நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 6 அகநானூறு களிற்றியானை நிரை உரையாசிரியர்கள் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கவியரசுஇரா.வேங்கடாசலம் பிள்ளை பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 6 உரையாசிரியர்கள் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கவியரசுஇரா.வேங்கடாசலம் பிள்ளை பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம், பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 280 = 312 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 195/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : மு. இராமநாதன், வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் 124 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற் காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “ சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “ சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரிய வர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர் களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்வி களிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப்பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக் குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921 -இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல் களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக்கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரணமாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த் தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர் களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள் கின்றேன். 17.07.2007 பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 அணிந்துரை ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் இடையறாத இலக்கிய வரலாறு படைத்தது தமிழ். இஃது உயர்தனிச் செம்மொழியாகவும், அதே வேளையில் உயிர்த் துடிப்புள்ள வழக்குமொழியாகவும் நின்று நிலவுகின்ற தனிச்சிறப்புமிக்கது. இன்று எஞ்சியுள்ள பழந்தமிழ் இலக்கியங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்த இலக்கியத்தின் முருகிய நிலையைக் காட்டுகின்றன. செறிவு, வரையறைக்குட்பட்ட தன்மை, மொழித்தூய்மை, தனக்கே சிறப்பாகவுரிய யாப்பு முதலியன இதன் சிறப்புத்தன்மைகள். உலகில் இதுவரையில் தோன்றிய இலக்கியங்களில் மிக நேர்த்தியானவை எனப் புகழத்தக்கன சில. அவற்றுள் நம் பழந்தமிழ் இலக்கியங்களும் அடங்கும். தமிழர் சங்க இலக்கியங்களை விஞ்சுகின்ற வேறு எவ்விலக்கியத்தையும் இதுவரையில் படைக்கவில்லை என்பார் அறிஞர் ஏ.கே. இராமாநுசன். பழந்தமிழ் இலக்கியங்களைச் சங்க இலக்கியங்கள் என வழங்கி வருகின்றோம். இவை எட்டுத்தொகை, பத்துப் பாட்டு என இருபெரும் பிரிவுகளாக வழங்கி வருகின்றன. அவற்றுள் எட்டுத்தொகையுள் ஒன்றாக விளங்குவது நெடுந்தொகை. அதனை அகநானூறு என்றும் வழங்கி வருகின்றனர். இதில் பாரதம் பாடிய பெருந்தேவனார் சிவபெருமான் மீது பாடிய கடவுள் வாழ்த்து நீங்கலாக, நானூறு அகவற்பாக்கள் உள்ளன. இத்தொகையை உருவாக்கியவர் உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர் என்றும், தொகுப்பித்த மன்னர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்றும் கூறுவர். இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்பவர் இந்நூற்கொரு பாயிரம் செய்தார். அவர், இந்நூலில் உள்ள செய்யுட்களை இயற்றிய புலவர்கள் நூற்று நாற்பத்து ஐவர் என்பார். “ ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள் நெடியவாகி அடிநிமிர்ந் தொழுகிய இன்பப் பகுதி இன்பொருட் பாடல் நானூ றெடுத்து நூல்நவில் புலவர் களித்த மும்மதக் களிற்றியானை நிரை மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம் மேவிய நித்திலக் கோவை என்றாங்கு அத்தகு பண்பின் முத்திற மாக முன்னர்த் தொடுத்த நன்னெடுந் தொகை” என்பார் இவர். இதில் அடங்கிய நானூறு செய்யுட்களையும் களிற்றியானை நிரை ( 1 - 120) மணிமிடை பவளம் ( 121-300) நித்திலக்கோவை (301-400) என முப்பிரிவாக்கியுள்ளனர். இப்பெயர்கட்கு உரிய காரணம் புலப்படவில்லை. ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்பன அகவற்பாக்களால் ஆன எட்டுத்தொகை நூல்கள். இவற்றுள் அடியளவால் நீண்ட பாட்டுக்களின் தொகுப்பாதலின் இந்நூல் நெடுந்தொகையாயிற்று. இந்நூலுள் 13 அடி முதல் 31 அடி வரை அமைந்த செய்யுட்கள் உள்ளன. ஏனையவற்றைவிட அகப்பாட்டுக்குரிய அடிப்படைப் பொருள் களாகக் கூறப்பட்ட முதல், கரு, உரி என்பன இந்நூலில் சிறப்பாக அமைந்தமையின் அகநானூறு என்ற பெயர் அமைந்தது எனத் தெரிகிறது. நற்றிணையிலும், குறுந்தொகையிலும் உள்ள தொகுப்பு முறையைவிட, இதன் தொகுப்பு முறை சற்று முன்னேறிய தாகத் தெரிகிறது. பிற இரண்டிலும் பாடல்களைத் தொகுப்பதில் ஓர் ஒழுங்குமுறை பின்பற்றப்படவில்லை. அகநானூற்றிலோ திட்டமிட்ட வரையறை காணப்படுகிறது. பாட்டின் எண்ணைக் குறித்தால், அதன் திணையை அறியும் வகையில் இதன் திணை வைப்புமுறை அமைந்துள்ளமை குறிக்கத்தக்கது. 1,3,5 என்றவாறு ஒற்றைப்படை எண் அமைந்த பாடல்கள் 200 பாலைத்திணைக்கு உரியன. 2,12,22: 8, 18, 28 என இரண்டிலும் எட்டிலும் முடியும் எண்களைக் கொண்ட 80 செய்யுட்கள் குறிஞ்சிக்குரியவை. இங்ஙனமே 4, 14,24 என்று நான்கில் முடியும் எண்களைக் கொண்ட 40 பாடல்கள் முல்லைக்கும், 6, 16, 26 என்று ஆறில் முடியும் எண்களை உடைய 40 செய்யுட்கள் மருதத்திற்கும், 10,20,30 எனப் பத்தின் மடங்காய் அமைந்த எண்கள் கொண்ட 40 செய்யுட்கள் நெய்தலுக்கும் உரியவாயின. இப்பாகுபாடு பற்றிய பழம்பாடல் வருமாறு:- ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஓதாது நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை அன்றியே ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு கூறாதவை குறிஞ்சிக் கூறு அகநானூற்றை முதன்முதல் பதிப்பித்த பெருமைக் குரியவர் சங்கசிந்தாமணி ஆசிரியரான வே.இராசகோபால ஐயங்கார் ஆவார். இவர்க்கு உறுதுணை புரிந்தவர் சேது வேந்தர் அவைப்புலவரான மகாவித்துவான் இரா.இராகவ ஐயங்கார் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐயங்கார் அவர்கள் எழுதியது குறிப்புரையே. அதற்கு விரிவான உரைவரைந்த பெருமை நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்க்கும், அவர்தம் உற்ற நண்பரான கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை அவர்கட்குமே உரியது. வேங்கட விளக்கம் என இவ்வுரை புகழ்பெறுவதாயிற்று. மர்ரே ராசம் நிறுவனத்தார் பேரறிஞர்கள் பலர் உதவியுடன் அகநானூற்று மூலத்தை வெளியிட்டனர். 2004-இல் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் ஒரு பதிப்பை வெளியிட்டுள்ளது. அஃது இரு தொகுதிகளாக அமைந்தது. இதன் உரையாசிரியர் முனைவர் இரா.செயபால் அவர்களாவார். அகநானூற்றுச் செய்யுட்களை இயற்றி யோருள் கிழார்கள் பதினெண்மரும், அந்தணப் புலவர்கள் பன்னிருவரும், அரசக் கவிஞர்கள் பதினொருவரும் அறியப்படுகின்றனர். அகநானூற்றில் மிகப் பெரிய பாட்டு 31 அடிகள் கொண்டது. இத்தகு பாட்டு ஒன்று மட்டுமே உள்ளது. 30 அடிகளைக் கொண்டதும் ஒன்றே. பாடல்களின் அடியளவு பற்றிய பட்டியலைக் கீழே காண்க. பாட்டின் பாடல்களின் அடியளவு எண்ணிக்கை 31 1 30 1 29 2 28 3 27 3 26 13 25 7 24 12 23 11 22 21 21 17 20 15 19 38 18 42 17 43 16 37 15 58 14 56 13 21 அகநானூற்று ஆசிரியருள் பரணர் 34 செய்யுட்களை இயற்றியுள்ளார். மாமூலனார் 27 செய்யுட்களையும், மருதனிளநாகனார் 23 செய்யுட்களையும் இயற்றியுள்ளனர். சங்ககாலத்தில் வாழ்ந்த பெண்பாற்புலவர் முப்பதின்மருள் பன்னிருவரின் செய்யுட்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அகநானூற்றில் பிற சங்க நூல்களில் காணமுடியாத அரிய செய்திகள் பல உள்ளன. பண்டைத் தமிழ் நாட்டில் நிகழ்ந்த திருமண நிகழ்ச்சியை இந்நூலின் 86, 136 ஆகிய செய்யுட்கள் அழகுற விளக்கியுள்ளன. இன்று பழனி என்று விளங்கும் ஊர் பழங்காலத்தில் பொதினி என வழங்கிற்று என்பதனை இந்நூலின் முதல் பாடல் கூறுகின்றது. துன்னற் காரர் என்றும், சாணை பிடிப்பவர் என்றும் அறிஞர்கள் அடையாளம் காட்டும் காரோடன் என்ற தொழிலாளியையும், அவன் பயன்படுத்திய சாணைக்கல்லைச் செய்யும் முறையையும் இந்நூலே முதலில் அறிமுகம் செய்தது. (அகம்.1, 356) யவனருடைய கப்பல்கள் பொன்னொடு வந்து கறியொடு பெயர்ந்த வரலாற்றையும் இந்நூல் தவிரப் பிறநூல்கள் குறிப்பிடவில்லை. இந்த ஏற்றுமதியும், இறக்குமதியும் முசிறித் துறைமுகத்தில் நிகழ்ந்தனவாம். ( அகம்.149) திருப்பரங்குன்றம் மதுரைக்கு மேற்கிலும், இன்று திருச்சியிலுள்ள மலைக்கோட்டை என்னும் குன்று உறையூரின் கிழக்கிலும் இருந்தன என்று இந்நூலின் 4, 149 ஆகிய பாடல்கள் முறையே நுவல்கின்றன. வெண்ணிப் போரில் புறப்புண் பெற்ற பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர்துறந்த செய்தியைக் கேட்ட அவன் நாட்டுச் சான்றோர் பலர் தாமும் உயிர்விட்டனர் என்ற அரிய வரலாற்றை இந்நூலின் 55-ஆம் செய்யுளும், இராமபிரான் தமிழகத்தில் உள்ள கோடியில் (தனுக்கோடி) தன் பரிவாரங்களுடன் ஓர் ஆலமரத்தின் அடியில் யாதோ ஒரு மறைவான பொருளைப் பற்றி ஆராய்ந்தார் என்ற செய்தியை 70ஆம் செய்யுளும் கூறுகின்றன. இங்ஙனமே, கண்ணபிரான் ஆயர்மகளிர் தழையுடையை உடுத்துக்கொள்ள வேண்டிக் குருந்தமரத்தின் மேல் ஏறி நின்று ஒரு கிளையை மிதித்தார் என 59ஆம் பாடலும், பரசுராமர் அரசமரபினர் பலரையும் அழித்தபின் செல்லூர் என்ற ஊரில் ஒரு பெருவேள்வி நிகழ்த்தினார் என 220ஆம் செய்யுளும் கூறுகின்றன. திருமால் குடிகொண்ட வைணவத் தலமான திருவரங்கத் தினை அகநானூறுதான் முதன்முதலில் குறிப்பிட்டது எனத் தெரிகின்றது. இந்நூலின் 137-ஆம் பாட்டு வெற்றிச் சிறப்பு மிக்க சோழர்களின் உறந்தையிடத்தே, பேராற்றின்கண் அமைந்த மணல் நிறைந்ததும், தேன் மணப்பதுமாகிய பொழிலில் பங்குனித்திருவிழா நடந்ததைச் சுட்டுகின்றது. அரங்கம் என்ற சொல் இப்பாட்டில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். இச்செய்யுளில் பங்குனி என்னும் திங்கட்பெயர் பதிவாகியுள்ளது. சோழமன்னன், எழினி என்ற குறுநிலமன்னன் தன் ஏவலை நிறைவேற்றத் தவறியமைக்காக அவன் பல்லைப் பறித்து எடுத்து வெண்மணி என்னும் ஊரில் இருந்த கோட்டை வாயிற் கதவிலே பதித்துவைத்தான் என்றும் (அகம்.211), மூவேந்தரும் பறம்புமலையை முற்றுகை செய்தபோது கபிலர் கிளிகளைக் கொண்டு நெற்கதிர்களைப் பெற்று மக்களைக் காத்தார் என்றும் (அகம்.78) இந்நூல் கூறுகின்றது. தன் தந்தையின் கண்ணைப் பறித்த கோசர்களைப் பழிவாங்கிய அன்னிமிஞிலி என்பாள் பற்றியும் (192, 262), ஆட்டனத்தி, ஆதிமந்தி ஆகிய காதலர்கள் வரலாறு பற்றியும், பறவைகளின் நண்பனான ஆய்எயினன் பற்றியும் இந்நூலின் செய்யுட்கள் கூறுகின்றன. ( 45, 76, 135, 222; 148, 181, 208) தமிழ்மக்களின் பண்பாடு பற்றிய அரிய பல செய்தி களின் பெட்டகமாக இந்நூல் காட்சியளிக்கின்றது. பண்கள் பற்றியும், பண்ணினின்று உருவாகும் திறம் பற்றியும், இசை நுட்பங்களை விளக்கும் இசையிலக்கண நூல் பற்றியும் இந்நூலின் 352ஆம் செய்யுள் விளக்கியுள்ளது. பாலைப்பண் (355), செவ்வழிப்பண் (14, 214, 314), குறிஞ்சிப்பண் (102) என்னும் நிலப்பண்கள் பற்றியும், யாழ், குழல் முதலான பல இசைக்கருவிகள் பற்றியும் இந்நூல் சொல்லும் செய்திகள் குறிப்பிடத்தக்கனவாகும். இவ்வகையில் இந்நூலின் 82, 376, 350, 111, 301, 40, 45, 155, 378, 94, 318 முதலிய செய்யுட்கள் சிறப்பானவை. பழந்தமிழ் மக்களிடம் நிலவிய பல நம்பிக்கைகள் செய்யுட் களில் பதிவாகியுள்ளன. பல்லியின் சொல்லில் தமிழர்க்கு இன்றளவும் நம்பிக்கை உண்டு. இந்நூலில் 9, 88, 289, 351, 387 ஆம் எண்ணுள்ள பாடல்கள் இதுபற்றிக் கூறும். பாம்பினிடம் விலையரிய மாணிக்கம் இருப்பதாக இன்றும் மக்கள் கூறுகின்றனர். அகத்தில் 92, 372 ஆகிய செய்யுட்கள் இதுபற்றிக் கூறுகின்றன. திங்களைப் பாம்பு விழுங்குவதாக நம்பினர். ( 114, 313) உமணர்கள் பற்றிப் பல செய்யுட்கள் சுவையான செய்தி களைத் தருகின்றன. அவற்றுள் 69ஆம் பாடல் தரும் செய்தி குறிப்பிடத்தக்கது. புலியால் கொல்லப்பட்ட யானையின் கறியை உமணர் சமைத்து உண்டனர் என்று இச்செய்யுள் கூறுகின்றது. பெண்ணுக்கு மணமகன் பரிசமளித்தான் என்பதனையும் ( அகம்.280), முகம் பார்க்கும் கண்ணாடிகள் பயன்பட்டமையையும்(அகம்.70), சங்க உறுப்பினர்கள் குடவோலை மூலம் தெரிவு செய்யப் பெற்றமையையும் ( அகம்.77) பிராமணர் தூதுவர்களாகப் பணிபுரிந்ததையும் (அகம்.337) பொன்னை நிறுக்கத் தனியொரு தராசு பயன்பட்டதையும் (அகம்.349) அறிய முடிகின்றது. சுட்ட செங்கல்லைக் கொண்டு கட்டிய கோயில்கள் பற்றிப் பல செய்யுட்கள் சுட்டியுள்ளன. ( 167, 287, 373, 377). நீராடாத சமணமுனிவர்கள் (123), கார்த்திகை விழா(141), பங்குனி உத்திரம் (137), நான்கு குதிரைகள் பூட்டிய தேர் ( 104), ஆமையை வேள்வியில் அவியாக அளித்தல் (361) முதலிய பல சிறப்பான பண்பாட்டுச் செய்திகளை இந்நூல் தருகின்றது. சங்கப் புலவர்கள் தம் உள்ளங்கவர்ந்த சமூக, வரலாற்று நிகழ்வுகளையும், அறக்கோட்பாடுகளையும், கலைகள் தொடர்பான செய்திகளையும் அகப்பாடல்களில் உவமைகளாக ஆண்டுள்ளனர். இத்தகு வரலாற்று உவமைகள் இடம்பெறும் அகப்பாடல்களில் அகவுணர்வுக்கு இரண்டாம் இடமே அமையும். அத்தகு பாடல்களை இயற்றியோரின் முதன்மையான நோக்கம், மேற்குறிப்பிட்ட அரிய செய்திகளைப் பதிவு செய்வதே. இத்தகு செய்யுட்கட்குக் கிளவித் தலைவன், பாட்டுடைத் தலைவன் என இரு தலைவர் உளர். இத்தகு பாடல்களே பின்னாளில் அகப்பொருட் கோவைகள் தோன்ற இடமளித்தன. அகநானூற்றில் இத்தகு பாட்டுடைத் தலைவர்களாக ஏறத்தாழ 120 பேர் காணப்படுகின்றனர். தமிழகத்தை ஆண்ட பெருவேந்தர்கள், குறுநிலத் தலைவர்கள், அவர்களின் வெற்றிகள், தோல்விகள், அவர் நாட்டகத்து ஆறுகள், மலைகள், அவர்தம் கொடைகள் முதலிய பலவும் உவமைகளாக ஆளப்பட்டமையால், அகப் பாடல்கள் வரலாற்றுப் பதிவேடுகளாக விளங்குகின்றன. அடியளவு மிகுதி காரணமாக, அகநானூறு இத்தகு உவமைகளை மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளது. கொல்லிமலை (62, 208, 209, 213, 303. 338), பொதியில் ( 138, 332), வேங்கடம் (27, 61, 83, 85, 141, 211, 213, 265, 393), பொதினி (1, 161) ஆகிய மலைகள் உவமைகளாக அறியப் படுவன. இவ்வாறே, ஆலங்கானம், பருவூர், வாகைப்பறந் தலை,வாகைப் பெருந்துறை, வெண்ணி முதலான இடங்களில் நிகழ்ந்த பெரும்போர்கள் பற்றியும் இவ்வுவமைகள் விளக்கியுள்ளன (36, 175, 96, 125, 199, 55, 246). வட இந்தியாவை ஆண்ட மன்னர் மரபுகள் பற்றிய செய்திகளைச் சில புலவர்கள் சுட்டிக் கூறியுள்ளனர். திராவிட மொழிகளுள் ஒன்றான துளுமொழி பேசும் இடம் துளுநாடு என்றே சுட்டப்பெறுகின்றது. இப்பகுதியில் ஆண்ட கோசர்கள் பற்றிச் சில செய்யுட்கள் ( 15, 196, 205, 216, 251, 262) குறிப்பிடுகின்றன. வேங்கடமலையை ஆண்ட தொண்டையர்கள் பற்றி 213ஆம் செய்யுள் குறித்துள்ளது. மகதநாட்டுக்குரிய நந்தர்கள் பற்றியும், அவர்தம் பாடலிபுத்திரம் பற்றியும் அகநானூறு பேசத் தவறவில்லை. (265), வடபுலத்தை ஆண்ட மோரியர்கள் பற்றியும், அவர்கள் மேற்கொண்ட தென்னாட்டுப் படையெடுப்புப் பற்றியும் செய்யுட்கள் குறித்துள்ளன (69, 251, 281). யவனருடைய கப்பல்கள் முசிறித் துறைமுகத்திற்கு வந்தமை பற்றி 149-ஆம் செய்யுள் குறிப்பிட்டுள்ளது. வழிப்பறியில் ஈடுபட்ட மறவர், மழவர் ஆகியோர் பற்றிப் பாலைத்திணைப் பாடல்களில் பல செய்திகள் உள்ளன. ( 1, 35, 91, 101, 119, 121, 129, 187, 269, 309, 337, 35, 53, 67, 87, 105, 284, 297, 363, 377, 382) தமிழ்மக்களின் வரலாறு, பண்பாடு ஆகியவை பற்றியும் இவர்களுடன் உறவாடிய பிற மாந்தர் பற்றியும் அறிய அகநானூறு ஓர் ஒப்பற்ற கருவூலமாக விளங்குவது இதற்கு நிலைத்த பெருமையைத் தரும். அகநானூற்றை உருவாக்கிய புலவர் பெருமக்கள், மாந்தர் கடைப்பிடித்து ஒழுகத்தக்க அறவொழுக்கங்களை ஆங்காங்கே அழுத்தமாக வலியுறுத்திச் சென்றுள்ளனர். அவற்றுள் சிலவற்றை இங்குக் குறித்தல் பயனுடையது. “ இல்லோர்க்கு இல்லென்று இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் காதல் அருளே காதலர் என்றி நீயே” (அகம்.53) “ அறந்தலைப் பிரியா தொழுகலும் சிறந்த கேளிர் கேடுபல ஊன்றலும் நாளும் வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்” (அகம்.173) “ செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு உறுமிடத்து உவக்கும் உதவி ஆண்மையும் இல்லிருந்து அமைவோர்க்கு இல்” (அகம்.231) “ இரப்போர் ஏந்துகை நிறையப் புரப்போர் புலம்பில் உள்ளமொடு புதுவதந் துவக்கும் அரும்பொருள் வேட்டம்” (அகம்.389) இக்காட்டிய இடங்கள் வறியோர்க்கும், உறவினர்க்கும் உதவி வாழும் சிறந்த நோக்கத்தினை வலியுறுத்தலைக் காணலாம். அகநானூற்றில் இடம்பெறும் பொதுவான உவயைணியும், உள்ளுறை உவமைகளும் கற்பார் உள்ளத்தைக் கொள்ளை கொள்வனவாகும். அகநானூற்று உரையாசிரியர்களாம் நாவலர் பெருமான் ந.மு.வே.நாட்டார் அவர்களும், கரந்தைக் கவியரசு அவர்களும் தம் நுண்மான் நுழைபுலம் கொண்டு எடுத்துக் காட்டிய உள்ளுறை உவமைகளை, அவர்கள் எழுதி உதவிய உரையிற் கண்டு கொள்க. இயற்கைப் பொருட்களின் அழகில் ஈடுபட்ட நம் புலவர்கள் உவமை களை உருவாக்கிக் காட்டும் நுட்பத்திற்கு ஈண்டு ஓரிரு எடுத்துக்காட்டுக்களைத் தருவது பொருத்தமாகும். மருதம் பாடிய இளங்கடுங்கோ என்னும் புலவர் பெருமான் ஒரே செய்யுளில் ஆறு உவமைகளை அமைத்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றார். “ கடல்கண் டன்ன கண்ணகன் பரப்பின் நிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கின் கழைகண் டன்ன தூம்புடைத் திரள்கால் களிற்றுச் செவியன்ன பாசடை மருங்கில் கழுநிவந் தன்ன கொழுமுகை இடையிடை முறுவல் முகத்தின் பன்மலர் தயங்கப் பூத்த தாமரைப் புள்ளிமிழ் பழனத்து வேப்புநனை யன்ன நெடுங்கண் ஈர்ஞெண்டு” (அகம்.176) இப்பகுதியில் மருதநிலத்து மேன்மையினை ஓர் அழகிய படக்காட்சியைப் போல் காட்டியமையால்தான் இவருக்கு மருதம் பாடிய என்னும் சிறப்பு அடை தரப்பட்டது என்று அறியலாம். இன்னொரு புகழ்மிக்க பெரும்புலவரான பரணர் பெருமான், இளங்கடுங்கோவை விஞ்சும் வகையில் ஒன்பது உவமைகளை ஆண்டுள்ளார். அவை வருமாறு “ வயிரத் தன்ன வையேந்து மருப்பின் வெதிர்வேர் அன்ன பரூஉமயிர்ப் பன்றி பறைக்கண் அன்ன நிறைச்சுனை பருகி நீலத் தன்ன அகலிலைச் சேம்பின் பிண்டம் அன்ன கொழுங்கிழங்கு மாந்திப் பிடிமடிந் தன்ன கல்மிசை ஊழ்இழிபு யாறுசேர்ந் தன்ன ஊறுநீர்ப் படாஅர்ப் பைம்புதல் நளிசினைக் குருகுஇருந் தனை வண்பிணி அவிழ்ந்த வெண்கூ தாளத்து அலங்குகுலை அலரி தீண்டித் தாதுகப் பொன்னுரை கட்டளை கடுப்பக் காண்வர” (அகம்.178) கிரேக்க மொழியில் அழியாப் புகழ்மிக்க காவியம் படைத்த ஓமர் பெருமான் கையாண்ட நீண்ட உவமைகள் உலகறிந்தவை.Homeric Simile என்று புகழ்பெற்ற அவ்வுவமை களைப் போன்றவை பழந்தமிழில் மிகுதி. அத்தகு சிறப்புமிக்க உவமை ஒன்றனை மதுரைக் கூத்தங்கண்ணனார் என்பவர் படைத்து நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றார். பொருள் தேடச் செல்லுமாறு தன்னை ஊக்கும் தன் நெஞ்சினை நோக்கித் தலைவன் கூறுவதாக அமைந்தது அகநானூற்றின் 335ஆம் செய்யுள். இதில், தலைவன் தன் அன்புக் காதலியின் எயிற்றில் ஊறும் இனிய உமிழ்நீரை வருணித்தற்கு மிக நீண்ட உவமையைக் கையாள்கின்றான். அது வருமாறு “ ஆடுகொள் முரசின் அடுபோர்ச் செழியன் மாட மூதூர் மதிற்புறம் தழீஇ நீடுவெயில் உழந்த குறியிறைக் கணைக்கால் தொடையமை பன்மலர்த் தோடுபொதிந் தியாத்த குடையோ ரன்ன கோள்அமை எருத்தின் பாளைப் பற்றழிந்து ஒழியப் புறஞ்சேர்பு வாள்வடித் தன்ன வயிறுடைப் பொதிய நாள்உறத் தோன்றிய நயவரு வனப்பின் ஆரத் தன்ன அணிகிளர் புதுப்பூ வாருறு கவரியின் வண்டுண விரிய முத்தி னன்ன வெள்வீ தாஅய் அலகின் அன்ன அரிநிறத் தாலி நகைநனி வளர்க்கும் சிறப்பின் தகைமிகப் பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய் நீரினும் இனிய வாகிக் கூர்எயிற்று அமிழ்தம் ஊறும் செவ்வாய் ஒண்டொடிக் குறுமகள் கொண்டனம் செலினே” (அகம் 335) இத்தகைய நீண்ட உவமையை வேறு எந்தச் சங்கச் செய்யுளிலும் காண்டல் அரிதாகும். நாணம் என்னும் நயமிகு பண்பினைப் புலமைப் பெருமாட்டி ஒளவையார் வருணிக்கும் அழகை இங்கே காண்க. “ .................................. வீங்குபு தலைவரம்பு அறியாத் தகைவரல் வாடையொடு முலையிடைத் தோன்றிய நோய்வளர் இளமுளை அசைவுடை நெஞ்சத்து உயவுத்திரள் நீடி, ஊரோர் எடுத்த அம்பல் அம்சினை ஆராக் காதல் அவிர்தளிர் பரப்பிப் புலவர் புகழ்ந்த நாணில் பெருமரம்” (அகம்.273) நாணம் புலவர்களால் போற்றப்பட்ட பண்பு என்பது எண்ணத் தக்கது. பழந்தமிழ் இலக்கியங்களின் ஒப்பற்ற விழுச்சிறப்பினையும், பழந்தமிழ் மாந்தரின் பண்பாட்டு வளத்தையும் உள்ளவாறு உணர உறுதுணை புரியும் அகநானூற்றைப் பற்றிய ஆய்வுகள் பல உண்டு. அவற்றுள் திருமதி தேவகிருபை தியாகராசன் எழுதிய ஆய்வுரை குறிப்பிடத்தக்கது. இது சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்ட ஆய்வேடாகும். இதன் சிறப்புணர்ந்த மேலைநாட்டுப் புலவோர் சிலரும், நம்நாட்டுப் புலவர் சிலரும், இதிலிருந்து பல பாடல்களை மொழி பெயர்த்து உலகிற்கு வழங்கியுள்ளனர். அவர்களுள் நல்லாடை ஆர்.பாலகிருட்டின முதலியார், பெ.ந.அப்புசாமி, மலேசியப் பெரும் புலவர் பொன்னையா, அமெரிக்க நாட்டறிஞர் ஜி.எல்.ஆர்ட் ஆகியோர் குறிப்பிடத்தக்கோர். அகநானூற்றின் நானூறு பாடல்களையும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வாயிலாக வெளியிட்டவர் மதுரைச் செந்தமிழ்க் கல்லூரியின் மேனாள் முதல்வர் அ.தட்சிணாமூர்த்தி ஆவார். இந்நூலைத் தெலுங்கு மொழியில் ஆக்கி வெளியிடப் பன்மொழிப் புலவர் மு.கு.சுகந்நாதராசா முயன்று வருகின்றார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும். 09.07.2007 அ.தட்சிணாமூர்த்தி 205,புட்பம் குடியிருப்பு 2ஆம் தெரு, அருளானந்த நகர், 10ஆவது குறுக்குத் தெரு, தஞ்சவூர் - 613 007. தொலைபேசி:04362 277402 ணிமேகலை - பதிப்பு வரலாறு பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங் களை யெல்லாம் தேடியெடுத்துத் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மை யாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக் கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்டதால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும் போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு... , செயல் செய்வாய் தமிழுக்கு...... ,ஊழியஞ் செய் தமிழுக்கு ......., பணி செய்வாய்! தமிழுக்கு ........, இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.”எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர் தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர் களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந் தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங் களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலனார் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற் குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடு வதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப் புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத் தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகு குரு. செயத்துங்கன், பேரா.கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெரு மக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டு கின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் வல்லுனர் குழு 1. முனைவர் கு.திருமாறன் 2. முனைவர் இரா.கலியபெருமாள் 3. பேராசிரியர் சண்முக.மாரி ஐயா 4. பேராசிரியர் நா.பெரியசாமி 5. முனைவர் பி.தமிழகன் 6. முனைவர் மு.இளமுருகன் உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை iv அணிந்துரை xi பதிப்புரை xxiii அகநானூறு மூலமும் உரையும் களிற்றியானை நிரை 1 பாட்டு முதற்குறிப்பு அகரவரிசை 274 ஆசிரியர் பெயர் அகர வரிசை 276 அகநானூறு களிற்றியானை நிரை அகநானூறு மூலமும் உரையும் களிற்றியானை நிரை கடவுள் வாழ்த்து கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் மலைந்த1 கண்ணியன் மார்பி னஃதே மையில் நுண்ஞாண் நுதல திமையா நாட்டம் இகலட்டுக் 5 கையது கணிச்சியொடு மழுவே மூவாய் வேலும் உண்டத் தோலா தோற்கே ஊர்ந்த தேறே சேர்ந்தோள் உமையே செவ்வா னன்ன மேனி அவ்வான் இலங்குபிறை அன்ன விலங்குவால் வையெயிற் 10 றெரியகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொன்முறை மரபின் வரிகிளர் வயமான் உரிவை தைஇய 15 யாழ்கெழு மணிமிடற் றந்தணன் தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே. -பாரதம் பாடிய பெருந்தேவனார். (சொற் பொருள்) 8-15 செவ்வான் அன்ன மேனி - சிவந்த வானை யொத்த திருமேனியினையும், அ வான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று - அவ்வானில் விளங்கும் பிறையை யொத்த வளைந்த வெள்ளிய கூரிய எயிற்றினையும், எரி அகைந் தன்ன அவிர்ந்து விளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடரும் சென்னி - நெருப்புக் கப்புவிட் டெரிந்தா லொத்த விட்டு விளங்கும் முறுக்குண்ட சடை இளம்பிறையுடன் ஒளிரும் சென்னியினையு முடைய, மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியா - மூப்புறாத தேவரும் முனிவரும் ஏனோரும் ஆகிய யாவரும் அறியாத, தொல்முறை மரபின் - பழமையாகிய தன்மையையுடைய, வரிகிளர் வயமான் உரிவை தைஇய - கோடுகள் விளங்கும் வலிய புலியின் தோலை யுடுத்த, யாழ் கெழு மணிமிடற்று - மறையிசை பொருந்திய நீலமணிபோலும் திருமிடற்றினையுடைய, அந்தணன் - அந்தணனாகிய சிவபிரான்; 1-2. கார்விரி கொன்றைப் பொன் நேர் புதுமலர் - கார்காலத்தில் விரியும் பொன்னை யொத்த கொன்றையின் புதிய மலர்களாலாய, தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் - தாரினை யுடையன் மாலையினையுடையன் சூடிய கண்ணியை யுடையன்; 3-7. மார்பினஃதே மைஇல் நுண்ஞாண் - அவன் மார்பின் கண்ணது குற்றமற்ற நுண்ணிய பூணூலாகும், நுதலது இமையா நாட்டம் - அவன் நெற்றியினிடத்தது இமைத்தலில்லாத கண், கையது இகல் அட்டு கணிச்சியொடு மழு - கையினிடத்தது பகைவரைக் கொன்று குந்தாலியுடன் விளங்கும் மழுப்படை, அ தோலாதோற்கு - அந்தத் தோல்வி யில்லாதாற்கு, மூவாய் வேலும் உண்டு - மூன்று தலையினையுடைய சூலப்படையும் உண்டு, ஊர்ந்தது ஏறு - அவன் ஏறி நடாத்தியது ஆனேறு, சேர்ந்தோள் உமையே - அவனது ஒரு கூற்றில் உறைபவள் உமை யாவள்; 16. தா இல் தாள் நிழல் - (அன்ன தன்மையனாகிய இறைவனது) அழிதலில்லாத திருவடி நிழலில், உலகு தவிர்ந்தன்று - உலகம் தங்கிற்று (ஆகலின் உலகிற்கு இடையூறில்லை என்க). (முடிபு) மணிமிடற்று அந்தணன் தாரன் மாலையன் கண்ணியன்; அவன் மார்பினஃது ஞாண், நுதலது நாட்டம், கையது மழு; அவற்கு வேலு முண்டு; அவன் ஊர்ந்தது ஏறு; அவனைச் சேர்ந்தோள் உமை; அவன் தாள் நிழல் உலகம் தவிர்ந்தன்று. மேனியினையும் எயிற்றையும் சென்னியையும் உடைய அந்தணன் எனவும், தொன்முறை மரபின் அந்தணன் எனவும், உரிவை தைஇய அந்தணன் எனவும், மிடற்று அந்தணன் எனவும் தனித்தனி கூட்டுக. (விளக்கவுரை) யாழ் என்றது ஆகுபெயரால் மறையிசையைக் குறிக்கும்; அன்றி யாழிசையுடன் பாடும் மிடற்றினையுடையன் என்னலுமாம்; "எம்மிறை நல் வீணை வாசிக்குமே"1 என்றார் திருநாவுக்கரையரும். தாரன் முதலியவற்றில், தாரும் கண்ணியும் சிறப்பியல்பாக முறையே மார்பிலும் சென்னியிலும் அணிவன; மாலை அழகிற்கு மார்பில் அணிவது. பொன் ஏர் எனப் பிரித்தலுமாம். மார்பினஃது: ஆய்தம் விரித்தல். கணிச்சியொடு விளங்கும் மழு வென்க. தவிர்தல் - தங்குதல். மேனி முதலியவற்றைக் கூறினார், அவ்வுருவைத் தியானம் பண்ணுக எனற்கு. (மேற்கோள்) "இசை திரிந் திசைப்பினும்"1 என்னும் சூத்திர வுரையில், `சொல்லொடு சொல் தொடர்புபடும் வாய்பாட்டாற் றொடராது பிறிதோர் வாய்பாட்டாற் றொடுப்பினும் பொருட் டொடர்பு உண்டாயிற் பொருள் இயையும் வழி அசைச்சொற்கள் திரியாது நின்ற நிலையே பொருள்படும்' என்று கூறி அதற்கு இச் செய்யுளை எடுத்துக்காட்டி, `இதற்குக் கொன்றையா லமைந்த தாரினனாய் மாலையனாய கண்ணியனாய் நுண்ஞாண் மார்பினனாய் இமையா நாட்டத்து நுதலினனாய்க் கணிச்சி மழுவு மூவாய்வேலும் ஏந்திய கையினனாய் யாவர்க்குந் தோலாதோனுமாய் ஏற்றினையு மூர்ந்து உமையாளையுஞ் சேர்ந்து செவ்வானன்ன மேனியையும் பிறைபோன்ற எயிற்றினையும் எரி போன்ற சடையினையும் திங்களொடு சுடருஞ் சென்னியையு முடையனாய் மூவா அமரர் முதலிய யாவருமறியாத் தொன்முறை மரபினனாய்ப் புலியதளையு முடுத்த, யாழ்கெழு மணியிடற் றந்தணனது சிவானுபூதியிற் பேருலகம் தங்கிற்று எனப் பொருள் உரைக்குங் காலத்து அதன்கண் இடைக்கிடந்த சொற்கள் முன்னொடு பின் வாய்பாடுகள் சேராவன்றே; அவ்வழி அவ்வாய் பாட்டாற் போந்த பொரு ளுரைப்பச் சேர்ந்தவாறும் இசை திரிந் திசைத்தவாறும் அவை தத்தம் நிலையிற் குலையாமை நின்று பொருள்பட்டவாறுங் கண்டு கொள்க,' என்றுரைத்தனர், இளம்பூரணர். `வாழ்த்தியல் வகையே நாற்பாற்கு முரித்தே'2 என்னும் சூத்திரவுரையில், இச்செய்யுளை எடுத்துக்காட்டி, இஃது உலகிற்குப் பயன்பட வாழ்த்தியது என்றார், பேராசிரியர். களிற்றியானை நிரை 1. பாலை (பிரிவிடை யாற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல் உருவக் குதிரை மழவர் ஓட்டிய முருகன் நற்போர் நெடுவே ளாவி அறுகோட் டியானைப் பொதினி யாங்கண் 5. சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய கற்போற் பிரியலம் என்ற சொற்றாம் மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய்நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார் நிலம்பக 10. அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின் நிழல்தேய்ந் துலறிய மரத்த அறைகாய் பறுநீர்ப் பைஞ்சுனை ஆமறப் புலர்தலின் உகுநெற் பொரியும் வெம்மைய யாவரும் வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடியச் 15. சுரம்புல் லென்ற ஆற்ற அலங்குசினை நாரின் முருங்கை நவிரல் வான்பூச் சூரலங் கடுவளி எடுப்ப ஆருற் றுடைதிரைப் பிதிர்வில் பொங்கிமுன் கடல்போல் தோன்றல காடிறந் தோரே. - மாமூலனார். (சொ-ள்.) 7-9 தோழி, சேய்நாட்டு - சேய்மைக்கண்ணுள்ள நாட்டினின்று, பொலம் கல வெறுக்கை தருமார் - பொன்னணி முதலாய செல்வங்களை ஈட்டிவரவேண்டி, சிறந்த வேய்மருள் பணைத்தோள் நெகிழ - சிறந்த மூங்கிலை யொத்த பரிய தோள் மெலியுமாறு (விட்டுப் பிரிந்து), 9-19 நிலம் பக - நிலம் பிளக்குமாறு, அழல்போல் வெங்கதிர் - தீயைப் போன்று வெப்ப மிக்க ஞாயிற்றின் கதிர், பைது அறதெறு தலின் - பசுமையறக் காய்தலின், நிழல் தேய்ந்து உலறிய மரத்த - நிழல் சுருங்க வற்றிய மரங்களையுடைய, அறை காய்பு - பாறைகள் கொதித்து, அறுநீர் பைஞ் சுனை - நீர் அற்ற பசிய சுனைகளிலும், ஆம் அறப் புலர்தலின் - ஈரம் இல்லையாம்படி காய்தலின், உகு நெல் பொரியும் வெம்மைய - அங்குச் சொரியும் நெல்லும் பொரியும் வெம்மையை உடைய, யாவரும் வழங்குநர் இன்மையின் - வழிச் செல்வார் யாவரும் இன்மையின், வௌவுநர் மடிய - ஆறலைப் போரும் வறுமையால் மெலிய, சுரம் புல்லென்ற ஆற்ற - சுரம் பொலிவற்ற நெறியினையுடைய, அலங்குசினை நார் இல் முருங்கை நவிரல் வான்பூ - அசையுங் கிளையினையுடைய நார் இல்லாத முருங்கையின் குலைந்த வெள்ளிய பூக்கள், சூரல் கடு வளி எடுப்ப- கடிய சூறாவளியாகிய காற்று வாரி வீச, ஆர்உற்று - ஆர்த்தலுற்று, உடைதிரைப் பிதிர்வில் பொங்கி-உடைந்த திரையின் துளிகளைப் போலப் பரந்து கிடத்தலின், முன் கடல்போல் தோன்றல - கடலின் கரையகம் போலத் தோன்றுதலையுடைய, காடு இறந்தோர் - காட்டினைக் கடந்தேகிய நம் தலைவர், 1-7. வண்டுபட ததைந்த கண்ணி - வண்டுகள் மொய்த்திட மலர்ந்த பூக்களாலாய கண்ணியினையும், ஒள் கழல் - ஒள்ளிய கழலினையும் உடைய, உருவ குதிரை மழவர் ஓட்டிய - அஞ்சத்தக்க குதிரைகளையுடைய மழவரை வென்றோட்டிய, முருகன் நற்போர் - முருகனைப் போன்ற நல்ல போர் வெற்றியினையுடைய, நெடுவேள் ஆவி - பெருமையுடைய வேளாகிய ஆவி என்பானது, அறுகோட்டு யானை- அறுத்துத் திருத்திய கோட்டினையுடைய யானைகளை யுடைய, பொதினி ஆங்கண் - பொதினி மலையாகிய அவ்விடத் திருந்து, சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல்போல் பிரியலம் என்ற சொல் தாம் - சிறியனாகிய சாணைக்கல் செய்வோன் அரக்கொடு சேர்த்தியற்றிய கல்லைப்போலப் பிரியேம் என்று கூறிய சொல்லை, மறந்தனர் கொல் - மறந்துவிட்டனரோ? (முடிபு) தோழி, சேய் நாட்டு வெறுக்கை தருமார் தோள் நெகிழக் காடிறந்தோர், பிரியலம் என்ற சொல் மறந்தனரோ? மரத்த, வெம்மைய, ஆற்ற, தோன்றல ஆகிய காடு எனவும், தருமார் இறந்தோர் எனவும் கூட்டுக. (வி-ரை) வண்டுபட - பட: காரணப் பொருட்டு; காரியப் பொருட்டும் ஆம். ததைந்த - சிதறின எனலும் ஆம். வண்டு படத் ததைந்த என்பது சினைக்கு ஏற்ற அடை. உரு - உருவ என ஈறு திரிந்தது; அழகிய குதிரை என்னலுமாம். மழவர் ஓட்டிய: உயர்திணை மருங்கின் இரண்டனுருபு தொக்கு வந்தது. ஓட்டிய ஆவி எனவும், பொதினி யாங்கண் சொல்லிய சொல் எனவும் கூட்டுக. அறுகு ஓட்டு எனப் பிரித்துச் சிங்கத்தை வென்ற எனலுமாம். பொதினி - ஆவியின் மலை; பழனி, `நெடுவே ளாவி, பொன்னுடை நெடுநகர்ப் பொதினி' (61) எனவும், `சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கற்போல்' (356) எனவும் பின்னர் வருவன அறியற் பாலன. (மே-ள்) `முதல் கருஉரிப்பொருள்'1 என்னுஞ் சூத்திரவுரையில் இச் செய்யுளை எடுத்துக்காட்டி, பாலைக்கு முதலுங் கருவும் வந்து முதற் பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது என்றார், நச். 2. குறிஞ்சி (பகற்குறிக்கட் செறிப்பறிவுறீஇத் தோழி வரைவு கடாயது.) கோழிலை வாழைக் கோண்மிகு2 பெருங்குலை ஊழுறு தீங்கனி உண்ணுநர்த் தடுத்த சாரற் பலவின் சுளையொ டூழ்படு பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல் 5. அறியா துண்ட கடுவன் அயலது கறிவளர் சாந்தம் ஏறல்செல் லாது நறுவீ அடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும் குறியா இன்பம் எளிதின் நின்மலைப் பல்வேறு விலங்கும் எய்து நாட 10. குறித்த இன்பம் நினக்கெவன் அரிய வெறுத்த வேஎர் வேய்புரை3 பணைத்தோள் நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட் டிவளும் இனைய ளாயின் தந்தை அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக் 15. கங்குல் வருதலும் உரியை பைம்புதல் வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே. -கபிலர் (சொ-ள்) 1-9. கோழ் இலை வாழைக் கோள் மிகு பெருங்குலை ஊழ்உறு தீங்கனி - வளவிய இலைகளையுடைய வாழையின் காய்த்தல் மிக்க பெரிய குலையிலுள்ள முதிர்ச்சியுற்ற இனிய கனியாலும், உண்ணுநர்த் தடுத்த சாரற் பலவின் ஊழ்படு சுளையொடு - தம்மை உண்போரைப் பிறவற்றை யுண்ணாமல் தடுத்த பக்கமலை யிலுள்ள பலாவின் முற்றிய சுளையாலும், பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல் - பாறையிடத்து நெடிய சுனையில் உண்டாகிய தேனை, அறியாது உண்ட கடுவன் - தேனென் றறியாதே உண்ட ஆண்குரங்கு, அயலது - அச்சுனையின் பக்கத்ததாகிய, கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது - மிளகுக் கொடி படர்ந்த சந்தனமரத்தில் ஏறமாட்டாது, நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் குறியா இன்பம் - நறிய பூக்களாலாய படுக்கையிற் களிப்புற்று உறங்கும் எதிர்பாராத இன்பத்தை, நின்மலைப் பல்வேறு விலங்கும் - நினது மலையிலுள்ள பல்வகை விலங்குகளும், எளிதின் எய்தும் நாட - எளிதாக அடையும் நாடனே!, 10. குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய - நீ குறித்து முயலும் இன்பங்கள் நினக்கு எங்ஙனம் அரியனவாகும்? 11-15. வெறுத்த ஏஎர் - மிக்க அழகினையுடைய, வேய் புரை பணைத் தோள் இவளும் - மூங்கிலை யொத்த பருத்த தோளினையுடைய இவளும், நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு இனையள் ஆயின் - நிறுத்தவும் நில்லாது ஓடும் நெஞ்சினளாய் நின்னிடத்தே இத்தகைய காதலுடையளாயின், தந்தை அருங்கடிக் காவலர் சோர் பதன் ஒற்றிக் கங்குல் வருதலும் உரியை - இனி நீ இவள் தந்தையின் அரிய காத்தற் றொழிலையுடைய காவலாளர் சோர்வுற்றிருக்குஞ் செவ்வியை மறைய உணர்ந்து இரவில் வருதற்கும் உரியை; 15-17. பைம்புதல் வேங்கையும் ஒள் இணர் விரிந்தன - அன்றியும் பசிய புதர் சூழ்ந்த வேங்கை மரங்களும் ஒள்ளிய பூங்கொத்துக்கள் விரியப் பெற்றன; நெடுவெண் திங்களும் ஊர் கொண்டன்று - மிக்க வெண்மையையுடைய திங்களும் நிரம்புதலுற்றது. (முடிபு) நாடனே, குறித்த இன்பம் நினக்கு எங்ஙனம் அரியன; இவளும் இனையளாயின் கங்குல் வருதலும் உரியை; வேங்கையும் இணர் விரிந்தன; திங்களும் ஊர் கொண்டன்று. (வி-ரை) சுளையொடு-சுளையால், ஒடுவைக் கனியொடுங் கூட்டுக. கனியாலும் சுளையாலும் விளைந்த ஊழ்படுதேறல் என்றுமாம்; ஊழ்படு - முறைமைப்பட்ட. உண்ணுநர்த் தடுத்த என்னும் அடை கனிக்கும் பொருந்தும். வாழைக் கனியையும் பலவின் சுளையையும் உண்டு, அவற்றால் விளைந்த தேறலையும் அறியாது மாந்திய கடுவன் என்றுரைத்தலும் பொருந்தும். அறியாதுண்டல் - நீர்வேட்கையால் இதனைத் தேறலென்றறியாது நீரென்றுண்டல். சாந்த மேறாது என்றது மரமாயிற் சந்தனமே ஆண்டுள்ளதென்னுங் குறிப்பிற்று. வீஅடுக்கம் - பூப்படுக்கை. குறியா இன்பம் - சிந்தனையும் முயற்சியுமின்றி வந்த இன்பம். கடுவனெய்திய குறியா வின்பத்தை அதுவேயன்றி வேறு பல் விலங்கும் எய்தும் நாடென்க. எய்து மென்னும் பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது. விலங்குமென்னும் உம்மை இழிவு சிறப்பு. வெறுத்தல் - செறிதல், மிகுதல். ஏரினையுடைய தோள் என்க. நிறுப்ப - நின்ற நிலையினின்று அழியாமல் நிறுத்தவும். கங்குல் வருதலு முரியை - பகற்குறியே யன்றி இரவுக்குறியில் வருதற்கு முரியை. வேங்கையும் விரிந்தன என்றது, தினைப்புனம் அறுத்துத் தலைவி இற்செறிக்கப்பட்டாள் என்றபடி; என்னை? வேங்கை மலருங்காலம் தினைமுற்றி அறுக்குங் காலமாகலின். இதனாற் பகற்குறி மறுத்ததாம். காவலர் சோர்பத னொற்றி என்பதனால் இரவுக்குறியருமை கூறி அதுவும் மறுத்ததாம். இரண்டிற்கும் உடம் படுவாள் போன்று இரண்டினையும் மறுத்துத் தோழி வரைவு கடாயினவாறு. நெடுவெண்டிங்கள் என்பதற்கு நெடும்பொழுது ஒளி செய்யும் நிறைமதி யெனப் பொருள்கொண்டு, ஊர்கொண்டன்று என்பதற்குக் குறைவின்றி வட்டமாக ஒளி பரந்தது என்றுரைத்தலு மாம். திங்கள் நிரம்புதலுற்றது என்றமையால் திருமணத்திற்குரிய நாளாதலும், நொது மலர் வரைய முற்படுவர் என்பதும் புலப்படுத்தி, விரைவில் வரைந்து கொள்ளுமாறு தூண்டியவாறாயிற்று. வேங்கை மலர்தலும் மணஞ் செய்யுநாள் குறித்தலாகக் கோடலும் அமையும். உம்மை யெச்சத்திற்கு முடிவு கூறும்1 சூத்திரவுரையிற் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் "வேங்கை யும்... ஊர் கொண்டன்றே" என்பதில், இணர் விரிதலும் ஊர் கோடலும் மணஞ் செய்யுங் காலங் குறித்தலின் அவை ஒரு வினைப் பாற்படும் என்றுரைத்து, அவ்வும்மை எச்சவும்மையாதற் கிழுக்கின்மை தெரித்தமை அறியற்பாலது. களிற்றியானை நிரையின் குறிப்புரையாசிரியர் `நெடு வெண்டிங் களென்றார்; ஆதித்தனுக்கு மேலாகலான்' எனக் கூறியது பௌராணிக மதம். " மையார் கதலி வனத்து வருக்கைப் பழம்விழுதேன் எய்யா தயின்றிள மந்திகள் சோரு மிருஞ்சிலம்பா மெய்யா வரியதெ னம்பலத் தான்மதி யூர்கொள்வெற்பின் மொய்யார் வளரிள வேங்கைபொன் மாலையின் முன்னினவே." 2 என்னும் திருச்சிற்றம்பலக்கோவைச் செய்யுளும், அதனுரையும் இச்செய்யுளின் கருத்துக்களைக் கொண்டு இயன்றிருப்பது அறிந்து இன்புறற்பாலது. (உள்ளுறை) கடுவனானது தேனை அறியாது நுகர்ந்து, பின்பு தன்றொழிலாகிய மரமேறலு மாட்டாது, பிறிதோரிடத்திற் செல்லவு மாட்டாது, அயலதாகிய சந்தன மரத்தின் நிழலிற் பூமேலே உறங்கு கின்றாற்போல நீயும் இக் களவொழுக்கமாகிய இன்பம் நுகர்ந்து, நினது தொழிலாகிய அறநெறியையும் தப்பி, இக் களவினை நீக்கி வரையவு மாட்டாது, இக் களவொழுக்கமாகிய இன்பத்திலே மயங்காநின்றாய் என்றவாறு. (மே-ள்) "நாற்றமும் தோற்றமும்" என்னும் சூத்திரவுரையில் இச் செய்யுளை எடுத்துக்காட்டி, "விலங்கும் எய்தும் நாட" என்று அந் நாட்டினை இறப்பக் கூறி, இந் நாடுடைமையிற் `குறித்த இன்பம் நினக்கெவனரிய' என வரைதல் வேண்டியவாறும், வேங்கை விரிந்ததனால் தினையறுத்தலின் இற்செறிப்புக் கூறியவாறும், `கங்குல் வருதலு முரியை' எனப் பகற்குறி மறுத்து இரவுக் குறி நேர்வாள்போற் கூறி `நெடுவெண்டிங்களு மூர்கொண் டன்றே' என்று அதனையும் மறுத்து வரைதற்கு நல்ல நாளெனக் கூறி வரைவு கடாயவாறுங் காண்க" என்றார், நச். 3. பாலை (முன்னொரு காலத்து நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப் போய்ப் பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.) இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன கருங்கால் ஓமைக் காண்பின் பெருஞ்சினைக் கடியுடை நனந்தலை ஈன்றிளைப் பட்ட கொடுவாய்ப் பேடைக் கல்கிரை தரீஇய 5. மான்றுவேட் டெழுந்த செஞ்செவி எருவை வான்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன் துளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி ஒண்செங் குருதி உவறியுண் டருந்துபு புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை 10. கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் புல்லிலை மராஅத்த1 அகன்சே ணத்தங் கலந்தரல் உள்ளமொடு கழியக் காட்டிப் பின்னின்று துரக்கும் நெஞ்சம் நின்வாய் வாய்போற் பொய்ம்மொழி எவ்வமென் களைமா 15. கவிரித ழன்ன காண்பின் செவ்வாய் அந்தீங் கிளவி ஆயிழை மடந்தை கொடுங்குழைக் கமர்த்த நோக்கம் நெடுஞ்சே ணாரிடை விலங்கு ஞான்றே. -எயினந்தை மகனார் இளங்கீரனார். (சொ-ள்) 1-11. இருங் கழி முதலை மேஎம் தோல் அன்ன - பெரிய உப்பங்கழியிலுள்ள முதலையிடத்துப் பொருந்திய தோலை யொத்த, கருங்கால் ஓமை காண்பு இன் பெருஞ்சினை - கரிய அடியினையுடைய ஓமை மரத்தின் காண்டற்கினிய பெரிய கிளை யின், கடியுடை நனந்தலை - காவலையுடைய அகன்ற இடத்தில், ஈன்று இளைப்பட்ட கொடுவாய்ப் பேடைக்கு - ஈன்று காவற்பட்ட வளைந்த வாயினையுடைய தன் பேடைக்கு, அல்கு இரை தரீஇய - மிக்க இரையைக் கொணர்ந்து தரும்பொருட்டு, மான்று வேட்டு எழுந்த செஞ்செவி எருவை - மயங்கி இரையை விரும்பி எழுந்த சிவந்த செவியினையுடைய எருவைச் சேவலானது, வான்தோய் சிமைய விறல் வரைக் கவான் - வானை அளாவிய உச்சியினையுடைய சிறப்பு வாய்ந்த மலையின் சாரலில், துளங்கு நடை மரையா வலம்படத் தொலைச்சி - அசைந்த நடையையுடைய மரையாவை வலப்பக்கத்தே வீழக்கொன்று வீழ்த்தி, ஒண் செங் குருதி உவறி உண்டு அருந்துபு - அதன் ஒள்ளிய சிவந்த குருதியை ஊற்றியுண்டு ஆர்ந்து, புலவுப் புலி துறந்த - புலால்நாறும் புலி கைவிட்டுப் போன, கலவுக் கழி கடுமுடை - மூட்டுவாய் கழிந்த மிக்க முடை வீசும் புலாலை, கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் - கொள்ளை புரியும் மாந்தரைப்போல விடாது கவர்ந்து செல்லும் (இடமாகிய), புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம் - புல்லிய இலைகளை யுடைய மராமரங்களைக் கொண்ட அகன்ற நெடிய நெறியில்; 12-13. கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டிப் பின்னின்று துரக்கும் நெஞ்சம் - அணிகலன்களை ஈட்டி வரும் எண்ணத்தாலே கடந்து செல்வதாகக் காட்டி எம்மைப் பின்னின்று தூண்டும் நெஞ்சமே! 15-18. கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ்வாய் - முருக்கம் பூவினையொத்த காண்டற்கு இனிய சிவந்த வாயினையும், அம் தீம் கிளவி - அழகிய இனிய மொழியினையும், ஆய் இழை - ஆய்ந்த அணியினையுமுடைய, மடந்தை - நம் தலைவியது, கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம் - வளைந்த குழையோடு மாறுபட்ட நோக்கமானது, நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்று - மிக நீண்ட அரிய சுரத்திடத்தே தோன்றித் தடுக்கும் அன்று; 13-14. நின் வாய் வாய்போற் பொய்ம்மொழி எம் எவ்வம் என் களைமா - நின் வாயினது மெய்போலும் பொய்ம்மொழி எமது துன்பத்தை எங்ஙனம் போக்குவதாகும்? (முடிபு) அகன் சேண் அத்தம் கலம் தரல் உள்ளமொடு பின்னின்று துரக்கும் நெஞ்சமே! ஆயிழை மடந்தை நோக்கம் ஆரிடை விலங்கும் ஞான்று நின் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா? புலி கவான் மரையா தொலைச்சி உண்டு துறந்த கடுமுடை எனவும், பேடைக்கு இரை தரீஇய எழுந்த எருவை கடுமுடை கவரும் அத்தம் எனவும் இயையும். (வி-ரை) மேவும் என்பது மேஎம் எனத் திரிந்தது. உயரத்தால் ஏறவொண்ணாமை பற்றிக் கடியுடை நனந்தலை யென்றார். ஈன்ற பேடை பிறிதிடத்திற் செல்லலாகாமையின் `இளைப்பட்ட' என்று கூறப்பட்டது. பின்னரும் `பருந்திளைப் படூஉம்'1 என இங்ஙனம் வருதல் காண்க. இளைப்பட்ட - வலைப்பட்ட என்பாருமுளர். அல்கு இரை எனற்கு வைத்திருந்து உண்ணும் இரை என்றும், இராப் பொழுது உண்ணும் இரை யென்றும் கூறுதலும் பொருந்தும். எருவை - பருந்தின் ஒருவகை. விறல் வரை - தன் பெருமையால் பிற மலையை வென்ற வெற்றியை யுடைய மலை எனலுமாம். கவான் - பக்க மலை. மரை ஆ - ஒருவகை மான். புலி பிற விலங்கினை வலப்பக்கத்தே வீழ்த்தி உண்ணும் இயல்பின தென்பது சான்றோர் செய்யுட்கள் பலவற்றான் அறியப்படுவது. உவறி - இஃது ஊற்றி என மருவி வழங்குகின்றது. நிறைந்து எனப் பொருள்படும் ஆர்ந்து என்பது அருந்துபு என்றாயிற்று. கலவு - மூட்டுவாய். முடை : ஆகு பெயர். மராஅ - ஆச்சாமரம்; மராஅம் எனப் பிரித்து வெண்கடம்பு எனலுமாம். நெஞ்சம்: அண்மைவிளி. `நின்வாய்' என்றது நெஞ்சினை உறுப்புடையது போலவும், வாய்போற் பொய்ம்மொழி என்றதனால் முன் மறுத்தமை கூறுதலின், மறுத்துரைப்பது போலவும் கூறினார். இது `நோயு மின்பமும்'2 என்னும் சூத்திரத்து `உறுப்புடையதுபோல் உணர்வுடையதுபோல்- மறுத்துரைப்பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும்' எனவும் போந்த வழுவமைதியால்; பின்னரும் ஆண்டாண்டு இங்ஙனம் வருதல் இவ் விதியின் பாற்படும் என்க. செவ்வாய் முதலிய விலங்கும் என்றது, முன் தலைவியின் உரு வெளிப்பட்டுத் தடுத்தமை கருதியாகும். களையுமாறு என்பது களைமா எனத் திரிந்தது. குழைக்கு - குழை யொடு: வேற்றுமை மயக்கம். (மே-ள்) இச் செய்யுளில் `பின்னின்று....களைமா' என்பதனை, மறுத்துரைப்பதுபோல நெஞ்சினை இளிவரல் பற்றிக் கூறியது என்றார், நச். `இன்பத்தை வெறுத்தல்'3 என்னுஞ் சூத்திர வுரையில், எதிர் பெய்து பரிதல் என்பதற்கு `அந்தீங் கிளவி... ஞான்றே' என்பதனை எடுத்துக் காட்டினர், பேரா. 4. முல்லை (தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது.) முல்லை வைந்நுனை1 தோன்ற இல்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற் பரலவல் அடைய இரலை தெறிப்ப 5. மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக் கருவி வானம் கதழுறை சிதறிக் கார்செய் தன்றே கவின்பெறு கானம் குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம்பார்த் தன்ன2 வாங்குவள் பரியப் 10. பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுறல் அஞ்சி மணிநா ஆர்த்த3 மாண்வினைத் தேரன் உவக்காண்4 தோன்றும் குறும்பொறை நாடன் கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது 15. நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட் போதவிழ் அலரின் நாறும் ஆய்தொடி அரிவைநின் மாணலம் படர்ந்தே. - குறுங்குடி மருதனார். (சொ-ள்) 17. ஆய்தொடி அரிவை - ஆராய்ந்த வளையினை யுடைய அரிவையே!, 1-7. முல்லை வை நுனை தோன்ற - முல்லையினது கூரிய நுனியை யுடைய அரும்புகள் தோன்றவும், இல்லமொடு பைங்கால் கொன்றை மென்பிணி அவிழ - தேற்றாமரத்தின் முகையொடு பசிய அடியினையுடைய கொன்றைமரத்தின் முகைகள் மெல்லிய கட்டு நெகிழ்ந்து விரியவும், இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பிற் பரல் அவல் அடைய இரலை தெறிப்ப - இரும்பை முறுக்கிவிட்டாற் போலும் கரிய பெரிய கொம்பினையுடைய ஆண் மான்கள் பரல்களையுடைய பள்ளங்களிலெல்லாம் துள்ளிக் குதிக்கவும், மலர்ந்த ஞாலம் புலம்பு புறக் கொடுப்ப - அகன்ற காடுறை யுலகில் நீரில்லாத வருத்தம் விட்டொழியவும், கருவி வானம் கதழ் உறை சிதறி கவின் பெறுகானம் கார் செய்தன்று - மின் முதலியவற்றின் தொகுதியையுடைய மேகம் விரைந்து வீழும் துளிகளைச் சிதறி அழகிய அக் காட்டினைக் கார்ப்பருவம் செய்தது; 13-17. குறும் பொறை நாடன் - குறிய மலைகளையுடைய நாட்டினையுடைய தலைவன், கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது - ஆரவாரிக்கும் ஒலி பொருந்திய விழவினையுடைய உறையூர்க்குக் கீழ்பாலுள்ளதாகிய, நெடும் பெருங் குன்றத்து - நீண்ட பெரிய மலையின் கண்ணே, அமன்ற காந்தள் போதுஅவிழ் அலரின் நாறும் நின் மாண்நலம் படர்ந்து - நெருங்கிய காந்தளின் போது விரிந்த மலரென நாறும் நினது சிறந்த அழகினை நினைந்து; 8-13. குரங்கு உளை பொலிந்த கொய் சுவல்புரவி - வளைந்த தலையாட்டத்தாற் பொலிந்த கொய்த பிடரிமயிரினையுடைய குதிரைகள், வாங்கு வள் பரிய - இழுக்கும் கடிவாளம் நெகிழ (விரைந்து ஓட), பூத்த பொங்கர் துணையொடு வதிந்த - பூத்த சோலையில் பெடையொடு தங்கும், நரம்பு ஆர்த்தன்ன தாது உண் பறவை - யாழின் நரம்பு ஒலித்தாலொத்த ஒலியினையுடைய தேனை யுண்ணும் வண்டுகள், பேதுறல் அஞ்சி - மயங்குமென அஞ்சி, மணிநா ஆர்த்த மாண் வினைத் தேரன் - மணிகளின் நாவை ஒலியாமற் கட்டிய மாண்புற்ற தொழிலமைந்த தேரினை யுடையனாய், உவக்காண் தோன்றும் - உவ்விடத்தே தோன்றும். (முடிபு) அரிவை! கானம் கார்செய்தன்று; குறும்பொறை நாடன் மாண் நலம் படர்ந்து தேரனாய் உவக்காண் தோன்றும். தோன்ற, அவிழ, தெறிப்ப, புறக்கொடுப்ப, வானம் உறை சிதறிக் கானத்தைக் கார் செய்தன்று என்க. மருப்பின் இரலை எனவும், அவலடையத் தெறிப்ப எனவும், நரம்பார்த்தன்ன பறவை எனவும், புரவி வள்பரிய (விரைதலால்) அஞ்சி மணி நா ஆர்த்த எனவும், நாடன் நலம் படர்ந்து தோன்றும் எனவும் கொண்டு கூட்டுக. (வி-ரை) `நுனை' என்றது நுனையையுடைய மொட்டை. இல்லம் கொன்றை என்பன அவற்றின் சினையாகிய அரும்பை யுணர்த்தி நின்றன. மாயிரு: யகர வுடம்படு மெய் பெற்றது, `கிளந்தவல்ல'1 என்னும் அதிகாரப் புறனடையாற் கொள்க. குரங்கல் - வளைதல்; `கிளைவிரி கரும்பின் கணைக்கால் வான்பூ - மாரியங் குருகி னீரிய குரங்க' (235) எனப் பின்னரும் வந்துளது. `குரங்கமை யுடுத்த மரம்பயில் அடுக்கத்து'2 என்றார் இளங்கோவடிகளும். புரவியினது வாங்கு வள், நரம்பார்த்தன்ன பரிய எனக் கொண்டு கூட்டினர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும்; வார், நரம்பு போலச் சிறிது ஒலிக்கும் என்பதும், அதனை ஆர்த்திலன் என்பதும் அவர்தம் கருத்தாகும். அஞ்சி : அருள் காரணமாகத் தோன்றும் அச்சம். துணையொடு வதியும் வண்டு பிரிந்து வருந்துதற்கும் அஞ்சுவான் தலைவனாகலின் அவன் நின்னைப் பிரிந்திருக்க ஒருப்படான் என்பது குறிப்பு. தாதுண் என்ற அடையால் பறவை வண்டாயிற்று. உவக்காண் - உவ்விடத்தே, உங்கே. `உவக்கா ணெங் காதலர்'1 என்புழி, உவக்காண் என்பதற்கு, `உங்கே' எனப் பொருளும், `ஒட்டி நின்ற இடைச்சொல்' என இலக்கணமும் பரிமேலழகர் எழுதினமை காண்க' குன்றம் - சிராப்பள்ளி மலை. (மே-ள்) செய்யுள் உறுப்பினுள் ஒன்றாகிய, நோக்கு2 என்பதற்குப் பேராசிரியர் இச் செய்யுளை எடுத்துக்காட்டித் தம் நுண் மாண்நுழை புலந் தோன்றக் கூறியிருக்கும் உரை ஈண்டு அறிந் தின்புறற் பாலது. `இனி அடிநிலை காறும்' என்றதனாற் செய்யுள் முழுவதும் எவ்வகை யுறுப்புங் கூட்டி நோக்கி யுணருமாறுங் கூறுதும்: முல்லையென்பது முதலாகக் கானம் என்பதீறாக நாற்சொல் லியலான் யாப்பு வழிப்பட்ட தாயினும் பருவங் காட்டி வற்புறுக்கும் தோழி பருவந் தொடங்கிய துணையே காண் என்று வற்புறுத்தினாளென்பது நோக்கி யுணர வைத்தான்: `உவக்காண் தோன்றுங் குறும்பொறை நாடன்' என்னுந் துணையும் தலைமகனது காதன்மிகுதி கூறி வற்புறுத்தினா ளென்பது நோக்கி யுணர வைத்தான்; ஒழிந்த அடி நிலைகாறும் பிரிந்த காலம் அணித்தெனக் கூறி வற்புறுத்தினா ளென்பது நோக்கி யுணர வைத்தான் எனப்படும்; என்னை? முல்லை யென்னாது `வைந் நுனை' என்றதனான் அவை அரும்பியது அணித்தென்பது பெறப்பட்டது; சின்னாள் கழியின் வைந்நுனையாகாது மெல்லென்னு மாகலின். இல்லமும் கொன்றையும் மெல்லென்ற பிணி யவிழ்ந்தன வென்றான், முல்லைக்கொடி கரிந்த துணை அவை முதல் கெடாது, முல்லை யரும்பிய காலத்து மலர்ந்தமையின். இரலை மருப்பினை இரும்பு திரித்தன்ன மருப்பு என்றதூஉம், நீர் தோய்ந்தும் வெயிலுழந்த வெப்பம் தணிந்தில; இரும்பு முறுக்கி விட்டவழி வெப்பம் மாறா (விட்ட) வாறு போல வெம்பா நின்றன இன்னும் என்றவாறு. `பரலவ லடைய இரலை தெறிப்ப' எனவே, பரல்படு குழிதோறும் தெளிந்து நின்ற நீர்க்கு விருந்தின வாகலாற் பலகாலும் நீர் பருகியும் அப் பரலவலினது அடைகரை விடாது துள்ளுகின்றனவென அதுவும் பருவந் தொடங்கினமை கூறியவாறாயிற்று. `கருவி வானங் கதழுறை சிதறி' என்பதூஉம் பலவுறுப்புங் குறைபடாது தொக்கு நின்றன மேகம் தமது வீக்கத்திடைக் காற்றெறியப்படுதலின் விரைந்து துளி சிதறின வென் றவற்றையும் புதுமை கூறினான். எனவே இவையெல்லாம் பருவந் தொடங்கி யணித்தென்றமையின், வற்புறுத்தற்கு இலேசாயிற்று. `குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி' என்பது, கொய்யாத உளை பல்கியும் கொய்த உளை பலகாலும் கொய்ய வேண்டுதலு முடைய குதிரை யென்றவாறு; எனவே தனது மனப்புகழ்ச்சி கூறியவாறு. அத்துணை மிகுதியுடைய குதிரை பூட்டின வாரொலி விலக்காது மணியொலி விலக்கி வாராநின்றான், அங்ஙனம் மாட்சிமைப்பட்ட மான் தேர னாதலான் என்றவாறு. அதற்கென்னை காரணமெனின், `துணையொடு வதியும் தாதுண் பறவை' எனவே, பிரிவஞ்சி யென்றவாறு. மணிநா வொலி கேட்பின் வண்டு வெருவு மாகலின் அது கேளாமை மணி நாவினை யியங்காமை யாப்பித்த மாண் வினைத் தேரனாகி வாரா நின்றானென இவையெல்லாம் தலைமகள் வன்புறைக் கேதுவாயின. `கறங்கிசை விழவி நுறந்தைக் குணாது, நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தள்' தெய்வமலை யாகலான் அதனுள் அமன்ற காந்தளைத் தெய்வப் பூ வெனக் கூறி, அவை போதவிழ்ந்தாற் போல அவர் புணர்ந்த காலத்துப் புதுமணம் கமழ்ந்த நின் கைத்தொடிகள் அவை அரியவாகிப் பிரிந்த காலத்துப் போன்று வடிவொத்து மணங் குறைபட்ட துணையேயால் அவர் பிரிந்து செய்த தன்மையின் என இதுவும் வன்புறைக்கே உறுப்பாயிற்று. இவ்வாறே பலவும் நோக்கி யுணர்தற்குக் கருவியாகிய `சொல்லும் பொருளும் எல்லாம் மாத்திரை முதலா வடிநிலை காறும்' என அடங்கக் கூறி நோக்குதற்குக் காரணம் நோக்கென்றான் என்பது. "மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்று"1 என்னும் சிந்தாமணிச் செய்யுள் உரையில், நச்சினார்க்கினியர் வண்டிற்குச் செவியறிவு உண்டெனக் கூறிப் `பூத்த..... தேரன்' என்னும் இச் செய்யுட் பகுதியை எடுத்துக் காட்டினர். `ஏனோர் மருங்கினும்'2 என்னும் சூத்திர உரையில் இச் செய்யுளை யெடுத்துக் காட்டி, `இதனுள் முல்லைக்குரித்தாகிய நிலமும் காலமும் கருப்பொருளும் இருத்தலாகிய உரிப்பொருளும் வந்தவாறு கண்டு கொள்க' எனவும், `முதல் கரு உரிப் பொருள்'3 என்னுஞ் சூத்திரவுரையில் இதனை எடுத்துக்காட்டி, `முல்லைக்கு முதலும் கருவும் வந்து, உரிப் பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது' எனவும் முறையே கூறுவர், இளம். `குரங்குளை.... பரிய' என்பதனையும், `இரும்பு.... தெறிப்ப'4 என்பதனையும், மொழி மாற்றுப் பொருள்களுக்கு உதாரணம் காட்டினர், நச். 5. பாலை (பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.) அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள் விளிநிலை கேளாள் தமியள்1 மென்மெல நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக் குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற 5. வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள் கண்ணிய துணரா அளவை யொண்ணுதல் வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன் முளிந்த ஓமை முதையலங் காட்டுப் பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி 10. மோட்டிரும் பாறை ஈட்டுவட் டேய்ப்ப உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன் மாய்த்த போல மழுகுநுனை தோற்றிப் பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல் விரனுதி சிதைக்கும் நிரைநிலை அதர 15. பரன்முரம் பாகிய பயமில் கானம் இறப்ப எண்ணுதி ராயின் அறத்தா றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி அன்ன வாக என்னுநள் போல முன்னம் காட்டி முகத்தின் உரையா 20 ஓவச் செய்தியின் ஒன்றுநினைந் தேற்றிப் பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ டாகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத் தூநீர் பயந்த துணையமை பிணையல் மோயினள் உயிர்த்த காலை மாமலர் 25. மணியுரு இழந்த அணியழி தோற்றம் கண்டே கடிந்தனம் செலவே ஒண்தொடி உழையம் ஆகவும் இனைவோள் பிழையலள் மாதோ பிரிதும்நாம் எனினே. - பாலை பாடிய பெருங்கடுங்கோ. (சொ-ள்) 1-7. (நெஞ்சே!) ஒள் நுதல் - ஒளி பொருந்திய நெற்றியினளாகிய நம் தலைவி, அளிநிலை பொறாது அமரிய முகத்தள் - நாம் அளிசெய்யும் நிலையினைப் பொறாமல் மாறுபட்ட முகத்தினளாய், விளிநிலை கேளாள் - நாம் அழைத்தலைக் கேளாமலே, தமியள் - நாண் முதலியவற்றைத் துறந்தனளாய், மென்மெல நலம் மிகுசேவடி நிலம் வடுக்கொளா குறுக வந்து - மென்மெலச் செல்லும் இயல்பினவாய நன்மை மிக்க சிவந்த அடியால் நிலத்தில் சுவடு தோன்ற அண்மையில் வந்து, கூர் எயிறு தோன்ற வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள் - தனது கூரிய பற்கள் தோன்றச் சிறிதே தன்னிடத்தெழுந்த மெய்ம்மை யல்லாத முறுவலுடையளாகி, கண்ணியது உணரா அளவை - யாம் எண்ணியதை உணரும் முன்பே, வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன் - நாம் பொருள்வயிற் பிரிதலை உடன்படாத எண்ணத்துடன், 8-16. முளிந்த ஓமை முதையல் காட்டு நெல்லி பளிங்கத்து அன்ன பல் காய் - காய்ந்த ஓமை மரங்களையுடைய முதிய காட்டில் நெல்லியினது பளிங்கு போன்ற பல காய்கள், மோடு இரும் பாறை ஈட்டு வட்டு எய்ப்ப உதிர்வன படூஉம் - உயர்ந்த பெரிய பாறைகளில் சிறார் விளையாடற்கு ஈட்டி வைத்திருக்கும் வட்டுக்களைப் போல உதிர்ந்து கிடக்கும், கதிர் தெறு கவான்- ஞாயிற்றின் கதிர்கள் காயும் பக்க மலைகளில், பாத்தி அன்ன குடுமி கூர் கல் - பகுத்து வைத்தா லொத்த தலையினையுடைய கூறிய கற்கள், மாய்த்தபோல மழுகு நுனை தோற்றி - தீட்டப்பட்டன போலத் தேய்ந்த கூர்முனையைத் தோற்றுவித்து, விரல்நுதி சிதைக்கும் நிரை நிலை அதர - வழிச் செல்வார் விரலின் முனையைச் சிதைக்கும் கல்லொழுங்குபட்ட நிலைமையையுடைய வழிகளைக் கொண்ட, பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம் - பரற் கற்களையுடைய மேட்டுநிலமாகிய வளனற்ற காட்டினை, இறப்ப எண்ணுதிர் ஆயின் - கடந்து செல்ல எண்ணுவீராயின், 16-26. அறத்தாறு அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி - (காதலுடையாரை விட்டுப் பிரிதல்) அறநெறி அன்றெனக் கூறிய பழைமை பொருந்திய சொல், அன்ன ஆக என்னுநள்போல - அங்ஙனம் சொல்லிய அளவில் கழிக என்று கூறுவாள் போல, முன்னம் காட்டி முகத்தின் உரையா - அக் குறிப்பினை முகக் குறிப்பான் உரைத்துக் காட்டி, ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஏற்றி - ஓவியம் வாளாது நிற்பதுபோல் நின்று நமக்கு உடன் படாமையை நினைந்து துணிந்து, பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு - தனது கண்ணின் பாவையை மறைத்து நிற்கும் நடுக்கத்தைச் செய்யும் நீரையுடைய பார்வையுடன், ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புல்தலை தூ நீர் பயந்த துணை அமை பிணையல் மோயினள் உயிர்த்த காலை - தனது மார்பில் அடக்கிய புதல்வனது புல்லிய தலையிலுள்ள தூய நீர் தந்த இணைப்பூக்களால் தொடுத்த செங்கழுநீர் மாலையை மோந்து பெருமூச்சு எய்திய காலத்தே, மாமலர் மணி உரு இழந்த அணி அழிதோற்றம் கண்டு - அச் சிறந்த மலர் பவளம் போலும் உருவினை யிழந்த பொலிவற்ற காட்சியைக் கண்டு, கடிந்தனம் செலவே - போதலைத் தவிர்ந்தோமன்றோ; 26-28. ஒண் தொடி உழையம் ஆகவும் இனைவோள் பிரிதும் நாம் எனினே பிழையலள் - ஒள்ளிய தொடியினளான இவள் நாம் அண்மையில் இருக்கவும் அவ்வாறு வருந்தும் இயல்பினள், பிரிவோமாயின் உயிர் உய்ந்திராள். (ஆகலின் நாம் செல்லுமாறு எங்ஙனம்?) (முடிபு) ஒண்ணுதல் அளி நிலை பொறாது அமரிய முகத்தளாய், செல்லா நினைவுடன், கானம் இறப்ப எண்ணு திராயின், கிளவி அன்னவாக என்னுநள் போல, முகத்திற் காட்டி, ஒன்று நினைந்தேற்றி, புதல்வன் புன்றலைப் பிணையல் மோயினள் உயிர்த்த காலை, அணி யழி தோற்றம் கண்டு நாம் பிரிதும் எனின் பிழையலள் என்று செலவு கடிந்தனம். முகத்தள் கேளாள் வந்து முறுவலள் உணரா அளவை செல்லா நினைவுடன் எனவும், காட்டு நெல்லி பாறை படூஉம் கவான் கூர்ங்கல் சிதைக்கும் அதர கானம் எனவும் கூட்டுக. (வி-ரை) அளிநிலை பொறாமையை, "முள்ளுறழ் முளை யெயிற் றமிழ்தூறுந் தீநீரைக், கள்ளினு மகிழ்செயு மெனவுரைத்து மமையாரென், னொள்ளிழை திருத்துவர் காதலர் மற்றவர், உள்ளுவ தெவன்கொ லறியே னென்னும்"1 என்பது முதலியவற்றால் அறிக. "பிரிவஞ்சும் புன்க ணுடைத்தாற் புணர்வு"2 என்புழிப் பரிமேலழகரும் பிரிவச்சத்திற்கு இக் கலியின் பகுதியை எடுத்துக் காட்டினர். கொளா - கொண்டு; இதனைக் கொள்ள வெனத் திரிக்க; கொள்ள வென்றே பாடங் கோடலுமாம். வறிது - சிறிது; உரிச்சொல். வாய்மையற்ற நகையாவது உள்ளத்தொடு பொருந்தாத நகை. முதையலங்காடு என்பதில் அம்மும், பளிங்கத்தன்ன என்பதில் அத்தும் சாரியைகள். அறத்தா றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி என்பதற்கு, காதலுடையாரைப் பிரிதல் அறநெறி யன்றாகலின், நின்னைப் பிரியேன் என்று, இயற்கைப் புணர்ச்சிக் காலத்து நீவிர் கூறிய சொல் என விரித்துரைத்துக் கொள்க. ஏற்றி - ஏற்றம் என்னும் உரியடியாகப் பிறந்த வினையெச்சம்; `கானலஞ் சேர்ப்பன் கொடுமையேற்றி'3 என்பது காண்க; எற்றி எனப் பாடங் கொள்வாரும் உளர். மோயினள்: வினையெச்சமுற்று; `வினையெஞ்சு கிளவியும் வேறு பல்குறிய'4 என்னும் சூத்திர உரையில், சேனாவரையர் மோயினள் என்பதற்கு வினையெச்சம் முற்றுச் சொல்லது திரிபாய் வந்ததென்றும், நச்சினார்க்கினியர் வினை யெச்சப் படர்க்கைத் தெரிநிலை முற்று என்றும் இலக்கணம் கூறினர். மணி - ஈண்டுப் பவளம். கழிந்தனம் செலவு என்றது பண்டொருகால் போக்கு ஒழிந்ததனைக் குறித்தது. இது, `செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே, வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும்'1 என்னும் விதியால் வற்புறுத்திப் பிரிதற்குத் தலைவன் செலவழுங்கியதாம் என்க. (மே-ள்) `கரணத்தி னமைந்து'2 என்னும் சூத்திர வுரையில் `கை விடின் அச்சமும்' என்பதற்கு இளம்பூரணர் இச் செய்யுளை எடுத்துக் காட்டினர். `செலவிடை யழுங்கல்' 3 என்னும் சூத்திர வுரையில், `மணியுறு .... பிரிது நாமெனினே' என்னும் பகுதியைப் பேராசிரியர் எடுத்துக்காட்டி, இது வன்புறை குறித்துச் செலவழுங்குதலிற் பாலையாயிற்று என்றார். 6. மருதம் (பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது.) அரிபெய் சிலம்பி னாம்பலந் தொடலை அரம்போ ழவ்வளைப் பொலிந்த முன்கை இழையணி பணைத்தோ ளையை தந்தை மழைவளந் தரூஉ மாவண் தித்தன் 5. பிண்ட நெல்லின் உறந்தை யாங்கண் கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தங் குழைமாண் ஒள்ளிழை நீவெய் யோளொடு வேழ வெண்புணை தழீஇப் பூழியர் கயநா டியானையின் முகனமர்ந் தாஅங் 10. கேந்தெழில் ஆகத்துப் பூந்தார் குழைய நெருநல் ஆடினை புனலே இன்றுவந் தாக வனமுலை யரும்பிய சுணங்கின் மாசில் கற்பின் புதல்வன் தாயென மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம் 15. முதுமை யெள்ளலஃ தமைகுந் தில்ல சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத் தந்தூம்பு வள்ளை யாய்கொடி மயக்கி வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய் முள்ளரைப் பிரம்பின் மூதரிற் செறியும் 20. பல்வேன் மத்தி கழா அ ரன்னவெம் இளமை சென்று தவத்தொல் லஃதே இனிமையெவன் செய்வது பொய்ம்மொழி யெமக்கே. -பரணர் (சொ-ள்) 1-6. அரி பெய் சிலம்பின் - பரல்கள் இடப் பெற்ற சிலம்பினையும், ஆம்பல் அம் தொடலை - ஆம்பல் மலராலாகிய அழகிய மாலையினையும், அரம் போழ் அவ்வளை பொலிந்த முன்கை - அரத்தாற் பிளக்கப்பெற்ற அழகிய வளைகளாற் பொலிந்த முன்கையினையும், இழை அணி பணை தோள் - அணிகலன் அணிந்த மூங்கிலை யொத்த தோளினையும் உடைய, ஐயை தந்தை - ஐயை என்பாளுக்குத் தந்தையாகிய, மழைவளம் தரும் மாவண் தித்தன் - மழைவளம் போலத் தரும் பெரிய வண்மையையுடைய தித்தனது, பிண்டம் நெல்லின் உறந்தை ஆங்கண் - நெற் குவியல் களையுடைய உறையூராய அவ்விடத்தே, கழை நிலை பெறாக் காவிரி நீத்தம் - ஓடக்கோலும் நிலைத்தலில்லாத காவிரியின் நீர்ப் பெருக்கில், 7-11. குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு - குழை முதலாகிய மாண்புறும் ஒளி பொருந்திய அணிகளையுடைய நின்னால் விரும்பப்பட்ட பரத்தையொடு, வேழம் வெண்புணை தழீஇ - வேழக் கரும்பாலாகிய வெள்ளிய தெப்பத்தினைக் கொண்டு, பூழியர் கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு - அவ்விடத்துப் பூழி நாட்டாரது குளத்தினைநாடிச் சென்று விளையாடும் களிறும் பிடியும் போல முகமலர்ச்சியுற்று, ஏந்து எழில் ஆகத்துப் பூ தார் குழைய - உயர்ந்த அழகிய மார்பிலுள்ள மலர்மாலை அழகுகெட, நெருநல் ஆடினை புனலே - நேற்றுப் புனலாடினை, 11-15. இன்று வந்து - இன்று இங்கு வந்து, ஆகம் வனம் முலை அரும்பிய சுணங்கின் - மார்பிலுள்ள அழகிய முலையில் தோன்றிய தேமலையும், மாசு இல் கற்பின் - குற்றமற்ற கற்பினையுமுடைய, புதல்வன் தாய் என - என் புதல்வன் தாயே என்று, மாயப் பொய் மொழி சாயினை பயிற்றி - வஞ்சனை பொருந்திய பொய்ம் மொழியினை வணங்கிப் பலகாலும் கூறி, எம் முதுமை எள்ளல் - எம் முதுமை நிலையினை இகழாதேகொள், அஃது அமைகும் - அம் முதுமைக்கு நாங்கள் அமைவோம், 16-20. சுடர் பூ தாமரை நீர் முதிர் பழனத்து - தீப்போலும் தாமரைப் பூக்களையுடைய நீர்மிக்க வயலில், அம் தூம்பு வள்ளை ஆய்கொடி மயக்கி - அழகிய உட்டுளையுடைய வள்ளையினது மெல்லிய கொடிகளை உழக்கி, வாளை மேய்ந்த வள் எயிற்று நீர் நாய் - வாளை மீன்களைத் தின்ற கூரிய பற்களையுடைய நீர்நாய், முள் அரைப் பிரம்பின் முது அரில் செறியும் - முட்கள் பொருந்திய தண்டினையுடைய பிரம்பினது பழைய தூறுகளில் தங்கி யிருக்கும் (இடங்களையுடைய), பல் வேல் மத்தி கழாஅர் அன்ன - பலவேற் படையினையுடைய மத்தியென்பானது கழாஅர் என்னும் ஊரினை யொத்த, 20-21. எம் இளமை சென்று தவ தொல்லஃது - எமது இளமை கழிந்து மிகப் பழைதாயிற்று, 22. பொய் மொழி எமக்கு இனிமை எவன் செய்வது - இனிநின் பொய்ம்மொழி எங்கட்கு இனிமை செய்வதென்பது எங்ஙனம் ஆகும்? (முடிபு) காவிரி நீத்தத்து நெருநல் புனல் ஆடினை; இன்று வந்து, சுணங்கினையும் கற்பினையுமுடைய புதல்வன் தாயெனப் மொய்ம்மொழி பயிற்றி எம் முதுமை எள்ளல்; அஃது அமைகும்; எம் இன்மை சென்று தவத் தொல்லது; நின் பொய்ம்மொழி எமக்கு இனிமை செய்வது என்னை? சிலம்பினையும் தொடலையினையும் முன்கையினையும் தோளினையுமுடைய ஐயை எனவும், நீர்நாய் மூதரிற் செறியுங் கழார் எனவும் இயையும். (வி-ரை) ஐயையது கற்பின் சிறப்பு நோக்கி, ஐயை தந்தை என்றார். மழை வளந் தரூஉம் என்பதற்கு மழையாகிய வளத்தினைத் தரும் எனக் கொண்டு, தித்தனது செங்கோன்மை கூறிற்று எனலுமாம்; மழை வளம் தரும் ஐயை என்றியைத்தலும் பொருந்தும். வேழக் கோலைப் புணையாகக் கொண்டு புனலாடுதல் `கொடுங் கோல் வேழத்துப் புணை துணையாகப், புனலாடு கேண்மை' (186) எனவும். யானை போலப் புணை தழுவிப் புனலாடுதல், `தார்பூங் களிற்றிற் றலைப்புணை தழீஇ.... காவிரிக்கோடு தோய் மலிர்நிறையாடியோரே' (166) எனவும், `மைந்துமலி களிற்றிற் றலைப்புணை தழீஇ.... நீர் பெயர்ந்தாடிய, (266) எனவும் பின்னரும் வருதல் காண்க. யானை யெனவே பிடியும் அடங்கிற்று. ஆங்கு : அசை. புதல்வன் தாய் என்றது கொண்டு, முதுமை எள்ளல் என்றாள். நெருநல் பரத்தையுடன் புனலாடினவன் இன்று வந்து சுணங்கினையும் கற்பினையும் பாராட்டு தலின் அதனை மாயப் பொய்ம்மொழி யென்றாள். பயிற்றல் - பலகாற் சொல்லல். அஃது அமைகும் என்பதற்கு நீ செய்கின்ற பரத்தமைக்கு யாம் அமைவேம் என்றுமாம். தில் : விழைவின்கண் வந்தது; அசையுமாம். அரில் - தூறு; பிணக்கம். தொல்லஃது : ஆய்தம் விரித்தல். (உ-றை) "நீர் நாய் வாளைக்குக் காவலாகிய வள்ளையினது நிலையை நெகிழ்த்து, இழிந்ததாகிய வாளையை நுகர்ந்து, பிரம்பாகிய முதிய தூற்றிலே தங்கினாற்போல, நீயும் பரத்தையர்க்குக் காவலாகிய தாய் முதலாயினாரது நிலைமையை நெகிழ்த்துக் குலமகளிரல்லாத விலை மகளிரை நுகர்ந்து, முன்பு நுமக்குண் டாகிய எங்கள் பழைமையைப் பற்ற, ஒரு பயன் கருதாது தங்குதல் மாத்திரத்திற்கு எம்மில்லில் வந்தீரென்றாளாம்." (மே-ள்) `வைகுறு விடியல்'1 என்னும் சூத்திர வுரையில் இச் செய்யுளை இத் துறைக்கே காட்டி, இஃது இளவேனில் வந்தது என்றும், `மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே'2 என்னும் சூத்திரத்து, புறத்திணையாற் கொண்ட மெய்ப் பெயரிடம் பற்றி அகத்திணைப் பொருள் நிகழவும் பெறும் எனக் கூறி, `அரிபெய் சிலம்பின்' என்னும் அகப்பாட்டினுள் தித்தன் எனப் பாட்டுடைத் தலைவன் பெயரும், பிண்ட நெல்லின் என நாடும், உறந்தை என ஊரும், காவிரி யாடினை என யாறுங் கூறிப் பின்னர் அகப்பொருள் நிகழ்ந்தவாறுங் கொள்க என்றும், `நிகழ்தகை மருங்கின்' 3 என்னும் சூத்திரத்து, ஆகவன முலை ..... சாயினை பயிற்றி' என்பது புலவிக்கண் தலைவன் புகழ்ந்தது என்றும் உரைத்தனர், நச். 4 "மூப்பே பிணியே" என்னும் சூத்திரத்து `மாயப் பொய்ம்மொழி.... தில்ல' என்பதனைத் தன்கட் டோன்றிய மூப்புப் பொருளாக இளிவரல் பிறந்தது என்பதற்கு எடுத்துக் காட்டினர், பேரா. 7. பாலை (மகட் போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று நவ்விப் பிணாக் கண்டு சொல்லியது.) முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின தலைமுடி சான்ற தண்தழை யுடையை அலமரல் ஆயமொ டியாங்கணும் படா அல் மூப்புடை முதுபதி தாக்கணங் குடைய 5. காப்பும் பூண்டிசின் கடையும் போகலை பேதை அல்லை மேதையங் குறுமகள் பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென ஒண்சுடர் நல்லில் அருங்கடி நீவித் தன்சிதை வறிதல் அஞ்சி இன்சிலை 10. ஏறுடை இனத்த நாறுயிர் நவ்வி வலைகாண் பிணையிற் போகி ஈங்கோர் தொலைவில் வெள்வேல் விடலையொ டென்மகள் இச்சுரம் படர்தந் தோளே ஆயிடை அத்தக் கள்வர் ஆதொழு அறுத்தெனப் 15. பிற்படு பூசலின் வழிவழி யோடி மெய்த்தலைப் 5 படுதல் செய்யேன் இத்தலை நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி ஒலிக்குழைச் செயலை உடைமாண் அல்குல் 20. ஆய்சுளைப் பலவின் மேய்கலை உதிர்த்த துய்த்தலை வெண்காழ் பெறூஉங் கற்கெழு சிறுகுடிக் கானவன் மகளே. - கயமனார் (சொ-ள்) 9-10. இன் சிலை ஏறு உடை இனத்த - இனிய முழக்கங்கொண்ட ஆண்மானாகிய இனத்தினையுடைய, நாறு உயிர் நவ்வி - உயிர்ப்புத் தோன்றும் இளைய மானே! 1-7. (என் மகளை நோக்கி யான்), மேதை அம் குறுமகள் - அறிவினையுடைய இளைய மகளே! முலை முகஞ் செய்தன - நினக்கு முலைகள் அரும்பின, முள் எயிறு இலங்கின - (விழுந்தெழுந்த) கூரிய பற்கள் ஒளி கொண்டன, தலை முடி சான்ற - கூந்தல் முடித்தல் அமைந்தன, தண் தழை உடையை - தண்ணிய தழையுடை கொண்டனை (ஆதலின்), அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல் - சுழன்று திரியும் நின் ஆயத்தாருடன் எங்கணும் போகற்க, மூப்புடை முதுபதி தாக்கு அணங்கு உடைய - தொன்மை வாய்ந்த இந்தப் பதியின் இடங்கள் தாக்கி வருத்தும் தெய்வங்களை யுடையன, காப்பும் பூண்டிசின் - (இவற்றால்) நீ காவலும் எய்தினை, கடையும் போகலை - இனி நீ நம் வாயிலகத்தும் போகற்பாலை யல்லை, பேதை அல்லை - நீ பேதைப் பருவத்தினை யல்லை, பெதும்பைப் பருவத்து புறத்து ஒதுங்கினை என - இப் பெதும்பைப் பருவத்து நீ புறத்துப் போனாய் என்னை என்று நான் கூற (அது கேட்டு), 17-22. பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி - பொன்னாலியன்ற புலிப்பல்லொடு கோக்கப்பெற்ற தனி மணித்தாலி யினையும், ஒலி குழை செயலை உடை மாண் அல்குல் - தழைத்த அசோகந்தளிராலாய தழையுடையால் மாண்புறும் அல்குலினையும் உடைய, பலவின் ஆய் சுளை மேய் கலை உதிர்த்த - பலாவினது சிறந்த சுளைகளை உண்ணும் முசுக்கலைகளால் உதிர்க்கப்பெற்ற, துய்தலை வெண் காழ் பெறூஉம் - தலையில் ஆர்க்கினையுடைய வெள்ளிய பலா வித்துக்கள் எங்கணும் கொள்ளக்கிடக்கும், கல்கெழு சிறுகுடிக் கானவன் மகள் - மலையிடத்தே பொருந்திய சிறு குடியை யுடைய கானவன் மகளாகிய என் மகள், 8-9. தன் சிதைவு அறிதல் அஞ்சி - தனது குற்றத்தினை நான் அறிந்தமைக்கு அஞ்சி, ஒண்சுடர் நல்இல் அருங்கடி நீவி - மிக்க ஒளி பொருந்திய எங்கள் நல்ல இல்லின் அரிய காவலைக் கடந்து, 11-13. வலை காண் பிணையின் போகி - வலையினை முன்னர்க் காணும் பெண் மான் அதனைத் தப்பி யோடுமாறு (விரைந்து) சென்று, தொலைவு இல் வெள்வேல் ஓர் விடலையொடு - தோற்றல் இல்லாத வெள்ளிய வேலினையுடைய ஒரு தலைவனொடு, இச் சுரம் ஈங்கு படர்தந்தோள் - இச் சுரத்தே இந் நெறியில் சென்றனள், 13-16. அ இடை - அப்பொழுதே, அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென - அருஞ்சுரத்துக் கள்வர் ஆக்களைத் தொழுவினின்றுங் கொண்டகன்றனராக, பின் படு பூசலின் வழிவழி ஓடி - அவர்கள் பின் சென்று செய்யும் போரினைப்போலப் பின்னே பின்னே (தொடர்ந்து) செல்லுமிடங்களி லெல்லாம் ஓடி, மெய்த் தலைப் படுதல் செய்யேன் - அவள் மேனியை அணுகப் பெற்றிலேன், 16-17. இத்தலை நின்னொடு வினவல் கேளாய் - இவ்விடத்து நின்னொடு வினவுகின்றதை விரும்பிக் கேட்டு (அவர்கள் செல்லும் நெறியினைக் கூறுவாயாக.) (முடிபு) நவ்வி ! யான் என் மகளை நோக்கி, பேதையல்லை; முகஞ் செய்தன, இலங்கின, சான்ற, உடையை, அணங்குடைய, ஆதலால் காப்பும் பூண்டி சின், படாஅல், இனி யாங்கணும் போகலை எனவும், பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்தெனவும் கூற, அக் கானவன் மகள் ஆகிய என் மகள் அஞ்சி, நீவி, போகி, விடலையொடு ஈங்குப் படர்தந்தோள்; வழிவழி யோடி மெய்த் தலைப்படுதல் செய்யேன்; இத்தலை நின்னொடு வினவல் கேளாய்; (அவர்கள் செல்லும் நெறி கூறுவாயாக.) தாலியினையும் அல்குலினையும் உடைய கானவன் மகள் எனவும் கானவன் மகளாகிய என் மகள் எனவும் கூட்டுக. (வி-ரை) இச் செய்யுளின் துறை கூறிய நச்சினார்க்கினியர், இது கானவன் மகளைக் கண்டு கூறியதுமாம் என, `எஞ்சியோர்க்கும்'1 என்னும் சூத்திரத்துக் கூறலின், `பொன்னொடு.... கானவன் மகளே' எனு மிச் செய்யுட் பகுதியை, செவிலி தான் கானகத்தே கண்டதோர் மகளை விளித்துக் கூறியதாகக் கோடலுமாம்; அங்ஙனம் கொள்ளின், `இன்சிலை.....போகி' என்ற பகுதியை, `இன் சிலை ஏறுடை யினத்த வலை காண் நாறுயிர் நவ்விப் பிணையிற் போகி' எனக் கூட்டி யுரைத்துப் போகிப் படர்தந்தோள் என முடிக்க. `மூப்பு' என முன் வந்தமையின், `முதுபதி' பதியென்னும் பெயர் மாத்திரையே யாகும். சின் : அசை. நவ்வியின் இனிய குரலைப் பாராட்டுவாள் இன்சிலை என்றாள். வெப்பம் தாங்கலாற்றாது உயிர்த்திடும் இளமைச் செவ்வியினதாதல், நாறுயிர் நவ்வி என்றதனாற் குறிக்கப்பட்டது. வலையைச் சேய்மைக் கண் கண்டதொரு பிணை அதனை அணுகாது விலகியோடி மறைவது போல, தனது இற் செறிப்பினைக் கண்டஞ்சிக் கழிந்தனள் என்றாள். நாறுதல் - தோன்றுதல். உயிர் - உயிர்ப்பு. அத்தக் கள்வர் என்றது வெட்சி மறவரை. பிற்படு பூசல் - பின்னே தொடர்ந்து சென்று மீட்கும் கரந்தையாரின் போர். அவள் கானக மகளாதலின் நினக்கும் ஓர் அடைவு உண்டு; ஆதலின் கூறுவாயாக என்றாள். பூசலின்; இன் : ஒப்பு. (மே-ள்) தலைவி கூற்று நிகழ்த்துமாறு கூறும் `மறைந்தவற் காண்டல்'1 என்னும் சூத்திரத்துத் `தமர்தற் காத்த காரண மருங்கினும்' என்னும் பகுதிக்கு, இச் செய்யுளையும் எடுத்துக் காட்டி, (தலைவி தோற்றப் பொலிவு கண்டு தமர் அவளை வெளியிற் செல்லாது காத்தனர் என்பார்) `என்றன தோற்றப் பொலிவாற் காத்தன' என்றும், `எஞ்சியோர்க்கும்'2 என்ற சூத்திரத்துச் செவிலிக்கும் கூற்று உண்டு எனக் கூறி, `முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின' என்னும் அகப்பாட்டு, `மகட் போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின் சென்று நவ்விப் பிணையைக் கண்டு சொற்றது; செவிலி கானவர் மகளைக் கண்டு கூறியதுமாம், என்றும் கூறுவர், நச். `மரபே தானும்'3 என்ற சூத்திரத்துப் `புலிப்பற் கோத்த....... அல்குல்' எனும் இச் செய்யுட் பகுதியைக் காட்டி `என்பது பருவத்திற்கேற்ற அணி கூறியது' என்பர், பேரா. 8. குறிஞ்சி (தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது. ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த குறும்பி வல்சிப் பெருங்கை யேற்றை தூங்குதோல் துதிய வள்ளுகிர் கதுவலின் பாம்புமதன் அழியும் பானாட் கங்குலும் 5. அரிய அல்லமன் இகுளை பெரிய கேழல் அட்ட பேழ்வா யேற்றை பலாவமல் அடுக்கம் புலவ ஈர்க்கும் கழைநரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு வாழை யோங்கிய தாழ்கண் அசும்பில் 10. படுகடுங் களிற்றின் வருத்தஞ் சொலிய பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் விண்டோய் விடரகத் தியம்பும் அவர்நாட் டெண்ணரும் பிறங்கல் மானதர் மயங்காது மின்னுவிடச் சிறிய ஒதுங்கி மென்மெலத் 15. துளிதலைத் தலைஇய மணியே ரைம்பால்1 சிறுபுறம் புதைய வாரிக் குரல்பிழியூஉ நெறிகெட விலங்கிய நீயிர் இச்சுரம் அறிதலும் அறிதிரோ என்னுநர்ப் பெறினே. -பெருங்குன்றூர் கிழார். (சொ-ள்) 5-12. இகுளை- தோழியே!, பெரிய கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை - பெரிய ஆண்பன்றியினைக் கொன்ற பிளந்த வாயினையுடைய புலியேறு, பலா அமல் அடுக்கம் - பலாமரங்கள் செறிந்த பக்க மலைகளில், புலவ ஈர்க்கும் - புலால் நாற அதனை இழுத்துச் செல்லும் இடமாகிய, கழை நரல் சிலம்பின் ஆங்கண் - மூங்கில்கள் ஒலிக்கும் மலையாய அவ்விடத்து, வழையொடு வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில் - சுரபுன்னையோடு வாழை ஓங்கி வளர்ந்த தாழ்ந்த இடத்தையுடைய நீர் அறாக் குழியில், படுகடுங் களிற்றின் வருத்தம் சொலிய - அகப்பட்ட கடிய களிற்றின் வருத்தத்தினை நீக்கற்கு, பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் - அதன் பெண் யானை அக் களிறு ஏறுதற்குப் படியாகப் பெரிய மரத்தினை முறித்திட்ட ஓசை, விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு - வான் அளாவிய மலைமுழையின்கண் சென்றொலிக்கும் நம் தலைவர் நாட்டில், 13-14. எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது மின்னு விடச் சிறிய மென்மெல ஒதுங்கி - எண்ணற்கரிய குன்றுகளின் பக்கமாகச் செல்லும் மான்களின் நெறிகளில் மயங்கித் திரியாது மின்னல் வழிகாட்டச் சிறுகச் சிறுக மெத்தென நடந்து, 1-4. ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த குறும்பி வல்சி பெருங் கை ஏற்றை - ஈயல்களை யுடைய புற்றின் குளிர்ந்த மேற்புறத்தே தங்கிய புற்றாஞ் சோறாகிய இரையினையுடைய பெரிய கையினை யுடைய ஆண்கரடியின், தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின் - தொங்கும் தோல் உறைக்குள் பொருந்தியிருக்கும் கூரிய நகம் பற்றிக் கொள்வதால், பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும் - பாம்பு தனது வலிமையற்றொழியும் பாதிநாளிரவும் (செல்லுதல்), 15-18. துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் - மழைத் துளியைத் தன்னிடத்தே கொண்ட நீலமணிபோன்ற அழகிய கூந்தலை, சிறுபுறம் புதைய வாரிக் குரல் பிழியூஉ - பிடரி மறையப் பின்னே கோதி அம் மயிர்த்தொகுதியைப் பிழிந்து விட்டு, நெறி கெட விலங்கிய இச் சுரம் நீயிர் அறிதலும் அறிதிரோ என்னுநர்ப் பெறின்- வழிகள் செல்ல முடியாதபடி பின்னிக்கிடக்கும் இச்சுரத்தின் நெறியினை நீவிர் முன்பு அறிதலும் செய்வீரோ என்று பரிவுற்று வினவுவாரைப் பெறின், 5. அரிய அல்ல மன் - நமக்கு அரியன அல்லவாம்; (அந்தோ அது பெற்றிலோமே!) (முடிபு) இகுளை! அவர் நட்டு மென்மெல ஒதுங்கிப் பானாட்கங்குலும் (செல்லல்), வினவுவார்ப் பெறின், அரிய அல்லமன். ஏற்றை ஈர்க்கும் ஆங்கண் அசும்பில் படுகளிறு என்க. (வி-ரை) `ஏற்றை' என்பது, "ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற் கெல்லாம், ஏற்றைக் கிளவி யுரித்தென மொழிப"1 என்பதனால், கரடி புலி முதலியவற்றின் ஆணினைக் குறிப்பதொரு மரபுப் பெயராகும். துதி - உறை. புலர என்றே பாடங்கொண்டு புலால் நாற எனலுமாம். அறிதலு மறிதிரோ - இங்ஙனம் வினை யிரட்டிக்குங் கால் பின்னது `செய்தல்' என்னும் பொதுவினையாகக் கொள்ளப்படும்; `அறிதலும் அறிதியோ பாக' 2 என்பதும் காண்க. பிறங்கல், பிறங்குகல் என்பதன் விகாரமாம். மின்னுவிட - மின் வழிவிட. ஒதுங்கி - ஒதுங்க எனத் திரித்தலுமாம். மணியேர் ஐம்பால் : ஏர், உவம உருபுமாம். (உ-றை) `ஈயற்புற்றத்து... மதனழியும்' என்பதற்கு "ஏற்றையானது பாம்பை வருத்தவேண்டும் என்னும் கருத்தில்லையாயினும், அது தன் காரியம் செய்யவே வள்ளுகிர் படுதலாகிய அவ்வளவிற்குப் பாம்பு வலியழிந்தாற்போல, அவர் நம்மை வருத்தவேண்டும் என்னும் கருத்தில்லையாயிருக்கவே, தமது காரியமாகிய களவின் பத்திலே ஒழுகவே, ஆறின்னாமை ஊறின்னாமை முதலாகிய இவ்வளவிற்கே நாம் வருந்தும்படியாய் விட்டது" என்றும், `பெரிய கேழலட்ட.... புலர வீர்க்கும்' என்பதற்கு, `புலியானது தான் நுகர்தற் பொருட்டுக் கேழலை யட்டுப் பழ நாற்றத்தையுடைய பலாவம லடுக்கம் புலர ஈர்த்தாற்போல, அவரும் இன்பந் துய்த்தற்பொருட்டு வந்து நம்மைக்கூடி, அக்கூட்டத்தாலே புகழ்ச்சியை யுடைத்தாகிய நம் குடியை இகழ்ச்சியுடைத்தாம்படி பண்ணினார்" என்றும், `வாழையொடு.... விடரகத் தியம்பும்' என்பதற்கு "வாழை நுகர வந்த யானை அதன் அயலாகிய அசும்பின் குழியிலே விழுந்ததாகப் பின்பு அக்குழியினின்றும் ஏறமாட்டாது வாழையாகிய உணவையும் இழந்துழிப், பிடி அஃது ஏறுதற்குப் படியாக மரம் முறிக்கின்ற ஓசை விண்டோய் விடரகத்து இயம்பினாற்போல, அவரும் நமது நலம் நுகர வந்து களவொழுக்கமாகிய குழியிலே விழுந்து, இக்கள வொழுக்கமாகிய இதனை விட்டு வரையவு மாட்டாது, நமது காவ லருமையால் இக்களவொழுக்கினை நுகரவுமாட்டாது துயரப்படு கின்றுழி, அறத்தொடு நிலை முதலாகிய இவற்றால் மகளிராகிய நாமே வரையமுயலும் வழி; அம்முயற்சியானே ஊரெல்லாம் அறியும்படி பண்ணினார்" என்றும் கூறுவர், குறிப்புரைகாரர். (மே-ள்) `அறக்கழிவுடையன'1 என்னும் சூத்திரத்து, இச்செய்யுளுள் `பாம்பு மதன்.... இகுளை' என்ற பகுதியைக் காட்டி, இதனுள், தலைவி செல்வாமென்றது, சிறைப்புறமாக வரைவு கடாயது பொருட் பயன் தருதலின், அறக்கழிவுடையதேனும் அமைந்தது என்றனர், நச். `மாட்டும் எச்சமும்'2 என்னுஞ் சூத்திரத்து உரையில், இச் செய்யுளுள் முதலும் கருவும் முறை பிறழ வாராமையின், இதனைத் துறைவகை யின்றி வந்தது என்பர், பேரா. 9. பாலை (வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது.) கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின் 3 வில்லோர் தூணி வீங்கப் பெய்த அப்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பைச் செப்படர் அன்ன செங்குழை அகந்தோ 5. றிழுதின் அன்ன தீம்புழல் துய்வாய் உழுதுகாண் துளைய வாகி ஆர்கழல் பாலி வானிற் காலொடு பாறித் துப்பின் அன்ன செங்கோட் டியவின் நெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கும் 10. அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்க் கொடுநுண் ஓதி மகளிர் ஓக்கிய தொடிமாண் உலக்கைத் தூண்டுரற் பாணி நெடுமால் வரைய குடிஞையோ டிரட்டுங் குன்றுபின் ஒழியப் போகி உரந்துரந்து 15. ஞாயிறு படினும் ஊர்சேய்த் தெனாது துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின் எம்மினும் விரைந்துவல் லெய்திப் பன்மாண் ஓங்கிய நல்லில் ஒருசிறை நிலைஇப் பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக் 20. கன்றுபுகு மாலை நின்றோள் எய்திக் கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை அன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாள்நுதல் 25. அந்தீங் கிளவிக் குறுமகள் மென்றோள் பெறநசைஇச்1 சென்றஎன் நெஞ்சே. - கல்லாடனார். (சொ-ள்) 1-10. கொல் வினைப் பொலிந்த - கொற்றொழிலாற் சிறந்த, கூர் குறு புழுகின் - கூரிய குறிய புழுகெனப் பெயரிய, வில்லோர் தூணி வீங்கப் பெய்த - வில்வீரர் அம்புக்கூட்டில் மிகப் பெய்திருக்கும், அப்பு நுனி ஏய்ப்ப - குப்பி நுனியை ஒப்ப, அரும்பிய இருப்பை - அரும்பிய இருப்பையது, செப்பு அடர் அன்ன - செப்புத் தகட்டை யொத்த, செங்குழை அகம்தொறும் - சிவந்த தளிர் களினிடந்தொறும், இழுதின் அன்ன தீம்புழல் துய்வாய் - நெய்யை யொத்த இனிய துளையுள்ள பூக்கள், ஆர் கழல்பு - ஆர்க்குக் கழன்று, உழுதுகாண் துளையவாகி - காம்பினை நீக்கிக் காணத்தக்க துளை யினையுடையவாய், ஆலி வானிற் காலொடு பாறி - வானினின்று விழும் பனிக் கட்டி போலக் காற்றாற் சிதறுண்டு, துப்பின் அன்ன செங்கோட்டு இயவில் - பவளம் போன்ற சிவந்த மேடாகிய வழிகளில், நெய்த்தோர் மீமிசை நிணத்தில் பரிக்கும் - குருதிமீ துள்ள கொழுப் பெனப் பரக்கும், அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் - சுரத்திலே பொருந்திய அழகிய குடிகளையுடைய சிற்றூர்க் கண்ணே, 11-12. கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய தொடிமாண் உலக்கை தூண்டு உரல் பாணி - வளைந்த நுண்ணிய கூந்தலினையுடைய பெண்டிர்கள் உயர்த்த பூண்மாண்ட உலக்கையிற் குற்றும் உரலினின் றெழும் ஒலி, 13-14. நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும் குன்று- நெடிய பெரிய பக்க மலையிலுள்ள ஆந்தை யொலியொடு மாறி மாறி ஒலிக்கும் குன்றுகள், பின் ஒழியப் போகி - பின்னே ஒழிய முன்னே போய், 14-17. ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது - ஞாயிறு மறைந்திடினும் ஊர் சேய்மையிடத்தது என்று கூறி யொழியாது, துனைபரி உரம் துரந்து - விரைந்து செல்லும் குதிரைகளை வலியாற் செலுத்தி, துரக்கும் - மேலும் மேலும் முடுக்குகின்ற, துஞ்சாச் செலவின் - மடிதல் இல்லாத போக்கினையுடைய, எம்மினும் - எம்மைக் காட்டினும், 24-26. நாணொடு மிடைந்த கற்பின் - நாணொடு செறிந்த கற்பினையும், வாள் நுதல் - ஒள்ளிய நெற்றியினையும், அம் தீங் கிளவி - அழகிய இனிய சொல்லினையுமுடைய, குறு மகள் - இளையோளது, மெல் தோள் பெற நசைஇ சென்ற - மெல்லிய தோளை அடைதற்கு விரும்பிச் சென்ற, என் நெஞ்சு - என் நெஞ்சம், 17. விரைந்து வல் எய்தி - மிக விரைந்து சென்று, 17-23. பல் மாண் ஓங்கிய நல்இல் - பல கட்டுக்களால் மாண்புற உயர்ந்த நல்ல இல்லில், ஒரு சிறை நிலைஇ - ஓரிடத்தே நின்று, பாங்கர் பல்லி படுதொறும் பரவி - நற்பக்கத்தே பல்லி ஒலிக்குந் தோறும் அதனைப் போற்றி, கன்று புகு மாலை நின்றோள் எய்தி - ஆன் கன்றுகள் இல்லிற்கு வந்துறும் மாலைக் காலத்தே நின்றவளை அடைந்து, கை கவியாச் சென்று குறுகி கண் புதையா - கையைக் கவித்துச் சென்று குறுகிக் கண்ணைப் புதைத்து, பிடிக்கை அன்ன பின்னகந் தீண்டி - பெண் யானையின் கையை ஒத்த பின்னின கூந்தலைத் தீண்டி, தொடிக்கை தைவர தோய்ந்தன்று கொல் - அவளது தொடியணிந்த கை பொருந்தத் தழுவியது கொல்லோ! (முடிபு) சீறூர் உரற் பாணி இரட்டும் குன்று ஒழியப் போகித் துஞ்சாச் செலவின் எம்மினும் எம் நெஞ்சு விரைந்து சென்று மாலை நின்றோள் எய்திக் குறுகித் தோய்ந்தன்று கொல். (வி-ரை) புழுகின் அப்பு எனக் கூட்டி, புழுகாகிய அப்பு என்க. புழுகு - அம்பின் தலையிற் செறிக்கும் குப்பி; இது மல்லிகை மொட்டு எனவும் படும். துய்வாய் - துய்யைத் தன்னிடத்தேயுடைய பூ; துய் - பஞ்சு. இழுதி னன்ன பூ எனவும் தீம் பூ எனவும் இயையும். ஆலி வானின் என்பதனை வானின் ஆலி என மாறுக. ஆலி - நீர்க்கட்டி; ஆலம் - நீர், காலொடு - காலால். துப்பின் அன்ன : சாரியை நிற்க உருபு தொக்கது. பரித்தல் - ஈண்டுப் பரத்தல். பாணி - உலக்கையாற் குற்றும்பொழுது பாடும் வள்ளைப்பாட்டுமாம். இரட்டுதல் - மாறி யொலித்தல். வல் விரைந்து என மாறுக. பல்லி சொல்லுந்தொறும் பரவுதல் உலக வழக்கு. கன்று புகுதல் மாலைக்கு அடை. தன் வருகையைக் காண விருப்புற்றுத் தலைவி இங்ஙனம் நிற்பள் எனத் தலைவன், பாவிக்கின்றான். எம்மினும் நெஞ்சு வல்விரைந்தெய்தி என்றது, தலைவன் தலைவியைக் காண்டற்கு விரையும் விதுப்புத் தோன்ற நின்றது. நெஞ்சு எய்திக் கை கவியாச் சென்று குறுகித் தீண்டித் தோய்ந்தன்று என்பது, `நோயும் இன்பமும்'1 என்னும் சூத்திரத்து, `உறுப்புடையதுபோல்................. நெஞ்சொடு புணர்த்தும்' என்பதனால் அமைந்த வழுவமைதி யாகும். (மே-ள்) `நோயு மின்பமும்'2 என்னுஞ் சூத்திர வுரையில் `கை கவியாச் சென்று ........... என்நெஞ்சு' `இஃது உறுப்புடையது போல் உவந்துரைத்தது' என்று நச்சினார்க்கினியரும், `மரபேதானும்'3 என்னுஞ் சூத்திர உரையில் இச் செய்யுளை எடுத்துக் காட்டி, `என்றவழி, குறிஞ்சிக்கும் முல்லைக்கும் ஏற்ற பொருள் தத்தம் மரபிற்றாய்ப் பலவும் வந்தன கண்டு கொள்க' என்று பேராசிரியரும் கூறினர். 10. நெய்தல் (இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி சொல்லியது.) வான்கடற் பரப்பில் தூவற் கெதிரிய மீன்கண் டன்ன மெல்லரும் பூழ்த்த முடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினைப் புள்ளிறை கூரும் மெல்லம் புலம்ப 5. நெய்தல் உண்கண் பைதல கலுழப் பிரிதல் எண்ணினை யாயின் நன்றும் அரிதுதுற் றனை1 யாற் பெரும உரிதினிற் கொண்டாங்குப் பெயர்தல் வேண்டுங் கொண்டலொடு குரூஉத்திரைப் புணரி உடைதரும் எக்கர்ப் 10. பழந்திமில் கொன்ற2 புதுவலைப் பரதவர் மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும் வளங்கெழு தொண்டி யன்னஇவள் நலனே. - அம்மூவனார். (சொ-ள்) 1-4. வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய - பெரிய கடற்பரப்பில் எழும் திரைத் திவலைகளை ஏற்றுக் கொண்ட, மீன் கண்டன்ன - விண்மீனைக் கண்டாலொத்த, மெல் அரும்பு ஊழ்த்த - மெல்லிய அரும்புகள் மலர்ந்த, முடவுமுதிர் புன்னை - முடம் பட்ட முதிர்ந்த புன்னை மரத்தின், தடவுநிலை மாசினை - பெரிய நிலையை யுடைய கரிய சினையில், புள் இறைகூரும் மெல் அம் புலம்ப - புட்கள் மிகத் தங்கியிருக்கும் மென்னிலமாகிய கடற் கரைக்குத் தலைவனே! 7. பெரும - பெருமானே! 5-7. நெய்தல் உண்கண் பைதல கலுழ - நெய்தற் பூவை ஒத்த மையுண்ட இவள் கண்கள் வருந்தினவாய் அழ, பிரிதல் எண்ணினை யாயின் - இவளைப் பிரிந்து செல்லுதலை நினைத்தாயாயின், நன்றும் அரிது துற்றனை - பெரிதும் அரியதனை மேற்கொள்வாயாயினை, 7-13. கொண்டலொடு குரூஉ திரைப் புணரி உடைதரும் எக்கர் - கீழ்காற்றால் விளக்கம் பொருந்திய கடலின் அலைகள் உடைக்கும் மணல் மேட்டிற் (கிடக்கும்), பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர் - பழைய படகின் சிதைவு போக்கிப் புதுக்கிய புதிய வலையினையுடைய பரதவர்கள், மோட்டு மணல் அடைகரை கோட்டுமீன் கொண்டி - உயர்ந்த மணலையுடைய அடைகரையில் வந்து கிடக்கும் சுறா மீனின் கொள்ளையினை, மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும் - மணம் நாறுகின்ற பாக்கத்தின்கண் பலர்க்கும் பகுத்துக் கொடுக்கும், வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலன் - வளம் மிக்க தொண்டி என்னும் பட்டினத்தை யொத்த இவளது அழகு, உரிதினில் கொண்டு ஆங்குப் பெயர்தல் வேண்டும் - இவட்கே உரித்தாக நின்னூர்க்கு வரைந்து கொண்டு போதல் வேண்டும். (முடிபு) புலம்ப! பெரும! பிரிதல் எண்ணினையாயின் அரிது துற்றனை; தொண்டி அன்ன இவள் நலன், உரிதினில் கொண்டு ஆங்குப் பெயர்தல் வேண்டும். (வி-ரை) எதிரிய ஊழ்த்த புன்னை என்க. தூவற்கு - தூவலை; வேற்றுமை மயக்கம். மாச்சினை : மா - கரிய எனலுமாம். பைதல் - வினையெச்சமுற்று. கொண்டி - கொள்ளப்பட்டவை. பாக்கம் - பரதவர்சேரி. தொண்டி என்பதொரு பதி சோழநாட்டுக் கடற்கரைக்கண்ணிருப்பினும், இவ்வாசிரியர் பிற இடங்களில் சேரனுடைய தொண்டி, மரந்தை என்பனவற்றைப் பாடியிருத்தலின் இங்குக் குறித்த தொண்டியும் சேரர் கடற்கரைப் பட்டினமாகிய தொண்டியே யாதல் வேண்டும். `தோளும் கூந்தலும் பல பாராட்டி, வாழ்த லொல்லுமோ மற்றே செங்கோற் குட்டுவன் தொண்டி யன்ன, எற்கண்டு நயந்துநீ நல்காக்காலே'1 என்பது காண்க. நலம் இவட்கு உரித்தாக வரைந்துகொண்டு போகவேண்டும் என்றது; அன்றாயின் இவள் இறந்துபடுவள் என்பது தோன்றக் கூறியபடி. (உ-றை) `பழந்திமில் ....... கொண்டி' என்பதற்குப் "பரதவர் தாம் அழிவு கோத்த திமிலானும் பண்ணின வலையானும் தமது தொழிலாகிய வேட்டைமேற் செல்லாது தேடாமல் வந்த இழிந்த சுறாமீனை அகப்படுத்து, அதனை அழித்துக் கூறுவைத்து எல்லாரையும் அழைத்தாற்போல, நீயிரும் நுமக்கு உறுதியாக ஆக்கிக் கொள்ளப்பட்ட நன்மைகளான் நுமக்கு ஒழுக்கமாகிய நல்வழியின் ஒழுகாது, கண்டோ ரிகழ்ந்த களவொழுக்கிலே ஒழுகி, இக் களவினைப் பரப்பிப் பலரும் அலர் கூறும்படி பண்ணாநின்றீர்" என்பர், குறிப்புரைகாரர். 11. பாலை (தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.) வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம் நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அம்காட் டிலையில மலர்ந்த முகையில் இலவம் கலிகொள் ஆயம் மலிபுதொகு பெடுத்த 5. அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றிக் கயந்துகள் ஆகிய பயந்தபு கானம் எம்மொடு கழிந்தன ராயின் கம்மென வம்பு விரித்தன்ன பொங்குமணற் கான்யாற்றுப் படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர் 10. மெய்புகு வன்ன கைகவர் முயக்கம் அவரும் பெறுகுவர் மன்னே நயவர நீர்வார் நிகர்மலர் கடுப்ப ஓமறந் தறுகுள நிறைக்குந போல அல்கலும் அழுதன் மேவல வாகிப் 15. பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே. -ஒளவையார். (சொ-ள்) 1-7. வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் - வானில் ஊர்ந்தேகும் விளங்கும் ஒளியினதாகிய ஞாயிற்று மண்டிலம், நெருப்பெனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு - தீ யெனச் சினந்தெரித்த வெப்பம் விளங்கும் காட்டகத்தே, இலைஇல மலர்ந்த முகை இல் இலவம் - இலையிலவாய் மலர்ந்துள அரும்பில்லாத இலவம் பூக்கள், கலிகொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த - ஆரவாரத்தைக் கொண்ட மகளிர் கூட்டம் மகிழ்ந்து கூடி எடுத்த, அம் சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி - அழகிய கார்த்திகை விளக்கின் நெடிய ஒழுங்கு போலத் தோன்ற, கயம் துகள் ஆகிய பயம் தபு கானம் - குளங்கள் நீரற்றுத் துகள்பட்டிருக்கும் வளம் தப்பிய காட்டில், கம்மென எம்மொடு கழிந்தனராயின் - நம் தலைவர் விரைவாக நம்மை உடன்கொண்டு கழிந்தனராயின், 8-11. வம்பு விரித்த அன்ன பொங்கு மணல் கான்யாற்று - கச்சினை விரித்துப் பரப்பி வைத்தாலன்ன விளங்கும் மணல் மிக்க காட்டாற்றினது, பயில் இணர்படு சினை தாழ்ந்த எக்கர் - மிக்க பூங்கொத்துக்களையுடைய பெரிய கிளைகள் தாழ்ந்துள மணல் மேட்டில், மெய் புகுவு அன்ன - மெய்கள் ஒன்றின் ஒன்று புகுவதை ஒத்த, கை கவர் முயக்கம் - கைவிரும்பும் முயக்கத்தினை, நயவர அவரும் பெறுகுவர் மன் - அன்பு தோன்ற அவரும் அடைவர், 12-15. பழி தீர் கண்ணும் - எமது குற்றமற்ற கண்களும், நீர் வார் நிகர் மலர் கடுப்ப - நீர் சொரியும் ஒளி பொருந்திய மலரையொப்ப, ஓ மறந்து - ஒழிதலின்றி, அறு குளம் நிறைக்குந போல - நீரற்ற குளத்தினைப் பெருக்கும் மடை போல, அல்கலும் அழுதல் மேவல ஆகிப் படுகுவ மன் - நாளும் அழுதலைப் பொருந்தாவாகித் துயிலப்பெறும். (முடிபு) (நம் தலைவர்) கானம் எம்மொடு கழிந்தனராயின், முயக்கம் அவரும் பெறுகுவர்; (நம்) கண்ணும் படுகுவ. (வி-ரை) இலவம் - இலவம் பூ. தோன்றி - தோன்ற எனத் திரிக்க. கம்மென - விரைய, தேய வழக்கு; `கம்மென வெழுதரு பெரும்படை'1 என்பதூஉங் காண்க. கார்த்திகைத் திங்களின் கார்த்திகை நாளில் இல்லந்தோறும் வரிசையாக விளக்குகளை ஏற்றிவைத்து விழா அயர்தல், சங்கச் செய்யுட்கள் பலவற்றிற் கூறப் பெறுதலின், தமிழ்நாட்டில் பண்டு தொட்டு இவ் வழக்கம் இருந்து வருவதென்பது பெற்றாம்; "அம்ம வாழி தோழி கைம்மிக" 2 என்னும் பாட்டினுள் கார்த்திகை விழாக் கொண்டாடும் முறைமையும், "எல்வளை ஞெகிழச் சாஅய்"3 என்னும் பாட்டினுள், "பெருவிழா விளக்கம் போலப் பலவுடன், இலையில மலர்ந்த இலவமொடு" என இவ்வுவமையும் இந் நூலுட் பின்னர் வருவதுங் காண்க. எம்மொடு கழிந்தனராயின், கண்ணும் அழுதல் மேவலவாகிப் படுகுவ என எதிர்வு பற்றிக் கூறலின், ஆற்றுவல் என்பது படச் சொல்லிய தென்னும் துறையாயிற்று. மன் கழிவின்கண் வந்தது எனக் கொள்ளின், ஆற்றாது இரங்குதல் நிகழ்ந்ததாம். நச்சினார்க்கினியர் இதனைப்4 பாலைக்கண் இரங்கல் நிகழ்ந்ததற்கு எடுத்துக் காட்டியவாறும் காண்க. (மே-ள்) `உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே'5 என்னும் சூத்திரவுரைக்கண், "வான மூர்ந்த....... அம்காட்டு" எனக் காடுறை யுலகத்துப் பாலை வந்தது" என்றும், `கொண்டுதலைக் கழியினும்'6 என்னும் சூத்திரவுரைக்கண், `வானமூர்ந்த' என்னும் அகப்பாட்டி னுள் `மெய்புகுவன்ன..............மன்னே' எனக் கூறி அழுதல்மேவா வாய்க் கண்ணும் துயிலுமென இரக்கம் மீக்கூறியவாறும் உணர்க' என்றும் உரைத்தனர், நச். 12. குறிஞ்சி (பகற்குறி வாராநின்ற தலைமகன் தோழியாற் செறிப்பறிவுறுக்கப்பட்டு, இரவுக்குறி வாரா வரைவல் என்றாற்கு, அதுவும் மறுத்து வரைவு கடாயது.) யாயே கண்ணினும் கடுங்கா தலளே எந்தையும் நிலனுறப் பொறாஅன் சீறடிசிவப்ப எவனில குறுமகள் இயங்குதி என்னும் யாமே, பிரிவின் றியைந்த துவரா நட்பின் 5. இருதலைப் புள்ளின் ஓருயி ரம்மே ஏனலங் காவலர் ஆனா தார்த்தொறுங் கிளிவிளி பயிற்றும் வெளிலாடு பெருஞ்சினை விழுக்கோட் பலவின் பழுப்பயன் கொண்மார் குறவர் ஊன்றிய குரம்பை புதைய 10. வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் புலிசெத்து வெரீஇய புகர்முக வேழம் மழைபடு சிலம்பிற் கழைபடப் பெயரும் நல்வரை நாட நீவரின் மெல்லியல் ஓருந் தான்வா ழலளே. - கபிலர். (சொ-ள்) 1-5. யாயே கண்ணினும் கடுங் காதலள் - எம் தாய் தன் கண்ணினும் இவள்பால் மிக்க காதலுடையாள், எந்தையும் நிலன் உறப் பொறாஅன் - எம் தந்தையும் (இவள் எங்கேனும் செல்வது காணின்) நிலத்தே இவள் அடி பொருந்தி நடக்கப் பொறாதவனாகி, இலகுறுமகள் - ஏடி! இளைய மகளே!, சீறடி சிவப்ப - நின் சிறிய அடி சிவப்புற, எவன் இயங்குதி என்னும் - என் செயச் செல்கின்றாய் என்று கூறும், யாமே - யாங்களும், பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின் - பிரிதலில்லாது கூடிய உவர்த்தலில்லாத நட்பினால், இருதலைப் புள்ளின் ஓர் உயிரம் - இருதலைப் பறவையைப் போல இரண்டு உடற்கு ஓர் உயிரினம் ஆவேம், 6-14. ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும் - தினைப் புனம் காக்கும் மகளிர் ஓயாது ஆர்க்குந்தோறும், கிளி விளி பயிற்றும் வெளில்ஆடு பெருஞ்சினை - கிளிகள் தம் இனத்தை அழைக்கும் அணில் ஆடும் பெரிய கிளைகளில், விழுக்கோள் பலவின் பழுப்பயன் கொண்மார் - பெரிய காய்களைக் கொண்ட பலாமரத்தின் பழமாய பயனைக் கொள்ளுதற்கு, குறவர் ஊன்றிய குரம்பை புதைய - குறவர்கள் நாட்டிய குடிசை மறைய , வேங்கை தாய தேம்பாய் தோற்றம் - தேன் ஒழுகும் வேங்கைப் பூக்கள் பரந்த தோற்றத்தை, புலி செத்து வெரீஇய புகர்முக வேழம் - புலியென்று கருதி அஞ்சிய புள்ளிகள் பொருந்திய முகத்தினையுடைய யானை, மழை படு சிலம்பில் கழைபடப் பெயரும் - மேகம் பொருந்திய பக்கமலையிலுள்ள மூங்கில்கள் முறிபடப் பெயர்ந்து செல்லும், நல் வரை நாட - நல்ல மலை பொருந்திய நாடனே, நீ வரின் - நீ இரவுக்குறி வரின், மெல்லியல் வாழலள் - மென்மைத்தன்மை வாய்ந்த இத் தலைவி உயிர் வாழ்ந்திராள். (முடிபு) வரை நாட! யாய் காதலள்; எந்தை எவன் இயங்குதி என்னும்; யாம் ஓர் உயிரம்; நீ வரின் மெல்லியல் வாழலள். கிளி விளிபயிற்றும் நல்வரை எனவும், வேழம் பெயரும் நல்வரை எனவும் கூட்டுக. (வி-ரை) தோழியானவள், யாய் காதலள்; எந்தை எவன் இயங்குதி யென்னும் என்பவற்றால் இற்செறிப்பினையும், யாம் ஓருயிரம் என்பதனால் தலைவி யெய்தும் வருத்தத்தினைத் தான் நன்கு அறியுமாற்றினையும், நீ வரின் மெல்லியல் வாழலள் என்பதனால் இரவுக் குறியின் ஏதம் அஞ்சுதலையும் அறிவுறுத்து வரைவு கடாயினளாம் என்க. இல - ஏடி : விளிப்பெயர். கிளி விளி பயிற்றும் என்றது, கிளியோப்பும் மகளிர் குரலைக் கிளியின் குரலெனக் கருதிப் புனத்திலுள்ள கிளிகள் தம் இனத்தை அழைத்தலைச் செய்யும் என்றபடியாம்; "கொடிச்சி யின்குரல் கிளிசெத் தடுக்கத்துப், பைங்குர லேனற் படர்தருங் கிளி"1 எனக் கபிலர் கூறுமாறுங் காண்க. இனி, காவலர் குறவர் எனக் கொண்டு அவர்கள் மரத்தின் சினைமீ திருந்து ஆர்க்குந்தோறும் கிளிகள் ஒலித்தலைச் செய்யும் என்று உரைத்தலுமாம். வெளில் - அணில். கோள் - காய்; காய்த்தலுமாம். பழுப்பயன் - பழுத்த பழமுமாம். குரம்பையில் வேங்கைமலர் பரந்த தோற்றத்தைப் புலியெனக் கருதி வேழம் அஞ்சிற்று என்னும் இக் கருத்து `நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகநண்ணி, மறமனை வேங்கை யெனநனி யஞ்சுமஞ் சார்சிலம்பா'2 எனத் திருச்சிற்றம்பலக் கோவை யாரினும் வருதல் அறியற்பாலது. தேம் - தேன். ஓரும் தான் என்பன அசைகள். (உ-றை) யானையானது வெருவத் தகாத குரம்பையை வெருவத்தக்க புலியென்று கருதித் தனக் குணவாகிய கழை முறியப் பாயும் என்பது, வெருவத் தகாத எங்கள் தமரை வெருவி வரைய முயலாது நீ திரிதலின், யாங்கள் இறந்துபடும்படியாயிற்று என்ற படியாம். (மே-ள்) `பொழுதும் ஆறும்'3 என்னும் சூத்திரத்து, `நல் வரை...... வாழலள்' என்னும் இச் செய்யுட் பகுதியைக் காட்டி, `என்பது இரவும் பகலும் வாரலென்றது, வரைதல் வேட்கைப் பொருளதாய வழுவமைதி, என்றனர், நச்.' `முட்டு வயிற் கழறல்'4 என்னும் சூத்திரத்து, வரைந்தெய்துங் கூட்டத்திற்கு ஏதுவாகிய மெய்ப்பாடுகளுள் ஒன்றாகிய அவன் புணர்வு மறுத்தல் என்பதற்கு, `நல்வரை நாட........ வாழலள்' என்ற பகுதியை எடுத்துக்காட்டி, "என்பது தலைமகள் குறிப்பினைத் தோழி கூறியதாகலான், இஃது அவன் புணர்வு மறுத்தல் எனப்படும். இஃது `ஒன்றித் தோன்றும் தோழி மேன' 5 என்னும் இலக்கணத்தாற் றோழி குறிப்பாயினும், தலைமகள் குறிப்பெனவே படும் என்பது கொள்க" என்றுரைத்தனர், பேரா. 13. பாலை (பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்கு வித்தது; உடம்பட்டதூஉமாம்.) தன்கடற்1 பிறந்த முத்தின் ஆரமும் முனைதிரை கொடுக்குந் துப்பின் தன்மலைத் தெறலரும் மரபின் கடவுட் பேணிக் குறவர் தந்த சந்தின் ஆரமும் 5. இருபே ராரமும் எழில்பெற அணியும் திருவீழ் மார்பின் தென்னவன் மறவன் குழியிற் கொண்ட மராஅ யானை மொழியின் உணர்த்துஞ் சிறுவரை யல்லது வரைநிலை யின்றி இரவலர்க் கீயும் 10. வள்வாய் அம்பிற் கோடைப் பொருநன் பண்ணி தைஇய பயங்கெழு வேள்வியின் விழுமிது நிகழ்வ தாயினுந் தெற்கேர்பு கழிமழை பொழிந்த பொழுதுகொள் அமையத்துச் சாய லின் துணை இவட்பிரிந் துறையின் 15. நோயின் றாக செய்பொருள் வயிற்பட மாசில் தூமடி விரிந்த சேக்கைக் கவவின் புன்மைக் கழிக வளவயல் அழனுதி யன்ன தோகை ஈன்ற கழனி நெல்லின் கவைமுதல் அலங்கல் 20. நிரம்பகன் செறுவில் வரம்பணையாத் துயல்வரப் புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை இலங்குபூங் கரும்பி னேர்கழை இருந்த வெண்குருகு நரல வீசும் நுண்பல் துவலைய தண்பனி நாளே. - பெருந்தலைச் சாத்தனார். (சொ-ள்) 1-12. தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும் - தனது தென்கடலில் தோன்றிய முத்தாகிய ஆரமும், முனை திறை கொடுக்கும் துப்பின் - பகைவர் திறைகொடுக்கும் வலிமையை யுடையதான, தன்மலைத் தெறல் அரும் மரபின் கடவுள் பேணி - தனது பொதியில் மலையில் உள்ள அடியார்களைத் துன்புறுத்தலில் லாத முருகவேளை வழிபட்டு, குறவர் தந்த சந்தின் ஆரமும் - குறவர்கள் கொண்டு வந்து தரும் சந்தனமாகிய ஆரமும் ஆய, இரு பேர் ஆரமும் - இவ்விரு பெரிய ஆரங்களையும், எழில் பெற அணியும் - அழகுற அணியும், திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் - இலக்குமி விரும்பும் மார்பினையுடைய பாண்டியனது படைத்தலைவனும், குழியிற் கொண்ட மராஅ யானை - பயம்பில் பிடித்த பழகாத யானைகளை, மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது - உரிய மொழிகளால் தொழிலை அறிவிக்கும் சிறு பொழுதல்லது, வரைநிலை இன்றி - தனக்கெனச் சிறிதும் உணர்ந்து கொள்ளும் நிலைமையின்றி, இரவலர்க்கு ஈயும் - இரவலர்களுக்கு வழங்கும், வள்வாய் அம்பின் கோடைப்பொருநன் - கூர்மை வாய்ந்த அம்பினையுடைய கோடைக்குத் தலைவனுமாகிய, பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின் - பண்ணி என்பான் செய்த பயன் மிக்க களவேள்வியைப் போல, விழுமியது நிகழ்வதாயினும் - நீர் தேடிவரும் பொருளாற் சிறந்த பயன் நிகழு மாயினும், 17-24. வளவயல் அழல்நுதி அன்ன - வளம் மிக்க வயலில் தீயின் கொழுந்தினை யொத்த, தோகை ஈன்ற - தோடுகளை ஈன்ற, கழனி நெல்லின் நவை முதல் அலங்கல் - வயல் நெல்லின் பலவாகக் கிளைத்த முதலிலிருந்து தோன்றிய நெற்கதிர், நிரம்பு அகன் செறுவில் - நிரம்பிய அகன்ற வயலினிடத்து, வரம்பு அணையாத் துயல்வர - வரப்புக்களை அணையாகக் கொண்டு கிடந்து அலைய, புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை - தனிமைத் துன்பினைக் கொண்டு வரும் பனிக்காலத் தன்மை கொண்ட வாடைக் காற்று, இலங்கு பூங்கரும்பின் ஏர் கழை இருந்த - விளங்கும் பூக்களை யுடைய கரும்பின் ஓங்கின தண்டின் மீதிருந்த, வெண்குருகு நரல வீசும் - வெண்ணாரை ஒலிக்கும் படி வீசுகின்ற, நுண் பல் துவலைய தண்பனி நாள் - நுண்ணிய பலவாகிய துளிகளைக் கொண்ட தண்ணிய பனிக்காலத்தே. 12-14. தெற்கு ஏர்பு கழி மழை பொழிந்த - (மேகங்கள்) தெற்கே எழுந்துபோய் மிக்க மழையைப் பொழியும், பொழுதுகொள் அமையத்து - மழைக்காலத் தன்மை வாய்ந்திடும் கூதிர்காலத்திற்கு, சாயல் இன் துணை இவள் - இனிய துணையாகிய மென்மை வாய்ந்த இவளை, பிரிந்து உறையின் - பிரிந்துபோய் வேற்றுநாட்டுத் தங்குவீராயின், 15-17. வயிற்பட மாசு இல் தூ மடி விரிந்த - தக்க இடத்தே குற்றமற்ற தூய அறுவை விரிக்கப்பெற்ற, சேக்கை கவவு இன்பு உறாமைக் கழிக - படுக்கைக்கண் முயங்கும் இன்பம் உறாமல் (அப்பனிநாள்) கழியினும் கழிக, செய்பொருள் நோய் இன்று ஆக - நீ தேடுகின்ற பொருட்கு எக்குறையும் நேரா தொழிவதாக. (முடிபு) தலைவ! பண்ணி தைஇய வேள்வியின் விழுமிது நிகழ்வதாயினும், கூதிர்ப் பொழுதிற்குத் துணையாய இவளைத் தண்பனி நாளில் பிரிந்துறையின், அப் பனி நாள் கவவு இன்புறாமைக் கழிக; செய்பொருள் நோயின்றாக. (வி-ரை) இரு பேராரமும் அணியும் தென்னவன் மறவனும் இரவலர்க்கு யானை ஈயும் கோடைப் பொருநனுமாய பண்ணி, என்றும் வயலில் நெல்லின் அலங்கல் துயல்வர வந்த வாடை, குருகு நரல வீசும் பனிநாள் என்றும் கூட்டுக. முத்தின், சந்தின் என்புழி, இன் சாரியை அல்வழிக்கண் வந்தன. பிறரால் தெறுதலரிய கடவுள் என்றுமாம். அணியும் மறவன் என்க; அணியும் தென்னவன் என்றுமாம். மொழி - யானைக்குத் தொழில் அறிவிக்கும் குறிப்பு மொழிகள். கோடை - கோட்டூர் என்பர் குறிப்புரையாசிரியர். வாடை வீசலின், மேகம் தெற்கு ஏர்பு என்றார். பொழுது கொள் அமையம் - கூதிர்ப்பொழுது. செய்பொருள் நோயின்றாக என்றது, அதற்கு இடையூறு உண்டாம் என்னும் கருத்தால். இடையூறாவது தலைவி தலைவனைப் பிரிந்து உயிர் வாழாமையானாவது. அணையா - அணைந்து என்றுமாம். 14. முல்லை (பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது) அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழிக் காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன் ஈயன் மூதாய் வரிப்பப் பவளமொடு மணிமிடைந் தன்ன குன்றங் கவைஇய 5. அங்காட் டாரிடை மடப்பிணை தழீஇத் திரிமருப் பிரலை புல்லருந் துகள முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர் குறும்பொறை மருங்கின் நறும்பூ வயரப் பதவுமேயல் அருந்து மதவுநடை நல்லான் 10. வீங்குமாண் செருத்தல் தீம்பால் பிலிற்றக் கன்றுபயிர் குரல மன்றுநிரை புகுதரு மாலையும் உள்ளா ராயிற் காலை யாங்கா குவங்கொல் பாண வென்ற மனையோள் சொல்லெதிர் சொல்லல் செல்லேன் 15. செவ்வழி நல்யாழ் இசையினென் பையெனக் கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந்நிறுத் தவர்திறஞ் செல்வேன் கண்டனென் யானே விடுவிசைக் குதிரை விலங்குபரி முடுகக் கல்பொரு திரங்கும் பல்லார் நேமிக் 20. கார்மழை முழக்கிசை கடுக்கும் முனைநல் லூரன் புனைநெடுந் தேரே. - ஒக்கூர் மாசாத்தனார். (சொ-ள்) 1-12. அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி - செவ்வரக்கினை யொத்த சிவந்த நிலத்திற் செல்லும் பெரு நெறியில், காயா செம்மல் தாஅய் - காயாவின் வாடிய பூக்கள் பரவிக்கிடக்க, ஈயல் மூதாய் பல உடன் வரிப்ப - தம்பலப் பூச்சிகள் பலவும் ஒருங்கே வரிவரியாக ஊர்ந்து செல்ல, பவளமொடு மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய - (அவை) பவளத்தொடு நீலமணி நெருங்கி யிருந்தா லொக்கும் குன்றம் சூழ்ந்த, அம் காட்டு ஆர் இடை - காட்டின் அகத்தே அரிய இடங்களில், மடப்பிணை தழீஇ - மடப்பத்தையுடைய பெண்மானைத் தழுவி, திரிமருப்பு இரலை - திரித்து விட்டால் போன்ற கொம்பினையுடைய ஆண்மான், புல் அருந்து உகள - புல்லை அருந்தித் தாவிச் செல்ல, முல்லை வியன்புலம் பரப்பி - (ஆனினங்களை) அகன்ற முல்லை நிலத்திலே பரவி மேயவிட்டு, கோவலர் குறும்பொறை மருங்கின் நறும்பூ அயர - ஆயர்கள் சிறிய குன்றுகளிடத்தே நறிய பூக்களை மாலையாகக் கட்டி மகிழ்ந்திருக்க, பதவு மேயல் அருந்து மதவு நடை நல்ஆன் - அறுகம் புல்லாய உணவினை அருந்திய வலிய நடையினையுடைய நல்ல ஆனினங்கள், வீங்கு மாண் செருத்தல் - பருத்த மாண்புற்ற மடி, தீம்பால் பிலிற்ற - இனிய பாலைச் சொரிய, கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் - கன்றை நினைந்து அழைக்கும் குரலினவாய் மன்றுகளில் நிறையச் செல்லும், மாலையும் உள்ளாராயின் - இம்மாலைக் காலத்தும் நம் தலைவர் நம்மை நினைத்து வாராராயின், 12-14. காலை யாங்கு ஆகுவம் கொல் பாண என்ற - பாணனே இக்காலத்து யாங்கள் எந்நிலை யுறுவேம் என்று கூறிய, மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன் - தலைவியின் சொல்லிற்கு மறுமொழி கூற இயலாதவனாகி, 15-17. செவ்வழி நல்யாழ் இசையினென் பையென - யாழில் நல்ல செவ்வழிப்பண்ணை மெல்லென இசைத்து, கடவுள் வாழ்த்தி - கடவுளை வாழ்த்தி, பையுள் மெய் நிறுத்தி - துயரினைக்கொண்ட மெய்யினனாய், அவர்திறம் செல்வேன் யான் - அவர்மாட்டுச் செல்வேனாகிய யான், 18-21. விடு விசைக் குதிரை - தூண்டப்பெறும் வேகங் கொண்ட குதிரையின், விலங்கு பரி முடுக - எதிர்ப்படுமவற்றை விலங்கி முன் செல்லும் செலவு மிக, கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி - கற்களில் மோதி ஒலிக்கும் பல ஆரங்கால்களையுடைய உருளையின் ஒலி, கார் மழை முழக்கிசை கடுக்கும் - கார்காலத்து மழையின் இடி முழக்கினை ஒக்கும், முனைநல்லூரன் புனைநெடுந்தேர் - முனையாகிய நல்ல ஊரிடத்தானாகிய தலைவனுடைய அணிசெயப்பெற்ற நீண்ட தேரினை, 17. கண்டனென் - கண்டேன். (முடிபு) `பாண! எம் தலைவர், மாலையும் உள்ளாராயின், காலை யாங்காகுவம்' என்ற (தலைவி) சொல்லெதிர் சொல்லேன் கடவுள் வாழ்த்தி, அவர்திறம் செல்வேன் முனை நல்லூரன் நெடுந்தேர் கண்டனென்; (எனப் பாணன் பாங்காயினார்க்குக் கூறினான்) இரலை உகள, கோவலர் நறும்பூ அயர, நல்லான் தகுதரு மாலை என்க. (வி-ரை) அரக்கத்தன்ன : அத்துச்சாரியை. காயாஞ் செம்மல் என மெலிமிக்கது, `யாமரக்கிளவி'1 என்னும் சூத்திரத்து இலேசாற் கொள்க. காயாஞ் செம்மலுக்கு நீல மணியும், ஈயல் மூதாய்க்குப் பவளமும் உவமையாம்; எதிர் நிரனிறை. ஈயல் மூதாய் - தம்பலப் பூச்சி; இந்திர கோபம். புல்லருந்து - புல்லை அருந்தி. நிறை - நிறைய. காலை - காலம். செவ்வழி - முல்லைப்பண். முனை - பகைப்புலம். (மே-ள்) `நிலம் பெயர்ந்துறைதல்'2 என்னும் சூத்திரத்துப் பாணர்க்குக் கூற்று நிகழ்வதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர், நச். `மனையோள் கிளவியும்'3 என்னுஞ் சூத்திரத்து, `மாலையும்........ பாண' என்னும் இச்செய்யுட் பகுதியை, பாணன் கேட்பத் தலைவி கூற்று வந்ததற்கு எடுத்துக் காட்டினர், பேரா. 15. பாலை (மகட் போக்கிய தாய் சொல்லியது.) எம்வெங் காமம் இயைவ தாயின் மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர் கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த பாக லார்கைப் பறைக்கண் பீலித் 5. தோகைக் காவின் துளுநாட் டன்ன வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பிற் செறிந்த சேரிச் செம்மல் மூதூர் அறிந்த மாக்கட் டாகுக தில்ல தோழி மாரும் யானும் புலம்பச் 10. சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன் பாழி அன்ன கடியுடை வியன்நகர்ச் செறிந்த காப்பிகந் தவனொடு போகி அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத் துய்த்த வாய துகள்நிலம் பரக்கக் 15. கொன்றை யஞ்சினைக் குழற்பழங் கொழுதி வன்கை யெண்கின் வயநிரை பரக்கும் இன்றுணைப் படர்ந்த கொள்கையோ டொராங்குக் குன்ற வேயில் திரண்டஎன் மென்றோள் அஞ்ஞை சென்ற ஆறே. - மாமூலனார். (சொ-ள்) 9-19. தோழிமாரும் யானும் புலம்ப - தன் தோழி மாரும் யானும் தனிமையான் வருந்த, சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன் பாழி அன்ன - முகபடாம் அணிந்த யானையினையும் ஒளிவிடும் அணியினையும் உடைய நன்னனது பாழி என்னும் பதியை ஒத்த, கடியுடை வியன் நகர் செறிந்த காப்பு இகந்து - காவல் மிக்க தந்தையது பெரிய மனையின் மிக்க காவலைத் தாண்டி, அவனொடு போகி - தலைவனொடு புறப்பட்டு, இன்துணைப் படர்ந்த கொள்கை யொடு ஒராங்கு - தன் இனிய துணைவனை நினைந்த கொள்கையால் ஒருங்குகூடி, குன்றவேயில் திரண்ட மெல் தோள் என் அஞ்ஞை சென்ற - குன்றத்து மூங்கில்போலத் திரண்ட மெல்லிய தோளையுடைய என் அன்னை சென்றடைந்ததும், அத்தம் இருப்பை ஆர் கழல் புது பூ - அருஞ்சுரத்தில் உள்ள இருப்பை மரத்தின் ஆர்க்குக் கழன்ற புதிய பூக்களை, துய்த்த வாய் - தின்ற வாயினவாய், துகள் நிலம் பரக்க - நிலத்திலே தூளி பரக்கச் சென்று, கொன்றை அம்சினை குழல் பழம் கொழுதி - கொன்றையினது அழகிய கிளைகளிலுள்ள குழல் போலும் பழத்தைக் கொழுதி, வன் கை எண்கின் வயநிரை பரக்கும் - வலிய கையினையுடைய கரடிகளின் வலிய கூட்டம் பரந்து செல்வதுமாய, ஆறு - நெறி. 1-8. எம் வெம் காமம் இயைவதாயின் - எமது மிக்க விருப்பம் கைகூடுவதாயின், மெய் மலி பெரும்பூண் செம்மல் கோசர் - மெய்ம் மொழியாற் சிறந்த பெரிய அணிகளையுடைய தலைமை கொண்ட கோசர்களது, குடுமி கொம்மை அம் பசுங்காய் விளைந்த பாகல் ஆர்கை - ஆர்க்கினைத் தலையிலுடைய திரண்ட பசிய காய் முற்றின பாகற்பழத்தைத் தின்னுதலுடைய, பறைக் கண் பீலித் தோகைக் காவின் - பறை போல வட்டமான கண்களைக் கொண்ட தோகை களையுடைய மயில்கள் மிக்க சோலைகளையுடைய, துளுநாட்டு அன்ன - துளுநாட்டை யொத்த, வறுங்கை வம்பலர் தாங்கும் பண்பின் - பொருளின்றி வரும் புதியர்களைப் புரக்கும் நற்பண்பினை யுடைய, செறிந்த சேரி செம்மல் மூதூர் அறிந்த மாக்கட்டுஆகுக - நெருங்கிய சேரிகளைக் கொண்ட தலைமை வாய்ந்திருக்கும் முதிய ஊர்களில் முகமறிந்த மக்களை உடையது ஆகுக. (முடிபு) எம் வெங்காமம் இயைவதாயின் அவனொடு போகி என் அஞ்ஞை சென்ற ஆறு, துளு நாட்டன்ன செம்மன் மூதூரில் அறிந்த மாக்கட்டு ஆகுக. கோசர் துளு நாடு என்க. அஞ்ஞை சென்ற ஆறு, வயநிரை பரக்கும் ஆறு எனத் தனித்தனி கூட்டுக. (வி-ரை) கோசர் மெய்ம்மையிற் சிறந்தவர் என்பது, `ஒன்று மொழிக் கோசர்'1 எனவும், `வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை, வளங்கெழு கோசர்'2 எனவும் வருவனவற்றான் அறியப்படும். இனி, மெய்ம்மலி என்பதற்கு உடம்பிலே நிறைந்த எனலுமாம். பீலி - தோகை, சிறை. தோகை - மயில். தில் - விழைவு. பாழி - நன்னனது ஊர். கொன்றைப் பழத்தினைத் துருவித் துளைத்துக் குழலாகக் கொள்ளுதல் உண்டாகலின், குழற்பழம் என்றார். அஞ்ஞை - அன்னை. செவிலி, தலைவியை அருமை பாராட்டி அஞ்ஞை என்றாள். (உ-றை) `கரடி ஆர்கழல் புதுப்பூவை நுகர்ந்த வாயை யுடைய வாய் அதிலே நிறைந்து, கொன்றைப் பழத்தைக் கோதினாற்போல, அவளும் தலைவனொடும் கூடிய இன்பத்திலே நிறைந்த செருக்கிலே, கூடி வளர்ந்த தோழிமாரையும், பெற்று வளர்த்த என்னையும் புறக்கணித்துப் போனாள்' என்பது. 16. மருதம் (பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன் யாரையும் அறியேன் என்றாற்குத் தலைமகள் சொல்லியது.) நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத் தாதின் அல்லி அயலிதழ் புரையும் மாசில் அங்கை மணிமருள் அவ்வாய் நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல் 5. யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத் தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே கூரெயிற் றரிவை குறுகினள் யாவரும் காணுநர் இன்மையின் செத்தனள் பேணிப் பொலங்கலஞ் சுமந்த பூண்தாங் கிளமுலை 10. வருக மாளஎன் னுயிரெனப் பெரிதுவந்து கொண்டனள் நின்றோள் கண்டுநிலைச் செல்லேன் மாசில் குறுமகள் எவன்பே துற்றனை நீயுந் தாயை இவற்கென யான்தன் கரைய வந்து விரைவனென் கவைஇக் 15. களவுடம் படுநரில் கவிழ்ந்து நிலங் கிளையா நாணி நின்றோள் நிலைகண் டியானும் பேணினென் அல்லனோ மகிழ்ந வானத் தணங்கருங் கடவு ளன்னோள் நின் மகன்தா யாதல் புரைவதாங் கெனவே. -சாகலாசனார். (சொ-ள்) 17. மகிழ்ந - தலைவனே! 1-5. நாயுடை முது நீர் கலித்த தாமரைத் தாதின் அல்லி அயல் இதழ் புரையும் - நீர்நாய்களையுடைய பழைய நீரில் தழைத்த தாமரையின் பூந்தாதாகிய அல்லியின் அடுத்த இதழினை யொத்த, மாசு இல் அங்கை மணி மருள் அவ்வாய் - குற்றமில்லாத அகங்கையினையும் பவளம் போன்ற அழகிய வாயினையும், நாவொடு நவிலா நகை படு தீஞ்சொல் - நாவாற் பயின்று பேசப்படாத கேட்டார்க்கு மகிழ்ச்சியைத் தரும் இனிய குதலைச் சொற்களையும் உடைய, யாவரும் விழையும் பொலம் தொடிப் புதல்வனை - கண்டார் அனைவரும் விரும்பும் பொற்றொடி யணிந்த புதல்வனை, 6-11. பொலம் கலம் சுமந்த - பொற்கலன்களைத் தாங்கிய, கூர் எயிற்று அரிவை - கூரிய பற்களையுடைய நின் பரத்தை, தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டு - அவன் சிறுதேர் ஓட்டிக் கொண்டிருந்த தெருவில் தனியனாய் நிற்பக் கண்டு, செத்தனள் பேணி - நின் ஒப்புமை கருதிப் போற்றி, யாவரும் காணுநர் இன்மையின் - யாருங் காண்போர் இன்மையின், குறுகினள் - குறுகி, பெரிது உவந்து - மிக மகிழ்ந்து, வருக என் உயிரென - என் உயிரே வருவாயாக என, பூண் தாங்கு இளமுலை கொண்டனள் நின்றோள் கண்டு - பூண்களையணிந்த இளமுலைகளில் அணைத்துக்கொண்டு நின்றவளைக் கண்டு, 11-14. நிலைச் செல்லேன் - நின்ற நிலையினின்று மீளேனாய், விரைவனென் வந்து கவைஇ - விரைந்து வந்து அவளை அணைத்து, மாசில் குறுமகள் - குற்றமற்ற இளைய மகளே, எவன் பேதுற்றனை - ஏன் மயங்கினை, நீயும் தாயை இவற்கு என - இவனுக்கு நீயும் ஒரு தாயல் லையோ என்று, யான் தன் கரைய - யான் அவளிடம் கூற, 15-16. களவு உடம்படுநரில் கவிழ்ந்து - தாம் செய்த களவைக் (கண்டு கொண்டார் முன்) உடன்பட்டு நிற்பார்போல முகம் கவிழ்ந்து, நிலம் கிளையா நாணி நின்றோள் நிலை கண்டு - நிலத்தைக் கால்விரலாற் கீறி நாணி நின்ற அவள் தன் நிலையினைக் கண்டு, 16-19. வானத்து அணங்கு அருங் கடவுள் அன்னோள் - வானத்தின் அரிய தெய்வமாகிய அருந்ததி போன்றாள், நின் மகன் தாயாதல் புரைவது எனவே - நின் மகனுக்குத் தாயாதல் ஒக்கும் என எண்ணி, யானும் பேணினென் அல்லனோ - யானும் அவளை விரும்பினேன் அல்லனோ? (முடிபு) மகிழ்ந! கூர் எயிற்றரிவை, புதல்வனைக் கண்டு கொண்டனள் நின்றோட் கண்டு, வந்து கவைஇ, நீயும் தாயை இவற்கென யான் கரைய, நாணி நின்றோள் நிலைகண்டு, நின்மகன் தாயாதல் புரைவது எனவே பேணினென் அல்லனோ? அரிவை குறுகினள் பேணி முலை (யிடத்துக்) கொண்டனள் நின்றோள் எனவும், யான் விரைவனென் வந்து கவைஇக் கரைய எனவும் கூட்டுக. (வி-ரை) அல்லி என்றது ஈண்டுத் தாதினை உணர்த்திற்று. அவிரிதழ் என்னும் பாடத்திற்கு அல்லியாகிய இதழென இருபெயரொட்டாகக் கொள்க; அல்லி - அகவிதழ். மணி - பவளம். நகைபடு தீஞ்சொல் என்பதற்கு, நகையைத் தோற்றுவிக்கும் திருந்தாத சொல் என்றுமாம்; இஃது இளமை பொருளாகத் தோன்றிய நகையாம். பகைவரும் உட்பட யாவரும் விழையும் என்றாள்; `செறுநரும் விரையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்' என (66) இந் நூலுட் பின்னர் வருதலுங் காண்க. தலைவனது தேர் செல்லும் தெரு, என்றுமாம்; தலைவன் பரத்தைவயின் தேரூர்ந்து செல்வான் ஆகலின். செத்து - கருதி ; ஒப்புமாம். பொலங்கலஞ் சுமந்த பூண் தாங்கு இளமுலை என்றது, தலைவனை வயமாக்கும் அவளது இளமை கருதிக் கூறியது. மாள: அசை. புதல்வனை உயிரென்றது, காதல் பற்றியது. தாயை; `ஐ' முன்னிலைக்கண் வந்தது. எப்பொழுதும் நின்னையே உள்ளத்துக் கொண்டிருப்பாள் என எள்ளுவாளாய் அருந்ததியன்னாள் என்றாள். இனி, அணங்கு அருங் கடவுள் என்பதற்குப் பிறரை வருத்துகின்ற எய்தற்கு அரிய தெய்வமகள் என்றுமாம். (மே-ள்) `அவனறிவு ஆற்ற' 1 என்னும் சூத்திரத்து `காமக் கிழத்தி தன்மகத் தழீஇ ஏமுறு விளையாட் டிறுதிக்கண்' தலைவி கூற்று நிகழ்வதற்கு, இச்செய்யுளையும், அச் சூத்திரத்து `அவன் வயிற் பிரிப்பினும்' என்பதற்கு `நின்மகன் றாயாதல்' என்னும் இச்செய்யுட் பகுதியையும், `கற்பு வழிப்பட்டவள்'2 என்னும் சூத்திரத்து, தலைவி பரத்தையை ஏத்துதல் வழுவமைதியாம் என்பதற்கு `நாணி........ புரைவதாங் கெனவே' என்னும் இச் செய்யுட் பகுதியையும் உதாரணம் காட்டினர், நச். "எள்ளலிளமை" 1 என்னும் சூத்திரத்து, `நாவொடு நவிலா நகை' என்பது, பிறர் இளமை பொருளாக நகை பிறந்தது என்றும், `பெருமையுஞ் சிறுமையும்' 2 என்னுஞ் சூத்திரத்து, `களவுடம் படுநரிற் கவிழ்ந்து நிலங் கிளையா' என்பது நகை யென்னும் மெய்ப்பாடு பற்றிய உவமம் என்றும், சிறுமை பற்றி வந்ததென்றும், `உவமப் பொருளை'3 என்னும் சூத்திரத்து, களவுடம் படுநர்க்குள்ள வேறுபாடு உலகத்து அடிப்பட வந்த வழக்காதலான் அஃது ஏதுவாக அறிந்து கொள்ளப்படுவதாயிற்று என்றும் கூறுவர், பேரா. 17. பாலை (மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது.) வளங்கெழு திருநகர்ப் பந்துசிறி தெறியினும் இளந்துணை யாயமொடு கழங்குட னாடினும் உயங்கின் றன்னையென் மெய்யென் றசைஇ மயங்குவியர் பொறித்த நுதலள் தண்ணென 5. முயங்கினள் வதியும் மன்னே இனியே தொடிமாண் சுற்றமும் எம்மும் உள்ளாள் நெடுமொழித் தந்தை அருங்கடி நீவி நொதும லாளன் நெஞ்சறப் பெற்றஎன் சிறுமுதுக் குறைவி சிலம்பார் சீறடி 10. வல்லகொல் செல்லத் தாமே கல்லென ஊரெழுந் தன்ன உருகெழு செலவின் நீரி லத்தத் தாரிடை மடுத்த கொடுங்கோ லுமணர் பகடுதெழி தெள்விளி நெடும்பெருங் குன்றத் திமிழ்கொள இயம்புங் 15 கடுங்கதிர் திருகிய வேய்பயில் பிறங்கல் பெருங்களி றுரிஞ்சிய மண்ணரை யாஅத் தருஞ்சுரக் கவலைய அதர்படு மருங்கின் நீளரை இலவத் தூழ்கழி பன்மலர் விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர் 20. நெய்யுமிழ் சுடரில் கால்பொரச் சில்கி வைகுறு மீனில் தோன்றும் மைபடு மாமலை விளங்கிய சுரனே. - கயமனார். (சொ-ள்) 1-5. வளம்கெழு திருநகர் - செல்வம் பொருந்திய அழகிய மனையின்கண்ணே, பந்து சிறிது எறியினும் - சிறிது பொழுது பந்து எறிந்து ஆடினும், இளந்துணை ஆயமொடு - தன்னை யொத்த இளையராய ஆயத்தாரோடு, கழங்கு உடன் ஆடினும் - ஒருங்கிருந்து கழங்கு ஆடினும், அன்னை என் மெய் உயங்கின்று என்று அசைஇ - அன்னையே! என் உடல் வருந்திற்று என்று கூறித் தளர்ந்து, மயங்கு வியர் பொறித்த நுதலள் - செறியும் வியர்வு அரும்பிய நெற்றியினளாய், தண்ணென முயங்கினள் வதியும் - (என் உடல்) தண்ணென்று குளிர என்னைத் தழுவி அமர்வள் (முன்பு), மன் - அந்தோ அது கழிந்ததே! 5-7. இனி - இப்பொழுது, தொடிமாண் சுற்றமும் எம்மும் உள்ளாள் - தொடியையுடைய சிறந்த ஆயத்தாரையும் எம்மையும் நினையாளாய், நெடுமொழித் தந்தை அருங்கடி நீவி - மிக்க புகழையுடைய தன் தந்தையினது அரிய காவலினைக் கடந்து சென்று; 10-22. கல் என ஊர் எழுந்தன்ன உருகெழு செலவின் - கல்லென்னும் ஒலியுடன் ஓர் ஊரே எழுந்து செல்வதொக்கும் அச்சம் மிக்க செல்கையையுடைய, கொடுங்கோல் உமணர் - கொடிய கோல்களையுடைய உப்புவாணிகர், நீர்இல் அத்தத்து ஆரிடை - நீரற்ற காட்டின் அரிய இடங்களிலே, மடுத்த பகடு தெழி தெள்விளி - தடையுறும் கடாக்களை உரப்பியோட்டும் தெள்ளிய ஒலிகள், நெடும் பெரு குன்றத்து இமிழ் கொள இயம்பும் - நெடிய பெரிய மலையில் எதிரொலி உண்டாக வந்திசைப்பதும், கடுங்கதிர் திருகிய வேய்பயில் பிறங்கல் - கடுமை மிக்க ஞாயிற்றின் கதிர்கள் முறுகிய மூங்கில் அடர்ந்த பக்கமலைகளையுடையதும், பெரு களிறு உரிஞ்சிய மண்அரை - யாத்து - பெரிய களிறுகள் உரிஞ்சியதால் சேற்று மண்ணைப் பொருந்திய அடியினையுடைய யா மரங்களை யுடைய, அருஞ் சுரக் கவலைய அதர்படு மருங்கின் - அரிய சுரத்தே கவர்த்த நெறிகள் பொருந்திய பக்கங்களில், நீள் அரை இலவத்து ஊழ்கழி பல் மலர் - நீண்ட அடியினையுடைய இலவ மரத்தின் முதிர்ச்சி மிக்க பலவாய பூக்கள், விழவுதலைக் கொண்ட பழவிறல் மூது ஊர் - விழாக்களைத் தன்னிடத்தே கொண்ட பழைய வெற்றியைக் கொண்ட முதிய ஊரில், நெய் உமிழ் சுடரில் - நெய்யைப் பெய்த விளக்கின் சுடர் விழுவதுபோல விழும்படி, கால்பொரச் சில்கி - காற்றுப் பொருதலால் எஞ்சியவை சிலவாகி, வைகுறு மீனில் தோன்றும் - விடிகின்ற காலத்து மீன்போலச் சிலவாய்த் தோன்றுவது மாகிய, மை படு மாமலை விலங்கிய சுரன் - மேகங்கள் பொருந்திய பெரிய மலைகள் குறுக்கிட்டு நிற்கும் சுரநெறியினில்; 8-10. செல்ல - செல்லுதற்கு, நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற - ஏதிலாளனது நெஞ்சு தனக்கே யுரித்தாகப் பெற்ற, என் சிறு முதுக்குறைவி - எனது சிறிய மூதறிவுடையவளது, சிலம்பு ஆர் சீறடி தாம் - சிலம்பு பொருந்திய சிறிய அடிகள், வல்லகொல் - வல்லுநவோ? (முடிபு) சிறு முதுக் குறைவியாய என் மகள். முன்பு பந்து சிறிது எறியினும் கழங்கு ஆடினும் அசைஇ முயங்கினள் வதியும், இனி, அவள் சிலம்பு ஆர் சீறடி தந்தை அருங்கடி நீவி, மலை விலங்கிய சுரன் செல்லவல்ல கொல். உருகெழு செலவின் உமணர் எனவும், ஆரிடை மடுத்த பகடு எனவும் கூட்டுக. தெள்விளி இயம்பும் மலை எனவும், பிறங்கலை யுடைய மலையெனவும், பன்மலர் சில்கித் தோன்றும் மலை யெனவும் இயையும். (வி-ரை) மன் கழிவின்கண் வந்தது. நெடுமொழி - புகழ்; வஞ்சினமுமாம். அறப் பெறுதல் - உரித்தாகப் பெறுதல்; `தன்னுயிர் தானறப் பெற்றானை' (268) என்றார் திருவள்ளுவரும். சிறுமுதுக் குறைவி - இளமையிலே அறிவு முதிர்ந்தவள்; `சிறுமுதுக்குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்'1 என்றார் இளங்கோவடிகளும். உமணர் கூட்டத்து மிகுதியைக் குறித்தற்கு ஊரெழுந்தன்ன என்றார். ஆரிடை - ஏற்றிழிவுடைய இடங்கள். இமிழ் கொள - இனிமை பொருந்த என்றுமாம். களிறு, மாரிக்காலத்து உண்டான சேறு உலர்ந்து விறுவிறுத்த உடலை உரிஞ்சுதலால் யாமரம் மண்ணையுடைய அரையாயிற்று. விடிகின்ற காலத்து, மீன்கள் பல மறையச் சிலவே தோன்றுமாகலின், வைகுறு மீனிற் றோன்றுமென்றார். 18. குறிஞ்சி (தோழி இரவு வருவானைப் பகல் வாவென்றது.) நீர்நிறம் கரப்ப ஊழுறு புதிர்ந்து பூமலர் கஞலிய கடுவரற் கான்யாற்றுக் கராஅந் துஞ்சுங் கல்லுயர் மறிசுழி மராஅ யானை மதந்தப ஒற்றி 5. உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தங் கடுங்கட் பன்றியின் நடுங்காது துறந்து நாம அருந்துறைப் பேர்தந் தியாமத் தீங்கும் வருபவோ ஓங்கல் வெற்ப ஒருநாள் விழுமம் உறினும் வழிநாள் 10. வாழ்குவள் அல்லளென் தோழி யாவதும் ஊறில் வழிகளும் பயில வழங்குநர் நீடின் றாக இழுக்குவர் அதனால் உலமரல் வருத்தம் உறுதுமெம் படப்பைக் கொடுந்தேன் இழைத்த கோடுயர் நெடுவரைப் 15. பழங்தூங்கு நளிப்பில் காந்தளம் பொதும்பில் பகனீ வரினும் புணர்குவை அகன்மலை வாங்கமைக் கண்ணிடை கடுப்பயாய் ஓம்பினள் எடுத்த தடமென் தோளே. - கபிலர் (சொ-ள்) 8. ஓங்கல் வெற்ப - உயர்ந்த மலையையுடைய தலைவனே!, 1-5. நீர் நிறம் கரப்ப ஊழ் உறுபு உதிர்ந்து பூமலர் கஞலிய கடுவரல் கான்யாற்று - நீரின் நிறம் மறைய முதிர்புற்று உதிர்ந்து அழகிய மலர்கள் நெருங்கிய நீர் கடுகி வருதலையுடைய காட்டாற்றில், கரா அம் துஞ்சும் கல் உயர் மறிசுழி - முதலை தங்கும் உயர்ந்த கல்லில் மோதி மீளும் சுழிகளையுடையதும், மராஅ யானை மதம் தப ஒற்றி உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் - இனத்தோடு மருவாத களிற்றி யானையை அதன் மதம் கெட மோதி வலியுற்று இழுத்தலின் அச்சம் தோன்றுவதுமாகிய வெள்ளத்தினை; 6-8. கடுங்கண் பன்றியின் நடுங்காது துறந்து - அஞ்சாமையை யுடைய பன்றியைப்போல நடுங்குதலின்றிக் கடந்து ஏறி, நாம அருந்துறை பேர் தந்து யாமத்து ஈங்கும் வருபவோ - (அணங்கு உறைதலின்) அச்சம் தரும் அரிய துறையினைத் தாண்டி நள்ளிரவில் இத்தகைய இடத்தும் மக்கள் வருவாருளரோ; 9-10. ஒரு நாள் விழுமம் உறினும் வழிநாள் என்தோழி வாழ்குவள் அல்லள் - ஒருநாள் நீ துன்பம் உறினும் பின்னாள் என் தோழி உயிர்வாழ்வாள் அல்லள்; 10-12. யாவதும் ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர் நீடு இன்றாக இழுக்குவர் - இடையூறு சிறிதும் இல்லாத வழிகளிலும் அங்குப் பலகாலும் போய் வருவார் நீடுதல் இலையாகத் தவறு எய்துவர்; 12-13. அதனால் உலமரல் வருத்தம் உறுதும் - அதனால் யாங்கள் மனம் சுழலும் வருத்தத்தினை யடைவோம்; 13-18. அகல் மலை வாங்கு அமைக் கண் இடை கடுப்ப - அகன்ற மலையிலுள்ள வளைந்த மூங்கிலின் கணுக்கட்கு நடுவான இடத்தை யொக்க, யாய் ஓம்பினள் எடுத்த தடமெல் தோள் - யாய் போற்றி வளர்த்த தலைவியின் பெரிய மென்மை வாய்ந்த தோளை, எம் படப்பை - எம் தோட்டத்தினை யடுத்துள்ள, கொடுதேன் இழைத்த - வட்டமாகிய தேனிறால் வைக்கப்பெற்ற, கோடு உயர் நெடு வரை - சிமையம் உயர்ந்த நீண்ட மலைக்கண், பழம் தூங்கு நளிப்பில் - பழங்கள் தொங்குகின்ற மரச்செறிவினுள், காந்தள் அம் பொதும்பில் - காந்தளினுடைய புதரிடத்து, பகல் நீ வரினும் புணர்குவை - பகற்கண் நீ வரினும் பொருந்துவை. (முடிபு) வெற்ப! கான்யாற்று நீத்தம் நடுங்காது துறந்து யாமத்து ஈங்கும் வருபவோ; என்தோழி வாழ்குவள் அல்லள்; ஊறில் வழிகளும் வழங்குநர் இழுக்குவர்; அதனால் வருத்த முறுதும்; தடமென்றோள் காந்தளம் பொதும்பிற் பகல் வரினும் பெறுகுவை. கான்யாற்றுச் சுழியையுடைய நீத்தம் எனவும், யானையை யுடைய நீத்தம் எனவும் இயையும். (வி-ரை) உராஅ - அலைய என்றுமாம். நாம : நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. பேர்தந்து - பேர்ந்து. ஈங்கு - தன்மைக் கண் வந்தது. அன்றே வாழாள் என்னாது வழிநாள் வாழாள் என்றது, அறிவது பின்னாளிலாகலின். யாய்- செவிலி. `கொடுந்தேன் ......... பொதும்பின்' என்றமையால், இரவுக்குறி விலக்கிப் பகற்குறி உடன்பட்டாள் போலக் கூறினும், தேன் அழிக்க வருவாராலும், பழமெடுக்க வருவாராலும், பூப்பறிக்க வருவாராலும் பகற்குறியும் அரிதாம் என்று குறிப்பால் மறுத்தாளாம். (மே-ள்) `பொழுதும் ஆறும்'1 என்னும் சூத்திரத்து, `அவனூறஞ்சல்' என்றதற்கு, `ஒரு நாள் விழுமமுறினும் வழிநாள், வாழ்குவளல்லள் என்றோழி' என்னும் பகுதியை எடுத்துக் காட்டினர். நச். 19. பாலை (நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது.) அன்றவண் ஒழிந்தன்றும் இலையே வந்துநனி வருந்தினை வாழியென் நெஞ்சே பருந்திருந் துயாவிளி பயிற்றும் யாவுயர் நனந்தலை உருள்துடி மகுளியின் பொருள்தெரிந் திசைக்குங் 5. கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்றம் எம்மொ டிறத்தலும் செல்லாய் பின்னின் றொழியச் சூழ்ந்தனை யாயின் தவிராது செல்லினிச் சிறக்கநின் னுள்ளம் வல்லே மறவல் ஓம்புமதி எம்மே நறவின் 10. சேயிதழ் அனைய வாகிக் குவளை மாயிதழ் புரையும் மலிர்கொள் ஈரிமை உள்ளகங் கனல உள்ளுதொ றுலறிப் பழங்கண் கொண்ட1 கதழ்ந்துவீழ் அவிரறல் வெய்ய உகுதர வெரீஇப் பையெனச் 15. சில்வளை சொரிந்த மெல்லிறை முன்கை பூவீ கொடியிற் புல்லெனப் போகி அடர்செய் ஆயகல் சுடர்துணை யாக இயங்காது வதிந்தநங் காதலி உயங்குசாய் சிறுபுறம் முயங்கிய பின்னே. - பொருந்தில் இளங்கீரனார். (சொ-ள்) 1-2. என் நெஞ்சே வாழி -, அன்று அவண் ஒழிந் தன்றும் இலை - நாம் புறப்படும் அன்று யான் வாரேன் என்று கூறி நம் மனையில் தங்கிவிட்டாயு மல்லை, வந்து நனி வருந்தினை - இத்துணையும் வந்து மிகவும் வருத்தமுற்றாய். 2-6. பருந்து இருந்து உயா விளி பயிற்றும் - பருந்து தங்கி வழிச்செல்வோர் வருத்தத்தை யடையும் ஓசையைப் பலகாலும் செய்யும், யா உயர் நனந்தலை - யா மரங்கள் உயர்ந்த அகன்ற இடங்களில், உருள் துடி மகுளியின் - (கடிப்பு) உருள்கின்ற இழுகு பறையின் ஓசையைப்போல, பொருள் தெரிந்து இசைக்கும் - பொருள் தெரிய ஒலிக்கும், கடுங்குரல் குடிஞைய - கடிய குரலை யுடைய ஆந்தைகளையுடைய, நெடும் பெருங் குன்றம் - நீண்ட பெரிய குன்றத்தை, எம்மொடு இறத்தலும் செல்லாய் - எம்மொடு தொடர்ந்து கடத்தலும் செய்யாய்; 6-8. பின் நின்று ஒழியச் சூழ்ந்தனை யாயின் - பின்னே நின்று ஒழியக் கருதினையாயின், தவிராது செல் இனி வல்லே - தடையின்றி இப்பொழுதே விரைந்து செல்வாயாக, சிறக்க நின் உள்ளம் - நின் உள்ளத்தெண்ணம் சிறப்பதாக; 9-19. குவளை மா இதழ் புரையும் - முன் குவளையினது கரிய இதழை யொக்கும், மலிர்கொள் ஈர் இமை - நீர் மிகுதல் கொண்ட குளிர்ந்த கண்களின் இமை, நறவின் சேய் இதழ் அனையவாகி - பின்பு நறவம்பூவின் சிவந்த இதழ் அனையவாகி, உள்ளகம் கனல - உள்ளம் கொதித்தலாலே, உள்ளுதோறு உலறி - நினையுந்தொறும் வற்றி, பழங்கண் கொண்ட கதழ்ந்து வீழ் அவிர் அறல் - துன்பங் கொளற்கு ஏதுவான விரைந்து விழும் விளங்கும் அறல்நீர், வெய்ய உகுதர - வெப்பங் கொண்டவாய்ச் சொரிய, வெரீஇ - அஞ்சி, சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை - சில வளைகளும் சொரியப்பெற்ற மெல்லிய சந்தினையுடைய முன்கையுடையாளும், பூ வீ கொடியிற் புல்லெனப் பையெனப் போகி - பூக்கள் ஒழியப்பெற்ற கொடிபோலப் பொலிவற மெல்லெனச் சென்று, அடர் செய் ஆய் அகல் சுடர் துணையாக - பொற்றகட்டா னியன்ற அழகிய அகலிடத்துத் தான் ஏற்றிய விளக்கே துணையாக, இயங்காது வதிந்த நம் காதலி -எங்கணும் இறங்க வலியற்று ஓரிடத்தே தங்கியுள்ளவளுமாகிய நம் காதலியின், உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின் - வருந்தி மெலிந்த பிடரினைத் தழுவிய பின்; 9. மறவல் ஓம்புமதி எம்மே - எம்மை மறத்தலை நீக்குவாயாக. (முடிபு) நெஞ்சே! அன்று ஒழிந்தன்றுமிலை; வந்து நனி வருந்தினை; குன்றம் எம்மோடிறத்தலும் செல்லாய்; ஒழியச் சூழ்ந்தனையாயின் செல் இனி; நின் உள்ளம் சிறக்க; நம் காதலி சிறுபுறம் முயங்கிய பின்னே எம்மை மறவல் ஓம்புமதி. (வி-ரை) மகுளி - ஓசை. மகுளியின் என ஒப்பு உரைத்தது ஓசை மாத்திரம் கருதி; பொருள் தெரிதல் குடிஞை ஓசைக்கே உள்ளது. தெரிந்து - தெரிய எனத் திரிக்க. பொருள் தெரிய இசைத்தல், குத்திப்புதை என்பதோர் பொருள் தெரிய இசைத்தல் என்பர். இனி, பொருள் - போவார் காரியமுமாம்; ஆந்தையின் குரல் போவார் காரியத்தை உணர்த்தும் நிமித்தமாதலின். உள்ளம் - நெஞ்சினது உள்ளம். நறவின் சேயிதழைச் செவ்வரிக்கு உவமையாகவும், குவளையைக் கண் வடிவிற்கு உவமையாகவும் கூறுவாரும் உளர். கொண்ட - கொள்ளுதற்கு ஏதுவான. குறிப்புரைகாரர் விரைந்து விழுகின்ற எனப் பொருள் செய்திருத்தலின் `கதழ்ந்து வீழ்' என்பதே அவர் கொண்ட பாடமாகும் `கலிழ்ந்து' எனும் பாடத்திற்குக் `கலங்கி' என்க. அறல் - அற்று விழுகின்ற நீர். வெரீஇ - பிறர் காண்பரென அஞ்சி. வளை பலவும் முன்பே கழன்றொழிந்தன என்பான் சில்வளை சொரிந்த என்றான். முன்கையையுடைய காதலி, வதிந்த காதலி எனக் கூட்டுக. மறைய நின்று பின்னே தழுவுதலான், சிறுபுறம் முயங்கிய என்றான். முயங்கியபின் என்றது முயங்குக எனக் கூறியவாறு மாயிற்று. (மே-ள்) `புணர்தல் பிரிதல்'1 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் காட்டி, `இது மறவலோம்புமதி யெனப் பிரிவு கூறிற்று' என்றும், `நோயு மின்பமும்'2, என்னுஞ் சூத்திரத்து, `கைகவியாச் சென்று.... நெஞ்சே' என்பது, நெஞ்சினை உறுப்புடையதுபோல் உவந்துரைத்தது என்றும், `வருந்தினை வாழியென் நெஞ்சே.... சிறக்க நின்னுள்ளம்' என்பது, நெஞ்சினை அறிவுடையதுபோல அழுகை பற்றிக் கூறியது என்றும் கூறினர், நச். 20. நெய்தல் (பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது.) பெருநீர் அழுவத் தெந்தை தந்த கொழுமீன் உணங்கல் படுபுள் ஓப்பி எக்கர்ப் பன்னை இன்னிழல் அசைஇச் செக்கர் ஞெண்டின் குண்டளை கெண்டி 5. ஞாழல் ஓங்குசினைத் தொடுத்த கொடுங்கழித் தாழை வீழ்கயிற் றூசல் தூங்கிக் கொண்டல் இடுமணல் குரவை முனையின் வெண்டலைப் புணரி ஆயமொ டாடி மணிப்பூம் பைந்தழை தைஇ யணித்தகப் 10. பல்பூங் கானல் அல்கினம் வருதல் கவ்வை நல்லணங் குற்ற இவ்வூர்க் கடிகொண் டனளே தோழி பெருந்துறை எல்லையும் இரவும் என்னாது கல்லென 15. வலவன் ஆய்ந்த வண்பரி நிலவுமணல் கொட்குமோர் தேருண் டெனவே. - 1 உலோச்சனார். (சொ-ள்) 13. தோழி -, 1-10. எக்கர்ப் புன்னை இன்நிழல் அசைஇ - கடற்கரைக்கண் மணல் மேட்டிலுள்ள புன்னையின் இனிய நிழலில் தங்கி, பெருநீர் அழுவத்து - கடற்பரப்பினின்று, எந்தை தந்த கொழுமீன் உணங்கல் படுபுள் ஓப்பி - நம் தந்தை தந்த கொழுமையாகிய மீனின் வற்றலைக் கவரவரும் பறவைகளை அகற்றியும், செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி - சிவந்த நண்டின் ஆழமான வளைகளைத் தோண்டியும், கொடுங்கழி தாழை வீழ்கயிற்று ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த ஊசல் தூங்கி - வளைந்த கழியிலுள்ள தாழை விழுதாலாய கயிற்றால் புலிநகக் கொன்றையின் உயர்ந்த கிளையில் கட்டித்தொங்கவிட்ட ஊசலில் ஆடியும், கொண்டல் இடுமணல் குரவை முனையின் - கீழ்க்காற்றுக் குவித்த மணலில் குரவையாடி (யும் இவை) வெறுப்பின், வெண்தலைப் புணரி ஆயமொடு ஆடி - வெள்ளிய தலையையுடைய கடல் நீரில் ஆயத்தாரோடு விளையாடி, மணி பூ பைந்தழை அணித்தக தைஇ - அழகிய பூக்களோடு மேவிய பசிய தழையுடையினை அழகு பொருந்த உடுத்திக் கொண்டும், பல் பூ கானல் அல்கினம் வருதல் - (இங்ஙன மெல்லாம்) பல பூக்களையும் உடைய கடற்கரைச் சோலையில் நாம் தலைவரொடு தங்கி வருதலைப்பற்றி; 11-16. இவ்வூர் - இவ்வூரில், கவ்வை நல் அணங்கு உற்ற - அலர் கூறலாகிய நற்பேய் பிடித்திருக்கும், கொடிது அறி பெண்டிர் சொற் கொண்டு - கொடுமை கூறலே அறியும் பெண்டிர் கூறும் சொல்லைக் கேட்டு, அன்னை - நம் அன்னை, பெரும் துறை - பெரிய துறையகத்து, எல்லையும் இரவும் என்னாது - பகலும் இரவும் என்றில்லாது, வலவன் ஆய்ந்த வண்பரி - பாகன் ஆய்ந்து கொண்ட அழகுமிக்க குதிரை பூட்டப்பெற்று, நிலவு மணல் கல் என கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே - நிலாப்போன்ற மணலில் கல்லென்னும் ஒலியுடன் சுழன்று திரியும் ஒரு தேர் உண்டு என்று எண்ணி, கடிகொண்டனள் - இல்லின் கண் காவற்படுத்தினள்; (என் செய்வாம்) (முடிபு) தோழி, நாம் பல்பூங்கானல் தலைவனொடு அசைஇ, ஒப்பிக், கெண்டித், தூங்கி, ஆடி, முனையின், தைஇ, அல்கினம் வருதலைப் பற்றி அன்னை பெண்டிர் கூறும் சொற்கொண்டு பெருந்துறையிடத்துக் கொட்கும் தேர் உண்டு எனவே நம்மைக் கடிகொண்டனள்; (என் செய்வாம்.) (வி-ரை) கொழுமீன் - ஒருவகைமீனுமாம். குரவையை வெறுப்பின் புணரி யாடியும் என்றுமாம். அணங்கு - ஈண்டுப் பேய்; நல் அணங்கு என்றது இகழ்ச்சிக் குறிப்பு. (மே-ள்) `மறைந்தவற் காண்டல்'1 என்னுஞ் சூத்திரத்து, பிறர் கூற்றால் தமர் தற்காத்தமைக்கு இச் செய்யுளையும், `தேரும் யானையும்'2 என்னுஞ் சூத்திரத்து, தலைவன் தேரூர்ந்து வருதற்கு, `நிலவுமணற் கொட்குமோர் தேருண் டெனவே' என்பதனையும் எடுத்துக் காட்டினர், நச். 21. பாலை (பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச்சுரத்து நின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது.) மனையிள நொச்சி மௌவல் வான்முகைத் துணைநிரைத் தன்ன மாவீழ் வெண்பல் அவ்வயிற் றகன்ற அல்குல் தைஇத் தாழ்மென் கூந்தல் தடமென் பணைத்தோள் 5. மடந்தை மாணலம் புலம்பச் சேய்நாட்டுச் செல்லல் ஒன்றியான் சொல்லவும் ஒல்லாய் வினைநயந் தமைந்தனை ஆயின் மனைநகப் பல்வேறு வெறுக்கை தருகம் வல்லே எழுவினி வாழியென் நெஞ்சே புரியிணர் 10. மெல்லவிழ் அஞ்சினை புலம்ப வல்லோன் கோடறை கொம்பின் வீயுகத் தீண்டி மராஅ மலைத்த மணவாய்த் தென்றல் சுரஞ்செல் மள்ளர் சுரியல் தூற்றும் என்றூழ் நின்ற புன்தலை வைப்பிற் 15. பருந்திளைப் படூஉம் பாறுதலை ஓமை இருங்கல் விடரகத் தீன்றிளைப் பட்ட மென்புனிற் றம்பிணவு பசித்தெனப் பைங்கண் செந்நாய் ஏற்றை கேழல் தாக்க இரியற் பிணவல் தீண்டலின் பரீஇச் 20. செங்காய் உதிர்ந்த பைங்குலை ஈந்தின் பரல்மண் சுவல முரணிலம் உடைத்த வல்வாய்க் கணிச்சிக் கூழார் கூவலர் ஊறா திட்ட உவலைக் கூவல் வெண்கோடு நயந்த அன்பில் கானவர் 25. இகழ்ந்தியங் கியவின் அகழ்ந்த குழிசெத் திருங்களிற் றினநிரை தூர்க்கும் பெருங்கல் அத்தம் விலங்கிய காடே. - காவன் முல்லைப் பூதனார். (சொ-ள்) 1-6. மனை இள நொச்சி - மனைப் படப்பையில் உள்ள இளைய நொச்சியிற் படர்ந்த, மா வீழ் மௌவல் வால்முகை - வண்டுகள் விரும்பும் முல்லையின் வெள்ளிய அரும்புகளில், துணை நிரைத்தன்ன - ஒத்தனவற்றை நிரைத்து வைத்தாலொத்த, வெண்பல் - வெள்ளிய பற்களையும், அவ்வயிற்று - அழகிய வயிற்றினையும், அகன்ற அல்குல் - பரந்த அல்குலினையும், தைஇ தாழ் மெல் கூந்தல் - ஒப்பனை செய்யப்பெற்றுத் தாழ்ந்து தொங்கும் மெல்லிய கூந்தலினையும், தடமெல் பணைத் தோள் - பெரிய மென்மை வாய்ந்த மூங்கிலையொத்த தோளினையும் (உடைய), மடந்தை மாண் நலம் புலம்ப - நம் தலைவியின் மாண்புறும் அழகு கெட, சேய் நாட்டுச் செல்லல் என்று - சேய்மைக் கண்ணதாகிய நாட்டிற்குச் செல்லாதே என்று, யான் சொல்லவும் ஒல்லாய் - அவ்விடத்தே யான் கூறவும் அதற்குப் பொருந்தாயாய்; 7-9. வினை நயந்து அமைந்தனை யாயின் - அவ் வினையை விரும்பி அமைந்து போந்தா யாகலின், மனை நக பல்வேறு வெறுக்கை தருகம் - நம் தலைவி மகிழப் பலவேறு வகையினவாய செல்வங்களை ஈட்டித் தருவோம்; 9-14. புரி இணர் மெல் அவிழ் அம் சினை புலம்ப - வலம் சுரிந்த பூங்கொத்துக்கள் மெல்லென மலர்கின்ற அழகிய கொம்புகள் அப் பூக்களை யிழந்து தனிமையுற, வல்லோன் கோடு அறை கொம்பின் - பூக்கொள்ள வல்லோன் மரக் கொம்பினை அடித்து அசைக்கும் கோல் போல, மராஅம் வீ உகத் தீண்டி அலைத்த மணவாய்த் தென்றல் - மராமரத்தை மலர்கள் உதிரத் தாக்கி அலைக்கும் மணத்தைத் தன்னிடத்துடைய தென்றல், சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும் - சுரநெறியிற் செல்லும் வீரர்களது குழன்ற மயிரில் அம்மலர்களைச் சொரியும், என்றூழ் நின்ற புன்தலை வைப்பில் - வெம்மை நிலைபெற்ற புல்லிய இடத்தையுடைய ஊர்களில்; 15-23. பருந்து இளைப்படும் பாறு தலை ஓமை - பருந்து ஈன்று காவற்படும் சிதறிய தலையினவாய ஓமை மரங்களையுடைய, இருங்கல் விடரகத்து - பெரிய மலையின் முழைஞ்சினிடத்து, ஈன்று இளைப்பட்ட - ஈன்று காவற்பட்ட, மென் புனிற்று அம் பிணவு பசித்தென - மென்மையும் ஈன்ற அண்மையும் உடைய அழகிய பெண் நாய் பசித்ததாக, பைங்கட் செந்நாய் ஏற்றை - பசிய கண்களையுடைய செந்நாய் ஏறு, கேழல் தாக்க - ஆண் பன்றியினைத் தாக்க, இரியல் பிணவல் தீண்டலின் - அது கண்டு அஞ்சியோடும் பெண்பன்றி மோதிச் செல்லுதலின், பைங்குலை ஈந்தின் பரீஇ உதிர்ந்த செங்காய் பரல் - பசிய குலைகளையுடைய ஈந்தினின்றும் அறுபட்டு உதிர்ந்த செங்காய்களின் வித்துக்களுடன் கூடிய, மண் சுவல முரண் நிலம் - மண்மேடாகிய வன்னிலத்தை, உடைத்த - உடைத்திட்ட, வல் வாய்க் கணிச்சி - வலிய வாயினையுடைய குந்தாலியையுடைய, கூழ் ஆர் கூவலர் - கூழினை யுண்ணும் கிணறு வெட்டுவோர், ஊறாது இட்ட உவலைக் கூவல் - அகழ்ந்து பார்த்தும் நீர் ஊறாமையின் விட்டேகிய தழை மூடிய கிணறுகளை; 24-27. இருங் களிற்று இனநிரை - பெரிய களிற்றினமாகிய கூட்டம், வெண்கோடு நயந்த அன்புஇல் கானவர் - தமது வெள்ளிய கொம்பினைக் கவர விரும்பிய இரக்கமற்ற வேடர்கள், இகழ்ந்து இயங்கு இயவின் - தீங்கில்லை என்று நினைத்துக் கருத்தின்றிச் செல்லும் நெறிகளில், அகழ்ந்த குழி செத்து - தங்களை அகப்படுத்த அகழ்ந்து மறைத்த குழிகளாகக் கருதி, தூர்க்கும் - அவற்றைத் தூர்க்கும், பெருங்கல் அத்தம் விலங்கிய காடு - பெரிய கற்களையுடைய நெறிகள் குறுக்கிடும் இக்காட்டிற் சேறற்கு (ஈண்டு நின்றும் மீளாது); 9. இனி வல்லே எழு - இப்பொழுது விரைந்து எழுந்து என் பின்னே வருவாயாக. (முடிபு) நெஞ்சே! மடந்தை நலம் புலம்ப, சேய் நாட்டுச் செல்லல் என்று யான் சொல்லவும், ஒல்லாது அமைந்து போந்தனையாகலின், மனை நக வெறுக்கை தருகம்; ஈண்டு நின்றும் மீளாது, காட்டிற் சேறற்கு இப்பொழுது எழுவாயாக. தென்றல் தூற்றும் வைப்பின் காடு எனவும், உவலைக் கூவலைக் களிற்றின நிரை தூர்க்கும் காடு எனவும் இயையும். (வி-ரை) பிணவு பசித்தெனச் செந்நாயேற்றை, கேழல் தாக்கப் பிணவல் தீண்டலின் பரீஇ உதிர்ந்த ஈந்தின் பரலையுடைய மட்சுவலாகிய வன்னிலத்தில் கூவலர் உடைத்த கூவல் என்க. மனைப் படப்பையில் நொச்சியின்கண் மௌவல் படர்ந்திருத்தல், `மயிலடி யிலைய மாக்குரல் நொச்சி, மனைநடு மௌவலோ டூழ்முகை யவிழ' என்னும் நற்றிணைச் (115) செய்யுளானும், `மனையிள நொச்சி மௌவல் வான்முகை'(21) `மனைய, தாழ்வி னொச்சி சூழ்வன மலரும், மௌவல் மாச்சினை(23)' என்னும் இந்நூற் செய்யுட்களானும் அறியப்படும். அமைந்தனை யாயின் - அமைந்து போந்தனையாயின் என விரிக்க. மனை நக - இல்லம் பொலிய என்றுமாம். கோடு அலை கொம்பு - பூ உதிர்க்கும் கொம்பு; அது தென்றலுக்கு உவமை. சுரியல் - சுருண்ட தலைமயிர். ஈன்றணிமைபற்றிப் புறத்தே செல்லலா காமையின் ஈரிடத்தும் இளைப்பட்ட என்றார். `பன்றி புல்வாய் நாயென மூன்றும், ஒன்றிய வென்ப பிணவென் பெயர்க்கொடை',1 `பிணவ லெனினு மவற்றின் மேற்றே'2 என்னும் சூத்திரங்களால், `பிணவு' எனவும் `பிணவல்' எனவும் வந்தன. களிறு தாம் இகழ்ந்து இயங்கு இயவில் கானவர் அகழ்ந்த குழி என்க. 22. குறிஞ்சி (1. வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்துத் தலைமகள் ஆற்றாளாகத் தோழி தலைமகனை இயற்பழிப்பத் தலைமகள் இயற்பட மொழிந்தது. 2. தலைமகன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாகத் தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியதூஉ மாம்.) அணங்குடை நெடுவரை யுச்சியின் இழிதருங் கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன் மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல் இதுவென அறியா மறுவரற் பொழுதில் 5. படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை நெடுவேட் பேணத் தணிகுவள் இவளென முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூறக் களநன் கிழைத்துக் கண்ணி சூட்டி வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத் 10. துருவச் செந்தினை குருதியொடு தூஉய் முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள் ஆர நாற அருவிடர் ததைந்த சாரற் பல்பூ வண்டுபடச் சூடிக் களிற்றிரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் 15. ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல நன்மனை நெடுநகர்க் காவலர் அறியாமைத் தன்னசை உள்ளத்து நந்நசை வாய்ப்ப இன்னுயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து நக்கனென் அல்லனோ யானே எய்த்த 20. நோய்தணி காதலர் வரவீண் டேதில் வேலற் குலந்தமை கண்டே. - வெறிபாடிய காமக் கண்ணியார். (சொ-ள்) 1-4. அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும் கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன் - தெய்வமுடைய நீண்ட மலையுச்சியினின்று விழும் கூட்டமாய அருவிகளையுடைய காடு பொருந்திய நாட்டையுடைய நம் தலைவனது, மணம் கமழ் வியன் மார்பு அணங்கிய செல்லல் இது என அறியா மறுவரல் பொழுதில் - மணம் கமழும் அகன்ற மார்பு வருந்திய வருத்தத்தை இதனாலுண்டாயதென்று அறியாத கலக்கமுற்ற காலத்தே; 5-11. படியோர்த் தேய்த்த பல்புகழ் தடக்கை நெடுவேள் பேணத் தணிகுவள் இவள் என - வணங்காரைத் தேய்த்தொழித்த பலவகைப் புகழ்களைக் கொண்ட பெரிய கையினையுடைய நெடுவேளைப் போற்றின் இவள் துயர் தணியப் பெறுகுவள் என்று, முதுவாய்ப் பெண்டிர் அது வாய் கூற - அறிவு வாய்த்தலையுடைய பெண்டிர் அதனை மெய்யாகக் கூற, களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி - வெறியாடுங் களம் நன்கு அமைத்து (வேலிற்குக்) கண்ணி சூட்டி, வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்து - வளம் பொருந்திய கோயிலில் ஒலியுண்டாகப் பாடிப் பலிகொடுத்து, உருவச் செந்தினை குருதியொடு தூஉய் - அழகிய செந்தினையைக் குருதியுடன் கலந்து தூவி, முருகு ஆற்றுப்படுத்த உருகெழு நடுநாள் - முருகனை வரவழைத்த அச்சம் பொருந்திய நடு இரவில்; 12-21. ஆரம் நாற - சந்தனம் மணம் வீச, சாரல் அருவிடர்த்ததைந்த பல்பூ வண்டுபடச் சூடி - பக்க மலையில் உள்ள அரிய முழைஞ்சுகளிற் செறிந்த பல பூக்களை வண்டு மொய்த்திடச் சூடியும், களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலிபோல - களிறாகிய இரையைத் தெரிதற் பொருட்டு ஒதுங்கிய பார்வையொடு மறைந்து இயங்கும் இயல்பினை யுடைய வலிய புலியினைப் போல, நல்மனை நெடுநகர்க் காவலர் அறியாமை - நமது நல்ல மனையின் கண்ணுள்ள நெடிய இல்லின் காவலாளரும் அறியாவண்ணம், எய்த்த நோய்தணி காதலர் வர - நாம் மெலிதற்கு ஏதுவாய இந் நோயைத் தணித்தற்குரிய நம் காதலர் வந்து, தன் நசை நம் உள்ளத்து நசை வாய்ப்ப - தன்னை நச்சுதலையுடைய நம் உள்ளத்தின் விருப்பம் நிறைவேறும்படி, இன் உயிர் குழைய முயங்குதொறும் - இனிய உயிர் குழையும்படி முயங்குந்தோறும், ஈண்டு ஏதில் வேலற்கு உலந்தமை கண்டு - இங்கு நமர் யாதும் இயைபில்லாத வேலனுக்கு அழிந்தமை கண்டு, யான் மெய்மலிந்து நக்கனென் அல்லனோ - யான் உடல் பூரித்துச் சிரித்தேன் அல்லனோ? (முடிபு) நாடன் மார்பு அணங்கிய செல்லல் அறியாப் பொழுதில், நெடுவேட் பேணத் தணிகுவள் இவளென முதுவாய்ப் பெண்டிர் கூற, முருகாற்றுப் படுத்த நடுநாள், வயப்புலிபோலக் காதலர் வர, நசை வாய்ப்ப முயங்குதொறும் வேலற் குலந்தமை கண்டு, நக்கனெ னல்லனோ? (வி-ரை) மறுவரல் - சுழற்சி. படியார் - வணங்கார்; ஆ ஓவாயிற்று, பிரதியோர் என்னும் சொல்லின் சிதைவுமாம். பல்புகழ் - வென்றி கொடை முதலாயவற்றால் வரும் புகழ். முதுவாய்: முது- அறிவு. அது வாயாக : வாய் - உண்மை. முருகனை ஆற்றுப்படுத்தல், `குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள், முருகிய நிறுத்து முரணின ருட்க, முருகாற்றுப் படுத்த வுருகெழு வியனகர்'1 என இவ்வாறே திரு முருகாற்றுப்படையிலும் வருதல் காண்க. புலி களிற்றிரையினைப் பெறுதற்குப் பதுங்கி மறைந்து வருதல் போலத் தலைவன் தலைவியைப் பெறுதற்கு மறைந்து வந்தான் என்க. 1. வெறியெடுத்துத் தீராத வழியில் அஃதியாராலே வந்த தென்றயிராதபடி வரையவந்த பேருதவியினாரைப் பொல்லாங்கு சொல்லக் கடவையோ எனத் தலைவி இயற்பட மொழிந்தாள் என்க. 2. ஈண்டும் தலைவி இயற்பட மொழிந்தாளாயினும் வெறியாட்டு நிகழ்ச்சியைத் தலைவற்கு வெளிப்படுத்தி விரைந்து வரையத் தூண்டுதல் பயனாகும். வெறியாட்டினை அழகுபெறக் கூறும் இச்செய்யுளைப் பாடிய சிறப்புப்பற்றி இவர் வெறிபாடிய காமக் கண்ணியார் என வழங்கப்பட்டார். (மே-ள்) 2`மறைந்தவற் காண்டல்' என்னும் தலைவி கூற்று நிகழ்த்துமாறு கூறுஞ் சூத்திரத்தே `பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல்' என்பதற்கு இச் செய்யுளை எடுத்துக்காட்டி இதனுட் பழிதீர அவன் வந்து உயிர் தளிர்ப்ப முயங்க, நக்கநிலையைத் தோழிக்குத் தலைவி கூறியவாறு காண்க' என்பர், நச். `பிறப்பே குடிமை'1 என்னும் சூத்திரத்து, `தன்னசை யுள்ளத்து, நந்நசை வாய்ப்ப' என்பது `இருவர் உணர்வும் ஒத்தவாறு' எனவும், `வினைபயன் மெய்யுரு'2 என்னுஞ் சூத்திரத்து `களிற்றிரை........ வயப்புலி போல' என்புழி, பார்வ லொதுக்கமாகிய வினை பண்பெனப்படாது. என்னை? பண்பென்பது குறிப்பின்றி நிகழும் குணமாகலின் எனவும், பார்வலொதுக்க மெனப்பட்ட வினைப்பகுதியாற் பிழையாமற் கோடற்குப் பார்வலொதுக்கினின்றா னென்பதும் பிறர்க்கஞ்சிப் பார்வலொதுங்குகின்றானல்ல னென்பதுஞ் சொல்லி, அவன் தலைமைக்கேற்ற உவமையாதலின், அது பொருட்டோற்றமாயிற்று எனவும், கூறினர், பேரா. 23. பாலை (தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) மண்கண் குளிர்ப்ப வீசித் தண்பெயல் பாடுலந் தன்றே பறைக்குரல் எழிலி புதன்மிசைத் தளவின் இதன்முட் செந்நனை நெருங்குகுலைப் பிடவமொடு ஒருங்குபிணி அவிழக் 5. காடே கம்மென் றன்றே யவல கோடுடைந் தன்ன கோடற் பைம்பயிர்ப் பதவின் பாவை முனைஇ மதவுநடை அண்ணல் இரலை அமர்பிணை தழீஇத் தண்ணறல் பருகித் தாழ்ந்துபட் டனவே 10. அனையகொல் வாழி தோழி மனைய தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும் மௌவல் மாச்சினை காட்டி அவ்வள வென்றார் ஆண்டுச்செய் பொருளே. - ஓரோடோகத்துக் கந்தரத்தனார். (சொ-ள்) 10. தோழி வாழி -, 1-2. பறை குரல் எழிலி - முழவின் குரல் போன்ற ஒலியினையுடைய மேகம், மண்கண் குளிர்ப்ப - மண்ணினிடமெல்லாம் குளிர, தண் பெயல் வீசி - குளிர்ந்த மழையைப் பெய்து, பாடு உலந்தன்றே - ஒலி யடங்கிற்று; 3-5. புதல் மிசை தளவின் இதல் முள் செந் நனை - புதரின் மீது படர்ந்த செம் முல்லையினது சிவல் முள்ளைப் போன்ற சிவந்த அரும்பு, நெருங்கு குலை பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ - நெருங்கிய குலையினையுடைய பிடாவின் அரும்புடன் ஒருங்கு பிணிப்பு விரிந்து மலர, காடு கம் என்றன்றே - காடு கம்மென்று மணம் வீசுகின்றது; 5-9. அவல கோடு உடைந்தன்ன கோடல் பைம் பயிர் - பள்ளங்களிலுள்ள சங்கு உடைந்தாற்போன்ற வெண்கோடலது பசிய பயிரோடு, பதவின் பாவை முனைஇ - அறுகங் கிழங்கைத் தின்று தெவிட்டுதலின் வெறுத்து, மதவு நடை அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ - செருக்கிய நடையினையும் தலைமையினையு முடைய ஆண்மான் விரும்பிய பெண்மானைத் தழுவி, தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே - குளிர்ந்த நீரைப் பருகி ஓரிடத்தே சேர்ந்து தங்கிவிட்டன; 10-13. மனைய தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும் மௌவல் மாச்சினை காட்டி - மனையிடத்துள்ள முல்லை சூழ்ந்து மலரும் இடமாகிய குறிய நொச்சியது கரிய சினையைக் காட்டி, ஆண்டுச் செய்பொருள் - தாம் வேற்று நாட்டிருந்து பொருள் ஈட்டுங் காலத் தெல்லை, அ அளவு என்றார் - அம் மௌவல் பூக்கத் தொடங்கும் அக்காலத் தெல்லையே என்றாரன்றே, அனைய கொல் - இக்காலம் அவ்வளவிற்றோ, அதனைத் தாண்டி நிற்பதொன்றோ கூறுவாயாக! (முடிபு) தோழி வாழி, எழிலி மண் குளிர்ப்பப் பெயல் வீசிப் பாடு உலந்தன்று; தளவின் நனை பிடவமொடு பிணிய விழக் காடு கம்மென்றன்று; இரலை பிணை தழீஇத் தண்ணறல் பருகித் தாழ்ந்து பட்டன; மௌவல் சூழ்வன மலரும் நொச்சி மாச்சினை காட்டி, ஆண்டுச் செய்பொருள் அவ்வளவென்றார்; அனையகொல்! (வி-ரை) இதல் - சிவல்; கவுதாரியுமாம். கம் - மணங்கமழ் குறிப்பு. அறுகு, இஞ்சி முதலியவற்றின் கிழங்கைப் பாவை என்றல் மரபு; `செய்யாப் பாவை'1 என்புழி, இஞ்சிக் கிழங்கைப் பாவை என்றல் மரபென நச்சினார்க்கினியர் கூறியதுங் காண்க. கோடற் பைம்பயிர் - கோடலைக் களையாகவுடைய வரகு முதலிய பயிர்களுமாம். அனைய கொல் என்பதற்கு (தலைவன் குறித்த காலங் கடந்தமை கூறுவாளாய்) பொருள் அங்ஙனம் சிறந்ததொன்றோ என்றாள் எனலுமாம். (மே-ள்) `ஏனைப் பிரிவும் அவ்வயி னிலையும்'2 என்னும் சூத்திரத்து, இச் செய்யுளை எடுத்துக்காட்டி, இதுபொருட்பிரிவின் கண் கார்குறித்து (வருவ லென்றமையின்) ஆறு திங்கள் இடை யிட்டது என்று கூறினர். நச். 24. முல்லை (1. தலைமகன் பருவங் கண்டு சொல்லியது. 2. வினைமுற்றும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉ மாம்.) வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளை1களைந் தொழிந்த கொழுந்தி னன்ன தளைபிணி அவிழாச் சுரிமுகப் பகன்றை சிதரலந் துவலை தூவலின் மலருந் 5. தைஇ நின்ற தண்பெயற் கடைநாள் வயங்குகதிர் கரந்த வாடை வைகறை விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி மங்குல் மாமழை தென்புலம் படரும் பனியிருங் கங்குலுந் தமியள் நீந்தித் 10. தம்மூ ரோளே நன்னுதல் யாமே கடிமதிற் கதவம் பாய்தலின் தொடிபிளந்து நுதிமுகம் 2மழுகிய மண்ணைவெண் கோட்டுச் சிறுகண் யானை நெடுநா ஒண்மணி கழிப்பிணிக் கறைத்தோல் பொழி 3 கணை யுதைப்புத் 15. 4தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்துக் கழித்துறை செறியா வாளுடை யெறுழ்த்தோள் இரவுத் துயில் மடிந்த தானை உரவுச்சின வேந்தன் பாசறை யேமே. - ஆவூர் மூலங் கிழார். (சொ-ள்) 1-5. வேளாப் பார்ப்பான் - யாகம் பண்ணாத ஊர்ப்பார்ப்பான், வாள் அரம் துமித்த -கூரிய அரத்தால் அறுத் தெடுத்த, வளைகளைந்து ஒழிந்த - வளைகள் போக எஞ்சிய, கொழுந்தின் அன்ன - சங்கின் தலையைப்போன்ற, தளை பிணி அவிழாச் சுரிமுகப் பகன்றை - கட்டுண்ட பிணிப்பு விரியாத சுரிந்த முகத்தினையுடைய பகன்றையின் அரும்புகள், சிதரல் அம் துவலை தூவலின் மலரும் - சிதறுகின்ற அழகிய மழைத்துளிகள் வீசுதலால் மலரும் (காலமாகிய), தண் பெயல் நின்ற தைஇ கடைநாள் - குளிர்ந்த பெயல் நின்ற தைத் திங்களாகிய முன்பனியின் கடை நாளில்; 6. வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை- எழுகின்ற ஞாயிறு மறைந்திருக்கும் வாடையுடன் கூடிய விடியற்காலையில்; 7-10. மங்குல் மா மழை - இருண்ட பெரிய மழை, விசும்பு உரிவதுபோல்- விசும்பு தோலுரிவதுபோல, வியல் இடத்து ஒழுகி - அகன்ற வானிடத்தே யியங்கி, தென்புலம் படரும் - தென்றிசைக்கண் போய்ச் சேரும், பனி இரும் கங்குலும் - பனியுடன் கூடிய கரிய கங்குலின் வெள்ளத்தையும், நன்னுதல் தமியள் நீந்தித் தம் ஊரோளே - சிறந்த நெற்றியினளாய நம் தலைவி தனியளாய் நீந்தித் தமது ஊரின் கண் உள்ளாள்; 10-18. யாமே - யாம், கடி மதில் கதவம் பாய்தலின் - காவலை யுடைய மதிற் கதவினைப் பாய்தலினால், தொடிபிளந்து நுதிமுகம் மழுகிய மண்ணை வெண் கோட்டுச் சிறுகண் யானை - பூண் பிளக்கப்பட்டுக் கூரிய முனை மழுங்கிய மொட்டையான வெள்ளிய கோட்டினையும் சிறிய கண்ணினையுமுடைய யானையின், நெடுநா ஒண்மணி - நீண்ட நாவினையுடைய ஒளி பொருந்திய மணியின் ஓசையும், கழிப்பிணிக் கறைத்தோல் பொழிகணை யுதைப்பு - கழிகளுடன் பிணிக்கப்பட்ட கரிய தோலாகிய கேடகத்துப்பொழியும் அம்புகள் தைத்தலால் எழும் ஓசையும், தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்து - முழங்கும் ஓசையினையுடைய முரசொலியுடன் சேர்ந்தொலிக்கும் நள்ளிரவில், கழித்து உறைசெறியா - உறை யினின்றும் உருவி மீண்டும் உள்ளிடாத, வாள் உடை எறுழ்த் தோள் - வாளினைக் கோத்த வலிய தோளினையுடையவனும், இரவுத் துயில் மடிந்த தானை - இரவில் அயர்ந்து தூங்கும் சேனைகளைக் கொண்டவனுமாகிய, உரவு சினவேந்தன் பாசறையேம் - மிக்க சினம் பொருந்திய வேந்தனது பாசறையின்கண் உள்ளேம்; (என் செய்வாம்.) (முடிபு) பகன்றை தூவலின் மலரும் தை நின்ற கடைநாள் வைகறை மழை தென் புலம் படரும் கங்குலும் நன்னுதல் தமியள் நீந்தித் தம் ஊராள்; யாம், யானை மணியோசையும் கணை யுதைப்பின் ஓசையும் முரசமொடு முழங்கும் யாமத்துத் தோளினையும் தானையையு முடைய வேந்தன் பாசறையேம், (என் செய்வாம்.) (வி-ரை) வேளாப் பார்ப்பான் வாளரம் துமித்த வளை என்றமையால், வேள்வி செய்யாமையான் தாழ்நிலை யடைந்த பார்ப்பனர்க்குச் சங்கறுக்கை முதலிய தொழில்கள் உளவென்பது பெறப்பட்டது. கொழுந்து - சங்கின் தலை; தண்பெயல் நின்ற தை கடை நாள் என மாறுக. கங்குலும்; உம்மை சிறப்பு. `விசும்புரிவது போல்' என இவ்வாசிரியர் உவமம் கூறியது பாராட்டற்குரியது; இஃது இல் பொருளுவமை. வாளுடை வேந்தன் எனவும், தோளையும் தானையையும் உடைய வேந்தன் எனவும் கூட்டுதலும் ஆம். இரவுத் துயில் மடிந்த தானை என்றது, பலநாளும் துயிலின்றிப் போர் செய்து வினைமுற்றுங் காலைத் துயின்ற தானை என்றபடி. குறித்த பருவம் வந்தும் சென்று தலைவியைக் கூடாது ஈண்டு இருக்கின்றேமே எனத் தலைவன் இரங்கிக் கூறினானாம். (மே-ள்) `கிழவி நிலையே'1 என்னும் சூத்திரத்து, தலைமகன் பாசறைக்கண் கிழவி நிலையுரைத்துப் புலம்பல், வென்றிக்காலத்தே விளங்கித் தோன்றும் என்பதற்கும், `வேந்துறு தொழிலே'2 என்னுஞ் சூத்திரத்துப் பகைவயிற் பிரிவு யாண்டினதகம் ஆம் என்பதற்கும் இச்செய்யுளை எடுத்துக் காட்டினர், நச். 25. பாலை (பருவங் கண்டழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.) நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும்புனல் சாஅய் அவிரறல் கொண்ட விரவுமணல் அகன்துறைத் தண்கயம் நண்ணிய பொழில்தொறுங் காஞ்சிப் பைந்தா தணிந்த போதுமலி எக்கர் 5. வதுவை நாற்றம் புதுவது கஞல மாநனை கொழுதிய மணிநிற இருங்குயில் படுநா விளியா னடுநின் றல்கலும் உரைப்ப போல ஊழ்கொள்பு கூவ இனச்சிதர் உகுத்த இலவத் தாங்கண் 10. சினைப்பூங் கோங்கின் நுண்தாது பகர்நர் பவளச் செப்பில் பொன்சொரிந் தன்ன இகழுநர் இகழா இளநா ளமையஞ் செய்தோர் மன்ற குறியென நீநின் பைத லுண்கண் பனிவார் புறைப்ப 15. வாரா மையின் புலந்த நெஞ்சமொடு நோவல் குறுமகள் நோயியரென் உயிரென மெல்லிய இனிய கூறி வல்லே வருவர் வாழி தோழி பொருநர் செல்சமங் கடந்த வில்கெழு தடக்கைப் 20. பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன் இன்னிசை யியத்திற் கறங்கும் கன்மிசை அருவிய காடிறந் தோரே. - ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன். (சொ-ள்) 18. தோழி-, வாழி-, 1-12. நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும்புனல் சாஅய் - நீண்ட கரையினைக் கொண்ட காட்டாற்றின் வேகம் மிக்க நீர் அற்றொழிய, அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகல் துறை தண்கயம் நண்ணிய பொழில்தொறும் - விளங்கும் அறலாந் தன்மை கொண்ட விரவிய மணலையுடைய அகன்ற துறையிடத்துள்ள குளிர்ந்த மடுக்கள் பொருந்திய பொழிலிடங்களி லெல்லாம், காஞ்சிப் பசுந் தாது அணிந்த போது மலி எக்கர் - காஞ்சி மரத்தினது அழகிய தாதுக்களைக் கொண்ட பூக்கள் மிக உதிர்ந்துள மணல் மேடுகள், வதுவை நாற்றம் புதுவது கஞல - புதிய மணநாற்றம் மிகா நிற்க, மாநனை கொழுதிய மணிநிற இருங்குயில் - மாவின் தாதினைக் கோதிய நீலமணி நிறத்தினை யொத்த கரிய குயில், படு நா விளியால் நடு நின்று அல்கலும் உரைப்ப போல ஊழ்கொள்பு கூவ - ஒலிக்கும் தனது நாவின் கூவுதலால் நடுநிலைமேவி நாள்தோறும் சில கூறுவன போல முறைகொண்டு கூவ, இனசிதர் சினைபூ கோங்கின் இலவத்து ஆங்கண் உகுத்த நுண்தாது - கூட்டமாகிய வண்டுகள் பூக்கள் நிறைந்த கிளைகளையுடைய கோங்க மரத்தின் மீதிருந்து இலவம் பூக்களாய அவ்விடத்து உதிர்த்த நுண்ணிய தாதுக்கள், பகர்நர் பவளச் செப்பிற் பொன் சொரிந்தன்ன - பொன் விற்போர் பவளச் சிமிழில் பொற் பொடியைச் சொரிந்து வைத்தாலன்னதாக, இகழுநர் இகழா இளநாள் அமையம் - பிரிவால் எய்தும் துயர்களைப் புறக்கணித்துப் பிரிவோரும் அங்ஙனம் இகழ்ந்து பிரியவொண்ணாத இவ்விளவேனிற் காலத்தை யன்றோ? 13-16. செய்தோர் மன்ற குறி என - தாம் மீண்டு வருங்காலமாக உறுதியாகக் குறித்தல் செய்தார் என்று கூறி, நீ நின் பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப - நீ நினது நோதலையுடைய மையுண் கண்கள் நீர் வடிந்து சொரிந்து கொண்டிருக்க, வாராமையின் புலந்த நெஞ்சமொடு நோவல் - தலைவர் வாராமையால் வெறுத்த நெஞ்சுடன் வருந்தற்க; 18-22. பொருநர் செல்சமம் கடந்த வில் கெழு தடக்கை - போர்புரியும் பகைவர் எதிர்ந்துவரும் போரினை வென்றொழித்த வில்லினைக் கொண்ட பெரிய கையினையுடையானும், பொதியில் செல்வன் பொலம் தேர் திதியன் - பொதியில் மலைக்குரிய செல்வனும் பொன்னாலாய தேரினையுடையானுமாகிய திதியன் என்பானது, இன்னிசை இயத்திற் கறங்கும் கல்மிசை அருவிய காடு இறந்தோர் - இனிய வெற்றி முரசுபோல ஒலிக்கும் மலையுச்சி யினின்று வீழும் அருவி களையுடைய காடுகளைத் தாண்டிப் பொருளீட்டச் சென்றோராய நம் தலைவர்; 16-18. குறுமகள் நோயியர் என் உயிரென - இளையாளே, (நின்னை இங்ஙனம் துயருறச் செய்த) என் உயிர் வருந்துவதாக என்றாற் போலும், மெல்லிய இனிய கூறி - மென்மை வாய்ந்த இனிய சொற்களைக் கூறிக் கொண்டு, வல்லே வருவர் - விரைந்து வந்துறுவர். (முடிபு) தோழி, வாழி, இகழுநர் இகழா இளநாளமையம் குறி செய்தோர் என, வாராமையின் புலந்த நெஞ்சமொடு கண் பனி வார்பு உறைப்ப நோவல்; காடிறந்தோர், குறுமகள் நோயியர் என் உயிரென இனிய கூறி வல்லே வருவர். (வி-ரை) எக்கர் வதுவை நாற்றம் கஞல, குயில் கூவ, தாது பொன் சொரிந்தன்னவாகலின் இகழுநர் இகழா இளநாளமையம் என்க. சாஅய் - சாய எனத் திரிக்க. அறல் - நீர் வற்றிய காலத்து மணல் அற்றற்றிருப்பது. இளவேனிற் பொழுதிலே ஆடவரும் மகளிரும் சோலைகளிலுள்ள எக்கரில் இன்ப விளையாட்டு நிகழ்த்துவ ராகலின் வதுவை நாற்றம் கஞல என்றார். ஊழ் கொள்பு கூவுதலாவது பேடை கூவச் சேவல் கூவுதல். குயில் நடுநின்று உரைப்ப போல என்பதனை, `ஊடினீ ரெல்லாம் உருவிலான் றன்னாணை, கூடுமி னென்று குயில் சாற்ற' 1 என்பதனால் அறிக. அடுநின்று எனப் பிரித்து வருத்தாநின்று என்று உரைத்தலுமாம். சிதர் - வண்டு. கஞல, கூவ எனும் எச்சங்கள் இகழாத என்னும் வேறு வினைகொண்டு முடிந்தன. இளநாளென்றார் இளவேனிலை. குறுமகள் என்றது தோழி தலை மகளை விளித்ததுமாம். என்னுயிர் நோவதாக வென்று நீ நோவாதே என்றுரைத்துப் பின், காடிறந்தோர் என்னுயிர் நோவதாக என மெல்லிய இனிய கூறி வருவரென வேறறுத்து உரைத்தலுமாம். 26. மருதம் (தலைமகன் தோழியை வாயில் வேண்டி, அவளால் தான் வாயில் பெறாது ஆற்றாமையே வாயிலாகப் புக்குக் 2கூடியவன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) கூன்முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற 3 மீன்முள் ளன்ன வெண்கால் மாமலர் பொய்தல் மகளிர் விழவணிக் கூட்டும் அவ்வயின் நண்ணிய வளங்கே ழூரனைப் 5. புலத்தல் கூடுமோ தோழி அல்கல் பெருங்கதவு பொருத யானை மருப்பின் இரும்புசெய் தொடியி னேர வாகி மாக்கண் அடைய மார்பகம் பொருந்தி முயங்கல் விடாஅல் இவையென மயங்கி 10. யானோம் என்னவும் ஒல்லார் தாமற் றிவைபா ராட்டிய பருவமு முளவே, இனியே, புதல்வற் றடுத்த பாலொடு தடைஇத் திதலை அணிந்த தேங்கொள் மென்முலை நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் அகலம் 4 15. வீங்க முயங்கல் யாம்வேண் டினமே தீம்பால் படுதல் தாமஞ் சினரே, ஆயிடைக் கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி மதவுநடைச் செவிலி கையென் புதல்வனை நோக்கி நல்லோர்க் கொத்தனிர் நீயிர் இஃதோ 20. செல்வற் கொத்தனம் யாமென மெல்லவென் மகன்வயிற் பெயர்தந் தேனே அதுகண் டியாமுங் காதலம் அவற்கெனச் சாஅய்ச் சிறுபுறங் கவையின னாக உறுபெயல் 1 தண்துளிக் கேற்ற பலவுழு செஞ்செய் 25. மண்போல் நெகிழ்ந்தவற் கலுழ்ந்தே நெஞ்சறை போகிய அறிவி னேற்கே. -பாண்டியன் கானப் பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி. (சொ-ள்) 6-11. தாம் - நம் தலைவர்தாம், பெருங் கதவு பொருத யானை மருப்பின் இரும்பு செய் தொடியின் ஏர ஆகி - பெரிய மதிற் கதவினைப் பாய்ந்து பிளந்த யானையின் கோடுகளிற் பொருந்திய இரும்பினாற் செய்யப்பெற்ற பூணின் அழகினையுடையவாகி, மா கண் இவை - கரிய கண்களையுடைய இவை, மார்பு அகம் அடைய பொருந்தி முயங்கல் விடாஅல் என - தம் மார்பகம் அழுந்தப் பொருந்தி முயங்கு தலை விலக்கற்க என்று கூறி, யான் மயங்கி ஓம் என்னவும் ஒல்லார் மற்று இவை பாராட்டிய பருவமும் உள - யான் வருந்தி ஒழிவீராக எனவும் தாம் அதற்குப் பொருந்தாராகிப் பின்னும் இவைகளைப் பாராட்டிய காலங்களும் உள்ளன; 11-16. இனி - இப்பொழுதோ, புதல்வன் தடுத்த பாலொடு தடைஇ - புதல்வன் உள்ளத்தைப் பிறிதிற் செல்லாது தடுத்துக் கொண்ட பாலாற் சரிந்து, திதலை அணிந்த தேம்கொள் மென்முலை - தேமலையணிந்த இனிமைகொண்ட மெல்லிய முலைகள், நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம் - அவரது நறிய சந்தனம் அணியப்பெற்ற நன்னிறம் விளங்கும் மார்பில், வீங்க முயங்கல் யாம் வேண்டினம் - விம்ம முயங்குதலை யாம் விரும்பினேம் ஆகவும், தீம்பால் படுதல் தாம் அஞ்சினரே - தமது மார்பில் இனிய பால் படுதலை அவர் அஞ்சினர்; 16-21. ஆயிடை கவவு கை நெகிழ்ந்தமை போற்றி - அவ்விடத்து (முன்பு) அணைத்தலை விடாத அவரது கைகள் (இன்று) நெகிழ்ந்தமை கண்டு, செவிலி கை மதவுநடை என் புதல்வனை நோக்கி - செவிலியின் கையிலிருந்த மெல்லிய நடையினையுடைய என் புதல்வனை நோக்கி, நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் - நீயிர் நும் அழகிய பரத்தை மார்க்குப் பொருந்தியவர் ஆவீர், இஃதோ செல்வற்கு ஒத்தனம் யாம் என - இதோ இந்தச் செல்வனுக்கு நாங்கள் பொருந்தியவர்கள் ஆவோம் என்று கூறி, மெல்ல என் மகன் வயின் பெயர் தந்தேன் - மெல்லென என் மகனிடத்துச் சென்றேன்; 21-23. அதுகண்டு யாமும் காதலம் அவற்கு என - அது கண்டு தலைவர் அச் செல்வன்பால் யாமும் காதலுடையேம் என்று கூறி, சாஅய் சிறுபுறம் கவையினனாக - பணிந்து எனது முதுகினை அணைத்துக் கொண்டனராக; 23-25. உறுபெயல் தண்துளிக்கு ஏற்ற - மிக்க பெயலாய குளிர்ந்த மழையை ஏற்றுக்கொண்ட, பல உழு செஞ்செய் மண்போல் - பல முறையும் உழுதிட்ட செம்மையாகிய செய்யின் மண்போல, நெஞ்சு நெகிழ்ந்து கலுழ்ந்து - என் நெஞ்சம் நெகிழ்ந்து கலங்கி; 5. அல்கல் - இரவில்; 25-26. அவன் அறை போகிய அறிவினேற்கு - அவர்பால் என்னை வஞ்சித்துச் சென்ற அறிவினேனாகிய எனக்கு; 1-5. கூன்முள் முள்ளி குவிகுலை கழன்ற - வளைந்த முள்ளினை யுடைய நீர்முள்ளியது குவிந்த குலைகளினின்று வீழ்ந்த, மீன்முள் அன்ன வெண்கால் மாமலர் = மீனினது முள்ளினை யொத்த வெள்ளிய காம்பினையுடைய கரிய மலர்களை, பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும் - விளையாட்டு மகளிர் தாம் செய்யும் விழாவிற்கு அழகு செய்வனவாகச் சேர்க்கும், அவ் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனைப் புலத்தல் கூடுமோ - அழகிய வயல்கள் பொருந்திய வளமிக்க ஊரனாகிய தலைவனைப் புலத்தல் பொருந்துமோ. (இதற்கு யான் என் செய்வேன்.! (முடிபு) தோழி! தாம் மார்பகம் பொருந்தி, முயங்கல் விடால் என்று கூறி, யாம் ஓவும் என்னவும் ஒல்லார், இவர் பாராட்டிய பருவமும் உள; இனி தீம்பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடை என் புதல்வனை நோக்கி, நல்லோர்க் கொத்தனிர் நீயிர்; இஃதோ செல்வற் கொத்தனம் யாமென மகன் வயிற் பெயர் தந்தேன்; அதுகண்டு யாமும் காதலம் அவற்கெனச் சாஅய்க் கவையினனாக, அவன் கண்டு நெகிழ்ந்து கலுழ்ந்து நெஞ்சறை போகிய அறிவினேற்கு ஊரனைப் புலத்தல் கூடுமோ. அல்கல் நெஞ்சறை போகிய என்க. (வி-ரை) கூர்முள் என்னும் பாடத்திற்குக் கூரிய முள்ளென உரைக்க. ஓம்: ஓவும் என்பதன் இடைக்குறை; செய்யும் என்னும் முற்று முன்னிலைக்கண் வந்தது. தேம்கொள் - இடங்கொண்ட என்றுமாம். இந்த என்பது இஃதோ எனத் திரிந்தது. (உ-றை) `முள்ளியின் பக்கலிலே தோற்றி வாழும் பூ, அதனை விட்டுப் பிறர்க்குப் பயன் பட்டாற்போல, நம்முடன் பிறந்த நெஞ்சு அவருடன் ஏகுகையாயிற்று. அவருடைய வதுவை விழவிற்கும் உடலாய்த் திரியாநின்றால் புலத்தல் கூடுமோ என்க' என்பது குறிப்புரை. (மே-ள்) `அருண்முந்துறுத்த' 1 என்னும் சூத்திரத்துத் தலைவியின் அருண்முந்துறுத்த அன்புபொதி கிளவிக்கும் பணிந்த மொழிக்கும் இதிலுள்ள `மண் போல் நெகிழ்ந்து' `இவை பாராட்டிய பருவமுமுள' `நெஞ்சறை போகிய அறிவினேற்கு' என்பவற்றையும், `தன் வயிற் கரத்தல்' 2 என்னுஞ் சூத்திரத்துத் தலைவி மடன் அழிதற்கு, `கவவுக்கை..... பெயர் தந்தேனே' என்றதலையும் காட்டினர், நச். `வினையுயிர் மெலிதல்'3 என்னும் சூத்திரத்துப் பாராட் டெடுத்தல் முதலிய பன்னிரு நிமித்தமுமின்றி ஆற்றாமை நிமித்தமாகக் கற்பினுட் புணர்ச்சி நிகழ்ந்ததற்கு, `தண்டுளிக்கேற்ற.... அறிவினேற்கே' என்பதனையும், `தெய்வ மஞ்சல்' 4 என்னும் சூத்திரத்து, `மறைந்தவை யுரைத்தல்' என்பதற்கு, `முயங்கல் விடாஅல்..... அஞ்சினரே' என்பதனையும் எடுத்துக் காட்டினர், பேரா. 27. பாலை (செலவுணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) கொடுவரி இரும்புலி 5தயங்க நெடுவரை ஆடுகழை இருவெதிர் கோடைக் கொல்குங் கானங் கடிய வென்னார் நாமழ நின்றதில் பொருட்பிணிச் சென்றிவண் தருமார் 5. செல்ப என்ப என்போய் நல்ல மடவை மன்ற நீயே வடவயின் வேங்கடம் பயந்த வெண்கோட் டியானை மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்குங் கொற்கையம் பெருந்துறை முத்தின் அன்ன 10. நகைப்பொலிந் திலங்கும் எயிறுகெழு துவர்வாய் தகைப்பத் தங்கலர் ஆயினும் இகப்ப யாங்ஙனம் விடுமோ மற்றே தேம்படத் தெண்ணீர்க் கேற்ற திரள்காற் குவளைப் பெருந்தகை சிதைத்தும் அமையாப் பருந்துபட 15. வேத்தமர்க் கடந்த வென்றி நல்வேல் குருதியொடு துயல்வந் தன்னநின் அரிவே யுண்கண் அமர்த்த நோக்கே. - மதுரைக் கணக்காயனார். (சொ-ள்) 1-6. கொடுவரி இரும்புலி தயங்க - வளைந்த கோடுகளையுடைய பெரிய புலி வெளிப்பட்டுத் தோன்ற, நெடுவரை ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் கானம் - நீண்ட மலையில் அசையும் தண்டினையுடைய வலிய மூங்கில்கள் மேல் காற்றினால் தளர்ந்து வளையும் காட்டு நெறி, கடிய என்னார் - கொடிதென்று எண்ணாராய், நாம் அழ - நாம் (பிரிந்து) அழுதிருக்க, நின்றது இல்பொருட்பிணி சென்று இவண் தருமார் செல்ப என்ப என்போய் - ஓரிடத்தும் நிலைபெறுவதில்லாத பொருட் பற்றினால் பிரிந்து சென்று அதனை இங்கு ஈட்டிவரச் சுரம் செல்வர் என ஊரார் கூறுவர் என்று சொல்லும் தலைவியே, நீ மன்ற நல்ல மடவை - நீ உறுதியாக நல்ல மடமையை யுடையை; 6-11. வடவயின் வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கை அம் பெருந் துறை முத்தின் அன்ன - வடதிசைக்கண் வேங்கடமலைப் பக்கத்திலுள்ள அரசர் திறையாகக் கொடுத்த வெள்ளிய கோட்டினையுடைய யானை களையுடைய வீரம் பொருந்திய போரில் வல்ல பாண்டியர்கள் அறநெறி வழாது காக்கும் அழகிய கொற்கைப் பெருந்துறையில் பெறும் முத்துக்களைப் போன்ற, நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர்வாய் - முறுவலாற் சிறந்து விளங்கும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற நின்வாய், தகைப்பத் தங்கலர் ஆயினும் - தடுத்தலால் தடைப்பட்டுத் தங்காராயினும்; 13-17. தேம்பட தெள் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளைப் பெருந்தகை சிதைத்தும் அமையா - தேன் உண்டாகத் தெளிந்த நீரினை ஏற்ற திரண்ட தண்டினையுடைய குவளைப்பூவின் சிறந்த அழகினை வென்று கெடுத்தும் அமையாமல், பருந்துபட வேந்து அமர்க்கடந்த வென்றி நல்வேல் குருதியொடு துயல்வந்தன்ன - பருந்துகள் வந்து சூழ அரசர் தம் போர்களை வென்ற வெற்றி பொருந்திய நல்ல வேல் இரத்தம் தோய்ந்து பிறழ்வது போன்ற, நின் அரி வேய் உண் கண் அமர்த்த நோக்கு - நினது செவ்வரி பொருந்திய மை யுண்ட கண்ணின் மாறுபட்ட பார்வை; 11-12. இகப்ப யாங்ஙனம் விடுமோ - அவரை எங்ஙனம் கடந்தேக விட்டுவிடும்? (விடாது காண்.) (முடிபு) தோழி, நம் தலைவர் கானம் கடிய என்னார், நாம் அழ, நின்றது இல் பொருட்பிணிச் சென்று இவண் தருமார், செல்ப என்ப என்போய், நீ மடவை மன்ற; துவர்வாய் தகைப்பத் தங்கலராயினும், நின் உண்கண் அமர்த்த நோக்கு இகப்ப யாங்ஙனம் விடும்? விடாதுகாண். (வி-ரை) புதருட் கிடந்த புலி வெளிப்பட மூங்கில் அசையும் என்க. கடியவென்னார் தருமார் நாம் அழச் செல்வர் என்றார் என்று கூட்டுக. நின்றது - நிலைபேறு. வேங்கடம் பயந்த யானை என்றது அம் மலையையுடைய அரசர் திறையாகத் தந்த யானை என்றவாறு. யானையையுடைய பாண்டியர் எனவும், போரினில் வல்ல பாண்டியர் எனவும் இயையும். பாண்டியர் போரிலே தறுகண்மையும் நாடு காத்தலில் தண்ணளியும் உடையரென்பார், மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் என்றார். பாண்டியர் காக்கும் கொற்கை; பாண்டியர் நாடு காத்தற்கு இடனாகிய கொற்கை எனலுமாம். துவர்வாய் தகைப்பத் தங்கலராயினும் என்றது, அது தகைத்தல் கொண்டே போக்கொழிவர் என்பது தோன்ற நின்றது. கோடைக்கு ஒல்கும் என்பதனை மூன்றன் உருபாகவும், தெண்ணீர்க்கு ஏற்ற என்பதனை இரண்டனுருபாகவும் விரித் துரைக்க. அமையா என்னும் எதிர்மறை யெச்சம் துயல்வந்தன்ன என்னும் குறிப்பு வினைகொண்டு முடிந்தது. வேந்து, வேத்தென விகாரமாயிற்று. அமர்த்த நோக்கு - பொருந்திய நோக்குமாம். 28. குறிஞ்சி (தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்கு சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. இது பகலே சிறைப்புறம்.) மெய்யில் தீரா மேவரு காமமொ டெய்யா யாயினும் உரைப்பல் தோழி கொய்யா முன்னும் குரல்வார்பு தினையே அருவி ஆன்ற பைங்கால் தோறும் 5. இருவி தோன்றின பலவே நீயே முருகுமுரண் கொள்ளும் தேம்பாய் கண்ணிப் பரியல் நாயொடு பன்மலைப் படரும் வேட்டுவற் பெறலொ டமைந்தனை யாழநின் பூக்கெழு தொடலை 1நுடங்க வெழுந்தெழுந்து 10. கிள்ளைத் தெள்விளி யிடையிடை பயிற்றி ஆங்காங் கொழுகா யாயின் அன்னை சிறுகிளி கடிதல் தேற்றாள் இவளெனப் பிறர்த் தந்து நிறுக்குவ ளாயின் 15, உறற்கரி தாகுமவன் மலர்ந்த மார்பே. - பாண்டியன் அறிவுடை நம்பி. (சொ-ள்) 2. தோழி,- 1-2. மெய்யில் தீரா மேவரு காமமொடு - ஒருவர் மெய்யினின்றும் ஒருவர் மெய் நீங்காதவாறு பொருந்திய காமத்தால், எய்யாய் ஆயினும் உரைப்பல் - நீ அறியாய் ஆயினும் (அதனால் வரும் ஏதத்தினை) நான் உரைப்பேன் கேட்பாயாக; 3-8. அருவி ஆன்ற பைங்கால் தோறும் - நீர் இல்லையான பசிய முதல்தோறும், தினை குரல் வார்பு - தினை கதிர் முதிரப் பெற்று, கொய்யா முன்னும் - கொய்வதன் முன்னும், பல இருவி தோன்றின - பலவும் தட்டைகளாகத் தோன்றின, நீயே - நீதான், முருகு முரண் கொள்ளும் தேம் பாய் கண்ணி - வேறுபட்ட பல மணங்களும் கமழும் தேன் ஒழுகும் கண்ணியையுடையனான, பரியல் நாயொடு பல்மலை படரும் வேட்டுவற் பெறலொடு அமைந்தனை - விரைந் தோடும் நாய்களுடன் பல மலைகளையுங் கடந்து செல்லும் வேட்டுவனை எய்துமளவில் அமைந்தனை; 8-11. நின் பூ கெழு தொடலை நுடங்க எழுந்தெழுந்து - நின் பூக்கள் பொருந்திய மாலை யசைய அடிக்கடி எழுந்து சென்று, கிள்ளைத் தெள் விளி இடை இடை பயிற்றி - கிளிகளை ஓட்டும் தெளிந்த ஓசைகளை இடையிடையே (பலகாலும்) எழுப்பி, ஆங்கு ஆங்கு ஒழுகாய் ஆயின் - அங்கங்கே சென்று வாராதொழியின்; 11-13. அன்னை இவள் சிறுகிளி கடிதல் தேற்றாள் என - நம் அன்னை சிறிய கிளியை இவள் ஓட்டுதலை யறியாளென எண்ணி, பிறர்த் தந்து நிறுக்குவள் ஆயின் - தினை காத்தற்குப் பிறரைக் கொணர்ந்து நிறுத்துவளாயின்; 14. அவன் மலர்ந்த மார்பு உறற்கு அரிது ஆகும் - தலைவனது பரந்த மார்பு பின் நீ அடைதற் கரியதாகும். (முடிபு) தோழி! காமத்தால் நீ எய்யாயாயினும் உரைப்பல்; தினை கொய்யா முன்னும் பைங்கால்தோறும் இருவி பல தோன்றின; நீயே வேட்டுவற் பெறலோ டமைந்தனை; நின் தொடலை நுடங்க எழுந்து விளி பயிற்றி ஒழுகாயாயின், அன்னை கிளி கடிதல் தேற்றாளெனப் பிறர்த்தந்து நிறுக்குவளாயின், அவன் மார்பு உறற் கரிதாம். (வி-ரை) தினை குரல் வார்பு கொய்யா முன்னும் பைங்கால் தோறும் இருவி தோன்றின என்க. அருவி - அருவி நீர். ஆன்ற - அகன்ற; இல்லையான. இருவி - கதிர் ஒழிந்த தட்டை. மாறுபட்ட பல பூக்களால் பல நாற்றமா யிருத்தலின் முருகு முரண்கொள்ளு மென்றார். கண்ணியை யுடைய வேட்டுவன், படரும் வேட்டுவன் என்க. தலைவனையே நினைந்து காத்தலைக் கைவிடுத்தமையின் கிளிகள் கவர இருவியாயின. இடை இடை - அவற்றின் ஓசைக்கு இடையிடையே எனலுமாம்; இரண்டோசைகட்கும் வேற்றுமை யில்லை என்றபடி. ஆங்காங்கு - அப்படி அப்படியே என்றுமாம்; கிளியோட்டுவது போன்று நடித்தலுஞ் செய்யாயாயின் என்றவாறு. (மே-ள்) `நாற்றமும் தோற்றமும்'1 என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுளை எடுத்துக்காட்டி, இது வரையும் பருவம் அன்றெனக் கூறியது என்பர், நச். 29. பாலை (வினைமுற்றி மீண்ட தலைமகன் எம்மையும் நினைத்தறிதிரோ என்ற தலைமகட்குச் சொல்லியது.) தொடங்குவினை தவிரா அசைவில் நோன்தாள் கிடந்துயிர் மறுகுவ தாயினும் இடம்படின் வீழ்களிறு மிசையாப் புலியினுஞ் சிறந்த தாழ்வில் உள்ளம் தலைத்தலைச் சிறப்பச் 5. செய்வினைக் ககன்ற காலை எஃகுற் றிருவே றாகிய தெரிதகு வனப்பின் மாவின் நறுவடி போலக் காண்தொறும் மேவல் தண்டா மகிழ்நோக் குண்கண் நினையாது கழிந்த வைகல் எனையதூஉம் 10. வாழலென் யானெனத் தேற்றிப் பன்மாண் தாழக் கூறிய தகைசால் நன்மொழி மறந்தனிர் போறிர் எம்மெனச் சிறந்தநின் எயிறுகெழு துவர்வாய் இன்னகை அழுங்க வினவல் ஆனாப் புனையிழை கேளினி 15. வெம்மை தண்டா எரியுகு பறந்தலைக் கொம்மை வாடிய இயவுள் யானை நீர்மருங் கறியாது தேர்மருங் கோடி அறுநீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும் உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கரும் கடத்திடை 20. எள்ளல் நோனாப் பொருள்தரல் விருப்பொடு நாணுத்தளை யாக வைகி மாண்வினைக் குடம்பாண் டொழிந்தமை அல்லதை மடங்கெழு நெஞ்சம் நின்னுழை யதுவே. - 2வெள்ளாடியனார். (சொ-ள்) 5-11. எஃகு உற்று இரு வேறு ஆகிய தெரிதகு வனப்பின் மாவின் நறுவடி போல - கத்தியால் அறுக்கப்பெற்று இரு பிளவாகிய விளங்கும் வனப்பினையுடைய மாவின் நறிய வடுப்போல, காண்தொறும் மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் - காணுந்தொறும் களிப்பு மேவுதல் குறையாத பார்வையினையுடைய மையுண்ட கண்களை, நினையாது கழிந்த வைகல் - நினையாது ஒழிந்த நாளில், எனையதூஉம் வாழலென் யான் எனத் தேற்றி - யான் சிறிதும் உயிர் தரித்திரேன் எனத் தெளிவித்து, பல் மாண் தாழக் கூறிய தகை சால் நல்மொழி - பல மாண்புகளும் தாழ்ந்திடக் கூறிய அழகுமிக்க நல்ல மொழியை; 1-5. தொடங்கு வினை தவிரா அசைவு இல் நோன்தாள் - தான் தொடங்கிய வினையைக் கைவிடாத தளர்ச்சியில்லாத வலிய முயற்சியினையுடையதும், கிடந்து உயிர் மறுகுவதாயினும் இடம் படின் வீழ் களிறு மிசையா - பட்டினி கிடந்து உயிர் வருந்துவதாயினும் தான் வீழ்த்திய களிறு இடப்பக்கம் வீழின் அதனைத் தின்னாதது மாகிய, புலியினும் சிறந்த தாழ்வு இல் உள்ளம் தலைத்தலை சிறப்ப - புலியைக் காட்டினும் மேம்பட்ட என்றும் தளர்தலில்லாத ஊக்கம் மேன்மேல் மிக, செய்வினைக்கு அகன்ற காலை - பொருளீட்டும் வினைக்குப் பிரிந்து அகன்ற காலத்தே; 12-14. மறந்தனிர் போறிர் எம் என - எம்மிடத்து மறந்து விட்டீர்போலும் என்று, சிறந்த நின் எயிறு கெழு துவர்வாய் இன் நகை அழுங்க - சிறந்த நினது பற்கள் விளங்கும் பவளம் போன்ற வாயின் இனிய நகைகெட, வினவல் ஆனாப் புனையிழை - வினவுதல் நீங்காத அழகிய அணிகளை யுடையவளே, இனிகேள் - இப்பொழுது யான் கூறுவதைக் கேட்பாயாக; 15-19. வெம்மை தண்டா எரி உகு பறந்தலை - வெப்பம் குறையாத எரிபரந்த பாழிடத்தே, கொம்மை வாடிய இயவுள் யானை - பெருமை யொழிந்த வழிச்செல்லும் யானை, நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி - நீருள்ள இடம் அறியாமல் பேய்த்தேர் தோன்றும் இடமெல்லாம் ஓடி, அறுநீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும் - நீரற்ற ஆற்றிற் கிடக்கும் ஓடம்போல வழியிடத்து வருந்திக் கிடக்கும், உள்ளுநர்ப் பனிக்கும் - நினைப்போரை வருத்தும், ஊக்கு அரும் கடத்திடை - ஊக்கம் ஒழியும் காட்டினிடத்திலே; 20-21. எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு - பிறர் இகழ்தலைப் பொறாத பொருள் ஈட்டி வரும் விருப்பத்துடன், நாணுதளையாக வைகி - தொடங்கிய வினையை முடிக்கவேண்டு மென்னும் மானமே தளையாகக் கட்டுண்டிருந்து, மாண் வினைக்கு - மாண்புற்ற வினையின் பொருட்டு, உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை - என் உடம்பு ஆங்குப் பிரிந்து நின்றதல்லது, மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே - அறியாமையுடைய என் நெஞ்சம் நின் கண்ணதேயாகும்; (இதனை யறியாமையின் இங்ஙனம் வினவுகின்றனை.) (முடிபு) உண்கண் நினையாது கழிந்த வைகல் வாழலென் யானெனத் தேற்றிக் கூறிய நன்மொழியை, புலியினுஞ் சிறந்த தாழ்வில் உள்ளம் சிறப்பச் செய்வினைக்கு அகன்ற காலை எம்மிடத்து மறந்தனிர் போறிர் என, இன் நகை அழுங்க வினவல் ஆனாப் புனை யிழை கேள் இனி; உள்ளுநர்ப் பனிக்கும் அருங்கடத்திடைப் பொருள்தரல் விருப்பொடு வைகி உடம்பு ஆண்டு ஒழிந்ததை அல்லதை நெஞ்சம் நின்னுழை யதுவே. (வி-ரை) நோன்றாட் புலியெனவும் மிசையாப் புலி யெனவும் தனித்தனி இயையும். இடம் வீழ்ந்ததனை உண்ணாத புலியினும் சிறந்த ஊக்கம் என்னும் இக் கருத்தினை, `கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தென, அன்றவ ணுண்ணா தாகி வழிநாட், பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந், திருங்களிற் றொருத்த னல்வலம் படுக்கும், புலிபசித் தன்ன மெலிவி லுள்ளத், துரனுடை யாளர்'1 என்பதனான் அறிக. (எஃகு) உற்று - உறுதலால். தெரிதகு - ஆராயத்தக்க எனவும், பன்மாண் - பலமுறை எனவும், இயவுள் - தலைமை எனவும் உரைத்தலுமாம். யானை ஓடி உணங்கும் கடம் என்க. நெஞ்சினை, மடங்கெழு நெஞ்சு என்றது தலைவியிடத் திருந்தும் தன் ஆற்றாமையை அறிவித்திலது என்று. (மே-ள்) `கரணத்தி னமைந்து'2 என்னுஞ் சூத்திரத்து, மறந்தீர் போலும் என்ற மனையோள் ஏமுறு கிளவிக்குத் தலைவன் எதிர் கூறியதாகும் இச் செய்யுள் என்றனர், நச். 30. நெய்தல் (பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.) நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலைக் கடல்பா டழிய இனமீன் முகந்து துணைபுணர் உவகையர் பரத மாக்கள் இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி 5. உப்பொய் உமணர் அருந்துறை போக்கும் ஒழுகை நோன்பக டொப்பக் குழீஇ அயிர்திணி அடைகரை ஒலிப்ப வாங்கிப் பெருங்களந் தொகுத்த உழவர் போல இரந்தோர் வறுங்கலம் மல்க வீசிப் 10. பாடுபல அமைத்துக் கொள்ளை சாற்றிக் கோடுயர் திணிமணல் துஞ்சுந் துறைவ பெருமை என்பது கெடுமோ ஒருநாள் மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத் தண்ணறுங் கானல் வந்துநும் 15. வண்ணம் எவனோ என்றனிர் செலினே. - முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன். (சொ-ள்) 1-11. நெடுங் கயிறு வலந்த குறுங்கண் அவ்வலை -நெடிய கயிறு கட்டப்பெற்ற குறிய கண்களையுடைய அழகிய வலையில், கடல் பாடு அழிய இனமீன் முகந்து - கடலின் பெருமை குன்ற இனமாகிய மீன்களை முகந்து, துணை புணர் உவகையர் பரத மாக்கள் இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி - துணையுடன் கூடிய மகிழ்ச்சி யுடையராய் இளையரும் முதியருமாய நுளையர்கள் சுற்றத்துடன் நெருங்கி, உப்பு ஒய் உமணர் அருந்துறை போக்கும் ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ - உப்பினைச் செலுத்தும் உப்பு வாணிகர் அரிய துறைகளிற் செலுத்தும் சகடுகளிற் பூட்டப்பெற்ற வலிய எருதுகளை யொப்பக் கூடி, அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி - நுண்மணல் செறிந்த பக்கத்துள்ள கரையில் ஆரவாரம் பெருக இழுத்து, பெருங்களம் தொகுத்த உழவர் போல - பெரிய களத்திலே நெல்லைத் தொகுத்த உழவர்களைப் போன்று, இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி - தம்மிடம் வந்து இரந்தோர்களுடைய வறிய கலன்கள் நிறைய அம் மீன்களைச் சொரிந்து, பாடு பல அமைத்துக் கொள்ளை சாற்றி - எஞ்சியவற்றைப் பல கூறுகளாகச் செய்து விலைகூறி விற்று, கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ - கரை உயர்ந்த திண்ணிய மணற் பரப்பில் தூங்கும் துறைவனே; 12-15. ஒருநாள் -, மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத் தண் நறுங்கானல் வந்து - தூய்மை செய்யப்பெறாத முத்துக்கள் அரும்பி யிருக்கும் புன்னை மரங்களையுடைய தண்ணிய நறிய கடற்கரைச் சோலையில் வந்து, நும் வண்ணம் எவனோ என்றனிர் செலின் - நுங்கள் மேனியின் வண்ணம் எத்தகையதோ என்று வினாவிச் செல்லின்; 12. பெருமை என்பது கெடுமோ - நின்பெருமை என்பது கெட்டுப் போமோ? (முடிபு) பரத மாக்கள் கிளையுடன் துவன்றிப் பகடொப்பக் குழீஇ அடை கரை ஒலிப்ப வாங்கி, உழவர் போல வறுங்கலம் மல்க வீசிக் கொள்ளை சாற்றி மணலிற்றுஞ்சும் துறைவ! ஒருநாள் கானல் வந்து, நும் வண்ணம் எவனோ என்றனிர் செலின் பெருமை என்பது கெடுமோ? (வி-ரை) இனமீன்; இனம் - வகை; கூட்டமுமாம். தொகுத்த வற்றை வறுங்கலம் மல்க வீசுதல் என்னும் தொழில் பற்றியதாகலின், உழவர்போல என்றது தொழில் உவமம். பாடு - கூறு. பெருமை என்பது, நீர் பெருமை என்று நினைக்கும் அது. மண்ணா முத்தம் - கழுவப்படாத முத்து; என்றது, புன்னை யரும்பு; இது வெளிப்படை. `வண்ணம் எவனோ என்றனிர் செலினே' என்றது, வண்ணம் அழிவு படுதலைக் குறித்தற்கு. (உ-றை) `பெருங்கடலுட் சிக்கிக் கிடக்கின்ற மீனை நுளையர் அதனினின்றும் நீக்கி உயிர் செகுத்துக் கண்டாரெல்லார்க்குங் கூறு வைத்துப் பரப்பிப் பின்பு உயிர் வருத்தினோமென்னும் இரக்கமின்றி, மணற்குன்றிலே உறங்கினாற் போல, பெருங்குலத்துப் பிறந்த இவளை, நீயிர் நும் வசமாக நீக்கி வருத்தி, வேறுபாட்டான் எல்லாரும் இவளைச் சூழும்படி அலராக்கிப் பின்பு நீர் துயரமின்றி உறங்குகின்றீர் என்றவாறு.' (மே-ள்) `நாற்றமும் தோற்றமும்'1 என்னும் சூத்திரத்து `வந்த கிழவனை மாயஞ்செப்பிப் பொறுத்த காரணம் குறித்த காலையும்' என்ற பகுதிக்கு, இச்செய்யுளை உதாரணமாகக் காட்டி, இதனால், `தம்மால் இடையூறெய்தி வருந்துகின்றானை ஒரு நாள் வந்திலரென மாயஞ் செப்பியவாறும், நீர் வாராமையின் வண்ணம் வேறு படுமென ஏற்றுக் கோடுமெனக் காரணங் கூறியவாறும் காண்க; தம்மேல் தவறின்றாகக் கூறுங் காலத்து இது கூறுவர் என்றதற்குக் குறித்த காலை என்றார், என்றுரைத்தனர், நச்.' 31. பாலை (பிரிவிடை ஆற்றாளாயினாளென்று பிறர் சொல்லக் கேட்டு வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் மண்டிலம் புலங்கடை மடங்கத் தெறுதலின் ஞொள்கி நிலம்புடை பெயர்வ தன்றுகொல் இன்றென மன்னுயிர் மடிந்த மழைமா றமையத் 5. திலையில வோங்கிய நிலையுயர் யாஅத்து மேற்கவட் டிருந்த பார்ப்பினங் கட்குக் கல்லுடைக் குறும்பின் வயவர் வில்லிட நிணவரிக் குறைந்த நிறத்த வதர்தொறுங் கணவிர மாலை யிடூஉக்கழிந் தன்ன 10. புண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் கண்ணுமிழ் கழுகின் கானம் நீந்திச் சென்றார் என்பிலர் தோழி வென்றியொடு வில்லலைத் துண்ணும் வல்லாண் வாழ்க்கைத் தமிழ்கெழு மூவர் காக்கும் 15. மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே. - மாமூலனார். (சொ-ள்) 12. தோழி - தோழியே; 1-4. நெருப்பு எனச் சிவந்த - தீயைப் போன்று சினந்தெழுந்த, உருப்பு அவிர் மண்டிலம் - வெம்மை விளங்கும் ஞாயிறு, புலம் கடை மடங்கத் தெறுதலின் - விளைநிலத்திடத்தேயுள்ள பயிர்கள் தீய்ந் தொழிய அழித்தலின், இன்று நிலம் ஞொள்கிப் புடை பெயர்வது அன்றுகொல் என - இன்று நிலவுலகம் குறைவுற்று நிலைபெயரும் காலம் அன்றோ என்று சொல்லும்படி, மன்னுயிர் மடிந்த மழை மாறு அமையத்து - நிலைபெறும் உயிர்கள் மடிதற் கேதுவாகிய மழை பெய்யா தொழிந்த இக் காலத்திலே; 5-11. இலைஇல ஓங்கிய உயர்நிலை யாஅத்து - இலைகள் இலவாகி மிக ஓங்கிய நிலையையுடைய யாமரத்தின், மேற்கவட்டு இருந்த பார்ப்பு இனங்கட்கு - மேலுள்ள கிளைகளிலிருந்த பார்ப்புக் களுக்கு, கல்லுடைக் குறும்பின் வயவர் வில்லிட - கற்களையுடைய சீறூரில் உள்ள மறவர்கள் வில்லால் அம்பினை எய்தலால், குறைந்த நிறத்த அதர்தொறும் - பொலிவற்ற நிறத்தினையுடைய வழிதோறும், கணவிரமாலை யிடூஉக் கழிந்தன்ன - செவ்வலரி மாலை இடப்பட்டு இறந்து கிடந்தாலொப்ப, நிண வரி - நிண ஒழுங்கும், புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் - புண் சொரியும் குருதியும் தம்மைச் சூழக் கிடந் தோரது, கண் உமிழ் - கண்ணைக் கவர்ந்து சென்று உமிழ்ந்து கொடுக்கும், கழுகின் கானம் நீந்தி - கழுகுகளையுடைய காட்டைத் தாண்டி; 12-15. வில் அலைத்து வென்றியொடு உண்ணும் வல்லாண் வாழ்க்கை - விற்போரில் பகைவர்களை அழித்து அவ் வெற்றியாலெய்தும் திறைப் பொருள்களைத் துய்க்கும் வலிய ஆண்மை பொருந்திய வாழ்க்கையினையுடைய, தமிழ்கெழு மூவர் காக்கும் - தமிழ் நாட்டினையாளும் மூவராலும் காக்கப்பெறும், மொழிபெயர் தேஎத்த பன்மலை யிறந்து - வேற்று மொழியினையுடைய தேயங் களிலுள்ள பல மலைகளையுங் கடந்து, சென்றார் என்பு இலர் - தலைவர் சென்றார் என்று கூறுதல் இலர்; (இவள் பிரிவாற்றாது வருந்துகின்றாளென்று என்னையே குறை கூறுகின்றனர்.) 1 (முடிபு) தோழி! மண்டிலம் தெறுதலின், மன்னுயிர் மடிந்த அமையத்து, யாஅத்து மேற்கவட்டிருந்த பார்ப்பினங் கட்கு (உணவாகக்) குருதி பரிப்பக் கிடந்தோரது கண்களைக் கொண்டு சென்று உமிழும் கழுகுகளையுடைய கானம் நீந்திப் பன்மலையிறந்து தலைவர் சென்றார் என்பு இலர். அமையத்துச் சென்றார் என்க. (வி-ரை) புலக்கடை, புலங்கடையென விகாரமாயிற்று. நிலம் புடை பெயர்வது - உலகம் அழியும் ஊழிக்காலம்; `நிலம் புடை பெயர் வதாயினும்'1 எனப் புறநானூற்றில் வருவதுங் காண்க. இல : குறிப்பு முற்று எச்சமாயிற்று. பார்ப்பு, பறப்பவற்றின் இளமைப் பெயர். நிணவரியும் குருதியும் பரிப்பக் கிடந்தோர் என்க. கழுகின் கானம், உருபும் பொருளும் தொக்கன. என்பு - என்றல்; தொழிற் பெயர். மூவர் காக்கும் தமிழ் மொழியின் வேறாய மொழி வழங்கும் தேயம் என்றுமாம். 32. குறிஞ்சி (1. பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. 2. தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉமாம்.) நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றிச் 5. சிறுதினைப் படுகிளி கடீஇயர் பன்மாண் குளிர்கொள் தட்டை மதனில புடையாச் சூரர மகளிரின் நின்ற நீமற் றியாரை யோவெம் அணங்கியோய் உண்கெனச் சிறுபுறங் கவையின னாக அதற்கொண் 10. டிகுபெயல் மண்ணின் ஞெகிழ்பஞ ருற்றவென் உள்ளவன் அறிதல் அஞ்சி உள்ளில் கடிய கூறிக் கைபிணி விடாஅ வெரூஉமான் பிணையின் ஒரீஇ நின்ற என்னுரத் தகைமையில் பெயர்த்துப்பிறி தென்வயிற் 15. சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந் தினந்தீர் களிற்றிற் பெயர்ந்தோன் இன்றுந் தோலாவா றில்லை தோழிநாம் சென்மோ சாயிறைப் பணைத்தோட் கிழமை தனக்கே மாசின் றாதலும் அறியான் ஏசற் 20. றென்குறைப் புறனிலை முயலும் அண்க ணாளனை நகுகம் யாமே. -2நல்வெள்ளியார். (சொ-ள்) 1-9. திரு மணி ஒளிர்வரும் பூணன் - அழகிய மணி விளங்கும் பூணினையுடையான் ஒருவன், நெருநல் எல்லை ஏனல் வந்து தோன்றி - நேற்றைப் பொழுது தினைப்புனத்தின் கண் வந்து தோன்றி, புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள - அரசன் போலும் தனது தோற்றத்துடன் மாறுபட, இரவல் மாக்களிற் பணிமொழி பயிற்றி - இரத்தல் செய்யும் மக்களைப் போலப் பணிந்த மொழிகளைப் பலகாற் சொல்லி, சிறுதினைப் படுகிளி கடீஇயர் - சிறிய தினையிற் பொருந்தும் கிளிகளைக் கடியுமாறு, குளிர்கொள் தட்டை மதன் இலபல் மாண் புடையா - குளிருடன் கூடிய தட்டையாய கிளிகடி கருவிகள் வலியில்லாதன கொண்டு பல முறையும் புடைத்து, சூர்அர மகளிரின் நின்ற நீ - சூரரமகளிர் போல நின்ற நீ, யாரையோ - யாரோ, எம் அணங்கியோய் - எம்மை வருத்தினவளே, உண்கு என - நின்னை நுகர்வேன் என்று கூறி, சிறுபுறம் கவையினன் ஆக - எனது பிடரியினை அணைத்துக் கொண்டானாக; 9-14. அதற்கொண்டு - அவ்வுரைக் கருத்தினை மனத்திற் கொண்டு, இகுபெயல் மண்ணின் - மழை பெய்யப் பெற்ற மண்போல, ஞெகிழ்பு அஞர் உற்ற என் உள் அவன் அறிதல் அஞ்சி - நெகிழ்ந்து வருந்திய என் உள்ளத்து நிலையினை அவன் அறிதலை அஞ்சி, உள் இல் கடிய கூறிக் கைபிணி விடாஅ - மனத்தொடு படாத கடியசொற் களைக் கூறி அவன் கையை அகற்றி, வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நின்ற - அச்சமுறும் பெண்மானைப்போல் விலகிநின்ற, என் உரத் தகைமையில் - எனது வன்னிலையைக் கண்டு (கூசி), பெயர்த்து - தன் காதலை உள்ளடக்கிக் கொண்டு; 14-17. பிறிது என் வயின் சொல்ல வல்லிற்றும் இலன் - பிறிதோர் சொல்லும் என்னிடம் கூற வலியற்றவனாகி, அல்லாந்து - வருந்தி, இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் - தன் இனத்தினின்றும் நீங்கும் களிற்றைப்போல் மீண்டான், இன்றும் தோலா ஆறு இல்லை - அவன் இன்றும் வந்து நமக்குத் தோலாதிருத்தல் இல்லை; 18-20. சாய்இறைப் பணைத்தோட் கிழமை - நமது வளைந்த சந்தினையுடைய பெரிய தோளின் உரிமை, தனக்கே மாசு இன்று ஆதலும் அறியான் - தனக்கே குற்றமின்றி யுளதாதலையும் அறியானாய், ஏசற்று - வருந்தி, என் குறைப் புறனிலை முயலும் - என்னால் அடையலாம் காரியத்திற்கு என்னை இரந்து பின்னிற்றற்கு முயலும், கண் அண் ஆளனை யாம் நகுகம் - நம்முன் வந்துறும் அத் தலைவனைப் பழித்து மகிழ்வோம்; 17. தோழி நாம் சென்மோ - தோழி நாம் செல்லுவோமாக. (முடிபு) தோழி! பூணன் வந்து பணிமொழி பயிற்றி எம் அணங்கியோய்! நீ யாரையோ உண்கெனக் கவையினனாக கைபிணி விடாஅ ஒரீஇ நின்ற என் உரத்தகைமையின் சொல்ல வல்லிற்று மிலன் பெயர்ந்தோன் இன்றும் தோலாவாறில்லை; அண்கணாளனை நகுகம் நாம் சென்மோ. (வி-ரை) `புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள, இரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றி'1 என்னும் இக் கருத்து, `ஒன்று இரப்பான்போல் எளிவந்தும் சொல்லும், உலகம், புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன்' எனக் கலியுள்ளும் வருவது காண்க. குளிர் - கிளிகடி கருவியுள் ஒன்று : `தழலும் தட்டையும் குளிரும் பிறவும், கிளிகடி மரபின'2 என்றார் பிறரும். குளிர், ஈரமும் ஆம். மதனில என்ற நொய்ம்மையால் மகளிர் நொய்ம்மை கூறப் பட்டது. உண்கு - நுகர்வேன். உள் அறிதல் - உள்ள நெகிழ்ச்சியை அறிதல். உள்ளில் கடிய கூறி என்றது, உள்ளத்தில் அன்புவைத்தே புறத்தே கடுமொழிபோற் றோன்றக் கூறி என்றபடி. இன்றும் தோலாவாறில்லை யென்றது, அவன் இன்றும் வந்து நம் கருத்தினை யறியாது திரும்பிச் செல்வான் என்றவாறு. புறனிலை - பின்னிற்றல், தாழ்ந்து நிற்றல். கண் அண்ணாளனை எனக் கூட்டுக. தலைவியின் உள்ளக் கருத்தினை அறிதற்குத் தோழி தனது சிறுபுறம் கவையினனாக எனப் படைத்து மொழிந்து, அவன் குறையினைத் தலைவி விரும்பி ஏற்றுக் கொள்ளவேண்டு மென்பாள், அண்கணாளனை நகுகம் சென்மோ என்றாள் என்க. இச் செய்யுள் தலைமகள் கூற்றெனின், தோழிக்கு அறத்தொடு நிற்றலாகும். (மே-ள்) `அறக்கழி வுடையன'3 என்னுஞ் சூத்திரத்து `சிறுபுறங் கவை யினனாக...கைபிணிவிடாஅ' என்பதனைத் தலைவி மறை புலப் படுத்தல் வேண்டி, தன்னை அவன் நயந்தான் போலத் தோழி கூறிய வழுவமைதிக்கு எடுத்துக் காட்டினர், நச். 33. பாலை (தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) வினைநன் றாதல் வெறுப்பக் காட்டி மனைமாண் கற்பின் வாணுதல் ஒழியக் கவைமுறி இழந்த செந்நிலை யாஅத்து ஒன்றோங் குயர்சினை இருந்த வன்பறை 5. வீளைப் பருந்தின் கோள்வல் சேவல் வளைவாய்ப் பேடை வருதிறம் பயிரும் இளிதேர் தீங்குரல் இசைக்கும் அத்தம் செலவருங் குரைய என்னாது சென்றவண் மலர்பா டான்ற மையெழில் மழைக்கண் 10. தெளியா நோக்கம் உள்ளினை உளிவாய் 1வெம்பரல் அதர குன்றுபல நீந்தி யாமே எமியம் ஆக நீயே ஒழியச் சூழ்ந்தனை யாயின் முனாஅது வெல்போர் வானவன் கொல்லி மீமிசை 15. நுணங்கமை புரையும் வணங்கிறைப் பணைத்தோள் வரியணி அல்குல் வாலெயிற் றோள்வயின் பிரியா யாயின் நன்றுமன் தில்ல அன்றுநம் மறியா யாயினும் இன்றுநம் செய்வினை ஆற்றுற விலங்கின் 20. எய்துவை அல்லையோ பிறர்நகு பொருளே. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார். (சொ-ள்) 1-2. நெஞ்சே -, வினை நன்று ஆதல் வெறுப்பக் காட்டி - பொருள் ஈட்டும் வினை அறம் முதலிய பயந்து நன்றாதலை மிக எடுத்துரைத்து, மாண் கற்பின் வாள் நுதல் மனை ஒழிய - மாண்புற்ற கற்பினையுடைய ஒள்ளிய நெற்றியினை யுடைய நம் தலைவி மனையில் இருப்ப; 3-7. முறி இழந்த கவை செந்நிலை யாஅத்து - தளிர்கள் இழந்த கிளைகளையுடைய செவ்விய நிலையினையுடைய யா மரத்தில், ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த - கப்பின்றி ஒன்றாக மிக உயர்ந்துள கிளையிலிருந்த, வன் பறை வீளை கோள் வல் பருந்தின் சேவல் - வலிய பறத்தலையுடைய சிள்ளென்று ஒலி செய்யும் இரை கொள்ள வல்ல பருந்தினது சேவல், வளை வாய்ப் பேடை வருதிறம் பயிரும் - வளைந்த வாயினையுடைய தனது பேடை தன்பால் வரும் பரிசு அழைக்கும், இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம் - இளியெனும் இசைபோன்ற இனிய குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் அரிய சுர நெறிகள்; 8-13. செலவு அருங்குரைய என்னாது சென்று - செல்லுதற் கரியவென அதுபோதே கூறாது இத்துணையும் போந்து, அவள் மலர் பாடு ஆன்ற மை எழில் மழைக் கண் - தலைவியது மலர் தன் பெருமை இழத்தற்குக் காரணமான மையுண்ட அழகிய குளிர்ந்த கண்ணின், தெளியா நோக்கம் உள்ளினை - மயங்கிய நோக்கத்தினை நினைத்து, உளிவாய் வெம்பரல் அதர குன்று பல நீந்தி - உளியின் வாய்போன்று கூரிய வெவ்விய பரல்கள் பொருந்திய நெறிகளை யுடைய குன்றுகள் பலவற்றைக் கடந்து வந்தும், யாமே எமியம் ஆக- யாம் தமியேம் ஆக, நீயே ஒழியச் சூழ்ந்தனையாயின் - நீ எம்மை விட்டு நீங்கிப் பிரிந்தேகக் கருதினையாயின்; 13-17. வெல்போர் வானவன் முனாஅது கொல்லி மீமிசை - போர் வெல்லும் சேரனது பழையதாகிய கொல்லிமலையின் உச்சியில் உள்ள, நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத்தோள் - சிறிய மூங்கிலை யொத்த வளைந்த முன்கையினை யுடைய பெரிய தோளினையும், வரி அணி அல்குல் - திதலையை அணிந்த அல் குலினையும், வால் எயிற்றோள் வயின் - வெள்ளிய எயிற்றினையுமுடைய தலைவியிடத்திருந்து, பிரியாயாயின் நன்று மன் - பிரியாதிருப்பாயாயின் நன்றாகும்; அது செய்திலையே; 18-20. அன்று நம் அறியாய் ஆயினும் - பிரிகின்ற அன்று நம் இயல்பினை அறிந்து கொள்ளாய் ஆயினும், இன்று நம் செய்வினை ஆற்று உற விலங்கின் - இன்று நமது செய்யப்படும் இவ்வினையினை இந்த இடைநெறியில் உற்ற அளவில் விலக்குவையாயின், பிறர் நகுபொருள் எய்துவை அல்லையோ - பிறர் சிரிக்கத்தக்க இகழ்ச்சியை அடைவாய் அல்லையோ? (முடிபு) நெஞ்சே! வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி, மனைவாணுதல் ஒழிய, அத்தம் செலவு அருங்குரைய என்னாது சென்று, அவள் நோக்கம் உள்ளினை ஒழியச் சூழ்ந்தனையாயின், வாலெயிற்றோள்வயின் (அன்றே) பிரியாயாயின் நன்று, மன்; இன்று நம் செய்வினை ஆற்றுற விலங்கின், பிறர் நகுபொருள் எய்துவை யல்லையோ. (வி-ரை) காட்டிச் சென்று ஒழியச் சூழ்ந்தனையாயின் என்க. மனை ஒழிய எனவும், பயிருங் குரல் எனவும், முனாஅது கொல்லி எனவும் இயையும். இளி - சட்ச சுரம்; குரல் மத்திமம் ஆகலின் என்க. மெத்தெனப் பேடையை அழைத்தலின் மந்த சுரம் ஆயிற்று. சென்று என்றது போந்து என்றபடி. தில் : அசை; ஈறு திரிந்தது. யாமே நீயே என்னும் ஏகாரம் பிரிநிலை. 34. முல்லை (வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.) சிறுகரும் பிடவின் வெண்டலைக் குறும்புதல் கண்ணியின் மலரும் தண்ணறும் புறவில் தொடுதோற் கானவன் கவைபொறுத் தன்ன இருதிரி மருப்பின் அண்ணல் இரலை 5. செறியிலைப் பதவின் செங்கோல் மென்குரல் மறியாடு மருங்கின் மடப்பிணை யருத்தித் தெள்ளறல் தழீஇய வார்மணல் அடைகரை மெல்கிடு கவுள துஞ்சுபுறங் காக்கும் பெருந்தகைக் குடைந்த நெஞ்சம் ஏமுறச் 10. செல்க தேரே நல்வலம் பெறுந பசைகொல் மெல்விரற் பெருந்தோட் புலைத்தி துறைவிட் டன்ன தூமயி ரெகினம் துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில் செந்தார்ப் பைங்கிளி முன்கை யேந்தி 15. இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென மழலை இன்சொல் பயிற்றும் நாணுடை அரிவை மாணலம் பெறவே. - மதுரை மருதன் இளநாகனார். (சொ-ள்) 1-9. சிறு கரும் பிடவின் - சிறிய கரிய பிடாவின், வெண்தலை குறும் புதல் - வெள்ளிய உச்சியினையுடைய குறிய புதர், கண்ணியின் மலரும் - மாலை போல மலரும், தண் நறும் புறவில் - குளிர்ந்த நறிய முல்லை நிலத்தில், தொடுதோல் கானவன் - செருப்பு அணிந்த தாளையுடைய வேட்டுவன், கவைபொறுத்தன்ன - கவைக் கோலைச் சுமந்தாலொத்த, இரு திரி மருப்பின் - பெரிய முறுக்குடைய கோட்டினையுடைய, அண்ணல் இரலை - பெருமை தங்கிய ஆண் மான்கள், செறி இலைப் பதவின் செங்கோல் மென்குரல் - நெருங்கிய இலைகளையுடைய அறுகினது சிவந்த தண்டினோடு மெல்லிய கொத்துக்களை, மறிஆடு மருங்கின் மடப்பிணை அருத்தி - மறிவிளையாடும் பக்கத்தினையுடைய இளைய பெண்மானை அருந்தச் செய்து, தெள் அறல் தழீஇய வார்மணல் அடைகரை - தெளிந்த அறல்நீர் தழுவிச் செல்லும் நெடிய மணல் சார்ந்த கரைகளில், மெல்கிடு கவுள - அசைவிடும் கவுளினை யுடையவாய், துஞ்சு புறம் காக்கும் - அவை துயிலும் இடத்தைக் காவல் செய்திருக்கும், பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற - பெருந் தன்மையினைக் கண்டு அவை போலத் தலையளி செய்திலமே என்று தளர்ந்த நெஞ்சம் இன்பம் அடையவும்; 11-18. பசை கொல் மெல்விரல் - ஆடைகளிலே தோய்ந்துள்ள கஞ்சிப் பசையினைக் கரைத்து விடும் மெல்லிய விரல்களையும், பெருந் தோள் புலைத்தி - பெரிய தோள்களையும் உடைய ஆடை ஒலிப்பவள், துறைவிட்டன்ன - அக் கஞ்சிப் பசையினைத் துறையில் அலசி விடுவது போன்ற, தூ மயிர் எகினம் - தூய மயிரினையுடைய அன்னங்கள், துணையொடு திளைக்கும் - தம் பெடைகளுடன் விளையாடி மகிழும், காப்புடை வரைப்பின் - காவல் பொருந்திய மனை எல்லைக்குள், செம்தார்ப் பைங்கிளி - சிவந்த மாலை யணிந்தது போன்ற கழுத்தினையுடைய பசிய கிளியினை, முன் கை ஏந்தி - தனது முன் கையில் ஏந்தி, இல்லவர் அறிதல் அஞ்சி - இல்லில் உள்ளார் அறிந்து விடுவரோ என அஞ்சி, மெல்லென - மென்மையாக, சென்றிசினோர் திறத்து இன்று வரல் உரைமோ என - நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் திறத்து ஒன்று உரைப்பையாயின் அவர் இன்று வருவார் என உரைப்பாய் என்று, மழலை இன் சொல் பயிற்றும் - மழலையாகிய இனிய சொற்களைப் பயில்வித்திருக்கும், நாண் உடை அரிவை மாண் நலம் பெற - நாணம் மிக்க நம் தலைவியது மாண்புற்ற நலத்தினை அடையவும்; 10. நல் வலம் பெறுந செல்க தேரே - தேரைச் செலுத்தும் நற்றிறம் வாய்ந்த பாகனே! நம் தேர் விரைந்து செல்வதாக. (முடிபு) நல்வலம் பெறுந! நெஞ்சம் ஏமுற அரிவை மாணலம் பெறச் செல்க தேர். இரலை புறவில் பிணை அருத்தித் துஞ்சு புறங்காக்கும் பெருந்தகை எனவும், வரைப்பில் கிளி முன்கை யேந்தி இன்று வரல் உரைமோ என இன்சொற் பயிற்றும் அரிவை எனவும் இயையும். (வி-ரை) பூவினால் வெண்டலையாயிற்று. கவை - புதர்களை ஒடுக்குதற்குக் கொண்ட கவைக்கோல். மறியாடு மருங்கின் மடப்பிணை - சூலுற்ற பிணையுமாம். பெருந்தகைக்கு - பெருந்தகைமையால். செல்க - செலுத்துக எனப் பிறவினையுமாம். தார் - கழுத்தின் இரேகை. சென்றிசினோர் திறத்து உரைக்கில் என ஒரு சொல் வருவிக்க. இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லெனச் சொல்லுதலின் நாணுடையாள் ஆயிற்று. `உயிரினுஞ் சிறந்தன்று நாண்'1 என்பவாகலின் நாணுடை அரிவை என்பாராயினர். தலைவன் தன்னை இங்கே இரலையும் பிணையும் வருத்துகின்றன என்பதும், அவளை அங்கே அன்னமும் துணையும் வருத்துவன என்பதும் புலப்படக் கூறினான். (மே-ள்) `கரணத்தி னமைந்து'2 என்னுஞ் சூத்திரத்துப் பாகரிடத்தும் தலைவன் கூற்று நிகழும் என்பதற்கு, `செல்க தேரே நல்வலம் பெறுந' என்பதனைக் காட்டினர், நச். 35. பாலை (மகட் போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது) ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள் வான்தோய் இஞ்சி நன்னகர் புலம்பத் தனிமணி இரட்டும் தாளுடைக் கடிகை நுழைநுதி நெடுவேற் குறும்படை மழவர் 5. முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார் நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்1 தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும் 10. போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரம் துணிந்துபிறள் ஆயினள் ஆயினும் அணிந்தணிந் தார்வ நெஞ்சமோ டாய்நலன் அளைஇத்தன் மார்புதுணை யாகத் துயிற்றுக தில்ல துஞ்சா முழவின் கோவற் கோமான் 15. நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப் பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கும் நெறியிருங் கதுப்பினென் பேதைக் கறியாத் தேஎத் தாற்றிய துணையே. - அம்மூவனார். (சொ-ள்) 1-2. வான்தோய் இஞ்சி - வான் அளாவிய மதிலையுடைய, நல் நகர் புலம்ப - நன்றாகிய மனை தனிமையுற, ஈன்று புறந் தந்த எம்மும் உள்ளாள் - பெற்றுப் பாதுகாத்த எம்மையும் நினையாளாய்; 3-11. தனி மணி இரட்டும் - ஒப்பற்ற மணி மாறி மாறி யொலிப்பதும், தாளுடைக் கடிகை நுழைநுதி - கடையாணி யிட்ட காம்பினையும் கூரிய முனையையும் உடையதுமாய, நெடுவேல் - நெடிய வேலையுடைய, குறும்படை மழவர் - கோட்டை மழவராகிய, முனை ஆ தந்து - வெட்சியார் போர்முனையில் வென்று ஆக்களை மீட்டு, முரம் பின் வீழ்த்த - அவ் வெட்சியாரை மேட்டு நிலத்தே வீழ்த்திய, வில் ஏர் வாழ்க்கை - வில்லையே ஏராகக்கொண்டு வாழும் வாழ்க்கையினை யுடைய, விழுத்தொடை மறவர் - சிறந்த அம்பினையுடைய கரந்தை வீரர்கள், வல்லாண் பதுக்கைக் கடவுள் பேண்மார் - தங்கள் வலிய ஆண்மையாலிட்ட பதுக்கைக் கண்ணுள்ள கடவுளை வழிபடற்கு, நடுகல் பீலி சூட்டி - அந் நடு கல்லில் மயிற்றோகைகளைச் சூட்டி, துடி படுத்து - துடியை அடித்து, தோப்பிக் கள்ளொடு - நெல்லாலாக்கிய கள்ளொடு, துரூஉப் பலி கொடுக்கும் - செம்மறிக் குட்டியைப் பலி கொடுக்கும், போக்கு அரும் கவலைய - வழிப்போதற்கு இயலாத கவர்த்த வழிகளையுடைய, புலவு நாறு அருஞ்சுரம் - புலால் வீசும் அரிய சுரநெறியில், துணிந்து பிறள் ஆயினள் ஆயினும் - செல்லத் துணிந்து பிறளொருத்தியாக ஆயினாள் எனினும்; 14-18. துஞ்சா முழவின் கோவல் கோமான் - முழவொலியறாத திருக்கோவலூர்க்குத் தலைவனாகிய, நெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன்றுறை - நெடிய தேரினையுடைய காரியின் கொடுங்கால் என்னும் ஊரினிடத்தே முன்றுறையில் உள்ள, பெண்ணை அம் பேர் யாற்று நுண் அறல்கடுக்கும் - அழகிய பெரிய பெண்ணையாற்றின் நுண்ணிய கருமணலை யொக்கும், நெறி இரும் கதுப்பின் என் பேதைக்கு - நெளிந்த கரிய கூந்தலையுடைய என் மகட்கு, அரியாத் தேஎத்து ஆற்றிய துணை - அவளை யறிவார் பிறர் இல்லாத நாட்டிலே அவளைத் செலுத்திப்போம் துணைவன்; 11-13. அணிந்து அணிந்து ஆர்வ நெஞ்சமொடு - அன்பு மிக்க உள்ளத்தோடு அவளைப் பலகாலும் அணிவித்து, ஆய் நலன் அளைஇ - அவளது அழகிய நலனைத் துய்த்து, தன் மார்பு துணையாகத் துயிற்றுக - தனது மார்பு பற்றுக்கோடாகத் துயில்விப்பானாக. (முடிபு) ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள், நகர் புலம்ப, அருஞ்சுரம் துணிந்து பிறள் ஆயினள் ஆயினும், என் பேதைக்கு அறியாத் தேயத்து ஆற்றிய துணை, அணிந்தணிந்து ஆய்நலன் அளைஇத் தன் மார்பு துணையாகத் துயிற்றுக தில்ல. (வி-ரை) எம்மும் என்னும் உம்மை ஆயத்தினையும் பந்து கழங்கு முதலியவற்றையும் தழுவி நின்றது. சிறந்த நகர் எனினும் இவ ளொருத்தியின்றி விளக்கம் ஒழிந்தது என்றவாறு. குறும்படை - கோட்டை; குறும்பை அடைந்த என்றுமாம்; குறும்பு - சிற்றரண். மழவர் - வெட்சி வீரர் எனக்கொண்டு, அவரது முனையிடத்து ஆ எனலுமாம். பதுக்கைக் கடவுள் - பதுக்கையிடத்துக் கல்லில் உறையும் கடவுள். விழுத்தொடை - தப்பாத அம்பென்றும், துன்பஞ் செய்யும் அம்பென்று மாம். துணிந்து என்றது சுரம்போதற் கருமையையும், பிறளாயினள் என்றது தம்மை மறந்து செல்லுதற் கருமையையும் புலப்படுப்பனவாம். தில் : விழைவுப் பொருட்டு. பெண்ணையாற்று முன்றுறை யென்க. துணை - தலைவன்; துணையாவான் அவனே என்னும் குறிப்பிற்றுமாம். (மே-ள்) `தன்னு மவனும்'1 என்னும் சூத்திரத்துத் தலைவன் தலைவிபால் மிகவும் அன்பு செய்கவென்று நற்றாய் தெய்வத்தைப் பராவியதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர், நச். இச்சூத்திரத்து இச் செய்யுளை எடுத்துக்காட்டி, இது செவிலி தெய்வம் பராஅயது என்பர், இளம். 36. மருதம் (தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது.) பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக் கொடுவாய் இரும்பின் கோளிரை துற்றி ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக் கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்தெழுந் 5. தரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கித் தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு நாட்கயம் உழக்கும் பூக்கே ழூர வருபுனல் வையை வார்மணல் அகன்றுறைத் 10. திருமரு தோங்கிய விரிமலர்க் காவின் நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தையொடு வதுவை அயர்ந்தனை யென்ப அலரே கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன் ஆலங் கானத் தகன்றலை சிவப்பச் 15. சேரல் செம்பியன் சினங்கெழு திதியன் போர்வல் யானைப் பொலம்பூண் எழினி நாரறி நறவின் எருமை யூரன் தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநனென் 20. றெழுவர் நல்வலம் அடங்க ஒருபகல் முரசொடு வெண்குடை அகப்படுத் துரைசெலக் கொன்றுகளம் வேட்ட ஞான்றை வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே. - மதுரை நக்கீரர். (சொ-ள்) 1-8. பகுவாய் - பிளந்த வாயினையும், பல்வரி - பல வரிகளையுமுடைய, வராஅல் இரும்போத்து - பெரிய வராற் போத்து, கொடுவாய் இரும்பின் கோள் இரை துற்றி - வளைந்த வாயினை யுடைய தூண்டிலிலுள்ள தனக்குக் கூற்றமாகிய இரையினை விழுங்கி, ஆம்பல் மெல்லடை கிழிய எழுந்து - ஆம்பலது மெல்லிய இலை கிழிய மேலெழுந்தும், குவளைக் கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்து - குவளையின் அரும்பு மலர்ந்த பல மலர்களும் சிதையும்படி பக்கத்தே பாய்ந்தும், அரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கி - பிணக்கம் மேவிய அழகிய வள்ளைக் கொடியினைக் கலக்கியும், தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது - தூண்டிலிட்ட வேட்டுவன் இழுக்கவும் வாராமல், கயிறு இடு கதச் சேப் போல - கயிறிட்டுப் பிடிக்கும் சினம் மிக்க ஏறு போல, மதம் மிக்கு நாட்கயம் உழக்கும் பூக்கேழ் ஊர - செருக்கு மிக்கு விடியற்காலத்தே குளங்களைக் கலக்கும் பூக்கள் பொருந்திய ஊரனே!; 9-23. புனல் வரு வையை வார் மணல் அகன்றுறை - என்றும் நீர் வற்றாது வரும் வையையின் மிக்க மணல் பொருந்திய அகன்ற துறையைச் சார்ந்த, திரு மருது ஓங்கிய விரிமலர்க் காவின் - அழகிய மருதமரம் ஓங்கிய விரிந்த மலர்களையுடைய சோலையில், நறும்பல் கூந்தல் குறுந்தொடி மடந்தையொடு - நன்மணமுடைய மிக்க கூந்தலையும் குறிய வளையல்களையும் உடைய பரத்தையை, வதுவை அயர்ந்தனை என்ப - மணஞ்செய்து கொண்டனை யென்று ஊரார் கூறுவர்; அலர் - அவ்வலர், கொய்சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன் - கொய்த பிடரி மயிரினையுடைய குதிரைகள் பூண்ட கொடி எடுத்த தேரினையுடைய பாண்டியன் நெடுஞ்செழியன், ஆலங்கானத்து அகன்தலை சிவப்ப - தலையாலங்கானம் என்ற ஊரின் அகன்ற இடனெல்லாம் செந்நிறமடைய, சேரல் செம்பியன் சினம் கெழு திதியன் - சேரன் சோழன் சினம் மிக்க திதியன், போர்வல் யானைப் பொலம்பூண் எழினி - போரில் வலிய யானைகளையுடைய பொற்பூண் அணிந்த எழினி, நார் அரி நறவின் எருமையூரன் - பன்னாடையால் அரிக்கப் பெற்ற கள்ளினையுடைய எருமை யூர்க்குத் தலைவன், தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான் - தேன் மணங்கமழும் மார்பிலே பூசிப் புலர்ந்த சந்தனத்தையுடைய இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருநன் என்று - செவ்விதின் இயன்ற தேரினையுடைய பொருநன் என்று கூறப்பட்ட, எழுவர் நல்வலம் அடங்க - எழுவரது சிறந்த வெற்றிகள் சாய்ந்தொழிய, ஒரு பகல் - ஒரு பகலிலே, முரசொடு வெண்குடை அகப்படுத்து - அவர்தம் முரசுகளுடன் வெண் குடைகளைப் பற்றிக்கொண்டு, உரை செல - தன் புகழுரை எங்கும் பரவ, கொன்று களம் வேட்ட ஞான்றை - அவர்தம் படைகளைக் கொன்று களவேள்வி செய்த காலத்து, வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிது - வெற்றியடைந்த வீரர்கள் ஆர்த்த ஆரவாரத்திலும் பெரிதாக உள்ளது. (முடிபு) ஊர! வையை அகன்றுறைக் காவில், மடந்தை யொடு வதுவை அயர்ந்தனை யென்ப; அலர், செழியன் எழுவர் நல் வலம் அடங்கக் கொன்று களம் வேட்ட ஞான்றை வீரர் ஆர்ப்பினும் பெரிது. வராற் போத்து, துற்றி, கிழிய எழுந்து, சிதையப் பாய்ந்து மயக்கி, வாங்க வாராது, உழக்கும் எனவும், செழியன் அகன்றலை சிவப்ப எழுவர் நல்வலம் அடங்க அகப்படுத்துக் கொன்று களம் வேட்ட எனவும் இயையும். (வி-ரை) கோள் - கொள்ளப்பட்ட என்றுமாம். இரும்பு - தூண்டில் முள். கூடற்பதியில் மருதமரம் உயர்ந்த காவினையுடைய வையையாற்றின் துறையானது, திருமருதந்துறையெனச் சான்றோர் பலராலும் பாராட்டிக் கூறப்பெறும்: `திருமருத நீர்ப்பூந்துறை.’1 ‘தீம்புனல் வையைத் திருமருத முன்னுறை’ ‘திருமருத முன்றுறை முற்றங் குறுகி’ எனப் பரிபாடலிலும், `வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை'2 எனச் சிலப்பதிகாரத்திலும் வருதல் காண்க. பகைவரது முரசுங் குடையும் போரில் பற்றிக் கொள்ளல், வெற்றிக்கு அடையாளமாகும். `சினங்கெழு வேந்தரை அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு, ஒருங்கப் படேஎ னாயின்' என இந்நெடுஞ் செழியனே வஞ்சினங் கூறுதல் காண்க. (உ-றை) `வேட்டுவன் தூண்டிலிற் கோத்த இரையை இலையின் கீழ்க் கிடந்த வாளை நுகர்ந்து, தூண்டிற் றுவக்கு விடாது இலைகிழிய எழுந்து குவளைப் பூ முறியப் பாய்ந்து அக் குவளையைச் சூழ்ந்த வள்ளையை மயக்கி, நாட்காலத்தே எல்லாருங் காணக் கயத்தை உழக்குகின்றாற்போல, நின்பாணனுடைய நெஞ்சு வலியதாய்ப் புறம்பு மெல்லிதா யிருக்கின்ற இன்சொல்லாலே, அப் பரத்தை நலத்தை நுகர்ந்து, அப் பரத்தையர் தாய்மார் நெஞ்சு வருந்த அவ்விடத்தை விடாது அன்புடனே போந்து, நாங்கள் நுமது நிறங்கண்டு வருந்த இங்கே வந்து, குவளை மலர் சூழ்ந்த வள்ளைபோலும் எங்கள் சுற்றத்தார் மயங்க, அவர்களை வருத்தி, ஊரை யெல்லாம் இப்படி எல்லாரு மறியக் கலக்குவா னொருவ னல்லையோ என்றவாறு' என்பர் குறிப்புரைகாரர். (மே-ள்) `பெற்ற மெருமை'3 `நீர்வாழ் சாதியுள்'4 என்னும் சூத்திரங்களின் உரையில், நீர்வாழ் சாதியுள் `போத்து' எனும் சொல் வந்ததற்கு, `பகுவாய் வராஅற் பல்வரி யிரும்போத்து' என்பதனை எடுத்துக் காட்டினர், பேரா. 37. பாலை (1. தலைமகள் தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது. 2. பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉமாம்.) மறந்தவண் அமையார் ஆயினும் கறங்கிசைக் கங்குல் ஓதைக் கலிமகிழ் உழவர் பொங்கழி முகந்த தாவில் நுண்துகள் மங்குல் வானின் மாதிரம் மறைப்ப 5. வைகுபுலர் விடியல் வைபெயர்த் தாட்டித் தொழிற்செருக் கனந்தர் வீட எழிற்றகை வளியொடு சினைஇய வண்டளிர் மாஅத்துக் கிளிபோல் காய கிளைத்துணர் வடித்துப் புளிப்பதன் அமைத்த புதுக்குட மலிர்நிறை 10. வெயில்வெரி நிறுத்த பயிலிதழ்ப் பசுங்குடைக் கயமண்டு பகட்டிற் பருகிக் காண்வரக் கொள்ளொடு பயறு பால்விரைஇ வெள்ளிக் கோல்வரைந் தன்ன வாலவிழ் மிதவை வாங்குகை தடுத்த பின்றை ஓங்கிய 15. பருதியங் குப்பை சுற்றிப் பகல்செல மருத மரனிழல் எருதொடு வதியும் காமர் வேனில் மன்னிது மாணலம் நுகருந் துணையுடை யோர்க்கே. - விற்றூற்று மூதெயினனார். (சொ-ள்) 18. (தோழி), மாண் நலம் நுகரும் துணையுடையோர்க்கு - மாண்புற்ற நலத்தினைத் துய்க்கும் துணையினைப் பிரியாதார்க்கு; 1-17. கறங்கு இசைக் கங்குல் ஓதை - ஒலிக்கும் ஒலியினையுடைய வைகறையில் ஆள் அழைக்கும் ஆரவாரத்தையுடைய, கலிமகிழ் உழவர் - மிக்க களிப்புற்ற உழவர், வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி - இரவில் தங்கிய இருள் புலர்கின்ற அவ்விடியலில் வைக்கோலைப் பிரித்துக் கடாவிட்டு அலைத்தெடுத்து, பொங்கழி முகந்த தா இல் நுண் துகள் - தூற்றாப் பொலியினின்றும் முகந்த வலியற்ற நுண்ணிய கூளங்கள், மங்குல் வானின் மாதிரம் மறைப்ப - இருண்ட மேகம் போலத் திசையெங்கும் மறைப்பத் தூற்றி, தொழில் செருக்கு அனந்தர் வீட - தொழிற் செருக்கால் வந்த மயக்கம் ஒழிய, வளியொடு சினைஇய எழில் தகை வண் தளிர் மாஅத்து - தென்றற் காற்றினால் கிளைத்த அழகின் மேன்மையுற்ற வளம் பொருந்திய தளிர்களையுடைய மாமரத்தில், கிளிபோல் காய - கிளிபோன்ற வடிவினையுடைய காய்களைக் கொண்ட, கிளைத்துணர் வடித்து - கிளைக் கொத்துக்களிலிருந்து அவற்றைக் கிள்ளி எடுத்து, புளிப் பதன் அமைத்த புதுக்குடம் மலிர் நிறை - அவற்றொடு புளிக்கும் பதனைச் சேர்த்தாக்கிய புதுக்குடங்களில் மிகப் பெய்த சாரங்களை, வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ் பசுங்குடை - வெயிலினிடத்துப் பின்புறம் தோன்ற வைத்துப் பதத்திலெடுத்த மிக்க இதழ்களை யுடைய பசிய குடைகளால்; கயம் மண்டு பகட்டிற் பருகி - குளத்தில் மண்டிய கடாக்களைப் போலக் குடித்து, கொள்ளொடு பயறு காண்வர பால் விரைஇ - கொள்ளும் பயறும் அழகு பொருந்தப் பாலுடன் கலந்து ஆக்கிய, வெள்ளிக்கோல் வரைந்தன்ன வால்அவிழ் மிதவை - வெள்ளிக் கம்பியை ஓரளவாக நறுக்கி வைத்தாற் போன்ற வெள்ளிய அவிழ்க் கஞ்சியை, வாங்கு கை தடுத்த பின்றை - வளைத்துண்ட கை போதும் எனத் தடுத்த பின்னர், ஓங்கிய பருதி அம் குப்பை சுற்றி - வட்டமாய் உயர்ந்த ஞாயிறு போன்ற அழகிய நெற்குவியலை நெற்கூடாக்கிச் சுற்றி, பகல் செல - ஞாயிற்றின் வெப்பம் அகல, மருத மரநிழல் எருதொடு வதியும் - மருதமரத்தின் நிழலில் தம் எருதுகளோடு தங்கியிருக்கும், காமர்வேனில் இது - அழகிய வேனிற்காலம் இதுவாகும், மன் - அது கழிந்ததே, மறந்து அவண் அமையாராயினும் - நம் தலைவர் நம்மை மறந்து அங்கே தங்கியிராராயினும் (அதனால் நாம் பெற்றது என்?) (முடிபு) தோழி! துணையுடையோர்க்கு இது காமர்வேனில் மன், நம் தலைவர் மறந்து அவண் அமையாராயினும் (அதனால் நாம் பெற்றது என்னை?) உழவர் விடியலில் வைபெயர்த்தாட்டி, துகள் மாதிரம் மறைப்பத் தூற்றி, அனந்தர் வீட மலிர்நிறை பருகி, மிதவை தடுத்த பின்றை சுற்றி எருதொடு வதியும் வேனில் என்றியையும். (வி-ரை) கறங்கிசை - அனுகரணம். வளியொடு - வளியால். மாஅத்து - மாமரத்தில்; அத்து: சாரியை. கிளிபோலும் மாங்காய் உளதென்பதனை, `ஊடுமென் சிறுகிளி யுணர்ப்பவண் முகம் போலப்,.... கடிகயத் தாமரை கமழ்முகை கரைமாவின், வடி தீண்ட வாய்விடூஉம் வயலணி நல்லூர'1 எனவும், `கொங்கலர் சேர்ந்த மாங்கனி தன்னைப், பாங்குற விருந்த பல்பொறி மஞ்ஞையைச், செம்பொற் றட்டிற் றீம்பா லேந்திப், பைங்கிளி யூட்டுமோர் பாவையா மென்று'2 எனவும் பிற சான்றோர்கள் உவமை கூறியவாற்றானுமுணர்க. கிளிமூக்கு மாங்காய் என்னும் வழக்கும் உளது. வடித்து - உறந்து. புளிப் பதன் - புளிப்பையுடைய மாதுளங் காய் முதலிய சில் பதம். இனி, புளிக்கும் செவ்வியுண்டாக்கப்பெற்ற என்றுமாம். நிறை - ஊறின சாரம்: ஆகுபெயர். விரைஇ ஆக்கிய என ஒரு சொல் வருவித்துரைக்க. மிதவை - கூழ். வாங்கு கை தடுத்த என்றது, வேண்டுமளவு உண்ட என்றபடி. எருதொடு வதியும் என்றது, அவர்கள் இயல்பு கூறியபடி. (மே-ள்) 3`உரிப் பொருளல்லன மயங்கவும் பெறுமே' என்னுஞ் சூத்திரத்து, உம்மையாற் றழுவிய பாலை தீம் புனலுலகத்து மயங்கி வந்தது இச் செய்யுள் என்றார், நச். 38. குறிஞ்சி (1. தோழி தலைமகன் குறை கூறியது. 2. பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியதுமாம். 3. தோழி குறிபெயர்த்திட்டுச் சொல்லியதுமாம்.) விரியிணர் வேங்கை வண்டுபடு கண்ணியன் தெரியிதழ்க் குவளைத் தேம்பாய் தாரன் அஞ்சிலை யிடவ தாக வெஞ்செலற் கணைவலந் தெரிந்து துணைபடர்ந் துள்ளி 5. வருதல் வாய்வது வான்தோய் வெற்பன் வந்தன னாயின் அந்தளிர்ச் செயலைத் தாழ்வில் ஓங்குசினைத் தொடுத்த வீழ்கயிற் றூசல் மாறிய மருங்கும் பாய்புடன் ஆடா மையிற் கலுழ்பில தேறி 10. நீடிதழ் தலைஇய கவின்பெறு நீலம் கண்ணென மலர்ந்த சுனையும் வண்பறை மடக்கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரற் குலவுப் பொறைஇறுத்த கோற்றலை இருவி கொய்தொழி புனமும் நோக்கி நெடிதுநினைந்து 15. பைதலன் பெயரலன் 1கொல்லோ ஐதேய் கயவெள் ளருவி சூடிய உயர்வரைக் கூஉங்கண் அஃதெம் ஊரென ஆங்கதை யறிவுறல் மறந்திசின் யானே. -வடம வண்ணக்கன் பேரிசாத்தனார். (சொ-ள்) 1-5 : வான் தோய் வெற்பன் - வானளாவிய மலையை யுடைய நம் தலைவன், விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன் - விரிந்த கொத்துக்களையுடைய வேங்கைப் பூவினாலாய வண்டுகள் மொய்க்கும் கண்ணியையுடையனாய், தெரி இதழ்க்குவளைத் தேம்பாய் தாரன் - ஆய்ந்தெடுத்த இதழ்களையுடைய குவளைப் பூவினாலாய தேன்பாயும் தாரையுடையனாய், அம் சிலை இடவதாக - அழகிய வில் இடப்பக்கத்திருப்ப, வெம் செலல் கணை வலம் தெரிந்து - கடிய செலவினையுடைய வலியமைந்த அம்புகளை ஆராய்ந்தெடுத்துக் கொண்டு, துணை படர்ந்து உள்ளி - தலைவி நினைந்து வருந்த, வருதல் வாய்வது - இங்கு வருதல் மெய்ம்மை; 6-8. வந்தனன் ஆயின் - அங்ஙனம் வரின், அம் தளிர்ச்செயலை- அழகிய தளிர்களையுடைய அசோகினது, தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த - தாழ்தல் இல்லாது ஓங்கிய கிளையில் தொடுத்த, வீழ் கயிற்று ஊசல் மாறிய மருங்கும் - தொங்கும் கயிற்றினாலாய ஊசல் இல்லாதொழிந்த இடத்தையும்; 8-15. பாய்வு உடன் ஆடாமையின் கலுழ்பு இல தேறி - ஒருங்கு பாய்ந்து விளையாடாமையின் கலங்குதல் இலவாய்த் தெளிந்து, நீடு இதழ் தலைஇய கவின்பெறு நீலம்-நீடிய இதழ்கள் பொருந்திய அழகிய நீலப் பூக்கள், கண்என மலர்ந்த சுனையும் - கண்போல மலர்ந்த சுனையையும், வண்பறை மடக்கிளி - அழகிய சிறகினையுடைய இளைய கிளி, எடுத்தல் செல்லாத் தடக்குரல் குலவுப்பொறை - தூக்கிச் செல்ல இயலாத பெரிய கதிராகிய வளைந்த பாரத்தை, இறுத்த கோல் தலை இருவி - முறித்த கோலாகிய தலையையுடைய தட்டைகள் பொருந்திய, கொய்து ஒழி புனமும் நோக்கி - கொய் தொழிந்த வறும் புனத்தையும் நோக்கி, நெடிது நினைந்து பைதலன் பெயரலன் கொல்லோ - நீள நினைந்து துன்புற்றவனாய்ப் பெயர லாகாது வருந்துவன் அன்றே; 16-18. கய வெள் அருவி சூடிய உயர்வரை - சுனையினின்றும் வரும் வெள்ளிய அருவிகளை உச்சியிற் கொண்ட உயர்ந்த மலையில், கூஉம் கண்ணது எம் ஊரென - கூப்பிடு தூரத்திலுள்ளதே எம் ஊரென, ஆங்கு அதை அறிவுறல் யான் மறந்திசின் - அத் தலைவனைப் பிரிந்த விடத்து அதனை அறிவுறுத்தலை யான் மறந்தேன், ஐ தேய்கு - அதனால் அழகு கெடுவேனாக. (முடிபு) வான்றோய் வெற்பன் வருதல் வாய்வது; வந்தனனாயின் ஊசல் மாறிய மருங்கும் நீலம் மலர்ந்த சுனையும் கொய்தொழி புனமும் நோக்கி நெடிது நினைந்து பைதலன் பெயரலன் கொல்லோ; யான் ஆங்குக் கூவுங் கண்ணஃது எம் ஊரென அதை அறிவுறல் மறந்திசின்; ஐ தேய்கு. வெற்பன் கண்ணியன் தாரனாய்ச் சிலை இடவதாகக் கணை தெரிந்து, உள்ள வருதல் வாய்வது என்க. (வி-ரை) சங்கச் செய்யுட்களில் வேங்கைமலரில் வண்டு படுமெனக் கூறியிருக்கவும், திவாகர பிங்கல நிகண்டுகள், `சண்பகமும் வேங்கையும் வண்டுணா மலர் மரம்' எனக் கூறுதல் ஆராய்தற்குரியது. துணை - தலைவி: முன்னிலை. உள்ளி - உள்ள எனத் திரிக்க. தலைவியை நினைந்து எனப் பொருள் கொள்ளின், துணைப்படர்ந்து என்று பாடங் கொள்ளுதல் வேண்டும். தேறி என்னும் எச்சம் மலர்ந்த என்னும் பிறவினை கொண்டு முடிந்தது. கதிர்த்தலை கழிந்ததென்பார் கோற்றலை என்றார். இருவியை யுடைய புனம் எனக் கூட்டுக. கொய்தொழிபுனம் என்றது புனம் என்னும் பெயரளவாய் நின்றது. பெயரலன் கொல்லோ, பெயரமாட்டானாய் என்றுரைத்தலுமாம். கூஉங்கண்ணஃது; விரித்தல் விகாரம். அது அதை எனத் திரிந்தது; அது - அதனை, அறிவுறல்: ஈண்டுப் பிறவினை. இச் செய்யுட்குக் குறிக்கப் பெற்றுள்ள கருத்துக்கள் மூன்றும் தோழி கூற்றாகவுள்ளன. நச்சினார்க்கினியர் கருத்தின்படி இச் செய்யுள் தலைவி கூற்றாகின்றது. (மே-ள்) `மறைந்தவற் காண்டல்'1 என்னும் சூத்திரத்து `தன் குறி தள்ளிய தெருளாக்காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்கள நோக்கித் தன்பிழைப் பாகத் தழீஇத் தேறல்' என்பதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இதனுள் ஊசன் மாறுதலும் புனமும் தன் குறி தள்ளிய இடன்; மறந்திசின் என்றது தெருளாக்காலை; கூஉங் கண்ணது ஊரென உணர்த்தாமையின் இடையீடு படுவதன்றி அவன்கண் தவறுண்டோ வெனத் தன்பிழைப்பாகத் தழீஇயினாள் என்றுரைத்து, இது சிறைப் புறமாக வரைவு கடாயது என்றும், `அவன் வரம் பிறத்தல்'2 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள் தலைவி களஞ் சுட்டியதாகும் என்றும் கூறினர், நச். 39 பாலை (பொருண் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு சொல்லியது.) ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந் துள்ளியும் அறிதிரோ எம்மென யாழநின் முள்ளெயிற்றுத் துவர்வாய் முறுவல் அழுங்க நோய்முந் துறுத்து நொதுமல் மொழியனின் 5. ஆய்நல மறப்பெனோ மற்றே சேணிகந்து ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி யொண்பொறி படுஞெமல் புதையப் பொத்தி நெடுநிலை முளிபுல் மீமிசை வளிசுழற் றுறாஅக் காடுகவர் பொருந்தீ யோடுவயின் ஓடலின் 10. அதர்கெடுத் தலறிய சாத்தொ டொராங்கு மதர்புலி வெரீஇய மையல் வேழத் தினந்தலை மயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு ஞான்றுதோன் றவிர்சுடர் மான்றாற் பட்டெனக் கட்படர் ஓதி நிற்படர்ந் துள்ளி 15. அருஞ்செல வாற்றா ஆரிடை ஞெரேரெனப் பரந்துபடு பாயல் நவ்வி பட்டென இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு நிலங்கிளை நினைவினை நின்ற நிற்கண் டின்னகை யினைய மாகவும் எம்வயின் 20. ஊடல் யாங்குவந் தன்றென யாழநின் கோடேந்து புருவமொடு குவவுநுதல் நீவி நறுங்கதுப் புளரிய நன்ன ரமையத்து வறுங்கை காட்டிய வாயல் கனவின் ஏற்றேக் கற்ற உலமரல் 25. போற்றா யாகலின் புலத்தியால் எம்மே. - மதுரைச் செங்கண்ணனார். (சொ-ள்) 14. கள் படர் ஓதி - வண்டு படியுங் கூந்தலை யுடையவளே! 1-5. ஒழித்தது பழித்த நெஞ்சமொடு - பெண்கட்குத் துயர் புரியலாகாது என்ற முன்னோர் ஒழித்த கொள்கையைப் பழித்த உள்ளமோடு, வழிப் படர்ந்து - நெடுவழிச் சென்று, உள்ளியும் அறிதிரோ எம்மென - எம்மை நினைத்தும் அறிந்தீரோ என, நின் முள் எயிற்றுத் துவர்வாய் முறுவல் அழுங்க - நினது முட்போன்ற கூரிய பற்களையுடைய பவளம் போன்ற வாயின் நகை அழிய, நோய் முந்துறுத்து - நோயைத் தோற்றுவித்து, நொதுமல் மொழியல் - உண்மைக்குப் புறம்பானதொன்றை மொழியாதே, நின் ஆய் நலம் மறப்பெனோ மற்று - ஆராயப்படும் நினது அழகினை மறப்பேனோ, மறந்திலேன்; 5-13. சேண் இகந்து - நெடுந்தூரம் தாண்டி, ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி - தழைத்த மூங்கில் ஒன்றோடொன்று உரசித் தேய்வதால் அம் மூங்கில் சொரியும் ஒள்ளிய தீப்பொறி, படுஞெமல் புதையப் பொத்தி - மிக்க சருகுகள் மறையும் படி மூள, நெடு நிலை முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅ - நெடிய இடத்துள்ள உலர்ந்த ஊகம் புல் மீது காற்றானது சுழற்றிப் பரவச் செய்ய, காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின் - காட்டைக் கவரும் பெரிய தீயானது காற்றுச் சென்ற விடமெல்லாம் பரத்தலின், அதர் கெடுத்து அலறிய சாத்தொடு - நெறியினைக் கைவிட்டலறிய வாணிகச் சாத்தரொடு, ஒராங்கு - ஒரு பெற்றியே, மதர் புலி வெரீ இய மையல் வேழத்து இனம் - செருக்குற்ற புலியினைக் கண்டு அஞ்சிய மயக்கம் பொருந்திய யானைக்கூட்டம், தலைமயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு - பலவிடத்தும் திரிதலுற்ற அகன்ற இடத்தையுடைய பெரிய காட்டகத்தே, ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றாற் பட்டென - (மாலையில் மறையுங் காலத்துத்) தாழ்ந்து தோன்றும் ஞாயிறு மயங்கி மறைந்திட்டதாக; 14-25. நிற்படர்ந்து உள்ளி - நின்னை நினைந்து நினைந்து, அருஞ் செலவு ஆற்றா ஆரிடை - அரிது சென்ற அச் செலவும் இயலா தொழிந்த அரிய வழியில், ஞெரேரென - பொதுக்கென, பரந்து படு பாயல் - பரந்து கண்படும் பாயற்கண்ணே, நவ்வி பட்டென - பெண் மானைக் கண்டாலொத்த, இலங்கு வளை செறியா - விளங்குகின்ற வளை கழன்று விழுவதனை மேலே ஏற்றுச் செறித்து, இகுத்த நோக்கமொடு - தாழ்ந்த நோக்கத்துடனே, நிலம் கிளை நினைவினை நின்ற நிற்கண்டு - நிலத்தைக் காலாற் கீறும் வருத்த முடையையாய் நின்ற நின்னைக் (கனவிற்) கண்டு, இன் நகை - இனிய நகையினை யுடையாய்!, இனையமாகவும் - யாம் இங்ஙனம் வருந்தியிருப்பவும், எம்வயின் ஊடல் யாங்கு வந்தன்று என - எம்மிடத்து நீ ஊடல் செய்தல் எங்ஙனம் வந்தது எனச் சொல்லி, நின் கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி - நினது பக்கம் உயர்ந்த புருவத்துடன் திரண்டு சிறுகிய நெற்றியினைத் துடைத்து, நறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து - மணம் பொருந்திய கூந்தலைக் கோதிய நல்ல பொழுதிலே, வறுங்கை காட்டிய வாய் அல் கனவின் - வெறுங்கை யாக்கிய அப் பொய்க் கனவிடத்தே, ஏற்று ஏக்கற்ற உலமரல் - துயிலை யேற்று நின்னைக் காணாது ஏக்கற்ற வருத்தத்தினை, போற்றாய் ஆகலின் - நீ அறிவிற் கொள்ளாயாகலின், புலத்தியால் எம்மே - எம்மைப் புலக்கின்றாய். (முடிபு) கள்படர் ஓதி எம் உள்ளியும் அறிதிரோவென, முறுவல் அழுங்க, நோய் முந்துறுத்து, நொதுமல் மொழியல், நின் ஆய் நலம் மறப்பெனோ? பெருங் காட்டு அவிர்சுடர் பட்டென, நிற்படர்ந்துள்ளி செலவாற்றா ஆரிடைப்பாயல், நினைவினை நின்ற நிற்கண்டு இனையமாகவும் ஊடல் யாங்கு வந்தன்றென, நீவி, உளரிய அமையத்து, வாயல் கனவின் உலமரல் போற்றாயாகலின் எம்மைப் புலத்தி. (வி-ரை) ஒழித்தது பழித்தல் - இரவலர்க்கு இடுதற்குப் பொருளின்றி அவரை அகற்றியதனைப் பழித்தல் என்றுமாம். ஆய் நலம் - ஆயத்தாரால் ஆராயப்படும் அழகு. மற்று: வினைமாற்று. ஞெலி - தீக் கடை கோல்; ஈண்டு மூங்கிலை ஞெலியென்றார். ஞெமல்- சருகு. பொத்தி - பொத்த. முளிபுல் - மூங்கிலுமாம். சுழற்றுறா - சுழற்றி; இதனைச் சுழற்ற எனத்திரிக்க. ஓடலின் அலறிய சாத்தொடு எனவும், சாத்தொடு ஞெரே ரெனக் கண்படு பாயற் கண்ணே எனவும், நவ்வி பட்டென இகுத்த நோக்கமொடு எனவும் இயைக்க. ஞான்று தோன்று - தொங்குவது போலத் தோன்றும். மான்றால்; ஆல் : அசை. கட்படர், கள் - வண்டு. ஞெரேரென - ஒலிக்குறிப்புமாம். பரத்தல் - வேண்டியபடி கிடத்தல். படுபாயல் - கண்படு பாயல். ஓதி, இன்னகை: விளிகள். என - என்று கூறி, யென ஒருசொல் வருவிக்க. யாழ இரண்டும் அசை. கனவிற் கண்டமையின் நன்னர் அமையம் ஆயிற்று. வறும்கை காட்டுதல், கையில் ஒன்று உளது போலப் பிடித்துப் பின் வறுங்கை காட்டுதல் வழக்கு. ஈண்டு புணர்ச்சிபோல இருந்து பொய் படுத்திய கனவு. வாய் அல் - உண்மையல்லாத. ஏற்று - துயிலேற்று. துயிலேற்றமையின் கனவு பொய்யாயிற்று. (மே-ள்) `கரணத்தி னமைந்து'1 என்னும் சூத்திரத்து, `சென்ற தேஎத்து உழப்புநனி விளக்கி, இன்றிச் சென்ற தந்நிலை கிளப்பினும்' என்னும் பகுதியில், இச் செய்யுளைக் காட்டி, இதனுள் `வறுங்கை காட்டிய வாயல் கனவின்' என நனவின்றிச் சென்றவற்றைத் தலைவன் கூறியவாறு காண்க என்றார், நச். `கனவு முறித்தா லவ்விடத் தான'2 என்னும் சூத்திரத்து, காமம் இடையீடுபட்டுழித் தலைவனும் தலைவியும் கனாக் காண்டலும் உரித்து எனக் கூறித் தலைவன் கனாக் காண்டற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர், இளம். 40. நெய்தல் (தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழிக் கிழத்தி தோழிக்குச் சொல்லியது.) கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப நீனிறப் பெருங்கடல் பாடெழுந் தொலிப்ப மீனார் குருகின் மென்பறைத் தொழுதி குவையிரும் புன்னைக் குடம்பை சேர 5. அசைவண் டார்க்கும் அல்குறு காலைத் தாழை தளரத் தூங்கி3 மாலை அழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க் காமர் நெஞ்சம் கையறு பினையத் துயரஞ் செய்துநம் அருளா ராயினும் 10. அறாஅ லியரோ அவருடைக் கேண்மை அளியின் மையின் அவணுறை4 முனைஇ வாரற்க தில்ல தோழி கழனி வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்புந் தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை 15. செறிமடை வயிரிற் பிளிற்றிப் பெண்ணை அகமடற் சேக்குந் துறைவன் இன்றுயின் மார்பிற் சென்றஎன் நெஞ்சே. - குன்றியனார். (சொ-ள்) 12. தோழி - ; 1-9. கானல் மாலைக் கழிப் பூக் கூம்ப - கடற்கரைச் சோலையை அடுத்த கழியில் வரிசையாகவுள்ள பூக்கள் குவியவும், நீல் நிறப் பெரும் கடல் பாடு எழுந்து ஒலிப்ப - நீல நிறத்தையுடைய பெரிய கடல் ஒலி மிக்கு ஒலிக்கவும், மீன் ஆர் குருகின் மென்பறைத் தொழுதி - மீனை யுண்ணும் மெல்லிய சிறகினையுடைய பறவைக் கூட்டம், குவை இரும் புன்னைக் குடம்பை சேர - திரட்சி பொருந்திய பெரிய புன்னைமரத்திலுள்ள கூடுகளிற் சேரவும், அசைவண்டு ஆர்க்கும் - அசைகின்ற வண்டுகள் ஒலிக்கும், அல்குறு காலை - எல்லாம் தம் பதிகளிலே சென்று தங்குங் காலமாகிய, மாலை - மாலைப் பொழுதிலே, தாழை தளரத் தூங்கி - தாழைகள் தளர்ந்திட அசைந்து, அழிதக வந்த கொண்டலொடு - (பிரிந்திருப்பார், வருந்த வந்த கீழ்காற்றினால், கழி படர்க் காமர் நெஞ்சம் கையறுபு இனைய - மிக்க துன்பங் கொண்ட அழகிய நெஞ்சம் செயலற்று வருந்த, துயரஞ் செய்து நம் அருளாராயினும் - நமக்குப் பிரிதற் றுன்பினைச் செய்து (மீண்டு வந்து) நம்மை அருளாராயினும்; 10. அறாலியர் அவருடைக் கேண்மை - அவரது நட்பு நமக்கு ஒழியாதிருப்பதாக; 11-17. கழனி வெண் நெல் அரிநர் பின்றைத் ததும்பும் - வயல்களில் வெண்ணெல்லை அரிவோரது பின்பு நின்றொலிக்கும், தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை - பறை ஒலியினைக் கேட்டஞ்சிய நீண்ட கால்களையுடைய நாரை, செறிமடை வயிரிற் பிளிற்றி - செறிந்த மூட்டு வாயினையுடைய கொம்புபோல் ஒலித்து, பெண்ணை அகமடல் சேக்கும் துறைவன் - பனைமரத்தின் மடலகத்தே தங்கும் கடற்றுறையுடைய தலைவனது, இன்துயில் மார்பில் சென்ற என் நெஞ்சு - இனிய துயிற்குரிய மார்பின் பொருட்டுச் சென்ற என் நெஞ்சு, அளியின்மையின் அவண் உறை முனைஇ - அவர் அளி செய்திலரென்று அங்கே தங்குதலை வெறுத்து, வாரற்க தில்ல - இங்கு வாராதிருப்பதாக. (முடிபு) தோழி! மாலைக் கொண்டலால் நெஞ்சம் இனைய, (தலைவர்) துயரஞ்செய்து அருளாராயினும் அவருடைக் கேண்மை அறாலியர்; துறைவன் மார்பிற் சென்ற என் நெஞ்சு வாரற்க. கூம்ப, ஒலிப்ப, சேர, ஆர்க்கும் காலையாய மாலை எனவும், தூங்கி வந்த கொண்டல் எனவும் இயையும். (வி-ரை) நீல் : கடைக்குறை. அசை வண்டு - நீர்ப் பூக்களிலும் கோட்டுப் பூக்களிலும் தடுமாறுகின்ற வண்டு. நம் - நம்மை. உறை - உறைதல் : முதனிலைத் தொழிற்பெயர். வாரற்க என்றது இங்கு வந்தால் என்னொடு கிடந்து துயருறு மென்றவாறு. தில் - விழைவு; அசையுமாம். (உ-றை) `வெண்ணெல் அரிநர் தங் காரியஞ் செய்யப் பறை கொட்டுவிக்க, நாரை வேற்று நிலத்ததாகிய பெண்ணையிலே சென்று தங்கித் தான் வாழுமிடமாகிய மருதநிலத்தை மறந்தாற்போலத் தங்காரியஞ் செய்ய நம்மைப் பிரிவார் இல்லைப் பிரிந்த வழி நம்முடைய நெஞ்சு நம்மைவிட்டுத் தனக்கு அந்நியமாகிய அவர் மார்பிலே சென்றது என்றவாறு' என்பது குறிப்புரை. (மே-ள்) `முதல்கரு வுரிப்பொருள்'1 என்னுஞ் சூத்திரத்து, நெய்தற்கு முதலும் கருவும் உரியும் வந்ததற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும். `வைகுறு விடியல்'2 என்னுஞ் சூத்திரத்து, நெய்தற்கு மாலையும் வந்தமைக்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர், நச். 41. பாலை (தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்துக் கிழத்தியை நினைந்து சொல்லியது.) வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்பக் கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் எரிமருள் பூஞ்சினை இனைச்சிதர் ஆர்ப்ப நெடுநெல் அடைச்சிய கழனியேர் புகுத்துக் 5. குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர அரிகால் போழ்ந்த தெரிபகட் டுழவர் ஓதைத் தெள்விளி புலந்தொறும் பரப்பக் கோழிணர் எதிரிய மரத்த கவினிக் காடணி கொண்ட காண்டகு பொழுதின் 10. நாம்பிரி புலம்பின் நலஞ்செலச் சாஅய் நம்பிரி பறியா நலனொடு சிறந்த நற்றோள் நெகிழ வருந்தினள் கொல்லோ மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர் தாதின் துவலை தளிர்வார்ந் தன்ன 15. அங்கலுழ் மாமை கிளைஇய நுண்பல் தித்தி மாஅ யோளே. - 3குன்றியனார். (சொ-ள்) 13-16. மென்சிறை வண்டின் - மெல்லிய சிறகினையுடைய வண்டுகளையுடைய, தண்கமழ் பூந்துணர் - குளிர்ச்சியையுடைய மணக்கும் பூங்கொத்துக்களிலுள்ள, தாதின் துவலை - தாதுடன் கூடிய தேன்துளி, தளிர் வார்ந்தன்ன - தளிரில் ஒழுகியது போலும், அம் கலுழ் மாமை கிளைஇய - அழகு ஒழுகும் மாமை நிறத்தில் கிளைத்துத் தோன்றும், நுண்பல் தித்தி - சிறிய பல தேமற் புள்ளிகளை யுடைய, மாயோள் - நம் கிழத்தி; 1-9. வைகு புலர் விடியல் - தங்கிய இருள் புலர்ந்திடும் விடியற் காலத்தில், மை புலம் பரப்ப - எருமைகள் நிலத்தே பரந்து செல்ல, முருக்கின் கருநனை அவிழ்ந்த - முருக்க மரத்தின் பெரிய அரும்புகள் முறுக்கு நெகிழ்ந்த, எரி மருள் ஊழ் உறு பூஞ்சினை - நெருப்பை ஒத்த மலர்ந்த பூக்களையுடைய கிளைகளில், இனச் சிதர் ஆர்ப்ப - கூட்டமாய வண்டுகள் ஒலிக்க, நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் - நெடிய நெற் பயிரினை நட்ட கழனியிலுள்ள ஏர்களை, குடுமிக் கட்டிய படப்பையொடு புகுத்து - தலைகுவிந்த கட்டிகளையுடைய தோட்டத்தில் சேர்த்து, மிளிர - மண் பிறழும்படி, அரிகால் போழ்ந்த - அரிதாளையுடைய நிலத்தைப் பிளந்து உழுத, தெரிபகட்டு உழவர் - ஆராய்ந்த எருதுகளைக் கொண்ட உழவர்களது, ஓதைத் தெள்விளி - ஏர் ஓட்டும் ஓசையாகிய தெளிந்த ஒலி, புலந்தொறும் பரப்ப - இடந்தோறும் பரக்க, கவினிக் கோழ் இணர் எதிரிய மரத்த - அழகுற்றுச் செழிய பூங்கொத்துக்கள் தோன்றிய மரங்களையுடைய, காடு அணி கொண்ட - காடு அழகுபெற்ற, காண்தகு பொழுதில் - காட்சி பொருந்திய இக் காலத்தில்; 10-12. நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த நற்றோள் - நம் பிரிவு என்பதே அறியாமல் இயற்கை யழகினோடுகூடி மிகச் சிறப் புற்றிருந்த தனது நல்ல தோள்கள், நாம் பிரி புலம்பின் - இப்போது நாம் பிரிந்திட்ட தனிமையால், நலம் செலச் சாஅய் நெகிழ - அவ்வியற்கை யழகு கெட மிகவும் மெலிந்து நெகிழ்ந்திடலால், வருந்தினள் கொல்லோ - வருந்தினாளோ? (முடிபு) மாயோளாகிய நம் கிழத்தி, காடணி கொண்ட காண்டகு பொழுதில், தனது நற்றோள் நலஞ்செலச் சாஅய் நெகிழ வருந்தினள் கொல்லோ? மைபுலம் பரப்ப, சிதர் ஆர்ப்ப, தெள்விளி பரப்ப, காடணி கொண்ட பொழுது என்க. (வி-ரை) விடியலும் எருமையும் பாலைக்கண் மயங்கி வந்தன. படப்பையொடு - படப்பையில். அரிகால் - புன்செய்ப் பயிர்களை அரிந்த தாள். (மே-ள்) `ஒன்றாத் தமரினும்'1 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள் `பகைவயிற் பிரியும் தலைமகன் கூற்று' எனவும், ....... `இவ்வாறு வருவன குறித்த பருவம் பிழைத்துழி என்று கொள்ள' எனவும் கூறினர், இளம். 42. குறிஞ்சி (தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.) மலிபெயற் கலித்த மாரிப் பித்திகத்துக் கொயலரு நிலைய1 பெயலேர் மணமுகைச் செவ்வெரி நுறழுங் கொழுங்கடை மழைக்கண் தளிரேர் மேனி மாஅ யோயே 5. நாடுவறங் கூர நாஞ்சில் துஞ்சக் கோடை நீடிய பைதறு காலைக் குன்றுகண் டன்ன கோட்ட யாவையுஞ் சென்றுசேக் கல்லாப்2 புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம் நிறைய வீசிப் 10. பெரும்பெயல் பொழிந்த ஏம வைகறைப் பல்லோ ருவந்த உவகை எல்லாம் என்னுட் பெய்தந் தற்றே சேணிடை ஓங்கித் தோன்று முயர்வரை வான்றோய் வெற்பன் வந்த மாறே. - கபிலர் (சொ-ள்) 1-4. மலி பெயல் கலித்த - மிக்க பெயலாலே தழைத்த, மாரிப் பித்திகத்து - மாரிக்காலத்துப் பூப்பதாய பித்திகத்தின், கொயல் அரும் நிலைய - மிகுதியால் கொய்தல் இயலா நிலைமையையுடைய, பெயல் ஏர் மண முகை - மழைக்கு எழுச்சி பெற்ற மணம் தங்கிய அரும்பின், செவ் வெரிந் உறழும் - சிவந்த பின்புறத்தை ஒக்கும், கொழுங்கடை மழைக்கண் - வளவிய கடையினையுடைய குளிர்ந்த கண்ணினையும், தளிர் ஏர் மேனி - தளிரை யொத்த அழகிய மேனியையும் உடைய, மாஅயோயே - மாமை நிறத்தை யுடையவளே! 12-14. சேண் இடை ஓங்கித் தோன்றும் - நெடுந்தூரத்தே உயர்ந்து தோன்றும், உயர்வரை - உயர்ந்த பக்கமலைகளையுடைய, வான் தோய் வெற்பன் - வானளாவிய பெருமலையை யுடைய தலைவன், வந்த மாறே - வரைவு மலிந்து வந்தமையானே (அது கண்ட என் மகிழ்ச்சி); 5-6. நாடுவறங்கூர நாஞ்சில் துஞ்ச - மழை பெய்யாமையால் நாட்டில் வறுமைமிகக் கலப்பை தொழிலற்று ஒழிய, கோடை நீடிய பைது அறுகாலை - கோடை நீண்ட பசுமையற்ற காலத்தே : 7-9. குன்று கண்டன்ன கோட்ட - குன்றங்களைக் கண்டாற் போலும் பெரிய கரைகளை யுடையனவும், சென்று சேக்கல்லாப் புள்ள - நீரின்மையின் பறவைகள் வந்து தங்குதலில்லாதனவும், உள்இல் என்றூழ் வியன் குளம் யாவையும் - உள்ளே நீர் இல்லா தனவும் வெப்பம் மிக்கனவுமாகிய பெரிய குளங்களெல்லாம்; 9-10. நிறைய வீசிப் பெரும் பெயல் பொழிந்த - நிறையும்படி உதவிப் பெரிய மழை பொழிந்து விட்ட, ஏம வைகறை - இன்பம் மிக்க விடியற்காலத்தே, பல்லோர் உவந்த உவகை யெல்லாம் - அதனைக் கண்ட பல்லோரும் மகிழ்ந்த மகிழ்ச்சியை யெல்லாம், என்னுட் பெய்தந்தற்றே - ஒரு சேர என்னுள்ளே பெய்து வைத்தாற் போலும். (முடிபு) மாயோய்! வெற்பன் வந்த மாறே, (என் மகிழ்ச்சி) பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை, பல்லோர் உவந்த உவகை யெல்லாம் என்னுட் பெய்தந்தற்று. (வி-ரை) பித்திகம், மாரிக்காலத்தே தழைத்து அக் காலத்து அந்தியில் மலர்வது; அதன் மலரின் புறம் சிவப்பாயிருத்தலின் செவ்வரி படர்ந்த கண்ணிற்கு உவமை; இதுவே பிச்சி என்று வழங்கப் பெறுவது. நின் மழைக்கண்ணும் தளிர் மேனியும் வேறுபட்டு வருந்தாமல் வரைவொடு வந்தார் என்பது குறிக்கத் தோழி தலைவியை அங்ஙனம் விளித்தனள். வந்தமையால் எழுந்த மகிழ்ச்சி என எழுவாய் வருவித்து முடிக்கப்பட்டது. சென்று சேக்கல்லாப் புள்ள - சென்று தங்காத பறவைகளை யுடைய; பறவைகள் சென்று தங்காத என்றபடி; இது கேடில்லாதவன் என்பதனை, இல்லாத கேட்டையுடையவன் என்பது போல நின்றது. `அருங்கேடன்'1 என்பதனைச், சென்று சேக்கல்லாய் புள்ள வுள்ளில், என்றூழ் வியன்குளம்’ என்பது போலக் கொள்க எனப் பரிமேலழகர் உரைத்ததுங் காண்க. சேக்கல் - தங்கல். கோட்ட, புள்ள, குளம் என்க. வரை - மூங்கிலுமாம். மாறு : மூன்றாம் வேற்றுமைப் பொருள் படுவதோர் இடைச்சொல்; `அனையை யாகன் மாறே'2 என்பதுபோல. 43. பாலை (தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.) கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை சுடர்நிமிர் மின்னொடு வலனேர் பிரங்கி என்றூழ் உழந்த புன்றலை மடப்பிடி கைமாய் நீத்தங் களிற்றொடு படீஇய 5. நிலனும் விசும்பும் நீரியைந் தொன்றிக் குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது கதிர்மருங் கறியா தஞ்சுவரப் பாஅய்த் தளிமயங் கின்றே 1தண்குரல் எழிலி, யாமே, கொய்யகை முல்லை காலொடு மயங்கி 10. மையிருங் கான நாறு நறுநுதற் பல்லிருங் கூந்தல் மெல்லியல் மடந்தை நல்லெழில் ஆகஞ் சேர்ந்தனம் என்றும் அளியரோ வளியர் தாமே அளியின் றேதில் பொருட்பிணிப் போகித்தம் 15. இன்றுணைப் பிரியும் மடமை யோரே. - மதுரையாசிரியர் நல்லந்துவனார். (சொ-ள்) 1-8. தண் குரல் எழிலி - தண்ணிய முழக்கத்தைக் கொண்ட மேகங்கள் பெய்யும் கார்காலமானது, கடல் முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை - கடலின் நீரை முகந்து நிறைந்த சூலினையுடைய கரிய மேகம், சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி - ஒளி மிக்க மின்னலுடன் வலமாக எழுந்துசென்று ஒலித்து, என்றூழ் உழந்த புன்றலை மடப்பிடி - ஞாயிற்றின் வெம்மையால் வருந்திய புற்கென்ற தலையினையுடைய இளைய பெண் யானை, கைமாய் நீத்தம் களிற்றொடு படீஇய - மேலே உயர்த்திய தன் கையும் மறையத்தக்க ஆழ்ந்த வெள்ளத்தில் களிற்றுடன் படிந்து விளையாட, நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி - நிலத்தினும் வானினும் மழைக்கால் நீர் பொருந்திச் சேர்ந்திட, குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது - குறிய நீரையுடைய நாழிகை வட்டிலால் நாழிகை அளந்து கூறுவார் கூறலன்றி, கதிர் மருங்கு அறியாது அஞ்சுவர - ஞாயிறு உள்ள இடம் இதுவென அறியப்படாமையின் உலகம் அஞ்சுதலடைய, பாஅய் தளி மயங்கின்று - எங்கும் பரந்து பெய்யும் மழையொடு பொருந்தியது; 8-12. யாமே - நாம், கொய் அகை முல்லை காலொடு மயங்கி - கொய்யப்படும் தழைத்த முல்லை காற்றால் மயங்குதலின், மை யிருங்கானம் நாறும் நறு நுதல் - கரிய பெரிய காடு நாறுவதென்ன நாறும் நறிய நுதலினையும், பல்இருங்கூந்தல் - பல வகை முடி சான்ற கரிய கூந்தலினையும், மெல்லியல் - மென்மைத் தன்மையினையும் உடைய, மடந்தை நல் எழில் ஆகம் சேர்ந்தனம் - நம் தலைவியின் நல்ல அழகுடைய ஆகத்தினைப் பிரியாதிருக்கின்றோம்; 12-15. அளி இன்று - இரக்க மின்றி, ஏதில் பொருட்பிணிப் போகி - அயலதாகிய பொருளீட்டும் பற்றுக்கொண்டு பிரிந்து சென்று, தம் இன்துணைப் பிரியும் மடமையோர் - தம்முடைய இனிய துணைவியைப் பிரியும் மடமையை யுடையோர், என்றும் அளியரோ அளியர் - எஞ்ஞான்றும் மிகவும் இரங்கத்தக்கார். (முடிபு) எழிலி, மழை ஏர்பு இரங்கிப் பாஅய்ப் (பெய்யும்) தளி யொடு மயங்கின்று; யாம் மடந்தை ஆகஞ் சேர்ந்தனம்; துணைப் பிரியும் மடமையோர் அளியரோ அளியர். (வி-ரை) பெய்யும் தளி யென ஒரு சொல் வருவித்துரைக்க. ஒன்ற, அஞ்சுவர என்னும் செயவெ னெச்சங்கள் பெய்யும் என வருவித்த பெயரெச்ச வினைகொண்டு முடியும். மழை - மேகம். கைமாய் நீத்தம்: கை - நீர் ஆழம் காட்டுவார் கையுமாம். ஒன்றி - ஒன்ற எனத் திரிக்க. கன்னல் - நாழிகை வட்டில், நாழிகையுமாம். தளி - மழை, தண் குரல் எழிலி என்பது ஆகுபெயரால் கார்காலத்தை யுணர்த்திற்று. கொய் முல்லை, அகை முல்லை என்க. அகைத்தல் - தழைத்தல்; கிளைத்தலுமாம். காலொடு - காலால். மயங்குதல் - நெருங்குதல். அளியரோ அளியர் என்னும் அடுக்கு மிகுதி பற்றியது. கழைமாய் என்பது பாடமாயின் ஓடக் கோல் மறையும் நீத்தம் என்க. 44. முல்லை (வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.) வந்துவினை முடித்தனன் வேந்தனும் பகைவரும் தந்திறை கொடுத்துத் தமரா யினரே முரண்செறிந் திருந்த தானை இரண்டும் ஒன்றென1 அறைந்தன பணையே நின்தேர் 5. முன்னியங் கூர்தி பின்னிலை யீயாது ஊர்க பாக ஒருவினை கழிய நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி துன்னரும் கடுந்திறற் கங்கன் கட்டி பொன்னணி வல்விற் புன்றுரை யென்றாங் 10. கன்றவர் குழீஇய அளப்பருங் கட்டூர்ப் பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனக் கண்டது நோனான் ஆகித் திண்டேர்க் கணையன் அகப்படக் கழுமலந் தந்த பிணையலங் கண்ணிப் பெரும்பூட் சென்னி 15. அழும்பில் அன்ன அறாஅ யாணர்ப் பழம்பல் நெல்லின் பல்குடிப் பரவைப் பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளைத் தண்குட வாயில் அன்னோள் பண்புடை ஆகத் தின்துயில் பெறவே. - 2குடவாயிற் கீரத்தனார். (சொ-ள்) 1-4. வேந்தனும் வந்து வினை முடித்தனன் - நம் அரசனும் போர்முனையி லெய்தி வினையை வெற்றியுற ஆக்கினன், பகைவரும் தம் திறை கொடுத்துத் தமர் ஆயினர் - பகைவரும் தாம் கொடுக்கக் கடவ திறையைக் கொடுத்து நம் அரசனுக்குச் சுற்ற மாயினர், முரண் செறிந்திருந்த தானை யிரண்டும் - முன்பு மாறுபாடு மிக்கிருந்த இரு சேனைகளும், ஒன்றென - ஒரே சேனையாக, பணை அறைந்தன - முரசறையப்பட்டன; 11. பழையன் - பழையன் என்பான்; 7-11. நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி - நன்னனும் ஏற்றையும் நல்ல பூணினை யணிந்த அத்தியும், துன்அரும் கடுந்திறல் கங்கன் கட்டி - பகைவர் நெருங்கற்கரிய மிக்க வலி பொருந்திய கங்கனும் கட்டியும், வல்வில் பொன் அணி புன்றுறை - வலிய வில்லினை யுடைய பொன்னணி யணிந்த புன்றுறையும், என்று அவர் - என்று கூறப்பட்ட அவர்கள், அன்று குழீஇய - முன்பு கூடிப் பொருதற்கு நின்ற, அளப்பு அரும் கட்டூர் - அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த பாசறைக் கண்ணே, பருந்துபடப் பண்ணி - பருந்து சுற்றும்படி போர் செய்து, பட்டென - பின்பு இறந்தானாக; 12-14. கண்டு அது நோனான் ஆகி - அதனைக் கண்டு பொறா னாகி, திண் தேர்க் கணையன் அகப்பட - வலிய தேரினையுடைய கணையன் உட்பட, கழுமலம் தந்த - கழுமலம் என்னும் ஊரைக் கைப்பற்றிய, பிணையல் அம் கண்ணிப் பெரும்பூண் சென்னி - கட்டிய கண்ணியினையுடைய பெரும்பூட் சென்னி என்பானது; 15-19.அழும்பில் அன்ன - அழும்பில் என்னும் ஊரினையொத்த, அறாஅ யாணர் - நீங்காத புது வருவாயை யுடையதும், பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை - மிக்க பழைய நெல்லினையுடைய பல குடிப் பரப்பினை உடையதும், பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளை - யானை படியும் குளத்தினையும் நெருங்கிய காவற் காடுகளையும் உடையதுமாகிய, தண் குடவாயில் அன்னோள் - குளிர்ந்த குடவாயில் என்னும் ஊரை யொத்த சிறப்பினளாகிய நம் தலைவியது, பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே - நற்பண்பினை யுடைய ஆகத்தின் கண்ணே இனிய துயிலைப் பெறுதற்கு; 4-6. பாக - பாகனே, முன் இயங்கு ஊர்தி நின்தேர் - முற்படச் செல்லும் நின் தேராகிய ஊர்தியினை, பின்னிலை யீயாது - இனிப் பின்னில்லாதபடி, கழிய - இச் சுரத்தை நாம் கழிய, ஒருவினை ஊர்க - மீண்ட தேர்களை நீங்கினையாய் விரைந்து செலுத்துவாயாக. (முடிபு) பாக! வேந்தனும் வினை முடித்தனன்; பகைவரும் தமராயினர்; தானை இரண்டும் ஒன்றெனப் பணை அறைந்தன; சென்னியின் குடவாயி லன்னோள் ஆகத்து இன்றுயில் பெற நின் தேரினைப் பின்னிலை யீயாது ஒருவினை கழிய ஊர்க. (வி-ரை) பின்நிலை யீயாது - பின்நிற்றல் செய்யாது, வினைத் திரிசொல். நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை என்போர் சேரன் படைத்தலைவர்கள். என்று அவர் - என்று கூறப்பட்ட அவர் என விரித்துரைக்க. ஆங்கு : அசை. கட்டூர் - பாசறை. பழையன் - சோழன் பெரும்பூட் சென்னியின் படைத் தலைவன். கணையன் - சேரன் படை முதலி, தலைமைப் படைத் தலைவன். பிணையலங் கண்ணி - அல் அம், சாரியைகள். கழுமலம் - சேர நாட்டகத்ததோர் ஊர். அழும்பில் - பாண்டிய நாட்டூர் என்பர். பரவை - பரப்பு. பொங்கடி - யானை; யாவற்றினும் பெரிய அடியினையுடையது. பண்புடை ஆகம்: பண்பாவது கற்புடையமை யான் ஆற்றியிருத்தல்; தலைவியின் பண்பு ஆகத்தின்மேல் ஏற்றிக் கூறப்பட்டது. `வந்து வினை முடித்தனன் வேந்தனும்' என்றமையின் வேந்தற்கு உற்றுழிச் சென்ற தலைவனாதல் பெற்றாம். (மே-ள்) `கரணத்தி னமைந்து'1 என்னுஞ் சூத்திரத்துப் பேரிசை யூர்திப் பாங்கினும் தலைவன் கூற்று நிகழ்வதற்கு இதனை எடுத்துக் காட்டினர், நச். 45. பாலை (வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) வாடல் உழிஞ்சில் விளைநெற் றந்துணர் ஆடுகளப் பறையின் அரிப்பன வொலிப்பக் கோடை நீடிய அகன்பெருங் குன்றத்து நீரிலார் ஆற்று நிலப்பன களிறட் 5. டாளில் அத்தத் துழுவை உகளும் காடிறந் தனரே காதலர் மாமை அரிநுண் பசலை பாஅய்ப் பீரத் தெழின்மலர் புரைதல் வேண்டும் அலரே அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன் 10. தொன்னிலை முழுமுதல் துமியப் பண்ணிப் புன்னை குறைத்த ஞான்றை வயிரியர் இன்னிசை யார்ப்பினும் பெரிதே யானே காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந் தாதி மந்தி போலப் பேதுற்று 15. அலந்தனென் உழல்வென் கொல்லோ பொலந்தார்க் கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல் வான வரம்பன் அடன்முனைக் கலங்கிய உடைமதில் ஓரரண் போல அஞ்சுவரு நோயொடு துஞ்சா தேனே. - வெள்ளி வீதியார். (சொ-ள்) 1-6. (தோழியே!) காதலர் - நம் காதலர், வாடல் உழிஞ்சில் விளைநெற்று அம் துணர் - நீர்வற்றிய வாகையின் முதிர்ந்த நெற்றுக்களைக் கொண்ட கொத்து, ஆடு களப் பறையின் அரிப்பன ஒலிப்ப - கூத்தர் ஆடுங் களத்தில் ஒலிக்கும் பறையைப்போல விட்டு விட்டு ஒலித்திட, கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து - கோடைத் தன்மை மிக்க அகன்ற பெரிய குன்றினிடத்தே, நீர் இல் ஆர் ஆற்று - நீரில்லாத அரிய சுரநெறியில், நிவப்பன களிறு அட்டு - ஓங்கின களிற்றினைக் கொன்று, ஆள்இல் அத்தத்து உழுவை உகளும் - மக்கள் இயங்குதல் அற்ற சுரத்தே புலி திரிவதாகிய, காடு இறந்தனரே - காட்டினைக் கடந்து சென்றனரே; 6-8. மாமை அரி நுண் பசலை பாஅய் - எனது மாமை நிறமானது ஐதாய நுண்ணிய பசலை பரத்தலால், பீரத்து எழில் மலர் புரைதல் வேண்டும் - பீர்க்கின் அழகிய மலரை ஒப்பதாகும்; 8-12. அலரே - ஊரில் எழும் அலரானது, அன்னி - அன்னி என்பான், குறுக்கைப் பறந்தலை - குறுக்கைப் போர்க்களத்தில், திதியன் - திதியன் என்பானது, தொல்நிலைப் புன்னை முழுமுதல் - பழையதாகிய நிலையையுடைய புன்னைமரத்தின் பெரிய அடியை, துமியப் பண்ணிக் குறைத்த ஞான்றை - வெட்டித் துண்டித்த காலத்தே, வயிரியர் இன்னிசை ஆர்ப்பினும் பெரிதே - கூத்தர் எடுத்த இன்னிசைப் புகழ் முழக்கத்தினும் பெரிதாகும். 12-19. யானே- நான், பொலம் தார் கடல் கால் கிளர்ந்த வென்றி - பொன்னரி மாலையினையும் கடலிடத்தினைப் புடைபெயரச் செய்த வென்றியினையும், நல்வேல் - நல்ல வேலினையுமுடைய, வான வரம்பன் - வான வரம்பனது, அடல்முனைக் கலங்கிய - வலிபொருந்திய போர்முனையிற் கலங்கிய, உடைமதில் ஓர் அரண்போல - உடை மதிலாகிய ஒரு அரணைப்போல, அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேன் - அச்சம் பொருந்திய வருத்தத்தால் துயிலேனாகி, ஆதிமந்திபோல - ஆதி மந்தியைப்போல, காதலற் கெடுத்த சிறுமையொடு - காதலனைக் காணா தொழிந்த சிறுமையால், நோய் கூர்ந்து - மிக்க வருத்தமுற்று, அலந்தனென் உழல்வென் கொல்லோ - துன்புற்றுத் தேடித் திரிவேனோ? (முடிபு) காதலர் காடிறந்தனர்; மாமை மலர் புரையும்; அலர் குறுக்கைப் பறந்தலை ஆர்ப்பினும் பெரிது, யான் அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனாய், ஆதிமந்திபோலக் காதலற் கெடுத்த சிறுமையொடு அலந்து உழல்வேனோ? (வி-ரை) உழிஞ்சில் - வாகை. நெற்றந்துணர்: அம், அசை. வாகை நெற்றுக் கழைக் கூத்தரது பறைபோல ஒலிக்கும் என்னும் கருத்து, `ஆரியர், கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி, வாகை வெண்ணெற் றொலிக்கும்'1 எனக் குறுந்தொகையுள்ளும்', `உழிஞ்சில், தாறுசினை விளைந்த நெற்றம் ஆடுமகள், அரிக்கோற் பறையி னையென வொலிக்கும்'2 என, இந் நூலுள்ளும் வருதல் காண்க. உகளல் - ஈண்டுத் திரிதல். பீரத்து : அத்து, சாரியை. வேண்டும் என்பது படும் என்றதுபோல் நின்றது. ஆதிமந்தி காதலற் பிரிந்து அவனைத் தேடி யுழந்தமை, இதனாலும், `பொருநனைக் காண்டிரோவென, ஆதிமந்தி பேதுற்றினைய' எனவும், `ஆட்ட னத்தியைக் காணீ ரோவென..... காதலற் கெடுத்த, ஆதிமந்திபோல்' எனவும் இந்நூலுட் பின் வருவனவற்றாலும், `மள்ளர் குழீஇய'2 என்னும் குறுந்தொகைச் செய்யுளாலும் பெறப்படும். ஆதிமந்திபோல என்னும் உவமையால், வெள்ளி வீதியும் கணவனைக் கெடுத்துத் தேடி யுழந்தமை பெற்றாம்; அது `வெள்ளி வீதியைப்போல நன்றுஞ் செலவயர்ந் திசினால் யானே' (147) என்னும் இந் நூற் செய்யுளானும், `கன்றுமுண்ணாது'3 என்னும் குறுந்தொகைச் செய்யுளானும் பெறப்படுதலுங் காண்க. 46. மருதம் (வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.) சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் ஊர்மடி கங்குலின் நோன்தளை பரிந்து கூர்முள் வேலி கோட்டின் நீக்கி நீர்முதிர் பழனத்து மீனுடன் இரிய 5. அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை வண்டூது பனிமலர் ஆரும் ஊர யாரை யோநிற் புலக்கேம் வாருற்று உறையிறந் தொளிருந் தாழிருங் கூந்தல் பிறரும்4 ஒருத்தியை நம்மனைத் தந்து 10. வதுவை அயர்ந்தனை யென்ப அஃதியாங் கூறேம் வாழியர் எந்தை செறுநர் களிறுடை அருஞ்சமந் ததைய நூறும் ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன்5 பிண்ட நெல்லின் அள்ளூ ரன்னஎன் 15. ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க சென்றீ பெருமநின் தகைக்குநர் யாரோ. - அள்ளூர் நன்முல்லையார். (சொ-ள்) 1-6. சேற்றுநிலை முனைஇய செங்கண் காரான் - சேற்றில் நிற்றலை வெறுத்த சிவந்த கண்ணினையுடைய எருமை, ஊர்மடி கங்குலின் - ஊரார் துயின்ற இருளில், நோன் தளை பரிந்து - தனது வலிய தளையை அறுத்துக் கொண்டு, கூர்முள் வேலி கோட்டின் நீக்கி - கூரிய முள்வேலியைத் தனது கொம்பினால் அகற்றிவிட்டு, நீர்முதிர் பழனத்து - நீர்மிக்க வயலில், மீன்உடன் இரிய - மீன்கள் எல்லாம் ஓட, அம் தூம்பு வள்ளை மயக்கி - அழகிய உட்டுளையையுடைய வள்ளைக் கொடியை மயங்கச்செய்து, தாமரை வண்டு ஊது பனிமலர் ஆரும் ஊர - வண்டுகள் உள்ளிருந்து ஊதும் தாமரையின் குளிர்ந்த மலரை நிறையத் தின்னும் ஊரனே!, 7- யாரையோ நின் புலக்கேம் - நின்னை யாம் புலத்தற்கு நீ என்ன உறவினை; 7-10. பிறரும் - இவ்வூரார் பிறரும்; வார் உற்று உறை யிறந்து ஒளிரும் - நீட்சியுற்று மழைக்கால் வீழ்ச்சியினையுங் கடந்து விளங்கும், தாழ் இருங் கூந்தல் ஒருத்தியை - தாழ்ந்த கரிய கூந்தலை யுடையாள் ஒருத்தியை, நம் மனைத் தந்து - எம் மனையிற் கொணர்ந்து காட்டி, வதுவை அயர்ந்தனை என்ப - நீ அவளை வதுவை புரிந்தனை என்று கூறுவர்; 10-11. எந்தை அஃது யாம் கூறேம் வாழியர் - எந்தையே, அதனை நீ செய்தாயென யாங்கள் சொல்லேம்; நீ வாழ்வாயாக; 11-14. செறுநர் களிறு உடை அருஞ் சமம் - பகைவர்களது யானை களைக்கொண்ட அரிய போரினை, ததைய நூறும் - சிதைந்திடக் கொல்லும், ஒளிறு வாள் தானை - ஒளிவீசும் வாட்படையினையுடைய, கொற்றச் செழியன் - வெற்றி பொருந்திய செழியனது, பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன - நெற்பொலி மிக்க அள்ளூரை யொத்த; 14-16. என் ஒள் தொடி நெகிழினும் நெகிழ்க - எனது ஒள்ளிய வளையல் நெகிழ்ந்து வீழினும் வீழ்க, சென்றீ பெரும - நீ முன்னிய விடத்திற்குச் செல்வாயாக, நின் தகைக்குநர் யாரோ - நின்னைத் தடுப்பவர் யாரோதான்! (முடிபு) ஊர! நிற்புலக்கேம், யாரையோ; ஊரார் ஒருத்தியைத் தந்து வதுவை அயர்ந்தனை என்ப; எந்தை! அஃது யாம் கூறேம்; தொடி நெகிழினும் நெகிழ்க; சென்றீ பெரும; நிற் றகைக்குநர் யாரோ? காரான், பரிந்து, நீக்கி, மயக்கி, ஆரும் ஊர் என்க. (வி-ரை) எருமையைக் காரான் என்றார், `பெற்றமும் எருமையும் மரையும் ஆவே'1 என்னுஞ் சூத்திரத்தால். இராக்கால மாதலின், வண்டூது பனி மலர் என்றது, வண்டு உள்ளே ஊதும் மலர் என்க. யாரையோ: ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது; சாரியையுமாம். `யாரையோ நிற் புலக்கேம்' என்றது, நின்னொடு புலத்தற்கு ஓரியைபும் இல்லை யென்றபடி. பிறளும் ஒருத்தியை என்பது பாடமாயின், பிறளாகிய ஒருத்தியை என்க. வதுவை அயர்ந்தனையென்று கூறுவர்; கூறுபவர் அச்செய்தியை நம்மனைக்கட் கொணர்ந்து கூறுவர் எனலுமாம். `அன்னை யென்னை என்றலு முளவே'1 என்னுஞ் சூத்திரத்து, உம்மையாற் பிறவுமுள வென்பது பெறுதலின், தலைவனை எந்தை என்றா ளென்க. `எந்தைதன் உள்ளங் குறைபடா வாறு'2 எனக் கலியுள்ளும் வருவது காண்க. நெகிழ்தல் - கழலுதல். என் தொடி யென்றாள், தான் அவள் என்னும் வேற்றுமையின்மையால். இனி, ஒண்டொடி யென்பதனை ஆகுபெயரால் தலைவியெனக் கொண்டு, அவள் மெலியினும் மெலிகவென்று உரைத்தலுமாம். செல் என்பது சென்றீ எனத் திரிந்து நின்றது, யாரோ: ஆசிரியம் ஓகாரத்தால் முடிந்தது. (உ-றை) `காரான் தனக்கு நிலையென்று புகுதப்பட்ட கொட்டிலை நீராலும் சாணாகத்தாலும் தானே சேறாக்கிக் கொண்டு தளையையும் அறுத்துக்கொண்டு, பழனத்துக்குக் காவலாகிய வேலியையும் கோட்டாலெடுத்து மீன்கள் இரியத் தாமரையைச் சூழ்ந்த வள்ளையை மயக்கி, மலர்ச்சியின்றி வண்டொடு குவிந்த தாமரையை ஆர்ந்தாற் போல, நீயே ஆதரித்துக் கொள்ளப்பட்ட இவளை, நீ தானே வேறுபடுத்தி, நாணமாகிய தளையையும் அறுத்துக்கொண்டு பரத்தையர்க்குக் காவலாகிய விறலியையும் பாணனாகிய கோட்டாலே நீக்கி, அப் பரத்தையருட னுறையும் தோழிமார் இரிய, அப் பரத்தை யருடைய தாய்மாரையும் மயக்கி, அகமலர்ந்து உன்னை எதிரேற்றுக் கொள்ளாத மகளிரை நுகர்வானொருத்தன் அல்லையோ என்றவாறு' என்றனர், குறிப்புரைகாரர். (மே-ள்) "அவனறி வாற்ற"3 என்னும் தலைவி கூற்று நிகழுமிடம் கூறுஞ் சூத்திரத்து, செல்லாக் காலை செல்கென விடுத்தலும், என்ப தற்குத் `தலைவன் செல்லான் என்பது இடமும் காலமும் பற்றி அறிந்த காலத்து, ஊடல் உள்ளத்தாற் கூடப் பெறாதாள், செல்கெனக் கூறி விடுத்து ஆற்றுதற் கண்ணும்' எனப் பொருள் கூறி, அதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர், நச். `உறுகண் ணோம்பல்'4 என்னுஞ் சூத்திரத்து, தோழி அறிவுடைய ளாகக் கூறற்கு உதாரணமாக, `பிண்ட நெல்லின்.... தகைக்குநர் யாரோ' என்னும் பகுதியைக் காட்டி, என்பது `உறுகண் காத்தற் பொருட்டாகத் தலைவி வருந்தினும் நீ செல்லென்றாள்; தலைவன் செல்லாமை அறிதலின்' என்று அவருரைத்தமை அவர் கற்பியலிற் கூறியதனோடு கூற்றுவகை பால் மாறுபடுகிறது. 1"கிழவோட் குவம மீரிடத் துரித்தே" என்னும் சூத்திரத்து, தலைமகள் மருதத்து உள்ளுறை உவமம் கூறற்கு, `தாமரை வண்டூது.... புலக்கேம்' என்பதனை எடுத்துக் காட்டினர், பேரா. 47. பாலை (தலைமகன் இடைச்சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது.) அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப வினையிவண் முடித்தன மாயின் வல்விரைந்து எழுவினி வாழிய நெஞ்சே ஒலிதலை அலங்குகழை நரலத் தாக்கி விலங்கெழுந்து 5. கடுவளி உருத்திய கொடிவிடு கூரெரி விடர்முகை அடுக்கம் பாய்தலின் உடனியைந்(து) அமைக்கண் விடுநொடி கணக்கலை அகற்றும் வெம்முனை அருஞ்சுரம் நீந்திக் கைம்மிக் ககன்சுடர் கல்சேர்பு மறைய மனைவயின் 10. ஒண்தொடி மகளிர் வெண்திரிக் கொளாஅலிற் குறுநடைப் புறவின் செங்காற் சேவல் நெடுநிலை வியனகர் வீழ்துணைப் பயிரும் புலம்பொடு வந்த புன்கண் மாலை யாண்டுளர் கொல்லெனக் கலிழ்வோள் எய்தி 15. இழையணி நெடுந்தேர்க் கைவண் செழியன் மழைவிளை யாடும் வளங்கெழு சிறுமலைச் சிலம்பிற் கூதளங் கமழும் வெற்பின் வேய்புரை பணைத்தோள் பாயும் நோயசா வீட முயங்கும் பலவே. -ஆலம்பேரிச் சாத்தனார். (சொ-ள்) 3. நெஞ்சே வாழிய - ; 1-2. அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப - சோர்தலில்லாத நம் உள்ளம் மேலும் மேலும் (ஊக்கத்தாற்) சிறப்ப, வினை இவண் முடித்தனமாயின் - இவ்விடத்தே வினையைச் செய்து முடித் தோமாயின்; 3-8. ஒலிதலை அலங்கு கழை நரலத் தாக்கி - தழைத்த தலை யினையுடைய அசையும் மூங்கிலை ஒலி யுண்டாகத் தாக்கி, விலங்கு எழுந்து - பக்கங்களில் எழுந்து, கடுவளி உருத்திய கொடிவிடு கூர் எரி - சூறாவளி வெப்பமுறச் செய்த கொழுந்து விட்டெரியும் மிக்க தீ; விடர்முகை அடுக்கம் பாய்தலின் - பிளப்பையும் முழைஞ்சினையு முடைய மலைப் பக்கங்களிற் பரத்தலின், அமைக் கண் விடு நொடி - மூங்கிலின் கணுக்கள் வெடித்தலால் எழும் ஒலி, கணக்கலை அகற்றும் - கூட்டமாகிய கலைமான்களைத் துரத்தும், வெம்முனை அரும்சுரம் நீந்தி - கொடிய போர் நிகழும் இடங்களாகிய அரிய சுரத்தினைக் கடந்து; 8. கை மிக்கு - அளவு கடந்து; 9-13. அகன் சுடர் கல் சேர்பு மறைய - பெரிய ஞாயிறு மேற்கு மலையினைச் சேர்ந்து மறைந்திட, மனைவயின் ஒள் தொடி மகளிர் - மனையிடத்து ஒளி பொருந்திய வளைகளை யணிந்த மகளிர், வெண்திரிக் கொளாஅலின் - விளக்கின்கண் வெள்ளிய திரியைக் கொளுவுதலின், குறுநடைப் புறவின் செங்காற் சேவல் - குறுக அடியிட்டு நடக்கும் சிவந்த காலினை யுடைய புறாவின் சேவல், நெடுநிலை வியன்நகர் - உயர்ந்த மேல் நிலைகளையுடைய பெரிய மனையின்கண், வீழ்துணைப் பயிரும் - தம்பால் அன்புள்ள பெடையை அழைக்கும், புலம்பொடு வந்த புன்கண் மாலை - தனிமையொடு வந்த துன்பத்தைத் தரும் மாலையில்; 14. யாண்டு உளர் கொல் என - நம் தலைவர் இப்பொழுது எவ்விடத்துள்ளாரோ என நினைந்து, கலிழ்வோள் எய்தி - கலங்கி அழுது கொண்டிருக்கும் தம் தலைவியை அடைந்து; 15-19. இழை அணி நெடுந்தேர்க் கைவண் செழியன் - இழைகள் அணியப்பெற்ற நீண்ட தேரினையும் கை வண்மையையு முடைய செழியனது, மழை விளையாடும் வளங்கெழு சிறுமலை - மழை தவழ்ந்திடும் வளம் மிக்க சிறுமலை என்னும் பெயருடைய, சிலம்பிற் கூதளம் கமழும் வெற்பின் - பக்க மலையிலே *கூதளஞ் செடி கமழப் பெறும் மலையிலுள்ள, வேய் புரை பணைத்தோள் - மூங்கிலை ஒத்த பெரிய தோளில், பாயும் நோய் அசா வீட - பரவியுள்ள நோய் வருத்தம் நீங்க; முயங்குகம் பல - பன்முறையும் முயங்குவோம்; (ஆதலின்) 2-3. இனி வல் விரைந்து எழு - இப்பொழுது வினையின் பொருட்டு என்னுடன் மிக விரைந்து எழுவாயாக. (முடிபு) நெஞ்சே! இவண் வினைமுடித்தனமாயின், இவ்வரிய சுரத்தினைக் கடந்து, நெடு நிலை வியனகரில் புன்கண் மாலையில், கலிழ்வோள் எய்திப் பணைத் தோள் நோயசா வீட, முயங்குகம் பலவே; ஆகலின் விரைந்து எழு. (வி-ரை) விலங்கெழுந்து பாய்தலின் என இயையும். கடுவளி விலங்கெழுந்து உருத்திய என்றுமாம். விடராகிய முகை என்றுமாம். முகை - குகை. கைம்மிக்குக் கலிழ்வோள் எனக் கூட்டுக. செழியன் சிறுமலை யாகிய வெற்பின் என்று இயைக்க. சிறுமலை, பெயர். புறவின் சேவல் வீழ் துணைப் பயிரும் மாலை என்றது, தலைவர் நம்மை விரும்பி அணைந்திலரே எனத் தலைவி எண்ணி இரங்குவள் என்பதனைப் புலப்படுத்தி நின்றது. `இரைவேட் டெழுந்த சேவ லுள்ளிப், பொறிமயி ரெருத்திற் குறுநடைப் பேடை... தயங்க விருந்து புலம்பக் கூஉம்'1 என்பது இதனொடு ஒத்து நோக்கற்பாலது. 48. குறிஞ்சி (செவிலித் தாய்க்குத் தோழி அறத்தொடு நின்றது.) அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள் பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி அதன்றிறம் யானுந் தெற்றென உணரேன் மேனாள் 5. மலிபூஞ் சாரலென் தோழி மாரோ டொலிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழிப் புலிபுலி என்னும் பூசல் தோன்ற ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆயிதழ் ஊசி போகிய சூழ்செய் மாலையன் 10. பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன் குயமண் டாகஞ் செஞ்சாந்து நீவி வரிபுனை வில்லன் ஒருகணை தெரிந்துகொண்(டு) யாதோ மற்றம் மாதிறம் படரென வினவி நிற்றந் தோனே அவற்கண்டு 15. எம்முள் எம்முள் மெய்ம்மறை பொடுங்கி நாணி நின்றனெ மாகப் பேணி ஐவகை வகுத்த கூந்தல் ஆய்நுதல் மையீர் ஓதி மடவீர் நும்வாய்ப் பொய்யும் உளவோ என்றனன் பையெனப் 20. பரிமுடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து நின்மகள் உண்கண் பன்மாண் நோக்கிச் சென்றோன் மன்றஅக் குன்றுகிழ வோனே பகல்மாய் அந்திப் படுசுடர் அமையத் தவன்மறை தேஎம் நோக்கி மற்றிவன் 25. மகனே தோழி என்றனள் அதனள வுண்டுகோள் மதிவல் லோர்க்கே. -தங்கால் முடக் கொற்றனார். (சொ-ள்) 1-3. அன்னாய் வாழி - அன்னையே வாழ்வாயாக; வேண்டு அன்னை - அன்னையே யான் கூறுவதனை விரும்பிக் கேள்; நின் மகள்-, பழங்கண் கொண்டு - துன்பம் எய்தி, பாலும் உண்ணாள் - பாலையும் பருகாளாய், நனி பசந்தனள் என வினவுதி - மிகவும் பசந்துள்ளாள் என வினவுகின்றனை; 3-7. அதன் திறம் யானும் தெற்றென உணரேன் - அது வந்த வழியினை யானும் தெளிவாக உணர்ந்திலேன், மேல் நாள் - முன்பு ஒரு நாள், மலிபூஞ் சாரல் - பூக்கள் நிறைந்த மலைச் சாரலில், என் தோழிமாரோடு - என் தோழியருடன், ஒளிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி - தழைத்த கிளைகளை யுடைய வேங்கையின் பூவினைக் கொய்யச் சென்ற காலை, புலி புலி என்னும் பூசல் தோன்ற - புலி புலி என்னும் ஆரவாரந் தோன்ற; 8-14. கண்போல் - மகளிர் கண்ணினைப் போலும், ஒண் செங் கழுநீர் ஆய் இதழ் - ஒளிபொருந்திய அழகிய செங்கழுநீர்ப் பூக்களை, ஊசி போகிய சூழ் செய் மாலையன் - ஊசியாற் கோத்துச் சுற்றிக் கட்டி மாலையனாய், பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன் - தலையின் ஒரு பக்கத்தே கொண்ட வெட்சிப்பூவாலாய கண்ணியனாய், குயம் மண்டு ஆகம் - மகளிர் முலைகள் பாய்தற்குரிய மார்பில், செஞ்சாந்து நீவி - சிவந்த சந்தனத்தைப் பூசி, வரிபுனை வில்லன் - வரிந்து புனைந்த வில்லையுடையனாய், ஒரு கணை தெரிந்து கொண்டு - ஒப்பற்ற கணையினை ஆய்ந்து கைக்கொண்டு (ஒரு தலைவன் தோன்றி), அம் மா படர் திறம் யாதோ என - அப் புலி சென்ற வழி யாதோ என்று, வினவி நிற்றந்தோன் - வினவி நின்றனன்; 14-16. அவற் கண்டு - யாங்கள் அவனைக் கண்டு, எம்முள் எம்முள் மெய் மறைபு ஒடுங்கி - எங்களுள் ஒருவர் முதுகில் ஒருவர் உடல் மறைந்து ஒடுங்க, நாணி நின்றனெம் ஆக - நாணுற்று நின்றேமாக; 16-19. பேணி ஐவகை வகுத்த கூந்தல் - விரும்பி ஐவகையாக வகுத்த கூந்தலினையும், ஆய் நுதல் - அழகிய நெற்றினையு முடைய, மை யீர் ஓதி மடவீர் - கரிய நெய்த்த கூந்தலையுடைய மடவீரே, நும் வாய் பொய்யும் உளவோ என்றனன் - நுமது வாயிற் பொய்ச் சொற்களும் உளவாமோ என்று கூறி; 19-22. அக் குன்று கிழவோன் - மலை நாட்டிற்குரியனாகிய அவன், பரிமுடுகு பை யெனத் தவிர்த்த தேரன் - பரிகளின் வேகத்தை அடக்கி மெல்லெனச் செலுத்தும் தேரனாகி, நின் மகள் உண்கண் - நின் மகளது மையுண்ட கண்களை, எதிர் மறுத்துப் பன்மாண் நோக்கி - நோக்கியபின் எதிர்நோக்கலாகப் பலமுறை நோக்கா நின்று; சென்றோன் - சென்றனன்; 23-25. பகல் மாய் அந்தி - பகற்பொழுது மாய்கின்ற அந்தியாகிய, படுசுடர் அமையத்து - ஞாயிறு மறையும் பொழுதிலே, அவன் மறை தேஎம் நோக்கி - அவன் மறைந்திடுந் திசையை நோக்கி, தோழி இவன் மகனே என்றனள் - தோழியே இவன் ஒரு ஆடவனே என்றனள்; 26. மதி வல்லோர்க்கு - ஆராய்ந்து அறியும் அறிவு மிக்கோர்க்கு, அதனளவு உண்டு கோள் - அதனளவாக ஓர் கோட்பாடு உண்டு. (முடிபு) அன்னாய் வாழி! வேண்டு, நின் மகள் பசந்தனளென வினவுதி; யானும் தெற்றென உணரேன்; மேனாள் தோழிமாரோடு சென்றுழி, பூசல் தோன்ற, ஒரு தலைவன் வினவி நிற்றந்தோன்; அவற் கண்டு, ஒடுங்கி நின்றனெமாக, நும்வாய்ப் பொய்யும் உளவோ என்றனன்; அக் குன்று கிழவோன் தேரன், நோக்கிச் சென்றனன்; தலைவி, அவன் மறை தேஎம் நோக்கி, இவன் மகனே என்றனள்; வல்லோர்க்குக் கோள் உண்டு. (வி-ரை) பசந்தனள் என வினவுதி - பசந்தனள் அதன் காரணம் யாதென வினவுகின்றாய் என விரித்துரைக்க. வேங்கை மரத்திற் பூக்கொய்வார், புலி புலி யென்று கூவின், அதன் கிளை தாழ்ந்து கொடுக்கும் என்பது வழக்கு. கழுநீர் இதழ் என்க. இதழ் - பூ. ஊசி போகிய - அல்லியைக் கழித்துத் தொடுத்த என்றுமாம்; ஊசி - ஊசி போன்ற அல்லி. குயம் மண்டு என்பது மார்பிற்கு இயற்கையடை. நீவி - பூசி; உதிர்த்து என்றுமாம். மா படர் திறம் என மாறுக. நிற்றந்தோன் - நிற்றல் தந்தோன்; நின்றோன். பேணி - புழுகு முதலியவற்றாற் பேணி என்றுமாம். கூந்தல் என முன் வந்தமையின் `மையீரோதி மடவீர்' என்றது பெயர் மாத்திரையாகி நின்றது. எதிர்மறுத்து நோக்குதலாவது, தலைவி தன்னை நோக்காதிருக்க, தான் அவளை நோக்குதல். தலைவன் நோக்குழித் தலைவி எதிர் நோக்காள் என்பதனை, `யானோக்குங் காலை நிலனோக்கும்'1 என்பதனா லறிக. (மே-ள்) `எளித்த லேத்தல்'2 என்னும் அறத்தொடு நிலை கூறுஞ் சூத்திரத்து, ஏதீடு என்பதற்குக் காரணம் இட்டு உணர்த்தல் என்று பொருள் கூறி, இதனைப் புலி காத்தற்கு வந்தானென இட்டுரைத்தது என்றும், `உயர்மொழிக்குரிய'3 என்னுஞ் சூத்திரத்து `அவன் மறை தேஎம் நோக்கி மற்றிவன் - மகனே தோழி யென்றனள்' என்பது, தலைவி ஐயத்துக்கண் தெய்வமென்று துணிந்தாள் அல்லள் என்றும், கூறினர், நச். `இன்பத்தை வெறுத்தல்'4 என்னுஞ் சூத்திரத்து, `அன்னாய்...... வினவுதி' என்றது, பசியட நிற்றல் என்னும் மெய்ப்பாடாமென்றும், `பிறப்பே குடிமை'1 என்னுஞ் சூத்திரத்து, `நின்மகள்....... என்றனள்' என்பது, உருவு நிறுத்த காமவாயில் என்றும் கூறினர், பேரா. `எளித்தல் ஏத்தல்'2 என்னுஞ் சூத்திரத்து, இது தலைவனை உயர்த்துக் கூறுதல் என்றும், `உற்றுழியல்லது'3 என்னுஞ் சூத்திரத்து `அன்னாய் வாழி..... வினவுதி' என்றவழி செவிலி குறிப்பினால் உணர்ந்தவாறு இஃது என்றும் கூறினர், இளம். 49. பாலை (உடன்போயின தலைமகளை நினைந்து செவிலித்தாய் மனையின்கண் வருந்தியது.) கிளியும் பந்துங் கழங்கும் வெய்யோள் அளியும் அன்புஞ் சாயலும் இயல்பும் முன்னாள் போலாள் இறீஇயரென் உயிரெனக் கொடுந்தொடைக் குழவியொடு வயின்மரத் தியாத்த 5. கடுங்கட் கறவையிற் சிறுபுறம் நோக்கிக் குறுக வந்து குவவுநுதல் நீவி மெல்லெனத் தழீஇயினே னாக என்மகள் நன்னர் ஆகத் திடைமுலை வியர்ப்பப் பல்கால் முயங்கினள் மன்னே அன்னோ 10. விறன்மிகு நெடுந்தகை பலபா ராட்டி வறனிழல் அசைஇ வான்புலந்து வருந்திய மடமான் அசாஇனந் திரங்குமரல் சுவைக்குங் காடுடன் கழிதல் அறியின் தந்தை அல்குபத மிகுத்த கடியுடை வியனகர்ச் 15. செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போலக் கோதை யாயமொ டோரை தழீஇத் தோடமை அரிச்சிலம் பொலிப்ப அவள் ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே. -4வண்ணப்புறக் கந்தரத்தனார். (சொ-ள்) 1-3. கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள் - கிளி பந்து கழங்கு எனும் இவற்றை மிக விரும்பிக் கைவிடாதவளாகிய என் மகள், அளியும் அன்பும் சாயலும் இயல்பும் - அருள் அன்பு மென்மை செயல் எனும் இவற்றால், முன்னாள் போலாள் - முன்னாட்களைப் போலாது வேறுபட்டுளாள், இஃதென்னோ? இறீஇயர் என் உயிர்என - என் உயிர் கழிவதாக என்று கூறி; 4-7. கொடுந் தொடைக் குழவியொடு - வளைந்த தொடையினை யுடைய கன்றுடன், மரத்து வயின் யாத்த - மரத்திடத்தே கட்டப் பெற்ற, கடுங்கண் கறவையின் - விரைந்து விரைந்து கன்றைப் பார்த்திருக்கும் பசுவைப்போல, சிறுபுறம் நோக்கி - அவள் முதுகினைப் பார்த்து, குறுக வந்து குவவு நுதல் நீவி - அண்மையில் வந்து வளைந்த நெற்றியினைத் தடவி, மெல் எனத் தழுவினேன் ஆக - மெத்தெனத் தழுவிக் கொண்டேனாக; 7-9. என் மகள் - என்னுடைய மகள், ஆகத்து முலையிடை வியர்ப்ப - ஆகத்தே முலையிடை வியர்வுண்டாக, பல்கால் நன்னர் முயங்கினள் மன்னே அன்னோ - பன்முறை நன்கு தழுவிக் கொண்டனள், அந்தோ, அது கழிந்ததே; 10-13. வான்புலந்து வருந்திய - மேகத்தை வெறுத்து வருந்திய, மடமான் அசாஇனம் - தளர்ச்சியுற்ற இளைய மானின் கூட்டம், திரங்கு மரல் சுவைக்கும் காடு - வற்றிய மரற்செடியினைச் சுவைத்துப் பார்க்கும் காட்டில், விறல் மிக நெடுந்தகை பல பாராட்டி - வலிமை மிக்க பெருந்தகையாய தலைவன் இவளைப் பலபடியாகப் பாராட்டி, வறன் நிழல் அசைஇ - உலர்ந்த நிழலிலே தங்கி, உடன்கழிதல் அறியின் - இவளை உடன் கொண்டு கழிதலை அறியின்; 13-18. தந்தை - இவள் தந்தையது, அல்கு பதம் மிகுத்த கடியுடை வியன் நகர் - தங்கும் உணவு மிகுந்துள காவல் பொருந்திய பெரிய மனையில், செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல - செல்லும் இடந்தொறும் இடந்தொறும் உடம்பின் நிழலைப் போலச் சென்று, கோதை ஆயமொடு ஓரை தழீஇ - கோதையையுடைய ஆயத் தாரோடு விளையாடும் விளையாட்டினை மேற்கொண்டு, தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப - தொகுதி வாய்ந்த பரலினையுடைய சிலம்பு ஒலிக்க, அவள் ஆடுவழி ஆடுவழி - அவள் விளையாடும் இடந்தோறும், அகலேன் மன்னே - அகலாதிருப்பேன்; அது கழிந்ததே; (முடிபு) வெய்யோள் முன்னாட் போலாள், உயிர் இறீஇய ரெனக் கறவையின் நோக்கி, வந்து, நீவித் தழீஇனேனாக, என் மகள் வியர்ப்ப, முயங்கினள் மன்னே; காடுடன் கழிதல் அறியின் வியனகர் செல்வுழிச் செல்வுழி நிழல் போலத் தழீஇ, ஆடுவழி ஆடுவழி அகலேன்; மன்னே. நெடுந்தகை, பாராட்டி, அசைஇ, கழிதல் எனவும், மெய்ந்நிழல் போல அகலேன் எனவும் கூட்டுக. (வி-ரை) இயல்பு - செய்தி. `குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க் கொடை,'1 `ஆவும் எருமையும் அவைசொலப் படுமே' என்பவற்றால், குழவி யென்றார். மரத்துவயின் எனவும், முலையிடை எனவும் மாறுக. கடுங்கண் : கடுமை - விரைவு. வியர்ப்பவும் பல்கால் முயங்கியது, போக்கை நினைந்து என்க. மன் இரண்டும் கழிவின்கண் வந்தன. அல்கு பதம் - வைத்திருந்துண்ணும் உணவு; மிக்க உணவு. உடன் கழிதல் - உடன்கொண்டு கழிதல். பாராட்ட எனத் திரித்து, இருவரும் கழிதல் என் றுரைத்தலுமாம். அடுக்குகள் பன்மை குறித்தன. அன்னோ : இரக்கப் பொருட்டு. (மே-ள்) `கொண்டு தலைக் கழியினும்'1 என்னுஞ் சூத்திரத்து `அல்குபத மிகுந்த கடியுடை வியனகர்' என நெல்லுடைமை கூறிய அதனானே வேளாண் வருணமென்பது பெற்றாம்' எனவும், `எஞ்சி யோர்க்கும் எஞ்சுத லிலவே'2 என்னுஞ் சூத்திரத்து, செவிலி கூற்று நிகழ்வதற்கு இப் பாட்டினை எடுத்துக் காட்டி, `இவ் வகப்பாட்டு உடன் போன தலைவியை நினைந்து செவிலி மனையின்கண் மயங்கியது' எனவும் கூறினர். நச். 50. நெய்தல் (தோழி பாணனுக்குச் சொல்லியது) கடல்பா டவிந்து தோணி நீங்கி நெடுநீர் இருங்கழிக் கடுமீன் கலிப்பினும் வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும் மாணிழை நெடுந்தேர் பாணி நிற்பப் 5. பகலும் நம்வயின் அகலா னாகிப் பயின்றுவரும் மன்னே பனிநீர்ச் சேர்ப்பன் இனியே, மணப்பருங் காமந் தணப்ப 3நீந்தி வாரா தோர்நமக் கியாஅரென் னாது மல்லல் மூதூர் மறையினை சென்று 10. சொல்லின் எவனோ பாண எல்லி மனைசேர் பெண்ணை 4மடிவாய் அன்றில் துணையொன்று பிரியினுந் துஞ்சா காணெனக் கண்ணிறை நீர்கொடு கரக்கும் ஒண்ணுதல் அரிவையான் என்செய்கோ வெனவே. - 5கருவூர்ப் பூதஞ்சாத்தனார். (சொ-ள்) 10. பாண - பாணனே!, 1-6. பனி நீர்ச் சேர்ப்பன் - குளிர்ந்த கடற்கரையையுடைய நம் தலைவன், கடல்பாடு அவிந்து - (முன்பு) கடலொலி அவிய, தோணி நீங்கி - தோணி கடலிற் செல்லாதொழிய, நெடுநீர் இருங்கழி - மிக்க நீரினையுடைய பெரிய கழியில், கடுமீன் கலிப்பினும் - சுறா முதலியன செருக்கித் திரியினும், வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும் - கொடிய வாயினராய பெண்டிர் அலர் தூற்றினும், மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப - மாண்ட இழையினை யுடைய நீண்ட தேர் தாழ்த்து நிற்க, பகலும் நம்வயின் அகலானாகி - பகற்காலத்தும் நம்மிடத்து நின்றும் பிரியானாகி, பயின்று வரும் மன்னே - அடுத்தடுத்து வருவன், அது கழிந்தது; 7-14. இனி - இப்பொழுது, மணப்பு அருங் காமம் - களவுக் காலத்துக் கூடுதற்கரிய வேட்கை, தணப்ப - நீங்குதலால், நீந்தி வாராதோர் - தாம் சென்றிருக்கும் இடத்தைக் கடந்து வாராதொழிவார், நமக்கு யார் என்னாது - நமக்கு என்ன உறவினர் என்னாது, ஒள் நுதல் அரிவை - ஒள்ளிய நெற்றியையுடைய தலைவி, எல்லி - இரவில், மனை சேர் பெண்ணை - மனையைச் சார்ந்துள்ள பனைமரத்தில், ஒன்று துணை பிரியினும் - ஒன்றி யிருத்தலினின்றும் துணை சிறிது பிரியினும், மடிவாய் அன்றில் - வளைந்த வாயினையுடைய அன்றில்கள், துஞ்சா காண் என - துயிலாதன வாதலை நெஞ்சே காண்பாயாக என்று, கண் நிறை நீர்கொடு கரக்கும் - கண்ணில் நிறையும் நீரைக்கொண்டு தனது ஆற்றாமையைப் பிறரறியாமை மறைக்கும், யான் என் செய்கோ எனவே - இதற்கு யான் என் செய்வேன் என்று, மல்லல் மூதூர் - வளம் பொருந்திய பழமையான ஊரின்கண், மறையினை சென்று - மறைந்து சென்று, சொல்லின் எவனோ - தலைவர்க்குச் சொல்லின் என்ன தவறாம்? (முடிபு) பாண! சேர்ப்பன் கடுமீன் கலிப்பினும், கவ்வை சாற்றினும், பாணி நிற்ப, பகலும் அகலானாகிப் பயின்று வரும் மன்; இனி, அவன்பால் நீ மறையினை சென்று, அரிவை `துஞ்சா காண் எனச் சொல்லிக் கரக்கும்' யான் என் செய்கோ எனச் சொல்லின் எவனோ? தணப்ப, நீந்தி வாராதோர் யார் என்னாது கண்கள் அழாநிற்க அதனைக் கரக்கும் எனவும், மறையினை சென்று சொல்லின் எவனோ எனவும் இயையும். (வி-ரை) கழி - கடற் குட்டம். கடுமீன் - சுறா முதலியன. தோணியிற் சென்று மீன் பிடிப்பாரின்மையின் அவை செருக்கும் என்றார்; தலைவன் வருகைக்கு அஃதோர் இடையீடு; களவுக் காலத்து அலர் முதலானவற்றிற்குச் சிறிதும் அஞ்சாது பகலினும் அகலாதிருந்தான் என்க. மன் - கழிவு. மணப்பரும் - கூடுதற்கரிய; மிக்க என்றபடி. தணப்ப - நீங்குகையாலே. நீந்தி - தாம் சென்றிருக்குமிடத்தைக் கழித்து; பரத்தையர் சேரியைக் கடந்து. நீங்கி என்பது பாடமாயின் நம்மைப் பிரிந்து என்க. மல்லல் மூதூர் - பரத்தையரின் ஆரவார மிகுதியையுடைய சேரி. மறையினை - அவரறியாதபடி மறைந்து. தலைவனைப் பிரிந்த ஆற்றாமையால் கண்கள் அழாநிற்கவும், அன்றில் பிரியினும் துஞ்சா காணெனச் சொல்லி, அதன் பொருட்டுக் கண்ணீர் சொரிவதுபோற் காட்டித் தனது ஆற்றாமையைத் தலைவி மறைக்கும் என்க. `அரிவை கரக்கும்; இதற்கு யான் என் செய்கோ' எனச் சென்று சொல்லின் எவன் எனப் பாணனை நோக்கித் தோழி கூறினாள். இனி, துஞ்சா காண்; இதற்கு என் செய்கோ எனச் சொல்லி அரிவை கரக்கும், எனச் சொல்லின் எவனோ? என்றாளெனினும் அமையும். (மே-ள்) `கற்புங் காமமும்'1 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இதனுள் காம மிகுதியால் கண் தாமே அழவும், கற்பிற் கரக்கும் எனத் தலைவி பொறையும் நிறையும் தோழி பாணற்குக் கூறினாள், அவன் தலைவற்கு இவ்வாறே கூறுவன் எனக் கருதி. இனி என்றதனாற் கற்பும் பெற்றாம், என்றார், நச். `இன்பத்தை வெறுத்தல்'2 என்னுஞ் சூத்திரத்து, இன்பத்தை வெறுத்தல் என்பது இன்பத்திற் கேதுவாய பொருள் கண்டவழி அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதல் என்று கூறி, அதற்கு, `எல்லி, மனைசேர் .... என் செய்கோ எனவே' என்னும் பகுதியை எடுத்துக் காட்டினர், பேரா. 51. பாலை (பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.) ஆள்வழக் கற்ற சுரத்திடைக் கதிர்தெற நீளெரி பரந்த நெடுந்தா ளியாத்துப் போழ்வளி முழங்கும் புல்லென் உயர்சினை முடைநசை இருக்கைப் பெடைமுகம் நோக்கி 5. ஊன்பதித் தன்ன வெருவரு செஞ்செவி எருவைச் சேவல் கரிபுசிறை தீய வேனில் நீடிய வேயுயர் நனந்தலை நீயுழந் தெய்துஞ் செய்வினைப் பொருட்பிணி பல்லிதழ் மழைக்கண் மாஅ யோள்வயிற் 10. 3பிரியிற் புணர்வ தாயிற் பிரியாது ஏந்துமுலை முற்றம் வீங்கப் பல்லூழ் சேயிழை தெளிர்ப்பக் கவைஇ நாளும் மனைமுதல் வினையொடும் உவப்ப நினைமாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே. - 4 பெருந்தேவனார். (சொ-ள்) 1-7. ஆள் வழக்கு அற்ற - ஆட்கள் இயங்குதல் ஒழிந்த, சுரத்திடை - அத்தத்தில், கதிர் தெற நீள் எரி பரந்த - ஞாயிற்றின் கதிர்கள் காய்தலின் மிக்க வெம்மை பரவிய, நெடுந்தாள் யாத்து - நீண்ட அடியினையுடைய யாமரத்தின், போழ் வளி முழங்கும் புல்லென் உயர்சினை - பிளந்து செல்லும் காற்று முழங்கும் பொலிவற்ற உயர்ந்த கிளையில், முடை நசை இருக்கை - புலால் விருப்பத்துடன் இருத்தலையுடைய, பெடை முகம் நோக்கி - தன் பெடையின் முகத்தினைப் பார்த்து (எழும்), ஊன் பதித்தன்ன வெருவரு செஞ்செவி - ஊன் துண்டினைப் பதித்து வைத்தாற் போலும் அச்சத்தைத் தரும் சிவந்த செவியினையுடைய, எருவைச் சேவல் - ஆண் பருந்தின், சிறை கரிபு தீய - சிறை கரிந்து தீய்ந்திட, வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை - வேனில் வெப்பம் மிக்க மூங்கில் உயர்ந்த அகன்ற காட்டிடத்தில்; 8-10. நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட்பிணி - நீ வருந்திச் செய்யும் வினைகளால் அடையப்படும் பொருள், பல் இதழ் மழைக்கண் - பல இதழ்களையுடைய பூப்போலும் குளிர்ந்த கண்ணினையுடைய, மாயோள் வயின் - மாமை நிறத்தினளாய நம் தலைவியிடத்தினின்றும், பிரியின் - பிரிந்து செல்வதானே, புணர்வதாயின் - கை கூடுவது ஒன்றாயின்; 10-14. மாண் நெஞ்சம் - எனது நல்ல மனமே, நீங்குதல் மறந்து - அவளை நீங்குதலை மறந்து, பிரியாது ஏந்துமுலை முற்றம் - ஒன்றினொன்று பிரியாது நெருங்கி நிமிர்ந்த முலைப்பரப்பு, வீங்க - விம்மவும், சேய் இழை தெளிர்ப்ப - சிவந்த அணிகள் ஒலிக்கவும், பல்லூழ் கவைஇ - பலமுறையுந் தழுவி, நாளும் - நாடோறும், மனைமுதல் - தலைவியானவள், வினையொடும் உவப்ப - இல்வாழ்க்கைத் தொழி லோடும் மகிழும்படி, நினை - நினைவாயாக. (முடிபு) நெஞ்சம்! பொருட்பிணி மாயோள்வயின் பிரியின், புணர்வதாயின், அவளை நீங்குதல் மறந்து, வீங்க, தெளிர்ப்பக் கவைஇ, மனைமுதல் உவப்ப நினை. யாத்துச் சினை யிருக்கைப் பெடை எனவும், நோக்கி எழும் எருவைச் சேவல் எனவும் இயையும். (வி-ரை) எரி - வெம்மை. பல் இதழ் - பூவிற்கு ஆகுபெயர். வயின் - இடம், இடத்தினின்றும் என விரிக்க. மனைமுதல் - மனைவி. வினை - அறவோர்க் களித்தல், விருந்தெதிர் கோடல் முதலிய இல்வாழ்க்கைத் தொழில். பிரியின் இவள் இறந்துபடும் என்பது கருதி, நீங்குதல் மறந்து உவப்ப நினை என்றான். (மே-ள்) `கரணத்தி னமைந்து'1 என்னும் தலைவன் கூற்று நிகழுமாறு கூறிய சூத்திரத்து, `நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளும்' என்பதற்கு இச் செய்யுளை எடுத்துக்காட்டினர், இளம். 52. குறிஞ்சி (தலைமகள் வேறுபட்டமை யறிந்த செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு நிற்குமெனத் தலைமகள் சொல்லியது.) வலந்த வள்ளி மரனோங்கு சாரற் கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப் பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள் இன்னா விசைய பூசல் பயிற்றலின் 5 ஏகல் அடுக்கத் திருளளைச் சிலம்பின் ஆகொள் வயப்புலி யாகுமஃ தெனத்தம் மலைகெழு சீறூர் புலம்பக் கல்லெனச் சிலையுடை யிடத்தர் போதரு நாடன் நெஞ்சமர் வியன்மார் புடைத்தென அன்னைக்கு 10. அறிவிப் பேங்கொல் 1அறிவியேங் கொல்லென இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபாற் சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை இன்னுயிர் கழிவ தாயினும் நின்மகள் ஆய்மலர் உண்கண் பசலை 15. காம நோயெனச் செப்பா தீமே. - 2நொச்சி நியமங்கிழார். (சொ-ள்) 12. தோழி வாழி; 9. அன்னைக்கு - நம் தாய்க்கு; 13-14. நின் மகள் ஆய் மலர் உண்கண் பசலை - நின் மகளது அழகிய மலரனைய மையுண்ட கண்ணிற் படர்ந்த பசலையானது; 1-8. மரன் ஓங்கு சாரல் - மரங்கள் உயர்ந்த பக்க மலையிடத்து, வலந்த வள்ளி - சுற்றிய கொடியையுடைய, கிளர்ந்த வேங்கை - செழித்தெழுந்த வேங்கை மரத்தினது, சேண் நெடும் பொங்கர் - மிகவுயர்ந்த கிளையிலுள்ள, பொன்நேர் புதுமலர் வேண்டிய குறமகள் - பொன்னை யொத்த புதிய மலரினைப் பறிக்க விரும்பிய குறமகள், இன்னா இசைய பூசல் பயிற்றலின் - இன்னாமையைத் தரும் ஒலியையுடைய புலி புலி என்னும் ஆரவாரத்தினை அடுத்தடுத்து எழுப்பலின், ஏகல் அடுக்கத்து - உயர்ந்த பாறைகளின் அடுக்கையுடைய, இருள் அளைச் சிலம்பின் - இருண்ட குகையினை யுடைய பக்க மலையில், ஆ கொள் வயப்புலி ஆகும் அஃது என - பசுவினைக் கவரும் வலியபுலியைக் குறித்த ஒலியாகும் அஃது என்று எண்ணி, சிலையுடை இடத்தர் - வில்லை இடக்கையிற் கொண்ட கானவர், தம் மலைகெழு சீறூர் புலம்ப - தமது மலையை யடுத்துள சிறிய ஊர் தனிப்ப, கல்லெனப் போதரும் நாடன் - கல்லெனும் ஒலியுடன் செல்லாநிற்கும் நாட்டையுடைய நம் தலைவனது; 9-12. நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்தென - நமது நெஞ்சை இடமாகக் கொண்ட பெரிய மார்பினைக் காரணமாக உடையது என, அறிவிப்பேம்கொல் அறிவியேம்கொல் என - தெரிவிப்பேமோ தெரிவியா தொழிவேமோ என, இருபாற்பட்ட சூழ்ச்சி - இருவகையிற் பட்ட ஆராய்ச்சி, ஒருபாற் சேர்ந்தன்று - ஒரு முடிபிற்கு வந்துள்ளது; 12-15. யாக்கை இன்னுயிர் கழிவது ஆயினும் - நமது யாக்கை யினின்றும் இனிய உயிர் பிரிவதாயினும், காம நோயெனச் செப்பாதீமே - இது காம நோயால் உண்டாயதென இங்ஙனம் விளங்க உரையாதே. (முடிபு) தோழி வாழி! அன்னைக்கு நின்மகள் உண்கண் பசலை, நாடன் மார்பைக் காரணமாக வுடைத்தென அறிவிப் பேங்கொல், அறிவியேங் கொல்லென இருபாற்பட்ட சூழ்ச்சி ஒருபாற் சேர்ந்தன்று; இன்னுயிர் கழிவதாயினும் காமநோ யெனச் செப்பாதீம். (வி-ரை) வலத்தல் - சுற்றுதல். வள்ளி - கொடி; `வாடிய வள்ளி முதலரிந் தற்று'1 என்பது காண்க. பொன் ஏர் - பொன் போலும் அழகிய என்றுமாம். பூசல் - புலி புலி என்னும் ஆரவாரம்; அச்சத்தை விளைப்ப தாகலின், இன்னா விசைய என்றார். வேங்கை மலர் பறிப்பார் புலி புலி என்று கூவுதல், `ஒலிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழிப், புலி புலியென்னும் பூச றோன்ற' (48) என முன்னரும் வந்துளது. ஏ கல் - மிக்க கல்: `ஏ பெற்றாகும்'2 என்பது உரியியல். அறியலம் என்ற பாடத்திற்கும் அறிவியேம் எனப் பிறவினைப் பொருளே கொள்க. மார்பு உடைத்து - மார்பினைக் காரணமாக உடையது என விரிக்க. காமநோ யெனச் செப்பாதீமே - ஆராய்ந்து காணுமாறு குறிப்பினாற் சொல்லுக என்றபடி. (உ-றை) `வேங்கையைக் கொடி சூழ, அவ் வேங்கையிலே அலர் உண்டான அளவில், ஆண்டு வாழும் மகளிர் புலி புலி யென்று பூப்பறித்ததற்குச் சொன்ன அரவத்தாலே ஊரெல்லாம் ஆரவாரித் தாற்போல, அவரை நாம் தலைப்பெய்த அளவிலே, அலர் பிறந்ததாக, அவ்வலர் முதற் சீராலே முகிழ் முகிழ்த்துப் பின்னை யெல்லாரும் அறிந்தது என்றவாறு' என்றனர் குறிப்புரைகாரர். (மே-ள்) `மறைந்தவற் காண்டல்'1 என்னுஞ் சூத்திரத்து, `விட்டுயிர்த் தழுங்கினும்' என்பதற்கு, கரந்த மறையினைத் தலைவி தமர்க்கு உரைத்தற்குத் தோழிக்கு வாய்விட்டுக் கூறி, அக் கூறிய தனையே தமர் கேட்பக் கூறாது தவிரினும் எனப் பொருள் கூறி, அதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இது சிறைப்புறம் என்றும், `செறிவு நிறைவும்'2 என்னும் சூத்திரத்து, இவை உடையளெனவே (தலைவி) மறை புலப்படுத்தற்கு உரியள் அல்லள் என்று கூறி, `இன்னுயிர் கழிவதாயினும்....... செப்பாதீமே' என்றது அவ் விலக்கணத் ததாம் என்றும் கூறினர், நச். `முட்டுவயிற் கழறல்'3 என்னுஞ் சூத்திரத்து..... `முனிவு மெய்ந் நிறுத்தல்' என்பதற்கு, `இன்னுயிர் கழிவ தாயினுஞ்..... செப்பாதீமே' என்பதனை எடுத்துக் காட்டி, இது வாழ்க்கை முனிந்து தலைமகள் சொல்லியது என்றார், பேரா. 53. பாலை (வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) அறியாய் வாழி தோழி யிருளற விசும்புடன் விளங்கும் விரைசெலல் திகிரிக் கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய நெடுங்கால் முருங்கை வெண்பூத் தாஅய் 5. நீரற வறந்த நிரம்பா நீளிடை வள்ளெயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு கள்ளியங் காட்ட கடத்திடை உழிஞ்சில் உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை பொரியரை புதைத்த புலம்புகொள் இயவின் 10. விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர் எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும் அருஞ்சுரக் கவலை நீந்தி யென்றும் இல்லோர்க் கில்லென் றியைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் 15. பொருளே காதலர் காதல் அருளே காதலர் என்றி நீயே. - சீத்தலைச் சாத்தனார். (சொ-ள்) 1-5. தோழி வாழி -, இருள் அற விசும்பு உடன் விளங்கும் - இருள் நீங்க வானிட மெல்லாம் விளங்குதற்கு ஏதுவாய, விரை செலல் திகிரி - விரைந்து செல்லும் ஞாயிற்றின், கடுங் கதிர் எறித்த - கடிய கதிர் எறித்தலாலாகிய, விடுவாய் நிறைய - பிளப்பிடம் நிறையும்படி, நெடுங் கால் முருங்கை வெண்பூத் தாஅய் - நீண்ட அடியினையுடைய முருங்கையின் வெள்ளிய பூக்கள் பரக்க, நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை - நீர் அற்றுப் போயதால் வறட்சியுற்றதும் செல்லத் தொலையாததுமாய நீண்ட இடத்தினை யுடைய; 6-16. வள் எயிற்றுச் செந்நாய் - கூரிய பற்களையுடைய செந்நாய், வருந்து பசிப் பிணவொடு - பசியால் வருந்துந் தன் பிணவோடு, கள்ளிக் காட்ட கடத்திடை - கள்ளிக் காட்டினையுடைய கடத்திலே, உழிஞ்சில் - (கோழரையினதாகிய) வாகைமரத்தினை, உள் ஊன் வாடிய சுரிமூக்கு நொள்ளை - உள்ளிருக்கும் ஊன்வாடப்பெற்ற சுரிந்த மூக்கினையுடைய சிறு நத்தைகள், பொரியரை புதைத்த - பொரியரையுடையது போலாக மூடிக்கொண்டிருக்கும், புலம்புகொள் இயவின் - தனிமை கொண்ட நெறியில், விழுத்தொடை மறவர் வில்லிட - சிறந்த அம்பினை மறவர்கள் வில்லில் வைத்தெய்ய, வீழ்ந்தோர் எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும் - இறந்து கிடப்போரது (பெயரும் பீடும் எழுதிய) எழுத்துக்களையுடைய நடுகல்லின் இனிய நிழலிலே தங்கியிருக்கும், அருஞ் சுரக் கவலை நீந்தி - அரிய பாலையிலே கவர்பட்ட நெறியினைக் கடந்து, என்றும் இல்லோர்க்கு இல்லென்று - எந்நாளும் வறியார்க்கு இல்லையென்று கூறி, இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப - இயைவதைச் செய்யாது கரத்தல் மாட்டாத நெஞ்சம் வற்புறுத்தலின், நம்மினும் பொருளே காதலர் காதல் - நம் காதலர் காதலித்தது நம்மினுங்காட்டில் பொருளேயாகும், அருளே காதலர் என்றி நீயே - நீயோ காதலர் காதல் நம்பால் அருள் செயலே என்னா நின்றாய்; அறியாய் - ஆதலால் நீ அறியாய்காண். (முடிபு) தோழி வாழி! நீளிடைக் கடத்திடை இயவில் நாய் பிணவொடு நடுகல் நிழலில் வதியும் சுரக்கவலை நீந்திக் காதலர் காதலித்தது பொருளே; நீ அருளே என்றி; அறியாய். (வி-ரை) விளங்கும் திகிரி - விளங்குதற்கு ஏதுவாய திகிரி; விசும்பில் விளங்கு மெனலுமாம். எறித்த விடுவாய்: பெயரெச்சம்; காரணப் பொருட்டு; ஆறு சென்ற வியர் என்றாற்போல. விடுவாய் - பிளப்பு. கடம் - கன்னிலம். நொள்ளை - நத்தையினமாகிய சிறு பூச்சிகள். விழுத்தொடை - தப்பாத தொடையுமாம். தொடை - தொடுத்தல். வேறு நிழலின்மையின் கல்லின் நிழல் இனிய நிழலாயிற்று. பொருள் இல்லாதிருக்கச் செய்தே முயன்று தேடும் வலியுடையராயிருந்து இரவலர்க்குப் பொருள் இல்லை யென்னின் அதுவும் இயைவது கரத்தலாகும் என்பது பெற்றாம். காதல் - காதலித்தது. நீந்திக் காதலித்தது பொருளே யென்க. அருளே காதலர் என்பதற்கு, அருளையே காதலித்தலுடையர் என்றலுமாம். (மே-ள்) `புணர்தல் பிரிதல்'1 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளை எடுத்துக்காட்டி, `இது பிரிதல் நிமித்தம்; வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி கூறியது' என்றும் `நிகழ்ந்தது நினைத்தற் கேதுவுமாகும்'2 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள் தலைவன்கண் நிகழ்ந்தது தலைவி நினைந்து தோழிக்குக் கூறியது என்றுங் கூறினர், நச். 54. முல்லை (வினைமுடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.) விருந்தின் மன்னர் அருங்கலந் தெறுப்ப வேந்தனும் வெம்பகை தணிந்தனன் தீம்பெயற் காரும் ஆர்கலி தலையின்று தேரும் ஓவத் தன்ன கோபச் செந்நிலம் 5. வள்வாய் ஆழி உள்ளுறு புருளக் கடவுக காண்குவம் பாக மதவுநடைத் தாம்பசை குழவி வீங்குசுரை மடியக் கனையலங் குரல காற்பரி பயிற்றிப் படுமணி மிடற்ற பயநிரை யாயம் 10. கொடுமடி யுடையர் கோற்கைக் கோவலர் கொன்றையங் குழலர் பின்றைத் தூங்க மனைமனைப் படரும் நனைநகு மாலைத் தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்ணிலைப் 15. 3புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர் நீர்குடி சுவையில் தீவிய மிழற்றி முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள் பொன்னுடைத் தாலி யென்மகன் ஒற்றி வருகுவை யாயின் தருகுவென் பாலென 20. விலங்கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றித் திதலை யல்குலெங் காதலி புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே. - 4மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார். (சொ-ள்) 6. பாக - பாகனே!, 1-3. விருந்தின் மன்னர் - புதிய அரசர், அருங்கலம் தெறுப்ப - திறையாக அரிய அணிகலன்களைக் குவிப்ப, வேந்தனும் வெம் பகை தணிந்தனன் - நம் அரசனும் கொடிய பகைமை தணியப்பெற்றனன்; தீம் பெயல் காரும் ஆர்கலி தலையின்று - மேகமும் இனிய பெயலை மிக்க ஒலியுடன் பெய்தது; 3-6. ஓவத்து அன்ன கோபச் செந்நிலம் - ஓவியம் போன்ற இந்திர கோபத்தையுடைய சிவந்த நிலத்தே, தேரும் வள் வாய் ஆழி உள் உறுபு உருள - தேரினை அதன் உறுதி வாய்ந்த உருளை நிலத்தே பதிந்து உருண்டுவர, கடவுக - செலுத்துவாயாக; 6-12. படுமணி மிடற்ற பயநிரை ஆயம் - ஒலிக்கும் மணி கட்டிய கழுத்தினையுடைய பாற்பசுக்களாகிய இனம், கொடு மடி உடையர்- வளைந்த மடிகோலிய உடையினராகிய, கோல் கைக் கோவலர் - கோலைக் கையிலுடைய இடையர், கொன்றை அம் குழலர் பின்றைத் தூங்க - கொன்றையினது கனியானாய அழகிய குழலினை யிசைப்பவராய்ப் பின்னே மெத்தென நடந்துவர, மதவு நடைத் தாம்பு அசை குழவி - செருக்கிய நடையினையுடைய தாம்பிற் பிணிக்கப்பெற்ற இளங்கன்றுகளிடத்தே, வீங்கு சுரை மடிய - பெருத்த மடி கரைய வேண்டி, கனையலங் குரல - கனைக்கின்ற குரலவாய், கால் பரி பயிற்றி - காலால் விரைதலைப் பயிலச் செய்து, மனைமனைப் படரும் - மனைதோறும் செல்லும், நனை நகு மாலை - அரும்புகள் மலரும் மாலைக் காலத்தே; 13-16. தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன் - தனக்கென்றே வாழாத பிறர்க்கெல்லாம் உரியவனாகிய, பண்ணன் சிறுகுடிப் படப்பை - பண்ணன் என்பானது சிறுகுடியைச் சார்ந்த தோட்டத்தில் உள்ள, நுண் இலைப் புன்காழ் நெல்லி - சிறிய இலையினையும் புல்லிய வித்தினையுமுடைய நெல்லியின், பைங்காய் தின்றவர் - செவ்விக் காய்களைத் தின்றவர், நீர்குடி சுவையில் - நீர் குடித்தகாலை எழும் சுவைபோல; 16-22. முகிழ் நிலாத் திகழ்தரு மூவாத் திங்கள் - அரும்பும் நிலவினால் விளங்கும் இளைய மதியே!, பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி - பொன்னாலாய தாலியினையுடைய என் மகனை நினைந்து, வருகுவையாயின் - இவண் வருதியாயின், தருகுவன் பால் என - நினக்கும் பால் தருவேன் என, தீவிய மிழற்றி - இனிய மொழிகள் கூறி, விலங்கு அமர்க் கண்ணள் - ஒருக்கணித்து நோக்கும் அமரிய கண்ணினளாய், விரல் விளி பயிற்றி - விரலால் அழைத்தலைப் பயிலச் செய்து, புதல்வற் பொய்க்கும் - தன் புதல்வனைத் தன் கருத்துணராமை மறைக்கும், திதலை அல்குல் எம் காதலி பூங்கொடி நிலை - தேமல் அணிந்த அல்குலினையுடைய எம் காதலியாய பூங்கொடி போல்வாள் நிலையினை; 6. காண்குவம் - காண்போம். (முடிபு) பாக! வேந்தனும் பகை தணிந்தனன்; காரும் தலையின்று; தேரும் கடவுக; தீவிய மிழற்றி, விளிபயிற்றிப் புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலை காண்குவம். ஆயம் மனைமனைப் படரும் மாலை எனவும், திங்கள் வருகுவையாயின் தருகுவென் பாலென விளி பயிற்றிப் பொய்க்கும் பூங்கொடி எனவும் இயையும். (வி-ரை) விருந்தின் மன்னர் - புதியராய் மாறேற்ற அரசர். வேந்தனும் பகை தணிந்தனன் என்றமையால் தலைவன் வேந்தற் குற்றுழிப் பிரிந்தானாயிற்று. நச்சினார்க்கினியர் கருத்தின்படி இஃது அந்தணன் தூதிற் பிரிந்ததாகும் என்க. உள்ளுறுதல் நிலத்தின் ஈரத்தால் என்க. குழவி பாலுண்ண வேண்டி என்பார் குழவியிடத்து வீங்குசுரை மடிய என்றார். கொடுமடி - அடகு பறித்திடுதற்கு வளைத்துக்கட்டிய மடி. சிறுகுடி - காவிரியின் வடவயினுள்ளதோர் ஊர். திங்கள் : விளி. என் மகன் ஒற்றி - என் மகன் நினைக்க என்றுமாம். இங்கு ஒற்ற எனத் திரிக்க. (மே-ள்) `திணைமயக் குறுதலும்'1 என்னுஞ் சூத்திரத்து, `இச் செய்யுள் கார்காலத்து மீள்கின்றான், முகிழ்நிலாத் திகழ்தற்குச் சிறந்த வேனி லிறுதிக்கண் தலைவிமாட்டு நிகழ்வன கூறி, அவை காண்டற்குக் கடிது தேரைச் செலுத்தென்றது; இது முல்லைக்கண் வேனில் வந்தது' என்றும், `அவற்றுள் ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன'2 என்னுஞ் சூத்திரத்து `இப்பாட்டில், வேந்தன் பகைமையைத் தான் தணி வித்தமை கூறலின் அந்தணன் தூதிற் பிரிந்தமை பெற்றாம்' என்றும் கூறினர், நச். 55. பாலை (புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலிலாட்டியர்க்கு உரைத்தது.) காய்ந்து செலற்கனலி கல்பகத் தெறுதலின் நீந்து குருகுருகும் என்றூழ் நீளிடை உளிமுக வெம்பரல் அடிவருத் துறாலின் விளிமுறை அறியா வேய்கரி கானம் 5. வயக்களிற் றன்ன காளையொ டென்மகள் கழிந்ததற் கழிந்தன்றோ இலனே யொழிந்தியான் ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த் தசைஇ வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு கண்படை பெறேஎன் கனவ ஒண்படைக் 10. கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் பொருதுபுண் ணாணிய சேர லாதன் அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென இன்னா இன்னுரை கேட்ட சான்றோர் அரும்பெறல் உலகத் தவனொடு செலீஇயர் 15. பெரும்பிறி தாகி யாங்குப் பிறிந்திவண் காதல் வேண்டியென் துறந்து போதல்செல் லாவென் உயிரொடு புலந்தே. - மாமூலனார். (சொ-ள்) 1-6. காய்ந்து செலல் கனலி - வெம்மையுற்றுச் செல்லுதலையுடைய ஞாயிறு, கல் பகத் தெறுதலின் - மலை பிளக்கக் காய்ந்திடலால், நீந்து குருகு உருகும் என்றூழ் நீளிடை - கடந்து செல்லும் பறவைகள் இனைதற்கு ஏதுவாகிய வெப்பமிக்க நீண்ட விடத்தே, உளிமுக வெம்பரல் - உளிபோலும் வாயையுடைய கொடிய பரற் கற்கள், அடி வருத்துறாலின் - அடியிற் பதிந்து வருத்துதலின், விளிமுறை அறியா - இறக்கும் இடம் இன்னது என்று அறியலாகாத, வேய்கரி கானம் - மூங்கில் கரிந்தொழியுங் காட்டில், வயக்களிற்றன்ன காளையொடு - வலிய களிற்றினை யொத்த காளையுடன், என்மகள் கழிந்ததற்கு அழிந்தன்றோ இலன் - என்மகள் உடன் போயதற்கு வருந்தினேன் அல்லேன்; 6-9. யான் ஒழிந்து - யான் அவளைப் பிரிந்திருந்து, ஊது உலைக் குருகின் - உலைக்கண் ஊதும் துருத்திபோல, உள் உயிர்த்து அசைஇ - வெய்துயிர்த்து உள்மெலிந்து, வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு - தீயில் வேவதுபோலும் வெவ்விய நெஞ்சமொடு, கண்படை பெறேஎன் கனவ - கண் துயிலேனாய் வாய் வெருவிப் புலம்ப; 9-15. ஒண்படைக் கரிகால் வளவனொடு - ஒளி தங்கிய படையினையுடைய கரிகால் வளவனொடு, வெண்ணிப் பறந்தலைப் பொருது - வெண்ணிப் போர்க்களத்தே போர் செய்து, புண் நாணிய - புறப் புண் பட்டமைக்கு நாணின, சேரலாதன் - பெருஞ் சேரலாதன், அழி கள மருங்கின் - பொருதழிந்த களத்தின் புறத்தே, வாள் வடக்கு இருந்தென - வாளொடு வடக்கிருந்தானாக, இன்னா இன்னுரை கேட்ட சான்றோர் - அச்செய்தியாகிய இன்னாமையும் இனிமையும் உடைய உரையினைக் கேட்ட பெரியோர், அரும்பெறல் உலகத்து - பெறுதற்கரிய துறக்கத்திற்கு, அவனொடு செலீஇயர் - அவனோடு செல்லும் பொருட்டு, பெரும்பிறிது ஆகியாங்கு - உயிர் நீத்தாங்கு; 15-17. இவண் காதல் வேண்டி - இவ்வுலகத்து ஆசையை விரும்பி, என் துறந்து பிறிந்து - என்னை விட்டுப் பிரிந்து, போதல் செல்லா என் உயிரொடு - போதலைச் செய்யாத என் உயிரோடு, புலந்து - நொந்தேன். (முடிபு) யான் கானம் என் மகள் கழிந்ததற்கு அழிந்தன்றோ இலன்; நெஞ்சமொடு கனவப் போதல் செல்லா என் உயிரொடு புலந்தேன். கழிந்ததற்கு உயிரொடு புலந்து, அழிந்தன்றோ விலன் எனக் கூட்டிமுடித்தலுமாம். (வி-ரை) சேரலாதன் வடக்கிருந்தெனக் கேட்ட சான்றோர் அவனொடு செலீஇயர் பெரும் பிறிதாகியாங்கு என் துறந்து போதல் செல்லா உயிர் என்க. உறால் - உறுதல். விளிமுறை அறியா - இன்ன விடத்தில் இன்ன துன்பம் வருமென்றறியாத. அழிந்தன்றோ: ஓ - ஒழியிசை. வாள் - வாளொடு. இன்னா இன்னுரை - மரிக்கின்றான் என்பதனால் இன்னாமையும், புறப்புண்பட்ட பழிதீர இருந்து உயிர் விடுகின்றான் என்பதனால் இனிமையும் உடைய உரை. அரும்பெறல் உலகம் - வீரர் எய்தும் துறக்கம். புலந்து - புலந்தேன்: தன்மை வினைமுற்று. சான்றோர் தமக்கு அயன்மை யுடையான் வடக்கிருந்த வழியும் அவனொடு செல்லுதற்கு உயிர் துறந்தனர்; யானோ என் மகளைப் பிரிந்தும் போகாத உயிருடன் கூடியுள்ளேன் என்று வெறுத்தாள் என்க. (மே-ள்) `தாய்க்கு முரித்தாற் போக்குடன் கிளப்பின்'1 என்னுஞ் சூத்திரத்து, இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும், `கண் படை பெறேன் கனவ' என்பதனை எடுத்துக்காட்டி, முறையே உடன் போக்கின்கண் நற்றாய்க்கும் கனவு உரித்தாயிற் றெனவும், செவிலித் தாய்க்கும் கனவு உரித்தாயிற் றெனவும் கூறினர். 56. மருதம் (பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) நகையா கின்றே தோழி நெருநல் மணிகண் டன்ன துணிகயந் துளங்க இரும்பியன் றன்ன கருங்கோட் டெருமை ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக் 5. கூம்புவிடு பன்மலர் மாந்திக் கரைய காஞ்சி நுண்டா தீர்ம்புறத் துறைப்ப மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும் தண்டுறை யூரன் திண்டார் அகலம் வதுவை நாளணிப் புதுவோர்ப் புணரிய 10. பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி யாழிட் டெம்மனைப் புகுதந் தோனே அதுகண்டு மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென் றிம்மனை அன்றஃ தும்மனை என்ற 15. என்னுந் தன்னும் நோக்கி மம்மர் நெஞ்சினோன் தொழுதுநின் றதுவே. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார். (சொ-ள்) 1. தோழி -; 1-10. நெருநல் - நேற்று, மணிகண்டன்ன துணிகயம் துளங்க- பளிங்கு மணியினைக் கண்டாற்போலும் தெளிந்த குளம் கலங்க, இரும்பு இயன்றன்ன கருங்கோட்டு எருமை - இரும்பாற் செய் தாலொத்த கரிய கொம்பினையுடைய எருமைகள், ஆம்பல் மெல் அடைகிழிய - ஆம்பலின் மெல்லிய இலைகள் கிழிய, குவளைக் கூம்புவிடு பன் மலர் மாந்தி - குவளையின் குவிதல் நீங்கிய பல மலர்களையும் நிறையத் தின்று, கரைய காஞ்சி நுண்தாது ஈர்ம் புறத்து உறைப்ப - கரையின் கண்ணுள்ள காஞ்சியின் நுண்ணிய தாது ஈரமுடைய உடம்பின் புறத்திலே சிந்த, மெல்கிடு கவுள - அசையிடும் தாழ் வாயினவாய், அல்கு நிலை புகுதரும் - தாம் தங்கும் கொட்டிலில் வந்து புகும், தண்துறை ஊரன் திண்தார் அகலம் - குளிர்ந்த துறையினையுடைய ஊரனது திண்ணிய மாலையினைத் தரித்துள்ள மார்பினில், வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய - வதுவைக் காலத்து ஒப்பனையையுடைய பரத்தையரைப் புணர்க்க, பரிவொடு வரூஉம் பாணன் - அவாவுடன் வந்த பாணன்; 10-12. தெருவில் புனிற்று ஆ பாய்ந்தெனக் கலங்கி - தெருவில் ஈன்ற அணிமையுடையதோர் ஆ தன்னைப் பாய்ந்தமையாற் கலக்க முற்று, யாழிட்டு - யாழினைக் கீழே போகட்டு, எம்மனைப் புகுதந்தோன் - எம்மில்லின்கண் புகுந்தான்; 12-16. அது கண்டு -, மெய்ம்மலி உவகை மறையினென் - உடல் விம்ம எழுந்த உவகையை மறைத்து, எதிர் சென்று - அவன் எதிரே சென்று, உம்மனை இம்மனையன்று அஃது என்ற - உங்கள் மனை இம்மனை யன்று அதுவாகும் என்று கூறிய, என்னும் தன்னும் நோக்கி - என்னையும் தன்னையும் பார்த்து, மம்மர் நெஞ்சினோன் - மயங்கிய நெஞ்சினனாய், தொழுது நின்றது - என்னைத்தொழுது நின்ற நிலை; 1. நகையாகின்று - நகையை விளைப்பதாகின்றது. (முடிபு) தோழி, ஊரன், அகலம் புதுவோர்ப் புணரிய வரும் பாணன், புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ்இட்டு எம்மனைப் புகுதந்தோன்; அது கண்டு எதிர் சென்று இம்மனை அன்று அஃது என்ற என்னுந் தன்னும் நோக்கி மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றது; நகையாகின்று. (வி-ரை) மணி - பளிங்குமணி. துணி - தெளிவு. குவளை கூம்பு விடுமலர் என்றமையால், ஆம்பல் குவிதல் பெற்றாம். புகுதரும் என்னும் எச்சம் ஊரன் என்பதன் முதனிலை கொண்டு முடியும். புதுவோர் - புதிய பரத்தையர். நோக்கி - நோக்கல் நோக்கம். என்னும் தன்னும் நோக்கி - யான் இகழுதலையும் தனது இளிவையும் கருதி. தொழுது நின்றது நகையாகின்று என்றது, பிறன் பேதைமை பொருளாக நகை யென்னும் மெய்ப்பாடு தோன்றியது. (உ-றை) `இருப்பியன் றன்ன கருங்கோட் டெருமை கயங்கலங்க ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக் கூம்புவிடு பன்மலரை மாந்திக் காஞ்சி நுண்டாது புறத்துறைப்ப மெல்கிடு கவுளவாய்த் தங்கு நிலைக்கட் புகுதரு மென்றது, இரும்பு போன்ற நெஞ்சினையுடைய ராகிய பரத்தையர் ஊர்முழுதுங் கலங்கத் தான் முன்பு கூடின பரத்தையர் தாய்மார் கலங்க, அப் பரத்தையர் அவ் வாம்பற் பூப்போலக் குவியக், குவிதல் விட்ட குவளை மலர்போலும் பூப்பெய்து கொள்ளப்பட்ட பரத்தையரை நுகர்ந்து, வருகின்ற காலத்து வழியிலகப் பட்ட சேடியர் முதலாயினாரை நுகர்ந்து பின்னுஞ் சிலரைக் கூடக் கொடுநாக் கெறிந்து கொண்டு நம் மனையிலே தங்குதற் பொருட்டு வருகின்றான் என்று தோழிக்கு வாயில் மறுத்தது ' என்பது குறிப்புரை. (மே-ள்) `எள்ள லிளமை'1 என்னுஞ் சூத்திரத்து, `நகையாகின்றே தோழி.....' என்பது, எள்ளல் பொருளாக நகை பிறந்த தென்று இளம் பூரணரும், `பிறன் பேதைமை பொருளாக நகை பிறந்த' தென்று பேராசிரியரும் கூறினர். 57. பாலை (பொருள்வயிற் பிரிந்த தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது.) சிறுபைந் தூவிச் செங்காற் பேடை நெடுநீர் வானத்து வாவுப்பறை நீந்தி வெயிலவிர் உருப்பொடு வந்துகனி பெறாஅது பெறுநாள் யாணர் உள்ளிப் பையாந்து 5. புகலேக் கற்ற புல்லென் உலவைக் குறுங்கால் இற்றிப் புன்தலை நெடுவீழ் இரும்பிணர்த் துறுகல் தீண்டி வளிபொரப் பெருங்கை யானை நிவப்பில் தூங்கும் குன்ற வைப்பின் என்றூழ் நீளிடை 10. யாமே எமியம் ஆகத் தானே பசுநிலா விரிந்த பல்கதிர் மதியில் பெருநல் ஆய்கவின் ஒரீஇச் சிறுபீர் வீயேர் வண்ணங் கொண்டன்று கொல்லோ கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன் 15. முதுநீர் முன்றுறை முசிறி முற்றிக் களி றுபட எருக்கிய கல்லென் ஞாட்பின் அரும்புண் உறுநரின் வருந்தினள் பெரிதழிந்து பானாட் கங்குலும் பகலும் ஆனா தழுவோள் ஆய்சிறு நுதலே. - நக்கீரர். (சொ-ள்) 1-5. நெஞ்சே, சிறுபைந் தூவிச் செங்காற் பேடை - சிறிய மெல்லிய சிறகினையும் சிவந்த காலினையும் உடைய வாவற்பேடை, நெடுநீர் வானத்து - நெடிய தன்மையையுடைய வானினை, வாவுப் பறை நீந்தி - தாவிப் பறத்தலாற் கடந்து, வெயில் அவிர் உருப் பொடு வந்து - விளங்கும் வெயிலாலாகிய வெம்மையொடு வந்து, கனி பெறாது - கனிகள் பெறாமல், பெருநாள் யாணர் உள்ளிப் பையாந்து - தான் முன்பு கனிகளைப் பெரும் நாளின் வளனை நினைந்து துன்புற்று, புகல் ஏக்கற்ற - பண்டுபோற் பயன் மரங்களிற் புகுதற்கு ஏங்கி யிருப்பதும்; 5-8. புல் என் உலவைக் குறுங்கால் இற்றி - பொலிவற்ற கிளைகளையும் குறிய அடியினையும் உடைய இற்றி மரத்தின், புன்தலை நெடுவீழ் - புல்லிய உச்சியினையுடைய நீண்ட விழுது, இரும் பிணர்த்துறுகல் தீண்டி - பெரிய சருச்சரையையுடைய உருண்டைக் கல்லைத் தீண்டி, வளிபொர - காற்றடித்தலால், பெருங்கை யானை நிவப்பில் தூங்கும் - பெரிய கையினையுடைய யானை உயர்ந்திருப்பதுபோற்றோன்றி அசைவதுமாகிய; 9-10. குன்ற வைப்பின் என்றூழ் நீளிடை - மலையிடத் தூர்களையுடைய வெம்மை மிக்க நெடிய காட்டில், யாமே எமியம் ஆக - யாம் தனித்திருப்ப; 14-19. கொய் சுவல் புரவி - கொய்த பிடரிமயிரினையுடைய குதிரை களையுடைய, கொடித் தேர்ச் செழியன் - கொடி கட்டிய தேரினையுடைய பாண்டியன், முதுநீர் முன்துறை முசிறி முற்றி - பழமையான கடலின் துறைமுகத்தையுடைய முசிறியை வளைத்து, களிறுபட எருக்கிய கல்என் ஞாட்பின் - யானைகள் மடியக் கொன்ற கல்லென்னும் ஒலியுடைய போரில், அரும்புண் உறுநரின் - விழுப்புண் பட்டவர்போல, வருந்தினள் பெரிது அழிந்து - மிகவும் மனம் நொந்து வருந்தி, பானாட் கங்குலும் பகலும் - நடு இரவிலும் பகலிலும், ஆனாது அழுவோள் - ஒழியாது அழுதிருக்கும் நம் தலைவியின், ஆய் சிறு நுதல் - அழகிய சிறிய நெற்றி; 11- 13. பசுநிலா விரிந்த பல்கதிர் மதியில் - குளிர்ந்த நிலா விரிந்த பல கதிர்களையுடைய மதியைப்போலும், பெருநல் ஆய்கவின் ஒரீஇ - பெரிய சிறந்த ஆராயும் அழகு நீங்க, சிறு பீர் வீ ஏர் வண்ணம் கொண்டன்று கொல் - சிறிய பீர்க்கினது பூவினை ஒத்த நிறம் கொண்டதோ? (முடிபு) குன்ற வைப்பின் என்றூழ் நீளிடை. யாம் எமியமாக, வருந்திப் பெரிதழிந்து அழுவோள் சிறுநுதல் மதியின் கவின் ஒரீஇய் பீர் வீ ஏர் வண்ணம் கொண்டன்று கொல். பேடை நீந்தி வந்து பெறாது உள்ளிப் பையாந்து ஏக்கற்ற நீளிடை எனவும், இற்றி நெடுவீழ் துறுகற் றீண்டி யானை நிவப்பிற் றூங்கும் நீளிடை எனவும் கூட்டுக. (வி-ரை) வாவுப்பறை கனி பெறாது என்ற குறிப்புக்களால் செங்காற்பேடை என்பது வாவற்பேடை யென்பது பெற்றாம்; வாவிப் பறத்தலின் இது வாவலெனப் பெயர் பெறுவதாயிற்று; இது வௌவால் எனவும் வழங்கப்பெறும். வாவல் கனிகளை விரும்பி யுண்ப தென்பது, `அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும், பொரிதாள் விளவினை வாவல் குறுகா,'1 `மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி, இரந்தழைப்பார் யாவருமிங் கில்லை'2 என்பவற்றாலும், `பளிக் கறைப் பவளப் பாவை'3 என்னும் செய்யுளில், அஞ்சிறைப் பறவை என்பதற்கு வாவல் எனப் பொருள்கொண்டு, `கண்ணாள் கனியை யொத்தாள்,...... அயில்கின்ற வேந்தன் வாவலை யொத்தான்' என உரை கூறியிருத்தலானும் பெறப்படும். ஏக்கறுதல் - ஆசையிற் றாழ்தல். ஒரீஇ - ஒருவ எனத் திரிக்க. கொல்: ஐயம். ஓ: அசை. 58. குறிஞ்சி (சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது.) இன்னிசை உருமொடு கனைதுளி தலைஇ மன்னுயிர் மடிந்த பானாட் கங்குல் காடுதேர் வேட்டத்து விளிவிடம் பெறாஅது வரியதள் படுத்த சேக்கைத் தெரியிழைத் 5. தேனாறு கதுப்பிற் கொடிச்சியர் தந்தை கூதிரிற் செறியுங் குன்ற நாட வனைந்துவரல் இளமுலை ஞெமுங்கப் பல்லூழ் விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற நின்மார் படைதலின் இனிதா கின்றே 10. நும்மில் புலம்பினும் உள்ளுதொறு நலியும் தண்வரல் அசைஇய பண்பில் வாடை பதம்பெறு கல்லா திடம்பார்த்து நீடி மனைமரம் ஒசிய ஒற்றிப் பலர்மடி கங்குல் நெடும்புற நிலையே. - மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார். (சொ-ள்) 1-6. கூதிர் - கூதிர்க்காலத்தில், இன்னிசை உருமொடு கனைதுளி தலைஇ - இனிய ஓசையுடைய இடியுடன் மிக்க மழை பெய்திட, மன்னுயிர் மடிந்த பானாள் கங்குல் - நிலைபெற்ற உயிர்களெல்லாம் துயின்ற பாதியிரவில், தெரியிழை தேன்நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை - ஆராய்ந்தெடுத்த அணிகளையும் தேன் நாறும் கூர்ந்தலினையுமுடைய குறத்தியர் தந்தைமார், காடுதேர் வேட்டத்து - காட்டில் விலங்குகளை ஆராயும் வேட்டையில், விளிவிடம் பெறாது - துயிலும் இடம் பெறாமல், வரி அதள் படுத்த சேக்கை - புலித்தோலினை விரித்துள்ள படுக்கையில், இல்செறியும் - இல்லிலே வந்து தங்கியிருக்கும், குன்ற நாட - மலைகள் பொருந்திய நாட்டின் தலைவனே; 10-14. நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும் - நும்மைப் பிரிந்திருக்கும் தனிமையில் நும்மை நினையுந்தோறும் வருத்தா நிற்கும், தண்வரல் அசைஇய - குளிர்ச்சியுடன் அசைந்து வருதலையுடைய, பண்பில் வாடை - இனிய பண்பில்லாத வாடைக்கு, பதம் பெறுகல்லாது - குறித்த பருவத்தில் நும் வருகையைப் பெறாது, இடம் பார்த்து நீடி - நீர் வருங்காலத்தை நோக்கித் தாழ்த்து, மனை மரம் ஒசிய ஒற்றி - மனைமரம் முறிய வலித்து, பலர் மடி கங்குல் - பலரும் துயின்ற இரவில், நெடும் புற நிலை - நெடுங்காலம் புறத்தே நின்று கொண்டிருக்கும் எமது நிலை; 7-9. வனைந்து வரல் இளமுலை ஞெமுங்க - பண்ணி னாற்போல் எழும் இளமுலைகள் அழுந்த, பல்லூழ் - பன்முறை, விளங்குதொடி முன்கை வளைந்து புறம் சுற்ற - விளங்கும் தொடிகளை யணிந்த முன்கை வளைந்து புறத்தினைச் சுற்றிக் கொள்ள, நின்மார்பு அடைதலின் - நின் மார்பை முயங்குதலினும், இனிதாகின்று - இனியதாயிற்று. (முடிபு) குன்ற நாட! நும் உள்ளுதொறும் நலியும் வாடைக் கண், பதம் பெறுகல்லாது நீடி ஒற்றிக் கங்குலில் நிற்கும் புறநிலை, இளமுலை ஞெமுங்க முன்கை புறஞ்சுற்ற, நின்மார் படைதலின் இனிதாகின்று. கொடிச்சியர் தந்தை, கூதிர்க் காலத்து, கங்குலில், வேட்டத்து, விளி விடம் பெறாது சேக்கையில் இற்செறியும் குன்ற நாடு என்க. (வி-ரை) தலைஇ - பெய்து; பெய்ய எனத் திரிக்க. காடு தேர் - காட்டில் விலங்குகளைத் தேரும் என ஒரு சொல் வருவித்துரைக்க. விளிவிடம் - முடிவிடமுமாம். தந்தை - தந்தையர் என்க. வனைந்து வரல் - வனைந்தாற் போல் வரல்; வனைதல் - இயற்றுதல். வரல் - வளர்தல். இடம் பார்த்து: இடம் - காலம். ஒற்றி நிற்கும் நிலையென விரித்துரைக்க. எல்லோரும் இனிது உறங்கும் கங்குலில் தான் உறக்கமின்றி இங்ஙனம் நிற்கும் நிலை இனிதாயிற்றென்று தலைவி கூறினும், குறிப்பினால் வாடையால் எய்திய வருத்தத்தை உணர்த்தினாள் ஆவள் என்க. கொடிச்சியர் தந்தையர் தாம் செய்தொழிற்கு இடம் பெறாது கூதிர்க் காலத்து இல்லிலே செறியும் குன்ற நாட என்றது, புறத்து வினையில்லாக் காலத்து எம்மை நினைக்கின்றாய் என்னுங் குறிப்பிற்று. (மே-ள்) `மறைந்தவற் காண்டல்'1 என்னுஞ் சூத்திரத்து, `பெற்ற வழி மலியினும்' என்பதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர், நச். `வினையுயிர் மெலிவிடத்து'2 என்னுஞ் சூத்திரத்து, உயிர் மெலிந்த விடத்துப் புணர்ச்சி நிமித்தமெனக் கூறப்பட்டவை யின்றியும் புணர்ச்சி நிகழ்ந்ததற்கு, `வனைந்துவரல்...... இனிதாகின்றே' என்னும் பகுதியை எடுத்துக் காட்டினர், பேரா. 59. பாலை (தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.) தண்கயத் தமன்ற வண்டுபடு துணைமலர்ப் பெருந்தகை இழந்த கண்ணினை பெரிதும் வருந்தினை வாழியர் நீயே வடாஅது வண்புனல் தொழுநை வார்மணல் அகன்றுறை 5. அண்டர் மகளிர் தண்டழை உடீஇயர் மரஞ்செல மிதித்த மாஅல் போலப் புன்றலை மடப்பிடி உணீஇயர் அங்குழை நெடுநிலை யாஅம் ஒற்றி நனைகவுள் படிஞிமிறு கடியும் களிறே தோழி 10. சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் 1சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை இன்றீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த தண்ணறுங் கழுநீர்ச் செண்ணியற் சிறுபுறம் 15. தாம்பா ராட்டிய காலையும் உள்ளார் வீங்கிறைப் பணைத்தோள் நெகிழச் சேய்நாட் டருஞ்செயற் பொருட்பிணி முன்னிநப் பிரிந்துசேண் உறைநர் சென்ற ஆறே. - மதுரை மருதனிளநாகன். (சொ-ள்) 9. தோழி-; 1-3. நீ - நீதான், தண் கயத்து அமன்ற - குளிர்ந்த குளத்தில் நிறைந்த, வண்டு படு துணைமலர்ப் பெருந்தகை இழந்த கண்ணினை - வண்டுகள் படியும் தமக்குத் தாமே நிகராய மலர்கள் போலும் பெரிய அழகினை இழந்திட்ட கண்களை யுடையை யாகி, பெரிதும் வருந்தினை - மிகவும் வருந்தினை, வாழியர் - வாழ்வாயாக; 10-15. சூர் மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல் - சூர பன் மாவினையும் அவன் சுற்றத்தினையும் தொலைத்த ஒளி பொருந்திய இலைத் தொழிலையுடைய நெடிய வேலினையுடைய, சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து - சினம் மிக்க முருகனது தட்பம் வாய்ந்த திருப்பரங் குன்றமாகிய, அந்துவன் பாடிய - நல்லந்துவனார் பாடிய, சந்துகெழு நெடுவரை - சந்தன மரங்கள் மிக்க உயர்ந்த மலையில் உள்ள, இன்தீம் பைஞ்சுனைத் தண் நறுங் கழுநீர் - இனிய தீவிய பசுமை வாய்ந்த சுனையில் உள்ள தண்ணிய நறிய குவளைப் பூவுடன் இயன்ற, ஈரணிப் பொலிந்த - பெரிய ஒப்பனையாற் பொலிவுற்ற, செண் இயல் சிறுபுறம் - கொண்டை அசைதலையுடைய முதுகினை, தாம் பாராட்டிய காலையும் உள்ளார் - நம் தலைவர் தாம் பாராட்டிய காலத்தினையும் நினையாராய்; 16-18. வீங்கு இறைப் பணைத்தோள் நெகிழ - பருத்த இறையினை யுடைய மூங்கில்போலும் தோள் மெலியும்படி, சேய்நாட்டு அருஞ் செயற் பொருட்பிணி முன்னி - தூரநாட்டிற் சென்று செய்யும் அருஞ் செயலாகிய பொருளீட்டலை நினைத்து, நப் பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறு - நம்மைப் பிரிந்து சேணின்கண் உறைகின்றவர் போன வழியின்கண்; 3-9. வடாது வண்புனல் தொழுநை வார்மணல் அகல்துறை - வடக்கின் கண்ணதாகிய நீர்வளம் அறாத யமுனை யாற்றின் நெடிய மணலையுடைய அகன்ற துறையில் நீராடிய, அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர் - ஆயர் மகளிர் தண்ணிய தழையை உடுத்திக் கொள்ள, மரம் செல மிதித்த மாஅல் போல - குருந்த மரம் வளைந்திட மிதித்துத் தந்த கண்ணன்போல, களிறு புன்தலை மடப் பிடி அங்குழை உணீஇயர் - களிறு மெல்லிய தலையினையுடைய இளைய பெண் யானை அழகிய தளிர்களை உண்ணற்கு, நெடுநிலை யாஅம் ஒற்றி - (முன்னர்) உயர்ந்த நிலையினையுடைய யாமரத்தினை வளைத்துத் தந்து, நனைகவுள் படி ஞிமிறு கடியும் - மதத்தால் நனைந்த கன்னத்தில் படியும் வண்டுகளை ஓட்டா நிற்கும்; (அவர் இது கண்டு வருவர்.) (முடிபு) தோழி! நீ தலைவரைப் பிரிந்து பெரிதும் வருந்தினை; வாழியர்! நின் செண்ணியற் சிறுபுறம் பாராட்டிய காலையு முள்ளார்; தோள்நெகிழ் பொருட்பிணி முன்னிப் பிரிந்து சேணுறைநர் சென்ற ஆற்றிலே களிறு பிடிகுழை உணீஇயர் யாஅம் ஒற்றி, மிஞிறு கடியும்; (அவர் அது கண்டு வருவர்). (வி-ரை) துணைமலர் - இரண்டாகிய மலருமாம். `வண்புனல்..... மால்போல' என்பதிற் குறித்த வரலாறு, ஆயர் பெண்கள் யமுனை யாற்றில் நீராடுங்கால், அவர்கள் கரையில் இட்டுவைத்த ஆடை களைக் கண்ணபிரான் விளையாட்டாக எடுத்துக் கொண்டு குருந்த மரத்தேறியிருந்தாராக, அப்பொழுது பலதேவர் அங்கு வர, அம் மகளிர் ஒரு சேர மறைதற்கு வேறு வழியின்மையால், தாம் ஏறியிருந்த குருந்த மரக் கொம்பினைத் தாழ்த்துக் கொடுத்தார் என்பது. இதனை, 1"நீனிற வண்ண னன்று நெடுந்துகில் கவர்ந்து தம்முன் பானிற வண்ண னோக்கிற் பழியுடைத் தென்று கண்டாய் வேனிறத் தானை வேந்தே விரிபுனற் றொழுனை யாற்றுட் கோணிற வளையி னார்க்குக் குருந்தவ னொசித்த தென்றான்." என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளானும் அறிக. மாஅல் போல - வினை பற்றிய உவமை. யாமரத்தை வளைத்த களிறு அதினின்றும் தன் கன்ன மதத்திற் படிந்த வண்டுகளைக் கடியும் என்றவாறு. அது கண்டு அவர் வருவரென்று விரித்துரைக்க. சூரினையும் மருங்கினையும் அறுத்த என்க. பரங் குன்றத்து நெடுவரை - பரங் குன்றமாகிய நெடுவரை; அத்துச் சாரியை அல்வழிக்கண் வந்தது. அந்துவன் - கடைச் சங்கப் புலவ ராகிய ஆசிரியர் நல்லந்துவனார். அவர் `மண்மிசை யவிழ்துழாய்'2 என்னும் பரிபாடற் செய்யுளிற் பரங்குன்றத்தைப் பாடியுள்ளமை அறிக. அக்காலத்து நல்லிசைப் புலவர்கள் ஒருவர்பா லொருவர் மதிப்பு வைத்திருந்தமைக்கு இஃதொரு சான்றாகும். செண் - ஒப்பனை செய்யப் பெறுவதாற் கொண்டைக்குப் பெயராயிற்று. நப்பிரிந்து: வலித்தல் விகாரம். களிறு பிடி குழை யுண்ணுதற்கு யாமரத்தினை வளைத்துத் தருமென்றது, `அன்புறு தகுந இறைச்சியுட் சுட்1டியதாகும். 60. நெய்தல் (தலைமகற்குத் தோழி செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.) பெருங்கடற் பரப்பிற் சேயிறால் நடுங்கக் கொடுந்தொழில் முகந்த செங்கோல் அவ்வலை நெடுந்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு 5. 2அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் திண்டேர்ப் பொறையன் தொண்டி அன்னஎம் ஒண்டொடி 3ஞெமுக்கா தீமோ தெய்ய ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரைக் 10. கோதை ஆயமொடு வண்டல் தைஇ ஓரை ஆடினும் உயங்குநின் ஒளியெனக் கொன்னுஞ் சிவப்போள் காணின் வென்வேல் கொற்றச் சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதியினும் செறிய 15. அருங்கடிப் படுக்குவள் அறனில் யாயே. - குடவாயிற் கீரத்தனார். (சொ-ள்) 1-8. பெருங்கடல் பரப்பில் சேயிறால் நடுங்க - பெரிய கடற்பரப்பில் சிவந்த இறால்மீன் நடுங்க, கொடுந் தொழில் முகந்த செங்கோல் அவ்வலை - முகக்கும் கொடிய தொழிலையுடைய நேரிய கோலையுடைய அழகிய வலையைக் கொண்ட, நெடுந் திமில் தொழிலொடு வைகிய - நீண்ட படகிலிருந்து மீன் பிடிக்குந் தொழிலிற் றங்கிய, தந்தைக்கு - தன் தந்தைக்கு, உப்பு நொடை நெல்லின் மூரல் வெண்சோறு - உப்பு விற்றுக்கொண்ட நெல்லினாற் சமைத்த மூரலாகிய வெண்சோற்றை, அயிலை துழந்த அம்புளி சொரிந்து- அயிலை மீனை யிட்டாக்கிய அழகிய புளிக்கறியினைச் சொரிந்து, கொழு மீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் - கொழுமீன் கருவாட்டினுடன் இளைய மகள் இடும் இடமாகிய, திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன - திண்ணிய தேரினையுடைய சேரனது தொண்டியைப் போன்ற, எம் - எம்முடைய, ஒண் தொடி ஞெமுக்கா தீமோ - ஒள்ளிய வளையலைத் தழும்புறும்படி அமுக்கற்க; 9-15. ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை - வாடைக் காற்றுக் குவித்த உயர்ந்த மணல் மேடாகிய கரையில், கோதை ஆயமொடு வண்டல் தைஇ - மாலையையுடைய ஆயத்தாரோடு வண்டல் இயற்றி, ஓரை ஆடினும் - விளையாட்டினைப் புரியினும், உயங்கும் நின் ஒளி என - உன்மேனி வாடும் என, கொன்னும் சிவப்போள் - ஏது வின்றியும் சினப்பவளாகிய, அறனில் யாய் காணின் - அறங்கருதாத யாய் இதனைக் காணின், வென்வேல் கொற்றச் சோழர் - வெல்லும் வேலினையுடைய வெற்றி பொருந்திய சோழர், குடந்தை வைத்த - குடவாயிற்கண் போற்றி வைத்த, நாடு தரு நிதியினும் - பகைவர் நாடு திறையாகக் கொடுத்த நிதியைக் காட்டினும், செறிய அருங் கடிப் படுக்குவள் - மிகவும் அரிய காவற்படுத்திவிடுவள். (முடிபு) தலைவ! நெடுந்திமிற் றொழிலொடு வைகிய தந்தைக்குக் குறுமகள் மூரலாகிய வெண்சோறு புளிக்கறி சொரிந்து தடியுடன் கொடுக்கும் தொண்டியன்ன எம் ஒண்தொடி ஞெமுக்காதீமோ; ஓரை யாடினும் உயங்கும் ஒளி எனக் கொன்னுஞ் சிவப்போளாகிய யாய் காணின், சோழர் குடந்தை வைத்த நிதியினும் செறிய அருங்கடிப் படுக்குவள். (வி-ரை) இறால், அயிலை, கொழுமீன் - இவை மீனின் சில வகைகள். கொடுந் தொழிலையுடைய வலை என்க. கோல் - வலையிற் கட்டிய கோல். மூரல் சோறு: இரு பெயரொட்டு; முறுவல் போலுஞ் சோறு எனலுமாம். புளி : புளிக் கறிக்கு ஆகுபெயர். கொடுக்கும் தொண்டியெனப் பெயரெச்சம் இடப் பெயர் கொண்டது. ஒண்தொடி என்பதற்குத் தலைவி யென்று பொருள் கூறி அவளை வருத்தாதேயென்று உரைத்தலுமாம். மோ, தெய்ய: அசைகள். சிவப்போள் - வெகுள்பவள். குடந்தை : குடவாயில் என்பதன் மரூஉ. (உ-றை) "திமிற்றொழிலொடு வைகிய தந்தைக்கு இள மகளானவள் மீன்கொண்டு வருதற்கு முன்னே தான் உப்பு விற்ற நெல்லாலே ஆக்கப்பட்ட மூரல்வெண் சோற்றையும் புளிக் கறியையும் சொரிந்து கொழுமீன் தடியொடு கொடுத்தாற்போலத் தாம் வரைதற்குத் தாமும் புறம்பே முயல, நாங்களும் அறத்தொடு நிலை வகையால் ஈங்கே முயல்வேம் எனச் சொல்லியவாறாக்குக" என்றார் குறிப்புரைகாரர். (மே-ள்) "`மரபே தானும், நாற்சொல் லியலான் யாப்புவழிப் பட்டன'1 என்னும் சூத்திரத்து, `குடவாயில்' என்பதனைக் `கொற்றச் சோழர் குடந்தை வைத்த' எனவும்..... மேலையோர் திரித்த வகையானே இக் காலத்தும் திரித்துக் கொள்ளப்படுவன உள" என்றார், பேரா. 61. பாலை (தலைமகன் பொருள்வயிற் பிரிய வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) நோற்றோர் மன்ற தாமே கூற்றம் கோளுற விளியார்பிறர் கொளவிளிந் தோரெனத் தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர் நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்து 5. ஆழல் வாழி தோழி தாழா அது உருமெனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால் வரிமாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளீஇ அருநிறத் தழுத்திய அம்பினர் பலருடன் அண்ணல் யானை வெண்கோடு கொண்டு 10. நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயருங் கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும் பழகுவ ராதலோ அரிதே முனா அது 15. முழவுறழ் திணிதோள் நெடுவே ளாவி பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்னநின் ஒண்கேழ் வனமுலைப் பொலிந்த நுண்பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே. - மாமூலனார். (சொ-ள்) 1-5. தோழி வாழி-, நாள் இழை நெடுஞ்சுவர் நோக்கி - தலைவர் பிரிந்த நாளைக் குறித்து வைத்த நீண்ட சுவரினை நோக்கிச் (சென்ற நாட்களை எண்ணி யுணர்ந்து), நோய் உழந்து ஆழல் - வருந்தித் துன்பத்து ஆழ்ந்திடாதே, கூற்றம் கோள் உற விளியார் - கூற்றம் கொள்ள (வறிதே) மரியாமல், பிறர் கொள விளிந்தோர் - பிறர் தம் பொருளைக் கொள்ளும்படி மரித்தோர், நோற்றோர் மன்ற - உறுதியாக நோற்றோராவர், என - என வற்புறுத்தி, தாள் வலம் படுப்ப - ஊக்கத்தினை வெற்றி யுறுவிக்க, சேட்புலம் படர்ந்தோர் - சேணிலத்தே வினைவயிற் பிரிந்தோர்; 5-18. தாழாது உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு - தாழ்க்காது இடியென ஒலிக்கும் ஊக்கத்துடன், பைங்கால் வரி மாண் நோன் ஞாண் வெண்சிலைக் கொளீஇ - பசிய காலும் மாண்புறும் வரியும் உடைய வலிய வில்லில் வலிய நாணினைக் கொளுத்தி, அருநிறத்து அழுத்திய அம்பினர் பலருடன் - பகைவரது அரிய மார்பிற் செலுத்தும் அம்பினையுடைய இளையர் பலருடன், அண்ணல் யானை வெண் கோடு கொண்டு - தலைமை வாய்ந்த யானைகளின் வெள்ளிய கோடுகளைக் கொண்டு, நறவு நொடை நெல்லின் நாண் மகிழ் அயரும் - அக் கோட்டுடன் கள்ளினை விற்றுக் கொண்ட நெல்லால் நாளோலக்கச் சிறப்புச் செய்யும், கழல் புனை திருந்தடிக் கள்வர் கோமான் - கழலினைத் தரித்த திருந்திய அடியினையுடைய கள்வர் பெருமானாகிய, மழபுலம் வணக்கிய - மழவரது நிலத்தை வணங்கச் செய்த, மாவண் புல்லி - மிக்க வண்மையையுடைய புல்லி என்பானது, விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும் - திரு விழாக்களையுடைய மிக்க சிறப்பு வாய்ந்த திருவேங்கடத்தைப் பெறுவதாயினும், முனாஅது - மிகப் பழமை வாய்ந்த, முழ உறழ் திணிதோள் நெடுவேள் ஆவி - முழவினை யொத்த வலிய தோளினையுடைய பெரிய வேளாகிய ஆவியின், பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்ன - பொன் மிக்க பெரிய நகரமாகிய பொதினியை ஒத்த, நின் ஒண் கேழ் வனமுலைப் பொலிந்த - நினது ஒளி விளங்கும் அழகிய முலையாற் சிறந்த, நுண் பூண் ஆகப் பொருந்துதல் மறந்து -நுண்ணிய பூணினை.அணிந்த ஆகத்திற் பொருந்துதலை மறந்து, பழகுவர் ஆதலோ அரிது - ஆங்குப் பழகி யிருத்தல் இல்லையாகும். (முடிபு) தோழி வாழி! நீ நாள் இழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்து ஆழல்; சேட்புலம் படர்ந்தோர் புல்லி வேங்கடம் பெறினும் நின் ஆகம் பொருந்துதல் மறந்து பழகுவர் ஆதல் அரிது. (வி-ரை) கூற்றங் கோடலுற விளிதலாவது - ஒருவர்க்கும் பயனின்றி வறிதே மரித்தல். பிறர் கொள விளிதல் - பிறர்க்குத் தம் பொருளை உதவிப் பயன்பட்டு மரித்தல். இதற்கு அமர்க்களத்தில் உயிர் துறத்தல் என்று பொருள் கொள்வர், நச். அவர் கருத்தின்படி தலைவன் வினைவயிற் பிரிந்தானாம். என - என்று வற்புறுத்தி என ஒரு சொல் வருவித்துரைக்க; எனவே உதவி செய்தற்காகப் பொரு ளீட்ட வேண்டு மென்றார் என்றாளாம். நாள் இழை நெடுஞ்சுவர் - நாடோறும் ஒவ்வொரு கோடாகப் பிரிந்த நாட்களிற் கீறிவைத்துள்ள நெடிய சுவர். காலினையும் வரியினையுமுடைய சிலையில் ஞாண் கொளீஇ என்க. மழபுலம் வணக்கிய - மழவர் தேயத்தை வணக்கி அவர்பால் திறைகொண்ட. பழகுவராதல் - பயின்று தங்குதல். முனாஅது பொதினி என்க; பொதினி - பழனி. நண் பூண் - நுண்ணிய தொழிலுடைய பூண். (மே-ள்) `நிகழ்ந்தது, கூறி நிலையலுந் திணையே'1 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் காட்டி, இவ்வகப்பாட்டினுள் மூப்பினும் பிணியினும் இறவாது அமர்க்களத்து வீழ்ந்தாரே துறக்கம் பெறு வரெனத் தன்சாதிக் கேற்பத் தலைவன் புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலைத் தோழி கூறினாள் என்றார், நச். 62. குறிஞ்சி (அல்ல குறிப்பட்டுழித் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன நகைப்பொலிந் திலங்கும் எயிறுகெழு துவர்வாய் ஆகத் தரும்பிய முலையள் பணைத்தோள் மாத்தாட் குவளை மலர்பிணைத் தன்ன 5. மாயிதழ் மழைக்கண் மாஅ யோளொடு பேயும் அறியா மறையமை புணர்ச்சி பூசல் துடியில் புணர்புபிரிந் திசைப்பக் கரந்த கரப்பொடு நாஞ்செலற் கருமையின் கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று 10. நெடுஞ்சுழி நித்தம் மண்ணுநள் போல நடுங்கஞர் தீர முயங்கி நெருநல் ஆகம் அடைதந் தோளே வென்வேல் களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி ஒளிறுநீர் அடுக்கத்து வியலகம் பொற்பக் 15. கடவுள் எழுதிய பாவையின் மடவது மாண்ட மாஅ யோளே. - பரணர். (சொ-ள்) 12-16. வெல்வேல் - வெல்லும் வேலினையும்; களிறு கெழு தானைப் பொறையன் - யானைகள் மிக்க படையினையு முடைய சேரனது, கொல்லி ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்ப - கொல்லி மலையின் விளங்கும் அருவி நீரினையுடைய பக்க மலையின் அகன்ற இடம் அழகுற, கடவுள் எழுதிய பாவையின் - தெய்வமாக அமைத்த (கொல்லிப்) பாவையினைப் போன்ற, மடவது மாண்ட மாயோள் - மடப்பத்தாற் சிறப்புற்ற கரியளாய தலைவி; 1-5. அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன - நீரில் வளர்ந்த பைஞ்சாய்க் கோரையின் குருத்தினை யொத்த, நகைப் பொலிந்து இலங்கும் எயிறுகெழு துவர்வாய் - ஒளியாற் சிறந்து விளங்கும் பற்கள் பொருந்திய பவளம்போன்ற வாயினையும், ஆகத்து அரும்பிய முலையள் - மார்பில் தோன்றிய முலையினையும் உடையளும், பணைத்தோள் - மூங்கில் போன்ற தோளினையும், மா தாள் குவளை மலர் பிணைத்தன்ன - கரிய தண்டினையுடைய குவளையின் மலர்களை இணைத்து வைத்தாற் போன்ற, மாஇதழ் மழைக்கண் மாயோளொடு - கரிய இமையினையுடைய குளிர்ந்த கரிய கண் களையும் உடையளுமாகிய அவளுடன்; 6-12. பேயும் அறியா மறையமை புணர்ச்சி - பேயும் அறியாத காலத்தே நிகழ்ந்துவந்த மறைவு அமைந்த புணர்ச்சியை, பூசல் துடியில் புணர்பு பிரிந்து இசைப்ப - ஆரவாரமுடைய துடியினைப் போல ஒருகால் இணைந்தும் ஒருகால் தனித்தும் அயலோர் அலர் கூறலால், கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின் - முன்பு போல் கரந்த ஒழுக்கத்தில் இனி நாம் செல்லுதற்கு அருமை எய்தினமையாற் போலும், கடும்புனல் மலிந்த காவிரிப் பேர் யாற்று - விரைந்தோடும் நீர் மிக்க காவிரி எனும் பேர் யாற்றில், நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல - நெடிது சுழலும் சுழிகளையுடைய வெள்ளத்திற் படிந்து குளிப்பவள் போல, நெருநல் - நேற்று, நடுங்கு அஞர்தீர முயங்கி - உள்ளம் நடுங்கும் துன்பம் போகத் தழுவி, ஆகம் அடைதந்தோள் - ஆகத்திற் பொருந்திக் கிடந்தனள். (முடிபு) பொறையன் கொல்லியில் எழுதிய பாவையின் மாண்ட மாயோள், துவர்வாய் அரும்பிய முலையள் பணைத்தோள் மழைக்கண் மாயோளாகிய தன்னுடன் மறை அமை புணர்ச்சி, புணர்பு பிரிந்திசைப்ப, செலற்கு அருமையின் காவிரி நீத்தம் மண்ணுநள் போல, நெருநல் முயங்கி ஆகம் அடைதந்தோள். (அந்தோ இன்று அல்லகுறிப் பட்டோமே.) (வி-ரை) மாயோள் எனப் பின்னர் வருதலின், மழைக்கண் மாயோள் என்புழிக் கருமையைக் கண்ணிற்கு ஏற்றுக. பேயும் இயங்காத நள்ளிரவில் நிகழ்ந்ததாதலின் அஃது அறியாததாயிற்று. புணர்வு பிரிந்து எனப் பாடங்கொண்டு, புணர்ந்த காலத்து மேனி அழகாலும் பிரிந்த காலத்து மேனி வேறுபாட்டாலும் இசைப்ப என்றுமாம்; இப்பொருட்குப் புணர்வு பிரிந்து என்பவற்றைப் புணர்தல் பிரிதல் எனத் தொழிற்பெயராக்குக. நீத்தம் மண்ணுநள் போல முயங்கி - நீத்தத்திற் குளிக்குமிடத்துக் குளிருமாறு போலக் குளிர முயங்கி. இச் செய்யுள் நச்சினார்க்கினியர் கருத்தின்படி, தலைவன் தோழியை இரப்பதாகும். (மே-ள்) `மெய் தொட்டுப் பயிறல்'1 என்னும் சூத்திரத்து, `களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகும்' என்பதனால் இச் செய்யுள், தலைவியாற் குறி பெற்றும் தலைவன் தோழியை இரப்பதாகும் என்றும், `தன்னுறு வேட்கை'2 என்னுஞ் சூத்திரத்து, `கடும்புனல்.... அடைதந்தோளே' என்பது, தலைவி வேட்கையைத் தலைவன் குறிப்பால் உணர்ந்தது என்றும் கூறினர், நச். 63. பாலை (தலைமகள் புணர்ந்துடன் செல்லச் செவிலி தன் மகளுக்குச் சொல்லியது.) கேளாய் வாழியோ மகளைநின் தோழி திருநகர் வரைப்பகம் புலம்ப அவனொடு பெருமலை இறந்தது நோவேன் நோவல் கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி 5. முடங்குதாள் உதைத்த 1பொலங்கெழு பூழி பெரும்புலர் விடியல் விரிந்துவெயில் எறிப்பக் கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல் சிறுபுன் பெடையொடு குடையும் ஆங்கண் அஞ்சுவரத் தகுந கானம் நீந்திக் 10. கன்றுகா ணாதுபுன் கண்ண செவிசாய்த்து மன்றுநிறை பைதல் கூரப் பலவுடன் கறவை தந்த 2கடுங்கால் மறவர் கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை 15. மடமயில் அன்னஎன் நடைமெலி பேதை தோள்துணை யாகத் துயிற்றத் துஞ்சாள் வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண் சேக்கோள் அறையுந் தண்ணுமை கேட்குநள் கொல்லெனக் கலுழுமென் நெஞ்சே. - கருவூர்க் கண்ணம் புல்லனார். (சொ-ள்) 1. மகளை வாழியோ - மகளே! வாழ்வாயாக. கேளாய்-; 1-3. நின் தோழி - நின் தோழியானவள், திரு நகர் வரைப்பு அகம் புலம்ப - அழகிய இல்லின் இடனெல்லாம் தனிமையுற, அவனொடு பெருமலை இறந்தது - அத் தலைவனுடன் பெரிய மலையைத் தாண்டி உடன்போயது பற்றி, நோவேன் - யான் வருந்து கின்றேனல்லேன்; 4-9. கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி - அஞ்சாமையை யுடைய யானை நீண்ட கையினை அணைத்து, முடங்கு தாள் உதைத்த - வளைந்த காலால் உதைத்துண்டாக்கிய, பொலம் கெழு பூழி - பொற்றுகள் எழும் புழுதியில், பெரும் புலர் விடியல் - பெரிய இருள் புலர்கின்ற விடியற்காலத்தில், விரிந்து வெயில் எறிப்ப - வெய்யில் மிகுந்து எறிக்க, கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல் - கரிய மாலை போன்ற கழுத்தினையுடைய சிவந்த குறும்பூழின் சேவல், சிறு புன் பெடையொடு - தனது சிறிய புல்லிய பெடையுடன், குடையும் ஆங்கண் - குடையும் அவ்விடங்களையுடைய, அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி - அச்சமுறத் தகுவதாகிய காட்டினைக் கடந்து; 10-13. கன்று காணாது புன்கண்ண செவிசாய்த்து - கன்று களைக் காணாமையின் பொலிவற்ற கண்ணினவாய்ச் செவிகளைச் சாய்த்து, மன்று நிறை பைதல் கூர - மன்றில் நிறைவதாலாம் துன்பம் மிக, பலவுடன் கறவை தந்த - பல கறவைகளையும் ஒருங்கே தந்து அடைத்த, கடுங்கால் மறவர் - வேகம் மிக்க காலினராகிய வெட்சி மறவரது, கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ - கல்லென்னும் ஆரவாரத்தையுடைய சீறூரில் இரவிலே தங்கி; 14-19. முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை - முதுமை வாய்த்தலையுடைய பெண்டின் சோர்ந்த காலினையுடைய குடிலிடத்து, மடமயில் அன்ன என் நடைமெலி பேதை - இளைய மயிலை யொத்த நடத்தல் தளர்ந்திட்ட என் பேதைமகள், தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள் - தன் தலைவன் தனது தோளில் அணைத்துத் துயிற்றவும் துயிலாதவளாகி, வேட்டக் கள்வர் - வேட்டம் புரியும் கள்வரது, விசியுறு கடுங்கண் - வாரினை யிழுத்துக் கட்டிய கடிய கண்ணினையுடைய, சேக்கோள் அறையும் தண்ணுமை - ஏறுகளைக் கொள்ளுங்கால் அடிக்கும் பறையின் ஒலியினை, கேட்குநள் கொல் எனக் கலுழும் என் நெஞ்சு - கேட்டு அழுவளோ என நினைந்தழும் என் நெஞ்சினைக் குறித்து; 3. நோவல் - யான் நோதல் செய்வேன். (முடிபு) மகளே! வாழி! கேளாய்! நின் தோழி அவனொடு மலையிறந்தது நோவேன்; யானை உதைத்த பூழி சேவல் பெடையொடு குடையும் ஆங்கண் கானம் நீந்தி மறவர் சீறூர் அசைஇ குரம்பை துஞ்சாள் தண்ணுமை கேட்குநள் கொல் லெனக் கலுழும் நெஞ்சை நோக்கி நோவல். (வி-ரை) வாழியோ, மகளை: ஓவும் ஐயும் அசைகள். பூழியில் குடையும் என்க. வெயிலெறிப்ப - எறிக்கும்பொழுது, மன்று நிறை கறவை எனலுமாம். சேக்கோள் - ஏறுகோடல். கானம் நீந்துதலும் மறவர் சீறூரில் எல்லியில் தங்குதலும் குரம்பையிற் றுயிற்றவும் துஞ்சா திருத்தலும் தண்ணுமை கேட்டலும் ஆகிய இவற்றைக் குறித்துக் கலுழும் நெஞ்சு என்பது கருத்தாகக் கொள்க. (மே-ள்) `தன்னுமவனும்'1 என்னுஞ் சூத்திரத்து, இச்செய்யுள் அச்சம் கூறியது என்பர், நச். 64. முல்லை (வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.) களையும் இடனால் பாக உளைஅணி உலகுகடப் பன்ன புள்ளியற் கலிமா வகையமை வனப்பின் வள்புநீ தெரியத் தளவுப்பிணி அவிழ்ந்த தண்பதப் பெருவழி 5. ஐதிலங் ககலிலை நெய்கனி நோன்காழ் வென்வேல் இளையர் வீங்குபரி முடுகச் செலவுநாம் அயர்ந்தன மாயின் பெயல கடுநீர் வரித்த செந்நில மருங்கின் விடுநெறி ஈர்மணல் வாரணஞ் சிதரப் 10. பாம்புறை புற்றத் தீர்ம்புறங் குத்தி மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு உடனிலை வேட்கையின் மடநாகு தழீஇ ஊர்வயிற் பெயரும் பொழுதில் சேர்புடன் கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரும் 15. ஆபூண் தெண்மணி ஐதியம் பின்னிசை புலம்புகொள் மாலை கேட்டொறுங் கலங்கினள் உறைவோள் கையறு நிலையே. - ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார். (சொ-ள்) 1. பாக - பாகனே, 1-3. உளை அணி - பிடரி மயிரணிந்த, உலகு கடப்பு அன்ன - உலகத்தையே கடத்தல் வல்லது போன்ற, புள் இயல் கலி மா - பறவையையொத்த வேகம் கொண்ட செருக்குடைய குதிரையின், வகையமை வனப்பின் - செலுத்துங் கூறுபாடமைந்த வனப்பினை யுடைய, வள்பு நீ தெரிய - கடிவாள வாரினை நீ ஆராய்ந்துகொள்ள; 4-7. தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெருவழி - செம் முல்லையின் அரும்பு விரிந்த குளிர்ந்த செவ்வியைக் கொண்ட பெரு வழியில், ஐது இலங்கு அகல்இலை நெய்கனி நோன்காழ் - அழகிதாக விளங்கும் அகன்ற இலையினையும் எண்ணெய் கனியப்பெற்ற வலிய தண்டினையும் உடைய, வென்வேல் இளையர் - வெற்றி பொருந்திய வேலை ஏந்திய ஏவலர், வீங்கு பரி முடுக - (தாளால் ஏகும்) விரைந்த செலவில் மிகு வேகங்கொள்ள, செலவு நாம் அயர்ந்தனமாயின் - செல்லும் செலவினை நாம் விரும்பினமாயின்; 7-17. பெயல கடுநீர் வரித்த செந்நில மருங்கின் - மழை யினுடைய கடுகிய நீர் வரிவரியாக இழைத்த செம்மண் நிலப் பக்கத்தே, விடுநெறி ஈர் மணல் வாரணம் சிதர - தேர்விடும் நெறியிலுள்ள ஈர மணலைக் கானங் கோழி கிளற, பாம்புஉறை புற்றத்து ஈர்ம்புறங் குத்தி - பாம்பு அடங்கிய புற்றின் குளிர்ந்த மேற் புறத்தைக் குத்தி, மண்ணுடைக் கோட்ட - கோட்டு மண்கொண்ட, அண்ணல் ஏறு - தலைமைமேவிய ஏறு, உடன்நிலை வேட்கையின் மடநாகு தழீஇ - (எக்காலத்தும்) தன்னொடு உடனிற்றலை விரும்பிய தனது இளைய பசுவினைத் தழுவிக்கொண்டு, ஊர் வயின் பெயரும் பொழுதில் - ஊரின்கண் மீண்டு வரும் பொழுதில், சேர்பு உடன் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் - யாவும் ஒருங்கு சேர்ந்து கன்றுகளை அழைக்கும் குரலினவாய்த் தொழுவிலே நிறையப் புகும், ஆ பூண் தெண்மணி ஐது இயம்பு இன்னிசை - ஆக்கள் பூண்டுள தெள்ளிய மணிகளின் அழகியதாய் இயம்பும் இனிய ஒலியை, புலம்புகொள் மாலை கேட்டொறும் - தனிமையைக் கொண்டுள்ள மாலையிற் கேட்குந்தொறும், கலங்கினள் உறைவோள் கையறு நிலை - கலங்கி யுறைவோளாகிய நம் தலைவியது செயலற்ற நிலையை. 1. களையும் இடன் - நீக்கும் காலம் இதுவேயாகும். (முடிபு) பாக, நீ வள்பு தெரிய இளையர் முடுக. நாம் செலவு அயர்ந்தன மாயின், வாரணம் சிதர ஏறு நாகு தழீஇப் பெயரும் பொழுதில், ஆவின் மணி இசை மாலை கேட்டொறும் கலங்கினள் உறைவோள் கையறு நிலை களையும் இடம் இது. (வி-ரை) தலைவன் ஊர்ந்து செல்லும் குதிரை பறவை போலும் விரைந்த செலவினதா மென்பது, `வினைவயிற் பிரிந்தோன் மீண்டு' வருங்காலை, யிடைச்சுர மருங்கிற் றவிர்த லில்லை, யுள்ளம் போல வுற்றுழி யுதவும், புள்ளியற் கலிமா வுடைமை யான'1 எனத் தொல்காப்பியனார் கூறுமாற்றானும் அறிக. ஐதியம்புதல் - நடக்க நடக்க விட்டிசைத்தல் என்றலுமாம். (மே-ள்) `எருமையும் மரையும் பெற்றமும் நாகே'2 என்னும் சூத்திரத்து, பெற்றத்திற்கு நாகு எனும் பெண்பாற் பெயர் வந்ததற்கு, `உடனிலை வேட்கையின் மடநாகு தழீஇ' என்பதனை எடுத்துக் காட்டினர், பேரா. 65. பாலை (வேறுபட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது.) உன்னங் கொள்கையொ டுளங்கரந் துறையும் அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம் ஈரஞ் சேரா இயல்பின் பொய்ம்மொழிச் சேரியம் பெண்டிர் கௌவையும் ஒழிகம் 5. நாடுகண் அகற்றிய உதியஞ் சேரற் பாடிச் சென்ற பரிசிலர் போல உவவினி வாழி தோழி அவரே பொம்மல் ஓதி நம்மொ டொராங்குச் செலவயர்ந்த தனரால் இன்றே மலைதொறும் 10. மால்கழை பிசைந்த கால்வாய் கூரெரி மீன்கொள் பரதவர் கொடுந்திமில் நளிசுடர் வான்தோய் புணரி மிசைக்கண் டாங்கு மேவரத் தோன்றும் யாஅஉயர் நனந்தலை உவயல் யானை வெரிநுச்சென் றன்ன 15. கல்லூர் பிழிதரும் புல்சாய் சிறுநெறிக் காடுமீக் கூறுங் கோடேந் தொருத்தல் ஆறுகடி கொள்ளும் அருஞ்சுரம் பணைத்தோள் நாறைங் கூந்தற் கொம்மை வரிமுலை நிரையிதழ் உண்கண் மகளிர்க்கு 20. அரிய வாலென அழுங்கிய செலவே. - மாமூலனார். (சொ-ள்) 7-8. பொம்மல் ஓதி - பொலிவுற்ற கூந்தலை யுடையாய், தோழி வாழி-, அவரே - நம் தலைவர்; 9-16. மலை தொறும் மால்கழை பிசைந்த கால் வாய் கூர் எரி- மலைகள்தோறும் பெரிய மூங்கில்கள் உரசிக்கொள்வதால் உண்டாகிய காற்று வீசுவதால் மிக்க தீச்சுடர்கள், மீன்கொள் பரதவர் கொடும் திமில் நளி சுடர் - மீன் பிடிக்கும் பரதவர்களது வளைந்த படகில் தோன்றும் மிக்க சுடர்கள், வான்தோய் புணரி மிசைக் கண்டாங்கு - வானளாவிய கடல் அலையின்மீது காணப்படுமாறு, மேவரத் தோன்றும் - பொருந்தத் தோன்றும், யா உயர் நனந்தலை - யா மரங்கள் உயர்ந்துள அகன்ற இடத்தில், உயவல் யானை வெரிநுச் சென்றன்ன - பட்டினியால் மெலிந்து வருந்திய யானையின் முதுகில் நடந்து செல்வது போலும், கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி - பாறையில் ஏறியும் இறங்கியும் செல்லும் மூங்கில்கள் சாய்ந்த சிறு நெறிகளையுடைய, காடு மீக் கூறும் கோடு ஏந்து ஒருத்தல் - காட்டை மேம்படச் சொலற்குக் காரணமான நிமிர்ந்த கோட்டினையுடைய களிறு, ஆறு கடி கொள்ளும் அருஞ்சுரம் - வழியினைக் காவல் பூண்டிருத்தற்குரிய அரிய சுரநெறிகள், பணைத் தோள் நாறு ஐங்கூந்தல் கொம்மை வரி முலை - மூங்கில் போன்ற தோளினையும் மணம் நாறும் ஐவகைக் கூறுபாடும் அமைந்த கூந்தலினையும் திரண்ட தேமலையுடைய முலையினையும், நிரையிதழ் உண்கண் மகளிர்க்கு - பூப்போலும் மையுண்ட கண்ணினையும் உடைய மகளிர்க்கு, அரிய என அழுங்கிய செலவு - செல்லற்கு அரியவாகும் எனத் தாழ்த்திருந்த போக்கினை; 8-9. நம்மொடு ஒராங்குச் செலவு அயர்ந்தனர் - இதுபோது நம்மொடு ஒரு பெற்றியே உடன்செல்ல விரும்பினர் ஆதலின்; 1-4. உன்னம் கொள்கையோடு - நம் கருத்தினை உணர்ந்து கொண்ட அறிவுடன், உளங் கரந்து உறையும் - தானறிந்தவற்றைக் கரந்து அவற்றை வெளியிட்டுக் கூறாதே செலுத்துகிற, அன்னை சொல்லும் உய்கம் - அன்னையின் கடுஞ்சொல்லினின்றும் தப்புவோம், என்னதும் ஈரம் சேரா இயல்பின் - சிறிதும் அன்பு பொருந்தாத இயல்பினையுடைய, பொய்ம்மொழிச் சேரியம் பெண்டிர் - பொய்ம் மொழி கூறும் சேரிப் பெண்டிர்களது, கௌவையும் ஒழிகம் - அலரினையும் நீங்குவோம்; 5-7. நாடு கண் அகற்றிய உதியஞ் சேரல் - தன் நாட்டினைப் பிறர் நாட்டினை வென்று கொண்டமையான் விரிவாக்கிய உதியஞ் சேரலாதனை, பாடிச் சென்ற பரிசிலர் போல - பாடிச் செல்லும் பரிசிலரைப் போல, உவ இனி - இப்பொழுது மகிழ்வாயாக. (முடிபு) பொம்மலோதி! தோழி! அவர் அருஞ்சுரம் மகளிர்க்கு அரியவாலென அழுங்கிய செலவை இன்று நம்மொடு செல வயர்ந்தனர்; ஆதலின் அன்னை சொல்லும் உய்கம்; சேரிப் பெண்டிர் கௌவையும் ஒழிகம்; உதியஞ் சேரற் பாடிச் சென்ற பரிசிலர் போல இனி உவ. மலைதொறும் கூரெரி கொடுந்திமில் நளிசுடர் புணரிமிசைக் கண்டாங்குத் தோன்றும் அருஞ்சுரமெனவும், நனந்தலைச் சிறு நெறி ஒருத்தல் ஆறு கடி கொள்ளும் அருஞ்சுரமெனவும் இயைக்க. (வி-ரை) உன்னம் - கருத்து; இஃது உன்னல் என்னும் வினையடி யாகப் பிறந்த பெயர். சேரியம் பெண்டிர்: அம்: அசை. யானையின் முதுகின்மேல் சென்றன்ன சிறுநெறி, கல்லூர் பிழிதரு சிறு நெறி என இயையும். புல் - மூங்கில். யானையையுடைய காடு காட்டிற் சிறந்த தென்றார். யானையுடைமையின் யாவரும் இயங்காமையின், ஒருத்தல் கடி கொள்ளும் சுரம் எனப்பட்டது. வரி - தொய்யிலுமாம். நிரையிதழ்: நிரைத்த இதழை யுடையது என மலருக்கு ஆகுபெயர். (மே-ள்) `தலைவரும் விழுமம் நிலையெடுத் துரைப்பினும்'1 என்னுஞ் சூத்திரத்து, `விடுத்தற் கண்ணும்' என்பதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இஃது உடன்போக்கு நயப்பித்தது என்றனர், இளம். இச் சூத்திரத்து, இச் செய்யுளை எடுத்துக் காட்டி`இதனுள் அன்னை சொல்லும் பெண்டிர் கௌவையும் தலைவரும் விழும மென்று (தோழி) தலைவிக்குக் கூறினாள்'1 என்றனர், நச். `பெருமையும் சிறுமையும் மெய்ப்பா டெட்டன், வழிமருங் கறியத் தோன்று மென்ப'2 என்னுஞ் சூத்திரத்து, பாடிச் சென்ற பரிசிலர் போல, உவவினி வாழி தோழி என்பது உவகையுவமை என்றனர், பேரா. 66. மருதம் (பரத்தையிற் பிரிந்த தலைமகற்கு வாயிலாப்புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) இம்மை யுலகத் திசையொடும் விளங்கி மறுமை யுலகமும் மறுவின் றெய்துப செறுநரும் விழையுஞ் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப் 5. பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் வாயே யாகுதல் வாய்த்தனம் தோழி நிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு வதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின் இயன்ற அணியன் இத்தெரு இறப்போன் 10. மாண்டொழின் மாமணி கறங்கக் கடைகழிந்து காண்டல் விருப்பொடு தளர்புதளர் போடும் பூங்கட் புதல்வனை நோக்கி நெடுந்தேர் தாங்குமதி வலவஎன் றிழிந்தனன் தாங்காது மணிபுரை செவ்வாய் மார்பகஞ் சிவணப் 15. புல்லிப் பெரும செல்லினி அகத்தெனக் கொடுப்போற் கொல்லான் கலுழ்தலின் தடுத்த மாநிதிக் கிழவனும் போன்மென மகனொடு தானே புகுதந் தோனே யானது படுத்தனென் ஆகுதல் நாணி இடித்திவன் 20. கலக்கினன் போலுமிக் கொடியோன் எனச்சென் றலைக்குங் கோலொடு குறுகத் தலைக்கொண் டிமிழ்கண் முழவின் இன்சீர் அவர்மனைப் பயிர்வன போலவந் திசைப்பவும் தவிரான் கழங்கா டாயத் தன்றுநம் அருளிய 25. பழங்கண் ணோட்டமும் நலிய அழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே. -1செல்லூர்க் கோசிகன் கண்ணனார். (சொ-ள்) 1-6. தோழி-, செறுநரும் விழையும் செயிர் தீர்காட்சி - பகைவரும் விரும்பும் குற்றமற்ற அழகினையுடைய, சிறுவர்ப் பயந்த செம்மலோர் - மக்களைப் பெற்ற தலைமையை யுடையோர், இம்மை உலகத்து இசையொடும் விளங்கி - இவ்வுலகத்தே புகழொடும் விளக்கமுற்று, மறுமை யுலகமும் மறுவின்று எய்துப என - மறுமையுலக வாழ்வினையும் குற்றமின்றி எய்துவர் என்று, பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம் - பலருங் கூறிய பழைய மொழிகளெல்லாம், வாயே ஆகுதல் வாய்த்தனம் - உண்மையே யாதலைக் கண்கூடாகக் காணப் பெற்றேம்; 7-9. நிரைதார் மார்பன் - மலர் வரிசையாலாய மாலையைத் தரித்த மார்பனாகிய நம் தலைவன், நெருநல் - நேற்று, ஒருத்தியொடு வதுவை அயர்தல் வேண்டி - ஒருத்தியை மணம் செய்து கொள்ள விரும்பி, புதுவதின் இயன்ற அணியன் - புதிதாக இயன்ற ஒப்பனை யுடையனாகி, இத்தெரு இறப்போன் - இத் தெருவினைக் கடந்து செல்வோன்; 10-12. மாண் தொழில் மா - மாட்சியுற்ற தொழிலிற் சிறந்த (அவனது) குதிரையின், மணி கறங்க - மணி ஒலிக்க (அதனைக் கேட்டு), கடை கழிந்து - தலைவாயிலைக் கடந்து சென்று, காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும் - (தன்னைக்) காணும் விருப்புடன் தளர்ந்து தளர்ந்து ஓடி வந்த, பூங்கண் புதல்வனை நோக்கி - பூப்போலும் கண்களையுடைய தன் புதல்வனைக் கண்டு; 12-18. வலவ நெடுந்தேர் தாங்குமதி என்று - வலவனே நீண்ட தேரினை நிறுத்துவாயாக என்று கூறி, இழிந்தனன் - தேரினின்றும் இறங்கி, தாங்காது - தாழ்க்காது, மணிபுரை செவ்வாய் மார்பகம் சிவணப் புல்லி - (புதல்வனது) பவளமணியினை யொத்த சிவந்தவாய் தனது மார்பகத்தே பொருந்த எடுத்துத் தழுவி, பெரும செல் இனி அகத்தெனக் கொடுப்போர்க்கு - பெரும! இனி அகத்திற்குச் செல்வாயாக என விடுப்போனுக்கு, ஒல்லான் கலுழ்தலின் - இசையானாகி அழுதலின், தடுத்த மகனொடு மாநிதிக் கிழவனும் போன்மெனப் புகு தந்தோனே - அங்ஙனம் தடுத்த மகனோடு இவன் குபேரனும் ஆவான் எனக் கூறி இல்லிற் புகுந்தனன்; 18-21. யான் அது படுத்தனென் ஆகுதல் நாணி - யான் அதனைச் செய்வித்தேன் ஆதற்கு நாணி, இக் கொடியோன் - இக் கொடிய மகன், இடித்து இவர் கலங்கினன் போலும் என - இவனை இடித்துக் கலக்கமுறுவித்தனன் போலும் என்றுகூறி, அடிக்குங் கோலொடு சென்று குறுக - அடித்தற்குரிய கோலுடன் சென்று அடைய, தலைக்கொண்டு - மகனைத் தன்பா லணைத்துக்கொண்டு; 22-26. அவர் மனை - வதுவை நிகழும் அவர் மனையில், இமிழ் கண் முழவின் இன்சீர் - ஒலிக்கும் கண்ணினையுடைய முழவின் இனிய ஓசை, பயிர்வனபோல வந்து இசைப்பவும் - தன்னை அழைப்பனபோல வந்தொலிக்கவும், தவிரான் - தவிராது, கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய - முன்பொருநாள் கழங்கு ஆடும் ஆயத்தாரிடை வந்து நம்மை அருள் செய்த, பழங்கண்ணோட்ட மும் நலிய - பழைய அருட் செயலும் வருத்த, அயர்ந்த தன் மணன் - தொடங்கிய தனது மணத்தினை, அழுங்கினன் அல்லனோ - நிறுத்திவிட்டானல்லனோ? (முடிபு) தோழி, மார்பன் ஒருத்தியொடு வதுவை வேண்டி இத் தெரு இறப்போன், கடைகழிந்து ஓடும் புதல்வனை நோக்கி, தேர் இழிந்தனன் புல்லிக் கொடுப்போற்கு, ஒல்லான் கலுழ்தலின் மகனொடு புகுதந்தோன், யான் நாணிக் கோலொடு குறுக. தலைக்கொண்டு, அவர்மனை விழவின் இன்சீர் இசைப்பவும் கண்ணோட்டமும் நலிய மணன் அழுங்கினன் அல்லனோ? ஆதலால், பழமொழி வாயேயாதல் வாய்த்தனம். சிறுவர்ப் பயந்த செம்மலோர் மறுவின் றெய்துப எனப் பல்லோர் கூறிய பழமொழி என்க. (வி-ரை) இம்மை யுலகம் - இவ்வுடம்புடன் வினைப்பயன் நுகரும் உலகம். மறுமை யுலகம் - உயிர் இவ்வுடம்பின் நீங்கிச் சென்று வினைப்பயன் நுகரும் உலகம். மறுவின் றெய்துப என்பதனால் அது நல்லுலகம் என்பது பெற்றாம். இன்று - இன்றி; வினையெச்சக் குறிப்பு முற்று. செறுநரும் விழையும் என்னுங் கருத்து "யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வன்" என (16) முன்னர்ப் போந்ததுங் காண்க. கொடுப்போற்கு - விடுப்போனுக்கு; தன்னைக் குபேரனும் போல்வன் எனக் கண்டார் சொல்லும்படி மகனொடு புகுதந்தோன் என்றுரைத்தலுமாம். இருவழியும் கிழவனும் என்ற உம்மை எச்சப் பொருட்டு. தான் மகனைப் புறஞ்செல்ல விடுத்தமையால், அவன் அது செய்தான் எனக் கொண்டு, `யான் அது படுத்தனெனாகுதல் நாணி' என்றாள். அன்று - இயற்கைப் புணர்ச்சிக் காலத்து ஒரு நாள், அயர்ந்தமணன் - விரும்பிய மணம் என்றுமாம். (மே-ள்) `பின்முறை யாக்கிய பெரும் பொருள் வதுவைத், தொன்முறை மனைவி எதிர்ப்பா டாயினு, மின்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினு, மிறந்த துணைய கிழவோ னாங்கட், கலங்கலு முரிய னென்மனார் புலவர்'1 என்னுஞ் சூத்திரத்திற்கு, இச்செய்யுளை உதாரணமாகக் காட்டினர், இளம். `நிகழ்தகை மருங்கின்'2 என்னுஞ் சூத்திரத்து, ‘நிரைதார் மார்ப னெருந லொருத்தியொடு......' என்றது தலைவி புலவிக்கட் புகழ்ந்தது என்றும், `வாயிற் கிளவி'3 என்னுஞ் சூத்திரத்து, தோழி வாயிலாகச் சென்றுழி, தலைவி வெளிப்படக் கூறுதலுங் கொள்க; அஃது `இம்மை யுலகு' என்னும் அகப்பாட்டினுட் காண்க என்றும் கூறினர், நச். "இன்பத்தை வெறுத்தல்4 என்னுஞ் சூத்திரத்து, `மெய்யே யென்றல்' என்றதற்குப் பொய்யை மெய்யென்று கூறுதல் என்று பொருள் கூறி, அது, `கழங்காடாயத்து.... அயர்ந்ததன் மணனே'; என்பது; தானே தன் மகனை வாயில் கொண்டு புக்கானாயினும், அதனைப் பழங் கண்ணோட்டமும் நலிதரப் பொய்யே புகுந்தானென்று மெய்யாகத் துணிந்து கோடலால் அப்பெயர்த் தாயிற்று என்றார். பேரா. 67. பாலை (பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) யானெவன் செய்கோ தோழி பொறிவரி வானம் வாழ்த்தி பாடவும் அருளாது உறைதுறந் தெழிலி நீங்கலிற் பறைபுடன் மரம்புல் லென்ற முரம்புயர் நனந்தலை 5. அரம்போழ் நுதிய வாளி அம்பின் நிரம்பா நோக்கின் நிரையங் கொண்மார் நெல்லி நீளிடை எல்லி மண்டி நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் 10. பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் வேலூன்று பலகை 5வேற்றுமுனை கடுக்கும் மொழிபெயர் தேஎந் 6தருமார் மன்னர் கழிப்பிணிக் கறைத்தோல் நிரைகண் டன்ன உவலிடு படுக்கை ஆளுகு பறந்தலை 15. உருவில் பேஎய் ஊராத் தேரொடு நிலம்படு மின்மினி போலப் பலவுடன் இலங்குபரல் இமைக்கும் என்பநம் நலந்துறந் துறைநர் சென்ற ஆறே. - 7நோய்பாடியார். (சொ-ள்) 1. தோழி-; 17-18. நலம் நம் துறந்து உறைநர் சென்ற ஆறு - நமது இன்பத்தைக் கைவிட்டுப் பிரிந்து போயிருப்பவர் சென்ற நெறி; 1-14. பொறி வரி வானம் வாழ்த்தி பாடவும் - புள்ளிகளையும் வரிகளையுமுடைய வானம்பாடிப்புள் பாடவும், அருளாது உறை துறந்து எழிலி நீங்கலின் - மேகம் அருள் செய்யாது துளிபெய்தலை நீத்து அகன்று போதலின், பறைபு உடன் மரம் புல் என்ற - மரங்கள் தம் இலைகள் யாவும் கெட்டொழிதலின் பொலிவற்றிற்கும், முரம்பு உயர் நனந்தலை - கற்குவியல்கள் உயர்ந்துள அகன்ற இடமாகிய, நெல்லி நீளிடை - நெல்லிமரங்களையுடைய நீண்ட இடங்களில், எல்லி மண்டி - இருளிலே விரைந்து சென்று, அரம் போழ் நுதிய - அரத்தினால் அராவப்பட்ட முனையையுடைய, வாளி அம்பின் - பற்களையுடைய அம்பினையும், நிரம்பா நோக்கின் - இடுக்கிக் குறிபார்க்கும் பார்வையினையு முடையராய், நிரை அம் கொண்மார் - தம் நிரையை மீட்க வேண்டி, நல் அமர் கடந்த - வெட்சியாருடன் நிகழ்ந்த நல்ல போரினை வென்று பட்ட, நாணுடை மறவர் - மானம் மிக்க கரந்தை வீரர்களது, பெயரும் பீடும் எழுதி - பெயரினையும் சிறப்பினையும் பொறித்து, அதர்தொறும் - நெறிதோறும், பீலி சூட்டிய - மயிற்றோகை யணிந்த, பிறங்கு நிலை நடுகல் - விளங்கும் நிலை மேவிய நடுகல்லானவை, வேல் ஊன்று பலகை - ஊன்றிய வேலும், சார்த்திய பலகையுங் கொண்டு, வேற்று முனை கடுக்கும் - பகைவருடன் போர்செய்யும் முனைப் புலத்தை யொக்கும், மொழி பெயர் தேஎம் தருமார் - வேற்றுமொழி வழங்கும் தேயத்தைக் கொள்ள வேண்டிச் செல்லும், மன்னர் - மன்னர்களது, கழிப்பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன - கழியாற் பிணிக்கப்பட்ட கரிய பரிசையின் நிரையினைக் கண்டாலொத்த, உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை - மரித்த ஆட்களை இட்டுத் தழைகளைக் கொண்டு மூடிய கற்குவியல்களையுடைய பாழிடத்தே; 15-17. உரு இல் ஊராப் பேய்த் தேரொடு - உரு இல்லாத ஊர்ந்திடப் பெறாத பேய்த்தேருடன், நிலம்படு மின்மினிப்போல - நிலத்தே பொருந்திய மின்மினிப் புழுவைப்போல, பலவுடன் இலங்கு பரல் இமைக்கும் - விளங்கும் பரற்கற்கள் பலவும் ஒருங்கு ஒளிவிடும், என்ப - என்று கூறுவர்; 1. யான் எவன் செய்கோ - யான் என் செய்வேனோ? (முடிபு) தோழி! நம் நலம் துறந்து உறைநர் சென்ற ஆறு, பறந்தலையில் ஊராத் தேரொடு பரல் இமைக்கும் என்ப; யான் எவன் செய்கோ? எழிலி நீங்கலின் மரம் புல்லென்ற நனந்தலை நீளிடை எல்லி மண்டிக் கடந்த மறவர் பெயரும் பீடும் எழுதிப் பீலி சூட்டிய நடுகல் வேலூன்று பலகை வேற்று முனை கடுக்கும் தேஎம் எனவும், தேஎம் தருமார் மன்னர் தோல் நிரை கண்டன்ன பதுக்கைப் பறந்தலை எனவும் கூட்டுக. (வி-ரை) போழ்தல் - ஈங்கு அராவுதல். வாளி அம்பு - எயிற்றம்பு. நிரையம்: அம், அசை. நிரயம் கொண்மார் என்பது பாடமாயின், நரகம்புகுவார் என்றாதல், நரகத்தை அடையவேண்டி என்றாதல் கொள்க. நிரை மீட்கும் போராதலின் `நல்லமர்' என்றார். இது தன்னுறு தொழில் கடந்த - வென்று இறந்த என்றபடி. வேற்று முனையிடத்தும் வேலும் பலகையும் உண்மையின் வேற்று முனை கடுக்கும் என்றார். வேற்று முனை கடந்து என்பது பாடமாயின், நடுகல் முதலியவற்றை யுடைய வேற்று முனையைக் கடந்து சென்ற ஆறு என இயையும். பதுக்கைகள் தோலின் நிரையை ஒக்கும் என்க; உருவில்லாத பேய் என்க. பேய்த்தேராகிய ஊராத் தேர் என்க. ஊராத் தேர் வெளிப்படை. நச்சினார்க்கினியர் இதனைத் தோழி கூற்றாகக் கொள்வர். (மே-ள்) `நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே'1 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள் மண்டிலத் தருமை தலைவன் கூறக் கேட்ட தோழி கூறியது என்றார், நச். 68. குறிஞ்சி (தலைமகன் இரவுக்குறி வந்தமை யறிந்த, தோழி தலைமகட்குச் சொல்லியது.) அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத் தண்ணயத் தமன்ற கூதளங் குழைய இன்னிசை அருவிப் பாடும் என்னதூஉங் கேட்டியோ வாழிவேண் டன்னைநம் படப்பை 5. ஊட்டி அன்ன ஒண்தளிர்ச் செயலை ஓங்குசினைத் தொடுத்த ஊசல் பாம்பென முழுமுதல் துமிய உருமெறிந் தன்றே பின்னும் கேட்டியோ எனவுமஃ தறியாள் அன்னையும் கனைதுயில் மடிந்தனள் அதன்றலை 10. மன்னுயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் வருவ ராயின் பருவம் இதுவெனச் சுடர்ந்திலங் கெல்வளை நெகிழ்ந்த நம்வயின் படர்ந்த உள்ளம் பழுதன் றாக வந்தனர் வாழி தோழி அந்தரத்து 15. இமிழ்பெயல் தலைஇய இனப்பல கொண்மூத் தவிர்வில் வெள்ளம் தலைத்தலை சிறப்பக் கன்றுகால் ஒய்யும் கடுஞ்சுழி நீத்தம் புன்றலை மடப்பிடிப் பூசல் பலவுடன் வெண்கோட் டியானை விளிபடத் துழவும் 20. அகல்வாய்ப் பாந்தட் படாஅர்ப் பகலும் அஞ்சும் பனிக்கடுஞ் சுரனே. - ஊட்டியார். (சொ-ள்) 14. தோழி வாழி -, (நாம் நம் அன்னையை நோக்கி அவள் துயிலுதலை உணர்ந்து கொள்ள;) 1-4. அன்னாய் வாழி வேண்டு அன்னை - அன்னையே வாழ் வாயாக, அன்னையே நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக. நம் படப்பைத் தண் அயத்து அமன்ற - நம் தோட்டத்திலுள்ள குளிர்ந்த பள்ளத்தே நிறைந்த, கூதளம் குழைய - கூதளஞ் செடியின் தழைகளின் கண்ணே விழும், இன்னிசை அருவிப் பாடும் - இனிய இசையையுடைய அருவி யொலியும், என்னதூஉம் கேட்டியோ - சிறிதேனும் கேட்டாயோ (எனவும்); 4-8. பின்னும் - மற்றும், வாழி வேண்டு அன்னை-, நம் படப்பை - நம் தோட்டத்திலுள்ள, ஊட்டி யன்ன ஒண் தளிர்ச் செயலை - அரக்கு ஊட்டினாற்போலும் ஒள்ளிய தளிரினையுடைய அசோகினது, ஓங்குசினைத் தொடுத்த - ஓங்கிய கிளையிற் கட்டிய, ஊசல் பாம்பென - ஊசற் கயிற்றினைப் பாம்பெனக் கருதி, முழுமுதல் துமிய உரும் எறிந்தன்றே - (அம்மரத்தின்) பெரிய அடியும் துணிபட இடி வீழ்ந்தது, கேட்டியோ எனவும் - அதனை நீ கேட்டாயோ என்று கூறவும்; 8-9. அஃது அறியாள் அன்னையும் கனைதுயில் மடிந்தனள் - அக் கூற்றினை அறியாளாய் அன்னையும் மிக்க துயிலில் அழுந்தி யுள்ளாள்; 9-10. அதன்றலை மன்னுயிர் மடிந்தன்றால் பொழுதே - அதன் மேலும் அந்நேரம் ஏனை உயிர்களும் துயிலப் பெற்றிருந்தது; 10-13. காதலர் வருவராயில் பருவம் இது வென - நம் காதலர் வருவராயின் அதற்குரிய அமையம் இஃதாகுமென, சுடர்ந்து இலங்கு எல்வளை நெகிழ்ந்த நம்வயின் - விட்டு விளங்கும் ஒளியுடைய வளை கழன்றிடும் நம்மிடத்து, படர்ந்த உள்ளம் பழுது அன்றாக - மேவிய தமது உள்ளம் குற்ற மற்றதாக; 14-21. அந்தரத்து - வானிடத்தே, இமிழ் பெயல் தலைஇய இனப் பலகொண்மூ - இடித்ததுடன் பெய்தலைச் செய்த கூட்டமாய பல மேகங்கள், தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப - நீங்குதலில்லாது (பெய்தமையால்) எழுந்த வெள்ளங்கள் இடந்தொறும் மிகுதலால், கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம் - யானைக்கன்றின் கால்களை இழுத்துச் செல்லும் கடிய சுழியினை யுடைய வெள்ளத்தில், புன்தலை மடப்பிடிப் பூசல் பலவுடன் - மெல்லிய தலையினையுடைய இளைய பெண்யானைகளின் ஆரவாரங்கள் பலவுடன், வெண் கோட்டு யானை விளிபடத் துழவும் - வெள்ளிய கொம்பினையுடைய களிறுகள் தாம் அழைக்கும் ஒலியும் சேரத் தடவிக் கொண்டிருப்பதும், அகல் வாய்ப் பாந்தள் படாஅர் - அகன்ற வாயினையுடைய பாம்புச் செடியினை யுடையதும் ஆகிய, பகலும் அஞ்சும் - பகற்பொழுதினும் அஞ்சப்படும், பனிக் கடுஞ்சுரம் - மிக்க நடுக்கத்தினைச் செய்யும் சுரநெறியில், வந்தனர் - வந்துள்ளார். (முடிபு) தோழி; வாழி! `அன்னாய் வாழி! கேட்டியோ' எனவும், பின்னும், `கேட்டியோ' எனவும், நம் அன்னை அறியாள் கனைதுயில் மடிந்தனள்; அதன்றலை மன்னுயிர் மடிந்தன்று பொழுது; காதலர் வருவராயிற் பருவம் இதுவென நெகிழ்ந்த நம்வயின் படர்ந்த உள்ளம் பழுதன்றாக, சுரம் தலைவர் வந்தனர். (வி-ரை) என்னதும் - சிறிதும். `பின்னுங் கேட்டியோ எனவும்' என்பதிலுள்ள எனவும் என்பதனை என்னதூஉங் கேட்டியோ எனவும் என முன்னரும் வருவித் துரைக்க. அன்னையின் துயில் நிலையை உணரக் கருதியவள் அருவி யோசையைக் கேட்டாயோ என முதலிற் கூறிப் பின்பு அதனினும் துணுக்கத்தினை விளைக்கத்தக்கதாக இடியோசையைக் கேட்டாயோ என்று உரைத்தாள். `அன்னாய் வாழி வேண்டன்னை' என இருமுறையும் அடுக்கி விளிப்பதும் அவளது துயிலின் பெற்றியை அறிதற் பயத்ததே யாகும். ஒருவாற்றானும் அவள் உணர்ந்தெழாமையின் `கனைதுயில் மடிந்தனள்' என்றாள். கனை துயில் மடிதல் - தூக்கத்தில் ஆழ்ந்து விடுதல். இதனால் தாய் துஞ்சுதலும், மன்னுயிர் மடிந்தன்றாற் பொழுது என்பதனால், ஊர், காவலர், நாய் முதலியவை துஞ்சுதலும் கூறினாள். ஒய்தல் - செலுத்துதல். வெள்ளத்தில் கன்று இழுக்கப் படுதலால் பிடியும் களிறும் முறையே பூசல் செய்து, விளித்துத் துழவின. பாந்தட் படார்- பாம்புபோலும் இயல்பினை யுடைய ஒரு செடி. யானை துழவுதலானும் பாந்தட் படாரை யுடைமையானும் சுரம் பகலினும் அஞ்சப்படுவதாயிற்று. துழவும் சுரம், படாரையுடைய சுரம், அஞ்சும் சுரம் எனத் தனித்தனி இயையும். இனி, பிடியின் பூசலும், யானையின் விளியும் உண்டாகக் கேட்டு, அவற்றை உண்டற்குத் துழாவுகின்ற பெரும் பாம்புகள் பொருந்திய காட்டினையுடைய சுரம் என்று உரைத்தலும் ஆம். இப் பொருட்குப் படார் என்பது காடு என்னும் பொருளதாகும். பாம்பு யானையை உண்ணவல்லது என்பதை `இடிகொள் வேழத்தை யெயிற்றொடு எடுத்துடன் விழுங்கும், கடிய மாசுணம்'1 என்பதனானும் அறிக. (உ-றை) `யானைகளும் கன்று காரணமாகப் பிடிவருந்திய பின்பு எடுக்க முயன்றாற்போல, அவரும் அலரானும் வழிய தருமையானும் நாம் நலனழிந்த பின்பு வரைய முயலுவதல்லது முன்பு முயலாரென்பது' என்றது குறிப்புரை. (மே-ள்) `குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி'1 என்னுஞ் சூத்திரத்து "ஊட்டி யன்ன வொண்டளிர்ச் செயலை" என்புழி இன்னதனை யென்று தெரித்து மொழியாமையின் வழுவாம் பிற வெனின், உவமை யென்னும் அலங்காரமாயினன்றே இன்ன தொன்றனை யெனல் வேண்டுவது; செயலையந் தளிரினது செய்யாத நிறத்தைச் செய்ததுபோலக் கூறுங் கருத்தினனாதலிற் பிறிதோர் அலங்காரமாம்" என்றார் சேனாவரையர்; ஊட்டாததனை ஊட்டியது போலக் கூறலின் வேறோர் உவமை யிலக்கணமாம் என்பர் நச்சினார்க்கினியர். `நாற்றமும் தோற்றமும்'2 என்னும் தோழி கூற்று உணர்த்தும் சூத்திரத்து இச்செய்யுளை எடுத்துக்காட்டி, இது தாயது துயிலுணர்ந்து தலைவன் வந்தமை தோழி தலைவிக்குக் கூறிக் குறிவயிற் சென்றது என்றனர், நச். 69. பாலை (பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான் தலைமகன் எனக் கவன்ற தலைமகட்கு வருவர் என்பதுபடச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது.) ஆய்நலந் தொலைந்த மேனியும் மாமலர்த் தகைவனப் பிழந்த கண்ணும் வகையில வண்ணம் வாடிய வரியும் நோக்கி ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின் 5. ஈதல் இன்பம் வெஃகி மேவரச் செய்பொருட் டிறவ ராகிப் புல்லிலைப் பராரை நெல்லி அம்புளித் திரள்காய் கான மடமரைக் கணநிரை கவரும் வேனில் அத்தம் என்னா தேமுற்று 10. விண்பொரு நெடுவரை இயல்தேர் மோரியர் பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த அறையிறந் தகன்றனர் ஆயினும் எனையதூஉம் நீடலர் வாழி தோழி ஆடியல் மடமயில் ஒழித்த பீலி வார்ந்துதம் 15. சிலைமாண் வல்விற் சுற்றிப் பலமாண் அம்புடைக் கையர் அரண்பல நூறி நன்கலந் தரூஉம் வயவர் பெருமகன் சுடர்மணிப் பெரும்பூண் ஆஅய் கானத்துத் தலைநாள் அலரி நாறுநின் 20. அலர்முலை ஆகத் தின்றுயில் மறந்தே. - உமட்டூர்கிழார் மகனார் பரங்கொற்றனார். (சொ-ள்) 13. வாழி தோழி-; 1-4. நீ, ஆய் நலம் தொலைந்த மேனியும் - ஆராயும் அழகு தொலைந்த மேனியினையும், மாமலர்த் தகைவனப்பு இழந்த கண்ணும் - கரிய மலரின் சிறந்த அழகினை இழந்த கண்ணினையும், வகை இல வண்ணம் வாடிய வரியும் - முன்னை யியல்பு இலவாய் அழகு வாடின திதலையையும், நோக்கி ஆழல் ஆன்றிசின் - நோக்கித் துயரில் அழுந்தாதேகொள்; 4-6. உரிதினில் ஈதல் இன்பம் வெஃகி - (நம் காதலர்) ஈதலால் எய்தும் இன்பம் தமக்கு உரிமையாக விரும்பி, மேவர - அது வந்துற, செய்பொருள் திறவராகி - செய்யும் பொருள் வகையராகி; 6-9. புல் இலை பரு அரை நெல்லி அம் புளித் திரள்காய் - சிறிய இலையினையும் பரிய அடியினையும் உடைய நெல்லியின் இனிய புளிப்பினையுடைய திரண்ட காயினை, கானம் மடமரைக் கண நிரை கவரும் - கானத்தே யுள்ள இளைய மரைமானின் மிக்க கூட்டம் தின்னும், வேனில் அத்தம் என்னாது - வெம்மை மிக்க நெறி என்று நினையாது, ஏமுற்று - மயக்கமுற்று; 10-12. விண்பொரு நெடுவரை இயல் தேர் மோரியர் - விண்ணை அளாவும் நீண்டுயர்ந்த பெருமலைகளில் செல்லும் தேரினையுடைய மோரியர், பொன்புனை திகிரி திரிதர - தங்கள் பொன்னாலியன்ற உருள் (தடையின்றிச்) செல்ல, குறைத்த அறை இறந்து அகன்றன ராயினும் - வெட்டி நெறியாக்கிக் கொண்ட குன்றங்களைக் கடந்து சென்றாராயினும்; 13-20. ஆடு இயல் மடமயில் ஒழித்த பீலி வார்ந்து - ஆடும் இயல் வாய்ந்த இளைய மயில் நீக்கிய தோகையை உரித்து, தம் சிலை மாண் வல் வில் சுற்றி - தமது ஓசை மிக்க வலிய வில்லில் சுற்றி, பல மாண் அம்புடைக் கையர் - பலவாகிய மாட்சியுற்ற அம்புடைய கையினராய், அரண் பல நூறி - பகைவர் அரண்கள் பலவற்றை அழித்து, நன்கலம் தரூஉம் - நல்ல அணிகலன்களைக் கொணரும், வயவர் பெருமகன் சுடர்மணிப் பெரும்பூண் ஆஅய் கானத்து - வீரர்கள் பெருமானாகிய சுடரும் மணிகள் பதித்த பெரும் பூணினை அணிந்த ஆய் என்பானது காட்டில், தலைநாள் அலரி நாறும் - அன்றலர்ந்த மலரென மணக்கும், நின் அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்து - நினது பரந்த முலையினையுடைய மார்பின் கண்ணே துயிலும் இனிய துயிலினை மறந்து; 12-13. எனையதும் நீடலர் - சிறிதும் தாழ்த்திரார். (முடிபு) தோழி வாழி, மேனியும் கண்ணும் வரியும் நோக்கி, ஆழல் ஆன்றிசின், நம் தலைவர் ஈதல் இன்பம் வெஃகிச் செய் பொருட்டிறவராகி, அத்தம் என்னாது ஏமுற்று, மோரியர் குறைத்த அறையிறந் தகன்றனராயினும், ஆய் கானத்து அலரி நாறும் நின் அலர்முலையாகத்தின் துயில் மறந்து எனையதும் நீடலர். (வி-ரை) ஆன்றிசின் - அமைக. ஈதலால் இன்ப முண்டாகு மென்பதனை, `ஈத்துவக்கும் இன்பம்'1 என்பதனால் அறிக. செய் பொருட்டிறவர் - பொருள் செய்யும் கூற்றினர். மோரியர் வடநாட்டின் கண்ணிருந்த அரச வகுப்பினர். இவர்கள் சில பகைவரோடு போர் கருதித் தெற்கே சென்ற காலை, குறுக்காக நின்றதோர் மலையைத் தேருருள் செல்லுமாறு குறைத்து வழிசெய்துள்ளார் என்ற வரலாறு, `தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர், பணியாமையிற் பகைதலை வந்த, மாகெழு தானை வம்ப மோரியர், புனைதேர் நேமி யுருளிய குறைத்த, இலங்குவெள் ளருவிய வறைவா யும்பர்' (251) எனவும், `முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர், தென்றிசை மாதிரம் முன்னிய வரவிற்கு, விண்ணுறவோங்கிய பனியிருங் குன்றத், தொண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த, அறையிறந் தவரோ சென்றனர்' (281) எனவும் இந்நூலுள்ளும், `வென்வேல், வெண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர், திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த, உலக விடை கழி யறைவாய் நிலைஇய'2 எனப் புறநானூற்றிலும் வருவனவற்றான் அறியப்படும். சிலை - ஒரு மரமுமாம். நன்கலம் தரூஉம் - பெற்ற கலன்களைப் பாணர் முதலாயினார்க்குத் தரும் என்றுமாம். 70. நெய்தல் (தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.) கொடுந்திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென இரும்புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக் குறுங்கண் அவ்வலைப் பயம்பா ராட்டிக் கொழுங்கண் அயிலை பகுக்குந் துறைவன் 5. நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப் பலருமாங் கறிந்தனர் மன்னே இனியே வதுவை கூடிய பின்றைப் புதுவது பொன்வீ ஞாழலொடு புன்னை வரிக்கும் 10. கானலம் பெருந்துறைக் கழனி மாநீர்ப் பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல் விழவணி மகளிர் தழையணிக் கூட்டும் வென்வேற் கவுரியர் தொன்முது கோடி முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை 15. வெல்போர் இராமன் அருமறைக் கவித்த பல்வீழ் ஆலம் போல ஒலியவிந் தன்றிவ் அழுங்கல் ஊரே. - மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார். (சொ-ள்) 1-7. கொடுந் திமில் பரதவர் - வளைந்த படகினை யுடைய பரதவர், வேட்டம் வாய்த்தென - மீன்வேட்டை நன்கு கை கூடிற்றாக, இரும் புலாக் கமழும் - பெரிய புலால் நாற்றம் வீசும், சிறுகுடிப் பாக்கத்து - சிறிய குடிகளையுடைய கடற்கரையூரில், குறுங்கண் அவ்வலைப் பயம் பாராட்டி - குறுகிய கண்களையுடைய அழகிய வலையின் பயனைப் பாராட்டிக் கூறி, கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன் - கொழுவிய கண்களையுடைய அயிலை மீனை யாவர்க்கும் பகுத்துக்கொடுக்கும் துறைவன், நம்மொடு புணர்ந்த கேண்மை - நம்முடன் கொண்ட காதல் நட்பு, முன்னே - முன்பு, அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற - அலர் கூறும் வாயினையுடைய பெண்டிர் அம்பலாக்கிப் பரப்ப, பலரும் ஆங்கு அறிந்தனர் - அவ்விடத்துப் பலர் அறிவாராயினர், மன் - அது கழிந்தது; 7-8. இனி - இப்பொழுது, வதுவை கூடிய பின்றை - மணம் கூடிய பிறகு; 8-17. புதுவது பொன் வீ ஞாழலொடு புன்னை - புலிநகக் கொன்றையின் புதிய பொன்னிறப் பூக்களுடன் புன்னைப் பூக்கள் உதிர்ந்து, வரிக்கும் - ஓவியம் வரைந்தாற்போல் அழகு செய்யும், கானல் அம்பெருந்துறை - கடற்கரைச் சோலையையுடைய அழகிய பெருந்துறைகளில், கழனி மா நீர் பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல் - வயல்களில் கரிய நீரில் பசிய இலைகளையுடைய தழைத்த திரண்ட தண்டினையுடைய நெய்தற் பூக்களை, விழவு அணி மகளிர் தழையணிக் கூட்டும் - விழாவிற்கு ஒப்பனை செய்யும் மகளிர்கள் தங்கள் தழையுடைக்கு அணிசெயச் சேர்க்கும், வென்வேற் கவுரியர் - வெற்றி வேலினையுடைய பாண்டியரது, தொல்முது கோடி - மிக்க பழைமையுடைய திருவணைக் கரையின் அருகில், முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை - முழங்கும் இயல்பினதான பெரிய கடலின் ஒலிக்கின்ற துறைமுற்றத்தில், வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த - வெல்லும் போரினில் வல்ல இராமன் அரிய மறையினை ஆய்தற் பொருட்டாகப் புட்களின் ஒலி இல்லையாகச் செய்த, பல்வீழ் ஆலம் போல - பல விழுதுகளைக் கொண்ட ஆலமரம் போல, இவ் அழுங்கல் ஊர் ஒலி அவிந்தன்று - இந்த ஆரவாரமுடைய ஊர் ஒலியடங்கப் பெற்றது. (முடிபு) துறைவன் கேண்மை, பெண்டிர் அம்பல் தூற்ற, (முன்பு) பலரும் அறிந்தனர்; இனியே, வதுவை கூடிய பின்றை, இராமன் அருமறைக்கு அவித்த ஆலம்போல இவ்வழுங்கலூர் ஒலியவிந்தன்று. (வி-ரை) பலரும் : உம் - அசை. மன் : கழிவின்கண் வந்தது. தழையணிக் கூட்டும் - தழை அணிக்குக் கூட்டும் என்க. இராமன் இலங்கைமேற் செல்லுதற் பொருட்டுத் திருவணைக்கரையின் ஞாங்கரிருந்த பெரிய ஆலமரத்தின்கீழே, தமக்குத் துணைவராயினா ரொடு, அரிய மறைகளைச் சூழுங்கால், ஆங்குள்ள பறவைகள் ஒலிக்காதவாறு தன் ஆணையால் அடக்கினன் என்றதொரு வரலாறு கூறப்பட்டது. (உ-றை) "பரதவர் தம் முயற்சியானே வேட்டை வாய்த்த தாகிலும், குறுங்கண் வலையைப் பாராட்டி அம் முயற்சியாலுண் டான அயிலையைக் கடலினின்றும் நீக்கி, எல்லார்க்கும் பகுத்துக் கொடுத்து மகிழ்வித்தாற் போல, அவரும் தம்முடைய முயற்சியானே வதுவை கூடிற்றாயினும், அதற்குத் துணையாக நின்ற என்னைக் கொண்டாடி, நின்னைப் பெரிய இச் சுற்றத்தினின்றும் கொண்டு போய்த் தம்மூரின் கண்ணே நின்னைக் கொண்டு விருந்து புறந்தந்து தம்மூரை யெல்லாம் மகிழ்விப்பர் என்றவாறு." "நெய்தற்பூவானது, ஞாழலும் புன்னையுங் கரையிலே நின்று தாதை யுதிர்த்துப் புறஞ்சூழ, நீரிடத்துத் தன்னை விடாதே அலைகள் சூழ நடுவே நின்று செருக்கி வளர்ந்து பின்னை விழவணி மகளிர் அல்குலுக்குத் தழையாய்ப் பயன்பட்டாற்போல, இருமுதுகுரவர் புறங்காப்ப ஆயவெள்ளத்தார் மெய்யை விடாதே சூழ்ந்து புறங்காப்ப, இப்படிச் செல்வத்தால் வளர்ந்த நீயும் நம் பெருமானுடைய இல்லற மாகிய பிரிவிற்குத் துணையாகப் போகா நின்றாயன்றோ வென்று வியந்து கூறியவாறு." 71. பாலை (பொருள்வயிற் பிரிந்தவிடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது.) நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர் பயனின் மையிற் பற்றுவிட் டொரூஉம் நயனின் மாக்கள் போல வண்டினம் சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர 5. மையின் மானினம் மருளப் பையென வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப ஐயறி வகற்றுங் கையறு படரோ டகலிரு வானம் அம்மஞ் சீனப் பகலாற்றுப் படுத்த பழங்கண் மாலை 10. காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக ஆரஞர் உறுநர் அருநிறஞ் சுட்டிக் கூரெஃ கெறிஞரின் அலைத்தல் ஆனாது எள்ளற இயற்றிய நிழல்காண் மண்டிலத் துள்ளூ தாவியிற் பைப்பய நுணுகி 15. மதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந் திதுகொல் வாழி தோழி என்னுயிர் விலங்குவெங் கடுவளி எடுப்பத் துளங்குமரப் புள்ளில் துறக்கும் பொழுதே. - அந்தி யிளங்கீரனார். (சொ-ள்) 16. தோழி வாழி-; 1-4. நிறைந்தோர் தேரும் நெஞ்சமொடு - செல்வம் நிறைந் தோரை ஆராய்ந்தடையும் உள்ளத்தால், குறைந்தோர் பயன் இன்மை யின் - செல்வம் குறைந்தோரால் பயன் அடைதல் இன்மையின், பற்றுவிட்டு ஒரூஉம் - அவர்பா லிருந்த பற்றினை யொழித்து நீங்கும், நயன்இல் மாக்கள் போல - நடுநிலை இல்லா மக்களைப்போல, வண் டினம் சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர - வண்டின் கூட்டங்கள் சுனைப்பூக்களை ஒழித்துச் சினைப் பூக்களை யடையவும்; 5-9. மையில் மான் இனம் மருள - குற்றமற்ற மான் கூட்டம் வருந்தவும், பையென வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப - உலையிற் காய்ந்து மெல்லென ஆறிவரும் பொன்னின் நிறம்போலச் செக்கர் வானம் பூத்தலைச் செய்யவும், ஐ அறிவு அகற்றும் கையறு படரோடு - வியக்கத்தக்க அறிவினைப் போக்கும் செயலற்ற துன்பத்துடன், அம் மஞ்சு அகல் இரு வானம் ஈன - அழகிய மேகங்களை அகன்ற பெரிய வானம் தரவும், பகல் ஆற்றுப் படுத்த பழங்கண் மாலை - ஞாயிற்றைப் போக்கிய துன்பத்தினைத் தரும் மாலைக்காலமானது; 10-12. காதலர் பிரிந்த புலம்பின் நோதக - காதலரைப் பிரிந்த தனிமையால் வருந்தியிருக்கவும், ஆர் அஞர் உறுநர் அருநிறம் சுட்டி - மிக்க துன்பத்தை அடைந்திருப்பா ரொருவரது அரிய மார்பினைக் குறித்து, கூர்எஃகு எறிஞரின் - கூரிய வேலை எறிவார்போல, அலைத்தல் ஆனாது - வருத்துதலை ஒழியாது; 13-15. எல் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து உள் - இகழ்ச்சி யற இயற்றப்பெற்ற உருவங்காணும் கண்ணாடியின் அகத்தே, ஊது ஆவியில் - ஊதிய ஆவி முன் பரந்து பின் சுருங்கினாற்போல், பைப்பய நுணுகி - சிறிது சிறிதாகக் குறைந்து வந்து, மதுகை மாய்தல் வேண்டும் - என் வலிமை மாய்தல் வேண்டியிரா நின்றது; 15-18. வெம் கடு விலங்கு வளி எடுப்ப - மிக்க கடிய சூறாவளி அலைப்ப, துளங்கும் மரப் புள்ளில் - அசையும் மரத்திலுள்ள பறவைபோல, பெரிது அழிந்து என் உயிர் துறக்கும் பொழுது - மிகவும் அழிவுற்று என்னுயிர் இவ்வுடலைத் துறந்தேகும் காலம், இதுகொல் - இதுவே போலும். (முடிபு) தோழி வாழி, பழங்கண் மாலை அலைத்தல் ஆனாது; மதுகை மாய்தல் வேண்டும்; என் உயிர் துறக்கும் பொழுது இது கொல். படர, பூப்ப, ஈனப் பகலாற்றுப்படுத்த பழங்கண் மாலை என்க. (வி-ரை) குறைந்தோர் என்றது, தமது பொருளை வழங்கி வறிய ராயினவர் என்றபடி. நயன் - நன்றியறிவு என்றுமாம். சுனைப் பூக்கள் முன்பு வளம் நிறைந்து தேன் வழங்கியன. இப்பொழுது வாடி வறியவாயினமையின், அவற்றிற்குக் குறைந்தோரை உவமை கூறினார். சினைப்பூ - வேனிற் காலத்து மலரும் மரங்களின் கோட்டி லுள்ள பூக்கள். `நறுந்தா துண்டு நயனில் காலை, வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்'1 என வண்டு உவமை கூறப்படுவதும் ஈண்டு அறியற் பாற்று. மானினங்கள் வெம்மையால் வருந்த என்க. அந்தி - ஒரு பூவுமாம். வை யறிவு எனப் பிரித்துக் கூரிய அறிவு என்றலுமாம். மஞ்சு - பல நிறத்தையுடைய மேகம். விலங்குவளி - சூறாவளி. புள் சூறாவளி யால் அலைப்புண்டு மரத்தைவிட் டொழிதல்போல, என் உயிர் பிரிவால் வருந்தி உடலைத் துறக்கும் பொழுது இதுகொல் என்றாள் என்க. (மே-ள்) `வேட்கை யொருதலை'2 என்னுஞ் சூத்திரத்து, தலைவி சாக்காடு என்னும் அவத்தை எய்தினமைக்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினார், நச். `கிழக்கிடு பொருளோ டைந்து மாகும்'3 என்னுஞ் சூத்திரத்து, உவம நிலைக்களத்து ளொன்றாகிய கிழக்கிடு பொருளிற்கு, `உள்ளூதா வியிற் பைப்பய நுணுகி' என்பதனை எடுத்துக் காட்டினர், பேரா. 72. குறிஞ்சி (1. தலைமகன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 2. தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம்.) இருள்கிழிப் பதுபோல் மின்னி வானம் துளிதலைக் கொண்ட நளிபெயல் நடுநாள் மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம் பொன்னெறி பிதிரிற் சுடர வாங்கிக் 5. குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை இரும்புசெய் கொல்லெனத் தோன்றும் ஆங்கண் ஆறே அருமர பினவே யாறே சுட்டுநர்ப் பனிக்குஞ் சூருடை முதலைய கழைமாய் நீத்தம் கல்பொரு திரங்க 10. அஞ்சுவந் தமியம் என்னாது மஞ்சுசுமந் தாடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன் ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய இருங்களி றட்ட பெருஞ்சின உழுவை நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த 15. மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும் வாள்நடந் தன்ன வழக்கருங் கவலை உள்ளுநர் உட்கும் கல்லடர்ச் சிறுநெறி அருள்புரி நெஞ்சமோ டெஃகுதுணை யாக வந்தோன் கொடியனும் அல்லன் தந்த 20. நீதவ றுடையையும் அல்லை நின்வயின் ஆனா அரும்படர் செய்த யானே தோழி தவறுடை யேனே. - எருமை வெளியனார் மகனார் கடலனார். (சொ-ள்) 1-7. ஆறு - தலைவன் வரும் நெறிகள், வானம் இருள் கிழிப்பதுபோல் மின்னி - மேகம் இருளைக் கிழிப்பதுபோல மின்னி, துளி தலைக் கொண்ட நளி பெயல் நடுநாள் - துளியைத் தன்னி டத்தே கொண்ட மிக்க பெயலையுடைய நள்ளிரவில், மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம் - மின் மினிகள் மொய்த்திருக்கும் முரிந்த இடத்தினையுடைய புற்றினை, பொன் எறி பிதிரில் சுடர வாங்கி - இரும்பினைக் காய்ச்சி யடிக்குங்கால் சிதறும் பிதிர்போல அம் மின்மினிகள் ஒளிவிடப் பெயர்த்து, குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை - புற்றாஞ் சோற்றினைத் தோண்டி யெடுக்கும் பெரிய கையினையுடைய கரடியேறு, இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண் - இரும்பு வேலை செய்யும் கொல்லன்போலத் தோன்றும் அவ்விடத்து, அருமரபினவே - செல்லுதற்கு அரிய தன்மையன; 7-9. யாறே - யாறு, கழை மாய் நீத்தம் கல்பொருது இரங்க- ஓடக்கோல் மறையும் வெள்ளம் கல்லிற் பொருது ஒலிக்க, சுட்டுநர்ப் பனிக்கும் சூர் உடை முதலைய - கருதுவோரையும் நடுங்கச் செய்யும் அச்சமுடைய முதலைகளை யுடையன; 10. அஞ்சுவம் தமியம் என்னாது - யாம் தமியேம்; இந்நெறிகளிற் போதற்கு அஞ்சுவேம் என்று எண்ணாது; 11-17. மஞ்சு சுமந்து ஆடு கழை நரலும் - மேகத்தினைத் தலைக் கொண்டு அசையும் மூங்கில் ஒலிக்கும், அணங்குடைக் கவான் - தெய்வங்களையுடைய பக்க மலையில், ஈருயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய - கருவுற்றிருக்கும் பெண் புலியின் வேட்கை மிக்க பசியினை நீக்க, இருங்களிறு அட்ட பெருஞ்சின உழுவை - பெரிய ஆண்பன்றியினைக் கொன்ற மிக்க சினம்பொருந்திய ஆண்புலி, நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த மேய் மணி விளக்கில் - அச்சந் தரும் நல்லபாம்பு மேய்தற்குச் செல்ல ஒளியுண்டாக உமிழ்ந்து வைத்த மணியாகிய விளக்கில், புலர ஈர்க்கும் - உதிரம் தோய்ந்துகாய இழுத்துச் செல்லும், வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை - கூர்ங்கற்களை யுடைமையால் வாளில் நடப்பதை யொக்கும் செல்லுதற்கு அரிய வழியாய, உள்ளுநர் உட்கும் கல்அடர்ச் சிறு நெறி - கடக்க எண்ணுநர் அஞ்சும் கற்செறிவையுடைய இட்டிய நெறியில்; 18-22. அருள்புரி நெஞ்சமொடு எஃகு துணையாக - நம்மேல் அருள் வைத்த நெஞ்சமொடு வேல் துணையாகக் கொண்டு, வந்தோன் கொடியனும் அல்லன் - வந்த தலைவனும் கொடியன் அல்லன்; தந்தநீ தவறுடையையும் அல்லை - அவனைக் குறிவழி வரச்செய்த நீயும் தவறுடையை யல்லை; நின்வயின், ஆனா அரும்படர் செய்த - நின்பால் நீங்காத அரிய துன்பினை யாக்கிய, யானே தவறுடையேன் - யானே தவறுடையவள் ஆவேன். (முடிபு) ஆறு அரு மரபின; யாறு முதலைய; அஞ்சுவம் தமியம் என்னாது கல்லடர்ச் சிறுநெறி வந்தோன் கொடியனு மல்லன்; நீ தவறுடையையும் அல்லை; யானே தவறுடையேன். (வி-ரை) கொல் - கொற்சாதி; கொல்லனை உணர்த்திற்று. ஆங்கண் : அசையுமாம். யாறு, இரங்க முதலைய எனக் கூட்டுக. இரங்க என்னும் செயவென் எச்சம் முதலைய என்னும் முற்றுவினைக் குறிப்புடன் முடியும். தன்னுயிரோடு கருவிலிருக்கும் உயிரையு முடைமையின் ஈருயிர்ப் பிணவு என்றார். வயவு - கருவுற்றிருக் குங்கால் உளதாம் வேட்கை. நாம : உரிச்சொல் ஈறு திரிந்தது. நல்லரா : பெயர். புலர - புலால் நாற என்றுமாம். கவலை யிலும் சிறு நெறியிலும் வந்தோன் எனலுமாம். (உ-றை) "புலி துணை புறந்தருதற்குப் பிறவற்றைத் தீங்கு செய்யும் பாம்பும் அதற்குத் துணையாயினாற் போல, நீயுங் குடியோம்பற் செய்தி காரணமாக வரைவொடு வரிற், கடுஞ் சொற் சொல்லுகிற பேரும் இன்சொற் சொல்லி வரைவுடம்படுவர் என்பதாம்." (மே-ள்) `மறைந்தவற் காண்டல்'1 என்ற சூத்திரத்து, `வந்தவன் பெயர்ந்த வறுங்கள நோக்கித் தன்பிழைப்பாகத் தழீ இத் தேறிய'தற்கு, `வாள்நடந்தன்ன....... தவறுடையேன்' என்பதனை எடுத்துக் காட்டினர், இளம். `பொழுது மாறும்'2 என்னுஞ் சூத்திரத்து `தன்னை அழிதலும்' என்னும் பகுதிக்கு, `நீதவறுடையையும்............. தவறுடையேனே' என்பதனை எடுத்துக்காட்டி, அவன் வரவினை உவவாது துன்பங் கூர்தல் வழுவாயினும் அதுவும் அவன்கண் அன்பாதலின் அமைத்தார் என்றுரைத்தனர், நச். 73. பாலை (தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான்; குறித்த பருவவரவுகண்டு அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது.) பின்னொடு முடித்த மண்ணா முச்சி நெய்கனி வீழ்குழல் அகப்படத் தைஇ வெருகிருள் நோக்கி அன்ன கதிர்விடு பொருகாழ் முத்தம் இடைமுலை விளங்க 5 அணங்குறு கற்பொடு மடங்கொளச் சாஅய் நின்னோய்த் தலையையும் அல்லை தெறுவர என்னா குவள்கொல் அளியள் தானென என்னழி பிரங்கும் நின்னொடி யானும் ஆறன் றென்னா வேறல் காட்சி 10. இருவேம் நம்படர் தீர வருவது காணிய வம்மோ காதலந் தோழி கொடிபிணங் கரில இருள்கொள் நாகம் மடிபதம் பார்க்கும் வயவான் துப்பின் ஏனலஞ் சிறுதினைச் சேணோன் கையதைப் 15. பிடிக்கை அமைந்த கனல்வாய்க் கொள்ளி விடுபொறிச் சுடரின் மின்னி அவர் சென்ற தேஎத்து நின்றதால் மழையே. - எருமை வெளியனார். (சொ-ள்) 11-17. காதல் அம் தோழி - காதலை யுடைய தோழியே!, அவர் சென்ற தேஎத்து - தலைவர் சென்ற நாட்டில், கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம் - கொடிகள் பின்னிய சிறு காட்டினிடத்தவாய இருண்ட நிறத்தையுடைய யானையின், மடிபதம் பார்க்கும் - சோரும் செவ்வியைப் பார்த்திருக்கும், வயமான் துப்பின் - அரியேற்றின் வலியினையுடைய, ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதை - தினையின் வகையு ளொன்றாகிய அழகிய சிறுதினையைக் காக்கும் பரண் மேலுள்ளோன் கையின்கண் ணுள்ளதும், பிடி கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி - பிடி கையின் கண் பொருந்தியதும் தீவாய்த்தலையுடையதுமாய கொள்ளிக் கோல், விடுபொறிச் சுடரின் மின்னி - (வீசுங்கால்) விடும் சுடர்ப் பொறிகளைப்போல மின்னி, நின்றது மழையே - மழை காலூன்றிப் பெய்து நிற்கின்றது; 1-2. பின்னொடு முடித்த - பின்னுதல் அளவில் முடித்திட்ட, மண்ணா முச்சி - வேறு ஒப்பனை செய்யாத கொண்டையில், நெய்கனி வீழ்குழல் அகப்படத் தைஇ - நெய் தடவப்பெற்ற தாழும் குழலினைச் சேரக் கட்டி; 3-4. வெருகு இருள் நோக்கியன்ன - வெருக்குப் பூனை இருளிலே நோக்கினாற் போல, ஒரு காழ் முத்தம் கதிர் விடுபு இடை முலை விளங்க - முத்தின் ஒரு வடம் கதிர்விட்டு முலையிடையே விளங்க; 5-6. அணங்கு உறு கற்பொடு - அருந்ததிபோ லுற்ற கற்பினால், மடம்கொள - மடம் மிக, சாஅய் - மெலிந்து, நின்நோய்த் தலையையும் அல்லை - நின் நோயளவில் வருந்தி நிற்பாயும் அல்லை; 6-11. தெறுவர என் ஆகுவள் அளியள் தான் என - அச்சம் உற இரங்கத்தக்காள் ஆகிய இவள் என் ஆகுவளோ என, என் அழிபு இரங்கும் - என் வருத்தத்திற்கும் இரங்கா நின்றாய்; அங்ஙனம் இரங்கும், நின்னொடு யானும் - நீயும் யானும், ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி - ஒருவர் செய்வது நெறியன்று என்று எண்ணாத வேற்றுமையற்ற அறிவினையுடைய, இருவேம் நம் படர் தீர - நம் இருவேமுடைய வருத்தமும் நீங்க, வருவது காணிய வம்மோ - நம் தலைவர் வருதலைக் காண்டற்கு எழுந்து வருவாயாக. (முடிபு) தோழி! தலைவர் சென்ற தேஎத்து மழைமின்னி நின்றது; நீ நின் நோய்த் தலையையும் அல்லையாய், என் அழிபும் இரங்காநின்றாய், அங்ஙனம் இரங்கும் நின்னொடு யானும் நம் படர் தீர அவர் வருவது காணிய வம்மோ. தைஇ, சாஅய், என் அழிபுக்கும் இரங்கும் நின்னொடு என்க. (வி-ரை) நோக்கி யன்னவாய்க் கதிர்விட்டு என்க. வணங்குறு கற்பு எனப் பிரித்து, ஏனோர் வணங்குதற்குரிய கற்பு எனலுமாம். நின்னொடு யானும் காண வா எனவும், இருவேம் படர்தீரக்காண வா எனவும் இயையும். வம் - வா என்னும் பொருட்டு. ஓ: அசை. கையது - கையதை எனத் திரிந்து நின்றது. பிடி - பிடிக்கும் இடம். பிடி கையமைந்த என்று பாடம் கொள்ளுதல் பொருந்தும்; பிடித்தற்கு இடம் வைத்து அஃதல்லாத இடம் சுட்டுக் கொள்ளி யாக்குதல் இயல்பு. (மே-ள்) `இளிவே இழவே'1 என்னுஞ் சூத்திரத்து `அணங்குறு கற்பொடு...... நின்னொடி யானும்' என்னும் பகுதியை எடுத்துக் காட்டி, இது தலைமகன் பிரிவிற்குத் தோழி படர்கூர்ந்தாள் எனச் சொல்லினமையின் பிறன்கட் டோன்றிய இழிவுபற்றி அவலம் பிறந்ததாம் என்பர், பேரா. 74. முல்லை (தலைமகன் பிரிவின்கண் அழிந்த கிழத்தி, வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது.) வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து போர்வல் இளையர் தாள்வலம் வாழ்த்தத் தண்பெயல் பொழிந்த பைதுறு காலைக் குருதி உருவின் ஒண்செம் மூதாய் 5. பெருவழி மருங்கில் சிறுபல வரிப்பப் பைங்கொடி முல்லை மென்பதப் புதுவீ வெண்களர் அரிமணல் நன்பல தாஅய் வண்டுபோ தவிழ்க்கும் தண்கமழ் புறவில் கருங்கோட் டிரலை காமர் மடப்பிணை 10. மருண்டமான் நோக்கம் காண்டொறும் நின்னினைந்து திண்டேர் வலவ கடவெனக் கடைஇ இன்றே வருவர் ஆன்றிகம் பனியென வன்புறை இன்சொல் நன்பல பயிற்றும் நின்வலித் தமைகுவன் மன்னோ அல்கல் 15. புன்கண் மாலையொடு பொருந்திக் கொடுங்கோல் கல்லாக் கோவலர் ஊதும் வல்வாய்ச் சிறுகுழல் வருத்தாக் காலே. - மதுரைக் கவுணியன் பூதத்தனார். (சொ-ள்) 14-17. அல்கல் புன்கண் மாலையொடு பொருந்தி - நாடோறும் வருத்தத்தைத் தரும் மாலைப் பொழுதுடன் கூடி, கொடுங்கோல் கல்லாக் கோவலர் ஊதும் - வளைந்த கோலினை யுடைய தம் தொழிலன்றிப் பிறதொழிலைக் கல்லாத ஆயர் ஊதும், வல்வாய்ச் சிறு குழல் வருத்தாக்கால் - வலிய வாயினையுடைய சிறிய குழல் வருத்தாதொழியின்; 3-5. தண்பெயல் பொழிந்த பைதுறு காலை - குளிர்ந்த மழை பொழிந்ததாற் பசுமையுற்ற காலத்தே, குருதி உருவின் ஒண்செம் மூதாய் - குருதியைப் போலும் சிவந்த நிறத்தினையுடைய ஒள்ளிய தம்பலப்பூச்சி, பெருவழி மருங்கில் சிறுபல வரிப்ப - பெரிய வழிகடோறும் பல சிறிய வரிகளாகப் பரக்க, பைங் கொடி முல்லை மென்பதப் புதுவீ நன் பல - பசிய முல்லைக்கொடியின் மெத்தென்ற செவ்வியை யுடைய மென்மைப் பதம் வாய்ந்த நன்றாகிய மிகப்பல புதிய மலர்கள், வெண்களர் அரிமணல் தாஅய் - வெள்ளிய களர் ஆகிய அறல்பட்ட மணலில் தாவிக் கிடப்ப, வண்டு போது அவிழ்க்கும் தண்கமழ் புறவில் - வண்டுகள் அரும்பினை மலர்த்தும் தண்ணிய கமழும் முல்லை நிலத்தில் ; 9-10. கருங்கோட்டு இரலை - கரிய கொம்பினையுடைய ஆண் மானினது, காமர் மடப்பிணை மான் மருண்ட நோக்கம் காண்டொறும் - அழகிய இளைய பெண்மானின் மருட்சியுற்ற பார்வையினைக் காணுந்தோறும், நின் நினைந்து - நின்னை எண்ணி; 1-2. வினை வலம்படுத்த வென்றியோடு - வினையை வெற்றியுறச் செய்த மேம்பாட்டுடன், மகிழ் சிறந்து - மகிழ்ச்சி மிக்கு, போர்வல் இளையர் தாள்வலம் வாழ்த்த - போரில் வல்ல வீரர் தனது முயற்சியின் வலிமையினை வாழ்த்திவர; 11-14. வலவ திண் தேர் கடவு எனக் கடைஇ - பாகனே திண்ணிய தேரினை இன்னும் விரைந்து செலுத்துவாயாக எனக் கூறிச் செலுத்திக் கொண்டு, இன்றே வருவர் - இன்றே (நம் தலைவர்) வந்துறுவர், ஆன்றிகம் பனி என - நாம் நடுக்கத்தை அமைவேம் என்று கூறும், வன்புறை இன்சொல் நன் பல பயிற்றும் - வன்புறையாகிய பல இனிய நல்ல சொற்களைக் கூறிவரும், நின் வலித்து அமைகுவன் - நின் சொல்லைத் துணிந்து அமைந்திருப்பேன், மன் - அது மாட்டுகிலேன். (முடிபு) (தோழி,) அல்கல் மாலையொடு பொருந்திக் கோவலர் ஊதும் குழல் வருத்தாக்கால், (தலைவர்,) `புறவில் இரலை மடப்பிணை நோக்கம் காண்டொறும், நின் நினைந்து, திண்டேர் கடைஇ, இன்றே வருவர் ஆன்றிகம் பனியென வன்புறை பயிற்றும் நின்வலித் தமைகுவன் மன்னோ. இளையர் வாழ்த்த இன்றே வருவர் எனக் கூட்டுக. (வி-ரை) தாள் - முயற்சி. தாஅய் - தாவ எனத் திரிக்க. பனி - நடுக்கம். வன்புறை - வற்புறுத்தல். சிறு குழலின் இன்னிசையும் துன்பத்தினை மிகுவித்தலின் அதனை வல்வாய்ச் சிறுகுழல் என்றாள். மாலையும் குழலும் வருத்தாக்கால் என்க. (மே-ள்) `இன்பத்தை வெறுத்தல்'1 என்னுஞ் சூத்திரத்து, `கல்லாக் கோவல ரூதும், வல்வாய்ச் சிறுகுழல் வருத்தாக் காலே' என்புழி இன்பத்தை வெறுத்தனளாயினும் புணர்ச்சிக்கு ஏதுவாம் என்பது கருத்து என்றார், பேரா. 75. பாலை (பொருள்வயிற் பிரிவரென வேறுபட்ட தலைமகட்குப் பிரியேனெனத் தலைமகன் சொல்லியது.) அருளன் றாக ஆள்வினை ஆடவர் பொருளென வலித்த பொருளல் காட்சியின் மைந்துமலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது எரிசினந் தவழ்ந்த இருங்கடற் றடைமுதல் 5. கரிகுதிர் மரத்த கான வாழ்க்கை அடுபுலி முன்பின் தொடுகழல் மறவர் தொன்றியல் சிறுகுடி மன்றுநிழல் படுக்கும் அண்ணல் நெடுவரை ஆமறப் புலர்ந்த கல்நெறிப் படர்குவ ராயின் நன்னுதல் 10. செயிர்தீர் கொள்கைச் சின்மொழித் துவர்வாய் அவிர்தொடி முன்கை ஆயிழை மகளிர் ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது சென்றுபடு விறற்கவின் உள்ளி என்றும் 15. இரங்குநர் அல்லது பெயர்தந் தியாவரும் தருநரும் உளரோஇவ் வுலகத் தானென மாரி ஈங்கை மாத்தளிர் அன்ன அம்மா மேனி ஐதமை நுசுப்பின் பல்காசு நிரைத்த கோடேந் தல்குல் 20. மெல்லியற் குறுமகள் புலந்துபல கூறி ஆனா நோயை ஆக 1 யானே பிரியச் சூழ்தலும் உண்டோ அரிதுபெறு சிறப்பின் நின்வயி னானே. - மதுரைப் போத்தனார். (சொ-ள்) 17-21. மாரி ஈங்கை மாத்தளிர் அன்ன - மாரிக் காலத்தே ஒளிரும் இண்டையின் கரிய தளிரை யொத்த, அம் மா மேனி - அழகிய மாமை நிறத்தையுடைய மேனியினையும், ஐது அமை நுசுப்பின் - நுண்ணிதாய் அமைந்த இடையினையும், பல்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் - பல மணிகள் கோத்த மேகலையையுடைய பக்கம் உயர்ந்த அல்குலினையும் உடைய, மெல்லியற் குறுமகள் - மென்மைத் தன்மையுடைய குறுமகளே நீ; 1-3. ஆடவர் - ஆடவர்கள், பொருள் - உண்மைப் பொருளாவது, அருள் அன்றாக - அருள் அன்றாகிட, ஆள்வினை என - ஆள்வினையே யாகுமென, வலித்த - துணிந்த, பொருள்அல் காட்சியின் - உண்மையற்ற அறிவினையுடைய, மைந்து மலி உள்ளமொடு - வலிமிக்க உள்ளத்தால், துஞ்சல் செல்லாது - மடிதல் இல்லாது; 4-9. எரி சினம் தவழ்ந்த - எரியும் தீப் பரந்த, இருங் கடற்று அடைமுதல் - பெருங்காட்டிற் புகுமிடத்தே, கரிகு உதிர் மரத்த - இலைகள் கரிந்து உதிரப்பெற்ற மரங்களையுடைய, கான வாழ்க்கை - காட்டின் வாழ்க்கையையுடைய, அடு புலி முன்பின் தொடு கழல் மறவர் - கொல்லும் புலிபோலும் வலியையும் கட்டப்பெற்ற கழலையுமுடைய மறவர்கள், தொன்று இயல் சிறு குடி மன்று நிழல் படுக்கும் - பழையதாய் வருகிற இயல்பையுடைய தமது சீறூரிலுள்ள மன்றத்து நிழலிலே கண்படுக்கும், அண்ணல் நெடுவரை - பெருமையையுடைய நெடிய மலையிலுள்ள, ஆம் அறப் புலர்ந்த - நீரறக்காய்ந்த, கல் நெறிப் படர்குவர் ஆயின் - கல் வழியிற் செல்வாராயின்; 9-24. நல் நுதல் - நல்ல நெற்றியினையும், செயிர்தீர் கொள்கை- குற்றமற்ற கொள்கையினையும், சின் மொழி - சிலவாய சொற் களையும், துவர் வாய் - பவளம் போன்ற வாயினையும், அவிர்தொடி முன் கை - விளங்கும் வளையலை யணிந்த முன் கையினையும், ஆயிழை - ஆய்ந்த அணிகளையுமுடைய, மகளிர் ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து - மகளிரது முத்தாரம் பூண்ட பரந்த முலையையுடைய ஆகத்தில், ஆராக் காதலொடு - அமையாத விருப்புடன், தார் இடைக்குழையாது - தங்கள் தாரை இடையே குழையச் செய்யாதே, சென்று படு விறல் கவின் உள்ளி - சென் றொழிந்த மிக்க அழகினை நினைத்து, என்றும் இரங்குநர் அல்லது - என்றும் இரங்குவாராவரே யல்லாது, இவ்வுலகத்தான் பெயர்தந்து யாவரும் தருநரும் உளரோ என - இவ்வுலகத்தே பெயர்த்து அவ்வழகினைத் தருவார் எவரேனும் உளராவரோ என்று இங்ஙனம், புலந்து பல கூறி - வெறுத்துப் பலவும் கூறி, ஆனா நோயை ஆக - அமையாத நோயுடையை ஆகவும், யான் - நான், அரிது பெறு சிறப்பின் நின் வயினான் - அரிதாகப் பெற்ற சிறப்பினையுடைய நின்னிடத் தினின்றும், பிரியச் சூழ்தலும் உண்டோ - பிரியுமாறு கருதுதலும் உளதோ? இல்லையாகும். (முடிபு) குறுமகளே! நீ, ஆடவர் பொருளல் காட்சியின் உள்ளமொடு துஞ்சல் செல்லாது, கன்னெறிப் படர்குவராயின், சென்றுபடு விறற்கவின் உள்ளி இரங்குநர் அல்லது பெயர்தந்து தருநரும் உளரோ எனப் புலந்து பல கூறி ஆனா நோயை யாக, யான் நின்வயின் பிரியச் சூழ்தலு முண்டோ? (சூழேன்.) (வி-ரை) ஆள்வினை - பொருளீட்டும் முயற்சி; அருள் பொருளன்றாக, ஆள்வினையே பொருளாக வலித்த என்க. `ஆங்கவையொருபாலாக'1 என்னுஞ் சூத்திரத்து, `அருளல் என்பது, மக்கள் முதலிய சுற்றத்தாரை அருளல்' என்றார் பேராசிரியர். பிரிவினால் தனக்கு வரும் ஏதங் குறித்து இரங்காமையின், அருளன்றாக எனத் தலைவி கூறினாள். இக் கருத்து, `பொருளே காதலர் காதல், அருளே காதலர் என்றி நீயே' (53) என முன்னர் இந்நூலுள்ளும், `பொருளே மன்ற பொருளே, அருளே மன்ற வாருமில் லதுவே'2 எனக் குறுந்தொகையுள்ளும் வந்துள்ளமையுங் காண்க. சினம் - நெருப்பு : ஆகுபெயர். கரிகுபு என்னும் எச்சம் கரிகு என விகாரப்பட்டது. கரிந்த குதிர் போலும் என்றுமாம். `தாரிடைக் குழையாது' என்பது இடக் கரடக்கு. `அவரே பிரியச் சூழ்தலும்' என்றும் பாடம் உளது. இதற்குத் தலைவர் நின்னைப் பிரிக் கருதலும் உண்டோ வென்று தோழி சொல்லியதாக உரைக்க. இதற்கேற்பக், கருத்தினும், தலைமகட்குப் பிரியாரெனத் தோழி சொல்லியது என்ற பாடமும் உளது. அக நானூற்றுக் குறிப்புரையாசிரியர், யானே பிரியச் சூழ்தலும் உண்டோ என்ற பாடத்திற்கே, `நின்னிடத்தினின்றும் அவர் பிரிய, அவரொடு யான் விசாரிப்பதுண்டோ' எனத் தோழி கூற்றாக்கி வலிந்து பொருள் கூறியுள்ளனர். 76. மருதம் (தலைமகனை நயப்பித்துக்கொண்டா ளென்று கழறக் கேட்ட பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.) மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்கத் தண்டுறை ஊரனெம் சேரி வந்தென இன்கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு நன்கலன் ஈயும் நாண்மகிழ் இருக்கை 5. அவைபுகு பொருநர் பறையின் ஆனாது கழறுப என்பவவன் பெண்டிர் அந்தில் கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன் வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியல் சுரியலம் பொருநனைக் 3காண்டி ரோவென 10. ஆதி மந்தி பேதுற் றினையச் சிறைபறைந் துரைஇச் செங்குணக் கொழுகும் அந்தண் காவிரி போலக் கொண்டுகை வலித்தல் சூழ்ந்திசின் யானே. - பரணர். (சொ-ள்) 1-2. மண் கனை முழவொடு மகிழ்மிகத் தூங்க - மார்ச்சனை செறிந்த மத்தளத்தொடு (காண்பார்க்கு) மகிழ்ச்சி மிக (யாங்கள்) கூத்தாட, தண்துறை ஊரன் எம் சேரி வந்தென - தண்ணிய நீர்த்துறையையுடைய ஊரன் எம் சேரிக்கண் அதனைக் காண வந்தனனாக (அவ்வளவிற்கே); 3-6. அவன் பெண்டிர் - அவன் பெண்டிர், இன் கடுங் கள்ளின் அஃதை - இனிய கடிய கள்ளினையுடைய அஃதை என்பானது, களிற்றொடு நன்கலன் ஈயும் நாண்மகிழிருக்கை - யானைகளையும் நல்ல அணிகளையும் (பரிசிலர்க்கு) வழங்கும் மகிழ்ச்சி பொருந்திய நாளோலக்கத்தையுடைய, அவை புகு பொருநர் பறையின் - அவையிற் புகும் பொருநரது பறையைப்போல, ஆனாது கழறுப என்ப - ஒழியாது என்னை இகழ்வர் என்று கூறுவர்; 7-13. கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன் - கச்சினையும் கழலினையும் தேனொழுகும் தாரணிந்த மார்பினையும் உடையவனும், வகை அமைப் பொலிந்த வனப்பு அமை தெரியல் - கூறுபாட்டின் அமைதியோடு விளங்கிய அழகு அமைந்த மாலையை யுடையவனும் ஆகிய, சுரியல் அம் பொருநனை - குழன்ற மயிரினையுடைய அழகிய கூத்தினனாகிய ஆட்டனத்தியை, காண்டிரோ என - கண்டீரோ என்று (வினாவி), ஆதிமந்தி பேது உற்று இனைய - அவன் காதலியாகிய ஆதி மந்தி மயக்கமுற்று வருந்திட, சிறை பறைந்து உரைஇ - கரையினை மோதிப் பரவி, செங்குணக்கு ஒழுகும் - நேர் கிழக்கே ஓடும், அம் தண் காவிரிபோல - அழகிய குளிர்ந்த காவிரி தன் திரைக்கையால் வௌவிக் கொண்டமைபோல, கொண்டு கை வலித்தல் - சூளினை மேற்கொண்டு கையாற் பற்றிக் கோடலை, யான் சூழ்ந்திசின் - யான் எண்ணியுள்ளேன். (முடிபு) ஊரன், யாங்கள் முழவொடு தூங்க, எம் சேரி வந்தென, அவன் பெண்டிர் பொருநர் பறையின் ஆனாது கழறுப என்ப; ஆதிமந்தி பொருநனைக் காண்டிரோ எனப் பேதுற்று இனைய, குணக்கு ஒழுகும் காவிரி போலச் சூள்மேற் கொண்டு கைவலித்தலை யான் சூழ்ந்திசின். (வி-ரை) கனைதல் - செறிதல்; ஒலித்தல் எனக் கொண்டு, மார்ச்சனை யமைந்து ஒலிக்கும் எனலுமாம். தூங்கல் - ஆடுதல். பெண்டிர் என்றது தலைமகளை. அந்தில் : அசை. கச்சினன் கழலினன் மார்பினன் என்னும் குறிப்பு முற்றுக்கள் எச்சமாய்ப் பொருநன் என்னும் பெயர்கொண்டு முடிந்தன. பொருநன் - ஆட்டனத்தி. இதனை, `ஆட்டனத்தி நலனயந் துரைஇத், தாழிருங் கதுப்பிற் காவிரி வவ்வலின், மாதிரந் துழைஇ மதிமருண் டலந்த, ஆதிமந்தி'1 என்பதனா னறிக. உரைஇ - பரந்து. காவிரிபோல - காவிரி தன் திரைக்கையால் வௌவிக் கொண்டமைபோல: இது தொழிலுவமம். ஆடற் றகையானாதல் பாடற்குரலானாதல், பெற்றேனென்று சொல்லுவா ளாயின், யான் இப்படிச் செய்வேன் என்றாள். (மே-ள்) `புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்'1 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள், தலைவனின் காமக் கிழத்தியாய இளமைப் பருவத்தாளொருத்தி, தன்பாற் றலைவன் வருவது பற்றித் தலைவி புலந்ததாகக் கேட்டவழிப் பெருமிதம் கொண்டு கூறியதாகும் என்பர், நச். 77. பாலை (தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கு வித்தது.) நன்னுதல் பசப்பவும் ஆள்வினை தரீஇயர் துன்னருங் கானந் துன்னுதல் நன்றெனப் பின்னின்று சூழ்ந்தனை யாயினன் றின்னாச் சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே வெய்துற 5. இடியுமிழ் வானம் நீங்கி யாங்கணும் குடிபதிப் பெயர்ந்த சுட்டுடை முதுபாழ்க் கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார் பொறிகண் டழிக்கும் ஆவண மாக்களின் உயிர்திறம் பெயர நல்லமர்க் கடந்த 10. தறுக ணாளர் குடர் தரீஇத் தெறுவரச் செஞ்செவி எருவை யஞ்சுவர இகுக்குங் கல்லதர்க் கவலை போகின் சீறூர்ப் புல்லரை யித்திப் புகர்படு நீழல் எல்வளி யலைக்கும் இருள்கூர் மாலை 15. வானவன் மறவன் வணங்குவிற் றடக்கை ஆனா நறவின் வண்மகிழ்ப் பிட்டன் பொருந்தா மன்னர் அருஞ்சமத் துயர்த்த திருந்திலை யெஃகம் போல அருந்துயர் தருமிவள் பனிவார் கண்ணே. - மருத னிளநாகனார். (சொ-ள்) 4. நெஞ்சே வாழிய.; 1-4. நன்னுதல் பசப்பவும் - நம் தலைவியின் ஒள்ளிய நெற்றி பசந்திடவும், ஆள்வினை தரீஇயர் - முயற்சியால் பொருள் ஈட்டுதற்கு, துன் அருங் கானம் - அடைதற்கரிய காட்டு நெறியில், துன்னுதல் நன்றென - செல்லுதல் நன்றென எண்ணி, பின்னின்று - என் பின்னே நின்று, சூழ்ந்தனையாயின் - எண்ணுதியாயின், நன்று இன்னா சூழ்ந்தி சின் - மிகவும் கொடியவற்றை ஆய்ந்துகொண்டனையாவாய்; (எதனாலெனின்,) 4-6. வெய்துஉற இடி உமிழ் வானம் - இடிகளை உமிழும் மேகம் வெம்மை மிக, நீங்கி - மழை பெய்யாது நீங்குதலால், யாங்கணும் குடி பதிப் பெயர்ந்த - எவ்விடத்தும் குடிகள் தத்தம் பதிகளினின்றும் பெயர்ந்து போகற் கேதுவாய, சுட்டு உடை முது பாழ் - பலரும் சுட்டிக் கூறும் மிக்க பாழிடமாகிய பாலையில் 7-8. கயிறு பிணிக்குழிசி - கயிற்றாற் பிணித்தலையுற்ற குடத்தி லுள்ள, ஓலை கொண்மார் - ஓலையை எடுத்துக் கோடற்கு, பொறி கண்டு அழிக்கும் - அக் குடத்தின்மே லிட்ட இலச்சினையை ஆய்ந்து நீக்கும், ஆவண மாக்களின் - அவ்வோலையைத் தேரும் மாக்கள் அவையிற்றை வெளியே ஈர்த்தெடுத்தல் போல; 9-11. உயிர் திறம் பெயர - தம் உயிர் வேறொரு நற்பதவியிற்புக, தெறுவர நல் அமர்க் கடந்த - மாற்றா ரஞ்ச நற்போரை வென்று பட்ட, தறுகணாளர் குடர் - அஞ்சா வீரரின் குடரை, செஞ்செவி எருவை - சிவந்த செவியினையுடைய பருந்து, அஞ்சுவர - கண்டார் அஞ்சுமாறு, தரீஇ இகுக்கும் - வாங்கிப் போகடும்; 12-14. கல் அதர்க் கவலை போகின் - கற்களையுடைய கவர்த்த நெறியிற் போயின், சீறூர் புல் அரை இத்தி புகர் படு நீழல் - ஆங்குள்ள சீறூர்களின் பாங்கர்ப் புல்லிய அடியினையுடைய இத்தியின் புள்ளிபட்ட நிழலிலே, எல் வளி அலைக்கும் - பெருங் காற்று அலைக்கும், இருள் கூர்மாலை - இருள் மிக்க மாலைப் பொழுதில்; 15-19. வானவன் மறவன் - சேரன் படைத்தலைவனாகிய, வணங்கு வில் தடக்கை - வளைந்த வில்லைப் பெரிய கையிற் கொண்ட, ஆனா நறவின் வண் மகிழ்ப் பிட்டன் - அமையாத கள்ளினது மிக்க மகிழ்ச்சியையுடைய பிட்டன் என்பான், பொருந்தா மன்னர் அரும் சமத்து உயர்த்த - பகை மன்னரது அரிய போரில் எடுத்த, திருந்து இலை எஃகம் போல - திருந்திய இலைத் தொழிலை யுடைய வேல் போல, இவள் பனிவார் கண் - நம் தலைவியது நீர் ஒழுகும் கண்கள் (தோன்றி), அருந் துயர் தரும் - அரிய துயரினைத் தரும் ஆதலால் என்க. (முடிபு) நெஞ்சே வாழிய! நீ ஆள்வினை தரீஇயர் கானம் துன்னுதல் நன்றெனச் சூழ்ந்தனையாயின், இன்னாச் சூழ்ந்திசின்; (எதனாலெனின்,) முது பாழாகிய கவலையைக் கடந்து செல்லுங்கால் மாலையில், இவள் பனிவார்கண் தோன்றிப், பிட்டன் பொருந்தா மன்னர் சமத்து உயர்த்த எஃகம் போல அருந்துயர் தரும் ஆதலால் என்க. குழிசி ஓலை கொண்மார் பொறி கண்டழிக்கும் ஆவணமாக்களின், எருவை தறுகணாளர் குடர் தரீஇ இகுக்கும் கவலை என்க. (வி-ரை) தரீஇயர் - பொருள்தரீஇய ரென விரித்துரைக்க. சூழ்தலோடு தன்னைத் தூண்டுதலுங் கருதிப் பின்னின்று சூழ்ந்தனையாயின் என்றான். பின்னின்று - உடன் நின்று என்றுமாம். நன்றெனக் கூறிப் போந்து அதனாலாம் ஏதத்தைப் பின்னின்று ஆராய்வாயாயின் என்றுரைத்தலுமாம். நீங்கி - நீங்கலால் எனத் திரிக்க. சுட்டுடை முதுபாழ் - பலராலும் சுட்டப்படுதலுடைய பாழ் என்க. பாழாகிய கல்லதர்க் கவலை எனக் கூட்டுக. `கயிறு பிணிக் குழிசி யோலை கொண்மார், பொறிகண் டழிக்கு மாவண மாக்களின்' என்றது, ஊராண்மை நாட்டாண்மைக் கழகங்கட்கு உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தற் பொருட்டு, உடன்பாடு தெரிவிக்கும் தகுதியுடையார் பலரும் எழுதிக் குடத்தின்கட் போகட்ட ஓலைகளை, ஆவண மாக்கள் பலர் முன் குடத்தின் மேலிட்ட இலச்சினையைக் கண்டு, நீக்கி, உள்ளிருக்கும் ஓலைகளை எடுத்து எண்ணித் தேரப்பட்டார் இவரென்ன முடிபு செய்வதோர் வழக்கத்தினைக் குறிப்பது. இது குடவோலை என்று கூறப்படும்; பழைய கல்வெட்டுக்களில் இம்முறை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆவணமாக்கள் - பிரமாணம் வாங்குகிற மாக்கள் என்பாரும் உளர். ஓலை கொண்மார் அழிக்கும் மாக்கள் என்பதனை, அழித்து ஓலை கொள்ளும் மாக்கள் என மாறுக. எல் வளி - தோற்றமுடைய வளியுமாம். 78. குறிஞ்சி (களவுக் காலத்துப் பிரிந்துவந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.) நனந்தலைக் கானத் தாளி யஞ்சி இனந்தலைத் தரூஉ மெறுழ்கிளர் முன்பின் வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்துப் பொறிநுதற் பொலிந்த வயக்களிற் றொருத்தல் 5. இரும்பிணர்த் தடக்கையின் ஏமுறத் தழுவ கடுஞ்சூன் மடப்பிடி நடுங்குஞ் சாரல் தேம்பிழி நறவின் குறவர் முன்றில் முந்தூ ழாய்மலர் உதிரக் காந்தள் நீடிதழ் நெடுந்துடுப் பொசியத் தண்ணென 10. வாடை தூக்கும் வருபனி யற்சிரம் நம்மில் புலம்பிற் றம்மூர்த் தமியர் என்னா குவர்கொல் அளியர் தாமென எம்விட் டகன்ற சின்னாட் சிறிதும் உள்ளியும் அறிதிரோ ஓங்குமலை நாட 15. உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று செழுஞ்செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி யாண்டுபல கழிய வேண்டுவயிற் பிழையா 20. தாளிடூஉக் கடந்து வாளமர் உழக்கி ஏந்துகோட் டியானை வேந்தர் ஓட்டிய கடும்பரிப் புரவிக் கைவண் பாரி தீம்பெரும் பைஞ்சுனைப் பூத்த தேங்கமழ் புதுமலர் நாறுமிவள் நுதலே. - மதுரை நக்கீரனார். (சொ-ள்) 14. ஓங்கு மலைநாட - ஓங்கிய மலை பொருந்திய நாட்டையுடையவனே; 1. நனந்தலை கானத்து ஆளி அஞ்சி - அகன்ற இடத்தையுடைய காட்டினிடத்தே ஆளியினை யஞ்சி; 2-5. இனம் தலைத் தரூஉம் - தன் இனத்தைத் தன்னிடத்தே கூட்டிக் கொள்ளும், எறுழ் கிளர் முன்பின் - விளங்கித் தோன்றும் மிக்க வலியினையும், வரி ஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து - வரியினையுடைய வண்டுகள் ஒலிக்கும் வாயிற்புகும் மதத்தினையும் உடைய, பொறி நுதல் பொலிந்த - புள்ளிகள் பொருந்திய நெற்றியாற் பொலிவுற்ற, வயக்களிற்று ஒருத்தல் - வலி பொருந்திய ஆண் யானைகளின் தலைவன், இரும் பிணர்த் தடக்கையின் - கரிய சருச்சரையுடைய பெரியகையால், ஏம் உறத் தழுவ - பாதுகாவல் தோன்றத் தழுவவும்; 6. கடும் சூல் மடப்பிடி நடுங்கும் சாரல் - முதற் சூலையுடைய இளைய பிடி நடுங்கும் பக்க மலையிலுள்ள; 7. தேம்பிழி நறவின் குறவர் முன்றில் - இனிமையுறப் பிழிந்த கள்ளினையுடைய குறவர்களது முற்றத்தில்; 8-10. முந்தூழ் ஆய் மலர் உதிர - மூங்கிலின் அழகிய மலர்கள் உதிரவும், காந்தள் நீடுஇதழ் நெடுந் துடுப்பு ஒசிய - காந்தளது நீண்ட இதழையுடைய பெரிய மலர் முறியவும், தண்என வாடை தூக்கும் - தண்ணென்று வாடைக்காற்று வீசும், வருபனி அற்சிரம் - தோன்று கின்ற பனியையுடைய முன்பனிக் காலத்தில்; 11-13. எம்விட்டு அகன்ற சின்னாள் - எம்மைவிட் டகன்றிருந்த சில நாட்களுள்ளே, நம் இல் புலம்பில் - நம்மைப் பிரிந்திருக்கும் தனிமையால், தம்மூர் - தம்மூரின் கண்ணே, தமியர் அளியர் தாம் - தனித்திருக்கும் இரங்கற்குரிய இவர், என் ஆகுவர் கொல் என - எந்நிலை யடைவரோ என எண்ணி இரங்கி; 15-24. உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை - உலகெலாம் பரக்கும் பலரும் புகழும் நல்ல புகழினையும், வாய்மொழி - மெய்ம்மொழியினையுமுடைய, கபிலன் சூழ - கபிலன் ஆய்ந்து வினைசெய, சேய் நின்று செழும் செய் நெல்லின் விளை கதிர்கொண்டு - நெடுந் தொலைவினின்று வளம்பொருந்திய வயல்களில் விளைந்த நெற் கதிர்களைக் கொண்டுவந்து, தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி - அவற்றைப் பெரிய தாளினையுடைய ஆம்பல் மலராலாய அவியலொடு அட்டு உண்பித்து, யாண்டு பல கழிய வேண்டு வயின் பிழையா - பல யாண்டுகள் கழியவும் போரை விரும்பிச் செய்யும் இடத்தினின்றும் பெயராமல், தாள் இடூஉக் கடந்து வாள் அமர் உழக்கி - பகைவர் வாட் போரினைக் கலக்கி முயற்சியால் வென்று, ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய - நிமிர்ந்த கொம்புகள் பொருந்திய களிற்றினையுடைய மூவேந்தரை யும் பிறக்கிடச் செய்த, கடும் பரிப் புரவிக் கைவண் பாரி - மிக்க விரைவினையுடைய குதிரையையும் கைவண்மையையு முடைய பாரியின், தீம் பெரும் பைஞ்சுனை பூத்த - இனிய பெரிய பசிய சுனைக்கட் பூத்த, தேம் கமழ் புதுமலர் நாறும் இவள்நுதல் - தேன் மணக்கும் புதிய மலரென மணக்கும் இவளது நெற்றியினை; 13-14. சிறிதும் உள்ளியும் அறிதிரோ - சிறிதளவேனும் நினைத் தறிந்தீரோ. (முடிபு) மலை நாட! ஆளி யஞ்சி, ஒருத்தல் தழுவவும் மடப்பிடி நடுங்கும் சாரலிடத்துக் குறவர் முன்றிலில் வாடை தூக்கும் அற்சிரம், நம்மில் புலம்பில் அளியர் என் ஆகுவர் கொல் என, பாரியின் சுனைபூத்த புதுமலர் நாறும் இவள் நுதலைச் சிறிதும் உள்ளியும் அறிதிரோ. (வி-ரை) இனம் தலை : இங்குத் தலை அசையுமாம். எறுழ் முன்பு : ஒருபொரு ளிரு சொல். மிஞிறு என்பது ஞிமிறு என்றாயிற்று. கடுஞ்சூல் - முதற் கரு. `நின்னயந் துறைவி கடுஞ்சூற் சிறுவன்'1 என்பது காண்க. தேம்பிழி நறவு - தேனாற் பிழிந்த நறவுமாம். துடுப்பு - துடுப்புப் போறலின் பூவிற்கு ஆகுபெயர். நம் மில் - நாம் இல்லாத என்க. `வாய்மொழிக் கபிலன் சூழச் சேய் நின்று, செழுஞ்செய் நெல்லின் விளைகதிர் கொண்டு, தடந்தா ளாம்பல் மலரொடு கூட்டி' என்றது, தமிழ்நாட்டு மூவேந்தரும் பாரியின் பறம்பரணை முற்றியிருப்ப, அரணிலுள்ளார் உணவின்றி வருந்தாவாறு, கபிலர் கிளிகளை வளர்த்துக் கதிர் கொண்டுவர விட்ட வரலாற்றை உணர்த்தியவாறு. `பாரி பறம்பின், நிரைபறைக் குரீஇயினம் காலைப் போகி, முடங்கு புறச் செந்நெற் றரீஇய வோராங், கிரைதேர் கொட்பினவாகிப் பொழுதுபட, படர்கொள் மாலை படர்தந் தாங்கு'1 என இவ் வரலாறு ஒளவையாராலுங் கூறப்பட்டுளது. மலரொடு கூட்டி என்ப தன்பின், அட்டு உண்பித்து என வருவித்துரைக்க. பிழையா, ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம். வேந்தர் ஓட்டிய என இரண்டனுருபு உயர்திணை மருங்கிற் றொக்கு நின்றது உடம்பொடு புணர்த்தலாற் கொள்க. (உ-றை) `நனந்தலை..... மடப்பிடி நடுங்கும்' என்றது, `யானை காக்கவும் பிடி நடுங்கினாற் போல,' நீயிர் இவளைப் பாதுகாக்க வேண்டுமென்னுங் கருத்துடையரா யிருக்கவும், பிரிவிற்கு அஞ்சா நின்றாள் என்றவாறு. 79. பாலை (பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர் கனைபொறி பிறப்ப நூறி வினைப்படர்ந்து கல்லுறுத் தியற்றிய வல்லுவர்ப் படுவில் பாருடை மருங்கின் ஊறல் மண்டிய 5. வன்புலம் துமியப் போகிக் கொங்கர் படுமணி யாயம் நீர்க்குநிமிர்ந்து செல்லும் சேதா எடுத்த செந்நிலக் குரூஉத்துகள் அகலிரு விசும்பின் ஊன்றித் தோன்றும் நனந்தலை அழுவம் நம்மொடு துணைப்ப 10. வல்லாங்கு வருது மென்னா தல்குவர வருந்தினை வாழியென் நெஞ்சே இருஞ்சிறை வளைவாய்ப் பருந்தின் வான்கட் பேடை ஆடுதொறு கனையும் அவ்வாய்க் கடுந்துடிக் கொடுவில் எயினர் கோட்சுரம் படர 15. நெடுவிளி பயிற்றும் நிரம்பா நீளிடை கல்பிறந் தத்தம் போகி நில்லாப் பொருட்பிணிப் பிரிந்த நீயே. - குடவாயிற் கீரத்தனார். (சொ-ள்) 11. வாழி என் நெஞ்சே-; 11-17. ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந்துடி - ஆடுந்தோறும் ஒலிக்கும் அழகிய வாயினையுடைய கடிய துடியினையும், கொடுவில் எயினர் கோள் சுரம் படர - வளைந்த வில்லினையுமுடைய மறவர் (பகைவரை வளைத்துக்) கொள்ளும் சுரத்தின்கட் செல்ல, இரும் சிறை வளைவாய்ப் பருந்தின் வான்கண் பேடை - பெரிய சிறையினையும் வளைந்த வாயினையுமுடைய பருந்தின் வெள்ளிய கண்ணினை யுடைய பேடை, நெடுவிளி பயிற்றும் நிரம்பா நீளிடை (தன் துணையினை நோக்கி) நெடுங் கூப்பீடு செய்யும் செல்லத் தொலையாத நீண்ட இடமாய, கல் பிறங்கு அத்தம் போகி - கற்கள் விளங்கும் காட்டில் நடந்து, நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீ - நிலை நில்லாத பொருளின் மேலுள்ள பற்றினால் பிரிதலுற்ற நீ; 1-9. தோட்பதன் அமைத்த கருங் கை ஆடவர் - தோளிலே தொங்கவிடும் சோற்று முடியைக் கோத்த வலிய கையினையுடைய ஆடவர்கள், வினைப்படர்ந்து - (கிணறு வெட்டும்) தொழிலிற் புக்கு, கனைபொறி பிறப்ப நூறி - மிக்க தீப் பொறி யுண்டாகப் பாறைகளை வெட்டி, கல்லுறுத்து இயற்றிய - கல்லுதல் செய்து அமைத்த, வல் உவர்ப் படுவில் - மிக்க உவரையுடைய கிணற்றில், பாருடை மருங்கின் ஊறல் மண்டிய - பாரினை உடைத்த பக்கத்தே ஊறிய நீரை உண்ண வேண்டி, நீர்க்கு நிமிர்ந்து செல்லும் - நீர் பருகக் கலித்துச் செல்லும், கொங்கர் படு மணி ஆயம் சேதா - கொங்கரது ஒலிக்கும் மணி பூண்ட ஆயமாகிய செவ்விய ஆக்கள், வன்புலம் துமியப் போகி - வன்னிலங்கள் துணிபடச் சென்று, எடுத்த செந்நிலக் குரூஉத்துகள் - கிளம்பிய செம் மண்ணாகிய நிறம் பொருந்திய புழுதி, அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும் - அகன்ற பெரிய வானின்கண் மிக்குத் தோன்றும், நனந்தலை அழுவம் - இடமகன்ற காட்டில் ; 9-11. நம்மொடு துணைப்ப - நம் தலைவி நம்மொடு துணையாக, வல்லாங்கு வருதும் என்னாது - வல்லபடி செல்வோம் என்னாது, அல்குவர வருந்தினை - இங்கே வந்து தங்கிய அளவில் வருந்துகின்றனை; இஃதென்னை! (முடிபு) நெஞ்சே! கல்பிறங்கு அத்தம் போகி நில்லாப் பொருட்பிணி பிரிந்த நீ, நனந்தலை அழுவம், நம்மொடு (அவள்) துணைப்ப, வல்லாங்கு வருதும் என்னாது அல்குவர, வருந்தினை. (வி-ரை) சோறும் உடன் கொண்டுபோய்க் கிணறு வெட்டுதலின், தோள்பதன் அமைத்த என்றார். கல்லுறுத்தல் - கல்லுதல். வல் உவர் - மிக்க உவர். படு - கிணறு, பார் - வன்னிலம். நீர்க்கு நிமிர்ந்து செல்லும் சேதா மண்டிய போகி எடுத்த துகள் என்க. வருதும் - போவோம் என்னும் பொருட்டு. நெடுவிளி பயிற்றும் என்றது எயினர் போர்க்குச் செல்லுதல் அறிந்து பேடை துணையை அழைக்கும் என்றபடி. 80. நெய்தல் (இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.) கொடுந்தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் இருங்கழி யிட்டுச்சுரம் நீந்தி யிரவின் வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப நினக்கெவன் அரியமோ யாமே எந்தை 5. புணர்திரைப் பரப்பகம் துழைஇத் தந்த பன்மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும் முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை ஒண்பல் மலர கவட்டிலை அடும்பின் செங்கேழ் மென்கொடி ஆழி அறுப்ப 10. இனமணிப் புரவி நெடுந்தேர் கடைஇ மின்னிலைப் பொலிந்த விளங்கிணர் அவிழ்பொன் தண்நறும் பைந்தா துறைக்கும் புன்னையங் கானல் பகல்வந் தீமே. - 1மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார். (சொ-ள்) 3. தண் கடற் சேர்ப்ப - குளிர்ந்த கடற்கரையையுடைய தலைவனே! நீ; 1-3. கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் - வளைந்த காலினையுடைய முதலையொடு சுறாமீன் இயங்கும், இருங்கழி இட்டுச் சுரம் நீந்தி - கரிய உப்பங் கழியாய நெருங்கிய அரிய வழியினைக் கடந்து, இரவில் வந்தோய் - இரவின்கண் வந்துளாய்; 7-13. முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை - நீர்முள்ளி தழைத்த கடலையடைந்த கரையிலுள்ள, ஒண் பல் மலர கவட்டிலை அடும்பின் - ஒள்ளிய பலவாய மலர்களையுடைய கவடுபட்ட இலைகளையுடைய அடம்பினது, செங்கேழ் மென்கொடி ஆழி அறுப்ப - சிவந்த நிறமுடைய மெல்லிய கொடிகளை (நின்) தேருருள் அறுத்துவர, இனமணிப் புரவி நெடுந்தேர் கடைஇ - மணிகளைப் பூண்ட ஓரினமாகிய குதிரைகள் பூட்டிய நெடிய தேரினைச் செலுத்தி, மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் - ஒளியையுடைய இலையொடு பொலிந்த விளங்கும் பூங்கொத்துக்கள், அவிழ் பொன் தண் நறும் பைந்தாது உறைக்கும் - மலர்ந்த பொன்போலும் தண்ணிய நறிய செவ்வித் தாதுக்களைச் சொரியும், புன்னை அம் கானல் பகல் வந்தீமே - புன்னை மரங்களையுடைய அழகிய கடற்கரைச் சோலையில் பகலில் வருவாயாக; 4-6. எந்தை - எம் தந்தை, புணர்திரைப் பரப்பகம் துழை இத் தந்த - பொருந்தும் அலைகளையுடைய கடலகத்தே துழவிக் கொணர்ந்த, பல்மீன் உணங்கல் படுபுள் ஓப்புதும் - பலவகை மீன்களின் வற்றலிற் பொருந்தும் புட்களை ஓட்டியிருப்போம்; ஆகலின்; 4. யாம் நினக்கு எவன் அரியம் - யாங்கள் நினக்கு எங்ஙனம் அரியமாவேம்? (முடிபு) சேர்ப்ப, இருங்கழி இட்டுச் சுரம் நீந்தி இரவில் வந்தோய், நெடுந்தேர் கடைஇ, புன்னையங் கானல் பகல் வந்தீமே; மீன் உணங்கல் படுபுள் ஓப்புதும்; யாம் நினக்கு எவன் அரியம்? (வி-ரை) கோட்டு மீன் - கொம்பையுடைய மீன்; சுறாமீன். இட்டுச் சுரம் - வழி சிறிதாகிய சுரம். நெறியருமை கூறியவாறு. மலர அடும்பு எனக் கூட்டுக. 81. பாலை (பிரிவுணர்த்திய தலைமகற்குத் தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது.) நாளுலா எழுந்த கோள்வல் உளியம் ஓங்குசினை இருப்பைத் தீம்பழம் முனையின் புல்லளைப் புற்றின் பல்கிளைச் சிதலை ஒருங்குமுயன் றெடுத்த நனைவாய் நெடுங்கோ 5. டிரும்பூது குருகின் இடந்திரை தேரும் மண்பக வறந்த ஆங்கட் கண்பொரக் கதிர்தெறக் கவிழ்ந்த உலறுதலை நோன்சினை நெறியயல் மராஅம் ஏறிப் புலம்புகொள எறிபருந் துயவும் என்றூழ் நீளிடை 10. வெம்முனை அருஞ்சுரம் நீந்திச் சிறந்த செம்மல் உள்ளம் துரத்தலின் கறுத்தோர் ஒளிறுவேல் அழுவம் களிறுபடக் கடக்கும் மாவண் கடலன் விளங்கில் அன்னஎம் மையெழில் உண்கண் கலுழ 15. ஐய சேறிரோ அகன்றுசெய் பொருட்கே. - ஆலம்பேரி சாத்தனார். (சொ-ள்) 15. ஐய-, அகன்றுசெய் பொருட்கு - எம்மைப் பிரிந்து சென்று தேடும் பொருட்கு; 10-11. சிறந்த செம்மல் உள்ளம் துரத்தலின் - சிறந்த தலைமை வாய்ந்த நும் உள்ளம் தூண்டுதலின்; 11-14. கறுத்தோர் - வெகுண்டெழுந்த பகைவரது, ஒளிறு வேல் அழுவம் - ஒளிர்கின்ற வேலினையுடைய போர்க்களத்தை, களிறு படக் கடக்கும் - யானைகள் மடிய வெல்லும், மாவண் கடலன் விளங்கில் அன்ன - மிக்க வண்மையையுடைய கடலன் என்பானது விளங்கில் எனும் பதியை யொத்த, எம் எழில் மை உண்கண் கலுழ - எமது அழகிய மையுண்ட கண்ணினளாய தலைவி அழ ; 1-6. நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் - விடியற் காலத்தே எழுந்து உலாவிய தன் இரையைக் கொள்ளுதலில் வல்ல கரடி, ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின் - உயர்ந்த கிளை களையுடைய இருப்பை மரத்தின் இனிய பழத்தினை வெறுப்பின், பல்கிளைச் சிதலை - பல கிளைகளாய கறையான், நனைவாய் ஒருங்கு முயன்று எடுத்த - நனைந்த வாயால் ஒருங்குகூடி வருந்திக் கட்டிய, புல்அளைப் புற்றின் - புல்லிய வளைகளையுடைய புற்றினது, நெடுங்கோடு - நெடிய உச்சியினை, இரும்பு ஊது குருகின் இடந்து - இருப்பு உலையில் ஊதும் துருத்தியைப் போன்று (உயிர்த்துப்) பெயர்த்து, இரை தேரும் - இரையினை ஆய்ந்தெடுத்துண்ணும், மண்பக வறந்த ஆங்கண் - மண் பிளவுபட வறட்சியுற்ற பாலை நிலைமாய அவ்விடத்து; 6-10. கண் பொரக் கதிர் தெற - வெய்யில் கண்களைப் பார்க்க வொண்ணாதவாறு பொர ஞாயிறு காய்தலின், நெறிஅயல் மராஅம் - நெறியின் அயலதாகிய வெண்கடம்புகளின், கவிழ்ந்த உலறுதலை நோன்சினை ஏறி - (தழைகள் வாடிக்) கவிழ்ந்துள காய்ந்த உச்சியினையுடைய வலிய கிளைகளில் ஏறி, புலம்புகொள ஏறி பருந்து உயவும் - இரையினைப் பாய்ந்தெடுக்கும் பருந்து தனிமை கொள வருந்தும், என்றூழ் நீள் இடை - வெப்பம் மிக்க நீண்ட இடங்களாய, வெம்முனை அருஞ்சுரம் நீந்தி - வெவ்விய முனைகளையுடைய அரிய சுரத்தினைத் தாண்டி; 15. சேறிரோ - செல்லுவீரோ. (முடிபு) ஐய! பொருட்கு உள்ளம் துரத்தலின், உண் கண் கலுழ, அருஞ்சுரம் நீந்திச் சேறிரோ. உளியம் தீம்பழம் முனையின் நெடுங்கோடிடந்து இரை தேரும் ஆங்கண் பருந்து உயவும் நீளிடை அருஞ்சுரம் என்க. (வி-ரை) `அத்த விருப்பை யார்கழல் புதுப்பூத், துய்த்த வாய துணிகலம் பரக்க,.... வன்கை யெண்கின் வயநிரை பரக்கும்'1 எனக் கரடி இருப்பைப்பூ உண்டலும், `ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த, குரும்பி வல்சிப் பெருங்கை யேற்றை'2 எனப் புற்றாம் பழஞ்சோறு உண்டலும் முன்னர் வந்துள்ளமை காண்க. கரடி அகழ்கின்ற காலத்து உயிர்த்தலின், குருகின் இடந்து என்றார். முனை - எயினர் இருப்பு. அழுவம் - போர்களப் பரப்பு. எம்ஐ எழில் எனப் பிரித்து வியக்கத்தக்க அழகு என்றுரைத்தலுமாம். உண்கண் : ஆகுபெயர்; தலைவியை உளப்படுத்தி எம் கண் கலுழ என்றுரைத்தாளுமாம். இது செலவழுங்குவித்தது. 82. குறிஞ்சி (தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது.) ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கில் கோடை யவ்வளி குழலிசை யாகப் பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத் தோடமை முழவின் துதைகுர லாகக் 5. கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு மலைப்பூஞ் சாரல் வண்டியா ழாக இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து மந்தி நல்லவை மருள்வன நோக்கக் கழைவளர் அடுக்கத் தியலியா டும்மயில் 10. 3நனவுப்புகு விறலியில் தோன்றும் நாடன் உருவ வல்வில் பற்றி அம்புதெரிந்து செருச்செய் யானை சென்னெறி வினாஅய் புலர்குரல் ஏனற் புழையுடை ஒருசிறை மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர் 15. பலர்தில் வாழி தோழி அவருள் ஆரிருட் கங்குல் அணையொடு பொருந்தி ஓரியா னாகுவ தெவன்கொல் நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே. - கபிலர். (சொ-ள்) 15. தோழி வாழி-; 1-15. ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கில் - அசையும் மூங்கிலில் துளைக்கப்பெற்ற விளங்கும் துளையிடத்தே, கோடை அவ்வளி குழல் இசையாக - அழகிய மேல் காற்றினா லெழும் ஒலி குழலின் இசையாகவும், பாடு இன் அருவிப் பனி நீர் இன்னிசை - ஒலி இனிய அருவியின் குளிர்ந்த நீரின் இனிய ஓசை, தோடு அமை முழவின் துதை குரலாக - தொகுதியாகிய முழவின் நெருங்கிய இசையாகவும், கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு - கூட்டமாய கலைமான்கள் தாழ ஒலிக்கும் கடிய குரல் பெரு வங்கியத்தின் இசையாகவும் (அதனொடு), மலைப் பூஞ்சாரல் வண்டு யாழாக - மலைச்சாரலிடத்தே பூக்களி லுள்ள வண்டின் ஒலி யாழின் இசையாகவும் ஆக, இன்பல் இமிழ் இசை கேட்டு - இங்ஙனம் இனிய பலவாய ஒலிக்கும் இசைகளைக் கேட்டு, கலி சிறந்து - ஆரவாரம் மிக்கு, மந்தி நல்லவை மருள்வன நோக்க - மந்திகளாய நல்ல திரள் வியப்புற்றுக்காண, கழை வளர் அடுக்கத்து - மூங்கில் வளரும் பக்க மலையில், இயலி ஆடும் மயில் - உலாவி ஆடும் மயில்கள், நனவுப் புகும் விறலியில் தோன்றும் நாடன் - களத்திற் புகுந்தாடும் விறலி போலத் தோன்றும் நாட்டையுடை யவனாகிய, மலர் தார் மார்பன்- அகன்ற தாரினை யணிந்த மார்பையுடையவன், உருவ வல் வில் பற்றி - அழகிய வலிய வில்லினைக் கையிற் பற்றி, அம்பு தெரிந்து - சிறந்த அம்பினை ஆய்ந்து கொண்டு, செருச் செய் யானை செல் நெறி வினாஅய் - தன்னால் அம்பு எய்யப்பெற்ற யானை சென்ற நெறியினை வினவி, புலர் குரல் ஏனல் புழையுடை ஒருசிறை - முதிர்ந்த கதிரினையுடைய தினைப் புனத்தின் வாயிலின் ஒரு பக்கத்தே, நின்றோன் கண்டோர் - நின்றவனைக் கண்டோர், பலர் - பலராவர்; 15-18. அவருள் - அவர் தம்முள், ஆர் இருள் கங்குல் - அரிய இருள் செறிந்த இரவில், அணையொடு பொருந்தி - அணையின்கண் தங்கி, நீர்வார் கண்ணொடு - நீர் சொரியும் கண்ணினொடு, நெகிழ் தோளேன் - மெலிந்த தோளையுடையேனாக, ஓர் யான் ஆகுவது எவன் கொல் - யானொருத்தியுமே ஆயது என்னையோ? (முடிபு) தோழி வாழி! நாடன், மார்பன் நின்றோன் கண்டோர் பலர்; அவருள் அணையொடு பொருந்தி நீர்வார் கண்ணொடு, நெகிழ் தோளேன் ஓர் யான் ஆகுவது எவன் கொல்? (வி-ரை) மூங்கிலில் வண்டு துளைத்த துளையின் வழியே மேல் காற்றுச் செல்லுதலால் எழும் ஓசை, குழலிசை போலும் என்னுங் கருத்து, `ஆடமைத் தும்பி குயின்ற, அகலா வந்துளை கோடை முகத்தலின், நீர்க்கியங் கினநிரைப் பின்றை வார்கொல், ஆய்க்குழற் பாணியிலைதுவந் திசைக்கும்' (225) எனப் பின்னர் வருதலுங் காண்க. இவ்வுருவகம், `பருதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக், கிருள் வளைப்புண்ட மருள்படு பூம்பொழிற், குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட, மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய, வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர், மயிலா டரங்கின் மந்தி காண் பனகாண்' 1 என மணிமேகலையில் அமைந்திருத்தல் அறிந்து இன்புறுத்தக்கது. உருவ - என்றதனை உரிச்சொல் ஈறு திரிந்த தெனக் கொண்டு உட்குப் பொருந்திய என்றலுமாம். `உருவக் குதிரை மழவர் ஓட்டிய'1 என்றதன் உரை காண்க. செருச் செய் யானை - போர் செய்து அம்பு எய்யப் பெற்ற யானை. மலர் மார்பு என இயையும். மலர்ந்த தார் எனச் சினைக்கேற்ற அடையாக்கலு மாம். தில் : அசை. `ஆடமை குயின்ற....... நாடன்' என்றது இங்ஙனம் பிறர்க் கெல்லாம் இன்பஞ் செய்யும் நாடனைக் கண்டார் பலருள்ளும் நமக்கே துயராவான் என்னென்றவாறு. இச் செய்யுள் புதுமை பொருளாகத் தோன்றிய வியப்பு என்னும் மெய்ப்பாடு. (மே-ள்) `வரைவிடை வைத்த காலத்து வருந்தினும், வரையா நாளிடை வந்தோன் முட்டினும், உரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணும் தானே கூறுங் காலமு முளவே'2 என்னும் சூத்திரத்து இச் செய்யுளை எடுத்துக்காட்டி, `அவனை ஆயத்தார் பலருங் கண்டாரென வந்தோன் முட்டியவாறும், அவருள் நெகிழ் தோளேன் யானே யெனத் தானே கூறியவாறுங் காண்க' என்றுரைத்தனர், நச். `புதுமை பெருமை'3 என்னுஞ் சூத்திரத்து `மந்தி நல்லவை.... தோன்று நாடன்' என்றவழி பண்டு ஒருகாலும் கண்டறியாதபடி ஆடிற்று மயில் என்றமையின், பிற பொருட்கட் டோன்றிய புதுமையாயிற்று எனவும், `மலர்தார் மார்பன்.... நெகிழ் தோளேனே' என்றது தன்கட்டோன்றிய புதுமை பற்றி வியப்புப் பிறந்தது. என்னை? தன் கருத்து வெளிப்படாது தன் மெய்க்கட்டோன்றிய புதுமையைத் தலைவி வியந்தாள் போலத் தோழிக்கு அறத்தொடு நின்றமையின் எனவும், `இன்பத்தை வெறுத்தல்'4 என்னுஞ் சூத்திரத்து `கண்டுயில் மறுத்த லென்பது - இரவும் பகலுந் துஞ்சாமை'; அது `புலர்குர லேனல்.... நெகிழ்தோ ளேனே' என வரும் எனவும் உரைத்தார், பேரா. 83. பாலை (தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) வலஞ்சுரி மராஅத்துச் சுரங்கமழ் புதுவீச் சுரியா ருளைத்தலை பொலியச் சூடிக் கறையடி மடப்பிடி கானத் தலறக் களிற்றுக்கன் றொழித்த உவகையர் கலிசிறந்து 10 கருங்கால் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து பெரும்பொளி வெண்ணார் அழுந்துபடப் பூட்டி நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர் நறவுநொடை நல்லில் புதவுமுதற் பிணிக்குங் கல்லா இளையர் பெருமகன் புல்லி 15. வியன்றலை நன்னாட்டு வேங்கடங் கழியினும் சேயர் என்னா தன்புமிகக் கடைஇ எய்தவந் தனவால் தாமே நெய்தல் கூம்புவிடு நிகர்மலர் அன்ன ஏந்தெழில் மழைக்கணெம் காதலி குணனே. - கல்லாடனார். (சொ-ள்) நெஞ்சே!; 1-10. வலம் சுரி மராஅத்து சுரம் கமழ் புதுவீ - வலமாகச் சுரித்த வெண்கடம்பினது சுரமெல்லாம் கமழும் புதிய பூக்களை, சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி - சுருள் கொண்ட உளைபோன்ற மயிரினையுடைய தலையில் விளங்கும்படி அணிந்து, கறைஅடி மடப்பிடி கானத்து அலற - உரல்போன்ற அடியினையுடைய இளைய பெண் யானை காட்டிற் (பிரிந்து) அலற, களிற்று கன்று ஒழித்த உவகையர் - யானைக் கன்றினைப் பிரித்துக்கொண்ட மகிழ்ச்சியை யுடையராய், கலி சிறந்து - செருக்கு மிக்கு, கருங்கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து - வலிய அடிமரத்தினை யுடைய வெண் கடம்பின் வளவிய கொம்பினைப் பிளந்து, பெரும் பொளி வெண்நார் - பெரிதாக உரித்த வெள்ளிய நார்க் கயிற்றால், அழுந்துபடப் பூட்டி - அக் கன்றினை அழுத்தம்பெறக் கட்டிக் கொணர்ந்து, நெடுங்கொடி நுடங்கும் நியமம் மூதூர் - நீண்ட கொடிகள் அசையும் அங்காடிகளையுடைய பழைமையான ஊரில், நறவு நொடை நல்லில் புதவு முதல் பிணிக்கும் - கள்விற்கும் நல்ல இல்லின் வாயிலிடத்தே பிணித்திடும், கல்லா இளையர் - தம் வேட்டுவத் தொழிலன்றிப் பிறிது தொழில் கல்லாத வேடர்கட்கு, பெருமகன் - தலைவனான, புல்லி - புல்லி என்பானது, வியன்தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும் - விரிந்த இடத்தினையுடைய நல்ல நாட்டின் கண்ணுள்ள வேங்கட மலையினைக் கடந்து செல்லினும்; 11-14. நெய்தல் கூம்பு விடு நிகர் மலர் அன்ன - நெய்தலினது முகை யவிழ்ந்த ஒளி பொருந்திய மலரை யொத்த, ஏந்து எழில் மழைக் கண் எம்காதலி குணன் - அழகினை ஏந்திய குளிர்ந்த கண்ணினளாய நம் காதலியின் குணங்கள், சேயர் என்னாது - சேய்மைக்கண் சென்றவர் என்னாது, அன்பு மிகக் கடைஇ - அன்பு மிகச்செலுத்திட, எய்தவந்தன தாம் - தாம் நம்மால் அணுக வந்தன. (முடிபு) நெஞ்சே! (நாம்) புல்லி வேங்கடம் கழியினும், எம் காதலி குணன் தாம் சேயர் என்னாது அன்பு மிகக் கடைஇ எய்த வந்தன. (வி-ரை) உளை - தலையாட்டம். ஒழித்த உவகையர் : ஒழித்த : பெயரெச்சம் காரணப் பொருட்டாக வந்தது. (மே-ள்) `வெறியறி சிறப்பின்'1 என்னுஞ் சூத்திரத்து, தருதலும் என்ற மிகையால், நிரையல்லாத கோடலும் அத் துறைப்பாற்படும் என்றுரைத்து, `கறையடி மடப்பிடி கானத் தலறக், களிற்றுக் கன்றொழித்த வுவகையர் கலிசிறந்து,..... கல்லா விளையர் பெருமகன் புல்லி' என்ற அடிகளைக் காட்டி,...... யானைக் கன்றைக் கவர்ந்தவாறு காண்க என்றனர், நச். 84. முல்லை (தலைமகன் பாசறையிருந்து சொல்லியது.) மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில் பணைமுழங் கெழிலி பௌவம் வாங்கித் 2தாழ்பெயற் பெருநீர் வலனேர்பு வளைஇ மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர 5. இருநிலங் கவினிய ஏமுறு காலை நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி அயிர்க்கண் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய நறுவீ முல்லை நாண்மலர் உதிரும் புறவடைந் திருந்த அருமுனை இயவில் 10. சீறூ ரோளே 3ஒண்ணுதல் யாமே எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி அரிஞர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு கள்ளார் வினைஞர் களந்தொறும் மறுகும் தண்ணடை தழீஇய கொடிநுடங் காரெயில் 15. அருந்திறை கொடுப்பவுங் கொள்ளான் சினஞ்சிறந்து வினைவயிற் பெயர்க்குந் தானைப் புனைதார் வேந்தன் பாசறை யேமே. - மதுரை எழுத்தாளன். (சொ-ள்) 1-5. மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில் - மலைமீது வளைந்த அச்சந் தரும் அழகிய வில்லினையுடைய, பணை முழங்கு எழிலி - முரசமென முழங்கும் மேகம், பௌவம் வாங்கி - கடல் நீரை முகந்துகொண்டு, வலன் ஏர்பு வளைஇ - உலகினை வலனாக எழுந்து வளைத்து, தாழ் பெயல் பெருநீர் - இறங்கிப் பெய்யும் மிக்க மழையை, மாதிரம் புதைப்பப் பொழிதலின் - திசை யெல்லாம் மறையப் பொழிதலால், காண்வர இருநிலம் கவினிய ஏம்உறு காலை - காட்சியுறப் பெரிய நிலம் அழகுபெற்ற இன்பம் எய்திய இக்காலத்தே; 10. ஒண்ணுதல் - ஒளி பொருந்திய நெற்றியினையுடைய நம் தலைவி; 6-10. அயிர்க்கண் படாஅர்த் துஞ்சு - நுண் மணலின் கண்ணுள்ள சிறு தூறினிடத்தே தூங்கும், நெருப்பின் அன்ன சிறுகண் பன்றி - நெருப்பினை யொத்த சிறிய கண்ணினையுடைய பன்றியின், புறம் புதைய - முதுகு மறைய, நறுவீ முல்லை நாள் மலர் உதிரும் - நறிய பூவினதாகிய முல்லையின் புதிய பூக்கள் உதிரும், புறவு அடைந்திருந்த அருமுனை இயவில் - காடு சார்ந்திருக்கும் அரிய முனைகளையுடைய நெறியிலுள்ள, சீறூரோள் - சிறிய ஊரின்கண் உள்ளாள் ஆவள்; 10-17. யாமே - யாமோ, எரி புரை பன்மலர் பிறழ வாங்கி - நெருப்புப் போன்ற பல மலர்களை மாறுபட வைத்து வலித்து, அரிஞர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு - நெல்லரிஞர் கட்டிய அசையும் பக்கங்களுடைய பெரிய நெற்கட்டினைக் கொண்டு, கள்ஆர் வினைஞர் களந்தொறும் மறுகும் - கள்ளினை உண்ட களமர் களந்தோறும் கொடு போகும், தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் - மருதநிலம் சூழ்ந்த கொடிகள் அசையும் இவ்வரிய எயிலை, அருந்திறை கொடுப்பவும் கொள்ளான் - பகைவர் வணங்கி அரிய திறையாகக் கொடுப்பவும் ஏற்றுக் கொள்ளானாகி, சினஞ் சிறந்து - சினம் மிக்கு, வினைவயின் பெயர்க்கும் தானை - மேன்மேலும் போரின்கட் செலுத்தும் சேனையினையுடைய, புனைதார் வேந்தன் பாசறையேம் - மாலையை அணிந்த அரசனது பாசறையிடத்தே யுள்ளேம். (முடிபு) எழிலி பொழிதலின் இருநிலம் கவினிய ஏமுறு காலை, ஒண்ணுதல் சீறூரோள்; யாமே. ஆரெயில் திறை கொடுப்பவும் கொள்ளான் வினை வயிற் பெயர்க்கும் தானைப் புனைதார் வேந்தன் பாசறையேம். (வி-ரை) ஏம் - ஏமம்; பாதுகாவலுமாம். எரிபுரை மலர் - தாமரை, செங்கழுநீர். பிறழ என்றது பூவோ டரிந்த நெல்லைக் கட்டுங் காலத்து அரியோடு மாற வைத்துக் கட்டப் பெறுதலால் அவை தம் மின் மாறுபடல். எயில் - அரண், ஊர். தூதுவிடக் கருதிய தலைவன் சீறூரோள் ஒண்ணுதல் எனத் தன் வருத்தந் தோன்றக் கூறினான் என்க. இதனைத் தூது கண்டு கூறிய தென்பர் நச்சினார்க்கினியர். (மே-ள்) `ஏவன் மரபின்'1 என்னுஞ் சூத்திரத்து, இச்செய்யுளை எடுத்துக்காட்டி, இது தூது கண்டு வருந்திக் கூறியது எனவும், இதன் கண் தன்னூரும் அருமுனையியவிற் சீறூர் என்றலின், தான் குறுநில மன்னன் என்பது பெற்றாம் என்றும், `தானே சேறலும்'2 என்னுஞ் சூத்திரத்து, `இது, குறுநில மன்னர் போல்வார் சென்றமை தோன்றக் கூறியது' என்றும், `ஒன்றாத் தமரினும்' என்னும் சூத்திரத்து இது, `ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்'3 என்றதற்கு உதாரணமாகு மென்றும் `கூதிர் வேனில்'4 என்னுஞ் சூத்திரத்து, `வினைவயிற்........ பாசறை யேமே' எனத் தலைவியை நினைவன வாகைக்கு வழுவாம்; அகத்திற்கு வழுவன்று என்றும் கூறுவர், நச். 85. பாலை (தலைமகன் பிரிய வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.) நன்னுதல் பசப்பவும் பெருந்தோள் நெகிழவும் உண்ணா உயக்கமோ டுயிர்செலச் சாஅய் இன்னம் ஆகவும் இங்குநத் துறந்தோர் அறவர் அல்லர் அவரெனப் பலபுலந்து 5. ஆழல் வாழி தோழி சாரல் ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி கன்றுபசி களைஇய பைங்கண் யானை முற்றா மூங்கில் முளைதரு பூட்டும் வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை 10. நன்னாட் பூத்த நாகிள வேங்கை நறுவீ யாடிய பொறிவரி மஞ்ஞை நனைப்பசுங் குருந்தின் நாறுசினை யிருந்து துணைப்பயிர்ந் தகவுந்5 துனைதரு தண்கார் வருதும் யாமெனத் தேற்றிய 15. பருவங் காணது பாயின்றால் மழையே. - காட்டூர் கிழார் மகனார் கண்ணனார். (சொ-ள்) 1-5. தோழி வாழி-; நன்னுதல் பசப்பவும் - அழகிய நெற்றி பசந்திடவும், பெருந் தோள் நெகிழவும் - பெரிய தோள் மெலிந்திடவும், உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய் - உண்ணாமையா லாய வருத்தத்தால் உயிர் நீங்க மெலிந்து, இன்னம் ஆகவும் - நாம் இந் நிலையினமாகவும், இங்கு நம் துறந்தோர் - இங்கு நம்மை விட்டுப் பிரிந்தார் நம் தலைவர், அறவர் அல்லர் அவர் - எனவே அவர் அறத்தினரல்லர், எனப் பல புலந்து ஆழல் - என்றிவ்வாறு பலவுங் கூறி வெறுத்துத் துயரில் அழுந்தாதே, 5-15. சாரல் - மலைச் சாரற்கண்ணே, ஈன்று நாள் உலந்த மெல்நடை மடப்பிடி கன்று பசி களைஇய - ஈன்று அணிமை கழிந்த மெல்லிய நடை வாய்ந்த இளைய பிடியினதும் அதன் கன்றினதும் பசியைப் போக்கற்கு, பைங்கண் யானை - பசிய கண்ணினையுடைய களிறு, முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும் - மூங்கிலின் முற்றாத முளையினைக் கொணர்ந்து உண்பிக்கும், வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை - வெற்றி பொருந்திய வேலினையுடைய திரையனது வேங்கடமெனும் நீண்ட மலையில், நன்னாள் பூத்த நாகு இளவேங்கை - நல்ல நாட்காலையிற் பூத்த மிக இளைய வேங்கை மரத்தின், நறுவீ ஆடிய பொறி வரி மஞ்ஞை - நறிய பூக்களின் துகளை அளைந்த பொறிகளுடன் கூடிய வரிகளையுடைய மயில், நனைப் பசுங் குருந்தின் நாறு சினை யிருந்து - தேனையுடைய பசிய குருந்த மரத்தின் நறுமணம் வீசும் கிளையிலிருந்து, துணைப் பயிர்ந்து அகவும் துனைதரு தண்கார் - தன் துணையை அழைத்துக் கூப்பிடும் விரைந்து வரும் குளிர்ந்த கார்ப் பருவமே, யாம் வருதும் எனத் தேற்றிய பருவம் - நம் தலைவர் தாம் வருவோம் எனத் தெளிவித்த பருவமாகும், மழை பாயின்று - அதற்கு மழையும் பரவா நின்றது, அதுகாண் - அதனைக் காண்பாயாக. (முடிபு) தோழி, வாழி! நாம் இன்னம் ஆக, நம் தலைவர் நம்மைத் துறந்தார், அவர் அறவரல்லர், எனப் புலந்து ஆழல்; தண் கார், யாம் வருதும் எனத் தேற்றிய பருவம், மழை பாயின்று; அது காண். யானை முளை தருபு ஊட்டும் வேங்கட நெடுவரை வேங்கை நறுவீயாடிய மஞ்ஞை குருந்தின் சினையிருந்து துணைப் பயிர்ந்தகவும் கார் என்க. (வி-ரை) நம் துறந்தோர் என்பது நத்துறந்தோர் என விகார மாயிற்று. நாள் உலந்த - நாள் முடிந்த; ஈன்றணிமை கழிந்த என்றபடி. பிடி கன்று இவற்றின் பசியென விரித்துக் கொள்க. வேங்கை பூக்குங் காலம் மணநாள் ஆகலின், நன்னாட் பூத்த என்றாள் எனலுமாம். கார் விரைவில் வந்துவிடும் என்பாள் துனைதரு தண்கார் எனவும், மழை பாயின்று எனவும் கூறினாள். எனவே இது வேனிற் காலத்து இறுதியாயிற்று. மஞ்ஞை துணைப் பயிர்ந்து அகவும் என்றது, கார் காலத்தில் பிரிந்திருத்தல் அருமையால் கூடுதற்கு அழைக்கும் என்றபடி. 86. மருதம் (வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்.) உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால் தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி மனைவிளக் குறுத்து மாலை தொடரிக் 5. கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக் கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள் கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர் பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் 10. முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப் புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினின் வழாஅ நற்பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை யாகென 15. நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நன்மணம் கழிந்த பின்றைக் கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர 20. ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல் கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத் தொடுங்கினள் கிடந்த ஓர்புறந் தழீஇ முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப அஞ்சினள் உயிர்த்த காலை யாழநின் 25. நெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென இன்னகை இருக்கைப் பின்யான் வினவலின் செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர அகமலி உவகையள் ஆகி முகனிகுத் தொய்யென இறைஞ்சி யோளே மாவின் 30. மடங்கொள் மதைஇய நோக்கின் ஒடுங்கீர் ஓதி மாஅ யோளே. - நல்லாவூர் கிழார். (சொ-ள்) 1-4. உழுந்து தலைப்பெய்த கொழுங் களிமிதவை - உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த செவ்விய குழைதலை யுடைய பொங்கலொடு, பெருஞ் சோற்று அமலை நிற்ப - பெரிய சோற்றுத் திரளையை உண்டல் இடையறாது நிகழ, நிரை கால் தண் பெரும் பந்தர் - வரிசையாகிய கால்களையுடைய குளிர்ந்த பெரிய பந்தரில், தருமணல் ஞெமிரி - கொணர்ந்திட்ட மணலைப் பரப்பி, மனை விளக்கு உறுத்து - மனையின்கண் விளக்கினை ஏற்றி வைத்து, மாலை தொடரி - மாலைகளைத் தொங்கவிட்டு; 5-10. கோள் கால் நீங்கிய கொடுவெண் திங்கள் - தீய கோள்களின் தொடர்பு நீங்கப்பெற்ற வளைந்த வெள்ளிய திங்களை, கேடுஇல் விழுப்புகழ் நாள் தலை வந்தென - குற்றமற்ற சிறந்த புகழினையுடைய உரோகணி எனும் நாள் அடைந்ததாக, கனைஇருள் அகன்ற கவின் பெறு காலை - அந்நாளிலே மிக்க இருள் நீங்கிய அழகு பொருந்திய விடியற் காலையில், உச்சிக் குடத்தர் புது அகல் மண்டையர் - உச்சியில் குடத்தினை யுடையரும் கையினிற் புதிய அகன்ற மண்டை எனும் கலத்தினையுடையரும் ஆகிய, பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் - மணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர், முன்னவும் பின்னவும் முறை முறை தரத் தர - முன்னே தருவனவும் பின்னே தருவனவும் முறைமுறையாகத் தந்திட; 11-16. புதல்வன் பயந்த திதலை அவ் வயிற்று - மகனைப் பெற்ற தேமலுடைய அழகிய வயிற்றினையுடைய, வால் இழை மகளிர் நால்வர் கூடி - தூய அணிகளையுடைய மகளிர் நால்வர் கூடி நின்று, கற்பினின் வழாஅ நற்பல உதவி - கற்பினின்றும் வழுவாது நன்றாய பல பேறுகளையும் தந்து, பெற்றோன் பெட்கும் பிணையை ஆகென - நின்னை எய்திய கணவனை விரும்பிப் பேணும் விருப்பத்தை யுடையை ஆக என்று வாழ்த்தி, நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி - நீரொடு கூட்டிப் பெய்த குளிர்ந்த இதழ்களையுடைய பூக்கள், பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க - மிக்க கரிய கூந்தலில் நெற்களுடன் விளங்க; 17. வதுவை நன்மணம் கழிந்த பின்றை - இங்ஙனம் நன்றாகிய வதுவைக் கலியாணம் முடிந்த பின்பு; 18-20. தமர் கல் என் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து - சுற்றத்தார் கல்லென்ற ஒலியினராய் விரைந்து வந்து, பேர் இற்கிழத்தி ஆக எனத் தர - பெரிய மனைக் கிழத்தி ஆவாய் என்று கூறிக் கூட்ட, ஓர் இல் கூடிய உடன்புணர் கங்குல் - ஓர் அறையில் உடன்கூடிய புணர்ச்சிக்குரிய இரவில்; 21-26. கொடும்புறம் வளைஇ - முதுகினை வளைத்து, கோடிக் கலிங்கத்து - கோடிப் புடைவைக்குள், ஒடுங்கினள் கிடந்த புறம் தழீஇ - ஒடுங்கிக்கிடந்த இடத்தினைச் சார்ந்து, முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப - அணையும் விருப்புடன் முகத்தினை மூடியிருந்த ஆடையினை நீக்க, அஞ்சினள் உயிர்த்த காலை - அஞ்சி உயிர்த்த பொழுது, நின் நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரையென - நின் உள்ளம் நினைந்ததனை மறையாது உரை என்று, பின் யான் வினவலின் - யான் பின்பு வினவுதலின், இன் நகை இருக்கை - இனிய மகிழ்ச்சியுடன் கூடிய இருக்கையின்கண்; 27-31. மாவின் மடங் கொள் மதைஇய நோக்கின் - மானின் மடத்தினைக் கொண்டதும் செருக்கினை யுடையதுமான நோக்கினையும், ஒடுங்கு ஈர் ஓதி - ஒடுங்கிய குளிர்ந்த கூந்தலினையும் உடைய, மாஅயோள் - மாமை நிறத்தினை யுடையாள்; செஞ் சூட்டு ஒண் குழை வண்காது துயல்வர - சிவந்த மணிகள் பதித்த ஒள்ளிய குழை வளவிய காதின்கண் அசைய, அகம் மலி உவகையள் ஆகி - உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியினள் ஆகி, முகன் இகுத்து - முகத்தினைத் தாழ்த்து, ஒய்யென இறைஞ்சியோள் - விரைந்து தலைவணங்கினள். (முடிபு) வதுவை நன் மணம் கழிந்த பின்றை. தமர்தர ஓரிற்கூடிய கங்குல், கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த புறம் தழீஇ, முகம் புதை திறப்ப, அஞ்சினள் உயிர்த்தகாலை, நின் நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரையென யான் வினவலின், மாயோள் முகன் இகுத்து ஒய்யென இறைஞ்சியோள். நாள் தலைவந்தென, அமலை நிற்ப, பந்தர் விளக்குறுத்து, மாலை தொடரி, முது செம் பெண்டிர் தரத் தர, மகளிர் நால்வர் கற்பினின் வழாஅ நற்பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென, நீரொடு சொரிந்த அலரி கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நன் மணம் கழிந்த பின்றை என்க. (வி-ரை) மிதவை - பொங்கல்; கும்மாயமுமாம். உண்பார் இடையறாமைபற்றி அமலை நிற்ப என்றான். ஞெமிரி - பரப்பி எனப் பிறவினைப் பொருட்டு. விளக்குறுத்து - தூய்மை செய்து என்றுமாம். கனையிரு ளகன்றகாலை யென்றமையால், முற்பக்கம் (பூர்வ பக்கம்) என்பது பெற்றாம். கோள் என்றது ஈண்டுத் தீய கோள்களை. உரோகணி என்பதனை வருவித்து, விழுப்புகழ் நாளாவது உரோகணி திங்களை அடைந்த நாள் என்னலுமாம். உரோகணியும் திங்களும் கூடிய நாள் கலியாணத்திற்குச் சிறந்ததென்பது, `திங்கட் சகடம் வேண்டிய துகடீர் கூட்டத்து ...... வதுவை மண்ணிய மகளிர்'1 எனப் பின்னர் இந் நூலுள்ளும், `வானூர் மதியம் சகடனைய வானத்துச், சாலி யொருமீன் தகையாளைக் கோவலன், மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது'1 எனச் சிலப்பதிகாரத் துள்ளும் வருதலான் அறியப்படும். கலியாணம் எல்லாரும் புகுதற்கு உரியதாகலின், `பொது' எனப்பட்டது. பிணை - விருப்பம்; `பிணையும் பேணும் பெட்பின் பொருள'2 என்பவாகலின். நெல்லொடு தயங்க என்றமையால், நெல்லும் சொரிந்தமை பெற்றாம். வதுவை மணமாவது - குளிப்பாட்டல். கோடிக் கலிங்கம்- புதுப் புடைவை. ஓர்புறந் தழீஇ : ஓர், அசை: யாழ : அசை தலைமகன் தோழிக்கு வாயின் மறுத்தவழிக் கூறியதாயின் தலைவி எக்காலத்தும் என்பால் இன்னதோர் அன்புடையள்; அவள் கருத்தறியாது கூறுகின்றனை என்றான் என்க. (மே-ள்) `கற்பெனப் படுவது'3 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் காட்டி, `இதனுள் வதுவைக்கு ஏற்ற கரணங்கள் நிகழ்ந்த வாறும், தமர் கொடுத்தவாறுங் காண்க. சுற்றஞ் சூழ்ந்து நிற்றலானும் தமர் அறிய மணவறைச் சேறலானும் களவாற் சுருங்கி நின்ற நாண் சிறந்தமையைப் பின்னர்த் தலைமகன் வினவ, அவள் மறுமொழி கொடாது நின்றமையைத் தலைவன் தோழிக்குக் கூறியவாறு காண்க. இதனானே இது களவின்வழி நிகழ்ந்த கற்பாயிற்று என்றும்,' `கரணத்தின் அமைந்து முடிந்த காலை'4 என்னுஞ் சூத்திரத்து `முகனிகுத் தொய்யென விறைஞ்சியோளே' என்பது கரணத்தின் அமைந்து முடிந்தது என்றும் கூறினர், நச். `புகுமுகம் புரிதல்'5 என்னுஞ் சூத்திரத்து, அகமலி யுவகையளாகி முகனிகுத், தொய்யென விறைஞ்சி யோளே' என்றது சிதைவு பிறர்க்கின்மை என்னும் மெய்ப்பாட்டிற்கு உதாரணமாகக் காட்டி, இது தலைமகன் அறிய மெய்ப்பட்டதென்பது என்றும், `மறை வெளிப் படுதல் தமரிற் பெறுதல்'6 என்னுஞ் சூத்திரத்து, `தமர்தர, ஓரிற் கூடி யுடன்புணர் கங்குல்' என்பது, தமரிற் பெறுதல் என்றும் உரைத்தனர், பேரா. 87. பாலை (7வினைமுற்றி மீளுந் தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) தீந்தயிர் கடைந்த திரள்கால் மத்தம் கன்றுவாய் சுவைப்ப முன்றில் தூங்கும் படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை நல்கூர் சீறூர் எல்லித் தங்கிக் 5. குடுமி நெற்றி நெடுமரச் சேவல் தலைக்குரல் விடியல் போகி முனாஅது கடுங்கண் மறவர் கல்கெழு குறும்பின் எழுந்த தண்ணுமை இடங்கட் பாணி அருஞ்சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணெனக் 10. குன்றுசேர் கவலை இசைக்கும் அத்தம் நனிநீ டுழந்தனை மன்னே அதனால் உவவினி வாழிய நெஞ்சே மையற வைகுசுடர் விளங்கும் வான்தோய் வியனகர்ச் சுணங்கணி வனமுலை நலம்பா ராட்டித் 15. தாழிருங் கூந்தனங் காதலி நீளமை வனப்பின் தோளுமா ரணைந்தே. - மதுரைப் பேராலவாயார். (சொ-ள்) 12. வாழிய நெஞ்சே-; 1-4. தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம் - இனிய தயிரைக் கடைந்த திரண்ட தண்டினையுடைய மத்து, கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும் - கன்று தன் வாயாற் சுவைத்திட முற்றத்தே தொங்கும், படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை - மர நிழலாகிய பந்தரையும் புல்லால் வேயப்பெற்ற குடில்களையுமுடைய, நல்கூர் சீறூர் - வறுமைப்பட்ட சிறிய ஊரின்கண், எல்லித் தங்கி - இரவிற்றங்கி; 5-6. குடுமி நெற்றி நெடுமரச் சேவல் - செஞ்சூடு பொருந்திய நெற்றியையுடைய நீண்ட மரத்திலுள்ள சேவலின், தலைக்குரல் விடியற் போகி - முதற் குரல் எழுந்த விடியற்காலையிற் புறப்பட்டுச் சென்று; 6-11. முனாஅது - பழமை யுடையதாகிய, கடுங்கண் மறவர் கல்கெழு குறும்பின் எழுந்த - வன்கண்மையுடைய மறவரது கற்கள் பொருந்திய காட்டரண்களில் எழுந்த, தண்ணுமை இடங்கண் பாணி - தண்ணுமைப் பறையின் அகன்ற கண்ணினின் றெழும் ஒலி, அருஞ்சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென இசைக்கும் - அரிய சுர நெறியே செல்வோர் நெஞ்சு நடுக்குற ஒலிக்கும், குன்று சேர்க வலை அத்தம் - குன்றினைச் சார்ந்த கவர்த்த நெறிகளையுடைய காட்டில், நனி நீடு உழந்தனைமன் - நீ மிகவும் நெடிது வருந்தினை; 11-16. அதனால் - ஆதலால், மை அற வைகு சுடர் விளங்கும் வான்றோய் வியன் நகர் - இருள் நீங்க விடிவிளக்கு விளங்குகின்ற வான் அளாவிய நம் பெரிய மாளிகையின்கண், தாழ்இருங் கூந்தல் நம் காதலி சுணங்கு அணி வனமுலை நலம் பாராட்டி - தாழ்ந்த கரிய கூந்தலையுடைய நம் காதலியின் சுணங்கு அணிந்த அழகிய முலையின் நல்லின்பத்தைப் பாராட்டி, நீள் அமை வனப்பின் தோளும் அணைந்து- நீண்ட மூங்கில் போன்ற அழகினையுடைய தோளினையும் அணைந்து, உவ இனி - இப்பொழுது மகிழ்வாயாக. (முடிபு) நெஞ்சே வாழிய! நீ சீறூர் எல்லித் தங்கி விடியற் போகி அத்தம் நீடு உழந்தனை மன்னே; அதனால் வியனகர், நம் காதலி முலை நலம் பாராட்டி, தோளும் அணைந்து இனி உவ. (வி-ரை) படலை - தழைப்பரப்பு. படலைப் பந்தர் - மர நிழலாகிய பந்தர். வினைமுற்றி மீள்கின்றானாகலின் இப்பொழுது உவ என்றான். மை - இருள். வைகு சுடர் - விடியுமளவும் எரியும் விளக்கு; விடிவிளக்கு எனப்படும். தோளுமார் : ஆர், அசை. 88. குறிஞ்சி (இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.) முதைச்சுவல் கலித்த மூரிச் செந்தினை ஓங்குவணர்ப் பெருங்குரல் உணீஇய பாங்கர்ப் பகுவாய்ப் பல்லிப் பாடோர்த்துக் குறுகும் புருவைப் பன்றி வருதிறம் நோக்கிக் 5. கடுங்கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்துநம் நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன் சென்றனன் கொல்லோ தானே குன்றத் திரும்புலி தொலைத்த பெருங்கை யானைக் 10. கவுள்மலி பிழிதரும் காமர் கடாஅம் இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ்செத் திருங்கல் விடரளை அசுணம் ஓர்க்கும் காம்பமல் இறும்பில் பாம்புபடத் துவன்றிக் கொடுவிரல் உளியம் கெண்டும் 15. வடுவாழ் புற்றின வழக்கரு நெறியே. - 1ஈழத்துப் பூதன்தேவனார். (சொ-ள்) 1-7. முதைச் சுவல் கலித்த - பழங்கொல்லையாகிய மேட்டு நிலத்தில் தழைத்த, மூரிச் செந்தினை - கொழுத்த செந்தினையின், ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய - உயர்ந்த வளைந்த பெரிய கதிரை உண்ண, பகுவாய்ப் பல்லி பாங்கர் பாடு ஓர்த்து - பிளந்த வாயினையுடைய பல்லி நற்பக்கத்தே செய்த ஒலியாய நிமித்தம் உணர்ந்து, குறுகும் - அணுக வரும், புருவைப் பன்றி வருதிறம் நோக்கி - இளைமை பொருந்திய பன்றியின் வரும் வகையினை நோக்கி, கடுங்கைக் கானவன் - வலிய கையினையுடைய தினைப்புனங் காப்போன், கழுது மிசைக் கொளீஇய - பரண்மீது கொளுத்தி வைத்த, நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி - நீண்ட சுடரின் ஒளியினை நோக்கி, வந்து நம் நடுங்கு துயர் களைந்த நன்னராளன் - வந்து நமது நடுக்கத்தைத் தரும் துயரினை ஒழித்த நன்மை யாளனாகிய நம் தலைவன்; 8-15. குன்றத்து இரும்புலி தொலைத்த பெருங்கை யானை - குன்றின்கண்ணுள்ள பெரிய புலியைக் கொன்ற பெரிய கையினையுடைய யானையின், கவுள் மலிவு இழிதரும் காமர் கடாஅம் - கன்னத்திலிருந்து பெருகி இழியும் அழகிய மதநீரில், இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப - கரிய சிறகினையுடைய வண்டின் கூட்டம் ஒலிக்க, யாழ் செத்து - அதனை யாழிசையெனக் கருதி, இருங்கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் - பெரிய மலையின் பிளப்பாய குகையிலுள்ள அசுணங்கள் உற்றுக் கேட்கும், காம்பு அமல் இறும்பில் - மூங்கில் நிறைந்த சிறு காட்டில், பாம்பு பட துவன்றி - பாம்பு இறந்துபட நெருங்கி, கொடு விரல் உளியம் கெண்டும் - வளைந்த விரலினையுடைய கரடி தோண்டும், வடு வாழ் புற்றின - வடுக்கள் பொருந்திய புற்றுக்களை யுடையனவாகிய, வழக்கு அருநெறி - வழங்குதற்கு அரியநெறியின்கண், சென்றனன் கொல் - சென்றான் கொல்லோ! (முடிபு) பன்றி வருதிற னோக்கிக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய விளக்கம் நோக்கி வந்து, நம் துயர்களைந்த நன்னராளன், வழக்கரு நெறி சென்றனன் கொல்லோ! (வி-ரை) பாடு - ஓசை. புருவை - இளமை. கழுது - பரண். புலியைக் கொன்ற யானையும், அசுணமும், பாம்பின் புற்றும், கரடியும் உடைய கொடு நெறியிற் சென்றானோ என்று வருந்தினள் என்க. இத் தன்மையான வழியிலே வந்து போகின்றாரோவென இரங்கிக் கூறக் கேட்டு வரைவானாவது பயனாக இங்ஙனம் கூறினாள். பன்றி பல்லி நிமித்தம் பார்த்துச் செல்லுதலுண்டென்னுங் கருத்து, "எய்ம்முள் ளன்ன பரூஉமயி ரெருத்திற், செய்ம்மேவற் சிறுகட் பன்றி, ஓங்குமலை வியன்புனம் படீஇயர் வீங்குபொறி, நூழை நுழையும் பொழுதிற் றாழாது, பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்துதன், கல்லளைப் பள்ளி வதியும் நாட"1 என நற்றிணையிலும் வந்திருத்தல் அறிந்து மகிழற்குரியது. (உ-ரை) தினை நுகர்தற்குப் பன்றி நிமித்தம் பார்த்து வருகையைச் செய்தேயும், கானவன் அது வருதிறமறிந்து சுடர் கொளுத்தினாற் போல, தாமும் பேணி வந்தாரே யாயினும் வரவு வெளிப்படும் என்றவாறு. 89. பாலை (மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.) தெறுகதிர் ஞாயிறு நடுநின்று காய்தலின் உறுபெயல் வறந்த ஓடுதேர் நனந்தலை உருத்தெழு குரல 1குடிஞைச் சேவல் புல்சாய் விடரகம் புலம்ப வரைய 5. கல்லெறி இசையின் இரட்டும் ஆங்கண் சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத் தூழுறு விளைநெற் றுதிரக் காழியர் கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப் பொழியக் களரி பரந்த கல்நெடு மருங்கின் 10. விளரூன் தின்ற வீங்குசிலை மறவர் மைபடு2 திண்டோள் மலிர வாட்டிப் பொறைமலி கழுதை நெடுநிறை தழீஇய திருந்துவாள் வயவர் அருந்தலை துமித்த படுபுலாக் கமழும் ஞாட்பில் துடியிகுத் 15. தருங்கலந் தெறுத்த பெரும்புகல் வலத்தார் வில்கெழு குறும்பிற் கோள்முறை பகுக்குங் கொல்லை யிரும்புனம் நெடிய என்னாது மெல்லென் சேவடி மெலிய ஏக வல்லுநள் கொல்லோ தானே தேம்பெய் 20. தளவுறு தீம்பால் அலைப்பவும் உண்ணாள் இடுமணற் 3பந்தருள் இயலும் நெடுமென் பணைத்தோள் மாஅ யோளே. -மதுரைக் காஞ்சிப் புலவர். (சொ-ள்) 19-22. தேம் பெய்து அளவுறு தீம்பால் - தேனைச் சொரிந்து கலந்த இனிய பாலை, அலைப்பவும் உண்ணாள் - அலைத் தூட்டவும் உண்ணாளாய், இடு மணல் பந்தருள் இயலும் - மணல் பரப்பிய பந்தருள் அங்கும் இங்கும் ஓடும், நெடுமென் பணைத்தோள் மாஅயோள் - நீண்ட மெல்லிய மூங்கில் போலும் தோளினையுடைய மாமை நிறத்தினளாகிய உன் மகள்; 1-2. தெறு கதிர் ஞாயிறு - யாவற்றையும் அழிக்கும் கதிர்களை யுடைய ஞாயிறு, நடு நின்று காய்தலின் - முதுவேனிற் காலத்து இடை நாட்களில் நின்று எரித்தலின், உறுபெயல் வறந்த - மிக்க மழையாலாய நீர் வறண்ட, ஓடு தேர் நனந்தலை - பேய்த்தேர் ஓடும் அகன்ற இடத்தினையும்; 3-5. உருத்து எழு குரல குடிஞைச் சேவல் - வெகுண்டு எழுகின்ற குரலினையுடைய பேராந்தைச் சேவல், புல் சாய் விடர் அகம் புலம்ப - புற்கள் ஒழிந்த வெடிப்பிடங்கள் தனித்திடச் சென்று, வரைய கல் எறி இசையின் இரட்டும் - மலையிலுள்ள கற்கள் உருண்டு விழும் போது எழும் ஓசைபோல மாறி ஒலிக்கும் (இடத்தினையும்); 6-9. சிறி யிலை வேலத்து - சிறிய இலையினையுடைய வேல மரத்தின், ஊழ் உறு விளை நெற்று உதிர - முறையாக முற்றி விளைந்த நெற்று உதிர, சிள்வீடு கறங்கும் - சிள்வீ டென்னும் வண்டு ஒலிக்கும், கவ்வைப் பரப்பின் - ஆரவாரம் பொருந்திய பரப்பினையுடையதும், காழியர் வெவ்வுவர்ப்பு ஒழிய - வண்ணார்கள் எடுக்கும் வெவ்விய உவர் மண் ஒழிய, களரி பரந்த - களர் மண் பரந்ததுமாகிய, கல்நெடு மருங்கின் - கற்களை இடையே கொண்ட நீண்ட இடத்தினையும் உடையதும்; 10-16. விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர் - கொழுப்பினை யுடைய ஊனைத்தின்ற விசைகொண்ட சிலையினராய மறவர்கள், மைபடு திண் தோள் மலிர - கருமை பொருந்திய வலிய தோள்கள் பூரிக்க, பொறை மலி கழுதை நெடுநிரை தழீஇய - பாரம்மிக்க கழுதைகளின் நீண்ட நிரைகளைப் பின்பற்றி வரும், திருந்து வாள்வயவர் வாட்டி அருந்தலை துமித்த - செப்பமுடைய வாளினைக் கொண்ட வீரர்களாய வணிகர்களை வாட்டி அவர்களது அரிய தலையைத் துணித்த, படு புலா கமழும் ஞாட்பில் - மிக்க புலவு நாறும் போர்க்களத்தே, துடி இகுத்து - துடியினைத் தாழக் கொட்டி, அருங்கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர் - அரிய அணிகலன் களைத் திறையாகப் பெற்றுக் குவித்த பெரிய போர் விருப்பினையுடைய வென்றியினர், வில்கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும் - விற்கள் பொருந்திய அரணிடத்தே அவரவர் கொள்ள வேண்டிய முறையே பிரித்துக் கொடுப்பதுமாகிய; 17-19. கொல்லை இரும்புனம் நெடிய என்னாது - கொல்லையினை யுடைய பெரிய காடுகளை நீண்ட தூரத்தன என்றெண்ணாது, மெல்லென் சேவடி மெலிய ஏக வல்லுநள் கொல்லோ - மெத்தென்றிருக்கும் சிவந்த அடி வருந்தச் செல்லற்கு வன்மையுடையள் ஆவளோ? (முடிபு) தீம்பால் அலைப்பவும் உண்ணாள் பந்தருள் இயலும் மா அயோள், கொல்லை யிரும் புனம் நெடிய வென்னாது சேவடி மெலிய ஏக வல்லுநள் கொல்லோ? ஓடுதேர் நனந்தலையினையும் கல்லெறி யிசையின் இரட்டும் இடத்தினையும் கன்னெடு மருங்கினையு முடைய கொல்லை இரும்புனம் எனவும், கோள் முறை பகுக்கும் கொல்லை இரும்புனம் எனவும் கூட்டுக. (வி-ரை) நடுநின்று காய்தலின் : நடு - முதுவேனிற் காலத்தின் நடுக்கூறாகிய நாட்கள். தேர் - பேய்த்தேர். உறுபெயல் `பரந்த' என்பது பாடமாயின், பெயல் (வறந்து) ஓடு தேராய்ப் பரவிய என்க. சிறிய இலை - சிறியிலை என விகாரப்பட்டது, வேலத்து : அத்து, சாரியை. கறங்கும் கவ்வை எனவும், வாட்டித் துணித்த எனவும் கூட்டுக. மலிர ஆட்டி எனப் பிரித்து, ஆட்டி எனற்கு அலைத்து என்றுரைத்தலு மாம். வாள் வயவர் என்றதனால் வாணிகச் சாத்தரும் வீரராயிருப்பர் என்பது பெற்றாம். அவருடன் போர் புரிந்து கொன்றார் என்பது தோன்றவே ஞாட்பில் என்றார். தேன் கலந்த பால் சுவை வீரியங்களாற் சிறக்கும் என்பது `பாலொடு தேன் கலந்தற்றே'1 என்பது முதலியவற்றான் அறியப்படும். தேன் கலந்த பாலைத் தானும் அச்சுறுத்தி ஊட்டவும் உண்ணாது ஓடுபவள் என அவளது செல்வச் சிறப்புக் கூறியவாறு. செல்வச் சிறாரும் சிறுமியரும் உணவுண்ண மறுக்குங்கால், உண்பிக்கும் தாயர் அவர்கட்கு இனிய கதைகள் கூறியும் அச்சுறுத்தியும் உண்பித்தல் இயல்பு என்க. 90. நெய்தல் (பகற்குறி வந்து கண்ணுற்று நீங்குந் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு நின்று இற்செறிப் பறிவுறீஇயது.) மூத்தோ ரன்ன வெண்டலைப் புணரி இளையோ ராடும் வரிமனை சிதைக்கும் தளையவிழ் தாழைக் கானலம் பெருந்துறைச் சில்செவித் தாகிய புணர்ச்சி அலரெழ 5. இல்வயின் செறித்தமை அறியாய் பன்னாள் வருமுலை வருத்தா அம்பகட்டு மார்பில் தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்வயின் நீங்கு கென்றியான் யாங்ஙனம் மொழிகோ அருந்திறற் கடவுள் செல்லூர்க் குணாஅது 10. பெருங்கடல் முழக்கிற் றாகி யாணர் இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் 2கடுங்கண் கோசர் நியமம் ஆயினும் உறுமெனக் கொள்ளுநர் அல்லர் நறுநுதல் அரிவை பாசிழை விலையே. - மதுரை மருதனிள நாகனார். (சொ-ள்) 1-8. தலைவ-, மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி - முதியோரை ஒத்த வெள்ளிய தலையையுடைய கடல், இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும் - இளைய மகளிர் விளையாடும் வண்டல் மனையினை அழிக்கும், தளை அவிழ் தாழைக் கானல்அம் பெருந்துறை - கட்டவிழ்ந்த மடல்கள் பொருந்திய தாழைகளை யுடைய சோலை பொருந்திய பெரிய கடற்றுறைக்கண்ணே, சில் செவித்தாகிய புணர்ச்சி - சிலர் செவிப்பட்ட மாத்திரையாகிய கூட்டம், அலர்எழ - அலராகி எங்கும் பரவ, இல்வயின் செறித்தமை அறியாய் - தாய் தலைவியை இல்லிடத்தே செறித்தமையை அறியாயாகி, பல்நாள் - பலநாளும், அம் பகட்டு மார்பின் - நினது அழகிய பெருமையையுடைய மார்பினால், வருமுலை வருத்தா - வளரும் முலையினை யுடையாளை வருத்தி, தெருமரல் உள்ளமொடு வருந்தும் - கலங்கும் உள்ளத்தோடு வருந்தா நிற்கும், நின்வயின் - நின்னிடத்தே, நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ - இக் களவொழுக்கத் தினின்றும் நீங்குவாயாக என்று யான் எங்ஙனம் மொழிவேன்; 9-14. நறு நுதல் அரிவை பாசிழை விலை - (இவள் தந்தைமார்) நறிய நுதலினையுடைய அரிவையாய இவளது பசிய அணிகட்கு விலையாக, அருந் திறல் கடவுள் செல்லூர்க் குணாஅது - அரிய வலிகொண்ட தெய்வங்களையுடைய செல்லூரின் கீழ்ப்பாலினதாய், பெருங் கடல் முழக்கிற்றாகி - பெரிய கடல்போலும் ஆரவாரத்தினை யுடையதாகிய, இரும்பு இடம்படுத்த வடு உடை முகத்தர் - படைக்கலம் இடம்படச் செய்திட்ட வடுக்களையுடைய முகத்தினராய, கடுங்கட் கோசர் - அஞ்சாமையையுடைய கோசர்கள் (வாழும்), யாணர் நியமம் ஆயினும் - புது வருவாயையுடைய நியமம் என்னும் ஊரினைக் கொடுப்பினும், உறும் எனக் கொள்ளுநர் அல்லர் - அமையும் எனக் கொள்வார் அல்லர். (முடிபு) தலைவ! கானலம் பெருந்துறை சில் செவித்தாகிய புணர்ச்சி அலரெழ இற் செறித்தமை அறியாய், பன்னாள் இவளை வருத்தி வருந்தும் நின்வயின், (இக் களவொழுக்கம்) நீங்குக என்று யாங்ஙனம் மொழிகோ! அரிவை பாசிழை விலை கோசர் நியமமாயினும் உறுமெனக் கொள்ளுநர் அல்லர். (வி-ரை) `மூத்தோரன்ன சிதைக்கும்' என்றது புணரி உருவினால் முதியோரை யொத்தும் சிறியரின் செய்கை யுடைய தாயிற்றென நயம்படக் கூறியவாறு. வருமுலை, இரும்பு என்பன ஆகுபெயர். மார்பு காரணமாக வருந்துதலின் மார்பின் வருத்தா என்றாள். எம் வருத்த மறிந்து நீயே வரைதற்கு முயலுதல் முறைமை யென்பாள், யான் யாங்ஙனம் மொழிகோ என்றாள். ஆகி என்றதனை ஆகிய எனத் திரிக்க. யாணர் நியமம் எனக் கூட்டுக. தலைவன் தலைவியைப் பொன்னணிந்து வரைதல் வழக்காதலின் அரிவை பாசிழை விலை என்றாள். உறுமெனக் கொள்ளுநர் அல்லர் என்றமையால், பொருள் மிகக் கொடுக்க வேண்டுமெனத் தலைவியை அருமை பாராட்டிய வாறு. அன்றி, விலை நியமம் கொடுப்பினும் கொள்ளாராதலால் அவர்கள் அன்பிற்கும் உரியையாகுக என்றாள் எனலுமாம். (உ-றை) மூத்தோர் இளையோரை வருத்தாரன்றே, அது செய்யாது புணரி இளையோர் மனை சிதைத்தாற்போல, பெரிய அறிவுடைய நீர் சிறியேமாகிய எங்களை வருத்தாநின்றீர் என்றவாறு. (மே-ள்) `நாற்றமுந் தோற்றமும்'1 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள், `பொருள் மிகக் கொடுத்தல் வேண்டுமென்றது' என்றனர், நச். 91. பாலை (பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.) விளங்குபகல் உதவிய பல்கதிர் ஞாயிறு வளங்கெழு மாமலை பயங்கெடத் தெறுதலின் அருவி யான்ற பெருவரை மருங்கில் சூர்ச்சுனை துழைஇ நீர்ப்பயங் காணாது 5. பாசி தின்ற பைங்கண் யானை ஓய்பசிப் பிடியோ டொருதிறன் ஒடுங்க வேய்கண் ணுடைந்த வெயிலவிர் நனந்தலை அரும்பொருள் வேட்கையின் அகன்றன ராயினும் பெரும்பே ரன்பினர் தோழி இருங்கேழ் 10. இரலை சேக்கும் பரலுயர் பதுக்கைக் கடுங்கண் மழவர் களவுழ வெழுந்த நெடுங்கால் ஆசினி ஒடுங்காட் டும்பர் விசிபிணி முழவின் குட்டுவன் காப்பப் பசியென வறியாப் பணைபயில் இருக்கைத் 15. தடமருப் பெருமை தாமரை முனையின் முடமுதிர் பலவின் கொழுநிழல் வதியும் குடநாடு பெறினும் தவிரலர் மடமான் நோக்கிநின் மாணலம் மறந்தே. - மாமூலனார். (சொ-ள்) 1-9. தோழி-, விளங்கு பகல் உதவிய பல் கதிர் ஞாயிறு- உலகம் விளங்கற்குக் காரணமாகிய பகலினைத் தந்த பல கதிர் களையுடைய ஞாயிறு, வளம் கெழு மாமலை பயம் கெடத் தெறுதலின்- வளம் வாய்ந்த பெரிய மலையின் பயன் கெட்டொழியக் காய்தலின், அருவி ஆன்ற பெருவரை மருங்கின் - அருவி இல்லையான பெரிய பக்கமலையினிடத்து, சூர்ச்சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது, தெய்வத்தினையுடைய சுனையைத்துழாவி நீராகிய பயனைக் காணாது, பாசி தின்ற பைங்கண் யானை - பாசியினைத் தின்ற பசிய கண்ணினையுடைய ஆண் யானை, ஓய் பசிப் பிடியொடு ஒரு திறன் ஒடுங்க - அயர்வினைத் தரும் பசினையுடைய பெண் யானையினுடன் ஒரு பக்கத்தே ஒடுங்கிக் கிடக்க, வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை - மூங்கில்கள் கணுக்கள் பிளந்த வெயில் விளங்கும் அகன்ற பாலை நிலத்தே, அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும் - அரிய பொருள் விருப்பால் நம் தலைவர் நம்மைப் பிரிந்து சென்றா ராயினும், பெரும் பேரன்பினர் - மிகப் பெரிய அன்பினராகலின்; 9-18. இரு கேழ் இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கை - கரிய நிறமுடைய ஆண்மான்கள் தங்கும் பரலையுடைய உயர்ந்த கற்குவியலில், கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த - வன்கண்மையினை யுடைய மழவர்கள் களவாகிய உழவிற்கு எழும் இடமாகிய, நெடுங்கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் - நீண்ட அடியை யுடைய ஈரப்பலா மரங்களையுடைய ஒடுங்காடு என்னும் ஊர்க்கு அப்பால், விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப - இறுகப் பிணித்த முழவினை யுடைய குட்டுவன் என்பான் புரத்தலால், பசி என அறியா பணை பயில் இருக்கை - பசி எனலை அறியாத மருதவளம் மிக்க ஊர்களை யுடைய, தட மருப்பு எருமை தாமரை முனையின் - வளைந்த கொம்பினையுடைய எருமை (மேய்ந்த) தாமரையை வெறுக்கு மாயின், முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும் - வளைவு மிக்க பலாவினது கொழுவிய நிழற்கண்ணே தங்கும், குடநாடு பெறினும் - குடநாட்டினையே பெறுவராயினும், மடமான் நோக்கி - இளமை வாய்ந்த மான் போலும் பார்வையினையுடையாய், நின் மாண் நலம் மறந்து தவிரலர் - நினது மாண்புற்ற நலத்தினை மறந்து ஆங்குத் தங்குவாரல்லர். (முடிபு) தோழி! மானோக்கி! நம் தலைவர் வெயிலவிர் நனந்தலை அரும் பொருள் வேட்கையின் அகன்றனராயினும் பெரும் பேரன்பினராகலின் குடநாடு பெறினும் நின் மாணலம் மறந்து ஆங்குத் தவிரலர். (வி-ரை) மாரிக்கண் உண்ட நீரைக் கோடையில் உமிழும் இயல்பினதாகிய மலையின் பயன் கெடத் தெறும் என வேனிலின் வெம்மை மிகுதி கூறியவாறாயிற்று. ஆன்ற - இல்லையான; அகன்ற என்பதன் மரூஉ. சுனைக்கண் சூர் உறையும் என்பதனை, `சுனையுறையும், சூர்மகள் மாதோ என்னுமென் நெஞ்சே'1 என்பதனானும் அறிக. சூர், அச்சமுமாம். யானை பாசியைத் தின்றமை நீர்ப்பசை கருதி யென்க. ஒடு - ஒருவகை மரம் என்பதும், அதன்முன் வல்லெழுத்துவரின், மெலிமிகும் என்பதும், `உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே'2 `ஒடுமரக் கிளவி யுதிமர வியற்றே' என்பவற்றால் அறியப்படும். ஈண்டு ஒடு மரங்கள் சூழ்ந்தமையின் ஒடுங்காடு எனப்பட்ட தென்க. இருக்கையையுடைய குடநாடு என்க. எருமை தாமரை முனையின் பலவின் நிழலில் வதியும் என்றது; மருதத்திற்கும் குறிஞ்சிக்கும் அணிமை கூறியபடியாம். எருமை, தாமரை யென்னும் மருதக் கருப்பொருள்கள் பாலைக்கண் வந்தன; என்னை? `எந்நில மருங்கிற் பூவும் புள்ளும், அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும், வந்த நிலத்தின் பயத்த வாகும்'1 என்பவாகலின் என்க. 92. குறிஞ்சி (இரவுக்குறிச் சென்று தலைமகளைக் கண்ணுற்று நீங்குந் தலைமகனைப் பகற்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி வரைவுகடாயது.) நெடுமலை யடுக்கம் கண்கெட மின்னிப் படுமழை பொழிந்த பானாட் கங்குல் குஞ்சரம் நடுங்கத் தாக்கிக் கொடுவரிச் செங்கண் இரும்புலி குழுமுஞ் சாரல் 5. வாரல் வாழியர் ஐய நேரிறை நெடுமென் பணைத்தோள் இவளும் யானும் காவல் கண்ணினம் தினையே நாளை மந்தியும் அறியா மரம்பயில் இறும்பின் ஒண்செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண் 10. தண்பல் அருவித் தாழ்நீர் ஒருசிறை உருமுச்சிவந் தெறிந்த உரனழி பாம்பின் திருமணி விளக்கிற் பெறுகுவை இருண்மென் கூந்தல் ஏமுறு துயிலே. - மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார். (சொ-ள்) 1-5. ஐய-, வாழியர்-, நெடுமலை அடுக்கம் கண்கெட மின்னி - உயர்ந்த மலையின் பக்கங்களில் கண்ணொளி கெட மின்னி, படு மழை பொழிந்த பால்நாள் கங்குல் - மிக்க மழை சொரிந்த பாதி யிரவாகிய இருளில், குஞ்சரம் நடுங்கத் தாக்கி - யானையை நடுங்கும்படி தாக்கி, கொடுவரி செங்கண் இரும்புலி குழுமும் சாரல்- வளைந்த கோடுகளையும் சிவந்த கண்ணினையுமுடைய பெரிய புலி முழங்கும் மலைச்சாரலிலே, வாரல் - நீ வாராதிருப்பாயாக; 5-7. நேர் இறை நெடு மென் பணைத்தோள் இவளும் யானும் - மெல்லிய முன் கையினையும் நீண்ட மெல்லிய மூங்கிலை யொத்த தோளினையுமுடைய இத்தலைவியும் யானும், காவல் கண்ணினம் தினை - தினைப்புனங் காத்தலைக் கருதியுள்ளேம்; 7-13. நாளை - நாளைப் பகற்கண், மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின் - மந்திகளும் ஏறி அறியமாட்டாத மரங்கள் செறிந்த காட்டில், ஒண் செங்காந்தள் அவிழ்ந்த ஆங்கண் - ஒள்ளிய செங்காத்தள் மலர்ந்த அவ்விடத்தே, தண் பல் அருவி தாழ் நீர் ஒரு சிறை - பலவாய தண்ணிய அருவிகள் வீழும் சுனையின் ஒருபுறம், உருமு சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் திருமணி விளக்கில் - இடி சினந்து தாக்கலின் வலி யழிந்த பாம்பினது அழகிய தலைமணியாகிய விளக்கிலே, இருள் மெல் கூந்தல் ஏம் உறு துயில் - தலைவியின் இருண்ட மெல்லிய கூந்தலகத்து இன்பம் உறும் துயிலை, பெறு குவை - நீ அடைவாய். (முடிபு) ஐய! வாழியர்! மழை பொழிந்த பானாட்கங்குல் குஞ்சரம் தாக்கிப் புலி குழுமும் சாரல் வாரல்; இவளும் யானும் தினை காவல் கண்ணினம்; நாளை இறும்பில் காந்தள் அவிழ்ந்த ஆங்கண் தாழ் நீர் ஒரு சிறை பாம்பின் திருமணி விளக்கில் கூந்தல் ஏம்உறு துயில் பெறுகுவை. (வி-ரை) நாளை காவல் கண்ணினம் எனலுமாம். கோடு வாழ் குரங்கு எனப்படுவதும், மரமேறுந் தொழிலிற் சிறந்ததுமாகிய மந்தியும் ஏறி அறியாத என மரத்தின் உயர்ச்சி கூறியவாறு. உம்மை சிறப்பும்மை. `குரங்கறி வாரா மரம்பயி லிறும்பில்'1 எனப் பின்னர் இந்நூலினும், `மந்தியு மறியா மரம்பயி லொருசிறை,'2 `மந்தியு மறியா மரன்பயி லடுக்கத்து'3 எனப் பிறநூல்களிலும் வருதலும் காண்க. இனி மந்தி, என்பதற்கு ஞாயிறு எனப் பொருள் கொண்டு, பருதியின் கதிர் நுழையலாகாதவாறு மரங்கள் செறிந்த காடு என்னலுமாம். பகற்குறி நேர்ந்தாள்போற் கூறினும், காந்தள் அவிழ்ந்த ஆங்கண் அருவித் தாழ்நீர் ஒருசிறை என்றமையின், பூக்கொய்ய வருவாராலும் அருவியாட வருவாராலும் பகற்குறியும் அரிதென்பது புலப்படுத்தி வரைவு கடாயினா ளாயிற்று. 93. பாலை (வினைமுற்றி மீளலுறுந் தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) கேள்கே டூன்றவும் கிளைஞர் ஆரவும் கேளல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் ஆள்வினைக் கெதிரிய ஊக்கமொடு புகல்சிறந் தாரங் கண்ணி அடுபோர்ச் சோழர் 5. அறங்கெழு நல்லவை உறந்தை அன்ன பெறலரு நன்கலன் எய்தி நாடும் செயலருஞ் செய்வினை முற்றின மாயின் அரண்பல கடந்த முரண்கொள் தானை வாடா வேம்பின் வழுதி கூடல் 10. நாளங் காடி நாறும் நறுநுதல் நீளிருங் கூந்தல் மாஅ யோளொடு வரைகுயின் றன்ன வான்தோய் நெடுநகர் நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை நிவந்த பள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து 15. நலங்கேழ் ஆகம் பூண்வடுப் பொறிப்ப முயங்குகஞ் சென்மோ நெஞ்சே வரிநுதல் வயந்திகழ் பிமிழ்தரும் வாய்புகு கடாத்து மீளி மொய்ம்பொடு நிலனெறியாக் குறுகி ஆள்கோட் பிழையா அஞ்சுவரு தடக்கைக் 20. கடும்பகட் டியானை நெடுந்தேர்க் கோதை திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத் தெண்ணீர் உயர்கரைக் கவைஇய தண்ணான் பொருநை மணலினும் பலவே. - கணக்காயனார் மகனார் நக்கீரனார். (சொ-ள்) 16. நெஞ்சே-; 1-3. கேள் கேடு ஊன்றவும் - உறவினரைக் கேட்டினை நீக்கித் தாங்கவும், கிளைஞர் ஆரவும் - கிளைகளாயுள்ளார் உண்ணவும், கேள்அல் கேளிர் கெழிஇயினர் ஒழுகவும் - நொதுமலாளர் கெழுதகையினராகி ஒழுகவும் வேண்டி, ஆள்வினைக்கு எதிரிய ஊக் கமொடு - பொருளீட்டும் முயற்சிக்கு ஏற்றதாய ஊக்கங்கொண்டு, புகல் சிறந்து - விருப்பம் மிக்கு; 4-7. ஆரம் கண்ணி அடுபோர்ச் சோழர் - ஆத்திமாலை யணிந்த அடும் போரினையுடைய சோழரது, அறம்கெழு நல்லவை உறந்தை அன்ன - அறம் பொருந்திய நல்ல அவையினையுடைய உறையூரை யொத்த, பெறல் அரும் நன்கலன் எய்தி - பெறுதற்கு அரிய நல்ல அணிகலன்களை எய்தி, நாடும் செயல் அரும் செய்வினை முற்றினம் ஆயின் - யாவரும் விரும்பும் செய்தற்கரிய பொருள்செய் வினையினை நாம் முடித்தனம் ஆதலின்; 8-11. அரண் பல கடந்த முரண் கொள் தானை - பகைவர் அரண்கள் பலவற்றை வென்ற மாறுபாடு கொண்ட தானையினையுடைய, வாடா வேம்பின் வழுதி - வாடாத வேப்ப மாலையினைத் தரித்த பாண்டியனது, கூடல் நாள் அங்காடி நாறும் - மதுரையின் காலைக் கடை வீதியென மணக்கும், நறுநுதல் நீள்இருள் கூந்தல் மாஅயோளொடு - நறிய நெற்றியினையும் நீண்ட கரிய கூந்தலினையு முடைய மாமை நிறத்தாளாய நம் தலைவியுடன்; 12-15. வரை குயின்றன்ன வான்தோய் நெடுநகர் - மலையைக் குடைந் தியற்றியதை யொத்த வானை அளாவிய நீண்ட மனையின் கண்ணே, நுரை முகந்தன்ன மென்பூஞ் சேக்கை - நுரையை முகந்து வைத்தாற் போன்ற மெல்லிய பூக்களாலாய படுக்கையையுடைய, நிவந்த பள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து - ஓங்கிய கட்டிலினிடத்து நெடிய விளக்கின் ஒளியிலே, நலம்கேழ் ஆகம் பூண் வடு பொறிப்ப - நன்மை பொருந்திய நம் மார்பிலே தலைவியின் மார்பகத்துப் பூண்கள் வடுக்களைச் செய்ய; 16-23. வரிநுதல் - வரி பொருந்திய நெற்றியினையும், வயம் திகழ்பு இமிழ்தரும் - வலி விளங்குதலின் முழங்கும், வாய் புகு கடாத்து - வாயிற் புகும் மதத்தினையும், மீளி மொய்ம்பொடு - கூற்றுவனை யொத்த வலியுடன், நிலன் எறியா - நிலத்தின்கண்ணே சுருட்டி எறிந்து, குறுகி ஆள் கோள் பிழையா அஞ்சுவரு தடக்கை - நெருங்கி வந்து ஆட்களைக் கொல்லுதலைத் தப்பாத அச்சம் வருகின்ற பெரிய கையினையும் உடைய, கடும் பகட்டு யானை - கடிய பெரிய யானைப் படையினையும், நெடுந் தேர்க் கோதை - நெடிய தேர்ப்படையினையுமுடைய சேரனது, திருமா வியன் நகர்க் கருவூர் முன்றுறை - செல்வம் மிக்க சிறந்த அகன்ற நகராகிய கருவூரின் துறைமுன், தெள் நீர் - தெளிந்த நீரினையுடைய, தண் ஆன் பொருநை- தண்ணிய ஆன் பொருநை என்னும் ஆற்றின், உயர்கரை குவைஇய - உயர்ந்த கரைக் கண் குவிந்துள, மணலினும் பல - மணலினும் பலவாக; 16. முயங்குகம் சென்மோ - நாம் முயங்குவோம் வருவாயாக. (முடிபு) நெஞ்சே! ஊன்றவும், ஆரவும், ஒழுகவும் வேண்டி, ஊக்கமொடு புகல் சிறந்து, உறந்தை யன்ன நன்கலன் எய்திச் செய்வினை முற்றினம் ஆதலால், மாயோளொடு மென்பூஞ் சேக்கை நிவந்த பள்ளியில், சுடர் விளக்கத்து, ஆன் பொருநை மணலினும் பல ஆகம் வடுப் பொறிப்ப முயங்குகம் சென்மோ. (வி-ரை) கேள் - கேளிர் என்னும் பொருட்டு. ஊன்றல் - தாங்கல். வறுமையுற்ற கிளைஞர் ஆரவும் என்க. கேள்அல் கேளிர் - ஏதிலார். அவர் அன்புடையராய் ஒழுகவும் என்றபடி. `ஆரும் வெதிரும் சாரும் பீரும், மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும்'1 என்னும் சூத்திரத்து, மெய்பெற என்ற இலேசால் `ஆரங்கண்ணி' என அம்முப் பெற்றது. உறையூர் அவையில் அறம் நிலை பெற்ற தென்பதனை, `மறங்கெழு சோழர் உறந்தை யவையத், தறங்கெட வறியா தாங்கு'2 `மறங்கெழு சோழர் உறந்தை அவையத், தறம்நின்று நிலையிற் றாகலின்'1 என வருவனவற்றானும் அறிக. முற்றி எய்தினம் என்று மாறுதலுமாம். `எய்திய' எனப் பாடங்கொண்டு, எய்துதற்கென்று உரைப்பாரு முளர். ஆயின் - ஆதலால். மீளி - கூற்றுவன் ஆதலை, `மீளி யுடம்பிடித் தடக்கை'2 என்பதற்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையான் உணர்க. மீளி - மறமுமாம். மதங் கொண்ட யானை கையை நிலத்தின்கண் எறிந்து வரும் என்பது, `இரும்பிணர்த் தடக்கை யிருநிலம் சேர்த்திச், சினந்திகழ் கடாஅஞ் செருக்கி மரங்கொல்பு, மையல் வேழம் தடங்கலின் எதிர்தர'3 என்பதனால் அறியப்படும். கருவூர் மேற்கடற் பக்கத்தது என்பாரும், சோழ நாட்டின் எல்லையை அடுத்துள்ள கொங்கு நாட்டுக் கருவூரே என்பாரும் என, இருதிறப்படுவர் வரலாற்று ஆராய்ச்சியாளர். இச் செய்யுளுள் சோழர், பாண்டியர், சேரர் என்னும் மூவேந்தரும், அவர் தலைநகராகிய உறந்தை, கூடல், கருவூர் என்பனவும் வந்துள்ளமை அறியற்பாற்று. (மே-ள்) `மேவிய சிறப்பின்'4 என்னுஞ் சூத்திரத்து, `கேள்கே டூன்றவும்...... புகல் சிறந்து' என்பது, `வணிகர் பொருள் வயிற் பிரிந்தவாறு' என்றும், `புறத்திணை மருங்கின்'5 என்னுஞ் சூத்திரத்து, இப்பாட்டு, `புறத்திணைத் தலைவர் பலராய் அகத்திணைக்கண் அளவி வந்தது' என்றும், `கரணத்தினமைந்து'6 என்னுஞ் சூத்திரத்து `கேள்கே டூன்றவும் கிளைஞராரவும்' என்பது, `அவ்வழிப் பெருகிய சிறப்பு' என்றும் கூறுவர், நச். `பிறப்பே குடிமை' என்னும் சூத்திரத்து, `கேள்கே டூன்றவும் ...... புகல் சிறந்து'7 என்புழி இன்ன காரணத்திற் பிரிந்து போந்து வினை முடித்தனமாயினும், அவளை `முயங்குகம் சென்மோ' என்றமையின் தன் ஆள்வினைக்குத் தக்க பெண்மையான் அவள் ஆற்றியிருந்தாள் என்பதூஉம் கருதிய கருத்தினாற் காமக் குறிப்புப் பிறந்தமையின், அஃது ஆண்மையாயிற்று எனவும், `மறை வெளிப்படுத்தலும்,'8 என்னுஞ் சூத்திரத்து, `நலங்கே ழாகம்.... சென்மோ நெஞ்சே' என்பது மலிதல் எனவும் கூறுவர், பேரா. 94. முல்லை (வினைமுற்றி மீளுந் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. தலைமகன் பாங்கற்குச் சொற்றதூஉ மாம்.) தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய குறையிலை முசுண்டை வெண்பூக் குழைய 9வானெனப் பூத்த பானாட் கங்குல் மறித்துரூஉத் தொகுத்த பறிப்புற இடையன் 5. தண்கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ வண்டுபடத் தொடுத்த நீர்வார் கண்ணியன் ஐதுபடு கொள்ளி அங்கை காயக் குறுநரி யுளம்புங் கூரிருள் நெடுவிளி சிறுகட் பன்றிப் பெருநிரை கடிய 10. முதைப்புனங் காவலர் நினைந்திருந் தூதும் கருங்கோட் டோசையொ டொருங்குவந் திசைக்கும் வன்புலக் காட்டுநாட் டதுவே அன்புகலந் தார்வஞ் சிறந்த சாயல் இரும்பல் கூந்தல் திருந்திழை யூரே. - நன்பலூர்ச் சிறுமேதாவியார். (சொ-ள்) 12-14. அன்பு கலந்து ஆர்வம் சிறந்த - அன்பால் உள்ளம் கலந்து விருப்பம் மிக்க, சாயல் - மென்மைத் தன்மையையும், இரும் பல் கூந்தல் - கரிய பலவாகிய கூந்தலினையும் உடைய, திருந்து இழை - திருந்திய இழையினையுடைய தலைவியினது, ஊர் - ஊரானது; 1-8. தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய குவைஇலை முசுண்டை வெண்பூ - தேன் அடை பொருந்திய உச்சிமலையின் பக்கலிற் செறிந்த குவிந்த இலைகளையுடைய முசுண்டையின் வெள்ளிய பூக்கள், வான் எனக் குழையப் பூத்த பால் நாள் கங்குல் - வானமானது மீனைப்பூத்தது போலக் குழைந்திடப் பூத்த நடுஇரவின் இருளிலே, மறித் துரூஉ தொகுத்த பறிப்புற இடையன் - ஆட்டுக் குட்டிகளைச் சேரத் தொகுத்து வைத்துள ஓலைப்பாயை முதுகிற் கொண்ட இடையன், தண்கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ - தண்ணிய கமழும் முல்லைப் பூவினைத் தோன்றிப் பூவுடன் இணைத்து, வண்டுபடத் தொடுத்த நீர்வார் கண்ணியன் - வண்டுகள் மொய்க்கத் தொடுத்த நீர் ஒழுகுகின்ற கண்ணியனாய், ஐது படு கொள்ளி அங்கை காய - மென்மை வாய்ந்த கொள்ளியின் தீயில் அகங்கை காய்ந்திட, கூர் இருள் குறு நரி உளம்பும் நெடுவிளி - மிக்க இருளில் குறுநரி களை அலைத்தோட்டும் நீண்ட ஒலி; 9-12. சிறு கண் பன்றிப் பெருநிரை கடிய - சிறிய கண்ணினை யுடைய பன்றியின் பெருங்கூட்டத்தை ஓட்டற்கு, முதைப்புனங் காவலர் - முற்றிய தினைப்புனம் காத்திருப்போர், நினைத்திருந்து ஊதும் கருங்கோட்டு ஓசையோடு - அவை வருங்காலத்தை எண்ணியிருந்து ஊதும் பெரிய கொம்பின் ஓசையொடு, ஒருங்குவந் திசைக்கும் - ஒரு சேர வந்தொலிக்கும், வன்புலக் காட்டு நாட்டதுவே - வன்புலமாகிய காட்டின் அகத்ததாகிய நாட்டினிடத்ததாகும்;(பாக! விரைந்து தேரினைச் செலுத்துவாயாக.) (முடிபு) (பாக!) திருந்திழையூர், கங்குலில் இடையன் குறு நரி உளம்பும் நெடுவிளி புனங் காவலர் ஊதும் கோட்டோசை யொடு ஒருங்குவந் திசைக்கும் காட்டு நாட்டதுவே. (ஆகலின் தேரை விரைந்து செலுத்துவாயாக.) (வி-ரை) தேம் - தேன்; தேனிறால். குழைதல் - தழைத்தல். வான் எனப் பூத்த - வான் மீனைப் பூத்தாற்போலத் தோன்றுமாறு பூத்த என்று விரித்துரைக்க. துரூஉ - செம்மறியாடு. மறி - குட்டி. பறி - மழையைத் தடுப்பதற்கு ஒலைப்பாயால் வளைத்து இயற்றிய குடலை. தொகுத்த இடையன் என இயையும். கொள்ளியில் கையைக் காய்த்திக் கொண்டு நரியை ஓட்டுவன் என்க. குறு நரி - ஆட்டு மறியை வௌவுதற்கு வருவது. குறு நரி, நெடு விளி, சிறு கண், பெருநிரை என்பன முரண் என்னும் அணி. வன்புலம் - குறிஞ்சியும் முல்லையும். அன்பு - ஒருவரை யொருவர் இன்றியமையாமை. ஆர்வம் - விருப்பம். தலைமகன் பாங்கற்குச் சொற்றது என்பது துறையாயின் களவுக் காலத்துப் பாங்கற் கூட்டத்துத் தலைவன் பாங்கற்குத் தலைவியின் இடங் கூறுதலாம். இது முல்லையிற் களவு நிகழ்ந்த தாதலின், திணை மயக்கமாம், `திணைமயக் குறுதலும் கடிநிலை யிலவே'1 என்பவாகலின். (மே-ள்) `புணர்தல் பிரிதல்'2 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள், `இருத்தல் நிமித்தமாம்; இக்காலம் வருந்துணையும் ஆற்றினாள் எனத் தான் வருந்துதலின்' என்றார், நச். 95. பாலை (போக்குடன் பட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) பைபயப் 3பசந்தன்று நுதலுஞ் சாஅய் ஐதா கின்றென் தளிர்புரை மேனியும் பலரும் அறியத் திகழ்தரும் அவலமும் உயிர்கொடு கழியின் அல்லதை நினையின் 5. எவனோ வாழி தோழி பொரிகால் பொகுட்டரை யிருப்பைக் குவிகுலைக் கழன்ற ஆலி யொப்பின் தூம்புடைத் திரள்வீ ஆறுசெல் வம்பலர் நீளிடை யழுங்க ஈனல் எண்கின் இருங்கிளை கவரும் 10. 4சுரம்பல கடந்தோர்க் கிரங்குப என்னார் கௌவை மேவல ராகி இவ்வூர் நிரையப் பெண்டிர் இன்னா கூறுப புரைய அல்லஎன் மகட்கெனப் பரைஇ நம்முணர்ந் தாறிய கொள்கை 15. அன்னை முன்னர்யாம் என்னிதற் படலே. - ஓரோடோகத்துக் கந்தரத்தனார். (சொ-ள்) 1-5. தோழி வாழி-, பை பயப் பசந்தன்று நுதலும் - என் நெற்றியும் மெல்ல மெல்லப் பசந்தது, சாஅய் ஐது ஆகின்று என் தளிர் புரை மேனியும் - தளிரை யொத்த என் மேனியும் நுணுகி மெல்லிதாகின்றது, பலரும் அறியத் திகழ்தரும் அவலமும் - என் துயரமும் பலரும் அறியும்படி விளங்கித் தோன்றும், உயிர்கொடு கழியின் அல்லதை - இவை என் உயிரைக் கொண்டு போவதல்லது, நினையின் எவனோ - ஆயுமிடத்து வேறு என் செய்வன; 5-10. பொரி கால் பொகுட்டு அரை இருப்பை - பொரிந்த அடியினையும் கொட்டைகளையுடைய அரையினையுமுடைய இருப்பையினது, குவி குலைக் கழன்ற - குவிந்த குலையினின்றும் கழன்ற, ஆலி ஒப்பின் தூம்பு உடைத் திரள் வீ - பனிக்கட்டி போலும் உட்டுளை யினையுடைய திரண்ட பூக்களை, ஆறு செல் வம்பலர் நீள்இடை அழுங்க - வழிச் செல்லும் புதியர் அந்நீண்ட நெறியிடத்தே அஞ்சிப் போக்கினைத் தவிர, ஈனல் எண்கின் இருங்கிளை கவரும் - ஈன்ற கரடி களின் பெருங் கூட்டம் கவர்ந்துண்ணுகின்ற, சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார் - பல சுரங்களையும் கடந்து சென்ற தம் தலைவர் பொருட்டுத் தலைவியர் இரங்குவராதல் இயல்பென்று நினையாராய்; 11-12. கௌவை மேவலர் ஆகி - அலர் தூற்றலே விரும்புவாராகி, இவ்வூர் நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ - இவ்வூரிலுள்ள இழிந்த இயல்புடைய பெண்டிர் கூறுவனவாய இன்னாத சொற்கள்; 13-15. புரைய அல்ல என் மகட்கு என - என் மகளுக்குப் பொருந்துவன அல்ல என்று, பரைஇ - தெய்வத்தைப் பரவி, நம் உணர்ந்து - நமது களவொழுக்கத்தினை உணர்ந்து வைத்து, ஆறிய கொள்கை அன்னை முன்னர் - அமைதியுற்றிருக்கும் கொள்கை யினையுடைய நம் அன்னை முன், யாம் என்இதற் படல் - யாம் இக் களவொழுக்கத்திற் பட்டு ஒழுகல் எங்ஙனம் இயலும்? (முடிபு) தோழி! வாழி! என் நுதலும் பசந்தன்று; மேனியும் ஐதாகின்று; அவலமும் திகழ்தரும்; (இவை) உயிர்கொடு கழியின் அல்லதை நினையின் எவனோ? சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார், கௌவை மேவலராகி நிரையப் பெண்டிர் இன்னா கூறுப, என் மகட்குப் புரைய அல்லவென, பரைஇ ஆறிய கொள்கை அன்னை முன்னர் யாம் இதற்படல் என்? (வி-ரை) பசந்த என்னும் பாடத்திற்கு, பசந்த நுதலும் ஐதாகின்ற மேனியும் திகழ்தரும் அவலமும் எனப் பெயரெச்சத் தொடர்களாகக் கொள்க. இதற்கு ஆகின்று என்பது விகாரம். அல்லதை - அல்லது : ஈறு திரிந்தது. பசப்பு முதலியன உயிர் கொண்டே கழியும் என்பது கருத்து. வீயை எண்கின் கிளை கவரும் என்க. ஈன்ற கரடிகள் சீறும் இயல்பினவாகலின் வம்பலர் அழுங்குவர் என்க. புரைய அல்ல - உயர்வாவன அல்ல எனலுமாம். பரைஇ - தெய்வத்தைப் பராவி. அன்னை, தன் மகள் பழியொடு படாத இன்ப வாழ்வு பெறல் வேண்டுமெனத் தெய்வத்தைப் பரவினள். `நமது ஆற்றா நிலைமை யுணர்ந்து நம்மைச் சினவாது அமைந்துள்ள அன்னையின் முன்பு நாம் மேலும் இவ்வாறு ஒழுகுதல் பொருந்தாது என்றாள்.' (மே-ள்) `எஞ்சி யோர்க்கும் எஞ்சுத லிலவே'1 என்னுஞ் சூத்திரத்து, இச்செய்யுளை எடுத்துக் காட்டி, இது போக்குடன் பட்டமை தலைவி தோழிக் குரைத்தது என்றனர், நச். 96. மருதம் (தோழி வாயின் மறுத்தது) நறவுண் மண்டை நுடக்கலின் இறவுகலித்துப் பூட்டறு வில்லில் கூட்டுமுதல் தெறிக்கும் பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின் அரவாய் அன்ன அம்முள் நெடுங்கொடி 5. அருவி ஆம்பல் அகலடை துடக்கி அசைவரல் வாடை தூக்கலின் ஊதுலை விசைவாங்கு தோலின் வீங்குபு ஞெகிழுங் கழனியம் படப்பைக் காஞ்சி யூர ஒண்தொடி யாயத் துள்ளுநீ நயந்து 10. கொண்டனை யென்பவோர் குறுமகள் அதுவே செம்பொற் சிலம்பின் செறிந்த குறங்கின் அங்கலுழ் மாமை2 யஃதை தந்தை அண்ணல் யானை அடுபோர்ச் சோழர் வெண்ணெல் வைப்பிற் பருவூர்ப் பறந்தலை 15. இருபெரு வேந்தரும் 3பொருதுகளத் தொழிய ஒளிறுவாள் நல்லமர்க் கடந்த ஞான்றைக் களிறுகவர் கம்பலை போல அலரா கின்றது பலர்வாய்ப் பட்டே. -மருதம் பாடிய இளங்கடுங்கோ. (சொ-ள்) 1-8. நறவு உண் மண்டை நுடக்கலின் இறவு கலித்து - கள்ளுண்ட கலம் கழுவப் படுதலின் (அந்நீரையுண்ட) இறா மீன் செருக்கி, பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும் - பூட்டிய நாண் அற்ற வில் தெறிப்பதுபோல நெற் கூடுகளின் அடிகளிற் றுள்ளி விழும் இடமாகிய, பழனப் பொய்கை அடைகரை - மருதநிலத்துப் பொய்கையின் அடைகரையிலுள்ள, பிரம்பின் அர வாய் அன்ன அம்முள் நெடுங் கொடி - பிரம்பினது அரத்தின் வாய் போன்ற அழகிய முட்களையுடைய நீண்ட கொடி, அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி - நீர்க்குறை வற்ற ஆம்பலது அகன்ற இலையினைச் சுற்றிட (அவ்விலையை), அசை வரல் வாடை தூக்கலின் - அசைந்துவரும் வாடைக்காற்று (விட்டு விட்டுப் புகுந்து) அசைத்தலின், ஊது உலை விசை வாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும் - (அவ்விலை) ஊதப்பெறும் கொல்லன் உலைக்களத்து விசைத்து இழுத்துவிடும் துருத்தியைப் போலப் புடைத்துச் சுருங்கும், கழனி அம் படப்பைக் காஞ்சி ஊர - வயல்களையும் தோட்டங்களையு முடைய காஞ்சி மரங்கள் மிக்க ஊரையுடைய தலைவனே!, 9-10. ஒண்தொடி ஆயத்துள்ளும் - ஒள்ளிய தொடியினையுடைய பரத்தையர் கூட்டத்தினுள்ளும், நீ ஓர் குறுமகள் நயந்து கொண்டனை என்ப - நீ ஒரு இளைய மகளை விரும்பி மணந்தனை என்று ஊரார் கூறுவாராயினர்; 10-18. அதுவே - அக் கூற்று, செம்பொன் சிலம்பின் - சிவந்த பொன்னாலாய சிலம்பினையும், செறிந்த குறங்கின் - நெருங்கிய துடையினையும், அம் கலுழ் மாமை - அழகு ஒழுகும் மாமை நிறத்தினையும் உடைய, அஃதை தந்தை - அஃதை என்பாட்குத் தந்தையராகிய, அண்ணல் யானை அடுபோர்ச் சோழர் - பெருமை தங்கிய யானையையும் வெல்லும் போரினையுமுடைய சோழர், வெண்ணெல் வைப்பில் பருவூர்ப் பறந்தலை - வெண்ணெல் விளையும் இடங்களை யுடைய பருவூர்ப் போர்க் களத்தே, இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய - தம்மொடு பொருத ஏனைச் சேரர் பாண்டியராய இருபெரு வேந்தர்களும் போர் செய்து களத்தினிடத்தே பட்டொழிய, ஒளிறு வாள் நல் அமர் கடந்த ஞான்றை - விளங்கும் வாளினாற் செய்யும் நல்ல போரினை வென்ற பொழுது, களிறு கவர் கம்பலை போல - அப் பகை வேந்தர்களது களிறுகளைக் கவர்ந்து கொண்டகாலை எழுந்த ஆரவாரம் போல, பலர் வாய்ப்பட்டு அலர் ஆகின்றது - பலர் வாயிலும் பொருந்தி யெழுந்து அலர் ஆகா நின்றது. (முடிபு) ஊர! நீ ஓர் குறுமகள் கொண்டனை யென்ப. அது, சோழர் பருவூர்ப் பறந்தலையில் இருபெரு வேந்தரும் பொருது ஒழிய, வாளமர்க் கடந்த ஞான்றைக் களிறு கவர் கம்பலை போல அலர் ஆகின்றது. (வி-ரை) மண்டை இக்காலத்து மொந்தை என வழங்கப்படு கின்றது. நுடக்கல் - கழுவல். அந்நீரை யுண்ட என வருவித்துரைக்க. நறவு கலந்த நீராதலின் உண்டு களிப்பதாயிற்று. கூட்டு முதற் றெறிக்கும் என்றது வளமிகுதி கூறியவாறாம். தெறிக்கும் ஞெகிழும் என்னும் பெயரெச்சங்கள் இடப்பெயர் கொண்டன. பிரம்பின் நெடுங்கொடி என்க. கவர் கம்பலை பெயரெச்சம் காரியப் பெயர் கொண்டது. கின்று: இடைநிலை; பிற்கால வழக்காகலின், அலரா கின்று என்பது பாடமாதல் வேண்டும்; அன்றி, அது பகுதிப் பொருள் விகுதி எனலுமாம். (உ-றை) `நறவுண் மண்டை...... காஞ்சியூர' என்றது, பரத்தையர் சேரியைச் சூழ்ந்து திரியும் பாணன் காமஞ் சாலா இளமையோ ளாகிய பரத்தையைத் தலைமகனோடு கூட்டத் தலைமகன் அவளை முயங்கிய விடத்து அவள் களிப்புற்று, நீங்கியவழி மெலிகின்றாள் என்றபடி. இதன்கண் பொய்கையைப் பரத்தையர் சேரியாகவும், முள்ளுடைப் பிரம்பின் கொடியை அதனைச் சூழ்ந்து திரியும் நெஞ்சு வலிய பாணனாகவும், ஆம்பல் இலையைக் காமஞ்சாலாக் குறுமகளாகவும், அதனைக் கொடி துடக்கியதனைப் பாணன் அவளைத் தலைமகனோடு கூட்டியதாகவும், வாடையைத் தலை மகனாகவும், அது தூக்குந்தோறும் அவ்விலை வீங்கித் தூக்காதவழி நெகிழ்ந்ததனை, தலைமகன் அவளை முயங்கியவழி அவள் களிப் புற்று, நீங்கிய வழி மெலிந்த தன்மையாகவும் கொள்க. மற்றும், இதில் `நறவுண் மண்டை...... கூட்டு முதற் றெறிக்கும்' என்றது நறவு கலந்த இழிந்த நீரையுண்ட இறால் அச் செருக்கினால் கூட்டுமுதற் றெறித்தது போலப் பரத்தையரின் இழிந்த இன்பத்தை நுகர்ந்த தலைவனும் செருக்குற்றுத் தனக்குப் புறம்பாகிய வேறிடத்தே தங்கிக் கிடக்கின்ற தன்மையாகவுங் கொள்க. (மே-ள்) `புல்லுதல் மயக்கும்'1 என்னுஞ் சூத்திரத்து, `ஒண்டொடி யாயத் துள்ளுநீ நயந்து, கொண்டனை யென்பவோர் குறுமகள் எனக் காமஞ் சாலா இளமையோளைக் கூறிற்று' என்றனர், நச். `தெய்வ மஞ்சல்'2 என்னுஞ் சூத்திரத்து, `களிறு கவர் கம்பலை போல, அலராகின்றது பலர் வாய்ப் பட்டே' என்பது புறஞ்சொல் மாணாக் கிளவிக்கு உதாரணமாகும் என்றனர், பேரா. `ஒருமை சுட்டிய'3 என்னுஞ் சூத்திரத்து, `பன்மைக் காகு மிடனுமா ருண்டே' என்பது, ஒருமைச் சொல் பன்மைச் சொல்லோடு தொடர் தற்குப் பொருந்து மிடமு முண்டென்பதூஉம் பட நின்றமையால், `அஃதை தந்தை ...... சோழர்' என ஒருமைச் சொல் பன்மைச் சொல்லோடு தொடர்தலுங் கண்டுகொள்க. ஈண்டு ஒருமைச் சொல் பன்மைச் சொல்லோடு மயங்குத லுடைமையான், `ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி' என்புழி அடங்காமை யறிக என்றனர் சேனாவரையர். அச் சூத்திரத்து, `அஃதை தந்தை........ சோழர்' என்புழிச் சோழரெல்லாரும் அஃதைக்குத் தந்தையாம் முறையராய் நிற்றலின், `தந்தை' என்னும் ஒருமை, சோழர் என்னும் பன்மையோடு தனித்தனி சென்று கூடுதலின் வழுவின்றேனும் ஈற்றுப் பன்மைபற்றி வழுவமைத்தார் என்றனர், நச். 97. பாலை (வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை வறனுறல் அங்கோ டுதிர வலங்கடந்து புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை இரவுக்குறும் பலற நூறி நிரைபகுத் 5. திருங்கல் முடக்கர்த் திற்றி கெண்டும் கொலைவில் ஆடவர் போலப் 1பலவுடன் பெருந்தலை யெருவையொடு பருந்துவந் திருக்கும் அருஞ்சுரம் இறந்த கொடியோர்க் கல்கலும் இருங்கழை இறும்பின் ஆய்ந்துகொண் டறுத்த 10. நுணங்குகண் சிறுகோல் வணங்கிறை மகளிரொ டகவுநர்ப் புரந்த அன்பின் கழல்தொடி நறவுமகிழ் இருக்கை நன்னன் வேண்மான் வயலை வேலி வியலூர் அன்னநின் அலர்முலை யாகம் புலம்பப் பலநினைந் 15. தாழேல் என்றி தோழி யாழவென் கண்பனி நிறுத்தல் எளிதோ குரவுமலர்ந் தற்சிர நீங்கிய 2அரும்பத வேனில் அறலவிர் வார்மணல் அகலியாற் றடைகரைத் துறையணி 3மருது தொகல்கொள வோங்கிக் 20. கலிழ்தளிர் அணிந்த இருஞ்சினை மாஅத் திணர்ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப் புகைபுரை அம்மஞ் சூர நுகர்குயில் அகவும் குரல்கேட் போர்க்கே. - 4மாமூலனார். (சொ-ள்) 15. தோழி-; 1-3. கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை - கள்ளிக் காட்டிலேயுள்ள புள்ளிகளாய பொறிகளையுடைய கலைமானை, வறன் உறல் அம் கோடு உதிர வலங் கடந்து - அதன் வறட்சியுற்ற அழகிய கொம்பு சிதர்ந்தொழிய அதன் ஓட்டத்தினை வென்று பற்றித்தின்ற, புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடுமுடை - புலால் விருப்புடைய புலி கைவிட்டுப் போன மூட்டு வாய் ஒழிந்த கடிய முடைநாற்றத்தினையுடைய தசை கிடக்கு மிடத்தே; 4-6. இரவு குறும்பு அலற நூறி - இரவிலே காட்டரண் களிலுள்ளார் அலற அவர்களைக் கொன்று, நிரை பகுத்து - தாம் கொண்ட நிரைகளைப் பகுத்துக் கொண்டு, இருங் கல் முடுக்கர் - பெரிய கற்பாறையின் முடுக்கிலே, திற்றி கெண்டும் - தசையினை அறுத்துத் தின்னும், கொலை வில் ஆடவர்போல - கொலைத் தொழில் வல்ல வில்லினையுடைய வெட்சி வீரர் போல; 6-8. பெருந்தலை எருவையொடு பருந்து பல உடன் வந்திருக்கும் - பெரிய தலையினையுடைய கழுகுகளோடு பருந்துகள் பலவும் ஒருங்கே வந்து சூழ்ந்திருக்கும், அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு - அரிய சுரநெறியைக் கடந்து சென்ற கொடியோராய நம் தலைவரின் பிரிவிற்காக, அல்கலும் - நாடோறும்; 9-15. இருங் கழை இறும்பின் - பெரிய மூங்கில்களையுடைய சிறு காட்டில், ஆய்ந்து கொண்டு அறுத்த - ஆராய்ந்து கொண்டு அறுத்திட்ட, நுணங்கு கண் சிறு கோல் - சிறிய கணுக்களையுடைய நுண்ணிய கோலினைக் கொண்ட, வணங்கு இறை மகளிரொடு - வளைந்த முன் கையினையுடைய விறலியரொடு, அகவுநர் புரந்த அன்பின் - பாணர்களைப் புரந்திடும் அன்பினையும், கழல்தொடி நறவு மகிழ் இருக்கை - கழலும் தொடியினையும் கள்ளுண்டு மகிழும் இருக்கையினையுமுடைய, நன்னன் வேண்மான் - நன்னன் வேண் மானது, வயலை வேலி வியலூர் அன்ன - வயலைக்கொடி படர்ந்த வேலிகளையுடைய வியலூரினை யொத்த, நின் அலர் முலை ஆகம் புலம்ப - நினது பரந்த முலையையுடைய மார்பகம் தனித்து வருந்த, பல நினைந்து ஆழேல் என்றி - பலவும் நினைந்து துன்பத்தில் ஆழ்ந்திடாதே என்னாநின்றாய்; என் - இஃதென்னை!, 16-23. குரவு மலர்ந்து அற்சிரம் நீங்கிய அரும்பதவேனில் - குரவம் மலர்ந்து முன்பனிக்காலம் நீங்கப் பெற்ற அரிய செவ்வியையுடைய இளவேனிற் காலத்தே, அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடைகரை - அறல் விளங்கும் நீண்ட மணலையுடைய அகன்ற ஆற்றின் கரையிடத்தே, துறை அணி மருது தொகல்கொள ஓங்கி- துறையை அழகு செய்யும் மருத மரங்களொடு தொகுதியாக உயர்ந்து, கலிழ்தளிர் அணிந்த இரும்சினை மாஅத்து - அழகு ஒழுகும் தளிரைக் கொண்ட பெரிய கிளைகளையுடைய மா மரத்தின், இணர்ததை புதுப் பூ நிரைத்த பொங்கர் - கொத்துக்களாக நெருங்கிய புதிய பூக்கள் செறிந்த சோலைகளிலே, புகை புரை அம் மஞ்சு ஊர - புகையினை யொத்த அழகிய வெண் மேகங்கள் தவழ, நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கு - (அவ்வின்பத்தை) நுகரும் குயில்கள் பாடும் குரலினைக் கேட்போருக்கு, கண்பனி நிறுத்தல் எளிதோ - கண்ணின் நீரை நிறுத்துதல் எளிதாகுங்கொல்? (முடிபு) தோழி! அருஞ்சுரம் இறந்த கொடியோர்க்கு வியலூரன்ன நின் அலர்முலை யாகம் புலம்ப ஆழேல் என்றி; என்? வேனிலில் யாற்றின் அடைகரைப் பொங்கரில் மஞ்சு ஊரக் குயில் அகவும் குரல் கேட்போர்க்குக் கண்பனி நிறுத்தல் எளிதோ? நிரை பகுத்துத் திற்றி கெண்டும் ஆடவர் போல, புலி கலையின் வலங் கடந்து துறந்த முடைக்கண் எருவையொடு பருந்து வந்திருக்கும் அருஞ்சுரம் என இயையும். (வி-ரை) கள்ளியம்.... பொறிக்கலை; அம்: அசைகள்: வலம் - வென்றி, ஓடும் வென்றி, கடந்து என்பதன்பின் பற்றிக் கொன்று தின்ற என்பதனை விரித்துரைக்க. முடை - முடை நாற்ற முடைய தசைக்கு ஆகுபெயர். முடையிடத்தே எருவையொடு பருந்து வந்திருக்கும் என்க. இறும்பு - பகைவர் எயிற்புறத்துக் காடுமாம். மகளிர் - விறலியர். இவர் கையிலே சிறிய மூங்கிற் கோலையுடைய ராவரென்பது, `வெண்கடைச் சிறு கோல் அகவன் மகளிர்'1 என்பதனாலும் அறியப்படும். பாணர், கூத்தராகிய அகவுநரும் கையிற் கோலுடைய ரென்பது பிறாண்டு வருவனவற்றால் அறியப்படும். யாழ : அசை. என் - எவ்வாறு இயலும் என்றபடி. மருது - மருதொடு என மூன்றனுருபு விரித்துரைக்க. குயில் அகவும் குரல் - குயில் பேட்டினை அழைக்கும் குரல் என்றலுமாம். கேட்போர்க்கு எனத் தன்னைப் பிறர்போல் வைத்துக் கூறினாள். இனி, கேட்டு வாளாவிருக்கும் தலைவர் பொருட்டாக, என் கண் பனி நிறுத்தல் எளிதோ என்றுரைத்தலுமாம். (மே-ள்) `நடுவு நிலைத்திணையே'2 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இதன்கண் இருவகை வேனிலும் பாலைக் கண் வந்தன என்றார். நச். 98. குறிஞ்சி (தலைமகன் சிறைப்புப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉமாம்.) பனிவரை நிவந்த பயங்கெழு கவாஅன் துனியில் கொள்கையோ டவர்நமக் குவந்த இனிய உள்ளம் இன்னா வாக முனிதக நிறுத்த நல்கல் எவ்வம் 5. சூருறை வெற்பன் மார்புறத் தணிதல் அறிந்தனள் அல்லள் அன்னை வார்கோல் செறிந்திலங் கெல்வளை நெகிழ்ந்தமை நோக்கிக் கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப் பொய்வல் பெண்டிர் பிரப்புளர் பிரீஇ 10. முருகன் ஆரணங் கென்றலின் அதுசெத் தோவத் தன்ன வினைபுனை நல்லில் பாவை அன்ன பலராய் மாண்கவின் பண்டையிற் சிறக்கவென் மகட்கெனப் பரைஇக் கூடுகொள் இன்னியம் கறங்கக் களனிழைத் 15. தாடணி அயர்ந்த அகன்பெரும் பந்தர் வெண்போழ் கடம்பொடு சூடி இன்சீர் ஐதமை பாணி இரீஇக்கை பெயராச் செல்வன் பெரும்பெயர் ஏத்தி வேலன் வெறியயர் வியன்களம் பொற்ப வல்லோன் 20. பொறியமை பாவையின் தூங்கல் வேண்டின் என்னாங் கொல்லோ தோழி மயங்கிய மையற் பெண்டிர்க்கு நொவ்வ லாக ஆடிய பின்னும் வாடிய மேனி பண்டையிற் சிறவா தாயின் இம்மறை 25. அலரா காமையோ அரிதே யஃதான் றறிவர் உறுவிய அல்லல்கண் டருளி வெறிகமழ் நெடுவேள் நல்குவன் எனினே செறிதொடி யுற்ற செல்லலும் பிறிதெனக் கான்கெழு நாடன் கேட்பின் 30. யானுயிர் வாழ்தல் அதனினும் அரிதே. - வெறிபாடிய காமக்கண்ணியார். (சொ-ள்) 21. தோழி-; 1-4. பனிவரை நிவந்த பயம் கெழு கவான் - குளிர் வாய்ந்த மலையினது உயர்ந்த வளம் பொருந்திய பக்க மலையிடத்து, அவர் - நம் தலைவர், துனிஇல் கொள்கையோடு - வெறுப்பில்லாத கொள்கையுடன், நமக்கு உவந்த இனிய உள்ளம் - நமக்குவந்தளித்த அவரது இனிய உள்ளம், இன்னாஆக - இன்னாவாயினமையின், முனிதக நிறுத்த நல்கல் எவ்வம் - வெறுக்குமாறு நிலை பெறுத்திய நல்கல் வருத்தமானது; 5-6. சூர் உறை வெற்பன் - தெய்வம் உறையும் மலையினை யுடையானாய அத் தலைவன், மார்புஉற - மார்பு உறுவதொன்றானே, தணிதல் - தணிவதாதலை, அன்னை அறிந்தாள் அல்லள் - நம் தாய் அறியாதவளாகி; 6-8. வார்கோல் செறிந்து இலங்கு எல்வளை நெகிழ்ந்தமை நோக்கி - நீண்ட கோற்றொழி லமைந்த நெருங்கி விளங்கும் ஒளி பொருந்திய வளை நெகிழ்ந்த நிலையினைப் பார்த்து, கையறு நெஞ்சினள் - செயலற்ற உள்ளத்தினளாய், வினவலின் - வினவுதலாலே; 8-10. முதுவாய் பொய் வல் பெண்டிர் - முதுமை வாய்ந்த பொய் கூறல் வல்ல கட்டுவிச்சியராய பெண்டிர், பிரப்பு உளர்பு இரீஇ - பிரப்பரிசியைப் பரப்பி வைத்து, முருகன் ஆர் அணங்கு என்றலின் - இது முருகனது செயலான் வந்த அரிய வருத்தம் என்று கூறலின், அது செத்து - அதனை வாய்மையாகக் கருதி; 11-13. ஓவத்து அன்ன வினை புனை நல் இல் - ஓவியத்தை யொத்த புனைந்த தொழிற் றிறங்களையுடைய நல்ல மனையில், பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின் - பாவையைப் போன்ற பலராலும் ஆராயப்பெறும் மாண்புற்ற அழகானது, என் மகட்குப் பண்டையிற் சிறக்க என - என் மகட்கு முன்போற் சிறப்புறுக என்று, பரைஇ- தெய்வத்தைப் பரவி; 14-15. கூடு கொள் இன்னியம் கறங்கக் களன் இழைத்து - இணைந்த பலவாய இனிய இயங்கள் ஒத்து ஒலிக்க வெறியாடும் களனை இயற்றி, ஆடு அணி அயர்ந்த அகல் பெரும் பந்தர் - ஆடுதற் கேற்ற அழகு செய்த அகன்ற பெரிய பந்தலிலே; 16-21. வெண் போழ் கடம்பொடு சூடி - வெள்ளிய பனந் தோட்டினைக் கடப்பமலரொடு சூடி, இன் சீர் ஐது அமை பாணி இரீஇ - இனிய சீர் அழகிதாக அமைந்த தாளத்தொடு பொருத்தி, செல்வன் பெரும் பெயர் ஏத்தி - முருகக் கடவுளின் பெரும் புகழினைத் துதித்து, வேலன் வெறி அயர் வியன் களம் பொற்ப - வேலன் வெறியாடும் பெரிய களம் அழகுபெற, வல்லோன் பொறி அமை பாவையின் - வல்லோன் ஆட்டும் பொறியமைந்த பாவையைப் போல, தூங்கல் வேண்டின் - ஆடுதலை விரும்பின், என்ஆம் கொல் - என் ஆகுமோ? 21-25. மயங்கிய மையல் பெண்டிர்க்கு - வெறியாடுங் களத்துக் கூடிய மயக்கம் பொருந்திய பெண்டிர்க்கு, நொவ்வலாக ஆடிய பின்னும் - துன்பம் உண்டாக வேலன் ஆடிய பின்னும், வாடிய மேனி - எனது வாடிய மேனி, பண்டையிற் சிறவாதாயின் - முன்பு போலச் சிறந்திடாதாயின், இம் மறை அலர் ஆகாமையோ அரிதே - இக் களவொழுக்கம் பலரும் தூற்றுமாறு வெளிப்படாதிருத்தல் அரிது; 25. அஃதான்று - அஃதன்றி; 26-30. அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி - தம் தலைவர் உறுவித்த இவ்வல்லலைத் தெரிந்தருளுதலின், வெறி கமழ் நெடுவேள் நல்குவன் எனின் - மணங்கமழும் நெடுவேள் நம் முன்னை அழகினைத் தந்தருள்வன் எனின், செறிதொடி உற்ற செல்லலும் பிறிதென - நெருங்கிய வளையலை யணிந்த நம் தலைவி உற்ற துன்பமும் பிறிதொன்றானெய்தியது என, கான் கெழு நாடன் கேட்பின் - காடு பொருந்திய நாட்டினையுடைய நம் தலைவன் கேட்டறியின், யான் உயிர் வாழ்தல் அதனினும் அரிது - யான் உயிர் கொண்டு வாழ்தல், முற்கூறிய அதனினும் அரிது. (முடிபு) தோழி (நம்) எவ்வம், அன்னை அறிந்தனள் அல்லள்; வினவலின் பெண்டிர் முருகன் ஆரணங்கு என்றலின், அது செத்து, (முருகற்) பரைஇ ஆடணி அயர்ந்த பந்தர், வேலன் பாவையிற் றூங்கல் வேண்டின் என் ஆம் கொல்? ஆடிய பின்னும் வாடிய மேனி சிறவாதாயின் மறை அலராகாமை அரிது; அஃதான்று, நெடுவேள் நல்குவன் எனின், செல்லலும் பிறிதெனக் கான்கெழு நாடன் கேட்பின், யான் உயிர் வாழ்தல் அதனினும் அரிது. (வி-ரை) உவந்த - உவந்து அளிசெய்த. ஆக: காரணப் பொருட்டாயது. நல்கல் எவ்வம் - தலைவன் அருளால் வந்த எவ்வம் எனத்தானுற்ற நோய்க்குப் பெயர் கூறினாள். அல்லல் என்பதனை எச்சமாக்குக. முதுவாய் - பேசி முதிர்ந்த வாய் என்றலுமாம். முதுவாய்ப் பெண்டிராவார் கட்டுவிச்சியர்; கட்டுக் கூறுபவர். கட்டாவது, முறத்திலே நெல்லை யிட்டுக் குறி சொல்லுதல். பிரப்பு - அரிசி, தினை முதலியவற்றைப் பல பகுதியாகக் கூடையிலாதல், முறத்திலாதல் பலியாக இட்டு வைத்தல். `பல்பிரப் பிரீஇ யென' (242) என இந்நூலுள்ளும், `தினைப்பிரப் பிரீஇ'1 எனக் குறுந்தொகை யிலும், `குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி, சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇ'2 எனத் திருமுருகாற்றுப்படையிலும் வருதல் காண்க. வெண் போழ் - போழப்பட்ட பனந்தோடு : ஆகுபெயர். சீர் - தாள அறுதி. செல்வன் - முருகன். பெரும் பெயர் - பெரிய திருநாமமும் ஆம். அஃதாவது, முருகனுக்குரிய ஆறெழுத் தருமறை. வேலன்- செவ்வேளின் வேலை ஏந்தி நின்றாடுபவன்; பூசாரி. பொறி - இயந்திரம். வல்லோன் இயற்றிய பொறி என்க. வல்லோன் ஆட்டும் பாவை யெனினும் பொருந்தும். நொவ்வல் - நோவல். ஆகாமை அரிது : ஆகும் என்றபடி. அஃதான்று : `இன்றி யென்னும் வினையெஞ்சிறுதி'1 என்னும் சூத்திரத்து, `தொன்றியல் மருங்கின்' என்றதனால், அன்றி என்பது அன்று என ஆயிற்று எனவும், `அன்று வருகாலை ஆவா குதலும்'2 என்றதனால் ஆன்று என ஆயிற்று எனவும் கொள்க. கண்டருளி - கண்டு அருள் செய்து என்றுரைத் தலுமாம். வெறி - முருகனுக்கு இயல்பாய நறுமணம். `மணங்கமழ் தெய்வத் திளநலம் காட்டி'3 என்றார் நக்கீரனாரும். இனி வெறியாடும் களத்துப் போதரலின் அந்நாற்றம் கமழும் என்றலுமாம். செல்லலும் பிறிதெனக் கான்கெழு நாடன் கேட்பின் யானுயிர் வாழ்தல்...... அரிது என்றது, தனது உண்மைக் காதலுக்கு இழுக்கு உண்டாதல் கருதி என்க. இச் செய்யுள் தலைவி கூற்றாதற்கே பெரிதும் பொருந்தியதாம். நச்சினார்க்கினியரும் இக் கருத்தினரே யென்பது `களவல ராயினும்'4 என்னுஞ் சூத்திரவுரையாற் பெறப்படும். தோழி கூற்றாயின் தலைவிக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமையால், யான் எனக் கூறினாள் எனல் வேண்டும். 99. பாலை (உடன் போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது.) வாள்வரி வயமான் கோளுகிர் அன்ன செம்முகை யவிழ்ந்த முண்முதிர் முருக்கின் சிதரார் செம்மல் தாஅய் மதரெழில் மாணிழை மகளிர் பூணுடை முலையின் 5. முகைபிணி அவிழ்ந்த கோங்கமொ டசைஇநனை அதிரல் பரந்த அந்தண் பாதிரி உதிர்வீ அஞ்சினை தாஅய் எதிர்வீ மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம் அணங்குடை நகரின் மணந்த பூவின் 10. நன்றே கானம் நயவரும் அம்ம கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பின் பிடிமிடை களிற்றில் தோன்றும் குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தே. -பாலைபாடிய பெருங்கடுங்கோ. (சொ-ள்) 11. குறுமகள் - இளமடவாய் - வாழியோ - வாழ்வாயாக; 1-3. வாள் வரி வய மான் தோள் உகிர் அன்ன - வாள் போலும் வரிகளையுடைய வலிய புலியினது கொல்லும் தொழிலையுடைய நகம் போன்ற, செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் - சிவந்த முகை விரிந்த முள் நிறைந்த முருக்க மலராகிய, சிதர் ஆர் செம்மல் தாஅய் - வண்டு சூழ்ந்த வாடிய பூக்கள் பரந்து; 3-6. மதர் எழில் மாண் இழை மகளிர் பூண் உடை முலையின் - கதிர்த்த அழகினையும் மாண்புற்ற அணியினையுமுடைய மகளிரது பூணணிந்த முலையினைப் போன்ற, முகை பிணி அவிழ்ந்த கோங்க மொடு நனை அதிரல் அசைஇ - முகைகள் அலர்ந்த கோங்கம் பூக்களோடு கொத்துக்களாய புனலிப்பூ கூடிக் கிடக்க; 6-7. பரந்த அம் தண் பாதிரி அஞ்சினை உதிர் வீ தாஅய் - பரவிய அழகிய குளிர்ந்த பாதிரியினது அழகிய சினையினின்றும் உதிர்ந்த பூக்களோடு தாவி; 7-8. எதிர் வீ மராஅ மலரொடு விராஅய் - மாறுபட்ட பூக்கள் வெண்கடப்பம் பூக்களோடு விரவித் தாவி; 8-9. பராஅம் அணங்கு உடை நகரின் மணந்த பூவின் - பரவுக் கடன் பூண்ட தெய்வமுடைய கோவிலின்கண் கலந்து கிடக்கும் பூக்களைப் போல; 10-11. கானம் நன்றே நயவரும் - இக் காடு பெரிதும் விரும்பத் தக்கதாகின்றது, கண்டிசின் - காண்பாக; 11-14. (மற்றும் இக் கானம்), நுந்தை அடுகளம் பாய்ந்த தொடி சிதை மருப்பின் - உன் தந்தை பகைவரை அடும் போர்க்களத்துப் பாய்ந்து போர் செய்தலால் பூண் சிதைந்த கோட்டினையுடையவும், பிடிமிடை - பிடிகள் சூழப் பெற்றவுமாய, களிற்றில் தோன்றும் - களிறுகளைப் போலத் தோன்றும், குறு நெடுந் துணைய - சிறியவும் பெரியவுமாய அளவினையுடைய, குன்றமும் உடைத்து - குன்றங் களையும் உடையதாகின்றது; (காண்பாயாக.) (முடிபு) குறுமகள், வாழியோ! முருக்கின் செம்மல் தாஅய், முகை பிணி யவிழ்ந்த கோங்கமொடு நனை அதிரல் அசைஇ, பாதிரி அஞ்சினை உதிர் வீ எதிர் வீ மராஅ மலரொடு தாஅய், விராஅய், அணங்குடை நகரின் மணந்த பூவின் கானம் நன்று நயவரும்; (அது) பிடிமிடை களிற்றிற் றோன்றும் குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்து; அம்ம! கண்டிசின். (வி-ரை) கோள் உகிர் - இரையைப் பற்றிய உகிரென்றுமாம்; குருதியாற் சிவந்த உகிரென்பான் `கோளுகிர்' என்றான்; புலியுகிர் வண்ணமும் வடிவும் பற்றி முருக்கின் செம்முகைக்கு உவமையாயது. முலைபோலும் முகை யென்க. `மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்' என்றது அளபெடை வண்ணம்; என்னை? "அளபெடை வண்ண மளபெடை பயிலும்"1 என்றாராகலின். அம்ம : உரையசை; கேட்பித்தற் பொருட்டுமாம். பகைவரது மதிற்கதவைப் பாய்தலின் தொடி சிதைந்த தெனலுமாம். மருப்பிற் களிறு பிடிமிடை களிறு என்க. (மே-ள்) `ஒன்றாத் தமரினும்'2 என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுளைக் கூறி, `இது தலைவியை மருட்டியது' என்று கூறினர், நச். 100. நெய்தல் (தோழி வரைவு கடாயது.) அரையுற் றமைந்த ஆரம் நீவிப் புரையப் பூண்ட கோதை மார்பினை நல்லகம் வடுக்கொள முயங்கி நீவந் தெல்லினிற் பெயர்தல் எனக்குமா ரினிதே 5. பெருந்திரை முழக்கமொ டியக்கவிந் திருந்த கொண்டல் இரவின் இருங்கடல் மடுத்த கொழுமீன் கொள்பவர் இருள்நீங் கொண்சுடர் ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை ஆடியல் யானை அணிமுகத் தசைத்த 10. ஓடை ஒண்சுடர் ஒப்பத் தோன்றும் பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான் பரியுடை நற்றேர்ப் பெரியன் விரியிணர்ப் புன்னையங் கானற் புறந்தை முன்றுறை வம்ப நாரை யினனொலித் தன்ன 15. அம்பல் வாய்த்த தெய்ய தண்புலர் வைகுறு விடியல் போகிய எருமை நெய்தலம் புதுமலர் 3மாந்தும் கைதையம் படப்பைஎம் மழுங்க லூரே. - உலோச்சனார். (சொ-ள்) 1-4. அரை உற்று அமைந்த ஆரம்நீவி - நறுமணம் கூட்டி அரைக்கப்பெற்று முடிந்த சந்தனத்தைப் பூசி, புரையப் பூண்ட கோதை மார்பினை - உயர்வுற மாலையினைப் பூண்ட மார்பினையுடையையாய், நீ எல்லினில் வந்து நல் அகம் வடுக்கொள முயங்கிப் பெயர்தல் எனக்கும் இனிது - நீ இரவினில் வந்து நினது நல்ல மார்பு வடுவுண்டாக முயங்கிப் போதல் எனக்கும் மிக இனிதாகும்; (ஆயினும்,) 5-7. பெரும் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த - பெரிய அலையின் ஒலியோடு அதன் அலைவும் ஓய்ந்திருந்த, கொண்டல் இரவில் - மேகஞ் சூழ்ந்த இரவில், இரு கடல் மடுத்த கொழுமீன் கொள்பவர் - கொழுமீனைப் பிடிக்கும் பரதவர் கரிய கடலிலே மடுத்த அம்பியிலுள்ள, இருள் நீங்கு ஒள்சுடர் - இருள் நீங்குதற்குக் காரணமான ஒளி பொருந்திய விளக்கம்; 8-10. ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை - பிறக்கிடாத மேற் கோளினையுடைய வேந்தன் பாசறைக்கண்ணே யுள்ள, ஆடு இயல் யானை அணிமுகத்து அசைத்த - அடுதல் வல்ல யானையின் அழகிய முகத்திற் பிணித்த, ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும் - ஓடையினது ஒள்ளிய சுடர்போலத் தோன்றும் (இடமாகிய); 11-15. பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான் - பாடி வருவாரை வளைத்துக் கொள்ளும் கைவண்மை வாய்ந்த கோமானாகிய, பரி உடை நல்தேர்ப் பெரியன் - குதிரைகள் பூண்ட சிறந்த தேரினை யுடைய பெரியன் என்பானது, விரி இணர்ப் புன்னை அம் கானல் புறந்தை முன்றுறை - மலர் விரிந்த கொத்துக்களையுடைய புன்னை மரங்களையுடைய அழகிய சோலை சூழ்ந்த புறையாற்றின் கடற்றுறையின்கண்ணுள்ள, வம்ப நாரை இனன் ஒலித்தன்ன அம்பல் - புதிய நாரையின் கூட்டம் ஒலித்தாற் போன்ற அலர்; 15-18. தண் புலர் வைகுறு விடியல் - தண்ணென்று புலந்திடும் இருள் தங்கிய விடியற்காலத்தே, போகிய எருமை நெய்தல் புதுமலர் மாந்தும் - வெளிச் சென்ற எருமை நெய்தலின் புதிதாக அலர்ந்த மலரினைத் தின்னும், கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊர் - தாழை வேலிகளையுடைய அழகிய தோட்டங்களையுடைய எமது ஆரவாரம் மிக்க ஊரின்கண், வாய்த்த - எழுந்தன. (முடிபு) தலைவ, நீ எல்லினில் வந்து பெயர்தல் எமக்கும் இனிது; ஆயினும், மீன் கொள்பவர் இருங்கடல் மடுத்த ஒண்சுடர் வேந்தன் பாசறை யானையின் ஓடை ஒண்சுடர் ஒப்பத் தோன்றும் பெரியன் புறந்தை முன்றுறை நாரை இனன் ஒலித்தன்ன அம்பல் எம் அழுங்கல் ஊர் வாய்த்தன. (வி-ரை) எனக்குமார்: உம்மை எச்சப் பொருட்டு; மார் : அசை. உவமைக்கண் யானை முகத் தசைத்த ஓடை யென்றமையால், பொருளிலும் அதற்கேற்ப, கடல்மடுத்த அம்பியிற் பிணித்த சுடர் என வருவித்துரைக்க. `பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான்' என்றது, பாடுவார் பொருள் வேட்டுப் பிறரிடம் செல்லாவாறு மிகுதியாக வழங்குபவன் என்றபடியாம். புன்னையில் நாரை யிருக்கு மென்பதும், வம்ப நாரை என்னும் வழக்கும், `நின்ற புன்னை நிலந்தோய் படுசினை - வம்ப நாரை சேக்கும்'1 என்னுஞ் செய்யுளுள்ளுங் காண்க. புறந்தை - புறையாறு என்பதன் மரூஉ. இது பொறையாறு எனவும் வழங்கும். `நறவுமகி ழிருக்கை நற்றேர்ப் பெரியன், கட்கமழ் பொறையாற் றன்ன'1 என்பது காண்க. வாய்த்த : முற்றுவினை. தெய்ய: அசை. `எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்'2 என்ற சூத்திரத்து ஒன்றென முடித்தலால், பிற கருப்பொருள் மயங்குவன உளவேனுங் கொள்க என்றலின், மருதத்து விலங்காகிய எருமையும், சிறுபொழுதாகிய வைகறையும் நெய்தற்கண் வந்தன. 101. பாலை (பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது. தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉ மாம்.) அம்ம வாழி தோழி யிம்மை நன்றுசெய் மருங்கில் தீதில் என்னும் தொன்றுபடு பழமொழி யின்றுபொய்த் தன்றுகொல் தகர்மருப் பேய்ப்பச் சுற்றுபு சுரிந்த 5. சுவன்மாய் பித்தைச் செங்கண் மழவர் வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல் தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி நுரைதெரி மத்தங் கொளீஇ நிறைப்புறத் தடிபுதைத் தொடுதோல் பறைய வேகிக் 10. கடிபுலங் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர் இனந்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட் டகலிரு விசும்பிற் கோடம் போலப் பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற் றுருப்பவிர் பூரிய 3சுழன்றுவரு கோடைப் 15. புன்கால் முருங்கை ஊழ்கழி பன்மலர் தண்கார் ஆலியில் தாவன உதிரும் பனிபடு பன்மலை இறந்தோர்க்கு முனிதகு பண்பியாஞ் செய்தன்றோ விலமே. - மாமூலனார். (சொ-ள்) 1. தோழி வாழி-, அம்ம - நான் கூறுவதனைக் கேட்பாயாக!, 1-3. இம்மை நன்று செய் மருங்கில் தீது இல் என்னும் - இம்மையில் நன்று செய்யுமிடத்துத் தீது வருவதில்லை என்று கூறப்படும், தொன்று படு பழமொழி - தொன்று தொட்டு வழங்கும் பழமொழி, இன்று பொய்த்தன்றுகொல் - இன்று பொய்யாயதோ; 4-11. தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த - செம்மறியாட்டுக் கிடாயின் கொம்பினை யொப்பச் சுற்றிக் கடை சுருண்ட, சுவல்மாய் பித்தைச் செங்கண் மழவர் - பிடரியை மறைக்கும் தலை மயிரினை யும் சிவந்த கண்ணினையுமுடைய மழவர்கள், வாய்ப் பகை கடியும் மண்ணொடு - வாயினின்றெழும் இருமலாய பகையினை எழாமற் றீர்க்கும் மருந்தாய புற்றுமண்ணை வாயில் அடக்கிக் கொண்டனராய், கடும் திறல் தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி - கடிய திறல்வாய்ந்த தீயுண்டாம் சிறிய அம்பினை வில்லோடு கையிற்பற்றி, நுரை தெரிமத்தம் கொளீஇ - வெண்ணெய்யை வெளிப்படுத்தும் கடையும் மத்தினைக் கவர்ந்துகொண்டு, நிரைப் புறத்து அடி புதை தொடுதோல் பறைய ஏகி - ஆனிரைகள் உள்ளவிடத்துத் தம் அடியை மறைத்துள்ள செருப்புக்கள் தேயச் சென்று, கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர் - பகைவர் காவல் இடத்திலே கவர்ந்த கன்றுகளுடன் கூடிய ஆன் இனத்தையுடையராய், இனம் தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு - அவ்வினத்தினை அவ்விடத்தினின்று கொண்டு போகும் அகன்ற இடத்தையுடைய பெரிய காட்டின் கண்ணே; 12-16. அகல் இரு விசும்பிற்கு ஓடம்போல - அகன்ற பெரிய வானாகிய கடற்கண் ஓடம்போல, பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று - பகலில் வானிடையே நின்ற பல கதிர்களையுடைய ஞாயிற்றின், உருப்பு அவிர்பு ஊரிய சுழன்று வரு கோடை - வெப்பம் விளங்கிப் பரக்கச் சுழன்று வரு மேல் காற்றினால், புன் கால் முருங்கை ஊழ் கழி பன்மலர் - புல்லிய அடிமரத்தினையுடைய முருங்கையின் முதிர்ந்து கழியும் பல பூக்கள், தண் கார் ஆலியில் தாவன உதிரும் - குளிர்ந்த கார்காலத்து ஆலங்கட்டி போலப் பரந்தனவாய் உதிரும்; 17-18. பனிபடு பன்மலை இறந்தோர்க்கு - நடுக்கமுண்டாகும் பல மலைகளையும் தாண்டிச் சென்ற நம் தலைவர்க்கு, முனிதகு பண்புயாம் செய்தன்றோ இலம் - வெறுக்கத்தக்க செயல் யாதும் நாம் செய்திலமே. (முடிபு) தோழி! "இம்மை..... பழமொழி" இன்று பொய்த்தன்றுகொல்! பெருங்காட்டிலே, ஞாயிற்றின் உருப்பு அவிர்பு ஊர்தலின், சுழன்றுவரு கோடையால் முருங்கையின் பன்மலர் ஆலியின் உதிரும் பன்மலை யிறந்தோர்க்கு யாம் முனிதகு பண்பு செய்தன்றோ இலம். மழவர், மண்ணொடு சிறுகோல் வில்லொடு பற்றி, கொளீஇ, ஏகி, கவர்ந்த கொள்ளையர் இனந்தலை பெயர்க்கும் பெருங்காடு என்க. (வி-ரை) வாய்ப்பகை - வாயினின் றுண்டாம் பகை; இருமல்; அவரது வரவை வெளிப்படுத்தலின் பகை என்றார். நுரை - வெண்ணெய். பறைய - கழல வென்றுமாம். கன்றுடைக் கொள்ளையர் - கன்றினை யுடைய ஆனின் கொள்ளையர் என்க. விசும்பிற்கு ஓடம் - விசும்பாகிய கடலின்கண் ஓடம்: அளக்கலாகா விரிவு பற்றி விசும்பிற்குக் கடலும், அதனை ஊடறுத்துச் செல்லுதல் பற்றி ஞாயிற்றுக்கு ஓடமும் உவமையாயின. ஊரிய - ஊர்தலால். காட்டின்கண் மலர் உதிரும் மலையென்க. காட்டினையுடைய பன்மலை யென்றலுமாம். மலையிறந் தோர்க்கு முனிதகு பண்பு யாம் செய்திலம்; அங்ஙனமாகவும் அவர் வரைவினை நீட்டிக்கச் செய்து நம்மை வருத்துதலின் `நன்று செய் மருங்கில் தீதுஇல்' என்னும் பழமொழி இன்று பொய்த்தது போலும் எனக் கிழத்தி கவன்று கூறினாளென்க. `நன்று செய் மருங்கில்' என்றமையால் இவள் இயற்கைப் புணர்ச்சிக் காலத்துத் தலைவற்கு இன்பம் விளைத்தா ளென்பது பெற்றாம். தோழி கூற்றாயினும் பொருளிதுவே. 102. குறிஞ்சி (இரவுக் குறிக்கண் சிறைப்புறமாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.) உளைமான் துப்பின் ஓங்குதினைப் பெரும்புனத்துக் கழுதிற் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென உரைத்த சந்தின் ஊரல் இருங்கதுப் பைதுவரல் அசைவளி யாற்றக் கைபெயரா 5. ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக் குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது படாஅப் பைங்கண் பாடுபெற் றொய்யென மறம்புகல் மழகளி றுறங்கும் நாடன் 10. ஆர மார்பின் அரிஞிமி றார்ப்பத் தாரன் கண்ணியன் எஃகுடை வலத்தன் காவலர் அறிதல் ஓம்பிப் பையென வீழாக் கதவம் அசையினன் புகுதந் துயங்குபடர் அகல முயங்கித் தோள்மணந் 15. தின்சொல் லளைஇப் பெயர்ந்தனன் தோழி இன்றெவன் கொல்லோ கண்டிகு மற்றவன் நல்கா மையின் அம்ப லாகி ஒருங்குவந் துவக்கும் பண்பின் இருஞ்சூழ் ஓதி ஒண்ணுதல் பசப்பே. - 1மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்தன். (சொ-ள்) 15. தோழி-; 1-9. உளைமான் துப்பின் - சிங்கம் போலும் வலியினனாய், தினைப் பெரும் புனத்து ஓங்கு கழுதில் - பெரிய தினைப்புனத்தில் ஓங்கிய பரணின்கண்ணே, கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென - கானவன் கள்ளுண்டு களித்து இருந்தனனாக, உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு - பூசிய மயிர்ச் சாந்தினையுடைய பரந்த கரிய கூந்தலை, ஐதுவரல் அசைவளி ஆற்ற - மெல்லென அசைந்து வரும் காற்றுப் புகுந்து புலர்த்த, ஒலியல் வார் மயிர் கை பெயரா உளரினள் - தழைத்து நீண்ட அக் கூந்தலைத் தன் கையாற் பெயர்த்துக் கோதிக் கொண்டு, கொடிச்சி - அவன் மனைவி, பெருவரை மருங்கில் - அப் பெரிய வரையின் பக்கத்தே, குறிஞ்சி பாட - குறிஞ்சிப் பண்ணைப் பாடாநிற்க, குரலும் கொள்ளாது - தான் கொண்ட தினைக் கதிரினையும் உட்கொள்ளாது, நிலையினும் பெயராது - நின்ற நிலையினின்றும் அகலாது, படாஅப் பைங்கண் பாடுபெற்ற - துயில்வரப்பெறாத அழகிய கண் துயில்வரப் பெற்று, மறம் புகல் மழ களிறு ஒய்யென உறங்கும் நாடன் - வீரத்தினை விரும்பிய இளைய களிறு விரைந்து தூங்கும் நாட்டையுடையனாகிய நம் தலைவன்; 10-15. ஆரம் மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப - சந்தனம் பூசிய தனது மார்பின்கண்ணே அழகிய வண்டுகள் ஒலிப்ப, தாரன் கண்ணியன் எஃகு உடை வலத்தன் - தாரனும் கண்ணியனும் வேல் பொருந்திய வலக்கையை யுடையவனுமாகி, காவலர் அறிதல் ஓம்பி - காவலாளர் அறிதலைப் பரிகரித்து, பையென வீழாக் கதவம் அசையினன் புகுதந்து - தாழ் வீழ்த்தாத கதவினருகே தங்கி மெல்லெனப் புகுந்து, உயங்கு படர் அகல முயங்கித் தோள் மணந்து - வருந்தும் துன்பம் நீங்க அணைத்துத் தோளினைக் கூடி, இன்சொல் அளைஇப் பெயர்ந்தனன் - இன் சொற்களைக் கலந்து பேசிச் சென்றனன்; (அங்ஙனமாகவும் இப்பால்,) 16-19. இன்று அவன் நல்காமையின் - அவன் இன்று ஒரு நாள் வந்து அருள் செய்யாமையின், ஒருங்கு வந்து அம்பல் ஆகி - ஒருங்கே வந்து அலர் ஆகுமாறு, உவக்கும் பண்பின் - மகிழ்ச்சியை விளைவிக்கும் இயல்பினையுடைய, இருஞ் சூழ் ஓதி ஒண்நுதல் பசப்பு - கரிய கூந்தலாற் சூழப்பட்ட ஒள்ளிய நெற்றியின் பசப்பினை, எவன் கொல்லோ கண்டிகும் - நாம் கண்டது என்னையோ? (முடிபு) தோழி! கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென, கொடிச்சி குறிஞ்சி பாட, களிறு கண்பாடு பெற்று உறங்கும் நாடன், முயங்கித் தோள் மணந்து இன் சொல் அளைஇப் பெயர்ந்தனன்; இன்று அவன் நல்காமையின், அம்பல் ஆக, நுதலிடத்துப் பசப்பினை எவன் கொல் கண்டிகும்? (வி-ரை) உளைமான் - பிடரி மயிரினையுடைய விலங்கு; சிங்கம். பிழி - கள், பிழியப்படுவது என்னும் பொருட்டு. பாட - பாடுதலால். பாடுதலாற் கொள்ளாது பெயராது உறங்கும் என்க. தார் - மார்பிற் சூடுவது. கண்ணி - தலையிற் சூடுவது. அறிதல் ஓம்பி - அறியாதபடி பாதுகாத்து. மற்று : வினைமாற்று. அம்பல் ஆகி : அம்பல் ஆக எனத் திரிக்க. உவக்கும் பண்பின் ஓதி என்க; நுதல் என்றலுமாம். இனி ஓதி என்பதனை ஆகு பெயராகக் கொண்டு, தோழி ஓதி என விளியாக்கலுமாம். இன்று ஒரு நாள் அருள் செய்யாமையால், நெற்றியில் பசப்பு உண்டாயது என்னை என்றபடி. (உ-றை) கொடிச்சி, கானவனுக்கு இன்பம் உண்டாகப் பாடிய குறிஞ்சிப் பண், யானையைத் தினை யுண்ணாமற் செய்ததன்றி, பசி ஒரு புறம் நலிய, அதனை உறங்கவும் செய்ததுபோல, அம்பற் பெண்டிர், தாய்க்கு உணர்த்திய அலர், தலைவன் தலைவியை நுகராமற் செய்ததன்றி, வேட்கை ஒருபுறம் நலிய, அவன் வாளாதே புறத்தே அயர்ந்திருக்கவும் செய்தது என்க. (மே-ள்) `இரவுக்குறியே...... மனையகம் புகாக் காலையான'1 என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுளைக் கூறி, இது மனையகம் புக்கது என்றுரைத்தனர், நச். 103. பாலை (தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொற்றது.) நிழலறு நனந்தலை யெழாலேறு குறித்த கதிர்த்த சென்னி நுணங்குசெந் நாவின் விதிர்த்த போலும் அந்நுண் பல்பொறிக் காமர் சேவல் ஏமஞ் சேப்ப 5. முளியரில் புலம்பப் போகி முனாஅது முரம்படைந் திருந்த மூரி மன்றத் ததர்பார்த் தல்கும் ஆகெழு சிறுகுடி உறையுநர் போகிய வோங்குநிலை வியன்நகர்2 இறைநிழல் ஒருசிறைப் புலம்பயா உயிர்க்கும் 10. வெம்முனை யருஞ்சுரம் நீந்தித் தம்வயின் ஈண்டுவினை மருங்கின் மீண்டோர் மன்னென நள்ளென் யாமத் துயவுத்துணை யாக நம்மொடு பசலை நோன்று தம்மொடு தானே3 சென்ற நலனும் 15. நல்கார் கொல்லோநாம் நயந்திசி னோரே. - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார். (சொ-ள்) 15. (தோழி), நாம் நயந்திசினோர் - நம்மால் விரும்பப்பட்ட தலைவர்; 1-5. நிழல் அறு நனந்தலை - நிழலற்ற அகன்ற பாலை நிலத்தே, எழால் ஏறு குறித்த - புல்லூற்றினால் எற்றுதல் குறிக்கப்பட்ட, கதிர்த்த சென்னி - பெரிய தலையினையும், நுணங்கு செந் நாவின் - நுணுகிய சிவந்த நாவினையும், விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி - தெளித்தன போலும் அழகிய சிறிய பலவாய புள்ளிகளையு முடைய, காமர் சேவல் - அழகிய குறும்பூழ்ச் சேவல், ஏமம் சேப்ப - பாதுகாவலான இடத்திற் சென்று தங்க எண்ணி, முளி அரில் புலம்பப் போகி - தானிருந்த காய்ந்துபட்ட சிறு தூறு தனித் தொழியப் போய்; 5-10. முனாஅது முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து - வன்னிலத்தைச் சார்ந்திருந்த பழைமையான பெரிய மன்றிலே, அதர் பார்த்து அல்கும் - (ஆறலைக்க) வழியைப் பார்த்துத் தங்கி யிருக்கும், ஆ கெழு சிறுகுடி - பசுக்கள் பொருந்திய சீறூரின்கண்ணே, உறையுநர் போகிய ஓங்கி நிலை வியன்நகர் - உறைவோர் விட்டுப் போன இடமாகிய உயர்ந்த நிலையினையுடைய பெரிய மனையில், இறை நிழல் ஒரு சிறை - இறப்பு நிழலின் ஒரு பக்கத்தே தங்கி, புலம்பு அயா உயிர்க்கும் - தனிமையால் பெரு மூச்செறிந்திருக்கும், வெம்முனை அரும் சுரம் நீந்தி - கொடிய முனையிருப்புக்களையுடைய அரிய சுரத்தினைக் கடந்து; 10-15. தம் வயின் ஈண்டு வினை மருங்கின் - தம்மிடத்து வந்துற்ற பொருளீட்டும் வினையகத்தே, மீண்டோர் என - மீண்டும் செல்லு தலுற்றாரென, நள் என் யாமத்து உயவுத் துணை ஆக - நள்ளென்ற நடு யாமத்தும் உசாவும் துணையாகும் பொருட்டு, நம்மொடு பசலை நோன்று - நம்மொடு இதுகாறும் பசலையைப் பொறுத்திருந்து இப்பொழுது, தம்மொடு தானே சென்ற நலனும் - அத் தலைவருடன் தானே வலிந்து சென்ற நம் நலனையேனும், நல்கார் கொல்லோ - நமக்கு அருளாரோ? (முடிபு) (தோழி!) நாம் நயந்திசினோர், அருஞ்சுரம் நீந்தி, வினை மருங்கின் மீண்டோர் என நம்மொடு பசலை நோன்று தம்மொடு தானே சென்ற நலனும் நல்கார்கொல்லோ? எழாலேறு குறித்த சேவல், ஏமம் சேப்ப, போகி இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயாவுயிர்க்கும் அருஞ்சுரம் என்க. (வி-ரை) எழால் - புல்லூறு, ஏறு - எறிதல், வவ்வுதல்; `கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇ'1 என்பது காண்க. கதிர்த்த சென்னி - ஒளிவிடும் தலை எனலுமாம். சேவல் - ஈண்டுக் குறும்பூழ்ச் சேவல். மீண்டோர் - மீண்டு சென்றார். ஆகிய எனும் பாடத்திற்கும் ஆகும் பொருட் டென்பதே பொருள். நலனும் உயவுத் துணையாக நம்மொடு பசலை நோன்றிருந்து, தம்மொடு தானே சென்றது; இனி, நல்கார் கொல்லோ என்று உரைத்தலுமாம். இதற்குச் சென்றது என்றது சென்ற என விகாரமாயிற்று என்க. 104. முல்லை (வினைமுற்றி மீளுந் தலைமகற்குத் தோழி சொல்லியது.) வேந்துவினை முடித்த காலைத் தேம்பாய்ந் தினவண் டார்க்குந் தண்ணறும் புறவின் வென்வேல் இளையர் இன்புற வலவன் வள்புவலித் தூரின் அல்லது முள்ளுரின் 5. முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர் வாங்குசினை பொலிய ஏறிப் புதல பூங்கொடி அவரைப் பொய்யதள் அன்ன உள்ளில் வயிற்ற வெள்ளை வெண்மறி 10. மாழ்கி யன்ன தாழ்பெருஞ் செவிய புன்தலைச் சிறாரோ டுகளி மன்றுழைக் கவையிலை ஆரின் அங்குழை கறிக்கும் சீறூர் பலபிறக் கொழிய மாலை இனிதுசெய் தனையால் எந்தை வாழிய 15. பனிவார் கண்ணள் பலபுலந் துறையும் ஆய்தொடி யரிவை கூந்தல் போதுகுரல் அணிய வேய்தந் தோயே. - மதுரை மருதனிள நாகனார். (சொ-ள்) 14. எந்தை - எம் தலைவனே!, 1-7. வேந்து வினை முடித்த காலை - வேந்தன் வினையை முடித்த காலத்தே, தேம் பாய்ந்து இன வண்டு ஆர்க்கும் - திசைகள்தோறும் பறந்து கூட்டமாய வண்டுகள் ஆரவாரிக்கும், தண் நறும் புறவில் - குளிர்ந்த நறிய முல்லை நிலத்தே, வென்வேல் இளையர் இன்புற - வென்றி பொருந்திய வேலினையுடைய வீரர் இன்பம் அடைய, வலவன் வள்பு வலித்து ஊரின் அல்லது - பாகன் கடிவாளத்தினை இழுத்துப் பிடித்துச் செலுத்தின் அல்லது, முள்உறின் முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா - தாற்றுக்கோல் தீண்டின் கடல் சூழ்ந்த உலகே ஆதி எனும் செலவிற்குப் போதாத, கடும்பரி நல்நால்கு பூண்ட நெடுந்தேர் - மிக்க வேகமுடைய நல்ல நான்கு குதிரைகள் பூட்டப்பெற்ற நீண்ட தேரில், வாங்கு சினை பொலிய ஏறி - வளைந்த கொடிஞ்சி பொலிய ஏறி; 7-13. புதல பூ கொடி அவரைப் பொய் அதள் அன்ன - புதல்களிற் படர்ந்த பூவையுடைய அவரைக் கொடியிலுள்ள பொய்த் தோல் போன்ற, உள்இல் வயிற்ற - உள்ளீடில்லாத வயிற்றினவும், மாழ்கி யன்ன தாழ்பெரும் செவிய - மயங்கிக் கிடந்தாலொத்த தாழ்ந்து தொங்கும் பெரிய செவியினவும் ஆகிய, வெள்ளை வெண்மறி - வெள்ளாட்டின் வெள்ளிய குட்டி, புன்தலைச் சிறாரோடு உகளி - புற்கென்ற தலையினையுடைய சிறுவர்களோடு குதித்துச் சென்று, மன்றுழைக் கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் - மன்றின் கண்ணே கவையாய இலையினையுடைய ஆத்தியின் அழகிய தளிரைக் கடிக்கும், சிறு ஊர் பல பிறக்கு ஒழிய - சிறிய ஊர்கள் பல பின்னே ஒழிந்திட வந்து; 13-17. மாலை - இம் மாலைக் காலத்தே, பனிவார் கண்ணள் பல புலந்து உறையும் - நீர்வடியும் கண்ணினளாய்ப் பலவற்றையும் எண்ணி வெறுத்து உறையாநிற்கும், ஆய்தொடி அரிவை - ஆராய்ந்த வளையலையுடைய தலைவி, அணிய - அணிந்துகொள்ளுமாறு, குரல் கூந்தல் - அவளுடைய கொத்தாகிய கூந்தலில், போது வேய்தந்தோய் - மலரைச் சூட்டினை (ஆகவே), இனிது செய்தனை - இனிய தொன்றைச் செய்தனையாவாய், வாழிய - நீ வாழ்வாயாக. (முடிபு) எந்தை! வேந்து வினை முடித்த காலை, கடும்பரி நெடுந்தேர் ஏறி, சீறூர் பல பிறக்கு ஒழிய (வந்து,) மாலை, புலந்து உறையும் அரிவை அணிய கூந்தல் போது வேய்தந் தோய், அதனால், இனிது செய்தனை, வாழிய! (வி-ரை) தேம் - திசை, `அவன் மறைதேஎம் நோக்கி'1 என்பது காண்க; தேனுமாம். வள்பு - வார், கடிவாளம். முள் - தாற்று முள். ஆதி - குதிரையின் நேரோட்டம். நால்கு - நான்கு; பெயர்த் திரிசொல் லென்பர் நச்சினார்க்கினியர்; `பால்புரை புரவி நால்குடன் பூட்டி' 2 என்பதன் உரை காண்க. சினை - தேரின் உறுப்பாகிய கொடிஞ்சி. பொய் அதள் - உள்ளீடின்றித் தோல் மாத்திரமாயிருக்கும் காய். தலைவனை எந்தை யென்று கூறுவது, `அன்னை யென்னை யென்றலு முளவே' என்னுஞ் சூத்திரத்து உம்மையால் தழுவப்படும். மறி, சிறாரோ டுகளிக் குழை கறிக்கும் சீறூர் பல பிறக்கொழிய என்றது, கார்ப் பருவத்தில், தலைவன் மீண்டு வரும் வழியானது, அவனுக்கு இன்பத்தை விளைத்து, தலைவிபால் விரைந்தேகத் தூண்டியதைக் குறித்தவாறு. (மே-ள்) `வெறியறி சிறப்பின்'1 என்னுஞ் சூத்திரத்து, வஞ்சிக் கண்ணும் பொதுவியல் வருவன உள என்று கூறி, அது `வேந்து வினை முடித்த' என்னும் அகப்பாட்டினுள், சுட்டி ஒருவர் பெயர் கூறா வஞ்சி பொதுவியலாய் வந்தவாறு காண்க, என்றும், `வினைவயிற் பிரிந்தோன்'2 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் காட்டி, இதனுள் வினைமுடித்த காலைத் தேரிளையர் செலவிற் கேற்ப ஊராது கோலூன்றின் உலகிறந்தன செலவிற்குப் பற்றாத குதிரைத் தேரேறி இடைச்சுரத்தில் தங்காது மாலைக்காலத்து வந்து பூச்சூட்டினை; இனிது செய்தனை; எந்தை வாழிய, எனத் தோழி கூறியவாறு காண்க என்றும் உரைத்தனர், நச். 105. பாலை (மகட் போக்கிய தாய் சொல்லியது.) அகலறை மலர்ந்த அரும்புமுதிர் வேங்கை ஒள்ளிலைத் தொடலை தைஇ மெல்லென நல்வரை நாடன் தற்பா ராட்ட யாங்குவல் லுநள்கொல் தானே தேம்பெய்து 5. மணிசெய் மண்டைத் தீம்பால் ஏந்தி ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள் நிழற்கயத் தன்ன நீள்நகர் வரைப்பின் எம்முடைச் செல்வமும் உள்ளாள் பொய்ம்மருண்டு பந்துபுடைப் பன்ன பாணிப் பல்லடிச் 10. சில்பரிக் குதிரைப் பல்வேல் எழினி கெடலருரி துப்பின் விடுதொழின் முடிமார் கனையெரி நடந்த கல்காய் கானத்து வினைவல் அம்பின் விழுத்தொடை மறவர் தேம்பிழி நறுங்கள் மகிழின் முனைகடந்து 15. வீங்குமென் சுரைய ஏற்றினந் தரூஉம் முகைதலை திறந்த வேனில் பகைதலை மணந்த பல்லதர்ச் செலவே. - தாயங்கண்ணனார். (சொ-ள்) 4-8. மணி செய் மண்டைத் தீம்பால் தேம் பெய்து ஏந்தி - மணிகளிழைத்த பொற்கலத்தில் இனிய பாலொடு தேன் கலந்து ஏந்தி, ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள் - செவிலித் தாயர் ஊட்டவும் உண்ணாளாய என்மகள், நிழற் கயத்து அன்ன நீள் நகர் வரைப்பில் - நிழற்கண்ணுள்ள குளம்போலக் குளிர்ந்த நீண்ட மாளிகையிடத்தேயுள்ள, எம் உடைச் செல்வமும் உள்ளாள் - எமது பெரிய செல்வத்தையும் நினையாளாய்; 1-3. அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை - அகன்ற பாறையில் அரும்பு முதிர்ந்து மலர்ந்த வேங்கையின், ஒள்இலைத் தொடலை தைஇ - ஒள்ளிய இலை விராவிய மாலையினை அணிந்து, மெல்லென - மெத்தென, நல்வரை நாடன் தன் பாராட்ட - நல்ல மலை நாடனாகிய தலைவன் தன்னைப் பாராட்டி வர; 8. பொய் மருண்டு - அப் பொய்யை மெய்யென மயங்கி; 9-17. பந்து புடைப்பன்ன பாணிப் பல்லடி - பந்து புடைக்கப் பட்டு எழுவதொத்த தாளத்துடன் கூடிய பல அடியீட்டினையும், சில் பரி - சிலவகைச் செலவினையுமுடைய, குதிரை - குதிரை களையும், பல்வேல் - பல வேற்படையினையு முடைய, கெடலரும் துப்பின் எழினி - கெடுதலில்லாத வலி பொருந்திய எழினி யென்பான், விடு தொழில் முடிமார் - ஏவிவிட்ட தொழிலை முடிக்கும் பொருட்டு, கனை எரி நடந்த கல்காய் கானத்து - மிக்க எரி பரத்தலின் பாறைகள் காய்ந்திருக்கும் காட்டின்கண், வினை வல் அம்பின் விழுத்தொடை மறவர் - போர்த்திறம் வாய்ந்த அம்பினது தப்பாத தொடுத்தலை யுடைய வீரர்கள், தேம்பிழி நறுங்கள் மகிழின் - பிழிந்த தேனாற் சமைந்த நறிய கள்ளுண்ட மகிழ்ச்சியினால், முனை கடந்து - பகைவர் போர் முனையை வென்ற, வீங்கு மென் சுரைய ஏறு இனம் தரூஉம் - பருத்த மெல்லிய மடியினையுடையவும் ஏறுகளோடு கூடியவு மாகிய ஆனினத்தைக் கொணர்ந்து தரும், பகை தலை மணந்த - பகைவருடன் பொருதல் கூடிய, பல் அதர் - பலவாகிய நெறிகளில், முகைதலை திறந்த வேனில் - மலை முழைஞ்சுகள் வெடித்தற் கேதுவாகிய வேனிற் காலத்தே, செலவு செல்லுதலை; 4. யாங்கு வல்லுநள் கொல் - எங்ஙனம் வல்லள் ஆயினளே! (முடிபு) ஈனாத்தாயர் தீம்பால் தேம் பெய்து மடுப்பவும் உண்ணாள், எம்முடைச் செல்வமும் உள்ளாள், வரை நாடன் தற் பாராட்ட, பொய் மருண்டு பகை தலைமணந்த பல்லதரில், வேனில் செலவு யாங்கு வல்லுநள் கொல்! எழினி விடு தொழில் முடிமார் மறவர், முனை கடந்து ஏற்றினம் தரூஉம் பகை தலை மணந்த பல்லதர் என்க. (வி-ரை) மெல்லென என்றதனைச் செலவு என்பதனோடு இயைத்து உரைத்தலுமாம். நற்றாயின் வேறு படுக்கச் செவிலியை, ஈனாத் தாயர் என்றார். சில்பரி - ஆதி, மண்டிலம் முதலிய செலவு வகை. விடுதொழில் - ஏவிய தொழில்; பகைவர் ஆனினத்தைக் கவர்ந்து வரும் தொழில்; பகைவர் கவர்ந்த தனது நிரையை மீட்கும் தொழிலுமாம். கள் மகிழின் - கள்ளையுண்டு மகிழ்ந்தால் என்றுமாம். வேற்று இனம் எனப் பிரித்து, பகைப் புலத்து இனம் என்றலுமாம். முகை - மலைமுழைஞ்சு. ஏற்றினம் தரூஉம் அதர், பகை தலைமணந்த அதர் எனத் தனித்தனி கூட்டுக. 106. மருதம் (தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.) எரியகைந் தன்ன தாமரைப் பழனத்துப் பொரியகைந் தன்ன பொங்குபல சிறுமீன் வெறிகொள் பாசடை யுணீஇயர் பைப்பயப் பறைதபு முதுசிரல் அசைபுவந் திருக்குந் 5. துறைகே ழூரன் பெண்டுதன் கொழுநனை நம்மொடு புலக்கும் என்ப நாமது செய்யா மாயினும் உய்யா மையின் செறிதொடி தெளிர்ப்ப வீசிச் சிறிதவண் உலமந்து வருகம் சென்மோ தோழி 10. யொளி றுவாட் டானைக் கொற்றச் செழியன் வெளிறில் கற்பின் மண்டமர் அடுதொறும் களிறுபெறு வல்சிப் பாணன் எறியும் தண்ணுமைக் கண்ணின் அலைஇயர்தன் வயிறே. - ஆலங்குடி வங்கனார். (சொ-ள்) 9. தோழி-; 1-6. எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து - தீ கிளைத் தெரிந்தாற் போலும் தாமரைப் பூக்களையுடைய வயலில், பொரி அகைந்தன்ன பொங்கு பல சிறு மீன் உணீஇயர் - நெற்பொரி முதலியன தெறித்தாற் போன்று விளங்கும் பல சிறிய மீன்களை உண்ணும் பொருட்டு, வெறி கொள் பாசடை - மணங்கொண்ட பசிய இலையில், பறைதபு முதுசிரல் - பறத்தல் ஒழிந்த முதிய சிச்சிலிப் பறவை, பைப்பய அசைபு வந்திருக்கும் - மெல்ல மெல்ல அசைந்து வந்திருக்கும், துறைகேழ் ஊரன் பெண்டு - துறை பொருந்திய ஊரனின் மனைவி, தன் கொழுநனை நம்மொடு புலக்கும் என்ப - தன் கணவனை நம்மொடு கூட்டி வெறுத்துப் பேசுகின்றாள் என்பர்; 6-7. நாம் அது செய்யாம் ஆயினும் உய்யாமையின் - நாம் அதற்கேதுவாய தொன்றும் செய்யாம் ஆயினும் அவள் கூறும் பழியினின்றும் நீங்க மாட்டாமையின்; 10-13. ஒளிறு வாள் தானை கொற்றச் செழியன் - விளங்கும் வாட்படையினையுடைய வெற்றி பொருந்திய பாண்டியன், வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும் - குற்றமில்லாத படைப் பயிற்சியொடு கூடி நெருங்கிய போரில் அடுந்தோறும், களிறு பெறு வல்சிப் பாணன் எறியும் - களிறாய உணவினைப் பெறும் பாணன் அடிக்கும், தண்ணுமைக் கண்ணின் - மத்தளத்தின் கண்போல, தன் வயிறு அலை இயர் - அவள் தன் வயிற்றை அலைக்கும்படி; 8-9. செறி தொடி தெளிர்ப்ப வீசி - செறிந்த வளை ஒலித்திடக் கையை வீசி, சிறிது அவண் உலமந்து வருகம் - சிறிது பொழுது அவ்விடத்தே உலாவி வருவோம், சென்மோ - வருவாயாக. (முடிபு) தோழி! துறை கேழ் ஊரன் பெண்டு, தன் கொழுநனை நம்மொடு புலக்கும் என்ப; நாம் அது செய்யா மாயினும் உய்யாமையின், செழியன் அமர் அடுதொறும் பாணன் எறியும் தண்ணுமைக் கண்ணின், தன் வயிறு அலைஇயர், சிறிது அவண் உலமந்து வருகம், சென்மோ. (வி-ரை) தெளிர்த்தல் - ஒலித்தல். சென்மோ - வாராய் என்றபடி. மோ; முன்னிலை யசை. கற்பு - கல்வி, படைக்கலப் பயிற்சி. (உ-றை) முதுமையால் பறக்கமாட்டாத சிரல், மீனுக்கு அண்மையில் பாசடை மீதிருந்தும் அதனைக் கவரமாட்டாமலும் ஏனை யிளஞ்சிரல் கவர்தற்குப் பொறாமலுமிருத்தல் போல், முதுமையால் எழுச்சி குன்றிய தலைவி, தன் மனையகத்தே கணவனைக் கொண்டிருந்தும் அவனை வளைத்துக்கொள்ள மாட்டாமலும், ஏனை யிளம் பருவமுடையார் தழுவுதற்குப் பொறாமலும் இருக்கின்றாள் என்பது. (மே-ள்) `பரத்தை வாயில்'1 என்னுஞ் சூத்திரத்து, `செறிதொடி தெளிர்ப்ப வீசிச் சிறிதிவண் - உலமந்து வருகஞ் சென்மோ தோழி' என்றக்கால் தலைவிக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லிக் கூறல் வேண்டு மென்பது என்றனர், பேரா. 107. பாலை (தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து தலைமகற்குச் சொல்லியது.) நீசெல வயரக் கேட்டொறும் பலநினைந் தன்பின் நெஞ்சத் தயாஅப்பொறை மெலிந்த என்னகத் திடும்பை களைமார் நின்னொடு கருங்கல் வியலறைக் கிடப்பி வயிறுதின் 5. றிரும்புலி துறந்த ஏற்றுமான் உணங்கல் நெறிசெல் வம்பலர் உவந்தனர் ஆங்கண் ஒலிகழை நெல்லின் அரிசியோ டோராங் கானிலைப் பள்ளி அளைபெய் தட்ட வானிணம் உருக்கிய வாஅல் வெண்சோறு 10. புகரரைத் தேக்கின் அகலிலை மாந்தும் கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர் வல்லாண் அருமுனை நீந்தி அல்லாந்து உகுமனூ றஞ்சும் ஒருகாற் பட்டத் தின்னா ஏற்றத் திழுக்கி முடங்கூர்ந் 15. தொருதனித் தொழிந்த உரனுடை நோன்பக டங்குழை இருப்பை அறைவாய் வான்புழல் புல்லுளைச் சிறாஅர் வில்லின் நீக்கி மரைகடிந் தூட்டும் வரையகச் சீறூர் மாலை இன்றுணை யாகிக் காலைப் 20. பசுநனை நறுவீப் பரூஉப்பர லுறைப்ப மணமனை கமழும் கானம் துணையீ ரோதியென் தோழியும் வருமே. - காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார். (சொ-ள்) 22. (தலைவ,) துணை ஈர் ஓதி என் தோழியும் - கடையொத்த குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழியும்; 1-3. நீ செலவு அயரக் கேட்டொறும் - நீ உடன்கொண்டு செல்லுதலை விரும்ப அவ்விருப்பினைக் கேட்குந்தொறும், அன்பின் நெஞ்சத்துப் பல நினைந்து - அன்பினையுடைய நெஞ்சத்து (முன்பு நிகழ்ந்த) பலவற்றையும் எண்ணி (அதனொடு), அயாஅப் பொறை மெலிந்த என் அகத்து இடும்பை களைமார் - வருத்தத்தைத் தாங்குவதால் மெலிந்துள என் நெஞ்சத்துள்ள துன்பினை நீக்கும் பொருட்டு; 4-12. இரும்புலி கருங்கல் வியல் அறை கிடப்பி - பெரிய புலியானது கரிய கற்களையுடைய அகன்ற பாறையில் கிடத்தி, வயிறு தின்று துறந்த ஏற்றுமான் உணங்கல் - வயிறு நிறையத் தின்று விட்டுப் போன மானேற்றின் காய்ந்த தசையை, நெறி செல் வம்பலர்- வழிச் செல்வோராய புதியர், உவந்தனர் ஆங்கண் - கண்டு மகிழ்ந் தனராய் (அதனை) அவ்விடத்தே, ஒலி கழை நெல்லின் அரிசியோடு ஓராங்கு - தழைத்த மூங்கிலின் விளைந்த நெல்லின் அரிசியுடன் ஒருங்கே கூட்டி, ஆனிலைப் பள்ளி அளைபெய்து அட்ட - ஆயர் சேரியிலுள்ள தயிரினைப் பெய்து சமைத்த, வால் நிணம் உருக்கிய வால் வெண்சோறு - வெள்ளிய நிணத்தினை உருகச்செய்த மிக வெள்ளிய சோற்றினை, புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும் - புள்ளி பொருந்திய அரையினையுடைய தேக்க மரத்தினது அகன்ற இலையில் வைத்து உண்ணுவதும், கல்லா நீள்மொழிக் கத நாய் வடுகர் - கல்வியில்லாத நெடுமொழி கூறும் சினம் மிக்க நாயையுடைய வடுகரது, வல் ஆண் அருமுனை - வலிய ஆண்மை விளங்கும் அரிய போர் முனையாவதுமாகிய சுரத்தினை, நீந்தி - கடந்து சென்று; 13-15. உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து - இடிந்து விழும் மண்ணின் இடையூற்றினை அஞ்சுவதான ஒரே துறையினை யுடைய ஓடையிலுள்ள, இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து - இன்னாததாகிய ஏற்றங்கொண்ட நெறியில் வழுக்கி விழுந்து மிக்க முடம்பட்டு, ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு - தன்னந் தனியே ஒழிந்து கிடக்கும் உடல்வலி வாய்ந்த பொறுக்குந் தன்மையுடைய பகட்டினை; 16-21. புல் உளைச் சிறார் - புல்லிய குடுமியினையுடைய சிறுவர், அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் - அழகிய தளிரையுடைய இருப்பையின் அற்ற வாயினையும் வெள்ளிய துளையினையுமுடைய பூவை, வில்லின் நீக்கி - வில்லினால் உதிர்த்து, மரை கடிந்து ஊட்டும் - அதனைத் தின்னவரும் மரைமானைத் துரந்து உண்பிக்கும், வரை அகச் சீறூர் - வரையிடத்தே யுள்ள சிறிய ஊர்களில், மாலை இன்துணை ஆகி - மாலைக் காலத்தே நினக்கு இனிய துணையாகித் தங்கி, காலை பசு நனை நறு வீ - காலைப் போதில் புதிய தேனையுடைய நறிய பூக்கள், பரூஉப் பரல் உறைப்ப - பெரிய பாறைக் கற்களில் உதிர்ந்து கிடத்தலான், மண மனை கமழுங் கானம் - மணம் நிகழும் மனை போன்று நாறுங் காட்டில்; 3. நின்னொடு - நின்னுடன்; 22. வரும் - வாரா நிற்பள். (முடிபு) தலைவ! நீ செலவு அயரக் கேட்டொறும் என் தோழியும், பல நினைந்து, என்னகத்து இடும்பை களைமார், வம்பலர் வெண்சோறு மாந்துவதும் வடுகர் அருமுனையாவது மாகிய சுரத்தினை நீந்தி வரையகச் சீறூர் மாலை இன்றுணை யாகி, காலை மணமனை கமழும் கானம் நின்னொடு வரும். (வி-ரை) வயிறு தின்று - வயிறு நிறையத் தின்று. அட்ட வெண்சோறு எனவும், வால் நிண முருக்கிய வெண்சோறு எனவும் கூட்டுக. அடுதலால் நிணம் உருகிய தென்க. வம்பலர் வெண்சோறு மாந்தும் முனை எனவும், வடுகர் அடுமுனை எனவும் தனித்தனி இயையும், பகடு - பகட்டினை. ஒருகாற் பட்டம் - ஒரே துறையினையுடைய ஓடை. புழல், பூவிற்கு ஆகுபெயர். மாலை இன்துணை யாகி என்பதற்கு - மாலைப் பொழுதில் நீ இனிய துணை யாகையாலே என்றுரைத்தலுமாம். இதற்கு ஆகி என்றதனை ஆக எனத் திரிக்க. (உ-றை) ஓடையிலே நீருண்டு அதினின்றும் ஏறமாட்டாத முடம்பட்ட உரனுடைப் பகட்டிற்குச் சிறார் இருப்பைப் பூவை மரத்தினின்றும் பிரித்து மரையினைக் கடிந்து ஊட்டினாற்போல, களவொழுக்கமாகிய இன்பத்தை நுகர்ந்து, இவ்வொழுக்கத் தினின்றும் நீங்கி வரைவொடு புக மாட்டாது வருந்தும் நினக்குக் குற்றேவன் மகளாகிய யான் தலைமகளைச் சுற்றத்தினின்றும் பிரித்து நொதுமலர் வரைவினை மாற்றி உடன் போக்கிற்கு ஒருப்படுத்தா நின்றேன் என்பது. 108. குறிஞ்சி (தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.) புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க் கொத்தன்று மன்னால் எவன்கொல் முத்தம் வரைமுதல் சிதறி யவை1போல் யானைப் புகர்முகம் பொருத புதுநீர் ஆலி 5. பளிங்குசொரி வதுபோல் பாறை வரிப்பக் கார்கதம் பட்ட கண்ணகன் விசும்பின் விடுபொறி ஞெகிழியில் கொடிபட மின்னிப் படுமழை பொழிந்த பானாட் கங்குல் ஆருயிர்த் துப்பில் கோண்மா வழங்கும் 10. இருளிடைத் தமியன் வருதல் யாவதும் அருளான் வாழி தோழி அல்கல் விரவுப்பொறி மஞ்ஞை வெரீஇ யரவின் அணங்குடை யருந்தலை பைவிரிப் பவைபோல் காயா மென்சினை தோய நீடிப் 15. பஃறுடுப் பெடுத்த அலங்குகுலைக் காந்தள் அணிமலர் நறுந்தா தூதுந் தும்பி கையாடு வட்டில் தோன்றும் மையாடு சென்னிய மலைகிழ வோனே. - தங்காற் பொற்கொல்லனார். (சொ-ள்) 11. தோழி வாழி-, 12-18. விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ - புள்ளிகள் விரவிய மயிலைக் கண் டஞ்சி, அரவின் அணங்குடை அரும் தலை பை விரிப்பவை போல் - பாம்பின் வருத்தத்தைச் செய்யும் அரிய நஞ்சினையுடைய தலைகள் படத்தை விரிப்பன போல, காயா மென்சினை தோய - காயாவின் மெல்லிய சினைகள் தோய, நீடிப் பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள் அணி மலர் - நீண்டு தூக்கிய பல துடுப்புகள் போலும் அசையும் குலைகளையுடைய காந்தளது அழகிய மலரின், நறும் தாது ஊதும் தும்பி - நறிய தாதினைக் குடைந்துண்ணும் வண்டுகள், கை ஆடு வட்டில் தோன்றும் - கையின்கண் வைத்து ஆடும் வட்டுப் போலத் தோன்றும், மை ஆடு சென்னிய மலை கிழவோன் - மேகம் தவழும் சிமையங்களையுடைய மலைக்கு உரியனாகிய நம் தலைவன்; 2-11. முத்தம் வரை முதல் சிதறியவை போல் - மலைத்தலையில் முத்துக்கள் சிதறியவை போல விளங்கும், யானைப் புகர் முகம் பொருத புது நீர் ஆலி - யானையின் புள்ளியினையுடைய முகத்தில் மோதி வீழ்ந்த புதிய ஆலங்கட்டி, பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப - பளிங்கினைச் சொரிவது போலப் பாறையில் வீழ்ந்து கோலம் செய்ய, கார் கதம் பட்ட கண் அகல் விசும்பில் - முகில்கள் சினந்தெழுந்தனவாய இடமகன்ற வானில், விடு பொறி ஞெகிழியின் கொடி பட மின்னி - பொறிவிடுகின்ற கொள்ளி போல் ஒழுங்குபட மின்னி, படு மழை பொழிந்த பானாள் கங்குல் - மிக்க மழையைச் சொரிந்த நடு நாளாகிய இரவில், ஆர் உயிர் துப்பின் - அரிய உயிர்ப் பொருளாகிய உணவினையுடைய, கோண்மா வழங்கும் இருளிடை - கொல்லும் தொழிலுடைய விலங்குகள் திரியும் இருளிடையே, அல்கல் தமியன் வருதல் யாவதும் அருளான் - நாடோறும் தனியே வருதலானே சிறிதும் அருள் செய்கின்றானல்லன்; 1-2. புணர்ந்தோர் புன்கண் அருளலும் - தம்மைச் சார்ந்தோரது துன்பினைப் போக்கியருளலும், உணர்ந்தோர்க்கு ஒத்தன்று - அறிவுடையார்க்குப் பொருந்தியதாகுமே, மன் - நம் தலைவன் அங்ஙனம் செய்திலன், எவன்கொல் - என்னையோ? (முடிபு) மலை கிழவோனாகிய நம் தலைவன் பானாட் கங்குல் கோண்மா வழங்கும் இருளிடை அல்கல் தமியன் வருதலானே யாவதும் அருளான்; புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு ஒத்தன்று மன்; எவன் கொல்? (வி-ரை) புன்கண் அருளலும் - புன்கண்ணை நீக்கி யருளலும் என்க; மன் : ஒழியிசை. வரையிடத்துச் சிதறிய முத்தம் போல் யானை முகத்திற் பொருத ஆலி என்பதும், மஞ்ஞை வெரீஇ அரவின் தலை பை விரிப்பவை போல் காயா மென் சினை தோய நீடி எடுத்த குலைக் காந்தள் என்பதும், கை யாடு வட்டில் போலக் காந்தள் மலரை யூதும் தும்பி தோன்றும் என்பதும் இரட்டைக் கிளவியாகிய உவமங்களாம். ஆலி - நீர்க்கட்டி; நீர் என முன் வந்தமையின் ஈண்டுப் பெயர் மாத்திரையாக நின்றது. முகில் குமுறி எழுந்ததைக் கதம்பட்டது என்றார். கோண்மா; சிங்கம் முதலியன; ஒருவகை விலங்குமாம். என்னை? `அச்சப் பொருளாவன : வள்ளெயிற் றரிமா வாள்வரி வேங்கை, முள்ளெயிற் றரவே முழங்கழற் செந்தீ, ஈற்றா மதமா ஏக பாதம், கூற்றங் கோண்மா குன்றுறை யசுணம் என்று சொல்லப் பட்டன போல்வன' என்றார் பேராசிரியர் ஆகலின். வருதல் - வருதலால் என உருபு விரிக்க. காயாவின் மென்சினைக்கு மஞ்ஞையும், தூக்கிய காந்தட் குலைக்குப் பாம்பு படம் விரித்ததும் உவமம். தும்பிக்கு வட்டு, வண்ணம், வடிவு, தொழில் என்னும் மூன்றும் பற்றிய உவமையாம். (உ-றை) கண்டார் விரும்பத்தக்க காந்தட்குலை அஞ்சத்தக்க அரவின் படம் போலும் என்றது, நம்மால் விரும்பத்தக்க தலைவன் வருகை, ஆற்றது தீமையால், நமக்கு அச்சத்தை விளைவிக்கின்றது என்று தலைவன் உணருமாறு தோழி கூறியபடியாம். (மே-ள்) `விரவியும் வரூஉம் மரபின வென்ப'1 என்னும் சூத்திரத்து, `காயா மென்சினை....... மலைகிழ வோனே' என்புழி, ஆடுதற்றொழில் பற்றியும், வடிவுபற்றியும், வண்ணம்பற்றியும் (உவமை) வந்தது என்பர், பேரா. 109. பாலை (இடைச்சுரத்துத் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) பல்லிதழ் மென்மலர் உண்கண் நல்யாழ் நரம்பிசைத் தன்ன இன்றீங் கிளவி நலநல் கொருத்தி இருந்த ஊரே கோடுழு களிற்றின் தொழுதி யீண்டிக் 5. காடுகால் யாத்த நீடுமரச் சோலை விழைவெளில் ஆடுங் கழைவளர் நனந்தலை 2வெண்ணுனை யம்பின் விசையிட வீழ்ந்தோர் எண்ணுவரம் பறியா உவலிடு பதுக்கைச் சுரங்கெழு கவலை கோட்பாற் பட்டென 10. வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர் கைப்பொருள் இல்லையாயினும் 3மெய்க்கொண் டின்னுயிர் செகாஅர் விட்டகல் தப்பற்குப் பெருங்களிற்று மருப்பொடு வரியதள் இறுக்கும் அறனில் வேந்தன் ஆளும் 15. வறனுறு குன்றம் பலவிலங் கினவே. - கடுந்தொடைக் காவினார். (சொ-ள்) 1-3. பல் இதழ் மெல் மலர் உண் கண் - பல இதழ் களையுடைய மெல்லிய மலர் போன்ற மையுண்ட கண்ணினையும், நல்யாழ் நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி - நல்ல யாழின் நரம்பு ஒலிப்பது போன்ற மிக இனிய மொழியினையும் உடைய, நலம் நல்கு ஒருத்தி - நலனெல்லாம் தரவல்ல ஒப்பற்ற நம் காதலி, இருந்த ஊர் - இருக்கும் ஊரானது; 4-10. கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டி - தம் கொம்பினால் பகையாயவற்றைக் குத்தி உழும் களிற்றியானைகளின் கூட்டம் கூட, காடு கால் யாத்த நீடு மரச்சோலை - காடாகப் பரந்த நீண்ட மரங்களையுடைய சோலையிலுள்ள, விழை வெளில் ஆடும் கழைவளர் நனந்தலை - ஒன்றை யொன்று விழைந்த அணில்கள் கூடி ஆடும் மூங்கில் வளர்ந்த அகன்றவிடத்தே, வெள் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர் - நிணம் தோய்தலால் வெள்ளிய முனையினையுடைய அம்பின் வேகம் பட இறந்தோர்களின், எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை - எண்ணின் எல்லை அறிய லாகாத தழையிட்டு மூடிய பதுக்கைகளையுடைய, சுரம் கெழு கவலை கோள்பால் பட்டென - சுரத்திற் பொருந்திய கவர் நெறிகள் ஆறலைக்கும் பகுதியிற் கொள்ளப் பெற்றதாக, வழங்குநர் மடிந்த அத்தம் - வழிப்போவார் இல்லையாகிய அச் சுர நெறியில்; 10-15. இறந்தோர் கைப் பொருள் இல்லை யாயினும் - அறியாது வந்தோர் கையிற் பொருள் இல்லையாயினும், மெய் கொண்டு இன் உயிர் செகார் விட்டு அகல் தப்பற்கு - அவர்தம் மெய்யைப் பற்றிக் கொண்டு அவர் இனிய உயிரினைக் கொல்லாராய் விட்டு அகன்று வந்த பிழைக்காக, பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் - பெரிய களிற்றின் கொம்பொடு புலியின் வரி பொருந்திய தோலைத் தண்டமாகத் தன் ஏவலரை இறுக்கச் செய்யும், அறன்இல் வேந்தன் ஆளும் வறன் உறு குன்றம் பல விலங்கின - அறனில்லாத அரசன் ஆளும் வறட்சியுற்ற குன்றுகள் பல குறுக்கிட்டுள்ளனவே; (என்று தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறினான்). (முடிபு) நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊர், அறனில் வேந்தன் ஆளும் குன்றம் பல விலங்கின. சோலையை யுடைய அகன்ற இடத்தில் வீழ்ந்தோரது பதுக்கைகள் பொருந்திய சுரங் கெழு கவலை கோட்பாற் பட்டென, வழங்குநர் மடிந்த அத்தம் என்றும், அத்தம் இறந்தோர் உயிர் செகாஅர் விட்டகல் தப்பற்கு மருப்பொடு வரி அதள் இறுக்கும் அறனில் வேந்தன் என்றும் கூட்டுக. (வி-ரை) ஈண்டி - ஈண்ட எனத் திரிக்க. கால் யாத்தல் - பரத்தல். கோட்பால் தீங்கின் பகுதி; என்றது ஆறலைக்கும் பகுதி இறுக்கும் - ஏவலரை இறுக்கச் செய்யும் என விரித்துரைக்க. அறனில் வேந்தன் என்றது - காட்டினை ஆளும் தலைவனை. குன்றம் பல விலங்கின வாதலின் இத்துணையும் போந்து இனி வறிதே மீளுதல் ஒல்லா தென்றான் என்க. (மே-ள்) `வெறியறி சிறப்பின்'1 என்னுஞ் சூத்திரத்து, `அறனில் வேந்த னாளும், வறனுறு குன்றம் பல விலங்கினவே' என காட்டுத் தலைவனை நாட்டுத் தலைவன் பெயராற் கூறினர் என்றனர், நச். 110. நெய்தல் (தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.) அன்னை அறியினும் அறிக அலர்வாய் அம்மென் சேரி கேட்பினுங் கேட்க பிறிதொன் றின்மை அறியக் கூறிக் கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக் 5. கடுஞ்சூள் தருகுவல் நினக்கே2 கானல் தொடலை யாயமொடு கடலுடன் ஆடியுஞ் சிற்றில் இழைத்தும் சிறுசோறு குவைஇயும் வருந்திய வருத்தம் தீர யாஞ்சிறி திருந்தன மாக எய்த வந்து 10. தடமென் பணைத்தோள் மடநல் லீரே எல்லும் எல்லின் றசைவுமிக உடையேன் மெல்லிலைப் பரப்பின் விருந்துண் டியானுமிக் கல்லென் சிறுகுடித் தங்கின்மற் றெவனோ எனமொழிந் தனனே ஒருவன் அவற்கண் 15. டிறைஞ்சிய முகத்தெம் புறஞ்சேர்பு பொருந்தி இவைநுமக் குரிய வல்ல இழிந்த கொழுமீன் வல்சி என்றனம் இழுமென நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ காணா மோவெனக் காலிற் சிதையா 20. நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும் என்னே குறித்த நோக்கமொடு நன்னுதால் ஒழிகோ யானென அழிதகக் கூறி யான்பெயர் கென்ன நோக்கித் தான்தன் நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி 25. நின்றோன் போலும் 3இன்றுமென் கட்கே. - போந்தைப் பசலையார். (சொ-ள்) 5-9. தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும் - மாலைபோன்ற ஆயத்தாரோடு கடலில் ஒருங்கு விளையாடியும், கானல் சிற்றில் இழைத்தும் - கடற்கரைச் சோலையில் சிறு வீடு கட்டியும், சிறு சோறு குவைஇயும் - சிறு சோற்றை அட்டுக் குவித்தும், வருந்திய வருத்தம் தீர - இங்ஙனம் வருந்திய வருத்தம் நீங்க, யாம் சிறிது இருந்தனமாக - யாம் சிறிது இளைப்பாறி யிருந்தேமாக (அதுபோது); 9-14. ஒருவன் எய்த வந்து - ஒரு தலைவன் எம்மிடம் அணுக வந்து, தடமென் பணைத் தோள் மட நல்லீரே - பெரிய மெல்லிய மூங்கில் போலும் தோளினையுடைய மடப்பம் வாய்ந்த நல்லீரே, எல்லும் எல்லின்று - பகலும் ஒளி இழந்தது, அசைவு மிக உடையேன் - தளர்ச்சி மிகவும் உடையேன், மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு யானும் - யானும் மெல்லிய இலைப் பரப்பின் நீயிர் இடும் விருந்துணவினை உண்டு, இக் கல் என் சிறு குடித் தங்கின் எவனோ - இந்தக் கல்லென்ற ஆரவாரமுடைய சிறுகுடியில் தங்கினால் எய்தும் குறை யாது? என மொழிந்தனன் - என்று கூறினன்; 14-17. அவன் கண்டு இறைஞ்சிய முகத்தெம் - அவனைக் கண்டு கவிழ்ந்த முகத்தேமாய், புறம் சேர்பு பொருந்தி - மறைவான இடத்தே சேர்ந்திருந்து, இழும் என - இழுமென்ற மெல்லிய குரலில், இவை நுமக்கு உரிய அல்ல - இவ்வுணவு நுமக்கு ஏற்றன அல்ல, இழிந்த கொழுமீன் வல்சி என்றனம் - இழிவாய கொழுமீனாலாய உணவு என்று கூறினேம்: (பின்னர்;) 18-22. நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ - நீண்ட கொடிகள் அசையாநிற்கும் நாவாய்கள் தோன்றுவனவற்றை, காணாமோ என- யாம் காண்பே மல்லேமோ என்று கூறி, காலின் சிதையா - எம் சிற்றில் சிறு சோறுகளைக் காலாற் சிதைத்து விட்டு, நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் -அங்கு நில்லாது போய பலருள்ளும், என்னே குறித்த நோக்கமொடு - அவன் என்னையே குறித்து நோக்கிய பார்வையொடு, நல் நுதால் ஒழிகோ யான் என அழிதகக் கூறி - நல்ல நெற்றியினை யுடையாளே செல்லுகோ என்று என் நெஞ்சம் அழிந்திடக் கூற; 23-25. யான் பெயர்க என்ன - யான் செல்க என்னலும், நோக்கி - (பெயராது என்னை) நோக்கியவனாய், தான் தன் நெடுந் தேர்க் கொடிஞ்சி பற்றி - அவன் தனது நீண்ட தேரின் கொடிஞ்சியினைப் பற்றிக் கொண்டு, நின்றோன் - நின்றனன், இன்றும் என் கட்குப் போலும் - இன்றும் என் கண் முன் நிற்பது அந்நிலையே போலும்; 1-5. அன்னை அறியினும் அறிக - இதனை அன்னை அறியினும் அறிவாளாக, அலர் வாய் அ மென் சேரி கேட்பினும் கேட்க - அலர் கூறும் வாயினையுடைய அம் மெல்லிய சேரியினர் கேட்பினும் கேட்டிடுக, பிறிது ஒன்றும் இன்மை அறியக் கூறி - வேறொன்றும் இல்லாமையை நீ யறியக் கூறி, கொடுஞ் சுழிப் புகார்த் தெய்வம் நோக்கி - வளைந்த சுழிகள் மேவிய புகாரிடத்துள்ள தெய்வத்தை நோக்கி, நினக்குக் கடுஞ்சூள் தருகுவன் - நினக்குக் கடிய சூள் செய்து தருவன். (முடிபு) கானல் தொடலை ஆயமொடு வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது இருந்தனம்; ஒருவன், அசைவு மிக உடையேன், விருந்துண்டு இச் சிறு குடித் தங்கின் எவனோ என மொழிந்தனன்; இழிந்த கொழுமீன் வல்சி என்றனம்; நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் என்னே குறித்த நோக்கமொடு ஒழிகோ யானென அழிதகக் கூறி, யான் பெயர்க என்ன, கொடிஞ்சி பற்றி நின்றோன் போலும் இன்றும் என் கட்கே; (இதனை) அன்னை அறியினும் அறிக; சேரி கேட்பினும் கேட்க. பிறிதொன்றின்மை அறியக் கூறிப் புகார்த் தெய்வம் நோக்கி நினக்குக் கடுஞ்சூள் தருகுவன். (வி-ரை) `அன்னை என்றது நற்றாயை. சேரி: ஆகுபெயர். தலைவியுற்ற நோய்க்குக் காரணம் பிறிதொன்று மின்மையை என்க, பிறிதொன்றும் என்னும் முற்றும்மை தொக்கது. மற்றெவனோ: மற்று யான் என்னூர்க்குச் செல்லுவ தொழிந்து எனப் பொருள் தருதலின் வினைமாற்று. என்னே - என்னையே. கூறி, கூற எனத் திரிக்க. நின்றோன் போலும் : நின்றோன் என முற்றாக்கி அந்நிலையே போலும் என விரித்துரைக்க. என்று மென் மகட்கே என்பது பாடமாயின், அங்ஙனம் நின்றவனே என்றும் என் மகட்கு உரியன் போலுமென அன்னை அறியினும் அறிக என இயைத்துரைக்க. கடுஞ்சூள் என்பதனை, கடி என்னும் உரிச்சொல் முன்னேற்றுப் பொருளில் வந்ததற்கு எடுத்துக்காட்டி, முன்னேற்று, புறத்திலன்றித் `தெய்வ முதலாயினவற்றின் முன்னின்று தெளித்தல்'1 என்பர், சேனா. மேலெல்லாம் ஆயத்தாரையும் தலைவியையும் உளப்படுத்திக் கூறிய தோழி பின்னர் `நில்லாது பெயர்ந்த பல்லே முள்ளும்'2 என்னாது, பல்லோருள்ளு மெனத் தன்னை வேறு பிரித்துக் கூறியது அவரெல்லாம் தலைவனுக்கு இரங்காது சென்றமையும், தான் மட்டும் தனித்து நின்றமையும் தோன்றக் கூறியதாகும் என்பர், நச். (மே-ள்) `மாயோன் மேய'3 என்னுஞ் சூத்திரத்து, நெய்தனிலத்தில் நுளையர்க்கு வலைவளம் தப்பின் அம் மகளிர் கிளையுடன் குழீஇச் சுறவுக்கோடு நட்டுப் பரவுக்கடன் கொடுத்தலின் ஆண்டு வருணன் வெளிப்படும் என்று கூறி, கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக் கடுஞ்சூள் தருகுவல் என வரும் என்றும் `மெய்தொட்டுப் பயிறல்'1 என்னும் சூத்திரத்து, `மெல்லிலைப் பரப்பின் விருந்துண்டி யானுமிக், கல்லென் சிறுகுடித் தங்கின் மற்றெவனோ' என வருவது `ஊரும் பேரும் கெடுதியும் பிறவும்.... கூறி' என்ற சூத்திரப் பகுதியில், பிறவும் என்றதனாற் கொள்க என்றும், அச் சூத்திரத்துத் `தண்டாது இரப்பினும்' என்னும் பகுதிக்கண், `எல்லும்.... ஒருவன் எனத் `தலைவன் இரவுக்குறி வேண்டியதனைத் தோழி கூறியவாறு காண்க' என்றும், `எளித்த லேத்தல்'2 என்னுஞ் சூத்திரத்து, `எல்லும்.... ஒருவன்' இது எளித்தல் என்றும், அச்சூத்திரத்து, பிறிதொன்றின்மை..... கடுஞ்சூ டருகுவ னினக்கே' இது தலைப்பாடு என்றும் கூறுவர், நச். `கண்ணினுஞ் செவியினும்' என்னுஞ் சூத்திரத்து, `ஒழிகோ யானென அழிதகக் கூறி'3 என்புழி, தலைமகன் மனத்து நிகழ்ந்த அழிவெல்லாம் ஒழிகோ யான் என்ற உரையானே உணர்ந்தமையின் அது செவியுணர்வு எனப்படும் என்று கூறினர், பேரா. 111. பாலை (தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகளை யாற்றுவித்தது.) உள்ளாங் குவத்தல் செல்லார் கறுத்தோர் எள்ளல் நெஞ்சத் தேஎச்சொல் நாணி வருவர் வாழி தோழி யரச யானை கொண்ட துகிற்கொடி போல 5. அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர மழையென மருண்ட மம்மர் பலவுடன் ஒய்களி றெடுத்த நோயுடை நெடுங்கை தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும் 10. அத்தக் கேழல் அட்ட நற்கோள் செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்பக் குருதி யாரும் எருவைச் செஞ்செவி மண்டம ரழுவத் தெல்லிக் கொண்ட புண்தேர் விளக்கின் தோன்றும் 15. விண்தோய் பிறங்கல் மலையிறந் தாரே. - பாலைபாடிய பெருங்கடுங்கோ. (சொ-ள்) 3. தோழி வாழி-; 1-2. உள்ளாங்கு உவத்தல் செல்லார் - தமக்குப் பொருள் உள்ள அளவிற்கு மகிழ்த லிலராய், கறுத்தோர் எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி - பகைவர் இகழும் நெஞ்சத்துடன் கூறும் அம்பு போலும் சொல்லிற்கு நாணினராய்; 3-6. அரச யானை கொண்ட துகிற்கொடி போல - பட்டத்து யானை தன்மீது கொண்ட துகிற்கொடி போல, ஓடைக் குன்றத்து - ஓடை என்னும் குன்றத்துள்ள, அலந்தலை ஞெமையத்து - காய்ந்த தலையினையுடைய ஞெமை மரத்தின்மீது, வலந்த சிலம்பி - பின்னிய சிலம்பியின் கூடானது, கோடையொடு துயல்வர - மேல் காற்றால் அசைய; 7-15. மழை என மருண்ட - அதனை மேகம் என மயங்கிய, மம்மர் ஒய் களிறு பல உடன் - மயக்கத்தினையுடைய இளைத்த களிறுகள் பலவும் ஒருங்கே, எடுத்த நோயுடை நெடுங் கை - தூக்கிய வருத்தத்தினையுடைய நீண்ட கைகள், தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் - புகழினைத் திரட்டிக் கூறும் கூத்தரது தூம்பினைப் போலத் தோன்றி ஒலிக்கும் காட்டிலுள்ள, கேழல் அட்ட நல்கோள் செந்நாய் ஏற்றை - ஆண் பன்றியினைக் கொன்ற தன் இரையினை நன்கு பற்றிக்கொள்ளும் திறனுடைய செந்நாயின் ஏற்றை, கம் என ஈர்ப்ப - விரைவாக அதனை இழுத்திட, குருதி ஆரும் எருவைச் செஞ்செவி - வழியெலாம் ஒழுகிய குருதியினைப் பருகும் பருந்தின் சிவந்த செவிகள், மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட புண்தேர் விளக்கின் தோன்றும் - மிக்க போர்க்களப் பரப்பில் இராப்பொழுதில் கைக்கொண்ட வீரர்களது மருமத்துப் புண்களை ஆராயும் விளக்குகளைப் போன்று தோன்றும், விண்தோய் பிறங்கல் மலை இறந்தோர் - வானைத் தோயும் விளக்கத்தையுடைய மலையினைக் கடந்து பொருள் ஈட்டச் சென்றோராய நம் தலைவர்; 3. வருவர் - விரைய வருவர் (எனத் தோழி தலைவியை ஆற்றுவித்தாள்.) (முடிபு) தோழி வாழி! உவத்தல் செல்லார், ஏஎச் சொல் நாணி மலையிறந்தோர் வருவர். (வி-ரை) உள்ளாங்கு - உள்ளபடி, ஏஎச்சொல் - பெருமிதத்துடன் கூறும் சொல்லுமாம். அலந்ததலை அலந்தலை யென விகாரப்பட்டது. ஞெமையத்து, அத்து : சாரியை. ஓடைக் குன்றத்திற்கு அரசயானையும், ஞெமையத்து வலந்த சிலம்பிக் கூட்டிற்குத் துகிற் கொடியும் உவமம். உண்டற்கு நீரின்றி மெலிந்த களிறு மேலுள்ள சிலம்பிக்கூட்டை மேகமென மருண்டு அதில் நீருண்டற்குக் கையை மேலே எடுத்த தென்க. கோடியர் தூம்பின் ஒலியும் யானையின் உயிர்ப்பொலியும் ஒரு தன்மையன என்பது, `கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின்'1 என்பதனாலும் அறிக. உயிர்க்கும் அத்தம் எனவும், அத்தத்தில் கேழலட்ட ஏற்றை ஈர்ப்ப அதன் குருதியை ஆரும் எருவை எனவும் இயையும். குருதி படிந்த அத்தம் அமர்க்களம் போலாக, எருவைச் செஞ்செவி ஆண்டுள்ள விளக்குப் போலத் தோன்றும். கம்மென : திசைச் சொல். (உ-றை) சிலம்பிக் கூட்டினை மேகமெனக் கருதும் யானையைக் காணும் தலைவர், தாம் பொருளல்லதனைப் பொருளெனக் கருதியதனை உணர்ந்து விரைய மீள்வர் என்றபடி. 112. குறிஞ்சி (இரவுக்குறி வந்த தலைமகனை யெதிர்ப்பட்டு நின்று தோழி சொல்லி வரைவு கடாயது.) 1கூனல் எண்கின் குறுநடைத் தொழுதி சிதலை செய்த செந்நிலைப் புற்றின் மண்புனை நெடுங்கோ டுடைய வாங்கி இரைநசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல் 5. ஈன்றணி வயவுப்பிணப் பசித்தென மறப்புலி ஒளிறேந்து மருப்பின் களிறட்டுக் குழுமும் பனியிருஞ் சோலை யெமியம் என்னாய் தீங்குசெய் தனையே யீங்குவந் தோயே நாளிடைப் படினென் றோழி வாழாள் 10. தோளிடை முயக்கம் நீயும் வெய்யை 2கழியக் காதலர் ஆயினும் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் வரையின் எவனோ வான்தோய் வெற்ப கணக்கலை இகுக்கும் கறியிவர் சிலம்பின் 15. மணப்பருங் காமம் புணர்ந்தமை அறியார் தொன்றியல் மரபின் மன்றல் அயரப் பெண்கோள் ஒழுக்கம் கண்கொள நோக்கி நொதுமல் விருந்தினம் போலவிவள் புதுநாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே. - நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர் கிழார். (சொ-ள்) 13. வான்தோய் வெற்ப - வானை அளாவும் மலையை யுடைய தலைவனே!, 1-4. கூனல் குறுநடை எண்கின் தொழுதி - கூனிய முதுகினையும் குறுகக்குறுக அடியிட்டு நடக்கும் நடையினையும் உடைய கரடிக் கூட்டம், சிதலை செய்த செந்நிலைப் புற்றின் - கறையான் எடுத்த சிவந்த நிலையினையுடைய புற்றினது, மண்புனை நெடுங்கோடு உடைய வாங்கி - மண்ணாற் புனைந்த நீண்ட உச்சி உடைந்திடப் பெயர்த்து, இரை நசைஇப் பரிக்கும் அரைநாள் கங்குல் - புற்றாஞ்சோறாய இரையினை விரும்பிச் சூழ்ந்து கொண்டிருக்கும் நடுநாள் இரவில்; 5-8. ஈன்ற அணி வயவு பிண பசித்தென - குட்டியை ஈன்ற அண்மையினையுடைய வேட்கையையுடைய பெண்புலி பசித்ததாக, மறப்புலி - தறுகண்மையையுடைய ஆண்புலி, ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும் - ஒளி வீசுகின்ற ஏந்திய கோட்டினையுடைய ஆண் யானையைக் கொன்று முழங்குகின்ற, பனி இரும்சோலை - குளிர்ந்த கரிய சோலையில், எமியம் என்னாய் - யாம் தமியேம் என்று நினையாயாய், தீங்கு செய்தனையே ஈங்கு வந்தோயே - ஈங்கு வருதலின் நீ தீங்கு செய்தாய் ஆவாய்; 9-10. நாள் இடைப்படின் என் தோழி வாழாள் - நீ வாராது ஒரு நாள் இடையீ டுறினும் என்தோழி உயிர் வாழாள்காண், தோளிடை முயக்கம் நீயும் வெய்யை - அங்ஙனே நாளும் என் தோழியின் தோளின் கண் முயங்குதலை நீயும் விரும்புதலுடையை; 11-12. சான்றோர் கழியக் காதலர் ஆயினும் - சான்றோராவார் மிகக் காதல் கொண்டார் ஆயிடினும், பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் - பழியுடன் கூடி வரும் இன்பினை விரும்பார் ஆகலின்; 13. வரையின் எவன் - நீ வரைந்து கொள்ளின் குறையாவது என்னை? (அங்ஙனம் வரைந்திடின்;) 14-16. கணம் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பில் - கூட்ட மாகிய கலைமான்கள் தாழ ஒலிக்கும் மிளகுக் கொடி படர்ந்த மலைச்சாரலில், மணப்பு அரும் காமம் புணர்ந்தமை அறியார் - எய்துதற்கு அரிய காமத்தால் நீர் கூடிய களவொழுக்கத்தினை அறியாத எமர், தொன்று இயல் மரபின் மன்றல் அயர - தொன்று தொட்டு வரும் முறைப்படி வதுவை நிகழ்த்திட; 17-19. பெண்கோள் ஒழுக்கம் கண்கொள நோக்கி - நீ இவளை வரைந்துகொள்ளும் அவ்வொழுக்கத்தினைக் கண்ணார நோக்கி, யாம் நொதுமல் விருந்தினம் போல - யாம் அயலேமாகிய புதியேம் போல, இவள் புதுநாண் ஒடுக்கமும் காண்குவம் - இவள் புதிய நாணாலாகிய ஒடுக்கத்தினையும் காண்பே மன்றோ? (முடிபு) அரை நாட் கங்குல் புலி களிறு அட்டுக் குழுமும் சோலையில் ஈங்கு வந்தோய் தீங்கு செய்தனை; நாள் இடைப்படின் என் தோழி வாழாள்; தோளிடை முயக்கம் நீயும் வெய்யை; சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்; வரையின் எவன்? மன்றல் அயர அப் பெண்கோளொழுக்கத்தை நோக்கி யாம் நொதுமல் விருந்தினம் போல இவள் புது நாண் ஒடுக்கமும் காண்குவம். (வி-ரை) `கூரலெண்கின்' என்ற பாடத்திற்கு, வளைந்த உடம்பினையுடைய கரடியின் என்பதே பொருளாகும். அணி - அணிமையுடைய. பிணா என்பது பிண என்றாயது, `குறியத னிறுதிச் சினைகெட வுகரம் - அறிய வருதல் செய்யுளு ளுரித்தே'1 என்னுஞ் சூத்திரத்து, அறிய என்னும் இலேசாற் கொள்ளப்படும். கழியாக் காதலர் என்பது பாடமாயின், நீங்காத காதலையுடையார் என்க. மன்றல் நிகழ்த்தும் தமராவார், இருமுது குரவரும் சான்றோரு முதலாயவர். (உ-றை) கரடியின் கூட்டம் சிதலை செய்த புற்றின் கோட்டினை யுடைத்து, அதிலுள்ள புற்றாம் பழஞ் சோற்றை யுண்டும், மேலும் அதனை விரும்பிச் சூழ்ந்தாற் போல, நீ எமர் காவலைச் சிதைத்துத் தலைவியை நுகர்ந்தும் மீட்டும் அக் கள வொழுக்கத்தையே விரும்பிப் பகலினும் இரவினும் சூழவாராநின்றாய் என்பது. (மே-ள்) `நாற்றமும் தோற்றமும்'2 என்னுஞ் சூத்திரத்து, `ஆற்றது தீமை யறிவுறு கலக்கமும்' என்பதற்கு இப்பாட்டு உதாரண மாகும் என்றும், `பொழுது மாறுங் காப்பும்'3 என்னுஞ் சூத்திரத்து `நன்மையுந் தீமையும் பிறிதினைக் கூறலும்' என்ற பகுதிக்கு, `கழி பெருங் காதல ராயினுஞ் சான்றோர், பழியொடு வரூஉ மின்பம் வெஃகார்' எனப் பிறர்மேல் வைத்துத் தலைவனை அறிவு கொளுத்தினமையின் வழுவாய் அமைந்தது என்றும், `பழியொடு வரூஉ மின்பம் வெஃகார்' எனவே, புகழொடு வரூஉம் இன்பம் வெஃகுவ ரெனக் கொள்ள வைத்தலின், நன்மையுந் தீமையும் பிறிதின்மேல் வைத்துக் கூறிற்றாம் என்றும் கூறினர், நச். `கல்வி தறுகண்'4 என்னுஞ் சூத்திரத்து, `கழியாக் காதல ராயினுஞ் சான்றோர், பழியொடு வரூஉ மின்பம் வெஃகார்' என்பது புகழ் பற்றிப் பிறந்த பெருமிதம்' என்பர், பேரா. 113. பாலை (தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) நன்றல் காலையும் நட்பிற் கோடார் சென்று வழிப்படூஉந் திரிபில் சூழ்ச்சியில் புன்றலை மடப்பிடி அகவுநர் பெருமகன் 5அமர்வீசு வண்மகிழ் அஃதைப் போற்றிக் 5. காப்புக்கை நிறுத்த பல்வேற் கோசர் இளங்கள் கமழும் நெய்தலம் செருவின் வளங்கெழு நன்னா டன்னவென் தோள்மணந் தழுங்கல் மூதூர் அலரெடுத் தரற்ற நல்காது துறந்த காதலர் என்றும் 10. கல்பொரூஉ மெலியாப் 1பாடினோன் அடியன் 2அல்கு வன்சுரைப் பெய்த வல்சியன் இகந்தன வாயினும் இடம் பார்த்துப் பகைவர் ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பில் குவையிமில் விடைய வேற்றா ஒய்யும் 15. கனையிருஞ் சுருணைக் கனிகாழ் நெடுவேல் விழவயர்ந்த தன்ன கொழும்பல் திற்றி எழாஅப் பாணன் நன்னாட் டும்பர் நெறிசெல் வம்பலர்க் கொன்ற தெவ்வர் எறிபடை கழீஇய சேயரிச் சின்னீர் 20. அறுதுறை யயிர்மணல் படுகரைப் போகிச் சேயர் என்றலில் சிறுமை யுற்றவென் கையறு நெஞ்சத் தெவ்வம் நீங்க அழாஅம் உறைதலும் உரியம் பராரை அலங்கல் அஞ்சினைக் குடம்பை புல்லெனப் 25. புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந் தாங்கு மெய்யிவ ணொழியப் போகிஅவர் செய்வினை மருங்கில் செலீஇயரென் உயிரே. - கல்லாடனார். (சொ-ள்) 1-5. நன்று அல் காலையும் நட்பில் கோடார் - (நட்டார் ஆக்கமின்றிக்) கேடுற்ற காலையும் நட்புத் தன்மையிற் றிரியாராய், சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியில் - அந் நட்டார்பாற் சென்று அவர் குறிப்பிற் படும் மாறுபாடில்லாத அறிவுடைமையால், அகவுநர் பெருமகன் - கூத்தரைப் புரக்கும் தலைவனாய், புன்தலை மடப்பிடி அமர் வீசு வண்மகிழ் - (அவர்கட்குப்) புல்லிய தலையினையுடைய இளைய பிடியினை அமரின்கண் அளிக்கும் வண்மையாலாகிய மகிழ்வுடைய, அஃதை போற்றி - அஃதை என்பானைப் பாதுகாத்து, காப்புக் கை நிறுத்த - அவனைக் காவல் மிக்க இடத்தே நிலை நிறுத்திய, பல்வேல் கோசர் - பல வேற்படையினை யுடைய கோசரென்பவரது; 6-7. இளங் கள் கமழும் நெய்தலஞ் செறுவின் - புதிய கள் கமழும் நெய்தலஞ் செறு எனும், வளம் கெழு நல் நாடு அன்ன - வளம் பொருந்திய நல்ல நாட்டை யொத்த; 7-9. என் தோள் மணந்து - என் தோளினைக் கூடி, அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற - ஆரவாரமுடைய பழைய ஊர் அலரினை மிகுத்துக் கூற, நல்காது துறந்த காதலர் - அருளாது விட்டேகிய நம் காதலர்; 9-11. என்றும் கல் பொரூஉ மெலியாப் பாடுஇன் நோன் அடியன் - எஞ்ஞான்றும் கல்லைப் பொருது மெலிவுறாத ஓசை இனிய வலிய அடியினை யுடையவனும், அல்கு வன் சுரை பெய்த வல்சியன் - மிக்க வலிய மூங்கிற் குழாயிற் பெய்த உணவினை யுடையவனும்; 12-17. இகந்தனவாயினும் - தன் நாட்டெல்லையைக் கடந்து சேய்மைக்கண்ண வாயினும், இடம் யார்த்து - கவரும் செவ்வி பார்த்து, பகைவர் ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பில் - பகைவர் ஆவினைப் பாதுகாத்து உறையும் உணவு மிக்க அரண்களிற் சென்று, குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் - திரண்ட இமிலையுடைய விடைகளுடன் கூடிய பகைப்புலத்து ஆக்களைக் கவர்ந்து செலுத்தும், கனை இரும் சுருணை கனி காழ் நெடுவேல் - செறிந்த கரிய பூணையும் நெய் கனிந்த தண்டையுமுடைய நீண்ட வேலினையும், விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி - விழாச் செய்தாலொத்த கொழுமை யாகிய பல உணவுகளையுமுடைய, எழாஅப் பாணன் நன்னாட்டு உம்பர் - பகைவர்க்குப் புறக்கிடாத பாணன் என்பானது நல்ல நாட்டிற்கு அப்பாற்பட்ட; 18-22. நெறிசெல் வம்பலர்க் கொன்ற தெவ்வர் - வழியிற் போகும் புதியர்களைக் கொன்ற ஆறலைப்போர், எறி படை கழீஇய சேய் அரிச் சில் நீர் - தாங்கள் எறிந்த படைக்கலத்தைக் கழுவிய சிவந்த நிறமுடைய அரித்தோடும் சின்னீரையுடைய, அறு துறை அயிர் மணல் படுகரை போகி - மக்கள் இயக்கம் அற்ற துறையாகிய நுண்மணல் பொருந்திய கரையினைத் தாண்டி, சேயர் என்றலின் - சேய்மைக்கண் உள்ளார் என்று பலரும் கூறலின், சிறுமையுற்ற என் கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க - நோயுற்ற என் செயலற்ற நெஞ்சத்துத் துன்பம் ஒழிய; 23-27. பரு அரை அலங்கல் அம் சினைக் குடம்பை புல் என- பருத்த அரையிற் கிளைத்த அசையும் அழகிய கிளையிலுள்ள தன் கூடுபொலிவற்றொழிய, புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு - தான் பெயர்ந்து போக எண்ணிய புலத்திடத்துப் பறவை புறப்பட்டுச் சென்றாற் போல, மெய் இவண் ஒழிய - எனது மெய் இங்குத் தனித் தொழிய, என் உயிர் போகி-என் உயிர் பிரிந்து புறப்பட்டு, அவர் செய்வினை மருங்கில் செலீஇயர் - அவர் வினை செய்யுமிடத்திற் செல்வதாக, அழாஅம் உறைதலும் உரியம் - அதனானே நாம் அழாதேமாய் உறைதற்கு உரியம் ஆவேம். (முடிபு) தோழி! கோசர் நன்னாடன்ன என் தோள் மணந்து துறந்த காதலர் பாணன் நன்னாட்டும்பர், படுகரை போகிச் சேய ரென்றலின் எவ்வம் நீங்க என் உயிர் போகி அவர் வினைசெய் மருங்கிற் செலீஇயர்; அழாஅம் உறைதலும் உரியம். அடியனும் வல்சியனுமாகிய வேற்றா ஒய்யும் பாணன் என்க. (வி-ரை) கூத்தர் முதலாயினார்க்கு யானை முதலியவற்றை அமர்க்களத்தில் அளித்தலை, `மாற்றார் உறுமுரண் சிதைத்தனின் நோன்றாள் வாழ்த்திக், காண்கு வந்திசிற் கழறொடி யண்ணல்........ மழையினும் பெரும்பயம் பொழிதி யதனாற், பசியுடை யொக்கலை யொரீஇய, இசைமேந் தோன்றனின் பாசறை யானே'1 என்பதனால் அறிக. மாவீசு என்பது பாடமாயின், பிடியொடு களிற்றினை வழங்கும் என்க. நெய்தலஞ் செறுவாகிய நன்னா டென்க. இன்சாரியை அல் வழிக்கண் வந்தது. பாடு இன் நோன் அடியன் ஓசை இனிய வலிய அடியை யுடையவன்; செருப்பணிந்து பரலில் நடத்தலின் ஓசை இனிய என்றார். பரட்டினோ னடி என்ற பாடத்திற்குப் பரட்டினையுடைய வலிய அடி யென்க. விடைய வேற்றா - வேற்றுப்புலத்து விடை களோடு கூடிய ஆக்கள். அடியன் வல்சியன் ஆகிய பாணன் எனவும், வேற்றா ஒய்யும் பாணன் எனவும், வேலையும் திற்றியையும் உடைய பாணன் எனவும், தனித்தனி கூட்டுக. `வலிமிகு மொய்ம்பிற் பாணன்' எனவும் `வடாஅது வல்வேற் பாணன் நன்னாடு' எனவும் இந்நூலுட் பிறாண்டும் வருதலிற் பாணனென்பான் தமிழ்நாட்டின் வடக்கண் இருந்த ஒரு காட்டுத் தலைவன் ஆவன் என்க. காதலர் சேய ரென்றலின் எனக் கூட்டுக. உயிர் உடம்பை விட்டுப் போதற்குப் புள் குடம்பையை விட்டுச்செல்லுதல் உவமமாதலை, `சேக்கை மரனொழியச் சேணீங்கு புட்போல, யாக்கை தமர்க் கொழிய நீத்து'2 என்பதனா லறிக. எவ்வம் நீங்க, அழாம் உறைதலும் உரியம் என்றது, உயிர் சென்ற காலத்து நிலையைக் கருதியது. 114. முல்லை (வினைமுற்றி மீளுந் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.) கேளாய் எல்ல தோழி வேலன் வெறியயர் களத்துச் சிறுபல தாஅய விரவுவீ உறைத்த ஈர்நறும் புறவின் உரவுக்கதிர் மழுங்கிய கல்சேர் ஞாயிறு 5. அரவுநுங்கு மதியின் ஐயென மறையும் சிறுபுன் மாலையும் உள்ளார் அவரென நம்புலந் துறையும் எவ்வம் நீங்க நூலறி வலவ, கடவுமதி உவக்காண் நெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை 10. யாமங் கொள்பவர் நாட்டிய நளிசுடர் வானக மீனின் விளங்கித் தோன்றும் அருங்கடிக் காப்பின் அருஞ்வரு மூதூர்த் திருநகர் அடங்கிய மாசில் கற்பின் அரிமதர் மழைக்கண் அமைபுரை பணைத்தோள் 15. அணங்குசால் அரிவையைக் காண்குவம் பொலம்படைக் கலிமாப் பூண்ட தேரே. -.......................... (சொ-ள்) 8. நூல் அறி வலவ - பரிநூல் வல்ல பாகனே!, 1-7. எல்ல தோழி கேளாய் - எல்லா ஏடி தோழியே யான் கூறுவதனைக் கேட்பாயாக; வேலன் வெறி அயர் களத்து தாய - வேலன் வெறியாடும் களத்தில் பரந்த, சிறு பல விரவு வீ - சிறிய பலவாய கலந்த பூக்கள்போல, உறைத்த ஈர் நறும் புறவின் - பூக்கள் உதிர்ந்த குளிர்ந்த நறிய முல்லை நிலத்தே, உரவு கதிர் மழுங்கிய கல்சேர் ஞாயிறு - வலிய கதிரின் வெம்மை குறைந்த மேற்கு மலையைச் சேர்ந்த ஞாயிறு, அரவு நுங்கு மதியின் ஐயென மறையும் - பாம்பு விழுங்கும் திங்களென மெல்ல மறைகின்ற, சிறு புல் மாலையும் உள்ளார் அவர் என - சிறிய புல்லிய மாலைக்காலத்தும் நம் தலைவர் நம்மை நினைந்திலரே என்றிவ்வாறு நம் தலைவி தன் தோழியை நோக்கிக்கூறி, நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க - நம்மை வெறுத்து உறையும் துன்பம் நீங்குமாறு; 8-15. நெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை - நெடிய கொடி அசையும் வானைத் தோயும் மதிலின்கண், யாமம் கொள்பவர் நாட்டிய நளிசுடர் - இராப்பொழுதைக் காத்திருப்போர் ஏற்றிய நெருங்கிய விளக்குக்கள், வான்அக மீனின் விளங்கித் தோன்றும் - வானிடத்தேயுள்ள மீன்போல விளக்கமுற்றுக் காணப்பெறும், அருகடி காப்பின் - அணுகுதற்குரிய மிக்க காவலினையுடைய, அஞ்சு வரும் மூதூர் - பகைவர்க்கு அச்சத்தினைத் தரும் முதிய ஊரிலுள்ள, திருநகர் அடங்கிய - செல்வமுள்ள மனையில் தயங்கிய, மாசு இல் கற்பின் - குற்றமற்ற கற்பினையும், அரி மதர் மழைக்கண் - செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்களையும், அமை புரை பணைத்தோள் - மூங்கிலை ஒத்த பருத்த தோளினையும் உடைய, அணங்குசால் அரிவையைக் காண்குவம் - தெய்வம்போன்ற சிறந்த நம் தலைவியைக் காண்போம்; 16. பொலம்படைக் கலி மா பூண்ட தேர் - பொன்னாலாய சேணத்தினை யணிந்த செருக்கினையுடைய குதிரைகள் பூட்டப் பெற்ற தேரினை; 8. உவக்காண் கடவுமதி - உங்கே செலுத்துவாயாக. (முடிபு) வலவ! நம் தலைவி தோழியை நோக்கி, `சிறுபுன் மாலையும் உள்ளார் அவர்' எனக் கூறி, புலந்து உறையும் எவ்வம் நீங்க, மூதூரில் திருநகர் அடங்கிய அரிவையைக் காண்குவம்! உவக்காண் தேர் கடவுமதி. புரிசையில் நாட்டிய நளிசுடர் வானக மீனின் விளங்கித் தோன்றும் மூதூர் என்க. (வி-ரை) எல்ல - எல்லா; கெழுதகைப் பொதுச்சொல்: கல் - அத்த மலை. கதிர் வெம்மை மழுங்கினமையால் மதிபோல் என்றார். சிறிது சிறிதாக மறைதல் குறித்து அரவு நுங்கு மதி என்றார். ஐயென - வியக்கும் பரிசு என்றுமாம். புன் மாலை - வருத்தத்தைச் செய்யும் மாலையுமாம். நம் புலந்து என்பது விகாரமாயிற்று. நூல் - குதிரையுள மறியும் நூல். உவக்காண் - உங்கே; மூதூர்க்கண் என்றபடி. கடிக்காப்பு : ஒருபொருட் பன்மொழி. அடங்கிய கற்பின் எனக்கொண்டு, ஆறிய கற்பினையுடைய என்றுரைத்தலுமாம். அணங்கு சால் - அருந்ததி போலும் கற்புடைய என்றலுமாம். 115. பாலை (பிரிவிடை வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்ப் பழியிலர் ஆயினும் பலர்புறங் கூறும் அம்பல் ஒழுக்கமும் ஆகிய வெஞ்சொற் சேரியம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக 5. நுண்பூண் எருமை குடநாட் டன்னஎன் ஆய்நலம் தொலையினும் தொலைக என்றும் நோயில ராகநம் காதலர் வாய்வாள் எவ்வி வீழ்ந்த செருவிற் பாணர் கைதொழு மரபின்முன் பரித்திடூஉப் பழிச்சிய 10. வள்ளுயிர் வணர்மருப் பன்ன ஒள்ளிணர்ச் சுடர்ப்பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று அறைமிசைத் தாஅம் அத்தம் நீளிடைப் பிறைமருள் வான்கோட் டண்ணல் யானைச் சினமிகு முன்பின் 1வாமான் அஞ்சி 15. இனங்கொண் டொளிக்கும் அஞ்சுவரு கவலை நன்னர் ஆய்கவின் தொலையச் சேய்நாட்டு நந்நீத் துறையும் பொருட்பிணிக் கூடா மையின் நீடி யோரே. - மாமூலனார். (சொ-ள்) (தோழி!) 1-4. அழியா விழவின் அஞ்சுவரும் மூதூர் - என்றும் நீங்காத விழாவினையுடைய பகைவர்க்கு அச்சம் தரும் இம் முதிய ஊரின் கண்ணே, பலர் - பலரையும், பழியிலராயினும் - அவர் பழி யொன்றும் இலராயினும், புறங்கூறும் அம்பல் ஒழுக்கமும் - புறஞ்சொற் கூறுதலாகிய அம்பல் ஒழுக்கத்தினையும், ஆகிய வெம் சொல் - வெவ்விய சொல்லையும் உடையாராகிய, சேரி பெண்டிர் எள்ளினும் எள்ளுக - சேரிப் பெண்டிர் நம்மை இகழினும் இகழுக; 5-6. நுண்பூண் எருமை குட நாடு அன்ன - நுண்ணிய தொழிற் பாடமைந்த பூணினையுடைய எருமை யென்பானது குட நாட்டினையொத்த, என் ஆய் நலம் தொலையினும் தொலைக - எனது அழகிய நலம் தொலையினும் தொலைவதாக; 7-12. வாய் வாள் எவ்வி வீழ்ந்த செருவில் - தப்பாத வாட்படை யினையுடைய எவ்வி என்பான் வீழ்ந்த போர்க்களத்தே, பாணர் பாணர்கள், கைதொழு மரபின் - கையாற் றொழும் முறைமையொடு, முன் பழிச்சிய - முன்பெல்லாம் பராவிய (யாழின்), வள் உயிர் வணர் மருப்பு - வளம் பொருந்திய ஒலியையுடைய வளைந்த கோட்டினை, பரித்து இடூஉ அன்ன - ஒடித்துப் போகட்டால் ஒத்த, ஒள் இணர் சுடர் பூ கொன்றை - ஒளி பொருந்திய கொத்துக்களையுடைய சுடரும் பூக்களையுடைய கொன்றையினது, ஊழ் உறு விளை நெற்று - முறையாக முற்றி விளைந்த நெற்றுக்கள், அறைமிசைத் தாஅம் அத்தம் நீள் இடை - பாறை மீது பரந்து கிடக்கும் சுரத்தின் நீண்ட நெறியிலுள்ள, 13-15. பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை - பிறையினை யொத்த வெள்ளிய கோட்டினையுடைய பெருமை தங்கிய யானைகளையும், சினம் மிகு முன்பின் வாம் மான் அஞ்சி - சினம் மிக்க வலிமையையும் தாவும் குதிரைகளையுமுடைய அஞ்சி என்பான், இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சு வரு கவலை - பகைவரது ஆனினங்களைக் கைப்பற்றி மறைத்திடும் அச்சந்தோன்றும் கவர்த்த நெறிகளிலே; 16-18. நன்னர் ஆய்கவின் தொலைய - நன்றாகிய நமது அழகு தொலைய, நம் நீத்துச் சேய் நாட்டு உறையும் பொருட்பிணி - நம்மைப் பிரிந்து நெடுந் தூரத்திலுள்ள நாட்டில் வதிதற்கேதுவாய பொருளீட்டும் செயல், கூடாமையின் நீடியோர் - உரிய காலத்தினுள் முற்றாமையின் காலம் தாழ்ந்திருப்போர் ஆகிய; 6-7. நம் காதலர் என்றும் நோயிலர் ஆக - நம் காதலர் என்றும் நோயின்றி இனிதிருப்பாராக. (முடிபு) மூதூரில் வெஞ்சொற் பெண்டிர் எள்ளினும் எள்ளுக; என் ஆய் நலம் தொலையினும் தொலைக; எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் முறித்து இடூஉப் பழிச்சிய வணர் மருப்பு அன்ன கொன்றை நெற்று தாஅம் அத்தம் நீளிடை, அஞ்சி இனம் கொண்டொளிக்கும் கவலையில், கவின் தொலைய நீத்துச் சேய்நாட்டுறையும் பொருட்பிணி கூடாமையின் நீடியோர் ஆகிய நம் காதலர் என்றும் நோயிலராக. (வி-ரை) பலர் - பலரும்; `பலர் புகழ் ஞாயிறு' என்புழிப் போல முற்றும்மை தொக்கது. சேரி அம் பெண்டிர்: அம், சாரியை. பாணர் யாழிலே தெய்வம் உறைதல் பற்றியும், தமக்கு உணவளிக்கும் உதவியுடைமை பற்றியும் யாழினைத் தொழுது பரவுவார் எனவும், எவ்வி இறந்தபின் இனித் தம் பாட்டினைக் கேட்டுப் பரிசில் அளிப்பார் இலரென்னும் வருத்த மிகுதியால் யாழினை முறித்துப் போகட்டார் எனவும் கொள்க. மருப்பு அன்னவாக நெற்று அறைமிசைத் தாஅம் என்க. இதனால் பாணர் முறித்துப் போகட்ட மருப்பும் பலவென்பது பெற்றாம். வயமான் அஞ்சி என்பது பாடமாயின், சிங்கம் போலும் வலியுடைய அஞ்சி என்றுரைக்க. யானை சின மிகு முன்பின் வயமான் அஞ்சி இனங்கொண் டொளிக்கும் என்பது பாடமாயின், யானையானது சிங்கத்தைக் கண்டஞ்சி தன் இனத்தைக் கொண்டொளிக்கும் கவலை என்க. (மே-ள்) `மங்கல மொழியும் வைஇய மொழியும்'1 என்னுஞ் சூத்திரத்து, `நோயில ராகநங் காதலர்' எனக் கூறுவது, நம்மை அறனன்றித் துறத்தலின் தீங்கு வருமென்று அஞ்சி வாழ்த்தியது; நம்பொருட்டுத் தீங்கு வருமென நினைத்தலின் வழுவாய் அமைந்தது என்றனர், நச். 116. மருதம் (தோழி தலைமகனை வாயில் மறுத்தது.) எரியகைந் தன்ன தாமரை யிடையிடை அரிந்துகால் குவித்த செந்நெல் வினைஞர் கட்கொண்டு மறுகுஞ் சாகா டளற்றுறின் ஆய்கரும் படுக்கும் பாய்புனல் ஊர 5. பெரிய நாணினை மன்ற பொரியெனப் புன்கவிழ் அகன்றுறைப் பொலிய ஒண்ணுதல் நறுமலர்க் காண்வருங் குறும்பல் கூந்தல் மாழை நோக்கிற் காழியல் வனமுலை எஃகுடை எழில்நலத் தொருத்தியொடு *1நெருநை 10. வைகுபுனல் அயர்ந்தனை யென்ப அதுவே பொய்புறம் 2பொதிந்தியாம் கரப்பவும் கையிகந்து அலரா கின்றால் தானே மலர்தார் மையணி யானை மறப்போர்ச் செழியன் பொய்யா விழவின் கூடற் பறந்தலை 15. உடனியைந் தெழுந்த இருபெரு வேந்தர் கடல்மருள் பெரும்படை கலங்கத் தாக்கி இரங்கிசை முரசம் ஒழியப் பரந்தவர். ஓடுபுறம் கண்ட ஞான்றை ஆடுகொள் வியன்களத் தார்ப்பினும் பெரிதே. -பரணர். (சொ-ள்) 1-5. எரி அகைந்த அன்ன தாமரை இடையிடை - நெருப்புக் கப்புவிட் டெரிவது போன்ற தாமரைப் பூக்களின் இடையிடையே, செந்நெல் கால் அரிந்து குவித்த வினைஞர் - செந்நெற்றாளை அரிந்து அரிஅரியாகப் போகட்ட நெல்லரிவோர், கட் கொண்டு மறுகும் சாகாடு - தங்கட்குக் கள்ளைக் கொண்டு பலகாலும் திரியும் வண்டி, அளற்று உறின் - சேற்றிற் பதிந்திடின், ஆய்கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர - அதனைப் போக்கச் சிறந்த கரும்புகளை அடுக்கி இடைமடுக்கும் பாயும் புனல் வள மிக்க ஊரனே, பெரிய நாணிலை மன்ற - உறுதியாக நீ பெரிதும் நாணில்லாதவனாவாய்; 5-10. பொரி எனப் புன்கு அவிழ் அகல் துறை பொலிய -பொரிபோலப் புன்கம்பூ மலரும் அகன்ற நீர்த்துறை பொலிவுற, ஒள்நுதல் - ஒளி பொருந்திய நெற்றியினையும், நறுமலர் காண்வரும் குறும் பல் கூந்தல் - நறிய மலர்கள் வேய்ந்த காண்டற்கினிய குறிய பலவாய கூந்தலினையும், மாழை நோக்கின் - மாவடுப் போன்ற கண்ணினையும், காழ் இயல் வன முலை - முத்துவடம் அசையும் அழகிய முலையினையும், எஃகு உடை எழில் நலத்து ஒருத்தியொடு - நுண்ணிய அழகின் நலத்தினையுமுடைய ஒரு பரத்தையோடு, நெருநை வைகுபுனல் அயர்ந்தனை என்ப - நேற்று இடையறாது ஒழுகும் புனலில் விளையாட் டயர்ந்தனை எனப் பலருங் கூறுவர்; 10-11. அதுவே - அதுதான், பொய்புறம் பொதிந்து யாம் கரப்பவும் - அதனைப் பொய் யென்று புறத்தே மூடி யாம் மறைக்கவும், கையி கந்து - எம்செயலினைக் கடந்து; 12-19. மலர் தார் - மலர்ந்த பூமாலையினையும், மை அணி யானை - தலையில் மை அணிந்த யானையினையும் உடைய, மறப்போர் - மறம் பொருந்திய போரில் வல்ல, செழியன் - பாண்டியனது, பொய்யா விழவின் கூடல் பறந்தலை - என்றும் நீங்காத விழவினையுடைய கூடற் போர்க்களத்தில், உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் - தம்முள் ஒருங்கு இயைந்து எழுந்த சோழ சேர அரசர்களது, கடல்மருள் பெரும் படை - கடல் போன்ற பெருந்தானைகளை, கலங்கத் தாக்கி - கலங்கும் பரிசு தாக்கி, இரங்கு இசை முரசம் ஒழியப் பரந்து அவர் ஓடுபுறம் கண்ட ஞான்றை - ஒலிக்கும் ஒலியினையுடைய முரசு ஒழிந்து கிடக்க அவர் பரந்து ஓடும் புறக்கொடையைக் கண்ட நாளில், ஆடு கொள்வியன் களத்து ஆர்ப்பினும் பெரிது - வெற்றி கொண்ட பெரிய களத்தின்கண் எழுந்த ஆரவாரத்தினும் பெரிதாக; 12. அலர் ஆகின்று - அலராகின்றது. (முடிபு) பாய் புனலூர! பெரிய நாணிலை மன்ற; எழில் நலத் தொருத்தியொடு நெருநை வைகுபுனல் அயர்ந்தனை என்ப; அது யாம் கரப்பவும் கையிகந்து, செழியன் கூடற் பறந்தலை, இருபெரு வேந்தர் பெரும்படை கலங்கத் தாக்கி அவர் புறங்கண்ட ஞான்றை, களத்து எழுந்த ஆர்ப்பினும் பெரிது அலர் ஆகின்று. (வி-ரை) ஆய் கரும்பு - மெல்லிய கரும்புமாம். கரும்பு அடுக்கும் என்றது மருத நிலத்தின் வளமிகுதி கூறியபடி. மாழை - இளமை என்றும், அழ கென்றுமாம். எழில் நலம் - எழுச்சியும் நலமுமாம். யானைக்கு நெற்றியில் அஞ்சனம் அணிதல் மரபாதலின், மையணி யானையென்றார். (உ-றை) நெல்லரியும் வினைஞர் தம் தொழிலை விடுத்து இழிந்தகள் வண்டியின் ஆழ்ச்சியைப் போக்கற்குச் சிறந்த கரும்பினைச் சிதைப்பது போல, நீ இல்லறஞ் செய்தலாய நின் ஒழுக்கத்தினைக் கைவிட்டு, இழிந்த பரத்தையின் இன்பத்தை நுகர்தற்குச் சிறந்த தலைவியை வருத்துகின்றாய் என்பது. (மே - ள்) `கிழவோன் விளையாட் டாங்கு மற்றே'1 என்னுஞ் சூத்திரத்து, `எஃகுடை யெழினலத் தொருத்தியொடு.... அலரா கின்றாற் றானே' என்பது, தலைவி பிறர் அலர் கூறியவழிக் காமஞ் சிறந்து புலந்தவாறு என்றும், `வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல்' 1 என்னும் சூத்திரத்து, `எரியகைந் தன்ன தாமரை யிடை யிடை....... யாப்பினும் பெரிதே' என்பதனுள், `நாணிலை மன்ற' எனத் தோழி கூறி அலரா கின்றால் என வெளிப்படக் கிளத்தலின் வழுவாய் அமைந்தது என்றும் கூறினர், நச். 117. பாலை (மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.) மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும் அவ்வரி அல்குல் ஆயமும் உள்ளாள் ஏதிலன் பொய்ம்மொழி நம்பி ஏர்வி(னை) வளங்கெழு திருநகர் புலம்பப் போகி 5. வெருவரு கவலை ஆங்கண் அருள்வரக் கருங்கால் ஓமை யேறி வெண்டலைப் பருந்துபெடை பயிரும் பாழ்நாட் டாங்கண் பொலந்தொடி தெளிர்ப்ப வீசிச் சேவடிச் சிலம்புநக இயலிச் சென்றஎன் மகட்கே. 10. சாந்துளர் வணர்குரல் வாரி வகைவகுத்து யான்போது துணைப்பத் தகரம் மண்ணாள் தன்னோ ரன்ன தகைவெங் காதலன் வெறிகமழ் பன்மலர் புனையப் பின்னுவிடச் சிறுபுறம் புதைய நெறிபுதாழ்ந் தனகொல் 15. நெடுங்கால் மாஅத் தூழுறு வெண்பழம் கொடுந்தாள் யாமை பார்ப்பொடு கவரும் பொய்கை சூழ்ந்த பொய்யா 2 யாணர் வாணன் சிறுகுடி வடாஅது தீநீர்க் கான்யாற்று அவிரறல் போன்றே. - .............................. (சொ-ள்) 1-2. மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும்- முல்லைப் பூவோடு மலர்ந்த கரிய கொத்தினையுடைய நொச்சியையும், அவ்வரி அல்குல் ஆயமும் உள்ளாள் - அழகிய வரி பொருந்திய அல்குலினையுடைய ஆயத்தினையும் நினையாளாயும்; 10-11. சாந்து உளர் வணர் குரல் வாரி - மயிர்ச் சாந்து பூசிய வளைந்த கொத்தாகிய கூந்தலை வாரி, வகை வகுத்து - வகைப்படுத்து, யான் போது துணைப்ப - யான் மலர்களை இணைக்கப்புக, தகரமும் மண்ணாள் - அதற்கு உடன்பட்டுத் தகரமும் பூசிக்கொள்ளாளாயும்; 3-4. ஏதிலன் பொய் மொழி நம்பி - பிறனொருவன் பொய்ம் மொழியினை விரும்பி, ஏர் வினை வளம்கெழு திரு நகர் புலம்பப் போகி - அழகிய தொழினலம் வாய்ந்த வளம் பொருந்திய செல்வ மிக்க மாளிகை தனித் தொழியப் புறப்பட்டு; 5-9. வெரு வரு கவலை ஆங்கண் - அஞ்சத்தக்க கவர்த்த நெறிகளாக அவ்விடங்களில், வெண்தலைப் பருந்து - வெள்ளிய தலையினையுடைய பருந்து, கருங்கால் ஓமை ஏறி - கரிய அடியினையுடைய ஓமை மரத்தின் மீதேறி, அருள் வர - இரக்கம் உண்டாக, பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண் - தனது பெடையினை அழைக்கும் பாழான நாட்டிடத்தே, பொலம் தொடி தெளிர்ப்ப வீசி - தனது பொற்றொடி யொலிக்கக் கையினை வீசியும், சேவடிச் சிலம்பு நக இயலி - சிவந்த அடியிற் சிலம்புகள் விளங்க உலாவியும், சென்ற என் மகட்கு - போய் விட்ட என் மகளுக்கு; 12-13. தன் ஓரன்ன தகை வெம் காதலன் - தன்னையே ஒத்த தகைமையையும் விருப்பத்தையுமுடைய காதலனாகிய தலைவன், வெறி கமழ் பன்மலர் புனையப் பின்னுவிட - மணம் கமழும் பலவகை மலர்களை வைத் தணிசெயற்குப் பின்னுதலைச் செய்ய (அவள் கூந்தல்), 15-19. நெடுங் கால் மாஅத்து ஊழ் உறு வெண் பழம் - நெடிய அடியினையுடைய மாமரத்தினது முறையாக முற்றிய வெள்ளிய பழத்தினை, கொடு தாள் யாமை பார்ப்பொடு கவரும் - வளைந்த காலினையுடைய யாமை தன் பார்ப்போடு கவர்ந்துண்ணும், பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர்- பொய்கைகள் சூழ்ந்துள்ள என்றும் அறாத புது வருவாய்களையுடைய, வாணன் சிறுகுடி வடாஅது - வாணனது சிறுகுடி என்னும் ஊர்க்கு வடக்கின்கண் ணுள்ள, தீம் நீர்க் கான்யாற்று அவிர் அறல் போன்று - இனிய நீரினையுடைய காட்டாற்றின் விளங்கும் அறல் போன்று; 14. சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன கொல் - பிடர் மறைய நெறிந்து தொங்குகின்றனவோ? (முடிபு) நொச்சியினையும் ஆயத்தினையும் நினையாளா யும், தகரம் மண்ணாளாயும், ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, நகர் புலம்பப்போகி, பாழ் நாட்டாங்கண், வீசியும் இயலியுஞ் சென்ற என் மகட்கு, காதலன் பின்னுவிட, அவள் கூந்தல் வாணன் சிறுகுடி வடாஅது கான்யாற்று அறல் போன்று சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல்? (வி-ரை) அருள் வர பெடைக்கு அருள்; கண்டார்க்கு அருள் வர எனலுமாம். கையை வீசி என்க. தன்னோ ரன்ன - அன்பு, ஒழுக்கம் முதலியவற்றால் தன்னை யொத்த. 118. குறிஞ்சி (செறிப்பறிவுறீஇ இரவும் பகலும் வார லென்று வரைவு கடாஅயது.) கறங்குவெள் 1அருவி பிறங்குமலைக் கவாஅன் தேங்கமழ் இணர வேங்கை சூடித் தொண்டகப் பறைச்சீர் பெண்டிரொடு விரைஇ மறுகிற் றூங்கும் சிறுகுடிப் பாக்கத்து 5. 2இயன்முரு கொப்பினை வயநாய் பிற்படப் பகல்வரிற் கவ்வை அஞ்சுதும் இகல்கொள இரும்பிடி கன்றொடு விரைஇய கயவாய்ப் பெருங்கை 3 யானைக் கோள்பிழைத் திரீஇய அடுபுலி வழங்கும் ஆரிருள் நடுநாள் 10. தனியை வருதல் அதனினும் அஞ்சுதும் என்னா குவள்கொல் தானே பன்னாள் புணர்குறி செய்த புலர்குரல் ஏனல் கிளிதடி பாடலும் ஒழிந்தனள் அளியள் தானின் அளியல திலளே. - கபிலர் (சொ-ள்) 1-6. கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன் - ஒலிக்கும் வெள்ளிய அருவிகள் விளங்கும் மலையின் சாரற் கண்ணே, தேம் கமழ் இணர வேங்கை சூடி - தேன் கமழும் கொத்துக் களையுடைய வேங்கைப் பூக்களைச் சூடி, தொண்டகப் பறைச் சீர் - தொண்டகம் என்னும் பறையின் தாளத்திற்கிசைய, பெண்டிரொடு விரைஇ - ஆடவர் பெண்டிரொடு கலந்து, மறுகில்தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து - தெருக்களில் ஆடும் எமது சிறுகுடிப் பாக்கத்தின்கண்ணே, இயல் முருகு ஒப்பினை - இயங்கும் முருகனை ஒப்பாயாகி, வயநாய் பிற்படப் பகல்வரின்- வலிய நாய் பின்னே வரப் பகற்கண் நீ வரின், கவ்வை அஞ்சுதும் - ஊரார் கூறும் அலர்க்கு அஞ்சுகிறோம்; 6-10. இரும்பிடி கன்றோடு விரைஇய - கரிய பிடியோடும் கன்றோடுங் கூடிய, கயவாய் பெருங்கை யானைக் கோள் பிழைத்து- அகன்ற வாயினையும் நீண்ட கையினையுமுடைய யானையைக் கொள்ளுதல் பிழைத்து, இகல்கொள இரீஇய - அதனால் அவற்றைப் பகைமை பொருந்த மறைந்திருக்கும்படி செய்த, அடுபுலி வழங்கும் ஆர்இருள் நடுநாள் - கொல்லும் புலி திரியும் அரிய இருள் சூழ்ந்த நள்ளிரவில், தனியை வருதல் அதனினும் அஞ்சுதும் - நீ தனியையாகி வருதலை அதனைக் காட்டினும் அஞ்சுகின்றோம்; 11-14. பன்னாள் புணர்குறி செய்த புலர்குரல் ஏனல் - பல நாளும் புணரும் பகற்குறியாகக் கொண்ட முற்றிய கதிரையுடைய தினைப் புனத்திலே, கிளி கடி பாடலும் ஒழிந்தனள் - கிளியை ஓட்டுதற்குப் பாடும் பாடலும் நீங்கினள், என் ஆகுவள் கொல் - இனி என் ஆகுவளோ, அளியள் நின் அளி அலது இலளே - இரங்கத் தக்காளாய என் தோழி நின் அருளை யன்றிப் பிறிதொரு பற்றுக் கோடும் இலள். (முடிபு) தலைவ, சிறுகுடிப் பாக்கத்து இயல் முருகு ஒப்பினை பகல்வரின் கவ்வை அஞ்சுதும்; அடுபுலி வழங்கும் ஆரிருள் நடுநாள் தனியை வருதல் அதனினும் அஞ்சுதும், இவள், ஏனல் கிளிகடி பாடலும் ஒழிந்தனள்; என் ஆகுவள் கொல்? அளியள் நின் அளியலது இலள். (வி-ரை) அருவிப் பிறங்குமலை என்பது பாடமாயின் அருவியையுடைய விளங்கும் மலை யென்க. இகல் முருகு என்பது பாடமாயின், பகைவரொடு மாறுபாடு கொண்ட முருகன் என்க. மிகல்கொள எனப் பிரித்து, தருக்கு அமைய என்றுரைத்தலுமாம். இரீஇய - ஓடும்படி செய்த என்றுமாம். யானை கோட் பிழைத்து என்பது பாடமாயின், யானையானது கொள்ளுதல் பிழைத்து இரீஇய என்க. வழங்கும் ஆரிருள் நடுநாள் என்பது பாடமாகக் கொள்ளின், வழங்கும் நெறியின் கண் இருளையுடைய நடுநாள் என்க. பகல்வரிற் கவ்வை யஞ்சுதும் என்றதனாலே பகற்குறி விலக்கியும், ஆரிருள் நடுநாள் வருதல் அஞ்சுதும் என்றதனால் இரவுக்குறி விலக்கியும், ஏனல்கிளிகடி பாடலும் ஒழிந்தனள் என்றதனால் செறிப்பு அறிவுறுத்தியும், நின் அளியல திலள் என்றதனால் வரைந்து கொள்ளல் வேண்டும் என்றாளாம். (மே-ள்) `பொழுது மாறும்'1 என்ற சூத்திரத்துப் `பகல் வாரல்' என்றதற்குப் `பகல்வரிற் கவ்வை யஞ்சுதும்' என்பதனை எடுத்துக் காட்டினர், நச். 119. பாலை (செலவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொற்றது. தோழி தலை மகட்குச் சொற்றதூஉ மாம்.) நுதலுந் தோளுந் திதலை யல்குலும் வண்ணமும் வனப்பும் வரியும் வாட வருந்துவள் இவளெனத் திருந்துபு நோக்கி வரைவுநன் றென்னா தகலினும் அவர்வறிது 5. ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை ஏறுபெறு பாம்பின் பைந்துணி கடுப்ப நெறியயல் திரங்கும் அத்தம் வெறிகொள உமண்சாத் திறந்த ஒழிகல் அடுப்பின் நோன்சிலை மழவர் ஊன்புழுக் கயரும் 10. சுரன்வழக் கற்ற தென்னா துரஞ்சிறந்து நெய்தல் உருவின் ஐதிலங் ககலிலைத் தொடையமை பீலிப் பொலிந்த கடிகை மடையமை திண்சுரை மாக்காழ் வேலொடு தணியமர் அழுவம் தம்மொடு துணைப்பத் 15. துணிகுவர் கொல்லோ தாமே 1துணிகொள மறப்புலி உழந்த வசிபடு சென்னி உறுநோய் வருத்தமொ டுணீஇய மண்டிப் படிமுழம் ஊன்றிய நெடுநல் யானை கைதோய்த் துயிர்க்கும் வறுஞ்சுனை 20. மைதோய் சிமைய மலைமுத லாறே. - குடவாயிற் கீரத்தனார். (சொ-ள்) (தோழி!) 1-4. அவர் - நம் தலைவர், வரைவு நன்று என்னாது அகலினும் - வரைந்து கோடல் தக்கது என்னாது பிரிந்திடினும், நுதலும் தோளும் திதலை அல்குலும் வண்ணமும் வனப்பும் வரியும் வாட - நெற்றியும் தோளும் தேமலையுடைய அல்குலும் நிறமும் அழகும் வரியும் வாட, வருந்துவள் இவள் எனத் திருந்துபு நோக்கி - இவள் வருந்துவாள் என நன்கு ஆராய்ந்துணர்ந்து; 15-20. மறப்புலி உழந்த துணிகொள வசிபடு சென்னி - மறத்தையுடைய புலியுடன் பொருது உழந்தமையால் துண்டமாகப் பிளவுபட்ட சென்னியின்கண், உறு நோய் வருத்தமொடு - உற்ற நோயாலாய வருத்தத்துடன், உணீஇய மண்டி - நீர் உண்டற்கு விரைந்து சென்று, படி முழம் ஊன்றிய நெடு நல் யானை - மண்ணில் முழங்காலை மடித்தூன்றிய நெடிய நல்ல யானையானது, கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை - தனது கையால் தோய்த்தும் நீரின்மையால் பெருமூச் செறியும் வறிய சுனையினையுடைய, மை தோய் சிமைய மலை முதல் ஆறு - மேகம் படியும் உச்சியினையுடைய மலையிடத்துச் செல்லும் நெறியாய; 4-7. ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை - நெறியிற் செல்லும் மக்கள் அறுத்துப் போகட்ட பிரண்டைக் கொடி, ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப - இடியாற் றாக்குதல் பெற்ற பாம்பினது பசிய துண்டுபோல, நெறி அயல் வறிது திரங்கும் அத்தம் - வழியின் பக்கத்தே பயனின்றி வதங்கிக் கிடக்கும் காட்டில்; 7-10. உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில் - உப்பு வணிகர் கூட்டம் விட்டொழிந்த கல் அடுப்பில், நோன் சிலை மழவர் - வலிய வில்லையுடைய மழவர், வெறி கொள ஊன் புழுக்கு அயரும் சுரன் - நாற்றமுண்டாக ஊனைப் புழுக்கி யுண்ணும் இடங்களையுடைய சுரமானது, வழக்கு அற்றது என்னாது - பெண்டிரொடு இயங்குதற்கு உரியதல்லது என்று நினையாது; 10-15. உரம் சிறந்து - ஊக்கம் மிக்கு, நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை - நெய்தற்பூப் போலும் உருவினையுடைய அழகிதாக விளங்கும் அகன்ற இலையினையும், தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை - தொடுத்தல் அமைந்த மயிற்றோகையால் விளக்கமுற்ற காம்பினையும், மடை அமை திண் சுரை - மூட்டுவாய் அமைந்த திண்ணிய சுரையினையும், மா காழ் வேலொடு - கரிய தண்டினையு முடைய வேலே துணையாக, தணி அமர் அழுவம் - பகையைத் தணிவிக்கச் செல்லும் போர்க்களத்திற்கு, தம்மொடு துணைப்ப - நாமும் தம்மொடு துணையாகிச் செல்ல, துணிகுவர் கொல்லோ - துணிவரோ? (முடிபு) தோழி! நம் தலைவர் வரைவு நன்றென்னாது அகலினும், வருந்துவள் இவள் எனத் திருந்துபு நோக்கி மலைமுதல் ஆறு ஆய சுரன் வழக்கற்ற தென்னாது, உரஞ் சிறந்து அமர் அழுவம் தம்மொடு துணையாகக் கொண்டு செல்லத் துணிகுவர் கொல்லோ? பிரண்டை திரங்கும் அத்தத்தில் அடுப்பில் மழவர் ஊன்புழுக் கயரும் சுரன் என்க. (வி-ரை) வறிது திரங்கும் எனவும், வெறிகொள ஊன் புழுக்கயரும் எனவும் கூட்டுக. ஏறு - இடி யேறு எனவும், எறிதல் எனவும் இரட்டுற மொழிதலாகக் கொள்க. சாத்து - வணிகர் திரள். துனிகொள என்னும் பாடத்திற்கு வெறுப்புண்டாக என்றுரைக்க. (உ-றை) `ஆறு செல்லும் மாக்களால் அறுத்துப் போகடப் பட்டுப் பிரண்டை வறிதே திரங்குவதுபோலத் தலைவராற் றுறக்கப்பட்டு எம் அழகு பயன்படலின்றியே கழியா நின்றது' `சாத்தராற் றுறக்கப்பட்ட கல்லடுப்பு மழவர்க்கு ஊன்புழுக் கயர்ந்து மகிழ்தற்குக் கருவியானாற் போலத் தலைவராற் றுறக்கப்பட்ட யாம் அம்பற் பெண்டிர்க்கு அலர்தூற்றி மகிழற்கு இலக்காயினோம்.' `புலியொடுழந்து சென்னியிடத்து வடுப்பட்டு வருந்திய யானை நீருண்ணச் சுனையிடத்து முழ மூன்றிக் கையைத் தோய்த்தும் நீர் பெறா துயிர்த்தாற்போல், அன்னையின் கொடுஞ் சொல்லாலும் அம்பற் பெண்டிரின் அலராலும் நெஞ்சு புண்ணுற்ற யாம், அந்நோய் தீர வரையுமாறு தலைமகன் கழல்களைப் பணிந்து வேண்டியும் அருள் பெறாமல் உயிர்க்கின்றோம்' என்றாளாம். (இராசகோபாலை யங்கார்.) 120. நெய்தல் (தோழி பகற்குறிக்கண் தலைமகளை இடத்துய்த்து வந்து தலைமகனை எதிர்ப்பட்டு நின்று சொல்லியது.) நெடுவேள் மார்பின் ஆரம் போலச் செவ்வாய் வானந் தீண்டிமீன் அருந்தும் பைங்காற் 1கொக்கின நிரைபறை யுகப்ப எல்லை பைப்பயக் கழிப்பிக் குடவயின் 5. கல்சேர்ந் தன்றே பல்கதிர் ஞாயிறு மதரெழில் மழைக்கண் கலுழ இவளே பெருநாண் அணிந்த சிறுமென் சாயல் மாணலம் சிதைய ஏங்கி யானாது அழல்தொடங் கினளே பெரும அதனால் 10. கழிச்சுறா எறிந்த புட்டாள் அத்திரி நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைஇ வல்வில் இளையரொ டெல்லிச் செல்லாது சேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோ பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை 15. அன்றில் அகவும் ஆங்கண் சிறுகுரல் நெய்தலெம் பெருங்கழி நாட்டே. - நக்கீரனார். (சொ-ள்) 1-5. நெடுவேள் மார்பின் ஆரம் போல - முருகக் கடவுள் மார்பினிடத்து முத்தாரம்போல, செவ்வாய் வானம் தீண்டி - செவ்வானத்திடம் பொருந்தி, மீன் அருந்தும் பைங்கால் கொக்கு இனம் நிரைபறை உகப்ப - மீனை அருந்தும் பசிய காலையுடைய கொக்கினது இனம் வரிசையாகப் பறத்தல் உயர்ந்திட, எல்லை பைப் பயக் கழிப்பி - பகற்பொழுதை மெல்ல மெல்லப் போக்கி, பல் கதிர் ஞாயிறு குடவயின் கல் சேர்ந்தன்று - பல கதிர்களையுடைய ஞாயிறு மேற்றிசையில் மறையும் மலையை அடைந்தது; 6-9. இவளே பெருநாண் அணிந்த சிறுமென் சாயல் - மிக்க நாணைக் கொண்ட சிறிய மெல்லிய சாயலினையுடைய இவள், மாண் நலம் சிதைய- மாண்புற்ற அழகு கெட, ஏங்கி - ஏக்கமுற்று, மதர் எழில் மழைக்கண் கலுழ - மதர்த்த அழகினையுடைய குளிர்ந்த கண் கலங்கிட, ஆனாது அழல் தொடங்கினளே - அமையாது அழுதலைத் தொடங்கியுள்ளாள்; 9-12. பெரும - தலைவ!, அதனால் - அதனாலும், கழிச்சுறா எறிந்த புண் தாள் அத்திரி - உப்பங்கழியிலுள்ள சுறாமீன் எறிதலாலுற்ற புண்ணுற்ற தாளினையுடைய கோவேறு கழுதை, நெடுநீர் இருகழி பரி மெலிந்து - நீண்ட நீரினையுடைய கரிய கழியில் செல்லுதல் மெலிந்திடலாலும், வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது அசைஇ - வலிய வில்லினையுடைய நின் ஏவலரொடு இவ்விரவிற் செல்லாது இளைப்பாற; 14-16. பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பை - பனை மரங்கள் ஓங்கிய வெள்ளிய மணல் பரந்த தோட்டங்களில், அன்றில் அகவும் ஆங்கண் - அன்றில் தன் துணையை அழைக்கும் அவ்விடத்தே, சிறு குரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டு - சிறிய பூங்கொத்தினை யுடைய நெய்தல் பொருந்திய எமது பெரிய கழி சூழ்ந்த நாட்டின் கண்; 13. சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ - நீ தங்கிச் செல்லின் கெடுவதொன்று உளதோ? (முடிபு) பெரும! பல் கதிர் ஞாயிறு கல் சேர்ந்தன்று; இவள் அழல் தொடங்கினள்; அதனாலும், அத்திரி பரிமெலிந் திடலாலும் இளையரொடு எல்லிச் செல்லாது அசைஇ, எம் பெருங்கழி நாட்டுச் சேர்ந்தனை செலின், சிதைகுவது உண்டோ? (வி-ரை) முருகக் கடவுள் மிக்க செந்நிறமுடைய ரென்பது சேய், செவ்வேள் என்னும் பெயர்களாலும், "பலர்புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு"1 "பவழத் தன்ன மேனி"2 என்பவற்றானும் அறியப்படும். செவ்வானத்திற்கு நெடுவேளின் செம்மேனியும், அவ்வானத்தை யொட்டி வரிசையாகப் பறந்து செல்லும் கொக்கினத்திற்கு அவரது மார்பிலணிந்த முத்தாரமும் உவமமாயின; ஆற்றுப்படையால் முருக வேளை யேத்திய ஆசிரியர் நக்கீரனாரது அன்பு கனிந்த திருவுள்ளத்தில் செவ்வானையும் அதனை யொட்டிப் பறந்து செல்லும் கொக்கின் நிரையையும் கண்டுழிச் செவ்வேளின் திருமேனியும் அவரது மார்பின் முத்தாரமும் தோன்றுவது இயல்பேயாம். கொக்கின் நிரை என்பது பாடமாயின் கொக்கின் கூட்டம் என்க. உகப்பு - உயர்வு, பறை யுகப்ப - உயர்ந்து பறக்க வெனக் கொள்க. சாயல் இவள் எனக் கூட்டுக. மெலிந்து என்பதனை மெலிய வெனத் திரிக்க. அன்றில் அகவும் ஆங்கண் என்றதனால் தலைவன் வராவிடில் தலைவிக்குண்டாம் ஏதம் குறிக்கப்பட்டது. "எல்லி........ அன்றில், துணையொன்று பிரியினுந் துஞ்சா காண்"1 என்பதன் உரை காண்க. இது நெய்தலிற் களவு. "திணைமயக் குறுதலுங் கடிநிலை யிலவே"2 என்பதனால் அமைந்தது. (மே-ள்) `நாற்றமும் தோற்றமும்'3 என்னுஞ் சூத்திரத்து, தோழி தலைவனை வேளாண் பெருநெறி வேண்டிக்கோடற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர், இளம். `வைகுறு விடியல்'4 என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுள், பகற் குறிக்கண் இடத்துய்த்துத் தலைவனை எதிர்ப்பட்டு உரைத்தது என்றும், ஈண்டு நெய்தற்கு எற்பாடு வந்ததென்றும், `பொழுதும் ஆறும் காப்பும்'5 என்னுஞ் சூத்திரத்து, `வல்வி லிளையரொடு........... பெருங்கழி நாட்டே' என்பது, `இரவினும் பகலினும் நீ வா' எனத் தோழி கூறுவதற்கு உதாரணமாகும் என்றும், இங்ஙனம் களவு அறிவுறுமென்று அஞ்சாது வருக என்றலின் வழுவேனும் தலைவன் வருத்தம் பற்றிக் கூறலின் அமைத்தார் என்றும், `தேரும் யானையும் குதிரையும், பிறவும் ஊர்ந்தனர் இயங்கலும், உரியன் என்ப'6 என்னுஞ் சூத்திரத்து, `பிற' ஆவன கோவேறு கழுதையும் சிவிகையும் முதலியனவாம் என்றும், `கழிச்சுறா வெறிந்த புட்டா ளத்திரி.......... பரிமெலிந் தசைஇ' என வருதல் அதற்கு உதாரணமாகு மென்றும், இன்னும் இச்சூத்திரத்து (இயங்கலும் என்ற) உம்மையால் இளையரோடு வந்து தனித்துக் கூடுதலுங் கொள்க; இதற்கு `வல்வி லிளையரொடு...... சிதைகுவ துண்டோ' என்பது உதாரணமாகு மென்றும் கூறினர், நச். களிற்றியானை நிரை முற்றும். அகநானூறு - களிற்றியானை நிரை பாட்டு முதற்குறிப்பு அகரவரிசை பாட்டு பாட்டு பக்க எண் எண் அகலறை மலர்ந்த 105 238 அணங்குடை நெடுவரை 22 58 அம்மவாழி 101 230 அயத்துவளர் பைஞ்சாய் 62 145 அரக்கத்தன்ன 14 40 அரிபெய் சிலம்பி 6 20 அருளன்றாக 75 174 அரையுற்றமைந்த 100 228 அழியாவிழலின் 115 260 அழிவில் உள்ளம் 47 113 அளிநிலைபொறாஅ 5 17 அறியாய்வாழி 53 126 அன்றவண் ஒழிந்த 19 51 அன்னாய்... நம்படப்பை 68 158 அன்னாய்... நின்மகள் 48 115 அன்னை அறியினும் 110 248 ஆடமைக்குயின்ற 82 188 ஆய்நலந்தொலைந்த 69 161 ஆள்வழக்கற்ற 51 122 இம்மையுலகத் 66 153 இருங்கழிமுதலை 3 10 இருள்கிழிப்பதுபோல் 72 167 இன்னிசை உருமொடு 58 136 ஈயற்புற்றத் 8 26 ஈன்றுபுறந்தந்த 35 86 உழுந்துதலைப்பெய்த 86 196 உளைமான்துப்பின் 102 232 உள்ளாங்குவத்தல் 111 251 உன்னங்கொள்கை 65 150 எம்வெங்காமம் 15 42 பாட்டு பாட்டு பக்க எண் எண் எரியகைந்தன்ன தாமரைப் பழனத்து 106 240 எரியகைந்தன்ன தாமரை யிடையிடை 116 262 ஒழித்தது பழித்த 39 96 கடல்பாடவிந்து 50 120 கடல் முகந்து கொண்ட 43 104 கள்ளியங்காட்ட 97 220 களையும் இடனால் 64 149 கறங்குவெள் அருவி 118 267 காய்ந்து செலற்கனலி 55 130 கார்விரிகொன்றை 1 1 (கடவுள் வாழ்த்து) கானல் மாலை 40 99 கிளியும் பந்தும் 49 118 கூன் முள்முள்ளிக் 26 67 கூனல் எண்கின் 112 253 கேள்கேடூன்றவும் 93 210 கேளாய் எல்லதோழி 114 258 கேளாய் வாழியோ 63 147 கொடுந்தாள்முதலை 80 185 கொடுந்திமிற்பரதவர் 70 163 கொடுவரி இரும்புலி 27 70 கொல்வினைப் பொலிந்த 9 29 கோழிலை வாழை 2 7 சிறுகரும்பிடவின் 34 84 சிறுபைந்தூவி 57 134 சேற்றுநிலைமுனைஇய 46 110 தண்கயத் தமன்ற 59 138 தன்கடற் பிறந்த 13 38 தீந்தயிர் கடைந்த 87 199 பாட்டு பாட்டு பக்க எண் எண் தெறுகதிர் ஞாயிறு 89 203 தேம்படுசிமய 94 213 தொடங்குவினை தவிரா 29 74 தோட்பதன் அமைத்த 79 183 நகையாகின்றே 56 132 நறவுண்மண்டை 96 217 நன்றல்காலையும் 113 255 நன்னுதல்பசப்பவும் ஆள்வி 77 178 நன்னுதல்பசப்பவும் பெருந்தோள் 85 194 நனந்தலைக்கானத் 78 180 நாயுடைமுதுநீர் 16 44 நாளுலா எழுந்த 81 186 நிழலறுநன்தலை 103 234 நிறைந்தோர்த் தேரும் 71 165 நீசெலவயர 107 241 நீர்நிறம்கரப்ப 18 49 நுதலுந்தோளுந் 119 268 நெடுங்கயிறு 30 76 நெடுங்கரை 25 65 நெடுமலையடுக்கம் 92 209 நெடுவேள்மார்பின் 120 271 நெருநல் எல்லை 32 80 நெருப்பெனச்சிவந்த 31 78 நோற்றோர்மன்ற 61 143 பகுவாய்வராஅல் 36 89 பல்லிதழ்மென்மலர் 109 246 பனிவரைநிவந்த 98 223 பின்னொடு முடித்த 73 170 புணர்ந்தோர்புன்கண் 108 244 பெருங்கடற்பரப்பிற் 60 141 பெருநீர் அழுவத் 20 54 பாட்டு பாட்டு பக்க எண் எண் பைபயப் பசந்தன்று 95 215 மண்கண்குளிர்ப்ப 23 61 மன்கனை முழவொடு 76 176 மலிபெயற்கலித்த 42 103 மலைமிசைக்குலைஇய 84 192 மறந்தவண் அமையார் 37 91 மனையிள நொச்சி 21 55 முதைச்சுவல் 88 201 முல்லைவைந்நுனை 4 13 முலைமுகஞ்செய்தன 7 23 மூத்தோரன்ன 90 205 மெய்யில்தீரா 28 72 மௌவலொடு மலர்ந்த 117 265 யாயே கண்ணினும் 12 35 யானெவன் செய்கோ 67 156 வண்டுபடத் ததைந்த 1 5 வந்துவினை முடித்தனன் 44 106 வலஞ்சுரிமராஅத்து 83 190 வலந்தவள்ளி 52 124 வளங்கெழுதிருநகர் 17 47 வாடல் உழிஞ்சில் 45 108 வாள்வரிவயமான் 99 226 வான்கடற்பரப்பில் 10 32 வானம்ஊர்ந்த 11 33 விரியிணர்வேங்கை 38 94 விருந்தின்மன்னர் 54 128 விளங்குபகல் உதவிய 91 209 வினை நன்றாதல் 33 82 வினை வலம்படுத்த 74 172 வேந்துவினை முடித்த 104 236 வேளாப்பார்ப்பான் 24 63 வைகுபுலர்விடியல் 41 101 ஆசிரியர் பெயர் அகரவரிசை (எண் - செய்யுளெண்) ஆசிரியர் பெயர் பாட்டு எண் அந்தி யிளங்கீரனார் 71 அம்மூவனார் 10, 35 அள்ளூர் நன்முல்லையார் 46 ஆலம்பேரிச் சாத்தனார் 47, 81 ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் 64 ஆலங்குடி வங்கனார் 106 ஆவூர் மூலங்கிழார் 24 ஈழத்துப் பூதன் தேவனார் 88 உமட்டூர்கிழார் மகனார் பரங்கொற்றனார் 69 உலோச்சனார் 20, 100 ஊட்டியார் 68 எயினந்தை மகனார் இளங்கீரனார் 3 எருமை வெளியனார் 73 எருமை வெளியனார் மகனாh கடலனார் 72 ஒக்கூர் மசாத்தனார் 14 ஒரோடோகத்துக் கந்தரத்தனார் 23, 95 ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் 25 ஒளவையார் 11 கடுந்தொடைக் காவினார் 109 கபிலர் 2,12,18,42,82,118 கயமனார் 7,17 கருவூர்க் கண்ணம்புல்லனார் 63 கருவூர்ப் பூதஞ்சாத்தனார் 50 கல்லாடனார் 9, 83, 113 காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் 85 ஆசிரியர் பெயர் பாட்டு எண் காவன்முல்லைப் பூதனார் 21 காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் 107 காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் 103 குன்றியனார் 40, 41 குடவாயிற் கீரத்தனார் 44, 60, 79, 119 குறுங்குடி மருதனார் 4 சாகலாசனார் 16 சீத்தலைச் சாத்தனார் 53 செல்லூர்க் கோசிகன் கண்ணனார் 66 தங்கால் முடக்கொற்றனார் 48 தங்காற் பொற்கொல்லனார் 108 தாயங் கண்ணனார் 105 நக்கீரனார் 57, 120 நக்கீரனார் (கணக்காயனார் மகனார் நக்கீரனார்) 93 நக்கீரனார் (மதுரை நக்கீரர்) 36, 78 நல்லாவூர் கிழார் 86 நல்வெள்ளியார் 32 நன்பலூர்ச் சிறுமேதாவியார் 94 நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர் கிழார் 112 நொச்சி நியமங்கிழார் 52 நோய்பாடியார் 67 பரணர் 6, 62, 76, 116 பாண்டியன் அறிவுடைநம்பி 28 பாண்டியன் கானப் பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி 26 ஆசிரியர் பெயர் பாட்டு எண் பாலை பாடிய பெருங்கடுங்கோ 5, 99, 111 பெருங்குன்றூர் கிழார் 8 பெருந்தலைச் சாத்தனார் 13 பெருந்தேவனார் 51 பொருந்தில் இளங்கீரனார் 19 போந்தைப் பசலையார் 110 மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 33 மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 56 மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன் 102 மதுரை எழுத்தாளன் 84 மதுரைக் கணக்காயனார் 27 மதுரைக் கவுணியன் பூதத்தனார் 74 மதுரைக் காஞ்சிப் புலவர் 89 மதுரைச் செங்கண்ணனார் 39 மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் 70 மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் 58 மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் 92 ஆசிரியர் பெயர் பாட்டு எண் மதுரைப் பேராலவாயர் 87 மதுரைப் போத்தனார் 75 மதுரை மருதனிள நாகனார் 34, 59, 77, 90, 104 மதுரை யாசிரியர் நல்லந்துவனார் 43 மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார் 80 மருதம் பாடிய இளங்கடுங்கோ 96 மாமூலனார் 1, 15, 31, 55, 61, 65, 91, 97, 101, 115 மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் 54 முடங்கிக் கிடந்த நெடுஞ் சேரலாதன் 30 வடம வண்ணக்கண் பேரிசாத்தனார் 38 வண்ணப்புறக் கந்தரத்தனார் 49 விற்றூற்று மூதெயினனார் 37 வெள்ளாடியனார் 29 வெள்ளிவீதியார் 45 வெறிபாடிய காமக் கண்ணியார் 22, 98 ...................... 114 ...................... 117 நாவலர் ந.மு.வே நாட்டார் எழுதிய நூல்கள் / உரைகள் நூல்கள் 1915 - வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 1919 - நக்கீரர் 1921 - கபிலர் 1923 - கள்ளர் சரித்திரம் 1926 - கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் 1928 - சோழர் சரித்திரம் உரைகள் 1925 - இன்னாநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, உலகநீதி, நல்வழி, நன்னெறி திரிகடுகம் - கையெழுத்துப் படியாகக் கிடைத்து முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண் : 20 இல் பார்க்க. 1925 - 1932 - திருவிளையாடற்புராணம் 1940 - சிலப்பதிகாரம் 1942 - மணிமேகலை 1940 - 42 - கட்டுரைத்திரட்டு (இரண்டு தொகுதிகள்) 1944 - அகநானூறு உரைத்திருத்தம் : 1940 - தண்டியலங்காரப் பழைய உரை யாப்பருங்கலக்காரிகை அகத்தியர் தேவாரத்திரட்டு 1930 - பிப்ரவரி 11,12,13,14 ஆகிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளை சார்பாக தொல்காப்பிய ஆராய்ச்சி சொற்பொழிவு. (இந்த சொற்பொழிவு இதுவரை வெளிவராதவை கையெழுத்துப் படியாகக் கிடைத்தது. முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ்உரைகள் தொகுதி எண் - 17 இல் 15-வது கட்டுரையில் பார்க்க .) ***** குறிப்புகள் (பாடம்) 1. ததைந்த. 1. திருநாவுக் . தேவாரம். 1. தொல். பொருளியல் : 1. 2. தொல். செய்யு : 109 1. தொல். அகத் : 3 2. கோண் முதிர். 3. வேய் மருள். 1. தொல். எச்ச : 40 2. திருச்சிற் : 262 1. புல்லிலை யாஅத்த. 1. அகம் : 21 2. தொல். பொருளியல் : 2 3. தொல். மெய்ப்: 22 1. வைந்நுதி. 2.நரம்பார்ப்பன்ன 3.யாத்த. 4. உதுக்காண். 1. தொல். குற்றிய :78 2. சிலப். 10,157 1. குறள் : 1158 2. தொல். செய் : 104 1. சீவக:892 2. தொல். அகத். 24 3. தொல். அகத் : 3 4. தொல். எச்ச: 12 (பாடம்) 1. கொள்ளாள் தமியள். 1. கலி. பாலை : 3 2. குறள் : 1152 3. குறுந் : 145 4. தொல். எச் : 61 1. தொல். கற்பு :44 2. தொல். கற்பு : 5 3. தொல். கற்பு :44 1. தொல். அகத் :8 2. தொல். புறத் : 32 3. தொல். பொருளியல் : 34 4. தொல். மெய் :6 (பாடம் ) 5. படுதல் செல்லேன் 1. தொல். அகத். 42 1. தொல். கள :20 2. தொல். அகத் :42 3. தொல். செய் :80 (பாடம் ) 1. மழையே ரைம்பால். 1. தொல். மரபு :49 2. நற் : 106 1. தொல். பொருளியல் :24 2. தொல். செய் : 211 (பாடம் ) 3. குறும்பெஃகின் (பாடம்) 1. மென்றோள் நசைஇ 1. தொல். பொருளியல் : 2 2. தொல். பொருளி :2 3. தொல்.செய் :80 (பாடம்) 1. அரிதுற்றனை. 2. பழந்திமில் சென்ற. 1. ஐங். 178 1. புறம். 292 2. அகம் :141 3. அகம் : 185 4. தொல். அகத் : 15 5. தொல். அகத். 13. 6. தொல்- அகத் 15 1. ஐங்குறு : 286 2. திருச்சிற் : 96 3. தொல். பொருளி:16 4. தொல். மெய்ப்:23 5. தொல். அகத்:39 (பாடம்) 1. தண்கடல். 1. தொல். எழுத் : 229 1. தொல். கற்பு :28 3. தொல். செய்யு :996 1. அகம் : 196 2. அகம் : 205 1. தொல். கற் :6 2. தொல். பொருளி :39 1. தொல். மெய்ப் : 4 2. தொல். உவம :19 3. தொல். உவம :21 சிலப். 16 : 68 1. தொல். பொருளியல் : 16 (பாடம்) 1. கலிழ்ந்து. 1. தொல். அகத் : 14 2. தொல். பொருளியல் : 2 (பாடம்) 1. பொருந்தில் இளங்கீரனார். 1. தொல். கள: 20 2. தொல். பொருளியல் : 18 1. தொல். மர : 58 2. தொல். மர: 59 1. முரு : 242-244 2. தொல்.களவு : 20 1. தொல். மெய்ப்: 25 2. தொல். உவமம் : 1 1. மலைபடு : 125 2. தொல். கற்பு 43 (பாடம்) 1. கனைந்தொழித்த. 2. மருங்கிய மொண்ணை 3. கணையுதைப்ப 4. தழங்குரல் முரசமொடு மயங்கும். 1. தொல். கற்பு : 45 2. தொல். கற்பு : 48 1. சிலப். வேனிற்காதை இறுதி வெண்பா. (பாடம்) 2. கூடிய தலைமகன். 3. கூர்முள். (பாடம்) 4. நறுஞ்சாந்து புலர்ந்த. 1. இகு பெயல். 1. தொல். கற்பி : 20 2. தொல். பொருளியல் : 11 3. தொல். மெய்ப் :20 4. தொல். மெய்ப் : 24 (பாடம்) 5. தயங்கு. (பாடம்) 1. நுடங்க எழுந்து 1. தொல். கள :23 (பாடம்) 2. வெண்வட்டியார். வேளாவட்டனன். 1. புறம் :190 2. தொல். கற்பு : 5 1. தொல். களவு : 23 1. `பசந்தாள்' திருக்குறள், 1188 1. புறம் : 34 (பாடம்) 2. நல்லொளியார். 1. குறிஞ்சிக் கலி : 11. 2. குறிஞ்சிப் பாட்டு 43-44. 3. தொல். பொருளியல் : 24 (பாடம்) 1. வெம்பர றாஅய் 1.தொல். கள : 22 2. தொல் கற்பு : 5 1. (பாடம்) துடிபடுத்து, துடிப்படத் 1. தொல். அகத் : 36 1. பரி. 7:33, 11 : 30, 22 : 45, 2. சிலப் 14 : 72 3.4. தொல். மரபு 41 : 42. 1. மருதக்கலி 7 2. மணி 19 : 67 - 70 (பாடம்) 3. தொல். அகத்திணையியல் 13. பாடம் 1. பெயர்வன. 1. தொல். களவு : 20 2. தொல். களவு : 29 1. தொல். கற்பு :5 2. தொல். பொருள் :3 (பாடம்) 3. தூக்கி 4. அவணுறைவு 1. தொல். அகத் :3 2. தொல். அகத் : 8 (பாடம்) 3. சேரமானந்தையர் 1. தொல். அகத் : 44 (பாடம்) 1. நிலைஇய 2. சேர்கல்லா. 1. குறள் : 210 2. புறம் : 4 (பாடம்) 1. இன்குரல் (பாடம்) 1. ஓர்ந்தன படையே. (பாடம்) 2. உறையூர்ச் சல்லியங் குமரனார். 1. தொல். கற்பு : 5 1. குறுந். 7 2. குறுந் : 31 3. குறுந்:27 (பாடம்) 4. பிறளும். (பாடம்) 5. கொற்கைச் செழியன். 1. தொல். மரபு : 60 1. தொல். பொருள் :52 2. கலி :61 3. தொல். கற்பு : 6 4. தொல். பொருள் : 45 1. தொல். உவம. 29. (1.. குறுந் : 154 * இக்காலத்து இது தாளிக்கொடி என வழங்கப் பெறுகிறது. 1. குறள் : 1094 2. தொல். பொருள் :13 3. தொல். பொருள் :44 4. தொல். மெய்ப் :22 1. தொல். மெய்ப்.25 2. தொல். பொருள் :12 3. தொல். பொருள் :13 (பாடம்) 4. வண்ணப்புறக் கல்லாடனார். 1. தொல். மரபு : 19-20 1. தொல். அகத்திணை : 15 2. தொல். அகத்திணை : 42 (பாடம்) 3. நீங்கி. 4. மடல்வாய் அன்றில் 5. கருவூர்ப் பூதனார் மகனார் கொற்றனார். 1. தொல். கற்பு : 11 2. தொல். மெய்ப் :22 (பாடம்) 3. பிரியப் புணர்வதாயின் 4. கடுகு பெருந்தேவனார். 1. தொல். கற்பு : 5 (பாடம்) 1. அறியலங்கொல். 2. மாற்றூர் கிழார் மகனார் கொற்றங்கொற்றனார். 1. குறள் : 1304 2. தொல். உரி :8 1. தொல். களவு : 20 2. தொல். பொருள் : 15 3. தொல். மெய்ப் : 23 1. தொல். அகத் : 14 2. தொல். அகத் : 43 (பாடம்) 3. புன்கால் நெல்லி. 4. நொச்சி நியமங்கிழார் மகனார்..... 1. தொல். அகத் : 12 2. தொல். அகத் : 26 1. தொல் - பொரு. 4 1. தொல். மெய்ப் : 4 1. நாலடியார் :261 2. நல்வழி : 30 3. சீவக : 192 1. தொல். களவு : 20 2. தொல். மெய்ப் : 20 1. சீர்மிகு முருகன். 1. சிந்தா : 209 2. பரி : 8 1. தொல். பொருள் : 37 (பாடம்) 2. அயிரை துழந்த 3. ஞெமுங்கா தீமோ. 1. தொல். செய் : 80 1. தொல். அகத் : 44 1. தொல். களவு : 11 2. தொல். களவு : 27 (பாடம்) 1. புலங்கெழு பூழி. 2. கடுங்கண் மறவர். 1. தொல். அகத் : 36 1. தொல். கற்பு : 53 2. தொல். மரபு - 62. 1. தொல். அகத் : 39. 1. தொல். அகத் : 39 2. தொல். உவம : 19 (பாடம்) 1. செயலூர்க் கோசங் கண்ணனார். 1. தொல். கற்பு : 31 2. தொல். பொருள் :34 3. தொல். பொருள் :47 4. தொல். மெய்ப். 22. (பாடம்) 5. வேற்று முனைகடந்து 6. தருமார் மள்ளர். 7. நொய்ப்பாடியார். 1. தொல். அகத் : 44 1. கம்ப. சித்திரகூடம். 35 1. தொல். கிளவி : 56 2. தொல். களவு 23. 1. குறள் : 228 2. புறம் : 175 1. மணிமேகலை : 18: 19-20 2. தொல். களவு :9 3. தொல். உவம :5 1. தொல். களவு - 21 2. தொல். பொருள் - 16. 1.1. தொல். மெய்ப் : 5 1. தொல். மெய்ப் : 22 (பாடம்) 1. அவரே பிரியச் சூழலும் 1. தொல். மெய்ப் : 12 2. குறுந் : 174. (பாடம்) 3. காணீரோ. 1. அகம் : 22 1. தொல். கற்பு : 10 1. ஐங்கு : 309 1. அகம் : 303 (பாடம்) 1. நக்கீரர். 1,2. அகம் : 15;8. (பாடம்) 3. விழவுக்கள விறலியில். 1. மணி. : 4:1-6 1. அகம் : 1 2. தொல். களவு : 21 3. தொல். மெய்ப் : 7 4. தொல். மெய்ப் : 22 1. தொல். புறத் : 5 (பாடம்) 2. தாழ்பெயற் கெதிரி. 3. நன்னுதல். 1. தொல். அகத் : 24 2. தொல். அகத் : 27 3. தொல். அகத் : 41 4. தொல். புறத் : 21 (பாடம்) 5. துணைதரு தண்கார். 1. அகம் : 136 1. சிலப். மங்கல : 50-53 2. தொல். உரி :40 3. தொல். கற்பு : 1. 4. தொல். கற்பு : 5 5. தொல். மெய்ப் : 13 6. தொல். செய்யுள் : 187 (பாடம்) 7. இடைச்சுரத்து மீளலுறும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. (பாடம்) 1. ஏறத்துப் பூதன் தேவன். 1. நற். : 98 (பாடம்) 1. குடுமிச்சேவல். 2. திணிதோள். 3. பந்தரியலும். 1. குறள் : 1121 (பாடம்) 2. கருங்கண். 1. தொல். களவு : 23 1. அகம். 198. 2. தொல். எழுத். உயிர்மயங் : 41-60 1. தொல். அகத் : 19 1. அகம் : 368 2. நற் : 194 3. முருகு. அடி: 42 1. தொல். எழுத். புள்ளி :68 2. நற் : 400 1. புறம் : 39 2. பெரும்பாண் : 75 3. குறிஞ்சி : அடிகள். 163-165 4. தொல். அகத் : 28 5. தொல். அகத் : 55 6. தொல். கற்பு : 5 7. தொல். மெய்ப் : 25 8. தொல். செய் : 187. (பாடம்) 9. வான்பூத் தன்ன. 1. தொல். அகத் : 12 2. தொல். அகத் : 14 (பாடம்) 3. பசந்த, பசந்தது. 4. சுரம்பல கழிந்தோர். 1. தொல். அகத் : 42 (பாடம்) 2. அகுதை 3. ஒருகளத் தொழிய. 1. தொல். கற்பு : 10 2. தொல். மெய்ப் : 24 3. தொல். எச்சவியல் : 65 1. பலபுலந்து 2. அரும்பு அவிழ்வேனில் 3. மருதமொடிகல்கொள 4. ஒளவையார், குடவுழுந்தனார். 1. குறுந் : 298 2. தொல். அகத் :9 1. குறுந் : 293 2. முருகு : 233-34 1. தொல். எழுத் : 237 2. தொல். எழுத் : 258 3. முருகு. 290. 4. தொல். களவியல் : 24 1. தொல். செய் : 219 2. தொல். அகத் : 41 (பாடம்) 3. நெய்தற் புதுமலர். 1. குறுந் : 236 1. நற் : 131 2. தொல். அகத் : 19 3. பாடம். 1. உளரிய. (பாடம்) 1. மதுரைப் பாலாசிரியன். 1. தொல். களவு : 40 (பாடம்) 2. வியன் மனை. 3. தாமே. 1. புறம் : 43 1. அகம் : 48 2. பொருந : 165 1. தொல். புறத். 5 2. தொல். கற்பு : 53 1. தொல். செய் : 199 (பாடம்) 1. வரை மிசைச் சிதறியவை. 1. தொல். உவம : 3 (பாடம்) 2. வெந்நுனை 3. மெய்கட்டின்னுயிர் 1. தொல். புறத் : 5 (பாடம்) 2. நினக்கென (பாடம்) 1. என்றுமென் மகட்கே. 1. தொல். சொல். உரி : 87 2. தொல். சொல். எச் : 67 3. தொல். அகத் : 5 1. தொல். களவு : 11 2. தொல். மெய்ப் : 27 3. தொல். மெய்ப் : 27 1. மலைபடு : 6 (பாடம்) 1. கூரல் எண்கின், கூருகிர் எண்கின். 2. கழிபெருங்காதலர், கழியாக் காதலர். 1. தொல். உயிர்மயங் : 32 2. தொல். களவு : 23 3. தொல். பொருளி : 16 4. தொல். மெய்ப் : 9 (பாடம்) 5. மாவீசு. 1. பரட்டினோனடி. 2. அகன்சூ லஞ்சுரைப் பெய்த வல்சியர், வைக லஞ்சுரைப்பெய்த. 1. பதிற்று: 94 2. நாலடி : 30 (பாடம்) 1. வயமானஞ்சி. 1. தொல். பொருளி : 50 (பாடம்) *1. நெருநல். 2. யான் கரப்பவும். 1. தொல். கற்பு : 23 1. தொல். பொருளி : 47 (பாடம்) 1. யாணர்ப் பண்ணன் (பாடம்) 1. அருவிப் பிறங்கு. 2. இகல்முருகு 3. யானை கோட்பிழைத்து. 1. தொல். பொருளியல் : 16 (பாடம்) 1. துணி கொள் துணிகொள்பு (பாடம்) 1. கொக்கின் நிரை. 1. திருமுருகாற்றுப்படை : 2 2. குறுந்தொகை : கடவுள் வாழ்த்து. 1. அகம் : 50 2. தொல். அகத் : 12 3. தொல். கள : 24 4. தொல். அகத் : 8 5. தொல். பொருளியல் : 16 6. தொல். பொருளியல் : 18