நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 2 சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் உரையாசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. விருத்தாசலம்\ பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 2 உரையாசிரியர் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம், பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 288 = 312 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 195/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : மு. இராமநாதன், வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற்காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “ சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “ சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரியவர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர் களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்விகளிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப்பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக் குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல்களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக்கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவ நேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரணமாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர் களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். 17.07.2007 பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 அணிந்துரை தமிழர்க்கு வாய்த்துள்ள முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். தண்டியலங்காரம் என்னும் அணியிலக்கணநூல், ‘காப்பியநூல்’ அமைதியை அருமையாகக் கூறுகிறது. “பெருங்காப்பிய நிலையே பேசுங்காலை, வாழ்த்து வணக்கம் வருபொருள் என்றிவற்றின் ஒன்று ஏற்புடைத்தாகி முன்வர இயன்று” என்று தொடங்கி விரித்துக் கூறும் காப்பிய இலக்கணம், முற்றாகத் தன் அமைதியால் தந்த காப்பியம், சிலப்பதிகாரமே என்பதை மேலோட்டமாகக் காண்பாரும் அறியக்கூடும். “இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்” என்னும் நெறிக்கு ஒப்பிலாச் சான்றாக அமைந்தது, சிலப்பதிகாரமே என்றும், அதனை வடித்து இலக்கண வார்ப்படமாக்கியது தண்டியலங்காரமே என்றும் கொள்ளலாம். ‘சிலம்பு’ - அணிகலப் பெயர். அப்பெயர் ஒலியால் பெற்றது.. சிலம்புதல் - ஒலித்தல். சிலம்பு, மலையின் பெயர்களுள் ஒன்று; பல்வகை ஒலிகளைத் தன்னகத் துடைமையை அன்றித் தன் எதிரொலியால் பெற்ற பெயரதும் அது. சிலம்பு, தமிழரின் வீரப் போர் விளையாடல்களுள் ஒன்று. கம்பும் கம்பும் மோதுதலால் பெற்ற ஒலிப் பெயர் அது. சிலம்பு என்னும் ஒலியை ஓயாது உடைமையால் சிலம்பி (சிலந்தி) என ஓர் உயிரியும், சிலம்பிக்கூடு ( சிலந்திக்கூடு) என அதன் பன்மாண் பின்னல் வலையும் பெயர் பெற்றன. “வான்குருவியின் கூடு வல்லரக்குத்தொல் கறையான் தேன் சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால்” என்பது ஒளவையார் தனிப்பாடல்களுள் ஒன்று. தினைக்கதிர் மல்கு கொல்லையில், தீஞ்சொல் இளங்கிளி சிலம்பும்; பூம்புனல் வளாகத்தில் புள்ளினம் சிலம்பும்; நல்ல அரும்பு தேன்வழியும் காலையில் வண்டு சிலம்பும்; மனைகள் தோறும் மகளிர்தம் வள்ளைப்பாட்டின் (உலக்கைப்பாட்டின்) மங்கலம் சிலம்பும்; என்பது கம்பர் காட்டும் சிலம்புச் சீர்மை. “தினைச் சிலம்புவ தீஞ்சொல் இளங்கிளி” என்னும் பாடற்செய்தி இது. சிலம்பரசன், சிலம்பரசி, சிலம்பாயி இன்னவை சிலம்பொடு கூடிய பெறலரும் பெயர்கள்! “அம் பொற்சிலம்பி அரவிந்தத் தாளணியும் செம்பொற் சிலம்பே சிலம்பு” என்பதும் புகழ்வாய்ந்த தனிப்பாடலின் பின்னிரண்டடிகள். அழகர் மலையில் வீழ்ந்ததோர் ஆறு - அருவியும் ஆயது. அது, “நிலம்பக வீழ்ந்த சிலம்பாறு” எனப்பட்டது. ‘சிலம்பு’ என்பது ‘சிலப்பதிகாரம்’ என்னும் பெயரை அன்றி, வேறு எவ்விடத்தும், ‘சிலப்பு’ என வல்லெழுத்து ( ம் > ப்) மாற்றம் பெற்றது இல்லை. வரம்பு - வரப்பு, பரம்பு - பரப்பு, குரங்கு - குரக்கு என ‘வலிக்கும் வழி வலித்தல்’ என்னும் இலக்கணம் பெற்று வந்தது இல்லை அது. இரும்பு - இருப்பு, செம்பு - செப்பு என மக்கள் வழக்கில் வருவது போலச் சிலம்பு, சிலப்பு ஆனதும் இல்லை. ‘வலியா வழி வலித்தல்’ என ஆக்கவா, அடிகள் சிலப்பதிகாரம் எனப் பெயரிட்டார்? அல்லது, “சிலம்பு > சிலப்பு’ என வலித்தல் விகாரம் பெற்றது” என்று, இலக்கணவாணர் சொல்லிக் கொள்வதற்காகவோ பெயரிட்டார்? ஏதோ ஒரு பாரிய நோக்கு இருந்தால் அன்றிச், சிலம்பைச் சிலப்பு ஆக்கி நெற்றிச் சூடு போட்டிருக்கமாட்டார்? மென்மையான ஒலியினது சிலம்பு; மெல்லியலார் அணிவது சிலம்பு; மணநாளுக்கு முற்படச் செய்யும் ‘சிலம்பு கழி நோன்பு’ வழியாகக் கன்னிமை நீங்கித் தாய்மைத் தெய்வக் கோலம் காட்டுவதற்காகத், தான் ஒதுங்கிக் கொள்வது சிலம்பு. ஒதுங்கிய சான்றாம் விழாக் கொண்டு, மங்கல விழாக்கண்டு, ஒலியும் தலையும் காட்டா வகையில் பொதியுள் ( பையுள்) அடங்கிக் கிடந்தும், அடங்கா வன் கொடுஞ்செயல்கள் எத்தனை எத்தனை செய்கின்றது? சிலம்பு திருடியவன் என்று திருட்டறியா ஒருவன் கொல்லப்பட்டானே! அவனை இழந்தாள் அவல அரற்றால், அரசனும் அரசியும் அவலப்பட்டனரே! அடைக்கலம் இழந்தேன், இடைக்குல மக்காள் என மாதரி எரிபாய்ந்து இறந்தனளே! மதுரைக்குத் தாயாய்த் தாங்கி வந்த காவுந்தி ஐயை உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்தனரே! அவலச் செய்தி, மாடலன் வழியே அறிந்த கோவலன் தாயும், கண்ணகி தாயும் பெரும் பிறிது உற்றனரே! கோவலன் தந்தையும், கண்ணகி தந்தையும் துறவு பூண்டனரே! ‘ஆடல் பாடல் அழகு’ என்னும் மூன்றன் கொள்கலமாகத் திகழ்ந்த மாதவியார், தாம் அறவணவடிகள் அடியடைந்து துறவு கொள்ளும் அளவில் ஒழியாமல், “ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?” என்னும் அழகுப் பிழம்பு மணிமேகலையாரைக், “கோதைத்தாமம் குழலொடு களைந்து போதித் தானம்” புகுவித்ததே! இன்றும் என்ன! ஆயிரம் பொற் கொல்லர் கண்ணகியார் அமைதியுற வேண்டி, ஆடு மாடு கோழி என உயிர்ப்பலி ஊட்டினரே! (ஆயிரம் பொற்கொல்லரை உயிர்ப்பலி ஊட்டினர் என்பது உரையாளர் செய்த பிழை; ஆயிரம் பொற்கொல்லர் உயிர்ப்பலி ஊட்டினர் என்பதே அடிகள் வாக்கு! இரண்டன் உருபு (ஐ) விரிக்க என்ற பிழையால், தீராக் கறையாக இன்றும் நிலைபெறுகின்றது) இவ்வன் கண்மைகளையெல்லாம் கண்ணராவிகளையெல்லாம் முகத்தில் முத்திரை யிட்டுக் காட்டுவதே சிலப்பதிகாரப் பெயரீடு! ஏன், இவ்விளக்கம்? நூலாசிரியன் நுண்ணோக்கு அறிந்தார் - அறிந்து உரைகாண வல்லார் - அருமை சுட்டுதற்கேயாம்! எவ்வளவு பேரும் பெருமையும் மிக்காரையும் மயக்கவல்லது நூல் நுட்பம் என்பதை நோக்கிச், சிலம்பு முதலிய வற்றைக் கற்றல் கடனெனக் கூறுதற்கே இப்பெயரீட்டு விளக்கமாம் என்க. தமிழ்வள உரைப்பரப்பில் மூவர்க்குத் தனிச்சிறப்பாம் இடம் உண்டு. அம்மூவர் அடியார்க்கு நல்லார், யாப்பருங்கல விருத்தியார், நச்சினார்க்கினியர் என்பார். முக்கடல் அன்ன முத்தமிழ் விளக்கப் பேருரைஞர் இம்மூவர். இவர்தம் உரை விளக்கம் நமக்கு வாயாக்கால் நம் முந்தையர் முழுவளம் அறிதற்குத் தானும் கருவி இல்லாமல் சுருக்க முற்றிருக்கும் என்பது வெள்ளிடை மலையாம். இச் சிலப்பதிகாரத்திற்கு முதற்கண் நமக்கு வாய்த்தது அரும்பொருள் உரையாம். அவ்வுரையை முழுதுற ஏற்று நடையிடுவது அடியார்க்கு நல்லார் உரை. அவ்வடியார்க்கு நல்லாரின் பாரித்த உரைதானும் நமக்கு முழுவதாகக் கிடைத்திலது. கிடைத்த அளவானே நலம் கொள்ளும் நலப் பாட்டின் அளவு - சிறப்பு என்பதை இந்நூல் இப்பதிப்பில் முகவுரைக் கண், கண்டு கொள்க. அடியார்க்கு நல்லார் உரைவளம் நலம் பெறுதற்கு ஊற்றுக் கண்ணாக இருந்தவர் பொப்பண்ண காங்கேயர் என்பார். இதனை உரைச் சிறப்புப் பாயிரம் சுட்டுகின்றது. “காற்றைப் பிடித்து” என்னும் பாட்டு அது. இக் காங்கேயன், ஈழத்துக் காங்கேயன் துறையினர் என்பதை விளக்கும் நூல், ‘அடியார்க்கு நல்லார்’ என்னும் அரிய ஆய்வு நூலாகும். “ தமிழருடைய பழைய கலைநாகரிகத்தை இறவாமல் பாதுகாத்த பெருமை இளங்கோவடிகட்குரியது” “ நுட்பமாகிய இசை நாடகப் பகுதிகளை விளக்குவதற்கு முயன்ற வகைமையால் அரும்பத உரையாசிரியர்க்கே அனைவரும் கடப்பாடு உடையர் ஆவர்” “ இதன் கண்ணுள்ள இசை நாடகப் பகுதிகள் யாவும் நன்கு விளக்கப் பட்டன என்றல் சாலாது. அவற்றை அறிதற்குக் கருவியாகிய நூல்கள் இறந்தொழிந் தமையின் உரையாசிரியர்களே பலவற்றை விளக்காது சென்றனர்“ - என்பன முகவுரைக் கண் நாவலர் வழங்கும் அரிய குறிப்புகளுள் சில. “இந்நூலின் மூலமும் உரைகளும் ஐயரவர்களால் பதிப்புத்தோறும் திருத்தம் பெற்றுளவேனும், அவை பின்னும் திருந்த வேண்டிய நிலையில் இருந்தன” என்று சுட்டுதல், நாவலர் தம் உரையால் நலம் பெற்ற சில திருத்தங்களைச் சுட்டுவதாம். இப்புத்துரைப் பதிப்பில் தானும் திருந்த வேண்டும் இடங்களும் உண்டு என்பதற்கு, ஒரு சான்று காட்டுவோம். முன்னைப் பதிப்பொன்று மீண்டும் பதிப்பிக்கப்படுங்கால் அதுகாறும் வந்துள்ள அந்நூல் பற்றிய ஆய்வாளர் கருத்துக்களில் தக்கவை உண்டாயின் அவற்றைப் பொன்னேபோல் போற்றுதல் கடன் என்பதைச் சுட்டுதல் சாலும். வாழ்த்துக் காதையில் வள்ளைப் பாட்டு மூன்றுள. அவற்றுள் இரண்டாம் பாடல் பாண்டியன் மாலையாம் வேப்பந்தாரும், மூன்றாம் பாடல் சேரன் மாலையாம் பனந்தோடும் சுட்டப்படுகின்றன. முதற்பாடல் சோழனைப் பற்றியது. அதில் முறைப்படி சோழன் மாலையாம் ஆர் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆர் = ஆத்தி. “ போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” என்பது தொல்காப்பியம். ‘ஆர்’ இருந்தும் ஏடுபெயர்த்தவர் சீருற எண்ணாமல் எடுத்த படியால், ‘ஆர் இரக்கும்’ என வரவேண்டியது ‘ஆரிக்கும்’ என்று வந்து ‘ஒலிக்கும்’ என்னும் பொருளும் கொண்டது. சென்னைப் பல்கலைக்கழக அகராதியிலும் அச்சொல் அப்பொருள் காட்டுவதாயிற்று. இதனை, ‘அகராதி நினைவுகள்’ என்னும் தம் சுவடியில், வையாபுரியார் சுட்டிக் காட்டினார். ஆயினும், உ.வே.சா. அவர்களின் பதிப்புகளிலும், புதுப்பதிப்பாம் இப்பதிப்பிலும் ஏறிற்றில்லை. எம் கைவயம் இருந்து இதுகால் திராவிடப் பல்கலைக் கழக ஆய்வுச் சுவடியாக உள்ள எ.ஆ. கிருட்டிண பிள்ளை அவர்கள் எழுத்துப்படியில் ‘ஆர் இரக்கும்’ என்றே உள்ளமை சுட்டத்தக்கதாம். ‘சுவடிக்கலை’ என்னும் எம் நூலில் இது விளக்கம் பெற்றது. அரும்பத உரைகாரர், அடியார்க்கு நல்லார் உரைகளைத் தக்காங்கு அவ்வவ் விடத்து ஏற்றுப் போற்றுவதுடன், விளக்கங்களும் நாவலர் வரைகிறார்.அவர்தம் உரை பொருந்தா இடம் காணின், அதனைத் தெளிவாகச் சுட்டிக் காட்டிப் பொருந்தும் வகையும் தெளிவாக்குகிறார். வடசொற்களை முன்னை ஆசிரியர் ஆண்டிருப்பின் தமிழாக்கச் சொல்லைச் சுட்டிச் செல்லுதல் இவ்வுரைச் சிறப்பாம். முந்தையர் உரைவாய்க்காத பன்னிரு பகுதிகளுக்கும் புத்துரைகண்டு பொலிவுறுத்துகிறார் நாவலர். அவர்தம் உரைநடை ஆற்றொழுக்கென அமைந்து தூய ஆழ்ந்த நீருள் மின்னும் பொன்னெனப் பொலிகின்றது. நாவலர்தம் பேரருள் உள்ளம் ஓரிடத்து அவர் செய்யும் விளக்கக் குறிப்பால் புலப்படும். எடுத்துக் காட்டாம் எழிலினது அது. ஆயிரம் பொற்கொல்லரைக் கொன்றமை, உரைபெறு கட்டுரையாலும், உரையாசிரியர்களாலும் சுட்டப்படுகின்றது. அதனைக் கூற வரும் நாவலர், அக் கொலையை உளங்கொளாமல் “மாவினால் ஆயிரம் பொற்கொல்லர் உருச் செய்து பலியிட்டனன் போலும்” என்று விளக்கம் வரைகின்றார். உரையாசிரியர் ‘இரண்டன் உருபு விரிக்க’ என்றது பிழை என உணராமல், உயிர்ப்பலி ஊட்டினான் எனக் கொண்டும், அதனை ஒப்புதல் இல்லாமல் உருகிய எழுத்து “மாவினால் உருச் செய்து” என்பது. தம் உரைப்பதிப்பிற்கு முன்னர் எவரெவர் இந்நூற் பதிப்புச் செய்தார் என்பது காட்டலும், நூல் நிறைவில் அருஞ்சொல் முதலியவற்றின் அகரவரிசை அமைத்தலும், அவ்வரிசையில் வேண்டும் இடங்களில் தக்க விளக்கம் தருதலும், பதிப்பாளர் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டல் செவ்வியதாம். தலைக்கோல் என்பது தலைக்கோலி என்னும் பட்டம் என்பதை விளக்கும் நாவலர், பழைய கல்வெட்டுகள் வழியாக அறியப் பெறும் தலைக் கோலியர் சிலரைக் கல்வெட்டுச் சான்றால் மெய்ப்பிக்கிறார். காப்பியம் குறிப்பிடும் செய்தியைச் சங்கநூல் பரப்பை அன்றி பின்னூல்கள் கொண்டும் தெளிவிக்கிறார். சொல் விளக்க நுணுக்கங்களைத் தெள்ளத் தெளியவும் சுருங்கவும் அமைக்கிறார். அகவை = உட்பட்டது; “பிறர் நெஞ்சு புகுதல்” - புகுதல் = ஆளக் கருதுதல்; உரிமை = இல்லக்கிழத்தி; ஒட்டுப்புதகம் = இரட்டைக்கதவு; கயிற்கடை = கொக்குவாய் (கொக்கி). ஒவ்வொரு பகுதிச் செய்தியையும் திரட்டி முகப்பில் வைத்துள்ள திறம், அம் முப்பதையும் திரட்டி நூல் திரட்டாகக் ‘குறுஞ்சுவடி’ ஒன்று ஆக்கிப் பயன் கொள்ளச் செய்யும் நெறியதாம். நாவலர் பெருமகனார் உரைத் திறநயம் குறித்து, முனைவர் அ.ஆறுமுகம் அவர்கள் தனி ஒருநூல் யாத்துளார். .அதனைக் கற்றல் நலமிகச் செய்வதாம். ஆழ்ந்த புலமை, அகன்ற கல்வி, அயரா உழைப்பு, ஆராக் காதல், பிறவிப் பெருநோக்கு என்பவை ஒருங்கே கொண்ட பெருந்தக்கார் தமக்கே சிலப்பதிகாரம் முதலாம் காப்பிய உரை காண்டலும், பாட்டு தொகை தொல்காப்பியம் அன்ன நூல் விளக்கம் காணலும் வாய்வதாம்! அவ் வாய்திறம் மல்கிய நாவலர் உரை, காலத்திற்கு வேண்டும், மாரியெனப், பாகனேரி வெ.பெரி.பழ.மு.காசி விசுவநாதன் செட்டியார் தூண்டலாலும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் தாமரைத் திரு. வ.சுப்பையா பிள்ளை பேருதவியாலும் வெளிப்பட்டுப், பல்வேறு பதிப்புகளைக் கண்டது. இதுகால் பெருமக்கள் அறிவாக்கம் நாட்டுடைமைப் பொருளாக்கப்படுதல் என்னும் நன்னோக்கால், பொதுமை பூத்துப் பொலியும் வளமாக வெளிப்படுகிறது. அவ்வெளிப்பாட்டைச் செய்பவர், தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திருமலி கோ.இளவழகனார். தமிழ்மண், தமிழ்மொழி, தமிழ் இனம் என்னும் முக்காவல் கடனும் முறையாக ஆக்குவதே நோக்காகக் கொண்டவர் இப்பெருமகனார்! நாவலர் தம் முழுதுறு படைப்புகளையும் தமிழுலகம் கூட்டுண்ண வழங்கும் இத்தோன்றல், தொண்டு வழிவழிச் சிறப்பதாக! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன் திருவள்ளுவர் தவச் சாலை திருவளர்குடி (அஞ்சல்) அல்லூர், திருச்சிராப்பள்ளி - 620101 தொ.பே. : 0431 2685328 பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங்களை யெல்லாம் தேடியெடுத்துத் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மையாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக்கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களையெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்டதால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும்போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு... , செயல் செய்வாய் தமிழுக்கு.... ,ஊழியஞ் செய் தமிழுக்கு ...., பணி செய்வாய்! தமிழுக்கு ..., இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.” எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர்தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந் தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங்களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலனார் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற்குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடுவதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப்பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப் புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத் தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகு குரு. செயத்துங்கன், பேரா.கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெருமக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டுகின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை iii அணிந்துரை x பதிப்புரை xvii மதுரைக் காண்டம் 11. காடுகாண் காதை 1 12. வேட்டுவ வரி 27 13 புறஞ்சேரியிறுத்த காதை 51 14. ஊர்காண் காதை 77 15. அடைக்கலக் காதை 110 16 கொலைக்களக் காதை 137 17 ஆய்ச்சியர் குரவை 163 18. துன்ப மாலை 186 19 ஊர்சூழ் வரி 193 20 வழக்குரை காதை 205 21 வஞ்சின மாலை 218 22 அழற்படு காதை 229 23 கட்டுரை காதை 245 அருஞ்சொல் முதலியவற்றின் அகரவரிசை 273 சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் இரண்டாவது மதுரைக் காண்டம் 11. காடுகாண் காதை (உறையூரை அடைந்த கோவலன், கண்ணகி, கவுந்தியென்னும் மூவரும் அன்று அங்கே தங்கி, வைகறையிற் புறப்பட்டுத் தென்றிசை நோக்கிச் செல்கின்றவர் ஓர் இளமரக்காவுட் புக்கனர். அப்பொழுது பாண்டியனது பல புகழையும் கூறி வாழ்த்திக்கொண்டு அவ்விடத்தி லிருந்த மறையோனை `நும்மூர் யாது? இவ்விடத்து வந்த காரணம் என்னை? என்று கோவலன் கேட்க, மறையோன், ‘திருவரங்கத்தில் திருவமர் மார்பன் கிடந்த வண்ணத்தையும், திரு வேங்கட மலையின்மிசைச் செங்கணெடியோன் நின்ற வண்ணத்தையும் காணும் வேட்கையால் வந்தேன்; குடமலை நாட்டு மாங்காடென்னும் ஊரிலுள்ளேன்; பாண்டியனாட்டுச் சிறப்பினைக் கண் குளிரக் கண்டேனாகலின் வாழ்த்தி வந்திருந்தேன்' என்று கூறினன். பின்பு, `மதுரைக்குச் செல்லும் செவ்விய நெறி கூறுக' வெனக் கோவலன் கேட்ப, உரைக்கின்ற மறையோன், `நீவிர் இந் நெடிய காட்டு வழியைக் கடந்து சென்று கொடும்பாளூர் நெடுங்குளக் கரையை அடைந்தால், அங்கிருந்து சிவபிரான் சூலப்படைபோல் மூன்று நெறிகள் கவர்த்துச் செல்லும்; அவற்றுள் வலப் பக்கத்து வழியிற் சென்றால் தென்னவன் சிறு மலை தோன்றும் ; அதனை வலத்திட்டுச் சென்மின்; இடப் பக்கத்து நெறியிற் சென்றால் திருமால் குன்றத்தை அடைவீர் ; அதில் மயக்கமறுக்கும் பிலம் ஒன்றுண்டு; அதன்கண் புண்ணிய சரவணம், பவகாரணி, இட்ட சித்தி என்னும் மூன்று பொய்கைகள் உள; அவற்றிற் படிவீராயின் முறையே ஐந்திர நூலும், பழம்பிறப்புணர்ச்சியும், இட்ட சித்தியும் எய்துவீர்' என்றியம்பி, மற்றும் அப் பிலத்து நெறியில் நிகழும் வியத்தக்க நிகழ்ச்சிகளையும் கூறி, `அவ் வழியே மதுரைக் கேகுமின் ; அந் நெறிச் செல்லாவிடின், இடையிலுள்ளது செந்நெறியாகும் ; அந் நெறியில் ஊர்கள் இடையிட்ட காடு பல கடந்து சென்றால் ஓர் தெய்வம் தோன்றி இடுக்கண் செய்யாது நயமுடன் போக்கினைத் தடுக்கும்; அதனை யடுத்து மதுரைக்குச் செல்லும் பெருவழி உளது' என்று கூறிச் சென்றனன். மூவரும் சென்று மறையோன் கூறிய இடைநெறியிற் போகும் பொழுது, கோவலன் நீர் வேட்கையால் ஓர் பொய்கைக் கரையை அடைந்து நிற்புழி, அக் கானுறை தெய்வம் வயந்தமாலை வடிவுடன் சென்று பல பணிமொழி கூறி மயக்காநிற்க, கோவலன், மயக்குந் தெய்வம் உளதென்று மறையோன் கூறக் கேட்டுளனாதலின், வஞ்ச வுருவை மாற்றும் கொற்றவையின் மந்திரத்தைக் கூறினன். கூற, அத் தெய்வம் தன்னியல்பினை யுரைத்து வணங்கிச் சென்றது. மூவருஞ் சென்று ஐயை கோட்டம் ஒன்றினை அடைந்தனர்.) திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச் செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து கோதைதாழ் பிண்டிக் கொழுநிழ லிருந்த ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கிக் 5 கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம் அந்தி லரங்கத் தகன்பொழி லகவயிற் சாரணர் கூறிய தகைசால் நன்மொழி மாதவத் தாட்டியும் மாண்புற மொழிந்தாங்கு அன்றவ ருறைவிடத் தல்கின ரடங்கித் 10 தென்றிசை மருங்கிற் செலவு விருப்புற்று வைகறை யாமத்து வாரணங் கழிந்து வெய்யவன் குணதிசை விளங்கித் தோன்ற வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்ததோர் இளமரக் கானத் திருக்கை புக்குழி 15 வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை ஊழிதொ றூழிதொ றுலகங் காக்க அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி வடிவேல் எறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் 20 குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச் செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம் 25 பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்று இடியுடைப் பெருமழை யெய்தா தேகப் பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்கெனத் 30 தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி மாமுது மறையோன் வந்திருந் தோனை யாது நும்மூர் ஈங்கென் வரவெனக் கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின் மாமறை யாளன் வருபொருள் உரைப்போன் 35 நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப் பால்விரிந் தகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித் 40 திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் வீங்குநீ ரருவி வேங்கட மென்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து 45 மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு நன்னிற மேகம் நின்றது போல பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையி னேந்தி நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு 50 பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன் தென்னவன் நாட்டுச் சிறப்புஞ் செய்கையும் 55 கண்மணி குளிர்ப்பக் கண்டே னாதலின் வாழ்த்திவந் திருந்தேன் இதுவென் வரவெனத் தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி கூறு நீயெனக் கோவலற் குரைக்கும் 60 கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி வேத்தியல் இழந்த வியனிலம் போல வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து 65 நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் காலை எய்தினிர் காரிகை தன்னுடன் அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும் நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்தஇந் 70 நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால் பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும் வலம்படக் கிடந்த வழிநீர் துணியின் 75 அலறுதலை மராமும் உலறுதலை ஓமையும் பொரியரை உழிஞ்சிலும் புன்முளி மூங்கிலும் வரிமரல் திரங்கிய கரிபுறக் கிடக்கையும் நீர்நசைஇ வேட்கையின் மானின்று விளிக்கும் கானமும் எயினர் கடமுங் கடந்தால் 80 ஐவன வெண்ணெலும் அறைக்கட் கரும்பும் கொய்பூந் தினையுங் கொழும்புன வரகும் காயமும் மஞ்சளும் ஆய்கொடிக் கவலையும் வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழடுத் தோங்கிய 85 தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் அம்மலை வலங்கொண் டகன்பதிச் செல்லுமின் அவ்வழிப் படரீ ராயி னிடத்துச் செவ்வழிப் பண்ணிற் சிறைவண் டரற்றும் தடந்தாழ் வயலொடு தண்பூங் காவொடு 90 கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றத்துச் செல்குவி ராயின் பெருமால் கெடுக்கும் பிலமுண் டாங்கு விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற் புண்ணிய சரவணம் பவகா ரணியோடு 95 இட்ட சித்தி யெனும்பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்றுள வாங்குப் புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர் 100 பவகா ரணிபடிந் தாடுவி ராயிற் பவகா ரணத்திற் பழம்பிறப் பெய்துவிர் இட்ட சித்தி எய்துவி ராயின் இட்ட சித்தி எய்துவிர் நீரே ஆங்குப் பிலம்புக வேண்டுதி ராயின் 105 ஓங்குயர் மலையத் துயர்ந்தோற் றொழுது சிந்தையில் அவன்றன் சேவடி வைத்து வந்தனை மும்முறை மலைவலஞ் செய்தால் நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலைப் பொலங்கொடி மின்னிற் புயலைங் கூந்தற் 110 கடிமல ரவிழ்ந்த கன்னிகா ரத்துத் தொடிவளைத் தோளி ஒருத்தி தோன்றி இம்மைக் கின்பமும் மறுமைக் கின்பமும் இம்மையு மறுமையும் இரண்டும் இன்றியோர் செம்மையில் நிற்பதுஞ் செப்புமின் நீயிர்இவ் 115 வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன் உரைத்தார்க் குரியேன் உரைத்தீ ராயின் திருத்தக் கீர்க்குத்திறந்தேன் கதவெனும் கதவந் திறந்தவள் காட்டிய நன்னெறிப் புதவம் பலவுள போகிடை கழியன 120 ஒட்டுப் புதவமொன் றுண்டத னும்பர் வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி இறுதியில் இன்பம் எனக்கீங் குரைத்தாற் பெறுதிர் போலும்நீர் பேணிய பொருளெனும் உரையீ ராயினும் உறுகண் செய்யேன் 125 நெடுவழிப் புறத்து நீக்குவல் நும்மெனும் உரைத்தார் உளரெனின் உரைத்த மூன்றின் கரைப்படுத் தாங்குக் காட்டினள் பெயரும் அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும் வருமுறை எழுத்தின் மந்திர மிரண்டும் 130 ஒருமுறை யாக உளங்கொண் டோதி வேண்டிய தொன்றின் விரும்பினி ராடிற் காண்டகு மரபின வல்ல மற்றவை மற்றவை நினையாது மலைமிசை நின்றோன் பொற்றா மரைத்தாள் உள்ளம் பொருந்துமின் 135 உள்ளம் பொருந்துவி ராயின் மற்றவன் புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும் தோன்றிய பின்னவன் துணைமலர்த் தாளிணை ஏன்றுதுயர் கெடுக்கும் இன்பம் எய்தி மாண்புடை மரபின் மதுரைக் கேகுமின் 140 காண்டகு பிலத்தின் காட்சி யீதாங்கு அந்நெறிப் படரீ ராயின் இடையது செந்நெறி யாகும் தேம்பொழி லுடுத்த ஊரிடை யிட்ட காடுபல கடந்தால் ஆரிடை யுண்டோர் ஆரஞர்த் தெய்வம் 145 நடுக்கஞ் சாலா நயத்தின் தோன்றி இடுக்கண் செய்யா தியங்குநர்த் தாங்கும் மடுத்துடன் கிடக்கும் மதுரைப் பெருவழி நீள்நிலங் கடந்த நெடுமுடி அண்ணல் தாள்தொழு தகையேன் போகுவல் யானென 150 மாமறை யோன்வாய் வழித்திறங் கேட்ட காவுந்தி யையையோர் கட்டுரை சொல்லும் நலம்புரி கொள்கை நான்மறை யாள பிலம்புக வேண்டும் பெற்றிஈங் கில்லை கப்பத் திந்திரன் காட்டிய நூலின் 155 மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய் இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம் பிறந்த பிறப்பிற் காணா யோநீ வாய்மையின் வழாது மன்னுயி ரோம்புநர்க்கு யாவது முண்டோ எய்தா அரும்பொருள் 160 காமுறு தெய்வங் கண்டடி பணிய நீபோ யாங்களும் நீள்நெறிப் படர்குதும் என்றம் மறையோற் கிசைமொழி யுணர்த்திக் குன்றாக் கொள்கைக் கோவலன் றன்னுடன் அன்றைப் பகலோர் அரும்பதித் தங்கிப் 165 பின்றையும் அவ்வழிப் பெயர்ந்துசெல் வழிநாட் கருந்தடங் கண்ணியும் கவுந்தி யடிகளும் வகுந்துசெல் வருத்தத்து வழிமருங் கிருப்ப இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின் புடைநெறிப் போயோர் பொய்கையிற் சென்று 170 நீர்நசைஇ வேட்கையின் நெடுந்துறை நிற்பக் கானுறை தெய்வம் காதலிற் சென்று நயந்த காதலின் நல்குவன் இவனென வயந்த மாலை வடிவில் தோன்றிக் கொடிநடுக் குற்றது போல ஆங்கவன் 175 அடிமுதல் வீழ்ந்தாங் கருங்கணீர் உகுத்து வாச மாலையின் எழுதிய மாற்றம் தீதிலேன் பிழைமொழி செப்பினை யாதலின் கோவலன் செய்தான் கொடுமையென் றென்முன் மாதவி மயங்கி வான்துய ருற்று 180 மேலோ ராயினும் நூலோ ராயினும் பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும் பிணியெனக் கொண்டு பிறக்கிட் டொழியும் கணிகையர் வாழ்க்கை கடையே போன்மெனச் செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண் 185 வெண்முத் துதிர்த்து வெண்ணிலாத் திகழும் தண்முத் தொருகாழ் தன்கையாற் பரிந்து துனியுற் றென்னையுந் துறந்தன ளாதலின் மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது எதிர்வழிப் பட்டோர் எனக்காங் குரைப்பச் 190 சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன் பாத்தரும் பண்பநின் பணிமொழி யாதென மயக்குந் தெய்வமிவ் வன்காட் டுண்டென வியத்தகு மறையோன் விளம்பின னாதலின் வஞ்சம் பெயர்க்கும் மந்திரத் தால்இவ் 195 ஐஞ்சி லோதியை அறிகுவன் யானெனக் கோவலன் நாவிற் கூறிய மந்திரம் பாய்கலைப் பாவை மந்திர மாதலின் வனசா ரிணியான் மயக்கஞ் செய்தேன் புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும் 200 என்திறம் உரையா தேகென் றேகத் தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந் தாங்கு அயாவுறு மடந்தை அருந்துயர் தீர்த்து மீதுசெல் வெங்கதிர் வெம்மையின் தொடங்கத் தீதியல் கானஞ் செலவரி தென்று 205 கோவலன் றன்னொடும் கொடுங்குழை மாதொடும் மாதவத் தாட்டியும் மயங்கதர் அழுவத்துக் குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை ஆரிடை யத்தத் தியங்குந ரல்லது 210 மாரி வளம்பெறா வில்லேர் உழவர் கூற்றுறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி வேற்றுப்புலம் போகிநல் வெற்றங் கொடுத்துக் கழிபே ராண்மைக் கடன்பார்த் திருக்கும் விழிநுதற் குமரி விண்ணோர் பாவை 215 மையறு சிறப்பின் வான நாடி ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கென். உரை 1-4. திங்கள் மூன்று அடுக்கிய திரு முக் குடைக்கீழ் - மூன்று திங்களை அடுக்கி வைத்தாற் போலும் அழகிய முக்குடையின் கீழ், செங்கதிர் ஞாயிற்றுத் திகழ்ஒளி சிறந்து - சிவந்த கதிர்களையுடைய ஞாயிற்றின் ஒளியினும் விளங்கும் ஒளி மிக, கோதை தாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த - மாலையாக மலர்ந்து தொங்கும் அசோகின் கொழுவிய நிழற்கண் எழுந்தருளிய, ஆதிஇல் தோற்றத்து அறிவனை வணங்கி - தன்னினும் ஒன்று முதற்கண் இல்லாத தோற்றத்தினையுடைய அருகதேவனைத் தொழுது; திங்கள் மூன்றடுக்கிய என்பதற்குத் திங்கள் முதலிய மூன்றடுக் கிய எனலுமாம். முக்குடை - சந்திராதித்தியம், நித்தியவினோதம், சகலபாசனம். சிறந்து - சிறப்ப எனத் திரிக்க. கடவுட்டன்மை யால் அப் பிண்டி எஞ்ஞான்றும் மாலையாகப் பூத்தலின் கோதை தாழ் பிண்டி என்றார் என்க. ஆதியில் தோற்றத்து அறிவனென்றது தனக்கொரு முதல்வன் இல்லாதவன் என்றவாறு. இனி, தோற்றத் தின்கண் முதல் இல்லாதவ னெனலுமாம்; பிறப்பிலான் என்றபடி. அறிவன் - உறையூரிலருகன். 5-8. கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம் - நிக்கந்தனுடை பள்ளியிடத்துள்ள முனிவர் யாவர்க்கும், அந்தில் அரங்கத்து அகன்பொழில் அகவயின் - ஆற்றிடைக் குறையாகிய அவ்விடத்துப் பரந்த சோலையினிடத்து, சாரணர் கூறிய தகை சால் நன்மொழி - சாரணர் அருளிய தகுதி யமைந்த அறவுரையை, மாதவத்தாட்டியும் மாண்பு உற மொழிந்து - கவுந்தியடிகளும் இனிமையுற மொழிந்து; நிக்கந்தன் - அருகன் ; நிக்கந்தனைக் கந்தன் என்றார். ஈண்டுக் கடவுளர் என்றது முனிவரை. இதனை, 1"தென்னவற் பெயரிய துன்னருந் துப்பின், தொன்முது கடவுள்" எனவும், 2"முத்தேர் முறுவலாய் நாமணம் புக்கக்கா, லிப்போழ்து போழ்தென் றது வாய்ப்பக் கூறிய, எக்கடவுண் மற்றக் கடவுள்" எனவும் வருவன வற்றானறிக. அரங்கம் - திருவரங்கமுமாம். சாரணர் கூறிய மொழி யாவது ‘ஒளியுறி னல்லது போதார் பிறவிப் பொதியறையோர்' என்றதனை. அந்தில் -அசைநிலையுமாம். 8-9. ஆங்கு அன்று அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி - அன்று அக் கடவுளர் உறைவிடத்தின்கண் தங்கி உறைந்து; அவர் என்றது முன்னர்க் கூறிய கந்தன் பள்ளிக் கடவுளரை. இனி, அடியார்க்கு நல்லார் அன்று என்பதற்கு வழி நாள் எனவும், அவர் உறைவிடம் என்பதற்குச் சாவகருறைவிடம் எனவும் பொருள் கூறுவர். ஆங்கு - அசை 10-14. தென்திசை மருங்கில் செலவு விருப்புற்று - தென்றிசைக் கண்ணே செல்லுதலை விரும்பி, வைகறை யாமத்து வாரணம் கழிந்து - உறையூரை வைகறையாகிய யாமத்தில் விட்டு நீங்கி, வெய்யவன் குணதிசை விளங்கித் தோன்ற - ஞாயிறு கீழ்த்திசைக் கண்ணே விளக்கமுற்றுத் தோன்ற, வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்த - வளவிய நீர் நிறைந்த வயல்களும் குளங்களும் பொலிவு பெற்ற, இளமரக் கானத்து இருக்கை புக்குழி - இளமரக் காவின்கண் மண்டபத்துப் புக்க காலை; வணங்கி மொழிந்து அடங்கி விருப்புற்றுக் கழிந்து புக்குழி என்க. 15-16. வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை - மன்னர் யாரினும் பெரிய தகையை யுடையோனாகிய எம் மன்னன் வாழ்வானாக, ஊழிதொறு ஊழிதொறு உலகம் காக்க - பல்லூழி இவ் வுலகினை அவனே காப்பானாக; தொறும் என்பது தொறுவென நின்றது. 17-22. அடியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி - தன் பெருமையின் அளவினை உலகத்து மன்னர்களுக்குக் காலான் மிதித்து உணர்த்தி, வடிவேல் எறிந்த வான்பகை பொறாது - வடித்த வேலானும் எறிந்த அப் பெரிய பகையினைப் பொறுக்காது, பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள - பஃறுளியாற்றுடனே பல பக்க மலை களையுடைய குமரி மலையினையும் வளைந்த கடல் கொண்ட வதனால், வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு - வடக்கண் கங்கையாற்றினையும் இமயமலையையும் கைக்கொண்டு, தென் திசை ஆண்ட தென்னவன் வாழி - தென்றிசையை ஆண்ட பாண்டியன் வாழ்வானாக ; தன்னளவு என்பதற்குக் கடலினதளவு எனலுமாம். அடியால் உணர்த்தலாவது கடல் தன் அடியைக் கழுவுமாறு நின்றமை. இது செய்தான் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் எனப்படுவன். அடியின் உணர்த்தி வேலால் எறிந்த பழம்பகை யென்க. குலத்து முன்னோன் செய்தியைப் பின்னோனுக்கு ஏற்றியுரைத்தபடி. பின்வருவனவும் இன்ன. "தென்றிசை யாண்ட தென்னவன் வாழி" என்பதற்கு, அடியார்க்கு நல்லார் `அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழ நாட் டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும் சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றமும் என்னுமிவற்றை இழந்த நாட்டிற்காக ஆண்ட தென்னவன் வாழ்வானாக'. என உரைப்பர்' 1"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின், மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப், புலி யொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை, வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்" என்பது கொண்டு அவர் அங்ஙனங் கூறினார் போலும்! கோடு என்பதற்குக் கரையெனப் பொருள் கூறுவர் அரும்பதவுரையாசிரியர். அடியார்க்கு நல்லாரும் வேனிற் காதை முதற்கண் `தொடியோள் பௌவம்' என்பதற் குரை விரித்த விடத்துத் ‘தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின் காறும்' கடல் கொண்ட தென்றே கூறினார். பஃறுளியாறு 2"முந்நீர் விழவி னெடியோன், நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" எனப் புறநானூற்றிற் சிறப்பிக்கப்பெற்றமை அறியற்பாலது. 23-25. திங்கட் செல்வன் திருக்குலம் விளங்க - திங்களாகிய செல்வனுடைய மரபு விளக்கமுற, செங்கண் ஆயிரத்தோன் திறல் விளங்கு ஆரம் - ஆயிரங்கண்களையுடைய இந்திரன் பூட்டிய வலி விளங்கிய ஆரத்தை, பொங்கு ஒளி மார்பிற் பூண்டோன் வாழி - பொலிவுற்ற விளக்கத்தினையுடைய மார்பின் கண் பூண்ட பாண்டியன் வாழ்வானாக ; விளங்கப் பூண்டோன் என இயைக்க. இங்ஙனம் ஆரம் பூண்டதனால் பாண்டியனைத் ‘தேவரார மார்பன்' என வாழ்த்துக் காதையுள் வழங்குவர். 26-31. முடிவளை உடைத்தோன் முதல்வன் சென்னி என்று - இவன் நம் முதல்வனது சென்னி முடியிலே வளையை உடைத் தோன் என்று, இடி உடைப் பெருமழை எய்தாது ஏக - இடியினையுடைய பெரிய மழை பெய்தல் எய்தாது ஏகிற்றாக, பிழையாவிளையுட் பெருவளஞ்சுரப்ப - தப்பாத விளையுளாகிய மிக்க வளஞ்சுரக்கும் வண்ணம், மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்கென - அம் மழையினை விலங்கிட்டு ஆண்ட மன்னவன் வாழ்வானாக என, தீது தீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி - குற்றம் நீங்கிய பெருமையினையுடைய பாண்டியன் வாழ்த்தி, மாமுது மறையோன் வந்திருந்தோனை - வந்து தங்கியிருந்த சிறந்த முதிய அந்தணனை; முடியில் வளையை உடைத்தென்றது முடியின் ஐந்துறுப்புக் களுள் ஒன்றாய கிம்புரியை உடைத்து என்றவாறு. முடியின் ஐந்துறுப் புக்களை 1"தாம முகுடம் பதுமங் கோடகம், கிம்புரி முடியுறுப் பைந்தெனக் கிளப்பர்" என்பதனானறிக. இனி, முதல்வன் முடியை வளை யாலுடைத்தோனெனலுமாம் ; இதனை 2"காய்சின மடங்கலன்னான் ... வீரன்" எனவும், 3"இன்னன பேசி ... அடித்தான்" எனவும் வரூஉம் இரு திருவிளையாடற் புராணச் செய்யுளானும் உணர்க. 4"வச்சிரத் தடக்கை யமரர் கோமான், உச்சிப் பொன் முடி யொளிவளை யுடைத்தகை" என்பர் பின்னும். பிழையா விளையுள் - வளந்தருதல் தப்பாத விளைநிலமுமாம். வந்திருந்தோன் - வினைப்பெயர். வேல்விடுத்துக் கடலை வற்றச் செய்ததும், இந்திரன் பூட்டிய ஆரத்தைப் பூண்டதும், இந்திரன் முடிமேல் வளை யெறிந்ததும், மேகத்தைத் தளையிட்டதும் உக்கிரவன்மன் (உக்கிர குமார பாண்டியன்) செயல்களாகத் திருவிளையாடற் புராணங்கள் கூறும். 32-33. யாது நும் ஊர் ஈங்கு என் வரவு எனக் கோவலன் கேட்ப-நும் ஊர்யாது இங்கு நீரவருவதற்குக் காரணம் என்னை எனக் கோவலன் கேட்க; வாழ்க காக்க தென்னவன் வாழி பூண்டோன் வாழி மன்னவன் வாழ்கென வாழ்த்தி வந்திருந்தோனைக் கோவலன் கேட்ப என்க. 33-34. குன்றாச் சிறப்பின் மா மறையாளன் வருபொருள் உரைப்போன் - மிக்க சிறப்பினையுடைய அம் மறையோன் தன் வரவின் பொருளை யுரைப்போன் ; 35-40. நீல மேகம் நெடும் பொற் குன்றத்து - கரிய மேகம் உயர்ந்த பொன்மலையினிடத்து, பால் விரிந்து அகலாது படிந்தது போல - பக்கங்களில் விரிந்து மிகாமல் படிந்த தன்மையை ஒப்ப, ஆயிரம் விரிந்து எழு தலையுடை அருந்திறற் பாயற் பள்ளி - பரப்பி எழுந்த ஆயிரந்தலையினையுடைய அரிய வலி பெற்ற பாம்பணையாகிய பள்ளிமீது, பலர் தொழுது ஏத்த - பலரும் வணங்கிப் போற்ற, விரிதிரைக் காவிரி வியன் பெருந் துருத்தி - விரிந்த அலைகளையுடைய மிகப் பெரிய காவிரியாற்றிடைக்குறையில், திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும் - திருமகள் விரும்பி யுறையும் மார்பையுடையோன் கிடந்த கோலத்தினையும் ; நீல மேகம் படிந்ததுபோல வென்க. நீல மேகமும் பொற் குன்றமும் திருமாலுக்கும் அனந்தனுக்கும் உவமை. 1"மின்னவிர் சுடர்மணி யாயிரம் விரித்த, கவைநா வருந்தலைக் காண்பின் சேக்கை" என்பது பரிபாடல். 41-51. வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் - மிக்க அருவி நீரினையுடைய வேங்கட மெனப்படும், ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை - மிகவுயர்ந்த மலையின் உச்சி மீதே, விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி இருமருங்கு ஓங்கிய இடை நிலைத் தானத்து - இருமருங்கினும் விரிந்த கதிர்களையுடைய ஞாயிறும் திங்களும் விளங்கி உயர்ந்த இடைப்பட்ட நிலத்தே, மின்னுக் கோடி உடுத்து விளங்கு வில் பூண்டு நல் நிற மேகம் நின்றது போல - நல்ல நீல நிறத்தினையுடைய மேகம் மின்னாகிய புது ஆடையை உடுத்து விளங்குகின்ற இந்திரவில்லாகிய பணியைப் பூண்டு நின்றாற்போல, பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும். - பகைவரை வருத்தும் சக்கரத்தினையும் பால்போலும் வெளிய சங்கத்தினையும், தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி- அழகிய தாமரை போன்ற கையினிடத்து ஏந்தி, நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு-அழகு விளங்கும் ஆரத்தை மார்பின்கண் பூண்டு, பொலம் பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய - பொன்னினானாய பூப்பொறித்த ஆடையொடு விளங்கித் தோன்றிய, செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் - சிவந்த திருக் கண்களையுடைய நெடியோன் நின்ற கோலத்தினையும்; ஞாயிறும் திங்களும் சக்கரத்திற்கும் சங்கிற்கு முவமை அவற் றிடை நின்ற மேகம் ஆழிசங்கேந்திய நெடியோற்குவமை; மின்னும் வில்லும் பொலம்பூவாடைக்கும் ஆரத்திற்குமுவமை. மின், வில் ; ஆரம், பூவாடை - எதிர்நிரனிறை. மீமிசை - ஒரு பொருட் பன் மொழி . 1"பருவம் வாயத்தலி னிருவிசும் பணிந்த, இருவேறு மண்டிலத் திலக்கம் போல, நேமியும் வளையு மேந்திய கையாற், கருவி மின்னவி ரிலங்கும் பொலம்பூண், அருவி யுருவி னாரமொ டணிந்தநின், திருவரை யகலம்" என்னும் பரிபாடற் பகுதியோடு இஃது ஒத்து நோக்கி மகிழற்குரியது. 52-53. என்கண் காட்டு என்று என் உளம் கவற்ற வந்தேன் - காட்டுவாயாகவென என் கண்கள் எனது உள்ளத்தைக் கவலை செய்தலான் ஈண்டு வந்தேன் ; குடமலை மாங்காட்டு உள்ளேன் - குடகமலைப் பக்கத்துள்ள மாங்காடு என்னும் ஊரிலுள்ளேன்; என்கண் காட்டென்று கவற்ற வந்தேன் என்க. என்கண், எழுவாய். இனி, எனக்குக் காட்டுகவென்று உள்ளம் கவற்றுதலால் வந்தேன் என உள்ளத்தை எழுவாயாக்கி யுரைத்தலுமாம் ; இதற்கு என்கட் காட்டெனத் திரிதற்பாலது திரியாது நின்றதெனல் வேண்டும். 54-57. தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும் - பாண்டியனுடைய நாட்டின் சிறப்பினையும் அவன் கொடை முதலிய செய்கையினையும், கண்மணி குளிர்ப்பக் கண்டேன் ஆதலின் வாழ்த்தி வந்திருந்தேன் - கண்கள் குளிரும் வண்ணம் கண்டேன் ஆகலான் அவனை நாவால் வாழ்த்தி வந்திருந்தேன்; இது என் வரவு என - இதுவே எனது வருகையின் காரணமாகும் என்று, தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு - முத்தீயின் திறத்தில் உள்ளம் விரும்பியோனாகிய அம் மறையோன் கூறக் கேட்டு; 58-59. மா மறை முதல்வ மதுரைச் செந்நெறி கூறு நீ என - கோவலன் அவனை நோக்கிப் பெரிய வேத முதல்வனே மதுரைக்குச் செல்லும் செவ்விய நெறியினை நீ கூறுவாயாக என்று கேட்க, கோவலற்கு உரைக்கும் - அம்மறையோன் அவற்கு இதனைக் கூறுவான் ; மறையோன் பாண்டி நாட்டினைக் கண்டு ஆண்டு நின்றும் போந்தன னென்பதறிந்தமையால் அவனை மதுரைக்கேகும் நெறி கேட்டனனென்க. 60-67. கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி - அரசியற்றொழி லினையுடைய அமைச்சரோடு முறை செய்யாது அரசனும் கோல் கோடலானே, வேத்தியல் இழந்த வியனிலம் போல - அரசியல் இழந்த அகன்ற நிலத்தைப் போல, வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் - வேனிலாகிய அமைச்சனொடு வெவ்விய கதிர்ச்களையுடைய ஞாயிறாகிய அரசன், தான் நலம்திருக - நலம் வேறுபடுதலான், தன்மையிற் குன்றி - தமது இயற்கை கெட்டு , முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து - முல்லை குறிஞ்சி என்னும் இருதிணையும் முறைமை திரிந்து, நல் இயல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்து - தமது நல்ல இயல்புகளை இழந்து தம்மைச் சேர்ந்தோரை நடுங்கும் வண்ணம் துன்பத்தினை யுறுவித்து, பாலை என்பதோர் படிவம் கொள்ளும் காலை - பாலை எனப்படும் வடிவினைக் கொள்ளும் இக் காலத்து , எய்தினிர் காரிகை தன்னுடன் - இக்காரிகையோடு அடைந்தீர்; 1"கோல முல்லையுங் குறிஞ்சியு மடுத்தசில் லிடங்கள், நீல வாட் படைநீலிகோட்டங்களும்நிரந்து, கால வேனிலிற் கடும்பகற் பொழுதினைப் பற்றிப், பாலை யுஞ்சொல லாவன வுளபரன் முரம்பு." என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுள் ஈண்டு அறியற்பாலது. நலந்திருகல்-வெம்மை மிகுதல். கோடி இழந்த நிலம்போலக் கிழவனொடு வேந்தன் றிருகக் குன்றித் திரிந்து இழந்து உறுத்துக் கொள்ளுங் காலையெனக் கூட்டுக. காரிகை தன்னுடன் காலை யெய்தினிரென மாறுக. காலை - காலம். தான் - அசை. 68-73. அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும் நிறை நீர் வேலியும் முறைபடக் கிடந்த - கற்பாறையும் சிறுமலையும் அரிய வழிகளின் கலப்பும் நிறைந்த நீர்க்கு வேலியாகிய ஏரிக் கரையும் ஆய இவை அடைவுபடக் கிடந்த, இந் நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று - இந்த மிக நீண்ட சுர நெறியைக் கடந்து சென்று, கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால் - கொடும்பாளூரின்கண் நெடுங்குளக் கரைக்கு உள்ளாகப் புக்கால், பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய - முடியிடத்துப் பிறையாகிய கண்ணியைச் சூடிய பெரியோனாகிய இறைவன் ஏந்திய, அறைவாய்ச் சூலத்து அருநெறி கவர்க்கும் - முக்கூறாக அறுக்கப்பெற்ற சூலம்போல மூன்று வழிகள் பிரியும்; பொறை - துறுகல் எனினுமாம். ஆரிடையாவது ஆறலைப் போரும் ஊறுசெய் விலங்குமுடைத்தாய் ஏற்றிழிவும் கவலைச் சின் னெறியுமாயிருப்பது. நிறை நீர்வேலி - பேய்த்தேர் என்றும், கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் - கொடும்பாளுர் நெடுங்குளம் என்னும் இரண்டூர்க்கும் பொதுவாகிய ஏரிக்கரை என்றும் கூறுவர் அடியார்க்கு நல்லார். நீந்திப் புகவரிது என்பது தோன்றப் புக்கால் என்றார். அறைவாய்ச் சூலம் என்பதற்குக் கண்ணோட்டமற்ற வாயினையுடைய சூலம் எனலுமாம். 74. வலம்படக் கிடந்த வழிநீர் துணியின் - அங்ஙனம் கவர்த்த நெறியினுள் வலப்பக்கத்துக் கிடந்த வழியில் நீர் செல்லத் துணிவீராயின்; 75-86. அலறுதலை மராமும் உலறுதலை ஓமையும் - விரிந்த தலையினையுடைய வெண்கடம்பும் காய்ந்த தலையினையுடைய ஓமையும், பொரி அரை உழிஞ்சிலும் புல்முளி மூங்கிலும் - பொரிந்த தாளினையுடைய வாகையும் தண்டு காய்ந்த புல்லாகிய மூங்கிலும், வரி மரல் திரங்கிய கரி புறக் கிடக்கையும் - வரிகளையுடைய மரல் நீரின்மையாற் சுருங்கிய கரிந்து கிடக்குமிடங்களும், நீர் நசைஇ வேட்கையின் மான் நின்று விளிக்கும் கானமும் - நீருண்டலை விரும்பி அவ் வேட்கையானே மான்கள் நின்று உளைக்கும் காடும், எயினர் கடமும் கடந்தால் - எயினர் ஊரை யடுத்த வழியுமாய இவை உள ; இவற்றைக் கடந்து செல்லின், ஐவன வெண்ணெலும் அறைக் கண் கரும்பும் - மலைச் சாரலில் விளையும் ஐவனமாகிய நெற்பயிரும் இலை அற்ற கணுக்களையுடைய கரும்பும், கொய் பூந் தினையும் கொழும் புனவரகும்- கொய்யும் பருவத்தினையுடைய பொலிவு பெற்ற தினையும் கொழுவிய புனத்தின் கண் விளைந்த வரகும், காயமும் மஞ்சளும் ஆய்கொடிக் கவலையும் - வெள்ளுள்ளியும் மஞ்சளும் அழகிய கொடியினையுடைய கவலையும் , வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் - தாழ்ந்த குலையினையுடைய வாழையும் கமுகும் தெங்கும், மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கிய - மாவும் பலாவும் ஆய இவை ஒன்றனை ஒன்று அடுத்துச் சூழப் பெற்று உயர்ந்த , தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் - பாண்டியனுடைய சிறுமலை என்னும் பெயரினையுடைய மலை விளங்கித் தோன்றும் , அம் மலை வலங்கொண்டு அகன்பதிச் செல்லுமின் - அம் மலையை வலத்திட்டு இடப்பக்கத்து நெறியானே மதுரைக் கண் செல்வீராக.; உழிஞ்சில் - உன்னமெனலுமாம். புல் - புறக்காழுடையன. வரி மரற்றிரங்கிய - விலங்கு சுவைத்தலால் திரங்கிய எனலுமாம். திரங்கிய கிடக்கை., கரிபுறக்கிடக்கை யெனத் தனித்தனிக் கூட்டுக. எயினர் - மறவர். கரும்பு முதிர்தலான் இலையற்றதென்க. இனி, முறிக்கும் பருவத்தைத் தன்கட்கொண்ட கரும்பெனவுரைப்பர் அடியார்க்கு நல்லார். சிறுமலை - பெயர். 87-92. அவ்வழிப் படரீராயின் - அவ் வலப்பக்கத்து நெறியிற் செல்லீராயின், இடத்து - இடப்பக்கத்தே, செவ்வழிப் பண்ணின் சிறைவண்டு அரற்றும் - சிறகினையுடைய வண்டுகள் செவ்வழிப் பண்ணைப்போல் பாடுகின்ற, தடம் தாழ் வயலொடு தண் பூங்காவொடு - குளங்களோடும் தாழ்ந்த வயல்களோடும் குளிர்ந்த பூஞ்சோலையோடும், கடம் பல கிடந்த காடு உடன் கழிந்து - அருஞ்சுரங்கள் பலவும் இடைக்கிடந்த காட்டு நெறியையுங் கடந்து, திருமால் குன்றத்துச் செல்குவிர் ஆயின்- அழகர் திருமலைக்கண் செல்குவீராயின், பெருமால் கெடுக்கும் பிலம் உண்டு - அங்கே மிக்க மயக்கத்தினைக் கெடுக்கும் பிலத்து நெறி ஒன்று உண்டு; 92. ஆங்கு - அப் பிலத்தினுள்ளே; செவ்வழி - செவ்வழியாழ் ; முல்லை நிலத்திற்குரிய பண். கடம்- பாலை நிலவழி. திருமால் குன்றம் - திருமாலிருஞ் சோலைமலை. 93-97. விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபின் - தேவர்களால் ஏத்தப்படும் வியக்கத்தக்க முறைமையினையுடைய, புண்ணிய சரவணம் பவகாரணியோடு இட்ட சித்தி எனும் பெயர் போகி- புண்ணியசரவணம் பவகாரணி இட்டசித்தி என்னும் பெயர் யாண்டும் பரக்கப்பெற்று, விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்று உள - இடையறாத சிறப்பினை யுடையவாய்த் தம்மிற் சேர்ந்திருக்கின்ற விளக்கம் அமைந்த மூன்று பொய்கைகள் உள்ளன; 97. ஆங்கு - அவற்றுள்; 98-99. புண்ணிய சரவணம் பொருந்துவிர் ஆயின் - புண்ணிய சரவணம் என்னும் பொய்கைக்கண் ஆடுவீராயின், விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர் - விண்ணவர் தலைவனாகிய இந்திரனாற் செய்யப்பெற்ற சிறந்த ஐந்திரம் என்னும் இலக்கணத்தை அறிவீர் ; பொருந்துதல் - ஆடுதல். எய்துதல் - உணர்தல். விண்ணவர் கோமான் விழுநூல் - ஐந்திரம். ஐந்திரம் இந்திரனாற் செய்யப்பட்டது என்னும்பொருட்டு. "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்" என்பது தொல்காப்பியப் பாயிரம். 100-101. பவகாரணி படிந்து ஆடுவிர் ஆயின் - பவகாரணி என்னும் பொய்கைக்கண் மூழ்கி ஆடுவீராயின், பவகாரணத்திற் பழம் பிறப்பு எய்துவிர் - இப் பிறப்பிற்குக் காரணமாகவுள்ள முற்பிறவியினை உணர்வீர் ; பவம் - பிறப்பு. 102-103. இட்ட சித்தி எய்துவிர் ஆயின் - இட்ட சித்தி எனப்படும் பொய்கைக்கண் மூழ்குவீராயின், இட்ட சித்தி எய்துவிர் நீரே - நீவிர் உள்ளத்து எண்ணியவெல்லாம் அடைவீர்; இனி, இட்டசித்தி எய்துவிர் என்பதற்கு எண்வகைச் சித்திகளையும் அடைவீர் எனலும் பொருந்தும். 104. ஆங்குப் பிலம் புக வேண்டுதிர் ஆயின் - அவ்விடத்து அப்பிலத்தின்கண் நுழைய விரும்புவீராயின்; 105-107. ஓங்கு உயர் மலையத்து உயர்ந்தோற் றொழுது - மிகவுயர்ந்த அம் மலைக்கண் எழுந்தருளிய மேலோனை வணங்கி, சிந்தையில் அவன் தன் சேவடி வைத்து - உள்ளத்தின்கண் அவனுடைய சிவந்த திருவடிகளை எண்ணி, வந்தனை - துதித்தலோடு, மும்முறை மலைவலஞ் செய்தால் - அம் மலையை மூன்று முறை வலம் வந்தால்; அத்து - சாரியை. உயர்ந்தோன் - திருமால். வைத்தல் - எண்ணுதல். வந்தனை - ஈண்டுப் போற்றல். 108-111. நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்தலை - நிலம் பிளக்கும் வண்ணம் ஆழ்ந்த சிலம்பாற்றின் அகன்ற கரைக் கண், பொலங்கொடி மின்னின் புயல் ஐங்கூந்தல் கடிமலர் அவிழ்ந்த கன்னிகாரத்து - விளக்கத்தையுடைய மலர்கள் விரிந்த கோங்கினடிக்கீழ்ப் பொற்கொடி போன்ற ஒளியினையும் மேகம்போலும் ஐங்கூந்தலினையும் உடைய, தொடி வளைத்தோளி ஒருத்தி தோன்றி - வளைந்த வளையல் அணிந்த தோளினையுடைய ஓர் இயக்கமாது வெளிப்பட்டு; சிலம்பாறு - பெயர். கன்னிகாரம் - கோங்கு. கன்னிகாரத்து மின்னினையும் கூந்தலினையு முடைய தோளி ஒருத்தி தோன்றி என்க. தொடி - வளைவு. 112-117. இம்மைக்கு இன்பமும் மறுமைக்கு இன்பமும் - இப்பிறப்பிற்கு இன்பமும் மறு பிறப்பிற்கு இன்பமும், இம்மையும் மறுமையும் இரண்டு மின்றி ஓர் செம்மையில் நிற்பதும் செப்பு மின்நீயிர் - இம்மை யின்பமும் மறுமை யின்பமுமாய இரண்டு மின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாய்த் தூயதாய் அழிவில்லாது நிற்கும் இன்பமுமாகிய பொருள்களை நீவிர் கூறுமின், இவ் வரைத்தாள் வாழ்வேன், - இம் மலையடிக்கண் வாழ்வேன், வரோத்தமை என்பேன் - வரோத்தமை யெனப் பெயர் கூறப் படுவேன், உரைத்தார்க்கு உரியேன்-அம்மூன்று உண்மையினையும் உரைத்தார்க்குயான் எத் தொழிற்கும் உரியேனாவேன், உரைத்தீர் ஆயின் திருத்தக்கீர்க்குத் திறந்தேன் கதவு எனும் - ஆகலின், நீவிர் அவற்றைக் கூறுவிராயின் அழகிய தகுதியையுடைய நுமக்கு இப் பிலவாயிற் கதவினைத் திறப்பேன் என்று கூறும். இம்மை இன்பம் - புகழ் ; பொருள் எனவுங் கூறுப. மறுமை இன்பம் - அறம். இன்பந் தருவனவற்றை இன்பமெனக் கூறினார். செம்மை - தூய்மை; நிற்பது - நிலை பெறுவது ; ஈண்டு வீடு 1"பிறப் பென்னும் பேதைமை" என்னுங் குறளிற் செம்பொருள் என்பதற்குப் பரிமேலழகர் எழுதிய உரையை நோக்குக. திறந்தேன், விரை பொருள் பற்றி எதிர்காலம் இறந்த காலமாகச் சொல்லப்பட்டது. 118-123. கதவம் திறந்து அவள் காட்டிய நன்னெறி - உரைப் பின் அவள் கதவினைத் திறந்து காட்டிய நல்ல வழிக்கண், புதவம் பல உள போகு இடை கழியன - நீண்ட இடைகழியிடத்தன வாகிய வாயில்கள் பல வுள்ளன ; ஒட்டுப் புதவம் ஒன்று உண்டு- அவற்றைக் கழிந்து செல்லின் இரட்டைக் கதவினையுடைய வாயில் ஒன்றுளது, அதன் உம்பர் வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி - அதற்குமேல் வட்டிகையாக எழுதிய பொலிவுற்ற கொடிபோல்வாள் வந்து எதிர்ப்பட்டு, இறுதிஇல் இன்பம் எனக்கு ஈங்கு உரைத்தால் - முடிவிலா இன்பம் யாது அதனை எனக்கு இவ் விடத்து உரைப்பீராயின், பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள் எனும் - நீவிர் இம் முப்பொருளினும் விரும்பிய பொருளினைப் பெறுகுவீர் என்று கூறுவாள்; புதவம் - கதவு; ஈண்டு வாயில். போகு - நெடுமை. பூங்கொடி - பூங்கொடி போல்வாள். வட்டிகை - சித்திரம். இனி வட்டிகை என்பதற்கு எழுதுகோல் எனப் பொருள் கொண்டு எழுதுகோலால் எழுதிய எனலுமாம். இறுதியில் இன்பம் உரைத்தலாவது இறுதி யில்லா இன்பம் யாதென வுரைத்தல். இறுதி இல் இன்பம்-வீடு. போலும் - ஒப்பில் போலி. பேணிய பொருள் என்பதற்குப் புகழ், அறம், வீடு என்னும் மூன்றனுள் விரும்பிய பொருள் என்க. 124-125. உரையீராயினும் உறுகண் செய்யேன் - யான் வினாயதற்கு நீர் விடைகூறீராயினும் நுமக்குத் துன்பம் செய்யேன், நெடு வழிப் புறத்து நீக்குவல் நும் எனும் - நும்மை நீர் செல்லக் கடவ நெடிய நெறிக்கண் செலுத்துவல் என்று கூறும்; புறம் - இடம். 126-127. உரைத்தார் உளர் எனின் - இங்ஙனம் கேட்டதனைக் கூறினார் உளராயின், உரைத்த மூன்றின் கரைப்படுத்து ஆங்குக்காட்டினள் பெயரும் - மேற்கூறிய மூன்று பொய்கைகளின் கரைக்கண் செலுத்தி அவற்றைக் காட்டி மீளும்; ஆங்கு, அசை. 128-32. அருமறை மருங்கின் - அரிய வேதத்தின் கண்ணவாய, ஐந்தினும் எட்டினும் வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும் - ஐந்தானும் எட்டானும் வந்த முறையினையுடைய எழுத்துக் களையுடைய இரண்டு மந்திரங்களையும், ஒரு முறையாக உளங்கொண்டு ஓதி - ஒரு வழிப்பட்ட முறையானே மனத்துட் கொண்டு வாக்காற் றுதித்து, வேண்டியது ஒன்றின் விரும்பினிர் ஆயின் - அம் மூன்றனுள் நீவிர் வேண்டிய தொரு பொய்கைக் கண் விரும்பி மூழ்குவிராயின், காண்டகு மரபின அல்ல மற்றவை - அம் மூழ்குதலானாய பயன் தவஞ் செய் தார்க்கும் காணத்தகும் முறையினையுடையனவல்ல ; எழுத்தின் என்னும் இன் அசையெனக் கொண்டு, ஐந்தெழுத்தினும் எட்டெழுத்தினும் வருமுறை மந்திரம் என விகுதி பிரித்துக் கூட்டுதலுமாம். 133-138. மற்றவை நினையாது மலைமிசை நின்றோன் பொற்றாமரைத்தாள் உள்ளம் பொருந்துமின் - நீவிர் அப் பொய்கைகளின் பயனை விரும்பீராயின் அவற்றை யெண்ணாது அம் மலை மீது நின்றோனுடைய அழகிய தாமரை மலரை ஒத்த திருவடிகளை நினைமின், உள்ளம் பொருந்துவிராயின் மற்றவன் புள் அணி நீள்கொடிப் புணர்நிலை தோன்றும் - அங்ஙனம் நினைப்பீராயின் அத் திருமாலின் கலுழன் எழுதிய அழகிய நீண்ட கொடிமரம் பொருந்தி நிற்கும் இடம் காணப்படும், தோன்றிய பின் அவன் துணைமலர்த்தாள் இணை ஏன்று துயர் கெடுக்கும் - காணப்பட்ட அளவில் அத் தேவனுடைய இணைத்த மலர் போலும் இரண்டு திருவடிகளும் நும்மை ஏற்றுக்கொண்டு நும் பிறவித் துன்பத்தினைக் கெடுக்கும் ; கொடி புணர்நிலை என்றது கொடிமரம் நிற்குமிடம் என்றவாறு. நீவிர் அவ்விடைச் சென்று அதனைக் காண்பீர் என்பான் தோன்றும் என்றான். கெடுக்கும், முற்று, அவ்வழிப் படரீராயின், குன்றத்துச் செல்குவீராயின், பிலமுண்டு; ஆங்குப் பொய்கை மூன்றுள; பொருந்துவிராயின், ஆடுவிராயின், எய்துவிராயின் எய்துவிர்; வேண்டுதிராயின்; வலம் செய்தால், தோன்றி. என்பேன் செப்புமின் திறந்தேன் எனும்; உம்பர்த் தோன்றி உரைத்தால் பெறுதிர் எனும்; நீக்குவல் எனும்; காட்டினள் பெயரும்; மந்திரம் இரண்டும் ஓதி ஆடில் அவை காண்டகு மரபினவல்ல; பொருந்துமின்; தோன்றும்; கெடுக்கும்; என முடிக்க. 138-139. இன்பம் எய்தி மாண்புடை மரபின் மதுரைக்கு ஏகுமின்- அங்ஙனம் துன்பத்தைக் கெடுத்தலால் இன்பமுற்று மாட்சியுடைய மரபினையுடைய மதுரை நகர்க்குச் செல்லுமின்; இன்பமெய்தி என்பதற்கு ஏது விரித்துரைக்க. 140. காண்டகு பிலத்தின் காட்சி ஈது - கண்கூடாகக் காணும் பிலத்தின் தன்மை இதுவாகும்; காட்சி - ஈண்டுத் தன்மை. 140-149. ஆங்கு அந் நெறிப் படரீர் ஆயின் - அவ்விருவகைப் பட்ட வழிக்கண் செல்லீராயின், இடையது செந்நெறி ஆகும் - அவ் விரண்டன் இடைப்பட்ட வழி செவ்விய வழியாகும்; தேம் பொழில் உடுத்த ஊர் இடை இட்டகாடு பல கடந்தால் - அவ் வழியிலே தேன் ஒழுகும் சோலை சூழ்ந்த ஊர்கள் இடை யிடையேயுள்ள காடுகள் பலவற்றைக் கடந்துசெல்லின், ஆர் இடை உண்டு ஓர் ஆர் அஞர்த் தெய்வம் - அரிய வழியிடத்து மிக்க துன்பந்தரும் தெய்வம் ஒன்று உளது; நடுக்கம் சாலா நயத்தில் தோன்றி - அத் தெய்வம் நடுங்குதல் அமையாத இனிய வடிவோடு தோன்றி, இடுக்கண் செய்யாது இயங்குநர்த் தாங்கும் - துன்பம் செய்யாது வழிப்போவாரைத் தடுக்கும்; மடுத்து உடன் கிடக்கும் மதுரைப் பெருவழி - அதனைத் தப்பின் அம்மதுரை செல்லும் வழி மூன்றும் ஒருங்கு சேர்ந்து கிடக்கும், ஆதலால் நீயிரும் சென்மின் ; நீள்நிலங் கடந்த நெடுமுடியண்ணல் தாள் தொழு தகையேன் போகுவல் யான் என - யானும் நெடிய உலகத்தினைத் தாவியளந்த நெடுமுடியண்ணலின் திருவடிகளை வணங்கும் தன்மையுடையேனாகலிற் செல்குவல் என்று கூற; தாங்கும் - தடுக்கும், அதனைப் தப்பின் எனவும், நீயிர் சென்மின், எனவும் விரித்துரைக்க, மறையோன் வாய்மொழிகளிலிருந்து, தீர விசாரித்தல், கட்டுரைவன்மை, சமயப்பற்று என்னும் பண்புகள் அவன்பால் மிக்குள்ளமை புலனாம். 150-151. மா மறையோன் வாய் வழித்திறம் கேட்ட காவுந்தி ஐயை ஓர் கட்டுரை சொல்லும் - பெருமையுடைய அம் மறை யோன் வாயால் நெறியின் இயல்பு கேட்ட கவுந்தியடிகள் ஓர் பொருள் பொதிந்த உரையை உரைப்பாராயினார் ; 152-164. நலம் புரி கொள்கை நான்மறையாள-நல்லொழுக்கத்தினை விரும்பிய கொள்கையினையுடைய நான்மறை வல்லோனே, பிலம் புகவேண்டும் பெற்றி ஈங்கு இல்லை - நீ கூறிய பிலத்தின்கண் புகுதற்குரிய தன்மை எம்மிடத்து இல்லை; ஏன் எனின்?, கப்பத்து இந்திரன் காட்டிய நூலின் - ஆயுக் கற்பத்தினையுடைய இந்திரன் செய்த வியாகரணத்தினை, மெய்ப்பாட் டியற்கை விளங்கக் காணாய்-அருகதேவன் அருளிய பரமாகமத்தின்கண் தோன்றக் காண்பாய், ஆகலாற் புண்ணிய சரவணம் பொருந்துதல் வேண்டா ; இறந்த பிறப்பின் எய்திய எல்லாம் பிறந்த பிறப்பிற் காணாயோ நீ - நீ முற்பிறப்பிற் செய்தன யாவும் இப் பிறப்பிலே காண்கின்றிலையோ, (காண்பாய் என்றபடி) ஆகலான் யாம் பவகாரணி படிதல் வேண்டா ; வாய்மையின் வழாது மன் உயிர் ஓம்புநர்க்கு யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள் - உண்மைநெறியிற் பிறழாது பிற உயிர்களைப் பேணுவோர்க்கு அடையக் கூடாத அரிய பொருள் சிறிதேனும் உண்டா, (இல்லை என்றபடி) ஆகலான் இட்ட சித்தியினை எய்த வேண்டுவதில்லை ; காமுறு தெய்வம் கண்டு அடி பணிய நீ போ - நீ விரும்பிய திருமாலாகிய கடவுளைக் கண்டு அவன் திருவடிகளைத் தொழ நீ செல்வாய் ; யாங்களும் நீள் நெறிப் படர்குதும் - நாங்களும் நீண்ட வழிக்கண் செல்லுவோம் ; என்று அம் மறையோற்கு இசைமொழி உணர்த்தி - என அவ் வந்தணனுக்குப் பொருந்தும் மொழிகளை அறிவித்து, குன்றாக் கொள்கைக் கோவலன் தன்னுடன் அன்றைப் பகல் ஓர் அரும் பதித் தங்கி - உயர்ந்த கோட்பாட்டினை யுடைய கோவலனோடு அற்றைப் பகலில் ஓர் அரிய ஊரின்கண் தங்கி, நலம்புரி கொள்கை நான்மறையாள என்றது இகழ்ச்சி. கற்பம் எனற்பாலது கப்பம் என்றாயிற்று. இந்திரன் காட்டிய நூல் - ஐந்திரம். நூலினை யென்னும் உருபு தொக்கது. மெய்ப் பாட்டியற்கை - பரமாகமம். இறந்த பிறப்பின் எய்தியதனைப் பிறந்த பிறப்பின் அறிதல் என்பதனை, 1"இறந்த பிறப்பிற்றாம் செய்த வினையைப், பிறந்த பிறப்பா லறிக - பிறந்திருந்து, செய்யும் வினையாலறிக இனிப்பிறந், தெய்தும் வினையின் பயன்" என்பதனா லறிக. வாய்மையும் கொல்லாமையுமே தலையாய அறங்கள் என்பதனைப் பொதுமறையானறிக. பொய்கை மூன்றினும் படிதலாலெய்தும் பயனெல்லாம் எங்கள் சமயநெறி நிற்றலால் எய்தற்பால மாகலின் அவற்றிற் படிதல் வேண்டாவென்பார் 'பிலம்புக வேண்டும் பெற்றியீங் கில்லை' என்றார். அன்றைப் பகல் என மென்றொடர்க் குற்றுகரம் திரியாது ஐகாரம் பெற்று முடிதலை 2"அல்லது கிளப்பினெல்லா மொழியுஞ் சொல்லிய பண்பி னியற்கை யாகும்" என்னுஞ் சூத்திரத்து இலேசான் முடிப்பர். 165-170. பின்றையும் அவ்வழிப் பெயர்ந்து செல் வழிநாள் - பின்னரும் தங்கி அந் நெறியிலே மீண்டும் செல்கின்ற பின்னாளில், கருந்தடங்கண்ணியும் கவுந்தியடிகளும் வகுந்து செல் வருத்தத்து வழிமருங்கு இருப்ப - கரிய பெரிய கண்ணினையுடைய கண்ணகியும் கவுந்தியடிகளும் வழிச் சென்ற வருத்தத்தினால் வழியின் பக்கத்து இருக்க, இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின் - முன்னர்க் கூறிய இடைவழியிற் கிடந்த செலவினைக் கொண்ட இடத்திலே, புடைநெறிப் போய் ஓர் பொய்கையிற் சென்று நீர் நசைஇ வேட்கையின் நெடுந்துறை நிற்ப - பக்க வழியிலே சென்று ஓர் பொய்கைக் கரைக்கண் போய் நீரை உண்ணுதலை விரும்பி அவ் விருப்பத்தானே பெரிய துறையிடத்துக் கோவலன் நிற்க. ; பின்றை - பின்னை. வழிநாள் - மறுநாள். வழி. இடை நெறி என்பதனை நெறியிடை என்னலும் பொருந்தும். 171-175. கான் உறை தெய்வம் காதலிற் சென்று - முன் அம் மறையோன் கூறிய காட்டின்கண் உறையும் அவ் வாரஞர்த் தெய்வம் காதலுடன் சென்று, நயந்த காதலின் நல்குவன் இவன் என - மாதவியிடத்து விரும்பிய காதலினால் இவன் அன்பு கொள்வான் என்று கருதி , வயந்தமாலை வடிவில் தோன்றி - அவள் தோழியாகிய வசந்தமாலையின் வடிவோடு தோன்றி, கொடி நடுக்கு உற்றது போல - பூங்கொடி நடுக்க முற்றது போல, ஆங்கு அவன் அடி முதல் வீழ்ந்து ஆங்கு அருங் கணீர் உகுத்து - அவ்விடத்து அக் கோவலனுடைய அடிக்கண் விழுந்து அரிய கண்ணீரைச் சிந்தி; வயந்தமாலையின் வடிவு கொள்ளின் நல்குவனெனக் கருதி அவள் வடிவுடன் தோன்றி யென்க. அடிமுதல் - அடியிடம். பின் வரும் ஆங்கு, அசை, அருங்கணீர் என்றது பொய்க் கண்ணீர் தானும் சிறிது வருகின்றதென்பது தோன்ற நின்றது. சென்று தோன்றி வீழ்ந்து உகுத்து என்க. 176-179. வாசமாலையின் எழுதிய மாற்றம் தீது இலேன் - மணம் பொருந்திய மாலையின்கண் எழுதிய மொழியில் தவறுதலுடையேன் அல்லேன், பிழை மொழி செப்பினை - நீ தவறுடைய மொழிகளைக் கூறினை போலும், ஆதலிற் கோவலன் செய்தான் கொடுமை என்று - அதனானன்றே கோவலன் எனக்குக் கொடுமை செய்தான் என்று கூறி, என்முன் மாதவி மயங்கி வான் துயர் உற்று - மாதவி என் முன்பு மயங்கி வீழ்ந்து மிக்க துயரத்தை அடைந்து; இங்குக் கூறிய வரலாற்றினை வேனிற் காதையிற் காண்க. கோவலன் கொடுமை செய்தான் என்றது தன்னை விட்டுப் பிரிந்தமையை. 180-191. மேலோர் ஆயினும் - இருந்தவமுடையோரும், நூலோர் ஆயினும் - கற்றறிந்தோரும், பால்வகை தெரிந்த பகுதியோர் ஆயினும் - நன்மை தீமைகளின் கூறுபாடுணர்ந்தோரும், பிணி எனக்கொண்டு பிறக்கிட்டு ஒழியும் - உள்ளங்கவற்றும் நோய் என்று கருதி முகம் பாராது விட்டுவிலகுகின்ற,. கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம் என - வரைவின் மகளிருடைய வாழ்வு மிக இழிந்தது என்று சொல்லி, செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண் - சிவந்த அரி படர்ந்த வளவிய கடையினையுடைய குளிர்ந்த கண்களால், வெண்முத்து உதிர்த்து - வெள்ளிய முத்துப் போலும் நீரைச் சிந்தி, வெண்ணிலாத் திகழும் தண்முத்து ஒருகாழ் தன் கையாற் பரிந்து - வெள்ளிய நிலாப்போல் விளங்கும் குளிர்ந்த தனி முத்து வடத்தினையும் பூட்டிய தனது கையினாலேயே அறுத்து வீசி, துனி உற்று என்னையும் துறந்தனள் ஆதலின் - வெகுண்டு என்னையும் துறந்தாள் ஆகையால், மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது - நீங்கள் மதுரை என்னும் பழம்பதியாகிய பெரிய நகரத்திற்கு வந்ததனை, எதிர்வழிப்பட்டோர் எனக்கு ஆங்கு உரைப்ப - வழிக்கண் எதிர்ப்பட்டோர் எனக்குக் கூறுதலான், சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன் - வாணிகச் சாத்தொடு போந்து தனிமையால் துன்புற்று வருந்தினேன், பாத்தரும் பண்ப நின் பணி மொழி யாது என - பகுத்தல் அரிய பண்பினையுடையாய் அதற்கு நீ பணித்திடும் மாற்றம் யாதென்று கேட்ப; பால்வகை தெரிந்த பகுதியோர் - ஓதாது நன்மை தீமைகளை அறிவோர் என்றும், மதி நுட்பமுடையோர் என்றும் கூறுவர் பழைய உரையாளர்கள். பிறப்பு வீடு என்பவற்றின் துன்ப வின்பக் கூறு பாடுகளை யறிந்த மெய்யுணர்வினர் எனலுமாம். ஆயினும் என்பது விகற்பமுணர்த்தும். பிறக்கிடுதல் - பின்னிடல்; அஃதாவது முகம் பாராமை. ஏகாரம், தேற்றம். போலும் என்பது போன்ம் என்றாயது. என்னையும் - துறவா என்னையும்; உம்மை - சிறப்பு, சாத்து - வணிகர் கூட்டம். பாத்தல் - பகுத்தல் ; ஈண்டுப் பிரித்தல். இனி, பாத்தரும் பண்பு - பிறர்க்கில்லாத குணம் என்றுமாம். 192-200. மயக்கும் தெய்வம் இவ் வன் காட்டு உண்டு என - அறிவினை மயக்கும் தெய்வம் இவ் வலிய காட்டின்கண் உண்டென்று, வியத்தகு மறையோன் விளம்பினன் ஆதலின் - வியக்கத்தக்க அவ் வேதியன் கூறினன் ஆகலான், வஞ்சம் பெயர்க்கும் மந்திரத்தால் - வஞ்சத்தைப் போக்கும் மந்திரத்தினால், இவ் ஐஞ்சில் ஓதியை அறிகுவென் யான் என - இந்த ஐவகைப்பட்ட சிலவாகிய கூந்தலையுடையாளின் உண்மையை யான் அறிகுவேன் என்று கருதி, கோவலன் நாவிற் கூறிய மந்திரம் - கோவலன் தனது நாவினாற் சொல்லிய மந்திரம், பாய்கலைப் பாவை மந்திரம் ஆதலின் - பாய்ந்து செல்லும் கலையை ஊர்தியாகவுடைய கொற்றவையின் மந்திரம் ஆகலான் அஞ்சி, வனசாரிணியான் மயக்கம் செய்தேன் - யான் இவ் வனத்தின்கண் திரியும் இயக்கி, நினக்கு மயக்கம் செய்ய எண்ணினேன், புனமயிற்சாயற்கும் - கானமயில் போலும் மென்மையை உடைய நின் மனைவிக்கும், புண்ணிய முதல்விக்கும் - தவநெறி நிற்கும் கவுந்தியடிகட்கும், என் திறம் உரையாது ஏகு என்று ஏக - யான் செய்த இப் பிழையினைக் கூறாது செல்கவென்று சொல்லித்தானுஞ் செல்ல; மயக்கும் தெய்வம் இவ் வன் காட்டுண்டென என்றது, 1"ஆரிடை யுண்டோர் ஆரஞர்த் தெய்வம்" என முன் கூறியதனை. வியத்தகு மறையோன் என்றது பலவற்றையும் அறிந்து கூறிய சதுரப் பாட்டினால். வஞ்சம் - வஞ்சவுரு. ஓதியை - ஓதியை உடையாள் யாவளென்பதனை. கூறினன் ; அங்ஙனங் கூறிய மந்திரம் என்க. வனசாரிணி- வனத்திற் சரிப்பவள். தவத்தினும் கற்புச் சிறந்ததாகலான் கண்ணகியை முற்கூறினார். இவ் விருவரும் சாயலும் அறனும் உடையாரேனும் தவறு கண்ட வழி வெகுண்டு சபிப்பர் என்று கருதி அவர்க்கு உரையற்கவென இரந்தாள். 201-202. தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந்து ஆங்கு அயா உறு மடந்தை அருந்துயர் தீர்த்து - பசிய தாமரை யிலைக் கண் தண்ணீரைக் கொண்டு வந்து அவ்விடத்துச் சோர்வுற்றிருந்த கண்ணகியின் அரிய துன்பத்தினை நீக்கி; அடை - இலை. அயா - தளர்ச்சி. அருந்துயர் - வழிச்செலவானும் நீர் வேட்கையானும் ஆயது. 203-206. மீதுசெல் வெம்கதிர் வெம்மையில் தொடங்க - வானிலெழுந்து செல்லும் ஞாயிறு வெம்மை செய்தலைத் தொடங்கலான், தீது இயல் கானம் செல அரிது என்று - தீமை மிக்கு நிகழ்கின்ற இக் காடு இனி வழிச் சேறற்கு அரிது என்று கருதி, கோவலன் தன்னொடும் கொடுங்குழை மாதொடும் மாதவத்தாட்டியும் மயங்கு அதர் அழுவத்து - கோவலனுடனும் வளைந்த காதணியினையுடைய கண்ணகியுடனும் கவுந்தியடி களும் வழிமயக்கத்தினையுடைய நிலப் பரப்பின்கண்; தீதுஇயல் கானம் - பாலைத் தன்மை நிகழ்கின்ற கானம். 207-216. குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய - குராவும் வெண்கடம்பும் கோங்கும் வேங்கையும் தம்மிற் கலந்துள்ள, பூம்பொழில் விளங்கிய இருக்கை - பொலி வினையுடைய சோலை சூழ்ந்து விளங்கிய இருப்பிடத்து, ஆர் இடை அத்தத்து இயங்குநர் அல்லது - அரிய இடங்களையுடைய வழிகளிற் செல்வோரது வளத்தினைப் பெறுவதல்லது, மாரி வளம் பெறா வில் ஏர் உழவர் - மழையினானாகும் வளத்தினைப் பெறுதலில்லாத வில்லாகிய ஏரினையுடைய மறவர், கூற்று உறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி - கூற்றத்தினை ஒத்த வலியுடனே வளைந்த வில்லைக் கையிலேந்தி, வேற்றுப் புலம் போகி - பகைவர் முனையிடத்துச் செல்ல, நல் வெற்றம் கொடுத்துக் கழிபேர் ஆண்மைக் கடன் பார்த்து இருக்கும் - அவர்க்கு நல்ல வென்றியைக் கொடுத்து அதற்கு விலையாக மிக்க ஆண்மைத் தன்மையை உடைய அவிப்பலியாகிய கடனை எதிர்நோக்கும், விழி நுதற் குமரி - நெற்றியிற் கண்ணையுடைய குமரியும், விண்ணோர் பாவை - தேவர் போற்றும் பாவையும், மை யறு சிறப்பின் வான நாடி - குற்ற மற்ற சிறப்பினையுடைய வானநாட்டை யுடையவளுமாகிய, ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் - கொற்றவையின் கோயிலைச் சென்றடைந்தனர் அப்பொழுது; பெறா - பெறுதலை விரும்பாத. 'ஆரிடை யத்தத் தியங்குநரல்லது, மாரி வளம்பெறா வில்லே ருழவர்' என்ற கருத்து 1"வானம் வேண்டா வறனில் வாழ்க்கை, நோன்ஞாண் வினைஞர்" எனவும், 2"கானுயர் மருங்கிற் கவலை யல்லது, வானம் வேண்டா வில்லே ருழவர்" எனவும் அகப்பாட்டில் வந்திருத்தல் காண்க. போகி என்பதனைப் போகவெனத் திரிக்க. உழவர் ஏந்திப் போகக் கொடுத்துப் பார்த்திருக்கும் ஐயை என்க. இனித் திரியாது உழவர்க்கு ஏந்திப் போகிக் கொடுத்துப் பார்த்திருக்கும் என முடிப்பினும் அமையும். கழி பேராண்மைக் கடன் - தன்னைத்தான் இடும் பலிக்கடன். மயங்கதரழுவத்து விளங்கிய இருக்கைக்கட் கோட்டம் என்க. விழிநுதல் - நுதல்விழி என்க. இது நிலைமண்டில வாசிரியப்பா. காடுகாண் காதை முற்றிற்று. 12. வேட்டுவ வரி (மூவரும் ஐயை கோட்டத்தின் ஒருபுடை இளைப்பாறி இருந்தனராக, இப்பால், வேட்டுவக் குடியில் தெய்வத்திற்கு வழிபாடு செய்யும் உரிமையுடைய சாலினி யென்பாள் தெய்வ மேறப்பெற்று, 'எயினர் மன்றுகள் பாழ்பட்டன; கடன் உண்ணின் அல்லது கொற்றவை வெற்றி கொடாள்; ஆகலின் நீர் செலுத்தற்குரிய கடனைச் செலுத்துவீராக' என்றாள். என்றலும், எயினரனைவரும் கூடித் தங்கள் தொல்குடிப் பிறந்த குமரியைக் கொற்றவையாக ஒப்பனை செய்து பரவிக் கை தொழுது ஏத்தினர். அப்பொழுது சாலினி தெய்வமுற்றுக் கோயிலின் ஒரு சிறை கணவனோடிருந்த கண்ணகியை நோக்கி, `இவள், கொங்கச் செல்வி குடமலை யாட்டி, தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து, ....’ என்று பின் நிகழ்வதறிந்து கூறக், கண்ணகி `மூதறிவாட்டி பேதுறவு மொழிந்தனள்' என்று புன் முறுவலுடன் கணவன் புறத்தொடுங்கி நின்றனள். குமரிக் கோலத்துக் குமரியும் வரிக்கோலம் நன்கு வாய்த்ததென்று கண்டார் சொல்ல அருளினள். வேட்டுவர்கள் கொற்றவையின் பல புகழையும் கூறிப் பரவி, `விறல் வெய்யோன் வெட்சி சூடுக' எனத் தம் அரசனை வாழ்த்தினர். (இதன்கண் வேட்டுவர் கொற்றவையை ஏத்துவனவாகவுள்ள பாட்டுக்கள் மிக்க சிறப்புடையன.) கடுங்கதிர் திருகலின் நடுங்கஞர் எய்தி ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்ப நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்தாங்கு ஐயை கோட்டத் தெய்யா வொருசிறை 5 வருந்துநோய் தணிய இருந்தனர் உப்பால் வழங்குவில் தடக்கை மறக்குடித் தாயத்துப் பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக் கையெடுத் தோச்சிக் கானவர் வியப்ப 10 இடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும் நடுவூர் மன்றத் தடிபெயர்த் தாடிக் கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது 15 அறக்குடி போலவிந் தடங்கினர் எயினரும் கலையமர் செல்வி கடனுணின் அல்லது சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள் மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின் கட்டுண் மாக்கள் கடந்தரும் எனவாங்கு 20 இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரியைச் சிறுவெள் ளரவின் குருளைநாண் சுற்றிக் குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி இளைசூழ் படப்பை இழுக்கிய வேனத்து 25 வளைவெண் கோடு பறித்து மற்றது முளைவெண் திங்க ளென்னச் சாத்தி மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை வெண்பால் தாலிநிரை பூட்டி வரியும் புள்ளியு மயங்கு வான்புறத்து 30 உரிவை மேகலை உடீஇப் பரிவொடு கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத் திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப் பாவையுங் கிளியுந் தூவி அஞ்சிறைக் கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும் 35 பந்துங் கழங்குந் தந்தனர் பரசி வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும் புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் மேவிய விரையும் ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர 40 ஆறெறி பறையுஞ் சூறைச் சின்னமும் கோடும் குழலும் பீடுகெழு மணியும் கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகைக் கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்தி 45 இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக் கணவனோ டிருந்த மணமலி கூந்தலை இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய 50 திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பப் பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி 55 நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப் பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள் துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி 60 வளையுடைக் கையிற் சூல மேந்தி கரியின் உரிவை போர்த்தணங் காகிய அரியின் உரிவை மேகலை யாட்டி சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை 65 இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன் தலைமிசை நின்ற தையல் பலர்தொழும் அமரி குமரி கவுரி சமரி சூலி நீலி மாலவற் கிளங்கிளை ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப் 70 பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை தமர்தொழ வந்த குமரிக் கோலத்து அமரிளங் குமரியும் அருளினள் வரியுறு செய்கை வாய்ந்ததா லெனவே; - உரைப்பாட்டுமடை - வேறு 1 நாகம் நாறு நரந்தம் நிரந்தன ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும் சேவும் மாவும் செறிந்தன கண்ணுதல் பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே; 2 செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ் கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கிளந் திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே; 3 மரவம் பாதிரி புன்னை மணங்கமழ் குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல் அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செய்யும் திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே; வேறு 4 கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்றவிப் பொற்றொடி மாதர் தவமென்னை கொல்லோ பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த விற்றொழில் வேடர் குலனே குலனும். 5 ஐயை திருவின் அணிகொண்டு நின்றவிப் பையர வல்குல் தவமென்னை கொல்லோ பையர வல்குல் பிறந்த குடிப்பிறந்த எய்வில் எயினர் குலனே குலனும். 6 பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்றவிவ் வாய்தொடி நல்லாள் தவமென்னை கொல்லோ ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த வேய்வில் எயினர் குலனே குலனும்; வேறு 7 ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக் கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால் வானோர் வணங்க மறைமேல் மறையாகி ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்; 8 வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக் கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால் அரியரன்பூ மேலோன் அகமலர்மேல் மன்னும் விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய்; 9 சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச் செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால் கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்; வேறு 10 ஆங்குக், கொன்றையுந் துளவமும் குழுமத் தொடுத்த துன்று மலர்ப்பிணையல் தோள்மே லிட்டாங்கு அசுரர் வாட அமரர்க் காடிய குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே; வேறு 11 ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப வார்ப்ப மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடும் போலும் மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடு மாயின் காயா மலர்மேனி யேத்திவானோர் கைபெய் மலர்மாரி காட்டும் போலும்; 12 உட்குடைச் சீறூ ரொருமகன் ஆ னிரைகொள்ள உற்ற காலை வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டும் போலும் வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டின் வேற்றூர்க் கட்சியுட் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும்; 13 கள்விலை யாட்டி மறுப்பப் பொறாமறவன் கைவில் ஏந்திப் புள்ளும் வழிபடரப் புல்லார் நிரைகருதிப் போகும் போலும் புள்ளும் வழிபடரப் புல்லார் நிரைகருதிப் போகுங் காலைக் கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடுமரமுன் செல்லும் போலும்; வேறு 14 இளமா எயிற்றி இவைகாண்நின் னையர் தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள் கொல்லன் துடியன் கொளைபுணர் சீர்வல்ல நல்லியாழ்ப் பாணர்தம் முன்றில் நிறைந்தன; 15 முருந்தேர் இளநகை காணாய்நின் னையர் கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள் கள்விலை யாட்டிநல் வேய்தெரி கானவன் புள்வாய்ப்புச் சொன்னகணி முன்றில் நிறைந்தன; 16 கயமல ருண்கண்ணாய் காணாய்நின் னையர் அயலூர் அலற எறிந்தநல் ஆனிரைகள் நயனில் மொழியின் நரைமுது தாடி எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன; - துறைப்பாட்டுமடை.- வேறு 17 சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம் அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது மிடறுகு குருதிகொள் விறல்தரு விலையே; 18 அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரு மணியுரு வினைநின் மலரடி தொழுதேம் கணநிறை பெருவிறல் எயினிடு கடனிது நிணனுகு குருதிகொள் நிகரடு விலையே; 19 துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெய வெடிபட வருபவர் எயினர்கள் அரையிருள் அடுபுலி யனையவர் குமரிநின் அடிதொடு படுகடன் இதுவுகு பலிமுக மடையே; வேறு 20 வம்பலர் பல்கி வழியும் வளம்பட அம்புடை வல்வில் எயின்கடன் உண்குவாய் சங்கரி அந்தரி நீலி சடாமுடிச் செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்; 21 துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய் விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்; 22 பொருள்கொண்டு புண்செயி னல்லதை யார்க்கும் அருளில் எயினர் இடுகடன் உண்குவாய் மருதின் நடந்துநின் மாமன்செய் வஞ்ச உருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய்; வேறு 23 மறைமுது முதல்வன் பின்னர் மேய பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக் கட்சியுங் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுக விறல்வெய் யோனே. உரை 1-5. கடுங்கதிர் திருகலின் - அங்ஙனம் அடைந்தவர், ஞாயிற்றின் வெவ்விய கதிர்கள் முறுகுதலால், நடுங்கு அஞர் எய்தி ஆறு செல் வருத்தத்துச் சீறடி சிவப்ப நறும்பல் கூந்தல் குறும் பல வுயிர்த்து ஆங்கு - மணமுள்ள பலவாக முடிக்கப்படும் கூந்தலையுடைய கண்ணகி வழிச்செல் வருத்தத்தினால் மிக்க துன்பத்தினை அடைந்து சிறிய அடிகள் சிவத்தலினால் வல்லா நடையோடும் குறுகப் பலவாக மூச்செறிதலின், ஐயை கோட்டத்து எய்யா ஒருசிறை வருந்து நோய் தணிய இருந்தனர் - அத்துன்பந் தணியும் வண்ணம் கொற்றவையின் கோயிலில் யாவரும் அறியாத ஒரு பக்கத்து இருந்தனர்; நடுங்கு அஞர் - நடுங்குதற்கேதுவாகிய துன்பம் ; மிக்க துன்பம். வருந்துநோய் என்பதும் அது. உயிர்த்து - உயிர்த்தலின் என்க. ஆங்கு - அசை; அப்பொழுதென்றுமாம். கூந்தல் திருகலின் வருத்தத்து அஞர் எய்திச் சிவப்ப உயிர்த்தலின் அடைந்தவர் நோய் தணியக் கோட்டத்து ஒரு சிறை இருந்தனர் என்க. 5. உப்பால் - மேலே; 6-7. வழங்கு வில் தடக்கை மறக் குடித் தாயத்து - அம்பினை வழங்கும் வில்லை யேந்திய பெரிய கையையுடைய மறவர் குடியிற் பிறந்த உரிமையை உடைய, பழங்கடன் உற்ற முழங்கு வாய்ச் சாலினி - முன்பு நேர்ந்த கடனைக் கொடுத்துப் போந்த ஒலிக்கும் வாயினையுடைய தேவராட்டி; வழங்கும் வில் - அம்பை வழங்கும் வில் என்க. தாயும் - உரிமை. முழங்கு வாய் - கொக்கரிப்பினையுடைய வாய். சாலினி - தேவராட்டி. பழங்கடன் - ஊரார் நேர்ந்த கடன். 8-11. தெய்வம் உற்று மெய்ம்மயிர் நிறுத்துக் கை யெடுத்து ஓச்சிக் கானவர் வியப்ப - மறவர் வியக்கும் வண்ணம் தெய்வத் தன்மையை அடைந்து மெய்ம்மயிர் சிலிர்த்துக் கைகளை எடுத்து உயர்த்தி, இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும் நடுவூர் மன்றத்து அடிபெயர்த்து ஆடி - முள்வேலி இடப் பெற்ற மறவர் கூடி ஒருங்கு உண்ணுதலையுடைய ஊர் நடுவில் உள்ள மன்றத்திலே கால்களைப் பெயர்த்து ஆடி; கானவர் வியப்ப ஆடி என்க. வேலியை உடைய ஊர் எயினர் கூட்டுண்ணுமூர் என இயைக்க. கூட்டுண்டல் - கவர்ந்த பொருளைச் சேர்ந்துண்டல். நடுவூர் என்பது முன்பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. 12-13. கல் என் பேர் ஊர்க் கண நிரை சிறந்தன - பழங்கடன் கொடாமையின் ஒலியினையுடைய பகைவரது பெரிய ஊர்க் கண்ணே திரண்ட ஆனிரைகள் மிக்கன, வல்வில் எயினர் மன்று பாழ் பட்டன - பகைவரை அழிக்கும் வலிய வில்லினைக் கொண்ட மறவருடைய மன்றுகள் பாழ்பட்டன ; கல் - ஒலிக் குறிப்பு. சிறத்தல் - மிகுதல். பட்டது என்பதும் பாடம். 14-15. மறக் குடித் தாயத்து வழி வளஞ் சுரவாது அறக்குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும் - மறக்குடியிற் பிறந்த உரிமையை உடைய மறவரும் வழிக்கண் பறிக்கும் வளம் சுரக்கப் பெறாது அறவர் குடிப் பிறந்தோர் போலச் சினங் குறைந்து செருக்கு அடங்கி விட்டனர்; வழிவளம் - வழிப்போவாரைப் பறிக்கும் வளம். மறக்குடித் தாயத்து எயினர் அடங்கினர் என்க. இனி, தாயத்து வழிவளம் என்பதற்குத் தாயமாகிய வழிவளம் எனலுமாம்; ஈண்டு அத்து அல்வழிக்கண் வந்ததென்க. இது முன்னிலைப் புறமொழி. 16-17. கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது - கலையாகிய ஊர்தியினையுடைய கொற்றவை தான் கொடுத்த வெற்றியின் விலையாகிய உயிர்ப்பலியை உண்டாலல்லது, சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள் - நும் வில்லிற்குப் பொருந்திய வெற்றியைக் கொடாள்; சிலை அமர்வென்றி என்பதற்கு வில் விரும்பும் வென்றி எனப் பொருள்கொண்டு, உடையான் தொழில் உடைமைமேல் ஏற்றப்பட்டது எனக் கூறினும் பொருந்தும். 18-19. மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின் கட்டு உண் மாக்கள் கடந்தரும் என ஆங்கு - வழிப்போவார் வளனைப் பறித்து உண்ணும் மறவர்காள் நீவிர் கள்ளுண்டு களிக்கும் வாழ்க்கையினை விரும்புவீராயின் கொற்றவைக்கு நேர்ந்த கடனைத் தம்மின் என்று சொல்ல; கட்டல் - பறித்தல். மாக்கள் - விளி. தாருமென்பது தருமெனக் குறுகிற்று. ஆங்கு - அசை. இனி, எயினர் குடிப் பெண் ஒருத்தியைக் கொற்றவை கோலங் கொள்வித்தல் கூறுகின்றார். 20-21. இட்டுத் தலை எண்ணும் எயினர் அல்லது சுட்டுத் தலை போகாத் தொல்குடிக் குமரியை - தாம் கருதிய பகைஞர் தலையைத் தாம் அறுத்திட்டு எண்ணுவதல்லது பகைவர் கருதுவது முடிவு போகாமைக்குக் காரணமாகிய மறவரது பழைய குடிக்கண் பிறந்த குமரியை; தம் வன்மையாற் பிறரை அழித்தற் குரியரே யன்றிப் பிறர் தம்மை அழித்தற் குரியர் அல்லர் என்பதாம். சுட்டு - கருத்து. இனி, தலைகள் அரிந்து வைக்கப் பிறரால் எண்ணப்படுமதல்லது நோயாற் செத்துச் சுடப்பட்டுப் போகாத குடி எனலுமாம். 22-26. சிறுவெள் அரவின் குருளை நாண் சுற்றிக் குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி - சிறிய வெள்ளிய பாம்பின் குட்டியாகப் பண்ணிய பொன் நாணால் குறுகிய நெளிந்த கூந்தலை நீண்ட சடையாகச் சுற்றிக் கட்டி, இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து - கட்டு வேலி சூழ்ந்த தோட்டப் பயிரை அழித்த பன்றியின், வளை வெண் கோடு பறித்து - வளைந்த வெள்ளிய கொம்பினைப் பிடுங்கி, மற்று அது முளை வெண்டிங்கள் என்னச் சாத்தி - அதனை இளைய வெள்ளிய பிறை என்னும்படி சாத்தி ; குமரியைக் கூந்தலைக் கட்டி என்றது, 1"முதன்முன் ஐவரிற் கண்ணென் வேற்றுமை, சினைமுன் வருத றெள்ளி தென்ப" என்னுஞ் சூத்திரத்துத் ‘தெள்ளிது' என்பதனாற் கொள்க. 'அரவின் குருளை' என்றதனை, 2"நாயே பன்றி புலிமுய னான்கும், ஆயுங் காலைக் குருளை என்ப" என்னும் சூத்திரத்து 'ஆயுங்காலை' என்பதனாற் கொள்க. சுற்றிக் கட்டி யென்க. இனி, கூந்தலைச் சடையாகக் கட்டி நாணினைக் குருளையாகச் சுற்றி என்னலுமாம். படப்பை ஆகுபெயர். இனி, படப்பை இழுக்கிய ஏனம் என்பதற்குப் படப்பைக்கண் பட்ட ஏனம் என்றுமாம். 27-30. மறங் கொள் வயப்புலி வாய் பிளந்து பெற்ற - தறு கண்மையை உடைய வலிய புலியினை வாயைப் பிளந்து கொண்ட, மாலை வெண்பல் தாலி நிரை பூட்டி - ஒழுங்காகக் கோத்த வெள்ளிய பல்லினாலாகிய தாலியை வரிசைப்படக் கட்டி, வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து உரிவை மேகலை உடீஇ - கோடுகளும் புள்ளிகளும் கலக்கப் பெற்ற தூய புறத்தினையுடைய தோலினை மேகலையாக உடுத்து ; பல்லொழுங்கை நிரைத் தாலியாகப் பூட்டி யெனலுமாம். உரிவை - உரி. 30-31. பரிவொடு கரு வில் வாங்கிக் கையகத்துக் கொடுத்து - வருத்தத்துடன் வயிர வில்லை வளைத்து அவள் கைக்கண் கொடுத்து; பரிவு - அன்புமாம். வில் வாங்கி என்பதற்கு வில்லை எடுத்து எனலும் அமையும். வாங்குதல் - எடுத்தல். 32. திரிதரு கோட்டுக் கலைமேல் ஏற்றி - முறுக்குண்ட கொம் பினையுடைய கலையின்மீது இருக்கச் செய்து ; திரிதல் - முறுக்குதல். 1"திரிமருப்பிரலை" என்பது காண்க. ஊரில் திரிதரும் எனலும் ஆம். 33-35. பாவையும் - மதனப்பாவை முதலியனவும், கிளியும் தூவி அம் சிறைக் கானக் கோழியும் நீல் நிற மஞ்ஞையும் - கிளியும் சிறு மயிரினையுடைய அழகிய சிறகினையுடைய காட்டுக் கோழியும் நீலநிறம் பொருந்திய மயிலும், பந்தும் கழங்கும் தந்தனர் பரசி - பந்தும் கழங்கும் ஆகிய இவற்றைக் கொடுத்துத் துதித்து; தூவி - சிறகின் மயிர் ; சூட்டும் ஆம். தந்தனர் - முற்றெச்சம். 36-39. வண்ணமும் சுண்ணமும் தண்ணறும் சாந்தமும் - வண்ணக் குழம்பும் பொற்பொடியும் குளிர்ந்த மணமுள்ள சந்தனமும், புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் - புழுக்கப்பட்டனவும் எள்ளுண்டையும் நிணத்தொடு கூடிய சோறும், பூவும் புகையும் மேவிய விரையும் - மலர்களும் புகையும் விரும்பிய மணப்பொருள்களும் ஆய இவற்றை, ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர - பணி செய்யும் மறப்பெண்கள் தாங்கினராய்ப் பின்னே செல்ல; வண்ணம் - தோள் முதலியவற்றில் நிறமெழுதுங் குழம்பு. புழுக்கல் - அவரை, துவரை முதலியன. நோலை - எள்ளுண்டை. விழுக்கு - நிணம். மடை - சோறு. ஏந்தினர், முற்றெச்சம். 40-42. ஆறு எறி பறையும் சூறைச் சின்னமும் - வழிபறிக்குங் கால் கொட்டும் பறையும் சூறைகொள்ளுங்கால் ஊதும் சின்னமும், கோடும் குழலும் பீடு கெழு மணியும் - கொம்பும் புல்லாங்குழலும் பெருமை பொருந்திய மணியும் ஆய இவை, கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் நிறீஇ - தம்மிற் கூடி ஒலிப்ப இவற்றை அவ் வணங்கின் முன்னே நிறுத்த; கோடு - துத்தரிக்கொம்பு என்ப; சங்குமாம். நிறீஇ என்பதனை நிறுத்தவெனத் திரிக்க. ‘அணங்கு மெய்ந்நிறீஇ' எனப் பாடங்கொண்டு, அக் குமரிமேல் அணங்கை யேற்றி என்றுரைப்பர் அரும் பதவுரையாசிரியர். 43-44. விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகை - தான் தந்த வெற்றியின் விலையாகிய பலியினை யுண்ணுகின்ற விரிந்த பலி பீடத்தை முதலிற் றொழுது, கலைப்பரி ஊர்தியைக் கை தொழுது ஏத்தி - பின்னர் விரைந்த செலவினையுடைய கலையை ஊர்தியாகவுடைய கொற்றவையைக் கையால் வணங்கி நாவாற் போற்றி; பலியுண்ணும் பீடிகை ; பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது ; உண்ணும் ஊர்தியை எனலுமாம். மலர்ப்பலி பீடிகை எனப் பாடங்கொண்டு, மலர்ப்பலி பீடிகை என்றது கோட்டத்தை எனவுரைப்பர் அரும்பதவுரை யாசிரியர். ஏத்துதல் சாலினியின் தொழில். பீடிகைக்கு அருகே உள்ள தலைஊர்தியைத் தொழுது எனலுமாம். கலைப் பரியூர்தி - தெய்வ வுருக்கொண்ட குமரி. 45-50. இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக் கணவனோடு இருந்த மணமலி கூந்தலை - தம்முள் ஒத்த மலர்போலும் சிறிய அடிகள் வருந்தினவளாய்த் துன்புற்றுத் தன் கணவனொடு தங்கி யிருந்த மணம் நிறைந்த கூந்தலையுடைய கண்ணகியைச் சுட்டி, இவளோ - இப் பெண், கொங்கச் செல்வி - கொங்கு நாட்டிற்குச் செல்வமாயுள்ளவள், குடமலை யாட்டி - குடமலை நாட்டினையாளும் செல்வி, தென்தமிழ்ப் பாவை - தென்றமிழ் நாட்டின் பாவை, செய்த தவக் கொழுந்து - உலகோர் செய்த தவத்தின் கொழுந்து போல்வாள், ஒரு மா மணியாய் உலகிற்கு ஓங்கிய திரு மா மணி எனத் தெய்வம் உற்று உரைப்ப - இவ்வுலகிற்கு ஒப்பற்ற முழு மாணிக்கம் போன்று உயர்ந்த அழகிய பெண்மணி என்று சாலினி தெய்வத்தன்மை அடைந்து இவளை மிகுத்துக் கூற; சாலினி கண்ணகிக்கு மேல் நிகழ்வது கூறினாள். கண்ணகி இன்னதன்மையளாதலைக் "கொங்கிளங் கோசர்" என்னும் உரை பெறு கட்டுரையா னறிக. 51-53. பேதுறவு மொழிந்தனள் மூதறிவாட்டி என்று - அது கேட்ட கண்ணகி இம் மூதறிவுடையாள் மயக்கத்தாற் கூறினாள் என்று, அரும்பெறற் கணவன் பெரும்புறத்து ஒடுங்கி விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப - பெறுதற்கரிய கணவனது பெரிய புறத்தே மறைந்து புதிய புன்முறுவல் தோற்றினவளாய் நிற்க; தமது பெருமையினைப் பிறர் கூறுங்கால் நாணுதல் பெரியோர் இயல்பு. ‘விருந்தின் மூரல்' என்றார், இவள் நெடுநாள் முறுவல் ஒழிந்திருந்தாள் என்பது தோன்ற. நாணினால் மறைந்தாள் என்க. 54-55. மதியின் வெண்தோடு சூடும் சென்னி - பிறையாகிய வெள்ளிய இதழைச் சூடும் சென்னியினையும், நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து - நெற்றியினைத் திறந்து விழித்த இமையாத கண்ணினையுமுடைய; மதி - ஈண்டுப் பிறை; இன்சாரியை அல்வழிக்கண் வந்தது. 56-57. பவள வாய்ச்சி - பவளம் போன்ற வாயினையுடையாள், தவள வாள் நகைச்சி - வெள்ளிய ஒளி பொருந்திய நகையினையுடையாள், நஞ்சு உண்டு கறுத்த கண்டி - நஞ்சினை உண்டதனாற் கறுத்த கண்டத்தினையுடையாள்; 57-58. வெஞ்சினத்து அரவு நாண் பூட்டி நெடுமலை வளைத்தோள் - கொடிய சினத்தினையுடைய வாசுகி என்னும் பாம்பாகிய நாணைப் பூட்டி நெடிய மேருவாகிய வில்லை வளைத்தவள்; அரவு நாண் என்பதற்கேற்ப மலை வில் என உரைக்கப்பட்டது. வில்லை வளைத்து நாண் பூட்டியவள் எனப் பிரித்துக் கூட்டுக. 59. துளை எயிற்று உரகக் கச்சு உடை முலைச்சி - நஞ்சு பொருந்தும் துளையுள்ள எயிற்றினையுடைய பாம்பாகிய கச்சணிந்த முலையினையுடையாள் ; 60. வளையுடைக் கையில் சூலம் ஏந்தி - வளையல் அணிந்த கையில் சூலத்தை ஏந்தினவள்; ஏந்தி - வினைமுதற்பொருளுணர்த்தும் விகுதி புணர்ந்து கெட்டது. 61-62. கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய அரியின் உரிவை மேகலை யாட்டி - யானையின் தோலைப் போர்த்து வருத்துந் தன்மையுடைய சிங்கத்தின் தோலை மேகலையாக உடுத்தவள்; அணங்கு - வருத்தம். 63-64. சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி இடப் பக்கத்துச்- சிலம்பும் வலப் பக்கத்து வீரக் கழலும் ஒலிக்கும் சிறிய அடிகளையும், வலம்படு கொற்றத்து வாய் வாட் கொற்றவை - மேலான வெற்றியையும் வினை வாய்க்கப் பெறும் வாளினையுமுடைய கொற்றவை; இடப்பாகம் கொற்றவையும் வலப்பாகம் சிவபெருமானும் ஆய உருவமாகலான் `சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி' என்றார். வலம்-மேன்மை. 65-66. இரண்டு வேறு உருவில் திரண்ட தோள் அவுணன் - தலையும் உடலும் இருவேறு வடிவினையுடைய திரண்ட தோளினையுடைய அவுணனது, தலைமிசை நின்ற தையல் - தலையின் மீது நின்றவள்; இரண்டு வேறு உருவு - உடலின் வேறுபட்ட கடாவின் தலையுடைய வடிவு. அவுணன் - மகிடாசுரன். விக்கிரமாசுரன் என்பாரு முளர். 66-68. பலர் தொழும் அமரி - யாவரும் வணங்கும் இறப்பில்லாதவள், குமரி - இளமை பொருந்தியவள், கவுரி - கௌர நிறத்தையுடையவள், சமரி - போரில் வல்லவள், சூலி - சூலம் ஏந்தியவள், நீலி - நீலநிறமுடையோள், மால் அவற்கு இளங்கிளை- திருமாலுக்கு இளையவள் ; இளங்கிளை - இளையவுறவினர்; இச் சொல், தம்பி, தங்கை, மைத்துனர், தோழர் முதலிய இளைய முறையினர் பலரையுங் குறிக்க வழங்கும். அமரி - அலங்கரித்தலில்லாதவள்; குமரி - அழிவில்லாதவள்; கிளை - கிளி போல்வாள் எனலுமாம். கிளை - கிள்ளை. 69-71. ஐயை - தலைவி, செய்யவள் - திருமகள், வெய்ய வாள் தடக்கைப் பாய்கலைப் பாவை - கொடிய வாளினைப் பெரிய கையின்கண் தாங்கிய தாவும் கலையை ஊர்தியாகவுடைய பெண், பைந்தொடிப் பாவை ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை - ஆராயும் கலைகளை உணர்ந்த பாவை, பசிய வீரவளையை அணிந்தவள், அரிய அணிகலங்களை அணிந்த பாவை போல்வாள்; ஐயை என்பதற்கு வென்றி மகள் எனவும், அருங்கலப் பாவை என்பதற்கு இரத்தினப் பாவை எனவும் கூறுவாரு முளர். 72-74. தமர் தொழ வந்த குமரிக் கோலத்து அமர் இளங் குமரியும் - திருமாலும் நான்முகனும் முதலியோர் வணங்கத் தோன்றிய கன்னியின் கோலத்தினையுடைய யாவரும் விரும்பும் அக் குமரியும், அருளினள் வரியுறு செய்கை வாய்ந்ததால் எனவே-இவள் கொண்ட வரிக்கோலம் வாய்ப்புடையது என்று கண்டோர் கூற அருளினாள். தொழ வந்த குமரி - கொற்றவை. இளங்குமரி - எயினர் குலக் கன்னி. தமர் தொழ வந்த குமரியும் என இயைத்து, மறவர் தொழவந்த என்றுரைத்தலுமாம். சாலினி கொண்ட கோலம் வாய்ப்புடைத்தென்று அருளினாள் என்பர் அடியார்க்கு நல்லார். சாலினி உற்று நிறுத்து ஓச்சி வியப்ப ஆடிக் கடன் தாரும் என, குமரியைக் காட்டிச் சுற்றிச் சாத்திப் பூட்டி உடீஇக் கொடுத்து ஏற்றிப் பரசிப் பின்வரத் துவைப்ப நிறுத்த, ஏத்திக் கூந்தலை, செல்வி, ஆட்டி, பாவை, கொழுந்து, மணி எனத் தெய்வம் உற்று உரைப்ப, கண்ணகி ஒடுங்கி நிற்ப, சென்னியையும் நாட்டத்தையுமுடைய வாய்ச்சி, நகைச்சி, கண்டி, வளைத்தோள், முலைச்சி, ஏந்தி, மேகலையாட்டி, கொற்றவை, தையல் ஆகிய குமரிக் கோலத்துக் குமரியும் அருளினள் என முடிக்க. உரைப்பாட்டுமடை - உரைப்பாட்டை நடுவே மடுத்தல். 1. "நாகநாறு ....... முன்றிலே" நாகம் நாறு நரந்தம் நிரந்தன - மணம் நாறும் சுரபுன்னையும் நாரத்தையும் ஒழுங்கு படவுள்ளன; ஆவும் ஆரமும் ஓங்கின - ஆச்சாவும் சந்தனமும் உயர்ந்து வளர்ந்தன; எங்கணும் சேவும் மாவும் செறிந்தன - எவ்விடத்தும் சேமரமும் மாமரமும் நெருங்கின; கண்ணுதல் பாகம் ஆளுடையாள் பலி முன்றிலே - நெற்றியிற் கண்ணினையுடைய சிவபெருமானது இடப் பாகத்தை ஆள்பவளாகிய கொற்றவையின் பலிகொள்ளும் முன்றிலின்கண்; பலிமுன்றிலின்கண் நிரந்தன, ஓங்கின, செறிந்தன எனக் கூட்டுக. பின்வருவனவற்றையும் இவ்வாறே கொள்க. 'எங்கணும்' என்பதனை எங்கணும் கூட்டுக. ஆரம் - ஆத்தி எனலும், சே - உழிஞ்சில் எனலும் ஆம். "ஐயுங் கண்ணு மல்லாப் பொருள் வயின், மெய்யுருபு தொகா விறுதி யான" என்ற விதியால் கண்ணுருபு இறுதியிற் றொக்கது. 2. "செம்பொன் ...... முன்றிலே" செம்பொன் வேங்கை சொரிந்தன - வேங்கை மரங்கள் சிவந்த பொன் போன்ற பூக்களைச் சிந்தின; சேயிதழ் கொம்பர் நல் இலவங்கள் குவிந்தன - நல்ல இலவமரங்கள் தம் கொம்புகளிலுள்ள சிவந்த பூவிதழ்களை உதிர்த்துக் குவித்தன; பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கு - புன்க மரங்கள் பழம் பூக்களாகிய வெள்ளிய பொரியைச் சிந்தின; இளந்திங்கள் வாழ் சடையாள் திருமுன்றிலே - பிறைதங்கிய சடையை உடையாளது அழகிய முன்றிலின்கண்; பொன் - பொன்போன்ற பூ. குவிந்தன - குவித்தன; விகாரம். பொங்கர் - பழம்பூ; கொம்பு, பொதுளல் எனலுமாம். 3. "மரவம் ...... முன்றிலே" மரவம் பாதிரி புன்னை மணம் கமழ் குரவம் கோங்கம் மலர்ந்தன - வெண்கடம்பும் பாதிரியும் புன்னையும் மணம் வீசும் குராவும் கோங்கமும் ஆய இவை பூத்தன; கொம்பர்மேல் அரவ வண்டு இனம் ஆர்த்து உடன்யாழ் செயும் - அவற்றின் கொம்புகளில் ஒலியினையுடைய வண்டுக் கூட்டம் முழங்கி வீணைபோலப் பாடும்; திருவ மாற்கு இளையாள் திருமுன்றிலே-திருமாலுக்கு இளையாளுடைய முன்றிலின் கண்; யாழ்செயும் - யாழின் இசைபோலப் பாடும். திருவ என்பதன் கண் அ அசை. இவை முன்றிலின்சிறப்பு. 4. "கொற்றவை ....... குலனும்" கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்ற இப் பொற் றொடி மாதர் தவம் என்னை கொல்லோ - துர்க்கை தனக்கு அணியாகக் கொண்டவற்றைத் தான் அணியும் அணியாகக் கொண்டு நின்ற இந்தப் பொன்னாலாய தொடியினையுடைய குமரி முன் செய்த தவம் யாதோ; பொற்றொடி மாதர் பிறந்த குடிப் பிறந்த விற்றொழில் வேடர் குலனே குலனும் - பொன் வளையலணிந்த இக் குமரி பிறந்த குடியின்கண் தோன்றிய விற்றொழிலில் வல்ல மறவர் குலமே சிறந்த குலம்; கொற்றவை அணிகொண்டு நின்ற மாதர் - மறவர் தொல்குடிக் குமரி. இதனை, "தொல்குடிக் குமரியைச், சிறுவெள்ளரவின் குருளை நாண் சுற்றி" என்பது முதலாகத் தொடங்கும் அடிகளானுணர்க. சாலினி யென்பர் அடியார்க்கு நல்லார். கொல், ஓ - அசைகள். 5. "ஐயை திருவின்............குலனும்" ஐயை திருவின் அணி கொண்டு நின்ற இப் பையரவு அல்குல் தவம் என்னை கொல்லோ - கொற்றவையின் அழகினை ஒப்ப அழகு கொண்டு நின்ற இந்த அரவின் படம் போன்ற அல்குலினையுடையாள் செய்த தவம் யாதோ, பையரவு அல்குல் பிறந்த குடிப்பிறந்த எய் வில் எயினர் குலனே குலனும் - இக் குமரி பிறந்த குடிக்கண் தோன்றிய அம்பினை எய்யும் வில்லினையுடைய வேடர் குலமே சிறந்த குலம்; திரு - அழகு. பை - படம். அரவுப்பை என மாறுக. 6. "பாய்கலைப் பாவை.......குலனும்" பாய்கலைப்பாவை அணிகொண்டு நின்ற இவ் ஆய்தொடி நல்லாள் தவம் என்னை கொல்லோ - தாவும் கலையை ஊர்தியாக வுடைய கொற்றவையின் அழகினைக் கொண்டு நின்ற இந்த அழகிய வளையலையுடைய பெண்ணின் தவம் எத்தகையதோ; ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த வேய் வில் எயினர் குலனே குலனும் - இக் குமரி தோன்றிய குடியிற் பிறந்த மூங்கில் வில்லினையுடைய மறவர்களது குலமே சிறந்த குலம் ; இவை மூன்றும் 1"வெறியறி சிறப்பின்" என்னும் சூத்திரத்து `வாடாவள்ளி' என்பதனான், வள்ளிக் கூத்து எனப்படும்; என்னை? `மண்டம ரட்ட மறவர் குழாத்திடைக், கண்ட முருகனுங் கண் களித்தான் - கண்டே, குறமகள் வள்ளிதன் கோலங்கொண் டாடப், பிறமக ணோற்றாள் பெரிது' என்பது வள்ளி, 'ஏவில் எயினர்' எனப் பாடங்கொள்வர் அரும்பதவுரை யாசிரியர். 7. "ஆனைத்தோல்........நிற்பாய்" ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்து - யானையின் தோலை மேலே போர்த்துப் புலியின் தோலை அரைக்கண் உடுத்து, கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால் - காட்டின்கண் எருமைக் கடாவினது கரிய தலையின் மீது நின்றாய்; வானோர் வணங்க மறைமேல் மறையாகி - தேவர் யாவரும் வணங்க வேதங்களுக்கு அப்பாற்பட்ட மறைந்த பொருளாய், ஞானக் கொழுந்தாய் நடுக்கு இன்றியே நிற்பாய் - அறிவின் கொழுந்தாகிச் சலித்தல் இன்றி யாண்டும் நிலைத்து நிற்பவளே இஃது என்ன மாயமோ ; வணங்க மறையாகிக் கொழுந்தாய் நிற்பாய் போர்த்து உடுத்து நின்றாய் இஃதென்ன மாயமோ என்க. பின் வருவனவற்றையும் இவ்வாறே மாறுக. கானம் என்பதனை எருமைக்கு அடையாக்கினு மமையும். எருமை - சாதிப்பெயர். 8. "வரிவளைக்கை...........................நிற்பாய்" வரிவளைக்கை வாள் ஏந்தி மா மயிடற் செற்று - வரிகள் பொருந்திய வளையணிந்த கையில் வாளைத் தாங்கிப் பெரிய மகிடாசுரனை அழித்து, கரிய திரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால் - கரிய முறுக்குண்ட கொம்பினையுடைய கலைமான் மீது நின்றாய்; அரி அரன் பூமே லோன் அகமலர்மேல் மன்னும் - திருமாலும் சிவபிரானும் நான் முகனும் ஆகிய இவர்களுடைய உள்ளத் தாமரையில் நிலைபெற்றிருக்கும், விரிகதிர் அஞ்சோதி விளக்காகியே நிற்பாய் - விரிந்த கதிர்களையுடைய அழகிய ஒளிவிடும் விளக்கமாகி நிற்பவளே, இஃதென்ன மாயமோ; அகமலர்மேல் மன்னும் விளக்காகி நிற்பாய் என்க. 9. "சங்கமும்.....நிற்பாய்" சங்கமும் சக்கரமும் தாமரைக் கை ஏந்தி - சங்கினையும் சக்கரத்தினையும் தாமரை போன்ற கைகளில் தாங்கி, செங்கண் அரிமான் சின விடைமேல் நின்றாயால் - சிவந்த கண்களையுடைய சிங்கமாகிய சினம் பொருந்திய விடைமீது நின்றாய், கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து - கங்கையினைச் சடைமுடியின்கண் அணிந்த நெற்றிக் கண்ணையுடையோனது இடப் பாகத்து, மங்கை உருவாய் மறை ஏத்தவே நிற்பாய் - பெண்ணுருவாகி வேதங்கள் போற்ற நிற்பாய் இஃதென்ன மாயமோ ; அரிமான் ஊர்தியென்பார் விடையென்றார் ; விடையும் ஊர்தி யாகலின். இவை மூன்றும் முன்னிலைப் பரவல். 10. ஆங்கு ................. கூத்துள் படுமே ஆங்கு - அவ்விடத்து ; கொன்றையும் துளவமும் குழுமத் தொடுத்த - கொன்றை மலரும் துளபமும் சேரக் கட்டிய, துன்று மலர்ப்பிணையல் தோள்மேல் இட்டு - மலர் செறிந்த மாலையைத் தோளின்மீது சூடி, ஆங்கு அசுரர் வாட அமரர்க்கு ஆடிய குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே - குமரியின் கோலத்தொடு அசுரர் வாடும் வண்ணம் தேவர்க்கு வெற்றியுண்டாக ஆடிய மரக்காற் கூத்து ஆடுதற்கு உள்படும்; உள்படும் - ஒருப்படும் ; ஆடும் என்றுமாம். இது வென்றிக் கூத்து. 11. "ஆய்பொன் ...... காட்டும் போலும்" ஆய்பொன் அரிச் சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப - அழகிய பொன்னாற் செய்த பருக்கையினையுடைய சிலம்பும் வளையும் மேகலையும் ஒலிப்ப, மாயஞ்செய் வாள்அவுணர் வீழ நங்கை மரக்கால்மேல் வாள் அமலை ஆடும் போலும் - வஞ்சம் புரிகின்ற வாட்டொழிலிற் சிறந்த அசுரர்கள் அழியுமாறு கொற்றவை மரக்காலின்மீது நின்று வாட்கூத்தினை ஆடா நிற்கும் ; மாயஞ் செய் வாள்அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள் அமலை ஆடும் ஆயின் - வஞ்சம் செய்யும் வாளினையுடைய அசுரர் ஒழிய இவள் மரக்காலின்மீது நின்று வாள் அமலை ஆடுவாளாயின், காயாமலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர் மாரி காட்டும் போலும் - இவளுடைய காயாம் பூப் போலும் மேனியைப் போற்றித் தேவர்கள் தம் கைகளாற் சொரியும் மலர்கள் மழையைக் காட்டாநிற்கும்; இது கூத்துள் படுதல். மாயஞ்செய் வாளவுணர் என்றது உண்மை யுருவோடு எதிர்நின்று வெல்ல நினையாது, பாம்பு, தேள் முதலிய வஞ்ச உருக்கொடு வந்ததனால் என்க. இதனை, "காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள், மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்" என்பதனானுணர்க. இனி, அவரது இயற்கைத் தன்மை கூறியவாறு எனலும் அமையும். பகைவர் ஒழிந்த பின் வாள்வீரர் ஆடுங் கூத்தினை வாள் அமலை யென்பர் தொல்காப்பியர். 1"தானை யானை" என்னும் சூத்திரத்துப் "பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோராடும் அமலையும்" என்பது காண்க. இத் துறையினை `ஒள்வாளமலை' என்பர் வெண்பாமாலையுடையார். கூத்து மலர் மாரியைக் காட்டும் என்றுமாம். போலும் - ஒப்பில் போலி. பின் இரு செய்யுட்களில் வருவனவும் இன்ன. 12. "உட்குடை............காட்டும் போலும்" உட்கு உடைச் சீறூர் ஒருமகன் ஆனிரை கொள்ள உற்ற காலை - பகைவர்க்கு அச்சம் விளைத்தலையுடைய சீறூரிடத்துள்ள ஒப்பற்ற வீரன் ஆனிரையைக் கொள்ளத் தொடங்கும்பொழுது, வெட்சி மலர் புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டும் போலும் - நிரை கவரும் போர்ப் பூவாகிய வெட்சி மலர் மாலையைத் தான் சூட வெள்ளிய வாளையுடைய கொற்றவையும் விரும்பும், வெட்சி மலர் புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டின் - வெட்சி மாலையைச் சூடக் கொற்றவை விரும்பின், வேற்றூர்க் கட்சியுட் காரி கடிய குரல் இசைத்துக் காட்டும் போலும் - பகைவர் ஊரைச் சூழ்ந்த காட்டிடத்துக் கரிக் குருவி தனது கொடிய குரலால் அவர்க்கு வரும் கேட்டினைக் கூறி உணர்த்தும் ; வெள்வாளுழத்தியும் வேண்டுமென்றது அவள் உடன் செல்வ ளென்றபடி. இச் செய்யுளும் அடுத்த செய்யுளும் நிரைகவர்தற்கண் ‘கொற்றவை நிலை' கூறலின் வெட்சிப் புறனடை எனப்படும் ; என்னை? 1"மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த, கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே" என்றாராகலான். இனி, வெண்பா மாலை இலக்கணம் நோக்கின் இவை வெட்சித்திணைக் கொற்றவைநிலையின்பாற்படும் ; என்னை? 2"ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக், கூளி மலிபடைக் கொற்றவை - மீளி, அரண்முருங்க ஆகோள் கருதின் அடையார், முரண்முருங்கத் தான்முந் துறும்" என்றாராகலான். 13. "கள்விலை............செல்லும் போலும்" கள் விலையாட்டி மறுப்பப் பொறா மறவன் கைவில் ஏந்தி - கள்ளினை விற்பாள் இவன் பழங்கடன் கொடாமையான் கள் கொடாது மறுக்க அதனைப் பொறாத வீரன் கைக்கண் வில்லினைத் தாங்கி, புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகும் போலும் - பறவைகள் தன் பின்னே தொடர்ந்து வரப் பகைவரது ஆனிரையைக் கொள்ளக் கருதிப் போவான், புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகும் காலை - அங்ஙனம் போகுங்கால், கொள்ளுங் கொடி எடுத்துக் கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும் - தான் கைக்கொண்ட சிங்கக் கொடியினை எடுத்துக் கொற்றவையும் வில்லின் முன்னே செல்வாள் ; புள் வழிப்படர்தல் அம் மறவன் அழிக்கும் பகைவர் ஊனை உண்பதற்கென்க. இனி, `புள்ளும் வழிப்படர' என்பதற்குப் புள் நிமித்தம் தன் கருத்திற்கு ஒத்துச் செல்ல எனலும் பொருந்தும். கொடு மரம் முன்செல்லும் என்றது வில் ஏந்திய அவ் வீரன்முன் செல்லும் என்றவாறு. இனி, கொடியையும் கொடுமரத்தையும் எடுத்து அவ் வீரன்முன் செல்லும் எனினும் பொருந்தும். இது தன்னுறு தொழில். 14. "இளமாவெயிற்றி ..... நிறைந்தன" இளமா எயிற்றி - மாமை நிறத்தையுடைய இளமை பொருந்திய வேட்டுவ மகளே, இவை காண் நின் ஐயர் தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள் - இவற்றைக் காண்பாய் நினது தந்தை முதலியோர் முன்னாளில் வேட்டையிற் கவர்ந்த நல்ல பசுக் கூட்டங்கள் ; கொல்லன் துடியன் கொளைபுணர் சீர் வல்ல நல்லியாழ்ப் பாணர் தம் முன்றில் நிறைந்தன - வேல் வடித்துத் தரும் கொல்லனும் துடி கொட்டும் துடியனும் பாட்டுக்களைத் தாளத்துடன் புணர்க்கவல்ல நல்ல யாழினையுடைய பாணரும் எனப்பட்ட இவர்களுடைய முன்றிலின்கண் நிறைந்துள்ளன ; நின் ஐயர் தந்த நிரைகள் முன்றிலில் நிறைந்தன இவைகாண் என முடிக்க. இது, 1"படை இயங்கரவம்" என்னும் சூத்திரத்துக் 'கொடை' என்னுந் துறைப்பாற்படும். 15. "முருந்தேரிளநகை ....... நிறைந்தன" முருந்து ஏர் இளநகை காணாய் - மயிலிறகின் அடியை ஒத்த அழகிய முற்றாத நகையினையுடையாய் காண்பாய், நின் ஐயர் கரந்தை அலறக் கவர்ந்த இன நிரைகள் - உனது ஐயன்மார் கரந்தையார் அலறும் வண்ணம் கவர்ந்துகொண்டு வந்த பசுக் கூட்டங்கள், கள்விலையாட்டி. நல் வேய் தெரி கானவன் புள்வாய்ப்பச் சொன்ன கணி முன்றில் நிறைந்தன - கள் விற்பவளும் நல்ல உளவறிந்து கூறும் ஒற்றனும் புள் நிமித்தப் பொருத்தம் கூறிய நிமித்திகனும் ஆகிய இவர்களது முன்றிலின்கண் நிறைந்தன ; கரந்தையார் - ஆனிரை மீட்போர். வேய் - ஒற்று. புள் - நிமித்தம். கணி - நிமித்திகன் ; சோதிடன். 16. "கயமலர் ...... நிறைந்தன" கயமலர் உண் கண்ணாய் காணாய் - குளத்துக்கண் தாமரை மலர்போலும் மையுண்ட கண்களையுடையாய் நீ காண்பாய், நின் ஐயர் அயலூர் அலற எறிந்த நல் ஆனிரைகள் - நினது ஐயன்மார் பகைவர் ஊர் வருந்திக் கூவும் வண்ணம் அவர்களை எறிந்து கொண்டு வந்த பசுக்கூட்டங்கள், நயன்இல் மொழியின் நரைமுது தாடி எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன - கொடுஞ் சொல்லினையும் நரைத்த தாடியினையும் உடைய முதிர்ந்த மறவரும் மறத்தியருமாகிய இவர்களுடைய முன்றிலின்கண் நிறைந்துள்ளன; கயமலர் - பெரியமலர் எனலுமாம் ;2"தடவும் கயவும் நளியும் பெருமை" என்பவாகலான். நயன் இல்மொழி - இனிமையில்லாத சொல். நயனில் மொழியை எயினர் எயிற்றியர்க்கும், நரைத் தாடியை எயினர்க்கும் இயைக்க. இதுவும் மேற்கூறிய செய்யுளும் ஆகிய இரண்டும் "படை இயங்கரவம்" என்னும் சூத்திரத்துப் "பாதீடு" என்னும் துறையின்பாற் படும். இம் மூன்றினையுமே ‘கொடை' என்னுந் துறைப்பாற் படுத்துவர் அடியார்க்கு நல்லார். இம் மூன்றும் கண்டார் கூற்று. துறைப்பாட்டு மடை - துறைப்பாட்டுக்களை இடையே மடுத்தல், 17. "சுடரொடு.........விலையே" சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் - ஞாயிற்றுடனே சுழன்று திரிதலைச் செய்யும் இருடிகளும் தேவர்களும் ஆகிய இவர்களுடைய, இடர்கெட அருளும் நின் இணை அடி தொழுதேம் - துன்பம் ஒழியும் வண்ணம் அருள் செய்கின்ற நினது இரண்டு திருவடிகளையும் வணங்கினேம் ; அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன்இது மிடறு உகு குருதிகொள் விறல் தரு விலையே - பகைவரை அடுதலையுடைய வலி மிக்க மறவர் நின் அடியினைத் தொட்டுச் சூளுற்ற வெற்றிக்கு விலையாகத் தரும் கடன் மிடற்றினின்றும் சிந்துகின்ற உதிரமாகும் இக் கடனை நீ கொள்வாயாக; ஞாயிற்றின் வெம்மை உயிர்களை வருத்தா வண்ணம் அதனைத் தாம் ஏற்று இம் முனிவர் சுடரொடு திரிகின்றனர் என்க. இதனை, 1"நிலமிசை வாழ்நர் அமரல் தீரத், தெறுகதிர்க் கனலி வெம்மைதாங்கிக், காலுண வாகச் சுடரொடு கொட்கும், அவிர்சடை முனிவரும்" என்பதனானும், 2"விண்செலன் மரபி னையர்க் கேந்திய தொருகை" என்ற அடியின் விரிவுரையானும் உணர்க. விறல் தருவிலை - நீ தந்த வெற்றிக்கு விலையாகத் தரும் என்க. வேற்றுப்புலம் போகி நல்வெற்றங் கொடுத்துக், கழிபேராண்மைக் கடன் பார்த்திருப்பவளாகலான், விறல்தரு விலைக்கடன் கொள் என்றார் என்க. கடனாகும் குருதியாகிய இதனைக் கொள் எனலுமாம். எயினர் - தன்மையிற் படர்க்கை வந்த வழுவமைதி. பின்வருவனவும் இவ்வாறே கொள்க. 18. "அணிமுடி.....அடுவிலையே" அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரும் - அழகிய முடிசூடிய தேவர்கள் தம் அரசனாகிய இந்திரனொடு வந்து வணங்குகின்ற, மணி உருவினை நின் மலர் அடிதொழுதேம் - நீலமணி போலும் நிறத்தினையுடையாய் நின்னுடைய மலர் போன்ற திருவடிகளை வணங்கினேம்; கண நிரை பெறு விறல் எயின் இடுகடன் இது நிணன் உகு குருதி கொள் நிகர் அடுவிலையே - திரண்ட ஆனிரையைப் பெறும் வெற்றியினையுடைய மறவர்கள் பகைவரை அடுதற்குக் காரணமாகிய விலையாக இடுங்கடன் நிணத்தொடு சிந்தும் உதிரமாகும் இக் கடனை நீ கொள்வாயாக; நின என்பதன்கண் ‘அ' ஆறாம் வேற்றுமையுருபு. எயின் - எயினர். எயின் அடுவிலை இடுகடன் குருதி என இயைக்க. 19. "துடியொடு..........மடையே" துடியொடு சிறுபறை வயிரொடு துவை செய வெடிபட - துடியுடனே சிறுபறையும் கொம்பும் மிக முழங்க, வருபவர் எயினர்கள் அரையிருள். அடுபுலி அனையவர் - நள்ளிரவில் வருபவர்களாகிய கொல்லும் புலியை யொத்த மறவர்கள், குமரி நின் அடிதொடு படுகடன் - குமரியாகிய நினது அடியினைத் தொட்டுச் சூளுற்ற கடன், இது உகு பலி முக மடையே - மிடற்றினின்றுஞ் சிந்தும் குருதியாகும்; இக் கடனை நீ கொள்வாயாக; நிலம் வெடிக்கும்படி வருபவரென்றுமாம். படு - பொருந்திய; மிக்க எனினும் அமையும். முகமடை - மிடறு. இதுபலி - இக்கடன்; கொள்கவென்பது சொல்லெச்சம். இவை மூன்றும் அவிப்பலியென்னும் துறையின்பாற் படும்; குருதிப் பலி யென்பாரு முளர். 20. "வம்பலர் பல்கி.....சேர்த்துவாய்" வம்பலர் பல்கி வழியும் வளம்பட - வழிகளும் ஆறு செல்வோர் நிறையப் பெறுதலான் அவர்தம் பொருளாகிய வளம் உண்டாம் வண்ணம், அம்புடை வல்வில் எயின் கடன் உண்குவாய்- அம்பு பொருந்திய வலிய வில் ஏந்திய மறவரது பலிக் கடனை உண்பாயாக ; சங்கரி அந்தரி நீலி சடாமுடிச் செங்கண் அரவு பிறையுடன் சேர்த்து வாய் - சங்கரி, அந்தரி, நீலி, சடைமுடிக்கண் சிவந்த கண்களையுடைய பாம்பினை இளம் பிறையோடு சேர்த்துச் சூடுபவளே; சேர்த்துவாய் வழிவளம்பட எயின் கடன் உண்குவாய் என்க. முன்னர்க் கொற்றவை கடன் கொள்ளாமையான், "மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது" என்றாராகலான், ஈண்டு வழிவளம் படக் கடன் உண்குவாய் என்றார். வம்பலர் - புதியராய் வருபவர். சடாமுடி - வடசொன் முடிபு. 21. "துண்ணென்.....செய்குவாய்" துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு - கேட்டார் துண்ணென நடுங்குமாறு ஒலி செய்யும் துடியுடனே பகைவர் உறங்குங் காலத்து ஊர்க் கொலை செய்யும், கண்இல் எயினர் இடுகடன் உண்குவாய் - கண்ணோட்ட மில்லாத மறவர் இடும் பலிக்கடனை நீ உண்பாயாக ; விண்ணோர் அமுது உண்டும் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய் - விண்ணவர் சாவா மருந்தாகிய அமுதமுண்டும் இறப்பவும் எத்தகையோரும் உண்ணவொண்ணாத நஞ்சினை உண்டும் இறவாதே இருந்தருள்வாய் ; இருந்து அருள் செய்குவாய் கடன் உண்குவாய் என்க. துஞ்சூர் எறிதலை 1"ஊர் கொலை" என்னும் வெட்சித்திணைத் துறையானறிக. 22. "பொருள் கொண்டு....செய்குவாய்" பொருள் கொண்டு புண்செயின் அல்லதை யார்க்கும் அருள் இல் எயினர் இடுகடன் உண்குவாய் - வழிப்போவார் பொருளைப் பறித்துக்கொண்டு அவர்க்குத் துன்பம் செய்தல் அல்லது எவரிடத்தும் கருணை இல்லாத வேட்டுவர் இடும் பலிக்கடனை உண்பாயாக ; மருதின் நடந்து - இரு மருத மரங்களின் இடையே நடந்து அவற்றைச் சாய்த்து, நின் மாமன் செய் வஞ்ச உருளும் சகடம் உதைத் தருள் செய்குவாய் - நின் மாமனாகிய கஞ்சன் செய்த வஞ்சத்தால் தோன்றிய உருண்டுவரும் சகடத்தை உதைத் தருளினாய் ; அல்லதை - ஐ சாரியை. "சுடரொடு திரிதரும்" என்பது முதல் ஆறுதாழிசைகளும் கொற்றவையைப் பரவுவார் வார்த்தை என்பர் அரும்பதவுரையாசிரியர். 2"மறவர், பொருள்கொண்டு புண்செயினல்லதை யன்போ, டருள்புற மாறிய வாரிடை யத்தம்" என்பது பாலைக் கலி. 23. "மறைமுது முதல்வன்....வெய்யோனே" மறைமுது முதல்வன் பின்னர் மேய - வேதங்களை அருளிய முதிய முதல்வனாகிய சிவபெருமானுக்குப் பின்னோன் ஆகிய அகத்தியன் எழுந்தருளிய, பொறை உயர் பொதியிற் பொருப்பன் - பொறைகளையுடைய உயர்ந்த பொதிய மலையை உடைய பாண்டியன், பிறர் நாட்டுக் கட்சியும் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுக விறல் வெய்யோனே - பகைவருடைய முனையிடமும் அவர் நிரை மீட்கும் தொழிலும் பாழ்படும் வண்ணம் வெற்றியை விரும்புவோனாகிய அவன் வெட்சி மாலையைச் சூடுவானாக ; பொருப்பனாகிய விறல் வெய்யோன் பாழ்பட வெட்சி சூடுக எனக் கூட்டுக. மறை சிவபிரான் வாய்மொழி யென்பது 3"நன்றாய் நீணிமிர்சடை, முதுமுதல்வன் வாய்போகா, தொன்று புரிந்த வீரிரண்டின்" என்பதனாலும் அறியப்படும். மறைமுது முதல்வன் - பிரமன் என்பாருமுளர். அகத்தியன் இறைவனோடு ஒப்பத் தென்றிசை தாழ இருந்ததனால், "மறைமுது முதல்வன் பின்னர்" என்றார். `பின்னர்' என்றது ஈண்டுத் தம்பி என்னும் பொருட்டன்று; ஒப்ப அடுத்த நிலையில் உள்ளோன் என்னும் பொருட்டு, இதனை, 1"ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன், பின்சாரப் பொய்யாமை நன்று" என வருவது கொண்டு உணர்க. 2"தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற், றொன்முது கடவுட் பின்னர் மேய, வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந" என்பதும் ஈண்டும் அறியற்பாலது. இதிலுள்ள ‘தொன்முது கடவுள்' என்பதற்கு அகத்தியனார் என்று பொருள் கூறுவது சிறப்புடைத்தன்று. பொறை - குன்று, பொற்றை ; சந்தனம் அகில் முதலிய மரங்களாற் சுமைமிக்க என்றுமாம். கட்சி - காடு; போர்முனை. இத் தாழிசையாறும் கொற்றவையைப் பரவுவார் கூற்று. கொற்றவை இறைவனுக்குக் கிரியாசக்தி யாகலின் நுதல்விழி, கறைமிடறு, புலியுரி, சூலம் முதலிய கோலங்களும், நஞ்சுண்டல் முதலிய செயல்களும் கூறப்பட்டன. மாயோனுக்குத் தங்கை யாகலின் அவன் செய்கையாகிய மருதினடந்ததும், சகடமுதைத்ததும் சார்த்தி உரைக்கப்பட்டன ; மாயோனும் இறைவற்கு ஓர் சக்தியாதல் உணரற்பாற்று. இது பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா. வேட்டுவ வரி முற்றிற்று. 13. புறஞ்சேரியிறுத்த காதை (குமரியின் கோலம் நீங்கிய பின்பு, பாண்டியர் காக்கும் நாட்டிலே புலி முதலிய கொடிய உயிர்களும் சார்ந்தவர்க்கு இடுக்கண் செய்யாவாகலின், பகல் வெயிலிற் செல்லாது இரவு நிலவொளியிற் செல்வேம்' எனத் துணிந்து, மூவரும் இரவின் வருகையை எதிர் பார்த்திருக்க, `மலயத் தோங்கி மதுரையின் வளர்ந்து புலவர் நாவிற் பொருந்திய தென்றலொடு வானிலா வெண்கதிர் பாவைமேற் சொரி'ந்தன. கோவலன் கண்ணகி தன் தோளில் சேர்த்திச் செல்ல, மூவரும் வைகறைப் பொழுதிலே, தமக்குரிய ஒழுக்கத்தின் வழுவிய பார்ப்பன ருறையும் ஒரு பகுதியைச் சேர்ந்தனர். முள்வேலி சூழ்ந்த காவலிடத்தே கவுந்தியையும், கண்ணகியையும் இருக்கச் செய்து, கோவலன் காலைக்கடன் கழித்தற் பொருட்டு ஓர் நீர் நிலையை அடைந்தனன். மாதவியால் விடுக்கப்பட்டு வந்த கௌசிகன் என்னும் அந்தணன் அவ் விடத்துக் கோவலனைக் கண்டு, அவன் பிரிவால் அவனுடைய தாய் தந்தையர் எய்திய அளவற்ற துன்பத்தையும் வசந்தமாலை கூறிய சொற்கேட்டதும் மாதவி பள்ளியில் மயங்கி வீழ்ந்ததனையும், மாதவியால் அனுப்பப்பட்டுத் தான் தேடி வந்ததையும் கூறி, மாதவியின் ஓலையை அவன் கையில் நீட்டினன். கோவலன் அதன் பொருளை உணர்ந்து, மாதவி தீதிலளெனத் தெளிந்து தளர்ச்சி நீங்கி, அவ் வோலையின் வாசகம் தம் பெற்றோருக்கும் பொருந்தி யிருந்தமையின், எம் குரவர் மலரடியைத் திசை நோக்கித் தொழுதேன் எனச் சொல்லி இவ் வோலையைக் காட்டு' என அதனைக் கௌசிகன் கையிற் கொடுத்து விடுத்து, கவுந்தியும் கண்ணகியும் இருக்குமிடத்தை யெய்தி, அங்குள்ள பாணர்களுடன் தானும் சேர்ந்து யாழ் வாசித்து, `மதுரை இன்னும் எத்துணைக் காவதம் உள்ளது கூறுமின்' என்ன, அவர்கள் `மதுரைத் தென்றல் வந்தது காணீர்; பாண்டியன் மூதூர் அண்மைக் கண்ணதே' என்று கூறவும், கூடலின்கண் எழும் பலவகை ஒலியும் கடலொலிபோல் எதிர் கொள்ளத் துன்பம் நீங்கிச் சென்று, வையை யாற்றை மரப்புணை யாற் கடந்து தென் கரையை யெய்தி, மதுரையின் மதிற்புறத்ததாகிய புறஞ்சேரியிற் புக்கனர். (இதன்கண் வையைக் கரையின் இயற்கை வனப்பு முதலியன கற்போர்க்கு இன்பம் விளைப்பன.) பெண்ணணி கோலம் பெயர்ந்தபிற் பாடு புண்ணிய முதல்வி திருந்தடி பொருந்திக் கடுங்கதிர் வேனிலிக் காரிகை பொறாஅள் படிந்தில சீறடி பரல்வெங் கானத்துக் 5 கோள்வல் உளியமுங் கொடும்புற் றகழா வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும் உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா செங்கோல் தென்னவர் காக்கும் நாடென 10 எங்கணும் போகிய இசையோ பெரிதே பகலொளி தன்னினும் பல்லுயி ரோம்பும் நிலவொளி விளக்கின் நீளிடை மருங்கின் இரவிடைக் கழிதற் கேத மில்லெனக் குரவரும் நேர்ந்த கொள்கையி னமர்ந்து 15 கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப் படுங்கதி ரமையம் பார்த்திருந் தோர்க்குப் பன்மீன் தானையொடு பாற்கதிர் பரப்பித் தென்னவன் குலமுதற் செல்வன் தோன்றித் தாரகைக் கோவையுஞ் சந்தின் குழம்பும் 20 சீரிள வனமுலை சேரா தொழியவும் தாதுசேர் கழுநீர் தண்பூம் பிணையல் போதுசேர் பூங்குழற் பொருந்தா தொழியவும் பைந்தளிர் ஆரமொடு பல்பூங் குறுமுறி செந்தளிர் மேனி சேரா தொழியவும் 25 மலயத் தோங்கி மதுரையின் வளர்ந்து புலவர் நாவிற் பொருந்திய தென்றலொடு பானிலா வெண்கதிர் பாவைமேற் சொரிய வேனில் திங்களும் வேண்டுதி யென்றே பார்மகள் அயாவுயிர்த் தடங்கிய பின்னர் 30 ஆரிடை உழந்த மாதரை நோக்கிக் கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் இடிதரும் உளியமும் இனையா தேகெனத் தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி மறவுரை நீத்த மாசறு கேள்வி 35 அறவுரை கேட்டாங் காரிடை கழிந்து வேனல்வீற் றிருந்த வேய்கரி கானத்துக் கான வாரணங் கதிர்வர வியம்ப வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து 40 மாதவத் தாட்டியொடு காதலி தன்னையோர் தீதுதீர் சிறப்பின் சிறையத் திருத்தி இடுமுள் வேலி நீங்கி ஆங்கோர் நெடுநெறி மருங்கின் நீர்தலைப் படுவோன் காதலி தன்னொடு கானகம் போந்ததற் 45 கூதுலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி உட்புலம் புறுதலின் உருவந் திரியக் கட்புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான் கோவலன் பிரியக் கொடுந்துய ரெய்திய மாமலர் நெடுங்கண் மாதவி போன்றிவ் 50 அருந்திறல் வேனிற் கலர்களைந் துடனே வருந்தினை போலுநீ மாதவி யென்றோர் பாசிலைக் குருகின் பந்தரிற் பொருந்திக் கோசிக மாணி கூறக்கேட்டே யாதுநீ கூறிய உரையீ திங்கெனத் 55 தீதிலன் கண்டேன் எனச்சென் றெய்திக் கோசிக மாணி கொள்கையின் உரைப்போன் இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும் அருமணி இழந்த நாகம் போன்றதும் இன்னுயிர் இழந்த யாக்கை யென்னத் 60 துன்னிய சுற்றந் துயர்க்கடல் வீழ்ந்ததும் ஏவ லாளர் யாங்கணுஞ் சென்று கோவலன் தேடிக் கொணர்கெனப் பெயர்ந்ததும் பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும் அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த 65 அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப் பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும் வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப் பசந்த மேனியள் படர்நோ யுற்று நெடுநிலை மாடத் திடைநிலத் தாங்கோர் 70 படையமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும் வீழ்துய ருற்றோள் விழுமங் கேட்டுத் தாழ்துயர் எய்தித் தான்சென் றிருந்ததும் இருந்துயர் உற்றோள் இணையடி தொழுதேன் வருந்துயர் நீக்கென மலர்க்கையின் எழுதிக் 75 கண்மணி யனையாற்குக் காட்டுக வென்றே மண்ணுடை முடங்கல் மாதவி யீத்ததும் ஈத்த வோலைகொண் டிடைநெறித் திரிந்து தீத்திறம் புரிந்தோன்சென்ற தேயமும் வழிமருங் கிருந்து மாசற வுரைத்தாங்கு 80 அழிவுடை உள்ளத் தாரஞ ராட்டி போதவிழ் புரிகுழற் பூங்கொடி நங்கை மாதவி யோலை மலர்க்கையின் நீட்ட உடனுறை காலத் துரைத்தநெய் வாசம் குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக் 85 காட்டிய தாதலிற் கைவிட லீயான் ஏட்டகம் விரித்தாங் கெய்திய துணர்வோன் அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன் வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும் குரவர்பணி அன்றியுங் குலப்பிறப் பாட்டியோ 90 டிரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி என்றவள் எழுதிய இசைமொழி யுணர்ந்து தன்றீ திலளெனத் தளர்ச்சி நீங்கி 95 என்தீ தென்றே எய்திய துணர்ந்தாங் கெற்பயந் தோற்கிம் மண்ணுடை முடங்கல் பொற்புடைத் தாகப் பொருளுரை பொருந்தியது மாசில் குரவர் மலரடி தொழுதேன் கோசிக மாணி காட்டெனக் கொடுத்து 100 நடுக்கங் களைந்தவர் நல்லகம் பொருந்திய இடுக்கண் களைதற் கீண்டெனப் போக்கி மாசில் கற்பின் மனைவியோ டிருந்த ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு ஆடியல் கொள்கை அந்தரி கோலம் 105 பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து செந்திறம் புரிந்த செங்கோட் டியாழில் தந்திரி கரத்தொடு திவவுறுத் தியாஅத்து ஒற்றுறுப் புடைமையிற் பற்றுவழிச் சேர்த்தி உழைமுதற் கைக்கிளை யிறுவாய்க் கட்டி 110 வரன்முறை வந்த மூவகைத் தானத்துப் பாய்கலைப் பாவை பாடற் பாணி ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டுப் பாடற் பாணி அளைஇ அவரொடு கூடற் காவதங் கூறுமின் நீரெனக் 115 காழகிற் சாந்தம் கமழ்பூங் குங்குமம் நாவிக் குழம்பு நலங்கொள் தேய்வை மான்மதச் சாந்தம் மணங்கமழ் தெய்வத் தேமென் கொழுஞ்சே றாடி யாங்குத் தாதுசேர் கழுநீர் சண்பகக் கோதையொடு 120 மாதவி மல்லிகை மனைவளர் முல்லைப் போதுவிரி தொடையற் பூவணை பொருந்தி அட்டிற் புகையும் அகலங் காடி முட்டாக் கூவியர் மோதகப் புகையும் மைந்தரும் மகளிரும் மாடத் தெடுத்த 125 அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும் பல்வேறு பூம்புகை அளைஇ வெல்போர் விளங்குபூண் மார் பிற் பாண்டியன் கோயிலின் அளந்துணர் வறியா ஆருயிர் பிணிக்கும் கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றிப் 130 புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின் பொதியில் தென்றல் போலா தீங்கு மதுரைத் தென்றல் வந்தது காணீர் நனிசேய்த் தன்றவன் திருமலி மூதூர் தனிநீர் கழியினுந் தகைக்குநர் இல்லென 135 முன்னாள் முறைமையின் இருந்தவ முதல்வியொடு பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர் பெயர்ந்தாங்கு அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும் பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும் பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த 140 காலை முரசக் கனைகுரல் ஓதையும் நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும் மாதவ ரோதி மலிந்த ஓதையும் மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு வாளோர் எடுத்த நாளணி முழவமும் 145 போரிற் கொண்ட பொருகரி முழக்கமும் வாரிக் கொண்ட வயக்கரி முழக்கமும் பணைநிலைப் புரவி ஆலும் ஓதையும் கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும் கார்க்கடல் ஒலியிற் கலிகெழு கூடல் 150 ஆர்ப்பொலி எதிர்கொள ஆரஞர் நீங்கிக் குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் மரவமும் நாகமும் திலகமும் மருதமும் சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து 155 குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும் விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும் குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும் பிடவமும் மயிலையும் பிணங்கரில் மணந்த கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும் 160 மிடைந்துசூழ் போகிய அகன்றேந் தல்குல் வாலுகங் குவைஇய மலர்ப்பூந் துருத்திப் பால்புடைக் கொண்டு பன்மல ரோங்கி எதிரெதிர் விளங்கிய கதிரிள வனமுலை கரைநின் றுதிர்த்த கவரிதழ்ச் செவ்வாய் 165 அருவி முல்லை அணிநகை யாட்டி விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண் விரைமலர் நீங்கா அவிரறற் கூந்தல் உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி 170 வையை என்ற பொய்யாக் குலக்கொடி தையற் குறுவது தானறிந் தனள்போல் புண்ணிய நறுமல ராடை போர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப் புனல்யா றன்றிது பூம்புனல் யாறென 175 அனநடை மாதரும் ஐயனுந் தொழுது பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும் அரிமுக அம்பியும் அருந்துறை யியக்கும் பெருந்துறை மருங்கிற் பெயரா தாங்கண் மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித் 180 தேமலர் நறும்பொழில் தென்கரை யெய்தி வானவர் உறையும் மதுரை வலங்கொளத் தான்நனி பெரிதுந் தகவுடைத் தென்றாங்கு அருமிளை யுடுத்த அகழிசூழ் போகிக் கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும் 185 தையலும் கணவனும் தனித்துறு துயரம் ஐய மின்றி அறிந்தன போலப் பண்ணீர் வண்டு பரிந்தினைந் தேங்கிக் கண்ணீர் கொண்டு காலுற நடுங்கப் போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி 190 வாரலென் பனபோல் மறித்துக்கை காட்டப் புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீர் ஏரியும் காய்க்குலைத் தெங்கும் வாழையும் கமுகும் வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை 195 அறம்புரி மாந்த ரன்றிச் சேராப் புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென். உரை 1. பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு - முன்னர்க் கூறிய வேட்டுக் குமரி யணிந்த கொற்றவை கோலம் நீங்கிய பின்னர்; பிற்பாடு - ஒரு சொல். கோலம் நீங்கியதெனவே கூத்து நீங்கியதும் பெற்றாம். 2. புண்ணிய முதல்வி திருந்து அடி பொருந்தி - அறநெறி நிற்றலான் முதன்மை பெற்ற கவுந்தியடிகளின் திருந்திய அடிகளைச் சேர்ந்து; புண்ணியம் - தவமுமாம். அடி பொருந்தி - அடியின்கண் வணங்கி. பொருந்தினான் கோவலன். 3-4. கடுங் கதிர் வேனில் இக் காரிகை பொறாஅள்-இவ் வழக்கினையுடைய கண்ணகி கடிய ஞாயிற்றின் வெம்மையைப் பொறுக்கலாற்றாள், படிந்தில சீறடி பரல் வெங் கானத்து - பருக்கைக் கற்களையுடைய கொடிய காட்டு வழியில் இவள் சிறிய அடிகளும் படிந்தில; சீறடி படிந்தில என்றது கால் கொப்புளங் கோடலின். அடி நன்கு மிதித்து நடவாமை கூறியவாறு. ‘பரல்வெங் கானம்' என்பதனைப் பின் வரும் அடிகளொடும் கூட்டுக. 5-10. கோள்வல் உளியமும் கொடும்புற்று அகழா - எதிர்ப் பட்டதனைக் கொள்ளுதல் வல்ல கரடியும் வளைந்த புற்றினைத் தோண்டா, வாள் வரி வேங்கையும் மான்கணம் மறலா - ஒளி பொருந்திய கோடுகள் பொருந்திய புலியும் மானினத்தொடு மாறுபடா, அரவும் சூரும் இரைதேர் முதலையும் உருமும் - பாம்பும் சூர்த் தெய்வமும் இரை தேடித் திரியும் முதலையும் இடியும் ஆய இக் கொடியவை, சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா - தம்மை உற்றார்க்குத் துன்பம் செய்யா, செங்கோல் தென்னவர் காக்கும் நாடு என-செங்கோலையுடைய பாண்டியர் ஆளும் நாடென்று, எங்கணும் போகிய இசையோ பெரிதே - எவ்விடங்களிலும் சென்ற புகழ் பெரிது ஆகலான்; பாம்பு உறைதலான் கொடிய புற்று எனலுமாம். கரடி தான் அகழ்தற்குரிய புற்றினையும் அகழா எனவும், புலி தாம் மாறுபடுதற்குரிய மானினத்தோடும் மாறுபடா எனவும் கூறின மையின் அவை மக்கட்கு ஊறு செய்யா என்பது தானே போதரும். அரவு முதலியன உறுகண் செய்யத் தகுவனவாயினும் செய்யா என்றார். இவ்வாற்றால் இவனது நாட்டு இக் காலத்து வருத்துவது இவ் வெயிலொன்றுமே என்பதாயிற்று. நாடு அகழா மறலா செய்யா என இடத்து நிகழ் பொருளின் றொழில்கள் இடத்தின்மேல் நின்றன. (அடி. இவற்றான், இவனாணையும் ஐவகை நிலத்திற்குரிமையுங் கூறினார் ; ஐவகை நில னென்பது எவற்றாற் பெறுதுமெனின், கான மென்பதனால் முல்லையும், சூர் கரடி யென்பவற்றாற் குறிஞ்சியும், வேங்கை யென்பதனாற் பாலையும், உருமு வென்பதனால் மருதமும், முதலை என்பதனால் நெய்தலும் பெறுதும்.) 1"உருமு முரறா தரவுந் தப்பா, காட்டு மாவு முறுகண் செய்யா" என்பதும் அறியற்பாலது. 11-14. பகல் ஒளி தன்னினும் - ஞாயிற்றின் விளக்கத்தினும், பல் உயிர் ஓம்பும் நில வொளி விளக்கின் - பல உயிர்களையும் காக்கின்ற திங்களின் ஒளியாகிய விளக்கொடு. நீள் இடை மருங்கின் இரவிடைக் கழிதற்கு ஏதம் இல் என - இரவின் கண் நீண்ட நெறிக்கண்ணே செல்வதற்கு உண்டாம் குற்றம் ஒன்றுமில்லை யென்று கோவலன் கூற, குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து - கவுந்தியடிகளும் அதற்கு உடன் பட்டமையால் அக் கோட்பாட்டோடே மேவி ; வழிச் சேறற்கு ஒளி வேண்டுதலானும், பகலொளி வருத்துதலானும் அதனிற் செல்லாது நிலவொளியிற் செல்கை நன்றென்றான். ஏதமின்மை மேலே கூறப்பட்டது. 15-16. கொடுங்கோல் வேந்தன் குடிகள் போல - கொடுங் கோன்மையையுடைய மன்னன் குடிகள் அம் மன்னன் ஒழியுங் காலத்தைப் பார்த்திருத்தல் போல, படுங்கதிர் அமையம் பார்த்திருந்தோர்க்கு - ஞாயிறு படுகின்ற செவ்வியைப் பார்த்திருந்த இவர் கட்கு; பார்த்திருந்தோர் - வினைப்பெயர் ; செங்கோல் வேந்தன் வரவு பார்த்தலை உவமைக்கண்ணும், தண் கதிர் வரவு பார்த்தலைப் பொருளின்கண்ணும் விரித்துரைக்க. 17-18. பன்மீன் தானையொடு பாற்கதிர் பரப்பி - பலவகைப் பட்ட மீனாகிய சேனையொடு வெள்ளிய கதிர்களை விரித்து, தென்னவன் குலமுதற் செல்வன் தோன்றி - பாண்டியன் குலத்திற்கு முதல்வனாகிய திங்களஞ் செல்வன் தோன்ற; தோன்றி - தோன்ற எனத் திரிக்க. மீன் தானை என்பதற்கு மீனக் கொடியையுடைய தானை யென்னும் பொருளும் தோன்றும். 19-29 தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும் - மீனொழுங்கு போன்ற முத்து வடமும் சந்தனக் குழம்பும், சீர் இள வன முலை சேராது ஒழியவும் - சீர்த்த இளமை பொருந்திய அழகிய முலைகளைச் சேரப் பெறாது நீங்கவும், தாது சேர் கழுநீர்த் தண் பூம் பிணையல் - பூம் பொடி பொருந்திய குளிர்ந்த குவளை மலர் மாலை, போது சேர் பூங்குழல் பொருந்தாது ஒழியவும் - முல்லை மலர் சேர்ந்த பொலிவு பெற்ற கூந்தற்கண் சேராது நீங்கவும், பைந்தளிர் ஆரமொடு பல் பூங் குறு முறி - சந்தனத் தளிருடனே வேறுபல அழகிய சிறிய தளிர்கள், செந்தளிர் மேனி சேராது ஒழியவும் - சிவந்த மாந்தளிர் போலும் மேனிக்கண் சேராது நீங்கவும், மலயத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து புலவர் நாவில் பொருந்திய தென்றலொடு - பொதியத்தில் தோன்றி மதுரை நகர்க்கண் வளர்ந்து கல்வி யறிவாளர் நாவின்கண் பொருந்திய தென்றற் காற்றுடன், பால் நிலா வெண்கதிர் பாவைமேல் சொரிய - மிக வெள்ளிய நிலவின் கதிர்கள் நின்மீது சொரிய, வேனில் திங்களும் வேண்டுதி என்றே - பாவையே இவ்வேனிற் காலத்துத் திங்களினையும் வேண்டுகின்றனைபோலும் என்று, பார்மகள் அயா உயிர்த்து அடங்கிய பின்னர் - நிலமகள் பெரு மூச்செறிந்து அடங்கிய பிறகு; போது - முல்லைப்பூ ; கற்பிற்கு அணிவது. ஆரத்தின் பைந்தளிர் என்க. 1"வெள்ளிற் குறுமுறி" 2"பொறிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி" என்பவாகலின் ' பல்பூங் குறுமுறி ' என்றார். மேனி - மார்பகம். தென்றலொடு ; வேறு வினையொடு, வேனில் - முதுவேனில். நின் கணவன் நின்னைப் பிரிந்த இளவேனிற் காலத்து ஒழியவும் ஒழியவும் ஒழியவும் விரும்பி இருந்த நீ இம் முது வேனிலில் சொரிதலையும் விரும்பி யிருப்பாய் போலும் என விரித்துரைத்தலுமாம். வேண்டுதியே என்று எனப் பிரித்துக் கூட்டி ஏகாரத்தை எதிர்மறையாக்குக. கண்ணகிக்குக் கலவியின்மையின் இங்ஙனம் கூறினார். அடங்குதல் - துயிலுதல்; உயிர்கள் துயிலுதலைப் பார்மகள் துயிலுதலாகக் கூறினார். இனி, இவை இவ்வாறொழியவும் வேனிற்றிங்களும் வெண்கதிரைச் சொரிதற்கு விரும்புவதாயிற்றோ என்று அயாவுயிர்த்து என்னலுமாம். 30-32. ஆர் இடை உழந்த மாதரை நோக்கி - கோவலன், வழி நடத்தலால் துன்பமுற்ற கண்ணகியை நோக்கி, கொடுவரி மறுகும் - இந் நெறிக்கண் புலிகள் சுழன்று திரியும், குடிஞை கூப்பிடும் - பேராந்தை குழறும், இடிதரும் உளியமும் - கரடியும் முழங்கும், இனையாது ஏகு என - இவற்றிற்கு நடுங்காது செல்வாயாகவென்று கூறி; கொடுவரி - புலி ; வளைந்த வரிகளையுடையது. குடிஞை - கோட்டான். மறுகும் - வாய்விடும் என்பாருமுளர். இடித்தல் - பற்பறை கொட்டலுமாம். 33-35. தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி - வளைந்த வளையலை அணிந்த கண்ணகியின் சிவந்த கையினைத் தன் தோளின்மீது சார்த்தி, மற உரை நீத்த மாசு அறு கேள்வி-பாவ மொழிகளின் நீங்கிய குற்றமற்ற கேள்வியினையுடைய கவுந்தியடிகளின், அறவுரை கேட்டு ஆங்கு ஆர்இடை கழிந்து-அறவுரைகளைக் கேட்டு அதனாலே கடத்தற் கரிய வழியைக் கடந்து; தொடி - வளைவு. தோளிற் காட்டி - தோளிலே தோன்றச் செய்து. கேள்வி - கேள்வியை உடைய கவுந்தியடிகள்; ஆகு பெயர். ஆங்கு - அவ்வாறு ; அசையுமாம். 36-37. வேனல் வீற்றிருந்த வேய்கரி கானத்து - வெம்மை நிலைபெற்ற மூங்கில் வெந்து கரிந்து கிடக்கும் காட்டினிடத்து, கான வாரணம் கதிர் வரவு இயம்ப - காட்டுக் கோழிகள் ஞாயிற்றின் வருகையை அறிவிக்க; வீற்றிருந்த கானம் என்க. 38-39. வரி நவில் கொள்கை மறைநூல் வழுக்கத்து - வரிப் பாட்டைப் பயிலும் கொள்கையோடு பொருந்தி வேதநூற் கொள்கையினின்றும் வழுவுதலையுடைய, புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து - முப்புரிநூல் அணிந்த மார்பினையுடை யோர் வதியும் பதியைச் சேர்ந்து ; வரி - ஈண்டுக் காமங் கண்ணிய இசைப் பாட்டு. மறைநூல் - வேத வொழுக்கம். புரிநூல் மார்பர் என்றது அவர் பிறப்பினாற் பார்ப்பன ரென்பதை அறிவியாநிற்பது அஃதொன்றுமே யென்ற படி. (அடி. புக்கென்னாது சேர்ந்தென்றதனால், அந்தப் பார்ப்பார் இழுக்கிய வொழுக்க முடைமை தமது சாவக நோன்புக் கேலாமையின், ஊர்க்கயலதோர் நகரிற் கோயிற்பக்கத்திற் சேர்ந்தா ரென்க.) 40-43. மாதவத்தாட்டியொடு காதலி தன்னை ஓர் தீது தீர்சிறப்பின் சிறை அகத்து இருத்தி-கவுந்தியடிகளுடனே கண்ணகியையும் குற்றம் நீங்கிய சிறப்பினையுடைய ஓர் அடைப்புள்ள இடத்தே இருக்கச் செய்து, இடு முள்வேலி நீங்கி - முள்ளிட்டுக் கட்டப் பெற்ற வேலியைக் கடந்து, ஆங்கு ஓர் நெடுநெறிமருங்கின் நீர் தலைப்படுவோன் - அவ்விடத்து நீண்ட வழிக்கண் உள்ளதோர் நீர்நிலைக்கண் சார்ந்தவன்; சிறையகம் - சுற்றும் வேலியிட்ட காவலான இடம். நெடு நெறி- பெருவழி. நீர்தலைப்படுதல் - சந்தி பண்ணுதல் என்பர் அரும்பத உரையாசிரியர் 44-47. காதலி தன்னொடு கானகம் போந்ததற்கு-தன்காதலி யோடு காட்டின்கண் போந்த அதனுக்கு, ஊது உலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி உள் புலம்பு உறுதலின் உருவம் திரிய - கொல்லன் உலையில் ஊதும் துருத்தி போலப் பெருமூச்சு எறிந்து உள்ளம் கலங்கித் தனிமையுற்று நிறம் வேறுபடலான், கட்புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான் - கௌசிகன் தன் கண்பார்வையின் மயக்கத்தால் தெளியானாய்; போந்ததற்கு - போந்தமை நிமித்தமாக. உள் கலங்கியென மாறுக. உருவம் திரிந்தமைக்குக் காதலியொடு கானகம் போந்தமையும் உள்ளங் கலங்கியமையும் காரணங்களாம். உலைக் குருகு - வெளிப்படை. உயிர்த்தனன் - முற்றெச்சம். கௌசிகன் - பெயர்; குடிப்பெயருமாம். 48-53. தெளிதற்பொருட்டுக் கூறுகின்றான் : - கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய - கோவலன் தன்னை விட்டுப் பிரிதலானே மிக்க துன்பத்தினை அடைந்த, மாமலர் நெடுங்கண் மாதவி போன்று - கரிய நெய்தல் மலர் போலும் நெடிய கண்களை யுடைய மாதவியைப் போல, இவ்வருந்திறல் வேனிற்கு அலர் களைந்து - இப் பொறுத்தற்கரிய வெம்மையினையுடைய வேனிற் காலத்து வெயிலால் அலரைப் பொறாது, உடனே-அப்பொழுதே, வருந்தினை போலும் மாதவி- மாதவியே நீ துன்பமுற்றனையோ, என்று ஓர் பாசிலைக்குருகின் பந்தரில் பொருந்தி - என ஓர் பசிய இலைகளையுடைய குருக்கத்தி படர்ந்த நிழலினையுடைய இடத்தில் சேர்ந்து, கோசிக மாணி கூறக் கேட்டே - பிரமச்சாரியாகிய கௌசிகனென்ற மறையவன் சொல்லக் கோவலன் கேட்டு ; அலர் களைதலை முன்னர் மாதவிக்குங் கூட்டுக. அலர்களைதல் - பழிச்சொல் பொறாமை, மலர்களை நீக்குதல். பந்தர் - நிழல். வேனிற்கு - வேனிலான்; உருபுமயக்கம். பந்தரில் பொருந்தி வருந்தினை போலும் என்று கூறக் கேட்டு என்க. 54-55. யாது நீ கூறிய உரை ஈது இங்கு என - நீ இவ்விடத்துக் கூறிய இவ் வுரையின் பொருள் யாது என்று கேட்ப, தீது இலன் கண்டேன் எனச் சென்று எய்தி - கோவலன் தீங்கின்றியுளன் அவனை யறிந்தேன் எனக் கருதி அவனைச் சென்று அடைந்து ஈது உரை என்க. தீது இலன் - ஐயமுடையேன் அல்லேன் என்பாருமுளர். 56. கோசிக மாணி கொள்கையின் உரைப்போன் - கௌசிகன் தான் வந்த கோட்பாட்டினைக் கூறுகின்றவன் ; கொள்கையின் : சாரியை நிற்க உருபு தொக்கது. 57-58. இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும் - பெருஞ் செல்வத்திற் குரியோனாகிய மாசாத்துவானும் அவன்றன் இல் லக்கிழத்தியும், அருமணி இழந்த நாகம் போன்றதும் - பெறற் கரிய மணியை இழந்த நாகம்போல் ஒடுங்கியதும்; பெருஞ் செல்வமுடையனாகலின் இருநிதிக் கிழவன் என்றார். மணி இழந்த நாகம் வருந்துமென்பதனை, 1"அருமணி இழந்தோர் நாக மலமரு கின்ற தொத்தாள்" என்பதனானறிக. 59-60. இன் உயிர் இழந்த யாக்கை என்ன - இனிய உயிரினை இழந்த உடம்புபோல, துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும் - நெருங்கிய சுற்றத்தார் துன்பக்கடலில் ஆழ்ந்ததும்; உயிரிழந்த யாக்கை செயலறுதலோடு ஒருகாலைக் கொருகால் அழகழியுமாறுபோல இச் சுற்றமும் செயலறுதலோடு துன்பமீக் கூர்தலின் தம் உடல் இயல்பு அழியப்பெற்றனர் என்க. 2"இன்னுயிரிழந்த யாக்கையி னிருந்தனள்" என்பதுங் காண்க. 61-62. ஏவலாளர் யாங்கணும் சென்று - பணியாளர் எத் திசைக்கண்ணும் சென்று, கோவலன் தேடிக்கொணர்கெனப் பெயர்ந்ததும் - கோவலனைத் தேடிக் கொண்டு வருவீராக என்று மாசாத்துவான் கூற அவர்கள் சென்றதும் ; ஏவலாளர் - விளி. 3"மெல்லெழுத்து மிகுவழி" என்ற சூத்திரத்து ‘அன்ன பிறவும்' என்பதனால், கோவலற் றேடி என உயர் திணைப்பெயர் இரண்டாம் வேற்றுமைக்கண் திரிந்து முடிந்தது. "கொணர்கெனப் போந்ததும்" என்பதும் பாடம். 63-66. பெருமகன் ஏவல் - தலைவன் ஏவிய பணிவிடையைச் செய்தலே உயர்ந்த பொருளாகும், அல்லது யாங்கணும் அரசே தஞ்சம் என்று - யாண்டும் அங்ஙனமன்றாகிய அரசாட்சியும் எண்மைப் பொருட்டாம் என்று கருதி, அருங் கான் அடைந்த அருந்திறல் பிரிந்த அயோத்தி போல - கடத்தற்கரிய காட்டினை அடைந்த இராமன் பிரியலுற்ற அயோத்தியைப் போல, பெரும் பெயர் மூதூர் பெரும்பேதுற்றதும் - பெரிய புகழினையுடைய பழமையாகிய காவிரிப்பூம்பட்டினத்துள்ளார் மிகவும் அறிவு மயங்கியதும்; பெருமகன் - தயரதன். தஞ்சம் - எண்மை. அருந்திறல் - அரிய திறலுடைய இராமன் ; ஆகுபெயர். பேதுறவு - அறிவின் றிரிவு. 67-70. வசந்தமாலைவாய் மாதவி கேட்டு - தன் திருமுகத்தை மறுத்துக் கூறியதனை மாதவி வசந்தமாலையினிடத்துக் கேள்வி யுற்று, பசந்த மேனியள் படர்நோய் உற்று - பசப்புற்ற மேனியை உடையளாய் நினைவென்னும் பிணியுற்று, நெடுநிலை மாடத்து இடைநிலத்து - உயர்ந்த நிலைகளையுடைய மாளிகையின் நடுமாடத்தில், ஆங்கு ஒர் படை அமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும் - ஓர் பள்ளியறையில் உறங்கற்கமைந்த சேக்கைக்கண் வீழ்ந்த செய்தியும்; வசந்த மாலைவாய் மாதவி கேட்டு' என்பதற்குக் கோவலன் கண்ணகியுடன் சென்றதனை மாதவி கேட்டு என உரைப்பர் அரும்பத வுரையாசிரியர். மேனியள், முற்றெச்சம். படை - உறக்கம்; படுத்தலுமாம். ஆங்கு, அசை. சேக்கைப் பள்ளி - சேக்கையிடம் எனவும் ஆம். 71-72. வீழ்துயர் உற்றோள் விழுமம் கேட்டு - அங்ஙனம் வீழ்ந்த துன்பமுற்றோளாகிய மாதவியின் இடும்பையைக் கேட்டு, தாழ்துயர் எய்தித் தான்சென்று இருந்ததும் - ஆழ்ந்த துயர முற்றுத் தான் அங்குச் சென்றிருந்த செய்தியும், வீழ்துயர் - விருப்பத்தான் வருந்துயர் என்றுமாம். துயர் உற்றோள், வினைப்பெயர். தாழ்தல் - ஆழ்தல். தாழ் துயர் - மிக்க துயரம். தான் - கோசிகன். 73-76. இருந்துயர் உற்றோள் - மிக்க துன்பமுற்றவளாகிய மாதவி, இணை அடி தொழுதேன் வருந்த துயர் நீக்கு என - நினது இரண்டு அடிகளையும் வணங்கினேன் எனக்கு வந்த துன்பத்தினைப் போக்குவாய் என்று சொல்லி, மலர்க்கையின் எழுதி - மலர்போன்ற தன் கைகளால் எழுதி, கண்மணி அனையாற்குக் காட்டுக என்றே - என் கண்ணின் கருமணி போல்வானுக்குக் காட்டுக என்று சொல்லி, மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும் - இலாஞ்சனை யையுடைய திருமுகத்தை அவள் தந்ததும் ; ‘இணையடி தொழுதேன் வருந்துயர் நீக்கென' என்றது, கொண்டு கூறல். திருமுகம் எழுதிச் சுருட்டி அதன்மீது மண் இலாஞ்சனை இடுதல் மரபாகலான் `மண்ணுடை முடங்கல்' என்றார். உற்றோள் மாதவி எழுதி ஈத்ததும் என்க. 77-78. ஈத்த ஓலை கொண்டு இடைநெறித் திரிந்து தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும் - அங்ஙனம் அவள் தந்த திருமுகத்தைக் கொண்டு பல வழியிடங்களில் அலைந்து தான் சென்ற நாடுகளும்; தீத்திறம் புரிந்தோன் - முத் தீத்தொழிலை விரும்பினவன் ; தன் மையிற் படர்க்கை வந்த வழுவமைதி.வழி 79-82. வழி மருங்கு இருந்து மாசு அற உரைத்து - நெறியின் பக்கத்தே தங்கிக் குற்றமறச் சொல்லி, ஆங்கு அழிவு உடை உள்ளத்து ஆர் அஞராட்டி - அவ்விடத்து அழிந்த உள்ளத்தையும் மிக்க காம நோயையும் உடையளாகிய, போது அவிழ் புரிகுழல் பூங்கொடி நங்கை மாதவி ஓலை மலர்க்கையின் நீட்ட - மலர் விரிந்த புரிந்த கூந்தலையுடைய பூங்கொடி போன்ற நங்கையாகிய மாதவி தந்த ஓலையைக் கோவலன் கையிலே கொடுக்க; மாசு அற உரைத்து என்றது நிகழ்ந்த நிகழ்ச்சியினை உள்ளவாறே உரைத்து என்றவாறு. ஆர் அஞராட்டியாகிய மாதவி என்க. 83-86. உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம் - தான் அவளொடு கூடி உறைந்த காலத்தில் பூசிய புழுகு நெய்யின் மணத்தினை, குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக் காட்டியது ஆகலின் - செறிந்த நெறிப்பையுடைய கூந்தலாலிட்ட மண் இலச்சினை அறிவித்துக் காட்டியது ஆதலால், கைவிடலீயான் - அம் முடங்கலைக் கையினின்றும் விடுவிக்க எண்ணாதவனாய், ஏட்டு அகம் விரித்து ஆங்கு எய்தியது உணர் வோன் - பின்னர் ஏட்டினை விரித்து அவ்வோலைக்கண் அடங்கிய பொருளை அறிகின்றவன்; கூந்தல் மண் பொறி - மண்ணின்மீது கூந்தலா லொற்றிய பொறி. வாசனையின் செவ்வி இன்மையைப் பொறி காட்டிற்று எனலுமாம். கைவிடலீயான் - மண் பொறியைக் கடிதின் விடுவியானாய்ப் பின்னர் விடுவித்து எனலுமாம்; வினைத்திரிசொல். 87. அடிகள் முன்னர் யான் அடிவீழ்ந்தேன் - அடிகாள் யான் நும் திருவடிகளைத் திசை நோக்கி வணங்கினேன்; அடிகள் - விளி. அடி வீழ்தல் - வணங்கல். 88. வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும் - தெளிவில்லாத எனது புன்மொழிகளை உள்ளத்தில் அடைத்தல் வேண்டும். மனக்கொளல் வேண்டுமென்ற கருத்து. பெண்டிர் பிழைபட மொழிதல் இயல்பு என்றுணர்ந்து அதனைப் பொருட்படுத்தாது கொள்ளல் வேண்டும் என்பதாம். இவை திருமுகத்தில் முதற்கண் எழுதப்படும் பணிமொழி. 89-92. குரவர் பணி அன்றியும் - இருமுது குரவர்க்கும் பணி செய்தல் ஒழிந்ததன்றியும், குலப்பிறப்பாட்டியோடு இர விடைக் கழிதற்கு - உயர்குடிப் பிறந்த கண்ணகியோடு இர வின்கண் நீர் செல்வதற்கு, என் பிழைப்பு அறியாது கையறும் நெஞ்சம் - யான் செய்த குற்றம் யாதென்று உணராது என் உள்ளம் செயலறுகின்றது, கடியல் வேண்டும் - அதனைப் போக்கல் வேண்டும், பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி- குற்றம் நீங்கிய அறிவினையுடைய மேலோய் போற்றுக; என் பிழைப்பு அறியாது என்றது யான் பிழையொன்றும் செய்திலேன், செய்தேனாயினும் அதன் பொருட்டு நீர் நும் இருமுது குரவரையும் பேணுதலை ஒழிந்து கற்புடை மனைவியோடு இரவின் கண் வேற்று நாட்டிற்குச் சேறல் தகுதியன்று என்று கூறிய வாறாயிற்று. போற்றி என்றது குரவர்பணி பிழைத்தலானும், கற் புடையாளொடு இரவிடை வேற்று நாட்டிற்குச் சேறலானும், யான் இறந்துபடுதலானும் நின்புகழ்க்குக் குறையுண்டாகாமற் காக்க என்றபடி. 93-95 என்று அவள் எழுதிய இசைமொழி உணர்ந்து - இவ்வாறு அவள் எழுதிய வாசகத்தின் பொருளை அறிந்து, தன் தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி என் தீது என்றே - தன்னாற் செய்யப்பட்ட குற்றமுடையவ ளல்லள் அவள், என் குற்றமே யாம் என்று தெளிந்து சோர்வு நீங்கி ; என் தீது - எனது தீவினை. தளர்ச்சி நீங்கினான் பொய் தீர் காட்சியோ னாகலான் ஊழ்வினையின்படி யாவும் நடக்குமென் றுணர்ந்து. 95-97. எய்தியது உணர்ந்து ஆங்கு - அவ் வோலையிற் பொருந்திய வாசகத்தை அறிந்து, எற் பயந்தோற்கு இம் மண் ணுடை முடங்கல் பொற்பு உடைத்தாகப் பொருள் உரை பொருந்தியது - என்னை ஈன்ற தந்தைக்கும் இந்த இலச் சினையையுடைய ஓலை தானே பொலிவுடைத்தாம்படி பொருளும் உரையும் பொருந்தின ; என்னை பொருந்தியவாறெனின்? குரவீர் நும் திருவடியை வணங்கினேன், தெளிவில்லாத என் புன்சொற்களை ஏற்றருள வேண்டும் ; நுமக்குச் செய்யும் பணிவிடையை ஒழித்ததன்றி, இக் கற்புடையாளொடு நும்மை விட்டு நீங்கி இரவின்கண் கழிதல் காரணமாக உண்டாய என் பிழையினை உணராது, அப் பிரிவான் ஏற்படும் நும் உள்ளத் தளர்ச்சியினைப் போக்குதல் வேண்டும்; குற்றம் தீர்ந்த அறிவினையுடைய பெரியோய் போற்றி ;' எனப் பொருந்தியவா றுணர்க. பெரியோர்க்குக் காப்புக் குறித்துப் போற்றி யென்றல் மரபாகலின் புரையோய் போற்றி' என்றான். எய்தியதுரைத்து என்று பாடங்கொண்டு தான் போந்த காரணம் சொல்லி என்றுரைப்பர் அரும்பத வுரையாசிரியர். 98-101. மாசு இல் குரவர் மலர்அடி தொழுதேன் கோசிக மாணி காட்டு எனக் கொடுத்து - கோசிகனே குற்றமில்லாத என் இருமுது குரவரது மலர் போன்ற திருவடிகளை வணங்கினேன் எனச் சொல்லி இம் முடங்கலை அவரிடம் காட்டுவாயாக வென அவனிடம் கொடுத்து, நடுக்கம் களைந்து - என் பிரிவால் அவர்க்குண்டான நடுக்கத்தினைப் போக்கி, அவர் நல் அகம் பொருந்திய-அவரது நல்ல உள்ளத்திற் பொருந்திய, இடுக்கண் களைதற்கு ஈண்டு எனப் போக்கி - துன்பத்தினை ஒழிப்பதற்கு விரைந்து செல்வாயாக என்று அவனைப்போகவிட்டு; ஈண்டுதல் - விரைதல் எனச்சொல்லி' என ஒரு சொல் வருவிக்க. ‘மாசில் குரவர்' எனவும் ‘அவர் நல்லகம்' எனவும் கூறியது என் தீவினைப் பொருட்டால் அவர் துன்பம் நுகர நேர்ந்ததன்றி அவர் தீவினையாளர் அல்லர் என்பது குறித்தற்கென்க. ‘நடுக்கம் களைந்து' என்பதற்கு நீ நடுங்கும் நடுக்கத்தை போக்கி என உரைப்பர் அரும்பத வுரையாசிரியர். 102-103. மாசு இல் கற்பின் மனையொடு இருந்த - குற்றமிலாக் கற்பினையுடைய தன் மனைவியாகிய கண்ணகியோடு இருந்த, ஆசு இல் கொள்கை அறவிபால் அணைந்து - தவறில்லாக் கோட் பாட்டினையுடைய கவுந்தி யடிகளிடம் சென்று சேர்ந்து ; 103-105. ஆங்கு - அவ்விடத்து, ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம் பாடும் பாணரில் - வெற்றி பொருந்திய கொள்கையை யுடைய துர்க்கையது போர்க்கோலத்தைப் பாடும் பாணருடன், பாங்குறச் சேர்ந்து - உரிமையுறக் கலந்து ; 1"பாண ரொக்கல்" என்பவாகலின், பாணரிற் பாங்குறச் சேர்ந்தென்றார். ஆடு - வெற்றி. 106. செந்நிறம் புரிந்த செங்கோட்டு யாழில் - செவ்விதின் இயற்றப்பட்ட செங்கோட்டி யாழில் ; செங்கோட்டி யாழ் - நால்வகை யாழிலொன்று ; ஏழு நரம்பினை யுடையது. இது பாணரது யாழ் என்க. 107. தந்திரி கரத்தொடு திவவு உறுத்து யாத்து - தந்திரிகரம் திவவு என்னும் இரண்டினையும் உறுதிபெறக் கட்டி ; தந்திரிகரமாவது நரம்பு துவக்குதற்குத் தகைப்பொழிய இருசாண் நால்விரல் நீளமாகக் குறுக்கிடத்துச் சேர்த்தும் ஐம்பத்தோருறுப்பு என்பர். இக் காலத்து இது மெட்டு என வழங்கும். திவவு என்பது நரம்புகளை வலிபெறக் கட்டும் வார்க்கட்டு. 108. ஒற்று உறுப்பு உடைமையின் பற்றுவழிச் சேர்த்தி-செங்கோட்டி யாழ் ஒற்று, பற்று என்னும் உறுப்புக்களையுடைத் தாகலான் ஒற்றினைப் பற்றிடத்திற் சேர்த்தி ; செங்கோட்டி யாழின் உறுப்புக்கள் ஆறு ; இதனை, "செங்கோட்டி யாழே செவ்விதிற் றெரியின், அறுவகை யுறுப்பிற் றாகுமென்ப" "அவைதாம், கோடே திவவே யொற்றே....... தந்திரிகரமே நரம்போ டாறே" என்பவற்றானறிக. ஒற்றுறுப்பு - நரம்பினும் பத்தரினும் தாக்குவதோர் கருவி யென்பர். செங்கோட்டி யாழின் பண் மொழி நரம்பு நான்கொழிய ஏனை மூன்றும் தாளமும் சுருதியும் கூட்டுவனவாகலின், அவையே ஒற்றும், பற்றும் எனலாயின; ஒற்றொன்றே கொள்ளலுமாம். 109. உழை முதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி - உழை குரலாகவும் கைக்கிளை தாரமாகவும் நரம்புகளை நிறுத்தி ; எழுவகைப் பாலையுள் அரும்பாலை என்னும் இசையைப் பிறப்பித் தென்றவாறு. உழை குரலாயது அரும்பாலை யென்பதனை ஆய்ச்சியர், குரவையுள் "குடமுத லிடமுறை...வேண்டிய பெயரே" என்பதன் உரையாலறிக. இது குடமுதற் பாலைத் திரிவு. 110-112. வரன்முறை வந்த மூவகைத் தானத்து - நூல்களின் வரலாற்று முறைமையால் வந்த மூவகைத் தானத்தாலும், பாய்கலைப் பாவை பாடற் பாணி - பாய்ந்து செல்லும் கலை யூர்தியை யுடைய கொற்றவையின் பாடலாகிய பண்ணை, ஆசான் திறத்தின் அமைவரக்கேட்டு - ஆசான் என்னும் பண்ணியலின் நால்வகைச் சாதியாகிய திறங்களுடன் பொருந்துதல்வரச் செவிப் புலத்தானறிந்து; மூவகைத்தானம் - வலிவு மெலிவு சமன் என்னும் மூவகை இயக்கிற்குரிய இடம்; எழுத்து அசை சீர் என்பாருமுளர். பண், பண்ணியற் றிறம், திறம், திறத்திறம் எனப் பண்கள் நான்கு கூறுபடும்; இவற்றுள் பண் என்பது ஏழு சுரமும் அமையப் பெறுவது; ஏனையன முறையே ஒவ்வொரு சுரம் குறைந்து வருவன; இவற்றைக் குறிக்கும் வடமொழிப் பெயர்கள் சம்பூரணம், சாடவம், ஒளடவம், சதுர்த்தம் என்பன. பண் முதலிய நான்கும் பண், திறம் என இரண்டாகவும் அடக்கிக் கூறப்படும். பாலையாழ் என்னும் பெரும் பண்ணின் திறம் அராகம், நேர்திறம், உறுப்பு, குறுங்கலி, ஆசான் என்னும் ஐந்துமாம். இவற்றுள் ஒவ்வொன்றும் அகநிலை, புறநிலை, அருகியல். பெருகியல் என்னும் நால்வகைச் சாதிபற்றி நந்நான்கு ஆகும். ஆசான் என்னுந் திறத்தின் அகநிலை காந்தாரமும், புறநிலை சிகண்டியும், அருகியல் தேசாக்கிரியும், பெருகியல் சுருதிகாந்தாரமும் ஆம் ; இறுதிக் கண்ணது சுத்த காந்தாரம் எனவும் கூறப்படும். இவ் விராகங்களைச் செவியால் ஓர்த்தென்க. 113. பாடற் பாணி அளைஇ அவரொடு - இங்ஙனமாகிய பண்களை அவரோடு கலந்து வாசித்து; 114. கூடற் காவதம் கூறுமின் நீர் என - இவ்விடத்தினின்று மதுரை எத்துணைக் காவத தூரத்திலுள்ளது; அதனைக் கூறுமின் நீரென்று கோவலன் கேட்ப; 115-118. காழ் அகில் சாந்தம் கமழ் பூங் குங்குமம் நாவிக் குழம்பு - வயிரம் பற்றிய அகிலின் சாந்தும் மணங் கமழும் குங்குமப் பூங் குழம்பும் புழுகுக் குழம்பும், நலங்கொள் தேய்வை மான்மதச் சாந்தம் - மணமாகிய நன்மை அமைந்த சந்தனச் சாந்தும் கத்தூரிச் சாந்துமாகிய, மணம் கமழ் தெய்வத் தேம்மென் கொழுஞ் சேறு ஆடி - இத் தெய்வ மணம் வீசும் இனிய மெல்லிய வளவிய சேற்றை யளைந்து; குழம்பு என்பதனைக் குங்குமத்தோடுங் கூட்டுக. நாவி - புழுகு. தேம் - இனிமை. 118-121. ஆங்குத் தாது சேர் கழுநீர் சண்பகக் கோதையொடு - பூம் பொடி பொருந்திய கழுநீர் மலரும் சண்பக மலரும் என்னும் இவற்றானாய மாலையொடு, மாதவி மல்லிகை மனை வளர் முல்லைப் போது விரிதொடையல் பூ அணை பொருந்தி - குருக்கத்தியும் மல்லிகையும் மனைக்கண் வளர்க்கப் பெற்ற முல்லையுமென்ற இவற்றின் விரிந்த மலர்களால் தொடுத்த மாலையையும் உடைய மலர் அணைக்கண் பொருந்தி ; ஆங்கு - ஆசை ; அப்பொழுது என்றலுமாம். பூ அணை - பொலிவினையுடைய அணை யென்றுமாம். முல்லை மனையில் வளர்வதனை 1"இல்லெழு முல்லையொடு மல்லிகை மயங்கி" என்பதனாலும் அறிக. 122-126. அட்டில் புகையும் - அடுக்களைகளில் தோன்றும் தாளிப்பு முதலிய புகையும், அகல் அங்காடி முட்டாக் கூவியர் மோதகப் புகையும் - அகன்ற கடைவீதிக்கண் தம் வாணிபம் முட்டுப் பெறாத அப்ப வாணிகர் அப்பம் சுடுகின்றமையான் உண்டாகும் புகையும், மைந்தரும் மகளிரும் மாடத்து எடுத்த அந்தீம் புகையும் - ஆடவரும் மகளிரும் மேல் மாடத்து உண்டாக்கிய அழகிய இனிய அகிற் புகையும், ஆகுதிப் புகையும் - வேள்விச் சாலைகளில் ஓமம் பண்ணுதலால் எழும் புகையும் ஆகிய, பல்வேறு பூம் புகை அளைஇ - பலவாக வேறுபட்ட பொலிவினையுடைய புகையை அளாவி ; அங்காடி - கடைவீதி. கூவியர் - அப்ப வாணிகர். முட்டா மோதகம் என இயைத்து முட்டாமற் சுடுகின்ற மோதகம் எனலு மாம். மைந்தரும் மகளிரும் புகை எடுத்தல் மயிர், துகில், மாலை முதலியவற்றிற்கு மணமூட்டற்கென்க. ; 126-129. வெல்போர் விளங்கு பூண் மார்பிற் பாண்டியன் கோயிலின் - வென்றி காணும் போரினையும் கலன் விளங்கும் மார்பினையும் உடைய பாண்டியனது கோயிலின்கண் தோன்றும், அளந்து உணர்வு அறியா - அறிவான் அளவிட்டறிய வொண்ணாத, ஆர் உயிர் பிணிக்கும் - அரிய உள்ளத்தைத் தகைக்கும், கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றி - நறுமணக் கலவையின் தொகுதி வெளிப்படத் தோன்றி ; விளங்கு பூண் - இந்திரனாற் பூட்டப்பட்ட ஆரமுமாம். கோயிலிற் கலவை, அறியாக் கலவை, பிணிக்கும் கலவை என்க. தம்மை ஒருகால் நுகர்ந்த உள்ளம் பின்னர் வேறொன்றினை நுகர விரும்பாது தம்மையே விரும்பி நிற்குமாறு செய்யும் கலவைக் கூட்டம் என்பார் ஆருயிர் பிணிக்கும் கலவைக் கூட்டம் என்றார். 130-132. புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின் - புலவர்களது செவ்விய நாவால் புகழப்பட்ட சிறப்பினையுடைய, பொதியில் தென்றல் போலாது - பொதியின் மலையில் தோன்றும் தென்றல் தன்னை ஒவ்வா வண்ணம், ஈங்கு மதுரைத் தென்றல் வந்தது காணீர் - இந்த மதுரையின் தென்றலானது வந்தது இதனைக் காண்பீர்; செந்நா - பொய் கூறா நா. நிவப்பு - உயர்வு ; சிறப்பு ; சிறப்பினையுடைய மதுரைத் தென்றல் என்க. பொதியிற்கண் அமையாத மணம் பலவற்றையும் இத் தென்றல் மதுரைக்கண் அளைந்து வருதலின் இதற்கு அப் பொதியிற் றென்றல் ஒவ்வாதாயிற்று. ஆடி, பொருந்தி, அளைஇ, தோன்றித் தென்றல் வந்தது என்க. 133-134. நனி சேய்த்து அன்று அவன் திரு மலி மூதூர் - அதனால் அப் பாண்டியனது செல்வ மிக்க மதுரை மிகச் சேய்மையிலுள்ளதன்று; தனி நீர் கழியினும் தகைக்குநர் இல் என - மேலும் தனித்த நீர்மையிற் செல்லினும் வழிக்கண் தடுப்பார் ஒருவரும் இல்லை என்று சொல்ல; தனி நீர்கழியினும் என்பதற்கு நீவிர் தனியே செல்லினும் என்றலும் பொருந்தும். தகைக்குநர் - தடுத்து நிறுத்தி ஆறலைப்பார். 135-136. முன்னாள் முறைமையின் இருந் தவ முதல்வியொடு பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர் - பெரிய தவத்தினைஉடைய கவுந்தியடிகளுடனே முதனாளிற் சென்ற முறைமை போலப் பிற்றை ஞான்றும் இரவின்கண் சென்றனர், பெயர்ந் தாங்கு - செல்ல, 137-140. அருந்தெறல் கடவுள் அகன் பெருங் கோயிலும் - பிறர்க்கு அரிய அழித்தற்றொழிலை வல்ல இறைவனது அகன்ற பெரிய கோயிலினிடத்தும், பெரும் பெயர் மன்னவன் பேர் இசைக் கோயிலும் - பெரிய புகழ் வாய்ந்த பாண்டியனது மிக்க புகழ் அமைந்த கோயிலினிடத்தும், பால் கெழு சிறப்பின் பல்லியம் சிறந்த காலை முரசக் கனைகுரல் ஓதையும் - பகுதிப்பட்ட சிறப்பினையுடைய காலை முரசமாகிய சிறந்த பல்லியத்தின் செறிந்த முழக்கொலியும் ; பெயர்ந்து - பெயரவெனத் திரிக்க. தெறற் கடவுள் - ஆலவாய் இறைவன். பெயர்ந்து என்பதனைப் பல்லியம் என்பதனோடு இயைத்துப் பல்லியம் பெயர்ந்து ஒலிக்கும் ஒலி எனப்பொருள் கொண்டு, பெயர்தல் - தாளமறுத எனவுரைப்பர் அடியார்க்கு நல்லார். காலைமுரசம் - பள்ளியெழுச்சி முரசம். காலை முரசப் பல்லிய வோதையும் என்க. 141. நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும் - பார்ப்பார் நான்கு மறைகளையும் பயின்றோதும் ஓசையும் ; 142. மாதவர் ஓதி மலிந்த ஓதையும் - இருடிகள் காலையில் மந்திரம் ஓதுதலான் நிறைந்த ஓசையும் ; 143-144. மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு - வெற்றி தன்னினின்றும் மீளப் பெறாத அரசனாற் பெற்ற சிறப்புடனே, வாளோர் எடுத்த நாள் அணி முழவமும் - வாள்வீரர் தத்தம் வீரத்திற்கு நாட் காலையில் எடுத்த முரசு முதலியவற்றின் அழகிய ஓசையும்; சிறப்பொடு எடுத்த முழவம் என்றது அரசன்பால் வரிசையாகப் பெற்ற முழவம் என்றபடி. நாள் - காலை. நாள் - குடை நாட்கோள் முதலியவுமாம். 145. போரில் கொண்ட பொரு கரி முழக்கமும் - போரிலே பகைவரை வென்று கொண்டுவந்த போர் யானையின் முழக்கமும்; 146. வாரிக்கொண்ட வயக்கரி முழக்கமும் - காட்டிற் பிடித்துக் கொண்டுவந்த வலிய யானையின் முழக்கமும். 147. பணைநிலைப் புரவி ஆலும் ஓதையும் - பந்திகளில் நிற்கும் குதிரைகள் ஆலிக்கும் ஓசையும்; 148. கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும் - கிணைப் பறையையுடைய மள்ளர் மருத நிலத்து வைகறைக்கண் கொட்டும் ஒலியும் ஆகிய ; கிணை - மருதப்பறை. பொருநர் - கூத்தருமாம். பாணி - பாட்டி னொலியுமாம். 146-150. கார்க்கடல் ஒலியில் கலி கெழு கூடல் ஆர்ப்பொலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி - மகிழ்ச்சி மிக்க கூடற்கண் ஆர்க்கும் ஒலிகள் கரிய கடல் ஒலி போன்று மிக்கு ஒலித்து எதிர் கொள்ளுதலான் முன்னைத் துன்பங்களெல்லாம் நீங்கி; எதிர்கொள - எதிரே வர ; எதிர்கொண்டழைப்பது போலாக. பல்வகை ஒலிகளைக் கேட்டலானும், பதியை யடைந்தோ மென்னும் மகிழ்ச்சியானும் அஞர் நீங்கினாரென்க. 151-154. குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் - குராவும் மகிழும் கோங்கும் வேங்கையும், மரவமும் நாகமும் திலகமும் மருதமும் - வெண்கடம்பும் சுரபுன்னையும் மஞ்சாடியும் மருதமரமும், சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் - உச்சிச் செலுந்திலும் செருந்தியும் செண்பகமரமும், பாடலம் தன்னொடு பன் மலர் விரிந்து - ஆகிய இவை பாதிரியுடனே பல வகை மலர்களும் விரிந்து; குரவமலர் முதலியனவும் பன்மலரும் விரிந்து என்க. சேடல் - உச்சிச் செலுந்தில் என்னும் மரமென்பர். ஓங்கல் - மரம்; ஆகுபெயர். 155-160. குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும்- குருக்கத்தியும் செம்முல்லையும் வளவிய கொடியினையுடைய முசுட்டையும், விரிமலர் அதிரலும் வெண்கூதாளமும் - விரிந்த பூக்களையுடைய மோசி மல்லிகையும் வெள்ளை நறுந் தாளியும், குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும் - வெட்பாலையும் மூங்கிலும் கொழுவிய கொடியாகப் பொருந்திய சிவதையும், பிடவமும் மயிலையும் பிணங்கு அரில் மணந்த - குட்டிப் பிடவமும் இருவாட்சியுமாய இவை பின்னிய பிணக்கத்துடன் கலக்கப் பெற்ற, கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும்மிடைந்து சூழ்போகிய அகன்று ஏந்து அல்குல் - கோவையாகிய மேகலை எவ்விடத்தும் செறிந்து சுற்றிய அகன்று உயர்ந்த கரையாகிய அல்குலினையும்; வெதிரம் - அம் சாரியை. பகன்றை - சீந்திலுமாம்; பெருங்கையால் என்றுமுரைப்பர். மயிலை - கொடிமல்லிகை யென்பாருமுளர். கொடுமை கூறினார் அல்குல் என்பதற்குப் பொருந்த. விரிமலர், கொழுங்கொடி இவற்றை ஏற்புழிக் கூட்டுக. பன்மலர் விரிந்து மணந்த மேகலைக்கோவை யாங்கணும் சூழ் போகிய அகன்றேந்திய கொடுங்கரையாகிய அல்குல் எனக் கூட்டுக. கரையின் புறவாயெங்கும் குரவ முதலாகப் பன்மலர் விரிந்தவை மீதுடுத்த பூந்துகிலாகவும், அகவாயெங்கும் குருகு முதலாகப் பிணங்கரில் மணந்தவை மேகலையாகவும் உடைய கரையாகிய வல்குல் என்பர் அடியார்க்கு நல்லார். 161-163. வாலுகம் குவைஇய மலர்பூந் துருத்திப் பால்புடைக் கொண்டு பல்மலர் ஓங்கி எதிர் எதிர் விளங்கிய கதிர் இள வன முலை - விரிந்த பொலிவினையுடைய ஆற்றிடைக் குறையின்கண் அடிப்பக்கம் அகன்று பல மலர்களால் உயர்ச்சி பெற்று ஒன்றற்கொன்று ஒத்து விளங்கிய குவிதலையுடைய மணற்குன்றாகிய விளக்கம் பொருந்திய இளைய அழகிய முலையினையும்; துருத்திக்கண் புடைக்கொண்டு ஓங்கி விளங்கிய வாலுக முலை என்க. எதிர் - ஒப்பு; மாறுபடலுமாம். பால்புடைக் கொள்ளலும் பன்மலரோங்கலும் எதிரெதிர் விளங்கலும் முலைக்கும் பொருந்துமாறுணர்க. விலங்கிய எனப் பாடங்கொண்டு, ஒன்றையொன்று நெருங்கிய வென்றுரைப்பர் அரும்பத வுரையாசிரியர். 164. கரை நின்று உதிர்த்த கவிர் இதழ்ச் செவ்வாய் - கரைக் கண் நின்று உதிர்த்த முருக்கமலரின் இதழாகிய சிவந்த வாயினையும்; 165. அருவி முல்லை அணி நகையாட்டி - அருவி நீரொடு வந்த முல்லை மலராகிய அழகிய நகையினையு முடையாள்; 166. விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கருங்கயல் நெடுங்கண் - குறுக்கே மறிந்தும் நெடுக ஓடியும் திரிகின்ற பெரிய கயல் ஆகிய நீண்ட கண்களையும்; விலங்கு நிமிர்தலும் ஒழுகலும் கண்ணுக்கும் பொருந்துமா றுணர்க. 167. விரை மலர் நீங்கா அவிர் அறற் கூந்தல் - மணம் பொருந் திய மலர்கள் நீங்கப் பெறாது விளங்குகின்ற அறலாகிய கூந்த லினையும்; 168-170. உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்து - உலகினைப் பல பொருளையும் விளைத்து உண்பித்துக் காக்கின்ற உயர்ந்த பெரிய ஒழுக்கத்தினையுடைய, புலவர் நாவில் பொருந் திய பூங்கொடி - புலவர்களுடைய நாவின்கண் பொருந்திய திருமகளை ஒப்பாள், வையை என்ற பொய்யாக் குலக்கொடி - வையை என்று சொல்லப்படுகின்ற பருவம் பொய்யாத பாண்டியர் குலக்கொடியாயுள்ளாள்; கொடுங்கரையாகிய அல்குலையும் வாலுகமாகிய முலையினையும் இதழாகிய சிவந்த வாயினையும் கயலாகிய கண்ணினையும் அறலாகிய கூந்தலினையும் முல்லையாகிய நகையினையுமுடையாள் பூங்கொடி குலக்கொடி என்க. ஒழுக்கத்துப் பொருந்திய பூங்கொடி என்க. புரந்து ஊட்டும் என்ற எச்சங்களுள் விகுதி பிரித்துக் கூட்டுக. இரு பத்தாறு பரிபாட்டுக் களாலும் பிறவற்றானும் சிறப்பிக்கப் பெற்ற மையின் புலவர் நாவிற் பொருந்திய என்றும், செல்வமளித்தலின் பூங் கொடி என்றும், எஞ்ஞான்றும் பாண்டியர்க்குரியதாகலின் பொய் யாக் குலக்கொடி என்றும் கூறினார். 171-173. தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல்-கண்ண கிக்கு மேல்வரும் துன்பத்தினைத் தான் முன்னரே அறிந்தாள் போல, புண்ணிய நறுமலர் ஆடை போர்த்து - தூய்மையுடைய நறிய பூக்களாகிய ஆடையால் தன் மெய்ம்முழுதும் போர்த்து, கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி - தன்கண் நிறைந்த மிக்க நீரினை மறைத்து உள்ளடக்க; புண்ணிய நறுமலர் - தன்னைக்கொண்டு அருச்சிப்பார்க்குப் புண்ணியங்களைக் கொடுக்கும் நறிய பூ என்றுரைப்பாருமுளர். கண்ணிறை நெடுநீர் என்பதற்குத் தன்னிடத்து நிறைந்த நீர் எனவும் கண்களில் நிறைந்த நீர் எனவும் பொருள் கொள்க. அடக்கி - அடக்க வெனத் திரிக்க. கரந்தனள் அடக்குதல் இவர் நீர் மிகுதி கண்டு வெருவாதிருத்தற்பொருட்டென்க. 174-175. புனல் யாறு அன்று இது பூம்புனல் யாறு என - இவ் வியாறு நீர் ஆறு அன்று பூவாறு என்று புகழ்ந்து, அன நடை மாதரும் ஐயனும் தொழுது - அன்னம் போன்ற நடையினை யுடைய கண்ணகியும் கோவலனும் வணங்கி; 176-180. பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும் அரிமுக அம்பி யும் அருந்துறை இயக்கும் - அரிய துறையிலே செலுத்தும் குதிரைமுக ஓடமும் யானைமுக ஓடமும் சிங்கமுக ஓடமுமாகிய இவற்றினேறி, பெருந்துறை மருங்கின் பெயராது - பலரும் செல்லும் பெரிய துறைப்பக்கத்தே செல்லாது, ஆங்கண் மாத வத்தாட்டியொடு மரப்புணை போகி - அதற்கு அயலிலுள்ள சிறிய துறையில் கவுந்தியடிகளுடனே மரப்புணையில் சென்று, தே மலர் நறும்பொழில் தென்கரை எய்தி - தேன் பொருந்திய மலர்களையுடைய நல்ல சோலை நிறைந்த தெற்குக் கரையினை அடைந்து; அருந்துறை - ஓடக்கோல் நிலைத்தலரிய துறை. ஓடத்தில் பல ரும் ஏறுவாராகலான் தாங்கள் மூவரும் தனியே கட்டுமரப் புணையில் சேர்ந்தனர் என்க; என்னை? முன்னர், "வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு" சாப முறுதலின். 181-183. வானவர் உறையும் மதுரை வலங் கொள - தேவர்கள் உறையும் மதுரை நகரத்தினை வலங் கொண்டால், தான் நனி பெரிதும் தகவு உடைத்து என்று - மிகவும் அறமுண்டாம் என்று கருதி, ஆங்கு அருமிளை உடுத்த அகழி சூழ்போகி - அவ் விடத்தே, அழித்தற்கரிய காவற்காடு சூழ்ந்த அகழியைச் சுற்றிப் போய்; நனி பெரிது, ஒருபொருட் பன்மொழி, தான், அசை, மிளை - கட்டுவேலியுமாம். 184-188. கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும் - கரிய நெடிய குவளையும் அல்லியும் தாமரையும், தையலும் கணவனும் தனித்து உறுதுயரம் - கண்ணகியும் அவள் கணவன் கோவல னும் பிரிந்து அடையும் துன்பத்தினை, ஐயம் இன்றி அறிந்தன போல - ஐயப்பாடு சிறிதும் இன்றி உணர்ந்தன போல, பண்நீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கி - வண்டுகள் பாடும் பண்ணீர் மையால் வருந்தி ஏக்கமுற்று அழுது, கண்ணீர் கொண்டு கால் உற நடுங்க - கண்ணீரைக்கொண்டு கால் பொருந்த நடுங்க; குவளை முதலியவற்றில் வண்டுகள் ஒலித்தல் இவர்க்குறு துயரங் கண்டு அக் குவளை முதலியன அழுதல்போன்றிருந்தன என்க. கண்ணீர் - கண்ணின்நீர், கள்ளாகிய நீர் எனவும், கால் உற நடுங்க - கால்கள் மிக நடுங்க, காற்றால் மிக அசைய எனவும் இரு பொருள் படுமாறறிக. 189-190. போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடுங்கொடி - பகைவர் வருந்தப் போர் தேய்த்தெடுத்த அரிய மதிலின்கண் நெடிய கொடிகள், வாரல் என்பனபோல் மறித்துக் கை காட்ட- இம் மதுரைக்கண் வாராதொழிவா யென்பன போலத் தம் கையின் மறித்துக் காட்ட ; ஆரெயில் நெடுங்கொடி மேல்காற்றடிக்க அசைகின்றவை கோவலனை இங்கு வாராதே போ என்று கை காட்டினாற் போன் றன ; தற்குறிப்பேற்றம். 1 " ஈண்டுநீ வரினு மெங்க ளெழிலுடை யெழிலி வண்ணன் பாண்டவர் தங்கட் கல்லாற் படைத்துணை யாக மாட்டான் மீண்டுபோ கென்றென் றந்த வியன்மதிற் குடுமி தோறும் காண்டகு பதாகை யாடை கைகளாற் றடுப்ப போன்ற" என்னுஞ் செய்யுள் இக் கருத்தைப் பின்பற்றியதாதல் காண்க. 191-196. புள்அணி கழனியும் பொழிலும் பொருந்தி - பறவை கள் அழகு செய்யும் வயல்களும் சோலைகளும் பொருந்தப் பெற்று, வௌச்ளநீர்ப் பண்ணையும் விரிநீர் ஏரியும் - மிக்க நீரினையுடைய பண்ணைகளும் பரந்த நீரினையுடைய ஏரிகளும், காய்க் குலைத் தெங்கும் வாழையும் கமுகும் - குலையாகப் பொருந் திய காய்களையுடைய தெங்கும் கமுகும் வாழையும், வேய்த்திரள் பந்தரும் - திரண்ட மூங்கிலால் இடப்பட்ட பந்தலும் ஆகிய இவை, விளங்கிய இருக்கை - விளங்கிய இருப்பினையுடைய, அறம்புரி மாந்தர் அன்றிச் சேரா - அறத்தினையே விரும்பும் முனிவர்கள் அன்றிப் பிறர் சேராத, புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென்-மூதூரின் புறஞ்சேரிக்கண் விரும்பிப் புக்கார் என்க. பண்ணை - தோட்டமும், ஓடையும். காய்க்குலை என்பதனை வாழை, கமுகு என்பவற்றொடுங் கூட்டுக. இருக்கையினையுடைய புறஞ்சிறை என்க. அறம்புரி மாந்தர் சேர்ந்த இருக்கையாகலான் இவர் புரிந்து புக்கார் என்க. புறஞ்சேரி - இது கீழ்த்திசை வாயிற்கு அயலதோர் முனிவர் இருப்பிடம் என்பர் அடியார்க்கு நல்லார். தொழுது போகி எய்திச் சூழ்போகிப் புக்கனர் என்க. 'அறம் புரி மாந்த ரன்றிச் சேராப், புறஞ்சிறை மூதூர்' என்ற கருத்துப் பின் 2அடைக்கலக் காதையுள் வருதலுங் காண்க. இது நிலைமண்டிலவாசிரியப்பா புறஞ்சேரியிறுத்த காதை முற்றிற்று. 14. ஊர்காண் காதை (பொழிலும் கழனியும் புட்கள் எழுந்தொலிக்க ஞாயிறு கீழ்த் திசைத் தோன்றியது. இறைவன் கோயில் முதலியவற்றில் வலம் புரிச் சங்கும் காலை முரசும் ஒலித்தன. கோவலன் கவுந்தி யடிகளை வணங்கித் தான் உற்ற இடும்பையை உரைத்து, யான் இந் நகர் வணிகர்க்கு எனது நிலையை உணர்த்தி வருகாறும், இப் பைந்தொடி நுமது பாதக் காப்பினள்' என்று கூறினன்; கூறக், கவுந்தி யடிகள் உலகிலே மக்களெய்தும் இன்ப துன்பங்களின் காரணங்களை எடுத் துரைத்து, முன்னரும் துன்பமுற்றோர் பலர் என்பதற்கு இராமனை யும் நளனையும் எடுத்துக் காட்டி, நீ அவர்கள்போல்வாயு மல்லை; மனைவியுடன் பிரியா வாழ்க்கை பெற்றனை; ஆகலின் வருந்தாது ஏகிப் பொருந்துமிடம் அறிந்து வருக' என்றனர்; என்றலும், கோவலன் மதிலக வரைப்பிற் சென்று, கடைகழி மகளிர் காதலஞ் செல்வருடன் காலையிற் புனல் விளையாடியும், நண்பகலிற் பொழில் விளையாட்டயர்ந்தும், எற்படுபொழுதில் நிலா முற்றத்திற் சேக்கை மீதிருந்தும், முன்பு தமக்கின்பம் விளைத்த கார் முதலிய பருவங் களின் வரவை எண்ணி இன்புறும் முதுவேனிற் கடைநாளில் அரசன்பாற் சிறப்புப் பெற்ற பொற்றொடி மடந்தையருடன் புது மணம் புணர்ந்து செழுங்குடிச் செல்வரும் வையங் காவலரும் மகிழா நிற்கும் வீதியும், எண்ணெண் கலையு முணர்ந்த பரத்தையரின் இரு பெருவீதியும், அரசனும் விரும்பும் செல்வத்தையுடைய அங்காடி வீதியும், பயன் மிக்க இரத்தினக்கடை வீதியும், பொற்கடை வீதி யும், அறுவை வீதியும், கூல வீதியும், நால்வேறு தெருவும், சந்தி யும், சதுக்கமும், மன்றமும், கவலையும், மறுகும் திரிந்து காவலன் பேரூரைக் கண்டு மகிழ்ந்து புறஞ்சேரிக்கண் மீண்டனன். (இதில் இரத்தினக் கடைத்தெரு கூறுமிடத்தே 180-200 அடிகளில் நவ மணிகளின் இலக்கணம் கூறப்பெற்றுள்ளது.) புறஞ்சிறைப் பொழிலும் பிறங்குநீர்ப் பண்ணையும் இறங்குகதிர்க் கழனியும் புள்ளெழுந் தார்ப்பப் புலரி வைகறைப் பொய்கைத் தாமரை மலர்பொதி அவிழ்த்த உலகுதொழு மண்டிலம் 5 வேந்துதலை பனிப்ப ஏந்துவாட் செழியன் ஓங்குயர் கூடல் ஊர்துயி லெடுப்ப நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும் உவணச் சேவ லுயர்த்தோன் நியமமும் மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும் 10 கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய காலை முரசங் கனைகுரல் இயம்பக் 15 கோவலன் சென்று கொள்கையி னிருந்த காவுந்தி ஐயையைக் கைதொழு தேத்தி நெறியின் நீங்கியோர் நீர்மையே னாகி நறுமலர் மேனி நடுங்குதுய ரெய்த அறியாத் தேயத் தாரிடை யுழந்து 20 சிறுமை யுற்றேன் செய்தவத் தீர்யான் தொன்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு என்னிலை யுணர்த்தி யான்வருங் காறும் பாதக் காப்பினள் பைந்தொடி யாகலின் ஏத முண்டோ அடிகளீங் கென்றலும் 25 கவுந்தி கூறுங் காதலி தன்னொடு தவந்தீர் மருங்கின் தனித்துய ருழந்தோய் மறத்துறை நீங்குமின் வல்வினை யூட்டுமென் றறத்துறை மாக்கள் திறத்திற் சாற்றி நாக்கடிப் பாக வாய்ப்பறை யறையினும் 30 யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார் தீதுடை வெவ்வினை யுருத்த காலைப் பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர் ஒய்யா வினைப்பயன் உண்ணுங் காலைக் கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள் 35 பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும் உருவி லாளன் ஒறுக்குந் துன்பமும் புரிகுழல் மாதர்ப் புணர்ந்தோர்க் கல்லது ஒருதனி வாழ்க்கை உரவோர்க் கில்லை பெண்டிரும் உண்டியும் இன்பமென் றுலகிற் 40 கொண்டோ ருறூஉங் கொள்ளாத் துன்பம் கண்டன ராகிக் கடவுளர் வரைந்த காமஞ் சார்பாக் காதலின் உழந்தாங்கு ஏமஞ் சாரா இடும்பை எய்தினர் இன்றே யல்லால் இறந்தோர் பலரால் 45 தொன்று படவரூஉந் தொன்மைத் தாதலின் தாதை ஏவலின் மாதுடன் போகிக் காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன் வேத முதல்வற் பயந்தோ னென்பது நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ 50 வல்லா டாயத்து மண்ணர சிழந்து மெல்லியல் தன்னுடன் வெங்கா னடைந்தோன் காதலிற் பிரிந்தோ னல்லன் காதலி தீதொடு படூஉஞ் சிறுமைய ளல்லள் அடவிக் கானகத் தாயிழை தன்னை 55 இடையிருள் யாமத் திட்டு நீக்கியது வல்வினை யன்றோ மடந்தைதன் பிழையெனச் சொல்லலும் உண்டேற் சொல்லா யோநீ அனையையும் அல்லை ஆயிழை தன்னொடு பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றே 60 வருந்தா தேகி மன்னவன் கூடல் பொருந்துழி யறிந்து போதீங் கென்றலும் இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த இலங்குநீர்ப் பரப்பின் வலம்புண ரகழியில் பெருங்கை யானை இனநிரை பெயரும் 65 சுருங்கை வீதி மருங்கிற் போகிக் கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள் யவனர்க் கயிராது புக்காங்கு ஆயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு வாய்திறந் தன்ன மதிலக வரைப்பில் 70 குடகாற் றெறிந்து கொடிநுடங்கு மறுகின் கடைகழி மகளிர் காதலஞ் செல்வரொடு வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை விரிபூந் துருத்தி வெண்மண லடைகரை ஓங்குநீர் மாடமொடு நாவா யியக்கிப் 75 பூம்புணை தழீஇப் புனலாட் டமர்ந்து தண்ணறு முல்லையுந் தாழ்நீர்க் குவளையும் கண்ணவிழ் நெய்தலுங் கதுப்புற அடைச்சி வெண்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த தண்செங் கழுநீர் தாதுவிரி பிணையல் 80 கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு தெக்கண மலயச் செழுஞ்சே றாடிப் பொற்கொடி மூதூர்ப் பொழிலாட் டமர்ந்தாங்கு எற்படு பொழுதின் இளநில முன்றில் தாழ்தரு கோலந் தகைபா ரட்ட 85 வீழ்பூஞ் சேக்கை மேலினி திருந்தாங்கு அரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇக் குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச் சிறுமலைச் சிலம்பிற் செங்கூ தாளமொடு நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து 90 குங்கும வருணங் கொங்கையி னிழைத்துச் செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல் சிந்துரச் சுண்ணஞ் சேர்ந்த மேனியில் அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு மலைச்சிற கரிந்த வச்சிர வேந்தற்குக் 95 கலிகெழு கூடற் செவ்வணி காட்டக் காரர சாளன் வாடையொடு வரூஉம் கால மன்றியும் நூலோர் சிறப்பின் முகில்தோய் மாடத் தகில்தரு விறகின் மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து 100 நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும் வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர விரிகதிர் மண்டிலந் தெற்கேர்பு வெண்மழை 105 அரிதில் தோன்றும் அச்சிரக் காலையும் ஆங்க தன்றியும் ஓங்கிரும் பரப்பின் வங்க ஈட்டத்துத் தொண்டியோ ரிட்ட அகிலுந் துகிலும் ஆரமும் வாசமும் தொகுகருப் பூரமுஞ் சுமந்துடன் வந்த 110 கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும் பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன் கோதை மாதவி கொழுங்கொடி யெடுப்பக் காவும் கானமும் கடிமல ரேந்தத் 115 தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து மன்னவன் கூடல் மகிழ்துணை தழூஉம் இன்னிள வேனில் யாண்டுளன் கொல்லென்று உருவக் கொடியோ ருடைப்பெருங் கொழுநரொடு பருவ மெண்ணும் படர்தீர் காலைக் 120 கன்றம ராயமொடு களிற்றினம் நடுங்க என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டுக் காடுதீப் பிறப்பக் கனையெரி பொத்திக் கோடையொடு புகுந்து கூட லாண்ட வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர 125 ஓசனிக் கின்ற உறுவெயிற் கடைநாள் வையமுஞ் சிவிகையும் மணிக்கால் அமளியும் உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும் சாமரைக் கவரியுந் தமனிய அடைப்பையும் கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப் 130 பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப் பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும் 135 நறுமலர் மாலையின் வறிதிடங் கடிந்தாங்கு இலவிதழ்ச் செவ்வாய் இளமுத் தரும்பப் புலவிக் காலத்துப் போற்றா துரைத்த காவியங் கண்ணார் கட்டுரை யெட்டுக்கும் நாவொடு நவிலா நகைபடு கிளவியும் 140 அஞ்செங் கழுநீர் அரும்பவிழ்த் தன்ன செங்கயல் நெடுங்கட் செழுங்கடைப் பூசலும் கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை சுருளத் திலகச் சிறுநுதல் அரும்பிய வியரும் செவ்வி பார்க்குஞ் செழுங்குடிச் செல்வரொடு 145 வையங் காவலர் மகிழ்தரும் வீதியும் சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின் முடியர சொடுங்குங் கடிமனை வாழ்க்கை வேத்தியல் பொதுவியல் எனவிரு திறத்து மாத்திரை யறிந்து மயங்கா மரபின் 150 ஆடலும் வரியும் பாணியுந் தூக்கும் கூடிய குயிவக் கருவியும் உணர்ந்து நால்வகை மரபின் அவினயக் களத்திலும் ஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும் மலைப்பருஞ் சிறப்பின் தலைக்கோ லரிவையும் 155 வாரம் பாடுந் தோரிய மடந்தையும் தலைப்பாட்டுக் கூத்தியும் இடைப்பாட்டுக் கூத்தியும் நால்வேறு வகையின் நயத்தகு மரபின் எட்டுக் கடைநிறுத்த ஆயிரத் தெண்கழஞ்சு முட்டா வைகல் முறைமையின் வழாஅத் 160 தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டாங்கு அரும்பெறல் அறிவும் பெரும்பிறி தாகத் தவத்தோ ராயினுந் தகைமலர் வண்டின் நகைப்பதம் பார்க்கும் இளையோ ராயினும் காம விருந்தின் மடவோ ராயினும் 165 ஏம வைகல் இன்றுயில் வதியும் பண்ணுங் கிளையும் பழித்த தீஞ்சொல் எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும் வையமும் பாண்டிலும் மணித்தேர்க் கொடுஞ்சியும் மெய்புகு கவசமும் வீழ்மணித் தோட்டியும் 170 அதள்புனை அரணமும் அரியா யோகமும் வளைதரு குழியமும் வால்வெண் கவரியும் ஏனப் படமும் கிடுகின் படமும் கானப் படமும் காழூன்று கடிகையும் செம்பிற் செய்நவும் கஞ்சத் தொழிலவும் 175 வம்பின் முடிநவும் மாலையிற் புனைநவும் வேதினத் துப்பவும் கோடுகடை தொழிலவும் புகையவும் சாந்தவும் பூவிற் புனைநவும் வகைதெரி வரியா வளந்தலை மயங்கிய அரசுவிழை திருவின் அங்காடி வீதியும் 180 காக பாதமும் களங்கமும் விந்துவும் ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா நூலவர் நொடிந்த நுழைநுண் கோடி நால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும் ஏகையும் மாலையும் இருளொடு துறந்த 185 பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும் பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும் விதிமுறை பிழையா விளங்கிய சாதியும் பூச உருவின் பொலந்தெளித் தனையவும் தீதறு கதிரொளித் தெண்மட் டுருவவும் 190 இருள்தெளித் தனையவும் இருவே றுருவவும் ஒருமைத் தோற்றத் தைவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும் தோற்றிய குற்றந் துகளறத் துணிந்தவும் 195 சந்திர குருவே அங்கா ரகனென வந்த நீர்மைய வட்டத் தொகுதியும் கருப்பத் துளையவும் கல்லிடை முடங்கலும் திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும் வகைதெரி மாக்கள் தொகைபெற் றோங்கிப் 200 பகைதெறல் அறியாப் பயங்கெழு வீதியும் சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம் சாம்பூ நதமென ஓங்கிய கொள்கையின் பொலந்தெரி மாக்கள் கலங்கஞ ரொழித்தாங்கு இலங்குகொடி யெடுக்கும் நலங்கிளர் வீதியும் 205 நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும் பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து நறுமடி செறிந்த அறுவை வீதியும் நிறைக்கோல் துலாத்தர் பறைக்கட் பராரையர் அம்பண வளவையர் எங்கணுந் திரிதரக் 210 காலமன் றியுங் கருங்கறி மூடையொடு கூலங் குவித்த கூல வீதியும் பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் அந்தியுஞ் சதுக்கமும் ஆவண வீதியும் மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து 215 விசும்பகடு திருகிய வெங்கதிர் நுழையாப் பசுங்கொடிப் படாகைப் பந்தர் நீழல் காவலன் பேரூர் கண்டுமகிழ் வெய்திக் கோவலன் பெயர்ந்தனன் கொடிமதிற் புறத்தென். உரை 1-2. புறஞ்சிறைப் பொழிலும் - அங்ஙனம் புக்க புறஞ்சேரியிடத்துள்ள சோலையின் கண்ணும், பிறங்கு நீர்ப் பண்ணையும் - விளங்குகின்ற நீர் பொருந்திய பண்ணை களிடத்தும், இறங்கு கதிர்க் கழனியும் - வளைந்த கதிர்களையுடைய வயல்களிலும், புள் எழுந்து ஆர்ப்ப - பறவைகள் துயிலெழுந்து ஒலி செய்ய ; பண்ணை - ஓடையும் தோட்டமும். இறங்குதல் - வளைதல் ; தாழ்தல் எனலும் பொருந்தும். பிறங்கல் - மிகுதலுமாம். 1"புள்ளணி கழனியும் .....வெள்ளநீர்ப் பண்ணையும்" என்றார் முன்னும். 3-6. புலரி வைகறை - புலர்கின்றதாகிய வைகறைப் பொழுதின் கண், பொய்கைத் தாமரை மலர் பொதி அவிழ்த்த உலகு தொழு மண்டிலம் - குளங்களிலுள்ள தாமரைப் பூக்களின் கட்டவிழ்த்த உலகினுள்ளார் யாவரும் வணங்கும் ஞாயிறு, வேந்து தலை பனிப்ப - பகையரசர்கள் தலை நடுங்கும் வண்ணம், ஏந்து வாட் செழியன் - வாளினை ஏந்திய பாண்டியனது, ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப - வீரத்தான் மேம்பட்ட வண்மையான் உயர்ந்த மதுரை நகரத்தினைத் துயிலினின்றும் எழுப்ப; பொதில் - குவிதல். ஓங்கு உயர் - ஒரு பொருட் பன்மொழியுமாம். கூடல் ஊர் - கூடலாகிய ஊர் ; ஆகு பெயர். எடுப்ப - எழுப்ப. 2'ஊர் துயில் எடுப்ப' என்றார் பிறரும். ஆர்ப்ப அவிழ்த்த மண்டிலம் ஊர் துயில் எடுப்ப வென்க. 7. நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும் - நெற்றியினிடத்து விழித்த கண்ணினையுடைய இறைவனது கோயிலும்; விழித்தல் - ஈண்டுத் தோன்றுதல். 3'நுதல்விழி நாட்டத் திறையோன்' எனப் பிறரும் கூறுவர். விழிநாட்டம் - வினைத்தொகை. நுதலில் இமையா நாட்டம் என்றுமாம். 8. உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும் - கருடச் சேவலைக் கொடியாக உயர்த்த திருமாலின் கோயிலும் ; 9. மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும் - வெற்றி தரும் கலப்பைப் படையினை ஏந்திய பலராமனுடைய கோயிலும்; மேழி - ஆகுபெயரான் கலப்பையை உணர்த்திற்று. வலன் மேழி என்க. வெள்ளை - வெண்ணிறமுடைய பலராமன். வலன் உயர்த்த - வலமாக ஏந்திய எனலும் ஆம். 10. கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் - கோழியின் சேவலாகிய கொடியையுடைய முருகனது கோயிலும்; 11. அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் - அறநெறிக் கண்ணே நின்று விளக்கமுற்ற முனிவர்களுடைய பள்ளிகளும்; இனி, இவ்வடிக்கு அடியார்க்கு நல்லார் விரித்துரைக்கும் பொருள் வருமாறு:- "அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் - அறமும் அதன்றுறைகளும் விளங்குவதற்குக் காரணமாகிய அறவோர்களுடைய இருப்பிடங்களும் ; ஈண்டுப் பள்ளி என்றது, அவ்விடங்களை. அறத்துறை - அறமும் அறத்தின் துறையுமென உம்மைத் தொகை. அறமாவது இருவகைத்து; இல்லறமும் துறவறமும் என. அவற்றுள் இல்லற மென்பது கற்புடை மனைவியோடு இல்லின்கணிருந்து செய்யும் அறம். அதன் றுறையாவன: தன்னை யொழிந்த மூவர்க்கும், துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும், தேவர்க்கும், முனிவர்க்கும், விருந்தினர்க்கும், சுற்றத்தார்க்கும், பிறர்க்கும் துணையாதலும், வேள்வி செய்தலும், சீலங்காத்தல் முதலியனவும், அருளும் அன்பும் உடையனாதலும், பிறவும். இனித் துறவறமாவது. நாகம் தோலுரித்தாற் போல அகப்பற்றும் புறப்பற்றும் அற்று இந்திரிய வசமறுத்து முற்றத் துறத்தல். அதன் துறையாவன:- சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. அவற்றுள், சரியை அலகிடல் முதலியன ; கிரியை பூசை முதலியன; யோகம் எண்வகைய; அவை:- இயமம், நியமம், ஆசனம், வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைதல், சமாதி, என்பன; அவற்றுள், "பொய்கொலை களவே காமம் பொருணசை, இவ்வகை யைந்து மடக்கிய தியமம்" எனவும், "பெற்றதற் குவத்தல் பிழம்புநனி வெறுத்தல், கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை, பூசனைப் பெரும்பய மாசாற் களித்தலொடு, பயனுடை மரபினி னியமமைந்தே" எனவும், "நிற்ற லிருத்தல் கிடத்தல் நடத்தலென், றொத்த நான்கி னொல்கா நிலைமையொ, டின்பம் பயக்குஞ் சமய முதலிய, வந்தமில் சிறப்பி னாசன மாகும்" எனவும், "உந்தியொடு புணர்ந்த விருவகை வளியுந், தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை" எனவும், "பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாமை, ஒருநிலைப்படுப்பது தொகைநிலை யாமே" எனவும், "மனத்தினை யொருவழி நிறுப்பது பொறைநிலை" எனவும், "நிறுத்திய அம்மன நிலைதெரியாமற், குறித்த பொருளொடு கொளுத்துவது நினைவே" எனவும், "ஆங்ஙனங் குறித்த அம்முதற் பொருளொடு, தான்பிற னாகாத் தகையது சமாதி" எனவும் வருவனவற்றானறிக." 12. மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் - வலிமை அமைந்த போர்த்துறைக்கண்ணே சேறலான் விளக்கமுற்ற அரசனது கோயிலும் ஆகிய இவ்விடங்களில்; இனி, மறத்துறை விளங்குதற்குக் காரணமாகிய மன்னவன் எனலும் பொருந்தும். மறத்துறையாவன வெட்சி முதலிய திணைகளும் அவற்றின் துறைகளுமாம். ஒரு பொருட்குக் கோயில், நியமம், நகரம், கோட்டம், பள்ளி எனப் பல பெயர் வந்தது ஓர் அணியாகும். இதனைப் பரியாயம் என்பர். 13-14. வால் வெண் சங்கோடு - தூய வெள்ளிய சங்கினோடும், வகைபெற்று ஓங்கிய காலை முரசம் கனை குரல் இயம்ப-மூன்று வகைப்பட்டு உயர்ந்த செறிந்த குரலினையுடைய காலை முரசம் ஒலிப்ப; வால் - தூய்மை. முரசவகையாவன : கொடை முரசு, வெற்றி முரசு, நியாய முரசு என்பனவாம். 15-16. கோவலன் சென்று கொள்கையின் இருந்த காவுந்தி ஐயையைக் கை தொழுது ஏத்தி - கோவலன் சென்று தவ வொழுக்கத்தில் இருந்த கவுந்தியடிகளைக் கையால் தொழுது நாவாற் போற்றி; கொள்கை - தவம் ; ஆவது தியானம். சென்று என்பதனாற் கவுந்தியடிகள் வேறிடத்திருந்தார் என்பதும் கொள்கையின் இருந்த என்பதனால் அவர் தவநிலையில் இருந்தார் என்பதும் பெறப்படும். இனி, கொள்கையின் இருந்த என்பதற்கு இவர்களடையும் துன்பம் அடையாதிருந்த எனலும் பொருந்தும். 17-20. நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி - நல்லொழுக்க நெறியினின்றும் பிறழ்ந்தோரது தன்மையை உடையேனாய், நறுமலர் மேனி நடுங்கு துயர் எய்த - நறிய மலர்போலும் மேனியையுடைய இவள் நடுங்குதற்குக் காரணமாய துயரத்தினை அடைய, அறியாத் தேயத்து ஆர் இடை உழந்து - முன்னம் உணராத நாட்டின்கண் அரிய வழியிடத்து அலைந்து வருந்தி, சிறுமை உற்றேன் செய்தவத்தீர் யான் - செய்த தவத் தினையுடையீர் யான் இழிவுற்றேன்; இல்லற நெறியினீங்கிக் கணிகையர் வாழ்க்கையொடு பொருந் தினமையானும், விழுக்குடிப் பிறந்தும் தன் கற்புடை மனைவியோடு நீணெறிச் சென்றமையானும் "நெறியி னீங்கியோர் நீர்மையே னாகி............சிறுமை யுற்றேன்" என்றான் என்க. நறுமலர் மேனி - ஆகுபெயர். செய்தவத்தீர் யான் நீர்மையேனாகி ஆரிடை யுழந்து சிறுமையுற்றேன் என மாறுக. 21-24. தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு - பழமையான இந் நகரத்திடத்துள்ள வணிக மாக்களுக்கு, என் நிலை உணர்த்தி யான் வருங்காறும் - எனது நிலைமையை அறிவித்து யான் வருந்துணையும், பாதக் காப்பினள் பைந்தொடியாகலின் ஏதம் உண்டோ அடிகள் ஈங்கு என்றலும் - அடிகாள் இப் பசிய தொடியினையுடையாள் நும் திருவடிகளாகிய காவலை யுடையாளாகலான் இவ்விடத்து இவளுக்கு ஓர் தீங்கு உண்டாமோ என்று கூறலும் ; மன்னர் பின்னோர் - நாற்பாலுள்ளே மன்னர்க்குப் பின்னாக வுள்ளோர்; வணிகர். என்னிலை என்றது முன்பு தானிருந்த நிலைமையும் இப்போது அடைந்த நிலைமையும் என்க. பாதக்காப்பு - பாதமாகிய காப்பு. பைந்தொடி - அன்மொழித்தொகை. முன்னர், 1"அடிக ணீரே யருளிதி ராயினித், தொடிவளைத் தோளி துயர்தீர்த்தேன்" என இவன் கூறியது பெரியோரைச் சார்ந்தோர்க்கு யாதும் தீங்கு நேராதென்பதனை உட்கொண்டதாகலான், ஈண்டும் அக்கொள்கையை உட்கொண்டே ஏதம் உண்டோ' என்றான் என்க. 25-26. கவுந்தி கூறும் : கவுந்தியடிகள் கூறுவார் : காதலி தன்னொடு தவந் தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய் - காதலை யுடைய மனைவியோடு அறவினை ஒழிந்த பக்கத்தானே தனித்துத் துயரினை உழந்தோய் ; தீர்தல் - ஒழிதல். 1"தவந்தீர் மருங்கிற் றனித்துய ருழந்தேன்" என்றார் பிறரும். தவந்தீர் மருங்கில் என்றது முன்பு நல்வினை செய்த நீ சிறிது தீவினையும் செய்தமையானே என்றபடி. தனித் துயர் - ஒப்பற்ற துயருமாம். உழத்தல் - நுகர்தல். 27-32. மறத்துறை நீங்குமின் - பாவ நெறியினின்றும் விலகு மின், வல் வினை ஊட்டும் என்று - நீங்கீராயின் அப் பாவச்செயல் தன் பயனாகிய துன்பத்தினை நுகர்விக்கும் என, அறத்துறை மாக்கள் - அறத்துறையில் நின்ற அறவோர், திறத்திற் சாற்றி நாக் கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும் - அவரவர்க்கு ஏற்ற வகையான் நாவாகிய குறுந்தடியான் வாயாகிய பறையை அறைந்து கூறினும், யாப்பு அறை மாக்கள் இயல்பிற் கொள்ளார் - அறிவென்னும் உறுதியற்ற மாக்கள் அதனை நன்மைத் தன்மையின் ஏற்றுக்கொள்ளாராகி, தீது உடை வெவ்வினை உருத்த காலை - பின்னர்த் தீப்பயனையுடைய கொடிய வினை யானது தோன்றித் தன் துன்பப் பயனை ஊட்டுங்காலத்து, பேதைமை கந்துஆப் பெரும் பேதுறுவர் - தம் அறியாமை காரணமாக மிகவும் மயக்கமுறுவர் ; திறம் - நன்மை தீமை என்னும் வகை எனினும் பொருந்தும். சாற்றி அறையினும் என்பவற்றுள் விகுதி பிரித்துக் கூட்டி அறைந்து சாற்றினும் என மாறுக. உருத்தல் - தோன்றிப் பயனளித்தல்; 2"உம்மை வினைவந் துருத்த லொழியாது" என வருதல் காண்க. 33-34. ஒய்யா வினைப்பயன் உண்ணுங்காலை - போக்கவொண்ணாத தீவினையின் பயனாகிய துன்பத்தினை நுகருங்காலத்து, கை யாறு கொள்ளார் கற்று அறி மாக்கள் - அறநூல்களைக் கற்றுணர்ந்த அறிஞர் செயலறவினைக் கொள்ளார்; ஒய்யாமை - போக்கவொண்ணாமை. தாமே முன் செய்து கொண்டமையானும் ஊட்டாது கழியாமையானும் இயைந்து நுகர்தற்பால தெனக் கொள்ளுவரென்றதாம். இனி, முன்னர் ‘வல்வினை யூட்டும்' எனக் கூறியதனை மேற்கோள் காட்டி வலியுறுத்துகின்றார். 35-45. பிரிதல் துன்பமும் - மகளிரைப் பிரிதலான் வரும் துன்பமும், புணர்தல் துன்பமும் - அவரைப் புணர்தல் காரணமாக உண்டாம் துன்பமும், உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும்- இவ் விருகாலத்தும் காமன் ஒறுக்கும் துன்பமும், புரிகுழல் மாதர்ப் புணர்ந்தோர்க்கு அல்லது - புரிந்த கூந்தலையுடைய பெண்டிரைப் புணர்ந்து மயங்கினார்க்கல்லது, ஒரு தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை - ஒப்பற்ற தனித்த வாழ்க்கை யினையுடைய அறிஞரிடத்து இல்லை ; பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகிற் கொண்டோர் உறூஉம் கொள்ளாத் துன்பம் - இவ்வுலகத்து மகளிரும் உணவுமே இன்பம் தரத் தக்க பொருளாம் என்று கொண்ட அறிவிலார் அடையும் இடங் கொள்ளாத் துன்பத்தினை, கண்டனர் ஆகிக் கடவுளர் வரைந்த - உணர்ந்தனராய் முனிவர்கள் நீக்கிய, காமம் சார்பு ஆ - காமம் பற்றுக்கோடாக, காதலின் உழந்து - அன்பு கொண்டு வருந்தி, ஆங்கு ஏமஞ் சாரா இடும்பை எய்தினர் - கரை காணப்படாத துன்பத்தினை உற்றோர், இன்றே அல்லால் இறந்தோர் பலரால் - இந் நிகழ்காலத்துள்ளோ ரல்லாமலும் முற்காலத்துக் கழிந்தோரும் பலராவர், தொன்றுபட வரூஉம் தொன்மைத்து - இந் நிகழ்ச்சி அடிப்பற்றி வருகின்ற பழைமையினை உடைத்து ; புணர்தற் றுன்பத்தினும் பிரிதற் றுன்பம் பெரிது ஆகலான் பிரிதற் றுன்பம் முற்கூறப்பட்டது. உருவிலாளன் - அநங்கன். உர வோர் - முனிவர். 1"பெண்டிரு முண்டியு மின்றெனின் மாக்கட், குண்டோ ஞாலத் துறுபயன்" என வருதலான், பெண்டிரும் உண்டி யுமே இன்பமெனக் கொண்டாரு முளரென்பதறிக. இன்பம் தருவன வற்றை இன்பமென்றார். கொள்ளாத் துன்பம் - தம்மளவல்லாத துன்பமெனலுமாம். இனி, அடியார்க்கு நல்லார், பெண்டிரும் உண்டியும் என்பவற்றை ஆகுபெயரான் இன்பமும் பொருளுமெனக்கொண்டு அதற்கேற்பப் பிரிதல் புணர்தல் என்பவற்றை இரண்டுக்கும் ஏற்றிப் பொருள் கூறிச் செல்வர் ; அவர் உருவிலாளன் என்பதற்குப் பொருளுக் கேற்ப `வறுமை' என்றுரைப்பர். ஏமம் - காவல் ; கரை. ஆல், அசை. 45-49. ஆதலின் - ஆகையான், தாதை ஏவலின் - தந்தையின் ஏவலால், மாதுடன் போகி - தன் மனைவியோடும் கானம் சென்று, காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன் - அம் மனைவி பிரிதலானே மிக்க துயரத்தினை நுகர்ந்தோன், வேத முதல்வற் பயந்தோன் என்பது - வேதத்தை அருளிய நான்முகனைப் பெற்ற திருமால் என்பதனை, நீ அறிந்திலையோ - நீ அறியாயோ, நெடு மொழி அன்றோ - அது யாவரும் அறியும் வண்ணம் பரந்து பட்ட சொல்லன்றோ ; தாதை - தயரதன். `நீ அறிந்திலையோ' என்றது அறிந்து வைத்தும் இரங்குதல் அறிவுடைமையாகாது என்பதாம். 50-57. வல் ஆடு ஆயத்து - புட்கரனோடு சூதாடும் தாயத்தான், மண் அரசு இழந்து - நிலத்தினையும் அரசாட்சியையும் இழந்து, மெல் இயல் தன்னுடன் வெங்கான் அடைந்தோன் - மென்மைத் தன்மையுடைய தமயந்தியுடன் வெவ்விய காட்டை அடைந்தோனாகிய நளன், காதலிற் பிரிந்தோன் அல்லன் - பொருள்மீது கொண்ட அன்பு காரணமாக அவளைப் பிரிந்தோ னுமல்லன், காதலி தீதொடு படூஉம் சிறுமையள் அல்லள் - அவள் குற்றத்தின்கண் படுகின்ற இழிவினை உறுவாளுமல்லள், அடவிக் கானகத்து ஆயிழை தன்னை - அங்ஙனமாகவும் அவளை அடவியாகிய காட்டினிடத்து, இடையிருள் யாமத்து இட்டு நீக்கியது - இருள் நிறைந்த நடு யாமத்தின்கண் உறக்கிடைப் போகட்டு நீங்கச் செய்தது, வல்வினை அன்றோ - அவர் முன் செய்த தீவினை அன்றோ, மடந்தைதன் பிழை எனச் சொல்லலும் உண்டேல் சொல்லாயோ நீ - அத் தமயந்தியின் பிழையே காரணமாம் என்று சொல்லுதற்கு வேறு உண்டாயின் நீ அதனைச் சொல்வாய்; ஆயம் - தாயம். மண்ணும் அரசும் என்க. அடைந்தோன் - வினைப்பெயர். காதலிற் பிரிந்தோ னல்லன் என்பதற்குத் தன் விருப்பம் காரணமாகவும் அவள் விருப்பம் காரணமாகவும் பிரிந்தோ னல்லன் என்றும், காதலினின்றும், நீங்கினோ னல்லன் என்றும் உரைத்தலுமாம். தீது - பிறர் நெஞ்சு புகுதல். தேவருள் மிக்கா னொருவனையும், மக்களுள் மிக்கா னொருவனையும் முறையே எடுத்துக் காட்டியவாறு காண்க. 58-59. அனையையும் அல்லை - நீ அவர்களைப் போன்றாயுமல்லை, ஆயிழை தன்னொடு பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றே - என்னையெனின்? நீ நின் மனைவியினின்றும் பிரியாத வாழ்க்கையினைப் பெற்றாயன்றே; உம்மை - சிறப்பு. தீவினை காரணமாகத் துயருழத்தலின் முற்கூறிய இருவரோடு நீ ஒப்பாய் எனினும், நீ அவரினும் ஒரு நன்மையை உடையை ; அஃதென்னை யெனின்? மனைவியைப் பிரியாது வாழ்தலாம் என்று கூறினாரென்க. 60-61. வருந்தாது ஏகி மன்னவன் கூடல் - இம் மன்னவனது கூடற்கண்ணே அறியாத் தேயத்து ஆரிடை யுழந்ததனை நினைந்து வருந்தாது சென்று, பொருந்துழி அறிந்து போது ஈங்கு என்றலும் - விருந்தெதிர் கொள்வாரிடத்தை அறிந்துகொண்டு ஈங்குப் போதுவாயாக என்று சொல்லலும் ; முன்னர், 1"மன்னர் பின்னோர்க் கென்னிலை யுணர்த்தி யான் வருங் காறும்" எனவும், பின்னர். 2"தங்குல வாணர்.......கடி மனைப் படுத்துவர்" எனவும் வருவனவற்றை உட்கொண்டது பொருந்துழி யறிந்தென்றது என்க. தீங்கு பொருந்துழி அறிந்து போ எனவும் பொருள் கொள்ளக் கிடந்தமை காண்க. 62-65. இளை சூழ் மிளையொடு - கட்டுவேலி சூழ்ந்த காவற் காட்டொடு பொருந்தி, வளைவுடன் கிடந்த இலங்கு நீர்ப் பரப்பின் வலம் புணர் அகழியில் - வளைவு பட்டுக் கிடந்த விளங்குகின்ற நீர்ப் பரப்பினையுடைய வெற்றி பொருந்திய அகழிக்கண், பெருங்கை யானை இனநிரை பெயரும் - பெரிய கையினை யுடைய யானையின் நிரைத்த இனங்கள் போக்கு வரவு செய்தற்கு அமைந்த, சுருங்கை வீதி மருங்கிற் போகி - சுருங்கையை உடைய வீதியினிடத்தைக் கழிந்து போய்; இளை - காவல் அரணுமாம். சுருங்கை - புகுந்து செல்லுதலை ஒருவரு மறியாதபடி நிலத்தின்கீழ் மறைத்துப் படுத்த வழி; இதனைக் கரந்துறை எனவும், கரந்துபடை எனவும் கூறுவர். 66-67. கடி மதில் வாயில் காவலிற் சிறந்த - அச்சத்தை விளைக்கும் மதிலின் வாயிலைக் காத்தற்றொழிலாற் சிறப்புப்பெற்ற, அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு - கொல்லுதலையுடைய வாளினை ஏந்திய யவனர்க்கு ஐயமுண்டாகா வண்ணம் புகுந்து; கடி - அச்சம்; மிகுதியுமாம். யவனர் - துலுக்கர் என்பர் அடியார்க்கு நல்லார். அயிராது - புதியரென ஐயுறாதபடி. 67. ஆங்கு - அவ்விடத்து ; 68-69. ஆயிரங் கண்ணோன் அருங்கலச்செப்பு - ஆயிரங் கண் களையுடைய இந்திரனது பெறுதற்கரிய அணிகலங்களைப் பெய்த பணிப்பேழையின், வாய்திறந்தன்ன மதிலக வரைப்பில்- வாயைத் திறந்து வைத்தாற்போன்ற மதிலினுள்ளிடத்த தாகிய அந் நகர் எல்லைக்கண்ணே; கலச்செப்பு - அணிகலப்பெட்டி. அகநகர்ச் சிறப்புக் கூறுதலான், `மதிலக வரைப்பு' என்றார். 70-75. குடகாற்று எறிந்து - மேல்காற்று விசைத்து வீசுத லான், கொடி நுடங்கு மறுகின் - கொடிகள் அசைகின்ற மறு கின்கண் உள்ள, கடை கழிமகளிர் - பெண்டிர்க்கமைந்த எல்லையினைக் கழிந்த பொது மகளிர், காதலம் செல்வரொடு - தம் பாற் காதல் கொண்ட செல்வ இளைஞருடன், வருபுனல் வையை மருது ஓங்கு முன்துறை - இடையறாது நீரொழுகும் வையை யாற்றின் ஓங்கிய திருமருதத்துறை முன்னர், விரிபூந்துருத்தி வெண்மணல் அடைகரை - பரந்த பொலிவுபெற்ற ஆற்றிடைக் குறையின் வெள்ளிய மணலையுடைய அடைகரைக்கண், ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கி - உயர்ந்த பள்ளியோடத் தோடு தோணிகளை ஏறிச் செலுத்தியும், பூம் புணை தழீஇ - பொலிவு பெற்ற தெப்பத்தினைத் தழுவி நீந்தியும், புனல் ஆட்டு அமர்ந்து - இங்ஙனம் நீராடுதலை விரும்பி; ஆடித்திங்களாதலின் குடகாற்றெறிந்த தென்க. பொது மகளிர் வரம்பினில்லாதவராகலான் கடைகழி மகளிர் எனப்பட்டனர். கடை - எல்லை, வரம்பு. இனி, நாணும் மடனும் பெண்மையவாக லான், இவற்றைக் கழிந்தே கடைகழிய வேண்டுதலின் கடைகழி மகளிர் எனப் பொதுமகளிர்க்குப் பெயர் கூறினார் எனலுமாம். பொதுமகளிர்க்குக் காதல் பொருளின்கண்ண தாகலான், காதலம் செல்வர் என்பதற்குத் தாம் காதலிக்கும் செல்வத்தினையுடைய காமுகர் எனக் கோடலும் அமையும். மருதமரம் ஓங்கியுள்ளமையால் திருமருதந் துறையெனப் பெயர் பெற்ற நீர்த்துறையென்க. இத்துறை சங்கச் செய்யுள் பலவற்றாற் சிறப்பிக்கப்படுவது; 1"திசை திசை தேனார்க்குந் திருமருத முன்றுறை," 2"வருபுனல் வையை வார்மண லகன்றுறைத், திருமரு தோங்கிய விரிமலர்க் காவின்," 3"தீம்புனல் வையைத் திருமருத முன்றுறையால் என்பன காண்க. இது சிறுபொழுதாறினும் காலைப்பொழுது கழிக்குமாறு கூறியது. 79-82. தண் நறு முல்லையும் - குளிர்ந்த நறிய முல்லை மலரும், தாழ்நீர்க் குவளையும் - ஆழ்ந்த நீரிற் பூத்த செங்குவளை மலரும் கண் அவிழ் நெய்தல் - கண்போல் மலர்ந்த நெய்தல் மலரும், ஆகிய இவற்றை, கதுப்பு உற அடைச்சி - கூந்தலிற் பொருந்தச் சூடி, வெண்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த - மல்லிகையின் வெள்ளிய பூக்களாலாகிய மாலையுடன் இணைந்த, தண் செங்கழுநீர்த் தாது விரி பிணையல் - குளிர்ந்த செங்கழுநீரின் தாது விரிந்த இதழ்களாற் கட்டிய பிணையலை, கொற்கையம் பெருந் துறை முத்தொடு பூண்டு - கொற்கைத் துறையில் உண்டாய பெரிய முத்தாற் செய்த வடத்துடன் பூண்டு, தெக்கண மலயச் செழுஞ்சேறு ஆடி - தென்றிசைக்கண்ணதாகிய பொதியிலிற் பிறந்த சந்தனத்தின் குழம்பை உடல் முழுதும் பூசி, பொற்கொடி மூதூர்ப் பொழிலாட்டு அமர்ந்தாங்கு - அழகிய கொடி களையுடைய மூதூர்க்கு அயலதாகிய சோலையிடத்து விளையாடும் விளையாட்டை விரும்பி ; தாணீர்க்குவளை என்பது பாடமாயின், தாளையுடைய நீர்மை யதாகிய குவளை யென்க. விரியல் - மாலை; விரிந்த பூ என்று கொண்டு அதனுடன் செங்கழுநீரிதழைச் சேர்த்துக் கட்டிய பிணையல் என்றுமாம். பிணையல் - மார்பிலிடுவது. தெக்கணம்; வடசொற்றிரிபு. ஆங்கு; அசை. அடைச்சிப் பூண்டு ஆடி அமர்ந்து என்க. இது நண்பகற் பொழுது கழிக்குமாறு கூறியது. 83-85. ஏற்படு பொழுதின் - ஏற்பாடாகிய பொழுதிலே, இள நிலா முன்றில் - இளநிலாவின் பயனை நுகர்தற்குரிய முற்றத்தில், தாழ்தருகோலம் தகை பாராட்ட - தம்மனத்திற் றங்கிய கோலத்தைப் புனைந்து கொழுநர் பாராட்ட, வீழ்பூஞ் சேக்கைமேல் இனிது இருந்தாங்கு - விரும்பப்படும் மலரமளி மேல் இனிமையுடனிருந்து; எற்படுபொழுது - ஞாயிறு மறையும் பொழுது. தாழ்தரு கோலம் தகை பாராட்ட என்பதற்கு முன்னர்ப் புனலினும் பொழிலினும் ஆடி இளைத்த கோலத்தைத் தங்கொழுநர் பாராட்டித் தீர்க்க என்றுரைப்பாருமுளர். காதலஞ் செல்வர் பாராட்ட அவருடன் இருந்தென்க. கோலத்தகை யென்பது மெலிந்து நின்றது. ஆங்கு, அசை. இஃது ஏற்பாடு கழிக்குமாறு கூறியது. 86-97. அரத்தப் பூம்பட்டு அரைமிசை உடீஇ - அங்ஙனம் சேக்கைமேலிருந்து பூத்தொழிலையுடைய செம்பட்டை அரை யின்மீதே உடுத்தி, குரல் தலைக் கூந்தல் குடசம் பொருந்தி - தலையிடத்துக் கொத்தாகவுள்ள கூந்தலில் வெட்பாலைப் பூவை முடித்து, சிறுமலைச் சிலம்பிற் செங்கூதாளமொடு நறுமலர்க் குறிஞ்சி நாள்மலர் வேய்ந்து - சிறுமலையெனப் பெயரிய மலையிற் பூத்த செந்நறுந்தாளிப் பூவுடனே நறிய மலரையுடைய குறிஞ்சியின் புதிய பூவைச் சூடி, குங்கும வருணம் கொங்கையின் இழைத்து - குங்குமம் போலும் நிறத்தையுடைய செஞ் சந்தனத்தைக் கொங்கையில் எழுதி, செங்கொடு வேரிச் செழும் பூம்பிணையல் - செங்கொடு வேரியின் வளவிய பூவாற் கட்டப்பட்ட பிணையலை, சிந்துரச் சுண்ணம் சேர்ந்த மேனியில் - சிவந்த சுண்ணம் அப்பிய மார்பிலே, அம் துகிர்க்கோவை அணியொடு பூண்டு - அழகிய பவள வடமாகிய அணியுடன் பூண்டு, மலைச் சிறகு அரிந்த வச்சிர வேந்தற்கு - மலைகளின் சிறகை யரிந்த வச்சிரப் படையினையுடைய இந்திரனுக்கு, கலி கெழு கூடற் செவ்வணி காட்ட - ஆரவாரம் பொருந்திய கூடலிடத்தே தம் செவ்வணியைக் காட்டுமாறு, கார் அரசாளன் வாடையொடு வரூஉம் காலம் அன்றியும் - காரை ஆளும் அரசன் வாடைக் காற்றோடு வரும் காலமும், அக் கால மன்றியும்; அரை - ஆகுபெயரான் மேகலையுமாம். குரல் - பூங்கொத்துமாம். குடசம் - செங்குடசம். நாண்மலர் எனப் பின் வருதலின், நறுமலர்க் குறிஞ்சி என்பதில் முதற்கேற்ற அடையடுத்தது. இழைத்துச் சேர்ந்த மேனியில் பிணையலை அணியொடு பூண்டு என்றியைக்க. செவ்வணி காட்ட என்பதற்குக் கடை கழி மகளிர் எழு வாய்; குடசம், குறிஞ்சி, கொடுவேரி யென்னுமிவை கார் காலத்துப் பூவாதல்கொண்டு காரரசாளனை எழுவாயாக்குவர் அடியார்க்கு நல்லார்; செய்தெ னெச்சங்கள் முடிவு பெறாமையின் அது பொருளன்மையோர்க. கார் - முகில்; காரரசாளன் - கார் காலம்; 1"இசைத்தலு முரிய வேறிடத் தான" என்பதனால் உயர்திணையாற் கூறினார்; இவ் விதி மேல்வருவனவற்றிற்குங் கொள்க. செவ்வணி காட்டத் துணையாக வருங் கால மென்க. வச்சிர வேந்தன் முகிலுக்குத் தலைவனாகலின் அவற்குச் செவ்வணி காட்டினரென்க. அவர் அரமகளி ரொப்பா ரென்பதுமாம். கூடற் செவ்வணி ; வேறு பொருளுந் தோன்ற நின்றது. காலமும் அஃதன்றியும் எனப் பிரிக்க. 97-101. நூலோர் சிறப்பின் - சிற்ப நூல் வல்லோராற் சிறப்புறச் செய்யப்பட்ட, முகில் தோய் மாடத்து - மேகம் தவழும்படி உயர்ந்த மாடங்களிலே, அகில் தரு விறகின் - கொண்டுவந்த அகிலாகிய விறகாலே, மடவரல் மகளிர் - மடப்பம் பொருந்துதலையுடைய மகளிர், தடவு நெருப்பு அமர்ந்து - இந்தளத்தில் இட்ட தீயினைக் காய்தலை விரும்பி, நறுஞ்சாந்து அகலத்து நம்பியர் தம்மொடு - நறிய சாந்து பூசிய மார்பினையுடைய மைந்தரோடு கூடி, குறுங்கண் அடைக்கும் கூதிர்க்காலையும் - குறிய கண்களையுடைய சாளரங்களை அடைக்கும் கூதிராகிய காலமும்; நம்பியர் - காதலஞ் செல்வர். குறுங்கண்; ஆகுபெயர். தடவு - இந்தளம்; தூபமுட்டி. 102-105. வள மனை மகளிரும் மைந்தரும் - செல்வ மிக்க மனையிடத்து மகளிரும் மைந்தரும், விரும்பி இள நிலா முன்றிலின் இளவெயில் நுகர - இளநிலாவை நுகர்தற்குரிய முற்றத்தி லிருந்து இளவெயிலை விரும்பி நுகரும்படி, விரிகதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு - விரிந்த கதிரையுடைய ஞாயிற்று மண்டிலம் தெற்கே எழுந்து இயங்குதலானே, வெண் மழை அரிதில் தோன்றும் அச்சிரக்காலையும் - வெண்முகில் அரிதாகத் தோன்றும் முன்பனிக் காலமும் எவ்விடத்துள்ளன; வளமனை நிலா முன்றில் என்றியைத்தலுமாம். இளநிலா - மாலைப் பொழுதின் நிலா; சுதைநிலா என முன்றிற்கு அடையாக் கலுமாம். தெற்கு - மிதுனவீதி ; வானிலே கோட்கள் இயங்கும் நெறிகள் மேடவீதி, இடபவீதி, மிதுனவீதி, என மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ளன; பதினொன்றாம் பரிபாட்டுள் 1"எரிசடை யெழில் வேழம் தலையெனக் கீழிருந்து, தெருவிடைப் படுத்தமூன் றொன்பதிற் றிருக்கையுள்" என வருதல் காண்க. ஏர்பு - எழுதலான் எனத் திரிக்க. எவ்விடத்துள்ளன என்று ஒரு சொல் வருவிக்க. 106. ஆங்கது அன்றியும் - அம் முன்பனிக்கால மன்றியும்; 106-112. ஓங்கு இரும்பரப்பின் - மிகப் பெரிய கடலின் கணுள்ள, வங்க ஈட்டத்து - நாவாயின் திரளாலே, தொண்டியோர் இட்ட - தொண்டி யென்னும் பதியிலுள்ள அரசர் திறையாக விட்ட, அகிலும் துகிலும் ஆரமும் வாசமும் தொகு கருப்பூரமும் சுமந்து உடன்வந்த - அகில் பட்டுசந்தனம் வாசம் கருப்பூரம் என்னும் இவற்றின் மணத்தினை ஒருங்கு சுமந்து வந்த, கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் - கீழ் காற்றோடு அரசனது கூடற்கட் புகுந்து, வெங்கண் நெடுவேள் வில் விழாக் காணும் - காமனது கொடிய வில் வெற்றி பொருந்திய விழாவினைக் காணும், பங்குனி முயக்கத்துப் பனியரசு யாண்டு உளன் - பங்குனித் திங்கள் ஈறாகப் பொருந்திய பின்பனிக் காலமாகிய அரசன் எவ்விடத்துள்ளான்; பரப்பு - பரவை; கடல். தொண்டி - சோணாட்டுக் கடற்கரைக் கண்ணதோர் பதி யென்பது கொண்டலொடு புகுந்து என்பதனாற் பெறப்படும்; சங்கச் செய்யுட்கள் பலவற்றிற் கூறப்படும் சேரர் கடற்றுறைப் பட்டினமாகிய தொண்டி வேறு, இது வேறு என்பதறிக. தொண்டியோர் - சோழ குலத்தோர். கொண்டல் - கீழ்க் காற்று. கொண்டலொடு புகுந்து காணும் பனியரசென்க. துகில் - பட்டுவர்க்கம்; வாசமூட்டப் பெற்றமையால் இவற்றுடன் ஓதப் பட்டது. (அடி. இனி, தொகு என்பதனை இறுதி விளக்காகக் கொண்டு பொருளுரைக்க. உரைக்குமாறு;- அகில்; அருமணவன் தக்கோலி கிடாரவன் காரகில் என்று சொல்லப்பட்ட பலவகைத்தாய தொகுதியும், துகில்; கோசிகம் பீதகம் பச்சிலை அரத்தம் நுண்டுகில் சுண்ணம் வடகம் பஞ்சு இரட்டு பாடகம் கோங்கலர் கோபம் சித்திரக்கம்மி குருதி கரியல் பாடகம் பரியட்டக்காசு வேதங்கம் புங்கர்க் காழகம் சில்லிகை தூரியம் பங்கம் தத்தியம் வண்ணடை கவற்றுமடி நூல்யாப்பு திருக்கு தேவாங்கு பொன்னெழுத்து குச்சரி தேவகிரி காத்தூலம் இறஞ்சி வெண்பொத்தி செம்பொத்தி பணிப்பொத்தி யென்று சொல்லப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும், ஆரம் ; மலையாரம் தீமுரன்பச்சை கிழான்பச்சை பச்சைவெட்டை அரிசந்தனம்; வேரச்சுக்கொடி யென்று சொல்லப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும், வாசம் ; அம்பர் எச்சம் கத்தூரி சவாது சாந்து குங்குமம் பனிநீர் புழுகு தக்கோலம் நாகப்பூ இலவங்கம் சாதிக்காய் வசுவாகி நிரியாசம் தைலம் என்று சொல்லப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும், கருப்பூரம்: மலைச்சரக்கு கலை அடைவுசரக்கு மார்பு இளமார்பு ஆரூர்க்கால் கையொட்டுக்கால் மாரப்பற்று வராசான் குமடெறிவான் உருக்குருக்கு வாறோசு சூடன் சீனச்சூடன் என்று பெயர் கூறப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும் எனத் தொகுத்தும் விரித்தும் பொருளுரைக்க.) 113-117. கோதை மாதவி கொழுங்கொடி எடுப்ப - மாலையை யுடைய குருக்கத்தி அழகிய கொடியை யெடுக்கவும், காவும் கானமும் கடிமலர் ஏந்த - இளமரக்காவும் நந்தவனமும் நறிய மலர்களை ஏந்தவும், தென்னவன் பொதியில் தென்ற லொடு புகுந்து மன்னவன் கூடல் - பாண்டியனது பொதியின் மலைத் தென்றலோடு அம் மன்னவனது கூடலின்கட் புகுந்து, மகிழ்துணை தழூஉம் - தாம் விரும்பும் துணைகளைத் தழுவுவிக்கும், இன் இளவேனில் யாண்டுளன்கொல் என்று - இனிய இள வேனிலென்னும் அரசன் எவ்விடத்துள்ளான் என்று; கோதை மாதவி - மாலைபோலப் பூக்கும் குருக்கத்தி. கொடி யெடுப்ப - கொடி வளரப்பெற; துகிற்கொடி யேந்திவர என்னும் பொருளும் தோன்ற நின்றது. கூடலிற் புகுந்தென மாறுக, தழூஉம் - தழுவுவிக்கும் ; பிறவினை. 118-119. உருவக் கொடியோர் - பூங்கொடி போலும் உருவினையுடைய மகளிர், உடைப்பெருங் கொழுநரொடு - தம்மை யுடைய பெரிய கொழுநரோடிருந்து, பருவம் எண்ணும் - அப் பருவங்களின் வரவை யெண்ணுகின்ற, படர் தீர் காலை - வருத்தம் நீங்கிய காலத்தே; உருவக் கொடியோர் - உருவிலே யெழுதிய கொடியினையுடயோர் என்றுமாம் ; இவர் முற்கூறிய கடைகழி மகளிர். பருவம் எண்ணும் - முன்பு தமக் கின்பம் விளைத்த கார் முதலிய பருவங்கள் மீட்டும் வருதலை யெண்ணும். கடைகழி மகளிர் காதலஞ் செல்வரொடு சேக்கைமேலிருந்து பருவ மெண்ணும் முதுவேனிற் காலத்தென்க. வேனில் நீங்கிக் கார் தொடங்கும்பொழுது அணித்தாதலின் 'படர்தீர் காலை' என்றார். 120-125. கன்று அமர் ஆயமொடு களிற்றினம் நடுங்க - கன்றுகள் விரும்பிய பிடியின் கூட்டத்தோடு அவற்றைப் புரக்கும் களிற்றினமும் நடுங்கும்படி, என்றூழ் நின்ற குன்று கெழு நன் னாட்டு - வெயில் நிலைபெற்ற நல்ல மலைசார்ந்த நாட்டின், காடு தீப்பிறப்பக் கனை எரி பொத்தி - காடுமுழுதும் தீயுண்டாக முழங்கும் அழலை மூட்டி, கோடையொடு புகுந்து - மேல் காற்றோடு வந்து புகுந்து, கூடல் ஆண்ட வேனில் வேந்தன் - கூடலை ஆட்சி செய்த வேனிலாகிய அரசன், வேற்றுப்புலம் படர ஓசனிக்கின்ற - வேற்றுப் புலங்கட்குச் செல்லுமாறு முயல் கின்ற, உறுவெயில் கடைநாள் - மிக்க வெயிலையுடைய வேனிலின் கடை நாளில்; என்றூழ் நீடிய என்பதும், பொத்திய என்பதும் அரும்பதவுரை யாசிரியர் கொண்ட பாடம். கனை - செறிவுமாம். பொத்தி - மூட்டி. ஓசனித்தல் - போதற்கு ஒருப்பட்டு முயலுதல்; 1"உடைதிரை முத்தஞ் சிந்த வோசனிக் கின்ற வன்னம்" என்பது காண்க. அவ்விடத்திருந்தும் அகல வென்பார் 'வேற்றுப் புலம்படர' என்றார்; "ஓரோர் தேயங்கட்கு ஓரொரு காலம் மாறி நிகழ்தலின் வேற்றுப் புலம் படர வென்றார்" என்னும் அடியார்க்கு நல்லாருரை தமிழ் கூறு நல்லுலகத்திற்குப் பொருந்துவதன்று. 126-131. வையமும்-கூடாரப் பண்டியும், சிவிகையும்-பல்லக்கும், மணிக்கால் அமளியும், மணிகளிழைத்த கால்களையுடைய சேக்கையும், உய்யானத்தின் உறுதுணை மகிழ்ச்சியும் - நீராவிச் சோலையிலே சேவிப்பாருடனிருந்து புதுமை காண்டலும், சாமரைக் கவரியும் - சாமரையாகிய கவரியும், தமனிய அடைப்பையும் - பொன்னாற் செய்த வெற்றிலைப் பெட்டியும், கூர் நுனைவாளும் - கூரிய முனையையுடைய வாளும், தம் கோமகன் கொடுப்ப - தம் அரசன் கொடுக்க, பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கை - அங்ஙனம் பெற்ற வரிசையாகிய செல்வம் எக்காலத்தும் மாறாத. பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து - பொன்வளை யணிந்த மகளிர் புதிய மணத்தினைப் பொருந்தி; உய்யானம் - அரசர் விளையாடும் காவற் சோலை. உறுதுணை மகிழ்ச்சி என்பதற்கு உற்ற துணைவனாகிய அரசனோடு மேவி மெய் தொட்டு விளையாடு மகிழ்ச்சி யென்றுரைப்பர் அடியார்க்கு நல்லார். சாமரைக் கவரி - இருபெயரொட்டு. அடைப்பை - வெற்றிலைப்பை (பெட்டி) ; அடை - வெற்றிலை. வையம் முதலியன ஏறிச் செல்லுதலும், உய்யானத்தில் விளையாடுதலும், சாமரை வீசப் பெறுதலும், அடைப்பை பிடித்து இடப் பெறுதலும், வாள் ஏந்தப் பெறுதலும் அரசன்பால் வரிசையாகப் பெற்றவ ரென்க. கொழுநரொடு புது மணம் புணர்ந்தென்று கூட்டுக. புதுமணம் புணர்ந்தென்பதற்கு நாடோறும் புதியாரோடு மணம் புணர்ந்தென்றுரைப்பாருமுளர். 132-133. செம்பொன் வள்ளத்துச் சிலதியர் ஏந்திய - ஏவற் பெண்டிர் பொன் வள்ளத்தில் ஏந்திய, அம் தீந்தேறல் மாந்தினர் மயங்கி - அழகிய இனிய கள்ளின் தெளிவைப் பருகினராய்ப் பின்னும் மயங்கி; புணர்ச்சியானுண்டாய சோர்வினைப் போக்கிக் களிப்பு விளைத் தற்குத் தேறன் மாந்தின ரென்க. 134-145. பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும் - வரி பாடும் பொறியையுடைய வண்டினத்தை அவை பொருந்து மிடத்தினன்றியும், நறுமலர் மாலையின் வறிதிடம் கடிந்தாங்கு - நறிய பூமாலையாலே அவை பொருந்தாத இடத்திற் கடிந்து இலவு இதழ்ச் செவ்வாய் இளமுத்து அரும்ப - இலவிதழ் போ லும் சிவந்த வாயின் மீதே இளமுத்துப் போலும் பற்கள் தோன்ற முறுவலித்து, புலவிக் காலத்துப் போற்றாது உரைத்த- ஊடற் காலத்துப் பாதுகாவாது கூறிய, காவியங் கண்ணார் கட்டுரை - நீலோற்பலம் போன்ற கண்ணினையுடையாரது புலவிப் பொருள் பொதிந்த உரையாகிய, எட்டுக்கு நாவொடு நவிலா நகைபடு கிளவியும் - எண்வகை யிடத்திற் பொருந்தி நாவால் நவிலப்படாத நகை தோன்றுங் கிளவியும், அம் செங்கழு நீர் அரும்பு அவிழ்த்தன்ன - அழகிய செங்கழுநீரின் அரும்பை நெகிழ்த்துப் பார்த்தாலொத்த, செங்கயல் நெடுங்கண் செழுங் கடைப் பூசலும் - சிவந்த கயலினை யொத்த நீண்ட கண்ணின் கடைச்சிவப்பாற் செய்த பூசலும், கொலை விற் புருவத்துக் கொழுங்கடை சுருள - கொலைத்தொழில் புரியும் வில்லை யொத்த புருவத்தின் அழகிய கோடிகள் உள் வளைய, திலகச் சிறு நுதல் அரும்பிய வியரும் - திலகமணிந்த சிறிய நெற்றியில் அரும்பிய வியரும், செவ்வி பார்க்கும் செழுங்குடிச் செல்வ ரொடு - தீருஞ் செவ்வி பார்த்து வருந்தும் வளமிக்க குடிப் பிறந்த செல்வரோடே, வையம் காவலர் மகிழ்தரு வீதியும் - நிலத்தினைப் புரக்கும் அரசரும் விரும்பும் வீதியும்; வண்டினம் புல்லுதல் - இதழில் மறையும் விழியைப் பூவிதழில் மறையும் தமதினமெனக் கருதிச் சேர்தல். மாலை - புணர்ச்சியாற் பரிந்த மாலை. மதுவுண்ட மயக்கத்தால் வண்டு மொய்க்காத இடத் தையும் மாலையாற் கடிந்தாரென்க. எட்டு - நெஞ்சு முதலாய எண் வகையிடம். கட்டுரை யெடுக்குநர் என்று பாடங்கொண்டு, வார்த்தை சொல்லப்புகுகின்றவர் என்றுரைப்பர் அரும்பதவுரை யாசிரியர். காவியங்கண்ணார் உரைத்த கட்டுரையாகிய கிளவியும் எனக் கூட்டுக. கிளவியும் பூசலும் வியரும் புலவியா லுண்டாயவை. தீருஞ் செவ்வியென ஒரு சொல் வருவித்துரைக்க, செழுங்குடிச் செல்வர் - அரசரல்லா ஏனையோர். வண்டு மூசுதலும் மாலை கொண்டு மயக்கத்தாற் பிறிதிடங் கடிதலும் 1"ஒருத்தி, கணங் கொண்டவை மூசக் கையாற்றான் பூண்ட, மணங்கமழ் கோதை பரிவுகொண்டோச்சி" எனவும், "ஒருத்தி, யிறந்த களியானிதழ்மறைந்த கண்ணள், பறந்தவை மூசக் கடிவாள் கடியும், இடந்தேற்றாள் சோர்ந்தனள் கை" எனவும் கலித்தொகையுட் கூறப்படுதல் ஈண்டறிந் தின் புறற்பாலது. 146-147. சுடுமண் ஏறா - செங்கல் தலையில் ஏறப்படாத, வடு நீங்கு சிறப்பின் - குடிப்பழி நீங்கிய சிறப்பினையுடைய, முடி அரசு ஒடுங்கும் கடிமனை வாழ்க்கை - முடிசூடிய அரசரும் பிற ரறியாது தங்கியிருத்தற்கேற்ற விளக்கமுற்ற மனையில் வாழ் தலையுடைய; பதியிலாரிற் குடிக்குற்றப்பட்டாரை ஏழு செங்கற் சுமத்தி ஊரைச் சுற்றிவரச் செய்து புறத்து விடுதல் மரபாகலின், அங்ஙனம் குற்றப்படாதவ ரென்பார் "சுடும ணேறா வடுநீங்கு சிறப்பின்" என்றார் ; இதனை, 1"மற்றவன் றன்னால் மணிமே கலைதனைப், பொற்றேர்க் கொண்டு போதே னாகிற், சுடும ணேற்றி யாங்குஞ்சூழ் போகி, வடு வொடு வாழு மடந்தையர் தம்மோ, டனையே னாகி யரங்கக் கூத்தியர் மனையகம் புகாஅ மரபினள்" என, மணிமேகலையிற் சித்திராபதி வஞ் சினங் கூறுதலானு மறிக; இனி, ஓடுவேயாது பொற்றகடு வேய்ந்த மனை யென்றலுமாம். முடியர சொடுங்கும் என்றது மனையின் பெருமை கூறியபடி. 148-151. வேத்தியல் பொதுவியல் என இரு திறத்து மாத் திரை அறிந்து - வேத்தியலும் பொதுவியலுமாகிய இருவகைக் கூத்தின் இயல்பினையறிந்து, மயங்கா மரபின் ஆடலும்-அவை மயங்காத முறைமையானே ஆடும் ஆடலும், வரியும்-பாடலும், பாணியும் - தாளங்களும், தூக்கும் - இத் தாளங்களின் வழி வரும் எழுவகைத் தூக்குக்களும், கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து- இவற்றுடன் கூடியிசைக்கும் குயிலுவக் கருவிகளும் உணர்ந்து; வேத்தியல் - அரசர்க்காடுவது ; பொதுவியல் - ஏனோர்க்காடுவது: இவை வசைக்கூத்தின் வகையென்ப. ஆடல் முதலியவற்றினியல்பினை அரங்கேற்று காதையில் "ஆடலும் பாடலும் பாணியுந் தூக்கும், கூடிய நெறியின கொளுத்துங் காலை" என வருவதன் உரை முதலியவற்றானறிக. குயிலுவக் கருவி - தோற்கருவி துளைக் கருவி நரப்புக் கருவி யென்பன ; மத்தளம் தண்ணுமை இடக்கை சல்லிகை யென்னும் உத்தமத் தோற்கருவி நான்கு மென்பாருமுளர். 152-154. நால்வகை மரபின் அவினயக் களத்தினும்-நால்வகை முறைமையினையுடைய அவினய நிலத்தினும், எழுவகை நிலத்தினும் - குரல் முதலாய ஏழ் நிலத்தினும், எய்திய விரிக்கும் பொருந்திய ஆடல் பாடல்களைப் பரப்பும், மலைப்பருஞ் சிறப்பின் தலைக்கோல் அரிவையும் - மாறுபடுத்தற்கரிய சிறப்பினையுடைய தலைக்கோற் பட்ட மெய்திய அரிவையும்; அவினய நிலம் நான்காவன ; நிற்றல் இயங்கல் இருத்தல் கிடத்தல் என்பன. தலைக்கோல் இயல்பினை 2அரங்கேற்று காதையானறிக. 155. வாரம் பாடும் தோரிய மடந்தையும் - வாரப்பாட்டினைப் பாடும் தோரிய மடந்தையும் ; தோரிய மடந்தை - ஆடி முதிர்ந்த பின்பு பாடன் மகளாய் ஆடன் மகளிர் காலுக்கு ஒற்றறுத்துப் பாடுங்கால் இடத்தூண் சேர்ந்தியலுமவள்; 1"இந்நெறி வகையா லிடத்தூண் சேர்ந்த. தொன்னெறி யியற்கைத் தோரிய மகளிரும்" என்பதன் உரை காண்க. 156. தலைப் பாட்டுக் கூத்தியும் - தலைப்பாட்டைப் பாடுங் கூத்தியும், இடைப் பாட்டுக் கூத்தியும் - இடைப்பாட்டைப் பாடுங் கூத்தியும் என்னும்; தலைப்பாட்டு உகம் எனவும், இடைப்பாட்டு ஒளகம் எனவும் படுமென்பர். 157-160. நால்வேறு வகையின் நயத்தகு மரபின் - நால்வகை யோடுங் கூடி யாவரும் விரும்பத்தக்க முறைமையினால், எட்டுக் கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு - ஆயிரத்தெட்டு என்னும் எண்ணினையுடைய கழஞ்சினை, முட்டா வைகல் முறைமையின் வழா - நாடோறும் முட்டாது பெறும் முறைமையினின்றும் வழுவாத, தாக்கணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு ஆங்கு - தீண்டி வருத்தும் அணங்கு போல்வாருடைய கண்ணாகிய வலையிலகப்பட்டு; எட்டினைக் கடையில் நிறுத்த ஆயிரம் - ஆயிரத்தெட்டு; ஆயிரத்து எண் கழஞ்சு ; ஆயிரமாகிய எண்ணினையுடைய கழஞ்சு; ஆயிரக் கழஞ்சு என்பதூஉம் பாடம் ; ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன் பெறுதலை, 2"விதிமுறைக் கொள்கையி னாயிரத் தெண் கழஞ் சொருமுறையாகப் பெற்றனள்" என்பதனானும் அறிக. ஆங்கு, அசை; பட்ட அப்பொழுதே யென்றுமாம். 161-167. அரும்பெறல் அறிவும் பெரும் பிறிதாக - பெறுதற் கரிய தமதறிவும் கெட்டொழிய, தவத்தோர் ஆயினும் - தவ நெறியில் முயல்வோராயினும், தகைமலர் வண்டின் - அழகிய மலர்தோறுஞ் சென்று அவற்றின் தேனைப் பருகும் வண்டு போல, நகைப்பதம் பார்க்கும் இளையோர் ஆயினும் - அவர் காமக் குறிப்பு நிகழ நகைக்கும் நகையின் செவ்வி பார்த்துப் புதுவோரைப் புணரும் காமுகராயினும், காமவிருந்தின் மடவோர் ஆயினும் - காமவின்பத்தை முன்பு நுகர்ந்தறியாத புதியராயினும், ஏம வைகல் இன் துயில் வதியும் - நாடோறும் புணர்ச்சியில் மயங்கி இனிய துயிலிலே கிடக்கும், பண்ணும் கிளையும் பழித்த தீஞ்சொல் - பண்ணினையும் கிளியினையும் பழித்த இனிய சொல்லையுடைய. எண்ணெண் கலையோர் இரு பெரு வீதியும் - தமக்கு வகுக்கப்பட்ட அறுபத்து நான்கு கலைகளை வல்ல பதியிலாருடைய இருவகைப்பட்ட வீதிகளும்; பெரும் பிறிதாதல் - செயலற்றொழிதல். வண்டாகிய உவமத் தால் அது முன் நுகர்ந்த மலரைத் துறந்து செல்லுதல் போல் இளையோர் முன்பு நுகர்ந்த மகளிரைத் துறந்து செல்லுதலுங் கொள்க. ஏமம் - மயக்கம், கிளை - கிள்ளை. எண்ணெண் கலை - யாழ்வாசினை முதலிய அறுபத்து நான்கு கலைகள் ; நாடகக் கணிகையர்க்கு இவை உரிய வென்பது, 1"எண்ணாண் கிரட்டி யிருங்கலை பயின்ற, பண்ணியன் மடந்தையர் பயங்கெழு வீதி" எனப் பின்னரும் கூறப்படுகின் றது; 2"யாழ்முத லாக அறுபத் தொருநான், கேரிள மகளிர்க் கியற்கையென் றெண்ணிக், கலையுற வகுத்த காமக் கேள்வி" என்றார் பிறரும் இருபெருவீதி - சிறுதனம் பெருந்தனம் பெறுவார் வீதி யென்பார். இனி, பண்ணும் கிளையும் பழித்த என்பதற்குப் பண்களையும் அவற்றின் திறங்களையும் பழித்த என்றலுமாம். 168-179. வையமும் - கொல்லாப் பண்டியும், பாண்டிலும் - இரண்டுருளையுடைய சகடமும், மணித் தேர்க் கொடிஞ்சியும் - அழகிய தேர் மொட்டும், மெய் புகு கவசமும் - மெய்புகுதற் கிடமாகிய கவசமும், வீழ்மணித் தோட்டியும் - விரும்பப்படும் மணிகள் பதித்த அங்குசமும், அதள் புனை அரணமும். - தோலாற் செய்யப்பட்ட கைத்தளமும், அரியா யோகமும் - அரைப்பட்டி கையும், வளைதரு குழியமும் - வளைதடியும், வால் வெண்கவரியும் - மிகவெள்ளிய சாமரையும், ஏனப் படமும் - பன்றிமுகக் கடகும், கிடுகின்படமும் - சிறுகடகும், கானப்படமும் - காடெழுதின கடகும், காழ் ஊன்று கடிகையும் - குத்துக் கோல்களும், செம்பிற் செய்நவும் - செம்பாற் செய்தனவும், கஞ்சத் தொழி லவும் - வெண்கலத்தாற் செய்தனவும், வம்பின் முடிநவும் - கயிற்றால் முடிவனவும், மாலையின் புனைநவும் - கிடையால் மாலையாகப் புனைவனவும், வேதினத் துப்பவும் - ஈர்வாள் முதலிய கருவிகளும், கோடு கடை தொழிலவும் - தந்தத்தைக் கடைந்து செய்த தொழிலை யுடையவைகளும், புகையவும் - வாசப் புகைக்கு உறுப்பாயுள்ளனவும், சாந்தவும் - மயிர்ச்சாந்துக்கு உறுப்பாயுள்ளனவும், பூவிற் புனைநவும் - பூவாற் புனையப்படும் மாலை களும் ஆகிய, வகை தெரிவு அறியா - வேறுபாடு தெரிதற்கரிய, வளம் தலைமயங்கிய - இவ் வளங்கள் கலந்து கிடக்கின்ற, அரசு விழை திருவின் அங்காடி வீதியும் - அரசரும் காணவிரும்பும் செல்வத்தையுடைய அங்காடித் தெருவும் ; அரியா யோகம் - பிணியைக் கெடுக்கும் மருந்து என்றும், குழியம் - வாசவுருண்டை யென்றும், கிடுகின்படம் - தோற்கடகு என்றும், கோடுகடைதொழில் - ஆனைக்கோடு முதலியவற்றைக் கடை யும் தொழிற்குரிய கருவிகள் என்றும் கூறுவாருமுளர். வால்வெண்: ஒரு பொருட் பன்மொழி. ஏனப்படம் முதலிய மூன்றும் கேடக வகைகள். வம்பின் முடிந - கயிற்றினாற் புதுமையுற முடியப்படுவன ; அல்லிக்கயிறு, குசைக்கயிறு முதலியன. வேதினம்-ஈர்வாள். துப்பு - கருவி. புகைய - நேர்கட்டி செந்தேன் நிரியாசம் பச்சிலை ஆரம் என்னும் புகையுறுப்புக்கள், சாந்த - மெய்யிற்பூசும் சாந்தின் உறுப்புக்களுமாம். 180-183. காகபாதமும் களங்கமும் விந்துவும் ஏகையும் நீங்கி - குற்றம் பன்னிரண்டனுள் மிகவும் தீயனவாகிய காகபாதம் களங்கம் விந்து இரேகை யென்னும் நான்கும் நீங்கி, இயல்பிற் குன்றா - குணங்களிற் குன்றாதனவாகி, நூலவர் நொடிந்த - நூலோராற் கூறப்பட்ட, நுழை நுண்கோடி - மிக்க நுண்மையுடைய கோடியினையும், நால்வகை வருணத்து - நால்வகை நிறத்தினையும், நலம் கேழ் ஒளியவும் - நன்மை பொருந்திய ஒளியையும் உடைய வயிரச் சாதியும் ; விந்து- புள்ளி. ஏகை - இரேகை யென்பதன் சிதைவு. நூலவர் நொடிந்த என்பதனை எல்லாவற்றொடுங் கூட்டுக. நுழைநுண் - மிகக்கூர்த்த ; ஒரு பொருளிரு சொல். ஒளி - இந்திரவிற் போலும் ஒளியென்பர். குற்றம் முதலியவற்றைப் பின்வரும் பழைய நூற்பாக்களானறிக. "சரைமலங் கீற்றுச் சப்படி பிளத்தல், துளைகரி விந்து காக பாதம், இருத்துக் கோடிக ளிலாதன முரிதல், தாரை மழுங்கல் தன்னோடு, ஈராறும் வயிரத் திழிபென மொழிப," "பலகை யெட்டுங் கோண மாறும், இலகிய தாரையுஞ் சுத்தியுந் தராசமும், ஐந்துங் குணமென் றறைந்தனர் புலவர், இந்திர சாபத் திகலொளி பெறினே," "காக பாதம் நாகங் கொல்லும்," "மலம்பிரி யாதது நிலந்தரு கிளைகெடும்," "விந்து சிந்தையிற் சந்தா பந்தரும்," "கீற்று வரலினை யேற்றவர் மாய்வர்." 184-185. ஏகையும் மாலையும் இருளொடு துறந்த - கீற்றும் தாருமாகிய குற்றங்களை இருளென்னும் குற்றத்தோடு நீக்கின, பாசார் மேனி - பசுமை நிறைந்த மெய்யையுடைய, பசுங் கதிர் ஒளியவும் - இளங்கதிரொளி பரந்த மரகதச் சாதியும் : 184-185. ஏகை - இரேகை ; கீற்று. இருள் - கருகல். மரகதக் குற்றம் எட்டனுள் இவை மூன்றும் மிக்க குற்றமென்க. குற்றம் எட்டினையும், "கருகுதல் வெள்ளை கன்மணல் கீற்றுப், பொரிவு தராச மிறுகு தன் மரகதத், தெண்ணிய குற்ற மிவையென மொழிப" என்பதனானறிக. இனி, மரகதத்தின் குணமும் எட்டென்ப; அவற்றை, "நெய்த்தல்கிளி மயிற்கழுத் தொத்தல்பைம் பயிரிற், பசுத்தல் பொன்மை தன்னுடன் பசுத்தல், பத்தி பாய்தல் பொன்வண் டின் வயி, றொத்துத் தெளிதலொ டெட்டுங் குணமே" என்பதனானறிக. 186-187. பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும் விதிமுறை பிழையா விளங்கிய சாதியும் - நூல்களில் விதித்த முறையிற் பிறழாமல் விளங்கிய பதுமம் நீலம் விந்தம் படிதம் என்னும் நால்வகைச் சாதி மாணிக்க வருக்கமும்; விதிமுறை பிழையா எனவே, பிறப்பிடம், வருணம், பெயர் குணம், குற்றம், நிறம், விலை, பத்தி என்னுமிவையும், பிறவும் அடங்கின; என்னை? "மாணிக்கத்தியல் வகுக்குங் காலைச், சமனொளி சூழ்ந்த வொருநான் கிடமும், நால்வகை வருணமும் நவின்றவிப் பெயரும், பன்னிரு குணமும் பதினறு குற்றமும், இருபத் தெண்வகை இலங்கிய நிறமும், மருவிய விலையும் பத்தி பாய்தலும், இவையென மொழிப வியல்புணர்ந் தோரே" என்றாராகலின். இவற்றுள், பதுமம் - பதுமராகம் எனவும் சாதுரங்கம் எனவும் படும். நீலம் - நீல கந்தி எனவும் சௌகந்தி எனவும் படும். விந்தம் - குருவிந்தம் எனவும் இரத்தவிந்து எனவும் படும். படிதம் - கோவாங்கு எனப்படும். இவற்றின் நிறங்களை, "தாமரை கழுநீர் சாதகப் புட்கண், கோப மின்மினி கொடுங்கதிர் விளக்கு, மாதுளைப் பூவிதை வன்னி யீரைந்தும், ஓதுசா துரங்க வொளியா கும்மே," திலக முலோத்தி ரஞ் செம்பருத் திப்பூக், கவிர்மலர் குன்றி முயலுதி ரம்மே, சிந்துரங்குக்கிற் கண்ணென வெட்டும், எண்ணிய குருவிந்த மன்னிய நிறமே," "கோகிலக்கண் செம்பஞ்சு கொய்ம்மலர்ப் பலாசம், அசோக பல்லவ மணிமலர்க் குவளை, இலவத் தலர்க ளென்றாறு குணமும், சௌகந் திக்குச் சாற்றிய நிறனே," "கோவைநற் செங்கல் குராமலர் மஞ்சளெனக், கூறிய நான்குங் கோவாங்கு நிறனே" என்பவற்றானறிக. 188. பூச உருவின் பொலம் தெளித்தனையவும் - பூசமீனின் உருவினையுடைய பொன்னைக் களங்கமறத் தெளிவித்தாலொத்த புருடராக வருக்கமும்; பூசையுருவிற் பொலந்தேய்த்தனையவும் என்று பாடங்கொண்டு, பூனைக்கண் போன்று பொன்னைத் தேய்த்தாற் போன்றவை புருடராகம் என்பர் அரும்பத வுரையாசியர். 189. தீது அறு கதிர் ஒளித் தெண்மட்டு உருவவும் - குற்ற மற்ற பரிதியினொளியும் தெளிந்த தேன்றுளியின் நிறமும் உடைய வயிடூரிய வருக்கமும் ; இதனைக் கோமேதகம் என்பர் அரும்பத வுரையாசிரியர். 190. இருள் தெளித்தனையவும் - இருளைத் தெளியவைத்தா லொத்த நீலமணி வருக்கமும்; "நீலத் தியல்பு நிறுக்குங் காலை, நால்வகை வருணமும் நண்ணுமா கரமும், குணம்பதி னொன்றும் குறையிரு நான்கும், அணிவோர் செயலு மறிந்திசி னோரே" என்பதனால், நீலத்திற்குச் சாதி நான்கும், குணம் பதினொன்றும், குற்றம் எட்டுமெனக் கொள்க. 190. இருவேறு உருவவும் - மஞ்சளும் சிவப்பும் கலந்தா லொத்த கோமேதக வருக்கமும் ; இருவேறுரு வினையுடையன வயிடூரியம் என்பர் அரும்பதவுரை யாசிரியர். 191-192. ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் - ஒன்று பட்ட பிறப்பினையும் வேறுபட்ட ஐந்து வனப்பினையுமுடைய. இலங்கு கதிர் விடூஉம் நலம்கெழு மணிகளும் - விளங்கும் ஒளிவிடா நின்ற நன்மை பொருந்திய மாணிக்கம் புருடராகம் வயிடூரியம் நீலம் கோமேதகம் என்னும் மணிகளும் ; சாதியும் அனையவும் உருவமும் அனையவும் இருவேறுருவமும் ஆகிய ஐவேறுவனப்பின் மணிகளும் என்க. 193-196. காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும் தோற்றிய குற்றம் துகள்அறத் துணிந்தவும் - காற்று மண் கல் நீர் என்பவற்றாலுண்டாய குற்றம் சிறிதும் இன்மையாலே தெளிந்த ஒளியுடையனவும், சந்திரகுருவே அங்காரகன் என வந்த நீர்மைய வட்டத் தொகுதியும் - வெள்ளியும் செவ்வாயும் போல வெண்ணீர்மை செந்நீர்மையுடையனவும் திரட்சியுடை யனவுமாகிய முத்து வருக்கமும் ; காற்றேறு மண்ணேறு கல்லேறு நீர்நிலையென்பன குற்றங்கள் பலவற்றுள்ளும் மிக்கன எனவும், வெள்ளி செவ்வாய் நீர்மை குணங்கள் பலவற்றுள்ளும் மிக்கன எனவுங் கொள்க. சந்திரகுரு - வெள்ளி ; வியாழன் என்றல் புராணத்திற்கொத்தது. அங்காரகன் செவ்வாய். வட்டத்தொகுதி - ஆணிமுத்தென்பர் அரும்பத வுரையாசிரியர். 197-198. கருப்பத் துளையவும் - நடுவே துளைபட்டனவும், கல்லிடை முடங்கலும் - கல்லிடுக்கிற் புக்கு வளைவுற்றனவும், திருக்கும் நீங்கிய - திருகுதலுற்றனவும் என்னும் இக் குற்றங்கள் நீங்கிய, செங்கொடி வல்லியும் -சிவந்த கொடிப்பவள வருக்கமும்; கல்லுடை முடங்கல் எனப் பாடங்கொண்டு, கல்லை உள்ளே யுடைய வளைவு என்பர் அரும்பத வுரையாசிரியர். பிறவும் குற்ற முளவாயினும் இவை மிக்க குற்ற மென்க. இனி, குணம் மிக்குக் குற்றங்கள் நீங்கியன சிந்துரமும் ஈச்சங்காயும் முசுமுசுக்கைக் கனியும் தூதுவழுதுணம் பழமும் போன்ற நிறமும் உருட்சியும் உடையன வென்பர். இனி, முற்கூறியவற்றுள் மாணிக்கத்தின் இயல்பனைத்தும், 1"கதிர்நிறை" என்னும் கல்லாடச் செய்யுளில். "குடுமிச் சேகரச் சமனொளி சூழ்ந்த, நிறைதரு நான்கி னிகழ்ந்தன குறியும், குருவிந் தஞ்சௌ கந்திகோ வாங்கு, சாதுரங் கம்மெனுஞ் சாதிக ணான்கும், தேக்கி னெருப்பிற் சேர்க்கினங் கையில், தூக்கினற் றகட்டிற் சுடர் வாய் வெயிலில், குச்சையின் மத்தகக் குறியினோ ரத்தில், நெய்த்துப் பார்வையி னேர்ந்துசிவந் தாங்கு, ஒத்த நற்குண முடையபன் னிரண்டும், கருகிநொய் தாதல் காற்று வெகுளி, திருகன் முரணே செம்ம ணிறுகல், மத்தகக் குழிவு காச மிலைச்சுமி, வெச்சம் பொரிவு புகைதல் புடாயம், சந்தைநெய்ப் பிலியெனத் தகுபதி னாறு, முந்திய நூலின் மொழிந்தன குற்றமும், சாதகப் புட்கண் டாமரை கழுநீர், கோப மின்மினி கொடுங்கதிர் விளக்கு, வன்னி மாதுளம் பூவிதை யென்னப், பன்னுசா துரங்க வொளிக்குணம் பத்தும், செம்பஞ் சரத்தந் திலக முலோத்திரம், முயலின் சோரி சிந்துரங் குன்றி, கவிரல ரென்னக் கவர்நிற மெட்டும், குருவிந் தத்திற் குறித்தன நிறமும், அசோகப் பல்லவ மலரிசெம் பஞ்சு, கோகிலக் கண்ணீ ளிலவலர் செம் பெனத், தருசௌ கந்தி தன்னிற மாறும், செங்கல் குராமலர் மஞ்சள் கோவை, குங்கும மஞ்சிற் கோவாங்கு நிறமும், திட்டை யேறு சிவந்த விதாயம், ஒக்கல் புற்றாங் குருதி தொழுதினை, மணிகோ கனகங்கற்பம் பாடி, மாங்கிச கந்தி வளர்காஞ் சுண்டையென், றாங்கொரு பதின்மூன் றடைந்த குற்றமும், இவையெனக் கூறிய நிறையருட்கடவுள்" எனக் கூறப்பட்டுள்ளமை காண்க. இனி, வலன் என்னும் அவுணன் வேள்விப் பசுவாக இந்திரன் அதனைச் செகுத்து வேள்வி செய்த பொழுது அதன் குருதி முதலியவற்றினின்று மாணிக்கம் முதலிய நவமணிகள் பிறந்தனவென்று புராணங் கூறும்; 1" அத்தகை யாவின் சோரி மாணிக்க மாம்பல் முத்தம் பித்தைவை டூய மென்பு வச்சிரம் பித்தம் பச்சை நெய்த்தவெண் ணிணங்கோ மேதந் தசைதுகிர் நெடுங்க ணீலம் எய்த்தவை புருட ராக மிவைநவ மணியின் றோற்றம்" என்பது காண்க. மற்றும் நவமணிகளின் இயல்பனைத்தும் திரு வாலவா யுடையார் திருவிளையாடற் புராணத்து மாணிக்கம் விற்ற திருவிளையாடலிலும், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்து மாணிக்கம் விற்ற படலத்திலும் விரிவாகப் கூறப்பட்டுள்ளன; ஆண்டு காண்க. 199-200. வகை தெரி மாக்கள் தொகை பெற்று ஓங்கி - இவ் வொன்பது வகைப்பட்ட மணிகளின் பிறப்பு முதல் சிறப்பீறாய இயல்பனைத்தும் தெரியவல்ல வணிகர் தொகுதலால் உயர்ச்சியுற்று, பகை தெறல் அறியாப் பயங்கெழு வீதியும் - பகைவர் வருத்துதலை யறியாத பயன் மிக்க இரத்தினக் கடைத் தெருவும்; 201-204. சாதரூபம் கிளிச்சிறை ஆடகம் சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையின் பொலம் தெரிமாக்கள் -சாதரூபமும் கிளிச்சிறையும் ஆடகமும் சாம்பூநதமும் என்னும் நான்கு சாதியாக ஓங்கிய இயல்பினையுடைய பொன்னின் வேற்றுமையைப் பகுத்தறியும் பொன் வாணிகர், கலங்கு, அஞர் ஒழித்து - கொள்வோர் எவ்விடத்து எப்பொன் உளதென்று ஐயுறுந் துன்பத்தை ஒழிப்ப, ஆங்கு - அவ்விடங்களில், இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும் - இவ்விடத்து இப் பொன் உளதென விளக்கக் கொடி யெடுக்கும் நன்மை மிக்க பொற்கடைத் தெருவும்; ஒழித்து- ஒழிப்பவெனத் திரிக்க. நால்வகைப் பொன்னுள் இறுதிக் கண்ணது 2"பொன்னுக்குச் சாம்புனதம்" என உயர்த்துக் கூறப்படும். 205-207. நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும் பால் வகை தெரியா - நுண்ணிய பருத்தி நூலானும் எலிமயிரானும் பட்டு நூலானும் தத்தம் பகுதி தோன்ற நெய்யப்பட்டு, பன்னூறு அடுக்கத்து நறுமடி செறிந்த அறுவை வீதியும் - ஒவ்வொன்று நூறாக அடுக்கப்பட்ட பல நூறு அடுக்குகளை யுடைய நறிய புடவைகள் நெருங்கியுள்ள புடவைக் கடைத் தெருவும் ; நூற்பட்டு - பட்டுநூல். மேல், 1''பட்டினு மயிரினும், பருத்தி நூலினும், கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும்" என்புழி உரைத்தமை காண்க. மணமூட்டுதலின், நறுமடி யென்றார். 208-211. நிறைக்கோல் துலாத்தர் - நிறுக்கும் துலாக்கோலை யுடையராயும், பறைக்கண் பராரையர் - பரிய அரையையும் இரும்பால் வாய் மாட்டாகக் கட்டின கண்ணையுமுடைய பறையினையுடையராயும், அம்பண அளவையர் - அளக்கும் மரக்காலையுடையராயும், எங்கணும் திரிதர - தரகு செய்வார் நின்றுழி நில்லாது எவ்விடத்தும் திரியும்படி, காலம் அன்றியும் - எக்காலமும், கருங்கறி மூடையொடு - பெரிய மிளகு பொதியுடனே, கூலம் குவித்த கூல வீதியும் - கூலங்களும் குவித்த கூலக் கடைத்தெருவும்; துலாக்கோல் எனவும், பராரைக்கட் பறை எனவும் மாறுக. பறை - தலை மட்டமாக அளக்கும் ஓர் முகத்தலளவைக் கருவி. அம் பணம் - மரக்கால். மூடையொடு என்னும் உடனிகழ்ச்சியால் பாக்கு முதலிய பொதிகள் கொள்ளலுமாம். கூலமாவன; "நெல்லுப் புல்லு வரகுதினை சாமை, இறுங்கு தோரை யிராகியெண் கூலம்" எனவும், "எள்ளுக் கொள்ளுப் பயறுழுந்தவரை, கடலை துவரை மொச்சை யென்றாங், குடனிவை முதிரைக் கூலத் துணவே" எனவும் ஓதப்பட்ட ஈரெண் வகைப்பொருள்கள். 212-218. பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் - பகுதி வேறு தெரிந்த அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்பார் இருக்கும் நால் வேறாகிய தெருக்களும், அந்தியும் - முச்சந்தியும், சதுக்கமும் - நாற்சந்தியும், ஆவண வீதியும் - கோயிற் கடைத் தெருவும், மன்றமும் - மன்றுகளும், கவலையும் - பல நெறிகள் கூடின முடுக்குகளும், மறுகும் - குறுந்தெருக்களும், திரிந்து - உலாவி, விசும்பு அகடு திருகிய வெங்கதிர் நுழையா - வானின் நடுவிலே வெம்மை முறுகியோடும் ஞாயிற்றின் கதிர்கள் நுழையப்படாத, பசுங் கொடிப் படாகைப் பந்தர் நீழல் - புதிய சிறு கொடியும் பெருங்கொடியுமென்னும் இவற்றின் பந்தர் நிழலிலே, காவலன் பேரூர் கண்டு மகிழ்வு எய்தி - பாண்டி மன்னனது பெரிய நகரினைக் கண்டு மகிழ்ச்சியுற்று, கோவலன் பெயர்ந்தனன் கொடிமதிற் புறத்தென் - கோவலன் கொடிகளை யுடைய மதிற்புறத்து மீண்டு போந்தான் என்க. கண்டு பந்தர் நீழற் றிரிந்து மகிழ்வெய்தி எனக் கூட்டுக. மகிழ்ச்சியெய்துதலாலே தான் கருதிவந்த பொருந்துழியறிதலை மறந்துபெயர்ந்தனன் என்க. புள்ளெழுந்தார்ப்ப மண்டிலம் துயிலெடுப்ப இயம்பச் சென்று ஏத்திச் சிறுமையுற்றேன் என்றலும், கவுந்தியடிகள், அனையையு மல்லை ; பிரியா வாழ்க்கை பெற்றனையன்றே ; வருந்தாதேகிப் போதீங் கென்றலும் மருங்கிற்போகி அயிராது புக்கு மகிழ்தரு வீதியும் இரு பெரு வீதியும் அங்காடி வீதியும் பயங்கெழு வீதியும் நலங்கிளர் வீதியும் அறுவை வீதியும் கூலவீதியும் நால்வேறு தெருவும் அந்தியும் சதுக்கமும் ஆவணவீதியும் மன்றமும் கவலையும் மறுகும் ஆகிய இவ்விடங்களில் பந்தர் நீழலில் திரிந்து காவலன் பேரூரைக் கோவலன் கண்டு மகிழ்வெய்திப் பெயர்ந்தான் என வினைமுடிக்க. இது நிலைமண்டில வாசிரியப்பா. ஊர்காண் காதை முற்றிற்று. 15. அடைக்கலக் காதை (புறஞ்சேரியிற் புக்க கோவலன் கவுந்தியடிகட்கு மதுரையின் சிறப்பையும் பாண்டியன் கொற்றத்தையும் கூறும்பொழுது, தலைச் செங்கானத்து மறையவனாகிய மாடலனென்போன் குமரியாடி மீண்டு வருபவன் வழிநடை வருத்தம் நீங்கக் கவுந்தியிருக்குமிடத்தை அடைந்தான். கோவலன் அவனைக் கண்டு வணங்க, அவன் கோவலனை நோக்கி, மாதவி மகட்கு மணிமேகலை யென்று பெயரிட்டு வாழ்த்தித் தானம் கொடுக்கும்பொழுது தானம் பெறுதற்கு வந்த முதுமறையோனை மதயானை பற்ற அதன் கையினின்றும் அவனை விடுவித்து, அதன் கையகத்தே புக்குக் கோட்டிடையொடுங்கிப் பிடரில் ஏறி அதனை அடக்கிய கருணை மறவனே! தான் வளர்த்ததும் தன் மகவின் உயிரைக் காத்ததுமாகிய கீரியைப் பிறழ உணர்ந்து கொன்ற குற்றத்திற்காகக் கணவனால் துறக்கப்பட்ட பார்ப்பனியின் பாவம் நீங்கத் தானஞ்செய்து, கணவனை அவளுடன் கூட்டி, அவர்கள் வாழ்க்கைக்கு மிக்க செல்வத்தையும் கொடுத்த செல்லாச் செல்வனே! பத்தினி ஒருத்தி அடாப்பழி யெய்தப் பொய்க்கரி கூறிச் சதுக்கப் பூதத்தாற் கொல்லப்பட்டவனுடைய தாயின் துயர் நீங்க அவன் சுற்றத்தார்க்கும் கிளைகட்கும் பொருளீந்து பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மலே! யானறிய நீ இம்மையிற் செய்தன வெல்லாம் நல்வினையாகவும் இம் மாணிக்கக் கொழுந்துடன் `நீ இங்ஙனம் போந்தது உம்மைப் பயனோ?' என வினவ, கோவலன் தான் கண்ட தீக்கனாவைக் கூறி, அதன் பயனாய துன்பம் விரைவில் உண்டாகுமென்றுரைக்க, மறையவனும் கவுந்தியும் இவ்விடம் துறந்தோர்க்கே உரியதாகலின், நீ மதுரையிற் புகுக' என்று கூறினர். அப்பொழுது அங்கு வந்த ஆயர் முதுமகளாகிய மாதிரி கவுந்தியடிகளைக் கண்டு வணங்கினாள். கொடுமையில்லாத வாழ்க்கையையுடைய கோவலர் குடியின் முதுமகளும் செவ்வியளுமாகிய இவளிடத்துக் கண்ணகியை இருத்துதல் குற்றமின்றென எண்ணி, கண்ணகியின் உயர்வையும் கற்பின் சிறப்பையுங் கூறி, தவத்தினரது அடைக்கலத்தைப் பாதுகாத்தலால் எய்தும் பெரும்பயனுக்கு ஓர் வரலாற்றையும் காட்டி, அவளை மாதரிபால் ஒப்புவிக்க, அவள் கவுந்தியை ஏத்தி நங்கையுடன் தன் மனையை அடைந்தாள்.) நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி கடம்பூண் டுருட்டுங் கௌரியர் பெருஞ்சீர்க் கோலின் செம்மையும் குடையின் தண்மையும் வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப் 5 பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் 10 மாதவத் தாட்டிக்குக் கோவலன் கூறுழித் தாழ்நீர் வேலித் தலைச்செங் கானத்து நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை மாமறை முதல்வன் மாடலன் என்போன் மாதவ முனிவன் மலைவலங் கொண்டு 15 குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து தமர்முதற் பெயர்வோன் தாழ்பொழி லாங்கண் வகுந்துசெல் வருத்தத்து வான்றுயர் நீங்கக் கவுந்தி இடவயிற் புகுந்தோன் தன்னைக் கோவலன் சென்று சேவடி வணங்க 20 நாவ லந்தணன் தானவின் றுரைப்போன் வேந்துறு சிறப்பின் விழுச்சீ ரெய்திய மாந்தளிர் மேனி மாதவி மடந்தை பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து வாலா மைந்நாள் நீங்கிய பின்னர் 25 மாமுது கணிகையர் மாதவி மகட்கு நாம நல்லுரை நாட்டுது மென்று தாமின் புறூஉந் தகைமொழி கேட்டாங்கு இடையிருள் யாமத் தெறி திரைப் பெருங்கடல் உடைகலப் பட்ட எங்கோன் முன்னாள் 30 புண்ணிய தானம் புரிந்தோ னாகலின் நண்ணுவழி இன்றி நாள்சில நீந்த இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் வந்தேன் அஞ்சல் மணிமே கலையான் உன்பெருந் தானத் துறுதி யொழியாது 35 துன்ப நீங்கித் துயர்க்கட லொழிகென விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென அணிமே கலையார் ஆயிரங் கணிகையர் மணிமே கலையென வாழ்த்திய ஞான்று 40 மங்கல மடந்தை மாதவி தன்னொடு செம்பொன் மாரி செங்கையிற் பொழிய ஞான நன்னெறி நல்வரம் பாயோன் தானங் கொள்ளுந் தகைமையின் வருவோன் தளர்ந்த நடையில் தண்டுகா லூன்றி 45 வளைந்த யாக்கை மறையோன் றன்னைப் பாகுகழிந் தியாங்கணும் பறைபட வரூஉம் வேக யானை வெம்மையிற் கைக்கொள ஒய்யெனத் தெழித்தாங் குயர்பிறப் பாளனைக் கையகத் தொழித்ததன் கையகம் புக்குப் 50 பொய்பொரு முடங்குகை வெண்கோட் டடங்கி மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப் பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக் கடக்களி றடக்கிய கருணை மறவ பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக 55 எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல வடதிசைப் பெயரு மாமறை யாளன் கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை வடமொழி வாசகஞ் செய்தநல் லேடு கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்கெனப் 60 பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர் மாட மறுகின் மனைதொறு மறுகிக் கருமக் கழிபலங் கொண்மி னோவெனும் அருமறை யாட்டியை அணுகக் கூஉய் யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென 65 மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக் கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன் நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு 70 ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில் தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத் தானஞ் செய்தவள் தன்றுயர் நீக்கிக் கானம் போன கணவனைக் கூட்டி ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து 75 நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ பத்தினி யொருத்தி படிற்றுரை எய்த மற்றவள் கணவற்கு வறியோன் ஒருவன் அறியாக் கரிபொய்த் தறைந்துணும் பூதத்துக் கறைகெழு பாசத்துக் கையகப் படலும் 80 பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென நன்னெடும் பூதம் நல்கா தாகி நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு 85 பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை ஒழிகநின் கருத்தென உயிர்முன் புடைப்ப அழிதரு முள்ளத் தவளொடும் போந்தவன் சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும் பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப் 90 பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல் இம்மைச் செய்தன யானறி நல்வினை உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது விருத்தகோ பால நீயென வினவக் 95 கோவலன் கூறுமோர் குறுமகன் தன்னால் காவல் வேந்தன் கடிநகர் தன்னில் நாறைங் கூந்தல் நடுங்குதுய ரெய்தக் கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும் அணித்தகு புரிகுழ லாயிழை தன்னொடும் 100 பிணிப்பறுத் தோர்தம் பெற்றி யெய்தவும் மாமலர் வாளி வறுநிலத் தெறிந்து காமக் கடவுள் கையற் றேங்க அணிதிகழ் போதி அறவோன் றன்முன் மணிமே கலையை மாதவி யளிப்பவும் 105 நனவு போல நள்ளிருள் யாமத்துக் கனவு கண்டேன் கடிதீங் குறுமென அறத்துறை மாக்கட் கல்ல திந்தப் புறச்சிறை யிருக்கை பொருந்தா தாகலின் அரைசர் பின்னோர் அகநகர் மருங்கினின் 110 உரையிற் கொள்வரிங் கொழிகநின் இருப்புக் காதலி தன்னொடு கதிர்செல் வதன்முன் மாட மதுரை மாநகர் புகுகென மாதவத் தாட்டியும் மாமறை முதல்வனும் கோவலன் றனக்குக் கூறுங் காலை 115 அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப் பான்மடை கொடுத்துப பண்பிற் பெயர்வோள் ஆயர் முதுமகள் மாதரி என்போள் காவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும் 120 ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை தீதிலள் முதுமகள் செவ்வியள் அளியள் மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு ஏதம் இன்றென எண்ணின ளாகி 125 மாதரி கேளிம் மடந்தைதன் கணவன் தாதையைக் கேட்கில் தன்குல வாணர் அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர் உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகு மளவும் 130 இடைக்குல மடந்தைக் கடைக்கலந் தந்தேன் மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச் செங்கயல் நெடுங்கண் அஞ்சனந் தீட்டித் தேமென் கூந்தற் சின்மலர் பெய்து தூமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின் 135 ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத் தாயும் நீயே யாகித் தாங்கிங்கு என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு 140 நடுங்குதுய ரெய்தி நாப்புலர வாடித் தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி இன்துணை மகளிர்க் கின்றி யமையாக் கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால் 145 வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது நீணில வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்தநா டென்னும் அத்தகு நல்லுரை அறியா யோநீ தவத்தோர் அடைக்கலம் தான்சிறி தாயினும் 150 மிகப்பே ரின்பம் தருமது கேளாய் காவிரிப் படப்பைப் பட்டினந் தன்னுள் பூவிரி பிண்டிப் பொதுநீங்கு திருநிழல் உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட இலகொளிச் சிலாதல மேலிருந் தருளித் 155 தருமஞ் சாற்றுஞ் சாரணர் தம்முன் திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன் தாரன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணாப் பலர்தொழு படிமையன் கருவிரற் குரங்கின் கையொரு பாகத்துப் 160 பெருவிறல் வானவன் வந்துநின் றோனைச் சாவக ரெல்லாம் சாரணர்த் தொழுதீங்கு யாதிவன் வரவென இறையோன் கூறும் எட்டி சாயலன் இருந்தோன் றனது பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையிலோர் 165 மாதவ முதல்வனை மனைப்பெருங் கிழத்தி ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து ஊர்ச்சிறு குரங்கொன் றொதுங்கிஉள் புக்குப் பாற்படு மாதவன் பாதம் பொருந்தி உண்டொழி மிச்சிலும் உகுத்த நீரும் 170 தண்டா வேட்கையின் தான்சிறி தருந்தி எதிர்முகம் நோக்கிய இன்பச் செவ்வியை அதிராக் கொள்கை அறிவனும் நயந்துநின் மக்களின் ஓம்பு மனைக்கிழத் தீயென மிக்கோன் கூறிய மெய்ம்மொழி ஓம்பிக் 175 காதற் குரங்கு கடைநா ளெய்தவும் தானஞ் செய்வுழி அதற்கொரு கூறு தீதறு கென்றே செய்தன ளாதலின் மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள் உத்தர கௌத்தற் கொருமக னாகி 180 உருவினும் திருவினும் உணர்வினுந் தோன்றிப் பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு எண்ணால் ஆண்டின் இறந்தபிற் பாடு விண்ணோர் வடிவம் பெற்றன னாதலின் பெற்ற செல்வப் பெரும்பய னெல்லாம் 185 தற்காத் தளித்தோள் தானச் சிறப்பெனப் பண்டைப் பிறப்பிற் குரங்கின் சிறுகை கொண்டொரு பாகத்துக் கொள்கையிற் புணர்ந்த சாயலன் மனைவி தானந் தன்னால் ஆயினன் இவ்வடிவு அறிமி னோவெனச் 190 சாவகர்க் கெல்லாம் சாற்றினன் காட்டத் தேவ குமரன் தோன்றினன் என்றலும் சாரணர் கூறிய தகைசால் நன்மொழி ஆரணங் காக அறந்தலைப் பட்டோர் அன்றப் பதியுள் அருந்தவ மாக்களும் 195 தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும் இட்ட தானத் தெட்டியும் மனைவியும் முட்டா இன்பத்து முடிவுல கெய்தினர் கேட்டனை யாயினித் தோட்டார் குழலியொடு நீட்டித் திராது நீபோ கென்றே 200 கவுந்தி கூற உவந்தன ளேத்தி வளரிள வனமுலை வாங்கமைப் பணைத்தோள் முளையிள வெண்பல் முதுக்குறை நங்கையொடு சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்துக் கன்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப 205 மறித்தோள் நவியத்து உறிக்கா வாளரொடு செறிவளை ஆய்ச்சியர் சிலர்புறஞ் சூழ மிளையுங் கிடங்கும் வளைவிற் பொறியும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும் 210 காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் 215 எழுவுஞ் சீப்பும் முழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும் ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும் வாயில் கழிந்துதன் மனைபுக் கனளால் கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்தென். உரை 1-8. நிலம் தரு திருவின் நிழல் வாய் நேமி - நிலத்திற்குப் பல செல்வத்தினையும் தருகின்ற அருள் வாய்ந்த ஆணையை, கடம் பூண்டு உருட்டும் கௌரியர் - முறைமையை மேற்கொண்டு செலுத்தும் பாண்டியர்களுடைய, பெரும் சீர்க் கோலின் செம்மையும் - பெரிய சிறப்பினையுடைய செங்கோலும், குடையின் தண்மையும் - குடையினது தண்மையும், வேலின் கொற்றமும் - வேலினுடைய வெற்றியும், விளங்கிய கொள்கை - விளங்குதற்கு இடமாகிய கோட்பாட்டினையுடைய, பதி எழுவு அறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் மா நகர் கண்டு-ஆண்டு வாழ்வோர் அவ்விடத்தினின்றும் பெயர்தலை அறியாத முறைமை மேம்பட்ட பழைய ஊராகிய மதுரை மா நகரத்தினைக் கண்டு, ஆங்கு அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பொழில் இடம் புகுந்து - அவ்விடத்து அறத்தினைப் பிறர்க்கறிவுறுத்தும் உள்ளத்தினையுடைய முனிவர்கள் நிறைந்த புறமதிற்கண் உள்ள மூதூர்ச் சோலையிடத்துப் புகுந்து ; மன்னன் குடிகளிடத்து அருளுடையன் ஆயவழி நிலத்துப் பல் வளமும் பெருகுமாகலின் ''நிலம்தரு திருவின் நிழல்" என்றார் ; நிழல் - அருள். மாற்றாரது நிலத்தைத் தரும் வெற்றியாகிய செல்வம் என்றும், ஒளி பொருந்திய நேமி யென்றும் உரைத்தலுமாம். பதி எழுவறியாமை ஆண்டுப் பல்வளமும் பெருகலான் என்க. பதி என்பது ஆகுபெயராய் ஆண்டுள்ளாரைக் குறித்து நின்றதெனலும் பொருந்தும். 9-10. தீது தீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் - குற்றம் நீங்கிய மதுரையின் சிறப்பினையும் பாண்டியனது கொற்றத்தையும், மாதவத்தாட்டிக்குக் கோவலன் கூறுழி - கவுந்தியடிகளுக்குக் கோவலன் கூறிய காலை ; தீது - பசி, பிணி, பகை; இம் மூன்றும் அருள்வாய்த்த கோலின் செம்மையானும் வேலின் கொற்றத்தானும் இலவாயின என்க. 11-13. தாழ் நீர் வேலித் தலைச்செங்கானத்து - தாழ்ந்த நீரை வேலியாகவுடைய தலைச் செங்காடு என்னும் ஊரிடத்துள்ள, நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை-நான்கு வேதங்களையும் முற்ற உணர்ந்த நன்மையை விரும்பிய கோட்பாட்டினையுடைய, மாமறை முதல்வன் மாடலன் என்போன் - மறையவர் தலைவனாகிய மாடலன் எனப்படுவோன்; தாழ்தல் - ஆழமாதல்; தங்குதல் என்றுமாம். தாழ்நீர் - கடல்; கிடங்குமாம். 14-19. மாதவ முனிவன் மலை வலங்கொண்டு-மிக்க தவத்தினை யுடைய அகத்திய முனிவனுடைய பொதிய மலையை வலங் கொண்டு, குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து - குமரியின் பெரிய துறைக்கண் முறைப்படி நீராடி, தமர்முதற் பெயர்வோன் - தம் கிளைஞர் இருக்குமிடத்திற்கு மீண்டு வருவோன், தாழ் பொழில் ஆங்கண் வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்கக் கவுந்தி இடவயின் புகுந்தோன் தன்னை - வழிச் சென்ற வருத்தத்தான் உண்டாய மிக்க துயரம் ஒழிய நிழல் படிந்த சோலையுள்ள அவ்விடத்துக் கவுந்தியடிகளிருந்த பள்ளியிடத்துப் புக்கவனை, கோவலன் சென்று சேவடி வணங்க - கோவலன் சென்று சேவடிக்கண் தொழ; குமரி - யாறு, கடலுமாம்; 1''தொடியோள் பௌவம்" என்றாராகலின். முதல் - இடம். வகுந்து - வழி. இடவயின் - இடத்தில். துயர் நீங்கப் பொழிலாங்கண் இடவயிற் புகுந்தோன் என்க. புகுந்தான் ; புகுந்தவனை என அறுத்துரைக்க. நா வல் அந்தணன் தான் நவின்று உரைப்போன் - நாவில் வல்ல அம் மாடலன் அவனை வினவித் தான் உரைக்கின்றவன் ; 20. நாவல் என்பதனைப் பிரிக்காது, நாவலந் தீவு என்றும், வெற்றி என்றும் கூறுதலுமாம். 2''நாவ லந்தண ரருமறைப் பொருளே" என்பது காண்க. தானவின்று - வினவியென்னும் பொருட்டு ; நீர் இங்ஙனம் வந்த காரணம் யாதென வினவி யென்க. 21-27. வேந்து உறு சிறப்பின் விழுச்சீர் எய்திய - அரசன் அளித்த மிக்க தலைவரிசையால் சிறந்த புகழினைப் பெற்ற, மாந்தளிர் மேனி மாதவி மடந்தை - மாந்தளிர் போலும் மேனியையுடைய மாதவியாகிய மடந்தை, பால் வாய்க் குழவி பயந்தனள் எடுத்து- நற்பகுதி வாய்த்தலையுடைய பெண் குழந்தையினைப் பெற்றெடுத்து, வாலாமை நாள் நீங்கிய பின்னர் - தூய்மையின்மையாகிய நாட்கள் கழிந்த பின்னர், மா முது கணிகையர் - ஆண்டில் முதிர்ந்த கணிகை மகளிர், மாதவி மகட்கு நாம நல் உரை நாட்டுதும் என்று - மாதவியின் புதல்விக்கு நல்ல புகழ் அமைந்த பெயரை இடுவோம் என்று, தாம் இன்பு உறூஉம் தகை மொழி கேட்டு ஆங்கு - தாங்கள் மகிழ்ச்சியுறுதற்குக் காரணமாகிய தகுதி அமைந்த சொல்லினைக்கூறக் கேட்டு அப்பொழுது; ‘வேந்துறு சிறப்பின் விழுச்சீர் எய்திய' என்றது அரசனால் தலைக்கோல் பெற்று ஆயிரத்து எண்கழஞ்சு பொன் பெற்றதனை. பெரும்புலவோர் ஒரு நிகழ்ச்சியினைக் கூறுங்கால், அந் நிகழ்ச்சியின் மேல் விளைவினையும் ஆண்டே புலப்படுத்தல் இயல்பாகலான், `பால் வாய்க்குழவி' என்றார்; பால் - பகுதி ; நல்லூழ்; பால்வாய் என்பது குழவிக்கு இயற்கையடை என்றலுமாம். வாலாமை - புனிறு தீராமை. முதுகணிகையர் - சித்திராபதி முதலியோர். முன்னர்க் குழவி என்ற பொதுமை நீங்க மகட்கு என்றார். நல்லுரை நாமம் என்க. கேட்டான் கோவலன். 28-37. (முன்நாள்) இடை இருள் யாமத்து எறிதிரைப் பெருங் கடல் - முன்னாளில் இருள் நிறைந்த நடுயாமத்தில் அலை மோதும் பெரிய கடலினிடத்து, உடைகலப்பட்ட எங்கோன்- மரக்கலம் உடையப்பட்ட எம் முன்னோன், முன்நாள் புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின் - முற்பிறப்பில் அறத்தினையும் தானத்தினையும் செய்தோனாகலான், நண்ணுவழி இன்றி நாள் சில நீந்த கரையைக் கிட்டும் இடமின்றியே சின்னாட்கள் நீந்திச் செல்ல, இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான் - ஓர் தெய்வம் தோன்றி, யான் மணிமேகலை எனப்படுவேன் இத் தீவினுள்ளாரை அசுரர் நலியாதிருத்தற் பொருட்டு இந்திரன் ஏவலால் ஈங்கு வாழுவேன் அவ் விந்திரன் ஏவலான் நின் துயர் ஒழிக்க இவண் வந்தேன் அஞ்சற்க, உன் பெருந் தானத்து உறுதி ஒழியாது - நினது பெரிய தானத்தின் பயன் நின்னைவிட்டு நீங்காது, துன்பம் நீங்கித் துயர்க்கடல் ஒழிகென - ஆகலான் கடலில் நீந்திய இத்துன் பத்தினின்றும் நீங்கித் துயர்க்கடலை ஒழிவாயாகவென்று கூறி, விஞ்சையில் பெயர்த்து விழுமம் தீர்த்த - மந்திரத்தினால் கரையை மீண்டும் அடையச் செய்து துன்பம் ஒழித்த, எம் குலதெய்வப்பெயர் ஈங்கு இடுகென - எமது குலதெய்வத்தின் பெயரை இங்கு நீவிர் இடுமின் என்று நீ சொல்ல; யாமம் - இரவு; 1'யாமமும் பகலு மறியா மையால்' என்றார் பிறரும். முன்னாள் என்பதனை உடைகலப்பட்ட என்பதனொடும், புண்ணியதானம் என்பதனொடும் கூட்டுக. புண்ணியதானம் - புண்ணியமும் தானமும். நண்ணுவழி இன்றி என்பதற்குத் தன்னை அணுகும் இடையூறு ஓரிடத்துமின்றி எனலுமாம். நாள் சில நீந்த-ஏழு நாட்கள் நீந்த ; (மணி 29 : 18-9. வரி காண்க.) இந்திரன் ஏவலின் வாழ்வேன் இந்திரன் ஏவலின் வந்தேன் என்க. உறுதி - பயன். பெயர்த்து - ஒரு திடரிற் பெயர்த்து எனவு முரைப்பர். வாழ்வேன் வந்தேன் அஞ்சல் உறுதி ஒழியாது நீங்கி ஒழிகெனப் பெயர்த்துத் தீர்த்த குலதெய்வம் என்க. 38-41. அணிமேகலையார் ஆயிரங் கணிகையர் - அழகு செய்யும் மேகலையை அணிந்த ஆயிரங் கணிகையர் கூடி, மணிமேகலை என வாழ்த்திய ஞான்று - மணிமேகலை எனப் பெயர் இட்டு அக் குழவியை வாழ்த்திய அற்றை நாள், மங்கல மடந்தை மாதவி தன்னோடு - அழகினை யுடைய மடந்தையாகிய மாதவியோடு, செம்பொன் மாரி செங்கையில் பொழிய - சிவந்த பொன்னாகிய மழையினைச் சிவந்த கையாலே நீ பொழிய; ஆயிரம் - எண்ணின் மிகுதி குறிப்பது. வாழ்த்திய - அரசனையும் நகரினையும் வாழ்த்திய என்றுமாம். 42-47. ஞான நல்நெறி நல் வரம்பு ஆயோன் - வீடு சேறற்கு நல்ல நெறியாகிய ஞானத்திற்குச் சிறந்த எல்லையாயுள்ளோன், தானம் கொள்ளும் தகைமையின் வருவோன் தளர்ந்தநடையில் தண்டுகால் ஊன்றி - தானத்தைப் பெறும் தகுதியோடு தளர்ந்த நடையுடன் ஊன்றுகோலையே காலாக ஊன்றி வருவோனாகிய, வளைந்த யாக்கை மறையோன் தன்னை - கூனிய உடம்பினை யுடைய அந்தணனை, பாகு கழிந்து யாங்கணும் பறை பட வரூஉம் வேக யானை - பாகர் செயலைக் கடந்து எவ்விடத்தும் பறை கொட்ட வருகின்ற மதவேகத்தினையுடைய யானை, வெம்மை யில் கைக்கொள - சினத்தால் பற்றிக்கொண்டதாக ; 2"தளர்ந்த நடையிற் றண்டுகால் ஊன்றி, வளைந்த யாக் கையோர் மறையோன்" என்பர் மணிமேகலையினும், பாகு - பாகர். கழிந்து என்றது அவர்க்கு அடங்காமை கூறிற்று. பறைபடுதல் மக்கள் அறிந்து காத்தற்கு. பொழியக் கொள்ளும் தகைமையின் வருவோனாகிய மறை யோன் தன்னை யானை கைக்கொள என்க. 48-53. ஒய் எனத் தெழித்து ஆங்கு உயர்பிறப்பாளனை - அப்பொழுது விரைவில் உரப்பி அம் மறையோனை, கை அகத்து ஒழித்து - யானையின் கையினின்றும் விடுவித்து, கை அகம் புக் குப் பொய் பொரு முடங்கு கை வெண்கோட்டு அடங்கி - தான் அவ் வியானையின் புரை பொருந்திய கையினிடத்துப் புகுந்து போர் செய்யும் வளைதலையுடைய வெள்ளிய கோட்டின்கண் அடங்கி, மை இருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப் பிடர்த்தலை இருந்து - கரிய பெரிய குன்றின்கண் இருந்த வித்தியாதரனைப் போல அதன் பிடரினிடத்திருந்து, பெருஞ்சினம் பிறழாக் கடக்களிறு அடக்கிய கருணை மறவ - மிக்க சினம் நீங்காத களிற்றின் மதத்தினை யடக்கிய அருள்வீரனே; ஒய் - யானையைப் பாகர் வையும் ஆரிய மொழியுமாம். பொய்க் கையகம் எனவும் பொருவெண்கோடு எனவும் இயைக்க. இனி, பொய்பொரு முடங்குகை என்பதற்குப் புரை பொருந்திய வளைந்த கை என்பதும் பொருந்தும். பிறழ்தல் - நீங்குதல் ; 1"மொய்கொளப் பிறழ்ந்து முத்தார் மருப்பிடைக் குளித்து" என்றார் பிறரும். கடக் களிறு அடக்கிய - மதத்தையுடைய யானையை அடக்கிய எனலுமாம். மறையோற் கெய்தும் துயரினைப் பொறாமையானும், தன்னுயிர்க் கஞ்சாது பாய்ந்து அடக்குதலானும் கருணை மறவன் என்றான். 54-75. பிள்ளை நகுலம் பெரும் பிறிது ஆக - தம் பிள்ளையைக் காத்த கீரி தன் மனைவி அடித்தமை காரணமாக இறந்தமையான், எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல வடதிசைப் பெயரும் மா மறையாளன் - வடக்கண் கங்கையாடச் செல்லும் மறையோன் அக் கோறல் காரணமாக இகழ்ந்து ஒதுக்கிய மனைவி வருந்தித் தன் பின்னே வரலான், கடவது அன்று நின் கைத்து ஊண் வாழ்க்கை - நினது கையிடத்ததாகிய உணவை உண்டு வாழும் வாழ்க்கை இனி முறைமையுடையது அன்று, வடமொழி வாசகம் செய்த நல் ஏடு - ஆகலான் வடமொழி வாசகம் எழுதிய நல்ல இவ்வேட்டினை, கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்கென - உணரத்தகு பொருளை யுணரும் மக்கள் கையகத்து நீ கொடுக்கவெனச் சொல்லிப் போக, பீடிகைத் தெருவின் பெருங்குடி வாணிகர் மாடமறுகின் மனை தொறும் மறுகி - கடைவீதியினும் பெருங்குடி வணிகர் வாழும் மாடங்கள் நிறைந்த மறுகிலும் ஏனையோர் இல்லங்களிலும் சுழன்று திரிந்து, கருமக் கழிபலம் கொண்மினோ எனும் அரு மறையாட்டியை - பாவத்தினைப் போக்கும் பயனைக் கொள்ளுங் கள் என்று கூறிச் செல்லும் பார்ப்பனியை, அணுகக் கூய் - அண்மையில் வரும் வண்ணம் அழைத்து, யாது நீ உற்ற இடர் ஈது என் என - நீ யடைந்த துன்பம் யாது இக் கையின்கண் ஏடு யாது என்று கேட்ப, மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி - அம் மாது தான் அடைந்த மிக்க துன்பத்தினைக் கூறி, இப் பொருள் எழுதிய இதழ் இது வாங்கி - இச் செய்யுள் எழுதிய இவ் வேட் டினைப் பெற்று, கைப்பொருள் தந்து என் கடுந்துயர் களை கென - கைப்பொருளைக் கொடுத்து எனது கொடிய துயரத் தினை ஒழிப்பாயாக வென்று கூற, அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன் - அஞ்சற்க உனது பொறுத்தற்கரிய துன்பத்தினை யான் போக்குவேன், நெஞ்சுறு துயரம் நீங்குக என்று - உன் உள்ளத்துப் பொருந்தும் இடும்பையை நீக்குக என்று சொல்லி, ஆங்கு ஓத்துடை அந்தணர் உரைநூல் கிடக்கையின் - அப்பொழுதே வேதத்தினையுடைய முனிவர்கள் கூறிய அறநூன் முறையானே, தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்க - கொலைத் தொழில் புரிந்தவளாகிய அப் பார்ப்பனி செய்த பாவம் ஒழியும் வண்ணம், தானம் செய்து அவள்தன் துயர் நீக்கி - தானத்தைச் செய்து அவளுடைய துன்பத்தினைப் போக்கி, கானம் போன கணவனைக் கூட்டி - காட்டு நெறிக்கண் சென்ற அவள் கணவனையும் சேர்த்து, ஒல்காச் செல்வத்து உறுபொருள் கொடுத்து - தளராத செல்வமுடைமையான் மிக்க பொருளினைத் தந்து, நல்வழிப்படுத்த செல்லாச் செல்வ - நன்னெறிப் படுத்திய தொலையாத செல்வமுடையானே; பிள்ளை நகுலம் - கீரிக்குட்டி. `பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக' என்றது பார்ப்பனியின் பிள்ளையைக் காத்திருந்த கீரி அவண் பாம் பொன்று வர அதனைக் கொன்று உதிரம் படிந்த வாயுடனே எதிர்வந்த தனைக் கண்ட அப் பார்ப்பனி அக் கீரி தன் குழந்தையைக் கொன்ற தெனக் கருதி அதனைக் கொன்றனள் என்னுங் கதை குறித்து நின்றது. பெரும்பிறிது - இறத்தல். கைத்தூண் வாழ்க்கை - ஒழுக்கத்தின் உண்டு வாழும் வாழ்க்கை எனலுமாம். வாசகம் - செய்யுள் : அதா வது :-"அபரீக்ஷ்ய நகர்த்தவ்யங் கர்த்தவ்யம் ஸுபரீக்ஷிதம், பச் சாத்பவதி ஸந்தாபம் ப்ராஹ்மணீ நகுலம்யதா" என்பதாகும், கட னறிமாந்தர் என்றது மக்கட் பிறப்பின் முறைமையை உணரும் மக்கள் என்றவாறு. கொடுக்கென என்பதன் பின்னர்ப் போகவென ஒரு சொல்வருவிக்க. தெருவினும் மறுகினும் உள்ள மனை எனலும் பொருந்தும். கருமக் கழிபலங் கொண்மின் என்றது கொலைப் பாவம் ஒழியப் பிரிந்த கணவன் வரும் வண்ணம் தானம் செய்தற்குப் பொருள் அளித்தலை ஏற்றுக் கொண்மின் என்றவாறு. `இப் பொருள்' என்றது பொருட்கிடமாகிய செய்யுளை. ஓத்துடை அந்தணர் - தருமாசனத்தோர் என்க. ‘துயர் நீங்க' என்றது துயரத்திற்குக் காரணமாய பாவம் நீங்க என்றபடி. 76-90. பத்தினி ஒருத்தி படிற்று உரை எய்த - ஓர் கற்புடை மகள் பொய்ப் பழியினை எய்துதற்கு, மற்று அவள் கணவற்கு வறியோன் ஒருவன் அறியாக் கரி பொய்த்து - அவளுடைய கணவனுக்கு அறிவிலான் ஒருவன் கண்டு தெளியாத சான்று கூறிப் பொய்த்தலான், அறைந்து உணும் பூதத்துக் கறைகெழு பாசத்துக் கை அகப்படலும் - தவ மறைந்து ஒழுகுவோர் முதலிய அறுவகையோரையும் புடைத்துண்ணும் பூதத்தினுடைய கரிய பாசத்தினிடத்து அகப்பட, பட்டோன் தவ்வை படுதுயர் கண்டு - அங்ஙனம் அகப்பட்டோனுடைய தாய் படும் துன்பத்தினை நோக்கி, கட்டிய பாசத்துக் கடிது சென்று எய்தி - அவனைக் கட்டிய பாசத்தினுள் தான் விரைந்து சென்று அடைந்து, என் உயிர்கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என - இப்பொழுது என்னுடைய உயிரை நீ பெற்றுக்கொண்டு இவனுடைய உயிரைத் தந்திடுவாய் என்று கேட்ப, நல் நெடும் பூதம் நல்காது ஆகி - நல்ல பெரிய பூதம் அவனுயிரைக் கொடாதாய், நரகன் உயிர்க்கு நல் உயிர் கொண்டு பரகதி இழக்கும் பண்பு ஈங்கு இல்லை - கீழோனுடைய உயிரின் பொருட்டு நல்ல உயிரினைக் கொண்டு மேலான நிலையை இழக்குந் தன்மை என்னிடத்து இல்லை, ஒழிக நின் கருத்து என உயிர் முன் புடைப்ப - ஆதலால் நின் எண்ணத்தினை ஒழிப்பாயாக என்று கூறி அவனைத் தன் எதிரே புடைத்து உண்ண, அழிதரும் உள்ளத்து அவளொடும் போந்து - வருந்திய உள்ளத்தினையுடைய அவளொடும் மீண்டு சென்று, அவன் சுற்றத்தோர்க்கும் தொடர்பு உறு கிளைகட்கும் - அவனுடைய சுற்றத்தார்க்கும் தொடர்பு கொண்ட கிளைஞர்க்கும், பற்றிய கிளைஞரில் பசிப்பிணி அறுத்து-அன்பாற் பிணித்த நினது சுற்றத்தாரைப் போலக் கருதிப் பசியாகிய நோயைக் கெடுத்து, பல் ஆண்டு புரந்த இல்லோர் செம்மல் - பல யாண்டுகள் காத்த வறியோர் தலைவனே; படிறு - பொய், வறியான் - பொருளிலான் எனக் கொண்டு பொருள் பெறுகைக்காகப் பொய்க்கரி கூறினான் என்றலும் அமை யும். கண்டு தெளிந்த கூறலே உண்மைக்கரியாகலான், அறியாக் கரி பொய்க்கரியாயிற்று. நல்லோர்க்குத் தீங்கு செய்யாமையான், `நன்னெடும் பூதம்' எனப்பட்டது. தவமறைந் தொழுகுவோர் முதலியோரைப் பூதம் புடைத்துண்ணுதலை, 1"தவமறைந் தொழு கும்.........கைப்படுவோர்" என வருதலானறிக. உயிர் - உடல் ; ஆகுபெயர். இல்லோர் செம்மல் - இல்லறத்தோர் தலைவன் என லுமாம். நரகன் - நரகமடைதற்குரியான் ; பாவி. கோவலன் வணங்க வணங்கியோனைக் கருணைமறவ, செல்லாச் செல்வ, இல்லோர் செம்மல் என நாவலந்தணன் புகழ்ந்தனன் என்க. 91-94. விருத்த கோபால - அறிவால் முதிர்ந்த கோபாலனே, நீ இம்மைச் செய்தன யான் அறி நல்வினை - யான் அறிய இப் பிறப்பின்கண் நீ செய்தன யாவும் நல்வினையே யாகவும், உம்மைப் பயன்கொல் ஒரு தனி உழந்து இத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது - ஒப்பற்ற தனிமையான் வருந்தி இத் திருவினை ஒத்த மாணிக்கத் தளிருடன் இவண் புகுந்தது முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனேயோ, என வினவ - என்று மாடலன் கேட்க ; ஒருதனி உழத்தல் - உசாவின்றி வருந்துதல். மாமணி - முழு மாணிக்கம். கண்ணகியின் இளமை கருதிக் கொழுந்து என்றார். விருத்தன் - ஞான விருத்தன் எனல் மரபு. கோபால - கோவல. கொல் - ஐயம். கோபால நீ இம்மைச் செய்தன நல்வினை உழந்து போந்தது உம்மைப் பயன்கொல் என மாறுக. 95-106. கோவலன் கூறும் - கோவலன் கூறுவான் : ஓர் குறு மகன் தன்னால் - ஒரு கீழோனால், காவல் வேந்தன் கடிநகர் தன்னில் - புரத்தலில் வல்ல பாண்டிய மன்னனுடைய காவலையுடைய இம் மதுரை நகரத்தின்கண், நாறு ஐங் கூந்தல் நடுங்கு துயர் எய்த - மணநாறும் ஐந்து பகுதியாக முடிக்கப்படும் கூந்தலை யுடைய இவள் கண்டார் நடுங்கத்தக்க துன்பத்தினை அடைய, கூறை கோள்பட்டுக் கோட்டு மா ஊரவும் - உடுத்த ஆடை பிறராற் கொள்ளப்பட்டு யான் பன்றிமீது ஏறிச் செலுத்தவும், அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும் - அழகு தக்க கடை குழன்ற கூந்தலினையும் ஆராய்ந்த இழையினையும் உடைய இவளோடு, பிணிப்பு அறுத்தோர்தம் பெற்றி எய்தவும் - பற்றினை யறுத்த சான்றோர் பெறும் பேற்றினை யான் பெறவும், மா மலர் வாளி வறுநிலத்து எறிந்து - மலர் அம்புகளை வெறுநிலத்தில் வீசி, காமக் கடவுள் கையற்று ஏங்க - மன்மதன் செயலற்று ஏக்கங் கொள்ளும் வண்ணம், அணிதிகழ் போதி அறவோன் தன்முன் - அழகு விளங்கும் போதிக்கண் அறவோனாகிய புத்தனிடத்து, மணிமேகலையை மாதவி அளிப்பவும் - மணிமேகலையை மாதவி கொடுக்கவும், நனவு போல நள் இருள் யாமத்து - நனவினிற் போலச் செறிந்த இருளினையுடைய கடை யாமத்தின்கண், கனவு கண்டேன் - கனாக் கண்டேன், கடிது ஈங்கு உறும் என - ஆக லான் பொல்லாங்கு ஒன்று இப்பொழுதே வந்து சேரும் என்று சொல்ல; குறுமை - கீழ்மை யென்னும்பொருட்டு. காவல் வேந்தன் என வும் கடிநகர் எனவும் கூறியது துயரெய்தலாகாவிடத்திலே துய ரெய்த என்னும் பொருள் தோன்ற. கோட்டு மா - எருமைக்கடாவு மாம். பிணிப்பறுத்தோர் பெற்றியாவது துறக்கமடைதல். நனவு - விழிப்பு. நளியென்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. கடிது உறும் - கடையாமத்துக் கனவாதலின் கடிதில் உறும் என்னலுமாம். கடி தீங்கு எனப் பிரித்து மிக்க தீங்கு, அச்சத்தையுடைய தீங்கு எனவுமாம். பன்றியையும் எருமைக்கடாவையும் ஊர்தல் காணின் தீங்குண் டாம் என்பதும் கடையாமத்திற் காணின் விரைவில் உறும் என்பதும், 1" களிறுமேல் கொள்ளவும் கனவி னரியன காணா" 2"சொல்லத் தகுமுகட் டொட்டகம் வெட்டுந் துணைமருப்பார் இல்லத் தெருமை கழுதைக ளென்றிவை யேறிநின்றே மெல்லத் தரையி லிழிவதன் முன்னம் விழித்திடுமேல் கொல்லத் தலைவரு மாற்றருஞ் சீற்றத்துக் கூற்றுவனே" 3"படைத்தமுற் சாமமோ ராண்டிற் பலிக்கும் பகரிரண்டே கிடைத்தபிற் சாம மிகுதிங்க ளெட்டிற் கிடைக்கு மென்றும் இடைப்பட்ட சாமமோர் மூன்றினிற் றிங்களொர் மூன்றென்பவால் கடைப்பட்ட சாமமு நாள்பத்து ளேபலங் கைபெறுமே" என்பவற்றான் அறியப்படும். 107-114. அறத்துறை மாக்கட்கு அல்லது - துறவறத்துறை யின்கண் நிற்கு முனிவர்களுக்கல்லது, இந்தப் புறச்சிறை இருக்கை பொருந்தாது ஆகலின் - இவ் வெயிற்புறத்துப் பள்ளி யில் இருக்கும் இருக்கை ஒவ்வாது ஆகலானும், அரைசர் பின் னோர் அகநகர் மருங்கின் நின் உரையிற் கொள்வர் - இவ் வக நகரிடத்து உள்ள வணிகர் நினது புகழால் நின்னை அறிந்து எதிரேற்றுக்கொள்வர் ஆகலானும், இங்கு ஒழிக நின் இருப்பு - இவ்விடத்து நினது இருக்கையை ஒழிவாயாக, காதலி தன்னொடு கதிர் செல்வதன்முன் மாட மதுரை மா நகர் புகுகென - ஞாயிறு மேற்றிசை சென்று வீழ்வதன் முன்னர் நின் மனைவி யோடு மடாங்களையுடைய மதுரை நகரத்தில் புகுகவென்று, மாதவத்தாட்டியும் மாமறை முதல்வனும் கோவலன் தனக்குக் கூறுங்காலை - கவுந்தியடிகளும் மறையோனாகிய மாடலனும் கோவலனுக்குக் கூறும்போது; அறத்துறை - அறத்தின்கண் உறையும் எனலுமாம். புறச்சிறை இருக்கை - எயிற்புறத்துப் பள்ளி. அரைசர் பின்னோர் - நால்வகைக் குலத்து அரசர்க்குப்பின் எண்ணப்படுபவராகிய வணிகர். அகநகர் மருங்கின் அரைசர் பின்னோர் என்க. கோவலன் 1'மண்தேய்த்த புகழினான்' ஆகலான் `நின் உரையிற் கொள்வர்' என்றார். இனி, நின் உரையிற் கொள்வர் என்பதற்கு, மாசாத்துவான் மகன் என்னும் புகழாற் கொள்வர் எனலுமாம். 115-119. அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய - அறத்தை விரும்பிய உள்ளத்தினையுடைய முனிவர்கள் நிறைந்த, புறஞ் சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்கு - எயிற்புறத்து மூதூர்க் கண் எழுந்தருளிய பூப்போலும் கண்களையுடைய இயக்கிக்கு, பால்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள் - முறையானே பாற்சோறு படைத்து மீள்வோளாகிய, ஆயர் முதுமகள் மாதரி என்போள் - இடையர் குடிப் பிறந்த முதியோள் மாதரி எனப்படுபவள், கவுந்தியையையைக் கண்டு அடி தொழலும் - கவுந்தியடி களைக் கண்டு அவருடைய அடிகளை வணங்குதலும்; அறவோர் பல்கிய மூதூர்க்கண் இயக்கி என்க. இயக்கி - ஒரு பெண் தெய்வம்; பாண்டி நாட்டில் இசக்கியென வழங்கும்; ஆரியாங்கனை யெனவும் கூறுவர்; ஆரியாங்கனை - கணவனிருக்கும் பொழுதே துறவு பூண்ட தவப்பெண். பண்பிற் பால் மடை கொடுத்து என மாறுக. இனி, புறஞ்சிறை மூதூர்க்கண் காவுந்தியையை எனவும் இயைப்பர். 120-124. ஆ காத்து ஓம்பி ஆப் பயன் அளிக்கும் - பசுக்களைப் பிணி முதலியவற்றினின்றும் காப்பாற்றிப் புல் நீர் முதலிய அளித்துப் பேணி அப் பசுவின் பயனை யாவர்க்கும் கொடுக்கின்ற, கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை - இடையர்களுடைய வாழ்க்கையில் ஒரு சிறிதும் தீமை இல்லை, தீது இலள் - ஆகலின் குற்றமில்லாதவள், முதுமகள் செவ்வியள் அளியள் - மேலும் இவள் முதியோளும் உட்கோட்ட மில்லாதவளும் தண்ணளியுடையாளுமாவள், மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு ஏதம் இன்று என எண்ணினள் ஆகி - ஆகலான் இம் மாதரி யிடத்துக் கண்ணகியை வைப்பதனால் குற்றம் ஒன்றும் இன்றாம் எனக் கருதியவளாய்; பிணி முதலிய உண்டாயவழி அவற்றை நீக்குதலைக் காத்து எனவும், புல் அருத்தல் முதலியவற்றை ஓம்பி எனவும் கூறினார். ஆப் பயன் - பால் முதலியன. அளியள் - அளிக்கத்தக்காள் எனலும் பொருந்தும் கொடும்பாடு - கொடுமை. 125-130. மாதரி கேள் - மாதரியே கேட்பாயாக, இம்மடந்தை தன் கணவன் தாதையைக் கேட்கின் தன் குலவாணர் - இப் பெண்ணின் கணவனுடைய தந்தையின் பெயரைக் கேட்பாராயின் அவன் குலத்துப் பிறந்த இந் நகரத்து வாழ்வோர், அரும் பொருள் பெறுநரின் விருந்து எதிர் கொண்டு - பெறுதற்கரிய செல்வத்தினைப் பெற்றார் போன்று தமது விருந்தினராக எதிர் கொண்டு அழைத்து, கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர் - இக் கரிய பெரிய கண்களையுடையாளொடு தமது காவலையுடைய இல்லத்தின்கண் வைத்துக் கொள்வர், உடைப் பெருஞ் செல்வ மனைப்புகும் அளவும் - அங்ஙனம் அப் பெருஞ் செல்வ முடையார் இல்லத்தின்கண் புகும் வரையும், இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன் - இடையர்குலப் பெண்ணாகிய நினக்கு இவளை அடைக்கலமாகக் கொடுத்தேன்; தாதையை - தந்தையின் பெயரை ; என்றது மாசாத்துவான் மகன் இவன் என்பதனைக் கேட்கின் என்றவாறு. உடைப்பெருஞ் செல்வர் - பெருஞ் செல்வமுடையார்; உடைய பெரிய செல்வர் எனலுமாம். 1"உடைப் பெருஞ் செல்வரும்" என்றார் பிறரும். இடைக்குல மடந்தை - முன்னிலையிற் படர்க்கை வந்த வழுவமைதி. 131-136. மங்கல மடந்தையை நல் நீர் ஆட்டி - அழகிய இக் கண்ணகியைத் தூய நீராற் குளிப்பாட்டி, செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் தீட்டி - சிவந்த கயல் போலும் நெடிய கண் களில் மை எழுதி, தே மென் கூந்தல் சில் மலர் பெய்து - தேன் பொருந்திய மெல்லிய கூந்தற்கண் சிலவாகிய மலர்களைச் சூடி, தூ மடி உடீஇ - தூய புடைவையை உடுத்து, தொல்லோர் சிறப்பின் ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத் தாயும் நீயே ஆகித் தாங்கு - ஆராய்ந்த கலன் அணிந்த இவளுக்கு முன்னோர் கூறிய சிறப்பினை யுடைய தோழிமாரும் காவற் பெண்டும் நற்றாயும் நீயேயாகிக் காப்பாற்றுவாயாக ; மங்கல நன்னீர் என இயைப்பினு மமையும். தொல்லோர் சிறப்பின் ஆயம் - பழையோராகச் சிறப்பித்துக் கூறப்பட்ட ஆயம் எனலுமாம். காவல் - செவிலித் தாயர். மடந்தையை ஆட்டித் தீட்டிப் பெய்து உடீஇத் தாங்கு என்க. 136-138. இங்கு என்னொடு போந்த இளங்கொடி நங்கை தன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் - இவ்விடத்து என்னோடு கூடி வந்த இளங்கொடி போலும் இக் கண்ணகியினுடைய அழகிய சிறிய அடிகளை முன்னர் நிலமகளும் கண்டறியாள். அடியை மண் மகள் அறிந்திலள் என்றது இவள் அகம் விட்டுப் புறம்போகாமையான் என்க, இனி, இவளுடைய அடியின் மென்மையை உணர்ந்து அதற்கேற்ப மண்மகள் தானும் மென்மையை அடைந்தாளிலள் எனவும், கால்கள் கொப்புளங்கொண்டு நிலத்திற் பாவாமையின் அவற்றைக் கண்டிலள் எனவும் பொருள் கொள்ளக் கிடந்தமையும் காண்க. 139-148. கடுங் கதிர் வெம்மையின் காதலன் தனக்கு - ஞாயிற்றின் கொடிய வெம்மையினால் துன்பமுற்ற தன் கணவன் பொருட்டு, நடுங்கு துயர் எய்தி நாப் புலர வாடி - கண்டார் நடுங்கத்தக்க துயரத்தை அடைந்து நாவும் புலர வாட்டமுற்று, தன் துயர் காணாத் தகை சால் பூங்கொடி - தனது வழி நடைத் துன்பத்தினைச் சிறிதும் உணராத தகுதி மிக்க பூங்கொடிபோல் வாளாகிய, இன் துணை மகளிர்க்கு இன்றியமையா - தம் கணவர்க்கு இனிய துணையாகப் பொருந்திய பெண்களுக்கு இன்றியமையாத, கற்புக் கடம் பூண்ட இத் தெய்வம் அல்லது - கற்பாகிய கடனை மேற்கொண்ட இத் தெய்வமே யல்லாது, பொற்பு உடைத் தெய்வம் யாம் கண்டிலமால் - வேறு பொலி வினையுடைய தெய்வம் ஒன்றினை யாம் காணேம், வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது - பருவ மழை பெய்தலினும் தவறாது நில வளமும் பிழையாது, நீள் நில வேந்தர் கொற்றம் சிதை யாது - பெரிய நிலப் பரப்பினை ஆளும் மன்னரது வெற்றியும் அழிவுறாது, பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு - கற்புடை மகளிர் வாழும் நாட்டின்கண், என்னும் அத் தகு நல் உரை அறியாயோ நீ - என்று பெரியோர் கூறும் அத் தகுதி வாய்ந்த நல்ல மொழியை நீ உணராயோ ; வெம்மையினால் துன்புற்ற என ஒரு சொல் வருவிக்க. காதலன் துயர்கண்டு தன் துயர் காணாளாயினாள், கற்புக் கடம் பூண்டோளாகலான் ; என்னை? 1"ஓங்கல் வெற்ப, ஒருநாள் விழும முறினும் வழிநாள், வாழ்குவ ளல்ல ளென்றோழி" எனவும் கூறுவராகலான். பூங்கொடியாகிய தெய்வம் கற்புக் கடம் பூண்ட தெய்வம் என்க. கற்புக் கடம் பூண்ட பூங்கொடியாகிய தெய்வம் எனினும் அமையும். இருந்த நாட்டின்கண் பொய்யாது அறியாது சிதையாது என்க. இனி, நாடு பொய்யாது, அறியாது, சிதையாது என முடித்தலுமாம். 149-150. தவத்தோர் அடைக்கலம் தான் சிறிது ஆயினும் - தவமுடையோர் தரும் அடைக்கலப் பொருளைக் காக்கும் காவல் எளிதாயினும், மிகப் பேர் இன்பம் தரும் அது கேளாய் - மிகப் பெரிய இன்பத்தினை அளிக்கும் அதனை நீ'a6 கேட்பாயாக ; அடைக்கலம் - அடைக்கலப் பொருளைப் பேணல். சிறிது - ஈண்டு எண்மைப் பொருட்டு. 151-155. காவிரிப் படப்பைப் பட்டினம் தன்னுள் - தோட்டக் கூறுகளையுடைய காவிரிப்பூம்பட்டினத்துள், பூ விரி பிண்டிப் பொது நீங்கு திரு நிழல் - மலர் விரிந்த அசோகின் பொதுமை நீங்கிய அழகிய நிழற்கண்ணே, உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட - சாவகர் பல்லோர் ஒன்று சேர்ந்து இட்ட, இலகு ஒளிச் சிலாதலம்மேல் இருந்தருளி - விளங்குகின்ற ஒளியினையுடைய சிலாவட்டத்தின்மேல் எழுந்தருளி, தருமம் சாற்றும் சாரணர் தம்முன் - அறவுரை கூறுகின்ற சாரணர் முன்பாக ; படப்பைக் காவிரிப்பட்டினம் என்க. 2"காவிரிப்பட்டினம் கடல்கொளும்" என்றார் பிறரும். இனி, காவிரியைத் தோட்டக் கூற்றிற்கு எல்லையாகவுடைய பட்டினம் என்றலும் பொருந்தும். நிழலின் பொதுமை நீங்கலாவது ஏனையவற்றின் நிழல் சாயவும் தான் ஒன்றே சாயாது நிற்றலாம். 3"உலக நோன்பிக ளொருங்குடனிட்ட, விலகொளிச் சிலாதலம்" என்றார் முன்னும். உலக நோன்பி கள் - இல்லறத்திலிருந்து விரதங் காப்போர். 156-160. திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன் - வான வில்லைப் போன்று ஒளிவிட்டு விளங்குகின்ற மேனியை யுடையனாய், தாரன் - பூமாலையை உடையனாய், மாலையன் - மணி மாலையை உடையனாய், தமனியப் பூணினன் பொன்னாற் செய்த அணி கலங்களை அணிந்தவனாய், பாரோர் காணாப் பலர் தொழு படிமையன் - இவ்வுலக மக்கள் காணவொண்ணாத தேவர் பலரும் வணங்கும் தெய்வ வடிவத்தினை யுடையவனாகிய, கருவிரல் குரங்கின் கை ஒரு பாகத்து - ஒரு பாகத்துக் கை கரியவிரலையுடைய குரங்கின் கையாகவுடைய, பெருவிறல் வானவன் வந்து நின்றோனை - பெரிய வெற்றியினை யுடைய தேவனொருவன் ஆங்கண் வந்து நின்றவனை ; திருவில் - வானவில். வானவில் இன்ன காலத்து இவ்வாறு தோன்றும் என்பது அறியப்படாதவாறு போலத் தேவனுடைய வரவும் அறியப்படாமையான் "திருவி லிட்டுத் திகழ்தரு மேனியன்" என்றார் எனலுமாம் ; என்னை? 1"வானிடு வில்லின் வரவறியா வாய்மையான்" என்றார் பிறருமாகலான். காணா - முன் கண்டறியாத என்றலுமாம். 2"தாரன் மாலையன் தமனியப் பூணினன், பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்" என்றார் மணிமேகலையினும். தாரன் மாலையன் என்பதனைத் தாரமாலையன் எனப் பாடமோதி, மந்தார மாலையையுடையவன் எனினும் பொருந்தும், படிமை - தெய்வ வடிவு. விறல் - வெற்றி ; ஆவது தேவனாயது. நின்றோன் - வினைப்பெயர். 161-162. சாவகர் எல்லாம் சாரணர்த் தொழுது - உலக நோன்பிகள் யாவரும் சாரணரை வணங்கி, ஈங்கு யாது இவன் வரவு என - இவ்விடத்து இத் தேவனுடைய வருகை யாதனைக் கருதியதாகும் என்று கேட்க, இறையோன் கூறும் - சாரணர் தலைவன் கூறுவானாயினன், (கூறுபவன்) ; முன்னர்ச் சாரணர் எனப் பன்மை கூறிப் பின்னர் இறையோன் என ஒருமை கூறியது அவர்களுள் தலைவனே மக்களுக்கு அறிவுறுத்துவன அறிவுறுத்துவானாகலின் என்க. முன்னரும், 3"தருமஞ் சாற்றுஞ் சாரணர் தோன்ற............சிந்தை விளக்கிற் றெரிந்தோ னாயினும்" எனக் கூறினமை காண்க. 163-191. எட்டி சாயலன் இருந்தோன் தனது -எட்டிப்பட்டத் தினையுடைய இல்லறத்திருந்தோனாகிய சாயலன் என்ற பெயரை யுடையானது, பட்டினி நோன்பிகள் பலர் புகும் மனையில் - பட்டினி விட்டுண்ணும் விரதிகள் பலரும் வந்து சேர்கின்ற இல்லத்தின்கண், ஓர் மா தவ முதல்வனை - பெரிய தவத்தான் மேம்பட்ட ஒருவனை, மனைப் பெருங் கிழத்தி - இல்லறத்திற்குத் துணையாகிய அச் சாயலனுடைய மனைவி, ஏதம் நீங்க எதிர் கொள் அமயத்து - தம் தீவினை ஒழிய எதிர்கொண்டு அழைத்த சமயத்து. ஊர்ச் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி உள்புக்கு - அவ்வூர்க் கணுள்ள சிறியதோர் குரங்கு அச்சத்தான் ஒதுங்கி அம் மனையினுள்ளே நுழைந்து, பாற்படு மாதவன் பாதம் பொருந்தி - அருளறத்தின் பாற் பட்ட அம் மாதவனுடைய திருவடிகளை வணங்கி, உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும் - அவன் உண்டு ஒழித்த சோற்றினையும் ஊற்றிய நீரையும், தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி - நீங்காத விருப்பினால் சிறிதளவு உண்டு பசி ஒழிந்து. எதிர் முகம் நோக்கிய இன்பச் செவ்வியை - இன்பத்தோடு எதிராக இருந்து தன் முகத்தை நோக்கிய தன்மையை, அதிராக் கொள்கை அறிவனும் நயந்து - நடுக்கமில்லாக் கோட் பாட்டினையுடைய மாதவனும் விரும்பி, நின் மக்களின் ஓம்பு மனைக்கிழத்தீ என - இல்லறத்திற்கு உரியவளே இக் குரங்கினை நின் மக்களை ஓம்புதல் போலக் காப்பாயாக என்றுரைக்க, மிக்கோன் கூறிய மெய்ம்மொழி ஓம்பி - அம் மேலோன் கூறிய உண்மை மொழியினைக் காத்து, காதற் குரங்கு கடை நாள் எய்தவும் - அன்பு நிறைந்த அக் குரங்கு இறந்த பின்னரும், தானம் செய்வுழி - தானம் செய்யும்போது, அதற்கு ஒரு கூறு தீது அறுகென்றே செய்தனள் ஆதலின் - அக் குரங்கிற்கு ஒரு பகுதித் தானத்தை அதன் தீய பிறவி ஒழிகவென்று கருதிச் செய்து வந்தாள் ஆகலான், மத்திம நல் நாட்டு வாரணம் தன்னுள் - நல்ல மத்தி மதேசத்துள்ள வாரணவாசி என்னும் நகரத்து, உத்தர கௌதற்கு ஒரு மகன் ஆகி - உத்தர கௌத்தன் என்னும் ஒருவனுக்கு ஒப்பற்ற புதல்வனாய், உருவினும் திருவினும் உணர்வினும் தோன்றி - அழகினானும் செல்வத்தானும் அறிவானும் மேம்பட்டு விளங்கி, பெருவிறல் தானம் பலவும் செய்து- பெரிய வென்றியோடு தானங்கள் பலவற்றையும் செய்து, ஆங்கு எண்ணால் ஆண்டின் இறந்த பிற்பாடு - அப் பிறவியிலே முப்பத்திரண்டாவது ஆண்டில் இறந்த பின்னர், விண்ணோர் வடிவம் பெற்றனன் - தேவர் வடிவத்தினை அடைந்தனன், ஆதலின் - ஆகையால், பெற்ற செல்வப் பெரும்பயன் எல்லாம் - அங்ஙனமாய செல்வத்தினைப் பெற்ற பெரிய பயன் யாவும், தற்காத்து அளித்தோள் தானச் சிறப்பு என - தன்னைக் காத்து அளிசெய்தவள் செய்த தானத்தின் மிகுதியான் ஆம் என்று உட்கொண்டு, பண்டைப் பிறப்பிற் குரங்கின் சிறுகை கொண்டு ஒரு பாகத்து - முன்னைப் பிறவியில் பொருந்திய கருங் குரங்கின் கை வடிவான சிறிய கையை ஒரு பாகத்தே கொண்டு, கொள்கையிற் புணர்ந்த சாயலன் மனைவி தானந் தன்னால் ஆயினன் இவ் வடிவு - தானம் செய்யும் கோட்பாட்டிலே கூடிய சாயலனுடைய மனைவி முன்னாளிற் செய்த தானத்தின் பயனால் இவ் வடிவத்தைப் பெற்றேன், அறிமினோ என - நீவிர் இதனை அறியுங்கள் என்று, சாவகர்க்கு எல்லாம் சாற்றினன் காட்ட - உலக நோன்பிகள் யாவர்க்கும் காட்டி அறிவுறுத்த, தேவ குமரன் தோன்றினன் எனலும் - இத் தெய்வ குமாரன் இங்ஙனம் தோன்றினான் என்று கூறவும் ; எட்டி - வணிகர்க்கு அரசரளிக்கும் சிறப்புப்பெயர். இருந் தோன் என்றது இக் கூறிய இடத்திருந்தோன் எனலுமாம். இருந்தோன் தனது மனை பலர் புகு மனை என்க. பாற்படு மாதவன் என்பதற்குத் தன்பாற்பட்ட தவத்தையுடையான். எனலும் பொருந்தும். மிச்சில் - எச்சில், எச்சில் உணவு. தண்டா வேட்கை-பசி என்ப. முகம் நோக்கிய செவ்வி, மெய்ம்மொழியை ஓம்புதலாவது அவர் மொழிந்ததற்குப் புறம்பாக நடவாது அதற்கு அடங்கி அக் குரங்கினைப் போற்றலாம். இனி, மெய்ம்மொழி ஓம்பி என்பதற்கு மெய்ம் மொழியின் படியே அக் குரங்கினைக் காத்து என்றலும் பொருந்தும். 'மக்களின் ஓம்பு' என்றதனால் தானம் செய்வுழி அதற்குரிய ஒரு பகுதியைச் செய்தனள் என்க. தீது - தீவினையுமாம். கடைநாள் - இறப்பு. உத்தரன் கவிப்பன் எனப் பாடமோதிக் கவிப்பன் என்னும் வணிகனுக்கு உத்தரன் என்னும் பெயரோடு ஒரு மகனாகி எனவும், கவிப்பன் - பசு மறையத் தேடின பொருளுடையவன் எனவும் உரைப்பாருமுளர். மக்களிடத்து அழகும் அறிவும் ஆக்கமும் மூன்றும் ஒருங்கே தோன்றுதல் அரிதாகலான், "உருவினும் திருவினும் உணர்வினும் தோன்றி" என்றார். தானம் பல செய்தற்குப் பலருடைய உள்ளம் ஒருப்படாவாகலான் அங்ஙனமின்றி ஒருப்பட்டுச் செய்யும் தானத்தினைப் "பெருவிறற் றானம்" என்றார். உடையான் தொழில் உடைமை மேல் ஏற்றப்பட்டது. பிற்பாடு - பின்னர். 1"பெண்ணணி கோலம் பெயர்ந்த பிற்பாடு" என்றார் முன்னும். தானச் சிறப்பு - தானத்தாற் பெற்ற சிறப்பு என்றலும் அமையும். 192-197. சாரணர் கூறிய தகைசால் நன்மொழி - சாரணர் மொழிந்த தகுதி யமைந்த நல்ல அறவுரையை, அன்று - அந் நாளில், ஆர் அணங்கு ஆக அறந்தலைப்பட்டோர் - மறை மொழியாகக் கொண்டு அறத்துவழி நின்றோராகிய, அப் பதியுள் அருந்தவ மாக்களும் - அந் நகரத்துக்கண் அரிய தவமுடையோரும். தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும் - தனக்கென வாழாத வாழ்க்கையினையுடைய உலக நோன்பிகளும், இட்ட தானத்து எட்டியும் மனைவியும் - தானம் செய்த சாயலனும் அவன் மனைவியும், முட்டா இன்பத்து முடிவுலகு எய்தினர் - குறைவிலா இன்பத்தினையுடைய வீட்டுலகத்தினை அடைந்தனர்; ஆரணங்காக என்பதற்குத் தெய்வத் தன்மையோடு கூடியதாக எனலுமாம் . தன் தெறல் வாழ்க்கை - தான் என்னுந் தன்மையைக் கெடுத்த வாழ்க்கை ; தனக்கெனவாழாது பிறர்க்கென வாழும் வாழ்க்கை, இட்ட தானம் - குரங்கின் பொருட்டுச் செய்த தானம். முட்டா இன்பம் - தடையிலா இன்பம், நிறைந்த இன்பம். வீட்டுலகினும் முடிவான வேறு உலகம் இன்மையான் அவ்வுலகு முடிவுலகு எனப்பட்டது. இது தானத்தின் சிறப்பிற்கு மேற்கோளாகும். 198-200. கேட்டனை ஆயின் - தானத்தின் சிறப்பினை உணர்ந்து அதனை உடன்பட்டாயாயின் இத் தோட்டார் குழலி யொடு - இந்தத் தொகுதி கொண்ட கூந்தலை யுடையாளொடு, நீட்டித்து இராது - தாழ்க்காது, நீ போகென்றே கவுந்தி கூற - நீ செல்வாயாக என்று கவுந்தியடிகள் சொல்ல, உவந்தனள் ஏத்தி - தான் பெற்ற அடைக்கலத்தின் பொருட்டு மகிழ்ந்து கவுந்தியடிகளைப் போற்றி; தோடார் எனற்பாலது தோட்டார் என விகாரமாயிற்று. தோடு - மலர் எனினும் அமையும். 201-206. வளர் இள வனமுலை - வளர்கின்ற இளமை பொருந்திய அழகிய முலையினையும், வாங்கு அமை பணைத்தோள் - மூங்கிலின் அழகைக் கவரும் பெரிய தோளினையும், முளை இள வெண்பல் - இளைய நாணல் முளை போலும் வெள்ளிய பற்களையும், முதுக்குறை நங்கையொடு - பேரறிவினையு முடைய கண்ணகியோடு, சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமையத்து - மேல் கடலிற் சென்று சேர்ந்த ஞாயிற்றின் ஒளி சென்று ஒடுங்கும் பொழுதில், கன்று தேர் ஆவின் கனை குரல் இயம்ப - கன்றினை நினைந்து வரும் பசுக்களின் முழங்கும் குரல் ஒலிப்ப, மறித்தோள் நவியத்து உறிக்காவாளரொடு - ஆட்டுக் குட்டியையும் கோடரியையும் சுமந்த தோளிலே உறியைக் காவிய இடையர்களோடு, செறிவளை ஆய்ச்சியர் சிலர் புறஞ் சூழ - நிறைந்த வளையலை அணிந்த இடைச்சியர் சிலர் இவள் புதியளாய் இருத்தலின் புறத்தே சூழ்ந்துவரா நிற்ப; வாங்கு அமை - வளைந்த மூங்கிலுமாம். முளை - நாணல் முளை. முதுக்குறை - பேரறிவு. செல்சுடர் - சுடர் செல் என்க. மறி நவியத்தோள் என மாறுக. காவுதல் - தோளிற் சுமத்தல்; உறி கட்டின காவையுடைய எனலுமாம். இவள் அழகு கண்டு புறத்தே சூழ்ந்தார் என்றலும் பொருந்தும். 207-217. மிளையும் - காவற்காடும், கிடங்கும் - அகழியும், வளைவிற் பொறியும் - வளைந்து தானே எய்யும் இயந்திர வில்லும், கருவிரல் ஊகமும் - கரியவிரலினையுடைய கருங்குரங்கு போன்ற பொறியும், கல் உமிழ் கவணும் - கல்லினை வீசுகின்ற கவணும், பரிவு உறு வெந்நெயும் - சேர்ந்தாரைத் துன்புறுத்துகின்ற வெம்மை மிக்க நெய்யும், பாகு அடு குழிசியும் - செம்பினை உருக்குகின்ற குழிசிகளும், காய்பொன் உலையும் - இரும்பு காய்ந்து உருகற்கு வைத்த உலைகளும், கல் இடு கூடையும் - கல் நிறைய இடப் பெற்ற கூடைகளும், தூண்டிலும் - தூண்டில் வடிவாகப் பண்ணிய கருவிகளும், தொடக்கும் - கழுத்திற் பூட்டி முறுக்கும் சங்கிலியும், ஆண்தலை அடுப்பும் - ஆண்டலைப் புள் வடிவாகச் செய்த அடுப்புகளும், கவையும் - அகழியினின்று ஏறின் தள்ளுகின்ற இருப்புக் கவைகளும், கழுவும் - கழுக் கோலும், புதையும் - அம்புக் கட்டுகளும், புழையும் - ஏவறை களும், ஐயவித் துலாமும் - தன்னை நெருங்கினார் தலையை நெருக்கித் திருகும் மரங்களும், கை பெயர் ஊசியும் - மதிலின் தலையைப் பற்றுவார் கையை நடுங்கச்செய்யும் ஊசிப் பொறிகளும், சென்று எறி சிரலும் - பகைவர்மேற் சென்று தாக்கும் சிச்சிலிப் பொறியும், பன்றியும் - மதிற்கண் ஏறினாரைக் கோட்டாற் கிழிக்கும் பன்றிப் பொறியும், பணையும் - மூங்கில் வடிவாகப் பண்ணி அடித்தற்கு வைத்த பொறிகளும், எழுவும் சீப்பும் - கதவிற்கு வலியாக உள்வாயிற்படியிலே நிலத்திலே வீழ விடுமரங்களும், முழு விறற் கணையமும் - மிக்க வலிபொருந்திய கணைய மரங்களும், கோலும் -எறிகோலும், குந்தமும் - சிறுகவளமும், வேலும் - ஈட்டி முதலியனவும், ஞாயிலும் - குருவித் தலைகளும், பிறவும் - மதிற்குரிய ஏனைய பொறி முதலியனவும், சிறந்து - மிகுந்து; வெந்நெய் - கொதிக்க வைத்த நெய், பாகு அடு குழிசி - சாணகங் கரைத்துக் காய்கிற மிடா எனவும் செம்புருக்கு எனவும் கூறுப. வெந்நெய் முதலிய மூன்றும் மதிலைப் பற்றுவார்மீது இறைத்தற் கமைந்தன. கல்லிடு கூடை என்பதற்கு இடங்கணிப் பொறிக்குக் கல்லிட்டு வைக்கும் கூடை எனவும், தொடக்கு எனபதற்குக் கயிற்றுத் தொடக்கு எனவும். ஆண்டலை அடுப்பு என்பதற்கு ஆண்தலைப் புள் வடிவாகச் செய்யப்பட்ட பொறி நிரைகள் எனவும் கூறுவர். ஐயவித்துலாம் தலையை நெருக்கித் திருகும் என்பதனை, 1"விற்பொறிகள் .........மரநிலையே" என்னும் சிந்தாமணிச் செய்யுளின் நச்சினார்க்கினியர் உரையானுணர்க. இனி, இதற்கு, கதவிற்குக் காவலாகப் புறவாயிலிலே கற்கவி தொடங்கித் தூக்கப்படும் மரம் எனவும், பற்றாக்கை தூக்கிப் போகட்ட விட்டமெனவும், சாணம்புக் கூடு எனவும், சிற்றம்புகள் வைத்து எய்யும் இயந்ச்திரம் எனவும் பொருள் கூறுப. கை பெயர் ஊசி - கையைக் கெடுக்கும். ஊசி; கையை அப்புறப்படுத்தும் ஊசி; நிரைக்கழு எனலும் பொருந்தும். கதவு திறக்குங்காலத்து மேலே எழுப்புகையால் எழுவுஞ் சீப்பும் என்றார். கணையம் - சீப்பு அகப்படக் குறுக்கே போடப்படும் மரமுமாம். ஞாயில் - ஏப் புழைக்கு நடுவாய் எய்து மறையும் சூட்டு என்பர் நச்சினார்க்கினியர். (சீவக, 105. செய்யுள் உரை நோக்குக). பிற என்றது களிற்றுப்பொறி, புலிப்பொறி முதலியனவாம். 217-219. நாள் கொடி நுடங்கும் - நாள்தோறும் பகைவரை வென்று வென்று உயர்த்திய கொடிகள் அசையும், வாயில் கழிந்து - மதில் வாயிலைக் கடந்து, தன் மனை புக்கனளால் கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்தென் - இடையர் குலத்தாளாகிய மாதரி அடைக்கலம் பெற்ற கொள்கையொடு பொருந்தித் தன் மனைக்கண் புக்காள் ; நாள் கொடி - நல்ல நாளில் எடுத்த கொடியுமாம். ஆல்-அசை. சிறந்து நுடங்கும் வாயில் என்க. மா நகர் கண்டு பொழிலிடம் புகுந்து கோவலன் கூறுழி மாடலன் என்போன் புகுந்தோன்றன்னைக் கோவலன் வணங்க, அந்தணன் உரைப்போன் கருணை மறவ, செல்லாச் செல்வ, இல்லோர் செம்மல், உம்மைப் பயன்கொல் போந்தது நீயென வினவ, கோவலன் கனவு கண்டேன் கடிதீங்குறும் என, இங்கு ஒழிக நின் இருப்பு, மதுரை மா நகர் புகுக என மாதவத்தாட்டியும் மாமறை முதல்வனும் கூறுங்காலை, மாதரி என்போள் ஐயையைக் கண்டு அடி தொழலும், எண்ணினளாகி, அடைக்கலம் தந்தேன் மடந்தையைத் தாயும் நீயே ஆகித் தாங்கு, அடைக்கலம் சிறிதாயினும் பேரின்பம் தரும், அது கேளாய், பட்டினந்தன்னுள் சாரணர் தம்முன் குரங்கின் கையொருபாகத்து வானவன் வந்து நின்றோனை யாது இவன் வரவு என, இறையோன் தேவகுமரன் தோன்றினன் என்றலும், அறந்தலைப்பட்டோர் முடிவுலகெய்தினர் ; கேட்டனையாயின் நீ போகென்று கவுந்தி கூற, நங்கையொடு கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்து மனைபுக்கனள் என முடிக்க. இது நிலைமண்டில ஆசிரியப்பா. அடைக்கலக் காதை முற்றிற்று. 16. கொலைக்களக் காதை (மாதரி கண்ணகியையும் கோவலனையும் புதிய மனை யொன்றில் இருத்தித் தன் மகள் ஐயையைக் கண்ணகிக்குத் துணையாக வைத்து அடிசிலாக்குதற்கு வேண்டும் பொருள்களை அளிக்க, கண்ணகி நன்கு சமைத்துக் கணவனை முறைப்படி உண்பித்து அவற்கு வெற்றிலை பாக்கு அளித்து நின்றனள்ச். அப்பொழுது கோவலன் கண்ணகியை அருகணைத்து 'நீ'a6 வெவ்விய காட்டிலே போந்ததற்கு என் தாய் தந்தையர் என்ன துன்பமுற்றார்களோ' என்று கூறி, தான் முன் நெறி தவறி நடந்தமைக்கு இரங்கி, `ஈங்கு என்னொடு போந்து என் துயர் களைந்த பொன்னே! கொடியே! புனைபூங் கோதாய்! நாணின் பாவாய்! நீணில விளக்கே! கற்பின் கொழுந்தே! பொற் பின் செல்வி! நான் நின் சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டுபோய் விற்று வருவேன்; மயங்காதிரு' எனத் தேற்றி, அரிதின் நீங்கிச் செல்வானாயினன். செல்பவன் பீடிகைத் தெருவிலே பொற் கொல்லர் நூற்றுவர் பின்வர முன்வந்த ஒரு பொற்கொல்லனைக் கண்டு, விற்பதற்குத் தான் கொணர்ந்த சிலம்பினைக் காட்ட, அப் பொற்கொல்லன் அரசன் மனைவியின் சிலம்பொன்றைக் கவர்ந்தவனாதலால் தனது களவு வெளிப்படு முன் இச் சிலம்பால் தன்மீது உண்டாகும் ஐயத்தைத் தவிர்க்கலாமெனத் துணிந்து `கோப்பெருந்தேவி அணிதற்கேற்ற இச் சிலம்பினை நான் அரசனுக் கறிவித்து வருங்காறும் இவ்விடத்திருப்பீர்' எனத் தன் மனையின் பக்கத்திலுள்ள கோயிலில் இருத்திச் சென்றனன். சென்றவன், தன் தேவியின் ஊடல் தணித்தற் பொருட்டு அவள் கோயிலை நோக்கிச் சென்றுகொண் டிருந்த பாண்டியன் நெடுஞ்செழியனைக் கண்டு, `கோயிலில் இருந்த சிலம்பினைத் திருடிய கள்வன் அச் சிலம்புடன் அடியேன் குடிலில் வந்துளான்' என்று கூற, அரசன், `அவனைக் கொன்று அச் சிலம்பினைக் கொணர்வீர்; எனக் காவலாளர்க் குரைத்தனன். பொற் கொல்லன் மகிழ்ந்து அக் காவலாளருடன் சென்று கோவலனை அணுகி, `அரசன் ஏவலாற் சிலம்பு காண வந்தோர் இவர்' எனக் கூறி, அச் சிலம்பினைக் காட்டுவித்து, ‘முகக்குறி முதலியவற்றால் இவன் கள்வனல்லன்' என்று கூறியவர்களை இகழ்ந்துரைத்து, களவு நூல் கூறும் ஏதுக்களை யெல்லாம் எடுத்துக் காட்டி அவனைக் கள்வனென்று வற்புறுத்தினன் ; அப்பொழுது அறிவற்ற தறுகணனொருவன் தன் கை வாளாற் கோவலனை வெட்டி வீழ்த்தினன். (இதில், கண்ணகி கோவலனை உண்பித்ததும், கோவலன் கூற்றுக்கு மறு மொழி கூறியதும் அவளது உயர்ந்த பண்புகளை வெளிப்படுத்துகின்றன.) அரும்பெறற் பாவையை அடைக்கலம் பெற்ற இரும்பே ருவகையின் இடைக்குல மடந்தை அளைவிலை யுணவின் ஆய்ச்சியர் தம்மொடு மிளைசூழ் கோவலர் இருக்கை யன்றிப் 5 பூவ லூட்டிய புனைமாண் பந்தர்க் காவற் சிற்றிற் கடிமனைப் படுத்துச் செறிவளை யாய்ச்சியர் சிலருடன் கூடி நறுமலர்க் கோதையை நாணீ ராட்டிக் கூடல் மகளிர் கோலங் கொள்ளும் 10 ஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச் செய்யாக் கோலமொடு வந்தீர்க் கென்மகள் ஐயை காணீ ரடித்தொழி லாட்டி பொன்னிற் பொதிந்தேன் புனைபூங் கோதை என்னுடன் நங்கையீங் கிருக்கெனத் தொழுது 15 மாதவத் தாட்டி வழித்துயர் நீக்கி ஏத மில்லா இடந்தலைப் படுத்தினள் நோதக வுண்டோ நும்மக னார்க்கினிச் சாவக நோன்பிக ளடிக ளாதலின் நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம் 20 அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள் நெடியா தளிமின் நீரெனக் கூற இடைக்குல மடந்தையர் இயல்பிற் குன்றா மடைக்கலந் தன்னொடு மாண்புடை மரபிற் கோளிப் பாகற் கொழுங்கனித் திரள்காய் 25 வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய் மாவின் கனியொடு வாழைத் தீங்கனி சாலி யரிசி தம்பாற் பயனொடு கோல்வளை மாதே கொள்கெனக் கொடுப்ப மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய் 30 கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத் திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன கரிபுற அட்டில் கண்டனள் பெயர வையெரி மூட்டிய ஐயை தன்னொடு கையறி மடைமையிற் காதலற் காக்கித் 35 தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக் கைவன் மகடூஉக் கவின்பெறப் புனைந்த செய்வினைத் தவிசிற் செல்வன் இருந்தபின் கடிமல ரங்கையிற் காதல னடிநீர் சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி 40 மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல் தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக் குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு அமுத முண்க அடிக ளீங்கென அரசர் பின்னோர்க் கருமறை மருங்கின் 45 உரிய வெல்லாம் ஒருமுறை கழித்தாங்கு ஆயர் பாடியின் அசோதைபெற் றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ நல்லமு துண்ணும் நம்பி யீங்குப் பல்வளைத் தோளியும் பண்டுநங் குலத்துத் 50 தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை விழுமந் தீர்த்த விளக்குக் கொல்லென ஐயையுந் தவ்வையும் விம்மித மெய்திக் கண்கொளா நமக்கிவர் காட்சி யீங்கென உண்டினி திருந்த உயர்பே ராளற்கு 55 அம்மென் திரையலோ டடைக்கா யீத்த மையீ ரோதியை வருகெனப் பொருந்திக் கல்லதர் அத்தம் கடக்க யாவதும் வல்லுந கொல்லோ மடந்தைமெல் லடியென வெம்முனை யருஞ்சுரம் போந்ததற் கிரங்கி 60 எம்முது குரவர் என்னுற் றனர்கொல் மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ யானுளங் கலங்கி யாவதும் அறியேன் வருமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப் 65 பொச்சாப் புண்டு பொருளுரை யாளர் நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ இருமுது குரவ ரேவலும் பிழைத்தேன் சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன் வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு 70 எழுகென எழுந்தாய் என்செய் தனையென அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும் பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள் 75 மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன் முந்தை நில்லா முனிவிகந் தனனா அற்புளஞ் சிறந்தாங் கருண்மொழி யளைஇ எற்பா ராட்ட யானகத் தொளித்த நோயும் துன்பமும் நொடிவது போலுமென் 80 வாயல் முறுவற்கவர் உள்ளகம் வருந்தப் போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின் ஏற்றெழுந் தனன்யான் என்றவள் கூறக் குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும் 85 அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி நாணமும் மடனும் நல்லோ ரேத்தும் பேணிய கற்பும் பெருந்துணை யாக என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த பொன்னே கொடியே புனைபூங் கோதாய் 90 நாணின் பாவாய் நீணில விளக்கே கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி சீறடிச் சிலம்பி னொன்றுகொண் டியான்போய் மாறி வருவன் மயங்கா தொழிகெனக் கருங்கயல் நெடுங்கட் காதலி தன்னை 95 ஒருங்குடன் தழீஇ உழையோ ரில்லா ஒருதனி கண்டுதன் உள்ளகம் வெதும்பி வருபனி கரந்த கண்ண னாகிப் பல்லான் கோவல ரில்லம் நீங்கி வல்லா நடையின் மறுகிற் செல்வோன் 100 இமிலே றெதிர்ந்த திழுக்கென அறியான் தன்குலம் அறியுந் தகுதியன் றாதலின் தாதெரு மன்றந் தானுடன் கழிந்து மாதர் வீதி மறுகிடை நடந்து பீடிகைத் தெருவிற் பெயர்வோன் ஆங்கண் 105 கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின் கைக்கோற் கொல்லனைக் கண்டன னாகித் தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற 110 பொன்வினைக் கொல்லன் இவனெனப் பொருந்திக் காவலன் றேவிக் காவதோர் காற்கணி நீவிலை யிடுதற் காதி யோவென அடியேன் அறியே னாயினும் வேந்தர் முடிமுதற் கலன்கள் சமைப்பேன் யானெனக் 115 கூற்றத் தூதன் கைதொழு தேத்தப் போற்றருஞ் சிலம்பின் பொதிவா யவிழ்த்தனன் மத்தக மணியொடு வயிரங் கட்டிய பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூற் சித்திரச் சிலம்பின் செய்வினை யெல்லாம் 120 பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கிக் கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு யாப்புற வில்லை யெனமுன் போந்து விறல்மிகு வேந்தற்கு விளம்பியான் வரவென் சிறுகுடி லங்கண் இருமின் நீரெனக் 125 கோவலன் சென்றக் குறுமக னிருக்கையோர் தேவ கோட்டச் சிறையகம் புக்கபின் கரந்தியான் கொண்ட காலணி ஈங்குப் பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்குப் புலம்பெயர் புதுவனிற் போக்குவன் யானெனக் 130 கலங்கா வுள்ளம் கரந்தனன் செல்வோன் கூடன் மகளிர் ஆடல் தோற்றமும் பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும் காவல னுள்ளம் கவர்ந்தன என்றுதன் ஊட லுள்ளம் உள்கரந் தொளித்துத் 135 தலைநோய் வருத்தந் தன்மே லிட்டுக் குலமுதல் தேவி கூடா தேக மந்திரச் சுற்றம் நீங்கி மன்னவன் சிந்தரி நெடுங்கட் சிலதியர் தம்மொடு கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக் 140 காப்புடை வாயிற் கடைகாண் அகவையின் வீழ்ந்தனள் கிடந்து தாழ்ந்துபல ஏத்திக் கன்னக மின்றியும் கவைக்கோ லின்றியும் துன்னிய மந்திரந் துணையெனக் கொண்டு வாயி லாளரை மயக்குதுயி லுறுத்துக் 145 கோயிற் சிலம்பு கொண்ட கள்வன் கல்லென் பேரூர்க் காவலர்க் கரந்தென் சில்லைச் சிறுகுடி லகத்திருந் தோனென வினைவிளை கால மாதலின் யாவதும் சினையலர் வேம்பன் தேரா னாகி 150 ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கென் தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு கன்றிய கள்வன் கைய தாகில் கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் காவலன் ஏவக் கருந்தொழிற் கொல்லனும் 155 ஏவ லுள்ளத் தெண்ணியது முடித்தெனத் தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த கோவலன் றன்னைக் குறுகின னாகி வலம்படு தானை மன்னவன் ஏவச் சிலம்பு காணிய வந்தோர் இவரெனச் 160 செய்வினைச் சிலம்பின் செய்தி யெல்லாம் பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கிவன் கொலைப்படு மகனலன் என்று கூறும் அருந்திறன் மாக்களை அகநகைத் துரைத்துக் 165 கருந்தொழிற் கொல்லன் காட்டின னுரைப்போன் மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம் தந்திரம் இடனே காலம் கருவியென்று எட்டுட னன்றே இழுக்குடை மரபிற் கட்டுண் மாக்கள் துணையெனத் திரிவது 170 மருந்திற் பட்டீ ராயின் யாவரும் பெரும்பெயர் மன்னனிற் பெருநவைப் பட்டீர் மந்திர நாவிடை வழுத்துவ ராயின் இந்திர குமரரின் யாங்காண் குவமோ தெய்வத் தோற்றம் தெளிகுவ ராயின் 175 கையகத் துறுபொருள் காட்டியும் பெயர்குவர் மருந்தின் நங்கண் மயக்குவ ராயின் இருந்தோம் பெயரும் இடனுமா ருண்டோ நிமித்தம் வாய்த்திடி னல்ல தியாவதும் புகற்கிலா அரும்பொருள் வந்துகைப் புகுதினும் 180 தந்திர கரணம் எண்ணுவ ராயின் இந்திரன் மார்பத் தாரமும் எய்துவர் இவ்விடம் இப்பொருள் கோடற் கிடமெனின் அவ்விடத் தவரை யார்காண் கிற்பார் காலங் கருதி அவர்பொருள் கையுறின் 185 மேலோ ராயினும் விலக்கலு முண்டோ கருவி கொண்டவர் அரும்பொருள் கையுறின் இருநில மருங்கின் யார்காண் கிற்பார் இரவே பகலே என்றிரண் டில்லை கரவிடங் கேட்பினோர் புகலிட மில்லை 190 தூதர்கோ லத்து வாயிலின் இருந்து மாதர்கோ லத்து வல்லிருட் புக்கு விளக்கு நிழலில் துளக்கிலன் சென்றாங்கு இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம் வெயிலிடு வயிரத்து மின்னின் வாங்கத் 195 துயில்கண் விழித்தோன் தாளிற் காணான் உடைவாள் உருவ உறைகை வாங்கி எறிதொறுஞ் செறித்த இயல்பிற் காற்றான் மல்லிற் காண மணித்தூண் காட்டிக் கல்வியிற் பெயர்ந்த கள்வன் றன்னைக் 200 கண்டோ ருளரெனிற் காட்டும் ஈங்கிவர்க் குண்டோ வுலகத் தொப்போ ரென்றக் கருந்தொழிற் கொல்லன் சொல்ல ஆங்கோர் திருந்துவேற் றடக்கை இளையோன் கூறும் நிலனகழ் உளியன் நீலத் தானையன் 205 கலன்நசை வேட்கையிற் கடும்புலி போன்று மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து ஊர்மடி கங்குல் ஒருவன் தோன்றக் கைவாள் உருவஎன் கைவாள் வாங்க எவ்வாய் மருங்கினும் யானவற் கண்டிலேன் 210 அரிதிவர் செய்தி அலைக்கும் வேந்தனும் உரியதொன் றுரைமின் உறுபடை யீரெனக் கல்லாக் களிமக னொருவன் கையில் வெள்வாள் எறிந்தனன் விலங்கூ டறுத்தது புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப 215 மண்ணக மடந்தை வான்றுயர் கூரக் காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் கோவலன் பண்டை ஊழ்வினை யுருத்தென். நேரிசை வெண்பா நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே கண்ணகி தன்கேள்வன் காரணத்தான் - மண்ணில் வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை விளைவாகி வந்த வினை. உரை 1-2. அரும் பெறற் பாவையை அடைக்கலம் பெற்ற - பெறுதற்கு அரிய பாவை போல்வாளாய கண்ணகியை அடைக்கல மாகப் பெற்ற, இரும் பேர் உவகையின் இடைக்குல மடந்தை - மிக்க பெரிய மகிழ்ச்சியினையுடைய இடைக்குலத்துத் தோன்றிய மாதரி; அரும் பெறல் - பெறலரும் என மாறுக. மடந்தை - ஈண்டுப் பருவங் குறியாது பெண்பாலை உணர்த்தி நின்றது. தான் அடைக்கலங்காக்கப் பெற்றமையால் இரும்பேருவகை எய்தினாள் என்க. 3-6. அளை விலை உணவின் ஆய்ச்சியர் தம்மொடு - மோரினை விற்றுப் பெறும் பொருளால் உண்டு வாழும் வாழ்க்கையினையுடைய இடைச்சியரோடு, மிளை சூழ் கோவலர் இருக்கை அன்றி - கட்டு வேலி சூழ்ந்த இடையர்களது இருக்கைக்கண் அன்றி, பூவல் ஊட்டிய புனை மாண் பந்தர்க் காவற் சிற்றில் கடி மனைப் படுத்து - அழகு மாட்சிமைப்பட்ட பந்தரினையும் காவலினையுமுடைய செம்மண் பூசிய சிறு வீடாகிய விளக்க மமைந்த மனைக்கண் சேர்த்து; மிளை கோவலரிருக்கைக்கும், காவல் மனைக்கும் கொள்க, பூவல்- செம்மண்; 1"இல்பூவலூட்டி" என்றார் பிறரும். கடி-விளக்கம். 7-8. செறி விளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி - செறிந்த வளை யினை அணிந்த இடைச்சியர் சிலருடன் சேர்ந்து, நறுமலர்க் கோதையை நாள் நீர் ஆட்டி - மணமுள்ள மலர் மாலையை அணிந்த கண்ணகியைப் புது நீரானே குளிப்பாட்டி ; நாள் நீர் - புதிய நீர். 9-14. கூடல் மகளிர் கோலங் கொள்ளும் - கூடல் நகரிடத்து மகளிர் அழகின் பொருட்டுக் கொள்ளுகின்ற, ஆடகப் பைம் பூண் அருவிலை அழிப்ப - பொன்னாற் செய்த பசிய பூணின் அரிய உயர்ச்சியைக் கெடுத்தற்கு, செய்யாக் கோலமொடு வந்தீர்க்கு - இயற்கை யழகுடன் வந்த நுமக்கு, என் மகள் ஐயைகாணீர் அடித்தொழிலாட்டி - எனக்கு மகளாய ஐயை குற்றேவல் மகளாவாள், பொன்னிற் பொதிந்தேன் - பொன்னைப் போல் அரிதாகப் போற்றுவேன், புனை பூங் கோதை என்னுடன் நங்கை ஈங்கு இருக்கெனத் தொழுது - அழகிய பூங்கோதையினை யுடைய நங்காய் என்னுடன் இவ்விடத்திருப்பா யாகவென வணங்கி ; கூடல் மகளிர் என்றாள், தானறியுமூர் அதுவாகலான். பூண்விலையை அழித்தலாவது, இவளது இயற்கை அழகு கண்டார் பூணின் நலனை இகழ்தலாம். செய்யாக் கோலம் - புனையா அழகு; ஆவது இயற்கை அழகு. இனி, கூடல் மகளிர் கொள்ளுகின்ற அரிய விலையை யுடைய ஆடகப் பைம்பூணாற் செய்த கோலம் அழித்தற்கு எனவுமுரைப்ப. நங்கை - விளி. நங்கை - மகன் மனைவியைக் குறிக்கும் முறைப் பெயரென்பர் அடியார்க்கு நல்லார். 15-17. மாதவத்தாட்டி வழித்துயர் நீக்கி - கவுந்தியடிகள் வழிச் சேறற்கண் உளவாம் துன்பங்களை விலக்கிக் காத்து, ஏதம் இல்லா இடந்தலைப்படுத்தினள் - குற்றம் சிறிதுமில்லா விடத்துக் கூட்டினாள், நோதகவு உண்டோ நும் மகனார்க்கு இனி- ஆகலான் நும் கணவனுக்கு இனி இவ்விடத்து உளக் கவலை யுறுதல் உண்டோ என்று சொல்லி ; தலைப்படுத்தல் - கூட்டுதல். நோவு தகவு, நோதகவு ஆயிற்று என்ப. மகன் - கணவன்; 1"நினக்கிவன் மகனாய்த் தோன்றிய தூஉம்" என்றார் மணிமேகலையினும். உண்டோ - ஒ, எதிர்மறை. என்று சொல்லி என வருவித்துரைக்க. 18-21. சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் - அடிகள் சாவக நோன்புடையராகலான், நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு - நாத்தூணாகிய ஐயையொடு பகற்பொழுதே உண்ணும் உணவினைச் சமைப்பதற்கு, அமைந்த நற்கலங்கள் நெடியாது அளிமின் நீர் எனக் கூற - பொருந்திய நல்ல கலங்களை நீட்டியாது நீவிர் அளிமின் என்று சொல்ல ; சாவகநோன்பி - துறவாது விரதங்காப்போர். அடிகள் என்றது ஈண்டுக் கோவலனை. நாத்தூண் - கணவனுடன் பிறந்தாள். நாத்தூணாகிய நங்கை. இனி, நாத்தூணும் நங்கையும் எனலுமாம் ; ஈண்டு நாத்தூண் - ஐயை ; நங்கை - கண்ணகி, நாள்வழிப்படூஉ மடிசில் - காலத்தில் ஆக்கும் அடிசில் எனலுமமையும். நற்கலம் - புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி மேன்மக்களாளும் கலத்தினை. நெடித்தல் - நீடித்தல் இடைக்குலமடந்தை ஆய்ச்சியர் தம்மொடு மனைப்படுத்துக் கூடி நீராட்டித் தொழுது அளிமின் எனக் கூற என்க. 22-28. இடைக்குல மடந்தையர் - ஆயர் குலத்து மகளிர். இயல்பிற் குன்றா மடைக்கலந் தன்னொடு - மாதரி கூறிய தன்மை யிற் குறையாத சமைத்தற் குரிய கலங்களுடனே, மாண்புடை மரபிற்கோளிப் பாகற் கொழுங் கனித் திரள்காய் - மாட்சிமை யுடையோர் கொடுக்கும் தன்மை போலப் பூவாது காய்க்கும் பலாவினுடைய கொழுவிய திரண்ட முதிர்ந்த காயும், வாள்வரிக்கொடுங்காய் - வளைந்த வரிகளையுடைய வெள்ளரிக் காயும், மாதுளம் பசுங்காய் - கொம்மட்டி மாதுளையின் இளங்காயும், மாவின் கனியொடு வாழைத் தீங்கனி - மாம்பழமும் இனிய வாழைப்பழமும், சாலி அரிசி - செந்நெல் அரிசியும் ஆகிய இவற்றை, தம்பாற் பயனொடு - தம்குலத்திற்குரிய பாலுடனும் நெய்யுடனும், கோல் வளை மாதே கொள்கெனக் கொடுப்ப - திரண்ட வளையலை யணிந்த மாதே கொள்வாயாக வென்று சொல்லிக் கொடுக்க ; பெரியோர் சொல்லாமலே செய்தல் போலத் தான் பூவாதே காய்த்தலின், மாண்புடை மரபிற் கோளிப்பாகல் எனப்பட்டது. 1"சொல்லாம லேபெரியர் சொல்லிச் சிறியர்செய்வர், சொல்லியுஞ் செய்யார் கயவரே - நல்ல, குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடிற், பலாமாவைப் பாதிரியைப் பார்" என்பது அறியற்பாலது. கோளி - பூவாது காய்க்கும் மரம். பாகல் - பலா. கோளிப்பாகல் : வெளிப்படை. கனிக்காய் - கனிக்கு ஆன காய், முதிர்ந்த காய் : இதனை இக்காலத்துச் செங்காய் என்ப. வால் வரிக் கொடுங்காய் எனப் பாடங் கொண்டு, வெள்வரிக்காய் என்பர் அரும்பத உரை யாசிரியர். கொம்மட்டி மாதுளங்காய் புளித்த கறி ஆக்குதற்குச் சிறந்தது என்பர். பாற்பயன் - பாலாகிய பயன் எனலுமமையும். 29-34. மெல் விரல் சேப்பப் பல்வேறு பசுங்காய் கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்ய - அங்ஙனம் அவர் கொடுத்த பலவேறு வகைப்பட்ட பசிய காய்களைத் தனது மெல்லிய விரல்கள் சிவக்கும் வண்ணம்வளைந்த வாயினையுடைய அரிவாளால் அரிதலைச் செய்ய, திருமுகம் வியர்த்தது - அழகிய முகம் வியர்த்தது, செங்கண் சேந்தன - செவ்வரி பொருந்திய கண்கள் சிவந்தன, கரிபுற அட்டில் கண்டனள் பெயர - கரிந்த இடத்தையுடைய அட்டிலைக் கண்டனளாய் முகம் மாறி? வை எரிமூட்டிய ஐயை தன்னொடு - வைக்கோலால் தீ மூட்டிய ஐயையுடன் கை அறிமடைமையிற் காதலற்கு ஆக்கி - தன் கை வல்ல அளவாலே கணவனுக்குச் சமைத்து; கொடுவாய்க்குயம் - வளைந்த வாயினையுடைய அரிவாள். 1"கூனிக்குயம்" என்றார் பிறரும். விடுவாய் செய்தல் - அரிதல். முகம் வியர்த்தது பசுங்காய் அரிந்தமையானும், செங்கண் சேந்தமை அட்டில் கண்டமையானும் என்க. கண்டனள்; முற்றெச்சம். தீ மூட்டுவார் முதலில் வைக்கோலால் மூட்டுவர். மடைமை - அடிசில் அடுதற்றன்மை. 35-43. தாலப் புல்லின் வால்வெண் தோட்டு - பனையாகிய புல்லினது மிக வெள்ளிய ஓலையினால், கைவல் மகடூஉ கவின் பெறப் புனைந்த - கைத்தொழில் வல்ல மகள் அழகு பெறச் செய்த, செய் வினைத் தவிசில் செல்வன் இருந்தபின் - தொழிற் பாடமைந்த தவிசின்கண் கோவலன் அமர்ந்த பின்னர், கடி மலர் அங்கையிற் காதலன் அடிநீர் சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி - சுட்ட மண்கலங் கொண்டு காதலன் அடிகளைக் கழுவிய நீரை விளக்கமமைந்த மலர் போலும் அகங்கையால் வணங்கி மாற்றி, மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப் பனள்போல் - நிலமடந்தையினது மயக்கத்தை ஒழிப்பவள் போல, தண்ணீர் தெளித்துத் தன் கையால் தடவி - தனது கையினால் குளிர்ந்த நீரைத் தெளித்து மெழுகி, குமரி வாழையின் குருத்து அகம் விரித்து ஈங்கு அமுதம் உண்க அடிகள் ஈங்கு என - ஈனாத வாழையின் குருத்தினை விரித்து அதன்கண் உணவினைப் படைத்து அடிகாள் இவ்விடத்து உண்டருள்க என்று சொல்ல; பனை புறக்காழ்த்து ஆகலான் புல் எனப்பட்டது. தவிசு - தடுக்கு எனப்படும். அகம்+கை - அங்கை. அடிநீர் - அடியைக் கழுவியநீர். சுடுமண் மண்டை என்ற குறிப்பு இவள் முன்பெல்லாம் பொன், வெள்ளி முதலியவற்றானாய கலங்களை வழங்கினாள் என்பதுணர்த்தி நின்றது. தொழுதனள் - முற்றெச்சம். மண்ணக மடந்தைக்கு மயக்கம் இவர்க்கு மேல் வரும் தீங்கு நோக்கி உண்டாயது என்க. இனி மயக்கம் - அனந்தல் எனவுமாம். குமரி வாழை - ஈனாத தலை வாழை. ஈங்கு இரண்டனுள் ஒன்று அசை. ஆக்கி, இருந்தபின் மாற்றித் தெளித்துத் தடவி விரித்து அமுதம் உண்கவென என்க. 44-53. அரசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின் உரியவெல் லாம் ஒருமுறை கழித்து - அரிய மறையினிடத்து அரசர் பின்னோராய வணிகர்க்கு உரியனவாகக் கூறிய பலியிடல் முதலிய வற்றை ஒரு முறையாற் கழித்து, ஆங்கு ஆயர் பாடியின் அசோதை பெற்று எடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ நல் அமுது உண்ணும் நம்பி ஈங்கு - இம் மதுரைக்கண் ஆயர் பாடியில் நல்ல அமுதினை யுண்ணும் நம்பியாகிய கோவலன் அம் மதுரைக்கண் ஆயர்பாடியில் அசோதை என் பாள் பெற்றெடுத்த அந்த நல்லமுதமுண்ணும் புதிய காயாம் பூப்போலும் நிறத்தினையுடைய கண்ணனோதான், பல்வளைத் தோளியும் - இவன் துயர் தீர்த்த இப் பலவாகிய வளையலை அணிந்த தோளினையுடையாளும், பண்டு நம் குலத்துத் தொழுனை யாற்றினுள் தூமணிவண்ணனை விழுமம் தீர்த்த விளக்குக்கொல் என - முன்னர் நம் குலத்துத் தோன்றிய தூய நீலமணி போலும் நிறமுடைய மாயோனைக் காளிந்தி யாற்றின்கண் துயர் தீர்த்த நப்பின்னை என்னும் விளக்கோதான் என்று, ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி- ஐயையும் அவள் தாய் மாதரி யும் வியப் புற்று, கண் கொளா நமக்கு இவர் காட்சி ஈங்கு என - இவருடைய அழகு நம் கண்களின் அடங்காவென்று புகழ்ந்து கூற; அரசர் பின்னோர் - வணிகர், தன்னூரிற் செய்வன வெல்லாம் செய்யப் பெறாமையான் ஒருமுறை கழித்து என்றார். ஈங்கு நல்லமுதுண்ணும் நம்பி ஆங்கு அசோதை பெற்றெடுத்த மலர் வண்ணன் கொல்லோ என மாறுக. நங்குலத்துத் தூமணி வண்ணன் என்க. 54-56. உண்டு இனிது இருந்த உயர் பேராளற்கு - இனிதே உணவுண்டு தங்கிய உயர்ந்த பெருமையுடையோனாகிய கோவலனுக்கு, அம் மென் திரையலோடு அடைக்காய் ஈத்த - அழகிய மெல்லிய வெற்றிலையோடு பாக்கினையும் தந்த, மையீர் ஓதியை வருகெனப் பொருந்தி - கரிய குளிர்ந்த கூந்தலையுடை யாளை வருகவென்று அருகணைத்து ; ஒருமுறை கழித்து உண்டினிதிருந்த பேராளன் என முடிக்க. திரையல் - வெற்றிலைச் சுருள். ஓதி - ஆகுபெயர். 57-62. கல்லதர் அத்தம் கடக்க யாவதும் வல்லுந கொல்லோ மடந்தை மெல்லடி என - மடந்தையின் மெல்லிய அடிகள் பருக்கைக் கற்கள் நிறைந்த நெறியாகிய அருவழியைக் கடப்ப தற்குச் சிறிதாவது வன்மையையுடையனவோ என்று நினைந்து, வெம்முனை அருஞ்சுரம் போந்ததற்கு இரங்கி - வெம்மையையுடைய மறவர் ஆறலைக்கும் முனைகளையுடைய அரிய சுரத்து நெறியிற் போந்தமைக்கு இரக்கங்கொண்டு, எம் முது குரவர் என் உற்றனர் கொல் - எம்முடைய இரு முதுகுரவரும் எந் நிலையை அடைந்தனரோ, மாயங் கொல்லோ - யான் இங்ஙன முற்றது கனவோ, வல்வினை கொல்லோ - நனவாயின் முன்செய்த தீவினையின் பயனோ, யான் உளம் கலங்கி யாவதும் அறியேன் - இப்பொழுது என்னுள்ளங் கலக்கமுறலான் யான் இவற்றினொன்றினையும் உணர்கின்றிலேன் ; முனை - மறவர் இருப்புக்கள்; குறும்புகள். யாவதும் வல்லுநகொல்லோ என்றது வல்லா என்றவாறு. என்னுற்றனர் கொல் - என்ன துன்பமுற்றாரோ; இறந்தனரோ. மாயம் - கனவு. யாவதும் - யாதும்; சிறிதும். 63-70. வறுமொழியாளரொடு வம்பப் பரத்தரொடு - பயனிலசொல்வாரோடும் புதிய பரத்தமையை யுடையாரோடுங் கூடி, குறுமொழிக் கோட்டி நெடு நகை புக்கு - சிறு சொற் சொல்லும் இழிந்தோர் கூட்டத்தின்கண் மிக்க சிரிப்புக்கு உட்பட்டு, பொச்சாப்பு உண்டு - மறவியிற் பொருந்தி, பொருள் உரையாளர் நச்சுக் கொன்றேற்கு - பொருள் பொதிந்த உரை யினையுடைய பெரியோர் விரும்புகின்ற நல்லொழுக்கத்தினைக் கெடுத்த எனக்கு, நன்னெறி உண்டோ - இனித் தீக் கதியன்றி நற்கதி உண்டாமோ, இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன் - தாய்தந்தையர்க்கு ஏவல் செய்தலினும் வழுவினேன், சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் - சிறு பருவத்தில் பெரிய அறிவினையுடையளாய நினக்கும் தீமை செய்தேன், வழு வெனும் பாரேன் - இங்ஙனம் நம் நகர் விட்டு இங்கு வருதல் குற்றமுடைத்தாம் என்பதனைச் சிறிதும் நோக்கேனாய், மா நகர் மருங்கு ஈண்டு எழுகென எழுந்தாய் - நமது பெரிய நகரத் திடத்தினின்றும் இவ்விடத்து எழுக வென்று யான் கூற உடனே ஒருப்பட்டு எழுந்தனை, என் செய்தனை என - என்ன அரிய காரியஞ் செய்தனையென்று கோவலன் இரங்கிக் கூற; வறுமொழி - பொருளில் மொழி, வம்பப் பரத்தர் - புதிய காம நுகர்ச்சி விரும்புங் காமுகர். கோட்டி - கூட்டம் பொச்சாப்பு - மறதி. நச்சு - நச்சப்படும் பொருள். கொல்லல் - ஈண்டு மேற் கொள்ளாமை. ஏவல் பிழைத்தல் - தாய் தந்தையர்க்குச் செய்வன தவிர்தல்; இனி, மாதவியின் நட்பை அவர்கள் ஒழித்திடுக என்னவும் ஒழியாமையுமாம். எனும் - சிறிதும். ஈண்டு என்றது மதுரையை. இத்துணையும் தனது ஒழுக்கத்தினை வெறுத்துக் கூறி இவ் வரவிற்கு நீயும் உடன் பட்டனையே என இரங்கிக் கூறினான். 71-83. அறவோர்க்கு அளித்தலும் - சாவகர்க்குக் கொடுத்தலும், அந்தணர் ஓம்பலும் - பார்ப்பனரைப் பேணுதலும், துறவோர்க்கு எதிர்தலும் - துறவிகளை எதிர்க்கொள்ளுதலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை - மேலையோர் உயர்த்துக் கூறும் சிறப்பினையுடைய விருந்தினரை எதிர்கொள்ளுதலுமாய இவற்றை இழந்த என்னை, நும் பெருமகள் தன்னொடும் - நுமது தாயோடும், பெரும் பெயர்த் தலைத்தாள் மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன் - பெரிய புகழினையும் தலையாய முயற்சியினையும் மன்னரது பெருமை மிக்க சிறப்பினையும் உடைய மாசாத்துவான் கண்டு, முந்தை நில்லா முனிவு இகந்தனன் ஆ - நீர் என் முன்பு நில்லாமையாற் றோன்றும் வெறுப்பினை நீங்கினேனாக, அற்பு உளம் சிறந்து அருள்மொழி அளைஇ என் பாராட்ட - அதனை உணர்ந்த அவர்கள் உள்ளத்து மிக்குத் தோன்றும் அன்போடு அருள் நிறைந்த மொழிகளைக் கலந்து என்னைப் பாராட்ட, யான் அகத்து ஒளித்த நோயும் துன்பமும் நொடிவது போலும் - நான் என்னுள்ளத்து மறைத்த மனக்கவலையையும் மெய்வருத்தத்தினையும் கூறுவது போன்ற, என் வாய் அல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்த - எனது உண்மையல்லாப் புன்சிரிப்பிற்கு அவர்கள் உள்ளம் வருந்தும் வண்ணம், போற்றா ஒழுக்கம் புரிந்தீர் - நீர் பெரியோர் வெறுக்கும் தீய வொழுக்கத்தினை விரும்பினீர் ஆகவும், யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் - உம்முடைய சொல்லைச் சிறிதும் மாற்ற நினையாத உள்ளத்து வாழ்க்கையை உடையேனாகலான், ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற - நான் நீர் கூறியதனை உடன்பட்டு எழுந்தேன் என்று கண்ணகி கூற; தாள் - முயற்சி. மன்பெரும் சிறப்பு - அரசனாற் பெறும் பெரிய சிறப்பு. இகத்தல் - நீங்குதல். நீர் நில்லா முனிவு என ஒரு சொல் வருவிக்க. நொடிதல் - சொல்லுதல். வாய் - உண்மை. 84-93. குடிமுதற் சுற்றமும் - குடிக்கண் முதற் சுற்றமாய் தாய் தந்தை முதலியோரையும், குற்றிளையோரும் - குற்றேவல் புரியும் மகளிரையும், அடியோர் பாங்கும் - அடியார் பகுதியையும், ஆயமும் நீங்கி - சேவிக்கும் தோழிமாரையும் விட்டு விலகி, நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணையாக - நாணினையும் மடனையும் நல்லோர்களது போற்றுதலையும் விரும்பிய கற்பினையும் பெருமை மிக்க துணையாகக் கொண்டு, என்னொடு போந்து ஈங்கு என் துயர் களைந்த - இவ்விடத்து என்னோடு வந்து என் துன்பத்தினைக் கெடுத்த, பொன்னே கொடியே புனை பூங் கோதாய் - பொன்னையொப்பாய் கொடிபோல்வாய் அழகிய மலர்மாலையை அனையாய், நாணின்பாவாய் நீள் நில விளக்கே-நாணினையுடைய பாவையை நிகர்ப்பாய் பெரிய இவ்வுலகிற்கு விளக்கமாக அமைந்தாய், கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி - கற்புக்குக் கொழுந்து போல்வாய் அழகின் செல்வியே, சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் மாறி வருவன் மயங்காது ஒழிகென - நின் சிறிய அடிக்கு அணியாகிய சிலம்புகளுள் ஒன்றனை யான் கொண்டு சென்று விற்று வருவேன் ; வருந்துணையும் நீ மயங்கா திருப்பாயாகவென்று சொல்லி : அடியோர் பகுதியராவார் - செவிலித்தாய் முதலிய ஐவர் : ஆவார், ஆட்டுவாள், ஊட்டுவாள், ஓலுறுத்துவாள், நொடி பயிற்றுவாள், கைத்தாய் எனப்படுவார். இனி இதற்குச் சேவிக்கும் பெயர் எனவும் கூறுப. மடன் - கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. பேணிய கற்பு என்றது கற்புத்தான் இவளை விரும்பி வந்தடைந்தது என்ற படி. நீணில விளக்கு என்பதனை உவமை யாக்கி நிலத்தின் விளக்காகிய ஞாயிற்றினையும் திங்களினையும் விளக்கத்தால் ஒப்பாய் எனலும் அமையும். யான் போய் மாறி வருவன் என்றது மேல் நிகழும் நிகழ்ச்சியைக் குறிப்பிற் புலப்படுத்தும் மொழியாகவுளது 94-99. கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னை - கரிய கயல் போலும் நெடிய கண்களையுடைய தன் காதலியை, ஒருங்குடன் தழீஇ - மெய்ம்முழுதும் தழுவி, உழையோர் இல்லாத ஒரு தனி கண்டு தன் உள்ளகம் வெதும்பி - அவளருகிலிருக்கும் தோழி முதலியோர் ஒருவரும் இல்லாத அவளது தனிமையை நோக்கித் தன் உள்ளம் கொதித்தலான், வரு பனி கரந்த கண்ணன் ஆகி - நிறைந்த நீரை மறைத்த கண்களையுடையனாய், பல் ஆன் கோவலர் இல்லம் நீங்கி - பல பசுக்களையும் எருமைகளையும் உடைய இடையர் வீட்டினை விட்டு நீங்கி, வல்லா நடையின் மறுகிற் செல்வோன் - தளர்வுற்ற நடையோடு அவ் வீதியிற் செல்கின்றவன்; உழையோரில்லா ஒரு தனி கண்டு என்றது முன்னர் இவள் ஆயத்தார் பலரோடு கூடியிருக்கும் நிலைமையை நோக்கிக் கூறியதாகக் கொள்க. இனி, ஈண்டு ஆய்ச்சியரெல்லாம் குரவையாடப் போயினமையான் ஆண்டு ஒருவரு மில்லாமை நோக்கிக் கூறியதாக் கலுமமையும். கண்ணீரைக் கரந்தான், காதலி அது காணின் வருந்துமென்று கொண்டு. வல்லா நடை - மாட்டாத நடை. 100-101. இமில் ஏறு எதிர்ந்தது. இழுக்கு என அறியான் தன் குலம் அறியும் தகுதி அன்று ஆதலின் - முரிப்பினையுடைய ஆனேறு தன்னை எதிர்ந்து பாய வந்ததனைத் தீய நிமித்தமென்று அறிந்திலன்; அது தனது குலம் உணரும் தகுதியினை உடைத் தன்று ஆகலான்; எதிர்தல் - எதிர்ப்படலுமாம். தகுதியன்று ஆகலின் அறியான் என்க. அறியான் - முற்றெச்சம். 102-104. தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து - தாதாகிய எருவினையுடைய மன்றமெல்லாங் கழிந்து, மாதர் வீதி மறுகிடை நடந்து - தளிப் பெண்டுகள் தெருவின் நடுவே நடந்து சென்று, பீடிகைத் தெருவிற் பெயர்வோன் ஆங்கண் - கடைவீதியிற் செல்கின்றவன் அவ்விடத்தே; தாதெருமன்றம் - எருக்கள் துகளாகிக் கிடப்பதும், மரத்தடியு மாகிய இடம். தளிப்பெண்கள் - கோயிற்பணி செய்யும் மகளிர். வீதி மறுகு - ஒருபொருட் பன்மொழி. 105-112. கண்ணுள் வினைஞர் - உருக்குத் தட்டாரும், கைவினை முற்றிய நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர - கைத்தொழிலில் தேர்ந்த நுட்ப வினைத்திறமுடைய பணித் தட்டாரும் நூறு பெயர் தன் பின்னே வர, மெய்ப்பை புக்கு - சட்டை அணிந்து, விலங்கு நடைச்செலவின் - விலகி நடக்கும் செலவினையுடைய, கைக்கோல் - கையின்கண் கொடிற்றினையுடைய, கொல்லனைக் கண்டனன் ஆகி - பொற்கொல்லனைக் கண்டு, தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற பொன்வினைக் கொல்லன் இவன் எனப் பொருந்தி - பாண்டியன் பெயரோடு வரிசை பெற்ற பொற்றொழிலில் தேர்ந்த கொல்லனாவான் இவன் எனக் கருதி அவனை அண்மி, காவலன் தேவிக்கு ஆவதோர் காற்கு அணி நீ விலையிடுதற்கு ஆதியோ என - அரசன் பெருந்தேவிக்கு அணியலாவதொரு காற்சிலம்பினை நீ விலை மதிப்பிடுதற்கு வல்லையோ என்று கேட்ப; மெய்ப்பை - சட்டை. விலங்கு நடை - உயர்ந்தோரைக் காணின் விலகி நடத்தல். கைக்கோல் - கொடிறு. தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற கொல்லன் எனக் கண்டான், நூற்றுவர் பின்வரலான். காற்கு அணி - காலில் அணியும் சிலம்பு. ஆதியோ - ஆவாயோ; தன் சிலம்பின் அருவிலை கருதி ஆதியோ வென்றான். பின்வரச் செல்லுதலையுடைய கொல்லன் என்க. ஒழிகெனத் தழீஇக் கண்டு வெதும்பிக் கண்ணனாகி நீங்கிச் செல்வோன் அறியான் கழிந்து நடந்து பெயர்வோன் கண்டனனாகிப் பொருந்தி ஆதியோவென என்க. இனிப் பொற்கொல்லன் கூறுவான் : 113-116. அடியேன் அறியேன் ஆயினும் - அடியேன் மகளிர் காலணியின் விலைமதித்தற்கு அறியேன் எனினும், வேந்தர் முடி முதற் கலன்கள் சமைப்பேன் யான் என - அரசர்களுக்கு முடி முதலிய அணிகலன்களை நன்கு சமைப்பேன் யான் என்று சொல்லி, கூற்றத் தூதன் கை தொழுது ஏத்த - கூற்றுவனின் தூதனாக வந்த பொற்கொல்லன் கையான் வணங்கிப் புகழ, போற்றரும் சிலம்பின் பொதிவாய் அவிழ்த்தனன் - புகழ்தற்கரிய சிலம்பினைப் பொதிந்த பொதியின் கட்டினைக் கோவலன் அவிழ்த்தனனாக; சமைத்தல் - நன்கு அமைத்தல். பொதிவாய் - கட்டுவாய். 117-120. மத்தக மணியொடு வயிரம் கட்டிய பத்திக்கேவணம் - தலையாய மாணிக்கத்தோடு வயிரமும் அழுத்திய பத்தி பட்ட கேவணத்தையுடைய, பசும்பொன் குடைச் சூல் சித்திரச் சிலம்பின் செய்வினை எல்லாம் - பசிய பொன்னாற் செய்த புடை பட்டு உட்கருவையுடைய சித்திரத் தொழிலமைந்த சிலம்பினது தொழில் நுணுக்கமெல்லாம், பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கி-பொய் கூறும் தொழிலினையுடைய பொற் கொல்லன் விலையை நோக்காது கோவலன் மீது குற்றங் கூறுதற்குத் தான் கவர்ந்த சிலம்போடு ஒக்கும் படியை நோக்கி; பத்தி - வரிசை. கேவணம் - கல்லழுத்துங் குழி. குடைச்சூல் - புடைபடுதலுமாம்; குடச்சூல் எனப் பாடங் கொள்ளலுமாம்; 1"குடச்சூல், அஞ்சிலம் பொடுக்கி" என்பது காண்க. குற்றமிலான் மேற் குற்றங் கூறுதற்கு இடுவந்தி கூறுதல் என்ப. 121-126. கோப்பெருந்தேவிக்கு அல்லதை - அரசனுடைய மாதேவிக்கு அல்லாது, இச் சிலம்பு யாப்புறவு இல்லை என முன் போந்து - இச் சிலம்பு பிறர்க்குப் பொருந்துமாறு இல்லை என்று கூறி முன்னின்றும் போய், விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர - வெற்றி மிக்க அரசனுக்கு யான் இதனை அறிவித்து வருந்துணையும், என் சிறு குடில் அங்கண் இருமின் நீர் என - எனது சிறிய குடிலாகிய அவ்விடத்தே நீர் இருப்பீராக என்று சொல்ல, கோவலன் சென்று அக் குறுமகன் இருக்கை யோர் தேவ கோட்டச் சிறையகம் புக்கபின் - கோவலனும் போய் அக் கீழோனுடைய இருக்கைக்கு அயலதாகியதோர் தேவகோட்டத்தின் மதிலுக்குள் புகுந்த பின்; அரச பத்தினியைத் தேவியென்றல் மரபு ; பெருந்தேவி - பட்டத்து மனைவி. அல்லதை - ஐ இடைச்சொல். சிறுகுடிலங்கண் - சிறு குடிலுக்கு அருகான அவ்விடம் எனலுமாம். குறு மகன் - கீழோன். சிறை - மதில். 127-130. கரந்து யான் கொண்ட கால் அணி - யான் வஞ்சித்துக் கொண்ட சிலம்பு, ஈங்குப் பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்கு - என்னிடத்ததே யென்று யாவரும் அறிய அரசனுக்கு வெளிப்படுதற்கு முன்னரே, புலம்பெயர் புதுவனிற் போக்குவன் யான் என - வேறு நாட்டினின்றும் போந்த இப் புதியோனால் என் கள்ளத்தினை யான் மறைப்பேனென்று, கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன் - துணிந்த உள்ளத் தினைக் கரந்து செல்கின்றவன்; புதுவனிற் போக்குதல் - அவன் வாயிலாகத் தன் வஞ்சத்தை மறைத்தல். போக்குதல் - மறைத்தல். 131-141. கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் - கூடலிடத்து நாடக மகளிருடைய ஆடலிற் றோன்றும் தோற்றமும், பாடற் பகுதியும் - அவ்வாடலுக் கேற்ற பாடலின் வேறுபாடும், பண்ணின் பயங்களும் - யாழிசையின் பயன்களும், காவலன் உள்ளம் கவர்ந்தன என்று - அரசனுடைய நெஞ்சினை ஈர்த்தனவென்று கருதி, தன் ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து - தனது ஊடு தலையுடைய உள்ளத்தை உள்ளே மறைத்து ஒடுக்கி, தலை நோய் வருத்தம் தன்மேல் இட்டு - தலைநோயாகிய வருத்தத்தைத் தன் மேல் ஏறட்டுக் கொண்டு, குலமுதல் தேவி கூடாது ஏக - உயர் குடிப் பிறப்பினையுடைய பெருந்தேவி தன்னொடு மேவாதே தனது கோயிற்கண் அந்தப்புரம் சென்றுவிடலான், மந்திரச் சுற்றம் நீங்கி மன்னவன் - அரசன் காம மிக்கவனாய் அமைச்சர் திரளினை விட்டு நீங்கி, சிந்து அரி நெடுங்கண் சிலதியர் தம்மொடு - அரி சிதறிய நெடிய கண்களையுடைய பணிப்பெண்டிருடனே, கோப்பெருந்தேவி கோயில் நோக்கி - கோப்பெருந்தேவியினுடைய கோயிலை நோக்கிச் செல்வோனை, காப்பு உடை வாயிற் கடைகாண் அகவையின் - காவலையுடைய வாயிற் கடையிடத்துக் காணுமுன்பே, வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்து பல ஏத்தி - வணங்கிக் கீழே விழுந்து கிடந்து பலவாக ஏத்தி ; ஆடற்றோற்றம் என்பதற்கு இரட்டுற மொழிதலால் ஆடலிடத்துத் தோன்றும் முகத் தோற்றமும் ஆடல் வேறுபாடும் என்றுரைத்தலுமாம். தலைநோய் வருத்தம் - வருத்தத்தைச் செய்யும் தலைநோய் எனலுமாம். நோக்கிச் செல்வோனை என ஒரு சொல் வருவித் துரைக்க. கடைகாண் அகவை என்பதற்கு, நோக்கிச் சென்று கடையைக் காணுமுன் எனக் கூறிக் கடைகாணுதலை அரசன் தொழிலாக்கினுமமையும். செல்வோன் வீழ்ந்து கிடந்து தாழ்ந்து ஏத்தி என்க. 142-147. கன்னகம் இன்றியும் கவைக்கோல் இன்றியும் - கன்னக்கோலும் கொடிற்றுக் கோலும் இன்றாகவும், துன்னிய மந்திரம் துணையெனக் கொண்டு - தன் உள்ளத்துப் பொருந்திய மந்திரத்தினையே களவிற்குத் துணையாகக் கொண்டு, வாயிலாளரை மயக்கு துயில் உறுத்து - வாயில் காப்போரை மயக்கத் தினை உண்டுபண்ணும் உறக்கத்தின்கண் பொருந்துவித்து, கோயிற் சிலம்பு கொண்ட கள்வன் - கோயிற்கண் இருந்த சிலம்பினைக் கவர்ந்துகொண்ட கள்வன், கல்லென் பேரூர்க் காவலர்க் கரந்து - ஒலியினையுடைய பெரிய ஊர்க்குக் காவலரானோர் கண்களை மறைத்து, என் சில்லைச் சிறுகுடில் அகத்து இருந்தோன் என - என்னுடைய இழிந்த சிறிய குடிலின்கண் வந்திருக்கின்றான் என்று கூற; கன்னகம் - அகழுங் கருவி. கவைக்கோல் - இட்டிகை முதலியவற்றைப் பறிக்குங் கருவி. மந்திரம் - துயிலுறுக்கும் மந்திரம். முன்னாள் கோயிற் சிலம்பு தன்னிடத்தில்லையென்று சாதித்தானாகலின், ஈண்டுக் 'கோயிற் சிலம்பு கொண்ட கள்வன்' என்றான். சில்லை - இழிவு. 148-153. வினை விளை காலம் ஆதலின் - வினை தோன்றிப் பயனைத் தரும் காலம் எய்திற்றாகலான், யாவதும் சினை அலர் வேம்பன் தேரான் ஆகி - கொம்புகளையுடைய வேம்பின் மலர் மாலையைச் சூடிய பாண்டியன் சிறிதும் ஆராய்தலிலனாய், ஊர் காப்பாளரைக் கூவி - ஊர் காவலரை அழைத்து, ஈங்கு என் தாழ் பூங்கோதை தன் காற் சிலம்பு - எனது தாழ்ந்த பூங்கோதையை யுடையாளது காலின்கண் அணியும் சிலம்பு, கன்றிய கள்வன் கையது ஆகின் - அடிப்பட்ட அக் கள்வனுடைய கையகத்ததாயின், கொன்று அச் சிலம்பு கொணர்க ஈங்கு என - அக் கள்வனைக் கொன்று அச் சிலம்பினை இங்குக் கொண்டு வருகவென்று சொல்ல; அலர் வேம்பன் - வேம்பலரோன் ; அலர் ஆகுபெயரான் மாலையை யுணர்த்திற்று. தாழ்தல் - நீடல். கன்றிய கள்வன் - களவில் தழும்பினவன். தேர்ந்து முறைசெய்தற் குரிய காவலன் தேராது இங்ஙனம் கூறியது வினையின் பயனென்பார் `வினை விளை காலமாதலின்' என்றார். முறை செய்யும் அரசன் ஆராயவேண்டிய நெறியொன்றையும் கைக்கொண்டில னென்பார் `யாவதும் தேரானாகி' என்றார். எனினும் என் கோதையின் காற்சிலம்பு கள்வன் கையதாகின் கொன்று கொணர்க வென்றமையான் அம் மன்னனிடத்துக் கொடுங்கோன்மை யின்மை உணரப்படும். கொல்லல் - வருத்துதலுமாம். தன் தேவியின் ஊடல் தீர்க்கும் மருந்தாய் அஃது உதவு மென்னுங் கருத்தால் கொணர்க ஈங்கு என்றானென்க. அவனைக் கொல்ல அச்சிலம்போடு ஈங்குக் கொணர்கவெனக் கருதியவன், வினை விளை காலமாதலின் கொன்று அச் சிலம்பு கொணர்க வென்றான் என்பர் அடியார்க்கு நல்லார். 154-157. காவலன் ஏவக் கருந்தொழிற் கொல்லனும்-அங்ஙனம் அரசன் ஊர் காப்பாளரைத் தன்னோடு ஏவுதலானே கொலைத் தொழிலையுடைய கொல்லனும், ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்து என - ஏவப்பட்ட உள்ளத்தோடே யான் கருதியதனை முடித்தேன் என்று கருதி, தீவினை முதிர்வலைச் சென்றுபட்டு இருந்த - தீயவினையாகிய சூழ்ந்த வலைக்கண்ணே சென்று அகப் பட்டிருந்த, கோவலன் தன்னைக் குறுகினன் ஆகி - கோவலனை அணுகியவனாய் ; கருந்தொழில் - கொலைத்தொழில். ஏவல் உள்ளம் - ஏவிய உள்ளம்; துரந்த உள்ளம். முடித்து - முடித்தேன் ; விரைவு பற்றி எதிர் காலம் இறந்த காலமாகக் கூறப்பட்டது. இனி முடிந்தது எனற் பாலது முடித்து என விகாரமாயிற்று எனவுங் கூறுப. முதிர்தல் - சூழ்தல். தீ வினை முதிர்வலை என்பதனை முதிர் தீவினை வலை என மாற்றி, முற்றிய தீவினையாகிய வலை எனலுமமையும். குறுகுதல் - அணுகுதல். 158-161. வலம் படு தானை மன்னவன் ஏவ - வென்றி காணும் சேனையினையுடைய அரசன் ஏவுதலானே, சிலம்பு காணிய வந்தோர் இவர் என - இவர்கள் சிலம்பினைக் காண்பதற்கு வந்தனர் ; அதனைக் காட்டுமின் எனச் சொல்லி, செய்வினைச் சிலம்பின் செய்தி எல்லாம் பொய்வினைக் கொல்லன் புரிந்து உடன் காட்ட - பொய்த்தொழில் சார்ந்த பொற்கொல்லன் அவரை வேறாக அழைத்துத் தொழிலமைந்த சிலம்பின் அருமையெல்லாம் விரும்பிச் சொல்லிக் கோயிற் சிலம்புடன் இஃது ஒக்குந் தன்மையையும் உடன் காட்ட ; காணிய, செய்யியவென்னும் வினையெச்சம், காட்டுமின், சொல்லெச்சம். செய்தி - தொழில் நுட்பம்; அருமை. உடன் காட்ட - கோயிற்சிலம்புடன் ஒக்குந் தன்மையைக் காட்ட ; என்பதனால் அவர்களை வேறாக அழைத்துச் சென்று கூறினமை பெறப்படும். 162-165. இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன் - இவ்விடத்திருந்தோனாகிய இவன் மெய்ப்பொறியானும் இருக்கின்ற முறைமையானும், கொலைப்படு மகன் அலன் என்று கூறும் - கொலை செய்தற்குரிய கள்வன் அல்லன் என்று கூறுகின்ற, அருந்திறல் மாக்களை அக நகைத்து உரைத்து - அரிய திறலையுடைய வேற்காரரை எள்ளல் நகை நகைத்து இகழ்ந்து கூறி, கருந்தொழிற் கொல்லன் காட்டினன் உரைப்போன் - கொலைத் தொழிலை விரும்பிய கொல்லன் களவு நூலிலுள்ள ஏதுக்களைக் காட்டி உரைப்பவன்: இலக்கண முறைமை - இலக்கணமும் முறைமையும் ; உம்மைத் தொகை. அக நகை - இகழ்ச்சி நகை. இனி, அக நக என்று பாடங் கொண்டு வேற்காரர் உளம் பிரியமாம்படி எனவும் கூறுப. 166-169. மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம் - மந்திரமும் தெய்வமும் மருந்தும் நிமித்தமும், தந்திரம் இடனே காலம் கருவி என்று எட்டுடன் அன்றே - தந்திரமும் இடனும் காலமும் கருவியும் எனப்படுகின்ற எட்டனையுமன்றோ, இழுக்கு உடை மரபிற் கட்டுண் மாக்கள் துணை எனத் திரிவது- குற்றம் பொருந்திய முறைமையினையுடைய களவு கண்டு உண்ணும் வாழ்க்கையினையுடைய கள்வர் துணையாகக் கொண்டு திரிவது; மருந்தே இடனே இவற்று ஏகாரம் எண்; 1"எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும், எண்ணுக் குறித்தியலு மென்மனார் புலவர்" என்பவாகலான் ஏனையவற்றெண்ணேகாரம் தொக்கன. இழுக்குடை மரபிற் கட்டுண்மாக்கள் எட்டுடனன்றே துணையெனத் திரிவது என மாறுக. உடன் : முற்றும்மைப் பொருட்டு. 170-171. மருந்திற் பட்டீர் ஆயின் யாவரும் பெரும் பெயர் மன்னனிற் பெரு நவைப் பட்டீர் - இவன் மருந்தின்கண் அகப் பட்டீராயின் நீவிர் யாவிரும் பெரிய புகழையுடைய அரசனால் கடுந்தண்டத்தினை அடைந்தீர் ; மருந்திற் பட்டீராயின் என்றது, முன்னர் இலக்கணமுறைமையின் கொலைப்படுமகனலன் எனக் கூறியதனை உட்கொண்டது. நவை - துன்பம் ; தண்டம். நவைப் பட்டீர்; துணிவு பற்றி இறந்த காலத்தாற் கூறினான். இனி, மந்திர முதலிய எட்டன் விளைவு கூறுவான்:- 172-173. மந்திரம் நாவிடை வழுத்துவர் ஆயின் - கள்வர் மந்திரத்தினை நாவினிடத்து உச்சரிப்பாராயின், இந்திர குமரரின் யாம் காண்குவமோ - தேவ குமாரரைப் போல அவரையும் நாம் காணமாட்டோம்; இந்திரர் - தேவர்; 2"இந்திரர் அமுத மியைவ தாயினும்" என்றார் பிறரும். இந்திர குமரர் - தேவகுமாரர் ; தேவர். ஓகாரம் எதிர் மறை 174-175. தெய்வத் தோற்றம் தெளிகுவர் ஆயின் - அவர் தம் தெய்வத்தின் வடிவினை உள்ளத்தே தெளிந்து நினைப்பாராயின், கையகத்து உறு பொருள் காட்டியும் பெயர்குவர் - தம் கையிலகப்பட்ட மிக்க பொருளினை நமக்குக் காட்டியும் தப்புவார்; 176-177. தோற்றம் - வடிவு. மருந்தின் நம்கண் மயக்குவர் ஆயின் - அவர் மருந்தினாலே நம்மிடத்து மயக்கஞ் செய்வாராயின், இருந்தோம் பெயரும் இடனுமார் உண்டோ - இருந்த நாம் எழுந்து போகலாம் இடமும் உண்டாமோ; மார், அசை. உண்டோ - இல்லை; ஓ, எதிர்மறை. 178-179. நிமித்தம் வாய்த்திடின் அல்லது - நன்னிமித்தம் வாய்க்கப் பெற்றா லல்லது, யாவதும் புகற்கிலர் அரும்பொருள் வந்து கைப் புகுதினும் - பெறுதற்கரிய மிக்க பொருள் தானே வந்து கிடைப்பினும் எளியவிடத்தும் புகார் ; யாவதும் - எத்துணை எளியவிடத்தும் ; யாவதும் புகற்கிலர் - சிறிதும் விரும்பார் என்றுமாம். 180-181. தந்திர கரணம் எண்ணுவர் ஆயின் - களவு நூலிற் சொல்லு கின்ற தொழில்களை எண்ணிச் செய்வாராயின், இந்திரன் மார்பத்து ஆரமும் எய்துவர் - இந்திரன் மார்பிலணிந்த ஆரத்தினையும் அடைகுவர் ; தந்திரம் - நூல், களவுநூல், கரணம் - தொழில். எண்ணுதல் - ஆய்ந்து செய்தல். 182-183. இவ்விடம் இப் பொருள் கோடற்கு இடம் எனின் - இப் பொருளினை யாம் கொள்ளுதற்கு இவ்விடமே ஏற்ற இடமாகும் என்று எண்ணுவாராயின், அவ்விடத்து அவரை யார் காண்கிற்பார் - அவ்விடத்து அவரைக் காண வல்லார் யார் ; 184-185. காலம் கருதி அவர் பொருள் கையுறின் - அவர் களவு கொள்ளுங் காலம் இதுவே என்று கருதிப் பொருளைக் கைப்பற்றுவாராயின், மேலோர் ஆயினும் விலக்கலும் உண்டோ - தேவ ராயினும் அதனை விலக்குதல் கூடுமோ; மேலோர் - தேவர். 186-187. கருவி கொண்டு அவர் அரும் பொருள் கையுறின் - அவர் கன்னகம் முதலிய கருவிகளைக் கொண்டு பெறுதற்கரிய பொருள்களைக் கைப்பற்றினால், இருநிலம் மருங்கின் யார் காண்கிற்பார் - இப் பெரிய வுலகத்து அவரைக் காண வல்லார் யார்? ஆகலான்; ஆகலான் என ஒரு சொல் வருவிக்க. 188-189. இரவே பகலே என்று இரண்டு இல்லை - அவர்க்கு இரவும் பகலும் என்னும் இரண்டு பகுதி இல்லை, கரவு இடம் கேட்பின் ஓர் புகல் இடம் இல்லை - அவர் களவு செய்யும் இடத்தைக் கேட்பின் நாம் ஓடி ஒளிக்கலாம் இடம் வேறு இல்லை; எல்லாக் காலமும், எல்லா இடமும் அவர் களவு செய்தற்குப் பொருந்தியனவே என்றவாறாயிற்று. இங்ஙனம் களவு நூற்றுறை கூறியோன், கள்வருடைய வன்மையை அவர்க்குணர்த்துவான் பொய்க் கரி ஒன்று கூறுகின்றான்; 190-202. தூதர் கோலத்து வாயிலின் இருந்து - முன்னொரு நாளில் ஒரு கள்வன் தூதருடைய உருவத்துடன் பகற் காலத்து அரசன் வாயிலின்கணிருந்து, மாதர் கோலத்து வல் இருள் புக்கு - மிக்க இருளையுடைய இராக்காலத்துப் பெண்ணுருக்கொண்டு உள்ளே நுழைந்து, விளக்கு நிழலில் துளக்கிலன் சென்று விளக்கின் நிழலிலே பள்ளியறையினுள் நடுக்கமின்றிப் புக்கு, ஆங்கு இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம் வெயிலிடு வயிரத்து மின்னின் வாங்க - அவ்விடத்து இந் நெடுஞ்செழியனுக்கு இளங்கோவாகிய வேந்தன் துயில்கின்றவனுடைய வெயிலிடுகின்ற வயிரத்தையுடைய அசையும் ஒளி பொருந்திய ஆரத்தை விரைவில் வாங்கினானாக, துயில் கண்விழித்தோன் தோளிற் காணான் உடைவாள் உருவ - தூக்கத்தினின்றும் எழுந்த அவ் விளவரசன் ஆரத்தைத் தோளிற் காணானாய்த் தன் உடைவாளை உருவ, உறை கை வாங்கி எறிதொறும் செறித்த இயல்பிற்கு ஆற்றான் - அதன் உறையைத் தன் கையிற் பற்றித் தான் குத்துந்தோறும் வாளிலே உறையைச் செறித்த அத் தன்மைக்கு ஆற்றானாய், மல்லிற் காண - மற்போரான் அவன் வலியைக் காண விரும்பிய அளவிலே, மணித்தூண் காட்டிக் கல்வியிற் பெயர்ந்த கள்வன் தன்னை - அவ்விடத்து நின்றதோர் மணித் தூணைத் தானாகக் காட்டித் தன் களவு நூற்பயிற்சியினால் மறைந்த கள்வனை, கண்டோர் உளர் எனில் காட்டும் - பார்த்தோருளராயின் அவர்களைக் காட்டுமின், ஈங்கு இவர்க்கு உண்டோ உலகத்து ஒப்போர் என்று அக் கருந்தொழிற் கொல்லன் சொல்ல - காட்டுவாரிலர் ஆகலான் இக் கள்வர்க்கு ஒப்பாவார் இவ் வுலகத்து ஒருவருண்டோ என அக் கொலைத் தொழிலினையுடைய பொற்கொல்லன் கூற ; வல் இருள் - மிக்க இருள். வல்லிருட்புக்கு என்றதனால், வாயிலினிருந்தமை பகற் காலமாயிற்று. துளக்கம் - நடுக்கம், அச்சம். மின்னின் வாங்க - மின்னலின் வழியே வாங்க எனலுமாம். மின் - ஒளி. வேந்தன் விழித்தோன் காணான் உருவ வாங்கிச் செறித்த இயல்பிற்கு ஆற்றான் காணக் காட்டிப் பெயர்ந்த கள்வன் என்க. 202-203. ஆங்கு ஓர் திருந்து வேல் தடக்கை இளையோன் கூறும் - அப்பொழுது திருந்திய வேலேந்திய பெரிய கையினையுடைய ஓர் இளைஞன் கூறுவான் ; கூறுவதி யாதெனின் :- 204-211. நிலன் அகழ் உளியன் நீலத் தானையன் - முன்னர் நிலத்தினை அகழும் உளியை யுடையனாய் நீல நிறம் பொருந்திய கச்சினையுடையவனாய், கலன் நசை வேட்கையிற் கடும்புலி போன்று - கலன்களை மிக விரும்பிய விருப்பத் தானே பசியால் தான் உண்டற்கு விலங்கினைத் தேடி யலையும் புலியைப் போன்று, மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து ஊர் மடிகங்குல் ஒருவன் தோன்ற - மழைக்காலத்து இடையாமமாகிய மிக்க இருள் கலந்த ஊராரெல்லாம் உறங்கிய இராக் காலத்தே ஒரு கள்வன் வந்து தோன்ற, கை வாள் உருவ என் கை வாள் வாங்க - யான் என் கைவாளினை உறையி னின்றும் உருவினேனாக அவன் எனது அக் கைவாளினைப் பற்ற, எவ் வாய் மருங்கினும் யான் அவற் கண்டிலேன் - அதன் பின்னர் அவனை யான் எவ்விடத்தும் காணகில்லேன், அரிது இவர் செய்தி - ஆகலான் இவருடைய செய்கை யாவராலும் அறிதற்கரிது, அலைக்கும் வேந்தனும் - இவனை நாம் கொல்லாது விடின் நம்மை அரசன் வருத்துவான், உரியது ஒன்று உரைமின் உறு படையீர் என - ஆகலான் மிக்க படைக்கலத்தினை உடையீர் இனிச் செய்தற்குரியது ஒன்றனை ஆராய்ந்து கூறுமின் என்று சொல்ல ; 1"நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர், மென்னூ லேணிப் பன்மாண் சுற்றினர், நிலனக ழுளியர் கலனசைஇக் கொட்குங், கண்மா றாடவ ரொடுக்க மொற்றி" என்றார் பிறரும். கோவலனையும் கள்வனாகக் கொண்டு 'இவர் செய்கை ' என்றான். உளியன் தானையன் புலிபோன்று ஒருவன் தோன்ற என்க. 212-217. கல்லாக் களிமகன் ஒருவன் கையில் வெள்வாள் எறிந்தனன் - கல்வியின்மையாற் கொலையஞ்சானாய களிமகன் ஒருவன் தன் கையிலுள்ள வெள்ளிய வாளாலே வெட்டினான், விலங்கு ஊடு அறுத்தது - அவ் வெட்டானது குறுக்காகத் துணித்தது, புண் உமிழ் குருதி பொழிந்து உடன் பரப்ப - துணிபட்ட புண்ணின் வழியே கொப்புளிக்கின்ற உதிரம் குதித்து எங்கும் பரக்க, மண்ணக மடந்தை வான் துயர் கூர - நில மடந்தை மிக்க துயரத்தினை அடைய, காவலன் செங்கோல் வளைஇய - அக் காவலனுடைய செங்கோல் வளையும் வண்ணம், வீழ்ந்தனன் கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென் - முன்னைத் தீவினை முதிர்தலான் கோவலன் வெட்டுண்டு வீழ்ந்தனன் என்க. வெள்வாள் - பகைவரோடு பொருது குருதி படியாத வாள். மண்ணக மடந்தை துயர் கூர்ந்தது இவன் வெட்டுண்டமைக்கும் அதனாற் கண்ணகி துயருறுதற்கு மென்க. முன்னரும், 1"மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல்" என்றார். இனி, மண்ணக மடந்தை - மதுரை யெனக் கொண்டு மேல் தனக்கு ஆவதுணர்ந்து துயர் கூர என்றுரைத்தலுமாம். இது நிலைமண்டில வாசிரியப்பா. வெண்பாவுரை "நண்ணு மிருவினையு ..... வந்த வினை." பண்டை விளைவாகி வந்த வினை - பாண்டியன் முன் செய்த தீங்கின் பயனாகி வந்த தீவினையால், மண்ணில் வளையாத செங்கோல் - இவ் வுலகத்து வளை யாத அவனுடைய செங்கோல், கண்ணகி தன் கேள்வன் காரணத் தான் வளைந்தது - கண்ணகியின் கணவனாய கோவலன் முன்னிலை யாக வளைவுற்றது, நண்ணும் இருவினையும் - ஆகலான், நீவிர் செய்த இரு வினைப் பயனும் நும்மை வந்து பொருந்தும் என்பதனை அறிந்து, நண்ணுமின்கள் நல்லறமே - உலகத்தீர் நல்வினையைச் செய்யுங்கள். பாண்டியன் கோல் வளைதற்கு பழவினை காரணமும், கோவலன் வாயிலு மென்றார். கொலைக்களக் காதை முற்றிற்று. 17. ஆய்ச்சியர் குரவை (ஆயர் சேரியில் பலவகை உற்பாதங்கள் நிகழ்ந்தன. மாதரி தன் மகள் ஐயையை நோக்கி, முன்பு ஆயர்பாடியில் கண்ணனும் பலராமனும் பின்னையுடன் ஆடிய குரவையை நாம் இப்பொழுது கறவை கன்று துயர் நீங்குகவென ஆடுவேம் எனக் கூறி, எழுவர் கன்னியரை நிறுத்தி ஏழிசைகளின் பெயர்களாகிய குரல் முதலிய வற்றை அவர்கட்குப் பெயர்களாக இட்டு, அவருள் குரலாகியவளைக் கண்ணன் என்றும், இளியாகியவளைப் பலராமன் என்றும், துத்தம் ஆகியவளைப் பின்னை என்றும், ஏனை நரம்புகளாகியோரை மற்றை நால்வர் என்றும் படைத்துக்கோட் பெயரிட, அவர்கள் கற்கடகக் கை கோத்து நின்று மாயோனைப் பாடிக் குரவை யாடினர். (இதிலே, முன்னிலைப் பரவலும் படர்க்கைப் பரவலுமாகத் திருமாலைப் பாடிய பாட்டுக்கள் மிகவும் அருமையானவை.) கயலெழுதிய இமயநெற்றியின் அயலெழுதிய புலியும்வில்லும் நாவலந்தண் பொழின்மன்னர் ஏவல் கேட்பப் பாரர சாண்ட 5 மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில் காலை முரசங் கனைகுர லியம்பு மாகலின் நெய்ம்முறை நமக்கின் றாமென்று ஐயைதன் மகளைக் கூஉய்க் கடைகயிறு மத்துங்கொண்டு 10 இடைமுதுமகள் வந்துதோன்றுமன்; உரைப்பாட்டு மடை 1 குடப்பால் உறையா குவியிமில் ஏற்றின் மடக்கணீர் சோரும் வருவதொன் றுண்டு; 2 உறுநறு வெண்ணெய் உருகா உருகும்; மறிதெறித் தாடா வருவதொன் றுண்டு; 3 நான்முலை யாயம் நடுங்குபு நின்றிரங்கும் மான்மணி வீழும் வருவதொன் றுண்டு; கருப்பம் குடத்துப்பா லுறையாமையும் குவியிமி லேற்றின் மடக் கண்ணீர் சோர்தலும் உறியில் வெண்ணெ யுருகாமையும் மறிமுடங்கியாடாமையும் மான்மணி நிலத்தற்று வீழ்தலும் வருவதோர் துன்பமுண்டென மகளை நோக்கி மனமயங்காதே மண்ணின்மாதர்க் கணியாகிய கண்ணகியுந்தான்காண ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண் பிஞ்ஞையோ டாடிய குரவை யாடுதும் யாமென்றாள் கறவை கன்று துயர் நீங்குகவெனவே; கொளு 1 காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ் வேரி மலர்க்கோதை யாள்; சுட்டு 2 நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப் பொற்றொடி மாதராள் தோள்; 3 மல்லல் மழவிடை யூர்ந்தாற் குரியளிம் முல்லையம் பூங்குழல் தான்; 4 நுண்பொறி வெள்ளை யடர்த்தாற்கே யாகுமிப் பெண்கொடி மாதர்தன் தோள்; 5 பொற்பொறி வெள்ளை யடர்த்தாற்கே யாகுமிந் நற்கொடி மென்முலை தான்; 6 வென்றி மழவிடை யூர்ந்தாற் குரியளிக் கொன்றையம் பூங்குழ லாள்; 7 தூநிற வெள்ளை அடர்த்தாற் குரியளிப் பூவைப் புதுமல ராள்; எடுத்துக் காட்டு ஆங்கு, தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் எழுவரிளங் கோதை யார் என்றுதன் மகளைநோக்கித் தொன்றுபடு முறையால் நிறுத்தி இடைமுது மகளிவர்க்குப் படைத்துக்கோட் பெயரிடுவாள் குடமுதல் இடமுறை யாக்குரல் துத்தம் கைக்கிளை உழைஇளி விளரி தாரமென விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே; மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை ஆயவன் என்றாள் இளிதன்னை - ஆயமகள் பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார் முன்னையாம் என்றாள் முறை; மாயவன் சீருளார் பிஞ்ஞையுந் தாரமும் வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும் கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்துளாள் முத்தைக்கு நல்விளரி தான்; அவருள், வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத் தண்டாக் குரவைதான் உள்படுவாள் - கொண்டசீர் வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப் பெய்வளைக் கையாள்நம் பின்னைதா னாமென்றே ஐயென்றா ளாயர் மகள்; கூத்துள் படுதல் அவர்தாம், செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஒத்து அந்நிலையே யாடற்சீ ராய்ந்துளார் - முன்னைக் குரற்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்புற்ற கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும் முல்லைத்தீம் பாணியென் றாள்; எனாக், குரன்மந்த மாக இளிசம னாக வரன்முறையே துத்தம் வலியா - உரனிலா மந்தம் விளரி பிடிப்பாள் அவள் நட்பின் பின்றையைப் பாட்டெடுப் பாள்; பாட்டு 1 கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ; 2 பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ; 3 கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லைநம் ஆனுள் வருமேல் அவன் வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ; தொழுனைத் துறைவனோ டாடிய பின்னை அணிநிறம் பாடுகேம் யாம்; 1 இறுமென் சாயல் நுடங்க நுடங்கி அறுவை யொளித்தான் வடிவென் கோயாம் அறுவை யொளித்தான் அயர அயரும் ஈறுமென் சாயல் முகமென் கோயாம்; 2 வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள் நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம் நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும் வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்; 3 தையல் கலையும் வளையும் இழந்தே கையி லொளித்தாள் முகமென் கோயாம் கையி லொளித்தாள் முகங்கண் டழுங்கி மைய லுழந்தான் வடிவென் கோயாம்; ஒன்றன்பகுதி 1 கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள் மதிபுரையு நறுமேனித் தம்முனோன் வலத்துளாள் பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார் முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்; 2 மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள் பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள் கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார் குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்; ஆடுநர்ப் புகழ்தல் மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும் கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசோதையார் தொழுதே தேத்தத் தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே; எல்லாநாம், புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும் உள்வரிப் பாணியொன் றுற்று; உள்வரி வாழ்த்து 1 கோவா மலையாரம் கோத்த கடலாரம் தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக் கோகுல மேய்த்துக் குருந்தொசித்தா னென்பரால்; 2 பொன்னிமயக்கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னந் திகிரிப் பொருபடையா னென்பரால்; 3 முந்நீரி னுள்புக்கு மூவாக் கடம்பெறிந்தான் மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் கன்னவில்தோ ளோச்சிக் கடல்கடைந்தா னென்பரால்; முன்னிலைப் பரவல் 1 வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே; 2 அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய் வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே; 3 திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே நடந்த அடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே; படர்க்கைப் பரவல் 1 மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே; 2 பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும் திருவடியுங் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்னே; கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே 3 மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நாரய ணாவென்னா நாவென்ன நாவே; என்றியாம்.... கோத்த குரவையுள் ஏத்திய தெய்வநம் ஆத்தலைப் பட்ட துயர்தீர்க்க வேத்தர் மருள வைகல் வைகல் மாறட்டு வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து இடிப்படை வானவன் முடித்தலை யுடைத்த தொடித்தோட் டென்னவன் கடிப்பிகு முரசே. உரை 1-10. கயல் எழுதிய இமய நெற்றியின் - இமயத்துச்சியில் தான் எழுதிய கயல்மீனிற்கு, அயல் எழுதிய புலியும் வில்லும் - பக்கத்தே எழுதிய புலியினையும் வில்லினையுமுடைய சோழனும் சேரனும், நாவலந் தண் பொழில் மன்னர் - நாவலந்தீவிலுள்ள ஏனைய அரசர்களும், ஏவல் கேட்பப் பார் அரசு ஆண்ட - தன் ஏவல் கேட்டு ஒழுக நிலவுலக முழுதையும் அரசாண்ட, மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலின் - முத்த மாலை பொருந்திய வெண்கொற்றக் குடையினையுடைய பாண்டியனது கோயிற்கண்ணே, காலை முரசம் கனை குரல் இயம்பும் - பள்ளி யெழுச்சி முரசு மிக்க குரலோடு முழங்கும், ஆகலின் நெய்ம்முறை நமக்கு இன்று ஆம் என்று - ஆதலான் நமக்கு இன்று கோயிற்கு நெய்யளக்கும் முறையாம் என எண்ணி, ஐயை தன் மகளைக் கூய்க் கடைகயிறும் மத்தும் கொண்டு இடைமுதுமகள் வந்து தோன்றுமன் - இடைக்குலத்து முதியளாகிய மாதரி ஐயையாகிய தன் மகளை அழைத்துக் கடைகயிற்றினையும் மத்தினையும் எடுத்துக்கொண்டு தயிர்த் தாழியிடத்து வந்து தோன்றினாள்; கயல் முதலியன இலச்சினை. இமயநெற்றியின் எழுதிய கயல் அயல் எழுதிய புலியும் வில்லுமெனக் கூட்டுக. கயலை வணங்குதற்கு அதன் அயலில் புலியும் வில்லும் எழுதப்பட்டனவன்றி ஒப்பாக எழுதப்பட்டில வென்க. என்னை? இவ் வாசிரியர் அவ்வக்காண் டத்து அவ்வந்நாட்டு மன்னரை உயர்த்துக் கூறுதல் முறையாகலான் என்க. புலியும் வில்லும் என்றது, அவற்றினையுடைய மன்னரை. மன்னரும் என்னும் உம்மை தொக்கது. இயம்பும், முற்று. மன், அசை. உரைப்பாட்டு மடை - உரையாகிய பாட்டை இடையே மடுத்தது. 1. "குடப்பால் உறையா................ஒன்றுண்டு" குடப்பால் உறையா - நாம் உறையிட்ட தாழிகளிற் பாலும் தோய்ந்தில, குவி இமில் ஏற்றின் மடக்கணீர் சோரும் - திரண்ட முரிப்பினை யுடைய ஆனேற்றின் அழகிய கண்களினின்றும் நீர் உகும் ; வருவது ஒன்று உண்டு - ஆதலான் நமக்கு வருவதோர் தீங்கு உண்டு ; உறைதல் - தோய்தல். குவிதல் - திரளுதல். மடம் - ஈண்டு அழகு. 2. "உறிநறு வெண்ணெய்.........ஒன்றுண்டு" உறிநறு வெண்ணெய் உருகா - உறிக்கண் வைத்த முதல் நாளை வெண்ணெய் உருக வைத்தன உருகுகின்றில, உருகும் மறி தெறித்து ஆடா - ஆட்டுக் குட்டிகளும் துள்ளி விளையாடாமற் குழைந்து கிடக்கும்; வருவது ஒன்று உண்டு - ஆதலான் நமக்கு வருவதோர் தீங்கு உண்டு ; உருகுதல் - ஒன்று நெகிழ்தல், மற்றொன்று குழைந்துகிடத்தல். இனி. உருகும் என்ற பாடத்தினை உருகி எனக்கொண்டு உருகி ஆடா எனவும் முடிப்ப. உருகி - மெலிந்து. 3. "நான்முலை.........ஒன்றுண்டு" நான் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும் - நான்கு முலைகளையுடைய பசு நிரை மெய் நடுங்கி நின்று அரற்றும், மான் மணி வீழும் - அப் பசுக்களின் கழத்திற்கட்டிய மணிகளும் அற்று நிலத்தில் விழும் ; வருவது ஒன்று உண்டு - ஆகலான் நமக்கு வரும் தீங்கு ஒன்று உண்டு; ஆயம் - ஆனிரை. நடுங்குபு - நடுங்கி. மால் மணி - பெரிய மணி யென்றுமாம். கருப்பம் - இவை கேட்டிற்குக் கருப்பம் ; மேலே கூறுவன வற்றிற்குக் காரணம் என்றுமாம். "குடத்துப்பால் உறையாமையும்.....நீங்குகவெனவே" தாழிக்கண் பால் உறையாமையானும், திரண்ட முரிப்பினை யுடைய ஆனேற்றின் கண்களிலிருந்து நீர் உகுதலானும் , உறிக் கண் வெண்ணெய் உருகாமையானும், ஆட்டு மறிகள் துள்ளி விளையாடாமையானும், பசுக்களின் கழுத்து மணிகள் அற்று நிலத்து வீழ்தலானும் வருவதோர் துன்பம் உண்டென்று சொல்லி, மகளை நோக்கி, `உள்ளங் கவலற்க ; இந் நிலத்து மாதர்க்கு அணியாக விளங்கும் கண்ணகியும் காணும் வண்ணம் முன்னர் ஆயர்பாடியில் எருமன்றத்தின்கண் கண்ணன் தம் முனாகிய பலராமனுடன் விளையாடிய பால சரித நாடகங்களுள் வேல் போலும் நெடிய கண்களையுடைய நப்பின்னையோடாடிய குரவைக் கூத்தினை, பசுக்களும் கன்றுகளும் துன்பம் ஒழி வனவாக வென்று கூறி யாம் ஆடுவோம்' என்றாள்; உறையாமையும் முதலிய எண்ணும்மைகளில் மூன்றனுருபு விரித்துரைக்க. மாயவனுடன் என்னும் மூன்றன் சொல்லுருபினைத் தம்முன் என்பதனோடு இயைக்க. கண்ணகியும் காண ஆடுதும் என்றாளென்க. தான், அசை. குரவையாவது எழுவரேனும். ஒன் பதின்மரேனும் கைகோத்தாடுங் கூத்து. கொளு - குரவைக் கூத்திற்குக் கருத்து. 1. "காரிகதன்.........கோதையாள்" காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும் இவ் வேரி மலர்க் கோதையாள் - இக் காரி எருத்தின் சீற்றத்தினை அஞ்சானாய்ப் பாய்ந்து தழுவியோனை இத் தேனிறைந்த மலர்மாலையையுடையாள் விரும்புவாள்; காரி - கருமையுடையது. கதன் - சீற்றம். கோதையாள் காமுறும் என்க. சுட்டு - இது முதற்சுட்டு. 2. "நெற்றிச் செகிலை..........மாதராடோள்" நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய இப் பொன் தொடி மாதராள் தோள் - நெற்றிக்கண் சிவந்த சுட்டியினையுடைய ஏற்றினை வலி தொலைத் தானுக்கே இப் பொன்னாலாய வளையினையணிந்த மாதருடைய தோள்கள் உரியனவாகும்; செகில் - சிவப்பு; ஆகுபெயர். 3. "மல்லல்.........பூங்குழறான்" மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள் இம் முல்லையம் பூங்குழல் தான் - வலி மிக்க இவ் விளைய ஏற்றினை எறிச் செலுத்தினானுக்கே இம் முல்லை மலரினைச் சூடிய அழகிய கூந்தலுடையாள் உரியளாவாள்; மல்லல் - வளம் எனினும் அமையும். தான், அசை. 4. "நுண்பொறி ..... தோள்" நுண்பொறி வெள்ளை அடர்த் தாற்கே ஆகும் இப் பெண் கொடி மாதர்தன் தோள் - நுண்ணிய புள்ளிகளையுடைய இவ் வெள்ளேற்றினை வலிதொலைத் தானுக்கே இக் கொடிபோன்ற பெண்ணின் காதலிக்கப்படும் தோள்கள் உரியனவாம்; வெள்ளை - ஆகுபெயர். பொறி வெள்ளை - மறை எனலுமாகும். மாதர் - காதல். பெண் கொடியாகிய மாதர் என்றலுமாம். தன், சாரியை. 5. "பொற்பொறி ......... மென்முலைதான்" பொற்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இந் நற்கொடி மென்முலை தான் - அழகிய இம் மறையேற்றினை அடக்கியோனுக்கே இவ் வழகிய கொடிபோன்றாளுடைய மெல்லிய முலைகள் உரியன வாகும்; தான், அசை. 6. "வென்றி.........பூங்குழலாள்" வென்றி மழவிடை ஊர்ந் தாற்கு உரியள் இக் கொன்றையம் பூங்குழலாள் - வென்றி யினையுடைய இவ்விளைய ஏற்றினை அடக்கிச் செலுத்தினானுக்கு இக் கொன்றைப் பழம் போலும் பொலிவு பெற்ற கூந்தலினை யுடையாள் உரியளாவாள்; 1"கொன்றைப் பழக்குழற் கோதையர்" என்றார் பிறரும். 7. "தூ நிற வெள்ளை ......... மலராள்" தூ நிற வெள்ளை அடர்த் தாற்கு உரியள் இப் பூவைப் புதுமலராள் - தூய வெள்ளை நிற முடைய இவ் வேற்றின் சீற்றத்தினைக் கெடுத்தவனுக்கு இக் காயாம் பூப் போலும் நிறத்தினையுடையாள் மனைவி ஆவாள் ; -_?ீ72"காரி கதனஞ்சான் பாய்ந்த பொதுவற்கே" 3"நுண்பொறி வெள்ளைக் கதனஞ்சான் பாய்ந்த பொதுவன்" 4"செம்மறு வெள்ளையும்" 5"பானிற வண்ணன்போற் பழிதீர்ந்த வெள்ளையும்" என்றற்றொடக்கத்தனவாக முல்லைக் கலியில் வரும் எருத்து வேறுபாடு களும் ஏறுகோள் இயல்பும் ஈண்டு அறியற்பாலன. எடுத்துக்காட்டு இவ்வேறு கொண்டானுக்கு இவள் உரியன் என்றல். இனி, இங்ஙனம் சுட்டிக் காட்டுதல் எனலுமாம். ஆங்கு - அப்படியே தொழுவிடை .................................... கோதையார் தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் எழுவர் இளங்கோதை யார் - இங்ஙனமாகத் தொழுவிடத் துண்டாகிய ஏழுவகை ஏற்றினை இக் கோதையையுடைய ஏழு கன்னியர் தன் மணங்குறித்து வளர்த்தனர். குறித்து வளர்த்தல் - இதனை அடக்கியோனையே மணப்பேம் என்று கருதி வளர்த்தல். "என்றுதன் மகளை ......... பெயரிடுவாள்" என்று தன் மகளை நோக்கி - என்று இங்ஙனம் கூறித் தன் மகளாகிய ஐயையை நோக்கி, தொன்று படு முறையான் நிறுத்தி இடைமுதுமகள் இவர்க்குப் படைத்துக் கோள் பெயர் இடுவாள் - இம் மகளி ரைப் பழைய நரம்புகள் நிற்கும் முறைமைகளிலே நிறுத்தி இடையர் குலத்துப் பிறந்த முதியவளாகிய மாதரி இவர்க்குப் படைத்துக்கோட் பெயரிடுவாளாயினாள்; இடைமுதுமகள் - மாதரி. படைத்துக்கோட் பெயர் இடுதல் - ஒரு பொருளுக்கு ஒருபெயர் இருப்பவும் ஒரு காரணத்தால் வேறொரு பெயரை இட்டு வழங்குதல் "குடமுதல் .... பெயரே" குடமுதல் இட முறையா - குட திசையில் குரல் நரம்பு முதல் இடமுறையாக, குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே - குரலும் துத்தமும் கைக்கிளையும் உழையும் இளியும் விளரியும் தாரமும் என இவர்க்கு முறையே இட்ட பெயரே மாதரி விரும்பிய பெயர்களாம்; தாரமென என்பதன் பின் சில சொல் வருவித்துரைக்க. விரிதரு பூங்குழல் - மாதரி, குடமுதல் - மேற்கு எதிர்முகமாக என்றபடி. பன்னிரண்டு இராசிகளுள்ளே இடபம், கடகம், சிங்கம், துலாம், தனுசு, கும்பம், மீனம் என்னும் ஏழினும் குரல் முதலாய ஏழும் முறையே நிற்பது ஓர் முறை. துலாம், தனுசு, கும்பம், மீனம், இடபம், கடகம், சிங்கம் என்னும் ஏழினும் குரல் முதலாய ஏழும் முறையே நிற்பது மற்றோர் முறை. இவற்றை, " ஏத்து மிடப மலவனுடன் சீயம் கோற்றனுக் கும்பமொடு மீனமிவை-பார்த்துக் குரல்முதற் றார மிறுவாய்க் கிடந்த நிரலேழுஞ் செம்பாலை நேர்." " துலைநிலைக் குரலுந் தனுநிலைத் துத்தமும் நிலைபெறு கும்பத்து நேர்கைக் கிளையும் மீனத் துழையும் விடைநிலத் திளியும் மானக் கடகத்து மன்னிய விளரியும் அரியிடைத் தாரமும் அணைவுறக் கொளலே" என்பவற்றானறிக. குரவையில் இவ்விரு முறையானும் எழு வரும் நின்று கைகோத்துப் பாடுகின்றன ராகலின் ஒருகால் இடத்தில் நின்றவர் மற்றொருகால் வலத்திலும், வலத்தில் நின்றவர் இடத்திலுமாக மாறி நிற்றல் இயல்பு. பின்வரும் சக்கரங்களில் இது தோன்றும். ஏழ் நரம்புகளில் முதலிற் றோன்றியது தாரம், ; தாரத்தில் உழையும், உழையிற் குரலும், குரலுள் இளியும், இளியுள் துத்தமும், துத்தத்துள் விளரியும், விளரியுட் கைக்கிளையும் பிறக்கும். இவற்றாற் பெரும் பண்கள் பிறக்குமாறு. " தாரத் துழைதோன்றப் பாலையாழ் தண்குரல் ஒருமுழைத் தோன்றக் குறிஞ்சியாழ்-நேரே இளிகுரலிற் றோன்ற மருதயாழ் துத்தம் இளியிற் பிறக்கநெய்த லியாழ்" என்பதனாற் புலனாம். தாரம் குரலாய ஏழ் நரம்பும் அதன் கிளையாகிய உழை குரலாய ஏழ் நரம்பும் அலகு ஒத்திசைப்பதனால் பாலை யாழும், உழை குரலாய ஏழ் நரம்பும் அதன் கிளையாகிய குரல் குரலாய ஏழ் நரம்பும் அலகு ஒத்திசைப்பதனால் குறிஞ்சி யாழும், குரல் குரலாய ஏழ் நரம்பும் அதன் கிளையாகிய இளி குரலாய ஏழ் நரம்பும் அலகு ஒத்திசைப்பதனால் மருத யாழும், இளி குரலாய ஏழ் நரம்பும் அதன் கிளையாகிய துத்தம் குரலாய ஏழ் நரம்பும் அலகு ஒத்திசைப்பதனால் செவ்வழி யாழும் பிறக்கு மென்க. ஏழு பாலையிசை பிறத்தல் முதலியனபற்றிய குறிப்புக்கள் ஈண்டு மூலத்தில் இல்லையேனும், அடியார்க்குநல்லார் அவற்றைத் தந்துரைத்துள்ளார். (அடி. இந் நரம்பிற் பாலை பிறக்குமிடத்துக் குரலும் துத்தமும் இளியும் நான்கு மாத்திரை பெறும்; கைக்கிளையும் விளரியும் மூன்று மாத்திரை பெறும்; உழையும் தாரமும் இரண்டு மாத்திரை பெறும். இவற்றுட் குரல் குரலாய் ஒத்து நின்றது செம்பாலை; இதனிலே குரலிற் பாகத்தையும் இளியிற் பாகத்தையும் வாங்கிக் கைக்கிளை உழை விளரி தாரத்திற்கு ஒரோவொன்றைக் கொண்டு சேர்க்கத் துத்தம் குரலாய்ப் படுமலைப் பாலையாம்; இவ்வாறே திரிக்க இவ் வேழு பெரும் பாலைகளும். பிறக்கும்; பிறக்குங்கால் திரிந்த குரலேழும் முதலாகப் பிறக்கும். அவை பிறக்குமாறு :-குரல் குரலாயது செம்பாலை; துத்தம் குரலாயது படுமலைப்பாலை; கைக்கிளை குரலாயது செவ்வழிப்பாலை; உழை குரலாயது அரும்பாலை; இளி குரலாயது கோடிப்பாலை; விளரி குரலாயது விளரிப்பாலை ; தாரம் குரலாயது மேற் செம்பாலை என வரன்முறையே ஏழு பாலையும் கண்டுகொள்க.) அரங்கேற்று காதையிலும், வேனிற்காதையுரையிலும் கூறப் பட்டவை இதனின் வேறுபட்ட முறையினவாதல் காண்க. இனிப் படைத்துக்கோட் பெயரிடுவாள் :- "மாயவன் என்றாள். . . . . முறை" மாயவன் என்றாள் குரலை - குரல் நரம்பினை மாயவன் என்று கூறினாள், விறல் வெள்ளை ஆயவன் என்றாள் இளி தன்னை - இளி நரம்பினை வென்றி மிக்க பலராமன் என்றாள், ஆய் மகள் பின்னையாம் என்றாள் ஓர் துத்தத்தை - மாதரி துத்த நரம்பினை நப்பின்னை என்று கூறினாள், மற்றையார் முன்னையாம் என்றாள் முறை - ஏனை நரம்புகள் முன்னை முறைப்படியே மற்றையார் ஆம் என்றாள்; முன்னை முறை ஆம் என மாறுக. முன்னை முறையாவது குரலுக்கு ஐந்தாவது இளியும், இளிக்கு ஐந்தாவது துத்தமும் போல் ஐந்தாவதான முறை. ஆய் மகள் என்னும் எழுவாயை ஏனையவற்றொடும் கூட்டுக. "மாயவன் சீர் ..... விளரிதான்" மாயவன் சீர் உளார் பின்னையும் தாரமும் - மாயவன் எனப் பெயர் கூறப்பட்ட குரல் நரம்பினை அடுத்துப் பின்னையெனப்பட்ட துத்தமும் தாரமும் நின்றன. வால் வெள்ளை சீரார் உழையும் விளரியும் - பலதேவரெனப்பட்ட இளி நரம்பினைச் சேர உழையும் விளரியும் நின்றன, கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் - கைக்கிளை என்னும் நரம்பு பின்னைக்கு இடப்பக்கத்தே நின்றது, வலத்து உளாள் முத்தைக்கு நல் விளரிதான் - முந்தை யென்னும் தார நரம்பிற்கு வலப்பக்கத் துள்ளது நல்ல விளரி என்னும் நரம்பு; முந்தை என்பது முத்தை என விகாரமாயிற்று. எல்லா நரம்பினும் முன் தோன்றியதாகலின் தாரத்தை முந்தை என்றார். மகளிராதலின் உயர்திணை கூறினார். "அவருள் ..... ஆயர்மகள்" அவருள் - அவ் வெழுவர் மகளிருள், வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு - வளவிய துளப மாலையினை மாயவனாகிய கண்ணன் தோளின்மீது சாத்தி, தண்டாக் குரவைதான் உள்படுவாள் - கூத்த நூலியல்பினின்றும் நீங்காத குரவையாடத் தொடங்குவாள், கொண்ட சீர் - சிறப்பினைக் கொண்ட, வைய மளந்தான் தன் மார்பில் திரு நோக்கா - உலகினை யளந்த திருமால் தன் மார்பினிடத்துத் திருவை விரும்பி நோக்காமைக்குக் காரணமாகிய, பெய்வளைக் கையாள் நம் பின்னைதான் ஆம் என்றே ஐ என்றாள் ஆயர் மகள் - வளை பெய்த கையினை யுடையாள் நம் பின்னைதானே யாமென்று மாதரி வியந்தாள் ; தண்டாமை - நீங்காமை. நோக்காப் பின்னை என்க. நம் பின்னை இதனை நப்பின்னை எனவும் வழங்குப. 1சீவக சிந்தாமணிஉரையில் "நப்பின்னை அவள் பெயர் ; நகரம் சிறப்புப் பொருளுணர்த்துவ தோரிடைச் சொல்" என்றார் நச்சினார்க்கினியர். நம் பின்னை - நமது பின்னை யெனினும் அமையும். ஐ, வியப்பு. ஆயர் மகள் - மாதரி. "அவர்தாம் ..... என்றாள்" அவர் தாம் செந்நிலை மண்டிலத்தார் கற்கடகக் கை கோத்து அந் நிலையே ஆடற்சீர் ஆய்ந்துளார் - சம நிலையாக நின்று மண்டிலத்தோடு நண்டுக் கரத்தைக் கோத்து அப்பொழுதே ஆடுதற்குத் தாளவுறுப்பை ஆராய்ந்த அவர்களுள், முன்னைக் குரல் கொடி - முதல் வைத்து எண்ணிய குரலிடத்து நின்ற மாயவனாகிய அவள், தன் கிளையை நோக்கி - தனது கிளையாகிய இளியிடத்து நின்ற பலதேவனாகிய அவளை நோக்கி, பரப்பு உற்ற கொல்லைப் புனத்து - அகன்ற கொல்லையாகிய புனத்தின்கண், குருந்து ஒசித்தான் பாடுதும் முல்லைத் தீம் பாணி என்றாள் - வஞ்சத்தால் வந்து நின்ற குருந்த மரத்தினை முறித்த மாயவனை முல்லையாகிய இனிய பண்ணினால் பாடுவோம் என்றாள்; செந்நிலை - சமநிலை. மண்டிலம் - வட்டம். கற்கடகக்கையாவது - நடுவிரலும் அணிவிரலும் முன்னே மடக்கி மற்றை இரண்டு விரலும் கோத்தல். அந்நிலையே - அப்பொழுதே. சீர் - தாளவறுதி. தன் கிளையை நோக்கி என்பதற்குத் ‘தனது கிளையாகிய துத்த நரம்பாகிய பின்னையை நோக்கி' என அடியார்க்குநல்லார் உரை காணப்படு கின்றது; குரலுக்குத் துத்தம் இணையும், இளி கிளையுமாகலின் துத்தத்தைக் கிளையென்றல் பாடப் பிறழ்ச்சி போலும். முல்லைப்பாணி - செவ்வழி யாழின் திறமாகிய முல்லைப் பண். எனா - என்று கூறி ; "குரல் மந்தமாக ... பாட்டெடுப்பாள்" குரல் மந்தம் ஆக- பாடத் தொடங்குகின்றவள் குரல் என்னும் நரம்பு மந்தசுரமாக, இளி சமன் ஆக - இளி யென்னும் நரம்பு சம சுரமாக, வரன்முறையே துத்தம் வலியா - வந்த முறையானே துத்த நரம்பு வலி சுரமாக, உரன் இலா மந்தம் விளரி பிடிப்பாள் - விளரி நரம்பினையும் வலியில்லாத மந்த சுரமாகப் பிடிக்கின்றவள், அவள் நட்பின் பின்றையைப் பாட்டு எடுப்பாள் - தன் நட்பு நரம்பாகிய துத்த நரம்பாயவட்குப் பற்றுப் பாடுகின்றாள்; விளரி உரனிலா மந்தம் பிடிப்பாள் என்க. மந்தம் முதலியன முறையே மந்தரம், மத்திமம், தாரம் எனவும், மந்தம், சமம், உச்சம் எனவும் கூறப்படும். மந்திரத்திற்கு ஐந்தாவது சமமும், அதற்கைந்தாவது வலியும், பின்னும் அதற்கைந்தாவது மந்தமுமாக வருதல் காண்க. நட்பு - நாலாம் நரம்பு ; விளரிக்குத் துத்தம் நட்பு. பாட்டு -அவள் பாடும் பாட்டு; 1. "கன்று குணிலா ......... தோழீ" கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன் - வஞ்சத்தால் வந்துநின்ற ஆவின் கன்றினைக் குணிலாகக் கொண்டு அங்ஙனமே நின்ற விளவின் கனியை உதிர்த்த கண்ணன், இன்று நம் ஆனுள் வருமேல் - இற்றைப் பொழுது நம் வழிபாட்டால் நம் பசு நிரை யிடத்து வருவானாயின், அவன் வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி - அவன் வாயினால் ஊதுகின்ற கொன்றைக் குழலின் இனிய இசையைக் கேட்போம் தோழீ ; குணில் - குறுந்தடி. ஆனுள் : உள் ஏழுனுருபு ; மேல்வருவனவும் இன்ன. தோழீ கேளாமோ என்க. கேளாமோ. ஈரெதிர்மறை ஓருடன்பாடு; பின்வருவனவும் இன்ன. 2. "பாம்புகயிறாக் . . . . . . . . . தோழீ" பாம்பு கயிறு ஆ கடல் கடைந்த மாயவன் - மேருவாகிய மத்தத்தில் வாசுகி என்னும் பாம்பு கயிறாகச் சுற்றிப் பாற்கடலைக் கடைந்த மாயவன், ஈங்கு நம் ஆனுள் வருமேல் - நம் வழிபாட்டால் இவ்விடத்து நம் ஆனிரையுள் வருவானாகில், அவன் வாயில் ஆம்பல் அம் தீங்குழல் கேளாமோ தோழீ - அவன் வாயினால் ஊதும் இனிய ஆம்பற் குழலோசையைக் கேட்போம் தோழீ ; 3. "கொல்லையஞ்சாரல் ............ தோழீ" கொல்லையஞ் சாரல் குருந்து ஒசித்த மாயவன் - நம் கொல்லையைச் சார்ந்த விடத்து வஞ்சத்தால் வந்து நின்ற குருந்தமரத்தினை முறித்த மாயவன், எல்லை நம் ஆனுள் வருமேல் - நம் வழிபாட்டால் பகலே நம் ஆனிரையுள் வருவானாயின், அவன் வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ - அவன் வாயினால் ஊதுகின்ற இனிய முல்லைக் குழலோசையைத் தோழீ கேட்போம் ; ஆம்பல், முல்லை என்பன பண்ணின் பெயராயினும், கொன்றையென ஒரு பண் இன்மையானும், இவை ஒரு பொருள் மேல் மூன்றடுக்கிய ஒத்தாழிசையாகலின் இரண்டு பண்ணும் ஒன்று கருவியுமாகக் கூறுதல் பொருந்தாமையானும் மூன்றையும் கருவி விசேட மாகக் கொள்ளுதல் வேண்டும். 1"ஒழுகிய கொன்றைத் தீங்குழன் முரற்சியர்" எனக் கலியுள்ளும், " கொன்றைப் பழக்குழற் கோவலராம்பலும்" என வளையாபதியுள்ளும் கொன்றைக் குழல் கூறப்படுதலின் கோவலர் கொன்றைப் பழத்தைத் துருவிக் குழல் செய்து ஊதுவரென்க. "கஞ்சத்தாற் குமுத வடிவாக அணைசு பண்ணிச் செறித்தலின் ஆம்பற் குழலாயிற்றெனவும், கொன்றைப் பழத்தைத் துருவித் துளைத்து ஊதலிற் கொன்றைக் குழலாயிற்றெனவும், முல்லைக் கொடியால் முப்புரியாகத் தெற்றிய வளையை வளைவாய்க் கட் செறிந்து ஊதுதலின் முல்லைக்குழலாயிற் றெனவும் கொள்க" என அடியார்க்குநல்லார் இவை காரணப்பெய ராதலை விளக்குவர். குழலின் இலக்கணம் மேல் அரங்கேற்று காதையில் குழலோன் அமைதி கூறியவிடத்து உரைக்கப்பட்டமை காண்க. "தொழுனைத்துறைவ . . . . . யாம்" தொழுனைத் துறைவனோடு ஆடிய பின்னை அணி நிறம் பாடுகேம் யாம் - தொழுனைத் துறைவனுடையவும் அவனோடு ஆடிய பின்னையினுடையவும் நிற அழகினை யாம் பாடுவேம்; தொழுனை - யமுனை. தொழுனைத்துறைவன்-மாயவன் துறைவனுடையவும் துறைவனோடாடிய பின்னையினுடையவும் என்க. தொழுனைக் கணவனோடு எனவும் பாடம். இச் செய்யுள் இடையிற் சேர்க்கப்பெற்றதென்பர் அரும்பதவுரையாசிரியர். 1. "இறுமென்சாயல் . . . . . என்கோயாம்" இறுமென்சாயல் நுடங்க நுடங்கி - கண்டார் மென்மையால் இற்றுவிடும் எனத் தக்க இடை துவளும் வண்ணம் அசைபவளது, அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம் - புடவையை ஒளித்த மாயவனது வடிவின் அழகினையே யாம் புகழ்ந்து சொல்லுவேமோ, அறுவை ஒளித்தான் அயர அயரும் நறுமென் சாயல் முகம் என்கோ யாம் - அன்றி, அறுவையை ஒளித்தவன் அவள் துகிலின்மை கண்டு தளர்வுற அதனைக் கண்டு சோர்கின்ற நறிய மெல்லிய சாயலையுடையாளது காமக்குறிப்புடைய முகத்தினழகையே யாம் புகழக் கடவேமோ; சாயல் - மென்மை; இறுமென்னும் என்றமையால் அஃது இடையைக் குறித்தது. நுடங்கி - பெயர். என்குமோ என்னும் பன்மை என்கோ எனத் திரிந்து வந்தது ; பன்மை யொருமை மயக்கம் எனினுமாம். வடிவு சிறந்ததென்பேமோ ? முகம் சிறந்த தென்பேமோ? எதனைச் சிறந்ததென்று புகழ்ந்துரைப்பேம் என்றபடி. பின்வருவனவும் இன்ன. 2. "வஞ்சஞ்செய்தான் . . . . யாம்" வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள் நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென்கோ யாம் - காளிந்தி யாற்றினுள் தன்னை வஞ்சித்தானுடைய உள்ளத்தினைக் கவர்ந்தாளது அழகினையே புகழக் கடவேமோ. நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும் வஞ்சம் செய்தான் வடிவு என்கோயாம் - அன்றி, அங்ஙனம் தன் உள்ளத்தினைக் கவர்ந்தாளுடைய அழகினையும் வளையினையும் வௌவிக்கொண்டானுடைய வடிவழகையே புகழ்ந்து கூறுவேமோ; நிறை - ஈண்டு அழகு. 3. "தையல் கலையும் . . . . யாம்" தையல் கலையும் வளையும் இழந்தே கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம் - கலையையும் வளையையும் இழந்து நாணினாலே தன் கையில் மறைந்தாளாகிய தையலின் முகத்தினழகையே யாம் புகழ்ந்து கூறுவேமோ, கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி மையல் உழந்தான் வடிவு என்கோ யாம் - அன்றி, அவ்வாறு கையிலே மறைந்தாளுடைய முகத்தின் தன்மை கண்டு இரங்கி மயக்க முழந்தாளினது வடிவழகினையே புகழ்ந்து கூறுவேமோ ; கலை - ஆடை. இனி, கையிலொளித்தாள் என்பதற்குக் கலையை இழந்தமையால் கையால் மறைத்தாள் எனினுமமையும்; இதற்கு இல் மூன்றனுருபாகும். இவை குரவை மகளிர் கூற்று. ஒன்றன் பகுதி - ஒற்றைத் தாளத்தின் கூறு. 1. "கதிர்திகிரி . . . . நரம்புளர்வார்" கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளாள் மதி புரையும் நறுமேனித் தம்முனோன் வலத்து உளாள் பொதி அவிழ் மலர்க் கூந்தற் பிஞ்ஞை - கட்டவிழ்ந்த மலரினைச் சூடிய கூந்தலையுடைய பின்னைதான் ஞாயிற்றைத் தன் கையிலுள்ள சக்கரப் படையான் மறைத்த கடல்போலும் நிறமுடைய கண்ணனுக்கு இடப் பக்கத்தும் திங்களை ஒத்த நறிய மேனியையுடைய அக் கடல் வண்ணன் முன்னோனாகிய பலதேவற்கு வலப் பக்கத்துமாக உள்ளாள் ; சீர் புறங் காப்பார் முதுமறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார் - அவளது தாள வொற்றறுப்பைக் காப்பார் முதிய வேதத்தினை ஆராய்ந்த பழைய முறையானே நரம் பினைத் தடவி வாசிக்கும் நாரதனார் ; பிஞ்ஞை இடத்துளாள் வலத்துளாள் எனவும், நரம்புளர்வார் நாரதனார் புறங்காப்பார் எனவும் மாறுக. மறை - வேதத்தின் அங்கமாகிய சிக்கை ; இதனை நாரத சிக்கை என்பர். சிக்கை - இசைநூல். 2. "மயிலெருத் . . . . . . நரம்புளர்வார்" மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள் பயில் இதழ் மலர் மேனித் தம் முனோன் இடத்து உளாள் கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை- சிறுபுறமாகிய பிடரை வளைத்து நின்ற நப்பின்னை ஆண்மயிலின் புறக் கழுத்தினை ஒத்த மேனியையுடைய மாயவன் வலப்பக்கத்துள்ளாள் ; மிக்க வெள்ளிய மலர்போலும் மேனியையுடைய அம் மாயவன் தமையனாகிய பலதேவன் இடப்பக்கத்துள்ளாள்; சீர் புறங் காப்பார் குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார் - அவளுடைய தாளவறுதியைப் புறங்காக்கின்றவர் குயிலுவருள் இசை புணர்ந்திருக்கும் தாளவறுதியையுடைய நரம்பினை உருவி வாசிக்கும் நாரதனார் ; கயிலாகிய எருத்தென்க; கயில் - பிடர். குயிலுவர் - தோற் கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, உருக்குக் கருவி இவற்றையுடையார். கொளை - இசை ; ஒற்றறுப்பு என்றுமாம். "மாயவன்றம் . . . . . . . . . தகவுடைத்தே" மாயவன் தம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும் - கண்ணன் தம்முனாகிய பலதேவருடனும் அழகிய வளையலை அணிந்த கையினையுடைய நப்பின்னையோடும், கோவலர் தம் சிறுமியர்கள் குழற் கோதை புறஞ் சோர - இடையர் சிறுமியர்களுடைய கூந்தற்கண் சூடிய மாலைகள் எருத்தத்தே வீழ்ந்து அசைய, ஆய் வளைச் சீர்க்கு அடிபெயர்த்திட்டு - கோத்த கைகளிலணிந்த அழகிய வளையல்கள் ஒலிக்கின்ற தாளத்திற்கு ஒக்க அடியைப் பெயர்த்து, அசோதையார் தொழுது ஏத்த - அசோதைப் பிராட்டியார் வணங்கிப் பரவ, தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே - துவராபதியில் தாதாகிய எருப் பொருந்திய மன்றத்தில் ஆடிய குரவைக்கூத்து மிகவும் தகுதியை உடைத்தாயிருந்தது; ஒடு இரண்டும் எண்ணிடைச்சொல். சிறுமியர் என்பது குட நாட்டு வழக்கென்பர். அசோதை - ஆயர் பாடியில் கண்ணனை வளர்த்த தாய். குரவையோ-ஓ, வியப்பு. மாயவன் தம் முன்னினோடும் பின்னையோடும் அடிபெயர்த்திட்டு ஆடும் குரவை யென்க. மாயவன் அன்றாடிய குரவையாகவே இதனைக் கருதி மாதர் வியந்தாள். 1"மாமணி வண்ணனுந் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரவையிஃ தாமென நோக்கியும்" என்றார் பிறரும். எல்லா நாம் - நாமெல்லாம் ; தோழீநாம் எனலுமாம். "புள்ளூர் ......... ஒன்றுற்று" புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும் உள்வரிப் பாணி ஒன்று உற்று - கருடப் பறவையை ஊர்கின்ற கடவுளை இக் குரவையுள் உள்வரியாகிய ஒரு பாட்டினால் மிகவும் போற்றுவேம். அடுக்குப் பன்மை பற்றி நின்றது. பாணி - பாட்டு. உள்வரி - வேற்றுருக்கொண்டு நடிப்பது; திருமால் பாண்டியன் முதலியோராக உருக்கொண்டமை கூறுதலின் உள்வரிப் பாணியாம் என்க. 1. "கோவாமலை.........என்பரால்" கோவாமலை ஆரம் கோத்த கடல் ஆரம் தேவர் கோன் பூண் ஆரம் தென்னர்கோன் மார் பினவே - கோக்கப்படாத பொதியமலையின் ஆரமும் கோக்கப்பட்ட கொற்கைக்கடலின் ஆரமும் இந்திரன் வெகுண்டு இட்ட பூணாகிய ஆரமும், ஆகிய இவை பாண்டியர் தலைவனது மார் பிடத்தன, தேவர் கோன் பூண் ஆரம் பூண்டான் - அங்ஙனம் தேவர்கோன் பூணாரம் இறுதியாக வுள்ளனவற்றைப் பூண்டவன் யாவனென்னின், செழுந்துவரைக் கோகுலம் மேய்த்துக் குருந்து ஒசித்தான் என்பரால் - வள மிக்க துவராபதிக்கண் ஆனிரையை மேய்த்துக் குருந்த மரத்தினை முறித்த கண்ணனென்று கூறுவர்; கோவா ஆரம் - சந்தனம்; கோத்த ஆரம் - முத்து; இவை இரண்டும் வெளிப்படை. 2. "பொன்னிமய.........என்பரால்" பொன் இமயக் கோட்டுப் புலி பொறித்து மண் ஆண்டான் - பொன்னாகிய இமயமலையின் சிமையத்திலே தனது புலியை எழுதி இப்பாலுள்ள நிலமெல்லாம் ஆண்டவன், மன்னன் வளவன் மதிற் புகார் வாழ் வேந்தன் - மதிலையுடைய புகார் நகரத்து வாழும் வேந்தனாகிய சோழ மன்னனாவான், மன்னன் வளவன் மதிற்புகார் வாழ் வேந்தன் - அவன் யாவனென்னின், பொன்னந் திகிரிப் பொரு படையான் என்பரால் - போர் செய்யும் அழகிய சக்கரப்படையையுடைய திருமால் என்று கூறுவர் ; பொன்னந்திகிரி - பொற்றிகிரியுமாம். 3. "முந்நீரினுள் . . . . என்பரால்" முந்நீரின் உள் புக்கு மூவாக் கடம்பு எறிந்தான் மன்னர் கோச் சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் - கடலினுள்ளேபுக்கு மூத்தலின்றி ஒருபெற்றியே நிற்கும் கடம்பை வெட்டினவன் வள மிக்க வஞ்சி நகரத்து வாழும் மன்னர் பிரானாகிய சேர வேந்தனாவான், மன்னர் கோச் சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் - அவன் யாவனென்னின், கல் நவில் தோள் ஓச்சிக் கடல் கடைந்தான் என்பரால் - மலையை ஒத்த தன் தோள்களைச் செலுத்திப் பாற்கடலைக் கடைந்த திருமால் என்று கூறுவர்; கடம்பெறிந்த செய்தியை, 1"மாநீர் வேலிக் கடம்பெறிந் திமயத்து, வானவர்மருள மலைவிற் பூட்டிய, வானவர் தோன்றல்" எனவும், 2"வலம்படு முரசிற் சேர லாதன், முந்நீ ரோட்டிக் கடம் பறுத்து" எனவும் வருவனவற்றா னறிக. முந்நீர் - கடல்; ஆகு பெயர்; படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று தன்மையினை யுடையது என்பது பொருள். இது குறித்து அடியார்க்குநல்லார் எழுதிய வுரை வருமாறு:- "முந்நீர் - கடல் ; ஆகுபெயர்; ஆற்றுநீர் ஊற்றுநீர் மேனீரென இவை என்பார்க்கு அற்றன்று; ஆற்றுநீர் மேனீராகலானும் இவ்விரண்டுமில்வழி ஊற்று நீரும் இன்றாமாதலானும் இவற்றை முந் நீரென்றல் பொருந்தியதன்று; முதிய நீரெனின், நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும் என்பதனால் அதுவும் மேனீரின்றி அமையாமையின் ஆகாது ; ஆனால் முந்நீர்க்குப் பொருள் யாதோவெனின், முச் செய்கையையுடைய நீர் முந்நீரென்பது; முச் செய்கையாவன மண்ணைப் படைத்தலும் மண்ணை அழித்தலும் மண்ணைக் காத்தலுமாம்" மூவாக்கடம்பு - வஞ்சத்தால் நிற்கின்றதாகலான் மூப்பின்றி என்றும் ஒருபெற்றியே நிற்கும் கடம்பு. இவை மூன்றும் பூவைநிலை. இந் நிகழ்ச்சி மதுரைக்கண்ண தாகலின் விருப்பு வெறுப்பற்ற சேர முனியாகிய இளங்கோவடிகள் சேரனை முற்கூறாது ஈண்டுப் பாண்டியனை முற்கூறினாரென்க. முன்னிலைப் பரவல் - முன்னிலையாக்கிப் பராவுதல். 1. "வடவரையை............மருட்கைத்தே" வடவரையை மத்து ஆக்கி வாசுகியை நாண் ஆக்கிக் கடல் வண்ணன் பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே - கண்ணனே நீ முன்பு ஒரு நாள் மந்தரமலையை மத்தாக நாட்டி வாசுகி என்னும் பாம்பினைக் கடை கயிறாகக் கொண்டு பாற்கடலின் நடுவிடத்தைக் கலக்கினாய், கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றாற் கட்டுண்கை- அங்ஙனங் கலக்கிய நின்கை அசோதைப் பிராட்டியின் கடை கயிற்றினால் கட்டுண்ட கை, மலர்க் கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே - தாமரை மலர் போலும் உந்தியினையுடையாய் இஃது ஒரு மாயமோ; மிகவும் மருட்கையை உடைத்தாயிருந்தது; வடவரை - இமயமலை எனினுமாம்; மலையென்னும் ஒப்புமை பற்றி; இங்ஙனம் ஒன்றன் வினையைச் சாதி ஒப்புமை பற்றிப் பிறி தொன்றின்மேல் ஏற்றிக் கூறல் முறை. கடல்வண்ணன் - கடல் போலும் கரியநிறமுடையன் ; கண்ணன் ; அண்மைவிளி. கட்டுண்கை - கட்டுண்டல் என்றுமாம். 2. "அறுபொருள்...........மருட்கைத்தே" அறுபொருள் இவன் என்றே அமரர் கணம் தொழுது ஏத்த உறு பசி ஒன்று இன்றியே உலகு அடைய உண்டனையே - தீர்ந்த பொருள் இவனே எனக் கொண்டு தேவர் கூட்டம் வணங்கிப் போற்ற நீ மிக்க பசி ஒன்று இல்லாது எல்லா உலகங்களையும் உண்டாய், உண்ட வாய் களவினான் உறி வெண்ணெய் உண்ட வாய் - அங்ஙனம் உலகமுண்ட வாய் களவின்கண் உறிக்கண் உள்ள வெண்ணெயை உண்ட வாயாகும், வண்துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே - வளவிய துழாய் மாலையை உடையாய் இஃது ஒரு மாயமோ மிகவும் மருட்கையினை யுடைத்தாயிருந்தது; வண்டுழாய் மாலையாய் என்பதனை முதற்கண் உரைக்க. அறு பொருள் - தீர்ந்தபொருள்; அறுதியிடப்பட்ட பொருள்; இனி, இதற்கு ஐயமற்ற பொருள் என்றும், அறுவகைச் சமயத்தாரும் துணிந்த பொருள் என்றும் கூறுவாருமுளர். உறுபசி - உற்ற பசியுமாம். அடைய - முழுவதும். 3. "திரண்டமரர்...மருட்கைத்தே" திரண்டு அமர் தொழுது ஏத்தும் திருமால் நின் செங்கமல இரண்டு அடியான் மூவுலகும் இருள் தீர நடந்தனையே - அமரர் கூடி வணங்கிப் போற்றுகின்ற திருமாலே நினது சிவந்த தாமரை மலர் போலும் இரண்டு அடிகளான் மூன்று உலகங்களும் இருள் நீங்கும் வண்ணம் நடந்தாய், நடந்த அடி பஞ்சவர்க்குத் தூது ஆக நடந்த அடி - அங்ஙனம் நடந்த அடிகள் பாண்டவர் பொருட்டுப் பின்பு தூதாக நடந்த அடிகளாம், மடங்கலாய் மாறு அட்டாய் மாயமோ மருட்கைத்தே - நரசிங்கமாகிப் பகையை அழித்தோய் இஃது ஓர் மாயமோ எங்கட்கு மிகவும் மருட்கையை உடைத்தாயிருந்தது; அமரர் தொழுதேத்தலை அடிக்குக் கூட்டினுமமையும். இவை மூன்றும் முன்னிலைப் பரவல். படர்க்கைப் பரவல்-தாம் பரவும் பொருளைப் படர்க்கையிடத்து வைத்துப் பராவுதல். 1. "மூவுலகும்...செவியே" மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடிய - முறைப்பட்ட மூன்றுலகங்களும் இரண்டு அடிகட்கு நிரம்புந் தன்மையின்றி முற்றும் வண்ணம், தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து - தாவி அளந்த அச்சிவந்த அடிகள் நடத்தலாற் சிவக்கும் வண்ணம் தம்பியாகிய இலக்குவனோடுங் காட்டிற்குச் சென்று, சோ அரணும் போர் மடியத் தொல் இலங்கை கட்டழித்த - சோ வென்னும் அரணமும் அவ்வரணத்துள்ளாரும் போரின்கண் தொலையப் பழமையான இலங்கை நகரின் காவலினையும் அழித்த, சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே - வீரனுடைய புகழினைக் கேளாத செவி என்ன செவியாகும், திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே - அத் திருமாலினுடைய சிறப்பினைக் கேளாத செவி என்ன செவியாம்; ஈரடியான் - ஈரடிக்கு. நிரம்பாமை - குறைவுபடுதல். சோ என்பது ஓர் அரண்; அன்றி ஒரு நகர் எனவும் உரைப்ப. அரண் மடியவே அரணத்துள்ளார் மடிந்தமையும் உணரப்படும். கான் போந்து இலங்கை கட்டழித்த வென்க. கட்டழித்தல் - நிலை குலை வித்தலுமாம். செவி என்ன செவி என்றது தான் கேட்டற்குரியன கேட்டுப் பயன் பெறாத செவி என்றவாறாம் ; பின்வருங் கண் முதலிய வற்றிற்கும் இங்ஙனமே கொள்க. இனி, சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே என்பதற்குச் சேவகன் சிறப்பினைக் கேளாத செவியும் சில செவியே எனவுரைத்து, மண்ணினும் மரத்தினும் கல்லினும் செவியுண்டாகலான் இங்ஙனங் கூறினார் என்பர் அடியார்க்குநல்லார். பின்வருங் கண் முதலியவற்றிற்கும் இங்ஙனமே உரைப்பர். உலகமளந்தானும் சோவரணை மடித்தானும் இலங்கை கட்டழித்தானும் திருமாலே யென்றார் . 2. "பெரியவனை ... கண்ணே" பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம் விரி கமல உந்தியுடை விண்ணவனை - எல்லாத் தேவர்க்கும் பெரியோனை மாயங்களில் வல்லவனை பெரிய உலகங்கள் யாவற்றையும் விரிக்கின்ற நாபிக் கமலத்தை உடைய வானவனை, கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே - கண்களும் திருவடிகளும் கைகளும் அழகிய வாயும் சிவந்து தோன்றுங் கரு நிறமுடையோனைக் காணாத கண்கள் எப் பயனைப் பெற்ற கண்களாம், கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே - காணுங்கால் கண்களை இமைத்துக் காண்பாருடைய கண்கள் என்ன கண்களோ ; விரிகமல உந்தி - உலகமெல்லாம் தோன்றும் உந்திக் கமலம் என்றுமாம். செய்ய கரியவன் என்றது விரோதம் என்னும் அணி குறித்து நின்றது. கண்ணிமைத்துக் காண்பார் - இமைத்து ஏனைப் பொருளைக் காண்பவர். எனவே திருமாலை இமையாமற் காணவேண்டு மென்றாயிற்று. 3. "மடந்தாழும் ......... நாவே" மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை - அறியாமை தங்கிய உள்ளத்தினையுடைய மாமனாகிய கஞ்சன் செய்த வஞ்சச் செயல்களை வென்றவனும், நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை - நான்கு திக்குகளிலும் உள்ளோர் யாவரும் போற்றவும் தன் பின்னே தொடர்ந்து வந்து வேதங்கள் முழங்கவும் பாண்டவர் பொருட்டுத் துரியோதனாதியரிடம் தூதாக நடந்து சென்றோனும் ஆய கண்ணனை, ஏத்தாத நா என்ன நாவே - போற்றாதநா எப் பயன் பெற்ற நாவாகும். நாராயணா என்னா நா என்ன நாவே - நாராயணா என்று கூறப் பெறாத நா என்ன பயன் பெற்ற நாவாகும்; தாழ்தல் - தங்கல். கஞ்சனார் - செறலின்கண் பால் மயக்கம். நாற்றிசை, ஆகுபெயர். படர்தல் -செல்லுதல். இவை மூன்றும் படர்க்கைப் பரவல். 4. "என்றியாம் ...... முரசே" என்று யாம் கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் - என்று கூறி நாம் தொடுத்த குரவைக் கூத்தினுள் போற்றிய கடவுள், நம் ஆத்தலைப்பட்ட துயர் தீர்க்க - நமது பசுவினிடத்துப் பட்ட துன்பங்களை நீக்கிடுக ; வேத்தர் மருள வைகல் வைகல் மாறு அட்டு வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து இடிப்படை வானவன் முடித்தலை உடைத்த தொடித்தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே - வெற்றி தரும் இடியைப் படையாகவுடைய இந்திரனது முடி இடத்தை உடைத்த தொடி பொருந்திய தோளையுடைய பாண்டியனது குணிலால் எறியப்படும் முரசமானது பகையரசர் மயங்கும் வண்ணம் நாடோறும் பகைவர்களைக் கொன்று வெற்றியை அத் தென்னற்கு அளித்து முழங்குவதாக. வேத்தர் - வேந்தர்; வலித்தல். அடுக்கு, பன்மைப்பொருட்டு. (அரும்பத, `காலைவாய்த் தழுவினாள், மாலைவாய்க் கண்டாள்' என்கையால் குரவை யாடியது கோவலனார் கொலையுண்ட அன்றே யென்க.) இது கொச்சக வொருபோகு உரைவிரவி வந்தது. ஆய்ச்சியர் குரவை முற்றிற்று. 18. துன்ப மாலை (குரவை முடிவில் மாதரி வையையில் நீராடச் சென்றாள். அப்பொழுது மதுரையிலிருந்து வந்த ஒருத்தி, கோவலனைச் சிலம்பு திருடியவனென்று அரசன் ஏவலாளர் கொலை செய்தனர் என்று கூறக் கேட்டுக் கண்ணகி பதைபதைத்து மயங்கிப் பலவாறு புலம்பி அழுது, தானும் உயிர்விடத் துணிந்து, ஆதித்தனை நோக்கிக் 'காய் கதிர்ச் செல்வனே, நீ யறிய என் கணவன் கள்வனோ' என்ன, 'நின் கணவன் கள்வனல்லன்; அவனைக் கள்வனென்று கொலை செய்த இவ் வூரை எரியுண்ணும்' என ஓர் குரல் எழுந்தது. (இஃது அவலச்சுவை மிக்கது.) ஆங்கு; ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள் பூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும் நீடுநீர் வையை நெடுமா லடியேத்தத் 5 தூவித் துறைபடியப் போயினாள் மேவிக் குரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு விரைவொடு வந்தாள் உளள்; அவள்தான், சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள் அந்நங்கைக்குச் 10 சொல்லாடும் சொல்லாடுந் தான்; எல்லாவோ, காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும் ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சன்றே ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சாயின் 15 ஏதிலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ; நண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும் அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சன்றே அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சாயின் மன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீ; 20 தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன் வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சன்றே வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சாயின் எஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ; சொன்னது: 25 அரைசுறை கோயில் அணியார் ஞெகிழம் கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே குரைகழல் மாக்கள் கொலைகுறித் தனரே எனக் கேட்டு, 30 பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த் திங்கள் முகிலோடுஞ் சேண்நிலங் கொண்டெனச் செங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை எங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்; இன்புறு தங்கணவர் இடரெரி யகமூழ்கத் 35 துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல் மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப அன்பனை இழந்தேன்யான் அவலங்கொண்டழிவலோ; நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கித் துறைபல திறமூழ்கித் துயருறு மகளிரைப்போல் 40 மறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்ப அறனென்னும் மடவோய்யான் அவலங்கொண் டழிவலோ; தம்முறு பெருங்கணவன் தழலெரி யகமூழ்கக் கைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய மகளிரைப்போல் செம்மையின் இகந்தகோல் தென்னவன் தவறிழைப்ப 45 இம்மையும்இசையொரீஇ இனைந்தேங்கி அழிவலோ; காணிகா, வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும் ஆயமடமகளி ரெல்லீருங் கேட்டீமின் ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டைக்க 50 பாய்திரை வேலிப் படுபொருள் நீயறிதி காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன் கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய் ஒள்ளெரி உண்ணுமிவ் வூரென்ற தொருகுரல். உரை 1. ஆங்கு - அவ்விடத்து; 2-7. ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள் - அசைந்த சாயலையுடைய ஆய்க்குலத்து முதியாளாகிய மாதரி, பூவும் புகையும் புனை சாந்தும் கண்ணியும் நீடு நீர் வையை நெடுமால் அடி ஏத்தத் தூவித் துறை படியப் போயினாள் மேவிக் குரவை முடிவில் - தாம் ஆடிய குரவைக் கூத்தின் முடிவின்கண் மலரும் புகையும் புனையுஞ் சந்தனமும் மாலையு மென்னும் இவற்றைத் தூவி இடையறா தொழுகும் நீரினையுடைய வையைக் கரைக் கண் திருமால் திருவடிகளைப் போற்றுதற்கு விரும்பி நீராடப் போயினாளாக, ஓர் ஊர் அரவங் கேட்டு விரைவொடு வந்தாள் உளள் - அப்பொழுது வேறொருத்தி உண்ணகரத்துப் பிறந்ததொரு சொற்கேட்டு அதனைக் கூறுதற்கு விரைவில் வந்தாள் உளள்; ஆயர்முதுமகள் போயினாள் ஆடிய சாயலாள் வந்தாளுளள் என்றியைத்தலுமாம். சாயலாள் - ஐயை யென்றலுமாம். நீடுநீர் - இடையறாது ஒழுகும் நீர். நெடுமால் இருந்த வளமுடை யாரெனவும் சுந்தர வானத் தெம்பெருமான் எனவும் கூறுப. துறைபடிதல் - நீராடுதல் ; அக் கால வழக்கு என்ப. தூவி ஏத்தத் துறைபடியப் போயினாள் என்க. தூவுதல் - வழங்குதல். 8. அவள்தான் - அங்ஙனம் வந்து நின்றவள்தான்; 9-10. சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள் அந் நங்கைக்கு - அத் துயர் மொழியினைக் கண்ணகிக்குக் கூறாதே நின்றாள்; சொல்லாடும் சொல்லாடும் தான் - அக் காலைக் கண்ணகி அவட்குக் கூறுகின்றாள்; அந் நங்கை - கண்ணகி ; கேட்டு வந்தாள் எனலுமாம். தான் - கண்ணகி. 11. எல்லாவோ - தோழீ ; ஏடீ எனலுமாம். ஓ, இரக்கம். 12-15. காதலற் காண்கிலேன் கலங்கி நோய் கைம்மிகும் ஊது உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு அன்றே - என் காதலனை யான் காண்கின்றிலேன் ஆகலான் என்னுள்ளம் கலங்கத் துன்பம் மிகாநின்றது அதுவேயுமன்றி மூச்சும் கொல்லனூதும் துருத்தியும் தோல்வியுற அழல் எழ உயிர்க்கின்றன, ஊது உலை தோற்க உயிர்க்கும் என்னெஞ்சு ஆயின் - இவை இங்ஙனமாதலால், ஏதிலார் சொன்னது எவன் வாழியோ தோழீ - தோழீ அயலார் கூறிய மொழி யாதோ ; கலங்கி - கலங்கவெனத் திரிக்க. நெஞ்சு கலங்கி என்க. விரைவொடு வந்தாள் உரையாடாதிருக்கின்ற நிலைமையானும் தன்னெஞ்சு கலங்கலானும் நிகழ்ந்த தொன்றுண்டெனவுட் கொண்டு அந் நிகழ்ச்சி தானும் இவள் நேரே யறியாது நகரத்துப் பிறர் வாய்க்கேட்டு அறிந்திருத்தல் கூடுமெனக் கருதி ஏதிலார் சொன்னதெவன் என்றாள் என்க. இனி, ஏதிலார் என்றது சொன்னவளையும் கேட்கின்றாரையும் எனவுங் கூறுவர். அன்றே,அசை, ஓ, இரக்கம், வாழி, முன்னிலையசை. பின் வருவனவற்றையும் இவ்வாறே கொள்க. 16-19. நண்பகற் போதே நடுக்கு நோய் கைம்மிகும் - நல்ல பகற் பொழுதிலேயே நடுக்கம் செய்கின்ற துன்பம் மிகாநின்றது, அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சு அன்றே - அதுவுமன்றி என் காதலனைக் காணப் பெறாமையான் என் உள்ளம் வருந்துகின்றது, அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சு ஆயின் - இங்ஙனம் என்னுள்ளம் வருந்துமாதலான், மன்பதை சொன்னது எவன் வாழியோ தோழீ - தோழீ அயலார் கூறிய மொழிதான் யாதோ; கோவலன் பிரிந்த போதே இவளுள்ளம் கலங்கலான் நண்பகற்போதே நோய் கைம்மிகும் என்றாள். அன்றியும் இக் காலம் பகற்கால மாகலான் இங்ஙனங் கூறினாள் எனலுமாம். நடுக்கு நோய்- நடுக்கஞ் செய்யும் நோய். அலவும் - சுழலும், வருந்தும் மன்பகை - மக்கட் கூட்டம், ஈண்டு ஏதிலார். 20-23. தஞ்சமோ தோழீ தலைவன் வரக் காணேன் - என் நாயகன் வரக் காண்கின்றிலேன் ஆதலான் தோழீ இனி எனக்கொரு அடைக்கலமுண்டோ, வஞ்சமோ உண்டு - என் தலைவனை வஞ்சகப்படுத்திய செயலொன்றுளது, மயங்கும் என் நெஞ்சு அன்றே.ஆகலான் என்னுள்ளம் மயங்காநின்றது, வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு ஆயின் - இங்ஙனம் வஞ்சச் செயல் நிகழ்ச்சியும் என் நெஞ்சு கலங்கலும் உண்டா மாகலான், எஞ்சலார் சொன்னது எவன் வாழியோ தோழீ - தோழீ அயலார் கூறிய மொழி யாதோ ; தஞ்சமோ என்பதற்கு நிகழ்ந்த செயல் எளிதன்று எனக் கூறினுமமையும், வஞ்சம் - வஞ்சச் செயல். எஞ்சலார் - அயலார்; இனி, நெஞ்சலார் எனப் பிரித்து நெஞ்சம் கலத்தலில்லாதவர் எனக்கொண்டு அப்பொருட்டாக்கினும் அமையும். தாழிசை மூன்றனுள்ளும் வந்த தோழீ என்றது ஐயையை என்க. 24. சொன்னது - அவள் கூறியது ; அவர்கள் கூறியது எனவும் உரைப்ப. 25-28. அரசு உறை கோயில் அணியார் ஞெகிழம் - அரசன் விரும்பித் தங்கும் கோயிற்கணிருந்த அழகு மிக்க சிலம்பினை, கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே - சிறிது அரவமும் இன்றிக் கவர்ந்த கள்வன் இவனேயாமென்று கூறி, குரை கழல் மாக்கள் கொலை குறித்தனரே - ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த ஊர்காவலர் இவனைக் கொலை செய்தலைக் கருதினர்; அரசு உறை கோயில் என்றது ஈண்டு அந்தப்புரத்தை என்ப. ஞெகிழம் - சிலம்பு. கரைதல் - ஒளித்தல் ; வருந்துதல் எனலும் ஆம். கொலை செய்தனர் எனக் கூறின் இவள் இறந்துபடுவாள் எனக் கருதிக் கொலை குறித்தனர் என்றாள் என்க. 29. எனக்கேட்டு - என்று அவ் வையை சொல்லக் கேட்டு; 30-33. பொங்கி எழுந்தாள் - சீறி எழுந்தாள், விழுந்தாள் பொழி கதிர்த் திங்கள் முகிலோடுஞ் சேண்நிலங்கொண்டென - நிலவினைப் பொழியும் திங்கள் கரிய முகிலோடும் பெரிய நிலத்தின்கண் வீழ்ந்தது போல வீழ்ந்தாள், செங்கண் சிவப்ப அழுதாள் - தன் சிவந்த அரி பரந்த கண்கள் சிவக்கும்படி அழுதாள், தன் கேள்வனை எங்கணா என்னா இனைந்து ஏங்கி மாழ்குவாள் - தன் கணவனை எவ்விடத்தாய் என்று கூவி வருந்தி ஏக்கமுற்று மயங்குவாள்; சேணிலங்கொண்டென விழுந்தாள் என்க. எழுந்தாள் மாழ்குவாளாய் விழுந்தவளாய் அழுதாள் என்க. தன் தலைவனைக் கொலை குறித்தனர் எனக் கேட்டவுடன் வெகுளியும் பின்னர் அவலமும் தோன்றிய வென்க. திங்களும் முகிலும் அவள் முகத்திற்கும் குலைந்த குழலுக்கும் உவமை. ஆ, இரக்கக் குறிப்பு. எங்கணாய் என்று பாடங் கொள்ளுதலுமாம். 34-37. இன்பு உறு தம் கணவர் இடர் எரியகம் மூழ்க -தம்மோடு இன்புற்ற தன் கணவன்மார் இடர் செய்யும் தீயிடத்து மூழ்கவும், துன்புறுவன நோற்றுத் துயர்உறு மகளிரைப்போல் - அவரோடு தாமும் தீயின் மூழ்காது துன்பமுறுந் தன்மையவாகிய கைம்மை நோன்பினை நோற்றுத் துயரடையும் பெண்டிரைப்போல, மன்பதை அலர் தூற்ற மன்னவன் தவறு இழைப்ப அன்பனை இழந்தேன் யான் அவலங்கொண்டு அழிவலோ - மக்கட் கூட்டமெல்லாம் என்னைப் பழி தூற்றப் பாண்டியன் தவற்றினைச் செய்தலாற் காதலனை இழந்தேனாகிய யான் அழுகையைக்கொண்டு உள்ளமகிழ்கின்றா ளொருத்தியோ; துன்புறுவன நோற்றல் - 1வெளிளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட, வேளை வெந்தை வல்சி யாகப், பரற்பெய் பள்ளிப் பாயின்று வதிதல் ஆம். மன்னவன் தவறிழைப்ப அன்பனை இழந்தேன் யான் மகளிரைப்போல் அலர்தூற்ற அவலங்கொண் டழிவலோ என்க. 38-41. நறை மலி வியன் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி - மணம் மிக்க அகன்ற மார்பினையுடைய தங் கணவனை இழந்ததனால் ஏக்கமுற்று, துறை பல திறம் மூழ்கித் துயர்உறு மகளிரைப்போல் - திறப்பட்ட பல நீர்த்துறைகளிலும் சென்று நீராடி இடர் மிக்கு அழுகின்ற பெண்டிரைப் போல, மறனொடு திரியுங் கோல் மன்னவன் தவறு இழைப்ப அறன் எனு மடவோய் யான் அவலங்கொண்டு அழிவலோ - அறக் கடவுளெனப்படும் அறிவற்றோய் பாவத்தினைப் பின்பற்றிச் செல்லும் கொடுங்கோன்மையை யுடைய பாண்டியன் தவற்றினைச் செய்தலான் யான் அவலத்தினை மேற்கொண்டு உள்ளமழிவேனோ; மூழ்குதல் - அழுக்கறக் குளிரக் குளித்தல். அல்லவை செய்யாத் தன்கணவனைக் காவாதிருந்ததற் பொருட்டும் மன்னவன் மறனொடு திரியக்கண்டும் அவனிடத்தே நின்றதுபற்றியும் புலந்து ‘அறனெனுமடவோய்' என்றாள். முன்னர், நண்பன் என ஒருமை கூறிப் பின்னர் மகளிர் எனப் பன்மை கூறியவதனால் கணவன் என்பதனை மகளிர்க்குத் தனித்தனியே கூட்டுக. "ஏவ லிளையர் தாய் வயிறு கறிப்ப" என்பதுபோல. பின்வருவதனையும் இவ்வாறே கொள்க. 42-45. தம்முறு பெருங்கணவன் தழல் எரியகம் மூழ்க - தம்மோடுற்ற பெருமை மிக்க கணவன் சுடுகின்ற தீயிடத்தே மூழ்கவும், கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரைப்போல் - தாமும் அத் தீயிடத்தே மூழ்காது பல நீர்த்துறைகளில் படிகின்ற கைம்மை நோன்பு மிக்க வருந்துதலையுடைய மகளிரைப் போன்று, செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப இம்மையும் இசை ஒரீஇ இனைந்து ஏங்கி அழிவலோ - செம்மையினின்றும் நீங்கிய கோலையுடைய பாண்டியன் தவற்றைச் செய்தலான் இப் பிறவியிலும் புகழை விட்டு நீங்கி வருந்தி ஏக்கமுற்று உள்ளமழிவேனோ; கைம்மை கூர் மகளிர் என்க. கவலையமகளிர்-உயவற் பெண்டிர். செம்மை - வளையாமை. இம்மையும் - உம், எச்சவும்மை; என்னை? மறுமையிலும் புண்ணியத்தை ஒரீஇ எனப் பொருள் படலான். 46. காணிகா - காண்பாயாக; இகவென்னும் முன்னிலையசை இகாவெனத் திரிந்தது. காணிகா காணிகாவெனப் பாடங்கொண்டு, இரண்டும் விரைவின்கண் வந்தன என்பர் அரும்பதவுரையாசிரியர். 47-53. வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும் ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீமின் ஆய மடமகளிர் எல்லீரும் கேட்டைக்க - மேல்வருந் தீமை நீங்குதல் வாய்த்தற் பொருட்டான் எடுத்த குரவைக்கூத்தினுள் வந்து திரண்ட இடைக்குலப் பெண்டிர் யாவிரும் கேண்மின் இடைக்குலப் பெண்டிர் யாவிரும் கேட்க, பாய் திரை வேலிப் படுபொருள் நீ அறிதி காய் கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன் - காய்கின்ற கதிர்களையுடைய செல்வனே பரந்த அலைகளையுடைய கடலை வேலியாகவுடைய இவ் வுலகத்துத் தோன்றும் பொருள்கள் யாவற்றையும் நீ அறிவாய் ஆகலான் நீயறிய என் கணவன் கள்வனோ சொல்லென்றாள், கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய் ஒள்ளெரி உண்ணும் இவ்வூர் என்றது ஒருகுரல் - என்றவட்கு ஓர் அசரீரி கரிய கயல்போலுங் கண்களையுடைய மாதே நின் கணவன் கள்வனல்லன் அவனைக் கள்வனென்ற இவ்வூரினை விளக்கம் பொருந்திய தீ உண்ணும் என்று கூறிற்று என்க. கேட்டீமின் - கேண்மின் ; வினைத்திரிசொல், கேட்டை என்னும் வினையசைச்சொல் ஈற்றுவியங்கோள் விகுதி பெற்றுக் கேட்க வென்னும் பொருட்டாயிற்று. கேட்டீமின் கேட்டைக்க என இரட்டித்தது யாவருங் கேட்டற்பொருட்டாம். பாய்தல் - பரத்தல். முதற்கண் கள்வனோ என்றதன்கண் ஓ வினாப்பொருட்டு; பின்னதன் ஓ பிரிநிலை. உண்ணும், முற்று. இவ்வூர் - கள்வனென்று கூறிய இவ்வூர். இது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா. துன்ப மாலை முற்றிற்று 19. ஊர்சூழ் வரி (கதிரோன் கூறியதைக் கேட்ட கண்ணகி, மிக்க சினங்கொண்டு, தன்பால் இருந்த மற்றொரு சிலம்புடன் புறப்பட்டு மதுரையின் வீதிவழியே சென்று, அங்குள்ள மகளிரை நோக்கிப் பலவாறு புலம்பி, ‘என் கணவனை முன்போலக் கண்டு அவன் கூறும் நல்லுரையைக் கேட்பேன்; அங்ஙனம் கேளேனாயின் என்னை இகழுமின்' என்று சூள் கூறிச் சென்று, வெட்டுண்டு கிடந்த கோவலனைச் சிலர் காட்டக் கண்டு அளவிலாத் துயரெய்தி, அவனை முன்னிலையாக்கிப் பலவாறு புலம்பி அவன் உடம்பைத் தழுவிக் கொள்ள, அவ்வளவில் அவன் எழுந்து நின்று `மதிபோன்ற நின் முகம் வாடியதே' என்று சொல்லிக் கையாள் அவள் கண்ணீரை மாற்ற, அவள் கணவனுடைய அடிகளை இரண்டு கையாலும் பற்றி வணங்கினாள் ; அப்பொழுது அவன் `நீ இங்கிருக்க' என்று சொல்லி, அவ் வுடம்பை யொழித்து, அமரர் குழாத்துடன் துறக்கம் புகுதற்குச் சென்றான். கண்ணகி `என் சினந் தணிந்தன்றிக் கணவனைக் கூடேன்; தீமையுடைய அரசனைக் கண்டு இதனை உசாவுவேன்' என்று அரசன் கோயில் வாயிலை அடைந்தாள். (இதன் அவலச்சுவை கன்னெஞ்சையும் கரைக்க வல்லது). என்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத்தோளி நின்றிலள் நின்ற சிலம்பொன்று கையேந்தி முறையில் அரசன்றன் ஊரிருந்து வாழும் நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈதொன்று 5 பட்டேன் படாத துயரம் படுகாலை உற்றேன் உறாதது உறுவனே ஈதொன்று கள்வனோ அல்லன் கணவன் என் காற்சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈதொன்று மாதர்த் தகைய மடவார்கண் முன்னரே 10 காதற் கணவனைக் காண்பனே ஈதொன்று காதற் கணவனைக் கண்டா லவன்வாயில் தீதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று தீதறு நல்லுரை கேளா தொழிவேனேல் நோதக்க செய்தாளென் றெள்ளல் இதுவொன்றென்று 15 அல்லலுற் றாற்றா தழுவாளைக் கண்டேங்கி மல்லல் மதுரையா ரெல்லாருந் தாமயங்கிக் களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கொல் மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன் 20 தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல் மண்குளிரச் செய்யு மறவேல் நெடுந்தகை தண்குடை வெம்மை விளைத்த திதுவென்கொல் செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால் வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல் 25 ஐயரி யுண்கண் அழுதேங்கி யரற்றுவாள் தெய்வமுற்றாள் போலுந் தகைய ளிதுவென்கொல் என்பன சொல்லி இனைந்தேங்கி யாற்றவும் மன்பழி தூற்றுங் குடியதே மாமதுரைக் கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்டச் 30 செம்பொற் கொடியனையாள் கண்டாளைத் தான்காணான் மல்லன்மா ஞாலம் இருளூட்டி மாமலைமேற் செவ்வென் கதிர்சுருங்கிச்செங்கதிரோன் சென்றொளிப்பப் புல்லென் மருள்மாலைப் பூங்கொடியாள் பூசலிட ஒல்லென் ஒலிபடைத்த தூர்; 35 வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழன்மேற் கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய்ப் புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க் கண்டாள் அவன்றன்னைக் காணாக் கடுந்துயரம் என்னுறு துயர்கண்டும் இடருறும் இவள்என்னீர் 40 பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ மன்னுறு துயர்செய்த மறவினை யறியாதேற்கு என்னுறு வினைகாணா இதுவென உரையாரோ யாருமில் மருள்மாலை இடருறு தமியேன்முன் தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ 45 பார்மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறிழைப்ப ஈர்வதோர் வினைகாணா இதுவென உரையாரோ கண்பொழி புனல்சோரும் கடுவினை யுடையேன்முன் புண்பொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ மன்பதை பழிதூற்ற மன்னவன் தவறிழைப்ப 50 உண்பதோர் வினைகாணா இதுவென உரையாரோ பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் கொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம் பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் 55 ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் 60 என்றிவை சொல்லி அழுவாள் கணவன்றன் பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள நின்றான் எழுந்து நிறைமதி வாள்முகம் கன்றிய தென்றவள் கண்ணீர்கை யான்மாற்ற அழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன் 65 தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யாற்பற்றப் பழுதொழிந்தெழுந்திருந்தான்பல்லமரர்குழாத்துளான் மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர் தெய்வங்கொல் போயெங்கு நாடுகேன் பொருளுரையோ இதுவன்று 70 காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன் தீவேந்தன் தனைக்கண்டித் திறங்கேட்பல் யானென்றாள் என்றாள் எழுந்தாள் இடருற்ற தீக்கனா நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச் 75 சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன். உரை 1-4. என்றனன் வெய்யோன் - காய்கதிர்ச் செல்வன் நின் கணவன் கள்வனல்லன் என்றனனாக, இலங்கு ஈர் வளைத்தோளி நின்றிலள் நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி - அறுக்கப்பெற்று விளங்குகின்ற வளையலை அணிந்த தோள்களை யுடைய கண்ணகி மற்றைச் சிலம்பினைக் கையின்கண் ஏந்தி அவ்விடத்து நில்லா ளாய், முறை இல் அரசன்றன் ஊரிருந்து வாழும் நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈது ஒன்று - நீதி யில்லாத அரச னுடைய ஊரின்கணிருந்து வாழ்கின்ற கற்புடைய பத்தினிப் பெண்டீர் இச் சிலம்பு அச் சிலம்பின் மற்றொன்று, அதனைக் காண்மின்; இலங்கு ஈர் என்பதனை ஈர்ந்திலங்கு என மாறுக. நின்றிலள் - அவ்வாயர் பாடியினில்லாது நகரத்துச் சென்றாள். நின்ற சிலம்பு - ஒழிந்த சிலம்பு; மற்றைச் சிலம்பு. பத்தினிப் பெண்டிர்காள் என் றது இகழ்ச்சி; என்னை இகழ்ச்சி எனின்? 1அருந்திற லரசர் முறை செயி னல்லது, பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது." எனவும், 2"மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவ லின்றெனி னின்றால்" எனவும் வருவனவற்றான் இகழ்ந்தாள் என்க. அவன் நாட்டு மகளிர்க்கும் கற்பின்றாம் ஆகலின், அவனிருக்கும் ஊரின்கண் வாழும் நுமக்கும் கற்பு இன்றாம் என இகழ்ந்தாள். 5-8. பட்டேன் படாத துயரம் படுகாலை - இம் மாலைக் காலத்து உலகத்து மற்றெவரும் படாத துயரம் பட்டேன், உற் றேன் உறாதது உறுவனே ஈது ஒன்று - பிறர் உறாத துன்பத் தினை யான் உற்றேன் இத்தகைய துன்பத்தினை யானுறக்கட வேனோ இஃதோர் வினைப்பயன், கள்வனோ அல்லன் கணவன் என் காற்சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈது ஒன்று - என் கணவன் கள்வனல்லன் எனது காற்சிலம்பின் விலையைக் கொடாது தாம் கைக்கொண்டு விடுதற்பொருட்டுக் கள்வனென்று ஒருபெயரிட்டு அவனைக் கொன்றார்களே இஃ தோரநியாயம்; படுகாலை - ஞாயிறு மறையும் காலம் ; மாலை, இனி, படுகாலை என்பதற்கு இறப்பு நெருங்கிய காலம் எனவும் உரைப்ப, உறுவன் - அன் விகுதி தன்மைக்கண் வந்தது, பின்னரும் இங்ஙனம் வருதல் காண்க. என் காற் சிலம்பு கொள்ளும் விலைப் பொருட்டால் என் றது தான் ஓர் அரசனாக இருந்தும் எனது சிலம்பிற்குரிய விலையைத் தருவதற்கு ஒருப்படானாயினனே என்று வியந்து கூறியவாறாம். கொன் றாரே என்ற பன்மை அமைச்சரையும் கருதி நின்றது. உறுவனே - ஏ. வினாவாகி எதிர்மறையை யுணர்த்தி நின்றது. கள்வனோ - ஓ, பிரிநிலை. 9-10. மாதர்த் தகைய மடவார் கண் முன்னரே - தம் கணவர் காதலிக்குந் தகுதியினையுடைய மகளிர் கண் முன்னரேயே, காதற் கணவனைக் காண்பனே ஈது ஒன்று - அன்பு நிறைந்த என் கணவனை உயிருடையவனாகக் காண்பேன். அங்ஙனங் காணும் இஃதோர் புதுமையன்றோ; மாதர் - காதல். தகை - ஈண்டுக் கற்பு. கணவனைக் காண் பேன் என்றது கணவனைப் பண்டுபோல உயிருடையவனாக் காண் பேன் என்றவாறு. 11-12. காதற் கணவனைக் கண்டால் அவன் வாயின் தீது அறு நல்லுரை கேட்பனே ஈது ஒன்று - அங்ஙனம் என் கணவனைப் பண்டு போலக் காண்பேனாயின் அவன் வாயினாற் கூறும் குற்ற மற்ற இனிய மொழியைக் கேட்பேன் இஃதோர் சூளாகும்; 13-14. தீது அறு நல்லுரை கேளாது ஒழிவேனேல் - அங்ஙனம் அவன் கூறும் நல்லுரையைக் கேளாதொழிவேனாயின், நோதக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று - இவள் நமக்கு வருந் தத் தக்கன செய்தாளென்று என்னை இகழுக. இது நுங்கட்கோர் வாய்ப்பிடம்; நோதக்க செய்தது, 1"நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள்" என்று இகழ்ந்து கூறியது. எள்ளல் என்றது இவள் கள்வன் மனைவியே என்று இகழுமின் என்றவாறு. எள்ளல் - அல்லீற்று வியங்கோள் ; 2"மக்கட்பதடி எனல்" என்பதுபோல. 14-18. என்று அல்லலுற்று ஆற்றாது அழுவாளைக் கண்டு ஏங்கி மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி - என்று கூறி வருத்தமுற்றுப் பொறாது அழுகின்றாளை வளமிக்க மதுரை நகரத்தார் யாவரும் கண்டு ஏக்கமுற்றுக் கலங்கி, களையாத துன்பம் இக் காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்தது இது என் கொல் - நீக்க வொண்ணாத துன்பத்தினை இக் காரிகைக்குச் செய்து எஞ்ஞான்றும் கோடாத செங்கோல் கோடிற்று இது யாது காரணத்தால் நிகழ்ந்ததோ ; அயல் நாடு போந்து தீதிலாக் கணவனை இழந்து தனித் துயருழத் தல் பற்றி மதுரையாரெல்லாரும் மயங்கினார் என்க, 3"அல்லற் பட் டாற்றா தழுதகண் ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை" என்னும் குறளின் கருத்து ஈண்டு அறிதற் குரியது. 4"கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில்" ஆகலான், களையாத் துன்பம் என்றார். 19-20. மன்னவர் மன்னன் மதிக்குடை வாள் வேந்தன் தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என் கொல் - அரசர்க் கரசனும் திங்களை ஒத்த குடையினையும் வாளினையும் உடைய வேந்தனும் ஆகிய பாண்டியனது அரசியல் அழிவுற்றது இது யாது காரணத்தானிகழ்ந்ததோ : குடையையும் வாளையுமுடைய வேந்தன் என்க. குடையும் வாளுங் கூறவே அளியுந் தெறலும் பெறப்பட்டன. கொற்றம் - அரசியல். 21-22. மண் குளிரச் செய்யும் மற வேல் நெடுந்தகை தண் குடை வெம்மை விளைத்தது இது ‘என்கொல் - நிலவுலகினைக் குளிரச் செய்யும் மறம் பொருந்திய வேலையுடைய சிறந்த தகுதியை யுடையானது தண் குடை வெம்மையை உண்டாக்கிற்று. இது யாது காரணத்தானிகழ்ந்ததோ; மண்குளிரச் செய்தலாவது மன்பதை துன்புறாமற் காத்தல். மண் குளிரச் செய்யும் தண்குடை யென்க. 1"மண்குளிர் கொள்ளக் காக்கு மரபொழிந் தரசர் தங்கள், விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயிற், கண்குளிர் கொள்ளப் பூக்குங் கடி கயத் தடமுங் காவும், தண்குளிர் கொள்ளு மேனுந் தான்மிக வெதும்பு மன்றே" என்னுஞ் செய்யுள் ஈண்டு ஒத்து நோக்கற் குரியது. 23-24. செம்பொற் சிலம்பு ஒன்று கை ஏந்தி நம் பொருட் டால் வம்பப் பெருந்தெய்வம் வந்தது இது என் கொல் - செம் பொன்னாலாகிய ஓர் சிலம்பினைத் தனது கையின்கண் ஏந்தி நம்மைக் கெடுத்தற்பொருட்டுப் புதிய பெரிய தெய்வம் வந்துற்றது இதனால் மேல் விளைவது யாதோ; நம்பொருட்டு - நம்மை நன்னெறிப்படுத்தும் பொருட்டு எனலு மாம். பெருந்தெய்வம் என்றது, முன்னர், 2"கற்புக் கடம் பூண்ட இத்தெய்வ மல்லது, பொற்புடைத் தெய்வம் யாம்கண் டில மால்" எனக் கூறினமையானென்க. 25-26. ஐ அரி உண்கண் அழுது ஏங்கி அரற்றுவாள் தெய்வ முற்றாள் போலுந் தகையள் இதுவென் கொல் - புலம்பி ஏக் குற்று அரற்றுவாளாய அழகிய அரி பரந்தமை பூசிய கண்ணினை யுடையாள் தெய்வத் தன்மையுற்றாள் போலுந் தகுதியை யுடையளாயினாள். இதனால் மேல் விளைவது யாதோ; ஐ - வியப்புமாம். உண்கண் - மை பூசிய கண். அரற்றுவாள் உண்கண் என மாறுக. தெய்வமுற்றாள் - தெய்வமேறினாள் எனலு மாம். 27-32. என்பன சொல்லி இனைந்து ஏங்கி - என்றின்னவற் றைச் சொல்லி வருந்தி ஏங்க, ஆற்றவும் மன்பழி தூற்றுங் குடி யதே மா மதுரைக் கம்பலை மாக்கள் கணவனைத் தாம் காட்ட - அரசன் கோல் கோடினமையான் அவனை மிகவும் பழிதூற்று கின்ற குடியினை யுடைத்தாகிய மதுரைக்கண் உள்ள கம்பலை மாக்கள் சிலர் அவள் கணவனை அவட்குக் காட்ட, செம்பொற் கொடியனையாள் கண்டாளைத் தான்காணான் - அவனைக் கண்ட சிவந்த பொன்னாலாய கொடி போன்றவளைத் தான் காணப் பொறானாய், மல்லல் மா ஞாலம் இருளூட்டி மா மலைமேல் செவ் வென் கதிர் சுருங்கிச் செங்கதிரோன் சென்று ஒளிப்ப - வளம் நிறைந்த பெரிய உலகிற்கு இருளை ஊட்டிக் கரிய மேற்கு மலை யின்கண் தனது சிவந்த கதிர்களைச் சுருக்கிக்கொண்டு ஞாயிறு சென்று மறைய ; என்பன சொல்லி என்றது களையாத துன்பம் என்பது முதலாகச் சொல்லியவற்றை. ஏங்கி - ஏங்கவெனத் திரிக்க. மதுரையா ரெல்லாரும் சொல்லி இனைந்து ஏங்க என்க. பழி தூற்றல் குடியின் தொழில். ('வன்பழி' என்ற பாடத்திலும் 'மன்பழி' என்ற பாடமே சிறந்ததாகத் தோன்றுகிறது) கம்பலை மாக்கள் - வேறு சில காட்சி கண்டு திரியுமவர் என்ப ; கம்பலை - ஒலி. தான் என்றது செங்கதி ரோனை ; அவன், தன் இறந்த கணவனை நோக்கி வருந்தும் கண்ணகி யைக் காணப் பொறாது மலையில் மறைந்தான் என்றார். இனி, தான் காணான் என்றதற்குக் கோவலன் இறந்தமையான் அவளைக் காணா னாயினான் எனவும் உரைப்ப; அது பின்னர் வருகின்றது. சுருக்கி எனற்பாலது சுருங்கி என்றாயிற்று. 33-34. புல்லென் மருள் மாலைப் பூங்கொடியாள் பூசலிட ஒல் லென் ஒலி படைத்தது ஊர் - அங்ஙனம் அவன் மறைதலானே புல்லென்ற மருட்சியையுடைய மாலைக் காலத்தே பூத்து உதிர்த்த கொடிபோன்ற கண்ணகி தன் கணவனிடத்திருந்து அழுது அரற்றலான் அவ்வூர் ஒல்லென்னும் ஒலியினைப் படைத்தது ; சிறிது காலமே நிற்றலான் புன்மை உடைத்தாயிற்று ; புற் கென்ற நிறமுமாம். இரவென்றும் பகலென்றும் துணியலாகாது மயங்குதற்கேதுவாகிய மாலையென்க. ஒல்லென், ஒலிக்குறிப்பு. 35-38. வண்டு ஆர் இருங்குஞ்சி மாலை தன் வார் குழல்மேற் கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய் - காலைப் போழ்தில் தன் கணவனைத் தழுவி அவனிடத்து வண்டுகள் நிறைந்த கரிய அவன் குஞ்சியிற் சூடிய மாலையை வாங்கித் தனது நீண்ட குழலினிடத்துச் சூடிக் கொண்டவள். புண் தாழ் குருதி புறஞ் சோர மாலைவாய்க் கண்டாள். அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம் - மாலைப் போழ்தில் அவன் மெய்யிற் புண்ணினின்றும் குதிக்கின்ற குருதி உடலிடமெல்லாம் நனைக்க அக் கோவலன் தன்னைக் காண வொண்ணாத மிக்க துயரத்தினைக் கண்டாள் ; வண்டுஆர் - வண்டொலிக்கின்ற எனலுமாம். குஞ்சி - ஆண் பால் முடி. அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம் என்றது அவனது இறப்பினை என்க. காலைவாய்த் தழீஇக் குஞ்சி மாலை குழன்மேற் கொண்டாள் மாலைவாய்க் குருதி புறஞ்சோரக் காணாக் கடுந்துயரங் கண்டாள் என மாறுக. மாலையில் உண்டாகிய துன்பத்தின் வரம்பின்மையும் விரைவுந் தோன்றக் காலையில் நிகழ்ந்த இன்ப நிகழ்ச்சியை உடன் கூறினார். 39-42. என் உறு துயர் கண்டும் இடர் உறும் இவள் என்னீர்- என்னுடைய மிக்க துயரத்தினைக் கண்டு வைத்தும் நம் காதலி யாகிய இவள் இதற்கு இடர் உறுவாள் என எண்ணுகின்றிலீர், பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ - அது நிற்க, மணம் பொருந்திய சந்தன முதலிய பூசப் பட்ட நுமது பொன் போன்ற மேனி புழுதி படிந்து கிடக்கத்தக்கதொன்றோ, மன் உறு துயர் செய்த மறவினை அறியாதேற்கு - மிக்க துயரத்துக் குக் காரணமாய அரசன் செய்த இக் கொலைத் தொழில் எத் தன்மையால் நிகழ்ந்ததென அறியவொண்ணா எனக்கு, என் உறுவினை காண் ஆ இது என உரையாரோ - இக் கொலைத் தொழிற்குக் காரணம் யான் முற்பிறப்பிற் செய்த என் தீவினையே காண் என எனக்கு இந் நாட்டிற் சொல்லார்களோ; நறுமேனி - மணந்தருவன பூசிய மேனி, ஓகாரம் - இரக்கம். உறுதுயர் மன் செய்த மறவினை எனக் கூட்டுக. இனி, உறுதுயர் செய்த மன் மறவினை எனலுமமையும். மறவினை - கொலைத் தொழில், என்னுறு வினை காணா இது என்பதற்கு, இக் கொலை நிகழ்ச்சி என்னை யுற்ற தீவினையின் பயனேகாண் எனவுரைத்தலும் அமையும்; ஆ, அசை, தான் அயல்நாட்டினளாகலான் இந் நாட்டில் எனக்குச் சொல்லார்களோ என்றாள். இஃது அழுகையைச் சார்ந்த வெகுளி; மேல்வருவனவும் இன்ன.. 43-46. யாரும் இல் மருள் மாலை இடர் உறு தமியேன் முன் - எனக்குத் துணையாக ஒருவருமில்லாத மயக்கத்தினைச் செய்யும் இம் மாலைக் காலத்தே துயருறுகின்ற தனியேன் கண்முன்னரேயே, தார் மலி மணி மார்பம் தரை மூழ்கிக் கிடப்பதோ - நிறைந்த மலர்மாலைக்குள் முழுகும் நுமது அழகிய மார்பு வெறு நிலத்தே படிந்து கிடக்கத் தக்க தொன்றோ, பார் மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறு இழைப்ப ஈர்வதோர் வினைகாண் ஆ இது வென உரையாரோ - உலகத்தார் மிக்க பழிச்சொல் கூறித் தூற்றும் வண்ணம் பாண்டியன் தவற்றினைச் செய்ய இந் நிகழ்ந்த நிகழ்ச்சி வெட்டுவிப்பதோர் நின் தீவினையின் பயன்காண் என ஒருவரும் சொல்லாரோ ; பாண்டியன் தவறிழைப்ப என்றது ஆராயாமல் கோவலனைக் கொலை செய்யக் கூறியதனை என்க. ஈர்வது - வெட்டுவது. 47-50. கண்பொழி புனல் சோரும் கடுவினை உடையேன் முன் - கண்கள் பொழிகின்ற நீர் சோராநிற்கும் தீவினையுடை யேன் கண் முன்னரேயே, புண்பொழி குருதியிராய்ப் பொடி யாடிக் கிடப்பதோ - நீவிர் புண்ணினின்றும் ஒழுகுகின்ற செந் நீரை உடையீராய்ப் புழுதி படிந்து கிடத்தல் தகுவதொன்றோ, மன்பதை பழி தூற்ற மன்னவன் தவறு இழைப்ப உண்பதோர் வினைகாண் ஆ இது வென உரையாரோ - மக்கள் பலரும் தன் பழியினைக் கூறித் தூற்றும் வண்ணம் பாண்டியன் தவற்றினைச் செய்ய இது நிகழ்ந்தது நீ நுகர்வதோர் தீவினையின் பயன்காண் என ஒருவரும் கூறாரோ; குருதியிர் - முன்னிலையில் உயர்வுப்பன்மை, தவறிழைப்ப என் பதற்கு முன்னுரைத்தாங் குரைக்க. உண்பதோர் வினை என்பதற்கு உயிரினை உண்பதோர் வினை எனலும் அமையும். மேற்கூறிய மூன்றும் முதுபாலை ; என்னை? 1"நனிமிகு சுரத் திடைக் கணவனை யிழந்து, தனிமகள் புலம்பிய முதுபாலையும்" என் பதனான் என்க. . 51-53. பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் - கோல் கோடிய மன்னனையுடைய இக் கூடல் நகரிடத்துக் கற் புடை மகளிரும் உளர்கொல்லோ, கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறூஉம் பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் - தாம் உள்ளத்துக் கொண்ட கணவருடைய மிக்க குறையினைப் பொறுக்கின்ற கற்புடைய மகளிரும் உளர் கொல்லோ; கொண்ட கொழுநர் என்பதற்குத் தம்மை மணந்துகொண்ட எனவும், தம்மை உள்ளத்துக்கொண்ட எனவும் கூறினும் அமையும், உறுகுறை - கணவர் உற்ற நோய் முதலியன; குற்றங்களைக் குறை யுறப் பொறுத்தலுமாம். உண்டு, பொதுவினை. 54-56. சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டு கொல் - இக் கூடல் நகரிடத்துப் பெரியோரும் உளரோ, ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் - பிறர் ஈன்று போகட்ட குழவியைத் தாங்கி வளர்க்கின்ற பெரியோரும் உளரோ; பிறர் ஈன்று போகட்ட குழவியைத் தம் குழவிபோற் பேணி வளர்க்குஞ் சான்றோரென்க. 57-59. தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் வை வாளில் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டு கொல் தெய்வமும் உண்டு கொல் - என் கணவனைக் கூரிய வாளால் வெட்டியதனால் கோல் கோடிய பாண்டியன் கூடல் நகரிடத்துத் தெய்வமும் உளதோ; தப்புதல் - வெட்டுதல்; 1"வாளிற் றப்பிய வண்ணமும்" என்றார் பிறரும், கற்புடை மகளிரும் சான்றோரும் தெய்வமும் உண்டாயின் இக் கொடுஞ்செயல் நிகழாது ; இது நிகழ்ந்தமையால் அவரும் அதுவும் இந் நகரிடத்து இல்லை என்றாள் என்க. 60-67. என்று இவை சொல்லி அழுவாள் கணவன்றன் பொன் துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக் கொள்ள - என்று இவற் றைச் சொல்லி அழுகின்றவள் தன் கொழுநனுடைய திருத் தங் கிய மார்பினைத் தன் மார்போடு பொருந்தும் வண்ணம் தழுவிக் கொண்டாளாக, நின்றான் எழுந்து நிறைமதி வாள்முகம் கன்றி யது என்று அவள் கண்ணீர் கையால் மாற்ற - உயிர் பெற் றெழுந்து நின்ற கோவலன் கண்ணகியை நோக்கி நினது நிறை மதிபோலும் ஒள்ளிய முகம் கன்றியதே என்று வாயாற் கூறி அவள் கண்ணீரைத் தன் கையால் துடைக்க, அழுது ஏங்கி நிலத் தின் வீழ்ந்து ஆயிழையாள் தன் கணவன் தொழுதகைய திருந்து அடியைத் துணைவளைக் கையாற் பற்ற - கண்ணகி புலம்பி ஏக்கமுற்று நிலத்தின்கண் விழுந்து தன் காதலனுடைய தொழத் தக்க திருந்திய அடிகளைத் தனது வளையணிந்த இரு கைகளாலும் பூண்டுகொண்டாளாக, பழுது ஒழிந்து எழுந்திருந் தான் பல்லமரர் குழாத்து உளான் எழுது எழில் மலர் உண்கண் இருந்தைக்கவெனப் போனான் - இவ் வுடலைவிட்டு நீங்கித் துறக் கம் புக எழுந்தவன் எழுதிய அழகிய மலர்போலும் மை பூசிய கண்களையுடையாய் நீ இங்கிருக்கவெனச் சொல்லிப் பல தேவர் கூட்டத்துள்ளானாய் வானுலகு புக்கான் ; என்றிவை சொல்லி என்றது, "என்னுறுதுயர்" முதல், "தெய்வமு முண்டுகொல்" வரை கூறியன. அழுவாள், வினைப்பெயர் எழுந்து நின்றான் என மாறுக. நின்றான், பெயர். மாற்றல் - துடைத்தல். பழுது - உடல்; 1"திருந்திய நின்மகன் தீது நீங்கினான்" என்ற விடத் துப் பழுதென்னும் சொல்லின் மறு பெயராகிய தீது என்னும் சொல் உடல் என்னும் பொருட்டாதல் காண்க. இனி, முன்னரே பழுதொழிந் திருந்தான் பல்லமரர் குழாத்துள்ளவன், தழீஇக் கொள்ள, எழுந்து நின்றான் மாற்ற, பின் வளைக்கையாற் பற்ற, உண்கண் இருந்தைக்க வெனப் போனான் எனக் கூட்டலும் அமையும். இருந்தைக்க - இருக்க ; வினைத்திரிசொல். 68-71. மாயம் கொல் மற்று என் கொல் மருட்டியது ஓர் தெய்வம் கொல் - இங்ஙனம் எழுந்து உரையாடியது வஞ்சங் கொல்லோ அன்றி என்னுள்ளத்தை மயக்கியதோர் தெய்வமோ தான் மற்று வேறு யாதோ, போய் எங்கு நாடுகேன் - இனி யாண்டுச் சென்று என் கணவனைத் தேடுவேன், - பொருள் உரையோ இது வன்று - இக் கூறிய உரை மெய்யுரை யன்று, காய்சினம் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன் - என் கண வனைக் கூடுதல் எனக்கு எளிதாயினும் எனது மிக்க வெகுளி தணிந்தாலன்றி அவனைக் கூடேன், தீ வேந்தன் தன்னைக் கண்டு இத் திறம் கேட்பல் யான் என்றாள் - அச் சினந் தணிதற்கு யான் கொடிய பாண்டிய மன்னனைக் கண்டு இக் கொலைத் திறத்திற் குரிய காரணந்தான் யாதென்று கேட்பேன் என்றாள் ; தெய்வங்கொல் என்றாள் ; வெட்டுண்டு இரு துணியாகிய உடல் கூடி உயிர் பெற்று நின்றமையான். மாயங்கொல் என்றாள் ; எழுந்து உரையாடி மறைந்தமையான். போயெங்கு நாடுகேன் என்பதற்கு யாண்டும் சென்று என் கணவனைத் தேடுவேன் எனலுமாம். கணவனைக் கைகூடலாவது, ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்கா தின்னுயிரீந்தும், நன்னீர்ப் பொய்கையின் நளி யெரி புக்கும் மறுமைக் கண் கணவனைக் கூடுதல். இத் திறம் என்றது தன் கணவனைக் கொலை செய்த இவ்வகை. யான் நாடுகேன் கைகூடேன் கேட்பல் என்றாள் என்க. 72-75. என்றாள் எழுந்தாள் - என்றிங்ஙனங் கூறியவள் ஆண்டுப் போதற்கு எழுந்தாள், இடர் உற்ற தீக் கனா நின்றாள் நினைந் தாள் நெடுங்கயற்கண் நீர் சோர - எழுந்தவள் தன்னூரிற் கண்ட துன்ப மிக்க தீய கனாவினை நீண்ட கயல்போலும் கண் களினின்றும் நீரொழுக நின்று எண்ணினாள், நின்றாள் நினைந் தாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச் சென்றாள் அரசன் செழுங் கோயில் வாயின்முன் - அங்ஙனம் நின்று நினைந்தவள் நெறி யறிதற்பொருட்டுத் தன் கண்ணீரைத் துடைத்துப் பாண்டிய மன்னனது வளம் மிக்க கோயிலின் வாயிலிடத்தை அடைந்தாள்; தீக்கனாவென்றது முன்னர்த் தான் கண்டு தேவந்தியிடம், 1"கடுக்குமென் நெஞ்சம்" என்பது முதலாகச் சொல்லியவதனை என்க. என்றாள் - எழுவாய் ; சென்றாள் - பயனிலை. இது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா. ஊர்சூழ் வரி முற்றிற்று. 20. வழக்குரை காதை (கோப்பெருந்தேவி தீக்கனாப் பல கண்டு அவற்றை அரியணை மீதிருந்த தன் கணவனிடம் கூறிக்கொண்டிருந்தாள். அப்பொழுது பெருஞ் சீற்றத்துடன் வாயிலை யடைந்த கண்ணகி தன் வரவை வாயில் காப்போனால் அரசனுக்கு அறிவித்துச் சென்று முன்னின்று, அவன் கேட்பத் தன் ஊர், பெயர் முதலியவற்றையும், தன் கணவனை அவன் ஆராயாது கொன்ற கொடுங்கோன்மையையும் அஞ்சாது இடித்துரையால் எடுத்தியம்பி, தன் கணவன் கள்வனல்ல னென்று தெரிவித்தற்பொருட்டுத், தன் சிலம்பினுள் உள்ள பரல் மாணிக்கம் என்றாள்; அரசன் தன் தேவி சிலம்பின் பரல் முத் தென்று கூறி, கோவலனிடமிருந்து கொண்ட சிலம்பை வருவித்து வைக்க, கண்ணகி அதனை உடைத்தாள் ; உடைக்க, அதிலுள்ள மாணிக்கப் பரல் அரசன்முன் தெறித்தது ; அது கண்ட நெடுஞ் செழியன் நடுநடுங்கி, 'இழிந்த பொற்கொல்லன் சொற் கேட்ட கொடுங்கோன்மையையுடைய யானோ அரசன்! யானே கள்வன் ; தென்புலம் காவல் என் முதற் பிழைத்தது ; இன்றே கெடுக என் ஆயுள்' எனக் கூறித் துயருற்று மயங்கித் தான் அமர்ந்த அரசு கட்டிலில் வீழ்ந்து துஞ்சினான் ; அது கண்ட அரசன் மனைவி கணவனை இழத்தலாகிய கொடுந் துன்பத்தை எண்ணி வருந்தி, அவன் இணையடிகளைத் தொழுது தானும் வீழ்ந்தனள்.) ஆங்குக் குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும் கடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லா திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக் 5 கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா விடுங்கொடி வில்லிர வெம்பகல்வீழும் கடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லா கருப்பம் செங்கோலும் வெண்குடையும் செறிநிலத்து மறிந்து வீழ்தரும் 10 நங்கோன்றன் கொற்றவாயில் மணிநடுங்க நடுங்குமுள்ளம் இரவுவில்லிடும் பகல்மீன்விழும் இருநான்கு திசையும் அதிர்ந்திடும் வருவதோர் துன்பமுண்டு மன்ன வர்க்கியாம் உரைத்துமென ஆடியேந்தினர் கலனேந்தினர் அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர் கோடியேந்தினர் பட்டேந்தினர் கொழுந்திரையலின் செப்பேந்தினர் 15 வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர் மான்மதத்தின் சாந்தேந்தினர் கண்ணியேந்தினர் பிணையலேந்தினர் கவரியேந்தினர் தூபமேந்தினர் கூனுங்குறளும் ஊமுங்கூடிய குறுந்தொழிலிளைஞர் செறிந்துசூழ்தர நரைவிரைஇய நறுங்கூந்தலர் உரைவிரைஇய பலர்வாழ்த்திட ஈண்டுநீர் வையங்காக்கும் பாண்டியன்பெருந் தேவிவாழ்கென 20 ஆயமுங்காவலுஞ்சென் றடியீடு பரசியேத்தக் கோப்பெருந் தேவிசென்றுதன் தீக்கனாத் திறமுரைப்ப அரிமா னேந்திய அமளிமிசை இருந்தனன் திருவீழ் மார்பின் தென்னவர் கோவே; இப்பால் வாயி லோயே வாயி லோயே 25 அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள் கணவனை யிழந்தாள் கடையகத் தாளென்று அறிவிப் பாயே அறிவிப் பாயே, என 30 வாயிலோன், வாழியெங் கொற்கை வேந்தே வாழி தென்னம் பொருப்பின் தலைவ வாழி செழிய வாழி தென்னவ வாழி பழியொடு படராப் பஞ்சவ வாழி அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப் 35 பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை யல்லள் அறுவர்க் கிளைய நங்கை இறைவனை ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக் கானகம் உகந்த காளி தாருகன் 40 பேருரங் கிழித்த பெண்ணு மல்லள் செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத் தாளே கணவனை இழந்தாள் கடையகத் தாளே, என 45 வருக மற்றவள் தருக ஈங்கென வாயில் வந்து கோயில் காட்டக் கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரை யோநீ மடக்கொடி யோய்எனத் 50 தேரா மன்னா செப்புவ துடையேன் எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் 55 அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை யாகி வாழதல் வேண்டி ஊழ்வினை துரப்பச் 60 சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி கண்ணகி யென்பதென் பெயரேயெனப், பெண்ணணங்கே கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று 65 வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை நற்றிறம் படராக் கொற்கை வேந்தே என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத் தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே 70 தருகெனத் தந்து தான்முன் வைப்பக் கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணிகண்டு தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன் பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட 75 யானோ அரசன் யானே கள்வன் மன்பதை காக்குந் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக் 80 கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி. வெண்பா 1 அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும் பல்லவையோர் சொல்லும் பழுதன்றே ? பொல்லா வடுவினையே செய்த வயவேந்தன் றேவி கடுவினையேன் செய்வதூஉங் காண். 2 காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும் ஆவி குடிபோன அவ்வடிவும் ? பாவியேன் காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக் கூடலான் கூடாயி னான். 3 மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் ? வையைக்கோன் கண்டளவேதோற்றான் அக் காரிகைதன் சொற்செவியில் உண்டளவே தோற்றான் உயிர். உரை 1. ஆங்கு - அங்ஙனம் அவள் வாயில்முன் சென்றகாலை; பெருந்தேவி தன் கனவினிலை யுரைத்தலைக் கூறுகின்றார்:- 2-3. குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும் கடைமணியின் குரல் காண்பென் காண் எல்லா - தோழீ நம் மன்னனது வெண் கொற்றக் குடையும் செங்கோலும் கீழே விழ வாயிலிடத்து நிலைபெற்று அசையும் மணியின் ஓசையை யான் கனவிலே காண்பேன்; ஒடு: எண்ணொடு. வீழ என்னுமெச்சம் இது நிகழாநிற்க இது நிகழ்ந்தது என்னும் பொருட்டு. கடை - வாயிற்கடை. காண் - அசை. பின்வருவனவும் இன்ன. 4-5. திசை இரு நான்கும் அதிர்ந்திடும் - எண் திசையும் அதிர்ச்சியுறும்; அதனைக் காண்பேன், அன்றிக் கதிரை இருள் விழுங்கக் காண்பென் காண் எல்லா - தோழீ அதுவேயு மன்றி ஞாயிற்றினை இருளானது விழுங்க அதனை யான் காண்பேன்; விழுங்கல் - மறைத்தல் ; இலக்கணை. 6-7. விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும் கடுங்கதிர் மீன் இவை காண்பென் காண் எல்லா - இரா ஒழுங்குபட்ட வான வில்லினைத் தோற்றுவிக்கும்; காயும் பகற்பொழுதில் மிக்க ஒளியினையுடைய மீன்கள் எரிந்து கீழே விழும் ; தோழீ யான் இவற்றைக் காண்பேன்; இடும் எனப் பிரித்தலுமாம். கொடி - ஒழுங்கு. இர - இரா; 1குறியதன் இறுதிச் சினை கெட்டது. இர வில் விடும், பகல் மீன் விழும் என்க. 8. கருப்பம் - கேட்டிற்குக் கருப்பம். 9-12. செங்கோலும் வெண் குடையும் செறி நிலத்து மறிந்து வீழ்தரும் - அரசனுடைய செங்கோலும் வெண்கொற்றக் குடையும் அணுச் செறிந்த நிலத்தின்கண் மடங்கி வீழும், நங்கோன் தன் கொற்ற வாயில் மணி நடுங்க நடுங்கும் உள்ளம் - நம் மன்னனது வெற்றி தரும் வாயிலின்கண் கட்டிய மணி என்னுள்ளம் நடுக்குறும் வண்ணம் அசையும், இரவு வில்லிடும் - இராக்காலமானது வான வில்லைத் தோற்றுவிக்கும், பகல் மீன் விழும் - பகற் காலத்து விண்மீன்கள் எரிந்து கீழே விழும், இரு நான்கு திசையும் அதிர்ந்திடும் - எட்டுத் திக்கும் அதிரும், வருவது ஓர் துன்பம் உண்டு - ஆகலான் வரக்கடவதாகிய துன்பம் ஒன்றுளது, மன்னவற்கு யாம் உரைத்தும் என - யாம் அரசனுக்கு இச் செய்தியைக் கூறுதும் என்று கூற; செறிநிலம் - அணுச் செறிந்த நிலம். உள்ளம் நடுங்க மணி நடுங்கும் என்க. நடுங்கல் - அசைதல், ஒலித்தல். தான் பெருந்தேவி யாகலான், அப் பெருமிதந் தோன்ற, யாம் உரைத்தும் என்றாள். பெருந்தேவியைத் தம் பிராட்டி எனவும் வழங்குவர். முன்னர்க் கூறியவற்றையே மீட்டுங் கூறினாள், அவற்றாற் றுன்பம் வருமென்பதனை உணர்த்துதற் பொருட்டு ; என்னை? "கூறியது கூறினுங் குற்றமில்லை, வேறொரு பொருளை விளக்கு மாயின்" என்பவாகலான். 13-17. ஆடி ஏந்தினர் கலன் ஏந்தினர் அவிர்ந்து விளங்கும் அணி இழையினர் - ஒளியிட்டு விளங்குகின்ற அழகிய கலன்களை அணிந்தவர்களாய்க் கண்ணாடியையும் அணிகலன்களையும் ஏந்தினராய், கோடி ஏந்தினர் பட்டு ஏந்தினர் - புதிய நூலாடை யையும் பட்டாடையையும் தாங்கினராய், கொழுந்திரையலின் செப்பு ஏந்தினர் - கொழுவிய வெள்ளிலைச் செப்பினை ஏந்தினராய், வண்ணம் ஏந்தினர் சுண்ணம் ஏந்தினர் மான் மதத்தின் சாந்து ஏந்தினர் - பல்வகை நிறங்களையும் பொற் பொடி முதலிய பொடிகளையும் கத்தூரிக் குழம்பினையும் சுமந்தனராய், கண்ணி ஏந்தினர் பிணையல் ஏந்தினர் கவரி ஏந்தினர் தூபம் ஏந்தினர் - தொடையினையும் மாலை யினையும் கவரியினையும் அகிற்புகையினையும் தாங்கினராய், கூனும் குறளும் ஊமும் கூடிய குறுந்தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர - கூனராயும் குறளராயும் ஊமராயுங் குழுமிய குற்றேவல் மகளிர் நெருங்கிப் புடைசூழ; ஆடி - கண்ணாடி. கோடி - புதிய ஆடை. திரையல் - வெற்றிலை. சுண்ணம் - பொடி . 1"வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்" என்றார் முன்னும். மான்மதத்தின் சாந்து ஏந்தினர் என்பதற்கு மான்மதங் கலந்த சந்தனத்தை ஏந்தினராய் எனப் பொருள் கோடலுமாம். அணியிழையினராகிய குறுந்தொழி லிளைஞர் என்றுமாம். குறுந்தொழிலிளைஞர் ஏந்தினராய்ச் செறிந்து சூழ்தர வென மாறுக. 18-21. நரை விரைஇய நறுங் கூந்தலர் உரை விரைஇய பலர் வாழ்த்திட ஈண்டு நீர் வையங் காக்கும் பாண்டியன் பெருந்தேவி வாழ்கென - நரை கலந்த நல்ல கூந்தலையுடைய முதுமகளிர் பலர் கடல் சூழ்ந்த இவ் வுலகத்தினைப் புரக்கும் பாண்டிய னுடைய பெருந்தேவி நீடு வாழ்கவெனச் சொல்லிப் புகழ் கலந்த மொழிகளான் வாழ்த்தவும், ஆயமும் காவலும் சென்று அடியீடு பரசி ஏத்த - சேவிக்குந் தோழியரும் காவல் மகளிரும் பின் சென்று அடியிடுந்தோறும் புகழ்ந்து போற்றவும், கோப்பெருந்தேவி சென்று தன் தீக்கனாத் திறம் உரைப்ப - பாண்டியன் பெருந்தேவி அரசனிடத்துச் சென்று தான் கண்ட தீய கனாவின் தன்மையை எடுத்துச் சொல்ல; பின்னர்க் கூறிய விரைஇய, பலவின்பாற் பெயர் ; மூன்றனுருபு விரிக்க. ஈண்டு நீர் - கடல். கோப்பெருந்தேவி - பெயர். திறம் - வகையுமாம். நறுங்கூந்தலர் பலர் தேவி வாழ்கென வாழ்த்திட ஆயமுங் காவலும் ஏத்தச் சென்று உரைப்ப என மாறியுரைக்க. 22-23. அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன் திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே - திருமகள் விரும்பும் மார்பினை யுடைய பாண்டியர் தலைவனான நெடுஞ்செழியன் சிங்கஞ் சுமந்த தவிசின்மீது அமர்ந்திருந்தான்; "திருவீழ் மார்பிற் றென்னவன்" என்றார் பிறரும் ; திருவீழ் மார்பு என்பதற்கு ஈண்டுத் திருமகள் கழியும் மார்பு எனக் கோடலும் அமையும். 23-29. இப் பால் - இங்ஙனமுரைத்து நின்றதற் பின்னர் ; வாயிலோயே வாயிலோயே அறிவு அறைபோகிய பொறி யறு நெஞ்சத்து இறை முறை பிழைத்தோன் வாயிலோயே - அறிவு கீழற்றுப் போகிய அற நினைவு அற்ற உள்ளத்தினையுடைய அரச நீதியற்ற வறியோனது கோயில் வாயில் காப்போய், இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் கணவனை இழந்தாள்-தன் கணவனை இழந்தாளொருத்தி பரலினையுடைய இரண்டு சிலம்பினுள் ஒன்றனை ஏந்திய கையினையுடையளாய், கடையகத்தாள் என்று அறிவிப்பாயே அறிவிப்பாயே என - நம் கோயில் வாயி லிடத்தாள் என்று அவ்வரசற்கு அறிவிப்பாய் என்று கண்ணகி கூற; அறைபோதல் - கீழறுத்தல். பொறி - அறம். பிழைத்தோன் : வினைப்பெயர். இணையரிச்சிலம்பு என்பது நீ கோவலனிடைக் கொண்ட சிலம்பினை ஒத்த சிலம்பு எனவும் பொருள் கொள்ள அமைந்துளது. வாயிலோயே வாயிலோயே எனவும் அறிவிப்பாயே அறிவிப்பாயே எனவும் வந்த அடுக்குகள் விரைவும் வெகுளியும் பற்றியன. 30-44. வாயிலோன் - வாயில்காப்போன், வாழி எம் கொற்கை வேந்தே வாழி - எமது கொற்கை நகரத்து, அரசே வாழ்வாயாக, தென்னம் பொருப்பின் தலைவ வாழி - தெற்கின்கட் பொதியின் மலையையுடைய தலைவனே வாழி, செழிய வாழி - செழியனே வாழி, தென்னவ வாழி - பாண்டியனே வாழி, பழி யொடு படராப் பஞ்சவ வாழி - மறநெறிக்கண் செல்லாத பஞ்சவனே நீ வாழ்வாயாக, அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந்துணி - வெட்டுவாயினின்றும் செறிந்தெழுந்து ஒழுகும் குருதி நீங்காத பசிய துண்டமாகிய, பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை அல்லள் - பிடரொடு கூடிய மயிடன் தலையாகிய பீடத்தின்கண் ஏறி நின்ற இளங்கொடியாகிய வென்றி தரும் வேலினைப் பெரிய கையின் கண் தாங்கிய கொற்றவையும் அல்லள், அறுவர்க்கு இளைய நங்கை - கன்னியர் எழுவருள் இளையாளாகிய பிடாரியும் , இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு - இறைவனை நட்ட மாடச் செய்த பத்திரகாளியும், சூர் உடைக் கானகம் உகந்த காளி - அச்சம் விளைக்கும் காட்டினிடத்தைத் தனக்கு இடமாக விரும்பிய காளியும், தாருகன் பேர் உரம் கிழித்த பெண்ணும் அல்லள் - தாருகனுடைய அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கையும் ஆகிய அவர்களும் அல்லள், செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் - தன் உள்ளத்துக் கறுவுகொண்டாள் போலவும் மிக்க சினமுற்றாள் போலவும், பொன் தொழிற் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் - தொழிற் றிறம் அமைந்த ஓர் பொற் சிலம்பினை ஏந்திய கையினை உடையளாய், கணவனை யிழந்தாள் கடையகத்தாளே கணவனை யிழந்தாள் கடையகத்தாளே என - தன் கணவனை யிழந்தவள் வாயிலின் முன்னிடத்தாள் என்று கூற; மன்னனை வணங்கும் ஒவ்வொரு முறையுங் கூறலின் வாழ்த்துப் பலவாயின. முதற்கண் வாழி முன்னிலையசையுமாம். படர்தல் என வந்தமையான் பழிநெறி என உரைக்கப்பட்டது. அடங்காத துணி, துணியாகிய தலைப்பீடம் என்க. மடக்கொடியாகிய கொற்றவை. எண்ணும்மையும் அல்லள் என்னும் வினையும் நங்கை முதலியவற்றோடும் கூட்டுக. செற்றம் - கறுவு ; செயிர்ப்பு - வெகுளி; 1"செற்றன் றாயினும் செயிர்த்தன் றாயினும்" என்றார் பிறரும். கண்ணகி கூறியதனைக் கொண்டு `கணவனை யிழந்தா'ளெனக் கூறினான் வாயிலோன். கொற்றவை முதலியோர் போல்வளாயினும் அவர்களல்லள் என்றமையின் இஃது உண்மையுவமை என்னும் அணியாகும். கடிய தோற்றம் பற்றிக் கொற்றவை முதலியவாகக் கருதினான். 45. வருக மற்று அவள் தருக ஈங்கு என-அத் தகையாள் வருவா ளாகவெனச் சொல்லி அவளை இவ்விடத்து அழைத்து வருவாய் என்று வாயிலோனிடத்து அரசன் கூற ; வருக என்றது அவள் வருகைக்கு உடன்பட்டவாறு. 46-49. வாயில் வந்து கோயில் காட்ட-வாயிலோன் கண்ணகியிடம் வந்து அவளை அழைத்துச் சென்று கோயிற்கண் மன்னனைக் காட்ட, கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி - கோயிற்கண் அரசனை அணுகிச் சென்று நின்றவிடத்து, நீர் வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரையோ நீ மடக்கொடியோய் என - அரசன், நீரொழுகும் கண்களையுடையையாய் எம் முன்னர் வந்து நின்றோய் இளங்கொடி போல்வாய் நீ யார் என்று கேட்ப; வாயில் - ஆகுபெயர். குறுகினள், முற்றெச்சம். உழி, காலப்பொருள் தந்து நின்றது. யாரை - ஐ, இடைச்சொல். 50. தேரா மன்னா செப்புவது உடையேன் - மன்னர்க்குரிய ஆராய்ச்சி யில்லாத மன்னவனே நின்னிடத்துச் சொல்லத் தகுவது ஒன்றுடையேன் யான்; அறிவறை போகியோன் ஆகலான் 'தேரா மன்னா' என்றாள். அதனைச் செப்புகின்றாள்;- 51-63. எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்உறு புன்கண் தீரித்தோன் - இகழ்தலற்ற சிறப்பினை யுடைய தேவர்களும் இறும்பூது எய்தப் புறாவொன்று உற்ற மிக்க துன்பத்தினைப் போக்கியோனும், அன்றியும் - அவனன்றியும், வாயிற் கடை மணி நடு நா நடுங்க-கடைவாயிலினிடத்துக் கட்டிய மணியின் நடுவிலுள்ள நா அசைய, ஆவின் கடைமணி உகு நீர் நெஞ்சு சுட - பசுவொன்றின் கண்மணிக் கடையினின்றும் ஒழுகும் நீர் தன்னுடைய உள்ளத்தை வெதுப்பலானே, தான் தன் அரும் பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் - தானே தன்னுடைய பெறுதற்கரிய மகனைத் தேர்க்காலிலிட்டுக் கொன்றோனும் ஆகிய இவரது, பெரும் பெயர்ப் புகார் என் பதியே - மிக்க புகழினையுடைய புகார் நகரமே யான் பிறந்த வூர், அவ் வூர் ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை யாகி - அவ் வூரின்கண் பழிப்பில்லாத சிறப்பினை யுடைய புகழ் யாங்கணும் சென்று விளங்கிய பெருங்குடிக்கண் மாசத்துவான் என்னும் வணிகனுடைய புதல்வனாகத் தோன்றி, வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ் கழல் மன்னா நின் னகர்ப் புகுந்து - வீரக் கழலணிந்த மன்னனே பொருளீட்டி வாழ்க்கை நடத்தலை விரும்பி முன்னைத் தீவினை செலுத்தலானே நினது மதுரை நகரத்தின்கண் புக்கு, இங்கு என் காற்சிலம்பு பகர்தல் வேண்டி நின்பாற் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி - இந் நகரிடத்தே என்னுடைய காலின்கண் அணிந்த சிலம் பொன்றனை விற்றல் காரணமாக நின்னிடத்துக் கொலை யுண்ட கோவலன் என்பானுடைய மனைவியாவேன், கண்ணகி என்பது என் பெயரே என - என் பெயர் கண்ணகி எனப்படும் என்று கூற; புள் - புறா. பருந்தொன்றினால் துரத்தப்பட்டுத் தன்னை வந்தடைந்த புறாவினைக் காத்து, அதன்பொருட்டுத் தன் ஊனை அப் பருந்திற்களித்தான் சிபி. இதனைக் 1"கொடுஞ்சிறைக், கூருகிர்ப் பருந்தி னேறு குறித்தொரீஇத், தன்னகம் புக்க குறுநடைப் புறவின், தபுதி யஞ்சிச் சீரை புக்க, வரையா ஈகை யுரவோன் மருக" என்பதனா னுணர்க. தன் புதல்வனை ஆழியின் மடித்தோன் மனுச்சோழன். இதனை, 2"சாலமறைத்தோம்பி ............முறைமைக்கு மூப்பிளமையில்" என வருஞ் செய்யுளானறிக. ஆழி - தேர்க்கால். பெரும் பெயர் - மிக்க புகழ். பெருங்குடி என்பது வணிகர் பிரிவு மூன்றனுள் ஒன்று. மகனை - ஐ, இடைச்சொல். சூழ்கழன் மன்னா என்றது கழற்சூழ்வு நின்மாட்டமைந்ததன்றி அறிவுச் சூழ்வு அமைந்திலது என்பதனைப் புலப்படுத்தி நின்றது. பெரும்பெயர்ப் புகார் என் பதி என்றது நின் பதியிற்போற் கொடுமை சிறிதும் நிகழாத பதி என்றவாறு. பாண்டியனது முறை வழுவை வலியுறுத்த நின்பதி எனவும், நின்பால் எனவும் கூறினாள். 63-65. பெண்ணணங்கே - அணங்குபோலும் பெண்ணே, கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று வெள்வேல் கொற்றம் காண் என - கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோன்மைப் பாற்பட்டதன்று மேலும் அதுவே அரச நீதியுமாகும் என்று அரசன் கண்ணகியிடம் கூற; கொற்றம் - அரச நீதி. காண், முன்னிலையசை. 65-67. ஒள்ளிழை - ஒள்ளிய இழையினையுடையாளாகிய கண்ணகி அவனை நோக்கி, நல் திறம் படராக் கொற்கை வேந்தே - அறநெறியிற் செல்லாத கொற்கை நகரத்து அரசனே, என் காற் பொற் சிலம்பு மணியுடை அரியே என - என் காற்கு அணியாம் பொன்னாலாய சிலம்பினுடைய பரல் மாணிக்கமே என்று கூற; நற்றிறம் - அறத்தின் கூறுபாடு. சிலம்புடை அரி மணியே என மாறுக. 68-72. தே மொழி உரைத்தது செவ்வை நன்மொழி - இக் கண்ணகி கூறியது செவ்விதாய நல்ல மொழியே யாகும், யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே என - எம்முடைச் சிலம்பினது பரல் முத்தே எனத் தம்முட் கருதி, தருகெனத் தந்து தான் முன் வைப்ப-அச் சிலம்பினைக் கொண்டு வருகவென ஏவலரிடைக் கூறி வருவித்துத் தானே அதனைக் கண்ணகியின் முன்பு வைத்த னனாக, கண்ணகி அணி மணிக் காற்சிலம்பு உடைப்ப - கண்ணகி தான் அணியும் அழகிய அச் சிலம்பினை உடைத்த காலை, மன்னவன் வாய் முதல் தெறித்தது மணியே - அதனினின்றும் எழுந்த மாணிக்கப் பரல் பாண்டியனது முகத்திடத்துத் தெறித்து வீழ்ந்தது; தேமொழி - தேன் போலும் மொழியினையுடையாள் ; அன் மொழித்தொகை. செவ்வைமொழி - நீதிமொழி. சிலம்புடை அரி முத்தென்க. தருகென வென்றது முன்னர்க் கோவல னிடத்துப் பெற்ற சிலம்பினைக் கொண்டு வருக என்று கூறி என்றவாறு. முன் வைப்ப - கண்ணகி முன் அரசன் வைக்க. வாய் - முகம். முதல், ஏழனுருபு. 72-78. மணி கண்டு - அங்ஙனந் தெறித்த மாணிக்கப் பரலைப் பார்த்து, தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன் - தாழ்வுற்ற குடையனாய்ச் சோர்வுற்ற செங்கோலனாய், பொன் செய் கொல்லன்தன் சொற் கேட்ட யானோ அரசன் யானே கள்வன் - பொற்றொழில் செய்யும் கொல்லனுடைய பொய்யுரை கேட்டு முறை பிழைத்த யான் ஓர் அரசனா வேனோ, ஆகேன், கள்வனென்று யான் துணிந்த அக் கோவலன் கள்வனல்லன் யானே கள்வன் , மன்பதை காக்கும் தென்புலங் காவல் என் முதற் பிழைத்தது - மக்கட் கூட்டத்தினைப் புரக்கின்ற பாண்டி நாட்டு ஆட்சி என்னை முதலாகக் கொண்டு தவறுற்றது, கெடுக என் ஆயுள் என மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே - என் வாழ்நாள் அழிவுறுவதாகவெனச் சொல்லி அரசன் மயக்கமுற்று வீழ்ந்தான்; அமைச்சரொடு சூழ்ந்து அவர் கூறியது நோக்கி முறைசெயற் குரியான் கொல்லன் சொற்கேட்டுக் கொடுமை செய்தான் ஆகலான் "யானோ அரசன்" எனவும், கோவலன் சிலம்பினைத் தம்முடையதாகக் கொண்டமையான் "யானே கள்வன்" எனவும் கூறினான் ; முன்னர், 1"தேரா மன்னா' என்றதும், 2"என் காற் சிலம்பு கொள்ளும் விலைப் பொருட்டாற் கொன்றாரே" என்றதும் இக் கருத்தினை வலியுறுத்துவனவே. தமக்கு முன்னர் இந் நில மாண்ட தம் முன்னோர் இங்ஙனம் கோல் கோடிற்றிலர் ஆகலானும், இவ்வாறு தான் கோல் கோடிய குற்றம் தன் வழி வருவார்க்கும் எய்தும் ஆகலானும் "தென் புலங் காவல் என்முதற் பிழைத்தது" என்றான். தென் புலங் காவலர் கோல் கோடாமையைக் கட்டுரை காதைக்கண் மதுரைமா தெய்வம் உரைத்தது கொண்டு உணர்க. வீழ்ந்தான் - துஞ்சினான். 78-81. தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கி - பாண்டியனுடைய மனைவி கோப்பெருத்தேவி உள்ளங் குலைந்து உடல் நடுக்குற்று, கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்லென்று - தாய் தந்தை முதலாயினோரை இழந்தவர்க்கு அம் முறை சொல்லிப் பிறரைக் காட்டுதல் கூடும் ; ஆயின் கணவனை இழந்த மகளிர்க்கு அங்ஙனஞ் சொல்லிக் காட்டலாவ தொன்றில்லை என்று கருதி, இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி - அவள் தன் கணவனுடைய இரண்டு அடிகளையும் தொட்டு வணங்கி நிலத்து வீழ்ந்தாள் என்க. கோப்பெருந்தேவி - பெயர். குலைந்தனள் - முற்றெச்சம். வீழ்ந்தனள் - துஞ்சினாள். குலைந்து நடுங்கி இல்லென்று தொழுது வீழ்ந்தனள் என்க. கோப்பெருந்தேவி, மடமொழி தொழுது வீழ்ந்தனள் என மாறுக. இது, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா வெண்பாவுரை 1. அல்லவை செய்தார்க்கு அறங்கூற்றம் ஆம் என்னும் - பாவச் செயல்களைச் செய்தவர்களுக்கு அறக்கடவுளே யமனாக இருந்து ஒறுக்கும் என்கின்ற, பல்லவையோர் சொல்லும் பழுது அன்றே - பல அறிஞர்களின் கூற்றும் பயனிலதன்று, பொல்லா வடுவினையே செய்த வய வேந்தன் தேவி - கொடிய தீங்கினைச் செய்த வெற்றியினையுடைய பாண்டியனுடைய மனைவியே, கடுவினையேன் செய்வதூஉம் காண் - கொடுவினையை உடையேனாகிய யான் இழைக்கும் மறச் செயல்களையும் நீ காண்பாய். 1"அல்லவை செய்தார்க் கறங்கூற்றம்" 2"அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம்" என்பன ஈண்டு அறியற்பாலன. இது கண்ணகி கூற்றாக அமைந்துள்ளது. 2. காவி உகு நீரும் - கண்ணகியின் நீல மலர் போன்ற விழி பொழியும் நீரையும், கையில் தனிச் சிலம்பும் - அவள் கையில் உள்ள ஒற்றைச் சிலம்பினையும், ஆவி குடிபோன அவ் வடிவும் - உயிர் நீங்கினால் ஒத்த அவள் வடிவினையும், காடு எல்லாம் சூழ்ந்த கருங்குழலும் - காடுபோல் விரிந்து உடல் முழுதுஞ் சூழ்ந்த கரிய கூந்தலையும், கூடலான் கண்டு அஞ்சிக் கூடு ஆயினான் - கூடற்பதிக்கரசனாகிய பாண்டியன் கண்டு அஞ்சி வெற்றுடம்பாயினான், பாவியேன் - பாவியாகிய யான் இதனைக் காண்பேனாயினேன். கூடாயினான் - உயிர்நீத்தான் என்றபடி, பாவியேன் என்ப தன் பின் ஒரு சொல் வருவித்து முடிக்க. இதுவும் வருஞ் செய்யுளும் கண்டாரொருவர் கூற்றாக அமைந்துள்ளன. 3. மெய்யிற் பொடியும் - கண்ணகியின் உடம்பிற் படிந்த புழுதியையும், விரித்த கருங்குழலும் - விரிக்கப்பட்ட கரிய கூந்தலையும், கையில் தனிச்சிலம்பும் - கையிலுள்ள ஒற்றைச் சிலம்பினையும், கண்ணீரும் - கண்ணீரையும், வையைக் கோன் - வையைக்கிறைவனாகிய பாண்டியன், கண்டளவே தோற்றான் - பார்த்த வளவிலே வழக்கிலே தோல்வியுற்றான், அக் காரிகை தன் சொல் செவியில் உண்டளவே - அந் நங்கையின் சொல்லினைச் செவியில் உட்கொண்டவளவிலே, தோற்றான் உயிர் - உயிரை இழந்தான். கண்ட, உண்ட என்னும் பெயரெச்சத் தகரங்கள் விகாரத்தாற் றொக்கன. வழக்குரை காதை முற்றிற்று. 21. வஞ்சினமாலை (கண்ணகி நடுங்கி வீழ்ந்த கோப் பெருந்தேவியை விளித்து, ‘யான் ஒப்பற்ற கற்புடை மகளிர் பலர் பிறந்த பதியின்கட் பிறந்தேன் ; யானும் ஓர் பத்தினியாயின் அரசோடு மதுரையையும் ஒழிப்பேன்' என்று கூறி, அவ்விடம் விட்டு நீங்கி, ‘மதுரையிலுள்ள மகளிர் மைந்தர் கடவுளர் மாதவர் அனைவீரும் கேண்மின்; என் காதலனைக் கொன்ற அரசன் நகரினைச் சீறினேன் ஆகலின் யான் குற்றமிலேன்' என்றுரைத்து, தனது இடக் கொங்கையைக் கையாலே திருகி, மதுரையை மும்முறை வலம் வந்து, சுழற்றி எறிந்தாள் ; அப்பொழுது அங்கியங்கடவுள் வெளிப்பட்டு, `பத்தினியே, நினக்குப் பிழை செய்த நாளில் இந் நகரினை எரியூட்ட முன்பே ஓர் ஏவல் பெற்றுளேன் ; இதன் கண் பிழைத்தற்குரியார் எவ்வெவர்' என்று உசாவ, ‘பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர் மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டுத் தீயோர் பக்கம் சேர்க' என்று கண்ணகி ஏவக் கூடல் நகரிலே அழல் மண்டிற்று. (இதன்கண் புகார் நகரிலிருந்த பத்தினிப் பெண்டிர் எழுவர் வரலாறு கூறப்பட்டிருப்பது அறிந்து மகிழ்தற்குரியது.) கோவேந்தன் தேவி கொடுவினை யாட்டியேன் யாவுந் தேரியா இயல்பினே னாயினும் முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண் நற்பகலே 5 வன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக முன்னிறுத்திக் காட்டிய மொய்குழலாள் பொன்னிக் கரையின் மணற்பாவை நின்கணவ னாமென்று உரைசெய்த மாதரொடும் போகாள் திரைவந்து அழியாது சூழ்போக வாங்குந்தி நின்ற 10 வரிய ரகலல்குல் மாதர் உரைசான்ற மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று கல்நவில் தோளாயோ வென்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக்கொண்டு 15 பொன்னங் கொடிபோலப் போதந்தாள் மன்னி மணல்மலிபூங் கானல் வருகலன்கள் நோக்கிக் கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள் இணையாய மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று வீழ்த்தேற்றுக்கொண்டெடுத்தவேற் கண்ணாள்வேற்றொருவன் 20 நீள்நோக்கங் கண்டு நிறைமதி வாள்முகத்தைத் தானோர் குரக்குமுக மாகென்று போன கொழுநன் வரவே குரக்குமுக நீத்த பழுமணி அல்குற்பூம் பாவை விழுமிய பெண்ணறி வென்பதும் பேதைமைத்தே என்றுரைத்த 25 நுண்ணறிவு னோர்நோக்கம் நோக்காதேஎண்ணிலேன் வண்டல் அயர்விடத் தியானோர் மகட்பெற்றால் ஒண்டொடி நீயோர் மகற்பெறிற் கொண்ட கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம் கெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால் 30 சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத் தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தியோர் கோடிக் கலிங்கம் உடுத்துக் குழல்கட்டி நீடித் தலையை வணங்கித் தலைசுமந்த ஆடகப்பூம் பாவை அவள்போல்வார் நீடிய 35 மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென் பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும் 40 வானக் கடவுளரும் மாதவருங் கேட்டீமின் யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று இடமுலை கையால் திருகி மதுரை வலமுறை மும்முறை வாரா அலமந்து 45 மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து விட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப் பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி 50 மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள் பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர் ஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்னப் பார்ப்பா ரறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர் மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் 55 தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே நற்றேரான் கூடல் நகர். வெண்பா பொற்பு வழுதியுந்தன் பூவையரும் மாளிகையும் விற்பொலியுஞ் சேனையுமா வேழமுங் ? கற்புண்ணத் தீத்தர வெங்கூடற் றெய்வக் கடவுளரும் மாத்துவத் தான்மறைந்தார் மற்று. உரை 1-4. கோ வேந்தன் தேவி - பேரரசனாய பாண்டியன் பெருந் தேவியே, கொடுவினையாட்டியேன் யாவும் தெரியா இயல்பி னேன் ஆயினும் - கணவனை இழந்த தீவினையுடையேனாகிய யான் ஒன்றுமறியாத தன்மையேன் ஆயினும், முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் காண்குறூ உம் பெற்றிய காண் - பிறனுக்கு முற்பகலில் கேடு செய்தானொருவன் தன் கேட்டினை அன்றைப் பிற்பகலே காணலுறுந் தன்மையையுடையன வினைகள்; கோ வேந்தன் - மன்னர் மன்னன் என்றுமாம்; 1"மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன் தென்னவன்" என்றார் முன்னும். கோவேந்தன் தேவி: விளி. பிறனுக்குக் கேடு செய்தானொருவனுக்குச் செய்த அன்றே கேடு எய்தும் என்பது தோன்ற, முற்பகல் கேடு செய்தான் பிற்பகல் கேடு காண்குறூஉம் என்றாள் ; முற்பகல் பிற்பகல் என்பன ஒரு பகலின் முற்கூறும் பிற்கூறுமாம். 2"பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா, பிற்பகற் றாமே வரும்" என்றார் வள்ளுவரும். பிறன்கேடு - பிறனுக்குக் கேடு ; நான்கனுருபு தொக்கது. தன்கேடு என்பதற்குத் தான் பிறனுக்குச் செய் அக்கேடு என்று பொருள் கூறி, அதுவே தனக்கு வருதலைக் காண்பான் என்றுரைத்தலுமாம். பெற்றிய என்பதற்கு வினைகள் என எழுவாய் வருவிக்க, காண், அசை. இனி, கண்ணகி தான் பிறந்த பதிப்பெருமை கூறுகின்றாள்: 4 - 6 நற்பகலே வன்னிமரமும் மடைப்பளியுஞ் சான்று ஆக முன்னிறுத்திக் காட்டிய மொய் குழலாள் - நல்ல பகற்காலத்து வன்னி மரமும் மடைப்பள்ளியும் தனக்குக் கரி உரைக்கும் பொருளாகப் பலரும் அறிய அவற்றை அவரெதிரில் நிறுத்திக் காட்டிய மொய்த்த கூந்தலையுடையாளும் ; நற்பகல் - விளக்கமமைந்த பகல். சோணாட்டின் ஓர் பட்டினத் திலிருந்து மதுரைக்கு வழிக்கொண்டு சென்ற வணிகனொருவனும், அவன் மாமன் மகளாகிய கன்னியும் திருப்புறம்பயத்தில் வந்து இரவு தங்கிய பொழுது வணிகன் அரவு தீண்டி இறந்தமையின் அக் கன்னி புலம்பி அழுதலை அப் பதிக்கண் எழுந்தருளியிருந்த திருஞானசம்பந்தப்பிரான் கேட்டு இரங்கித் தமது அருணோக் கத்தால் அவனை உயிர்ப்பித்து, அங்கிருந்த வன்னிமரம் கிணறு சிவலிங்கம் என்னும் மூன்றனையும் சான்றாக வைத்து அவர்கள் மணம் பொருந்தும்படி செய்தனரெனவும், அம் மாது மதுரையிலே மாற்றாளால் இகழப் பட்டபொழுது அவள் வேண்டியபடி அம் மூன்றும் அங்கே தோன்றிச் சான்றாயின எனவும் இரண்டு திருவிளையாடற் புராணத்தும் கூறப்பட்டுளது. வைப்பூரிலுள்ள தாமன் என்னும் வணிகன் மகளிர் எழுவரில் இளையவளாகிய கன்னியும், அவள் அத்தை மகனும் வழிக்கொண்டு வந்து திருமருகல் என்னும் பதியில் தங்கியகாலை அவன் அரவு கடித் திறந்தமைக்காற்றாது அக் கன்னி புலம்பியழுததனை அப் பதிக்கண் எழுந்தருளியிருந்த திருஞானசம்பந்தப் பெருமான் கேட்டு நிகழ்ந்தவற்றையு ணர்ந்து, "சடையா யெனுமால்" என்னும் பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்து, அவர்கள் மணஞ் செய்து கொள்ளும்படி கட்டளையிட்டனரென்பது திருத்தொண்டர் புராணத்தால் அறியப்படுகின்றது. சான்று வைத்தது முதலியன இதில் கூறப்படவில்லை ; மற்றும் இரண்டிலும் வேறுபாடுகள் உள்ளன ; திருப்புறம்பய நிகழ்ச்சியிலேயே சான்று வைத்தமை கூறப்படுதலாலும், சான்றாவனவற்றுள் வன்னிமரம் ஒன்றாதலாலும் ஈண்டுக் கூறிய "வன்னிமரமும் மடைப்பளியும் சான்றாக" என்பதனோடு ஒற்றுமையுறுகின்றது. ஆயின் பெரிய புராணத்தில் திருப்புறம்பய நிகழ்ச்சி கூறப்படாமையானும், சிலப்பதிகாரம் சம்பந்தர் காலத்திற்குச் சில நூற்றாண்டுகளின் முன்பு தோன்றியதாகலானும் சம்பந்தப் பிள்ளையார் திருமருகலில் விடந்தீர்த்த நிகழ்ச்சியை வடமொழியிற் புராணம் வகுத்தோர் திருப்புறம் பயத்தில் அதற்கு முன்னிகழ்ந்ததொரு வரலாற்றுடன் பொருத்திவிட்டனர் போலுமெனக் கருதப்படுகின்றது. வணிகனும் மாதும் ஓரிடத்தில் அடிசிலமைத்துண்டு தங்கியிருந்த பொழுது நிகழ்ந்தமையின் ஆண்டுள்ள கிணறும் சிவலிங்கமும் மடைப்பள்ளி என்பதில் அடங்காநிற்கும் என்க. திருப்புறம்பயத்திலுள்ள சிவபிரான் திருப்பெயர் சாட்சிநாதர் என வழங்குவதும் அறியற்பாலது. 9-10. பொன்னிக் கரையின் மணற்பாவை நின் கணவன் ஆமென்று உரைசெய்த மாதரொடும் போகாள் - கரையினையுடைய காவிரிக்கண் ஒருத்தி தான் விளையாடற்கமைத்த மணற்பாவையினை, இப் பாவை நினக்குக் கணவனாகும் என்று கூறிய அவளோடும் ஆடப் போந்த ஏனை மகளிரோடும் வீடு செல்லாளாய்,திரை வந்து அழியாது சூழ் போக ஆங்கு உந்தி நின்ற வரியார் அகல் அல்குல் மாதர் - அலைகள் நெருங்கி அப் பாவையினை அழியாதே சுற்றிப் போதலான் ஆற்றிடைக்குறையாகிய விடத்தில் நின்ற வரி பொருந்திய அகன்ற அல்குலையுடைய ஓர் நங்கையும் ; கரையின் பொன்னி என மாறுக. மேல், திரை அழியாது சூழ் போக அம் மாதர் உந்தி நின்றமைபெறப்படலான் மணற்பாவை வைத்தாடிய இடம் பொன்னிக்கரை அன்று என்க. சூழ்போக என்பதற்குச் சுற்றிப் போகும் வண்ணம் எனவும், ஆங்குந்தி நின்ற என்பதற்கு ஆற்றின் நடுவு குறையாம்படி நின்ற எனவும் உரைத்தலுமாம். உந்தி - ஆற்றிடைக்குறை. போகாள் நின்ற என்க. 10-15. உரை சான்ற மன்னன் கரிகால் வளவன் மகள் - புகழ் மிக்க அரசனாகிய கரிகால் வளவனுடைய மகளாகிய ஆதிமந்தி, வஞ்சிக்கோன் தன்னைப் புனல் கொள்ள - தான் காதலித்த வஞ்சி நகரத் தலைவனாய ஆட்டனத்தி யென்பவனைக் காவிரி நீர் அடித்துச் செல்லலான், தான் புனலின் பின் சென்று கல் நவில் தோளாயோ என்ன - அவ் ஆதிமந்தி தான் காவிரி நீர் செல்லும் வழியே சென்று கடற் கரையில் நின்று கல்லினையொத்த தோள்களை யுடையாய் நீ யாண்டுள்ளாய் என்று அரற்ற, கடல் வந்து முன்னிறுத்திக் காட்ட - கடல் அவனைக் கொடுவந்து அவள் முன்னிலைப்படுத்திக் காட்டலான், அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள் - அக் காதலனைத் தழுவிக்கொண்டு பொற்கொடி போல வந்தாளும் ; சோழ அரசருட் சிறந்தோனாகாலன் உரை சான்ற மன்னன் என்றாள். வளவன் மகள் - ஆதிமந்தியார் ; புலமை வாய்ந்தோர். வஞ்சிக்கோன் - சேர மன்னனாகிய ஆட்டன் அத்தியென்போன் ; ஆடுதல் வன்மையால் ஆட்டன் என்பது பெயராயிற்றுப் போலும். ஆதிமந்தியார் கழார் என்னும் பதியைச் சார்ந்த காவிரித்துறையில் காதலனாகிய ஆட்டனத்தியுடன் நீர் விழாக் கொண்டாடிய பொழுது, அவனைக் காவிரி வெள்ளம் கவர்ந்து கொள்ள, இவர் அவனைக் காணாது நீரின் பின்னே சென்று கடற்கரையில் கூவி அரற்றினாராக, இவரது கற்பின் மாண்பினால் கடல் அவனைக் கரைக்கு அணிமையிற் கொணர்ந்து நிறுத்திக் காட்ட, இவர் அவனைத் தழுவிக் கொண்டு மீண்டார் என்பது வரலாறு; கடல் கொணர்ந்து நிறுத்திய காதலனை அங்கே நீராடிய மருதி யென்பவள் இவர்பாற் சேர்த்துப் புகழ்பெற்றன ளென்பதோர் செய்தியும் அறியப்படுகின்றது. இவற்றை, 1"ஒலிகதிர்க் கழனிக் கழாஅர் முன்றுறைக் கலிகொள் சுற்றமொடு கரிகால் காணத், தண்பதங் கொண்டு தவிர்ந்த வின்னிசை, ஒண்பொறிப் புனைகழல் சேவடிப் புரளக், கருங்கச்சு யாத்த காண்பினவ்வயிற், றரும்பொலம் பாண்டியன் மணியொடு தெளிப்பப், புன்யந் தாடும் அத்தியணி நயந்து, காவிரி கொண்டொளித் தாங்கு" 2"மந்தி, பனிவார் கண்ணள் பலபுலந் துறையக், கடுந்திற லத்தி யாடணி நசைஇ, நெடுநீர்க் காவிரி கொண்டொளித் தாங்கு" 3"கழாஅர்ப் பெருந்துறை விழவி னாடும், ஈட்டெழிற் பொலிந்த வேந்துகுவவு மொய்ம்பின், ஆட்ட னத்தி நலனயந் துரைஇத், தாழிருங் கதுப்பிற் காவிரி வவ்வலின், மாதிரந் துழைஇ மதிமருண் டலந்த, ஆதி மந்தி காதலற் காட்டிப், படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின், மருதி யன்ன மாண்புகழ் பெறீஇயர்" என்பன முதலிய வற்றானறிக. 15-17. மன்னி மணல் மலி பூங் கானல் வரு கலன்கள் நோக்கி - மணல் நிறைந்த பொலிவு பெற்ற கடற்கரைச் சோலையிடத்தே தங்கிக் கடலினின்றும் கரைக்கு வரும் மரக்கலங்களை நோக்கி இருந்து, கணவன் வரக் கல்லுருவம் நீத்தாள் தன் கணவன் கலத்தினின்றும் வந்த அளவில் தன் கல் வடிவத்தினை ஒழித்தாளும்; பூங்கானல் மன்னி என்க. கானல் - கடற்கரைச் சோலை. கடல் கடந்து பொருளீட்டற் பொருட்டுப் போயின தன் கணவன் வரும் வரை ஒருத்தி கல்வடிவா யிருந்தனள் என்க. 17-19. இணையாய மாற்றாள் குழவி விழத் தன் குழவியும் கிணற்று வீழ்த்து ஏற்றுக் கொண்டு எடுத்த வேற் கண்ணாள் - தன்னோடொத்த மாற்றாளுடைய குழவி கிணற்றின்கண் வீழ்ந்ததனால் அது குறித்து உலகோர் தன்மீது பழி சுமத்தாமைப் பொருட்டுத் தன்னுடைய குழவியையும் கிணற்றின்கண் தள்ளி அவ்விரு குழந்தை களையும் அக் கிணற்றினின்றும் எடுத்த வேல் போலுங் கண்களையுடையாளும் ; மாற்றாள் - தன் கணவனுக்கு வாய்த்த மற்றொரு மனைவி; கற்பின் பெருமையால் இரு குழவியையும் ஊறின்றி யெடுத்தாளென்க. 19-23. வேற்றொருவன் நீள் நோக்கங் கண்டு - அயலானொருவன் தன்னைத் தொடர்ந்து பார்க்கும் பார்வையினை அறிந்து, நிறைமதி வாண் முகத்தைத் தான் ஓர் குரக்கு முகம் ஆகென்று - தனது கலை நிறைந்த திங்கள்போலும் ஒள்ளிய முகத்தினை ஓர் குரங்கின் முகமாகக் கடவதென்று அங்ஙனமாக்கியிருந்து, போன கொழுநன் வரவே குரக்கு முகம் நீத்த பழுமணி அல்குற் பூம் பாவை - வெளியே சென்றிருந்த தன் கணவன் வந்தவளவிலே அக் குரங்கின் முகத்தினை ஒழித்த சிவந்த மணிகள் பதித்த மேகலை அணிந்த அல்குலினையுடைய பொலிவுற்ற பாவைபோல்வாளும் ; நீள்நோக்கம் - விடாமற் பார்த்தல். பழுமணி - பழுத்த மணி; சிவந்த மணி. 23-34. விழுமிய பெண்ணறிவு என்பது பேதைமைத்தே என்று உரைத்த நுண்ணறிவினோர் நோக்கம் நோக்காதே - மகளிர் அறிவெனப்படுவது அறியாமையை உடைத்து என்று கூறிய சிறந்த நுண்ணிய அறிவினையுடைய மேலோரது கருத்தினை உணராதே, எண்ணிலேன் வண்டல் அயர்விடத்து - ஆராய்ச்சிஇல்லாத யான் இளமையில் வண்டலாட்டினைச் செய்யுமிடத்து என் தோழியை நோக்கி, யான் ஓர் மகள் பெற்றால், ஒண்டொடி நீ ஓர் மகன் பெறில் - ஒள்ளிய தொடியினைஉடையாய் நீ ஓர் மகனைப் பெற்றால் யான் ஓர் மகளைப் பெற்றால், கொண்ட கொழுநன் அவளுக்கு என்று யான் உரைத்த மாற்றம் - அம் மகளுக்கு நின்மகன் கணவனாவான் என்று விளையாட்டாக யான் கூறிய மொழியினை, கெழுமியவள் உரைப்பக் கேட்ட விழுமத்தால் - எனக்குத் தோழியாகப் பொருந்திய அப் பிள்ளையின் தாய் உண்மையாகக் கொண்டு கூற அதனைக் கேட்ட துன்பத்தானே, சிந்தை நோய் கூரும் திருவிலேற்கு - திருவில்லா எனக்கு உள்ளம் இடர்மிகும், என்று எடுத்துத் தந்தைக்குத் தாய் உரைப்பக் கேட்டாளாய் - என்று முன்னர் நிகழ்ந்ததனைத் தன் தந்தைக்குத் தாய் எடுத்துக் கூற அதனைக் கேட்டனளாய், முந்தி ஓர் கோடிக் கலிங்கம் உடுத்து - முற்பட்டு ஓர் புதுப் புடைவையை உடுத்து, குழல் கட்டி - கூந்தலை வாரி முடித்து, நீடித் தலையை வணங்கி - நெடிதாகத் தலையை வணங்கி, தலை சுமந்த ஆடகப் பூம்பாவை அவள் போல்வார் - தன் தாய் இளமையிற் குறித்த கொழுநனைத் தலைக்கண் சுமந்த பொலிவு பெற்ற பொற்பாவையும், மற்றும் அவர் போன்றவருமாகிய, நீடிய மட்டு ஆர் குழலார் பிறந்த பதிப் பிறந்தேன் - நீண்ட தேனிறைந்த கூந்தலையுடைய கற்புடை மகளிர் பிறந்த புகார் நகரத்தின்கண் தோன்றினேன்; விழுமிய நுண்ணறிவினோர் எனக் கூட்டுக. "நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும், பெண்ணறி வென்பது பெரும்பே தைமைத்தே" என வருவ தூஉங் காண்க. வண்டல் - சிறுமியர் மணலிற் சிற்றிலமைத்தல் முதலிய விளையாட்டு. யான் உரைத்த மாற்றம் - யான் விளையாட்டாகக் கூறிய உரை. கெழுமியவள் - தோழியாகப் பொருந்தியவள். கூறும், முற்று. முந்தி - கொடுப்பாரும் அடுப்பாருமின்றித்,தானே முற்பட்டு எனலுமாம். நீடிய குழல் என்க. பாவையாகிய அவளும் போல்வாருமாகிய குழலார் என்க. கூறியவாறே அவளுக்கு மகனும் எனக்கு மகளும் பிறந்த பின் அவளுரைப்ப என விரித்துரைக்க. ஈண்டுக் கூறிய கற்புடைமகளிர் எழுவர் வரலாறும் பட்டினத்துப் பிள்ளையார் புராணத்தின் பூம்புகார்ச் சருக்கத்திலுள்ள பின்வருஞ் செய்யுட்களிற் கூறப்பட்டிருத்தல் காண்க : கரிகாலன் பெருவளவன் மகள்கேள்வன் கடல்புக்கான் திருவேயோ எனவழைத்துத் திரைக்கரத்தால் தரக்கொண்டாள் வரைகேள்வன் கலநோக்கி வருமளவுங் கல்லானாள் புரைதீரப் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே. 1 வன்னிமடைப் பளியோடு சான்றாக வரவழைத்தாள் பன்னியகா விரிமணல்வாய்ப் பாவையை நுன் கேள்வனெனும் கன்னியர்க ளொடும்போகாள் திரைகரையா வகைகாத்தாள் பொன்னனையாள் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே. 2 கூவலிற்போய் மாற்றாள் குழவிவிழத் தன்குழவி ஆவலின்வீழ்த் தேற்றெடுத்தாள் அயனோக்கம் வேறென்று மேவினாள் குரக்குமுகம் வீடுடையோன் வரவிடுத்தாள் பூவின்மேற் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே. 3 முற்றாத முலையிருவர் முத்துவண்ட லயர்விடத்துப் பெற்றாற்றா மாண்பெண் பிறர்மணஞ்செய் யாவண்ணம் சொற்றார்கள் பிறந்தபெண் ணாயகனைத் தலைசுமந்தாள் பொற்றாலி பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே. 4 35-38. பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில் - அங்ஙனம் அப் பதியிற் றோன்றிய யானும் ஓர் கற்புடை மகள் என்பது உண்மை யாயின், ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் - நீ இனிதிருக்க ஒருப்படேன் மன்னனோடு மதுரை நகரினையும் அழிப்பேன், என் பட்டிமையும் காண்குறுவாய் நீ என்னா விட்டு அகலா - என் படிற்றினையும் நீ இப்பொழுதே காண்பாயாகவென்று கூறிக் கோயிலை விட்டு நீங்கி; பட்டாங்கு - உண்மை ; பட்டாங்கு ஆமாகில் எனக் கூட்டுக. பட்டிமை - வஞ்சத் தன்மை; மீச்செலவுமாம். பெருந்தேவி கணவனொடு வீழ்ந் திறந்ததனை நோக்காதே இங்ஙனங் கூறினாள் என்க. 39-40. நான் மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் வானக் கடவுளரும் மாதவரும் கேட்டீமின் - மதுரை நகரத்துள்ள பெண்டிரும் ஆடவரும் தேவர்களும் மிக்க தவமுடைய முனிவர்களும் யான் கூறுவதனைக் கேண்மின் ; நான்கு மாடங்கள் கூடினமையால் மதுரை நான் மாடக் கூடலாயிற்று. நான்கு மாடங்களாவன : திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர். வானக் கடவுளர் என்பதற்குச் சுடரொடு திரிதரும் தேவ முனிவர்கள் எனக் கூறலும் அமையும். கேட்டீமின் :வினைத்திரிசொல். 41-46. யான் அமர் காதலன் தன்னைத் தவறு இழைத்த - யான் விரும்பிய என் காதலனைக் கொலை செய்த, கோ நகர் சீறினேன் குற்றமிலேன் யான் என்று - மன்னனது நகரத்தினை வெகுண்டேன் அச் சீற்றத்தால் யான் குற்றமுடையே னல்லேன் என்று கூறி, இட முலை கையால் திருகி - இடப் பக்கத்து முலையினை வலக்கையால் திருகி, மதுரை வலமுறை மும்முறை வாரா அலமந்து - மதுரை நகரத்தினை வலமாக மூன்று முறை வந்து மயங்கி, மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள் - விளங்கிய அணி யினையுடையாள் தன் அழகிய அம் முலையினைச் சூளுற்றுத் தேன் நிறைந்த மறுகின்கண் விட்டெறிந்தாள் ; தவறு - கொலை. கோ நகர் - அரசன் தலைநகர். அலமந்து - சுழன்று, மயங்கி. வட்டித்தல் - பிரதிக்கினை செய்தல்; சுழற்றுதல் எனலுமாம். விட்டாள் ; முற்றெச்சம். விளங்கிழையாள் குற்ற மிலேன் யானென்று திருகி வாரா அலமந்து வட்டித்து எறிந்தாள் என்க. 46-52. வட்டித்த நீல நிறத்துத் திரி செக்கர் வார் சடை - அங்ஙனம் அவள் எறிந்த அளவிலே எழுதினாலொத்த நீல நிறத்தினையும் புரிந்த செந்நிறமுடைய நீண்ட சடையினையும், பால் புரை வெளிஎயிற்றுப் பார்ப்பனக் கோலத்து - பாலை ஒத்த வெளிளிய எயிற்றினையும் உடைய பார்ப்பன வடிவத்தோடு, மாலை எரி அங்கி வானவன் தான் தோன்றி - ஒழுங்குபட்ட யாவற்றையும் எரித்தலையுடைய தீக்கடவுள் வெளிப்பட்டு, மா பத்தினி நின்னை மாணப் பிழைத்த நாள் - சிறந்த கற்புடையாய் இந்நகர் நினக்கு மிகவும் தவறிழைத்த அந்நாளே, பாய் எரி இந்தப் பதியூட்டப் பண்டே ஓர் ஏவல் உடையேனால் - இந்நகரினைப் பரந்த எரிக்கு ஊட்டுவதற்கு முன்னரே யான் ஓர் ஏவல் பெற்றுளேன், யார் பிழைப்பார் ஈங்கு என்ன - இவ்விடத்துப் பிழைத்தற்குரியோர் யாரென்று கண்ணகியைக் கேட்க; வட்டித்த - சூளுற்றதனால் வந்த என வுரைத்தலுமாம். மாண - மிக; 1"ஞாலத்தின் மாணப் பெரிது" என்புழி மாணவென்பது அப் பொருட்டாதல் காண்க. மாண - திண்ணிதாக என்பர் அரும்பத வுரையாசிரியர். நிறத்தினையும் சடையினையும் எயிற்றினையும் கோலத்தினையும் உடைய வானவன் என்க. பாய் எரி - பரந்த எரி. ஆல்: அசை. வானவன் தோன்றி என்ன என்க. 53-57. பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர் மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டு - அந்தணரும் அறவோரும் ஆவும் கற்புடை மகளிரும் முதியோரும் குழந்தைகளும் எனப்படும் இவர்களை ஒழித்து, தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று - தீய தன்மையுடையாரிடத்தே சென்று அழிப்பா யாகவென்று, காய்த்திய பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே நல் தேரான் கூடல் நகர் - கண்ணகி ஏவலான் அத் தீயோரைச் சுடுதற் பொருட்டு நல்ல தேரினையுடைய பாண்டியன் கூடல் நகரிடத்துப் புகையொடு கூடிய தீ முடுகிற்று என்க. சேர்கென்று பொற்றொடி ஏவ எனவும், காய்த்திய புகையழல் மண்டிற்று எனவும் கூட்டுக ; காய்த்திய, செய்யிய வென்னும் வினையெச்சம். "பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப் பெண்டிர், மூத்தோர் குழவி எனுமிவரை" என்பது திணை விராய் உயர்திணை முடிபு பெற்றது. இறுதி வெண்பா, இளம்புலவர் யாராலோ எழுதிச் சேர்க்கப்பட்டது; பொருட் சிறப்பில்லாதது. கோவேந்தன் றேவி இயல்பினேனாயினும் பெற்றிய காண்; மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் ; ஆமாகில் ஒட்டேன் ; ஒழிப்பேன் ; காண்குறுவாய் என்னா அகலாத் திருகி எறிந்தாள் ; வானவன் தோன்றி யார் பிழைப்பார் ஈங்கென்ன, கைவிட்டுச் சேர்கென்று பொற்றொடி ஏவ. நகர் அழல் மண்டிற்று என வினை முடிக்க. வஞ்சின மாலை முற்றிற்று. 22. அழற்படு காதை (அரசர் பெருமானாகிய நெடுஞ்செழியன் தேவி தன்னுடன் அரசு கட்டிலில் துஞ்சியதை அறியாது ஆசான் முதலாயினார் ஓவியத்திரள் போல் உரை அவிந்திருந்தனர்; காழோர் முதலாயினார் கோயில் வாயிலில் வந்து நெருங்கினர்; நால் வகை வருணப் பூதங்களாகிய தெய்வங்களும் அந் நகரை விட்டு நீங்கின; அறவோர்கள் உள்ள இடங்களை விடுத்து, மறவோர் சேரிகளில் எரி மண்டியது; அந்தி விழவும் ஆரண வோதையும் முதலியவை நீங்கின; நகரின் கண் காதலனை இழந்த துன்பத்துடன் உள்ளம் கொதித்து வீரபத்தினி மறுகு முதலியவற்றிற் சுழன்று திரிந்தனள்; அப்பொழுது அவள்முன் எரியின் வெம்மையைப் பொறாத மதுராபதி யென்னும் தெய்வம் வந்து தோன்றினள். (வருணப் பூதர் நால்வருடைய இயல்புகளும் இதன்கண் கூறப்பட்டுள்ளன.) ஏவல் தெய்வத் தெரிமுகம் திறந்தது காவல் தெய்வங் கடைமுகம் அடைத்தன அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன் வளைகோல் இழுக்கத் துயிராணி கொடுத்தாங்கு 5 இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர் காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு 10 கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும் ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக் காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர் வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து கோமகன் கோயிற் கொற்ற வாயில் 15 தீமுகங் கண்டு தாமிடை கொள்ள நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளித் (தண்கதிர் மதியத் தன்ன மேனியன் ஒண்கதிர் நித்திலம் பூணொடு புனைந்து வெண்ணிறத் தாமரை அறுகை நந்தியென்று 20 இன்னவை முடித்த நன்னிறச் சென்னியன் நுரையென விரிந்த நுண்பூங் கலிங்கம் புலரா துடுத்த உடையினன் மலரா வட்டிகை இளம்பொரி வன்னிகைச் சந்தனம் கொட்டமோ டரைத்துக் கொண்ட மார்பினன் 25 தேனும் பாலும் கட்டியும் பெட்பச் சேர்வன பெறூஉந் தீம்புகை மடையினன் தீர்த்தக் கரையும் தேவர் கோட்டமும் ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று பிற்பகற் பொழுதிற் பேணினன் ஊர்வோன் 30 நன்பகல் வரவடி யூன்றிய காலினன் விரிகுடை தண்டே குண்டிகை காட்டம் பிரியாத் தருப்பை பிடித்த கையினன் நாவினும் மார்பினும் நவின்ற நூலினன்) மூத்தீ வாழ்க்கைமுறைமையின் வழாஅ 35 வேத முதல்வன் வேள்விக் கருவியோடு ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும் (வென்றி வெங்கதிர் புரையும் மேனியன் குன்றா மணிபுனை பூணினன் பூணொடு முடிமுதற் கலன்கள் பூண்டனன் முடியொடு 40 சண்பகம் கருவிளை செங்கூ தாளம் தண்கமழ் பூநீர்ச் சாதியோடு இனையவை கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும் ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன் அங்குலி கையறிந்து அஞ்சுமகன் விரித்த 45 குங்கும வருணங் கொண்ட மார்பினன் பொங்கொளி யரத்தப் பூம்பட் டுடையினன் முகிழ்த்தகைச் சாலி அயினி பொற்கலத் தேந்தி ஏலு நற்சுவை இயல்புளிக் கொணர்ந்து 50 வெம்மையிற் கொள்ளும் மடையினன் செம்மையில்) பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன் ஆழ்கடல் ஞால மாள்வோன் தன்னின் முரைசொடு வெண்குடை கவரி நெடுங்கொடி உரைசா லங்குசம் வடிவேல் வடிகயிறு 55 எனவிவை பிடித்த கையின னாகி எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி மண்ணகம் கொண்டு செங்கோ லோச்சிக் கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு நடும்புகழ் வளர்த்து நானிலம் புரக்கும் 60 உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன அரைச பூதத்து அருந்திறற் கடவுளும் செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன் மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர் அரைசுமுடி யொழிய அமைத்த பூணினன் 65 வாணிக மரபின் நீள்நிலம் ஓம்பி நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் (உரைசால் பொன்னிறங் கொண்ட இடையினன் வெட்சி தாழை கட்கமழ் ஆம்பல் சேட னெய்தல் பூளை மருதம் 70 கூட முடித்த சென்னியன் நீடொளிப் பொன்னென விரிந்த நன்னிறச் சாந்தம் தன்னொடும் புனைந்த மின்னிற மார்பினன் கொள்ளும் பயறும் துவரையும் உழுந்தும் நன்னியம் பலவும் நயந்துடன் அளைஇக் 75 கொள்ளெனக் கொள்ளு மடையினன் புடைதரு நெல்லுடைக் களனே புள்ளுடைக் கழனி வாணிகப் பீடிகை நீள்நிழற் காஞ்சிப் பாணிகைக் கொண்டு முற்பகற் பொழுதில் உள்மகிழ்ந் துண்ணு வோனே அவனே 80 நாஞ்சிலம் படையும் வாய்ந்துறை துலாமுஞ் சூழொளித் தாலு மியாழு மேந்தி விளைந்துபத மிகுந்து விருந்துபதம் தந்து மலையவும் கடலவு மரும்பம் கொணர்ந்து விலைய வாக வேண்டுநர்க் களித்தாங்கு) 85 உழவுதொழி லுதவும் பழுதில் வாழ்க்கைக் கிழவன் என்போன் கிளரொளிச் சென்னியின் இளம்பிறை சூடிய இறையவன் வடிவினோர் விளங்கொளிப் பூத வியன்பெருங் கடவுளும் (கருவிளை புரையு மேனிய னரியொடு 90 வெள்ளி புனைந்த பூணினன் தெள்ளொளிக் காழகம் செறிந்த உடையினன் காழகில் சாந்து புலர்ந்தகன்ற மார்பினன் ஏந்திய கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும் காட்டிய பூவிற் கலந்த பித்தையன் 95 கம்மியர் செய்வினைக் கலப்பை ஏந்திச் செம்மையின் வரூஉஞ் சிறப்புப் பொருந்தி) மண்ணுறு திருமணி புரையு மேனியன் ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன் ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப் 100 பாடற் கமைந்த பலதுறை போகிக் கலிகெழு கூடற் பலிபெறு பூதத் தலைவ னென்போன் தானுந் தோன்றிக் கோமுறை பிழைத்த நாளி லிந்நகர் தீமுறை உண்பதோர் திறனுண் டென்ப 105 தாமுறையாக அறிந்தன மாதலின் யாமுறை போவ தியல்பன் றோவெனக் கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன் நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயரக் கூல மறுகும் கொடித்தேர் வீதியும் 110 பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் (உரக்குரங்கு உயர்த்த ஒண்சிலை உரவோன்) காவெரி யூட்டிய நாள்போற் கலங்க அறவோர் மருங்கின் அழற்கொடி விடாது மறவோர் சேரி மயங்கெரி மண்டக் 115 கறவையும் கன்றும் கனலெரி சேரா அறவை யாயர் அகன்றெரு அடைந்தன மறவெங் களிறும் மடப்பிடி நிரைகளும் விரைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன சாந்தந் தோய்ந்த ஏந்திள வனமுலை 120 மைத்தடங் கண்ணார் மைந்தர் தம்முடன் செப்புவா யவிழ்ந்த தேம்பொதி நறுவிரை நறுமல ரவிழ்ந்த நாறிரு முச்சித் துறுமலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள் குங்குமம் எழுதிய கொங்கைமுன்றில் 125 பைங்கா ழாரம் பரிந்தன பரந்த தூமென் சேக்கைத் துனிப்பதம் பாராக் காமக் கள்ளாட் டடங்கினர் மயங்கத் திதலை அல்குல் தேங்கமழ் குழலியர் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு 130 பஞ்சியா ரமளியில் துஞ்சுயில் எடுப்பி வால்நரைக் கூந்தல் மகளிரொடு போத வருவிருந் தோம்பி மனையற முட்டாப் பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ் வெய்தி இலங்குபூண் மார்பிற் கணவனை இழந்து 135 சிலம்பின் வென்ற சேயிழை நங்கை கொங்கைப் பூசல் கொடிதோ வன்றெனப் பொங்கெரி வானவன் தொழுதனர் ஏத்தினர் எண்ணான் கிரட்டி இருங்கலை பயின்ற பண்ணியல் மடந்தையர் பயங்கெழு வீதித் 140 தண்ணுமை முழவம் தாழ்தரு தீங்குழல் பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்ப் பாணியொடு நாடக மடந்தைய ராடரங் கிழந்தாங்கு எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோ இந்நாட்டி டிவ்வூர் இறைவனை யிழந்து 145 தேரா மன்னனைச் சிலம்பின் வென்றிவ் வூர்தீ யூட்டிய ஒருமக ளென்ன அந்தி விழவும் ஆரண ஓதையும் செந்தீ வேட்டலுந் தெய்வம் பரவலும் மனைவிளக் குறுத்தலும் மாலை அயர்தலும் 150 வழங்குகுரன் முரசமு மடிந்த மாநகர்க் காதலற் கெடுத்த நோயொ டுளங்கனன்று ஊதுலைக் குருகின் உயிர்த்தன ளுயிர்த்து மறுகிடை மறுகுங் கவலையிற் கவலும் இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் 155 ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன் கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅள் வந்து தோன்றினள் மதுரா பதியென். வெண்பா மாமகளும் நாமகளும் மாமயிடற் செற்றுகந்த கோமகளும் தாம்படைத்த கொற்றத்தாள் ? நாம 160 முதிரா முலைகுறைத்தாள் முன்னரே வந்தாள் மதுரா பதியென்னு மாது. உரை 1-2. ஏவல் தெய்வத்து எரிமுகம் திறந்தது - கண்ணகியின் ஏவல் பெற்ற தீக்கடவுளின் எரியின் கூறு வெளிப்பட்டது, காவல் தெய்வம் கடைமுகம் அடைத்தன - நகர் காக்குந் தெய் வங்கள் கோட்டை வாயில்களைக் காவாதொழிந்தன ; "பண்டேயோர் ஏவலுடையேன்" என வஞ்சின மாலையுள் அங்கி வானவன் கூறுதலின் ஈண்டு ஏவல் என்றது அதனையும் குறிக்கும். காவற்றெய்வம் - இந்திரன், இயமன், வருணன், சோமன் என்னும் நான்கு தெய்வங்களுமாம் ; இதனை, 1"நாற்பெருந் தெய்வத்து நன்னகர்" என்பதற்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையானறிக ; வருணப் பூதங்கள் பின் கூறப்படுதலின் ஈண்டுக் கூறியன அவை அல்லன என்க. வாயிலை யடைத்தனவெனவே தமது காவற்றொழிலை விடுத்துப்போயின வென்பதாயிற்று. 3-7. அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன் - மன்னர் தலைவனாய வெல்லும் போரினையுடைய நெடுஞ்செழியன், வளைகோல் இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து ஆங்கு இரு நில மடந்தைக்குச் செங்கோல் காட்ட - தான் தவறுதலானே வளைந்த கோலைத் தன் உயிராகிய ஆதாரத்தைக் கொடுத்து அப்பொழுதே பெரிய நிலமங்கைக்குத் தனது செங்கோலை உணர்த்துதற் பொருட்டு, புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசுகட்டிலின் துஞ்சியது அறியாது - குற்றந் தீர்ந்த கற் பினையுடைய தன் பெருந்தேவி யுடனே அரியணையில் இறந்த தனை உணராதே; இழுக்கத்து வளை கோல் என்க. இனிக் கோல் வளைதலாகிய இழுக்கத்தையுற்ற வளவிலே என்றுமாம். ஆணி - ஆதாரம்; அச் சாணிபோல்வது ; உரையாணி யென்றுமாம். தான் ஒரு மங்கைக்குச் செய்த பழியினைத் தான் உயிர் விட்டுத் தீர்த்ததனை ஓர் மங்கையிடத்துக் காட்டினான் என்றார். புரைதீர் கற்பு - பிறர் நெஞ்சு புகாமை. 8-11. ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர் காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு - குரவன் கணிவன் அறங்கூறு அவையத்தார் காவிதி மந்திரவோலை எழுதுவார் என்னும் இவரோடு, கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும் - அரண் மனையிலுள்ளாரும் வளை யணிந்த பணிப்பெண்டிரும், ஓவியச் சுற்றத்து உரை அவிந்து இருப்ப - சித்திரத்தொகுதி போன்று உரையாட்டு அடங்கியிருந்த வளவிலே ; ஆசான் - புரோகிதன். பெருங்கணி - தலைமை நிமித்திகன். அறக்களத்தந்தணர் - தன்மாசனத்துக் கருத்தாக்கள் என்ப. பின்னர், 1"அறக்களத் தந்தண ராசான் பெருங்கணி" எனக் கூறுதலும் நோக்கத்தக்கது. காவிதி - வரியிலார் ; அரசிறை வாங்குவோர் ; காவிதி என்பது அரசனாற் கொடுக்கப்படும் ஓர் சிறப்புப் பெயராகலின் அதனைப் பெற்றோரென்க. மந்திரக் கணக்கர் - அமைச்சர் குழுவி னுள் முடியும் முடிபுகளை ஓலையில் எழுதுவார். 12-15. காழோர் வாதுவர் கடுந்தேர் ஊருநர் வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து - பரிக்கோலினராய யானைப்பாகரும் குதிரைப்பாகரும் விரையுந் தேர்ப்பாகரும் வினை வாய்த்த வாள் வீரரும் தம்முட் கலந்து மிக்கு,கோ மகன் கோயில் கொற்ற வாயில் - மன்னனது அரண்மனையின் வெற்றியினை உடைய வாயிலின்கண், தீ முகம் கண்டு தாம் மிடைகொள்ள - எரியின் திறத்தினை நோக்கி வந்து நெருங்க ; காழ் - குத்துக்கோல். வாதுவர் - வாசிவாரியர். பகை மன்னர் பணிந்து திறை கொணர்ந்து காத்திருக்கும் வாயிலாகலின், 'கொற்ற வாயில்' என்றார். நெருப்பவித்தற்கு வந்து மிடைந்தன ரென்க ; தாம் விடைகொள்ள எனப் பாடங்கொண்டு அரசனை உட்கொண்டு இவர்கள் நீங்க எனவும் உரைப்ப. 16-36. நித்திலப் பைம் பூண் நிலாத்திகழ் அவிர் ஒளி - பசுமை யான முத்து வட மணிந்த நிலவுபோல் விளங்கும் மிக்க ஒளியினையுடைய, முத் தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ வேத முதல்வன் வேள்விக் கருவியோடு ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும் - நான்முகன் யாகத்திற்கெனவுரைத்த உறுப்புக்களோடே முத்தீ வாழ்க்கையின் இயல்பினின்றும் பிழையாத தலைமை அமைந்த ஆதிப்பூதமாகிய கடவுளும், ஒளியினையுடைய ஆதிப்பூதம், வேள்விக் கருவியோடு முறைமையின் வழுவா ஆதிப்பூதம் என்க. கருவி - சமிதை முதலாயின. முத்தீ வாழ்க்கை - ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி என்னும் மூன்றெரியையும் பேணும் வாழ்க்கை. "நித்திலப் பைம்பூண்" முதலாகப் 'பூதத்ததிபதிக் கடவுள்' ஈறாகப் பிராமண பூதத்தைக் கூறிற்று" என்பது அரும்பதவுரை. இக்காதையுள் [ ] இக்குறியீட்டினுட்பட்ட பகுதிகள் கந்தியார் போலும் ஒருவரால் பாடி இடைமடுக்கப்பட்டன வாகலின் அவற்றிற்கு உரையெழுதப்படவில்லை. அப் பகுதிகள் சில சுவடிகளிற் காணப்படாமையானும், அரசு பூதங் கூறுமிடத்து - "வென்றி வெங்கதிர் புரையு மேனியன்," "குங்கும வருணங் கொண்ட மார்பினன்" எனவும், வேளாண்பூதங் கூறுமிடத்து - "கருவிளை புரையு மேனியன்," "மண்ணுறு திருமணி புரையு மேனியன்" எனவும், "காழகஞ் செறிந்த வுடையினன்," "காழகஞ் சேர்ந்த வுடையினன்" எனவும் இங்ஙனம் கூறியது கூறலாகவும் வேண்டா கூறலாகவும் பல இருத்த லானும், அரும்பதவுரையாசிரியர் இது முதலாக இஃதீறாக இப்பூதங் கூறிற்றென நான்கு பூதமும் பற்றிக் குறிக்கும் வழி, அரச பூதத்திற்கு முன்னுள்ள பதினான்கு அடிகளை நீக்கிப் 'பவளச் செஞ் சுடர் முதலாக' எனவும், வேளாண் பூதத்திற்கு முன்னுள்ள எட்டு அடிகளை நீக்கி 'மண்ணுறு திருமணி முதலாக' எனவும் குறித் திருத்தலானும், மற்றும் குறியீட்டுக் குட்பட்ட பகுதிகளில் ஒரு சொற்கேனும் அவரெழுதிய பொருள் காணப்படாமையானும் அவை இளங்கோவடிகள் இயற்றியன அல்ல வென்பதும், பின்னுள்ள யாரோ ஒருவரால் இயற்றிப் புகுத்தப்பட்டன ஆகுமென்பதும் நன்கு துணியப்படும். 37-51-61. பவளச் செஞ்சுடர் திகழ் ஒளி மேனியன் - செவ்விய ஒளியினையுடைய பவளம்போலத் திகழ்கின்ற ஒளி பொருந்திய மேனியையுடையோனாய், ஆழ்கடல் ஞாலம் ஆள் வோன் தன்னின் - ஆழ்ந்த கடல் சூழ்ந்த இவ் வுலகினை ஆளும் மன்னனைப் போல, முரைசொடு வெண்குடை கவரி நெடுங் கொடி உரை சால் அங்குசம் வடிவேல் வடி கயிறு என இவை பிடித்த கையினன் ஆகி - முரசமும் வெண் கொற்றக் குடையும் கவரியும் நெடிய கொடியும் புகழமைந்த தோட்டியும் வடித்த வேலும் வடிகயிறும் எனப்படும் இவற்றைக் கொண்ட கையினை யுடையனாய், எண் அருஞ் சிறப்பின் மன்னரை ஓட்டி - அளவிடற்கரிய சிறப்பினையுடைய அரசர்களைப் போரின்கண் தோல்வியுறச் செய்து, மண் அகங் கொண்டு செங்கோல் ஓச்சி - இந் நிலத்தினைத் தனதாகக் கொண்டு செங்கோல் செலுத்தி, கொடுந்தொழில் கடிந்து - கொடிய செயல்களை விலக்கி, கொற்றங் கொண்டு - நீதியினை மேற்கொண்டு, நடும் புகழ் வளர்த்து நால் நிலம் புரக்கும் - தன் பெயரை நிறுத்தற் குரிய புகழினை மிகுந்து உலகினைக் காக்கின்ற, உரை சால் சிறப்பின் நெடி யோன் அன்ன - உரை அமைந்த சிறப்பினையுடைய நெடியோன் என்னும் பாண்டியனை ஒத்த, அரைச பூதத்து அருந்திறற் கடவுளும் - அரிய வலியினையுடைய அரசபூதமாகிய கடவுளும்; வடிகயிறு - புரவியை வசமாக்கும் கயிறு. முரசு குடை முதலியன அரசற்குரியன வென்பது, 1"படையுங் கொடியுங் குடையு முரசும், நடைநவில் புரவியுங் களிறுந் தேரும், தாரு முடியு நேர்வன பிறவும், தெரிவுகொள் செங்கோ லரசர்க் குரிய" என்னுஞ் சூத்தி ரத்து எடுத்தோத்தானும், பிறவு மென்னும் இலேசானும் பெறப்படும். கொடுந்தொழில் என்பதற்குத் தன்கட் கொடிய தொழில் எனவும் குடிகளிடத்துக் கொடிய தொழில் எனவுங் கோடல் அமையும். நடும்புகழ் - அழியாப்புகழ். நெடியோன் - வடிம்பலம்ப நின்ற பாண்டியன்; 2"பொலந்தார் மார்பின் நெடியோன்," 3"முந்நீர் விழவி னெடியோன்" என்பனவும், அவற்றின் உரையும் காண்க. மேனியனாய்க் கையினனாகி நெடியோனையொத்த கடவுளும் என்க. இனி, ஞாலமாள்வோன் என்பதற்கு அருச்சுனன் எனவும் மன்னர் என்பதற்குத் துரியோதனாதியர் எனவும், நெடியோன் என்பதற்குக் கண்ணன் எனவும் அரும்பதவுரையாசிரியர் நலிந்து பொருள் உரைப்பர் "பவளச் செஞ்சுடர்" முதலாக "அருந்திறற் கடவுள்" ஈறாக அரச பூதத்தைக் கூறிற்று" என்பது அரும்பதவுரை. 62-88. செந்நிறப் பசும்பொன் புரையு மேனியன் - சிவந்த நிறமுடைய ஒட்டற்ற பொன்னையொத்த மேனியையுடையோ னாய், மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர் அரைசு முடி ஒழிய அமைந்த பூணினன் - நிலை பெற்ற சிறப்பினையும் மறம் பொருந்திய வேலினையுமுடைய அரசர்க்குரிய தலைமை அமைந்த முடி தவிரப் பூண்ட கலன்களையுடையனாய், வாணிக மரபின் நீள் நிலம் ஓம்பி - வாணிகஞ் செய்யு முறையானே பெரிய உலகினைக் காத்து, நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் - கலப் பையையும் துலாக்கோலையும் ஏந்திய கையினை யுடையனாய், உழவு தொழில் உதவும் பழுது இல் வாழ்க்கைக் கிழவன் என் போன் - உழவுத் தொழிலானே உலகினர்க்கு உதவும் குற்ற மற்ற வாழ்க்கைக்குரியோன் எனப்படுவோனாகிய, கிளர் ஒளிச் சென்னியின் இளம்பிறை சூடிய இறைவன் வடிவின் ஓர் விளங்கு ஒளிப் பூத வியன் பெருங் கடவுளும் - விளங்கும் ஒளி யினையுடைய தலை மீது குழவித் திங்களை அணிந்த இறைவனது வடிவுபோலும் ஒளி மிளிரும் மிகப் பெரிய வணிகப் பூதமாகிய கடவுளும் ; முடியொழிந்தன வணிகர்க்குள வென்பது 1"வில்லும் வேலுங் கழலுங் கண்ணியுந், தாரு மாலையுந் தேரும் வாளும், மன்பெறு மரபி னேனோர்க்கு முரிய" என்பதனானும், அவர்க்கு உழவும் உரித்தென் பது 2"மெய்தெரி வகையி னெண்வகை யுணவின், செய்தியும் வரையா ரப்பா லான" என்பதனானும் பெறப்படும். மேனியனாய்ப் பூணின னாய்க் கையினனாய் வாழ்க்கைக் கிழவனென்போனாகிய பூதக் கடவுளும் என்க. "'செந்நிறப் பசும்பொன்' முதலாக ‘வியன்பெருங் கடவுள்' ஈறாக வணிக பூதத்தைக் கூறிற்று" என்பது அரும்பதவுரை. 97-102. மண்ணுறு திருமணி புரையும் மேனியன் – கழுவப்பட்ட நீல மணிபோலும் மேனியனாய், ஒளி நிறக் காழகம் சேர்ந்த உடையினன் - ஒள்ளிய கருநிறஞ் சேர்ந்த உடையினனாய், ஆடற்கு அமைந்த அவற்றொடு பொருந்தி - உலகினை ஆளுதற்கேற்ற உழுபடை முதலியவற்றுடன் பொருந்தி, பாடற்கு அமைந்த பல துறை போகி - புலவர் பாடுதற்கேற்ற ஈகைத் துறை பலவற்றிலும் முடியச் சென்று, கலி கெழு கூடல் பலிபெறு பூதத் தலைவன் என்போன் தானும் - ஆரவாரம் மிக்க கூடற்கண் பலியினைப் பெறும் பூதத் தலைவனென்னும் வேளாண் பூதமும், தோன்றி - வெளிப்பட்டு ; காழகம் - கருமை, உடை ; இரட்டுற மொழிதலாகக் கொள்க. வேளாண் மாந்தர் உலகினை ஆளுதலாவது தமது உழவுத் தொழிலால் ஏனோரை யெல்லாம் தாங்குதலும், தம்மரசர்க்கு வெற்றியை உண்டாக்குதலுமாம்; 3"உழுவா ருலகத்தார்க் காணியஃதாற்றா, தெழு வாரை யெல்லாம் பொறுத்து," 4"பலகுடை நீழலுந் தங்குடைக் கீழ்க் காண்பர், அலகுடை நீழ லவர்" என்பன காண்க. ஆடுதற்கமைந்த வாச்சியங்கள் எனவும், பாட்டின் துறைகள் எனவும் அரும்பதவுரையாசிரியர் கொண்ட கருத்துக்கள் வேளாண் பூத மாதற்குப் பொருந்துவன அல்ல ; அப் பொருள் அடிகள் கருத்தாயின் கூத்தர் முதலாயினாரை அகப்படுத்திக் கூறினாரெனல் வேண்டும். ‘மண்ணுறு திருமணி' முதலாகப் 'பலிபெறு பூதத்தலைவன்' ஈறாக வேளாண் பூதத்தைக் கூறிற்று" என்பது அரும்பதவுரை. 103-108. கோ முறை பிழைத்த நாளில் இந் நகர் தீமுறை உண்பதோர் திறன் உண்டு என்பது - பாண்டியன் நீதி தவறிய காலத்து இம் மதுரை நகரை எரி முறைமையால் உண்பதாகிய ஓர் செய்கை உண்டு என்பதனை, ஆம் முறையாக அறிந்தனம் ஆதலின் - மேல் வரக்கடவதொரு தன்மையென முன்னரே உணர்ந்தோம் ஆகலான், யாம் முறை போவது இயல்பு அன்றோ என - நாம் இவ் வியல்பானே இவ்விடம் விட்டுப் பெயர்தல் இயற்கையாம் எனக் கூறி, கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன் நால் பால் பூதமும் பால் பால் பெயர - தன் முலையானே வெற்றி கருதிய கண்ணகியின் எதிரே அந்நான்கு பகுதிப்பட்ட பூதங்களும் வெவ்வேறிடங்களிற் செல்ல; மன்னவன் தவறிழைத்தமையான் எரி மண்டிற்று ; ஆகலின் தீமுறை யுண்பது என்றார். திறன் - செய்கை. ஆமுறையாக - ஆவதொரு தகுதியாக எனலுமாம். கொங்கை குறித்த கொற்றம், மதுரையை எரியூட்டியது. 109-112. கூல மறுகும்கொடித் தேர் வீதியும் - கூலம் விற்குங் கடைவீதியும் கொடி கட்டிய தேர் செல்லும் வீதியும், பால் வேறு தெரிந்த நால்வேறு தெருவும் - பகுதி வேற்றுமை, உணரப்பட்ட நான்கு வேறுவகையான தெருக்களும், உரக் குரங்கு உயர்ந்த ஒண்சிலை உரவோன் கா எரி ஊட்டிய நாள்போல் கலங்க - வலிய குரங்கினைக் கொடிக்கண் உயர்த்திய வில் வல்லானாகிய அருச்சுனன் காண்டாவனத்தைத் தீயினுக்கு அளித்த நாளிற்போலக் கலக்கம் அடைய; கூலம் எண்வகைத்து ; அவை - "நெல்லுப் புல்லு வரகு தினை சாமை, இறுங்கு தோரையொடு கழைவிளை நெல்லே" என்பனவாம். இனிப் பதினெண்வகைத் தென்பாரும், பதினாறுவகைத் தென்பாரும் உளர். நால்வேறு தெரு - நால்வகை வருணத்தார் தெரு. எரியூட் டிய நாளில் அவ் வனம் கலக்கமுற்றாற்போல வென்க. அருச்சுனன் காவெரித்ததனைப் பாரதத்துட் காண்க. "உரக்குரங் குயர்த்த வொண்சிலை யுரவோன்" என்னும் அடி இடைச்செருகல் போலும். அதனை நீக்கின் 'காவெரி யுண்ட' என்னும் பாடம் கொள்ளத்தக்கது. மறுகும் வீதியும் தெருவும் கலங்க வென்க. 113-114. அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது - அருள் நிறைந்த சான்றோர் பக்கலில் தீக்கொழுந்தினை விடாதாய், மறவோர் சேரி மயங்கு எரி மண்ட - வன்கண்மை நிறைந்த தீயோரது சேரிக்கண்ணே கண்டார் கலக்கங் கொள்ளுதற்குக் காரணமான நெருப்பு மிக்குச் செல்ல; 1"அறவோர்....இவரைக் கைவிட்டுத், தீத்திறத்தார் பக்கமே சேர்க" என்றதனால், எரி அறவோர் மருங்கின் அணுகாது மறவோர் சேரி மண்டிற்று என்க. 115-16. கறவையும் கன்றும் கனல் எரி சேரா அறவை ஆயர் அகன் தெரு அடைந்தன - ஆக்களும் அவற்றின் கன்றுகளும் கொளுத்துகின்ற தீயின் கட்படாவாய் அறத்தினையுடைய இடையரது அகன்ற தெருக்கண் சேர்ந்தன; 2"ஆகாத் தோம்பி ஆப்பய னளிக்குங், கோவலர் வாழ்க்கை யோர் கொடும்பா டில்லை" ஆகலான், அறவையாயர் என்றார். 117-118. மற வெங்களிறும் மடப்பிடி நிரைகளும் - வலி மிக்க கொடிய ஆண்யானைகளும் இளம் பெண்யானை வரிசைகளும், வினைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன - விரையும் செல வினையுடைய குதிரைகளும் மதிற்புறத்தே சென்றன ; 119-127. வெங்களிறு - மதயானை. பரி - செலவு. சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை மைத் தடங்கண்ணார் மைந்தர் தம்முடன் - சாந்து படிந்த நிமிர்ந்த இளமையும் அழகுமுடைய கொங்கையினையும் மை பூசிய பெரிய கண் களையும் உடைய மகளிர் இளையரோடு, செப்பு வாய் அவிழ்ந்ததேம் பொதி நறுவிரை நறுமலர் அவிழ்ந்த நாறு இரு முச்சித் துறுமலர்ப்பிணையல் சொரிந்த பூந்துகள் - செப்பின்கண் வாய் விரிந்த தேன் மிக்க நன்மணமுடைய அழகிய மலர்கள் விரிந்த மணங் கமழும் கரிய முடியின்கண் செறிந்த மலர் மாலை சிந்திய பூந்தாதும், குங்குமம் எழுதிய கொங்கைமுன்றில் பைங்காழ் ஆரம் பரிந்தன பரந்த தூ மென் சேக்கை - குங்குமம் பூசிய முலை முற்றத்திடத்துப் பசிய முத்து வடமும் செயலற்றுப் பரந்த தூய மெல்லிய படுக்கை யிடத்து, துனிப்பதம் பாராக் காமக் கள் ளாட்டு அடங்கினர் மயங்க - துனியின் செவ்வி நோக்கவேண்டாத காமமாகிய கள்ளுண்டு விளையாடும் விளையாட்டினின்றும் அடங்கினராய்க் கலக்கங் கொள்ளவும்; செப்பு - மலரும் அரும்புகள் வைக்கும் பூஞ்செப்பு. இதனை, 3"முதிரா வேனி லெதிரிய வதிரல், பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர், நறுமோ ரோடமொ டுடனெறிந் தடைச்சிய, செப்பிடந் தன்ன நாற்றந் தொக்கு" என்பதனானறிக. வாயவிழ்தல் - மலர்தல். வாயவிழ்ந்த மலர்ப்பிணையல் நறுவிரை மலர்ப்பிணையல் எனக் கூட்டுக. நறுமலர் அவிழ்தல் முச்சிக்கு அடை. இனி, செப்புவா யவிழ்ந்த நறுவிரை என்பதற்குச் செப்பினது வாய் திறந்து சொரிந்த சாந்து முதலிய வெனலுமாம். காழ் - முத்து வடம். பூந்துகளும் பைங்காழாரமும் பரிந்தன பரந்த சேக்கை என முடிக்க. பரிந்தன - சிந்தினவாய் எனலுமாம். துனிப்பதம் பாராமை - புலவி நீட்டிக்க விட்டிராமை. களிப்பினைச் செய்தலொப்புமையால் காமத்தைக் கள் என்றார். ஈண்டுக் கூறிய இவர் மக்களைப் பெறாதவர். 128-131. திதலை அல்குல் தேங்கமழ் குழலியர் - திதலை பொருந்திய அல்குலினையும் மணங் கமழுங் கூந்தலினையு முடைய மகளிர், குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு - மழலைச் சொல் பொருந்திய செவ்வாயினையும் குறுக நடக்கும் நடையினையும் உடைய புதல்வர்களை, பஞ்சி ஆர் அமளியில் துஞ்சு துயில் எடுப்பி - பஞ்சணை பொருந்திய படுக்கைக்கண் உறங்கும் உறக்கத்தினின்றும் எழுப்பி, வால் நரைக் கூந்தல் மகளிரொடு போத - வெண்மையாக நரைத்த கூந்தலையுடைய முதிய பெண்டிரோடு செல்லவும் ; புதல்வரொடு - புதல்வரை ; உருபு மயக்கம். வால் நரைக் கூந்தல் - மிக நரைத்த கூந்தல் எனலுமாம். குழலியர் புதல்வரைத் துயிலெடுப்பிக் கூந்தல் மகளிரொடு போத என்க. 132-137. வரு விருந்து ஓம்பி மனைஅறம் முட்டாப் பெருமனைக் கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி - தம் இல்லத்து வரும் விருந்தின ரைப் பேணி இல்லற நெறியின் வழுவாத பெரிய மனையறத்திற்குரிய மகளிர் மிக மகிழ்ச்சியுற்று, இலங்கு பூண் மார்பிற் கணவனை இழந்து - விளங்கும் பூணணிந்த மார்பினையுடைய தன் கொழுநனை இழந்து, சிலம்பின் வென்ற சேயிழை நங்கை கொங்கைப் பூசல் கொடிதோ அன்று என - சிலம்பானே பாண்டிய மன்னனை வெற்றி கொண்ட செவ்விய அணிகலங் களையுடைய மங்கை தன் கொங்கையாற் செய்த பூசல் கொடி தன்று எனக் கூறி, பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத் தினர் - மிக்கு எரியும் தீக் கடவுளை வணங்கித் துதித்தனர்; 1"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி, வேளாண்மை செய்தற் பொருட்டு" ஆகலான் வருவிருந்தோம்பி மனையற முட்டாப் பெருமனைக் கிழத்தியர் என்றார். கொடிதன்று - முறையே யென்றபடி. மைத்தடங் கண்ணார் மயங்கக் குழலியர் மகளிரொடு போத மனைக் கிழத்தியர் ஏத்தினர் என்க; ஏத்தினராக வும் என விரித்து எச்சப்படுத்தலுமாம். 138-146. எண்ணான்கு இரட்டி இருங்கலை பயின்ற பண்ணி யல் மடந்தையர் பயங்கெழு வீதி - பரந்த அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத் தேர்ந்த இசையின் இயலறிந்த மகளிரது பயன் மிக்க தெருவின் கண்ணே, தண்ணுமை முழவம் தாழ்தரு தீங்குழல் பண்ணுக் கிளை பயிரும் பண்ணியாழ்ப் பாணியொடு நாடக மடந்தையர் ஆடு அரங்கு இழந்து - நாடக மகளிர் பண்ணின் வகைகளை இசைக்கும் பண்ணுத லமைந்த யாழிசை யோடு மத்தளம் குடமுழா தாழ்ந்த செலவினை யுடைய இனிய குழல் என்பவற்றையும் ஆடும் அரங்கினையும் இழந்து, ஆங்கு எந் நாட்டாள்கொல் யார் மகள்கொல்லோ - எந் நாட்டினளோ யார் புதல்வியோ, இந் நாட்டு இவ்வூர் இறைவனை இழந்து - இந் நாட்டில் இம் மதுரை நகரிடத்துத் தன் கணவனை இழந்து, தேரா மன்னனைச் சிலம்பின் வென்று இவ்வூர் தீ ஊட்டிய ஒரு மகள் என்ன - ஆராய்வு இல்லா அரசனைத் தன் சிலம்பானே வென்று இந் நகரினை எரி யூட்டிய ஒரு மங்கை என்னவும்; கணிகையர்க்கு அறுபத்து நான்கு கலைகளுண் டென்பதனை, 1"எண்ணெண் கலையோர்" என முன்னர் இந் நூலுள்ளும் 2"யாழ் முதலாக அறுபத் தொருநான், கேரிள மகளிர்க் கியற்கை" எனப் பெருங்கதை யுள்ளும் கூறினமையானும் அறிக. பண்ணியல் மடந் தையர் - இசை யறிவார். தாழ்தரு தீங்குழல் - இனிமை தங்கிய குழல் எனினுமமையும். பண்ணுக்கிளை - பண்ணும் திறமுமாம். பயிர்தல்- இசைத்தல். நாடக மடந்தையர், பயங்கெழு வீதியிடத்து யாழ்ப் பாணியொடு தண்ணுமை முதலியவற்றை இழந்து, இறை வனை இழந்து மன்னனை வென்று தீ யூட்டிய ஒரு மகள் எந் நாட்டாள் யார் மகள் என்ன என முடிக்க. முன்னவற்றுடன் கூட்டி என்னவும் என உம்மை விரித்தலுமாம். நாடக மடந்தையர் - தளியிலார் ; கோயிற் பெண்டிர். 147-150. அந்தி விழவும் ஆரண ஓதையும் - மாலைக் காலத் தயரும் சீபலியும் மறை முழக்கமும், செந்தீ வேட்டலும் தெய்வம் பரவலும் - சிவந்த தீயில் ஓமஞ் செய்தலும் கடவுட் பூச னையும், மனை விளக்கு உறுத்தலும் மாலை அயர்தலும் - மாலை யில் மனைக்கண் விளக்கேற்றலும் இல் உறை தெய்வத்தைப் பரவுதலும், வழங்கு குரல் முரசமும் மடிந்த மா நகர்-ஒலிதரும் குரலையுடைய முரசு முழங்குதலும் ஒழிந்த பெரிய நகரத்தில்; அந்தி விழவு - சீபலி ; கோயிலில் நித்தலும் நடைபெறும் விழா. வேட்டல் - ஓமஞ்செய்தல். நாடக மடந்தையர் ஒரு மகள் என்ன அந்தி விழவு முதலிய மடிந்த மா நகர் என்க. 151-157. காதலற் கெடுத்த நோயொடு உளம் கனன்று - தன் கணவனைக் காணப் பெறாத துன்பத்தோடே உள்ளங்கொதித்து, ஊது உலைக் குருகின் உயிர்த்தனள் - கொல்லன் உலைக் களத்து ஊதும் துருத்தி போலச் சுடுமூச்செறிந்தனள், உயிர்த்து மறுகிடை மறுகும் கவலையிற் கவலும் - அங்ஙனம் வெய் துயிர்த்து வீதியிற் சுழன்று திரியும், குறுந்தெருக்களிற் கவலை யுடன், நிற்கும், இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் - பல வழியும் இயங்குதலுஞ் செய்யும், மயங்கி நிற்றலுஞ் செய்யும், ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன் - இங்ஙனம் பொறுத் தற்கரிய துன்பமுற்ற சீறிய கற்புடையாள் முன்னர், கொந்து அழல் வெம்மைக் கூர் எரி பொறாஅள் வந்து தோன்றினள் மதுராபதியென் - திரண்ட அழலாகிய வெம்மை மிக்க எரி யினைப் பொறாளாய் மதுராபதி என்னும் தேவதை வந்து தோன்றினாள் என்க. உள்ளுடல் கொதித்து வெவ்விதாக வரும் பெருமூச்சுக்கு ஊது லைக் குருகின் காற்று உவமம்; 1"ஊதுலைக் குருகி னுயிர்த்தகத் தடங் காது" என்பது காண்க. மறுகிடை மறுகும் கவலையிற் கவலும் என்று கூறியதனையே பின்னர்க் கூறி அங்ஙனஞ் செய்யும் வீரபத் தினிமுன் மதுராபதி தோன்றினள் என்றார். இயங்கும் மயங்கும் என்பன முற்று ; பெயரெச்ச அடுக்காக்கி வீரபத்தினி என்பதுடன் முடித்தலுமாம். இயங்கலு மியங்கும், மயங்கலு மயங்கும் என்பன, 2'சுழலலுஞ் சுழலும்' என்பதுபோல் நின்றன. அரசன் தேவி தன் னுடன் துஞ்சியதறியாது உரை அவிந்திருப்ப, மிடைகொள்ள நாற்பாற் பூதமும் பெயர எரி மண்ட அடைந்தன ; பெயர்ந்தன ; மயங்க, போத, ஏத்தினர்; நாடக மடந்தையர் இழந்து என்ன, மடிந்த மா நகர்க்கண் கனன்று உயிர்த்து மறுகும் ; கவலும்; இயங்கும்; மயங்கும்; அங்ஙனம் அஞருற்ற வீரபத்தினிமுன் மதுராபதி வந்து தோன்றினள் என வினை முடிக்க. வெண்பாவுரை மாமகளு.....................மாது. மாமகளும் இலக்குமியும், நாமகளும் - கலைமகளும்- மாமகளும் மா மயிடன் செற்று உகந்த கோமகளும்தாம் -பெரிய மயிடன் என்னும் அவுணனைக் கொன்று மகிழ்ந்த கொற்றவை யும் ஆகிய மூவரும், படைத்த கொற்றத்தாள்-படைத்த வெற்றியினை யுடையாளும், நாம முதிரா முலை குறைத்தாள் - முன்னரே அச்சத்தைச் செய்யும் இளைய முலையைப் பறித்தாளுமாகிய வீரபத்தினியின் எதிரே, வந்தாள் மதுராபதி என்னும் மாது - மதுராபதி என்னுந் தேவதை வந்து தோன்றினாள். மகிஷன் என்னும் வடசொல் மயிடன் எனத் திரிந்தது; எருமை உருவினன் என்பது பொருள். கொற்றமாவன நல்லோரைக் காத்தலும், அரசனை வழக்கில் வேறலும், தீயோரை அழித்தலும் என முறையே கொள்க. அழற்படு காதை முற்றிற்று. 23. கட்டுரை காதை (கண்ணகிபால் வந்து தோன்றிய மதுராபதி அவளை நோக்கி `யான் மதுரையின் அதி தெய்வம் ; நின் கணவற் குண்டாகிய துன் பத்தால் எய்திய கவற்சியுடையேன் ; இந் நகரத்திருந்த பாண்டி மன்னர்களில் ஒருவரேனும் சிறிதும் கொடுங்கோன்மை யுடையரல்லர்; இந் நெடுஞ் செழியனும் `மறை நாவோசையல்லது யாவதும் மணி நா வோசை கேட்ட' றியாத செங்கோன்மை யுடையனே ; இவ்வாறு நிகழ்ந்ததற்குக் காரணம் ஊழ்வினையே யாகும் ; அதன் வரலாற்றைக் கூறுவேன் கேள் ; முன்பு கலிங்க நாட்டிலுள்ள சிங்கபுரத்தினும் கபிலபுரத்தினு மிருந்த தாய வேந்தராகிய வசு என்பவனும் குமரன் என்பவனும் தம்முள் பகை கொண்டு ஒருவரை யொருவர் வெல்லு தற்கு முயன்றுகொண்டிருந்தனர் ; அதனால் இருவரூர்க்கும் இடைப் பட்ட ஆறு காத எல்லையில் யாரும் இயங்காதிருக்கவும், சங்கமன் என்னும் வணிகன் பொருளீட்டும் வேட்கையால் தன் மனைவியோடு காவிற் சென்று சிங்கபுரத்தின் கடை வீதியில் அரிய கலன்களை விற்றுக்கொண்டிருந்தனன் ; அப்பொழுது அரசனிடத்துத் தொழில் செய்துகொண்டிருந்த பரதன் என்பவன் அவ் வணிகனைப் பகைவனுடைய ஒற்றனென்று பற்றிச் சென்று அரசனுக்குக் காட்டிக் கொன்றுவிட்டனன் ; கொல்லப்பட்ட சங்கமன் மனைவியாகிய நீலி என்பவள் மிக்க துயரத்துடன் முறையிட்டுக்கொண்டு எங்கணும் திரிந்து பதினான்கு நாள் சென்றபின் ஓர் மலையின் உச்சியை அடைந்து கணவனைச் சேர்தற் பொருட்டுத் தன் உயிரைவிடத் துணிந்தவள் `எமக்குத் துன்பஞ் செய்தோர் மறுபிறப்பில் இத் துன்பத்தை யடைவாராக' எனச் சாபமிட்டிறந்தனள் ; அப் பரதன் நின் கோவலனாகப் பிறந்தான் ; ஆதலால் நீங்கள் இத் துன்பத்தை அடைந்தீர்கள் ; நீ இற்றைக்குப் பதினான்காவது நாளில் பகல் சென்றபின் நின் கணவனைக் கண்டு சேர்வாய்' எனச் சொல்லிச் சென்றது சென்றபின், கண்ணகி `கீழ்த்திசைவாயிற் கணவனொடு புகுந்தேன், மேற்றிசைவாயில் வறியேன் பெயர்வேன்' எனக் கையற்று ஏங்கி மதுரையை நீங்கி, வையைக்கரை வழியே மேற்றிசை நோக்கிச் சென்று, மலைநாட்டிலுள்ள திருச்செங்குன் றென் னும் மலை மீதேறி ஒரு வேங்கை மரத்தின்கீழ் நின்று, பதினாலாம் நாட் பகற்பொழுது சென்றபின் அங்கே தெய்வ வடிவுடன் போந்த கோவலனைக் கண்டு அவனுடன் வானவூர்தியிலேறித் தேவர்கள் போற்றத் துறக்கம் அடைந்தனள். (இதில் பாண்டியர்களுடைய நீதியை உணர்த்துதற்குப் பொற்கை வழுதியின் வரலாறும், சேரன் பாற் பரிசில் பெற்றுவந்த சோணாட்டுப் பார்ப்பானாகிய பராசரன் என்பானுக்குத் தங்கால், வயலூர் என்னும் ஊர்களை அளித்த மற்றொரு பாண்டியன் வரலாறும் கூறப்பட்டுள்ளன. மதுரை இன்ன நாளில் எரியுண்ணும் என்பதோர் உரையுண்டென்பதும் கூறப்பட்டுளது.) சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக் குவளை உண்கண் தவளவாள் முகத்தி கடையெயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி 5 இடமருங் கிருண்ட நீல மாயினும் வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள் இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும் வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள் வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால் 10 தனிச்சிலம்பு அரற்றுந் தகைமையள் பனித்துறைக் கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன் பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன் குலமுதற் கிழத்தி ஆதலின் அலமந்து ஒருமுலை குறைத்த திருமா பத்தினி 15 அலமரு திருமுகத் தாயிழை நங்கைதன் முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக் கேட்டிசின் வாழி நங்கையென் குறையென வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்டி யாரைநீ யென்பின் வருவோய் என்னுடை 20 ஆரஞர் எவ்வம் அறிதி யோவென ஆரஞ ரெவ்வ மறிந்தேன் அணியிழாஅய் மாபெருங் கூடல் மதுரா பதியென்பேன் கட்டுரை யாட்டியேன் யானின் கணவற்குப் பட்ட கவற்சியேன் பைந்தொடி கேட்டி 25 பெருந்தகைப் பெண்ணொன்று கேளாயென் நெஞ்சம் வருந்திப் புலம்புறு நோய் தோழிநீ ஈதொன்று கேட்டியென் கோமகற்கு ஊழ்வினை வந்தக் கடை மாதராய் ஈதொன்று கேளுன் கணவற்குத் 30 தீதுற வந்தவினை; காதின் மறைநா வோசை யல்ல தியாவதும் மணிநா வோசை கேட்டது மிலனே அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது குடிபழி தூற்றுங் கோலனு மல்லன் 35 இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர் மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு இடங்கழி நெஞ்சத்து இளமை யானை கல்விப் பாகன் கையகப் படாஅது ஒல்கா உள்ளத் தோடு மாயினும் 40 ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்கந் தாராது இதுவுங் கேட்டி உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள் அரைச வேலி யல்ல தியாவதும் 45 புரைதீர் வேலி இல்லென மொழிந்து மன்றத் திருத்திச் சென்றீ ரவ்வழி இன்றவ் வேலி காவா தோவெனச் செவிச்சூட் டாணியிற் புகையழல் பொத்தி நெஞ்சஞ் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று 50 வச்சிரத் தடக்கை அமரர் கோமான் உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து இறைக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்க மின்மை இன்னுங் கேட்டி நன்வா யாகுதல் 55 பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை அறனறி செங்கோல் மறநெறி நெடுவாள் புறவுநிறை புக்கோன் கறவைமுறை செய்தோன் பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன் 60 தங்கா விளையுள் நன்னா டதனுள் வலவைப் பார்ப்பான் பராசர னென்போன் குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு வண்டமிழ் மறையோர்க்கு வானுறை கொடுத்த திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக் 65 காடும் நாடும் ஊரும் போகி நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர் முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும் 70 அறுதொழில் லந்தணர் பெறுமுறை வகுக்க நாவலங் கொண்டு நண்ணா ரோட்டிப் பார்ப்பன வாகை சூடி ஏற்புற நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன் செங்கோல் தென்னன் திருந்துதொழில் மறையவர் 75 தங்கா லென்ப தூரே அவ்வூர்ப் பாசிலை பொதுளிய போதிமன் றத்துத் தண்டே குண்டிகை வெண்குடை காட்டம் பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை 80 விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி கடற்கடம் பெறிந்த காவலன் வாழி விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி பூந்தண் பொருநைப் பொறையன் வாழி மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கெனக் 85 குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த் தளர்நடை யாயத்துத் தமர்முதல் நீங்கி விளையாடு சிறாஅ ரெல்லாஞ் சூழ்தர குண்டப் பார்ப்பீ ரென்னோ டோதியென் பண்டச் சிறுபொதி கொண்டுபோ மின்னெனச் 90 சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன் பால்நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த் தளர்நா வாயினும் மறைவிளி வழாஅது உளமலி உவகையோ டொப்ப வோதத் 95 தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து முத்தப் பூணூல் அத்தகு புனைகலம் கடகம் தோட்டொடு கையுற ஈத்துத் தன்பதிப் பெயர்ந்தன னாக நன்கலன் புனைபவும் பூண்பவும் பொறாஅ ராகி 100 வார்த்திகன் தன்னைக் காத்தன ரோம்பிக் கோத்தொழி லிளையவர் கோமுறை அன்றிப் படுபொருள் வௌவிய பார்ப்பா னிவனென இடுசிறைக் கோட்டத் திட்டன ராக வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள் 105 அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில் புலந்தனள் புரண்டனள் பொங்கினள் அதுகண்டு மையறு சிறப்பின் ஐயை கோயில் செய்வினைக் கதவந் திறவா தாகலின் திறவா தடைத்த திண்ணிலைக் கதவம் 110 மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கிக் கொடுங்கோ லுண்டுகொல் கொற்றவைக் குற்ற இடும்பை யாவதும் அறிந்தீ மின்னென ஏவ லிளையவர் காவலற் றொழுது வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி யுரைப்ப 115 நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென் இறைமுறை பிழைத்தது பொறுத்தல்நுங் கடனெனத் தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன் மடங்கா விளையுள் வயலூர் நல்கிக் 120 கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள் தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே நிலைகெழு கூடல் நீள்நெடு மறுகின் மலைபுரை மாடம் எங்கணும் கேட்பக் 125 கலையமர் செல்வி கதவந் திறந்தது சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதுங் கறைப்படு மாக்கள் கறைவீ செய்ம்மின் இடுபொரு ளாயினும் படுபொரு ளாயினும் உற்றவர்க் குறுதி பெற்றவர்க் காமென 130 யானை யெருத்தத்து அணிமுரசு இரீஇக் கோன்முறை யறைந்த கொற்ற வேந்தன் தான்முறை பிழைத்த தகுதியுங் கேள்நீ ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று 135 வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண உரைசால் மதுரையோடு அரைசுகே டுறுமெனும் உரையு முண்டே நிரைதொடி யோயே கடிபொழி லுடுத்த கலிங்கநன் னாட்டு வடிவேல் தடக்கை வசுவுங் குமரனும் 140 தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும் காம்பெழு கானக் கபில புரத்தினும் அரைசாள் செல்வத்து நிரைதார் வேந்தர் வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர் தம்முள் பகையுற 145 இருமுக் காவதத் திடைநிலத் தியாங்கணுஞ் செருவல் வென்றியிற் செல்வோ ரின்மையின் அரும்பொருள் வேட்கையிற் பெருங்கலன் சுமந்து கரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்தினோர் 150 அங்கா டிப்பட் டருங்கலன் பகரும் சங்கமன் என்னும் வாணிகன் தன்னை முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன் வெந்திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன் பரத னென்னும் பெயரனக் கோவலன் 155 விரத நீங்கிய வெறுப்பின் னாதலின் ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு வெற்றிவேல் மன்னர்க்குக் காட்டிக் கொல்வுழிக் கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி நிலைக்களங் காணாள் நீலி என்போள் 160 அரசர் முறையோ பரதர் முறையோ ஊரீர் முறையோ சேரியீர் முறையோவென மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு எழுநா ளிரட்டி எல்லை சென்றபின் தொழுநாள் இதுவெனத் தோன்ற வாழ்த்தி 165 மலைத்தலை யேறியோர் மால்விசும் பேணியில் கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள் எம்முறு துயரம் செய்தோ ரியாவதும் தம்முறு துயரமிற் றாகுக வென்றே விழுவோ ளிட்ட வழுவில் சாபம் 170 பட்டனி ராதலிற் கட்டுரை கேள்நீ உம்மை வினைவந் துருத்த காலை செம்மையினோர்க்குச் செய்தவ முதவாது வாரொலி கூந்தல்நின் மணமகன் தன்னை ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி 175 வானோர் தங்கள் வடிவின் அல்லதை ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென மதுரைமா தெய்வம் மாபத் தினிக்கு விதிமுறை சொல்லி அழல்வீடு கொண்டபின் கருத்துறு கணவற் கண்டபின் அல்லது 180 இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலனெனக் கொற்றவை வாயிற் பொற்றொடி தகர்த்துக் கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன் மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென இரவும் பகலு மயங்கினள் கையற்று 185 பீடுகெழு நங்கை பெரும்பெய ரேத்தி வாடா மாமலர் மாரி பெய்தாங்கு அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக் கோநகர் பிழைத்த கோவலன் றன்னொடு வான வூர்தி ஏறினள் மாதோ 190 உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு அவல என்னாள் அவலித்து இழிதலின் மிசைய என்னாள் மிசைவைத் தேறலித் கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல் 195 நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப் பூத்த வேங்கைப் பொங்கர்க் கிழோர் தீத்தொழி லாட்டியேன் யானென் றேங்கி எழுநா ளிரட்டி எல்லை சென்றபின் தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்திப் 200 கானமர் புரிகுழற் கண்ணகி தானென். வெண்பா தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத் தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால் ? தெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி விண்ணகமா தர்க்கு விருந்து கட்டுரை முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும் படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர் அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும் 5 விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் ஒடியா இன்பத் தவருடை நாட்டுக் குடியுங் கூழின் பெருக்கமும் அவர்தம் வையைப் பேரியாறு வளஞ்சுரந் தூட்டலும் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும் 10 ஆரபடி சாத்துவதி யென்றிரு விருத்தியும் நேரத் தோன்றும் வரியுங் குரவையும் என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் வடவாரியர் படைகடந்து 15 தென்றமிழ்நா டொருங்குகாணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோ டொருபரிசா நோக்கிக் கிடந்த 20 மதுரைக் காண்டம் முற்றிற்று. உரை 1-13. சடையும் பிறையுந் தாழ்ந்த சென்னிக் குவளை உண் கண் தவள வாள் முகத்தி - சடையிடத்து இளம்பிறை தங்கிய சென்னியினையும் குவளை மலர் போன்ற மை பூசிய கண்களையும் வெள்ளிய ஒளி பொருந்திய முகத்தினையு முடையாள், கடை எயிறு அரும்பிய பவளச் செவ்வாய்த்தி - கடைவாய்ப் பல் வெளிப்பட்டுத் தோன்றுகின்ற பவளம் போலும் சிவந்த வாயினை யுடையாள், இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி - தம்மிடத்து நிலவொளி பரந்த முத்துப் போன்ற பற்களையுடையாள், இடமருங்கு இருண்ட நீலமாயினும் வலமருங்கு பொன் நிறம் புரையும் மேனியள் - இடப்பாகம் இருளின் தன்மை கொண்ட நீல உருவாக இருப்பினும் வலப் பாகம் பொன்னுருப் போன்ற வடிவுடையாள், இடக்கை பொலம் பூந் தாமரை ஏந்தி னும் வலக்கை அம் சுடர்க் கொடுவாள் பிடித்தோள் - இடக்கையில் பொன்னிறமான பொலிவுற்ற தாமரை மலரை ஏந்தி இருப்பினும் வலக் கையில் அழகிய ஒளி விடுகின்ற மழுப்படையை ஏந்தினாள், வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால் தனிச் சிலம்பு அரற்றும் தகைமையள் - வலக்காலின்கண் தொழிலமைந்த வீரக் கழலைக் கட்டியிருப்பினும் இடக்காலில் ஒப்பற்ற சிலம்பு ஒலிக்குந் தன்மையுடையாள் (அவள்), கொற்கைக் கொண்கன் - கொற்கை நகரத் தலைவனும், குமரித் துறைவன் - குமரியாற்றுத் துறையை யுடையோனும், பொற்கோட்டு வரம்பன் - இமயமலையை தன் ஆட்சியின் வடவெல்லையாக உடையோனும், பொதியிற் பொருப்பன் - பொதியமலையையுடையோனுமாகிய பாண்டியனுடைய, குலமுதற் கிழத்தியாதலின் - குலத்தினை அடி தொடங்கியே காக்கும் உரிமை பூண்டோளாகலான் ; சடையும் பிறையும் என்பவற்றில் உம்மை அசைநிலை; சடையும், சடையிடத்தே பிறையுந் தங்கிய எனலும் அமையும். கடை எயிறு - பன்றிக் கொம்புபோலப் புறப்பட்ட எயிறு என்பர் அரும்பத உரையாசிரியர். முகத்தி என்பது முதலியனவும், கொண்கண் என்பது முதலியனவும் ஒரு பொருண்மேல் வந்த பல பெயர்கள். குலமுதற் கிழத்தி - மதுரையின் அதி தெய்வம்; அத் தெய்வத்தின் வடிவு வலப்பாகத்து இறைவனையுடைய இறைவியின் வடிவாகக் கூறப் பெற்றது. `இடக்காற் றனிச்சிலம் பரற்றினும் வலக்காற், புனைகழல் கட்டுந் தகைமையள்' என்பதும் பாடம். 13-17. அலமந்து - மயங்கி, ஒரு முலை குறைத்த திருமா பத்தினி - இடமுலையைத் திருகி வாங்கிய அழகிய பெருமை மிக்க கற்புடையளாய, அலமரு திருமுகத்து ஆயிழை நங்கைதன் முன்னிலைஈயாள் பின்னிலைத் தோன்றி - துன்பத்தாற் சுழல்கின்ற முகத்தினையும் ஆய்ந்து செய்த அணியினையும் உடைய கண்ணகியின் எதிரே நில்லாளாய்ப் பின்புறத்தே வந்து நின்று, கேட்டிசின் வாழி நங்கை என் குறை என - நங்காய் என் குறையினைக் கேட்பாயாக என்று கூற; பத்தினியாகிய நங்கை என்க. கற்புடைத் தெய்வமாகலானும் வெகுளியோடிருந்தன ளாகலானும், அவள் முன்னர்த் தோன்றாது பின்னர்த் தோன்றினாள். நிலையீயாள் - நில்லாள்; வினைத்திரி சொல். சின், இடைச்சொல். வாழி யென்றது ஓம்படை கூறியது; அசையுமாம். 18-20. வாட்டிய திருமுகம் வல வயின் கோட்டி - தனது வாட்டங்கொண்ட முகத்தினை வலப்பக்கத்தே வளைத்து நோக்கி, யாரை நீ என் பின் வருவோய் - என் பின்னர் வருகின்றோய் நீ யார், என்னுடை ஆர் அஞர் எவ்வம் அறிதியோ என - என்னுடைய பொறுத்தற்கரிய மன வருத்தத்திற்குக் காரணமான துன்பத்தினை நீ அறிவாயோ என்று கண்ணகி கேட்ப; 18-20. வாடிய என்பது வாட்டிய என விகாரமாயிற்று. யாரை என்பதன் கண் ஐ அசைநிலை இடைச்சொல். 21-24. ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன் அணி இழாஅய் - அழகு செய்யும் அணிகலங்களை யுடையாய் நின் பொறுத்தற்கரிய துன்பத்தினை யான் அறிந்தேன், மா பெருங் கூடல் மதுராபதி என்பேன் - மிக்க சிறப்பினை யுடைய கூடற்கண் உள்ளேன் மதுராபதி என்னும் பெயருடையேன், கட்டுரை யாட்டியேன்- நினக்குச் சில சொல்லுதலுடையேன், யான் நின் கணவற்குப் பட்ட கவற்சியேன் - யான் நின்கணவன் கொலையுண்டது காரணமாக அடைந்த கவலையை உடையேன், பைந்தொடி கேட்டி - ஆயினும் நீ இதனைக் கேட்பாயாக; அணியிழை என்பது ஓர் நங்கை யென்னுந் துணையே குறித்து நின்றது; மேல்வரும் பெயர்களும் இத் தன்மையன. கட்டுரை - பொருள் பொதிந்த சொல். பைந்தொடி, விளி. 25-26. பெருந்தகைப் பெண் ஒன்று கேளாய் என் நெஞ்சம் வருந்திப் புலம்புறு நோய் - பெரிய தகுதியையுடைய பெண்ணே என்னுள்ளம் துன்பத்தான் வருத்தமுற்றுப் புலம்புறுதற்குரிய தொன்றனைக் கேட்பாயாக; நோயால் வருந்திப் புலம்புறும் ஒன்றென்க ; புலம்புறுதற் கேதுவாகிய நோய் ஒன்று எனலுமாம். 27-28. தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோமகற்கு ஊழ்வினை வந்தக் கடை - தோழி நீ எம் மன்னனாகிய பாண்டியனுக்குப் பழவினை வந்தெய்திய வகையாகிய இஃதொரு பொருளைக் கேட்பாயாக; ஈது, சுட்டு நீண்டது. "எங்கோமகற், கூழ்வினை வந்தக் கடை" என்பதனை, 1"வினைவிளை கால மாதலின் யாவதுஞ், சினையலர் வேம்பன் தேரா னாகி" என முன்னர் வந்தமையானும் அறிக. வந்தக்கடை - வந்தபடி; ககரம் விரித்தல் விகாரம் ; வினையெச்சமாகக் கொண்டு, வந்தவிடத்து அதனாலெய்திய துன்பமாகிய ஈதொன்றை என்றுரைத்தலுமாம். 29. மாதராய் ஈது ஒன்று கேள் உன் கணவற்குத் தீதுற வந்த வினை - நங்காய் உன் கணவனுக்குத் தீமை பொருந்த வந்து எய்திய வினையாகிய இவ் வொன்றினைக் கேட்பாயாக; தீது - கொலை. இனிப் பாண்டியர் கோலின் செம்மை கூறுவாள்: 30-34. காதின் மறை நா ஓசையல்லது - தன் காதுகளால், அந்தணர் தம் நாவால் ஓதுகின்ற வேதவொலியினைக் கேட்டறிந்த தல்லது. யாவதும் மணி நா ஓசை கேட்டதும் இலனே-ஒரு பொழுதும் மணியின் நாவோசையைக் கேட்டறியான், அடி தொழுது இறைஞ்சா மன்னர் அல்லது - அவன் தன்னடிகளைக் கையாற்றொழுது தலை வணங்காத பகையரசர் பழி கூறித் தூற்றப்பெறினல்லது, குடி பழி தூற்றுங் கோலனும் அல்லன்-குடிகள் பழி கூறித் தூற்றப்பெறும் கொடுங்கோலுடையனுமல்லன்; மதுரையில் மறையொலி மிக்குள்ளமை 1"நான்மறைக் கேள்வி நவில்குர லெடுப்ப, ஏமவின்றுயி லெழுத லல்லதை,.... கோழியினெழாதெம் பேரூர் துயிலே" என்பதனானும் அறியப்படும். தம் குடிகளில் குறையுற்றார் அறிவிக்கவென அரசன் கட்டிய மணியினை ஆண்டுக் குறையுற்று அடிப்பார் ஒருவரும் இலர் ஆகலான் "மணிநாவோசை கேட்டது மிலனே" என்றார். எனவே அவனாட்டு அவனாட்சியில் குறையுற்றார் இதுவரை ஒருவருமிலர் என்பதாயிற்று. இறைஞ்சா மன்னர் - பகை அரசர். தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் கூறிய வஞ்சினத்தில் 2"குடிபழி தூற்றுங்கோலே னாகுக" என்றது ஈண்டு அறியத்தகுவது. 35 இன்னும் கேட்டி - மேலும் அவர் உயர்குணத்தைக் கேட்பாயாக; 35-41. நல் நுதல் மடந்தையர் மடங்கெழு நோக்கின் - நல்ல நெற்றியினையுடைய மகளிர் தம் எழில் பொருந்திய பார்வையானே, மத முகம் திறப்புண்டு - தன்னிடத்தே மதம் வெளிப்பட்டு, இடம் கழி நெஞ்சத்து இளமை யானை - வரம்பு கடந்து செல்லும் உள்ளத்தினையுடைய இளமையாகிய யானை, கல்விப் பாகன் கை அகப்படா அது ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும் - கல்வியாகிய பாகனுக்கு உட்படாது தளராத ஊக்கத்தோடே ஓடினும், ஒழுக்கொடு புணர்ந்த இவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் தாராது - நல்லொழுக்கத்தோடே ஒன்றிய இச் சிறந்த குடியின்கண் தோன்றியோர்க்குக் குற்றத்தினைச் செய்யாது; மதம் - இளமைக்கும் யானைக்கும் ஏற்பக் கொள்க. இடங்கழி - வரம்பு கடக்கை; கழி காமமுமாம்; 1"இடங்கழி மான்மாலையெல்லை" என்பதன் உரை காண்க. இளமையாற் காமம் மீதூரப் பெறினும் நெறி தவறிச் செல்லார் என்றபடி. 2"இடங்கழி காமமொடடங்கா னாகி," 3"கல்விப் பாகரிற் காப்புவலை யோட்டி" என்பன ஈண்டு அறியற்பாலன. 41. இதுவுங்கேட்டி - இதனையும் கேட்பாய்; உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி புதவக் கதவம் புடைத் தனன் ஒருநாள் - ஒருநாள் தான் ஓரில்லத்து வாயிற் கதவினைத் தட்டினானாக அதன்பொருட்டு அவ்வில்லத்து வாழும் பிறர்க்கு உதவுவதற்கொண்ணாத வறுமை வாழ்க்கையினை உடைய கீரந்தை என்பானுடைய மனைவி, அரைச வேலி அல்லது யாவதும் புரைதீர் வேலி இல்லென மொழிந்து மன்றத்து இருத்திச் சென்றீர் அவ்வழி - நீர் போகின்ற அக் காலத்து மன்னனுடைய காவல் அல்லாது வேறு குற்றம் தீர்ந்த காவல் சிறிதும் இல்லை யென்று கூறி என்னை அரணில்லாத வீட்டில் இருக்கச் செய்து போயினீர், இன்று அவ் வேலி காவாதோ என-இப்பொழுது அவ் வரைச வேலி என்னைக் காத்திடாதோ என்று கூறி வருந்த; உதவா வாழ்க்கை - உதவுவதற்கொண்ணாத வாழ்க்கை. கீரந்தை - ஓரந்தணன். புதவம் - வாயில் ; புதவக்கதவம் - கதவில்லா வீடு என்பாருமுளர். வேலி - காவல். மன்றம் - அரணில்லா இல்லம். மிடி வாழ்க்கையையுடைய கீரந்தை யென்னும் பார்ப்பனன் ‘அரசனது காவலுளதாகலின் நீ அஞ்சாதே' என்று கூறித் தன் மனைவியைத் தனியே இல்லின்கண் இருக்கச் செய்து யாத்திரை சென்றிருந்த காலை, இரவில் நகரி சோதனைக்கு வந்த பாண்டியன் அவ் வில்லின் கதவைத் தட்ட, அவ்வொலி கேட்ட பார்ப்பனி இங்ஙனம் கூறினாளென்க ; பார்ப்பனன் மீண்டு வந்து இரவில் மனைவியுடன் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது அரசன் கதவைத் தட்டினான் என்றும், பிறவாறும் உரைப்பாருமுளர். 48-53. செவிச் சூட்டு ஆணியின் புகை அழல் பொத்தி நெஞ்சம் சுடுதலின் - அச் சொல் காதினைச் சுடுவதாகிய ஆணியைப் போன்று புகைகின்ற தீ மூண்டு உள்ளத்தைச் சுடலானே, அஞ்சி நடுக்குற்று - அச்சமும் நடுக்கமு மடைந்து, வச்சிரத் தடக்கை அமரர் கோமான் - வச்சிரப் படை ஏந்திய பெரிய கையினையுடைய இந்திரனுடைய, உச்சிப் பொன்முடி ஒளி வளை உடைத்த கை குறைத்த செங்கோல் - தலையிலுள்ள அழகிய முடியின்கண் ஒளி பொருந்திய வளையினை உடைத்த கையினைத் துணித்த செங்கோலினையும், குறையாக் கொற்றத்து - அதனாலாய குறைவுபடாத வெற்றியினையும் உடைய, இறைக் குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை - அரசர் குடியிற் பிறந்த இப் பாண்டியர்களுக்கு வழுவுதல் இல்லையாகும்; சுடுதலுள்ள இறைச்சி சூட்டிறைச்சியானாற் போலச் சுடுதலுடைய ஆணி சூட்டாணியாயிற்று. அமரர் கோமான் முடிவளை யுடைத்தமை 1"முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னி" என்பதனானும் அறியப்படும்; வளை முடியின் ஓர் உறுப்பு; வளையென்னும் படையால் முடியை உடைத்தானாகப் புராணங் கூறும். குறைத்த என்னும் பெயரெச்சம் செங்கோல் என்னும் ஏதுப்பெயர் கொண்டது. செங்கோல் வெற்றிக்குக் காரணமாதலை 2"வேலன்று வென்றி தருவது மன்னவன், கோலதூஉங் கோடா தெனின்" என்பதனானறிக. இழுக்க மின்மையாகிய இதுவும் கேட்டி என முடித்தலுமாம். பாண்டியன் கை குறைத்தமை, 3"எனக்குத் தகவன்றா லென்பதே நோக்கித், தனக்குக் கரியாவான் றானாய்த் தவற்றை, நினைத்துத்தன் கைகுறைத்தான் றென்னவன் காணா, ரெனச்செய்யார் மாணா வினை," 4"நாடுவிளங் கொண்புகழ் நடுதல் வேண்டித்தன், ஆடுமழைத் தடக்கை யறுத்து முறைசெய்த, பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன்" என்பவற்றானும் அறியப்படும். கை குறைத்தவழிப் பொன்னாற் கை செய்து வைத்தமையின் `பொற்கைப் பாண்டியன்' எனப் பெயரெய்தினன் போலும்! 54. இன்னும் கேட்டி நன்வாய் ஆகுதல் - இது நன்றாகிய மெய்யாதலை இன்னும் கேட்பாயாக ; 55-66. அறன் அறி செங்கோல் மறநெறி நெடுவாள் - அறநூலினை அறிந்து அதற்கேற்ப நிற்கும் செங்கோலையும் வீரவழியிலே ஒழுகிய நெடிய வாளினையும் உடைய, புறவு நிறை புக்கோன் - புறாவின் பொருட்டுத் துலாம் புக்கோனும், கறவை முறை செய்தோன் - ஆவின் பொருட்டுத் தன் மகனைத் தேர்க்காலிலிட்டு முறை செய்தோனும் ஆய, பூம்புனற் பழனப் புகார் நகர் வேந்தன் - பொலிவுற்ற நீரினையுடைய வயல்கள் நிறைந்த புகார் நகரத்தையுடைய சோழனது, தாங்கா விளையுள் நன்னாடதனுள்- நிலம் பொறாத விளைவினையுடைய நல்ல சோணாட்டின்கண், வலவைப் பார்ப்பான் பராசரன் என்போன் - அறிவில் வல்ல பரா சரனென்னும் அந்தணன், பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தடக்கை - பாரதப்போரில் பெருஞ் சோறளித்த திருந்திய வேலேந்திய பெரிய கையினையும், திரு நிலைபெற்ற பெருநாளிருக்கை - செல்வம் நிலைபெற்ற பெருமை மிக்க காலையோலக்கத் தினையுமுடைய, குலவு வேற் சேரன் கொடைத் திறங்கேட்டு - விளங்கும் வேலினையுடைய சேரனது கொடையின் இயல்பினைக் கேள்வியுற்று, வண் தமிழ் மறையோற்கு வான் உறை கொடுத்த திண் திறல் நெடுவேல் சேரலன் காண்கு என - வளவிய தமிழுணர்ந்த அந்தணனுக்குத் துறக்கத்துறைதலைத் தந்த உறுதியான வலி மிக்க நீண்ட வேலினையுடைய சேரனைக் காண்பேன் என்று கருதி, காடும் நாடும் ஊரும் போகி - காடு நாடு ஊர் இவைகளைக் கடந்து, நீடு நிலை மலையம் பிற்படச் சென்று - உயர்ந்த நிலையினையுடைய பொதியின்மலை பிற்படும்படி போய்; தடக்கையினையும் இருக்கையினையுமுடைய சேரன் என்றியைக்க. பெருஞ்சோறு பயந்தவென அக் குலத்து முன்னோன் செய்கை அவன்மேல் ஏற்றிக் கூறப்பட்டது. உதியஞ் சேரலாதன் பாரதப்போரில் இரு திறப் படைக்கும் சோறளித்தனனென்பது, 1"அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ, நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை, ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப், பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்" எனப் புறத்தினும். 2"ஓரைவ ரீரைம் பதின்ம ருடன்றெழுந்த, போரிற் பெருஞ் சோறு போற்றாது தானளித்த, சேரன்" என மேல் இந் நூலுள்ளும் வருதலானும், பெருஞ் சோற்றுதியஞ் சேரலாதன் என்னும் பெயரானும் அறியப்படும். பிற சான்றோரும் சேரனது நாளோலக்கத்தைத் "தண்கட னாட னொண்பூங் கோதை, பெருநா ளிருக்கை" எனக் கூறியுள்ளமை காண்க. புறவுநிறை புக்கமையும் கறவைமுறை செய்தமையும் ஆகிய வரலாறுகளை 3வழக்குரை காதையானும், அதன் உரையானும் அறிக. மறையோன் - பாலைக் கௌதமனார் என்னும் புலவர். உறை, முதனிலைத் தொழிற் பெயர். சேரலன் - இமைய வரம்பனின் றம்பியாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவன். பதிற்றுப் பத்தின் மூன்றாம் பத்தினால் தன்னைப் பாடிய பாலைக் கௌதம னாருக்குத் குட்டுவன் துறக்கமளித்த வரலாறு, அதன் பதிகத்தில், 1"பாடிப் பெற்ற பரிசில் : நீர் வேண்டியது கொண்மின் என, கணவனுடன் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டுமென, பார்ப் பான் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பித்துப் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணா பெற்றுளது. இக் காப்பியத்துள்ளும் 2"நான் மறையாளன் செய்யுட் கொண்டு, மேனிலை யுலகம் விடுத்தோ னாயினும் வேந்தன் குறிக்கப்படுதல் அறியற்பாற்று 66-70. ஆங்கு - அவ்விடத்தே, ஒன்று புரி கொள்கை இரு பிறப்பாளர் வீடுபேற்றினை விரும்பும் கொள்கையினையும் இரண்டு பிறப்பினையும் உடையாராகிய, முத்தீச் செல்வத்து - மூன்று வகைப்பட்ட தீயை வளர்க்குஞ் செல்வத்தோடே, நான் மறை முற்றி - நான்கு மறைகளையும் முற்ற அறிந்து, ஐம்பெரு வேள்வியும் செய்தொழில் ஓம்பும் - ஐந்தாகிய பெருமையுடைய வேள்விகளைச் செய்தலாகிய தொழிலையும் பேணும், அறு தொழில் அந்தணர் பெறுமுறை வகுக்க - ஆறு தொழிலினை யுடைய அந்தணர் பெறுகின்ற முறையை அப் பராசரனுக்கு வகைப்படுத்திக் கூற; ஒன்று - வீடு. இரு பிறப்பு - உபநயனத்திற்கு முன்னர் ஒரு பிறப்பும் பின்னர் ஒரு பிறப்பும். முத்தீ - ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி. ஐம்பெரு வேள்வி - கடவுள் வேள்வி, பிரம வேள்வி, பூதவேள்வி, மானிட வேள்வி, தென்புலத்தார் வேள்வி. அறுதொழில் - ஓதல், ஓதுவித்தல். வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன. 71-73. நா வலங்கொண்டு - நாவானே தருக்கித்து வெற்றி கொண்டு, நண்ணார் ஓட்டி - பகைவர்களை ஓடச் செய்து, பார்ப்பன வாகை சூடி - பார்ப்பன வாகையைச் சூடி, ஏற்புற நன்கலம் கொண்டு தன் பதிப் பெயர்வோன் - பொருத்தமுற நல்ல அணிகலங்களைப் பெற்றுத் தன் ஊர்க்கு மீண்டு செல்வோன்; நாவலம் - நாவான் வரும் வெற்றி. நண்ணார் என்றது கல்வி அறிவுடையராய்த் தன்னொடு வாது செய்ய வந்தாரை. பார்ப்பன வாகையாவது 1"கேள்வியாற் சிறப்பெய்தியானை, வேள்வியான் விறல்மிகுத்தன்று." பெயர்தல் - மீளல். சேரலற் காண்கெனப் போகிச் சென்று வலங்கொண்டு ஓட்டிச் சூடிக் கலங்கொண்டு பெயர்வோன் என முடிக்க. 74-79. செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர் தங்கால் என்பது ஊரே - செங்கோலினையுடைய பாண்டியனுடைய திருந்திய செயலினையுடைய அந்தணர்களது ஊர் திருத்தங்கால் என்பது, அவ்வூர்ப் பாசிலை பொதுளிய போதி மன்றத்து - அவ்வூரின்கண் பசிய இலை தழைந்த அரசு நிற்கும் மன்றத்தின் கண், தண்டே குண்டிகை வெண்குடை காட்டம் - தண்டினையும் கமண்டலத்தினையும் வெள்ளிய குடையினையும் சமித்தையும், பண்டச் சிறு பொதி பாதக் காப்பொடு - பண்டங்களையுடைய சிறிய மூட்டையினையும் மிதியடியுடன், களைந்தனன் இருப்போன் - கீழே வைத்திருப் போனாகிய அவன்; மறையவர் - பஞ்சக்கிராமிகள் என்ப. தண்டே - ஏ, எண்ணிடைச் சொல், 79-84. காவல் வெண்குடை விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி - குடிகளைக் காக்கும் வெண்கொற்றக் குடையினையும் அறநெறியால் உண்டாகி முதிர்ந்த வெற்றியையு முடைய மேலோன் வாழ்வானாக, கடற் கடம்பு எறிந்த காவலன் வாழி - கடலின்கண்ணே பகைவர் கடம்பினைத் தடிந்த மன்னவன் வாழ்வானாக, விடர்ச் சிலை பொறித்த வேந்தன் வாழி - இமயமலைக்கண் வில்லெழுதிய காவலன் வாழ்வானாக, பூந்தண் பொருநைப் பொறையன் வாழி - பொலிவு பெற்ற தண்ணிய பொருநையாற்றினையுடைய பொறையன் வாழ்வானாக, மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கென - மாந்தரஞ் சேரலாகிய அரசன் வாழ்வானாக வெனச் சொல்ல; விளைந்து முதிர் கொற்றம் - மிகப் பெருகிய வெற்றியுமாம். விறல் - மேம்பாடு. கடற்கடம்பு எறிந்தமையாவது கடல் நடுவண் ஓர் தீவிலிருந்து பகைவரை வென்று அவரது காவல் மரமாகிய கடம்பினைத் துணித்தமை. விடர் - மலை முழைஞ்சு ; மலைக்கு ஆகு பெயர் ; மலை ஈண்டு இமையம். கடம்பெறிந்ததனை 1"இருமுந்நீர்த் துருத்தியுண், முரணியோர்த் தலைச்சென்று, கடம்புமுத றடிந்த கடுஞ்சின முன்பின், நெடுஞ்சேர லாதன்" என்னும் பதிற்றுப் பத்தானறிக. கடம்பெறிந்தமையும் சிலை பொறித்தமையும் 1இந்நூலுள்ளும்பின்னர்க் கூறப்படுதல் அறியத்தகும். பொறையன் - மலைநாட்டையுடையன்; பொறை - மலை. மாந்தரஞ் சேரல் - 2சிறப்புப் பெயரென்பர் பரிமேலழகர். 85-87. தமர் முதல் நீங்கி - தம் சுற்றத்தாரினின்றும் நீங்கி, குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த் தளர்நடை ஆயத்து - குழலினையும் குடுமியினையும் நிரம்பாத சொல்லையுடைய சிவந்த வாயினையும் தளர்ந்த நடையினையும் உடைய கூட்டத்துடன், விளையாடு சிறாஅர் எல்லாஞ் சூழ்தர - விளையாடுகின்ற சிறுவர் யாவரும் அவ் வந்தணனைச் சூழ்ந்துகொள்ள ; குழல், குடுமி என்பதனானே சிறுவரும் சிறுமியரும் என்பது பெறப்படும்; குழல் - சுருண்ட மயிர் எனவும், குடுமி - உச்சியில் வைத்த சிகை யெனவும் கொள்ளலுமாம். முதல் - இடம். எல்லாரும் எனற்பாலது வழக்குப் பற்றி எல்லா மென்றாயது. பராசரன் கூறுவான் :- 88-89. குண்டப் பார்ப்பீர் - அந்தணச் சிறுவர்களே, என்னோடு ஓதி என் பண்டச் சிறு பொதிகொண்டு போமின் என - என்னுடனே மறையினையோதி என்னுடைய பண்டங்கள் வைத்த சிறிய மூடையினை நீவிர் பெற்றுச் சென்மின் என்று அவன் கூற; குண்டப் பார்ப்பீர் என்பதற்குப் பிழுக்கை மாணிகாள் எனவும் சிறுமாணிகாள், சிறுபிள்ளைகாள் எனினுமாம் எனவும் உரைப்பர் அரும்பதவுரையாசிரியர். மாணி - பிரமசாரி. 90-94. சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் - பெருமையமைந்த சிறப்பினையுடைய வார்த்திகன் என்பான் புதல்வனாகிய, ஆல் அமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன் - தக்கிணாமூர்த்தி என்னும் பெயர்பெற்று வளர்ந்தவன், பால் நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர் - பால் தோன்றும் சிவந்த வாயினையுடைய தன்னையொத்த இளையோர் முன்பு, தளர்நா ஆயினும் மறை விளி வழாஅது உளம் மலி உவகையோடு ஒப்ப ஓத - தளர்வுறும் நாவினையுடையனாயினும் மறையின் ஓசையை முறை பிறழாது உள்ளத்து நிறைந்த மகிழ்ச்சியுடன் அவனோடு ஒருபடித்தாக ஓதுதலைச் செய்ய; வார்த்திகன் - ஓரந்தணன், புதல்வனாகிய வளர்ந்தோனென்க. ஆலமலர் செல்வன் - கல்லாலின் புடையமர்ந்த இறைவன் ; தக்கிணாமூர்த்தி. `பானாறு செவ்வாய்ப் படியோர்' என்றது மிக்க இளஞ்சிறார் என்பதுணர்த்திற்று. படியோர் - ஒத்தவர். இனி, இதற்குப் பிரமசாரிகள் எனக் கூறிப் படிமம் படி என்றாயிற்று என்பாருமுளர். 95-98. தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து - மறையினைத் தன்னோடொப்ப ஓதிய தக்கிணாமூர்த்தியாகிய சிறுவனைப் பராசரன் வியந்து பாராட்டி, முத்தப் பூணூல் - அழகிய பூணூலையும், அத் தகு புனைகலம் - அத் தகுதி வாய்ந்த புனையும் அணிகலங்களையும், கடகம் தோட்டொடு கையுறை ஈத்து - கைவளையும் தோடுமாகிய இவற்றுடனே பரிசிலாகக் கொடுத்து, தன் பதிப்பெயர்ந்தனன் ஆக - தன்னகரத்து மீண்டானாக; வலவைப் பார்ப்பானாகலான் மிக்கோன் என்றார். முத்தப் பூணூல் - முத்துவடமாகிய பூணூல் எனவும், அத்தகு - அழகு பொருந்திய எனவும் கூறலுமாம். கையுறை - காணிக்கை ; ஈண்டுப் பரிசில். 98-103. நன் கலன் புனைபவும் பூண்பவும் பொறாஅராகி - அத் தக்கிணாமூர்த்தி நல்ல அணிகலங்கள் புனைபவற்றையும் பூண்பவற்றையும் பொறாதவர்களாய், வார்த்திகன் தன்னைக் காத்தனர் ஓம்பி - வார்த்திகனைக் காவல் செய்து பற்றி, கோத் தொழில் இளையவர் கோ முறை அன்றிப் படுபொருள் வௌவிய பார்ப்பான் இவன் என - அரசனேவல் செய்யும் காவலர் அரச நீதியில்லாது புதையலைக் கவர்ந்த பார்ப்பான் இவனென்று கூறி, இடுசிறைக் கோட்டத்து இட்டனராக - கள்வரை இடும் சிறைக் கண்ணே இவனை இட்டு அடைத்தனராக; புனைபவும் பூண்பவும் வெவ்வேறு வகையின. கோத்தொழி லிளையவர் பொறாராகிக் காத்தனரோம்பி இட்டனராக வெனக் கூட்டுக. கோமுறையன்றி வௌவிய பார்ப்பான் என்க. படு பொருள் - களவுப் பொருள் எனலுமாம். 1"உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த், தெறுபொருளும் வேந்தன் பொருள்" ஆகலான் படுபொருள் வௌவுதல் குற்றமாயிற்று. 104-108. வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள் - அங்ஙனம் சிறையிடப் பெற்ற வார்த்திகனுடைய மனைவியாகிய கார்த்திகை என்னும் பெயருடையாள், அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்திற் புலந்தனள் புரண்டனள் பொங்கினள் - மயங்கி ஏக்கம் கொண்டு நிலத்தில் வீழ்ந்தழுது கடவுளை வெறுத்துப் பூமியிற் புரண்டு வெகுண்டனள், அது கண்டு - அதனை யுணர்ந்து, மை அறு சிறப்பின் ஐயை கோயிற் செய் வினைக் கதவம் திறவாது - குற்றமற்ற சிறப்பினையுடைய துர்க்கையின் கோயிற்கண் செயற்குரிய தொழிலெல்லாம் முற்றுப் பெற்ற கதவம் திறவாதாயிற்று ; அலந்தனள், அழுதனள், புலந்தனள், புரண்டனள் முற்றெச்சம். ஐயை கோயில் - மதுரைக்கண் உள்ள துர்க்கை கோயில். 108-112. ஆகலின் - ஆகையால், திறவாது அடைத்த திண்நிலைக் கதவம் - அங்ஙனம் திறவாது மூடிய திணிந்த நிலையினையுடைய கதவினை, மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கி - வீரஞ் செறிந்த வேலினையுடைய பாண்டியன் கேட்டு மயக் குற்று, கொடுங் கோல் உண்டுகொல் - எனது கோல் கோடியது உண்டோ, கொற்றவைக்கு உற்ற இடும்பை யாவதும் அறிந்தீமின்னென - ஐயைக்குப் பொருந்திய துன்பத்தின் எவ்வாற்றானும் உணர்ந்து எதற்குக் கூறுமின் என்று கூற ; அடைத்த திண்ணிலைக் கதவம் கேட்டனன் என்றாராயினும் கதவம் அடைத்ததனைக் கேட்டனன் என்பது கருத்தாகக் கொள்க. கொல், ஐயம். யாவதும் - சிறிதாயினும் எனலுமாம். அறிந்தீமின், வினைத்திரிசொல். 113-114. ஏவலிளையவர் காவலற் றொழுது - அரசனேவல் செய்யுங் காவலர் மன்னனை வணங்கி, வார்த்திகற் கொணர்ந்த வாய் மொழியுரைப்ப - வார்த்திகனைக் கொண்டு வந்து சிறையிட்ட உண்மைச் செய்தியினைக் கூற; மொழி - ஈண்டுச் செயல் மேற்று. 115-122. நீர்த்து அன்று இதுவென நெடுமொழி கூறி - இச்செயல் நீர்மையுடைத்தன்று என்று வார்த்திகனைப் புகழ்ந்து கூறி, அறியா மாக்களின் முறை நிலை திரிந்த - அறிவில்லாத காவலரால் முறை செய்யும் நிலையினின்றும் வேறுபட்ட, என் இறை முறை பிழைத்தது - என்னுடைய அரச நீதி தவறுற்றது, பொறுத்தல் நும் கடன் என - அதனைப் பொறுத்தல் நுமது கடமையாகும் என்று கூறி, தடம் புனற் கழனித் தங்கால் தன்னுடன் - பெரிய நீர் சூழ்ந்த வயல்களையுடைய திருத்தங்கால் என்னும் ஊருடனே, மடங்கா விளையுள் வயலூர் நல்கி - குறைவுபடாத விளைவினையுடைய வயலூரையும் கொடுத்து, கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி - கார்த்திகையின் கணவனாகிய வார்த்திகன் முன்பு பெரிய பார் மடந்தைக்குத் தனது அழகிய மார்பினை அளித்து, அவள் தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே - அந் நிலமடந்தையின் நீங்காத விருப்பத்தினையும் சிறிதளவு தணித்தனன் ; நீர்த்தன்றிதுவென வென்றது தன் உட்கோளாகக் கொள்க. இனி, இளையவர், வார்த்திகன் ஆகிய இவரிடைக் கூறினானெனக் கோடலு மிழுக்காது. நெடுமொழி - புகழ்மொழி. வயலூர் என்பது பெயர். அவனைப் பணிந்தென்பார் இருநில மடந்தைக்குத் திரு மார்பு நல்கி என்றார் ; இது பரியாயவணி. அரசனை நில மடந்தை கேள்வனாகிய திருமாலெனக் கொண்டு திருமார்பு நல்கி என்றார். அவன் பிறரைப் பணியாமையின் அவன் மார்பு எஞ்ஞான்றும் நிலத்திற் பொருந்தியதின் றென்பதனை அவள் தணியா வேட்கை என்பதனாற் பெற வைத்தார். 123-125. நிலைகெழு கூடல் நீள் நெடு மறுகின் - நிலைத்தல் பொருந்திய கூடல் நகரத்து மிக நீண்ட தெருக்களில் உள்ள, மலை புரை மாடம் எங்கணுங் கேட்ப-மலையினையொத்து உயர்ந்த மாளிகைகள் எவ்விடத்தும் கேட்கும் வண்ணம், கலை அமர் செல்வி கதவம் திறந்தது - கலையை ஊர்தியாக விரும்பிய கொற்றவை கோயிலின் கதவு திறந்தது; நிலைகெழு கூடல் என்றது என்றும் அழியாத கூடல் என்றவாறு. கூடல் மாடம் மறுகின் மாடம் என்க. 126-132. சிறைப்படு கோட்டம் சீமின் - குற்றஞ் செய்தோரையும் பகைஞராய்ப் பற்றப்பட்டோரையும் காவற் படுத்தியிருக்கும் சிறைக்கோட்டத்தினைத் திறந்திடுமின், யாவதும் கறைப்படு மாக்கள் கறைவீடு செய்மின் - எத்துணையாயினும் இறை இறுத்தற்குரிய மக்களது இறையினை விடுதலை செய்யுமின், இடுபொருளாயினும் படுபொருளாயினும் உற்றவர்க்கு உறுதி பெற்றவர்க்கு ஆம் என - பிறர் வரவிட்ட பொருளாயினும் புதையற் பொருளாயினும் அவை எடுத்தார்க்கும் கொண்டார்க்கும் உரிமையுடையனவாம் என்று, யானை, எருத்தத்து அணிமுரசு இரீஇக் கோல் முறை அறைந்த கொற்ற வேந்தன் - யானையின் பிடரில் அழகிய முரசினை இருத்தி அரச நீதியாகக் கூறிய வெற்றியினையுடைய மன்னன், தான் முறை பிழைத்த தகுதியும் கேள் நீ - நீதி தவறிய தகுதிப்பாட்டையும் நீ கேட்பாயாக ; சிறைப்படு கோட்டஞ் சீமின் என்றது சிறையிலுள்ளாரை வீடு செய்ம்மின் என்றவாறு ; சிறைக் கோட்டத்தை இடித்துத் தூய்மை செய்ம்மின் என்றலுமாம் ; 1"சேராமன்னர் சினமழுங்க, உறையுங்கோட்ட முடன்சீமின்" என்புழி நச்சினார்க்கினியர் இவ்வாறுரைத் தமை காண்க. அறைந்த - அறைவித்த. அறைந்தனன் ; அங்ஙனம் அறைந்த கொற்றவேந்தன் என அறுத்துரைக்க. கறை - கடமை; வரி, இடுபொருள் - மறைத்து வைத்திட்ட பொருள், புதையல்; படுபொருள் - மிக்க பொருள் எனலுமாம். உற்றவர்க்குப் பெற்றவர்க்கு உறுதியாமென்க. 133-137. ஆடித் திங்கள் பேர்இருட் பக்கத்து அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று வெள்ளி வாரத்து - ஆடித்திங்களின் கிருட்டின பக்கத்து அட்டமியும் கார்த்திகையின் குறையும் சேர்ந்த வெள்ளிக்கிழமையன்று, ஒள் எரி உண்ண - விளக்க மமைந்த தீக் கதுவலானே, உரை சால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும் உரையும் உண்டே நிரைதொடியோயே - புகழ் மிக்க மதுரைநகரத்தோடே அரசன் கேடெய்துவான் என்னும் சொல்லும் உண்டாயிற்று நிரைத்த தொடியினையுடையாய் ; அழல் - கார்த்திகை நாள். குட்டம் - குறைந்தது ; குறைந்த சீருள்ள அடியைக் குட்டமென்பதும் அறிக. 2"ஆடிய லழற்குட்டத்து" என்புழி அழற்குட்டம் என்பது கார்த்திகையின் முதற்காலை யுணர்த்திற்று. ஈண்டு அதன்முதற் காலையோ அன்றி ஒழிந்த மூன்று காலையுமோ உணர்த்தியதாகல் வேண்டும். அதனால் திங்கள் மேடம் அல்லது இடபத்தில் இருத்தல் பெற்றாம். உரை - அறிவர் மொழி; சோதிடச் சொல்லுமாம். நிரை தொடியோயே உரையுமுண்டே என்க. 138-146. கடி பொழில் உடுத்த கலிங்க நல் நாட்டு - மணம் நிறைந்த சோலை சூழ்ந்த கலிங்கநாட்டின்கண், தீம் புனற் பழனச் சிங்கபுரத்தினும் காம்பு எழு கானக் கபிலபுரத்தினும் - இனிய நீர் நிறைந்த மருதநிலம் பொருந்திய சிங்கபுரத்தின்கண்ணும் மூங்கில் நிறைந்த காடுகளையுடைய கபிலபுரத்தின்கண்ணும், அரைசு ஆள் செல்வத்து நிரை தார் வேந்தர் வடிவேல் தடக்கை வசுவும் குமரனும் - அரசாளும் செல்வத்தினையுடைய ஒழுங்குபடத் தொடுத்த மாலை அணிந்த அரசராகிய திருத்திய வேலினை ஏந்திய பெரிய கையினையுடைய வசுவென்பானும் குமரனென்பானும், வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர் - என்றுங் கெடாத செல்வத்தினையுடைய சிறந்த குடிக்கண் தோன்றிய தாயத்தாராவர், தம்முள் பகை யுற - அத் தாயவேந்தரிருவரும் தங்களுள் பகையுற்றமையான், இருமுக்காவதத்து இடைநிலத்து யாங்கணும் - ஆறு காவதத்திற்கு இடைப்பட்ட நிலத்து எவ்விடத்தும், செருவெல் வென்றியிற் செல்வோர் இன்மையின் - ஒருவரை யொருவர் வெல்லும் வெற்றியின் பொருட்டு அமர் நிகழுகை காரணமாகப் போவார் ஒருவரும் இல்லாமையான்; கலிங்க நன்னாட்டுச் சிங்கபுரத்தினுங் கபிலபுரத்தினும் அரை சாள் செல்வத்து வேந்தர் வசுவுங் குமரனும் எனக்கூட்டுக. வசு சிங்க புரத்தினும் குமரன் கபிலபுரத்தினும் ஆண்டான் என்க. தாயம் - உரிமை. 147-151. அரும்பொருள் வேட்கையிற் பெருங்கலன் சுமந்து - பெறுதற்கரிய செல்வத்தினை ஈட்டும் விருப்பத்தானே சிறந்த அணிகலங்களைச் சுமந்து, கரந்து உறை மாக்களின் - மறைந்துறையும் மக்களைப்போலப் போந்து, காதலி தன்னொடு சிங்கா வண்புகழ்ச் சிங்கபுரத்தின் ஓர் அங்காடிப்பட்டு - தன் மனைவியோடும் அழியாத வளவிய புகழினையுடைய சிங்கபுரத்திலுள்ள ஓர் கடைவீதியுள் புக்கு, அருங்கலன் பகரும் சங்கமன் என்னும் வாணிகன் தன்னை - விலையிடற்கரிய அணிகலளை விற்குஞ் சங்கம னெனப்படுகின்ற வணிகனை ; கரந்துறைமாக்கள் - ஒற்றர் முதலாயினார்; 1"துறந்தார் படிவத்தாராகி" என்பது காண்க. மாக்களிற் போந்து என ஒரு சொல் வருவித்துரைக்க. சிங்காமை - அழியாமை. 152-157. முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன் - பசிய தொடியினையுடையாய் முற்பிறவியில் நின் கணவன், வெந்திறல் வேந்தற்குக் கோத் தொழில் செய்வோன் - வெவ்விய வலியமைந்த வசுவென்னு மரசனுக்கு அரச வினை செய்பவன், பரதன் என்னும் பெயரன் அக் கோவலன் - கோவலனாகிய பரதன் என்னும் பெயரினையுடைய அவன், விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின் - கொல்லா விரதத்தினின்றும் விலகிய வெறுக்கப்படுவோனாதலான், ஒற்றன் இவன் எனப் பற்றினன் கொண்டு வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழி - இவன் பகை மன்னன் ஒற்றனாவான் எனப் பிடித்துச் சென்று வெற்றி தரும் வேலினையுடைய தன் அரசனிடத்து காட்டிக் கொலை செய்த போது; பைந்தொடி - விளி. வேந்தன் - வசு. செய்வோன், வினைப் பெயர். கோவலன் முற்பிறப்பின் பெயர் பரதன். கோவலனாகிய அவன் என்க. பற்றினன், முற்றெச்சம். 158-166. கொலைக்களப்பட்ட சங்கமன் மனைவி நிலைக்களங்காணாள் நீலி என்போள் - கொலைக்களத்துப் பட்ட சங்கமன் மனைவியாகிய நீலி என்பவள் நிலையிடத்தைக் காணாளாய்., அரசர் முறையோ பரதர் முறையோ - அரசர்காள் வணிகர்காள் இது நீதியோ, ஊரீர் முறையோ சேரியீர் முறையோ என - ஊரிலும் சேரியிலும் உள்ளீர் இது நீதியோ, என்று கூறி, மன்றினும் மறுகினும் சென்றனள் பூசல் இட்டு - மன்றத்திலும் வீதியிலும் சென்று யாவருமறிய வெளியிட்டு, எழுநாள் இரட்டி எல்லை சென்றபின் தொழுநாள் இது எனத் தோன்ற வாழ்த்தி - பதினான்கு நாள் சென்றபின் கணவனை வணங்கற்குரிய நாள் இதுவென்று கருதி மிகுதியாகப் போற்றி, மலைத்தலை ஏறி -மலை யுச்சியிடத்து ஏறி, ஓர் மால் விசும்பு ஏணியிற் கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள் - ஒப்பற்ற பெரிய வானெல்லையில் கொலையிடத்துப்பட்ட தன் கணவனைக் கூடுவதாக நின்றவள் ; நீலி நிலைக்களம் காணாள் என்க. காணாள், முற்றெச்சம், சேரி - பல குடிகள் சேர்ந்திருப்பது ; ஊரின் பகுதி, ஏணி - எல்லை; 1"நளியிரு முந்நீரேணி யாக" என்பது காண்க. கூடுபு - கூடவெனத் திரிக்க. நின்றோள், வினைப்பெயர். 167-70. எம் உறு துயரம் செய்தோர் யாவதும் தம்முறு துயரம் இற்று ஆகுக என்றே - எமக்கு இம் மிக்க துன்பத்தினைச் செய்தவர் எவ்வகையானும் இத் தகைய துன்பம் தம்மை அடையப் பெறுவார்களாக என்று, விழுவோள் இட்ட வழுவில் சாபம் பட்டனிர் - விழுகின்றவள் இட்ட தவறுதலில்லாத சாபத்தினைப் பெற்றீர்கள்; செய்தோர் என்ற எழுவாய்க்குப் பயனிலையாகப் படுவாராக என ஒருசொல் வருவிக்க. இச் சாப வரலாறு மணிமேகலைக்குக் கண்ணகி கூறியதாகச் 2சாத்தனாராலும் கூறப்பெற்றுள்ளது. நீலியென்போள் முறையோவெனப் பூசலிட்டு வாழ்த்திக் கூடுபு நின்றோள் ஆகுகவென்றே விழுவோள் என்க,. 170. ஆதலிற் கட்டுரை கேள் நீ - ஆதலால் யான் கூறும் பொருள் பொதிந்த உரையினை நீ கேட்பாயாக ; 171-172. உம்மை வினை வந்து உருத்தகாலை செம்மை இலோர்க்குச் செய்தவம் உதவாது - முற்பிறப்பிற் செய்த தீவினை பயனளிக்க நேர்ந்த பொழுது அக் காலத்துச் செவ்விய உள்ளமிலராயினார்க்கு முன்செய்த நல்வினை சிறிதும் உதவாது; உம்மைவினை என்றதனான், தவமுதவாதது இப் பிறப்பால் என்க. உம்மை என்பதனை வினையொடும் செம்மையொடுங் கூட்டுக. தவம் உதவாது என்றதனால் உம்மை வினையென்றது தீவினையை என்க. ஒருவன் செய்த நல்வினை தீவினைகள் தம் பயனை நுகர்விக்குங்கால், தம்முள் ஒன்று நிற்கும்போது மற்றொன்று நில்லாது ; தனித்தனியே நின்று நுகர்விக்கும் என்பது கருத்து; 173-178. வார் ஒலி கூந்தல் நின் மணமகன் தன்னை - நீண்டு தழைந்த கூந்தால் நின் கணவனை, ஈரேழ் நாளகத்து எல்லை நீங்கி - பதினான்கு நாளளவு கழிந்த பின்னர், வானோர் தங்கள் வடிவின் அல்லதை ஈனோர் வடிவிற் காண்டல் இல் என - தேவர்களுடைய வடிவத்துக் காண்பதல்லது இவ்வுலக மக்களுடைய வடிவத்துக் காணுதல் இல்லையென்று, மதுரை மா தெய்வம் மாபத்தினிக்கு விதிமுறை சொல்லி அழல் வீடு கொண்ட பின் - மதுரைத் தெய்வமாகிய பெருமையுடைய மதுராபதி பெருமை மிக்க கற்புடைய கண்ணகிக்கு ஊழ்வினையின் தன்மையினைச் சொல்லித் தீயின் விடுதலையைக் கொண்ட பின்னர் ; அல்லதை, ஐ இடைச்சொல், ஈனோர் - இவ்வுலகோர் ; ஈன் - இவ்விடம். அழல் வீடாவது தீ யெரித்தலை நிறுத்தல். "வாரொலி... லில்லென" என்னும் நான்கடியும் இந் நூற் பதிகத்துள் (50-3) வந்துள்ளமையுங் காண்க. 179-183. கருத்துறு கணவற் கண்டபின் அல்லது இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலன் என - என்னுள்ளத்துப் பொருந்திய கணவனைக் காணாததன் முன்னர் இருத்தலையுஞ் செய்யேன் நிற்றலையுஞ் செய்யேன் என்று கூறி, கொற்றவை வாயிற் பொன் தொடி தகர்த்து - துர்க்கையின் கோயில் வாயிலில் பொலிவு பெற்ற தன் சங்கவளையலை உடைத்து, கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன் மேல்திசை வாயில் வறியேன் பெயர்கு என - நகரத்துக் கீழ்த்திசைக்கண் வாயிலில் கணவனொடு புக்க யான் மேல்திசையிலுள்ள வாயிலில் தனியேனாய்ச் செல்கின்றேன் என்று சொல்லி; இருத்தல் - அமர்தல், பெயர்தல் - செல்லுதல்; 1"பெருமால் களிற்றுப் பெயர்வோன்" என்பது காண்க. பொன் - பொலிவு. ‘கீழ்த்திசை வாயிற் கணவனோடு புகுந்தேன் மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு' என்றது அவல மிகுதியைப் புலப்படுத்துகின்றது. 184-190. இரவும் பகலும் மயங்கினள் கையற்று உரவு நீர் வையை ஒருகரைக் கொண்டு - இரவு இது பகல் இஃதென்று பகுத்தறியாது செயலற்று மயங்கி ஒலிக்கும் நீர் நிறைந்த வையை யாற்றின் ஒருகரையில் செல்லலுற்று, ஆங்கு அவல என்னாள் அவலித்து இழிதலின் - அப்போது பதறி இறங்கலாற் பள்ளங்கள் என்று பாராள், மிசைய என்னாள் மிசைவைத்து ஏறலின் - தன் கணவனிடத்து உள்ளம் வைத்து ஏறலானே மேடுகள் என்று பார்க்கிலள், கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து - கடலின் நடுவிடத்தைக் கிழித்துக் கிரவுஞ்சம் என்னும் மலையின் நெஞ்சினைப் பிளந்து, ஆங்கு அவுணரைக் கடந்த சுடர் இலை நெடுவேல் - அவ்விடத்தே அசுரரை வென்ற ஒளி விடும் தகட்டு வடிவாய நீண்ட வேலினையுடைய, நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறி - முருகனது குன்றத்து அடிவைத்து நடந்து உயரச் சென்று; அவல, மிசைய பலவின்பாற் பெயர் ; பள்ளமும் மேடுமாய நெறிகள். என்னாள் என்ற இரண்டும் முற்றெச்சம். வயிறு - நடுவிடம்; 1"கடல்வண்ணன் பண்டொருநாட் கடல்வயிறு கலக்கினையே" என்பதூஉம் காண்க. நெடுவேள் குன்ற மென்பதற்கு அரும்பதவுரை யாசிரியர் திருச் செங்கோடு எனவுரைப்பர். அடியார்க்கு நல்லார் இதனை மறுத்து, திருச்செங்குன்று எனவுரைத்தார்; பதிகத்துக் 2'குன்றக் குறவர்' என்பதன் உரை காண்க. அடி வைத்து ஏறி என்றார், அதற்கு முன்பு வருத்தத்தாற் கால் நிலத்துப் பாவாமையால். 191-200. பூத்த வேங்கைப் பொங்கர்க்கீழ் ஓர் தீத்தொழிலாட்டியேன் யான் என்று ஏங்கி - மலர்ந்த கொம்புகளையுடைய வேங்கை மரத்தின் கீழே நின்று யான் ஒப்பற்ற தீவினையை யுடையேன் என்று சொல்லி, எழுநாள் இரட்டி எல்லை சென்ற பின் - பதினான்கு நாளளவு கழிந்த பின்னர், தொழுநாள் இதுவெனத் தோன்ற வாழ்த்தி - தான் கணவனைக் கண்டு தொழுதற்குரிய நாள் இதுவாகுமென்று அவனை மிகவும் வாழ்த்தி, பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி - பெருமை மிக்க கண்ணகியின் பெரும் புகழைச் சொல்லி, வாடா மா மலர் மாரி பெய்து - வாடாத பெரிய பூ மழையைச் சொரிந்து, ஆங்கு அமரர்க்கரசன் தமர் வந்து ஏத்த - இந்திரன் தமராய வானோர் ஆங்கு வந்து துதிக்க, கான் அமர் புரி குழற் கண்ணகி தான் - மணந் தங்கிய புரிந்த கூந்தலையுடைய கண்ணகி, கோ நகர் பிழைத்த கோவலன் தன்னொடு வான ஊர்தி ஏறினள் - மதுரையார் கொலை செய்த தன் கணவனாகிய கோவலனோடு தேவ விமானத்தில் ஏறித் துறக்கம் புக்கனள் என்க. பொங்கர் - மரக்கொம்பு. குன்றத்துக் குறத்தியர் கேட்கத் தீவினையாட்டியேன் யான் என்றாள். ஏங்கி என்பது ஈண்டுச் சொல்லி என்னும் பொருட்டு ; சொல்லி ஏக்கமுற்று எனலுமாம். பதினாலாம் நாட் பகற்பொழுது சென்ற பின் என்பர் அரும்பதவுரை யாசிரியர். பெயர் - புகழ் ; பெயரை மந்திரமாகச் சொல்லி என்றுமாம். நகர், ஆகுபெயர். அமரர்க் கரசன் தமர் என்றமையால் இந்திரனுக்கு விருந்தாயின ரென்பது பெற்றாம். கோவலன் தன்னொடு என்றமையால் அவனும் அவருடன் போந்தமை பெறப்படும். இக் காதையுள் முன் நீலியின் செய்கை கூறிய விடத்தும் "எழு நாளிரட்டி.........வாழ்த்தி" என்னும் இரண்டடியும் வந்துள்ளமை காண்க. அமரர்க்கரசன் தமர் வந்து ஏத்திப் பெய்து ஏத்த எனவும், கண்ணகி தோன்ற வாழ்த்திக் கோவலன்தன்னொடு வானவூர்தி ஏறினள் எனவும் இயையும். மதுராபதி என்னும் தெய்வம் கண்ணகி பால் வந்து தனது வருத்தத்தைத் தெரிவித்துப் பாண்டியனுடைய செங்கோன்மையை விரித்துரைத்துக் கோவலன் கொலையுண்டமைக் கேதுவாகிய பழவினையின் உண்மையைத் தெரிவித்து, `இற்றைக்குப் பதினாலாம் நாள் பகல் சென்றபின் தேவ வடிவிற் கணவனைக் காண்பாய்' என்று கூறிச் செல்ல, கண்ணகி வையைக்கரையின் வழியே சென்று திருச்செங்குன்றென்னும் மலையை அடைந்து வேங்கைமரத்தின்கீழே நின்று பதினாலாம் நாளெல்லை கழிந்து இந்திரன் தமர் வந்து ஏத்தக் கோவலனோடும் வானவூர்தி ஏறிச் சென்றாளென்க. வெண்பாவுரை "தெய்வந் தொழாஅள்.......விருந்து" மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி - இவ் வுலகத்துக் கற்புடை மகளிர்க்கு அழகு செய்வாளாய கண்ணகி, தெய்வமாய் விண்ணக மாதர்க்கு விருந்து - தெய்வமாகி வானின்கண் அரமகளிர்க்கு விருந்தாயினாள், தெய்வந்தொழாஅள் கொழுநன் தொழுவாளைத் தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால் - ஆகலான் வேறு தெய்வத்தை வணங்காளாய்த் தன் கணவனை வணங்குவாளைத் தெய்வமும் வணங்குந் தன்மை உறுதி யுடைத்தாம். விருந்தாயினாள் என விரிக்க. 1"தெய்வந் தொழாஅள் கொழுநற்றொழு தெழுவாள்" என்னும் குறளின் கருத்து இதில் அமைந்துள்ளமை காண்க. ஆல், அசை. கட்டுரை காதை முற்றிற்று. கட்டுரையுரை (முடிகெழு வேந்தர்........முற்றிற்று.) முடிகெழு வேந்தர் மூவருள்ளும் - முடி பொருந்திய சோழ பாண்டிய சேரராகிய மூவேந்தருள்ளும், படை விளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர் - வேற்படை விளங்கும் பெரிய கையையுடைய பாண்டியர் மரபினோருடைய, அறனும் மறனும் ஆற்றலும் - அறமும் ஆண்மையும் திறலும், அவர்தம் பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும் - அவருடைய பழைய பெருமையையுடைய மூதூராகிய மதுரையின் இயல்பு மேம்பட்டு விளங்குதலும், விழவு மலி சிறப்பும் - அப் பதியின்கண் விழாக்கள் நிறைந்த சிறப்பும், விண்ணவர் வரவும் - தேவர் வருகையும், ஒடியா இன்பத்து அவருடைய நாட்டுக் குடியும் கூழின் பெருக்கமும் - கெடாத இன்பத்தையுடைய அவர் நாட்டின் குடிகளும் உணவின் பெருக்கமும், அவர் தம் வையைப் பேர் யாறு வளம் சுரந்து ஊட்டலும் - அவருடைய வையையாகிய பெரிய யாறு வளத்தினைச் சுரந்து உண்பித்தலும், பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும் - காலந் தப்பாத மேகம் புதிய மழையைச் சொரிதலும், ஆரபடி சாத்துவதி என்று இரு விருத்தியும் நேரத் தோன்றும் வரியும் குரவையும் - ஆரபடி சாத்துவதி யென்னும் இரண்டியல்புகளும் முறையே பொருந்தத் தோன்றும் வரி குரவை என்னுங் கூத்துக்களும், என்றிவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் - என்று கூறப்பட்ட இவை அனைத்தும் கூறாதொழிந்த பிற பொருள்களின் அமைப்போடு பொருந்தித் தோன்றும் ஒப்பற்ற முறைமை நிலைபெறலும், வட ஆரியர் படை கடந்து - வடக்கிலுள்ள ஆரிய மன்னர்களின் படையை வென்று, தென் தமிழ்நாடு ஒருங்கு காண - தெற்கிலுள்ள தமிழ்நாடு முழுதுங்காண, புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோடு, குற்றமற்ற கற்பினையுடைய கோப்பெருந் தேவியுடன் அரியணையில் அமர்ந்தவாறே துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோடு, ஒரு பரிசா நோக்கிக் கிடந்த மதுரைக் காண்டம் முற்றிற்று- ஒருவாறாக நோக்கும்படி அமைந்த மதுரைக் காண்டம் என்னும் இத் தொடர்நிலைச் செய்யுளின் இரண்டாம் பகுதி முற்றியது என்க. இளங்கோவடிகள் மூவேந்தரையும் ஒரு பெற்றியே புகழ்வது போன்றே மூன்று காண்டத்தின் இறுதிக் கட்டுரைகளையும் ஒரே முறையில் அமைத்துள்ளார். மூன்றினையும் ஒத்துநோக்கின் ஒரு கட்டுரையிற் காணப்படும் பொருள் பெரும்பாலனவும் ஏனைக் கட்டுரைகளிலும் இருத்தல் புலனாம். மூவரையும் சமனுறக்கொண்ட தன் உட்கோள் புலப்படும்பொருட்டே போலும் இக் காண்டத்தின் துன்ப நிகழ்ச்சிகளைக் கட்டுரையிற் சுட்டாது விடுத்துள்ளார். புகார்க் காண்டத்தின் இறுதிக் கட்டுரைக்கு பொருளெழுதிய இருவரில் அடியார்க்குநல்லாரேயன்றி அரும்பதவுரையாசிரியர் தாமும் பின் இரு காண்டங்களின் கட்டுரைகட்குப் பொருள் குறியாதுவிட்டமை முதலில் காட்டிய முறை பற்றிக் கற்பார் அறிதல் சாலுமென்னும் கருத்தினாற்போலும். அறன் மறன் ஆற்றல் என்பன மழை பிணித்தாண்டமை வடிவே லெறிந்தமை ஆரம் பூண்டமை முதலியவற்றிலும், மூதூர்ப் பண்பு மேம்படுதல் குடி கூழின்பெருக்கம் என்பன ஊர்காண் காதை முதலியவற்றிலும், யாறு வளஞ் சுரத்தல் புறஞ்சேரியிறுத்த காதையிலும், விண்ணவர் வரவு வஞ்சினமாலை முதலிய மூன்று காதையிலும், வரி வேட்டுவவரியிலும், குரவை ஆய்ச்சியர் குரவையிலும் ஒன்றித் தோன்றுவனவாம். ஆரபடி சாத்துவதி என்பன நாடகத்தின் விலக்குறுப்புக்களில் ஒன்றாகிய விருத்தியன் வகை நான்கனுள் இரண்டாம். ஆரபடி பொருள் பொருளாகவும், சாத்துவதி அறம் பொருளாகவும் வருவனவாகலின் அவற்றுடன் பொருந்திய ஆடல்கள் முறையே வேட்டுவ வரியும் ஆய்ச்சியர் குரவையுமாதல் வேண்டும். கட்டுரை காதை முற்றிற்று. மதுரைக் காண்டம் முற்றிற்று. அருஞ்சொல் முதலியவற்றின் அகரவரிசை (எண் பக்கத்தைக் குறிக்கும்) அஃறிணைப் பெயர் உயர்திணை யிடத்து வருதல் - காரரசாளன் 96 அகநகை - இகழ்ச்சி நகை 144 அகமலாமேல் மன்னுதல் 30 அசோதை 139 அடித்தொழிலாட்டி 145 அடுபோர்ச் செழியன் 229 அடை - வெற்றிலை 98 அமரர்க்கரசன் தமர் 270 அயா - தளர்ச்சி 25 அயினி 230 அரங்கு 9,23 அரசுவிழை திரு 82 அரவு 29, 32 அரவு நாண் 38 அரிமுக அம்பி 57,75 அவுணர் 44 அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல் 251 அழல் - கார்த்திகை நாள் 265 அழல் வீடு 268 அறக்களத்தந்தணர் 235 அறவி 54,67,87 அறவையாயர் 240 அறவோர் 2 78,85,88,111 அறவோர் பள்ளி 78,85 அறனென்னும் மடவோய் 187 அறுதொழில் 248,259 அறுவை வீதி 77, 83,107,109 ஆசான் 55,68,69,229 ஆடல் 32,47,79,91,100 ஆடு - வெற்றி 67 ஆட்டனத்தி 222,223 ஆணி - ஆதாரம் 234 ஆண்டலை அடுப்பு 116,135 ஆதிமந்தி 222,223 ஆமுறையாக - ஆவதொரு தகுதியாக 239 ஆம்பல் 177, 231 ஆயர்பாடி 148,163,164,170 ஆய்கொடிக் கவலை 4,15 ஆரஞர் 6,24,56 ஆரபடி 252, 271,272 ஆரம் - ஆத்தி 40 ஆலமர் செல்வன் 248 ஆழி - தேர்க்கால் 214 ஆறெறி பறை 28 இசை 21,41,44,52 இட்டசித்தி 16,17 இடுபொருள் 265 இந்திரர் - தேவர் 158 இயக்கி 24,68,92 இருநிதிக் கிழவன் 63 இருந்தைக்க 202,203 இலவங்கம் 96 இளம்பிறை 231,237, 252 இளி 163,165,172 உத்தரன் 132 உறிக்கா 116,133 உந்தி - ஆற்றிடைக்குறை 222 உயிர்ப்பலி 34 உய்யானம் 98 உரவுநீர் வையை 251 உரிவை - உரி 36 உரைப்பாட்டுமடை 29,40 உலகுதொழு மண்டிலம் 77 உலறுதலை ஓமை 4,15 உழத்தல் - நுகர்தல் 88 உழுந்து 231 உளமலி உவகை 248 உள்வரி வாழ்த்து 167 உறுதி - பயன் 120 எஞ்சலார் - அயலார் 189 எடுத்துக்காட்டு 172 எடுப்ப - எழுப்ப 84 எழுவும் சீப்பும் 134 என்றூழ் 81 ஏடு 34,36,45,56 ஏணி - எல்லை 267 ஏமம் - மயக்கம் 102 ஐஞ்சில் ஓதி 24 ஐயவித்துலாம் 135 ஒப்பனை 27 ஒன்றன் பகுதி 179 ஒன்றுபுரி கொள்கை 248 ஓங்கல் - மரம்; ஆகுபெயர் 72 ஓத்தின் சாலை 230 கஞ்சனார் 168,184,185 கஞ்சன் 49,184 கடகம் 102,172,248 கடல் கடைந்த மாயவன் 176 கடைமணி 205,207,208,213 கட்டுரை - பொருள் பொதிந்த சொல் 254 கணவன் வரக் கல்லுருவம் நீத்தாள் 223 கணிகை 7,23,87,102,111,112 கணிகையர் வாழ்க்கை 7,23,87 கதன் - சீற்றம் 170 கபிலபுரத்தின் 256 கம்பலை - ஒலி 199 கயில் - பிடர் 179 கரணம் - தொழில் 159 கரிபுற அட்டில் 139,147,4,57,75 கருந்தொழில் - கொலைத்தொழில் 157 கருப்பம் 164,169,205,209 கரும்பு 4,15,16 கருவிளை 230,231,236 கலப்பை 85,232 கல்லிடு கூடை 116,135 கல்லுருவம் 219,223 கவுரி 29,39 கவை 12, 56,73,116 கழஞ்சு 82,101,119 கழு 1,7,10,23,28,69,71,92 கள்விலையாட்டி 46 கறவை முறை செய்தோன் 258 கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் 165 கன்னகம் - அகழுங் கருவி 155 கன்னிகாரம் - கோங்கு 17 காமக் கடவுள் 113,125 காயாமலர் மேனி 44 காய்சினம் 203 காய்பொன் உலை 116, 134 காவற்றெய்வம் 234 காவதம் 51,69 காவிதி - வரியிலார் 235 காவியங்கண்ணார் 99 காவுதல் - தோளிற் சுமத்தல் 134 காவெரி யூட்டிய நாள் 232 காழ்- குத்துகோல் 235 கானக் கோழி 28, 36 கானுறை தெய்வம் 2,7 கிணை - மருதப்பறை 72,56,72 கிளை - கிள்ளை 39,102 கீரந்தை மனைவி 247 குடகாற்று 91 குடிஞை 52, 60 குட்டுவன் 259 குணில் - குறுந்தடி 176 குரல் - பூங்கொத்து 94 குருந்தொசித்த மாயவன் 166 குறுமொழிக் கோட்டி 139, 149 குன்றின் விஞ்சையன் 112, 121 கூடம் 216, 241 கூத்துள் படுதல் 44, 165 கூலம் 15, 77, 108, 260 கூலம் எண்வகைத்து 239 கூல வீதி 77,108 கூற்றம் 23,216 கூனி 10, 81, 191, கூன் 5, 61, 132 கேட்டைக்க 187, 192 கேவணம் - கல்லழுத்துங் குழி 154 கை குறைத்த செங்கோல் 257 கைக்கிளை 55, 172 கைத்தூண் வாழ்க்கை 112, 122 கை பெயர் ஊசி 134, 135 கைம்மை கூர் மகளிர் 192 கையறு நெஞ்சம் 54 கைவளை 262 கொடி - ஒழுங்கு 209 கொடும்பாடு 127 கொடுவரி 52, 60 கொட்டம் 37, 46,72 கொய் பூந் தினை 15 கொல்லன் 160, 215 கொழும்புன வரகு 4 கொளு 120, 170 கொள் 31, 59, 136, 264 கொள்கை - தவம் 86 கொற்கை 80, 246 கொற்றம் - அரசியல் 198 கொற்றவை 27, 268 கொன்றச் சிலம்பு கொணர்க 142 கொன்றைக் குழல் 177 கோகுலம் 181 கோத்தொழில் 250 கோப்பெருந்தேவி 137,216 கோல் 83 கௌசிகன் 51, 61 சங்கமன் 245 சங்கம் 77 சங்கரி 32, 48 சண்பகம் 230 சந்தி 8, 59 சமரி 29,39 சாத்து - வணிகர் கூட்டம் 24 சாத்துவதி 252 சாபம் 250 சாயல் - மென்மை 178 சாரணர் 130 சாலினி - தேவராட்டி 33 சாவகநோன்பி - துறவாது விரதங்காப்போர் 146 சிக்கை - இசைநூல் 179 சிலம்பாறு 17 சில்லை - இழிவு 156 சிவிகை 81, 97 சிறுபறை 32, 48 சுட்டு - கருத்து 35 சுண்ணம் - பொடி 210 சுருங்கை வீதி 79, 91 சூலம் 15, 38 சூலி 29 செங்கண் 138 செங்கோடு 269 செங்கோல் தென்னவர் 52, 58 செந்நிலை - சமநிலை 175 செம்பாலை 173 செயிர்ப்பு - வெகுளி 212 செய்யவள் 29, 39 செரு 34, 239 செவ்வழி 4, 174 செழியன் 78, 205 செற்றம் - கறுவு 212 ஞாயில் 135 ஞெகிழம் - சிலம்பு 190 தக்கிணன் 248, 262 தமனிய அடைப்பை 81, 98 தருமஞ் சாற்றுஞ் சாரணர் 115,130 தலைக்கோல் 100,119 தவம் பல 5, 18 தனிக்கோள் நிலைமை 252,271 தாங்கும் - தடுக்கும் 21 தாடி 10, 170, 268 தாதெருமன்றம் 152 தாரகைக் கோவை 52, 59 தாழை 231 தாழ் நீர் 118 திதலை 233 திரணை 230 திருமலி மூதூர் 55 திரையலின் செப்பு 210 திரையல் - வெற்றிலை 149,210 துடியன் 32, 46 துப்பு - கருவி 103 தும்பை 258 துவர் 58,159,268 துறைபடிதல் - நீராடுதல் 188 துறைப்பாட்டுமடை 32 துன்புறுவன நோற்றல் 191 தூக்கு 82,160 தூண்டில் 134 தூபம் 210 தூவுதல் - வழங்குதல் 188 தென்னவன் 1,111,220 தேவகுமரன் 136 தேவந்தி 204 தேவர்கோன் பூணாரம் பூண்டான் 167 தொடக்கு 116,134 தொடியோள் பௌவம் 10, 118 தொழுவிடை 164,172 தோரம் 23,89 நகுலம் 112,121,122 நந்தி 169,229 நலம்புரி கொள்கை - நான்மறையாளன் 22 நவை - துன்பம் 158 நாராயணா 185 நாவாய் 92 நாளணி 56 நான்மாடக் கூடல் 219 நித்தில நகைத்தி 246, 252 நிலந்தரு திரு 111 நிலைகெழு கூடல் 249,264 நிலைக்களம் 267 நிழல் - அருள் 117 நீலி 14,29,245 நுண்பொறி வெள்ளை 164,171 நெடுஞ்செழியன் 211,229 நெடுவேள் குன்றம் 251,269 நெய்தல் 62,92 நெய்ம்முறை 163 பஃறுளியாறு 10 பகடு 84 பசு 45,106,227 படர்க்கைப் பரவல் 167,183,185 படிறு - பொய் 123 படுபொருள் 187,192 பட்டாங்கு - உண்மை 226 பட்டிமை 219,226 பணிமொழி 2,7,65 பண்ணியல் மடந்தையர் 233 பதாகை 76 பதிகம் 221 பத்தி - வரிசை 154 பத்தினிப் பெண்டிர் 115,196 பயறு 108,231 பரதன் 245,266 பரிமுக அம்பி 57,75 பலி பீடிகை 28,37 பவம் - பிறப்பு 17 பவள வாய்ச்சி 29,38 பாகல் - பலா 146 பாடல் 12,100 பாட்டு 27,101 பாட்டுமடை 29,40 பாதக் காப்பினள் 77,87 பாத்தரும் பண்பு 24 பாய்கலைப் பாவை மந்திரம் 24 பாய்தல் - பரத்தல் 192 பார்ப்பார் 61,71,218 பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி 206,211 பிண்டிக் கொழுநிழல் 8 பிள்ளை நகுலம் 112,,122 பிறக்கு 105, 174 பிற்பாடு 57,131 பீடிகைத் தெரு 112,152 பீடு கெழு 37,270 புண்ணிய சரவணம் 1,16 புதல்வனை ஆழியின் மடித்தோன் 207,213 புதை 116,134 புலவர் செந்நா 55,70 புலி 10,28 புலியுரி 50 புன்மை 199 புழுக்கல் - அவரை, துவரை முதலியன 37 புழை 116,134 புள்ளணி கழனி 57,84 புறவுநிறை புக்கோன் 247 பூவைப் புதுமலர் வண்ணன் 139,148 பொங்கர் - பழம்பூ 41 பொச்சாப்பு - மறதி 150 பொதியில் 55,81 பொதிவாய் - கட்டுவாய் 153 பொதுவியல் 82 பொருளுரை 54,96 பொழிலாட்டு 93 பொறை - குன்று 50 பொற்பொறி வெள்ளை 164, 171 பொன்னுறு நறுமேனி 194, 200 போலாது 70 போலும் - ஒப்பில் போலி 19,44 மடை - சோறு 37 மணமகன் 251 மணிமேகலை 100, 267 மண்டிலம் 77,109 மண்ணுடை முடங்கல் 54,64 மதுராபதி 229,243 மதுரைத் தென்றல் 51,55 மதுரைமா தெய்வம் 216 மந்திரக் கணக்கர் 229,235 மந்திரச் சுற்றம் 141,155 மந்திரம் - துயிலுறுக்கும் மந்திரம் 155 மயக்குந் தெய்வம் 2 மயன் 115 மரக்காற் கூத்து 43 மரப்புணை 51,57,75 மருதம் 231 மலைபுரை மாடம் 249 மலை வளைத்தோள் 29,38 வளம் 8,171 மழவிடை 164,170 மறைவிளி 248 மனக்கொளல் 54,65 மனைவளர் முல்லை 55 மாது மதுரை 221 மாடலன் 111,124 மாண - மிக 227 மாதரி 114,146 மாந்தரஞ் சேரல் 248,260 மான்கணம் 52,58 முகமடை - மிடறு 48 முக்குடை 8 முதலை 52 முதுக்குறை நங்கை 116,133 முதுபாலை 201 முத்தி 90,176 முன்னிலைப் பரவல் 43,167 மூவாக்கடம்பு 182 மூவா மருந்து 49 மெய்ப்பை - சட்டை 153 மேரு 46 யவனர் 79 வசந்தமாலை 22, 51 வச்சிரம் 107 யாமம் - இரவு 120 வடமொழி வாசகம் 121 வடவரை 167,182 வடவாரியர் படைகடந்து 252 வடிகயிறு 230,236 வடியாக் கிளவி 54,65 வடுகு 96 வட்டித்தல் - பிரதிக்கினை செய்தல் 227 வம்பப் பரத்தர் 150 வம்பப் பெருந்தெய்வம் 194, 198 வயலூர் 246 வரோத்தமை 5, 118 வழிநாள் - மறுநாள் 22 வளைவிற் பொறி 116, 134 வனசாரிணி 24 வாகை 15 வாங்குதல் - எடுத்தல் 36 வாசுகி 38 வாதுவர் 85, 229 வாரணவாசி 131 வார்த்திகன் புதல்வன் 248, 261 வால் - தூய்மை 86 வால்வளை - சங்கவளை 92 வானவூர்தி 246,270 விஞ்சையன் 112,121 விடுவாய் செய்தல் 147 விரியல் - மாலை 93 விருந்தின் மூரல் 29,38 விரை 18, 206 விருத்தி 252 விலைப்பலி 28, 37 விழி நுதற் குமரி 25 விழுக்கு - நிணம் 37 வெட்சி 27,31 வென்றி மழவிடை 164,171 வேத்தியல் 4,82 வேலன் 257 வேல் 10,265 வேனில் வேந்தன் 81,97 வைகல் 101,185 வைகறை 1,51 வைகறைப் பாணி 56,72 வையை 27,74 வையை நெடுமால் 188 ந.மு.வே.நாட்டார் வாழ்க்கைச் சுவடுகள் பிறப்பு: - நடுக்காவிரி, 12. 3. 1884 திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தந்தை - வீ.முத்துசாமி நாட்டார் தாய் - திருமதி தைலம்மை இளமைக் கல்வி: திண்ணைப்பள்ளி - நடுக்காவிரி தொடக்கப்பள்ளி - 3,4 ஆம் வகுப்புகள் நடுக்காவிரி தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் மதுரைத் தமிழ்ச் சங்கம் 1905 - பிரவேச பண்டிதம் 1906 - பாலபண்டிதம் 1907 - பண்டிதம் ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டியதை மூன்றே ஆண்டுகளில் படித்து முதல் வகுப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற பாராட்டுக்குரியவர். பொற் பதக்கம், தங்கத்தோடா, அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர். ஆசிரியர் பணி 1908 - பிசப் ஈபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. 1909 - தூய மைக்கேல் உயர் நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் 1910-1933 - தமிழ்ப் பேராசிரியர் பணி (22 ஆண்டுகள்) எஸ்.பி.ஜி. கல்லூரி , திருச்சிராப்பள்ளி 1933-1940 - தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் 1940 - சென்னை மாகாண தமிழர் மாநாட்டில் ‘நாவலர்’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டவர். 1941-1944 - மதிப்பியல் முதல்வர் கரந்தைப் புலவர் கல்லூரி தஞ்சாவூர் 28.3.1944 - இவ்வுலக வாழ்வில் இருந்து மறைந்தார். குறிப்பு : நாட்டார் தொடர்பான வரலாற்றுச் சுவடுகளின் விரிவான செய்திகளை பதிப்பாசிரியர் உரையிலும், நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண். 22 லும் பார்க்க) நாவலர் ந.மு.வே நாட்டார் எழுதிய நூல்கள் / உரைகள் நூல்கள் 1915 - வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 1919 - நக்கீரர் 1921 - கபிலர் 1923 - கள்ளர் சரித்திரம் 1926 - கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் 1928 - சோழர் சரித்திரம் உரைகள் 1925 - இன்னாநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, மூதுரை, உலகநீதி, நல்வழி, நன்னெறி திரிகடுகம் - கையெழுத்துப் படியாகக் கிடைத்து முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண் : 20 இல் பார்க்க. 1925 - 1932 - திருவிளையாடற்புராணம் 1940 - சிலப்பதிகாரம் 1942 - மணிமேகலை 1940 - 42 - கட்டுரைத்திரட்டு (இரண்டு தொகுதிகள்) 1944 - அகநானூறு உரைத்திருத்தம் : 1940 - தண்டியலங்காரப் பழைய உரை யாப்பருங்கலக்காரிகை அகத்தியர் தேவாரத்திரட்டு 1930 - பிப்ரவரி 11,12,13,14 ஆகிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளை சார்பாக தொல்காப்பிய ஆராய்ச்சி சொற்பொழிவு. (இந்த சொற்பொழிவு இதுவரை வெளிவராதவை கையெழுத்துப் படியாகக் கிடைத்தது. முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ்உரைகள் தொகுதி எண் - 17 இல் 15-வது கட்டுரையில் பார்க்க .) *** நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் நூல்கள் / கட்டுரைகள் 24 தொகுதிகளாக வெளிவருகின்றன. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் சிலப்பதிகாரம் தொகுதி 1 1) புகார்க் காண்டம் தொகுதி 2 2) மதுரைக் காண்டம் தொகுதி 3 3) வஞ்சிக் காண்டம் மணிமேகலை தொகுதி 4 4) மணிமேகலை 1 தொகுதி 5 5) மணிமேகலை 2 அகநானூறு தொகுதி 6 6) களிற்றியானைநிரை தொகுதி 7 7) மணிமிடை பவளம் தொகுதி 8 8) நித்திலக் கோவை திருவிளையாடற்புராணம் தொகுதி 9 9) மதுரைக் காண்டம்-1 தொகுதி 10 10) மதுரைக் காண்டம்-2 தொகுதி 11 11) மதுரைக் காண்டம்-3 தொகுதி 12 12) கூடற் காண்டம் -1 தொகுதி 13 13) கூடற் காண்டம் -2 தொகுதி 14 14) திருவாலவாய்க்காண்டம் -1 தொகுதி 15 15) திருவாலவாய்க்காண்டம் -2 தொகுதி 16 16) இலக்கியக் கட்டுரைகள் 17) இலக்கணக் கட்டுரைகள் தொகுதி 17 18) சொற்பொழிவுக் கட்டுரைகள் 19) வரலாற்றுக் கட்டுரைகள் தொகுதி 18 20) வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 21) சோழர் சரித்திரம் 22) கள்ளர் சரித்திரம் தொகுதி 19 23) நக்கீரர் 24) கபிலர் 25) அகத்தியர் 26) இளம்பூரணம் நீதிநூல்கள் + பதிணென்கீழ்க் கணக்கு நூல்கள் தொகுதி 20 27) ஆத்திசூடி 28) கொன்றைவேந்தன் 29) மூதுரை 30) நன்னெறி 31) நல்வழி 32) உலகநீதி 33) நறுந்தொகை 34) இன்னா நாற்பது 35) களவழி நாற்பது 36) கார்நாற்பது 37) திரிகடுகம் - முதன் முதலில் வெளிவருகிறது. தாகுதி 21 38) நாட்டார் நாட் குறிப்பு -1 - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 22 39) நாட்டார் நாட் குறிப்பு -2 மற்றும் வாழ்க்கை வரலாறு - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 23 40) கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 24 41) நாட்டார் புலமையும் பண்பும் குறிப்புகள் 1. மதுரைக்கா, 40-1 2. கலித்தொகை, 93 1. கலி. 104 2. புறநானூறு 9 :10-11 1. திவா. 7-வது. 2. பரஞ். திருவிளை. இந்திரன்முடி. 53 3. திருவால. திருவிளை. இந்திரன்முடி;48 4. சிலப். 23; 50-1. 1. பரி. 13 ; 27-8. 1. பரி. 13 ; 7-12. 1. பெரியபு. திருக்குறிப்பு; 15. 1. குறள். 358. 1. அறநெறி. 59. 2. தொல் எழுத். 425. 1. சிலப். 11: 144. 1. அகம் : 186. 2. அகம் : 193. 1. தொல், சொல், 88. 2. தொல், பொருள், 563. 1. குறுந், 338. 1. தொல், புறத். 5. 1. தொல், பொருள். 72. 1. தொல், பொரு. 59. 2. புறப்பொ-வெ, 20. 1. தொல், பொருள். புறத். 3. 2. தொல், உரி. 22. 1. புறம். 43 2 திருமுரு. 107. 1. தொல். பொருள். 58. 2. கலி, 15, 3. புறம், 165. 1. குறள். 33; 3. 2. மதுரைக். 40-3. 1. பெரும்பாண். 42-3. 1. திருமுரு. 37. 2. நற்றிணை. 9. 1. சீவக. 1508. 2. மணிமே. 7 . 133. 3. தொல். எழுத்து. 157. 1. திருக்கோ. 400. 1. பெருங், 1, 33 : 73. 1 வி. பாரதம். வாசுதேவனை. 6. 2 சிலப். 15. 7-8 ; 115-6. 1. சிலப். 13: 191-2. 2. மணி. 7: 125 3. மணி. 1: 54. 1 சிலப், 10 : 62.3. 1 மணி, 14 : 89. 2 மணி, 26 ; 32. 1 மணி, 16 : 80-1. 1 சிலப், 14 : 24-2. 2 சிலப், 15 : 126-8. 1 கலி, 26. 2 அகம், 36. 3 பரி, 22; 45. 1 தொல், சொல். 59. 1 பரி 11. 2 - 3. 1 சீவக, 2652. 1 கலி, 62. 1. மணி: 18: 31-6. 2 சிலப் 3 : 114-20. 1 சிலப் 3 : 133-4. 2 சிலப், 3 : 162-3. 1. சிலப், 22 : 138-9. 2. பெருங். 1. 35 : 84-6. 1 கல்லாடம், 99. 1. பரஞ். திருவிளை. மாணிக்கம். 35. 2. திருவள்ளுவமாலை. 36. 1. சிலப். 5 : 16-7. 1 சிலப். 8 : 1. 2. பரிபாடல். செய். 2-57. 1 சீவக. 135. 2. மணி, 14 : 30-1. 1. சீவக. 983. 1 சிலப். 5 : 128-32. 1. புறம். 40. 2. கனா நூல். 15. 3. கனா நூல். 3. 1. சிலப். 1:34 1 நாலடி. 368. 1. அகம் 18 2 மணி, 28; 135. 3 சிலப். 10;24-5. 1. நாலடி. கடவுள் வாழ்த்து. 2. மணி. 3;36-7. 3 சிலப், 10 ; 163-7. 1 சிலப். 13 ; 1. 1 சீவக. 102. 1 கலி. 104 1 மணி, 21: 29. 1 தனிச்செய்யுள். 1 பொருந. 242. 1 அகம், 198. 1. தொல். சொல் :228 2 புறம், 182. 1. மதுரைக், 639-42. 1 சிலப், 16 : 40. 1. வளையாபதி. 2 கலி. 104. 3. கலி. 101. 4. கலி. 105. 5. கலி. 104. 1 சீவக. 482. 1 கலி. 106. 1 மணி. 19 : 65-6. 1 சிலப், 25: 1-2. 2 பதிற்று. 11, 1. புறம். 246. 1 சிலப், 28. 207-8. 2 மணி. 22: 208-9. 1 சிலப், 16:4. 2 குறள். 196 3 குறள், 555. 4 சிலப். 20:81. 1 சூளா. மந்திரசாலை, 26. 2 சிலப் 15: 143-4. 1 தொல். புறத்திணை. 24. 1. மணி. பதிகம். 76. 1 சீவக. 327. 1 சிலப். 9: 45. 1 தொல். எழுத்து. 234. 1 சிலப். 12 : 36. 1 புறம். 226. 1 புறம். 43 2 பழமொழி, 93 1 சிலப். 20 : 50. 2 சிலப். 19 : 7-8. 1 நான்மணிக். 83. 2 மூதுரை, 27. 1 சிலப். 16: 19-20. 2 குறள். 319. 1 அகம், 376. 2 அகம், 396. 3 அகம், 222. 1 குறள். 102. 1 முருகு. 160. 1 சிலப். 28: 222. 1 தொல். பொருளதி. 626. 2 மதுரை. 61. 3 புறம். 8. 1 தொல், பொருளதி. 638. 2 தொல், பொருளதி 633. 3 குறள், 1034. 4 குறள். 1032. 1 சிலப். 21: 53-5. 2 சிலப். 15: 120-1. 3. நற். 337. 1 குறள். 81. 1 சிலப். 14 : 167. 2 பெருங். 1-35 : 843. 1 மணி. 2; 43. 2. மணி. 3 : 111 1. சிலப். 16-9. 1 பரிபா. திரட்டு. 7: 8-11. 2 புறம். 71. 1. புறப். வெண்பா. 12 : 5. 2. மணி. 10 ; 22. 3. மணி. 18: 165. 1. சிலப். 11:26. 2. குறள். 546. 3. பழமொழி. 76. 4. தொல், கள ; 1. (இளம்) 1 புறம், 1. 2 சிலப். 29. ஊசல். 3 சிலப். 20 : 51-5. 1. பதிற். 3-ம் பத்து : பதி 2 சிலப். 28 ; 37-8. 1. பு.வெ, வாகை. 9. 2. பதிற். 20. 1. சிலப் 25: 1-3;28 : 153-6. 2. குறள். 355. உரை. 1 குறள். 756. 1 சீவக. 306. 2. புறம். 228. 1. குறள் 586. 1. புறம் : 35 2. மணி 26 : 5-34. 1. சிலப். 27:16. 2. சிலப். ஆய்ச், முன்னிலைப் பரவல். 1:2. 3. சிலப். பதிகம்: 3. 1. குறள். 55.