நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 3 சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் உரையாசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 3 உரையாசிரியர் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம், பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 200 = 224 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 140/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : மு. இராமநாதன், வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற்காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரியவர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்விகளிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப்பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக்குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல்களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக் கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவ நேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரணமாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர் களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். 17.07.2007 பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 அணிந்துரை தமிழர்க்கு வாய்த்துள்ள முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். தண்டியலங்காரம் என்னும் அணியிலக்கணநூல், ‘காப்பியநூல்’ அமைதியை அருமையாகக் கூறுகிறது. “பெருங்காப்பிய நிலையே பேசுங்காலை, வாழ்த்து வணக்கம் வருபொருள் என்றிவற்றின் ஒன்று ஏற்புடைத்தாகி முன்வர இயன்று” என்று தொடங்கி விரித்துக் கூறும் காப்பிய இலக்கணம், முற்றாகத் தன் அமைதியால் தந்த காப்பியம், சிலப்பதிகாரமே என்பதை மேலோட்டமாகக் காண்பாரும் அறியக்கூடும். “இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்” என்னும் நெறிக்கு ஒப்பிலாச் சான்றாக அமைந்தது, சிலப்பதிகாரமே என்றும், அதனை வடித்து இலக்கண வார்ப்படமாக்கியது தண்டியலங்காரமே என்றும் கொள்ளலாம். ‘சிலம்பு’ - அணிகலப் பெயர். அப்பெயர் ஒலியால் பெற்றது.. சிலம்புதல் - ஒலித்தல். சிலம்பு, மலையின் பெயர்களுள் ஒன்று; பல்வகை ஒலிகளைத் தன்னகத் துடைமையை அன்றித் தன் எதிரொலியால் பெற்ற பெயரதும் அது. சிலம்பு, தமிழரின் வீரப் போர் விளையாடல்களுள் ஒன்று. கம்பும் கம்பும் மோதுதலால் பெற்ற ஒலிப் பெயர் அது. சிலம்பு என்னும் ஒலியை ஓயாது உடைமையால் சிலம்பி (சிலந்தி) என ஓர் உயிரியும், சிலம்பிக்கூடு ( சிலந்திக்கூடு) என அதன் பன்மாண் பின்னல் வலையும் பெயர் பெற்றன. “ வான்குருவியின் கூடு வல்லரக்குத்தொல் கறையான் தேன் சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால்” என்பது ஒளவையார் தனிப்பாடல்களுள் ஒன்று. தினைக்கதிர் மல்கு கொல்லையில், தீஞ்சொல் இளங்கிளி சிலம்பும்; பூம்புனல் வளாகத்தில் புள்ளினம் சிலம்பும்; நல்ல அரும்பு தேன்வழியும் காலையில் வண்டு சிலம்பும்; மனைகள் தோறும் மகளிர்தம் வள்ளைப்பாட்டின் (உலக்கைப்பாட்டின்) மங்கலம் சிலம்பும்; என்பது கம்பர் காட்டும் சிலம்புச் சீர்மை. “தினைச் சிலம்புவ தீஞ்சொல் இளங்கிளி” என்னும் பாடற்செய்தி இது. சிலம்பரசன், சிலம்பரசி, சிலம்பாயி இன்னவை சிலம்பொடு கூடிய பெறலரும் பெயர்கள்! “ அம் பொற்சிலம்பி அரவிந்தத் தாளணியும் செம்பொற் சிலம்பே சிலம்பு” என்பதும் புகழ்வாய்ந்த தனிப்பாடலின் பின்னிரண்டடிகள். அழகர் மலையில் வீழ்ந்ததோர் ஆறு - அருவியும் ஆயது. அது, “ நிலம்பக வீழ்ந்த சிலம்பாறு” எனப்பட்டது. ‘சிலம்பு’ என்பது ‘சிலப்பதிகாரம்’ என்னும் பெயரை அன்றி, வேறு எவ்விடத்தும், ‘சிலப்பு’ என வல்லெழுத்து ( ம் > ப்) மாற்றம் பெற்றது இல்லை. வரம்பு - வரப்பு, பரம்பு - பரப்பு, குரங்கு - குரக்கு என ‘வலிக்கும் வழி வலித்தல்’ என்னும் இலக்கணம் பெற்று வந்தது இல்லை அது. இரும்பு - இருப்பு, செம்பு - செப்பு என மக்கள் வழக்கில் வருவது போலச் சிலம்பு, சிலப்பு ஆனதும் இல்லை. ‘வலியா வழி வலித்தல்’ என ஆக்கவா, அடிகள் சிலப்பதிகாரம் எனப் பெயரிட்டார்? அல்லது, “சிலம்பு > சிலப்பு’ என வலித்தல் விகாரம் பெற்றது” என்று, இலக்கணவாணர் சொல்லிக் கொள்வதற்காகவோ பெயரிட்டார்? ஏதோ ஒரு பாரிய நோக்கு இருந்தால் அன்றிச், சிலம்பைச் சிலப்பு ஆக்கி நெற்றிச் சூடு போட்டிருக்கமாட்டார்? மென்மையான ஒலியினது சிலம்பு; மெல்லியலார் அணிவது சிலம்பு; மணநாளுக்கு முற்படச் செய்யும் ‘சிலம்பு கழி நோன்பு’ வழியாகக் கன்னிமை நீங்கித் தாய்மைத் தெய்வக் கோலம் காட்டுவதற்காகத், தான் ஒதுங்கிக் கொள்வது சிலம்பு. ஒதுங்கிய சான்றாம் விழாக் கொண்டு, மங்கல விழாக்கண்டு, ஒலியும் தலையும் காட்டா வகையில் பொதியுள் ( பையுள்) அடங்கிக் கிடந்தும், அடங்கா வன் கொடுஞ்செயல்கள் எத்தனை எத்தனை செய்கின்றது? சிலம்பு திருடியவன் என்று திருட்டறியா ஒருவன் கொல்லப்பட்டானே! அவனை இழந்தாள் அவல அரற்றால், அரசனும் அரசியும் அவலப்பட்டனரே! அடைக்கலம் இழந்தேன், இடைக்குல மக்காள் என மாதரி எரிபாய்ந்து இறந்தனளே! மதுரைக்குத் தாயாய்த் தாங்கி வந்த காவுந்தி ஐயை உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்தனரே! அவலச் செய்தி, மாடலன் வழியே அறிந்த கோவலன் தாயும், கண்ணகி தாயும் பெரும் பிறிது உற்றனரே! கோவலன் தந்தையும், கண்ணகி தந்தையும் துறவு பூண்டனரே! ‘ஆடல் பாடல் அழகு’ என்னும் மூன்றன் கொள்கலமாகத் திகழ்ந்த மாதவியார், தாம் அறவணவடிகள் அடியடைந்து துறவு கொள்ளும் அளவில் ஒழியாமல், “ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?” என்னும் அழகுப் பிழம்பு மணிமேகலையாரைக், “கோதைத்தாமம் குழலொடு களைந்து போதித் தானம்” புகுவித்ததே! இன்றும் என்ன! ஆயிரம் பொற் கொல்லர் கண்ணகியார் அமைதியுற வேண்டி, ஆடு மாடு கோழி என உயிர்ப்பலி ஊட்டினரே! (ஆயிரம் பொற்கொல்லரை உயிர்ப்பலி ஊட்டினர் என்பது உரையாளர் செய்த பிழை; ஆயிரம் பொற்கொல்லர் உயிர்ப்பலி ஊட்டினர் என்பதே அடிகள் வாக்கு! இரண்டன் உருபு (ஐ) விரிக்க என்ற பிழையால், தீராக் கறையாக இன்றும் நிலைபெறுகின்றது) இவ்வன் கண்மைகளையெல்லாம் கண்ணராவிகளை யெல்லாம் முகத்தில் முத்திரையிட்டுக் காட்டுவதே சிலப்பதிகாரப் பெயரீடு! ஏன், இவ்விளக்கம்? நூலாசிரியன் நுண்ணோக்கு அறிந்தார் - அறிந்து உரை காண வல்லார் - அருமை சுட்டுதற்கேயாம்! எவ்வளவு பேரும் பெருமையும் மிக்காரையும் மயக்கவல்லது நூல் நுட்பம் என்பதை நோக்கிச், சிலம்பு முதலிய வற்றைக் கற்றல் கடனெனக் கூறுதற்கே இப்பெயரீட்டு விளக்கமாம் என்க. தமிழ்வள உரைப்பரப்பில் மூவர்க்குத் தனிச்சிறப்பாம் இடம் உண்டு. அம்மூவர் அடியார்க்கு நல்லார், யாப்பருங்கல விருத்தியார், நச்சினார்க்கினியர் என்பார். முக்கடல் அன்ன முத்தமிழ் விளக்கப் பேருரைஞர் இம்மூவர். இவர்தம் உரை விளக்கம் நமக்கு வாயாக்கால் நம் முந்தையர் முழுவளம் அறிதற்குத் தானும் கருவி இல்லாமல் சுருக்க முற்றிருக்கும் என்பது வெள்ளிடை மலையாம். இச் சிலப்பதிகாரத்திற்கு முதற்கண் நமக்கு வாய்த்தது அரும்பொருள் உரையாம். அவ்வுரையை முழுதுற ஏற்று நடை யிடுவது அடியார்க்கு நல்லார் உரை. அவ்வடியார்க்கு நல்லாரின் பாரித்த உரைதானும் நமக்கு முழுவதாகக் கிடைத்திலது. கிடைத்த அளவானே நலம் கொள்ளும் நலப் பாட்டின் அளவு - சிறப்பு என்பதை இந்நூல் இப்பதிப்பில் முகவுரைக் கண், கண்டு கொள்க. அடியார்க்கு நல்லார் உரைவளம் நலம் பெறுதற்கு ஊற்றுக் கண்ணாக இருந்தவர் பொப்பண்ண காங்கேயர் என்பார். இதனை உரைச் சிறப்புப் பாயிரம் சுட்டுகின்றது. “காற்றைப் பிடித்து” என்னும் பாட்டு அது. இக் காங்கேயன், ஈழத்துக் காங்கேயன் துறையினர் என்பதை விளக்கும் நூல், ‘அடியார்க்கு நல்லார்’ என்னும் அரிய ஆய்வு நூலாகும். “ தமிழருடைய பழைய கலைநாகரிகத்தை இறவாமல் பாதுகாத்த பெருமை இளங்கோவடிகட்குரியது” “ நுட்பமாகிய இசை நாடகப் பகுதிகளை விளக்கு வதற்கு முயன்ற வகைமையால் அரும்பத உரையா சிரியர்க்கே அனைவரும் கடப்பாடு உடையர் ஆவர்” “ இதன் கண்ணுள்ள இசை நாடகப் பகுதிகள் யாவும் நன்கு விளக்கப் பட்டன என்றல் சாலாது. அவற்றை அறிதற்குக் கருவியாகிய நூல்கள் இறந்தொழிந் தமையின் உரையாசிரியர்களே பலவற்றை விளக்காது சென்றனர்“ - என்பன முகவுரைக் கண் நாவலர் வழங்கும் அரிய குறிப்பு களுள் சில. “இந்நூலின் மூலமும் உரைகளும் ஐயரவர்களால் பதிப்புத்தோறும் திருத்தம் பெற்றுளவேனும், அவை பின்னும் திருந்த வேண்டிய நிலையில் இருந்தன” என்று சுட்டுதல், நாவலர் தம் உரையால் நலம் பெற்ற சில திருத்தங்களைச் சுட்டுவதாம். இப்புத்துரைப் பதிப்பில் தானும் திருந்த வேண்டும் இடங்களும் உண்டு என்பதற்கு, ஒரு சான்று காட்டுவோம். முன்னைப் பதிப்பொன்று மீண்டும் பதிப்பிக்கப்படுங்கால் அதுகாறும் வந்துள்ள அந்நூல் பற்றிய ஆய்வாளர் கருத்துக் களில் தக்கவை உண்டாயின் அவற்றைப் பொன்னேபோல் போற்றுதல் கடன் என்பதைச் சுட்டுதல் சாலும். வாழ்த்துக் காதையில் வள்ளைப் பாட்டு மூன்றுள. அவற்றுள் இரண்டாம் பாடல் பாண்டியன் மாலையாம் வேப்பந்தாரும், மூன்றாம் பாடல் சேரன் மாலையாம் பனந்தோடும் சுட்டப் படுகின்றன. முதற்பாடல் சோழனைப் பற்றியது. அதில் முறைப்படி சோழன் மாலையாம் ஆர் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆர் = ஆத்தி. “ போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” என்பது தொல்காப்பியம். ‘ஆர்’ இருந்தும் ஏடுபெயர்த்தவர் சீருற எண்ணாமல் எடுத்த படியால், ‘ஆர் இரக்கும்’ என வரவேண்டியது ‘ஆரிக்கும்’ என்று வந்து ‘ஒலிக்கும்’ என்னும் பொருளும் கொண்டது. சென்னைப் பல்கலைக்கழக அகராதியிலும் அச்சொல் அப்பொருள் காட்டுவதாயிற்று. இதனை, ‘அகராதி நினைவுகள்’ என்னும் தம் சுவடியில், வையாபுரியார் சுட்டிக் காட்டினார். ஆயினும், உ.வே.சா. அவர்களின் பதிப்புகளிலும், புதுப்பதிப்பாம் இப்பதிப்பிலும் ஏறிற்றில்லை. எம் கைவயம் இருந்து இதுகால் திராவிடப் பல்கலைக் கழக ஆய்வுச் சுவடியாக உள்ள எ.ஆ. கிருட்டிண பிள்ளை அவர்கள் எழுத்துப்படியில் ‘ஆர் இரக்கும்’ என்றே உள்ளமை சுட்டத்தக்கதாம். ‘சுவடிக்கலை’ என்னும் எம் நூலில் இது விளக்கம் பெற்றது. அரும்பத உரைகாரர், அடியார்க்கு நல்லார் உரைகளைத் தக்காங்கு அவ்வவ் விடத்து ஏற்றுப் போற்றுவதுடன், விளக்கங் களும் நாவலர் வரைகிறார்.அவர்தம் உரை பொருந்தா இடம் காணின், அதனைத் தெளிவாகச் சுட்டிக் காட்டிப் பொருந்தும் வகையும் தெளிவாக்குகிறார். வடசொற்களை முன்னை ஆசிரியர் ஆண்டிருப்பின் தமிழாக்கச் சொல்லைச் சுட்டிச் செல்லுதல் இவ்வுரைச் சிறப்பாம். முந்தையர் உரைவாய்க்காத பன்னிரு பகுதிகளுக்கும் புத்துரைகண்டு பொலிவுறுத்துகிறார் நாவலர். அவர்தம் உரைநடை ஆற்றொழுக்கென அமைந்து தூய ஆழ்ந்த நீருள் மின்னும் பொன்னெனப் பொலிகின்றது. நாவலர்தம் பேரருள் உள்ளம் ஓரிடத்து அவர் செய்யும் விளக்கக் குறிப்பால் புலப்படும். எடுத்துக் காட்டாம் எழிலினது அது. ஆயிரம் பொற்கொல்லரைக் கொன்றமை, உரைபெறு கட்டுரையாலும், உரையாசிரியர்களாலும் சுட்டப்படுகின்றது. அதனைக் கூற வரும் நாவலர், அக் கொலையை உளங்கொளாமல் “மாவினால் ஆயிரம் பொற்கொல்லர் உருச் செய்து பலியிட்டனன் போலும்” என்று விளக்கம் வரைகின்றார். உரையாசிரியர் ‘இரண்டன் உருபு விரிக்க’ என்றது பிழை என உணராமல், உயிர்ப்பலி ஊட்டினான் எனக் கொண்டும், அதனை ஒப்புதல் இல்லாமல் உருகிய எழுத்து “மாவினால் உருச் செய்து” என்பது. தம் உரைப்பதிப்பிற்கு முன்னர் எவரெவர் இந்நூற் பதிப்புச் செய்தார் என்பது காட்டலும், நூல் நிறைவில் அருஞ் சொல் முதலியவற்றின் அகரவரிசை அமைத்தலும், அவ்வரிசையில் வேண்டும் இடங்களில் தக்க விளக்கம் தருதலும், பதிப்பாளர் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டல் செவ்வியதாம். தலைக்கோல் என்பது தலைக்கோலி என்னும் பட்டம் என்பதை விளக்கும் நாவலர், பழைய கல்வெட்டுகள் வழியாக அறியப் பெறும் தலைக் கோலியர் சிலரைக் கல்வெட்டுச் சான்றால் மெய்ப்பிக்கிறார். காப்பியம் குறிப்பிடும் செய்தியைச் சங்கநூல் பரப்பை அன்றி பின்னூல்கள் கொண்டும் தெளிவிக்கிறார். சொல் விளக்க நுணுக்கங்களைத் தெள்ளத் தெளியவும் சுருங்கவும் அமைக்கிறார். அகவை = உட்பட்டது; “பிறர் நெஞ்சு புகுதல்” - புகுதல் = ஆளக் கருதுதல்; உரிமை = இல்லக்கிழத்தி; ஒட்டுப்புதகம் = இரட்டைக்கதவு; கயிற்கடை = கொக்குவாய் (கொக்கி). ஒவ்வொரு பகுதிச் செய்தியையும் திரட்டி முகப்பில் வைத்துள்ள திறம், அம் முப்பதையும் திரட்டி நூல் திரட்டாகக் ‘குறுஞ்சுவடி’ ஒன்று ஆக்கிப் பயன் கொள்ளச் செய்யும் நெறியதாம். நாவலர் பெருமகனார் உரைத் திறநயம் குறித்து, முனைவர் அ.ஆறுமுகம் அவர்கள் தனி ஒருநூல் யாத்துளார். .அதனைக் கற்றல் நலமிகச் செய்வதாம். ஆழ்ந்த புலமை, அகன்ற கல்வி, அயரா உழைப்பு, ஆராக் காதல், பிறவிப் பெருநோக்கு என்பவை ஒருங்கே கொண்ட பெருந்தக்கார் தமக்கே சிலப்பதிகாரம் முதலாம் காப்பிய உரை காண்டலும், பாட்டு தொகை தொல்காப்பியம் அன்ன நூல் விளக்கம் காணலும் வாய்வதாம்! அவ் வாய்திறம் மல்கிய நாவலர் உரை, காலத்திற்கு வேண்டும், மாரியெனப், பாகனேரி வெ.பெரி.பழ.மு.காசி விசுவநாதன் செட்டியார் தூண்டலாலும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் தாமரைத் திரு. வ.சுப்பையா பிள்ளை பேருதவியாலும் வெளிப்பட்டுப், பல்வேறு பதிப்புகளைக் கண்டது. இதுகால் பெருமக்கள் அறிவாக்கம் நாட்டுடைமைப் பொருளாக்கப்படுதல் என்னும் நன்னோக்கால், பொதுமை பூத்துப் பொலியும் வளமாக வெளிப்படுகிறது. அவ்வெளிப்பாட்டைச் செய்பவர், தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திருமலி கோ.இளவழகனார். தமிழ்மண், தமிழ்மொழி, தமிழ் இனம் என்னும் முக்காவல் கடனும் முறையாக ஆக்குவதே நோக்காகக் கொண்டவர் இப்பெருமகனார்! நாவலர் தம் முழுதுறு படைப்புகளையும் தமிழுலகம் கூட்டுண்ண வழங்கும் இத்தோன்றல், தொண்டு வழிவழிச் சிறப்பதாக! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன் திருவள்ளுவர் தவச் சாலை திருவளர்குடி (அஞ்சல்) அல்லூர், திருச்சிராப்பள்ளி - 620101 தொ.பே. : 0431 2685328 பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங் களை யெல்லாம் தேடியெடுத்துத் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மை யாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக் கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்ட தால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும் போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு..... , செயல் செய்வாய் தமிழுக்கு...... ,ஊழியஞ் செய் தமிழுக்கு ......., பணி செய்வாய்! தமிழுக்கு ........, இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம். ” எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் தமிழர் தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர் களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந் தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங் களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலனார் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற்குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடு வதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப் புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத் தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகு குரு. செயத்துங்கன், பேரா.கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெரு மக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டு கின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை iii அணிந்துரை x பதிப்புரை xvii வஞ்சிக் காண்டம் 24. குன்றக் குரவை 1 25. காட்சிக் கோதை 19 26 கால்கோட் காதை 45 27. நீர்ப்படைக் காதை 74 28. நடுகற் காதை 105 29 வாழ்த்துக் காதை 135 30 வரந்தரு காதை 159 நூற் கட்டுரை 183 அருஞ்சொல் முதலியவற்றின் அகரவரிசை 185 சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் மூன்றாவது வஞ்சிக் காண்டம் 24. குன்றக் குரவை (இவ்வாறு கண்ணகி கணவனுடன் விமானமேறிச் செல்லக் கண்ட மலைவாணராகிய வேட்டுவரும் வேட்டுவித்தியரும் மிகுந்த வியப்புற்றுக் கண்ணகியைத் தம் குலதெய்வமாகக் கருதி அவள் பொருட்டுக் குரவைக்கூத்து நிகழ்த்தினர். (இதன்கண் குன்றவர் தெய்வ வழிபாட்டு முறைமையும், அகப்பொருட் சுவையமைந்தனவும் செவ்வேளின் துதியாவனவு மாகிய குரவைப் பாட்டுக்களும் காணக்கிடக்கின்றன.) உரைப்பாட்டு மடை குருவியோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றுவைகி அருவியாடியும் சுனைகுடைந்தும் அலவுற்று வருவேம்முன் மலைவேங்கை நறுநிழலின் வள்ளிபோல்வீர் மனநடுங்க முலையிழந்து வந்துநின்றீர் யாவிரோவென முனியாதோ 5 மணமதுரையோ டரசுகேடுற வல்வினைவந் துருத்தகாலைக் கணவனையங்கு இழந்துபோந்த கடுவினையேன் யானென்றாள் என்றலும் இறைஞ்சியஞ்சி இணைவளைக்கை எதிர்கூப்பி நின்ற எல்லையுள் வானவரும் நெடுமாரி மலர்பொழிந்து குன்றவரும் கண்டுநிற்பக் கொழுநனொடு கொண்டுபோயினார் 10 இவள்போலும் நங்குலக்கோர் இருந்தெய்வம் இல்லையாதலின் சிறுகுடி யீரே சிறுகுடி யீரே தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர் 15 தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின் கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின் குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின் பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின் 20 பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின் ஒருமுலை இழந்த நங்கைக்குப் பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே; (1) கொளுச் சொல் ஆங்கொன்று காணாய் அணியிழாய் ஈங்கிதுகாண் அஞ்சனப் பூமி யரிதாரத் தின்னிடியல் சிந்துரச் சுண்ணஞ் செறியத்தூய்த் தேங்கமழ்ந்து இந்திர வில்லின் எழில்கொண் டிழுமென்று வந்தீங் கிழியு மலையருவி யாடுதுமே; ஆடுதுமோ தோழி யாடுதுமே தோழி அஞ்சலோம் பென்று நலனுண்டு நல்காதான் மஞ்சுசூழ் சோலை மலையருவி ஆடுதுமே; (2) எற்றொன்றும் காணேம் புலத்தல் அவர்மலைக் கற்றீண்டி வந்த புதுப்புனல் கற்றீண்டி வந்த புதுப்புனல் மற்றையார் உற்றாடி னோம்தோழி நெஞ்சன்றே; (3) என்னொன்றும் காணேம் புலத்தல் அவர்மலைப் பொன்னாடி வந்த புதுப்புனல் பொன்னாடி வந்த புதுப்புனல் மற்றையார் முன்னாடி னோம்தோழி நெஞ்சன்றே; (4) யாதொன்றுங் காணேம் புலத்தல் அவர்மலைப் போதாடி வந்த புதுப்புனல் போதாடி வந்த புதுப்புனல் மற்றையார் மீதாடி னோம்தோழி நெஞ்சன்றே; (5) பாட்டுமடை உரையினி மாதராய் உண்கண் சிவப்பப் புரைதீர் புனல்குடைந் தாடினோ மாயின் உரவுநீர் மாகொன்ற வேலேந்தி ஏத்திக் குரவை தொடுத்தொன்று பாடுகம்வா தோழி; (6) சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்கை வேலன்றே பாரிரும் பௌவத்தின் உள்புக்குப் பண்டொருநாள் சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே; (7) அணிமுகங்க ளோராறும் ஈராறு கையும் இணையின்றித் தானுடையான் ஏந்தியவே லன்றே பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம் மணிவிசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே; (8) சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மா ரறுவர் திருமுலைப்பா லுண்டான் திருக்கைவே லன்றே வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து குருகு பெயர்க்குன்றம் கொன்ற நெடுவேலே; (9) பாட்டுமடை இறைவளை நல்லாய் இதுநகை யாகின்றே கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க அறியான்மற் றன்னை அலர்கடம்பன் என்றே வெறியாடல் தான் விரும்பி வேலன் வருகொன்றாள்; (10) ஆய்வளை நல்லாய் இதுநகை யாகின்றே மாமலை வெற்பனோய் தீர்க்கவரும் வேலன் வருமாயின் வேலன் மடவன் அவனிற் குருகு பெயர்க்குன்றங் கொன்றான் மடவன்; 11) செறிவளைக்கை நல்லாய் இதுநகையா கின்றே வெறிகமழ் வெற்பனோய் தீர்க்க வரும்வேலன் வேலன் மடவன் அவனினுந் தான்மடவன் ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின்; (12) நேரிழை நல்லாய் நகையா மலைநாடன் மார்பு தருவெந்நோய் தீர்க்க வரும்வேலன் தீர்க்க வரும்வேலன் தன்னினுந் தான்மடவன் கார்க்கடப்பந் தாரெங் கடவுள் வருமாயின்; (13) பாட்டுமடை வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும் ஆல்அமர் செல்வன் புதல்வன் வரும்வந்தால் மால்வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே; (14) கயிலைநன் மலையிறை மகனைநின் மதிநுதல் மயிலியல் மடவரல் மலையர்தம் மகளார் செயலைய மலர்புரை திருவடி தொழுதேம் அயல்மணம் ஒழியருள் அவர்மணம் எனவே; (15) மலைமகள் மகனைநின் மதிநுதல் மடவரல் குலமலை உறைதரு குறவர்தம் மகளார் நிலையுயர் கடவுள்நின் இணையடி தொழுதேம் பலரறி மணமவர் படுகுவ ரெனவே; (16) குறமகள் அவளெம் குலமகள் அவளோடும் அறுமுக வொருவநின் அடியிணை தொழுதேம் துறைமிசை நினதிரு திருவடி தொடுநர் பெறுகநன் மணம்விடு பிழைமண மெனவே; (17) பாட்டுமடை என்றியாம் பாட மறைநின்று கேட்டருளி மன்றலங் கண்ணி மலைநாடன் போவான் முன் சென்றேன் அவன்றன் திருவடி கைதொழுது நின்றேன் உரைத்தது கேள்வாழி தோழி 5 கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி மடந்தை பொருட்டால் வருவ திவ்வூர் அறுமுகம் இல்லை அணிமயில் இல்லை குறமகள் இல்லை செறிதோ ளில்லை கடம்பூண் தெய்வ மாக நேரார் 10 மடவர் மன்றவிச் சிறுகுடி யோரே; (18) பாட்டுமடை என்றீங்கு, அலர்பாடு பெற்றமை யானுரைப்பக் கேட்டு புலர்வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன மலர்தலை வெற்பன் வரைவானும் போலும் 5 முலையினால் மாமதுரை கோளிழைத்தாள் காதல் தலைவனை வானோர் தமராரும் கூடிப் பலர்தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த நிலையொன்று பாடுதும் யாம் பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம் 10 பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம் கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத் தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம் தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுங்கால் மாமலை வெற்பன் மணவணி வேண்டுதுமே 15 பாடுற்றுப் பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாளோர் பைத்தர வல்குல்நம் பைம்புனத் துள்ளாளே பைத்தர வல்குல் கணவனை வானோர்கள் உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே 20 வானக வாழ்க்கை யமரர் தொழுதேத்தக் கான நறுவேங்கைக் கீழாளோர் காரிகையே கான நறுவேங்கைக் கீழாள் கணவனொடும் வானக வாழ்க்கை மறுதரவோ வில்லாளே மறுதர வில்லாளை ஏத்திநாம் பாடப் 25 பெறுகதில் லம்ம இவ்வூரு மோர்பெற்றி பெற்றி யுடையதே பெற்றி யுடையதே பொற்றொடி மாதர் கணவன் மணங்காணப் பெற்றி யுடைய திவ்வூர் என்றியாம் 30 கொண்டு நிலைபாடி ஆடும் குரவையைக் கண்டுநம் காதலர் கைவந்தா ரானாது உண்டு மகிழ்ந்தானா வைகலும் வாழியர் வில்லெ ழுதிய இமயத்தொடு கொல்லி யாண்ட குடவர் கோவே. உரை உரைப்பாட்டு மடை - உரையாகிய பாட்டை இடையே மடுப்பது. 1-4. குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்துச் சென்று வைகி அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று வருவேம் முன் - மலைக்கண் சென்று தங்கிக் குருவிகளை ஓட்டியும் கிளிகளைத் துரந்தும் அருவியின்கண் நீராடியும் சுனையில் மூழ்கியும் இவ்வாறு சுழன்று வரும் எம் முன்னர், மலை வேங்கை நறு நிழலின் வள்ளி போல்வீர் மனம் நடுங்க முலை இழந்து வந்து நின்றீர் யாவிரோ என - குன்றத்து வேங்கையின் நல்ல நீழற் கண்ணே எம் முள்ளம் நடுங்கும் வண்ணம் ஒரு முலையினை இழந்து வந்து நின்றீர்; வள்ளியினை ஒப்பீர் நீவிர் யாவிர் என்று யாம் வினவ; குருவி - தினையைக் கவரும் கிளி அல்லாத பறவை. குன்றம் - திருச்செங்குன்றென்னும் மலை. குன்றத்துச் சென்று வைகிக் குருவி ஓப்பியுமென்க. வள்ளி - முருகன் தேவி ; வல்லியுமாம். யாவிரோ என்பதில் ஓ இரக்கமுணர்த்தி நின்றது ; முலை இழந்து துயருடன் நின்றமையான் இரங்கினாரென்க. 4-6. முனியாதே - அங்ஙனங்கேட்ட அவர்களை வெகுளாதே, மண மதுரையோடு அரசு கேடுற வல்வினை வந்து உருத்த காலைக் கணவனை அங்கு இழந்து போந்த கடுவினையேன் யான் என்றாள் - தீவினை தன் பயனை அளிக்கத் தோன்றிய காலத்து மணம் நிறைந்த மதுரை நகரத்தோடே அரசனும் கெட்டொழிய என் கணவனை அம் மதுரை யிடத்தே இழந்து வந்த தீவினையுடையேன் யான் என்று கூறினாள் ; மணம் நிறைதலை 1"அளந்துணர் வறியா வாருயிர் பிணிக்கும், கலவைக் கூட்டங் காண்வரத் தோன்றி" என்பது முதலிய வற்றானறிக; கலியாண மதுரை யென்பர் அரும்பதவுரையாசிரியர். 7-9. என்றலும் இறைஞ்சி அஞ்சி இணை வளைக்கை எதிர் கூப்பி நின்ற எல்லையுள் - என்றிங்ஙனம் அவள் கூறியவுடனே யாங்கள் அச்சமுற்று வணங்கி வளை அணிந்த இரு கைகளையும் அவளெதிர் குவித்து நின்றவளவில், வானவரும் நெடுமாரி மலர் பொழிந்து குன்றவரும் கண்டு நிற்பக் கொழுநனொடு கொண்டு போயினார் - தேவர்களும் மிக்க மலர் மழையைச் சொரிந்து மலையிலுள்ள குறவர்களும் கண்ணாற் கண்டு நிற்கும் வண்ணம் அவள் கணவனுடன் அழைத்துப் போயினர் ; மலர்மாரி என மாறுக. வானவரும் குன்றவரும் என்பவற்றும்மை முறையே உயர்வு சிறப்பும் இழிவு சிறப்புமாம். 10. இவள் போலும் நம் குலக்கு ஓர் இருந்தெய்வம் இல்லை- யாதலின். ஆதலின் நம் குலத்திற்கு இவளைப் போன்ற ஓர் பெரிய தெய்வம் இல்லையாதலால் ; குலக்கு, சாரியை தொக்கது. 11-15. சிறு குடியீரே சிறு குடியீரே தெய்வம் கொள்ளுமின் சிறு குடியீரே - சிறு குடியிலுள்ளீர் இவளைத் தெய்வமாகக் கொள்ளுமின், நிறம் கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை - வெளிய நிறம் விளங்குகின்ற அருவியினையுடைய நெடுவேள் குன்றமாகிய பறம்பினுடைய தாழ்வரையிடத்து, நறுஞ்சினை வேங்கை நல் நிழற்கீழ் ஓர் தெய்வங் கொள்ளுமின் சிறு குடியீரே-மணம் பொருந்தும் கிளைகளையுடைய வேங்கை மரத்து நல்ல நிழலின் கண்ணே ஒப்பற்ற தெய்வமாகப் பண்ணிக் கொள்ளுமின்; சிறுகுடி - வேட்டுவரூர். சிறுகுடியீரே எனப் பலகாற் கூறியது உவகையும் விரையும் பற்றி. பறம்பு - மலையென்னும் பொருட்டு தெய்வமாகவென விரிக்க.ஒரு முலை இழந்த நங்கைக்கு - இங்ஙனந் தெய்வமாகக் கொண்ட 16-22. ஒரு முலையினை இழந்த அந் நங்கைக்கு, பெருமலை துஞ்சாது வளம் சுரக்கெனவே - பெரிய இம் மலையானது ஒழி வில்லாது பயனை மிகுப்பதாக வென்று சொல்லி, தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின் - தொண்டகப் பறையினையும் சிறு பறையினையும் வாசியுங்கோள், கோடு வாய் வைம்மின் - கடமாக் கொம்புகளை வாய் வைத்து ஊதுங்கோள், கொடு மணி இயக்குமின் - ஓசை மிக்க மணியினை ஒலிக்கப் பண்ணுங் கோள், குறிஞ்சி பாடுமின் - குறிஞ்சிப் பண்ணினைப் பாடுங்கள், நறும் புகை எடுமின் - மணமுள்ள அகிற்புகை ஏந்துங்கள், பூப் பலி செய்ம்மின் - மலராகிய பலியை இடுங்கள், காப்புக்கடை நிறுமின் - சுற்று மதிலெடுத்து வாயிலும் நிறுத்துங்கள், பரவலும் பரவுமின் - போற்றுதலையும் செய்யுங்கள், விரவுமலர் தூவுமின் - பலவகையும் கலந்த பூக்களையும் அவள்மீது சொரியுங்கள்; தொடுதல் - அடித்தல். சிறுபறை - துடி. பூப்பலி செய்தல் - அருச்சித்தல். காப்புக் கடை நிறுத்தல் - வாயிலின்கண் திசைத் தெய்வங்களைக் காவலாக நிறுத்தலுமாம். 1"பூப்பலி செய்து காப்புக் கடை நிறுத்தி" என்புழி இவ்வாறு கூறுவர் அரும்பத வுரையாசிரியர். பரவலும் பரவுமின் என்பது 2"இயங்கலு மியங்கு மயங்கலு மயங்கும்" என்பதுபோல நின்றது. பெருமலை வளஞ்சுரக்கென நங்கைக்குத் தொடுமின் ......... என்றியைக்க. கொளுச் சொல் - பாட்டின் கருத்துடைச் சொல் 2. ஆங்கு ஒன்று காணாய் அணி இழாய் - அவ்விடத்தே யொன்றனைக் காண்பாய் அழகிய கலன்களையுடையாய், இங்கு இது காண் - இவ்விடத்து இதனைக் காண்பாய், அஞ்சனப் பூழி அரி தாரத்து இன் இடியல் சிந்துரச் சுண்ணம் செறியத் தூய் - அஞ்சனத்தின் பூழ்தியும் அரிதாரத்தின் இடித்தாக்கிய இனிய பொடியும் சிந்துரத்தின் துகளும் செறியாநிற்கத் தூவி, தேம் கமழ்ந்து இந்திர வில்லின் எழில்கொண்டு - மணம் வீசி வான வில்லைப் போன்று அழகு பெற்று, இழுமென்று ஈங்கு இழியும் மலை அருவி ஆடுதுமே - இழுமென்னும் ஒலி கொண்டு வந்து இவ்விடத்தே வீழ்கின்ற மலையருவிக்கண் நீராடுவோம், ஆடுதுமே தோழி ஆடுதுமே தோழி அஞ்சல் ஓம்பு என்று நலன் உண்டு நல்காதான் மஞ்சு சூழ் சோலை மலையருவி ஆடுதுமே - தோழீ அஞ்சுதலை ஒழி என்று பொய் கூறி நம் நலனை நுகர்ந்து அருளானுடைய வெள்ளிய மேகம் சூழ்ந்த சோலையையுடைய மலைக்கண் அருவியில் ஆடுவோம்; அஞ்சனம் முதலியன மலைபடு பொருள்கள் ; பன்னிறமுடைய அவற்றைத் துகளாக்கித் தூவிக்கொண்டு இழிதலால் அருவி இந்திரவில் போல்வதாயிற்று. சேய்மையினின்று ஆங்கொன்று எனவும், அண்மையிற் சென்று ஈங்கிது எனவும் கூறினாள் என்க. "இதுவென்றாள், கண்ணகி அங்கே வந்தவளவிலே மழை பெய்தலால் விழுகிற அருவியை" என்பது அரும்பதவுரை. அஞ்சல் - பிரிவிற்கஞ்சுதல். அவன் நல்காமைக் கொடுமை செய்தும் அவன் மலையில் ஆடவேண்டிற்றே என்றாள். ஆடுதுமே ஏகாரம், தேற்றம். 3. எற்று ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை கல் தீண்டி வந்த புதுப்புனல் - நமக்குக் கொடுமை செய்த அவருடைய மலைக்கண் கல்லில் படிந்து வந்த புதிய நீரொடு வெறுப்புக் கோடற்கு யாதொரு காரணமும் யாம் கண்டிலேம், கல் தீண்டி வந்த புதுப்புனல் மற்றையார் உற்று ஆடின் நோம் தோழி நெஞ்சு அன்றே - எனினும் கல்லிற் படிந்து வந்த புதிய புனலின் கண்ணே ஏனைய மகளிர் பொருந்தி ஆடினால் தோழீ நம் உள்ளம் வருந்தும்; அதற்குக் காரணம் யாதோ ; முன்னர், நலனுண்டு நல்காதான் மலையருவி ஆட வேண்டிற்றே என்றவள் ஈண்டு அவ் வருவியொடு புலத்தற்குக் காரணமில்லை ; அவனையே புலத்தல் வேண்டுமெனக் கூறினாள். மற்றையார் என்றது அருவி ஆடுவாருள் தன்னை ஒழிய முன் அந் நீரிற் குளித்த மகளிரை. நெஞ்சு நோம் என மாறுக. அன்றே என்பது இசைநிறை ; பின்வருவனவும் இன்ன. 4. என்னொன்றும் காணேம் புலத்தல் அவர் மலைப் பொன் ஆடி வந்த புதுப்புனல் - அவரது மலைக்கண் பொற்பொடியோடு கலந்து வந்த புதிய புனலோடு புலத்தற்கு யாம் யாதொரு காரணமும் கண்டிலேம், பொன் ஆடி வந்த புதுப்புனல் மற்றையார் முன் ஆடின் நோம் தோழி நெஞ்சு அன்றே - ஆயின் அங்ஙனம் பொற்பொடியோடு கலந்து வந்த புதிய நீரின்கண் ஏனைய மகளிர் முற்பட ஆடினால் தோழீ நம் உள்ளம் வருந்தும் ; எவன் என்பது என்னென்றாயிற்று. 5. யாது ஒன்றுங் காணேம் புலத்தல் அவர் மலைப் போது ஆடி வந்த புதுப்புனல் - அவர் மலைக்கண் பூக்களோடு கலந்து வந்த புதிய நீரோடு புலத்தற்கு யாம் அதனிடைச் சிறிது பிழையுங் கண்டிலேம், போதாடி வந்த புதுப்புனல் மற்றையார் மீது ஆடின் நோம் தோழி நெஞ்சு அன்றே - ஆயின், அவ்வாறு மலரோடு கலந்து வந்த புதிய நீரின்கண் மற்றைப் பெண்டிர் மேம்பட ஆடினால் தோழீ நம் உள்ளம் வருந்தும்; எற்றொன்றும் என்பது முதலாகிய மூன்றும் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. கந்தருவ மார்க்கத்தால் இடை மடக்கி வந்தன. பாட்டு மடை - பாட்டினை மடுத்தல். 6. உரை இனி மாதராய் உண்கண் சிவப்பப் புரை தீர் புனல் குடைந்து ஆடினோம் ஆயின் - மாதே இனியுரைப்பாயாக நாம் நம் மை உண்ட கண்கள் சிவக்கும் வண்ணம் குற்றம் தீர்ந்த நீரின்கண் மூழ்கி விளையாடினோம் ஆதலால், உரவு நீர் மா கொன்ற வேலேந்தி ஏத்திக் குரவை தொடுத்து ஒன்று பாடுகம் வா தோழி - கடலின்கண் மா மரத்தினை அழித்த வேலை ஏந்திய முருகனைப் போற்றி மண்டிலமிட்டுக் குரவைக் கூத்தாடி ஒரு பொருள் பற்றிப் பாடுவோம் தோழீ வருவாய் ; ஆயின் - ஆதலால்; 1"ஊதுலை தோற்க வுயிர்க்குமென் னெஞ்சாயி, னேதிலார் சொன்ன தெவன்" என்றவிடத்து ஆயின் என்னும் சொல் இப் பொருளில் வருதல் காண்க. மாகொன்ற என்றது மாவாய் நின்ற சூரபதுமனைக் கொன்ற என்றவாறு. வேலேந்தி - வேலை யேந்தியவன்; பெயர்; ஏத்தியென்னும் பாடத்திற்கு வேலை ஏத்தியேத்தி என அடுக்காக்குக. தொடுத்தல் - வளைத்தல். ஒன்று என்றது மணங் கருதிற்று. தோழி வா பாடுகம் என்க. 7. பார் இரும் பௌவத்தின் உள் புக்குப் பண்டு ஒருநாள் சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே - பாரினைச் சூழ்ந்த பெரிய கடலின் நடுவிடத்தே புக்கு முன்னொரு காலத்துச் சூரபதுமனாகிய மாவினை அறுத்த ஒளி பொருந்தும் இலையினையுடைய வெள்ளிய வேல், சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல் அன்றே - சிறப்புப் பொருந்திய திருச்செந்திலும் திருச்செங்கோடும் சுவாமிமலையும் ஏரகமும் ஆய இவ்விடங் களின் நீங்காத முருகன் கையிடத்ததாகிய வேலேயாம்; செந்தில் - திருச்செந்தூர் ; திருச்சீரலைவாய். வெண்குன்று - சுவாமிமலை என்பது அரும்பதவுரை. ஏரகம் - 1மலைநாட்ட கத்ததொரு திருப்பதி என்பர் நச்சினார்க்கினியர். பார் - பாறையுமாம்; 2"பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்கு" என்பதன் உரை காண்க, முருகன் கடலுட் புக்குச் சூர்மா தடிந்ததனை, 3"பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச், சூர்முத றடிந்த சுடரிலை நெடுவேல்" என வருவதனானறிக. சுடரிலைய வெள்வேல் இறைவன் கைவேலன்றே என மாறுக. இலைய ; அ, இடைச் சொல், அன்றே என்பது தேற்றப் பொருட்டாய் நின்றது. வேலே என்பதன்கண் ஏகாரம், அசை. 8. பிணிமுக மேற்கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம் மணி விசும்பிற் கோன் ஏத்த மாறு அட்ட வெள் வேலே - பிணி முகமெனப்படும் மயிலின் மீதேறி அசுரர்களுடைய பெருமை கெடுமாற்றானே அழகிய துறக்கத்துத் தலைவனாகிய இந்திரன் போற்றப் பகைவர்களை அழித்த வெள்ளிய வேல், அணிமுகங் கள் ஒராறும் ஈராறு கையும் இணையின்றித் தானுடையான் ஏந்திய வேல் அன்றே - அழகிய ஆறுமுகங்களையும் பன்னிரு கைகளையும் பிறர் தனக்கு ஒப்பில்லையாக உடையானாகிய முருகன் ஏந்திய வேலேயாம் ; பிணிமுகம் - மயில் என்பது அரும்பதவுரை; 4"பிணிமுக மஞ்ஞை செருமுகத் தேந்திய" என்புழியும் பிணிமுகம் இப் பொருட்டாதல் காண்க. 1புறநானூற்றுரை யாசிரியரும் இவ்வாறு கூறுவர். 2"சேயுயர் பிணிமுக மூர்ந்தம ருழக்கி" என்புழிப் பரிமேலழகரும், 3"ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி" என்புழி நச்சினார்க்கினியரும் பிணிமுகம் முருகக்கடவுள் ஊரும் யானை யென்பர். முருகற்கு யானையும் ஊர்தியாதல் பரிபாடல், பதிற்றுப்பத்து முதலியவற்றான் அறியப்படும். 9. வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடுவேலே - வளரும் மலையினைச் சூழ வரும் அசுரனுடைய நெஞ்சு பிளக்கக் கிரவுஞ்ச மலையினை அழித்த நெடிய வேல், சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர் திருமுலைப்பால் உண்டான் திருக்கை வேல் அன்றே - சரவணப் பொய்கையில் தாமரை மலராகிய பள்ளியறைக் கண்ணே அறுவராகிய தாயரின் முலைப்பாலினை உண்ட முருகனுடைய அழகிய கையிலுள்ள வேலேயாம் ; அறுவர் - கார்த்திகைப் பெண்டிர். உண்டான். வினைப்பெயர். திகிரி - மலை ; திகிரி கோலவுணன் - மலையைச் சூழவரும் அவுணன் என்பது அரும்பதவுரை. திகிரிபோலவுணன் என்பதும், திகிரியோனவுணன் என்பதும் பாட வேறுபாடு. பிளந்து, பிளக்கவெனத் திரிக்க. குருகு பெயர்க்குன்றம் - கிரவுஞ்சமலை ; 4"குருகொடு பெயர்பெற்ற மால்வரை யுடைத்து" என்பதுங் காண்க. சீர்கெழு செந்தில் முதலிய மூன்றும் தம் வரைவு முடிதல் வேண்டித் தெய்வம் பராயது. பாட்டுமடை-, 10. இறைவளை நல்லாய் - கையிடத்தே வளையலை அணிந்த தோழீ, கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் - மிளகுக் கொடி வளரும் குளிர்ந்த மலையினையுடையான் எனக்குச் செய்த நோயினை, தீர்க்க அறியாள் மற்று அன்னை - அவற்கு மணஞ் செய்து கொடுத்தலானே போக்குதற்குத் தாய் அறியாளாய், அலர் கடம்பன் என்றே - இவளைக் கடப்பமலர் மாலையை அணிந்த முருகன் அணங்கினான் என்று கொண்டு, வெறியாடல் தான் விரும்பி வேலன் வருகென்றாள் - அவற்கு வெறியாட்டயர் தலைக் கருதி வேலனை வருகவென்றழைத் தாள், இது நகையாகின்று - இச் செயல் என்னால் எள்ளி நகைத்தற் குரித்தாயிற்று; இறை - முன்கை. கடம்பன் என்றே - கடம்பன் அணங்கினா னென்றே என விரித்துரைக்க. வேலன் - படிமத்தான்; வெறியாடு வோன். நல்லாய் அன்னை வேலன் வருகென்றாள் இது நகையா கின்றே எனக் கூட்டுக. 11. ஆய் வளை நல்லாய் இது நகையாகின்றே மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் - நுண்ணிய வினையமைந்த வளையலை அணிந்த தோழீ எனக்குப் பெரிய மலையினை யுடைய வெற்பனால் உண்டாய நோயினைத் தீர்ப்பதற்கு வேலன் வருவான் இச் செயல் நகைத்தற்குரியதாயிற்று, வருமாயின் வேலன் மடவன் - அங்ஙனம் என்னோயினைத் தீர்ப்பதற்கு வேலன் வருவானாயின் அவன் அறியாமை உடையன், அவனிற் குருகு பெயர்க் குன்றம் கொன்றான் மடவன் - அவ் வேலனிலும் கிரவுஞ்ச வெற்பைக் கொன்ற முருகன் அறியாமை யுடையன் ; ஆய்தல் - நுணுக்கம். வெற்பன், வாளா பெயராய் நின்றது. நோய் - காமநோய். வேலன் அழைக்க வருவானாயின் குன்றங் கொன்றான் மடவன் என்றாள் ; எனவே அவன் வாரானென்னுங் கருத்தின ளென்க. குருகு பெயர்க்குன்றங் கொன்றான் மடவன் என்ற கருத்து, 1"வேலன் வேண்ட வெறிமனை வந்தோய், கடவுளாயினு மாக, மடவை மன்ற வாழிய முருகே" என நற்றிணையில் வந்துள்ளமை அறியற்பாலது. நல்லாய் வேலன் நோய் தீர்க்க வரும் இது நகையாகின்றே என முடிக்க, பின்வருவனவற்றையும் இங்ஙனமே முடிக்க. 12. செறி வளைக்கை நல்லாய் இது நகையாகின்றே வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் - செறிந்த வளையலை அணிந்த கையினையுடைய தோழீ மணங் கமழும் வெற்பன் தந்த நோயினைத் தீர்ப்பதற்கு வேலன் வருவான் இச் செயல் நகைத்தற்கு உரித்து, வேலன் மடவன் - அங்ஙனம் வரும் வேலன் அறியாமை யுடையன், அவனினும் தான் மடவன் ஆல் அமர் செல்வன் புதல்வன் வருமாயின் - கல்லாலின் கீழ் அமர்ந்த செல்வனாகிய சிவபிரானுடைய புதல்வன் ஈங்கே வருவானாயின் அவ்வேலனிலும் தான் அறியாமையுடையன்; வெறி கமழ் என்ற அடை வெற்பனுக்கும் வெற்புக்கும் பொருந்தும். புதல்வன் வருமாயின் அவனினும் மடவன் என்க. 13. நேர் இழை நல்லாய் நகையாம் மலைநாடன் மார்பு தரு வெந் நோய் தீர்க்க வரும் வேலன் - அழகிய கலன்களை அணிந்த தோழீ மலைநாடனது மார்பு தந்த கொடிய நோயினை வேலன் தீர்க்க வருவான் இது நமக்கு நகையினைச் செய்யும், தீர்க்க வரும் வேலன் தன்னினும் தான் மடவன் கார்க்கடப்பந் தார் எம் கடவுள் வருமாயின் - கார்காலத்தே பூக்கும் கடப்ப மலர்மாலையை அணிந்த எங்கள் முருகக் கடவுள் வருவானாயின் அங்ஙனம் நோய் தீர்க்க வரும் வேலனிலும் தான் அறியாமை யுடையன்; வெந்நோய் என்ற குறிப்பு அவ் வெற்பனாலன்றித் தீர்த்த லொண்ணாது என்பது குறித்து நின்றது. கடம்பு கார்காலத்தலரு மென்பது, 1"காரலர் கடம்பனல்லன்" என வருவதுகொண்டு ணர்க. எம் கடவுள் என்றாள், மலையுறை கடவுளாகலான். கடவுள் வருமாயின் வேலன் தன்னினுந்தான் மடவன் என்க. இவை நான்கினும் பிறர்கண் தோன்றிய பேதைமை பொருளாக நகை பிறந்தது. பாட்டுமடை, 14. வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து - வேலன் வந்து வெறியாடலைச் செய்யும் விரும்பத்தக்க களத்திடத்தே, நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும் ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும் - கல்லாலமர்ந்த இறைவன் புதல்வனாகிய முருகன் நீல நிறமுடைய மயிலின்மீது சிறந்த கலனை அணிந்த வள்ளி யோடும், வருவான், வந்தால் மால் வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே - அங்ஙனம் வந்தால் அவனைப் பெரிய மலையினையுடைய வெற்பன் நம்மை மணஞ்செய்து கோடல் கருதி வணங்குவோம் ; வேலனார், இழித்தற்குறிப்பு. வெங்களம் - வெவ்விய களமுமாம். பறவை - நீலநிறமுள்ள மயில். நேரிழை - வள்ளி ; தங் குடியிற் பிறந்த வளாகலான் அவளையே கூறினாள் என்க. இதனைப் பின்னர், "குறமக ளவளெம் குலமக ளவளொடும், அறுமுக வொருவனின் னடியிணை தொழுதேம்" எனக் கூறுமாற்றா னறிக. மணவணி - மணக்கோலம் ; ஈண்டு இது மணவினை என்னும் பொருட்டாய் நின்றது. 2"இருபெருங் குரவரு மொருபெரு நாளான், மணவணி காண மகிழ்ந்தனர்" என்றவிடத்தும் இச் சொல் இப் பொருட்டாய் நிற்றல் காண்க. 15. கயிலை நன்மலை இறைமகனை - கயிலையாகிய நல்ல மலைக் கண் உளனாகிய இறைவன் புதல்வனே, அயல் மணம் ஒழி அருள் அவர் மணம் எனவே - ஏதிலாருடைய மணத்தினை விலக்கிடு எம் நலனுண்டு நல்காதாருடைய மணத்தினை ஈந்திடு என்றே, நின் மதிநுதல் மயில் இயல் மடவரல் மலையர்தம் மகளார் - நினக்குரிய மதி போன்ற நுதலினையும் மயில் போன்ற சாயலினையும் மடப்பத்தையும் உடைய குறவர் மகளாரின், செயலைய மலர் புரை திருவடி தொழுதேம் - அசோகின் மலரினை ஒத்த திருவடிகளை வணங்கினேம் ; மகனை என்பதன் கண் ‘ஐ' இடைச்சொல். அயன் மணம் எனக்கொண்டு பிராசாபத்தியம் என்பர் அரும்பதவுரை யாசிரியர். மலையர் - மலைவாணர் ; குறவர் மகளார் - வள்ளி ; ஆர், உயர்வு குறித்தது. யாம் விரும்பியபடி நீ அருள் செய்தற்கு நின் முழு அன்பிற்கும் உரியவளும் எம் குலத்துதித்தவளுமாகிய வள்ளிப் பிராட்டியின் அடிகளை வணங்குதலே உபாயமெனக் கொண்டு வணங்கினோம் என்றாள் ; நின் அடிகளையும் மகளார் அடி களையும் வணங்கினோம் என்றலுமாம். அவர் - தலைவர் ; இயற்பெயரின்றியே இங்ஙனம் சுட்டுப் பெயர் வருதல் புலனெறி வழக்கிடைப் பயின்றுள தென்க. . 16. மலை மகள் மகனை - மலையரசன் மகளாகிய உமையின் புதல்வனே, நின் மதிநுதல் மடவரல் குலமலை உறைதரு குறவர்தம் மகளார் - நின்னுடைய மதி போன்ற நெற்றியினையும் இளமையையும் உடைய சிறந்த மலையின்கண் வாழும் குறவர் மகளாருடைய, நிலை உயர் கடவுள் - யாவரினும் மேலாந் தன்மையையுடைய முருகனே, நின் இணையடி தொழுதேம் - நின்னுடைய இரண்டு திருவடிகளையும் வணங்கினேம், பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே - பலரும் அறியத்தக்க மணத்தினை அத்தலைவர் உடன்படுவாராகவென்று ; நின் மடவரலாகிய குறவர் மகளார் எனலுமாம் ; ஈண்டு மடவரல் கிழத்தி யென்னும் பொருட்டு. குலம் - சிறப்பு. மகளார் இணை அடியையும் நின் இணையடியையும் என்க. முன்னர் நிகழ்ந்தது களவாதலால் ஈண்டுப் பலரறி மணம் என்றாள் ; பலர் அறிமணம் - தமரும் சான்றோரும் விரும்பி அளிக்கும் மணம். படுதல் - உடன்படல். படுகுவரெனவே இணையடி தொழுதேம் என்க. 17. குறமகள் அவள் எம் குல மகள் அவளொடும் அறுமுக ஒருவ - ஆறுமுகத்தினையுடைய ஒப்பற்றோய் குறமகளாகிய அவள் எங் குடியிற் பிறந்த மகளாவாள் அவளோடும், நின் அடியிணை தொழுதேம் - நின் இரு திருவடிகளையும் வணங்கினேம், துறைமிசை நினது இரு திருவடி தொடுநர் பெறுக நன் மணம்-நீர்த் துறைக்கண்ணே நின்னிரு திருவடிகளிற் சூளுற்ற தலைவர் பிழைபடா மணத்தைப் பெற்றிடுக, விடு பிழை மணம் எனவே - குற்றமுடைய மணம் ஒழிவதாக என்று; அவள் எம் குல மகள் என்றது தாம் உரிமையின் வணங்குதற் கோர் தொடர்பு கூறியவாறு. எம என்பதன் கண் அகரம், அசை நிலை. ஈண்டும் இருவர் அடியையுமெனக் கொள்க. அடிதொடுதல்- அடிதொட்டுச் சூளுறுதல். முருகன் உறையுமிடம் 1"யாறும் குளனும்" என்பராகலின் ‘துறைமிசை...தொடுநர்' என்றாள். தொடுநர் மணத்தைப் பெறக் கடவேம் என்றுமாம். பிழை மணம் - அயலார் மணம். விடு - விடப்படுத லென்னும் பொருட்டு. பெறுக வெனவும், ஒழிக வெனவும் இணையடி தொழுதேம் என்க. இவை எட்டும் தோழி சிறைப் புறமாகக் கூறியது; `இறைவனை' முதலிய நான்கும் தலைவி அறத்தொடு நின்றதுமாம். 18-1-4. என்று யாம் பாடமறை நின்று கேட்டருளி மன்றல் அம் கண்ணி மலை நாடன் போவான்முன் - இன்னணம் யாம் பாடாநிற்க அதனை மறைவிடத்தே நின்று கேட்டுப் போவானாகிய மணங் கமழும் அழகிய மாலையைச் சூடிய மலை நாடன் முன்னர், சென்றேன் அவன்றன் திருவடி கை தொழுது நின்றேன் - சென்று அவனுடைய அடிகளைக் கையால் தொட்டு வணங்கி நின்ற நான், உரைத்தது கேள் வாழி தோழி - அவனிடத்துக் கூறியதனைக் கேட்பாய் தோழி; யாம் பாட என்று தலைவியையும் உளப்படுத்திக் கூறினாள் தோழி என்க. மறைநின்று - சிறைப்புறமாக நின்று. போவான், சென்றேன், வினைப்பெயர்கள். 5-10. கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி மடந்தை பொருட்டால் வருவது இவ் வூர் - தலைவ நீ இவ்வூர்க்கண் கடப்ப மலர்மாலையைச் சூடி வேலினைக் கையிலேந்தி ஓர் மங்கையின்பொருட்டு வருதல் நின்னைக் கண்டார் முருகனென்று கருதல் வேண்டியே, அறுமுகம் இல்லை - ஆயின் நினக்கு ஆறுமுகங்கள் இல்லை, அணிமயில் இல்லை - அழகிய மயிலூர்தியும் இல்லை, குறமகள் இல்லை - மேலும் பக்கத்தே வள்ளி இல்லை, செறிதோள் இல்லை - பன்னிரு தோள்கள் இல்லை. ஆகலின், கடம்பூண் தெய்வமாக நேரார் மடவர் மன்ற இச் சிறுகுடியோரே - இச் சிறு குடியிலுள்ளார் நின்னை முறைமையை மேற்கொள்ளும் கடவுளாக உடன்படார் ஆதலால் அவர் மிக அறியார்; உடம்பிடி - வேல். கண்டார் முருகனென்று கருதல்வேண்டியே எனச் சில சொற்கள் வருவித்துரைக்க. இவ்வூர் என்று தலைவனைக் கூறினாளுமாம். அறுமுகம் முதலிய நான்கும் இல்லையென்று கூறித் தெய்வமாக நேரார் என்றுமாம். கடம் - கடன்; பலி. தெய்வமாக இகழ்தல்போல அலர் அறிவித்தவாறு. 16-1-8. என்று ஈங்கு - என்று இவ்வாறாக, அலர் பாடு பெற்றமை யான் உரைப்பக் கேட்டு - நம் களவொழுக்கத்தின் அலர் சிறந்த தன்மையினை யான் அவனுக்குக் கூற அதனைக் கேட்டு, புலர் வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன - புலர்ந்து வாடுகின்ற உள்ளம் தன் பின்னே கிடக்கப் போன, மலர் தலை வெற்பன் வரைவானும் போலும் - பரந்த இடத்தினையுடைய வெற்பன் மணத்தலுஞ் செய்வான் போலும் ஆதலால், முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல் தலைவனை - தன்னொரு முலையானே சிறந்த மதுரை நகரினை எரிகொள்ளச் செய்தாளாய கண்ணகியின் காதலையுடைய கணவனை, வானோர் தமராருங் கூடி - தேவர் சுற்றத்தார் யாவரும் சேர்ந்து, பலர் தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த நிலை ஒன்று பாடுதும் யாம் -பலரும் வணங்கத் தக்க அக் கற்புடை யாளுக்குக் காட்டித் தந்த ஒரு தன்மையினை யாம் பாடுவோம்; அலர் - பலரறி பழிச்சொல். புலர் வாடு நெஞ்சம் - புலர்ந்து வாடும் உள்ளம்; 1 ‘வரிப்புனை பந்து" என்பதுபோல. நெஞ்சம் புறங்கொடுத்துப் போதல் - தன் உள்ளம் தலைவியின் மேலதாய்ச் சேறல். போலும், ஒப்பில் போலி. 9-14. பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம் - தோழி யாம் பாடுவோம் வாராய், கோ முறை நீங்கக் கொடி மாடக் கூடலைத் தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம் - அரசுமுறை பிழைத்தமையானே கொடி களையுடைய மாடங்கள் நிறைந்த கூடல் நகரினைத் தீயின் தன்மையுடையதாகச் செய்த கண்ணகியைப் போற்றி யாம் பாடுவோம், தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுங்கால் - அங்ஙனம் அவளை யாம் பாடுங்காலை, மா மலை வெற்பன் மணவணி வேண்டுதுமே - பெரிய மலையினையுடைய வெற்பன் நம்மை மணஞ்செய்து கோடல் குறித்துப் பராவுவோம்; அடுக்குகள் உவகை பற்றியன. தீ முறை செய்தல் - தீயால் முறை செய்தலுமாம்; ஆவது எரித்தொறுத்தல். வெற்பன், பெயர் மாத்திரமாய் நின்றது. 15-19. பாடு உற்றுப் பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாள் ஓர் பைத்தர வல்குல் நம் பைம்புனத்து உள்ளாளே - பெருமை யுற்றுக் கற்புடை மகளிர் தாம் போற்றி வணங்கப் படுவாளாய ஒப்பற்ற அராப் படம் போன்ற அல்குலினையுடையாள் நமது பசிய புனத்திடத்துள்ளாள், பைத்தர வல்குல் கணவனை வானோர்கள் உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே - தேவர்கள் அவள் கணவனை அவளிடத்துக் கொண்டு வந்து தந்தும் அவளைக் புகழ்தல் ஒழியார்; கற்புடை மகளிர் கண்ணகியை வணங்குதலே தமக்குப் பெருமை யாகக் கோடலான் " பாடுற்று.........தொழுவாள்" என்றாள்; மேல் `பாடுகம்' என்றமையால் அங்ஙனம் பாடுதலுற்று என்றுமாம். பைத்தரவு - அரவின் படம்; தூ, பகுதிப்பொருள் விகுதி. உரை - புகழ்; புகழ்தல். 20-23. வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்தக் கான நறு வேங்கைக் கீழாள் ஓர் காரிகையே - துறக்க வாழ்க்கையினை உடைய தேவர்கள் வணங்கிப் போற்றக் காட்டிடத்து மணங் கமழும். வேங்கை மரத்தடியில் அமர்ந்தாள் ஓர் நங்கை, கான நறுவேங்கைக் கீழாள் கணவனொடும் வானக வாழ்க்கை மறு தரவோ இல்லாளே - காட்டிடத்து நல்ல வேங்கையின் அடியில் அமர்ந்த அவள் தன் கணவனோடும் துறக்க வாழ்வினின்றும் மீட்சியிலளாயினாள்; கண்ணகி தன் கணவனொடும் வானவூர்தி ஏறித் துறக்கம் புக்கது கண்ட குற மகளிர் அவர் மீண்டும் வரக்காணாமையான் மறுதரவில்லாள் என்றார் என்க. மறுதரவு - மீட்சி. 24-28. மறுதரவு இல்லாளை ஏத்தி நாம் பாடப் பெறுகதில் அம்ம இவ் வூரும் ஓர் பெற்றி - அங்ஙனம் மீளவில்லாத அக் கற்புடையாளை நாம் போற்றிப் பாட இவ் வூரும் ஓர் நோன்பினைப் பெறுவதாக, பெற்றியுடையதே பெற்றியுடையதே பொற்றொடி மாதர் கணவன் மணங்காணப் பெற்றி உடையது இவ்வூர் - பொற்றொடி நங்கை தன் கணவனது வரைவினைக் காண இவ்வூர் ஓர் நோன்பினையுடையது; தில், விழைவின்கண் வந்தது. பெற்றி - நோன்பு; பெருமையுமாம். இவ்வூர் கணவன் மணத்தைக் காணப் பெற்றியுடையது என்றுமாம். 29-34. என்று யாம் கொண்டு நிலை பாடி ஆடும் குரவையைக் கண்டு நம் காதலர் கை வந்தார் - இன்னணமாக யாம் கொண்டு நிலையாகிய பாட்டினைப் பாடி ஆடுகின்ற குரவைக் கூத்தினைக் கண்டு நம் காதலர் நம் வழியிலே பட்டார், வில் எழுதிய இமயத்தொடு கொல்லி ஆண்ட குடவர் கோவே - தன் வில்லினைப் பொறித்த இமய மலையோடு கொல்லி மலையினையும் ஆண்ட குடநாட்டார் வேந்தன், ஆனாது உண்டு மகிழ்ந்து ஆனா வைக லும் வாழியர் - அமையாதே வீர பானத்தை உண்டு களித்து எண்ணிலமையாத நாள் களெல்லாம் வாழ்வானாக. கொண்டுநிலை - குரவையில் ஒருவர் கூற்றினை ஒருவர் கொண்டு கூறுஞ் செய்யுளென்பர் நச்சினார்க்கினியர்; 1"குரவை தழீ இயா மாடக் குரவையுட், கொண்டுநிலை பாடிக்காண்" என்பதன் உரை காண்க. அரசனை வாழ்த்தி முடித்தல் மரபு. இது தலைமகட்குத் தோழி வரைவு கூறியது. இச் செய்யுள் கொச்சகக் கலி குன்றக் குரவை முற்றிற்று. 25. காட்சிக் காதை (சேர வேந்தனாகிய செங்குட்டுவன் மலை வளங் காண விரும்பி விளையாட்டிற்குரிய பலவகைப் பொருளுங் கொண்டு தானைகள் சூழத் தன் தேவியாகிய வேண்மாளுடன் வஞ்சி நகரினின்றும் புறப்பட்டுச் சென்று பேராற்றங் கரையிலுள்ள மணற் குன்றிலே தங்கியிருந்தான்; குன்றக் குரவை முதலியவற்றா லெழுந்த பலவகை ஓசைகள் அவர்கட்கு இன்பம் விளைத்தன. கண்ணகி விமானமேறிச் சென்ற அதிசயத்தைத் தங்கள் நாட்டிற்கு அரசனாகிய குட்டுவனிடம் தெரிவிக்கக் கருதிய மலை வாணர்கள் குறிஞ்சியிற் கிடைப்பனவாகிய பல வகைப் பொருள்களையும் காணிக்கையாகக் கொண்டு சென்று அரசனைக் கண்டு அதனைக் கூறினார்கள்; அப்பொழுது அங்கு வந்து செங்குட்டுவனோ டிருந்த மதுரைத் தமிழாசிரியராகிய சாத்தனார் மதுரையிற் கோவலன் கொலையுண்டதும், கண்ணகி அரசன் முன் வழக்குரைத்து வென்று மதுரையை எரித்ததும், நெடுஞ் செழியன் தேவியுடன் அரசு கட்டிலிற் றுஞ்சியதும் முதலிய செய்திகளை விரித் துரைத்தார். அவற்றைக் கேட்ட செங்குட்டுவன் பாண்டியன் இறந்ததற்கு வருந்தி, தன் தேவியின் வேண்டுகோளால் பத்தினிக் கடவுளாகிய கண்ணகியைப் பிரதிட்டை செய்து வழிபடுதற்கு இமய மலையிற் கல் கால்கொள்ளக் கருதி வஞ்சி நகரை அடைந்து, தான் இமயத்திற்குப் புறப்படுவதனையும், வடதிசையிலுள்ள மன்ன ரெல்லாம் திறையுடன் வந்து காண வேண்டுமென்பதனையும் தெரிவித்து நகரின்கண் பறை அறைவித்தான். (இதன்கண் வேட்டு வர்கள் காணிக்கை கொண்டுவந்தமை கூறுமிடத்து மலைபடு பொருள்கள் பலவும் வனப்புறக் காட்டப்பெற்றுள்ளன. செங்குட்டுவன் வட திசைக்கண் வஞ்சி சூடிச் செல்வேமெனக் கூறும் பொழுது அவனது பெருமிதவுணர்ச்சி புலனாகின்றது; காஞ்சித்திணைக்கும் வஞ்சித் திணைக்குமுரிய துறைகள் பல ஆண்டு வெளிப்படுத்தப்பெற்றன.) மாநீர் வேலிக் கடம்பெறிந்து இமயத்து வானவர் மருள மலைவிற் பூட்டிய வானவர் தோன்றல் வாய்வாட் கோதை விளங்கில வந்தி வெள்ளி மாடத்து 5 இளங்கோ வேண்மா ளுடனிருந் தருளித் துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும் மஞ்சுசூழ் சோலை மலைகாண் குவமெனப் பைந்தொடி ஆயமொடு பரந்தொருங் கீண்டி வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன் 10 வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடு விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன் பொலம்பூங் காவும் புனல்யாற்றுப் பரப்பும் இலங்குநீர்த் துருத்தியும் இளமரக் காவும் அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி 15 ஒருநூற்று நாற்பது யோசனை விரிந்த பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று கோங்கம் வேங்கை தூங்கிணர்க் கொன்றை நாகம் திலகம் நறுங்கா ழாரம் உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்து 20 மதுகரம் ஞிமிறொடு வண்டினம்பாட நெடியோன் மார்பி லாரம் போன்று பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை இடுமண லெக்கர் இயைந்தொருங் கிருப்பக் குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும் 25 வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும் தினைக்குறு வள்ளையும் புனத்தெழு விளியும் நறவுக்கண் ணுடைத்த குறவ ரோதையும் பறையிசை அருவிப் பயங்கெழும் ஓதையும் புலியொடு பொரூஉம் புகர்முக வோதையும் 30 கலியெழு மீமிசைச் சேணோன் ஓதையும் பயம்பில்வீழ் யானைப் பாக ரோதையும் இயங்குபடை யரவமோ டியாங்கணு மொலிப்ப அளந்துகடை யறியா அருங்கலம் சுமந்து வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றத்து 35 இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல யானைவெண் கோடும் அகிலின் குப்பையும் மான்மயிர்க் கவரியும் மதுவின் குடங்களும் சந்தனக் குறையுஞ் சிந்துரக் கட்டியும் 40 அஞ்சனத் திரளும் அணியரி தாரமும் ஏலவல்லியும் இருங்கறி வல்லியும் கூவை நூறுங் கொழுங்கொடிக் கவலையும் தெங்கின் பழனும் தேமாங் கனியும் பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும் 45 காயமும் கரும்பும் பூமலி கொடியும் கொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும் பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும் ஆளியி னணங்கும் அரியின் குருளையும் வாள்வரிப் பறழும் மதகரிக் களபமும் 50 குரங்கின் குட்டியுங் குடாவடி உளியமும் வரையாடு வருடையும் மடமான் மறியும் காசறைக் கருவும் மாசறு நகுலமும் பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும் கானக் கோழியும் தேன்மொழிக் கிள்ளையும் 55 மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டாங்கு ஏழ்பிறப் படியேம் வாழ்க நின் கொற்றம் கான வேங்கைக் கீழோர் காரிகை தான்முலை இழந்து தனித்துய ரெய்தி வானவர் போற்ற மன்னொடும் கூடி 60 வானவர் போற்ற வானகம் பெற்றனள் எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோ நின்னாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம் பன்னூ றாயிரத் தாண்டுவா ழியரென மண்களி நெடுவேல் மன்னவற் கண்டு 65 கண்களி மயக்கத்துக் காதலோ டிருந்த தண்டமி ழாசான் சாத்தனிஃ துரைக்கும் ஒண்டொடி மாதர்க் குற்றதை யெல்லாம் திண்டிறல் வேந்தே செப்பக் கேளாய் தீவினைச் சிலம்பு காரண மாக 70 ஆய்தொடி அரிவை கணவற் குற்றதும் வலம்படு தானை மன்னன் முன்னர்ச் சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும் செஞ்சிலம் பெறிந்து தேவி முன்னர் வஞ்சினம் சாற்றிய மாபெரும் பத்தினி 75 அஞ்சி லோதி அறிகெனப் பெயர்ந்து முதிரா முலைமுகத் தெழுந்த தீயின் மதுரை மூதூர் மாநகர் சுட்டதும் அரிமா னேந்திய அமளிமிசை இருந்த திருவீழ் மார்பின் தென்னர் கோமான் 80 தயங்கிணர்க் கோதை தன்றுயர் பொறாஅன் மயங்கினன் கொல்லென மலரடி வருடித் தலைத்தாள் நெடுமொழி தன்செவி கேளாள் கலக்கங் கொள்ளாள் கடுந்துயர் பொறாஅள் மன்னவன் செல்வுழிச் செல்க யானெனத் 85 தன்னுயிர் கொண்டவ னுயிர்தே டினள்போல் பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள் கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை இற்றெனக் காட்டி இறைக்குரைப் பனள்போல் தன்னாட் டாங்கண் தனிமையிற் செல்லாள் 90 நின்னாட் டகவயின் அடைந்தனள் நங்கையென்று ஒழிவின் றுரைத்தீன் டூழி யூழி வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றமெனத் தென்னர் கோமான் தீத்திறங் கேட்ட மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன் 95 எம்மோ ரன்ன வேந்தர்க் குற்ற செம்மையின் இகந்தசொற் செவிப்புலம் படாமுன் உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது 100 மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம் பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம் குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதக வில்லெனத் 105 துன்னிய துன்பம் துணிந்துவந் துரைத்த நன்னூற் புலவற்கு நன்கனம் உரைத்தாங்கு உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும் செயிருடன் வந்தவிச் சேயிழை தன்னினும் நன்னுதல் வியக்கும் நலத்தோர் யாரென 110 மன்னவன் உரைப்ப மாபெருந் தேவி காதலன் துன்பம் காணாது கழிந்த மாதரோ பெருந்திரு வுறுக வானகத்து அத்திறம் நிற்கநம் அகல்நாடு அடைந்தஇப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டுமென 115 மாலை வெண்குடை மன்னவன் விரும்பி நூலறி புலவரை நோக்க ஆங்கவர் ஒற்கா மரபிற் பொதியி லன்றியும் விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்துக் கற்கால் கொள்ளினுங் கடவுளாகும் 120 கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலிலும் தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்தெனப் பொதியிற் குன்றத்துக் கற்கால் கொண்டு முதுநீர்க் காவிரி முன்றுறைப் படுத்தல் மறத்தகை நெடுவா ளெங்குடிப் பிறந்தோர்க்குச் 125 சிறப்பொடு வரூஉஞ் செய்கையோ அன்று புன்மயிர்ச் சடைமுடிப்புலரா வுடுக்கை முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து இருபிறப் பாளரொடு பெருமலை யரசன் மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக் 130 கடவு ளெழுதவோர் கல்தா ரானெனின் வழிநின்று பயவா மாண்பில் வாழ்க்கை கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும் முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை மதிமுடிக் களித்த மகட்பாற் காஞ்சியும் 135 தென்றிசை யென்றன் வஞ்சியொடு வடதிசை நின்றெதி ரூன்றிய நீள்பெருங் காஞ்சியும் நிலவுக்கதி ரளைந்த நீள்பெருஞ் சென்னி அலர்மந் தாரமொடு ஆங்கயல் மலர்ந்த வேங்கையொடு தொடுத்த விளங்குவிறல் மாலை 140 மேம்பட மலைதலும் காண்குவல் ஈங்கெனக் குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும் நெடுமா ராயம் நிலைஇய வஞ்சியும் வென்றார் விளங்கிப வியன்பெரு வஞ்சியும் பின்றாச் சிறப்பிற் பெருஞ்சோற்று வஞ்சியும் 145 குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும் வட்கர் போகிய வான்பனந் தோட்டுடன் புட்கைச் சேனை பொலியச் சூட்டிப் பூவா வஞ்சிப் பொன்னகர்ப் புறத்தென் வாய்வாள் மலைந்த வஞ்சிசூ டுதுமெனப் 150 பல்யாண்டு வாழ்கநின் கொற்றம் ஈங்கென வில்லவன் கோதை வேந்தற் குரைக்கும் நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக் கொங்கர்செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடி பகைபுறத்துத் தந்தன ராயினும் ஆங்கவை 155 திகைமுக வேழத்தின் செவியகம் புக்கன கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர் பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன் கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது 160 கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம் எங்கோ மகளை ஆட்டிய அந்நாள் ஆரிய மன்னர் ஈரைஞூ னற்றுவர்க்கு ஒருநீ யாகிய செருவெங் கோலம் கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம் 165 இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய இதுநீ கருதினை யாயின் ஏற்பவர் முதுநீ ருலகில் முழுவது மில்லை இமய மால்வரைக்கு எங்கோன் செல்வது கடவுளெழுதவோர் கற்கே யாதலின் 170 வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம் தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி மண்டலை யேற்ற வரைக வீங்கென நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்றுநம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா 175 வம்பணி யானை வேந்தர் ஒற்றே தஞ்செவிப் படுக்குந் தகைமைய வன்றோ அறைபறை யென்றே அழும்பில்வே ளுரைப்ப நிறையருந் தானை வேந்தனும் நேர்ந்து கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த 180 வாடா வஞ்சி மாநகர் புக்கபின் வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை ஊழிதொ றூழி யுலகங் காக்கென விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்தோர் கற்கொண்டு பெயருமெங் காவலன் ஆதலின் 185 வடதிசை மருங்கின் மன்ன ரெல்லாம் இடுதிறை கொடுவந் தெதிரீ ராயின் கடற்கடம் பெறிந்த கடும்போர் வார்த்தையும் விடர்ச்சிலை பொறித்த வியன்பெரு வார்த்தையும் கேட்டு வாழுமின் கேளீ ராயின் 190 தோட்டுணை துறக்கும் துறவொடு வாழுமின் தாழ்கழல் மன்னன் தன்றிரு மேனி வாழ்க சேனா முகமென வாழ்த்தி இறையிகல் யானை யெருத்தத் தேற்றி அறைபறை எழுந்ததால் அணிநகர் மருங்கென். உரை 1-9. மா நீர் வேலிக் கடம்பு எறிந்து-கடலை வேலியாகவுடைய கடம்பினை வெட்டி, இமயத்து வானவர் மருள மலை வில் பூட்டிய வானவர் தோன்றல் வாய் வாள் கோதை - இமயமலையின் கண் தேவர்களும் மருளும் வண்ணம் மலைதலையுடைய வில்லை எழுதிய சேரர் குடியிற் றோன்றியோனாகிய தப்பாத வாளினையுடைய செங்குட்டுவன், விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து இளங்கோ வேண்மாளுடன் இருந்தருளி - ஒளிவிடும் நீராவியினையுடைய வெள்ளிய மாளிகையின்கண் தன் தேவியாகிய இளங்கோ வேண்மாளுடன் அமர்ந்து, துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும் மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம் என - ஒலித்தல் ஓயா முழ வினைப்போன்று அருவி ஒலிக்கும் முகில் சூழ்ந்த சோலையினை உடைய மலையின் வளங் காண்போமெனச் சொல்லி, பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி - பசிய வளையலை அணிந்த தேவியோடு ஆய மகளிர் மிக்கு ஒருசேரக் குழும, வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்- வஞ்சிநகரின் வாயின்முற்றத் தைக் கடந்து செல்கின்றவன்; மாநீர் - பெருநீர்; கடல்; கரிய நீருமாம். கடம்பெறிந்தமையும் இமயம் விற்பொறித்தமையும் 1"வலம்படு முரசிற் சேரலாதன், முந்நீ ரோட்டிக் கடம்பறுத் திமையத்து, முன்னோர் மருள வணங்கு விற் பொறித்து" என்பதனானறிக. மேல், 1"கடற்கடம் பெறிந்த காவலன் வாழி" என்புழி உரைத்தமையுங் காண்க. வானவர் - தேவர், சேரர். தோன்றல் - தலைவன் எனலுமாம். கோதை என்பது சேரல் என்பது போன்ற சேரர் குடிப் பொதுப்பெயர். வேண்மாள் - வேளிர் குலத்துதித்த பெண் என்னும் பொருட்டு. இளங்கோவேண்மாள் செங்குட்டுவன் தேவியின் பெயர்; நன்னன் வேண்மாள், வெளியன் வேண்மாள் என்பனபோல. வேண்மாளுடனிருந்து இளங்கோவை அருளியென நலிந்து பொருள் கோடல் சிறப்பின்றாமென்க. அருவி முழவின் ஒலிக்குமென்பதனை, 2"முழவின்னிசை மூரி முழங்கருவி" என வருதல்கொண்டு உணர்க. அரசனாக லாற் காண்குவமென்றான்; இனித் தேவியை உளப்படுத்தினானாகலு மாம். ஈண்டி, ஈண்டவெனத் திரிக்க. 10-16. வள மலர்ப் பூம் பொழில் வானவர் மகளிரொடு விளை யாட்டு விரும்பிய விறல் வேல் வானவன் - வள மிக்க பூக்கள் மலிந்த பொலிவினையுடைய சோலைவாய் அரமகளிரோடு விளை யாடலை விரும்பிய வெற்றியினையுடைய வேலேந்திய இந்திரன், பொலம் பூங் காவும் புனல் யாற்றுப் பரப்பும் - அழகிய பூங்கா வினையும் நீரொழுகும் யாற்றுப் பரப்பினையும், இலங்கு நீர்த் துருத்தியும் இள மரக் காவும் - விளங்குகின்ற நீரினையுடைய ஆற்றிடைக் குறையையும் இளமரக் காவினையும், அரங்கும் பள்ளியும் - நாடக சாலைகளையும் மண்டபங்களையும், ஒருங்கு டன் பரப்பி ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த - நூற்று நாற்பது யோசனை அளவாக விரிந்தவற்றை ஒருசேரப் பரப்பி, பெரு மால் களிற்றுப் பெயர் வோன் போன்று - பெரிய மத்த யானையின்மீது செல் வோனைப்போலச் சென்று; நூற்று நாற்பது யோசனை விரிந்த பொலம் பூங்கா முதலியவற் றைப் பரப்பிக் களிற்றின்மீது செல்லும் இந்திரன்போன்று என்க. சென்று என ஒரு சொல் வருவிக்க. இந்திரன் போன்றென்னும் உவமையால் இவனும் பூங்கா முதலியவற்றைப் பரப்பிக் கொண்டு களிற்றின்மீது சென்றானென்பது பெற்றாம். களிற்றின்மேல் பரப்பி என்றுங் கொள்க. 17-23. கோங்கம் வேங்கை தூங்கு இணர்க் கொன்றை நாகம் திலகம் நறுங்காழ் ஆரம் - கோங்கும் வேங்கையும் தொங்கும் பூங்கொத்துக்களையுடைய கொன்றையும் சுர புன்னை யும் மஞ்சாடியும் நல்ல வயிரங்கொண்ட சந்தனமும் எனப்பட்ட மரங்கள், உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து - உதிர்த்த பூக்களின் பரப்பினால் நீர் கரந்து ஒழுகும், மதுகரம் ஞிமி றொடு வண்டினம் பாட-மதுகரத்தோடும் ஞிமிறோடும் வண்டுக் கூட்டங்கள் இசை பாட, நெடியோன் மார்பில் ஆரம் போன்று பெருமலை விலங்கிய பேரியாற்றடைகரை - திருமாலின் மார் பின்கண் மாலை போலப் பெரிய மலையினைக் குறுக்கிட்டுச் செல் லும் பேர்யாறு என்னும் யாற்றின் கரைக்கண், இடுமணல் எக்கர் இயைந்து ஒருங்கு இருப்ப - யாறு குவித்த எக்கர் மண லிடத்தே ஒன்றுகூடிப் பொருந்தி இருக்க; உதிர்பூ - உதிர்ந்த பூ எனலுமாம். ஒளித்து என்பதனைத் தன் வினையாக்குக; பிறவினையாக உரைப்பினும் அமையும். மதுகரம், ஞிமிறு, வண்டு இவை வண்டின் பிரிவு. புனலொளித்து ஒழுகும் பேர் யாறு எனவும், ஆரம் போன்று விலங்கிய பேர் யாறு எனவும் கூட்டுக. பாடவென்னும் எச்சம் விலங்கியவென்னும் பெயரெச்ச வினைகொண்டு முடியும். பூம்பரப்பின் புனல் ஒளித்தலால் வண்டி னம் பாட எனலுமாம். பூக்கள் புனலை மறைத்தமையானும் மலை யைக் குறுக்கிட்டுச் சேறலானும் பேர் யாறு ஆரம் போன்றிருந்த தென்க. மலையை நெடியோனாக்குக. இயைந்து ஒருங்கிருப்ப - தேவியோடும் ஆயத்தோடும் பொருந்தி இருக்கவென்க; மூவருங் கூடி யிருப்பவென்றல் முன்பின் மாறுபாடாகும். 24-32. குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும் - குன்றத்துக் குரவையாடினாரொலியும் குறத்தியர் பாட்டொலி யும், வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும் - வெற்றி பொருந் திய முருகனுடைய வேலன் பாட்டோசையும், தினைக் குறு வள்ளையும் - தினையைக் குற்றுவாரது உலக்கைப் பாட்டொலி யும், புனத்து எழு விளியும் - தினைப்புனத்தின்கண் கிளி முதலிய வற்றை ஓட்டுதற்குப் பாடும் பாடலின் ஓசையும், நறவுக் கண் உடைத்த குறவர் ஓதையும் - தேன் கூட்டின் இடத்தை உடைத்திட்ட குறவர்களின் முழக்கமும், பறை இசை அருவிப் பயங்கெழும் ஓதையும் - பறையின் முழக்கம் போலும் அருவி யின் பயன் பொருந்தும் ஒலியும், புலியொடு பொரூஉம் புகர் முக ஓதையும் - புலியுடனே போர் செய்யும் யானையின் முழக்க மும், கலி கெழு மீ மிசைச் சேணோன் ஓதையும் - தழைத்தல் பொருந்திய மரத்தின்மீது கட்டிய பரண்மேலுள்ளோன் விலங்கு களைத் துரக்கும் ஓசையும், பயம்பில் வீழ் யானைப் பாகர் ஓதை யும் - குழியில் வீழ்ந்த யானையைப் பிடிக்கும் யானைப்பாகரது ஒலியும், இயங்கு படை அரவமோடு யாங்கணும் ஒலிப்ப-படை யின் இயக்கத்தால் உண்டாய ஒலியோடு கூடி மலையின் எவ்வி டத்தும் ஒலியாநிற்க; வேலன் - படிமத்தான் ; முருகனைப் பூசிப்பவன் ; முருகன் வேலை உடைமையால் இவனுக்கு இப் பெயர் எய்திற்று. வள்ளை- உலக் கைப்பாட்டு. விளி - பாட்டு ; 1 "விளியாதான் கூத்தாட்டுக் காண்ட லும்" என வருதல் காண்க. நறவு - ஈண்டுத் தேன்கூடு; கண் - அசையுமாம். பிற சான்றோரும் 2"பறையிசை யருவி" 3"பறைக் குர லருவி" எனக் கூறுதல் காண்க. புகர் முகம் - புள்ளிகள் பொருந்திய முகத்தையுடையது ; யானை. கலி -ஆரவாரமுமாம்; 4 "கலிகெழு மரமிசைச் சேணோன்" என்பது காண்க. பயம்பு - யானையை அகப்படுக்கும் குழி. இயங்குபடையரவம் - ஆகோள் கருதிய வெட்சியாரது படையியங்கும் ஒலி; 5"படையியங் கரவம்" என்றார் தொல்காப்பியனாரும். 33-36. அளந்து கடையறியா அருங்கலம் சுமந்து - அளவிட்டு முடிவு போகாத அரிய கலன்களைத் தாங்கி வந்து, வளம் தலை மயங்கிய வஞ்சி முற்றத்து - பல செல்வமும் தலைமயங்கிக் கிடக் கின்ற வஞ்சி நகரின் கோயில் முற்றத்தே, இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல - அரசனது காணுஞ் செவ்வியைப் பெறாது தாம் கொணர்ந்த திறைப் பொருளினைச் சுமந்து எவ்விடத்தும் நிற்கும் பகைவ ரைப்போல; அளந்து கடையறியா என்றது கலத்தின் மிகுதி கூறியவாறு. சுமந்து வந்து என ஒரு சொல் விரிக்க ; சுமந்து தலைமயங்கிய என முற்றத்திற்கு அடையாக்கலுமாம். தலைமயங்குதல் - விரவிக் கிடத் தல். செவ்வி - காண்டற்கினிய பொழுது. செவ்வி பெறாது யாங் கணும் நிற்குமென்க. 37-55. யானை வெண்கோடும் அகிலின் குப்பையும் - யானையின் வெள்ளிய கொம்புகளையும் அகிற் கட்டையின் குவியலையும், மான் மயிர்க் கவரியும் - மான் மயிராகிய வெண்சாமரையை யும், மதுவின் குடங்களும் - தேன் குடங்களையும், சந்தனக் குறையும் சிந்துரக் கட்டியும் - சந்தனக் கட்டைகளையும் சிந்து ரக் கட்டிகளையும், அஞ்சனத்திரளும் அணி அரிதாரமும் - நீலக் கல்லின் திரளையும் அழகிய கத்தூரியையும், ஏல வல்லியும் இருங் கறி வல்லியும்-ஏலக்கொடிகளையும் கரிய மிளகு கொடி களையும், கூவை நூறும் - கூவைக் கிழங்கின் நீற்றினையும், கொழுங் கொடிக் கவலையும்-கொழுவிய கவலைக்கொடியின் கிழங்குகளை யும், தெங்கின் பழனும் தேமாங் கனியும் - தெங்கம் பழங்களை யும் இனிய மாவின் பழங்களையும், பைங்கொடிப் படலையும் - பச்சிலை மாலையையும், பலவின் பழங்களும் - பலாப் பழங்களை யும், காயமும் - வெள்ளுள்ளியையும், கரும்பும் - கரும்பினையும், பூ மலி கொடியும் - பூங்கொடியினையும், கொழுந் தாள் கமுகின் செழுங் குலைத் தாறும் - கொழுவிய அடியினையுடைய கமுகினது செழுமையான காய்க் குலையாகிய தாற்றினையும், பெருங் குலை வாழையின் இருங் கனித் தாறும் - பெரிய தாற்றினையுடைய வாழையின் பெரிய பழம் நிறைந்த குலையினையும், ஆளியின் அணங்கும் அரியின் குருளையும் வாள் வரிப் பறழும் மதகரிக்களப மும் குரங்கின் குட்டியும் குடாவடி உளியமும் - ஆளி சிங்கம் புலி யானை குரங்கு கரடி என்பவற்றின் குட்டிகளையும், வரை யாடு வருடையும் - மலையில் துள்ளி விளையாடும் வருடை மானை யும், மட மான் மறியும் காசறைக் கருவும் - இளமை பொருந் திய மான் குட்டியையும் கத்தூரிக் குட்டியையும், ஆசு அறு நகுலமும் - குற்றமற்ற கீரியையும், பீலி மஞ்ஞையும் - ஆண் மயிலினையும், நாவியின் பிள்ளையும் - புழுகு பூனையின் குட்டியை யும், கானக் கோழியும் தேன் மொழிக் கிள்ளையும் - காட்டுக் கோழியையும் இனிய மொழி பேசும் கிளியினையும், மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டு - குன்றக் குறவர் தம் தலைமீது சுமந்து வந்து நின்று; மான்மயிர்க் கவரியும் என்பதற்குக் கவரிமான் மயிரும் எனமாற் றிப் பொருள் உரைப்பினும் அமையும், குறை - குறைக்கப்பட்டது; கட்டை. கூவை நூறு - கூவைக்கிழங்கின் மா; 1"நூறொடு குழீஇயின கூவை," 2"மாவை யிஞ்சியுங் கூவைச் சுண்ணமும்" என வருவனவுங் காண்க. பைங்கொடி - பச்சிலைக் கொடி; எல்லாவற்றிலும் பசுத் திருத்தலிற் பச்சிலையென்று பெயர் பெற்றது; சினைவினையை முதன் மேலேற்றிப் பைங்கொடி யென்றார்; முருகாற்றுள் 3"பைங்கொடி" என்பதற்கு நச்சினார்க்கினியரெழுதிய உரை காண்க. படலை - இலை மாலை. பெருங்குலை வாழைக்கு அடை. குடாவடி - வளைந்த அடி களையுடையது; கரடி. வருடை - மலையிற் பாய்ந்து விளையாடும் ஒரு வகை மான்; மலையாடு என்றுங் கூறுவர்; இஃது எட்டுக் கால்களை உடையதென்றும், இதன் கால்கள் வளைந்து முதுகின்மேல் இருப்பன என்றும் கூறப்படுகின்றது; 1"சிலம்புபாய் வருடையொடு," 2"மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள், வரைவாழ் வருடை வன்றலை மாத்தகர்,"3"எண்கால் வருடையும்" என்பன காண்க. அணங்கு, குருளை, பறழ், களபம், குட்டி, உளியம், மறி, கரு, பிள்ளை எனப் பலவகை இளமை மரபுப் பெயர்களை அடிகள் ஏற்ற பெற்றி அமைத்திருக்குந் திறன் அறிந்து மகிழ்தற்குரியது. கொண்டு வந்து நின்றது என விரித்துரைக்க. தெவ்வர் போலத் தலைமிசைக் கொண்டு வந்து நின்றென்க. 55-63 ஆங்கு - அவ்விடத்தே, ஏழ் பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம்-ஏழு பிறவியின்கண்ணும் நினக்கு யாம் அடிமை யாவேம் நினது அரச நீதி நீடு வாழ்வதாக என்று சொல்லி, கான வேங்கைக் கீழ் ஓர் காரிகை-காட்டகத்து வேங்கை மரத் தடியில் ஓர் நங்கை, தான் முலை இழந்து தனித் துயர் எய்தி- தனது ஒரு முலையினை இழந்து பிறரடையாத துன்பத்தை அடைந்து, வானவர் போற்ற மன்னொடும் கூடி வானவர் போற்ற வானகம் பெற்றனள் - தேவர்கள் துதிக்கத் தன் கணவனோடு கூடி அத் தேவர்கள் ஏத்தத் துறக்கம் புக்கனள், எந் நாட்டாள் கொல் யார் மகள் கொல்லோ - அவள் எந்நாட்டினளோ எவர் புதல்வியோ, நின்னாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்-நினது நாட்டிடத்து யாங்கள் எண்ணத்தினும் இஃதொப்ப தொன்றனை அறிந்திலேம், பன்னூறு ஆயிரத்து ஆண்டு வாழியர் என - பல நூறாயிரம் ஆண்டுகள் வாழ்வாயாகவென வாழ்த்திய அளவில்; பிறப்பு - வழி முறையுமாம்; வழிவழி அடியேம் என்றவாறு. கொற்றம்-வென்றியுமாம். என்று சொல்லி என ஒரு சொல் வரு விக்க. பின்னர் வரும் வானவர் போற்ற என்பதற்குச் சேரர் போற்ற எனலும் அமையும்; இதற்குப் போற்ற என்பது எதிர்கால மாகும். நின்னாட்டுக் கான வேங்கைக் கீழ் என்றுமாம். நினைப்பினும் என்னும் உம்மை கண்ணாற் கண்டறியாமையே அன்றி என எச்சப் பொருள் தந்தது. 64-66. மண் களி நெடு வேல் மன்னவற் கண்டு - நிலமகள் களிப்பெய்து தற்குக் காரணமாகிய நீண்ட வேற்படையினை யுடைய செங்குட்டுவனை நோக்கி, கண் களி மயக்கத்துக் காத லோடு இருந்த - அவனது காட்சி கண் களித்தற்குக் காரணமான வியப்பைச் செய்தலால் ஆர்வத்துடன் அவணிருந்த, தண்டமிழ் ஆசான் சாத்தன் இஃது உரைக்கும் - தமிழ் ஆசிரியனாகிய கூல வாணிகன் சாத்தன் இதனைக் கூறுவான்; மயக்கம் - மருட்சி; வியப்பு. இஃதென்றது மேல் வருவதனை. 67-68. ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம் திண் திறல் வேந்தே செப்பக் கேளாய் - ஒள்ளிய வளையலணிந்த அம் மடந் தைக்கு நேர்ந்தன யாவற்றையும் மிக்க வலியினையுடைய மன் னனே யான் கூறக் கேட்பாயாக ; அம் மாதர்க்கு எனச் சுட்டு வருவித்துரைக்க. உற்றதை எல்லாம், ஒருமைப் பன்மை மயக்கம், மாதர்க்கு உற்றதை யெல்லாம் செப்பக் கேளாய் என்று சாத்தன் இஃது உரைக்கும் என முன்னர்க் கூட்டி யுரைப்பினுமமையும். இதற்கு என்று என ஒரு சொல் வரு விக்க. 69-77. தீ வினைச் சிலம்பு காரணமாக - இவர் கொடுவினை பலித்தற்குக் காரணமான சிலம்பு ஏதுவாக, ஆய் தொடி அரிவை கணவற்கு உற்றதும் - ஆராய்ந்த வளையலணிந்த கண்ணகியின் கணவனுக்குநேர்ந்ததனையும், வலம்படு தானை மன்னன்முன்னர்- வெற்றியுண்டாதற்குக் காரணமான படையினையுடைய பாண்டி யன் முன்னர், சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும் - தன் மற்றைச் சிலம்பொன்றுடன் போன கண்ணகி வழக்குரைத்த தனையும், செஞ்சிலம்பு எறிந்து தேவி முன்னர் வஞ்சினம் சாற் றிய மா பெரும் பத்தினி- செம்மையுடைய சிலம்பினை உடைத் துப் பாண்டியன் தேவி முன்பு வஞ்சினங் கூறிய மிக்க பெருமை யினையுடைய பத்தினி யாகிய கண்ணகி, அஞ்சில் ஓதி அறிகெனப் பெயர்ந்து - அழகிய சிலவாய கூந்தலை உடையாய் என் வஞ்சி னத்தை அறிவாயாகவென்று கூறி அவ்விடத்தை நீங்கி, முதிரா முலை முகத்து எழுந்த தீயின் மதுரை மூதூர் மா நகர் சுட்டதும்- முற்றாத முலையிடத்தே தோன்றிய எரியான் மதுரையாகிய பழைய நகரினை எரித்ததனையும் சொல்லி; இனி, சிலம்பு தீவினையுடைத் தன்றாயினும் இச் செயல்களுக் கெல்லாம் காரணமாக இருந்தது பற்றித் `தீவினைச் சிலம்பு' என் றார் எனலும் அமையும். பதிகத்துள்ளும் 1"சிலம்பு காரணமாக" என்றமை காண்க. கணவற்குற்றது என்றது அவன் கொலையுண்ட தனை. மாணிக்கப் பரலுடையதாகலின் `செஞ்சிலம்பு' எனப்பட்டது. தேவி முன்னர் வஞ்சினஞ் சாற்றியதனை வஞ்சின மாலையுட் காண்க. சொல்லியென ஒரு சொல் விரித்துரைக்க. 78-86. அரி மான் ஏந்திய அமளிமிசை இருந்த திரு வீழ் மார்பின் தென்னர் கோமான் - சிங்கஞ் சுமந்த அரசு கட்டிலில் அமர்ந்திருந்த திரு விரும்பும் மார்பினையுடைய பாண்டி யர் பெருமான் மயங்கி விழ்ந்தானாக அது கண்டு, தயங்கு இணர்க் கோதை தன் துயர் பொறாஅன் மயங்கினன் கொல் லென - விளங்கும் பூங்கொத்தணிந்த கூந்தலையுடைய கண்ணகி யின் துன்பத்தினைப் பொறானாய் மயக்க மெய்தினனோ என்று, மலர் அடி வருடி - அவன் மலர் போலும் பாதங்களைத் தடவி, தலைத்தாள் நெடுமொழி தன்செவி கேளாள் - கண்ணகி பெரு மிதத்துடன் கூறிய வஞ்சின மொழியினைத் தன் செவியகத்துக் கேளாமலும், கலக்கங் கொள்ளாள் - உள்ளங் கலங்காமலும், கடுந்துயர் பொறாஅள் - கணவனுற்ற துன்பத்தைப் பொறா ளாய், மன்னவன் செல்வுழிச் செல்க யான் என - அரசன் சென்றவிடத்தே யானும் செல்வேனாக என்று கூறி, தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல் - தனது உயிரானே அம் மன்னனது உயிரைத் தேடுவாள் போன்று, பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள் - கோப்பெருந் தேவியும் அவ் வரசனோடு சேர மடிந்தனள்; 1"அரிமா னேந்திய வமளிமிசை யிருந்தனன், றிருவீழ் மார்பிற் றென்னவர் கோவே" என முன்னருங் கூறினார். கோமான் மயங்கி வீழ்ந்தனனாக அது கண்டு என விரித்துரைத்துக் கொள்க. "கெடுக வென் னாயுளென, மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே" என்றதூஉம் காண்க. கடுந்துயர் - அரசன் துஞ்சினமை. மன்னவன் அரசு கட் டிலில் மயங்கி விழ்ந்ததனைக் கண்ட தேவி கண்ணகியின் துயர் பொறாது மயங்கினன் போலுமென அடிகளை வருடி, அவன் துஞ்சி னமை அறிந்து, செல்க யானெனக் கூறி, அவன் உயிர் தேடினள்போல் உடன் மாய்ந்தனள் என்க. உயிருடன் தாழ்த்திராது கடுக மரித்தா ளென்பார் ‘நெடுமொழி கேளாள்', ‘கலக்கங் கொள்ளாள்' என் றார். உம்மை இறந்தது தழீஇயது. 87-92. கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை இற்று எனக் காட்டி இறைக்கு உரைப்பனள் போல் - வெற்றியினை உடைய பாண்டியனது கொடுங்கோலின் இயல்பு இஃதெனக் காட்டி நினக்குக் கூறுவாள் போன்று, தன் நாட்டு ஆங்கண் தனிமையிற் செல்லாள் நின் நாட்டு அகவயின் அடைந்தனள் நங்கை - கண்ணகி அவ் விடத்தினின்றும் தனியாகத் தன்னாட் டிற்குச் செல்லாளாய் நினது நாட்டின்கண் சேர்ந்தனள்; என்று ஒழிவின்றி உரைத்து - என்று யாவும் எஞ்சாமற் கூறி, ஈண்டு ஊழி ஊழி வழி வழிச் சிறக்க நின் வலம்படு கொற்றம் என - இவ்வுலகத்தில் நின் மேன்மை பொருந்திய வெற்றியா னது ஊழிதோறும் நின் வழியிலுள்ளார்க்கும் பின்னும் பின் னும் மிகுவதாக என்றியம்ப; பாண்டியனது கொடுங்கோலின் தன்மையைச் செங்கோலனாய நினக்கு உரைப்பாள் போன்று என்க. இது தற்குறிப்பு; இறை, முன்னிலைக்கண் வந்தது. கோவலன் கொலையுண்டது முதலியவற் றைக் கூறிய சாத்தனார் பெருங்கோப்பெண்டு மாய்ந்ததனையும் நங்கை அடைந்ததனையும் சிறப்புப் பற்றி வேறாக எடுத்துரைத்தா ரென்க. பின்னர் 1"மாதரோ பெருந்திரு வுறுக" "பத்தினிக் கட வுளைப் பரசல் வேண்டும்" என வருதலுங் காண்க. . 93-94. தென்னர் கோமான் தீத் திறங் கேட்ட மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன் - பாண்டியனது கொடுந் தன்மையைக் கேள்வியுற்ற மன்னர் தலைவனாய குட்டுவன் வருந்தினனாய் உரைப்பவன் ; தென்னர் கோமான் - தென்னாட்டார் தலைவன். தீத் திறம் - பாண்டியன் உயிர் விட்டதும் கோவலற்கு ஊறு செய்ததுமாகிய இரண்டனையும் குறிக்கும். 95-106. எம் மோரன்ன வேந்தர்க்கு உற்ற செம்மையின் இகந்த சொல் செவிப் புலம் படாமுன் - எம்மை ஒத்த அரசர்க்கு முறை வழுவுதலால் உண்டாய பழிச்சொல் சென்று செவியிற் பொருந்து தற்கு முன், உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கு என - ஈண்டு உயிரை உடம்பினின்று நீக்கின சொல் சென்றடைவதாக என்று உயிரை விட்டமையின், வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது - முன்னைத் தீவினை வந்துறுத்து வளையச் செய்த கோலைப் பாண்டியனது உடம்பினின்று சென்ற உயிர் வளைவு நீக்கிச் செங்கோலாகச் செய்தது, மழை வளம் கரப்பின் வான் பேர் அச்சம் - மழையாகிய வளம் பெய்யாது மறையின் மிகப் பெரிய அச்சம் உண்டாம், பிழை உயிர் எய்தில் பெரும்பேர் அச்சம் - யாதானு மொன்றான் உயிர்கள் வருத்தமுறின் அத னானும் மிகப் பெரிய அச்சமுண்டாம், குடிபுரவுண்டும் கொடுங் கோல் அஞ்சி மன்பதை காக்கும் நன் குடிப் பிறத்தல் - குடி களைக் காத்தலை மேற்கொண்டும் கொடுங்கோலுக்கு அஞ்சி மக்கட் கூட்டத்தினைப் புரக்கும் நல்ல அரசர் குடியில் உதித்தல், துன்பம் அல்லது தொழுதகவு இல் என - துன்பந் தருவதல்லது போற்றத்தக்கதன்று என, துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த நன்னூற் புலவற்கு நன்கனம் உரைத்து- கண்ண கிக்கு உற்ற துன்பத்தினைத் தெளிந்து வந்து கூறிய சாத்த னார்க்கு நன்கு மொழிந்து ; "எம்மோரன்ன.........உறுக வீங்கென" என்றது பாண்டி யன் உட்கோள். என்று உயிரை விட்டமையின் என விரித்துரைத்துக் கொள்க. பதி - இடம்; உடம்பு; 1"உண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்த்ததும்" என மேல் வருவதுங் காண்க. செம்மை - செங்கோன்மை. இகந்த - இகத்தலாகிய. அரசன் முறைகோடாவியல் பினனென்பான் "வல்வினை வளைத்த கோலை" என்றான். கோல் வளைதலுற்ற அப்பொழுதே செல்லுயிர் அதனைச் செங்கோலாக்கி யது என்றான். முன்னர். 2"வளைகோ லிழுக்கத் துயிராணி கொடுத் தாங், கிருநில மடந்தைக்குச் செங்கோல் காட்ட" என்றதூஉங் காண்க. மழையும் அதனாலாய வளமும் எனலுமாம். 3"மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்...காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்" என்றார் பிறரும். தொழுதகவு - போற்றுந்தகுதி; ஈண்டு இன்பத்தின் மேற்று, ஆட்சி எளிதன்று என்பது 4"ஒருமைந்தன் றன்குலத்துக் குள்ளானென் பதுமுணரான், தருமந்தன் வழிச் செல்கை கடனென்று தன்மைந்தன், மருமந்தன் றேராழி யுறவூர்ந் தான் மனுவேந்தன், அருமந்த வரசாட்சி யரிதோமற் றெளிதோ தான்" என்பதனானும் அறியப்படும். நன்னூற் புலவன் - மணி மேகலை யாசிரியராகிய சாத்தனார். இனி 'வேந்தற்கு' என்பது பாடமாயின் பாண்டியனுக்குண்டாகிய சொல் பிறர் செவிப் புகு தற்குமுன் பெயர்த்தமை உறுகவெனக் கருதி எனச் செங்குட்டுவன் உட்கோளாக்குக. தொழுதகவில்லென நன்கன முரைத்தென்க. தொழுதகவில்லென வந்துரைத்த புலவற்கு என அரும்பதவுரையா சிரியர் கூறியது சிறப்புடைத்தன்று ; என்னை? "நன்கன முரைத்து" என்பது பயனின்றா மாகலின். 106-110. ஆங்கு உயிருடன் சென்ற ஒரு மகள் தன்னினும் செயிருடன் வந்த இச் சேயிழை தன்னினும் - அப்பொழுதே கணவன் உயிரோடே கூடிச் சென்ற ஒப்பற்ற பெருங்கோப் பெண்டும் கணவனை இழந்த செற்றத்தோடே இவண் வந்த இக் கண்ணகியுமாய இருவருள்ளும், நன்னுதல் வியக்கும் நலத்தோர் யார் என மன்னவன் உரைப்ப - நன்னுதால் வியக்கத் தக்க சிறப்பினையுடையோர் யார் என்று மன்னன் கேட்ப ; நன்னுதல், முன்னிலைப்பெயர். நலம் - கற்பு மேம்பாடு. 1"பாம் பறியும் பாம்பின் கால்" என்றபடி, கற்புடை மகளிரியல்பு கற் புடை மகளிர்க்கே புலனாமாகலின் ‘நன்னுதல் . . . . . . யாரெனக்' கேட்டனன் என்க. 110-114. மா பெருந் தேவி - அது கேட்ட இருங்கோ வேண் மாள், காதலன் துன்பம் காணாது கழிந்த மாதரோ பெருந்திரு உறுக வானகத்து - தன் கணவன் இறந்தமையான் உண்டாம் துன்பத்தினை அறியாதே இறந்த கோப்பெருந்தேவி துறக்கத்துப் பெருஞ்செல்வம் பெறுக, அத் திறம் நிற்க - அஃதொழிக, நம் அகல் நாடு அடைந்த இப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும் என - நமது அகன்ற நாட்டினை அடைந்த இக் கற்புக் கடவுளைப் போற்றுதல் வேண்டுமெனக் கூற; மாபெருந்தேவி - பெருமையுடைய அரச மாதேவி; இருங்கோ வேண்மாள். மாதர் - பாண்டியன் மனைவி. கணவன் இறந்த அப் பொழுதே அவளும் இறந்தாளாகலான், காதலன்றுன்பங் காணாது கழிந்த மாதர் என்றாள். அத்திறம் நிற்க - அது கூற வேண்டா என்ற படி. ஈண்டுத் தேவி கூறிய விடை ஒட்ப நுட்பமுடையதாதல் அறிந்து இன்புறுதற்குரியது. இருவரும் வியக்கு நலத்தோரே, எனினும் தம்மால் வழிபடற்குரியாள் பத்தினித் தெய்வமாம் என்பது விடை யின் கருத்தாகும். 115-116. மாலை வெண்குடை மன்னவன் விரும்பி நூல் அறி புலவரை நோக்க - மாலை அணிந்த வெண்கொற்றக் குடையினை யுடைய அரசன் தன் தேவி கூறியதன்கண் விருப்புற்று அமைச்சரை நோக்க; நூலறிபுலவர் - அரசியல் நூலறிந்த அமைச்சர் ; 2"மதி நுட்பம் நூலோ டுடையார்க்கு" என்றார் வள்ளுவனாரும். 116-121. ஆங்கவர் - அவ் வமைச்சர், ஒற்கா மரபின் பொதி யில் அன்றியும் - ஒடுங்காத முறைமையினையுடைய பொதியி லின்கண் அன்றியும், வில் தலைக்கொண்ட வியன் பேரிமயத்து - நமது வில்லைத் தன்னிடத்துடைய மிகப் பெரிய இமயவரைக் கண், கல் கால் கொள்ளினும் - கல்லினை அடிச்செய்து கொண்டா லும், கடவுள் ஆகும் - அது கடவுள் ஆம், கங்கைப் பேர் யாற்றி னும் காவிரிப் புனலினும் தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து என - அங்ஙனம் கால் கொண்ட கல்லைக் கங்கையாற்றிடத்தும் காவிரியிடத்தும் நீர்ப்படை செய்தல் தகுதியுடைத்தாம் எனக் கூற; ஒற்கா மரபு - அழியாத தன்மை; 1"பொதியி லாயினும் இமய மாயினும் ..... ஒடுக்கங் கூறார்" என்றமை காண்க. பொதியில் அன்றியும் - பொதியிற்கல் கொள்வதன்றியும். இமயக் கல்லிற்குக் கங்கையும் பொதியிற் கல்லிற்குக் காவிரியுங் கொள்க ; எதிர்நிர னிறை. நீர்ப்படை - நீரிற்படுத்துத் தூய்மை செய்தல். அவர் தக வுடைத்தெனக் கூறவென்க. 122-125. பொதியில் குன்றத்துக் கற் கால்கொண்டு முதுநீர்க் காவிரி முன்துறைப்படுத்தல் - பொதியின் மலையில் கல்லினைப் பெயர்த்துப் பழையதாய் வரும் நீரினையுடைய காவிரியாற்றின் துறைக்கண் நீர்ப்படுத்தல், மறத்தகை நெடுவாள் எம் குடிப் பிறந்தோர்க்குச் சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று - மறத்தின் கூறுபாடமைந்த மாற்றார்க்குத் தீங்கு செய்யும் நீண்ட வாளினையுடைய எமது குடியிலே தோன்றினார்க்குப் பெருமை யொடு பட்ட செயல் அன்றாம்; முதுமையைக் காவிரிக்கு ஏற்றுக. மறத்தகை என்னும் அடை வாளுக்கும் குடிக்கும் பொருந்தும்; மறத்தகையும் நெடுவாளு முடைய குடியெனலுமாம். சேய்மைக் கண்ணதாய வேற்று நாட்டிலே சென்று பகை வென்று எடுத்துப் படுத்தலே வீரக்குடியிலே தோன்றி னார்க்குப் பெருமையுடைய செய்கையாம் என்றானென்க.. 126-130. புன் மயிர்ச் சடைமுடிப் புலரா உடுக்கை - சிவந்த மயிர்களை யுடைய சடைமுடியினையும் ஈரம் புலராத உடையினை யும், முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து - மூன்று புரியானா கிய பூணூலணிந்த மார்பினையும் மூன்று எரியாகிய செல்வத் தினையும் உடைய, இரு பிறப்பாளரொடு தேவ இருடிக ளோடே, பெருமலை அரசன் - பெரிய மலையரசன், மடவதின் மாண்ட மா பெரும் பத்தினிக் கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின் - இளமைக் காலத்தேயே மாட்சிமைப் பட்ட மிக்க சிறப்பினையுடைய கற்புத் தெய்வத்தின் படிமஞ் செய்தற்கு ஓர் கல் தாராதொழிவனாயின்; புல் - ஓர் நிறம் ; புல்லை யென வழங்கும். புலரா வுடுக்கை யினைப் 2"புலராக் காழகம் புலர வுடீஇ" என்பதனானுமறிக. முத்தீ - ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி. இருபிறப்பு - உபநயனத்திற்கு முன்னொரு பிறப்பும் பின்னொரு பிறப்புமாகிய இரு பிறப்பு. மகட்டருவார் பார்ப்பாரோடு கொடுத்தல் கருதி இரு பிறப்பாளரொடு கல்தாரானாயின் என்றார். இருபிறப்பாளர் - ஈண் டுத் தேவ இருடிகள். கண்ணகி. 1"சிறுமுதுக் குறைவி" யாக லான், மடவதின் மாண்ட பத்தினி என்றார். எழுதல் - இயற்றுதல். இருபிறப்பாளரொடு என்றமையானும், பின் மகட்பாற் காஞ்சி கூறுதலானும் கல்லினை மலையரையன் மகளாகக் கருதினான் என்க. 131-140. வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை கழிந் தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும் - நிலைத்து நின்று பயன்படாத மாட்சி இல்லாத வாழ்க்கையினை இறந்தோர் இற வாதோர்க்கு உணர்த்திய யாக்கை நிலையாமையாகிய காஞ்சியும், முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை மதி முடிக்கு அளித்த மகட்பாற் காஞ்சியும் - தனது தொல் குடியிற் றோன் றிய இளஞ் செல்வியாகிய உமையைப் பிறை சூடும் இறைவ னுக்குக் கொடுத்த மகட்பாற் காஞ்சியும், தென் திசை என்றன் வஞ்சியொடு வடதிசை நின்று எதிர் ஊன்றிய நீள்பெருங் காஞ் சியும் - தென்றிசையினின்று மேற்செல்லும் எனது வஞ்சியோடு வடதிசைக்கண் எதிராக நின்று தடுத்த நீண்ட பெருங் காஞ்சியும், நிலவுக் கதிர் அளைந்த நீள் பெருஞ் சென்னி - நிலாவின் தண் கதிர்கள் படிந்த உயர்ந்த பெரிய முடியின்கண், அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை - மலர்ந்த மந்தார மாலையோடே அவ் விடத்து அதன் பக்கலில் மலர்ந்த வேங்கைப் பூவாற் றொடுத்த ஒளி அமைந்த வெற்றி மாலையும் ஆகிய இவற்றை, மேம்பட மலைதலும் காண்குவல் ஈங்கு என - மேன்மையுண்டாகச் சூடு தலையும் இப்பொழுது காண்பேனெனச் சொல்லி; கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சி - இளமை கழிந்து அறிவு மிக்கோர் இளமை கழியாத அறிவின் மாக்கட்குக் காட்டிய முதுகாஞ்சி என்றலுமாம்;2"கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்" என்பதற்கு நச்சினார்க்கினியரெழுதிய உரை காண்க. மகட்பாற் காஞ்சியின் இலக்கணம் 3"நிகர்த்துமேல் வந்த வேந்த னொடு முதுகுடி, மகட்பா டஞ்சிய மகட்பா லானும்" எனத் தொல் காப்பியத்தும், 4"ஏந்திழையாட் டருகெனும், வேந்தனொடு வேறு நின்றன்று" என வெண்பா மாலையினும் கூறப்பட்டுளது. மகட் பாடஞ்சிய என்புழியும் மகளைக் கொடுக்க அஞ்சி மாறுபட்ட என் பதே கருத்தாகும். இவ்வாற்றால் ஒருவற்கு மகட்கொடை மறுத்தல் மகட்பாற் காஞ்சியாதலன்றி மகட்கொடை அஃதாகாமையின், முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை மதிமுடிக் களித்தமை மகட்பாற் காஞ்சியாதல் யாங்ஙனமெனின், இறைவற்கு இனியனாய் அளித் தான் எனக் கொண்டு, மகட்டருகென்று மேல்வந்தாற்கு அளித்தில னென்னும் எதிர்மறைப் பொருள் பற்றி மகட்பாற் காஞ்சி யென்றல் சாலுமென்க. 'தென்றிசை யென்றன் வஞ்சியொடு வடதிசை, நின்றெதி ரூன்றிய நீள்பெருங் காஞ்சி' "வஞ்சியுங் காஞ்சியுந் தம்முள் மாறே" என்னும் பன்னிரு படலத்தைத் தழுவியதாகும். அடிகள் பிறாண்டும் அந் நூற் கருத்தினைத் தழுவிச் சேறல் அறியற்பாற்று. பெருங்காஞ்சியாவது 1"மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமை" என்பர் தொல்காப்பியர். 2"தாங்குதிறன் மறவர் தத்த மாற்றல், வீங்குபெரும் படையின் வெளிப்படுத் தன்று" என்பர் ஐயனாரிதனார். வேங்கையொடு - வேங்கையால். மாலை மேம்பட மலைதலும் என்றமையால் முற்கூறிப் போந்த காஞ்சித் துறைகள் அவற்றிற்குரிய மாலையைக் குறிக்குமென்க. காண்குவல் என்றது அம் மலர் மரங்களைத் தடிந்து அம்மாலைகளை மலையாமற் செய்வேனென் வஞ்சினங் கூறியபடி. இங்ஙனம் மலையரசன் மேல் வைத்துக் கூறியதனை இமயத்துக் கற்கொள்ளுதலை ஆரியவரசர் தடுப்பாருளராயின் அவரை நோக்கி உரைத்ததாகக் கொள்க. 141-149. குடை நிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும் - குடை நாட்கோளும் கொற்ற வஞ்சியும், நெடு மாராயம் நிலைஇய வஞ் சியும் - நெடிய மாராயம் நிலைபெற்ற வஞ்சியும், வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும் - வெற்றி கொண்டோர் விளங் கிய சிறந்த பெருவஞ்சியும், பின்றாச் சிறப்பின் பெருஞ் சோற்று வஞ்சியும் - தாழாச் சிறப்பினையுடைய பெருஞ்சோற்று வஞ்சி யும், குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும் - குறைவில்லாப் பெருமையினையுடைய கொற்ற வள்ளையும், வட்கர் போகிய வான் பனந் தோட்டுடன் புட்கைச் சேனை பொலியச் சூட்டி - இடையே முரிதலில்லாத சிறந்த பனந்தோட்டோடு மேற் கோளையுடைய தானை விளங்க அணிவித்து, பூவா வஞ்சிப் பொன் நகர்ப் புறத்து என் வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என - அழகிய வஞ்சி நகரின் புறத்தே எனது பகைவரைப் பொருத வினை வாய்த்த வாளிற்கு வஞ்சி மாலை சூடுவேம் என்று கூற; குடைநிலை வஞ்சி - குடைநாட் கோடல். 1"குடையும் வாளும் நாள்கோள்" என்னுஞ் சூத்திர வுரையில், ‘நாள்கொளலாவது நாளும் ஓரையுந் தனக்கேற்பக் கொண்டு செல்வுழி அக் காலத்திற்கு ஓர் இடையூறு தோன்றியவழித் தனக்கு இன்றியமையாதனவற்றை அத் திசை நோக்கி அக் காலத்தே முன்னே செல்ல விடுதல்' எனவும், 2"இயங்குபடை யரவம்" என்னுஞ் சூத்திரவுரைக்கண், "மாராயம் பெற்ற நெடுமொழி" என்பதற்கு ‘வேந்தனாற் சிறப்பெய்திய வதனால் தானேயாயினும் பிறரேயாயினும் கூறும் மீக்கூற்றுச் சொல்; சிறப்பாவன ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதல்' எனவும், "பிண்ட மேய பெருஞ் சோற்று நிலை" என்பதற்கு 'வேந்தன் போர்தலைக் கொண்ட பிற்றைஞான்று போர் குறித்த படையாளரும் தானும் உடனுண்பான் போல்வதோர் முகமன் செய்தற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தல் மேயின பெருஞ்சோற்று நிலை' எனவும், " குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளை" என்பதற்கு `வேந்தனது குறையாத வெற்றிச் சிறப்பினாற் பகைவர் நாடழிதற் கிரங்கித் தோற்றோனை விளங்கக் கூறும் வள்ளைப் பாட்டு (வள்ளை-உரற்பாட்டு)' எனவும் நச்சினார்க்கினியர் எழுதிய உரைகள் அறியத்தக்கன. "கொற்ற வள்ளை" என்பதற்குத் `தோற்ற கொற்றவன் அளிக்கும் திறை' என்பர் இளம்பூரணர். குடை நாட் கோள் தொல்காப்பியத்து உழிஞைத் திணையிற் கூறி யிருப்ப, வெண்பா மாலையில் வஞ்சி உழிஞை என்னும் இருதிணைக் கண்ணும் கூறப்பட்டுளது. இளங்கோவடிகள் வஞ்சியிற் குடைநிலை கூறியது பன்னிரு படலத்தைத் தழுவியதாகும். மற்றும், 3"வாளுங் குடையும் மயிர்க்கண் முரசும், நாளொடு பெயர்த்து" என்புழி உரைத்தனவுங்காண்க. இனி, புறப்பொருள் வெண்பா மாலையில் குடைநிலைவஞ்சி, கொற்றவஞ்சி, மாராயவஞ்சி, பெருவஞ்சி, பெருஞ்சோற்றுவஞ்சி, கொற்றவள்ளை என்ப வற்றிற்கு முறையே கூறப்பட்டுள்ள இலக்கணங்கள்; 4" பெய்தாமஞ் சுரும்பிமிரப் பெரும்புலவர் புகழ்பாடக் கொய்தார் மன்னவன் குடைநாட் கொண்டன்று" " வையகம் வணங்க வாளோச் சினனெனச் செய்கழல் வேந்தன் சீர்மிகுத் தன்று" " மறவேந்தனிற் சிறப்பெய்திய விறல்வேலோர் நிலையுரைத்தன்று" " முன்னடையார் வளநாட்டைப் பின்னருமுடன் றெரிகொளீஇயன்று" " திருந்தார் தெம்முனை தெறுகுவ ரிவரெனப் பெருஞ்சோ றாடவர் பெறுமுறை வகுத்தன்று" " மன்னவன் புகழ்கிளந் தொன்னார்நா டழிபிரங்கின்று" என்பன. வட்கர் என்பதனை வட்கார் என்பதன் குறுக்கலெனக் கொண்டு, பகைவர் போதற்குக் காரணமான என்றுரைத்தலுமாம்; 1"வட்கர் போகிய வளரிளம் போந்தை" என்பதன் உரை காண்க. பூட்கை - மேற்கோள்; புட்கையென விகாரமாயிற்று. பூவாவஞ்சி யென்பது வஞ்சி நகர்க்கு வெளிப்படை; 2"பூவாவஞ்சியுந் தருகு வன்" 3"பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி" என்பனவுங் காண்க. பூவா வஞ்சி - கருவூர் என்பது அரும்பதவுரை. என் எனவும் ஆடுதுமென வும் ஒருமை பன்மை மயங்கி வந்தன. வேந்தன் ஒருவன், போர் செய்யப் போங்கால், தனக்குரிய அடையாளப் பூக்களோடே தான் மேற்கொண்ட திணைக்குரிய மலர்களை விரவித் தொடுப்பித்துத் தான் சூடிக்கோடலும், தன் வீரர்க்குச் சூட்டுதலும் மரபு. ஆகலான், வஞ்சித்திணையைச் சார்ந்த குடை நிலைவஞ்சி முதலியவற்றுக்குரிய வஞ்சிப்பூவினைப் பனந்தோட்டுடன் சூட்டிச் சூடுதும் என்றான் செங்குட்டுவன். இங்ஙனம் குடைநிலைவஞ்சி . . . கொற்றவள்ளை இவற்றைப் பனந்தோட்டுடன் சூட்டுவேன் என்றானாயினும் இத் துறை யெல்லாம் முற்ற முடிப்பேன் எனக் கூறியதாகக் கருத்துக் கொள்க. 150-151. பல் யாண்டு வாழ்க நின்கொற்றம் ஈங்குஎன வில்லவன் கோதை வேந்தற்கு உரைக்கும் - வில்லவன் கோதையென்னும் அமைச்சன் இவ் வுலகத்து நினது வெற்றி பல யாண்டு நின்று நிலவுவதாகவெனக் கூறி மன்னனுக்கு உரைப்பான்; வில்லவன் கோதை - செங்குட்டுவன் அமைச்சன். 152-155. நும் போல் வேந்தர் நும்மோடு இகலி - நும்மை ஒத்த அரசர் நும்முடன் மாறுபட்டு, கொங்கர் செங்களத்துக் கொடுவரிக் கயற் கொடி பகைபுறத்துத் தந்தனர் ஆயி னும் - கொங்கரது போர்க்களத்துப் பொருதவிடத்தே புலிக் கொடியும் மீனக்கொடியும் நினக்குத் தந்து ஓடினராயினும், ஆங்கு அவை திகை முக வேழத்தின் செவி அகம் புக்கன - அச் செயல்கள் திக்கு யானைகளின் காதுகளிற் பட்டன; நும்போல் மன்னர் என்றான், குலம் பற்றி. செங்களம் - குருதி யாற் சிவந்த களம். செங்களத்துப் பகைபுறத்தென்க. பகைத்தல் ஈண்டுப் பொருதல். சோழ பாண்டியர் இவனொடு கொங்கர் செங்களத்துப் பொருத போரில் தம் கொடிகளைப் போட்டு ஓடின ரென்க. இவன் ஆண்டுக் களவேள்வி செய்தனனென்பது 1"கொங்கர் செங்களம் வேட்டு" என்றமையாற் பெறப்படும். திகை - திசை. திகை முக வேழத்தின் செவியகம் புக்கனவென்றது அச் செயல் யாண்டும் பரவின என்றவாறு. 156-159. கொங்கணர் கலிங்கர் கொடுங் கரு நாடர் - கொங் கணரும் கலிங்கரும் கொடிய கன்னடரும், பங்களர் கங்கர் பல் வேல் கட்டியர் - வங்களரும் கங்கரும் பல வேலினையுடைய கட்டியரும், வட ஆரியரொடு வண்தமிழ் மயக்கத்து உன் கடமலை வேட்டம் என் கட்புலம் பிரியாது - வடக்கண் ஆரியரும் ஆகிய இவரொடு வளவிய தமிழ்ப் படை கைகலந்த செருக்களத்தில் உனது யானைவேட்டை என் கண்ணினின்றும் விலகாது; கொங்கணர் முதலாயினார், தமிழ் நாட்டைச் சார்ந்து வடக்கிலுள்ள ஒவ்வொரு நாட்டின் பகுதியை ஆண்ட சிற்றரசர்கள். 2நன்ன னேற்றை நறும்பூ ணத்தி, துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி "என்பதனால் கங்கரும் கட்டியரும் தமிழ் நாட்டின் பகுதி யினரெனலுமாம். ஆரியர் வேறு கூறினமையின் கொங்கணர் முத லாயினார் ஆரியரல்லரென்பது பெற்றாம். கொங்கணர் முதலாயினாருடன் கூடிய ஆரியரோடு தமிழ்ப் படை கைகலந்த போரில் என்க. தமிழ் - தமிழ்ப்படை ;3"தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானம்" என்புழியும் தமிழ் இப் பொருட்டாதல் காண்க. உன் கடமலை வேட்டம் -நீ பகைவருடைய யானைப் படையை வேட்டமாடியது என்க; நீ நின் யானையை விட்டபடி யென்றுமாம். 160-164. கங்கைப் பேர் யாற்றுக் கடும்புனல் நீத்தம் எங்கோ மகளை ஆட்டிய அந் நாள் - கங்கையாற்றின் விரையுஞ் செல வினையுடைய நீர்ப் பெருக்கில் எமது கோமகளை நீராட்டிய அக் காலத்து, ஆரிய மன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு ஒரு நீயாகிய செரு வெங் கோலம் - ஆயிரம் ஆரிய வரசர்க்கு நீ ஒருவனுமே எதிராக நின்று செய்த கொடிய போர்க்கோலத்தினை, கண் விழித்துக் கண்டது கடுங்கண் கூற்றம் - தன் கண்ணைத் திறந்து நோக்கியது அஞ்சாமையையுடைய கூற்றமன்றோ; எம் கோமகள் என்றது செங்குட்டுவன் தாயை. செங்குட்டுவன் தன் தாயைக் கங்கையில் நீராட்டுதற்கு அழைத்துச் சென்றனன் என்க. ஈரைஞ்ஞூற்றுவர் - எண்ணிறந்தோர் என்றபடி. உயிர் கவருந் தொழிலுடைய கூற்றமும் இவன் பகைவரைக் கொன்று குவித் தலைக் கண்டு வியந்து நின்றதென்பான் 'கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்' என்றான். 165-172. இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின் - முழங்கும் கடலை வேலியாகவுடைய இந்நிலம் முழுவதையும் தமிழ் நாடாக்க விரும்பி இமயத்தே கற் கால் கொள்ளுதலாகிய இதனை நீ எண்ணின், ஏற்பவர் முது நீர் உலகின் முழுவதும் இல்லை - நின்னுடன் எதிர்ப்போர் கடல் சூழ்ந்த உலகத்து ஒருவரும் இல்லை என்று கூறி, இமய மால் வரைக்கு எங்கோன் செல்வது கடவுள் எழுத ஓர் கற்கே ஆதலின் - எமது மன்னன் பெரிய இமயமலையிடத்துச் சேறல் கற் புடைத் தெய்வம் செய்ய ஓர் கல் பெறுதல் வேண்டியே யாக லான், வடதிசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம் - அது குறித்து வடநாட்டு அரசர் யாவர்க்கும், தென் தமிழ் நல் நாட்டுச் செழு வில் கயல் புலி மண்தலை ஏற வரைக ஈங்கு என - தென்றிசைக் கண்ணதாகிய வளமிக்க தமிழ் நாட்டு வில்லுங் கெண்டையும் புலியுமென்னும் இவற்றின் இலச்சினையைத் தம்மிடத்துக் கொண்ட ஓலைகளை வரைந்தனுப்புக இப்பொழுதே எனக் கூற; ஆக்கிய, செய்யியவென்னும் எச்சம். உலகின் முழுவதும் - உலகு முழுவதிலும், நும்போல் வேந்தர் என்றது தொடங்கிக் கண் விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம் என்பதன்காறுங் அவன் வென்றி வீரங் கூறி, இத்தகைய நின்னை எதிர்ப்பார் ஒருவருமிலராக லான் நீ எண்ணியாங்கே முடித்தல் தகும் என்று கூறி, ஓலை யெழுதுக என்றான் வில்லவன் கோதை. செல்வது, தொழிற் பெயர். எழுத - பண்ண; 1"கடவு ளெழுதவோர் கற்றாரான் எனின்" என்றார் முன்னும். மூவேந்தருள் வென்றி மிக்காற்கு அவனுடைய கொடியும் இலச்சினையுமன்றி, ஏனை இருவருடையவும் உரியவாகக் கூறுதல் மரபு; 2"தென்குமரி யாண்ட செருவிற் கயற்புலியான், மன்பதை காக்குங் கோமான்" எனப் பின் வருவதுங் காண்க. மண் - இலச் சினை. ஏற்ற - பன்மைவினைப் பெயர். 173-177. நாவல்அம் தண் பொழில் நண்ணார்ஒற்று நம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா - இந் நாவலந் தீவில் பலவிடங் களிலுமுள்ள பகைவர்களின் ஒற்றுக்கள் நமது காவலையுடைய வஞ்சி நகரின் வாயிலிடத்தை நீங்காது நிற்பன ஆதலால், வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே தம் செவி படுக்கும் தகைமைய அன்றோ - அவ் வொற்றுக்களே கச்சு அணிந்த யானையினை யுடைய பகை மன்னர் செவிக்கு அறிவிக்குந் தன்மையை யுடையனவாம், அறை பறை என்றே அழும்பில் வேள் உரைப்ப - ஆகலான், வட திசைச் செலவு குறித்து ஈண்டுப் பறையறைதலே அமையும் என அழும்பில் வேள் என்பான் கூற; பொழில் - உலகம், தீவு, ஒற்று - ஒற்றர்; ஒற்றியறிபவர். ஒற்று என்ற சொற்கேற்பப் பிரியாவென அஃறிணை முடிபு கூறினார். ஒற்று வேந்தர்தஞ் செவிப்படுக்குமென்க; நின்றாங் குரைப்பினும் அமையும். அழும்பில் வேள் செங்குட்டுவன் அமைச்சருள் ஒருவன் போலும், மேலும், 1"அழும்பில் வேளோ டாயக் கணக்கரை" என்பர். அழும்பில் - ஓரூர் என்பது 2"அழும்பி லன்ன வறாஅ யாணர்" 3"மான விறல்வே ளழும்பி லன்ன, நாடு" என்பவற்றா னறியப்படும். அழும்பில் - பாண்டி நாட்டூர் என்பர் களிற்றியானை நிரையின் குறிப்புரைகாரர். 178-180. நிறை யருந் தானை வேந்தனும் நேர்ந்து - பகைமேற் செல்லும் பொழுது நிறுத்தற்கரிய படையினையுடைய மன்னனும் அதற்கு உடன்பட்டு, கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த வாடாவஞ்சி மா நகர் புக்கபின் - நண்ணாரது எடுத்துச் செலவாற்கொண்ட திறையினைக் கொண்டு சிறப்புற்ற வஞ்சி நக ரத்தே மீண்டு சென்று புக்க பின்னர்; வஞ்சி - பகைமேற்சேறல்; வஞ்சிக் கூட்டு - மேற்சேறலாற் கொண்ட திறை; கூடாரது திறையென்க. உண்டு - கொண்டு. வாடா வஞ்சி, வெளிப்படை. அரசன் பேராற்றங்கரையினின்றும் போந்து புக்கபின் என்க. 181-194. வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை - (பறையறைவோர்), அரசர்க்கரசனாய எம் தலைவன் நீடு வாழ்க, ஊழி தோறூழி உலகங் காக்கென - பல ஊழிகளிலும் அவன் இவ்வுல கத்தை நன்கு காப்பானாகவென வாழ்த்தி, வில் தலைக்கொண்ட வியன் பேர் இமயத்து ஓர் கல் கொண்டு பெயரும் எம் காவலன் ஆதலின் - வில்லைத் தன்னிடத்தேயுடைய அகன்ற பெரிய இமய வரையில் கற்புக்கடவுள் பொருட்டால் ஓர் கல்லினைக் கொண்டு மீள்வான் எம் மன்னன் ஆகலான், வடதிசை மருங்கின் மன்னர் எல்லாம் இடுதிறை கொடுவந்து எதிரீர் ஆயின் - வடநாட்டு வேந்தீர் நீவிர் யாவிரும் அவற்கு இடத்தக்க திறையினைக் கொண்டுவந்து கொடுத்து அவன் தலைமையை ஏற்றுக் கொண்மின் அங்ஙனம் ஏற்றுக்கொள்ளீராயின், கடற் கடம்பு எறிந்த கடும்போர் வார்த்தையும் - கடலின்கண் கடம்பின் முதலை வெட்டிய கொடிய போரினைக் குறித்த உரையையும், விடர்ச்சிலை பொறித்த வியன்பெரு வார்த்தையும் - இமயத்துத் தன் வில்லினைப் பொறித்த பெருஞ் செயலைக் குறித்த உரையையும், கேட்டு வாழுமின் - அறிந்து வாழ்மின், கேளீராயின் தோள் துணை துறக்கும் துறவொடு வாழுமின் - அறியீராயின் மனைவி யரை வெறுக்கும் தவத்தினை மேற்கொண்டு வாழுமின் என்று, தாழ் கழல் மன்னன் தன் திருமேனி வாழ்க சேனாமுகம் என வாழ்த்தி - பொருந்திய வீரக்கழலையுடைய அரசனது திருமேனி யாகிய சேனாமுகம் வாழ்க என்று வாழ்த்தி, இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி அறை பறை எழுந்தது ஆல் அணிநகர் மருங்கு என் - முரணுடைய அரசு உவாவின் பிடரின்கண் ஏற்றி அழகிய வஞ்சிநகரிடத்து அறையும் பறையின் ஒலி மிக்குத் தோன்றியது; முதலிலும் இறுதியிலும் அரசனை வாழ்த்துதல் மரபு. தலை - உச்சியுமாம். எதிர்வீர்; அங்ஙனம் எதிரீர் ஆயின் என அறுத் துரைக்க. விடர் - முழைஞ்சு; ஆகுபெயர். வார்த்தை என்றமையால் அவை எங்கணும் பேசப்படும் என்றவாறாயிற்று; கடலைக் கடந்தும் மலையைத் தாண்டியும் வாழுமின் என்றபடி. வாழுமின் என்று என விரிக்க. தாழ்தல் தங்குதல். அரசற்குச் சேனை சிறந்ததாகலின் திருமேனி யென்றார். திருமேனியாகிய சேனாமுகம் வாழ்கவென வாழ்த்தி என்க. இறை யானை - பட்டத்து யானை. பறை - பறை யின் ஒலி. எருத்தத்தேற்றி வாழுமின் (என்று கூறி) வாழ்த்தி அறை பறை எழுந்ததென முடிவு செய்க. காட்சி - கற்கொள்ள உள்ளத்தால் உறுதி கோடல். காட்சிக் காதை முற்றிற்று. 26. கால்கோட் காதை (பறையொலி எழுந்தபின், செங்குட்டுவன், முன்னர் இமயமலையி னின்றும் போந்த முனிவர்கள் ஆரிய வரசர்களாகிய கனகனும் விசயனும் தமிழரசரை இகழ்ந்தனரெனக் கூறக்கேட்டோனாதலின் பத்தினிக் கடவுளின் உருச்செய்யும் சிலையினை அவ்வரசர்கள் முடியிலேற்றிக் கொணர்வேன் என வஞ்சினங் கூறி, வாளினையும் குடையினையும் நன் முழுத்தத்தில் வடதிசையிற் புறப்படச் செய்து படைத்தலைவர்க்குப் பெருஞ் சோறளித்து விடியற் காலையிற் சிவ பிரான் திருவடிகளைப் பணிந்து முடிமேற்கொண்டு வஞ்சிமாலை சூடி யானையின் பிடரில் ஏறி நால்வகைத் தானையும் புடை சூழச் சென்று நீலகிரியை அடைந்தனன்; அடைந்தவன் அவ்விடத்திற் றங்கி இமயத்தினின்றும் போந்த முனிவர் கூறிய வாழ்த்தினைப் பெற்று, கொங்கணக் கூத்தர் முதலாயினாருடைய கூத்துக்களைக் கண்டு, பற்பல மன்னர்களும் வரவிடுத்த திறைப் பொருள்களை நோக்கியிருந்து, பின் ஆண்டு நின்றும் புறப்பட்டுக் கங்கையாற்றை அடைந்து, தன் நட்பரச ராகிய நூற்றுவர் கன்னர் கொணர்ந்து வைத்திருந்த ஓடங்களினால் வடகரை சேர்ந்து பகைவர் நாட்டிற் புக்குப் பாசறை யமைத் திருந்தனன். அப்பொழுது ஆரிய மன்னர்களாகிய கனக விசயரும் அவர்கட்குத் துணையாக வந்த உத்தரன் முதலிய பற்பல மன்னரும் ‘தமிழரசர் ஆற்றலைக் காண்பேம்' என ஒருங்கு திரண்டு படையுடன் வந்தெதிர, ஓர் அரியேறு யானைக் கூட்டத்திற் பாய்வதுபோற் செங்குட்டுவன் அவர்கள்மேற் பாய்ந்து அவர்தம் படைஞர்களைக் கொன்று குவித்து அனைவரையும் வென்று, தோல்வியுற்றுத் தவ வேடம் முதலியன கொண்டோடிய அவ்வரசர்களைப் பற்றி அகப் படுத்திக்கொண்டு, அமைச்சனாகிய வில்லவன் கோதையையும் சேனையையும் ஏவி இமயமலையிற் பத்தினிக்குக் கற் கால் கொண்டனன்.) அறைபறை யெழுந்தபின் அரிமா னேந்திய முறைமுதற் கட்டில் இறைமக னேற ஆசான் பெருங்கணி அருந்திற லமைச்சர் தானைத் தலைவர் தம்மொடு குழீஇ 5 மன்னர் மன்னன் வாழ்கென் றேத்தி முன்னிய திசையின் முறைமொழி கேட்ப வியம்படு தானை விறலோர்க் கெல்லாம் உயர்ந்தோங்கு வெண்குடை உரவோன் கூறும் இமையத் தாபதர் எமக்கீங் குணர்த்திய 10 அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி நம்பா லொழிகுவ தாயி னாங்கஃது எம்போல் வேந்தர்க் கிகழ்ச்சியுந் தரூஉம் வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக் கடவு ளெழுதவோர் கற்கொண் டல்லது 15 வறிது மீளுமென் வாய்வா ளாகில் செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப் பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பிற் குடிநடுக் குறூஉங் கோலே னாகென ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும் 20 சீர்கெழு மணிமுடிக் கணிந்தோ ரல்லால் அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல்நின் வஞ்சினத் தெதிரும் மன்னரு முளரோ இமைய வரம்பநின் இகழ்ந்தோ ரல்லர் அமைகநின் சினமென ஆசான் கூற 25 ஆறிரு மதியினுங் காருக வடிப்பயின்று ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து வெந்திறல் வேந்தே வாழ்கநின் கொற்றம் இருநில மருங்கின் மன்னரெல் லாம்நின் திருமலர்த் தாமரைச் சேவடி பணியும் 30 முழுத்தம் ஈங்கிது முன்னிய திசைமேல் எழுச்சிப் பாலை யாகென் றேத்த மீளா வென்றி வேந்தன் கேட்டு வாளுங் குடையும் வடதிசைப் பெயர்க்கென உரவுமண் சுமந்த அரவுத்தலை பனிப்பப் 35 பொருந ரார்ப்பொடு முரசெழுந் தொலிப்ப இரவிடங் கெடுத்த நிரைமணி விளக்கின் விரவுக்கொடி யடுக்கத்து நிரயத் தானையோடு ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும் வெம்பரி யானை வேந்தற் கோங்கிய 40 கரும வினைஞருங் கணக்கியல் வினைஞரும் தரும வினைஞருந் தந்திர வினைஞரும் மண்டிணி ஞாலம் ஆள்வோன் வாழ்கெனப் பிண்ட முண்ணும் பெருங்களிற் றெருத்தின் மறமிகு வாளும் மாலைவெண் குடையும் 45 புறநிலைக் கோட்டப் புரிசையிற் புகுத்திப் புரைதீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன் அரைசுவிளங் கவையம் முறையிற் புகுதர அரும்படைத் தானை யமர்வேட்டுக் கலித்த பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப் 50 பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து ஞாலங் காவலர் நாட்டிறை பயிரும் காலை முரசம் கடைமுகத் தெழுதலும் நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி 55 உலகுபொதி உருவத் துயர்ந்தோன் சேவடி மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு மறையோ ரேந்திய ஆவுதி நறும்புகை நறைகெழு மாலையின் நல்லகம் வருத்தக் 60 கடக்களி யானைப் பிடர்த்தலை யேறினன் குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென ஆடக மாடத் தறிதுயில் அமர்ந்தோன் சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத் தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் 65 வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின் ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கின னாகித் தகைமையிற் செல்வுழி நாடக மடந்தையர் ஆடரங் கியாங்கணும் கூடையிற் பொலிந்து கொற்ற வேந்தே 70 வாகை தும்பை மணித்தோட்டுப் போந்தையோடு ஓடை யானையின் உயர்முகத் தோங்க வெண்குடை நீழலெம் வெள்வளை கவரும் கண்களி கொள்ளுங் காட்சியை யாகென மாகதப் புலவரும் வைதா ளிகரும் 75 சூதரும் நல்வலந் தோன்ற வாழ்த்த யானை வீரரும் இவுளித் தலைவரும் வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத் தானவர் தம்மேல் தம்பதி நீங்கும் வானவன் போல வஞ்சி நீங்கித் 80 தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும் வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத மலைமுதுகு நெளிய நிலைநா டதர்பட உலக மன்னவன் ஒருங்குடன் சென்றாங்கு ஆலும் புரவி யணித்தேர்த் தானையொடு 85 நீல கிரியின் நெடும்புறத் திறுத்தாங்கு ஆடியல் யானையும் தேரும் மாவும் பீடுகெழு மறவரும் பிறழாக் காப்பிற் பாடி யிருக்கைப் பகல்வெய் யோன்றன் இருநில மடந்தைக்குத் திருவடி யளித்தாங்கு 90 அருந்திறல் மாக்கள் அடியீ டேத்தப் பெரும்பே ரமளி ஏறிய பின்னர் இயங்குபடை அரவத் தீண்டொலி இசைப்ப விசும்பியங்கு முனிவர் வியன்நிலம் ஆளும் இந்திர திருவனைக் காண்குது மென்றே 95 அந்தரத் திழிந்தாங் கரசுவிளங் கவையத்து மின்னொளி மயக்கும் மேனியொடு தோன்ற மன்னவன் எழுந்து வணங்கிநின் றோனைச் செஞ்சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ கேளாய் 100 மலயத் தேகுதும் வான்பே ரிமய நிலையத் தேகுதல் நின்கருத் தாகலின் அருமறை யந்தணர் ஆங்குளர் வாழ்வோர் பெருநில மன்ன பேணல்நின் கடனென்று ஆங்கவர் வாழ்த்திப் போந்ததற் பின்னர் 105 வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்கெனக் கொங்கணக் கூத்தரும் கொடுங்கரு நாடரும் தங்குலக் கோதிய தகைசால் அணியினர் இருள்படப் பொதுளிய சுருளிருங் குஞ்சி மருள்படப் பரப்பிய ஒலியல் மாலையர் 110 வடம்சுமந் தோங்கிய வளர்இள வனமுலைக் கருங்கயல் நெடுங்கட் காரிகை யாரோடு இருங்குயில் ஆல இனவண்டு யாழ்செய அரும்பவிழ் வேனில் வந்தது வாரார் காதல ரென்னும் மேதகு சிறப்பின் 115 மாதர்ப் பாணி வரியொடு தோன்றக் கோல்வளை மாதே கோலங் கொள்ளாய் காலங் காணாய் கடிதிடித் துரறிக் காரோ வந்தது காதல ரேறிய தேரோ வந்தது செய்வினை முடித்தெனக் 120 காஅர்க் குரவையொடு கருங்கயல் நெடுங்கட் கோற்றொடி மாதரொடு குடகர் தோன்றத் தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து வாள்வினை முடித்து மறவாள் வேந்தன் ஊழி வாழியென் றோவர் தோன்றக் 125 கூத்துள் படுவோன் காட்டிய முறைமையின் ஏத்தின ரறியா இருங்கலன் நல்கி வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி நாடக மகளிர்ஈ ரைம்பத் திருவரும் கூடிசைக் குயிலுவர் இருநூற் றெண்மரும் 130 தொண்நூற் றறுவகைப் பாசண் டத்துறை நண்ணிய நூற்றுவர் நகைவே ழம்பரும் கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பதிற் றிரட்டியும் கடுங்களி யானை ஓரைஞ் ஞூறும் ஐயீ ராயிரங் கொய்யுளைப் புரவியும் 135 எய்யா வடவளத் திருபதி னாயிரம் கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும் சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற கஞ்சுக முதல்வர்ஈ ரைஞ்ஞூற் றுவரும் சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே 140 வாயி லோரென வாயில்வந் திசைப்ப நாடக மகளிரும் நலத்தகு மாக்களும் கூடிசைக் குயிலுவக் கருவி யாளரும் சஞ்சயன் றன்னொடு வருக ஈங்கெனச் செங்கோல் வேந்தன் திருவிளங் கவையத்துச் 145 சஞ்சயன் புகுந்து தாழ்ந்துபல ஏத்தி ஆணையிற் புகுந்தஈ ரைம்பத் திருவரொடு மாண்வினை யாளரை வகைபெறக் காட்டி வேற்றுமை யின்றி நின்னொடு கலந்த நூற்றுவர் கன்னருங் கோற்றொழில் வேந்தே 150 வடதிசை மருங்கின் வானவன் பெயர்வது கடவு ளெழுதவோர் கற்கே யாயின் ஓங்கிய இமையத்துக் கற்கால் கொண்டு வீங்குநிர்க் கங்கை நீர்ப்படை செய்தாங்கு யாந்தரு மாற்றல மென்றன ரென்று 155 வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் வாழ்கென அடல்வேன் மன்னர் ஆருயி ருண்ணும் கடலந் தானைக் காவல னுரைக்கும் பால குமரன் மக்கள் மற்றவர் காவா நாவிற் கனகனும் விசயனும் 160 விருத்தின் மன்னர் தம்மொடுங் கூடி அருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்கெனக் கூற்றங் கொண்டிச் சேனை செல்வது நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக் கங்கைப் பேர்யாறு கடத்தற் காவன 165 வங்கப் பெருநிரை செய்க தாமெனச் சஞ்சயன் போனபின் கஞ்சுக மாக்கள் எஞ்சா நாவினர் ஈரைஞ் ஞூற்றுவர் சந்தின் குப்பையுந் தாழ்நீர் முத்தும் தென்ன ரிட்ட திறையொடு கொணர்ந்து 170 கண்ணெழுத் தாளர் காவல் வேந்தன் மண்ணுடை முடங்கலம் மன்னவர்க் களித்தாங்கு ஆங்கவ ரேகிய பின்னர் மன்னிய வீங்குநீர் ஞாலம் ஆள்வோ னோங்கிய நாடாள் செல்வர் நல்வல னேத்தப் 175 பாடி யிருக்கை நீங்கிப் பெயர்ந்து கங்கைப்பே ரியாற்றுக் கன்னரிற் பெற்ற வங்கப் பரப்பின் வடமருங் கெய்தி ஆங்கவ ரெதிர்கொள அந்நாடு கழிந்தாங்கு ஓங்குநீர்வேலி உத்தர மரீஇப் 180 பகைப்புலம் புக்குப் பாசறை யிருந்த தகைப்பருந் தானை மறவோன் றன்முன் உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன் வடதிசை மருங்கின் மன்னவ ரெல்லாம் 185 தென்றமி ழாற்றல் காண்குதும் யாமெனக் கலந்த கேண்மையிற் கனக விசயர் நிலந்திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர இரைதேர் வேட்டத் தெழுந்த அரிமாக் கரிமாப் பெருநிரை கண்டுளஞ் சிறந்து 190 பாய்ந்த பண்பிற் பல்வேன் மன்னர் காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப வெயிற்கதிர் விழுங்கிய துகிற்கொடிப் பந்தர் வடித்தோர் கொடும்பறை வால்வளை நெடுவயிர் இடிக்குரல் முரசம் இழுமென் பாண்டில் 195 உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து மயிர்க்கண் முரசமொடு மாதிரம் அதிரச் சிலைத்தோ ளாடவர் செருவேற் றடக்கையர் கறைத்தோன் மறவர் கடுந்தே ரூருநர் வெண்கோட்டு யானையர் விரைபரிக் குதிரையர் 200 மண்கண் கெடுத்தவிம் மாநிலப் பெருந்துகள் களங்கொள் யானைக் கவிழ்மணி நாவும் விளங்குகொடி நந்தின் வீங்கிசை நாவும் நடுங்குதொழி லொழிந்தாங்கு ஒடுங்கியுள் செறியத் தாருந் தாருந் தாமிடை மயங்கத் 205 தோளுந் தலையுந் துணிந்துவே றாகிய சிலைத்தோள் மறவர் உடற்பொறை யடுக்கத்து எறிபிணம் இடறிய குறையுடற் கவந்தம் பறைக்கட் பேய்மகள் பாணிக் காடப் பிணஞ்சுமந் தொழுகிய நிணம்படு குருதியில் 210 கணங்கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட அடுந்தேர்த் தானை ஆரிய வரசர் கடும்படை மாக்களைக் கொன்றுகளங் குவித்து நெடுந்தேர்க் கொடுஞ்சியுங் கடுங்களிற் றெருத்தமும் விடும்பரிக் குதிரையின் வெரிநும் பாழ்பட 215 எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்தொகை ஒருபக லெல்லையின் உண்ணு மென்பது ஆரிய வரசர் அமர்க்களத் தறிய நூழி லாட்டிய சூழ்கழல் வேந்தன் போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை 220 ஓங்கிருஞ் சென்னி மேம்பட மலைய வாய்வா ளாண்மையின் வண்டமி ழிகழ்ந்த காய்வேற் றடக்கைக் கனகனும் விசயனும் ஐம்பத் திருவர் கடுந்தே ராளரொடு செங்குட் டுவன்றன் சினவலைப் படுதலும் 225 சடையினர் உடையினர் சாம்பற் பூச்சினர் பீடிகைப் பீலிப் பெருநோன் பாளர் பாடு பாணியர் பல்லியத் தோளினர் ஆடு கூத்த ராகி யெங்கணும் ஏந்துவா ளொழியத் தாந்துறை போகிய 230 விச்சைக் கோலத்து வேண்டுவயிற் படர்தரக் கச்சை யானைக் காவலர் நடுங்கக் கோட்டுமாப் பூட்டி வாட்கோ லாக ஆளழி வாங்கி அதரி திரித்த வாளே ருழவன் மறக்களம் வாழ்த்தித் 235 தொடியுடை நெடுங்கை தூங்கத் தூக்கி முடியுடைக் கருந்தலை முந்துற ஏந்திக் கடல்வயிறு கலக்கிய ஞாட்புங் கடலகழ் இலங்கையில் எழுந்த சமரமுங் கடல்வணன் தேரூர் செருவும் பாடிப் பேரிசை 240 முன்றேர்க் குரவை முதல்வனை வாழ்த்திப் பின்றேர்க் குரவைப் பேயாடு பறந்தலை முடித்தலை அடுப்பிற் பிடர்த்தலைத் தாழித் தொடித்தோள் துடுப்பின் துழைஇய ஊன்சோறு மறப்பேய் வாலுவன் வயினறிந் தூட்டச் 245 சிறப்பூண் கடியினஞ் செங்கோற் கொற்றத்து அறக்களஞ் செய்தோன் ஊழி வாழ்கென மறக்கள முடித்த வாய்வாட் குட்டுவன் வடதிசை மருங்கின் மறைகாத் தோம்புநர் தடவுத்தீ யவியாத் தண்பெரு வாழ்க்கை 250 காற்றூ தாளரைப் போற்றிக் காமினென வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த பல்வேற் றானைப் படைபல ஏவிப் பொற்கோட் டிமயத்துப் பொருவறு பத்தினிக் கற்கால் கொண்டனன் காவல னாங்கென். உரை 1-2. அறை பறை எழுந்தபின் அரிமான் ஏந்திய முறை முதற் கட்டில் இறைமகன் ஏற - எம் மன்னவனாகிய குட்டுவர் பெருந் தகை பத்தினிக் கடவுளின் படிவந் தீட்டுதற்குக் கற்கொணரும் பொருட்டு வடதிசைக்குப் புறப்படுகின்றான் என்று ஒலிக்கின்ற பறையறையப்பட்ட பின்னர் அரியேற்றினாற் சுமக்கப்பட்டுத் தொன்றுதொட்டுள்ள அரசு கட்டிலில் அரசன் ஏறுதலும் ; முறை முதல் - தன் குலத்திற்கு அடிநாள் தொடங்கி உரியதாம் முறைமையுடைய வென்க. 3-6. ஆசான் பெருங்கணி அருந்திறல் அமைச்சர் தானைத் தலைவர் தம்மொடு குழீஇ - சேனைத் தலைவர்களுடன் புரோகித னும், பெரு நிமித்திகனும், அரிய வலியுடைய அமைச்சர்களும் கூடி, மன்னர் மன்னன் வாழ்க என்று ஏத்தி - அரசர்க்கரசே வாழ்வாயாக என்று துதித்து, முன்னிய திசையின் முறைமொழி கேட்ப - கருதிய திசையில் நின்று அரசன் கூறும் மொழிகளை முறைமையாற் கேட்க ; கணி - நிமித்திகன் ; சோதிடன். "ஆசான் - புரோகிதன்; பெருங்கணி - கணிதவிவர்த்தகன்" என்பர் அரும்பதவுரையாசிரியர். ஆசான் பெருங்கணி யென்னும் இத் தொடர் இவ்வாறே இந்நூலின் கண் முன்னர் 1ஓரிடத்தும், பின்னர் 2ஓரிடத்தும் அமைந்துளதேனும், இக்காதையிற் பின் வேறு கூறப்பட்டிருத்தலின், ஆசானாகிய பெருங் கணி எனப் பொருள் கோடல் சாலாதென்க. 7-12. வியம்படுதானை விறலோர்க்கு எல்லாம் உயர்ந்தோங்கு வெண்குடை உரவோன் கூறும்-பெருமை மிக்கு விளங்குகின்ற வெண்கொற்றக் குடையினையுடைய சேரர் பெருந்தகை ஏவல் பெற்ற சேனைகளின் தலைவர்க்கெல்லாம் கூறாநிற்பன், இமை யத் தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய - புண்ணியத் துறையாடு மாறு இமயத்தினின்றும் போந்த முனிவர் எமக்கு இப்பொழுது அறிவித்த, அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி - நிரம் பாத உயிர் வாழ்க்கையினையுடைய வடபுல மன்னரின் வாய் மொழிகள், நம்பால் ஒழிகுவதாயின் ஆங்கஃது எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம் - நம்மிடத்துக் கிடப்பதொரு சொல்லாயின் அம் மொழி எம்மை யொத்த சோழர் பாண்டியர் கட்கு இகழ்ச்சியையுந் தரும் ஆகலின் ; வியம் - ஏவல் ; முன்னர் 1"வினைகடைக் கூட்ட வியங்கொண் டான்" என்றதுங் காண்க. உயர்ந்தோங்கு, ஒருபொருளிருசொல். அமையா வாழ்க்கையாவது 2செம்புற்றீயல் போலும் ஒருபகல் வாழ்க்கை. அரைசர் வாய்மொழியாவது, 3"தென்றமிழ் நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து, மின்றவழு மிமய நெற்றியில் விளங்கு விற்புலி கயல்பொறித்தநாள், எம்போலு முடிமன்னர் ஈங்கில்லை போலும்" என்றது. நம்பால் ஒழிகுவதாயின் - அச்சொல் அவரையே சென்று தாக்காது நம்மிடத்துக் கிடப்பதாயின் என்ற படி. வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம் - வேந்தர் எம்மை யிகழ்தலை யும் உண்டாக்கும் ; அன்றி, எமக்கேயன்றி அவர்க்கும் இகழ்ச்சி யைத் தரும் என்றலுமாம். 13-18. வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக் கடவுள் எழுதவோர் கற்கொண்டு அல்லது - வடநாட்டு அரசர்களின் முடியணிந்த தலைமீது தெய்வம் அமைத்தற்குரிய ஒருகல்லை ஏற் றிக்கொண் டன்றி, வறிது மீளும் என் வாய்வாள் ஆகில் - என் னுடைய வடிக்கப்பட்ட வாள் வறிதே திரும்புமாயின், செறி கழல் புனைந்த செருவெங் கோலத்துப் பகையரசு நடுக்காது - நெருங்கிய வீரக் கழலணிந்த கொடிய போர்க்கோலங் கொண்ட மாற்றரசனை நடுங்கச் செய்யாது, பயங்கெழு வைப்பில் குடி நடுக்குறூஉம் கோலேன் ஆகென - பயன்மிகுந்த நன்னாட்டி லுள்ள குடிமக்களை நடுங்கச் செய்யுங் கொடுங் கோன்மை யுடையவனாவேன் என உரைக்க ; தன் செய்கையை வாளின்மேலேற்றிக் கூறினான். செருவெங் கோலத்தால் எனலுமாம். வைப்பு - நாடு. 4"குடிபழி தூற்றுங் கோலே னாகுக" என நெடுஞ்செழியன் வஞ்சினங் கூறினமையுங் காண்க ; 5"குடிபழி தூற்றுங் கோலனு மல்லன்" என்பதும் அறி யற்பாலது. ஆகவென என்பது விகாரமாயிற்று ; ஆகு - ஆவேன் எனலுமாம். 19-24. ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும் சீர்கெழு மணி முடிக்கு அணிந்தோர் அல்லால் - ஆத்தி மலராற் றொடுக் கப்பட்ட கண்ணியையும் வேப்ப மலர் மாலையையும் சிறப்பு மிக்க அழகிய முடியிற் சூடியோராகிய சோழ பாண்டியரை யன்றி, அஞ்சினர்க்கு அளிக்கும் அடுபோர் அண்ணல் - அஞ்சி யோர்க்கு அருள்புரியும் போர்த்திறனுடைய அண்ணலே, நின் வஞ்சினத்து எதிரும் மன்னரும் உளரோ - நினது வஞ்சின மொழிகட்கு எதிராகும் அரசரும் உளரோ, இமைய வரம்ப நின் இகழ்ந்தோர் அல்லர் - ஆகலான் இமயவரம்பனே அவர்கள் நின்னை இகழ்ந்துரைத்தாரல்லர், அமைக நின் சினம் என ஆசான் கூற - நின் செற்றந் தணிக என்று புரோகிதன் கூற ; வேம்பின் அலர்த்தார் என்க. அணிந்தோரை யல்லால் நின்னை யிகழ்ந்தோரல்லர் எனக் கூட்டுக. நீ வஞ்சினங் கூறுதற்கு நின் னுடன் எதிர்க்கும் மன்னரு முளரோ என்றுமாம். அஞ்சியோர்க்கு - அஞ்சி யடைந்தோர்க்கு. 25-31. ஆறிருமதியினும் காருக வடிப் பயின்று - பன்னீ ரிராசி களிலும் உள்ள கோட்களின் நிலையைக் கற்று, ஐந்து கேள் வியும் அமைந்தோன் எழுந்து - திதி முதலிய ஐந்தின் கல்வியும் அமையப்பெற்ற நிமித்திகன் எழுந்து, வெந்திறல் வேந்தே வாழ்க நின் கொற்றம் - வெவ்விய திறலையுடைய மன்னவனே நின் வென்றி வாழ்வதாக, இரு நில மருங்கின் மன்னர் எல்லாம்- பெரிய பூமியின்கணுள்ள அரசர் யாவரும், நின் திருமலர்த் தாமரைச் சேவடி பணியும் முழுத்தம் ஈங்கிது-அழகிய தாமரை மலர் போன்ற நின் சிவந்த திருவடிகளை வணங்கும் நற்பொழு தாகும் இக்காலம், முன்னிய திசைமேல் எழுச்சிப்பாலையாக என்று ஏத்த - நீ குறித்த திசையின்மேற் போருக்கு எழு வாயாக என்று கூறித் துதிக்க ; மதி - ஈண்டு இராசியைக் குறிக்கின்றது. காருக அடி - கிரக நிலை. மேடம் முதலிய பன்னிரண்டிருக்கைகளிலும் கோட்கள் நிற் கும் நிலையை அறிந்தென்க. ஐந்து - திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்பன ; இவை ஐந்தங்கம் எனப்படும்; இனி ஐந்து என்பது கோள்களின் நட்பு, ஆட்சி உச்சம், பகை, நீசம் எனலுமாம். முழுத்தம் - முகூர்த்தம் ; பொழுது. பணியும் முழுத் தம்- பணிதற்கேதுவாகிய முழுத்தம். எழுச்சிப்பாலை யாகென - எழுதற்பான்மையை யாக வென்ன. 32-33. மீளா வென்றி வேந்தன் கேட்டு - நீங்காத வெற்றி பொருந்திய செங்குட்டுவன் அதனைக் கேட்டு, வாளும் குடை யும் வடதிசைப் பெயர்க்க என - நமது வாளையும் குடையையும் வடக்கு நோக்கிப் புறப்பட விடுவீராக என ; வாளும் குடையும் பெயர்த்தல் - வாணாட் கோளும் குடை நாட்கோளுமாம் ; முன் 1"குடை நிலை வஞ்சி," என்புழி உரைத்தமை காண்க. 34-47. உரவுமண் சுமந்த அரவுத்தலை பனிப்ப - வலிய நிலவுல கினைச் சுமந்துள்ள அனந்தனின் தலை நடுங்குமாறு, பொருநர் ஆர்ப்பொடு முரசு எழுந்து ஒலிப்ப - களம் பாடுவோரின் ஆரவாரத்துடன் முரசம் எழுந்து முழங்க, இரவு இடங் கெடுத்த நிரை மணி விளக்கின் - இருள் இல்லையாமாறு ஓட்டிய வரிசையாகிய மணிவிளக்கொளியில், விரவுக் கொடி அடுக்கத்து நிரையத் தானையோடு - கொடிகள் விரவி நெருங்கிய நிரயம் போலும் சேனைகளுடன், ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும் - அமைச்சர் முதலாய ஐம்பெருங் குழுவினரும் கர ணத்தியலவராதி எண்பேராயத்தினரும், வெம்பரி யானை வேந் தற்கு ஓங்கிய கருமவினைஞரும் கணக்கியல் வினைஞரும் - கடுகிய செலவினையுடைய யானையையுடைய அரசற்குச் சிறந்தோராகிய அந்தணரும் காலத்தை அறுதியிடும் கணிகளும், தருமவினை ஞரும் தந்திரவினைஞரும் - அறங்கூறுந் தொழிலோரும் தந்திரரத் தொழிலோரும், மண்டிணி ஞாலம் ஆள்வோன் வாழ்க என - மண் செறிந்த நிலவுலகினை ஆள்கின்ற எம் மன்னன் வாழ்க என வாழ்த்தி, பிண்டம் உண்ணும் பெருங்களிற்று எருத்தின் - பிண்டத்திற்குரிய பெரிய பட்டத்து யானையின் பிடரின் மீது, மறமிகு வாளும் மாலைவெண் குடையும் புறநிலைக் கோட் டப் புரிசையில் புகுத்தி - வென்றி மிக்க வாளினையும் மாலை யணிந்த வெள்ளிய குடையினையும் வைத்துக் கோயிலின் புற மதிற்கண்ணே புகவிட்டு, புரைதீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன் - குற்றமற்ற வஞ்சி மாலையைப் பனம் பூமாலை யுடன் தொடுத்தணியும் சேரனது, அரைசு விளங்கு அவையம் முறையிற் புகுதர - விளங்கிய அரசவைக்கண்ணே முறைமை யுடன் புகாநிற்க ; பொருநர் - போர்க்களம் பாடும் பொருநர் ; வீரருமாம், நிரை மணி விளக்கின் என்றமையானும், பின் காலை முரசங் கூறுதலானும் வாளுங் குடையும் நாட் கொண்டமையும் பெருஞ் சோறு வகுத்தமை யும் இரவிலென்பது பெற்றாம். நிரயத் தானை - பகைவர்க்கு நரகம் போலும் துன்பத்தைச் செய்யுந் தானை; நரகபாலர் போலும் தானை யென்றுமாம்;2"நிரைகளி றொழுகிய நிரைய வெள்ளம்" 3"நிரைய வொள்வா ளிளையர் பெருமகன்" என்பனவுங் காண்க. 1ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும் முன்னர் உரைக்கப்பட்டமை காண்க. வெம்பரித் தானை என்பதும் பாடம். கரும வினைஞர் - சடங்கியற்று வோர். தந்திர வினைஞர் - படைத் தலைவர்; கடவுளரை அருச்சிப் போருமாம். பிண்டம் - அரசன் பிண்டித்து வைத்த உணவு; 2"பிண்ட முண்ணும் பெருங் களிறு" என்றார் திருத்தக்கதேவரும். கோட்டப் புறநிலைப் புரிசை என மாறுக. வாளினையும் குடையினை யும் நன் முழுத்தத்திலே புறப்படவிட்டு என்றபடி. வஞ்சி போர்ப் பூவும், போந்தை அடையாளப் பூவுமாம். தானையோடு குழுவும் ஆயமும் கருமவினைஞர் முதலாயினாரும் கூடி வாழ்த்தி வாளும் குடை யும் புகுத்திப் புகுதரவென்க. 48-51. அரும்படைத் தானை - அரிய படைக்கலங்களையுடைய சேனை மறவர்க்கும், அமர் வேட்டுக் கலித்த பெரும் படைத் தலைவர்க்கும் - போரை விரும்பித் தருக்கிய பெரிய தானைத் தலை வர்கட்கும், பெருஞ்சோறு அளித்து-பெருஞ்சோற்று விருந் தளித்து, பூவா வஞ்சியில் - வஞ்சிமா நகரிலே, பூத்த வஞ்சி வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக்கு அணிந்து - கூரிய வாளினை யுடைய அரசர் பெருந்தகை வஞ்சிப் பூமாலையைத் தனது அழகிய முடியிற் சூடி; தானையினையும் படையினையுமுடைய தலைவர்க்கு என்றுமாம். கலித்த - ஆரவாரித்த எனலுமாம். பெருஞ்சோறு வகுத்தலை மேல் 3பெருஞ் சோற்று வஞ்சி என்புழி உரைத் தமையானறிக. பூவா வஞ்சி, வெளிப்படை. பூவா பூத்த என்பன முரண். நெடுந்தகை பெருஞ்சோறு வகுத்து வஞ்சி யணிந்து என்க. 52-60. ஞாலங் காவலர் நாள் திறை பயிரும் - ஏனை நாட்டு மன்னர்கள் நாட் காலத்தே இடுந் திறையை அழைக்கும், காலை முரசம் கடைமுகத்து எழுதலும் - காலை முரசம் கடைவாயிலில் முழங்குதலும், நிலவுக் கதிர்முடித்த நீள் இருஞ் சென்னி உலகு பொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி - ஒளி பொருந்திய திங்களைச் சூடிய நீண்ட பெரிய சடைமுடி யினையும் உலகினையகப் படுத்தும் வடிவத்தினையுமுடைய சிவபெருமான் திருவடிகளை, மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து - வெற்றி பொருந்திய வஞ்சி மாலையுடன் அணிந்து, இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு - எவர்க்கும் வணங்காத தலையால் வணங்கி வலம்வந்து, மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை நறைகெழு மாலையின் நல்லகம் வருத்த - அந்தணர் ஏந்திவந்த ஆகுதியின் நறிய புகை தேன் மிகுந்த மலர் மாலையின் நல்லவிடத்தை வருத்த, கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினன் - மதக்களிப் பினையுடைய யானையின் பிடரின்கண் ஏறினன்; உலகு பொதி யுருவம் - 1"இருசுடரோ டியமான னைம்பூத மென், றெட்டு வகையும்" ஆகிய உலகு வடிவாதலன்றி அதனைக் கடந்தும் நிற்கும் நிறைவுநிலை. இறைஞ்சிப் புனைந்து என்க; 2"குண மிலவே எண்குணத்தான், தாளை வணங்காத்தலை" என்பதுங் காண்க. சேவடியைப் புனைதலாவது சிந்தனையாற் சென்னியிலிருத்தல். புகை - அக்கினி கோத்திரம் என்பர். புகையுடன் போந்து மறை யோர் வாழ்த்த ஏறினன் என்க. மாலையை வருத்தலாவது - வாடச் செய்தல்; புகை மிகுதி கூறியபடி. 61-67. குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்க என - குட திசைக் கோவாகிய செங்குட்டுவன் வென்றி பெறுக என்று, ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன் சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த - திருவனந்தபுரத்தில் யோகநித்திரையி லமர்ந்த நெடுமாலின் சேடத்தைக் கொணர்ந்து நின்று சிலர் துதிக்க, தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணி முடி வைத்தலின் - கங்கையைப் பொதிந்துள்ள சிவந்த சடை யினையுடைய சிவபெருமானது அழகிய திருவடி களைத் தன் மணி முடியின்மீது வைத்திருந்தமையான், ஆங்கது வாங்கி அணி மணிப் புயத்துத் தாங்கினனாகித் தகைமையில் செல்வுழி - திரு மாலின் திருச்சேடத்தை வாங்கி அழகிய மணித்தோளின்மீது தாங்கினவனாய்ப் பெருந் தகுதியுடன் செல்லுமிடத்து; "ஆடகமாடம் - திருவனந்தபுரம்; இரவிபுர மென்பாருமுளர்" என்பர் அரும்பதவுரை யாசிரியர். 3"ஆடகமாடத் தரவணைக் கிடந் தோன்" எனப் பின் வருவதும் அறியற்பாலது. சேடம் - தெய்வத் திற்குப் படைத்த உணவு, மலர் முதலியவை; பிரசாதம் எனவும் படும். சிவபிரான் திருவடியை முடியிற் கொண்டிருத்தலின் அதனோ டொப்ப இதனையும் தரித்தற் கொருப்படானாகி இதனை வாங்கிப் புயத்திலே தரித்தனன் என்றார். புயத்திலே தாங்கின னென்றமை யால் சேடமாவது மாலை யென்பது பெற்றாம். சேவடி யென்றது சேவடிப் பிரசாதமுமாம். செங்குட்டுவன் சிவமென்னும் செம் பொருளையே முழுமுதற் பொருளாகக் கொண்டு வேறு தெய்வத்தை அதனோடொப்ப நினையாத செந்நெறிச் செல்வன் என்பதும், எனி னும் வேறு தெய்வ வழிபாட்டையும் மதித்தொழுகும் பெருந்தகை யென்பதும் இதனாற் போதரும். 68-73. நாடக மடந்தையர் ஆடரங்கு யாங்கணும் கூடை யிற் பொலிந்து - நாடகமகளிர் ஆடுகின்ற அரங்குகள் எங்கும் கூப்பிய கையுடன் விளங்கி, கொற்ற வேந்தே - வென்றி வேந்தே, வாகை தும்பை மணித் தோட்டுப் போந்தையோடு - வாகையும் தும்பையும் மணிபோலும் இதழினையுடைய பனம் பூவினுடன் தொடுக்கப்பட்டு, ஓடை யானையின் உயர்முகத்து ஓங்க - நெற்றிப் பட்ட மணிந்த நின் களிற்றின் உயரிய முகத்தில் ஓங்கித் தோன்ற, வெண்குடை நீழல் எம் வெள்வளை கவரும் - வெண்கொற்றக் குடைநீழலில் எம்முடைய வெள்ளிய வளை களைக் கவரும். கண் களிகொள்ளும் காட்சியை ஆக என - எம் கண்கள் உவகை கொள்ளும் காட்சி யுடையையாக என்று வாழ்த்த; கூடை - அவினயக் கைவகை; இரட்டை ஒற்றைக் கையாகிய கூப்பிய கை; 1"கூடை செய்தகை வாரத்துக் களைதலும்' என்புழி உரைத்தமை காண்க. அரசர் சூடுவன யானைக்குஞ் சூட்டுதலின் வாகையும் தும்பையும் போந்தையோடு யானைமுகத் தோங்க என்றார். யானைமீது குடைநிழலில் எம் வளை கவரும் காட்சியையுடையை யாக என்றாரென்க. கவர்ந்து என்பதும் பாடம். 74-79. மாகதப் புலவரும் வைதாளிகரும் சூதரும் நல்வலம் தோன்ற வாழ்த்த - சூதரும் மாகதரும் வேதாளிகரும் நல்ல வெற்றி விளங்குமாறு வாழ்த்த, யானை வீரரும் இவுளித் தலை வரும் வாய்வாள் மறவரும் வாள் வலன் ஏத்த - யானை மறவரும் குதிரை வீரரும் கூரிய வாட் படையினையுடைய போர் வீரரும் வாளின் வென்றியை வாழ்த்த, தானவர் தம்மேல் தம்பதி நீங்கும் வானவன் போல வஞ்சி நீங்கி - அவுணர்மீது தம் பதியின் நீங்கிச் செல்லும் இந்திரனைப்போல வஞ்சிப் பதியினின்றும் நீங்கி; மாகதப் புலவர் - இருந்தேத்துவார்; வைதாளிகர் - வைதாளி யாடுவார்; சூதர்-நின்றேத்துவார்; 2"சூதர் மாகதர் வேதாளிக ரொடு; என் முன் வந்தமையுங் காண்க. வாய்வாள் - தப்பாத வாளுமாம். தானவர்மேல் எடுத்துச் செல்லுமென்க. 80-91. தண்டத் தலைவரும் தலைத்தார்ச் சேனையும்-தானைத் தலைவரும் முதன்மை பொருந்திய தூசிப்படையும், வெண்டலைப் புணரியின் விளிம்பு சூழ்போத- வெள்ளிய அலைகளையுடைய கடற்கரைக்கு அருகே போத, மலைமுதுகு நெளிய நிலைநாடு அதர் பட-மலைகளின் முதுகு நெளியவும் சமநிலையுடைய காடுநாடெல் லாம் வழியுண்டாகவும், உலக மன்னவன் ஒருங்கு உடன் சென் றாங்கு - உலகினையாளும் சேரர் பெருமான் ஒரு சேரச் சென்று ஆலும்புரவி அணித் தேர்த் தானையொடு - ஆடுகின்ற குதிரைகள் பூட்டிய அழகிய தேர்ச்சேனையுடன், நீலகிரியின் நெடும்புறத்து இறுத்தாங்கு - நீலவெற்பின் பெரிய புறத்தே தங்கி, ஆடுஇயல் யானையும் தேரும் மாவும் - வென்றி பொருந்திய யானையும் தேரும் குதிரையும், பீடுகெழு மறவரும் பிறழாக் காப்பில் பாடி யிருக்கை - பெருமை மிக்க வீரரும் சூழ்ந்து வேற்றிடஞ் செல்லாத அருங்காப்பினையுடைய படை வீட்டில், பகல்வெய்யோன் தன் இருநில மடந்தைக்குத் திருவடியளித்தாங்கு - நடுவு நிலையை விரும்பும் வேந்தன் தான் ஆளும் நிலமகளுக்குத் தன் திருவடியை அளித்து, அருந்திறல் மாக்கள் அடியீடு ஏத்த-அரிய வலியுடைய மறவர்கள் அடியிட்டு நடத்தலைப் போற்ற, பெரும் பேரமளி ஏறிய பின்னர் - பெருமை பொருந்திய அமளியின் கண் ஏறியபின்; தண்டலைத்தலைவர் என்பதும் பாடம். தார் - தூசிப் படை; தாராகிய சேனையென்க. புணரியின் விளிம்பு என்றமையால் குட கடலின் மருங்கே தானை சென்ற தென்பது போதரும். மலை முதுகு நெளிய வென்றது உயர்வு நவிற்சி. ஆலும் - கனைக்கும் என்றுமாம். நீலகிரி - இஞ்ஞான்றும் இப்பெயருடன் விளங்கும் தோற்றஞ் சால் மலை. அதர் - வழி. ஆடு - வெற்றி. பாடி - படைவிட்டிருக்குமிடம் ; பாடியாகிய இருக்கை யென்க. பகல் - நடுவுநிலை ; வெய்யோன் - விரும்புவோன் ; இனி "ஞாயிற்றன்ன வெந்திற லாண்மை" யுடைய னென்றுமாம். யானையினிழிந்து கால்நிலந் தோயச் செய்தனன் என்பார் ‘இருநில மடந்தைக்குத் திருவடி யளித்து' என்றார். அடியீடு- அடியிட்டு நடக்கை. ஆங்கு என்பன அசைகள். மன்னவன் விளிம்பு சூழ்போத நெளியவும் அதர்படவும் சென்று தானையொடு இறுத்து இருக்கைக்கண் திருவடியளித்து அமளியேறிய பின்ன ரென்க. 92-104. இயங்கு படை அரவத்து ஈண்டொலி இசைப்ப - திரிகின்ற படைகளின் முழக்கத்தாற் கூடிய பேரொலி சென் றிசைத்தலால், விசும்பியங்கு முனிவர் வியல்நிலம் ஆளும் இந்திர திருவனைக் காண்குதும் என்றே - விண்ணகத் தியங்கும் முனிவர்கள் அகன்ற பூமியையாளும் இந்திரச் செல்வம் பெற்ற மன்னனைக் காண்போம் என்று, அந்தரத்து இழிந்தாங்கு அரசு விளங்கு அவையத்து - வானினின்றும் இறங்கி அரசு பொலியும் அவையின் கண், மின்னொளி மயக்கும் மேனியொடு தோன்ற - மின்னலின் ஒளியையும் மயங்கச் செய்யும் பேரொளி பொருந்திய திருமேனியுடன் தோன்ற, மன்னவன் எழுந்து வணங்கி நின்றோனை - எழுந்து வணக்கஞ்செய்து நின்றோனாகிய அரசனை நோக்கி, செஞ்சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ கேளாய் - சிவந்த சடையினை யுடைய சிவ பெருமான் திருவருளினாலே வஞ்சிப்பதி விளங்கு மாறு உதித்த சேரனே கேட்பாயாக, மலயத்து ஏகுதும் - யாங்கள் பொதியின் மலைக்குச் செல்கின்றோம், வான்பேர் இமய நிலயத்து ஏகுதல் நின் கருத்து ஆகலின் - நீ மிகப் பெரிதாகிய இமயத்தின்பாற் செல்ல எண்ணினை ஆதலால், அருமறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர் - அங்கே அரிய மறைகளை யுணர்ந்த அந்தணர் வாழ்வாருளர், பெருநில மன்ன பேணல் நின்கடன் என்று - பெரிய நிலவுலகினை யாளும் அரசே அன்னோரை நலியாது காத்தல் நினது கடமை யாகும் என்று கூறி, ஆங்கவர் வாழ்த்திப் போந்ததற் பின்னர் - அம் முனிவர்கள் வாழ்த்திச் சென்ற பின்பு ; ஒலித்தலால் அறிந்து காண்குதுமென்று இழிந்தாரென்க. வணங்கி நின்றான் அங்ஙனம் நின்றவனை நோக்கியென விரித் துரைக்க. இமயமாகிய நிலயத்து. நிலயத்து - நிற்கிறவிடத்து என்பது அரும்பதவுரை. அந்தணர் ஆங்கு வாழ்வோருளர் அவர்களைக் காத்தல் கடனென்று கூறியென்க. 105-115. வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க என - கடல் சூழ்ந்த நிலவுலகினையாளும் சேரர் பெருமான் வாழ்க என்று கூறிக் கொண்டு, கொங்கணக் கூத்தரும் கொடுங் கருநாடரும் - கொங்கண நாட்டுக் கூத்தரும் கருநாடரும், தம் குலக்கு ஓதிய தகைசால் அணியினர் - தம் மரபிற்குக் கூறப்பட்ட தகுதி மிக்க ஒப்பனையுடையராய், இருள்படப் பொதுளிய சுருள் இருங் குஞ்சி - இருளுண்டாகுமாறு நெருங்கிய சுருண்ட கரிய குஞ்சியில், மருள்படப் பரப்பிய ஒலியல் மாலையர் - மயங்கு மாறு பரப்பப்பட்ட தழைத்த மாலையை யுடையராய், வடம் சுமந்து ஓங்கிய வளர்இள வன முலைக் கருங்கயல் நெடுங்கண் காரிகை யாரோடு - மணி வடங்களைச் சுமந்து உயர்ந்த அழகிய இளங் கொங்கைகளும் கயல்மீன் போன்ற கரிய பெரிய கண்களு முடையராகிய மகளிருடன், இருங்குயில் ஆல இனவண்டு யாழ் செய - கரிய குயில்கள் பாட வண்டினங்கள் யாழினொலியைச் செய்ய, அரும்பு அவிழ் வேனில் வந்தது வாரார் காதலர் என்னும் - அரும்புகள் அலரும் பருவமாகிய இளவேனில் வந்தது நம் காதலரோ இன்னும் வாரார் என்னும், மேதகு சிறப்பின் மாதர்ப்பாணி வரியொடு தோன்ற - பெருஞ் சிறப்பினையுடைய அழகிய வரிப்பாட்டுடன் தோன்ற ; வீங்குநீர் - மிக்கநீர் ; கடல். கருநாடர் - கருநாடராகிய கூத்தர். குலக்கு, அத்துச்சாரியை தொக்கது. குஞ்சி - ஆடவர் தலை மயிர். ஒலியல் மாலை - தழைத்த மாலை. ‘வேனில் வந்தது ; காதலர் வாரார்' என்று தலைவி தோழிக்குக் கூறும் பொருளமைந்த பாட்டென்க. வரிப்பாணியென மாறுக. குயிலால, வண்டுயாழ் செய என்பன வேனிற்கு அடை. கூத்தரும் கருநாடரும் காரிகையா ரோடு கூடி வரிப் பாணியொடு தோன்ற வென்க. 116-121. கோல்வளை மாதே கோலங்கொள்ளாய் - திரட்சியுடைய வளையல்களை யணிந்த நங்கையே ஒப்பனைசெய்து கொள் வாயாக, காலம் காணாய் கடிது இடித்து உரறிக் காரோ வந்தது - காலத்தைக் காண்பாயாக, கடிதாக இடித்து உருமிக் கொண்டு கார்ப்பருவமோ வந்தது, காதலர் ஏறிய தேரோ வந்தது செய்வினை முடித்து என - நம் காதலர் ஏறிய தேரோ செய்வினை முடித்து மீண்டது என்று, கார்க்குரவையொடு - கார் காலத்தைக் குறித்துப் பாடும் குரவைப் பாட்டுடன், கருங்கயல் நெடுங்கண் கோற்றொடி மாதரொடு குடகர் தோன்ற - கரிய கயல்போன்ற பெரிய கண்களையும் திரண்ட வளைகளையுமுடைய மகளிருடன் குடகர்கள் தோன்ற; ‘மாதே கோலங்கொள்ளாய் ; கார் வந்தது ; தேர் வந்தது' எனத் தோழி தலைமகட்குக் கூறும் பொருளமைந்த குரவைப் பாட்டென்க. காரோ தேரோ என்னும் ஓகாரங்கள் சிறப்பு. தேரோ வந்தது என விரைவுபற்றி இறந்த காலமாகக் கூறப்பட்டது. செய்வினை - போர். குடகர் - குடநாட்டுக் கூத்தர். குடகர் மாதரொடு கூடிக் குரவை யொடு தோன்ற வென்க. 122-124. தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து - பொருந்திய கோலத்தையுடைய தம் மகளிருடன் மகிழ்ச்சி மிக்கு வாள்வினை முடித்த மறவாள் வேந்தன் ஊழி வாழியர் என்று ஓவர் தோன்ற - போர்த் தொழிலினை முடித்து வென்றி வாளினை யுடைய மன்னவன் ஊழியூழி வாழ்வானாக என்று கூறிக் கொண்டு ஓவர்கள் தோன்ற ; தாழ்தல் - தங்குதல் ; பொருந்துதல். தமர் - மகளிர். வாள் வினை - போர்த் தொழில். ஓவர் - ஏத்தாளர். ஓவர் வேந்தன் வாழியர் என்று தமரொடு தோன்ற வென்க. 125-127. கூத்துள் படுவோன் காட்டிய முறைமையின்-ஆடலாசிரியன் காட்டிய முறைப்படி, ஏத்தினர் அறியா இருங்கலன் நல்கி - தம்மைப் புகழ்ந்து பாடினோர்க்கு அன்னோர் முன்னறி யாத பேரணி களைக் கொடுத்து, வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி - அரசர் கூட்டத்தினை நடுங்கச் செய்யும் வேற்படையினை யுடைய மன்னவன் இருந்தபொழுது ; கூத்துள் படுவோன் - தன்னிடத்துள்ள ஆடலாசிரியன் ; காட்டிய முறைமையின் - அவன் அறிவித்த வரிசைக்குத் தக. ஏத்தினர் அறியா விருங்கலன் என்பதனை 1"விரற்செறி மரபின செவித்தொடக்குநரும், செவித்தொடர் மரபின விரற்செறிக்குநரும், அரைக்கமை மரபின மிடற்றியாக்குநரும், மிடற்றமை மரபின வரைக்கி யாக்குநரும்" என்பதனானறிக. 128-140. நாடகமகளிர் ஈரைம்பத்திருவரும் - ஆடல் மகளிர் நூற்று இருவரும், கூடிசைக் குயிலுவர் இருநூற்று எண்மரும்- இசைகூடும் குயிலுவக் கருவியாளர் இருநூற்று எண்மரும், தொண்ணூற்று அறுவகைப் பாசண்டத்துறை நண்ணிய நூற்றுவர் நகைவேழம்பரும் - தொண்ணூற்றாறு வகையினை யுடைய சமய சாத்திரத் துறையிற் கற்றுத் தெளிந்த நகையைத் தரும் வேழம்பர் நூற்றுவரும், கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பதிற்று இரட்டியும் - தாமரை வடிவாகிய கொடிஞ்சி யினையுடைய பெரிய தேர் நூறும், கடுங்களி யானை ஓரைஞ்ஞூறும் -தறு கண்மையும் மதக்களிப்புமுடைய யானை ஐந்நூறும், ஐயீராயிரம் கொய்யுளைப் புரவியும் - கொய்யப் பட்ட பிடரிமயிரினை யுடைய பதினாயிரங் குதிரைகளும், எய்யா வடவளத்து இருபதினாயிரம் கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும் - வேறோரிடத்தும் கண்டறியாத வடதிசை வளங்களையுடையனவாயும் சரக்கின் பெயர்அளவு முதலியன பொறிக்கப்பட்ட பொதிகளை யுடையனவாயும் அணி செய்யப்பெற்ற இருபதினாயிரம் வண்டிகளும், சஞ்சயன் முதலாத் தலைக்கீடுபெற்ற கஞ்சுக முதல்வர் ஈரைஞ்ஞூற்றுவரும் - சஞ்சயனை முதலாகக் கொண்ட மயிர்க் கட்டினைப் பெற்ற சட்டையிட்ட தலைவர் ஆயிரவரும், சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே - மிக வுயர்ந்த விற்கொடியையும் செவ்விய கோலையும் உடைய மன்னவ, வாயிலோர்என வாயில் வந்து இசைப்ப - வாயிலின்கண் வந்துளார் என்று வாயில் காவலர் வந்துகூற ; குயிலுவர் - தோற்கருவி துளைக் கருவி நரப்புக் கருவி உருக்குக் கருவியாளர். தொண்ணூற்றறுவகைப்பாசண்டத்துறை என்பதனைப் 1"பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு" என்புழி உரைத் தமையானு மறிக. நகை வேழம்பர் - விதூடகர். எய்யா-அறியப் படாத; 2"எய்யாமையே அறியாமையே" என்பது தொல்காப்பியம். வடவளம் - வடக்கிற் பாகுடம் ; வடதிசையினின்றும் போந்த திறைப் பொருள். சஞ்சயன் - தூதரிற் றலையாயவன். தலைக்கீடு - அரசரளிக்கும் தலைப்பாகை. திணைவிரவி வாயிலோரென உயர்திணை முடிபு பெற்றது. வாயில் - காவலாளர். 141-143. நாடக மகளிரும் நலத்தகு மாக்களும் கூடிசைக் குயிலுவக் கருவியாளரும் - நாடக மாதரும் சிறப்புடைய ஏனையரும் குயிலுவரும், சஞ்சயன் தன்னொடு வருக ஈங்கு என - சஞ்சயனோடும் ஈண்டு வருக என அரசன் பணிப்ப ; யானை முதலியன புறத்தே நிற்க மக்களாவாரை அழைத்து வருகவென ஆணை செய்தனனென்க. 144-155. செங்கோல் வேந்தன் திருவிளங்கு அவையத்து - சேரர் பெருமானது மலர்மகள் பொலியும் அவையின்கண், சஞ்சயன் புகுந்து தாழ்ந்து பல ஏத்தி - சஞ்சயன் எய்தி வணங்கிப் பலவாறாகத் துதித்து, ஆணையில் புகுந்த ஈரைம்பத் திருவரொடு மாண் வினையாளரை வகைபெறக் காட்டி-அரசனாணைப்படி வந்த முற்கூறிய நாடகமகளிர் நூற்றிருவருடன் சிறந்த தொழில் வல்லாரையும் வகைபெறுமாறுகாட்டி, வேற்றுமையின்றி நின்னொடு கலந்த நூற்றுவர் கன்னரும் கோற்றொழில் வேந்தே-செங்கோலரசே நின்னுடன் மாறுபாடின்றி நட்புக் கொண்ட நூற்றுவர் கன்னரும், வடதிசை மருங்கின் வானவன் பெயர்வது-சேனைத் தலைவன் வடக்கு நோக்கிச் செல்வது, கடவுள் எழுத ஓர் கற்கே ஆயின் - தெய்வம் அமைத்தற்கு ஒரு கற்கொணரும் பொருட் டேயாயின், ஓங்கிய இமயத்துக் கற்கால் கொண்டு - உயரிய இமயமலையின்கண் கற்கால் கொண்டு, வீங்கு நீர்க் கங்கை நீர்ப் படை செய்து - பெருகிவரும் நீரினையுடைய கங்கை யாற்றில் அக் கல்லினை நீராட்டி, ஆங்கு யாம் தரும் ஆற்றலம் என்றனர் என்று - அங்கேயே கொணர்ந்து தரும் வலியுடையம் யாம் என்று மொழிந்தனர் என்று கூறி, வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க என - கடல் சூழ்ந்த வுலகினையாள்கின்ற ஏந்தலே வாழ் வாயாகவென ஏத்த ; மாண்வினையாளர் என்றது குயிலுவர் முதலாயினாரை. கல்லினை யாமே கொணர்ந்து தரும் ஆற்றலமாகலின் அதன் பொருட்டுச் சேரர் பெருமான் வருதல் வேண்டா என்றனர். சஞ்சயன் காட்டி என்றனரென்று கூறி வாழ்கென வாழ்த்த என்க. நூற்றுவர் கன்னர் - செங்குட்டுவற்கு நட்பாளராய வடநாட்டரசர். சஞ்சயன் - நூற்றுவர் கன்னரால் விடுக்கப்பட்ட தூதர் தலைவன். 156-166. அடல் வேல் மன்னர் ஆருயிர் உண்ணும் கடலந்தானைக் காவலன் உரைக்கும் - வெற்றி பொருந்திய வேற்படை யினை யுடைய பகையரசர்தம் அரிய உயிரை உண்ணும் கடல் போன்ற பெரிய சேனையையுடைய அரசன் கூறுகின்றான்; பாலகுமரன் மக்கள் மற்றவர் காவா நாவிற் கனகனும் விசயனும் - பாலகுமரன் புதல்வராய் கனகனும் விசயனுமென்பார் நாவினைக் காவாதவராய், விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி - தமிழரசர் வலியறியாத புதிய வேந்தர்களுடன் கூடி, அருந் தமிழ் ஆற்றல் அறிந்திலராங்கென - அரிய தமிழ்த்திறனை அறியாராய் இகழ்ந்துரைத்தனரென்று, கூற்றம் கொண்டு இச்சேனை செல்வது - கூற்றுவனை அழைத்துக்கொண்டு இப் படை செல்கின்றது, நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி - இதனை நூற்றுவர் கன்னர்க்குக் கூறி, ஆங்கு - அங்கே, கங்கைப் பேர் யாறு கடத்தற்கு ஆவன வங்கப் பெருநிரை செய்க தாம் என -கங்கைப் பெரு நதியைக் கடத்தற்கு வேண்டுவனவாகிய மிகுதியான ஓடங்களை அமைத்திடுக என்றுரைக்க, சஞ்சயன் போன பின் - சஞ்சயன் அங்கு நின்றுஞ் சென்ற பின்னர் ; பாலகுமரன் மக்கள் கனகனும் விசயனும் என்னும் அவர் அறிந் திலரென வென்க. காவாநாவின் என்றமையால் அறியாது இகழ்ந் தனரெனக் கொள்க. 1"யாகாவா ராயினும் நாகாக்க" என்றார் வள்ளுவனாரும். தமிழாற்றல் - தமிழரசர் ஆற்றல். கூற்றம் பின் வர இச் சேனை செல்வது என்க. கூற்றக் கொண்டி என்பது பாட மாயின் கூற்றத்தை யொக்கும் கொண்டிச் சேனை யென்க; கொண்டி - கொள்ளை. தாம், அசை; அவர்கள் செய்கவென் றுரை யென்ன விரித்துரைத்தலுமாம். வானவன் பெயர்வது கற்கேயாயின் யாம் தரும் ஆற்றலம் என்று கூறி விடுத்தார்க்கு இச் சேனை செல்வது கற்கால் கொள்வது தலைக்கீடாக அருந்தமிழாற்றல் அரியாதோரை அறியப் பண்ணுதற்கெனக் கூறுக வென்றான். சேனை செல்வதெனச் சேனை மேலிட்டுக் கூறினான்; தனக்கு அவர் நிகரன்மையின். 166-172. கஞ்சுகமாக்கள் எஞ்சா நாவினர் ஈரைஞ்ஞூற்று வர் - மொழிதவறாத நாவினையுடையரான கஞ்சுகமாக்கள் ஆயிரவர், சந்தின் குப்பையும் தாழ்நீர் முத்தும் தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து - சந்தனக் குவியலும் நீர்மை தங்கிய முத்தும் பாண்டியர் இட்ட திறைப் பொருளுடன் கொண்டுவர, கண்ணெழுத்தாளர் - திருமுகமெழுதுவோர், காவல் வேந்தன் - மாநிலங் காவலனாகிய மன்னவனது, மண்ணுடை முடங்கல் - இலச்சினையிடப்பட்ட திருமுகத்தினை, அம் மன்னவர்க்கு அளித்து - அவ்வரசர்க்கு அளிக்க, ஆங்கவர் ஏகிய பின்னர் - அவர் அது கொண்டு போயபின்; எஞ்சாமை - சோர்வின்மையுமாம். தென்னர் விடுத்த கஞ்சுக மாக்கள் ஈரைஞ்ஞூற்றுவ ரென்க. தாழ்நீர் - கடலுமாம். சந்தும் முத்துமாகிய தென்னரிட்ட திறையெனக் கொண்டு ஒடுவை அசை யாக்கலுமாம். சந்தனமும் முத்தும் தென்னர்க்குரியன வாதல் 1"தன்கடற் பிறந்த முத்தினாரமும், ... சந்தினாரமும், இருபே ரார மும் எழில்பெற வணியும், திருவீழ்மார்பிற் றென்னவன்" 2"கோவா மலையாரங் கோத்த கடலாரம், ... தென்னர்கோன் மார்பினவே" என்பவற்றா னறியப்படும். கண்ணெழுத்தாளர் - ஈண்டுத் திருமுக மெழுதுவார். முடங்கல் - திருமுகம். வேந்தன் முடங்கலை அம் மன்னவர்க்குக் கண்ணெழுத்தாளர் எழுதி இலச்சினையிட்டு அவர் கைக் கொடுத்தாரென்க. கொணர்ந்து அளித்து என்பவற்றைக் கொணர அளிப்பவெனத் திரிக்க. ஆங்கு, அசை. 172-181. மன்னிய வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் - நிலை பெற்ற கடல் சூழ்ந்த வுளகினையாளும் செங்குட்டுவன், ஓங்கிய நாடு ஆள் செல்வர் நல் வலன் ஏத்த-பெருமை பொருந்திய நாட்டினை யாளும் அரசர்கள் தனது சிறந்த வென்றியைக் கொண்டாட, பாடியிருக்கை நீங்கிப் பெயர்ந்து-பாடியாகிய இருக்கையி னின்றும் நீங்கிப் புறப்பட்டு, கங்கைப் பேரியாற்றுக் கன்னரிற் பெற்ற வங்கப் பரப்பின் வடமருங்கு எய்தி - நூற்றுவர் கன்னரிடம் பெற்ற மரக்கலத் திரள்களான் கங்கைப் பெருநதி யின் வடகரையை அடைந்து, ஆங்கவர் எதிர்கொள அந்நாடு கழிந்தாங்கு - கன்னர் எதிர்கொண்டழைக்க அவர் நாட்டினைக் கடந்து, ஓங்குநீர் வேலி உத்தரம் மரீஇ - கடலை வேலியாக வுடைய வடதேயத்தை யடைந்து, பகைப் புலம் புக்குப் பாசறை இருந்த - பகையரசர் நாட்டில் நுழைந்து படைவீட்டிலிருந்த, தகைப்பருந் தானை மறவோன் தன்முன்- தடுத்தற்கரிய சேனை களையுடைய விறலோன் முன்னர்; இருந்தனன் அங்ஙனமிருந்த மறவோன்றன்முன் என்க. ஆள் வோன் பெயர்ந்து எய்திக் கழிந்து மரீஇப் புக்கு இருந்தனன் என முடிக்க. 182-187. உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்தி ரன் சிங்கன் தனுத்திரன் சிவேதன் (என்ற)-, வடதிசை மருங் கின் மன்னவர் எல்லாம் - வடநாட்டிலுள்ள அரசரனைவரும், தென்றமிழ் ஆற்றல் காண்குதும் யாம் என - தென்றமிழின் ஆற்றலை யாம் காண்பேம் என்று, கலந்த கேண்மையில் கனக விசயர் - கனக விசயருடன் ஒன்றிய நட்புடையராய், நிலந் திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர - பூமியைத் திரைக்கின்ற பெருஞ் சேனையுடன் போருக்கு எதிர்த்துவர; கேண்மையினாலே கனகவிசயர் தானையொடு ஒத்து மேல் வர என்றுமாம். திரைத்தல் - சுருக்குதல்; நிலவகலத்தைத் தன்னுள்ளே யடக்குதல்; 1"நிலந்திரைக்குங் கடற்றானை" என்பதன் உரை காண்க. 188-196. இரை தேர் வேட்டத்து எழுந்த அரிமா - உணவு தேடி வேட்டைக்குப் புறப்பட்ட சிங்கம், கரிமாப் பெருநிரை கண்டு உளம் சிறந்து பாய்ந்த பண்பில் - பெருங் கூட்டமாகிய யானை களைக் கண்டு ஊக்கமிக்கு அவற்றின்மேற் பாய்ந்தாற் போல, பல்வேல் மன்னர் காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப - வேற்படையினை யுடைய பல அரசர்களின் எதிரூன் றிய சேனையுடன் செங்குட்டுவன் போர்புரியத் தொடங்கி, வெயிற் கதிர் விழுங்கிய துகிற்கொடிப் பந்தர் - ஞாயிற்றின் கதிர்களை மறைத்த துகிற்கொடிகளாகிய பந்தரில், வடித்தோற் கொடும் பறை - தெளித்தெடுத்த தோலினால் மூடப்பட்ட கொடும் பறை, வால்வளை-வெள்ளிய சங்கு, நெடுவயிர் - நீண்ட கொம்பு, இடிக்குரன் முரசம்-இடிபோலும் ஒலியுடைய முழவு, இழுமென் பாண்டில் - இழுமென்னும் ஓசையுடைய கஞ்ச தாளம், உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரல் முழக்கத்து மயிர்க் கண் முரசமொடு - இடிமுழக்கம் போலும் பேரொலியுடன் உயிர்ப்பலி கொள்ளும் மயிர்க்கண் முரசம் என்னுமிவற்றுடன், மாதிரம் அதிர - திசைகள் அதிர; அரிமா, கரிமா என்பன இருபெயரொட்டு. உளம் - ஊக்கம்; 2"உள்ளத்தனைய துயர்வு" என்புழி இப்பொருட்டாதல் காண்க. விழுங்குதல் - மறைத்தல்; இலக்கணை. வடித்தோல் - பதனிட்ட தோல். முழக்கத்தையுடைய முரசமென்றுமாம். மயிர்க்கண் முரசம்- மயிர் சீவாத தோல் போர்த்த கண்ணையுடைய முரசம்; முன்னரும் 1"உயிர்ப்பலியுண்ணு முருமுக்குரன் முழக்கத்து, மயிர்க்கண் முரசு" என்றார்; ஆண்டு உரைத்தமையுங் காண்க. பறை முதலியன அதிர மாதிரமும் அதிர்ந்ததென்க; பறை முதலியன முரச மொடு மாதிரமெல்லாம் ஒலிக்க எனலுமாம். 197-203. சிலைத்தோள் ஆடவர் செருவேல் தடக்கையர் - வில்லினைத் தோளிற்கொண்ட வீரர் போர்புரியும் வேலினைக் கையிற் கொண்ட வீரர், கறைத்தோல் மறவர்-கரிய கிடுகினைத் தாங்கிய வீரர், கடுந்தேர் ஊருநர் - கடிய செலவினையுடைய தேரினைச் செலுத்துவோர், வெண்கோட்டு யானையர் விரைபரிக் குதிரையர் - வெள்ளிய கொம்புகளையுடைய யானையைக் கடாவுவோர் விரைந்த செலவினையுடைய குதிரையைத் தூண்டுவோர் என்னும் இவர்கள் செலவினால், மண்கண் கெடுத்த இம் மா நிலப் பெருந்துகள் - நிலவுலகின் கண்ணை மூடிய இந்தப் பெரிய பூமியின் மிகுதியான துகள், களங்கொள் யானைக் கவிழ்மணி நாவும் - போர்க்களத்தை யடைந்த யானைகளிற் கட்டிய கவிழ்ந்த மணிகளின் நாவும், விளங்கு கொடி நந்தின் வீங்கு இசை நாவும் - விளங்கும் கொடியுடன் கட்டிய மிக்க ஒலியை யுடைய சங்குகளின் நாவும், நடுங்கு தொழில் ஒழிந்து ஆங்கு ஒடுங்கி உள்செறிய - அசையுந் தொழிலொழிந்து ஒடுங்குமாறு அவற்றினுள்ளே நிறைய; என்போர் செலவினால் என வருவித்துரைக்க. உயிர்களின் கண்ணை மறைத்ததனை `மண்கண் கெடுத்த' என்றார். மாநிலத்தி னின்றும் எழுந்த துகளென்க. 'கொடி நந்து-கொடியும் சங்கும் முகத்துக் கட்டுவர்போலும்' என்றார் அரும்பதவுரையாசிரியர்; விளங்கொளி நந்தின் எனவும் பாடமுளது, 'சங்கின் நா' என்றார்; ஒலித்தல்பற்றி. ஒடுங்கி - ஒடுங்கவெனத் திரிக்க. பெருந்துகள் உள் செறியவென்க. 204-208. தாரும் தாரும் தாம் இடை மயங்க - தூசிப்படையும் தூசிப்படையும் ஒன்றோடொன்று நெருங்கிப் போர் புரிய;தோளும் தலையும் துணிந்து வேறாகிய - தோள்களும் தலையும் துணிபட்டு வெவ்வேறாகிய, சிலைத்தோள் மறவர் உடற் பொறை அடுக்கத்து - வில்லைத் தோளிற் கொண்ட வீரர்களின் உடற்பாரமாகிய குன்றுகளில், எறி பிணம் இடறிய குறை உடற் கவந்தம் - வெட்டுண்ட பிணத்தால் இடறப்பட்ட தலை யற்ற உடலினையுடைய கவந்தங்கள், பறைக்கண் பேய் மகள் பாணிக்கு ஆட - பறைபோன்ற பெரிய கண்களையுடைய பேய் மகளின் தாளத்திற்கிசைய ஆட; பறைபோலுங் கண்ணென்பதனைப் 1"பேய்க்க ணன்ன பிளிறு கடி முரசம்" என்பதனானு மறிக. 209-210. பிணம் சுமந்து ஒழுகிய நிணம்படு குருதியில்-பிணங் களை ஈர்த்து ஓடும் நிணம் பொருந்திய குருதியாற்றில், கணம் கொள் பேய்மகள் கதுப்பு இகுத்து ஆட-பெண்பேயின் கூட் டம் கூந்தலைத் தாழவிட்டு ஆட; 2"கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப், பிணந்தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும்" என்பது ஈண்டு அறியற்பாலது. 211-220. அடுந் தேர்த் தானை ஆரிய அரசர் கடும்படை மாக் களை - போரில்வல்ல தேர்ப் படைகளையுடைய வடபுலமன்ன ரின் கொடிய படைவீரர்களை, கொன்று களங் குவித்து நெடுந் தேர்க் கொடுஞ்சியும் கடுங்களிற்று எருத்தமும் விடும்பரிக் குதிரையின் வெரிநும் பாழ்பட-உயர்ந்த தேர் மொட்டுகளும் கொடிய களிறுகளின் பிடரியும் விரைந்த செலவினையுடைய குதிரைகளின் முதுகும் பாழாகுமாறு கொன்று களத்திற் குவித்து, எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்தொகை ஒரு பகல் எல்லையின் உண்ணும் என்பது- எருமைக் கடாவாகிய விரைந்த குதிரையை ஊருவோனாகிய கூற்றுவன் உயிர்த்தொகுதி களை ஒரு பகல் அளவிலேயே உண்ணுவன் என்பதனை, ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய - ஆரிய மன்னர் தம் போர்க்களத் தின்கண்ணே அறியுமாறு, நூழில் ஆட்டிய சூழ்கழல் வேந் தன்-கொன்று குவித்த வீரக் கழலணிந்த மன்னவன், போந்தை யொடு தொடுத்த பருவத் தும்பை - பனம் பூவினுடன் தொடுக் கப்பட்ட செவ்வித் தும்பை மாலையை, ஓங்கிருஞ் சென்னி மேம் பட மலைய - உயர்ந்த பெரிய முடியின்கண் சிறப்ப அணிந்திட; பாழ்படவும் உண்ணுமென்பதறிவும் கொன்று குவித்து நூழி லாட்டிய வேந்தன் என மாறுக. நூழிலாட்டினன் என முடித்து, ஆட்டிய வேந்தனென்றெடுக்க. கூற்றுவன் உண்ணுமென்பதறிய என்னுங் கருத்தினை "மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமை யும், நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய" என்பதனானுமறிக. நூழிலாட்டு - தும்பைத்திணையின் துறைகளுளொன்று; 3"களங் கழுமிய படையிரிய, உளங்கிழித்த வேல் பறித்தோச் சின்று" என் பது அதனிலக்கணம்; 1"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன், மெய்வேல் பறியா நகும்" என்பதுங் காண்க. இனி, 2நூழிலாட்டி என்பதற்குத் தூசிப் படையைக் கொன்று குவித்து எனப் பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். போந்தையொடு தும்பை மலைந்தமை 3"தோடார் போந்தை தும்பையொடு முடித்துப், பாடுதுறை முற்றிய" எனப் பின்னருங் கூறப்படும். 221-224. வாய்வாளாண்மையின் வண்டமிழ் இகழ்ந்த-வாய் வறிதே இராமையால் வண்டமிழை இகழ்ந்துரைத்த, காய் வேல் தடக்கைக் கனகனும் விசயனும் - கொதிக்கும் வேலினை யேந்திய பெரிய கைகளையுடைய கனகனும் விசயனும், ஐம்பத்திரு வர் கடுந்தேராளரொடும் - கடிய செலவினை யுடைய தேர்வல்லார் ஐம்பத்திருவருடனும், செங்குட்டுவன் தன் சினவலைப் படுதலும் - செங்குட்டுவ மன்னனின் சினமாகிய வலையின் கண்ணே அகப்படுதலும்; வாய்வாளாண்மை - வாயாகிய வாளின் ஆண்மை; வாய் வீரம். வாய்வாளாமை யென்பது ஒன்றும் பேசாதிருத்தலாகலின் இச்சொல் அதனின் வேறாமென்க; 4"வாய்வாளாமை ... மாற்ற முரையா திருத்தல்" என்பது காண்க. பற்றுக்கோட் பட்டா ரென்பது சின வலைப்படுதலென்பதனாற் பெற்றாம். 225-230. சடையினர் உடையினர் சாம்பற் பூச்சினர் - சடை யும் காவியுடையும் சாம்பற்பூச்சுமுடைய துறவிகளாகியும், பீடிகைப் பீலிப் பெருநோன்பாளர் - மணையும் மயிற்றோகையு முடைய பெரிய விரதியராகியும், பாடுபாணியர் பல்லியத்தோ ளினர் ஆடு கூத்தராகி - பாடுகின்ற பாட்டினையுடையரும் பல வாச்சியங்களையிட்டுச் சுருக்கிய பையைத் தோளிலுடையரு மாகிய ஆடுங் கூத்தராகியும், எங்கணும் ஏந்து வாள் ஒழிய-ஏந் திய வாட்படைகள் எவ்விடத்தும் ஒழிந்து கிடக்க, தாம் துறை போகிய விச்சைக் கோலத்து வேண்டுவயிற் படர்தர - மற்றும் தாம் கற்றுவல்ல வித்தைகட்குரிய கோலங்களுடையராகியும் வேண்டுமிடங்களிற் செல்ல; பீலியுடையார் சமணராவர். பாடுபாணி - ஒலிக்கின்ற தாளமு மாம். வாளொழியத் துறவிகளாகியும் நோன்பாளராகியும் கூத்த ராகியும் கோலத்தினராகியும் வேண்டுமிடங்களிற் செல்ல வென்க. ஏனையரசரும் படைஞரும் படர்தரவென்று வருவித்து முடிக்க. 1"வரைக்கலிங்கர் தமைச்சேர மாசையேற்றி வன்னூறு பறித்த மயிர்க் குறையும் வாங்கி, அரைக்கலிங்க முரிப்புண்ட கலிங்கரெல் லாம் அமணரெனப் பிழைத்தாரு மநேக ராங்கே" "குறியாகக் குருதிகொடி யாடையாகக் கொண்டுடுத்துப் போர்த்துப்பாற் குஞ்சி முண்டித், தறியீரோ சாக்கியரை யுடைகண்டாலெனப் புறமென் றியம்பிடுவ ரநேக ராங்கே" என்பன ஈண்டு ஒத்துநோக்கி மகிழ்தற் குரியன. 231-241. கச்சை யானைக் காவலர் நடுங்க - கழுத்திடு கயிற் றினை யணிந்த யானைகளையுடைய அரசர்கள் நடுங்குமாறு, கோட்டுமாப் பூட்டி-கோட்டினையுடைய களிறுகளை எருதாகப் பூட்டி, வாள் கோலாக - வாளே கோலாக, ஆள் அழி வாங்கி அதரி திரித்த - ஆளாகிய போரை இரங்கவிட்டுக் கடாவிட்ட, வாள் ஏர் உழவன் மறக்களம் வாழ்த்தி - வாளாகிய ஏரினை யுடைய உழவனாகிய செங்குட்டுவனது போர்க் களத்தை வாழ்த்தி, தொடியுடை நெடுங்கை தூங்கத் தூக்கி - வீர வளை யணிந்த பெரிய கைகளை அசையுமாறு தூக்கி, முடியுடைக் கருந்தலை முந்துற ஏந்தி - முடியணிந்த கரிய தலையை முற்பட ஏந்திக்கொண்டு, கடல்வயிறு கலக்கிய ஞாட்பும் கடல் அகழ் இலங்கையில் எழுந்த சமரமும் கடல் வணன் தேர்ஊர் செருவும் பாடி - கடல் போலும் நீல நிறமுடைய கண்ணன் கடலின் வயிற்றைக் கலக்கிய போரும் கடலை அகழியாகவுடைய இலங்கையிற் புரிந்த போரும் பாண்டவர்பொருட்டுத் தேரூர்ந்த போரும் ஆகிய மூன்றையும் பாடி, பேரிசை முன்தேர்க் குரவை முதல்வனை வாழ்த்தி - பெரும் புகழுடைய முதல்வனை முன்றேர்க் குரவையிலே பாடி வாழ்த்தி, பின்தேர்க் குரவை பேய் ஆடு பறந்தலை - பின்றேர்க் குரவையிலே பேய் ஆடுகின்ற மறக்களத்தில்; கோல் - தாற்றுக்கோல், ஆள் - வீரர்கள். அழி-நெற்போர். அதரி திரித்தல் - கடாவிடுதல். கோட்டுமாப் பூட்டி ... வாளேருழ வன் என்றது உருவகம்; 2"யானை யெருத்தின் வாண்மட லோச்சி, யதரி திரித்த" என்றார் பிறரும். கடல்வயிறு கலக்கிய ஞாட்பு - பாற்கடல் கடைந்த காலத்தில் வானவர்க்கும் தானவர்க்கு மிடையே நிகழ்ந்த போர்; இம் மூவகைப்போரும் வருங்காதையினும் குறிக்கப் படுதல் காண்க. மாயவன் நிகழ்த்திய இம் மூன்று செருவையும் இவன்மே லேற்றிப் பூவை நிலையாற் பாடிற்று. பேய் வாழ்த்தித் தூக்கி ஏந்திப் பாடி வாழ்த்தி ஆடு பறந்தலை யென்க. முன்றேர்க் குரவை - பகையரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப் பாலே தேர்த்தட்டிலே நின்று போர்த் தலைவரோடு கைபிணைந்தாடு வது; பின்றேர்க் குரவை - வென்ற அரசன் தேரின்பின்னே கூளிச் சுற்றம் ஆடுவது; 1"தேரோர், வென்ற கோமான் முன்றேர்க் குரவையும், ஒன்றிய மரபிற்பின்றேர்க் குரவையும்" என்புழி நச்சினார்க் கினியர் உரைத்த வுரை காண்க; தேரின்முன் பேயாடியது என்றும், தேரின்பின் விறலியரும் வயவரும் ஆடியது என்றும் முறையே இவற்றினிலக்கணங் கூறுவர் 2வெண்பாமாலையுடையார்; இளங்கோவடிகள் ஈண்டுக் கூறியன முன்னவற்றை யொத்திருத்தல் அறியற்பாலது. 242-247. முடித்தலை அடுப்பில் பிடர்த்தலைத் தாழி-முடி சூடிய தலையாகிய அடுப்பில் யானையின் தலையாகிய தாழியில் தொடித்தோள் துடுப்பில் துழைஇய ஊன்சோறு - தொடி யணிந்த தோளாகிய துடுப்பினால் துழாவி அடப்பட்ட ஊனாகிய சோற்றை, மறப்பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட-மறம் பொருந்திய பேய் மடையன் பதமறிந்து உண்பிக்க, சிறப்பூண் கடியினம் செங்கோற் கொற்றத்து அறக்களம் செய்தோன் ஊழி வாழ்க என-சிறந்த உணவினையுண்ட பேயினங்கள் முறை வழுவா வென்றியினாலே அறக்களஞ் செய்தோன் ஊழிதோறும் வாழ்க என வாழ்த்த. மறக்களம் முடித்த வாய்வாட் குட்டுவன்- போர்க்களச் செய்கையை முடித்த தப்பாத வாளினையுடைய செங்குட்டுவன்; பிடர்த்தலை- பிடரினையுடைய யானைத்தலை; 3"கொற்றவாண் மறவ ரோச்சக் குடரொடு, தலையுங் காலும், அற்றுவீ ழானைப் பானை யடுப்பினி லேற்று மம்மா" என்றார் செயங்கொண்டாரும். பேய் வாலுவன் - பேயாகிய மடையன் ; பேய்க்குச் சோறிடும் மடையன். வயின் - பதம் ; 4"வளைக்கை மகடூஉ வயினறிந் தட்ட" என்பதன் உரை காண்க. 5"ஆண்டலை யணங்கடுப்பின், ... தொடித் தோட்கை துடுப்பாக, வாடுற்ற வூன்சோறு, நெறியறிந்த கடிவாலுவன், அடியொதுங்கிப் பிற்பெயராப், படையோர்க்கு முருகயர" என்றார் காஞ்சிப் புலவர். சிறப்பூண் - விருந்தூண். கடி - பேய். தமக்கு உணவளித்தமையின் ‘அறக்களஞ் செய்தோன்' என்றன. இது கள வழி கூறிற்று; 6"களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்" என் பதற்கு நச்சினார்க்கினியர் உரைத்தவுரை காண்க. முடித்தனன் அங்ஙனம் முடித்த குட்டுவன் என அறுத்துரைக்க. வடதிசை மருங்கின் மறைகாத்து ஓம்புநர் - வட திசைக் கண்ணே மறையினைப், பாதுகாக்கும் அந்தணருடைய, தடவுத்தீ அவியாத் தண்பெரு வாழ்க்கை - குண்டத்தின் முத் தீயை அவியாது பேணும் பெரிய அருள் வாழ்க்கையை, காற் றூதாளரைப் போற்றிக் காமின் என - குறிக்கொண்டு காப்பீராக வென்று தூதுவர்க்குச் சொல்லி; தடவு - ஓமகுண்டம்; 1"தடவுநிமிர் முத்தீ" என்பது காண்க. காமினெனச் சொல்லி என ஒரு சொல் விரித்துரைக்க. ஓம்புநர் வாழ்க்கையைப்போற்றிக் காமினெனக் காற்று தாளர்க்குச் சொல்லி யென மாறுக. தூதாளரை, வேற்றுமை மயக்கம். காற்றூதாளர் - காலாள் என்பதுபோல் நின்றது. 2"அருமறை யந்தண ராங்குளர் வாழ்வோர், பெருநில மன்ன பேணனின் கடனென்று" முன் விசும் பியங்கு முனிவர் கூறியதை உட்கொண்டு தூதர்க்கு ஆணைதந்தா னென்க. 251-254. வில்லவன் கோதையொடு வென்று வினைமுடித்த பல் வேல் தானைப்படை பல ஏவி - வில்லவன் கோதை யென்னும் அமைச்சனுடன் போரினை வென்று முடித்த பல வேற்படைகளை யுடைய சேனை பலவற்றை ஏவி, பொற் கோட்டு இமயத்து - பொன்னாலாய சிமையத்தினையுடைய இமய மலையின்கண், பொருவறு பத்தினிக் கல்கால் கொண்டனன் காவலன் ஆங்கென் - ஒப்பற்ற பத்தினிக் கடவுட்குக் கற்செய்தலை அடிக்கொண் டான் அரசன் என்க. வில்லவன் கோதை - படைத் தலைவனுமாம். கால்கொண்ட னன் - தொடங்கினான் ; கடவுள் வடிவெழுதத் தொடங்கினான் என்றபடி , குட்டுவனாகிய காவலன் காமினெனச் சொல்லி ஏவி இமயத்துக் கல் கால் கொண்டனனென்க. நிலைமண்டில வாசிரியப்பா கால்கோட் காதை முற்றிற்று. 27. நீர்ப்படைக் காதை (இமயத்தினின்றும் கொண்ட பத்தினிக் கல்லைக் கனக விசயரு டைய முடியின் மீதேற்றிச் சென்று கங்கையாற்றில் முறைப்படி நீர்ப்படை செய்து அதன் தென்கரை சேர்ந்து, ஆரிய மன்னர்களால் ஆங்கண் அழகுற அமைக்கப்பெற்ற பாடியின்கண் செங்குட்டுவன் சேனையுடன் தங்கிப், போரிலே வீரங்காட்டித் துறக்கமுற்றோரின் மைந்தர்களுக்கும், பகைஞர்களை வென்ற வீரர்களுக்கும் பொன்னாற் செய்த வாகைப் பூவினை யளித்துச் சிறப்பித் திருந்தனன். இருந்தவன் , கங்கையாடி அங்குப் போந்த மாடலனால் கோவலன் வரலாற்றையும், அவன் கொலையுண்டமை கேட்டுப் புகார் நகரிலிருந்த அவன் தந்தையும் கண்ணகி தந்தையும் துறவு பூண்டதும், இருவர் தாயரும் உயிர் துறந்ததும் முதலியவற்றையும் நெடுஞ்செழியன் துஞ்சிய பின் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் பாண்டி நாட்டை ஆட்சி செய்து வருவதனையும் சோழனது செங்கோல் திரிபின்றி விளங்குவதனையும் கேள்வியுற்று, அவனுக்குத் தன் நிறையாகிய ஐம்பது துலாம் பொன் தானஞ்செய்து. தன்னாற் பற்றுக்கோட் பட்ட கனக விசயரைச் சோழ பாண்டியர்க்குக் காட்டி வருமாறு நீலன் முதலிய கஞ்சுக மாக்களை யேவித் தானையுடன் புறப்பட்டுச் சென்று , தன்னைப் பிரிந்து துயிலின்றி வருந்தியிருக்கும் கோப் பெருந் தேவியின் நெகிழ்ந்த வளை மகிழ்ச்சியாற் செறியும்படி வெண் கொற்றக் குடை நிழற்ற யானைமீ திவர்ந்து வஞ்சி நகரத்திற் புகுந்தனன். வடபே ரிமயத்து வான்றகு சிறப்பிற் கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின் சினவேல் முன்பிற் செருவெங் கோலத்துக் கனக விசயர்தங் கதிர்முடி யேற்றிச் 5 செறிகழல் வேந்தன் தென்றமி ழாற்றல் அறியாது மலைந்த ஆரிய மன்னரைச் செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக உயிர்த்தொகை உண்ட வொன்பதிற் றிரட்டியென்று யாண்டும் மதியும் நாளுங் கடிகையும் 10 ஈண்டுநீர் ஞாலங் கூட்டி யெண்கொள வருபெருந் தானை மறக்கள மருங்கின் ஒருபக லெல்லை உயிர்த்தொகை உண்ட செங்குட் டுவன்றன் சினவேற் றானையொடு கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து 15 பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை நூற்றிறன் மாக்களி னீர்ப்படை செய்து மன்பெருங் கோயிலும் மணிமண் டபங்களும் பொன்புனை யரங்கமும் புனைபூம் பந்தரும் உரிமைப் பள்ளியும் விரிபூஞ் சோலையும் 20 திருமலர்ப் பொய்கையும் வரிகாண் அரங்கமும் பேரிசை மன்னர்க் கேற்பவை பிறவும் ஆரிய மன்னர் அழகுற அமைத்த தெள்ளுநீர்க் கங்கைத் தென்கரை யாங்கண் வெள்ளிடைப் பாடி வேந்தன் புக்கு 25 நீணில மன்னர் நெஞ்சுபுக லழித்து வானவர் மகளிரின் வதுவைசூட் டயர்ந்தோர் உலையா வெஞ்சமம் ஊர்ந்தமர் உழக்கித் தலையுந் தோளும் விலைபெறக் கிடந்தோர் நாள்விலைக் கிளையுள் நல்லம ரழுவத்து 30 வாள்வினை முடித்து மறத்தொடு முடிந்தோர் குழிகட் பேய்மகள் குரவையிற் றொடுத்து வழிமருங் கேத்த வாளொடு மடிந்தோர் கிளைக டம்மொடு கிளர்பூ ணாகத்து வளையோர் மடிய மடிந்தோர் மைந்தர் 35 மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடியத் தலைத்தார் வாகை தம்முடிக் கணிந்தோர் திண்டேர்க் கொடுஞ்சியொடு தேரோர் வீழப் புண்டோய் குருதியிற் பொலிந்த மைந்தர் மாற்றருஞ் சிறப்பின் மணிமுடிக் கருந்தலைக் 40 கூற்றுக்கண் ணோட அரிந்துகளங் கொண்டோர் நிறஞ்சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து புறம்பெற வந்த போர்வாள் மறவர் வருக தாமென வாகைப் பொலந்தோடு பெருநா ளமயம் பிறக்கிடக் கொடுத்துத் 45 தோடார் போந்தை தும்பையொடு முடித்துப் பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தன் ஆடுகொள் மார்போ டரசுவிளங் கிருக்கையின் மாடல மறையோன் வந்து தோன்றி வாழ்க வெங்கோ மாதவி மடந்தை 50 கானற் பாணி கனக விசயர்தம் முடித்தலை நெரித்தது முதுநீர் ஞாலம் அடிப்படுத் தாண்ட அரசே வாழ்கெனப் பகைப்புலத் தரசர் பலரீங் கறியா நகைத்திறங் கூறினை நான்மறை யாள 55 யாதுநீ கூறிய உரைப்பொரு ளீங்கென மாடல மறையோன் மன்னவற் குரைக்கும் கானலந் தண்டுறைக் கடல்விளை யாட்டினுள் மாதவி மடந்தை வரிநவில் பாணியோடு ஊடற் காலத் தூழ்வினை உருத்தெழக் 60 கூடாது பிரிந்து குலக்கொடி தன்னுடன் மாட மூதூர் மதுரை புக்காங்கு இலைத்தார் வேந்தன் எழில்வான் எய்தக் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி குடவர் கோவே நின்னாடு புகுந்து 65 வடதிசை மன்னர் மணிமுடி யேறினள் இன்னுங் கேட்டருள் இகல்வேற் றடக்கை மன்னர் கோவே யான்வருங் காரணம் மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன் 70 ஊழ்வினைப் பயன்கொல் உரைசால் சிறப்பின் வாய்வாள் தென்னவன் மதுரையிற் சென்றேன் வலம்படு தானை மன்னவன் தன்னைச் சிலம்பின் வென்றனள் சேயிழை யென்றலும் தாதெரு மன்றத்து மாதரி யெழுந்து 75 கோவலன் தீதிலன் கோமகன் பிழைத்தான் அடைக்கல மிழந்தேன் இடைக்குல மாக்காள் குடையும் கோலும் பிழைத்த வோவென இடையிருள் யாமத் தெரியகம் புக்கதும் தவந்தரு சிறப்பிற் கவுந்தி சீற்றம் 80 நிவந்தோங்கு செங்கோல் நீணில வேந்தன் போகுயிர் தாங்கப் பொறைசா லாட்டி என்னோ டிவர்வினை உருத்த தோவென உண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்த்ததும் பொற்றேர்ச் செழியன் மதுரை மாநகர்க்கு 85 உற்றது மெல்லாம் ஒழிவின் றுணர்ந்தாங்கு என்பதிப் பெயர்ந்தேன் என்துயர் போற்றிச் செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க் குரைக்க மைந்தற் குற்றதும் மடந்தைக் குற்றதுஞ் செங்கோல் வேந்தற் குற்றதுங் கேட்டுக் 90 கோவலன் தாதை கொடுந்துய ரெய்தி மாபெருந் தானமா வான்பொரு ளீத்தாங்கு இந்திர விகாரம் ஏழுடன் புக்காங்கு அந்தர சாரிகள் ஆறைம் பதின்மர் பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று 95 துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும் துறந்தோன் மனைவி மகன்துயர் பொறாஅள் இறந்ததுய ரெய்தி இரங்கிமெய் விடவும் கண்ணகி தாதை கடவுளர் கோலத்து அண்ணலம் பெருந்தவத் தாசீ வகர்முன் 100 புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும் தானம் புரிந்தோன் தன்மனைக் கிழத்தி நாள்விடூஉ நல்லுயிர் நீத்துமெய் விடவும் மற்றது கேட்டு மாதவி மடந்தை நற்றாய் தனக்கு நற்றிறம் படர்கேன் 105 மணிமே கலையை வான்துயர் உறுக்குங் கணிகையர் கோலங் காணா தொழிகெனக் கோதைத் தாமம் குழலொடு களைந்து போதித் தானம் புரிந்தறங் கொள்ளவும் என்வாய்க் கேட்டோர் இறந்தோ ருண்மையின் 110 நன்னீர்க் கங்கை யாடப் போந்தேன் மன்னர் கோவே வாழ்க ஈங்கெனத் தோடார் போந்தை தும்பையொடு முடித்த வாடா வஞ்சி வானவர் பெருந்தகை மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பிற் 115 றென்னவன் நாடு செய்ததீங் குரையென நீடு வாழியரோ நீணில வேந்தென மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் 120 இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் வளநாடழிக்கும் மாண்பின ராதலின் ஒன்பது குடையும் ஒருபக லொழித்தவன் பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய் பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு 125 வேம்புமுதல் தடிந்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள் கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன் பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞூற்றுவர் ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு 130 ஒருபக லெல்லை உயிர்ப்பலி யூட்டி உரைசெல வெறுத்த மதுரை மூதூர் அரைசுகெடுத் தலம்வரும் அல்லற் காலை தென்புல மருங்கில் தீதுதீர் சிறப்பின் மன்பதை காக்கும் முறைமுதற் கட்டிலின் 135 நிரைமணிப் புரவி ஓரேழ் பூண்ட ஒருதனி யாழிக் கடவுட் டேர்மிசைக் காலைச் செங்கதிர்க் கடவுளே றினனென மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் ஊழிதொ றூழி யுலகங் காத்து 140 வாழ்க எங்கோ வாழிய பெரிதென மறையோன் கூறிய மாற்ற மெல்லாம் இறையோன் கேட்டாங் கிருந்த எல்லையுள் அகல்வாய் ஞாலம் ஆரிருள் விழுங்கப் பகல்செல முதிர்ந்த படர்கூர் மாலைச் 145 செந்தீப் பரந்த திசைமுகம் விளங்க அந்திச் செக்கர் வெண்பிறை தோன்றப் பிறையேர் வண்ணம் பெருந்தகை நோக்க இறையோன் செவ்வியிற் கணியெழுந் துரைப்போன் எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது 150 மண்ணாள் வேந்தே வாழ்கென் றேத்த நெடுங்காழ்க் கண்டம் நிரல்பட நிரைத்த கொடும்பட நெடுமதிற் கொடித்தேர் வீதியுள் குறியவும் நெடியவுங் குன்றுகண் டன்ன உறையுள் முடுக்கர் ஒருதிறம் போகி 155 வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச் சித்திர விதானத்துச் செம்பொற் பீடிகைக் கோயி லிருக்கைக் கோமகன் ஏறி வாயி லாளரின் மாடலற் கூஉய் இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர் 160 வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு செங்கோற் றன்மை தீதின் றோவென எங்கோ வேந்தே வாழ்கென் றேத்தி மங்கல மறையோன் மாடலன் உரைக்கும் வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப 165 எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும் குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர எறிதரு பருந்தின் இடும்பை நீங்க அரிந்துடம் பிட்டோன் அறந்தரு கோலும் திரிந்துவே றாகுங் காலமு முண்டோ 170 தீதோ இல்லைச் செல்லற் காலையுங் காவிரி புரக்கும் நாடுகிழ வோற்கென்று அருமறை முதல்வன் சொல்லக் கேட்டே பெருமகன் மறையோற் பேணி யாங்கவற்கு ஆடகப் பெருநிறை யையைந் திரட்டித் 175 தோடார் போந்தை வேலோன் றன்னிறை மாடல மறையோன் கொள்கென் றளித்தாங்கு ஆரிய மன்னர் ஐயிரு பதின்மரைச் சீர்கெழு நன்னாட்டுச் செல்கவென் றேவித் தாபத வேடத் துயிருய்ந்து பிழைத்த 180 மாபெருந் தானை மன்ன குமரர் சுருளிடு தாடி மருள்படு பூங்குழல் அரிபரந் தொழுகிய செழுங்கயல் நெடுங்கண் விரிவெண் தோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச் சூடக வரிவளை ஆடமைப் பணைத்தோள் 185 வளரிள வனமுலைத் தளரியல் மின்னிடைப் பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு எஞ்சா மன்னர் இறைமொழி மறுக்கும் கஞ்சுக முதல்வர் ஈரைஞ் வூற்றுவர் அரியிற் போந்தை அருந்தமி ழாற்றல் 190 தெரியாது மலைந்த கனக விசயரை இருபெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவித் திருந்துதுயில் கொள்ளா அளவை யாங்கணும் பரம்புநீர்க் கங்கைப் பழனப் பாசடைப் பயிலிளந் தாமரைப் பல்வண்டு யாழ்செய 195 வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக் குணதிசைக் குன்றத் துயர்மிசைத் தோன்றக் குடதிசை யாளுங் கொற்ற வேந்தன் வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத் தென்றிசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு 200 நிதிதுஞ்சு வியன்நகர் நீடுநிலை நிவந்து கதிர்செல வொழித்த கனக மாளிகை முத்துநிரைக் கொடித்தொடர் முழுவதும் வளைஇய சித்திர விதானத்துச் செய்பூங் கைவினை இலங்கொளி மணிநிரை யிடையிடை வகுத்த 205 விலங்கொளி வயிரமொடு பொலந்தகடு போகிய மடையமை செறுவின் வான்பொற் கட்டில் புடைதிரள் தமனியப் பொற்கா லமளிமிசை இணைபுண ரெகினத் திளமயிர் செறித்த துணையணைப் பள்ளித் துயிலாற்றுப் படுத்தாங்கு 210 எறிந்துகளங் கொண்ட இயறேர்க் கொற்றம் அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர் தோட்டுணை துறந்த துயரீங் கொழிகெனப் பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்தச் சிறுகுறுங் கூனுங் குறளுஞ் சென்று 215 பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தான் நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுகென அமைவிளை தேறல் மாந்திய கானவன் கவண்விடு புடையூஉக் காவல் கைவிட வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த 220 ஓங்கியல் யானை தூங்குதுயி லெய்த வாகை தும்பை வடதிசைச் சூடிய வேக யானையின் வழியோ நீங்கெனத் திறத்திறம் பகர்ந்து சேணோங் கிதணத்துக் குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும் 225 வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக் கவடி வித்திய கழுதையே ருழவன் குடவர் கோமான் வந்தான் நாளைப் படுநுகம் பூணாய் பகடே மன்னர் அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும் 230 தொடுப்பேர் உழவ ரோதைப் பாணியும் தண்ணான் பொருநை யாடுந ரிட்ட வண்ணமுஞ் சுண்ணமும் மலரும் பரந்து விண்ணுறை விற்போல் விளங்கிய பெருந்துறை வண்டுண மலர்ந்த மணித்தோட்டுக் குவளை 235 முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின் முருகுவிரி தாமரை முழுமலர் தோயக் குருகலர் தாழைக் கோட்டுமிசை யிருந்து வில்லவன் வந்தான் வியன்பே ரிமயத்துப் பல்லான் நிரையொடு படர்குவிர் நீரெனக் 240 காவலன் ஆனிரை நீர்த்துறை படீஇக் கோவலர் ஊதுங் குழலின் பாணியும் வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக் குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம் 245 கழங்காடு மகளி ரோதை யாயத்து வழங்குதொடி முன்கை மலர நீந்தி வானவன் வந்தான் வளரிள வனமுலை தோள்நலம் உணீஇய தும்பை போந்தையொடு வஞ்சி பாடுதும் மடவீர் யாமெனும் 250 அஞ்சொற் கிளவியர் அந்தீம் பாணியும் ஓர்த்துடன் இருந்த கோப்பெருந் தேவி வால்வளை செறிய வலம்புரி வலனெழ மாலைவெண் குடைக்கீழ் வாகைச் சென்னியன் வேக யானையின் மீமிசைப் பொலிந்து 255 குஞ்சர ஒழுகையிற் கோநக ரெதிர்கொள வஞ்சியுட் புகுந்தனன் செங்குட் டுவனென். உரை 1-4. வடபேரிமயத்து - வடக்கின் கண்ணதாகிய பெரிய இமயமலையிலே, வான்தரும் சிறப்பின் கடவுட் பத்தினி - துறக்கந் தருஞ் சிறப்பினையுடைய பத்தினிக்கடவுட்கு, கற்கால் கொண்ட பின்-கல்லில் வடிவெழுதிய பின்னர், சின வேல் முன்பிற் செரு வெங் கோலத்துக் கனக விசயர்தம் கதிர்முடி ஏற்றி- அச்சிலையைச் சினம் பொருந்திய வேல் வலியுடைய வெவ்விய போர்க் கோலத்துடன் அகப்பட்ட கனக விசயருடைய ஒள்ளிய முடி சூடிய தலையின்கண் ஏற்றி; வான்தரும் - மழையைத் தரும் என்றுமாம். முடி - முடியை யுடைய தலை. அதனை யேற்றி யென்க. 5-13. செறிகழல் வேந்தன் - செறிந்த வீரக் கழலையுடைய சேர வேந்தன், தென்றமிழ் ஆற்றல் அறியாது மலைந்த ஆரிய மன்னரை - தமிழன் ஆற்றலை அறியாது பொருத ஆரியவர சரை, செயிர்த் தொழில் முதியோன் செய்தொழில் பெருக உயிர்த்தொகை உண்ட - கொல்லுந் தொழிலையுடைய கூற்றுவனது தொழில் மிகுமாறு உயிர்க்கூட்டத்தை யுண்ட போர்கள், ஒன்பதிற்று இரட்டியென்று யாண்டும் மதியும் நாளும் கடிகையும் ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள - பதினெட்டாகிய யாண்டிலும் திங்களிலும் நாளிலும் நாழிகையிலும் முடிந்தன வென்று கடல்சூழ்ந்த உலகத்தோர் கூட்டியெண்ண, வருபெருந்தானை மறக்கள மருங்கின் - பெரிய சேனைகளோ டெதிர்ந்த போர்க் களத்திலே, ஒரு பகல் எல்லை உயிர்த்தொகை உண்ட செங்குட்டுவன் - ஒரு பகற் பொழுதினுள்ளே உயிருண்ட செங் குட்டுவன்; வேந்தனாகிய செங்குட்டுவன் எனக் கூட்டுக. தமிழாற்றல் - தமிழ் வேந்தரின் ஆற்றல், தமிழ் மறவரின் ஆற்றல், தமிழ்நாட்டினரின் ஆற்றல். செயிர் செற்றம் ; துன்பமுமாம். செயிர்த்தொழில் - செயிரை விளக்குந் தொழில். உண்ட - உண்டனவாகிய போர்கள்; வினைப் பெயர். ஞாலம் ஆண்டு முதலியவற்றுடன் ஒன்பதிற்றிரட்டியைக் கூட்டிப் போர்கள் அவற்றில் முடிந்தனவென் றெண்ண; தேவாசுர யுத்தம் பதினெட்டாண்டிலும், இராம ராவண யுத்தம் பதினெட்டு மாதத்திலும், பாண்டவ துரியோதன யுத்தம் பதினெட்டு நாளிலும், செங்குட்டுவனும் கனகவிசயரும் செய்த யுத்தம் பதினெட்டு நாழிகையிலும் முடிந்தனவென் றெண்ண வென்க ; 1"தேவாசுர ராமாயண மாபாரத முளவென், றோவாவுரை யோயும் படி யுளதப்பொரு களமே" என்பது அறியற்பாலது. இவன் போர் பதினெட்டு நாழிகையில் முடிவுற்ற தென்பதனை, 2"எருமைக் கடும் பரி யூர்வோ னுயிர்த்தொகை, ஒருபகலெல்லையி னுண்ணு மென்ப, தாரிய வரச ரமர்க்களத் தறிய, நூழி லாட்டிய சூழ்கழல் வேந்தன்" என்ற குறிப்பானுமறிக. ஆரிய மன்னரை ஒரு பகலெல்லை உயிர்த் தொகையுண்ட செங்குட்டுவன் என்றியையும். 13-16. தன் சின வேல் தானையொடு - தனது சினம் பொருந்திய வேலேந்திய சேனையோடு, கங்கைப் பேர்யாற்றுக் கரை யகம் புகுந்து - கங்கையாற்றின் கரையிடத்தே சென்று, பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை - யாவரும் வணங்கும் பகுதியிலே பட்ட முறைமையினையுடைய பத்தினிக் கடவுளை, நூல்திறன் மாக்களின் நீர்ப்படை செய்து - நூல்களின் கூறுபாட்டை உணர்ந்தோரால் நீர்ப்படுத்து ; பத்தினிக் கடவுள் என்றது கடவுள் எழுதிய கல்லினை. பகுதிப் பட்ட மரபாலே நீர்ப்படை செய்து என்றுமாம். நீர்ப்படை செய்தல் - நீராட்டுதல். 17-24. மன்பெருங் கோயிலும் - மிகப் பெரிய மாளிகையும், மணிமண்டபங்களும் - மணிகள் பதித்த மண்டபங்களும், பொன்புனை அரங்கமும் - பொன்னால் அமைத்த நாடக சாலையும், புனைபூம் பந்தரும் - பூக்களால் புனையப்பெற்ற பந்தரும், உரிமைப் பள்ளியும் - அரசர்க்குரிய பள்ளியிடமும், விரிபூஞ் சோலையும் - மலர்ந்த பூக்களையுடைய சோலையும், திருமலர்ப் பொய்கையும் - அழகிய மலர்களையுடைய வாவியும், வரிகாண் அரங்கமும் - வரிக் கூத்தினைக் காண்டற்குரிய அரங்கும், பேர் இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும் - மிக்க புகழையுடைய அரசர்க்குத் தக்கனவாகிய ஏனையவும், ஆரிய மன்னர் அழகுற அமைத்த - ஆரியவரசர் அழகுபெறச் சமைத்த, தெள்ளுநீர்க் கங்கைத் தென்கரை யாங்கண் - தெளிந்த நீரினையுடைய கங்கை யாற்றின் தென்கரை யிடத்தே, வெள்ளிடைப் பாடி வேந்தன் புக்கு - வெளியான இடத்திலுள்ள பாசறையில் அரசன் புகுந்து ; கோயில் - அரசனிருக்கும் மாளிகை. கங்கைத் தென்கரையாங் கண் பேரிசை மன்னர்க் கேற்பனவாகிய கோயில் முதலியன ஆரிய மன்னரால் அமைக்கப்பட்ட பாடி யென்க. 25-26. நீள்நிலமன்னர் நெஞ்சுபுகல் அழித்து - பெரிய உலகாளும் அரசரது உள்ளத்தருக்கினைத் தொலைத்து, வானவர் மகளிரின் வதுவை சூட்டு அயர்ந்தோர் - தேவமகளிரால் மணமாலை சூட்டப் பெற்றோரும் ; புகல் - செருக்கு ; புகல்வு எனவும்படும்; 1"மாறுபொரு தோட்டிய புகல்வின்" என்பது காண்க. வதுவை - மணமாலை; ஆகுபெயர். வதுவைசூட் டயர்ந்தோர் என்றது போர்க்களத்துப் பொருது இறந்தோரை என்க. 27-28. உலையா வெஞ்சமம் ஊர்ந்து அமர் உழக்கி-பொரத் தொலையாத வெவ்விய போர்க்களத்தே அடர்ந்து போரின் கண் பகைவரைக் கலக்கி, தலையும் தோளும் விலைபெறக் கிடந்தோர் - மன்னர்கண்டு அன்புடையோராம்படி தலையும் தோளும் வேறு வேறாகக் கிடந்தோரும் ; விலைபெறுதல் - மதிப்பெய்துதல். 29-30. நாள் விலைக் கிளையுள் - தம் வாழ்நாளை விலையாகத் தரும் மறவருள், நல்அமர் அழுவத்து - நல்ல பொரு களப் பரப்பிலே, வாள் வினைமுடித்து மறத்தொடு முடிந்தோர் - வாளாற் செய்யும் வினையனைத்தையும் செய்து முடித்து வீரத்தோடு பட்டோரும்; நாள்விலைக் கிளை - அரசனளித்த செஞ்சோற்றுக்கும் சிறப்புக்கும் விலையாகத் தம் வாழ்நாளைத் தரும் மறவர். கிளையுள் என்பதனை இடைநிலை விளக்காகக் கொண்டு முன்னும் பின்னுங் கூட்டுக. 31-32. குழிகட் பேய்மகள் குரவையின் தொடுத்து - குழிந்த கண்ணினையுடைப் பேய்மகள் மண்டிலமிட் டாடுங் குரவை யுடன் தொடுத்து, வழிமருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர் - தம் வழியிலுள்ளாரையும் போற்றும்படித் தம் வாளோடு பட்டோரும்; தொடுத்து - இயைத்து. இவர் வீரங் கண்டு அவர் வழியிலுள்ளா ரையும் ஏத்திற்று என்க. மருங்கு - கிளை. 33-34. கிளைகள் தம்மொடு - தமக்குறவாகிய வீரர்களுடன், கிளர்பூண் ஆகத்து வளையோர் மடிய மடிந்தோர் - விளங்கும் பூணணிந்த மார்பினையும் வளையினையும் உடைய மகளிர் உடன் மடிய இறந்தோரும் ஆகிய இவர்களின், மைந்தர் - ஆண்மை யுடைய மக்களும் ; கிளைகள் தம்மொடு மடிந்தோர், வளையோர் மடிய மடிந்தோர் என்க. இனி, வளையோர், தம் கிளர்பூணாகத்துப் பொருந்தி மடிய மடிந்தோர் எனலும் அமையும். 1"பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார், மார்பகம் பொருந்தியாங் கமைந்தனரே" என்பதூஉங் காண்க. 2"முலையு முகனுஞ் சேர்த்திக் கொண்டோன், றலையொடு முடிந்தநிலை" என்பர் தொல்காப்பியர். வதுவை சூட்டயர்ந்தோர் முதலாகக் கூறிய துஞ்சிய வீரர்களின் மைந்தரென்க. 35-36. மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடியத் தலைத் தார் வாகை தம் முடிக்கு அணிந்தோர்-மாறுபட்டுத் தம்பாற் பொர வந்தோர் வாளுடனே பட முதன்மையுடைய வாகை மாலையினைத் தம் முடியிற் சூடியோரும் ; தார்-தூசிப் படையெனக் கொண்டு, தலைவந்தோராகிய தூசிப் படையினர் மடிய எனலுமாம். வாகையணிந்தோர் - பகைவரது புறக்கொடை கண்டு மீண்டோராவர். 37-38 திண்டேர்க் கொடுஞ்சியொடு தேரோர் வீழ-உறுதிப் பாடுடைய தேரினது மொட்டோடு தேர்வீரரும் அவிய, புண் தோய் குருதியிற் பொலிந்த மைந்தர் - அவர் புண்ணினின்றும் போந்த குருதி படிதலாற் பொலிவுற்ற வீரரும்; 37-40 தேரோர் - தேரேறிவந்த பகைவர். அவரது புண் என்க. மாற்றருஞ் சிறப்பின் மணிமுடிக் கருந்தலை - பெயர்த் தற்கரிய சிறப்பினையுடைய மணிமுடி கவித்த பெரிய தலையினை, கூற்றுக் கண்ணோட அரிந்து களம்கொண்டோர் - கூற்று வனும் இரக்கங்கொள்ள அறுத்துப் போர்க்களத்தினைத் தமதாக்கிக் கொண்டோரும்; மாறு என்பது மாற்றென விகாரமாயிற் றெனலுமாம்; மாறு - ஒப்பு. மணிமுடிக் கருந்தலை - மாற்றரசர் தலை. கண்ணோட்ட மின்றி உயிர்வௌவும் கூற்றுவனும் கண்ணோட என்றார்; சிறப்பும்மை தொக்கது. 3"கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை" என்றார் பிறரும். 41-42. நிறம் சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து - உருச் சிதைந்த கவசத்தோடே மார்பின்கண் புண் மிகப்பெற்று, புறம் பெற வந்த போர் வாண் மறவர் - பகைவர் புறத்தைக் கண்ட வளவிலே மீண்ட போரிற் சிறந்த வாள் வீரரும் ; நிறம் இரண்டனுள் முன்னது வடிவு ; பின்னது மார்பு. 43-47. வருக தாம் என - வருகவென்றழைத்து, வாகைப் பொலம் தோடு - பொன்னாலாகிய வாகை மலரினை, பெருநாள் அமயம் பிறக்கிடக் கொடுத்து - பெரிய நாளில் கொடுக்கும் பொழுதொழிய நெடும்பொழுதிருந்து கொடுத்து, தோடுஆர் போந்தை தும்பையொடு முடித்து - இதழ் பொருந்திய பனம்பூ மாலையினைத் தும்பை மாலையோடு சூடி, பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தன்-வீரரைப் பாடும் புறத்துறை யெல்லாம் முடித்துப் பாடல்கொண்ட வென்றியினையுடைய மன்னன், ஆடு கொள் மார்போடு அரசு விளங்கு இருக்கை யின் - வெற்றி கொண்ட மார்போடே விளங்கி யிருக்கும் அரசிருக்கைக் கண்ணே ; மடிந்தோர் மைந்தரும் அணிந்தோரும் பொலிந்த மைந்தரும் கலங்கொண்டோரும் வாண் மறவரும் வருகவென அழைத்துக் கொடுத்தென்க. வாகைப் பொலந்தோடு அளித்தல் வீரர்களின் வீரச் செய்கையைப் பாராட்டியதற்கு அடையாளமாக அளிக்கும் சிறப்பாகும். கொடுக்குநாளைப் பெருநாளென்றார். அமயம் பிறக்கிட-பொழுது போதாதாம்படி. இனி, பிறந்த நாள்வயிற் கொடுக்கும் பொழுது பின்னாகும்படி யென்றுரைத்தலுமாம். 48-52. மாடல மறையோன் வந்து தோன்றி - மாடலனாகிய அந்தணன் அரசன்முன் வந்து தோன்றி, வாழ்க எங்கோ-எம் வேந்தே வாழ்வாயாக, மாதவி மடந்தை கானற்பாணி-மாதவி யாகிய மகளின் கானல்வரிப் பாட்டு, கனகவிசயர்தம் முடித்தலை நெரித்தது - கனகனும் விசயனும் என்பாருடைய முடியணிந்த தலையினை நெரித்தது, முதுநீர் ஞாலம் அடிப்படுத்து ஆண்ட அரசே வாழ்கென - கடல்சூழ்ந்த இவ்வுலகைத் தன் கீழ்ப் படுத்து ஆட்சி புரிந்த மன்னனே வாழ்வாயாகவென்று கூற; நெரித்தது - நெருக்கி வருத்தியது. மாதவி பாடிய கானல்வரியானே கோவலன் அவளைப் பிரிந்து கண்ணகியொடு கூடி மதுரை சென்று கொலைப்பட, அது பொறாத கண்ணகி மதுரையை எரியூட்டிச் சென்று நெடுவேள் குன்றத்துத் தன் கணவனைக் கூடித் துறக்கம் புக்கனளாக, அவளைத் தெய்வமாகக் கொண்டு வழிபட விரும்பி அவளுருவமைக்க இமயமலையிற் கற்கொணர்ந்த செங்குட்டுவன் இவர் தலையிற் சுமத்திக் கொணர்ந்தனன் ஆகலான், கானற்பாணி யானது முடித்தலை நெரிதற்கு வழிவழிக் கருவியாயிற்று. கருவியை வினைமுதலாக்கி நெரித்தது என்றார். 53-55. பகைப்புலத்து அரசர் பலர் ஈங்கு அறியா நகைத் திறம் கூறினை - இங்குள்ள பகைப்புலத்து மன்னர் பலரும் அறியாத நகைவகையாகிய கூற்றினைக் கூறினை, நான் மறையாள - அந்தணாளனே, யாது நீ கூறிய உரைப்பொருள் ஈங்கு என - ஈண்டு நீயுரைத்த மொழியின் பொருள் யாதென்று கூற; பகைப்புலம் - பகைவர் நாடு, இப்பொழுது பகைவரெனற் கேலாமையின் `பகைப்புலத்தரசர்' என்றான், அவன் கூறியதன் கருத்தைத் தான் அறிந்திருப்பினும் பகைப்புலத்தரசர் அறியா ராகலின் அவரறியுமாறு கூறுவிக்கக் கருதி, உரைப்பொருள் யாது அதனைத் தெரிவிப்பாய் என்றனனென்க. நானறியாத நகை யென்னாது மன்னர் பலரு மறியாத என்றான், `இராச பாவத்தாலே' என்பர் அரும்பத வுரையாசிரியர். 56. மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் - மாடலனாகிய அந்தணன் அரசனுக்கு கூறுவான் ; 57-61. கானல்அம் தண் துறைக் கடல் விளையாட்டினுள் - சோலைசூழ்ந்த குளிர்ந்த துறையையுடைய கடல் விளையாட்டிடத்தே, மாதவி மடந்தை வரி நவில் பாணியோடு- மாதவி பாடிய வரிப்பாட்டுடனே, ஊடற்காலத்து ஊழ்வினை உருத்து எழ - ஊடுதலுண்டாய பொழுது முன்னை வினையானது பயனளிக்க உருக்கொண்டு எதிர்தலான், கூடாது பிரிந்து - மாதவியோடு கூடாதே பிரிந்து சென்று, குலக்கொடி தன்னுடன் மாடமூதூர் மதுரை புக்கு - உயர்குடியிற் பிறந்தோளாகிய கண்ணகியுடன் கூடி மாடங்களையுடைய பழமையான மதுரை நகரினை அடைந்து ; கடல் விளையாட்டினுள் - நகரமாந்தரும் மாதரும் கடல் விளையாட்டு நிகழ்த்தும் பொழுதில் ;கடற்றுறைக் கானல் விளையாட்டில் என்றலுமாம். கானல் - கடற்கரைச் சோலை. மடந்தை நவில் வரிப்பாணி யென்க. வரிப்பாணியோடு ஊழ்வினையும் எழ என்க. 1"யாழிசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை யுருத்ததாகலின், உவவுற்ற முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்" என்றார் முன்னும். உருத்து - வெகுண்டு என்றுமாம். 61-65. ஆங்கு இலைத்தார் வேந்தன் எழில் வான் எய்த-அந்நகரிடத்தேதழைவிரவிய மாலையணிந்த பாண்டியன் அழகிய துறக்கத்தினை அடைய, கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி - கொலையுண்ட கோவலன் மனைவியாகிய கண்ணகி, குடவர் கோவே நின்னாடுபுகுந்து-குடநாட்டினர் தலைவனே நின்னாட்டின் கண்புக்கு, வடதிசை மன்னர் மணிமுடி ஏறினள்-வடக்கண் ஆரியவரசரது முடித் தலையி லேறினாள் ; வான்எய்த - வானெய்தும்படி ; செயவெனெச்சம் காரியப் பொருட்டு. புகுந்து பின்பு ஏறினாளென்க. வடிவெழுதிய கல்லாகலின் ‘ஏறினாள்' என்றான். 66-67. இன்னும் கேட்டருள் இகல்வேல் தடக்கை மன்னர் கோவே யான்வருங் காரணம்-தெவ்வரொடு முரணும் வேலேந்திய பெரிய கையினை யுடைய மன்னர்மன்ன யான் ஈங்கு வந்த காரணத்தை மேலுங் கேட்டருள்வாயாக ; 68-71. மாமுனி பொதியில் மலைவலங் கொண்டு-அகத்தியனுறையும் பொதியின் மலையை வலஞ்செய்து, குமரியம் பெருந்துறை ஆடி மீள்வேன் - குமரியின் அழகிய பெரிய துறைக் கண்ணே நீராடி மீளும் யான், ஊழ்வினைப் பயன்கொல்-முன்னை வினையின் பயனோதான், உரைசால் சிறப்பின் வாய்வாள் தென்னவன் மதுரையிற் சென்றேன் - புகழ்மிக்க சிறப்பினையுடைய வினைவாய்த்த வாளினை யுடைய பாண்டியனது மதுரை நகரத்துச்சென்றேன் ; இவ்வாறே, 1"மாதவ முனிவன் மலைவலங் கொண்டு, குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து, தமர்முதற் பெயர்வோன்" என முன்னர் வந்தது காண்க. ஆங்குச் சென்று தீயன கேட்டற் கமைந்தே னென்பது கருத்தாக "ஊழ்வினைப் பயன்கொல்..... சென்றேன்" என்றான் என்க. 72-73. வலம் படு தானை மன்னவன் தன்னை - வெற்றியுண்டா தற்குக் காரணமாகிய சேனையினையுடைய பாண்டிய மன்னனை, சிலம்பின் வென்றனள் சேயிழை என்றலும் - கண்ணகி தன் சிலம்பினால் வெற்றி கொண்டனள் என்ற செய்தியைக் கேட்ட வளவில் ; சிலம்பின் வென்றனள் என்றது பாண்டியன் கோவலனைக் கொல்வித்துக் கண்ணகியால் தன் அரசியல் பிழைத்தமையறிந்து அரசு கட்டிலிலிருந்தவாறே துஞ்சிய வரலாற்றை அடக்கியுள்ளது. 74-78. தாது எரு மன்றத்து மாதரி யெழுந்து-தாதாகிய எருப் பொருந்திய மன்றத்திடத்தே மாதரி தோன்றி, கோவலன் தீது இலன் - கோவலன் குற்றமுடையனல்லன், கோமகன் பிழைத் தான் - மன்னனே தவறிழைத்தான், அடைக்கலம் இழந்தேன் இடைக்குல மாக்காள்-இடையர் குலத்துப் பிறந்த மக்காள் யான் அடைக்கலப் பொருளைக் காக்குந் தகுதியின்றி இழந்து விட்டேன், குடையுங் கோலும் பிழைத்தவோவென-குடிகட்கு நிழல் செய்யுங் குடையும் நீதிசெய்யும் செங்கோலும் வழுவினவோ என்று கூறி, இடையிருள் யாமத்து எரியகம்புக்கதும் - இருள்மிக்க இடையாமத்தே தான் தீயிடை மூழ்கியதும் ; தாது எரு - பொடியாகிக் கிடக்கும் எரு. அரசன் குடிகளிடத்து அருளும் நீதியும் உடையனாதல் இன்றியமையாத தாகலான், அவ் விரண்டன் குறியாகிய குடையுங் கோலும் பிழைத்தவோ வென்றாள். பிழைத்தவோ என்றாள், முன்னர்ப் பிழையாமைபற்றி. 79-83. தவந்தரு சிறப்பிற் கவுந்தி சீற்றம்-தவத்தின் சிறப் பினையுடைய கவுந்தியடிகளின் சீற்றத்தினை, நிவந்து ஓங்கு செங் கோல் நீணிலவேந்தன் போகு உயிர் தாங்க-மிக்குயர்ந்த செங் கோலினையுடைய பெருநில மன்னனாம் பாண்டியனது சாக்காடு தணித்திட, பொறைசா லாட்டி - பொறுமை மிக்க கவுந்தியடிகள், என்னோடு இவர் வினை உருத்ததோ என - இவ்விருவர் தீவினையும் என்னோடு இவர்களைக் கொணர்ந்து பயனளிக்கத் தோன்றிற்றோவென எண்ணி, உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்த்ததும் - உண்ணா விரதத்தினால் உயிரை உடம்பி னின்றும் நீக்கியதும்; சீற்றத்தைப் போகுயிர் தாங்க என்க. தாங்கல் - ஈண்டுத் தணித்தல். வேந்தன் துஞ்சிற்றிலனேற் சபித்திடுவாரென்பது போதரும். ஓ, இரக்கமுமாம். 84-85. பொன் தேர்ச் செழியன் மதுரைமா நகர்க்கு உற்ற தும் - அழகிய தேரினையுடைய பாண்டியனது பெரிய மதுரை நகரத்திற்கு உற்ற தீமையும், எல்லாம் ஒழிவு இன்று உணர்ந்து - ஆகிய எல்லாவற்றையும் எஞ்சுதலின்றி அறிந்து ; மதுரைக்குற்றது, எரியுண்டது. இன்றி என்பது இன்றெனத் திரிந்தது. மதுரையிற் சென்றேன் ஆங்கண் புக்கதும் பெயர்த்ததும் உற்றதும் ஆகிய எல்லாவற்றையும் உணர்ந்து பெயர்ந்தேன் என்க. மேல் அடைக்கலக் காதையில், குமரியாடிப் போந்த மாடலன் மது ரையிற் கோவலனைக் கண்டு அவன் கண்ணகியுடன் போந்ததற்கு இரங்கினமை கூறப்பட்டிருத்தலின், அவன் பின்னரும் சின்னாள் அங்கிருந்து யாவற்றையும் அறிந்து சென்றான் என்பது பெற்றாம். 85-87. ஆங்கு என் பதிப் பெயர்ந்தேன் என் துயர் போற்றி - அவ்வளவிலே என் பதிக்கு மீண்டேனாய் எனது துன்பத்தைப் பொறுத்துச் சென்று, செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க்கு உரைக்க - சோழன் மூதூராகிய புகார் நகரத்தில் அவர்க்குச் சிறந்தோராகிய உறவினர்க்குக் கூற; பெயர்ந்தேன், முற்றெச்சம். என் துயர் என்றது அவர்க்குற்ற பொல்லாமையால், தான் எய்திய துயரம். போற்றி - பொறுத்து என்னும் பொருட்டு. சிறந்தோர் - தாய் தந்தை முதலிய உறவினர். 88-95. மைந்தற்கு உற்றதும் மடந்தைக்கு உற்றதும் - தன் புதல்வனுக்கு நேர்ந்ததனையும் கண்ணகிக்கு நேர்ந்ததனையும், செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு - செங்கோலையுடைய பாண்டியனுக்கு நேர்ந்ததனையுங் கேள்வியுற்று, கோவலன் தாதை கொடுந்துயர் எய்தி - மாசாத்துவான் கொடிய துன்பத் தினை அடைந்து, மாபெருந்தானமா வான்பொருள் ஈத்து-மிக்க சிறப்புடைய தானமாகத் தன் சிறந்த செல்வங்களை யெல்லாம் அளித்து, ஆங்கு இந்திர விகாரம் ஏழுடன்புக்கு-அப்பொழுதே இந்திரன் சமைத்த விகாரம் ஏழன்கண்ணும் புகுந்து, ஆங்கு அந்தரசாரிகள் ஆறு ஐம்பதின்மர் - ஆங்கண் வானத்தியங்கு வோராம் முந்நூற்றுவராய, பிறந்த யாக்கைப் பிறப்பு அற முயன்று துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும் - தாம் முன்பு பிறந்துவரும் உடலினது பிறப்பு அறும்வண்ணம் முயற்சி கொண்டு துறந்த சாரணர் முன்பே துறவினை அடையவும். தாதை கேட்டுத் துயரெய்தி ஈத்துத் துறவி யெய்தவும் என்க. வான்பொருள் - அறத்தாறீட்டிய விழுப்பொருள். இந்திர விகாரம் ஏழ் - அவ்வூர்ப் புத்த சைத்தியத்தில் இந்திரனால் நிருமிக்கப்பட்ட ஏழரங்கு ; இதனை, 1"அந்தரசாரிக ளறைந்தனர் சாற்று, மிந்திர விகார மேழுடன் போகி" என்பதனானும், அதன் உரைக் குறிப்பானும் அறிக. துறவி - துறவு ; 2"மாதவி துறவிக்கு" 3"துறவியுள்ளந் தோன்றி" என வருவன காண்க. 96-97. துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாஅள் - அங்ஙனந் துறந்தோனாகிய மாசாத்துவான் மனைவி தன் புதல்வற்கு எய்திய துன்பத்தினைப் பொறாளாய், இறந்த துயர் எய்தி இரங்கி மெய் விடவும் - மிக்க துன்பமுற்று வருந்தி உடலினை விட்டிடவும்; மகன் துயர் - மகனுக்குற்ற துயர் ; ஆவது கொலை. 98-100. கண்ணகி தாதை கடவுளர் கோலத்து-கண்ணகியின் தந்தை முனிவர் கோலத்துடன், அண்ணல் அம்பெருந் தவத்து ஆசீவகர்முன் - தலைமை யமைந்த மிக்க தவத்தினையுடைய ஆசீவகர் முன்னர், புண்ணியதானம் புரிந்து அறங் கொள்ளவும் - புண்ணியமாகிய தானஞ்செய்து துறவறத்தினை மேற்கொள்ளவும்; கடவுளர் - ஈண்டு முனிவர். 1"கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்" என வருதல் காண்க. ஆசீவகம் - சமண சமயத்தின் வகையுள் ஒன்று. புண்ணியதானம் - பிறப்பினை யொழித்தற்குச் செய்யுந் தானம் ; 2"போதியின்கீழ் மாதவர்முன் புண்ணியதானம் புரிந்த, மாதவி தன்றுறவும்" என மேல் வருவதுங் காண்க. 101-102. தானம் புரிந்தோன் தன் மனைக் கிழத்தி - அங்ஙனந் தானஞ் செய்து துறந்தோனாய மாநாய்கன் மனைவி, நாள்விடூஉ நல்லுயிர் நீத்து மெய் விடவும் - வாழ்நாளைவிட்டு நல்ல உயிரினைத் துறந்து உடம்பை யொழிக்கவும் ; நாள் - வாழ்நாள். விடூஉ, வினையெச்சம். 103-108. மற்றது கேட்டு மாதவி மடந்தை - அச்செய்தியினை மாதவி கேள்வியுற்று, நற்றாய் தனக்கு நல்திறம் படர்கேன் மணி மேகலையை வான்துய ருறுக்கும் கணிகையர் கோலம் காணாது ஒழிகென - யான் நன்மையாகிய பகுதியிற் செல்லக் கடவேன், நீ மணிமேகலையை மிக்க துன்பத்தினைச் செய்யும் கணிகையர் கோலத்தினளாகச் செய்யாதொழிகவென்று தன் தாயிடத்துச் சொல்லி, கோதைத் தாமம் குழலொடு களைந்து - கோதை யாகிய மாலையினைக் கூந்தலுடனே களைந்து, போதித்தானம் புரிந்து அறங்கொள்ளவும்-புண்ணியதானஞ் செய்து துறவறங் கொள்ளவும்; அது என்றது கோவலற்குற்றது முதலிய செய்தி, நற்றாய்-ஈன்ற தாய் ; சித்திராபதி, நற்றாய்தனக்குக் காணாதொழிகென்று கூறி யென்க. வான்றுய ருறுக்குங் கணிகையர் கோலம் என்றாள், அக் கோலத்தால் தான் துன்பமுறுதலான். கோதை - ஒழுங்கு எனலு மாம். போதித்தானம் - போதி மாதவர்முன் செய்யும் புண்ணிய தானம். 109-111. என்வாய்க் கேட்டோர் இறந்தோர் உண்மையின் - என்னிடத்துக் கேட்டவர் இங்ஙனஞ் செய்யாநிற்க அவருள் இறந்தோரும் உண்டாகையால், நன்னீர்க் கங்கையாடப் போந்தேன் - தூய நீரினையுடைய கங்கையில் நீராட வந்தேன், மன்னர் கோவே வாழ்க ஈங்கு என - மன்னர் மன்ன இவ்வுல கத்து வாழ்வாயாக என்று போற்ற; யான் கூறியது காரணமாக அவர் இறந்தபழி என்னைச் சாரு மாகலான் அது தொலைதற்குக் கங்கையாடப் போந்தேன் என்றான் என்க. நன்னீர் - தன்கண் ஆடினாரைத் தூய்மை செய்யுநீர். 112-115. தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்த-இதழ் மிக்க பனம்பூவினைத் தும்பைப் பூவொடு சூடிய, வாடாவஞ்சி வானவர் பெருந்தகை - வஞ்சி நகரத்தையுடைய சேரர் பெருந்தகை, மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின் தென்ன வன் நாடு செய்தது ஈங்கு உரையென- நெடுஞ்செழியன் இறந்த பின்னர் செல்வம் மிக்க சிறப்பினையுடைய பாண்டியனாடு செய்ததனை இப்பொழுது உரைப்பாயாக என்று கேட்க ; வாடாவஞ்சி, வெளிப்படை. மன்னவன் - பாண்டியன் நெடுஞ் செழியன் 116-117. .நீடு வாழியரோ நீணில வேந்து என - பெருநில மன்ன நீ நீடு வாழ்வாயாக என்று வாழ்த்தி, மாடல மறை யோன் மன்னவற்கு உரைக்கும் - மாடலனாகிய அந்தணன் அரசனுக்குக் கூறுவான் ; ஓ, அசை. வேந்து, அண்மை விளி. 117-123. நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா-நினது மைத்துனனாகிய சோழன் பெருங் கிள்ளியுடன் சேராத, ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் - ஒத்த தன்மையினையுடையராகிய ஒன்பது அரசர்கள், இளவரசு பொறார் - தாம் இள வரசாக இருத்தலைப் பொறாராய், ஏவல் கேளார் - அக் கிள்ளி யின் ஏவலைக் கேளாராய், வளநாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின் - செல்வமிக்க நாடாட்சியினைச் சிதைக்குந் தன்மையை உடையராயினா ராகலான், ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து - அவர்களுடைய ஒன்பது குடையினையும் ஒரே பகலில் ஒழித்து, அவன் பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய் - அவ் வளவனது அழகிய ஆக்கினா சக்கரத்தை ஒருநிலைப் படச் செய்தோய் ; கிள்ளி - பெருங்கிள்ளி ; பெருநற் கிள்ளி யெனவும் கூறப்படு வன் ; இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி யென்பான் இவனே போலும். ஒன்பது மன்னரும் சோழர் குலத்தினரென்பது 1"ஆர் புனை தெரிய லொன்பது மன்னரை, நேரிவாயி னிலைச்செரு வென்று," 1ஆராச் செருவிற் சோழர் குடிக் குரியோர், ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து, நிலைச்செருவினாற் றலையறுத்து" என்பவற்றாற் பெறப்படும். ஒத்த பண்பினர் - ஒரு பெற்றியே பெருங் கிள்ளி யுடன் பகைமை பூண்டவர் ; தவற்றால் ஒத்த பண்பினை யுடையர் என்பர் அரும்பதவுரை யாசிரியர். இளவரசு - இளையனா யுள்ளான் அரசாளுதலை யென்றுமாம். மாண்பு - ஈண்டு இயல்பு. 124-126. பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு - பழையன் என்பான் காத்த தளிர்மிக்க நீண்ட கொம்புகளை யுடைய, வேம்பு முதல் தடிந்த ஏந்து வாள்வலத்துப் போந் தைக் கண்ணிப் பொறைய கேட்டருள் - வேம்பின் அடியினைக் குறைத்த ஏந்திய வாளின் வெற்றியினையும் பனம்பூ மாலை யினை யும் உடைய பொறையனே கேட்டருள்வாயாக ; பழையன் - ஓர் குறுநில மன்னன் ; மோகூரில் இருந்தவன். பழையன் காவன் மரமாகிய வேம்பினைத் தடிந்ததனை, 2"பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின், முழாரை முழுமுதல் துமியப் பண்ணி" என்பதனானறிக. 127-138. கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் - கொற்கை நகரத்து இருந்தாண்ட வெற்றிதரும் வேலினை யுடைய செழியன், பொன் தொழிற் கொல்லர் ஈரைஞ்ஞூற்று வர் - பொற் கொல்லர் ஆயிரவரை, ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு - தன்னொரு முலையினைத் திருகியெறிந்து மதுரையை யெரித்த மாபெரும் பத்தினிக்கு, ஒரு பகல் எல்லை உயிர்ப்பலியூட்டி - ஒரு பகற் பொழுதிலே உயிப்பலியாக உண்பித்து, உரைசெல வெறுத்த மதுரை மூதூர் - புகழ் யாங்கணும் பரக்கும்படி மிக்க மதுரையாகிய பழைய ஊர், அரைசு கெடுத்து அலம்வரும் அல்லற்காலை - அரசினையிழந்து மயங்கும் துன்ப மிக்க காலத்தே, தென்புல மருங்கின் தீதுதீர் சிறப்பின் - தென்னாட்டின்கண் குற்றந் தீர்ந்த சிறப்பினையுடைய, மன்பதை காக்கும் முறை முதற் கட்டிலின்-உயிர்த் தொகுதியினைக் காவல் செய்யும் முறையானே முதன்மை யமைந்த சிங்காதனத்தின் கண், நிரைமணிப் புரவி ஓரேழ் பூண்ட - நிரையான மணித்தார் அணிந்த ஏழு குதிரைகள் பூட்டிய. ஒரு தனி ஆழிக் கடவுள் தேர்மிசை - ஒப்பற்ற ஓருருளையினையுடைய திப்பியத் தேரின் மீது, காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன் என-காலைப் போழ்தில் சிவந்த கதிர்களையுடைய ஞாயிற்றுப்புத்தேள் ஏறினாற் போன்று, மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் - மாலையிற்றோன்றும் திங்களின் வழித் தோன்றலாகிய அவன் ஏறினான் ; வெற்றிவேற் செழியன் பத்தினிக்குப் 1"பலியூட்டியதனை இந்நூலின் உரைபெறு கட்டுரையானு மறிக ; இவனை இளஞ்செழியன் என்பர் அடியார்க்கு நல்லார். ஈரைஞ்ஞூற்றுவரையென இரண்ட னுருபுவிரிக்க. வெறுத்தல்-மிகுதல். திங்கள் வழியோனாகிய வெற்றி வேற் செழியன் அல்லற்கானலை பலியூட்டிக் கட்டிலில் ஏறினன் என முடிக்க. 139-140. ஊழிதோறூழி உலகங் காத்து வாழ்க எங்கோ வாழிய பெரிது என - எம் வேந்தே பல்லூழி காலம் இவ்வுல கினைக் காவல்செய்து வாழ்வாயாக என்று கூற ; ஊழி - முறையாலென்றுமாம். அவன் உலகங் காத்து வாழ்க; எங்கோவே நீ பெரிது வாழிய என இருவரையும் வாழ்த்தினானாக வுரைத்தலுமாம். 141-150. மறையோன் கூறிய மாற்றம் எல்லாம் - மாடலன் கூறிய மொழிகள் யாவற்றையும், இறையோன் கேட்டு ஆங்கு இருந்த எல்லையுள் - செங்குட்டுவன் கேட்டு அவன் இருந்த அளவிலே அகல்வாய் ஞாலம் ஆரிருள் விழுங்க - அகன்ற இடத்தினையுடைய உலகத்தினை அரிய இருள் மூடுமாறு, பகல் செல - ஞாயிறு மறைந்த காலை, முதிர்ந்த படர்கூர் மாலைச் செந்தீப் பரந்த திசைமுகம் விளங்க - மிக்க வருத்தத்தைச் செய்யும் மாலையாகிய சிவந்த எரி பரந்த திசையின்முகம் விளக்கமுறும் வண்ணம், அந்திச் செக்கர் வெண்பிறைதோன்ற - செவ்வானிடத்தே வெள்ளிய பிறை தோன்ற, பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க - அங்ஙனம் பிறை எழுந்தபடியைப் பெரிய தகுதியுடைய குட்டுவன் பார்க்க, இறையோன் செவ்வியிற் கணி எழுந்து உரைப்போன் - மன்னனது காட்சியானே காலக்கணிதன் எழுந்து கூறுபவன், எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது மண்ணாள் வேந்தே வாழ்கென்று ஏத்த - நிலத்தினை யாளும் மன்னனே நீ வஞ்சியினின்றும் நீங்கிய காலம் முப்பத்திரண்டு திங்களாகும் வாழ்வாயாகவென்று போற்ற ; பகல் - பகற்பொழுதுமாம், விழுங்கச் செலவென்க. படர்தல் - நினைதலுமாம். பிரிந்திருப்பார்க்குப் படர்செய்யும் மாலை யென்க. மாலை - மாலைப் பொழுதில் என்றுமாம். செந்தீ - செவ்வானத்தை யுணர்த்திற்று. அந்திச் செக்கர், பிறைக்கு அடை, ஏர்தல் - எழுதல். செவ்வி -குறிப்பு. 151-157. நெடுங்காழ்க் கண்டம் நிரல்பட நிரைத்த-நெடிய கழி களுடன் சேர்த்தியற்றிய பூந்திரைகளை வரிசையாக நிரைத்த, கொடும்பட நெடுமதிற் கொடித்தேர் வீதியுள் - வளைந்த படங்காகிய நீண்ட மதிலினையுடைய கொடிகட்டிய தேர் நிற்கும் தெருவின்கண், குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன உறையுள் - குறுகியவும் உயர்ந்தனவுமாகிய மலைகளைக் கண்டாற் போன்ற இல்லங்களையுடைய, முடுக்கர் ஒரு திறம் போகி - குறுந்தெருவின் ஒரு பக்கத்தே சென்று, வித்தகர் கைவினை விளங்கிய கொள்கை - ஓவிய நூல் வல்லாரது கைத்தொழில் சிறந்து விளங்கிய கோட்பாட்டினையுடைய, சித்திர விதானத்துச் செம்பொற் பீடிகைக் கோயிலிருக்கைக் கோமகன் ஏறி - ஓவியமமைந்த மேற் கட்டியினையுடைய கோயிலிலே செம் பொன்னாற் செய்த தவிசாகிய இருக்கைக் கண்ணே அரசன் ஏறி யமர்ந்து, காழ் - குத்துக்கோல், கண்டம் - நிறத்தாற் கூறுபட்ட திரை; ஆகுபெயர்; 1"நெடுங்காழ்க் கண்டங் கோலி" என்றார் பிறரும். படம் - படங்கு; கூடகாரம் எனப்படுவது. படநெடுமதில் - படமாகிய நீண்டமதில். முடுக்கர் - குறுந்தெரு. சித்திரவிதானத்துக் கோயிலிற் பீடிகை யிருக்கையென மாறுக. 158. வாயிலாளரின் மாடலற் கூஉய் - வாயில் காப்போரான மாடலனை அழைத்து ; 159-161. இளங்கோ வேந்தர் இறந்ததற்பின்னர் - இளவரசராகிய ஒன்பது மன்னரும் இறந்ததன் பின், வளங்கெழு நன்னாட்டு - செல்வமிக்க நல்ல நாட்டின்கண், மன்னவன் கொற்ற மொடு செங்கோல் தன்மை தீது இன்றோ என - அரசனுடைய வெற்றியும் செங்கோலின் இயல்பும் குற்றமின்றியுள்ளனவோ என்று கேட்ப ; இளங்கோ வேந்தரென்றது இக்காதையுள் முன்னர்க் கூறிய ஒத்த பண்பினராம் ஒன்பது இளவரசரை. வளங்கெழு நாடு - சோழ நாடு. 162-163. எங்கோ வேந்தே வாழ்கென்று ஏத்தி - எம் தலைவனாய மன்னனே வாழ்வாயாகவெனப் போற்றி, மங்கல மறையோன் மாடலன் உரைக்கும்-மங்கலம் பொருந்திய மறையோனாகிய மாடலன் கூறுவான் ; 164-172. வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப - ஒளி விளங்குகின்ற மாணிக்கக் கலன்பூண்ட வானவர் வியக்கும் வண்ணம், எயில் மூன்று எறிந்த இகல்வேற் கொற்றமும் - வானிலே தூங்கிய மூன்று மதிலினையும் அழித்த மாறுகொண்ட வேலின் வெற்றியும், குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர - குறுக நடக்கும் நடையினையுடைய புறாவினது மிக்க துயரம் ஒழியவும், எறிதருபருந்தின் இடும்பை நீங்க - அப் புறவினை எறியுமாறு துரந்த பருந்தின் பசித் துன்பம் ஒழியவும், அரிந்து உடம்பு இட்டோன் அறந்தரு கோலும் - தன் உடலினை அரிந்து அப் பருந்திற் களித்தவனது அறத்தினை வளர்க்கும் செங்கோலும், திரிந்து வேறு ஆகுங் காலமும் உண்டோ - பிறழ்ந்து மாறுபடுங் காலமும் உண்டாமோ ஆகாதன்றே ; தீதோ இல்லை செல்லற் காலையும் காவிரி புரக்கு நாடுகிழவோற்கு என்று-மழை யின்மையான் வற்கட மிக்க காலத்தினும் காவிரியாற் புரக்கப்படும் நாட்டிற்குரியோனாய சோழனுக்குச் சிறிது தீதும் இல்லை என, அருமறை முதல்வன் சொல்லக் கேட்டே - அரிய மறைகளை யுணர்ந்த மாடலன் கூறக்கேட்டு : எயில் மூன்றெறிந்ததனை 1"உயர்விசும்பிற், றூங்கெயின் மூன்றெறிந்த சோழன்காண்" என்பர் பின்னும். புறவின்றுயர் தீர்த்ததனைப் 2"புள்ளுறு புன்கண் தீர்த்தோன்" என்புழி உரைத்தமை யானுமறிக. தீரவும் நீங்கவும் அரிந்துடம்பிட்டோ னென்க. 3"வசை யில்புகழ் வயங்குவெண்மீன், றிசைதிரிந்து தெற்கேகினுந். தற்பாடிய தளியுணவிற், புட்டேம்பப் புயன்மாறி, வான்பொய்ப்பினுந் தான் பொய்யா, மலைத்தலைய கடற்காவிரி" என்பவாகலின் செல்லற் காலையும் காவிரி புரப்பதாயிற்று. 173-176. பெருமகன் மறையோற் பேணி - அரசன் மாடலனை விரும்பி, ஆங்கு அவற்கு ஆடகப் பெருநிறை ஐயைந்து இரட்டி - அவனுக்கு ஐம்பது துலாம் என்னும் பெருநிறையுடைய பொன்னாகிய, தோடுஆர் போந்தை வேலோன் தன்நிறை-தனது எடை யுள்ளதனைத் தோடுகள் பொருந்திய பனம்பூமாலை யணிந்த வேலினையுடைய செங்குட்டுவன், மாடல மறையோன் கொள்கென்று அளித்து - மாடலனாகிய அந்தணன் இதனைக் கொள்வானாகவெனக் கொடுத்து ; பெருமகனாகிய வேலோன் மறையோற் பேணி அவற்குத் தன் நிறையாகிய ஐம்பது துலாம் என்னும் பெருநிறையுடைய பொன்னை அளித்து எனக் கொண்டு கூட்டுக. தன்னிறையுள்ள பொன்னைத் தானஞ் செய்வது ‘துலா புருடதானம்' எனப்படும். செங்குட்டுவன் ஐம்பது துலாம் நிறையுள்ளவன் எனப்படுதலால் நாற்பது தோலாவாகும் இராத்தல் முந்நூற்றெழுபத்தைந்து அவனது நிறையாகும் என்பது பெற்றாம். துலாம் - நூறு பலம் கொண்ட நிறை. மறையோன் - விளியுமாம். 176-178. ஆங்கு ஆரிய மன்னர் ஐயிருபதின்மரை - ஆரிய நாட்டரச ராகிய நூற்றுவரை, சீர்கெழு நன்னாட்டுச் செல்க வென்று ஏவி - நும் சிறப்புற்ற நல்ல நாட்டின்கண் செல்லுமின் என்று கட்டளையிட்டு ; ஆரிய மன்னர் ஐயிருபதின்மராவார் செங்குட்டுவனுக்கு நட்பாளராகிய நூற்றுவர் கன்னர் ; இவர்கள் செங்குட்டுவன் தானையுடன் கங்கையைக் கடத்தற்கு நாவாய்கள் தந்தமையைக் 1"கால் கோட் காதையா னறிக. 179-191. தாபத வேடத்து உயிர்உய்ந்து பிழைத்த - தவ வேடம் பூண்டு உயிர்தப்பிப் பிழைத்த, மாபெருந் தானை மன்ன குமரர் - மிகப்பெரிய படைகளையுடைய அரச குமாரர்களையும், சுருள் இடு தாடி மருள்படு பூங்குழல் - சுரிந்த மோவாயும் கருமை பொருந்திய அழகிய கூந்தலும், அரிபரந்து ஒழுகிய செழுங்கயல் நெடுங்கண் - செவ்வரி பரந்து கிடக்கின்ற கொழுவிய கயல்மீன் போன்ற பெரிய கண்களும், விரிவெண் தோட்டு வெண்ணகைத் துவர்வாய் - விரிந்த வெள்ளிய தோடுகளுடன் வெண்பற்களும் பவளம்போன்ற வாயும், சூடக வரி வளை - சூடகமாகிய அழகிய வளைகளும், ஆடு அமைப் பணைத் தோள் - அசைகின்ற மூங்கி லனைய பருத்ததோள்களும் வளர் இள வனமுலை - வளர்கின்ற அழகிய இளங்கொங்கைகளும், தளிர்இயல் - தளிர்போலும் சாயலும், மின்இடை - மின்னை யொத்த இடையும், பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு - பரி புரமணிந்த சிறிய அடிகளுமுடைய ஆரியப் பேடியுடன், எஞ்சா மன்னர் இறைமொழி மறுக்கும் - மறத்திறன் ஒழியாத அரசர் தம் மேம்பட்ட மொழியினைப் பொறாமல் மறுத் துரைக்கும், கஞ்சுக முதல்வர் ஈரைஞ்ஞூற்றுவர் - சட்டையிட்ட பிரதானிகள் ஆயிரவரை, அரியிற் போந்தை அருந்தமிழ் ஆற்றல் தெரியாது மலைந்த கனகவிசயரை - அழிதலில்லாத போந்தைக் கண்ணி சூடிய அருந்தமிழ் வேந்தன் ஆற்றலை அறியாமற் போர் புரிந்து தோற்ற கனக விசயரையும், இருபெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவி - சோழபாண்டியர்கட்கு அழைத்துச் சென்று காட்டுமாறு எவி ; அரசரை அரசகுமரர் என்றலும் மரபு. மன்ன குமரர் என்புழி இரண்டனுருபும் எண்ணும்மையும், கனகவிசயரை என்புழி எண்ணும்மையும் விகாரத்தாற் றொக்கன. மன்ன குமரரையும் கனகவிசயரையும் ஆரியப் பேடியோடு வேந்தர்க்குக் காட்டிட ஈரைஞ்ஞூற்று வரை ஏவி யென்க. இனி, மன்ன குமரராகிய கனக விசயரை ஆரியப் பேடியோடு காட்டிட என்றுமாம். கஞ்சுக மாக்கள்-தூதருமாம். மருள் - கருமை. வெண்டோடு - சங்கினாற் செய்த தோடு. சூடகம் - கைவளையின் வகை. எஞ்சா மன்னர் - வேற்று மன்னர். இறை மொழி - பெருமித மொழி. மறுக்கும் என்றது தம்மரசர்க்குத் தாழ்வு வராதபடி வேற்றரசரது பெருமித மொழியை மறுத்துரைக்கும் அஞ்சாமையுடைய என்றபடி. அரி - கெடுதல். அரியிற் போந்தை, வலித்தல் விகாரம். தமிழ் - தமிழ் வேந்தனாகிய சேரன் ; சேரன் படைஞருமாம். தமிழின் வெற்றி கண்டு உவப்ப ரென்னுங் கருத்தால் சோழ பாண்டியர்க்குக் காட்டிட ஏவினானென்க. பேடியினியல்பு 1"சுரியற்றாடி மருள்படு பூங்குழற், பவளச் செவ்வாய்த் தவள வாணகை, யொள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் டோட்டுக், கருங்கொடிப் புருவத்து மருங்கு வளை பிறைநுதற், காந்தளஞ் செங்கை யேந்திள வனமுலை, யகன்றவல்கு லந்நுண் மருங்கு, லிகந்த வட்டுடை யெழுதுவரிக் கோலத்து, . . . பேடிக் கோலத்துப் பேடு" என்பதனானும் அறியப்படும். 192-199. திருந்து துயில்கொள்ளா அளவை - நல்ல உறக்கங் கொள்வதன்முன், யாங்கணும் - எவ்விடத்தும், பரம்புநீர்க் கங்கைப் பழனப் பாசடைப் பயிலிளந் தாமரைப் பல்வண்டு யாழ்செய - பரந்த நீரினையுடைய கங்கையைச் சூழ்ந்த பழனங் களில் உள்ள பசிய இலைகளுடன் நெருங்கிய புதிய தாமரை மலர்களில் வண்டினங்கள் யாழின் ஒலியைச் செய்ய, வெயில் இளஞ்செல்வன் விரிகதிர் பரப்பி - ஒளிதரும் இளஞாயிறு விரிந்த கிரணங்களைப் பரப்பிக்கொண்டு, குணதிசைக் குன்றத்து உயர்மிசைத் தோன்ற - கீழ்த்திசை மலையின் உச்சிமீது தோன்ற, குடதிசை ஆளும் கொற்றவேந்தன் - மேற்றிசையினையாளும் வெற்றி வேந்தனாகிய செங்குட்டுவன், வடதிசைத் தும்பை வாகையொடு முடித்து-வடதிசையிற் போரினை வென்று தும்பையை வாகை மாலையுடன்சூடி, தென்றிசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு - தென்றிசை நோக்கிப் புறப்பட்ட வெற்றி மிக்க சேனைகளுடன்; துயில்கொள்ளா வளவை வெயிலிளஞ் செல்வன் தோன்ற வென்க. இது செங்குட்டுவனது ஆள்வினையின் கடுமை கூறியபடி. தும்பை வாகையொடு முடித்து - தும்பைத் துறையையும் வாகைத் துறையையும் முடிவு செய்து என்றுமாம். வேந்தனாகிய செங்குட்டுவன் தானையொடு (256) வஞ்சியுட் புகுந்தனன் என முடியும். இனி, செங்குட்டுவன் பிரிவால் அவனுடைய தேவி பள்ளியில் துயிலின்றி யிருக்கு முறைமை கூறப்படுகின்றது.. 200-209. நிதி துஞ்சு வியன் நகர் - பொருட்குவை யனைத்தும் தங்குதல்கொண்ட அகன்ற கோயிலின்கண், நீடுநிலை நிவந்து கதிர்செலவு ஒழித்த கனகமாளிகை - நெடிய நிலைகளுடன் உயர்ந்து ஞாயிற்றின் செலவினை நீக்கிய பொன் மாளிகையில், முத்து நிரைக் கொடித் தொடர் முழுவதும் வளைஇய - முத்துக்களை வரிசையாகக் கோத்த சல்லியும் தூக்குமாகிய வற்றால் முழுவதும் வளைக்கப்பட்ட, சித்திர விதானத்து-ஓவியங்கள் அமைந்த மேற்கட்டியினையுடைய, இலங்கு ஒளிமணி நிரை இடையிடை வகுத்த விலங்கு ஒளிவயிரமொடு பொலந்தகடு போகிய - பக்கத்தே யோடும் ஒளியுடைய வயிரத் துடன் விளங்கும் ஒளிபொருந்திய மாணிக்கத்தை இடையிடையே வரிசையாகப் பதித்த பொற்றகடு ஒழுகிய, மடை அமை செறிவின் வான்பொற் கட்டில் - மூட்டுவாய் செறியப் பொருந்தின சிறந்த பொற்கட்டிலாகிய, புடைதிரள் தமனியப் பொற்கால் அமளிமிசை - பக்கந் திரண்ட பொற் கால்களையுடைய மஞ்சத்தின்மீது, இணைபுணர் எகினத்து இளமயிர் செறித்த துணைஅணைப் பள்ளி - சேவலுடன் புணர்ந்த அன்னப்பேடை புணர்ச்சியால் உருகியுதிர்த்த மென்மையுடைய தூவியைச் செறித்த பலவாக அடுக்கிய அணைகளையுடைய படுக்கையின் கண், துயில் ஆற்றுப்படுத்து - துயிலினைப் போக்கி ; துஞ்சுதல் - தங்குதல். நகர் - கோயில். மாளிகை - அந்தப்புரம். விதானத்தையுடைய கட்டில், பொலந்தகடு போகிய கட்டில், பொற் காலையுடைய கட்டில் எனத் தனித்தனி கூட்டிக் கட்டிலாகிய அமளியென்க. கட்டில் அமளி, தமனியம் பொன் என்பன ஒரு பொருட் சொற்கள். துணைபுணர் எனவும், இணையணை எனவும் கொண்டு கூட்டுதலுமாம்; 1"துணைபுண ரன்னத் தூவியிற் செறித்த, இணையணை மேம்பட" என்பதும் அதனுரையுங் காண்க. ஆற்றுப் படுத்து - செலுத்தி ; தன்னிடத்தில்லாது போக்கியென்றபடி. ஆற்றுப்படுத்து (251) ஓர்த்துடனிருந்த என்றியையும். 209-213. ஆங்கு - வடதிசைக்கண், எறிந்து களம்கொண்ட இயல்தேர்க் கொற்றம் அறிந்து - பகைவரை யழித்துப் போர்க் களத்தைத் தனதாக்கிய இயற்றப்பட்ட தேரினையுடைய வேந்தனது வெற்றியை அறிந்து, உரைபயின்ற ஆயச் செவிலியர் - கட்டுரைத்தல் பயின்ற முதுபெண்டிராகிய செவிலியர் கூட்டம், தோள்துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக என - கணவனைப் பிரிந்துறைந்த துன்பத்தை இப்பொழுது ஒழிவாயாகவென்று, பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்த - பாட்டுடன் சேர்த்துப் பல்லாண்டு கூறி வாழ்த்தவும்; ஆங்கு - அசையுமாம். தோட்டுணை - தோளுக்குத் துணை யானவன் ; கணவன். 1"நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற், செம்முகச் செவிலியர் கைமிகக் குழீஇக், குறியவு நெடியவு முரைபல பயிற்றி, இன்னே வருகுவ ரின்றுணை யோரென, உகந்தவை மொழியவும்" என்பது ஈண்டு ஒப்புநோக்கற்பாலது. 214-216. சிறு குறுங் கூனும் குறளும் சென்று - சிறு தொழில் செய்யும் குறிய கூனும் குறளும் சென்று, பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தான் - அரசன் வந்தனன் நின்எழிலைப் பெறு வாயாக, நறுமலர்க் கூந்தல் நாள்அணி பெறுகென - நினது நறிய மலர்க்குழல் நாளொப்பனை பெறுவதாக என்று கூறவும்; கூனும் குறளு முதலாயினார் அந்தப்புரத்திலே குறுந்தொழில் செய்வாராதல் 2"கூனுங் குறளும் ஊமுங் கூடிய, குறுந்தொழி லிளைஞர் செறிந்து சூழ்தர "என முன்னர்ப் போந்ததனாலும் அறியப்படும். 217-224. அமை விளை தேறல் மாந்திய கானவன் - மூங்கிலின் கண் விளைந்த கள்ளையுண்ட வேட்டுவன், கவண்விடு புடையூஉக் காவல் கைவிட - கவண்கற்களை விடுத்துப் புடைக்கின்ற காவலினைக் கைவிடுதலால், வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த - பெரிய தினைப்புனத்தில் உண்ணுதலை விரும்பிவந்த, ஓங்கியல் யானை தூங்குதுயில் எய்த - உயர்ந்த இயல்புடைய யானை அயர்ந்து உறக்கமடைய, வாகை தும்பை வடதிசைச் சூடிய - வாகையையும் தும்பையையும் வடநாட்டின் கண் முடித்த, வேக யானையின் வழியோ நீங்கென - விரைந்த செலவினையுடைய யானை வரும்வழியிற் செல்வாய் இவ்விடம்விட்டு நீங்குவாய் என்று, திறத்திறம் பகர்ந்து சேண் ஓங்கு இதணத்துக் குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்-அரசனுடைய வெற்றித் திறங்களைத் திறப்பண்ணினாற் கூறிச் சேணிலே உயர்ந்த பரணின்மீ திருந்து குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாடலையும் அமை - மூங்கில்; அதன் குழாய்க்கு ஆகுபெயர். விளைதல்-முற்றுதல்; கள்ளினை மூங்கிற் குழாயில் வார்த்துப் புதைத்து முற்ற வைப்பரென்க. விடு என்பதனை விடுத்து என எச்சமாகவும், புடையூ என்பதனைப் புடைத்தல் எனத் தொழிற் பெயராகவும் கொள்க. கள்ளுண்ட மயக்கத்தால் காவலைக் கைவிட்டமையின் உண்ணவந்த யானை துயிலும்படி பாடிய பாணியென்க. அரசன் சூடிய வாகையும் தும்பையும் அவன் ஏறிய யானையும் சூடிய தென்றார். தினைப் புன முண்ணவந்த யானையை நோக்கி 'நீ இவ்விடம்விட்டு அவ் வியானையின் வழியிற் செல்வாய்' என்றார். வழியோய் எனப் பாடங்கொண்டு, யானையின் வழியினையா கலின் நீங்கென் றுரைத்தலுமாம். திறத்திறம் - முறைமுறையாக வென்றுமாம். 225-230. வடதிசை மன்னர் மன்னெயில் முருக்கி - வட நாட்டு அரசர்களின் நிலைபெற்ற மதிலை அழித்து, கவடி வித்திய கழுதை ஏருழவன் - வெள்வரகை விதைத்த கழுதை பூட்டிய ஏரினை உழுவோனாகிய, குடவர் கோமான் வந்தான் - குட நாட்டினர் தலைவன் வந்தனன், நாளைப் படுநுகம் பூணாய் பகடே மன்னர் அடித்தளை நீக்கும் வெள்ளணியாம் எனும் - நாளை பகையரசர்களின் காற்றளையை நீக்குவதாகிய அரசன் பிறந்த நாட் பெரு மங்கலமாகும் ஆகலின் பகடே நீயும் நுகம்பூண்டு உழாயாவாய் என்னும், தொடுப்பேர் உழவர் ஓதைப்பாணியும் - விழாக்கொண்டு உழும் உழவர் முழக்க மாகிய மருதப் பாடலும்; கவடி - வெள்வரகு ; இஃது உண்ணாவரகு எனவும் கூறப் படும். பகைவர் அரணையழித்துக் கழுதை யேரால் உழுவித்து வெள்ளை வரகும் கொள்ளும் வித்துவரென்பது 1"எண்ணார் பல்லெயில் கழுதையே ருழுவித், துண்ணா வரகொடு கொள்வித் தின்று" 2"வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி, வெள்ளைவரகுங் கொள்ளும் வித்தும் வைக லுழவ" என்பவற்றானறியப்படும். பதிற்றுப்பத்தின் பழைய உரையாசிரியர் 3"வெள்வர குழுத கொள்ளுடைக் கரம்பையாகிய வன்பாலிலே கெட்டுப் போயிருந்து ஆண்டு விளைந்த வெள்வரகு உண்பதன்றித் தாம் பண்டு உண்ணும் செந்நெல் வல்சி உண்ணக் கிடையாதபடி மிடிபடுகின்றார்" என உரைப்பதிலிருந்து வெள்ளைவரகென்பது காட்டிலே மிடியுற்றா ருண்பதொரு பொருளாமென்பது போதரும். வெள்ளணி - பிறந்தநா ளொப்பனை. தொடுப்பு - விதைப்புமாம். 1"தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய" என்பது காண்க.. 231-241. தண்ஆன் பொருநை ஆடுநர் இட்ட-குளிர்ந்த ஆன் பொருநையில் நீராடுவோர் இட்ட, வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து - தொய்யிற் குழம்பும் பொற் சுண்ணமும் மலர்களும் பரவி, விண் உறை விற்போல் விளங்கிய பெருந்துறை - இந்திர வில்லைப்போல் விளங்குகின்ற பெரிய நீர்த் துறைகளில், வண்டுஉண மலர்ந்த மணித்தோட்டுக் குவளை - வண்டுகள் உண்ணுமாறு மலர்ந்த நீலமணி போலும் நிறம்பொருந்திய இதழ்களையுடைய குவளை மலர்களை, முண்டகக் கோதை யொடு முடித்த குஞ்சியின் - முள்ளிப்பூ மாலையுடன் முடித்த குடுமியின்கண், முருகுவிரி தாமரை முழுமலர் தோய - மணம் விரியும் தாமரையின் முழுமலரும் பொருந்துமாறு அணிந்து, குருகுஅலர் தாழைக் கோட்டுமிசை இருந்து - குருகுபோலும் பூ அலர்ந்த தாழையின் கிளைமீது இருந்துகொண்டு, வில்லவன் வந்தான் - விற்கொடியையுடைய சேரலன் வந்தான், வியன்பேர் இமயத்துப் பல்ஆன் நிரையொடு படர்குவிர் நீர் என - அகன்ற பெரிய இமயமலையினின்றும் அவன் கொணர்ந்த பல ஆனிரை களுடன் நீவிரும், சேர்வீர் என்று, காவலன் ஆன்நிரை நீர்த் துறை படீஇ- அரசனுடைய ஆனினங்களை நீர்த்துறையிலே படிவித்து, கோவலர் ஊதும் குழலின் பாணியும் - ஆயர்கள் ஊதும் வேய்ங் குழலின் பாடலும்; முண்டகம் - கடன்முள்ளிச் செடி. குருகு-வெண்ணிறப்பறவை. தாழையின் பூவைக் குருகென உவமையாற் கூறினார்; 2"தோடார் தோன்றி குருதி பூப்ப" என்புழிப்போல. தோய அணிந்து என ஒரு சொல் வருவிக்க. மருதத்திற்கும் நெய்தற்குமுரிய பூக்கள் கூறப்படுதலின் இஃது அவ்விரண்டுஞ் சார்ந்த முல்லையாமென்க. கோவலர் ஆனிரையை நீர்த்துறையிற் படிவித்துத் தாழைக் கோட்டு மிசையிருந்து ஊதும் குழலின் பாணி யென்றியையும். 242-250. வெண்டிரை பொருத வேலை வாலுகத்துக் குண்டு நீர் அடைகரைக் குவையிரும் புன்னை - ஆழமாகிய நீரையுடைய கடலின் வெள்ளிய அலைபொருத வெண்மணலையுடைய அடை கரைக்கண் திரண்ட பெரிய புன்னையினிடத்தே, வலம்புரிஈன்ற நலம்புரி முத்தம் - வலம்புரிச் சங்கமீன்ற அழகிய முத்துக்களை, கழங்காடு மகளிர் ஓதைஆயத்து - ஆரவாரம் பொருந்திய கூட்டத்துடன் கழங்காடுகின்ற மகளிர், வழங்கு தொடி முன்கை மலர ஏந்தி - கழலும் வளையணிந்த முன்னங் கைகள் மலருமாறு ஏந்தி, வானவன் வந்தான் - சேரர் பெருமான் வந்தான், வளர் இள வன முலை தோள் நலம் உணீஇய - நம்முடைய வளர்கின்ற அழகிய இளங் கொங்கைகள் அவனுடைய தோளின் நலத்தை நுகர்தற் பொருட்டு, தும்பை போந்தையொடு வஞ்சி பாடுதும் மடவீர் யாம் எனும் - மடப்பத்தை யுடையீர் அவன் முடித்த தும்பை வஞ்சிகளைப் பனை மாலையுடன் யாம் பாடக்கடவேம் என்னும், அஞ்சொற் கிளவியர் அம் தீம் பாணியும் - அழகிய சொற்களையுடைய மகளிரின் அழகிய இனிய பாடலும்; வழங்கு தொடி-ஏறுதலும் இழிதலுமுடைய தொடி; ஈகையையுடைய கையென்றுமாம். பாடுதலால் தம்மிடத்து வருவானென்று கருதி, உணீஇய பாடுதும் என்றார். சொற்கிளவி, ஒரு பொருளிரு சொல். ‘ஏந்தி' யென்னும் வினையெச்சம் 'எனும்' என்னும் பெயரெச்ச வினையோடு முடிந்தது. புன்னையிடத்தே கழங்காடு மகளிராகிய அஞ்சொற் கிளவியர் முத்துக்களை முன்கையில் ஏந்திக் கொண்டு தோணலம் உணீஇய பாடுதும் என்று பாடாநிற்கும் இனிய பாடலும் என்க. 251-256. ஓர்த்து உடன்இருந்த கோப்பெருந்தேவி வால் வளை செறிய - ஆகிய நால்நிலப் பாடல்களையும் ஒரு சேரக் கேட்டு உறங்காதிருந்த கோப்பெருந் தேவியின் வெள்ளிய வளையல்கள் செறிய, வலம்புரி வலன் எழ - வலம்புரிச் சங்கு வெற்றி தோன்ற முழங்க, மாலை வெண்குடைக்கீழ் வாகைச் சென்னியன் வேக யானையின் மீமிசைப் பொலிந்து - வாகை சூடிய சென்னியையுடையனாய் வெந்திறலுடைய பட்டத்தி யானையின் மேலிடத்தே மாலையணிந்த வெண்கொற்றக் குடையின்கீழ்ப் பொலிவுற்று, குஞ்சர ஒழுகையிற் கோநகர் எதிர்கொள-யானை நிரையுடன் திருநகர் எதிர்கொள்ள, வஞ்சியுட் புகுந்தனன் செங்குட்டுவன் - செங்குட்டுவன் வஞ்சி நகரிற் புகுந்தனன் என்க. செவிலியர் வாழ்த்தவும் கூனுங் குறளும் நாளணிபெறு கெனவும் பாணியும் பாணியும் பாணியும் பாணியும் ஓர்த்திருந்த கோப்பெருந்தேவி யென்க. ஓர்த்தல் - உற்றுணர்தல். வளைசெறிய என்றமையால் முன் நெகிழ்ந்தமை பெற்றாம். "குறிஞ்சி முதலாக நாலுநிலத்துப் பாணியும் ஓர்த்து உறங்காத தேவியென்றது நாலுநில அணிமையுங் கூறிற்று" என்பது அரும்பதவுரை. கோவலர் ஆன்பொருனைத் துறையில் ஆனினங்களைப் படிவித்தல் கூறுமிடத்தே மருதமும் நெய்தலுஞ் சார்ந்த முல்லை கூறப்படு தலானும், பின் கடலின் அடைகரையாகிய நெய்தலில் மகளிர் விளையாடுதல் கூறப்படுதலானும், கோப்பெருந்தேவி அவர்கள் பாடும் பாட்டினைக் கேட்டு உறங்காதிருந்த வஞ்சிநகரம் கடலின் புடையதென்பது தெற்றெனப் புலப்படும். ஒழுகை - ஈண்டு வரிசை. குஞ்சர வொழுகையுடன் புகுந்தனன் எனலுமாம். வடதிசைக்கண் தும்பையையும் வாகையையும் முடித்துச் செங்குட்டுவன் தன் தேவி கைவளை செறிய வலம்புரி முழங்க வாகைச் சென்னியனாய் யானைமிசைப் பொலிந்து திருநகர் எதிர்கொள்ள வஞ்சியுட் புகுந்தனனெனக் கூட்டுக. இது நிலைமண்டில வாசிரியப்பா நீர்ப்படைக் காதை முற்றிற்று. 28. நடுகற் காதை (வஞ்சியிற் புகுந்த செங்குட்டுவன் மாலையிலே மதியந் தோன்றிய வளவில் தனது தேவியாகிய வேண்மாளுடன் அரண்மனை நிலா முற்றத்தை யடைந்து கூத்தச்சாக்கையன் ஆடிய கொட்டிச் சேதம் என்னும் கூத்தினைக் கண்டு மகிழ்ந்து, பின் அரசியன் மண்டபத்தை யெய்தி யிருந்தனன். அப்பொழுது நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் வந்து, சோழனிடத்தும் பாண்டியனிடத்தும் தோல்வியுற்ற ஆரிய வரசர்களோடு தாம் சென்ற காலையில், அவர்கள் 'போரிலே தோற்றுக் கொல்லாக் கோலம் பூண்டு சென்ற அரசர்களைப் பிடித்து வருதல் பெருமையன்று' என்றிழித்துரைத்தனர் எனக் கூறக்கேட்டு, மிக்க சினங் கொள்வானாயினன். உடனே மாடலன் எழுந்து, 'அரசே, செற்றம் தணிக ; இளமையும் யாக்கையும் செல்வமும் நிலையுடையனவல்ல ; மிக உயர்ந்த பிறப்பினையுற்ற நீ'a6 உலகிலே உயிர்கள் போகும் பொதுநெறியிற் செல்லுதல் தகாது; அரசர்க்குரியதும் வானவர் போற்றும் வழியை அளிப்பதுமாகிய வேள்வியைத் தாழாதே நீ செய்தல் வேண்டும்' எனப் பல ஏதுக் களோடும் எடுத்துரைக்கக் கேட்டுச் சினந்தணிந்தவனாய், அம் மாடலன் கூறிய வண்ணமே வேள்விக்குரியவற்றை அமைக்குமாறு சிலரை யேவி, ஆரிய வரசர்களைச் சிறையினின்றும் விடுவித்து, அவர்கட்கு ஏற்றனவுதவுமாறு வில்லவன் கோதைக்குக் கூறி, சிறைக் கோட்டத்தை இடித்துத் தூய்மை செய்யவும், ஊர்கள் தோறும் குடிகள் செலுத்தும் வரிகளை வாங்காது தவிர்க்கவும் அழும்பில் வேளை ஆயக்கணக்கரோடு ஏவி, பின்பு ஆன்றோர் பலருடன் சென்று சிற்ப நூற்றுறைபோய கம்மியர்களால் இயற்றப்பட்ட கோயிலில் இமயச் சிலையால் இயற்றப்பட்டுள்ள படிமத்திலே பத்தினிக் கடவுளாகிய கண்ணகியைப் பிரதிட்டை செய்து அங்கிருந்தனன் செங்குட்டுவன்.) தண்மதி யன்ன தமனிய நெடுங்குடை மண்ணக நிழற்செய மறவா ளேந்திய நிலந்தரு திருவின் நெடியோன் றனாது வலம்படு சிறப்பின் வஞ்சிமூதூர் 5 ஒண்டொடித் தடக்கையின் ஒண்மலர்ப் பலிதூஉய் வெண்திரி விளக்கம் ஏந்திய மகளிர் உலக மன்னவன் வாழ்கென் றேத்திப் பலர்தொழ வந்த மலரவிழ் மாலை போந்தைக் கண்ணிப் பொலம்பூந் தெரியல் 10 வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்தர் யானை வெண்கோடு அழுத்திய மார்பும் நீள்வேல் கிழித்த நெடும்புண் ஆகமும் எய்கணை கிழித்த பகட்டெழில் அகலமும் வைவாள் கிழித்த மணிப்பூண் மார்பமும் 15 மைமல ருண்கண் மடந்தைய ரடங்காக் கொம்மை வரிமுலை வெம்மை வேது றீ இ அகிலுண விரித்த அம்மென் கூந்தல் முகில்நுழை மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ் மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து 20 சிதரரி பரந்த செழுங்கடைத் தூது மருந்தும் ஆயதிம் மாலையென் றேத்த இருங்கனித் துவர்வாய் இளநிலா விரிப்பக் கருங்கயல் பிறழுங் காமர் செவ்வியில் திருந்தெயி றரும்பிய விருந்தின் மூரலும் 25 மாந்தளிர் மேனி மடவோர் தம்மால் ஏந்துபூண் மார்பின் இளையோர்க் களித்துக் காசறைத் திலகக் கருங்கறை கிடந்த மாசில்வாள் முகத்து வண்டொடு சுருண்ட குழலுங் கோதையுங் கோலமுங் காண்மார். 30 நிழல்கால் மண்டிலம் தம்மெதிர் நிறுத்தி வணர்கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇப் புணர்புரி நரம்பிற் பொருள்படு பத்தர்க் குரல்குர லாக வருமுறைப் பாலையில் துத்தங் குரலாத் தொன்முறை யியற்கையின் 35 அந்தீங் குறிஞ்சி யகவன் மகளிரின் மைந்தர்க் கோங்கிய வருவிருந் தயர்ந்து முடிபுறம் உரிஞ்சுங் கழற்காற் குட்டுவன் குடிபுறந் தருங்கால் திருமுகம் போல உலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம் 40 பலர்புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப ஐங்கணை நெடுவேள் அரசுவீற் றிருந்த வெண்ணிலா முன்றிலும் வீழ்பூஞ் சேக்கையும் மண்ணீட் டரங்கமும் மலர்ப்பூம் பந்தரும் 45 வெண்கால் அமளியும் விதானவே திகைகளும் தண்கதிர் மதியம் தான்கடி கொள்ளப் படுதிரை சூழ்ந்த பயங்கெழு மாநிலத் திடைநின் றோங்கிய நெடுநிலை மேருவிற் கொடிமதின் மூதூர் நடுநின் றோங்கிய 50 தமனிய மாளிகைப் புனைமணி யரங்கின் வதுவை வேண்மாள் மங்கல மடந்தை மதியேர் வண்ணங் காணிய வருவழி எல்வளை மகளிர் ஏந்திய விளக்கம் பல்லாண் டேத்தப் பரந்தன வொருசார் 55 மண்கணை முழவும் வணர்கோட் டியாழும் பண்கனி பாடலும் பரந்தன ஒருசார் மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும் கூனுங் குறளும் கொண்டன வொருசார் வண்ணமுஞ் சுண்ணமும் மலர்ப்பூம் பிணையலும் 60 பெண்ணணிப் பேடியர் ஏந்தின ரொருசார் பூவும் புகையும் மேவிய விரையும் தூவியஞ் சேக்கை சூழ்ந்தன வொருசார் ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும் சேடியர் செவ்வியின் ஏந்தின ரொருசார் 65 ஆங்கவள் தன்னுடன் அணிமணி யரங்கம் வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் ஏறித் திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும் பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவும் செங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும் 70 செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும் பாடகம் பதையாது சூடகந் துளங்காது மேகலை ஒலியாது மென்முலை அசையாது வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது உமையவள் ஒருதிற னாக ஓங்கிய 75 இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தர் சாக்கைய னாடலின் மகிழ்ந்தவன் ஏத்தி நீங்க இருநிலம் ஆள்வோன் வேத்தியன் மண்டபம் மேவிய பின்னர் 80 நீலம் முதலிய கஞ்சுக மாக்கள் மாடல மறையோன் தன்னொடுந் தோன்றி வாயி லாளரின் மன்னவற் கிசைத்தபின் கோயில் மாக்களிற் கொற்றவற் றொழுது தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே 85 செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய சித்திர மண்டபத் திருக்க வேந்தன் அமரகத் துடைந்த ஆரிய மன்னரொடு தமரிற் சென்று தகையடி வணங்க 90 நீளம ரழுவத்து நெடும்பே ராண்மையொடு வாளுங் குடையும் மறக்களத் தொழித்துக் கொல்லாக் கோலத் துயிருய்ந் தோரை வெல்போர்க் கோடல் வெற்றம் அன்றெனத் தலைத்தேர்த் தானைத் தலைவர்க் குரைத்தனன் 95 சிலைத்தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை ஆங்குநின் றகன்றபின் அறக்கோல் வேந்தே ஓங்குசீர் மதுரை மன்னவற் காண ஆரிய மன்னர் அமர்க்களத் தெடுத்த சீரியல் வெண்குடைக் காம்புநனி சிறந்த 100 சயந்தன் வடிவில் தலைக்கோ லாங்குக் கயந்தலை யானையிற் கவிகையிற் காட்டி இமயச் சிமையத் திருங்குயி லாலுவத் துமையொரு பாகத் தொருவனை வணங்கி அமர்க்களம் அரசன தாகத் துறந்து 105 தவப்பெருங் கோலங் கொண்டோர் தம்மேல் கொதியழற் சீற்றங் கொண்டோன் கொற்றம் புதுவ தென்றனன் போர்வேற் செழியனென் றேனை மன்னர் இருவருங் கூறிய நீண்மொழி யெல்லாம் நீலன் கூறத் 110 தாமரைச் செங்கண் தழனிறங் கொள்ளக் கோமகன் நகுதலும் குறையாக் கேள்வி மாடலன் எழுந்து மன்னவர் மன்னே வாழ்கநின் கொற்றம் வாழ்கவென் றேத்திக் கறிவளர் சிலம்பில் துஞ்சும் யானையின் 115 சிறுகுரல் நெய்தல் வியலூ ரெறிந்தபின் ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை நேரி வாயில் நிலைச்செரு வென்று நெடுந்தேர்த் தானையொ டிடும்பிற்புறத் திறுத்துக் கொடும்போர் கடந்து நெடுங்கட லோட்டி 120 உடன்றுமேல் வந்த ஆரிய மன்னரைக் கடும்புனற் கங்கைப் பேர்யாற்று வென்றோய் நெடுந்தார் வேய்ந்த பெரும்படை வேந்தே புரையோர் தம்மொடு பொருந்த வுணர்ந்த அரைச ரேறே யமைகநின் சீற்றம் 125 மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள் தண்ணான் பொருநை மணலினுஞ் சிறக்க அகழ்கடல் ஞாலம் ஆள்வோய் வாழி இகழா தென்சொற் கேட்டல் வேண்டும் வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு 130 ஐயைந் திரட்டி சென்றதற் பின்னும் அறக்கள வேள்வி செய்யா தியாங்கணும் மறக்கள வேள்வி செய்வோ யாயினை வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணிநின் னூங்கணோர் மருங்கில் 135 கடற்கடம் பெறிந்த காவல னாயினும் விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும் நான்மறை யாளன் செய்யுட் கொண்டு மேல்நிலை யுலகம் விடுத்தோ னாயினும் போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கெனக் 140 கூற்றுவரை நிறுத்த கொற்றவ னாயினும் வன்சொல் யவனர் வளநா டாண்டு பொன்படு நெடுவரை புகுந்தோ னாயினும் மிகப்பெருஞ் தானையொடு இருஞ்செரு வோட்டி அகப்பா எறிந்த அருந்திற லாயினும் 145 உருகெழு மரபின் அயிரை மண்ணி இருகடல் நீரும் ஆடினோ னாயினும் சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும் மீக்கூற் றாளர் யாவரும் இன்மையின் 150 யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய் மல்லன்மா ஞாலத்து வாழ்வோர் மருங்கில் செல்வம் நில்லா தென்பதை வெல்போர்த் தண்டமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின் கண்டனை யல்லையோ காவல் வேந்தே 155 இளமை நில்லா தென்பதை எடுத்தீங்கு உணர்வுடை மாக்கள் உரைக்கல் வேண்டா திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே நரைமுதிர் யாக்கை நீயுங் கண்டனை விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர் 160 மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும் மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர் மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும் விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர் கலங்கஞர் நரகரைக் காணினுங் காணும் 165 ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக் கூடிய கோலத் தொருங்குநின் றியலாது செய்வினை வழித்தாய் உயிர்செலு மென்பது பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின் எழுமுடி மார்பநீ யேந்திய திகிரி 170 வழிவழிச் சிறக்க வயவாள் வேந்தே அரும்பொருட் பரிசிலன் அல்லேன் யானும் பெரும்பேர் யாக்கை பெற்ற நல்லுயிர் மலர்தலை யுலகத் துயிர்போகு பொதுநெறி புலவரை யிறந்தோய் போகுதல் பொறேஎன் 175 வானவர் போற்றும் வழிநினக் களிக்கும் நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான் அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும் நாளைச் செய்குவம் அறமெனில் இன்றே 180 கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும் இதுவென வரைந்து வாழுநா ளுணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவது மில்லை வேள்விக் கிழத்தி யிவளொடுங் கூடித் தாழ்கழல் மன்னர் நின்னடி போற்ற 185 ஊழியோ டூழி யுலகங் காத்து நீடுவா ழியரோ நெடுந்தகை யென்று மறையோன் மறைநா வுழுது வான்பொருள் இறையோன் செவிசெறு வாக வித்தலின் வித்திய பெரும்பதம் விளைந்துபத மிகுத்துத் 190 துய்த்தல் வேட்கையிற் சூழ்கழல் வேந்தன் நான்மறை மரபின் நயந்தெரி நாவின் கேள்வி முடித்த வேள்வி மாக்களை மாடல மறையோன் சொல்லிய முறைமையின் வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி 195 ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப் பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத் தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில் வேளா விக்கோ மாளிகை காட்டி நன்பெரு வேள்வி முடித்ததற் பின்னாள் 200 தம்பெரு நெடுநகர்ச் சார்வதுஞ் சொல்லியம் மன்னவர்க் கேற்பன செய்க நீயென வில்லவன் கோதையை விருப்புடன் ஏவிச் சிறையோர் கோட்டஞ் சீமின் யாங்கணும் கறைகெழு நல்லூர்க் கறைவீடு செய்ம்மென 205 அழும்பில் வேளோடு ஆயக் கணக்கரை முழங்குநீர் வேலி மூதூர் ஏவி அருந்திற லரசர் முறைசெயி னல்லது பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை 210 பார்தொழு தேத்தும் பத்தினி யாகலின் ஆர்புனை சென்னி யரசற் களித்துச் செங்கோல் வளைய வுயிர்வா ழாமை தென்புலங் காவல் மன்னவற் களித்து வஞ்சினம் வாய்த்தபி னல்லதை யாவதும் 215 வெஞ்சினம் விளியார் வேந்த ரென்பதை வடதிசை மருங்கின் மன்னவ ரறியக் குடதிசை வாழுங் கொற்றவற் களித்து மதுரை மூதூர் மாநகர் கேடுறக் கோதியழற் சீற்றம் கொங்கையின் விளைத்து 220 நன்னா டணைந்து நளிர்சினை வேங்கைப் பொன்னணி புதுநிழல் பொருந்திய நங்கையை அறக்களத் தந்தணர் ஆசான் பெருங்கணி சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று மேலோர் விழையும் நூனெறி மாக்கள் 225 பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து இமையவர் உறையும் இமையச் செவ்வரைச் சிமையச் சென்னித் தெய்வம் பரசிக் கைவினை முற்றிய தெய்வப் படிமத்து வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து 230 முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப் பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக் கடவுள் மங்கலம் செய்கென ஏவினன் வடதிசை வணக்கிய மன்னவ ரேறென். உரை 1-4. தண்மதியன்ன தமனிய நெடுங்குடை - குளிர்ந்த திங்கள் போலும் பொற்றொழிலமைந்த நெடியகுடை, மண்ணகம் நிழற் செய மறவாள் ஏந்திய - இவ்வுலகிற்கு நிழலைச் செய்ய வீர வாளினை ஏந்திய, நிலந்தரு திருவின் நெடியோன் தனாது - நிலத்திற்குப் பல செல்வத்தினையுங் தருகின்ற செங்குட்டுவனது, வலம்படு சிறப்பின் வஞ்சி மூதூர் - வெற்றி யுண்டாகுஞ் சிறப்பினையுடைய வஞ்சியாகிய மூதூர்க்கண்ணே ; காம்பும் முகப்பும் பொன்னாதலான் `தமனிய நெடுங்குடை' என்றார்; 1"பொன்னணி காம்பு செய்த பொழிகதிர்த் திங்கள் போலும் ..... குடை" என்றார் பிறரும். 2"நின் விண்பொரு வியன்குடை, வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய, குடிமறைப் பதுவே" என்றாராகலான், நெடுங்குடை மண்ணக நிழற்செய என்றார். நிலந்தரு திரு - விளைவுமாம் ; இனி, பகைவர் நிலத்தினைத் தன தாக்கும் வெற்றித்திரு எனலுமமையும். நெடியோன் - யாவரினும் உயர்ந்தோன். பெருங்குன்றூர் கிழார் இளஞ்சேரலிரும்பொறை யென்னும் சேரமன்னனை 1"நிலந்தரு திருவின் நெடியோய்" எனக் கூறுதலுங் காண்க. 5-8. ஒண்டொடித் தடக்கையின் ஒண்மலர்ப் பலிதூஉய் - ஒள்ளிய வளையணிந்த பெரிய கையானே விளக்க மமைந்த மலர்ப்பலியைத் தூவி, வெண்டிரி விளக்கம் ஏந்திய மகளிர் - வெள்ளிய திரியினையுடைய விளக்குகளை எடுத்த பெண்டிர், உலக மன்னவன் வாழ்கென்று ஏத்தி - இவ்வுலகினையாளும் அரசன் நீடு வாழ்வானாகவென்று போற்றி, பலர் தொழவந்த மலர் அவிழ் மாலை - பலரும் வணங்கும் வண்ணம் வந்த பூக்கள்மலரும் மாலைக்காலம் ; மாலைக்காலத்தே மலர்தூஉய் விளக்கமேந்துதல், 2"அகனக ரெல்லாம் அரும்பவிழ்முல்லை, நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகன் மாய்ந்த, மாலை மணிவிளக்கங் காட்டி" என வருவதனானறிக. பலி தூஉய் ஏந்திய மகளிர் பலரும் ஏத்தித் தொழவந்த மாலை என்க. 9-10. போந்தைக் கண்ணிப் பொலம் பூந் தெரியல் - பனம்பூ மாலையினையும் பொன்னாற்செய்த தும்பைப் பூமாலை யினையும் சூடிய, வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்தர் - தம் மன்னனது போர்த்தொழிலை முடித்த ஏந்திய வாளின் வெற்றியினையுடைய வீரர்கள் ; முன்னர் 3"தோடார் போந்தை தும்பையொடு முடித்த" என்றாராகலானும் 4"பொலம்பூந் தும்பை" என்பவாகலானும் பொலம்பூந் தெரியல் என்பதற்குப் பொன்னாற் செய்த தும்பை மலர்மாலையென உரைக்கப்பட்டது ; தும்பையுடன் வாகை மாலையும் கொள்ளுதலுமாம். 11-14. யானை வெண்கோடு அழுத்திய மார்பும் - களிற்றி யானையின் வெள்ளிய கொம்பு பாய்ந்த தம் மார்பினையும், நீள்வேல் கிழித்த நெடும்புண் ஆகமும் - நீண்ட வேல்பிளந்த விழுப்புண்ணையுடைய மார்பினையும், எய்கணை கிழித்த பகட்டெழில் அகலமும் - பகைவர் எய்த அம்பு துளைத்த பெருமையினையும் அழகினையும் உடைய மார்பினையும், வைவாள் கிழித்த மணிப்பூண் மார்பமும்-கூரிய வாள் வெட்டிய மாணிக்கக் கலன் அணிந்த மார்பினையும் ; எய்கணை, வினைத்தொகை. பகைவருடைய வேல் முதலிய வற்றையும் யானையின் கோட்டினையும் மார்பில் ஏற்றுக்கொண்டமை கூறுதலின் அவர்களது ஊறஞ்சா வன்கண் புலனாகின்றது. 15-16. மைம்மலர் உண்கண் மடந்தையர் அடங்காக் கொம்மை வரிமுலை வெம்மை வேது உறீஇ - கருங்குவளை மலர்போலும் மைபூசிய கண்களையுடைய மகளிரது மார்பகத் தடங்காத திரண்ட தொய்யிலெழுதிய முலையானே வெம்மையுற வேது கொண்டு ; கொம்மை - திரட்சி, வேது - வெம்மையுடைய ஒற்றடம்; 1"தங்குகண் வேல்செய்த புண்களைத் தடமுலை வேது கொண்டொற்றியும்" என்றார் பிறரும். 17-21. அகில் உண விரித்த அம்மென் கூந்தல் முகில்நுழை - அகிற் புகையினைக் கொள்ள விரித்த அழகிய மெல்லிய கூந்தலாகிய மேகத்தின் உள்ளே தோன்றும், மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ் - முகமாகிய மதியினிடத்துள்ள புருவமாகிய வளைந்த கரிய வில்லின்கீழ் அமைந்த, மகரக்கொடியோன் மலர்க்கணை துரந்து - மகரமீனைக் கொடியாகவுடைய மன்மதனது மலரம்பு களையோட்டி, சிதர்அரி பரந்த செழுங்கடைத் தூது - சிதறிய செவ்வரி பரந்த கொழுவிய கண்ணின் கடையாகிய தூது, மருந்தும் ஆயது இம் மாலை என்று ஏத்த - முன்னர்ப் பாசறைக்கண் நமக்கு வருத்தஞ் செய்ததேயன்றி இம் மாலையில் அதற்கு மருந்தும் ஆகியது என்று புகழ ; கூந்தன் முகில், முகமதியம், புருவவில் எனுமிவை உருவகம். மலர்க்கணை துரந்து என்றது ஆடவரை வருத்துந் தொழிலால் அதனை வென்று என்றபடி. கண்ணென்பது வருவித்துச் சிலைக்கீழ் அமைந்த அரிபரந்த கண்ணின் கடையாகிய தூது என்க. கட்கடை - கடைக்கண்ணி னோக்கம் ; அந்நோக்கங் கண்டு சேறலின் அதனைத் தூது என்றார். பாசறைக்கண் உருவெளியாகத் தோன்றித் துன்புறுத்தியதாகலின், ஈண்டு மருந்துமாயது என்றார். 2"பிணியும தற்கு மருந்தும்" என்பதுங் காண்க. உம்மை எச்சவும்மை. வாள் வலத்தர் தம் மார்பினை வரிமுலையால் வேதுகொண்டு செழுங்கடைத் தூதும் மருந்தும் ஆயதென்று ஏத்த என்க. 22-26. இருங்கனித் துவர்வாய் இளநிலா விரிப்ப - பெரிய கொவ்வைக் கனியும் பவளமும் போன்ற வாய் சிறு நிலாவொளியினைப் பரப்ப, கருங்கயல் பிறழுங் காமர் செவ்வியின் - கரிய கெண்டைமீன் பிறழ்கின்ற அழகிய காட்சியோடே, திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும் - திருந்திய பற்கள் சிறிது தோன்றிய புதிய நகையினையும், மாந்தளிர் மேனி மடவோர் தம்மால் - மாந்தளிர் போலும் மேனியினையுடைய மடந்தையரால், ஏந்துபூண் மார்பின் இளையோர்க்கு அளித்து - பூண் அணிந்த மார்பினையுடைய காளையர்க்கு உதவி ; துவர் - செம்மையுமாம். விரிப்ப அரும்பிய மூரல் என்க. கயல் - கயல் போலுங் கண். ஏத்த அரும்பிய மூரல் என முடியும். வாள்வலத்தராகிய இளையோர்க்கு மாலைப் பொழுதானது மடவோரால் மூரலையும் அளித்தென்க. 27-30. காசறைத் திலகக் கருங்கறை கிடந்த - கத்தூரித் திலகமாகிய கரிய மறுத் தங்கிய, மாசுஇல் வாண்முகத்து- குற்ற மற்ற ஒள்ளிய முகத்தினையும், வண்டொடு சுருண்ட குழலுங் கோதையுங் கோலமுங் காண்மார் - தேனுகரவந்த வண்டுடனே சுருண்டு கிடந்த கூந்தலையும் மாலையினையும் ஒப்பனையையும் காணும் பொருட்டு, நிழல்கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி - உருவினை வெளிப்படுத்தும் கண்ணாடியைத் தமக்கு முன்னே நிறுத்தி ; கறை - களங்கம். முகத்துடன் குழல் கோதை ஆகியவற்றின் கோலத்தைக் காணவென்றுமாம். காலுதல் - வெளிப்படுத்தல்; வட்டமாயிருத்தலின் மண்டிலம் எனப்படுவதாயிற்று ; 1"நிழல்கான் மண்டில நோக்கி யழல்புனை, யவிரிழை திருத்துவாள்" 2"மாசறக் கண்ணடி வயக்கி வண்ணமுந், தேசுமொளியுந் திகழ நோக்கி" என்பன அறியற்பாலன. நிழல்காண் மண்டிலமெனப் பாடங் கொண்டாருமுளர். 31-36. வணர் கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇப் புணர்புரி நரம்பின் பொருள்படு பத்தர் - வளைந்த தண்டினையும் இசை பொருந்துதலையுடைய நரம்பினையும் பத்தரினையுமுடைய சீறி யாழை எடுத்தணைத்து, குரல் குரலாக வருமுறைப் பாலையின் - குரல் குரலாக வரும் செம்பாலைப் பண்ணுடன், துத்தம் குரலாத் தொன்முறை இயற்கையின் - துத்தம் குரலாய படுமலைப் பாலையும் அம்முறையே செவ்வழிப் பாலை முதலியனவும், அம் தீங் குறிஞ்சி - அழகிய இனிய குறிஞ்சிப் பண்ணும் ஆகியவற்றை, அகவல் மகளிரின் - பாடுதலையுடைய மகளிரால்; மைந்தர்க்கு ஓங்கிய வருவிருந்து அயர்ந்து - மைந்தர்க்குச் சிறந்த விருந்தினையும் செய்து ; கோடு நரம்பு பத்தர் ஆகியவற்றையுடைய சீறியாழ் எனக் கூட்டுக. பாலை, குறிஞ்சி யென்னும் பண்களினியல்பினை ஆய்ச்சியர் குரவையிற் கூறியவாற்றானறிக. நிறுத்தித் தழீஇ என்னுமெச்சங்கள் அகவல் மகளிரென்னும் பெயரில் அகவுதற் றொழிலொடு முடிந்தன. 37-40. முடிபுறம் உரிஞ்சுங் கழற்காற் குட்டுவன் - ஏனை மன்னரது முடியின் புறத்தினைத் தேய்க்கின்ற கழலணிந்த அடியினை யுடைய குட்டுவன், குடிபுறந் தருங்கால் திருமுகம்போல - குடிகளைக் காக்குங் காலத்து விளங்கும் அவன் அழகிய முகத்தினை யொப்ப, உலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம் - உலகத்தார் வணங்க வானின்கட் டோன்றிய விரிந்த கதிர்களையுடைய திங்களை, பலர்புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க - யாவரும் போற்றும் மூதூரிலுள்ளார்க்கு அறிவித்து விலக ; மற்றைய அரசர் இவன் அடிக்கண் தம்முடி பொருதத் தலை வணங்கலான் அம்முடியினைக் கழல்தேய்ப்பதாயிற்றென்க. பகையொடு பொரூஉங் காலத்தன்றி ஏனைக்காலத் தெல்லாம் இனிய முகத்துடன் இருத்தலான், "குடிபுறந் தருங்காற் றிருமுகம்போல" என்றார். மலரவிழ் மாலை இளையோர்க்கு மடவோர் தம்மால் மூரலையும் அளித்து மைந்தர்க்கு அகவன் மகளிரான் விருந்துமயர்ந்து மதியத்தை மூதூர்க்குக் காட்டி நீங்க என முடிக்க. 41-46. மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப - ஆடவரும் மகளிரும் தன் பின் நின்று தன்மொழி கேட்டு நடக்க, ஐங்கணை நெடுவேள் அரசு வீற்றிருந்த - ஐந்து மலரம்புகளையுடைய மன்மதன் அரசனாகப் பெருமிதத்தோடமர்ந்த, வெண்ணிலா முன்றிலும் - வெள்ளிய நிலா முற்றத்தினையும், வீழ்பூஞ் சேக்கையும்- விரும்பப்படும் மலர்நிறைந்த படுக்கையினையும், மண்ணீட்டு அரங்கமும் - சுதைபூசிய அரங்கினையும், மலர்ப் பூம் பந்தரும் - மலர்களையுடைய பொலிவுபெற்ற பந்தரினையும், வெண்கால் அமளியும் - வெள்ளிய கால்களையுடைய கட்டில்களையும், விதான வேதிகைகளும் - மேற்கட்டியினை யுடைய மேடைகளை யும், தண்கதிர் மதியந்தான் கடிகொள்ள - குளிர்ந்த கதிர்களையுடைய திங்கள் விளக்காநிற்க; தண்கதிர் மதியம் நெடுவேளரசு வீற்றிருந்த வெண்ணிலா முன்றில் முதலியவற்றைக் கடிகொள்ள என்க. வழி மொழி - ஏவல். மண்ணீடு - சுதையாற் செய்த பாவையென்றுமாம். வெண்கால் - தந்தத்தாற் செய்த கால். கடி கொள்ளல் - காவல் கொள்ளலுமாம். தான், அசை. 47-52. படுதிரை சூழ்ந்த பயங்கெழு மாநிலத்து-ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த பயன் பொருந்திய இப் பெரிய வுலகத்து, இடை நின்று ஓங்கிய நெடுநிலை மேருவின் - நடுவிலே நின்று உயர்ந்த நீண்ட சிமயங்களையுடைய மேருவரைபோல, கொடிமதில் மூதூர் நடுநின்று ஓங்கிய - கொடிகட்டிய மதிலினையுடைய பழம் பதியாகிய வஞ்சியின் இடையே நின்றுயர்ந்த, தமனிய மாளிகைப் புனை மணி யரங்கின் - பொன் மாளிகையின் கண் மணிகளால் அழகுசெய்த நிலா முற்றத்திருந்து, வதுவை வேண்மாள் மங்கலமடந்தை - பட்டத்துத் தேவியாகிய வதுவைவேண்மாள், மதியேர் வண்ணங் காணிய வருவழி - திங்களின் அழகினைக் காணவந்த காலை ; படுதிரை, ஆகுபெயர். உலகமும் அதன் நடுவுள்ள மேருவும் வஞ்சிக்கும் அதன் நடுவுள்ள தமனிய மாளிகைக்கும் உவமை. வதுவை - கல்யாணம். வேண்மாள் - வேள்குல மகள்; பெயர் ஏர்- எழுச்சியுமாம். 53-54. எல்வளை மகளிர் ஏந்திய விளக்கம் பல்லாண்டு ஏத்தப் பரந்தன ஒருசார்-ஒளியமைந்த வளையலணிந்த பெண்டிர் வாழ்த்துக் கூறிப் பரவுதற்கெடுத்த விளக்குகள் ஒரு பக்கல் மிக்கன; பல்லாண்டேத்த மகளிர் ஏந்திய விளக்கம் என்க ; என்னை? மகளிர் விளக்க மேந்தி வாழ்த்தல் மரபாகலான் ; 1"வெண்டிரி விளக்க மேந்திய மகளி, ருலக மன்னவன் வாழ்கென் றேத்தி" என முன்னர்க் கூறியதூஉங் காண்க. எல் - ஒளி. 55-56. மண்கணை முழவும் வணர்கோட்டு யாழும்-மார்ச்சனை யமைந்த திரண்ட மத்தள வொலியும் வளைந்த கோட்டினை யுடைய யாழோசையும், பண்கனி பாடலும் பரந்தன ஒருசார் - இசை கனிந்த பாடலும் ஒரு பக்கத்தே மிகுந்தன; முழவு - முழவொலி. யாழ் - யாழோசை. கனிபாடல், வினைத் தொகை. 57-58. மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும் - கத்தூரிக் குழம்பும் தொய்யிலெழுதும் வெள்ளிய சந்தனமும், கூனும் குறளும் கொண்டன ஒருசார் - ஒரு பக்கத்தே கூனுங் குறளும் ஏந்தி நின்றன; வரி - தொய்யில். 59-60. வண்ணமும் சுண்ணமும் மலர்பூம் பிணையலும் - எழுதும் வண்ணங்களையும் பூசு சுண்ணங்களையும் மலர்ந்த பூமாலை களையும், பெண்ணணிப் பேடியர் ஏந்தினர் ஒரு சார் - பெண் தன்மை மிக்க அழகிய பேடியர் ஒரு பக்கத்தே சுமந்து நின்றனர்; பெண்ணணிப் பேடியர் - பெண் தன்மையை விரும்பிய பேடியர்; 1"பெண்ணவா யாணிழந்த பேடி" என்றார் பிறரும். அணி - ஒப்பனையுமாம். மலர்ப் பூம்பிணையல் என்பதும் பாடம். 61-62. பூவும் புகையும் மேவிய விரையும்-மலர்களும் புகை உறுப்புக்களும் விரும்பப்பட்ட வாசனையும், தூவியஞ் சேக்கை சூழ்ந்தன வொருசார் - ஒரு பக்கத்தே எகினத்தின் இளமயிர் செறித்த பள்ளியைச் சூழ்ந்திருந்தன; ஈண்டுக் கூறிய வண்ணஞ் சுண்ண முதலியவற்றை, 2"வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும், பூவும் புகையு மேவிய விரையும்" என வரும் அடிகளானும் அவற்றினுரையானும் அறிக. 63-64. ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும் - கண்ணாடியும் ஆடையும் அழகு செய்யும் இழைகளும் என்னுமிவற்றை, சேடியர் செவ்வியின் ஏந்தினர் ஒருசார் - ஒரு பக்கத்தே தோழிமார் அழகோடே ஏந்தி நின்றனர்; அணிதரு கலன் என்பதற்கு அணிந்துகொள்ளும் கலன் எனவுரைத்தலுமாம். 65-66. ஆங்கு அவள் தன்னுடன் அணிமணி அரங்கம் வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி - அங்ஙனமாக வந்த அப் பெருந் தேவியுடனே அழகிய மணிகள் பதித்த நிலா முற்றத்தின் கண்ணே கடல் சூழ்ந்த இவ்வுலகினை ஆளும் செங்குட்டுவன் அமர்ந்து; அவள் - வதுவை வேண்மாள். வதுவை வேண்மாள் மதிகாணிய வரும் வழி பரத்தல் முதலிய நிகழாநிற்க வந்த அவள்தன்னுடன் ஆள்வோன் ஏறி என்க. வீங்குநீர் - கடல். 67-70. திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும் - திருநிலை பெற்றிருத்தலையுடைய சிவந்த அடிக்கண் தண்டை ஒலிக்கவும், பரிதரு செங்கையிற் படுபறை ஆர்ப்பவும்-சிவந்த கையிடத்தே தாங்கிய பறை முழங்கவும், செங்கண் ஆயிரம் திருக்குறிப்பு அருளவும் - ஆயிரம் சிவந்த கண்களும் தம் கருத்தினைப் புலப்படுத்தவும், செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும்-செவ்விய சடை பரந்து திக்குகளில் அலையவும்; வாய் புலம்பல் - ஒலித்தல்; ஒரு சொல். இதன்கண் சேவடி செங்கை செங்கண் செஞ்சடை என்ற அமைப்பு நோக்கத்தக்கது. சிலம்பு - கழலுமாம். 71-75. பாடகம் பதையாது சூடகம் துளங்காது - பாடகமானது அசையாதே தோள்வளை நடுங்காதே மேகலை ஒலியாது- மேகலையணி ஒலி செய்யாதே, மென்முலை அசையாது - மெல்லிய முலை ஆடாதே, வார்குழை ஆடாது - நீண்ட குழையாகிய காதணி அசையாதே, மணிக்குழல் அவிழாது - நீலமணி போலுங் கூந்தல் அவிழாதே, உமையவள் ஒரு திறன் ஆக - உமாதேவி தன் இடப்பக்கத்தினளாக, ஓங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்-மாதேவனாகிய இறைவன் நடித்த கொடுகொட்டியை; பாடகம்-மகளிர் அணியும் காலணி. திருமேனியின் ஒரு கூற்றிற் சிறிதும் அசைவில்லையாக ஆடின னென்பதனால் அவ்வாட்டத்தின் அருமை புலப்படும். இறைவன் கொடுகொட்டி ஆடியதனை, 1"திரிபுர மெரியத் தேவர் வேண்ட, எரிமுகப் பேரம் பேவல்கேட்ப, உமையவ ளொருதிறனாக வோங்கிய, இமையவனாடிய கொடுகொட்டி யாடலும்" என்பதனா னறிக.‘புலம்ப' முதலிய எச்சங்களும், ‘பதையாது' முதலிய எச்சங்களும் தனித்தனி ஆடிய என்னும் வினை கொண்டு முடியும். 76-79. பாத்தரு நால்வகை மறையோர் பறையூர் - பகுத்தலரிய நான்கு மறைகளையுடைய அந்தணரது பறையூர்க்கண் உளனாகிய, கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து - கூத்தச் சாக்கையன் ஆடுதலானே மகிழ்வுற்று, அவன் ஏத்தி நீங்க - அச் சாக்கையன் தன்னைப் போற்றி நீங்கியவளவிலே, இருநிலம் ஆள்வோன் வேத்து இயன் மண்டப மேவிய பின்னர் - பெரிய நிலத்தினையாளுங் குட்டுவன் அரசிருப்பாய பேரோலக்க மண்டபத்தினை அடைந்தபின்; பார்த்தல் - பகுத்தல். கூத்தச் சாக்கையன் - கூத்து நிகழ்த்தும் சாக்கையன். சாக்கையன் கூத்தாடுந் தொழிலுடைய ஓர் குலத்தினன். அவள்தன்னுடன் ஆள்வோன் ஏறி மகிழ்ந்து மண்டபமேவிய பின்னர் என முடிக்க. 80-82. நீலன் முதலிய கஞ்சுகமாக்கள் - நீலனை முதலாகக் கொண்ட சட்டையிட்ட தூதுவர், மாடல மறையோன் தன்னொடும் தோன்றி - மாடலனாகிய அந்தணனோடு வந்து, வாயிலாளரின் மன்னவற்கு இசைத்தபின் - வாயில் காப்போரான் அரசனுக்கு அறிவித்த பின்னர்; நீலன் முதலியோர், கனக விசயரை இருபெரு வேந்தர்க்குக் காட்டிடச் சென்றோர். 83-89. கோயின் மாக்களிற் கொற்றவன்தொழுது - கோயிற் பணியாளருடன் சென்று மன்னவனை வணங்கி, தும்பை வெம் போர்ச் சூழ்கழல் வேந்தே - தும்பை சூடிய வெவ்விய போரில் வல்ல கழலணிந்த மன்ன, செம்பியன் மூதூர் சென்று புக்கு- சோழனது பழைய நகரத்தை அடைந்து, ஆங்கு வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய - அவ்விடத்தே வச்சிர நாட்டுப் பந்தரும் அவந்தி நாட்டுத் தோரணவாயிலும் மகதநாட்டுப் பட்டி மண்டமும் ஆய இவை கூடிய, சித்திர மண்டபத்து இருக்க வேந்தன் - ஓவியத் தொழிலமைந்த மண்டபத்தின் கண்ணே சோழவரசன் இருந்தவளவில், அமரகத்து உடைந்த ஆரிய மன்னரொடு - போரினிடத்தே தோற்றோடிய ஆரிய அரசர் களுடனே, தமரிற் சென்று தகையடி வணங்க - அரசனுடைய பரிவாரத்தார் வழிவிடச் சென்று அம் மன்னனுடைய அழகிய அடிகளை வணங்க; கோயில் மாக்கள் - கோயிற் பரிவாரத்தாருமாம். பரிவாரத்தார் வருவோரை உபசரித்தற்கும், அரசன்பால் அழைத்துச் செல்வ தற்கும் உரிமையுடையராவர். வச்சிரம் அவந்தி மகதம் குழீஇய மண்டபம் என்க; என்றது இம்மூன்று நாடுடையாரும் திறையாகக் கொடுத்த பந்தர் முதலிய மூன்றுங் கூடிய மண்டபம் என்றபடி; இதனை, 1"மாநீர்வேலி வச்சிர நன்னாட்டுக், கோனிறை கொடுத்த கொற்றப் பந்தரும், மகதநன் னாட்டு வாள்வாய் வேந்தன், பகைபுறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும், அவந்தி வேந்த னுவந்தனன் கொடுத்த, நிவந்தோங்கு மரபிற் றோரணவாயிலும்" என முற்போந்த தனா னறிக. வச்சிரம், அவந்தி, மகதம் என்பன பிறந்தவழிக் கூறல் என்னும் ஆகுபெயர் என்க. 90-95. நீள்அமர் அழுவத்து நெடும்பேர் ஆண்மையொடு - பெரிய போர்க்களப் பரப்பிலே மிக்க பெரிய வீரத்தோடே, வாளும் குடையும் மறக்களத்து ஒழித்து - தாம் கொணர்ந்த வாளினையுங் குடையினையும் போர்க் களத்தே போகட்டு, கொல்லாக் கோலத்து உயிர் உய்ந்தோரை - (பகைவர்) கொல்லுதற்கு ஒருப்படாத தவ வடிவோடே உயிர் பிழைத்த பகை மன்னரை, வெல்போர்க் கோடல் வெற்றம் அன்று என - வெல்லும் போரினிடத்துப் பிடித்துக் கோடல் வெற்றிச் செயலன்று என்று, தலைத்தேர்த் தானைத் தலைவற்கு உரைத்தனன் சிலைத்தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை - இந்திரவிற்போலும் மாலையை அணிந்த மார்பினையுடைய சோழர் பெருமான் முதன்மைபெற்ற தேர்ப்படையினையுடைய மன்னனுக்குக் கூறினான்; நெடும் பேராண்மையொடு என்பது இகழ்ச்சிக்குறிப்பு. முனிவரைக் கோறல் முறையன்று என்பதுணர்ந்து, இவர் தவவேடங் கோடலால், கொல்லாக் கோலத் துயிருய்ந்தோர் எனக் கூறினார். முன்னர்,1"தாபத வேடத் துயிருய்ந்து பிழைத்த, மாபெருந் தானை மன்னகுமரர்" என வந்தமை காண்க, வெற்றம் - வெற்றி. தலை வற்கு - நினக்கு; முன்னிலையிற் படர்க்கை. உரைத்தல் - உரைப்பித்தல். செம்பியர் பெருந்தகை உயிருய்ந்தோரைக் கோடல் வெற்ற மன்றென உரைத்தனன் என முடிவு செய்க. 96-97. ஆங்கு நின்று அகன்றபின் அறக்கோல் வேந்தே-அற நெறியில் நிற்கும் செங்கோலையுடைய மன்னனே அச்சோணாட்டினின்றும் நீங்கிய பின்னர், ஓங்குசீர் மதுரை மன்னவற் காண - உயர்ந்த சிறப்பினையுடைய பாண்டிய வரசனை யாம் கண்ட அளவில்; 98-107. ஆரிய மன்னர் - ஆரிய வரசர்கள், அமர்க்களத்து எடுத்த - போர்க்களத்தே பற்றிய, சீர்இயல் வெண்குடைக் காம்பு- சிறப்புடைய வெண்கொற்றக் குடையின் காம்பாகிய, நனி சிறந்த சயந்தன் வடிவின் தலைக்கோல் - மிகவுயர்ந்த சயந்தன் வடிவாம் தலைக்கோலாக, ஆங்குக் கயந் தலை யானையிற் கவிகையிற் காட்டி - அங்கே பெரிய தலையையுடைய யானையின் மீதுள்ள குடையினின்றும் காட்டியும், இமையச் சிமையத்து இருங் குயிலாலுவத்து - இமயமலையின் முடியின் பக்கத்ததாய பெரிய குயிலாலுவம் என்றவிடத்தமர்ந்த, உமையொரு பாகத்து ஒருவனை வணங்கி - உமையினைத் தன் இடப் பக்கத்துடைய ஒப்பற்ற இறைவனை வணங்கியும், அமர்க்களம் அரசனது ஆகத் துறந்து - போர்க்களம் நும் மன்னனுடையதாக அதனை விடுத்து, தவப்பெருங் கோலங் கொண்டோர் தம்மேல்- பெருமையினையுடைய தவ வடிவங் கொண்ட அரசர்மீது, கொதியழற் சீற்றங் கொண்டோன் கொற்றம் - வெவ்விய தீப்போலும் சினத்தினைக் கொண்டோனுடைய வெற்றி, புதுவது என்றனன் போர்வேற் செழியன் - போரிற் சிறந்த வேற்படையினையுடைய பாண்டியன் புதுவதாகும் என்று கூறினன்; தலைக்கோல் பகைவரிடத்துப் பற்றிய குடைக் காம்பாற் செய்யப்படுவதென்பது 1"பேரிசை மன்னர் பெயர்புறத் தெடுத்த, சீரியல் வெண்குடைக் காம்பு நனிகொண்டு" என்பதனானும், அது சயந்தன் வடிவாயதென்பது 2"இந்திர சிறுவன் சயந்த னாகென, வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்" என்பதனானும் அறியப் படும். இனி, ஆரிய மன்னர் அமர்க்களத்திலே தங்களுக்கெடுத்த குடையிற் காம்பைக் கையிற் பிடித்து ஆனைக் கழுத்திலிருத்திய ஆசிரியன் கையிற்றலைக் கோலாகக் காட்டியும் என்றுரைத் தலுமாம். குயிலாலுவம் - இமயமலைப் பக்கத்தொரு பகுதி. தெவ்வர் ஓடலாற் களம் அரசனதாயிற்று; ஈண்டு அரசன் செங்குட்டுவன் என்க. தவப்பெருங் கோலமென்றது, "சடையின ருடையினர் சாம்பற் பூச்சினர், பீடி கைப் பீலிப் பெருநோன் பாளர்" ஆகிய வடிவினை என்க. புதுவது என்றது முன்னொருவரும் செய்யாத தொன்றென இகழ்ந்தபடி. ஆரியமன்னர் காட்டி வணங்கித் துறந்து கொண்டோர் என்க; ஆரிய மன்னரென்னுந் தொகுதி யொற்றுமையானே காட்டி வணங்கித் துறந்து கொண்டோர் எனச் சிலர் வினை வேறு சிலர் வினையோடு முடிந்தது. வேற்செழியன் கோலங்கொண்டோர் தம்மேற் சீற்றங் கொண்டோன் கொற்றம் புதுவது என்றனன் என்க. 107-109. என்று ஏனை மன்னர் இருவருங் கூறிய-என மற்றைய தமிழ் மன்னர் இருவரும் மொழிந்த, நீண்மொழி யெல்லாம் நீலன் கூற - அறிவு நிறைந்த சொற்கள் எல்லாவற்றையும் நீலனென்பான் கூறிய அளவில்; நீண்மொழி - தவக் கோலத்தினரைத் துன்புறுத்தல் தகாதெனக் கூறிய அறிவுரை; பெருமித மொழியுமாம். 110-113. தாமரைச் செங்கண் தழல் நிறங்கொள்ள - தாமரை மலர்போலுஞ் சிவந்த கண்கள் சிவப்பேற, கோமகன் நகுதலும்- செங்குட்டுவன் வெகுண்டு நகைத்த அளவிலே, குறையாக் கேள்வி மாடலன் எழுந்து - குறைவில்லாத நூற்கேள்வியினை யுடைய மாடலன் எழுந்து நின்று, மன்னவர் மன்னே வாழ்க நின்கொற்றம் வாழ்கென்று ஏத்தி - அரசர்க்கரசே நினது வெற்றி வாழ்வதாக நீ நீடு வாழ்வாயாக வென்று போற்றி; அருளாற் செம்மையுடைய கண்கள் வெகுளியாற் சிவந்தன என்றார். 114-121. கறிவளர் சிலம்பில் துஞ்சும் யானையின் - மிளகுக் கொடி படரும் மலைக்கண் உறங்கும் யானையினையுடைய, சிறு குரல் நெய்தல் வியலூர் எறிந்தபின் - சிறிய கொத்தாகிய நெய்தற் பூக்களையுடைய வியலூரை அழித்து வெற்றி கொண்ட பின்னர், ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை - ஆத்தி மலராற்புனைந்த மாலையினையுடைய ஒன்பது சோழ அரசரை, நேரி வாயில் நிலைச்செரு வென்று - நேரிவாயி லென்னுமிடத்தே நிலைபெற்ற போரின்கண் வென்று, நெடுந் தேர்த் தானை யொடு இடும்பிற் புறத்து இறுத்து - உயர்ந்த தேரினையுடைய சேனையோடே இடும்பில் என்னு மூர்ப்புறத்தே தங்கி, கொடும்போர் கடந்து நெடுங்கடல் ஓட்டி - கொடிய போரினை வென்று நெடிய கடலிடத்தே நாவாயைச் செலுத்தி, உடன்று மேல்வந்த ஆரிய மன்னரை - தன்னொடு வெகுண்டு எதிர்த்த ஆரியவரசரை, கடும் புனற் கங்கைப் பேர் யாற்று வென்றோய் - விரைந்து செல்லும் நீரினையுடைய பெரிய கங்கையாற்றுக் கரைக்கண் வென்றோய்; யானையினையுடைய வியலூர் என்க. சாரியை நிற்க உருபும் பயனும் தொக்கன. ஆர்புனை ஒன்பது மன்னரை வென்றமை, 1"நின், மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா, வொத்த பண் பின ரொன்பது மன்ன, ரிளவரசு பொறா ரேவல் கேளார், வளநாடழிக்கு மாண்பின ராதலி, னென்பது குடையுமொருபக லொழித்து" எனவும், 2"ஆராச் செருவிற் சோழர்குடிக் குரியோ, ரொன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து, நிலைச்செருவி னாற்றலை யறுத்து" எனவும் போந்தவற்றானறிக. நேரிவாயில் - உறையூர்த் தெற்கு வாயில தோரூர். நிலைச்செரு - நாடோறும் தொடர்ந்து நிகழும் போர். இடும்பில் - ஓரூர். கடலோட்டிய செய்தி 3"பொங்கிரும் பரப்பிற் கடல் பிறக்கோட்டிக், கங்கைப்பேர் யாற்றுக் கரைபோகிய, செங்குட்டுவன்" என்பதனானுணரப்படும். ஆரிய மன்னர் - முன்னொரு கால் இவனுக்குத் தோற்றார் சிலருமாம். வென்று இறுத்துக் கடலோட்டி என்னும் பல்வேறு தொழிற்பட்ட வினையெச்சங்கள் வென்றோய் என்பதன் வெல்லுதற் றொழிலொடு முடிந்தன. 122. நெடுந்தார் வேய்ந்த பெரும்படை வேந்தே - நெடிய மாலையை அணிந்த பெரிய படையினையுடைய மன்னனே; தார்வேய்தல் படைக்கும் மன்னற்கும் ஏற்கும். 123-124. புரையோர் தம்மொடு பொருந்த உணர்ந்த - உயர்ந் தோரோடு ஒப்ப மெய்பொருளறிந்த, அரைசர் ஏறே அமைக நின் சீற்றம் - மன்னர் மன்னனே நின்சினம் அடங்குவதாக; இனி, உயர்ந்தோரால் யாவற்றையும் தெளிய வுணர்ந்த வென்றுரைத்தலுமாம். நீ மிக்க பெரும் படையை யுடையை யாயினும் ஆன்றவிந்தடங்கிய புரையோரொடு பொருந்த வுணர்ந் தனையாகலின் வெகுளல் தகாதென உணர்த்தியவாறாயிற்று. 125-126. மண் ஆள் வேந்தே - இந்நில முழுதாளும் மன்னனே, நின் வாணாட்கள் - நின்னுடைய வாழும் நாட்கள், தண் ஆன் பொருநை மணலினுஞ் சிறக்க - தண்ணிய ஆன்பொருநை யாற்றின் மணலினும் மிகுவனவாக. ஆன்பொருநை - சேரநாட்டுள்ளதோர் யாறு; இஃது ஆன் பொருந்தம் எனவும் பொருநை யெனவும் வழங்கும். ஓரரசரை வாழ்த்துங்கால் அவரை அவர் யாற்று மணலினும் வாழ்கவென்றல் மரபாகலான் இங்ஙனங் கூறினான். 1"சிறக்க நின்னாயுண், மிக்கு வரு மின்னீர்க் காவிரி, யெக்க ரிட்ட மணலினும் பலவே" என வருதலுங் காண்க. சிறத்தல் - மிகுதல். வாணாள், மரூஉ முடிபு. 127-128. அகழ் கடல் ஞாலம் ஆள்வோய் வாழி - அகழ்ந்த கடல்சூழ்ந்த இவ்வுலகினை ஆளும் அரசே வாழ்வாயாக, இகழாது என் சொல் கேட்டல் வேண்டும் - எனது சொல்லை இகழ்ந்து ஒதுக்காதே கேட்டருளல் வேண்டும்; அகழ் கடல் - சகரரால் தோண்டப்பட்ட கடல்; ஒப்புமை பற்றிப் பிறகடலையும் அகழ்கடல் என்றார்; ஆழமாய கடல் என்றலுமாம். 129-132. வையம் காவல்பூண்ட நின் நல் யாண்டு - இவ்வுலகு காத்தற்றொழிலை மேற்கொண்ட நினது நன்றாகிய ஆண்டுகள், ஐயைந்து இரட்டி சென்றதற் பின்னும் - ஐம்பது முடிவுற்ற பின்னரும், அறக்கள வேள்வி செய்யாது - அறநூல்கள் கூறும் வேள்வியினைச்செய்யாதே, யாங்கணும் மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை - எவ்விடத்தும் வலிமிக்க போர்க்கள வேள்வியையே செய்பவனாயினை; அறக்கள வேள்வி - அறநூல்களுள் அரசர்க்கு விதிக்கப்பெற்ற இராசசூயமும் துரங்கவேள்வியும் போல்வன. மறக்கள வேள்வி யாது என்பதனை, 1"நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து அதரி திரித்துச் சுற்றத்தொடு நுகர்வதற்கு முன்னே கடவுட் பலி கொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளர் முகந்துகொள்ள வரிசையின் அளிக்குமாறு போல, அரசனும் நாற்படையையுங்கொன்று களத்திற்குவித்து எருதுகளிறாக வாண்மடலோச்சி அதரிதிரித்துப் பிணக்குவையை நிணச் சேற்றோடு உதிரப் பேருலைக்கண் ஏற்றி ஈனா வேண்மாள் இடந்துழந்தட்ட கூழ்ப்பலியைப் பலியாகக் கொடுத்து எஞ்சிநின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப் பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகந்துகொள்ளக் கொடுத்தலாம்" என வருதலானுணர்க. ஈண்டு ஐயைந்திரட்டி சென்றமை கூறுதலானும், பதிற்றுப் பத்தின் (5ம்) பதிகத்திலே, "கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான்" எனக் கூறப்படுதலானும், இக் காதையுள்ளே பின்னர் "நரைமுதிர் யாக்கை நீயுங் கண்டனை" என வருதலானும் செங்குட்டுவன் ஏறக்குறைய எழுபத்தைந்து யாண்டு உயிர் வாழ்ந்திருந்தனன் எனவும், ஐம்பத்தைந்து யாண்டு அரசுபுரிந்தனன் எனவும் கருதுதல் பொருந்தும். 133-134. வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்து-மன்னர்க்கு உரிய வினைகளைக் குறைவின்றியே முடித்த வாளேந்திய வெற்றியினையுடைய, போந்தைக் கண்ணிநின் ஊங்கணோர் மருங்கின் - பனம் பூமாலையினையுடைய நின் முன்னோருள்; வேந்தர் முடித்தற்குரிய வினை யாவை என்பதனை, 2"நின், னாடு குடிமூத்த விழுத்திணைச் சிறந்த, வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த, இரவன் மாக்க ளீகைநுவல, வொண்டொடி மகளிர் பொலங்கலத்தேந்திய, தண்கமழ் தேறன் மடுப்ப மகிழ்சிறந், தாங்கினி தொழுகு மதி பெரும வாங்கது, வல்லுநர் வாழ்ந்தோ ரென்ப" என்பதனான் அறிக. ஊங்கண் என்பது கால முன்மையை உணர்த்திற்று. 135. கடற்கடம்பு எறிந்த காவலனாயினும் - கடலிடத்தே பகைவர் கடம்பினை வெட்டிய மன்னனும்; கடற்கடம்பு எறிந்த செய்தியை முன்னர்க் காண்க. 136. விடர்ச் சிலை பொறித்த விறலோன் ஆயினும் - இமயச் சிமையத்தில் வில்லினைப் பொறித்த வெற்றியை உடையவனும்; 1"குடக்கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை, விடர்ச்சிலை பொறித்த வேந்தன்" என மணிமேகலையுள்ளும் இவன் கூறப் படுகின்றான். 137-138. நான்மறையாளன் செய்யுட்கொண்டு நான்மறையோதும் அந்தணனாகிய புலவன் பாடிய செய்யுளை ஏற்று, மேல்நிலை யுலகம் விடுத்தோன் ஆயினும்-அவனைத் துறக்கவுலகத்துச் செலுத்தியோனும்; நான்மறையாளன்- பாலைக்கௌதமனார் என்னும் புலவர்; மேனிலையுலகம் விடுத்தோன் - இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன்; இவ்வரலாற்றினை, 2"பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடினார். பத்துப்பாட்டு; பாடிப் பெற்ற பரிசில்; நீர் வேண்டியது கொண்மினென யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டுமெனப் பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெரு வேள்வி வேட்பித்துப் பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையுங் காணாராயினார்" என்பதனானறிக. 139-140. போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கென - நிலை பெற்ற உயிர்களை முறையின்றிக் கவர்தலைப் பரிகரித்து மூத்த முறைமையானே கொள்வாயாகவென, கூற்றுவரை நிறுத்த கொற்றவனாயினும் - இயமனை ஓர் எல்லையுட்படுத்திய மன்னவனும்; 3"தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வ, ரீற்றிளம் பெண்டிராற்றாப் பாலகர், முதியோ ரென்னா னிளையோ ரென்னான், கொடுந் தொழி லாளன் கொன்றனன்" குவித்தலானே இங்ஙனம் அவனை வரைப்படுத்தான் என்க. 141-142. வன்சொல் யவனர் வளநாடு ஆண்டு-கொடுஞ் சொல்லுடைய யவனரது வளமிக்க நாட்டினை ஆட்சி செய்து, பொன்படு நெடுவரை புகுந்தோன் ஆயினும் - பொன்பட்ட உயர்ந்த இமயமலையிடத்தே புக்கவனும்; யவனர் நாடாண்ட செய்தி, 4"வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கற், றென்குமரி யாண்ட" எனப் பின்னரும் கூறப்படும். 143-144. மிகப் பெருந் தானையோடு இருஞ்செரு ஓட்டி - மிகப் பெரிதாகிய சேனையோடே பெரிய போரினைத் துரந்து, அகப்பா எறிந்த அருந்திறலாயினும் - பகைவர் மதிலையழித்த அரிய திறலையுடையோனும்; போரின்கண் தானையோடு ஓடச்செய்து என்றுமாம். அகப்பா - மதில்; இதனை ஓர் அரணின் பெயராகச் சிலர் கூறுவது பொருத்தமின்று; 1"அகப்பா வெறிந்து பகற்றீ வேட்டு" என்பதுங் காண்க. மிகற் பெருந்தானை யென்னும் பாடத்திற்குத் தருக்கினையுடைய சேனை யென்க. 145-146. உருகெழு மரபின் அயிரை மண்ணி-உட்குப் பொருந்தும் முறைமையினையுடைய அயிரை மலையிற் கொற்றவை யென்னுந் தெய்வத்தை நீராட்டி வழிபட்டு, இருகடல் நீரும் ஆடினோன் ஆயினும்-ஒரு பகலில் இரு கடல்நீரையும் கொணர்வித்து முழுகினோனும்; அயிரை - சேரநாட்டுள்ளதோர் மலை; ஈண்டு அதன்கணுள்ள தெய்வத்தை யுணர்த்திற்று. மண்ணுதல் - திருமுழுக்குச் செய்வித்தல். இருகடல் - தன்னதாய மேல் கடலும், வேற்றுவேந்தனதாய்த் தன்னால் வெல்லப்பட்ட நாட்டிற் கீழ் கடலுமாம்; 2"இருகட னீரு மொருபக லாடி, அயிரை பரைஇ" என்பதும், அதனுரையுங் காண்க. அயிரை - ஓர் யாறு என்பர் அரும்பதவுரையாசிரியர். 147-148. சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து-சதுக்கப் பூதங்களை அமராபதியினின்றும், வஞ்சி நகரத்துக் கொணர்ந்து, மதுக் கொள் வேள்வி வேட்டோன் ஆயினும் - சோம யாகத்தினைச் செய்தோனும் ஆகிய; ஆயினும் என்பது ஓரெண்ணிடைச்சொல்; 3"அருந்தவர்க் காயினு மரசர்க்காயினும்" என்புழிப் போல. சோமயாகஞ் செய்தோன் சோமயாஜி எனப்படுவன். 149-150. மீக்கூற்றாளர் யாவரும் இன்மையின் - மேம்பட்ட புகழினையுடையார் ஒருவரும் இல்லாது இறந்தமையானே, யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய் - உடல் நிலையாது என்பதனை நீ யறிந்தனை; மீக்கூற்று - மேலாய சொல்; புகழ். 151-154. மல்லல் மாஞாலத்து வாழ்வோர் மருங்கின் - வளம் நிறைந்த இப்பெரிய வுலகத்து வாழும் மக்களிடத்து, செல்வம் நில்லாது என்பதை - பொருள் நிலைபெறாது என்பதனை, வெல் போர்த் தண்டமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரிற் கண்டனை யல்லையோ காவல்வேந்தே-காவற்றொழிலுடைய மன்னனே வெல்லும் போரினையுடைய தமிழ்நாட்டு வேந்தரை எள்ளிய ஆரிய மன்னரிடத்துக் கண்டாயல்லையோ; 155-158. இளமை நில்லாது என்பதை - இளமைப் பருவம் நிலையாது என்பதனை, எடுத்து ஈங்கு உணர்வுடை மாக்கள் உரைக்கல் வேண்டா - இவ்வுலகத்து அறிவுடைய மக்கள் மேற் கோள் வாயிலாக எடுத்துரைத்தல் வேண்டா , திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே - திருமகள் தங்கிய பரந்த மார்பினையும் செங்கோலையும் உடைய வேந்தனே, நரைமுதிர் யாக்கை நீயுங் கண்டனை - நரைத்தலோடு முதிர்ந்த உடலை நீயும் பார்த்தனை ; ஞெமிர்தல் - பரத்தல். நீயுங் கண்டனையாகலான் உரைக்கல் வேண்டா என்க. நீயுங் கண்டனை என்றது நின் உடம்பும் நரைத்தலுடன் முதிர்ந்த தென்றபடி. நரைமுதிர் - நரைமிக்க என்றுமாம். ‘கடற்கடம் பெறிந்த காவலனாயினும்' என்பது தொடங்கி. ‘நரை முதிர் யாக்கை நீயுங் கண்டனை' எனபதன்காறும் யாக்கையும் செல்வமும் இளமையும் நில்லாவென்பது சான்றுகாட்டி நிறுவப்பட்டது. 159-164. விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர் - தேவர் வடிவத் தோடு துறக்கம் புக்க நல்ல உயிரானது, மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும் - மக்கள் வடிவோடு இவ்வுலகின்கண் மீளினும் மீளும், மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர் - மனிதவுடலை மேற்கொண்ட ஓர் நிலைபெற்ற உயிர், மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும் - மன்னனே விலங்கின் உடலை அடையினும் அடையும், விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர் - விலங்கினது யாக்கையினின்றும் விலகிய இனிய உயிர், கலங்கு அஞர் நரகரைக் காணினுங் காணும் - உள்ளம் நடுங்கற்குக் காரணமாய துன்பம் நுகரும் நரகரது யாக்கையை அடையினும் அடையும் ; நல்லுயிர் என்றார் அறஞ்செய்த வுயிராகலான். உருவின் எய்திய - உருவினை யடைந்த எனலுமாம். மறித்தல் - மீளல். தாம் செய்யுந் தீவினையானே தேவர் மக்களாகவும் மக்கள் விலங்காகவும் விலங்கு நரகராகவும் பிறத்தலுங் கூடுமென்றான். நரகர் -நரகர துடம்பிற்காயிற்று. 165-168. ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக் கூடிய கோலத்து ஒருங்கு நின்று இயலாது - ஆடுகின்ற கூத்தரைப் போல அரிய உயிரானது ஓரிடத்துச் சேர்ந்த வடிவத்துடன் எப்பொழுதும் நிலைபெற்று நடவாது, செய்வினை வழித்தாய் உயிர்செலும் என்பது - தான் செய்த வினையின் வழியதாய் உயிர் செல்லா நிற்கும் என்னுமது, பொய்யில் காட்சியோர் பொருள்உரை ஆதலின் - தெளிந்த அறிவினையுடையோரது உண்மை மொழியாமாகலான் ; கூத்தர் தாம் மேற்கொண்ட கூத்தினுக்கேற்ப வெவ்வேறு கோலம் எடுத்தல் போல உயிரும் தாம் செய்த வினைக்கேற்ப வெவ்வேறு வடிவினை யெடுக்குமென்றான். 1"ஆடு கூத்த ரணியே போல, வேற்றோ ரணியொடு வந்தீரோ" 2"ஐயமுண்டோ ஆருயிர் போனாற், செய்வினை மருங்கிற் சென்றுபிறப் பெய்துதல்" என்பன காண்க. இயலாது, முற்று, பொருளுரை யாதலின் ஒருங்கு நின்றியலாது என முடிக்க. பொய்யில் காட்சி - ஐயந்திரிபில்லா அறிவு; பொருளுரை - மெய்யுரை; 3பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்" என்புழி இப்பொருட்டாதலுங் காண்க. 169-170. எழுமுடி மார்பநீ ஏந்திய திகிரி - ஏழு முடிகளாற் செய்த ஆரம் பொருந்து மார்பினையுடையாய் நீ எடுத்த ஆணைச் சக்கரம், வழிவழிச் சிறக்க வயவாள் வேந்தே - வெற்றிகாணும் வாளினையுடைய அரசே மேலும் மேலுஞ் சிறப்புறுவதாக; "எழுமுடி என்பது ஏழு அரசரை வென்று அவர்கள் ஏழுமுடி யானுஞ் செய்ததோராரமாம்" என்பர் பதிற்றுப்பத்தின் பழைய வுரையாசிரியர். 4"எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்து நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை" என்பதன் உரை காண்க. 171-174. அரும்பொருட் பரிசிலேன் அல்லேன் யானும் - யான் பெறுதற்கரிய பொருளைப்பெறும் பரிசிலாளனல்லேன், பெரும் பேரியாக்கை பெற்ற நல்லுயிர் - மிக்க பெருமையுடைய உடம்பினைப்பெற்ற அறஞ்செய்த வுயிரானது, மலர்தலை உலகத்து உயிர்போகு பொதுநெறி புலவரை யிறந்தோய் போகுதல் பொறேஎன் - அறிவின் எல்லை கடந்தோய் பரந்த இடத்தினையுடைய உலகத்தின்கண் ஏனைய உயிர்கள் செல்லும் பொது நெறி யிடத்தே செல்லுதலைப் பொறுத்தலாற்றேன்; பொருட் பரிசிலே னல்லே னென்றது நின்மாட்டுப் பொருள் பெறுதற்காக இது கூறுகின்றேனல்லேன் என்றவாறு. பெரும்பேர் யாக்கை - அரச வுடல். முன்னர் நல்லுயிர் என விதந்தமையின் பின்னர்க்கூறிய உயிர் ஏனைய மக்களுயி ரென்றவாறாயிற்று. பொது நெறி - பிறந்திறப்பா ரெல்லாரும் செல்லு நெறி; சிறப்பிலா நெறி புலவரை - அறிவின் எல்லை. 175-178. வானவர் போற்றும் வழி நினக்கு அளிக்கும் - விண்ணவர் புகழும் வீட்டு நெறியினை உனக்குத் தருகின்ற, நான் மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான் - நான்கு வேதங்களிற் கூறப்படும் வேள்வியினைச் செய்யும் அந்தணர் கொண்டு, அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய பெருநல் வேள்வி நீ செயல் வேண்டும் - அரிய மறைகளிடத்தே மன்னர்க்கென வுரைத்த உயர்ந்த நல்ல வேள்வியினை நீ செய்தல் வேண்டும்; வானவர் போற்றும் வழி - வீட்டு நெறி. அளிக்கும் வேள்வி யென இயையும்; அளிக்கும் வேள்விப் பார்ப்பான் என்பாருமுளர். அரசர்க்கு ஓங்கிய வேள்வி - இராசசூயம், பரிவேள்வி முதலியன. பார்ப்பானைக் கொண்டு என ஒரு சொல் வருவித்துரைக்க. அருமறை-ஓதவும் உணரவும் அரிய மறை. 179-182. நாளைச் செய்குவம் அறம் எனின் - அடுத்த நாளில் அறஞ்செய்வோம் என்று நாம் கருதின், இன்றே கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும் - இற்றைப் பொழுதிலேயே கேள்வி யளவேயான நல்ல உயிரானது விலகினும் விலகும், இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவதும் இல்லை - தம் வாழ்நாள் இத்துணைத்தென வரையறை செய்து அறிந்தவர் கடல்சூழ்ந்த உலகத்தின்கண் யாங்கணும் இல்லை; நாளை என்பது வருங்கால மென்னும் பொருட்டு. யாக்கை நிலை யாமையின், இன்றே அறஞ்செய்கவெனக் கூறினான். பிறரும் 1"புன்னுனிமே னீர்போ னிலையாமை யென்றெண்ணி, இன்னினியே செய்க அறவினை - இன்னினியே, நின்றான் இருந்தான் கிடந்தான்றன் கேளலறச், சென்றா னெனப்படுத லான்" எனக் கூறுமாறு காண்க. 183-188. வேள்விக் கிழத்தி இவளொடுங் கூடி - வதுவைக் கிழத்தியாகிய இவளோடுங் கலந்து, தாழ் கழல் மன்னர் நின் னடிபோற்ற - கழலணிந்த அரசர்கள் நினது அடியினைத் துதிக்க, ஊழியோடு ஊழி உலகங் காத்து நீடுவாழியரோ நெடுந்தகையென்று - பல்லூழி இவ்வுலகினைக் காத்து நெடுந்த காய் நீடு வாழ்வாயாக என, மறையோன் மறைநா உழுது - மாடலனாகிய அந்தணன் மறையோதும் நாவாகிய ஏரானே உழுது, வான்பொருள் - சிறந்த பொருளாகிய விதையினை, இறையோன் செவி செறுவாக வித்தலின் - மன்னனது செவியே வயலாகக் கொண்டு விதைத்தலான்; வேள்வி - மன்றல் வேள்வி. இனி, வேள்விக்கிழத்தி என்பதற்கு வேள்வி செய்தற்கண் உடனிருக்கு முரிமையுடையாள் எனலும் பொருந்தும். தாழ்தல் - தங்குதல்; தாழும் மன்னர் என்றியைத் தலுமாம். ஊழியோடூழி - பல்லூழி. நாவாகிய ஏரால் எனவும், பொருளாகிய விதையை எனவும் உருவகத்தை விரித்துரைக்க. 189-194. வித்திய பெரும்பதம் விளைந்து பத மிகுத்து துய்த்தல் வேட்கையின் - விதைத்த பெரும் பொருள் விளைய அவ்வுணவினை மிகுதியாக நுகரும் விருப்பத்தானே, சூழ்கழல் வேந்தன் - கழலினையணிந்த வேந்தன், நான்மறை மரபின் நயம் தெரி நாவின்-நால்வேத முறையானே நாற்பொருளை ஆராய்ந்து கூறும் நாவினையுடைய, கேள்வி முடித்த வேள்வி மாக்களை - பல்வகை நூற்கேள்விகளையும் முடித்த வேள்வி செய்தற்குரிய அந்தணரை, மாடல மறையோன் சொல்லிய முறைமையின் - மாடலனாகிய பார்ப்பான் கூறிய முறைமையானே, வேள்விச் சாந்தியின் விழாக் கொள ஏவி - வேள்விச் சாந்தியாகிய விழாவினைச் செய்ய ஏவி; பெரும்பதம் - வான் பொருள். பதம் - உணவு. நாவின்மாக்கள், கேள்வி முடித்த மாக்கள் எனத் தனித்தனி கூட்டுக. சாந்தி யென்பது 1"ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு" என்பதன்கண் வேள்வி யென்னும் பொருளதும், 2"கபாலீச் சரமமர்ந்தான் பெருஞ்சாந்தி" என்பதன் கண் விழா என்னும் பொருளதுமாகலின் வேள்வியாகிய சாந்தி யென்றாதல், சாந்தியாகிய விழா வென்றாதல் விரித்துரைக்க. தாழ்வு தீரச் செய்யப்படுவனவாகலின் அவை சாந்தியெனப்படுவன வாயின. 195-202. ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கி - ஆரிய மன்னரைப் பெயர்தற்கரிய சிறையினின்று விடுத்து, பேர் இசை வஞ்சி மூதூர்ப்புறத்து - பெரும்புகழ் பரந்த வஞ்சி நகரின் புறத்தே, தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம் பொழில் - ஆழ்ந்த நீரை வேலி யாகவுடைய தண்ணிய பொலிவுற்ற பூஞ்சோலைக்கண் உள்ள வேள் ஆவிக்கோ மாளிகை காட்டி - வேளாகிய ஆவிக்கோவின் பெயர் பொருந்திய மாளிகையை அவர்கள் இருக்குமாறு காட்டி, நன்பெரு வேள்வி முடித்ததற் பின்னாள் - நல்ல பெரிய யாகத்தினை முடித்த பிற்றை நாளில், தம் பெரு நெடுநகர்ச் சார்வதுஞ் சொல்லி - அவர் தமது பெரிய நீண்ட நகரத்தினை அடைவதுங் கூறி, அம் மன்னவர்க்கு ஏற்பன செய்க நீயென வில்லவன் கோதையை விருப்புடன் ஏவி - அவ்வாரிய வரசர்க்கு ஏற்ற தகவுகளை நீ செய்வாயாகவென்று வில்லவன் கோதையை மகிழ்ச்சியோடே ஏவி; வேளாவிக்கோ மாளிகை - வேளாகிய ஆவிக்கோவின் பெயராற் கட்டப்பட்ட மாளிகை; இது வேண்மாடம் எனவும் படும்; இது விருந்தின் மன்னர் தங்குதற்கமைத்த மாளிகை போலும்? நீக்கிக் காட்டிச் சொல்லி நீ ஏற்பன செய்கவென வில்லவன் கோதையை ஏவி யென்க. 203-206. சிறையோர் கோட்டம் சீமின் - சிறையாளர் கோட்டத் தினைத் திறந்திடுமின், யாங்கணும் கறைகெழு நாடு கறை வீடு செய்ம்மென - எவ்விடத்தும் இறை கொடுத்தற் கமைந்த நாடுகளின் இறையினை விடுதலை செய்ம்மின் என்று, அழும்பில்வேளோடு ஆயக்கணக்கரை முழங்கு நீர்வேலி மூதூர் ஏவி - அழும்பில் வேளுடனே வரிக்கூறு செய்யும் கணக்கரையும் ஒலிக்கும் நீர்நிறைந்த வயல்களையுடைய மூதூர்களிலே ஏவி; இவ்வாறே முன்னர், 1"சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதுங் கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்" எனப் பாண்டியன் செய்கை கூறினமை காண்க. அழும்பில் வேளையும் ஆயக்கணக் கரையும் மூதூர்களில் இங்ஙனஞ் செய்ம்மின் என ஏவி என்க. 207-211. அருந்திறல் அரசர் முறை செயின் அல்லது - அரிய வலியினையுடைய மன்னர் தம் நீதி செலுத்தினல்லது. பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது என - பெரும் புகழினையுடைய மகளிர்க்குக் கற்புநிலை சிறப்புறாது என்று, பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை - பண்டைப் பெரியோர் கூறிய இனிய தமிழ்நாட்டு நன்மொழியை, பார் தொழுது ஏத்தும் பத்தினியாகலின் - இவ்வுலகோர் வணங்கிப் போற்றற்குரிய கற்புடையாளாகலான், ஆர் புனை சென்னி அரசற்கு அளித்து - ஆத்திமாலை சூடிய சோழ மன்னனுக்கு ஈந்து; முறை செய்தல் - ஒழுக்கத்தினும் வழக்கினும் இழுக்கினாரை யொறுத்தல். அரசன் காவ லில்வழி பெண்டிர் கற்புச் சிறவாது என்பதனை, 2"மாதவர் நோன்பும் மடவார் கற்புங், காவலன் காவலின்றெனி னின்றால்" என்பதனானறிக. சென்னி-சோழன்; ஆர்புனை சென்னி என்பதற்கு ஆத்திமாலை புனைந்தமுடி எனலும் அமையும். பத்தினியாகலின் பண்டையோருரைத்த நல்லுரையை அரசற்களித்து என்க. அளித்தல் - அறியும்படி செய்தல்; கோவலன் ஒழுக்கத்தின் வழுவினமையால் பத்தினிக் குண்டாகிய துன்பம் கருதப்பட்டது. 212-213. செங்கோல் வளைய உயிர் வாழாமை - செவ்விய கோல் கோட உயிர்வாழாத் தன்மையை, தென்புலங்காவல் மன்னவற் களித்து - தென்னாடு புரக்கும் பாண்டியனுக்கு அளித்து; வளைய, காரணப் பொருட்டு. வாழார் என்னும் புகழினை என்க. பாண்டியர் கோல்கோடின் உயிர் வாழார் என்பது 1"செங்கோல் வளைய வுயிர் வாழார் பாண்டியர்" எனப் பின்னரும் கூறப்படுதல் காண்க. 214-217. வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும் வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை - மன்னர் தாம் கூறிய சூள் நிறைவுற்ற பின்னல்லாது அதன் முன்னர்ச் சிறிதும் கொடிய சினம் நீங்கப்பெறார் என்பதனை, வடதிசை மருங்கின் மன்னவர் அறிய - வடநாட்டு வேந்தர்கள் உணரும் வண்ணம், குடதிசை வாழுங் கொற்றவற்கு அளித்து - மேற்றிசையில் வாழும் சேர வேந்தற்கு அளித்து; அல்லதை, ஐ இடைச்சொல். விளிதல் - கெடுதல்; ஈண்டு நீங்குதல். வேந்தர் - தமிழ் மன்னரென்றுமாம். 218-221. மதுரை மூதூர் மாநகர் கேடுற - பழம்பதியாகிய மதுரைப் பெருநகர் அழிவுற, கொதியழற் சீற்றம் கொங்கையின் விளைத்து - தன் சினத்தானே வெவ்விய எரியினை முலைக் கண் தோற்று வித்து, நன்னாடு அணைந்து நளிர்சினை வேங்கைப் பொன் அணி புதுநிழற் பொருந்திய நங்கையை - நமது நல்ல நாட்டினை அடைந்து குளிர்ந்த கிளையினையுடைய வேங்கையின் பொன்போலும் அழகு செய்யும் புதிய நீழலில் தங்கிய மகளை; 2"கொதியழற் சீற்றங் கொங்கையின் விளைத்தோய்" என்றார் பதிகத்தும். பொன்போலும் புதிய மலரையணிந்த வேங்கை யென்றுமாம். 222-225. அறக்களத்து அந்தணர் ஆசான் பெருங்கணி சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று-தன்மாசனத்துக் கருத்தாக்களுள் புரோகிதனும் சோதிடனும் சிறப்புடைய சிற்பியரோடுஞ் சென்று, மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள் - தேவரும் விரும்பும் சிற்ப நூலுணர்ந்த கம்மியரால், பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து - பகுதிப்பட வகுத்த பத்தினிக்கோட்டத்தில்; முன்னரும், 1"ஆசான் பெருங்கணி யறக்களத் தந்தணர்" எனக் கூறினமை காண்க. சிறப்பு - தொழிற்சிறப்பு; அரசன்பாற்பெற்ற வரிசையுமாம். நூனெறிமாக்கள் அந்தணர் முதலியோரோடு சென்று வகுத்த பத்தினிக் கோயில் என்னலுமாம்; அரசன் அந்தணர் முதலானோருடன் சென்று என்றுரைத்தலுமாம். கரு நிலையும் பகுதி மண்டபமும் பெரு மண்டபமும் என வகைப்படலான் பால்பெற வகுத்த என்றார். 226-228. இமையவர் உறையும் இமையச் செல்வரை - வானவர் வதியும் இமயமலையின், சிமையச் சென்னித் தெய்வம் பரசி - சிமையத்துச்சியிலுள்ள கடவுளைப் போற்றி, கைவினை முற்றிய தெய்வப் படிமத்து - கைத்தொழில் மிகுந்த தெய்வப் படிமத்தின்கண், தெய்வம் பரசி முற்றிய படிமம் என்க. படிமம் - தெய்வ வடிவம். 229-234. வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டி - கைத்தொழில் வல்லார் செய்த சிறந்த அழகினையுடைய அணிகலன்களை முழுவதும் அணிந்து, பூப்பலி செய்து - அருச்சனை செய்து, காப்புக் கடை நிறுத்தி - திசைக் கடவுளரைக் கடைவாயிலினிறுத்தி, வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்து-ஓமமும் விழவும் நாள்தோறும் வகை பெறச்செய்து, கடவுள் மங்கலஞ் செய்கென ஏவினன் வட திசை வணக்கிய மன்னவர் ஏறு என்-பிரதிட்டை செய்கவென்று ஏவினான் வடநாட்டு மன்னரை வணங்கச் செய்த வேந்தர் பெருமானாகிய செங்குட்டுவன் என்க. வேள்வி - ஓமம். கடவுள் மங்கலம் - பிரதிட்டை. மன்னவரேறு நங்கையைப் பத்தினிக் கோட்டத்துத் தெய்வப்படிமத்துக் கடவுண் மங்கலஞ் செய்கென ஏவினன் என முடிக்க. இது நிலைமண்டில வாசிரியப்பா. நடுகற் காதை முற்றிற்று. 29. வாழ்த்துக் காதை (கண்ணகியைப் பிரதிட்டை செய்த பிற்றை நாளிலே செங்குட்டுவன் மண்ணரசர் திறை கேட்டிருந்த பொழுது, முன்பு கோவலன் கொலையுண்டது முதலியவற்றை மாடலன் கூறக் கேட்டோர்களுள் தேவந்தியும் கண்ணகியின் செவிலித்தாயும் அவள் அடித் தோழியும் காவிரிப்பூம்பட்டினத்தினின்று நீங்கி மதுரையை அடைந்து, அங்கே கண்ணகியைக் காணாமல் மாதரி மகள் ஐயையைக் கண்டு அவளோடும் வையைக் கரைவழியே சென்று மலைநாட்டை யடைந்து கண்ணகி கோயிலிற் புகுந்து, அங்கிருந்த செங்குட்டுவற்குத் தம்மை இன்னாரென அறிவித்துக் கண்ணகியின் பிரிவாற்றாமையால் வருந்தி அரற்றினர். அப்பொழுது கண்ணகி தெய்வ வடிவத்தோடு வெளிப்பட்டுச் செங்குட்டுவனுக்குக் காட்சி கொடுத்து வாழ்த்தினள். (இதன் கண் மூவேந்தர்களின் வாழ்த்தாகவுள்ள அம்மானைவரி, கந்துகவரி, ஊசல்வரி, வள்ளைப் பாட்டு ஆகிய செய்யுட்கள் மிக்க இன்பம் பயப்பன). உரைப்பாட்டு மடை 1. "குமரியொடு வடவிமயத் தொரு மொழிவைத் துலகாண்ட சேரலாதற்குத் திகழ்ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் சினஞ் செருக்கி வஞ்சியுள் வந்திருந்த காலை, வட ஆரிய மன்னர் ஆங்கோர் மடவரலை மாலைசூட்டி உடனுறைந்த இருக்கைதன்னில் ஒன்றுமொழி நகையினராய்த் தென்றமிழ் நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து மின்றவழும் இமய நெற்றியில் விளங்கு வில்புலிகயல் பொறித்த நாள் எம் போலும் முடிமன்னர் ஈங்கில்லை போலும் என்றவார்த்தை அங்குவாழும் மாதவர் வந்தறிவுறுத்தவிடத் தாங்கண் உருள்கின்ற மணிவட்டைக் குணில்கொண்டு துரந்ததுபோல் இமயமால்வரைக் கற்கடவுளாமென்ற வார்த்தை இடந்துரப்ப? ஆரியநாட்டர சோட்டி அவர் முடித்தலை அணங்காகிய பேரிமயக் கல்சுமத்திப் பெயர்ந்து போந்து நயந்த கொள்கையிற் கங்கைப்பேர்யாற்றிருந்து நங்கைதன்னை நீர்ப்படுத்தி வெஞ்சினந்தரு வெம்மை நீங்கி வஞ்சிமா நகர்புகுந்து நிலவரசர் நீண்முடியாற் பலர்தொழு படிமங் காட்டித் தடமுலைப் பூசலாட்டியைக் கடவுண் மங்கலஞ் செய்த பின்னாள் கண்ணகிதன் கோட்டத்து மண்ணரசர் திறைகேட்புழி, அலம்வந்த மதிமுகத்திற் சில செங்கயல் நீர் உமிழப் பொடியாடிய கருமுகில்தன் புறம் புதைப்ப அறம்பழித்துக் கோவலன்றன் வினையுருத்துக் குறுமகனாற் கொலையுண்ணக் காவலன்றன் இடஞ்சென்ற கண்ணகி தன் கண்ணீர்கண்டு மண்ணரசர் பெருந் தோன்றல் உண்ணீரற்றுயிரிழந்தமை மாமறையோன் வாய்க்கேட்டு மாசாத்துவான் தான்றுறப்பவும் மனைக்கிழத்தி உயிரிழப்பவும் எனைப் பெருந்துன்பமெய்திக் காவற்பெண்டும் அடித்தோழியும் கடவுட்சாத்தனுடன் உறைந்த தேவந்தியும் உடன் கூடிச் சேயிழையைக் காண்டுமென்று மதுரைமாநகர் புகுந்து முதிரா முலைப் பூசல் கேட்டு ஆங்கடைக்கலமிழந் துயிரிழந்த இடைக் குலமகளிடமெய்தி ஐயையவள் மகளோடும் வையையொரு வழிக்கொண்டு மாமலை மீமிசையேறிக் கோமகடன் கோயில்புக்கு நங்கைக்குச் சிறப்பயர்ந்த செங்குட்டுவற்குத் திறமுரைப்பர் மன்; தேவந்தி சொல் 2 முடிமன்னர் மூவருங் காத்தோம்புந் தெய்வ வடபே ரிமய மலையிற் பிறந்து கடுவரற் கங்கைப் புனலாடிப் போந்த தொடிவளைத் தோளிக்குத் தோழிநான் கண்டீர் சோணாட்டார் பாவைக்குத் தோழிநான் கண்டீர்; காவற்பெண்டு சொல் 3 மடம்படு சாயலாள் மாதவி தன்னைக் கடம்படாள் காதற் கணவன் கைப்பற்றிக் குடம்புகாக் கூவற் கொடுங்கானம் போந்த தடம்பெருங் கண்ணிக்குத் தாயர்நான் கண்டீர் தண்புகார்ப் பாவைக்குத் தாயர்நான் கண்டீர்; அடித்தோழி சொல் 4 தற்பயந் தாட்கில்லை தன்னைப் புறங்காத்த எற்பயந் தாட்கும் எனக்குமோர் சொல்லில்லை கற்புக் கடம்பூண்டு காதலன் பின் போந்த பொற்றொடி நங்கைக்குத் தோழி நான் கண்டீர் பூம்புகார்ப் பாவைக்குத் தோழிநான் கண்டீர்; தேவந்தி யரற்று 5 செய்தவ மில்லாதேன் தீக்கனாக் கேட்டநாள் எய்த வுணரா திருந்தேன்மற் றென்செய்தேன் மொய்குழன் மங்கை முலைப்பூசல் கேட்டநாள் அவ்வை யுயிர்வீவுங் கேட்டாயோ தோழீ அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழீ; காவற்பெண் டரற்று 6 கோவலன் றன்னைக் குறுமகன் கோளிழைப்பக் காவலன் றன்னுயிர் நீத்ததுதான் கேட்டேங்கிச் சாவதுதான் வாழ்வென்று தானம் பலசெய்து மாசாத்து வான்றுறவுங் கேட்டாயோ அன்னை மாநாய்கன் றன்றுறவுங் கேட்டாயோ அன்னை; அடித்தோழி யரற்று 7 காதலன் றன்வீவுங் காதலிநீ பட்டதூஉம் ஏதிலார் தாங்கூறும் ஏச்சுரையுங் கேட்டேங்கிப் போதியின்கீழ் மாதவர்முன் புண்ணியதா னம்புரிந்த மாதவி தன்றுறவுங் கேட்டாயோ தோழீ மணிமே கலைதுறவுங் கேட்டாயோ அன்னை; தேவந்தி ஐயையைக் காட்டி யரற்றியது 8 ஐயந்தீர் காட்சி யடைக்கலங் காத்தோம்ப வல்லாதேன் பெற்றேன் மயலென் றுயிர்நீத்த அவ்வை மகளிவடான் அம்மணம் பட்டிலா வையெயிற் றையையைக் கண்டாயோ தோழீ மாமி மடமகளைக் கண்டாயோ தோழீ; செங்குட்டுவன் கூற்று 9 என்னேயிஃ தென்னேயிஃ தென்னேயிஃ தென்னேகொல் பொன்னஞ் சிலம்பிற் புனைமே கலைவளைக்கை நல்வயிரப் பொற்றோட்டு நாவலம் பொன்னிழைசேர் மின்னுக் கொடியொன்று மீவிசும்பிற் றோன்றுமால்; செங்குட்டுவற்குக் கண்ணகியார் கடவு ணல்லணி காட்டியது 10 தென்னவன் தீதிலன் தேவர்கோன் றன்கோயில் நல்விருந் தாயினான் நானவன் றன்மகள் வென்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன் என்னோடுந் தோழிமீ ரெல்லீரும் வம்மெல்லாம்; வஞ்சிமகளிர் சொல் 11 வஞ்சியீர் வஞ்சி யிடையீர் மறவேலான் பஞ்சடி யாயத்தீ ரெல்லீரும் வம்மெல்லாம்; கொங்கையாற் கூடற் பதிசிதைத்துக் கோவேந்தைச் செஞ்சிலம்பால் வென்றாளைப் பாடுதும் வம்மெல்லாம் தென்னவன் றன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்; செங்கோல் வளைய வுயிர்வாழார் பாண்டியரென் றெங்கோ முறைநா இயம்பஇந் நாடடைந்த பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம்மெல்லாம் பாண்டியன் றன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்; ஆயத்தார் சொல் 12 வானவ னெங்கோ மகளென்றாம் வையையார் கோனவன்றான் பெற்ற கொடியென்றாள் - வானவனை வாழ்த்துவோம் நாமாக வையையார் கோமானை வாழ்த்துவாள் தேவ மகள்; வாழ்த்து 13 தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணின்நீர் கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ; வாழியரோ வாழி வருபுனல்நீர் வையை சூழு மதுரையார் கோமான்றன் தொல்குலமே; 14 மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீண்முடிமேல் ஏற்றினான் வாழியரோ, வாழியரோ வாழி வருபுனல்நீர்த் தண்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான்றன் தொல்குலமே; 15 எல்லா நாம்; காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும் பூவிரி கூந்தல் புகார்; அம்மானை வரி 16 வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன் ஓங்கரணங் காத்த வுரவோன்யா ரம்மானை ஓங்கரணங் காத்த வுரவோன் உயர்விசும்பில் தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்கா ணம்மானை சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை; 17 புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக் குறைவில் உடம்பரிந்த கொற்றவன்யா ரம்மானை குறைவில் உடம்பரிந்த கொற்றவன்முன் வந்த கறவை முறைசெய்த காவலன்கா ணம்மானை காவலன் பூம்புகார் பாடேலோ ரம்மானை; 18 கடவரைக ளோரெட்டுங் கண்ணிமையா காண வடவரைமேல் வாள்வேங்கை யொற்றினன்யா ரம்மானை வடவரைமேல் வாள்வேங்கை யொற்றினன்றிக் கெட்டுங் குடைநிழலிற் கொண்டளித்தகொற்றவன்கா ணம்மானை கொற்றவன்றன் பூம்புகார் பாடேலோ ரம்மானை; 19 அம்மனை தங்கையிற் கொண்டங் கணியிழையார் தம்மனையிற் பாடுந் தகையேலோ ரம்மானை தம்மனையிற் பாடுந் தகையெலாந் தார்வேந்தன் கொம்மை வரிமுலைமேற் கூடவே யம்மானை கொம்மை வரிமுலைமேற் கூடிற் குலவேந்தன் அம்மென் புகார்நகரம் பாடேலோ ரம்மானை; கந்துக வரி 20 பொன்னிலங்குபூங்கொடி பொலஞ்செய்கோதைவில்லிட மின்னிலங்கு மேகலைகள் ஆர்ப்பஆர்ப்ப எங்கணும் தென்னன் வாழ்கவாழ்க என்றுசென்று பந்தடித்துமே தேவரார மார்பன்வாழ்க என்றுபந் தடித்துமே; 21 பின்னுமுன்னும் எங்கணும் பெயர்ந்துவந் தெழுந்துலாய் மின்னுமின் ளிளங்கொடி வியனிலத் திழிந்தெனத் தென்னன்வாழ்க வாழ்க என்று சென்றுபந் தடித்துமே தேவரார மார்பன்வாழ்க என்றுபந் தடித்துமே; 22 துன்னிவந்து கைத்தலத் திருந்ததில்லை நீணிலம் தன்னினின்று மந்தரத் தெழுந்ததில்லை தானெனத் தென்னன்வாழ்கவாழ்கவென்று சென்றுபந்தடித்துமே தேவரார மார்பன் வாழ்க என்றுபந் தடித்துமே; ஊசல் வரி 23 வடங்கொள் மணியூசன் மேலிரீஇ ஐயை உடங்கொருவர் கைநிமிர்த்தாங் கொற்றைமே லூக்கக் கடம்பு முதல்தடிந்த காவலனைப் பாடிக் குடங்கைநெடுங் கண்பிறழ ஆடாமோ ஊசல் கொடுவிற் பொறிபாடி ஆடாமோ ஊசல்; 24 ஓரைவ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக் கார்செய் குழலாட ஆடாமோ ஊசல் கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல் 25 வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல் தென்குமரி யாண்ட செருவிற் கயற்புலியான் மன்பதைகாக் குங்கோமான் மன்னன் திறம்பாடி மின்செய் இடைநுடங்க ஆடாமோ ஊசல் விறல்விற் பொறிபாடி ஆடாமோ ஊசல்; வள்ளைப் பாட்டு 26 தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர் ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப் பாழித் தடவரைத்தோட் பாடலே பாடல் பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்; 27 பாடல்சான் முத்தம் பவழ உலக்கையான் மாட மதுரை மகளிர் குறுவரே வானவர்கோன் ஆரம் வயங்கியதோட் பஞ்சவன்றன் மீனக் கொடிபாடும் பாடலே பாடல் வேப்பந்தார் நெஞ்சுணக்கும் பாடலே பாடல்; 28 சந்துரற் பெய்து தகைசால் அணிமுத்தம் வஞ்சி மகளிர் குறுவரேவான் கோட்டாற் கடந்தடுதார்ச் சேரன் கடம்பெறிந்த வார்த்தை படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல் பனந்தோ டுளங்கவரும் பாடலே பாடல்; 29 ஆங்கு, நீணில மன்னர் நெடுவிற் பொறையன்நல் தாள்தொழார் வாழ்த்தல் தமக்கரிது சூளொழிய எங்கோ மடந்தையும் ஏத்தினாள் நீடூழி செங்குட்டுவன் வாழ்க என்று. உரைப்பாட்டு மடை உரைப்பாட்டு -உரைச் செய்யுள்; மடை - முன்னே மடுத்தது; உரைப்பாட்டாகிய மடையென்க. 1. "குமரியொடு..... திறமுரைப்பர் மன்" குமரியொடு வட இமயத்து ஒரு மொழி வைத்து உலகு ஆண்ட சேரலாதற்குத் திகழ்ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் சினஞ் செருக்கி வஞ்சியுள் வந்திருந்த காலை - தெற்கண் குமரியும் வடக்கண் இமயமுமாகிய அவ்விரண்ட னிடைப்பட்ட உலகினைத் தன் ஆணை யானே ஆண்ட சேரலாதனுக்கு விளங்கும் ஒளியினையுடைய ஞாயிற்றுச் சோழன் மகள் பெற்ற புதல்வனாகிய கொங்கரது போர்க் களத்தே களவேள்வி செய்து கங்கையாகிய பெரிய யாற்றின் கரைக்கண்ணே சென்ற செங்குட்டுவன் ஆரிய மன்னரிடத்தே சினத்தை மிகுத்து ஆண்டு நின்றும் வஞ்சி நகரத்து வந்திருந்த காலத்து; இமயத்து உலகு ஒரு மொழி வைத்து என மாறுக. ஒரு மொழி, ஆணை. ஞாயிற்றுச் சோழன் - சூரிய வங்கிசத்துச் சோழன் என்பர்; அரும்பத உரையாசிரியர். 1"சேரலாதற்கு... சோழன் றன்மகள் நற்சோணை யீன்ற மக்களிருவருள் முன்னோன்" என அடியார்க்கு நல்லார் கூறுதலின் சோழன் மகள் பெயர் சோணை யென்பது அவர் கருத்தாகும்; அதற்கு மேற்கோள் புலப்பட்டிலது. பதிற்றுப் பத்தில் 2"சோழன் மணக்கிள்ளி யீன்ற மகன்" என வருதலின், மணக்கிள்ளி யென்பது அவள் பெயராதல் வேண்டும். கொங்கர் செங்களம் வேட்டதனை, 3 "நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக், கொங்கர் செங்களத்துக் கொடுவரிக் கயற்கொடி, பகைபுறத்துத் தந்தனராயினு மாங்கவை, திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன" என முன்னர்க் கூறப்பட்டுளது. கங்கை யாற்றுக் கரை போகியது தன் தாயினைக் கங்கையில் நீராட்டுதற்குக் கொண்டு போயது போலும். வடஆரிய மன்னர் ஆங்கோர் மடவரலை மாலை சூட்டி உட னுறைந்த இருக்கை தன்னில் ஒன்று மொழி நகையினராய்த் தென்றமிழ் நாடு ஆளும் வேந்தர் செருவேட்டுப் புகன்று எழுந்து மின் தவழும் இமய நெற்றியில் விளங்கு விற்புலி கயல் பொறித்த நாள் எம்போலு முடிமன்னர் ஈங்கு இல்லைபோலும் என்ற வார்த்தை - வடநாட்டு ஆரியவரசர் அவ்வட நாட்டிலே ஓர் மங்கையை மணமுடித்துச் சேர்ந்து தங்கிய இருப்பிடத்தே தம்மில் ஒத்த சொல்லுடனே எள்ளல் நகையினை யுடையராய்த் தென்றிசைக் கண்ணதாகிய தமிழ்நாட்டினை யாளும் அரசர் போரினை விரும்பித் தருக்குற் றெழுந்து போந்து மின்னுக் கொடி படியும் இமயமலை உச்சியிற் சிறப்புற்ற வில்லும் புலியுங் கயலுமாய இவற்றை எழுதிய காலத்து எம்மையொத்த முடியுடைப் பேரரசர் இந்நாட்டிலில்லை போலும் என்று கூறிய மொழியை; ஒன்று மொழி - தம்மில் வேற்றுமை யின்றியே தமிழ் வேந் தரை இகழ்ந்துரைத்த மொழி, புகன்று - தருக்குற்று. ஈங்கில்லை யென்றது இருப்பின் பொறித்த லாற்றார் என்னுங் குறிப்பிற்று. போலும், ஒப்பில் போலி. அங்கு வாழும் மாதவர் வந்து அறிவுறுத்தவிடத்து ஆங்கண் உருள்கின்ற மணிவட்டைக் குணில் கொண்டு துரந்ததுபோல் இமயமால் வரைக் கற் கடவுளாம் என்ற வார்த்தை இடம் துரப்ப- அந்நாட்டு வாழுந் தாபதர் வந்து அவ்விடத்தே அறிவுறுத்திய காலத்து இயல்பானே உருள்கின்ற மாணிக்க வட்டினைக் குறுந்தடியார் செலுத்தியது போலப் பெரிய இமயமலைக் கல் கடவுளாம் என்று கூறிய மொழி தன்னை இடத்தினின்றுந் துரப்ப; இல்லைபோலு மென்ற வார்த்தையை அறிவுறுத்தவிடத் தென்க. மாதவர் வந்து கூறியதனை, 1"இமையத் தாபத ரெமக்கீங் குணர்த் திய, அமையா வாழ்க்கை யரசர் வாய்மொழி" என முன்னர்க் கூறியது கொண்டுணர்க. 'இமய மால்வரைக் கல் கடவுளாம் என்ற வார்த்தை' என்றது 2"விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்துக், கற்கால் கொள்ளினுங் கடவுளாகும்" என்றதனை யுட்கொண்டது. வட்டு - உண்டை; 3'அரங்கின்றி வட்டாடி யற்றே' என்ற குறளுரையிற் காண்க. இயல்பாக உருள்கின்ற வட்டினைக் குணில் கொண்டு துரந்ததுபோல் என்னும் உவமையால், மாதவர் அறிவுறுத்த பொழுதே சினம்மிக்கு மேற்செல்லக் கருதி யிருந்தானை இமயமலையிற் கல் கடவுளாம் என்ற வுரை விரைந்தேகத் தூண்டிய தென்பது பெற்றாம். துரப்பச் சென்று என ஒரு சொல் வருவிக்க. ஆரிய நாட்டு அரசு ஓட்டி அவர் முடித்தலை அணங்காகிய பேர் இமயக் கல் சுமத்திப் பெயர்ந்து போந்து நயந்த கொள்கையின் கங்கைப்பேர் யாற்று இருந்து நங்கை தன்னை நீர்ப்படுத்தி வெஞ்சினந் தரு வெம்மை நீங்கி வஞ்சிமாநகர் புகுந்து நில அரசர் நீள் முடியால் பலர் தொழு படிமம் காட்டித் தடமுலைப் பூச லாட்டியைக் கடவுள் மங்கலம் செய்த பின்னாள் கண்ணகி தன் கோட்டத்து மண்ணரசர் திறை கேட்புழி - ஆரிய நாட்டு மன்னரைப் புறங்கண்டு அம்மன்னரது முடிசூடிய தலைக்கண் தெய்வமாகிய பெரிய இமயமலைக் கல்லை ஏற்றி மீண்டு வந்து விரும்பிய கொள்கையோடே கங்கை யாற்றுக் கரையிலே தங்கிக் கடவுளுருவாய கண்ணகியை நீர்ப்படை செய்து வெவ்விய வெகுளியாகிய செற்றம் நீங்கப்பெற்று வஞ்சி நகரத்துப் போந்து வையங் காவலர் பலரும் தமது உயர்ந்த முடியானே வணங்கும் தெய்வ வடிவு செய்வித்துப் பெரிய முலையானே பூசல் செய்தவளாய கண்ணகியைப் பிரதிட்டை செய்த பின்னாளில் கண்ணகியின் கோயிலில் நிலமன்னர் செலுத்தும் திறையினைக் கேட்டிருந்த காலை; அவர் என்றது கனக விசயரை; 1"கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின் ....கனக விசயர்தங் கதிர்முடி யேற்றி" எனப் போந்தமை காண்க. கற்றெய்வ மாதலால் அணங்கென்றார். நங்கை யென்றது நங்கையின் வடிவு எழுதிய கல்லினை என்க. படிமம் - தெய்வ வடிவு. ‘வடவாரியர்' என்பது முதல் 'கடவுண் மங்கலஞ் செய்த பின்னாள்' என்பதன்காறும் முன் செய்ததனைக் கொண்டு கூறியதாக்கி யுரைக்க. அலம்வந்த மதிமுகத்திற் சில செங்கயல் நீர் உமிழப் பொடி யாடிய கருமுகில் தன் புறம்புதைப்ப அறம்பழித்துக் கோவ லன்றன் வினை யுருத்துக் குறுமகனாற் கொலையுண்ணக் காவலன் றன் இடஞ் சென்ற கண்ணகிதன் கண்ணீர் கண்டு மண்ணரசர் பெருந் தோன்றல் உண்ணீர் அற்று உயிரிழந்தமை மாமறை யோன் வாய்க் கேட்டு - சுழற்சி கொண்ட திங்கள் போலும் முகத்தில் இரண்டு செங்கயல் போலும் சிவந்த கண்கள் நீரினைச் சிந்தப் புழுதி படிந்த கரிய மேகம் போலுங் கூந்தல் தனது முதுகினை மறைக்க அறக் கடவுளை இகழ்ந்து கோவலன் தனது வினை பயனளிக்கத் தோன்றியதனால் கீழோனொருவனால் கொலை செய்யப்பட அதன் பொருட்டுப் பாண்டிய மன்னனிடம் போய் வழக்குரைத்த கண்ணகியின் கண்ணீரைக் கண்டு நில மன்னருட் பெருந் தலைவனாய பாண்டியன் உள்ளத்தின் இயல்பு கெட்டு உயிரிழந்ததனை மாடலனாகிய அந்தணன் கூறக் கேட்டு; 2"அறனெனு மடவோய் யான் அவலங்கொண்டழிவலோ" என்றதனால் அறம்பழித்தமை அறிக. உருத்து - உருத்தலான். குறு மகன்- கீழ் மகனாகிய பொற்கொல்லன்.மறையோன் - மாடலன்; அவன் வாய்க் கேட்டமை 3"வலம்படு தானை மன்னவன் றன்னை . . . . என்பதிப் பெயர்ந்தே னென்றுயர் போற்றிச். செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க் குரைக்க" என்றமையாலறிக. உமிழப் புதைப்பப் பழித்துக் காவலனிடஞ் சென்ற கண்ணகி என்க. மாசாத்துவான் தான் துறப்பவும் மனைக்கிழத்தி உயிர் இழப்பவும் எனைப் பெருந்துன்பம் எய்திக் காவற் பெண்டும் அடித் தோழியும் கடவுட் சாத்துனுடன் உறைந்த தேவந்தியும் உடன்கூடிச் சேயிழையைக் காண்டும் என்று மதுரைமா நகர் புகுந்து- மாசாத்துவான் துறவு பூணவும் அவன் மனைவி உயிர்துறக்கவும் மிக்க பெருந் துன்பமுற்றுக் காவற்பெண்டும் அடித்தோழியும் கடவுளாகிய சாத்தனை மணந்து அவனுடன் வாழ்ந்த தேவந்தி யும் ஒருங்கு சேர்ந்து கண்ணகியைக் காண்போம் என்று கூறி மதுரைமா நகரத்தை அடைந்து; மாசாத்துவான் துறந்ததும் அவன் மனைவி உயிரிழந்ததும், 1"மைந்தற் குற்றது மடந்தைக் குற்றதுஞ், செங்கோல் வேந்தற் குற் றதுங் கேட்டுக், கோவலன் றாதை கொடுந்துய ரெய்தி ... துறந்தோர் தம்முன் றுறவி யெய்தவும்" எனவும், "துறந்தோன் மனைவி மகன் றுயர் பொறாஅ, ளிறந்த துயரெய்தி யிரங்கிமெய் விடவும்" எனவும் முன்னர்க் கூறப்பட்டமை காண்க. கடவுட் சாத்தனுட னுறைந்த தேவந்தி என்றது சாத்தனாகிய ஐயனை மணந்து அவனோடு வாழ்ந்த தனை; இது, 2"தேவந்திகையைத் தீவலஞ் செய்து, நாலீராண்டு நடந்ததற் பின்னர் . . . . நீவா வென்றே நீங்கிய சாத்தன்' என மேல் வருதலா னறியப்படும். காவற்பெண்டு - செவிலி. அடித் தோழி - சிலதி. தேவந்தி - கண்ணகியின் பார்ப்பனத் தோழி. முதிரா முலைப்பூசல் கேட்டு ஆங்கு அடைக்கலம் இழந்து உயிர் இழந்த இடைக்குல மகளிடம் எய்தி ஐயை அவள் மகளோடும் வையை யொருவழிக் கொண்டு மாமலை மீமிசையேறிக் கோமகள் தன் கோயில்புக்கு நங்கைக்குச் சிறப்பு அயர்ந்த செங்குட்டுவற்குத் திறம் உரைப்பர்மன் - கண்ணகி தன் இளங் கொங்கையாற் செய்த பூசலைக் கேள்வியுற்று அப்பொழுதே அடைக்கலப் பொருளை இழந்ததனால் உயிர்துறந்த இடையர் குலமகளாய மாதரியின் இருக்கையை யடைந்து அம் மாதரியின் மகளாகிய ஐயையோடும் வையை யாற்றுக் கரை வழியே சென்று மலையின் உச்சியிலேறிக் கண்ணகி கோயிலை அடைந்து பத்தினிக் கடவுட்கு விழாச் செய்த செங்குட்டுவனுக்குத் தம் வரலாறு கூறுவார்; முதிரா முலைப்பூசல் என்றது மதுரையை யெரித்ததனை யென்க. மாதரி உயிரிழந்தமை, 3"தாதெரு மன்றத்து மாதரி யெழுந்து. . . . அடைக்கல மிழந்தே னிடைக்குல மக்காள், குடையுங் கோலும் பிழைத்த வோவென, இடையிரு ளியாமத் தெரியகம் புக்கதும்" என்பதனால் அறியப்படும். மாமலை -திருச்செங்குன் றென்னும் மலை. செங்குட்டுவன் கண்ணகிதன் கோட்டத்து மண்ணரசர் திறை கேட்புழிக் காவற்பெண்டும் அடித்தோழியும் தேவந்தியும் ஐயையோடு கோயில்புக்கு உரைப்பர் என்க. மன், அசை. தேவந்தி சொல் 2. "முடிமன்னர் மூவருங் . . . தோழி நான் கண்டீர்" முடிமன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ வடபேர் இமய மலையிற் பிறந்து - தமிழ்நாட்டு முடியுடைப் பேரரசர் மூவரும் பேணிக் காக்குந் தெய்வத் தன்மையுடைய வடதிசைக் கண்ண தாய இமயமலையிற்றோன்றி, கடுவரற் கங்கைப் புனல் ஆடிப் போந்த - விரைந்து வருதலுடைய கங்கை நீரில் மூழ்கிப் போந்த, தொடி வளைத் தோளிக்குத் தோழி நான் கண்டீர் - வளைந்த வளையணிந்த தோளினையுடையாட்கு யான் தோழி யாவேன்,சோணாட்டார் பாவைக்குத் தோழி நான் கண்டீர் - சோழ நாட்டார் புதல்வியாகிய இவட்கு யான் தோழியாவேன்; மூவருங் காத்தோம்பு மலை - மூன்று மன்னருந் தமது இலச் சினையிட்டுக் காக்கும் மலை. தொடிவளை - வளைந்த வளையல். கண்ணகியின் மகளுருத் தோற்றத்தைச் சோணாட்டார் பாவை என்பதனாலும், தெய்வ வுருத் தோற்றத்தை மலையிற் பிறந்து என்பதனாலும் குறிப்பிட்டாள். கண்டீர், முன்னிலையசை. பின் வருவனவும் இன்ன. காவற்பெண்டு சொல் 3. "மடம்படு சாயலாள் ... தாயர் நான் கண்டீர்" மடம்படு சாயலாள் மாதவி தன்னைக் கடம்படாள் - அழகு தோன் றும் மென்மைத் தன்மையுடையளாய மாதவியை வெகுளா ளாய்,காதற் கணவன் கைப்பற்றி - அன்பு நிறைந்த தன் கணவனது கையினைப் பிடித்து, குடம்புகாக் கூவற் கொடுங்கானம் போந்த - குடம் புகுதலில்லாத கிணறுகளையுடைய கொடிய காட்டிடத்தே சென்ற, தடம்பெருங் கண்ணிக்குத் தாயர் நான் கண்டீர் - மிகப் பெரிய கண்ணினை யுடையாட்கு நான் செவிலித் தாயாவேன், தண் புகார்ப் பாவைக்குத் தாயர் நான் கண்டீர் - தண்ணிய புகார் நகரத்துத் தோன்றிய பாவைக்கு நான் செவிலித் தாயாவேன்; கடம் படாள்- வெகுளுங் கடனில்லாளாய். மடம் - அழகு. நீரின்மையால் இறைப்பா ரின்மையின் குடம் புகாக் கூவல் என்றார். சாயலாளாய கண்ணி யென்க; சாயலாளாய மாதவி யெனலுமாம். தாயர் - செவிலித்தாய்; ஒருமை. அடித்தோழி சொல் 4. "தற்பயந்தாட்கு .... தோழி நான் கண்டீர்" தற்பயந்தாட்கு இல்லை தன்னைப் புறங்காத்த எற்பயந் தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை - தன்னை ஈன்றாட்கும் ஒரு சொற் கூறாளாய்த் தன்னைக் காத்தோம்பிய செவிலியாகிய என்னை ஈன் றாட்கும் எனக்கும் ஓர் சொற் கூறாளாய், கற்புக் கடம்பூண்டு காதலன் பின்போந்த - கற்பினைக் கடனாக மேற் கொண்டு கண வன் பின்னே போந்த, பொற்றொடி நங்கைக்குத் தோழி நான் கண்டீர் - பொன்னாலாய தொடியினை யுடையாட்கு யான் தோழியாவேன், பூம்புகார்ப் பாவைக்குத் தோழி நான் கண்டீர் - பொலிவினையுடைய புகாரில் தோன்றிய பாவைக்கு யான் தோழி யாவேன்; தற்பயந்தாள் - நற்றாய்; பயந்தாட்குமென உம்மை விரிக்க, செவிலியின் மகளே தோழியாதல் முறைபற்றி, "தன்னைப் புறங் காத்த வெற்பயந்தாட்கும்" என்றாள். 'தற்பயந்தாட்கில்லை' என்ற வழி, ஓர் சொல் என்பது கூட்டியுரைக்க. உம்மைகள் எண்ணும்மை யோடு சிறப்பும்மையுமாம். தேவந்தி யரற்று 5. "செய்தவ மில்லாதேன் . . . தோழீ" செய்தவம் இல்லாதேன் தீக்கனாக் கேட்ட நாள் - முன்னை அறஞ் செய்திலேனாகிய யான் தீய கனவினை நீயுரைக்கக் கேட்ட அந்நாளில், எய்த வுணராது இருந்தேன் மற்று என் செய்தேன் - பொருந்த அறியாதே யிருந்த யான் என்ன தவறிழைத்தேன், மொய் குழல் மங்கை முலைப்பூசல் கேட்ட நாள் - செறிந்த கூந் தலையுடைய நங்கையின் முலையாற் செய்த பூசலைக் கேட்ட, நாளில், அவ்வை உயிர் வீவுங் கேட்டாயோ தோழீ - தோழீ தாய் உயிர் நீத்ததனைக் கேட்டாயோ, அம்மாமி தன் வீவுங் கேட்டாயோ தோழி - அம்மாமியின் இறப்பினையும் கேட்ட னையோ; தீக்கனாக் கேட்டதனைக் 1கனாத்திற முரைத்த காதையிற் காண்க. மங்கை, முன்னிலை. முலைப்பூசல் - மதுரையை எரித்தமை. அவ்வை - கண்ணகியின் தாய். அம்மாமி - மாமன் மனைவி; கோவலன்றாய். காவற்பெண் டரற்று 6. "கோவலன்றன்னை . . . கேட்டாயோ வன்னை" கோவலன் றன்னைக் குறுமகன் கோள் இழைப்ப - கோவலனைக் கீழோனாய பொற்கொல்லன் தவற்றினைச் செய்ய அதனானே, காவலன் தன்னுயிர் நீத்ததுதான் கேட்டு ஏங்கி-பாண்டியன் தனது உயிர் விட்டமையைக் கேள்வியுற்று ஏக்கங் கொண்டு, சாவதுதான் வாழ்வு என்று- இவ் வாழ்க்கை கெடுவதாக வென்று கூறி, தானம் பலசெய்து மாசாத்துவான் துறவும்கேட் டாயோ அன்னை - பல தானங்களைச் செய்து மாசாத்துவான் துறவு பூண்டதனையும் அன்னாய் கேட்டனையோ, மாநாய்கன் தன் துறவும் கேட்டாயோ அன்னை - மாநாய்கன் துறவினையும் அன்னாய் கேட்டனையோ; கோள் - தவறு, கொலை, வாழ்வு சாவதுதான் என்க. 1"அன்னை யென்னை யென்றலு முளவே" என்பதனாற் செவிலி கண்ணகியை அன்னை யென்றாள், இனி, தெய்வமாகி நிற்குமுறை நோக்கி இங்ஙனங் கூறினாளெனினும் அமையும். அடித்தோழி யரற்று 7. "காதலன்றன் . . . கேட்டாயோ தோழீ" காதலன் தன் வீவும் காதலி நீ பட்டதூஉம் ஏதிலார் தாம் கூறும் ஏச்சு உரையுங் கேட்டு ஏங்கி - காதலனாய கோவலனது இறப்பி னையும் காதலியாகிய நீ எய்திய துன்பத்தினையும் அயலார் கூறும் பழிப்புரையினையுங் கேட்டு ஏக்கமுற்று, போதியின்கீழ் மாதவர் முன் புண்ணியதானம் புரிந்த மாதவி தன் துறவும் கேட்டாயோ தோழீ - போதி மரத்தின் நிழலிடத்துள்ள முனிவர்முன்னர் புண்ணியத்தையும் தரும தானத்தையும் செய்த மாதவியின் துறவையும் தோழீ கேட்டனையோ, மணிமேகலை துறவும் கேட் டனையோ தோழீ - அவள் மகள் மணிமேகலையின் துறவினையும் தோழீ கேட்டனையோ; ஏச்சுரை - கோவலனிறந்ததற்கும் கண்ணகி துயருழந்தமைக் கும் இவளே காரணமாவாள் என்னுமுரை. மாதவி துறவு பூண் டமை, 2 "கோவல னிறந்தபின் கொடுந்துய ரெய்தி, மாதவி மாதவர் பள்ளியு ளடைந்ததும்" என்பதனாலறியப்படும். மாதவர் - அறவண வடிகள்.. தேவந்தி ஐயையைக் காட்டி யரற்றியது 8. "ஐயந்தீர் காட்சி . . . கண்டாயோ தோழீ" ஐயந்தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப வல்லாதேன் - கவுந்தி யடிகள் அளித்த அடைக்கலப் பொருளைப் பேணிக்காத் தற்கு மாட்டாத யான், பெற்றேன் மயல் என்று உயிர்நீத்த - பித்துற்றேன் என்று கூறி உயிர்விட்ட, அவ்வை மகள் இவள்தான் அம் மணம் பட்டிலா வை எயிற்று ஐயையைக் கண்டாயோ தோழீ- மாதரியின் மகளாகிய வதுவை செய்யப் பெறாத இக் கூரிய பற்களையுடைய ஐயையைத் தோழீ பார்த்தனையோ, மாமி மடமகளைக் கண்டாயோ தோழீ-மாமியின் மடப்பத்தை யுடைய மகளைத் தோழீ பார்த்தனையோ; ஐயந்தீர் காட்சி - தெளிந்த அறிவு; அதனையுடைய கவுந்தியடி கட்கு ஆகுபெயர். மயல் - பித்து. அவ்வை என்றது ஈண்டுத் தாய் என்னும் பொருள் குறியாது முதியாள் என்பது குறித்து நின்றது. மாதரி இறந்தமையால் மணம் படுத்துவாரின்மையின், மணம்பட்டிலா ஐயை என்றாள். வை - கூர்மை. முன்னர், ஐயையைக் கண்ணகியின் 1"நாத்தூண்" எனக் கூறினமையான், கண்ணகிக்கு மாதரி மாமி யாயினாள் என்க. செங்குட்டுவன் கூற்று 9. "என்னேயிஃ தென்னே ... தோன்றுமால்" என்னே யிஃது என்னே யிஃது என்னே கொல்- ஈதென்ன வியப்பு, பொன்னஞ் சிலம்பிற் புனைமேகலை வளைக் கை - பொன்னாலாகிய அழகிய சிலம்பினையும் புனையப்பட்ட மேகலையினையும் வளைசேர்ந்த கையினையும், நல்வயிரப் பொன் தோட்டு நாவலம் பொன்னிழை சேர் - குற்றமற்ற வயிரம் பதித்த பொற்றோட்டினையும் சாம்பூநதப் பொன்னினாலாகிய ஏனை அணிகளையும் உடைய, மின்னுக்கொடி ஒன்று மீவிசும்பில் தோன்றுமால் - ஓர் மின்னற்கொடி உயர்ந்த வானத்திடத்துக் காணப்படுகின்றது; அடுக்கு வியப்பு மிகுதியை உணர்த்திற்று. நாவலம் பொன் - சாம்பூநதமென்னும் பொன். மின்னுக்கொடி என்றது கண்ணகியை. செங்குட்டுவற்குக் கண்ணகியர் கடவுணல்லணி காட்டியது 10. "தென்னவன் . . . வம்மெல்லாம்" தென்னவன் தீது இலன் தேவர்கோன் தன் கோயில் நல்விருந்து ஆயினான் - பாண்டியன் குற்றமுடையனல்லன் ஆகலான் அவன் இந்திரன் கோயிற்கண்ணே நல்ல விருந்தினன் ஆயினான், நான் அவன்றன் மகள் - நான் அப் பாண்டியன் புதல்வி யாவேன், வென்வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன் - வென்றி வேலினை யுடையோனாய முருகனது மலையின்கண் விளையாடலை யான் ஒழியேன், என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம் - தோழிமீர் நீவிர் யாவிரும் என்னுடன் வாரீர்; 1"எம்முறு துயரஞ் செய்தோ ரியாவதுந், தம்முறு துயரமிற் றாகுக வென்றே, விழுவோ ளிட்ட வழுவில் சாபம்" பட்டமையான் தென்னவன் றீதிலன் என்றாள். கோயில் - இந்திரன் இருக்கை. மக்கள் யாக்கையிற் கொண்ட வெகுளி யடங்கிக் கடவுள் யாக்கை பெறுதற்குக் காரணமாயினான் என்பது கொண்டு. நான் அவன் மகள் என்றாள். வம் - வம்மின். எல்லாம் - எல்லீரும்; அடுக்காகக் கொள்க; பின் வருவனவும் இன்ன. வஞ்சிமகளிர் சொல் 11. "வஞ்சியீர் . . . வம்மெல்லாம்." வஞ்சியீர் வஞ்சி இடையீர் மறவேலான் பஞ்சுஅடி ஆயத்தீர் எல்லீரும் வம்மெல்லாம்-வஞ்சி நகரத்து மங்கைமீர் வஞ்சிபோலும் இடையுடையீர் வலிமிக்க வேற்படையை யுடையான்றன் செம்பஞ் சூட்டிய அடியினையுடைய தோழிமீர் எல்லீரும் வம்மின், கொங்கையாற் கூடற்பதி சிதைத்துக் கோவேந்தைச் செஞ் சிலம்பால் வென்றாளைப் பாடுதும் வம்மெல்லாம் - தன் முலைக் கண் எழுந்த தீயானே மதுரை நகரினை அழித்து அந்நகரின் பேரரசனைத் தனது செவ்விய சிலம்பானே வென்றி கொண்டா ளைப் பாடுவோம் நீவிர் யாவிரும் வம்மின், தென்னவன்றன் மகளைப் பாடுதும் வம்மெல்லாம் - பாண்டியன் மகளைப் பாடுவோம் நீவிர் யாவிரும் வம்மின், செங்கோல் வளைய உயிர்வாழார் பாண்டியர் என்று எங்கோ முறைநா இயம்ப - பாண்டிய மன்னர் தமது செங்கோல் வளையின் உயிரோடு கூடி வாழ்தலைச் செய்யார் என எமது மன்னனாய சேரனது முறைமையினை யுடைய நாவானது கூற, இந்நாடு அடைந்த பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம்மெல்லாம் - இந்நாட்டினை யடைந்த பசிய தொடியினையுடைய பாவையைப் பாடுவோம் யாவிரும் வம்மின், பாண்டியன்றன் மகளைப் பாடுதும் வம்மெல்லாம் - பாண்டியன் மகளைப் புகழ்ந்து பாடுவோம் யாவிரும் வம்மின்; இதிற் கூறப்பட்டவர் செங்குட்டுவன் பரிகரத்தின் மகளிர். பாண்டியர் செங்கோல் வளைய உயிர் வாழார் என்பதனை, 1“செங்கோல் வளைய வுயிர் வாழாமை, தென்புலங் காவன் மன்னவற் களித்து" என முன்னர்க் கூறியதூஉங் காண்க. முன்னர்ப் பாண்டியன் உயிர்நீத்தமையை இவன் புகழ்ந்தபடி கருதி ''எங்கோ முறை நா வியம்ப" என்றார். ஆயத்தார் சொல் 12. ‘வானவனெங்கோ . . . மகள்" வானவன் எங்கோ மகள் என்றாம் - சேரனாகிய எம் அரசனுடைய புதல்வியென்று கூறினேம் நாம், வையையார்கோன் அவன்றான் பெற்ற கொடி என்றாள் - அவள்தான் பாண்டியன் பெற்ற மகள் என்றாள், வானவனை வாழ்த்துவோம் நாம் ஆக - நாம் நம்மரசனாகிய சேரனை வாழ்த்துவோமாக, வையையார் கோமானை வாழ்த்துவாள் தேவமகள் - தெய்வமாகிய கண்ணகி பாண்டியனை வாழ்த்தாநிற்பள்; கோனாகிய அவன் என்க. நாம் வாழ்த்துவோமாக எனப் பிரித் துக் கூட்டுக. சேரன் பிரதிட்டித்தமையால் ''எங்கோ மகளென் றாம்" என்று கூறினார். தேவமகள் வாழ்த்துவாளாக நாம் வாழ்த்து வோம் எனலுமாம். வாழ்த்து 13. ‘தொல்லை . . . தொல் குலமே" தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணின் நீர் கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ - முன்னைத் தீவினை காரணமாகத் துன்பமுழந்த கண்ணகியின் கண்ணினின்றொழு கும் நீர் கொல்லத் தன் உயிரையிழந்த மன்னர் மன்னன் வாழ் வானாக, வாழியரோ வாழி வருபுனல் நீர் வையை சூழும் மதுரை யார் கோமான்றன் தொல்குலமே-எஞ்ஞான்றும் வற்றா தொழுகும் நீரினையுடைய வையையாறு சூழ்ந்த மதுரைப் பதியார்க் கரசனது தொன்றுதொட்டு வருங் குலம் நீடு வாழ்வதாக; கண்ணினீர் கொல்ல வுயிர் கொடுத்த என்றது அவளுற்ற துயரினைப் பொறாது இறந்ததனை; 1 “கண்ணகி தன் கண்ணீர் கண்டு மண்ணரசர் பெருந் தோன்ற லுண்ணீரற் றுயிரிழந்தமை" என முன்னர்க் கூறியதுங் காண்க. தொல்குலம்-படைப்புக் காலந்தொட்டு வருங் குலம்; 2''வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி, பண் பிற் றலைப்பிரித லின்று" என்னுங் குறளுரையிற் பழங்குடி என்பதற்குச் சேர சோழ பாண்டிய ரென்றாற்போலப் படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வருங் குடி எனப் பரிமேலழகர் உரைத்தமை காண்க. 14. “மலையரையன் . . . தொல்குலமே" மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீண்முடி மேல் ஏற்றினான் வாழியரோ-மலையரசனாகிய இமவான் பெற்ற இளமை பொருந்திய பாவையை நிலமாளும் மன்னரது நெடிய முடியின்கண் சுமத்தினோன் நீடு வாழ்க, வாழியரோ வாழி வருபுனல்நீர் ஆன்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான் றன் தொல்குலமே - அறாது ஒழுகும் நீர்மையினையுடைய நீர் மிக்க ஆன் பொருந்தம் சூழ்ந்த வஞ்சி நகரத்தார் தலைவனது பழங்குலம் நீடுழி வாழ்வதாக; இமயமலைக் கற்கொணர்ந்து படிவஞ் செய்தமையான், “மலை யரையன் பெற்ற மடப்பாவை" என்றார். நிலவரசர் - கனகனும் விசயனும். 15. "எல்லா நாம் - தோழீ நாம்;" காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும் பூவிரி கூந்தல் புகார்-காவிரி சூழ்ந்த சோணாடுடையானைப் பாடுவேம் மலர்மிக்க கூந்தலை யுடையாய் புகார் நகரத்தினைப் புகழ்ந்து பாடுவேம்; கூந்தல், விளி. புகார் பாடுதும் என்க. புகார் என்பதன்கண், இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. 16. "வீங்குநீர் . . . அம்மானை" வீங்குநீர் வேலி உலகு ஆண்டு விண்ணவர்கோன் ஓங்கு அரணம் காத்த உரவோன் யார் அம்மானை - கடலை எல்லையாகக் கொண்ட உலகினை ஆட்சி செய்து இந்திரனுடைய உயர்ந்த அரணினைக் காத்த வலியோன் யார், ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர்விசும்பில் தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன் காண் அம்மானை - உயர்ந்த மதிலினைக் காத்த வலியோன் யாவ னென்னின் உயர்ந்த வானின்கண் அசைகின்ற மூன்று மதிலினை அழித்த சோழனாவான், சோழன் புகார் நகரம் பாடேலோர் அம்மானை - அத்தகைய சோழனது புகார் நகரத்தினைப் புகழ்ந்து பாடுக; வீங்குநீர் - கடல், பாடு - பாடுவோமாக என்றலுமாம். ஏலும் ஓரும் அசை. பாடு, வியங்கோள்; 1‘பெறுக நன் மணம் விடு பிழை மணமெனவே' என்ற விடத்து விடு என்பது வியங்கோட் பொருளில் வருதல் காண்க. அம்மனை யென்பது பல்வரிக் கூத்துள் ஒன்றாகிய மகளிர் விளையாட்டு; விளையாடுங்கால் ஒருவர் கருதியதோர் பொருள்பற்றி வினாவுதலும், மற்றொருவர் அதற்கு விடை கூறுதலுமாக அம்மானை யென்னுஞ் சொல்லினை யமைத்து அம்மனைச் செய்யுள் பாடுதல் மரபு; வினாவின்றியும், அம்மானாய் எனவமைத்துப் பாடுதலுண்டு. வேட்கை மிகுதியால் அம்மனை முன்னிலையாகச் சோழனைப் பாடினாரென்க. 17. "புறவுநிறை . . . அம்மானை" புறவு நிறை புக்குப் பொன்னுலகம் ஏத்தக் குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார் அம்மானை-புறா வொன்றன் பொருட்டுத் துலாத்தின்கண் ஏறி விண்ணவர் போற்றத் தன் உடம்பினை அரிந்த மன்னவன் யார், குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த கறவை முறை செய்த காவலன்காண் அம்மானை - தன்னுடம் பினை யரிந்த மன்னவன் யாவனென்னின் வாயிலின் முன்வந்த ஆவின் பொருட்டுத் தன் மகன்மீது தேர்க் காலைச் செலுத்தி முறை செய்த வேந்தனான்,காவலன் பூம் புகார் பாடேலோர் அம்மானை-அத்தகைய மன்னனது பொலிவு பெற்ற புகார் நகரினைப் புகழ்ந்து பாடுக; குறைவுஇல் உடம்பு-அரச இலக்கணத்திற் குறைவு படாத உடம்பு. புறவு நிறை புக்கதனையும் கறவை முறை செய்ததனையும் முன்னர் 2 வழக்குரை காதையில் உரைத்தமையுங் காண்க. 18. "கடவரைகள் . . . அம்மானை" கடவரைகள் ஓர் எட்டும் கண்ணிமையா காண வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் யார் அம்மானை - திசை யானைகள் எட்டும் தம் கண் இமைக்கப் பெறாதனவாய் வெருவிப் பார்க்க இமயமலை நெற்றியில் நீண்ட புலியினை எழுதியோன் யார், வட வரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும் குடைநிழலில் கொண்டு அளித்த கொற்றவன் காண் அம்மானை - இமயமலையில் நீண்ட புலியினைப் பொறித்தோன் எட்டுத் திக்குகளையும் தம் குடை நிழலில் வைத்துக் காத்த மன்னனாவான், கொற்றவன் றன் பூம்புகார் பாடேலோர் அம்மானை - அத்தகைய மன்னனது பொலிவுற்ற புகார் நகரினைப் புகழ்ந்து பாடுக; கடவரை - மதமலை; யானை; வெளிப்படை. 19. "அம்மனை தங்கையில் . . . அம்மானை" அம்மனை தம் கையிற் கொண்டு அங்கு அணியிழையார் தம் மனையிற் பாடும் தகையேலோர் அம்மானை - அழகு செய்யும் அணி கலன்களையுடைய மடவார் தம் மனையின்கண் அம்மனை யாடுங்காயைத் தமது கையிலே கொண்டு பாடாநிற்பர், தம் மனையிற் பாடும் தகையெலாம் - அவர் அங்ஙனம் பாடும் இயல்பெல்லாம், தார்வேந்தன் கொம்மை வரி முலைமேற் கூடவே அம்மானை - ஆத்தி மாலையையுடைய சோழ மன்னன் தமது திரண்ட தொய்யிலையுடைய முலையிடத்துக் கூடுதற்கேயாம், கொம்மை வரி முலைமேற் கூடில் குலவேந்தன் அம்மென் புகார் நகரம் பாடேலோர் அம்மானை - அங்ஙனம் அவன் கூடினால் அவ்வேந்தனது அழகிய புகார் நகரத்தினைப் புகழ்ந்து பாடுகம்; இஃது அம்மனை யாடுகின்றாரைக் கண்ட பின்பு தாமும் அம்மனையாடுகின்றார் கூற்றாகவுள்ளது. பாடா நிற்பர் என முடித்து அங்ஙனம் பாடு மியல்பெல்லாம் கூடவே யென்றுரைக்க. அவன் கூடின் யாமும் பாடுவேமாக என்க. கந்துக வரி 20. "பொன்னிலங்கு . . . பந்தடித்துமே" பொன்இலங்கு பூங்கொடி-விளங்கும் பொற்பூங்கொடி போல் வாய், பொலம் செய்கோதை வில்லிட-பொன்னாற் செய்த மாலை ஒளிவிடவும், மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப - மின் போல் விளங்கும் மேகலைகள் ஒலிக்கவும், எங்கணும் தென்னன் வாழ்கவாழ்க என்று சென்று பந்து அடித்துமே - எவ்விடத்தும் பாண்டியன் வாழ்வானாகவென்று வாழ்த்திச் சென்று பந்தடிப் போம், தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே - தேவர்க்கரசன் வஞ்சத்தால் இட்ட ஆரமணிந்த மார்பினையுடைய பாண்டியன் வாழ்கவென்று வாழ்த்திப் பந்தடிப்போம்; பொன்னிலங்கு பூங்கொடி, விளி. எங்கணுஞ் சென்று என்க. பந்து - தெறிக்கும் பந்து. தேவர் ஆரமிட்டதனை, 1''தேவர்கோன் பூணாரந் தென்னர் கோன் மார்பினவே" என முன்னர்க் கூறிய தனானும் அறிக. அடுக்குகள் பன்மையும் உவகையும் பற்றியன. அடித்தும், தன்மைப் பன்மை எதிர்கால முற்று. கந்துகம் - பந்து. இங்ஙனம் பாடிக்கொண்டு, பந்தாடுவரென்க. 21. "பின்னுமுன்னும் . . . பந்தடித்துமே" பின்னும்முன்னும் எங்கணும் பெயர்ந்து உவந்து எழுந்து உலாய் மின்னு மின்னிளங்கொடி வியன் நிலத்து இழிந்தென - மின்னுகின்ற கோமள மின்னற்கொடி பெரிய நிலத்து இறங்கிய தென்னப் பின்னிடத்தும் முன்னிடத்தும் மற்றெவ்விடத்தும் சென்று மகிழ்வு கொண்டு துள்ளி உலாவி, தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே - பாண்டியன் நீடு வாழ்வானாக வென்று வாழ்த்திப் பெயர்ந்து பந்தடிப்போம், தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே - தேவர்களது ஆரம் பூண்ட மார்பினை யுடையான் வாழ்கவென்று வாழ்த்திப் பந்தடிப்போம்; கொடி இழிந்தென உலாய் என்க. 22. "துன்னி வந்து . . . பந்தடித்துமே" துன்னி வந்து கைத்தலத்து இருந்தது இல்லை நீள்நிலந் தன்னில் நின்றும் அந்தரத்து எழுந்தது இல்லை தான் என - அணுகிவந்து கையிடத்திருந்தது மில்லை நிலத்தினின்றும் வானத்து எழுந்த தும் இல்லை என்று கூறும் வண்ணம், தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே - பாண்டியன் வாழ்வானாக வென்று கூறிச் சென்று பந்தடிப்போம், தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே - தேவர்களது ஆரம்பூண்ட மார்பினை யுடையான் வாழ்வானாகவென்று கூறிப் பந்தடிப்போம்; கைத்தலத் திருந்ததில்லை. நீணிலந்தன்னி னின்று மெழுந்த தில்லை என்றது விரைவுபற்றி என்க. இல்லை இல்லையெனச் சென்று பந்தடித்தும் என்க. ஊசல் வரி 23. "வடங்கொண்மணி . . . ஊசல்" வடங்கொள் மணியூசல் மேல் இரீஇ ஐயை யுடங்கு ஒருவர் கை நிமிர்த்து ஆங்கு ஒற்றை மேல் ஊக்க - வடங்களைக் கொண்ட அழகிய ஊசல் மீதிருத்தி ஐயையுடன் நின்றாரிலொருவர் கையை நிமிர்த்து ஒற்றைத் தாளத்துடன் மேலே செலுத்த, கடம்பு முதல் தடிந்த காவலனைப் பாடிக் குடங்கை நெடுங்கண் பிறழ ஆடாமோ ஊசல் - கடம்பின் அடியை எறிந்த மன்னனைப் புகழ்ந்து பாடி அகங்கை போன்ற நெடிய கண்கள் பிறழா நிற்க ஊசல் ஆடுவோம், கொடுவிற் பொறிபாடி ஆடாமோ ஊசல் - வளைந்த வில்லின் இலச்சினையைப் பாடி ஊசல் ஆடுவோம்; மணியூசல்-மாணிக்கம் பதித்த வூசலென்றுமாம். இரீஇ-இருந்து எனத் தன்வினையுமாம். ஐய வென்பது பாடமாயின் மெல்ல வென்றாகும். உடங்கு - உடன். ஒற்றை - ஏகதாளம். ஊக்க - நூக்க; தள்ள. விற்பொறி - இமயத்தில் வில்லிலச்சினையிட்டமை. ஆடுவாம் என்பது ஆடாம் என மருவிற்று; ஓகாரத்தை எதிர்மறை யாக்கி இரண்டெதிர்மறை ஓருடன்பா டாயிற்று என்னலுமாம். 24. "ஓரைவர் . . . ஊசல்" ஓரைவர் ஈரைம்பதின்மர் உடன்று எழுந்த போரில் - ஐவரும் நூற்றுவரும் தம்முள் வெகுண்டு முற்பட்டுச் செய்த செருவில், பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த சேரன் பொறையன் மலையன் திறம்பாடி - பெருஞ் சோறாகிய மிக்க உணவை வரையாது கொடுத்த சேரனது இயல்பினைப் புகழ்ந்து, கார்செய் குழல்ஆட ஆடாமோ ஊசல் - முகிலையொத்த கூந்தல் அலையும்படி ஊசல் ஆடுவோம், கடம்பு எறிந்தவா பாடி ஆடாமோ ஊசல் - கடம்பு தடிந்தவாற்றினைப் புகழ்ந்து ஊசலாடுவோம்; ஐவர் - பாண்டவர் ஐவர்; ஈரைம்பதின்மர் - கௌரவர் நூற்றுவர்; இவை தொகைக் குறிப்புச் சொற்கள். இருதிறச் சேனைக்கும் வரையாதளித்த வென்க. 1 ‘அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ, நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை, ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப், பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்" என்றார் பிறரும். சேரன், பொறையன், மலையன் என்பன சேரர் குடிப் பொதுப் பெயர்; ஒரு பொருள்மேல் வந்தன. செய், உவமவுருபு. 25. வன்சொல் . . . ஊசல்" வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல் தென்குமரி ஆண்ட - கொடுஞ் சொல்லினையுடைய யவனரது வளமிக்க நாட்டினையும் இமயமலையினையும் தென் குமரியையும் ஆண்ட, செரு வில் கயல் புலியான் - போர்க்குரிய வில் கயல் புலி இவற்றை யுடையனாய, மன்பதை காக்குங் கோமான் மன்னன் திறம் பாடி மின் செய் இடை நுடங்க ஆடாமோ ஊசல் - குடிகளைப் புரக்குந் தலைவனாகிய சேரவரசனது பண்புகளைப் புகழ்ந்து மின்போன்ற இடை துவள ஊசல் ஆடுவோம், விறல் விற் பொறி பாடி ஆடாமோ ஊசல் - வெற்றி பொருந்திய வில் இலச்சினையைப் புகழ்ந்து ஊசல் ஆடுவோம்; 1"வன்சொல் யவனர் வளநாடாண்டு" என முன்னருங் கூறினார். 2 ''நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து" என்பதுங் காண்க. மூவேந்தருள் ஒருவன் பெருமை கூறுமிடத்து ஏனையிரு வருடைய கொடியையும் இலச்சினையையும் அவனுக்கேற்றி யுரைத்தல் வழக்கு; 3''தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி, மண்டலை யேற்ற வரைக" என முன்னர்க் கூறினமையுங் காண்க.. வள்ளைப் பாட்டு 26. "தீங்கரும்பு . . . பாடல்" தீங்கரும்பு நல் உலக்கையாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர் - இனிய கரும்பினை நல்ல உலக்கை யாகக் கொண்டு கொழுவிய முத்தினைப் பொலிவுற்ற காஞ்சி மரத்து நிழற்கண்ணே குற்றுவாராய புகார் நகரத்து மங்கையர், ஆழிக் கொடித் திண்டேர்ச் செம்பியன்-வலிய உருளுடைய கொடி கட்டிய திண்ணிய தேரினையுடைய சோழனது, வம்பு அலர் தார்ப் பாழித் தடவரைத் தோள் பாடலே பாடல் - மணம் பரந்த மாலை சூடிய வலிய பெரிய மலைபோலுந் தோளினைப் பாடும் பாடலே சிறப்புடைப் பாடலாம், பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல் - அம் மகளிர் ஆர்த்தலைச் செய்யும் பாடலே சிறந்த பாடலாம்; வள்ளை - உலக்கைப்பாட்டு. பூங்காஞ்சி - மலர்க்காஞ்சி எனலுமாம். அவைத்தல் - குறுதல். பாழி-வலிமை, பெருமை. ஆழி-ஆக்கினா சக்கரமுமாம். ஆரிக்கும்-ஆதரிக்கு மென்றுமாம். மருத வளம் கூறியவாறு. 27. "பாடல்சால் . . . பாடல்" பாடல்சால் முத்தம் பவழ உலக்கையால் மாடமதுரை மகளிர் குறுவரே - பவளமாகிய உலக்கையால் புகழ்மிக்க முத்தினைக் குற்றுவாராகிய மாளிகைகளையுடைய மதுரை நகரத்து மங்கையர், வானவர்கோன் ஆரம் வயங்கியதோட் பஞ்சவன்றன் மீனக் கொடி பாடும் பாடலே பாடல் - இந்திரன் அளித்த பூணாரம் விளங்கிய தோளினையுடைய பாண்டியனது கயற்கொடியினைப் புகழ்ந்து பாடும் பாடலே சிறந்த பாடல், வேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் - உள்ளத்தை வாட்டுகின்ற வேப்ப மாலையினைப் பாடும் பாடலே சிறப்புடைப் பாடல்; பாடல்சால் - புலவர் பாடுதற்கமைந்த வென்றுமாம். 1"பவளவுலக்கை கையாற் பற்றித், தவள முத்தங் குறுவாள்" என முன்னர்ப் போந்தமையுங் காண்க. குறுவர் என முற்றாக்கி அங்ஙனங் குறுவோர் பாடும் என வருவித்துரைத்தலுமாம். நெஞ்சு-மகளிருள்ளம். உணக்குந் தாரினைப் பாடு மென்க. கடல்வளங் கூறியவாறு. 28. "சந்துரல் . . . பாடல்" சந்து உரல்பெய்து தகைசால் அணிமுத்தம் வஞ்சிமகளிர் குறுவரே வான் கோட்டால்-தகுதி மிக்க அழகிய முத்தினைச் சந்தனமரத் தாலாய உரலிற் போகட்டுச் சிறந்த யானைக் கொம்பினாற் குற்றுவாராய வஞ்சிநகரத்து மங்கையர், கடந்து அடு தார்ச் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல் - பகைவரை வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் மாலையை யணிந்த சேர மன்னனது கடம்பின் முதலைத் துமித்த பரந்த இவ்வுலகினை மூடிய மொழியினைப் பாடும் பாடலே சிறப்புடைப் பாடல், பனந்தோடு உளங்கவரும் பாடலே பாடல் - உள்ளத்தினை ஈர்க்கும் பனந்தோட்டினைப் பாடும் பாடலே சிறப்புடைப் பாடல்; முத்தம் பெய்து கோட்டாற் குறுவர் மகளிர் எனக் கூட்டுக. தார் - தூசிப்படையுமாம். சேரனது வார்த்தை; அது கடம்பு எறிந்த வார்த்தை நிலம் போர்த்த வார்த்தை என்க; வார்த்தை - புகழ்; 2"மண்டேய்த்த புகழினான்" என்பதும் அதன் உரையும் நோக்குக. மலைவளங் கூறியவாறு. முத்தம் மூன்று நிலத்தினும் உளதாதல் ஓர்க.. 29. "ஆங்கு . . . வாழ்கவென்று" ஆங்கு நீணில மன்னர் நெடுவிற் பொறையன் நல் தாள் தொழார் வாழ்த்தல் தமக்கு அரிது - நெடிய விற்பொறியையுடைய சேரனது நல்ல தாளினை வணங்காராகிய நிலவேந்தர்க்கு அவனை வாழ்த்தல் அரிதாகும், சூழ் ஒளிய எங்கோ மடந்தையும் ஏத்தினாள் நீடுழி செங்குட்டுவன் வாழ்கவென்று - ஒளி பொருந்திய எமது கோமகளாகிய பத்தினிக் கடவுளும் செங்குட்டுவன் நீடூழி வாழ் வானாக என்று வாழ்த்தினாள் என்க. ஆங்கு, அசை. “வானவ னெங்கோ மகளென்றாம்" என இக்காதையுள் முன்னர்க் கூறினமையின் ஈண்டும் கண்ணகியை எங்கோ மடந்தை யென்றார். தெய்வமாயினமையின் `சூழொளிய' என்றார். உம்மை சிறப்புடன் எச்சமுமாம். மடந்தையும் ஏத்தினாள் என்றதனால் ஏனோர் வாழ்த்துதல் கூற வேண்டாவாயிற்று. தொழார் தமக்கு வாழ்த்திப் பயன்கோடல் அரிதென அவர் சிறுமை கூறியபடி. மூவேந்தர் பெருமையுங் கூறி வாழ்த்துதலின் இது வாழ்த்துக் காதையாயிற்று. இது கொச்சகக் கலி. வாழ்த்துக் காதை முற்றிற்று. 30. வரந்தரு காதை (பின்னர், மணிமேகலையின் துறவு வரலாற்றைத் தேவந்தி சொல்லக் கேட்ட செங்குட்டுவன், அவள்மேல் ஆவேசித்த சாத்த னென்னும் தெய்வத்தின் கட்டளையால் மாடலன் தன் கையிலுள்ள கரகநீரை அங்கு வந்திருந்த சிறுமியர் மூவர்மீதுந் தெளிப்ப, உடனே கண்ணகியைக் குறித்துப் புலம்பிய அம் மூவரையும் கண்ணகி நற்றாய் கோவலன் நற்றாய் மாதரி யென்னும் மூவருடைய பிறப்பினராக அறிந்து, அன்னோர் அங்ஙனம் பிறத்தற்குரிய காரணத்தை மாடலன் கூறக் கேட்டுப் பத்தினிக் கடவுளின் பூசனை முதலியவற்றிற்குப் படிப்புறம் வகுத்து, பத்தினிக் கடவுட்குப் பூ முதலியன கொண்டு நாடோறும் வழிபாடு நிகழ்த்துமாறு தேவந்திக்குச் சொல்லி, தான் அக்கடவுளை மும்முறை வலம்வந்து வணங்கி நின்றான்; அப்பொழுது ஆரியவரசரும் குடகக் கொங்கரும் மாளவ வேந்தரும் இலங்கை யரசனாகிய கயவாகுவும் அங்கு வந்து அக் கடவுளை நோக்கி, ‘யாங்கள் எங்கள் நாட்டிற் செய்யும் வேள்வி யினும் வந்து அருள்செய்க' வென வணங்கி வேண்ட, அப்பொழுது `நீங்கள் விரும்பியவாறே வரந்தந்தேன்' என ஒரு குரல் உண்டாயது. அது கேட்ட செங்குட்டுவனும் ஏனை யரசர்களும் மிக்க மகிழ்ச்சி யடைந்தனர். பின்பு செங்குட்டுவன் மாடலனோடு வேள்விச் சாலைக்குச் செல்ல, இளங்கோவடிகள் கண்ணகி கோயிலுக்குச் சென்றார்; அவர்முன் பத்தினிக் கடவுள் தேவந்திமேல் தோன்றி, அவருடைய துறவின் வரலாற்றைச் சொல்லி உவப்பித்தாள். (இளங்கோவடிகள் இக்காப்பியத்தின் தெளி பொருளாகவுள்ள அறங்களை உலகத்தாருக்குக் கூறி இதனை முடித்திருப்பது அவர் இதனை யியற்றியதன் குறிக்கோளை இனிது புலப்படுத்தும்.) வடதிசை வணக்கிய வானவர் பெருந்தகை கடவுட் கோலம் கட்புலம் புக்கபின் தேவந் திகையைச் செவ்விதின் நோக்கி வாயெடுத் தரற்றிய மணிமே கலையார் 5 யாதவள் துறத்தற் கேதுவீங் குரையெனக் கோமகன் கொற்றங் குறைவின் றோங்கி நாடு பெருவளஞ் சுரக்கென் றேத்தி அணிமேகலையா ராயத் தோங்கிய மணிமே கலைதன் வான்றுற வுரைக்கும் 10 மையீ ரோதி வகைபெறு வனப்பின் ஐவகை வகுக்கும் பருவங் கொண்டது செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண் அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலள் ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்த 15 நித்தில விளநகை நிரம்பா வளவின புணர்முலை விழுந்தன புல்லக மகன்றது தளரிடை நுணுகலுந் தகையல்குல் பரந்தது குறங்கிணை திரண்டன கோலம் பொறாஅ நிறங்கிளர் சீறடி நெய்தோய் தளிரின 20 தலைக்கோ லாசான் பின்னுள னாகக் குலத்தலை மாக்கள் கொள்கையிற் கொள்ளார் யாது நின்கருத் தென்செய் கோவென மாதவி நற்றாய் மாதவிக் குரைப்ப வருகவென் மடமகள் மணிமே கலையென் 25 றுருவி லாள னொருபெருஞ் சிலையொடு விரைமலர் வாளி வெறுநிலத் தெறியக் கோதைத் தாமங் குழலொடு களைந்து போதித் தானம் புரிந்தறம் படுத்தனள் ஆங்கது கேட்ட அரசனும் நகரமும் 30 ஓங்கிய நன்மணி யுறுகடல் வீழ்த்தோர் தம்மிற் றுன்பந் தாமநனி யெய்தச் செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தன்றுற வெமக்குச் சாற்றின ளென்றே அன்புறு நன்மொழி அருளொடுங் கூறினர் 35 பருவ மன்றியும் பைந்தொடி நங்கை திருவிழை கோலம் நீங்கின ளாதலின் அரற்றினென் என்றாங் கரசற் குரைத்தபின் குரற்றலைக் கூந்தல் குலைத்துபின் வீழத் துடித்தனள் புருவந் துவரிதழ்ச் செவ்வாய் 40 மடித்தெயி றாம்பினள் வருமொழி மயங்கினள் திருமுகம் வியர்த்தனள் செங்கண் சிவந்தனள் கைவிட் டோச்சினள் கால்பெயர்த் தெழுந்தனள் பலரறி வாராத் தெருட்சியள் மருட்சியள் உலறிய நாவினள் உயர்மொழி கூறித் 45 தெய்வமுற் றெழுந்த தேவந் திகைதான் கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் றன்முன் கடவுண் மங்கலங் காணிய வந்த மடமொழி நல்லார் மாணிழை யோருள் அரட்டன் செட்டிதன் ஆயிழை ஈன்ற 50 இரட்டையம் பெண்கள் இருவரு மன்றியும் ஆடக மாடத் தரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமகள் ஈங்குளள் மங்கல மடந்தை கோட்டத் தாங்கண் செங்கோட் டுயர்வரைச் சேணுயர் சிலம்பிற் 55 பிணிமுக நெடுங்கற் பிடர்த்தலை நிரம்பிய அணிகயம் பலவுள ஆங்கவை யிடையது கடிப்பகை நுண்கலுங் கவிரிதழ்க் குறுங்கலும் இடிக்கலப் பன்ன இழைந்துகு நீரும் உண்டோர் சுனையத னுள்புக் காடினர் 60 பண்டைப் பிறவிய ராகுவ ராதலின் ஆங்கது கொணர்ந்தாங் காயிழை கோட்டத் தோங்கிருங் கோட்டி யிருந்தோய் உன்கைக் குறிக்கோட் டகையது கொள்கெனத் தந்தேன் உறித்தாழ் கரகமும் உன்கைய தன்றே 65 கதிரொழி காறுங் கடவுட் டன்மை முதிரா தந்நீர் முத்திற மகளிரைத் தெளித்தனை யாட்டினிச் சிறுகுறு மகளிர் ஒளித்த பிறப்பின ராகுவர் காணாய் பாசண் டன்யான் பார்ப்பனி தன்மேல் 70 மாடல மறையோய் வந்தே னென்றலும் மன்னவன் விம்மித மெய்தியம் மாடலன் தன்முக நோக்கலும் தானனி மகிழ்ந்து கேளிது மன்னா கெடுகநின் தீயது மாலதி யென்பாள் மாற்றாள் குழவியைப் 75 பால்சுரந் தூட்டப் பழவினை யுருத்துக் கூற்றுயிர் கொள்ளக் குழவிக் கிரங்கி ஆற்றாத் தன்மையள் ஆரஞ ரெய்திப் பாசண் டன்பாற் பாடு கிடந்தாட் காசில் குழவி யதன்வடி வாகி 80 வந்தனன் அன்னைநீ வான்துய ரொழிகெனச் செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கிப் பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற் காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து தேவந் திகையைத் தீவலஞ் செய்து 85 நாலீ ராண்டு நடந்ததற் பின்னர் மூவா இளநலங் காட்டியென் கோட்டத்து நீவா வென்றே நீங்கிய சாத்தன் மங்கல மடந்தை கோட்டத் தாங்கண் அங்குறை மறையோ னாகத் தோன்றி 90 உறித்தாழ் கரகமும் என்கைத் தந்து குறிக்கோள் கூறிப் போயினன் வாரான் ஆங்கது கொண்டு போந்தே னாதலின் ஈங்கிம் மறையோ டன்மேற் றோன்றி அந்நீர் தெளியென் றறிந்தோன் கூறினன் 95 மன்னர் கோவே மடந்தையர் தம்மேல் தெளித்தீங் கறிகுவம் என்றவன் தெளிப்ப ஒளித்த பிறப்புவந் துற்றதையாதலின் புகழ்ந்த காதலன் போற்றா வொழுக்கின் இகழ்ந்ததற் கிரங்கும் என்னையும் நோக்காய் 100 ஏதில் நன்னாட் டியாருமில் ஒருதனிக் காதலன் றன்னொடு கடுந்துய ருழந்தாய் யான்பெறு மகளே என்றுணைத் தோழீ வான்றுயர் நீக்கும் மாதே வாராய் என்னோ டிருந்த இலங்கிழை நங்கை 105 தன்னோ டிடையிருள் தனித்துய ருழந்து போனதற் கிரங்கிப் புலம்புறு நெஞ்சம் யானது பொறேஎன் என்மகன் வாராய் வருபுனல் வையை வான்றுறைப் பெயர்ந்தேன் உருகெழு மூதூர் ஊர்க்குறு மாக்களின் 110 வந்தேன் கேட்டேன் மனையிற் காணேன் எந்தாய் இளையாய் எங்கொளித் தாயோ என்றாங் கரற்றி இனைந்தினைந் தேங்கிப் பொன்தாழ் அகலத்துப் போர்வெய் யோன்முன் குதலைச் செவ்வாய்க் குறுந்தொடி மகளிர் 115 முதியோர் மொழியின் முன்றில் நின்றழத் தோடலர் போந்தைத் தொடுகழல் வேந்தன் மாடல மறையோன் றன்முக நோக்க மன்னர் கோவே வாழ்கென் றேத்தி முந்நூன் மார்பன் முன்னிய துரைப்போன் 120 மறையோன் உற்ற வான்துயர் நீங்க உறைகவுள் வேழக் கையகம் புக்கு வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற காதலி தன்மேற் காதல ராதலின் மேனிலை யுலகத் தவருடன் போகும் 125 தாவா நல்லறஞ் செய்தில ரதனால் அஞ்செஞ் சாய லஞ்சா தணுகும் வஞ்சி மூதூர் மாநகர் மருங்கிற் பொற்கொடி தன்மேற் பொருந்திய காதலின் அற்புளஞ் சிறந்தாங் கரட்டன் செட்டி 130 மடமொழி நல்லாள் மனமகிழ் சிறப்பின் உடன்வயிற் றோராய் ஒருங்குடன் றோன்றினர் ஆயர் முதுமக ளாயிழை தன்மேல் போய பிறப்பிற் பொருந்திய காதலின் ஆடிய குரவையின் அரவணைக் கிடந்தோன் 135 சேடக் குடும்பியின் சிறுமக ளாயினள் நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும் அற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும் அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும் பிறந்தவ ரிறத்தலும் இறந்தவர் பிறத்தலும் 140 புதுவ தன்றே தொன்றியல் வாழ்க்கை ஆனே றூர்ந்தோ னருளிற் றோன்றி மாநிலம் விளக்கிய மன்னவ னாதலின் செய்தவப் பயன்களுஞ் சிறந்தோர் படிவமும் கையகத் தனபோற் கண்டனை யன்றே 145 ஊழிதோ றூழி யுலகங் காத்து நீடுவா ழியரோ நெடுந்தகை யென்ற மாடல மறையோன் றன்னொடு மகிழ்ந்து பாடல்சால் சிறப்பிற் பாண்டிநன் னாட்டுக் கலிகெழு கூடல் கதழெரி மண்ட 150 முலைமுகந் திருகிய மூவா மேனிப் பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து நித்தல் விழாவணி நிகழ்கென் றேவிப் பூவும் புகையும் மேவிய விரையும் தேவந் திகையைச் செய்கென் றருளி 155 வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி உலக மன்னவ னின்றோன் முன்னர் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் 160 கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத் தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல் 165 ஆங்கது கேட்ட அரசனு மரசரும் ஓங்கிருந் தானையும் முறையோ டேத்த வீடுகண் டவர்போல் மெய்ந்நெறி விரும்பிய மாடல மறையோன் றன்னொடுங் கூடித் தாழ்கழன் மன்னர் தன்னடி போற்ற 170 வேள்விச் சாலையின் வேந்தன் போந்தபின் யானுஞ் சென்றேன் என்னெதி ரெழுந்து தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை நுந்தை தாணிழ லிருந்தோய் நின்னை 175 அரைசுவீற் றிருக்குந் திருப்பொறி யுண்டென்று உரைசெய் தவன்மே லுருத்து நோக்கிக் கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச் செங்குட் டுவன்றன் செல்லல் நீங்கப் பகல்செல் வாயிற் படியோர் தம்முன் 180 அகலிடப் பாரம் அகல நீக்கிச் சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத்து அந்தமி லின்பத் தரசாள் வேந்தென்று என்திறம் உரைத்த இமையோ ரிளங்கொடி தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி 185 தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்! பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்; தெய்வந் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்; பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொற் போற்றுமின்; ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்; 190 தானஞ் செய்ம்மின்; தவம்பல தாங்குமின்; செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட் பிகழ்மின்; பொய்க்கரி போகன்மின்; பொருண்மொழி நீங்கன்மின்; அறவோ ரவைக்களம் அகலா தணுகுமின்; பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்; 195 பிறர்மனை அஞ்சுமின்; பிழையுயிர் ஓம்புமின்; அறமனை காமின்; அல்லவை கடிமின்; கள்ளுங் களவுங் காமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்; இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா 200 உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்; மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென். கட்டுரை முடியுடை வேந்தர் மூவ ருள்ளும் குடதிசை யாளுங் கொற்றங் குன்றா ஆர மார்பிற் சேரர்குலத் துதித்தோர் அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம் 5 பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும் விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் ஒடியா இன்பத் தவருறை நாட்டுக் குடியின் செல்வமுங் கூழின் பெருக்கமும் வரியுங் குரவையும் விரவிய கொள்கையின் 10 புறத்துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய மறத்துறை முடித்த வாய்வாள் தானையொடு பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக் கங்கைப் பேர்யாற் றுக்கரை போகிய செங்குட் டுவனோ டொருபரிசு நோக்கிக் 15 கிடந்த வஞ்சிக் காண்ட முற்றிற்று. உரை 1-5. வடதிசை வணக்கிய வானவர் பெருந்தகை - வடதிசையில் உள்ளாரைப் பணியச் செய்த சேரர் பெருமானாகிய செங்குட்டுவன், கடவுட் கோலம் கட்புலம் புக்கபின் - கற்புக் கடவுள் வடிவு தன் கண்ணறிவிற்கு வெளிப்பட்ட பின்னர், தேவந் திகையைச் செவ்விதின் நோக்கி - தேவந்தியை நன்கு நோக்கி, வாய்எடுத்து அரற்றிய மணிமேகலை யார் யாது அவள் துறத்தற்கு ஏது ஈங்கு உரை என - நீ வாய்விட்டு அழுங்கியுரைத்த மணிமேகலை என்பாள் யார் அவள் துறவு கோடற்குரிய காரணம் யாது இப்போழ்து அதனை உரைப்பாயாகவென்று கேட்க ; வடதிசை, ஆகுபெயர், கடவுட் கோலங் கட்புலம்புக்கமை, 1"என்னே யிஃது . . . மீவிசும்பிற் றோன்றுமால்" என்பதனாலுணர்க. முன்னர், கங்கையாற்றுத் தென்கரைக்கண் தங்கியிருந்த செங்குட்டு வனிடத்து மாடலன், தான் ஆங்கே போந்தமைக்குக் காரணம் கூறப் புக்கவன் காவிரிப்பூம்பட்டினத்துக் கோவலன் றந்தை முதலியோரைப் பற்றிக் கூறியக்கால், மணிமேகலையைக் குறித்து, "மாதவி மடந்தை, நற்றாய் தனக்கு நற்றிறம் படர்கேன், மணிமே கலையை வான்றுய ருறுக்குங் கணிகையர் கோலங் காணா தொழிகென" என்றவளவே கூறி முடித்தானாகலான், ஈண்டுக் குட்டுவன், "வாயெடுத் தரற்றிய மணிமேகலை யார்" என்றான். வாழ்த்துக் காதையில் "மணிமேகலை துறவுங் கேட்டாயோ" என்றமையான், 'யாதவள் துறத்தற்கேது' வென்றான். வாழ்த்துக் காதையில் "மணிமேகலை துறவுங் கேட்டாயோ" என்பது தேவந்தியரற்று என்னும் பகுதியிற் காணப்படாது அடித்தோழி யரற்று என்னும் பகுதியிற் காணப் படுதலின், மணிமேகலையைக் குறித்துத் தேவந்தியரற்றியது பிறிதொரு காலாதல் வேண்டும். 6-9. கோமகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி நாடு பெருவளம் சுரக்கென்று ஏத்தி - வேந்தனது வெற்றி குறைவில்லாது உயர்தலானே நாடு மிக்கசெல்வம் பெருகுவதாகவென வாழ்த்தி, அணி மேகலையார் ஆயத்து ஓங்கிய மணிமேகலைதன் வான்துறவு உரைக்கும் - அழகிய மேகலையணிந்த மங்கையர் கூட்டத்தே அவரினும் உயர்ந்த மணிமேகலையின் சிறந்த துறவினைக் கூறுவாள் ; இன்றி என்பது இன்று எனத் திரிந்தது, ஓங்கி என்பதனைக் காரணப்பொருட் டாக்காது, ஓங்கிச் சுரக்கவெனப் பிறவினை கொண்டு முடிந்ததாகக் கூறலும் அமையும். நாடு வளஞ்சுரக்க வென இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது. 10-23. மையீர் ஓதி வகைபெறு வனப்பின் ஐவகை வகுக்கும் பருவங்கொண்டது - கரிய ஈரிய கூந்தல் பகுதிப்படும் அழகோடே ஐந்து வகையாகப் பகுக்கும் பருவத்தினை உற்றது, செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண் அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலள் - சிவந்த அரிகள் படர்ந்த செழுவிய கடையினை யுடைய குளிர்ந்த விழிகள் வஞ்சம் உணர்ந்தன ஆயின் அவ் வஞ்சத்தினைத் தான் அறியாளாயினாள், ஒத்து ஒளிர் பவளத்து உள் ஒளி சிறந்த நித்தில இளநகை நிரம்பா அளவின - தம்முள் ஒத்து விளங்கும் இரு பவளத்துள்ளே ஒளிமிக்க முத்துக் கோவை போலும் பற்கள் முதிராத அளவினவாயின, புணர்முலை விழுந்தன புல்அகம் அகன்றது - தம்முட் கூடிய கொங்கைகள் நேராக எழுந்தனவில்லை, புல்லப்படும் மார்பு பரந்தது, தளர்இடை நுணுகலும் தகை அல்குல் பரந்தது - துவளும் இடை சிறுத்த அளவிலே அழகிய அல்குல் அகன்றது, குறங்கு இணை திரண்டன - இரண்டு துடைகளும் திரட்சியுற்றன, கோலம் பொறா நிறங்கிளர் சீறடி நெய்தோய் தளிரின - அழகு செய்தலைப் பொறாத வண்ணம் விளங்கும் சிறிய அடிகள் நெய் தோய்த்த தளிரினை யொத்தன, தலைக்கோல் ஆசான் பின் உளனாகக் குலத்தலை மாக்கள் கொள்கையிற் கொள்ளார் - தலைக் கோலுடைய நட்டுவன் பயிற்றுவித்த லின்மையின் தலைக்கோல் பெறுந்தன்மை இல்லை ஆதலான், உயர்குடிப் பிறந்தோர் முறையானே கொள்ள எண்ணுகின்றிலர், யாது நின் கருத்து என் செய்கோ என மாதவி நற்றாய் மாதவிக்கு உரைப்ப - ஆகலான், நினது எண்ணம் யாது யான் என்ன செய்வேன் என்று மாதவியின் நற்றாய் மாதவிக்குக் கூற ; மையீரோதி என்பது முதல் மாதவியின் நற்றாய் கூற்று, மணி மேகலையின் ஓதி, மழைக்கண் என்றிங்ஙனம் விரித்துரைத்துக் கொள்க. வகைபெறு வனப்பு என்றது குழலை ஐந்து வகையாக முடிக்குங்கால், அவ்வாற்றானே அழகு வேறுபட்டுத் தோன்றல். அவ்வியம் அறிந்தன - அவ்வியமறியும் செவ்வியையுற்றன வென்க. விழுந்தன என்றது நேராக எழுந்தில என்னுங் கருத்திற்று. அடிக்குக் கோலம் பஞ்சியூட்டல் முதலியன. அக்கோலம் செய்தற்கும் பொறாத மெல்லடி என்றார். 1"பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென், றஞ்சிப்பின் வாங்கு மடி" என்றார் பிறரும். பின்னுளனாக என்றது சிரமஞ்செய்து முடியாமையின் என்றபடி. அவள் தலைக்கோல் பெறுந்தன்மை யில்லை யாகலான் என இசையெச்சம் விரித்துரைக்க. மாதவி நற்றாய் - சித்திராபதி. 24-28. வருக என் மடமகள் மணிமேகலை என்று - என் இளமகள் மணிமேகலை என்னிடம் வருவாளாகவென்று அழைத்து, உருஇல் ஆளன் ஒரு பெரும் சிலையொடு விரைமலர் வாளி வெறு நிலத்து எறிய - அநங்கன் தனது ஒப்பற்ற பெரிய வில்லுடனே மணந் தங்கும் மலர் அம்புகளையும் வறிய நிலத்தின்கண் எறிந்து செயலறும் வண்ணம், கோதைத் தாமம் குழலொடு களைந்து போதித் தானம் புரிந்து அறம்படுத்தனள்- ஒழுங்குபட்டமாலையைக் கூந்தலோடே நீக்கிப் புண்ணிய தானஞ் செய்து துறவறத்துப் படுத்தாள் ; உருவிலாளன் - மன்மதன். அவளாற் பலரையும் வெல்ல நினைத்த அவன், அவள் துறவுபூண்டமையான், தன் வில்லம்பு களை வெறுநிலத் தெறிந்தான் என்க. புத்த சமயத்துத் துறவு பூணும் மகளிரும் குழல் களைதல் மரபுபோலும்; அன்றேல் குழலினின்றுங் களைந்தென்னல் வேண்டும்; முன்னரும், 1"கோதைத் தாமங் குழலொடு களைந்து, போதித் தானம் புரிந்தறங் கொள்ளவும்" என்றார். 29-37. ஆங்கு அது கேட்ட அரசனும் நகரமும் - அப்பொழுது அத் துறவினைக் கேள்வியுற்ற வேந்தனும் நகரத்தோரும், ஓங்கிய நல்மணி உறுகடல் வீழ்த்தோர் தம்மின் துன்பம் தாம் நனி எய்த - உயர்வாகிய நல்ல மாணிக்கத்தை ஆழம் மிக்க கடலிடைப் போகட்டார் போன்று மிக்க துன்பத்தினை அடைய, செம்மொழி மாதவர் - உண்மைக் கூற்றினையுடைய மாதவராகிய அறவணவடிகள், சேயிழை நங்கை தன் துறவு எமக்குச் சாற்றினள் என்றே அன்புஉறு நல்மொழி அருளொடுங் கூறினர் - மணிமேகலை தன்னுடைய துறவினை எமக்கு அறிவித்தாளென்று அவளது அன்பு மிக்க நல்லுரையை எம்மிடத்து அருளோடும் உரைத்தார், பருவம் அன்றியும் பைந்தொடி நங்கை திருவிழை கோலம் நீங்கினள் ஆதலின் - துறத்தற்குரிய பருவ காலத்தன்றியேயும் பசிய தொடியணிந்த மணிமேகலை திருமகளும் விரும்பும் அழகின் நீங்கினாளாகலான், அரற்றினென் என்று ஆங்கு அரசற்கு உரைத்தபின் - வாய்விட்டுப் புலம்பினேன் என அவ்விடத்து மன்னற்குக் கூறிய பின்னர் ; இவன் துறவு பூண்டமையான் மணியைக் கடலிடை வீழ்த்தோர் போன்று அரசனும் நகரமும் வருந்தினர் என்க. 1"அரும்பெறன் மாமணி, ஓங்குதிரைப் பெருங்கடல் வீழ்த்தோர் போன்று, மைய னெஞ்சமொடு" என்றார் சாத்தனாரும். செம்மொழி - உண்மை மொழி. திருவிழை கோலம் நீங்கினள் என்றது துறவுக்கோலம் கொண்டதனை என்க. சித்திராபதி மாதவிக் குரைத்ததும் மாதவி தன்னைத் தவநெறிப் படுத்ததுமாகிய தனது துறவின் செய்தியை மணிமேகலை எமக்கு அறிவித்தாளென்று அறவணவடிகள் கூறினரெனவும், அவள் பருவமன்றியும் கோலம் நீங்கினளாதலின் அரற்றினே னெனவும் தேவந்தி செங்குட்டுவற்குக் கூறினாளென்க. 38-45. குரல்தலைக் கூந்தல் குலைந்து பின் வீழ - பூங்கொத்துக் களைத் தன்னிடத்தேயுடைய கூந்தல் சரிந்து புறத்தே வீழ்ந் தலைய, துடித்தனள் புருவம் - புருவந்துடித்தாள், துவர் இதழ்ச் செவ்வாய் மடித்து எயிறு அரும்பினள் - சிவந்த வாயின் பவளம் போன்ற உதடுகளை மடித்துச் சிரித்தனள், வருமொழி மயங்கினள் - பேசும் சொற்கள் குழறினள், திருமுகம் வியர்த்தனள் - அழகிய முகம் வியர்வை கொண்டனள், செங்கண் சிவந்தனள் - சிவந்த கண்கள் சேக்கப் பெற்றாள், கைவிட்டு ஓச்சினள் - கையை வீசி உயர்த்தினாள், கால் பெயர்த்து எழுந்தனள் - காலைப் பெயர்த்துத் துள்ளினள், பலர் அறி வாராத் தெருட்சியள் மருட்சியள் - பலரும் அறியவொண்ணாத தெளிந்த உணர்வுடையவள் மயக்க முடையவள், உலறிய நாவினள் - காய்ந்த நாவுடையள் உயர்மொழி கூறித் தெய்வம் உற்று எழுந்த தேவந்திகைதான் - மேலான சொற்களை மொழிந்து தெய்வமேறித் தோன்றிய தேவந்தி ; துடித்தனள் முதலியவற்றை முற்றெச்சமாக்கி, அவற்றைக் கூறி என்பதனொடு முடிக்க. குரற்றலைக் கூந்தல் என்பது தொடங்கி உலறிய நாவினள் என்பதன் காறுமுள்ளவை தேவந்தி தெய்வமுற்ற மையான் எய்திய தன்மைகள். புருவந்துடித்தனள் என்பது முதலியவற்றில், சினைவினை முதலொடு முடிந்தன. 2"தெய்வ முற்றோ னவி நயஞ் செப்பிற் கைவிட் டெறிந்த கலக்க முடைமையும், மடித் தெயிறு கௌவிய வாய்த்தொழி லுடைமையுந், துடித்த புருவமுந் துளங்கிய நிலையுஞ், செய்ய முகமுஞ் சேர்ந்த செருக்கும், எய்து மென்ப வியல்புணர்ந் தோரே" என்பது அறியற் பாற்று. 46-52. கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் தன்முன்-கொய்த தளிர் இடையிட்டுத் தொடுத்த குறிஞ்சி மலர்மாலை சூடிய செங் குட்டுவன் எதிரே, கடவுள் மங்கலம் காணிய வந்த மடமொழி நல்லார் மாண் இழையோருள் - கண்ணகி பிரதிட்டையைக் கண்டு வணங்கப் போந்த மென் சொற் களையுடையராகிய மாட்சிமைப்பட்ட அணிகலன் அணிந்த மகளிருள், அரட்டன் செட்டி தன் ஆயிழை ஈன்ற இரட்டையம் பெண்கள் இருவரும் அன்றியும் - அரட்டன் செட்டியின் மனைவி பெற்ற இரட்டையாகத் தோன்றிய மகளிர் இருவரும் அன்றியும், ஆடகமாடத்து அரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமகள் ஈங்கு உளள் - திருவனந்தபுரத்து அராவணையிற் பள்ளிகொண்ட திருமாற்குத் தொண்டு செய்யுங் குடும்பத்தை யுடையானது சிறிய மகளாயினாளும் இவ்விடத்துள்ளாள் ; குறிஞ்சிக் கோமான் - மலைநாட்டரசன் எனக் கொண்டு, கொய் தளிர் என்பதனைக் குறிஞ்சியாகிய இடத்து நிகழ் பொருளுக்கு அடையாக்கினும் அமையும். காணிய, செய்யிய வென்னும் வினையெச்சம். ஆடகமாடம் - திருவனந்தபுரம் ; இரவிபுரம் என்பாருமுளர். சேடன் - அடியவன் ; திருவடி பிடிப்பான் எனலுமாம். 53-70. மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண் செங்கோட்டு உயர் வரைச்சேண் உயர் சிலம்பில் - செவ்விய முடிகளையும் நீண்ட மூங்கிலையும் உடைய மிக வுயர்ந்த மலையில் மங்கலா தேவியின் கோயிலையுடைய அவ்விடத்தே, பிணிமுக நெடுங்கல் பிடர்த்தலை - முருகக் கடவுளின் யானைபோலும் நெடியகல்லின் பிடர்போலு மிடத்தில், நிரம்பிய அணி கயம் பல உள - நீர் நிறைந்த அழகிய சுனைகள் பலவுள்ளன, ஆங்கு அவை இடையது கடிப்பகை நுண் கலும் கவிர் இதழ்க் குறுங்கலும் இடிக்கலப்பு அன்ன இழைந்து உகுநீரும் உண்டு ஓர் சுனை - அவ்விடத்தே அவற்றின் நடுவணதாய் வெண்சிறு கடுகு போன்ற நுண்ணிய கற்களையும் முருக்கம் பூவினை யொத்த நிறமுடைய சிறிய கற்களையும் மாவைக் கரைத்தாலொத்த நெகிழ்ந்து சொரி கின்றநீரினையும் உடைய ஓர்சுனை உள்ளது, அதன் உள்புக்கு ஆடினர் பண்டைப் பிறவியர் ஆகுவர் - அச் சுனையினுள்ளே சென்று மூழ்கினோர் முன்னைப் பிறவியின் உணர்ச்சியுடைய ராவர், ஆதலின் ஆங்கு அது கொணர்ந்து ஆங்கு ஆயிழை கோட்டத்து ஓங்கு இருங்கோட்டி இருந்தோய் - ஆகலான், கண்ணகி கோயிலின் உயர்ந்த பெரிய வாயிலில் இருந்தோய் அச் சுனை நீரைக் கொண்டுவந்து, உன் கை-நின் கையிலே, குறிக்கோள் தகையது கொள்கெனத் தந்தேன் - ஈது கருதிக் கொள்ளத்தகும் இயல்பினை யுடைத்து கொள்வாய் எனக் கொடுத்தேன், உறித்தாழ் கரகமும் உன் கையது அன்றே - உறியிடத்துத் தங்கிய அந்நீருடைய கமண்டலமும் நின்கை யிடத்தது, கதிர்ஒழிகாறும் கடவுள் தன்மை முதிராது - அந்நீரின் தெய்வத்தன்மை ஞாயிறு திங்கள் உள்ள அளவும் ஒழியாது, அந்நீர் முத்திற மகளிரைத் தெளித்தனை ஆட்டின் இச்சிறு குறுமகளிர் ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய் - அதனால் இம்மூன்று மங்கையரையும் அந்நீரைத் தெளித்து ஆட்டினால் இக் குறிய சிறுமியர் முன்னைப்பிறப் புணர்ச்சியினராவர், இதனை நீ காண்பாய், பாசண்டன் யான் பார்ப்பனிதன்மேல் மாடல மறையோய் வந்தேன் என்றலும் - மாடலனாகிய அந்தணனே பாசண்டச் சாத்தனாகிய யான் பார்ப் பனியாகிய தேவந்திகை யிடத்தே உற்றேன் என்று கூறிய வளவில்; மங்கல மடந்தை - மங்கலா தேவி, கண்ணகி. கோடு - சிகரம். சிலம்பின் பிடர்த்தலையில் பல சுனை உள்ளன; அவற்றின் நடுவண தோர் சுனை உண்டு ; அதனுள் ஆடின் முற்பிறப் புணர்ச்சி யுண்டாம் எனக் கூறினாள். கடிப்பகை - வெண் சிறுகடுகு. பேய்க்குப் பகையாயது என்பது பொருள். 1"அரவாய்க் கடிப் பகையையவிக் கடிப் பகை" என்றார் பிறரும். கவிர் - முண்முருக்கு. தேவந்திமேலுற்ற பாசண்டச் சாத்தன், மாடலனை நோக்கி நின்னிடத்துக் கரகந்தந்தேன் என்றான். கோட்டின்-கோயில் வாயில். கதிர் - ஞாயிறு, திங்கள், தெளித்தனை, முற்றெச்சம். ஒளித்த பிறப்பு - மறைந்த பிறப்பு; முன்பிறப்பு. பிறப்பினர்-பிறப்பின் உணர்ச்சியினர். 71-73. மன்னவன் விம்மிதம் எய்தி அம் மாடலன் தன்முகம் நோக்கலும் - செங்குட்டுவன் வியப்புற்று அம் மாடலனது முகத்தை நோக்கிய வளவிலே, தான் நனிமகிழ்ந்து - அவன் மிக மகிழ்ச்சியுற்று, கேள்இது மன்னா கெடுகநின் தீயது - வேந்தே நினது தீமை கெடுவதாக இவ் வரலாற்றினைக் கேட்பாயாக வென்று கூறுவான்; 74-87. மாலதி என்பாள் மாற்றாள் குழவியைப் பால் சுரந்து ஊட்ட - மாலதி எனப்படுவாளோர் பார்ப்பனி தன் மாற்றாளுடைய குழவிக்குத் தன் முலை பால் ஊறப்பெற்று அருத்த, பழவினை உருத்துக் கூற்றுயிர்கொள்ள - அக்காலை முன்னைத் தீவினை தோன்றலானே பால் விக்க அது காரணமாக அக்குழவியின் உயிரைக் கூற்றுவன் கவர்ந்து செல்ல, குழவிக்கு இரங்கி ஆற்றாத்தன்மையள் ஆர்அஞர் எய்திப் பாசண்டன்பால் பாடு கிடந்தாட்கு - அங்ஙனம் இறந்த குழவியின்பொருட்டு வருந்தி அதனைப் பொறாத இயல்பினளாய் மிக்க துன்பமுற்றுப் பாசண் டச்சாத்தனிடத்து வரங் கிடந்தாளுக்கு, ஆசுஇல் குழவி அதன் வடிவு ஆகி வந்தனன் அன்னை நீ வான் துயர் ஒழிகென- அன்னையே நீ மிக்க துயரொழிக வென்று கூறிக் குற்றமற்ற அக்குழவியின் உருக்கொடு வந்து, செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கி - அருளை விரும்பிய சாத்தன் அவள் துன்பத் தினைப் போக்கி, பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய் பால் காப்பியத் தொல் குடி கவின் பெற வளர்ந்து-மாலதியோடே அவள் மாற்றாளாகிய தாயிடத்தே பழைய காப்பியக் குடியிலே அழகுபெற வளர்ந்து, தேவந்திகையைத் தீவலம் செய்து - தேவந்தியை மணந்து, நால் ஈராண்டு நடந்ததன் பின்னர் - எட்டியாண்டுகள் கழிந்த பின்னர், மூவா இளநலங் காட்டி என் கோட்டத்து நீவா என்றே நீங்கிய சாத்தன் - என்றும் அழியாத தன் இளமையின் அழகினைத் தோற்றுவித்து என் கோயிற்கண் நீ வருவாய் எனக் கூறி அவளிற் பிரிந்த சாத்தனாகிய அவன் ; பால் ஊட்ட - பாலைச் சங்கால் ஊட்ட எனலும் அமையும். பாசண்டன் - சாத்தனாராகிய ஐயன், பாடு கிடத்தல் - வரம் வேண்டிக் கிடத்தல்; 1"பன்னாளாயினும் பாடு கிடப்பேன்" என வருதல் காண்க. அன்னை, விளி, செந்திறம் - அருள். பண்டைத்தாய் - மாலதியின் மாற்றாள். இவனை அவள் புதல்வனாகக் கருதுதலான் பண்டைத் தாய் என்றார். காப்பியக் குடியென்பது சீகாழிக்குத் தென் கிழக்கிலுள்ளதாகிய ஓரூர். மூவாஇளநலம் - தெய்வ வடிவு; 2"மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி" என்பது காண்க. தீவலஞ் செய்தல் - மணத்தல், சாத்தன், சுட்டு. செந்திறம் புரிந்தோன் அன்னாய் துயரொழிகெனக் குழவி வடிவாகிச் செல்லல் நீக்கி வளர்ந்து தீவலஞ் செய்து இளநலங் காட்டி நீங்கியவன் என்க. இவ்வரலாற்றினை, 3"மாலதி மாற்றாள் . . . நீவாவென வுரைத்து நீங்குதலும்" எனக் கனாத்திறமுரைத்த காதையிற் கூறினமையாலும் அறிக. 88-96. மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண் அங்கு உறை மறையோன் ஆகத் தோன்றி - மங்கலா தேவியின் கோயிலிடத்து ஆங்கே வாழும் ஓர் அந்தணனாக வெளிப்பட்டு, உறித்தாழ் கரகமும் என் கைத்தந்து குறிக்கோள் கூறிப் போயினன் வாரான் - உறியிலே தங்கிய கமண்டலத்தை என்னிடம் கொடுத்து அதனைக் குறிக்கொண்டு காக்குமாறு சொல்லிச் சென்றனன் பின்பு வந்திலன், ஆங்கு அது கொண்டு போந்தேன் ஆதலின் - அவ்விடத்தினின்றும் அக் கரகத்தினைக் கொண்டு வந்தேன் ஆகலான், ஈங்கு இம் மறையோள் தன் மேல் தோன்றி அந்நீர் தெளி என்று அறிந்தோன் கூறினன் - இப்பொழுது இப் பார்ப்பனியிடத்து வெளிப்பட்டு அந்நீரினைத் தெளிப்பாய் என்று அறிவிற் சிறந்த சாத்தன் சொல்லினன், மன்னர் கோவே மடந்தையர் தம்மேல் தெளித்து ஈங்கு அறிகுவம் என்று அவன் தெளிப்ப - மன்னர் மன்ன இம் மங்கையர்மீது இப்போழ்து தெளித்து அதனை அறிவோம் என்று கூறி அம் மாடலன் அந்நீரினைத் தெளிக்க ; நீங்கிய சாத்தன் மறையோனாகத் தோன்றித் தந்து போயினன் என்க. மறையோள் - தேவந்தி. அறிந்தோன் - சாத்தன். 97-103. ஒளித்த பிறப்பு வந்து உற்றதை ஆதலின் - முந்தைப் பிறவியின் உணர்ச்சி வந்து தோன்றியதாகலான், புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின் இகழ்ந்து அதற்கு இரங்கும் என்னையும் நோக்காய் - பிரிவுக் காலத்தும் நீ புகழ்ந்துரைத்த நின் கணவனது பெரியோர் வெறுக்கும் ஒழுக்கத்தினை எள்ளி அவ்வொழுக்கங் காரணமாக வருந்தும் என்னையும் கருதாயாய், ஏதில் நல்நாட்டு யாரும் இல் ஒரு தனிக் காதலன் தன்னொடு கடுந்துயர் உழந்தாய் - வேற்று நாட்டிடை எவருந் துணை இல்லாத ஒப்பற்ற தனிமையால் கணவனோடே மிக்க துன்ப முற்றனை, யான்பெறு மகளே - யான் வருந்தியீன்ற மகளே, என் துணைத் தோழீ - எனக்குத் துனையாகவிருந்தமையால் தோழி அனையாய், வான்துயர் நீக்கு மாதே வாராய்-எமது மிக்க துயரத்தைப் போக்கிய நங்காய் வாராயோ ; உற்றதை, வினைத் திரிசொல், ஒழுக்கின், இரண்டனுருபு தொக்கது. போற்றா வொழுக்கினால் நின்னை இகழ்ந்ததற்கு என்றுரைத் தலுமாம். ஒரு தனி - தன்னந் தனியே. இது கண்ணகி தாயின் கூற்று. 104-107. என்னோடு இருந்த இலங்கு இழை நங்கை தன்னோடு - நீ பிரிந்த பின்னர் என்னோடு உறைந்த விளங்குங் கலனணிந்த கண்ணகியோடே, இடைஇருள் தனித்துயர் உழந்து போன தற்கு இரங்கிப் புலம்புறும் நெஞ்சம் - இடையாமத்தே பிறர் அடையாத துன்பத்தை யடைந்து வேற்று நாடு சென்றதற்கு என்னுள்ளம் வருந்தித் தனிமையுறும், யான் அது பொறேஎன் என் மகன் வாராய் - நீ உற்றதுயரை யான் பொறுக்கேன் ஆதலான் என் மகனே ஈண்டு நீ வாராயோ ; என்னோடிருந்த நங்கை என்றது கண்ணகியை. புலம்புறும், முற்று. மகன், விளி. இது கோவலன் தாய் கூற்று. 108-111. வருபுனல் வையை வான்துறைப் பெயர்ந்தேன் -இடையறாது வருநீரினை யுடைய வையை யாற்றின் பெரிய துறையினின்றும் மீண்ட யான், உருகெழு மூதூர் ஊர்க் குறு மாக்களின் வந்தேன் கேட்டேன் மனையில் காணேன் - அழகு மிக்க நகரத்து இளையோரால் இக்கொடுஞ் செயலைக் கேள்வியுற்று இல்லம் புக்கேன் ஆண்டு நின்னைக் கண்டிலேன், எந்தாய் இளையாய் எங்கு ஒளித்தாயோ - எம் தந்தை போல்வாய் இளம் பருவமுடையாய் அங்ஙனமாய நீ யாண்டுச் சென்றொளித் தனையோ ; பெயர்ந்தேன் வந்தேன் கேட்டேன் என்பன முற்றெச்சங்கள். கேட்டேன் வந்தேன் என மாறுக. எந்தாய் என்றது கோவலனை. இது மாதரி கூற்று. 112-115. என்று ஆங்கு அரற்றி இனைந்து இனைந்து ஏங்கி - அவ்விடத்தே இவ்வாறு கூறிப் புலம்பி வருந்தி ஏக்கமுற்று, பொன் தாழ் அகலத்துப் போர் வெய்யோன்முன் - திருமகள் தங்கும் மார்பினையுடைய போரை விரும்பியோனாய செங்குட்டுவன் எதிரே, குதலைச் செவ்வாய்க் குறுந்தொடி மகளிர் முதியோர் மொழியின் முன்றில் நின்று அழ - மழலைச் சொல் பொருந்திய சிவந்த வாயினையும் குறிய வளையினையும் உடைய மங்கையர் முதிர்ந்த பெரியோர் கூறுமாறு போலக் கோயில் முன்னிடத்தே நின்று புலம்ப ; அவன் தெளிப்ப ஒளித்த பிறப்பு வந்துற்றதாகலான் குறுந்தொடி மகளிர் போர் வெய்யோன் முன் மாதே வாராய் என்மகன் வாராய் இளையாய் எங்கொளித்தாயோ என்று அரற்றி ஏங்கி முதியோர் மொழியின் முன்றில் நின்று அழவென்க. 116-119. தோடு அலர் போந்தைத் தொடுகழல் வேந்தன் மாடல மறையோன் தன்முகம் நோக்க - இதழ்விரிந்த பனம்பூ மாலையினையும் கட்டிய வீரக் கழலினையும் உடைய மன்னவன் மாடலனாகிய அந்தணன் முகத்தை நோக்கிய வளவிலே, மன்னர் கோவே வாழ்கென்று ஏத்தி முந்நூல் மார்பன் முன்னியது உரைப்போன் - பூணூல் அணிந்த மார்பினையுடைய மாடலன் அரசர்க்கரசே நீடு வாழ்வாயாகவென்று போற்றி அரசன் கருதியதனைக் கூறுபவன்; 120-131. மறையோன் உற்ற வான் துயர் நீங்க - தன்னிடத்துத் தானங்கொள்ள வந்த பார்ப்பனன் அடைந்த கொடிய துன்பம் ஒழிய, உறைகவுள் வேழக் கையகம் புக்கு வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற காதலிதன்மேல் காதலராதலின் - மதஞ்சொரியுங் கவுளினையுடைய யானையின் கையகத்தே நுழைந்து விண்ணோரது வடிவம் பெற்றோனாகிய கோவலன் கொண்ட கண்ணகியின்மீது அன்புடையா ராகலானும், மேல் நிலை உலகத்து அவருடன் போகும் தாவா நல் அறம் செய்திலர் அதனால் - துறக்கவுலகத்து அவருடன் சென்றடையும் கெடுதலற்ற நல்ல அறத்தினைச் செய்திலராதலானும், அம்செஞ்சாயல் அஞ்சாது அணுகும் வஞ்சிமூதூர் மருங்கில் - அழகிய செவ்விய சாயலுடையாள் சிறிதும் அஞ்சாதஅடைந்த பழைய ஊராகிய வஞ்சி நகரத்திடத்தே, பொன்கொடி தன்மேல் பொருந்திய காதலின் - கண்ணகியிடத்து அமைந்த அன்பாலே, அற்புஉளம் சிறந்து ஆங்கு அரட்டன் செட்டி மடமொழி நல்லாள் மன மகிழ் சிறப்பின் உடன் வயிற்றோராய் ஒருங்குடன் தோன்றினர் - உள்ளத்தின் மிக்க அன்போடே அரட்டன் செட்டியின் மனைவி உள்ளம் மகிழ்தற்குரிய சிறப்போடே ஒரு வயிற்றிடத்து ஒரு சேரத் தோன்றினர் ; மறையோன் துயர் நீங்க வேழக் கையகம் புக்கதனை, 1"மறையோன்றன்னை ... கருணை மறவ" என முன்னுரைத் தமையானுணர்க. உறைத்தல் - சிந்துதல். காதலர் - கண்ணகிதாயும் கோவலன் தாயும். மேனிலை உலகம் - துறக்கவுலகம். வேழக் கையகம் புக்கு அவ்வறத்தினாலே பின் வானோர் வடிவம் பெற்றவன் என்க. பெற்ற - மணந்துகொண்ட. பெற்றவன்மேலும் பெற்ற காதலி மேலும் காதலராதலின் என்றுமாம். காதலராதலின் அவருடன் செல்லுந்தன்மையினர் அறஞ் செய்திலாமையால் மேனிலை யுலகத்துச் செல்லகில்லாராய்க் கண்ணகிமீதுள்ள அன்பினால் அவள் அணுகிய வஞ்சி மூதூரிற் பிறந்தனரென்க. அஞ்செஞ்சாயல்- கண்ணகி. மடமொழி நல்லாள் - அரட்டன் செட்டி மனைவி. இரட்டையராகித் தோன்றலான் ஒருங்குடன் தோன்றினர் என்றான். 132-135. ஆயர் முது மகள் ஆயிழைதன்மேல் போய பிறப்பில் பொருந்திய காதலின் - இடையர் குலத்து முதியளாகிய மாதரி கண்ணகியிடத்து முந்தைப் பிறவியிற் பொருந்திய அன்பு காரணமாக, ஆடிய குரவையின் - தான் ஆடிய குரவையின் பயத்தால், அரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறு மகள் ஆயினள் - அரவணையில் பள்ளி கொண்டோனுக்குத் தொண்டு செய்யும் குடும்பத்தானது புதல்வியாயினள் ; ஆதலால்; ஆயிழை - கண்ணகி, அரவணைக் கிடந்தோன் என்றது திருவனந்தபுரத்துத் திருமாலை. காதலானும் குரவையானும் சிறுமகளாயினளென்க. ஆதலால் என ஒரு சொல் வருவிக்க. 136-147. நல்திறம் புரிந்தோர் பொற்படி எய்தலும் - நல்ல அறத்தின் வகைகளை விரும்பிச் செய்தோர் பொன்னுலகம் அடைதலும், அற்பு உளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும் - ஒருவர்பால் அன்புமிக்க உள்ளமுடையோர் இந்நிலத்துத் தாம் அன்பு வைத்த இடத்தே பிறத்தலும், அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும் - ஒருவன் செய்த அறத்தின் நற்பயன் அவற்கு உண்டாதலும் பாவத்தின் தீப்பயன் உண்டாதலும், பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் - இவ்வுலகிடைத் தோன்றியோர் மறைதலும் மறைந்தோர் தோன்றுதலும், புதுவது அன்றே தொன்று இயல் வாழ்க்கை - புதியனவல்ல படைப்புக் காலந் தொட்டே நிகழும் வழக்காகும், ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளில் தோன்றி மாநிலம் விளக்கிய மன்னவன் ஆதலின் - நீ இடபத்தை ஊர்தியாகவுடைய இறைவனது திருவருளானே பிறந்து இப் பெரிய உலகினை விளக்கமுறச் செய்த வேந்தனாகலான், செய்தவப் பயன்களும் சிறந்தோர் படிவமும் கையகத்தனபோல் கண்டனை அன்றே - செய்யப் பட்ட தவத்தின் பயனாயுள்ளவற்றையும் உயர்ந்தோரது படிவத்தையும் அங்கையில் உள்ளனபோலத் தெளிவுற அறிந்தாய், ஊழிதோறூழி உலகம் காத்து நீடு வாழியரோ நெடுந்தகை என்ற மாடல மறையோன் தன்னொடு மகிழ்ந்து - பல்லூழி இந்நிலத்தினைப் புரந்து நெடிதினிது வாழ்வாயாக நெடுந்தகாய் என்றுரைத்த மாடலனோடு மகிழ்வுற்று ; பொற்படி - பொன்னுலகம். அன்பு, அற்பாயிற்று. அறப்பயன் விளைதல் முதலியவற்றை, 1"பிறந்தோ ரிறத்தலு மிறந்தோர் பிறத்தலும், அறந்தரு சால்பு மறந்தரு துன்பமும்" என்பதனானு மறிக. எய்தல் முதலிய தொழில்களைப் புதுவதன்று என்பதனோடு தனித்தனி முடிக்க. இவன் சிவபிரானருளாற் றோன்றியவனென்பது 2"செஞ்சடை வானவ னருளினில் விளங்க, வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்" என முன்னர் முனிவர் கூறியதனானும் பெற்றாம். சிறந்தோர் - தேவர். அன்று ஏ, அசைகள். 148-156. பாடல் சால் சிறப்பின் பாண்டி நல் நாட்டுக் கலி கெழு கூடல் கதழ்எரி மண்ட - புலவர் புகழ்ந்து பாடும் பாடல் மிக்க சிறப்பினையுடைய பாண்டி நாட்டின் தலைநகராய பல் வகை ஒலி பொருந்திய கூடலிடத்து விரைந்து பற்றுந் தீ மிகும் வண்ணம், முலைமுகம் திருகிய மூவாமேனிப் பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து - தனது இடக் கொங்கையைத் திருகி எறிந்த முதிராத மேனியையுடைய கற்புத் தெய்வத்தின் கோயிலுக்கு அர்ச்சனாபோகத்தை நியமித்து, நித்தல் விழா அணி நிகழ்கென்று ஏவி - நித்தல் விழாவாகிய சிறப்பும் நடைபெறுக என்று ஏவுதல் செய்து, பூவும் புகையும் மேவிய விரையும் தேவந்திகையைச் செய்கென்று அருளி - தேவந்திகையை நோக்கிப் பூ முதலியவற்றை நீ செய்கவென்று அருள்செய்து, வல முறை மும்முறை வந்தனன் வணங்கி உலக மன்னவன் நின்றோன் முன்னர் - கோட்டத்தை மூன்றுமுறை வலமாக வந்து வணங்கி நின்றோனாகிய உலக மன்னவன் எதிரே ; கலி - விழவொலி முதலியன ; அன்றி மகிழ்ச்சி எனலுமாம். படிப்புறம் - அருச்சனாபோகம் ; அருச்சனை முதலியவற்றுக்கு இறையிலியாக நிலம் விடுதல் ; நிபந்தமுமாம். நித்தல்விழா - நாடொறும் நிகழும் சிறப்பு ; நிகழ்கென்று - நிகழச் செய்கவென்று, 1"பத்தினிக் கோட்டமும் சமைத்து, நித்தல் விழாவணி நிகழ்வித் தோனே" என முன்னர்ப் போந்தமையுங் காண்க. பூவும் புகையும் விரையுஞ் செய்கென்றது, சந்தன முதலியன சாத்துதலும் மலரால் அருச்சித்தலும் நறும்புகை எடுத்தலும் செய்வாயாக என்றவாறு. உலக மன்னவன், நீடு வாழியரோ நெடுந்தகையென்ற மறையோன் தன்னொடு மகிழ்ந்து வகுத்து ஏவி அருளி வந்தனன் வணங்கி நின்றோன் முன்னர் என்க. வந்தனன், முற்றெச்சம், நின்றோன், வினைப்பெயர். 157-164. அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்-அப்பொழுது நீங்குதற்கரிய சிறைக் கோட்டத்தினின்றும் நீங்கிப்போந்த ஆரிய நாட்டரசரும், பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் - பெரிய காவற்கூடத்தை நீங்கிய மற்றைய வேந்தரும், குடகக் கொங்கரும் - குடக நாட்டுக் கொங்கரும், மாளுவ வேந்தரும் - மாளுவ தேயத்து மன்னரும், கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் - கடல் சூழ்ந்த இலங்கை மன்னனாய கயவாகுவும், எம்நாட்டு ஆங்கண் இமய வரம்பனின் நல்நாட் செய்த நாள் அணி வேள்வியில் வந்தீகென்றே வணங்கினர் வேண்ட - எமது நாட்டிடத்தே இமயவரம்பனது வெள்ளணி நாளில் யாம் செய்யும் அழகிய நாள் வேள்வியில் வந்தருள் புரிவாயாகவெனப் பணிந்து வேண்டிய அளவிலே, தந்தேன் வரம் என்று எழுந்தது ஒரு குரல் - அங்ஙனமே வரந் தந்தேன் என வானிடத்து ஓர் குரல் தோன்றிற்று ; கோட்டம் பிரிந்த மன்னர் - முன்னரே வஞ்சியிற் சிறை கிடந்த அரசர். கொங்கரும் கயவாகுவும் கண்ணகியைத் தங்கணாட்டு வழிபட்டமை 1உரைபெறு கட்டுரையிலும் கூறப்பட்டுளது. இமயவரம்பன் - செங்குட்டுவன் ; நன்னாள் - பிறந்த நாள் ; வேள்வியியற்றிய நாளுமாம். செய்த - செய்யும். நாள்வேள்வி - ஒரு நாளிற் செய்யப்படும் வேள்வி. ஈண்டுக் கூறிய கயவாகு வென்பான் இலங்கைச் சரிதத்தில் வரும் கயவாகுவெனப் பெயரிய வேந்தருள் முதல்வனாவான் ; கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவன். 165-170. ஆங்கு அதுகேட்ட அரசனும் அரசரும் ஒங்கு இருந்தானையும் உரையொடு எத்த- அவ்விடத்தே அக்குரல் கேட்ட செங்குட்டுவனும் ஏனைய அரசர்களும் மிகப் பெரிய சேனைகளும் அவள் புகழ் கூறிப் போற்ற, வீடு கண்டவர் போல் - வீட்டின்பத்தைக் கண்டார் போன்று மகிழ்ந்து, மெய்ந்நெறி விரும்பிய மாடல மறையோன்றன்னொடுங் கூடி - உண்மை நெறியினை விரும்பிய மாடலனோடுஞ் சேர்ந்து, தாழ்கழல் மன்னர் தன் அடிபோற்ற வேள்விச் சாலையின் வேந்தன் போந்த பின் - பொருந்திய கழலையுடைய அரசர் தன்னுடைய அடிகளைத் துதிக்க யாகசாலைக்கண் மன்னவன் புகுந்த பின்னர்; வீடு - முத்தி. மெய்ந்நெறி - வீட்டுநெறி. வேந்தன் பத்தினிக் கோட்டத்தினின்றும் வேள்விச்சாலையிற் போந்த பின் என்க. 171-185. யானும் சென்றேன் - யான் பத்தினிக் கோட்டத்திற்குச் சென்றேனாக, என் எதிர் எழுந்து தேவந்திகை மேல் திகழ்ந்து தோன்றி - அங்ஙனம் சென்ற என்னெதிரே தேவந்தி மீது விளங்கி வெளிப்பட்டெழுந்து, வஞ்சி மூதூர் மணி மண்டபத் திடை - வஞ்சி நகரத்தின் கோயில் அத்தாணி மண்டபத்தில், நுந்தை தாள் நிழல் இருந்தோய் நின்னை - நின் தந்தையிடத் திருந்தோயாகிய உன்னை நோக்கி, அரைசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு என்று உரை செய்தவன்மேல் உருத்து நோக்கி - அரசனாக வீற்றிருக்கும் அழகிய வடிவிலக்கணம் நின்னிடத்து உண்டு என உரைத்த கணிவன்மீது வெகுண்டு நோக்கி, கொங்கு அவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச் செங்குட்டுவன் றன் செல்லல் நீங்க - மணம் விரிந்த நறிய மாலையினையும் கொடி கட்டிய தேரினையும் நால்வகைப் படையினையும் உடைய தன் முன்னோனாகிய செங்குட்டுவனது துன்பம் ஒழியுமாறு, பகல் செல்வாயில் படியோர் தம்முன் - ஞாயிறு தோன்றும் குணக்காகிய திக்கினாற் பெயருடைய குணவாயிலின்கண் முனிவர்கள் எதிரே, அகல் இடப் பாரம் அகல நீக்கி - அகன்ற இடத்தினையுடைய இந் நிலந் தாங்கும் சுமை தன்னை விட்டொழிய விலக்கி, சிந்தை செல்லாச் சேண் நெடுந்தூரத்து அந்தம்இல் இன்பத்து அரசு ஆள் வேந்து என்று - உள்ளமும் சென்று அறியவொண்ணா மிக்க நெடுந் தூரத்திலுள்ள முடிவில்லாத இன்பத்தினையுடைய வீட்டுலக அரசினையாளும் மன்னவனாயினை என்று, என் திறம் உரைத்த இமையோர் இளங்கொடிதன் திறம் உரைத்த தகை சால் நல்மொழி - என் வரலாறு கூறிய விண்ணவர் மகளாம் கண்ணகியின் தன்மைகளை விளக்கிய தகுதி மிக்க நல்லுரையை, தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர் - விளங்கக் கேட்ட அழகு தக்க நன்மையுடையீர் ; பொறி - இலக்கணம் ; ஊழுமாம். செல்லல் நீங்க - துன்பம் வாரா தொழிய வென்க. பகல் - ஞாயிறு ; பகல் செல்வாயில்-குண வாயில் என்றபடி. படியோர் - படிமையோர் ; தவவொழுக்கத்தையுடைய முனிவர். ‘வஞ்சி மூதூர்' என்பது முதல் 'அந்தமிலின்பத்தர சாள் வேந்து' என்பதுவரை தம்மை நோக்கித் தெய்வம் கூறியதனை இளங்கோவடிகள் கொண்டு கூறினார். இமையோர் இளங்கொடி-தெய்வ மகள். எழுந்து தோன்றி வேந்தென்று என் திறமுரைத்த இளங்கொடி என்க. மணி மண்டபத்திடை நின் தந்தையாகிய சேரலனிடத்தே நீயிருக்க, ஒரு நிமித்திகன் ஆங்கு வந்து நின்னை நோக்கி, நின்னிடை அரசு வீற்றிருக்கும் இலக்கணம் உண்டென்று கூற, அரசாள என் தமையனாகிய செங்குட்டுவனிருக்க நீ இவ்வாறு முறைமை கெடக் கூறினாய் என்று அவனை வெகுண்டு நோக்கிச் செங்குட்டுவனுக்குத் துன்பம் வராதபடி திருக்ககுணவாயி லிடத்துத் துறந்து வதிந்த முனிவர்முன் போந்து இவ்வுலகினையாளும் அரசினை யொழித்து முத்தியாகிய அரசினையாளத் தக்க வேந்தனாயினை யல்லையோ என்று முன்னர் நிகழ்ந்ததும் மேல் நிகழ்வதுமாகிய என் திறமுரைத்த இமையோ ரிளங் கொடியின் திறமுரைத்தனைத் தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர் என்க. 186-202. பரிவும் இடுக்கணும் பாங்குற - நீங்குமின் - பிறர்க்குக் கவலையும் துன்பமும் விளைத்தலை முறைமையால் விட்டொழிமின், தெய்வம் தெளிமின் - கடவுள் உண்டென வுணர்மின், தெளிந்தோர்ப் பேணுமின் - அங்ஙனம் கடவுளை யுணர்ந்தோரை விரும்புமின், பொய்யுரை அஞ்சுமின் - பொய்கூறற்கு அஞ்சுமின், புறஞ்சொல் போற்றுமின் - புறங்கூறுதலைப் பரி கரிமின், ஊன் ஊண் துறமின் - ஊன் உண்ணுதலை விலக்குமின், உயிர்க்கொலை நீங்குமின் - உயிர்களைக் கொலை செய்தலை ஒழிமின், தானம் செய்ம்மின் - தானத்தினை மேற்கொண்டு செய்ம்மின், தவம் பல தாங்குமின் - தவம் பலவற்றையும் மேற்கொண்மின், செய்ந்நன்றி கொல்லன்மின் - பிறர் செய்த உதவியை மறவன்மின், தீ நட்பு இகழ்மின் - தீயோரது தொடர்பினை எள்ளி ஒதுக்குமின், பொய்க் கரி போகன்மின் - பொய்ச் சான்று கூறும் நெறியிற் செல்லன்மின், பொருள் மொழி நீங்கன்மின் - உண்மை மொழியினை விட்டு நீங்கன்மின், அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின் - அறநெறிச் செல்லும் சான்றோர் அவையினை நீங்காது அடைமின், பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின் - மறநெறிச் செல்லுந் தீயோர் அவைக்களத்தினின்றுந் தப்பி நீங்குமின், பிறர்மனை அஞ்சுமின் - பிறர்மனைவியை விரும்புதலை அஞ்சுமின், பிழை உயிர் ஓம்புமின் - துன்பமுற்ற உயிர்களைக் காமின், அறமனை காமின் - இல்லறத்தைப் போற்றுமின், அல்லவை கடிமின் - பாவச் செயலை நீக்குமின், கள்ளும் களவும் காமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின் - கள்ளும் களவும் காமமும் பொய்யும் பயனில சொல்லும் கூட்டமும் என்னும் இவற்றை ஒழிக்கும் உபாயத்தால் ஒழித்திடுமின், இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா - இளமை பொருள் உடல் இவை மூன்றும் நிலையற்றன, உளநாள் வரையாது - அறுதியிட்டுள்ள வாழ்நாள் சென்று கழிதலைக் கைவிடாது. ஒல்லுவது ஒழியாது - சாரக்கடவதாய துன்பம் சாராது நீங்காது ஆகலான், செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின் - இறந்த பின் செல்லும் மறுமை உலகிற்கு உற்ற துணையாகிய அறத்தினைத் தேடுமின், மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு என் - வளமிக்க இப்பெரிய வுலகத்து வாழும் மக்களை யென்றா ரென்க. போற்றுதல் - உண்டாகாது பாதுகாத்தல். தீ நட்பு - தீயோர் நட்பு. பொருண் மொழி - முனிவர் கூறும் பயனுள்ள மொழியுமாம். பிழைஉயிர் - மரிக்கிற உயிரென்பர் அரும்பதவுரையாசிரியர். அறமனை - மனையறம். விரகு - சூழ்ச்சி ; சதுரப்பாடுமாம். நன்மொழி தெரிவுறக் கேட்ட நல்லீர் என்றமையால் ஈண்டுத் தொகுத்துரைப்பன வெல்லாம் அதன் துணிபொருளா மென்பது பெற்றாம். ஞாலத்து வாழ் வீராகிய நல்லீர் என்க. ஞாலத்து வாழ்வீர்என வாழ்த்தி முடித்தாருமாம். உளநாள் செல்லுதல் தவிர்தல் இல்லை என்பது, 1"வைகலும் வைகல் ... வைத்துணராதார்" என்பதனாலும், ஒல்லுவதொழியாமை, 2"உறற்பால நீக்க லுறுவார்க்கு மாகா" என்பதனாலும் அறியப்படும். 3"கள்ளும் பொய்யுங் காமமுங் கொலையும், உள்ளக்களவுமென் றுரவோர் துறந்தவை" 4இளமையு நில்லா யாக்கையு நில்லா, வளவிய வான்பெருஞ் செல்வமு நில்லா" 5"தன்னொடு செல்வது வேண்டி னறஞ் செய்க" என்பன ஈண்டு அறியற்பாலன. இளங்கோவடிகள், என்றிற முரைத்த இமையோ ரிளங்கொடிதன் றிற முரைத்த நன்மொழியைக் கேட்ட நல்லீர் என உலகத்தாரை விளித்து, செய்யத்தகுவனவும் தவிரத் தகுவனவுமாகக் காப்பியத்திலமைந்த பாவிகங்களை யெடுத்த அவர்கட்கு அறிவுறுத்தி வாழ்வீர் உறுதுணை தேடுமின் என்றார் என்க. இது நிலைமண்டில வாசிரியப்பா. கட்டுரையுரை (முடியுடை வேந்தர் ........ முற்றிற்று). முடியுடை வேந்தர் மூவருள்ளும் - முடியுடைய மன்னராகிய சோழர் பாண்டியர் சேரர் என்னும் மூவருள்ளும், குடதிசை ஆளும் கொற்றம் குன்றா ஆர மார்பிற் சேரர்குலத்து உதித்தோர் - மேற்றிசைக்கண்ணதாகிய மலைநாட்டினை யாளும் குன்றாத வென்றியையும் ஆரமணிந்த மார்பினையுமுடைய சேரர் குலத்துப் பிறந்தோருடைய, அறனும் மறனும் ஆற்றலும் - அறமும் ஆண்மையும் திறலும், அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்புமேம்படுதலும் - அவரது பழைய பெருமையையுடைய தொன்னகராகிய வஞ்சியின் இயல்பு மேம்பட்டு விளங்குதலும், விழவுமலி சிறப்பும் - அந்நகரின்கண் விழாக்கள் நிறைந்த சிறப்பும், விண்ணவர் வரவும் - வானோர் வருகையும், ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக் குடியின் செல்வமும் கூழின் பெருக்கமும் - கெடாத இன்பத்தையுடைய அவரது நாட்டில் உறையும் குடிகளின் செல்வமும் உணவின் பெருக்கமும், வரியும் குரவையும் விரவிய கொள்கையின் - தம்மிற் கலந்த தன்மையையுடைய வரியும் குரவையுமாகிய பாட்டும் கூத்தும், புறத்துறை மருங்கின் - புறத்திணைக்குரிய துறைகளிலே, அறத்தொடு பொருந்திய மறத்துறை முடித்த - அறத்துடன் கூடிய போர்த்துறைகளைச் செய்து முடித்த, வாய்வாள் தானையொடு பொங்கு இரும் பரப்பின் கடல்பிறக்கு ஓட்டி - தப்பாத வாளினை யுடைய சேனையுடன் சென்று மிக்க பெரிய பரப்பினையுடைய கடலின் கண் வாழும் பகைஞரைப் பிறக்கிடுமாறு துரந்து, கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய - கங்கையாகிய பெரிய யாற்றின் கரைக்கண் மேற்சென்ற, செங்குட்டுவனோடு - செங்குட்டுவன் என்னும் கீர்த்தி மிக்க வேந்தனோடு, ஒரு பரிசு நோக்கிக் கிடந்த வஞ்சிக்காண்டம் முற்றிற்று - ஒருவாறு நோக்கும்படி அமைந்த வஞ்சிக் காண்டமென்னும் இத் தொடர்நிலைச் செய்யுளின் மூன்றாம் பகுதி முற்றிற்று என்க. சேரர் குலத்தோரின் அறன் முதலாக ஈண்டுத் தொகுத்துரைத் தவற்றை இக்காண்டத்தில் ஆண்டாண்டுக் கண்டுணர்க. மறத்துறை முடித்த குட்டுவன், தானையொடு கடல்பிறக் கோட்டிக் கரை போகிய குட்டுவன் எனத் தனித்தனி முடிக்க. கடல்பிறக் கோட்டியதும் கரைபோகியதும் 1முன்னர்ப் போந்தமை காண்க. அறன்முதலாகக் குரவையீறாகக் கூறியன பலவும் செங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கிக் கிடந்த வஞ்சிக் காண்ட மென்க. வரந்தரு காதை முற்றிற்று. வஞ்சிக் காண்டம் முற்றிற்று. நூற் கட்டுரை குமரி வேங்கடங் குணகுட கடலா மண்டிணி மருங்கிற் றண்டமிழ் வரைப்பிற் செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின் ஐந்திணை மருங்கின் அறம்பொரு ளின்பம் 5 மக்கள் தேவ ரெனவிரு சார்க்கும் ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர எழுத்தொடு புணர்ந்தசொல் லகத்தெழு பொருளை இழுக்கா யாப்பின் அகனும் புறனும் அவற்று வழிப்படூஉஞ் செவ்விசிறந் தோங்கிய 10 பாடலும் எழாலும் பண்ணும் பாணியும் அரங்கு விலக்கே ஆடலேன் றனைத்தும் ஒருங்குடன் தழீஇ உடம்படக் கிடந்த வரியுங் குரவையுஞ் சேதமு மென்றிவை தெரிவுறு வகையாற் செந்தமி ழியற்கையில் 15 ஆடிநல் நிழலின் நீடிருங் குன்றம் காட்டு வார்போற் கருத்துவெளிப் படுத்து மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதி காரம் முற்றும். உரை குமரி........சிலப்பதிகாரம் முற்றும். குமரி வேங்கடம் குண குட கடலா மண்திணி மருங்கில் தண்டமிழ் வரைப்பில் - அணுக்கள் செறிந்த நிலவுலகிலே தெற்கிற் குமரியும் வடக்கில் வேங்கடமும் கிழக்கிலும் மேற்கிலும் கடலும் எல்லையாக அவற்றிடைப்பட்ட தண்டமிழ் நாட்டில், செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதியின் ஐந்திணை மருங்கின் - செந்தமிழ் நாடு கொடுந் தமிழ் நாடு என்னும் இருபகுதியினும் அமைந்த குறிஞ்சி முல்லைபாலை மருதம் நெய்தல் என்னும் ஐந்து நிலத்தினும் வாழ்வார்க்கு, அறம் பொருள் இன்பம் மக்கள் தேவர் என இரு சார்க்கும் ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர - அறம் பொருள் இன்பமாகிய உறுதிப் பொருள்கள் மக்கள் தேவர் என்னும் இரு பகுதிக்கும் அமைந்த தன்மையையுடைய ஒழுக்கத்துடன் பொருந்த, எழுத்தொடு புணர்ந்த சொல்லகத்து எழுபொருளை இழுக்கா யாப்பின் - எழுத்தும் அதனாலாய சொல்லும் அதன் கட்டோன்றும் பொருளுமாகிய அம்மூன்றிலக் கணத்தினின்றும் வழுவுத லில்லாத செய்யுட்களால், அகனும் புறனும் அவற்று வழிப்படூஉம் செவ்வி சிறந்ததோங்கிய பாடலும் - அகமும் புறமுமாகிய அவற்றின் வழிப்படும் அழகு மிக்குயர்ந்த பாட்டும்? எழாலும் பண்ணும் பாணியும் யாழும் பண்ணும் தாளமும், அரங்கு விலக்கே ஆடல் என்று அனைத்து - அரங்கும் விலக்குறுப்பும் கூத்தும் என்ற அனைத்தையும், ஒருங்குடன் தழீ'a6இ - ஒரு சேரத் தழுவி, உடம்படக் கிடந்த வரியும் குரவையும் சேதமும் என்றிவை அவற்றுடன் இசைவுபெறக் கிடந்த வரியும் குரவையும் சேதமும் என்னும் இவைகள், தெரிவுறு வகையால் விளங்கும் வகையால், செந்தமிழ் இயற்கையின் - செந்தமிழின் மரபாலே, ஆடி நல் நிழலின் நீடு இருங்குன்றம் காட்டுவார்போல் - ஆடியின் நல்ல நிழலில் உயர்ந்த பெரிய மலையினைக் காட்டுவார்போல்? கருத்து வெளிப்படுத்து - கருத்துக்களைத் தோற்றுவித்து- மணிமேகலைமேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும் - மணிமேகலை யென்னும் தொடர்நிலைச் செய்யுளோடு கூடி உரைக்கப்படும் பொருள் முடிந்த சிலப்பதிகாரக் காப்பியம் முற்றுதலுற்றது என்க. அறம் பொருளின்பம் ஒழுக்கொடு புணர எனவும், பாடல் முதலியன தெரிவுறு வகையால் எனவும், யாப்பின் இயற்கையின் கருத்து வெளிப்படுத்தும் எனவும் இயையும். மலையின் வடிவு முழுதும் சிறிய ஆடி நிழலில் விளங்கித் தோன்றுமாறு போலப் பரந்த பொருளெல்லாம் சுருங்க வெளிப்படுமாறு செய்தென்க. சேதம் என்பது விலக்குறுப்புக்களிலொன்று; விலக்கும் சேதமும் வேறு வேறாகவும். சேதம் என்பதனை வரி குரவை என்பவற்றோடு சேர்த்தும் கூறியிருப்பதன் கருத்துப் புலனாகவில்லை. நான்கு பொருள்களுள் சிலப்பதிகாரம் அறம் முதலிய மூன்றனையும், மணிமேகலை வீட்டினையுங் கூறுதலின் மணிமேகலைமேல் உரைப் பொருள் முற்றிய என்றார். இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தின் மூன்று காண்டத்திற்கும் பண்டித நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இயற்றிய உரை முற்றிற்று. அருஞ்சொல் முதலியவற்றின் அகரவரிசை (எண் பக்கத்தைக் குறிக்கும்) அடித்தோழி 136 அஞ்சில் ஓதி 31 அந்தரசாரிகள் 90 அமைவிளை தேறல் 80 அம்மணம் 137 அம்மாமி 137 அம்மானை வரி 138 அரங்கு 20,26 அரட்டன் செட்டி 161, 170,175 அரவு 46 அரும்பவிழ் வேனில் 49 அலர்பாடு பெற்றமை 4 அவந்தி 120 அவுணர் 10, 59 அவ்வை 137,146,148 அழும்பில் - ஓரூர் 43 அறக்கள வேள்வி 109, 124,125 அறத்தொடு பொருந்திய மறத்துறை 182 அறப்பயன் விளைதல் 176 அறமனை காமின் 165,180 அறவோர் 180 ஆசான் 31, 45, 46,53 ஆசீவகர் 91 ஆடகமாடம் - திருவனந்தபுரம் 58,170 ஆடல் 50,63,65,184 ஆடியல் யானை 48 ஆடு - வெற்றி 60 ஆர மார்பிற் சேரர் 165,181 ஆலமர் செல்வன் 3 ஆலமர் செல்வன் புதல்வன் 3 ஆலும் புரவி 48 ஆவுதி 47,57 ஆவுதி நறும்புகை 47,57 ஆளியின் அணங்கு 29 ஆறுமுகங்கள் 15 ஆன்பொருநை 124,151 இசை 9,27,48,60,63 இடுமணல் எக்கர் 27 இந்திர வில் 2,8,102 இமயவரம்பன் 126,178 இரட்டையம் பெண்கள் 161,170 இருபிறப்பு 36 இருபிறப்பாளர் 37 இலங்கைக் கயவாகு 177 இறை - முன்கை 12 உடங்கு - உடன் 155 உண்ணீரற்றுயிரிழந்தமை 136 உத்தரன் 45,51,67 உமையவள் 107,119 உயிர்க்கொலை நீங்குமின் 165,180 உயிர்போகு பொதுநெறி 129 உயிர்ப்பலி 51,67,68,78,93 உரவுமண் 46,56 உருத்திரன் 51,67 உளநாள் வரையாது 165,180 ஊசல் வரி 139,154 ஊன்சோறு 52,72 எஞ்சா நாவினர் 50,66 எல் - ஒளி 117 ஏச்சுரை 137,147 ஏடு 2,7,33,36,43 ஏரகம் 10 ஏலவல்லி 21 ஒப்பனை 6,162,115,118 ஒலியல் மாலை 48,61 ஒற்றை - ஏகதாளம் 155 கங்கர் 24,41 கடம் - கடன் 16 கடம்பன் 3,11,12 கடலந்தானை 65 கடல் விளையாட்டு 87 கட்டியர் 24,41 கட்புலம் 24,41,159,166 கணிகையர் 77, 91, 166 கண்டம் - நிறத்தாற் கூறுபட்ட திரை 95 கண்ணெழுத்தாளர் 66 கண்ணெழுத்து 49,63,66 கந்துக வரி 139,153 கயவாகு 159,164,177,178 கருநாடர் 62 கரும வினைஞர் 57 கரும்பு 21,29,140,156 கலிங்கர் 24,41,71 கவடி - வெள்வரகு 101 கவண் 80,100 கவந்தம் 51,68 கவிழ்மணி 51,68 கவை 24,47,48,81,99,125 கழங்காடு மகளிர் ஒதை 103 கழு 10,11,25,60,70 கறவை முறை செய்த காவலன் 152 கறைத்தோல் 68 காசறைக் கரு 21,29 காப்பியத் தொல்குடி 162 காவா நா 50,65 குடகர் 49,62 குடக்கோக் குட்டுவன் 47, 58 குடங்கை நெடுங்கண் 154 குடைநிலை வஞ்சி 23, 39 குட்டுவன் 19, 25, 34, 47, 55 குயிலுவக் கருவி 49, 63, 64 குயிலுவர் 49, 65 குரங்கின் குட்டி 21, 29 குரற்றலைக் கூந்தல் 160, 169 குலத்தலை மாக்கள் 160, 167 குலமலை 4, 14 குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணி 81, 101 குறிஞ்சிப் பாணி 81, 101 குறிஞ்சி மலர் 170 குறையுடற் கவந்தம் 51 குன்று கண்டன்ன உறையுள் 95 கூடம் 45, 61, 97 கூத்தச் சாக்கையன் 119 கூலம் 21, 33, 112, 172 கூற்றம் 6, 65, 121 கூனி 12, 62, 179 கூன் 14, 50, 180 கைவளை 98, 104 கொங்கணக் கூத்தர் 45 கொங்கணர் 24, 41 கொங்கர் செங்களம் 41,135, 141 கொங்கர் செங்களம் வேட்டது 141 கொடுஞ்சி நெடுந்தேர் 49, 63 கொடுந்தமிழ் 183 கொடுமணி 2 கொடுவரி 24,40, 141 கொட்டிச் சேதம் 105, 108, 119 கொண்டி - கொள்ளை 65 கொல்லன் 143, 147, 165 கொளு 82, 131 கொள் 15, 107 கொற்கை 74, 93 கொற்றவஞ்சி 39 கொற்றவள்ளை 40 கொற்றவை 127 கோப்பெருந்தேவி 35,103 கோல் 89 கோள் - தவறு 147 சங்கம் 68 சஞ்சயன் 49, 63 சந்தி 50, 162 சந்துரல் 157 சாபம் 149 சாரணர் 90 சிங்கன் 51, 67 சித்திரன் 51, 67 சிந்துரக் கட்டி 20, 28 சிலம்பன் 3, 11 சிவேதன் 51, 67 சிறப்பூண் - விருந்தூண் 72 சிறுபறை 2,7 சீறியாழ் 106, 115 சிறுகுடியீரே 7 சூலம் 30 செங்கண் 122 செங்கோடு 10 செஞ்சடைக் கடவுள் 47, 58 செஞ்சடை வானவன் 48, 61 செந்தமிழ் 183 செந்தில் 10 செம்பாலை 115 செம்பியன் 77, 144, 156 செயலைய மலர்புரை திருவடி 4 செயிர்த்தொழில் முதியோன் 74 செரு 42, 93 செவ்வழி 115 செவ்வேள் 20, 27 செழியன் 54, 89 சேதம் 105, 184 சேரன் கடம்பெறிந்த வார்த்தை 140 சேரன் பொறையன் மலையன் 140, 155 சேனாமுகம் 44 ஞிமிறு 27 தண்டலை 60 தண்ணான் பொருநை 81,109 தமனியம் 99 தமிழாற்றல் 65, 82 தலைக்கோல் 121, 167 தலைத்தாள் நெடுமொழி 22, 32 தவம் பல 180 தனுத்தரன் 51 தாடி 71,178 தார் - தூசிப்படை 157 தாழை 81,102 திகை - திசை 141 திசைமுகம் 78, 107 திரைத்தல் - சுருக்குதல் 67 தீவினைச் சிலம்பு 21,31 துகிற்கொடிப் பந்தர் 51, 67 தும்பை 47, 100,155 துவர் 79,183 தூக்கு 99 தூங்கெயில் மூன்றெறிந்த சோழன் 139 தெளிந்தோர்ப் பேணுமின் 165,180 தென்னவன் 88,137 தேவந்தி 135,178 தொடுப்பு - விதைப்புமாம் 102 தொண்டகம் 2,7 தொழுதகவு 34 தொன்றியல் வாழ்க்கை 163 தோரம் 84,91 தோள்வளை 119 நந்தி 51,68,118 நரைமுதிர் யாக்கை 110,125 நன்கனம் 22,34 நாவலந் தண்பொழில் 24 நாவாய் 97 நாவியின் பிள்ளை 21,29 நாளணி 80 நாள் விலைக் கிளை 84 நித்தல் விழா 164,177 நித்தல் விழாவணி 164, 177 நிலந்தரு திரு 105,112 நிலந்திரைத் தானை 151 நிலையுயர் கடவுள் 4 நீர்ப்படை 23,35 நீர்ப்படை செய்தல் 36,83 நீலகிரி 45,60 நீலப் பறவை 4,13 நீலன் முதலிய கஞ்சுகமாக்கள் 120 நூழிலாட்டு 69 நூற்றுவர் கன்னர் 45,65 நெடுஞ்செழியன் 54,92 நெய்தல் 109,183 நேரார் 4,15,16 நேரிவாயில் 123 பங்களர் 24,41 பசு 29,169 பஞ்சடி 138 பஞ்சவன் 140,156 பதம் - உணவு 131 பத்தர் 106 பத்தினிக் கடவுள் 36,159 பத்தினிப் பெண்டிர் 5,17 பரசல் 23,33,35 பலரறி மணம் 14 பலர்தொழு பத்தினி 5 பறந்தலை 52,71,85 பறம்பு 7 பாசறை 45,66 பாடகச் சீறடி 80,97 பாடகம் 3,10,119 பாடல் 11,103 பாடல்சால் முத்தம் 156 பாடியிருக்கை 66 பாட்டு 1,141 பாட்டுமடை 3,13 பாத்தரு நால்வகை மறை 108,119 பிடர்த்தலைத் தாழி 52 பிழை மணம் 15 புகன்று - தருக்குற்று 142 புலர்வாடு நெஞ்சம் 4 புலவரை யிறந்தோய் 110,129 புலி 20,24 புல் - ஓர் நிறம் 36 புறநிலைக் கோட்டப் புரிசை 47 புனம் 80,100 பூத்த வஞ்சி 40,47,57 பெண்ணணிப் பேடியர் 107,118 பெருங்கணி 45,53 பெருங்காஞ்சி 38 பெருங்கோப் பெண்டு 22,32 பெருஞ்சோற்று வஞ்சி 23, 38 பெருவஞ்சி 38, 39 பெருந்திரு 23 பேடியினியல்பு 98 பேய்மகள் 51, 69,75 பேர்யாறு 27,50 பைங்கொடிப் படலை 21,29 பைரவன் 51,67 பொருண் மொழி 180 பொருளுரை 70,110 போதியின்கீழ் மாதவர் 91,137,147 மகட்பாற் காஞ்சி 23,37 மகதம் 120 மடமான் மறி 21 மடம் - அழகு 145 மண மதுரை 6 மணவணி 4,13 மணிமேகலை 91,184 மண்டிணி ஞாலம் 47,56 மண்டிலம் 106,115 மண்ணுடை முடங்கல் 66 மண்ணுதல் 127 மண்ணோர் உரு 110,128 மதுகரம் 20,27 மயல் - பித்து 148 மயன் 77,90 மயிர்க்கண் முரசம் 39,67 மருதம் 183 மலைநாடன் 3 மலைமுதுகு நெளிய 48,60 வளம் 7,127 மழை பிணித்தாண்ட மன்னவன் 109 மறித்தல் - மீளல் 128 மறுதரவு 17 மன்பதை காக்கும் நன்குடி 22 மாகதப் புலவர் 59 மாசாத்துவான் துறவு 144,147 மாடலன் 143,166 மாதரி 76,174 மாதிரம் 51,67 மாந்திய 80 மா மலை வெற்பன் 12,16 மாலதி 161,171 மான்மயிர்க் கவரி 20,29 மின்னுக்கொடி 148 மின்னொளி மயக்கும் மேனி 48,61 முதலை 44 முதுகுடி 23,37 முத்தி 30,151 முன்றேர்க் குரவை 52,71 மூவாமேனிப் பத்தினி 177 மேரு 107 மேனிலையுலகம் 126 யவனர் 109 யவனர் வளநாடு 126,140 யாக்கை நிலையாமை 37 யானை ஐந்நூறு 63 வச்சிரம் 120 வஞ்சி முற்றம் 20,182 வடவரை 139,152 வடுகு 45 வட்கர் 24 வட்டு - உண்டை 142 வயிர் 51,67 வயின் - பதம் 72 வரிப்பாணி 62 வரியுங் குரவையும் விரவிய கொள்கை 165 வரையாடு வருடை 21 வலம்படு கொற்றம் 33 வலம்புரி 81,103 வள்ளிபோல்வீர் 1 வள்ளை - உலக்கைப்பாட்டு 156 வள்ளைப் பாட்டு 39,140,156 வால்வளை - சங்கவளை 11,13 வானவர் போற்றும் வழி 105 வானவூர்தி 17 விசித்திரன் 51, 67 விசும்பியங்கு முனிவர் 48,60 வியலூர் 123 விருந்தின் மன்னர் 65 விரை 41, 168 விருத்தி 50 வில்லவன் கோதை 24, 105 விழாவணி 164, 177 வினை வழித்தாய் உயிர்செலும் 129 வெட்சி 28 வெண்கால் அமளி 107,116 வெண்குன்று 3 வெண்டலைப் புணரி 48 வெள்ளிடைப் பாடி 75,83 வெற்றிவேற் செழியன் 78,93 வேலன் பாணி 20 வேல் 21, 65 வேள்வி - ஓமம் 134 வேள்விக் கிழத்தி 111,130 வேள்விச் சாந்தியின் விழா 111,131 வேள்விப் பார்ப்பான் 110,130 வைகல் 181 வைதாளிகர் 59 வையை 17, 125 ந.மு.வே.நாட்டார் வாழ்க்கைச் சுவடுகள் பிறப்பு: - நடுக்காவிரி, 12. 3. 1884 திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தந்தை - வீ.முத்துசாமி நாட்டார் தாய் - திருமதி தைலம்மை இளமைக் கல்வி: திண்ணைப்பள்ளி - நடுக்காவிரி தொடக்கப்பள்ளி - 3,4 ஆம் வகுப்புகள் நடுக்காவிரி தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் மதுரைத் தமிழ்ச் சங்கம் 1905 - பிரவேச பண்டிதம் 1906 - பாலபண்டிதம் 1907 - பண்டிதம் ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டியதை மூன்றே ஆண்டுகளில் படித்து முதல் வகுப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற பாராட்டுக்குரியவர். பொற் பதக்கம், தங்கத்தோடா, அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர். ஆசிரியர் பணி 1908 - பிசப் ஈபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. 1909 - தூய மைக்கேல் உயர் நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் 1910-1933 - தமிழ்ப் பேராசிரியர் பணி (22 ஆண்டுகள்) எஸ்.பி.ஜி. கல்லூரி , திருச்சிராப்பள்ளி 1933-1940 - தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் 1940 - சென்னை மாகாண தமிழர் மாநாட்டில் ‘நாவலர்’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டவர். 1941-1944 - மதிப்பியல் முதல்வர் கரந்தைப் புலவர் கல்லூரி தஞ்சாவூர் 28.3.1944 - இவ்வுலக வாழ்வில் இருந்து மறைந்தார். குறிப்பு : நாட்டார் தொடர்பான வரலாற்றுச் சுவடுகளின் விரிவான செய்திகளை பதிப்பாசிரியர் உரையிலும், நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண். 22 லும் பார்க்க) நாவலர் ந.மு.வே நாட்டார் எழுதிய நூல்கள் / உரைகள் நூல்கள் 1915 - வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 1919 - நக்கீரர் 1921 - கபிலர் 1923 - கள்ளர் சரித்திரம் 1926 - கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் 1928 - சோழர் சரித்திரம் உரைகள் 1925 - இன்னாநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன்,வெற்றிவேற்கை, மூதுரை, உலகநீதி, நல்வழி, நன்னெறி திரிகடுகம் - கையெழுத்துப் படியாகக் கிடைத்து முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண் : 20 இல் பார்க்க. 1925 - 1932 - திருவிளையாடற்புராணம் 1940 - சிலப்பதிகாரம் 1942 - மணிமேகலை 1940 - 42 - கட்டுரைத்திரட்டு (இரண்டு தொகுதிகள்) 1944 - அகநானூறு உரைத்திருத்தம் : 1940 - தண்டியலங்காரப் பழைய உரை யாப்பருங்கலக்காரிகை அகத்தியர் தேவாரத்திரட்டு 1930 - பிப்ரவரி 11,12,13,14 ஆகிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளை சார்பாக தொல்காப்பிய ஆராய்ச்சி சொற்பொழிவு. (இந்த சொற்பொழிவு இதுவரை வெளிவராதவை கையெழுத்துப் படியாகக் கிடைத்தது. முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ்உரைகள் தொகுதி எண் - 17 இல் 15-வது கட்டுரையில் பார்க்க .) நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் நூல்கள் / கட்டுரைகள் 24 தொகுதிகளாக வெளிவருகின்றன. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் சிலப்பதிகாரம் தொகுதி 1 1) புகார்க் காண்டம் தொகுதி 2 2) மதுரைக் காண்டம் தொகுதி 3 3) வஞ்சிக் காண்டம் மணிமேகலை தொகுதி 4 4) மணிமேகலை 1 தொகுதி 5 5) மணிமேகலை 2 அகநானூறு தொகுதி 6 6) களிற்றியானைநிரை தொகுதி 7 7) மணிமிடை பவளம் தொகுதி 8 8) நித்திலக் கோவை திருவிளையாடற்புராணம் தொகுதி 9 9) மதுரைக் காண்டம்-1 தொகுதி 10 10) மதுரைக் காண்டம்-2 தொகுதி 11 11) மதுரைக் காண்டம்-3 தொகுதி 12 12) கூடற் காண்டம் -1 தொகுதி 13 13) கூடற் காண்டம் -2 தொகுதி 14 14) திருவாலவாய்க்காண்டம் -1 தொகுதி 15 15) திருவாலவாய்க்காண்டம் -2 தொகுதி 16 16) இலக்கியக் கட்டுரைகள் 17) இலக்கணக் கட்டுரைகள் தொகுதி 17 18) சொற்பொழிவுக் கட்டுரைகள் 19) வரலாற்றுக் கட்டுரைகள் தொகுதி 18 20) வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 21) சோழர் சரித்திரம் 22) கள்ளர் சரித்திரம் தொகுதி 19 23) நக்கீரர் 24) கபிலர் 25) அகத்தியர் 26) இளம்பூரணம் நீதிநூல்கள் + பதிணென்கீழ்க் கணக்கு நூல்கள் தொகுதி 20 27) ஆத்திசூடி 28) கொன்றைவேந்தன் 29) மூதுரை 30) நன்னெறி 31) நல்வழி 32) உலகநீதி 33) நறுந்தொகை 34) இன்னா நாற்பது 35) களவழி நாற்பது 36) கார்நாற்பது 37) திரிகடுகம் - முதன் முதலில் வெளிவருகிறது. தாகுதி 21 38) நாட்டார் நாட் குறிப்பு -1 - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 22 39) நாட்டார் நாட் குறிப்பு -2 மற்றும் வாழ்க்கை வரலாறு - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 23 40) கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 24 41) நாட்டார் புலமையும் பண்பும் L L L குறிப்புகள் குறிப்புகள் குறிப்புகள் 1. சிலப். 13 : 128-9. 1 சிலப். 28 : 231. 2 சிலப். 22 : 154. 1. சிலப். 18. 14-5. 1. முருகு. 189 - (உரை). 2. பரி. 5: 1. 3. முருகு, 45. 6 4. கல். 7. 1. புறம். 55. 2. பரி. 5:2. 3. முருகு. 247. 4 பரி. 5 : 9 1 நற். 34. 1 மணி. 4 : 46. 2. சிலப். 1: 41-2. 1 முருகு. 224. 1 முருகு. 68. 1. கலி. 39. 1 அகம். 127. 1 சிலப். 23; 83. 2 சிந். 1193. 1 திரிக. 11. 2 புறம். 125 : 228 3 பதிற் 70. 4 குறிஞ்சிப். 40 5 தொல், பொருள். 58. 1. மலைபடு. 137. 2. பெருங், 1. 51: 23. 3. முருகு, 190 - 3. உரை. 1. சிந், 1238. பே.உரை 2. மலைபடு, 502-3. 3. தொல், பொருள், 587. 1 சிலப். பதி : 58. 1 சிலப், 20 : 22-3. 1. சிலப்.25: 112-4. 1. சிலப், 27: 83 2. சிலப். 22: 4-5. 3 புறம், 34. 4. பெரியபு. திருவாரூர். 44. 1. பழ. 7. 2 குறள். 63 : 6. 1 சிலப் 1: 14- 8. 2 முருகு. 184. 1 சிலப் : 16. 68. 2. தொல், பொருள். 79. 3. தொல். பொருள். 79. 4. புற. வெ. 4 ; 24. 1. தொல். பொருள். 79. 2. புற. வெ. 4 ; 6. 1. தொல்.பொருள். 68. 2. தொல்.பொருள். 63. 3. சிலப். 5:91-2. 4. புற. வெ. 3:3, 7, 11, 22, 23, 8. 1. புறம், 99. 2. புறம், 31. 3. சிலப். 26 ; 50. 1 சிலப். 29, உரைப். 2. அகம். 44. 3. புறம். 18. 1 சிலப், 25; 130. 2 சிலப். 29; ஊசல் -3. 1 சிலப். 28; 205. 2 அகம். 44. 3 மதுரைக், 344-5 1 சிலப். 22 : 8 2 சிலப் 28 : 222. 1 சிலப். 9 : 78. 2 புறம். 119. 3 சிலப் 29. உரைப். 4 புறம். 72. 5 சிலப். 23 : 34. 1 சிலப் 25 : 141. 2 பதிற். 15 3 குறுந். 258 1. சிலப். 5: 157. 2. சிந். 1844. 3. சிலப் 25: 144 1 மணி. 27: 89 - 90. 2. குறள். 9. 3. சிலப். 30;51 1. சிலப். 3: 20. 2. சிலப். 5: 48 1 புறம். 378. 1 சிலப் : 9 : 15 2 தொல், உரி. 44. 1 குறள். 127. 1 அகம். 13. 2 சிலப். 17. உள்வரி-1. 1 புறம். 97. 2 குறள், 595. 1. சிலப். 5; 87-8. 1. பட்டினப். 236. 2. புறம். 18. 3. பு. வெ. தும்பை-16. 1. குறள். 774. 2. மலைபடு. 87. 3. சிலப். 27: 45.-6 4. மணி. 30: 247-9 1. கலிங். போர்பாடியது. 63, 65. 2. புறம். 370. 1. தொல், பொருள். 76. 2. வெ. வாகை: 7-8. 3. கலிங், களம் 47. 4. பெரும்பாண். 304. 5. மதுரைக். 29-38. 6. தொல். பொருள். 76. 1. பரிபா. 5-42. 2. சிலப். 26 ; 102-3. 1. கலிங். களம். 1. 2 சிலப். 26: 215-8. 1. குறிஞ். 135. 1. புறம். 61. 2. தொல். பொருள், 79. 3. புறம். 18. 1 சிலப். 7 : 55-6. 1. சிலப். 15 : 14-6. 1. சிலப், 10:13-4. 2. மணி, 2:10. 3. மணி, 26:58, 1. சிலப், 11:5. 2. சிலப். 29. “காதலன்றன்.” 1. சிலப். 28 : 116-7. 1. பதிற் 5. பதி. 2. பதிற். 5. பதிகம். 1. சிலப்.உரைபெறு 1-4. 1. முல்லை. 44. 1 சிலப், 29; “வீங்குநீர்” 2 சிலப். 20;52. 3 பட்டினப். 1-6. 1. சிலப். 26: 176-7, 1 மணி. 3 : 116-25. 1. சிலப். 4 : 66-7. 1. நெடுநல். 152-6. 2. சிலப். 20 : 17. 1. பு. வெ, மாலை. 6 ; 26. 2. புறம். 391. 3. பதிற், 75 : 11-2. (உரை) 1. மதுரைக். 11. 2. முல்லை. 96. 1. சீவக. 1170. 2. புறம், 35. 1. பதிற், 82. 2. சிலப், 9 :1-3. 3. சிலப், 27 ; 45. 4. புறம். 1. 1. கலிங்க. கடை. 35. 2. திருச்சிற். 5. 1. பரிபா. 21. 2. பரிபா. 12. 1. சிலப். 28; 6-7 1. நாலடி. 251 2. சிலப். 5; 13-4. 1. சிலப். 6-40-3. 1. சிலப். 5;99. 1. சிலப். 27 ; 179-80. 2. சிலப், 3 ; 114-5. 2. சிலப். 3 ; 119-20 1. சிலப், 27;117-22 2. பதிற்று. 5-ப் பத்துப் பதிகம். 3. சிலப். 30. கட்டுரை, 12-5 1. புறம், 42. 2. தொல், புறட், சூ, 21. (ந, உரை,) 2. புறம். 24. 1. மணி. 28 ; 103-4. 2. பதிற். 3 ; பதிகம். 3. மணி. 6 ; 97-100. 4. சிலப். 29, “வன்சொல்”. 1. பதிற், 3. பதிகம். 2. பதிற், 3. பதிகம். 3. மணி, 6 ; 54; 1. மணி. 12 : 51-2. 2. மணி, 6 : 158-9. 3. மணி. 22 : 61. 4. பதிற். 14. 1. நாலடி. 3 : 9. 1. பதிற். 9. பதிகம். 2. திருஞான. தேவா. 2. 47 ; 10. 1. சிலப். 23: 126-7. 2. மணி. 22 : 208 - 9. 1. சிலப். 29. “செங்கோல் வளைய”. 2. சிலப். பதி, 44. 1. சிலப். 22 ; 8. 1. சிலப் (பதிகவுரை.) 2. பதிற்று.5:பதிகம். 3. சிலப். 25: 152-5. 1. சிலப், 26: 9-10 2. சிலப். 27:18-9. 3. குறள் 401. 1. சிலப். 27 ; 2-4. 2. சிலப். 18 : “நறைமலி” 3. சிலப். 27 : 72-87. 1. சிலப், 27: 88-97. 2. சிலப், 30: 84-7. 3. சிலப், 27: 74-8. 1 சிலப். 9 : 45-54. 1. தொல். பொருள், 246. 2 மணி. 18 : 7-8. 1. சிலப். 16 : 19. 1 சிலப். 23 : 167-9. 1 சிலப். 28 : 212-3. 1. சிலப். 29;உரைப்பாட்டு மடை. 2. குறள். 955. வி-உரை 1 சிலப். 24 : (17) 90. 2 சிலப். 20 : 51-5. 1 சிலப். 17; ‘’கோவாமலை . . . என்பரால்” 1 புறம். 1. 1 சிலப். 28 : 141 2 பதிற். 2: பதிகம். 3 சிலப். 25 : 171-2. 1. சிலப். 7 ; 20. 1. சிலப் , 1 : 36 1. சிலப். 29: “என்னே” 1. நாலடி 396. 1. சிலப். 27 : 107-8 1. மணி. 2 : 72-4. 2. சிலப், பக். 56. 1. மணி. 7: 73. 1. மணி. 18 ; 158. 2. முருகு. 190. 3. சிலப். 9 ; 5-36. 1. சிலப். 15 ; 45-53. 1. மணி, 21 : 16-20. 2. சிலப், 26 : 98-9. 1. சிலப். உரைபெறுகட்டுரை, 4. 1. சிலப், பக். 18. 1. நாலடி. 39. 2. நாலடி, 104. 3. மணி. 24 : 77-8. 4. மணி 22:135-136. 5. நான்மணிக். 15. 1 சிலப். 28 : 119-21. 29 ; உரைப்.