் குறித்து மேலும் ஆராய்ந்து, “ அடியார்க்கு நல்லார் என்பது இறைவன் திருப்பெயருமாம், கருவூருள் ஆனிலை, அண்ணலார் அடியார்க்கு நல்லரே என்னும் ஆளுடையபிள்ளையார் திருவாக்கும் காண்க.” என்று நாட்டார் ஐயா தெளிவுறுத்தல் எண்ணி இன்புறத் தக்கது. சங்க வரலாற்றுத் தொடர்புடைய தொன்மங்களைக் கொண்டு விளங்கும் இப்புராணத்தின் மூன்றாம் பகுதியாகிய திருவாலவாய்க் காண்டத்தில் ‘தருமிக்குப் பொற்கிழியளித்த படலத்தில், தண்டமிழ் மூன்றும் வல்லோன் தான்எனக் குறியிட் டாங்கே புண்டர நுதலிற் பூத்துப் பொய்யிருள் கிழித்துத் தள்ள (52.99) என்ற பாடற்பகுதிக்கு அவர்களின் விளக்கம் நோக்குவோம். “ தண்ணிய மூன்று தமிழிலும் வல்லவன்தானே எனக் குறியிட்டது போலத் திரிபுண்டரம் ( - மூன்று கீற்றுத்திருநீறு) நெற்றியின்கண் இடப்பெற்று நிலையில்லாத அஞ்ஞான இருளைக் கிழித்து ஓட்டவும்.” என்பது உரைப்பகுதியாகும். வடமொழியினைத் தேவபாடை எனக் கூறிக்கொண்ட காலத்தில், எங்கள் செந்தமிழும் தெய்வமொழியே என்பதை நிலைநாட்டும் பாங்கில் சிவபிரான் முத்தமிழிலும் வல்லவன் என்றும், தலைச்சங்கத்துப் புலவருடன் கூடியிருந்து தமிழாராய்ந்தான் என்றும் தொன்மச் செய்தி வழங்கி வருதற்கு இறையனார் களவியலுரையும் சான்றாக அமைகின்றது. மேலே சுட்டப்பெற்ற உரைப்பகுதிகள் நாவலர் ந.மு.வே. அவர்களின் கூர்த்த மதிநலத்தினையும் சீர்த்த புலமை வளத்தையும் புரிந்துகொள்ளப் போதுமானவை. கற்றோர்க்குத் தாம் வரம்பாகத் திகழ்ந்த நாட்டார் ஐயா அவர்களின் ஆராய்ச்சித்திறனுக்கு ஒரு சான்று கூறுதல்சாலும். திருவிளையாடற்புராணத்தின் ஆராய்ச்சி முன்னுரையில், திருவிளையாடற் கதைகளில் எவை எவை பழைய இலக்கியங் களில் பொதிந்துள்ளன என்பதை அகழ்ந்தெடுத்துக் காட்டியுள்ள பகுதி அறிஞர்களால் உற்றுநோக்கத்தக்கது. சிலப்பதிகாரம், கல்லாடம், தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களிலிருந்து அவர்கள் கூறியுள்ள திருவிளையாடற் கதைகளை (ப.8) அவர்கள் கூறிய வரிசையிலேயே திருவிளையாடற் புராணப் பதிப்பில் ( அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, 1991) அதன் பதிப்பாசிரியர் ஆராய்ச்சி முன்னுரை என்ற பெயரில் அமைந்துள்ள பகுதியில் II , III - இல் மாற்றமின்றித்தாமே முதன்முதல் கண்டறிந்து கூறியதுபோல் எழுதியுள்ளார். நாவலர் நாட்டாரின் பெயரினை அவர் சுட்டாது போயினமையினை இங்குச் சுட்டுதல் நம் கடமை ஆயிற்று. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திருவிளையாடற் புராணத்திற்கு நாவலர் ந.மு.வே. அவர்களின் உரையினை ஏழு தொகுதிகளில் தமிழ் கூறு நல்லுலகிற்கு வழங்கும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் காலத்திற்கேற்ற பணி பாராட்டற்பாலது. இப்பணிக்கு உறுதுணையாக விளங்கும் உழுவலன்பு கெழுமிய பேராசிரியர் பி.விருத்தாசலம் அவர்கள் நாட்டார் பெயரினால் விளங்கும் திருவருள் கல்லூரியின் தாளாளராக ஆற்றிவரும் அரும்பணி அனைவராலும் பாராட்டற் பாலது. நாட்டார் ஐயாவின் ஏனைய நூல்களையும் தமிழ்மண் பதிப்பகம் வெளியிடும் செய்தியறிந்து உவகையுற்றேன். இந்நூல் வரிசையினைத் தமிழ்மக்களும் நூலகங்களும் பெற்றுப் பயன்கொள்ள வேண்டுகிறேன். 19.07.2007 முனைவர் சோ.ந.கந்தசாமி தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறைத் தலைவர் (ஓய்வு) தஞ்சாவூர். பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங் களை யெல்லாம் தேடியெடுத்துத் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மை யாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக் கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்டதால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும் போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு..., செயல் செய்வாய் தமிழுக்கு......,ஊழியஞ் செய் தமிழுக்கு......., பணி செய்வாய்! தமிழுக்கு........, இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.”எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர் தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர் களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந் தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங் களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலம் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற் குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடு வதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப் புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத் தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகுகுரு.செயத்துங்கன், பேரா. கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெரு மக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டு கின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் நாட்டார் கல்லூரி நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலம் திருமிகு குரு.செயத்துங்கன், முனைவர் கோ.கணேசமூர்த்தி உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை iv அணிந்துரை xi பதிப்புரை xxv முகவுரை 1 சிறப்புப்பாயிரம் 11 காப்பு 13 திருநாட்டுச் சிறப்பு 49 திருநகரச் சிறப்பு 95 திருக்கைலாயச் சிறப்பு 179 புராண வரலாறு 184 தலவிசேடப் படலம் 202 தீர்த்த விசேடப் படலம் 217 முர்த்தி விசேடப் படலம் 239 பதிகம் 260 செய்யுள் முதற்குறிப்பு அகர வரிசை 273 திருவிளையாடற்புராணம் மதுரைக் காண்டம் - 1 முகவுரை நீல மாமிடற் றால வாயிலான் பால தாயினார் ஞால மாள்வரே. ஒருமருந் தாகியுள்ளா யும்பரோ டுலகுக்கெல்லாம் பெருமருந் தாகிநின்றாய் பேரமு தின்சுவையாய்க் கருமருந் தாகியுள்ளா யாளும்வல் வினைகடீர்க்கும் அருமருந் தாலவாயி லப்பனே யருள்செய்யாயே. வாயானை மனத்தானை மனத்து ணின்ற கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் றன்னைத் தூயானைத் தூவெள்ளை யேற்றான் றன்னைச் சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்ற தாயானைத் தவமாய தன்மை யானைத் தலையாய தேவாதி தேவர்க் கென்றும் சேயானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றே னானே. தேவாரம் திருவிளையாடற் புராணம் என்பது மதுரையம் பதியிலே கோயில் கொண்டிருக்கும் முழுமுதலாகிய சோமசுந்தரக்கடவுள் உயிர்களெல்லாம் உய்திகூடுதற் பொருட்டுப் பெருங்கருணை யினால் நிகழ்த்தி யருளிய திருவிளையாட்டுக்களை உணர்த்தும் தமிழ் நூலாகும். மதுரைப் பதியானது வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பாகிய தமிழகத்திலே, செந்தமிழ் நாடென்று சிறப்பித் தோதப்பெறும் பாண்டி நாட்டில், படைப்புக் காலந் தொடங்கி மேன்மையுற்று வந்த பாண்டி மன்னர்கள் அரசிருக்கும் தலை நகரயாது; திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளையும் தம்முளொரு வராகக்கொண் டெண்ணும் பெருமை வாய்ந்த நல்லிசைப் புலவர் பல்லோர் பன்னெடுங்காலம் சங்கமமர்ந்து அமிழ்தினுமினிய தமிழ்மொழியை ஆராய்ச்சி செய்தற்கு நிலைக்களமானது; சங்கப் புலவர்கள் பாடித்தொகுத்த எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பரிபாடல் எழுபது செய்யுட்களுள் வையைக் கென்றும் தனக் கென்றும் முப்பது செய்யுட்களை வரைந்து கொண்டது; மற்றும் எண்ணிறந்த சான்றோர்களாற் பாராட்டப் பெற்றது; தேவாரப் பாடல்பெற்ற ‘ கூடல் புனவாயில் குற்றாலம் ஆப்பனூர் ஏடகம் நெல்வேலி இராமேசம் - ஆடானை தென்பரங்குன் றம்சுழியல் தென்றிருப்புத் தூர்காளை வன்கொடுங்குன் றம்பூ வனம்’ என்னும் பாண்டிநாட்டுப் பதினான்கு திருப்பதிகளில் முதலாயது; திருஞான சம்பந்தப் பிள்ளையார் பாடிய 1. நீலமாமிடற்று, 2.மந்திரமாவது, 3.மானினேர்விழி, 4.காட்டுமாவது, 5.செய்யனே, 6.வீடலாலவாயிலாய், 7.வேதவேள்வியை, 8.ஆலநீழல், 9.மங்கையர்க்கரசி என்னும் பதிகங்களையும், திருநாவுக்கரசுகள் பாடிய 1.வேதியா, 2.முளைத்தானை என்னும் பதிகங்களையுங் கொண்டு திகழ்வது. உலகெலா மீன்ற மலைமகளாரும், மறைகளுந் தேறாக் கறைமிடற் றிறையும், குன்றமெறிந்த வென்றிவேற் பரனும் அரசு வீற்றிருந்து முறை செய்யப் பெற்றது இப்பதியென்றால் இதனை யொப்பது வேறெப்பதி? இத்திருப்பதியிலே கருணைக் கடலாகிய சோமசுந்தரக் கடவுள் செய்தருளிய அற்புதமான அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் போலும் பொற்பு மிக்க வரலாறுகள் வேறெவ்விடத்தும் நிகழ்ந்தனவாகக் கேட்டலரிது. இத்திருவிளையாடற்கதைகளை யெடுத்துக்கூறும் தமிழ் நூல்கள் அளவற்றன. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடியது, கடல் சுவற வேல்விட்டது, இந்திரன் முடிமேல் வளை யெறிந்தது முதலியன சிலப்பதிகாரத்திலும்; இந்திரன் பழி தீர்த்தது, திருமணஞ் செய்தது, வெள்ளியம்பலத் திருக்கூத்தாடியது, அன்னக்குழியும் வையையும் அழைத்தது, எழுகடலழைத்தது, உக்கிரகுமார பாண்டியர் திருவவதாரம், கடல் சுவற வேல்விட்டது, கல்லானைக்குக் கரும்பருத்தியது, அங்கம் வெட்டியது, வளையல் விற்றது, சோழனை மடுவில் வீட்டியது, மாமனாகவந்து வழக்குரைத்தது, விறகு விற்றது, திருமுகங் கொடுத்தது, கரிக்குருவிக்கு உபதேசித்தது, தருமிக்குப் பொற்கிழியளித்தது, இடைக்காடன் பிணக்குத் தீர்த்தது, வலை வீசியது, நரியைப் பரியாக்கினது, மண் சுமந்தது முதலியன கல்லாடத்திலும்; நான்மாடக் கூடலானது, சங்கப் பலகை தந்தது, தருமிக்குப் பொற்கிழியளித்தது, வலை வீசியது, பாண்டியன் சுரந் தீர்த்தது, சமணரைக் கழுவேற்றியது முதலியன தேவாரத்திலும்; வெள்ளியம்பலத் திருக்கூத்தாடியது மெய்க்காட்டிட்டது, அட்டமா சித்தி யுபதேசித்தது, தண்ணீர்ப் பந்தர் வைத்தது, பன்றிக்குட்டிக்குப் பால் கொடுத்தது, கரிக்குருவிக்கு உபதேசித்தது, வலை வீசியது, வாதவூரடிகளுக்கு உபதேசித்தது, நரியைப் பரியாக்கியது, மண் சுமந்தது முதலியன திருவாசகத்திலும்; எடுத்தோதப் பெற்றன. திருவிளையாடல்களை உணர்த்தும் பொருட்டே யெழுந்த தமிழ் நூல்கள் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், கடம்பவன புராணம், சுந்தர பாண்டியம், திருவிளையாடற் புராணம் என்பனவும், வேறு சிலவுமாம். திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் என்பது செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி யென்பவரால் இயற்றப் பெற்றது. இது, வேம்பத்தூரார் திருவிளையாடல் எனவும், பழைய திருவிளையாடல் எனவும் வழங்கா நிற்கும். கடம்பவன புராணம் என்பது தொண்டை நாட்டிலுள்ள இலம்பூரிலிருந்த வீமநாத பண்டிதர் என்பவரால் இயற்றப் பெற்றது; சுந்தர பாண்டியம் என்பது தொண்டை நாட்டிலுள்ள வாயற்பதியிலிருந்த அனதாரியப்பன் என்னும் புலவரால் இயற்றப் பெற்றது; திருவிளையாடற் புராணம் என்பது பரஞ்சோதி முனிவரால் இயற்றப் பெற்றது. இவற்றுள் நம்பி இயற்றியதும், பரஞ்சோதியார் இயற்றியதும் ஆகிய இரு நூல்களும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களையும் செவ்வையாக விரித்துரைப்பன. இவற்றுள் முன்னதினும் பின்னது ஏறக்குறைய இரு மடங்கு விரிவுடையது. இவ்விரு நூல்களுள் ஒன்றனோடு மற்றொன்றற்குள்ள வேறு பாடுகள் பல. இந்நூலிலுள்ள வருணன் விட்ட கடலை வற்றச் செய்த வரலாறு அந்நூலிலுள் நான்மாடக்கூடலான வரலாற்றிலும், இதிலுள்ள நாகமெய்த வரலாறும், மாயப் பசுவை வதைத்த வரலாறும் அதிலுள்ள மதுரையான வரலாற்றிலும், இதிலுள்ள திருநகரங்கண்ட வரலாறு அதிலுள்ள புலி முலை புல் வாய்க்கருளின வரலாற்றிலும் அடங்கியுள்ளன. அதிலுள்ள மூர்த்தியார்க்கு அரசளித்தது, காரியார் நாரியார் பாப்பகுந்தது, புலி முலை புல்வாய்க் கருளினது என்னும் திருவிளையாடல்கள் இந்நூலிற் காணப்பட்டில. இரண்டிலும் கதை மாறுபாடுகளும் உள. இந்நூல் இன்ன பாண்டியன் மகன் இவன் என்று பாண்டியர் வழியை இடை விடாமற் கூறிச் செல்வதுடன், இன்ன பாண்டியன் காலத்து இன்ன திருவிளையாடல் நடந்த தென்றும் கூறுகிறது; அந்நூல் அங்ஙனம் கூறிற்றிலது; 1. மலயத்துவசன், 2. சுந்தரமாறர், 3. உக்கிரனார், 4. தத்தன், 5. வீரமாறன், 6. வரகுணர், 7. வரகுணருடைய மைந்தர் என்னும் பாண்டியர்களின் பெயர்களை மட்டுமே அது கூறுகின்றது. திருநகரங் கண்டது தவிர, வேல்வளை செண்டு கொடுத்தது காறும் முதலிலுள்ள பதினொரு திருவிளையாடல்கள் இருநூலிலும் ஒரேமுறையிலும், பின்புள்ள திருவிளையாடல்கள் முறைமாறியு முள்ளன. இந்நூல் கூறும்பாண்டியர் பெயர்களிற் பெரும்பாலன வடமொழியில் எழுதுதற்பொருட்டுப் படைத்துக் கொண்டனவாதல் வேண்டுமென்பது பழந்தமிழ் நூல்களின் உணர்வுடையார்க்கு விளங்கும். திருவிளையாடல்களின் முறைவைப்பில் அந்நூலினும் இந்நூல் பொருத்த முடையதாகத் தோன்றுகிறது. சில நூற்றாண்டு களின் முன்பு தோன்றிய வேறு சில நூல்களிலும் நம்பி திருவிளை யாடலின் முறைவைப்பே காணப்படினும், அதனாற் பெறப்படுவது அவற்றுள் ஒன்றைப் பார்த்து ஒன்று அமைக்கப்பட்டது என்பதன்றி, அம்முறையே பொருந்துவ தென்பதாகாது. திருவிளையாடல் அறுபத்து நான்கில் மாணிக்கவாசகர் காலத்து நிகழ்ந்தன 27, 28, 29, 30-ஆம் திருவிளையாடகளாகவும், திருஞான சம்பந்தர் காலத்து நிகழ்ந்தன 37, 38,-ஆம் திருவிளையாடல்களாகவும், மெய்க் காட்டிட்டது, அட்டமாசித்தி பகர்ந்தது, தண்ணீர்ப்பந்தர் வைத்தது, புலிமுலை புல்வாய்க் கருளினது, பன்றிக் குட்டிகளுக்கு அருள் புரிந்தது, கரிக் குருவிக்கு அருள் புரிந்தது என்பன முறையே 39, 42, 43, 53, 59, 60-ஆம் திருவிளையாடல்களாகவும் அந்நூல்களில் அமைக்கப் பெற்றுள்ளன; அட்டமாசித்தி பகர்ந்தது முதலாக இங்கெடுத்துக் காட்டியவைகளை மாணிக்கவாசகர் திருவாசகத்துக் கூறியிருப்பது அம்முறை பிழைபாடுடையது என்பதைக் காட்டும்; மற்றும், மதுரையானது, இந்திரன் முடிமேல் வளையெறிந்தது, திருவால வாயானது என்பவற்றை முறையே 36, 44, 47-ஆம் திருவிளையாடல்களாக அமைத்திருத்தல் முதலியன தமிழாராய்ச்சி யாற் பெறப்படும் உண்மை வரலாற்றுடன் மாறுபடுவனவாகும். இனி, பரஞ்சோதி முனிவரியற்றிய இத் திருவிளையாடற் புராணத்திற்கு முதனூல் வடமொழியிலுள்ள ஆலாசிய மான்மியம் என்றும், இது பதினெண் புராணங்களி லொன்றாகிய காந்த புராணத்தின் ஓர் பகுதியாம் என்றுங் கூறப்படுகின்றது. தல மான்மியங்களைப் பதினெண் புராணங்களி லொன்றனோடு இயைத்துரைப்பது அவற்றின் பெருமையை மிகுத்துக் காட்ட வேண்டும் மென்னும் கருத்தினாலாம் என்பது நல்லறிவுடையா ரனைவர்க்கும் உடன்பாடாகும். யாதானும் ஒரு தமிழ் நூல் ஆரியத்தினின்று மொழி பெயர்க்கப் பட்டதானால் மட்டும் யாவரும் ஒத்துக் கொள்ளத்தக்க பெருமை யுடையதாம்; அதுவும் வேத ஆகம புராண இதிகாசங்களில் ஒன்றைச் சார்ந்ததாகவும், பின் நிகழப்போகிற வரலாறுகளை முன்னரே கூறிவைத்ததாகவும் இருக்கவேண்டும்; என்னும் இத்தகைய போலிக்கொள்கைகள் பிறருடைய பழக்கங் காரணமாகச் சென்ற சில நூற்றாண்டுகளி லிருந்த தமிழ் மக்களிடையே தோன்றின. அவை தமிழ் நூல்கள் சில மறைந் தொழியும்படி வடமொழி மூலம் இன்றென்று புறக்கணித் தொதுக்கு மாறும், சில தமிழ் நூல்களை ஆரியத்தில் மொழி பெயர்த்துக்கொண்டு அவற்றினின்று இவை வந்தனவென்று காட்டுமாறும் தூண்டக் கூடியவாதல் காண்க. எனினும், அக் கொள்கைகள் வலியுற்று நின்ற காலத்தில் ஒரு தமிழ்ப்புலவர் அந்நெறியே சென்றிருப்பின், அவர் அவற்றைக் கடக்கும் மதுகையில ராயினா ரென்பதன்றி, அவர்மீது வேறு குற்றம் சுமத்துதல் சாலாது. இற்றை நாளிலும் அத்தகையோ ரிருப்பதே பெரியதோர் வியப் பாகும். இன்னோர் இன்னமும் இருக்கின்றன ரென்பதனைத் திருவால வாயுடையார் திருவிளையாடற் புராண முகவுரை 6-ம் பக்கத்தில் மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதையரவர்கள் எழுதியுள்ளதனாலறிக. சில ஆண்டுகளின் முன்பு சித்தாந்த நூற் பயிற்சி வாய்ந்தவராயிருந்த ஒருவர் குமரகுருபர சுவாமிகளின் சரிதத்தைத் தமிழில் எழுதிவைத்துக் கொண்டு, இதற்கு எப்படி யாவது வடமொழியில் மூலம் கற்பித்துவிட வேண்டுமெனத் தாம் எண்ணியதை என்னிடம் கூறியது முண்டு! தனித்தமிழ் நூல்களாகிய பெரியபுராணம் போல்வனவற்றைச் சிலர் ஆரியத்தில் மொழி பெயர்த்து வைத்துக்கொள்ள, ஆரியத்தினின்று இவை மொழி பெயர்க்கப்பட்டன வென்று கூறும் ஒன்றிரண்டுபேர் இன்னுமிருக் கின்றனரே. திருவிளையாடற் புராணம் ஆரியத்தினின்று மொழி பெயர்க்கப் பெற்றதாயினும், இதிற் கூறப்படும் திருவிளையாடல் களெல்லாம் செந்தமிழ்ப் பாண்டி நாட்டிலே தமிழ் மக்களிடையே தமிழ் மொழியாற் பேசியும் எழுதியும் நிகழ்த்திப் போந்தன வாகலின், இவ்வரலாறுகள் ஆரியத்தில் எழுதப்படு முன்பே தமிழின் இருவகை வழக்கிலும் பயின்றனவாதல் வேண்டு மென்றும், இவற்றை வடநூற் புலவர் அம்மொழியில் எழுதுங்கால் தமிழ் வழக்குக்களை நன்கு அறியாமை முதலிய காரணங்களாற் சில பிறழ்ச்சிகள் நிகழ்ந்திருத்தல் இயல்பென்றும், இந் நூலாசிரியர் வழிநூன் மேற்கோளாகக் கதைகளை எடுத்துக்கொண்டனராயினும் பழந் தமிழ் நூல்களின் கருத்துக்களையும் சொற்களையும் தொடர் களையும் எடுத்தமைத்தே இந்நூலை அழகுபெறச் செய்திருக்கின்றன ரென்றும் தமிழ் மக்கள் உணர வேண்டும். கதைகளிற் சில பிறழ்ச்சி நிகழ்ந்திருப்பினும், இந்நூல்களின் நோக்கம், சரித்திர வாராய்ச்சி செய்வதன்றி, முழுமுதல்வனாகிய இறைவன் அடியார்களுக்கு எளிவந்து அருள் புரியும் பெருங்கருணைத் திறத்தை உணர்த்தி உயிர்களை உய்வித்தலே யென்பதை உன்னின், அஃதோரிழுக் காகத்தோன்றுமாறில்லை. இனி, இந்நூலாசிரியராகிய பரஞ்சோதி முனிவர் ஏறக்குறைய 280 ஆண்டுகளின் முன்பு, சோழ மண்டலத்திலே, திருமறைக் காட்டில், வழி வழிச்சைவர்களாகிய அபிடேகத்தர் மரபில் மீனாக்ஷி சுந்தர தேசிகர் என்பவர்க்குப் புதல்வராய்த் தோன்றியவர்; தந்தையாரிடத்தில் முறையானே தீக்கைகள் பெற்று, தமிழிலும் வடமொழியிலுமுள்ள பலவகையான அரிய நூல்களையும் கற்றுத் துறை போயவர்; சிவபத்தி அடியார்பத்தி மிக்கவர்; அங்கயற் கண்ணம்மையின் திருவடிக்கு மிக்க அன்பு பூண்டவர்; இவர் சிவபெருமான் திருக்கோயில் கொண்டிருக்கும் திருப்பதிகள் பலவற்றுக்கும் சென்று, மதுரையை அடைந்து கயற்கண் இறை வியையும் சோம சுந்தரக் கடவுளையும் நாடோறும் தரிசித்து வழிபட்டுக் கொண்டு அப்பதியில் வதியும் பொழுது, மீனாக்ஷி தேவியார் தமக்குக் கனவிலே தோன்றி ‘எம்பெருமான் திருவிளை யாடல்களைப் பாடுவாய்’ என்று பணிக்க, அப்பணியைத் தலைமேற் கொண்டு இந்நூலைப் பாடி முடித்து, சொக்கேசர் சந்நிதியில் அறுகாற் பீடத்திலிருந்து, அடியார்களும் புலவர்களும் முதலாயி னார் கூடிய பேரவையில் இதனை அரங்கேற்றினர்; என்று பெரியோர் கூறுவர். இவர் காலம் 400 ஆண்டுகளின் முன்பா மென்றும், 850 ஆண்டுகளின் முன்பாமென்றும் இங்ஙனம் வேற்றுமைப் படக் கூறுவாருமுளர்; ஒருவர் கூற்றும் ஆதரவுடன் கூடியதன்று; தக்க சான்று கிடைத்த வழியே இது துணிதற்குரியதாகும். இவரியற்றிய வேறு தமிழ் நூல்கள் வேதாரணியப் புராணம், திருவிளையாடற் போற்றிக்கலி வெண்பா, மதுரைப் பதிற்றுப்பத் தந்தாதி என்பன. திருவிளையாடற் புராணத்திலுள்ள மாணிக்கம் விற்ற படலம்; கால் மாறியாடிய படலம், நரி பரியாக்கிய படலம் என்பவற்றை நோக்குழி இவ்வாசிரியரது அருங்கலை யுணர்ச்சியின் பரப்பு வெளிப்படும். தொல் காப்பியம் முதலிய இலக்கணங்களிலும், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலிய சங்கச் செய்யுட்களிலும், ஐம்பெருங்காப்பியங்களிலும், தேவாரம் முதலிய பன்னிரு திருமுறை களிலும், மெய் கண்ட நூல்கள் முதலியவற்றிலும் இவ்வாசிரியர் நல்ல பயிற்சியுடையவர்; இதனை இந்நூலுரையுள் ஆண்டாண்டு எடுத்துக் காட்டும் பகுதிகளால் அறியலாகும். ஈண்டுச் சில காட்டுகின்றேன்; “ மகர வேலையென் றியானைபோன் மழையருந் தகழி சிகர மாலைசூ ழம்மதி றிரைக்கரந் துழாவி அகழ வோங்குநீர் வையையா லல்லது வேற்றுப் பகைவர் சேனையாற் பொரப்படும் பாலதோ வன்றே” என்னும் இந்நூல் அகழிச் சிறப்புணர்த்துஞ் செய்யுள், “ வையைதன் நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லா னேராதார் போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன்” என்னும் மருதக்கலியின் கருத்தையும், “ செங்கதிர் மேனியான்போ லவிழ்ந்தன செழும்ப லாசம் மங்குலூர் செல்வன்போல மலர்ந்தன காஞ்சி திங்கட் புங்கவன் போலப் பூத்த பூஞ்சினை மரவஞ் செங்கை அங்கதி ராழி யான்போ லலர்ந்தன விரிந்த காயா”” என்னும் இளவேனிலைச் சிறப்பிக்கும் இந்நூற் செய்யுள், “ ஒருகுழை யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும் பருதியஞ் செல்வன்போ னனையூழ்த்த செருந்தியும் மீனேற்றுக் கொடியோன்போன் மிஞிறார்க்குங் காஞ்சியும் ஏனோன்போ னிறங்கிளர்பு கஞலிய ஞாழலும் ஆனேற்றுக் கொடியோன்போ லெதிரிய விலவமும் ஆங்கத் தீதுதீர் சிறப்பி னைவர்க ணிலைபோலப் போதவிழ் மரத்தொடு பொருகரை கவின்பெற நோதக வந்தன்றா லிளவேனின் மேதக ” என்னும் பாலைக்கலியின் கருத்தையும் மேற்கொண்டுள்ளன. “ கொய்ம்மலர்க் குடுமிச் சேவல் கோழிளந் தகர்போர் மூட்டி”” “ ஆறிடு மதமால் யானைப் பழுக்குலை யவரை” “ பாய தொன்மரப் பறவைபோற் பயன் கொள்வான் பதினெண் ” “ டேய மாந்தருங் கிளந்தசொற் றிரட்சிதான் ” “ கதிர்கலம் பெய்காட்சி போலுதிர் பழம் ” என்னும் இந்நூற் செய்யுட் பகுதிகள், “ கோட்டிளந் தகர்களுங் கொய்ம்மலர் தோன்றி போற் சூட்டுடைய சேவலும்......போர்க்கொளீஇ””” “ பொருவில் யானையின் பழுப்போற் பொங்கு காய்க்குலையவரை”” “ முட்டிலா மூவறு பாடை மாக்களாற் புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய” “ புதுக்கலம் போலும் பூங்கனியால்” என்னும் சிந்தாமணிச் செய்யுட் பகுதிகளை முறையே ஒத்துள்ளன. “ வஞ்சவினைக் கொள்கலனா முடைலைத்தீவாய் மடுக்கிலேன் வரையுருண்டு மாய்ப்பே னல்லேன் ” “ மழலைதேறாச் சிறியனா மொருமதலை கையிற்கொண்ட செம்பொன்மணி வள்ளம்போற் றேவர் யார்க்கும் அறிவரியாய் சிறியேனை யெளிவந்தாண்ட வருமையறியேன்” “ முன்னா முதுபொருட்கு முன்னா முதுபொருளாய்ப் பின்னாம் புதுமைக்கும் பின்னாகும் பேரொளியாய் ” “ மண்ணாய்ப் புனலாய்க் கனலாய் வளியாகி விண்ணா யிருசுடரா யித்தனையும் வேறாகி ” என்னும் வாதவூரடிகள் பரவுவனவாகவுள்ள இந்நூற் செய்யுட் பகுதிகள் முறையே “ தீயில் வீழ்கிலேன் றிண்வரை யுருள்கிலேன்” “ மையிலங்குநற் கண்ணிபங்கனே வந்தெனைப் பணிகொண்டபின் மழக் கையிலங்குபொற் கிண்ண மென்றலா லரியையென் றுனைக் கருதுகின்றிலேன் ” “ முன்னைப் பழம்பொருட்கு முன்னைப்பழம் பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே” “ வானாகி மண்ணாகி வளியாகி யொளியாகி ஊனாகி யுயிராகி யுண்மையுமா யின்மையுமாய்” என்னும் திருவாசகப் பகுதிகளைச் சிந்தனையிற் கொண்டு இயற்றப் பெற்றனவாகும். இனி, இவ்வாசிரியர் ஒன்பான் சுவையும் விஞ்சவும், பரிமான் செலவுபோற் பெருமித நடை பொருந்தவும் செய்யுளியற்றுந் திறன் வாய்ந்தவர். நம்பி திருவிளையாடலானது இந்நூற்கு முற்பட்டதும், பழைய தமிழ் வழக்குகளைப் பெரும்பாலும் தழுவிச் செல்வது மாகவும், அதன் பயிற்சி குன்றவும், இதனையே யாவரும் விரும்பிக் கற்கவும் செய்தது இந்நூற் செய்யுட்களின் அழகேயெனல் மிகையா காது. பத்தி நலங்கனிந்து கற்பார்க்குப் பெரும்பயன் விளைப்பதாய், சைவநன்மக்கள் யாவரானும் பெரிய புராணத்தை யடுத்துப் பாராட்டிப் படிக்கப் பெறுவதாயுள்ளது இந்நூலே. இந்நூல் மூலமானது தமிழுக்கும் சைவத்திற்குமாகத் தம் வாழ்க்கையை ஈடுபடுத்திய பெரியாராகிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவல ரவர்கள் முதலிய பலரால் முன் அச்சிடப் பெற்றுளது. திரிசிரபுரம் மகா வித்துவான் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் மாணாக்க ராகிய சோடசாவதானம் சுப்பராயச் செட்டியாரவர்கள் இதற்கு ஓர் உரையெழுதி வெளிப்படுத்தி யுள்ளார்கள். பின் அவ்வுரையையே பெரிதுந் தழுவி ஈக்காடு, இரத்தின வேலு முதலியார் என்பவர்களால் ஓர் பொழிப்புரை யெழுதப்பெற்று வெளிவந்துளது. மதுரைக் காண்ட மட்டும் மதுரை இராமசுவாமிப்பிள்ளை யென்னும் ஞான சம்பந்தப்பிள்ளை என்பவர்களால் வேறுபட்ட பல பாடங்கொண்டு ஓர் பொழிப்புரை யெழுதி வெளிப்படுத்தப் பெற்றுளது. இவர் களனை வரும் அவ்வக் காலங்களிற் புரிந்துவைத்த இவ்வுதவிகளைத் தமிழ் மக்கள் யாவரும் பாராட்டுங் கடமைப் பாடுடையராவர். தமிழ் நூல்கள் பலவற்றையும் அழகிய முறையில் அச்சிட்டுப் பரப்பித் தமிழையும் சைவத்தையும் பேணிவரும் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் அமைச்சரும், நனவிலும் கனவிலும் தமிழ் நலமே கருதிப்பேரூக்கத்துடன் உழைத்து வருபவரும் ஆகிய திருவாளர் வ. திருவரங்கம் பிள்ளைய வர்கள் ‘செட்டியாரவர்கள் உரையுடன் கூடிய திருவிளையாடற் பதிப்பு முற்றிலும் செலவாகி இப்பொழுது கிடைப்பதரிதாயின மையால், நீங்கள் இக்காலத்திற் கேற்றபடி திருத்தமான முறை தழுவிய ஓர் உரை எழுதித்தரல் வேண்டும் என்று கூறிப் பலகாலும் என்னை. வற்புறுத்தினமையால், திருவருளிருந்தவா றென்று நான் இவ்வுரையினை எழுதுவேனாயினேன். பல பதிப்புக்களை ஒத்து நோக்கி, மூலத்தின் வேறுபட்ட பாடங்களுட் சிறந்ததெனத் தோன்றுவதை அமைத்துக் கொண்டு பிறவற்றைப் பாடபேதமாக அமைத்திருக்கின்றேன். இந்நூற் செய்யுட்களின் இடர்ப்பட்ட சொற்பொருண் முடிபுகளை ஒழுங்குபடுத்துவது, இன்றியமையாதவும் ஒத்த கருத்துள்ளவுமாகிய பிற நூன்மேற் கோள்களை யெடுத்துக் காட்டி விளங்க வைப்பது முதலியவற்றில் எவ்வளவு அருமுயற்சி யெடுத்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதும், இவ்வுரை எவ்வளவு திருத்தம் பெற்றுள்ள தென்பதும் நடுநிலை முதலிய உயர்குணங் களுடையராய் ஒத்து நோக்கும் அறிவுடையா ரெவர்க்கும் நன்கு புலனாமாகலின் இங்கு அவைகள் எடுத்துக்காட்டப் பெற்றில. இவ்வுரை யெழுதுவதில் எனக்குத் துணையாயிருந்து எழுதி யுதவி வந்தோர் தமிழ் இலக்கிய இலக்கணங்களிலும் திருமுறை களிலும் நல்ல பயிற்சியும் கூரிய அறிவும் வாய்ந்துளாரும், தமிழ்ப் பற்றும் சிவபத்தியும் மிக்காரும் ஆகிய என் இனிய நண்பர் திருவாளர் அ.மு.சரவண முதலியாரவர்களாவர். அவர்களுதவி இருந்திராவிடில், பலவினைச் செறிவுடைய என்னால் இப்பொழுது இவ்வுரை யெழுதியிருக்க வொண்ணாது. கழகத்தாரும் யானும் அவர்கட்கு நன்றி பாராட்டுங் கடமைப்பாடுடையோம். கல்வி அறிவு ஆற்றல்களில் மிகவும் சுருங்கியவனாகிய யான் பலவேலைகளுக்கிடையே எழுதிவந்த இவ்வுரையில் எத்தனையோ பல குற்றங்கள் காணப்படக்கூடும். அவற்றைப் பொறுத்தருளுமாறு பெரியோர்களை மிகவும் வேண்டுகின்றேன். ஒன்றுக்கும் பற்றாத என்னை இம்முயற்சியிற் புகுத்தி இதனை நிறை வேற்றுவித் தருளாநின்ற பரங்கருணைத் தடங்கடலாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவடித் தாமரைகளை எஞ்ஞான்றும் சிந்தித்து வாழ்த்தி வணங்க உன்னுவதன்றி எளியேன் செய்யக் கிடந்தது யாதுளது? “ ஞால நின்புக ழேமிக வேண்டுந் தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே.” ந.மு.வேங்கடசாமி. உ திருச்சிற்றம்பலம் சிறப்புப்பாயிரம் (அறுசீரடியாசிரியவிருத்தம்) அறுகாற்பீ டத்துயர்மா லாழிகடைந் தமுதையரங் கேற்று மாபோல் அறுகாற்பே டிசைபாடுங் கூடன்மான் மியத்தையருந் தமிழாற் பாடி அறுகாற்பீ டுயர்முடியார் சொக்கேசர் சந்நிதியி லமரர் சூழும்1'92 அறுகாற்பீ டத்திருந்து பரஞ்சோதி முனிவனரங் கேற்றி னானே. (இதன் பொருள்.) அறுகால் பீடத்து உயர்மால் - காலிலியாகிய அனந்தன் என்னும் படுக்கையில் அறிதுயில் கொள்ளும் திருமால், ஆழி கடைந்து அமுதை அரங்கேற்றுமாபோல் - பாற்கடலைக் கடைந்து அதிலுண்டாகிய அமிழ்தத்தைத் தேவர் கூட்டத்திற்கு அளித்தாற் போல, பரஞ்சோதி முனிவன் -பரஞ்சோதி முனிவன் என்னும் பெயருடைய பெரியோன், அறுகால் பேடு இசைபாடும் கூடல் மான்மியத்தை - ஆறுகாலையுடைய பெண் வண்டுகள் இசைபாடும் சோலைகள் சூழ்ந்த மதுரையின் மகத்துவத்தை, அருந்தமிழால் பாடி-அருமை வாய்ந்த தமிழ் மொழியாற் பாடி, அறுகால்பீடு உயர் முடியார் சொக்கேசர் சந்நிதியில் -அடியார்க ளருச்சிக்கும் அறுகம் புல்லுடன் பெருமை மிக்கு விளங்கும் திருமுடியை உடையராகிய சொக்க நாதர் சந்நிதியில், அமரர் சூழும் அறுகால் பீடத்து இருந்து அரங்கேற்றினான் - தேவகணங்கள் சூழ்ந்திருக்கும் ஆறுகால் மண்டபத்திலிருந்து அரங்கேற்றினான் என்றவாறு. அறுகால் - பாம்பு; வினைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகைக் காரணப்பெயர்; அற்றகாலையுடையதென விரியும்; காலில்லாததென்பது கருத்து. பீடம் - ஈண்டுப் பள்ளி; ஆதனம் எனினும் ஆம்; என்னை? “ சென்றாற் குடையா மிருந்தாற்சிங் காதனமாம் நின்றான் மரவடியா நீள்கழலுள் - என்றும் புணையா மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும் அணையாந் திருமாற் கரவு” என்பவாகலினென்க. உயர்தல் - கண்வளர்தல்; பீடத்திலுள்ள சிறந்த மால் எனினுமாம். இசைபாடு மென்பதற் கேற்பச் சோலைகள் சூழ்ந்த என வருவிக்கப்பட்டது; பாடும் என்னும் பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது. திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும் குன்றமெறிந்த முருகவேளும் அமரமுனிவனாகிய அகத்தியனும் என்றிவர் முதலாயினோரால் ஆராயப்பெற்றதும் திருந்திய இயல் வரம்புடையதும் ஆம் என்பார் ‘அருந்தமிழால்’ என்றார்; அருமை - பிறவற்றிற்கில்லாத சிறப்பு. அறுகால் - அறுகோடு; ஆல் ஒடுவின்பொருட்டாயிற்று. அமரர்கள் சோமசுந்தரக் கடவுளை வணங்குதற்கு வந்து மொய்த்திருக்கும் பீடமென்க. அமுதை அரங்கேற்றுதல் - அமிழ்தத்தைத் தேவர் கூட்டம் உண்ணச் செய்தல். முனிவன் அரங்கேற்றுதலாவது தான் பாடிய புராணத்தை அரங்கின் கண் உள்ள புலவர்களுக்குக் கூறி அவர்கள் ஏற்கும்படி செய்தல். இதுதொன்றுதொட்ட வழக்கமென்பது தொல்காப்பியம் நிலந்தரு திருவிற் பாண்டிய னவையத்து அரங்கேறிய தென்பதனால் அறியலாகும். இச்செய்யுளில் ஆக்கியோன் பெயர், நுதலிய பொருள், களன் முதலியவை கூறப்பட்டிருத்தல் காண்க. இதனை இயற்றினார் இந்நூலாசிரியர்க்கு ஒருசாலை மாணாக்கர் முதலாயி னாருள் ஒருவராதல் வேண்டும். ஏ ஈற்றசை. உ திருச்சிற்றம்பலம் திருவிளையாடற் புராணம் மூலமும் உரையும் 1. மதுரைக் காண்டம் காப்பு (கலிவிருத்தம்) சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர முத்தி யான முதலைத் துதிசெயச் சுத்தி யாகிய சொற்பொரு ணல்குவ சித்தி யானைதன் செய்யபொற் பாதமே. (இ-ள்.) சத்தியாய் - சத்தியாகியும், சிவம் ஆகி-சிவமாகியும், தனி - ஒப்பற்ற, பரமுத்தி ஆன -பரமுத்திப் பேறாகியும் உள்ள. முதலை - முதற் கடவுளை, துதிசெய - துதித்தற்கு, சுத்தி ஆகிய - தூய்மையவான, சொல் பொருள் - சொற்களையும் பொருள் களையும், சித்தியானைதன் - யானை முகத்தையுடைய சித்தி விநாயகக் கடவுளின், செய்ய - செம்மையாகிய, பொன் - அழகிய, பாதம் - திருவடிகள், நல்குவ - அருளுவன எ - று. இச்செய்யுள், எடுத்துக்கொண்ட நூல் இனிது முடிதற் பொருட்டுச் செய்யற்பாலதென ஆன்றோ ரொழுக்கத்தான் அநுமிக்கற் பாலதாய மங்கலம் கூறவெழுந்தது. மூத்த பிள்ளையாரின் திருவடிகளை வணங்குதலே - இவண் இடையூறு போக்கி நூலினை யினிது முடித்தற்குக் காரணமாகக்கொண்ட மங்கலமாம்; இது காப்பு எனவும்படும். இறைவி பிடியுருவு கொள்ள இறைவன் களிற்றுருவுகொண்டு அருளினமையின் பிள்ளையார் யானை முகத்துடன் றோன்றுவாராயினர்; இதனையும், பிள்ளையார் வழிபடும் அடியாரின் இடர்களை தற்கே இறைவனால் அருளப் பட்டவ ரென்பதனையும், “ பிடியத னுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர வருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே”” “ செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ் சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவா யொற்றைச்சேர் முற்றற்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக் கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகவிறையைப் பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும் பேராநோய்தா மேயாமை பிரிவுசெய்த வனதிடங் கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக் காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே””” என்னும் ஆளுடைய பிள்ளையார் அருளிச் செயல்களானறிக. மதுரையம்பதி சத்தி பீடம் அறுபத்து நான்கனுள் முதன்மையதாக லானும், அருளாகிய சத்தியை யுணர்ந்தே சிவத்தை யுணரவேண்டு மென்பவாகலானும், இந்நூலாசிரியர்க்குப் பராசத்தியார் காட்சி தந்து இதனைப் பாடுமாறு அருள்புரிந்தனராகலானும் சத்தியாய் என்று தொடங்கப்பெற்றது. பரமுத்தி - எல்லா முத்திகளினும் மேலாய முத்தி; திருவடியிற் கலத்தலாகிய முத்தி. வீடு பேற்றுக்கு ஆதாரமாகிய இறைவனை வீடுபேறெனவே உபசரித்துக் கூறுவர் ஆன்றோர். சொல்லும் பொருளும் வடிவமான சத்தியும் சிவமுமாம் முதற்பொருளைத் துதித்தற்குச் சொல்லும் பொருளும் அருளப் பெறுதல் ஒருதலை யென்பார் சுத்தியாகிய சொற்பொருணல்குவ என்றார். (1) ---- வாழ்த்து (அறுசீரடியாசிரிய விருத்தம்) மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம் பல்குக வளங்க ளெங்கும் பரவுக வறங்க ளின்பம் நல்குக வுயிர்கட் கெல்லா நான்மறைச் சைவ மோங்கிப் புல்குக வுலக மெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க. (இ-ள்.) வேத வேள்வி - வேதத்திற் கூறப்பட்ட வேள்விகள் மல்குக - நிரம்புக; வானம் - முகில்கள், சுரந்து வழங்குக - நீரினைச் சுரந்து பொழிக; எங்கும் - எவ்விடத்தும், வளங்கள் பல்குக - செல்வங்கள் பெருகுக; அறங்கள் பரவுக - தருமங்கள் பரவுக; உயிர்கட்கு எல்லாம் - எல்லா வுயிர்கட்கும், இன்பம் நல்குக - இன்பம் அளிக்கப்படுக; உலகம் எல்லாம் - உலக முழுதும், நான்மறைச் சைவம் - நான்கு வேதங்களின் துணி பொருளாகிய சைவ சமயமானது, ஓங்கிப் புல்குக - தழைத்தோங்கி நிலைபெறுக; புரவலன் - அரசனது, செங்கோல் வாழ்க - செவ்விய கோல் வாழ்க எ - று. வேள்வி வேதத்திற் கூறப்பட்டதாகலின் ‘வேத வேள்வி’ எனப் பட்டது. ‘வேத வேள்வியை’ என்பது தமிழ் மறை. வேள்வியால் மழையும், மழையால் வளமும், வளத்தால் அறமும் இன்பமும் உளவாகலின் அம்முறை வைத்து, உலகியலின் வேறாகிய ஈறிலின்பம் எய்துதற்குரிய சைவ நெறியை அவற்றின் பின் வைத்து, அவையனைத் திற்கும் அரணாக வுள்ளது அரசன் செங்கோலாகலின் அதனை இறுதிக்கண் வைத்து வாழ்த்துக் கூறினார். நல்கப்படுக எனற்பாலது படு சொற்றொக்கு நல்குக என நின்றது. ‘அமரர்கண் முடியு மறுவகையானும்’ என்னும் தொல்காப்பியப் புறத்திணையியற் சூத்திரவுரையில் ‘முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகும்’ என்னும் ஆறனையும் அமரர்கண் முடியும் அறுமுறை என்பர் நச்சினார்க்கினியர். இஃது ஆளுடைய பிள்ளையார் அருளிய, “ வாழ்க வந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல் லாமர னாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே”” என்னும் பாசுரத்தின் பொருளோடு பெரிதொத்துச் சிறிதொவ்வாமை காண்க. இந்நூலாசிரியர் வேள்வி என்பதனால் அவ்வாறனுள் அந்தணர் வானவர் ஆனினங்களைப் பெற வைத்து, வானம் என்பதனால் மழையையும், புரவலன் என்பதனால் வேந்தனையும்கிளந்து கூறி, ஏனைப் பகுதிகளால் உலகினை யெடுத்தோதி வாழ்த்தின ரென்க. உலகமெல்லாம் சைவ மோங்கிப் புல்குக என்றதும் உயிர் களெல்லாம் பேரின்ப மெய்த வேண்டுமென்னும் கருத்துப் பற்றியாகலின் உலகினை வாழ்த்திய தேயாயிற்று. (1) ---- நூற்பயன் (எண்சீரடியாசிரிய விருத்தம்) திங்களணி திருவால வாயெம் மண்ணல் திருவிளையாட் டிவையன்பு செய்து கேட்போர் சங்கநிதி பதுமநிதிச் செல்வ மோங்கித் தகைமைதரு மகப்பெறுவர் பகையை வெல்வர் மங்கலநன் மணம்பெறுவர் பிணிவந் தெய்தார் வாழ்நாளு நனிபெறுவர் வானா டெய்திப் புங்கவரா யங்குள்ள போக மூழ்கிப் புண்ணியராய்ச் சிவனடிக்கீழ் நண்ணி வாழ்வார். (இ-ள்.) திங்கள் அணி - சந்திரனை யணிந்த, திருவாலவாய் - திருவாலவாயில் எழுந்தருளிய, எம் அண்ணல் - எம் இறைவன் புரிந்தருளிய, திருவிளையாட்டு இவை - இத் திருவிளையாடல் களை, அன்பு செய்து கேட்போர் - அன்போடு வழிபாடு செய்து கேட்பவர், சங்க நிதி பதுமநிதி சங்க நிதி பதுமநிதிகளைப் போலும், செல்வம் ஓங்கி - செல்வத்தால் உயர்ந்து, தகைமை தரும் மகப் பெறுவர் - பண்புடைய மக்கட் பேற்றையடைவர்; பகையை வெல்வர் - பகை களைக் கடப்பர்; மங்கலம் நல் மணம் பெறுவர் - மங்கலமாகிய நல்ல மணங்களைப் பெறுவர்; பிணிவந்து எய்தார் - நோய்கள் வந்து அடையப் பெறார்; வாழ் நாளும் நனி பெறுவர் - நீண்ட ஆயுளையும் பெறுவர்; வான் நாடு எய்தி - விண்ணுலகிற் சென்று, புங்கவராய் - தேவராய், அங்கு உள்ள போகம் மூழ்கி - அங்குள்ள இன்பங்களை மிக நுகர்ந்து, புண்ணியராய் - சிவபுண்ணியம் உடையவராய், சிவன் அடிக்கீழ் - சிவபெருமான் திருவடி நீழலில், நண்ணி வாழ்வார் - இரண்டறக் கலந்து வாழ்வார், எ - று. திங்களணி அண்ணலென இயைக்க. திருவிளையாட்டு என்றது அதனைக் கூறும் நூலுக்காயிற்று. இறைவன் செய்யுஞ் செய லெல்லாம் எளிதின் முடிதனோக்கி அவற்றை அவனுடைய விளையாட்டுக்கள் என்ப; “ காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி” என்னும் திருவாசகமும், “ சொன்னவித் தொழில்க ளென்ன காரணந் தோற்ற வென்னின் முன்னவன் விளையாட் டென்று மொழிதலுமாம்” என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தமும் நோக்குக. சங்கம், பதுமம் என்பன சில பேரெண்கள்; அவ்வளவினையுடைய நிதிகள் சங்கநிதி, பதுமநிதி எனப்படும்; சங்கு போலும் தாமரை போலும் வடிவினை யுடைய நிதிகள் எனக் கூறுவாரு முளர். இவை குபேரனிடத்தி லுள்ளன வென்பர். திருநாவுக்கரசரும் சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து என அருளிச்செய்தல் காண்க. வாழ்நாளு நனிபெறுவர் என்பதுகாறும் இம்மைப் பயனும், புங்கவரா யங்குள்ள போகமூழ்கி என்பதனால் மறுமைப் பயனும், சிவனடிக் கீழ் நண்ணி வாழ்வார் என்பதனால் முத்திப் பயனும் முறையே கூறப்பட்டன. இச்செய்யுளில், திருவிளையாட்டிவை என்பதனால் நுதலிய பொருளும், அன்பு செய்து கேட்போர் என்பதனால் கேட்டற்குரிய அதிகாரியும், பிறவற்றால் கேட்போ ரெய்தும் பயனும் பெறப்பட்டமை காண்க. (2) --- கடவுள் வாழ்த்து சிவம் (அறுசீரடியாசிரிய விருத்தம்) வென்றுளே புலன்க ளைந்தார் மெய்யுண ருள்ளந் தோறுஞ் சென்றுளே யமுத மூற்றுந் திருவருள் போற்றி யேற்றுக் குன்றுளே யிருந்து காட்சி கொடுத்தருள் கோலம் போற்றி மன்றுளே மாறி யாடு மறைச்சிலம் படிகள் போற்றி. (இ-ள்.) உள்ளே புலன் வென்று களைந்தார் - அகத்தின்கண் புலன்களை வென்று போக்கினவரின், மெய் உணர் - மெய்ம்மையை உணர்ந்த, உள்ளம் தோறும் - இதயங்கள் தோறும், சென்று -போய், உள்ளே - அவர்கள் அறிவினுள்ளே, அமுதம் ஊற்றும் - அமிழ்தத்தைச் சொரிகின்ற, திருவருள் போற்றி - திருவருள் காக்க, குன்றுஏறு உள்ளே இருந்து - வெள்ளி மலைபோலும் இடபத்தின்கண் அமர்ந்து;காட்சி கொடுத்தருள் - தரிசனம் தந்தருளுகின்ற, கோலம் போற்றி - திருவுருவம் காக்க; மன்று உள்ளே - வெள்ளி மன்றத்தின் கண், மாறி ஆடும் - கால் மாறி நடித்தருளுகின்ற, மறைச் சிலம்பு - வேதமாகிய சிலம்பினை யணிந்த, அடிகள் போற்றி - திருவடிகள்காக்க எ-று. புலன் - சுவை முதலியன; ஈண்டு அவற்றின்மேற் செல்கின்ற அவாவினை உணர்த்துகின்றது. பொறிகள் புறத்தின்கண்ணவேனும் ஆசை அகத்தே நிகழ்தலின் உள்ளே புலன் எனப்பட்டது; ‘ஐவரை யகத்தே வைத்தீர் என்பது ஆளுடைய அரசுகள் திருவாக்கு. அமுதம் என்றது சிவானந்தத்தை; அது தேனென்றும் பிறவாறும் கூறப்படு வதுண்டு; அனைத்தெலும் புண்ணெக வானந்தத் தேன் சொரியும் - குனிப்புடையான் என்பது மணிவாசகம். குன்றுளே என்பதில் உள் ஏழனுருபு. போற்றி - காக்க என வேண்டிக்கோடற் பொருடரும் வியங்கோள் வினைமுற்று; நம என்பது போல் வணக்கம் என்னும் பொருளதுமாம்; பரவப்படுக என்னும் பொருள் பயப்பதுமாம். இப்பாட்டு விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்னும் மூவகை உயிர்கட்கும் முறையே அருளுமுறைமை குறிக்கின்றது எனவும் கூறுவர். (3) சத்தி (வேறு) சுரும்புமுரல் கடிமலர்ப்பூங் குழல்போற்றி யுத்தரியத் தொடித்தோள் போற்றி கரும்புருவச் சிலைபோற்றி கவுணியர்க்குப் பால்சுரந்த கலசம் போற்றி இரும்புமனங் குழைத்தென்னை யெடுத்தாண்ட வங்கயற்க ணெம்பி ராட்டி அரும்புமிள நகைபோற்றி யாரணநூ புரஞ்சிலம்பு மடிகள் போற்றி. (இ-ள்.) சுரும்பு முரல் - வண்டுகள் ஒலிக்கின்ற, கடிமலர் - வாசனை பொருந்திய மலரை யணிந்த, பூங்குழல் போற்றி - அழகிய கூந்தல் காக்க; உத்தரியம் தொடி - உத்தரியத்தையும் வளையலையும் அணிந்த, தோள் போற்றி - திருத்தோள்கள் காக்க; கரும்புருவம் சிலை போற்றி - கரிய புருவங்களாகிய விற்கள் காக்க; கவுணியர்க்கு - ஆளுடைய பிள்ளையாருக்கு, பால் சுரந்த - ஞானப்பால் சுரந்தருளிய, கலசம் போற்றி - கலசம் போலும் கொங்கைகள் காக்க; இரும்பு மனம் - இரும்பு போலும் வலிய மனத்தை, குழைத்து - இளகச் செய்து, என்னை - (பிறவிக்கடலுள் அழுந்தும்) அடியேனை, எடுத்து - (அழுந்தா வகை) தூக்கி, ஆண்ட - ஆண்டருளிய, அம் கயல்கண் - அழகிய கயல்போலும் கண்களையுடைய, எம்பிராட்டி - எம் இறைவியின், அரும்பும் - அரும்புகின்ற, இளநகை போற்றி - புன்முறுவல் காக்க; ஆரண நூபுரம் - வேதங்களாகிய சிலம்புகள், சிலம்பும் - ஒலிக்கின்ற, அடிகள் போற்றி - திருவடிகள் காக்க எ-று. இருப்பு மனம் எனற்பாலது மெலிந்து நின்றது; ‘இரும்பு தருமனத்தேனை யீர்த்தீர்த்தெ னென்புருக்கி’ எனவும், ‘இருப்பு நெஞ்ச வஞ்ச னேனை யாண்டு கொண்ட நின்னதாள்’ எனவும் ஆளுடைய வடிகள் கூறுவன இங்கே சிந்திக்கற்பாலன. முதற்கட் குழலையும் ஈற்றின்கண் அடிகளையும் கூறியது எல்லா அங்கங்களையும் அகப்படுத்துப் பரவுங் குறிப்பினாலென்க. பரசிவம் (கலிநிலைத்துறை) பூவண்ணம் பூவின் மணம்போல மெய்போத மின்பம்1 ஆவண்ண மெய்கொண் டவன்றன் வலியாணை தாங்கி மூவண்ண றன்சந் நிதிமுத் தொழில்செய்ய வாளா மேவண்ண லன்னான் விளையாட்டின் வினையை வெல்வாம். (இ-ள்.) பூவண்ணம் பூவின்மணம் போல - பூவும் அதன் நிறமும் அதன் மணமும் பிரிப்பின்றி நிற்றல் போல, மெய் போதம் இன்பம் - உண்மை அறிவு ஆனந்தம் இம்மூன்றும் பிரியாது, மெய் ஆம் வண்ணம் கொண்டவன் - திருமேனி ஆகும் வண்ணம் கொண்ட வனும், தன்வலி ஆணை தாங்கி-தனது சத்தியின் ஏவலையேற்று, மூவண்ணல் - அயன் அரி அரன் என்னும் மும்மூர்த்திகளும், தன் சந்நிதி - தனது திருமுன்னே, முத்தொழில் செய்ய - ஆக்கல் அளித்தல் அழித்தலாகிய மூன்று தொழில்களையும் செய்யா நிற்க, வாளா மேவு அண்ணல் - அசைவின்றி நிற்கும் பெருமையுடையவனுமாகிய, அன்னான் - அவ்விறைவனின், விளையாட்டின் - திருவிளையாடல் களைக் கூறுதலினாலே, வினையை வெல்லவாம் - வினையாகிய பகையை வெல்வாம் எ-று. வலி - சத்தி. தாங்கி என்றது முடிமேற் கொண்டென்றபடி இறைவனுடைய சத்தியால் முத்தொழிலும் நடைபெறு மென்பதனை, “ உரைத்தவித் தொழில்கண் மூன்று மூவருக் குலக மோத வரைத்தொரு வனுக்கே யாக்கி வைத்ததிங் கென்னை யென்னின் விரைக்கம லத்தோன் மாலு மேவலான மேவி னோர்கள் புரைத்ததி கார சத்தி புண்ணிய நண்ண லாலே”” என்னும் சிவஞான சித்தியாலறிக. (5) சிற்சத்தி அண்டங்க ளெல்லா மணுவாக வணுக்க ளெல்லாம் அண்டங்க ளாகப் பெரிதாய்ச்சிறி தாயி னானும் அண்டங்க ளுள்ளும் புறம்புங்கரி யாயி னானும் அண்டங்க ளீன்றா டுணையென்ப ரறிந்த நல்லோர். (இ-ள்.) அண்டங்கள் எல்லாம் - எல்லா அண்டங்களும், அணுவாக - அணுவாகத் தோன்ற, பெரிதாய் - பெரிய பொருளாகி, அணுக்கள் எல்லாம் - எல்லா அணுக்களும், அண்டங்களாக - அண்டங் களாகத் தோன்ற, சிறிதாயினானும் - நுண்பொருளாயினானும், அண்டங்கள் உள்ளும் புறம்பும் - அண்டங்களின் அகத்தும் புறத்தும், கரி ஆயினானும் - சான்றாயினானுமாகிய இறைவனை, அண்டங்கள் ஈன்றாள் - அவ்வண்டங்களைப் பெற்ற உமையம்மை யாருக்கு, துணை என்பர் - துணையாக நிற்பவன் என்று சொல்லுவர், அறிந்த நல்லோர் - மெய் உணர்ந்த பெரியோர் எ-று. நிரனிறை கொண்டு கூட்டி உரைக்கப்பட்டது. இறைவன் அண்டங்கள் எல்லாம் அணுவாகப் பெரிதாயிருக்குந் தன்மை, “ அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரின் றுன்னணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன் ” எனத் திருவாசகத்துள் ஓதப்பட்டது. திருவிசைப்பாவிலும், “ அண்டமோ ரணுவாம் பெருமைகொண் டணுவோர் அண்டமாஞ் சிறுமைகொண் டடியேன், உண்டவூ ணுனக்காம் வகையென துள்ளம் உள்கலந் தெழுபரஞ் சோதி” எனப் பெரிதும் சிறிதுமாந்தன்மை கூறப்பெற்றமை காண்க. ஆயினானுமென்புழி, ஆயினானுக்கும் எனக் குவ்வுருபு விரித்துப் பொருளுரைத்தலுமாம். (6) சொக்கநாதர் (கலி விருத்தம்) பூவி னாயகன் பூமக ணாயகன் காவி னாயக னாதிக் கடவுளர்க் காவி நாயக னங்கயற் கண்ணிமா தேவி நாயகன் சேவடி யேத்துவாம். (இ-ள்.) பூ இல் நாயகன் - தாமரை மலரை இருக்கையாக வுடைய அயனும், பூமகள், நாயகன் - செந்தாமரை மலரில் இருக்கும் திருமகளின் தலைவனாகிய அரியும், காவின் நாயகன் - கற்பகத் தரு விற்குத் தலைவனாகிய இந்திரனும், ஆதி - முதலான, கடவுளர்க்கு - தேவர் கட்கு, ஆவிநாயகன் - பிராணநாதனும், அம்கயல் கண்ணி - அழகிய கயல் போன்ற கண்களையுடையவராகிய, மாதேவி நாயகன் - பெருமை பொருந்தி உமாதேவியாரின் தலைவனுமாகிய சொக்கநாதனின், சேவடி - சிவந்த திருவடிகளை, ஏத்துவாம் - துதிப்பாம் எ - று. இல் - இல்லமாகவுடைய. காவினையுடைய விண்ணுலகிற்கு நாயகனென்பார், காவினாயகன் என்றார். எல்லாத் தேவர்களிடத்து மிருந்து அவர்களை யியக்குவிப்பான் இறைவனாகலின் ஆவி நாயகன் என்றார். கண்ணியாகிய தேவியென்க. (7) அங்கயற்கண்ணம்மை (அறுசீரடியாசிரிய விருத்தம்) பங்கயற்கண் ணரியபரம் பரனுருவே தனக்குரிய படிவ மாகி1 இங்கயற்க ணகனுலக மெண்ணிறந்த2 சராசரங்க ளீன்றுந் தாழாக் கொங்கயற்கண் மலர்க்கூந்தற் குமரிபாண் டியன்மகள்போற் கோலங் கொண்ட அங்கயற்க ணம்மையிரு பாதப்போ தெப்போது மகத்துள் வைப்பாம். (இ-ள்.) பங்கயற்கு அண் அரிய - பிரமனுக்கும் அணுகுதற் கரிய, பரம்பரன் உருவே - சிவபெருமான் திருவுருவே, தனக்கு உரிய படிவம் ஆகி - தனக்கு உரிய திருவுருவமாகப் பெற்று, இங்கு - இவ்விடத்தும், அயற்கண் - அயலிடத்தும் உள்ள, அகன் உலகம் - இடமகன்ற உலகங்களையும், எண் இறந்த - அளவற்ற, சர அசரங்கள் -இயங்குவன நிற்பனவாகிய பொருள்களையும், ஈன்றும் - பெற்றும், தாழாக் கொங்கை - தளராத கொங்கைகளையும், அல் கள் மலர் கூந்தல் - இருள்போலும் தேனிறைந்த மலர்களை யணிந்த கூந்தலையு முடைய, குமரி - கன்னியாகிய, பாண்டியன் மகள்போல் - மலையத்துவச பாண்டியனின் திருமகளாரைப்போல், கோலம் கொண்ட - திருவுருத் தாங்கிய, அங்கயற்கணம்மை - அங்கயற் கணம்மையாரின், இருபாதப் போது - திருவடி மலர் இரண்டனையும், எப்போதும் - எஞ்ஞான்றும், அகத்துள் வைப்பாம் - மனத்தின்கண் வைத்துச் சிந்திப்பாம் எ-று. பரம்பரன் - எவற்றினுக்கும் மேலோன். இறைவன் திருவுருக் கொள்ளுமாறே சத்தியும் உருவு கொள்ளுதலையும், இறைவி உலகுயிரெல்லாம் பெற்றும் கன்னியாயிருத்தலையும், “ சத்தியாய் விந்து சத்தி யாய்மனோன் மணிதா னாகி யொத்துறு மகேசை யாகி யுமைதிரு வாணி யாகி வைத்துறுஞ் சிவாதிக் கிங்ஙன் வருஞ்சத்தி யொருத்தி யாகும் எத்திற நின்றா னீச னத்திற மவளு நிற்பள்”” “ சிவஞ்சத்தி தன்னை யீன்றுஞ் சத்திதான் சிவத்தை யீன்றும் உவந்திரு வரும்பு ணர்ந்திங் குலகுயி ரெல்லா மீன்றும் பவன்பிரம சாரி யாகும் பான்மொழி கன்னி யாகும் தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் றெரியு மன்றே”” என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தங்களான் முறையே யுணர்க. கொங்கயற்கண் என்புழி ஐகாரம் திரிந்தது. மலையத்துவச பாண்டியனது வேள்வியின்கண்ணே இறைவி மூவாட்டைக் குழவி யாகத் தோன்றியருளிளமையால் பாண்டியன் மகள்போற் கோலங் கொண்ட என்றார். அங்கயற்கணம்மை - பெயர்; மீனாட்சியம்மை. போது மென்னும் உம்மை தொக்காது. பொழுது என்பது போது எனமருவிற்று. அகத்துள் வைத்தல் - சிந்தித்தல். (8) சபாபதி உண்மையறி வானந்த வுருவாகி யெவ்வுயிர்க்கு முயிராய் நீரின் தண்மையனல் வெம்மையெனத் தனையகலா திருந்துசரா சரங்க ளீன்ற பெண்மையுரு வாகியதன் னானந்தக் கொடிமகிழ்ச்சி பெருக யார்க்கும் அண்மையதா யம்பலத்து ளாடியருள் பேரொளியை யகத்துள் வைப்பாம். (இ-ள்.) உண்மை அறிவு ஆனந்த உருவாகி - சத்து சித்து ஆனந்தமே திருவுருவாகக்கொண்டு, எவ்வுயிர்க்கும் உயிராய் - எல்லா உயிர்களுக்கும் உயிராய், நீரின் தண்மை - நீரில் தட்பமும், அனல் வெம்மை என - தீயில் வெப்பமும் போல, தனை அகலாது இருந்து - தன்னை நீங்காதிருந்து, சர அசரங்கள் ஈன்ற - திரிவனவும் நிற்பனவுமாகிய பொருள்களைப் பெற்ற, பெண்மை உருவாகிய - பெண்மை வடிவாகிய, தன் ஆனந்தக்கொடி - சிவகாம வல்லியார், மகிழ்ச்சி பெருக - கண்டு களிகூர, யார்க்கும் - அனைவருக்கும், அண்மையதாய் - அணித்தாய், அம்பலத்துள் - பொற் சபையின் கண், ஆடியருள் - திருநடனம் செய்தருளும், பேரொளியை - பெரிய ஒளிப்பிழம்பாகிய சபாபதியை, அகத்துள் வைப்பாம் - மனத்துள் வைத்துச் சிந்திப்பாம் எ-று. ‘நீரின்றண்மை அனல் வெம்மை’ என்பன இறைவி இறை வனோடு தாதான்மியமாய் நிற்குந் தன்மையை உணர்த்த வந்த உவமைகள். தன் ஆனந்தக் கொடி - சிவகாமவல்லி என்னும் பொருட்டு; தன் - சிவம்; அன்றி, ஆனந்தக்கொடி என்பதனைப் பெயராக்கித் தனது ஆனந்தக்கொடி எனலும் ஆம். இறைவி கண்டு மகிழ இறைவன் திருக்கூத்தியற்றுதலை, “ செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் மைஞ்ஞின்ற வொண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்துநிற்க நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான் கைஞ்ஞின்ற வாடல்கன் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே ” என்னுந் தேவாரத் திருவிருத்தத்தாலும் அறிக. (9) சோமசுந்தரர் சடைமறைத்துக் கதிர்மகுடந் தரித்துநறுங் கொன்றையந்தார் தணந்து வேப்பந் தொடைமுடித்து விடநாகக் கலனகற்றி மாணிக்கச் சுடர்ப்பூ ணேந்தி விடைநிறுத்திக் கயலெடுத்து வழுதிமரு மகனாகி மீன நோக்கின் மடவரலை மணந்துலக முழுதாண்ட சுந்தரனை வணக்கஞ் செய்வாம். (இ-ள்.) சடை மறைத்து - சடையை மறையச் செய்து, கதிர் மகுடம் - ஒளிபொருந்திய திருமுடியை, தரித்து - சூடி, நறுகொன்றை அம்தார் - மணமிகுந்த கொன்றை மலர்களாலாகிய அழகிய மாலையை, தணந்து - நீக்கி, வேப்பம் தொடை முடித்து - வேப்பம் பூக்களா லாகிய மாலையை அணிந்து, விடநாகக் கலன்அகற்றி - நஞ்சை யுடைய நாகங்களாகிய அணிகளை அகற்றி, மாணிக்கம் சுடர் பூண் ஏந்தி - நவமணிகளாலாகிய ஒளியையுடைய அணிகளை அணிந்து, விடை நிறுத்தி - இடபக்கொடியை உயர்த்தாது நிறுத்தி, கயல் எடுத்து - மீனக்கொடியை உயர்த்தி, மீனம் நோக்கின் - மீன்போலும் கண்களையுடைய, மடவரலை - தடாதகைபிராட்டியாரை, மணந்து - திருமணம் செய்ததனால், வழுதி மருமகனாகி - மலையத்துவச பாண்டியனின் மருமகனாகி, உலகம் முழுது - எல்லா உலகங் களையும், ஆண்ட - ஆண்டருளிய, சுந்தரனை வணக்கம் செய்வாம் - சோமசுந்தரக் கடவுளை வணங்குவாம் எ-று. இறைவன் ‘பிறவாயாக்கைப் பெரியோன்’ ஆகலின் அருள் காரணத்தாற் பாண்டி வேந்தாதற்கேற்பத் தனதுண்மைத் திருக் கோலத்தையே மாற்றி வந்தனனென்பார் ‘சடைமறைத்துக் கதிர் மகுடந்தரித்து’ என்றிங்ஙனங் கூறினர். “ கடுக்கை மலர்மாற்றி வேப்பமலர் சூடி ஐவாய்க் காப்புவிட் டணிபூ ணணிந்து விரிசடை மறைத்து மணிமுடி கவித்து விடைக்கொடி நிறுத்திக் கயற்கொடி யெடுத்து வழுதியாகி ” என்னும் கல்லாடத்துடன் இப்பாட்டு ஒற்றுமையுற்று விளங்குதல் காண்க. முழுதென்பது எஞ்சாமைப் பொருட்டு. வணக்கஞ் செய்வாம் என்னும் இருசொல்லும் ஒரு சொன்னீரவாய்ச் சுந்தரனை என்னும் இரண்டவாதற்கு முடிபாயின. (10) தடாதகைப்பிராட்டியார் செழியர்பிரான் றிருமகளாய்க் கலைபயின்று முடிபுனைந்து செங்கோ லோச்சி முழுதுலகுஞ் சயங்கொண்டு திறைகொண்டு நந்திகண முனைப்போர் சாய்த்துத் தொழுகணவற் கணிமணமா லிகைசூட்டித் தன்மகுடஞ் சூட்டிச் செல்வந் தழைவுறுதன் னரசளித்த பெண்ணரசி யடிக்கமலந் தலைமேல் வைப்பாம். (இ-ள்.) செழியர் பிரான் - பாண்டியர் தலைவனாகிய மலையத் துவசனின், திருமகளாய் - திருமகளாய்த் தோன்றி, கலைபயின்று - எல்லாக் கலைகளையும் கற்று, முடிபுனைந்து - திருமுடி சூடி, செங்கோல் ஒச்சி - அரசு நடாத்தி, முழுது உலகும் - எல்லா உலகங் களையும், சயங்கொண்டு - வெற்றி கொண்டு, திறைகொண்டு - திறைப்பொருளை ஏற்று, நந்தி கணம் - நந்திதேவர் முதலிய சிவகணங் களை, முனைப்போர் - போர்முனையில், சாய்த்து - வலிகெடச் செய்து, தொழு கணவற்கு - (தன்னாலும் அனைவராலும்) தொழப்பெறுகின்ற நாயகனுக்கு, அணிமண மாலிகை சூட்டி - அழகிய மணமாலையைச் சூட்டி, தன்மகுடம் சூட்டி - தனது திருமுடியையும் புனைவித்து, செல்வம் தழைவுறு - செல்வம் நிரம்பப்பெற்ற, தன் அரசு அளித்த - தனது அரசியலையும் கொடுத்தருளிய, பெண்ணரசி - மங்கையர்க்கரசியாகிய தடாதகைப் பிராட்டியாரின், அடிக்கமலம் - திருவடித் தாமரைகளை, தலைமேல் வைப்பாம் - முடியின்மீது சூடுவாம் எ-று. இறைவி பாண்டியற்கு மகளாய்த் தோன்றிப் புரிந்தருளிய செயலெல்லாம் முறையானே இப்பாட்டில் தொகுத்துரைக்கப் பட்டவாறறிக. நந்திகணம் - நந்தியை முதலாகவுடைய கணம். முனைப்போர் என்பதைப் போர்முனை என மாற்றுக. சாய்தல் - மெலிதல்; சாய்த்தல் அதன் பிறவினை. தொழு கணவன் - தொழப்படுங் கணவன். மேற்பாட்டினும் இப்பாட்டினும் கூறிய வரலாற்றைத் தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப்படலத் தானும், திருமணப் படலத்தானும் அறிக. வெள்ளியம்பலவாணர் பொருமாறிற் கிளர்தடந்தோ ளொருமாறன் மனங்கிடந்த புழுக்க மாற வருமாறிற் கண்ணருவி மாறாது களிப்படைய மண்ணும் விண்ணும் உருமாறிப் பவக்கடல்வீழ்ந் தூசலெனத் தடுமாறி யுழலு மாக்கள் கருமாறிக் கதியடையக் கான்மாறி நடித்தவரைக் கருத்துள் வைப்பாம். (இ-ள்.) பொரும் ஆறில் - போர்த்துறையில், கிளர் - விளங்கா நின்ற, தடம் தோள் - பெரிய தோள்களையுடைய, ஒரு மாறன் - ஒரு பாண்டியன், மனம் கிடந்த - மனத்தின்கண் தங்கிய, புழுக்கம் மாற - துன்பம் நீங்கவும், வரும் ஆறில் - பெருகிவரும் ஆற்றுநீர் போல், கண்அருவி - கண்களினின்றும் ஒழுகும் நீரருவி, மாறாது - நீங்கப்பெறாது, களிப்பு அடைய - (அம்மன்னன்) மகிழ்ச்சி யடையவும், பவக்கடல் வீழ்ந்து - பிறவிக் கடலுள் வீழ்ந்து, உருமாறி - நால்வகைக்கதியினும் மாறி மாறி, ஊசலென - (மேலும் கீழும் போவதும் வருவதுமாகிய) ஊசல் போல, மண்ணும் விண்ணும் தடுமாறி - மண்ணுலகத்தும் விண்ணுலகத்தும் வருவதும் போவது மாகி, உழலும் மாக்கள் - வருந்துகின்ற மக்கள் கருமாறி - கருவிற் சென்றடைதலினின்றும் நீங்கி, கதி அடைய - வீடுபெறவும், கால் மாறி நடித்தவரை - கால்மாறி யாடிய வெள்ளியம்பல வாணரை, கருத்துள் வைப்பாம் - மனத்துள் வைத்து வணங்குவாம் எ-று. வெட்சி, வஞ்சி முதலிய புறத்திணைகளும், அவற்றின் பகுதியாய துறைகளும், ‘பொருமாறு’ எனப்பட்டன; விற்போர், வாட்போர், மற்போர் முதலிய போர் விகற்பங்கள் எனினும் பொருந்தும். மாறன் - இராசசேகர பாண்டியன்; இம்மன்னன் பரதநூற்றுறை பயின்று அதனாற் கால் தளர்ந்து வருந்தி, எம் பெருமானுக்கும் இங்ஙனம் திருவடி வருந்துமே என நினைந்து உளம்புழுங்கி வேண்டிக் கொள்ள, அவன் மகிழும்படி இறைவன் ஊன்றிய திருவடியை மேலெடுத்தாடி யருளினன்; இதன் விரிவைக் கான்மாறியாடின படலத்திற் கண்டு கொள்க. பொருமாற்றில், வருமாற்றின் எனற்பாலன விகாரப் பட்டன, ஊசலென மனந்தடுமாறி எனினும் ஆம்; ‘உறுகயிறூசல் போல வொன்றுவிட் டொன்று பற்றி, மறுகயிறூசல் போல வந்துவந் துலவு நெஞ்சம்’ என்னும் திருநேரிசையும் காண்க. (12) தட்சிணாமூர்த்தி கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதற் கற்ற கேள்வி வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப் பாலாய் எல்லாமா யல்லதுமா விருந்ததனை யிருந்தபடி யிருந்து காட்டிச் சொல்லாமற் சொன்னவரை நினையாம னினைந்துபவத் தொடக்கை வெல்வாம். (இ-ள்.) கல் ஆலின் புடை அமர்ந்து - கல்லால மரத்தின் கீழ் இருந்து, நான்மறை ஆறு அங்கம் முதல் - நான்குமறை ஆறு அங்க முதலானவற்றை, கற்ற - கற்றுணர்ந்த, கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் - கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சநகர் முதலிய நான்கு முனிவர்கட்கும், வாக்கு இறந்த பூரணமாய் - வாக்கியலைக் கடந்த நிறைவாயும், மறைக்கு அப்பாலாய் - வேதங்கட்கு அப்பாற் பட்ட தாயும், எல்லாமாய் - எல்லாமாயும், அல்லதுமாய் - (அவற்றுள் ஒன்றும்) அல்லதுமாயும், இருந்ததனை - உள்ளதன் உண்மையை, இருந்தபடி இருந்து - உள்ளபடி இருந்து, காட்டி - காண்பித்து, சொல்லாமல் சொன்னவரை - குறிப்பாலுணர்த்திய தட்சிணா மூர்த்தியை, நினையாமல் நினைந்து - இடையறாமல் நினைந்து, பவத்தொடக்கை வெல்வாம் - பிறவிக்கட்டாகிய பகையை வெல்வாம் எ-று. நான்மறை - இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்ப; தைத்திரியம், பெளடிகம், தலவகாரம், சாமம் எனலுமாம். ஆறங்கம் - சிட்சை, வியாகரணம், நிருத்தம், கற்பம், சந்தம், சோதிடம் என்பன; இவை வேதத்திற்கு உறுப்புக்கள் போறலின் வேதாங்கம் எனப்படும்; இதனை, “ கற்பங்கை சந்தங்கா லெண்கண் தெற்றெ னிருத்தஞ் செவி சிக்கை மூக் குற்ற வியாகரண முகம் பெற்றுச் சார்பிற் றோன்றா வாரண வேதக் காதியந்த மில்லை” என மணிமேகலை கூறுவதாலும் அறிக. முதல் என்றதனால் அறநூல், புராணம் முதலாயின கொள்ளப்படும். கேள்வி என்பது கேட்டல் எனப் பொருள்படுதலன்றிக் கல்வியெனவும், வேதம் எனவும் பொருள்படும். நால்வர் - சனகர், சனாதனர், சனந்தரர், சனற்குமாரர் எனுமிவர். இறைவன் வாக்கிறந்து நிற்றலை ‘மாற்ற மனங்கழிய நின்ற மறையோன்’ ‘சொற்பதங் கடந்த தொல்லோன்’ என ஆளுடைய அடிகள் அருளுமாற்றானறிக. வேதம் முதலிய கலைகளெல்லாம் பாசஞான மாகலானும், இறைவன் ‘பாசஞானத் தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரன்’ ஆகலானும் ‘மறைக்கப் பாலாய்’ என்றார். இறைவன் எல்லாமா யிருத்தலை, “ இருநிலனாய்த் தீயாகி நீருமாகி யியமான னாயெறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் நாயி றாகி யாகாச மாயட்ட மூர்த்தி யாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம்முருவுந் தாமேயாகி நெருநலையா யின்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிக ணின்ற வாறே”” எனவும், அல்லதுமா யிருத்தலை, “ விரிகதிர் நாயிறல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணுநிலனுந் திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர் தெளிநீரு மல்லர் தெரியில் அரிதரு கண்ணியாளை யொருபாக மாக வருள்காரணத்தில் வருவார் எரியர வாரமார்ப்ப பரிமையாரு மல்ல ரிமைப்பாரு மல்ல ரிவரே ” எனவும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்தமை காண்க: “ ஒன்றுநீ யல்லை யன்றியொன் றில்லை யாருனை யறிகியற் பாரே” என்னும் திருவாசகமும் சிந்திக்கற் பாலது; இறைவன் உலகெலாமாகி வேறாயுடனுமாய் நிற்பன் என மெய்கண்ட நூல்கள் கூறாநிற்கும். இருந்ததனை; வினையாலணையும் பெயர்; தன்னை யெனப் பிரித்தலும் ஆம். இருந்து காட்டிச் சொல்லாமற் சொல்லுதல் - மோன முத்திரைக்கையுட னமர்ந்து அருளாலுணர்த்துதல்; ஒருகை மார்பொடு விளங்க ஒருகை தாரொடு பொலிய என்னும் திருமுரு காற்றுப்படைத் தொடருக்கு முனிவர்க்குத் தத்துவங்களைக் கூறி உரையிறந்த பொருளை யுணர்த்துங் காலத்து ஒருகை மார்போடே விளங்கா நிற்க, ஒருகை மார்பின் மாலை தாழ்ந்ததனோடே சேர்ந்து அழகுபெற, இறைவன் மோன முத்திரை யத்தனாய்த் தானாயே யிருந்து காட்ட ஊமைத்தசும்புள் நீர் நிறைந்தாற் போல ஆனந்தமய மான வொளி மாணாக்கர்க்கு நிறைதலின் அதற்குரிய மோன முத்திரை கூறிற்று என நச்சினார்க்கினியர் உரை விரித்திருப்பது இங்கு நோக்கற்பாலது. “ ஓரானீழ லொண்கழ லிரண்டும் முப்பொழு தேத்திய நால்வ'faக்கு ஒளிநெறி காட்டினை” என்பது திருவெழுகூற்றிருக்கை. நினையாமல் நினைந்து - பிறிதொன்றையும் நினையாமல் நினைந்து; இடையறாது பாவித்து என்றபடி; சிந்திக்கு முறையிற் சிந்தித்து என்றலுமாம்; அது தற்போதத்தாற் சிந்தியாது திருவருள் வழியாற் சிந்தித்தல் என்பதாம். இதனை, “ அறியாமை யறிவகற்றி யறிவி னுள்ளே யறிவுதனை யருளினா லறியாதே யறிந்து குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடுங் கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாகில்”” என்னும் சிவஞானசித்தியா லறிக. மாணிக்கவாசகப் பெருமானும் ‘நினைப்பற நினைந்தேன்’ என்றார். ஆலின் கீழிருந்து சிவபெரு மானிடத்தில் மறைப் பொருளைக் கேட்டுணர்ந்த சனகர் முதலிய முனிவர்கள் பின்னரும் தெளிவு பிறவாராகித் திருக்கைலையை அடைந்து இறைவனை வணங்கி ‘ஆகமத்தி னரும்பத மூன்றும் கூற’ப் பெற்றுப் புந்தியொடுங்கும் ஞானத்தைப் போதிக்க வேண்ட, இறைவன் ‘உரத்திற் சீர்கொள், கரதல மொன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி, ஒருகணஞ் செயலொன் றின்றி யோகுசெய் வாரி னுற்றான்’ என்பது வரலாறு. இதனைக் கந்த புராண உற்பத்தி காண்டத்து மேருப்படலத்தாலறிக. சித்திவிநாயகக்கடவுள் உள்ளமெனுங் கூடத்தி லூக்கமெனுந் தறிநிறுவி யுறுதி யாகத் தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி யிடைப்படுத்தித் தறுகட் பாசக் கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை யென்னும் வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைந்துவரு வினைகள் தீர்ப்பாம். (இ-ள்.) உள்ளம் எனும் கூடத்தில் - உள்ளமாகிய கூடத்தில், ஊக்கம் எனும் - மனவுறுதியாகிய, தறி நிறுவி - கட்டுத் தறியை நிறுத்தி, தள்ளரிய - பேதித்தலில்லாத, அன்பு என்னும் தொடர் - அன்பாகிய சங்கிலியை, உறுதியாகப் பூட்டி - வலிமை பெறப்பூட்டி, இடைப்படுத்தி - அதில் அகப்படுத்தி, தறுகண் - வன்கண்மையை யுடைய, பாசம் - ஆணவ சம்பந்தமுள்ள, கள்ளவினை - வஞ்சவினையை யுடைய. பசுபோதம் - சீவபோதம் ஆகிய, கவளம் இட - கவளத்தைக் கொடுக்க, களித்து - மகிழ்ந்து, உண்டு - அருந்தி, கருணை என்னும் - அருளாகிய, மதவெள்ளம் பொழி - மதப்பெருக்கைச் சொரிகின்ற, சித்தி வேழத்தை - சித்திவிநாயகக்கடவுளாகிய யானையை, நினைந்து - தியானித்து, வருவினைகள் தீர்ப்பாம் - பிறவிதோறும் தொடர்ந்துவருகின்ற வினைகளை நீக்குவாம் எ-று. விநாயகக்கடவுளை வேழமென்றதற்கேற்ப உள்ளம் முதலிய வற்றைக் கூடம் முதலியவாக உருவகப் படுத்தினார். கூடம் - யானை கட்டுமிடம். கவளம் - யானை யுணவு. தொடராற் பூட்டி எனவிரிப் பினும் அமையும். ஆணவத்தாற் பசுபோதமும், அதனால் வினையும் நிகழுமென்க. பசுபோதக் கவள மிடுதலாவது யான் எனது என்னுஞ் செருக்கற்று வணங்குதல். சித்தி விநாயகர்; பெயர். இப்பாட்டு இயைபுருவக வணி. (14) முருகக் கடவுள் கறங்குதிரைக் கருங்கடலுங் காரவுணப் பெருங்கடலுங் கலங்கக் கார்வந் துறங்குசிகைப் பொருப்புஞ்சூ ருரப்பொருப்பும் பிளப்பமறை யுணர்ந்தோ ராற்றும் அறங்குலவு மகத்தழலு மவுணமட வார்வயிற்றி னழலு மூள மறங்குலவு வேலெடுத்த குமரவேள் சேவடிகள் வணக்கஞ் செய்வாம். (இ-ள்.) கறங்கு - ஒலிக்கின்ற, திரை - அலைகளையுடைய, கருங்கடலும் - கரிய கடலும், கார் அவுணப் பெருங்கடலும் - கரிய அசுர சேனையாகிய பெரிய கடலும், கலங்க - கலங்கவும், கார் வந்து உறங்கு - முகில் வந்து படியப் பெற்ற, சிகை - உச்சியையுடைய, பொருப்பும் - கிரவுஞ்ச மென்னும் மலையும், சூர்-சூரபன்மாவின், உரம் பொருப்பும் - மார்பாகிய மலையும், பிளப்ப - பிளவை யடையவும், மறை உணர்ந்தோர் ஆற்றும் - வேதவிதிகளை நன்குணர்ந்தவர்கள் செய்கின்ற, அறம் குலவும் - அறத்தோடு கூடிய, மகத்து அழலும் - வேள்வியின்கண் தீயும், அவுண மடவார் வயிற்றின் அழலும் - அசுரப்பெண்டிர் வயிற்றின்கண் தீயும், மூள - மூண்டு எரியவும், மறம் குலவு - வீரம் பொருந்திய, வேல் - வேற் படையை, எடுத்த - திருக்கரத்திலேந்திய, குமரவேள் - முருக வேளின், சேவடிகள் - சிவந்த திருவடிகளை, வணக்கம் செய்வாம் - வணங்குவாம் எ-று. சூரபன்மன் கடல் நடுவே மாமரமாய்த் தோன்றி நின்றபொழுது முருகக் கடவுள் ஆங்கெய்தி அதனைத் தமது வேலாற் றுணித்தன ராகலின் கருங்கடலும் - கலங்க என்றார். திருமுருகாற்றுப்படையுள் பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச், சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல் என்று கூறப்படுதலுங் காண்க. கிரவுஞ்சன் என்னும் அசுரன் மலைவடிவாயிருந்து, முருகக் கடவுள் சேனையுடன் வரும்பொழுது மாயை பல புரிந்து, அவரது வேலாற் பிளக்கப்பட்ட மையால்,‘சிகைப் பொருப்பும்.....பிளப்ப’ என்றார். அவுணப் பெருங்கடல், சூருரப் பொருப்பு என்பன உருவகம். வயிற்றினழல் - சோகத்தீ. இவ்வரலாறுகளனைத்தும் கந்தபுராணத்துட் காண்க. வேலெடுத்த எனக் காரணத்தாற் காரியத்தைக் கூறினார். (15) நாமகள் பழுதகன்ற நால்வகைச்சொல் மலரெடுத்துப் பத்திபடப் பரப்பித் திக்கு முழுதகன்று மணந்துசுவை யொழுகியணி பெறமுக்கண் மூர்த்தி தாளில் தொழுதகன்ற வன்பெனுநார் தொடுத்தலங்கல் சூட்டவரிச் சுரும்புந் தேனுங் கொழுதகன்ற வெண்டோட்டு முண்டகத்தா ளடிமுடிமேற் கொண்டு வாழ்வாம். (இ-ள்.) பழுது அகன்ற - குற்றநீங்கிய, நால்வகைச் சொல்மலர் எடுத்து - பெயர் வினை இடை உரி என்னும் நான்கு வகையை யுடைய சொற்களாகிய மலர்களை எடுத்து, பத்திபட பரப்பி - நிரல் பெற வைத்து, திக்குமுழுது அகன்று - எல்லாத் திக்குகளினுஞ் சென்று, மணந்து - கமழ்ந்து, சுவை ஒழுகி - சுவை ஒழுகப்பெற்று, அணிபெற - அழகுபெற, அகன்ற அன்பு எனும் நார் -பெரிய அன்பாகிய நாரினால், அலங்கல் தொடுத்து - பாமாலையாகச் செய்து, முக்கண் மூர்த்தி - மூன்று கண்களையுடைய இறைவனுடைய, தாளில் - திருவடிகளில், தொழுது - வணங்கி, சூட்ட - அணிவதற்கு, வரி - கீற்றுக்களையுடைய, சுரும்பும் தேனும் - ஆண்வண்டும் பெண் வண்டும், கொழுது - குடைதலினால், அகன்ற - விரிந்த, வெண் தோட்டு முண்டகத்தாள் - வெண்மையான இதழ்களையுடைய தாமரைப்பூவை இருக்கையாகவுடைய நாமகளின், அடி - திருவடி களை, முடிமேற்கொண்டு வாழ்வாம் - சென்னியிற் சூடிவாழ்வாம் எ-று. பழுது - மலருக்குப் புழுக்கடி முதலியனவும், சொல்லுக்குத் திணைவழு முதலியனவும் ஆம். மலரும் கோட்டுப்பூ, கொடிப்பூ, நிலப்பூ, நீர்ப்பூ என நால்வகைப்படும். நால்வகைச் சொல்லென்பன இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனலுமாம். “ இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே” என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாரும். சொன்மலர், அன்பெனு நார் என்பன உருவகம். ‘பத்திபடப் பரப்பித்திக்கு முழுதகன்று மணந்து சுவையொழுகி யணிபெற’ என்பன செம்மொழிச் சிலேடை. (கற்போர்க்கு) அன்புண்டாகப் பரப்பித், திசை முழுதும் புகழ் பொருந்துமாறு எண்வகைச் சுவையுங் கனிந்து சொல்லணி பொருளணியுடையதாகத் தொடுத்து எனப் பாமாலைக்கேற்ப உரைத்துக்கொள்க. எண்வகைச் சுவையாவன; வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், வெகுளி, நகை என்பன. சமனிலை கூட்டின் சுவை ஒன்பதாகும். (16) திருநந்திதேவர் (வேறு) வந்திறை யடியிற் றாழும் வானவர் மகுட கோடி பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையாற் றாக்கி அந்தியும் பகலுந் தொண்ட ரலகிடுங் குப்பை யாக்கும் நந்தியெம் பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்பாம். (இ-ள்.) இறை அடியில் - இறைவன் திருவடிகளில், வந்து தாழும் - வந்து வணங்கு கின்ற, வானவர் - தேவர்களின், மகுடகோடி பந்தியின் முடியுறுப்பு வரிசைகளினின்று, மணிகள் சிந்த - மாணிக்கங்கள் சிதறும்பாடியாக, வேத்திரப்படையால் - பிரம்பாகிய படையால், தாக்கி - அடித்து, அந்தியும் பகலும் - இரவும் பகலும், தொண்டர் - திருத்தொண்டர்கள், அலகு இடும் - திருவலகிடுதற்குக் காரணமாயுள்ள, குப்பை ஆக்கும் - குப்பையாகச் செய்கின்ற, நந்தி எம்பெருமான் - எம் திருநந்தி தேவரின், பாதம் - திருவடிகளாகிய, நகைமலர் - ஒளிபொருந்திய மலர்களை; முடிமேல் வைப்பாம் - முடியின் கண்ணே சூடுவாம் எ-று. மகுட கோடிபந்தி என்பன வடசொற்களாதலின் வல்லொற்று மிகாதியல்பாயின. கோடி - முடியுறுப்பு; எண் ஆயின் மகுடகோடி சிந்த என எழுவாயாக்கி உரைத்தல்வேண்டும்; வேற்றுமையாயின் கோடிப்பந்தி என ஒற்றுமிகுதல் வேண்டுமென்க. அந்தியும் பகலும் என்பதற்குக் காலையந்தி, மாலையந்திகளிலும், நண்பகலிலும் என்று கூறலுமாம். தொண்டர்களுக்கெல்லாம் திருத்தொண்டுநெறி கற்பிக்கும் குரவரென்னும் குறிப்புத்தோன்ற அலகிடுங் குப்பை யாக்கும் என்றார். (17) ஆளுடைய பிள்ளையார் கடியவிழ் கடுக்கை வேணித் தாதைபோற் கனற்கண் மீனக் கொடியனை வேவ நோக்கிக் குறையிரந் தனையான் கற்பிற் பிடியன நடையாள் வேண்டப் பின்னுயி ரளித்துக் காத்த முடியணி மாடக் காழி முனிவனை வணக்கஞ் செய்வாம். (இ-ள்.) கடி அவிழ் - மணத்துடன் மலர்ந்த, கடுக்கைவேணி - கொன்றைமலர் மாலையையணிந்த சடையையுடைய, தாதைபோல் - தந்தையாராகிய சிவபிரான் புரிந்தருளியதுபோல, கனற்கண் - வெப்பு நோயாகிய தீயின்கண், மீனக்கொடியனை - மீனக்கொடியை உடையவனாகிய கூன்பாண்டியனை, வேவநோக்கி - வெதும்பி வருந்தும் படியாக அருள்செய்து, அனையான் - அப்பாண்டியனின் (மனைவியாராகிய), கற்பின் - கற்பினையுடைய, பிடிஅன நடையாள் - பெண்யானை போலும் நடையினையுடைய மங்கையர்க்கரசியார், குறையிரந்து வேண்ட - தமது குறைகூறி வேண்டிக்கொள்ள, பின் - அவ்வாறு வேண்டிய பின்பு, உயிர் அளித்து - அப்பாண்டியனுக்கு உயிரை நல்கி, காத்த - ஆண்டருளிய, முடிஅணி - சிகரங்களை யுடைய அழகிய, மாடம் - மாடங்களையுடைய, காழி முனிவனை - சீகாழிப்பதியில் அவதரித்த திருஞான சம்பந்தப்பெருமானை, வணக்கஞ்செய்வாம் - வணங்குவாம் எ-று. ‘கனற்கண்.......காத்த’ என்பது சிலேடை. கனற்கண் - அனல் விழியால், மீனக்கொடியனை - மீனக்கொடியுடைய மன்மதனை, வேவ நோக்கி - எரியும்படி பார்த்தருளி, அனையான் கற்பின்பிடி அன நடையாள் வேண்ட - அவன் மனைவியாகிய இரதிதேவி வேண்டிக் கொள்ள, பின் உயிர் அளித்துக் காத்த - பின்பு அம் மன்மதனது உயிரை நல்கிக் காத்தருளிய, - என்று சிவபிரானுக்கேற்பப் பொருளுரைத்துக் கொள்க. காமனை யெரித்த கதை:- சிவபெருமானை யிகழ்ந்து தக்கன் புரிந்த வேள்வியிற்சென்று அவியுண்ட தீவினையால் அயன், மால், இந்திரன் முதலிய அமரர்களெல்லாம் அப்பொழுது ஒறுக்கப்பட்ட தன்றிப், பின்னரும் சூரபன்மன் முதலிய அவுணர்களால் துன்பமுழந்து, அத்துன்பத்தை யொழிப்பதற்கு இறைவன் மலையரையன் புதல்வி யாரை மணந்து குமாரக்கடவுளைத் தோற்றுவிக்க வேண்டுமெனத் தெளிந்து, அதன்பொருட்டு, முனிவர்க்கு மெய்ப்பொருளுணர்த்தி யோகிலிருக்கும் பெருமானை மலரம்பெய்து மோனத்தினின்றும் அகற்றும்படி மன்மதனை வேண்டிக்கொண்டனர். அவன் அது செய்தற்கு அஞ்சினனாயினும் தேவர்கள் பலவாறு வேண்டிக் கொண்டதற்கிரங்கிச் சென்று சிவபெருமான்மேல் அம்பினை செய்து, அப்பெருமான் சிறிது விழித்தவளவில் நெற்றிக்கண்ணின் நெருப்பால் எரிந்து சாம்பராயினன். பின் அவன் மனைவியாகிய இரதி வேண்ட இறைவன் திருக்கலியாண காலத்தில் அவனுக்குயிர் நல்கி, இரதிக்கு உருவுடனும் ஏனையர்க்கு அநங்கனாகவும் இருக்குமாறு அருள்செய்தனர் என்பது. இதனைக் கந்தபுராணத்துக் காமதகனப் படலம் முதலியவற்றானறிக. திருஞானசம்பந்தர் பாண்டியனை வெப்புநோயால் வருந்தச் செய்து, பின் அது தீர்த்தருளிய வரலாறு:- சோழநாட்டிலே சீகாழிப்பதியிலே சிவபாதவிருதயர் என்னும் அந்தணர்க்குப் பகவதியார் திருவயிற்றிலே திருவவதாரஞ் செய்து மூன்றாம் ஆண்டிலே பிரமதீர்த்தக்கரையில் சிவபெருமான் உமா தேவியாரோடும் வந்து பரஞானம் கலந்த பால் கொடுக்கப்பெற்றுத் ‘தோடுடை செவியன்’ என்னும் பதிகம்பாடித் தந்தைக்கு இறைவனைச் சுட்டிக்காட்டித் திருஞானசம்பந்தரென்றும், ஆளுடைய பிள்ளை யாரென்றும் பெயரெய்தியவர் பல திருப்பதிகளுக்கும் சென்று பதிகம்பாடி இறைவன்பால் பொற்றாளம், முத்துச்சிவிகை முதலிய பெற்றுப் பல அற்புதம் புரிந்து மதுரையையடைந்து அடியார் கூட்டத்துடன் தங்கியிருக்கும்பொழுது சமணர்கள் பொறாமை யினால் திருமடத்திற் றீவைக்க, அக்கொடுஞ்செயல் அரசன் முறை செய்யாமையால் நிகழ்ந்ததென உட்கொண்ட பிள்ளையார் அத்தீயானது சென்று பாண்டியனை வெப்பு நோயாகப் பற்றுமாறு அருளி, மங்கையர்க்கரசியாரின் வேண்டுகோளுக்கிணங்கிப் பின் அம்மன்னனது வெப்புநோயைத் திருநீற்றால் மாற்றிச் சமண னாயிருந்த அவ்வரசனைச் சைவனாக்கிச் சமணரை வாதில்வென்று தமிழ்நாடு முழுதும் சைவம் தழைத்தோங்கச் செய்தனர் என்பது. இதன் விரிவைப் பெரியபுராணத்திலுள்ள அவரது புராணத் திலும், இந்தப் புராணத்திலுள்ள பாண்டியன் சுரந்தீர்த்த படலத் திலும் கண்டுகொள்க. தாதைபோல் என்றது தந்தையினியல்பு பிள்ளையிடத்தும் விளங்குமென்பது குறிப்பித்தவாறாம். (18) ஆளுடைய அரசுகள் அறப்பெருஞ் செல்வி பாகத் தண்ணலஞ் செழுத்தா லஞ்சா1 மறப்பெருஞ் செய்கை மாற வஞ்சக ரிட்ட நீல நிறப்பெருங் கடலும் யார்க்கு நீந்துதற் கரிய வேழு பிறப்பெனுங் கடலு நீத்த பிரானடி வணக்கஞ் செய்வாம். (இ-ள்.) அறப்பெரும் செல்வி - முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்த பெரிய செல்வியாராகிய உமையம்மையாரை, பாகத்து - ஒரு கூற்றிலுடைய, அண்ணல் - பெருமை பொருந்திய இறைவனின், அஞ்சு எழுத்தால் - திருவைந்தெழுத்தாகிய புணையினாலே, அஞ்சா- பழிக்கு அஞ்சாத, மறப்பெரும் செய்கை - பெரிய பாவச்செய்கையினின்று, மாறா - நீங்காத, வஞ்சகர் - வஞ்சகராகிய சமணர்கள், இட்ட நீலநிறப் பெருங்கடலும் - கற்றூணோடு பிணித்துப் போகட்ட நீலநிறத்தையுடைய பெரிய கடலையும், யார்க்கும் - எவ்வகையோராலும், நீந்துதற்கு அரிய - கடப்பதற்கு முடியாத, ஏழு பிறப்பெனும் கடலும் - ஏழுவகையினையுடைய பிறவி என்னுங் கடலையும், நீத்த - ஒரு சேரக் கடந்தருளிய, பிரான் - திருநாவுக்கரசரின், அடி - திருவடிகளை, வணக்கம் செய்வாம் - வணங்குவாம் எ-று. அஞ்சா, மாறா என்னும் பெயரெச்சமறைகள் வஞ்சகர் என்னும் பெயருடன் தனித்தனி முடிந்தன. அஞ்ச என்பது பாடமாயின் அதனை இட்ட என்பதனோடு முடிக்க. ஈரிடத்தும் கடலும் என்பதிலுள்ள உம்மைகள் எண்ணுடன் சிறப்புங் குறித்தன. ஏழு பிறப்பாவன; தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் என்பன. திருநாவுக்கரசர் கடல்கடந்த வராலாறு :- திருமுனைப்பாடி நாட்டிலே திருவாமூரிலே வேளாளர் குலத்திலே புகழனார் என்பவர்க்கு மாதினியார் வயிற்றிலே திருவவதாரஞ்செய்த மருணீக்கியாரென்பவர் இளமையிலே பலகலையுங்கற்று, அறம் பல புரிந்து, உலகநிலையாமை யுணர்ந்து, உண்மைப்பொருளை ஆராயத்தொடங்கி, ‘நம்பர் அருளாமையினால், சமணசமயமே மெய்ச்சமயமெனத் துணிந்து, அதிற் பிரவேசித்து, அம்மதநூல் முழதுங்கற்றுப், புத்தர் முதலானோரை வாதில் வென்று, தருமசேனர் என்னும் பெயருடன் சமணகுரவராய் விளங்கிய காலத்தில், அவர் தமக்கையாராகிய திலகவதியம்மையார் திருவதிகைத் திருப்பதியிலே திருவீரட்டானமுடைய பரமசிவனுக்கு வைகலும் தொண்டுசெய்து வருகின்றவர் தமது தம்பியாரைச் சமணசமயத்திலிருந்து மீட்டருள வேண்டுமெனப் பிரார்த்தித்தபடியே பரங்கருணைத் தடங்கட லாகிய இறைவன், சைவசமயம் தழைத்தோங்கவும் உலகமெல்லாம் ஈடேறவும், அவரைச் சைவசமயத்திற்கு மீட்கத் திருவுளம்பற்றி அவருக்குச் சூலைநோய் தந்தருள, அந் நோயானது சமணக்குருக் கண்மார் செய்த மந்திரமருந்துகளினா லெல்லாம் தணியாது மேன்மேல் முறுகி வருத்தாநிற்க, அவர் அதுபொறுக்கலாற்றாது திருவதிகைப் பதியை அடைந்து திலகவதியாரை வணங்கித் திருநீறுபெற்றுத் தரித்துத் திருவைந்தெழுத்துபதேசம்பெற்று, அவருடன் திருக்கோயிலையடைந்து கூற்றாயினவாறு’ என்னும் பதிகம்பாடிச் சிவபெருமானால் நோய்நீக்கமும், திருநாவுக்கரசு என்னும் திருப்பெயரும் பெற்றுத் திகழ்வாராயினர். அதையுணர்ந்த சமணக் குருக்கண்மார் தங்கள் சமயத்திற்கு ஊனம் வந்துவிடுமென்றஞ்சிச் சமணசமயத்தவனாயிருந்த (மகேந்திரவர்மபல்லவ) அரசன் பாற் சென்று, போதித்துத் திருநாவுக்கரசரை யழைப்பித்து அவரைக் கொல்லுமாறு தூண்டினர். அரசனும் அவர்கள் கருத்திற்கிணங்கித் திருநாவுக்கரசரை நீற்றறையிலிட்டும், நஞ்சமருந்தச்செய்தும், அவர்மீது கொலையானையை ஏவியும், சிவபெருமான் றிருவருளால் அவற்றானெல்லாம் அவர் துன்புறாதிருந்த காலைக், கற்றூணிற் பிணித்துக் கடல்நடுவே யிடச்செய்தான். அப்பொழுது அரசுகள், “ சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே ” என்னும் பஞ்சாக்கரப் பதிகம் பாடிக், கல்லே தெப்பமாக மிதக்க அதில் ஆரோகணித்துத் திருப்பாதிரிப்புலியூரில் வந்து கரையேறினர் என்பது. இதன் விரிவைப் பெரிய புராணத்திலுள்ள திருநாவுக்கரசு நாயனார் புராணத்திற் காண்க. திருநாவுக்கரசர் இங்ஙனம் கரை யேறிய வரலாற்றை அவர் தமது திருவாக்கினாலேயே, “ கல்லி னோடெனைப் பூட்டி யமண்கையர் ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால் நெல்லு நீள்வயல் நீலக் குடியரன் நல்ல நாம நவிற்றியுய்ந் தேனன்றே ” எனக் கூறலுங் காண்க. (19) ஆளுடைய நம்பிகள் அரவக லல்கு லார்பா லாசைநீத் தவர்க்கே வீடு தருவமென் றளவில் வேதஞ் சாற்றிய தலைவன் தன்னைப் பரவைதன் புலவி தீர்ப்பான் கழுதுகண் படுக்கும் பானாள் இரவினிற் றூது கொண்டோ னிணையடி முடிமேல் வைப்பாம். (இ-ள்.) அரவு அகல் அல்குலார்பால் - பாம்பின் படம்போலும் அகன்ற நிதம்பத்தையுடைய மகளிரிடத்து, ஆசை - அவாவை, நீத்தவர்க்கே - ஒழித்தவர்களுக்கே, வீடுதருவம் என்று - பேரின்ப வீட்டைக் கொடுப்பேமென்று, அளவு இல் வேதம் - எண்ணிறந்த வேதங்களால், சாற்றிய - கூறியருளிய, தலைவன் தன்னை - முதல் வனாகிய சிவபிரானையே, பரவைதன் - பரவை நாய்ச்சியாரின், புலவி தீர்ப்பான் - ஊடலை நீக்கும் பொருட்டு, கழுது கண்படுக்கும் - பேயும் உறங்கப் பெறுகின்ற, பானாள் இரவினில் - நள்ளிரவில், தூதுகொண்டோன் - தூதாகக் கொண்ட சுந்தரமூர்த்தி நாயனாரின், இணையடி - இரண்டு திருவடிகளையும், முடிமேல் வைப்பாம் - சென்னியின் மேல் வைப்பாம் எ-று. மடவாராசையை யொழித்தவர்க்கே பேரின்பங் கைகூடு மென்பதனை, “ அருப்புப் போன்முலை யாரல்லல் வாழ்க்கைமேல் விருப்புச் சேர்நிலை விட்டுநல் லிட்டமாய்த் திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக் கருப்புச் சாற்றினு மண்ணிக்குங் காண்மினோ ” என்னும் திருக்குறுந்தொகையானுமறிக. நீத்தவர்க்கே என்பதில் ஏகாரம் பிரிநிலையும் தேற்றமும் ஆம். தருவம் என்னும் பன்மை உயர்வு குறித்தது. வேதத்தால் என்னும் மூன்றனுருபும், கழுதும் என்னும் சிறப்பும்மையும் விகாரத்தாற்றொக்கன. தன் இரண்டும் சாரியை. விதிவரம்பு செய்த தலைவனேஅவ்விதிக்கு மாறாகத் தாம் புரியுஞ் செய்கைக்கு உதவிசெய்யப் புரிந்த வல்லாளன் என்று சமற்காரம்படக் கூறினார். நம்பியாரூரர் தம்மை ஆட்கொண்டருளிய சிவபெருமானாலேயே கூட்டுவிக்கப்பெற்று அப்போகம் புசிக்கு மிடத்து, “ தென்னாவ லூர்மன்னன் றேவர்பிரான் றிருவருளால் மின்னாருங் கொடிமருங்குற் பரவையெனு மெல்லியறன் பொன்னாரு முலையோங்கற் புணர்குவடே சார்வாகப் பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார்” என்று சேக்கிழார்பெருமான் கூறுமாறு அதனையே சிவயோகமாகக் கொண்டொழுகிய பெரியாராகலின், அவர் சிவப்பேறாகிய நலத்தினின் வழாரயினாரென்க. சிவபிரானைத் தூதுகொண்ட வரலாறு :- திருமுனைப்பாடி நாட்டிலே திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே சடையனார் என்பவர்க்கு இசைஞானியார் வயிற்றிலே திருவவதாரஞ் செய்த நம்பியாரூரர் அந்நாடாளும் அரசராகிய நரசிங்கமுனையரையரால் வளர்க்கப்பெற்று, புத்தூர்ச் சடங்கவி சிவாசாரியின் மகளைத் திருமணஞ்செய்து கொள்ள மாப்பிள்ளைக்கோலத்துடன் வந்திருந்த பொழுது பரமசிவனால் ஆவணங் காட்டித் தடுத்தாட் கொள்ளப் பெற்று, இறைவன் கட்டளை யிட்டபடியே பல திருப்பதிகட்குஞ் சென்று திருப்பதிகம் பாடித் திருவாரூரையடைந்து சிவபெருமான் திருவருளால் அங்கே உருத்திர கணிகையர் குலத்தில் திருவவதாரஞ் செய்திருந்த பரவைநாச்சியாரை மணந்து இன்பந்துய்த்து வருகின்றவர், திருவொற்றி யூரை யடைந்து சங்கிலிநாச்சியாரை மணந்து மீண்டு திருவாரூரையெய்திப், பரவையா'fa மிக்க சினத் துடனிருப்பதைப் பரிசனங்களால் அறிற்து. பரவையின் ஊடலைத் தணித்துத் தம்மை அவருடன் சேர்ப்பிக்கவேண்டுமெனச் சிவபெருமானைப் பிரார்த்தித்தனர். ஆரூராளும் அடிகளாகிய இறைவனும் நள்ளிரவில் பரவையார் வீட்டுக்கு அருச்சகர் வடிவிற் சென்று, அவரால் மறுக்கப்பட்டு, மீட்டும் தேவர்களும், முனிவர்களும், சிவகணங்களும் புடைசூழச் சென்று பரவையாரின் ஊடலைத் தீர்த்துத் தன் தோழநம்பியை ஏற்றுக்கொள்ளுமாறு செய்தனன் என்பது. இதனைத் திருத்தொண்டர் புராணத்தாலறிக. (20) ஆளுடைய அடிகள் எழுதரு மறைகள் தேறா இறைவனை யெல்லிற் கங்குற் பொழுதறு காலத் தென்றும் பூசனை விடாது செய்து தொழுதகை தலைமீ தேறத் துளும்புகண் ணீருள் மூழ்கி அழுதடி யடைந்த வன்ப னடியவர்க் கடிமை செய்வாம். (இ-ள்.) எழுதரும் - எழுதப்படாத, மறைகள் தேறா - மறை களாலும் தெளியப் பெறாத, இறைவனை - முதல்வனாகிய சிவபிரானை, எல்லில் கங்குல்பொழுது - பகற்பொழுதிலும் இராப் பொழுதிலும் உள்ள, அறுகாலத்து - ஆறுவகையாகிய காலங் களினும், என்றும் - எந்நாளும், பூசனைவிடாது செய்து - இடையறாது பூசனைபுரிந்து, தொழுதகை - கூப்பிய கைகள், தலைமீது ஏற - தலையின்மீதேற, அழுது - நெக்கு நெக்குருகி அழுது, துளும்பு - ததும்பி வழிகின்ற, கண்நீருள் மூழ்கி - கண்ணீருட் படிந்து, அடி அடைந்த - திருவடி நீழலை யடைந்த, அன்பன் - அன்பராகிய மணி வாசகப் பெருமானின், அடியவர்க்கு - அடியார்களுக்கு, அடிமை செய்வாம் - தொண்டு செய்வாம் எ-று. மறைகள் எழுதப்படாது கேட்கப்பெற்று வந்து எழுதாக் கிளவியெனவும் சுருதியெனவும் பெயர் கூறப்படுதலின் எழுதரு மறைகள், என்றார். கங்குற் பொழுதில் என உருபு விரிக்க. அறுகாலம்; விடியல், நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை என்பன. எல்லிற் கங்குற் பொழுதறு காலத்து என்பதற்கு இராப்பகலற்ற விடத்தில் என்றும் பொருள் கூறுப; இதற்கு எல்லில் என்பதன் இல்சாரியை யாகும். மாணிக்கவாசகர் பூசனை புரிந்து அடியடையந்ததனை. “ பாசவே ரறுக்கும் பழம் பொரு டன்னைப் பற்றுமா றடியனே ற்கருளிப் பூசனை யுகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டியபொருளே ” எனவும், அவர் அன்பினால் உருகி அழுததனை, “ முழுமுத லேயைம் புலனுக்கு மூவர்க்கு மென்றனக்கும் வழிமுத லேநின் பழவடி யார்திரள் வான்குழுமிக் கெழுமுத லேயரு டந்திருக்க இரங்குங் கொல்லோவென் றழுமது வேயன்றி மற்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே”” எனவும் அவர் பாடியருளிய திருவாசகத்தானறிக. மாணிக்கவாசகர் வரலாறு:- பாண்டிநாட்டிலே திருவாதவூரிலே அமாத்தியர் குலத்திற்பிறந்த வாதவூரர் பதினாறாண்டினுள் எண்ணெண் கலையும் பயின்று பாண்டிவேந்தனுக்கு முதலமைச்சராய்த் திகழ்ந்து, குதிரை வாங்குதற்குப் பெரும் பொருளுடன் புறப்பட்டுச் சென்று, திருப்பெருந்துறையிலே குருந்தமரத்தினடியில் தம்மை ஆட் கொள்ளுதற்காக எழுந்தருளியிருந்த பரமசிவனாகிய குரு மூர்த்தியைத் தரிசித்து அருள்பெற்று, நெஞ்சம் அனலிடைப்பட்ட மெழுகென உருக அன்பினாலழுது பாமாலைபாடிச் சாத்தி, மாணிக்கவாசகர் என்னும் திருப்பெயர் ஆசாரிய மூர்த்தியாகிய பரமசிவனால் அளிக்கப்பெற்றுத், தம்பொருட்டாகப் பெருமான் பல திருவிளையாடல் புரியத்தாம் தலந்தோறுஞ் சென்று திருவாசகமும், திருக்கோவையும் பாடிச் சிதம்பரத்திலே சபாநாதர் திருவடியிற் கலந்தருளினர் என்பது. இவ்வரலாற்றின் விரிவை இப்புராணத்திலுள்ள வாதவூரடிகளுக்குபதேசித்த படலம் முதலிய நான்கு படலங்களானும், திருவாதவூரர் புராணம், திருப்பெருந்துறைப் புராணம் முதலியவற்றானும் அறிக. (21) சண்டேசுரரும், மற்றை அடியார்களும் (வேறு) தந்தைதா ளொடும்பிறவித் தாளெறிந்து நிருத்தரிரு தாளைச் சேர்ந்த மைந்தர்தாள் வேதநெறி சைவநெறி பத்திநெறி வழாது1 வாய்மெய் சிந்தைதா னரனடிக்கே செலுத்தினராய்ச் சிவாநுபவச் செல்வ ராகிப் பந்தமாந் தொடக்கறுத்த திருத்தொண்டர் தாள்பரவிப் பணிதல் செய்வாம். (இ-ள்.) தந்தை தாளொடும் - தந்தையாரின் அடியோடு, பிறவித்தாள் எறிந்து - பிறவிவேரையும் களைந்து, நிருத்தர் இரு தாளைச் சேர்ந்த - திரு நிருத்தஞ் செய்யும் இறைவனின் திருவடி களை அடைந்த, மைந்தர் தாள் - சண்டேசுர நாயனாரின் திருவடி களையும், வேதநெறி - வேதநெறியிலும், சைவநெறி - சைவநெறி யிலும், பத்தி நெறி - பத்தி நெறியிலும், வழாது - வழுவாது, வாய் மெய் சிந்தை - வாக்கு மெய்மனம் ஆகிய மூன்று கரணங்களையும், அரன் அடிக்கே - சிவபிரான் திருவடிகளிலேயே, செலுத்தினராய் - செலுத்தினவர்களாய், சிவாநுபவச் செல்வராகி - சிவா நுபூதிமான் களாகி, பந்தம் ஆம் தொடக்கு அறுத்த - பாசபந்தமாகிய கட்டினை அறுத்த, திருத்தொண்டர் தாள் - பிற அடியார்களின் திருவடி களையும், பரவி - துதித்து, பணிதல் செய்வாம் - வணங்குவாம் எ-று. தந்தையின் தாளைத் துணித்தது பாதகச் செயலாயினும் அது பத்திநெறிக்கண் வல்வினையாகிய சிவபுண்ணியம் ஆயினமையின் அதுவே பிறவி வேரறுத்து இறைவனடி சார்தற்கு ஏதுவாயிற்று இதனை, “ மெல்வினையே யென்ன வியனுலகி லாற்றரிய வல்வினையே யென்ன வருமிரண்டும்-சொல்லிற் சிவதன்ம மாமவற்றிற் சென்றதிலே செல்வாய் பவகன்ம நீங்கும் படி”” “ பாதக மென்றும் பழியென்றும் பாராதே தாதையை வேதியனைத் தாளிரண்டுஞ் - சேதிப்பக் கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே சண்டீசர் தஞ்செயலாற் றான். ” என்னும் திருக்களிற்றுப்படியாரா லறிக. “ வந்து மிகைசெய் தாதைதாள் மழுவாற் றுணித்த மறைச்சிறுவர் அந்த வுடம்பு தன்னுடனே யரனார் மகனா ராயினார்” என்று அருண்மொழித்தேவர் கூறுகின்றபடி சிவகுமாரராயினமையின் ‘மைந்தர்தாள்’ என்றார். வேத நெறி - வைதிகம். சைவநெறி - வேதத் தெளிவாகிய ஆகம நெறி. பத்திநெறி - வைதிக, சைவநெறிகட்கு அப்பாற்பட்டுப், பண்டைநற் றவத்தாற் றோன்றிப் பரமனைப் பத்திபண்ணும் தொண்டு நெறி. தான்; அசை. மைந்தர் தாளையும் திருத்தொண்டர் தாளையும் பரவி எனக் கூட்டுக. சண்டேசர் வரலாறு :- சோழநாட்டிலே திருச்சேய்ஞலூரிலே மறையோர் குலத்திலே எச்சதத்தன் என்பவருக்குப் பவித்திரைவ யிற்றிலே திருவவதாரஞ் செய்த விசாரசருமர் இளமையிலேயே வேதம் முதலிய கலைகளையெல்லாம் உணர்ந்து, அவற்றின் பொருட்கெல்லாம் எல்லையாவது சிவபெருமானது திருவடியே யெனத் தெளிந்து, சிவபெருமானிடத்துத் தலையன்புடையராய் ஒழுகிவருநாளில், ஒருநாள் அவ்வூர் ஆனினங்களை மேய்ப்பா னொருவன் ஒரு பசுவினை அடிக்கக்கண்டு மனம் பொறாராய் ஆவின் மேன்மைகளை யெல்லாம் அவ் வாயனுக்கு அறிவுறுத்தி அவனை ஆனிரை மேய்ப்பதினின்றும் விலக்கித் தாமே ஊராருடைய உடன் பாடும் பெற்று நிரைமேய்த்து வருவாராயினர். அவர் அவைகளை நல்ல புல்லுள்ள இடங்களில் மேயச்செய்து, நறுந் தண்ணீரூட்டி, நிழலிலமரச்செய்து இங்ஙனம் புரந்து வரும்பொழுது ஆன் களெல்லாம் அழகு சிறந்து இரவும் பகலும் மடிசுரந்து தாமே பால் பொழிவனவாயின. ஊராராகிய மறையோர்களும் தம் பசுக்கள் முன்னையிற் பன்மடங்கு பால் கறத்தல் கண்டு மகிழ்ச்சிமிக்கார்கள். விசாரசருமரும் பசுக்கள் தம்மை யணுகி அன்பாற் பால் சொரிதல் கண்டு சிவபெருமானுக்குத் திருமஞ்சனஞ் செய்யும் குறிப்பு உள்ளத்தே நிகழ, மண்ணிநதியின் ஆற்றிடைக் குறையாகிய மணற்பரப்பில் திருஆத்திமரநிழலில் மணலாலே சிவலிங்கம் தாபித்து ஆவின்பாலால் திருமஞ்சனமாடி விதிப்படி அருச்சித்துப் பூசிப்பாராயினர். அவர் அங்ஙனம் பூசித்துவருங்கால் அதன் இயல்பு அறியாதானொருவன் அதனைக்கண்டு அவ்வூர் மறையோரிடஞ் சென்று, ‘விசாரசருமர் பாலைக் கறந்து மணலிலே சொரிகின்றார்’ என்றுகூற, அவர்கள் எச்சதத்தனுக்கு அதனை அறிவிக்க, அவனுஞ் சென்று கரவில் மறைந்திருந்து பார்த்து வெகுண்டு, திருமஞ்சனப் பாற்குடத்தைக் காலால் இடறித்தள்ளினான். விசாரசருமர் அதனைக் கண்டு அது செய்தவன் தந்தையென வுணர்ந்தும் அவன்றாளைத் துணிப்பது தகுதியெனத் துணிந்து அருகிலிருந்த கோலையெடுக்க, அதுவே மழுவாக, அதனால் அவன்றாளை யெறிந்து வீழ்த்தினார். அப்பொழுது சிவபெருமான் உமாதேவியாரோடு இடபவாகனத்தில் எழுந்தருளிவந்து அடுத்ததாதை யினியுனக்கு நாமென்றருள் செய்து, தொண்டர்கட்கு அதிபராக்கிச் சண்டேசராம் பதமும் அளித்துத் தாம் சடையிலணிந்திருந்த கொன்றைமாலையையும் எடுத்துச் சூட்டியருளினார் என்பது. இதனைத் திருத்தொண்டர் புராணத்தா லறிக. இவ் வரலாறு சைவத்திரு முறைகள் பலவற்றிலும் எடுத்துப் போற்றப் பெற்றுளது. “ பீரடைந்த பாலதாட்டப் பேணாதவன் றாதை வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந்தான் றனக்குத் தாரடைந்த மாலைசூட்டித் தலைமைவகுத்த தென்னே சீரடைந்த கோயின்மல்கு சேய்ஞலூர் மேயவனே”” என்று திருஞானசம்பந்தரும், “ ஆமலி பாலுநெய்யு மாட்டியர்ச் சனைகள்செய்து பூமலி கொன்றைசூட்டப் பொறாததன் றாதைதாளைக் கூர்மழு வொன்றாலோச்சக் குளிர்சடைக் கொன்றைமாலை தாமெனச் சண்டிக்கீந்தார் சாய்க்காடு மேவினாரே”” என்று திருநாவுக்கரசரும், “ ஏத நன்னில மீரறு வேலி யேயர்கோ னுற்ற இரும்பிணி தவிர்த்துக் கோத னங்களின் பால்கறந் தாட்டக் கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற தாதை தாளற வெறிந்த சண்டிக்குன் சடைமி சைமல ரருள்செயக் கண்டு பூத வாளிநின் பொன்னடி யடைந்தேன் பூம்பொ ழிற்றிருப் புன்கூரு ளானே”” என்று சுந்தரமூர்த்திகளும், “ தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப வீசன் திருவருளாற் றேவர்தொழப் பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்”” என்று மாணிக்கவாசகரும், “ தாதையைத் தாளற வீசிய சண்டிக்கு மண்டத்தொடு முடனே பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனகமும் அருளிச் சோதி மணிமுடித் தாமமு நாமமுங் தொண்டர்க்கு நாயகமும் பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே”” என்று சேந்தனாரும் அருளிச்செய்திருத்தல் காண்க. (22) நூல்செய்தற்குக் காரணம் (வேறு) அண்ணல்பாற் றெளிந்த நந்தி யடிகள்பாற் சநற்கு மாரன் உண்ணிறை யன்பி னாய்ந்து வியாதனுக் குணர்த்த வந்தப் புண்ணிய முனிவன் சூதற் கோதிய புராண மூவா றெண்ணிய விவற்றுட் காந்தத் தீசசங் கிதையின் மாதோ. (இ-ள்.) அண்ணல்பால் - பெருமை பொருந்திய சிவபிரானிடத்து, தெளிந்த - கேட்டுத் தெளிந்த, நந்தி அடிகள்பால் - நந்தி தேவரிடம், சநற்குமாரன் - சநற்குமார முனிவன், உள்நிறை அன்பின் - உள்ளத்தில் நிறைந்த அன்பினோடு, ஆய்ந்து - கேட்டு ஆராய்ந்து, வியாதனுக்கு உணர்த்த - வியாசமுனிவனுக்கு அறிவிக்க, அந்தப்புண்ணிய முனிவன் - அந்தப் புண்ணியங்களையுடைய வியாசமுனிவன், சூதற்கு - சூதமுனிவனுக்கு, ஓதிய - சொன்ன, புராணம் மூவாறு - புராணங்கள் பதினெட்டாகும்; எண்ணிய இவற்றுள் - மதிக்கப் பெற்ற இப்பதினெண் புராணங்களுள், காந்தத்து - காந்த மகாபுராணத்தில், ஈசசங்கிதையின் - சங்கரசங்கிதையில் எ-று. நந்தியடிகள், சிலாதரமுனிவன் புதல்வர்; கோடியாண்டு அருந்தவம் புரிந்து சிவபெருமானுக்கு ஊர்தியும், வாயில் காப்போரு மாயினவர்; சைவசந்தான முதற் குரவர்; சனற்குமாரன், வியாதன், சூதன் என்போர் வரலாறுகளும், பதினெண்புராணங்களின் பெயர் முதலியவும் பின் புராணவரலாறு கூறுமிடத்தே விளக்கப்படும். மாது, ஓ - அசைகள். (23) அறைந்திடப் பட்ட தாகு மாலவாய்ப் புகழ்மை யந்தச் சிறந்திடும் வடநூ றன்னைத் தென்சொலாற் செய்தி யென்றிங் குறைந்திடும் பெரியோர் கூறக் கடைப்பிடித் துறதி யிந்தப் பிறந்திடும் பிறப்பி லெய்தப் பெறுதுமென் றுள்ளந் தேறா. (இ-ள்.) ஆலவாய்ப்புகழ்மை - திருவாலவாயென்னும் மதுரையின் பெருமை, அறைந்திடப்பட்டது ஆகும் - கூறப்பெற்றது ஆகும்; அந்தச்சி றந்திடும் வடநூல் தன்னை - அந்தச் சிறந்த வடநூலுட் கூறப்பட்ட பெருமைகளை, தென்சொலால் செய்தி என்று - தமிழ்மொழியால் கூறுவாயென்று, இங்கு உறைந்திடும் - இவ் விடத்து (மதுரையில்) வசிக்கும், பெரியோர் கூற - பெரியோர்கள் பணிக்க, பிறந்திடும் இந்தப் பிறப்பில் - பிறந்த இப்பிறவியிலேயே, உறுதி எய்தப் பெறுதும் என்று - பிறப்பின்பயனை அடையக் கடவேம் என்று, கடைப்பிடித்து - உறுதியாகக் கொண்டு, உள்ளம் தேறா - சிந்தை தெளிந்து எ-று. அறைந்திட என்பதில் இடு, துணைவினை. புகழ்மை என்பதில், மை: பகுதிப்பொருள் விகுதி. அந்த வடநூல் எனவும், இந்தப் பிறப்பில் எனவும் கூட்டுக. செய்தி; முன்னிலையேவலொருமை யெதிர்கால வினைமுற்று; இதில் த் எழுத்துப் பேறு. தேறா; செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். (24) திருநகர் தீர்த்த மூர்த்திச் சிறப்புமூன் றந்த மூர்த்தி அருள்விளை யாட லெட்டெட் டருச்சனை வினையொன் றாக வரன்முறை யறுபத் தெட்டா மற்றவை படல மாக விரிமுறை விருத்தச் செய்யுள் வகைமையால் விளம்ப லுற்றேன். (இ-ள்.) திருநகர் தீர்த்தம் மூர்த்திச் சிறப்பு மூன்று - தலவிசேடம் தீர்த்தவிசேடம் மூர்த்திவிசேடம் என மூன்றும், அந்த மூர்த்தி - அப் பெருமை பொருந்திய சோமசுந்தரக் கடவுள், அருள் விளையாடல் எட்டெட்டு - அருளினாற் புரிந்த திருவிளையாடல்கள் அறுபத்து நான்கும், அருச்சனை வினை ஒன்று - அருச்சித்த செயல் ஒன்றும், ஆக அறுபத்தெட்டு ஆம் அவை - ஆக அறுபத்தெட்டாகிய அவை களை. வரன்முறை - முறைப்படியே, படலம் ஆக - படலங்களாக அமைத்து, விரிமுறை - விரிந்தமுறையில், விருத்தச் செய்யுள் வகைமையால் - விருத்தமாகிய செய்யுள்வகையினால், விளம்பல் உற்றேன் - கூறத்தொடங்கினேன் எ-று. சிறப்பு என்பதனைத் திருநகர், தீர்த்தம் என்பவற்றோடும் ஒட்டுக. அறுபத்தெட்டு என்று கூறினும், தலவிசேடத்தின் முற்படக் கூறிய பகுதிகளையும் சேர்த்தெண்ணிக் கொள்க. மற்று: அசை. விருத்தம் என்பது கலித்துறை முதலியவற்றையும் குறிக்கும்; திருவிருத்தம் என்னும் வழக்கும் ஓர்க. வகைமை, மை; பகுதிப்பொருள் விகுதி. மேற்பாட்டில் பெறுதும் என்று பன்மையாற் கூறியது சார்புடை யாரையும் உளப்படுத்தி. இவை மூன்று பாட்டும் குளகம். (25) அவையடக்கம் நாயகன் கவிக்குங் குற்ற நாட்டிய கழக மாந்தர் மேயவத் தலத்தி னோர்க்கென் வெள்ளறி வுரையற் குற்றம்1 ஆயுமா றரிதன் றேனு நீர்பிரித் தன்ன முண்ணுந் தூயதீம் பால்போற் கொள்க சுந்தரன் சரிதந் தன்னை. (இ-ள்.) நாயகன் - முற்றறிவுடையனாகிய சிவபிரானின், கவிக்கும் - திருப்பாசுரத்திற்கும், குற்றம் நாட்டிய - குற்றங்கூறி நிறுத்திய, கழகமாந்தர் - சங்கப்புலவர்கள், மேய - பொருந்தியிருக்கப்பெற்ற, அத்தலத்தினோர்க்கு - அந்த மதுரைமாநகரில் வசிப்போர்க்கு, என்வெள் அறிவு உரையில் - என் வெண்மையான அறிவு பற்றிவந்த சொற்களில், குற்றம் ஆயுமாறு - குற்றங்காணும் வழி, அரிது அன்றேனும் - அருமையுடைத்தன்றாயினும், அன்னம் - அன்னப் பறவையானது, நீர் பிரித்து - நீரை ஒதுக்கி, உண்ணும் தூய தீம்பால் போல் - தூய்மையோடு கூடிய இனிய பாலை உண்ணுவது போல, சுந்தரன் சரிதம் தன்னை - சோமசுந்ரக்கடவுளின் திருவிளையாடலை, கொள்க - கொள்ளக்கடவர் எ-று. உம்மை, உயர்வு சிறப்பு. கவி - கொங்குதேர் வாழ்க்கை என்னும் முதலையுடைய செய்யுள். குற்றங் கூறியவர் - நக்கீரர்; இவ்வரலாற்றை இப்புராணத்திலுள்ள தருமிக்குப் பொற்கிழி யளித்த படலத்தால் அறிக. அன்னம் பால் உண்ணுவதுபோல எனப் பிரித்துக் கூட்டப்பட்டது. நீர் பிரித்து என்றதற்கேற்ப என் சொற்குற்றத்தை நீக்கி என உரைத்துக்கொள்க. (26) (கலிநிலைத்துறை) கவைக்கொ ழுந்தழ 1 னாச்சுவை கண்டவூ னிமையோர் சுவைக்க வின்னமிழ் தாயின துளக்கமில் சான்றோர் அவைக்க ளம்புகுந் தினியவா யாலவா யுடையார் செவிக்க ளம்புகுந் தேறுவ சிறியனேன் பனுவல். (இ-ள்.) கொழும் தழல் - கொழுவிய அக்கினியின், கவை நா - பிளவுபட்ட நாவினால் , சுவைகண்ட - சுவைகாணப்பெற்ற, ஊன் - ஊன்கள், இமையோர் - தேவர்கள், சுவைக்க - சுவைத்துண்ண, இன்அமிழ்து அயின - இனிய அமிழ்தமாயின; (அதுபோல), சிறியனேன்பனுவல் - சிறியேனுடைய செய்யுட்கள், துளக்கம் இல் சான்றோர் - ஐயந்திரிபில்லாத புலவர்களின், அவைக்களம் புகுந்து - அவைக்களஞ்சென்று, இனியவாய் - மதுரமுடையனவாய், ஆலவாய் உடையார் - திருவாலவாயுடைய இறைவரின், செவிக்களம் புகுந்து ஏறுவ - திருச்செவியினிடத்தில் சென்று பொருந்துவனவாம் எ-று. தழல் - வேள்வித்தீ. கொழுந்து அழல் எனப் பிரித்தலும் ஆம். துளக்கம் - நடுக்கம். அவைக்களம்: இருபெயரொட்டுப் பண்புத் தொகை. அவைக்களம் புகுந்து என்றது சான்றோரால் கேட்டுத் துகளறுக்கப்பட்டு என்றபடி. (27) பாய வாரியுண் டுவர்கெடுத் துலகெலாம் பருகத் தூய வாக்கிய காரெனச் சொற்பொருள் தெளிந்தோர் ஆய கேள்வியர் துகளறுத் தாலவா யுடைய நாய னார்க்கினி தாக்குப நலமிலேன் புன்சொல். (இ-ள்.) கார் பாயவாரி உண்டு - மேகமானது பரந்த கடல் நீரைப் பருகி, உவர் கெடுத்து - (அதிலுள்ள) உப்பைப்போக்கி, உலகு எலாம் பருக - உலகிலுள்ளாரனைவரும் உண்ணும்படி, தூய ஆக்கிய என - தூயவாகும்படி செய்தாற்போல, சொல் பொருள் தெளிந்தோர் ஆய-சொல்லையும் பொருளையும்குற்றமற உணர்ந்தோராகிய, கேள்வியர் - கேள்வி வல்லுநர், நலம் இலேன் புன்சொல் - (அக்கல்வி கேள்வி) நலம் இல்லாத என்னுடைய புன்மையான சொற் களிலுள்ள, துகள் அறுத்து - குற்றங்களைப் போக்கி, ஆலவாய் உடைய நாயனார்க்கு - திருவாலவாயையுடைய சிவபிரானுக்கு, இனிது ஆக்குப - இனியதாகச் செய்வர் எ-று. வாரி, நீருக்கு ஆகுபெயர். கார் ஆக்கியவென என்று பிரித்துக் கூட்டப்பட்டது. கேள்வியர் - புலமையர் என்றுமாம். நாயனார் - தலைவர். (28) அல்லை யீதல்லை யீதென மறைகளு மன்மைச் சொல்லி னாற்றுதித் திளைக்குமிச் சுந்தர னாடற் கெல்லை யாகுமோ வென்னுரை யென்செய்கோ விதனைச்1 சொல்லு வேனெனு மாசையென் சொல்வழி கேளா. (இ-ள்.) அல்லையீது அல்லையீது என - இஃது அல்லையா யிருக்கின்றாய் இஃது அல்லையாயிருக்கின்றாய் என்று, மறைகளும் - வேதங்களும், அன்மைச் சொல்லினால் - எதிர்மறைச் சொல்லினால், துதித்து இளைக்கும் - துதித்து மெலிவதற்குக் காரணமாயுள்ள இச்சுந்தரன் ஆடற்கு - இந்தச் சோமசுந்தரக் கடவுளின் திருவிளை யாடலைக் கூறுதற்கு, என் உரை எல்லையாகுமோ - என்மொழி வரம்பு ஆகுமோ, (ஆகாது எனினும்) இதனைச் சொல்லுவேன் எனும் ஆசை - இத்திரு விளையாடலைக் கூறுவேன் என மனத்திலெழுந்த விருப்பம், என்சொல்வழி கேளா - நான் கூறும் வழியைக் கேட்கின்றிலது, என்செய்கு - என்செய்வேன் எ-று. ஈது எனச் சுட்டுப்பெயர் நீண்டது. அல்லை; முன்னிலை யொருமை எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று. உம்மை; உயர்வு சிறப்பு. இளைக்கு மென்றார் காணலாகாமையால். இளைக்கும் என்னும் பெயரெச்சம் சுந்தரன் என்னும் கருவிப்பெயர் கொண்டது. இகரச் சுட்டு உயர்வின் மேலது. ஆடற்கு - ஆடலைக் கூறுதற்கு. ஆடற்கு உரை எல்லையாகுமோ என்றது, ஆடல் என் உரை வரம்பில் அடங்காது என்றபடி. ஓ இரண்டனுள் முன்னது வினா; பின்னது அசை நிலை. செய்கு; தன்மை யொருமை யெதிர்கால வினைமுற்று. கேளாது என்னும் துவ்வீறு தொக்கது. ஆசை மிகுதியாற் சொல்லலுற் றேன் என்றார். மறைகள் அன்மைச் சொல்லினாற் கூறி இளைத்தலை இவ்வாசிரியரே, “ பூதங்க ளல்ல பொறியல்ல வேறு புலனல்ல உள்ள மதியின் பேதங் களல்ல விவையன்றி நின்ற பிறிதல்ல வென்று பெருநூல் வேதங் கிடந்து தடுமாறும் வஞ்ச வெளியென்ப கூடன் மறுகிற் பாதங்க ணோவ வளையிந்த னாதி பகர்வாரை யாயு மவரே”” என, இப்புராணத்துள் பின்னரும் கூறுதல் காண்க. இவை நான்கு பாட்டும் அவையடக்கம். அவையடக்கமாவது இன்னதென்பதனை, “ அவையடக் கியலே யரிறபத் தெரியின் வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென் றெல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே” என்னும் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திரத்தானறிக. அவையடக்கியலைக் குற்றமற ஆராயின் அறியாதன சொல்லினும் பாகுபடுத்துக் கோடல்வேண்டுமென்று எல்லா மாந்தர்க்கும் தாழ்ந்து கூறல் என்றவாறு என்பது இதற்கு இளம்பூரணர் கூறிய உரை. வாயுறை வாழ்த்தே யவையடக் கியலே என்னும் செய்யுளியற் சூத்திரவுரையில், பேராசிரியர், அடக்கியலென்பது வினைத்தொகை; தானடங்குதலாயின் ‘அடங்கிய லென வேண்டும்; அஃதாவது அவை யத்தாரடங்குமாற்றால் இனியவாகச் சொல்லி அவரைப் புகழ்தல் என்று கூறியிருப்பதும் இங்கே கருதற்பாலது. (29) ஆகச் செய்யுள் - 30 திருநாட்டுச் சிறப்பு (கலிநிலைத்துறை) கறைநி றுத்திய கந்தர சுந்தரக் கடவுள் உறைநி றுத்திய வாளினாற் பகையிரு ளொதுக்கி மறைநி றுத்திய வழியினால் வழுதியாய்ச் செங்கோன் முறைநி றுத்திய பாண்டிநாட் டணியது மொழிவாம். (இ-ள்.) கறைநிறுத்திய - விடக்கறையினை நிலவச்செய்த, கந்தரம் - திருமிடற்றினையுடைய, சுந்தரக்கடவுள் - சோமசுந்தரக் கடவுள், வழுதியாய் - பாண்டி வேந்தாகி, உறை நிறுத்திய வாளினால் - உறையில் நிறுத்தியுள்ள வாட்படையாகிய ஒளியால், பகை இருள் ஒதுக்கி - பகையாகிய இருளை யொழியச்செய்து, மறை நிறுத்திய வழியினால் - வேதங்களிற் கூறி நிறுத்தப்பட்ட வழியினால், செங்கோல் முறை நிறுத்திய - நீதிமுறையை நிலைபெறுத்தி ஆண்டருளிய, பாண்டிநாட்டு அணி மொழிவாம் - பாண்டித் திருநாட்டின் சிறப்பினைக் கூறுவாம். எ-று. பாற்கடல் கடைந்தபொழுது உண்டாகிய ஆலகாலம் என்னும் கொடுவிடத்திற் காற்றாது அமரரெல்லாரும் அஞ்சிச் சரண்புக, சிவபெருமான் அதனையுண்டு, முடிவிலாற்றலும், பேரருளுமுடைய முதற்கடவுள் தானே என்பதனை எக்காலத்தும் யாவர்க்கும் அறிவுறுத்தி உய்விக்கும் பொருட்டாக அதனைத் திருமிடற்றிலே நிலை பெறுத்தி நீலகண்டன் என்னும் திருப்பெயருடன் விளங்கு கின்றான் ஆகலின், ‘கறைநிறுத்திய கந்தர சுந்தரக் கடவுள்’ என்றார். கந்தரம் - தலையைத் தாங்குவது என்னும் பொருளது. வாள் - இரட்டுற மொழிதலால் ஒளியும் ஆம். தான் வகுத்தருளிய மறை நெறியினின்று யாவரும் மாறுபடா தொழுகுதற்பொருட்டுத் தானே அந்நெறி நின்று செங்கோலோச்சிக் காட்டினன் என்பார் ‘மறை நிறுத்திய வழியினால் முறை நிறுத்திய என்றார். முறை நிறுத்திய’ என்னும் பெயரெச்சம் பாண்டி நாடென்னும் நிலப்பெயர் கொண்டது. அணியது - அது பகுதிப்பொருள் விகுதி. (1) தெய்வ நாயக னீறணி மேனிபோற் சென்று பெளவ மேய்ந்துமை மேனிபோற் பசந்துபல் லுயிர்க்கும் எவ்வ மாற்றுவான்1 சுரந்திடு மின்னரு ளென்னக் கெளவை நீர்சுரந் தெழுந்தன கனைகுரன் மேகம். (இ-ள்.) கனைகுரல் மேகம் - ஒலிக்கின்ற குரலையுடைய மேகங்கள், தெய்வநாயகன் - தேவர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமானின், நீறு அணி மேனி போல் சென்று - திருநீறு அணிந்த திருமேனி போலும் (வெண்ணிறத்தோடு) சென்று, பெளவம் மேய்ந்து - கடல் நீரைப்பருகி, உமை மேனிபோல் பசந்து - உமாதேவியாரின் திருமேனிபோலும் பசிய நிறங்கொண்டு, பல் உயிர்க்கும் - பலவகைப் பட்ட உயிர்களுக்கும், எவ்வம் மாற்றுவான் - பிறவித் துன்பத்தை நீக்குதற் பொருட்டு, சுரந்திடும் இன்அருள் என்ன - இனிய திருவருளைச் சுரந்திடுதல் போல, கெளவை நீர் சுரந்து எழுந்தன - ஒலிக்கின்ற நீரைச் சுரந்து மேலெழுந்தன எ-று. ‘நீறணிந்த கடவுணிறத்தவான்’ என்றார் கம்பரும். மேய்ந்து - பருகி; ‘கலங்குதெண்டிரை மேய்ந்து’ என்று திருத்தக்கதேவரும், ‘ஆர்கலிமேய்ந்து’ என்று கம்பரும் கூறுதல் காண்க. ஆற்றுவான் எனவும் பிரித்தலமையும். பல்லுயிர்க்கும் எவ்வமாற்றுவான் நீர் சுரந்து எனவும் கூட்டிக்கொள்க. ஈண்டு எவ்வமாவது ஞாயிற்றின் வெம்மையும் உணவின்மையும் ஆம். உமையுடன் கூடிய இறைவன் சுரந்திடும் இன்னருளென்க; “ ............நந்தம்மை யாளுடையாள் தன்னிற் பிரிவிலா வெங்கோமா னன்பர்க்கு முன்னி யவணமக்கு முன்சுரக்கு மின்னருளே யென்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்”” என்னும் திருவாசகமும் காண்க. (2) இடித்து வாய்திறந் தொல்லென வெல்லொளி மழுங்கத் தடித்து வாள்புடை விதிர்த்துநின் றிந்திர சாபம் பிடித்து நீளம்பு கோடைமேற் பெய்துவெம் பெரும்போர் முடித்து நாமென வருதல்போல் மொய்த்தன கொண்மூ. (இ-ள்.) ஒல்லென வாய் திறந்து இடித்து - ஒல்லென்று வாயைத் திறந்து முழங்கி, எல் ஒளி மழுங்க - சூரியன் ஒளியும் மழுங்கும் வண்ணம், தடித்து வாள்புடை விதிர்த்து நின்று -மின்னலாகிய வாட்படையைப் பக்கங்களில் அசைத்து நின்று, இந்திர சாபம் பிடித்து - இந்திர வில்லை ஏந்தி, நீள் அம்பு - நீண்ட நீராகிய அம்பினை, கோடைமேல் பெய்து - கோடையாகிய பகையின்மீது சொரிந்து, வெம்பெரும் போர் - வெவ்விய பெரிய போரினை, முடித்தும் நாம் என - நாம் முற்றுவிப்போமென்று, வருதல் போல் - வருவதைப் போல், கொண்மூ மொய்த்தன - மேகங்கள் நெருங்கின எ-று. ஒளியும் என்னுஞ் சிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது. தடித்து - மின்னல். அம்பு - நீர், கணை. இந்திரசாபமாகிய வில் என்றும் நீராகிய கணை என்றும் உரைக்க. கோடையைப் பகையென்னா மையால் இஃது ஏகதேசவுருவகம். (3) முனித னீள்வரை யுச்சிமேன் முழங்கிவா னிவந்து தனித நீர்மழை பொழிவன தடஞ்சிலை யிராமன் கனித னீர்மையா லாலவாய்க் கண்ணுதன் முடிமேற் புனித நீர்த்திரு மஞ்சன மாட்டுவான் போலும். (இ-ள்.) தனிதம் - மேங்கள், முனிதன் - அகத்திய முனிவருடைய, நீள்வரை உச்சிமேல் - உயர்ந்த பொதியின் மலையினுச்சியில், முழங்கி - குமுறி, வான்நிவந்து - வானின்கண் உயர்ந்து, நீர்மழை பொழிவன - நீராகிய மழையைப் பொழிதல், தடசிலை இராமன் - பெரிய கோதண்டம் என்னும் வில்லையுடைய இராமபிரான், கனிதல் நீர்மையால் - கனிதற் றன்மையோடு, ஆலவாய் - திருவால வாயின்கண் வீற்றிருக்கும், கண்ணுதல் - நெற்றிக்கண்ணையுடைய இறைவனது, முடிமேல் - திருமுடிமேல், புனிதம் நீர் - தூய்மையான நீரால், திருமஞ்சனம் ஆட்டுவான்போலும் - திருமஞ்சனம் செய்தலை ஒக்கும் எ-று. பொதியில் அகத்தியர்க்கு என்றும் உறைவிடமாதலின் முனி வரை எனப்பட்டது; தென்றமிழ்நாட் டகன்பொதியிற் றிருமுனிவன் றமிழ்ச்சங்கஞ் சேரு வீரேல், என்றுமவ னுறைவிடமாம் என்று கம்பரும் கூறினர். தனிதம் - முழக்கம்; மேகத்திற்கு ஆகுபெயர். இராமன் சிவபெருமானுக்குக் கோயிலெடுத்துப் பூசனை புரிந்த தனைத் திருவிராமேச்சுரத் திருநேரிசையா னறிக. மற்றும் பல திருப்பதிகளினும் அவன் வழிபட்டமை கேட்கப்படுகின்றது. பொழிவன ஆட்டுவான் என்பன ஈண்டுத் தொழிற்பெயர்கள். நீர்மையால், ஆல் - ஒடுவின் பொருட்டு. (4) சுந்த ரன்றிரு முடிமிசைத் தூயநீ ராட்டும் இந்தி ரன்றனை யொத்தகா ரெழிலிதென் மலைமேல் வந்து பெய்வவத் தனிமுதன் மெளலிமேல் வலாரி சிந்து கின்றகைப் போதெனப் பன்மணி தெறிப்ப. (இ-ள்.) தென்மலைமேல் - பொதியின்மலைமேல், வந்து பெய்வ - வந்து மழையைப் பெய்வனவாகிய, கார் எழிலி - கரிய மேகங்கள், சுந்தரன் திருமுடிமிசை - சோமசுந்தரக் கடவுளின் திருமுடியின் கண்ணே, தூயநீர் ஆட்டும் - தூய்மையான நீரால் அபிடேகஞ் செய்கின்ற, இந்திரன்தனை ஒத்த - இந்திரனை ஒத்தன; அத் தனிமுதல் மெளலிமேல் - அந்த ஒப்பற்ற; முதற் கடவுளின் திருமுடிமேல், வலாரி - அவ்விந்திரனானவன், கைசிந்துகின்ற - கையினால் சொரிகின்ற, போது என - மலர்களைப்போல, பல்மணி - பலவாகிய மணிகள், தெறிப்ப - (அம் மேகங்களினின்றும்) சிதறுவன எ-று. வலாரி - வலன் என்னும் அசுரனுக்குப் பகைவன்; இந்திரன். மணிகள், முகில்கள் கடலி னீருண்ணும்பொழுது அதனுடன் கலந்து வந்தன. இந்திரன் பூசித்ததை இப்புராணத்து இந்திரன் பழிதீர்த்த படலத்தாலறிக. (5) உடுத்த தெண்கடன் மேகலை யுடையபார் மகடன் இடத்து தித்தபல் லுயிர்க்கெலா மிரங்கித்தன் கொங்கைத் தடத்து நின்றிழி பாலெனத் தடவரை முகடு தொடுத்து வீழ்வன விழுமெனத் தூங்குவெள் ளருவி. (இ-ள்.) இழுமென - இழுமென்னு மொலியோடு, தூங்குவெள் அருவி - ஒழுகுகின்ற வெள்ளிய அருவிகளானவை, உடுத்த - உடுக்கப்பட்ட, தெண்கடல் - தெளிந்த கடலாகிய, மேகலை உடைய - ஆடையினை யுடைய, பார்மகள் - புவிமடந்தையானவள், தன் இடத்து உதித்த - தன்னிடத்துத் தோன்றிய, பல் உயிர்க்கு எலாம் - பலவகையான உயிர்களெல்லாவற்றுக்கும், இரங்கி - இரக்கமுற்று, தன் கொங்கைத் தடத்து நின்று - தனது கொங்கையிடத்தினின்றும் (சொரிய), இழிபால் என - பால் ஒழுகுமாறுபோல, தடவரை முகடு தொடுத்து வீழ்வன - பெரிய மலையின் உச்சியினின்றும் வீழ்வன எ-று. மேகலை, ஈண்டு ஆடை. பார்மகள் கொங்கை யென்பதனை, ‘மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை, அணிமுலைத் துயல்வரூஉ மாரம்போலச், செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்று’ என்னும் சிறுபாண் அடிகளிற் காண்க. சொரிய என ஒருசொல் வருவிக்கப்பட்டது. (6) (அறுசீரடியாசிரியவிருத்தம்) கருநிற மேக மென்னுங் கச்சணி சிகரக் கொங்கை அருவியாந் தீம்பால் சோர வகன்சுனை யென்னுங் கொப்பூழ்ப் பொருவில்வே யென்னு மென்றோட் பொதியமாஞ் சைலப் பாவை பெருகுதண் பொருநை யென்னும் பெண்மகப் பெற்றா ளன்றே. (இ-ள்.)அகன்சுனை என்னும் கொப்பூழ் - அகன்ற சுனையாகிய கொப்பூழினையும், பொருஇல் - ஒப்பில்லாத, வேய் என்னும் மென்தோள் - மூங்கிலாகிய மெல்லிய தோளினையுமுடைய, பொதியம் ஆம் சைலப்பாவை - பொதியமாகிய மலைமடந்தை யானவள், கருநிறமேகம் என்னும் கச்சு அணி - கரிய நிறத்தினை யுடைய மேகமாகிய கச்சினையணிந்த, சிகரக்கொங்கை - சிகர மாகிய கொங்கையினின்றும், அருவியாம் தீம்பால் சோர - அருவி யாகிய மதுரம்பொருந்திய பால் ஒழுக, பெருகுதண் பொருநை என்னும் பெண்மகப் பெற்றாள் - பெருகா நின்ற குளிர்ந்த தாமிரபன்னியாகிய பெண்மகவை ஈன்றாள் எ-று. அகன்சுனை, புறனடையான் முடிக்க. பொதியில் என்பது பொதியம் எனவும் பொதிகை யெனவும் வடமொழியிற்சென்று திரிந்துவழங்கும். அன்று ஏ, அசை. இயைபுருவகம். (7) கல்லெனக் கரைந்து வீழுங் கடும்புனற் குழவி கானத் தொல்லெனத் தவழ்ந்து தீம்பா லுண்டொரீஇத் திண்டோள் மள்ளர் செல்லெனத் தெழிக்கும் பம்பைத் தீங்குரல் செவிவாய்த் தேக்கி மெல்லெனக் காலிற் போகிப் பணைதொறும் விளையாட் டெய்தி. (இ-ள்.) கல்லெனக் கரைந்து வீழும் - கல் என்று ஒலித்து வீழும், கடும்புனல் குழவி - கடிய வேகத்தினையுடைய பொருநைநீராகிய குழந்தை, கானத்து - முல்லை நிலத்தின்கண், ஒல்லெனத்தவழ்ந்து - விரையத் தவழ்ந்து, தீம்பால் உண்டு - இனிய பாலைப் பருகி, ஒரீஇ - அதனினின்றும் நீங்கி, திண்தோள் மள்ளர் - வலிய தோளையுடைய உழவர்களின், செல்என தெழிக்கும் - மேகம்போல் உரப்புகின்ற, பம்பை தீம்குரல் - பம்பையினுடைய இனிய குரலை, செவி வாய் தேக்கி - செவியினிடமாக நிரப்பி, மெல்லென - மெதுவாக, காலில் போகி - காலாற் சென்று, பணைதொறும் விளையாட்டு எய்தி - பண்ணைகள் தோறும் விளையாடுதலைப் பொருந்தி எ-று. கல்லென - ஒலிக்குறிப்பு. ஒல்லென - விரைய; ஒலிக்குறிப்பு மாம். செவிவாய்த் தேக்கி யென்றது உபசாரம். பண்ணை - மகளிர் விளையாட்டிடம்; விகாரம். முல்லைநிலத்து ஆய்ச்சியரின் பாற் குடங்களையுருட்டி யென்றும், கால்வாய் வழியே சென்றென்றும், கழனிகடோறும் பாய்ந்தென்றும் புனலுக்கேற்ப உரைத்துக்கொள்க. இது குழவித்தன்மை கூறியவாறு. (8) அரம்பைமென் குறங்கா மாவி னவிர்தளிர் நிறமாத் தெங்கின் குரும்பைவெம் முலையா1 வஞ்சிக் கொடியிறு நுசுப்பாக் கூந்தல் சுரும்பவிழ் குழலாக் கஞ்சஞ் சுடர்மதி முகமாக் கொண்டு நிரம்பிநீள் கைதை வேலி நெய்தல்சூழ் காவில் வைகி. (இ-ள்.) அரம்பைமென் குறங்கா - வாழைமரங்களை மெல்லிய தொடைகளாகவும், மாவின் அவிர்தளிர் நிறமா - விளங்குகின்ற மாந்தளிர்களை நிறமாகவும், தெங்கின் குரும்பை - தென்னங் குரும்பைகளை, வெம்முலையா - விருப்பத்தைத்தரும் முலை களாகவும், வஞ்சிக்கொடி - வஞ்சிக்கொடியை, இறு நுசுப்பா - ஒடிகின்ற இடையாகவும், கூந்தல் - கூந்தற்பனையின் மடலை, சுரும்பு அவிழ்குழலா - வண்டுகள் பரந்த கூந்தலாகவும், கஞ்சம் சுடர் மதிமுகமாக்கொண்டு - தாமரை மலரை ஒளியையுடைய மதிபோலும் முகமாகவுங்கொண்டு, நிரம்பி - (மங்கைப்பருவம்) நிரம்பி, நீள்கைதைவேலி - நீண்ட தாழையாகிய வேலியையுடைய. நெய்தல்சூழ் - நெய்தனிலத்தைச் சூழ்ந்த, காவில் வைகி - சோலையில் தங்கி எ-று. அரம்பை முதலியன மகளிரின் குறங்கு முதலியவற்றிற்கு உவம மாவன ஆகலானும், அவை அம்மருங்குளவாகலானும் அவற்றையே உறுப்புக்களாகக் கூறினார். ஆக என்பது விகாரமாயிற்று. (9) பன்மலர் மாலை வேய்ந்து பானுரைப் போர்வை போர்த்துத் தென்மலைத் தேய்ந்த சாந்த மான்மதச் சேறு பூசிப் பொன்மணி யாரந் தாங்கிப் பொருநையாங் கன்னி முந்நீர்த் தன்மகிழ் கிழவ னாகந் தழீஇக்கொடு கலந்த தன்றே. (இ-ள்.) பொருநை ஆம் கன்னி - அந்தப் பொருநையாகிய கன்னி, பன்மலர் மாலைவேய்ந்து - பலமலர் மாலைகளை அணிந்து, பால்நுரைப் போர்வை போர்த்து - வெள்ளிய நுரையாகிய போர்வையைப் போர்த்து, தென்மலை தேய்ந்த - பொதியின்மலையி லரைபட்ட, சாந்தம் மான்மதச் சேறுபூசி - சந்தனத்தோடு கலந்த கத்தூரிக் குழம்பை அணிந்து, பொன்மணி ஆரம் தாங்கி - பொன்னாலும் மணியாலு மியன்ற ஆரங்களைத் தாங்கி, மகிழ் - மகிழ்ச்சியைச் செய்கின்ற, முந்நீர் - கடலாகிய, தன் கிழவன் ஆகம் - தன் தலைவன்மார்பை, தழீஇக்கொடு கலந்தது - தழுவிக்கொண்டு கலந்தது எ-று. மலர்மாலை - மலராற் றொடுத்தமாலை, மலர் வரிசை. மாலை வேய்தல் முதலியன கலவியின் பொருட்டு கலவிக் காலத்து மெல்லிய வெண்டுகி லுடுத்தலை ‘பட்டுநீக்கித் துகிலுடுத்து’ என்னும் பட்டினப் பாலை யடியானறிக. மணியாரம் - மணியானியன்ற ஆரம், மணியும் முத்தும். முந்நீர், ‘நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலு மாகிய மூன்று தொழிலுமுடைமையின்’ கடலுக்கு ஆகுபெய ரென்பர் நச்சினாக்கினியர். ‘யாற்றுநீரும் ஊற்றுநீரும் மழைநீரும் உடைமையால் கடற்கு முந்நீ ரென்று பெயராயிற்று’ என்பர் புறநானூற்றுரைகாரர். இவை மூன்றுபாட்டுங் குளகம். குழவி மங்கையாய் நிரம் பினமை கூறிப் பின் கன்னி யென்பதனை எழுவாயாக நிறுத்திக் கலந்ததென்னும் பயனிலையால் முடித்தார். பொருநைக்கியையக் கலந்ததென அஃறிணை வினை கொடுத்தார். “ திரைபொரு கனைகடற் செல்வன் சென்னிமேல் நுரையெனு மாலையை நுகரச் சூட்டுவான் சரவெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக் குரைபுனற் கன்னிகொண் டிழிந்த தென்பவே ” என்னுஞ் சிந்தாமணிச் செய்யுள் ஈண்டு நோக்கற்பாலது. (10) வல்லைதா யிருபால் வைகுஞ் சிவாலய மருங்கு மீண்டி முல்லையா னைந்துந் தேனுந் திரைக்கையான் முகந்து வீசி நல்லமான் மதஞ்சாந் தப்பி நறுவிரை மலர்தூய் நீத்தஞ் செல்லலாற் பூசைத் தொண்டின் செயல்வினை மாக்கள் போலும். (இ-ள்.) நீத்தம் - பொருநை வெள்ளமானது, வல்லைதாய் - விரைந்து தாவிச் சென்று, இருபால்வைகும் - இருபுறங்களினு முள்ள, சிவாலய மருங்கு ஈண்டி - சிவாலயங்களிடத்தில் நெருங்கி, முல்லை - முல்லை நிலத்திலுள்ள, ஆன் ஐந்தும் - ஆவின்பால் முதலிய ஐந்து கவ்வியங்களையும், தேனும் - தேனையும், திரைக்கையால் - அலைகளாகிய கைகளால், முகந்துவீசி - மொண்டு வீசியும், நல்ல மான்மதம் - நல்ல கத்தூரியையும், சாந்து - சந்தனத்தையும், அப்பி - பூசியும்; நறுவிரை மலர்தூய் - நறிய மணமுள்ள மலர்களைத் தூவியும், செல்லலால் - செல்லுதலால், பூசைத்தொண்டின் - சிவபூசைத் திருத்தொண்டின், செயல் வினை மாக்கள் போலும் - செயலாகிய வினையையுடைய அடியார்களை ஒக்கும் எ-று. ஆன் ஐந்து - பால், தயிர், நெய், கோமயம், கோசலம் என்பன. தேன் முதலியன மலையிலும் காட்டிலுமுள்ளன. தாவி, தூவி என்பன தாய், தூய் என விகாரப்பட்டன. மருங்கும் என்பதில் உம்மை அசை நிலை. நீத்தம், நீந்தப்படுவதென வெள்ளத்திற்குக் காரணக்குறி. நீந்து பகுதி, அம் செயப்படுபொருள் விகுதி. (11) அரும்பவி ழனங்க வாளி யலைதர வாகம் பொன்போர்த் திரங்கிவா லன்ன மேந்தி யிருகையுஞ் சங்கஞ் சிந்தி மருங்குசூழ் காஞ்சி தள்ளி வரம்பிற வொழுகும் வாரி பரம்பரற் கையம் பெய்யும் பார்ப்பன மகளிர் போலும். (இ-ள்.) அரும்பு அவிழ் - முகை விரிந்த, அனங்க வாளி - மன்மத பாணமாகிய மலர்களை, அலை தர - அலைகள் ஒதுக்க, ஆகம் பொன்போர்த்து - தன்னிடமுற்றும் பொன்மணலையுடைய தாய், இரங்கி - ஒலித்து, வால் அன்னம் ஏந்தி - வெள்ளிய அன்னப் பறவைகளைத் தாங்கி, இருகையும் சங்கம் சிந்தி - இரண்டு கரைகளிலும் சங்குகளைச் சிதறி, மருங்குசூழ் காஞ்சி தள்ளி - பக்கங்களிற் சூழ்ந்த காஞ்சி மரங்களைத் தள்ளிக்கொண்டு, வரம்பு இற ஒழுகும் வாரி - கரையுடையும் படி செல்லா நின்ற பொருநை நதியானது, பரம்பரற்கு - சிவபெருமானுக்கு, ஐயம் பெய்யும் - பிச்சையிடும், பார்ப்பன மகளிர் போலும் - தாருகாவனத்து முனிபன்னியரை ஒக்கும் எ-று. அனங்கவாளி - காமபாணங்கள், அலைதர - வருத்த, ஆகம் பொன்போர்த்து - உடல்முழுதும் பொன்போலும் தேமல் பூக்கப் பட்டு, இரங்கி - மனங்கவன்று, வால் அன்னம் ஏந்தி - வெள்ளிய சோற்றையேந்தி, இருகையும் சங்கம் சிந்தி - இரண்டு கைகளிலு முள்ள வளையல் களை உதிர்த்து, மருங்கு சூழ் காஞ்சி தள்ளி - இடையில் அணிந்த காஞ்சி யென்னும் அணியை விழுத்தி, வரம்பு இற ஒழுகும்- கற்புநிலைகெட ஒழுகும் என, மகளிர்க்கேற்ப உரைத்துக்கொள்க. விரகநோயுற்று உடல் மெலிதலால் வளையும் காஞ்சியும் தாமே கழன்று விழுதலைச் சிந்தி, தள்ளி எனப் பிறவினையாற் கூறினார். காஞ்சி - இருகோவையுள்ள இடையணி; எழுகோவை என்பாரும் உளர். மகளிர் ஐயமிட்டதனை வளையல் விற்றபடலத்திற் காண்க. (12) வரைபடு மணியும் பொன்னும் வைரமும் குழையும் பூட்டி அரைபடு மகிலுஞ் சாந்து மப்பியின் னமுத மூட்டிக் கரைபடு மருத மென்னுங் கன்னியைப் பருவ நோக்கித் திரைபடு பொருநை நீத்தஞ் செவிலிபோல் வளர்க்கு மாதோ. (இ-ள்.) திரைபடு பொருநை நீத்தம் - அலைகளையுடைய பொருநையின் வெள்ளமானது, வரைபடு - மலைகளிலுள்ள, மணியும் பொன்னும் வைரமும் குழையும் பூட்டி - மணி பொன் வைரம் குழை என்பவற்றைப் பூட்டி, அரைபடும் அகிலும் சாந்தும் அப்பி - அரை பட்ட அகிலையும் சந்தனத்தையும் பூசி, இன் அமுதம் ஊட்டி - இனிய அமுதத்தை உண்பித்து, கரைபடு மருதம் என்னும் கன்னியை - வரம்பு பொருந்திய மருத நிலமாகிய மங்கையை, பருவம் நோக்கி - அவள் பருவத்திற்குத் தகுந்தனவற்றை ஆராய்ந்து, செய்து செவிலிபோல் வளர்க்கும் -கைத்தாயைப்போல வளர்க்கும் எ-று. குழை - குண்டலம், தளிர். அமுதம் - பால், நீர். மலையிலுள்ள வற்றை வாரிச்சென்று மருதத்திற் சேர்ப்பதனைக் கன்னியென்றதற் கேற்பப் பூட்டி என்றும் அப்பி என்றுங் கூறினார். கன்னியை வளர்க்குமென்க. செவிலிபோல் - செவிலி வளர்ப்பதுபோல். (13) மறைமுதற் கலைக ளெல்லா மணிமிடற் றவனே யெங்கும் நிறைபர மென்றும் பூதி சாதன நெறிவீ டென்றும் அறைகுவ தறிந்துந் தேறா ரறிவெனக் கலங்கி யந்த முறையின்வீ டுணர்ந்தோர் போலத் தெளிந்தது மூரிவெள்ளம். (இ-ள்.) மறைமுதல் கலைகள் எல்லாம் - வேதமுதலிய கலைகள் எல்லாமும், மணிமிடற்றவனே - நீலமணிபோலும் கண்டத்தையுடைய சிவபெருமானே, எங்கும் நிறைபரம் என்றும் - எங்கும் நிறைந்த பரம்பொருள் என்றும், பூதிசாதனம் - திருநீறு முதலிய சாதனங்களே, வீடு நெறி என்றும் - வீடு பேற்றுக்கு வழி என்றும், அறைகுவது அறிந்தும் - கூறுவதை அறிந்து வைத்தும், தேறார் அறிவென - தெளியாதவரின் அறிவின் கலக்கத்தைப்போல, மூரிவெள்ளம் கலங்கி - பெரிய வெள்ளமானது கலங்குதலுற்று, அந்த முறையின் வீடு உணர்ந்தோர் போல - அவை கூறுமுறையான் வீட்டினை உணர்ந்த பெரியாரின் திருவுள்ளத்தின் தெளிவுபோல, தெளிந்தது - தெளிவையடைந்தது எ-று. பூதிசாதனம் என்னுந் தொடர்க்குத் திருநீறாகிய சாதனம் என்றும் பொருள் கூறுதல் அமையும். ‘எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி’ என்று தமிழ்மறை கூறுதலின் திருநீறும் சாதனமும் என்று பொருள் கூறுதல் சிறப்பு. சாதனம், உருத்திராக்கம் என்றும், திருவைந்தெழுத்தென்றும் கூறுவர். வீட்டுநெறி என மாற்றியுரைக்கப்பட்டது. பூதிசாதன நெறி என நிறுத்திச் சைவசமயம் என்று பொருள் கொள்ளலும் ஆம். இதற்கு வீட்டிற் கேதுவை வீடென உபசரித்தாரெனல் வேண்டும். (14) மறைவழி கிளைத்த வெண்ணெண் கலைகள்போல் வருநீர் வெள்ளந் துறைவழி யொழுகும் பல்கால் சோலைதண் பழனஞ் செய்தேன் உறைவழி யோடை யெங்கு மோடிமன் றுடையார்க் கன்பர் நிறைவழி யாத வுள்ளத் தன்புபோ னிரம்பிற் றன்றே. (இ-ள்.) வருநீர் வெள்ளம் - வருகின்ற பொருநையின் வெள்ள மானது, மறைவழி கிளைத்த - வேதத்தினின்றுங் கிளைத்த, எண் எண் கலைகள்போல் - அறுபத்துநான்கு கலைகளைப்போல், துறைவழி ஒழுகும் - நீர்த்துறைகளினின்று கிளைத்துச் செல்லாநின்ற, பல்கால் - பல வாய்க்கால்களால், சோலை - சோலையிலும், தண் பழனம் - குளிர்ந்த மருத நிலத்திலும், செய் - கழனிகளிலும், தேன் உறை வழி ஓடை - தேன் துளிகள் வழிகின்ற ஓடைகளிலும், எங்கும் - எல்லாவிடத்தும், ஓடி - விரைந்து சென்று, மன்று உடையார்க்கு அன்பர் - தில்லைமன்றுடைய சிவபிரான் அடியார்களின், உள்ளத்து - திருவுள்ளத்தின்கண். நிறைவு அழியாத - நிறைதல் நீங்காத, அன்பு போல் நிரம்பிற்று - அன்பைப்போல நிரம்பியது எ-று. கலைகள், எழுத்திலக்கணம் முதலாகவுள்ள அறுபத்து நான்கும். ‘நிறைவழியாத’ என்பதனை உள்ளத்திற்கு அடையாக்கி, இன்ப நிறைவுடைய என்று கூறலும் ஆம்; அன்பராயினார் ‘இறைவன் கழலேத்து மின்ப மின்பமே’ என்று கொள்வராகலின் அவருள்ளம் இன்பத்தால் நிறைந்திருக்குமென்க. ‘நிறைக்கொண்ட சிந்தையா னெல்வேலிவென்ற நின்றசீர்நெடுமாறன்’ என்னுந் திருத்தொண்டத் தொகையும் காண்க. சோலை முதலியன பெயர்ச் செவ்வெண். அன்று, ஏ; அசை. (15) (கலிநிலைத்துறை) இழிந்த மாந்தர்கைப் பொருள்களு மிகபரத் தாசை கழிந்த யோகியர் கைப்படிற் றூயவாய்க் களங்கம் ஒழிந்த வாறுபோ லுவரியுண் டுவர்கெடுத் தெழிலி பொழிந்த நீரமு தாயின புவிக்கும்வா னவர்க்கும்.1 (இ-ள்.) இழிந்த மாந்தர் கைப்பொருள்களும் - கீழ்மக்களிடத் துள்ள பொருள்களும், இகபரத்து ஆசை கழிந்த யோகியர் - இம்மைப்பயன் மறுமைப் பயன்களில் அவா நீங்கிய சிவயோகி யரின், கைப்படில் - திருக்கரத்தில் பட்டால், தூயவாய் களங்கம் ஒழிந்தவாறு போல் - குற்றத்தின் நீங்கித் தூய்மையாயினமைபோல, எழிலி - மேகமானது, உவரி உண்டு - கடல் நீரைப் பருகி, உவர் கெடுத்து - (அதிலுள்ள) உப்பைப் போக்கி, பொழிந்தநீர் - சொரிந்த நீர்த்துளிகள், புவிக்கும் வானவர்க்கும் - நிலவுலகத் துயிர்கட்கும் வானின்கண் உள்ள தேவர்கட்கும், அமுது ஆயின - அமிழ்தமாயின எ-று. துறக்கவின்பமும் அழிதன்மாலையதாகலின் அவ்வாசை கூடாதாயிற்று. ஆசைகழிதல் விராகமெனப்படும். யோகியர்கைப் படில் என உடம்பொடு புணர்த்தலால் அவரே தானமளித்தற்குச் சிறந்தார் என்பது பெறப்படும். “ தண்டறு சிந்தைத் தபோதனர் தாமகிழ்ந் துண்டது மூன்று புவனமு முண்டது கொண்டது மூன்று புவனமுங் கொண்டதென் றெண்டிசை நந்தி யெடுத்துரைத் தானே” என்று திருமந்திரங் கூறுதல் காண்க. “ சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு மீண்டு” என்பவாகலின், வானவர்க்கும் அமுதாயின என்றார். உவரி உவர்ப் பினையுடையதெனக் காரணப் பெயர்; இ வினைமுதற்பொருள் விகுதி. (16) ஈறி லாதவ ளொருத்தியே யைந்தொழி லியற்ற வேறு வேறுபேர் பெற்றென வேலைநீ ரொன்றே ஆறு கால்குளங் கூவல்குண் டகழ்கிடங் கெனப்பேர் மாறி யீறில்வான் பயிரெலாம் வளர்ப்பது மாதோ. (இ-ள்.) ஈறு இலாதவள் ஒருத்தியே - அழிவில்லாதவளாகிய சிவசக்தி ஒருத்தியே, ஐந்தொழில் இயற்ற - படைப்பு முதலிய ஐந்து தொழில்களையும் நடத்துதற்பொருட்டு, வேறு வேறு பேர் பெற்றென - வெவ்வேறு பெயர்களைத் தாங்கி நின்றாற்போல, வேலை நீர் ஒன்றே - கடல் நீர் ஒன்றே, ஆறு கால் குளம் கூவல் குண்டு அகழ்கிடங்கு என - நதி கால்வாய் குளம் கிணறு ஆழமாகத் தோண்டப்பெற்ற கிடங்கு என, பேர்மாறி - பெயர்கள் வேறுபட்டு, ஈறு இல்வான் பயிர் எலாம் - எண்ணிறந்த உயர்ந்த பயிர்களை, வளர்ப்பது - வளர்க்கா நிற்கும் எ-று. ஐந்தொழில் - படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல் அருளல் என்பன. வேறு வேறு பேர் - பராசத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி என்பன; வாணி, திரு, உமை, மகேசை, மனோன்மனி என்னலுமாம். குண்டு - ஆழம்; குட்டமு மாம். ஏகாரங்கள் தேற்றப்பொருளன. பெற்றென, தொகுத்தல் விகாரம். பெயர் பேரென மருவியது. மாது ஓ ; அசை. (17) (அறுசீரடியாசிரிய விருத்தம்) களமர்கள் பொன்னேர்பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடற் குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்க வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற அளமரு பொறிபோ லேவ லாற்றவாள் வினையின் மூண்டார். (இ-ள்.) களமர்கள் - உழவர்கள், பொன்னேர் பூட்டி - பொன்னேரைப்பூட்டி, தாயர்வாய் - அன்னையரின் வாயினின்றும் வருகின்ற; கனிந்த பாடற்கு - கனிவோடு கூடிய பாடலுக்கு, உளம் மகிழ்சிறாரின் - மனமகிழுகின்ற சிறுவர்களைப்போல, ஏறும் ஒருத்தலும் உவகை தூங்க - எருதுகளும் எருமைக்கடாக்களும் மகிழ்ச்சிகூர, வளம்மலி மருதம் பாடி - வளமிக்க மருதப்பண்களைப் பாடி, மனவலிகடந்தோர் - மனத்தின் வலிமையைக் கடந்தோரால், வென்ற - வெல்லப்பட்ட, அளமரு பொறிபோல் - சுழலுகின்ற ஐம்பொறிகளும் (அவர்கள் பணித்தவழி நிற்றல்) போல, ஏவல் ஆற்ற - (அவைகள்) தாம் பணித்தவாறு செய்ய, ஆள்வினையில் மூண்டார் - உழுதொழிலின் கண்ணே தலைப்பட்டார்கள் எ-று. களமர், நெற்களமுடையார் என்னும் காரணப்பெயர். புத்தேரினைப் பொன்னேர் என்பர்; நல்லேர் என்றலுமுண்டு. “ கொழுங்கொடி யறுகையுங் குவளையுங் கலந்து விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப் பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ ஏரொடு நின்றோ ரேர்மங் கலமும்” என்னும் நாடுகாண்காதையால் பொன்னேர் பூட்டு மியல்பும், அதற்கு ஏர் மங்கலம் பாடுவதுண்டென்பதும் விளங்கும். ஒருத்தல் எருமைக்கடாவாதலை ‘ஏற்புடைத்தென்ப எருமைக் கண்ணும்’ என்னும் மரபியல் சூத்திரத்தானறிக. மனத்தை அடக்கி னோர்க்கு ஐம்பொறிகளும் ஏவல் செய்யுமென்றார். ல ள வொற்றுமைபற்றி அலமரு அளமருவென நின்றது. (18) பலநிற மணிகோத் தென்னப் பன்னிற வேறு பூட்டி அலமுக விரும்பு தேய வாள்வினைக் கருங்கான் மள்ளர் நிலமக ளுடலங் கீண்ட சால்வழி நிமிர்ந்த சோரிச் சலமென நிவந்த செங்கேழ்த் தழன்மணி யிமைக்கு மன்னோ. (இ-ள்.) பலநிறமணி கோத்தென்ன - பல நிறங்களையுடைய மணிகளைக் கோவை செய்ததுபோல, பல் நிற ஏறு பூட்டி - பல நிறங்களையுடைய எருதுகளைப் பூட்டி, அலம் முக இரும்புதேய - கலப்பையின் முனையிலுள்ள கொழுத் தேயும்படி, ஆள்வினை - உழுதொழில் செய்யும், கரும் கால் மள்ளர் - வலியகாலினையுடைய உழவர்கள், நிலமகள் - புவிமடந்தையின், உடலம்கீண்ட - உடலைக் கிழித்த, சால் வழி - படைச்சாலின் வழியே, நிமிர்ந்த சோரிச் சலமென - பொங்கிய உதிரவெள்ளத்தைப்போல, நிவந்த செம்கேழ் - உயர்ந்த செந்நிறத்தையுடைய, தழல்மணி இமைக்கும் - நெருப்புப் போன்ற மணிகள் ஒளிவீசா நிற்கும் எ-று. கருங்கால் என்பதிற் கருமை வலிமை; கருந்தொழில் வினைஞர் என்னும் சிறுபாண் உரையிற்காண்க; நிறமுமாம். நிலமகள் என்ற தற்கியைய உடலென்றும், சோரியென்றும் கூறினார். தழல்மணி - மாணிக்கம். கோத்தென்ன தொகுத்தல். உடலம், அம் சாரியை. மன் ஓ; அசை. (19) ஊறுசெய் படைவாய் தேய வுழுநரு நீர்கால் யாத்துச் சேறுசெய் குநருந் தெய்வந் தொழுதுதீஞ் செந்நெல் வீசி நாறுசெய் குநரும் பேர்த்து நடவுசெய் குநருந் தெவ்வின் மாறுசெய் களைகட் டோம்பி வளம்படுக் குநரு மானார். (இ-ள்.) (அவ்வுழவர்கள்) ஊறுசெய் - (புவியைக்) கிழிக்கின்ற, படைவாய் தேய - கலப்பையின் முகம்தேயும்படி, உழுநரும் - உழுகின்றவர்களும், நீர்கால் யாத்து - நீரினைக்கட்டி, சேறு செய்கு நரும் - சேறாக்குகின்றவர்களும், தெய்வம் தொழுது - (அந்நிலக் கடவுளாகிய) இந்திரனை வணங்கி, தீம்செந்நெல் வீசி - இனிய செந்நிற முடைய நெல்முளைகளை விதைத்து, நாறு செய்குநரும் - நாறுசெய்கின்றவர்களும், பேர்த்து நடவுசெய்குநரும் - (அவற்றைப்) பெயர்த்து நடுகின்றவர்களும், தெவ்வின் மாறுசெய் - பகைவரைப் போலப் பகை செய்கின்ற, களைகட்டு - களைகளைக் களைந்து, ஓம்பி - (பிற ஊறுகள் நேராவண்ணம்) பாதுகாத்து, வளம் படுக்குநரும் ஆனார் - வளப்படுத்துகின்றவரு மாயினார்கள் எ-று. கால்யாத்தல், ஒருசொல். தெய்வம் - இந்திரன்; ‘இந்திர தெய்வதந் தொழுது நாறு நடுவார்’ என்பது திருத்தொண்டர் புராணம். இந்திரன் மருதத்தின்தெய்வம்; ‘வேந்தன்மேய தீம்புன லுலகம்’ என்றார் தொல்காப்பியனார். நாறு - நாற்று. பேர்த்து, பெயர்த்தென்பதன் மரூஉ. கட்டு - கள்பகுதி, ட் இடைநிலை, உ வினையெச்ச விகுதி. நர், பெயர் விகுதி. (20) பழிபடு நறவந் தன்னைக்1 கடைசியர் பருகிச் செவ்வாய் மொழிதடு மாற வேர்வை முகத்தெழ முறுவ றோன்ற விழிசிவந் துழலக் கூந்தன் மென்றுகில் சோர வுள்ளக் கழிபெருங் களிப்பு நல்கிக் கலந்தவ ரொத்த2 தன்றே. (இ-ள்.) பழிபடு நறவம் - பழிக்கப்படுகின்ற மதுவானது, தன்னைக் கடைசியர் பருகி - தன்னை உழத்தியர்கள் பருகுதலால், செவ்வாய் மொழி தடுமாற - (அவர்கள்) சிவந்த வாயினின்று வருகிற மொழிகள் தடுமாறவும், முகத்து வேர்வை எழ - முகத்தின்கண் குறுவேர்வை எழவும், முறுவல் தோன்ற - (வாயின்கண்) நகை தோன்றவும், விழிசிவந்து உழல - விழிகள் சிவந்துசுழலவும், கூந்தல் மென்துகில் சோர - கூந்தலும் மெல்லிய ஆடையும் சரியவும், உள்ளம் கழிபெரும்களிப்பு நல்கி - உள்ளத்தில் மிகப்பெரிய களிப்பை நல்குதலால், கலந்தவர் ஒத்தது - புணர்ந்த தலைவரை ஒத்தது எ-று. நறவம் ஒத்தது என்க. மொழிதடுமாறல் முதலாயின கள்ளுண் டார்கண்ணும் கலவிசெய்த மகளிர்கண்ணும் நிகழ்வன. பருகி, நல்கி என்னும் எச்சங்கள் காரணப் பொருளன. கூந்தல் மென்றுகில், எண்ணிடைச் சொல் தொக்கது. கழிபெரு, ஒருபொருளிருசொல். ஒத்தார் என்பது பாடமாயின் கடைசியர் எழுவாய். நறவம் செயப்படு பொருள். அன்று ஏ; அசை. (21) பட்பகை யாகுந் தீஞ்சொற் கடைசியர் பவளச் செவ்வாய்க் குட்பகை யாம்ப லென்று மொண்ணறுங் குவளை நீலங் கட்பகை யாகு மென்றுங் கமலநன் முகத்துக்1 கென்றுந் திட்பகை யாகு மென்றுஞ் செறுதல்போற் களைதல் செய்வார். (இ-ள்.) பண்பகையாகும் - பண்ணுக்குப் பகையாகிய, தீம்சொல் - இனிய மொழிகளையுடைய, கடைசியர் - உழத்தியர்கள், பவளச் செவ்வாய்க்கு - (தங்கள்) பவளம் போன்ற சிவந்த வாய்க்கு, ஆம் பல் உள்பகை ஆகும் என்றும் - செவ்வல்லி மலர்கள் உட்பகையாகு மென்றும், கண் - கண்களுக்கு, ஒள் நறும் குவளை நீலம் - ஒள்ளிய நறிய செங்குவளை மலர்களும் கருங்குவளை மலர்களும், பகை ஆகும் என்றும் - பகையாய் உள்ளன வென்றும், நல் முகத்துக்கு - நல்ல முகத்திற்கு, கமலம் என்றும் திண்பகை ஆகும் என்றும் - தாமரை மலர்கள் எப்போதும் திண்ணிய பகையாயுள்ளன வென்றும், செறுதல்போல் களைதல் செய்வார் - அழித்தல் போல அவற்றைக் களைவாராயினர் எ-று. உட்பகை - புறந்தோன்றாத பகை, உள்ளிடத்திற்குப் பகை. ஆம் பல் முதலியன அவற்றின் மலருக்கு ஆகுபெயர். களைதல் - முதலொடும் போக்குதல். திண்பகை யெனற்பாலது எதுகை நோக்கி வலித்தது. (22) கடைசியர் முகமுங் காலுங் கைகளுங் கமல மென்னார் படைவிழி குவளை யென்னார் பவளவாய் குமுத மென்னார் அடையவுங் களைந்தார் மள்ளர் பகைஞரா யடுத்த வெல்லை உடையவ னாணை யாற்றா லொறுப்பவர்க் குறவுண் டாமோ. (இ-ள்.) மள்ளர் உழவர்கள், கமலம் - தாமரை மலர்கள், கடைசியர் - (தங்கள்) உழத்தியரின், முகமும் காலும் கைகளும் என்னார் - முகம் கால் கைகள் ஆகுமென்று கருதாமலும். குவளை - நீலமலர்கள், படை விழி என்னார் - வேல் போன்ற கண்கள் ஆகுமென்று கருதாமலும், குமுதம் - செவ்வல்லி மலர்கள், பவளவாய் என்னார் - பவளம் போன்ற வாய்கள் ஆகுமென்று கருதாமலும், அடையவும் களைந்தார் - (அவை களை) முற்றவும் களைந்தார்கள்; பகைஞராய் அடுத்த எல்லை - (உறவினராயினும்) பகைவராய்வந்த காலத்தில், உடையவன் ஆணை ஆற்றால் - ஆண்டானது ஏவல்வழி நின்று, ஒறுப்பவர்க்கு உறவு உண்டாமோ - தண்டிப்பவர்க்கு அவ்வுறவை நினைத்தல் கூடுமோ (கூடாது) எ-று. என்னார் என்பன முற்றெச்சங்கள். உண்டாமோ, ஓ;எதிர்மறை வேற்றுப் பொருள்வைப்பணி. “ பண்கள்வாய் மிழற்று மின்சொற் கடைசியர் பரந்து நீண்ட கண்கைகான் முகம்வா யொக்குங் களையலாற் களையிலாமை உண்கள்வார் கடைவாய் மள்ளர் களைகலா துலாவி நிற்பார் பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால்” என்னும் கம்பராமாயணச் செய்யுட் கருத்து இதில் வேறுவகையாற் கூறப்பட்டமை காண்க. (23) புரையற வுணர்ந்தோர் நூலின் பொருளினுள் ளடங்கி யந்நூல் வரையறை கருத்து மான வளர்கருப் புறம்பு தோன்றிக் கரையமை கல்வி சாலாக் கவிஞர்போ லிறுமாந் தந்நூல் உரையென விரிந்து கற்பின் மகளிர்போ லொசிந்த தன்றே. (இ-ள்.) வளர்கரு - வளர்கின்ற கருவானது, புரையற உணர்ந்தோர் நூலின் பொருளின் - (ஜயந்திரிபாகிய) குற்றம் நீங்கக் கற்றுணர்ந் தோர் (இயற்றிய) நூலின்கண் (உள்ளடங்கியிருக்கும்) பொருள் போல, உள் அடங்கி - அகத்திலடங்கி நின்று, அந்நூல் வரை அறை - அந்நூற் பொருளி னளவைத்தெரிக்கின்ற, கருத்துமான - கருத்துரையின் தோற்றம்போல, புறம்பு தோன்றி - வெளித்தோன்றி, கரை அமை கல்வி சாலா - இலக்கணவரம்பு அமைந்த கல்வி நிறையாத, கவிஞர் போல் இறுமாந்து - புன்கவிஞர் (இறுமாத்தல்) போல் தலை எடுத்து, அந்நூல் உரை என - மேற் கூறிய நூலின் உரைபோல, விரிந்து - தலைவிரிந்து, கற்பின் மகளிர் போல் - கற்புடைமகளிர் (தலை வணங்குதல்) போல், ஒசிந்தது - தலைவளைந்தது எ-று. அந்நூல் என்றது புரையற வுணர்ந்தோ ரியற்றிய நூலினை. நூலின், கற்பின் என்பவற்றில் இன் சாரியை. பொருளின், இன்: ஒப்புப் பொருட்டு. அன்று ஏ:அசை. “ சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் றோற்றம்போன் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார் செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூற் கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே” என்னுஞ் சிந்தாமணிச் செய்யுள் இங்கே நினைக்கற்பாலது. (24) அன்புறு பத்தி வித்தி யார்வநீர் பாய்ச்சுந் தொண்டர்க் கின்புரு வான வீச னின்னருள் விளையு மாபோல் வன்புறு கருங்கான் மள்ளர் வைகலுஞ் செவ்வி நோக்கி நன்புல முயன்று காக்க விளைந்தன நறுந்தண் சாலி. (இ-ள்.) அன்பு உறு - அன்பு மிக்க, பத்திவித்தி - பத்தியாகிய வித்தை விதைத்தது, ஆர்வம் நீர் பாய்ச்சும் தொண்டர்க்கு - விருப்பமாகிய நீரைப் பாய்ச்சுகின்ற அடியார்களுக்கு, இன்பு உருவான ஈசன் - இன்பமே வடிவாகிய இறைவனது, இன் அருள் விளையுமாபோல் - இனிய திருவருளாகிய பயன் விளைகின்ற தன்மைபோல, வன்புஉறு - வலிமை மிக்க, கரும்கால் மள்ளர் - கரியகாலினையுடைய உழவர்கள், வைகலும் - நாள்தோறும், செவ்வி நோக்கி - பருவம் பார்த்து, நன்புலம் - நல்ல விளைபுலங் களை, முயன்று காக்க - முயற்சியோடு பாதுகாக்க, நறும்தண்சாலி விளைந்தன - நறிய தண்ணிய நெற்பயிர்கள் விளைந்தன எ-று. அன்பின் முதிர்ச்சி பத்தி யெனப்படும். இக்கருத்தினை, “ அன்பென் பாத்தி கோலி முன்புற மெய்யெனு மெருவை விரித்தாங் கையமில் பத்தித் தனிவித் திட்டு நித்தலும் ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சிநேர் நின்று” என்னும் பட்டினத்தடிகள் திருவாக்கானறிக. அருச்சனை வயலுளன் புவித் திட்டு’ என்பது திருவாசகம். விளையுமாறு என்பது குறைந்து நின்றது. (25) அகனில வேறு பாட்டி னியல்செவ்வி யறிந்து மள்ளர் தகவினை முயற்சி செய்யக் காமநூல் சாற்று நான்கு வகைநலார் பண்பு செவ்வி யறிந்துசேர் மைந்தர்க் கின்பம் மிகவிளை போகம் போன்று விளைந்தன பைங்கூ ழெல்லாம். (இ-ள்.) அகல்நில வேறுபாட்டின் இயல் - அகன்ற நிலங்களின் வேறுபாட்டின் தன்மையையும், செவ்வி - (பயிரிடும்) பருவத்தையும், அறிந்து - தெரிந்து, மள்ளர் - உழவர்கள், தகவினை முயற்சி செய்ய - (அவற்றிற்கு) தகுதியாகத் தொழில் முயற்சி செய்ய, காமநூல் சாற்றும் நான்குவகை நலார் - காமநூல் கூறுகின்ற நால்வகைப்பட்ட மகளிரின், பண்பு செவ்வி அறிந்து - தன்மையையும் பருவத்தையும் தெரிந்து, சேர் மைந்தர்க்கு - கலவிசெய்யும் ஆடவருக்கு, இன்பம் மிகவிளை - இன்பம் மிக விளைகின்ற, போகம் போன்று - அவ்வநுபவம் போல, பைங்கூழ் எல்லாம் விளைந்தன - பயிர்கள் அனைத்தும் விளைந்தன எ-று. நில வேறுபாடு - செவ்வல், கரிசல் முதலாயின. நான்குவகை நல்லார் - பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்போர். மகளிடத்துப் போகம் விளைதல் போன்று நிலத்தின்கட் பயிர்விளையுமென்னுங் கருத்தினை, “ செல்லான் கிழவ னிருப்பி னிலம்புலந் தில்லாளி னூடி விடும் ” என்னும் பொதுமறையா னறிக. இயல் செவ்வி, பண்பு செவ்வி என்பவற்றில் எண்ணும்மைகள் விகாரத்தாற் றொக்கன. (26) கொடும்பிறை வடிவிற் செய்த கூனிரும் பங்கை வாங்கி முடங்குகால் வரிவண் டார்ப்ப முள்ளரைக் கமல நீலம் அடங்கவெண் சாலி செந்நெல் வேறுவே றரிந்தீ டாக்கி நெடுங்களத் தம்பொற் குன்ற நிரையெனப் பெரும்போர் செய்தார். (இ-ள்.) கொடும்பிறை வடிவில் செய்த - வளைந்த பிறையின் வடிவுபோற் செய்யப்பெற்ற, கூன் இரும்பு அங்கை வாங்கி - அரிவாளைக் கையிலேந்தி, முடங்கு கால் வரிவண்டு ஆர்ப்ப - வளைந்த கால் களையும் கீற்றுக்களையுமுடைய வண்டுகள் ஒலிக்க, முள் அரைக் கமலம் நீலம் - முள்ளோடு கூடிய நாளத்தினையுடைய தாமரையும் குவளையும், அடங்க - உடன்சேர, வெண்சாலி செந்நெல் - வெண்ணெல் செந் நெல் விளைவுகளை, வேறு வேறு அரிந்து - வெவ்வேறாக அறுத்து, ஈடு ஆக்கி - கற்றைகளாக்கி, நெடும் களத்து - நெடிய களத்தின்கண், அம்பொன் குன்றம் நிரை என - அழகிய பொன் மலைகளின் வரிசைகள்போல, பெரும்போர் செய்தார் - (உழவர்கள்) பெரியபோர்கள் செய்தனர் எ-று. பிறை வடிவென முன்வந்தமையின் கூனிரும்பு என்பது பெயர் மாத்திரையாய் நின்றது. அங்கை - அகங்கை. கமலநீலம் உம்மைத் தொகை. வெண்சாலி செந்நெல் என்புழிச் செவ்வெண்ணின் றொகை விகாரத்தாற் றொக்கது. ஈடு - பெருமை; ஈண்டுக் கற்றை; ஈடுசால் போரழித்து’ என்னும் சிந்தாமணிச் செய்யுளுரையை நோக்குக. (27) கற்றவை களைந்து தூற்றிக் கூப்பியூர்க் காணித் தெய்வம் அற்றவர்க் கற்ற வாறீந் தளவைகண்1 டாறி லொன்று கொற்றவர் கடமை கொள்ளப் பண்டியிற் கொடுபோய்த் தென்னா டுற்றவர் சுற்றந் தெய்வம் விருந்தினர்க் கூட்டி யுண்பார். (இ-ள்.) கற்றை வை களைந்து - திரளாகிய வைக்கோலை நீக்கி, தூற்றி - பதர்போகத் தூற்றி, கூப்பி - (நெல்லைப்) பொலிகளாகக் குவித்து, ஊர்க்காணித் தெய்வம் - கிராம தேவதைகளுக்கும், அற்ற வர்க்கு - வறியோர்களுக்கும், அற்றவாறு ஈந்து - வரையறுத்தபடி கொடுத்து, அளவை கண்டு - அளந்து, கொற்றவர் - மன்னர், கடமை - இறைப்பொருளாக, ஆறில் ஒன்று கொள்ள - ஆறில் ஒரு கூறு கொள்ள, பண்டியில் கொடுபோய் - (மிகுதியைப்) பண்டிகளிற் கொண்டுபோய், தென்னாடு உற்றவர் - தென்புலத்தாரையும், சுற்றம் - ஒக்கலையும், தெய்வம் - தேவரையும், விருந்தினர்க்கு - விருந் தினரையும், ஊட்டி - உண்பித்து, உண்பார் - (அந்நாட்டினர்) தாமும் உண்பார் எ-று. “ தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங் கைம்புலத்தா றோம்ப றலை” என்னும் திருக்குறளும், “பிதிரராவார் படைப்புக்காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கிடம் தென்றிசை யாகலின் ‘தென்புலத்தார்’ என்றார். தெய்வமென்பது சாதியொருமை. விருந்தென்பது புதுமை. அஃதீண்டாகு பெயராய்ப் புதியராய் வந்தார் மேல்நின்றது. அவர் இருவகையர், பண்டறிவுண்மையிற் குறித்து வந்தாரும், அஃதின்மையிற் குறியாது வந்தாருமென. ஒக்கல் - சுற்றத்தார். எல்லா அறங்களும் தானுளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னையோம்பலும் அறனாயிற்று......... அரசனுக் கிறைப்பொருள் ஆறிலொன்றாயிற்று; இவ் வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக” என்று பரிமேலழகர் விளக்கிய உரையும் இங்கே அறியற்பாலன. அற்றவர்க்கு, விருந்தினர்க்கு என்னும் நான்கனுருபுகள் ஏனையிடத்தும் சென்றியையும். (28) சாறடு கட்டி யெள்ளுச் சாமைகொள் ளிறுங்கு தோரை ஆறிடு மதமால் யானைப் பழுக்குலை யவரை யேனல் வேறுபல் பயறோ டின்ன புன்னில விளைவு மற்றும் ஏறொடு பண்டி யேற்றி யிருநிலம் கிழிய வுய்ப்பார். (இ-ள்.) சாறு அடுகட்டி - கருப்பஞ்சாற்றைக் காய்ச்சிய வெல்லம், எள்ளு சாமை கொள் இறுங்கு தோரை - எள் சாமை கொள் சோளம் மலைநெல், ஆறு இடும்மதம் - வெள்ளம்போற் சொரிகின்ற மதத்தினையுடைய, மால் - பெரிய, யானைப்பழுக் குலை அவரை - யானையின் விலா வெலும்புபோலும் காயினையுடைய குலை களையுடை அவரை, ஏனல் - தினை, வேறுபல் பயறோடு - வேறு வகைப்பட்ட பல பயறுகளோடு, இன்னமற்றும் - இத்தன்மைய பிறவுமாகிய, புன்னில விளைவு - புன்செயில் விளைந்தபொருள் களை, ஏறு ஒடுபண்டி ஏற்றி - எருதுகளிலும் பண்டியிலும் ஏற்றி, இருநிலம் கிழிய உய்ப்பார் - பெரிய பூமி கிழியும்படி கொண்டு போவார் எ-று. யானையின் பழுப்போல் அவரையின்கா யிருத்தலை, பொரு வில்யானையின் பழுப்போற் பொங்கு காய்க்குலை யவரை எனப் பிறருங் கூறியிருத்தல் காண்க. யானையின் பழுவெலும்பின் வரிசை போன்ற வாழைக்குலை என்பாரும், யானைமுகம்போற் பழுக்கத் தக்க வாழைக்குலை என்பாரும் உளர். இறுதியிற் கூறிய பொருளுக்குக் கருங்கதலிப் பெருங்குலைகள் களிற்றுக்கைம் முகங்காட்ட என்னும் பெரியபுராணச் செய்யுள் மேற்கோளாகும். குறிஞ்சியும் முல்லையும் புன்னிலமெனப்படும். ஓடு என்னும் எண்ணிடைச்சொல் பிறவிடத்துஞ் சென்றியையும். எள்ளு, உ; சாரியை ஏற்றொடு எனற்பாலது விகாரப்பட்டது. (29) துறவின ரீச னேசத் தொண்டினர் பசிக்கு நல்லூண் திறவினைப் பிணிக்குத் தீர்க்கு மருந்துடற் பனிப்புக் காடை உறைவிடம் பிறிது நல்கி யவரவ ரொழுகிச் செய்யும் அறவினை யிடுக்க ணீக்கி யருங்கதி யுய்க்க வல்லார். (இ-ள்.) துறவினர் - துறந்தோரும், ஈசன் நேசத்தொண்டினர் - சிவபிரானிடத்து அன்பினையுடைய திருத்தொண்டரும் ஆகியவர் களின், பசிக்கு நல்ஊண் - பசியைப்போக்க நல்ல உணவும், வினைத் திறப் பிணிக்கு - வினைவகையாலாகிய நோய்க்கு, தீர்க்கும் மருந்து - நீக்குதற்குரிய மருந்தும், உடல் பனிப்புக்கு ஆடை - மெய்யின் குளிரைப்போக்க உடையும், உறைவிடம் - தங்குமிடமும், பிறிதும் - வேறு பொருளுமாகிய இவற்றை, நல்கி - கொடுத்து, அவர் அவர் ஒழுகிச் செய்யும் - அவரவர்கள் தத்தம் நிலையில் வழுவாதொழிகிச் செய்யுகின்ற, அறவினை இடுக்கண் நீக்கி - அறத் தொழிலுக்கு நேரும் இடையூறுகளைப் போக்கி, அருங்கதி உய்க்கவல்லார் - அரிய வீட்டு நெறியில் (அவர்களைச்) செலுத்தவல்லவராவர் எ-று. “ இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கும் நல்லாற்றி னின்ற துணை”” என்னும் திருக்குறளும், இவரிவ் வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும் அச் செலவிற்குப் பசிநோய் குளிர் முதலியவற்றான் இடையூறு வாராமல் உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி அவ்வந்நெறிகளின் வழுவாமற் செலுத்துதலான் நல்லாற்றினின்ற துணை என்றார் எனப் பரிமேலழகர் கூறிய உரையும் இங்கே நோக்கற் பாலன. திறவினை வினைத்திறமென மாற்றப்பட்டது. (30) நிச்சலு மீச னன்பர் நெறிப்படிற் சிறார்மேல் வைத்த பொச்சமி லன்பு மன்னர் புதல்வரைக் கண்டா லன்ன அச்சமுங் கொண்டு கூசி யடிபணிந் தினிய கூறி இச்சையா றொழுகி யுள்ளக் குறிப்பறிந் தேவல் செய்வார். (இ-ள்.) நிச்சலும் - நாள் தோறும், ஈசன் அன்பர் - சிவனடி யார்கள், நெறிப்படில் - வழியிலே எதிர்ப்பட்டால், சிறார்மேல் வைத்த பொச்சம் இல் அன்பும் - தங்களிளம் புதல்வர்களிடம் வைத்திருக்கும் மெய்யன்பும், மன்னர் புதல்வரைக் கண்டால் அன்ன அச்சமும் கொண்டு - அரசிளங்குமரரைக் கண்டாலொத்த பயமும் கொண்டு, கூசி அடிபணிந்து - ஒடுங்கி அடிவணங்கி, இனிய கூறி - இன் மொழிகள் கூறி, இச்சை ஆறு ஒழுகி - (அவர்கள்) விருப்பின் படி நடந்து, உள்ளக் குறிப்பு அறிந்து ஏவல் செய்வார் - உள்ளக் குறிப்பினை உணர்ந்து பணி செய்வார் எ-று. இச்செய்யுளின் கருத்தை, “ ஆசையொடு மரனடியா ரடியாரை யடைந்திட் டவர்கரும முன்கரும மாகச் செய்து கூசிமொழிந் தருண்ஞானக் குறியி னின்று கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே” என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தத்தா னறிக. பொச்சம் - பொய். நித்தல் - நிச்சல் என மரீஇயது. (31) நறைபடு கனிதேன் பெய்த பாலொடு நறுநெய் வெள்ளம் நிறைபடு செம்பொன் வண்ணப் புழுக்கலா னிமிர்ந்த சோறு குறைவற வுண்டு வேண்டும் பொருள்களுங் கொண்மி னென்ன மறைமுத லடியார் தம்மை வழிமறித் தருத்து வார்கள். (இ-ள்.) மறை முதல் அடியார் தம்மை - வேத முதல்வனாகிய சிவபிரானுடைய அடியார்களை, நறுநெய் வெள்ளம் நிறைபடு - நறிய மணமுள்ள நெய்ப்பெருக்கு நிறைந்த, செம்பொன் வண்ணப் புழுக்கலான் - சிவந்த பொன்போலும் நிறத்தினையுடைய பருப்புச் சோற்றோடு, நிமிர்ந்த சோறு - உயர்ந்த வேறுவகை அன்னத்தை, நறைபடு கனிதேன் பெய்த பாலொடு - தேன்பொருந்திய கனியோடும் தேனளாவிய பாலோடும், குறைவு அற - குறைவின்றி (நிறைய), உண்டு - அருந்தி,வேண்டும் பொருள்களும் கொண்மின் என்ன - வேண்டிய பிறபொருள்களும் கொள்ளுங்கள் என்று, வழிமறித்து அருத்துவார்கள் - வழியை மறித்து அழைத்துவந்து உண்பிப்பார்கள் எ-று. செம்பொன் வண்ணப்புழுக்கல் - பருப்புச்சோறு; இதனைத் தீம்பாலடிசிலமிர்தஞ் செம்பொன் வண்ணப்புழுக்கல் என்னும் சிந்தாமணிச் செய்யுளுரையாலறிக. புழுக்கலான் - புழுக்கலோடு. நிமிர்ந்த சோறு - பாலடிசில், அக்காரடலை, புளிச்சோறு முதலியன. வேண்டும் பொருள்கள் - ஆடை முதலியன. வழிமறித்தல் - வற்புறுத்தல் ஒடு, எண்ணுப் பொருளில்வந்த இடைச்சொல். கற்றவைகளைந்து’ என்னுஞ் செய்யுள்முதல் இச்செய்யுள்காறும் அந்நாட்டினர் என்னும் எழுவாய் வருவித்து முடிக்க. (32) பின்னெவ னுரைப்ப தந்தப் பெருந்தமிழ் நாடாங் கன்னி தன்னிடையூர்க ளென்னு மவயவந் தாங்கச் செய்த பொன்னியற் கலனே கோயில் மடமறப் புறநீர்ச் சாலை இன்னமு தருத்து சாலை யெனவுருத் திரிந்த தம்மா. (இ-ள்.) அந்தப் பெருந்தமிழ்நாடு ஆம் கன்னி - அச்சிறப்பு வாய்ந்த பெரிய தமிழ் நாடாகிய கன்னியானவள், தன் இடை ஊர்கள் என்னும் - தன்னிடத்துள்ள ஊர்களாகிய, அவயவம் தாங்கச்செய்த - உறுப்புக்கள் தாங்குமாறு செய்த, கலனே - அணிகலன்களே, கோயில் மடம் அறப்புறம் நீர்ச்சாலை இன்அமுது அருத்துசாலை என - திருக்கோயில் திருமடம் அறச்சாலை தண்ணீர்ப்பந்தர் இனிய அமுதை உண்பிக்கும் அன்னசாலை என்றிவைகளாக, உரு திரிந்து - வடிவம் வேறுபட்டனவென்று கூறுவதன்றி, பின் எவன் உரைப்பது - வேறு யாது சொல்லக் கிடப்பது எ-று. பின் என்பது வேறு என்னும் பொருளில் வந்தது. தமிழ்நாடென்னும் பெயர் பாண்டிநாட்டிற்குச் சிறப்பாகவுரித்து; இதனையாமெழுதிய கபிலர் என்னும் உரை நூலுட் காண்க. கன்னியென்பதும் அதற்கோர் பெயர். கலன்; சாதியொருமை. அம்மா; அசைநிலை. (33) திணைமயக்கம் (கலிநிலைத்துறை) இன்ற டம்புனல் வேலிசூ ழிந்நில வரைப்பிற் குன்ற முல்லைதண் பணைநெய்தல் குலத்திணை நான்கும் மன்ற வுள்ளமற் றவைநிற்க மயங்கிய மரபின் ஒன்றோ டொன்றுபோய் மயங்கிய திணைவகை உரைப்பாம். (இ-ள்.) இன் தடம் புனல் வேலிசூழ் - இனிய அகன்ற நீர்வேலியாற் சூழப்பட்ட, இந்நிலவரைப்பில் - இந்தப் பாண்டிநாட் டெல்லையில், குன்றம் முல்லை தண்பணை நெய்தல் - குறிஞ்சி முல்லை குளிர்ந்த மருதம் நெய்தலாகிய, குலத்திணை நான்கும் - உயர்ந்த நான்கு திணைகளும், மன்ற உள்ள - ஒரு தலையாகவுள்ளன; அவை நிற்க - அவை அங்ஙனமாக, மயங்கிய மரபின் - (அந்நிலங்கள்) ஒன்றோடொன்று நெருங்கியுள்ள முறைமையால், ஒன்றொடு ஒன்றுபோய் மயங்கிய - ஒருதிணைக் கருப்பொருளுடன் மற்றொருதிணைக் கருப்பொருள் சென்று கலந்த, திணைவகை உரைப்பாம் - திணைமயக்கக் கூறுபாட்டைச் சொல்வாம் எ-று. குலத்திணை - சிறந்த நிலங்கள்; பாலைத்திணைக்கு நிலமின்றா கலின் அதனை யொழித்து நான்கென்றார்; “ அவற்றுள், நடுவ ணைந்திணை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே” என்பது இலக்கணமாதலின், பாலைக்கு இயற்கை நிலமின்றேனும், “ வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் றானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்”” என்று சிலப்பதிகாரம் கூறுமாறு செயற்கை நிலமுண்டாகலின், ஒரோவிடத்து அதுவுங் கூறப்படும். இங்கே திணைமயக்க மென்பது ஒரு திணை கருப்பொருளோடு மற்றொரு திணைக் கருப்பொருள் சென்று மயங்குதல். இதற்கு விதி; “ எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயத்த வாகும்” என்னும் தொல்காப்பியச் சூத்திரமாகும். இதனுரையிலே ஒன்றென முடித்தலாற் பிற கருப்பொருண் மயங்குவ உளவேனுங் கொள்க என்றார் நச்சினார்க்கினியர். இவ்வாறு வருவன திணை மயக்கமாம் என்றார் இளம்பூரணர். எனினும் வந்த நிலத்தின் பயத்தவாகும் என்பதன் கருத்தைத் தழுவியதன்று இங்கே கூறப்பட்டுள்ள திணைமயக்கம். நான்கு நிலங்களும் நெருங்கியிருத்தலாகிய வளமுடைமையே இதனாற் பெறப்படுவது. இங்ஙனம் பாடுவதும் பழைய வழக்கேயென்பது பொருநராற்றுப்படையில் (அடி - 218-226) அறியலாகும். குறிஞ்சி பரதவர் பாட நெய்தல், நறும்பூங் கண்ணி, குறவர் சூடக், கானவர் மருதம் பாட வகிவர், நீறை முல்லைப் பஃறிணை நுவலக், கானக்கோழி கதிர்குத்த, மனைக் கோழி தினைக்கவர வரைமந்தி கழிமூழ்கக், கழிநாரை வரையிறுப்பத், தண்வைப்பினானாடுகுழீஇ என்பது காண்க. மன்ற, தேற்றப் பொருள்தரும் இடைச்சொல். (34) கொல்லை யானிரை மேய்ப்பவர் கோழிணர்க் குருந்தின் ஒல்லை தாயதிற் படர்1 கறிக் கருந்துண ருகுப்ப முல்லை சோறெனத் தேன்விராய் முத்திழை சிற்றில் எல்லை யாயமோ டாடுப வெயின்சிறு மகளிர். (இ-ள்.) கொல்லை ஆன் நிரை மேய்ப்பவர் - முல்லை நிலத்திற் பசுக்கூட்டத்தை மேய்க்கும் இடையர்கள், கோழ் இணர் குருந்தின்- கொழுவிய பூங்கொத்துக்களையுடைய குருந்த மரத்தின்மேல், ஒல்லை தாய் - விரைவாகத் தாவி ஏறி, அதில் படர் - அதிலே படர்ந்துள்ள, கறிக் கருந்துணர் உகுப்ப - மிளகு கொடியிலுள்ள கரிய காய்க்கொத்துக்களை உதிர்ப்பார், எயின் சிறுமகளிர் - வேட்டுவச் சிறுமியர், முத்து இழை சிற்றில் எல்லை - முத்துக்களாலியற்றிய சிற்றிலினிடத்து, முல்லை சோறு என - முல்லை அரும்புகளே சோறாக, தேன்விராய் - (அவற்றோடு) தேனைக் கலந்து, ஆயமோடு ஆடுப - மகளிர் கூட்டத்துடன் விளையாடுவர் எ-று. குருந்து முல்லைக்கும், - கறி குறிஞ்சிக்கும் உரியன. முத்து - குறிஞ்சி நில முத்துக்கள். எயின் என்னுஞ் சாதிப்பெயர் குறிஞ்சித் திணை மக்கட்கும், பாலைத்திணை மக்கட்கும் உரியது; ஈண்டு, குறிஞ்சிக்குரிய வேட்டுவச் சாதியைக் குறிக்கின்றது. குறிஞ்சிக்கும் முல்லைக்கும் மயக்கங் கூறியவாறு. பின்னிரண்டடிக்கு முல்லை நெய்தல் பாலைகளின் மயக்கமாகச் சிலர் பொருள் கூறியிருப்பது பொருந்தாதாகும். விராவி யென்பது விராய் என விகாரப்பட்டது.. உகுப்ப, ஆடுப என்பன பலர்பால் முற்றுக்கள். (35) கன்றொ டுங்களி வண்டுவாய் நக்கவீர்ங் கரும்பு மென்று பொன்சொரி வேங்கைவா யுறங்குவ மேதி குன்றி ளந்தினை மேய்ந்துபூங் கொழுநிழல் மருதஞ் சென்று றங்குவ சேவக மெனமுறச் செவிமா. (இ-ள்.) மேதி - எருமைகள், கன்றொடும் களிவண்டு - தன் கன்றுகளும் களித்த வண்டுகளும், வாய் நக்க - கடைவாயை நக்கும் படி, ஈர் கரும்பு மென்று - குளிர்ந்த கரும்புகளைக் குதட்டி, பொன் சொரி வேங்கைவாய் உறங்குவ - பொன்போலும் பூக்களை உதிர்க்கின்ற வேங்கை மர நிழலில் தூங்குவன; முறச்செவிமா - முறம் போலும் செவிகளையுடைய யானைகள், குன்று இளம் தினை மேய்ந்து - குறிஞ்சி நிலத்திலுள்ள முதிராத தினைக் கதிர்களைத் தின்று, பூ மருதம் - பூக்கள் நிறைந்த மருதமரத்தின், கொழுநிழல் - கொழுவிய நிழலிலே, சென்று - போய், சேவகம் என உறங்குவ - (தாம்) துயிலுமிடமாகக் கருதி உறங்குவன எ-று. பொன் போலும் பூக்களைப் பொன்னென்றார்; முறியிணர்க் கொன்றை நன்பொன் கால என்புழிப் போல. சேவகம் - யானை துயிலிடம். கரும்பு, மருதம், மேதி மருதத்திற்கும்; தினை, வேங்கை, யானை குறிஞ்சிக்கும் உரியன. குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் மயக்கங் கூறியவாறு. உறங்குவ; பலவின்பால் முற்று. (36) எற்று தெண்டிரை யெறிவளை யெயிற்றிய ரிழைத்த சிற்றில் வாய்நுழைந் தழிப்பவச் சிறுமியர் வெகுண்டு பற்றி லாரெனச் சிதறிய மனவணி பரதர் முற்றி லாமுலைச் சிறுமியர் முத்தொடுங் கோப்ப. (இ-ள்.) எற்று தெள்திரை - மோதும் தெள்ளிய அலைகள், எறிவளை - வீசிய சங்குகள், எயிற்றியர் இழைத்த சிற்றில்வாய் - வேடச் சிறுமிகள் கோலிய சிறு வீட்டின்கண், நுழைந்து அழிப்ப - புகுந்து அழிக்க, அச்சிறுமியர் வெகுண்டு - அப்பெண்கள் சினந்து, பற்று இலார் என - பற்றற்றாரைப்போல, சிதறிய மனவு அணி - கழற்றியெறிந்த அக்குமணி அணிகளை, பரதர் - நுளையருடைய, முற்றிலா முலைச் சிறுமியர் - முதிராத கொங்கையையுடைய சிறுமிகள், முத்தொடும் கோப்ப - முத்துக்களோடுங் கோவை செய்வர் எ-று. மனவு குறிஞ்சிக்குரியது. பரதர் - நெய்தற்றிணை மக்கள். குறிஞ்சிக்கும் நெய்தலுக்கும் மயக்கங் கூறியவாறு. அழிப்ப; செயவெனெச்சம். கோப்ப; பலர்பால் முற்று. (37) முல்லை வண்டுபோய் முல்லையாழ் முளரிவாய் மருதம் வல்ல வண்டினைப் பயிற்றிப்பின் பயில்வன மருதங் கொல்லை யான்மடி யெறிந்திளங் குழவியென் றிரங்கி ஒல்லை யூற்றுபால் வெள்ளத்து ளுகள்வன வாளை. (இ-ள்.) முல்லை வண்டு போய் - முல்லை நிலத்துள்ள வண்டுகள் சென்று, முல்லை யாழ் - (தாம்வல்ல) முல்லைப்பண்ணை, முளரிவாய் மருதம் வல்ல வண்டினைப் பயிற்றி - தாமரைப் பூவிலுள்ள மருதப்பண்வல்ல வண்டுகளைப் பயில்வித்து, பின் மருதம் பயில்வன - பின்மருதப் பண்ணைத் தாம் கற்பன; வாளை - வாளை மீன்கள், கொல்லை ஆன்மடி - முல்லை நிலத்திலுள்ள பசுவின் மடியில். எறிந்து - முட்டி, இளம் குழவி என்று இரங்கி - (அப்பசு தனது) இளமையாகிய கன்று முட்டியதென்று மனமுருகி, ஒல்லை ஊற்று - விரைந்து சொரிகின்ற, பால்வெள்ளத்துள் உகள்வன - பால் வெள்ளத்திலே தாவுவன எ-று. முல்லையாழ் - முல்லைப்பண். மருதம் - மருதப்பண். பயிற்றி, பயின்று என்பதன் பிறவினை. வண்டுகளுக்குப் பயிற்றி எனப் பொருள் கூறி, உருபுமயக்கம் என்னலுமாம். “ குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை” “ ஆவு மெருமையு மவைசொலப் படுமே” என ஆசிரியர் தொல்காப்பியனார் விதித்திருத்தலின் ஆன்கன்றைக் குழவி யென்றார், முல்லைக்கும் மருதத்திற்கும் மயக்கங் கூறியவாறு. (38) கரும்பொற் கோட்டிளம் புன்னைவாய்க் கள்ளுண்டு காளைச் சுரும்பு செவ்வழிப் பாண்செயக் கொன்றை பொன்சொரிவ அருந்த டங்கடல் வளையெடுத் தாழியான் கையில் இருந்த சங்கென விறைகொளப் பூவைமே லெறிவ. (இ-ள்.) கரும்பொன் கோட்டு - இரும்புபோலும் கரியகொம்பு களையுடைய, இளம் புன்னைவாய் கள் உண்டு - இளமையாகிய புன்னை மலரின் தேனைப்பருகி, காளை சுரும்பு - ஆண்வண்டுகள், செவ்வழிப்பாண் செய - செவ்வழிப் பண்ணைப்பாட, கொன்றை பொன் சொரிவ - கொன்றை மரங்கள் (கொடையாளர்போல) பொன்போலும் பூக்களைப் பொழிவன; அரும் தடம் கடல் - அளத்தற்கரிய பெரிய கடலானது, வளைஎடுத்து - தன்னிடத்துள்ள சங்கினை எடுத்து, ஆழியான் கையில் இருந்த சங்கு என இறைகொள - சக்கரப் படையையுடைய திருமாலின் கையில் இருந்த பாஞ்ச சந்நிய மென்னுஞ் சங்குபோலத் தங்கும்படி, பூவைமேல் எறிவ - காசாஞ் செடிமீது எறிவன எ-று. கரும்பொன் - இரும்பு. புன்னை நெய்தலுக்கும், பூவை முல்லைக்கும் உரியன. செவ்வழி - நெய்தற்பண். பாண்செயல் - பாடுதல். பொன்போலும் பூவைப் பொன் என்றார். மேலுரைத்தது காண்க. சுரும்பு பாணராகவும், கொன்றை பரிசிலளிப்போராகவும் தோன்றுமாறு நயம்படக் கூறினார். “ வரைச்சேரு முகின்முழவ மயில்கள்பல நடமாட வண்டுபாட விரைச்சேர்பொன் னிதழிதா மென்காந்தள் கையேற்கு மிழலையாமே” என்னும் ஆளுடைய பிள்ளையார் திருவாக்கும் காண்க. பூவை மாயோன் போலுமாகலானும், அவனும் முல்லைக் குரியனா கலானும், அவன் கையிலிருந்த சங்குபோல வென்றார். இறை கொளல் - இறுத்தல்; தங்குதல். முல்லைக்கும் நெய்தலுக்கும் மயக்கங்கூறியவாறு. (39) கழிந்த தெங்கினொண் பழம்பரீஇ முட்பலாக் கனிகீண் டழிந்த தேனுவர்க் கேணிபாய்ந் தகற்றுவ வுவரை வழிந்த தேன்மடற் கேதகை மலர்நிழல் குருகென் றொழிந்த தாமரைப் போதுபுக் கொளிப்பன கெண்டை. (இ-ள்.) கழிந்த தெங்கின் ஒண்பழம் பரீஇ - குலையினின்று நீங்கிய தென்னையின் ஒள்ளிய காய்களைப் பரித்தலால், முள்பலாக் கனி கீண்டு அழிந்த தேன் - முட்களையுடைய பலாப்பழங்கள் கிழிபட்டு ஒழுகிய தேன்கள், உவர்க்கேணி பாய்ந்து - உப்புக் கேணியிற் பாய்ந்து, உவரை அகற்றுவ - அவ்வுப்பைப் போக்குவன; தேன் வழிந்த - தேன்சிந்திய, மடல் கேதகை மலர்நிழல் - இதழ்களையுடைய தாழம்பூவின் நிழலை, குருகு என்று - கொக்கு என்று அஞ்சி, ஒழிந்த தாமரைப் போது - (அப்பறவை இருந்து) நீங்கிய தாமரைமலரில், புக்கு - புகுந்து, கெண்டை ஒளிப்பன - கெண்டை மீன்கள் மறைந்து கொள்வன எ-று. இச்செய்யுளின் பின்னிரண்டடிகளை “கேதகை நிழலைக் குருகென மருவிக் கெண்டைகள் வெருவு கீழ்க்கோட்டூர்” என்னும் திருவிசைப்பாவோடு ஒத்துநோக்குக. பரீஇ - பரித்து, சுமந்து ; எச்சத்திரிபு. கீண்டு ; கீழ்ந்து என்பதன் மரூஉ. பலா குறிஞ்சிக்கேயன்றி மருதத்திற்கு முரித்து. தெங்கு, பலா, தாமரை, கெண்டை மருதத்திற் குரியன. உவர்க்கேணி, கேதகை நெய்தற் குரியன. குருகு இரண்டிற்கு முரித்து. மருதத்திற்கும் நெய்தலுக்கும் மயக்கங் கூறியவாறு. “ காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப் பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கை போழ்ந்து” என்னும் சிந்தாமணிச் செய்யுள் இங்கு நோக்கற்பாலது. (40) ஆறு சூழ்கழிப் புலால்பொறா தசைந்துகூன் கைதை சோறு கால்வன வாம்பல்வாய் திறப்பன துணிந்து கூறு வாரெனக் குவளைகண் காட்டிடக் கூடித் தூறு வாரெனச் சிரித்தலர் தூற்றுவ முல்லை. (இ-ள்.) கூன்கைதை - வளைந்த தாழைகள், ஆறுசூழ் கழிபுலால் பொறாது - ஆறாகச் சூழ்ந்த உப்பங்கழியின் புலால் நாற்றத்தைப் பொறுக்கலாற்றாது, அசைந்து - (உடல்) நடுங்கி, சோறு கால்வன -(பூவினின்று மகரந்தந்தாங்கிய) சோற்றைக் கக்க, ஆம்பல்வாய் திறப்பன - ஆம்பல்கள் (அதனை உண்ணுங் குறிப்பின போன்று மலர்களாகிய) வாயைத் திறப்பன; குவளை துணிந்து கூறுவார் என- குவளைகள் (ஒருவன் தீயசெயலை) மனந்துணிந்து சொல் வார்போல, கண்காட்ட - (மலர்களாகிய) கண்ணாலறிவிக்க, முல்லை - முல்லைகள், கூடிச் சிரித்துத் தூறுவார் என - (ஒருவன் குற்றத்தைத் தம்முட்) கூடி நகைத்துத் தூற்றுகின்றவரைப் போல, அலர் தூற்றுவ - (மலர்தலாகிய) நகைத்தலைச் செய்து பழம்பூக்களைத் தூற்றுதல் செய்யும் எ-று. சோறு - மகரந்தம், அடிசில். அலர்தூற்றுவ என்பதில் பழிச்சொற்களைத் தூற்றுவன என்னும் குறிப்புமுளது. ஆம்பல் மலர்தலை வாய்திறப்பன என்றும், குவளை நெகிழ்தலைக் கண்காட்டிட என்றுங் கூறினார். கால்வன என்பது செயவெனெச்சப் பொருளில் வந்தது. நெய்தலோடு மருதத்திற்கும் முல்லைக்கும் மயக்கங் கூறியவாறு. (41) துள்ளு சேல்விழி நுளைச்சியர் சுறவொடு மருந்தக் கள்ளு மாறவுங் கூனலங் காய்தினை யவரை கொள்ளு மாறவுங் கிழங்குதேன் கொழுஞ்சுவைக் கன்னல் எள்ளு மாறவு ப்பன விடைக்கிடை முத்தம். (இ-ள்.) துள்ளு சேல் விழி நுளைச்சியர் - துள்ளுகின்ற கெண்டை மீன்போலுங் கண்களையுடைய நெய்தனிலப் பெண் களால், சுற வொடும் அருந்த - சுறா மீனோடும் உண்ணுதற் பொருட்டு, கள்ளுகொழும் சுவைக் கன்னல் - கள்ளையும் கொழுவிய இனிய கரும்பையும், மாறவும் - வாங்குதற் பொருட்டும், கூனலங்காய் தினைகிழங்கு தேன் - புளியங்காய் தினை கிழங்கு தேன் இவைகளை, மாறவும் - வாங்குதற்பொருட்டும், அவரை கொள்ளு எள்ளு மாறவும் - அவரை கொள் எள் இவைகளை வாங்குதற் பொருட்டும், இடைக்கு இடை முத்தம் அளப்பன - அளவுக்கு அளவு முத்துக்கள் அளக்கப் பெறுவன எ-று. கள், கன்னல் மருதத்திற்கும்; கூனலங்காய், தினை, கிழங்கு, தேன் குறிஞ்சிக்கும்; அவரை, எள், கொள் முல்லைக்கு முரியன. கள்ளு, கொள்ளு, எள்ளு என்பவற்றில் உகரமும், கூனலங்காய் என்பதில் அம்மும் சாரியை. மாறல் - ஒரு பண்டங் கொடுத்து மற்றொரு பண்டம் வாங்கல்; பண்ட மாற்று என்னும் வழக்குங் காண்க; ஈண்டு வாங்க என்னுந் துணையாய் நின்றது. நெய்தலோடு மருதத்திற்கும், முல்லைக்கும், குறிஞ்சிக்கும் மயக்கங் கூறியவாறு. சொல்லானும் மயக்கங் காட்டுவார் போன்று இச்செய்யுளில் சொற்களை முறை பிறழ வைத்திருப்பதும் ஓர் வியப்பு. (42) அவமி கும்புலப் பகைகடந் துயிர்க்கெலா மன்பாம் நவமி குங்குடை நிழற்றிமெய்ச் செய்யகோ னடாத்திச் சிவமி கும்பர ஞானமெய்த் திருவொடும் பொலிந்து தவமி ருந்தர சாள்வது தண்டமிழ்ப் பொதியம். (இ-ள்.) அவம் மிகும் - கேடு மிகுந்த, புலப்பகை கடந்து - புலனாகிய பகையை வென்று, உயிர்க்கு எலாம் - உயிர்கள் அனைத்திற்கும், அன்பு ஆம் நவம் மிகும் குடை நிழற்றி - அருளாகிய புதுமைமிக்க குடையால் நிழலைச் செய்து, மெய்ச் செய்ய கோல் நடாத்தி - வாய்மையாகிய செங்கோலை நடத்தி, சிவம் மிகும் - சிவப்பேறு மிகுதற்குக் காரணமாயுள்ள, பரஞான மெய்த் திருவொடும் பொலிந்து - சிவஞானமாகிய அழியாச் செல்வத்துடன் விளங்கி, தவம் இருந்து அரசு ஆள்வது - தவமானது வீற்றிருந்து ஆட்சி புரிவதற்கிடமாயுள்ளது, தண் தமிழ்ப் பொதியம் - குளிர்ந்த செந்தமிழையுடைய பொதியின் மலை எ-று. புலம் - ஊறு முதலியன; மெய் முதலிய பொறிகளுமாம். தவத்திற் கேற்ப அன்பு என்பதற்கு அருளெனப் பொருள் கூறப்பட்டது. சிவம் - மங்கலமுமாம். புலனடக்கல், அருள், வாய்மை, ஞானம் என்பன தவத்திற்குச் சிறந்தன வாதல் குறிப்பிட்டவாறு. தவராச யோகிகளா யுள்ளார்கட்கு இருப்பிடமாதல் பற்றித், தவமே அரசாளுதற் கிடனா யுள்ளது என்றார். தமிழை வளர்த்த ஆசிரியர் அகத்தியனார்க்கு என்றும் உறைவிடமாகலின் தண்டமிழ்ப் பொதியம் என்றார். (43) வான யாறுதோய்ந் துயரிய மலயமே முக்கண் ஞான நாயக னம்மலை போர்த்தகார் நால்வாய் யானை யீருரி யம்மழை யசும்பதன் புண்ணீர் கூனல் வான்சிலை குருதிதோய் கோடுபோன் றன்றே. (இ-ள்.) வானயாறு தோய்ந்து உயரிய மலயம் - ஆகாய கங்கையை அளாவி உயர்ந்த பொதியின் மலை, முக்கண் ஞான நாயகன் - மூன்று கண்களையுடைய ஞான முதல்வனாகிய சிவபிரானையும், அம்மலை போர்த்த கார் - அப்பொதியின் மலையாற் போர்க்கப் பெற்ற முகில், நால் வாய் யானை ஈர் உரி - தொங்குகின்ற வாயினையுடைய யானையினின்றும் உரித்து (அவ்விறைவனாற் போர்க்கப் பெற்ற) தோலையும், அம்மழை அசம்பு - அம் முகிலின் மழைத்துளிகள், அதன் புண்நீர் - அவ்வியானையின் குருதியையும், கூனல் வான்சிலை - (அதனிற் காணப்படும்) வளைந்த இந்திரவில், குருதி தோய் கோடு- (அவ்வியானையின்) உதிரந் தோய்ந்த கொம்பினையும், போன்ற ன்று - ஒத்தது எ-று. வானயாறு தோய்தல் மலயத்திற்கும் இறைவனுக்கும் பொது. தோய்ந்து என்பதனை மலைக்கேற்றுங்கால் தோய என்பதன் திரிபெனக் கொள்ளலுமாம். ஏகாரமிரண்டும் அசை. யானையுரித்த வரலாறு:- யானையுருவினையுடைய கயாசுரன் என்பவன் பிரமனைக்குறித்து அருந்தவம் புரிந்து வரங்கள் பெற்றுத் தேவர் முதலியோர்க்கு இடுக்கண் விளைத்துத் திரியாநின்றவன், ஒரு கால் தன்னைக் கண்டஞ்சிய முனிவர்களைத் துரந்து வந்தனன். அப்பொழுது, முனிவர்கள் சிவபெருமானைச் சரண்புக இறைவன் அவனைக் கொன்று தோலையுரித்துப் போர்த்தருளினன் என்பது; இதனைக் கந்தபுராணத்துட் காண்க. (44) சுனைய கன்கரைச் சூழல்வாய்ச் சுரும்புசூழ் கிடப்ப நனைய விழ்ந்தசெங் காந்தண்மே னாகிள வேங்கைச் சினைய விழ்ந்தவீ கிடப்பபொன் றோய்கலத் தெண்ணீர் அனைய பொன்சுடு நெருப்பொடு கரியிருந் தனைய. (இ-ள்.) சுனை - சுனையும், அகன்கரைச் சூழல்வாய் - அதன கன்ற கரையின்கண், சூழ்கிடப்ப சுரும்பு - சுற்றி மொய்த்துக் கிடக்கும் வண்டுகளும், பொன்தோய் தெண்நீர் கலம் கரி அனைய - பொன்னைக் காய்ச்சித் தோய்க்கப் பெறுகின்ற தெளிந்த நீரையுடைய பாத்திரத்தையும் கரியையும் ஒத்தன; நனை அவிழ்ந்த செங்காந்தள் மேல் - முகைவிரிந்த செங்காந்தள் மலர்மேல், நாகு இள வேங்கைச்சினை அவிழ்ந்தவீகிடப்ப - மிக்க இளமையாகிய வேங்கை மரத்தின் கிளையின் மலர்ந்த பூக்கள் கிடப்பன, நெருப் பொடு சுடுபொன் இருந்து அனைய - நெருப்பின் மேல் அதனாற் சுடப் படுகின்ற பொன் இருந்தால் ஒத்தன எ-று. பொருளுக் கியையச் சொற்கள் மாற்றி யுரைக்கப்பட்டது. இது மொழிமாற் றெனப்படும். என்னை? “ மொழிமாற் றியற்கை சொன்னிலை மாற்றிப் பொருளெதி ரியைய முன்னும் பின்னுங் கொள்வழிக் கொளாஅல்” என ஆசிரியர் தொல்காப்பியனார் கூறினாராகலின். பின்னூலார் இதனைக் கொண்டு கூட்டென்ப. நாகிள; ஒருபொருளிருசொல். கிடப்ப; வினைப்பெயர். இருந்தாலனைய என்பது விகாரமாயிற்று. (45) குண்டு நீர்ப்படு குவளைவாய்க் கொழுஞ்சினை மரவம் வண்டு கூப்பிடச் செம்மறூய்ப் புதுமது வார்ப்ப அண்டர் வாய்ப்பட மறைவழி பொரிசொரிந் தானெய் மொண்டு வாக்கிமுத் தீவினை முடிப்பவ ரனைய. (இ-ள்.) குண்டு நீர்ப்படு குவளைவாய் - ஆழ்ந்த சுனை நீரிலுள்ள செங்குவளை மலரில், வண்டு கூப்பிட - வண்டுகள் ஒலிக்க, செம்மல் தூய் - பழம்பூக்களைத் தூவி, புதுமது வார்ப்ப - புதியதேனைச் சொரி வனவாகிய, கொழும் சினை மரவம் - கொழுவிய கிளைகளை யுடைய குங்கும மரங்கள், அண்டர் வாய்ப்பட - தேவர்களின் வாயில் சேரும்படி, மறைவழி - மந்திர வொலியுடன், பொரி சொரிந்து - நெற்பொரியைச் சொரிந்து. ஆன்நெய் மொண்டுவாக்கி - பசுநெய்யை (ச்சுருவையால்) முகந்து வார்த்து, முத்தீவினை முடிப்பவர் அனைய - மூன்று வகையாகிய நெருப்பையுடைய வேள்வி வினையை முடிக்கும் முனிவர்களை ஒத்தன எ-று. செம்மல் - பழம்பூ. வாக்கி - வார்த்து. முத்தீ - காருகபத்தியம், ஆகவனீயம், தென்றிசை யங்கி என்பன. செங்குவளை, மரவம், வண்டினொலி, பழம்பூ, புதுமது என்பவற்றுக்கு முத்தீ, முனிவர், மறையொலி, பொரி, நெய் என்பன முறையே உவமங்களாம். தூவி யென்பது தூய் என விகாரமாயிற்று. முகந்தென்பது மொண்டு என மருவிற்று. (46) அகிலு மாரமுந் தழன்மடுத் தகழ்ந்தெறிந் தழல்கால் துகிரு மாரமுந் தொட்டெறிந் தைவனந் தூவிப் புகரின் மால்கரி மருப்பினால் வேலிகள் போக்கி இகலில் வான்பயி ரோம்புவ வெயினர்தஞ் சீறூர். (இ-ள்.) எயினர்தஞ் சீறூர் - குறவர்களின் சீறூர்கள், அகிலும் ஆரமும் தழல் மடுத்து - அகில் சந்தன மரங்களைத் தீயினால் உண்பித்து, அகழ்ந்து எறிந்து - (அவற்றின் வேர்களைக்) கல்லி எறிந்து, அழல்கால் துகிரும் ஆரமும் தொட்டு எறிந்து - நெருப்புப் போலும் ஒளிவீசும் பவளத்தையும் முத்தையும் தோண்டி வெளியில் வீசி, ஐவனம் தூவி - மலைநெல்லை விதைத்து. புகர் இல் - குற்ற மில்லாத, மால்கரி மருப்பினால் வேலிகள் போக்கி - பெரியயானைக் கொம்புகளால் வேலிகள் கோலி, இகல் இல் - பகை இல்லையாம்படி, வான்பயிர் ஓம்புவ - உயர்ந்த பயிர்களைப் பாதுகாப்பன எ-று. ஆரம் - சந்தனம், முத்து, சீறூர் - குறிஞ்சி நிலத்தூர். சீறூரிலுள்ளார் அனைவரும் என்பதற்குச் சீறூர் என்றார். அகில் முதலிய விலையுயர்ந்த பொருள்களைக் கழித்து ஐவனந்தூவி ஓம்புவ என்றது, குறவர்களின் குறிய வாழ்க்கையைக் குறிப்பிட்டவாறு; அகில் முதலியன நெற்போல இன்றியமையாதனவல்ல வென்பது மாயிற்று. மலையின் வளங் கூறியதுமாயிற்று. வருஞ்செய்யு ளிரண்டிற்கும் இங்ஙனமே கொள்க. (47) அண்ட வாணருக் கின்னமு தருத்துவோர் வேள்விக் குண்ட வாரழற் கொழும்புகை கோலுமக் குன்றிற் புண்ட வாதவே லிறவுளர் புனத்தெரி மடுப்ப உண்ட காரகிற் றூமமு மொக்கவே மயங்கும். (இ-ள்.) அண்டவாணருக்கு - தேவர்களுக்கு, இன் அமுது அருத்துவோர் - இனிய அவியுணவை உண்பிக்கும் முனிவரின், வேள்விக்குண்ட ஆர்அழல் கொழும்புகை - வேள்விக் குண்டத்தில் நிறைந்த தீயினின்று மேலெழும். கொழுவிய புகையானது, கோலும் அக்குன்றில் - சூழும் அப்பொதியின்மலையில், புண் தவாத வேல் இறவுளர் - புலால் நீங்காத வேலினையுடைய குறவர்கள், புனத்து எரிமடுப்ப - காட்டில் தீயைமூட்ட, உண்ட கார் அகில் தூமமும் - அதனால் உண்ணப்பட்ட கரிய அகிலின் புகையும், ஒக்கவே மயங்கும்- அவ்வேள்விப் புகையின் உடனாகவே மயங்கா நிற்கும் எ-று. வாழ்நர் என்பது வாணர் என மருவிற்று. கொலைத் தொழிலுடையாரென்பார் ‘புண்ட வாதவே லிறவுளர்’ என்றார். தவாத, தாவாத என்பதன் விகாரம்; தபு என்னும் பகுதி திரிந்து முடிந்ததுமாம். சுட்டு, வருவிக்கப்பட்டது. இடையடியாகப் பிறந்த ஒக்க வென்னும் வினையெச்சம் உடன் என்னும் பொருட்டு. (48) கருவி வான்சொரி மணிகளுங் கழைசொரி மணியும் அருவி கான்றபன் மணிகளு மகன்றலை நாகத் திரவி கான்றசெம் மணிகளும் புனங்கவ ரினமான் குருவி வீழ்ந்திடக் கொடிச்சியர் கோத்தெறி கவண்கல். (இ-ள்.) கருவி வான் சொரி மணிகளும் - தொகுதியையுடைய மேகங்கள் சொரிந்த முத்துக்களும், கழைசொரி மணியும் - மூங்கில்கள் சொரிந்த முத்துக்களும், அருவிகான்ற பன்மணிகளும் - அருவிகள் ஒதுக்கிய பல்வகை மணிகளும், அகன்தலை நாகத்து - அகன்ற படத்தினையுடைய நாகத்தினின்றும், கான்ற - உமிழப் பட்ட, இரவிசெம்மணிகளும் - சூரியன்போலும் சிவந்த மணி களும், புனம் கவர் இனம்மான் குருவி வீழ்ந்திட - தினைப்புனத்தின் கதிர்களைக் கவர்கின்ற கூட்டமாகிய மான்களும் குருவிகளும் வீழும்படி, கொடிச்சியர் கவண்கோத்து எறிகல் - குறமகளிர் கவணில்கோத்து எறிகின்ற கற்களாவன எ-று. கருவி - தொகுதி;‘கருவிதொகுதி’ என்னும் தொல்காப்பியச் சூத்திரவுரையில்,‘கருவிவான மென்புழிக் கருவி, மின்னு முழக்கு முதலாயவற்றது தொகுதி’ எனச் சேனாவரையர் எழுதியிருப்பது இங்கே அறியற்பாலது. நாகத்து என்பதில் இன் உருபு தொக்கது. புனம் என்றது புனத்திலுள்ள கதிர்களை உணர்திற்று. மான் குருவி, எண்ணும்மை தொக்கன. கொடிச்சியர் - குறிஞ்சிநில மகளிர். (49) மாய வன்வடி வாயது வைய மாலுந்திச் சேய பங்கய மாயது தென்னனா டலர்மேற் போய மென்பொகுட் டாயது பொதியமப் பொகுட்டின் மேய நான்முக னகத்தியன் முத்தமிழ் வேதம். (இ-ள்.) வையம் மாயவன் வடிவு ஆயது - புவியானது திருமாலின் வடிவம் போன்றது; தென்னன்நாடு - (அப்புவியின் ஒரு கூறாகிய) பாண்டியன் நாடானது, மால்சேய உந்திபங்கயம் ஆயது - அத்திருமாலின் சிவந்த உந்தித்தாமரை போன்றது; பொதியம் - (அந்நாட்டின்) பொதியின் மலையானது. அலர்மேல் போய மென்பொகுட்டு ஆயது - அத்தாமரை மலர்மேல் நீண்ட மெல்லிய கொட்டை போன்றது; அகத்தியன் - (அம்மலையின்கண்) அகத்திய முனிவன், அப்பொகுட்டின் மேய நான்முகன் - அக்கொட்டையி லிருக்கும் நான்முகன் (போல்வான்); முத்தமிழ் - (அம் முனிவன் போற்றி வளர்த்த) மூன்று பிரிவினதாகிய தமிழானது, வேதம் - (அந்நான்முகன் அருளிய) வேதம் (போன்றது) எ-று. மாயவன் - கருநிற முடையவன்; மாயைவல்லானும் ஆம். பங்கயம் - சேற்றில் முளைப்பது; காரண விடுகுறி. தென்னன் - தெற்கின் கண்ணதாய நாட்டையாள்பவன், பாண்டியன். முத்தமிழ்- இயல், இசை, நாடகம் என்பன. வழக்குஞ் செய்யுளுமாகிப் பொருளுணர்த்து வதாய தமிழ் இயற்றமிழ். பண்ணுடன் கூடியது இசைத்தமிழ். பண்ணொடும் அபிநயத்தொடுங் கூடியது நாடகத் தமிழ். இயலின்றி இசையும், இயல் இசையின்றி நாடகமுமில்லை. எனவே, இவை மூன்றும் மொழியின் மூவகை யியக்கத்தைக் குறிப்பனவென்க. தமிழ் இம்மூன்று துறையிலும் எண்ணிறந்த நூல்களை உடைத்தா யிருந்தமையின் முத்தமிழ் என வழங்கப் பெறுவதாயிற்று. முத்தமிழை வேதமெனக் கூறவந்தவர் அதற் கேற்பப் புவிமுதலியவற்றை மாயவன் வடிவு முதலியவாகக் கூறினர். அகத்தியன் தென்மதுரை யகத்துத் தலைச்சங்கத்து வீற்றிருந்து தமிழாராய்ந்தும், தொல்காப்பியன் முதலிய பன்னிருவர்க்குத் தமிழறிவுறுத்தியும், அகத்தியமென்னும் முத்தமிழிலக்கணத்தை அருளிச்செய்தும் பல்லாற்றானும் தமிழை வளம்படுத்திச் செந் தமிழ்க் குரவனாகத் திகழ்தமையின், தமிழை அவன் வெளியிட்டா னாக உபசரித்துக் கூறுவர். அகத்தியற்கு முன்னும் தமிழ் உயரிய. நிலையிலிருந்ததென்பதே ஆராய்ச்சியாற் பெறப்படும் உண்மை. இதனை அகத்தியர் என்னும் உரைநூலுட் காண்க. சேய; செம்மை யென்னும் பண்படியாக வந்த குறிப்புவினைப்பெயரெச்சம். மேவிய என்பது மேய என விகாரமாயிற்று. (50) ஏக மாகிய மேருவும் பொதியமே யிரும்பொன் ஆகு மேருவைச் சூழ்ந்தசாம் பூநத யாறு நாக ராடுதண் பொருநையே நாவலா றுடுத்த போக பூமியும் பொருநைசூழ் பூமியே போலும். (இ-ள்.) ஏகம் ஆகிய மேருவும் - ஒப்பற்ற மேருமலையும், பொதிய மே - பொதியின் மலையே; இரும்பொன் ஆகும் மேருவை - பெரிய பொன்மயமாகிய மேருமலையை, சூழ்ந்த - சுற்றியுள்ள, சாம்பூநதயாறும் - சாம்பூநதம் என்னும் நதியும், நாகர் ஆடு தண் பொருநையே - (அப்பொதியின் மலையைச் சூழ்ந்த) தேவர்களும் நீராடுதற்குரிய தண்ணிய பொருநை நதியே; நாவல் ஆறு உடுத்த போக பூமியும் - நாவலாற்றால் சூழப்பெற்ற போக பூமியும், பொருநைசூழ் பூமியே போலும் - பொருநையால் சூழப்பெற்ற பூமியோ எ-று. இணையாயது பிறிதின்மையின் ‘ஏகமாகிய’ என்றார். மேரு முதலியவாகக் கூறப்படுவனவெல்லாம் பொதியின் முதலியவே போலும் எனத் தங்குறிப்பினை யேற்றுவார் ‘பூமியே போலும்’ என்றார் எனலுமாம். போலும்; ஒப்பில்போலி; உவமச் சொல் லாக்கி, மேரு முதலியன பொதியின் முதலியவற்றை ஒக்குமெனக் கூறின் தடுமாறுவமாம்; இதனை விபரீத வுவமையென்றுங் கூறுவர். சாம்பூநதம் என்றதனைத் தமிழால் ‘நாவலாறு’ என்றார். நாவலாறு - நாவற்கனிச் சாறாகிய ஆறு. நாகர் - தேவர். போகபூமி - இன்பநுகர்ச்சி மாத்திரையே யுடையபூமி. மேரு முதலியவற்றின் பெற்றியைக் கந்தபுராண, அண்ட கோச படலத்திற் காண்க. உம்மைகள் உயர்வு சிறப்புப் பொருளான. (51) சிறந்த தண்டமி ழாலவாய் சிவனுல கானாற் புறந்த யங்கிய நகரெலாம் புரந்தரன் பிரமன் மறந்த யங்கிய நேமியோ னாதிய வானோர் அறந்த யங்கிய வுலகுரு வானதே யாகும். (இ-ள்.) சிறந்த தண்தமிழ் ஆலவாய் - சிறந்த தண்ணிய தமிழையுடைய திருவாலவாயனாது, சிவன் உலகு (உரு) - சிவலோக வடிவாயுள்ளது; ஆனால் - அங்ஙனமாயின், புறம் தயங்கிய நகர் எலாம் - (அவ்வாலவாயின்) புறத்தில் விளங்குகின்ற நகரங்கள் அனைத்தும், புரந்தரன் பிரமன் - இந்திரன் பிரமன், மறம் தயங்கிய நேமியோன் - வீரம் விளங்குகின்ற சக்கரப் படையையுடைய திருமால், ஆதிய வானோர் - முதலிய தேவர்களின், அறம் தயங்கிய உலகு உரு ஆனதே ஆகும் - தருமம் விளங்குகின்ற உலகங்களின் வடிவமானதே யாகும் எ-று. சங்கமிருந்து தமிழாராய்ந்த பதியாகலின் தண்டமிழாலவாய் என்றார். ஆலாவாய் சிவனுலகானால் என்றது, அத் திருப்பதியிலே வரகுணனுக்குச் சிவலோகங் காட்டி யருளினமையை உட்கொண் டென்க. இதனை இப்புராணத்து வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய படலத்தானறிக. அன்றி இறைவன், உமை, முருகவேள் என்னும் மூவரும் இருந்து அரசுபுரிந்தமை கருதியுமாம். “அப்பாண்டி நாட்டைச் சிவலோக மாக்குவித்த” என்பது பாண்டி நாட்டையே சிவலோகமாகக் கூறுகின்றது. ஆலவாய் சிவனுல கென்பது யாவரானும் தெளியப்படுதலின் அதுபோலப் புறந் தயங்கிய நகரங்கள் ஏனைவானோரின் உலகங்களாமென்பது தெளியப்படுமென்பார் சிவனுலகானால் என்றார். நீரின் றமையா துலகெனின் என்பதற்குப் பரிமேலழகரெழுதிய உரையுங் காண்க. நகரெலாம் ஆனது என்றது, பன்மை யொருமை மயக்கம். (52) வளைந்த நுண்ணிடை மடந்தையர் வனமுலை மெழுகிக் களைந்த குங்குமக் கலவையுங் காசறைச் சாந்தும் அளைந்த தெண்டிரைப் பொருநையோ வந்நதி ஞாங்கர் விளைந்த செந்நெலும் கன்னலும் வீசுமவ் வாசம். (இ-ள்.) வளைந்த நுண்இடை மடந்தையர் - நுடங்கிய நுண்ணிய இடையையுடைய மகளிர், வனம் முலை மெழுகிக் களைந்த - (தங்கள்) அழகிய கொங்கைகளிற் பூசிக்கழுவிய, குங்குமக் கலவையும் காசறைச் சாந்தும் அளைந்து - குங்குமப்பூக்கலந்த கலவையும் கத்தூரிகலந்த சந்தனமும் அளையப்பெற்ற, தெண்திரைப் பொருநையோ - தெளிந்த அலைகளையுடைய பொருநையாறு மட்டுமா (கமழ்வது), அந்நதி ஞாங்கர் விளைந்த - அவ்வாற்றின் பக்கங் களில் விளைந்த, செந்நெலும் கன்னலும் - செந்நெல்லும் கரும்புங் கூட, அவ்வாசம் வீசும் - அவற்றின்மணங் கமழா நிற்கும் எ-று. காசறை - கத்தூரி. அளைதல் - விரவுதல். பொருநையோ என்பதில் ஓகாரம் பிரிநிலைப் பொருளது. (53) பொதியி லேவிளை கின்றன சந்தனம் பொதியின் நதியி லேவிளை கின்றன முத்தமந் நதிசூழ் பதியி லேவிளை கின்றன தருமமப் பதியோர் மதியி லேவிளை கின்றன மறைமுதல் பத்தி1 (இ-ள்.) சந்தனம் - சந்தன மரங்கள், பொதியிலே விளைகின்றன - பொதியின்மலையின் கண்ணே உண்டாகின்றன; முத்தம் - முத்துக்கள், பொதியின் நதியிலே விளைகின்றன - பொதியின் மலையினின்றும் வருகின்ற பொருநையாற்றின் கண்ணே உண்டா கின்றன; தருமம் - அறங்கள், அந்நதிசூழ் பதியிலே விளைகின்றன - அப்பொருநையாற் சூழப்பெற்ற நகரங்களிலே உண்டாகின்றன; மறைமுதல் பத்தி - வேத முதல்வனாய சிவபிரான் திருவடிகளிற் பத்திகள், அப்பதியோர் மதியிலே விளைகின்றன - அந்நகரத்தோர் அறிவின்கண்ணே உண்டாகின்றன எ-று. பொதியிலிற் சந்தனமும்; தென்கடலில் முத்தும் உண்டாவன வென்று தொன்னூல்கள் கூறாநிற்கும்; “ குடமலைப் பிறந்த வாரமு மகிலுந் தென்கடன் முத்தும் குணகடற் றுகிரும்”” என்பது பட்டினப்பாலை. மறைமுதல் - சிவபெருமான்; முன்னரும் மறைமுதலடியார் தம்மை எனக் கூறியது காண்க. பத்தி, பலதிறப்படு மாகலின் பன்மை கூறினார். பொதியில் என்னும் ஏழனுருபு தொக்கது. (54) கடுக்க வின்பெறு கண்டனுந் தென்றிசை நோக்கி அடுக்க வந்துவந் தாடுவா னாடலி னிளைப்பு விடுக்க வாரமென் காறிரு முகத்திடை வீசி மடுக்க வுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ. (இ-ள்.) கடு கவின்பெறு கண்டனும் - நஞ்சினால் அழகுபெற்ற திருமிடற்றையுடைய இறைவனும், தென்திசை நோக்கி - தென் திசையைக் குறித்து, அடுக்க வந்துவந்து ஆடுவான் - நெருங்க வந்துவந்து ஆடுதல், ஆடலின் இளைப்பு விடுக்க - திருநிருத்தத் தாலுண்டாகிய மெலிவை நீக்குதற்பொருட்டு, ஆரம் மென் கால்வீசி - சந்தனச்சோலையிற் படிந்து வருகிற மெல்லிய தென்றற்காற்று வீசப்பெற்று, திருமுகத்திடை மடுக்கவும் - (அதனைத் தனது) திருமுகத்தின்கண் ஏற்கவும், தமிழ் திருச்செவி மாந்தவும் அன்றோ - தமிழின் சுவையைத் திருச்செவியால் நுகரவும் அல்லவா எ-று. தென்றிசை - தெற்கின்கண்ணதாய தமிழ்நாடு; மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திடத், தீதிலாத் திருத் தொண்டத் தொகைதரப், போதுவார்’ எனப் பெரியபுராணங் கூறுதலுங் காண்க. இறைவன் திருக்கைலை முதலியவற்றை விடுத்துத் தமிழ்நாட்டிலே திருநடம்புரிவதும், தமிழ்நாட்டினுள்ளும் திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, திருக்குற்றாலம் என்பவற்றில் முறையானே நெருங்கிவந்தாடுவதும் என்பார். தென்றிசை நோக்கி அடுக்கவந்து வந்தாடுவான்’ என்றார். தெற்கு நோக்கியாடுதலுங் கொள்க. தமிழ் திருச்செவிமாந்தவும் என்றது, வேறெம்மொழிக்கு மில்லாத அதன் இனிமை கருதி யென்க. அடுக்கு உவகை குறித்தது; வந்து உவந்து எனப் பிரித்தலும் ஆம். வீசி - வீசப்பட்டு. கண்டனும்; உம் உயர்வு சிறப்பு. ஆடுவான் என்பது தொழிற்பெயராய் நின்றது; தற்குறிப்பேற்றவணி. (55) விடையு கைத்தவன் பாணினிக் கிலக்கண மேனாள் வடமொ ழிக்குரைத் தாங்கியல் மலயமா முனிக்குத் திடமு றுத்தியம் மொழிக்கெதி ராக்கிய தென்சொல் மடம கட்கரங் கென்பது வழுதிநா டன்றோ. (இ-ள்.) விடை உகைத்தவன் - இடபவாகனத்தைச் செலுத்து கின்ற சிவபெருமான், மேல்நாள் - முன்னொருகாலத்திலே, பாணினிக்கு - பாணினிமுனிவனுக்கு, வடமொழிக்கு இலக்கணம் உரைத்தாங்கு - சமஸ்கிருத மொழிக்கு வியாகரண சூத்திரத்தை அருளிச் செய்தது போல, மலயம் மாமுனிக்கு - பொதியின் மலையிலுள்ள பெருமை பொருந்திய அகத்திய முனிவனுக்கு, இயல் திட முறுத்தி - தமிழிலக் கணத்தைத் திடம்பெற அறிவுறுத்தி, அம் மொழிக்கு - அவ்வட மொழிக்கு, எதிர் ஆக்கிய - எதிர்மொழியாகச் செய்த, தென்சொல் மடமகட்கு - தென்மொழியாகிய தமிழ் நங்கைக்கு, அரங்கு என்பது - நடனசாலையென உயர்ந்தோரால் புகழ்ந்து கூறப்படுவது, வழுதிநாடு அன்றோ - பாண்டி நாடு அல்லவா எ-று. பாணினி என்பவர் காந்தாரநாட்டிலே சலாது நகரத்திலே பாணினி என்பானுக்குத் தாக்ஷி என்பாள் வயிற்றுப்பிறந்த இளமையிலே மந்தமதி யுடையானென ஆசிரியனாலும் பிறராலும் அவமதிக்கப் பட்டுப் பின் சிவனை நோக்கித் தவம்புரிந்து மகேசுவர சூத்திர உபதேசம் பெற்றுப் பலகலையினும் வல்லவராகி வடமொழிக்குச் சிறந்த தோரிலக்கணம் இயற்றின ரென்ப. இவரியற்றிய வியாகரணம் பாணினீயம் எனப்படும். இதனைக் காசுமீர நாட்டின் அரசனாகிய கானிட்கனது அவைக்களத்தே அரங்கேற்றின ரென்பர். இந்நூலுக்கு உரை கண்டவர்கள் வரருசியும், பதஞ்சலியுமாவர். - பாணினியின்காலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தெனச்சிலரும், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதெனச் சிலரும் கூறாநிற்பர். எங்ஙனமாயினும் பாரத இராமாயண காலங்களுக் கெல்லாம் முன்னரே தென்மதுரை யகத்துத் தலைச் சங்கப் புலவராய்த் திகழ்ந்த ஆசிரியர் அகத்தியனார்க்குப் பாணினி மிகவும் பிற்பட்டவரென்பதுதேற்றம். எனவே சிவபெருமான் பாணினிக்கு முதற்கண் இலக்கணம் அறிவுறுத்திப் பின்பு அகத்தியர்க்கு அறிவுறுத்தின ரென்பது சிறிதும் பொருந்தாது ஆகலின் ‘மேனாள்’ என்பதற்கு முன்னொருகாலத்தில் எனப் பொதுவகையாகப் பொருள் கொள்ளப்பட்டது. இப் புராணமியற்றிய ஆசிரியரும் இவரனைய பிறரும் பாணினீயத்தையே முற்பட்டதாகக் கொண்டனரெனினும், இன்னோர் சரித்திர ஆராய்ச்சியைப் பொருளாகக் கொண்டவரல்ல ராகலின் இவர்கள் கூற்று இவ்வுழித் தவறென எடுத்துக்காட்டுதலால் இவர் பெருமைக்கு இழுக்கொன்று மின்றென்க. அகத்தியர் சிவபெருமானிடத்தே தமிழ் கேட்டதனை. “ உழக்குமறை நாலினு முயர்ந்துலக மோதும் வழக்கினு மதிக்கவியி னும்மரபி னாடி நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண் தழற்புரை சுடர்க்கடவு டந்தமிழ் தந்தான்” என்று கம்பருங் கூறியுள்ளார். பரத கண்டத்தின் தெற்கிலே தமிழும், வடக்கிலே ஆரியமும் சிறந்து விளங்கினமையின் இவற்றை முறையே தென்மொழி, வடமொழி யென்பர். திடமுறுத்தி - உறுதிபெற அறிவுறுத்தி. சேர, சோழ மண்டலங்களும் தமிழ் நாடேயாயினும், பல்லாயிரம் ஆண்டுகள் சங்கமிருந்து தமிழாராய்ந்தது பாண்டிநாடகலின், அதனையே அரங்கென்றார். மடம் - மென்மை. (56) கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக்1 கிடந்ததா வெண்ணவும் படுமோ. (இ-ள்.) கண்நுதல் பெரும் கடவுளும் - நெற்றியிற் கண்ணை யுடைய முதற் கடவுளாகிய சிவபெருமானும், கழகமோடு அமர்ந்து - சங்கத்தின்கண் வீற்றிருந்து, பண்உற - செப்பமுற, தெரிந்து ஆய்ந்த - ஆராய்ந்து தெரிந்த, இப்பசுந்தமிழ் - இப் பசிய தமிழ் மொழியானது, ஏனை மண்இடை - மற்றை நிலங்களினுள்ள, இலக்கண வரம்பு இலா - இலக்கணவரையறை இல்லாத, சிலமொழிபோல் - சிலமொழிகளைப் போல, எண் இடை - எண்ணின்கண், படக்கிடந்ததா - அமையக்கிடந்ததாக, எண்ணவும் படுமோ - நினைக்கவுங் கூடுமோ (கூடாது) எ-று. சிவபெருமான் கழகமோடமர்ந்து தமிழாராய்ந்ததனை “தலைச் சங்க மிருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத் தொன்பதின்மர் என்ப” என்னும் இறையனாரகப் பொருளுரையானும், இப் புராணத்தின் சங்கப்பலகை கொடுத்த படலத்தில், “ பொன்னின் பீடிகை யென்னும் பொன்னாரமேல் துன்னு நாவலர் சூழ்மணி யாகவே மன்னி னார்நடு நாயக மாமணி என்ன வீற்றிருந் தார்மது ரேசரே” “ நதிய ணிந்தவர் தம்மொடு நாற்பத்தொன் பதின்ம ரென்னப் படும்புல வோரெலாம் முதிய வான்றமிழ் பின்னு முறைமுறை மதிவி ளங்கத் தொடுத்தவண் வாழுநாள்” என வருதலானும், நம்பி திருவிளையாடற் புராணத்தானு மறிக. சேக்கிழார்குரிசிலும் திருத்தொண்டர் புராணத்தில், “ சென்றணைந்து மதுரையினிற் றிருந்தியநூற் சங்கத்துள் அன்றிருந்து தமிழாராய்ந் தருளிய வங்கணர்” எனவும், “ திருவாலவாயில், எம்மைப் பவந்தீர்ப்பவர் சங்கமிருந்தது” எனவும் கூறியருளினார். கழகமோடு - கழகத்தில்; உருபுமயக்கம், புலவர்களோடு எனினும் ஆம். பசுந் தமிழ் என்றது, என்றும் இளமைச் செவ்வி குன்றாத கன்னித்தமிழ் என்றவாறு. ஏனைமண் இவையென்பதனை. “ சிங்களஞ் சோனகஞ் சாகஞ் சீனந் துளுக்குடகம் கொங்கணங் கன்னடங் கொல்லந்தெ லுங்கங்க லிங்கம்வங்கம் கங்க மகதங்க டாரங் கவுடங் கடுங்குசலம் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே” என்னுஞ் செய்யுளாலறிக. சில என்றதும் மொழிகளின் எளிமை தோன்ற நின்றது. எண்ணிடைப் படுதலாவது அவற்றை யெண்ணுங் கால் அவற்றுடன் ஒன்றாகச் சேர்த்து எண்ணப்படுவது. எண்ணிடப் பட என்பது பாடமாயின் எண்ணப்பட எனப் பொருளுரைக்க. கடவுளும் பண்ணுறத் தெரிந்தாய்ந்ததும், பசுமையும், இலக்கண வரம்பு முடையதுமாகிய தமிழை, அவற்றுள் ஒன்றேனும் பெறாத ஏனைமொழிகளுடன் சேர்த்தெண்ணுதல் தகுதியன்றென்பதாம். இவ்வியல்பு வடமொழிக்கு மின்றாகலின், பொதுப்பட்ட‘மொழி போல்’ என்றார். எண்ணவும் படுமோ என்றதனால் சொல்லுதல் கூடாதென்பது கூறவேண்டாதாயிற்று. கடவுளும் என்றதில் உம்மை; உயர்வு சிறப்பு. இகரச் சுட்டு இதன் பெருமை யாவரானும் அறியப்பட்ட தென்பதனைக் காட்ட வந்தது. (57) தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை உண்ட பாலனை யழைத்தது மெலும்புபெண் ணுருவாக் கண்ட தும்மறைக் கதவினை திறந்ததுங் கன்னித் தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர். (இ-ள்.) தொண்டர் நாதனை - அடியார்க்குத் தலைவனாகிய சிவபெருமானை, தூதிடை விடுத்ததும் - தூதின்கண் செலுத்தியதும், முதலை உண்ட பாலனை அழைத்ததும் - முதலையால் உண்ணப் பெற்ற சிறுவனை வரவழைத்ததும், எலும்பு பெண் உருவாக் கண்டதும் - எலும்பைப் பெண்வடிவாக உயி'faப்பித்ததும், மறைக்கத வினைத் திறந்ததும் - வேதத்தினாலே அடைக்கப்பட்ட கதவைத் திறந்ததும், கன்னித் தண்தமிழ்ச் சொலோ - அழியாத தண்ணிய தமிழ் மொழியா (அன்றி), மறுபுலச் சொற்களோ சாற்றீர் - ஏனைய நிலங்களின் வழங்கு மொழிகளா (புலவர்களே) சொல்லக் கடவீர் எ-று. திருஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் புரிந்த அருஞ் செயலெல்லாம், அவர்கள் பாடியருளிய தமிழ்ப் பதிகங்களின் வாயிலாக வாகலின், கருவியை வினைமுதலாக்கித் தமிழ் செய்தன வாகக் கூறினர். வேறெம் மொழியாலும் யாரும் இத்தகைய அருஞ்செயல் செய்திற்றில ரென்பார் ‘மறுபுலச் சொற்களோ சாற்றீர்’ என்றார். நாதனைத் தூதுவிடுத்த வரலாறு முன்னரே கூறப்பட்டது. முதலையுண்ட பாலனை அழைத்த வரலாறு :- தம்பிரான் றோழராகிய நம்பியாரூரர் சேரமான் பெருமாளைக் காணும் விருப்பினால் திருவாரூரினின்றும் புறப்பட்டுச் சோணாடுகடந்து கொங்கு நாட்டிலே திருப்புக்கொளியூர் அவிநாசியை அடைந்த காலையில், ஓரில்லத்தில் மங்கலவொலியும், அதற்கெதி ரில்லத்தில் அழுகையொலியும் நிகழக்கேட்டு, அதன் காரணத்தை விசாரித்தனர். ஐந்து வயதினராயிருந்த இரண்டு பார்ப்பனச்சிறார்கள், ஏரிக்குச் சென்று விளையாடும் பொழுது ஒருவனை முதலை விழுங்கிவிட்ட தென்றும், தப்பி வந்தானுக்கு இப்பொழுது உபநயனவிழா நடக்கிற தென்றும், மகனை யிழந்தோர் துயரத்தால் அழுகின்றன ரென்றும் அறிந்துகொண்டு, அப்பொழுது தம் வரவினையறிந்து, அழுகையை விடுத்துவந்து மெய்யன்புடன் வணங்கிய பெற்றோர்களுக்கு, அச்சிறுவனை அழைத்துத் தருவதாகத் துணிந்து, ஏரிக்கரையை யெய்திப் பதிகம்பாட, முதலை அச்சிறுவனைக் கரையிலுமிழ்ந்து சென்றது என்பது. “ உரைப்பா ருரையுகந் துள்கவல் லார்தங்க ளுச்சியாய் அரைக்கா டரவா வாதியு மந்தமு மாயினாய் புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே கரைக்கான் முதலையைப் பிள்ளைத ரச்சொல்லு காலனையே”” என்பது அத்திருப்பதிகத் திருப்பாட்டு. என்பு பெண்ணுருவாக் கண்ட வரலாறு :- திருமயிலாப்பூரிலே செல்வத்திற் சிறந்த சிவநேயர் என்னும் வணிகரொருவர், கபாலீசர் திருவருளால் ஓர்புதல்வியைப் பெற்று, அந் நங்கையை ஆளுடைய பிள்ளையார்க்கு உரிமையாக்கத் துணிந்து வளர்த்துவருங் காலத்தில் அவர் சேடியருடன் மலர் கொய்யச் சென்று அரவுதீண்டி இறந்தனர். சிவநேயர் மிகுந்த துயரத்துடன் அவ்வம்மையின் உடலைத் தகனஞ் செய்து, பிள்ளையாரிடம் ஒப்புவித்தற்பொருட்டாக அச்சாம்பரையும் என்பையும் ஒரு குடத்திலிட்டுக் கன்னிமாடத் திருத்தி, அவ்வம்மை உயிர்த்திருக்கும் பொழுதிற்போலச் சேடியர் உபசரித்து வருமாறு செய்வித்தனர். அப்பொழுது திருஞானசம்பந்தப் பெருமான் அடியார் கூட்டங்களுடன் பல திருப்பதிகளும் தரிசித்துக்கொண்டு திருவொற்றியூரை அடைந்திருந்தனர். சிவநேயர் அதனைக் கேள்வி யுற்றுத் திருமயிலையிலிருந்து திருவொற்றியூர் காறும் பந்தரிட் டலங்கரித்து ஞானசம்பந்தரை இறைஞ்சி அழைத்துவந்து நிகழ்ந்த செய்தியைத் தெரிவிக்க, சம்பந்தப் பெருமான் அக்குடத்தினைக் கபாலீசர் திருமுன் வருவித்துப், பதிகம்பாடியருள, அவ்வென்பானது அங்கே கூடியிருந்த எண்ணிறந்தோரும் கண்டு அதிசயிருக்கும்படி பெண்ணுருவெய்திப் பன்னிரண்டாண் டளவு நிரம்பி வெளியேவர, ஆளுடைய பிள்ளையார் தம்மால் உயிர்ப்பிக்கபெற்ற அவ்வம்மையை அங்கேயே இருக்கச் செய்து கபாலீசரை வணங்கிக்கொண்டு எழுந்தருளினர் என்பது. “ மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான், ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்” என்பது அத்திருப்பதிகத் திருப்பாட்டு. மறைக்கதவினைத் திறந்த வரலாறு :- திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளிய காலத்தில், ஞானசம்பந்தர் நாவுக்கரசரைப் பார்த்து, ‘நாம் வேதங்கள் பூசித்துத் திருக்காப்பிட்ட நேர் வாயில்வழியே சென்று இறைவரை வழிபட வேண்டும் ஆகலின், நீர் திருக்கதவம் காப்பு நீங்கப் பாடியருளும்’ என்று கூற அரசுகளும் பதிகம்பாடிக் கதவு திறக்கச் செய்தனர் என்பது. “ அரக்கனை விரலா லடர்த் திட்டநீர் இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரே சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ சரக்க விக்கத வந்திறப் பிம்மினே” என்பது அத்திருப்பதிகத் திருப்பாட்டு. இவ்வரலாறுகளின் விரி வினைத் திருத்தொண்டர் புராணத்திற் காண்க. (58) வெம்மை யால்விளை வஃகினும் வேந்தர்கோல் கோடிச் செம்மை மாறினும் வறுமைநோய் சிதைப்பினுஞ் சிவன்பாற் பொய்ம்மை மாறிய பத்தியும் 1பொலிவுங்குன் றாவாத் தம்மை மாறியும் புரிவது தருமமந் நாடு. (இ-ள்.) வெம்மையால் - (மழைவறங் கூர்ந்து) கோடை மிக்கமையால், விளைவு அஃகினும் - விளைவு குன்றினாலும், வேந்தர் கோல் கோடி - அரசர் செங்கோல் திறம்பி, செம்மை மாறினும் - நடுவுநிலைமை மாறினாலும், வறுமைநோய் சிதைப்பினும் - வறுமைப் பிணி வருத்தினாலும், சிவன்பால் - சிவபிரானிடத்து, பொய்ம்மை மாறிய பத்தியும் - பொய்ம்மை நீங்கிய (மெய்) அன்பும், பொலிவும் குன்றாவா - (சைவ) விளக்கமுங் குன்றாவாக, தம்மை மாறியும் - (அங்குள்ளார்) தங்களை விற்றாயினும், தருமம் புரிவது அந்நாடு - அறஞ்செய்யப் பெறுவது அப்பாண்டி நாடு எ-று. ‘வேந்தர் கோல் கோடிச் செம்மை மாறினும்’ என்பது செய்யுளாகலின் இடையே நின்றது; கோல்கோடுதலாற் கோட்கள் நிலைதிரிதலும், அதனால் மழையின்மையும், அதனால் விளைவு குன்றலும், அதனால் வறுமைநோயும் உண்டாமென்க. “ கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும் கோணிலை திரிந்திடின் மாரிவறங் கூரும் மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை” என்று மணிமேகலையும். “ கோணிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கண் மிஞ்சி நீணில மாரி யின்றி விளைவஃகிப் பசியு நீடிப் பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிந் தறங்கண் மாறி ஆணையிவ் வுலகு கேடா மரசுகோல் கோடி னென்றான்” என்று சிந்தாமணியும் கூறுதல் காண்க. பொய்ம்மை மாறிய பத்தி - நெக்கு நெக்கு நினைந்துள்ளுருகும் பத்தி. மெய்ம்மையா முழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப், பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனு நீரைப்பாய்ச்சி என்பதும் சிந்திக்கற்பாலது. பொலிவாவது திருநீறு, கண்டிகை, திருவைந்தெழுத்து என்பவற்றின் விளக்கமாம். ஆக என்பது குறைந்து நின்றது. புரிவது அந்நாடு - புரிதற்கு இடனாயது அந்நாடு; நாடு என்பது நாட்டிலுள்ளாரைக் குறிப்பது என்னலுமாம். சிவபத்தியும், சிவபுண்ணியமும் மலிந்த நாட்டின்கண் விளைவஃகுதல் முதலியன உளவாகா என்பது தோன்ற எதிர்மறை யும்மை கொடுத்துக் கூறினாரென்னலுமாம். தம்மை மாறியும்; உம்மை எச்சமும் சிறப்புமாம். (59) உலகம் யாவையு மீன்றவ ளும்பரு ளுயர்ந்த திலக நாயகி பரஞ்சுடர் சேயென மூன்று தலைவ ரான்முறை செய்தநா டிஃதன்றிச் சலதி சுலவு பாரினுண் டாகுமோ துறக்கத்து மஃதே. (இ-ள்.) உலகம் யாவையும் ஈன்றவள் - எல்லா வுலகங்களையும் ஈன்றருளியவளும், உம்பருள் உயர்ந்த திலகநாயகி - சத்திகளுள் உயர்ந்த திலகம் போல்வாளுமாகிய உமாதேவியும், பரஞ்சுடர் - பரஞ்சோதியாகிய சிவபெருமானும், சேய் என மூன்று தலைவரான் - முருகக்கடவுளுமாகிய மூன்று முதல்வர்களாலும், முறைசெய்த நாடு இஃது அன்றி - செங்கோல் ஓச்சியநாடு இப்பாண்டி நாடேயன்றி, சலதி சுலவுபாரின் உண்டாகுமோ - கடலாற் சூழப்பட்ட நிலவுலகின் கண் வேறுநாடும் உளதோ (இன்று); துறக்கத்தும் அஃதே - விண்ணுலகத்து மங்ஙனமே (வேறு நாடு இன்று) எ-று. உம்பர் என்பது இங்கே சத்திகளை யுணர்த்திற்று. உமை தடாதகைப் பிராட்டியாராகவும், பரஞ்சுடர் சோமசுந்தர பாண்டிய ராகவும், சேய் உக்கிரகுமார பாண்டியராகவும் இந்நாட்டிலிருந்து ஆட்சி நடாத்திய செய்திகள் மேல் இப்புராணத்துள் விளக்கமாம். இம்மூவருள்ளும் வேற்றுமை யின்றென்பார் மூன்று தலைவரான் என்றார். செந்நிறமுடைமையால் முருகக்கடவுளுக்குச் சேய் என்பது ஒருபெயர். செய்த, செயப்பாட்டு வினைப்பொருளது. உண்டாகு மோ என்றது உளதோ என்னுமாத்திரையாய் நின்றது. தலைவரானும் என்னும் முற்றும்மை தொக்கது. (60) திருநாட்டுச் சிறப்பு முற்றிற்று. ஆகச் செய்யுள் - 60 திருநகரச் சிறப்பு மங்க லம்புனை பாண்டிநா டாகிய மகட்குச் சங்க லம்புகை தோளிணை தடமுலை யாதி அங்க மாம்புறந் தழுவிய நகரெலா மனைய நங்கை மாமுக மாகிய நகர்வளம் பகர்வாம். (இ-ள்.) மங்கலம்புனை - பல நலன்களையும் பூண்ட, பாண்டி நாடு ஆகிய மகட்கு - பாண்டிநாடு என்னும் மங்கைக்கு, புறம் தழுவிய நகர் எலாம் - (அதன்) புறத்தெ சூழ்ந்த நகரங்கள் அனைத்தும், சங்கு அலம்பு கை - வளை ஒலிக்குங் கைகள், தோள் இணை - இரண்டு தோள்கள், தடம்முலை - பெரிய கொங்கைகள், ஆதி அங்கம் ஆம் - முதலிய உறுப்புக்கள் ஆகும்; அனைய நங்கை - அங்ஙனமாய நங்கையின், மாமுகம் ஆகிய நகர்வளம் - பெருமை பொருந்திய முகமாகிய மதுரை நகரின் சிறப்பினை, பகர்வாம் - கூறுவாம் எ-று. மங்கலம் - நலம். நாட்டிற்கு நலமாவன; பிணியின்மை, செல்வம், விளைவு, இன்பம், ஏமம் என்பனவும் பிறவுமாம்; அவற்றைத் திருக்குறளில் நாடு என்னும் அதிகாரத்திற் காண்க. வருகிற பாட்டில் திருமுக மதுரையாம் புரமே என்று கூறுதலின், இங்கே முகமாகிய நகர் என்று கூறிப்போந்தார். நங்கை - பெண்டிரிற் சிறந்தாள். பாண்டிநாடு ஏனை நாடுகளினுஞ் சிறந்ததென்பார் நங்கை என்றும், மதுரை அந்நாட்டு ஏனைப் பதிகளினுஞ் சிறந்ததென்பார் ‘மாமுகமாகிய நகர்’ என்றும் கூறினார். (1) கொங்கை யேபரங் குன்றமுங் கொடுங்குன்றுங் கொப்பூழ் அங்க மேதிருச் சுழியலவ் வயிறுகுற் றாலஞ் செங்கை யேடக மேனியே பூவணந் திரடோள் பொங்கர் வேய்வனந் திருமுக மதுரையாம் புரமே. (இ-ள்.) (அந்நங்கைக்கு) கொங்கை - கொங்கைகள், பரங்குன்றமும் கொடுங்குன்றும் - திருப்பரங்குன்றமும் திருக்கொடுங் குன்றமுமாகும்; கொப்பூழ் அங்கம் - உந்தியாகிய உறுப்பு, திருச்சுழியல் - திருச்சுழியலென்னுந் தலமாகும்; அவ்வயிறு - அழகிய வயிறு, குற்றாலம் - திருக்குற்றாலமென்னுந் தலமாகும்; செங்கை - சிவந்தகை, ஏடகம் - திருவேடகமென்னுந் தலமாகும்; மேனி - உடல், பூவணம் - திருப்பூவணமென்னுந் தலமாகும்; திரள்தோள் - திரண்ட தோள்கள், பொங்கர் வேய்வனம் - சோலைகள் சூழ்ந்த வேணுவனமென்னுந் தலமாகும்; திருமுகம் - அழகிய முகம், மதுரை புரம்ஆம் - மதுரையாகிய நகரம் ஆகும் எ-று. அந்நங்கைக்கு என்பது வருவிக்க. கொடுங்குன்று - பிரான்மலை. வேய்வனம் - திருநெல்வேலி. குன்றுகள் கொங்கைக்கு உவம மாகலின் பரங்குன்றம் கொடுங் குன்றுகளைக் கொங்கையென்றும், நீர்ச்சுழி, ஆலிலை, தாமரை, மலர், மூங்கில் என்பன கொப்பூழ் முதலியவற்றுக்கு உவமமாகலின், பெயரான் அவற்றோடியை புடைய பதிகளை அவ்வங்கங்களென்றும், சந்திரனது அமிழ்தத்தாற் சாந்திசெய்யப் பட்டமையின் மதுரை யென்பது பெயராயிற்று என மேல் இப்புராணத்துள் ஓதப்படுதலானும், சந்திரன் முகத்திற்கு உவமமாகலானும் மதுரையைத் திருமுகமென்றுங் கூறினார். அவ்வயிறு - அழகியவயிறு; மகரம் வகரமாய்த் திரிந்தது. “மடவோள் பயந்த மணிமரு ளவ்வாய்க், கிண்கிணிப் புதல்வர்” என்று புறத்தில் வருதலுங் காண்க. கொங்கையே என்பது முதலிய ஏகாரங்கள் எண்ணுக் குறித்தன; “ எண்ணே கார மிடையிட்டுக் கொளினும் எண்ணுக் குறித்தியலு மென்மனார் புலவர்” என்பது தொல்காப்பியம். புரமே என்பதில் ஏ; ஈற்றசை. இயை புருவகம. (2) வடுவின் மாநில மடந்தைமார் பிடைக்கிடந் திமைக்கப் படுவி லாரமே பாண்டிநா டாரமேற் பக்கத் திடுவின் மாமணி யதன்புற நகரெலா மிவற்றுள் நடுவி னாயக மாமணி மதுரைமா நகரம். (இ-ள்.) வடு இல் - குற்றமில்லாத, மாநில மடந்தை - பெரிய நிலமகளின், மார்பு இடை - மார்பின்கண், கிடந்து இமைக்கப்படு - இருந்து விளங்குகின்ற, வில் ஆரமே - ஒளியையுடைய பதக்கமே, பாண்டிநாடு - பாண்டிநாடாகும்; ஆரம் மேற்பக்கத்து இடு - அம் மதாணியின் சுற்றுப்புறங்களிற் பதித்த, வில் மாமணி - ஒளியை யுடைய பெரியமணிகளே, அதன்புறம் நகர் எலாம் - அப்பாண்டி நாட்டின் புறத்துச் சூழ்ந்த நகரங்களனைத்துமாகும்; இவற்று நடுவுள் - இம்மணிகளின் நடுவிடத்துள்ள, வில் நாயக மாமணி - ஒளியினை யுடைய தலைமையாகிய பெரியமணியே, மதுரை மாநகரம் - மதுரையாகிய பெரிய நகரமாகும் எ-று. இமைக்கப்படு - இமைக்கின்ற. ஆரம் - பதக்கம்; மதாணி; உள்பிரித்துக் கூட்டப்பட்டது. இன் சாரியையாக்கி நடுநாயகம் எனினும் ஆம். (3) திரும கட்கொரு தாமரைக் கூடமே திருமால் மரும கட்குவெண் டாமரை மாடமே ஞானந் தரும கட்கியோ கத்தனிப் பீடமே தரையாம் பெரும கட்கணி திலகமே யானதிப் பேரூர். (இ-ள்.) தரையாம் பெருமகட்கு - நிலமாகிய பெருமாட்டிக்கு, அணிதிலகமே ஆனது - அணிகின்ற திலகமேயானதாகிய, இப்பேர் ஊர் - இப்பெரிய நகரமானது, திருமகட்கு ஒரு தாமரைக்கூடம் - அலை மகளுக்கு ஒப்பற்ற தாமரையில்லம்; திருமால் மருமகட்கு - திருமாலின் மருகியாகிய கலைமகளுக்கு, வெண்தாமரை மாடம் - வெண்தாமரையில்லம்; ஞானம் தருமகட்கு - ஞானத்தைப் பாலிப்பவராகிய மலைமகளுக்கு, யோகத்தனிப் பீடம் - ஒப்பற்ற யோகபீடம் எ-று. திருமகள் - திருவாகிய மகள்; இலக்குமி. பின் வெண்டாமரை யெனலால் முற்கூறியது செந்தாமரை யென்க. தாமரை யிரண்டும் மலருக்கு ஆகுபெயர். கலைமகள் அயனுக்கு மனைக்கிழத் தியாகலின் திருமாலுக்கு மருகியாயினள். திருமான் எனப்பிரித்து இலக்குமிக்கு மருமகளென்னலுமாம். திருமான் - திருவாகிய மான். “ நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே பூவின் கிழத்தி புலந்து” என்பதிலும் இவர் மாமியும் மருகியும் என்பது தோன்றக் கூறப் பட்டிருத்தல் காண்க. ஞானந்தருமகள் - உமை; “ ஆகமங்க ளெங்கே யறுசமயந் தானெங்கே யோகங்க ளெங்கே யுணர்வெங்கே - பாகத் தருள்வடிவுந் தானுமா யாண்டிலனே லந்தப் பெருவடிவை யாரறிவார் பேசு” என்று திருக்களிற்றுப்படியார் கூறுவது இங்கே சிந்திக்கற்பாலது. ஆனது என்பதனை முற்றாக்கிக் கூடம் முதலியவற்றொடும் கூட்டி நான்கு முடிபாக்குவாரு முளர்; இந்நகரமானது செல்வத்தானும், கல்வியானும், ஞானத்தானும் ஏனையவற்றினுஞ் சிறந்து விளங்குவ தென்பது கருத்து. செல்வ முதலியவற்றுக்கு இருக்கையென்றும், அவற்றைத் தருவது என்றும் கருத்துக்கொள்ளலுமாம். ஏ; அனைத்தும் அசை; தேற்றமுமாம். (4) திக்கும் வானமும் புதையிரு டின்றுவெண் சோதி கக்கு மாளிகை நிவப்புறு காட்சியந் நகருள் மிக்க வாலிதழ்த் தாமரை வெண்மக ளிருக்கை ஒக்கு மல்லது புகழ்மக ளிருக்கையு மொக்கும். (இ-ள்.) திக்கும் வானமும் - திசைகளையும் ஆகாயத்தையும், புதை - மறைத்த, இருள் தின்று - இருளை விழுங்கி, வெண்சோதி கக்கும் - வெள்ளிய ஒளியைக் காலுகின்ற, மாளிகை நிவப்புறு காட்சி - மாளிகைகள் உயர்ந்துள்ள தோற்றம், அந்நகருள் - அந்நகரின்கண், மிக்க வால்இதழ் தாமரை - மிக்க வெண்மையையுடைய இதழ் களையுடைய தாமரையாகிய, வெண்மகள் இருக்கை ஒக்கும் - கலைமகளின் இருப்பிடம்போலும், அல்லது - அன்றி, புகழ்மகள் இருக்கையும் ஒக்கும் - புகழ்மாதின் இருப்பிடமும் போலும் எ-று. வெண்சோதி - முத்து, வயிரம், சுண்ணம் என்பவற்றாலாய வெள்ளொளி. இருளைத் தின்று சோதியைக் கக்குமென ஒரு நயம்படக் கூறினார். தாமரையாகிய இருக்கை யென்க. புகழையும் வெண்ணிற முடையதாகக் கூறுதல் மரபாகலின் புகழ்மகளிருக்கையு மொக்கும் என்றார். (5) புறம்பணை நெற்க ரும்பெனக் கரும்பெலா நெடுங்கமு கென்ன வர்க்க வான்கமு கொலிகலித் தெங்கென வளர்ந்த பொற்க வின்குலைத் தெங்குகார்ப் பந்தரைப் பொறுத்து நிற்க நாட்டிய காலென நிவந்ததண் பணையே. (இ-ள்.) தண்பணை - குளிர்ந்த மருத நிலங்களில், நெல் கரும்பு என - நெற்பயிர்கள் கரும்புகள் எனவும், கரும்பு எலாம் - கரும்புகள் அனைத்தும், நெடு கமுகு என - நீண்ட கமுக மரங்கள் எனவும், வர்க்கம் வான் கமுகு - இனமாகிய உயர்ந்த கமுகமரங்கள், ஒலிகலித் தெங்கு என - தழைத்த செருக்கிய தென்னை மரங்கள் எனவும், வளர்ந்த - ஒங்கிய, பொன்கவின் குலைத்தெங்கு - பொன்போலும் அழகிய குலைகளையுடைய தென்னைமரங்கள், கார்ப்பந்தரை - முகிலாகிய பந்தரை, பொறுத்து நிற்க - சுமந்து நிற்பதற்கு, நாட்டிய கால் என - நாட்டப்பட்ட கால்கள் எனவும் (கருதும்படி), நிவந்த - உயர்ந்துள்ளன எ-று. ஒலி - தழைத்தல்; இஃதிப்பொருட்டாதலை ‘ஒலி நெடும்பீலி’ என நெடுநல்வாடையினும், ‘வணரொலியைம் பாலாய்’ எனக் கார்நாற்பதினும் வருதலானறிக. கலி - செருக்குதல்; இதனை, மலைபடுகடாத்துள், “ தீயி னன்ன வொண்செங் காந்தட் டூவற்கலித்த புதுமுகை” என்பத னுரையானறிக. வளர்ந்த வென்பது தெங்கிற்கு அடை. நிவந்த, அன்பெறாத பலவின்பால் முற்று. தண்பணை யென்பதில் ஏழனுருபு இறுதிக்கட் டொக்கது; “ ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின் மெய்யு ருபுதொகா விறுதி யான்” என்பது தொல்காப்பியம். ஏ, அசை. (6) சிவந்த வாய்க்கருங் கயற்கணாள் வலாரியைச் சீறிக் கவர்ந்த வான்றருக் குலங்களே கடிமணம் வீசி உவந்து வேறுபல் பலங்களும் வேண்டினர்க் குதவி நிவந்த காட்சியே போன்றது நிழன்மலர்ச் சோலை. (இ-ள்.) நிழல் மலர்ச்சோலை - குளிர்ந்த மலர்களையுடைய சோலைகளின் (தோற்றம்), சிவந்தவாய் - சிவந்தவாயினையும், கரும்கயல் கணாள் - கரிய கயல்மீன்போலும் கண்களையுமுடைய தடாதகைப் பிராட்டியார், வலாரியைச் சீறிக் கவர்ந்த - இந்திரனைக் கோபித்துக் கொணர்ந்த, வான்தருக் குலங்களே - உயர்ந்த பஞ்சதருக் கூட்டங்களே, கடிமணம் வீசி - மிக்க மணத்தினை வீசி,வேண்டி னர்க்கு - குறையிரந்தார்க்கு, வேறு பல் பலங்களும் - வேறாகிய பல பயன்களையும், உவந்து உதவி - மகிழ்ந்து கொடுத்து, நிவந்த - உயர்ந்துள்ள, காட்சியே போன்றது - தோற்றத்தையே ஒத்தது எ-று. வலாரி - வலன் என்னும் அசுரனுக்குப் பகைவன், இந்திரன், தருக்கள்; சந்தானம், அரிசந்தனம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம் என்பன. குலம் - கூட்டம். கடிமணம் - மிக்க மணம்; ஒரு பொருளிருசொல். வேறு - வானுலகத்து வழங்கிய ஆடை அணி முதலியவற்றின் வேறாகிய; வெவ்வேறு பல என்னலுமாம். பலம் - பழம்; பழம் என்னும் தமிழ்ச்சொல் நெடுநாளின்முன் ஆரியத்திற் பலமெனத் திரிந்தேறியது. ஏ;இரண்டும் பிரிநிலை. தடாதகைப் பிராட்டியார் இந்திரனைச் சீறித் தருக்களைக் கவர்ந்து வந்ததனை இப்புராணத்தே திருமணப்படலத்திற் காண்க. (7) ஒல்லொ லிக்கதிர்ச் சாலிகள் புறந்தழீ இயோங்க மெல்லி லைப்பசுங் கொடியினால் வீக்குறு பூகம் அல்லெ னுங்களத் தண்ணற னணிவிழாத் தருப்பைப் புல்லொ டும்பிணிப் புண்டபொற் கொடிமரம் போலும். (இ-ள்.) ஒல் ஒலி - ஒல் என்ற ஒலியையுடைய, கதிர்ச்சாலிகள் - கதிர்களையுடைய நெற்பயிர்கள், புறம் தழீஇ ஓங்க - புறத்தின் கண் பொருந்தி உயர்ந்து நிற்க, மெல் இலைப் பசும் கொடியினால் பசிய வெற்றிலைக் கொடியினால், வீக்குறுபூகம்: - கட்டப்பட்ட பாக்கு மரமானது, அல் எனும் களத்து - இருள் போலுந் திருமிடற்றினை யுடைய, அண்ணல் தன் அணிவிழா - பெருமை பொருந்திய சிவபிரானுடைய திருவிழாவின் கண், தருப்பைப் புல்லொடும் - தருப்பைப்புற்களோடும், பிணிப்புண்ட - கட்டப்பெற்ற, பொன் கொடி மரம் போலும் - பொன்னாலாகிய கொடிமரத்தை ஒக்கும் எ-று. மெல்லிலை - வெற்றிலை; இதனை யறியாத சிலர் மெல்லிய இலைகளையுடைய எனப் பொருள் கூறுவர்; அவர் பூகம் என்பதனுடன் இணைத்துக் கூறிய நயத்தினையும் நோக்கிற்றிலர்; “ மல்லலந் தெங்கிள நீர்பெய் பண்டியும் மெல்லிலைப் பண்டியுங் கமுகின் மேதகு பல்பழுக் காய்க்குலை பெய்த பண்டியும் ஒல்குதீம் பண்டம்பெய் தொழுகு பண்டியும்” என்னும் சிந்தாமணிச் செய்யுளுரையில், நச்சினார்க்கினியர், மெல்லிலைப் பண்டியும் என்பதற்கு‘வெற்றிலை பெய்த பண்டியும்’ எனப்பொருள் கூறி, ‘மெல்லிலை - வினைத் தொகை’ எனக் குறிப் பெழுதியிருப்பதுங் காண்க. கொடிமரம் - துவசத் தம்பம். பாக்கு மரம் கொடி மரத்தையும், பாக்கு மரத்தைத் தழுவிய கதிர்ச்சாலிகள் கொடிமரத்தின் புறத்தே பொருந்திய தருப்பைப் புல்லையும், சாலியுடன் பாக்குமரத்தைச் சுற்றியுள்ள வெற்றிலைக்கொடி புல்லுடன் கொடிமரத்தைப் பிணித்துள்ள கயிற்றையும் ஒக்கு மென்வாறு. சாலியும் வெற்றிலையும் பூகமும் நெருங்கியிருக்கு மென்க. ஒல்லொலி - ஒலிக்குறிப்பு. தழீஇ; தழுவி என்பதன் விகாரம். கொடியினால், ஆல்; வினை முதற் பொருளில் வந்தது.(8) சீத வேரியுண் டளிமுரல் கமலமேற் செருந்தி போத வேரியு மலர்களுஞ் சொரிவன புத்தேள் வேத வேதியர் செங்கரம் விரித்துவாய் மனுக்கள் ஓத வேமமும் உதகமும் உதவுவா ரனைய. (இ-ள்.) சீதவேரி உண்டு - குளிர்ந்த தேனைப்பருகி, அளிமுரல் - வண்டுகள் ஒலிக்கப்பெற்ற, கமலம் மேல் - தாமரை மலரின்மேல், வேரியும் மலர்களும் - தேனையும் பூக்களையும், போத சொரிவன - மிகச் சொரிவனவாகிய, செருந்தி - செருந்தி மரங்கள், புத்தேள் வேத வேதியர் - தெய்வத்தன்மை பொருந்திய மறைகளை யுணர்ந்த மறையோர், செங்கரம் விரித்து - சிவந்த கைகளை விரித்து, வாய் மனுக்கள் ஓத - வாயினால் மந்திரங்களைச் சொல்ல, ஏமமும் உதகமும் - (அவர் கையில்) பொருளையும் (தத்தஞ் செய்யும்) நீரையும், உதவுவார் அனைய - கொடுப்பாரை ஒத்தன எ-று. போத - மிக; நிரம்பிய வழி அமைவுண்டாமாகலின், அமையும் அமையா என்னுங் கருத்தில் போதும் போதா என வழங்கும் வினை விகற்பங்களும் நோக்குக. மணிவாசகரும் ஒன்றும் போதா நாயேனை என்றார். போத என்பது போர எனவும் திரிந்து வழங்கும். மனு - மந்திரம்; உதவுவாரனைய என்பதற்கேற்பச் சொரிவனவாகிய செருந்தியென்க. ஏமமும் உதகமும் என்பதற்கேற்ப மலர்களும் வேரியும் என மாற்றிக் கொள்க. வண்டினொலி, கமலம், மலர், வேரி, செருந்தி என்பவற்றுக்கு மந்திரவொலி, பார்ப்பனர்கை, பொன், நீர் உதவுவோர் என்பன முறையே உவமங்களாம். வேதமென முன்வந்தமையின் வேதியரென்பது பெயர் மாத்திரை யாய் நின்றது. (9) விரைசெய் பங்கயச் சேக்கைமேற் பெடையொடு மேவி1 அரச வன்னநன் மணஞ்செய வம்புயப் பொய்கை திரைவ ளைக்கையா னுண்டுளி செறிந்தபா சடையாம் மரக தக்கலத் தரளநீ ராசனம்2 வளைப்ப. (இ-ள்.) விரைசெய் - மணம் வீசும், பங்கயச் சேக்கைமேல் - தாமரை மலராகிய சேக்கையின்மேல், அரச அன்னம் - அரச அன்னப்பறவையானது, பெடையொடும் மேவி - பெண் அன்னத் தோடும் பொருந்தி, நன்மணம் செய - நல்ல மணத்தைச் செய்யா நிற்க, அம்புயப் பொய்கை - தாமரைத் தடாகங்களாகிய (மகளிர் கூட்டம்), திரை வளைக்கையால் - அலைகளாகிய (சங்கு) வளையுள்ள கைகளால், நுண் துளி தரளம் செறிந்த - நுண்ணிய நீர்த்துளிகளாகிய முத்துக்கள் நெருங்கிய, பாசடையாம் மரகதக் கலம் - பசிய இலையாகிய மரகதத்தட்டின்கண், நீராசனம் வளைப்ப - ஆலத்தி சுற்றா நின்றன எ-று. சேக்கை - தங்குமிடம், படுக்கை. அரச வன்னம் - அன்னங்களிற் சிறந்தது. பங்கயம் - சேற்றிலுதிப்பது, அம்புயம் - நீரிலுதிப்பது காரண விடுகுறிப் பெயர்கள். பொய்கை என்பது மானுடராக்காத நீர் நிலை என்று கூறுவர் நச்சினார்க்கினியர்; வழக்கில் பொதுவாகத் தடாகத்தைக் குறிக்கின்றது. வளை திரைக்கும் கைக்கும் பொது. நுண்டுளியாகிய தரளம் எனக் கூட்டுக. தாமரையிலையின் நீர்த் துளி முத்துப்போலுமாகலின் தளம் என்றார். பசுமை அடை பாசடையா யிற்று. அது மரகதம் போறலின் மரகதக்கலம் என்றார். செல்வப் பெருக்கினால் மரகதக் கலத்து முத்து நீராசனம் வளைப்ப என்பது தோன்றக் கூறினார். நீரினை யேற்றபாசடைதிரையால் அலைவதை ஆலத்தி சுழற்றுவதாகக் கூறினார். ஏகதேச வுருவகம். (10) இரும்பி னன்னதோள் வினைஞரார்த் தெறிந்துவாய் மடுக்குங் கரும்பு தின்றிடி யேற்றொலி காட்டியின் சாறு சுரும்பு சூழ்கிடந் தரற்றிடச் சொரிந்துவெஞ் சினத்தீ அரும்பு கட்களி றொத்தன வாலையெந் திரங்கள். (இ-ள்) ஆலை எந்திரங்கள் - ஆலையாகிய எந்திரங்கள், இரும்பின் அன்னதோள் - இரும்பையொத்த வலியதோள்களை யுடைய, வினைஞர் ஆர்த்து -மள்ளர்கள் ஆரவாரித்து, எறிந்து - தறித்து, வாய்மடுக்கும் -(தமது) வாயிற் கொடுக்கின்ற, கரும்புதின்று - கரும்புகளை நெரித்து, இடி ஏற்று ஒலிகாட்டி - இடியேற்றின் முழக்கத்தைத் தோற்றுவித்து, சுரும்பு சூழ்கிடந்து அரற்றிட - வண்டுகள் சூழ்ந்து கிடந்து ஒலிக்க, இன்சாறு சொரிந்து - இனிய சாற்றைப் பொழிந்து, வெம்சினத் தீ அரும்பு - வெவ்விய வெகுளித் தீ உண்டாகின்ற, கண்களிறு ஒத்தன - கண்களையுடைய யானைகளை ஒத்தன எ-று. களிற்றுக் கேற்ப வினைஞரென்பதற்குப் பாகரென உரைத்துக் கொள்க. ஆலை கரும்பு தின்றலாவது கரும்பினை நெரித்தல். ஏனையகளிற்றுக்கும் ஆலைக்கும் பொது. ஆலை - கரும்பினைச் சாறு பிழியும் பொறி: ஆலையாகிய எந்திரமென இருபெயரொட்டு. இரும்பினன்ன; சாரியை நிற்க உருபு தொக்கது. (11) பள்ள நீர்குடைந்1 தஞ்சிறைப் பாசிபோர்த் தெழுந்த வெள்ளை யன்னத்தைக் காரன2 மெனப்பெடை வீழ்ந்த உள்ள மீட்டல மரச்சிற குதறியுள் ளன்பு கொள்ள வாசையிற் றழீஇக்கொடு குடம்பைசென் றணையும். (இ-ள்.) பள்ளம் நீர்குடைந்து - ஆழமாகிய நீரில் மூழ்கி, அம்சிறை - அழகிய சிறைகள், பாசிபோர்த்து - நீர்ப்பாசியினாற் போர்க்கப்பட்டு, எழுந்த வெள்ளை அன்னத்தை - மேலெழுந்த வெள்ளிய அன்னச்சேவலை, கார் அனம் என - காகமெனக் கருதி; வீழ்ந்த உள்ளம் மீட்டு - விரும்பிய உள்ளத்தைத் திருப்பிக்கொண்டு, பெடை அலமர அன்னப்பேடு சுழலா நிற்க, சிறகு உதறி - (அவ்வன்னச் சேவல்) சிறைகளை விதிர்த்துப் (பாசிகளை வீழ்த்தி), உள் அன்புகொள்ள - உளத்தில் அன்பு நிறைய, ஆசையின் - ஆசையால், தழீஇக்கொடு - (அவ்வன்னப் பேட்டைத்) தழுவிக் கொண்டு, குடம்பை சென்று அணையும் - கூட்டினுட் போய்ச் சேரும் எ-று. பாசி - பசுமையுடையதெனக் காரணப் பெயர். போர்த்து - போர்க்கப்பட்டு, எருமையைக் காரான் என்பதுபோலக் காகத்தைக் காரனமென்றார். கரிய அன்ன மென்பாருமுளர். வெள்ளை கருமை என்பன முரண். எனக் கருதி மீட்டென்க. அங்குள்ள பறவைகளும் கற்பு நெறிப்பட்டன என்றார். வீழ்ந்த என்னும் பெயரெச்சம் வினை முதற் பெயர்கொண்டது. (12) இரவி யாழியொன் றுடையதே ரீர்த்தெழு மிமையாப் புரவி நாநிமிர்த் தயில்வன பொங்கர்வாய்த் தளிர்கள் 3கரவி லார்மகத் தெழுபுகை கற்பக நாட்டிற் பரவி வாட்டுவ பனியெனப் பங்கயப் பொய்கை. (இ-ள்.) இரவி - சூரியனின், ஆழி ஒன்று உடைய தேர் - ஓர் உருளையையுடைய தேரை, ஈர்த்து எழும் - இழுத்துச் செல்லாநின்ற, இமையாப் புரவி -இமையாத நாட்டத்தையுடைய குதிரைகள், பொங்கர்வாய்த் தளிர்கள் - சோலைகளின் தளிர்களை, நா நிமிர்த்து அயில்வன - நாக்களை நீட்டித் தின்னா நிற்பன; கரவு இலார் - வஞ்சகமில்லாத மறையோரால் (வேட்கப்படுகின்ற), மகத்து எழு புகை - வேள்வியினின்று மேலெழும் புகைகள், கற்பக நாட்டில் - கற்பகத் தருக்களையுடைய வானுலகில், பரவி - பரம்பி, பங்கயப் பொய்கை - (அங்குள்ள) தாமரைத் தடாகத்தை, பனி என வாட்டுவ - பனிபோலும் வாட்டா நிற்பன எ-று. இமையாப்புரவி - இமையா நாட்டமுடைய புரவி; வானோர்க்குக் கண்ணிமை யாவாகலின் பரிதிவானவன் புரவிக்கும் கண்ணிமையா என்றார். பொங்கர் தம்மினும் மேல் நிவந்திருத்தலின் நாநிமிர்த்தயில்வன என்றார். வானுலகில் பொழுது வேற்றுமை யின்மையின் பனியென என்றார். பங்கயப் பொய்கை என்றாரேனும், வாட்டுவ என்பதற் கியையப் பொய்கையிலுள்ள பங்கய மென்க. தொடர் புயர்வு நவிற்சி. (13) அகழி பிறங்கு மாலவா யகத்துளெம் பிரானரு ளால்வந் தறங்கொ டீர்த்தமா யெழுகட லமர்ந்தவா நோக்கிக் கறங்கு தெண்டிரைப் பெரும்புறக் கடலும்வந் திவ்வூர்ப் புறங்கி டந்ததே போன்றது புரிசைசூழ் கிடங்கு. (இ-ள்.) புரிசை சூழ் கிடங்கு - மதிலைச் சூழ்ந்துள்ள அகழி யானது, பிறங்கும் ஆலவாய் அகத்துள் - விளங்குகின்ற மதுரைப் பதியின்கண், எம்பிரான் - எம் பிரானாகிய சோமசுந்தரக் கடவுளின், அருளால் - திருவருளால், எழுகடல் - ஏழு கடல்களும், வந்து அறம்கொள் தீர்த்தமாய் - வந்து அறவடிவாகிய தீர்த்தமாகி, அமர்ந்தவாநோக்கி - அமர்ந்த தன்மையை நோக்கி, கறங்கு தெண் திரை - ஒலிக்கின்ற தெளிந்த அலைகளையுடைய, பெரும்புறக் கடலும் வந்து - பெரும்புறக் கடலும் இங்குப் போந்து, இவ்வூர்ப்புறம் கிடந்தது போன்றது - இந்நகரின் புறத்திலமர்ந்ததை ஒத்தது எ-று. தீர்த்தம் - வினைமாசு கழுவுந் தூயநீர். எழுகடலாவன, - உவர் நீர்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ் சாற்றுக்கடல், மதுக்கடல், நன்னீர்க்கடல் என்பன. ஏழுதீவுகளில் ஒவ்வொன்றின் புறஞ்சூழ்ந்து கிடக்கும். இவற்றின் புறத்தே சக்கர வாளகிரியும், அதன் புறத்தே பெரும்புறக்கடலும் சூழ்ந்துகிடக்கும். இவற்றைக் கந்தபுராணத்து அண்டகோசப் படலத்தில், “ பரவுமிவ் வுலகிலுப்புப் பால்தயிர் நெய்யே கன்னல் இரதமா மதுநீராகு மெழுகட லேழுதீவும் வரன்முறை விரவிச்சூழு மற்றதற் கப்பாற் சொன்னத் தரையது சூழ்ந்துநிற்குஞ் சக்கர வாளச் சையம்” “ அன்னதற் கப்பால்வேலைக் கரசனாம் புறத்திலாழி பின்னது தனக்குமப்பாற் பேரிருள் சேர்ந்தஞாலம்” என வருதலானறிக. எழுகடலும் வந்து அமர்ந்தமையை இப்புராணத்து எழுகடலழைத்த படலத்தானறிக. தானும் தீர்த்த மாவான் வந்துகிடந்ததே போன்றதென்க. எழுகடலும்; என்னு மும்மை தொக்கது. அமர்ந்தவா: ஈறு கெட்டது. (14) எறியும் வாளையு மடிக்கடி யெழுந்துடல் பரப்பிப் பறியு மாமையும் வாளொடு கேடகம் பற்றிச் செறியு நாண்மல ரகழியுஞ் சேண்டொடு புரிசைப் பொறியு மேயன்றி1 யுடன்றுபோர் புரிவது2 போலும். (இ-ள்.) அடிக்கடி எழுந்து - அடிக்கடி மேலெழுந்து, எறியும் வாளையும் - (நீரை) வெட்டுகின்ற வாளைகளும், உடல்பரப்பிப் பறியும் ஆமையும் - (அங்ஙனமே மேலெழுந்து) உறுப்புக்களை விரித்துத்தவழுகின்ற ஆமைகளும் (அகழியிலே திரிதல்), சேண் தொடு - ஆகாயத்தையளாவிய, புரிசைப் பொறியும் அன்றி - மதிலின்கண் உள்ள பொறிகளே யன்றி, நாள் மலர் செறியும் - அன்றலர்ந்த மலர்கள் நிறைந்த, அகழியும் - அகழிதானும், வாள் ஒடு கேடகம் பற்றி - வாளோடு கேடகத்தையும் பற்றிக்கொண்டு, உடன்று போர் புரிவது போலும் - கோபித்துப் (பகைவரோடு) போர் புரிதலை ஒக்கும் எ-று. வாளை வாளினையும், ஆமை கேடகத்தையும் போலுமென்க. கேடகம் - பரிசை. அகழியும் புரிசைப்பொறியும் போர்புரிவது போலும் எனினும் ஆம். இதற்கு அன்றி என்பது மாறுபட்டு என்னும் பொருளதாகும். அகழியும் பொறியும் எனினும், அகழி பொறியுடன் மாறுபட்டு என்று கருத்துக் கொள்ளவேண்டும். ஒன்றிஎன்பது பாட மாயின் எதிரெதிர் பொருந்தி யென்க. ஏ:அசை. புரிவது தொழிற்பெயர். (15) கண்ணி லாதவெங் கூற்றெனக் கராங்கிடந் தலைப்ப மண்ணி னாரெவ ரேனுமிம் மடுவிடை வீழ்ந்தோர் தெண்ணி லாமதி மிலைந்தவர்க் கொப்பெனச் சிலரை எண்ணி னாரிரு ணரகநீத் தேறினு மேறார். (இ-ள்.) கண் இலாத - கண்ணோட்டமில்லாத, வெம்கூற்று என-வெவ்விய கூற்றுவனைப்போல, கராம் கிடந்து அலைப்ப - முதலை இருந்து வருத்துதலைச் செய்ய, மண்ணினார் எவரேனும் - நிலவுலகிலுள்ளார் யாவரேனும், இம்மடுவிடை வீழ்ந்தோர் - இவ்வகழியின் கண் வீழ்ந்தவர்கள், தெள்நிலா மதிமிலைந்தவர்க்கு - தெள்ளிய நிலவினையுடைய சந்திரனைச் சடையிலணிந்த இறைவனுக்கு, ஒப்பு என - சமம் என்று, சிலரை எண்ணினார் - சில தேவரைக் கருதினவர்கள், இருள் நரகம் நீத்து ஏறினும் - இருளாகிய நரகத்தைக் கடந்தேறினாலும், ஏறார் - ஏறமாட்டார்கள் எ-று. கண் - கண்ணோட்டம். கூற்றுவனுக்குக் கண்ணோட்ட மின்மையை, “ தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர் ஈற்றிளம் பெண்டி ராற்றாப் பாலகர் முதியோ ரென்னா னிளையோ ரென்னான் கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்ப” என மணிமேகலை கூறுவதானு மறிக. கராம் - முதலையின் சாதிபேதம். “கொடுந்தாண் முதலையும் இடங்கருங் கராமும்” எனக் குறிஞ்சிப் பாட்டில் வருதல் காண்க. முழுமுதற் பொருளாகிய சிவபெருமானுடன் ஏனைத் தேவரைச் சேர்த்தெண்ணுதல் பொருந் தாதென்பதனை, “ சாவமுன் னாட்டக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சமஞ்சி ஆவவெந் தாயென் றவிதா விடுநம் மவரவரே மூவரென் றேயெம் பிரானொடு மெண்ணிவிண் ணாண்டுமண்மேல் தேவரென் றேயிறு மாந்தென்ன பாவந் திரிதவரே” என வாதவூரடிகள் இரங்கிக் கூறுவதாலறிக. இருளாகிய நரக மென்க. இருள் - நரக வகையுளொன்று;அடங்காமை ஆரிருளுய்த்து விடும் என்பதற்குப் பரிமேலழகரெழுதிய உரையுங்காண்க. ஏறினும் என்பது ஏறாரென்பதுபட நின்றமையின் எதிர்மறை யும்மை. (16) குமிழ லர்ந்தசெந் தாமரைக் கொடிமுகிழ் கோங்கின் உமிழ்த ரும்பர ஞானமுண் டுமிழ்ந்தவாய் வேதத் தமிழ றிந்துவை திகமுடன் சைவமு நிறுத்தும் அமிழ்த வெண்டிரை வையையு மொருபுறத் தகழாம். (இ-ள்.) குமிழ் அலர்ந்த - குமிழம்பூ மலர்ந்த, செந்தாமரை - செந்தாமரை மலரையுடைய, கொடி - கொடியின்கண், முகிழ் கோங்கின் - முகிழ்த்த கோங்கரும்பினின்றும், உமிழ்தரும் - பொழிந்த, பரஞானம் உண்டு - சிவஞானத்தைப் பருகி, வாய் உமிழ்ந்த - (திருஞான சம்பந்தப் பெருமானார்) திருவாயால் வெளியிட்டருளிய, வேதத் தமிழ் அறிந்து - வேதமாகிய தமிழின் பெருமையையறிந்து, வைதிக முடன் - வேதநெறியோடு, சைவமும் நிறுத்தும் - சைவநெறியையும் நிலைபெறச் செய்த, அமிழ்த வெண்திரை - அமிர்தம்போலும் வெள்ளிய அலைகளையுடைய, வையையும் - வையையாறும், ஒருபுறத்து அகழாம் - (மதிலின்) ஓர் பக்கத்துள்ள அகழியாம் எ-று. குமிழ், தாமரை யென்பன அவற்றின் மலருக்கும், கோங்கு என்பது அதன் அரும்புக்கும் ஆகுபெயர். குமிழ் மூக்கிற்கும், செந்தாமரை முகத்திற்கும், கொடி திருமேனிக்கும், கோங்கு தனத்திற்கும் உவமமாவன; அவற்றையே மூக்கு முதலியவாகக் கூறினார்; கேட்டோர்க்கு மகிழ்ச்சி யுண்டாமாகலின். குமிழாகிய கோட்டுப்பூ நீர்ப்பூவாகிய தாமரையுள் அலர்தலும், அதனைக் கொடி உடைத்தாதலும், அதன்கண் கோங்கமரத்தின் அரும்பு இருத்தலும் என்னுமிவையும் அபூதமாய் இன்பம் பயத்தல் காண்க. கோங்கின் உமிழ்தரும் பரஞானம் என்றது உமையம்மையார் தமது திருத்தனத்தினின்றும் கறந்தருளிய பாலுடன் கலந்த சிவஞானம் என்க. இதனை, “ வாரிணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்தருளி” எனவும், “ எண்ணரிய சிவஞானத் தின்னமுதங் குழைத்தருளி” எனவும் திருத்தொண்டர் புராணங் கூறுதலானறிக. உண்டருளிய பரஞானமே தமிழ் வேதமாக வெளிப்போந்ததென்பார் ‘உண்டு மிழ்ந்த வாய்வேதத் தமிழ்’ என்றார்; இதனானே அபரஞான மெனப்படும் மற்றைக் கலைகளினும் தமிழ்வேதம் சிறந்ததாதலும் பெறப்படும். வாய் என்பதனை முன்னே கூட்டுக; வாய்வேதம் - உண்மைவேதம் என்னலுமாம். திருஞானசம்பந்தப் பெருமான் சமணர்களோடு வாது நிகழ்த்துங் காலையில் பாசுரம் எழுதியிட்ட திருவேடானது வையையில் எதிரேறிச் சென்றதாகலின், அதன் பெருமையை வையை அறிந்ததெனக் கொண்டு தமிழறிந்து என்றும், அதனால் பிள்ளையார் திருவவதாரத்தின் நோக்கமாகிய வேதநெறி தழைத்தோங்கலும், மிகுசைவத் துறை விளங்கலும் நிறை வேறினமையின், அதனை அதன்மேலிட்டு ‘வைதிகமுடன் சைவமு நிறுத்தும்’ என்றுங் கூறினார். பாசுரமாவது; “ வாழ்க வந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல் லாமர னாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே” என்பது. (17) பிள்ளை யும்பெடை யன்னமுஞ் சேவலும் பிரியாக் கள்ள முண்டகச் செவ்வியாற் கண்டவர் கண்ணும் உள்ள முந்திரும் பாவகை சிறைப்படுத் தோங்கும் புள்ள லம்புதண் கிடங்கிது புரிசையைப் புகல்வாம். (இ-ள்.) பிள்ளையும் பெடை அன்னமும் சேவலும் - பார்ப்பும் அன்னப்பேடும் சேவலும், பிரியா - நீங்காத, கள்ள - தேனையுடைய - முண்டகம் - தாமரை மலர்களின், செவ்வியால் - அழகினால், கண்டவர் - பார்த்தவர்களின், கண்ணும் உள்ளமும் - கண்களும் மனமும், திரும்பாவகை - மீளாவண்ணம், சிறைப்படுத்து - அகப்படுத்தி, ஓங்கும் - மேன்மையுற்ற, புள் அலம்பு - பறவைகள் ஒலிக்கப்பெறு கின்ற, தண்கிடங்கு இது - குளிர்ந்த அகழி இத்தன்மையது; புரிசையைப் பகர்வாம் - (இனி) மதிலின் பெருமையைக் கூறுவாம் எ-று. பிள்ளை - பறவையின் இளமைப்பெயர்; ‘பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை’ என்பது மரபியல். பெடையன்னமென இடை நிற்றலின் அன்னப்பார்ப்பும் அன்னச் சேவலுமென்க. புள் - வண்டுமாம். கள்ள - குறிப்பு வினைப்பெயரெச்சம். (18) மதில் மாக முந்திய கடிமதின் மதுரைநா யகர்கைந் நாக மென்பதே தேற்றமந் நகர்மதில் விழுங்கி மேக நின்றசை கின்றதவ் வெஞ்சினப் பணிதன் ஆக மொன்றுதோ லுரிபட நெளிவதே யாகும். (இ-ள்.) நாகம் உந்திய - வானுலகை ஊடறுத்துச் சென்ற, கடிமதில் - காவலாயுள்ள மதிலானது, மதுரை நாயகர் - மதுரேசராகிய சோமசுந்தரக்கடவுளின், கைந்நாகம் என்பதே தேற்றம் - கையி லணிந்த பாம்பென்பதே துணிபு; அந்நகர் மதில் விழுங்கி - அந்நகரின் மதிலைமறைத்து, மேகம் நின்று அசைகின்றது - முகிலானது தங்கி அசைகின்றது, அவ்வெம் சினப்பணி - அந்த வெவ்விய சினத்தினையுடைய பாம்பானது, தன் ஆகம் ஒன்று தோல் - தனது உடலோடு பொருந்திய தோல், உரிபட நெளிவது ஆகும் - உரிபடும் பொருட்டு நெளிகின்றதை ஒக்கும் எ-று. முந்திய எனப்பிரித்து முந்துற்றுச் சென்ற என்னலுமாம். சிவபெருமான் கையிலணிந்திருந்த கங்கணமாகிய பாம்பினால் நகரின் எல்லை காட்டப்பெற்றமையின் மதிலை நாகமென்றார். பாம்பு எல்லை காட்டியதனை இப்புராணத்தே திருவாலவாயான படலத்திற் காண்க. என வென ஒரு சொல் வருவித்து, மேகமென நின்றசைகின்றது நெளிவதேயாகும் ஆகலின் நாகமென்பதே தேற்றம் என முடித்தலுமாம். (19) புரங்க டந்தபொற் குன்றுகோ புரமெனச் சுருதிச் சிரங்க டந்தவர் தென்னரா யிருந்தனர் திருந்தார் உரங்க டந்திட வேண்டினு முதவிசெய் தவரால் வரங்க டந்திடப் பெறவெதிர் நிற்பது மானும். (இ-ள்.) புரம்கடந்த பொன் குன்று - திரிபுரத்தை வெல்லுதற்கு வில்லாயிருந்த மேருமலையானது, சுருதிச் சிரம் கடந்தவர் - மறை முடியைக் கடந்தவராகிய இறைவர், தென்னராய் இருந்தனர் - பாண்டி மன்னராய் இருந்தனர் (ஆதலின்), திருந்தார் உரம் கடந்திட வேண்டினும் - வலிய பகைவர்களை வெல்லுதற்கு (இன்னும்) வேண்டியிருந்தாலும், உதவி செய்து - உபகரித்து, அவரால் - அவ்விறைவரால், வரங்கள் தந்திடப்பெற - வரங்கள் அருளப்பெற, கோபுரம் என - கோபுரம் என்று சொல்ல, எதிர் நிற்பது மானும் - எதிர் நிற்றலை ஒக்கும் எ-று. பகைவரின் வலியை அடக்க என்னலுமாம். வேண்டினும் என்னும் உம்மை முன் வேண்டியிருந்த தென்பதுபட நின்றமையின் எச்சவும்மை. மேருவே கோபுரமென நிற்பதென்று கோபுரத்தின் பெருமை கூறினார். கடந்த என்னும் பெயரெச்சம் கருவிப் பெயர்கொண்டது. மானும் என்பதற்குக் கோபுரம் என்னும் எழுவாய் வருவித்துக்கொள்க. திரிபுர மெரித்த வரலாறாவது :- தாருகாக்கன், கமலாக்கன், வித்துன்மாலி என்னும் அரக்கர் மூவரும் சிவபெருமானைக் குறித்துத் தவங்கிடந்து இரும்பு வெள்ளி பொன் என்பவற்றா லாகியனவும், திரியுமியல்பினவுமாகிய மூன்று அரண்களைப் பெற்று அவற்றுடன் சென்று பல இடங்களையு அழித்துத் தேவர் முதலாயினார்க்குந் துன்பம் விளைவித்து வந்தனர். அப்பொழுது திருமால் முதலிய தேவர்கள் வேண்டிக் கொண்டதற்கிரங்கிச் சிவபெருமான் புவித்தேரூர்ந்து மேருவை வில்லாகவும் வாசுகியை நாணாகவும் திருமாலைக் கணையாகவும் தீக்கடவுளை அம்பின் முனையாகவும் கொண்டு சென்று திரிபுரத்தை நோக்கி நகைபுரிய அவை எரிந்து பட்டன என்பது. திரிபுரத்தின்மீது அம்பெய்து, அழித்ததாகவும் திருமுறைகளிற் பலவிடத்துக் கூறப்பெற்றுள்ளது. சிவபத்தி மிக்காராகிய அவர்களை அழித்தற்கு உபாயமாகத் திருமாலானவர் நாரதர் முதலானோரைக் கொண்டு அவர்கட்குப் புத்தமதத்தைப் போதிப்பித்துச் சிவபத்தி குன்றுமாறு செய்வித் தனரென்றும் கூறப்படுகின்றது. திரிபுரம் எரியுண்டகாலையில் மூவர் உய்ந்தனரென்றும், அவருள் இருவரை வாயில் காவலாள ராகவும் ஒருவனை முழவம் வாசிப்போனாகவும் சிவபெருமான் அமைத்துக் கொண்டனரென்றும் மூவரையும் காவலாளராகக் கொண்டன ரென்றும் தமிழ்மறைகள் கூறுகின்றன. “ மூவெயில்செற்றஞான் றுய்ந்தமூவரி லிருவர்நின்றிருக் கோயிலின்வாய்தல் காவலாளரென் றேவியபின்னை யொருவனீகரி காடரங்காக மானைநோக்கியோர் மாநடமகிழ மணிமுழா முழக்க வருள்செய்த தேவதேவநின் றிருவடியடைந்தேன் செழும்பொழிற்றிருப் புன்கூருளானே” எனத் தேவாரமும், “ உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண் டெய்யவல் லானுக்கே யுந்தீபற” எனவும், “ எண்ணுடை மூவ ரிராக்கதர்க ளெரிபிழைத்துக் கண்ணுத லெந்தை கடைத்தலைமு னின்றதற்பின்” எனவும், திருவாசகமும் கூறுதல் காண்க. (20) சண்ட பானுவுந் திங்களுந் தடைபடத் திசையும் அண்ட கோளமும் பரந்துநீண் டகன்றகோ புரங்கள் விண்ட வாயிலால் வழங்குவ விடவரா வங்காந் துண்ட போல்பவு முமிழ்வன போல்பவு முழலா. (இ-ள்.) சண்ட பானுவும் - வெம்மை மிக்க சூரியனும், திங்களும் - சந்திரனும், தடைபட - தாம் போக்கொழியும் வகை, திசையும் அண்டகோளமும் - எட்டுத் திக்குகளிலும் அண்ட முகட்டிலும், பரந்து நீண்டு அகன்ற - அகன்று உயர்ந்து சென்ற, கோபுரங்கள் - கோபுரங்களின், விண்ட வாயிலால் - திறந்த வாயில் வழியால், உழலா வழங்குவ - உழன்று சஞ்சரிப்பன, விட அரா - நஞ்சினையுடைய இராகு கேது என்னும் பாம்புகளால், உண்ட போல்பவும் உமிழ்வன போல்பவும் - உண்ணப்பட்டன போல் வனவும் உமிழப்படுவன போல்வனவும் (ஆம்.) எ-று. சண்டபானு - விரைந்த செலவினையுடைய சூரியன் என்றுமாம். அகன்ற - சென்ற. பானுவுந் திங்களுமென இரண்டாதலின் பன்மைவினை கொடுத்தார். வழங்குதலும், உண்டுமிழ்தலும் பல்கால் நிகழ்தல் பற்றியுமாம். வழங்குவ, போல்ப என்பன தொழிற்பெயருமாம். உண்ட: அன்சாரியை யின்றி நின்றது. உண்டற்குப் பின் நிகழ்வது பற்றி ‘உமிழ்வன’ என எதிர்காலத்தாற் கூறினார். ஆம் என்பது வருவிக்கப் பட்டது. (21) மகர வேலையென் றியானைபோன் மழையருந் தகழிச் சிகர மாலை1 சூழம்மதி றிரைக்கரந் துழாவி அகழ வோங்குநீர் வையையா லல்லது வேற்றுப் பகைவர் சேனையாற் பொரப்படும் பாலதோ வன்றே. (இ-ள்.) மகரம் வேலை என்று - சுறாமீன்களையுடைய கடல் என்று கருதி, யானைபோல் - யானைகளைப்போல, மழை - முகிற் கூட்டங்கள், அருந்து - நீருண்ணப் பெறுகின்ற, அகழிச் சிகரமாலை சூழ் - அகழியின் அலை வரிசையாற் சூழப்பட்ட, அம்மதில் - அந்த மதிலானது, திரைக்கரம் - அலையாகிய கைகளால், துழாவி அகழ - துழாவிக் கல்லும்படி, ஓங்குநீர் - பெருகிய நீரினையுடைய, வையையால் அல்லது - வையை நதியாலன்றி,வேற்றுப் பகைவர் சேனையால் - வேற்று நாட்டுப் பகைமன்னரின் படையால், பொரப்படும் பாலதோ அன்று - தாக்கப்படுந் தன்மையதோ அன்று எ-று. மகரம் - சுறா; அதனை யுடைமையால் கடல் மகராலயம் எனவும்படும். சிகரம் - அலை. சிகரம் என்பதனைச் சீகரம் என்பதன் குறுக்கமாகக் கொண்டு நீர்த்திவலை என்னலுமாம். மாலை - வரிசை.‘அகழி சிகரமாலை’ எனப் பாடங் கொண்டு, அகழியும் சிகரவரிசையும் என்று உரைப்பாருமுளர். வையைாற் பொரப்படு வதல்லது என உரைக்க. மதுரையின் மதில் வையையாலன்றிப் பகைவராற் பொரப்படுவதன் றென்னுமிக்கருத்து, “ கார்முற்றி யிணரூழ்த்த கமழ்தோட்ட மலர்வேய்ந்து சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி யிருநிலம் தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன் நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லா னேராதார் போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன்” என்னும் மருதக்கலியினின்றுந் தோன்றியதாகும். (22) எல்லை தேர்வழித் தடைசெயு மிம்மதிற் புறஞ்சூழ்ந் தொல்லை மேவலர் வளைந்துழி யுடன்றுபோ ராற்றி வெல்ல மள்ளரும் வேண்டுமோ பொறிகளே வெல்ல வல்ல வம்மதிற் பொறிசெயு மறஞ்சிறி துரைப்பாம். (இ-ள்.) எல்லை - சூரியனின், தேர்வழி - தேர் செல்லும் வழி யாகிய வானை; தடை செயும் - தடைப்படுத்தும், இம்மதில் புறம் - இம்மதிலின் புறத்தே, மேவலர் - பகைவர், ஒல்லை சூழ்ந்து வளைந்துழி - விரைவாக முற்றிவளைத்த காலத்து, உடன்று - சினந்து, போர் ஆற்றி - போர் செய்து, வெல்ல - (அவர்களை) வெல்லுதற்கு, மள்ளரும் வேண்டுமோ - வீரரும் வேண்டுமோ (வேண்டா), பொறிகளே வெல்ல வல்ல - (அம்மதிற்) பொறிகளே வெல்ல வல்லன; அம்மதிற் பொறி செயும் - அவை செய்கின்ற, மறம் சிறிது உரைப்பாம் - வீரச் செய்கைகளில் சிலவற்றைக் கூறுவாம் எ-று. எல்லை - சூரியன்; எல்: பகுதி, ‘எல்லை தேர்வழித் தடை செயும்’ என்பதற்கு, உயர்வகலமாகிய எல்லையை ஆராயும் வழி அறிவைத் தடைசெயும் என்று பொருளுரைப்பாருமுளர். மள்ளர் - வீரர்; வலியுறுத்தற்கு வேண்டுமோ எனவும், வல்ல எனவுங் கூறினார். வல்ல: குறிப்பு வினைமுற்று அன்சாரியையின்றி நின்றது. வளைந்துழி: வினையெச்சம். மதில் வளைத்தல் உழிஞை யெனப் படும். (23) மதிற் பொறிகள் (எழுசீரடியாசிரியவிருத்தம்) மழுக்கள் வீசுவன நஞ்சு பூசுமுனை வாள்கள் வீசுவன முத்தலைக் கழுக்கள் வீசுவன குந்த நேமியெரி கால வீசுவன காலனேர் எழுக்கள் வீசுவன கப்ப ணங்கள்விட மென்ன வீசுவன வன்னெடுங் கொழுக்கள் வீசுவன கற்க வண்கயிறு கோத்து வீசுவன வார்த்தரோ. (இ-ள்.) (பொறிகளிற் சில) மழுக்கள் வீசுவன - மழுப்படை களை எறிவன; நஞ்சு பூசுமுனை - நஞ்சு பூசிய முனையையுடைய, வாள்கள் - வாட்படைகளை, வீசுவன - எறிவன; முத்தலைக் கழுக்கள் - மூன்று முடியையுடைய சூலப்படைகளை, வீசுவன - எறிவன; குந்தம் நேமி - கைவேல் திகிரி என்னும் படைகளை, எரிகால வீசுவன - அனலுமிழ எறிவன; காலன் நேர் எழுக்கள் - கூற்றுவனை ஒத்த வளைதடிகளை, வீசுவன - எறிவன; கப்பணங்கள் - இரும்பாலாகிய நெருஞ்சின் முள் வடிவப் படைகளை, விடம் என்ன - நஞ்சு என்று சொல்லும்படி, வீசுவன - எறிவன; வல்நெடும் கொழுக்கள் - வலிய நெடிய கொழுப்படைகளை, வீசுவன - எறிவன; கவண் கயிறு - கவண் கயிற்றில், கல் கோத்து - கல்லைக் கோத்து, ஆர்த்து - ஆரவாரித்து, வீசுவன - எறிவன எ-று. குந்தம் - விட்டேறு என்பர் நச்சினார்க்கினியர்; சிறுசவளம் என்பர் சிலப்பதிகார உரையாளர்கள். கப்பணம் - இரும்பினாலே யானை நெருஞ்சின்முள் வடிவாகச் செய்யப்பட்டது. கல்வீசுவன இடங்கணிப் பொறி முதலியன என்பர். சில என்னும் எழுவாயை ஒவ்வொன்றுக்கும் கூட்டிக்கொள்க. அரோ: அசை. (24) நஞ்சு பில்குதுளை வாளெ யிற்றரவு நாநிமிர்த் தெறியு மலையரா வெஞ்சி னங்கொண்முழை வாய்தி றந்துபொரு வாரை விக்கிட விழுங்குமால் குஞ்ச ரங்கொடிய முசலம் வீசியெதிர் குறுகு வார்தலைகள் சிதறுமால் அஞ்சு வெம்பொறி விசைப்பி னுங்கடுகி யடுபு லிப்பொறி யமுக்குமால். (இ-ள்.) நஞ்சு பில்கு துளை - நஞ்சினைச் சிந்துகின்ற துளை யினையுடைய, வாள் எயிற்று அரவு - கூரிய பற்களையுடைய பாம்புப் பொறிகள், நாநிமிர்த்து எறியும் - நாவை நீட்டி (ப் பகைவரைக்) கொல்லும்; வெம் சினம்கொள் - கொடிய சினங் கொண்ட, மலை அரா - மலைப் பாம்புப் பொறிகள், முழைவாய் திறந்து - குகைபோலும் வாயைத்திறந்து, பொருவாரை விக்கிட விழுங்கும் - போர் செய்வாரை விக்கும்படி விழுங்கும்; குஞ்சரம் - யானைப் பொறிகள், கொடிய முசலம் வீசி - கொடிய உலக்கைப் படையை வீசி, எதிர் குறுகுவார்கள் - எதிரே நெருங்குவார்களின், தலைகள் சிதறும் - தலைகளைச் சிந்தும்; அடுபுலிப்பொறி - கொல்லும் புலிப்பொறிகள், அஞ்சு வெம்பொறி - கொடிய ஐந்து பொறிகளின், விசைப்பினும் - வேகத்தினும், கடுகி அமுக்கும் - விரைந்து (பகைவரை) அமுக்கும் எ-று. ஐம்பொறி யுவமையை நன்னெறி விலக்கும் பொறியென வெறியுங் கராத்தது என அகழிச் சிறப்பில் வைத்துள்ளார் கம்ப நாடர். ஆல் எல்லாம் அசை. (25) எள்ளி யேறுநரை யிவுளி மார்பிற வெறிந்து குண்டகழி யிடைவிழத் தள்ளி மீளுமுருள் கல்லி ருப்புமுளை தந்து வீசியுடல் சிந்துமாற் கொள்ளி வாயலகை வாய்தி றந்துகனல் கொப்பு ளிப்பவுடல் குப்புறத் துள்ளி யாடுவன கைகள் கொட்டுவன தோள்பு டைப்பசில கூளியே. (இ-ள்.) இவுளி - குதிரைப் பொறிகள், எள்ளி ஏறுநரை - இகழ்ந்து ஏறியவர்களை, மார்பு இற எறிந்து - (அவர்கள்) மார்பு ஒடியும்படி உதைத்து, குண்டு அகழி இடை - ஆழமாகிய அகழியின் கண், விழத்தள்ளி மீளும் - விழும்படி வீழ்த்தித் திரும்பும் உருள் கல் இருப்புமுளை தந்து - உருட்சியாகிய கல் இருப்புமுளை அரிகயிறு என்னும் படைகளை, வீசி உடல் சிந்தும் -எறிந்து (பகைவர்) உடலை அழிக்கும் (சில பொறிகள்); கொள்ளிவாய் அலகை - கொள்ளிவாய்ப் பைசாசப் பொறிகள், வாய்திறந்து - தம் வாய்களைத் திறந்து, கனல் கொப்புளிப்ப - தீயை உமிழ்வன; சில கூளி - சில பேய்ப் பொறிகள், உடல் குப்புறத்துள்ளி ஆடுவன - உடல் குப்புறும்படி குதித்து விளையாடுவன, கைகள் கொட்டுவன - கைகளைக் கொட்டுவன, தோள்புடைப்ப - தோள்களைத் தட்டுவன எ-று. தந்து - நூல். நூல் - அரிகயிறு என்பர் நச்சினார்க்கினியர். தந்து என்பதற்கே கொணர்ந்து எனலும், ஆம். கொப்புளிப்ப, புடைப்ப; அன்பெறாத பலவின்பால் முற்றுக்கள். (26) துவக்கு சங்கிலி யெறிந்தி ழுக்குமரி தொடர்பி டித்தகை யறுக்கவிட் டுவக்கு மொன்னலர்க டலைக ளைத்திருகி யுடனெ ருக்குமர நிலைகளாற் கவைக்கொ ழுந்தழல் கொளுத்தி வீசுமெதிர் கல்லு ருட்டியடு மொல்லெனக் குவைக்க டுங்கன்மழை பெய்யு மட்டமணல் கொட்டு மேவலர்கள் கிட்டவே. (இ-ள்.) (சில பொறிகள்) மேவலர்கள் கிட்ட - பகைவர்கள் அணுகுங்கால், துவக்கு சங்கிலி - கட்டுகின்ற சங்கிலியை, எறிந்து இழுக்கும் - வீசி இழுக்கும்; பிடித்தகை அறுக்க - பற்றிய கையைத் தறித்தற் பொருட்டு, அரிதொடர்விட்டு உவக்கும் - அரிசங்கிலியை விட்டு மகிழும்; மரம் நிலைகளால் - மரநிலைகளினால், ஒன்னலர் கள் - பகைவர்களின், தலைகளைத் திருகி உடல் நெருக்கும் - தலைகளைப் பறித்து உடல்களை நெறிக்கும்; கவைக்கொழுந்து - பிளவாகிய சிகையையுடைய, அழல்கொளுத்தி வீசும் - தீயைக் கொளுத்தி எறியும்; கல் எதிர் உருட்டி அடும் - கல்லை எதிரே உருட்டிக் கொல்லும்; ஒல்லென - ஒல் என்னும் ஒலியோடு, குவை - கூட்டமாக, கடும் கல்மழை பெய்யும் - கடிய கல்மழையைப் பொழியும்; அட்ட மணல் கொட்டும் - வறுத்த மணலைக் கொட்டும் எ-று. மரநிலை - ஐயவித்துலாம் என்பர் நச்சினார்க்கினியர். ஒல்லென - விரைய எனலுமாம். (27) உருக்கி யீயமழை பெய்யு மாலய வுருக்கு வட்டுருகு செம்பினீர் பெருக்கி வீசும்விடு படையெ லாமெதிர் பிடித்து விட்டவர் தமைத்தெறச் செருக்கி வீசுநடை கற்ற மாடமொடு சென்று சென்றுதுடி முரசொடும் பெருக்கி மீளுநடை வைய மேனடவி யெய்யும் வாளிமழை பெய்யுமால். (இ-ள்.) (சில பொறிகள்) ஈயம் உருக்கி - ஈயத்தையுருக்கி, மழைபெய்யும் - மழைபோல (ப்பகைவர் மீது) பொழியும்; உருளும் அய உருக்குவட்டு செம்பின் நீர் - உருகிய இரும்பாலாகிய உருக்குவட்டுக் களோடு செம்பின் நீரையும், பெருக்கி வீசும் - மிகுத்து வீசும்; விடுபடை எலாம் - (பகைவர்) விடுகின்ற படைகள் அனைத்தையும், எதிர்பிடித்து - எதிர்நின்று பிடித்து, விட்டவர்தமை - அப்பகைவரை, தெறச் செருக்கி வீசும் - கொல்லும்படி செருக்குடன் வீசும்; நடைகற்ற மாடமொடு - சஞ்சரிக்கின்ற மாடங்களோடு, சென்று சென்று - பல இடங்களிலும் போய், துடி முரசொடும் - உடுக்கை யொலியைப் பேரிகை யொலியோடும், பெருக்கிமீளும் - மிகச் செய்து திரும்பும்; நடைவையம் - நடைத் தேரை, மேல் நடவி - மேலே செலுத்தி, எய்யும் வாளி மழைபெய்யும் - எய்கின்ற அம்பு மழையைப் பொழியும் எ-று. வையம் - தேர். நடை வையமென்றது புரவி முதலியனவின்றிச் செலுத்துந் தேரை. நடவி - நடத்தி, நடவு: பகுதி, இ: வினையெச்ச விகுதி. ஆல்: அசை. (28) வெறிகொ ளைம்பொறியை வெல்லினும் பொருது வெல்லு தற்கரிய காலனை முறிய வெல்லினும் வெலற்கருங் கொடிய முரணவா யமர ரரணெலாம் அறிவி னானிறுவு கம்மி யன்செயவு மரியவா யவனர் புரியுமிப் பொறிகள் செய்யும்வினை யின்ன பொன்னணி புரத்து வீதிக ளுரைத்துமால். (இ-ள்.) வெறிகொள் - மயக்கத்தைக்கொண்ட, ஐம்பொறியை - ஐந்து பொறிகளையும், வெல்லினும் - வென்றாலும், பொருது - போர் செய்து, வெல்லுதற்கு அரிய - வெல்ல முடியாத, காலனை - கூற்றுவனையும், முறியவெல்லினும் - புறங்கொடுக்க வென்றாலும், வெலற்கு அரும் - வெல்லுதற்கு முடியாத, கொடிய முரணவாய் - கொடிய வலியையுடையனவாய், அமரர் அரண் எலாம் - தேவர் களின் அரண்முதலிய எல்லாவற்றையும், அறிவினால் நிறுவு கம்மியன் - நினைத்தலினாலேயே படைக்கும் தேவதச்சன், செயவும் அரியவாய் - செய்யவும் இயலாதனவாய், யவனர் புரியும் - யவனர்களால் செய்யப்பெற்ற, இப்பொறிகள் செய்யும் வினை இன்ன - இம்மதிற் பொறிகள் செய்கின்ற தொழில்கள் இத்தன்மையன; பொன்புரத்து - அழகிய மதுரைமா நகரத்தின், வீதிகள் அணி உரைத்தும் - வீதிகளின் அழகைச் சொல்வாம் எ-று. ஐம்பொறியை வெல்லுதல் அருமை யென்பது, “ ஐவரை யகத்தே வைத்தீ ரவர்களே வலியர் சால” என்னுந் திருநேரிசை யானுமறிக. யவனர் - கிரேக்க தேசத்தார்; இவர்கள் பண்டை நாளிலே தமிழ் நாட்டிற் போந்து தமிழரசர்க்கு வாயிற்காத்தல் முதலிய ஊழியம் புரிவோராயும், வேறுபல தொழில் செய்வோராயு மிருந்தனர்; இவர்கள் மிலேச்சர் எனவும் சோனகர் எனவும் படுவர்; எகிப்து முதலிய தேசத்தினரையும் யவனரென்னும் பெயருக்குட்படுத்தல் பொருந்தும். இவர்கள் சிற்பம்வல்லராயிருந்த செய்தி பழைய தமிழ்நூல் பலவற்றானும் அறியப்படுகின்றது. தமிழரசர்கள் யவனரது நாட்டினையும் அடிப்படுத்தாண்டிருக் கின்றன ரென்பது. “ வன்சொல் யவனர் வளநா டாண்டு பொன்படு நெடுவரை புகுந்தோ னாயினும்” என்னும் சிலப்பதிகாரத்து நடுகற் காதையா லறியப்படுகின்றது. யவனர் புரியும் என்பதற்குத் தண்டமிழ் வினைஞர் தம்மொடுங் கூடி யவனரியற்றிய என்பது கருத்தாகக் கொள்க. ஆல்;அசை. பின்வருஞ் செய்யுட்கள் இங்கே நோக்கற் பாலன: “ மிளையுங் கிடங்கும் வளைவிற் பொறியுங் கருவிர லூகமுங் கல்லுமிழ் கவணும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியுங் காய்பொன் னுலையுங் கல்லிடு கூடையுந் தூண்டிலுந் தொடக்கு மாண்டலை யடுப்புங் கவையுங் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமுங் கைபெய ரூசியுஞ் சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் எழுவுஞ் சீப்பு முழுவிறற் கணையமுங் கோலுங் குந்தமும் வேலும் பிறவும் ஞாயிலுஞ் சிறந்து நாட்கொடி நுடங்கும்” சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை அடி 207 - 217. “ மாற்றவர் மறப்படை மலைந்துமதில் பற்றின் நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கியெறி பொறியுந் தோற்றமுறு பேய்களிறு துற்றுபெரும் பாம்புங் கூற்றமன கழுகுதொடர் குந்தமொடு கோண்மா” “ விற்பொறிகள் வெய்யவிடு குதிரைதொட ரயில்வாள் கற்பொறிகள் பாவையன மாடமடு செந்தீக் கொற்புனைசெய் கொள்ளிபெருங் கொக்கெழில்செய் கூகை நற்றலைக டிருக்கும்வலி நெருக்குமர நிலையே” “ செம்புருகு வெங்களிக ளுமிழ்வதிரிந் தெங்கும் வெம்புருகு வட்டுமிழ்வ வெந்நெய்முகந் துமிழ்வ அம்புமிழ்வ வேலுமிழ்வ கல்லுமிழ்வ வாகித் தம்புலங்க ளால்யவனர் தாட்படுத்த பொறியே”” “ கரும்பொனியல் பன்றிகத நாகம்விடு சகடங் குரங்குபொரு தகரினொடு கூர்ந்தரிவ நுண்ணூல் பரந்தபசும் பொற்கொடிகள் பதாகையொடு கொழிக்குந் திருந்துமதி றெவ்வர்தலை பனிப்பத்திருந் தின்றே”” சீவகசிந்தாமணி, நாமகளிலம்பகம் 72, 73,74,75. “ சினத்தயில் கொலைவாள் சிலைமழுத் தண்டு சக்கரந் தோமர முலக்கை கனத்திடை யுருமின் வெருவருங் கவண்கல் லென்றிவை கணிப்பில கொதுகின் இனத்தையு முவணத் திறையையு மியங்குங் காலையு மிதமல நினைவார் மனத்தையு மெறியும் பொறியுள வென்றான் மற்றினி யுணர்த்துவ தெவனோ.”” கம்பராமாயணம், நகரப்படலம். (29) கலிநிலைத்துறை கழையுந் தாமமுஞ் சுண்ணமு மணிநிழற் கலனுங் குழையுந் தூபமுந் தீபமுங் கும்பமுந் தாங்கித் தழையுங் காதலர் வரவுபார்த் தன்பகந் ததும்பி விழையுங் கற்பினா ரொத்தன விழாவறா வீதி. (இ-ள்.) விழா அறா வீதி - திருவிழாக்கள் நீங்கப் பெறாத வீதிகள், கழையும் - கரும்புகளையும், தாமமும் - பூ மாலைகளையும், சுண்ணமும் - வாசனைப் பொடிகளையும், மணி நிழல் கலனும் - இரத்தினங்களாலாகிய ஒளியையுடைய அணிகளையும், குழையும் - மாந்தளிர்களையும், தூபமும் தீபமும் கும்பமுந் தாங்கி - தூபங்களையும் தீபங்களையும் பூரண கும்பங்களையும் தாங்குத லால், (கழையும் தாமமும் சுண்ணமும் மணி நிழல்கலனும் குழையும் - கருப்புவில் எழுதிய தொய்யிலையும் பூமாலைகளையும் வாசனைப் பொடிகளையும் ஒளியையுடைய இரத்தினாபரணங்களையும் குண்டலங்களையும் அணிந்து, தூபமும் தீபமும் கும்பமும் - தூபதீப கும்பங்களாகிய மங்கலங்களை, தாங்கி - ஏந்தி) தழையும் காதலர் - தழைகின்ற காதலையுடைய தலைவரின், வரவு பார்த்து - வருகையை நோக்கி, அகம் அன்பு ததும்பி விழையும் - உள்ளத்தின்கண் அன்பு நிரம்பி விரும்பி நிற்கின்ற, கற்பினார் ஒத்தன - கற்பினையுடைய மகளிரை ஒத்தன எ-று. மகளிர்க்குச் சொல்லுங்கால், கழை - கரும்புவில் வடிவாக எழுதப்பெற்ற தொய்யில்; கழை, தாமம் முதலியவற்றை அணிந்து என்றும், தூபம் முதலியவற்றை ஏந்தி என்றும் கொள்க. நிழல் - ஒளி. நிழற்கலன் - கண்ணாடி என்னலும் ஆம்; படிமக்கலன் என்னும் பெயரும், கண்ணாடி அட்டமங்கலத்து ளொன்றாதலும் நோக்குக. வரவு பார்த்து என்றமையாற் பிரிந்து சென்ற காதலரின் வருகையை எதிர் நோக்கி யென்க.பிரிதல் ஓதல் முதலியன குறித்தாம்; “ ஓதல் காவல் பகைதணி வினையே வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தையென் றாங்க வாறே யவ்வயிற் பிரிவே” என்பது இறையனார்களவியல். (30) ஆல நின்றமா மணிமிடற் றண்ணலா னந்தக் கோல நின்றசே வடிநிழல் குறுகினார் குணம்போல் வேலை நின்றெழு மதியெதிர் வெண்ணிலாத் தெண்ணீர் கால நின்றன சந்திர காந்தமா ளிகையே. (இ-ள்.) ஆலம் நின்ற - நஞ்சு நிலைபெற்ற, மாமணி மிடற்று அண்ணல் - பெருமை பொருந்திய நீலமணிபோலும் திருமிடற்றினை யுடைய இறைவனின், ஆனந்தக்கோலம் நின்ற - இன்பவடிவம் நிலைபெற்ற, சேவடி நிழல் - சிவந்த திருவடி நீழலில், குறுகினார் குணம்போல் - (பிறவி வெப்புத்தணிய) அடைந்தவர்கள் (ஆனந்தக் கண்ணீர் சொரிய நிற்கும்) தன்மைபோல், சந்திரகாந்த மாளிகை - சந்திரகாந்தக் கற்களாலாகிய மாளிகைகள், வேலைநின்று எழு - கடலினின்று எழுகின்ற, மதி எதிர் - சந்திரன்முன்னர், வெள் நிலாத் தெள் நீர் கால நின்றன - வெள்ளிய ஒளியினையுடைய தெளிந்த நீர் ஒழுகும்படி நின்றன எ-று. குறுகினார் குணம் என்றது ஆனந்தக் கண்ணீர் பொழியு மியல் பினை; குணம் தெளிந்த நீர் என்னலுமாம். சந்திரகாந்தம் - சந்திரனைக் கண்டு நீர் சொரியும் ஒருவகைக் கல். (31) குன்ற நேர்பளிக் குபரிகை நிரைதொறுங் குழுமி நின்ற பல்சரா சரமுமந் நீழல்வாய் வெள்ளி மன்ற கம்பொலிந் தாடிய மலரடி நிழல்புக் கொன்றி யொன்றறக் கலந்தபல் லுயிர்நிலை யனைய. (இ-ள்.) குன்றம் நேர் - மலையை ஒத்த, பளிக்கு உபரிகை நிரைதொறும் - பளிங்குக் கற்களாலாகிய மேல்வீடுகளின் வரிசை தோறும், குழுமிநின்ற - கூடிநின்ற, பல் சர அசரமும் - பல இயங்கியற் பொருள்களும் நிலையியற் பொருள்களும், அந்நீழல்வாய் - அம்மேல் வீடுகளின் நீழலின்கண், ஒன்றி - கலத்தலால் (அவை), வெள்ளிமன்று அகம் - வெள்ளிமன்றின்கண், பொலிந்து ஆடிய - விளங்கி நடித்த, மலர் அடிநிழல் - மலர்போலும் திருவடி நீழலில், புக்குஒன்று அற(ஒன்றி) - போய் ஒன்றுமாகாமல் வேறுமாகாமல் சேர்ந்து, கலந்த நிலை - கலந்த தன்மைமையுடைய, பல் உயிர் அனைய - பல உயிர்களை ஒத்தன எ-று. ஒன்றி யென்பது முன்னுங் கூட்டி, ஒன்றலால் எனத் திரிக்கப் பட்டது. கலந்த நிலையையுடைய பல்லுயிர் என்க. நிழலில் ஒன்றி விளங்குந் தன்மைகள் பல்லுயிர் கலந்த தன்மைகளைப் போல்வன என்றுரைத்தலுமாம். ஒன்றற என்றது அபேதமின்றி யென்றபடி. பேதமின்றிக் கலத்தலென்பது இரண்டறக் கலத்தல் எனப்படும். ஆன்மாக்கள் இறைவனுடன் கலக்கும் கலப்பானது பேதம், அபேதம், பேதாபேதம் என்னும் மூன்றினும் வேறென்றும், அதுவே அத்துவிதம் எனக் கூறப்படுமென்றும் சைவ சித்தாந்தம் இயம்பு கின்றது. இதனை, “ புறச்சமயத் தவர்க்கிருளா யகச்சமயத் தொளியாய்ப் புகலளவைக் களவாகிப் பொற்பணிபோ லபேதப் பிறப்பிலதா யிருள்வெளிபோற் பேதமுஞ்சொற் பொருள்போற் பேதாபே தமுமின்றிப் பெருநூல் சொன்ன அறத்திறனால் விளைவதா யுடலுயிர்கண் ணருக்கன் அறிவொளிபோற் பிறிவருமத் துவிதமாகுஞ் சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாஞ் சைவ ddசித்தாந்தத் திறனிங்குத் தெரிக்க லுற்றாம்”” என்னும் சிவப்பிரகாசத் திருவிருத்தத்தா லறிக.d (32) கறித்த ருந்துபுற் குவைகழீ இக் காற்றொடர் பரியத் தெறித்த கன்றயன் மரகதச் சித்திரத் தெற்றி எறித்த பைங்கதிர்க் கொழுந்தையு மெட்டிநா வளைத்துப் பறித்து மென்றுவா யசைப்பன பசலையான் கன்று. (இ-ள்.) ஆன் பசலை கன்று - பசுவின் இளங்கன்றுகள், கறித்து அருந்து - கடித்துத் தின்னுகின்ற, புல் குவை கழீ இ-புற்குவியல்களை நீக்கி, கால் தொடர் - காலிற் கட்டிய கயிறானது, பரியத் தெறித்து அகன்று - அறும்படியாகத் துள்ளி (அங்கு நின்றும்) நீங்கி, அயல் - பக்கங்களிலுள்ள, மரகதம் - மரகதத்தாலமைந்த, சித்திரத்தெற்றி - சித்திரங்களமைந்த திண்ணைகள், எறித்த பைங்கதிர்க் கொழுந்தை - வீசுகின்ற பசிய ஒளிக்கொழுந்தை, நா வளைத்து - நாவை வளைத்து நீட்டி, எட்டிப்பறித்து - எட்டிப்பிடுங்கி, மென்றுவாய் அசைப்பன - தின்று வாயால் அசை போடுவன எ-று. கறித்து - கடித்து. கழீஇ - கழித்து. பறித்தும் என்று: எனப் பிரித்து, பறிப்பேமென்று எனப் பொருள் கூறலுமாம். கொழுந்தையும் என்பதில் உம்: அசை நிலை. (33) சிறுகு கண்ணவாய்க் காற்றெறி செவியவாய்ப் பாசம் இறுகு காலவாய்க் கோட்டுமா னினம்வழங் காறும் குறுகு நுண்மருங் கிறுத்தெழு கோட்டுமா னினம்போம் மறுகும் வண்டுசூழ்ந் திறைகொள மான்மத நாறும். (இ-ள்.) சிறுகு கண்ணவாய் - சிறிய கண்களையுடையனவாய், காற்று எறி செவியவாய் - காற்றை வீசும் செவிகளையுடையனவாய், பாசம் இறுகு காலவாய் - சங்கிலி இறுகப் பிணித்த கால்களை யுடையன வாய், கோட்டுமான் இனம் - கொம்புகளையுடையன வாகிய யானைக் கூட்டங்கள், வழங்கு ஆறும் - செல்லுகின்ற நெறிகளிலும், வண்டு சூழ்ந்து இறைகொள - வண்டுகள் மொய்த்துத் தங்க, மால் மதம் நாறும் - மிகுந்த மதநீர் மணக்கும்; குறுகுநுண் மருங்கு - மிக நுண்ணிய இடையானது, இறுத்து - முறிய, எழு கோட்டு - பூரித் தெழுந்த மலைச்சிகரம்போன்ற கொங்கைகளையுடைய, மான் இனம் - மான்போலும் மகளிர் கூட்டம், போம் மறுகும் - போகின்ற வீதிகளிலும், வண்டு சூழ்ந்து இறைகொள - வண்டுகள் மொய்த்துத் தங்க, மான்மதம் நாறும் - கத்தூரி கமழும் எ-று. கோட்டு மானினம் என்னுந் தொடர்கள் முன்னுள்ள அடை களால் யானைக் கூட்டத்தையும், மகளிரினத்தையும் குறிப்பன வாயின. மகளிரைக் குறிக்குமிடத்துக் கோடு, மான் என்பன அவைபோலும் பொருளுக்காயின. இறைகொள - தங்க;ஒரு சொல். மால் - பெரிய. மான்மத நாறும் என்பது முன்னுங் கூட்டித் தனித்தனி முடிக்கப்பட்டது. கண்ணவாய் என்பது முதலிய குறிப்பு வினை யெச்சங்கள் கொம்புகளையுடையனவாகிய என விரிக்கப் பட்ட பெயரெச்சவினை கொண்டுமுடியும். இறுத்து : செய வெனெச்சத்திரிபு.‘மான்மத நாறும்’ என்னும் வினை சிலேடையாய் ஆறு, மறுகு என்னும் இரண்டிற்கும் பொருந்துதலின் பல வினைச்சிலேடையாகும். மேல் இங்ஙனம் வருவனவும் இது. (34) மாட மாலையு மேடையு மாளிகை நிரையும் ஆட ரங்கமு மன்றிவே ளன்னவர் முடியும் ஏட விழ்ந்ததா ரகலமு மிணைத்தடந் தோளுஞ் சூடு மாதரார் சீறடிப் பஞ்சுதோய் சுவடு. (இ-ள்.) மாதரார் - மகளிரின், சிறு அடி தோய் - சிறிய அடி களில் ஊட்டிய, பஞ்சு சுவடு - செம்பஞ்சிக் குழம்பின் சுவட்டினை, மாடம் மாலையும் - மாடவரிசைகளும், மேடையும் மாளிகை நிரையும் - மேடை வரிசைகளும் மாளிகை வரிசைகளும், ஆடு அரங்கமும் - நடனசாலை வரிசைகளும், அன்றி - (சூடுவதே) அல்லாமல், வேள் அன்னவர் - மன்மதனை ஒத்த ஆடவர்களின், முடியும் - முடிகளும், ஏடு அவிழ்ந்ததார் அகலமும் - இதழ்கள் விரிந்த மாலையை யணிந்த மார்புகளும், இணைத்தடம் தோளும் - பெரிய இரண்டு தோள்களும், சூடும் - சூடா நிற்கும் எ-று. பஞ்சுதோய் சீறடிச் சுவடு என்றியைத்துரைத்தலும் ஆம். மகளிர் திரிந்து விளையாடுதலால் மாட முதலியவற்றிலும், அவர் கலவியிடத் தூடியபொழுது ஊடல் தீர்த்தற்கு வணங்கிய தலைவரை உதைத்தலால் அவர் அகலம் முதலியவற்றிலும் சுவடு பொருந்து மென்க. தலைவன் பணிதலும் தலைவி பணியாமையும் உண்டென்பதனை, “ மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவும் நினையுங் காலைப் புலவியு ளுரிய” என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தாலறிக. “ சிலைமலி வாணுத லெங்கைய தாகமெனச் செழும்பூண் மலைமலி மார்பி னுதைப்பத்தந் தான்றலை மன்னர்தில்லை உலைமலி வேற்படை யூரனிற் கள்வரி லென்னவுன்னிக் கலைமலி காரிகை கண்முத்த மாலை கலுழ்ந்தனவே” என்னும் திருக்கோவையார்ச் செய்யுளின் நயத்தினையும் நோக்குக. (35) மருமச் செம்புன லாறிட மாறடு கோட்டுப் பருமச் செங்கண்மால் யானையின் பனைக்கையு மறைநூல் அருமைச் செம்பொரு ளாய்ந்தவர்க் கரும்பொரு ளீவோர் தருமச் செங்கையு மொழுகுவ தானநீ ராறு. (இ-ள்.) மருமம் - மார்பினின்றும், செம்புனல் ஆறு இட - குருதி வெள்ளம் தோன்ற, மாறு அடு கோட்டு - பகைவரைக் கொல்லுகின்ற கொம்பினையுடைய, பருமம் - கவசத்தை யணிந்த, செம்கண் - சிவந்த கண்களையும், மால் - மத மயக்கத்தையும் உடைய, யானையின் பனைக்கையும் - யானையினது பனைபோன்ற துதிக்கையினின்றும், தானம் நீர் ஆறு - மதநீராகிய வெள்ளம், ஒழுகுவ - ஒழுகுவன; மறைநூல் - வேத நூலின், அருமைச் செம்பொருள் - அரிய உண்மைப் பொருளை, ஆய்ந்தவர்க்கு - ஆராய்ந்தவர்க்கு, அரும்பொருள் - கொடுத்தற் கரிய பொருளை, ஈவோர் தருமச் செங்கையும் - கொடுப்போர்களின் அறத்தையுடைய சிவந்த கைகளினின்றும், தானம் நீர் ஆறு -தானஞ் செய்யும் நீர்ப்பெருக்கு, ஒழுகுவ - ஒழுகுவன எ-று. செம்புனல் - குருதி. பருமம் - யானைமேற் போர்க்குங் கவசம். செம்பொருள் - கடவுள்; “ பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு” என்னும் திருக்குறளும், தோற்றக் கேடுகளின்மையின் நித்தமாய் நோன்மையாற் றன்னையொன்றுங் கலத்தலின்மையின் தூய்தாய்த், தான் எல்லாவற்றையுங் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி, அதனைச் செம்பொருள் என்றார் என்னும் பரிமேலழக ருரையும் நோக்குக. செங்கை - செவ்விய கையுமாம். தானமாவது தக்கார்க்கு வேண்டும் பொருளை நீருடனளிப்பது. கோட்டு யானை, பரும யானை எனத் தனித்தனி முடிக்க. மாறு - பகைமை; பகைமையுடையாரை உணர்த்திற்று. (36) பரிய மாமணி பத்தியிற் பதித்திருட் படலம் பொரிய வில்லிடக் குயிற்றிய பொன்னர மியமுந் தெரிய மாமுர சொலிகெழு செம்பொனா டரங்கும் அரிய மின்பயோ தரஞ்சுமந் தாடுவ கொடிகள். (இ-ள்.) பரிய மாமணி - பருத்த பெருமை பொருந்திய மணிகளை, பத்தியில் - வரிசையாக, பதித்து - பதித்து, இருள் படலம் பொரிய - இருட் கூட்டம் சிதறும்படி, வில் இட - ஒளிவிடுமாறு, குயிற்றிய - செய்த, பொன் அரமியமும் - பொன்னாலாகிய நிலா முற்றங் களிலும், கொடிகள் - கொடிகள், அரிய மின் பயோதரம் - மின்னலை யுடைய பசியமேங்களை, சுமந்து ஆடுவ - தாங்கி அசைவன; தெரிய மாமுரசு ஒலிகெழு - விளங்கும்படி பெரிய முரசின் ஒலி பொருந்திய, செம்பொன் ஆடு அரங்கு - சிவந்த பொன்னலாகிய நடனசாலை களிலும், கொடிகள் - கொடி போன்ற பெண்கள், அரிய - நுண்ணிய, மின் - மின்னல்போலும் இடையினையும், பயோதரம் - கொங்கைகளையும், சுமந்து ஆடுவ - தாங்கி நடிப்பார்கள் எ-று. பொரிய வில்லிடப் பதித்துக் குயிற்றிய எனக்கூட்டி முடித் தலுமாம்; சிந்தாமணியுரையில், நச்சினார்க்கினியர், “உதைய கிரியிற் சிந்தூர அருவி வீழ்ந்த சிந்தூராகரத்திற் பிறந்து பதினாறு சதுர்யுகஞ் சிவப்பேறின முழுமாணிக்கம் இருளைக் கெடுத்தலின் ‘இருள் பருகுமருமணி’ என்றார்” எனக் கூறியிருப்பது நோக்கற்பால”. அரமியம் - நிலாமுற்றம். தெரிய - விளங்க. அரிய: அரி என்பதனடியாக வந்த குறிப்புப் பெயரெச்சம். அரி - பசுமை, நுண்மை. பயோதரம் என்பது நீரைத் தரிப்பது என்னுங் காரணத் தால் மேகத்திற்கும், பாலைத் தரிப்பது என்னுங் காரணத்தால் கொங்கைக்கும் பெயர். மின், கொடிகள் என்பன முறையே இடைக்கும் மகளிர்க்கும் ஆகுபெயர். இப்பொருளில் ஆடுவர் என உயர்திணை முடிபாக்குக. (37) வலம்ப டும்புயத் தாடவர் மார்பமேற் புலவிக் கலம்ப டர்ந்தபூண் முலையினார் காலெடுத் தோச்சச் சிலம்ப லம்பிசை மழுங்கமுன் னெழுமவர் தேந்தார்ப் புலம்பு வண்டுநொந் தரற்றிய பொங்குபே ரொலியே. (இ-ள்.) வலம் படும் புயத்து - வெற்றி பொருந்திய தோள் களையுடைய, ஆடவர் மார்ப மேல் - தத்தங் கணவர்களின் மார்பின் கண், புலவிக் கலம் படர்ந்த - ஊடலாகிய அணி பரந்த, பூண்முலை யினார் - அணிகலத்தையுடைய கொங்கையையுடைய மகளிர், கால் எடுத்து ஓச்ச - காலை எடுத்து உதைக்க, சிலம்பு அலம்பு இசை மழுங்க - (அவர்) சிலம்பு ஒலிக்கின்ற ஒலி மழுங்கும்படி, அவர் - அவ்வாடவர்களின், தேம்தார் - தேனையுடைய மாலையினின்றும், புலம்பு வண்டு - இசை பாடும் வண்டுகள், நொந்து அரற்றிய - வருந்தி ஒலித்த, பொங்கு பேர் ஒலி - மிகுந்த பெரிய ஒலியானது, முன் எழும் - முற்பட்டுத் தோன்றும் எ-று. புலவியானது அவரைப் பொதிந்ததென்பார் படர்ந்த என்றார். படர்ந்த மகளிரென்க. (காமக் கடலிற்) புலவியாகிய மரக்கலத்திற் சென்ற என்னலுமாம். பூண் கலம் படர்ந்த முலையினார் புலவியால் ஓச்ச என முடித்தலுமாம். காலெடுத்தோச்சுமியல்பினை மாட மாலையும்என்னுஞ் செய்யுளுரையிற் கூறியது கொண்டுமறிக. நன்கு ஓச்சவென்பார் எடுத்தோச்ச என்றார். தேன்; தேம் எனத் திரிந்தது. (38) தைய லார்மதி முகங்களுந் தடங்களுங் குழைய மைய ளாவிய விழிகளு மாடமுங் கொடிய கையு நாண்மலர்ப் பொதும்பருங் கறங்கிசை வண்ட நெய்ய வோதியும் வீதியு நீளற னெறிய. (இ-ள்.) தையலார் மதிமுகங்களும் - மகளிரின் மதிபோன்ற முகங்களும், குழைய - குண்டலங்களையுடையன; தடங்களும் - தடாகங்களும், குழைய - தளிர்களையுடையன; மை அளாவிய விழிகளும் - மை தீட்டப்பெற்ற (அவர்) கண்களும், கொடிய - கொடுமையையுடையன; (மை அளாவிய - மேக மண்டலத்தை அளாவிய) மாடமும் - மாடங்களும், கொடி - கொடிகளையுடையன; கையும் - (அவர்) கைகளும், கறங்கு இசைவண்ட - ஒலிக்கின்ற ஒலியினை யுடைய வளையல்களை யுடையன; நாள் மலர்ப் பொதும்பரும் - அன்றலர்ந்த மலர்களையுடைய சோலைகளும், கறங்கு இசைவண்ட - ஒலிக்கின்ற இசையினையுடைய வண்டுகளையுடையன; நெய்ய ஓதியும் - நெய்யினையுடைய (அவர்) கூந்தல்களும், நீள் அறல் நெறிய - கருமணல்போலும் நீண்ட நெறிப்பினையுடையன; வீதியும் நீள் அறன் நெறிய - வீதிகளும் மிக்க அற நெறிகளையுடையன எ-று. ‘மையளாவிய’ என்னும் அடை சிலேடையாய் மாடத்திற்கும் பொருந்திற்று. நெய் - புழுகுமாம். நெய்ய: குறிப்பு வினைப் பெயரெச்சம். குழைய என்பது முதலியன சாரியை யின்றி வந்த பலவின்பாற் குறிப்பு வினை முற்றுக்கள். (39) மலருந் திங்கடோய் மாடமுஞ் செய்வன மணங்கள் அலருந் தண்டுறை யுங்குடைந் தாடுவ தும்பி சுலவுஞ் சோலையு மாதருந் தூற்றுவ வலர்கள் குலவும் பொய்கையு மனைகளுங் குறைபடா வன்னம். (இ-ள்.) மலரும் - பூக்களும், செய்வன மணங்கள் - மணங்களை வீசுவன; திங்கள்தோய் மாடமும் - சந்திரமண்டலத்தை யளாவிய மாளிகைகளும், மணங்கள் செய்வன - கல்யாணங்கள் செய்யப்படுவன; அலரும் - மலர்களிலும், தும்பி - வண்டுகள், குடைந்து ஆடுவ - கிண்டி ஆடுவன; தண் துறையும் - குளிர்ந்த நீர்த்துறைகளிலும், தும்பி - யானைகள், குடைந்து ஆடுவ - மூழ்கி விளையாடுவன; சுலவும் சோலையும் - சூழ்ந்திருக்கின்ற சோலைகளும், அலர்கள் தூற்றுவ - மலர்களைச் சொரிவன; மாதரும் - மகளிராலும், அலர்கள் தூற்றவ - பழிமொழிகள் தூற்றப்படுவன; குலவும் - விளங்குகின்ற, பொய்கையும் - தடாகங்களிலும், அன்னம் குறைபடா - அன்னப் பறவைகள் குறையா (நிறைந்துள்ளன); மனைகளும் - இல்லங் களிலும், அன்னம் குறைபடா - அடிசில்கள் குறையா (நிறைந் துள்ளன) எ-று. மலரும், சோலையும் என்பன எழுவாய் வேற்றுமை. மாதரும் என்பதில் மூன்றனுருபும், மாடமும் என்பது முதலியவற்றில் ஏழனுருபும் விரிக்க. சோலையும் மாதரும் என்பதற்குத் திணை விரவிச் சிறப்பால் அஃறிணை வினைகொண்டு முடிந்தன என்னலு மாம். மாதர் அலர் தூற்றுதல் தலைவன் தலைவியரின் கள வொழுக்கம் வெளிப்பட்ட ஞான்றென்க. (40) ஊடி னாரெறி கலன்களு மம்மனை யுடன்பந் தாடி னார்பரி யாரமு மடியினாற் சிற்றில் சாடி னாரொடு வெகுண்டுகண் டதும்புமுத் துறைப்ப1 வாடி னார்பரி நித்தில மாலையுங் குப்பை. (இ-ள்.) ஊடினார் - (தலைவரோடு) புலந்த மகளிர், எறி கலன்களும் - வெறுத்து எறிந்த அணிகளும், அம்மனைஉடன் பந்து ஆடினார் - அம்மனையொடு பந்து விளையாடு மகளிர், பரி ஆரமும் - (சுமக்கலாற்றாது) நீத்த அணிகளும், அடியினால் சிற்றில் சாடினாரொடு - காலினால் (தாமிழைத்த) சிறு வீட்டை அழித்த இளைஞரோடு, வெகுண்டு - கோபித்து, கண் ததும்பும் - கண்களி னின்றும் ததும்புகின்ற, முத்து உறைப்ப - முத்துப்போலும் நீர்த் துளிகள் துளிக்க, வாடினார் - வருந்திய சிறுமிகள், பரி - (அறுத்து) எறிந்த, நித்திலமாலையும் - முத்து மாலைகளும், குப்பை - (அவ் வீதியில்) குப்பைகளாம் எ-று. ஊடினார்வெறுத்தும், ஆடினார் சுமக்கலாற்றாதும், வாடினார் சினந்தும் எறிவரென்க. சிற்றில் சாடுதல் - சிறார்கண் இயற்கையினி கழும் குறும்புச்செயல். இதனை ஆண்பாற் பிள்ளைக்கவியில் ஒரு பருவமாக வைத்துப் பாடுதலுங் காண்க. பரிதல் - அறுதல்; பரி என்பது ஈண்டுப் பிறவினைப் பொருளில் வந்தது. முத்து என்பது முத்துப்போலும் நீர்த்துளிக்காயிற்று. உறைத்தல் - துளித்தல். இறைப்ப என்னும் பாடத்திற்குக் கண்கள் சொரிய வென்க. ஈற்றில் ஆக்கம் வருவிக்க. (41) ஐய வென்னுரை வரம்பின வாகுமோ2 வடியர் உய்ய மாமணி வரிவளை விறகுவிற் றுழன்றோன் பொய்யில் வேதமுஞ் சுமந்திடப் பொறாதகன் றரற்றுஞ் செய்ய தாண்மலர் சுமந்திடத் தவஞ்செய்த தெருக்கள். (இ-ள்.) அடியர் உய்ய - அடியார்கள் உய்தற்பொருட்டு - மாமணி - பெருமை பொருந்திய மாணிக்கங்களையும், வரிவளை - வரிகளையுடைய வளையல்களையும், விறகு - விறகையும், விற்று உழன்றோன் - விற்றுத் திரிந்த இறைவனுடைய, பொய்யில்வேதமும் - பொய்யில்லாத வேதங்களும், சுமந்திடப் பொறாது - தீண்ட மாட்டாமல், அகன்று - சேய்மையினின்று, அரற்றும் - முறையிடப் பெற்ற, செய்யதாள் மலர் - சிவந்த திருவடிமலர்களை, சுமந்திட - சுமப்பதற்கு, தவம் செய்த தெருக்கள் - தவம் புரிந்த வீதிகளின் பெருமைகள், என் ஐய உரைவரம்பின ஆகுமோ - எளியேனது நொய்மையான சொல்லின் அளவின ஆகுமோ? (ஆகா) எ-று. ஐய : ஐம்மை யென்பத னடியாக வந்த குறிப்புப் பெயரெச்சம்; ஐம்மை - நொய்மை; ஐவியப்பாகும் என்பதனால் ஐ யென்னும் உரிச்சொல் திரிந்து வந்ததெனக் கொண்டு, (நான் கூறப்புகுந்தது) வியப்பே என்னலுமாம். எண்ணும்மைகள் தொக்கன. உழன்றோன் தாண்மலர் எனக் கூட்டுக. வேதமும் என்னும் உம்மை உயர்வு சிறப்பு. சுமந்திடத் தவஞ்செய்த என்பதைத் தவஞ்செய்து சுமந்த எனப் பிரித்துக் கூட்டலுமாம். தெருக்கள் - தெருக்களின் பெருமைகள். மணி வளைவிறகு விற்றமையை இப்புராணத்து அவ்வப்படலங்களா னறிக. (42) (அறுசீரடியாசிரிய விருத்தம்) தோரண நிரைமென் காஞ்சி சூழ்நிலை நெடுந்தே ரல்குற் பூரண கும்பக் கொங்கைப் பொருவின்மங் கலமா மங்கை தாரணிந் தாரந் தூக்கிச் சந்தகி றிமிர்ந்து பாலிச் சீரணி முளைவெண் மூரல் செய்துவீற் றிருக்கு மன்னோ. (இ-ள்.) தோரண நிரை - தோரண வரிசையாகிய, மென்காஞ்சி சூழ் - மிருதுவான எண்கோவை சூழ்ந்த, நிலை நெடுதேர் அல்குல்- பெரிய நிலைத்தேராகிய அல்குலையும், பூரண கும்பம் - நிறை குடங்களாகிய, கொங்கை - கொங்கைகளையுமுடைய, பொரு இல்- ஒப்பற்ற, மங்கலமாம் மங்கை - மங்கலமாகிய மங்கையானவள், தார் அணிந்து - மலர்மாலைகளை அணிந்து, ஆரம் தூக்கி - முத்து மாலைகளைத் தொங்கவிட்டு, சந்து அகில் திமிர்ந்து - சந்தனக் குழம்பையும் அகிற் குழம்பையும் பூசி, பாலி - பாலிகைகளிலுள்ள, சீர் அணி - சிறப்பு வாய்ந்த, வெண்முளை மூரல் செய்து - வெள்ளிய முளைகளாகிய புன்னகை காட்டி, வீற்றிருக்கும் - வீற்றிருப்பாள் எ-று. மென்மை - தொழிலின் நயம். காஞ்சி - இடையிலணியும் அணிவிசேடம்; எண்கோவை யுடையது. சீர் அணி - சிறப்பும் அழகு முடைய என்றும், அழகு மிக்க என்றும் கூறலுமாம். தோரணம் முதலியவற்றைக் காஞ்சி முதலியவாக உருவகித்து, அவற்றை மங்கல மங்கைக்கு உரியவாக்கினார்; அவை மங்கலப்பொருள்களாதலின். அந்நகரத்தில் மங்கலமெல்லாஞ் சிறந்து திகழ்கின்றன என்றபடி. நகரவீதிகளின் சிறப்பைப் பொதுவகையால் உரைத்துவந்து, இது முதல் மூன்று செய்யுட்களால் நகரின் சிறப்பைப் பொதுவகையாற் கூறுகின்றார். மன், ஓ: அசை. (43) திங்களைச் சுண்ணஞ் செய்து சேறுசெய் தூட்டி யன்ன பொங்குவெண் மாடப் பந்தி புண்ணியம் பூசுந் தொண்டர் தங்கண்மெய் வேடந் தன்னைத் தரித்தன சாலக் கண்கொண் டங்கணன் விழவு காண்பா னடைந்தென மிடைந்த வன்றே. (இ-ள்.) திங்களை - மதியை, சுண்ணம் செய்து - நீறாக்கி, சேறு செய்து - சேறாகக் குழைத்து, ஊட்டி அன்ன - பூசினாலொத்த, பொங்கு - விளங்குகின்ற, வெள் மாடப்பந்தி - வெள்ளிய மாடவரிசைகள், புண்ணியம் பூசும் - திரு நீற்றையணிந்த, தொண்டர் தங்கள் - அடியார்களின், மெய்வேடம் தன்னை - உண்மை வேடத் தினை, தரித்தன - தாங்கினவைகளாய், சால - மிக, கண்கொண்டு - கண்களால், அங்கணன் - அழகிய கண்ணையுடைய இறைவனது, விழவு காண்பான் - திருவிழாவைக் காண்பதற்கு, அடைந்தென - அடைந்தாற்போல, மிடைந்த - நெருங்கியுள்ளன எ-று. புண்ணியம் - திருநீறு; புண்ணிய மாவது நீறு எனத் தமிழ் மறை கூறுவது காண்க. மெய்வேட மென்பது அவ்வேடமே மெய்ப்பொருளாகலின். மாடங்கட்குச் சாலக்கண் என்றதனைச் சாளரக்கண் என்று கொள்க. சாலம் - சாளரம். கண் - துவாரம்; கண்போறலின் கண் எனப்படும். பலகணி யென்னும் பெயரும் அதுபற்றி வந்தது. கொண்டு: மூன்றாம் வேற்றுமைச் சொல். ஊட்டியன்ன, அடைந்தென என்பன வினையெச்சத் திரிபுகள். காண்பான்: வினையெச்சம் அன்று, ஏ: அசை. (44) தேரொலி கலினப் பாய்மான் சிரிப்பொலி புரவி பூண்ட தாரொலி கருவி யைந்துந் தழங்கொலி முழங்கு கைம்மான் பேரொலி யெல்லா மொன்றிப் பொருகொலி யன்றி யென்றுங் காரொலி செவிம டாது கடிமணி மாடக் கூடல். (இ-ள்.) கடி மணி மாடம் - விளக்கமாகிய மணிகள் பதிக்கப் பெற்ற மாடங்களையுடைய, கூடல் -கூடற்பதியில், என்றும் - எஞ்ஞான்றும், தேர் ஒலி - தேர்கள் ஓடுவதனாலுண்டாய வொலியும், கலினம் - கடிவாளத்தையுடைய, பாய் மான் - பாய்கின்ற குதிரைகளின், சிரிப்பு ஒலி - கனைப்பொலியும், புரவி பூண்ட - அவைகள் அணிந்த, தார் ஒலி - கிண்கிணி மாலையின் ஒலியும், கருவி ஐந்தும்- (தோற்கருவி முதலிய) ஐவகை இயங்களும். தழங்கு ஒலி - ஒலிக்கின்ற ஒலியும்; முழங்கு கைம்மான் - பிளிறுகின்ற யானை களின், பேர் ஒலி - பெரிய ஒலியுமாகிய, எல்லாம் ஒன்றி - இவை எல்லாம் கலந்து, பெருகு ஒலி அன்றி - பெருகிய ஒலி கேட்கப் படுவதன்றி, கார் ஒலி - மேகத்தின் இடியொலியானது, செவி மடாது - செவியிற் கேட்கப்படாது எ-று. கலினப் பாய்மான் என முன் வந்தமையான் புரவி என்பதனைச் சுட்டாகக் கொள்க. கருவி ஐந்தாவன; தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக் கருவி, கஞ்சக் கருவி, மிடற்றுக் கருவி என்பன. ஆகியவென ஒரு சொல் வருவிக்க. செவிமடுக்கப்படா தென்க. கடி - விளக்கம். நான் மாடக்கூடல் என்பதுமுதல் குறைந்து வந்த தென்னலுமாம். (45) பரத்தையர் வீதி இழிபவ ருயர்ந்தோர் மூத்தோ ரிளையவர் கழியா நோயாற் கழிபவர் யாவ ரேனுங் கண்வலைப் பட்டு நெஞ்சம் அழிபவர் பொருள்கொண் டெள்ளுக் கெண்ணெய்போ லளந்து காட்டிப் பழிபடு போகம் விற்பார் ஆவணப் பண்பு சொல்வாம். (இ-ள்.) இழிபவர் - இழிகுலத்தோர், உயர்ந்தோர் - உயர்குலத் தோர், மூத்தோர் - முதியோர், இளையவர் - இளைஞர், கழியா நோயால் கழிபவர் - நீங்காத நோயினால் மெலிகின்றவர், யாவரேனும் - (ஆகிய) யாவராயினும், கண் வலைப்பட்டு - தம் கண்களாகிய வலைகளிலகப்பட்டு, நெஞ்சம் அழிபவர் பொருள் கொண்டு - மனம் வருந்துகின்றவர்களின் பொருளைக் கைக்கொண்டு, எள்ளுக்கு எண்ணெய்போல் - எள்ளுக்கு எண்ணெய் அளந்து கொடுப்பது போல், அளந்து காட்டி - அப்பொருளுக்குத்தக அளந்து காட்டி, பழிபடு - பெரியோர்களால் பழிக்கப்படுகின்ற, போகம் விற்பார் - கலவியின்பத்தை விற்கின்ற புறப்பெண்டிரின், ஆவணப் பண்பு - வீதியின் தன்மையை, சொல்வாம் - பகருவாம் எ-று. எள்ளுக்கு என்றமையின் நெய்யெனவே அமையுமெனினும் விளங்குதற் பொருட்டு எண்ணெய் என்றார்; வழக்கு நோக்கி யெனினுமாம். மிகைகுறையின்றி யென்பார் அளந்து காட்டி யென்றார். விற்பாரென்ற தற்கேற்ப ஆவணம் என்றார். (46) மெய்படு மன்பி னார்போல் விரும்பினார்க் கருத்துந் தங்கள் பொய்படு மின்பம் யார்க்கும் புலப்படத் தேற்று வார்போல் மைபடு கண்ணார் காமன் மறைப்பொருள் விளங்கத் தீட்டிக் கைபடச் சுவராய்த் தோன்றச் சித்திரங் காணச் செய்வார். (இ-ள்.) மைபடு கண்ணார் - மையளாவிய கண்களையுடைய விலை மகளிர், மெய்படும் அன்பினார் போல் - உண்மையான அன்புடையாரைப் போல், விரும்பினார்க்கு - விரும்பிய ஆடவருக்கு, அருத்தும் - ஊட்டுகின்ற, தங்கள் பொய்படும் இன்பம் - தம்முடைய பொய்யாகிய இன்பக் கலவிகளை, யார்க்கும் - அனைவருக்கும், புலப்பட - விளங்க, தேற்றுவார் போல் - தெளிவிப்பார் போல், காமன் மறைப் பொருள் - காமநூலுட் கூறும் கலவிக்கரணங்களை, விளங்கத் தீட்டி - விளங்கும்படி எழுதிவைத்தும், கைபட - கைபடுங் கால், சுவராய்த்தோன்றவும் - சுவராகத் தோன்றவும், சித்திரம் காணச் செய்வார் - சித்திரங்களைப் புலப்படுத்துவார்கள் எ-று. மெய்படு மன்பினார் போல் என்றமையின், அவர் பொய்யன் புடையார் என்பதாயிற்று. இன்பமென்றது, கலவிக் கரணங்களை. தாம் அவைவல்லராதலைக் காட்டவும், அவை அறியாத ஆடவர் அறிந்துகொள்ளச் செய்யவும் என்பார் புலப்படத் தேற்றுவார் போல் என்றார். காமன் மறைப்பொருள் - கலவிக்கரணம்; லீலைவகை. ஓவியங்கள் மெய்யாய ஆடவர் மகளிர் போன்று தோன்ற என்பார் ‘கைபடச் சுவராய்த் தோன்ற’ என்றார்; ஓவியத் தொழிலின் சதுரப்பாடு கூறியவாறு.(47) திருவிற்கான் மணிப்பூ ணாகம் பலகையாத் தெண்முத் தார அருவிக்கால் வரைமென் கொங்கைச் சூதொட்டி யாடி வென்றும் மருவிக்கா முகரைத் தங்கள் வடிக்கண்வேன் மார்பந் தைப்பக் கருவிச்சூ தாடி வென்றுங் கைப்பொருள் கவர்தல் செய்வார். (இ-ள்.) காமுகரை மருவி - (பொருட்பெண்டிர்) காமுகரைச் சேர்ந்து, திருவில் கால் -அழகிய ஒளியை வீசுகின்ற, மணிப்பூண் ஆகம் - மணிகளாலாகிய அணிகளை யணிந்த (அவர்) மார்பையே, பலகையா - பலகையாகக் கொண்டு (அதிலே), தெண் முத்து ஆரம் - தெளிந்த முத்து மாலையாகிய, அருவிகால் - அருவியை ஒழுக்குகின்ற, வரைமென்கொங்கை - மலை போன்ற மெல்லிய கொங்கைகளாகிய, சூது - வல்லுகளை, ஒட்டி - ஒற்றி (பணயம் வைத்து), ஆடி வென்றும் - ஆடி வெற்றி பெற்றும், தங்கள் - தங்களுடைய, வடிக்கண் வேல் - மாவடுப்போன்ற கண்களாகிய வேல்கள், மார்பம் தைப்ப - (அவர்கள்) மார்பிற்றைக்கும்படி, கருவி - கருவியாகிய, சூது ஆடி வென்றும் - சூதினை ஆடிவெற்றிபெற்றும், கைப்பொருள் கவர்தல் செய்வார் - (அவர்) கைப்பொருள்களைக் கவர்ந்து கொள்வார்கள் எ-று. கொண்டு அதில் என்னுஞ் சொற்கள் வருவிக்கப்பட்டன. ஒட்டியென்பதற்குக் கொங்கைக் கேற்பப் பொருந்தச் செய்து என்றும், சூதிற் கேற்பப் பந்தயம் வைத்து என்றும் பொருள் கொள்க. வடி - மாவடு; கூர்மை யெனினும் பொருந்தும். வடிக்கண் மேல் மார்பந்தைத்தலைக் கலவிப் போருடனும் சூதுப் போருடனும் இயைத்துக்கொள்க. கருவிச் சூது - கருவியாலாடுஞ் சூதெனலுமாம். கருவி - சூதாட்டத்திற்குரிய கவறு, வல்லு முதலியன. இருவகை வென்றியாலும் பொருள் கவர்வாரென்றார். (48) தண்பனி நீரிற் றோய்த்த மல்லிகைத் தாம நாற்றி விண்படு மதியந் தீண்டும் வெண்ணிலா முற்றத் திட்ட கண்படை யணைமேற் கொண்டு காமனுங் காமுற் றெய்தப் பண்பல பாடி மைந்த ராவியைப் பரிசில் கொள்வார். (இ-ள்.) (பரத்தையர்) தண்பனி நீரில் தோய்த்த - குளிர்ந்த பனிநீரில் நனைத்த, மல்லிகைத் தாமம் நாற்றி - மல்லிகை மலர்மாலைகளைத் தொங்கவிட்டு, விண்படு மதியம் தீண்டும் - ஆகாயத்திற் பொருந்திய சந்திரனையளாவிய, வெள் நிலா முற்றத்து இட்ட - வெள்ளிய நிலா முற்றத்தின்கண் அமைத்த, கண் படை அணைமேற்கொண்டு - தூங்குமஞ்சத்தின்கண் இருந்து, காமனும் காமுற்று எய்த - காமவேளும் விரும்பி வர, பல பண் பாடி - பல பண்களைப்பாடி, மைந்தர் ஆவியை - ஆடவரின் உயிரை, பரிசில் கொள்வார் - பரிசிலாகக் கொள்வார் எ-று. நாற்றி - தொங்கவிட்டு; நால் என்பதன் பிறவினையாகிய நாற்று; பகுதி. மதிய மென்பதில் அம்; சாரியை. நிலாமுற்றம் - நிலவின் பயன்கொள்ளுதற்கு மேனிலத்தமைத்த கூடம்; இஃது அரமியம் எனவும்படும். கண்படை - உறக்கம்; கண்படு: பகுதி. மேற்கொள்ளல் - அமர்தல், உம்மை: உயர்வு சிறப்பு. காமம் என்பது ஈறு கெட்டுக் காம் என்றாகி, உறு என்பதனுடன் சேர்ந்து விளையாயது பண்பாடி என்பதற்கேற்பப் பரிசில் கொள்வார் என்றார். ஆவி யெனவே உடலும் பொருளும் கூறவேண்டாவாயின. (49) குரும்பைவெம் முலையிற் சிந்து சாந்தமுங் குழலிற் சிந்தும் அரும்பவிழ் மாலைத் தாது மளிநுகர்ந் தெச்சி லாகிப் பொரும்பரிக் காலிற் றூளாய்ப் போயர மாதர் மெய்யும் இருங்குழற் காடுஞ் சூழ்போ யியன்மணம் விழுங்கு மன்னோ. (இ-ள்.) குரும்பை - தென்னங் குரும்பைபோன்ற, வெம் - விருப்பந்தருகின்ற, முலையில் - கொங்கைகளினின்றும், சிந்து சாந்தமும் - உதிர்ந்த சந்தனமும், குழலில் சிந்தும் - கூந்தலினின்றும் உதிர்ந்த, அரும்பு அவிழ்மாலைத்தாதும் - முகைவிரிந்த மாலையின் மகரந்தமும், அளிநூகர்ந்து எச்சிலாகி - வண்டுகளால் உண்ணப்பட்டு எச்சிலாகி, பொரும் பரி - போர்செய்யும் குதிரைகளின், காலில் தூள் ஆய் - காலினால் தூளாகி, போய் - மேலெழுந்துபோய், அரமாதர் - தேவமாதரின், மெய்யும் - உடலையும், இரும் குழல் காடும் - நீண்ட கூந்தலாகிய காட்டையும், சூழ்போய் - சூழ்ந்து, இயல் மணம் விழுங்கும் - (அவற்றின்) இயற்கை மணத்தை மறைக்கும் எ-று. வெம்மை - விருப்பம். இருமை - கருமையுமாம். இவராற் கழிக்கப்பட்டு இழி வெய்திய சாந்தமும் தாதும் தேவமாதரின் மணத்தையும் மறைக்கும் எனக் கூறி, இங்குள்ள பரத்தையரின் சிறப்பினை விளக்குவாராய், சிந்து சாந்தமும் தாதும் எச்சிலாகிக் காலிற் றூளாய்ப்போய் விழுங்கும் என்றார். விழுங்குமென்றது, புலப்படாமற் செய்யும் என்றபடி. தேவமகளிர்க்கு இயற்கையில் மணமுண்டென்றார். எச்சில், எஞ்சு என்பதனடியாகப் பிறந்தது. துகள் என்பது தூள். என மருவிற்று. மன், ஓ;அசை (50) ஆலவா யுடையா னென்று மங்கயற் கண்ணி யென்றுஞ் சோலைவாழ் குயிலி னல்லார் சொல்லியாங் கொருங்கு சொல்லும் பாலவாங் கிளிகள் பூவை பன்முறை குரவ னோதும் நூலவாய்ச் சந்தை கூட்டி நுவன்மறைச் சிறாரை யொத்த. (இ-ள்.) சோலைவாழ் குயிலின் நல்லார் - சோலையில் வாழும் குயில்போன்ற பரத்தையர், ஆலவாய் உடையான் என்றும் - திருவாலவாயில் வீற்றிருக்கும் உடையானே என்றும், அங்கயற் கண்ணி என்றும் - அங்கயற் கண்ணியே என்றும், சொல்லி யாங்கு - சொல்லினாற் போல, ஒருங்கு சொல்லும் - ஒரு சேரச் சொல்லு கின்ற, பால் அவாம் கிளிகள் - பாலை விரும்புகின்ற கிளிகளும், பூவை - நாகணவாய்ப் பறவைகளும், குரவன் பன்முறை ஓதும் - ஆசிரியன் பலமுறை ஓதுகின்ற, நூல் அவாய் - மறையை விரும்பி, சந்தை கூட்டி நுவல் - சந்தை கூட்டிச் சொல்லுகின்ற, மறைச் சிறாரை ஒத்த - பார்ப்பனச் சிறுவர்களை ஒத்தன எ-று. உலகுயிரெல்லாம் இறைவனுக்கு உடைமையாகலின் அவன் உடையானெனப்படுவன்; திருவாசகத்துப் பலவிடத்தும் உடை யானென வருதல் காண்க. ஆலவாயை உடையான் என்னலுமாம். விளியாக வன்றிப் பெயராகவும் கொள்ளலாகும். நல்லார்சொல்வது இயல்பாகச் சொல்லுதலும், பயிற்றுவித்தலும் ஆம். ஆங்கென்னும் உவமப் பொருட்டாய இடைச்சொல், சொல்லி என்பதனுடன் ஒட்டி ஒரு சொல்லாய் நின்றது. இங்குள்ள பரத்தையரும் அம்மையப்பர் திருநாமங்களையே கூறும் பத்திமை யுடையாரென்றார். நூலென்றது, ஈண்டு மறையினை. சந்தை - பண்ணுடன் ஓது முறைமை. “ நந்தி நாம நமச்சி வாயவெனுஞ் சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல் சிந்தை யான்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம் பந்த பாச மறுக்கவல் லார்களே” என்னும் தமிழ்மறையுங் காண்க. அவாவும், அவாவி என்பன அவாம், அவாய் எனத் திரிந்தன.கிளிகள் பூவை என்புழி உம்மைகள் விரிக்க. ஒத்த: அன்பெறாத பலவின்பால் முற்று. (51) ஒளவிய மதர்வேற் கண்ணா ரந்தளிர் விரன டாத்துந் திவ்விய நரம்புஞ் செவ்வாய்த் தித்திக்கு மெழாலுந் தம்மிற் கெளவிய நீர வாகிக் காளையர் செவிக்கா லோடி வெவ்விய காமப் பைங்கூழ் விளைதர வளர்க்கு மன்றே. (இ-ள்.) ஒளவியம் - பொறாமையுடைய, மதர் - மதர்த்த, வேல் கண்ணார் - வேல்போலுங் கண்களையுடைய பரத்தையர், அம் தளிர்விரல் நடாத்தும் - அழகிய தளிர்போன்ற விரல்களால் உண்டாக்குகின்ற, திவ்விய நரம்பும் - திப்பிய நரம்பின் ஒலியும், செவ்வாய் - (அவரது) சிவந்த வாயினின்றும் வருகின்ற, தித்திக்கும் எழாலும் - மதுரமாகிய மிடற்றொலியும், தம்மில் கெளவிய -தம்முட் கலந்த, நீரவாகி - தன்மை யுடையவாய் (நீராகி), காளையர் - இளைஞர்களின், செவிக்கால் ஓடி - செவியாகிய காலின் வழியே சென்று, வெவ்விய - கொடிய, காமப் பைங்கூழ் - காமமாகிய பயிரானது, விளைதர வளர்க்கும் - விளையும்படி (அதை) வளர்க்கும் எ-று. ஒளவியமுடைய கண்ணாரென்க; கண்ணெனினுமாம். கண்ணாரின் விரலென விரித்தலுமாம். விரலால் நடாத்தலாவது ஆராய்ந்து வாசித்தல். திவ்வியம் - தெய்வத்தன்மை, இனிமை. நரம்பு - நரம்பின் இசை. எழால் - மிடற்றுப்பாடல். நரம்பும் எழாலும் தம்மிற் கெளவியியங்குதலை. “ வீழ்மணி வண்டுபாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை சூழ்மணிக் கோட்டு வீணைச் சுகிர்புரி நரம்பு நம்பி ஊழ்மணி மிடறு மொன்றாய்ப் பணிசெய்த வாறு நோக்கித் தாழ்மணித் தாம மார்பிற் கின்னரர் சாம்பி னாரே” என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளானு மறிக. நீரவாகி யென்பது இரட்டுற மொழிதலால் தன்மையவாகி யென்றும், நீராகி யென்றும் பொருள் படும். நீர் என்னும் பொருளில் அகரம் சாரியை. கால்வழி - வாய்க்கால். உள்ளத்தை நிலமாகக்கொள்க. ‘வெவ்வியகாமம்’ என்றார்; “ ஊரு ளெழுந்த வுருகெழு செந்தீக்கு நீருட் குளித்து முயலாகும் - நீருட் குளிப்பினுங் காமஞ் சுடுமேகுன் றேறி ஒளிப்பினுங் காமஞ் சுடும்” என்பவாகலின். இசையால் காமம் மிகுமென்பதாயிற்று. அன்று, ஏ; அசை. (52) கட்புல னாதி யைந்து முவப்புறக்1 கனிந்த காமம் விட்புலத் தவரே யன்றி வீடுபெற் றவரும் வீழ்ந்து பெட்பமுற் றமுதுங் கைப்பப் பெருங்குலக் கற்பி னார்போல் நட்பிடைப் படுத்தி விற்கு நல்லவ ரிருக்கை யீதால். (இ-ள்.) விண்புலத்தவரே அன்றி - தேவர்களே அல்லால், வீடு பெற்றவரும் - பாச நீக்கம்பெற்ற சீவன்முத்தர்களும், வீழ்ந்து - விரும்பி, பெட்பம் உற்று - மயல் மிகுந்து, அமுதும் கைப்ப - (தத்தமக்குரிய) அமுதங்களையும் வெறுக்கும்படி, கனிந்த காமம் - முதிர்ந்த காம நுகர்ச்சியை. கண்புலன் ஆதி ஐந்தும் உவப்புற - (ஆடவர்களின்) கண்முதலிய ஐந்து புலன்களும் ஒருசேர இன்ப மெய்த, பெரும் குலக் கற்பினார்போல் - பெருமை பொருந்திய உயர்குடியிற் பிறந்த கற்புடைப் பெண்டிர் போல, நட்பு - தமது நட்பின்கண், இடைப்படுத்தி - (அவர்களை) அகப்படுத்தி, விற்கு நல்லவர் - விற்கின்ற பரத்தையர்களின், இருக்கை ஈது - இருப்பிடம் இத்தன்மையது எ-று. “ கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள” என்பவாகலின், ‘கட்புலனாதி யைந்து முவப்புற’ என்றார். உவர்ப்பற என்பது பாடமாயின் வெறுப்பின்றாக எனப் பொருளுரைத்துக் கொள்க. அமுது - தேவருண்டியும், மோக்கமும் ஆம். மோக்கவுலக மும் கைத்தலை, “ தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல் தாமரைக் கண்ணா னுலகு” என்பதனா லுணர்க. அமுதுங் கைப்ப என்றது, பொதுவகையால் அவரளிக்கும் இன்பத்தின் சிறப்புக் கூறியவாறு. ‘பெருங்குலக் கற்பினார்போல் நட்பிடைப்படுத்தி’ என்றது மேலாயினாரையும் அவர் தம் வயமாக்கும் இயல்பு கூறியபடி. உம்மைகள் உயர்வு சிறப்பு. பெட்பம் என்பதில் அம்: பகுதிப் பொருள் விகுதி; சாரியையுமாம். ஆல்: அசை. (53) வேளாளர் வீதி வழுக்கறு வாய்மை மாண்புங் கங்கைதன் மரபின் வந்த விழுக்குடிப் பிறப்பு மூவ ரேவிய வினைகேட் டாற்றும் ஒழுக்கமு மமைச்சாய் வேந்தர்க் குறுதிசூழ் வினையுங் குன்றா இழுக்கறு மேழிச் செல்வர் வளமறு கியம்ப லுற்றாம். (இ-ள்.) வழுக்கு அறு வாய்மை மாண்பும் - தவறில்லாத வாய்மையின் மாட்சியும், கங்கைதன் மரபின் வந்த - கங்கையின் குலத்திற்றோன்றிய, விழுக்குடிப் பிறப்பும் - சீரிய குடிப்பிறப்பும், மூவர் ஏவிய வினைகேட்டு ஆற்றும் ஒழுக்கமும் - மூவர்கள் கூறிய வினைகளைக் கேட்டு முடிக்கின்ற ஒழுக்கமும், வேந்தர்க்கு - அரசருக்கு, அமைச்சாய் - மந்திரியாய், உறுதி சூழ்வினையும் - ஆவன ஆராயும் வினையும், குன்றா - குறையாத, இழுக்கு அறும் - கோழைபடாத, மேழிச் செல்வர் - மேழியால் வருஞ் செல்வத்தை யுடைய வேளாளரின், மறுகு வளம் - வீதியின் வளப்பங்களை, இயம்பல் உற்றாம் - சொல்லத் தொடங்கினோம் எ-று. வேளாளர் வாய்மையிற் சிறந்தாராதலை, “ மாறுகொடு பழையனூர் நீலி செய்த வஞ்சனையால் வணிகனுயி ரிழப்பத் தாங்கள் கூறியசொற் பிழையாது துணிந்து செந்தீக் குழியிலெழு பதுபேரு முழுகிக் கங்கை ஆறணிசெஞ் சடைத்திருவா லங்காட் டப்ப ரண்டமுற நிமிர்ந்தாடு மடியின் கீழ்மெய்ப் பேறுபெறும் வேளாளர் பெருமை யெம்மாற் பிரித்தளவிட் டிவளவெனப் பேச லாமோ” எனச் சேக்கிழார் புராணத்துக் கூறப்பட்ட வரலாற்றானறிக. அவர் கங்கை குலத்தினராதலை, “ பரப்புநீர்க் காவிரி பாவைதன் புதல்வர்” என்னும் நாடுகாண்காதை யடிக்கு “காவிரிநீர் கங்கைநீராதலிற் கங்கைப் புதல்வரைக் காவிரிப் புதல்வ ரென்றார்” என அடியார்க்கு நல்லார் கூறிய விளக்கத்தானு மறிக; உழவிற்கு இன்றியமையாத நீரினை ஆளுதலுடையா ரென்பதுபற்றி அங்ஙனம் வழங்கப்பட்டா ராதல் வேண்டும்; காராள ரென்பதுங் காண்க. மூவராவார்; அந்தணர், அரசர், வணிகர் என்போர். ஆரிய நால்வருணத்திற் சேர்ந்த சூத்திரர் நிலைமையும், தமிழ் வேளாளர் நிலைமையும் வெவ்வேறா மென்றும், பின்னுளோர் இருதிறத்தாரையும் ஒப்பக் கருதி வேளாளர்க்கு வழிபாடு கூறிவிட்டன ரென்றும் சில அறிஞர் கருதுகின்றனர்; திருக்குறள் முதலிய பழந்தமிழ் நூல்களில் உழவுத் தொழில் உயர்ந்ததாகப் பாராட்டப் படுதலும் நோக்குக. ‘மன்னர் பாங்கிற் பின்னோ ராகுப’ என்னும் அகத்திணையியற் சூத்திரமும், அறுவகைப்பட்ட என்னும் புறத்திணையியற் சூத்திரமும், ‘வேளாண் மாந்தர்க்கு’ ‘வேந்து விடுதொழிலில்’, என்னும் மரபியற் சூத்திரங் களும், அவற்றினுரைகளும் நோக்கி வேளாளர்க்குரிய தொழில்கள் இன்னவென அறிக. ‘மன்னர் பாங்கின்’ என்னுஞ் சூத்திரவுரையில், வேளாளரை உழுவித் துண்போர், உழுதுண்போர் எனப் பிரித்து முதல்வருடைய பெருமைகளை விரித்துக் காட்டியுள்ளார் நச்சினார்க்கினியர். (54) வருவிருந் தெதிர்கொண் டேற்று நயனுரை வழங்கு மோசை அருகிருந் தடிசி லூட்டி முகமனன் கறையு மோசை உரைபெறு தமிழ்பா ராட்டு மோசைகேட் டுவகை துள்ள இருநிதி யளிக்கு மோசை யெழுகட லடைக்கு மோசை.1 (இ-ள்.) வருவிருந்து - வருகின்ற விருந்தினரை, எதிர்கொண்டு ஏற்று - (இன்முகத்தோடு) எதிர்சென்று அழைத்து வந்து, நயன் உரை வழங்கும் ஒசை - இன்னுரை கூறும் ஒலியும், அருகு இருந்து -பக்கத்திலிருந்து, அடிசில் ஊட்டி - அறுசுவை உணவுகளையும் உண்பித்து, நன்கு முகமன் அறையும் ஓசை - குறைவற உபசாரங் கூறும் ஒலியும், உரைபெறு தமிழ் - புகழ் அமைந்த தமிழ்ப்பாக்களை (அவற்றின் சொற்சுவை பொருட்சுவை உணர்ந்து), பாராட்டும் ஓசை - பாராட்டுவதனாலுண்டாகும் ஒலியும், கேட்டு - (அவ்வாறு உணர்ந்து பாராட்டும் புலவர்கள் கூறுவதைக்) கேட்டு, உவகை துள்ள - மகிழ்ச்சி மீதூர, இருநிதி அளிக்கும் ஓசை - (அவருக்குப்) பெரும் பொருளைக் கொடுத்தலா லுண்டாகும் ஒலியும் (ஆகிய இவை), எழுகடல் அடைக்கும் ஒசை - ஏழுகடல்களின் ஒலி களையும் கீழ்ப்படுத்தும் ஒலிகளாம் எ-று. “ இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” என்பவாகலின் ஈண்டு விருந்தோம்பலை முதற்கண் எடுத்தியம் பினார். சேய்மைக்கட் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணிய வழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்று எனப் பரிமேலழகர் கூறிய உரை இங்கே சிந்திக்கற்பாலது. தமிழ் பாராட்டும் ஓசையைக் கேட்டு என்றுரைப்பாரு முளர். கடல் அதன் ஓசைக்காயிற்று. (55) அருந்தின ரருந்திச் செல்ல வருந்துகின் றாரு மாங்கே இருந்தினி தருந்தா நிற்க வின்னமு தட்டுப் பின்னும் விருந்தினர் வரவு நோக்கி வித்தெல்லாம் வயலில் வீசி வருந்திவிண் ணோக்கு மோரே ருழவர்போல் வாடி நிற்பார். (இ-ள்.) அருந்தினர் - உண்டவிருந்தினர், அருந்திச்செல்ல - உண்டுசெல்ல, அருந்துகின்றாரும் - உண்கின்றவர்களும், ஆங்கே -முன்னுண்டவர் போலவே, இருந்து இனிது அருந்தாநிற்க - இருந்து மகிழ்ச்சியுடன் உண்ணா நிற்க, பின்னும் இன் அமுது அட்டு - பின்பும் இனிய அமுதைச் சமைத்து, விருந்தினர் வரவுநோக்கி - வரக்கடவராகிய விருந்தினர்களின் வருகையை நோக்கி, வித்து எலாம் - விதை அனைத்தையும், வயலில் வீசி - விளைபுலத்தில் வித்தி, விண் வருந்தி நோக்கும் - மழையை வருந்தி எதிர்பார்க்கின்ற, ஓர் ஏர் உழவர் போல் - ஒரே ஏரினையுடைய உழவரைப்போல, வாடி நிற்பார் - வருந்தி நிற்பார் (அவ் வேளாளர்) எ-று. இடையறாது விருந்தோம்புதல் தோன்ற மூன்று காலத்தானுங் கூறினார். “ செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு” என்னுந் திருவள்ளுவப்பயனுங் காண்க. விருந்தினர் வரவு தாழ்ப் பின் வாடிநிற்பா ரென்க. விருந்தோம்பற்கண் அவருக்குள்ள ஆர்வமிகுதி கூறியவாறு. (56) வானமும் திசையும் பொங்கும் புகழ்மையும் வானம் பேணும் ஞானமும் பொறையுங் குன்றா நன்றியு மூக்கப் பாடுந் தானமுங் கொடையு மன்பும் வரிசையுந் தகைசா னண்பும் மானமுந் தவஞ்செய் தீன்ற மகவுபோல் வளர்க்க வல்லார். (இ-ள்.) வானமும் திசையும் - வானுலகத்தினும் எட்டுத் திக்குக்களிலும், பொங்கும் புகழ்மையும் - பரந்து விளங்கும் புகழும், வானம் பேணும் ஞானமும் - வீட்டுலகை விரும்புகின்ற மெய்யுணர்வும், பொறையும் - பொறையுடைமையும், குன்றா நன்றியும் - குன்றாத நன்றியும், ஊக்கப்பாடும் - உரனுடைமையும், தானமும் கொடையும் அன்பும் வரிசையும் - தானமும் ஈகையும் அன்பும் தகுதியும், தகைசால் நண்பும் மானமும் - பெருமை மிக்க நட்பும் மானமும் (ஆகிய இவைகளை), தவம் செய்து ஈன்ற மகவுபோல் - தவங்கிடந்து பெற்ற மகவை வளர்ப்பது போல், வளர்க்க வல்லார் - வளர்ப்பதில் வல்லவர்கள் (அவ்வேளாளர்) எ-று. வானமென்றது ஈண்டு வீட்டுலகத்தை; ‘வையத்தில் வான நணியதுடைத்து’ என்புழி வானம் வீட்டுலக மென்னும் பொருளதா தலைப் பரிமேலழகர் உரையா னறிக. விண்ணுலகத்தவரும் விரும்பும் மெய்யுணர்வு என்றுரைப்பாருமுளர். குன்றா நன்றி - நன்றி குன்றாமை - தானம் - தக்கார்க்களிப்பது. தானம் சிறப்பும், கொடை பொதுவுமாகும். வரிசை - தகுதி, பெருமை; ‘வரிசையானோக்கின்’ எனவும், ‘வரிசையறிதலோ வரிதே’ எனவும் வருவன காண்க. நண்பு - நட்புத் தன்மை. மானம் - நிலையிற் றழாமையும், தாழ்வு வந்துழி உயிர் வாழாமையும் ஆம். குறிக்கொண்டு பேணி வளர்ப்பாரென்பார் ‘தவஞ்செய்தீன்ற மகவுபோல் வளர்க்க வல்லார்’ என்றார். புகழ்மை, மை: பகுதிப்பொருள் விகுதி; புகழ்த்தன்மையுமாம். (57) வணிகர் வீதி புல்லியோர் பண்டங் கொள்வார் வினவினப் பொரு1 டம் பக்கல்2 இல்லெனி னினமா யுள்ள பொருளுரைத் தெதிர்ம றுத்தும் அல்லதப் பொருளுண் டென்னின் விலைசுட்டி யறுத்து நேர்ந்துஞ் சொல்லினு மிலாபங் கொள்வார் தொன்மர பிருக்கை சொல்வாம். (இ-ள்.) கொள்வார் - வாங்குவார், புல்லி - வந்து, ஓர் பண்டம் வினவின் - ஒரு பொருள் உண்டோ என வினவுவராயின், அப்பொருள் தம் பக்கல் இல் எனின் - அந்தப் பொருள் தம்மிடத்து இல்லையாயின், இனமாய் உள்ள பொருள் உரைத்து - அதற்கு இனமாயுள்ள பொருள் உண்டு என்று கூறுவதனால், எதிர்மறுத்தும் - கேட்ட பொருள் இல்லை என்றும், அப்பொருள் உண்டு என்னின் - அவ்வாறின்றி அந்தப் பொருள் தம்மிடத்திருந்ததாயின், விலைசுட்டி அறுத்தும் - விலையை வரையறுத்துக் கூறியும், நேர்ந்தும் - கொடுத்தும், சொல்லினும் இலாபம் கொள்வார் - பொருளாலன்றிச் சொல்லானும் இலாபத்தைப்பெறுகின்ற வணிகர்களின், தொல்மரபு - பழமை தொட்டு வருகின்றமரபின், இருக்கை சொல்வாம் - வீதியின் பெருமையைக் கூறுவாம் எ-று. “ தம்பா லில்ல தில்லெனி னினனாய் உள்ளது கூறி மாற்றியு முள்ளது சுட்டியு முரைப்பர் சொற்சுருங் குதற்கே” என்னும் நன்னூற் சூத்திரப் பொருள்பற்றி யெழுந்தது இச்செய்யுள். பயறுளதோ என்று வினாயினார்க்கு அது தம்பக்கல் இல்லையாயின் இனனாயுள்ள பிறிதுபொருளைச்சுட்டி உழுந்து உளது என்றும், பயறு உளதாயின் இத்துணைப் பயறு உளது, இன்ன விலையிற்று என்றும் கூறுவர் என்பது கருத்து. இங்ஙனம் கூறுதல் வினாவும் விடையுமாகிய சொற்கள் பல்காது சுருங்குதற் பொருட்டென்க. இது பண்டைத் தமிழ் வாணிகரது முயற்சித்திறனை விளக்குதற்கு உறு சான்றாகும். ‘விலைசுட்டி யறுத்து நேர்ந்தும்’ என்பதற்கு, பொருளைச் சுட்டியும் விலையை வரையறுத்தும் என்றும் கூறலு மாகும். ‘அறுத்து நேர்ந்து’ என்பதற்கு வரையறுத்துக் கூறுதலால் அப்பொருள் உளதென்பதனை உடன்பட்டு என்றுரைத்தலுமாம். விலை கூறுமிடத்து இலாபத்தை வெளிப்படையாகச் சொல்லுதலுங் கொள்க. ‘பல் பண்டம் பகர்ந்து வீசும்’ என்னும் பட்டினப்பாலை யடிக்கு நச்சினார்க்கினியர் இப்பொருள் கூறியிருத்தல் காண்க. “ எப்பொரு ளாயினு மல்ல தில்லெனின் அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல்” “ அப்பொருள் கூறிற் சுட்டிக் கூறல் ” என்னும் தொல்காப்பியச் சூத்திரங்களும், அவற்றின் உரைகளும் நோக்கி அவற்றோ டிதனிடையுள்ள ஒற்றுமை வேற்றுமை காணற் பாலன. உம்மை: எச்சப்பொருட்டு. (58) (கலிநிலைத்துறை) நீல வேதிமேற் பளிங்கினா னிழற்சுவர் நிறீஇமின் கால வாலிய வைரவாட் கானிரைத் தும்பர்க் கோல வானிலாச் 1சொரிமணி குயிற்றிவெண் மாடம் மாலை போல்வகுத் தியற்றின பீடிகை மறுகு. (இ-ள்.) பீடிகை மறுகு - கடை வீதிகளில், நீலவேதிமேல் - நீலமணியாலாகிய திண்ணையின்மேல், நிழல் பளிங்கினால் சுவர் நிறீ இ-ஒளி பொருந்திய பளிங்கினாற் சுவரை நிறுத்தி, வாலியவாள் - வெள்ளிய ஒளியினையுடைய, வைரக்கால் - வைரத்தூண்களை, மின்கால - ஒளிவீச, நிரைத்து - வரிசையாக நட்டு, உம்பர் - மேலிடத்தில், கோலம் - அழகிய, வால்நிலாச் சொரிமணி - வெள்ளிய நிலாவைப் பொழிகின்ற சந்திரகாந்தக் கற்களை, குயிற்று - பதித்து, மாலைபோல் - மலர் மாலையப்போல், வெண்மாடம் வகுத்து இயற்றின - வெள்ளிய மாடங்கள் வரிசையாக அமைத்துக் கட்டப் பட்டன எ-று. இயற்றின:படுசொல் தொக்குநின்ற செயப்பாட்டுவினை. (59) திரைய ளிப்பவுந் திரைபடு தீம்புனல் வேலிக் கரைய ளிப்பவுங் கரையிலா னிரை1 படு கானத் தரைய ளிப்பவுந் தரைகிழித் தூன்றிவிண் டாங்கும் வரைய ளிப்பவும் வாங்கிவாய் மடுப்பன மாடம். (இ-ள்.) மாடம் - பண்டசாலைகள், திரை அளிப்பவும் - கடல் தரும் பொருள்களையும், திரைபடு தீம்புனல் வேலி - அலைகளை யுடைய இனிய நீரினை வேலியாகவுடைய, கரை அளிப்பவும் - மருத நிலம் தரும் பொருள்களையும், கரை இல் - அளவில்லாத, ஆன் நிரைபடு - பசு மந்தைகளையுடைய, கானத்தரை அளிப்பவும் - முல்லை நிலம் தரும் பொருள்களையும், தரை கிழித்து - புவியைப் பிளந்து, விண் ஊன்றி தாங்கும் - வானத்தை ஊன்றித் தாங்குகின்ற, வரை அளிப்பவும் - மலை தரும் பொருள்களையும், வாங்கி வாய்மடுப்பன - வாங்கித் தம்மிடத்து நிறைப்பன எ-று. திரை: அதனையுடைய கடலுக் காயிற்று. சூழ்ந்திருத்தலின் புனலை வேலி யென்றார். கரை - கரைகளையுடைய மருதம். கானத்தரை - கானமாகிய தரை; முல்லை நிலம். விண்ணினைத் தாங்குவது போன் றிருத்தலின், ‘விண்டாங்கும்’ என்றார். மாடம் என்றது பண்ட சாலைகளை. அளிப்ப, என்பன: வினையாலணையும் பெயர். குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் முறை எதிராக உரைக்கப்பட்டது நான்கு திணையிலும் உண்டாம் பொருள்கள் இவை என்பதனை, “ அகில்கறி கோட்ட மொடுதக் கோலம் குங்கும மைந்தும் மலைபடு திரவியம் ” “ அரக்கிறா லின்றே னணிமயிற் பீலி நாவி கான்படு திரவிய மைந்தே” “ செந்நெல் செவ்விள நீர்சிறு பயறு கன்னல் கதலி யெனப்பெயர் பெற்ற ஐந்து நன்னாட் டமைந்த திரவியம்”” “ பவள முத்துச் சங்கொக் கோலை உப்புக் கடல்படு திரவிய மைந்தே” என்னும் பிங்கலந்தைச் சூத்திரங்களா னறிக. (60) கரிய கம்பலக் கிடுகின்மேற் கதிர் விடு பவளத் தெரியல் பொன்னரி மாலிகை தெண்ணிலாச் சொரியும் பரிய நித்தில மணிவட மரகதப் பசுந்தார் விரிய விட்டன விந்திர வின்னிரை யனைய. (இ-ள்.) கரிய கம்பலக் கிடுகின்மேல் - கரிய கம்பலம் வேய்ந்த சட்டத்தின் மேல், விரிய விட்டன - விரியும்படி விட்டனவாகிய, கதிர் விடு பவளத் தெரியல் - ஒளிவீசுகின்ற பவளமாலைகளும், பொன் அரிமாலிகை - பொன்னால் அரிந்து செய்த மாலைகளும், தெள் நிலாச் சொரியும் - தெளிந்த நிலவைப் பொழிகின்ற, பரிய நித்திலமணிவடம் - பெரிய முத்துமாலைகளும், மரகதப் பசுந்தார் - பசிய மரகத மாலைகளும், இந்திர வில் நிரை அனைய - வரிசையாகவுள்ள இந்திர வில்லுகளை ஒத்தன எ-று. மாலைகள் விளங்கித் தோன்றுதற்குக் கரிய கம்பலத்தின்மேல் இட்டு வைப்பர்; கம்பலம் முகிலையும், மாலைகள் இந்திர வில்லையும் போலுமென்க. பலநிற முடைமையின் இந்திரவில் உவமம். (61) நாள்க ளுங்குளிர் திங்களு ஞாயிறு மேனைக் கோள்க ளுங்குளிர் விசும்பொரீஇக் குடிபுகுந் தாங்கு வாள்கி டந்திராப் பகலொளி மழுக்கலால் வணிகர் ஆள்க லம்பகர் பீடிகை துறக்கநா டனைய. (இ-ள்.) நாள்களும் - நாண்மீன்களும், குளிர் திங்களும் - குளிர்ந்த மதியும், ஞாயிறும் - இரவியும், ஏனைக்கோள்களும் - மற்றைக் கோள்களும், குளிர்விசும்பு ஒரீஇ - குளிர்ந்த வானத் தினின்று நீங்கி, குடிபுகுந்தாங்கு - குடி புகுந்தாற்போல, வாள்கிடந்து - ஒளி தங்கி, இராப்பகல் ஒளி மழுக்கலால் - இரவின் ஒளியையும் பகலின் ஒளியையும் மழுங்கச் செய்தலால், ஆள் கலம் பகர் வணிகர் பீடிகை - அணியும் கலன்களை விற்கின்ற வணிகர் கடைவீதிகள், துறக்க நாடு அனைய - வானுலகை ஒத்தன எ-று. நாள் - நாண்மீன், நட்சத்திரம். ஏனைக் கோள்களாவன:- செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்பன. இராகு கேதுக்கள் சாயை யாதலின் ஈண்டு அவை கொள்ளற் பாலனவல்ல. இரவிலும் பகலிலும் தோன்றும் அனைத்தொளியும் ஒருங்கு தொக்காற் போலுதலின் அவ்வொளி இரவிலும் பகலிலும் தனித் தனியுள்ள ஒளிகளை மழுங்கச் செய்வதாயிற்று; அதனால் இரவு பகல் என்னும் பொழுது வேற்றுமை புலனாகாமையால் அவ் வேற்றுமையில்லாத துறக்க நாட்டினைப் போலும் என்றார். ஆளுதல் - ஈண்டு அணிதல். (62) பன்னி றத்தபல் பெருவிலைப் பட்டெலா மவண அன்ன பட்டின்மேம் படுவிலைப் பருத்தியு மவண எந்நி லத்தரும் பொருள்பதி னெழுபுல வணிகர் மன்னி ருக்கையு மரும்பெறல் வளனெலா மவண. (இ-ள்.) பல் நிறத்த - பல நிறத்தினையுடைய, பெரு விலை - பெரிய விலையினையுடைய, பல் பட்டு எலாம் ஆவண - பல வகையான பட்டாடைகள் அனைத்தும் அவ்விடத்துள்ளன; அன்ன பட்டின் - அத்தன்மையவான பட்டாடைகளின், மேம்படு விலை - மேம்பட்ட விலையினையுடைய, பருத்தியும் அவண - பருத்தி நூலாடைகளும் அங்குள்ளன; எந்நிலத்து அரும்பொருள் (எலாம்) - எந்த நாட்டினுங் கிடைத்தற்கரிய பொருள்கள் எல்லாமும், பதினெழு புலவணிகர் மன் இருக்கையும் - (தமிழ் ஒழிந்த) பதினேழு தேயவணிகர்களின் நிலைபெற்ற உறைவிடங்களும், பெறல் அரும் வளன் எலாம் - பெறுதற்கரிய (பிற) செல்வங்கள் எல்லாமும், அவண - அக் கடைவீதிகளிலுள்ளன எ-று. அவண ; பலவின்பாற் குறிப்பு முற்று. பட்டு, பருத்தி யென்பன அவற்றானாய ஆடைகளுக்கு ஆகுபெயர். எந்நிலத்தும் என உம்மை விரிக்க எந்நிலத் தரும் பொருள் என்பதற்கு எந்நாட்டினுமுள்ள அரிய பொருள்கள் என்று கொள்ளுதலுமாம். அரும் பொருள் - கருப்பூரம் முதலியன; பட்டினப்பாலையில் ‘அரியவும்’ என்பதற்குச் ‘சீனம் முதலிய இடங்களினின்றும் வந்த கருப்பூரம், பனிநீர், குங்குமம் முதலியனவும்’ என நச்சினார்க்கினியர் உரை கூறியிருப்பதுங் காண்க. பொருளும், எலாமும் என்னும் உம்மைகள் தொக்கன. (63) மரக தத்தினா லம்மிகள் வைரவா ளுலக்கை உரல்கள் வெள்ளிய லடுப்பகில் விறகுலை பனிநீர் அரிசி முத்தழல் செம்மணி யடுகலன் பிறவும் எரிபொ னாலிழைத் தாடுப விவர்சிறு மகளிர். (இ-ள்.) இவர் சிறு மகளிர் - இவ்வணிகரின் சிறுமிகள், மரகதத்தினால் அம்மிகள் - மரகதங்களால் அம்மிகளும் குழவி களும், வாள்வைரம் உலக்கை உரல்கள் - ஒளிபொருந்திய வைரங் களால் உலக்கைகளும் உரல்களும், வெள்ளியால் அடுப்பு - வெள்ளியினால் அடுப்பும் (அமைத்து), அகில் விறகு - அகிற் கட்டையை விறகாகவும். உலை பனிநீர் - பனிநீரை உலைநீராகவும், முத்து அரிசி - முத்துக்களை அரிசியாகவும், செம்மணி அழல் - சிவந்த மாணிக்கத்தை நெருப்பாகவும் (கொண்டு), அடுகலன் பிறவும் - பிற சமையற் கலன்களனைத்தையும், எரிபொனால் - ஒளியினையுடைய பொன்னால், இழைத்து - இயற்றி,ஆடுப - விளையாடுவர் எ-று. அம்மிகள் என்புழி இனம்பற்றிக் குழவியும் கொள்ளப்பட்டது. வாளால் என விரிக்க. உலக்கையுரல்கள் உம்மைத் தொகை. அமைத்து, கொண்டு என்னுஞ் சொற்கள் இயைபு நோக்கி வருவிக்கப் பட்டன. (64) செயிரிற் றீர்ந்தசெம் பொன்னினாற் றிண்ணிலைக் கதவம் வயிரத் தாழுடைத் தவர்கடை வாயிலு மென்றால் அயிரிற் றீர்ந்தபே ரறிஞரு மனையர்தஞ் செல்வத் தியலிற் றாமென வரையறுத் திசைப்பதை யெவனோ. (இ-ள்.) அவர் கடைவாயிலும் - அவ்வணிகரின் கடைவா யிலும், செயிரில் தீர்ந்த - குற்றத்தினீங்கிய, செம்பொன்னினால் - சிவந்த பொன்னினால், திண்நிலைக் கதவம் - வலிய நிலையோடு கூடிய கதவும், வயிரத்தாழ் - (அதற்கு) வயிரத்தினால் தாழக் கோலும், உடைத்து என்றால் - உடையது என்று சொன்னால், அயிரில் தீர்ந்த பேர் அறிஞரும் - ஐயத்தினீங்கிய பெரிய அறிஞர் களும், அனையர் தம் - அவ்வணி கருடைய, செல்வத்து இயல் - செல்வத்தினளவு, இற்று ஆம் என - இவ்வளவின தென்று, வரையறுத்து - முடிவுகட்டி, இசைப்பது எவன் - கூறுவது எவ்வாறு? (முடியாது என்றபடி) எ-று. செயிரிற்றீர்ந்த பொன் - ஒட்டற்றபொன். வாயில் உடைத்து எனக்கூட்டுக. ஐயத்தினீங்கிய பேரறிஞராவார் ஆதித்தனது செலவு முதலியவற்றையும் அறியும் அறிவினையுடையார். “ செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமு மென்றிவை சென்றளந் தறிந்தோர் போல வென்றும் இனைத்தென் போரு முளரே”” என்னும் புறப்பாட்டும் காண்க. வாயிலும், அறிஞரும் என்னும் உம்மைகள் முறையே இழிவையும் உயர்வையும் சிறப்பிக்க வந்தன. தம், ஆம்: சாரியை. இசைப்பதை: வினைத்திரி சொல், ஐ: சாரியை என்னலுமாம். ஒ: அசை. (65) எரிக்கு றும்பொறி யனையசெம் மணிசுட ரெறிபொன் வரிச்சு ரும்புநேர் மரகத முத்துவாள் வைரந் தெரிப்ப ருந்துகிர் சிந்தின செல்லுநா ளொன்றுக் கரிப்பர் கையகப் படுவன வாயிரத் திரட்டி. (இ-ள்.) எரிக் குறும்பொறி அனைய - நெருப்பின் சிறிய பொறியை யொத்த, செம்மணி - சிவந்த மாணிக்கங்களும், சுடர் எறிபொன் - ஒளி வீசுகின்ற பொன்னும், வரிச் சுரும்பு நேர் மரகதம் - கீற்றுக்களையுடையவண்டினை யொத்த மரகதங்களும், முத்து - முத்துக்களும், வாள் வைரம் - ஒளிபொருந்திய வைரங்களும், தெரிப்பு அரும்துகிர் - விலை தெரிந்து சொல்லுதற்கரிய பவளங் களுமாக, சிந்தின - சிதறிக் கிடக்கின்றவை, அரிப்பர் செல்லு நாள் ஒன்றுக்கு - அரித் தெடுப்போர் செல்லுகின்ற ஒவ்வொரு நாளும், கை அகப்படுவன் (அவர்) கையிற் கிடைப்பன, ஆயிரத்து இரட்டி- (வகைக்கு) இரண்டாயிரங்களாம் எ-று. தெரிப்பு - தெரிந்து சொல்லுதல். நாளொன்றுக்கு - நாளொன்றில். சிந்தின, அகப்படுவன: வினையாலணையும் பெயர்கள். ஆயிரத் திரட்டி யென்றது எண்ணிறந்தன வென்றபடி. (66) பாய தொன்மரப் பறவைபோற் பயன்கொள்வான் பதினெண் தேய மாந்தருங் கிளந்தசொற் றிரட்சிதான் றூய மாயை காரிய வொலியன்றி வான்முதற் கருவின் ஆய காரிய வோசையே யாய்க்கிடந் தன்றே. (இ-ள்.) பாய தொன்மரம் - பரந்த ஆலமரத்தில், பறவைபோல் - (பயன்கொள்ளுதற் பொருட்டுக் கூடிய) பறவைகளைப்போல், பயன்கொள்வான் - பயனைக் கொள்ள வந்த, பதினெண்தேய மாந்தரும் - பதினெண்மொழிகள் வழங்கும் நிலத்திலுள்ளமக்களும், கிளந்தசொல் திரட்சிதான் - பேசுகின்ற சொற்றொகுதிதான், தூயமாயை காரியஒலி அன்றி - சுத்த மாயையின் காரிய ஒலியாக அல்லாமல், வான்முதல் கருவின் ஆய - வானாயமுதற்காரணத் தினாலுண்டாகிய, காரிய ஓசையே ஆய்க்கிடந்தன்று - காரிய ஓசையேயாகி அமைந்தது எ-று. தொன்மரம் - ஆலமரம். பயன் கொள்வான் என்பது பறவைக்கும் கூட்டப்பட்டது. பதினெண் தேயமாவன - செந்தமிழ் கொடுந் தமிழ் என்றிருபகுதியாகிய தமிழ் வழங்கு நிலமும், சிங்களம் முதலிய ஏனை மொழிகள் வழங்கு நிலங்களுமாம். தமிழொழிந்த பதினேழு நாடுகள் இவை யென்பதனை, “ சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந் துளுக்குடகம் கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலுங்கங் கலிங்கம்வங்கம் கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலம் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே” என்னுஞ் செய்யுளாலறிக. சுத்தமாயையின் காரியவொலியாவது பொருள் பயக்கும் எழுத்துவடிவானவொலி. ஆகாய காரிய வோசையாவது பொருள் பயவாது சத்த மாத்திரையாயிருப்பது. வான் முதற்கருவின் என்பதற்கு ஆகாய முதலிய ஐம்பூத காரணங் களால் எனப் பொருள் கூறுவாறு முளர்; ஏனைப் பூதங்களிலும் வானின் கலப்பினாலேயே ஓசையுண்டாமாகலின் அங்ஙனங் கூறுதல்வேண்டாவென்க. ஒலி, ஓசை என்பன ஒரே பொருளில் வழங்கு வதுண்டாயினும், அவை முறையே எழுத்து வடிவையும், எழுத்து வடிவில்லாத சத்தத்தையும் உணர்த்துஞ் சொற்களாக, ஆன்றோரால் ஆளப்படுகின்றன; திருநாவுக்கரசுகள் தேவாரத்தில் ‘ஓசை யொலியெலா மானாய் நீயே’ என்று கூறுவது அவ்விரண்டற்கும் வேற்றுமை யுண்மையைப் புலப்படுத்தா நிற்கும். இச்செய்யுளில் ‘மாயை காரிய வொலி’ என்றும், ‘வான் முதற் கருவினாய காரிய வோசை’ என்றும் கூறியது இவ்வேற்றுமை குறித்தேயாகும். பலமொழிகளும் ஒருங்கு பேசப்படுங்கால் அவை மயங்குதலுற்று ஒரு மொழியின் வடிவுந் தோன்றாமையால் ஆகாயகாரிய வோசையேயாயிற்று என்றார். “ மூசதே னிறாலின் மூச மொய்திரை யியம்பி யாங்கும் ஓசையென் றுணரி னல்லா லெழுத்துமெய் யுணர்த லாகா” என்னும் சிந்தாமணிச் செய்யுளோடு இதனை ஒப்புநோக்குக. ஓசையே என்பதில் ஏ; தேற்றம். கிடந்தன்று - கிடந்தது. ஏ; அசை. (67) ஒழிவில் வேறுபல் பொருளுமே ழுலோகமும் பிறவும் வழுவில் வேறுபல் கலைகளு மரபுளி வகுத்துத் தழுவி வேண்டினர் தாங்கொளத் தக்கவா பகரா அழிவி லாமறை போன்றன வாவண வீதி. (இ-ள்.) ஒழிவு இல் வேறுபல் பொருளும் - நீங்குத லில்லாத பலவேறு வகையான பொருள்களையும், ஏழு உலோகமும் - ஏழு உலோகங்களையும், வழு இல் வேறு பல் கலைகளும் - குற்ற மில்லாத பல்வேறு வகைப்பட்ட கலைகளையும், பிறவும் - பிறவற்றையும், மரபுளி - முறையால், வகுத்து - வகைப்படுத்தி, தழுவி வேண்டினர் தாம் கொள - அணுகிநின்று விரும்பியவர்கள் கொள்ளும்படி, தக்கவா பகரா - தக்கவாறு பகர்ந்து, ஆவண வீதி - கடைவீதிகள், அழிவு இலாமறைபோன்றன - அழிவில்லாத வேதங்களைப் போன்றன எ-று. கடை வீதிக்கியைய உலோகம் என்பதற்குப் பொன் முதலியன வென்றும், கலைகள் என்பதற்கு ஆடைகள் என்றும், கொளத்தக்கவா பகரா என்பதற்கு வாங்குமாறு விற்று என்றும், மறைக்கியைய அவற்றுக்கு முறையே பூலோகம் முதலியன வென்றும், அறுபத்து நாற்கலைகள் என்றும், பக்குவத்திற்கேற்ப ஏற்றுக்கொள்ளுமாறு கூறி யென்றும் பொருள் கொள்க. பொன் முதலிய ஏழுஉலோகங்கள் இவை யென்பதனை, “ பொன்னும் வெள்ளியும் செம்பும் இரும்பும் அன்ன ஈயமும் ஐவகை யுலோகம்” “ தராவொடு கஞ்சந் தானுங் கூட்டி எழுவகை யுலோகம் என்னவும் படுமே” என்னும் திவாகரச் சூத்திரங்களா னறிக. மரபுளி - மரபால்; உளி; மூன்றன் பொருள்படுவதோரிடைச்சொல். (68) திக்கெ லாம்புகழ் மதுரையைச் சிவபுர மாக்கி முக்க ணாயக னரசுசெய் முறையினுக் கேற்பத் தக்க தோழனோ டளகைமா நகருறை தயக்கம் ஒக்கு மந்நகர் வாணிக ருறையுள்சூழ் நியமம்.1 (இ-ள்.) அந்நகர் வாணிகர் - அந்த மதுரை மாநகரத்துள்ள வாணிகர்களின், உறையுள் சூழ் நியமம் -இல்லங்கள் சூழ்ந்த கடை வீதியின் விளக்கம், திக்கு எலாம் புகழ் - எல்லாத் திசையாராலும் புகழப்படுகின்ற, மதுரையை - மதுரைமாநகரை, சிவபுரம் ஆக்கி - சிவ புரமாகச் செய்து, முக்கண் நாயகன் - மூன்று கண்களையுடைய இறைவன், அரசு செய் முறையினுக்கு ஏற்ப - செங்கோ லோச்சிய முறைமைக்குப் பொருந்த, தக்க தோழனோடு - தகுதியான நண்பனாகிய குபேரனோடு, அளகைமாநகர் உறை தயக்கம் ஒக்கும் - அளகை மாநகரமானது தயங்கிய விளக்கத்தை ஒக்கும் எ-று. முக்கணாயகன் அரசு புரிதலின் மதுரை சிவபுரமாயிற்று. தக்க - தோழனா யிருத்தற்குத் தக்க. உறையுள் - உறைவிடம்; உள்: பெயர் விகுதி. (69) மன்னவர் வீதி ஒற்றை யாழியா னுலகிரு ளொதுக்குமா போலச் செற்ற நேமியாற் கலியிருள் தின்றுகோ லோச்சி மற்ற டம்புய வலியினான் மாறடு சீற்றக் கொற்ற மன்னவர் விழுக்குடிக் கோமறு குரைப்பாம். (இ-ள்.) ஒற்றை ஆழியான் - ஓர் உருளை பூண்ட தேரினை யுடைய சூரியன், உலகு இருள் ஒதுக்குமாபோல -உலகின்கண் புறவிருளை நீக்குவதுபோல, செற்றம் நேமியால் - (தீயோரிடத்தில்) வெகுளியையுடைய ஆணைத் திகிரியால், கலி இருள் தின்று - (குடிகளின்) துன்பமாகிய இருளைக் கெடுத்து, கோல் ஓச்சி - செங்கோல் நடாத்தி, மல் தடம்புய வலியினால் - வளவிய பெரிய தோள் வலிமையால், மாறு அடு சீற்றம் - பகைவரைக் கொல்லுகின்ற செற்றத்தினையும், கொற்றம் - வெற்றியையுமுடைய, மன்னவர் விழுக்குடி - அரசர்களின் சீரிய குடிகளையுடைய, கோ மறுகு உரைப்பாம் - அரச வீதியின் பெருமையைச் சொல்வாம் எ-று. ஒன்று என்பது ஐகாரக்சாரியை பெற்று ஒற்றை யென்றாயது ஆழி அதனையுடைய தேருக்காயிற்று. ஒதுக்குமாறு என்பது ஈறுகெட்டது. செற்ற நேமி - ஆக்கினா சக்கரம். மல் - வளன்; மற்போருமாம். மாறு - பகை; பகைவரை யுணர்த்திற்று. (70) தரங்க வேலைக டம்மையே தாளுறப் பிணித்துத் துரங்க மாவெனத் தொகுத்தமந் துரைபல வருவி இரங்கு மோரறி வுயிர்வரை யாவையும் பெயர்த்து மரங்கொல் யானைபோற் பிணித்தகூ டம்பல மன்னோ. (இ-ள்.) தரங்க வேலைகள் தம்மையே - அலைகளையுடைய கடல்களையே, தாள் உறப் பிணித்து - காலை இறுகக் கட்டி, துரங்கமா என - குதிரைகளாக, தொகுத்த - தொகுக்கப் பெற்றுள்ள, மந்துரை பல - பரிச்சாலைகள் பல; அருவி இரங்கும் - அருவி ஒலிக்கின்ற, ஓர் அறிவு உயிர் - ஓரறிவுயிராகிய, வரை யாவையும் பெயர்த்து - மலைகள் அனைத்தையும் தோண்டி, மரம் கொல் யானைபோல் - மரங்களை முறிக்கின்ற யானைகளாக, பிணித்த கூடம் பல - கட்டப்பட்டுள்ள யானைக்கூடங்கள் பல உள்ளன (அவ்வீதியில்) எ-று. தரங்கம் புரவிக்கு உவமம். புரவியின் மிகுதி கூறுவார் வேலைகள் தம்மையே தொகுத்த என்றார். துரங்கமா - துரங்கமாகிய மா; இரு பெயரொட்டு. மதத்திற்கு அருவியும் யானைக்கு மலையும் உவமம். வளர்தலுண்மையின் ஓரறிவுயிர் என்றார். மரம் - கட்டுத் தறியுமாம். யானைபோல் -யானைகளாக. தற்குறிப்பேற்றம். மன், ஓ; அசை. (71) மழுக்கள் வச்சிரங் கார்முகம் வாளிமுக் குடுமிக் கழுக்கள் சக்கர முடம்பிடி கப்பண நாஞ்சில் எழுக்க ணாந்தகம் பலகைதண் டிவைமுதற் படையின் குழுக்க ளோடிகல் விந்தைவாழ் கூடமும் பலவால். (இ-ள்.) மழுக்கள் வச்சிரம் கார்முகம் வாளி - மழுக்கள் வச்சிரங்கள் வில் அம்பு, முக்குடுமிக் கழுக்கள் - முத்தலைச் சூலங்கள், சக்கரம் உடம்பிடி - திகிரி கைவேல், கப்பணம் - இருப்பு நெருஞ்சின் முள், நாஞ்சில் - கலப்பை, எழுக்கள் - வளைதடிகள், நாந்தகம் - வாள், பலகை - கேடகம், தண்டு இவை முதல் - தண்டம் இவை முதலான, படையின் குழுக்களோடு - படைக்கலக் கூட்டத் தோடு, இகல் விந்தை வாழ் கூடமும் பல - வெற்றிக்குரிய கொற்றவை வாழ்கின்ற கூடங்களும் பலவுள்ளன (அவ்வீதியில்) எ-று. கார்முகம் - வில்; போருக்குரியது என்னும் பொருளுள்ள தத்தி தாந்தம். உடம்பிடி - கைவேல். கப்பணம் - யானை நெருஞ்சின் முள் வடிவாக எஃகினாற் செய்யப்படுவது. விந்தை - துர்க்கை, கொற்றவை. படைக்கலக் கொட்டிலில் விந்தைவாழு மென்றார். ஆல்; அசை. (72) தொளைய கல்லைமா லெனக்கொண்டு சுழற்றியும் செந்தூள் அளையும் யானைபோற் பாய்ந்துமல் லாற்றியு மாற்றல் விளைய வாளொடு கேடகம் வீசியும் வென்றி இளைய ராடமர் பயில்வன வெண்ணிலாக் கூடம். (இ-ள்.) தொளைய கல்லைக் கொண்டு - தொளையையுடைய கல்லை ஏந்தி, மால் எனச் சுழற்றியும் - திருமால் திகிரியைச் சுழற்றினாற்போல் சுழற்றியும், செம் தூள் அளையும் யானைபோல் - செம்புழுதியிற் படிந்த யானைகளைப்போல, பாய்ந்து மல் ஆற்றியும் - செந்நிலத்திற் பாய்ந்து மற்போர் செய்தும், ஆற்றல் விளைய - வலிமை முதிர, வாளொடு கேடகம் வீசியும் - வாட் படையோடு பரிசையும் பற்றி (ஒருவர்மே லொருவர்) வீசியும், வென்றி இளையர் - வெற்றியையுடைய அரசிளங் குமரர்கள், ஆடு அமர் பயில்வன - வெற்றி பொருந்திய போர்த்தொழில் பயிலும் இடமாகவுள்ளன, எண் இலாக் கூடம் - அளவிறந்த கூடங்கள் எ-று. திகிரியைச் சுழற்றினாற்போல வென்பது தொளைய கல்லை என்னும் பொருளுக்கு ஏற்பவும், செந்நிலத்திற் பாய்ந்து என்பது செந்தூள் அளையும்’என்னும் உவமைக்கு ஏற்பவும் வருவிக்கப் பட்டன. பயில்வன வாகிய கூடங்கள் உள்ளன என முடித்தலுமாம்.(73) (அறுசீரடியாசிரிய விருத்தம்) தேசவிர் நீல மாடஞ் செம்மணிச் சென்னி மாடங் காசறு கனக மாடஞ் சந்திர காந்த மாடம் ஆசற விளங்கு மின்ன மாடநீண் மாலை கூடற் பாசிழை மடந்தை பூண்ட பன்மணிக் கோவை யன்ன. (இ-ள்.) தேசு அவிர் - ஒளி விளங்குகின்ற, நீல மாடம் - நீல மணியாலாகிய மாளிகையும், செம்மணி - சிவந்த மாணிக்கங்களாற் கட்டப்பெற்ற, சென்னிமாடம் - முடியையுடைய மாளிகையும், காசு அறு கனகமாடம் - குற்றமற்ற பொன்னா லியற்றப்பட்ட மாளிகையும், சந்திரகாந்த மாடம் - சந்திரகாந்தக் கல்லாலமைக்கப்பெற்ற மாளிகையும் ஆகிய, ஆசு அற விளங்கும் - குற்ற மின்றாக விளங்குகின்ற, இன்ன மாடம் நீள்மாலை - இந்த நீண்ட மாளிகை வரிசைகள், கூடல் - மதுரையாகிய, பாசிழை மடந்தை பூண்ட - பசிய அணிகலன்களை யுடைய மங்கையானவள் அணிந்த, பல் மணிக் கோவை அன்ன - பலவகை மணிகளைக் கோத்த வடங்களை ஒத்திருந்தன எ-று. மாலை - வரிசை. பசுமை இழை, பாசிழை யென்றாயது. (74) விரையகல் கதுப்பி னல்லார் வீங்கிளங் கொங்கை போழ்ந்த வரையகன் மார்ப மன்றி வடுப்படார் தமக்கன் பில்லார் உரையகன் மான வாற்றா லொழுகுவார் பலகை யொள்வாட் கரையகல் விஞ்சை வீரர் கணம்பயில் காட்சித் தெங்கும். (இ-ள்.) வரை அகல் - மலைபோ லகன்ற, மார்பம் - மார்பின் கண், விரை அகல் - மணமிக்க, கதுப்பின் - கூந்தலையுடைய, நல்லார் - மகளிரின், வீங்கு இளம் கொங்கை - பருத்த இளமையாகிய கொங்கைகள், போழ்ந்த (வடு) அன்றி - பிளந்ததனாலாகிய வடுவே யல்லாமல், வடுப்படார் - வேறு படையினால் வடுப்படாதவர்களும், தமக்கு அன்பில்லார் - தம்முயிரினிடத்து அன்பில்லாதவர்களும், உரை அகல் - புகழ்மிகுந்த, மான ஆற்றால் ஒழுகுவார் - மான நெறியால் ஒழுகுகின்றவர்களுமாகிய, பலகை ஒள் வாள் விஞ்சை - கேடகத்தையும் ஒளி பொருந்திய வாளையும் பற்றி வீசுகின்ற வித்தையில் வல்ல, கரை அகல் வீரர்கணம் - அளவிறந்த வீரர்கள் கூட்டம், பயில் காட்சித்து எங்கும் - நெருங்கி யிருக்கிற காட்சியையுடையது எல்லா விடங்களும் எ-று. வரை அகல் மார்பம் - மூன்று வரிகளையுடைய அகன்ற மார்பு எனலுமாம். கொங்கை போழ்ந்த மார்பிலன்றி ஏனையிடத்து வடுப்படார் எனக் கூறலுமாம்; இதற்கு இனம் பற்றி முகமும் கொள்ளப்படும்; என்னை? முகத்தினும் மார்பினும் பட்ட புண்ணை விழுப்புண் என்பவாகலின், புறங்கொடார் என்பது கருத்து. தம் முயிர்க் கிரங்காமையின் ‘தமக்கன்பில்லார்’ எனப்பட்டார். மான வாற்றா லொழுகுதலாவது தாழ்வுவரின் உயிரை விடுதல், “ மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்” என்றார் வள்ளுவனாரும். விஞ்சை பயில்என ஒட்டலுமாம். காட்சித்து; குறிப்பு முற்று. எங்கும்; எழுவாய்; பன்மை யொருமை மயக்கம். (75) மின்னைவா ளென்ன வீசி வீங்குகார் தம்மிற் போர்மூண் டென்னவான் மருப்பு நீட்டி யெதிரெதிர் புதையக் குத்தி அன்னவா னென்ன வாய்விட் டதுவெனச் செந்நீர் சோரப் பொன்னவா மகன்ற மார்பர் பொருகளி றாட்டு வார்கள். (இ-ள்.) வீங்கு கார் - சூல்முதிர்ந்த முகில்கள், மின்னை வாள் என்ன வீசி - மின்னலை வாள்போல வீசி, தம்மில் போர் மூண்டென்ன - தம்முள் போர்மூண்டுசெய்தாற்போல, பொரு களிறு - போர் செய்யும் யானைகள், வால் மருப்பு - வெள்ளிய தந்தங்களை, எதிர் எதிர் நீட்டி - எதிரெதிரே நீட்டி, புதையக் குத்தி - (உடலில்) மூழ்கும்படி குத்தி, அன்னவான் என்ன - அந்த மேகங்கள் முழங்குவதுபோல, வாய் விட்டு - முழங்கி, அதுவென - அம்மேகம் சொரியும் தாரைபோல, செந்நீர் சோர - குருதித் தாரை சொரியும்படி, பொன் அவாம் - திருமகளும் விரும்பும்படியான, அகன்ற மார்பர் - விரிந்த மார்பினையுடைய வீரர்கள் (அவ்யானைகளை), ஆட்டுவார்கள் - போர் செய்விப்பார்கள் எ-று. மூண்டென்ன. விகாரம். அன்ன ; சுட்டு. மேக மென்னும் பொருண்மைபற்றி அது என்று ஒருமையாற் கூறினார். சோர - சொரிய என்னும் பொருட்டு. அவாவும் என்பது அவாம் என விகாரமாயிற்று. அவாவும் மார்பு, அகன்ற மார்பு எனத் தனித்தனி கூட்டுக. நீட்டி என்பது முதலியன களிற்றின் வினைகள். (76) தூண்டுவா ருளமுந் தங்கள் பின்னிடத் துவக்குண் டீர்த்துத் தாண்டுமா னொற்றையாழித் தேரினுந் தள்ளித் துள்ளப் பாண்டில்வாய்ப் பசும்பொன் றேயப் பார்மகள் முதுகு கீண்டு சேண்டிசை போய்ம டங்கச் செல்வத்தேர் நடாத்து வார்கள். (இ-ள்.) தூண்டு வார் உளமும் - செலுத்துகின்றவர்களின் மனோ வேகமும், தங்கள் பின்னிட - தங்கள் வேகத்திற்குப் பின்னிடும்படி, துவக்குண்டு ஈர்த்துத் தாண்டுமான் - கட்டப்பட்டு இழுத்துத் தாவு கின்ற குதிரைகள், ஒற்றை ஆழித் தேரினும் - ஓருருளையையுடைய சூரியன் தேரிற் பூட்டிய குதிரைகளைவிட, தள்ளித்துள்ள - விரைந்து ஓடவும், பாண்டில் வாய் - உருளையின் கண் உள்ள; பசும்பொன் தேய - பசிய பொன் தேயும்படியாகவும், பார்மகள் முதுகு கீண்டு - புவி மடந்தையின் முதுகைக் கிழித்து, சேண் திசை போய் மடங்க - வானத் தினுந் திசைகளினும் போய் மீளும்படி, செல்வத்தேர் நடாத்து வார்கள் - சிறந்த தேர்களை நடாத்துவார்கள் (அவ்வீரர்கள்) எ-று. தேரினும் - தேர்க் குதிரையினும். தள்ளித் துள்ளல் - மிக்குத் துள்ளல். பாண்டில் - உருள். பொன் - உருளின் பொற்கட்டு. சேண்டிசை - சேணிலும் திசையிலும். கீழ்ந்து என்பது கீண்டு என மருவிற்று. மான் துள்ளப் பொன் தேயத் தேர் நடாத்துவார்கள் என்க. மடங்கல் தேரின் வினை. கீண்டு என்பது செயவெ னெச்சத்திரிபும் ஆம். (77) மைந்தர்தந் நெருக்கிற் சிந்து கலவையு மகளிர் கொங்கைச் சந்தமுங் கூந்தல் சோர்ந்த தாமமுஞ் சிவிறி வீசு சிந்துரப் பொடியு நாறத் தேனொடு மெழுந்து1 செந்தூள் அந்தர வயிறு தூர்ப்ப வடுபரி நடாத்து வார்கள். (இ-ள்.)மைந்தர் தம் - ஆடவர்களின், நெருக்கில் - நெருக்கத் தினால், சிந்து கலவையும் - உதிர்ந்த கலவைச் சாந்தும், மகளிர் கொங்கைச் சாந்தமும் - பெண்களின் கொங்கைகளினின்றும் உதிர்ந்த சந்தனமும், கூந்தல் சோர்ந்த தாமமும் - (அவர்கள்) கூந்தலினின்றும் வீழ்ந்த மகரந்தமும், சிவிறி வீசு சிந்துரப் பொடியும் - துருத்தியால் வீசுகின்ற சிந்துரச் சுண்ணமுமாகிய, செந்தூள் தேனொடும் நாற எழுந்து - சிவந்த புழுதி தேனாடுங் கமழ மேலெழுந்து, அந்தர வயிறு தூர்ப்ப - வானத்தின் நடுவிடத்தை மறைக்கும்படி, அடு பரி நடாத்துவார்கள் - வெற்றி பொருந்திய குதிரைகளைச் செலுத்துவார்கள் (இளைஞர்) எ-று. சிந்தாமணியிலே கடை வீதியின் சிறப்புணர்த்து மிடத்து, “ பூசுசாந் தொருவர் பூசிற் றெழுவர்தம் மகலம் பூசி மாசன மிடம்பெ றாது வண்கடை மலிந்த தன்றே” எனக் கூறியிருப்பதனோடு மைந்தர்தந் நெருக்கிற் சிந்து கலவை என்பது ஒப்பு நோக்கற் பாலது. தாமம் - மகரந்தத்துக்கு ஆகுபெயர். சிந்துரப் பொடி - குங்குமம்; பொற் சுண்ணம் முதலியனவுமாம். பொடியுமாகிய செந்தூள் நாற எழுந்து தூர்ப்ப நடாத்துவார்கள் எனமுடிக்க. (78) தம்முயிர்க் கிரங்கா ராகித் தருக்கொடு மான மீர்ப்பத் தென்முனை யெதிர்ந்தா ராற்றுஞ் செருவெனக் குருதிச் செங்கேழ்க் கொய்ம்மலர்க் குடுமிச் சேவல் கோழிளந் தகர்போர் மூட்டி வெம்முனை நோக்கி நிற்பார் வேறவற் றூறு நோக்கார். (இ-ள்.) தம் உயிர்க்கு இரங்கார் ஆகி - தமது உயிர்க்கு இரங் காத வர்களாய், தருக்கொடு மானம் ஈர்ப்ப - செருக்கோடு மானமும் இழுக்க, தெவ் முனை - பகைவரின் போர் முனையின், எதிர்ந்தார் ஆற்றும் செரு என - எதிர்த்த வீரர்கள் செய்யும் போரைப்போல (செய்யும்படி), குருதிச் செம் கேழ் - உதிரம் போலும் செந்நிறத்தை யுடைய, கொய்மலர் - கொய்த மலர் போன்ற, குடுமிச் சேவல் - கொண்டையையுடைய சேவல்களையும், கோழ் இளம்தகர் - கொழுமையும் இளமையு முடைய ஆட்டுக் கிடாய்களையும், போர் மூட்டி - போரிற் செலுத்தி, வேறு அவற்று ஊறு நோக்கார் - அவற்றின் பிற துன்பங்களை நோக்காதவர்களாய், வெம்முனை நோக்கிநிற்பார் - கொடியபோர் ஒன்றையே கண்டு நிற்பார் எ-று. உயிருறும் துன்பநோக்கி யொழியாமையால் ‘தம்முயிர்க் கிரங்காராகி’ என்றார். ஈர்த்தல் - இழுத்தல். தெவ்முனை தெம் முனை யென்றாயது. முனை - போரிடம். செய்யும்படி என்பது வருவிக்கப்பட்டது. மலர் - செங்காந்தட்பூ. வேறு, அஃதன்றி என்னும் பொருளில் வந்த இடைச்சொல்லுமாம். “ கோட்டிளந் தகர்களுங் கொய்ம்மலர தோன்றிபோற் சூட்டுடைய சேவலுந் தோணிக்கோழி யாதியா வேட்டவற்ற தூறுள்ளார் வெருளிமாந்தர் போர்க்கொளீஇக் காட்டியார்க்குங் கெளவையுங் கடியுங்கெளவை கெளவையே” என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளோடு இதனை ஒப்பு நோக்குக. (79) பெண்முத்த மனைய பேதைச் சிறுமியர் பெருநீர் வையை வெண்முத்த மிழைத்த சிற்றில் சிதைபட வெகுண்டு நோக்கிக் கண்முத்தஞ் சிதறச் சிந்துங் கதிர்முத்த மாலை தட்பத் தெண்முத்தி னகைத்துச் செல்வச் சிறார்கடே ருருட்டு வார்கள். (இ-ள்.) பெண் முத்தம் அனைய - பெண்களுள் முத்தினை ஒத்த, பேதைச் சிறுமியர் - பேதைப் பருவத்தையுடைய சிறுமிகள், பெருநீர்வையை வெண்முத்தம் - மிகுந்த நீரினையுடைய வையை யாற்றின் வெள்ளிய முத்துக்களால், இழைத்த சிற்றில் சிதைபட - கட்டிய சிறு வீடுகள் சிதைய, வெகுண்டு நோக்கி - (அதனால் அவர்கள்) கோபித்துப் பார்த்து, கண் முத்தம் சிதற - கண்கள் முத்துப்போலும் நீர்த்துளிகளைத் துளிக்க, சிந்தும் - அறுத்துச் சிந்திய, கதிர் முத்தமாலை - ஒளி பொருந்திய முத்துமாலைகள், தட்ப - (தங்கள் சிறு தேர்ச் செலவைத்) தடைசெய்ய, செல்வச் சிறார்கள் - செல்வத்தையுடைய அரசிளங்குமரர்கள், தெண் முத்தின் நகைத்து - (அது கண்டு) தெள்ளிய முத்துப்போற் புன்னகை யரும்பி, தேர் உருட்டவார்கள் - சிறுதேரைச் செலுத்துவார்கள் எ-று. களங்க மின்மையும் அழகும் பற்றிப் ‘பெண் முத்த மனைய’ என்றார். வையை மருங்கே என்னலுமாம். சிதைபட உருட்டுவார்கள் என்றும், மாலை தட்பநகைத்து உருட்டுவார்கள் என்றும் தனித்தனி முடிக்க. சிதைபட என்னும் எச்சம் காரியமும் காரணமும் ஆயிற்று. சிதற என்பது சிந்தும் என்பதை விசேடித்து வந்தது. தட்ப - தடுக்க; தள் ; பகுதி; தளையுமாம். ‘கண்முத்தம்’ என்புழி, முத்தம்; ஆகு பெயர். சிறார் - ஆகாரமாயிற்று; பராரை என்பதிற்போல. சிற்றில் சிதைத்தல் சிறாரின் குறும்பு களிலொன்று.சிற்றில் சிதைத்தல், சிறுதேருருட்டல் என்பன சிறுபருவச் செயல்களாகப் பிள்ளைக்க வியிற் பின்னுள்ளோர் பாடுதலுங் காண்க. (80) கொடிமுகி றுழாவு மிஞ்சிக் கோநகர் வடகீழ் ஞாங்கர் முடிமிசை வேம்பு நாற முருகவி ழாரும் போந்தும் அடிமிசை நாறத் தென்னர் வழிவழி யரசு செய்யும் இடிமுர சுறங்கா வாயி லெழுநிலை மாடக் கோயில். (இ-ள்.) முகில் துழாவும் கொடி - மேகத்தைத் தடவுகின்ற கொடிகளையுடைய, இஞ்சிக் கோ நகர் - மதிலாற் சூழப்பட்ட அத்தலை நகரின், வடகீழ் ஞாங்கர் - வடகிழக்குப் பக்கத்தில், முடிமிசை வேம்பு நாற - முடியின்கண் வேப்பம்பூமாலை கமழவும், அடிமிசை - அடிகளின் மேல், முருகு அவிழ் - மணம் விரிந்த, ஆரும் போந்தும் நாற - ஆத்தி மாலையும் பனைமாலையும் கமழவும், தென்னர் வழி வழி அரசு செய்யும் - பாண்டி மன்னர்கள் வழிவழி யாகச் செங்கோலோச்சி வருகின்ற. இடி முரசு உறங்கா - இடி போலும் முரசொலி நீங்காத வாயில் வாயிலையும், எழுநிலை மாடக் கோயில் ஏழு நிலை மாடங்களையுமுடைய கோயில் (உள்ளது) எ-று. கோ-தலைமை; அரசுமாம். வேப்பம்பூ மாலை பாண்டியர் முடியிற் சூடுங்கண்ணியாகலின் முடிமிசை வேம்பு நாற என்றும், சோழரும் சேரரும் வணங்குங்கால் முறையே அவர்கள் முடியிற் சூடிய கண்ணியாகிய ஆத்திமாலையும் பனைமாலையும் அடியிற் படுமென்று ஆரும்போந்ததும் அடிமிசை நாற என்றும் கூறினார். சேர பாண்டிய சோழர்க்கு முறையே உரிய அடையாளப் பூ மாலை இவை யென்பது, “ போந்தை வேம்பே யாரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” எனத் தொல்காப்பியத்தும் கூறப் பெற்றுளது. வேம்பு முதலியன ஆகுபெயர். வழிவழி - தலைமுறையாக. முரசு;வீரம் நியாயம் தியாகம் என்பவற்றை யுணர்த்தும் மும்முரசுகள். இடையறா தொலிக்கு மென்பார் உறங்கா என்றார். கோயில் - அரசமனை; அரமனை. உள்ளது என ஒரு சொல் வருவித்து முடிக்கப்பட்டது. ஞாங்கர் உள்ள தென்க. மறையவர் வீதி ஆத்திக ருண்டென் றோது மறமுதற் பொருள்கள் நான்கும் நாத்திகம் பேசும் வஞ்சர் நாவரி கருவி யாக ஆத்தனா லுரைத்த வேத வளவுகண் டுள்ளந் தேறித் தீர்த்தராய் முத்தீ வேட்குஞ் செல்வர்தம் மிருக்கை சொல்வாம். (இ-ள்.) ஆத்திகர் உண்டு என்று ஓதும் -ஆத்திகர்கள் உண்டு என்று சொல்லுகின்ற, அறம் முதல் பொருள்கள் நான்கும் - அற முதலிய நான்கு பொருள்களையும், நாத்திகம் பேசும் வஞ்சர் - இல்லையென்று கூறுகின்ற வஞ்சகரின், நா அரி கருவி ஆக - நாவினை அறுக்கின்ற வாளாக, ஆத்தனால் உரைத்த - இறைவனால் அருளிச் செய்யப்பட்ட, வேத அளவு கண்டு - மறையின் முடிவை உணர்ந்து, உள்ளம் தேறி - மனந் தெளிந்து, தீர்த்தராய் - தூய்மையுடைய ராய், முத்தீவேட்கும் - மூன்று தீயிணை ஓம்புதலாகிய வேள்வியை முடிக்கும், செல்வர்தம் இருக்கை சொல்வாம் - செல்வர்களாகிய மறையவரின் வீதியின் பெருமையைச் சொல்வாம் எ-று. ஆத்திகர் - உண்டென்பார்; மறுபிறப்பும் இருவினைப்பயனும் கடவுளும் உண்டென்பார்; அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளும் உண்டென்பார், மற்றும் இத்தன்மைய மெய்ம்மைகள் உண்டென்பார். நாத்திகர் - இல்லையென்பார்; ஆத்திகர்க்கு மறு தலையாயினார், இவர் உலகாயதர் முதல் பலதிறப்படுவர்; காண்டலளவை ஒன்றே பிரமாணம்; காணப்படும் நிலம் நீர் தீ வளி யென நான்கே தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள்; இவற்றின் கூட்டமே உடம்பு; பாகடையுஞ் சுண்ணாம்புங் கூடியவழிச் செவ் வண்ணம் பிறக்குமாறு போல இவற்றின் கூட்டரவின் ஓருணர் வுண்டாம்; அவ்வுணர்வு உடம்பு வளர வளரும்; தேயத் தேயுமாகலின், உடம்பிற்கு வேறே உயிரென்பது பொய்; உடம்பிற்கு இன்பத் துன்பங்கள் இயல்பாயுள்ளன; இவற்றிற்குக் காரணம் வினையென்பதும் பொய்; மயிலைச் சித்திரித்தாரையும் குயிலைக் கூவுவித்தாரையும் காணாமையிற் கடவுளுண்டென்பது பொய் என்றிங்ஙனங் கூறுவார் உலகாயதராவர். ஆத்தன் - உண்மையுரைப்போன், நண்பன்; இங்கே பரமாத்தனாம் சிவபெருமான். வேட்குஞ் செல்வர் - வேட்டலாகிய செல்வத் தினையுடையார் என்றுமாம். (82) முஞ்சிநாண் மருங்கின் மின்னப் பொன்செய்த முளரி வேய்ந்த குஞ்சிநான் றசையத் தானைச் சொருக்குமுன் கொய்து தூங்கப் பஞ்சினாண்1 கலைத்தோல் மார்பும் பலாசக்கோல் கையுந் தாங்கி எஞ்சினான் மறை2 நூல் கற்போர் கிடைகளே யில்ல மெல்லாம். (இ-ள்.) முஞ்சி நாண் - முஞ்சிப் புல்லாலாகிய கயிறு, மருங்கில் மின்ன - அரையின்கண் ஒளிவிடவும், பொன் செய்த - பொன்னாற் செய்யப்பட்ட, முளரி வேய்ந்த - தாமரை மலரை அணிந்த, குஞ்சி நான்று அசைய - சிகையானது தொங்கி அசையவும், தானைச் சொருக்கு - ஆடையின் சொருகல். முன்கொய்து தூங்க - முன்னே கொய்யப்பட்டுத் - தொங்கவும், கலைத் தோல் பஞ்சின் நாண் - மான்றோலைக் கட்டியபஞ்சினாலாகிய பூIVலை, மார்பும் - மார்பிலும், பலாசக்கோல் - முள்முருக்கங்கோலை, கையும் தாங்கி - கையிலுங் கொண்டு, எஞ்சு இல் - குறைவு இல்லாத, நான்மறை நூல்கற்போர் - நான்கு மறைகளாகிய நூல்களைக் கற்கின்ற மாணவரின், கிடைகளே இல்லம் எல்லாம் - சாலைகளேயாம் (அவ்வீதியிலுள்ள) வீடுகளனைத்தும் எ-று. முஞ்சி - ஒருவகை நாணற்புல். தானைச் சொருக்கு - கொய்சகம். மறை நூல் - மறையும் நூலும் என்றுமாம். கிடை - வேதமோதுஞ்சாலை. முஞ்சி நாண் முதலியன பிரமசாரிக்குரியன. பஞ்சி, எஞ்சி என்னும் பாடங் கட்கு முறையே பஞ்சு, ஏக்கற்று நின்று என்பன பொருள்களாம். (83) தீவினை யந்த ணாளர் சிறார்பயி றெய்வ வேத நாவுரு வேற்றக் கேட்டுக் கிளிகளோ நவிலும் வேற்றுப் பூவையும் பயின்று புத்தே ளுலகுறை புதுமந் தாரக் காவுறை கிளிகட் கெல்லாங் கசடறப் பயிற்று மன்னோ. (இ-ள்.) தீவினை அந்தணாளர் சிறார் - அங்கி காரியத்தை யுடைய பார்ப்பனரின் சிறுவர்கள், பயில் தெய்வ வேதம் - பயிலுதற்குரிய திப்பிய மறைகளை, நா உரு ஏற்றக் கேட்டு - (தமது) நாவினால் உருப்போடுதலைக் கேட்டு, கிளிகளோ நவிலும் - (அவ்வில்லங்களிலுள்ள) கிளிகள் மட்டுமாகூறாநிற்கும் (அன்று); வேற்றுப் பூவையும் பயின்று - அயலிடங்களிலுள்ள நாகணவாய்ப் புட்களும் கற்று, புத்தேள் உலகு உறை - தேவருலகத்திற் பொருந்திய, புது மந்தாரக் காஉறை கிளிகட்கு எல்லாம் - புதிய மலர்களையுடைய கற்பகச் சோலையின்கண் உறையும் கிளிகளுக்கெல்லாம், கசடு அறப் பயிற்றும் - குற்றம் நீங்கக் கற்பிக்கும் எ-று. உருவேற்றல் - பலமுறை கூறிப் பயிலுதல்; இதனை நெட்டுருச் செய்தல் என்றுங் கூறுவர். மந்தாரம் - கற்பகம் முதலியவற்றுக்கும் உபலக்கணம். என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும், நின்றலர்ந்து தேன் பிலிற்றும் என்ப ஆகலின் ‘புது மந்தாரம்’ என்றார். கிளிகட் கெல்லாம் - கிளிகளெல்லாவற்றுக்கும் என உருபு பிரித்துக்கூட்டுக. கசடு - சுரவழு முதலிய குற்றம். உயர்வு நவிற்சி. மன், ஓ: அசை. (84) வேதமு மங்க மாறு மிருதியும் புராண நூலின் பேதமுந் தெரிந்தோ ராலும் பிறர்மதங் களைய வல்ல வாதமு மதமேற் கொண்டு மறுத்தலு நிறுத்த வல்ல போதமு முடையோ ராலும் பொலிந்தன கழக மெல்லாம். (இ-ள்.) வேதமும் - நான்கு மறைகளும், அங்கம் ஆறும் - ஆறு அங்கங்களும், மிருதியும் - பதினெண் மிருதிகளும், புராண நூலின் பேதமும் - பேதமுள்ள பதினெண் புராண நூல்களும் ஆகிய இவைகளை, தெரிந்தோராலும் - அறிந்தோர்களாலும், பிறர் மதம் களையவல்ல வாதமும் - பிறர் கொள்கையை அழிக்கவல்ல வாதத்தினையும், மதம் மேற்கொண்டு மறுத்தலும் - அவர் கொள்கையை ஒருவாற்றான் மேற்கொண்டு மற்றொரு வாற்றல் மறுத்தலையும், நிறுத்தவல்ல போதமும் - தமது கொள்கையை நிறுத்திச்சாதிக்கவல்ல உணர்ச்சியையும், உடையோராலும் - உடையவர்களாலும், கழகம் எல்லாம் பொலிந்தன - கழகங்கள் அனைத்தும் விளங்கின எ-று. வேதங்களும் அங்கங்களும் இவையென முன் உரைக்கப் பட்டன, மிருதி பதினெட்டனையும், “ மனுவே அத்திரி ஒளரிதம் விண்டு யாஞ்ஞ வற்கியம் உசனம் ஆங்கிரசம் இயமம் ஆபத் தம்பம் சம்வர்த்தம் காத்தி யாயனம் பிரகற்பதி பராசரம் வியாசம் சங்கலிதம் தக்கம் கெளதமம் சாதன்ம மோடு வசிட்டம் இவையே தருமநூல் பதினெட் டாகுமென்ப” என்னும் திவாகரச் சூத்திரத்தானறிக. இவை இருடிகளால் வேதங் களின் அருத்தங்களை நினைத்து செய்யப்பட்டனவாம். புராணங் களின் பேதங்களைப் புராண வரலாற்றுட் கூறுதும்; ஆண்டுக் கண்டு கொள்க. மதம் - கொள்கை; நன்னூலார் கூறிய எழுவகை மதங் களுள் மறுத்தல், பிறர் மதம் மேற்கொண்டு களைதல், தான் நாட்டித் தனாது நிறுத்தல் என்னும் மூன்றும் இங்கே குறிக்கப்பட்டன. கழகம் - ஓதுஞ் சாலை. (85) உறிபொதி கரகக் கைய ரொளிவிடு செங்கற் றோய்த்த அறுவைய ருயிர்க்கூ றஞ்சு நடையின ரவிச்சை மாள எறிசுடர் மழுவா ளென்னக் கோவணம் யாத்த1 கோலா மறைமுடி வன்றித் தேறா மாதவர் மடங்க ளெங்கும். (இ-ள்.) உறிபொதி கரகக்கையர் - உறியாற் பொதியப்பட்ட கமண்டலத்தைக் கையிலுடையவரும், ஒளிவிடு செம் கல் தோய்த்த அறுவையர் - ஒளிவீசும் சிவந்த காவிக் கற்குழம்பில் தோய்ந்த ஆடையையுடையவரும், உயிர்க்கு ஊறு அஞ்சும் நடையினர் - எறும்பு முதலிய சிற்றுயிர்களுக்கு நேரும் துன்பத்தை யஞ்சி மெல்லென ஒதுங்கும் நடையையுடையவரும், அவிச்சை மாள - அஞ்ஞானமரம் கெட, எறிசுடர் மழுவாள் என்ன - வீசுகின்ற ஒளியையுடைய மழுப்படையைப் போல, கோவணம் யாத்த கோலர் - கோணவங் கட்டிய தண்டத்தை யுடையவருமாகிய, மறைமுடிவு அன்றித் தேறா மாதவர் - உபநிடதங்களையன்றி வேறு நூல்களைச் சிந்தியாத முனிவர்களின், மடங்கள் எங்கும் - மடங்கள் (அவ்வீதிகளில்) எவ்விடத்தும் (உள்ளன) எ-று. துறவிகள் காவியுடை யுடுப்பர்; இதனை, ‘கற்றோய்த் துடுத்த’ என்றார் முல்லைப்பாட்டிலும். அவிச்சை - அஞ்ஞானம். எறிதல் - துணித்தல். எறிசுடர் மழுவாள் என்றமையால் அவிச்சையாகிய மரமென்க. கோவணம் தலைப்பில் யாத்த கோல், வடிவால் மழுவினைப்போலும். அவர் அவிச்சையின் வலியைக் கெடுத்தலின் அதனைக் கோலின்மே லேற்றிக் கூறினார். மறைமுடிவு - வேத அந்தம்; அதனை இடையறாது சிந்தித்துத் தெளிவரென்க. மாதவர் - சந்நியாசிகள். (86) அட்டில்வாய்ப் புகையு மாடத் தகில்படு புகையும் வேள்வி விட்டெழு புகையு மொன்றி விரிசுடர் விழுங்கக் கங்குல் பட்டது பலருந் தத்தம் பயில்வினை யிழக்க நங்கை மட்டவிழ் கடுக்கை யான்கண் புதைத்தநாள் மானு மன்னோ. (இ-ள்.) அட்டில்வாய்ப் புகையும் - அடுக்களையினின்று எழுந்த புகையும், மாடத்து அகில்படு புகையும் - மேன்மாடத் தினின்றும் அகிற் கட்டையா லுண்டாகி எழுந்த புகையும், வேள்வி விட்டு எழு புகையும் - வேள்விக் குண்டத்தினின்றும் விடப்பட்டு மேலெழுந்த புகையும், ஒன்றி - ஒன்றுபட்டு, விரிசுடர் விழுங்க - ஒளிவிரிந்த சூரியனை மறைக்க, கங்குல் பட்டது - இருள் நிறைந்த தாகிய அந்த நாள், பலரும் தம் தம் பயில்வினை இழக்க - அனைவரும் தத்தமக்குரிய செய்யுந் தொழில்களை இழக்கும்படி, நங்கை - உமையம்மை, மட்டு அவிழ் கடுக்கையான் - மணம்விரிந்த கொன்றை மாலையையுடைய இறைவனுடைய, கண் புதைத்த நாள் மானும் - திருக்கண்களைத் (தமது கரத்தால்) மூடிய நாளை ஒக்கும் எ-று. அகிற்புகை மகளிர் கூந்தலின் ஈரம் புலர்த்துதற்கு இடப் பட்டது. விட்டு - விடப்பட்டு; நீங்கி யெனினுமாம். கங்குல் பட்டது; வினையாலணையும் பெயர். பயிறல் - செய்தல். மன், ஒ; அசை. கண்புதைத்த வரலாறு:- ஒருகாலத்தில் திருக்கைலையிலுள்ள இளமரக்காவில் சிவபெருமானும் உமாதேவியாரும் எழுந்தருளி யிருக்கும் பொழுது இறைவி ஒரு திருவிளையாடலைக் கருதிப் பின்னே வந்து இறைவனுடைய திருக்கண்களைப் பொத்த, அக்கண்கள் பரிதியும் மதியுமாதலால் உலகெங்கும் இருள்மூடிற்று; எல்லாவுயிர்களும் தம்தம் தொழில்களைக் கைவிட்டு வருந்தின; அப்பொழுது பெருமான் நுதற்கண்ணைத் தோற்றுவித் தருளினர் என்பது. இதனைக் கந்தபுராணம், ததீசியுத்தரப் படலத்திலுள்ள, “ ஈசனை யொருஞான் றம்மை யெழில்பெறு கயிலைக் காவிற் பேசல ளாட லுன்னிப் பின்வரா விழியி ரண்டுந் தேசுறு கரத்தாற் பொத்தச் செறிதரு புவனம் யாவும் மாசிருள் பரந்த தெல்லா வுயிர்களும் வருத்தங் கொள்ள” “ ஓங்குதன் னுதலி னாப்ப ணொருதனி நாட்ட நல்கி ஆங்கது கொண்டு நாத னருள்கொடு நோக்கி யாண்டு நீங்கரு நிலைமைத் தாகி நின்றபே ரிருளை மாற்றித் தீங்கதிர் முதலா னோர்க்குச் சிறந்தபே ரொளியை யீந்தான்” என்னுஞ் செய்யுட்களா லுணர்க. இவ்வரலாற்றினை, “ நாயகன் கண்ண யப்பா னாயகி புதைப்ப வெங்கும் பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித் தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்தபண்பின் தேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேசதென்னார்”” எனச் சிவஞானசித்தியார் கிளந்தெடுத் துரைத்தலுங் காண்க. (87) சைவர் வீதி (கலிநிலைத்துறை) தெய்வ நீறுமைந் தெழுத்துமே சிதைக்கல னாக எவ்வ மாசிரு வினையுடம் பெடுத்துழல் பிறவிப் பெளவ மேழையுங் கடந்தரன் பதமலர்க் கரைசேர் சைவ மாதவ ருறைமடத் தனிமறு குரைப்பாம். (இ-ள்.) தெய்வ நீறும் - தெய்வத் தன்மையையுடைய திருநீறும் ஐந்து எழுத்துமே - திருவைந் தெழுத்துமே, சிதைக்கலன் ஆக - பாய் மரத்தினை யுடைய கப்பலாகக் (கொண்டு), எவ்வம் மாசு இருவினை - துன்பத்தைத் தருகின்ற குற்றத்தையுடைய இருவினைகளாலும், உடம்பு எடுத்து உழல் பிறவி - உடம்பினை எடுத்து வருந்துகின்ற எழுவகைப் பிறப்பாகிய, பெளவம் ஏழையும் - ஏழுகடல்களையும், கடந்து - நீந்தி, அரன் பதமலர்க் கரைசேர் - இறைவன் திருவடித் தாமரையாகிய கரையை அடைகின்ற, சைவமாதவர் உறைமடம் - தவத் தினையுடைய சைவப் பெரியார்கள் உறைகின்ற மடங்களையுடைய, தனிமறுகு உரைப்பாம் - ஒப்பற்ற வீதியின் பெருமையைச் சொல்வாம் எ-று. திருநீறு தெய்வத்தன்மை யுடையதாதலைத் திருநீற்றுப் பதிகத் தானறிக. திருவைந்தெழுத்தும் புணையாகப் பிறவிக்கடல் கடத்தலை, “ தனியனேன் பெரும்பிறவிப் பெளவத் தெவ்வத் தடந்திரையா லெற்றுண்டு பற்றொன் றின்றிக் கனியைநேர் துவர்வாயா ரென்னுங் காலாற் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட் டினியென்னே யுய்யுமா றென்றென் றெண்ணி யஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை முனைவனே முதலந்த மில்லா மல்லற் கரைகாட்டி யாட்கொண்டாய் மூர்க்க னேற்கே” என்னும் திருவாசகத்தானு மறிக. சிதை - பாய்மரம். மாசு - அவிச்சையுமாம்; ‘இருள்சே ரிருவினையும்’ என்றார் பொய்யில் புலவரும். சைவமாதவர் - சிவனடியார்; ஆதி சைவருமாம். (88) எங்கு மீசனைப் பூசைசெய் திகபர மடைவார் எங்கு மன்பரைப் பூசைசெய் தெழுபிறப் பறுப்பார் எங்கு மாகமஞ் செவிமடுத் தெதிர்வினை தடுப்பார் எங்கு நாயகன் வடிவுணர்ந் திருள்மலங் களைவார். (இ-ள்.) (அவ்வீதியில்) எங்கும் - எவ்விடத்தும், ஈசனை - சிவபெருமானை, பூசைசெய்து இகபரம் அடைவார் - பூசனை புரிந்து இம்மை மறுமைப் பயன்களைப் பெறுவாரும், எங்கும் - யாண்டும், அன்பரைப் பூசைசெய்து - அடியார்களைப் பூசித்து, எழுபிறப்பு அறுப்பார் - வருகின்ற பிறவியைப் போக்குவாரும், எங்கும் - எப்புறத்தும், ஆகமம் செவிமடுத்து - ஆகமநூலைக்கேட்டு. எதிர்வினை தடுப்பார் - ஆகாமிய வினையைத் தடுப்பாரும், எங்கும்- எப்பக்கமும், நாயகன் வடிவு உணர்ந்து - இறைவனது திருவுருவைச் சிந்தித்து, இருள்மலம்களைவார் - ஆணவமலத்தைக் கெடுப்பாரும் (உளர்) எ-று. இகபரம் என்பன அவற்றின் பயனுக்கு ஆகுபெயர்; பரம் என்றது ஈண்டு மறுமையை. அன்பரைப் பூசித்தலாவது அவரை யடைந்து அவர் கருமத்தைத் தன் கருமமாகச் செய்து கூசிமொழிந்து அருள்ஞானக் குறியினின்று வழிபடுதலாகும்; அன்பர் திருவேடத்தை அரனெனவே தேறி வழிபடுதலுங் கொள்க, எழுபிறப்பு - எழுவகைப் பிறப்புமாம். செவிமடுத்தல், சிந்தித்தல் தெளிதல்கட்கும் உபலக்கணம். எதிர்வினை - ஆகாமியம்; எதிரக்கடவதாகிய சஞ்சிதம் எனினும் ஆம். “ சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் ” என்னும் தமிழ்மறையுங் காண்க இருள்மலம் - ஆணவம்; அறியாமை இது, புறவிருளானது கண்ணை மறைப்பதுபோன்று உயிரின் அறிவை மறைத்தலின் இருளெனவும்படும். உளர் என ஒருசொல் வருவித்து எங்குமுளர் எனமுடிக்க. (89) அழிவி லானுரை யாகம மிலக்கமாய்ந் தவற்றுள் விழுமி தாகிய விதியினும் விலக்கினு மடியைத்1 தழுவு தொண்டர்கள் மைந்தர்கள் சாதகர் பாசங் கழுவி வீடருள் போதகக் காட்சியர் பலரால். (இ-ள்.) அழிவு இலான் உரை - நித்தனாகிய சிவபிரான் அருளிப் பாடாகிய, ஆகமம் - ஆகமங்களின், இலக்கம் ஆய்ந்து - நூறாயிரங்கிரந்தங்களை ஆராய்ந்து, அவற்றுள் விழுமிதாகிய விதியினும் விலக்கினும் - அவற்றுள்ளே உயர்ந்த விதியானும் விலக்கானும், அடியைத் தழுவு - (தமது) திருவடிகளை இறுகப் பற்றிய, தொண்டர்கள் மைந்தர்கள் சாதகர் - தொண்டர்கள் மைந்தர்கள் சாதகர் ஆகிய இவர்களின், பாசம் கழுவி - பாசத்தைப் போக்கி, வீடு அருள் - வீட்டுலகை அருளுகின்ற, போதகக்காட்சியர் பலர் - மெய்யுணர்வினையுடைய ஞானாசிரியர் பலர் (அவ்வீதியில் உள்ளார்) எ-று. உரை ஆகமம் - உரைத்த ஆகமம் என வினைத்தொகையுமாம். ஆகமங்கள் சிவபெருமானால் அருளப்பட்டவையென்பது, மன்னு மாமலை மகேந்திர மதனிற், சொன்னவாகமந்தோற்றுவித் தருளியும்’ என்பது முதலிய திருவாசகப் பகுதிகளிலும் குறிக்கப்பெற்றுளது. ஆகமத்துள் இலக்கங் கிரந்தம் ஆராய்ந்துணர்ந்தவர் உத்தமரென்ப. தொண்டர் - சரியை நெறிநிற்போர். மைந்தர் - கிரியைநெறி நிற்போர். சாதகர் - யோகநெறி நிற்போர். போதகக்காட்சியர் - ஞானிகள்; காட்சி - உணர்வு. இந்நான்கு நெறியும் முறையே தாசமார்க்கம். புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் எனவுங் கூறப்படும். இவர் சமயம், விசேடம், நிருவாணம், ஆசாரியா பிடேகம் என்னும் தீக்கைகளை முறையே பெற்றவராவரென்றும் கூறுவர். தொண்டர்கள் முதலிய மூவரும் அடியைத் தழுவி நிற்கும் மாணாக்கரெனவும், போதகக்காட்சியர் அவர்கள் பாசத்தைப் போக்கி வீடருளும் ஆசாரியரெனவும் உணர்க. விதியினும் விலக்கினும் தழுவிய என்க; விதியினும் விலக்கினும் பாசங் கழுவி என இசையபாருமுளர். தொண்டர் மைந்தர் சாதகர் என்போரும், காட்சியரும் பலர் என உரைத்தலுமாம். ஆல்; அசை. (90) மறைக ளாகமம் பொதுச்சிறப் பெனச்சிவன் வகுத்த முறையி1 னோதிய விதி2விலக் குரைகளு முடிவில் அறையும் வீடுமொன் றிரண்டெனும் பிணக்கற வமைந்த குறைவி லாச்சிவ யோகியர் குழாங்களும் பலவால். (இ-ள்.) மறைகள் ஆகமம் - வேதங்களையும் ஆகமங்களையும், பொது சிறப்பு என - (முறையே) பொதுவாகவும் சிறப்பாகவும், சிவன் வகுத்த முறையின் - சிவபிரான் ஒருவனே அருளிச்செய்த முறைமையினால், ஓதிய விதிவிலக்கு உரைகளும் - அவற்றுள் கூறப்பட்ட விதிவிலக்கு மொழிகளும், முடிவில் அறையும் வீடும் - அவற்றின் இறுதியிற் கூறுகின்ற வீடும், ஒன்று இரண்டு எனும் பிணக்கு அற-ஒன்று என்றும் இரண்டு என்றும் கூறுகின்ற மாறுபாடு இல்லையாகக்கொண்டு, அமைந்த - தெளிந்திருந்த, குறைவு இலா - குறைவில்லாத, சிவயோகியர் குழாங்களும் பல - சிவயோகியர் கூட்டங்களும் பல (அவ்வீதியில் உள்ளன) எ-று. வேதம் பல்வேறு நிலையினர்க்கும் அவரவர் பக்குவத்திற் கேற்பப் பொருளுணர்த்தி நிற்றலின் பொதுவென்றும், ஆகமம் சத்திநிபாத முடையார்க்கு வேதத்தின் உண்மைப் பொருளுணர்த் தலின் சிறப்பென்றுங் கூறப்படுமென்ப. இங்ஙனம் சிவபெருமான் ஒருவராலேயே இவை பொதுவும் சிறப்புமாக அருளிச் செய்யப் பட்டமையால் இவை கூறும் பொருளனைத்தும் அபேதமுமல்ல, பேதமுமல்லவென்பார் ‘ஒன்றிரண்டெனும் பிணக்கற’ என்றார். இப்புராணத்துள்ளே பின் ‘வேதவாகமச் சென்னியில் விளை பொருளபேதம், பேதமாகிய பிணக்கறுத்து என வருவதும் இக்கருத் தினதே. ‘விதிவிலக்குரைகளும் வீடும் ஒன்றே; அங்ஙனமாகவும் இரண்டென்று பிணங்குவார் பிணக்கற அமைந்த’ எனப் பொருளுரைப் பாருமுளர், “ வேதமொ டாகம மெய்யா மிறைவனூல் ஓதும் பொதுவுஞ் சிறப்புமென் றுன்னுக நாத னுரையவை நாடிலி ரண்டந்தம் பேதம தென்னிற் பெரியோர்க் கபேதமே””” என்னும் திருமந்திரம், “ வேதநூல் சைவநூ லென்றிரண்டே நூல்கள் வேறுரைக்கு நூலிவற்றின் விரிந்த நூல்கள் ஆதிநூ லநாதியம லன்றருநூ லிரண்டும் ஆரணநூல் பொதுசைவ மருஞ்சிறப்பு நூலாம் நீதியினா லுலகர்க்குஞ் சத்திநிபா தர்க்கும் நிகழ்த்தியவை நீண்மறையி னொழிபொருள்வே தாந்தத் தீதில்பொருள் கொண்டுரைக்கு நூல்சைவம் பிறநூல் திகழ்பூர்வஞ் சிவாகமங்கள் சித்தாந்த மாகும்” என்னுஞ் சிவஞானசித்தித் திருவிருத்தமும் இச்செய்யுளின் பொருளைத் தெளிவு படுத்துவனவாம். வேதாமகத்துணி பிரண்டில்லை யொன் றென்னவே மூலன் மரபில்வரு மெளனகுரு தமக்குணர்த்திய தாகத் தாயுமானவடிகள் கூறுவர். இச்செய்யுட்குப் பிறர் பிறவா றுரைக்கும் பொருள்கள் பொருந்துமேற் கொள்க. (91) திருக்கோயில் முதலியன குழலுந் தும்புரு நாரதர் பாடலுங் குனித்துச் சுழலுங் கொம்பனா ராடலு மூவர்வாய்த் துதியும் விழவின் செல்வமுஞ் சுருதியுந் திசையெலாம் விழுங்கும் முழவுங் கண்டுயி லாதது முன்னவன் கோயில். (இ-ள்.) குழலும் - வேய்ங்குழலின் ஒலியும், தும்புரு நாரதர் பாடலும் - தும்புரு நாரதர் என்னு மிருவர்களின் இசைப்பாட்டின் ஒலியும், கொம்பு அனார் குனித்துச் சுழலும் ஆடலும் - பூங்கொம்பை யொத்த மகளிர் வளைந்து சுழன்று ஆடுகின்ற ஆடலின் ஒலியும், மூவர்வாய்த் துதியும் - ஆளுடைய பிள்ளையார் ஆளுடைய அரசுகள் ஆளுடைய நம்பிகள் ஆகிய மூவரும் திருவாய்மலர்ந்தருளிய திருநெறித் தமிழ்மறையின் ஒலியும், விழவின் செல்வமும் - சிறந்த திருவிழாவின் ஒலியும், சுருதியும் - நான் மறைகளின் ஒலியும், திசை எலாம் விழுங்கும் முழவும் - திக்குகளின் ஒலிகளையெல்லாம் கீழ்ப்படுத்தும் முழவின் ஒலியும், கண்துயிலாதது நீங்கப்பெறாதது, முன்னவன் கோயில் - இறைவன் வீற்றிருந்தருளுத் திருக்கோயில் ஆகும் எ-று. தும்புரு - கந்தருவ குரு. நாரதர் பிரமனின் மானச மைந்தர்; இவர் தேவ விருடியெனவும் படுவர். இவ்விருவரும் இசையில் மிக வல்லுநராவர். நாரதர் சிவபிரான் றிருமுன் இசைபாடுதற் சிறப்பை, “ நெற்றித் தனிக்க ணெருப்பைக் குளிர்விக்குங் கொற்றத் தனியாழ்க் குலமுனிவன்” எனப் புகழேந்தியாரும், “ மான்புரிந்த திருக்கரத்து மதிபுரிந்த நதிவேணி மங்கை பாகன் தான்புரிந்த திருக்கூத்துக் கிசைய மகிழ்ந் திசைபாடுந் தத்வஞானி” என வில்லிபுத்தூரரும் பாடியிருத்தல் காண்க. குனித்தல் - வளைதல்; குனித்த புருவமும், என்பது காண்க. செல்வம் - ஈண்டு ஒலியின் பெருக்கம். திசையெலாம் விழுங்கும் என்பதற்குத் திக்குக்களை யெல்லாம் அகப்படுத்தும் என்றுரைத்தலுமாம். துயிலாமை - இடை யறாது நிற்றல்; துயிலாதது. இடப்பொருளில் வந்த வினைப்பெயர். (92) மடங்க லின்றிவிண் பிளந்துமேல் வளர்ந்துவெள் ளேற்று விடங்கர் வெள்ளிமன் றிமைத்தெழு வெண்சுடர் நீட்டம் முடங்கல் வெண்பிறைக் கண்ணியான் கயிலைமூ வுலகும் ஒடுங்கு கின்றநா ளோங்கிய வோக்கமே யொக்கும். (இ-ள்.) வெள் ஏற்று விடங்கர் - வெண்மையான ஏறாகிய ஊர் தியையுடைய அழகராகிய இறைவன் திருநிருத்தஞ் செய்கின்ற, வெள்ளிமன்று - வெள்ளியம்பலத்தினின்று, இமைத்து - விளங்கி, மடங்கலின்றி - மடங்குதலில்லாமல், விண் பிளந்து - வானத்தைக் கிழித்து, மேல் வளர்ந்து எழு - மேலே வளர்ந்தெழுகின்ற, வெண்சுடர் நீட்டம் - வெள்ளிய ஒளியின் நீட்சியானது, முடங்கல் - வளைவையுடைய, வெண்பிறைக் கண்ணியான் கயிலை - வெண்மையுடைய பிறையாகிய கண்ணியையுடைய சிவபிரான் வீற்றிருக்கும் கயிலைமலையானது, மூவுலகும் ஒடுங்குகின்ற நாள் - மூன்று உலகங்களும் அழிகின்ற நாளில், ஓங்கிய ஓக்கமே ஒக்கும் ஒக்கும்- வளர்ந்த உயர்ச்சியையே போலும் எ-று. விடங்கம் - உளியாற் செய்யப்படாதது என்னும் பொருளது; சுயம்புலிங்கம் என்பர்; இஃது அழகென்னும் பொருளிலேயே பயின்று வருதலின் விடங்கர் என்பதற்கு அழகர் என்பதே சிறந்த பொருளாம். மன்றினின்றும் வளர்ந்து எழுகின்ற எனக் கூட்டுக. கண்ணி - தலையிற் சூடுமாலை; இது கண்ணி போறலின் கண்ணி யெனப்படும். உலகம் அழிவதாவது மாயை யென்னுங் காரணத்துளொடுங் குவதாகலின் ஒடுங்குகின்ற என்றார். நீட்டம், ஓக்கம் என்பன பண்புப் பெயர்கள், நீள், ஓங்கு என்பன முறையே பகுதிகள்; அம்;விகுதி. கைலைமலையானது உலகங்களெல்லாம் ஒடுங்கும் ஊழிக்காலந்தோறும் ஓங்கு மென்பது. “ ஊழிதோ றூழிமுற்றும் உயர்பொன் னொடித்தான் மலையே” என்று தம்பிரான்றோழர் அருளிச்செய்திருப்பதனாலும் அறியப் படும். (93) சுரந்து தேன்றுளித் தலர்களுஞ் சொரிந்துவண் டரற்ற நிரந்து சுந்தரற் கொருசிறை நின்றபூங் கடம்பு1 பரந்து கட்புன லுகப்பல மலர்கடூய்ப் பழிச்சி இரந்து நின்றருச் சனைசெயு மிந்திர னிகரும். (இ-ள்.) தேன் சுரந்து துளித்து - தேன் ஊற்றெடுத்துத் துளித்து, அலர்களும் சொரிந்து - மலர்களையும் சொரிந்து, வண்டு அரற்ற - வண்டுகள் ஒலிக்க; நிரந்து - தழைத்து, சுந்தரற்கு ஒருசிறை - சோம சுந்தரக் கடவுளுக்கு ஒரு பக்கத்தின், நின்ற பூங்கடம்பு - நிற்கின்ற பூக்களையுடைய கடம்பமரமானது, கண் புனல் பரந்து உக - கண்களினின்று அருவியானது பெருகிப் பொழிய, பலமலர்கள் தூய் - பல மலர்களைத் தூவி, பழிச்சி - துதித்து, இரந்து நின்று - குறையிரந்து நின்று, அருச்சனை செயும் - அருச்சிக்கின்ற, இந்திரன் நிகரும் - இந்திரனை ஒக்கும் எ-று. தேன்றுளித்தலுக்குக் கட்புனல் சொரிதலும், அலர் சொரி தலுக்கு மலர் தூவுதலும், வண்டு அரற்றலுக்குப் பழிச்சுதலும், பூங்கடம்பிற்கு இந்திரனும் உவமைகளாம். நின்ற - நிற்கின்ற. தூவியென்பது தூய் என விகாரப்பட்டது. (94) உழல்செய் தீவினை யுருப்பற வுயிர்க்கெலா மடியின் நிழல்செய் வார்க்குநீ ணிழல்செயா நின்றபூங் கடம்பின் குழல்செய் வண்டுகற் பகமதுக் கொணர்ந்துவந் தூட்டித் தழல்செய் காமமென் பேடையி னூடனோய் தணிக்கும். (இ-ள்.) உழல் செய் - வருந்துதலைச் செய்கின்ற, தீவினை உருப்பு அற - தீவினையாகிய வெப்பம் நீங்க, உயிர்க்கு எலாம் - உயிர் அனைத்திற்கும், அடியின் நிழல் செய்வார்க்கு - (தமது) திருவடியின் நீழலை அருளுகின்ற சோம சுந்தரக்கடவுளுக்கு, நீள் நிழல் செயா நின்ற பூங்கடம்பின் - மிகுந்த நிழலைச் செய்து (ஒரு சிறை) நிற்கின்ற பூக்கள் நிறைந்த கடப்ப மரத்தினுள்ள, குழல் செய் வண்டு - வேய்ங்குழலின் இசைபோலும் ஒலி செய்யும் ஆண் வண்டானது, கற்பகம் - கற்பகச் சோலையிலுள்ள, மதுக் கொணர்ந்து - தேனைக் கொண்டுவந்து, உவந்து ஊட்டி - மகிழ்ந்து உண்பித்து, தழல் செய் காமம் - வெம்மையைச் செய்கின்ற காமத்தையுடைய, மென்பேடையின் - மென்மையான பெண்வண்டின், ஊடல் நோய் தணிக்கும் - புலவித் துன்பத்தை ஆற்றும் எ-று. உழல் - முதனிலைத் தொழிற்பெயர். உயிர்க்கெலாம் - உயிர் எல்லாவற்றுக்கும் என உருபினை மாற்றுக. தீவினையின் உருப்பற எனவும் அடியாகிய நிழல்செய்வார்க்கு எனவும், அடியினால் நிழல் செய்வார்க்கு எனவும் விரித்தலுமாம். உயிர்க்கெலாம் நிழல் செய்வார்க்கு நிழல் செயா நின்றதென ஓர் வியப்புத்தோன்றக் கூறியவாறு. செயா நின்ற - செய்கின்ற வென ஒரு சொல்லுமாம். கடம்பிலுள்ள வண்டினைக் கடம்பின் வண்டு என்றார். தொடர் புயர்வு நவிற்சியணி. (95) ஆரு நீர்க்கட லன்றது வெனநிறை யகழ்கார் ஊரு மாழியன் றதுவென வோங்கெயி லெட்டாய்ச் சாரு நேமியன் றதுவெனச் சமைந்தகோ புரம்பொன் மேரு வன்றது வெனச்சுடர் விண்ணிழி விமானம். (இ-ள்.) ஆரும் நீர்க்கடல் - நிறைந்த நீரினையுடைய கடல், அது அன்று (இது) என - அதுவன்று இதுதான் என்று சொல்லும்படி, நிறை அகழ் - நீர் நிறைந்த அகழியும், கார் ஊரும் ஆழி - மேகந் தவழ்கின்ற சக்கரவாளகிரி, அது அன்று (இது) என - அதுவன்று இதுதான் என்று கூறும்படி, ஓங்கு எயில் - உயர்ந்த மதிலும், எட்டாய்ச் சாரும் நேமி - எட்டாய்ப் பொருந்திய மலைகள், அது அன்று (இவை) என - அவையல்ல இவைதான் என மொழிய, சமைந்த கோபுரம் - அமைந்த கோபுரங்களும், பொன் மேரு - பொன் மயமாகிய மேருமலை, அது அன்று (இது) என - அதுவன்று இதுதான் எனக் கழற, விண் இழி சுடர் விமானம் - வானுலகத்தினின்றும் இறங்கிய ஒளி பொருந்திய விமானமும் (அங்கு உள்ளன) எ-று. அன்றது என வருவனவற்றை அது அன்று என மாற்றியும், இது என்பதனை அருத்தாபத்தியாற்கொண்டும் உரைக்கப்பட்டது. எட்டாய்ச் சாரு நேமியன்று அது என்புழிப் பன்மை யொருமை மயக்கம். மலை யென்னும் பொதுமை நோக்கி அதுவென்றார் எனலுமாம். மலை யெட்டாவன; இமயம், ஏம கூடம், கந்தமாதனம், கைலை, நிடதம், நீலகிரி, மந்தரம், விந்தம் என்பன. குலமலை ஏழென்பார் கந்தமாதனம் ஒழியக் கொள்வர். பயனிலை தொக்கு நின்றது. இது தற்குறிப்பணியின் பாற்படும். (96) வேத வந்தமுந் துளக்கற மெய்ப்பொருள் விளங்கும் நாத வந்தமுங் கடந்ததோர் நடுநிலைப் பொருளின் பாத வந்தனைப் பத்தியின் பாலராய்ப் பயில்வோர் மாத வந்தரு பயனெனத் தழைத்தபல் வளனும். (இ-ள்.) வேத அந்தமும் - வேத முடிவையும், துளக்கு அற- கலக்கமின்றி, மெய்ப்பொருள் விளங்கும் - மெய்ப்பொருள் விளங்குதற்கேதுவாகிய, நாத அந்தமும் - நாத முடிவையும், கடந்தது - கடந்ததாகிய, ஓர் - ஒப்பற்ற, நடுநிலைப் பொருளின் - நடுநிலைப் பொருளாகிய இறைவனுடைய, பாதம் - திருவடிகளை, வந்தனை - வணங்குதலையுடைய, பத்தியின் பாலராய்ப் பயில்வோர் - அன்பின் பகுதியை யுடையவராய் ஒழுகுவார்க்கு, மாதவம் தருபயன் என - அச்சிவ புண்ணியந் தருகின்ற பயன் தழைப்பதுபோல், பல் வளனும் தழைத்த - பல வளங்களும் (அங்கு) தழைத்தன எ-று. வேத அந்தம் - உப நிடதம். நாத அந்தம் - நாத தத்துவத்தின் முடிபு; நாதம் - தத்துவங்க ளெல்லாவற்றினும் தலையாயது; நாத தத்துவத்தைத் தரிசித்தவர்க்கு மெய்ப்பொருள் விளங்கு மென்பார் மெய்ப் பொருள் விளங்கு நாதவந்தம் என்றார்; விளங்கு மென்ப தனை இடைநிலை விளக்காகக் கொண்டு வேதவந்தமும் என்பதனோடும் இயைத்துரைத்தலுமாம். இறைவன் பாச ஞானம் பசு ஞானங்களைக் கடந்தவ னென்பார் வேத வந்தமும் நாத வந்தமும் கடந்த என்றார். நடுநிலைப் பொருள் - எள்ளினுள் எண்ணெய்போல எங்கும் கலந்துள்ள பொருள். தழைத்த ; அன்பெறாத பலவின்பால் முற்று. (97) பொறிக ளைந்தினுக் கூட்டுபல் போகமு மிதப்பச் செறிகொ ணீரவா லுவப்பவத் 1 திருநகர் மாக்கள் நெறிகொள் செஞ்சடைப் பிறைமுடி நிருமலக் கொழுந்தின் வெறிகொ ணாண்மல ரடிதழீஇ வீடுபெற் றார்போல். (இ-ள்.) நெறிகொள் செஞ்சடை - நெறித்தலைக் கொண்ட சிவந்த சடையின்கண், பிறைமுடி - சந்திரனை அணிந்த, நிருமலக் கொழுந்தின் - இயல்பாகவே பாசங்களி னீங்கிய இறைவனுடைய, வெறிகொள் - மிகுந்த மணத்தைக் கொண்ட, நாள் மலர் அடிதழீஇ - அன்றலர்ந்த மலர்போலுந் திருவடிகளைப்பற்றி, வீடு பெற்றார் போல் - வீட்டுலகை யடைந்தவ ரடையும் இன்பம்போல், அத்திரு நகர் மாக்கள் உவப்ப - அம் மதுரை மாநகரிலுள்ள மக்கள் இன்பம் பெற, பொறிகள் ஐந்தினுக்கு ஊட்டு - ஐம்பொறிகளுக்கும் உண்பிக்கின்ற, பல்போகமும் - பல போகப் பொருள்களும், மிதப்பச் செறிகொள் நீர - மிக நிறைந்த தன்மையுடையன எ-று. ஐந்தினுக்கு - இனைத்தென அறிபொருளில் வரும் முற்றும்மை தொக்கது; இன்; சாரியை. மிதப்ப - மிக. செறி, நெறி என்பன முதனிலைத் தொழிற் பெயர். நீரவால் என்பதில் ஆல் அசை. நீர்மையை உடையவாதலால் மாக்கள் உவப்ப என முடித்தலுமாம்; இதற்கு உவப்ப என்பது பலர்பால் முற்று. (98) முன்ன வன்னர சிருக்கையா லந்நகர் முளரிப் பொன்னை யீன்றதா லதுபல பொருணிறை செல்வந் தன்னை யீன்றதா லதுபல தருமமென் றுரைக்கும் மின்னை யீன்றதஃ தீன்றதால் விழுத்தகு புகழே. (இ-ள்.) முன்னவன் அரசு இருக்கையால் - யாவர்க்கும் முதல்வனாகிய சோமசுந்தரக் கடவுள் அரசு புரிந்தமையினால், அந்நகர்முளரிப் பொன்னை ஈன்றது. அம்மதுரையானது தாமரை மலரில் வீற்றிருக்குந் திருமகளைப் பெற்றது; அது - அத்தெய்வம், பல பொருள் நிறை செல்வம் தன்னை ஈன்றது - பல பொருள்களும் நிறைந்த செல்வத்தைப் பெற்றது; அது - அச்செல்வம், பல தருமம் என்று உரைக்கும் மின்னை ஈன்றது - பல அறங்கள் என்று சொல்லப் படுகின்ற பெண்ணைப் பெற்றது; அஃது - அந்தப் பெண், விழுத்தகு புகழ் ஈன்றது - சீரிய புகழைப் பெற்றது எ-று. னகரம் விரித்தல். ஈன்றதால் மூன்றினும் ஆல்; அசை. பின் பின்னாக வருவனவற்றிற்கு முன் முன்னாகவுள்ளன காரணமாக விருத்தலின் இது காரண மாலையணி. (99) எழுக்க டந்ததோ ளுருத்திர வுலகமென் றியாரும் வழுத்த நின்றவிந் நகர்வயி னும்பரின் மாண்ட விழுத்த கும்பல செல்வமும் வியந்துபார்த் துள்ளத் தழுக்க றாமையா லின்னமு மமரர்கண் ணுறங்கார். (இ-ள்.) எழுக் கடந்த தோள் - தூணை வென்ற தோள்களை யுடைய, உருத்திரன் உலகமென்று - சிவபிரானுலகமென்று, யாரும் வழுத்த நின்ற - எவரும் பரவுதற்கு அமைந்த, இந்நகர்வயின் - இம் மதுரை நகரின்கண் உள்ள, உம்பரின் மாண்ட - (தமது) தேவ உலகிலுள்ள பொருள்களினும் மாட்சிமைப்பட்ட, விழுத்தகும் பல செல்வமும் - சீரிய பல செல்வங்களையும், பார்த்து வியந்து - கண்டு வியப்படைந்து, உள்ளத்து அழுக்கு அறாமையால் - மனத்தின்கண் பொறாமை நீங்காமையினால், அமரர் இன்னமும் கண் உறங்கார் - தேவர்கள் இன்னமும் கண்டுயிலாதவரா யுள்ளார்கள் எ-று. உருத்திர வுலகம் - சிவலோகம்; பெயர்; ‘எழுக்கடந்ததோள்’ என்பது உருத்திரனுக்கு அடை; உருத்திரனுலகம் எனப் பாடங் கொள்ளுதல் சிறப்பு;‘குருதிக் கோட்டுக் குஞ்சரநகரம்’ என்பது போலக் கொள்ளலுமாம். அழுக்கு -பொறாமை. இனி யென்னும் இடைச் சொல் அம்முப்பெற்று இகரங்கெட்டு இன்னம் என்றாயது. அழுக்காறுடையார் கண்ணுறங்கார் என்றார். அமரர்க்கு இயல்பாய கண்ணுறக்க மின்மையைப் பொறாமையால் வந்ததெனக் கவி தன்கருத்தை யேற்றிக் கூறுதலின் இது தற்குறிப்பேற்றவணி. (100) விரைய விழ்ந்ததார் மீனவர் வாகைவேல் விடுத்துத் திரையை வென்றது முடிதகர்த் திந்திரன் செருக்குக் கரைய வென்றதுங் கார்தளை யிட்டதுங் கனக வரையை வென்றது மிந்நகர் வலியினா லன்றோ. (இ-ள்.) விரை அவிழ்ந்த தார் மீனவர் - மணம் விரிந்த மாலையை யணிந்த மீனக் கொடியை யுடைய பாண்டி மன்னர், வாகைவேல் விடுத்து - வெற்றி மாலையைச் சூடிய வேற்படையை ஏவி, திரையை வென்றதும் - கடலைச் சுவறச் செய்து வெற்றி பெற்றதும். இந்திரன் முடி தகர்த்து - இந்திரனுடைய முடியைப் பொடியாக்கி, செருக்குக்கரைய வென்றதும் - (அவன்) செருக்கு அழியும்படி செய்து வெற்றி பெற்றதும், கார் தளை இட்டதும் - முகிலை விலங்கு பூட்டிச் சிறையிலிட்டதும், கனக வரையை வென்றதும் - மகா மேருவைச் செண்டாலடித்து வெற்றி பெற்றதும், இந்நகர் வலியினால் அன்றோ - இந்நகரத்தின் வலிமையினால் அல்லவா எ-று. இங்கே மீனவர் என்றது உக்கிரகுமாரபாண்டியரை; அவர் கடல் சுவற வேல் விட்டதும், இந்திரன் முடிமேல் வளை யெறிந்ததும், மேகத்தைத் தளையிட்டதும், மேருவைச் செண்டாலடித்ததும் இப்புராணத்துள்ளே வரும் அவ்வப்படலங்களானறிக. ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் என்றபடி வலியுடையார்க்கும் அரண்வேண்டு மாகலின், ஈண்டு அதனையே மிகுத்துக் கூறுவாராய் இந்நகர் வலியினாலன்றோ என்றார். (101) எங்கு நாவுமா யெங்கணுங் கண்ணுமா யெங்குந் தங்கு பேரொளி யல்லதித் தனிநகர்ச் செல்வஞ் செங்க ணாயிர நாவினான் செப்பவு மெதிர்கண் டங்க ணாயிர முடையவ னளக்கவும் படுமோ. (இ-ள்.) எங்கும் நாவும் ஆய் - எவ்விடத்தும் நாவையுடைய தாகி, எங்கணும் கண்ணும் ஆய் - எங்குங் கண்ணையுடையதாகி, எங்கும்தங்கு - யாண்டும் நிறைந்த, பேர் ஒளி அல்லது - பெரிய ஒளிப் பிழம்பாகிய இறைவனால் அளக்கவும் கூறவு முடியுமே யன்றி, இத் தனி நகர்ச் செல்வம் - இந்த ஒப்பற்ற நகரிலுள்ள செல்வமானது, செங்கண் ஆயிரம் நாவினான் செப்பவும் - சிவந்த கண்களையும் ஆயிரம் நாவையுமுடைய ஆதிசேடன் சொல்லவும், அம் கண் ஆயிரம் உடையவன் - அழகிய ஆயிரம் கண்களையுடைய இந்திரன், எதிர்கண்டு அளக்கவும் படுமோ - எதிரே பார்த்து அளந்துவிடவும் முடியுமோ (முடியாது) எ-று. எண்ணில்லாத நாவும்கண்ணுமுடையவராலன்றி, ஆயிர மென்னும் வரையறைப்பட்ட நாவும் கண்ணுமுடையவரால் சொல்லவும் அளக்கவும் முடியாதென்றார். எவ்விடத்தும் எல்லாத் தொழிலும் ஒருங்கே செய்யும் இறைவனது முடிவிலாற்றலைக் குறித்தற்கு ‘எங்கு நாவுமா யெங்கணுங் கண்ணுமாய்’ என்றார். “ ஆயிரந் தாமரை போலு மாயிரஞ் சேவடி யானும் ஆயிரம் பொன்வரை போலு மாயிரந் தோளுடைய யானும் ஆயிர ஞாயிறு போலு மாயிர நீண்முடி யானும் ஆயிரம் பெருகந் தானுமாரூ ரமர்ந்த வம்மானே”” என்பது முதலிய திருவாக்குகளில் ஆயிரம் என்பது அளவிறந்த தென்னும் பொருட்டு. (102) புண்ணி யம்புரி பூமிபா1 ரதில்வரு போகம் நண்ணி யின்புறு பூமிவா னாடென்ப நாளும் புண்ணி யம்புரி பூமியு மதில்வரு போகம் நண்ணி யின்புறு பூமியு மதுரைமா நகரம். (இ-ள்.) புண்ணியம் புரி பூமி பார் - அறஞ் செய்தற்கு இடமாயுள்ளது புவியாம், அதில் வருபோகம் நண்ணி - அவ்வறத் தால் விளையும் பயனைப் பெற்று, இன்பு உறு பூமி வானாடு - இன்பத்தையடைதற்கு இடமாயுள்ளது வானுலகமாம், என்ப -என்று சொல்லுவர் நூலோர்; நாளும் - எப்போதும், புண்ணியம் புரி பூமியும் - அறஞ்செய்தற்கு இடமாயுள்ளதும், அதில் வரு போகம் நண்ணி - அதனால் வருகின்ற போகத்தைப் பொருந்தி, இன்பு உறு பூமியும் - இன்பத்தையடைதற்கு இடமாயுள்ளதும், மதுரைமா நகரம் - இம் மதுரை மாநகரமே ஆகும் எ-று. பூமி என்பன இடம் என்னும் பொருளன. அதில் - அதனால். புண்ணியம், போகம் என்பன சாதி யொருமைகள். சொல்லும் பொருளும் முன் வந்தனவே பின்னும் வருதலின் இது சொற்பொருட் பின் வருநிலை யணி. (103) (அறுசீரடியாசிரியவிருத்தம்) பண்கனிந் தனைய சொல்லார் நரப்பிசைப் பாணி2 தேவர் உண்கனி யமுதுங் கைப்பச் செவிதொளைத் தூட்ட வுண்டும் பெண்களி னமுத மன்னார் பெருமித நடன முண்ணக் கண்களை விடுத்துங் காலங் கழிப்பவ ரளவி லாதார். (இ-ள்.) பண் கனிந்தனைய சொல்லார் - பண்கனிந்தா லொத்த (இனிய) சொல்லையுடைய மகளிர், நரப்பு இசைப் பாணி - யாழின் இசையோடு கூடிய பாட்டினை, தேவர் உண் கனி அமுதும் கைப்ப - தேவர் உண்ணுகின்ற (சுவை) முதிர்ந்த அமுதத்தையும் வெறுக்கும் படி, செவி தொளைத்து ஊட்ட உண்டும் - செவியைத் தொளைத்து உண்பிக்க (அதனை) உண்டும், பெண்களின் அமுதம் அன்னார் -பெண் களுள் அமுதம் போன்ற மகளிர் (செய்யும்), பெருமித நடனம் உண்ண - மிகவுயர்ந்த நடனத்தை நுகரும் பொருட்டு, கண்களை விடுத்தும் - பார்வைகளைச் செலுத்தியும், காலம் கழிப்பவர் அளவு இலாதார் - காலம் போக்குவோர் அளவற்றவர்கள் (அப்பதியில் உளர்) எ-று. பண் கனிந்தனைய - பண் முற்றுப்பெற்றா லொத்த; கனிந் தாலனைய எனற்பாலது விகாரமாயிற்று. நரம்பு - யாழைக் குறிக் கின்றது; மெல்லொற்று வல்லொற்றாயது. இசையாகிய பாணி என்னலுமாம். கனி அமுது - சுவை முற்றிய அமுது. தொளைத்தலை கேள்வியாற் றோட்கப்படாத செவி என்பதனாலுமறிக; உபசாரம். செவி யுணவு என்பவாகலின் உண்டும் என்றார்; கண்ணுக்குங் கொள்க. (104) கலவிவித் தாக வூடிக் கட்புனல் குளிக்கு நல்லார் புலவிதீர் செவ்வி நோக்கிப் புணர்முலைப் போகந் துய்த்தும் நிலைநிலை யாமை நோக்கி நெறிப்படு1 தரும தானங் கலைஞர்கைப் பெய்துங் காலங் கழிப்பவ2 ரெண்ணி லாதார். (இ-ள்.) கலவி வித்தாக ஊடி - புணர்ச்சி காரணமாகப் புலந்து, கண்புனல் குளிக்கும் நல்லார் - கண்ணீரில் மூழ்கும் மகளிரின், புலவிதீர் செவ்வி நோக்கி - புலவி நீங்குகின்ற காலத்தை யறிந்து, புணர் முலைப் போகம் துய்த்தும் -நெருங்கிய கொங்கைகளின் இன்பத்தை நுகர்ந்தும், நிலை நிலையாமை நோக்கி - நிலையுடைப் பொருள் நிலையில் பொருளி னியல்பை அறிந்து, நெறிப்படு - முறைமையையுடைய, தருமதானம் - தரும தானங்களை, கலைஞர் கைப்பெய்தும் - நூலறிவு மிக்க சான்றோருக்குச் செய்தும், காலம் கழிப்பவர் எண் இலாதார் - காலத்தை நடத்துகின்றவர்கள் பலர் (அப்பதியில் உளர்) எ-று. “ ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங் கூடி முயங்கப் பெறின் ” என்பவாகலின் கலவி வித்தாக வூடி என்றார். நிலையுள்ளனவும் நிலையில்லனவும் நிலைநிலையாமை எனப்பட்டன; உம்மை தொக்கது.நித்த அநித்தங்களை உணர்ந்த வழியே அறஞ் செய்தற்கண் மனவெழுச்சி யுண்டாமென்பார் நோக்கி என்றார். தருமம் பொதுவும் தானம் சிறப்புமாம். நெறி யென்றது அறநூல் கூறு முறைமையினை. (105) சந்தித்து மீன நோக்கி தலைவனை மூன்று போதும் வந்தித்து மீசன் பூசை மரபுளி முடித்தும் வேதம் அந்தித்து மறியான் செய்த திருவிளை யாடல் கேட்டுஞ் சிந்தித்து மன்பர் பூசை செய்துநாள் கழிப்பர் பல்லோர். (இ-ள்.) மீன நோக்கி தலைவனை - அங்கயற்கண்ணி தலைவனாகிய சோமசுந்தரக் கடவுளை, மூன்று போதும் சந்தித்து வந்தித்தும் - மூன்று காலங்களிலும் சென்றுகண்டு வணங்கியும், ஈசன் பூசை மரபுளி முடித்தும் - சிவபூசையை ஆகம முறையால் நிறைவேற்றியும், வேதம் அந்தித்தும் அறியான் செய்த - வேதங்கள் அணுகியும் அறியமுடியாதவனாகிய அவ்விறைவன் செய்தருளிய, திருவிளையாடல் கேட்டும் - திருவிளையாடல்களைப் பெரியோர் சொல்லக் கேட்டும், சிந்துத்தும் (அவற்றை) நினைத்தும், அன்பர் பூசை செய்தும் - அடியார்களைப் பூசித்தும், நாள் கழிப்பர் பல்லோர் - நாளை நடத்துவார்கள் பலர் (அப்பதியில்) எ-று. சந்தித்து வந்தித்து மென்க. போதும் - மரூஉ. மூன்று பொழுது; காலை, நண்பகல், மாலை என்பன. மரபுளி - முறையால்; உளி; மூன்றன் பொருள்படுவ தோரிடைச் சொல். அந்தித்தல் - சந்தித்தல். அணுகல்; முடியச் செல்லுதல் எனினுமாம். அறியான் - அறியப் படாதவன்; செயப்பாட்டு வினைப் பொருளில் வந்தது. சிந்தித்தும் என்பதற்கு இறைவனைத் தியானித்தும் என்றுரைத்தலுமாம். (106) கற்பவை கற்றுங் கேட்டுங் கேட்பவை1 கருத்துளூறச் சொற்பொரு ணினைந்துங் கேட்போர்க் குணர்த்தியுட் டுளக்கந் தீர்த்தும் எற்பக லிரவு நீங்கு மிடத்துமெய் யறிவா னந்த அற்புத வெள்ளத் தாழா தாழ்ந்துநாள் கழிப்பர் சில்லோர். (இ-ள்.) கற்பவை கற்றும் - கற்கத் தகுவனவாய மெய்ந் நூல்களைக் கற்றும், கேட்டும் - (அந்நூற் பொருளைப் பெரியார்வாய்க்) கேட்டும், கேட்டவை - (அங்ஙனங்) கேட்டவைகள், கருத்துள் ஊற - கருத்தில் பதியும்படி, சொல்பொருள் நினைந்தும் - சொல்லையும் பொருளையும் பலகாற் சிந்தித்தும், கேட்போர்க்கு உணர்த்தி - கேட்பவருக்கு அறிவித்து, உள் துளக்கம் தீர்த்தும் - (அவர்கள்) உள்ளத்திலுள்ள ஐயத்திரிபாகிய கலக்கங்களைப் போக்கியும், எல் பகல் இரவு நீங்கு இடத்து - ஒளி பொருந்திய பகலும் இரவும் அற்ற விடத்தில், மெய் அறிவு ஆனந்த அற்புத வெள்ளத்து - சச்சிதானந்த சொரூபமாகிய அற்புத வெள்ளத்தின்கண், ஆழாது ஆழ்ந்தும் - படியாமற் படிந்தும், நாள் கழிப்பர் சில்லோர் - நாளைப் போக்குவர் சிலர் (அப்பதியில்) எ-று. கற்பவை - கற்கத் தகுவனவாகிய ஞான நூல்கள். நினைதல் - சிந்தித்தல். கேட்போர்க்குணர்த்தியென்றது கேட்பித்து என்றவாறு. இவற்றுடன் கற்பித்தலையுங் கூட்டி ஞான பூசை யென்பர்; ‘ஞானநூல் தனையோத லோது வித்தல் நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா, ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்த லைந்தும் இறைவனடி யடைவிக்கு மெழின்ஞானபூசை’ என்பது சிவஞானசித்தி. எல்-ஒளி. இரவு பகல் என மாற்றிக் கொள்க. ‘இரவு பகலற்ற விட மாவதுகேவல சகலங்களின் நீங்கியசுத்தாவத்தையில் நிற்கும் அருளாதார நிலை; இரவு பகலில்லா வின்ப வெளியூடே, விரவி விரவிநின்றுந்தீபற, விரைய விரையநின் றுந்தீபற’ என மெய்ந்நூல் கூறுதலுங்காண்க. மெய் - அழிவில்லது; சத்து. ஆழாது ஆழ்தல் - அது வாதலும் வேறாதலுமின்றிப் பேரின்ப நிட்டை கூடியிருத்தல். (107) தன்னிக ருயர்ச்சி யில்லான் காப்பியத் தலைவ னாக முன்னவர் மொழிந்த தேனோர் தமக்கெலா முகம னன்றோ அன்னது தனதே யாகு மண்ணலே பாண்டி வேந்தாய் இந்நகர்க் கரச னாவா னிக்கவிக் கிறைவ னாவான். (இ-ள்.) தன் நிகர் உயர்ச்சி இல்லான் - தனக்கு ஒப்பும் உயர்வு மில்லாதவனே, காப்பியத் தலைவன் ஆக - காப்பியத் தலைவ னென்றும், முன்னவர் மொழிந்தது - முன்னுள்ளவர்கள் கூறியது, ஏனோர் தமக்கு எலாம் முகமன் அன்றோ - மற்றையோர்க்கெல்லாம் உபசாரமல்லவா, அன்னது தனதே ஆகும் அண்ணலே - அவ்வுயர் வொப்பில்லாத தன்மையைத் தனக்கே உரிமையாகக் கொண்டிருக்கும் இறைவனே, பாண்டி வேந்தாய் - பாண்டி மன்னனாய், இந்நகர்க்கு அரசன் ஆவான் - இம்மதுரை நகருக்கு அரசனாவானும், இக்கவிக்கு இறைவன் ஆவான். இக்காப்பியத்திற்குத் தலைவனாவானும் ஆகும் எ-று. காப்பியம் - கவியால் இயற்றப்படுவது; கவி - புலவன்; காப்பியம் என்பது தமிழில் தொடர்நிலைச் செய்யுள் எனப்படும். காப்பியத் தலைவன் ஒப்புயர் வில்லானாதல் வேண்டுமென்பதை, “ பெருங்காப் பியநிலை பேசுங் காலை வாழ்த்து வணக்கம் வருபொரு ளிவற்றினொன் றேற்புடைத் தாகி முன்வர வியன்று நாற்பொருள் பயக்கு நடைநெறித் தாகித் தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய்” என்னும் அணிநூற் சூத்திரத்தா னறிக. ஒப்பும் உயர்வுமில்லாதவன் எல்லா முழுமுதன்மையுமுடைய இறைவ னொருவனே யாகலின் ஏனோர் தமக்கெலா முகமனன்றோ என்றார். ஏகாரம்; தேற்றம். இக்கவி யென்புழிக் கவி யென்றது காப்பியமென்னும் பொருட்டு; கவி - செய்யுள், காப்பியம் ; ஆகு பெயருமாம். (108) என்னென வுரைப்பே னந்த1 விறைமகன் பண்பை யேனை மன்னவர் வானோர் போல மதித்துரை விரிக்கற் பாற்றோ அன்னவ னாணை யாற்றா னடப்பதிவ் வகில மென்றால்2 முன்னவன் செய்த வாடல் வரவினை முறையிற் சொல்வேன். (இ-ள்.) அன்னவன் ஆணையால் தான் - அச்சோமசுந்தரக் கடவுளின் திருவாணையினாலேதான், இ அகிலம் நடப்பது என்றால் - இந்த உலகம் நடைபெறுவதென்றால், அந்த இறைமகன் பண்பை - அந்தப் பாண்டி மன்னனாகிய இறைவனுடைய தன்மையை, என் என உரைப்பேன் - என்னென்று கூறுவேன் (அது), ஏனை மன்னவர் வானோர் போல மதித்து - மற்ற அரசர்கள் தேவர்களின் தன்மை களைப் போலக் கருதி, உரை விரிக்கற் பாற்றோ - உரைக்குந் தகுதியை உடையதோ (அன்று), முன்னவன் செய்த ஆடல் வரவினை - (இனி அம்) முதல்வன் செய்தருளிய திருவிளையாடல்களை, முறையில் சொல்வேன் - முறையாகக் கூறுவேன் எ-று. இறைமகன் - இறையாகிய மகன்; இறைவனென்னுஞ் சொல் அரசனையும் கடவுளையுங் குறிக்கும்; இறைகாக்கும் வையக மெல்லாம், இறைவன் பொருள்சேர் புகழ் என்புழி முறையே காண்க. ஆணை ஆற்றால் எனப் பிரித்து, ஆணைவழியால் எனப் பொருளுரைத்தலுமாம். இவ்வகிலம் என்பதிற் சுட்டு உலகினைப் பொதுவிற் சுட்டுவது; எவ்வுலகும் என்பது பாடமாயின் எல்லாவுலகமு மென்க. நடப்பது யாவரானும் தெளியப்பட்ட தென்பார் என்றால் என்றார். அம்முன்ன வன் எனச் சுட்டு வருவிக்க. ஆடல் வரவு - ஆடலின் நிகழ்ச்சி. 109) ஆகச்செய்யுள் - 199 திருக்கைலாயச் சிறப்பு (கலிநிலைத்துறை) வரங்க டந்தரு ளெனமுது வானவர் முனிவோர் கரங்க டந்தலை முகிழ்த்திடக் கருணைசெய் தவிச்சை உரங்க டந்துரை யுணர்வெலாங் கடந்தரு மறையின் சிரங்க டந்தவ னிருப்பது திருக்கயி லாயம். (இ-ள்.) முதுவானவர் முனிவோர் - பெரிய தேவர்களும் முனிவர்களும், வரங்கள் தந்தருள் என - வரங்களைக் கொடுத்தருள வேண்டுமென்று, கரங்கள் தம் தலை முகிழ்த்திட - கைகளைத் தங்கள் தலையிற் கூப்பி வேண்டாநிற்க, கருணை செய்து - (அவருக்குத்) திருவருள்செய்து, அவிச்சை உரம் கடந்து - (இயல் பாகவே) வலிய பாசங்களினின்று நீங்கி, உரை உணர்வுஎலாம் கடந்து - வாக்கு மனங்கள் எல்லாவற்றையுங் கடந்து, அருமறையின் சிரம் கடந்தவன் - அரிய வேதங்களின் முடிவையும் கடந்த இறைவன், இருப்பது திருக்கைலாயம் - வீற்றிருக்கப்பெறுவது திருக்கைலாயமலை ஆகும் எ-று. முதுவானவர் - திருமால் முதலியோர். முனிவோர்; அகரம் ஓகாரமாதல் உடம்பொடு புணர்த்தலாற் கொள்க. அவிச்சை - அஞ்ஞானம்; அஃது ஏனைத் தேவர் முதலாயினார் அறிவை யெல்லாம் மறைக்கும் வலியுடையதென்பது தோன்ற, ‘அவிச்சையுரம்’ என்றார். உரை உணர்வுகள் பல திறப்படுமாதலின் ‘எல்லாம்’ என்றார். இறைவன் அபரஞானத்திற்கு அப்பாற்பட்டவ னென்பார் ‘அருமறையின் சிரங்கடந்தவன்’ என்றார். செய்து, கடந்து, கடந்து என்னும் வினை யெச்சங்கள் கடந்தவன் என்பதன் பகுதியைக் கொண்டு முடிந்தன. (1) புரந்த ராதிவா னவர்பதம் போதுறை புத்தேள் பரந்த வான்பதஞ் சக்கரப் படையுடைப் பகவன் வரந்த வாதுவாழ் பதமெலா நிலைகெட வருநாள் உரந்த வாதுநின் றூழிதோ றோங்குமவ் வோங்கல். (இ-ள்,) புரந்தர ஆதி வானவர் பதம் - இந்திரன் முதலிய இமையவர் உலகும், போது உறை புத்தோள் - தாமரை மலரில் உறையும் அயனுடைய, பரந்த வான்பதம் - அகன்ற உயர்ந்த சத்திய லோகமும், சக்கரப்படை உடைப்பகவன் - திகிரிப்படையினையுடைய திருமாலின், வரம் தவாது வாழ் பதம் - மேன்மை கெடாது வாழ்கின்ற பரமபதமும், எலாம் - ஆகிய எல்லாமும், நிலைகெட வரும் ஊழி நாள்தோறும் - அழிய வருகின்ற ஊழிக்காலந்தோறும், அ ஓங்கல் - அத்திருக்கைலாய மலையானது, உரம் தவாது நின்று ஓங்கும் -வலி கெடாது நிலைபெற்று வளரும் எ-று. புரந்தராதி; வடமொழித் தீர்க்க சந்தி. பகவன் ஆறு குணங் களையுடையவன்; சிவன், திருமால் முதலிய பல கடவுளர்க்கும் இப்பெயர் உரித்து. வரும் ஊழி நாள் எனச் சொற்கள் மாற்றப் பட்டன; வருநாள் நின்று அவ்வூழிதோறும் என வுரைத்தலுமாம்; உம்மை தொக்கது. கைலை மூவுலகும் ஒடுங்குகின்ற நாளோங்கிய வோக்கம் என முன்னுங் கூறினார்; ஆண்டுக் காட்டிய ஊழிதோ றூழி முற்று முயர்பொன் னொடித்தான் மலையே என்பதனை ஈண்டுங்கொள்க. ஓங்கல் என்பது மலைக்குத் தொழிலாகுபெயர்; அல்; பெயர் விகுதி யென்னலுமாம். (2) அரம்பை மாதரா ராடலி னரவமும் பாடல் நரம்பி னோசையு முழவதிர் சும்மையும் நால்வாய் வரம்பி லோதையு மருவிவீ ழொலியுமா றாது நிரம்பி வானமுந் திசைகளு நிமிர்வன மாதோ. (இ-ள்.) அரம்பை மாதரார் ஆடலின் அரவமும் - தேவ மகளிரின் கூத்தின் ஒலியும், பாடல் நரம்பின் ஓசையும் - பாடலின் ஒலியும்யாழின் ஒலியும், முழவு அதிர் சும்மையும் - மத்தளம் அதிர்கின்ற ஒலியும், நால்வாய் வரம்பு இல் ஓதையும் - யானைகளின் அளவிறந்த ஒலியும், அருவி வீழ் ஒலியும் - அருவிகள் வீழ்கின்ற ஒலியும், மாறாது - நீங்காது, வானமும் திசைகளும் நிரம்பி நிமிர்வன - வானுலகத்தும் திக்குகளிலும் சென்று நிரம்பி மிகுவன எ-று. ஓசை யென்பதனைப் பாடலோடுங் கூட்டுக. நரம்பு; ஆகு பெயர். நால்வாய்; தொங்கும் வாயையுடையது என அன்மொழித் தொகைக் காரணப்பெயர். மாது, ஓ;அசை. அரவம் முதலியன சொல் வேறுபட்டு ஒரேபொருளில் வருதலின் இது பொருட் பின்வருநிலை. (3) வெந்த நீற்றொளி வெண்மையும் விமலனை யகங்கொண் டந்த மின்றியே யசைவற விருக்கையு மருவி வந்த கண்களும் கொண்டவ ணிருக்குமா தவர்க்குத் தந்த தாலரன் கயிலையுந் தனதுசா ரூபம். (இ-ள்.) அரன் கயிலையும் - (சிவபிரானே யன்றி) அவன் வீற்றிருக்கும் கயிலாய மலையும், வெந்த நீற்று ஒளி வெண்மையும்- வெந்த திருநீற்றின் ஒளிபோலும் வெண்மையையும், விமலனை அகம் கொண்டு - நின்மலனாகிய இறைவனைத் தன்னிடத்தே கொண்டு, அந்தம் இன்றியே அசைவற இருக்கையும் - அழிவில்லாமல் அசைவற்று இருத்தலையும், அருவிவந்த கண்களும் கொண்டு - அருவி வருகின்ற இடங்களையுங் கொண்டு, அவண் இருக்கும் மாதவர்க்கு - அங்கு இருக்கின்ற பெருமை பொருந்திய முனிவர்களுக்கு, தனது சாரூபம் தந்தது - தனது சாருப பதவியைக் கொடுத்தது எ-று. சாரூபம் - பதமுத்தி மூன்றனு ளொன்று. சிவசாரூபமாவது முக்கண், சடைமுடி, நாற்றோள், மணிமிடறு, மான் மழு வேந்துகை முதலியனவுடைய சிவனது திருவுருவைப் பெறுதல். வெண்மை, இருக்கை, கண்கள் என்பன கைலைக்கும் மாதவர்க்கும் பொதுவாக வுள்ளன வாதலின் கைலையும் தனது சாரூபம் தந்ததென்றார்; இது தற்குறிப்பேற்றவகை. திருநீற்றின் ஒளி, உளத்திற் கொண்டு சலிப்பின்றி யிருத்தல். ஆனந்தவருவி வந்த விழிகள் என மாதவர்க் கேற்பப் பொருளுரைத்துக் கொள்க. ஆல்; அசை. கயிலையும் என்னும் உம்மை எச்சப்பொருட்டு. (4) ஆங்கு வெண்டுகில் விரித்தெனக் கல்லென வார்த்து வீங்கு காலரு வித்திரள் வெள்ளமே யன்றி ஓங்கு நான்மறைக் குடுமியி னுள்ளொளி நோக்கித் தூங்கு மாதவர் கண்களுஞ் சொரிவன வெள்ளம். (இ-ள்.) ஆங்கு - அம்மலையினிடமானது. வெண்துகில் விரித்தென - வெள்ளிய ஆடையை விரித்தாற் போலத் (தோன்றி), கல்லென ஆர்த்து - கல்லென்று ஆரவாரித்து, வீங்குகால் - உயர்ந்த கால்களையுடைய, அருவித்திரள் வெள்ளம் அன்றி - அருவியாகிய திரண்ட வெள்ளத்தைச் சொரிதல் அல்லாமல், ஓங்கும் நான்மறைக் குடுமியின் உள் ஒலி நோக்கி - உயர்ந்த நான்கு மறைகளின் முடியினுள் விளங்கும் ஒளிப்பிழம்பை (அகத்திற்) கண்டு, தூங்கு மாதவர் கண்களும் - அழுந்திக் கிடக்கின்ற பெரிய முனிவர்களின் கண்களும், வெள்ளம் சொரிவன - ஆனந்த அருவியாகிய வெள்ளத்தைப் பொழிவனவாம் எ-று. ஆங்கு - அவ்விடம்; எழுவாய். அருவி வெண்டுகில் விரித்தாற் போலுமென்பதனை. “ அவிர்துகில் புரையு மவ்வெள் ளருவி” எனப் பெருங்குறிஞ்சியுட் கூறியவாற்றானு மறிக. வெள்ளத்தைச் சொரிதலன்றி என விரித்துரைக்கப்பட்டது. ஒளி - இறைவன் றிருவுரு. தூங்குதல் - அழுந்தி நிற்றல்; இதனையே தூங்காமற் றூங்கல் என்பர். ஒளி நோக்கித் தூங்கும் என்பதிலுள்ள அணி நலமும் காண்க. எச்சவும்மை. (5) கோட்டு மாமலர் நிலமலர் குண்டுநீ ரெடுத்துக் காட்டு மாமலர் கொடிமலர் கொண்டுமுட் கரைந்த பாட்டு மாமலர் கொண்டுநம் பரஞ்சுட ரடியிற் சூட்டு மாதவர் தொகுதியுஞ் சூழ்வன வோருபால். (இ-ள்.) கோட்டு மாமலர் - பெருமை பொருந்திய கோட்டுப் பூக்கள், நிலமலர்- நிலப்பூக்கள், குண்டு நீர் எடுத்துக்காட்டும் மாமலர் - ஆழமாகிய நீர் உயர்த்திக் காட்டுகின்ற பெருமை பொருந்திய நீர்ப்பூக்கள், கொடி மலர் கொண்டும் - கொடிப் பூக்கள் ஆகிய இந்நல் வகைப் பூக்களைக் கொண்டும், உள்கரைந்த - உள்ளம் உருக்கிக் கூறிய, பாட்டு மாமலர் கொண்டும் - பாட்டாகிய பெருமை பொருந்திய மலர்களைக் கொண்டும், நம் பரஞ்சுடர் அடியில் சூட்டும் - நமது பரஞ்சோதியாகிய சிவபிரான் திருவடி களிற் சூட்டுகின்ற. மாதவர் தொகுதியும் - பெரிய தவத்தினை யுடையார் கூட்டங்களும், ஒருபால் சூழ்வன - (அம்மலையின்) ஒரு பக்கத்தில் சூழா நிற்கும் எ-று. மா என்னு மடையை நிலமலர் கொடிமலர்கட்குங் கூட்டுக. நீர் எடுத்துக் காட்டும் என்பதற்கு நீரில் விளங்கித் தோன்றிய என்னலுமாம். கரைந்த - கரைந்து கூறியவென்க; கரைதற்குக் காரணமான என்னலுமாம். மாதவர் - திருத்தொண்டர். (6) கைய நாகமுங் காய்சின வுழுவையுங் கடுவாய்ப் பைய நாகமுந் தங்கிளை பரவிய முக்கண் ஐய னாகமெய் யருந்தவர் தமையடைந் தன்பு செய்ய நாகமும் வையமும் புகழ்வதச் சிலம்பு. (இ-ள்.) கைய நாகமும் - கையையுடைய யானைகளும், காய்சின உழுவையும் - மிகுந்த சினத்தையுடைய புலிகளும், கடுவாய்ப்பைய - நஞ்சினையுடைய வாயையும் படத்தையுமுடைய, நாகமும் - பாம்புகளும், தம் கிளை பரவிய முக்கண் ஐயன் ஆக - தங்கள் சுற்றம் வழிபட்ட மூன்று கண்களையுடைய இறைவனாகக் கருதி, மெய் அருந்தவர் தமை அடைந்து - மெய்யாகிய அரிய தவமுடையார்களை அடைந்து, அன்பு செய்ய - அன்போடு பணி செய்யா நிற்க, நாகமும் வையமும் புகழ்வது அச்சிலம்பு - விண்ணுலகத்தாராலும் மண்ணுல கத்தாராலும் புகழப் பெறுவது அத்திருக்கைலாயமலை எ-று. நாகம் என்னும் பல பொருளொரு சொல் கைய, பைய என்னும் சிறப்படைகளானும், வையம் என்னும் இனத்தானும் முறையே யானை, பாம்பு, விண்ணுலகம் என்பவற்றை யுணர்த்திற்று. காய்சினம் - காய்கின்ற சினம்; மிக்க சினம். கைய, பைய வென்பன குறிப்புப் பெயரெச்சம். யானை திருவானைக்காவிலும் சீகாளத்தி யிலும் வழிபட்டமையும், பாம்பு சீகாளத்தியில் வழிபட்டதும், புலிதில்லையுள் வழிபட்டதும் திருவானைக்காப் புராணம், சீகாளத்திப் புராணம், கோயிற் புராணம் என்பவற்றுட் காண்க. மெய்யாகிய தவமென்க; தவத்தினர்க் கேற்றி, மெய்ம்மையை யுடையவர் என உரைத்தலுமாம். ஐயனாகக் கருதி யென்க. நாகமும் வையமும் ஆகுபெயர். பரவிய, புகழ்வது என்பன செயப்பாட்டு வினை; படுவிகுதி தொக்கு வந்தன. (7) ஆகச் செய்யுள் - 206 புராண வரலாறு (கலிவிருத்தம்) அளந்தி டற்கரி தாயவக் குன்றின்மேற் களங்க றுத்துவிண் காத்தவன் கோயின்முன் விளம்ப ருஞ்சிவ தீர்த்தத்தின் மிக்கதாய் வளம்பெ றுஞ்சிவ தீர்த்தத்தின் மாடது. (இ-ள்.) அளந்திடற்கு அரிது ஆய - அளப்பதற்கு அரிய பெருமையையுடைய, அக்குன்றின்மேல் - அத் திருக்கைலாய மலையின் கண், களம் கறுத்து விண்காத்தவன் கோயில்முன் - திருமிடறு கறுத்துத் தேவர்களை ஆண்ட இறைவனது திருக் கோயிலின் முன்னர், விளம்பு அரும் - சொல்லுதற்கரிய, சிவ தீர்த்தத்தின் மிக்கதாய் - சிவதீர்த்தங்களின் மேம்பட்டதாய், வளம்பெறும் - வளம் பெற்ற, சிவதீர்த்தத்தின் மாடது - சிவ தீர்த்தத்தின் பக்கத்திலுள்ளது. எ-று. நஞ்சுண்டதனைக் களங்கறுத்து’என கூறினார்;அது திருமிடற்றினின்று என்றும் அவனது இறைமையைத் தோற்றுவித்தலின். கோயின் முன் வளம் பெறும் எனக் கூட்டுக. விளம்பு;முதனிலைத் தொழிற் பெயர்; விளம்ப என்பது தொக்கதுமாம். பல தலங்களிலு முள்ளசிவசம்பந்தமுடைய தீர்த்தங்களை முதலிலுள்ள சிவதீர்த்த மென்பது குறிக்கின்றது; பின்னுள்ளது பெயர். மாடது மண்டபம் எனவருஞ் செய்யுளோடு கூட்டி முடிக்க. (1) தண்ட ருங்கதிர்ச் சந்திர காந்தத்திற் பண்ட யங்க1 நவமணி பத்திசெய் தண்டர் தச்ச னநேக தவஞ்செய்து கண்ட தாயிரக் கான்மண் டபமரோ. (இ-ள்.) தண்டரும் கதிர் - நீங்குதல் இல்லாத ஒளியினையுடைய, சந்திரகாந்தத்தில் - சந்திர காந்தக் கற்களினால், பண் தயங்க - ஒப்பனை விளங்க, நவமணி - ஒன்பது மணிகளையும், பத்திசெய்து - வரிசைப்படப் பதித்து, அண்டர் தச்சன் - தேவர்கள் தச்சன். அநேக தவம் செய்து கண்டது - அளவிறந்த தவஞ்செய்து கட்டியது, ஆயிரக் கால் மண்டபம் - ஆயிரங் கால்களையுடைய மண்டபம் எ-று. சந்திர காந்தத்திற் கண்ட தென்க. கண்டது - இயற்றியது; கருத்தால் நிருமித்தலின் கண்டது என்றார் எனலுமாம். மாடது, கண்டது என்பவற்றை மண்டபம் என்பதனுடன் தனித்தனி கூட்டுக; கண்ட தாகிய மண்டபம் மாடது என முடித்தலுமாம். அரோ;அசை. (2) ஆன பான்மையி னாலந்த மண்டபம் ஞான நாயக னாண்மலர்த் தாடொழ வான மீனொடு வந்து பதங்குறித் தூன மின்மதி வைகுவ தொத்ததே. (இ-ள்.) ஆன பான்மையினால் - அவ்வாறாகிய தன்மையினால், அந்த மண்டபம் - அந்த மண்டபம் (இருத்தல்), ஞான நாயகன் - ஞானமே வடிவாகிய இறைவனுடைய, நாள் மலர்த்தாள் தொழ - அன்றலர்ந்த மலர்போலுந் திருவடிகளை வணங்க, ஊனம் இல் மதி-குற்றமற்ற நிறைமதியானது, வானம் மீனொடு வந்து - வானிலுள்ள உடுக்களோடு வந்து, பதம் குறித்து வைகுவது ஒத்தது - செவ்வி நோக்கி இருத்தலை ஒத்தது எ-று. ஆன பான்மையினால் என்றது மேற் செய்யுளிற் கூறிய வியல்பைச் சுட்டிற்று. பான்மை-முறைமை; தன்மை. சந்திர காந்தத் திற்கு மதியும், நவமணிகட்கு வான்மீன்களும் உவமம். ஊனமில் மதி யென்பது நிறைமதி யென்றும், களங்கமில்லாத மதியென்றும் பொருள்படும்; பிற்பொருளில் இல்பொருளுவமை. (3) அன்ன மண்டபந் தன்னு ளருந்தவம் என்ன வேங்கை யதண்மே லிருந்தனன் பன்னு கேள்விப் பதினெண் புராணமுஞ் சொன்ன மாதவச் சூத முனிவனே. (இ-ள்.) அன்னமண்டபம் தன்னுள் - அந்த மண்டபத்தின்கண்; அரும் தவம் என்ன - செய்தற்கரிய தவமே உவவெடுத்து இருந்தாற் போல, வேங்கை அதண் மேல் - புலித்தோலின்மேல், பன்னு கேள்வி - (யாவரும்) புகழுகின்ற கல்வி கேள்விகளையுடைய, பதினெண் புராணமும் சொன்ன மாதவம் சூதமுனிவன் இருந்தனன் - பதினெட்டுப் புராணங்களையுங் கூறிய பெருந்தவத்தினையுடைய சூதமுனிவன் இருந்தனன் எ-று. கேள்வியையுடைய சூதமுனிவ னென்க. தான் வியாசமுனிவன் பாற் கேட்டவற்றை நைமிசவனத்து முனிவர்கட்கு உரைத்தானா கலின் பதினெண் புராணமுஞ் சொன்ன என்றார். பதினெண் புராணம் இவை யென்பதனை, “ மச்சம் கூர்மம் வராகம் வாமனம் பிரமம் வைணவம் பாகவதம் சைவம் இலிங்கம் பெளடிகம் நாரதீயம் காரூடம் பிரமகை வர்த்தம் மார்க்கண்டே யம்காந்தம் பிரமாண்டம் ஆக்கினேயம் பதுமம் என்றிவை பாற்படு பதினெண் புராண மாகும்” என்னும் திவாகரச் சூத்திரத்தா னறிக. (4) அந்த வேலையி லச்சிவ தீர்த்தத்தில் வந்து மூழ்கியம் மண்டபத் தேறியே சந்தி யாதி தவமுடித் தீறிலா இந்து சேகரன் றாணினைந் தேத்தியே. (இ-ள்.) அந்த வேலையில் - அப்பொழுதில், அச்சிவ தீர்த்தத்தில்வந்து மூழ்கி - வந்து அத் தீர்த்தத்தின்கண் நீராடி, அம்மண்டபத்து ஏறியே - அந்தமண்டபத்திலேறி, சந்தி ஆதி தவம் முடித்து - சந்தியா வந்தனம் முதலிய தவங்களை முடித்து, ஈறு இலா இந்து சேகரன் - அழிவில்லாத சந்திரசேகரனாகிய இறைவனுடைய, தாள் நினைந்து ஏத்தி - திருவடிகளைத் தியானித்துத் துதித்து எ-று. சந்தியிற் செய்யப்படுவதனைச் சந்தி யென்றார், தவம் - செய்கடன், ஈறிலானென்க. குளகம் (5) சம்பு பத்தன்சதானந்த னுத்தமன் அம்பு யுத்த னனைய மகோதரன் உம்ப ரஞ்சிய வுக்கிர வீரியன் நம்பு கேள்விப் பிரசண்ட நற்றவன். (இ-ள்.) சம்புபத்தன் சதானந்தன் உத்தமன் - சம்புபத்தனும் சதானந்தனும் உத்தமனும், அம்புயத்தன் அனைய மகோதரன் - தாமரை மலரி லிருப்பவனாகிய அயனை யொத்த மகோதரனும், உம்பர் அஞ்சிய உக்கிர வீரியன் - தேவர்களும் அஞ்சப்பெற்ற உக்கிர வீரியனும், நம்பு கேள்விப் பிரசண்ட நல் தவன் - விரும்புகின்ற கேள்வியினையுடைய பிரசண்டன் என்னும் நல்ல தவத்தை யுடையவனும் எ-று. சம்புபத்தன் முதலியவை பெயர். (6) ஆதி மாதவர் யாவரு மன்புமை பாதி யாய்முற்று மாகும் பராபரச் சோதி பால்வைத்த சூதனைத் தோத்திரம் ஓதி யஞ்சலித் தொன்று வினாவினார். (இ-ள்.) ஆதி - முதலிய, மாதவர் யாவரும் - பெரிய தவமுடை யார் அனைவரும், உமைபாதியாய் - உமையொரு கூறாய், முற்றும் ஆகும் - முழுதுமாகிய, பராபரச் சோதிபால் - பராபர ஒளிப்பிழம் பாகிய இறைவனிடத்தில், அன்பு வைத்த சூதனை - அன்பு பூண்ட சூத முனிவனை, தோத்திரம் ஓதி - துதித்து, அஞ்சலித்து - கைகூப்பி, ஒன்று வினாவினார் - ஒன்று கேட்பாராயினர் எ-று. மேற் செய்யுளிற் கூறப்பட்டாருடன் இயைத்து ‘ஆதி மாதவர்’ என்றார். அன்புவைத்த எனக் கூட்டுக. உமையைத் தன்னுளடக்கித் தானேயாய் நிற்றல் கருதி முற்றுமாகும் என்றார். புறநானூற்றின் கடவுள் வாழ்த்தில், “ பெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருத் தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும்” எனக் கூறப்பட்டிருத்தல் காண்க. “ பாதியு மாய்முற்று மாயினார்க்குப் பந்தமும் வீடு மாயினாருக் காதியு மந்தமு மாயினாருக் காடப்பொற் சுண்ண மிடித்துநாமே” என்னும் திருவாசகத்தையும் சிந்திக்க. (7) (கலிநிலைத்துறை) வேத வாகம புராணமே மிருதியே முதலா ஓது நூல்களின் துணிபொரு ளுலகெலாம் பயந்த பேதை பாகனே பரமெனத் தேர்ந்துணர் பெரிய போத மாதவ வுனக்கியாம் புகல்வதொன் றுளதால். (இ-ள்.) வேத ஆகம புராணமே மிருதியே முதலா - வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் மிருதிகள் முதலாக, ஓதும் நூல்களின் - கூறப்பட்ட நூல்களின், துணிபொருள் - முடிந்த பொருள், உலகு எலாம் பயந்த பேதை பாகனே பரம் - எல்லா வுலகங் களையும் ஈன்ற உமையை ஒரு கூற்றிலுடைய சிவபிரானே பரம் பொருள் என்பது, எனத் தேர்ந்து உணர் பெரிய - என ஆராய்ந்து உணர்ந்த பெரியவனே, போத மாதவ - ஞானத்தையுடைய பெரிய தவத்தையுடையவனே, உனக்கு யாம் புகல்வது ஒன்று உளது - உனக்கு நாங்கள் சொல்வது ஒன்று உளது எ-று. வேதம், புராணம், மிருதி முன் கூறப்பட்டன. சிவாகமம் காமிகம் முதல் வாதுளம் இறுதியாக இருபத்தெட்டு என்ப. ஒன்பது ஆகமங்களின் பெயர்களைத் திருமூலர் குறிக்கின்றார்; இதனை, “ பெற்றநல் லாகமங் காரணங் காமிகம் உற்றநல் வீர முயர்சிந்தம் வாதுளம் மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம் துற்றநற் சுப்பிரஞ் சொல்லு மகுடமே” என்னும் மந்திரத்திற் காண்க. பரமென்பது என விரிக்க புராணமே, மிருதியே என்னும் ஏகாரங்கள் எண்ணுப் பொருளன; பிறவற்றொடுங் கூட்டுக. “ எண்ணே கார மிடையிட்டுக் கொளினும் எண்ணுக் குறித்தியலு மென்மனார் புலவர்” என்பது தொல்காப்பியம். பேதை பாகனே என்னும் ஏகாரம் பிரிநிலையும் தேற்றமுமாம். ஆல்: அசை. (8) மேரு மந்தரங் கயிலைபர்ப் பதமுதல் விடைமேல் ஊரு மந்தர நாடவ னுறைபதி யனந்தம் ஆரு மந்தமில் போகம்வீ டடைவதென் றவற்றின் கார ணங்களோ டுரைத்தனை கருத்தினுக் கிசைய. (இ-ள்.) விடைமேல் ஊரும்-இடப வாகனத்திலேறி நடத்தியருளு கின்ற, அந்தர நாடவன் - சிவலோகத்தை யுடையவனாகிய இறைவன், உறைபதி - எழுந்தருளியிருக்குந் திருப்பதிகள் ஆகிய, மேரு மந்தரம் கயிலை பர்ப்பதம் முதல் அனந்தம் - மேரு மந்தரம் திருக்கயிலாயம் திருப்பருப்பதம் முதலிய அளவில்லாதனவும், ஆரும் - எவரும், அந்தம் இல்-அழிவில்லாத, போகம்வீடு அடைவது என்று - போகத்தையும் வீட்டையும் அடைவதற் குரியனவென்று, அவற்றின் காரணங்களோடு உரைத்தனை - அவைகளின் ஏதுக் களோடு கூறினாய், கருத்தினுக்கு இசைய - எங்கள் கருத்துக்குப் பெருந்தும்படி எ-று. பர்ப்பதம் - திருப்பருப்பதம். அடைவது: பன்மை யொருமை மயக்கம். இசைய உரைத்தனை என முடிக்க. (9) ஐய மாதிமுக் குற்றமு மகலநீ யருளிச் செய்ய வுந்தெளிந் திலேங்கள்1 யாஞ் சிற்றறி வுடையேம் மைய னெஞ்சினே மாகையான் மயக்கற வின்னம் உய்யு மாறருள் செய்தியென் றுரைத்தனர் மன்னோ. (இ-ள்.) ஐயம் ஆதி முக்குற்றமும் அகல - ஐயம் முதலிய மூன்று குற்றங்களும் நீங்கும்படியாக, நீ அருளிச்செய்யவும் - நீ உரைத் தருளவும், யாம் - நாங்கள், சிறு அறிவு உடையேம் - குறுகிய அறிவினை யுடையேமும், மையல் நெஞ்சினேம் - மயக்கத்தையுடைய உள்ள முடையேமும், ஆகையால் - ஆகையினாலே, தெளிந்திலேங்கள் - தெளிவு பிறவாதிருக்கின்றோம், மயக்கு அற - அம்மயக்கம் நீங்க, உய்யுமாறு - பிழைக்கும்படி, இன்னம் அருள் செய்தி என்று உரைத்தனர் - இன்னும் கூறியருள வேண்டுமென்று விண்ணப்பித்தனர் எ-று. முக்குற்றம்: ஐயம், திரிபு, அறியாமை என்பன. மயக்கு - மயக்கம் : ஈறு தொக்கது. செய்தி - செய்வாய்; த், எழுத்துப்பேறு. மன், ஓ; அசை. (10) தலங்க டம்மின்மிக் குள்ளதாய்த்2 தகுதிசால் தீர்த்தக் குலங்க டம்மின்மிக் குள்ளதாய்க்3 குறையிரந் தோர்க்கு நலங்க டந்தருள் மூர்த்தியாய்4 நாதவே தாந்தப் புலங்க டந்தபே ரொளியுறை தலனொன்று புகலாய். (இ-ள்.) தலங்கள் தம்மில் - பலதலங்களிலும், மிக்குள்ள தாய் - மேம்பட்டுள்ளதாகியும், தகுதி சால் - பெருமை மிகுந்த, தீர்த்தக் குலங்கள் தம்மில் மிக்கு உள்ளதாய் - பல தீர்த்தங்களிலும் சிறந்த தீர்த்தத்தை யுடையதாகியும் உள்ள, குறை இரந்தோர்க்கு - தங்கள் குறைகளைக் கூறி வேண்டினாருக்கு, நலங்கள் தந்தருள் மூர்த்தியாய் - எல்லா நன்மைகளையும் அருளுகின்ற மூர்த்தியாகி, நாத வேதாந்தம் புலம் கடந்த - நாத தத்துவத்தி னிறுதியாகிய இடத்தையும் வேதத்தி னிறுதியாகிய இடத்தையும் கடந்தருளிய, பேர் ஒளி உறை - பெரிய ஒளிப் பிழம்பாகிய இறைவன் எழுந்தருளப் பெற்ற, தலம் ஒன்று புகலாய் - ஒரு தலத்தைக் கூறுவாயாக எ-று. அந்தம் என்பதை நாதத்துடனுங் கூட்டுக. “ வேத வந்தமுந் துளக்கற மெய்ப்பொருள் விளங்கு நாத வந்தமுங் கடந்ததோர் நடுநிலைப் பொருளின்” என முன்னருங் கூறினார். அந்தம் ஆறு என்ப; இதனை, “ வேதத்தி னந்தமும் மிக்கசித் தாந்தமும் நாதத்தி னந்தமும் நற்போத வந்தமும் ஓதத் தகுமெட்டி யோகாந்த வந்தமும் ஆதிக்க லாந்தமு மாறந்த மாமே” என்னுந் திருமந்திரத்தா னறிக. (11) என்ற போதெதிர் முகமலர்ந் திருள்மல வலியை வென்ற சூதனுந் தலங்களின் விசேடமாய்ந் தம்பொற் குன்ற வார்சிலை யானிடங் கொண்டுறை பதியுள் ஒன்று கேட்கவீ டளிப்பதா யுளதுமற் றதுதான்.1 (இ-ள்.) என்றபோது - என்று கேட்டபோது, எதிர் முகமலர்ந்து - எதிரே முகமலர்ச்சி கொண்டு, இருள் மல வலியை வென்ற சூதனும் - ஆணவ மலத்தின் வலியை வென்ற சூதமுனிவனும், தலங்களின் விசேடம் ஆய்ந்து - எல்லாப் பதிகளின் பெருமையையும் ஆராய்ந்து, அம்பொன் குன்றம் - அழகிய பொன்மலையாகிய, வார்சிலையான் - நீண்ட வில்லையுடைய இறைவன், இடம் கொண்டு உறைபதியுள் - இடமாகக் கொண்டு எழுந்தருளி யிருக்கின்ற திருப்பதிகளுள், ஒன்று (உளது) - ஒன்று உள்ளது, அது கேட்க வீடு அளிப்பது ஆய் உளது - அப்பதி தன்னைக் கேட்டவளவில் வீட்டை யளிக்க வல்லது எ-று. தலங்களிற் சிறந்ததனை ஆராய்ந்து என வுரைத்தலுமாம். உளது என்பது ஒன்று என்பதனோடுங் கூட்டி முடிக்கப்பட்டது. மற்று : வினைமாற்று. தான் : அசை. (12) முற்ற வோதிய புராணமூ வாறனுட்2காந்தம் பெற்ற தாறுசங் கிதையவை யாறுந்தம் பெயராற் சொற்ற பேர்சனற் குமரமா முனிவரன் சூதன் கற்றை வார்சடைச் சங்கரன் மாலயன் கதிரோன். (இ-ள்.) முற்ற ஓதிய - (யாவையும்) முடிவுபெறக் கூறிய, புராணம் மூவாறனுள் - பதினெண் புராணங்களுள், காந்தம் - கந்த புராணமானது, ஆறு சங்கிதை பெற்றது - ஆறு சங்கிதைகளைக் கொண்டது; அவை ஆறும் - அச்சங்கிதைகள் ஆறனையும், தம் பெயரால் சொற்ற பேர் - தங்கள் பெயராற் கூறியவர்கள், மாசனற்குமர முனிவரன் - பெருமை பொருந்திய சனற்குமார முனிவனும், சூதன் - சூதமுனிவனும், கற்றைவார்சடைச் சங்கரன் - திரண்ட நீண்ட சடையினையுடைய சங்கரனும், மால் அயன் கதிரோன் - திருமாலும் அயனும் சூரியனுமாவர் எ-று. பதினெண் புராணங்களுள் மச்சம், கூர்மம், வராகம், வாமனம், சைவம், இலிங்கம், பெளடிகம், காந்தம், மார்க்கண்டேயம், பிரமாண்டம் என்னும் பத்தும் சிவபுராணங்கள்; வைணவம், பாகவதம், காருடம், நாரதீயம் என்னும் நான்கு விண்டு புராணங்கள்; பிரமம், பதுமம் என்னும் இரண்டும் பிரம புராணங்கள்; ஆக்கினேயம் அக்கினி புராணம்; பிரம கைவர்த்தம் சூரிய புராணம். சிவனது தலைமை கூறும் தேவாரப் பதிகத்திற்குத் ‘தசபுராணம்’ என்று பெயரிட்டிருப்பது சிவபுராணம் பத்தென்பதனைக் காட்டும். சொற்றவர் என்பதனை வழக்கு நோக்கிச் ‘சொற்றபேர்’ என்றார். மா: இசை நிறையுமாம். (13) இன்ன வாறனுட் சங்கர சங்கிதை யென்று சொன்ன நூலினை யுணர்த்தினான் சங்கரன் றுணைவிக் கன்ன போதவள் மடியினி லிருந்துகேட் டதனை மின்னு வேல்பணி கொண்டவேள் வெளிப்பட வுணர்ந்தான். (இ-ள்.) இன்ன ஆறனுள் - இந்த ஆறு சங்கிதைகளுள், சங்கர சங்கிதை என்று சொன்ன நூலினை - சங்கர சங்கிதை என்று சொல்லப்பட்ட நூலை, சங்கரன் துணைவிக்கு உணர்த்தினான் - சிவபெருமான் உமையம்மையாருக்கு அறிவித் தருளினார்; அன்னபோது - அப்போது, அவள் மடியினில் - அவ்வம்மையின் திருமடியின்கண், மின்னு வேல் - விளங்கிய வேற்படையை, பணி கொண்ட வேள் - ஏவல் கொண்ட குமரவேள், இருந்து கேட்டு - வீற்றிருந்து கேட்டு, அதனை - அச்சங்கர சங்கிதையை, வெளிப்பட உணர்ந்தான் - செவ்விதாக உணர்ந்தான் எ-று. சங்கிதை - தொகுதியென்னும் பொருளுள்ள வடசொற் சிதைவு. மடி - மடக்கிய கவான். இன் : சாரியை. வெளிப்பட வுணர்தல் - தெளிய வுணர்தல். (14) குன்றெ றிந்தவேள் வழிபடு குறுமுனிக் குரைத்தான் அன்று தொட்டஃ தகத்திய சங்கிதை யாகி நின்ற தன்னது கேட்பவர்க் கரனடி நீழல் ஒன்று மின்பவீ டளிப்பதா வொருதல னுரைக்கும். (இ-ள்.) குன்று எறிந்த வேள் - கிரவுஞ்ச மலையைப் பிளந்த குமரவேள், வழிபடு குறுமுனிக்கு உரைத்தான் - தன்னை வழிபடா நின்ற அகத்திய முனிவனுக்குக் கூறியருளினான்; அன்று தொட்டு - அந்நாள் தொடங்கி, அஃது - அச்சங்கர சங்கிதையானது, அகத்திய சங்கிதை ஆகி நின்றது - அகத்திய சங்கிதை எனப் பெயருடையதாகி நிலை பெற்றது; அன்னது - அச்சங்கிதைதான், கேட்பவர்க்கு - கேட்கின்றவர்களுக்கு, அரன் அடி நீழல் - இறைவன் திருவடி நீழலில், ஒன்றும் - இரண்டறக்கலத்தலாகிய இன்ப வீடு - பேரின்ப வீட்டினை, அளிப்பதா - கொடுக்கத் தக்கதாக, ஒருதலன் உரைக்கும் -ஓர் திருப்பதியைக் கூறாநிற்கும் எ-று. நீழல் : நீட்டல் விகாரம். ஒன்றும் என்பது தொழிற்பெயர்த் தன்மைப்பட்டு நின்றது. (15) அதிக வப்பதி யாதெனி னாலவாய் கேட்கக் கதிய ளிப்பதென், றோதிய சூதனைக் கதியின் மதியை வைத்தவ ரன்னதைப் பகரென வந்த விதியி னிற்புகல் கின்றனன் வியாதன்மா ணாக்கன். (இ-ள்.) அதிக அப்பதி யாது எனில் - சிறந்த அத்திருப்பதி யாதென்று வினவில், ஆலவாய் - திருவாலவாயாம்; கேட்கக் கதி அளிப்பது என்று ஓதிய - கேட்ட அளவில் வீட்டை அளிக்கவல்லது என்று கூறிய, சூதனை - சூதமுனிவனை, கதியில் மதியை வைத்தவர் - வீட்டுலகிற் கருத்தைச் செலுத்திய முனிவர்கள், அன்னதைப் பகர் என - அத்திருப்பதியின் பெருமையைக் கூறியருள வேண்டுமென. வந்த விதியினில் - (தொன்று தொட்டுக் கூறி) வந்த முறையினால், வியாதன் மாணாக்கன் புகல்கின்றனன் - வியாதமுனியின் மாண வனாகிய சூதமுனிவன் சொல்லா நின்றான் எ-று. அதிகம் மேம்பாடு. தலனொன்று புகலாய் என்றபோது என்று ஓதிய சூதனை, என மேற் பதினொன்று பன்னிரண்டாஞ் செய்யுட் களோடு சேர்த்து முடிக்க. அன்னதைப் பகர் என - அதன் பெருமையை விரித்துரைக்க வென. (16) புதிய தாமரை மேவிய பழமறைப் புத்தோள் விதியி னாற்கடு நடைப்பரி மகஞ் செய்வான் வேண்டிக் கதியை மாய்ந்தவர்க் குதவுதண் டுறைகெழு காசிப் பதியின் மைந்தரோ டெய்தினான் பண்டொரு வைகல். (இ-ள்.) புதிய தாமரை மேவிய - வாடாத தாமரை மலரில் உறையும், பழமறைப் புத்தேள் - பழைய வேதங்களை யுணர்ந்த பிரமதேவன், விதியினால் - அவ் வேத விதிப்படி, கடுநடைப் பரிமகம் செய்வான் - விரைந்த நடையினையுடைய துரகவேள்வி செய்தற்கு, வேண்டி - விரும்பி, மாய்ந்தவர்க்கு - (தன்னிடத்து வந்து) இறந்த வருக்கு, கதியை உதவு - வீட்டுலகைத் தருகின்ற, தண் துறைகெழு - குளிர்ந்த நீர்த்துறைகள் பொருந்திய, காசிப்பதியில் - காசி என்னுந் திருப்பதியின் கண், பண்டு ஒரு வைகல் - முன்னொரு காலத்தில், மைந்தரோடு எய்தினான் - புதல்வர்களோடு சென்றான் எ-று. புதிய தாமரை பழமறை என்றது முரண். பரிமகம் - அசுவமேதம் எனப்படும் வேள்வி. துறை - கங்கையின் நீர்த்துறை. காசியில் மரித்தவர் வீடெய்துவ ரென்ப. செய்வான் : வானீற்று வினையெச்சம். (17) (எழுசீரடியாசிரியவிருத்தம்) அகத்தியன் வியாத னாரதன் சனக னாதிநான் முனிவர்கோ தமனூற் சிகைத்தெளி வுணர்ந்த பராசரன் வாம தேவன்வான் மீகியே வசிட்டன் சகத்தியல் கடந்த சுகன்முதன் முனிவர் தம்மொடும் பத்துவெம் பரிமா மகத்தொழின் முடித்து மற்றவர்க் குள்ள மகிழ்வுற வழங்குந வழங்கா. (இ-ள்.) அகத்தியன் வியாதன் நாரதன் - அகத்தியனும் வியாதனும் நாரதனும், சனகன் ஆதி நால்முனிவர் - சனகன் முதலிய நான்கு முனிவர்களும், கோதமன் - கெளதமனும், நூல் சிகைத் தெளிவு உணர்ந்த பராசரன் - மறை முடிவின் றுணிபொருளாகிய பரசிவத்தை உணர்ந்த பராசரனும், வாமதேவன் வான்மீகி வசிட்டன் - வாமதேவனும் வான்மீகியும் வசிட்டனும், சகத்து இயல் கடந்தசுகன் - உலகியலைக் கடந்த சுகனும், முதல் முனிவர் தம் மொடும் - முதலாகிய முனிவர்களோடும், பத்து வெம்பரிமா மகத்தொழில் முடித்து - பத்தாகிய கூடிய நடையினையுடைய பரிவேள்வி வினைகளை முடித்து, அவர்க்கு - அம்முனிவர்க் களுக்கு, உள்ளம் மகிழ்வு உற - உள்ளம் மகிழ்ச்சி பொருந்த, வழங்கா வழங்கத் தக்கவைகளை வழங்கி எ-று. நூல் என்றது ஈண்டு வேதத்தை. பிறந்தது தொட்டே உலக மாயையாற் பற்றப்படாதவ னென்பார் ‘சகத்தியல் கடந்த சுகன்’ என்றார். பரிமா: இருபெய ரொட்டு; மா-பெருமை யெனலுமாம். மற்று: வினைமாற்று. வழங்குந - தக்கிணை : வினைப்பெயர். (18) சத்திய வுலகிற் சரோருகக் கிழவன் சார்ந்தபின் புலப்பகை சாய்த்த அத்திரு முனிவ ரனைவருங் காசி யடிகளை யடைந்தனர் பணிந்து முத்திமண் டபத்தி னறமுத னான்கு மொழிந்தருள் மூர்த்திசந் நிதியில் பத்தியா யிருந்து நாரத முனியைப் பார்த்தொரு வினாவுரை பகர்வார். (இ-ள்.) சரோருகக் கிழவன் - தாமரை மலருக் குரியவனாகிய அயன், சத்திய உலகில் சார்ந்தபின் - சத்திய உலகை அடைந்தபின், புலப்பகை சாய்த்த - புலன்களாகிய பகையைக் கெடுத்த, அத்திரு முனிவர் அனைவரும் - அச்சிறந்த முனிவர்களனைவரும், காசி அடிகளை அடைந்தனர் பணிந்து - காசிப்பதியில் வீற்றிருக்கும் இறைவனை யடைந்து வணங்கி, முத்தி மண்டபத்தில் - முத்தி மண்டபத்தின்கண், அறம் முதல் நான்கும் - அறமுதலிய நான் கனையும், மொழிந்தருள் மூர்த்தி சந்நிதியில் - (சனகாதி நால் வருக்கும்) உபதேசித்தருளிய தட்சிணா மூர்த்தி திருமுன்னே, பத்தியாய் இருந்து - அன்போடு அமர்ந்து, நாரத முனியைப் பார்த்து - நாரத முனிவரை நோக்கி, ஒரு வினா உரை பகர்வார் - ஓர் வினா நிகழ்த்துவாராயினார் எ-று. சத்திய வுலகம் - பிரமனுலகு. அடைந்தனர்; வினை யெச்சமுற்றறு. முத்தி மண்டபம் - பெயர். அறமுதல் நான்கு - அறம் பொருள் இன்பம் வீடு. வினா வுரை - வினாவாகிய உரை. (19) தலமுதன் மூன்றுஞ் சிறந்ததோர் சைவத் தலமுரை யென்னநா ரதன்றான் கலைமுழு துணர்ந்த சனற்குமா ரன்பாற் கற்றவன் வியாதனா மவன்பால் நலமுறக் கேண்மி னெனவவன் கதிர்வே னம்பிபான் மறைமுத லனைத்தும் அலைவற1 வுணர்ந்தோன் குறுமுனி யாகு மவனிடைக் கேண்மென விடுத்தான். (இ-ள்.) தலம் முதல் மூன்றும் - தலமுதலிய மூன்றினாலும், சிறந்தது ஒர் சைவத்தலம் உரை என்ன - சிறந்ததாகிய ஒரு சிவதலத்தைக் கூறுவாயென்று வினவ, நாரதன் - நாரதமுனிவன், கலைமுழுது உணர்ந்த சனற்குமாரன்பால் - கலைகள் அனைத்தையும் உணர்ந்த சனற்குமார முனிவரிடத்து, கற்றவன் வியாதன் ஆம் - கற்றுணர்ந்தவன் வியாத முனிவனாகும், அவன் பால் நலம் உறக் கேண்மின் என - அவனிடத்து நன்மை பெருகக் கேளுங்கள் என்று கூற, அவன் - அவ்வியாதமுனிவன், கதிர்வேல்நம்பிபால் - ஒளியினை யுடைய வேற்படையையுடைய முருகவேளிடத்து, மறைமுதல் அனைத்தும் - வேதமுதலிய எல்லாக் கலைகளையும், அலைவு அறஉணர்ந்தோன் - ஐயமறக் கற்றுணர்ந்தவன், குறுமுனி ஆகும். அகத்திய முனிவனாகும், அவனிடைக்கேண்ம் என விடுத்தான் - அவனிடத்துக் கேளுங்கள் என்று ஏவினான் எ-று. வியாதனாமாகலின், குறுமுனியாகுமாதலின் என விரித்துக் கொள்க. கேண்மினென என்றதன்பின் அவர் கேட்க என்பது தொக்கு நின்றது. அலைவு - அசைவு; ஐயம். கேண்மென - கேளுமென;கேளும் என்பதன் ஈற்றயலுகரங் கெட்டது; செய்யுமெனெச்சவீற்று’ என்னும் நன்னூற் சூத்திரங் காண்க. விடுத்தல் - விடை கூறுதலுமாம். (20) மலயமா தவனை யடைந்துகை தொழுது வாழ்த்திவா தாவிவில் வலனைக் கொலைபுரி தரும மூர்த்தியே விந்தக் குன்றடக் கியதவக் குன்றே அலைகடல் குடித்த வருட்பெருங் கடலே யருந்தமிழ்க் கொண்டலே தென்பார் துலைபெற நிறுத்த களைகணே யென்று சுருதியா யிரமெனத் துதித்தார். (இ-ள்.) மலயம் மாதவனை அடைந்து - பொதியின் மலையை யுடைய பெரிய குறுமுனியை அடைந்து, கைதொழுது வாழ்த்தி - கைகூப்பி வணங்கித் துதித்து, வாதாவி வில்வலனை - வாதாவி வில்வலனென்ற அசுரர்களை, கொலை புரி தரும மூர்த்தியே - கொன்றருளிய அறவடிவானனே, விந்தக் குன்று அடக்கிய - விந்த மலையை அடக்கிய, தவக்குன்றே - தவமலையே, அலைகடல் குடித்த - அலைதலையுடைய கடலைப் பருகிய, அருள் பெருங் கடலே - பெரிய கருணைக் கடலே, அருந் தமிழ்க் கொண்டலே - அரிய தமிழ் சுரக்கு முகிலே, தென்பார் துலைபெற - பூமியின் தென்பாகமானது துலாக்கோல் போலும் சமன் பெறும்படி, நிறுத்த களைகணே - நிறுத்திய பற்றுக்கோடே, என்று - என்று கூறி, சுருதி ஆயிரம் எனத் துதித்தார் - அளவிறந்த வேதங்கள் கூடித் துதித்தாற் போலத் துதித்தார்கள் எ-று. கொலைபுரி தரும மூர்த்தியே, குன்றடக்கிய தவக்குன்றே, கடல்குடித்த அருட்பெருங் கடலே என்பவற்றிலுள்ள நயங்களை ஓர்ந்துணர்க: தரும மூர்த்தியாகலின் கொலை புரிந்தனர், தவக் குன்றாகலின் குன்றடக்கினர், அருட்கடலாகலின் கடல் குடித்தனர் எனவுங்கொள்க. தமிழ்க் கொண்டல்- தமிழைச் சுரந்து பொழியும் முகில். ஆயிரம் - அளவின்மை. வாதாவி வில்வலனைக் கொன்ற வரலாறு :- அசமுகி யென்னும் அசுரமாது நாரதமுனிவனை வலிதிற் கூடி வில்வலன் வாதாவி யென்னும் இருமைந்தரைப் பெற்றாள். அவ்விருவரும் கொடிய தோர் வேள்வி புரிந்து பிரமன்பால் வேண்டிய வரங்களைப் பெற்றுக்கொண்டு, காட்டிலே அவ்வழிவரும் முனிவர்களைக் கொல்லுங் கருத்தினராய்ப் பன்னசாலை யமைத்துக்கொண்டிருந் தனர்; இருப்புழி வில்வலன் தவவேடந் தாங்கி, வாதாவியை ஆடாக்கி வருகிற முனிவர்களுக்கு விருந்து செய்து, வாதாவியை வருகவென அழைக்க. அவன் அம்முனிவர்களின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வர, இவ்வகையாக அவர்களைக் கொன்று தின்று வாழ்ந்து வந்தனர்; ஒரு நாள் அகத்தியர் இங்ஙனம் விருந்துண்டிருந்தபொழுது, வில்வலன் வாதாவியை அழைக்க, அகத்தியர் உண்மையை யுணர்ந்து, வாதாவியை வயிற்றிலே மடி வித்து, எதிர்த்துப் பொருதற்கு வந்த வில்வலனையும் ஓர் தருப்பைப் புல்லை அத்திரமாக விடுத்துக் கொன்றனர் என்பது. இதனைக் கந்தபுராணத்து வில்வலன் வாதாவிவதைப் படலத்திற் காண்க. விந்த மடக்கிய வரலாறு;- ஒரு காலத்து விந்தமலையானது நாரத முனிவரின் சூழ்ச்சியால் மேருமலையுடன் இகலி வளர்ந்து, சூரிய சந்திரரும் இயங்கா வகை வானின் வழியை அடைத்து நின்றது: அப்பொழுது தென்றிசை நோக்கி வந்த அகத்தியர் தமக்கு வழிவிடுமாறு விந்தத்தை வேண்ட, அது சிறிதும் அவரை மதியாது ‘வழிவிடேன்’ எனச் செருக்கிக் கூற, குறியவராகிய அம்முனிவர் தமது கையை உயர்த்தி அம்மலையின் தலையில் வைத்து அழுத்தினர்: அது செருக்கழிந்து பிலத்திற் புக்கது என்பது இதனைக் கந்தபுராணத்து, விந்தம் பிலம்புகு படலத்திற் காண்க. புவியைச் சமனுறச் செய்த வரலாறு:- சிவபெருமான் திருமணத் திற்குத் தேவர் முதலிய யாவரும் வந்து திரண்டமையால் வடதிசை தாழ்ந்து தென்றிசை யுயர்ந்தது: யாவரும் நடுக்க மெய்தினர்: சிவபெருமான் அகத்தியரை யழைத்து அவரைப் பொதியிலிற் சென்றிருக்குமாறு பணித்தனர்; அகத்தியர் பொதியிலுக்கு வரவே பூமிசமனாயிற்று என்பது. இதனைக் கந்தபுராணத்து, திருக்கல்யாணப் படலத்திற் காண்க. கடல்குடித்த வரலாற்றை இப்புராணத்து, இந்திரன் பழிதீர்த்த படலத்திற் காண்க. (21) மூவகைச் சிறப்பு முள்ளதோர் தான மொழிகென முகமலர்ந் தருள்கூர்ந் தியாவையு முணர்ந்தோன் முத்திமண் டபத்தி னீரிரு தொகையின்வந் திறக்குஞ்1 சேவல்க டமையு மைங்கரன் றனையுஞ் சேவலங் கொடியுடை வடிவேற் காவலன் றனையும் வடநிழ லமர்ந்த கண்ணுதற் பரனையும் பணியா. (இ-ள்.) மூவகைச் சிறப்பும் - தலம் தீர்த்தம் மூர்த்தி என்னும் மூன்று வகைச் சிறப்பும், உள்ளது ஓர் தானம் மொழிக என - உடையதாகிய பதி ஒன்றைக் கூறுவாயென, முகமலர்ந்து - முகமலர்ச்சி கொண்டு, அருள் கூர்ந்து - கருணை மிகுந்து, யாவையும் உணர்ந்தோன் - எல்லா நூல்களையும் கற்றுணர்ந்த அகத்திய முனிவன், முத்தி மண்டபத்தின் - முத்தி மண்டபத்தின்கண், ஈர் இரு தொகையின் வந்து இறக்கும் சேவல்கள் தமையும் - நான்கு என்னுந் தொகைபெற்று வந்து இறந்த கோழிகளையும், ஐங்கரன் தனையும் - ஐந்து திருக்கரங்களையுடைய விநாயகக் கடவுளையும், சேவல் அம் கொடி உடை - அழகிய கோழிக் கொடியையுடைய, வடிவேல் காவலன் தனையும் - கூரிய வேற்படை ஏந்திய முருகவேளையும், வட நிழல் அமர்ந்த - கல்லாலினிழலில் எழுந்தருளியிருந்த; கண்நுதல் பரனையும் - நெந்றியிற் கண்ணையுடைய தட்சிணா மூர்த்தியையும், பணியா - வணங்கி எ-று. மொழிகென; தொகுத்தல். கூர்ந்தியாவையும்; குற்றிய லிகரம். சேவல்கள் என்றது ஈண்டுக் கோழியென்னும் பொதுப்பெயர் மாத்திரையாய் நின்றது, சேவலங்கொடி; அம் சாரியையுமாம். சேவல்களின் வரலாறு:- மூன்றாம் உகத்திலே காசியிலிருந்த மாகனந்தன் என்னும் மறையவன் கொடுந்தொழில் பல புரிந்து, தன் சுற்றத்தாரால் ஓட்டப்பட்டு, மனைவியோடும், மக்களிருவரோடும் கீகட தேயம் நோக்கிச் செல்வுழி அந்நால்வரும் வேடர்களாற் கொல்லப்பட்டு உயிர் துறந்தனர்; இறக்கும் பொழுது காசியை நினைத்தமையால், அவன் பண்டை யுணர்வுடன் சேவலாகவும், மனைவி பெடையகாவும், மக்களிருவரும் பார்ப்பாகவும் பிறந்து, காசிக்குச் சென்று முத்தி மண்டபத்தை யடைந்து முத்தி பெற்றனர் என்பது. இதனைக் காசி காண்டத்து, முத்தி மண்டபத்தின் கதையுரைத்த அத்தியாயத்திற் காண்க. (22) அங்கயற் கண்ணி தன்னையு மெந்தை யாலவா யானையு மிதய பங்கயத் திருத்திச் சமாதியி லிருந்து பரவச மடைந்துபார்ப் பதிக்குச் சங்கர னருளிச் செய்தசங் கிதையைத் தாரக னுடலிரண் டாகச் செங்கைவேல் விடுத்த சேவகனெனக்குத் தெருட்டினா னனையசங் கிதையில். (இ-ள்.) அங்கயற் கண்ணி தன்னையும் - அங்கயற்கண் ணம்மையையும், எந்தை ஆலவாயானையும் - எம் தந்தையாகிய திருவாலாவாயிறைவனையும், இதய பங்கயத்து - இருத்தி - இருதய கமலத்தில் இருத்தி, சமாதியில் இருந்து - சமாதி கூடி இருந்து, பரவசம் அடைந்து - பரவசப்பட்டு, பார்ப்பதிக்கு - உமையம்மை யாருக்கு, சங்கரன் அருளிச் செய்த சங்கிதையை - சிவபெருமான் அருளிச் செய்த சங்கர சங்கிதையை, தாரகன் உடல் இரண்டு ஆக - தாருகாசுரன் உடலானது இருகூறு ஆகும்படியாக, செம் கைவேல் விடுத்த - சிவந்த திருக்கரத்து வேற்படையை ஏவிய, சேவகன் - வீரனாகிய குமரவேள், எனக்குத் தெருட்டினான் - எனக்குத் தெளிவுபெற அருளிச் செய்தான்; அனைய சங்கிதையில் - அந்தச் சங்கிதையில் எ-று. சமாதியாவது இறைவனின் வேறாகாது தியானத்தில் அழுந்தி நிற்பது; ‘சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்பது’ என்பதனுரையில் ‘அதனைக் காண்கையாவது உயிர்தன் னவிச்சை கெட்டு அதனோடு ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல்; இதனைச் சமாதி யெனவும்..... கூறுப எனப் பரிமேலழகர் கூறியிருப்பது காண்க. பரவச மடைதல் - தன்வயமின்றி யிருத்தல். சமாதியிலிருந்து என்னும் எச்சம் இறுதிச் செய்யுளில், உணர்த்துவான் என்பது கொண்டு முடியும். சங்கிதையில் என்பதனை வருஞ் செய்யுளில், ஒன்று கூறப்பட்டுள்ளது என வருவித்து அதனுடன் முடிக்க. தாரகன் - சூரபன்மன்தம்பி. தாரகன் உடலைப் பிளந்த வரலாறு;- முருகக் கடவுளானவர் தேவர்களின் இடுக்கண் டீர்க்கப் படையுடன் புறப்பட்டுச் சூரபன் மனது நகர் நோக்கிச் செல்லும் வழியில் கிரவுஞ்சகிரி யெதிர்ப் பட்டது; அப்பொழுது நாரதர் அங்கு வந்து, கிரவுஞ்சன் என்னும் அசுரன் முனிவர்களுக்கு இடுக்கண் விளைத்து அகத்திய முனிவராற் சபிக்கப்பட்டு மலையாக விருத்தலையும், அம் மலையின் ஒருபாலுள்ள மாயநகரத்தில் சூரனுக் கிளையதாரகன் வசித்து வருதலையும் மலை வடிவாகிய கிரவுஞ்சனும், தாரகனும் புரியும் கொடுமைகளையும் கூறினர்; அப்பொழுது குமாரக் கடவுள் தமது வேலினை விடுத்துத் தாரகன் மார்பையும், கிரவுஞ்சாவற்றையும் பிளந்தருளினர் என்பது. இதனைக் கந்தபுராணத்து தராகன் வதைப் படலத்திற் காண்க. (23) பெறற்கருந் தவஞ்செய் தகந்தெளிந் தரிதிற் பெறுங்கதி கேட்பவர்க் கெளிதாய் உறப்படுந் தலநீர் வினாயமுச் சிறப்பு முள்ளதெத் தலத்தினுங் கழிந்த சிறப்பினாங் கெண்ணெண்டிருவிளை யாடல் செய்தருள் வடிவெடுத் தென்றும் மறைப்பொருள் விளங்கு மாலவா யதனை மண்ணின்மேற் சிவனுல கென்னும். (இ-ள்.) பெறற்கு அருந்தவம் செய்து - பெறுதற்கு அரிய தவஞ்செய்து, அகம் தெளிந்து - மனந்தெளிந்து, அரிதில் பெறும் - அரிதாகப் பெறப்படும், கதி - வீடானது, கேட்பவர்க்கு - கேட்கின்ற வர்களுக்கு, எளிதாய் உறப்படும் தலம் - எளிதாக அடைதற்குரிய தலமாகவும், நீர் வினாய முச்சிறப்பும் உள்ளது - நீவிர்கேட்ட மூன்று வகைச் சிறப்புமுள்ளதாகவும் (ஒன்று கூறப்பட்டுள்ளது; அது), எத்தலத்தினும் - மற்றெந்தத் தலங்களினும், கழிந்த - மேம்பட்ட, சிறப்பின் - சிறப்பினையுடைய, மறைப்பொருள் - வேதப் பொருளாகிய இறைவன், அருள் வடிவு எடுத்து - அருட்டிருமேனி கொண்டு, என் எண் திருவிளையாடல் செய்து - அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் புரிந்து, என்றும் விளங்கும் - எப்பொழுதும் வீற்றிருப்பதற்கிடமாயுள்ள, ஆலவாய் - திருவாலவாயாகும்; அதனை - அத்திருப்பதியை, மண்ணின் மேல் சிவனுலகு என்னும் - நிலவுலகிலுள்ள சிவலோகமென்று உலகங் கூறும் எ-று. எளிதாய்: எச்சத்திரிபு. வினாவிய என்பது விகாரமாயிற்று. ஒன்று கூறப்பட்டுள்ளது, அது என்பன வருவிக்கப்பட்டன. கழிந்த; மிகுதிப் பொருள்தரும் கழியென்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்தது. கழிந்த சிறப்பின் ஆலவாய் என வியையும். ஆங்கு : அசை. உலகம் என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது. (24) அத்தலத் தனைய மூவகைச் சிறப்பு மளவிலா வுயிர்க்கெலாங் கருணை வைத்தவன் செய்த திருவிளை யாட்டும் வரையுரங் கிழியவே லெடுத்த வித்தக னெனக்கு விளம்பிய வாறே விளம்புவ னுமக்கென வந்த உத்தம முனிவர் யாவருங் கேட்க வுணர்த்துவான் கடலெலா முண்டான். (இ-ள்.) அத்தலத்து - அந்தத் தலத்தின்கன், அனைய மூவகைச் சிறப்பும் - தலம் தீர்த்தம் மூர்த்தி என்னும் அந்த மூன்று வகைச் சிறப்புக்களையும், அளவு இலா உயிர்க்கு எலாம் - அளவிறந்த எல்லா வுயிர்களிடத்தும், கருணை வைத்தவன் - அருள் வைத்துள்ள வனாகிய இறைவன், செய்த திருவிளையாட்டும் - செய்தருளிய திருவிளையாடல்களையும், வரை உரம் கிழிய - கிரவுஞ்ச மலையின் மார்பு கிழியும்படி, வேல் எடுத்த -வேற்படையை ஏந்திய, வித்தகன் - ஞான சொரூபனாகிய குமரவேள், எனக்கு விளம்பியவாறே - எனக்குக் கூறிய வண்ணமே, உமக்கு விளம்புவன் என - உங்களுக்குக் கூறுவேன் என்று, கடல் எலாம் உண்டான் - கடல் நீர் முற்றும் பருகிய குறுமுனிவன்: அந்த உத்தம முனிவர் யாவரும் கேட்க உணர்த்துவன் - அந்தச் சிறந்த முனிவர்களெல்லாரும் கேட்கும்படி சொல்வானாயினான் எ-று. சிறப்பும், திருவிளையாட்டும் உணர்த்துவான் என்க. வித்தகன் - சதுரப்பாடுடையவன்: ஞானி. கேட்க - செவியேற்க. மேலே பதினாறாஞ் செய்யுளில் விதியினிற் புகல்கின்றனன் வியாதன் மாணாக்கன் என்று கூறிவைத்து, பின்பு அகத்தியன் முனிவர்கட்கு உரைப்பதாக முழுதும் கூறப்படுகின்றது: ஆகலின் அறுபத்து நான்காவது திருவிளையாடலின் முடிபில், என அகத்தியன் முனிவர்கட்குக் கூறினான் எனத் திருக்கைலையில் சிவ தீர்த்தத்தின் மருங்குள்ள ஆயிரக்கால் மண்டபத்திலிருந்து சூதமுனிவன் அங்கே கூடியிருந்த மாதவர்கட்குக் கூறிப் பின் அம்முனிவர்கள் அகத்தியனுடன் வந்து அருச்சித்துப் பேறு பெற்றதனையும் அருளிச் செய்தனன் என வருவித் துரைத்துக் கொள்க. (25) ஆகச் செய்யுள் - 231 தலவிசேடப் படலம் (அறுசீரடியாசிரியவிருத்தம்) நாட்டமொரு மூன்றுடைய நாயகனுக் கன்புடையீர் நயந்து நீவிர் கேட்டதல மீண்டுரைத்த திருவால வாயதனுட் கிளைத்துப் பொன்னந் தோட்டலர்தா மரைமுளைத்த தொருதடமுஞ் சுந்தரச்செஞ் சோதி ஞான ஈட்டமென முளைத்தசிவ லிங்கமொன்று முள1வின்னு மிசைப்பக் கேண்மின். (இ-ள்.) நாட்டம் ஒரு மூன்று உடையநாயகனுக்கு - ஒருமூன்று கண்களையுடைய தலைவனாகிய சிவபெருமானிடத்து, அன்பு உடையீர் - அன்புடைய முனிவர்களே, நயந்து நீவிர் கேட்ட தலம் - நீங்கள் விரும்பிக் கேட்ட பதி, ஈண்டு உரைத்த திருவாலவாய் - இப்பொழுது கூறிய திருவாலவாயாகும், அதனுள் - அப்பதி யின்கண், கிளைத்து - நிறைந்து, பொன் அம் தோடு அலர் - பொன்போலும் அழகிய இதழ்களையுடைய விரிந்த, தாமரை முளைத்தது - தாமரை முளைக்கப் பெற்றதாகிய, ஒருதடமும் - ஓர் தடாகமும், சுந்தரம் - அழகிய, செம் சோதி - சிவந்த ஒளிவடிவான, ஞான ஈட்டம் என - ஞானத்திரட்சி என்று சொல்லும்படி, முளைத்த - தோன்றிய, சிவலிங்கம் ஒன்றும் - ஒர் சிவலிங்கமும், உள - உள்ளன: இன்னும் இசைப்பக் கேண்மின் - இன்னுஞ் சொல்லக் கேளுங்கள் எ-று. நாட்டம், அம்: கருவிப் பெயர் விகுதி. ஒரு மூன்றென்பது வழக்கு. (1) திருவால வாய்க்கிணையா மொருதலமுந் தெய்வமணஞ் செய்யப் பூத்த மருவார்பொற் கமலநிகர் தீர்த்தமுமத் தீர்த்தத்தின் மருங்கின் ஞான உருவாகி யுறைசோம சுந்தரன்போ லிகபரந்தந் துலவா வீடு தருவானு முப்புவனத் தினுமில்லை யுண்மையிது சாற்றின் மன்னோ. (இ-ள்.) திருவாலவாய்க்கு இணை ஆம் ஒரு தலமும் - திருவாலவாய்க்கு நிகராகிய ஒரு பதியும், தெய்வமணம் செய்ய - தெய்வமணம் வீசும்படி, பூத்த - மலர்ந்த, மரு ஆர் - மணம் நிறைந்த, பொற்கமலம் நிகர் தீர்த்தமும் - பொற்றாமரையை நிகர்த்த ஒரு தீர்த்தமும், அத்தீர்த்தத்தின் மருங்கில் - அந்தத் தீர்த்தத்தின் பக்கத்தில், ஞான உரு ஆகி உறை - ஞான வடிவாய் எழுந்தருளி யிருக்கின்ற, சோமசுந்தரன்போல் - சோமசுந்தரக் கடவுளைப்போல, இகபரம் தந்து - (உயிர்களுக்கு) இம்மை மறுமைப் பயன்களை அளித்து, உலவா வீடு தருவானும் - அழியாத வீட்டுலகைத் தருகின்ற வனும், முப்புவனத்திலும் இல்லை - மூன்றுலகத்திலும் இல்லை; சாற்றின் - சொல்லுமிடத்து, இது உண்மை - இது சத்தியம் எ-று. தெய்வமணம் - திப்பியமணம். பொற்கமலம் - தீர்த்தத்தின் பெயர்; பூத்த மருவார் என்னும் அடைகள் தாமரைக்கு. சோம சுந்தரன் - உமையுடன் கூடிய அழகன்; பெயர். மன், ஓ;அசை. (2) அவ்வகைய மூன்றின்முதற் றலப்பெருமை தனைச்சுருக்கி யறையக் கேண்மின் எவ்வகைய வுலகத்துந் தருமதல மதிகமவற் றீறி லாத சைவதல மதிகமவற் றறுபத்தெட் டதிகமவை தமிலீ ரெட்டுத் தெய்வதல மதிகமவற் றதிகதல நான்கவற்றைச் செப்பக் கேண்மின். (இ-ள்.) அவ்வகைய மூன்றில் - அத் தன்மையை யுடைய மூன்றனுள், முதல் - முதற்கண், தலப்பெருமைதனை - தல விசேடத்தை, சுருக்கி அறையக்கேண்மின் - சுருக்கிச் சொல்லக் கேளுங்கள்; எவ்வகைய உலகத்தும் - எத்தன்மையுடைய உலகத்திலும், தரும தலம் அதிகம் - புண்ணியத் தலங்கள் உயர்ந்தன; அவற்று - அப்புண்ணியத் தலங் களுள், ஈறு இலாத - அழிவில்லாத, சைவதலம் அதிகம் - சிவத்தலங்கள் உயர்ந்தன; அவற்று - அப்பதிகளுள், அறுபத்தெட்டு அதிகம் - அறுபத்தெட்டுத் தலங்கள் உயர்ந்தன; அவைதமில் - அவ்வறுபத்தெட்டனுள், ஈர் எட்டுத் தெய்வதலம் அதிகம் - பதினாறு சிவத்தலங்கள் உயர்ந்தன; அவற்று - அப்பதினாறனுள், நான்கு தலம் அதிகம் - நான்கு பதிகள் உயர்ந்தன; அவற்றைச் செப்பக கேண்மின் - அந்நான்கனையுஞ் சொல்லக் கேளுங்கள் எ-று. தருமதலம் முதலியன வடசொற் றொடராகலின் ஒற்று மிகாவாயின. அவற்றுள் என உருபு விரிக்க. நான்கு தலம் அதிகம் எனமாற்றப்பட்டது. (3) அன்னமலி வயற்புலியூர் காசிநகர் காளத்தி யால வாயாம் இன்னவளம் பதிநான்கிற் றிருவால வாயதிக மெவ்வா றென்னின் மின்னவிரம் பலங்காணக் காசிநகர் வதிந்திறக்க வியன்கா ளத்திப் பொன்னகரம் பத்தியினால் வழிபாடு செயவளிக்கும் போகம் வீடு. (இ-ள்.) அன்னம் மலிவயம் புலியூர் - அன்னப் பறவைகள் நிறைந்த வயல்களையுடைய சிதம்பரமும், காசி நகர் - காசிப்பதியும், காளத்தி - சீகாளத்தியும், ஆலவாய் ஆம் - திருவாலவாயும் ஆகும்; இன்ன வளம்பதி நான்கில் - இந்த அழகிய திருப்பதி நான்கனுள், திருவாலவாய் அதிகம் - திருவாலவாயே உயர்ந்தது; எவ்வாறு என்னின் - எப்படி என்றால், மின் அவிர் - ஒளி விளங்குகின்ற, அம்பலம் காண - சிதம்பரந் தரிசித்தலானும், காசிநகர் வதிந்து இறக்க - காசிப் பதிதங்கி இறத்தலானும், வியன் காளத்தி - பெருமை பொருந்திய சீகாளத்தியாகிய, பொன் நகரம் - அழகிய நகரமானது, பத்தியினால் வழிபாடு செய - அன்போடு வழிபடுதலானும், போகம் வீடு அளிக்கும் - போகத்தையும் வீட்டையுங் கொடுக்கும் எ-று. அவையென வருவித்து ஆம் என்பதனோடு முடிக்க. இன்ன; சுட்டு. வளம்பதி; மெலித்தல் விகாரம். அம்பலம் முதலியன அளிக்கு மென்க. செயவெனெச்சங்கள் காரணப் பொருளன. எண்ணும்மை விரிக்க. வருஞ் செய்யுளோடு சேர்த்துப் பொருள் கொள்க. (4) அறந்தழையுந் திருவால வாய்கேட்ட வுடன்போக மளிக்கு மீண்டு பிறந்திறவாப் பேரின்பக் கதியளிக்கு மிதுவன்றிப் பிறழா தெங்கும் நிறைந்தபர னெத்தலமும் படைப்பானித் தலத்தைமுத னிருமித் திங்ஙன்1 உறைந்தருளி னானன்றி யின்னமுள திதன்பெருமை2 யுரைப்பக் கேண்மின். (இ-ள்.) அறம் தழையும் - அறங்கள் மிகுகின்ற, திருவாலவாய்- திருவாலவாயானது, கேட்ட உடன் போகம் அளிக்கும் - கேட்ட பொழுதே போகத்தைக் கொடுக்கும், மீண்டு - பின், பிறந்து இறவாப்பேர் இன்பக் கதி அளிக்கும் - தோன்றி அழியாத பேரின்ப வீட்டையுங்கொடுக்கும்; இது அன்றி - இதுவல்லாமல், பிறழாது - தவறாமல், எங்கும் - எவ்விடத்தும், நிறைந்தபரன் - நிறைந்துள்ள இறைவன், எத்தலமும் படைப்பான் - எல்லாத் தலங்களையும் படைக்கும் பொருட்டு, இத் தலத்தை முதல்நிருமித்து - இத்திருவாலவாயை முதலிற்படைத்து, இங்ஙன் உறைந்தருளினான் - இவ்விடத்தில் இருந்தருளினான்; அன்றி- அல்லாமல், இதன் பெருமை இன்னம் உளது உரைப்பக் கேண்மின் - இதன் பெருமை இன்னு முண்டு சொல்லக் கேளுங்கள் எ-று. தழையும் - தழைதற்குக் காரணமான எனினுமாம். கேட்டவுடன் - தன் பெயர் செவியுறப் பெற்றவுடனே; விரும்பியவுடனுமாம். மீண்டு-மீள, அதன்பின்; மீண்டு பிறந்தெனலுமாம். பிறந்திறவாமை யாகிய கதி யென்க. (5) திருவால வாயென்று கேட்டவரே யறம்பெறுவர் செல்வ மோங்குந் திருவால வாயென்று நினைத்தவரே பொருளடைவர் தேவ தேவன்3 திருவால வாயதனைக் கண்டவரே யின்பநலஞ் சேர்வ ரென்றுந் திருவால வாயிடத்து வதிந்தவரே பரவீடு சேர்வ4 ரன்றே. (இ-ள்.) திருவாலவாய் என்று கேட்டவரே - திருவாலவா யென்று ஒருவர் சொல்லக் கேட்டவர்களே, அறம் பெறுவர் - அறத்தையடைவர்; செல்வம் ஓங்கும் - செல்வமிகுந்த, திருவாலவாய் என்று நினைத்தவரே - திருவாலவாயென்று சிந்தித்தவர்களே, பொருள் அடைவர் - பொருளைப் பெறுவர்; தேவதேவன் - தேவர்களுக்குத் தேவனாகிய சோமசுந்தரக் கடவுளின், திருவாலவாய் அதனைக் கண்டவரே - திருவாலவாயைப் பார்த்தவர்களே; இன்பநலம் சேர்வர் - இன்பமாகிய நன்மையை அடைவர்; என்றும் - எப்போதும்; திருவாலவாய் இடத்து வதிந்தவரே - திருவாலவாயின்கண் உறைந் தவர்களே, பரவீடு சேர்வர் - மேலான வீட்டுலகை அடைவார்கள் எ-று. கேட்டல் முதலியன முறையே அறம் முதலிய நாற்பொருளும் பயக்குமென்றார். ஏகாரம்; பிரிநிலையும் தேற்றமுமாம். பரவீடு - பரமுத்தியுமாம். அன்று, ஏ; அசை. (6) சுரநதிசூழ் காசிமுதற் பதிமறுமைக் கதியளிக்குந் தூநீர் வையை வரநதிசூழ் திருவால வாய்சீவன் முத்திதரும் வதிவோர்க் கீது திரனதிகம் பரகதியும் பின்கொடுக்கு மாதலினிச் சீவன் முத்தி புரனதிக மென்பதெவ னதற்கதுவே யொப்பனமெப் புவனத் துள்ளும். (இ-ள்.) சுரநதி சூழ் - கங்கையாறு சூழ்ந்த, காசிமுதல் பதி - காசி முதலிய பிறபதிகள், மறுமைகதி அளிக்கும் - மறுமையில் வீட்டுலகைக் கொடுக்கும்; தூநீர் வையை வரநதிசூழ் - தூய்மையான நீரினையுடைய வையையாகிய சிறந்த ஆறு சூழ்ந்த, திருவாலவாய் - திருவாலவாயானது, வதிவோர்க்கு சீவன் முத்தி தரும் - வசிப்பவர் களுக்குச் சீவன் முத்தியைக் கொடுக்கும்; ஈது அதிகம் திரன் - இது மிகுந்த உறுதி, பின் பரகதியும் கொடுக்கும் - மறுமையில் வீட்டுலகையும் கொடுக்கும், ஆதலின் - ஆதலால், இச்சீவன் முத்திபுரம் அதிகம் என்பது எவன் - இத்திருவாலவாய் சிறந்தது என்பது என்னை, எப்புவனத் துள்ளும் - எல்லா உலகத்தின் கண்ணும், அதற்கு அதுவே ஒப்பு ஆம் - அதற்கு அதுவே நிகர் ஆகும் எ-று. கங்கை வானினின்று வந்தமையால் சுரநதி எனப்பட்டது. வரம் - மேன்மை. மறுமை - மறுபிறப்பு. இம்மையிலே சீவன் முத்திதரு மென்க; அதனாற் சீவன் முத்திபுரம் என்பது பெயர். திரன் - ஒருதலை. எவன் - என்னை; கூறுதல் வேண்டா என்றபடி. ‘அதற்கு அதுவே யொப்பு’ என்பது சந்திராலோக முடையாரால் இயைபின்மையணி என்றும், தண்டியலங்கார முடையாரால் பொதுநீங்குவமை யென்றும் கூறப்படும். (7) ஆதலினிப் பதிவிட்டுப் பிறபதியிற் போய்நோற்போ ரங்கை கொண்ட சீதளவா னமுதேய்ப்பத் தித்திக்கத் தேம்பெய்து செய்த தீம்பால் ஓதனத்தைக் கைவிட்டுப் புறங்கையை1 நக்குவா ரொப்பா ரிந்த மாதலத்தின் பெருமைதனை யாவரே யளவிட்டு வழுத்தற் பாலார். (இ-ள்.) ஆதலின் - ஆதலால், இப்பதிவிட்டு - இப்பதியி லிருந்து தவஞ்செய்தலை ஒழித்து, பிறபதியில் போய் நோற்போர் - வேறு பதிகளிற் சென்றிருந்து தவஞ்செய்வார், அங்கை கொண்ட - உள்ளங்கையிற் பெற்ற, சீதளம் - குளிர்ந்த, வான் அமுது ஏய்ப்ப - தேவாமு தத்தை - ஒக்க, தித்திக்க - சுவைதர, தேம் பெய்து செய்த - தேனைச் சொரிந்து செய்த, தீம்பால் ஓதனத்தை - இனிய பாற் சோற்றை, கைவிட்டு - தவறவிட்டு, புறம் கையை நக்குவார் ஒப்பார் - புறங்கையை நக்குவாரை ஒப்பார்கள். இந்த மாதலத்தின் பெருமைதனை - இந்தப் பெருமை பொருந்திய பதியின் சிறப்பை, அளவிட்டு வழுத்தற் பாலார் யாவர் - வரை யறுத்துக் கூறும் பகுதியையுடையார் யாவர் (ஒருவருமில்லை என்றபடி) எ-று. அங்கை-அகங்கை. ஏய்க்குமாறு தித்திக்க வென்க; ஏய்ப்பச் செய்த வென்னலுமாம். தேன் தேம் எனத் திரிந்தது. புறங்கையை நக்குதல் பழமொழி. வழுத்தல் - ஈண்டுக் கூறுதலென்னும் பொருட்டு; புகழ்தலுமாம். (8) மற்றைய தலங்க டம்மிற் பரிமகம் வாச பேயம் அற்றமில் சோட சாக மக்கினிட் டோமம் யார்க்கும் முற்றரு மிராச சூய முதன்மக முடித்த பேறுஞ் செற்றமி றரிச2 பூர்ண முதலிட்டி செய்த பேறும். (இ-ள்.) மற்றைய தலங்கள் தம்மில் - பிறபதிகளில், பரிமகம் - அசுவமேதமும், வாசபேயம் - வாசபேயமும், அற்றம் இல் சோட சாகம் - குற்றமில்லாத சோடசாகமும், அக்கினிட்டோமம் - அக்கினிட் டோமமும், யார்க்கும் முற்று அரும் - எவருக்கும் முடித்தற்கரிய, இராச சூயம் முதல் மகம் முடித்த பேறும் - இராச சூயமும் முதலிய பல வேள்விகளை முடித்தலால் வரும் பயனும், செற்றம் இல் - வருத்த மில்லாத, தரிச பூர்ணம் முதல் இட்டி செய்த பேறும் - தரிச பூர்ணம் முதலிய பல இட்டிகளைச் செய்தலால் வரும் பயனும் எ-று. திவாகரத்தினும் பிங்கலத்தினும் பதினெண் வகை வேள்விகள் கூறப்பட்டுள. மாற்றரசர்களை வென்று திறைகொண்டு செய்யப் படுவதாகலின், முற்றருமிராச சூயம் என்றார். பெருமை சிறுமை நோக்கி மகம் இட்டி யென வேறு பிரித்தோதினார். தரிசமும் பூர்ணமும் என இரண்டாக்கி யுரைப்பாரு முளர். முடித்த, செய்த என்னும் பெயரெச்சங்கள் காரணப்பொருளில் வந்தன. (9) எள்ளிழு தன்னங் கன்னி யிவுளிதே ரியானை யில்லம் வெள்ளியான் பொன்பூ ணாடை விளைவொடு பழன முன்னாத் தள்ளரு மடிமை யாதி தானங்கள் செய்த பேறும் வள்ளறன் காசி யாதிப் பதிகளில் வதிந்த பேறும். (இ-ள்.) எள் இழுது அன்னம் கன்னி - எள்ளும் நெய்யும் சோறும் கன்னியும், இவுளி தேர் யானை இல்லம் - குதிரையும் தேரும் யானையும் வீடும், வெள்ளி ஆன் பொன் பூண்ட ஆடை - வெள்ளியும் பசுவும் பொன்னும் அணிகலனும் ஆடையும், விளைவொடு பழனம் - விளைவோடு கூடிய வயலும், முன்னா - முதலாகவும், தள் அரும் அடிமை ஆதி - நீக்குதற் கரிய அடிமை முதலாகவுமுள்ள, தானங்கள் செய்தபேறும் - தானங்களைச் செய்தலினால் வரும்பயனும், வள்ளல்தன் காசியாதி - சிவபிரான் எழுந்தருளியிருக்கும் காசி முதலிய, பதிகளில் வதிந்த பேறும் - தலங்களில் வசித்தலால் வரும் பயனும் எ-று. எள்ளிழுது - எண்ணெயுமாம். முன்னா - முதலாக; முன்னித் தள்ளரும் என உரைப்பாருமுளர். (10) கங்கைகா ளிந்தி வாணி காவிரி கண்ண வேணி துங்கபத் திரிதீம் பாலி தூயதண் பொருநை முன்னாச் சங்கையி னதிகள் முற்று மாடிய தவத்தின் பேறும் மங்கல மதுரை தன்னில் வைகலும் வதிவோர்க் கெய்தும். (இ-ள்.) கங்கை காளிந்தி வாணி காவிரி கண்ணவேணி - கங்கையும் காளிந்தியும் சரசுவதியும் காவிரியும் கிருட்டிணையும், துங்கபத்திரை தீம்பாலி தூயதண் பொருநை முன்னா - துங்கபத் திரையும் இனிய பாலியும் தூய்மையான குளிர்ந்த தாமிரபன்னியும் முதலாக உள்ள, சங்கை இல் நதிகள் முற்றும் - அளவிறந்த நதிகள் முழுதினும், ஆடியதவத்தின் பேறும் - நீராடிய தவத்தினால் வரும் பயனும் (ஆகிய இவையனைத்தும்), மங்கலம் மதுரை தன்னில் - நன்மையுடைய மதுரைப்பதியில், வைகலும் வதிவோர்க்கு எய்தும் - நாள்தோறும் வசிப்பவர்களுக்கு உண்டாகும் எ-று. காளிந்தி - யமுனை. கண்ணவேணி - கிருஷ்ணை; பாகதச் சிதைவு. தீம்பாலி;பாலிக்கு அடை. நீராடுதல் தாபதப் பக்கத்து ளொன்றாகலின் ஆடிய தவம் என்றார். (11) அன்னிய தலங்க டம்மி லாற்றிய பிரம கத்தி பொன்னினைக் களவு செய்தல் கள்ளுண்டல் புனித வாசான் பன்னியைப் புணர்த லின்ன பாதக மனைத்து மென்றுந் தன்னிக ரால வாயில் வதிபவர் தமைவிட் டேகும். (இ-ள்.) அன்னிய தலங்கள் தம்மில் - வேறு பதிகளில், ஆற்றிய - புரிந்த, பிரமகத்தி - பிரமகத்தியும், பொன்னினைக் களவு செய்தல் - பிறர் பொருளைத் திருடுதலும், கள்ளுண்டல் - கள்ளுண்ணலும், புனித ஆசான் பன்னியைப் புணர்தல் - தூய்மையான குரவன் மனைவியைக் கூடுதலுமாகிய, இன்ன பாதகம் அனைத்தும் - இந்தப் பாவங்கள் எல்லாம், தன் நிகர் ஆலவாயில் - தனக்குத் தானே ஒத்த திருவாலவாயின்கண், என்றும் வதிபவர் தமை விட்டு ஏகும் - எந்நாளும் வசிப்பவர்களை விட்டு நீங்கும் எ-று. இச் செய்யுளிற் கூறியவை பெரும் பாதகங்க ளென்பதனை, “ மறையவர்ச் செகுத்தோன் கடிமது நுகர்ந்தோன் வயங்குசெம் பொற்கள வாண்டோன் நிறையருட் குரவன் பன்னியைப் புணர்ந்தோ னிகரிலிக் கொடியரை யாரும் அறைவரான் மாபா தகரென விவரை யடுத்தொரு வருடநட் டவரும் முறைதவிர் மாபா தகர்களே யென்ன மொழிவதற் கையமொன் றின்றே””” என்னும் சூதசங்கிதையானு மறிக. இத் தலத்தின் பெருமை கூறுவார் வதிபவர் தமை விட்டேகும் என்றார். (12) மற்றைய தலத்திற் சாந்தி ராயண மதியந் தோறும் உற்றபே றிங்குக் கங்கு லுண்டியா லடைபே றாகும் மற்றைய தலத்தின் மாதப் பட்டினிப் பலத்தின் பேறிங் குற்றொரு வைக லுண்டி யொழிந்தவர் பெறும்பே றாகும். (இ-ள்) மற்றைய தலத்தில் - பிற பதிகளில், மதியம்தோறும் - மாதந்தோறும், சாந்திராயணம் உற்ற பேறு - சாந்திராயண விரதம் நோற்றலால் வரும் பயன், இங்கு கங்குல் உண்டியால் அடை பேறு ஆகும் - இப்பதியில் இரவில் உண்ணுதலால் அடைகின்ற பயன் ஆகும்: மற்றைய தலத்தில் - ஏனைய தலங்களில், மாதப்பட்டினி பலத்தின் பேறு - மாதப்பட்டினி விரதத்தால் வரும் பயன், இங்கு உற்று ஒரு வைகல் உண்டி ஒழிந்தவர் - இத்தலத்திலிருந்து ஒருநாள் உணவு நீங்கியவர், பெறும்போது ஆகும் - அடைகின்ற பயன் ஆகும் எ-று. மற்றையவாகிய தலங்களென்க. சாந்திராயணமாவது, சந்திரன் கலை வளருந்தோறும் ஒவ்வொரு கவளம் உயர்த்தும், குறையுந் தோறும் ஒவ்வொரு கவளம் குறைத்தும் உணவுண்டு நோற்கும் விரதம். மதியம் அம் சாரியை; அசையும் என்ப. கங்குலுண்டி - கங்குலில் மாத்திரம் உணவு கொள்ளும் நோன்பு. பட்டினி - உபவாசம். பலம் என்றது ஈண்டு விரதமென்னும் பொருளது. ஒருநாள் உபவாச நோன்புற்றோர் அடையும் பயன் ஆகும். (13) அயனக ரடைந்து நான்கு திங்கணோன் பாற்றும் பேறிவ் வியனக ரடைந்து நோற்கு மட்டமி விரத நல்கும் அயனக ரெய்தி யாறு திங்கணோன் பாற்றும் பேறிவ் வியனகர்ச் சோம வார விரதமே யளிக்கு மன்றே. (இ-ள்.) அயல் நகர் அடைந்து - வேறு பதிகளிற் சென்று, நான்கு திங்கள் - நான்கு மாதங்கள், நோன்பு ஆற்றும் பேறு - விரதங்கொள்ளுதலினால் வரும் பயன், இவ்வியன் நகர் அடைந்து - இந்த உயர்ந்த பதியைச் சார்ந்திருந்து, நோற்கும் அட்டமி விரதம் நல்கும் - புரிகின்ற அட்டமி விரதம் கொடுக்கும்; அயல் நகர் எய்தி - பிற தலங்களிற்போய், ஆறு திங்கள் - ஆறு மாதங்கள், நோன்பு ஆற்றும் பேறு - விரதம் இயற்றுதலினால் வரும் பயனை, இவ்வியன் நகர் - இச் சிறந்த பதியிலிருந்து நோற்கின்ற, சோமவார விரதமே அளிக்கும் - சோமவார விரதம் ஒன்றுமே நல்கும் எ-று. அன்று, ஏ:அசை (14) ஏனைய தலத்தி லோராண் டுணவொழிந் தியற்று நோன்பால் ஆனபே றிங்கு நோற்குஞ் சிவனிரா வளிக்கு மிங்கே ஊனவைம் பொறியும் வென்றோன் முன்பொழு துண்டு வைகித் தானமர்ந் தாலுங் காலுண் டியற்றுமா தவத்தோ னாகும். (இ-ள்.) ஏனைய தலத்தில் - பிற பதிகளில், ஓர் ஆண்டு - ஒரு வருடம், உணவு ஒழிந்து - உணவின்றி, இயற்றும் நோன்பால் ஆனபேறு - செய்கின்ற விரதத்தால் வரும்பயனை, இங்கு நோற்கும் சிவன் இரா அளிக்கும் - இப்பதியிற் புரிகின்ற சிவராத்திரி விரதம் ஒன்றுமே நல்கும்; இங்கு - இப்பதியில், ஊன் ஐம்பொறியும் வென்றோன் - குற்றமுள்ள ஐம்பொறிகளையும் வென்றவன், முப்பொழுது உண்டு வைகி அமர்ந்தாலும் - மூன்று வேளையும் உண்டு இருந்தானாயினும், கால் உண்டு இயற்று மாதவத்தோன் ஆகும் - காற்றை உண்டு நோற்கின்ற பெரிய தவத்தை யுடை யோனாகும் எ-று. முப்பொழுதும் என்னும் உம்மை தொக்கது. தான்:அசை. காற்றினை யுண்டு தவம்புரிதலை, “ புற்று மாய்மர மாய்ப்புனல் காலே யுண்டியா யண்ட வாணரும் பிறரும் வற்றி யாருநின் மலரடி காணா மன்ன! வென்னையோர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய் ””” என்னும் திருவாசகத்தா னறிக. (15) இந்தநான் மாட மோங்கு மாலவா யிடத்தியா ரேனும் அந்தணர் தமக்கோர் முட்டி யருந்தவர் தமக்கோர் பிச்சை தந்தவர் புறம்பு செய்த சோடச தானந் தம்மால் வந்தபே றடைவர் பல்வே றுரைப்பதென் மதியான் மிக்கீர். (இ-ள்.) மதியால் மிக்கீர் - அறிவால் உயர்ந்த முனிவர்களே, இந்த நால் மாடம் ஓங்கும் ஆலவாய் இடத்து - இந்த நான் மாடமாகிய சிறந்த திருவாலவாயின்கண், அந்தணர் தமக்கு ஓர் முட்டி - அந்தணர் கட்கு ஒரு பிடி அரிசியாவது, அருந்தவர் தமக்கு ஓர் பிச்சை - செய்தற்கரிய தவத்தை யுடையார்க்கு ஒரு பிடி அன்னமாவது, தந்தவர் யாரேனும் - கொடுத்தவர்கள் யாவராயினும், புறம்புசெய்த - வேறு இடங்களில் செய்யப்பட்ட, சோடச தானம் தம்மால் வந்தபேறு அடைவர் - சோடச தானத்தால் வரும் பயனைப் பெறுவர் (ஆயின்), பல்வேறு உரைப்பது என்-பல வேறு வகைப்படக் கூறுவது என்னை; (கூறவேண்டா) எ-று. நான் மாடக் கூடல் என்னும் பெயர் கடைகுறைந்து நின்றது. நான் மாடம் ஓங்கிய என்னலுமாம்: முட்டி - கைவிரல்களை மடக்கி யிருப்பது. அரிசி, அன்னமென்பன கொள்க. சோடச தானம் - பதினாறு வகைத் தானம். தம்: சாரியை. உரைப்பது: தொழிற்பெயர். முற்கூறிய வாற்றானே பெறப்படு மென்பார் உரைப்பதென் என்றார், (16) பல்வகைத் தலங்க ளெல்லாம் வைகிய பயனு மென்றும் பல்வகைத் தீர்த்த மெல்லா மாடிய பயனு மென்றும் பல்வகைத் தான மெல்லா நல்கிய பயனு மென்றும் பல்வகைத் தான பூசை பண்ணிய தவத்தின் பேறும். (இ-ள்.) பல் வகைத் தலங்கள் எல்லாம் வைகிய பயனும் - பல வகையான பதிகளிலெல்லாம் வசித்தலால்வரும் பயன்களும், என்றும் - எப்போதும், பல்வகைத் தீர்த்தம் எல்லாம் ஆடிய பயனும் - பலவகையான தீர்த்தங்களனைத்திலும் நீராடியதனால் வரும் பயன்களும், என்றும் - எந்நாளும், பல்வகைத் தானம் எல்லாம் நல்கிய பயனும் - பலவகையான தானங்களனைத்தும் செய்தமையால் வரும் பயன்களும், என்றும் - எக்காலத்தும், பல் வகைத்து ஆன பூசை பண்ணிய தவத்தின் பேறும் - பல வகைகளை யுடையதாகிய பூசையைச் செய்ததவத்தால் வரும் பயன்களும் எ-று. வகைத்து-து: பகுதிப்பொருள் விகுதியுமாம். பூசையே தவமென்பார் ‘பூசைபண்ணிய தவம்’ என்றார். (17) பல்வகைத் தவங்க ளெல்லா முற்றிய பயனுந் தூய பல்வகை மந்தி ரத்தி லெய்திய பயனு நூலின் பல்வகைக் கேள்வி யெல்லா மாய்ந்துணர் பயனும் யோகம் பல்வகை ஞான மெல்லாம் பயின்றுணர்ந் தடங்கும் பேறும். (இ-ள்.) பல்வகைத்தவங்கள் எல்லாம் - பலவகையானதவங்கள் முழுதும், முற்றிய பயனும் - செய்து முடித்தலால் வரும் பயன்களும், தூய - புனிதமான, பல்வகை மந்திரத்தில் எய்திய பயனும் - பலவகையான மந்திரங்களைச் செபித்தலால் வரும் பயன்களும், பல்வகை - பலவகையான, நூலின் கேள்வி எல்லாம் - நூற்பொருள் கேட்டவற்றையெல்லாம், ஆய்ந்து உணர் பயனும் - ஆராய்ந்து உணர்ந்ததனால் வரும் பயன்களும், பல்வகை யோகம் ஞானம் எல்லாம் பயின்று - பலவகையான யோகங்கள் ஞானங்களெல்லாம் பழகி, உணர்ந்து - மெய்ப்பொருளை யறிந்து, அடங்கும் பேறும் - தற்போதம் அடங்கியிருத்தலால் வரும் பயன்களும் (ஆகிய இவையனைத்தையும்) எ-று. பல்வகை யோகமும் ஞானமுமெல்லாமென்க. யோகம் பயின்று ஞானமுணர்ந்து என நிரனிறையுமாம். (18) அனையதொல் பதியி லென்றும் வைகுவோ ரடைவ ரென்றால் இனையதொல் பதிக்கு நேர்வே றில்லையிப் பதியின் மேன்மை தனையறி பவரா ரீசன் றானன்றி1 யாத லாலே வினையைவெல் பவரங் கெய்தி வதிவதே வேண்டு மாதோ. (இ-ள்.) அனைய தொல்பதியில் - அந்தப் பழமையான ஆலவாயின்கண், என்றும் வைகுவோர் அடைவர் என்றால் - எந்நாளும் வசிப்போர் அடைவாரென்னின், இனைய தொல்பதிக்கு - இப்படிப்பட்ட பழம் பதிக்கு, நேர் வேறு இல்லை - ஒப்பு வேறோர் பதியுமில்லை; இப் பதியின் மேன்மைதனை - அத் தலத்தின் பெருமையை, ஈசன் அன்றி அறிபவர் ஆர் - சிவபிரானல் லாமல் உணர்ந்தவர்வேறு யாவர் (எவருமில்லை), ஆதலால் - ஆகையால், வினையை வெல்பவர் - இரு வினைகளையும் வெல்லக் கருதினோர், அங்கு எய்தி வதிவதே வேண்டும் - அப்பதிக்குச் சென்று வசித்திருப்பதே வேண்டியதாகும் எ-று. அடைவரென்றால் நேர் வேறுண்டோ? இல்லையென்க. ஈசனன்றி அறிபவர் ஆர் என மாற்றிக் கூட்டுக. ஏ; முன்னது அசை; பின்னது தேற்றம். மாது, ஓ;அசை. (19) கைத்தலநான் கிரண்டுடைய மலர்க்கடவுள் மேலொருநாட் கயிலை யாதி எத்தலமு மொருதுலையிட் டித்தலமு மொருதுலையிட் டிரண்டுந் தூக்க உத்தமமாந் திருவால வாய்மிகவுங் கனத்ததுகண் டுலகின் மேலா வைத்ததல மிதுவென்றா லிதன்பெருமை யாவரே வழுத்தற் பாலார். (இ-ள்.) நான்கு இரண்டு கைத்தலம் உடைய மலர்க்கடவுள் - எட்டுத் திருக்கரங்களையுடைய தாமரைமலரில் வசிக்கும் நான்முகன், மேல் ஒருநாள் - முன் ஒருநாளில், கயிலை ஆதி எத்தலமும் - திருக்கயிலாயம் முதலான எல்லாப் பதிகளையும், ஒரு துலை இட்டு - ஒரு தராசின் தட்டில் வைத்து, இத்தலமும் ஒரு துலை இட்டு - இந்தப் பதியையும் ஒரு தட்டில் வைத்து, இரண்டும் தூக்க - இரண்டையும் தூக்க, உத்தமம் ஆம் திருவாலவாய் - சிறந்த திருவால வாயனது, மிகவும் கனத்தது கண்டு - மிக்க கனத்திருத்தலைப் பார்த்து, உலகில் மேலா வைத்த தலம் இது என்றால் - உலகங்களில் உயர்ந்ததாக அறுதியிட்டு வைத்த பதி இது ஆயின், இதன் பெருமை - இதன் சிறப்பை, வழுத்தற் பாலார் யாவர் - வரையறுத்துக் கூறும் பகுதியையுடையார் யாவர் (எவருமில்லை) எ-று. கைத்தலம் - கையாகிய தலம்; கை. துலை - தராசு. தராசின் ஒரு தட்டினை ஒரு துலை யென்றார். தூக்க - தூக்கி நிறுக்க. கனத்தல் - கனமாதல். வழுத்தல், ஈண்டுக் கூறுதல். (20) அத்திருமா நகரின்பேர் சிவநகரங் கடம்பவன மமர்ந்த சீவன்1 முத்திபுரங் கன்னிபுரந் திருவால வாய்மதுரை முடியா ஞானம் புத்திதரும் பூவுலகிற் சிவலோகஞ் சமட்டிவிச்சா புரந்தென் கூடல் பத்திதரு துவாதசாந் தத்தலமென் றேதுவினாற் பகர்வர் நல்லோர். (இ-ள்.) அத் திருமாநகரின் பேர் - அந்தத் தெய்வத்தன்மை பொருந்திய சிறந்த திருப்பதியின் பெயர்களை, சிவ நகரம் கடம்பவனம் - சிவ நகரமென்றும் கடம்பவனமென்றும், அமர்ந்த சீவன் முத்திபுரம் - விரும்பிய சீவன் முத்திபுரம் என்றும், கன்னிபுரம் திருவாலவாய் மதுரை - கன்னிபுரமென்றும் திருவாலவாய் என்றும் மதுரை என்றும், முடியா ஞானம் புத்திதரும் பூவுலகில் சிவலோகம் - அழியாத ஞானத்தையும் போகத்தையுங் கொடுக்கின்ற பூலோக சிவலோகம் என்றும், சமட்டி விச்சாபுரம் தென்கூடல் - சமட்டி விச்சாபுர மென்றும் தென்கூடல் என்றும், பத்திதரும் துவாத சாந்தத் தலம் என்று - அன்பை யருளுகின்ற துவாத சாந்தப்பதி என்றும், நல்லோர் ஏதுவினால் பகர்வர் - உயர்ந்தோர் ஒவ்வொரு காரணங்களாற் கூறுவர் எ-று. சீவன் முத்தியளித்தலின் சீவன் முத்திபுரம் என்றும், தடாதகைப் பிராட்டியார் கன்னியாயிருந்து ஆண்டமையின் கன்னிபுரம் என்றும், எல்லா ஞானங்களையும் தருதலின் சமட்டி விச்சாபுரம் என்றும், விராட்புருடனுக்கு உச்சிக்குமேற் பன்னிரண்டங்குல முடிவிலுள்ள துவாத சாந்தமாகக் கொள்ளப்படுதலின் துவாத சாந்தத்தலம் என்றும் பெயர்; பிற பெயரின் வரலாறும் மேல்வருமிடங் களில் ஆண்டாண்டுக் காண்க. சீவன் முத்தியாவது உடம்போடு கூடியிருந்தே அளத்திற்பட்ட புற்போலப் பசுகரணமெல்லாம் சிவகரணமாகிச் சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்து எப் பற்று மின்றிச் சிவபோகந் துய்த்தல். புத்தி யென்றது சிவபோகத்தை. (21) என்றுதலச் சிறப்புரைத்த குறுமுனிவ னெதிரறவோ ரிறும்பூ தெய்தி நன்றுதலப் பெருமையருள் செய்தனைகேட் டுடலெடுத்த நயப்பா டெல்லாம் இன்றடைந்தே மினிச்சுவண புண்டரிகச் சிறப்பதனை யிசைத்தி யென்னக் குன்றமடக் கியகருணைக் குன்றனையான் வரன்முறையாற் கூறுகின்றான். (இ-ள்.) என்று தலச்சிறப்பு உரைத்த - என்று தலவிசேடத்தைக் கூறிய, குறுமுனிவன் எதிர் - அகத்திய முனிவன் எதிரே, அறவோர் இறும்பூது எய்தி - முனிவர்கள் வியப்புற்று, தலப்பெருமை நன்று அருள் செய்தனை - தலச்சிறப்பை நன்கு கூறி யருளினாய், கேட்டு - அதனைக் கேட்டு, உடல் எடுத்த நயப்பாடு எல்லாம் - உடலை எடுத்ததனால் அடைய வேண்டிய பயன் முழுதும், இன்று அடைந் தேம் - இப்பொழுதே அடையப் பெற்றேம்; இனி சுவண புண்டரிகச் சிறப்பதனை -இனிப் பொற்றாமரைத் தீர்த்தத்தின் விசேடத்தை, இசைத்தி என்ன - கூறியருளுக என்ன, குன்றம் அடக்கிய - விந்தமலையை அடக்கிய, கருணைக்குன்று அனையான் - கருணை மலையை ஒத்தவனாகிய அகத்தியன், வரன் முறையால் கூறுகின்றான் - வரலாற்று முறைமைப்படி கூறுகின்றான் எ-று. இறும்பூது - பெருமை பற்றிய அதிசயம் இனியென்னும் இடைச்சொல் எதிர்காலங் குறித்தது. சுவணம் - பொன். (22) விரதமா தவத்தீர் காணின் வெவ்வினை யெல்லாம் வீட்டிச் சரதமாப் போக நல்குந் தமனிய1 முளரி வந்த வரவுமக் கனகக் கஞ்சப்2 பெருமையும் வளனு நன்கா உரைசெய்துங் கேண்மி னென்னா முனிவர னுரைக்கு மன்னோ. (இ-ள்.) விரதம் மாதவத்தீர் - பெரிய தவத்தினை விரதமாகக் கொண்ட முனிவர்களே, காணின் - தரிசித்தால், சரதமா - உண்மையாக, வெவ்வினை எல்லாம் வீட்டி - கொடிய வினைகளை எல்லாம் அழித்து, போகம் நல்கும் - போகத்தைக் கொடுக்கின்ற, தமனிய முளரி - பொற்றமரையானது, வந்த வரவும் - தோன்றிய வரலாறும், அக்கனகக் கஞ்சப்பெருமையும் - அப்பொற்றாமரையின் சிறப்பும், வளனும் - வளப்பமும் ஆகிய இவற்றை, நன்கா உரை செய்தும் - நன்றாகக் கூறுவேம், கேண்மின் என்னா - கேளுங்கள் என்று, முனிவரன் உரைக்கும் - முனிபுங்கவனான அகத்தியன் கூறுவானாயினான் எ-று. விரதத்தையும் தவத்தையும் உடையீர் என்றும், விரதமாகிய தவத்தை யுடையீர் என்றும் உரைத்தலுமாம். வீட்டி - வீழ்த்தி யென்பதன் மரூஉ. தமனிய முளரி, கனகக் கஞ்சம் என்பன பெயர். சரதமாக, நன்காக என்பன விகாரமாயின. என்று கூறிப்பின் உரைப்பானாயினான். மன், ஓ;அசை. (23) ஆகச் செய்யுள் - 254 தீர்த்தவிசேடப் படலம் (அறுசீரடியாசிரிய விருத்தம்) கண்ணகன் குடுமி மாடக் கடிபொழி லால வாயின் அண்ணலம் பெருமை யாரே யளப்பவ ரவிர்தண் முத்த1 வெண்ணகை யுமையா ளன்பு விளைமுகச் செவ்வி போலத் தண்ணறுங் கமலம் பூத்த தடப்பெருந் தகைமை சொல்வாம். (இ-ள்.) கண் அகன் - இடம் பரந்த, குடுமி மாடம் - சிகரங்களை யுடைய மாடங்களையுடைய, கடிபொழில் - மண மிகுந்த சோலை களாற் சூழப்பெற்ற, ஆலவாயின் - திருவாலவாயினது, அண்ணல் அம்பெருமை - மிகுந்த அழகிய பெருமையை, அளப்பவர் யாரே - அளவிட்டுக் கூற வல்லவர் யாவர், அவிர்தண் முத்தம் - விளங்கிய குளிர்ந்த முத்துக்கள் போலும், வெள் நகை உமையாள் - வெள்ளிய பற்களையுடைய உமையம்மையாரின், அன்புவிளை - அருள் பழுத்த, முகச் செவ்விபோல - திருமுகத்தின் அழகுபோல, தண் நறும் கமலம் பூத்த - குளிர்ந்த நறிய தாமரை மலரப்பெற்ற, தடம்பெருந் தகைமை சொல்வாம் - தீர்த்தத்தின் பெருஞ் சிறப்பினைக் கூறுவாம் எ-று. அகன், மரூஉ. அண்ணல் என்பதற்கு இங்கே கடவுளெனப் பொருள் கூறுதல் பொருந்தாமை யறிக. அண்ணற் பெருமை - மிக்க பெருமை. அம்; சாரியையுமாம். ஏகாரம்; எதிர்மறை. முகச்செவ்வி போலக் கமலம் பூத்த என்றமையால் இஃது எதிர்நிலையணி. (1) ஆற்றினுக் கரசாங் கங்கை காவிரி யாதி யாறும் வேற்றுரு வாய முந்நீர் வேலையும் பிறவுங் காருந் தோற்றுமுன் றன்னை யாட்டச் சுந்தர மூர்த்தி செங்கண் ஏற்றினன் கண்ட தீர்த்த மாகுமீ தெவ்வா றென்னில். (இ-ள்.) ஈது- இப்பொற்றாமரையானது, ஆற்றினுக்கு அரசு ஆம் - நதிகளுக்கு அரசாகிய, கங்கை காவிரி ஆதி ஆறும் - கங்கை காவிரி முதலிய நதிகளும், வேற்று உருவு ஆய - வெவ்வேறு வடிவமாகிய, முந்நீர் வேலையும் - மூன்று நீரையுடைய கடலும், பிறவும் - பிற நிர்நிலைகளும், காரும் - மேகமும், தோற்று முன் - தோன்றுவதற்கு முன்னே, தன்னை ஆட்ட - தன்னைத் திருமஞ்சனஞ் செய்விக்க, செங்கண் ஏற்றினன் - சிவந்த கண்களையுடைய இடப ஊர்தியை உடையனாகிய, சுந்தர மூர்த்தி - சோம சுந்தரக் கடவுள், கண்ட தீர்த்தம் ஆகும் - தோற்றுவித்த தீர்த்தம் ஆகும்; எவ்வாறு என்னில் - எப்படி என்னில் எ-று. முந்நீர் - ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் என்பன; படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று நீர்மையும் என்ப. முந்நீராகிய வேலை யெனினும் ஆம். கண்ட - படைத்த. ஈது;சுட்டு நீண்டது. (2) அகளமா யுலகமெல்லா மொடுக்கியந் நெறியே யார்க்கும் நிகளமாம்1 விருத்தி தோன்ற நினைவற நினைந்து நிற்குந் துகளிலா வறிவா னந்தச் சுந்தரச் சோதி மேனாட் சகளமா முருவங் கொண்டு தானொரு விளையாட் டாலே. (இ-ள்.) அகளம் ஆய் - நிட்களமாய், உலகம் எல்லாம் ஒடுக்கி - உலகமனைத்தையும் தன்னுள்ளே ஒடுக்கி, அந்நெறியே - அவ்வொடுக்கிய முறையாகவே, யார்க்கும் நிகளம் ஆம் விருத்தி தோன்ற - எவர்க்கும் பாசமாகிய விருத்தி தோன்றுமாறு, நினைவற நினைந்து நிற்கும் - நினைவற நினைந்து நிற்கின்ற, துகள் இலா - குற்றமில்லாத, அறிவு ஆனந்தச் சுந்தரச் சோதி - ஞானானந்த ஒளிவடிவாகிய சோம சுந்தரக் கடவுள், மேல் நாள் - முன்னொரு நாளில், சகளம் ஆம் உருவம் கொண்டு - சகளமாகிய வடிவங் கொண்டு, ஒரு விளையாட்டால் - ஒரு திருவிளையாட்டினால் எ-று. அகளம் - நிட்களம்; அருவமாகிய சிவம், மாயைக்கு ஆதாரமாய் நிற்றலின் தன்னுள்ளே யொடுக்கி யெனப்பட்டது; மாயையில் ஒடுக்கி யென்னலுமாம். நிகளம் - தளை; பாசபந்தம். விருத்தி - வியாபாரம். நினைவற நினைதல் - சத்தியாற் சங்கற்பித்தல். உயிர்களின் அறிவும் இன்பமும் துகளுடையன. சகளம் - உருவமுடைத்தாதல். “ அகளமா யாரு மறிவரி தப்பொருள் சகளமாய் வந்ததென் றுந்தீபற” என்பது காண்க. (3) முக்கண னரவப் பூண நூலினன் முகிழ்வெண் டிங்கட் செக்கரஞ் சடையான் சூல காபலத்தன் செங்க ணேற்றன் மைக்கருங் கயலுண் கண்ணி வாமத்தன் முன்னும் பின்னும் பக்கமு நந்தி யாதி கணாதிபர் பரவிச் சூழ. (இ-ள்.) முக்கணன் - மூன்று கண்களையுடையவனும், அரவப் பூண நூலினன் - பாம்பாகிய பூணுலையுடையவனும், முகிழ் வெண் திங்கள் - அரும்பிய வெள்ளிய பிறைச்சந்திரனை அணிந்த, செக்கர் அம் சடையான் - செவ்வானம் போலும் அழகிய சடையை உடைய வனும், சூல கபாலத்தன் - சூலத்தையும் கபாலத்தையு முடையவனும், செங்கண் ஏற்றன் - சிவந்த கண்களையுடைய இடபத்தையுடைய வனும், மை உண் கயல் கருங் கண்ணி - மை உண்ட கயல் போலும் கரிய கண்களையுடைய உமையம்மையை, வாமத்தன் - இடப் பாகத்திலுள்ளவனுமாகிய இறைவன், நந்தி ஆதி கண அதிபர் - நந்தி முதலிய கணத்தலைவர்கள், முன்னும் பின்னும் பக்கமும் பரவிச் சூழ - முன்னும் பின்னும் பக்கமுமாகிய எங்கும் சூழ்ந்து துதிக்க எ-று. பூண நூல், அ;அசை. மையுண்ட வென்க. பக்கமும் - இருமருங்கும். கணாதிபர்; வடமொழி நெடிற் சந்தி. (4) சென்றுதன் மேனித் தேசாற் றிசையெலாம் விளங்கச் செங்கண் வென்றிகொ ளுரக வேந்த னகரமும் விபுதர் வேந்தன் பொன்றிகழ் நகரும் வேதன் புரமுமால் புரமு மேலைத் தன்றிரு நகருஞ் சென்று சஞ்சரித் தாடி மீள்வான். (இ-ள்.) தன் மேனித் தேசால் - தனது திருமேனியின் ஒளியினால், திசை எலாம் விளங்கச் சென்று - திக்குகள் எல்லாம் ஒளிவீசப்போய், செங்கண் - சிவந்த கண்களையுடைய, வென்றி கொள் உரகவேந்தன் நகரமும் - வெற்றியைக் கொண்ட பாம்புகளின் அரசனாகிய அனந்தனுடைய உலகத்திலும், விபுதர் வேந்தன் - தேவர்கட்கு அரசனாகிய இந்திரனது, பொன் திகழ் நகரும் - விளங்காநின்ற பொன்னுலகத்திலும், வேதன் புரமும் - பிரமனது உலகத்திலும், மால் புரமும் - திருமாலின் உலகத்திலும், மேலைத் தன் திரு நகரும் - அவைகளின் மேலுள்ள தனது சிவலோகத்திலும், சென்று சஞ்சரித்து ஆடி மீள்வான் - சென்று உலாவித் திருவிளை யாடல் செய்து மீண்டருளுவான் எ-று. திகழ் பொன் நகரு மென்க. மேலை - மேலுள்ளதாகிய; எழின் முடியதாஞ் சிவலோகம் என்பர் பின்னும். (5) அன்னபோ தயனுந் தேவர்க் கரசனு மாழி வேந்தும் முன்னர்வந் திறைஞ்சி யேத்த முனிவரும் பேறு நல்கித் தன்னக ரடைந்து நீங்காத் தனிப்பெருங் கணத்தி னோரை இன்னருள் சுரந்து நோக்கி யிலிங்கத்திற் புகுது மெல்லை. (இ-ள்.) அன்னபோது - அப்பொழுது, அயனும் - பிரமனும், தேவர்க்கு அரசனும் - தேவேந்திரனும், ஆழி வேந்தும் - திகிரிப் படையையுடைய திருமாலும், முன்னர் வந்து இறைஞ்சி ஏத்த - திருமுன் வந்து வணங்கித் துதிக்க, முனிவு அரும் பேறு நல்கி - (அவர்களுக்கு) வெறுப்பில்லாதவரங்களைக் கொடுத்து, தன்நகர் அடைந்து - தனது திருவாலவாயை அடைந்து, நீங்காத் தனிப்பெருங் கணத்தினோரை - பிரியாத ஒப்பற்ற பெரிய கணத்தலைவர்களை, இன் அருள் சுரந்துநோக்கி - இனிய அருள் கூர்ந்து பார்த்து, இலிங்கத்தில் புகுதும் எல்லை - இலிங்கத்திற் சென்றெய்தும் பொழுதில் எ-று. முன்னர், ஆர்;பகுதிப் பொருள் விகுதி. முனிவு அரும் - வெறுத்தலில்லாத; மகிழ்தற் குரிய என்றபடி. இலிங்கம் - ஒளி யுடையது, அடையாளம், சிவனது அருவுருவத் திருமேனி. (6) வேத்திரப் படையோ னாதி கணாதிபர் வீழ்ந்து பால நேத்திர வன்பர்க் கன்ப நிரஞ்சன நிருத்தா னந்த சாத்திர முடிவுந் தேறாத் தனிமுத லொருவ வென்னாத் தோத்திர வகையாலேத்தித் தொழுதொன்று வினாவல் செய்வார். (இ-ள்.) வேத்திரப் படையோன் ஆதி கணாதிபர் - பிரம்புப் படையையுடையோனாகிய நந்தி முதலிய கணத்தலைவர்கள், வீழ்ந்து - கீழே விழுந்து, பால நேத்திர - நெற்றிக்கண்ணனே, அன்பர்க்கு அன்ப - அன்பராயினார்க் கன்பனே, நிரஞ்சன - களங்கமற்றவனே, நிருத்தானந்த - ஆனந்தத் தாண்டவமுடையவனே, சாத்திர முடிவுந் தேறா - சாத்திர முடிவினாலும் தெளியப்படாத, தனி முதல் ஒருவ-ஒப்பற்ற முதற்பொருளாகிய ஒருவனே, என்னா - என்று, தோத்திர வகையால் ஏத்தி - துதி வகையினாற் புகழ்ந்து, தொழுது - வணங்கி, ஒன்று வினாவல் செய்வார் - ஒன்று கேட்பாராயினர் எ-று. பாலம் - நெற்றி. அஞ்சனம் - களங்கம். ஆனந்த நிருத்த எனமாற்றுக; நிருத்தத்தின் ஆனந்தமுமாம்; வடசொற் சந்தி. வீழ்ந்து தொழுது ஏத்தி வினாவுவரென முடிக்க. (7) ஐயவிவ் விலிங்க மூர்த்திக் காட்டவு மடியே மூழ்கி உய்யவுங் கங்கை யாதி நதிகளு முலகத் துள்ளோர்1 மையறு தடாக நீரு மற்றிலை யிருமைப் பேறுஞ் செய்யவோர் தீர்த்த மிங்குண் டாக்கெனச் செப்பலோடும். (இ-ள்.) ஐய-தலைவனே, இ இலிங்கமூர்த்திக்கு - இச் சிவலிங்கப் பெருமானுக்கு, ஆட்டவும் - திருமஞ்சனம் செய்யவும், அடியேம் மூழ்கி உய்யவும் - அடியேங்கள் நீராடி உய்தி கூடவும், உலகத்துள் - உலகின் கண், கங்கை ஆதி நதிகளும் - கங்கை முதலிய ஆறுகளும், ஓர் மையறு தடாக நீரும் இலை - ஓர் குற்றமற்ற தடாக நீரும் இல்லை (ஆதலால்), இருமைப் பேறும் செய்ய - இம்மை மறுமை யாகிய இருமைப் பயன்களையும் நல்க, இங்கு ஓர் தீர்த்தம் உண்டாக்கு எனச் செப்பலோடும் - இவ்விடத்து ஓர் தீர்த்தம் ஆக்கியருள வேண்டுமென்று விண்ணப்பித்துக் கொண்டவுடனே எ-று. உலகத்துள்ளோர் குற்றமறுதற்குக் காரணமான என்றுமாம். மற்று; அசை. (8) அத்தகை யிலிங்க மூர்த்திக் கடுத்ததென் கீழ்சா ராக முத்தலை வேலை வாங்கி நாட்டினான் முதுபார் கீண்டு பைத்தலைப் பாந்தள் வேந்தன் பாதலங் கீண்டு போயெண் கைத்தலப் பிரம னண்ட கடாகமுங் கீண்ட தவ்வேல். (இ-ள்.) அத்தகை - அத்தன்மையுடைய, இலிங்க மூர்த்திக்கு - சிவலிங்கப் பெருமானுக்கு, அடுத்த தென் கீழ்சார்ஆக - அடுத்த தென்கிழக்குப் பக்கத்தில், முத்தலை வேலை வாங்கி நாட்டினான் - மூன்று தலையையுடைய சூலத்தை எடுத்துக் கீழே ஊன்றினான்; அவ்வேல் - (ஊன்றப்பெற்ற) அச்சூலமானது, முதுபார்கீண்டு - பழமையாகியநிலவுலகத்தைக் கிழித்து, பைத்தலைப் பாந்தள் வேந்தன் - படம் பொருந்திய தலைகளையுடைய பாம்புகட்கு அரசனாகிய அனந்தனிருக்கும், பாதலம் கீண்டு போய் - பாதலத்தைக் கிழித்துச் சென்று, எண் கைத்தலப் பிரமன் அண்ட கடாகமும் கீண்டது - எட்டுக் கைகளையுடைய நான் முகனது அண்ட கடாகத்தையும் ஊடுருவிச் சென்றது எ-று. கீண்டு, கீழ்ந்து என்பதன் மரூஉ. அண்ட கடாகம் - அண்ட கோளத்தின் புறவோடு. (9) அவ்வழிப் புறம்பு சூழ்ந்து கிடந்தபே ராழி யூழிப் பெளவநீ ரென்ன வோங்கப் பாணியா லமைத்து வேணித் தெய்வநன் னீரைத் தூவிக் கலந்துமா தீர்த்த மாக்கிக் கைவரை கபாலி நந்தி கணத்தினை நோக்கிக் கூறும். (இ-ள்.) அவ்வழி - அக்கீண்ட வழியால், புறம்பு சூழ்ந்து கிடந்த பேர் ஆழி - அக் கடாகத்தின் புறத்தில் சுற்றிக்கிடந்த பெரும்புறக் கடலானது, ஊழிப் பெளவம் நீர் என்ன-ஊழிக்காலத்திற் பொங்கி எழுங் கடல்நீர் போல, ஓங்க - மேலோங்க, பாணியால் அமைத்து - (தனது) திருக்கரத்தால் அமைக வென அமைத்து, வேணி - சடையிலுள்ள, தெய்வ நல் நீரைத் தூவிக் கலந்து - தெய்வத் தன்மை பொருந்திய நல்ல நீரைத் தெளித்துக் கலந்து, மா தீர்த்தம் ஆக்கி - பெருமை பொருந்திய தீர்த்தமாகச் செய்து, கை வரை கபாலி - கையில் ஏந்திய கபாலத்தையுடைய இறைவன், நந்தி கணத்தினை நோக்கிக் கூறும் - நந்தி, தேவரையும் மற்றைக் கணத்தலைவர் களையும் பார்த்துக் கூறுவான் (எ-று.) வரைதல் - கொள்ளுதால். நந்தி முதலிய கணமும் ஆம். (10) இன்னமா தீர்த்தந் தன்னை யெனைப்பல தீர்த்தங் கட்கு முன்னம்யா மிங்குக் கண்ட முதன்மையா லாதி தீ'faத்தம் என்னலா மினியுண் டாக்குந் தீர்த்தங்க ளெவைக்கு மேலாய் மன்னலாற் பரம தீர்த்த மெனப்பெயர் வழங்க லாகும். (இ-ள்.) இன்னமா தீர்த்தம் தன்னை - இந்தப் பெருமை பொருந்திய தீர்த்தத்தை, எனைப் பல தீர்த்தங்கட்கும் - பலவகை யான தீர்த்தங்களெல்லாவற்றையும் தோற்றுவித்தற்கு, முன்னம் - முன்பே, யாம் இங்கு கண்ட முதன்மையால் - நாம்இவ்விடத்து உண்டாக்கிய முதன்மையினால், ஆதி தீர்த்தம் என்னலாம் - ஆதி தீர்த்தம் என்று, கூறலாம்; இனி உண்டாக்கும் - மேல் தோற்று விக்கும், தீர்த்தங்கள் எவைக்கும் மேலாய் மன்னலால் - தீர்த்தங்கள் அனைத்திற்கும் உயர்வாக நிலைபெறுதலால், பரம தீர்த்தம் என - பரம தீர்த்தம் என்று, பெயர் வழங்கலாகும் - பெயர்கூறலாகும் எ-று. எனைப் பல - எத்துணையும் பலவாகிய; எனை - எல்லா மென்னும் பொருட்டு;எனைவகையாற் றேறியக்கண்ணும்’ என்பது காண்க. தீர்த்தங்கட்கும் - தீர்த்தங்களைத் தோற்றுவித்தற்கும்; ஐந்தாவதன் எல்லைப்பொருளில் வந்தது. முன்னம், அம்;அசை; பகுதிப் பொருள் விகுதியுமாம். கண்ட; காரணப் பொருட்டு. ஆய், ஆக.(11) மருட்கெட மூழ்கி னோர்நன் மங்கலம் பெறலா னாமம் அருட்சிவ தீர்த்த மாகும் புன்னெறி யகற்றி யுள்ளத் திருட்கெட ஞானந் தன்னை யீதலான் ஞான தீர்த்தந்1 தெருட்கதி தரலான் முத்தி தீர்த்தமென் றிதற்கு நாமம். (இ-ள்.) மருள் கெட - மயக்கம் நீங்க, மூழ்கினோர் - (இதில்) நீராடியவர்கள், நல்மங்கலம் பெறலால் - நல்ல நன்மைகளை அடைவதால், நாமம் அருள் சிவ தீர்த்தம் ஆகும் - பெயர் அருளையுடைய சிவதீர்த்தமாகும்; புல்நெறி அகற்றி - தீயவழிகளிற் செல்லுதலை நீக்கி, உள்ளத்து இருள்கெட - மனத்தின்கண் அஞ்ஞான இருள் கெடுமாறு, ஞானம் தன்னை - ஞானவொளியை, ஈதலான் ஞான தீர்த்தம் - கொடுத்தலினால் ஞான தீர்த்தம் என்றும், தெருள் கதி தரலால் - தெளிந்த முத்தியை நல்குவதால், முத்தி தீர்த்தம் என்று - முத்தி தீர்த்தம் என்றும், இதற்கு நாமம் - இதற்குப் பெயர்களுள்ளன எ-று. சிவம் என்பது மங்கலம் என்னும் பொருளதாகலின் மங்கலந் தருவதற்குத் சிவ தீர்த்த மென்று பெயர். சிவம், மங்கலம், நலம் என்பன ஒரு பொருளன. சீவகசிந்தாமணியுரையில் ‘சிவம்புரி நெறியைச் சேர என்பதற்கு ‘நன்மை புரிந்த வீட்டைச் சேரும்படி’ என நச்சினார்க்கினியர் பொருள் கூறியிருப்பதுங் காண்க. தெருள் - ஞானம்; தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் என்பதற்குப் பரிமேலழகர் கூறிய உரையை நோக்குக. ஞானத்தையும், ஞானத் தானெய்தும் கதியையும் தரும் என்றார். (12) குடைந்துதர்ப் பணமுஞ் செய்து தானமுங் கொடுத்தம் மாடே2 அடைந்தெழுத் தைந்து மெண்ணி யுச்சரித் தன்பா லெம்மைத் தொடர்ந்துவந் திறைஞ்சிச் சூழ்ந்து துதித்தெமை யுவப்பச் செய்தோர் உடம்பெடுத் ததனா லெந்த வுறுதியுண் டதனைச் சேர்வார். (இ-ள்.) குடைந்து - நீராடி, தர்ப்பணமும் செய்து தானமும் கொடுத்து - தர்ப்பணம் செய்து தானங் கொடுத்து, அம்மாடே அடைந்து - அதனருகே தங்கி, ஐந்து எழுத்தும் எண்ணி உச்சரித்து - திருவைந் தெழுத்துக்களையும் கருதி உச்சரித்து, அன்பால் - அன்பினாலே, எம்மைத் தொடர்ந்துவந்து இறைஞ்சி - எம்மைப் பற்றி வந்து வணங்கி, சூழ்ந்து - வலங்கொண்டு, துதித்து எமை உவப்பச் செய்தோர் - துதித்து எம்மை மகிழ்வித்தவர்கள், உடம்பு எடுத்ததனால் - மக்கட்பிறப்பை யடைந்ததனால், எந்த உறுதி உண்டு - எந்தப் பயன் அடைதற்கு உரியதோ, அதனைச் சேர்வார் - அதை அடைவார்கள் எ-று. தர்ப்பணஞ் செய்தல் - மந்திரநீ ரிறைத்தல். எண்ணி - கணித்து என்றுமாம்; ‘அக்குமாலைகொ டங்கையி னெண்ணுவார்’என்னும் தமிழ் மறையுங் காண்க. விளக்கத்தினைக் காட்ட ‘எந்த’ என்றார். உறுதி - வீடுபேறு. (13) இந்தநீ ரெம்மை யாட்டி னேழிரண் டுலகின் மிக்கஅந்தமி றீர்த்த மெல்லா மாட்டிய பயன்வந் தெய்தும் வந்ததின் மூழ்கி யிங்கு வைகுநங் குறியை யுங்கள் சிந்தையி லார்வம் பொங்கப் பூசனை செய்மி னென்னா. (இ-ள்.) இந்த நீர் - இந்தத் தீர்த்தத்தால், எம்மை ஆட்டின் - எம்மைத் திருமஞ்சனஞ் செய்வித்தால், ஏழ் இரண்டு உலகின் - பதினான்கு உலகங்களிலுமுள்ள, மிக்க அந்தம் இல் -உயர்ந்த அழிவில்லாத, தீர்த்தம் எல்லாம் - தீர்த்தங்கள் எல்லவாற்றானும், ஆட்டிய பயன் வந்து எய்தும் - அபிடேகித்தலால் வரும் பயன் வந்து பொருந்தும்; (ஆகையால்), இதில் வந்து மூழ்கி - இதில் வந்து நீராடி, இங்குவைகும் - இங்கு எழுந்தருளியிருக்கும், நம் குறியை - நமது அருட் குறியாகிய சிவலிங்கத்தை, சிந்தையில் ஆர்வம் பொங்க - உள்ளத்தில் அன்பு மீக்கூர, பூசனை செய்மின் என்னா - பூசனை புரியுங்கள் என்று கூறி எ-று. மிக்க தீர்த்தம் என இயையும். எல்லாம் - எல்லாவற்றானும். ஆட்டிய; காரணப்பொருட்டு (14) விண்ணவர் தம்மின் மேலாம் வேதிய னாகி நின்ற பண்ணவன் றானந் நீரிற் படிந்துதன் னனுஞை யாலே1 அண்ணலங் கணத்தி னோரை மூழ்குவித் தனாதி யாய புண்ணிய விலிங்கந் தன்னுட் புகுந்தினி திருந்தான் மன்னோ. (இ-ள்.) விண்ணவர் தம்மில் - தேவர்களுள், மேலாம் வேதியன் ஆகி நின்ற பண்ணவன் - உயர்ந்த அந்தணனாகிய இறைவன், தான் அந்நீரில் படிந்து - தாந் அத் தீர்த்தத்தில் மூழ்கி, தன் அனுஞையால் - தன் ஏவலால், அண்ணல் அம் கணத்தினோரை - பெருமை பொருந்திய அழகிய கணத்தலைவர்களை, மூழ்குவித்து - மூழ்கச்செய்து, அனாதியாய புண்ணிய இலிங்கம் தன்னுள் - அனாதியாயுள்ள அறவடிவான இலிங்கத்துள்ளே, புகுந்து இனிது இருந்தான் - போய் இனிமையாக வீற்றிருந்தான் எ-று. இறைவன் ‘அறவாழி யந்தணன்’ ஆகலின் மேலாம் வேதியனாகி யென்றார். அம்; சாரியையுமாம். மன், ஓ;அசை. (15) அந்தமா நீரா னந்தி யாதியோர் விதியாற் சோம சுந்தரன் முடிமே லாட்டித் துகளறப் பூசை யாற்றிச் சிந்தையில் விழைந்த வெல்லா மடைந்தனர் செம்பொற் கஞ்சம் வந்தவா றிதுவத் தீர்த்த மகிமையு முரைப்பக் கேண்மின். (இ-ள்.) நந்தி ஆதியோர் - திருநந்தி தேவர் முதலான கணத் தலைவர்கள், அந்தமா நீரால் - அந்தச் சிறந்த தீர்த்தத்தால், விதியால் - ஆகம முறைப்படி, சோமசுந்தரன் முடிமேல் ஆட்டி - சோம சுந்தரக் கடவுளின் திருமுடிமேல் அபிடேகித்து, துகள் அறப் பூசை ஆற்றி - குற்றமறப் பூசித்து, சிந்தையில் விழைந்த எல்லாம் அடைந்தனர் - மனத்தில் விரும்பியன எல்லாவற்றையும் பெற்றனர்; செம்பொன் கஞ்சம் - சிவந்த பொற்றாமரைத் தீர்த்தமானது, வந்த ஆறு இது - தோன்றிய முறை இதுவாகும்; அத் தீர்த்தம் மகிமையும் உரைப்பக் கேண்மின் - அத்தீர்த்தத்தின் பெருமையையும் சொல்லக் கேளுங்கள் எ-று. விழைந்த; வினைப்பெயர்; பெயரெச்சமுமாம். (16) வளையெறி தரங்க ஞான வாவியை நோக்கிற் பாவத் தளையறு மூழ்கின் வேண்டுங் காமிய மெல்லாஞ் சாரும் உளமுற மூழ்கு மெல்லை முழுக்கொன்றற் குலகத் துள்ள அளவறு தீர்த்த மெல்லா மாடிய பயன்வந் தெய்தும். (இ-ள்.) வளை எறி தரங்கம் - சங்குகளை விசுகின்ற அலைகளையுடைய, ஞான வாவியை - ஞான தீர்த்தத்தை, நோக்கில் - தரிசித்தால், பாவத் தளை அறும் - பாவத்தொடக்கு நீங்கும்; மூழ்கின் - மூழ்கினால், வேண்டும் காமியம் எல்லாம் சாரும் - விரும்புகின்ற பொருள்களனைத்தும் வந்து கூடும்; உளம் உற மூழ்கும் எல்லை - மனம் பொருந்த மூழ்குங்கால், முழுக்கு ஒன்றற்கு - ஒவ்வொரு முழுக்கிற்கும், உலகத்து உள்ள - உலகங்களிலுள்ள, அளவு அறு தீர்த்தம் எல்லாம் - அளவிறந்த தீர்த்தங்கள் எல்லா வற்றிலும் ஆடிய பயன் வந்து எய்தும் - ஆடிய தனால் வரும் பயன் வந்து பொருந்தும் எ-று. காமியம் - விரும்பிய பொருள். மூழ்கு மெல்லை - முழ்கு மிடத்து - தீர்த்தமெல்லாவற்றிலும் என்க. (17) மெய்யைமண் ணாதி கொண்டு விதிவழி சுத்தி செய்து மையறு வருண சூத்த1 மந்திர நவின்று மூழ்கில் துய்யமா தீர்த்த மெல்லாந் தோய்ந்துநான் மறையு மாய்ந்தோர் கையிலெப் பொருளு மீந்த காசறு பேறு நல்கும். (இ-ள்.) மெய்யை மண் ஆதி கொண்டு - உடலைமண் முதலியவைகளைக் கொண்டு, விதிவழி - விதிப்படி, சுத்தி செய்து - தூயதாக்கி, மை அறு - குற்றமற்ற, வருண சூத்த மந்திரம் நவின்று மூழ்கில் - வருணசூக்க மந்திரத்தை உச்சரித்து நீராடில் (அது), துய்ய மா தீர்த்தம் எல்லாம் தோய்ந்து - புனிதமான பெருமைபொருந்திய தீர்த்தங்கள் எல்லாவற்றினும் மூழ்கி, நான்மறையும் ஆய்ந்தோர் கையில் - நான்கு வேதங்களையும் ஆராய்ந்துணர்ந்த மறையவர் கையில், எப்பொருளும் ஈந்த - (அவர்கள் விரும்பிய) பொருள் அனைத்தையும் தானஞ்செய்தலால் வரும், காசு அறு பேறு நல்கும் - குற்றமற்ற பயனை நல்கும் எ-று. மண்ணாதியாவன ;- ஒன்பது வகை மண்ணும், எழுவகைத் தளிரும், பஞ்ச கவ்வியமும் ஆம்; இதனை, “ அரசு கூவிளந் துழாய்புளி யால்சம்பு மூலம் புரசை மால்கரிக் கூடமும் புரவிமந் திரமும் கரிசி லானிரைத் தொழுவமுங் கல்விநூல் விதியின் வரிசை யாலெடுத் திடப்படு மண்களொன் பதுமே” “ தளிர் துழாய்புளி சம்புகூ விளம்வட மரசு விளரி லாவறு கென்பன விளம்புகவ் வியங்கள் அளவில் சீர்தரு மந்நல மறிகபால் தயிர்நெய் வளநி லாவிய கோசல மயமிவை யாகும்””” எனவரும் திருவானைக்காப் புராணச் செய்யுட்களா லுணர்க. சூக்தம் - நன்றாகச் சொல்லப்பட்டது என்னும் பொருளது; இது தமிழில் சூத்தமெனவும், சூக்க மெனவும் திரியும். எப்பொருளும் - எல்லாப் பொருள்களும் ஈந்ததனால் வரும் பேறு. (18) தெய்வவித் தீர்த்தந் தன்னை நினைவின்றித் தீண்டி னாலும் அவ்விய வினையி னீந்தி யரும்பெறல் வீடு சேர்வர் இவ்வுரை மெய்யே யாகு மென்னெனின் மனத்தா னன்றி வெவ்வழ றீண்டி னாலுஞ் சுடுமன்றி விடுமோ வம்மா. (இ-ள்.) தெய்வ இத்தீர்த்தம் தன்னை - தெய்வத்தன்மை பொருந்திய இத் தீர்த்தத்தை, நினைவு இன்றி தீண்டினாலும் - நினைப்பில்லாது தொட்டாலும், அவ்விய வினையின் நீந்தி -தீவினையினின்றுங் கடந்து, அரும் பெறல் வீடு சேர்வர் - பெறுதற்கரிய வீடு பேற்றை யடைவர்; இ உரை மெய்யே ஆகும் - இந்த வார்த்தை உண்மையே யாகும்; என் எனில் - எப்படி என்றால், மனத்து ஆறு அன்றி - மனத்தின் வழியன்றி (நினைப்பில்லாமல்), தீண்டினாலும் - தொட்டாலும், வெவ்அழல் - கொடிய தீயானது, சுடும் அன்றி விடுமோ - சுடுமேயல்லாது விட்டு விடுமோ (விடாது) எ-று. அவ்வியம் - அழுக்காறு, மனக்கோட்டம்; தீவினை அதனாற் செய்யப்படுதலின் ‘அவ்விய வினை’ என்றார். ஒளவிய மென்பது போலியாயிற்று. பெறலரும் என்பது முன் பின்னாகத் தொக்கது. எவன் என்பது என்னென்றாயது. ஏ;தேற்றம். ஓ;எதிர்மறை. அம்மா; வியப்பிடைச்சொல். இஃது எடுத்துக் காட்டுவமை. (19) ஆருமந் நீரி லென்று மாடினார் சீவன் முத்தி சேருவ ரந்நீ ராடுஞ் சிறப்புறு பயனுக் கொவ்வா வாருண மாக்கி னேய மந்திர மிவைமுன் னான பேருணர் வளிக்கு நானஞ் செய்தவர் பெறும்பே றெல்லாம். (இ-ள்.) ஆரும் அந்நீரில் என்றும் ஆடினார் - நிறைந்த அத்தீர்த்தத்தில் எப்பொழுதும் மூழ்கியவர், சீவன் முத்தி சேருவர் - சீவன் முத்தியையடைவர்; அந்நீர் ஆடும் - அத்தீர்த்தத்தில் மூழ்குவதால் வருகின்ற, சிறப்புறு பயனுக்கு - சிறப்பையுடைய பயனுக்கு, வாருணம் - வருண நானமும், ஆக்கினேயம் - அங்கி நானமும், மந்திரம் - மந்திர நானமும், இவை முன் ஆன - இவை முதலான, பேர் உணர்வு அளிக்கும் - பெரிய ஞானத்தைக் கொடுக்கின்ற, நானம் செய்தவர் - நானம் செய்தவர், பெறும் பேறு எல்லாம் ஒவ்வா - அடையும் பயன் அனைத்தும் ஒப்பாகா எ-று. ஆடினார் ஆருமென்றுமாம். வாருணம் - நீரினியைபுடையது. ஆக்கினேயம் - அக்கினியி னியைபுடையது; நீறு. நானம் - ஸ்நானம்; திருமுழுக்கு. வாருண மந்திரம், ஆக்கினேய மந்திரம் எனக்கொள்ளுதல் பொருந்தாது. (20) அன்னநீர் தனிலு மாடி யாலவா யுடைய நாதன் தன்னையும் பணிவோன் மேலைப் பரகதி தன்னைச் சாரும் என்னநன் னூலிற்1 சொன்ன பவித்திர மெவைக்கு மேலாய்ப் பன்னரும் புனித2 மான பவித்திர மாகி நிற்கும். (இ-ள்.) அன்ன நீர் தனிலும் ஆடி - அந்தத் தீர்த்தத்திலும் நீராடி, ஆலவாய் உடைய நாதன் தன்னையும் பணிவோன் - திருவால வாயையுடைய சோம சுந்தரக் கடவுளையும் வணங்கு வோன், மேலை - மறுமையில், பரகதி தன்னைச் சாரும் - மேலான வீடுபேற்றை யடைவன்; என்ன நல் நூலில் சொன்ன - எப்படிப் பட்ட நல்ல நூல்களில் எடுத்துக் கூறிய, பவித்திரம் எவைக்கும் மேலாய் - புனிதங்களனைத்திற்கும் சிறந்ததாய், பன் அரும் புனிதம் ஆன - சொல்லுதற்கரிய தூய்மையான, பவித்திரம் ஆகி நிற்கும் - புனிதவடிவாகி நிற்கும் (அத்தீர்த்தம்) எ-று. மேலை - பரகதிக்கு அடையுமாம். பரகதி - பரமமுத்தி. தன்; சாரியை. எல்லா நூலினுமென்க. பவித்திரம் - தூய்மை. புனித தீர்த்தம் என்னும் பாடத்திற்கு, அத்தீர்த்தம் மேலாய் ஆகி நிற்கும் எனக் கூட்டிப் பொருளுரைக்க. (21) ஆதர விலனா யந்நீ ராடினோன் சுவர்க்கஞ் சேரும் ஆதர வுளனாய் மூழ்கி வானவ ராதி யானோர்க் காதர வரிசி யெள்ளுத் தருப்பண மமையச் செய்தோன் ஆதர வேள்வி முற்று மாற்றிய பயனைச் சேரும். (இ-ள்.) ஆதரவு இலனாய் - அன்பு இல்லாதவனாய், அந்நீர் ஆடினோன் - அந்தத் தீர்த்தத்தில் நீராடியவன், சுவர்க்கம் சேரும் - சுவர்க்கத்தை யடைவன்; ஆதரவு உளனாய் - அன்பு உள்ளவனாய், மூழ்கி - நீராடி, வானவர் ஆதி ஆனோர்க்கு - தேவர் முதலானவர்க்கு, ஆதரவு - விருப்பத்துடன், அரிசி எள்ளு - அரிசியையும் எள்ளையுங் கொண்டு, தருப்பணம் அமையச் செய்தோன் - தருப்பணம் விதியோடு பொருந்தச் செய்தவன், ஆதரம் வேள்வி முற்றும் - விரும்பத்தக்க வேள்விகளனைத்தையும், ஆற்றிய பயனைச் சேரும் - செய்தலால் வரும் பயனை அடைவான் எ-று. ஆதியானோர் என்றதனால் பிதிரர் முதலாயினார் கொள்க. (22) ஏனைமா தலங்க டம்மி லிருந்துசெய் விரதம் பூசை தானமா தரும மோமந் தவஞ்செபந் தியானந் தம்மால் ஆனமா பயனிற் கோடி யதிகமா மடைந்து மூழ்கி ஞானமா தீர்த்த ஞாங்க ரிருந்தவை நயந்து செய்யின். (இ-ள்.) ஏனைமா தலங்கள் தம்மில் இருந்து - பெருமை பொருந்திய மற்றைப் பதிகளிலிருந்து, செய்-செய்யும், விரதம் பூசை தானம் மா தருமம் ஒமம் தவம் செபம் தியானம் தம்மால் ஆன - நோன்பு பூசை தானம் பெரிய தருமம் ஓமம் தவம் செபம் தியானமாகிய இவைகளினாலாகின்ற, மா பயனில் - பெரிய பயனிலும், ஞான மா தீர்த்தம் அடைந்து மூழ்கி - பெருமை பொருந்திய ஞானதீர்த்தத்திற் சென்று நீராடி, ஞாங்கர் இருந்து - (அதன்) கரையிலிருந்து, அவை நயந்து செய்யின் - அவற்றை விரும்பிச் செய்தால், கோடி அதிகம் ஆம் - (வரும் பயன்) கோடி மடங்கு அதிகமாகும் எ-று. பயனிலும் செய்யின் அதிகமாம் என்க. கோடி யென்றது அளவின்மைக்கு ஓர் எடுத்துக் காட்டு. (23) பிறந்தநா ளந்நீர் மூழ்கின் மேலைவெம் பிறவிப் பெளவம் மறிந்திடு மறிதேள் கும்ப மதிகளின் மூழ்கித் தென்பால் உறைந்தவர் பொருட்டுப் பிண்ட முதவினா லவர்தா மாழ்ந்து நிறைந்திடு பிறவிப் பெளவ நின்றுமே லெழுவ ரன்றே. (இ-ள்.) பிறந்தநாள் அந்நீர் மூழ்கின் - பிறந்த நாளில் அந்தத் தீர்த்தத்தில் மூழ்கினால், மேலை வெம் பிறவிப் பெளவம் மறிந்திடும் - தொன்று தொட்டு வருகின்ற கொடிய பிறவிக்கடல் வற்றும்; மறிதேள் கும்பம் மதிகளின் மூழ்கி - சித்திரை கார்த்திகை மாசி மாதங்களில் மூழ்கி, தென்பால் உறைந்தவர் பொருட்டு - தென் திசையிலிருக்கும் பிதிரர்களின் பொருட்டு, பிண்டம் உதவினால் - பிண்டங் கொடுத்தால், அவர் தாம் ஆழ்ந்து நிறைந்திடு - அப் பிதிரர்கள் தாம் ஆழ்ந்து அழுந்திய, பிறவிப் பெளவம் நின்று மேல் எழுவர் - பிறவிக்கடலினின்றும் மேலே எழுவார்கள் எ-று. பிறந்தநாள் - ஜன்ம நட்சத்திரம். மறி - ஆடு; மேடம். தேள் - விருச்சிகம். மேடம், விருச்சிகம், கும்பம் இவ்விராசிகளில் ஆதித் தனிருக்குங் காலம் முறையே சித்திரை, கார்த்திகை, மாசி மாதங் களாம். மதி-மாதம். படைப்புக் காலத்து அயனாற் படைக்கப்பட்ட தோர் தேவ சாதியாரும், தமது குடியில் முன்பு இறந்தோரும் பிதிரரெனப்படுவர்; இறந்தவர்களைக் குறித்து அத்தேவர்க்குக் கடன் செலுத்துவர். பிதிரருலகம் தெற்கிலுள்ளது. ஆழ்ந்து நிறைந்திடல் - மிக்க ஆழமுடைத்தாதல்; அளவிட முடியாமை. அன்று, ஏ;அசை. (24) அத்தட மருங்கின் யாவர் தென்புல மடைந்தோர் தங்கள் சித்தமா சகற்ற வேண்டிச் செய்கடன் முடிக்கி னன்னோர்1 எத்தனை யெண்ணேர்ந்தாலு மெள்ளுக்கா யிரமாண் டாக அத்தனை யாண்டு மட்டு மவரைவிண் ணாள வைப்பார். (இ-ள்.) தென் புலம் அடைந்தோர் யாவர் - தென் திசைக் கேகினவர் யாவரோ, (அவர்) தங்கள் - அவர்களுடைய, சித்தம் மாசு - மனமுதலிய வற்றாற் செய்த பாவத்தை, அகற்ற வேண்டி - நீக்க விரும்பி, செய்கடன் - செய்ய வேண்டிய கடமைகளை, அத்தடம் மருங்கின் முடிக்கின் - அத்தீர்த்தத்தின் கரையிலிருந்து முடித்தால், அன்னோர் - அம்முடிப்போர், எத்தனை எள் நேர்ந்தாலும் - (பிதிரர் பொருட்டு) எவ்வளவு எள்ளை ஈந்தாலும், எள்ளுக்கு ஆயிரம் ஆண்டாக - எள் ஒன்றுக்கு ஆயிரம் வருடமாக, அத்தனை ஆண்டு மட்டும் - அவ்வளவு வருடங்கள் வரையிலும், அவரை விண் ஆள வைப்பார் - அப்பிதிரர்களை தேவ உலகத்தை ஆளும்படி செய்வார்கள் எ-று. அடைந்தோர் யாவரோ அவர் தங்கள் என்க. முடிக்க என்பது முடிக்கின் எனத் திரிந்ததென்னலு மொன்று. எண் எனப் பிரித் தலுமாம்; எண் - எள். எள்ளுக்கு - எள் ஒன்றுக்கு. மட்டு என்பது அளவென்னும் பொருளது. (25) மூவகை யுலகி லுள்ள தீர்த்தமு முறையா லென்றுஞ் சேவகஞ் செய்யு மிந்தத் தீர்த்தமென் நாளு மூழ்கி ஏவரந் நீரா லென்று மீசனைப் பூசை செய்வோர் ஆவரிப் பிறவி தன்னி லவர்கதிக் கரையைச் சார்வார்2 (இ-ள்.) மூவகை உலகில் உள்ள தீர்த்தமும் - மேல் கீழ் நடு என்னும் மூன்று உலகங்களிலுமுள்ள தீர்த்தங்களனைத்தும், முறையால் - முறைப்படி, என்றும் - எப்போதும், சேவகம் செய்யும் இந்தத் தீர்த்தம் - வணங்கிப் பணி செய்யப் பெற்ற இந்தத் தீர்த்தத்தின்கண், எந்நாளும் மூழ்கி - எந்த நாளிலும் நீராடி, ஏவர் என்றும் அந்நீரால் - எவர் எப்போதும் அந்த நீராலே, ஈசனைப் பூசை செய்வோர் ஆவர் - சோம சுந்தரக் கடவுளைப் பூசிக்கின் றவரோ, அவர் இப்பிறவிதன்னில் - அவர்கள் இந்தப் பிறவியிலேயே, கதிக் கரையைச் சார்வார் - வீடாகிய கரையைச் சேருவாார்கள் எ-று. சேவகஞ் செய்தல் - பணிதல், தொண்டு செய்தல். செய் வோராவர் ஏவர் அவர் எனக் கூட்டுக. ஆவர்; முதல் வேற்றுமைக்கண் வருஞ்சொல். பிறவிக் கடலை நீந்தி வீடாகிய கரையைச் சேர்வரென்க. கதிக் கரசராவார் என்னும் பாடத்திற்கு வீட்டுலகத்திற்கு அரசாவார் என்று பொருள் கூறிக் கொள்க. (24) விடுத்திட லரிய நித்த வேள்விமா விரதம் வேதந் தடுத்திட லரிய தானந் தவமிவை தரும்பே றெல்லாம் அடுத்ததன் கரையில் வைகி யீசனை யருச்சிப் போர்க்குக் கொடுத்திடு புண்ணியத்திற் கோடியி லொன்றுக் கொவ்வா. (இ-ள்.) விடுத்திடல் அரிய - நீக்குதல் கூடாத, நித்த வேள்வி - நித்திய வேள்வியும், மாவிரதம் - பெரிய விரதமும், வேதம் - வேதம் ஓதுதலும், தடுத்திடல் அரிய தானம் - தடையில்லாத தானமும், தவம் - தவமுமாகிய, இவை தரும் பேறு எல்லாம் - இவைகள் கொடுக்கின்ற பயன்களனைத்தும், அதன் கரையில் அடுத்து வைகி - அதன் கரையிற் சென்று இருந்து, ஈசனை அருச்சிப்போர்க்கு - இறைவனை வழிபடுவோருக்கு, கொடுத்திடு புண்ணியத்தில் - தானங் கொடுக்கிற புண்ணியத்தில், கோடியில் ஒன்றுக்கு ஒவ்வா - கோடியில் ஒன்றுக்கேனும் ஒப்பாகா எ-று. விடுத்திடல் அரிய -கைவிடுதல் கூடாத. நித்த வேள்வி - பஞ்சயக் கியம்; அக்கினி காரியமும் என்ப. தடுத்திடல் - செய்யாதுதவிர்த்தல். ஒன்றுக்கு - ஒரு கூறாகிய புண்ணியத்திற்கும்; உம்மை தொக்கது. (27) உம்மையிற் பிறவி தோறு நியமநல் லொழுக்கம் பூண்டு பொய்ம்மையில் விரதந் தானந் தவஞ்செய்து புனித ராகிச் செம்மைநன் னெறியி னின்ற சித்தருக் கலதித் தீர்த்தம் இம்மையி லடைந்து நித்த மாடுதற் கெய்தா தன்றே. (இ-ள்.) உம்மையில் பிறவிதோறும் - முன்னெடுத்த பிறப்புக் கள் ஒவ்வொன்றிலும், நியமம்நல் ஒழுக்கம்பூண்டு - நியமமாக நல்லொழுக்கத்தை மேற்கொண்டு, பொய்ம்மை இல் - பொய் இல்லாத, விரதம் தானம் தவம் செய்து - விரதம் தானம் தவங்களைச் செய்து, புனிதர் ஆகி - தூயராகி, செம்மைநல் நெறியில் நின்ற - நடு நிலைமையாகிய நல்வழியில் நிலைபெற்ற, சித்தருக்கு அலது - சித்த முடையாருக்கன்றி (ஏனையோர்க்கு), இத்தீர்த்தம் - இந்தத் தீர்த்தமானது, இம்மையில் அடைந்து - இப்பிறவியில்சென்று, நித்தம் ஆடுதற்கு எய்தாது - தினமும் ஆடுதற்குக் கிட்டாது எ-று. உம்மையில் - முற்பிறவிகளில். செம்மை - சிறப்புமாம். சித்தர் - மனமுடையார்; செய்யப்படுவன செய்து முடித்தவருமாம். சித்தருக்கு எய்துவதன்றி ஏனையருக்கு எய்தா தென்க. நித்தம் - நாடோறும். அன்று, ஏ;அசை. (28) மதிகதிரோ னிடத்தொடுங்கு தினந்திங்கட் பிறப்பரவம் வாயங் காந்து கதிர்கடமை விழுங்குதினம் விதிபாத மிந்நாளிற் கருதி மூழ்கித் துதிகடருப் பணந்தானம் புரிதன்மனு வோதுதலத் தொகையொன் றற்கொன் றதிகபல னம்முறைநூ றாயிரநூ றாயிரமோ ரனந்த மாகும். (இ-ள்.) மதி கதிரோன் இடத்து ஒடுங்கு தினம் - சந்திரன் சூரியனிடத்தில் ஒடுங்குகின்ற அமாவாசையும், திங்கள் பிறப்பு - மாதப் பிறப்பும், அரவம் வாய் அங்காந்து - இராகு கேதுக்கள் வாயைத்திறந்து, கதிர்கள் தமை விழுங்கு தினம் - சந்திர சூரியர்களை விழுங்குகின்ற நாளும், விதிபாதம் - விதி பாதமுமாகிய, இந்நாளில் - இந்த நாட்களில், கருதிமூழ்கி - பயனை எண்ணிநீராடி, துதிகள் தருப்பணம் தானம் புரிதல் - துதிகளும் தருப்பணமும் தானமும் செய்தலும், மனு ஓதுதல் - சமந்திரம் செபித்தலுமாகிய, அத்தொகை - அவை நான்கும், அம்முறை - அந்நாட்களின் முறையே, நூறு ஆயிரம் நூறாயிரம் ஓர் அனந்தம் - நூறும் ஆயிரமும் நூறாயிரமும் அளவில்லாதனவும் ஆக, ஒன்றற்கு ஒன்று - ஒன்றைக் காட்டிலும் ஒன்று, அதிக பலன் ஆகும் - மிக்க பலன் உடையனவாகும் எ-று. விழுங்கு தினம் - கிரகண நாள். விதிபாதம் - மாதந்தோறும் வரும் யோகங்களிலொன்று. அத்தொகை - அவை. அம்முறை அதிக பலன் ஆகும் என்றது நாடொறுஞ் செய்தலினும் அமாவாசையிற் செய்தல் நூறு மடங்கும், மாதப்பிறப்பிற் செய்தல் ஆயிரமடங்கும், கிரகணநாளிற் செய்தல் நூறாயிரமடங்கும், விதிபாதநாளிற் செய்தல் அளவின்றியும் மிக்க பலனுடையவாகும் என்றவாறு. ஒன்றற் கொன்று - ஒன்றின்னொன்று. (29) பொருவரிய தகர்த்திங்க டுலாத்திங்க ளிவையுதிக்கும் போது மூழ்கின் ஒருபதினா யிரமடங்காஞ் சுறவுகவைத் தாளலவ னுதிப்பின் மூழ்கின் இருபதினா யிரமடங்கா மிந்திரவி யிடத்தொடுங்கு மிந்து வாரம் வருவதறிந் தாடிமனு வோதன்முதல் செயினனந்த மடங்குண் டாகும். (இ-ள்.) பொருவு அரிய - ஒப்பில்லாத, தகர்த் திங்கள் - சித்திரை மாதமும், துலாத் திங்கள் இவை - ஐப்பசி மாதமுமாகிய இவைகள், உதிக்கும் போது மூழ்கின் - பிறக்கும் நாழிகையில் மூழ்கினால், ஒரு பதினாயிரம் மடங்கு ஆம் - பதினாயிரமடங்கு பலன் ஆகும்; சுறவு - தைமாதமும், கவைத்தாள் அலவன் - பிளவுபட்ட காலையுடைய கற்கடகமாகிய ஆடி மாதமுமாகிய இவைகள், உதிப்பின் மூழ்கின் - பிறக்கு நேரத்தில் மூழ்கினால், இருபதினாயிரம் மடங்கு ஆம் - இருபதினாயிர மடங்கு பலன் ஆகும்; இந்து இரவி இடத்து ஒடுங்கு - சந்திரன் சூரியனிடத் தொடுங்குகின்ற, இந்து வாரம் வருவது அறிந்து - திங்கட்கிழமை வருவதை உணர்ந்து, ஆடி மனு ஓதல் முதல் செயின் - நீராடி மந்திரஞ் செபித்தல் முதலியவற்றைச் செய்தால், அனந்த மடங்கு உண்டாகும் - அளவற்ற பலன் உண்டாகும் எ-று. தகர் - மேடம். சுறவு - மகரம். அலவன் - கடகம். சித்திரை, ஐப்பசி; தை, ஆடி;என்னும் மாதங்கள் பிறக்கும் பொழுதும், அமாவாசையுடன் கூடிய திங்கட்கிழமையும் கூறப்பட்டன. சுறவு, அலவன் என்பன அத்திங்களைக் குறிப்பன. உதிப்பின் - உதித்தற்கண். அலவன் என்னும் பெயர் நோக்கிக் கவைத்தாள் என அடை கொடுத்தார். (30) பிரயாகை தனின்மகர மதிநாண்முப் பதுங்குடைந்து பெறும்பே றிந்தத் திரையார்பைந் தடத்தொருநாண் மூழ்குவோன் பெறும்விரத சீலம் பூண்டு வரையாம லொருவருடம் படிந்துமையை யமரர்சிகா மணியாம் வேத உரையானை வழிபடுமேன் மலடிக்கும் நன்மகப்பே றுண்டா மன்னோ. (இ-ள்.) பிரயாகைதனில் - பிரயாகையில், மகரமதி - தை மாதத்தில், முப்பது நாளும் குடைந்து - முப்பது நாளும் மூழ்கி, பெறும் பேறு - அடையும் பயனை, இந்தத் திரை ஆர் பைந் தடத்து - இந்த அலைகளையுடைய பசிய தீர்த்தத்தில், ஒரு நாள் மூழ்கு வோன் பெறும் - ஒரு நாள் மூழ்குவோன் அடைவான்; விரத சீலம் பூண்டு - விரத ஒழுக்கத்தை மேற்கொண்டு, வரையாமல் - தவறாமல் ஒருவருடம் படிந்து - ஓராண்டு மூழ்கி, உமையை - அங்கயற் கண்ணியையும், அமரர் சிகாமணி ஆம் - தேவர்கள் சூளாமணி யாகிய, வேத உரையானை - வேதமாகிய திருவாக்கையுடைய சோமசுந்தரக் கடவுளையும், வழிபடுமேல் - வழிபடுவாளானால், மலடிக்கும் நன் மகப்பேறு உண்டாம் - மலடிக்கும் அறிவறிந்த மக்கட் பேறு உண்டாம் எ-று. பிரயாகை - திரிவேணிசங்கமம். முப்பது என்றது வழக்குப் பற்றி; சாந்திரமானத்தால் எனினுமாம். விரதமும் சீலமு மென்னலுமாம். வரைதல் - நீக்கல்; தவிர்தல். உமையையும் உரையானையும் என உம்மை விரிக்க. மலடிக்கும் என்னும் உம்மை இழிவு சிறப்பு. மன், ஓ;அசை. (31) எண்டிசைய நதிவாவி வடிவான மாதீர்த்த மெல்லா மிப்பொற் புண்டரிகத் தடத்திலொருகோடியிலோர் கூறுநிகர் போதா வீது கண்தனா லறந்தீண்டப் பெற்றதனா னற்பொருளங் கையா லள்ளிக் கொண்டதனா லின்பநலம் குடைந்ததனாற் பேரின்பங் கொடுக்கு மன்றே. (இ-ள்.) எண்திசைய - எட்டுத் திக்குகளிலுமுள்ள, நதிவாவி வடிவு ஆன - நதிவடிவும் தடாக வடிவுமான, மா தீர்த்தம் எல்லாம் - பெரிய தீர்த்தங்களி லாடிய பயன் அனைத்தும், இப்பொன் புண்டரிகத் தடத்தில் ஒரு கோடியில் - இந்தப் பொற்றாமரையில் ஆடிய பயன் ஒரு கோடியில், ஓர் கூறு நிகர் போதா -ஒரு கூற்றுக்கும் ஒப்பாகக் கூறப்போதாதன், ஈது - இந்தத் தீர்த்தமானது, கண்ட தனால் அறம் - தரிசித்தலால் அறத்தையும், தீண்டப் பெற்றதனால் நல்பொருள் - தொடப் பெற்றதனால் நல்ல பொருளையும், அம் கையால் அள்ளிக் கொண்டதனால் இன்ப நலம் - அகங்கையால் அள்ளிக் கொண்டதனால் இன்பமாகிய நலத்தையும், குடைந்த தனால் பேர் இன்பம் கொடுக்கும் - மூழ்கியதனால் பேரின்பமாகிய வீட்டையுங் கொடுக்கும் எ-று. தீர்த்தம், தடம் என்பன பயனுக்காயின. நிகர் போதா; ஒரு சொல்லுமாம்; ஒப்பாகா என்றபடி. உறுதிப் பொருள் நான்கனையுந் தரும் என்றார். சுட்டு நீண்டது. கண்டது முதலியன தொழிற் பெயர்கள். அன்று, ஏ;அசை. (32) முன்னவ னருளிச் செய்த காரண முறையா லன்றி இன்னமிப் புனித வாவிக் கேதுவா லெய்து நாமம் மின்னவிர் சடையான் சென்னி மேவிய கங்கை நீரிற் பின்னது கலந்த நீராற் பெருஞ்சிவ கங்கை யென்றும். (இ-ள்.) முன்னவன் அருளிச் செய்த காரண முறையால் அன்றி - இறைவனருளிச் செய்த காரண முறையால் வந்த பெயர்களே அல்லாமல், இன்னம் - இன்னமும், இப்புனித வாவிக்கு - இந்தத்தூய பொய்கைக்கு, ஏதுவால் எய்தும் நாமம் - காரணத்தால் வரும் பெயர். மின் அவிர் சடையான் - மின் போலும் விளங்குகின்ற சடையையுடைய இறைவனது, சென்னி மேவிய கங்கை நீரில் - திருமுடியிற் பொருந்திய கங்கையின் புனலில், பின் அது கலந்த நீரால் - பின்பு அது கலந்த தன்மையால், சிவகங்கை என்றும் பெறும் - சிவகங்கை எனவும் பெறும் எ-று. நாமம் சிவகங்கை யென்றுஞ் சொல்லப்பெறும் என்க. கலந்த நீர் - கலந்த தன்மை. (33) அலகிலாத் தீர்த்தந் தம்மு ளதிகவுத் தமமாய்த் தோன்றி இலகலா லிதனைத் தீர்த்த வுத்தம மென்ப ராய்ந்தோர் பலவிதழ் விரித்துச் செம்பொற் பங்கய மலர்ந்த நீரால் உலகவர் யாரும் பொற்றா மரையென வுரைப்ப ரன்றே. (இ-ள்.) அலகு இலா - அளவில்லாத, தீர்த்தம் தம்முள்ள - தீர்த்தங்களுக்குள், அதிக உத்தமம் ஆய்த் தோன்றி இலகலால் - மேலான உத்தமமாய்க் காணப்பட்டு விளங்குதலால், இதனை - இத்தீர்த்தத்தை, ஆய்ந்தோர் - நூலாராய்ந்தோர், பல இதழ் விரித்து - பல இதழ்களையும் விரித்து, செம்பொன் பங்கயம் மலர்ந்த நீரால் - சிவந்த பொற்றாமரை மலர்ந்த தன்மையினால், உலகவர் யாரும் - உலகத்தார் எவரும், பொற்றாமரை என உரைப்பர் - பொற்றாமரை யெனக் கூறுவர் எ-று. மேற் பாட்டிலுள்ள எய்து நாமம் என்பதனைக் கூட்டி, எய்து நாமம் உத்தம தீர்த்தமென்பர் என முடிக்க; பின்னுள்ள பெயர் களோடும் இங்ஙனமே கூட்டி முடிக்க. அன்று, ஏ;அசை. (34) தருமமுன் னாகு நான்குந் தருதலாற் றரும தீர்த்தம் அருமைசா லருத்த தீர்த்த மரும்பெறற் காம தீர்த்தம் இருமைசேர் முத்தி தீர்த்த மென்பதா மினைய தீர்த்தம் வெருவரு பாவ மென்னும் விறகினுக் கெரியா மன்றே. (இ-ள்.) தருமம் முன் ஆகும் நான்கும் தருதலால் - தரும முதலாகிய நான்கையும் நல்குவதனாலே, தரும தீர்த்தம் - தரும தீர்த்தம், அருமைசால் அருத்த தீர்த்தம் - அருமை மிகுந்த அருத்த தீர்த்தம், அரும்பெறல் காம தீர்த்தம் - பெறுதற்கரிய காம தீர்த்தம், இருமை சேர் முத்தி தீர்த்தம் என்பதாம் - பெருமை பொருந்திய முத்தி தீர்த்தம் என்று கூறப்படுவதாம்; இனைய தீர்த்தம் - இந்தத் தீர்த்தமானது, வெருவரு - அச்சம் பொருந்துகின்ற. பாவம் என்னும் விறகினுக்கு எரியாம் - பாவ மென்கின்ற விறகுக்குத் தீயாகும் எ-று. நான்கில் ஒவ்வொன்றால் இப்பெயர்கள் கூறப்படு மென்க. முத்தி தீர்த்த மென்னும் பெயர் முன்னர்ப் போந்த தெனினும் உறுதிப் பொள் நான்கும் பயத்தல் கூறுமுறைபற்றி ஈண்டுங் கூறினார். இருமை - பெருமை. வெரு; முதனிலைத் தொழிற்பெயர்; வெருவுதல் வருகின்ற. தீர்த்தம் எரியாம் என்பதின் நயங் காண்க. அன்று, ஏ;அசை. (35) இவ்வருந் தலத்தி னான்ற பெருமையு மெரிகால் செம்பொற் றெய்வத பதும தீர்த்தப் பெருமையுஞ் செப்பக் கேட்டோர் எவ்வமில் போகம் வீடு பெறுவரென் றிசைத்தான் முந்நீர்ப் பெளவமுண் டமரர் வேந்தன் பரிபவ விழுமந் தீர்த்தோன். (இ-ள்.) முந்நீர்ப் பெளவம் உண்டு - மூன்று நீரையுடைய கடலைக்குடித்து, அமரர் வேந்தன் - தேவேந்திரனுடைய, பரிபவ விழுமம் தீர்த்தோன் - தோல்வியால் வருந் துன்பத்தை நீக்கிய வனாகிய அகத்தியமுனிவன், இ அருந்தலத்தின் ஆன்ற பெருமையும் - இந்த அரிய தலத்தின் நிறைந்த பெருமையும், எரி கால் - ஒளி வீசுகின்ற, செம்பொன் பதும தெய்வத் தீர்த்தப் பெருமையும் - சிவந்த பொற்றாமரையாகிய தெய்வத்தன்மை பொருந்திய தீர்த் தத்தின் பெருமையும் ஆகிய இவைகளை, செப்பக் கேட்டோர் - ஒருவர் சொல்லக் கேட்டவர்கள், எவ்வம் இல் போகம் வீடு பெறுவர் என்று இசைத்தான் - துன்பமில்லாத போகத்தையும் வீட்டையும் அடைவார்கள் என்று கூறினான் எ-று. எரி - நெருப்பு; ஒளிக்காயிற்று. தெய்வதம்; தகரம் விரித்தல், போகமும் வீடும் என்னும் உம்மை தொக்கன. பரிபவம் - இழிவு. விழுமம் - துன்பம். (36) ஆகச் செய்யுள் - 290. மூர்த்திவிசேடப் படலம் ஆலவா யலர்ந்த1 செம்பொ னம்புயப் பெருந்தீர்த் தத்தின் மேலவாம் பெருமை தன்னை விளம்புவா ரெவரே யங்கண் நீலமா மிடற்று முக்க ணிராமய னறிவா னந்த மூலமா விலிங்க மேன்மை முறையினா லறைய லுற்றாம். (இ-ள்.) ஆலவாய் - திருவாலவாயின்கண், அலர்ந்த - மலர்ந்த, செம்பொன் அம்புயம் - சிவந்த பொற்றாமரையாகிய, பெருந் தீர்த்தத்தின் - பெருமை பொருந்திய தீர்த்தத்தின், மேல் அவாம் - விண்ணுலகத்தாரும் விரும்புகின்ற, பெருமை தன்னை - பெருமையை, விளம்புவார் எவரே - கூறுவார் யாரே; அங்கண் - அவ்விடத்து, நீலம் மாமிடற்று - மிக்க கருமையுடைய கண்டத்தினையும், முக்கண் - மூன்று கண்களையுமுடைய, நிராமயன் - சோமசுந்தரக் கடவு ளாகிய, அறிவு ஆனந்தம் - ஞானானந்த வடிவான, மூலம் மா இலிங்கம் - பெருமை பொருந்திய மூல விலிங்கத்தின், மேன்மை - பெருமையை, முறையினால் அறையல் உற்றாம் - முறைப்படி சொல்லுதலுற்றோம் எ-று. விளம்புவா ரெவரே யென்றது யாமும் இவ்வளவில் அமைதும் என்றபடி. நீலம் மா; ஒருபொருளிருசொல்; மா பெருமையுமாம். நிராமயன் - நோயில்லாதவன், ஆமயம் - நோய். நிராமயனாகிய இலிங்க மூர்த்தி யென்க. (1) பொன்னெடு மேரு வெள்ளிப் பொருப்புமந் தரங்கே தாரம் வன்னெடும் புரிசை சூழ்ந்த வாரண வாசி யாதிப் பன்னருந் தலங்க டம்மிற் பராபர விலிங்கந் தோன்றும் முன்னரிக் கடம்பின் மாடே மூளைத்ததிச் சைவ லிங்கம். (இ-ள்.) பொன் நெடு மேரு - பொன்னாகிய நெடிய மேரு மலையும், வெள்ளிப் பொருப்பு - கைலைமலையும், மந்தரம் - மந்தரமலையும், கேதாரம் - திருக்கேதாரமும், வல்நெடும் புரிசை சூழ்ந்த - வலியநெடிய மதில் சூழ்ந்த, வாரண வாசி - காசியும், ஆதி - முதலாகவுள்ள, பன் அரும் தலங்கள் தம்மில் - சொல்லுதற்கரிய திருப்பதிகளின் கண், பராபர இலிங்கம் தோன்று முன்னர் - சிவலிங்கம் தோன்றுவதற்கு முன்பே, இக்கடம்பின் மாடே - இக்கடம்ப மரத்தினடியில், இச்சைவலிங்கம் முளைத்தது - இந்தச் சிவலிங்கம் தோன்றியருளியது எ-று. பராபரன் என்பதில் னகர வொற்றுக் கெட்டது; பரமும் அபரமுமானவன்; பரைக்கு நாயகன் என்றுங் கூறுவர். சிவன் சைவனெனப் படுதலைச் ‘சைவா போற்றி’ என்பதனா னறிக. (2) அப்பதி யிலிங்க மெல்லா மருட்குறி யிதனிற் பின்பு கப்புவிட் டெழுந்த விந்தக் காரண மிரண்டி னாலும் ஒப்பரி தான ஞான வொளிதிரண் டன்ன1விந்தத் திப்பிய விலிங்க மூல விலிங்கமாய்ச் சிறக்கு மன்னோ. (இ-ள்.) அப்பதி இலிங்கம் எல்லாம் - (மகாமேரு முதலிய) அந்தத் திருப்பதிகளிலுள்ள இலிங்கங்கள் அனைத்தும், அருள் குறி இதனில் - அருட்குறியாகிய இச்சிவலிங்கத்தினின்றும், பின்பு கப்புவிட்டு எழுந்த - இது தோன்றியபின் கிளைத்துத் தோன்றின; இந்தக் காரணம் இரண்டினாலும் - இந்த இரண்டு ஏதுக்களாலும், ஒப்பு அரிதான - ஒப்பில்லாத, ஞான ஒளி திரண்டு அன்ன - ஞானவொளி திரண்டாற் போன்ற, இந்தத் திப்பிய இலிங்கம் - இந்தத் திவ்விய இலிங்கமானது, மூல இலிங்கமாய்ச் சிறக்கும் - மூல லிங்கமாகச் சிறந்து விளங்கும் எ-று. கப்பு; கவர்ப்பு என்பதன் மரூஉ. எழுந்த; அன் பெறாத பலவின்பால் முற்று. மேற் செய்யுளிற் கூறியதனையுஞ் சேர்த்துக் காரணம் இரண்டென்றார். திரண்டாலன்ன வென்பது விகார மாயிற்று. மன்னும் ஓவும் அசை. (3) இந்தமா விலிங்கத் தெண்ணான் கிலக்கண விச்சை மேனி அந்தமி லழகன் பாகத் துமையொடு மழகு செய்து சந்ததம் விளக்கஞ் செய்யுந் தகைமையை நோக்கிச் சோம சுந்தர னென்று நாமஞ் சாத்தினார்2 துறக்க வாணர். (இ-ள்.) இந்தமா இலிங்கத்து - இந்தப் பெருமை பொருந்திய இலிங்கத்தின்கண், எண் நான்கு இலக்கணம் - முப்பத்திரண்டு இலக்கணங்களையுடைய, விச்சை மேனி - ஞானவடிவாகிய, அந்தம் இல் அழகன் - முடிவில்லாத அழகினையுடைய இறைவன், பாகத்து உமையொடும் - ஒரு பாகத்தில் உமை யம்மையோடும், அழகு செய்து - அழகினைச் செய்து, சந்ததம் - எப்போதும், விளக்கம் செய்யும் - அருள் பாலிக்கின்ற, தகைமையை நோக்கி - தன்மையைக் கண்டு, துறக்கவாணர் - தேவர்கள், சோமசுந்தரன் என்று நாமம் சாத்தினார் - சோமசுந்தரன் என்று பெயர் கூறினார்கள் எ-று. புருடவுடம்பிலக்கணம் முப்பத்திரண்டென்பது கருதிக் கூறினார். விச்சை - ஞானம். விளக்கஞ் செய்தல் - அருளால் உலகை விளங்கச் செய்தல். சோம சுந்தரன் - உமையுடன் கூடிய அழகினை யுடையான். சாத்துதல் - சார்த்துதல். (4) திறப்படு முலக மெங்கும் வியாபியாய்ச் சிறந்து நிற்கும் அறப்பெருங் கடவுள் சோம சுந்தர னதனா லன்றோ கறைக்கதிர் வடிவேற் றென்னன் கையிற்பொற் பிரம்பு பட்ட புறத்தடித் தழும்பு மூன்று புவனமும் பட்ட தன்றே. (இ-ள்.) திறப்படும் - பலவகையாயுள்ள, உலகம் எங்கும் - உலகங்களனைத்தும், வியாபியாய்ச் சிறந்து நிற்கும் - வியாபியாகச் சிறந்து நிலைபெற்ற, அறப்பெருங் கடவுள் - அறவடிவாகிய பெரிய இறைவன், சோம சுந்தரன் - சோமசுந்தரக் கடவுளாம்; அதனால் அன்றோ - அதனாலல்லவா; கறை - குருதிக் கறையையுடைய, கதிர் - ஒளிபொருந்திய, வடி - கூர்மையான, வேல் - வேற்படையையுடைய, தென்னன் கையில் - பாண்டி மன்னன் கையிலுள்ள, பொன் பிரம்பு - பொற் கட்டினையுடைய பிரம்பினாலே, புறத்துப்பட்ட - முதுகிற் பட்ட, அடித்தழும்பு - அடியின்சுவடானது, மூன்று புவனமும் பட்டது - மூன்றுலகங்களிலுமுள்ள சராசரங்களிலும் பட்டது எ-று. திறம் - வகை. வியாபித்தல் - கலத்தல். அதனாலன்றோ பட்டது என்க; இரண்டு எதிர்மறை ஓருடன்பாடாயின. அன்று ஏ; அசை; அன்று - அந்நாளில் எனினுமாம். இறைவன் சருவ வியாபி என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டுக் கூறினார். இவ்வரலாற்றை இப்புராணத்து மண்சுமந்த படலத்திற் காண்க. (5) சொற்றவிச் சமட்டி யான சோமசுந் தரனைக் காணப் பெற்றவர் வியட்டி யான பிறபதி யிலிங்கங் காணல் உற்றவ ராவ ரென்னென் றுரைக்கின்வே ரூட்டு நீர்போய் மற்றைய சினைக ளெல்லாந் தழைவிக்கு மரத்தின் மாதோ. (இ-ள்.) சொற்ற இச் சமட்டி ஆன - சொல்லிய இந்தச் சமட்டி உருவாகிய, சோம சுந்தரனைக் காணப் பெற்றவர் - சோம சுந்தரக் கடவுளைக் காணப் பெற்றவர், வியட்டி ஆன - வியட்டி உருவாகிய, பிற பதி - பிற திருப்பதிகளிலுள்ள, இலிங்கம் காணல் உற்றவர் ஆவர் - இலிங்கங்களையும் காணப் பெற்றவராவர்; என் என்று உரைக்கின் - எப்படி என்று வினாவில், வேர் ஊட்டும் நீர் - வேரை உண்பித்த நீரானது, போய் - சென்று, மரத்தின் - மரத்திலுள்ள, மற்றைய சினைகள் எல்லாம்தழைவிக்கும் - பிற உறுப்புக்களை யெல்லாம் தழையச் செய்யும் (அது போலவென உணர்க) எ-று. சமட்டியான - சூக்குமமாய் எல்லாமான. வியட்டியான - தூலமாய் வெவ் வேறான. காரணம் என்னென்று வினவிலென்க. சில சொற்கள் வருவித்து முடிக்கப்பட்டது. மாது ஓ; அசை. (6) எத்தலத் தியாவ னெண்ணெண் டிருவிளை யாடல் செய்தான் அத்தலத் தவனுக் கொப்பு மதிகமாஞ் சிறப்பும் பெற்ற உத்தம னென்று மெந்த வுலகிலு1 மில்லை யந்த வித்தக னதிகத் தன்மை யெனைத்தெனின் விளம்பக் கேண்மின். (இ-ள்.) எத்தலத்து - எந்தப்பதியில், யாவன் - எந்தக் கடவுள், எண் எண் திருவிளையாடல் செய்தான் - அறுபத்து நான்கு திருவிளையாடல்களைச் செய்தருளினானோ, அத்தலத்து - அந்த மதுரைப்பதியில் உள்ள, அவனுக்கு - அந்தச் சோமசுந்தரக் கடவுளுக்கு, ஒப்பும் அதிகம் ஆம் சிறப்பும்பெற்ற - ஒப்புத்தன்மையும் உயர்வாகியசிறப்புத் தன்மையும் அடைந்த, உத்தமன் - கடவுள், என்றும் எந்த உலகிலும் இல்லை - எந்தக் காலத்திலும் எந்த உலகத்திலுமில்லை; அந்த வித்தகன் - அந்த ஞான வடிவினனுடைய, அதிகத்தன்மை - சிறப்புத்தன்மை, எனைத்து எனின் - எத்தன்மையது என்றால், விளம்பக் கேண்மின் சொல்லக் கேளுங்கள் எ-று. செய்தான் யாவன் அவனுக்கு என்க; குற்றியலிகரம், (7) பொருப்பினுட் டலைமை யெய்தும் பொன்னெடுங் குடுமி மேரு தருக்களிற் றலைமை சாருந் தண்ணறுந் தெய்வ தாரு விருப்புறு வேள்வி தம்முண் மேம்படும் புரவி மேதம் அருட்படு தானந் தம்முள் விழுமிதா மன்ன தானம். (இ-ள்.) நெடுங்குடுமி - நீண்ட சிகரங்களையுடைய, பொன் மேரு - பொன்னாகிய மேருமலையானது, பொருப்பினுள் தலைமை எய்தும் - மலைகளுக்குள் முதன்மையுறும்; தண்நறுந் தெய்வதாரு - குளிர்ந்த நறிய கற்பகத்தரு, தருக்களில் தலைமை சாரும் - மரங்களுள் முதன்மை யெய்தும்; விருப்பு உறு - விருப்ப மிகுகின்ற; வேள்வி தம்முள் - வேள்விகளுள், புரவி மேதம் மேம்படும் - பரி வேள்வி உயர்வாகும்; அருள்படுதானம் தம்முள் - அருளோடு கூடிய தானங்களுள், அன்னதானம் விழுமிது ஆம் - அன்னதானம் சிறந்ததாகும் எ-று.(8) மனிதரி லுயர்ந்தோ ராதி மறையவர் தேவர் தம்மிற் பனிதரு திங்கள் வேணிப் பகவனே யுயர்ந்தோன் வேட்டோர்க் கினிதருள் விரதந் தம்மு ளதிகமா மிந்து வாரம் புனிதமந் திரங்க டம்முட் போதவைந் தெழுத்து மேலாம். (இ-ள்.) மனிதரில் ஆதி மறையவர் உயர்ந்தோர் - மக்களுள் முதன்மையான மறையவர் மேலோராவர்; தேவர் தம்மில் - தேவர் களுள், பனிதரு திங்கள் வேணி - குளிர்ந்த சந்திரனை யணிந்த சடையை யுடைய, பகவனே உயர்ந்தோன் - சிவபெருமானே உயர்ந்தவன்; வேட்டோர்க்கு - விரும்பினவர்களுக்கு, இனிது அருள் - நலத்தைச் செய்கின்ற, விரதம் தம்முள் - விருதங்களுள், இந்து வாரம் அதிகம் ஆம் - சோமவார விரதம் சிறந்தது ஆகும்; புனித மந்திரங்கள் தம் முள் - தூய மந்திரங்களுள், போத ஐந்து எழுத்து மேலாம் - ஞானத் திற்கு எதுவாகிய திருவைந்தெழுத்தாகிய மந்திரம் மேன்மை யுடையதாகும் எ-று. திருவைந் தெழுத்தின் முதன்மையை, “ மந்திர நான்மறை யாகி வானவர் சிந்தையு ணின்றவர் தம்மை யாள்வன” என்னும் திருநெறித் தமிழ் மறையா னறிக. (9) மின்மைசான் மணியிற் சிந்தா மணிவரம் விழுப்ப நல்கும் தன்மைசா லறங்க டம்மின் மிகுஞ்சிவ தரும மென்ப இன்மைசா னெறிநின் றோருக் கேற்குநற் கலங்க1 டம்மின் நன்மைசான் றவரே முக்க ணாதனுக் கன்பு பூண்டோர். (இ-ள்.)மின்மைசால் - ஒளிமிகுந்த, மணியில் சிந்தாமணி வரம் - மணிகளுள் சிந்தாமணி மேன்மையானது; விழுப்பம் நல்கும் தன்மைசால் - உயர்வைக் கொடுக்குந் தன்மை யமைந்த, அறங்கள் தம்மில் - தருமங்களுள், சிவ தருமம் மிகும் - சிவதருமம் உயர்ந்தது; இன்மைசால் நெறி நின்றோருக்கு - இல்லறமாகிய சிறந்த நெறியில் நின்றவருக்கு, ஏற்கும் - ஏற்றற் குரிய, நற்கலங்கள் தம்மில் - நல்ல பாத்திரங்களுள், முக்கண் நாதனுக்கு அன்பு பூண்டோரே - மூன்று கண்களையுடைய இறைவனுக்கு அன்பு பூண்டவரே, நன்மை சான்றவர் - நன்மை மிக்கவராவர் எ-று. மின்மை, இன்மை என்பவற்றில் மை; பகுதிப் பொருள் விகுதி. சிந்தாமணி - சிந்தித்தவற்றைத் தரும் மணி. என்ப; அசை. நின்றோருக்கு; வேற்றுமை மயக்கம். பாத்திரம் என்பதனாற் கலம் என்றார். ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. (10) தீயவாஞ் சுவைப்1பா லாவிற் றேவரா வதிகம் பல்வே றாயமா தீர்த்தந் தம்மு ளதிகமாஞ் சுவண கஞ்சம் மாயமா சறுக்க வெல்லாத் தலத்திலும் வதிந்து மன்னுந் தூயவா னவரிற் சோம சுந்தரன் சிறந்தோ னாகும். (இ-ள்.) தீயவாம் - இனிமையாகிய, சுவைப்பால் ஆவில் - சுவையையுடைய பாலையுடைய பசுக்களுள், தேவர் ஆ அதிகம் - காம தேனு உயர்ந்தது; பல்வேறு ஆய - பல வேறு வகையாகிய, மா தீர்த்தம் தம்முள் - பெருமை பொருந்திய தீர்த்தங்களுள், சுவண கஞ்சம் அதிகம் ஆம் - பொற்றாமரை சிறந்தது; (அவைபோல), மாயம் மாசு அறுக்க - பந்தமாகிய குற்றத்தை நீக்குதற் பொருட்டு, எல்லாத் தலத்திலும் - எல்லாப் பதிகளினும், மன்னி வதியும் - நிலைபெற்று வீற்றிருக்கும், தூய வானவரில் - தூய சிவலிங்க மூர்த்திகளுள், சோமசுந்தரன் சிறந்தோன் ஆகும் - சோம சுந்தரக் கடவுள் சிறந்தவனா வான் எ-று. தீய என்பது பண்பு மாத்திரையாய் நின்றது. அவாம் தீ சுவை எனப் பிரித்துக் கூட்டி. விரும்பும் இனிய சுவை யென்றலுமொன்று. வதிந்து மன்னும் - மன்னி வதியும் என மாற்றப்பட்டது. ‘பொருப் பினுட் டலைமை யெய்தும் பொன்னெடுங் குடுமி மேரு’ என்பது முதலாகக் கூறப்பட்டவற்றை யெல்லாம் உவமையாக நிறுத்தி ஒப்புமைக் கூட்ட வுவமையாக்குக. (11) அந்தமு முதலு மில்லா வகண்டபூ ரணமா யார்க்கும் பந்தமும் வீடு நல்கும் பராபரச் சோதி தானே வந்தனை புரிவோர்க் கிம்மை மறுமைவீ டளிப்பா னிந்தச் சுந்தர விலிங்கத் தென்றும் விளங்குவான் சுருதி யேத்த. (இ-ள்.) அந்தமும் முதலும் இல்லா - முடிவும் முதலு மில்லாமல், அகண்ட பூரணமாய் - அகண்ட நிறைவாகி, யார்க்கும் பந்தமும் வீடும் நல்கும் - எவருக்கும் பந்தத்தையும் முத்தியையுங் கொடுத்தருளுகின்ற, பராபரச் சோதி - சிவபெருமான். வந்தனை புரிவோர்க்கு - வணங்கு வோர்களுக்கு, இம்மை மறுமை வீடு அளிப்பான் - இகபரப் பயன்களையும் வீடுபேற்றையும் அருளும் பொருட்டு, இந்தச் சுந்தர இலிங்கத்து - இந்த அழகிய இலிங்கத் தின்கண், சுருதி ஏத்த - மறைகள் துதிக்க, என்றும் விளங்குவான் - எப்போதும் வீற்றிருப்பான் எ-று. இல்லா ; ஈறு கெட்ட எதிர்மறை வினை யெச்சம்; பெயரெச்ச மறையுமாம். தான், ஏ;அசை. (12) இத்தகு சயம்பு தன்னை யேனைய சயம்பு வெல்லாம் நித்தமுந் தரிசித் தேகு நிருமல வொளியா மிந்த உத்தம விலிங்கங் கண்டோ ருரையுணர் வொடுங்க வுள்ளே சித்தமா சொழியத் தோன்றுஞ் சிவபரஞ் சுடரைக் கண்டோர். (இ-ள்.) இத்தகு சயம்புதன்னை - இந்தச் சயம்பு மூர்த்தியை, ஏனைய சயம்பு எல்லாம் - மற்றைய சயம்பு மூர்த்திகள் அனைத்தும், நித்தமும் தரிசித்து ஏகும் - நாள்தோறும் வந்து தரிசித்துச் செல்லா நிற்கும்; நிருமல ஒளி ஆம் -நின்மல ஒளிப் பிழம்பாகிய, இந்த உத்தம இலிங்கம் கண்டோர் - இந்த உத்தமமான சிவலிங்கத்தைத் தரிசித்தோர், சித்தம் மாசு ஒழிய - மனக்குற்றம் ஒழிதலால், உரை உணர்வு ஒடுங்க - வாக்கும் மனமும் ஒடுங்க, உள்ளே தோன்றும் - அகத்தே தோன்றியருளுகின்ற, சிவபரஞ் சுடரைக் கண்டோர் - பரஞ்சோதியாகிய சிவத்தைத் தரிசித்தவராவர் எ-று. சயம்பு - சுயம்பு. வடசொல்லாகலின் உயிர்வர உகரங்கெடாது நின்றது. உள்ளே கண்ட பயனெய்துவர்; காண்பர் என்றுமாம். (13) இத்தனிச் சுடரை நேர்கண் டிறைஞ்சினோர் பாவ மெல்லாங் கொத்தழற் பொறிவாய்ப் பட்ட பஞ்சுபோற் கோப மூள மெய்த்தவஞ் சிதையு மாபோன் மருந்தினால் வீயு நோய்போல் உத்தம குணங்க ளெல்லா முலோபத்தா லழியு மாபோல். (இ-ள்.) இத் தனிச் சுடரை - இந்த ஒப்பற்ற ஒளிவடிவாகிய சிவலிங்கத்தை, நேர் கண்டு இறைஞ்சினோர் - நேரே காணப்பெற்று வணங்கியவர்களுடைய, பாவம் எல்லாம் - பாவங்கள் அனைத்தும், கொத்து - திரண்ட, அழல் பொறி வாய் - தீப்பொறியின்கண், பட்ட பஞ்சுபோல் - அகப்பட்ட பஞ்சு அழிவது போலவும், கோபம் மூள - சினம் மிகுக்க, மெய்த்தவம் சிதையுமாபோல் - உண்மைத் தவம் அழியுந் தன்மைபோலவும், மருந்தினால் வீயும் நோய் போல் - மருந்தினால் நோய் அழிதல் போலவும், உத்தம குணங்கள் எல்லாம் - சிறந்த குணங்களனைத்தும், உலோபத்தால் அழியுமாபோல் - உலாபத் தன்மையால் அழியுந் தன்மைபோலவும் எ-று. பஞ்சு அழிதல்போல், நோய் வீதல்போல் என்க. சிதையுமா, அழியுமா என்பன விகாரம். “ உளப்பரும் பிணிப்புறா வுலோப மொன்றுமே அளப்பருங் குணங்களை யழிக்கு மாறுபோல்” என்பர் கம்பநாடரும். (14) கலிகட லிரவி தோன்றக் கருகிரு ளுடையு மாபோல் ஒலிகெழு பெருங்கா றள்ள வுடைபடு மேகம் போல வலிகெழு மடங்கல் சீற மாயுமால் யானை போலக் குலிசவல் லேறு தாக்கப் பொடிபடுங் குன்றம் போல. (இ-ள்.) கலிகடல் - ஒலிக்கின்ற கடலின்கண், இரவி தோன்ற - சூரியன் உதித்தலால். கருகு இருள் உடையுமா போல் - கருகிய இருள் அழியுந் தன்மை போலவும், ஒலி கெழு - ஒலி மிகுந்த, பெருங்கால் தள்ள - பெரிய காற்றுத் தள்ளுதலால், உடைபடு மேகம்போல் - மேகம் சிதைதல் போலவும், வலி கெழு - வலி மிக்க, மடங்கல் சீற - சிங்கம் கோபிக்க, மாயும் மால் யானைபோல - பெரிய யானை அழிதல் போலவும், குலிசம் வல் ஏறு தாக்க - வச்சிரப் படையாகிய வலிய இடியேறு தாக்குதலால், பொடி படு குன்றம் போல - மலைகள் துகள்பட்டு அழிதல் போலவும் எ-று. தோன்ற என்பது முதலிய செயவெனெச்சங்கள் காரணப் பொருளன. மேகம் முதலிய பெயர்களை மாற்றித் தொழிலு வமமாக்குக. மடங்கல் - சிங்கம்; மடங்கி முன்னும் பின்னும் நோக்குவது பற்றி வந்த பெயர். (15) மருட்சிசெய் காம நோயான் மதிகெடு மாறு போல அருட்சிவ ஞான நோக்கால் வலிகெடு மவிச்சை போலத் தருக்குறு முவணஞ் சீறத் தழலரா விளியு மாபோற் செருக்குற வழியுங் கற்ற கல்விபோற் சிதையு மன்றே. (இ-ள்.) மருட்சி செய் - மயக்கத்தைச் செய்கின்ற, காம நோயால் - காமநோயினால், மதிகெடுமாறு போல - அறிவு கெடுந்தன்மை போலவும், அருள் சிவஞான நோக்கால் - அருளை யுடைய சிவஞானப் பார்வையினால், வலி கெடும் அவிச்சை போல - அஞ்ஞானம் வலிகெட்டு அழிதல் போலவும், தருக்கு உறும் உவணம் சீற - செருக்கு மிக்க கருடன் கோபித்தலால், தழல் அரா விளியுமாபோல் - நஞ்சினையுடைய பாம்புகள் அழிதல் போலவும், செருக்கு உற - தருக்குப் பொருந்துதலால், அழியும் கற்ற கல்விபோல் - கற்றகல்வி அழிதல் போலவும், சிதையும் - கெட்டு விடும் எ-று. செருக்கினையே அறியாமை யாக்கி. “ வெண்மை யெனப்படுவ தியாதெனி னொண்மை யுடையம்யா மென்னுஞ் செருக்கு” எனத் தெய்வப் புலவர் கூறியிருப்பது இங்கு நோக்கற் பாலது. மேல் இறைஞ்சினோர் பாவமெல்லாம் என நிறுத்திய எழுவாய் இச்செய்யுளிற் சிதையும் என்னும் பயனிலை கொண்டு முடிந்தது. அன்று - ஏ: அசை. (16) புலரியிற் சீவன் முத்தி புரேசனைக் காணப் பெற்றால் அலைகட னான்குட் பட்ட வவனிமா தானஞ் செய்த பலனுறுங் கதிர்கா லுச்சி வைகலிற் பணியப் பெற்றால் கலைஞர்பா னூற்றுப் பத்துக் கபிலைமா தானப் பேறாம். (இ-ள்.) புலரியில் - விடியற்காலையில், சீவன் முத்தி புரேசனை - சீவன் முத்திபுரத்தில் வீற்றிருக்கும் சோமசுந்தரக் கடவுளை, காணப் பெற்றால் - காணப் பெறின், அலைகடல் நான்குள்பட்ட - அலைகின்ற கடல் நான்கின் உட்பட்ட, மா அவனி தானம் செய்த - பெரிய பூமியைத் தானங்கொடுத்தலால் வரும், பலன் உறும் - பயன் எய்தும்; கதிர்கால் உச்சி வைகலில் - சூரியன் ஒளியை வீசும் உச்சிப் போதில், பணியப் பெற்றால் - வணங்கப் பெற்றால்; கலைஞர்பால் - அறிஞர்களிடத்து, நூற்றுப் பத்து மா கபிலை தானப் பேறு ஆம் - ஆயிரம் பெரிய பசுக்களைத் தானஞ் செய்தலால் வரும் பயன் கூடும் எ-று. புலரி - இருள் நீங்குங்காலம். புரேசன் ; குணசந்தி. மா அவனியென்க. உச்சி - ஆதித்தன் விசும்பின்றாடுவில் இருக்குங்காலம். கலைஞர் - வேதம் முதலிய கலைகளை யுணர்ந்தவர். (17) விண்ணிடைப் பரிதிப் புத்தேள் மேலைநீர் குளிக்கு மெல்லை அண்ணலை வணங்கிற் கோடி யானினத் தானப் பேறாம் பண்ணவர் பரவும் பாதி யிருள்வயிற் பணியப் பெற்றால் வண்ணவெம் புரவி மேத மகம்புரி பெரும்பே றெய்தும். (இ-ள்.) விண் இடை - வானின்கண் உள்ள, பரிதிப் புத்தோள் - சூரிய தேவன், மேலை நீர் குளிக்கும் எல்லை - மேலைக் கடலில் மூழ்கும் அந்திப்பொழுதில், அண்ணலை வணங்கில் - சோம சுந்தரக் கடவுளைப் பணிந்தால், கோடி ஆன் இனம் தானப்பேறு ஆம் - கோடி பசுக்கூட்டங்களைத் தானஞ்செய்த பயன் எய்தும், பண்ணவர் பரவும் பாதி இருள் வயின் - தேவர்கள் வணங்கும் அரையிருளில், பணியப் பெற்றால் - வணங்கப் பெற்றால், வண்ணம் - நல்ல நிறத்தையுடைய, வெம்புரவி மேதம் - கடிய செலவினையுடைய பரி மேதமாகிய, மகம் புரி பெரும் பேறு எய்தும் - வேள்வியைப் புரிதலால் வரும் பெரிய பயன் கூடும் எ-று. வண்ணமும் வெம்மையும் புரவிக்கு அடை புரி; காரணப் பொருளில் வந்தது. (18) இன்னன வதிக மாம்பே றறிந்துபோ யெத்தே வர்க்கும் முன்னவன் சமட்டி விச்சா புரமுறை முதல்வன் றன்னைச் சொன்னவிக் காலந்1தோறு மிறைஞ்சியுந் தொழுதுஞ் சூழ்ந்தும் பொன்னடிக் கன்ப ராகி வழிபடும் புனித சீலர். (இ-ள்.) இன்னன - இவை போல்வனவாகிய, அதிகம் ஆம் பேறு அறிந்து போய் - மிகுந்த பயனை உணர்ந்து சென்று, எத்தேவர்க்கும் முன்னவன் - எல்லாத் தேவர்களுக்கு முன்னவனாகிய, சமட்டி விச்சாபுரம் உறை முதல்வன் தன்னை - சமட்டி விச்சாபுர மென்னும் மதுரைப்பதியில் எழுந்தருளியுள்ள முதல்வனாகிய சோமசுந்தரக் கடவுளை, சொன்ன இக்காலந்தோறும் - மேற் கூறிய இக்காலங்கள் தோறும், இறைஞ்சியும் - நிலத்திற் றாழ்ந்து வணங்கியும், தொழுதும் - கைகூப்பிக் கும்பிட்டும், சூழ்ந்தும் - வலம் வந்தும், பொன் அடிக்கு - அழகிய திருவடிகளுக்கு, அன்பர் ஆகி வழிபடும் புனித சீலர் - அன்பினை யுடையராகி வழிபாடு செய்கின்ற தூய ஒழுக்கத்தையுடையார் எ-று. சமட்டி விச்சாபுரம் என்பதனைத் தலவிசேடத்துட் காண்க. புனித சீலர் என்பது வரும்பாட்டில் வாழ்வார் என்பதனோடு முடியும். (19) உம்மையில் வினைக ளென்னும் பிணியவிழ்ந் தொருவித் தூய செம்மைய ராகி யானாத் திருவொடு செல்வ மோங்க வெம்மையில் போக மூழ்கி மலவிருள் வீக்க நீந்தி மைம்மலி கண்டத் தெங்கோன் மலரடி நீழல் வாழ்வார். (இ-ள்.) உம்மையில் - முற்பிறப்புக்களிற் செய்த, வினைகள் என்னும் பிணி - வினைகளாகிய கட்டனாது, அவிழ்ந்து ஒருவி - அவிழ்ந்து நீங்கப் பெற்று, தூய செம்மையர் ஆகி - தூய வாய்மையை யுடையவராய், ஆனாத் திருவொடு - நீங்காத அருட் செல்வத்தோடு, செல்வம் ஓங்க - ஏனைச் செல்வங்களும் மிக, வெம்மைஇல் போகம் மூழ்கி - தட்பமாகிய போகத்தில் அழுந்தி நுகர்ந்து, மல இருள் வீக்கம் நீந்தி - ஆணவ இருளாகிய பெருக்கினைக் கடந்து, மை மலி கண்டத்து எங்கோன் - கருமை மிகுந்த திருமிடற்றையுடைய எம் இறைவனுடைய, மலர் அடி நீழல் வாழ்வார் - மலர்போன்ற திருவடி நீழலையடைந்து வாழ்வார்கள் எ-று. அவிழ்ந்து என்றமையால் பிணி என்பதற்குக் கட்டு என்றும், நீந்தி என்றமையால் வீக்கம் என்பதற்கு பெருக்கு என்றும் பொருள் கூறப்பட்டன. செம்மை - நடுவுநிலைமை, வாய்மை, மலமாகிய இருள் வீக்கம் என்றும், இருளினது வீக்கம் என்றும் விரித்தலுமாம். (20) (மேற்படி வேறு) அறவுருவ னாலவா யானாமஞ் செவிமடுத்தா லடைந்த பத்துப் பிறவிவினை யறுநினைந்தா னூறுபெரும் பவப்பாவப் பிணிபோங் கூடல் இறைவனையின் றிறைஞ்சுதுமென் றெழுந்து மனைப்புறம்போந் தாலீரைஞ் ஞூறு மறமுறுவெம் பவத்திழைத்த பாதகவல் வினையனைத்து மாயு மன்னோ. (இ-ள்.) அற உருவன் ஆலவாயான் - தரும வடிவினனாகியதிரு வாலவாய்க் கடவுளின், நாமம் செவிமடுத்தால் - பெயரைச் செவியிற் கேட்டால், பத்துப் பிறவி அடைந்த வினை அறும் - பத்துப் பிறப்புக் களிலெய்திய வினைகள் கெடும்; நினைந்தால் - சிந்தித்தால், நூறுபவம் - நூறு பிறவிகளிற் செய்த, பெரும் பாவப் பிணிபோம் - பெரிய பாவமாகிய நோய் ஒழியும்; கூடல் இறைவனை - மதுரையில் எழுந்தருளிய அவ்விறைவனை, இன்று இறைஞ்சுதும் என்று எழுந்து - இன்று வணங்குவேமென்று கருதி எழுந்து, மனைப்புறம் போந்தால் - வீட்டின் புறத்தே வந்தால், ஈரைஞ்ஞறு மறம்உறு வெம்பவத்து இழைத்த - ஆயிரம் பாவ மிகுந்த கொடிய பிறவிகளிற் செய்த, பாதக வல்வினை அனைத்தும் மாயும் - பாதகங்களாகிய கொடிய வினைகளெல்லாம் அழியும் எ-று. பவம் - பிறப்பு. பெரும் பாவம் என்க. மன்னும் ஓவும் அசை. (21) புழைக்கைவரை தொலைத்தானைத் தரிசித்தோ ராயிரவாம் புரவி வேள்வி தழைத்தபெரும் பயன்பெறுவ ருருத்திரசூத்1 தம்மதனாற் றவவா னோர்கள் தொழற்கரியான் றனைத்துதித்தோர் கணத்துக்கா யிரராச சூய யாகம் இழைத்தபெரும் பயன்பெறுவர் சமட்டிவடி வாகியவவ் விலிங்கந் தன்னை. (இ-ள்.) புழை கைவரை தொலைத்தானை - துவாரத்தை யுடைய துதிக்கையினையுடைய மலையாகிய யானையைத் தொலைத்த சோமசுந்தரக் கடவுளை, தரிசித்தோர் - காணப் பெற்றவர்கள், வாம்புரவி வேள்வி ஆயிரம் தழைத்தபெரும் பயன் பெறுவர் - தாவுகின்ற பரிவேள்விகள் ஆயிரஞ் செய்தலால் வரும் மிகுந்த பெரிய பயனை அடைவர்; தவ வானோர்கள் - தவத் தினையுடைய தேவர்களும், தொழற்கு அரியானை - வணங்குதற்கு அரியவனை, உருத்திர சூத்தம் அதனால் துதித்தோர் - உருத்திர சூத்த மந்திரத்தால் துதித்து வணங்கியவர்கள், கணத்துக்கு - கணப்பொழுதுக்கு; ஆயிர ராச சூய யாகம் இழைத்த - ஆயிரம் இராச சூயவேள்வி செய்தலால் வரும், பெரும்பயன் பெறுவர் - பெரிய பயனை அடைவர்; சமட்டி வடிவாகிய அ இலிங்கம் தன்னை - சமட்டி உருவமாகிய அந்தச் சிவலிங்கத்தை எ-று. கைவரை - யானை. புழை கைக்கு அடை. வாவும் புரவி. ஆயிரஞ் செய்தலால் வரும் என விரிக்க. இலிங்கந்தன்னைப் பூசித்தோர் எனவருஞ் செய்யுளோடியையும். (22) அங்கையள வாகியநன் னீராட்டிப் பூசித்தோ ரளவி லேனைத் துங்கதலத் துறையிலிங்க மூர்த்திகளைச் சிவாகமநூல் சொன்ன வாற்றான் மங்கலமா கியமுகம னீரெட்டும் வழுவாது வாசந் தோய்ந்த செங்கனக மணிக்கலசப் புனலாட்டி மாபூசை செய்தோ ராவார். (இ-ள்.) அங்கை அளவு ஆகிய நல்நீர் ஆட்டி - உள்ளங்கை யிலடங்கும் அளவினையுடையதாகி நல்ல நீரால் திருமஞ்சனம் செய்து, பூசித்தோர் - பூசித்தவர்கள், ஏனை அளவு இல் துங்க தலத்து உறை - மற்றைய அளவிறந்த உயர்ந்த பதிகளில் எழுந்தருளிய, இலிங்க மூர்த்திகளை - சிவலிங்க மூர்த்திகளை, சிவாகமநூல் சொன்ன ஆற்றால் - சிவாகமம் கூறிய வழியால், மங்கலம் ஆகிய முகமன் ஈரெட்டும் வழுவாது - மங்கலமான சோடச உபசாரங் களும் தவறாமல், செங்கனக மணிக்கலசம் - சிவந்த பொன்னாற் செய்த இரத்தினங்கள் பதித்த கலசத்தில் நிறைந்த, வாசம் தோய்ந்த புனல் ஆட்டி - மணம் அளாவிய நீரால் அபிடேகித்து, மாபூசை செய்தோர் ஆவார் - பெரிய பூசை செய்தவர்கள் ஆவார்கள் எ-று. சோடச வுபசாரங்களாவன; ஆவாகனம், தாபனம், சந்நிதானம், சந்நிரோதனம், அவகுண்டனம், தேனுமுத்திரை, பாத்தியம், ஆசமனீயம், அர்க்கியம், புட்பதானம், தூபம், தீபம், நைவேத்தியம், பானீயம், ஆராத்திரிகை, ஜபசமர்ப்பணை என்பன. (23) அவ்வண்ணஞ் சுந்தரனை யைந்தமுத மானுதவு மைந்து தீந்தேன் செவ்வண்ணக் கனிசாந்தச் சேறுமுதன் மட்டித்துத் தேவர் தேறா மெய்வண்ணங் குளிரவிரைப் புனலாட்டி மாபூசை விதியாற் செய்தோர் மைவண்ண வினைநீந்தி யறமுதனாற் பொருளடைந்து மன்னி வாழ்வார். (இ-ள்.) அவ்வண்ணம் சுந்தரனை - அவ்வாகமத்திற் கூறிய வண்ணம் சோமசுந்தரக் கடவுளை, ஐந்து அமுதம் - பஞ்சாமிர்தமும், ஆன் உதவும் ஐந்து - பசுக்களால் அளிக்கப்பெற்ற பஞ்ச கவ்வியமும், தீந்தேன் - மதுரமாகிய தேனும், செவ் வண்ணக்கனி - சிவந்த நிறத்தையுடைய பழங்களும், சாந்தச்சேறு முதன் மட்டித்து - சந்தனக் குழம்பும் முதலியவற்றை அப்பி, தேவர்தேறா மெய் வண்ணம் குளிர - தேவர்களும் அறியாத அழகிய திருமேனி குளிருமாறு, விரைப்புனல் ஆட்டி- மணமுடைய நீரால் அபிடேகித்து, மாபூசை விதியால் செய்தோர் - பெரிய பூசையை விதிப்படி செய்தவர்கள், மைவண்ண வினை நீந்தி - கரிய தீவினைக் கடலைக் கடந்து, அறமுதல் நாற்பொருள் அடைந்து - அறமுதலிய நான்கு பயனையும்பெற்று, மன்னி வாழ்வார் - நிலைபெற்று வாழ்வார்கள் எ-று. அமுதம் ஐந்து; பால், நெய், தேன், சருக்கரை, பழம்; பால்நீக்கித் தேங்காய்த் திருகல் கூட்டி ஐந்தென்று கொள்ளுதலும்; அதனையும் நீக்கி நீர்கூட்டி ஐந் தென்றலும்; பழவர்க்கம் ஒன்று, நெய் தயிர்பால் என்பன ஒன்று, இவற்றுடன் தேன், சருக்கரை, நீர்கூட்டி ஐந்தென்றலும்; உண்டு. ஆன் உதவும் ஐந்து; பால், தயிர், நெய், கோமயம், கோசலம், கோரோசனமும் கூட்டிக் கவ்வியம் ஆறெனவும் கூறுதலுண்டென்பர். மைவண்ணம் என்றது இலக்கணை வழக்கு. தேவரும் என்னும் உம்மை தொக்கது. (24) நல்லவகை முகமனீ ரெட்டுள்ளும் வடித்தவிரை நன்னீ ராட்ட வல்லவர்நூ றாயிரமா மேதமகப் பயன்பெறுவர் வாச நானம் எல்லவிர்குங் குமஞ்சாந்த மிவைபலவு மட்டித்தோ ரெழிலார் தெய்வ முல்லைநகை யாரோடும் விரைக்கலவை குளித்தின்ப மூழ்கி வாழ்வார். (இ-ள்.) நல்லவகை முகமன் ஈர் எட்டு உள்ளும் - நல்ல வகையாயுள்ள சோடச உபசாரங்களுள்ளும், வடித்த விரை நல்நீர் ஆட்டவல்லவர் - வடித்த மணமுள்ள நல்லநீரால் திருமஞ்சனம் செய்யவல்லவர்கள், நூறு ஆயிரம் மாமேத மகப் பயன் பெறுவர் - நூறாயிரம் பரிவேள்வியாகிய யாகத்தைச் செய்தலால் வரும்பயனை அடைவர்; வாசம் நானம் - மணம்பொருந்திய கத்தூரியும், எல் அவிர் - ஒளி விளங்குகின்ற, குங்குமம் - குங்குமப்பூவும். சாந்தம் - சந்தனமு மாகிய, இவை பலவும் மட்டித்தோர் - இவை பலவற்றையும் சாத்தினோர்கள், எழில் ஆர் - அழகு நிறைந்த, தெய்வமுல்லை நகையாரோடும் - தெய்வப் பெண்களாகிய முல்லை யரும்பு போலும் பற்களையுடையவர்களோடும், விரைக்கலவை குளித்து - மணம் பொருந்திய கலவையைப் பூசி, இன்பம் மூழ்கி வாழ்வார் - இன்பக்கடலுள் திளைத்து வாழ்வார்கள் எ-று. விரை நன்னீர் - பனிநீருமாம். தெய்வமுல்லை நகையார் என்பதனை விகுதி பிரித்துக் கூட்டுதலுமாம். (25) நன்மலரொன் றாலவா யான்முடிமேற் சாத்தினா னயந்து நூறு பொன்மலர்கொண் டயற்பதியிற் பூசித்த பயனெய்தும் புனித போகத் தன்மைதரு சுந்தரற்குத் தூபமொரு காற்கொடுப்போர் தமக்குத் தாங்கள் சொன்மனமெய் யுறச்செய்த குற்றமா யிரம்பொ றுப்பன் சுருதி நாதன். (இ-ள்.) ஆலவாயான் முடிமேல் - திருவாலவாயான் திருமுடி மேல், நல் மலர் ஒன்று சாத்தினால் - நல்ல மலர் ஒன்றைச் சாத் தினால், நயந்து - விரும்பி, நூறு பொன் மலர்கொண்டு - நூறு பொன்னா லாகிய மலர்களைக்கொண்டு, அயல்பதியில் பூசித்த பயன் எய்தும் - பிற தலங்களிற் பூசித்தலால் வரும் பயன் அடையும்; புனித போகத் தன்மை தரு சுந்தரற்கு - சிவபோகத் தன்மையைத் தந்தருளும் சோமசுந்தரக் கடவுளுக்கு, தூபம் ஒருகால் கொடுப்போர் தமக்கு - ஒருமுறை தூபம் கொடுப்பவர்களுக்கு, தாங்கள் - அக்கொடுத் தவர்கள், சொல்மனம் மெய் உறச்செய்த - மனம் வாக்குக் காயங்கள் பொருந்தச் செய்த, ஆயிரம் குற்றம் சுருதிநாதன் பொறுப்பன் - ஆயிரங் குற்றங்களை வேதத் தலைவனாகிய சோமசுந்தரக் கடவுள் பொறுத்தருள்வான் எ-று. புனிதபோகம் - தூயபோகம்; சிவபோகம். தூபம் - நறும்புகை. மனமொழி மெய்யென மாற்றுக. மெய்யால் என விரித்தலுமாம். ஆயிரம் - அளவில்லன. (26) திருவமுது நிவேதிப்போ ரவிழொன்றற் குகமொன்றாச் சிவலோ கத்தின் மருவிநிறை போகமுடன் வைகுவர்தாம் பூலமுக வாச மீந்தோர் பொருவரிய கடவுளராண் டொருநூறு கோடிசிவ புரத்து வாழ்வார் ஒருபளித விளக்கிடுவோர் வெண்ணிறமுங் கண்ணுதலு முடைய ராவார். (இ-ள்.) திரு அமுது நிவேதிப்போர் - அவ்வாலவாய்ப் பெருமானுக்குத் திருவமுது படைப்போர்கள், அவிழ் ஒன்றற்கு உகம் ஒன்று ஆக - ஒரு அவிழுக்கு ஒரு யுகமாக, சிவலோகத்தில் மருவி - சிவலோகத்திற் பொருந்தி, நிறை போகமுடன் வைகுவர் - நிறைந்த போகத்துடன் வாழ்வார்கள்; தாம்பூலம் முகவாசம் ஈந்தோர் - தாம் பூலமும் முகவாச மைந்தும் கொடுத்தவர்கள், பொருவு அரிய - ஒப்பில்லாத, கடவுளர் ஆண்டு ஒரு நூறுகோடி - நூறுகோடி தேவஆண்டுகள், சிவபுரத்து வாழ்வார் - சிவலோகத்தில் வாழ் வார்கள்; ஒருபளித விளக்கு இடுவோர் - ஒரு கற்பூர விளக்கு இடுபவர்கள்; வெள்நிறமும் கண் நுதலும் உடையர் ஆவர் - வெண்மை நிறத்தையும் நெற்றிக்கண்ணையும் உடையராவார்கள் எ-று. அவிழ் - பருக்கை யெனப்படுவது. யுகம் உகமென்றாயது. முகவாசமாவன; தக்கோலம், ஏலம், இலவங்கம், கர்ப்பூரம், சாதி என்பன. கடவுளராண்டு - மக்கட்கு ஓராண்டு ஒரு நாளாகக் கணிக்கப் பட்ட ஆண்டு. பளித விளக்கு - கர்ப்பூர நீராஞ்சனம். கர்ப்பூர தீப வரலாறு ஆராய்ச்சிக்குரியது. விளக்கிடுவோர் சிவசாரூபம் பெறுவர் என்றதாயிற்று. (27) நறுந்திருமஞ் சனமெடுக்கக் குடமாட்ட மணிக்கலச நல்ல வாசம் பெறுந்தகைய தூபக்கால் தீபக்கால் மணியின்ன பிறவுங் கங்குற் றெறுங்கதிர்கான் மணிமாட மதுரைநா யகற்கீந்தோர் செய்த பாவம் வெறுந்துகள்செய் தைம்பொறிக்கு விருந்தூட்டும் பெருங்காம வெள்ளத் தாழ்வார். (இ-ள்.) கங்குல் தெறும் - இருளை ஓட்டும், கதிர்கால் - ஒளியை வீசுகின்ற, மணிமாடம் மதுரை நாயகற்கு - மணிகள் பதித்த மாடங் களையுடைய மதுரை யிறைவனாகிய சோமசுந்தரக் கடவுளுக்கு, நறும் திருமஞ்சனம் எடுக்கக் குடம் - மணங்கலந்த திருமஞ்சன மெடுத்தற்குக் குடமும், ஆட்ட மணிக் கலசம் - அபிடேகிக்க இரத்தினக் கலசமும், நல்ல வாசம்பெறும் தகைய தூபக்கால் - இனிய மணத்தைத் தரும் தகுதியையுடைய தூபக்கால்களும், தீபக்கால் மணி இன்ன பிறவும் - தீபக்காலும் மணியும் இவை போல்வன பிறவும், ஈந்தோர் - கொடுத்தவர்கள், செய்த பாவம் - தாங்கள் செய்த பாவங்களை, வெறும் துகள் செய்து - வெறுவிய பொடியாகச் செய்து, ஐம்பொறிக்கும் விருந்து ஊட்டும் - ஐந்து இந்திரியங்களுக்கும் விருந்துண்பிக்கும், பெருங்காம வெள்ளத்து ஆழ்வார் - பெரிய இன்பவெள்ளத்துள் மூழ்குவார்கள் எ-று. தூபமும் தீபமும் இடுதற்குரிய கலன்கள் தூபக்கால், தீபக்கால் எனப் பெறும். சிறிதும் பயனின்றாகச் செய்து என்பார் வெறுந்துகள் செய்து என்றார். காமம் என்றது இன்பத்தை. புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும் போகம்பின்னும் புதிதாய்...... வளர்கின்றதே என்பவாகலின் விருந்தூட்டும் என்றார். (28) கயலிசையுங்1 கண்ணுமைகோன் றிருமுன்னர்ப் பல்லியமுங் கல்லென் றார்ப்ப இயலிசைய பாடலினோ டாடலிவை செய்விப்போ ரிறுமாப் பெய்திப் புயலிசைய வியங்கலிப்ப மூவுலகுந் தொழவரசாய்ப் பொலங்கொம் பாடுஞ் செயலிசைய வணங்கனையா ராடரங்கு கண்டின்பக் செல்வத் தாழ்வார். (இ-ள்.) கயல் இசையும் கண் உமைகோன் - கயலை ஒத்த கண் களையுடைய அங்கயற்கண்ணியின் தலைவனாகிய சோமசுந்தரக் கடவுளின், திருமுன்னர் - சன்னிதானத்தில், பல் இயமும் கல் என்று ஆர்ப்ப - பல இயங்களும் கல்லென்று ஒலிக்க, இயல் இசைய பாடலினோடு - இலக்கண வமைதியையுடைய பாடல்களோடு, ஆடல் இவை செய்விப்போர் - ஆடலுமாகிய இவற்றைச் செய்விப் பவர்கள், இறுமாப்பு எய்தி - இறுமாந்து, புயல் இசைய - முகிலை ஒக்க. இயம் கலிப்ப - இயம் ஒலிக்க, மூ உலகும் தொழ அரசு ஆய் - மூன்றுலகங்களும் வணங்குமாறு அரசராகி, பொலம் கொம்பு ஆடும் செயல் இசைய - பொற் கொம்புகள் ஆடும் செயலை ஒக்க, அணங்கு அனையார் - தேவ மகளிரை ஒத்த பெண்கள், அரங்கு ஆடு கண்டு - மேடையில் நடித்தலைக் கண்டு, இன்பச் செல்வத்து ஆழ்வார் - இன்பந்தரும் செல்வக் கடலுள் அழுந்துவார்கள் எ-று. இயல் இசைய, அ; சாரியை; பொருந்தும் இசையினையுடைய வெனப் பெயரெச்சமுமாம். மற்றுள்ள இசைய இசையும் என்பன உவமச் சொற்கள். இறுமாத்தல் - களித்தல். அரங்கிலாடுதல்; ஆடு; முதனிலைத் தொழிற்பெயர். இன்பமாகிய செல்வமுமாம். (29) ஒருகாலட் டாங்கமுடன் பஞ்சாங்க முடனாத1 லொண்செங் கால்வெண் குருகாலு2 மலர்த்தடஞ்சூழ் கூடனா யகற்பணிவோர் கோலொன் றோச்சிப் பொருகாலின் வருபரித்தேர் மன்னவரா யாவருந்தம் புடைவந் தெய்தி இருகாலுந் தலைவருட வெக்காலும் தமைவணங்க விருப்ப ரன்றே. (இ-ள்.) ஒள் செங்கால் - ஒள்ளிய சிவந்த கால்களையுடைய, வெண் குருகு ஆலும் - வெண்மையான அன்னங்கள் ஒலிக்கும், மலர்த்தடம் சூழ் - தாமரை மலர்களையுடைய தடாகங்களாற் சூழப்பெற்ற, கூடல் நாயகன்- மதுரை நாயகனை, ஒருகால் - ஒருமுறை, அட்டாங்கம் உடனாதல் பஞ்சாங்கம் உடனாதல் - அட்டாங்கமோ டாவது பஞ்சாங்கமுடனாவது, பணிவோர் - வணங்குவோர், கோல் ஒன்று ஓச்சி - ஒப்பற்ற செங்கோலைச் செலுத்தி, பொரு - தாக்குகின்ற, காலின் வருபரித்தேர் மன்னவர் ஆய் - காற்றைப்போலும் விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டிய தேரையுடைய அரசராகி, யாவரும் - எல்லா மன்னரும், தம் புடைவந்து எய்தி - தமது பக்கம் வந்து பொருந்தி, இருகாலும் தலைவருட - இரண்டு அடிகளும் அவர்கள் தலையில் தடவுமாறு, எக்காலும் தமை வணங்க இருப்பர் - எஞ்ஞான்றும் தம்மை வணங்க வீற்றிருப்பர் எ-று. அட்டாங்கம் - தலை, கையிரண்டு, செவி யிரண்டு, மோவாய், தோள் இரண்டு என்னும் எட்டுறுப்பும் நிலந்தோயப் பணிதல், பஞ்சாங்கம் - தலை, கையிரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்துறுப்பும் நிலந்தோயப் பணிதல். ஆதல் என்னுமிடைச்சொல் முன்னும் இயைந்தது. பொருபரி என்னலுமாம். எய்தி வணங்க எனக் கூட்டுக. அன்று, ஏ; அசை. (30) இத்தகைய திருவால வாயுடையான் றிருமுன்ன ரியற்று மோமம் மெய்த்தவமந் திரந்தான மின்னவணு வளவெனினு மேரு வாகும் உத்தமமா மிவ்விலிங்கப் பெருமையெலாம் யாவரளந் துரைப்பர் வேத வித்தகரே சிறிதறிந்த வாறுரைத்தே மினிப்பலகால் விளம்பு மாறென். (இ-ள்.) இத்தகைய திருவாலவாயுடையான் - இத்தன்மையை யுடைய திரவாலவாயையுடைய சோம சுந்தரக் கடவுளின், திரு முன்னர் - சந்நிதானத்தில், இயற்றும் - செய்கின்ற, ஓமம் மெய்த்தவம் மந்திரம் தானம் இன்ன - ஓமங்களும் உண்மைத் தவங்களும் மந்திரங்களும் தானங்களும் இவை போல்வன பிறவும், அணு அளவு எனினும் - அணுவின் அளவின ஆயினும், மேரு ஆகும் - மகா மேருவின் அளவின ஆகும்; உத்தமம் ஆம் - சிறந்தது ஆகிய, இ இலிங்கப் பெருமை எலாம் - இந்த இலிங்க மூர்த்தியின் பெருமைகள் அனைத்தையும், அளந்து உரைப்பார் யாவர் - அளவிட்டுக் கூறவல்லார் யார் (ஒருவருமில்லை எனினும்), வேத வித்தகரே - வேதங்களில் வல்லமுனிவர்களே, சிறிது அறிந்தவாறு உரைத்தேம் - சிறிது அறிந்தபடி கூறினேம், இனிப் பலகால் விளம்புமாறு என் - இனிப் பலமுறை சொல்லுவது என்னை எ-று. அணுவும் மேருவும் சிறுமை பெருமைகட்கு எடுத்துக் காட்டாவன. பயனாற் பெரிதாம் என்றார். அறிந்தவாறு சிறிது உரைத்தேம். விளம்பினும் அளவு படாமையின் இஃதே யமையு மென்பார், விளம்புமாறென் என்றார். (31) இத்தலத்துக் கொப்பாக வொருதலமும் பொற்கமல மென்னு மிந்த உத்தமமா தீர்த்தத்துக் கொப்பதொரு தீர்த்தமுமெய் யுணர்வானந்த வித்தனைய விலிங்கமிதற் கொப்பாவோ ரிலிங்கமும்பார் விண்மே லென்னும் முத்தலத்து மிலையந்த மூர்த்திதிரு நாமங்கண் மொழியக் கேண்மின். (இ-ள்,) இத்தலத்துக்கு ஒப்பு ஆக ஒரு தலமும் - இந்தத் திருப்பதிக்கு இணையாக ஒரு பதியும், பொன் கமலம் என்னும் - பொற்றாமரை என்று கூறப்படும், இந்த உத்தம மா தீர்த்தத்துக்கு ஒப்பது - இந்தச் சிறந்த பெருமை பொருந்திய தீர்த்தத்துக்கு ஒப்பதாகிய, ஒரு தீர்த்தமும் - ஒரு பொய்கையும், மெய் உணர்வு ஆனந்த வித்து அனைய - உண்மை அறிவு இன்பங்களின் மூலம் போலும், இலிங்கம் இதற்கு - இந்த இலிங்கத்துக்கும், ஒப்பா ஓர் இலிங்கமும், இணையாக ஓர் இலிங்கமும் பார் விண்மேல் என்னும்- பூமி அந்தரம் சுவர்க்க மென்கின்ற, முத்தலத்தும் இலை - மூன்றுலகங்களிலுமில்லை; அந்த மூர்த்தி திருநாமங்கள் மொழியக் கேண்மின் - அந்தச் சோமசுந்தரக் கடவுளின் திருப்பெயர்களைச் சொல்லக் கேளுங்கள் எ-று. மெய்யுணர் வானந்தம் - சச்சிதானந்தம், பார்விண்மேல் - இவை பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் என்றும் கூறப்படும்; புறப்பாட்டில், “ கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற் கட்டின் நீர்நிலை நிவப்பின் கீழு மேலது ஆனிலை யுலகத் தானும்” என வருவது நோக்கற் பாலது. தலவிசேடத்துட் கூறிய ‘திருவால வாய்க் கிணையாமொரு தலமும் என்னுஞ் செய்யுளோடு இது பெரிதும் ஒத்துள்ளமை காண்க. (32) கருப்பூர சுந்தரன்பூங் கடம்பவன சுந்தரனுட் கரவாத் தொண்டர் விருப்பூருங் கலியாண சுந்தரனல் லறவடிவாய் விளங்கு மேற்றுப் பொருப்பூரு மபிராம சுந்தரன்றேன் புடைகவிழப் பொன்னிற் பூத்த மருப்பூசு சண்பகசுந் தரன்மகுட சுந்தரன்றான் வாழி மன்னோ. (இ-ள்.) கருப்பூர சுந்தரன் - கருப்பூர சுந்தரன் என்றும், பூங்கடம்பவன சுந்தரன் - பூக்களையுடைய கடம்பவன சுந்தரன் என்றும், உள் கரவாத் தொண்டர் - உள்ளத்தில் வஞ்சனை யில்லாத அடியார்களின், விருப்பு ஊரும் கலியாண சுந்தரன் - அன்பு மிக்க கலியாண சுந்தரன் என்றும், நல் அறவடிவாய் விளங்கும் - நல்ல தரும வடிவாகி விளங்குகின்ற, ஏற்றுப் பொருப்பு ஊரும் - இடபமாகிய மலையை நடாத்தியருளும், அபிராம சுந்தரன் - அபிராம சுந்தரன் என்றும், தேன்புடை கவிழ - தேன் பக்கத்தில் நிரம்பச் சொரிய, பொன்னில் பூத்த - பொன்னைப் போல மலர்ந்த, மரு பூசும் - மணம் நிறைந்த, சண்பக சுந்தரன் - சண்பக சுந்தரன் என்றும், மகுட சுந்தரன் - மகுட சுந்தரன் என்றும் எ-று. அடைகளைக் கடம்பிற்கும் சண்பகத்திற்கும் கொள்க. எண்ணி வரும் பெயர்கள் பின்னே ‘இவை முதலா நாமம் அளப்பிலவாகும்’ என்பது கொண்டு முடியும். வாழி, உட்கோள். தான், மன், ஓ என்பன அசைகள். (33) மான்மதசுந் தரன்கொடிய பழியஞ்சு சுந்தரனோர் மருங்கின் ஞானத் தேன்மருவி யுறைசோம சுந்தரன்றேன் செவ்வழியாழ் செய்யப் பூத்த கான்மருவு தடம்பொழில்1 சூழாலவாய்ச் சுந்தரன்மீன் கணங்கள் சூழப் பான்மதிசூழ் நான்மாடக் கூடனா யகன்மதுரா பதிக்கு வேந்தன். (இ-ள்.) மான்மத சுந்தரன் - மான்மத சுந்தரன் என்றும், கொடிய பழி அஞ்சு சுந்தரன் - கொடுமையான பழியஞ்சிய சுந்தரன் என்றும், ஓர் மருங்கில் - ஒரு பக்கத்தில், ஞானத்தேன் மருவி உறை சோமசுந்தரன் - உமையம்மையார் விரும்பி உறைகின்ற சோம சுந்தரன் என்றும், தேன் - வண்டுகள், செவ்வழி யாழ் செய்ய - செவ்வழிப் பண்ணைப் பாட, பூத்த - மலர்ந்த, கான் மருவு - மணம் பொருந்திய, தடம் பொழில் குழ் - பெரிய சோலைகள் சூழ்ந்த, ஆலவாய்ச் சுந்தரன் - ஆலவாய்ச் சுந்தரன் என்றும், மீன் கணங்கள் சூழ - உடுத்தொகுதிகள் சூழ, பால்மதி சூழ் - வெள்ளிய சந்திரன் வலம் வருகின்ற, நான் மாடக் கூடல் நாயகன் - நான் மாடக் கூடனாயகன் என்றும், மதுராபதிக்கு வேந்தன் - மதுராபதி வேந்தன் என்றும் எ-று. கொடிய; பழிக்கு அடை. ஞானவுருவாகிய தேன்; உமா தேவியார். தேன் செவ்வழியாழ் செய்ய - வண்டு செவ்வழிப் பண் பாட; செவ்வழி. நெய்தற் பண். தடமும் பொழிலும் சூழ்ந்த என்றுமாம். (34) சிரநாலோன் பரவரிய சமட்டிவிச்சா புரநாதன் சீவன் முத்தி புரநாதன் பூவுலக சிவலோகா திபன்கன்னி புரேசன் யார்க்கும் வரநாளுந் தருமூல விலிங்கமென விவைமுதலா மாடக் கூடல் அரனாம மின்னமளப் பிலவாகு முலகுய்ய வவ்வி லிங்கம். (இ-ள்.) சிரம் நாலோன் - நான்கு தலைகளையுடைய பிரமன், பரவு அரிய - வணங்குதற்கரிய, சமட்டி விச்சாபுர நாதன் - சமட்டி விச்சாபுர நாதன் என்றும், சீவன் முத்திபுரநாதன் - சீவன் முத்திபுர நாதன் என்றும், பூ உலக சிவலோகாதிபன் - பூலோக சிவலோகாதிபன் என்றும், கன்னி புரேசன் - கன்னி புரேசன் என்றும், யார்க்கும் - எவருக்கும், நாளும் - எப்போதும், வரம்தரு - வரம் தருகின்ற, மூலஇலிங்கம் என - மூலலிங்கமென்றும், இவை முதலா - இவை முதலாக, மாடக் கூடல் அரன் நாமம் - நான்மாடக் கூடலில் எழுந்தருளியிருக்கும் சோம சுந்தரக் கடவுளின் திருப்பெயர்கள், இன்னம் அளப்பு இல ஆகும் - இன்னும் அளவிறந்தனவாம்; அ இலிங்கம் உலகு உய்ய - அந்த இலிங்கமானது உலகத்தார் உய்திகூடுதற் பொருட்டு எ-று. அவ்விலிங்க என்பது வரும் பாட்டில் முளைத்தெழுந்தது என்பது கொண்டு முடியும். (35) பாதாள மேழுருவ முளைத்தெழுந்த தவ்விலிங்கப் படிவந் தன்னுள் ஆதார மாகவமர்ந் தறுபத்து நாலுவிளை யாடல் செய்த போதானந் தன்பெருமை நங்குரவன் மொழிப்படியே புகன்றோ மென்றான் வேதாதி கலைதெரிந்த மலயமுனி கேட்டறவோர் வினாதல் செய்வார். (இ-ள்.) பாதாளம் ஏழ் உருவ முளைத்து எழுந்தது - பாதாள முடியவுள்ள ஏழலகங்களும் ஊடுருவ முளைத்து மேலெழுந்தது; அ இலிங்கப் படிவம் தன்னுள் - அந்த இலிங்கத் திருமேனியுள், ஆதாரமாக அமர்ந்து - எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருந்து, அறுபத்து நாலு விளையாடல் செய்த - அறுபத்து நான்கு திருவிளையாடல்களைச் செய்தருளிய, போதானந்தன் பெருமை - ஞானானந்தனாகிய இறைவனது பெருமையை, நம் குரவன் மொழிப்படியே - நம் குரவனாகிய முருகக் கடவுள் அருளிச் செய்தபடியே, புகன்றோம் என்றான் - கூறினோம் என்றான், வேதாதி கலை தெரிந்த மலயமுனி - வேத முதலிய பலகலைகளையு முணர்ந்த அகத்திய முனிவன்; கேட்டு அறவோர் வினாதல் செய்வார் - முனிவர்கள் அதனைக் கேட்டு மேலும் வினவுவாராயினர் எ-று. கீழுலகு ஏழாவன;- அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் என்பன. படிவம் - வடிவம். மலயமுனி என்றா னென்க. போதானந்தன், வேதாதி யென்பன வடசொல்நெடிற் சந்தி. கேட்ட என்னும் பெயரெச்சத்து அகரம்தொக்கதுமாம். (36) அருட்கடலே யிறைவிளையாட் டறுபத்து நான்கென்றா யவையா னந்தப் பொருட்கடவு ளெக்காலத் தியாவர்பொருட் டாடினனெம் போதந் தேறித் தெருட்படர வரன்முறையாற் செப்புகெனக் கரங்குவித்தார் தென்பால் வெற்பில் இருப்பவனும் வினாயபடிக் கிறைநிரம்பத் தொகுத்துவிரித் தியம்பு கின்றான். (இ-ள்.) அருட் கடலே - கருணைக்கடலே, இறை விளையாட்டு அறுபத்து நான்கு என்றாய் - இறைவன் திருவிளையாடல்கள் அறுபத்து நான்கு என்று கூறியருளினாய்; அவை - அவ் விளையாடல்களை, ஆனந்தப் பொருட்கடவுள் - ஆனந்தப் பொருளாகிய இறைவன், எக்காலத்து யாவர் பொருட்டு ஆடினன் - எந்தக் காலத்தில் யாவர் பொருட்டு ஆடியருளினன்; எம்போதம் தேறித் தெருள்படர - எங்கள் கலங்கிய அறிவு தெளிந்து தூயதாக வரன் முறையால் செப்புக என - வரன் முறைப்படி கூறியருளுக என்று, கரம் குவித்தார் - கைகளைக் கூப்பி வணங்கினார்கள்; தென்பால் வெற்பில் இருப்பவனும் - பொதியின் மலையிலிருப்பவனாகிய குறுமுனியும், வினாயபடிக்கு - கேட்ட படி, இறை நிரம்ப - விடை நிரம்ப, தொகுத்து விரித்து இயம்பு கின்றான் - தொகுத்தும் விரித்தும் கூறுகின்றான் எ-று. தேறி என்றமையால் கலங்கிய என்றுரைக்கப்பட்டது. செப்பு கென; அகரம் தொகுத்தல். படிக்கு, கு; அசை. இறை - விடை. தொகுத் துரைத்தல் - பதிகமாக வுரைப்பது. (37) ஆகச் செய்யுள் - 327 பதிகம் வானவர்கோன் பழிதொலைத்த விளையாட்டுங் கரிசாப மாய்த்த வாறும் மீனவர்கோன் காடெறிந்து புரங்கண்ட பெருஞ்சிறப்பு மீன நோக்கி ஆனதடா தகையழல்வா யவதரித்துப் பாராண்ட வருளு மீசன் தானவளை மணஞ்செய்து முடிதரித்து மண்காத்த தகைமைப் பாடும். (இ-ள்.) வானவர் கோன் பழிதொலைத்த விளையாட்டும் - தேவேந்திரனது பழியைத் தீர்த்த திருவிளையாடலும், கரிசாபம் மாய்த்தவாறும் - வெள்ளையானையின் சாபத்தைத் தீர்த்த தன்மையும், மீனவர்கோன் - பாண்டியன், காடு எறிந்து - காட்டை அழித்து, புரம் கண்ட பெருஞ் சிறப்பும் - திருநகரங்கண்ட பெரிய சிறப்பும், மீனநோக்கி ஆன தடாதகை - மீன்போலும் கண்ணை யுடைய வளாகிய தடாதகைப் பிராட்டியார், அழல் வாய் அவதரித்து - வேள்வித் தீயில் அவதாரம்செய்து, பார் ஆண்ட அருளும் - பூமியை ஆட்சி செய்த கருணையும், ஈசன் - சிவபெருமான், அவளை மணஞ் செய்து - அப்பிராட்டியாரைத் திருமணம் செய்து கொண்டு, முடிதரித்து மண்காத்த தகைமைப் பாடும் - முடி சூடிக்கொண்டு பூமியை ஆண்ட தகுதியும் எ-று. விளையாட்டு என்பதனை எல்லாவற்றுக்கும் கொள்க. மீனவர் கோன் - குலசேகர பாண்டியன். மலயத்துவச பாண்டியன் செய்த வேள்வித் தீ. (1) புலிமுனியும் பணிமுனியுந் தொழவெள்ளி மன்றுணடம் புரிந்த வாறும் வலிகெழுதோட் குண்டகட்டுக் குறட்கன்னக் குன்றளித்த வகையும் பின்னும் நலிபசிநோய் கெடவன்னக் குழியழைத்துக் கெடுத்துநீர் நசைக்கு வையை அலைபுனல்கூ யருத்தியதும் பொன்மாலைக் கெழுகடலு மழைத்த வாறும். (இ-ள்.) புலி முனியும் பணி முனியும் தொழ - வியாக்கிர பாதரும் பதஞ்சலியும் வணங்க, வெள்ளி மன்றுள் நடம்புரிந்த வாறும் - வெள்ளியம்பலத்தின்கண் திருக்கூத்தாடிய தன்மையும், வலி கெழுதோள் - வலிமை பொருந்திய தோளையுடைய, குண்டு அகட்டுக் குறட்கு - குண்டோதர பூதத்திற்கு, அன்னக்குன்று அளித்தவகையும் - அன்னமாகிய மலையை இட்ட தன்மையும், பின்னும் நலி பசி நோய் கெட - மீண்டும் வருத்துகின்ற பசி நோயானது அழிய, அன்னக்குழி அழைத்துக்கொடுத்து - அன்னக் குழியை வருவித்து அளித்து, நீர் நசைக்கு - நீர்வேட்கைக்கு, அலைபுனல் வையை கூய் அருத்தியதும் - அலைகின்ற நீரையுடைய வையை நதியை அழைத்துக் குடிப்பித்ததும், பொன்மாலைக்கு - காஞ்சன மாலைக்கு (நீராடற்பொருட்டு) எழுகடலும் அழைத்த வாறும் - ஏழுகடலையும் அழைத்துக்கொடுத்த தன்மையும் எ-று. குண்டு - ஆழம். அகடு - வயிறு. குண்டோதரன் - ஆழ்ந்தவயிற்றையுடையவன். குறள் - குறியது. அதனை நலிகின்ற. கூவி யென்பது கூய் என்றாயது. காஞ்சன் மாலை - மலயத்துவசன் றேவி (2) அந்தரர்கோ னாதனத்தி லுறைமலயத் துவசனைமீண் டழைத்த வாறும் சுந்தரவுக் கிரகுமா னவதரித்த வாறும் வளை சுடர்வேல் செண்டு தந்தையிடத் தவன்பெற்ற வாறுமவ னவ்வடிவேல் சலதி வீறு சிந்தவிடுத் ததுமகவான் முடியைவளை யெறிந்திறைவன் சிதைத்த வாறும். (இ- ள்) அந்தரர்கோன் ஆதனத்தில் உறை தேவேந்திரனுடைய ஆசனத்தில் இருந்த, மலையத்துவசனை மீண்டு அழைத்த வாறும் - மலையத்துவச பாண்டியனைப் பூவுலகில் மீளவும் வரும் படி அழைத்த தன்மையும், சுந்தர உக்கிர குமரன் அவதரித்தவாறும் - அழகிய உக்கிர குமாரபாண்டியன் அவதரித்த தன்மையும், அவன்- அப்பாண்டியன், தந்தையிடத்து (தன்) - தந்தையிடத்து, வளை சுடர்வேல் செண்டு பெற்றவாறும் - வளையும் ஒளியினையுடைய வேலும் செண்டும் பெற்றுக் கொண்ட தன்மையும், அவன் - அவ் புக்கிரகுமார பாண்டியன், அவ்வடிவேல் - அந்தக் கூரிய வேற்படையை, சலதி வீறு சிந்த விடுத்ததும் - கடலின் தருக்குக் கெடுமாறு விட்டதும், இறைவன் - அப் பாண்டியன், வளை எறிந்து - திகிரிப்படையை வீசி, மகவான் முடியைச் சிதைத்தவாறும் - இந்திரன் முடியை அழித்த தன்மையும் எ - று. அந்தரர் - தேவர். மீண்டு - மீள; செய வெனெச்சம் திரிந்தது. வளைவேல் செண்டு - படைக்கலங்கள்; வளை - சக்கரம். உக்கிரகுமரன் - முருகக் கடவுளின் அவதாரம். தந்தை - சோமசுந்தர பாண்டியனாகிய இறைவன். இறைவன் - குமரன். (3) பொன்னசலந் தனைச்செண்டாற் புடைத்துநிதி யெடுத்ததுவும் புனிதர்க் கீசன் பன்னரிய மறைப்பொருளைப் பகர்ந்ததுவு மாணிக்கம் பகர்ந்த வாறும் தொன்னகர்மே னீர்க்கிழவன் வரவிடுத்த கடல்சுவறத் தொலைத்த வாறும் அன்னதனித் தொன்மதுரை நான்மாடக் கூடனக ரான வாறும். (இ-ள்.) பொன் அசலம் தனை - பொன் மலையாகிய மேருவை, செண்டால் புடைத்து - செண்டாலடித்து, நிதி எடுத்ததுவும் - பொருளை எடுத்ததுவும், புனிதர்க்கு - முனிவர்களுக்கு, ஈசன் - சிவபெருமான், பன் அரிய மறைப் பொருளைப் பகர்ந்ததுவும் - சொல்லுதற்கரிய வேதப் பொருளைக் கூறியதும், மாணிக்கம் பகர்ந்தவாறும் - மாணிக்கம் விற்ற தன்மையும், தொல் நகர்மேல் - பழமையான மதுரை நகரத்தின் மேல், நீர்க் கிழவன் -நீருக்குரிய வனாகிய வருணனானவன், வரவிடுத்த - வரச்செய்த, கடல் சுவறத் தொலைத்தவாறும் - கடல் சுவறுமாறு (அதை) அழித்த தன்மையும், அன்னதனி - அந்த ஒப்பற்ற, தொல் மதுரை - பழைய மதுரையானது, நான் மாடக் கூடல் நகர் ஆனவாறும் - நான் மாடக் கூடல் நகராகிய தன்மையும் எ-று. அசலம் - அசைவில்லாதது; மலை. புனிதர் - தூயர். (4) வட்டங்கொள் சடையுடைய சித்தர்விளை யாடியதோர் வனப்புங் கையிற் கட்டங்கந் தரித்தபிரான் கல்லானை கரும்பருந்தக் காட்டு மாறும் உட்டங்கு வஞ்சனையா லமணர்விடு வாரணத்தை யொழித்த வாறும் இட்டங்கொள் கெளரிமுனம் விருத்தனிளை யோன்குழவி யான வாறும். (இ-ள்.) வட்டம் கொள் சடையுடைய சித்தர் - வட்டமாகக் கட்டிய சடையையுடைய எல்லாம்வல்ல சித்தர், விளையாடியது ஓர் வனப்பும் - விளையாடிதாகிய ஓர் அழகும், கையில் கட்டங்கம் தரித்தபிரான் - கையில் மழுவை ஏந்திய இறைவனாகிய அந்தச் சித்தர், கல் ஆனை கரும்பு அருந்தக் காட்டுமாறும் - கல்லானை கரும்பு தின்னக் காட்டிய தன்மையும், உள் தங்கு வஞ்சனையால் - உள்ளத்தில் நிலைபெற்ற வஞ்சனையினாலே, அமணர் விடு - சமணர்கள் ஏவிய, வாரணத்தை ஒழித்தவாறும் - யானையை எய்த தன்மையும், இட்டம்கொள் கெளரி முனம் - அன்புடைய கெளரியின்முன், விருத்தன் இளையோன் குழவி ஆனவாறும் - விருத்தனும் குமாரனும் பாலனும் ஆகியதன்மையும் எ-று. ‘சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கம்’ என்னும் திருக் கோவையார்ச் செய்யுளுரையில் கடங்கமென்பது மழு; இது கட்டங்கமென நின்றது என்று பேராசிரியர் உரைத்திருப்பது காண்க. கட்டங்கம் - கட்வாங்கம் என்பதன் றிரிபென்றும், யோக தண்ட மென்றும் கூறுவாருமுளர். (5) செய்யதாண் மாறிநட மாடியதும் பழியஞ்சு திறனுந் தாயை மையலாற் புணர்ந்தமகன் பாதகத்தை மாற்றியது மதியா தாசான் தையலாள் தனைவிரும்பு மாணவனை வாளமரிற் றடிந்த வாறும் பையரா வெய்ததுவும் படிற்றமணர் விடுத்தபசுப் படுத்த வாறும். (இ-ள்.) செய்யதாள் மாறி நடம் ஆடியதும் - சிவந்த திருவடி மாறி ஆடியதும், பழி அஞ்சுதிறனும் - பழியஞ்சிய வகையும், தாயை - தன் தாயை, மையலால் - காம மயக்கத்தினாலே, புணர்ந்த மகன் - சேர்ந்த மகனுடைய, பாதகத்தை மாற்றியதும் - மாபாதகத்தைத் தீர்த்ததுவும், மதியாது ஆசான் தையலாள் தனைவிரும்பும் மாணவனை - ஆராயாது குரவன் பன்னியை விரும்பிய மாணவனை, வாள் அமரில் தடிந்தவாறும் - வாட்போரில் வெட்டின தன்மையும், படிற்று அமணர் விடுத்த - வஞ்சனையுடைய அமணர்கள் ஏவிய, பை அரா எய்ததுவும் - படத்தையுடைய நாகத்தை எய்ததுவும், பசுப் படுத்தவாறும் - மாயப்பசுவை வதைத்த தன்மையும் எ-று. மதியாது - பொருளாக்காது எனலுமாம். படுத்தல் - கோறல்.(6) அறவேற்றுப் பரியுகைத்து மெய்க்காட்டுக் கொடுத்தவிளை யாட்டுங் காட்டுச் சுறவேற்றுக் கொடி1 யரசன் றனக்குலவாக் கிழிகொடுத்த தொடர்பு நாய்கர் நறவேற்ற மலர்க்குழலார் மனங்கவர்ந்து வளைபகர்ந்த நலனு மாறு மறவேற்கண் மாதரார்க் கட்டமா சித்திபெற வகுத்த வாறும். (இ-ள்.) அற ஏற்றுப் பரி உகைத்து - தரும விடையாகிய புரவியைச் செலுத்தி, மெய்க்காட்டுக் கொடுத்த விளையாட்டும் - மெய்க்காட்டிட்ட திருவிளையாடலும், காட்டுச் சுறவு ஏற்றுக் கொடி அரசன் தனக்கு - நீரில் வாழும் ஆண்சுறாவை எழுதிய கொடியையுடைய பாண்டி மன்னனுக்கு, உலவாக் கிழி கொடுத்த தொடர்பும் - உலவாக்கிழி யருளிய தொடர்ச்சியும், நாய்கர் நறவு ஏற்ற மலர்க்குழலார் - வணிகருடைய தேன்பொருந்திய மலர்களையணிந்த கூந்தலையுடைய மகளிரின், மனம் கவர்ந்து - மனத்தைக் கவர்ந்து, வளைபகர்ந்த நலனும் - வளையல் விற்ற நன்மையும், மற வேல் கண் ஆறுமாதரார்க்கு - வீரவேல் போலுங் கண்களையுடைய ஆறு மகளிருக்கு, அட்டமா சித்தி பெற வகுத்தவாறும் - அட்டமாசித்தி உபதேசித்தருளிய தன்மையும் எ-று. ஏற்றையே பரியாகச் செய்து உகைத்தனர்; இதனை, “ கொற்றப்போர் விடையைத்தானே குரங்குளைப் பரியாமேற் கொண் டொற்றைச்சே வகராய்மாறி யாடியவொருவர் வந்தார்” என அப்படலத்திற் கூறுமாற்றா னறிக. காடு - வனம்; வனம் - நீர். சுறவின் ஆண் ஏறெனப் படுதலை, கடல்வாழ் சுறவும் ஏறெனப் படுமே என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தா னறிக. அரசன் - குலபூடண பாண்டின். உலவாக்கிழி - எடுக்கக் குறையாத பொன்முடிப்பு. காட்டுதலையுடைய கொடியென் றுரைப்பாரும், நாட்டும் எனப் பாடங்கொண்டு, நாட்டுங்கொடியென் றுரைப் பாரும் உளர் (7) சென்னிபொருட் டெயில்வாயி றிறந்தடைத்து விடைபொறித்த செயலுஞ் சென்னி மன்னிகலிட் டமர்விளைப்ப மீனவர்க்கு நீர்ப்பந்தர் வைத்த வாறும் பொன்னனையாள் பொருட்டிரத வாதவினை முடித்ததுவும் புகார்க்கு வேந்தன் தன்னையகன் குழிவீட்டித் தென்னவற்கு மறவாகை தந்த வாறும். (இ-ள்.) சென்னி பொருட்டு - சோழன் காரணமாக, எயில் வாயில் திறந்து - மதில் வாயிலைத் திறந்து, அடைத்து விடை பொறித்த செயலும் - திருக்காப்பிட்டு விடையிலச்சினை வைத்த செய்கையும், சென்னிமன் இகல் இட்டு அமர்விளைப்ப - சோழன் நிலைபெற்ற பகைகொண்டு போர்விளைப்ப, மீனவற்கு நீர்ப்பந்தர் வைத்தவாறும் - பாண்டியனுக்குத் தண்ணீர்ப் பந்தல் வைத்த தன்மையும், பொன்னனையாள் பொருட்டு இரதவாத வினை முடித்ததுவும் - திருப்பூவணத்திருந்த பொன்னனையாளுக்கு இரசவாத வினையை முடித்ததுவும், புகார்க்கு வேந்தன் தன்னை - காவிரிப்பூம் பட்டினத்திற்கு அரசனாகிய சோழனை, அகன் குழி வீட்டி - அகன்ற குழியில் வீழ்ப்பித்து, தென்னவற்கு - பாண்டியனுக்கு, மறவாகை தந்தவாறும் - வெற்றிக்குரிய வாகை மாலையை அளித்த தன்மையும் எ-று. சென்னி - காடுவெட்டிய சோழன். மீனவன் - இராச புரந்தர பாண்டியன். புகார்க்கு வேந்தன் - சேவக சோழன்; புகார் - காவிரிப்பூம் பட்டினம்; காவிரி கடலொடு கலக்குமிடத்துள்ளது; சோழர்தலை நகரங்களிலொன்று. தென்னவன் - சுந்தரேசபாத சேகரபாண்டியன். மறம் - வீரம்; ஈண்டு வெற்றி. அகன் குழி; மரூஉ முடிபு. வீட்டி; வீழ்த்தியென்பதன் மரூஉ. (8) மனக்கவலை கெடவுலவாக் கோட்டையடி யாற்களித்த வகையு மாமன் எனக்கருணை வடிவாகி வழக்குரைத்துப் பொருவணிகற் கீந்த வாறுஞ் சினக்கதிர்வேல் வரகுணற்குச் சிவலோகங் காட்டியதுந் திவவுக் கோலான் தனக்கடிமை யெனவிறகு திருமுடிமேற் சுமந்துபகை தணித்த வாறும். (இ-ள்.) மனக்கவலை கெட - மனத்திலுள்ள துன்பம் நீங்கு மாறு, அடியாற்கு - தொண்டனுக்கு, உலவாக் கோட்டை அளித்த வகையும் - உலவாக் கோட்டை யளித்தருளிய தன்மையும், மாமன் என - மாமன்போல, கருணை வடிவு ஆகி - அருள் வடிவு கொண்டு, வழக்கு உரைத்து - வழக்குக் கூறி, வணிகர்க்குப் பொருள் ஈந்தவாறும் - வணிகனுக்குப் பொருள் கொடுத்த தன்மையும், சினக் கதிர்வேல் வரகுணற்கு - சினத்தையுடைய ஒளி பொருந்திய வேற்படையையுடைய வரகுண பாண்டியனுக்கு, சிவலோகம் காட்டியதும் - சிவலோகங் காட்டியருளியதும், திவவுக் கோலான் தனக்கு - நரம்புக் கட்டினை யுடைய யாழ் வல்ல பாணபத்திரனுக்கு, அடிமை என - அடிமை என்று கூறி, திருமுடிமேல் விறகு சுமந்து - திருமுடியின்கண் விறகை சுமந்து, பகை தணித்தவாறும் - பகையைவென்ற தன்மையும், எ-று. உலவாக்கோட்டை - கொள்ளக் குறையாத அரிசிக்கோட்டை. அடியான் - உழுதொழிலாளனான ஒரு சிவபத்தன். திவவு - யாழ் நரம்பின் கட்டு. கோல் என்றது யாழினை. கோலான் - பாண பத்திரன். பகை - பகைவன்; ஏமநாதன். (9) அப்பாணற் கிருநிதியஞ் சேரனிடைத் திருமுகமீந் தளித்த வாறும் அப்பாணன் பாடமழை யரையிரவிற் பொற்பலகை யளித்த வாறும் அப்பாணன் மனைவியிசைப் பகைவெல்ல வண்ணலவை யடைந்த வாறும் அப்பாண னாளென்றோன் முலையருத்திப் பன்றியுயி ரளித்த வாறும். (இ-ள்.) அப் பாணற்கு - அந்தப் பாண பத்திரனுக்கு, சேரன் இடைத் திருமுகம் ஈந்து - சேரமான் பெருமாளிடத்துத் திருமுகம் கொடுத்து, இரு நிதியம் அளித்தவாறும் - பெரிய பொருளைக் கொடுப்பித்த தன்மையும், அப் பாணன் பாட - அவன் பாடுதற்கு, மழைஅரை இரவில் - மழை பெய்கின்ற நள்ளிரவில், பொன் பலகை அளித்தவாறும் - பொன் பலகை அருளிய தன்மையும், அப் பாணன் மனைவி - அவன் மனைவி, இசைப்பகை - இசைக்குப் பகையாய் வந்தவளை, வெல்ல - வெல்லுதற் பொருட்டு, அண்ணல் அவை அடைந்தவாறும் - இறைவன் பாண்டியன் சபைக்குப்போன தன்மையும், அப் பாணன் ஆள் என்றோன் - அந்தப் பாணபத்திரன் அடிமை நான் என்று கூறிய சோமசுந்தரக் கடவுள், முலையருத்தி - முலைகொடுத்து, பன்றி உயிர் அளித்தவாறும் - பன்றிக் குட்டிகளின் உயிரைக் காப்பாற்றிய தன்மையும் எ-று. சேரன் - கழறிற்றறிவாராகிய சேரமான் பெருமான்; அறுபத்து மூன்று தனியடியாருள் ஒருவர். திருமுகம் - ‘மதிமலி புரிசை’ என்னும் பாசுரம், பகை - ஈழநாட்டுப் பாடினி. அவை - இராசராச பாண்டியன் அவைக்களம். (10) வயவேனக் குருளைகளை மந்திரிக ளாக்கியதும் வலியுண் டாகக் கயவாய்க்குக் குருமொழிவைத் தருளியது நாரைக்குக் கருணை நாட்டந் தயவால்வைத் தருண்முத்தி நல்கியதுங் கூடனகர் தன்னைச் சித்தர் புயநாகம் போய்வளைந்து திருவால வாயாக்கிப் போந்த வாறும். (இ-ள்.) வய ஏனக் குருளைகளை - வெற்றியையுடைய அந்தப் பன்றிக் குட்டிகளை, மந்திரிகள் ஆக்கியதும் - அமைச்சர்களாகச் செய்தருளியதும், கயவாய்க்கு - கரிக்குருவிக்கு, வலி உண்டாக - ஏனைய பறவைகளைவிட வலிமை உண்டாகுமாறு, குருமொழி வைத்தருளியதும் - உபதேசித் தருளியது, நாரைக்குக் கருணை நாட்டம் தயவால் வைத்தருள் - நாரைக்கு அருட் பார்வையைக் கருணையோடு வைத்தருளி, முத்தி நல்கியதும் - வீடுபேற்றை அருளியதும், சித்தர் புயநாகம் போய் - எல்லாம் வல்ல சித்தரின் கையில் அணிந்த கங்கணமாகிய நாகமானது சென்று, கூடல் நகர் தன்னை வளைந்து - நான்மாடக்கூடலாகிய நகரை வளைந்து, திருவாலவாய் ஆக்கிப் போந்தவாறும் - அதனைத் திருவாலவாய் என்னும் பெயருடைய தாக்கி வந்ததன்மையும் எ-று. கயவாய் - கரிக்குருவி. குருமொழி வைத்தல் - உபதேசித்தல். வைத்தருளி யென்பது இகர விகுதி குறைந்து நின்றது; அருள் என்பதனை முத்திக்கு அடையாக்கலுமாம். (11) சுந்தரனென் றெழுதியகூ ரம்பெய்து செம்பியன்போர் தொலைத்த வாறுஞ் செந்தமிழோர்க் கியற்பலகை யருளியதுந் தருமிக்குச் செம்பொன் பாடித் தந்ததுவு மாறுபடு கீரற்குக் கரையேற்றந் தந்தவாறும் விந்தமடக் கியமுனியாற் கீரனியற் றமிழ்தெளிய விடுத்த வாறும். (இ-ள்.) சுந்தரன் என்று எழுதிய - சுந்தரன் என்று பெயர் எழுதப் பட்ட, கூர் அம்பு எய்து - கூரிய அம்பினை விடுத்து, செம்யியன் போர் - சோழன் செய்த போரினை, தொலைத்தவாறும் - அழித்த தன்மையும், செந்தமிழோர்க்கு இயல்பலகை அருளியதும் - தூய தமிழை உணர்ந்த சங்கப் புலவர்கட்குச் சங்கப் பலகை அருளிச் செய்ததும், தருமிக்குப்பாடிச் செம்பொன் தந்ததுவும் - தருமிக்குப் பாடிக் கொடுத்து சிவந்த பொன்முடிப்பைக் கொடுப்பித் தருளியதும், மாறுபடு கீரற்கு - (தன்னொடு) மாறுகொண்ட நக்கீரனுக்கு, கரை ஏற்றம் தந்தவாறும் - கரையேறுதலை அளித்த தன்மையும், விந்தம் அடக்கிய முனியால் - விந்தமலையை அடக்கிய அகத்திய முனிவனால், கீரன் இயல் தமிழ் தெளிய விடுத்தவாறும் - அவன் இலக்கணம் அறிந்து கொள்ளும்படி ஏவியருளிய தன்மையும் எ-று. செம்பியன் - விக்கிரமசோழன். செந்தமிழோர் - கபிலர் பரணர் நக்கீரர் முதலாயினார்; பொய்யடிமை யில்லாத புலவர். இயல் - இலக்கணம். கொங்குதேர் வாழ்க்கை என்னும் செந்தமிழ்ப் பாவினைப்பாடி. பொற்றா மரையினின்றும் கரையேற்றுவித்தது. இயற்றமிழ் - தமிழ் இயல்; தமிழிலக்கணம். கீரற்கு என்பதை உருபு மயக்கமாகக் கொண்டு, கீரனைக்கரையேற்றிய என்னலுமாம். (12) ஊமனாற் புலவரிக லகற்றியது மிடைக்காட னுடன்போய்க் கொன்றைத் தாமனார் வடவால வாயமர்ந்த பரிசும்வலை சலதி வீசிப் பூமனாய் குழலியைவேட் டருளியதும் வாதவூர்ப் புனிதர்க் கேறத் தேமனாண் மலரடிகண் முடிசூட்டி யுபதேசஞ் செய்த வாறும். (இ-ள்.) ஊமனால் புலவர் இகல் அகற்றியதும் - மூங்கையாகிய உருத்திரசன்மரால் சங்கப் புலவர்கள் மாறுபாட்டைப்போக்கி யருளியதும், கொன்றைத் தாமனார் - கொன்றை மாலையை அணிந்த சோமசுந்தரக் கடவுள், இடைக்காடனுடன் போய் - இடைக்காடனோடு சென்று, வட ஆலவாய் அமர்ந்த பரிசும் - வட மதுரையின்கண் தங்கிய தன்மையும், சலதி வலைவீசி - கடலில் வலையை வீசி, பூமன் ஆய்குழலியை வேட்டு அருளியதும் - மலர்கள் பொருந்திய ஆய்ந்து வகிர்ந்த கூந்தலையுடைய உமையம்மையை மணந்தருளியதும், வாதவூர் புனிதர்க்கு - திருவாத வூரின்கண் தோன்றியருளிய தூயவருக்கு, ஏற - (அவர்) வீடுபேற்றை அடைய, தேம் மன் நாள் மலர் அடிகள் முடிசூட்டி உபதேசம் செய்தவாறும் - தேன் பொருந்திய அன்றலர்ந்தமலர் போலுந் திருவடிகளை (அவர்) முடியின்கண் சூட்டி உபதேசித்தருளிய தன்மையும் எ-று. ஊமை - முருகக்கடவுளின் அமிசமாய் வைசியர் மரபில் உதித்து மூங்கைப் பிள்ளையாயிருந்த உருத்திரசன்மர். வடவாலவாய் - மதுரைக்கு வடக்கிலும் வையை நதிக்குத் தெற்கிலுமுள்ள வடமதுரை. வாதவூர்ப் புனிதர் - திருவாதவூரடிகள்; மாணிக்க வாசகர். (13) நரிகள்பரி யாக்கியதும் பரிகணரி யாக்கியது நாகம் பூண்டோன் அரியதிரு மேனியின்மே லடிசுமந்து மண்சுமந்த வருளுந் தென்னன் எரியடுவெஞ் சுரந்தணித்த வாறுமம ணரைக்கழுவி லிட்ட வாறுங் கரியதென வன்னிகிண றிலிங்கங்கூய் வணிகமகட் காத்த வாறும். (இ-ள்.) நரிகள்பரி ஆக்கியதும் - நரிகளைப் பரிகள் ஆக்கியதும், பரிகள் நரி ஆக்கியதும் - பரிகளை நரிகள் ஆக்கியதும், நாகம் பூண்டோன் - நாகத்தை அணிந்த சோமசுந்தரக் கடவுள், அரிய திருமேனியின்மேல் - (தனது) அரிய திருமேனியிலே, அடிசுமந்து மண்சுமந்த அருளும் - பிரம்படி சுமந்து மண்சுமந்தருளியதும், தென்னன் - பாண்டியனது, எரி அடுவெஞ்சுரம் தணித்தவாறும் - அழல்போலும் வருத்தாநின்ற கொடிய வெப்பு நோயைத் தணித் தருளிய தன்மையும், அமணரைக்கழுவில் இட்டவாறும் - சமணர்களைக் கழுவிலேற்றிய தன்மையும், கரி வன்னி கிணறு இலிங்கம் கூய் - சான்றாகவன்னி கிணறு இலிங்கம் ஆகிய இம் மூன்றையும் அழைத்து, வணிக மகள்காத்தவாறும் - வணிகப் பெண்ணைக்காத் தருளிய தன்மையும் எ-று. வானோராலுங் காண்டற் கரிய திருமேனி. சுமந்த அருளின்றன் மையும். தென்னன் - கூன்பாண்டியன்; நெடுமாறர். கரியது, அது; பகுதிப் பொருள் விகுதி. (14) எனத்தொகையா லறுபத்து நான்கிவற்றை நிறுத்தமுறை யீறி லாத வினைத்தொகையா றகன்றீரெக் காலமெவர் பொருட்டெனநீர் வினாய வாற்றான் மனத்தளவி லன்புமடை யுடைந்தொழுகத் திருவால வாயான் றாளை நினைத்தளவி லானந்தம் பெருகவிரித் துரைப்பலென நெறியாற் கூறும். (இ-ள்.) எனத் தொகையால் அறுபத்து நான்கு - என்று தொகையினால் அறுபத்து நான்கு திருவிளையாடல்களாம்; ஈறு இலாத வினைத்தொகை ஆறு அகன்றீர் - முடிவில்லாத வினைத் தொகுதியின் நெறியைக் கடந்த முனிவர்களே, எக்காலம் எவர் பொருட்டு என நீர் வினாயவாற்றால் - எந்தக் காலத்தில் எவர் பொருட்டு என்று நீர் கேட்ட படியால், இவற்றை நிறுத்த முறை - இவைகளை இங்கு வைத்த முறைப்படியே, விரித்து உரைப்பல் என - விரித்துக் கூறுவேன் என்று, மனத்து அளவு இல் அன்பு - மனத்தின்கண் அளவிறந்த அன்பானது, மடை உடைந்து ஒழுக - மடை திறந்து பாய, திருவாலவாயான் தாளை நினைந்து - திருவாலவாயுடைய பெருமான் திருவடிகளைச் சிந்தித்து, அளவு இல் ஆனந்தம். பெருக - அளவற்ற இன்பம் மிக, நெறியால் கூறும் - முறைப்படி கூறுவான் எ-று. வினாவினமை மூர்த்தி விசேடப்படலத்திறுதிச் செய்யுளிற் காண்க. மனத்து நினைத்தென்றுமாம். மடை யுடைந்தாற்போல. நிரைத்த மறையென்பது பாடமாகாமையுணர்க. பல்வகைப் பொருளையும் தொகுத் துரைத்தமையின் இப் பதினைந்து செய்யுளும் பதிகம் எனப்படும்; “ பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத் தொகுதி யாகத் தொகுத்துரைப் பதுவே” என்னுஞ் சூத்திரமும் காண்க. (15) ஆகச் செய்யுள் - 342. செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை அகத்தியன் வியாத 193 அகளமா யுலகமெல்லா 218 அகனில வேறு 66 அகிலு மாரமுந் 80 அங்கயற் கண்ணி 198 அங்கையள வாகியநன் 250 அண்டங்களெல்லா 20 அண்ட வாணருக் 81 அண்ணல்பாற் றெளிந்த 44 அதிக வப்பதி யாதெனி 192 அத்தகை யிலிங்க 221 அத்தட மருங்கின் 230 அத்தலத் தனைய 200 அத்திருமா நகரின்பேர் 214 அந்தமா நீரா னந்தி 225 அந்தமு டுதலு 243 அந்தரர்கோ னாதனத்தி 262 அந்த வேலையி லச்சிவ 186 அப்பதியி லிங்க 239 அப்பாணற் கிருநிதியஞ் 267 அட்டில்வாய்ப் புகைய 161 அயனக ரடைந்து 210 அரம்பை மாதரா 180 அரம்பைமென் குறங்கா 54 அரவக லல்கு 37 அருட்கடலே யிறைவினை 260 அருந்தின ரருந்திச் 138 அரும்பவி ழனங்க 56 அலகிலாத் தீர்த்தந் 235 அல்லை யீதல்லை 47 அவமி கும்புலப் 78 அவ்வகைய மூன்றின்முதற் 203 அவ்வண்ணஞ் சுந்தரனை 250 அவ்வழிப் புறம்பு 222 அழிவி லானுரை 163 அளந்தி டற்கரி 184 அறந்தழையுந் திருவால 205 அறப்பெருஞ் செல்வி 35 அறவுருவ னாலவா 248 அறவேற்றுப் பரியுகைத்து 265 அறுகாற்பீ டத்துயர்மா 11 அறைந்திடப் பட்ட 44 அனைய தொல்பதி 213 அன்புறு பத்தி 65 அன்னநீர் தனிலு 228 அன்னபோ தயனுந் 220 அன்ன மண்டபந் 185 அன்னமலி வயற்புலியூர் 205 அன்னிய தலங்க 209 ஆங்கு வெண்டுகில் 181 ஆதர விலனா 228 ஆதலினிப் பதவிட்டுப் 207 ஆதி மாதவர் யாவரு 187 ஆத்திக ருண்டென 156 ஆரு நீர்க்கட 168 ஆருமந் நீரி 227 ஆல நின்றமா 119 ஆலவா யலர்ந்த 238 ஆலவா யுடையா 133 ஆறு சூழ்கழிப் 76 ஆற்றினுக் கரசாங் 217 ஆன பான்மையி 185 இடித்து வாய்திறந் 50 இத்தகு சயம்பு 244 இத்தகைய திருவால 256 இத்தலத்துக் கொப்பாக 256 இத்தனிச் சுடரை 244 இந்தநான் மாட மோங்கு 211 இந்த நீ ரெம்மை 224 இந்தமா விலிங்கத் 239 இரவி யாழியொன் 103 இரும்பின னன்னதோள் 102 இவ்வருந் தலத்தி 236 இழிந்த மாந்தர்கைப் 59 இழிபவ ருயர்ந்தோர் 130 இன்ற டம்புனல் 71 இன்னமா தீர்த்தந் 222 இன்ன வாறனுட் 191 இன்ன வதிக 247 ஈறி லாதவ 60 உடுத்த தெண்கடன் 52 உண்மையறி வானந்த 22 உம்மையில் வினைக 248 உம்மையிற் பிறவி 231 உருக்கி யீயமழை 116 உலகம் யாவையு 93 உழல்செய் தீவினை 168 உளமெனுங் கூடத்து 29 உறிபொதி கரகந் 160 ஊறுசெய் படைவாய் 62 எங்கு நாவுமா 172 எங்கு மீசனைப் 162 எண்டிசை நதிவாவி 234 எத்தலத் தியாவ 241 எரிக்கு றும்பொறி 146 எல்லை தேர்வழித் 112 எழுக்க டந்ததோ 171 எழுதரு மறைகள் 39 எள்ளி யேறுநரை 114 எள்ளிழு தன்னங் 208 எஷூயும் வாளையு 105 எற்று தெண்டிரை 74 எனத்தொகையாலறுபத்தி 271 என்ற போதெதிர் 90 என்னென வுரைப்பே 177 ஏக மாகிய மேருவும் 83 ஏனைமா தலங்க 229 ஏனைய தலத்தி 211 ஐய மாதிமுக் குற்றமு 189 ஐயவிவ் விலிங்க 221 ஐய வென்னுரை 127 ஒருகாலட் டாங்கமுடன் 255 ஒல்லொ லிக்கதிர்ச் 100 ஒழிவில் வேறுபல் 148 ஒற்றை யாழியா 149 ஒளவிய மதர்வேற் 134 கங்கைகா ளிந்தி 208 கடியவிழ் கடுக்கை 33 கடுக்க வின்பெறு 86 கடைசியர் முகமுங் 64 கட்புல னாதி யைந்து 135 கண்ணகன் குடுமிமாடக் 217 கண்ணி லாதவெங் 106 கண்ணுதற்பெருங் 88 கயலிசையுங் கண்ணுமை 254 கரிய கம்பல்க 143 கருநிற மேக 53 கருப்பூர சுந்தரன் பூங் 257 கரும்பொற் கோட்டிளம் 75 கருவி வான் சொரி 81 கலவிவித் தாக வூடிக் 174 கலிகட லிரவி 245 கல்லாலின் புடையமர்ந்து 27 கல்லெனக் கரைந்து 53 கவைக்கொ ழுந்தழ 46 கழிந்ததெங்கினொண் 76 கழையுந் தாமமுஞ் 119 களமர்கள் பொன்னேர் 60 கறக்குதிரைக் கருங்கடலுங் 30 கஷூத்த ருந்துபுற் 121 கறைநி றுத்திய 49 கற்பவை கற்றுங் 175 கற்றைவை களைந்து 67 கன்றோ டுங்களி 73 குடைந்துதர்ப் பணமுஞ் 223 குண்டு நீர்ப்படு 80 குமிழ லர்ந்தசெந் 107 குரும்பைவெம் முலையிற் 133 குழலுந் தும்புரு 166 குன்ற நேர்பளிக் 120 குன்றெ றிந்தவேள் 192 கைத்தலநான் கிரண்டு 213 கைய நாகமுங் 182 கொங்கை யேபரங் 95 கொடிமுகி றுழாவு 156 கொடும்பிறை வடிவிற் 66 கொல்லை யானிரை 73 கோட்டு மாமலர் 182 சடைமறைத்துக் கதிர் மகுடந் 23 சண்ட பானுவுந் 111 சத்திய வுலகிற் 194 சத்தி யாய்ச்சிவ 13 சந்தித்து மீன நோக்கி 175 சம்பு பத்தன் 186 சரியவன் கமலச் சாறடு கட்டி 68 சிரநாலோன் பரவரிய 259 சிவந்த வாய்க்கருங் 99 சிறந்த தண்டமி 84 சிறுகு கண்ணவாய்க் 121 சீத வேரியுண் 101 சுந்தரனென் றெழுதியகூட சுந்த ரன்ஷூரு 52 சுரநதிசூழ் காசிமுதற் 206 சுரந்து தேன்றுளித் 167 சுரும்புமுரல் கடிமலர்ப்பூங் 18 சுனைய கன்கரைச் 79 செயிரிற் றீர்ந்தசெம் 145 செய்யதாண் மாறிநட 264 செல்வ மாநக 81 செழியர்பிரான் ஷூருமகளாய் 25 சென்றுதன் மேனித் 219 சென்னிபொருட் டெயில்வா 266 சொற்றவிச் சமட்டி 240 தங்குடிமைத் தச்சனையோர் தண்ட ருங்கதிர்ச் 184 தண்பனி நீரிற் 132 கந்தைதா ளொடும்பிறவித் 40 தம்முயிர்க் கிரங்கா 154 தரங்க வேலைக 149 தருமமுன்னாகு 236 தரைபுகழ் தென்னனன் 162 தலங்க டம்மின்மிக் 189 தலமுதன் மூன்றுஞ் 195 தன்னிக ருயர்ச்சி 176 திக்கும் வானமும் 98 திக்கெ லாம்புகழ் 148 திங்களணி திருவால 16 திங்களைச் சுண்ணஞ் 129 திருநகர் தீர்த்த 45 திருமகட்கொரு 97 திருவமுது நிவேதிப்போ 252 திருவால வாயென்று 205 திருவால வாய்க்கிணையா 203 திருவிற்கான் மணிப்பூ 131 திரைய ளிப்பவுந் 142 திறப்படு முலக 240 தீவினை யந்த ணாளர் 158 துவக்கு சங்கிலி 115 துள்ளு சேல்விழி 77 துறவின ரீச னேசத் 69 தூண்டுவா ருளமுந் 153 தெய்வ நாயக 50 தெய்வ நீறுமைந் தெய்வவித் தீர்த்தந் 227 தேசவிர் நீல மாடஞ் 151 தேரொலி.....சிப்பொலி 129 தைய லார்மதி 125 தொண்டர் நாதனைத் 90 தொளைய கல்லைமா 150 தோரண நிரைமென் 128 நஞ்சு பில்குதுளை 113 நரிகள்பரி யாக்கியதும் 270 நல்லவகை முகமனீ 251 நறுந்திருமஞ் சனமெடுக்கக் 253 நறைபடு கனிதேன் 70 நன்மலரொன் றாலவா 252 நாட்டமொரு மூன்றுடைய 202 நாயகன் கவிக்குங் 45 நாள்க ளுங்குளிர் 143 நிச்சலு மீச னன்பர் 69 நீல வேதிமேற் 141 நெற்க ரும்பெனக் 98 பங்கயற்கண் ணரியபரம் 21 பட்பகை யாகுந் 63 பண்கனிந் தனைய 173 பரிய மாமணி 124 பலநிற மணிகோத் 61 பல்வகைத் தலங்க 212 பவ்வகைத் தவங்க 212 பழிபடு நறவந் 62 பழுதகன்ற நால்வகைச் 31 பள்ள நீர்குடைந் 103 பன்மலர் மாலை 55 பன்னி றத்தபல் 144 பாதாள மேழுருவ 259 பாய தொன்மரப் 146 பாய வாரியுண் 47 பிரயாகை தனின்மகா 233 பிள்ளை யும்பெடை 108 பிறங்கு மாலவா 104 பிறந்தநா ளந்நீர் 229 பின்னெவ னுரைப்ப 71 புண்ணி யம்புரி 173 புதிய தாமரை மேவிய 193 புரங்க டந்தபொற் 109 புரந்த ராதிவா 179 புரையற புணர்ந்தோர் 64 புலரியிற் சீவன் 246 புலிமுனியும் பணிமுனியுந் 261 புல்லியோர் பண்டங் 140 புழைக்கை வரை 249 பூவண்ணம் பூவின் 19 பூவி னாயகன் 21 பெண்முத்த மனைய 155 பெறற்கருந் தவஞ்செய் 199 பொதியி லேவிளை 85 பொருப்பினுட் டலைமை 241 பொருமாநிற் கிளர்தடந்தோ 26 பொருரிய தகர்த்திங் 233 பொஷூக ளைந்தினுக் 170 பொன்னசலந்தனைச் 263 பொன்னெடு மேரு 238 மகர வேலையென் 111 மங்க லம்புனை பா 95 மடங்க லின்றிவிண் 166 மதிகதிரோ னிடத்தொடுங் 232 மரக தத்தினா 144 மருட்கெட மூழ்கி 223 மருட்சிசெய் காம 245 மருமச் செம்புன 123 மலயமா தவனை 195 மலருந் கிங்கடோய் 126 மல்குக வேத 14 மழுக்கள் வச்சிரங் 150 மழுக்கள் வீசுவன 113 மறைக ளாகமம் 164 மறைமுதற் கலைக 57 மறைவழி கிளைத்த 58 மற்றைய தலங்க 207 மற்றைய தலத்திற் 210 மனக்கவலை கெடவுலவாக் 267 மனிதரி லுயர்ந்தோ 242 மாக முந்திய 108 மாட மாலையு 122 மாய வன்வடி வாயது 82 மான்மதசுந் தரன்கொடிய 258 மின்மைசான் மணியிற் 242 மின்னைவா ளென்ன 152 முக்கண னரவப் 219 முஞ்சிநாண் மருங்கின் 157 முல்லை வண்டுபோய் 74 முற்ற வோதிய 190 முனித னீள்வரை 51 முன்னவ னருளிச் 235 முன்ன வன்னர 170 மூவகைச் சிறப்பு 197 மூவகை யுலகி 230 மெய்படு மன்பி 131 மெய்யைமண் ணாதி 226 மேரு மந்தரங் 188 மைந்தர்தந் நெருக்கிற் 153 வடுவின் மாநில 96 வட்டங்கொள் சடையுடைய 264 வந்திறை யடியிற் 32 வயவேனக் குருளைகளை 268 வரங்க டந்தரு 179 வருவிருந் தெதிர்கொண் 138 வரைபடு மணியும் 57 வலம்ப டும்புயத் 125 வல்லைதா யிருபால் 56 வழுக்கறு வாய்மை 136 வளைந்த நுண்ணிடை 85 வளையெறி தரங்க 225 வள்ள றன்னை வானமுந் திசையும் 139 வான யாறுதோய்ந் 78 வானவர்கோன் பழிதொலை 261 விடுத்திட லரிய 231 விடையு கைத்தவன் 86 விண்ணவர் தம்மின் 224 விண்ணிடைப் பரிதிப் 247 விரதமா தவத்தீர் 216 விரைசெய் பங்கயச் 101 விரையகல் கதுப்பி 151 விரைய விழ்ந்ததார் 171 வெந்த நீற்றொலி 181 வெம்மை யால்விளை 92 வெறிகொ ளைம்பொறியை 116 வென்றுளே புலன்க 17 வேதமு மங்க மாறு 159 வேத வந்தமுந் 169 வேத வாகம புராணமே 187 வேத்திரப் படையோ 220 நாவலர் ந.மு.வே நாட்டார் எழுதிய நூல்கள் / உரைகள் நூல்கள் 1915 - வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 1919 - நக்கீரர் 1921 - கபிலர் 1923 - கள்ளர் சரித்திரம் 1926 - கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் 1928 - சோழர் சரித்திரம் உரைகள் 1925 - இன்னாநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, உலகநீதி, நல்வழி, நன்னெறி திரிகடுகம் - கையெழுத்துப் படியாகக் கிடைத்து முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண் : 20 இல் பார்க்க. 1925 - 1932 - திருவிளையாடற்புராணம் 1940 - சிலப்பதிகாரம் 1942 - மணிமேகலை 1940 - 42 - கட்டுரைத்திரட்டு (இரண்டு தொகுதிகள்) 1944 - அகநானூறு உரைத்திருத்தம் : 1940 - தண்டியலங்காரப் பழைய உரை யாப்பருங்கலக்காரிகை அகத்தியர் தேவாரத்திரட்டு 1930 - பிப்ரவரி 11,12,13,14 ஆகிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளை சார்பாக தொல்காப்பிய ஆராய்ச்சி சொற்பொழிவு. (இந்த சொற்பொழிவு இதுவரை வெளிவராதவை கையெழுத்துப் படியாகக் கிடைத்தது. முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ்உரைகள் தொகுதி எண் - 17 இல் 15-வது கட்டுரையில் பார்க்க .) L L L ந.மு.வே.நாட்டார் வாழ்க்கைச் சுவடுகள் பிறப்பு: - நடுக்காவிரி, 12. 3. 1884 திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தந்தை - வீ.முத்துசாமி நாட்டார் தாய் - திருமதி தைலம்மை இளமைக் கல்வி: திண்ணைப்பள்ளி - நடுக்காவிரி தொடக்கப்பள்ளி - 3,4 ஆம் வகுப்புகள் நடுக்காவிரி தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் மதுரைத் தமிழ்ச் சங்கம் 1905 - பிரவேச பண்டிதம் 1906 - பாலபண்டிதம் 1907 - பண்டிதம் ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டியதை மூன்றே ஆண்டுகளில் படித்து முதல் வகுப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற பாராட்டுக்குரியவர். பொற் பதக்கம், தங்கத்தோடா, அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர். ஆசிரியர் பணி 1908 - பிசப் ஈபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. 1909 - தூய மைக்கேல் உயர் நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் 1910-1933 - தமிழ்ப் பேராசிரியர் பணி (22 ஆண்டுகள்) எஸ்.பி.ஜி. கல்லூரி , திருச்சிராப்பள்ளி 1933-1940 - தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் 1940 - சென்னை மாகாண தமிழர் மாநாட்டில் ‘நாவலர்’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டவர். 1941-1944 - மதிப்பியல் முதல்வர் கரந்தைப் புலவர் கல்லூரி தஞ்சாவூர் 28.3.1944 - இவ்வுலக வாழ்வில் இருந்து மறைந்தார். குறிப்பு : நாட்டார் தொடர்பான வரலாற்றுச் சுவடுகளின் விரிவான செய்திகளை பதிப்பாசிரியர் உரையிலும், நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண். 22 லும் பார்க்க) நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் நூல்கள் / கட்டுரைகள் 24 தொகுதிகளாக வெளிவருகின்றன. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் சிலப்பதிகாரம் தொகுதி 1 1) புகார்க் காண்டம் தொகுதி 2 2) மதுரைக் காண்டம் தொகுதி 3 3) வஞ்சிக் காண்டம் மணிமேகலை தொகுதி 4 4) மணிமேகலை 1 தொகுதி 5 5) மணிமேகலை 2 அகநானூறு தொகுதி 6 6) களிற்றியானைநிரை தொகுதி 7 7) மணிமிடை பவளம் தொகுதி 8 8) நித்திலக் கோவை திருவிளையாடற்புராணம் தொகுதி 9 9) மதுரைக் காண்டம்-1 தொகுதி 10 10) மதுரைக் காண்டம்-2 தொகுதி 11 11) மதுரைக் காண்டம்-3 தொகுதி 12 12) கூடற் காண்டம் -1 தொகுதி 13 13) கூடற் காண்டம் -2 தொகுதி 14 14) திருவாலவாய்க்காண்டம் -1 தொகுதி 15 15) திருவாலவாய்க்காண்டம் -2 தொகுதி 16 16) இலக்கியக் கட்டுரைகள் 17) இலக்கணக் கட்டுரைகள் தொகுதி 17 18) சொற்பொழிவுக் கட்டுரைகள் 19) வரலாற்றுக் கட்டுரைகள் தொகுதி 18 20) வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 21) சோழர் சரித்திரம் 22) கள்ளர் சரித்திரம் தொகுதி 19 23) நக்கீரர் 24) கபிலர் 25) அகத்தியர் 26) இளம்பூரணம் நீதிநூல்கள் + பதிணென்கீழ்க் கணக்கு நூல்கள் தொகுதி 20 27) ஆத்திசூடி 28) கொன்றைவேந்தன் 29) மூதுரை 30) நன்னெறி 31) நல்வழி 32) உலகநீதி 33) நறுந்தொகை 34) இன்னா நாற்பது 35) களவழி நாற்பது 36) கார்நாற்பது 37) திரிகடுகம் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 21 38) நாட்டார் நாட் குறிப்பு -1 - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 22 39) நாட்டார் நாட் குறிப்பு -2 மற்றும் வாழ்க்கை வரலாறு - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 23 40) கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 24 41) நாட்டார் புலமையும் பண்பும் L L L குறிப்புகள் குறிப்புகள் குறிப்புகள் (பாடபேதம்) 1. அமரர் சூழ. (பாடபேதம்) 1. மெய்ப்போத வின்பம். (பாடபேதம்) 1. படிவமாக்கி. (பாடபேதம்) 2. உலகத் தெண்ணிறந்த. (பாடபேதம்) 1. அஞ்ச. (பாடபேதம்) 1. பத்திநெறி வளர்ந்து. (பாடபேதம்) 1. வெள்ளறிவுரை சொற்குற்றம் (பாடபேதம்) 1. கவைக் கொழுந் தெழுநா (பாடபேதம்) 1. என்செய்கேனிதனைச் சொல்லுகேனெனு மாசை. (பா-ம்) 1. எவ்வமாற்றுவாள் (பா-ம்) 1. மென்முலையா. (பா-ம்) 1. வானகர்க்கும். (பா-ம்) 1. நறவந்தானே. (பா-ம்) 2. கலந்தவரொத்தார் (பா-ம்) 1. மென்முகத்துக்கு (பா-ம்) 1. அளவை கொண்டு (பா-ம்) 1. அகிற்படர் (பா-ம்) 1. மறைமுதற் பத்தி. (பா-ம்) 1. எண்ணிடப்படக் (பா-ம்) 1. பொலிவு குன்றாவாய் (பா-ம்) 1. பெடையொடும் விரவி. (பா-ம்) 2. நீராஞ்சனம். (பா- ம்) 1. நீர்க்குடைந்து. (பா- ம்) 2. காரண்டம் (பா- ம்) 3. கரவிலா (பா- ம்) 1. பொறியுமே யொன்றி (பா- ம்) 2. புரிவன. (பா- ம்) 1. அகழிசிகரமாலை. (பா- ம்) 1. முத்திறைப்ப (பா- ம்) 2. வரம்பினதாகுமோ. (பா- ம்) 1. உவர்ப்பறக் (பா- ம்) 1. எழுகடலடக்குமோசை (பா- ம்) 1. வினவின பொருள். (பா- ம்) 2. பக்கம் (பா- ம்) 1. வாணிலாச் (பா- ம்) 1. கரையிலா நிரை. (பா- ம்) 1. நிகமம் (பா- ம்) 1. எழுந்த. (பா-ம்) 1. பஞ்சிநாண். (பா-ம்) 2. எஞ்சி நான்மறை (பா-ம்) 1. ஆர்த்த (பா-ம்) 1. அடியில் (பா-ம்) 1. வகுத்துமுறையின், வகுத்தமுறையம் (பா-ம்) 2. ஓதியவ்விதி (பா-ம்) 1. நின்றலர் கடம்பு (பா-ம்) 1. உவர்ப்பத். (பா-ம்) 1. பூமியார் (பா-ம்) 2. இசைபாணி (பா-ம்) 1. நெறிபடு (பா-ம்) 2. கடப்பவர் (பா-ம்) 1. கேட்பவை. (பா-ம்) 1. இந்த (பா-ம்) 2. எஉவுலகுமென்றால், எவ்வுலகுமானால் (பா-ம்) 1. பண்டயங்கு. (பா-ம்) 1. தெளிந்திலங்கள் (பா-ம்) 2. உள்ளதா. (பா-ம்) 3. உடையதாய். (பா-ம்) 4. மூர்த்தியா (பா-ம்) 1. மற்றதனை. (பா-ம்) 2. ஆறினுள் (பா-ம்) 1. அலமற (பா-ம்) 1. ஈரிரு திசையினுமிருக்கும். (பா-ம்) 1. சிவலிங்கமு மொன்றுள. (பா-ம்) 1. அங்கண். (பா-ம்) 2. அதன் பெருமை (பா-ம்) 3. தேவதேவைத்திருவாலவாயிடத்து (பா-ம்) 4. வீட்டு நெறி சேர்வர். (பா-ம்) 1. முழங்கையை (பா-ம்) 2. தெரிச. (பா-ம்) 1. ஈசனன்றியே, ஈசனென்றறி (பா-ம்) 1. அமர்ந்தோர் சீவன், சிவநகரோத்தமங் கடம்ப வடவி சீவன். (பா-ம்) 1. தபனிய (பா-ம்) 2. கனக கஞ்ச. (பா-ம்) 1. அவிர்ந்த முத்த (பா-ம்) 1. நிகளமாய். (பா-ம்) 1. உலகத்துள்ள. (பா-ம்) 1. இருட்கெடப் பரமமுத்திக் கேதுவா ஞானந்தன்னைத் தெருட்படத் தரலான் தீர்த்தம் (பா-ம்) 2. கொடுத்துமாடே. (பா-ம்) 1. தன்னனுச்சையாலே (பா-ம்) 1. சூக்கம் (பா-ம்) 1. இன்ன நன்னூலில் (பா-ம்) 2. புனித தீர்த்தம். (பா-ம்) 1. முடிக்க வன்னோர்க்கு; (பா-ம்) 2. கதிக்கரசராவார். (பா-ம்) 1. ஆலவாயமர்ந்த (பா-ம்) 1. திரண்டான (பா-ம்) 2. சாற்றினார். (பா-ம்) 1. எல்லாவுலகிலும் (பா-ம்) 1. கலன்கள், நற்றவங்கள் (பா-ம்) 1. தீயவான்சுவை. (பா-ம்) 1. சொன்னவக்காலம். (பா-ம்) 1. சூக்கம் (பா-ம்) 1. கயலிசைய. (பா-ம்) 1. உடனாக (பா-ம்) 2. குருகாரும் (பா-ம்) 1. கடம்பொழில் (பா-ம்) 1. நாட்டுஞ் சுறவேற்றுக்கொடி.