நூற்றாண்டு நினைவு வெளியீடு புலவர் குழந்தை படைப்புகள் - 6 தமிழக வரலாறு அனைத்து நூல்களும் ஒருசேரத் தொகுத்து, பொருள் வழிப்பிரித்து, கால வரிசையில் ஒரே வீச்சில் வெளிவருகின்றன. ஆசிரியர் புலவர் குழந்தை நூற்பெயர் : புலவர் குழந்தை படைப்புகள் - 6 ஆசிரியர் : புலவர் குழந்தை பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 272 = 288 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 180/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். திராவிட இயக்கச் சான்றோர்கள் வரிசையில் முன்னவர். 1906இல் தோன்றி 1973இல் மறைந்தார். 68 ஆண்டுகள் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர். பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களால் பாராட்டப்பட்டவர். தமிழர்கள் ஆரிய சூழ்ச்சியால் பட்ட அவலங்களை எண்ணியெண்ணி நெஞ்சம் குமுறியவர். தம் நெஞ்சத்து உணர்வுகளை எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு பதிவுகளாக எழுதி வைத்துச் சென்றவர். தமிழ் இன எழுச்சி வரலாற்றில் அளப்பரும் தொண்டாற்றியவர். இவர் எழுதிய நூல்கள் 29. இந்நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து, பொருள் வழிப் பிரித்து, கால வரிசைப்படுத்தி 1 முதல் 15 படைப்புகளாக ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். பல்வேறு அணிகலன்கள் அடங்கிய முத்து மாலையாகத் தந்துள்ளோம். இவர் நூல்கள் அனைத்தும் தமிழ்மொழி இன நாட்டின் மேன்மைக்கும், வாழ்வுக்கும், வளத்துக்கும் வித்திடுபவை. குறிப்பாக இராவண காவியம் படைப்பு திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல். ஆரிய எதிர்ப்பு உணர்வைக் கட்டியமைத்த இன எழுச்சிக் காவியம். தமிழ் மண்ணில் தன்மானக் கொள்கைகள் நிலைத்து நிற்பதற்கு செயற்கரிய செயல்களைத் தமிழ் இளைஞர்கள் செய்வதற்கு முன் வரவேண்டும் எனும் இன உணர்வோடு எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். இப்படைப்புகள் வெளிவரப் பல்லாற்றானும் துணை நின்ற தமிழ்ப்பெருமக்களுக்கும், இந்நூல்களுக்கு அறிமுகவுரை தந்துதவிய பெரும்புலவர் இரா. வடிவேலன் அவர்களுக்கும், எம் பதிப்பக ஊழியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன் கொள்ளும் வகையில் பிழையற்ற பதிப்பக வெளிவருகின்றது. வாங்கிப் பயனடையுங்கள். (இராவண காவியம் நூலுக்கு மிகச்சிறந்த தெளிவுரை எழுதப்பட்டு வருவதால் இப்படைப்பு வரிசையில் சேர்க்க முடியவில்லை. விரைவில் வெளிவரும்.) கோ. இளவழகன் முன்னுரை ‘இஃது எங்கள் ஊர்ப் பழக்கம், இஃது எங்கள் நாட்டு வழக்கம்’ என, ஒவ்வொருவரும் தாம் பிறந்து வளர்ந்த தம் ஊரையும் நாட்டையும் ‘எங்கள் ஊர்’ ‘எங்கள் நாடு’ என அவ்வளவு உரிமையோடு பெருமையாகக் கூறிக் கொள்கின்றனர். இது மக்களின் இயல்பு. இது மக்கட்பண்பாட்டின் ஒரு கூறு எனலாம். ஆடு, மாடு, பூனை நாய் முதலிய விலங்குகளும், புறா, கோழி முதலிய பறவை களுங்கூடத் தாம் பிறந்து வளர்ந்த இடத்தின்மீது மிகுந்த பற்றுடையனவாக உள்ளன. அவற்றை வேறு இடத்தில் கொண்டுபோய் விட்டால் தம் சொந்த இடத்திற்கு வந்து விடுதல், பிறந்த இடத்துப் பற்றுதலே யாகும். என்னே பிறந்த இடத்தின் பெருமை! பறவை விலங்கு முதலிய ஐயறி வுயிர்களே இங்ஙன மாயின், ஆற்றிவுடைய மக்கள் தம் சொந்த ஊரின் மீதும், சொந்த நாட்டின் மீதும் பற்றுக் கொள்வதில் வியப்பென்னை? ‘சொந்த ஊர்ப் பற்றுத் துறவிக்கும் உண்டு’ என்பது, பொருளமைந்த பொன்மொழியே யாகும். ஊரூராக இரந்துண்டு திரியும் இரவலரும் தாம் பிறந்த ஊரைப்பற்றி, ‘அஃது எங்களூர்’ எனப் பெருமையாகக் கூறிக் கொள்வதை இன்றுங் காணலாம். அத்தகைய பெருமை யுடையது பிறந்த இடத்துப் பற்று! பேரப்பிள்ளைகளுக்கு மணமுடித்த ஒரு பேரிளம் பெண்கூடத் தன் தாய் வீட்டுக்குப் போவதென்றால் எவ்வளவு விருப்பமும் மகிழ்ச்சியுங் கொள்கிறாள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? ஏன், அது அவள் சொந்த ஊர் அல்லவா? “ பெற்ற தாயும் பிறந்தபொன் னாடும் நற்றவ வானினும் நனிசிறந் தனவே” எனப் பெற்று அருமைத் தாயோ டொப்ப, பிறந்து வளர்ந்த தாய்நாட்டை உயர்த்துப் பெருமைப்படக் கூறுதல் நாட்டுப் பற்றின், தூண்டுதலேயாகும். தாய் நாட்டுக்காக உயிரைக் கொடுத்தல்; உயிரைக் கொடுத்துத் தாய் நாட்டைக் காத்தல். அதன் மீதுள்ள அளவிறந்த பற்றுதலின் காரணமேயாமன்றோ? ஒவ்வொரு நாட்டினரும் தமது நாட்டின் பழமை, பெருமை, வளமை, மேன்மை முதலியன பற்றிப் பெருமையாகப் கூறிக் கொள்வர். அத்தகைய சிறப்புடைய நாடு தங்கள் நாடு எனக் கூறிக் கொள்வது, அவர் தம் நாட்டுப் பற்றின் காரணமாக எழுந்த ஆவலே யாகும். ஒரு நாட்டு மக்களின் அத்தகைய ஆவலே அந்நாட்டின் முன்னேற்றத்திற்கும், அந்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும் உயர்வாழ்விற்கும் காரணமாகும் எனலாம். பழமை பெருமை முதலிய அத்தகைய சிறப்போடு, அந்நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்வு, கல்விச் சிறப்பு, இலக்கிய மேம்பாடு, அரசியல் முதலியன அந்நாட்டின் வரலாறாகும். உலக நாடுகள் ஒவ்வொன்றுக்கும் நாட்டு வரலாறு உண்டு. தம் தாய் நாட்டின் வரலாற்றினை அறிந்து கொள்ளுதல், ஒரு நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் நீங்காக் கடமையுளொன்றாகும். ஆங்கிலேயர் இந்நாட்டின் ஆட்சியை மேற்கொண்ட பின்னரே இந்திய நாட்டின் வரலாறு ஒருவாறு எழுதப்பட்டது. அதில் பெரும்பான்மையும் வட நாட்டின் அரசியல் மாற்றமே யாகும். அவ்வரலாற்றில் ஆங்கிலேயர் இந்நாட்டைக் கைப்பற்றிய பகுதியே தென்னாட்டின் வரலாறாகும் ஆங்கில ஆட்சிக் காலத்தே தமிழ் நாட்டின் வரலாற்றைத் தமிழ் மாணவர்கள் படித்தறிந் தின்புறும் வாய்ப்பில்லாமல் இருந்து வந்தனர்; இப்போது தான் பேருக்காக என்னவோ தமிழ் நாட்டு வரலாறு படித்து வருகின்றனர். ஆனால், கல்வி பயிலும் தமிழ் மாணவர்கள் எல்லாரும் தமிழ் நாட்டு வரலாற்றை ஓரளவாவது படித்தறியும் வாய்ப்பு இன்னும் ஏற்படவில்லை. தனியாக நாட்டு வரலாறு எழுதி வைக்கும் பழக்கம் பழந்தமிழரிடை இல்லாமையால், பழந்தமிழக வரலாற்று நூல் ஒன்றும் தமிழில இல்லை. வெளிநாட்டு யாத்திரிகர் எழுதி வைத்த சில குறிப்புகளைத் தவிர ஒழுங்கான தமிழ்நாட்டு வரலாற்றுக் குறிப்புக்கள் எவையும் இல்லை. இப்போது தான் சங்க இலக்கியங்கள், பிற தமிழ் நூல்கள், புதைபொருட் கண்டெடுப்புகள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள் முதலிய வற்றைத் துணையாகக் கொண்டு, தமிழறிஞர் பெருமுயற்சி செய்து தமிழ் நாட்டு வரலாற்றினை ஒருவாறு எழுதியுள்ளார்கள். அது பாண்டியர் வரலாறு, சோழர் வரலாறு, சேரர் வரலாறு, பல்லவர் வரலாறு எனத் தமிழ் நாட்டை ஆண்ட அரசர்கள் பெயரால் எழுதப்பட்டுள்ளது. தமிழக வரலாறு என்ற பெயரில் இரண்டொரு நூல் வெளிவந்துள்ளன. எனினும், முடிந்த முடிவான தமிழ் நாட்டு வரலாறு எழுதப் படவில்லை. தமிழக வரலாறு என்னும் இந்நூல் தமிழக வரலாற்றுக் காலத்தை - சங்ககாலம், மருண்ட காலம், முற்காலம் இடைக்காலம், பிற்காலம், ஆயலாட்சிக்காலம் என ஆறு பகுதியாகப் பகுத்து, ஒவ்வொரு பகுதியையும் அப்பகுதிக்குரிய அரசர்களின் ஆட்சிக் காலத்திற் கேற்றவாறு உட்பாகுபாடு செய்து, அவ்வுட்பகுதியின் முதலில், அப்பகுதிக்குரிய அரசர்களை அன்னார் ஆட்சியாண்டுடன் நிறுத்தி, அவர் தம் வரலாறு கூறப்பட்டுள்ளது. இத்துடன் கொங்கு நாட்டு வரலாறும் ஒழுங்காக எழுதப்பட்டுள்ளது. இந்நூல் தமிழ் மக்களுக்கும், குறிப்பாகக் கல்லூரி மாணவர்கட்குத் தமிழக வரலாற்றினை அறிந்தின்புற ஏற்ற கருவியாகும் என நம்புகின்றனன். பவானி அன்புள்ள 6.3.68 குழந்தை நூற்பெயர் விளக்கம் புறம் - புறநானூறு அகம் - அகநானூறு நற் - நற்றிணை குறுந் - குறுந்தொகை பதிற் - பதிற்றுப்பத்து முருகு - திருமுருகாற்றுப்படை மதுரைக் - மதுரைக்காஞ்சி பட்டி - பட்டினப்பாலை பொருந - பொருநராற்றுப்படை சிலப் - சிலப்பதிகாரம் மணிமே - மணிமேகலை தொல் - தொல்காப்பியம் பெரிய - பெரிய புராணம் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை அவர்கள் கொங்கு நாட்டில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஓலவலசு’ என்னும் சிற்றூரில், பண்ணையக்காரர் என்னும் பழங்குடியில், முத்துசாமிக் கவுண்டர் - சின்னம்மையாருக்கு 1-7-1906இல் பிறந்தார். இவர்தம் பெற்றோருக்கு ஒரே மகனாக வளர்ந்தார். தாம் பிறந்த சிற்றூரில் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார்; தொடர்ந்து படிக்காமல் இடையிடையே விட்டு விட்டுப் படித்தார். மொத்தத்தில் எட்டு மாதங்களே திண்ணைப் பள்ளியில் பயின்றார். கருவிலே திருவுடையவராகிய இவர் பத்தாம் ஆண்டில் இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். யாரேனும் ஒருவர் ஒரு பாட்டைப் பாடக் கேட்டால் உடனே இவர் அப்பாட்டின் ஓசையில் புதுப்பாட்டு ஒன்றினைப் பாடுவார். எப்போதும் ஏதேனும் ஒருபாட்டை எழுதிக் கொண்டே இருப்பார். பாட்டு எழுதுவது இவருக்குக் கைவந்த கலையாக அமைந்து விட்டது. இவர் காலத்தில் இவர் வாழ்ந்த பகுதியில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. ஆகவே தானாகவே முயன்று படித்துக் கவிபாடும் திறம் பெற்றிருந்தார். இவர் முதன் முதலில் இசைப்பாடல்களைப் பாடினார். இவர்தம் கல்லாமல் பாடும் கவித் திறனையும், பாடல்களின் சிறப்பினையும் கண்டு வியந்த அறிஞர்கள் சிலர், தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிக்குமாறு தூண்டினர்; ஊக்குவித்தனர். தாம் பிறந்த ஓலவலசிலோ, அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலோ தமிழ்ப் புலவர்கள் எவரும் அக்காலத்தில் இல்லை. ஆகவே இவர் ஆசிரியர் துணையின்றித் தாமாகவே முயன்று இலக்கிய இலக்கணங்களைப் படித்துத் தமிழில் சிறந்த புலமை பெற்றார். மேலும் இவர் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே படித்து 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித் தேர்வராகத் தேர்வு எழுதிப் புலவர் பட்டயம் பெற்றார். இவர் பவானியில் மாவட்டக் கழகப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். 1940வரை தமிழாசிரியராகத் தொண்டாற்றினார். 1941 முதல் 1962ஆம் ஆண்டுவரை தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மாணவர்கள் வியந்து பாராட்டும்வகையில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியர் பணியினின்று ஓய்வு பெற்ற பின்பும் எழுத்துப் பணியினின்று ஓய்வு பெறவில்லை. வாழ்நாள் முழுமையும் தமிழுக்காகத் தொண்டாற்றினார்; பல நூல்களைப் படைத்தார்; தமது கவிதைகள் வாயிலாகச் சமுதாய உணர்வை - பகுத்தறிவை மக்களிடையே பரப்பினார். இவருக்கு முன் ஓலவலசில் படித்தவர் எவருமில்லை. அவ்வூரில் உள்ளவர்களுக்குக் கையொப்பம் இடவும் தெரியாது. இளமைப் பருவத்திலேயே பொதுத் தொண்டில் - சமுகாயத் தொண்டில் ஆர்வமுடையவராக இருந்தார். தாமாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தம் ஊரிலிருந்த தம்மையொத்த அகவையுடைய இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்தார். அவர்கள் மூலமாகப் பெரியவர்களுக்குக் கையொப்பம் போடப் பயிற்சியளிக்கச் செய்தார்; கை நாட்டு போடுவதை அறவே ஒழித்தார். அக்காலத்தில் இவரைவிட மூத்தவர் பலர் இவரிடம் கல்வி கற்றனர். ஓலவலசில் கல்லாமை இருளைப் போக்கினார். வேளாளஇன மக்களிடையே இருந்த பலபிரிவினரையும் ஒன்று சேர்ப்பதற்காகவும், அவ்வின இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்காகவும் 1946 முதல் 1950வரை ‘வேளாளன்’ என்னும் திங்களிதழை நடத்தினார். அவ்விதழில் இவர் எழுதிய கட்டுரைகள் அவ்வின இளைஞர்களிடையே புத்துணர்ச்சியை வளர்த்தது. விதவை மணம், கலப்புத்திருமணம், சீர்த்திருத்த மணம் முதலியன செய்யவும் அம்மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். வேளாள சமூகத் தலைவரான திரு. வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் தலைமையில், தகடூர் (தருமபுரி) மாவட்டத்திலுள்ள அரூரில் வேளாள மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் புலவர் குழந்தை அவர்கள் ‘விதவை மணம்’ தீர்மானங் கொண்டு வந்தார்; ஒருமனமாக நிறைவேறச் செய்தார். அதன்படி நூற்றுக்கணக்கான விதவை மணங்களைச் செய்து வைத்தார். இச்செயல்கள் இவர்தம் சமூகத் தொண்டிற்குச் சிறந்த சான்றுகளாகும். இவர், யாப்பிலக்கணம் படிப்பதற்கு முன்னே 1918இல் ‘கன்னியம்மன் சிந்து’ என்னும் கவிதை நூலை வெளியிட்டார். இவர் பாடிய அச்சாகாத பாடல்களும் நூல்களும் பல உள்ளன; சில நூல்கள் அச்சாகி வெளியிடப்பட்டன. யாப்பிலக்கணம் கற்பதற்கு முன்பு பாடிய பாடல்கள் யாப்பிலக்கணப்படி அமைந்துள்ளன. இவர் இதுவரை எழுதியுள்ள நூல்கள் : இராவண காவியம் உள்படச் செய்யுள் நூல்கள்-7, உரைநூல்கள் - 3, இலக்கண நூல்கள் -3, உரைநடை நூல்கள் -16 ஆகமொத்தம் 29 நூல்கள் படைத்துள்ளார். தீரன் சின்னமலை நாடகம் இன்னும் அச்சாகவில்லை. ‘விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர்கம்பன்’ என இதுவரையில் போற்றப்பட்டு வரும் புகழுரைக்கு ஈடாகப் புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியம் பாடிப் புகழ்பெற்றார். ‘காமஞ்சரி’ என்னும் செய்யுள் நாடக நூல், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களின் மனோன்மணீயம் என்னும் நூலுக்குப் பிறகு எழுதப்பட்ட சிறந்த நாடக நூலாகும். ‘நெருஞ்சிப் பழம்’ என்னும் நூல் தமிழில் இதுவரை வெளிவராத கற்பனைக் கருவூலமான காதல் கதையாகும். புலவர் குழந்தை அவர்கள் பெருங்கவிஞர் மட்டுமல்லர். சிறந்த எழுத்தாளர்; கேட்போர் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசும் பெரும் பேச்சாளர். இவருடைய எழுத்துகள் உறுதியும் அஞ்சாமையும் ஆய்வும் செறிந்த புரட்சிக் கனல் தெறிக்கும் இயல்புடையவை. இவருடைய செய்யுள் நடையும் உரைநடையும் எளிய இனிய தனித்தமிழில் அமைந்தவை. இவர் படைத்த நூல்களெல்லாம் தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கம் தரும் வகையில் அமைந்துள்ளன. தந்தை பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இவர் அவ்வியக்கத்தில் சேர்ந்தார்; பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். அன்று முதல் சுயமரியாதை இயக்கம் அதன் மறு பதிப்பான திராவிடர் கழகம், அதன் மறுமலர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுள் இணைந்து தொண்டாற்றியவர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் செய்யாதவர். பள்ளித் தமிழாசிரியராக இருந்துகொண்டே, அத்தொழிலுக்குச் சிறிதும் இடையூறு இல்லாமல், ‘பெரியார் சீடர்’, ‘கருப்புச் சட்டைக்காரர்’ என்று பொது மக்கள் கூறும்படி கட்சித் தொண்டாற்றியவர். இவரது சுயமரியாதை உணர்ச்சிப் பிழம்பே இராவண காவியம் படைக்கத் தூண்டியது; இவருக்குப் புகழைச் சேர்த்தது. 1948இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திருக்குறளுக்குப் பகுத்தறிவிற்கு ஏற்ப உரை எழுதுவதற்குத் தந்தை பெரியார், நாவலர் சோமசுந்தரபாரதியார் தலைமையில் ஐவர் கொண்ட குழுவை அமைத்தார். அக்குழுவில் புலவர் குழந்தையும் ஒருவர். இவரே தனிஒருவராக இருந்து திருக்குறளுக்கு உரை எழுதி ‘திருக்குறள்-குழந்தையுரை’ என்று வெளியிட்டார். அவ்வுரையை 28 நாட்களில் எழுதி முடித்த பெருமைக்குரியர். அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோட்டில் ‘விடுதலை’ ஆசிரியராக இருந்தபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்ட இவர்தம் இராவண காவியத்திற்கு, தமிழக அரசால், தமிழ் வாழத் தாம் வாழும் தமிழவேள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் 17-5-1971இல் தடை நீக்கப்பட்டது. அதைக்கண்டு தமிழகமே அகமிக மகிழ்ந்தது; தமிழவேள் கலைஞரை உளமார வாழ்த்தியது. புலவர் குழந்தை ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கொண்டவர். இவர் ஒரு புரட்சிப் புலவரே எனினும் அமைதியும் அடக்கமும் உடையவர்; ஆடம்பரமின்றி எளிய வாழ்வு வாழ்ந்தவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடமை தவறாதவர்; எதிர்க் கட்சி யானாலும், மாற்றுக் கருத்து உடையவராலும் நன்கு மதிக்கத் தக்கவர். புலவர் குழந்தை அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார். கல்வியறிவு பெற வாய்ப்பில்லாதவராயினும் பொது அறிவு நிரம்பப் பெற்றவர்; தன்மானக் கொள்கையுடையவர்; தம் கணவரின் கொள்கைக்கேற்ப இல்லறத்தை இனிது நடத்தியவர். இவ்விணையருக்குச் சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண்மக்கள் உள்ளனர். தமிழுக்குத் தொண்டு செய்து வந்த புலவர் பெருந்தகை தமது 68ஆம் அகவையில் 24-9-1973இல் இயற்கை அடைந்தார். மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் புலவர் குழந்தையிடம் அன்பும் மதிப்பும் உடையவர். அவர் மறைந்த பிறகு, அவர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நூல்கள் 8-7-2006 அன்று அரசுடைமை ஆக்கப்பட்டதாக அறிவித்தார். குழந்தை அவர்களின் மகள்கள் இருவருக்கும் தலா ரூ.5 இலட்சம் பரிவுத் தொகை வழங்கினார். பொருளடக்கம் தமிழக வரலாறு முன்னுரை iii நூற்பெயர் விளக்கம் vi புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு vii பதிப்புரை xi சங்ககாலம் 1 - 44 1. கி.மு. மூன்றா நூற்றாண்டினர் மோரியர் படையெடுப்பு 2. கி.மு. இரண்டா நூற்றாண்டினர் பாடினோரும் பாடப்பட்டோரும் 3. கி. மு. முதல் நூற்றாண்டினர் 4. கி.பி. 1 முதல் 150 வரை இருந்தவர் 5. கி.பி. 115 முதல் 235 வரை இருந்தவர் மருண்ட காலம் 45 - 66 1. சமயப் படையெடுப்பு 2. தமிழர் வீழ்ச்சி 1. முற்காலப் பல்லவர் - 250-340 2. இடைக்காலப் பல்லவர் - 340-575 கடம்பர், கங்கர், பல்லவர் 3. தமிழர் எழுச்சி முற்காலம் 67 - 95 1. பாண்டியர்-பல்லவர்-575-710 2. தேவார மூவர் 3. பாண்டியர்-பல்லவர்-710-900 இடைக்காலம் 96 - 119 1. சோழர் - பாண்டியர் - 1070 - 1218 2. சோழர்-சாளுக்கியர்-985-1070. பிற்காலம் 120 - 147 1. சோழர்-பாண்டியர்-1070-1218 2. பாண்டியர் - சோழர் - 1216 - 1310 அயலாட்சிக் காலம் 142 - 221 1. முகமதியப் பேரரசு 2. தென்னாட்டுப் பேரரசுகள் 1. யாதவப் பேரரசு 1185 - 1310 2. காகதீயப் பேரரசு 1158 - 1322 3. ஒய்சளப் பேரரசு 1047 - 1346 4. காம்பிலியரசு 3. முகமதியர் படையெடுப்பு 4. மதுரையில் முகமதியராட்சி 1333-1378 5. விடுதலை இயக்கம் 6. பாமினிப் பேரரசு 1347 - 1518 7. ஐந்து முகமதிய அரசு 1490 - 1690 8. வெற்றிநகர்ப் பேரரசு 1336 - 1647 1. சங்கமரபு 1336 - 1485 குமார கம்பண்ணன் படையெடுப்பு 2. சாளுவ மரபு - 1486 - 1503 உம்மத்தூர்த் தலைவர்கள் 3. துளுவமரபு 1505 - 1542 தமிழகத்தில் நாயக்கராட்சி 1. மதுரை நாயக்கா - 1529 - 1736 2. தஞ்சை, செஞ்சி, வேலூர், இக்கேரிநாயக்கர் மதுரை மதுரை நாய்க்கர் - தொடர்ச்சி 3. தஞ்சை மராட்டியர் 1675 வெற்றிநகர்ப் பேரரசுத் தொடர்ச்சி 4. அரவீடு மரபு - 1544 - 1647 9. மைசூர் மன்னர் 1788 - 1868 கொங்கு நாட்டு வரலாறு 222 - 272 1. கங்க மன்னர் 1. தலைக்காட்டுக் கங்கர் 2. கோலார்க் கங்கர் 2. கொங்குச் சோழர் 1004 - 1303 3. கொங்குப் பாண்டியர்-1265-1304 4. கொங்கு நாடும் சேரரும் தமிழக வரலாறு (1968) தமிழக வரலாறு 1. சங்ககாலம் வாழ்வாங்கு வாழும் மக்கள் வாழ்க்கை முறையும், அத்தக அமைந்த ஆட்சிமுறையும் நாகரிகம் எனப்படும். அந்நாகரிக நல்வாழ்வே வரலாறு என்பது. வரலாற்றறிஞர்கள், ‘வரலாற்றுக் காலம்’ என ஒரு காலவரையறை செய்துள்ளனர். தமிழர், வரலாறு, அக்கால வரையறைக்குட்படாத அத்தகு பழைமையுடையதாகும். (தமிழர் வரலாற்றுக் காலத்தை -பழங்காலம், சங்ககாலம், பிற்காலம் என முக்கூறு பாடுடைய தாகக் கொள்ளலாம். இவற்றுள், பழங்காலம் என்பது, வரலாற்றுக் கப்பாற்பட்ட தொன்றாகும்.’ தமிழகத்தின் பொற்காலம் சங்ககாலமேயாகும் முடியுடை மூவேந்தராட்சியின் மாட்சியால் தனிச் சிறப்புற்று விளங்கிய சங்க காலத் தமிழகத்தின் அரசியல் வரலாற்றினை அப்படியே அறிந்து இன்புறும் பேறு நமக்குக் கிடைக்கவில்லை. எனினும், ஆராய்ச்சித் திறன் மிக்க அறிஞர் பெருமக்கள், புறநானூறு முதலிய சங்க இலக்கியங்களின் துணைகொண்டு, பலவாறு முயன்று, சங்ககால அரசியல் வரலாற்றினை ஒருவாறு ஒழுங்கு செய்துள்ளார்கள். அன்னார்க்குத் தமிழுலகம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளதாகும். சங்ககாலம் என்பது மிகப் பரந்துபட்ட கால எல்லை யினையுடையதொன்றாகும். அதன் இறுதிக்காலம், கி.பி. மூன்றா நூற்றாண்டென்பது, வரலாற்றுப் பேரறிஞர்களின் ஒரு மனப் பட்ட முடிந்த முடிபாகும். சங்கத் தொகைநூற் பாடல்களிற் சில, கி.மு. ஆயிர ஆண்டுகட்கப்பாற்பட்டன என்பதை மறத்தல் கூடாது. மிகப் பழங்காலந் தொட்டே முடியுடை மூவேந்தரும் பன்முறை இமயத்தில் மீனும் புலியும் வில்லும் பொறித்து வந்துள்ளனர். அவர்களுள் இரண்டாங் கரிகாலனும், சேரன் செங் குட்டுவனும் குறிப்பிடத்தக்கவராவர். அவ்விருவரின் வடநாட்டுப் படையெடுப்பிற்கேற்ற காலத்திற்கு ஏற்றதென, வரலாற்று முறை வழுவாது, டாக்டர் இராசமாணிக்கனார் அவர்கள், சங்ககாலத் தமிழரசர் காலங்களை ஒருவாறு வரையறை செய்து ள்ளார். அவ்வாறு வரையறை செய்துவிட்டு, ‘இக்கால வரை யறை முற்றும் பொருத்தமான தென்றோ, முடிந்த முடிபென்றோ கருதலாகாது’ என்கின்றனர் (சோழர் வரலாறு-17-25). அக்காலவரையறை முற்றும் பொருத்தமானதென்றும், முடிந்த முடிபென்றும் கொள்வதனால், வரலாற்று மரபுக் குண்டாகும் இழுக்கொன்றுமில்லை. அதற்கு மாறாக அதனால், தமிழக வரலாறு முடிந்த முடிபெய்தும் பெரும் பயன் உண்டாகும் என்பது முடிந்த முடிபாகும். ஒரு சில அரசரின் ஒரு சில ஆண்டு முன்பின் மாறுபடுதலான், வரலாற்று அடிப்படை மாறுபடுதல் இல்லை என்பதை அறிதல் வேண்டும். சங்க காலத் தமிழரசர்களின் வரலாற்றுக் குறிப்புக்கள் சங்க இலக்கியப் பாடல்களிலிருந்தே பெறப்படுதலான், சங்ககாலத் தமிழரசர்களை நேரில் பாடிய புலவர் பெருமக்களைக் கொண்டு, அவ்வரசர்களின் ஆட்சிக் காலத்தினை ஒருவாறு ஒழுங்கு செய்துள்ளனன். குறிப்பிட்ட ஒரு சில அரசர்களின் ஒரு சில ஆண்டு முன்பின் ஆதலன்றி, பெரும்பாலும் வரலாற்று அறிஞர் களால் வரையறை செய்யப்பட்டுள்ள கால வரையறையை அடியொட்டியே இது இயன்றுள்ளது. அவ்வரையறைக்கேற்ப, 1. கி.மு. மூன்றா நூற்றாண்டிற்கு முற்பட்டவர் 2. கி.மு. மூன்றா நூற்றாண்டினர் 3. கி.மு. இரண்டா நூற்றாண்டினர் 4. கி.மு. முதல் நூற்றாண்டினர் 5. கி.பி. 1 முதல் 150 வரை இருந்தவர் 6. கி.பி. 115 முதல் 235 வரை இருந்தவர் என, சங்ககாலத் தமிழரசர்கள் அறுவகையாகப் பாகு படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுள், முதல் இரு காலத்தினர் நமக்குப் பெயரளவில் அறிமுகமானவர்களே, மூன்றாங் காலத்தவரினும் ஒரு சிலரே ஒருவாறு வரலாற்று நிகழ்ச்சியோ டறிமுகப்பட்டவராவர். கி.மு. மூன்றா நூற்றாண்டிற்கு முற்பட்ட தென்பது, பரந்து பட்ட கால எல்லையதாகும். அக்காலத்தினர் பெரும்பாலும் புராணமரபுக் குட்படுத்தப்பட்டுள்ளன ராகையால், அன்னாரின் வரலாற்றளவே கொள்ளுதல் வேண்டும். சங்க காலத்து மூவேந்தர் மரபினரும், ஒரே காலத்தில் பலர் பல பகுதிகளிலிருந்து ஆண்டு வந்தனர் என்பதை அறிதல் வேண்டும். அவ்வாறே, அவ்வரசர்களைப் பாடிய புலவர்களில், ஒரே பெயரையுடைய பலர் வெவ்வேறு காலத்தில் இருந்து வந்தனர் என்பதையும் கருத்தில் இருத்துதல் வேண்டும். அப்புலவர் பெருமக்கள் முன்னோர் செயல்களைப் பின்னோர் மேலேற்றிப் பாடியுள்ள இயன்முறை வாழ்த்து முறை யினையும் நினைவு கூர்தல் வேண்டும். 1. கி.மு. மூன்றா நுற்றாண்டிற்கு முற்பட்டவர் பாண்டியர் : 1. நெடியோன் 2. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி 3. முடத்திரு மாறன் சோழர் : 4. செம்பியன் 5. முதுகாந்தன் 6. காந்தன் 7. தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன் சேரர் : 8. வானவரம்பன் 9. இமயவரம்பன் 10. பெருஞ்சோற் றுதியன் சேரலாதன் 11. கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை 1. நெடியோன் தமிழ்கூறு நல்லுலகத்தே அரசு தோன்றிய அன்று தொட்டுப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் தமிழகத்தைச் சீருஞ்சிறப்புடன் ஆண்டு வந்த முடியுடை மூவேந்தர்களின் பெயர்களை யேனும் அறிந்தின்புறக் கொடுத்துவைக்காத குறைபாடுடையவரானோம் யாம். அவர்களுள் மிகப் பழை யோனாக நமக்கு அறிமுகமானவன் நெடியோன் என்னும் பாண்டிய மன்னனேயாவன். இவன், கடல்கொண்ட பஃறுளி யாற்றங் கரையிலிருந்த மதுரையிலிருந்து அப் பழந்தமிழகத்தை ஆண்டு வந்தவன்; சாவக நாட்டின் துறைமுகமான சாலியூரை வென்று கைக்கொண்டு கடல் வாணிகத்தைப் பெருக்கியவன். விளக்கம் - ‘கொங்கு நாட்டின் பழமை’ என்னும் பகுதியிற் காண்க. 2. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இவனும் அத்தொன்மதுரையிலிருந்து அப்பழந்தமிழகத்தை ஆண்டவனே. இவன் பல அரச வேள்வி செய்தவன் என்பது, இவன் பெயரால் பெறப்படுகிறது. புறம்-6, 15, 64 பார்க்க. “ எங்கோ வாழிய குடுமி, தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” (புறம்-9) 3. முடத்திரு மாறன் இவன், பஃறுளியாறு கடல் வாய்ப்பட்டபின் குமரியாற்றின் கடல் முகத்திலிருந்த அலைவாய் என்ற நகரிலிருந் தாண்டவன். இடைச்சங்கத் திறுதியிலேற்பட்ட இரண்டாங் கடல்கோளுக்குத் தப்பி, இன்றுள்ள மதுரையிற் குடியேறியவன் இவனே என் கின்றது இறையனாரகப் பொருளுரை. எனவே, இவன் இடை, கடை என்னும் இரு சங்கங்கட்கும் தொடர்புடையவனாவன். நற்-105, 223 இவன் பாடிய பாடல்களே. 4. செம்பியன் முதற் சோழ மன்னனாக அறிமுகமாகியுள்ளவன் இவனே. செம்பியன் என்பது - சோழர் மரபுப் பெயர். இதையே சிபி எனத் திரித்தனர். கொல்ல வந்த பருந்தினுக் கஞ்சிவந் தடைந்த ஒரு புறாவினுக்காக, தன் உடல் தசையில் சிறிதரிந்து அப் பருந்தினுக்கிட்டு, அல்லது அப்புறவின் நிறையளவு நிறுத்திட்டு, அப்புள்ளுறு புன்கண் தீர்த்த வள்ளியோனாவானிவன். “ புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல் சினங்கெழு தானைச் செம்பியன் மருக.” (புறம்-37) “ தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக.” (புறம்-43) சீரை - துலாக்கோல். இவன் தானே துலாத் தட்டில் ஏறினான் என்பது, புராண மரபு. 5. முதுகாந்தன் இந்திரன் என்னும் ஓரரசனுக்குப் போரில் உதவியதற்காக, அவன் இவனுக்குக் கொடுத்ததே புகாரி லிருந்த நாளங்காடிப் பூதம் என்கின்றது சிலப்பதிகாரம் (6 : 7-13). இவன் குரங்கு முகத்தையுடைமையால் முசுகுந்தன் எனப் பெயர் பெற்றனன் என்பது, புராணம். (புலவர் குழந்தையின் ‘பூவா முல்லை’ எனும் நூலில், - ‘இந்திர விழா’ என்பது பார்க்க). 6. காந்தன் இவன், மைசூர் நாட்டிலுள்ள மலையை வெட்டி, கிழக்கே சென்ற காவிரியைத் தெற்கே திருப்பிச் சோழநாட்டை நெற் களஞ்சியம் ஆக்கினவன். முதுகாந்தன் - இவன் தந்தை, அல்லது பாட்டனாக இருக்கலாம். “ மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட சோழன்” (தக்கயாகப் பரணி) “ கொள்ளுங் குடகக் குவடூ டறுத்திழியத் தள்ளுந் திரைப்பொன்னி தந்தோனும்” (விக்கிரமச் சோழனுலா) 7. தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் இமயமலைப் பகுதியில் வாழ்ந்தோர் - இமயவர் எனப் பட்டனர். வானளாவிய அம்மலைப் பகுதியில் வாழ்ந்ததால் அவர் - வானவர் எனவும் பெயர் பெற்றனர். மலைநாட்டையுடைய சேரர்க்கும் வானவர் என்னும் பெயருண்மை அறிக (துடிசைக் கிழார் - திருமந்திரப் பதிப்பு - 17). அவ்வானவர் தலைவனின் பகைவனுடைய மூன்று உயர்ந்த அரண்களை அழித்து, அவனுக்கு உதவியவன் இச்சோழன். தூங்கு எயில் - வானத்தில் தொங்குவது போன்ற உயர்ந்த மதில். தூங்குதல் - தொங்குதல். எயில் - மதில், கோட்டை. “ ஒன்னார் உட்கும் துன்னருங் கடுந்திறல் தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின் அடுதல்நின் புகழும் அன்றே” (புறம்-39) “ தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்”. (சிலப்-29:16) 8. வானவரம்பன் இச்சேரமன்னன், சேர நாட்டுக்கு வானவாற்றை வரம்பாக - எல்லையாக - கொண்டதால் ஏற்பட்டபெயராகும் இது. இதன் விளக்கம் -“பழங்கொங்கு நாடு’ என்னும் தலைப்பிற் காண்க. 9. இமயவரம்பன் இவன், இமயம் வரை வென்று, இமயத்தைத் தன் ஆட்சி யெல்லையாகக் கொண்டவன். “ குமரியொடு வடவிமயத் தொருமொழிவைத் துலகாண்ட சேரலாதன்” (சிலப்-29) 10. பெருஞ்சோற் றுதியன் சேரலாதன் இவன், பாரதப் போர் நடக்கும் போது, படைவீரர்கட்கு வரையாது உணவளித்த பெருந்தகையாளன். பெருஞ்சோறு-விருந்துணவு. “ அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மர் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” (புறம்-2) பெரும்படை வீரர்கட்கு வேண்டிய அவ்வளவு உணவு குறைவின்றி அளித்ததால், பெருஞ்சோற்று மிகுபதம்’ என்றார். பதம்-உணவு. பெருஞ்சோறாகிய மிகுபதம் என்க. “ ஓரைவர் ஈரைம் பதின்மர் உடன்றெழுந்த போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன்” (சிலப்-29:24) குறிப்பு : உதியன் குடி, பொறையன்குடி எனச் சேரமன்னர் மரபு இருவகைப்படும். இவன் உதியன் குடியைச் சேர்ந்தவன். 11. கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை இவன் கோட்டம்பலம் என்னும் இடத்தில் நடந்த போரிலோ அல்லது அங்கு இயற்கையாகவோ இறந்தவன். புறம்-245, அகம்-168-இவன் பாடிய பாடல்களே. இவன், பேரிளமைப் பருவம் எய்து முன்னரே தன் மனைவி இறந்ததால், பிரிவாற்றாது மனமுருகிப் பாடியதே 245 புறப்பாட்டு. இக்கோட்டம்பலப் பகுதியில், சந்திரகுப்தன் காலத்து 188 வெள்ளி நாணயங்கள் கிடைத் துள்ளமையால், அக்காலத்தே மகத நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் வாணிகத் தொடர்பு இருந்ததென்பது பெறப்படுகிறது. (துடிசைக் கிழார்-சேரர் வரலாறு-20) 2. கி.மு. மூன்றா நூற்றாண்டினர் 1. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி இப்பாண்டிய மன்னன் வாணிகத்தின் பொருட்டுப் பரத குமரருடன் கடலிடைக் கலமூர்ந்து சென்ற போது கலங்கவிழ்ந் திறந்தனன். இதனால், அக்காலத்தே தமிழர் கடல் வாணிகம் செய்து வந்தமை பெறப்படும். புறம்-182, பரிபாடல்-15 இவன் பாடியவையே. 2. செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி (கி.மு. 290-270) இவன், நெய்தலங்கானல் என்னும் ஊரிலிருந்து சோழ நாட்டை ஆண்டு வந்தான் (புறம்-10). நெய்தலங்கானல் என்பது புகாரின் பழம்பெயராகும். இவன் பேராற்றலும் பெருவீரமும் ஒருங்கே உடையவன். தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த, தமிழ் மண்ணைக் கைக்கொள்வான் வந்த மோரியரை வென்று துரத்தித் தமிழ் மரபைக் காத்த தகைசால் குரிசில் இவனே! மோரியர் படையெடுப்பு தமிழரசு தோன்றிய காலத்திருந்து, கி.மு. ஆறா நூற்றாண்டு வரை இந்தியப் பெருநாட்டில் இருந்த ஒரே பேரரசு தமிழரசே யாகும். கி.மு. ஆறா நூற்றாண்டில் கங்கை வெளியில் மகதப் பேரரசு தோன்றியது. அதையடுத்து, தென்னாட்டின் வட பகுதியில் கலிங்கப் பேரரசும், ஆந்திரப் பேரரசும் தோன்றின. அதற்கு முன்னும் பின்னும் வடநாட்டில் சிறுசிறு அரசுகளே இருந்து வந்தன. சிசுநாகமரபு, நந்தமரபு, மோரியமரபு ஆகிய மூன்றும் மகதப் பேரரசு மரபுகளாகும். 1. மகதப் பேரரசு 1. சிசுநாக மரபு கி.மு. 1. பிம்பிசாரன் 525-500 2. அசாதசத்துரு 500-475 3. தர்சகன் 475-450 4. உதயணன் 450-425 2. நந்த மரபு 1. நந்திவர்த்தனன் 425-400 2. மகாபதும நந்தன் 375-350 (இந் நந்தனுக்கு மைந்தர் எண்மர். தந்தையுடன் இவர்கள் நவநந்தர் எனப்பட்டனர்.) 3. மோரிய மரபு 1. சந்திரகுப்தன் 350-301 2. பிந்துசாரன் 301-273 3. அசோகன் 273-232 2. கலிங்கப் பேரரசு காரவேலன் 176-163 3. ஆந்திரப் பேரரசு (சாதவாகனர்) கி.மு. 235-கி.பி. 220 புத்தர் கி.மு. 567-487 மகாவீரர் கி.மு. 539-467 குறிப்பு : மகதப் பேரரசு தோன்றிய அதே காலத்தே அங்கு கௌதம புத்தரும் மகாவீரரும் தோன்றிப் பௌத்த சமண சமயங்களைப் பரப்பினர். அப்பேரரசின் துணையால் அச்சமயங்கள் அங்கு எளிதில் விரைந்து பரவின. பழந்தமிழகத் தலைநகர்கள் தமிழரசு தோன்றியதிலிருந்து, கி.மு. ஐந்தா நூற்றாண்டு வரை, தமிழ்நாட்டைப் பற்றி எந்த உலக அரசும் எண்ணியதே இல்லை. தமிழ்நாட்டைக் கைப்பற்றலாம் என்ற கனவுகூட எவரும் காணவில்லை. நந்தர்கள் தமிழரசர்களுடன் நட்புறவினராகவே இருந்து வந்தனர் என்பது, “ பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மலி பாடலிக் குழீஇக் கங்கை நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ” (அகம்-265) “ வெண்கோட் டியானை சோணை படியும் பொன்மலி பாடலி பெறீஇயர்” (குறுந்-75) என்னும் மாமூலனார், படுமரத்து மோசிகீரனார் கூற்றுக் களால் பெறப்படுகிறது. இவர்கள் பாடலியை நட்புப் புலமாகவே குறித்தலை அறிக. (பாடலி-மகதநாட்டின் தலைநகர்.) ஆனால், கி.மு. நான்காம் நூற்றாண்டில் மகதத்தில் தோன்றிய மோரியப் பேரரசர்கள் அக்கனவு காணத் தொடங்கினர். அக்கனவை நனவாக்குஞ் செயலைத் தொடங்கி வைத்தவன் சந்திரகுப்தனே யாவன் என்பது, அவன் பல்லாயிரக் கணக்கான சமணர்களுடன் தமிழகம் போந்து, மைசூர் நாட்டில் தங்கி யிருந்ததனால் பெறப்படுகிறது. (‘சமயப் படையெடுப்பு’ என்னும் தலைப்பைப் பார்க்க). முடிவில், (சந்திரகுப்தன் மைந் தனான பிந்துசாரன் (301-273) என்பான், தமிழகத்தின் மீது படையெடுக்க முற்பட்டான்; பெரும்படை யொன்றைத் தமிழக நோக்கி அனுப்பினான்.) மோரியர் படையில், கோசர் என்னும் ஒருவகைப் போர் வீரர் மிகுதியாக இருந்தனர். அவர்கள் மிக்க வீரமும் போர்த்திறனும் உடையவர்; அறை போதலை அறியா வாய்மையாளர்; போர் புரிதலையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர். தமிழ் நாடு நோக்கி வந்த அம்மோரியர் படையில் அக் கோசரே பெரும்பான்மையினராக இருந்தமையால், தமிழ்ச்சான்றோர்கள் அம்மோரிய வீரரை - கோசர் என்றே குறித்தனர். முன்னர்ச் சந்திரகுப்தனோடு வந்த சமணர்கள், மைசூர், குடகு, கொண்கானம் முதலிய பகுதிகளில் தங்கிச் சமணத்தைப் பரப்பி, தங்கள் படை வருவதற்கேற்றவாறு நல்ல வழிசெய்து வைத்திருந்தனர். எனவே, தமிழ் நாட்டை நோக்கி வந்த அம் மோரியப் படை கொண்கானத்தின் வடபால் வந்து தங்கிற்று. 1. அங்கிருந்து அப்படைவீரர்கள், கொண்கானத்தின் மேல்கடலோரப் பகுதியான துளுநாட்டிற் புகுந்து தாக்கி, அன்று அத்துளு நாட்டை ஆண்ட நன்னன் என்பானை நாட்டை விட்டோட்டி, அந்நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். “ அழியல் வாழி தோழி, நன்னன் நறுமா கொன்று நாட்டிற் போக்கிய ஒன்றுமொழிக் கோசர்” (குறுந்-37) நறுமா - யானை; வெறிநீர் கமழும் நறுநாற்றத்தையுடையது. நாட்டின் போக்கிய-நாட்டைவிட் டோட்டிய. பின்னர் அத்துளு நாட்டிலிருந்த பாழி அல்லது செருப்பாழி என்னும் கோட்டை யை மிக்க வலியுடையதாக்கி அங்குத் தங்கினர் அம்மோரியர். 2. அப் படைவீரர்கள், அத்துளுநாட்டிலிருந்து கொண்டே அதனை அடுத்துள்ள நாடுகளைத் தாக்கி வந்தனர். “இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார் இகலின ரெறிந்த அகலிலை முருக்கின் பெருமரக் கம்பம் போலப் பொருநர்க் குலையாநின் வலன்வா ழியவே.” (புறம்-169) “ ஆனா நறவின் வண்மகிழ்ப் பிட்டன் பொருந்தா மன்னர் அருஞ்சமத் துயர்த்த திருந்திலை எஃகம் போல” (அகம்-77) என்னும் குறிப்புக்களால், அத்துளுநாட்டின் கிழக்கில் இருந்த குதிரைமலை நாட்டை ஆண்ட பிட்டங்கொற்றன் என்பானோடு அவர்கள் பொருததாகத் தெரிகிறது. புறநானூற்றுப் பாடல் பிற்காலத்த தெனினும், அதில் குறிக்கப்படும் இச்செய்தி இறந்த காலத்தாகக் கொள்ளற்கும் பொருந்தும். 3. அதன் பின்னர் அக்கோசர்கள், தென்கிழக்காகச் சென்று, கொங்கு நாட்டுப் பழையன் மோகூரைத் தாக்கினர். (பழையன் மோகூர் பற்றி, - ‘வீரமும் புகழும்’ என்னும் பகுதியிற் காண்க). மோகூர்ப் பழையன் அவ்வடவரை வென்று துரத்தினான். தோற்றோடிய மோரியப் படைத்தலைவன், பெரும்படை அனுப்பும்படி பாடலிபுரத்திற்கு ஆளனுப்பினான். மகதத்திலிருந்து பெரும்படை யொன்று தமிழக நோக்கி வந்தது. அப்படையி லிருந்த தேர்களும், சரக்கேற்றிய வண்டிகளும் செல்லத் தடையாயிருந்த மலைவழிப் பாறைகளை உடைத்து நல்ல வழியுண்டாக்கிக் கொண்டு, அப்படை தமிழகத்தை நோக்கி வந்த தென்பது, “துனைகா லன்ன புனைதேர்க் கோசர் தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி உருளிய குறைத்த இலங்குவெள் ளருவி அறைவாய்” (அகம்-251) என்னும் மாமூலனார் கூற்றால் தெரிகிறது. துனை கால் அன்ன - விரையும் காற்றை ஒத்த. கல்-காற்று. தொல்முது ஆலம் - மிக முதிர்ந்த ஆலமரம். பணை-கிளை. பொதியில் - மன்றம். அதாவது, ஆலமரத்தின் கீழுள்ள மன்றம். தெவ் முனை - பகைப் புலம். மோகூரை முற்றிய அக்கோசர், ஊர்ப்புற மன்றத்தே முரசு முழங்கக் கோட்டையைத் தாக்கினர். பழையன் பணியாமல் அவர்களை அடித்துத் துரத்தினான். பகைதலை வந்த வம்ப மோரியர் - பகைத்து வந்த புதிய மோரியர். வம்பு-புதிது. நேமி-சக்கரம். குறைத்த-பாறையை உடைத்து வழியுண்டாக்கிய. அறைவாய்-மலைவழி. “ விண்பொரு நெடுவரை இயல்தேர் மோரியர் பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த” (அகம்-69) திகிரி-சக்கரம். திரிதர-உருண்டு செல்ல. இப்புதிய மோரியர் படை தமிழகத்தை நோக்கி வரும் போது, கலிங்கத்தை அடுத்திருந்த வடுகரை உறவு கொண்டு, அவ்வடுகர் படையையுந் துணைக்கொண்டு வந்தனர் என்பது, “ முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு விண்ணுற ஓங்கிய பனியிருங் குன்றத் தொண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த” (அகம்-28) என்னும் மாமூலனார் கூற்றால் தெரிகிறது. வடுகர்-வடக்கத்தியார். நம் முன்னையோர், மூவேந்தர் தமிழகத்தை அடுத்து வடக்கிலிருந்தாரை-வடுகர் எனவும், அப்பகுதியை-வடுகு எனவும், அதன் வடக்கிலுள்ளாரை-விந்த மலைக்கு அப்பாற் பட்டவரை (அக்கால மகத நாட்டினரை) - வடவடுகர் எனவும் அழைத்து வந்தனர். ‘வடவடுகர் வாளோட்டிய’ (புறம்-378) எனக்காண்க. வடுகர் முன் உற-அம்மோரியர்க்குப் படைத் துணையாக முன்னே வர. அவ்வாறு வடுகர் படையுடன் அவ் வடவடுகர் படை வந்துகொண்டிருந்தது. “மோரிய அரசன் தென்னாட்டுப் படையெடுப்பில், மோகூர்ப் பழையனுடன் போர் செய்து தோல்வியுற்றான் என்று, மோரியர் வரலாறு பேசுகிறது.” (துடிசைக்கிழார்-சேரர் வரலாறு-74) 4. மோகூரிடம் தோற்றோடிய அக்கோசர், சோழ நாட்டை நோக்கிச் சென்றனர். சென்ற அம்மோரிய வீரர்கள், செல்லும் வழியில் அங்கங்கே அழிவு செய்து கொண்டு சென்றனர். வாட்டாற்று ஆதன் எழினி என்பான் அவர்களை எதிர்த்தனன். போர் கடுமையாக நடந்தது. எழினியின் செல்லூர்க்குக் கீழ்பால் நடந்த போரில் மார்பில் வேல்பாய்ந்து எழினி இறந்தான். “ கடிமிளைப் புறவிற் பூத்த முல்லையொடு பல்லிளங் கோசர் கண்ணி யயரும் மல்லல் யாணர்ச் செல்லூர்க் கோமான் எறிவிடத் துலையாச் செறிசுரை வெள்வேல் ஆதன் எழினி அருநிறத் தழுத்திய பெருங்களிற் றெவ்வம் போல.” (அகம்-216) மிளை-காவற்காடு. நிறம்-மார்பு. “ அருந்திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது பெருங்கடல் முழக்கிற் றாகி, யாணர் இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் கடுங்கண் கோசர்.” (அகம்-90) எழினி இறந்ததால், கோசரின் ஆர்ப்பு-பெருங்கடல் முழக் கிற்றானது. இரும்பு இடம்படுத்த-படைக்கலம் இடம் படச் செய்திட்ட - வடு, பழையனிடம் தோற்றோடி வந்தவர், இங்கு வென்று மேம்பட்டனர். 5. எழினி இறந்தபின் அக்கோசர்கள் அங்கேயே நிலை யாகத் தங்கி, சுற்றுப் புறங்களில் சென்று சென்று அழிவு செய்து வந்தனர். மாடு பயிரைத் தின்றதற்காக, அக்கொடி யோர் சிலர் - அன்னி மிஞிலி என்னும் பெண்மணியின் தந்தையின் கண்ணைப் பறித்துக் கொடுமை செய்தனர். அதுகண்ட அப்பெண்மணி, நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியின் படைத்தலைவனான அழுந்தூர் வேள் திதியனிடம் முறையிட்டாள் (அகம்-262). அது கேட்ட திதியன் கடுஞ்சினங்கொண்டு, கண்ணைப் பறித்த அக்கொடியரைக் கொன்றதோடு, மற்றவர்களையும் பொருது வென்று ஆங்குநின்றும் துரத்தினான் (டாக்டர், இராசமாணிக் கனார்-சோழர் வரலாறு-36; கா. அப்பாத்துரையார்-தென்னாட்டுப் போர்க்களங்கள்-60, 74) “ கண்கவின் அழித்ததன் தப்பல் தெறுவர ஒன்றுமொழிக் கோசர் கொன்றுமுரண் போகிய கடுந்தேர்த் திதியன் அழுந்தைக் கொடுங்குழை அன்னி மிஞிலி” (அகம்-196) முரண்-சினம், திதியனால் தன் தந்தை கண்களைப் பறித்த அக்கொடியரைக் கொல்வித்து மிஞிலி சினந் தணிந்தாளென்க. 6. இவ்வாறு அம்மோரியப் படைவீரர்கள் - கோசர்கள், அங்கங்கே உள்ள சிற்றரசர்களை எதிர்த்துக் குறும்பு செய்து வருவது கேட்ட இளஞ்சேட்சென்னி, படையெடுத்துச் சென்று பொருது வென்று, அவர்களைச் சோழ நாட்டை விட்டே துரத்தினான். “ வளங்கெழு கோசர் விளங்குபடை நூறி நிலங்கொள வெஃகிய பொலம்பூண் கிள்ளி பூவிரி நெடுங்கழி நாப்பண் பெரும்பெயர்க் காவிரிப் படப்பைப் பட்டினத் தன்ன” (அகம்-205) நூறி-அழித்து. காவிரிப்பட்டினம்-காவிரிப்பூம்பட்டினம். அதுகாலை, புதிதாக வந்த மோரியப் படை செருப்பாழி வந்து சேர்ந்துள்ள தென்பதை ஒற்றரால் அறிந்த சென்னி, பெரும் படையுடன் சென்று பொருது, அம்மோரியரை அங்கு நின்றும் வடக்கு நோக்கி ஓடும்படி துரத்தியதோடு, அப்பாழியையும் அழித்து மீண்டனன்; “ எழாஅத் திணிதோட் சோழர் பெருமகன் விளங்குபுகழ் நிறுத்த இளஞ்சேட் சென்னி குடிக்கட னாகலிற் குறைவினை முடிமார் செம்புறழ் புரிசைப் பாழி நூறி வம்ப வடுகர் பைந்தலை சவட்டி” (அகம்-375) “ தென்பரதவர் மிடல்சாய வடவடுகர் வாளோட்டிய” (புறம்-378) குடிக்கடன்-தமது குடிக்குச் செய்யும் கடமை. முடிமார்-முடித்தற்கு, குறைவினை முடித்தலாவது-அம்மோரியர் மறுபடியும் தமிழகத்தில் தங்கியிராமல், தமிழகத்தை விட்டே துரத்துதல் புரிசை-மதில். நூறி-அழித்து. சவட்டி-வெட்டி. வம்பவடுகர் - புதிதாக வந்த வடவர். இவர், இரண்டாவது மோரியர்படை வந்தபோது உடன் வந்தவர். வடவடுகர் - மோரியர். எனவே, மோரியர் படையில் - மோரியர் (வடவடுகர்), வடுகர், கோசர் என மூவகை வீரர்களிருந்தனரென்க. நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி, சோழ நாட்டினின்று அம்மோரியரை வென்று துரத்தியதோடு, துளுநாட்டுக்குப் படையெடுத்துச் சென்று அம்மோரியரை வென்று துரத்தி, அச்செருப்பாழிக் கோட்டையையும் அழித்து, செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி எனப் பெயர் பெற்றான். இச்சென்னியைப் பாடிய (புறம்-10, 203, 370, 378) ஊன்பொதி பசுங்குடையார், சென்னியின் அவைப் புலவராவர். இவன் மோரியரை வென்ற வெற்றியைக் குறித்த நக்கீரரும் (அகம்-205), இடையன் சேந்தங் கொற்றனாரும் (அகம்-375) பிற்காலத்த வராவர். இம்மோரியர் படையெடுப்பு, குறைந்தது நாலைந்தாண்டு களேனும் நடந்திருக்கலாம். இளஞ்சேட்சென்னி, மோரியரை வென்று துரத்தியதோடு நிற்கவில்லை. இனி அவ்வடவர் தென்னாட்டுப் பக்கம் திரும்பிப் பாராமல் இருக்கும்படி செய்யவேண்டும் என முடிவு செய்தான். அதை ஏனைய வேந்தர்கட்கும் அறிவித்தான். மோரியரின் இப்புதிய போக்கைக் கண்டு தமிழ்நாடு விழித் தெழுந்தது. முடியுடை மூவேந்தரும், முந்நாட்டு வேளிரும், கொங்கு வேளிரும் ஒன்றுகூடி, அவ்வடவர் எண்ணத்தை, முயற்சியை முளையிலேயே கிள்ளியெறிய முடிவு செய்தனர். அதற்காக, கி.மு. 278இல் ஒரு கூட்டணி அமைத்து, அவ்வட வரின் எண்ணத்தை மண்ணாகும்படி செய்தனர். பிந்துசாரன் மைந்தனான அசோகனும் (273-232) பலமுறை தமிழகத்தின் மீது படையெடுத்தெடுத்துத் தோல்வியே கண்டான். கலிங்கப்பேரரசனான காரவேலன் (கி.மு. 176-163) என்பான், கி.மு. 163இல் அத்திக்கும்பம் என்ற இடத்தில் பொறித்த கல்வெட்டில், ‘தமிழரசர்கள் மூவரும் ஒன்றுபட்ட, வலிமை வாய்ந்த கூட்டணியை, 113 ஆண்டுகளுக்குப் பிறகு, கி.மு. 165இல் தான் தகர்த் தெறிந்ததாகப் பெருமையடித்துக் கொள்கிறான்.’ இக்கல்வெட்டு, பேராசிரியர், கே.பி. ஜெயசுவால் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, (165+113-) கி.மு. 278இல் தமிரசர்கள் கூட்டணி அமைத்தமை பெறப்படுதல் காண்க. காரவேலன் ஒரு பாண்டிய மன்னனை வென்றதாகவும், அப்பாண்டியன் காரவேலனுக்கு முத்துக்களையும் யானை களையும் பரிசாகத் தந்து உடன்பாடு செய்து கொண்டதாகவும் இலங்கை வரலாறு கூறுகிறது. காரவேலன் அவ்வொரு வெற்றிக்குப்பின் வெற்றி பெறவில்லை. பன்முறை தமிழகத்தின் மீது படையெடுத்தெடுத்துத் தோல்வியே கண்டான். தமிழரசர் கள் அமைத்த அக்கூட்டணி கி.மு. முதல் நூற்றாண்டுவரை அப்படியே இருந்து வந்தது. அதன் பின்னர் அக்கூட்டணியின் பெருமையை மறந்து, மூவேந்தரும் ஏனோ தமக்குட் பகைகொள்ளலாயினர். அதனால், தமிழகம் அயலாட்சிக் குட்பட்டதோடு, அம்மூவரச மரபும் அழிந்தொழிந்தது. அக்கூட்டணி அப்படியே அச்சுக் குலை யாமல் இருந்திருக்கின், தமிழ்நாட்டில் அயலாட்சி ஏற்பட்டி ருக்காது. ஏன்? இந்தியப் பெருநாட்டிலேயே அயலாட்சி ஏற்பட்டி ருக்காது. ஆங்கிலேயர் 150 ஆண்டுகள் இந்நாட்டைக் கட்டி ஆண்டிருக்கமாட்டார்கள். இன்றும் அம்மூவரசமரபு அப்படியே, அச்சுக்குலையாமல் இருந்து கொண்டிருக்கும். என் செய்வது, காலச்சுழல் அதைக் கெடுத்துவிட்டது! மோரியப் படைவீரராக வந்த அக்கோசர்களிற் சிலர், கொண்கானத்தின் வடபால் தங்கி விட்டனர். பின்னர் அவர்கள் படிப்படியாகத் தமிழ்நாடு போந்து, தமிழரசர் படையில் சேர்ந்து வாழ்ந்து வரலாயினர். இவர்களே பிற்காலச் சங்க இலக்கியப் பாடல்களில் குறிக்கப்படும் கோசர்களாவர். 3. கி.மு. இரண்டா நூற்றாண்டினர் 1. பாண்டியன் மதிவாணன் 2. பொற்கைப் பாண்டியன் 3. ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன் 4. பசும்பூண் பாண்டியன் 5. மகனை முறைசெய்த வளவன் 6. முதற்கரிகாலன் 7. சேரமான் பெருஞ்சேரலாதன் 1. பாண்டியன் மதிவாணன் இவன் கடைச்சங்கத்தைப் புரந்த பாண்டியரு ளொருவன்; தன்பெயரால் ஒரு நாடகத் தமிழ் நூல் செய்துள்ளான். அது, மதிவாணர் நாடகத் தமிழ்நூல் எனப்படும். (சிலப். உரைப்பாயிரம்) 2. பொற்கைப் பாண்டியன் ‘மன்னவன் செங்கோல் உன்னைக் காக்கும்’ எனக் கூறித் தன் மனைவியைத் தனியே விட்டு யாத்திரை சென்ற கீரந்தை என்னும் பார்ப்பனன் வீட்டை, அவளறியாது காத்து வந்த இப் பாண்டியன், ஒரு நாள் அவ்வீட்டினுள் ஆணொலி கேட்டுக் கதவைத் தட்டினான். கணவன் ஐயுற்று நோக்க, ‘அன்று மன்னவன் செங்கோல் உன்னைக் காக்கும்’ என்று கூறிச் சென்றீரே, இன்று அது காவாதோ?’ என்றாள். அது கேட்டுத் தன் செய்கைக்குப் பெரிதும் வருந்திக் கதவைத் தட்டிய தன் கையைக் குறைத்துக் கொண்ட செங்கோலினன் இவன் (சிலப். 23: 42-52). பின்னர்ப் பொன்னால் கை செய்து வைத்துப் பொற்கைப் பாண்டியன் எனப்பட்டனன். 3. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இவன் மிக்க வீரமுடையவன் என்பது, ‘ஒல்லையூர் தந்த’ என்பதால் விளங்கு கிறது. பகைவரால் கைப்பற்றப்பட்ட ஒல்லை யூரை மீட்டவன். 71 புறப்பாட்டு இவன் பாடியதே. இவன் மனைவி பெருங்கோப்பெண்டு, இவன் போலவே புலமை வாய்ந்தவள்; கைம்மைத் துன்பத்தை எடுத்துக்கூறித் (புறம்-246) தன் கணவனுடன் உடனெரி புக்கவள் (புறம்-247). 4. பசும்பூண் பாண்டியன் இவன், கொங்கு நாட்டின் மேற் படையெடுத்துச் சென்று சில கொங்கு மன்னரை வென்றான் (அகம்-253). அவ் வெற்றிக் களிப்பினால் மறுபடியும் கொங்கு நாட்டின்மேற் படையெடுத்துச் சென்று அதியமானின் மலையின்கட் டங்கினான் (அகம்-162). பின் அதியனுக்கும் இவனுக்கும் வாகைப்பறந்தலை என்னும் இடத்தில் நடந்த போரில் இப்பாண்டியன் களிற்றொடு பட்டான். “ கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும்பூண் பாண்டியன் வினைவ லதியன் களிற்றொடு பட்ட ஞான்றை ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே.” (குறுந்-393) வினைவல் அதியன் - போர்த்தொழிலில் வல்ல அதிய மானது, வாகைப் பறந்தலை - பசும்பூண் பாண்டியன் களிற்றொடு பட்டஞான்றை, ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே எனக்கூட்டுக. கொங்கர் ஆர்த்ததனால், பட்டவன் பாண்டிய னே யாவன். 5. மகனை முறைசெய்த வளவன் இவன், திருவாரூரில் இருந்தாண்ட சோழ மன்னன். தேரூர்ந்து செல்லும் போது குறுக்கே வந்து விழுந்த ஓர் ஆன் கன்றை அறியாது கொன்றதற்காகத் தன் ஒரே மகனைத் தரையிற் கிடத்தி, அவன் மீது அத்தேரையே ஊர்ந்து கொன்ற செங்கோலினன் (சிலப். 20:53:55). இவனை, மனுச் சோழன் என்பது, புராண மரபு. ஏழாரன் என்னும் சோழமன்னன் ஒருவன், அசேலன் என்னும் இலங்கை அரசனை வென்று 45 ஆண்டு இலங்கையை ஆண்டுவந்தனன் எனவும், அவனும் இவனைப் போலவே மகனை முறை செய்தனன் எனவும், துத்தகாமணி என்பான் அவ்வேழாரனை வென்று இலங்கையை மீட்டுக் கொண்டனன் எனவும் மகாவமிசம் என்னும் இலங்கை வரலாற்று நூல் கூறுகிறது. ‘எழுமுடியாரன்’ (பதிற்-14) என்பது போன்றதே ஏழாரன் என்னும் பெயர். எனவே, மகனை முறைசெய்த சோழனே ஏழாரனாக இருக்கலாமென்பது ஆராய்ச்சி அறிஞர்கள் கருத்து. 6. முதற்கரிகாலன் (கி.மு. 120-90) : இவன், அழுந்தூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவன், இவன் காலத்தே, சேரமான் பெருஞ்சேரலாதன் (கி.மு. 115-90) என்பான் சேரநாட்டை ஆண்டு வந்தான். யாது காரணத்தாலோ இவ்விருவருக்கும் பகையுண்டானது. சோழ நாட்டு வெண்ணிப் பறந்தலையில் நடந்த போரில், கரிகாலன் எறிந்த வேல் சேரமான் மார்பில் பட்டு ஊடுருவிச் சென்று முதுகிற் புண்ணுண்டாக்கியது. அப்புறப்புண் நாணிச் சேரன் வடக்கிருந்து - உண்ணாதிருந்து - உயிர் விட்டனன் (புறம்-65,66). இதுவன்றோ மானத்தொடுபட்ட மறப்பண்பு! இச் சேரலாதனுடன் பல சான்றோரும் வடக் கிருந்தனர் (அகம் 55). இப்போரில் கரிகாலனுக் கெதிராகப் பாண்டிய மன்னனும் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. மேலும், இக்கரிகாலன் வெண்ணிவாயிற் போரில் இருபெரு வேந்தரையும் பதினொரு வேளிரையும் வென்ற தாகவும் (அகம்-246), வாகைப்பறந்தலைப் போரில் ஒன்பது மன்னரை வென்றதாகவும் (அகம்-125) தெரிகிறது. இது கூட்டணியை மீறிய செயலாகும். 1. பாடினோரும் பாடப்பட்டோரும் பாடினோர் பாடப்பட்டோர் 1. கழாத்தலையார்: 1. சேரமான் பெருஞ்சேரலாதன் - 65 2.முதற்கரிகாலன் (66-வெண்ணிக் குயத்தியார்) 3.முதலாம் வேற்பஃறடக்கைப் பெரு விறற் கிள்ளி-62 (63-முதற்பரணர்) 4.சேரமான் குடக்கோ நெடுஞ்சேர லாதன் - 62, 368 2. பெருங்குன்றூர்க் 1. உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி-266 கிழார்: 2.சேரமான் குடாக்கோச் சேரலிரும் பொறை 210,211 3. பொய்கையார்: 1. சேரமான் கணைக்காலிரும் பொறை- நற்-18 2. கோச்செங்கட் சோழன் 3. சேரமான் கோக்கோதைமார்பன் 48 4. இரும்பிடர்த் 1. கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் தலையார்: வழுதி-3 2.சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேர லிரும்பொறை (ஆட்டனத்தி) 5. நக்கீரர்: 1. முதலாங் கிள்ளிவளவன் 2.பாண்டியன் பழையன் மாறன் 3.சேரமான் கோக்கோதை மார்பன் அகம்-346 6. உறையூர் ஏணிச் 1. சோழன் முடித்தலைக் சேரி கோப்பெருநற்கிள்ளி முடமோ சியார் 2.சேரமான் அந்துவஞ்சேர லிரும்பொறை-13 7. காவிரிப்பூம் 1. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பட்டினத்துக் பெருந்திருமாவளவன்-58 காரிக்கண்ணனார்: 2.பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி-58 3.இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்-57 8. மாறோகத்து 1. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி நப்பசலையார்: வளவன்-37 2.கபிலர் பாடிய (121) மலையமான் திருமுடிக் காரியை, நப்பசலையார் பாடியுள்ளார்-126 3.செல்வக் கடுங்கோ வாழியாதன் (8-கபிலர்) 9. ஆவூர் 1. குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளி மூலங்கிழார்: வளவன்-38 2.இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்-196 10.ஐயூர் முடவனார்: 1. குளமுற்றத் துஞ்சிய கிள்ளி வளவன்-228 2.கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி-51 11.கோனாட்டு 1.குராப்பள்ளித்துத் துஞ்சிய எறிச்சிலூர் மாடலன் பெருந்திருமாவளவன்-197 மதுரைக் குமரனார்: 2.வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி(பெருந்திருமா வளவன் காலம்-58) 3.சேரமான் குட்டுவன் கோதை-54 4.இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி-61 12.மருதனிள நாகனார்: 1. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்-55 2. கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி-52 13. ஆலத்தூர்க் கிழார்: 1. குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்-34 2. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி-225 14. கோவூர்க் கிழார்: 1. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்-41 2. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி-44 3. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி-31 4.நெடுங்கிள்ளி, நலங்கிள்ளி-45 15.வடமவண்ணக்கன் 1.சேரமான் மாந்தரஞ்சேர பெருஞ்சாத்தனார்: லிரும்பொறை 2.இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி 3.தேர்வண் மலையன்-125 16.மதுரைக் கூல 1.பாண்டியன் சித்திர மாடத்துத் வாணிகன் சீத்தலைச் துஞ்சிய நன்மாறன்-59 சாத்தனார்: 2.சேரன் செங்குட்டுவன் (சிலப்பதிகாரம்) 17.பெருங்குன்றூர்க் 1.இளஞ்சேரலிரும்பொறை கிழார்: 2.கோப்பெருஞ் சோழன் 3.இளம்பழையன் மாறன் (பதிற்-9 பதிகம்) 18.பிசிராந்தையார்: 1.கோப்பெருஞ் சோழன்-67 2.பாண்டியன் அறிவுடைநம்பி-184 19.குறுங்கோழியூர்க் 1.தலையாலங் கானத்துச் செருவென்ற கிழார்: நெடுஞ்செழியனோடு- 2.இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், 3.சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிருமபொறையும் பொருதனர் (அகம்-36)புறம்-17 20.ஒளவையார்: 1.இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, 2.சேரமான் மாரிவண்கோ (குட்டுவன் சேரல்) 3.கானப்பே ரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி (இளவரசன்)-367 குறிப்பு: 1. அரசர் பெயருக்குப் பின்னுள்ள எண்கள் புற நானூற்றுப் பாட்டெண்கள். 2. ஒருவரைப் பலரும், ஒருவர் பலரையும் பாடியுள்ள தொடர் பினால், காலவரிசை பெறப்படும். 2. அரசர்களின் ஆட்சிக்கால அடைவு 1. 1. முதற்கரிகாலன் கி.மு. 120-90 2. சேரமான் பெருஞ்சேரலாதன் ” 115-96 3. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்” 95-75 4. முதலாம் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி” 90-75 2. 1. குடக்கோச்சேர லிரும்பொறை ” 78-62 2. உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி - இவ்வறுவரும் ஒரு காலத்தவர். ” 75-60 3. 1. சேரமான் கணைக்கா லிரும்பொறை ” 60-35 2. கோச்செங்கட் சோழன் ” 50-32 3. சேரமான் கோக்கோதை மார்பன் ” 35-16 4. 1. கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி” 50-30 2. கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேர லிரும்பொறை ” 30-14 5. 1. முதலாங் கிள்ளிவளவன் ” 32-10 2. பாண்டியன் பழையன் மாறன் ” 45-26 -இவ்வெழுவரும் ஒரு காலத்தவர் கி.மு. கி.பி. 6. 1. சோழன் முடித்தலைக் கோப்பெருநற் கிள்ளி 10-46 2. சேரமான் அந்துவஞ்சேர லிரும்பொறை கி.பி.32-90 7. 1. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் 46-70 2. பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி 75-100 3. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் 100-105 8. 1. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 98-135 2. செல்வக் கடுங்கோ வாழியாதன் 90-115 9. கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி 105-119 10. 1.சேரமான் குட்டுவன் கோதை 95-130 2. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி 102-150 11. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி 90-145 - இப்பதினொருவரும் ஒரு காலத்தவராவர். 12. 1.சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறை 118-150 2. இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி (இளவரசன்) 13. 1.சேரன் செங்குட்டுவன் 125-180 2.பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் 154-175 14. 1.இளஞ்சேரலிரும்பொறை 132-148 15. 2.கோப்பெருஞ் சோழன் 140-146 3. இளம்பழையன் மாறன் 140-146 4. பாண்டியன் அறிவுடை நம்பி 138-145 16. 1. தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் 175-204 2. இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி 145-193 3. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை 148-180 17. 1.சேரமான் மாரிவண்கோ (குட்டுவன் சேரல்) 180-215 2.கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி 204-235 - இப்பன்னிருவரும் ஒருகாலத்தவராவர். குறிப்பு : முதலில் உள்ள எண், புலவர் வரிசை எண். 3. அரசர் குடிவழி பாண்டியர் குடிவழி 1. வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி 75-100 2. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் 100-105 3. கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி 105-119 4. ஆரியப்படை 5. சித்திர மாடத்துத் துஞ்சிய கடந்த நெடுஞ் நன்மாறன் (154-175) செழியன் (119-154) 6. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (175- 204) 7. கானப் பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி (204-235) குறிப்பு : முதல் இருவர்க்கும் மூன்றாமவனுக்கும் உள்ள முறை தெரியவில்லை. 2. சோழர் குடிவழி 1. மகனை முறை செய்த வளவன் கி.மு.180-150 2. முதற்கரிகாலன் தந்தை 150-120 3. முதற்கரிகாலன் 120-90 4. முதல் வேற்பஃ நடக்கைபெருவிறற்கிள்ளி 90-75 5. உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி 75-60 6. இரண்டாங் கரிகாலன் 60-10 7.முடித்தலைக் கோப்பெருநற் கிள்ளிகி.மு.10, கி.பி.46 8.குராப்பள்ளித் துஞ்சிய 9. இரண்டாம் வேற்பஃறடக்கைப் பெருந்திருமாவளவன் (46-90) பெருவிறற்கிள்ளி (50-97) 10. காரியாற்றுத் துஞ்சிய 11. குளமுற்றத்துத் துஞ்சிய நெடுங்கிள்ளி (90-145) கிள்ளிவளவன் (98-135) 13. இராசசூயம் வேட்ட 12. இலவந்திகைப் பள்ளித் பெருநற்கிள்ளி (145-193) துஞ்சிய நலங்கிள்ளி (102-150) 14.நெடுமுடிக்கிள்ளி (150-198) சேரர் குடிவழி 1. உதியன்குடி 1. உதியஞ் சேரல் கி.பி.18-67 2. இமயவரம்பன் 3. பல்யானைச் செல்கெழு நெடுஞ்சேரலாதன் (67-125) குட்டுவன் (70-95) 4. களங்காய்க் 5. ஆடுகோட் 6. குட்டுவன் கண்ணி நார் பாட்டுச் கோதை முடிச்சேரல் (71-97) சேரலாதன் (95-130) (80-118) 7. சேரன் செங்குட்டுவன் 125-180 இளங்கோவடிகள் 8. சேரமான் மாரிவண்கோ 180-215 2. பொறையன் குடி 1. அந்துவஞ்சேர லிரும்பொறை கி.பி. 32-90 2. செல்வக்கடுங்கோ வாழியாதன் கி.பி. 90-115 3. தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை ,, 115-132 4. யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை ,, 132 - 148 5. இளஞ்சேர லிரும்பொறை ,,148 -1 80 4. கி. மு. முதல் நூற்றாண்டினர் 1. 1. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் கி.மு-95-75 2. முதலாம் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி கி.மு-50-75 2. 1. குடக்கோச்சேர லிரும்பொறை கி.மு-78-62 2. உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி கி.மு-75-60 3. 1. சேரமான் கணைக்காலிரும் பொறை கி.மு-60-35 2. கோச்செங்கட் சோழன் கி.மு-50-32 4. இரண்டாங் கரிகாலன் கி.மு.60-10 5. கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி கி.மு-50-30 6. 1. கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேர லிரும்பொறை கி.மு-30-12 2. நல்லடி கி.மு-32-18 7. 1. முதலாங் கிள்ளிவளவன் கி.மு-32-10 2. பாண்டியன் பழையன் மாறன் கி.மு.45-26 3. சேரமான் கோக்கோதை மார்பன் கி.மு.-35-16 1.சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் (95 -75): இவனொரு பெருவீரன், இவன் காலத்தே, முதலாம் வேற் பஃற டக்கைப் பெருவிறற்கிள்ளி (90-75) என்பான் சோழ நாட்டின் ஒருபகுதியை ஆண்டு வந்தான். இருவர்க்கும் ஏனோ பகையுண் டானது. கொங்கு நாட்டுக் கோவை மாவட்டத்துத் திருப்போர்ப் புறத்து நடந்த போரில் இருவரும் உயிர்நீத்தனர் (புறம் - 62, 63), கழாத்தலையார் என்னும் புலவர் போர்க்களஞ் சென்றார். சேரமான் குற்றுயிராகக் கிடந்தான். அந்நிலையினும் தன் கழுத்தி லுள்ள மணி மாலையை எடுத்துக் கொள்ளுமாறு குறிப்பாலுணர்த் தினான் (புறம் -363), என்னே குடக்கோவின் வள்ளன்மை! திருப்போர் என்பது, இன்று திருப்பூர் என வழங்குகிறது. ஊரின் தென் புறமுள்ள கோயில் வெளியே, திருப் போர்ப்புறம் எனப்படும். அங்கு தோண்டி யதில், யானை குதிரைகளின் எலும்புகள் இருந்தனவாம். சோழன் மேற்கு நோக்கி யும், சேரன் கிழக்கு நோக்கியும் படையெடுத்துச் சென்று அவ்விடத்தில் எதிர்ப் பட்டனர் போலும். 2. உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி (75 - 60): இவன் முதலாம் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியின் மைந்தன்; இரண்டாங் கரிகாலன் தந்தை, இவன், பெருங்குன்றூர்க் கிழார் என்னும் புலவரைப் பிரிய மனமில்லாது பரிசில் நீட்டித்துப் பின் பெரும்பரிசில் நல்கினான் (புறம் -266) . இவன் காலத்தே சேரமான் குடக்கோச் சேரலிரும்பொறை (78-62) என்பவன், சேரநாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். அவனும் அப்புலவரைப் பிரிய மனமில்லாது, இவன் போலவே பரிசில் நீட்டித்துப் பின் பெரும்பரிசில் நல்கினான் (புறம் -210, 211). முறுகிய தமிழ்ப் பற்றுள்ள இவர்கள் காலம் அமைதியாக இருந்தது. 3. கணைக்காலிரும்பொறை (60-35): இவன், சேரநாட்டுத் தொண்டியிலிருந்து அப்பகுதியை ஆண்டு வந்தான். இவன், தன்னை எதிர்த்த மூவன் என்னும் குறுநில மன்னனைப் பொருது கொன்று, அவன் பல்லைப் பிடுங்கித் தொண்டி நகரின் கோட்டைக் கதவில் பதித்தவன் (நற்-18). இவன் காலத்தே, கோச்செங்கட் சோழன் (50-32) என்பான் உறையூரிலிருந்து அப்பகுதியை ஆண்டு வந்தான். இருவர்க்கும் எதனாலோ பகையுண்டானது. உறையூரின் கிழக்கு வாயிலான குணவாயிற்கோட்டம், வெண்ணிப்பறந்தலை, உறையூரின் தென்பாலிருந்த கழுமலம், கொங்கு நாட்டுத் திருப்போர்ப்புறம் ஆகிய இடங்களில் நடந்த நான்கு போரிலும் சேரமான் தோற்று, உறையூர்க் குணவாயிற் கோட்டத்தே சிறை வைக்கப்பட்டான். ஒரு நாள் தண்ணீர் கேட்டு, சிறைக்காவலன் காலந் தாழ்ந்துக் கொண்டு வந்து கொடுக்க, அதைக்குடியாது, ‘குழவி யிறப்பினும் ஊன்றடி பிறப்பினும்’ என்னும் 74 ஆம் புறப்பாட்டை எழுதி வைத்துவிட்டு, ‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமா வன்னார் உயிர் நீப்பர் மானம் வரின், என்னும் குறளுக்கு எடுத்துக்காட்டாயினான். 4. இரண்டாங் கரிகாலன் (60-10): இவன், உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகன். இடைக்காலச் சோழப்பேரரசை நிறுவிய முதல் இராசராசன், முதல் இராசேந்திரன் போன்ற பெருவீரனாவான். இவன் இளமையிலேயே தந்தையை இழந்து அரசனான். பொறாமை கொண்ட தாயத்தார் இவனைச் சிறையி லிட்டதோடு, அச்சிறைக்குத் தீயும் இட்டனர். இவன், தன் தாய்மாமனான இரும்பிடத்தலையாரின் உதவியாலும், தன் திறமையாலும் சிறையினின்று வெளியேறிப் பகைவரை வென்று அரசெய்தினான். இளமையுடையோனென எள்ளிய வழக்காளிகளாகிய முதியோர் நாணும்படி, இவன் நரை முடித்து நல்ல தீர்ப்புக் கூறியதாகப் பழமொழி நானூறு, மணிமேகலை முதலிய நூல்களால் தெரிகிறது. இவன் மூன்றாம் வெண்ணிப் போரில் சேர பாண்டியரை வென்றான் (பொருந-143-48). சேர பாண்டிய நாடுகளை வென்ற இவன், வடக்கே சென்று தொண்டை நாட்டைப் பிடித்து அதை வளமாக்கினான்; பின்னர் இமயம் வரைப் படையெடுத்துச் சென்று, எதிர்த்த வடவரசர்களை யெல்லாம் வென்று, இமயத்தைக் கடந்து சென்ற போது பனியுறைந்து, செல்ல முடியாது செய்தமையால், இமய நெற்றியில் புலி பொறித்து மீண்டான். இன்றும் திபேத்துக்கும் சிக்கிமுக்கும் இடையிலுள்ள மலைத்தொடருக்கு - சோழன் மலைத் தொடர் என்றும், அங்குள்ள கணவாய்க்கு - சோழன் கணவாய் என்றும் பெயர் காணப்படுகின்றனவாம். (டாக்டர். இராசமாணிக்கனார் - பல்லவர் வரலாறு - 9) இமயந் தலைதாழ்க்க வாகை சூடிய கரிகாலன் மீண்டு வரும்போது, மகத நாட்டு மன்னன் பட்டிமண்டபமும், வச்சிர நாட்டு மன்னன் கொற்றப்பந்தரும், அவந்தி நாட்டு அரசன் தோரணவாயிலும் காணிக்கையாகத் தரப்பெற்று வந்தனன் (சிலப்.5:90-104). இம்மூன்றும் காட்சிப் பொருள்களாகும். பின்னர்க்கரிகாலன் இலங்கையைவென்று, தன் படைத் தலைவனை அதை ஆளும்படி செய்தான். கி.மு. 44 முதல் 17 வரை இலங்கையில் தமிழராட்சி நடந்து வந்தது. இலங்கையி லிருந்து இவன் பல்லாயிரக் கணக்கானவர்களை அழைத்து வந்து, காவிரிக்குக் கரை கட்டி, கால்வாய்கள் வெட்டி நாட்டை வளமுடையதாக்கினான். பொருநராற்றுப்படை, பட்டினப் பாலைகளின் பாட்டுடைத் தலைவன் இவனே. பட்டினப் பாலை பாடிய உருத்திரங் கண்ணனார்க்கு 16 நூறாயிரம் பொன்னோடு, உறையூரிலிருந்த பதினாறுகால் மண்டபத்தையும் பரிசளித்துப் பெருமைப் படுத்தினான். கருங்குழலாதனார் என்னும் புலவர், இவனது வென்றிச் சிறப்பினைப் பாடிக் களித்ததோடு, கையறமும் பாடிக் கலங்கினர் (புறம்-7,224). உறையூரும் புகாரும் இவன் காலத்தே சிறந்து விளங்கின. 5. பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி (50-30): இவன் வீரமும் கொடையும் மிக்கவன். இரும்பிடர்த் தலையாரால் பாடப் பெற்றவன் (புறம்-3). 6. கருவூ ரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேர லிரும் பொறை (30-12): இவன், இரண்டாங் கரிகாலன் மருமகன்; ஆதி மந்தியின் கணவன்; அத்தி என்பது இவன் பெயர். ஆடல் பாடலில் சிறந்தவனாகையால் ஆட்டனத்தி (ஆட்டன் அத்தி) எனப்பெயர் பெற்றான். இவன், பொறையன் குடியைச் சேர்ந்தவன். கோச்செங்கட் சோழன் மகனான நல்லடி (32-18) என்பான், இவ்வத்தியுடன் பகைகொண்டு பொருது இறந்தான். அவன் சில ஆண்டுகள் இருந்தாண்ட கொங்கு நாட்டுக் கருவூரில் இவனும் சில ஆண்டுகள் இருந்தாண்டு வந்ததால், ‘கருவூர் ஏறிய ஓள்வாட் கோப் பெருஞ் சேர லிரும்பொறை’ எனப்பட்டான். இவன் ஒருநாள், புகாரை அடுத்த கழார் என்னுமிடத்தே காவிரியில் நீராடும்போது, வெள்ளத்தால் அடித்துச் செல்லப் பட்டுக் கடலையடைந்து, பரதவரால் கரை சேர்க்கப்பட்டான்; அங்கிருந்த மருதி என்பாள் மீது காதல் கொண்டான். கணவனைத் தேடிக் கொண்டு அங்கு வந்த ஆதி மந்திக்காக, மருதி கடலில் விழுந்திறந்தாள். இவ் வரலாற்றினை - அகம் - 45, 76, 135, 222, 236 , குறுந் - 31 பாடல்களிற் காண்க. இவ்வத்தி, நரிவெரூ உத்தலை யாரால் பாடப் பெற்றவன் (புறம் - 5). 7. சேரமான் கோக்கோதை மார்பன் (35-16): இவன் கணைக்காலிரும் பொறைக்குப்பின் தொண்டியிலிருந் தாண்டவன். இவனுக்கும், பாண்டியன் பழையன் மாறன் (45-26) என்பானுக்கும் பகையுண்டானது. இவன் காலத்தே, சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்த முதலாங் கிள்ளி வளவன் (32-10) என்பான், மதுரையை முற்றிப் பழையன் மாறனை வென்றான். அதுகண்ட கோக்கோதை மார்பன் மகிழ்ந்தானாம் (அகம் -346). சேரனும் சோழனும் நண்பர் களாவர். தன் நண்பனுக்காகவே கிள்ளி மதுரையை முற்றினானென்க. 5. கி.பி. 1 முதல் 150 வரை இருந்தவர் 1. 1. சோழன் முடித்தலைக் கோப்பெருநற் கிள்ளி கி.மு.10-கி.பி.46 2. சேரமான் அந்துவஞ்சேர லிரும்பொறை கி.பி.32-90 2. உதியஞ் சேரலாதன் கி.பி.18-67 3. 1. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் கி.பி.46-90 2. வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி கி.பி.75-100 4. இரண்டாம் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி கி.பி.50-97 5. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி.பி.67-125 6. பல்யானைச் செல்கெழு குட்டுவன் கி.பி.70-95 7. களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் கி.பி.72-97 8. ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் கி.பி.80-118 9. செல்வக்கடுங்கோ வாழியாதன் கி.பி.90-115 10. சேரமான் குட்டுவன் கோதை கி.பி.95-130 11. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கி.பி.98-135 12. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் கி.பி.100-105 13. கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி கி.பி.105-119 14. 1. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி கி.பி.90-145 2. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி கி.பி.102-150 1. சோழன் முடித்தலைக் கோப்பெருநற் கிள்ளி (கி.மு.10-கி.பி.46): இவன், இரண்டாங் கரிகாலன் மகன், இவன் ஒருகால் சேரநாட்டு வஞ்சியை முற்றினான். முற்றகப் பட்டிருந் தவன், சேரமான் அந்துவஞ்சேர லிரும்பொறை (32-90) என்பவன். ஒருநாள் இரும்பொறையும் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவரும் வேண் மாடத்து மேல் இருக்கையில், சோழன் தன் பாசறைப் பக்கம் யானைமேற் சென்று கொண்டிருந்தான். யானை வெறி கொண்டு, குத்துக் கோற் காரருக் கடங்காது நகரை நோக்கிச் சென்றது. அதுகண்ட மோசியார், ‘அதோ அக்களிற்றின்மேல் வருபவன் அம்பால் கிழிக்கப்பட்ட மார்பையுடையவன். களிறோ வெறி கொண்டு விட்டது. அவன் நோயிலனாகப் பெயர்க’ (புறம் - 13) எனப் பரிவுரை கூறி இருவரையும் நண்பராக்கினார். என்னே புலவரின் கடப்பாட்டுத் தன்மை! 2. உதியஞ்சேரல் (18-67): இவன், இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் தந்தை. இவன் ஏனையரசர்களுடன் நட்புக் கொண்டு அமைதியாக நாடாண்டு வந்தான். இவன், பதிற்றுப்பத்து - முதற்பத்தின் பாட்டுடைத் தலைவன் என்பது அறிஞர் கருத்து. “நாடுகண் அகற்றிய உதியஞ் சேரற் பாடிச் சென்ற பரிசிலர் போல” (அகம் - 65) என்பது, மாமூலனார் பாட்டு. மாமூலனார் என்னும் புலவர் இவ்வுதியஞ் சேரலுக்கு முற்பட்டவராதலான், மாமூலனார் பாராட்டும் உதியஞ் சேரல், இவனுக்கு முன்னிருந்த ஒருவனாவன். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளையுடைய முச்சங்க காலத்தே இருந்த முடியுடை மூவேந்தர் மரபினருள் ஒருசிலரே நமக்கு அறிமுகமாகியுள்ளனர். அறிமுக மாகாதவரே பலராவர். அவருள், ஒரே பெயரையுடைய பலர் இருந்திருக்கலாம். அத்தகைய முன்னோரி லொருவனே மாமூலனார் பாராட்டும் இவ்வுதியஞ்சேரல். “வலம்படு முரசின் சேர லாதன் முந்நீர் ஒட்டிக் கடம்பறுத் திமயத்து முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து” (அகம் - 127) இஃதும் மாமூலனார் பாடலே. இப்பாடலிற் குறிக்கப்படும் சேரலாதன், உதியஞ் சேரலின் மகனான இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் அல்லன். அப்பெயருடைய அவன் முன்னோனாவன். கடற்கடம்பரை யொறுத்தலும் இமயத்தில் விற்பொறித் தலும் பழங்காலச் சேரமன்னர் பலர் செய்த செயல்களாகும். ‘முன்னோர் மருள (போல)’ என்பதால், இது விளங்கும். இனிவரும் இத்தகைய இடங்களுக்கும் இவ் வாறே பொருள் கொள்க. 3. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் (46-90): இவன், முடித்தலைக் கோப்பெருநற் கிள்ளியின் மைந்தன்; இரண்டாங் கரிகாலன் பேரன். இவன் உறையூரிலிருந்து அப் பகுதியை ஆண்டு வந்தான். மணக்கிள்ளி, ஞாயிற்றுச் சோழன் எனவும் இவன் பெயர் பெறுவான் (பதிற். 5,பதிகம்; சிலப்-29). செங்குட்டுவன் தாய் நற்சோணை இவன் மகளே. இவன் காலத்தே, வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி (75-100) என்னும் பாண்டிய மன்னன் பாண்டி நாட்டை ஆண்டு வந்தான். இவ்விருவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். ஒருநாள் இவ்விருவரும் ஒருங்கிருந்த போது, காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும் புலவர், ‘இன்னீராகலின் இனியவு முளவோ’ (புறம்.58), என வியந்தனர். இவன் ‘குராப்பள்ளி’ என்னும் இடத்தில் இறந்ததனால் இப்பெயர் பெற்றான். இனி வரும் இத்தகைய பெயர்களையும் இவ்வாறே கொள்க. 4. இரண்டாம் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி (50-97): இவன், மணக்கிள்ளியின் தம்பி. இவன் புகாரிலிருந் தாண்டான். 5. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (67 -125): இவன், உதியஞ் சேரலின் மூத்த மகன், இவனுக்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி, நற்சோணை என இரு மனைவியர். களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும், ஆடு கோட்பாட்டுச் சேரலா தனும் - பதுமன் தேவி மக்கள். சேரன் செங்குட்டுவனும், இளங்கோவடிகளும் -நற்சோணை மக்கள். இவனொரு பெருவீரன்: மேல்கடல் தீவுகளிலிருந்து கொண்டு, கப்பற் கொள்ளை யிட்டு வந்த கடம்பர்களை வென்ற டக்கினான்; கடம்பர் துணையை நம்பிக் குறும்பு செய்த யவனர்களை வென்று, கைகளைப் பின்கட்டாகக் கட்டி, நெய்யைத் தலையில் பெய்து ஊர்வலம் செய்வித்துச் சிறையிட்டான். அவர்கள் ஏராளமான பொருள் தந்து சிறை வீடு பெற்றனர். இவன் இமயம் வரைப் படை யெடுத்துச் சென்று, எதிர்த்த வடவரசர் களை வென்று, இமயத்தில் விற்பொறித்து மீண்டான் (பதிற். 2, பதிகம்). இவன், தன்மீது பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார்க்கு, உம்பற்காட்டு ஐந்நூற்றூர்ப் பிரமதாயமும், முப்பத்தெட்டு யாண்டு தன்னாட்டுள் வருவதனிற் பாகமும் கொடுத்தான். உம்பல்காடு-யானைக்காடு. இது, சேர நாட்டிலுள்ள ஒரு மலைநாட்டுப் பகுதி. 6. பல்யானைச் செல்கெழு குட்டுவன் (70 - 95): இவன், நெடுஞ்சேரலாதன் தம்பி; பூழி நாட்டை ஆண்டு வந்தான். இவன், மேல் கடலை அடுத்த யவனர் நாடொன்றை வென்றுபிடித் தாண்டதாகத் தெரிகிறது (சிலப்.28: 41). மேல் கொங்கு நாட்டை வென்றனன் (பதிற்.22). தன் மீது மூன்றாம் பத்தைப் பாடிய பாலைக் கௌதமனார் விருப்பப்படி, இவன் ஒன்பது பெருவேள்வி வேட்டு, அவரை நற்பேறு பெறச் செய்தனனாம். 7. களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் (72 - 97): இவன், நெடுஞ்சேரலாதன் மகன்; மாந்தையிலிருந்து அப்பகுதியை ஆண்டு வந்தான். கொங்கு நாட்டு ஆனைமலைப் பகுதியை ஆண்ட நன்னனை வென்று, அவன் கைப்பற்றிய தன்னாட்டுப் பகுதியை இவன் மீட்டனன் (பதிற் -4, பதிகம்); தன் படைத்தலைவனான புன்னாட்டு ஆய் எயினனைக் கொன்றதற்காகக் கொண்கானத்து நன்னனைப் பொருது கொன்றான் (அகம் - 199); தகடூர் அதியமான் நெடுமிடல் அஞ்சியை வென்றான் (பதிற்-32); நாலாம் பத்தைப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார்க்கு நாற்பது நூறாயிரம் பொன்னும், ஆள்வதிற் பாகமுங் கொடுத்தான். 8. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (80-118): இவன், நார்முடிச் சேரலின் தம்பி; தொண்டியிலிருந்து அப்பகுதியை ஆண்டு வந்தான்; அடிக்கடி தன்னாட்டிற் புகுந்து குறும்பு செய்த ஆரியரை வென்று துரத்தியதோடு, ஆரிய நாடான தண்டகாரணியத் திற்கே படையெடுத்துச் சென்று, எதிர்த்த ஆரியரை வென்று, ஏராளமான வருடை என்னும் ஒரு வகை ஆடுகளையும் மாடுகளையுங் கைப்பற்றி வந்து இரவலர்க் கீந்தான். உள்ள இடத்துச் சென்று இரவலரைத் தேரேற்றிக் கொணர்ந்து பரிசில் நல்கும் பான்மையுiடயவனாவனிவன் (பதிற்-55). ஆறாம் பத்தைப் பாடிய காக்கை பாடினியார் நச் செள்ளையார்க்கு அணிகலன்களுக்கென ஒன்பது துலாம் பொன்னும், நூறாயிரங் காணமும் (பொற்காசு) கொடுத்து, அத்தாணியில் உடனிருக்கையுந் தந்தான். 9. செல்வக் கடுங்கோ வாழியாதன் (90-115): இவன், அந்துவஞ் சேரலின் மைந்தன்; நெடுஞ்சேரலாதன் கொழுந்தி கணவன். ஏழாம்பத்தைப் பாடிய கபிலர்க்கு நூறாயிரங் காணமும், நன்றாவென்னும் குன்றேறி நின்று கண்ட நிலமுங் கொடுத்தான்; பாண்டி நாட்டுச் சிக்கற்பள்ளி என்னும் இடத்தில் நடந்த போரில் இறந்தான். 10. சேரமான் குட்டுவன் கோதை (95 - 130): இவன், பல் யானைச் செல்கெழு குட்டுவன் மகன்; பூழி நாட்டை அமைதி யாக ஆண்டு வந்தான். 11. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்: (98-135): இவன், இரண்டாம் வேற்பஃ றடக்கைப் பெருவிறற் கிள்ளியின் மூத்தமகன்; உறையூரிலிருந்தாண்டு வந்தான். இவனொரு பெருவீரன். ஒருகால் மேற்கு நோக்கிப் படையெடுத்துச் சென்று, எதிர்த்த கொங்கு வேளிரை வென்று சேர நாடு சென்று வஞ்சியை முற்றினான் (புறம் - 373). ஆலத்தூர்க் கிழாரும், மாறோகத்து நப்பசலையாரும் அறிவுரை கூறி (புறம்-37) முற்று விடச் செய்தனர். ஒருகால் இவன் மலையமான் திருமுடிக் காரியைப் பொருது கொன்று, அவன் மக்களைக் கொண்டு வந்து கொல்யானைக் காற்கீழிட்டுக் கொல்ல முயல்வது கண்ட கோவூர்க்கிழார் அறிவுரை கூறி, அச்சிறார்களைக் காப்பாற்றினார் (புறம் - 46). ஓரூர்க்குடிமக்கள் இறுக்க வேண்டிய நிலவரி சில ஆண்டுகள் இறுக்கப்படாமல் கடனாகிவிடவே, வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர் கிள்ளியைப்பாடி அக்கடனைத் தள்ளும்படி செய்தார் (புறம்-35). 173 புறப்பாட்டு இவன் பாடியதே. 12. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் (100-105): இவன், பேராற்றல் வாய்ந்தவன். ஆனால், இவன் அமைதி யாக நாடாண்டு வந்தான். இவன் பரிசு நீட்டியது கண்ட ஆவூர் மூலங்கிழார் கடிந்து கூறவே (புறம் - 196), பெரும் பரிசில் நல்கினான் (புறம் - 55, 56, 57, 198). 13. கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி(105 - 119): இவனொரு பெருவீரன்; வடபுல மன்னரை வென்று துரத்திய தீரன் (புறம் - 51, 52). 14. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி (90 - 145): இவன், மணக்கிள்ளியின் மகன்; செங்குட்டுவன் தாய்மாமன். இவன் ஆவூரிலிருந்தபகுதியை ஆண்டு வந்தான். இவனுக்கும் இவன் சிற்றப்பன் மகன் நலங்கிள்ளிக்கும் எவ்வாறோ பகையுண்டானது. நலங்கிள்ளி புகாரில் பட்டம்பெற்றதும் (102இல்), நெடுங்கிள்ளி உறையூரைத் தனதாக்கிக் கொண்டான். நலங்கிள்ளி ஆவூரை முற்றுகையிட்டான். நெடுங்கிள்ளி அஞ்சி மதிலடைத்திருந்தான். அது கண்ட கோவூர்க்கிழார் இடித்துரைக்கவே (புறம்-44), பொரு வான் போல் வெளிப்போந்து ஓடி, உறையூர்புக்குக் கதவடைத் திருந்தான். நலங்கிள்ளி உறையூரை முற்றினான். அதுகண்ட கோவூர்க்கிழார், ‘உங்கள் இருவர் கண்ணியும் ஆத்தியே. உங்களில் யார் தோற்றாலும் தோற்பது நுங்குடியே. இருவரும் வெல்வ தென்பது இயற்கையன்று. நும்மோரன்ன வேந்தர்க்கு இது உவகையை உண்டாக்கும்’ (புறம் - 45) என அறிவுரை கூறி உடன்பாடு செய்தனர். எனினும் அப்பகை தீராது, காரியாற்றங் கரையில் நடந்த போரில் நெடுங்கிள்ளி கொல்லப் பட்டான். நலங்கிள்ளி (102-150): ஒரு பெருவீரன். இவன், பாண்டியரை வென்று, ஏழு கோட்டைகளைக் கைப்பற்றி அவற்றில் புலி பொறித்தான் (புறம் - 33). இவனது படைப் பெருமை, 225 புறப்பாட்டால் விளங்கும். தமிழ் நாட்டை வலமாகச் சுற்றிக் கொண்டு இங்கு வருதலுங் கூடுங்கொல் என்று வடவர் அஞ்சி நடுங்கித் துஞ்சாக் கண்ணராய் இருப்பர் (புறம்-31) என்று, இவனது போர் வென்றியைக் கோவூர்க்கிழார் பாராட்டும் அத்தகு ஆற்றலுடையவன். 73, 75 புறப்பாட்டுக்களால் இவனது புலமை விளங்கும். இவன், இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி எனவும் வழங்கப் பெறுவன். மாவளத்தான்: இவன், நலங்கிள்ளியின் தம்பி; அண்ணனுக்குத் துணையாக இருந்து வந்தான். ஒருநாள் இவனும், தாமப்பல் கண்ணனார் என்னும் புலவரும் வட்டாடினர். புலவரறியாது வட்டொன்று அவர் காற் கீழ் மறைய, அதை அவர் மறைத்ததாக எண்ணி வெகுண்டு, அவ்வட்டை அவர் மேல் வீசி எறிந்தான். உடனே புலவர் வெகுண்டு, ‘நீ சோழர் மரபினன் அல்லன்; சோழர் மரபில் வந்திருப்பின் இங்ஙனம் செய்யாய்; அதனால், நின் பிறப்பில் எனக்கு ஐயந் தோன்றுகிறது’ என்று கடிந்துரைத்தார். மாவளத்தான் தன் தவற்றை எண்ணி வருந்தி நாணி நின்றான். அவனது உள்ள நிலையை உணர்ந்த புலவர், அவனைத் தேற்றி மகிழ்வித்தார் (புறம்-43). 6. கி.பி. 115 முதல் 235 வரை இருந்தவர் 1. சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை 115-132 2. 1. சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறை 118-150 2. இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி - (இளவரசன்) 3. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் 119-154 4. 1. சேரன் செங்குட்டுவன் 125-180 2. இளங்கோவடிகள் 5. 1. இளஞ்சேர லிரும்பொறை 132-148 2. கோப்பெருஞ்சோழன் 140-146 3. இளம்பழையன் மாறன் 6. பாண்டியன் அறிவுடை நம்பி 138-145 7. சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் 154-175 8. 1. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் 175-204 2. இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி 145-193 3. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை 148-180 9. 1. சேரமான் மாரி வண்கோ 180-215 2. கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி 204-235 3. இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி 10.1. நெடுமுடிக் கிள்ளி 150-198 2. இளங்கிள்ளி 1. சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை (15-132): இவன், செல்வக் கடுங்கோ வாழியாதன் மகன். இவன், காமூரை முற்றிக் காமூர்த்தலைவனான கழுவுள் என்பானைப் புகலடையும்படி செய்தான். (பதிற்-71, அகம் - 135, 365). திருக்கோவலூர் மலையமான் திருமுடிக் காரியை ஏவி, கொல்லி மலை வல்வில் ஓரியைக் கொல்வித்தான்; தகடூர் நாட்டின் மேற் படையெடுத்துச் சென்று, அதியமான் நெடுமான் அஞ்சியைப் பொருது கொன்றான் (பதிற் - 8 , பதிகம்.) இப்படையெடுப்புப் பற்றியதே ‘தகடூர் யாத்திரை’ என்னும் நூல். ஒருநாள், மோசிகீரனார் என்னும் புலவர், நடந்து வந்த களைப்பினால், முரசுகட்டிலைக் கட்டிலென்றெண்ணிப் படுத் துறங்க, அவர் தூங்கி எழுகிறவரை கவரிவீசி நின்று, ‘கவரி வீசிய காவலன்’ என்னும் புகழுக் குரியவனானான் (புறம் - 50). எட்டாம் பத்தைப் பாடிய அரிசில் கிழார்க்கு ஒன்பது நூறாயிரம் பொற்காசோடு, தன் அரசையும் பரிசிலாகக் கொடுத்தான். அவர் அரசைத் திருப்பித்தந்து இவனுக்கு அமைச்சுப் பூண்டார். 2. சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறை (118 - 150): இவன், விளங்கில் என்னும் ஊரிலிருந்து, அப்பகுதியை ஆண்டவன்; அதனை முற்றிய பகைவரைப் புறங்காட்டி ஓடும்படி செய்தான் (புறம்-53). இவன் காலத்தே, சோழ நாட்டைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி (90-145) ஆண்டு வந்தான். அவன் மகன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி என்பான், இளவரசனாக இருந்தபோது, மாந்தரனுக்கும் அவனுக்கும் போருண்டானது. கிள்ளி பக்கம் பெருவீரனான தேர்வண்மலையன் இருந்ததால், சேரன் தோற்றான். வென்றவனும், ‘நம்மை வெல்வித்தோன் மலையன்’ எனவும், தோற்றவனும், ‘மலையன் இல்லாவிடின் நாம் எளிதில் வென்றிருக்கலாம்’ எனவும்-மலையன் திறத்தினை வியந்தன ராம் (புறம்-125). அத்தகு பெருவீரன் தேர்வண் மலையன்! 3. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் (119 - 154): இவன், கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியின் மகன்; தமிழ் நாட்டிற் புகுந்து குறும்பு செய்த ஆரியப் படை வீரரை அடித்துத் துரத்திய பெருவீரன். இவனே, ஆராயாது கோவலனைக் கொன்றது குற்றமெனக் கண்டதும், ‘யானோ அரசன்! யானே கள்வன்! தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது. கெடுக என் ஆயுள்’ எனக் கூறி அரசுகட்டிலில் துஞ்சி, தமிழர் செங்கோன்மைத் திறத்தினை உலகங் கண்டு வியக்கும்படி செய்தவனாவன் (சிலப். 20: 73-8; 23 - கட்டுரை). ‘உற்றுழி உதவியும்’ என்ற புறப்பாட்டு (183) இவன் பாடியதே. சிலப்பதிகாரம் 23ஆம் காதையில் உள்ள பராசரன் கதையால் மாந்தரஞ்சேர லிரும்பொறையும் இவனும் ஒரு காலத்தவர் என்பது பெறப்படுகிறது. 4. 1. ‘சேரன் செங்குட்டுவன் (125-180): இவன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் x நற்சோணையின் முதல் மகன், இவன் வரலாறு, சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இவன், கடற் கொள்ளைக் காரரை வென்று, ‘கடலோட்டிய வேள்கெழு குட்டுவன்’ (புறம் - 369; பதிற்-46) என்று பெயர் பெற்றான். இவன் தாயுடன் பிறந்தவனான நெடுங்கிள்ளியின் மகன் - இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி இளமையாய் இருந்த போது, பங்காளிகள் பலர் கூடிக் கலகம் விளைவிக்கவே, பெருநற்கிள்ளி மலையமானது முள்ளூர் மலையில் ஓடி ஒளிக்க நேர்ந்தது. மலையமான் திருமுடிக் காரியின் மகன் திருக்கண்ணன் என்பான், இவனைப் பாதுகாத்தனன் (புறம்-174). இதையறிந்த செங்குட்டுவன் படையெடுத்துச் சென்று, உறையூரின் தெற்கு வாயிற் புறத்ததான நேரிவாயில் என்னும் இடத்தில் நடந்த போரில் பகைவர்களை வென்று, பெருநற்கிள்ளியை அரசனாக்கி மீண்டான் (சிலப்.27; 118 - 123; 28: 116-7; பதிற்-5. பதிகம்). மேலும் இவன், கொண்கானத்து நன்னனுடைய வியலூர் முதலியவற்றையும் வென்றான். இவன், கொங்கர் செங்களத்தும், பழையன் மோகூரிலும் செய்த போர்கள் பற்றி, மோகூர்ப் பழையன் வரலாற்றில் கூறப் பட்டுள்ளது; ஆங்குங்காண்க, ஐந்தாம் பத்தைப் பாடிய பரணர்க்கு, இவன் உம்பற்காட்டு வருவாயோடு, தன் மகன் குட்டுவன் சேரலை யும் பரிசிலாகக் கொடுத்தனன். குடக்கோ நெடுஞ்சேரலா தனைப் (கி.மு. 95-75) பாடிய (புறம்-63) பரணர் வேறு, இப்பரணர் வேறு என்பதை அறியவும். 2. இளங்கோவடிகள்: இவர், செங்குட்டுவன் தம்பி; சிலப்பதி கார ஆசிரியர். அண்ணனுக்குத் துணையாக இருந்து நாடாளப் பிறந்த இவர், அதைவிட்டுச் சமணத் துறவியானது, அக்காலத்தே தமிழர்கள் புறச்சமயத் தாக்குதலால் அடைந்த வீழ்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். 5. 1. இளஞ்சேர லிரும்பொறை (132 -148) : இவன், தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறையின் மகன். இவன் கொங்கு நாட்டின்மேற் படையெடுத்துச் சென்று, கொல்லி மலைக்குக் கீழ்பாலுள்ள விச்சிமலைத் (பச்சைமலை) தலைவனான விச்சிக்கோவைப் பொருதுவென்றான்; இப்போரில் விச்சிக் கோவுக்குத் துணைவந்த கோப்பெருஞ் சோழனையும், இளம் பழையன் மாறனையும் தோல்வியுறச் செய்தான் (9, பத்துப் பதிகம்). ஒன்பதாம் பத்தைப் பாடிய பெருங்குன்றூர்க் கிழார்க்கு முப்பத்தீராயிரங் காணங் கொடுத்ததோடு, அவரறியாது ஊரும் மனையும்.... பாற்பட வகுத்தான். உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியையும், கி.மு. 75-60 (புறம்-266), சேரமான் குடக்கோச் சேரலிரும்பொறையை யும்-கி.மு. 78-62 (புறம்-210-1) பாடிய பெருங்குன்றூர்க் கிழார் வேறு, இவ்விளஞ்சேர லிரும்பொறையை (கி.பி. 132-148) ஒன்பதாம் பத்தில் பாடிய பெருங்குன்றூர்க்கிழார் வேறு என்பதை அறியவும். (2) கோப்பெருஞ் சோழன் (140-146): இவன், உறையூரி லிருந்தாண்டவன், இவன் காலத்தே, பாண்டி நாட்டில் பிசிராந்தையார் என்னும் புலவர் இருந்தார். இவ்விருவரும் ஒருவர் குணநலனை ஒருவர் கேள்வியாலறிந்து பழகா நட்புற்று, ‘புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்’ என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினர். இங்ஙனமிருக்க, கோப்பெருஞ் சோழனின் மக்கள் கொடிய ராய், தந்தையுடன் போரிடத் துணிந்தனர். அது கண்ட சோழன், வாழ்க்கையை வெறுத்து உயிர்விடத் துணிந்து வடக்கிருந்தனன், உணர்ச்சியால் இதையறிந்த ஆந்தையாரும் உறையூர் வந்து சோழனுடன் வடக்கிருந்தார். புல்லாற்றூர் எயிற்றியனார், பொத்தியார் முதலான புலவர் பெருமக்களும் வடக்கிருந்தனர்- உண்ணாதிருந்து உயிர்விட்டனர் (புறம்-67,213,214,215,216, 218, 220,221,222, 223). என்னே நட்பின் பெருமை! 214, 215, 216 புறப்பாட்டுக்கள் கோப்பெருஞ் சோழன் பாடியவையாம். 6. பாண்டியன் அறிவுடை நம்பி (138-145): ‘படைப்புப் பலபடைத்து’ என்ற (188) புறப்பாட்டைப் பாடியவன். இவன் அமைதியாக நாடாண்டு வந்தான். 7. சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் (154-175): இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தம்பி. கோவலன் கொலையுண்ட போது, கொற்கை யிலிருந்தாண்ட வெற்றி வேற் செழியன் இவனே. கண்ணகி விழாவின் போது இவன் உடனிருந்தான். 8. தலையாளங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (175-204): இவன், நன்மாறன் மகன்; பெருவீரன். இவன் இளமையாயிருந்த போது-இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை என்னும் இருபெரு வேந்தரும்; திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் என்னும் ஐம்பெரு வேளிரும் கூடி எதிர்த்தனர். தலையாலங் கானம் என்னும் இடத்தில் நடந்த போரில் அவ்வெழுவரையும் வென்று இவன் வாகை சூடினான் (அகம்-36). சேரமான் செழியனால் சிறைவைக்கப்பட்டுத் தன் திறமையினால் சிறைக்காவலரை வென்று, சிறையினின்று தப்பிச் சென்றான் (புறம்-17). இம்மாந்தரஞ்சேர லிரும்பொறை, இளஞ் சேரலிரும்பொறையின் மகன். 72 புறப்பாட்டு இந்நெடுஞ் செழியன் பாடியதே. 9. (1) கானப்பேர் எயில் தந்த உக்கிரப் பெருவழுதி (204-235): இவன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் மகன், இவன், வேங்கை மார்பன் என்னும் குறுநில மன்னனுக்குரிய கானப்பே ரெயிலை (காளையார் கோயில்) வென்று கைப்பற்றினான் (புறம்-21). இவன் இளவரசனாக இருந்த போது இவனும், இராசசூயம் வெட்ட பெருநற் கிள்ளியும், சேரமான் மாரிவண்கோவும் ஒருங்கிருந்த போது, ‘விண்மீனினும் மழைத் துளியினும் நும் வாழ்நாட்கள் பொலிவ தாக’ என, ஒளவையார் வாழ்த்தினார் (புறம்-367). 26 அகப் பாட்டு இவ்வுக்கிரப் பெருவழுதி பாடியதே. இவ்வுக்கிரப் பெருவழுதியே சங்ககாலக் கடைசிப் பாண்டிய மன்னனாவான். 9. (2)சேரமான் மாரிவண்கோ (180-215): இவன், சேரன் சேங்குட்டுவன் மைந்தன். இவனது இளமைப் பெயர் - குட்டுவன் சேரல் என்பது. உதியன் குடிச் சங்ககாலக் கடைசிச் சேரமன்னன் இவனே. 10. நெடுமுடிக் கிள்ளி (150-198): இவன், இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி மகன். மணிமேகலை காலத்தில் புகாரிலிருந்தாண்டு வந்த சோழ மன்னன் இவனே. இவன் தம்பி இளங்கிள்ளி என்பான் காஞ்சியிலிருந்து, அண்ணன் கீழ்த் தொண்டை நாட்டை ஆண்டு வந்தான். இந்நெடுமுடிக்கிள்ளியின் மனைவி, வாணமரபினளான சீர்த்தி என்பாள். இவள் மகனே மணிமேகலையைக் காதலித்த உதயகுமரன். நெடுமுடிக்கிள்ளியின் இரண்டாவது மனைவி, பீலிவளை என்பாள். நெடுமுடிக்கிள்ளி பட்டம் பெற்ற சில ஆண்டுகளில், ஒரு பாண்டியனும் சேரனும் சேர்ந்து தொண்டை நாட்டின் மேற்படையெடுத்தனர். காரியாற்றங் கரையில் நடந்த போரில், இளங்கிள்ளி அவர்களை வென்றனன் (மணிமே - 19: 119-129). இந் நெடுமுடிக்கிள்ளியே சங்ககாலக் கடைசிச் சோழ மன்னனாவான். சங்ககால மூவேந்தருட் சிலர் 1. பாண்டியன் பன்னாடு தந்தான்: இவன் பெயரால் இவன் வெற்றி வீரன் என்பது தெரிகிறது. குறுந்தொகை 276ஆம் பாடலைப் பாடியவனும், நற்றிணை தொகுப்பித் தோனும் இவனே. 2. நல்வழுதி: 12 ஆம் பரிபாடலைப் பாடியவன். 3. குறுவழுதி: 150 ஆம் அகப்பாட்டைப் பாடியவன். 4. நம்பி நெடுஞ்செழியன்: வீரமும் புகழும் ஒருங்கே உடையவன் (புறம்-239). 5. தித்தன்: இவன் உறையூரிலிருந் தாண்ட சங்க காலச் சோழமன்னன்; உறையூரைச் சிறந்த அரணுடையதாகச் செய்தவன்; பெருங்கொடையாளி (அகம்-6), உறையூரை முற்றிய கட்டியை வென்று துரத்தியவன் (அகம் - 226). 188 ஆம் அகப்பாட்டு இவன் பாடியதே. இத்தித்தன் மகள் ஐயை என்பாள், ‘ஐயை தந்தை’ எனத் தந்தையை அறிமுகப்படுத்தும் அத்தகு பெருமை உடையவள் (அகம்-6). 6. போரவைக் கோப்பெருநற் கிள்ளி: இவன், தித்தன் மகன் முக்காவனாட்டு ஆமூர் மல்லனை மற்போரில் வென்றவன் (புறம்-80,81,82). பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணை யார் என்னும் பெண்பாற் புலவர், இவனுடைய ஆண்மையிலும் அழகிலும் ஈடுபட்டு இவனைப் புகழ்ந்து பாடியுள்ளார் (புறம் - 83, 84, 85). 7. சோழன் நல்லுருத்திரன்: இவன், முல்லைக்கலியும், 191 ஆம் புறப்பாட்டும் பாடியவன். 8. முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்: 30 ஆம் அகப் பாட்டைப் பாடியவன். 9. பாலைபாடிய பெருங்கடுங்கோ: இவன் பாலைக்கலி யோடு, அகத்தில் 12 பாடல்களும், குறுந்தொகையில் 10 பாடல் களும், நற்றிணையில் 10 பாடல்களும் பாடியுள்ளான். 10. மருதம் பாடிய இளங்கடுங்கோ: 96, 176 அகப் பாட்டுக் களைப் பாடியவன். 8,9,10 - இம்மூவரும் மிகப் பழமையானவர். 11. சேரமான் இளங்குட்டுவன்: 153 ஆம் அகப்பாட்டைப் பாடியவன். தமிழரசு தோன்றிய காலந் தொட்டு, சங்ககால இறுதி வரை, பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் தமிழகத்தைச் சீருஞ் சிறப்புடன் ஆண்டுவந்த முடியுடை மூவேந்தர் மரபினருள் 81 பேர்களையும், அவர்தம் அரைகுறை வரலாற்றை யுந்தான் நாம் ஒருவாறு அறிந்து இன்புற முடிந்தது. மற்றவர்கள் பற்றி... 2. மருண்ட காலம் 1. சமயப் படையெடுப்பு செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி, மோரியரைப் புறங்காட்டி ஓடச்செய்ததையும், தமிழரசர்கள் வலிமை வாய்ந்த கூட்டணி அமைத்து வடவர் படையெடுப்பைத் தடுத்து வந்ததையும், கலிங்க மன்னனான காரவேலன் தமிழகத்தின் மீது பன்முறை படையெடுத்து ஒரு வெற்றியோடு அமைந்ததையும் முன்பு கண்டோம். ஒரு நாட்டைக் கைப்பற்ற எண்ணுவோர், முதலில் அந் நாட்டு மக்களிடைத் தங்கள் சமயத்தைப் பரப்புவது தொன்று தொட்ட மரபாகும். மோரியரும் இதைச் செய்யத் தவறவில்லை. பிந்துசாரன் படையெடுப்பிற்கு முன்னரே இதைச் செய்யத் தொடங்கினர். சமண பௌத்தத் துறவியர் களைத் தமிழகத்திற்கு அனுப்பி அச்சமயக் கொள்கைகளைத் தமிழரிடைப் பரப்பித் தமிழரிடம் செல்வாக்குப் பெறச் செய்துவந்தனர். அன்னாரும் அவ்வாறே அவ்வடவர் படையெடுப்பிற்கு வழிவகை செய்து வந்தனர். அம்மோரியர் அதோடு நிற்கவில்லை. பிந்துசாரன் தந்தை யான சந்திரகுப்தன், தன்வாழ்நாளின் இறுதியில் கி.மு.301 க்குப் பின் பத்திரபாகு என்னும் சமண முனிவருடன், மைசூர் நாட்டி லுள்ள வெண்குளம் (பெள்குளா) என்னும் இடத்தில் வந்து தங்கியிருந்து, 12 ஆண்டுகட்குப் பின், பத்திரபாகு முனிவரின் முன்னிலையில் உண்ணாதிருந்து உயிர் விட்டனன் (சல்லேகானம்) என்று சமண நூல்கள் கூறுகின்றன. அவ் விடத்தில் கிடைத் துள்ள கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்றும் இதற்குச் சான்று பகர்கின்றது. சமண முனிவர்களாகிய சிரவணர் தங்கி வாழ்ந்து வந்ததால் அவ்விடம், சிரவண வெண்குளம் (சிரவண பெள்குளா) என வழங்கலானது. கி.பி. 900 இல், சீரங்கப்பட்டணத்திற்கருகில் பொறிக்கப் பட்ட இரு கல்வெட்டுக்கள், சிரவண வெண்குளத்தில் உள்ள சந்திரகிரியில் சந்திரகுப்தன், பத்திரபாகு ஆகிய இருவரின் அடிச்சுவடுகள் காணப்படுவதால், அம்மலையை முனிபதி என்று வழங்கினதாகக் குறிப்பிடுகின்றன (க.த. திருநாவுக்கரசு - தமிழர் நாகரிக வரலாறு -42). அவர்கள் கங்கைவெளியிலிருந்து தவஞ் செய்வதற்காகத் தமிழகத்திற்கு எதற்காக வரவேண்டும்? அங்கென்ன அதற்கு இடமா இல்லை? தங்கள் சமயத்தைத் தமிழரிடைப் பரப்புவதற் காகவே வந்தவராவர் என்பதில் தடை என்ன? மேலும், சந்திரகுப்தன் பத்திரபாகுவுடன் மட்டும் வரவில்லை; பல்லாயிரக் கணக்கான சமணர்களையும் உடன் கூட்டி வந்தான். இது யாம் கூறுவதன்று. கீழே படியுங்கள்; “மோரியப் பேரரசனாகிய சந்திரகுப்த மன்னனும் அவர்தம் குருவாகிய பத்திரபாகு சுவாமிகளும், அவருடன் தமிழகம் வந்த எண்ணாயிரம் சமணமுனிவர்களும் நமது உள்ளங்களில் காட்சி யளிக்கின்றனர். பத்திரபாகு சுவாமிகள், எண்ணாயிரம் மாணவர் களுடன் தமிழகம் வந்து, ஆங்காங்கு உள்ள சமணக் கோயில் களையும், அறவோர் பள்ளிகளையும், அரசர்களையும், சாவக சாவகிகளையும் (சாவகர் - இல்லறச் சமணர்) கண்டு களித்தும், அறவுரைகள் ஆற்றியும் வந்தனர். அவ்வெண்ணாயிரவரும் தமிழக மலைகளிலே தவமி யற்றும் சமண முனிவர்களுடன் தங்கி அளவளாவியும் வந்தனர். இவ்வாறு அம்முனிவர்கள் எண்ணாயிரவரும் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து, தமிழக மக்களின் மனத்தைக் கவர்ந்தனர். அவ்வறவோர்களின் அறவுரைகளை மன்னர்களும் மக்களும் கேட்டு இன்புற்றனர். அத் தூய தவத்தோர்களைக் கடவுளர் எனவும் போற்றி வணங்கினர். அம்முனிவர்கள் தமிழக மக்களின் உயிர் கலந்து, உளங் கலந்து, ஊன் கலந்து விளங்கினர். அவ்வறவோர்கள் சிரவண வெண்குளம் சென்றதும், பத்திரபாகு சுவாமிகள் வீடுபேறு பெற்றதும், சந்திர குப்த மன்னரின் தவக் கோலமும் நமது அகக்கண் முன் வந்து காட்சி யளிக்கின்றன. அவ்வறவோர்கள் பலரும் வெண்குளம் சென்றுவிட்ட பின்னரும் அவர்களைப் பற்றிய நினைவும், அவர்கள் தொகை யாகிய எண்ணாயிரமும், அவர்கள் தொடர்பு கொண்ட மலை களும் மக்கள் மனத்தை விட்டு அகலவே இல்லை” (ஜீவபந்து, டி.எஸ். ஸ்ரீபால் - நாலடியார் கடவுள் வாழ்த்து - வானவில் ஆராய்ச்சி - 25-26). ஏன் இது சமயப் படையெடுப்பல்லவா? இவர்கள் தமிழகம் வருமுன்னரே ஏராளமான சமண முனிவர்கள் தமிழகம் போந்து அங்கங்கே கோயில்களும் பள்ளிகளும் அமைத்துக் கொண்டு தங்கள் சமயத்தைப் பரப்பி வந்தனரென்பது விளங்கு கிறதல்லவா? சந்திரகுப்தன் ஆட்சித் தொடக்கத்திலேயே (கி.மு.350) இவ்வேலையை-சமணர்களைத் தமிழகத்திற் கனுப்புவதைத் தொடங்கி விட்டனன் என்பது வெளிப்படை. “பத்திரபாகு முனிவரின் மாணவரான விசாக முனிவர் என்பார், தமிழ் நாட்டில் சமணத்தைப் பரப்பி வந்தனர் என்பது சமண நூற் செய்தி. மதுரை மாவட்டத்தில் காணப்படும் பிராமிக் கல்வெட்டுக்கள் சமணர்களால் வெட்டப்பட்டவையே. அவை, கி.மு. மூன்றா நூற்றாண்டின வென்பது கல்வெட்ட றிஞர்கள் கருத்து. எனவே, சமணம், கி.மு. மூன்றாம் நூற்றாண்டி லேயே தமிழகத்தில் நுழைந்து பரவத் தொடங்கிய தெனலாம்” (டாக்டர், இராசமாணிக்கனார் - இலக்கிய வரலாறு-80). (பரவி விட்டது எனலாம். அரிசேனர் (கி.மு. 3 நூ) என்னும் சமண முனிவர் செய்த பிரகத்கதாகோசம் என்ற வடநூலில், ‘வடநாட்டிலிருந்து ஒரு சமண சங்கத்தார் தெற்கே சென்று புன்னாட்டை அடைந்தனர்’ என்று கூறப்பட்டுள்ளது (கோவைக் கிழார் - கொங்கு நாட்டு வரலாறு -53). புன்னாடு என்பது, கொண்கானத்தின் கீழ்ப்பகுதி யில் உள்ள ஓர் நாடு என்பதை முன்பு கண்டோம். அது, மைசூர் நாட்டை அடுத்து மேற்கில் உள்ளதே. சமணசங்கம் என்பது ஆயிரக் கணக்கானவர்களையுடையதாகும். எனவே கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னிருந்தே மைசூர் நாடு, கொண் கானம் முதலிய பகுதிகளில் சமண சமயம் மிகுதியாகப் பரப்பப் பட்டு விட்டதென்பது வெளிப்படை. அதுவே, மோரியர்படை அங்குவந்து தங்குவதற்கு வழி வகுத்துத் தந்ததென்பதில் சிறிதும் ஐயமில்லை. அசோகன் காலத்தே (273-232) கலிங்கம் ஒரு பேரரசாக இருந்தது. இது, வடக்கே கங்கை முதல் தெற்கே வடபெண்ணை வரை பரவியிருந்தது. மோரியப் பேரரசு அன்று கலிங்கத்தின் அப்பால்தான் இருந்தது. கலிங்கத்தை வென்றதால், அசோகன் ஆட்சி தமிழக எல்லையை எட்டியது. அது கடந்தும் அவன் தமிழரை வென்று, தன் தந்தையடைந்த மானக்கேட்டைப் போக்க முயன்றான். அம்முயற்சி வெற்றி பெறாததனாலேயே தமிழருடன் நட்புறவு கொண்டு, சமயப் போர்வையில் ஆட்சிப் புகழ் பரப்ப முயல்வானானான். அம்முயற்சி அப்போது வெற்றி பெறாவிடினும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வெற்றி பெற்றது. அசோகன் ஏராளமான பௌத்தர்களைத் தமிழகத்திற்கு அனுப்பினான். தன் மகனையும் மகளையுமே (மகேந்திரன், சங்க மித்திரை) அனுப்பினானென்றால், அவன் தமிழகத்தே தமது சமயத்தைப் பரப்ப எடுத்துக் கொண்ட முயற்சி இவ்வள வென்பது விளங்குகிறதல்லவா? அசோகன் தன் மக்களை இலங்கைக்கு அனுப்பினதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தைக் கடந்துதானே அவர்கள் இலங்கை சென்றிருப்பர்? தமிழகத்தே இயன்ற அளவு சமயப்பணிபுரிந்து விட்டு இலங்கை சென்றனர் என்பதே உண்மையாகும். அசோகன் தனது இரண்டாம் பாறைக் கல்வெட்டில், சேர சோழ பாண்டிய நாடுகளில் மக்கட்கும் விலங்குகட்கும் மருத்துவ ஏற்பாடு செய்ததாகவும், பதின்மூன்றாம் பாறைக் கல்வெட்டில், தமிழகத்தில் பௌத்தசமயம் பரவ ஏற்பாடு செய்தமையுங் குறிப்பிட்டுள்ளான். தமிழகத்தில் கழுகுமலை முதலிய இடங்களில் காணப்படும் பௌத்தருடைய பிராமிக் கல்வெட்டுக்கள், கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவை என்பது, ஆராய்ச்சி அறிஞர்கள் முடிபாகும். எனவே, அசோகன் காலத் திற்றான் (278-232) முதன் முதலாகத் தமிழகத்தில் பௌத்தம் நுழைந்து பரவத்தொடங்கிய தென்பது பெறப்படுகிறது. இதன் தொடக்க காலத்தே சமணம் பெருஞ் செல்வாக்குப் பெற்று விட்டது. கலிங்க மன்னனான காரவேலன் (176-163), கி.மு. 165இல் ஒரு பாண்டியனை வென்றதாக இலங்கை வரலாறு கூறுகின்றது. அன்று ஆந்திரப்பேரரசு அவன் கீழ்ப்பட்டிருந்தது. அதனால். அவன் ஆட்சி தமிழக எல்லை வரை எட்டியிருந்தது. அவன் சமணன்; அசோகனைப் போலவே தன் ஆட்சியுடன் சமணத்தைப் பரப்ப அவன் பெரிதும் முயன்று வந்தான். தமிழகத்தின் மீது பலமுறை படையெடுத்து, ஒரு சிறு வெற்றிக்குப் பின் தோல்வியே கண்ட அவன், அசோகனைப் போலவே ஏராளமாகச் சமணர்களைத் தமிழகத்திற்கு அனுப்பி வந்தான். மகதமும் கலிங்கமும் இத்திருப் பணியைத் தொடர்ந்து செய்து வந்தன. சங்க இலக்கியங்களிற் காணப்படும் ஆரியர் தமிழர் போர்களில், மோரியர் போரும், காரவேலன் போரும் அடங்கும். இங்கு ஆரியர் என்ற சொல், இனங்குறிக்கும் சொல்லன்று; நாட் டையும் (இடம்), திசையையும் அடிப்படையாகக் கொண்டு வழங்கிய சொல்லாகும். புத்தர் காலத்துக் கங்கை வெளியினரே தம்மை ஆரியர் என்று பெருமையாகக் கூறிக் கொண்டனர் (முனைவர், இராசமாணிக்கனார் - இலக்கிய வரலாறு - 55, கா. அப்பாத்துரையார் - தென்னாட்டுப் போர்க்களங்கள் - 61) கி.மு. முதல் நூற்றாண்டில் சிரவண வெண்குளத்தில் இருந்த சிம்மநந்தி என்னும் சமண முனிவர், அப்பகுதியில் கங்க அரசை நிறுவினாராம். அதாவது, வித்தியாரணியர் என்பார் வெற்றி நகர்ப் பேரரசு ஏற்பட உதவினது போல, இவர் கங்க அரசு ஏற்பட உதவினரென்க. இரண்டொருவர் தவிர, கங்க மன்னர்களெல் லாரும் சமணர்களாகவே இருந்தனர் என்பதை அறியவும். இதனால், மைசூர் நாட்டில் அன்று சமணத்திற் கிருந்த செல்வாக்கு விளங்குகிறதல்லவா? கொங்குநாடும் கங்கராட்சிக்கீழ் இருந்த மையால், இங்கும் அதே நிலைமை தான் இருந்திருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. மன்னவனெப்படி மன்னுயிரப்படித்தானே! கொங்கு நாட்டுச் சமணப் பெரும்புலவரான கொங்கு வேளிரின் சொந்த ஊரான விசயமங்கலம் சமணர்களின் தலைமையிடம் ஆனது. கொங்குவேளிர் ஒரு குறுநில மன்னர் என்பதை நினைவு கூர்க. எனவே, அப்பகுதி சமண ஆட்சித் தலைமையிட மானதில் வியப்பொன்றும் இல்லை. அவ்வூரைச் சுற்றிலும் உள்ள சீனாபுரம், திங்களுர், அரசண்ணாமலை, பூந்துறை, வெள்ளோடு ஆகிய ஊர் களில் அன்று சமணர்கள் மிகுதியாக இருந்தனர். விசயமங்கலத்திலுள்ள நெட்டைக் கோபுரம் சமணருடையதே. விசயமங்கலத்திற்கு மேற்கே உள்ள செங்கப் பள்ளியின் பழம் பெயர் - செங் கமலப்பள்ளி ஆகும். அது, விசயமங்கலத்துச் சமணக்கோயிலின் இறையிலிக்கிராமமாகும். சமண முனிவர்கள் மலைகளில் குகைகள் தோண்டி, அல்லது இயற்கையான மலைக்குகைகளில் இருந்து தவஞ் செய்து வந்தனர். அக்குகைகளில் இருந்து தவஞ் செய்வதற்காக இருக்கைகளையும், படுப்பதற்காகப் படுக்கைகளையும் பாறை களில் செதுக்கிக் கொண்டனர்; அக்குகைச் சுவர்களில் அக்காலத்து எழுத்தால் அரிய செய்திகளைப் பொறித்தும் வைத்தனர். ஆனால், அச்சமண முனிவர்கள் எப்போதும் தவஞ் செய்து கொண்டே இருக்கவில்லை; சமயப்பரப்புதலைக் கடமையாகக் கொண்டு, ஓய்வு நேரத்திலேயே தவநிலையிலிருந்து வந்தனர். இத்தகைய குகைகள் தமிழ்நாடெங்கும் அங்கங்கே பல இடங்களில் இருக்கின்றன. இக்காலத்தார் அவற்றைப் பாண்டவர் படுக்கை என்கின்றனர். பாண்டவர் தமிழ் நாட்டில் வந்து தங்கவும் இல்லை; பாண்டவர்களுக்கும் இச்சமணர் தவப்படுக் கைகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. பாண்டி நாட்டில் மதுரையைச் சுற்றி எட்டுக் குன்றுகளில் இப்பாறைப் படுக்கைகள் உள்ளன. பெரிய புராணமும் திருவிளை யாடற் புராணமும் அவற்றை எண் பெருங்குன்றம் என்கின்றன. “ஆனை மாமலை யாதி யாய இடங்க ளிற்பல அல்லல்சேர் ஈனர் கட்கெளி யேனலேன்” என்பது சம்பந்தர் தேவாரம். இதனால், ஆனைமலை, ஆந்தை மலை, அழகர்மலை முதலிய எண்பெருங் குன்றங்களிலும் சமணமுனிவர்கள் ஏராளமாக இருந்து வந்தனர் என்பது விளங்குகிறது. மேலும், பாண்டி நாட்டில் - கழுகுமலை, சித்தர்மலை, நாகமலை, கொங்கற் புளியங்குளம், குன்றக்குடி, உத்தம பாளையம், கீழையூர், மேட்டுப்பட்டி, கீழவளவு முதலிய மலை களிலும் இச்சமணமுனிவர்கள் படுக்கைகளும், சமண தீர்த்தங்கரர் சிலைகளும் உள்ளன. (டி. எஸ். ஸ்ரீபால் - நாலடி, வானவில் ஆராய்ச்சி - 28) கொங்கு நாட்டில் இச்சமணர் படுக்கைகள் மிகுதியாக உள்ளன. புகலூர்ப் புகைவண்டி நிலையத்திற்கு வடக்கில் காவிரிக் கரையில் உள்ள புகழிமலையில் சில இயற்கையான குகைகள் உள்ளன. அவற்றில் சில கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள கல்வெட்டுக்களிலிருந்து அவை கி.மு. மூன்றா நூற்றாண்டில் வெட்டப்பட்டவை என்று தெரிகிறது. (கோவைக் கிழார் - கொங்கு நாட்டு வரலாறு-58) பழனி-கொழுமம் வழியில் பழனிக்கு 6 கல் மேற்கில் உள்ள அயிரிமலையில் ஒரு பாறையின் கீழ்ச் சில படுக்கைகள் உள்ளன. அங்கு குணவீரர், சாந்தி என்ற பெயர்கள் செதுக்கப் பட்டுள்ளன. அவை சமண முனிவர்கள் பெயர்களாகும். இம்மலையைத் தவறாக ஐவர்மலை என்கின்றனர். உடுமலை வட்டத்திலுள்ள திருமூர்த்தி மலையின் அடி வாரத்தில் உள்ள ஓர் உருண்டைப் பாறையில் ஒரு சமண தீர்த் தங்கரர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இஃதறியார் அதனை மும்மூர்த்திகளின் உருவம் என்று வழிபட்டு வருகின்றனர். தாராபுரம் கோட்டை மேட்டில் சில சமணர் சிலைகள் உள்ளன. அறச்சலூர் மலையில் உள்ள ஒரு குகையில் ஐந்து சமணர் படுக்கைகளும் கல்வெட்டுக்களும் உள்ளன. திருச்செங்கோட்டு மலைமீது இரு இயற்கைக் குகைகளும், அவற்றில் இரண்டும் மூன்றுமாக ஐந்து கற்படுக்கைகளும் உள்ளன. அவற்றைத் தவறாக, ஐவர் சாய்ந்த கிடை என்கின்றனர். திருச்செங்கோட்டை அடுத்துள்ள பருத்திப்பள்ளி என்னும் ஊரில், சமண தீர்த்தங்கரரான ஆதிநாதர் சிலையும், மற்றும் பல சமணர் சிலைகளும் உள்ளன. இவற்றால், கொங்கு நாடு முழுவதும் சமணர்கள் பரவியிருந்தமை பெறப்படும். மற்றும் கொங்கு நாட்டில் பல இடங்களில், அமண லிங்கம் என்னும் பெயரால் சமணச் சின்னங்கள் அகப்படுகின்றன. பொள்ளாச்சி, உடுமலை வட்டங்களில் அது மிகுதியாகக் கிடைக்கிறது. இன்னும் தமிழ் நாட்டில் அங்கங்கே உள்ள மலைகளில் இச்சமணர் படுக்கைகள் உள்ளன. அங்கெல்லாம் சமண முனிவர் கள் இருந்துகொண்டு, சுற்றுப் புறங்களில் சமணத்தைப் பரப்பி வந்தனர் என்பதை அறியவும். கி.பி. 642 இல் காஞ்சிக்கு வந்த சீன யாத்திரியரான யுவான்சுவாங் என்பார், ‘அந்நாட்டில் (தொண்டை நாட்டில்) 100 சங்கிராமங்கள் (பௌத்த மடம்) இருக்கின்றன. பதினாயிரம் பௌத்தத் துறவிகள் இருக்கின்றனர். திகம்பர சமணர் பலர் திராவிட நாட்டில் (தொண்டை நாட்டில்) இருக்கின்றனர். புத்தர் பெருமான் காஞ்சிக்கு வந்து பலரைப் பௌத்தர் ஆக்கியதாக இந்நாட்டில் கூறப்படுகிறது. அசோகன் திராவிட நாட்டில் (தொண்டை) பல தூண்களை அமைத்தான். அவற்றுட் சில காஞ்சியைச் சுற்றிலும் பழுதுற்ற நிலையில் இருக்கின்றன. நான் பாண்டி நாட்டையும் சென்று கண்டேன். அங்குச் சிலரே உண்மைப் பௌத்தராக இருக்கின்றனர். பலர் பொருளீட்டுவதி லேயே ஈடுபட்டுள்ளனர். பாண்டி நாட்டில் பௌத்தம் அழி நிலையில் உள்ளது. பல இடங்களில் பௌத்த மடங்கள் இருந் தமைக்கு அறிகுறிகள் தென்படுகின்றன.’ என்று எழுதியுள்ளார். இவர் பௌத்தராதலின், பாண்டி நாட்டுச் சமணத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. தமிழகத்தில் சமணம் பரவியது போலப் பௌத்தம் பரவவில்லை. பாட்டன் முயற்சியைப் போல் பேரன் முயற்சி அவ்வளவு பயன் தரவில்லை யென்க. சோழ தொண்டை நாட்டிற் போல், பாண்டிய சேர கொங்கு நாட்டில் பௌத்தம் பரவ வில்லை. சோழ தொண்டை நாட்டில் சங்க காலத்தே ஒருவாறு சமணம் பரவியிருந்தது. திருப்பாதிரிப் புலியூரில் ‘(தென் பாடலி புரம்) கி.மு. முதல் நூற்றாண்டிற்கு முன்னிருந்தே சமணர் சங்கம் இருந்து வந்ததாகச் சமண நூல்கள் கூறுகின்றன. வந்தவாசிக்கு அண்மையிலுள்ள ஒரு குன்றில் சமண முனிவர்கள் தவஞ்செய்தனராம் (15.8.59. நல்லறம்). ஆனால், பிற்காலத்தே சமண சமயம் அப்பகுதியில் தான் நிலைபெற லாயிற்று. இன்றும் தென்னார்க்காடு வடார்க்காடு மாவட்டங்கள் சமண சமயத்தின் வாழ்விடமாக இருத்தலை அறிக. கி.மு. 3 அல்லது நான்காம் நூற்றாண்டில் தமிழகம் போந்த சமண பௌத்த சமயங்கள், சில நூற்றாண்டுகளில் - கி.பி. இரண்டா நூற்றாண்டுக்குள் - தமிழகத்தில் பேராதிக்கம் பெற்று விட்டன என்பது மிகையாகாது. செங்குட்டுவன் (125-180) காலத்தே - காஞ்சி, புகார், உறையூர், மதுரை, வஞ்சி ஆகிய தமிழ் நாட்டுத் தலைநகர்கள் அப் புறச்சமயங்களின் உறைவிடமாயின என்பது, சிலப்பதிகார மணிமேகலையால் தெரிகிறது. அத் தலைநகர்களே யன்றித் தமிழ் நாட்டின் ஊர்தோறும் சென்று சமண பௌத்தப் பெரி யார்கள் தங்கள் சமயங்களைப் பரப்பி வந்தன ரென்பது, தேவாரம், பெரியபுராணம் முதலிய தமிழ் நூல்களால் தெரிகிறது. பெருஞ் செல்வர்களும் அப்புறச் சமயங்களைத் தழுவினரென்பது, கோவலன் குடும்ப வரலாற்றால் தெரிகிறது. அக்காலத் தமிழரசர்கள் அப்புறச்சமயங்களைப் போற்றியதனாலேயே தமிழ் நாட்டுத் தலைநகர்கள் அன்று அந்நிலையை அடைந்தன எனலாம். பிற்காலத்தே மேனாட்டுக் கிறித்துவர்கள் தமிழ் நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் தங்கள் சமயத்தைப் பரப்பினது போலவே, அன்று அவ்வடநாட்டுப் புறச்சமயிகள் தங்கள் சமயங்களைப் பரப்பி வந்தனர் என்பதை அறியவும். இதற்குப் பெருந்துணை புரிந்தவர், அப்புறச் சமயங்களைத் தழுவிய தமிழறி ஞர்களே யாவரென்பது நினைவு கூரத்தக்கது. அவ்வடவடுகர் தமிழகத்தே தங்கள் சமயங்களைப் பரப்புகிற அளவில் இருந்து விடவில்லை. அவர்கள் அடிக்கடி தமிழகத்தின்மேற் படையெடுத்து வந்து கொண்டே இருந்தனர். தமிழகத்தே அப் புறச்சமயங்களின் ஆதிக்கம் பெருகப்பெருக அவ்வடவர் படையெடுப்பும் பெருகிக் கொண்டே வந்தது. கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து, கி.பி. இரண்டா நூற்றாண்டு முடியத் தமிழர் ஆரியர் போர் மும்முரமாக நடந்துவந்த தென்பது, சங்கநூற் குறிப்புக்களாற் பெறப்படுகின்றது. இரண்டாங் கரிகாலனும் (கி.மு. 60-10), சேரன் செங்குட்டு வனும் (கி.பி. 125-180) இமயம் வரைப் படையெடுத்துச் சென்று, ஆரியரை வென்றடிப் படுத்து இமயத்தில் புலியும் வில்லும் பொறித்து மீண்டதையும், செங்குட்டுவன் தந்தை இமயவரம்பன் ஆனதையும், ஆரியவரசராகிய கனகவிசயர் என்பார், ‘தென்தமிழ் நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன் றெழுந்து மின்றவழும் இமய நெற்றியில் விளங்கு விற் புலி கயல் பொறித்த நாள் எம்போலு முடிமன்னர் ஈங்கில்லை போலும்’ (சிலப். 29, உரைப்பாட்டுமடை) என்றதையும், ஆடுகோட் பாட்டுச் சேரலாதனும், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும் ஆரியரை அடித்துத் துரத்தியதையும், “ மாரி யம்பின் மழைத்தோற் சோழர் வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை ஆரியர் படையின் உடைகவென் நேரிறை முன்கை வீங்கிய வளையே.” (அகம்-336) என,வல்லத்துப் போரில் சோழர் ஆரியரை வென்று துரத்தியதையும், “ ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளுர்ப் பலருடன் கழித்த ஓள்வான் மலையன தொருவேற் கோடி யாங்கு” (நற்-170) என, மலையமான் திருமுடிக்காரி ஆரியரை வென்று துரத்தி யதையும் அறிக. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முடிய, ஆரியர் தமிழரை வென்றதாகத் தெரியவில்லை. ஆனால், அவ்வாரியர் சமயம் தமிழரை வென்றடிப்படுத்து விட்டது. 2. தமிழர் வீழ்ச்சி பிற்காலத்தே, அச்சமண பௌத்த சமயங்களைப் புறச் சமயம் என வெறுத்தொதுக்கிய தமிழ் மக்கள், அன்று அச்சமயக் கணக்கர்களின் விரிவுரைகளைக் கேட்டு மருண்டனர்; அம் மயக்கத்தால் அப் புதுச் சமயங்களை மேற்கொண்டு, வீரமிழந்து கோழைகளாயினர். ஊர்தோறும் இருந்த சிலம்பக் கூடங்கள் வெறுமையுற்றன. தமிழ் இளைஞர்கள் வாள் வேல் முதலிய படைக்கலங்களைத் தொடுவதும் தீதென எண்ணும் நிலையை அடைந்தனர். தமிழ் இளைஞர்க்கு இயல்பாக உடைய மறப்பண்பு ஒழிந்து அன்மறப்பண்பு மீக் கூர்ந்தது; நிலையாமை தiலக் கொhண்டது. வாழப்பிறந்த காளையரும் கன்னியரும் இளந்துறவு பூணத் தலைப்பட்டனர். மொழிப் பற்று, நாட்டுப்பற்று, இனப் பற்று ஆகிய மூன்றையும் ஒருங்கிழந்தனர். சங்க காலத் தமிழர் வழிவந்த தமிழரா இவர் என ஐயுறும் நிலையை அடைந்தனர். அண்ணனுக்குத் துணையாயிருந்து அரசாளப் பிறந்த இளங்கோ, இளங்கோ அடிகளானதும், வாழப் பிறந்த மங்கை மணிமேகலை பிக்குணிக் கோலம் பூண்டதும் அப்புறச்சமயங் களால் தமிழர் அடைந்த வீழ்ச்சிக்கு எடுத்துக் காட்டாகும். வாழ் வியலுக்குப் புறம்பான அப்புறச்சமயக் கொள்கைகளான முதிர்ந்த அருளறப் பற்றும், (முறுகிய அகிம்சை) நிலையாமைப் பற்றும் தமிழரை வீழ்ச்சியடையச் செய்து விட்டன. ஞாயிறு தண்ணென வாயினும் -திங்கள் நாளுங் கடுவெயில் காயினும் ஆயிர ஆண்டுமுன் போயினும் - வீரமும் ஆண்மையும் மாறாத் தமிழர்கள். 5 உம்பரில் இம்பர் ஒழியினும்-வானம் ஓயாது செந்நீர் பொழியினும் ஐம்பெரும் பூதம் அழியினும்-வீரமும் ஆண்மையும் மாறாத் தமிழர்கள். 10 உள்ள பொருளெலாம் போயினும்-இவ் வுலக மெலாம்பகை யாயினும் வெள்ளந் திடீரென மேயினும்-ஆண்மையும் வீரமும் மாறாத் தமிழர்கள். 23 ஊன்றிய வேலகத் தொன்றினும்-களத் தொல்லென வொருங்கே பொன்றினும் தோன்றிய நாள்முத லொன்றினும்-என்றும் தோல்வி யறியாத் தமிழர்கள். 30 அப்புறச் சமயக் கொள்கைகளில் முறுகிய பற்றுடையராகி, (வேறு) உலகம் பொய் உடம்புபொய் உயிர்வாழ் வும்பொய் உற்றமனை மக்கள்தமர் உறவும் பொய்பொய் இலகுபொரு ளனைத்தும்பொய் இன்ப மும்பொய் எனநம்பிப் பொய்யுலகி லியங்கி னாரே. 78 வேலெறிந்து வாள்வீசி அம்பு தொட்டு வீரர்படை பயில்சிலம்பக் கூடமெல்லாம் மேலெறிந்து கொல்லாத அருள றத்தை மிகப்பேசும் மேடைகளாய் விளங்கிற் றம்மா! 108 புலிபோலப் பாய்ந்துபகை பொருது வென்று புகழோடு வாழ்ந்துவந்த தமிழர் பாவம்! அலிபோல வீரம் இகல் ஆண்மை குன்றி அங்காடிப் பாவைகள்போ லாயினாரே. 127 தமிழரின் இத்தகைய நிலையை அறிந்த அவ்வடவடுகர், கி.பி. மூன்றா நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகத்தின் மீது படையெடுத்தனர். இந்நிலையில், இடையேயிருந்த ஆந்திரப் பேரரசும் வலி குன்றி விட்டது. எனவே, அவ்வடவர் எளிதில் தமிழகத்தை அடைந்தனர். வேறு தோன்றியமுதலாய்-என்றும் தோல்வி கண்டறியா மூன்று பேரரசும்-அந்தோ! முதுகு காட்டினவே. 193 வீரம் ஆண்மையெலாம்-பிறர்க்கு விலைக்கு விற்றதனால் ஆரி யப்படைக்குத்-தோற்ற தருந்த மிழகமே. 194 வேறு முன்னர்நூ றாண்டு காலம் முதுகினைக் காட்டிக் காட்டி இன்னலுற் றுழந்தா ரின்றோ எளிதினில் வெற்றி பெற்றார். 195 படைக்கலந் தொடுநாட் டொட்டுப் பாரினில் தோல்வி காணாத் தொடைக்கலத் தமிழர் அந்தோ! தோல்விகண் டொல்கி னாரே. 205 (இப்பாடல்கள் - புலவர் குழந்தையின், ‘அரசியலரங்கம்’ என்னும் காவியத்தின், ‘தமிழர் வீழ்ச்சி’ என்ற தலைப்பில் உள்ளவை.) கி.பி. 250இல், தமிழ்நாடு அவ்வடவர் கைப்பட்டது. பன்முறை வடவரை வென்று, இமயத்தில் மீனும் புலியும் வில்லும் பொறித்து மீண்ட முடியுடை மூவேந்தரிருந் தாண்ட தமிழ்நாட்டுத் தலை நகர்களில் அவ்வடவர் கொடிகள் வானளாவிப் பறந்தன. அரசினை இழந்த மூவேந்தரும் அவ்வடவர்கீழ்ச் சிற்றர சர்களாய் ஒரு மூலையில் உயிர் வாழ்ந்து வருவாராயினர். அதாவது, அக்காலத்தே இருந்த தமிழரசர்கள், முறுகிய புறச்சமயச் சார்புடையராகி, நாட்டாட்சி செய்வதை விட்டுச் சமய ஆட்சி செய்வதில் பெரிதும் ஈடுபட்டிருந்தனர். அதாவது, படையைப் பெருக்கல், படை வீரர்க்குப் பயிற்சி கொடுத்தல் போன்றவற்றை அறவே விடுத்துச் சமயப் பணி புரிவதில் பெரிதும் ஈடுபட்டிருந்தனர். பிற்காலத்து - முதல் சேரமான் பெருமாள், இரண்டாஞ் சேரமான் பெருமாள், மதுரை விசயரங்கச் சொக்கநாத நாயக்கர் ஆகியோர் வரலாறு இதற்கு எடுத்துக் காட்டாகும். இந்நிலையில், இரண்டாங் கரிகாலனாலும், சேரன்செங் குட்டுவனாலும் வென்றடக்கப்பட்ட வடவரசர் வழிவந்த பலர் ஒன்று கூடிப் பெரும்படையுடன் வந்து, அத்தமிழரசர்களை எளிதில் வென்றனர். அவ்வடவர் பலராகையால் குறிப்பான ஒரு பெயரிட்டழைக்கப்படவில்லை. பிற்காலத்தார் அவ்வட வரை-களப்பிரர் என்றனர். பலர் கலந்து வந்து-ஒன்றுகூடி வந்து-நாட்டைக் கைப்பற்றிய அயலார் என்ற பொருளில், கலப்பு பிறர்-கலப்பிறர் என்பதே, களப்பிரர் எனத் திரிந் திருக்கலாம். அல்லது களங்கொண்ட பிறர்-களம் பிறர்-களப் பிறர் என்பது, களப்பிரர் எனத் திரிந்திருக்கலாம். இதே காலத்தே, ஆந்திரப் பேரரசு வலிகுன்றி விட்டதால், அதன் தென்மண்டலத் தலைவனாக இருந்த சிவகந்தவர்மன் என்னும் பல்லவமரபினன் தன்னுரிமை யுடையவனாகி, பெரும்படையுடன் தெற்கே வந்து, காஞ்சியிலிருந்த வடவடு கரை வென்று காஞ்சியைக் கைப்பற்றினான். அவ்வடவர் பாலாற்றின் தெற்கே சென்றனர். அல்லது, அவ்வடவர் படை யெடுத்து வந்த அதே காலத்தே இப்பல்லவனும் படையெடுத்து வந்து காஞ்சியைக் கைப்பற்றிக் கொண்டான் எனினுமாம். “பல்லவர்க்குக் கோதவரி, கோல்கொண்டா முதலிய இடங்களில் வைரக் கனிகள் இருத்தல் போல, கொங்கர்க்குப் படியூரில் கடல்நிற வைரக்கற்கள் உள்ளன” என்ற, பிளைனி (கி.பி. 24-79) என்னும் மேனாட்டறிஞர் கூற்றால், கி.பி. முதல் நூற்றாண்டில் பல்லவர் கோதாவரிப் பகுதியை ஆண்டு வந்தனர் என்பது பெறப்படும். எனவே, பல்லவர் வடவரென்பது வெளிப் படை. எனவே, பாண்டிய சோழ சேர நாடுகளை வடவரும், தொண்டை நாட்டைப் பல்லவரும் ஆண்டு வந்தனர். அவ்வட வர்கள் மதுரையைத் தலைமை யிடமாகக் கொண்டாண்டு வந்தனர். மதுரையிலிருந்தாண்ட அவ்வடவர்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. 1. முற்காலப் பல்லவர் -250-340 1. சிவகந்த வர்மன் கி.பி. 250-275 2. விசயகந்த வர்மன் கி.பி. 275-300 3. புத்தவர்மன் கி.பி. 300-312 4. புத்தியங்குரன் கி.பி. 312-340 இந்நால்வரும் தொண்டை நாட்டில் பல்லவராட்சியை ஒருவாறு நிலை நாட்டினர். சுற்றிலும் இவர்கட்கு எதிர்ப்பு இருந்தது. 2. இடைக்காலப் பல்லவர் - 340-575 1. குமார விஷ்ணு கி.பி.340-350 2. முதலாங் கந்தவர்மன் கி.பி.350-375 3. வீரகூர்ச்சரவர்மன் கி.பி.375-400 4. இரண்டாங் கந்தவர்மன் கி.பி.400-436 5. சிம்மவர்மன் இளவரசன் விஷ்ணுகோபன் (436-460) இரண்டாங் குமாரவிஷ்ணு 6. மூன்றாங் கந்தவர்மன் 460-475 இரண்டாஞ் சிம்மவர்மன் புத்தவர்மன் 7. முதலாம் நந்திவர்மன் இரண்டாம் விஷ்ணுகோபன் மூன்றாங் குமார விஷ்ணு (525-550) 8. மூன்றாஞ் சிம்மவர்மன் குறிப்பு: 1. எண்ணப்படாதவர், பட்டஞ்சூட்டப்படாதவர். 2. குறிப்பிட்ட அரசர்கள் வரலாறு கூறுகையில் அவர்கள் பெயரையும், அவ்வரலாற்றில் தொடர்புடைய பிற அரச மரபுகள், அல்லது பெயர்களையும் முதலில் தெரிந்து கொள்ளுதல், படிப்போர்க்கு எளிமையும் விளக்கமும் தரும். ஆந்திரப் பேரரசு அழிந்தபின் அங்குத் தோன்றிய அரசுகள் : 1.குப்தப்பேரரசு : உச்சினியைத் தலைநகராகக் கொண்டு, கங்கை வெளிமுதல், சிந்து வெளிவரை வட பகுதியை ஆண்ட பேரரசு. 2. விஷ்ணுகுண்டர் (450-700): கோதாவரி யாற்றுக்கு வடபாற்பட்ட நிலப்பகுதியை ஆண்டவர். 3. வாகாடகர் (300-500): விஷ்ணுகுண்ட நாட்டின் வடக்கில் ஆண்டவர். 4. சாலங்காயனர்: (320-620): வேங்கியைத் தலைநகராகக் கொண்டு, கோதாவரி கிருஷ்ணையாறுகட் கிடைப்பட்ட நிலப் பகுதியை ஆண்டவர். இதுவே, பிற்காலக் கீழைச் சாளுக்கிய நாடாகும். 5. இக்குவாகர் (300 - 450): குண்டூர், கிருஷ்ணைக் கோட்டங் களை ஆண்டவர். 6. ஆனந்தர் (500-600): இக்குவாகர்க்குப் பின் அப்பகுதியை ஆண்டவர். 7. சூட்டுநாகர் (250-350): பம்பாய் மாநிலத்தின் தென் பகுதியும், கடப்பை, அனந்தப்பூர் மாவட்டங்களுங் கொண்ட பகுதியை ஆண்டவர். 1. குமார விஷ்ணு (340-350): இவன், விஷ்ணுகோபன் எனவும் பெயர் பெறுவன். கி.பி. 350 இல் குப்தப் பேரரசனான சமுத்திர குப்தன் (325-375) தெற்கே படையெடுத்து வந்து, இடையிலுள்ள அரசுகளையெல்லாம் வென்று, காஞ்சியை ஆண்ட இக்குமார விஷ்ணுவையும் வென்று சென்றான் (அலகா பாத் கல்வெட்டு). 3. வீரகூர்ச்சரவர்மன் - (375-400); வாகாடக மன்னனான முதலாம் பிருதிவிசேனன் (350-390) என்பான் தெற்கு நோக்கிப் படையெடுத்துவந்து, இவ்வீரகூர்ச்சரனை வென்று துரத்தி சத்தியசேனன் என்பானைக் காஞ்சிக்கு அரசனாக்கிச் சென்றான். தோற்றோடிய வீரகூர்ச்சரன், சூட்டுநாக நாட்டை அடைந்து, சூட்டுநாக மன்னன் மகளை மணந்து, அவனுக்கு, ஆண் மகவு இன்மையால், குந்தளநாட்டு அரசையும் பெற்றான். குந்தள நாடு - தொண்டை நாட்டை அடுத்த வட மேல் பகுதி. கூர்ச்சரவர்மன் வழிவந்த, 4. இரண்டாங் கந்தவர்மன் (400 - 436) பெரும் படையுடன் வந்து சத்திய சேனனோடு பொருது, வடார்க்காட்டுக் கோட்டத்துக் கடிகாசலம் வரை பிடித்தான். பின்னர், அவன் மூன்றாவது மகனான இரண்டாங் குமாரவிஷ்ணு, சத்தியசேனனை வென்று, காஞ்சியைக் கைப்பற்றினான். கடம்பர்: மயூரசன்மன் என்னும் கடம்பன், பல்லவநாட்டின் எல்லைப் புறத்தில் குழப்பம் செய்து பல்லவரிடமிருந்து, குந்தள நாட்டை மேற்பார்க்கும் உரிமை பெற்று, நாளடைவில் குந்தள நாட்டிற்கே தனியரசனானான். இவன் முன்னோரான கடம் பர்கள், கி.மு. பன்னூறாண்டு கட்குமுன்னிருந்தே கொண் கானத்தை அடுத்து வடபால் மேல் கடற்கரையில் இருந்து வந்தனர் என்பதை நினைவுகூர்க. 1. மயூரசன்மன் 350 - 375 2. கங்கவர்மன் 375 - 400 3. பாகீரதவர்மன் 400 - 425 4. காகுத்தவர்மன் 425 - 450 5. சாந்தி வர்மன்450-475 6. முதலாங் கிருஷ்ணவர்மன்476-480 7. மிருகேசவர்மன்475-500 தேவவர்மன் விஷ்ணுவர்மன் 8. இரவிவர்மன் 500-535 குமாரவர்மன் சிம்மவர்மன் 9. அரிவர்மன் 535-570 மாந்தாதன் கிருஷ்ணவர்மன் சசவர்மன் குறிப்பு: சாந்திவர்மன் முதல் அம்மரபினர் - வனவாசியைத் (வானவாசி) தலைநகராகக் கொண்டு, அப்பகுதியை ஆண்டு வந்தனர். வனவாசி என்பது - கங்கநாட்டின் வடக்கிலும், கொண்கானத்தின் கிழக்கிலும் உள்ள பகுதியாகும். 9. அரிவர் மனுடன் வனவாசிக் கடம்பர் அரசு ஒழிந்து, அங்கு சாளுக்கிய அரசு ஏற்பட்டது. முதலாங் கிருஷ்ணவர்மன் மரபினர், பல சிகா வைத் (ஹல்சி) தலை நகராகக் கொண்டு, குந்தள நாட்டின் ஒருபகுதியை ஆண்டு வந்தனர். கங்கர்: பெரும்பாலும் இன்றைய மைசூர் நாட்டின் இடைப் பகுதியே கங்கநாடு ஆகும். இது, கங்கவாடி எனவும் பெயர் பெறும். தலைக்காடு என்பது - கங்க வாடியின் தலைநகர். அது, கொள்ளேகால் வட்டத்தின் வடக்கெல்லை யான காவிரியின் வடகரையில் இருந்தது. கொங்கு நாடு, தலைக்காட்டுக் கங்கர் ஆட்சியில் இருந்து வந்தது. பின்னர், கங்கரின் ஒரு கிளையினர், குவளாலபுரம் என்னும் கோலாரைத் தலைநகராகக் கொண்டு, கங்கநாட்டின் கீழ்ப் பகுதியை ஆண்டு வந்தனர். அவர் கோலார்க் கங்கர் எனப் படுவர். கங்கர் மரபு நீண்டதொரு மரபு. கங்கர் பற்றிய விளக்கத் தையும், மரபுப் பட்டியலையும், கொங்கு நாட்டு வரலாறு என்னும் பகுதியில் காண்க. கடம்பர், கங்கர், பல்லவர் கடம்பர்: 4. காகுத்தவர்மன் 425-450 6. முதலாங்கிருஷ்ணவர்மன் 476-480 7. மிருகேசவர்மன் 475-500 8. இரவிவர்மன் 500-535 கங்கர்: 10. அரிவர்மன் 436-460 12. இரண்டாம் மாதவன் 473-505 பல்லவர்: 5. முதலாஞ் சிம்மவர்மன் 436-460 6. மூன்றாங் கந்தவர்மன் 460-475 இரண்டாஞ் சிம்மவர்மன் இரண்டாம் விஷ்ணுகோபன் 4. காகுத்தவர்மன் (425-450): இவன், 10 அரிவர்மன் (436-460) என்னும் கங்கனை வென்று, அவன் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். 5. முதலாஞ் சிம்மவர்மப் பல்லவன் (436-460) கடம்பனை வென்று, கங்கனை அரசனாக்கினான். 7. மிருகேச வர்மன் (475-500): இவன், அரிவர்மன் இரண்டாம் மகனான இரண்டாம் மாதவனை (473-505) வென்றான். பல்லவச் சிம்மவர்மன் மகனான 6. மூன்றாங் கந்தவர்மன் (460-475) கடம்பனை வென்று, கங்கனை அரசனாக்கினான். இதை, இரண்டாம் மாதவன் தன்பெனு கொண்டாக் கல்வெட்டில் பெருமையாகக் கூறிக் கொள்கிறான். முதலாங் கிருஷ்ணவர்மன் (476-480) என்னும் கடம்ப மன்னன், இரண்டாஞ் சிம்மவர்மப் பல்லவனிடம் படுதோல்வி அடைந்தான். மிருகேசவர்மன் மகனான இரவிவர்மன் (500-535), இரண்டாம் விஷ்ணுகோபப் பல்லவனை வென்றதாக ஹல்சிப் (பலாசிகா) பட்டயம் அறைகிறது. குறிப்பு: வனவாசிக் கடம்பர்க்கும் இடைக்காலப் பல்லவர்க்கும் ஓயாது போராட்டம் நடந்தது. ஆனால் இரவிவர்மனுக்குப் பின், கடம்பர் சாளுக்கியருடன் ஓயாது போரிட வேண்டியவ ரானதால் பல்லவர் பக்கம் திரும்பவில்லை. வனவாசியை அடுத்து வடக்கில் இருந்தது சாளுக்கிய நாடு. சாளுக்கியர்: கி.பி. ஆறா நூற்றாண்டுத் தொடக்கத்தில், விசயாதித்தன் என்பான், இன்றைய மைசூர் நாட்டின் வடக்கில், மேல்கடற்பகுதியில், சாளுக்கிய அரசை ஏற்படுத்தினான். அவனை அடுத்து, சயசிம்மனும் இரணதீரனும் அரசைப் பெருக்கி வந்தனர். 1. விசயாதித்தன் 2. சயசிம்மன் 500-525 3. இரணதீரன் 525-550 4. முதலாம் புலிகேசி 550-666 5. முதலாங்கீர்த்திவர்மன் 6. மங்களேசன் 566-598 598-609 7. இரண்டாம் புலிகேசி 609-642 விஷ்ணுவர்த்தனன் 7. முதலாம் நந்திவர்மன் (525-550): இப்பல்லவன், சாளுக்கிய இரணதீரனைப் (525-550) பொருது வென்றான். 8. மூன்றாஞ் சிம்ம வர்மன் (550-575): இவன், சாளுக்கியரை (முதலாம் புலிகேசி, அல்லது கீர்த்திவர்மனை) வென்றான். 4. முதலாம் புலிகேசி (550-566): இவன் வாதாவியைக் கைப் பற்றிச் சாளுக்கிய நாட்டின் தலைநகராக்கினான். புலிகேசியின் முதல் மகனான முதலாங்கீர்த்தி வர்மன் (566-598) கடம்ப மன்னன் அரிவர்மனை வென்று, வனவாசியைக் கைப்பற்றினான். இவன் தம்பி மங்களேசன் (598-609) கலசூரியரைவென்றான். இவ்வாறு சாளுக்கியர் படிப்படியாக நாட்டைப் பெருக்கினர். 3. தமிழர் எழுச்சி தமிழகத்தில் வடவடுகர் ஆட்சிக் காலத்தே, தமிழர்தம் பழஞ்சமயக் கொள்கை மறைந்து சமண பௌத்த சமயங்கள் தமிழர் சமயங்களாயின. வடமொழி அரியணையேறியது. தமிழ் கேட்பாரற்ற பொருளானது. தமிழர் கலை, நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்களெல்லாம் அழிந்தொழிந்தன. தமிழர், தமிழர் என்னும் பெயருடன் வாழ்ந்து வந்தனர். தமிழ் வளர்த்து வந்த மதுரைத் தமிழ்ச்சங்கமும் ஒழிந்தது. தமிழ்ப் புலவர்கள், தமிழ் மரபை விட்டு அயல்மரபை மேற் கொள்ளலாயினர். பல்லவரும் தமிழர் அல்லர் என்பதை அறியவும். தமிழ் மக்களின் இரங்கத்தக்க இவ்விழிநிலையைக் கண்ட தமிழ்ப் பெரியார் சிலர், தமிழர் தம் பழஞ்சமயக் கருத்துக் களுடன் காலத்துக்கேற்ற புதுக்கருத்துக்களையுங் கலந்து, அன்பு நெறி (பத்திமார்க்கம்) என்னும் ஒரு புதுக் கொள்கையை உண்டாக்கி, தமிழ் இளைஞர்கள் பலரை அதிற் பயிற்றுவித்து, அவர்களைக் கொண்டு அதைத் தமிழரிடைப் பரப்பி வந்தனர். தமிழ் மக்கள் அப்புறச் சமய மயக்கந் தெளிந்து ஒருவாறு தந் நிலையை உணரத் தலைப்பட்டனர். தமிழரிடை வீரம் அரும்பியது. ஊர்தோறும் புல் மூடிக்கிடந்த சிலம்பக் கூடங்கள் புது வாழ்வு பெற்றன. வேலும் வாளும் வில்லும் தமிழ் இளைஞர்கள் கை களைத் தழுவின. தமிழகம் முழுவதும் இத்தகைய புத்துணர்ச்சி பெற்றது. தமிழர் விடுதலை வேட்கையுடையவராயினர். தமிழ்ச் சமயப் பரப்பினர், வரவர அப்புறச் சமயப் பற்றின் தீமையை எடுத்துக் கூறுவதோடு, அதை எதிர்த்துப் பேசியும் வந்தனர். சமண பௌத்தர்களும் இவர்களை எதிர்த்துத் தங்கள் சமயங் களைப் பரப்பி வந்தனர். இதையொட்டி, வைதிகப் பிராமணரால் வேதக் கருத்துக் களும், புராணக் கதைகளும் தமிழ் நாட்டில் பரப்பப்பட்டன (டாக்டர். இராசமாணிக்கனார்-சைவ சமய வளர்ச்சி-69). வரவர அவ்வன்பு நெறி, அக்கருத்துக்களைத் தழுவி மறைநெறிச் சமய மாக உருப்பெற்று விட்டது. மூவர் தேவாரப் பாடல்களில் இதைக் காணலாம். எனினும், தமிழரின் சைவ சமயப் பரப்புதலினால் தமிழகத்தில் ஆங்காங்கே சைவ அடியார்கள் சிலர் தோன்றினர். சண்டீசர், கண்ணப்பர், சாக்கியர், கணம் புல்லர், அமர்நீதி நாயனார், அரிவாட்டாயனார், நமிநந்தியடிகள், தண்டியடிகள், புகழ்த்துணையார், எறிபத்தர் ஆகியோர் இக்காலத்தவராவர். இவர்கள் அப்பர் சம்பந்தரால் பாராட்டப் பெற்றவர் (டாக்டர். இராச மாணிக்கனார்-சைவ சமய வளர்ச்சி-57). மேலும் இக்காலத்தே, ஐயடிகள், காரைக்காலம்மையார், நக்கீர தேவர், கபில தேவர், பரண தேவர், கல்லாட தேவர் என்னும் சைவ அடியார்களாகிய சைவப் புலவர்கள் சிவபெருமான் மீது அந்தாதி, இரட்டைமணிமாலை, மும்மணிக்கோவை முதலிய பனுவல்கள் பாடிச் சைவத்தைப் பரப்பி வந்தனர். ஏறத்தாழ இவர்கள் பாடல்களில் 70 சிவன் கோயில்கள் குறிக்கப்பட்டுள்ளன. அப்பரும், சம்பந்தரும், தமக்கு முன்னரே நாட்டில் பல கோயில் களில் பண்ணிறைந்த பாடல்கள் பாடப்பட்டு வந்தன என்று குறித்துள்ளனர் (டாக்டர். இராச-சைவ சமய வளர்ச்சி-67). எனவே, இவர்கள் பெரும்பாலும் அக்கோயில்களுக்கு நேரில் சென்று வழிபட்டதோடு, அங்கங்கு சமயப் பரப்புதல் செய்து வந்தனர் என்பது பெறப்படும். இவர்கள் பாடல்கள் 11 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு புறச் சமயத்தை எதிர்த்துத் தமிழ்ச் சமயம் பரப்பப்பட்டு வந்தது. 1. கோச்செங்கணான்: இந்நிலையில், வடவடுகர் கீழ்ச் சிற்றரசனாக இருந்த கோச்செங்கணான் என்னும் சோழ மன்னன், தமிழ் இளைஞர்களைத் திரட்டிப் பெரும் படையை அமைத்தான்; சோழ நாட்டை ஆண்டு வந்த வடவடுகரை வென்றடக்கினான்; பின்னர்க் காஞ்சி வரை படையெடுத்துச் சென்று, இரண்டாங் குமார விஷ்ணுவின் மகனான புத்தவர்மப் பல்லவனுடன் போரிட் டான். ஆனால், இறுதியான வெற்றி கிடைக்கவில்லை. இதையே, வேலூர்ப்பாளையப்பட்டயம், ‘புத்தவர்மன் கடல் போன்ற சோழர் படையை நடுங்க வைத்தான்’ என்கின்றது. இதனால், சோழன் படைப் பெருக்கும், புத்தவர்மன் முழு வெற்றி அடைய வில்லை என்பதும் விளங்கு கிறதல்லவா? தமிழ்ப் பெரியார்களின் முயற்சிக்கு இச்செங்கணான் பேருதவியாக இருந்தான். இவன் 70 சிவன் கோயில் கட்டின தாகத் திருமங்கையாழ்வார் குறித்துள்ளார் (திருநறையூர்ப் பதிகம்-8). இது மிகையாக இருக்கினும் அன்புநெறி-சைவ உணர்ச்சி - பெருகிவந்ததென்பதைக் காட்டுவதோடு, தமிழகத்தே அவ்வடவடுகர் ஆட்சியின் தளர்ச்சியையும் குறிப்பிடுவதாகும். புறச் சமய விலக்குக்காகவே செங்கணான் பல போர்கள் செய்தான் என்பது மிகையாகாது. அன்று கொங்கு நாடு ஒரே சமணமயமாக இருந்தது. காரணம், சமணர் தலைமையிடமான சிரவண வெண்குளத்தை அடுத்திருந்ததோடு, சமணர்களாகிய கங்க மன்னர் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது அன்று கொங்கு நாடு. செங்கணான் கொங்கரை வென்று அங்கு அன்பு நெறியைப் பரப்பினான். இவ்வெற்றி குறித்ததே களவழி நாற்பது என்னும் நூல். இக் கொங்குப் போரில் செங்கணானுக்கெதிராக ஒரு சேர மன்னனும் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. அல்லது, இவன் சேர நாட்டின் மீதும் படையெடுத்துச் சென்று சேரரை வென்று, அங்கும் சைவ நெறியைப் பரப்பியிருக்கலாம். இச்செங்கணான் முயற்சி, காரிருளில் மின்னும் மின்னல் போன்றதே யெனினும், அம்மின்னல் போல் தமிழர்க்கு வழி காட்டிற்றென்பதில் சிறிதும் ஐயமில்லை. இச்செங்கணான் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இருந்தவனாவன். 2. புகழ்ச் சோழன்: இவன், செங்கணானை அடுத்து, அவனைப் போலவே அன்பு நெறியைப் பரப்பி வந்தான். புறச் சமய விலக்குக் காக இவனும் பெருந்தொண்டாற்றியவனாவான். இவன் கொங்கு நாட்டுத் தகடூர் அதியமானை வென்றான்; சேரரையும் வென்றதாகத் தெரிகிறது. இவனுக்குப் பின் சோழ நாடு பல்லவர் கைப்பட்டது. 3. கூற்றுவநாயனார்: இவர், புகழ்ச்சோழனை அடுத்திருந்தவ ராவர். இவர், கொங்கு நாட்டுக் குறுநில மன்னர் ஆவர். இவர் கோவைக் கோட்டத்துப் பொள்ளாச்சி வட்டத்தைச் சேர்ந்த களந்தை என்னும் ஊரினர். இவரொரு பெருவீரர். இவர் கொங்கு நாட்டில் அன்பு நெறியைப் பரப்புதற்காக, புறச்சமய விலக்குக் காகப் பெருந் தொண்டாற்றியுள்ளார். இவர், தில்லைவரை படையெடுத்துச் சென்று பல்லவரை வென்றதாகத் தெரிகிறது. செங்கணான் முதலிய இம்மூவரும் அறுபான் மும்மை நாயன் மார் தொகையுட் சேர்க்கப் பட்டுள்ளனர். 4. கடுங்கோன்: இந்நிலையில், வடவடுகர் கீழ்ச் சிற்றரசனாக இருந்து வந்த கடுங்கோன் என்னும் பாண்டிய மன்னன், தமிழ் இளைஞர்களைத் திரட்டிப் பெரும்படையை அமைத்துச் சென்று, மதுரையிலிருந்த அவ் வடவரை வென்று துரத்தி, கி.பி. 575 இல் மதுரையில் அரியணை ஏறினான். பாண்டிய நாட்டில் பழையபடி தமிழரசு ஏற்பட்டது. (வேள்விக்குடிச் செப்பேடு) ஆனால், 325 ஆண்டுகள் பாண்டி நாடு வடவராட்சியில் இருந்து வந்ததால், இழந்த பழந்தமிழ் மரபை மறுபடியும் தமிழர் எய்தவே இல்லை. வடவராட்சிக்குப் பின், கி.பி. 575 இல் பழையபடி பாண்டியப் பேரரசு ஏற்பட்டது. பாண்டிய மன்னரின் பெரு முயற்சியால், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் மறுபடியும் சோழப் பேரரசு ஏற்பட்டது. ஆனால், அதன் பின்னர்ச் சேரப் பேரரசு ஏற்படவே இல்லை. அதன்பின் அது, பல சிற்றரசு களாகச் சிதறி விட்டது. அவ்வாறு சிதறியதோடு, அது தமிழ்மரபையே அடியோடிழந்து, பின்னர்த் தம் தாய்மொழியாம் தமிழையும் இழந்து விட்டது. அச்சிதறிய சேரச் சிற்றரசர்கள் வரலாற்றுச் சிறப் பின்றி, பாண்டிய சோழப் பேரரசின் கீழ்ச் சிற்றரசர்களாகவே இருந்து வந்தனர். மலையாள நாட்டில் உள்ள நம்பூதிரிகள் பற்றிய குறிப் பொன்றும் சங்க இலக்கியங்களில் காணப்படாமையால், அன்னார் வடவராட்சிக் காலத்தே வடநாட்டினின்று குடியேற்றப் பட்டவராக இருக்கலாம். 3. முற்காலம் 1. பாண்டியர் - பல்லவர் - 575 - 710 பாண்டியர்: 1. மாறவர்மன் அவனி சூளாமணி 600-625 2. செழியன் சேந்தன் 625-640 3. மாறவர்மன் அரிகேசரி 640-680 4. கோச்சடையன் ரணதீரன் 680-710 பல்லவர்: 1. சிம்மவிஷ்ணு 575-615 2. மகேந்திரவர்மன் 615-630 3. நரசிம்மவர்மன் 630-668 4. பரமேசுவரன் 670-685 5. இராசசிம்மன் 685-705 6. இரண்டாம் பரமேசுவரன் 705-710 மேலைச் சாளுக்கியர் 7. இரண்டாம் புலிகேசி 609-642 8. முதலாம் விக்கிரமாதித்தன் 655-680 9. வினயாதித்தன் 680-696 10. இரண்டாம் விசயாதித்தன் 696-733 கீழைச் சாளுக்கியர்: 1. விஷ்ணுவர்த்தனன் 614-625 கங்கர்: 15.துர்விநீதன் 605-655 18.பூவிக்கிரமன் 665-674 20.முதலாஞ் சிவமாறன் 679-726 இலங்கை: 1. அட்டதத்தன் 2. மானவன்மன் குப்தர்: 1. அர்ஷவர்த்தனன் 606-647 1. மாறவர்மன் அவனி சூளாமணி (600-625): இவன் கடுங்கோன் மகன். இவன் காலத்திலிருந்து பாண்டியர் வடமொழிப் பெயர் வைத்துக் கொண்டதோடு, மாறவர்மன், சடையவர்மன் என்ற வடமொழிப் பட்டப் பெயர்களையும் ஒருவர் பின் ஒருவராக மாறிமாறி வைத்துக் கொள்ளலாயினர். 325 ஆண்டுகள் மதுரையில் நடந்த வடவராட்சி, பைந்தமிழ் வளர்த்த பழந்தமிழ்ப் பாண்டிய மன்னர் மரபினையே இங்ஙனம் மாறும்படி செய்து விட்டதென்க. 2. செழியன் சேந்தன் (625-640) : இவன், அவனி சூளாமணி மகன்; ‘சடையவர்மன்’ என்ற பட்டமுடையவன். சேந்தன்தி வாகரம் இவன் காலத்ததே. 1. சிம்மவிஷ்ணு (575-818): இவன், இடைக்காலப் பல்லவர் பட்டியலின் மூன்றாஞ் சிம்மவர்மன் மகன். இவனுக்கு முற்பட்ட நந்திவர்மன் முன்னோரும் இவன் முன்னோரும் ஆந்திர நாட்டி லிருந்தாண்டு வந்தனர். இரண்டாங் குமாரவிஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றிய பின், அவன் மகன் புத்தவர்மனுக்கும் கோச்செங் கணானுக்கும் நடந்த போரில் சோழனே வெற்றி பெற்றிருப் பான் போல் தெரிகிறது. எங்ஙனமெனில், காஞ்சி இச்சிம்மவிஷ்ணு வால் மீட்கப் பட்டதனாலென்க. இவன் காஞ்சியைப் பிடித்த தோடு, தெற்கே இருந்த வடவர், சோழர், பாண்டியர் ஆகியோரை வென்று, தெற்கே புதுக்கோட்டை வரை பல்லவ நாட்டைப் பெருக்கினான். இவன் காலத்தேதான் பல்லவராட்சி தமிழ்நாட்டில் நிலையுடையதான தென்க. தோற்ற பாண்டியன் அவனிசூளா மணியாக இருக்கலாம். இச்சிம்மவிஷ்ணு காலத்துக் கங்க மன்னனான துர்விநீதன் (605-655) அவையில், பாரவி என்னும் வடமொழிப் புலவர் இருந்தார். அவர் செய்த பாடலை ஒருவன் பாடக் கேட்டு வியந்த சிம்மவிஷ்ணு அவரைக் காஞ்சிக்கு வரவழைத்து அவைப்புலவ ராக்கிக் கொண்டான். இதனால், பல்லவரின் மொழியாட்சி பெறப் படுவதோடு, துர்விநீதனும் சிம்மவிஷ்ணுவும் நண்பர்களாக இருந்து வந்தன ரென்பதும் பெறப்படுகிறது. 2. மகேந்திரவர்மன் (615 - 630): இவன், சிம்ம விஷ்ணுவின் மகன். இவன் காலத்தவனான மேலைச் சாளுக்கிய இரண்டாம் புலிகேசி (610-642) என்பான் வடக்கே படையெடுத்துச் சென்று, தெற்கே படையெடுக்க முயன்று, தனேசுவரத்தைத் தலை நகராகக் கொண்ட கன்னோசிப் பேரரசனான அர்ஷவர்த் தனனை (606-647) வென்றான். அர்ஷன், குப்தரின் ஒரு கிளை யினனாவான். பின், புலிகேசி அர்ஷனுடன் உடன் பாடு செய்து கொண்டு மீண்டு, கோதாவரி கிருஷ்ணையாறுகட் கிடைப்பட்ட கீழ் கடற் பகுதியான வேங்கி நாட்டைச் சாலங்காயனரிட மிருந்து கைப்பற்றி, தன் தம்பி விஷ்ணு வர்த்தனனை அதனை ஆளச்செய்தான். இவ்விஷ்ணு வர்த்தனனே கீழைச்சாளுக்கிய மரபின் முதல் வனாவான். பின்னர்ப் புலிகேசி, தன் மாமனாரான கங்கமன்னன் துர்விநீதன் துணையுடன் காஞ்சியை நோக்கிப் படையெடுத் தான். மகேந்திரன், காஞ்சிக் கோட்டைக்குட் கதவடைத்திருந் தான். புலிகேசி, காஞ்சியை முற்றாமல் தெற்கே காவிரி வரை சென்று திரும்பி வரும்போது, காஞ்சிக்கு 10 கல் தொலைவிலுள்ள புள்ளலூர் என்னும் இடத்தில், பல்லவன் சாளுக்கியனை எதிர்த்துத் தாக்கினான். புலிகேசி தோற்றோடினான். மகேந்திரன் சமணனாக இருந்து, அப்பரால் சைவனாக்கப் பட்டவன். இவன் சமணனாக இருந்தபோது அப்பருக்கும், சைவனாக மாறியபின் சமணர்கட்கும் செய்த கொடுமைகள் சொல்லுந் தரத்தவல்ல. இவன் குகைக்கோயில்களும் கற்கோயில் களும் பல அமைத்தவன். மத்தவிலாசப் பிரகசனம் என்னும் வட மொழி நகைச்சுவை நூல் இவன் செய்ததே. 3. நரசிம்மவர்மன் (630-668): இவன், மகேந்திரன் மகன். மகேந்திரனிடம் தோற்றோடிய சாளுக்கிய இரண்டாம் புலிகேசி, நரசிம்மன் பட்டம் பெற்ற சில ஆண்டுகளில் பல்லவ நாட்டின் மேற் படையெடுத்தான். காஞ்சிக்கு 20 கல் அளவில் உள்ள மணிமங்கலம், பரியலம், சூரமாரம் ஆகிய இடங்களில் நடந்த போர்களில் தோற்ற சாளுக்கியப் படையை, பல்லவப் படைத் தலைவன் பரஞ்சோதி என்பான், வாதாவி மட்டும் துரத்திச் சென்று, சாளுக்கியர் தலைநகரான வாதாவியையும் அழித்தான். (642ல்). 13 ஆண்டுகள் வாதாவி பல்லவரிடம் இருந்தது. இப்பரஞ்சோதியே - சிறுத்தொண்டநாயனார் ஆவான். இந்நரசிம்மப் பல்லவன் காலத்தே, பாண்டி நாட்டை மாறவர்மன் அரிகேசி (640-680) என்பவன் ஆண்டு வந்தான். இவன், சேந்தன் செழியன் மைந்தன். இவனைச் சுந்தர பாண்டியன், கூன்பாண்டியன் என்கின்றது திருவிளையாடற் புராணம். இவன் சேரரையும், பாழி, நெல்வேலி, செந்நிலம் முதலான இடங்களில் எதிர்த்த குறுநில மன்னரையும் வென்றான்; உறையூரை வென்று, அதனை ஆண்ட மணிமுடிச்சோழன் வேண்டிக்கொள்ள, அவன் மகள் மங்கையர்க்கரசியை மணந்து கொண்டான். குலச்சிறையார் என்பவர் இவனது அமைச்சராவர். நரசிம்மப் பல்லவன் புலிகேசியை வென்று துரத்தி விட்டுக் காஞ்சியிலிருந்த போது, அரிகேசரி பல்லவ நாட்டின் மேற் படையெடுத்துச் சென்று, சங்கரமங்கை என்ற இடத்தில் நடந்தபோரில் நரசிம்மனைத் தோற்கடித்தான் (சின்னமனூர்ப் பட்டயம்). இம்மாறவர்மன் அரிகேசரி சமணனாக இருந்து, சம்பந்த ரால் சைவனாக்கப் பட்டவன். சம்பந்தரிடம் சமயப் போர் புரிந்து தோற்ற பல்லாயிரக்கணக்கான சமணரை இவன் கழு வேற்றியதாகப் பெரியபுராணம் கூறுகிறது. அக்காலச் சமயக் கொடுமையை எண்ணிப் பார்க்கவும். அதன்பின் இவன், நெடு மாறன் எனப் பெயர்பெற்றான். இரண்டாம் புலிகேசிக்குப் பிறகு, 642-654 வரை சாளுக்கிய நாடு குழப்பத்தில் இருந்தது. இரண்டாம் புலிகேசிக்கு-சந்திராதித்தன், ஆதித்தவர்மன், முதலாம் விக்கிரமாதித்தன் என மூன்று மைந்தர். சந்திராதித்தன் இறந்த பின், பின்னிரு வர்க்கும் அரசுரிமை பற்றிய பூசல் உண்டாயிற்று. ஆதித்தவர்மன், நரசிம்மப் பல்லவன் துணையை வேண்டினான். விக்கிரமாதித்தன், தன் தாய்வழிப் பாட்டனான கங்கமன்னன் துர்விநீதன் உதவியை நாடினான். போர் மூண்டது. நரசிம்மன் கொங்கு நாட்டைக் கைப் பற்றி, தனது ஒன்று விட்ட தம்பியை அதற்கு அரசனாக்கினதால் துர்விநீதனுக்கு நரசிம்மன்மேல் தீராப்பகை உண்டு. எனவே, துர்விநீதன் நரசிம்மன் படையை வென்று, விக்கிரமாதித்தனைச் சாளுக்கிய அரசனாக்கினான் (நகர்க்கல்வெட்டு). அட்டதத்தன் என்பான், இலங்கை இளவரசனான மானவன்மனின் அரசைக் கவர்ந்து கொண்டான். மானவன்மன் நரசிம்மனிடம் தஞ்சம் புகுந்தான். நரசிம்மவர்மன் பெரும் படை யுடன் மானவன்மனை இலங்கைக்கு அனுப்பினான். மானவன் மன் அட்டதத்தனிடம் தோற்று மீண்டும் காஞ்சியை அடைந்தான். அடுத்துச் சென்ற பல்லவப்படை அட்டதத்தனை வென்று, மானவன் மனை இலங்கை மன்னனாக்கி மீண்டது (காசக்குடிப்பட்டயம்). இந்நரசிம்மன் காலத்தே தான், சீன வழிப்போக்கனான யுவான்சுவாங் என்பான் காஞ்சிக்கு வந்தான். தன் தந்தையைப் போலவே இவனும் பல குகைக் கோயில் கள் அமைத்தான். இவன் சிவன் கோயிலும் திருமால் கோயிலுங் கட்டினான். கொங்கு நாட்டு நாமக்கல் மலையடிக் குகைக் கோயில் இவன் அமைத்ததே. மாமல்லன் என்றும் இவனுக்குப் பெயர். நரசிம்மன் மகன் இரண்டாம் மகேந்திரன் (668-670) இரண்டாண்டுகளே ஆண்டான். 4. பரமேசுவரவர்மன் (670-685): இவன் காலத்தே இரண்டாம் புலிகேசியின் மகன் முதலாம் விக்கிரமாதித்தன் (655-685) சாளுக்கிய நாட்டை ஆண்டு வந்தான். அவன் பல்லவநாட்டின் மீது படையெடுத்து வந்து காஞ்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பரமேசுவரன் தப்பி ஓடிவிட்டான். விக்கிரமாதித்தன் அங்கிருந்து உறையூர் வரை சென்று, பின் பாண்டி நாட்டின் மேற் படையெடுத்தான். புதுக் கோட்டைப் பகுதியிலுள்ள நெல்வேலி என்னும் இடத்தில் நடந்த போரில், மாறவர்மன் அரிகேசரியும், அவன் மகன் கோச்சடையன் ரணதீரனும் சாளுக்கியனை வென்று துரத்தினர். “ நிறைகொண்ட சிந்தையான் நெல்வேலி கொண்ட நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்” என்பது, சுந்தரர்-திருத்தொண்டத் தொகை.இது நெடுமாறனின் பெருவெற்றியாகும். முன் சாளுக்கியனிடம் தோற்றோடிய பரமேசுவரன் ஆந்திர நாடு சென்று பெரும்படை திரட்டி வந்து, திருச்சிக்கு 12 கல் அளவில் உள்ள பெருவளநல்லூர்ப் போரில் விக்கிரமாதித் தனைத் தோற்கடித்தான். ஆனால், கங்கமன்னன் பூவிக்கிரமன் (665-674) என்பான், பல்லவ நாட்டின் மேற் படையெடுத்து வந்து, விழிந்தம் முதலிய இடங்களில் நடந்த போரில் பரமேசுவரனை வென்று, உக்கி ரோதயம் என்னும் பல்லவரின் மணியாரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். இப்பரமேசுவரன் சைவன்; சிவன் கோயில்கள் பல கட்டினான். இவன் கட்டிய கூரம் கோயிலே தமிழகத்து முதற் கற்கோயிலாகும். இவன் சிறந்த வடமொழிப் புலமையுடையவன். 5. இராசசிம்மன் (685-705): இவன், பரமேசுவரன் மகன். இவனுக்கு, இரண்டாம் நரசிம்மன் என்றும் பெயர். சாளுக்கிய விக்கிரமாதித்தனுக்குப் பின் அவன் மகன் வினயாதித்தன் (680-696) பட்டம் பெற்றான். அவன் முதலில் கங்கவாடியைத் தாக்கினான். அப்போது அதனை ஆண்டவன், முதலாஞ் சிவமாறன் (679-726) ஆவன். வினயாதித்தன் சிவமாறனை வென்று தனக்கு அடங்கி நடக்குமாறு செய்தான். பின்னர், தந்தை கட்டளைப் படி, பழிக்குப் பழி வாங்கப் பல்லவ நாட்டின்மேற் படையெடுத் தான். ஆனால், இராச சிம்மனால் முறியடிக்கப்பட்டான். இராசசிம்மன் கங்க நாட்டின்மேற் படையெடுத்துச் சென்று, முதலாஞ் சிவமாறனிடம் தோல்வியுற்றதாகக் கங்கர் பட்டயம் கூறுகிறது. காஞ்சிக் கைலாச நாதர் கோயிலைக் கட்டியவன் இராச சிம்மனே. வடமொழித் தண்டி, இவன் அவைப் புலவராவர். சிம்மவிஷ்ணு, வடமொழிப் புலவரான பாரவியைப் போற்றினான். பாரவியின் பேரர் தண்டி. எனவே, பாரவியும், அவர் மகனும், பாரவி பேரர் தண்டியும் ஆகிய வடமொழிப் புலவர்கள், பல்லவர் அவைக்களப் புலவர்களாக இருந்து வந்துள்ளனர். இதனால் பல்லவரின் மொழியாட்சி நிலை எங்ஙனம் இருந்த தென்பது பெறப்படும். 6. இரண்டாம் பரமேசுவரன் (705-710): இவன், இராச சிம்மன் மகன். இவன் சில ஆண்டுகள் அமைதியாக ஆண்டு வந்தான். 4. கோச்சடையன் ரணதீரன் (680-710): இவன், மாற வர்மன் அரிகேசி மகன், தந்தையோடு சேர்ந்து (நெல்வேலிப் போரில்) சாளுக்கிய விக்கிரமாதித்தனை வென்றவன். ரணரசிகன் என்ற விக்கிரமாதித்தனை வென்றதால், இவன் ரணதீரன் என்று பெயர் பெற்றான். இவன், சேரரையும் சோழரையும் கரு நாடரையும் கொங்கரையும் வென்று திறைதருமாறு செய்தான் என்கின்றது, வேள்விக் குடிச் செப்பேடு. கடல் போன்ற படை யையுடைய ஆய்வேளை இவன் மருதூர்ப் போரில் வென்றான்; மங்களாபுரம் போரில், சாளுக்கிய வினயாதித்தன் மகனான இரண்டாம் விசயாதித்தனை (696-733) வென்றான். மங்களா புரம் என்பது-மேல்கடற்கரையிலுள்ள மங்களூராகும். எனவே, இவன் காலத்தே பாண்டியப் பேரரசு மிக உயர்ந்த நிலையை அடைந்த தென்பது பெறப்படும். இக்கோச்சடையன் காலத்திற்றான், சுந்தரரும், சேரமான் பெருமாளும் (667-712) மதுரைக்கு வந்தனர். கோச்சடையன் மருமகனான சோழமன்னனும் அப்போது மதுரையிலிருந்தான். இது, தமிழகத்தே புறச்சமய இருள் நலிந்து, அகச்சமயமாகிய அன்பு நெறி ஒளிவீசத் தொடங்கி விட்டதென்பதைக் காட்டுவ தாகும். 2. தேவார மூவர் தமிழகத்தைக் கைப்பற்றியாண்ட அவ்வடவடுகரை வென்று துரத்துவதற்காக, தமிழ் மக்களுக்குத் தமிழினவுணர்ச்சி யூட்டுவதற்காக, பழையபடி தமிழ் நாட்டில் தமிழரசை ஏற்படுத்து வதற்காகத் தமிழ்ப் பெரியார்களால் உண்டாக்கப் பட்டுத் தமிழரிடைப் பரப்பி வந்த அவ்வன்பு நெறிப் பரவுதல், மதுரை யிலிருந்தாண்ட அவ்வடவரை வென்று துரத்திய பின்னரும், மதுரையில் பழையபடி பாண்டி அரசு ஏற்பட்ட பின்னரும் தொடர்ந்து நடந்து வந்தது. காரணம், அவ்வடவடுக ராட்சியை வெறுக்கும் அளவுக்குத் தமிழர் இனவுணர்ச்சி பெற்றனரே யன்றி, அவ்வடவரால் புகுத்தப்பட்ட அப்புறச் சமய மயக்கம் அறவே தெளிந்தாரில்லை. சனிக்கிழமை மட்டும் நாமம் போட்டுக் கொண்டு, மற்ற நாட்களில் திருநீறு பூசுவோர் நிலையில் இருந்து வந்தனர் தமிழரிற் பெரும்பாலோர். ஓரு நாட்டைக் கைப்பற்றிய அயலாரை எளிதில் வென்று துரத்தி விடலாம். ஆனால், ஒரு நாட்டு மக்களைக் கைப்பற்றிய அயற்சமயத்தை அவ்வாறு எளிதில் வென்று துரத்திவிட முடியாது. அதனாலேயே அத்தமிழ்ச் சமயபரப்புத் தொண்டு தொடர்ந்து நடந்து வந்தது. அத்தொண்டாற்றி வந்தோரில் - அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்னும் தேவார மூவரும் குறிப்பிடத் தக்கவராவர். அப்பரும் சம்பந்தரும். கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் இடையிலும், சுந்தரர் அந்நூற்றாண்டின் இறுதியிலும் இருந்து வந்தனர். அப்பர் சம்பந்தருக்கு முன்னிருந்து, சம்பந்தர் காலத்தும் இருந்து வந்தனர். இம்மூவரும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, தேவாரம் பாடித் தமிழ் மக்களைத் தம் வழிப்படுத்து வந்தனர். இவர்களில் ஒவ்வொருவரும் ஊர்தோறும் தனியாகச் செல்ல வில்லை; அடியார் திருக்கூட்டத்துடன் சென்று வந்தனர். ஓரூரில் சென்று இவர்களிலொருவர் தேவாரம் பாடும் போதே, பக்கத்தூர்ச் சைவ அன்பர்கள் தங்களூர்க்கு வரும்படி அழைப்பர். அவ்வழைப்பை ஏற்று இவர் அவ்வூருக்குச் செல்லும் போது, அவ்வூரார் மேளதாளத்துடன் எதிர் கொண்டு இவரை கோயிலுக்கு அழைத்துச் செல்வர். இவர் கோயிலுக்குச் சென்று இறைவன் திருமுன் தாம் பாடிய தேவாரப் பதிகப் பாடல்களை இசையுடன் உருக்கமாகப் பாடி அனைவரையும் உளமுருகச் செய்வர். ஊரார் தெருவெங்கும் தோரணங்கட்டிக் கோலம் போட்டு ஊரை அணிசெய்வர். மாலையில் அடியார்புடைசூழ, யாழ் குழல் மத்தளம் முதலிய பின்னணியிசையுடன் அப்பதிகப் பாடல்களை இசையுடன் பாடிக்கொண்டு தெருக்கள் தோறும் ஊர்வலம் செல்வர். அப்பாடல்களின் இன்னிசையில் ஈடுபட்ட மக்கள் உணர்ச்சி வயப்பட்டு, தொடர்ந்து அவ்விசையின்பத்தை நுகர ஊர்வலத்தில் கலந்து கொள்வர். “ போதுக்குள் உயர்ந்த கஞ்சப் பூப்புகுஞ் சுரும்பர் அம்பொற் றாதுக்குள் முழுகிப் புன்னை சாரவம் மணத்தாற் பெண்டேன் வாதுக்கு நிற்க நெய்தல் வரியினால் வசிய மாய; ஏதுக்கும் உருகா வேனும் இசைக்குரு காத வுண்டோ.” (வேளாளப்புராணம், நாட்டுப்படலம் - 23) கஞ்சம் - தாமரை, இது, மருத நிலத்துப்பூ. சுரும்பர் ஆண் வண்டு, தாது-மகரந்தம், புன்னை-நெய்தல் நிலமரம், பெண்தேன்-பெண்வண்டு. நெய்தல்வரி-இரங்கற் பண், பண்-இசை. ஆண்வண்டு பாடிய இசையினால் பெண்வண்டு ஊடல் தணிந்ததாம். இசையின் இத்தகைய சிறப்புடைமை பற்றியே, தேவார மூவரும் தங்கள் பாடல்களைப் பண்ணுடன் பாடினர். இவர்களில் சம்பந்தர் பேரிசை வாணராவர். ‘நாளும் இன்னிசை யால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்’ (சுந்தரர்) எனல் காண்க. ஊர்வலம் கோயிலை வந்தடைந்ததும் அக்கூட்டத்தில் அப்பதிகப் பாடல்களில் அமைந்துள்ள அவ்வூரின் இயற்கை யழகு, செயற்கையழகு. ஏனைய சிறப்புக்கள், புராணக் கதைகள் முதலியவற்றை எடுத்து விளக்கிக் கூறிக் கேட்போர் புறச்சமய மயக்கம் தெளிந்து, சைவ சமய உணர்ச்சியுறுமாறு செய்வர். இவ்வாறு அம்மூவரும் பெரிய கோயில்கள் உள்ள ஊர்தோறும் சென்று சமயத் தொண்டாற்றி வந்தனர். ஆனால், அன்று தமிழ்ப் பெரியார்கள் கண்ட அன்பு நெறி யாகிய அத்தமிழ்ச்சமயம், வரவரப் புராணக் கதைகளும் அயற் கருத்துக்களும் புகுத்தப்பட்டு, இன்று ஒரு புதிய உருவம் பெற்று விட்டதென்பது, மூவர் தேவாரப் பாடல்களாற் பெறப்படும். அம்மூவருள், அப்பர் பாடல்களில் பெரும்பாலும் அன்பு நெறியே வற்புறுத்தப்படுகிறது. சுந்தரர் பெரும்பாலும் அப்பரையே பின்பற்றியுள்ளனர். ஆனால். சம்பந்தரோ, “ வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லி அமணொடு தேரரை” “ வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி மூட்டு சிந்தை முரட்டமண் குண்டரை” “ மறைவ ழக்கமி லாதமா பாவிகள்” “ வைதி கத்தின் வழியொழு காதவக் கைத வமுடைக் காரமண் தேரரை” என, தமிழ் மரபுக்கு மாறாக, வேதவேள்வியையும், வேத நெறி யையும், வைதிகத்தையும் வற்புறுத்தியுள்ளார். எனவே, தேவாரப் பாடல்களிலிருந்து, அன்று தமிழ்ப் பெரியார்கள் கண்ட அவ்வன்பு நெறியையும், அதற்கு முந்திய பழந்தமிழ்ச் சமயத்தையுங் காணுதல் இயலாது. இவ்வாறே சமண பௌத்தரும் தங்கள் சமயங்களைப் பரப்பி வந்தனர். இவ்விரு சாரார்க்கும் அரசுகளும் துணை நின்றன. இரு சாரார்க்கும் மும்முரமாகச் சொற்போரும் நடந்து வந்தது. ஒவ்வொருகால், சொற்போர் மற்போரும் கற்போரும் ஆதலும் உண்டு. வரவர அச் சமய உணர்ச்சி சமய வெறியாக மாறி, அது சமயப்போராக மூண்டது. அதனால் உண்டான கொலையும் கொள்ளையும் கொடுமையும் கொஞ்ச நஞ்சமல்ல. அதனால் தமிழ் மக்கள் பட்ட அல்லலும் தொல்லையும் சொல்லும் தரத்த வல்ல. சமணர்கள் மகேந்திரவர்மனைக்கொண்டு அப்பருக் கிழைத்த கொடுமையும், மகேந்திரன் சைவனான பின் சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்தழித்துச் செய்த கொடுமை களும், கூன்பாண்டியன் பல்லாயிரக் கணக்கான சமணர்களைக் கழுவேற்றிக் கொன்ற கொடுமையும் எடுத்துக்காட்டுகளாகும். அவர்கள் இருசாராரும் தமிழர்களென்பதை அவ்விருசாராரும் மறந்ததன் பொருள் நமக்கு விளங்கவில்லை. வாழ்க்கையின் ஒரு கூறான சமயத்துக்காகக் கொள்ளை! கொலை! கொடுமை! தேவாரப் பதிப்பிற் கண்டபடி, தேவார மூவரும் பாடிய பதிகத்தொகையும், கிடைத்துள்ள பதிகத் தொகையும் கீழ்வருமாறு: 3-முற்காலம் பாடியபதிகம் கிடைத்துள்ள பதிகம் அப்பர் 49000 313 சம்பந்தர் 10000 383 சுந்தரர் - 37000 - 100 - - 96000 - 796 - 96000 பதிகங்களில் 796 பதிகங்களே கிடைத்துள்ளன. கிடைத்துள்ள பதிகங்களின்படி, மூவர் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 275. வைப்புத்தலங்கள் 50. பாடல் பெற்ற கோயில்கள் உள்ள நாடுகளும் கோயில்களும் வருமாறு: 1. சோழ நாடு 191 6. கொங்கு நாடு 7 2. தொண்டைநாடு 32 7. இலங்கை 2 3. நடுநாடு 22 8. துளுநாடு 1 4. பாண்டிநாடு 14 9. வடநாடு 5 5. சேர நாடு 1 பாடல் பெற்ற 275 கோயில்களில் 8 வெளிநாட்டுக் கோயில்கள் போக, தமிழ் நாட்டுக் கோயில்கள் 267. அன்று சோழ தொண்டை நடு நாடுகள் மூன்றும் பெரும்பாலும் ஓராட்சியின் கீழ் இருந்தமையால் (191+32+22) -245 போக, தமிழ் நாட்டின் மற்றைப் பகுதிக் கோயில்கள் 22 ஆகும். தேவார மூவரும் கொங்கு நாட்டுக்கு வந்துள்ளனர். பாடல்பெற்ற கொங்கு நாட்டுக் கோயில்கள் 7 ஆவன: அப்பர் 1. கொடுமுடி சம்பந்தர் 2. பவானி. 3, திருச்செங்கோடு, கொடுமுடி 4. கரூர் சுந்தரர் 5. அவிநாசி, 6. திருமுருகன்பூண்டி, கொடுமுடி 7. வெஞ்சமாக் கூடல் வைப்புத்தலம் அப்பர் 1. பேரூர், 2. அவிநாசி, 3. திருமுருகன் பூண்டி, 4. திருச்செங்கோடு 5. ஏழுர் 6. அறப்பள்ளீச் சுரம். 7. வெஞ்சமாக்கூடல். சம்பந்தர்-அறப்பள்ளி, 8. மயிண்டீச் சுரம். சுந்தரர்-பேரூர், 9. குரக்குத்தளி, 10. தகடூர். கொங்கு நாட்டின் பெருமை வீரர்க்குப் பகையுள்ள இடத்தும், மருத்துவர்க்கு நோயுள்ள இடத்தும், ஒளிக்கு இருளுள்ள இடத்துத் தாமே வேலை? அன்று தமிழகத்தில் கொங்கு நாடு தான் ஒரே சமணமயமாக இருந்தது. எனவே, தேவார மூவரும் கொங்கு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, குறிப்பிடத் தக்க கோயில்கள் உள்ள எல்லா ஊர்களுக்கும் சென்று தேவாரம் பாடியிருப்பர். ஆனால், அப்பதிகங்களெல்லாம் கிடைக்கவில்லை. அப்பர்-கொங்கு நாட்டில் கொடுமுடி ஒன்றை மட்டும் பாடியுள்ளார். ஆனால், கோவையை அடுத்துள்ள பேரூர், அவி நாசி, திருமுருகன் பூண்டி, சேலமாவட்டதுத் திருச்செங்கோடு, நாமக்கல்லுக்கு 10 கல் வடக்கிலுள்ள ஏழூர், கொல்லிமலை மீதுள்ள அறப்பள்ளி, கரூர்க்கு 13 கல் தென் மேற்கில் உள்ள வெஞ்சமாக் கூடல் ஆகியவற்றைத் தம் பாடல்களிற் குறித்துள்ளார். அங்கெல்லாம் போகாதிருந்திருந்தால், அவ்வூர்களைப் பற்றி அவருக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்? கேள்வி மூலம் அறிந்து குறித்திருப்பாரெனில் அத்துணைச் சிறப்புடைத்தாகுமோ? சம்பந்தர்-கரூர், கொடுமுடி, பவானி, திருச்செங்கோடு ஆகிய நான்கைப் பாடியுள்ளார். அறப்பள்ளியையும், தரும புரியை அடுத்த அதியமான் கோட்டையில் உள்ள மயிண்டீச் சுரத்தையும் தம் பாடலில் குறித்துள்ளார். அறப்பள்ளியைப் பற்றி அப்பர் சொல்லியிருக்கலாம். மயிண்டீச்சுரத்தைப் பற்றி இவருக்கு எப்படித் தெரியும்? இவர், திருச்செங்கோட்டில் தம் திருக்கூட்டத்தாரில் சிலரை விட்டு விட்டுச் சிலருடன் மேல் கொங்கெல்லாம் சென்று வந்து பவானியை அடைந்து பதிகம் பாடித் திருச்செங்கோடு சென்றனரென்பது, “ அப்பாலைக் குடபுலத்தி லாறணிந்தா ரமர்கோயில் எப்பாலுஞ் சென்றேத்தித் திருநணா வினையிறைஞ்சிப் பைப்பாந்தள் புனைந்தவரைப் பரவிப்பண் டமர்கின்ற வைப்பான செங்குன்றூர் வந்தணைந்து வைகினார்.” (பெரிய. திருஞான-827) என்னும் சேக்கிழார் கூற்றால் பெறப்படும். மேலும் இவர் வெஞ்சமாக்கூடலை வழிபட்டதாகப் பெரியபுராணங் கூறுகிறது. வழிபட்டவர் பதிகம் பாடாமலா வந்திருப்பர்? எனவே, இவர் கொங்கு நாடு முழுவதும் சுற்றியுள்ளார் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இவ்வாறே அப்பரும், மேற்கே பேரூர் முதல், கிழக்கே கொல்லிமலை வரை கொங்கு நாடு முழுதுஞ் சுற்றியவரேயாவர். இனிச் சுந்தரர்க்கோ, கொங்கு நாடு தாய்வீடு போன்றது. கொங்கு நாட்டுக்கு இவர் மூன்று முறை வந்துள்ளார். முதல் முறை-பேரூர் சென்று, அங்கு தில்லையில் இறைவன் நடமாடும் திருக்கோலத்தைக் கண்டு களித்து மீண்டும் தில்லை (சிதம்பரம்) சென்று, அதை அங்கு கண்டு பாடியுள்ளார். இரண்டா முறை சேரமான் பெருமாளுடன் சேரநாடு சென்று, திரும்பி வரும்போது அவிநாசியை அடுத்த திருமுருகன் பூண்டியைப் பாடியுள்ளார். மூன்றா முறை சேரநாடு செல்லும் போது அவிநாசியைப் பாடியுள்ளார். எனவே, இவர் கொங்கு நாட்டில் ஐந்து முறை போகவர இருந்திருக்கிறார். ஆனால் அவிநாசி, திருமுருகன் பூண்டி, கொடு முடி, வெஞ்சமாக் கூடல் ஆகிய நான்கன் தேவாரங்கள் தாம் கிடைத்துள்ளன. பேரூரை இவர் வேறுகோயில் பதிகத்தில் குறிப் பிடுகிறார். நடனத் திருக்கோலத்தைக் கண்டுகளித்த இவர், பேரூர்ப் பட்டீச்சுரனைப் பாடாமலா இருந்திருப்பர்? திருமுருகன் பூண்டியை அடுத்து, திருப்பூரின் 6 கல் கிழக்கிலுள்ள குரக்குத் தளியை வேறொரு பதிகத்தில் குறித்துள்ளார். கொடுமுடியி லிருந்து வெஞ்சமாக் கூடலுக்குக் கரூர் வழியாகத்தான் போக வேண்டும். மேலும், இவர், சேலமாவட்டத்துத் தகடூரை ஊர்த் தொகைப் பதிகத்தில் குறித்துள்ளார். முன்னிருவரும் அதனைப் பாடாமையால் இவருக்கு அவ்வூர் பற்றி எங்ஙனம் தெரிந்திருக்க முடியும்? எனவே, இவரும் கொங்கு நாடு முழுவது முள்ள பெரிய கோயில்களையெல்லாம் பாடியிருக்க வேண்டும். அப் பதிகங்களெல்லாம் கிடைக்கவில்லை. இனி, மாணிக்கவாசகர், திருவாசக ஆனந்தமாலை 7வது பாட்டில் அவிநாசியையும், கீர்த்தித்திருவகவலில் மொக்கணீச் சுரம் என்னும் கோயிலையும் குறித்துப் பாடியுள்ளார். மொக் கணீச்சுரம் - அவிநாசி கோபிவழியில், அவிநாசிக்கு வடக்கேயுள்ள சேவூரின் வடமேற்கில் 3 கல் அளவில் எங்கேயோ ஒரு மூலையில் உள்ளது. தேவார மூவர் போல் இவர் கோயில்கடோறும் செல்ல வில்லை. தேவார மூவரிலொருவர் பாடா திருந்தால் இக்கோயில் மாணிக்கவாசகருக்குத் தெரிந்திருக்கவே முடியாது. சுந்தரர்-குரக்குத்தளி, மொக்கணீச்சுரம் எல்லாம் பாடியிருப்பார். எனவே, கொங்கு நாட்டிலுள்ள சிறப்புடைய கோயில்க ளெல்லாவற்றையும் பெரும்பாலும் மூவரும் பாடியிருப்பர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. திங்களூரிலிருந்த அப்பூதி அடிகள் என்பார், தாமமைத்த குளங்கள், தண்ணீர்ப்பந்தர்கள் முதலிய எல்லாவற்றிற்கும் அப்பர் பெயரை இட்டனர் என்கின்றது பெரியபுராணம். ஈரோடு கோவைப் பெருவழியில், ஈரோட்டின் மேற்கில் 16வது கல்லில் உள்ள விசயமங்கலத்திற்கு 5கல் வடக்கில் திங்களுர் என்ற ஊர் இருக்கிறது. இது, விசயமங்கலத்தைப் போலவே, சமணர் இருந்த பழைய ஊராகும். இத்திங்களூரை அடுத்து அண்மையிலேயே அப்பிச்சிமார் மடம் என்ற மடமும் ஊரும் உள்ளன. அப்பர்மடம் என்பதே, அப்பிச்சிமார்மடம் எனத் திரிந்து வழங்குகிறது. இத்திங்களுரே அப்பூதியடிகள் இருந்த ஊர். அப்பர் பெயரால் அவர் அமைத்த மடமே இம்மடம் என்கின்றனர். இது ஆராய்ச்சிக் குரியது. இனி, துளுநாட்டுக் கோயிலான கோகரணத்தை (துளு நாட்டின் வடக்கிலுள்ளது) அப்பரும் சம்பந்தரும் பாடியுள்ளனர். மைசூர் நாடு சமணத்தின் தலைமையிடம். சிரவணவெண்குளம் அங்குதானே உளது? மைசூர்நாட்டில், கொள்ளேகால் வட்டத்திற்கு வடக்கில் தென்கடம்பை என்ற ஊர் இருக்கிறது. இது மிகப் பழமையான ஊர். அவ்வூரைத் தலைநகராகக் கொண்ட நாட்டிற்கும் அதே பெயர்தான். அந்நாடு, தெற்காணம்பி நாடு எனவும் வழங்கினது. “ நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்” என்னும் அப்பர் தேவாரம், இத்தென்கடம்பைத் தேவாரமேயாகும் என்பது அறிஞர்கள் கருத்து. கோகரணம் செல்லும் வழியிலேயே யுள்ளது தென் கடம்பை. அவ்வூர்க் கோயில் கரக்கோயிலாக இருக்கலாம். அன்று அப்பகுதியெல்லாம் - கோகரணப் பகுதியும் - தமிழ் நிலமாகவே இருந்தது. இஃதும் ஆராய்ச்சிக்குரியது. காலம்: இனி, தேவார மூவர் இருந்த காலத்தினைக் காண் பாம். அப்பர், மகேந்திரவர்மப் பல்லவனைச் சைவனாக்கினார். சம்பந்தர், மாறவர்மன் அரிகேசியைச் சைவனாக்கினார். சுந்தரரும் சேரமான் பெருமாளும் மதுரைக்குச் சென்றபோது, மாறவர்மன் அரிகேசியின் மைந்தனான கோச்சடையன் ரணதீரன் (டி.வி.எஸ். பண்டாரத்தார்- பாண்டியர் வரலாறு) அவர்களை அன்புடன் வரவேற்றான் என்கின்றது பெரிய புராணம். மகேந்திர வர்மன் 615-630 மாறவர்மன் அரிகேசரி 640-680 கோச்சடையன் ரணதீரன் 680-710 சேரமான் பெருமாள் 667-712 “ அப்பருக்கெண் பத்தொன் றருள்வாத வூரருக்குச் செப்பிய நாலெட்டில் தெய்வீகம் - இப்புவியில் சுந்தரருக்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க் கந்தம் பதினா றறி.” என்னும் தேவாரப் பதிப்பிலுள்ள வெண்பாவால், அப்பர் - 81 ஆண்டும், சம்பந்தர் - 16 ஆண்டும் சுந்தரர் - 18 ஆண்டும் வாழ்ந்தனர் என்பது பெறப்படும். சம்பந்தர் மூன்றாவதாண்டுத் தொடக்கத்தில் ஞானப்பா லுண்டு மெய்யறிவு கைவரப் பெற்று, அதிலிருந்து தேவாரம் பாடத் தொடங்கினர் என்பது பெரியபுராணம். எனவே அவர், 14 ஆண்டுகள் சமயத் தொண்டாற்றி வந்தனர் என்பது பெறப் படும். சுந்தரர், 16வது ஆண்டில் திருமண நிகழ்ச்சியின் போது, இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டனர் என்கின்றது பெரிய புராணம். எனவே, அவர். அதிலிருந்து இரண்டாண்டுகள் சமயத் தொண்டாற்றி வந்தனர் என்பது பெறப்படும். அப்பர் சைவராக மாறியபோது, அவருக்குக் குறைந்தது 35 ஆண்டுகளாவது இருந்திருக்கும். மகேந்திரவர்மன் சைவனாக மாறியது 625 எனக் கொள்ளின், அப்பர் ((625=46) = 671 வரை இருந்தவராவர். அப்பருக்குப் பின்னரும் சம்பந்தர் இருந் திருப்ப தால், 660இல் அப்பரும் சம்பந்தரும் சந்தித்திருக்கலாம். அப்போது சம்பந்தருக்கு 4 ஆவதாண்டுத் தொடக்கம் எனில், அதன்பின் அவர், 13 ஆண்டுகள் இருந்திருக்கிறார். எனவே, சம்பந்தர் (660+13) = 673 வரை இருந்தவராவர். சிறிது முன்பின் இருக்கலாம். சுந்தரரும் சேரமான் பெருமாளும் கைலை சென்றதாகப் பெரியபுராணம் கூறுவதால், சுந்தரர் (712-18) = 694இல் பிறந்த வராவர். இவ்விருவரும் கோச்சடையனை, 710 இடை, அல்லது இறுதியில் சந்தித்திருக்கலாம். எனவே, மூவரின் பிறப்பும் வாழ்வும், அப்பர் - 590-671-(81) சம்பந்தர் - 657-673-(16) சுந்தரர் - 694-712-(18) என்பது பெறப்படும். சுந்தரர் பாடிய பதிகங்களோ 37 ஆயிரம். பாடிய காலமோ 2 ஆண்டுகள், தேவாரப் பதிகங்கள் ஒரே இடத்தில் அமைதியாக இருந்து கொண்டு தொடர்ந்து பாடியவையல்ல. அவை ஊரூராகச் சென்று கோயிலுக் கொன்றாகப் பாடியவை. ஒவ்வொரு நாளும் தவறாது ஒவ்வோரூருக்குப் போயிருக்க முடியாது. அப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதிகம் பாடியதாக வைத்துக் கொண்டாலும் 24 மாதங்களில் (24 x 30)= 720 பதிகங்கள், அல்லது (365 x 2)= 730 பதிகங்கள்தாம் பாடியிருக்க முடியும். நாளொன்றுக்கு 2 பாடியதாக வைத்துக் கொண்டாலும் (720 x 2)= 1440 பதிகங்கள் தாமே ஆகும். மேலும், இவர் பரவையாரை மணந்து கொண்டது; சங்கிலி யாரை மணந்து கொண்டது ,இருமுறை சேரநாடு சென்று சேரமான் பெருமாளுடன் இருந்தது. இவற்றில் குறைந்தது மூன்று மாதங் களாவது கழிந்திருக்கும். எனவே, சுந்தரர் குறைந்தது 45 ஆண்டு கட்கு மேல் வாழ்வராதல் வேண்டும். இப்போதும் தேவாரம் பாடிய முறைப்படி இவர் இத்தனை பதிகங்கள் பாடியிருக்க முடியாது. கிடைக்காதவற்றுள் பொதுப் பதிகங்கள் நிரம்ப இருக் கலாம். தேவாரப் பதிப்பினர் கொண்ட பதிகத் தொகை மிகை யாகவும் இருக்கலாம். இம்முறைப்படி, சம்பந்தரும் குறைந்தது 30 ஆண்டுகளாவது வாழ்ந்தவராதல் வேண்டும். 3. பாண்டியர் - பல்லவர் - 710 - 900 பாண்டியர்: 1. மாறவர்மன் அரிகேசரிபராங்குசன் 710-765 2. நெடுஞ்சடையன் பராந்தகன் 765-790 3. இரண்டாம் இராசசிம்மன் 790-792 4. முதலாம் வரகுண பாண்டியன் 792-830 5. சீமாறன் சீவல்லபன் 835-862 6. இரண்டாம் வரகுணபாண்டியன் 862-880 7.பராந்தக பாண்டியன் 880-900 பல்லவர் 1. இரண்டாம் நந்திவர்மன் 710-775 2.தந்தி வர்மன் 775-825 3.மூன்றாம் நந்திவர்மன் 825-850 4.நிருபதுங்க வர்மன் 850-882 5.அபராசித வர்மன் 882-890 சோழர்: 1.விசயாலயன் 846-881 2.ஆதித்தன் 881-907 மே.சாளுக்கியர் 11.இரண்டாம் விக்கிரமாதித்தன் 733-746 12.இரண்டாங் கீர்த்திவர்மன் 746-757 கீ.சாளுக்கியர்: 2. இரண்டாம் விசயாதித்தன் 799-843 இராட்டிரகூடர் 1. தந்தி துர்க்கன் 725-758 2. முதலாங் கிருஷ்ணன் 758-772 3. இரண்டாங் கோவிந்தன் 772-780 4. துருவன் 780-794 5. மூன்றாங் கோவிந்தன் 794-814 6. இரண்டாம் இந்திரன் 804 - 7. முதலாம் அமோகவர்ஷன் 814-880 கங்கர் 1. ஸ்ரீபுருஷன் (கோ) 725-778 24. முதலாம் பூதுகன் 837-870 2. இரண்டாஞ் சிவமாறன் 778-817 3.முதலாம் பிருதிவிபதி 817-880 இலங்கை 3. முதலாஞ் சேனன் 822-842 4.இரண்டாஞ் சேனன் 842-877 1. மாறவர்மன் அரிகேசரி பராங்குசன் (710-765): இவன், கோச்சடையன் ரணதீரன் மகன், இவன், முதலாம் இராசசிம்மன், தேர்மாறன் எனவும் வழங்கப்பெறுவன். இவனை, அரிகேசரி பராங்குச மாறவர்மன் என்பதும் உண்டு. இவன் கொங்கு நாட்டின்மேற் படையெடுத்துச் சென்று, நாமக்கல் வட்டத்தின் தென் மேற்குப் பகுதியான மழகொங்கைக் கைப் பற்றினான். அதை, தகடூர் அதியமான் கீழ் அவன் படைத்தலைவன் ஆண்டு வந்தான் (‘கொங்கு தனியாட்சி நாடு’ என்பது பார்க்க). வெண்பை என்னும் இடத்தில் நடந்த போரில் கோலார்க் கங்கனான ஸ்ரீபுருஷன் (726-778) என்பானை வென்று, அவன் மகள் பூசுந்தரியை இவன் மணந்து கொண்டான். இவ்வரிகேசரி பட்டம் பெற்ற அதே ஆண்டில் பட்டம் பெற்ற, புதிய பல்லவ மரபினனான பல்லவ மல்லன் என்னும் இரண்டாம் நந்திவர்மன் (710-775) கொங்கு நாட்டைப் பிடிக்க முயன்றதனாலும், பழைய பல்லவ மரபின் கடைசி அரசனான இரண்டாம் பரமேசுவரன் மகன்-சித்திரமாயன் என்பான், அரசுரிமைக்காக அரிகேசரியைப் புகலடைந்திருந்ததனாலும், நந்திவர்மனுக்கும் அரிகேசரிக்கும் போருண்டானது. குழும்பூர், நெடுவயல் குறுமடை, மன்னக்குறிச்சி, பூவலூர், கொடும் பாளுர், பெரியலூர் ஆகிய இடங்களில் பாண்டியன் பல்லவர் படையை வென்றான். நந்திவர்மன், கும்பகோணத்துக் கருகிலுள்ள நந்திபுரங் கோட்டையுள் தங்கியிருந்த போது, அரிகேசரி அக்கோட்டையை முற்றினான். உதயச்சந்திரன் என்னும் பல்லவர் படைத்தலைவன் பெரும்படையுடன் வந்து, பாண்டி யனைப் புகலடைந்திருந்த சித்திரமாயனையும் சில படைத் தலைவர்களையும் கொன்றதோடு, நிம்பவனம், சூதவனம், சங்கிரகிராமம், மண்ணைக்குறிச்சி, சூரவழுந்தூர் ஆகிய இடங்களிலும் பாண்டிப் படையை வென்றான். பாண்டியன் வென்றதும் தோற்றதுமாகிய இவ்வூர்கள் தஞ்சை மாவட்டத்திலும், புதுக்கோட்டைப் பகுதியிலும் உள்ளவை. சாளுக்கிய இரண்டாம் விசயாதித்தன் மகனான இரண்டாம் விக்கிரமாதித்தன் (733-746) கொங்கு நாடு வரை தன் நாட்டை விரிவாக்கினான். நந்திவர்மன் பாண்டியனை வென்று கொங்கு நாட்டைக் கைக்கொள்ள முயன்றான். தன் குடிப் பகைவனான பல்லவன், தன் பேரரசின் எல்லை வரை செல் வாக்குப் பெறுதல் தனக்குக் கேடு பயக்கும் என்பதை உணர்த்த விக்கிரமாதித்தன் பெரும்படையுடன் காஞ்சியை நோக்கிச் சென்றான். நந்திவர்மன் பாண்டியனோடு போர் செய்து கொண்டிருந்த போது, விக்கிரமாதித்தன் காஞ்சியை எளிதில் வென்று கைப்பற்றி அங்கு அமைதியாக இருந்தான். உதயச்சந்திரன் பாண்டியர் படையைத் துரத்திக் கொண்டு தெற்கே சென்ற போது, நந்திவர்மன் தன்னிடமிருந்த படையுடன் காஞ்சி போந்து விக்கிரமாதித்தனை வென்று துரத்தினான். விக்கிர மாதித்தன் மகனான இரண்டாங் கீர்த்தி வர்மன் பெரும் படை யுடன் வந்து, பல்லவனை வென்று காஞ்சியினின்று துரத்தினான். அந்நெருக்கடியான நிலையில் உதயச்சந்திரன் வந்து, கீர்த்தி வர்மனை வென்று துரத்திச் சென்று, பல்லவ நாட்டின் எல்லைக் கப்பால் விட்டனன். இப்போரில், கங்கமன்னன் ஸ்ரீபுருஷன் சாளுக்கியருக் குதவியதுடன். பெருமானடிகள் என்ற பல்லவர் பட்டத்தையும் தனதாக்கிக் கொண்டான். இரண்டாங் கீர்த்திவர்மன் (746-757): இவன் காலத்துப் பல்லவசாளுக்கியப் போர் மிகக் கடுமையாக நடந்தது. இம்முறை நந்திவர்மன், கங்கரையும் பாண்டியரையும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டான். வெண்பை என்னும் இடத்தில் நடந்த போரில் கீர்த்தி வர்மன் கொல்லப்பட்டான். இவனுடன் முதற்சாளுக்கியப் பேரரச மரபு முடிவடைந்தது. இராட்டிரகூடர்: சாளுக்கிய இரண்டாங் கீர்த்திவர்மன் ஆட்சியில், முதலாம் இந்திரன் என்னும் இராட்டிரகூட மரபினன் சிற்றரசனாக இருந்தான். அவன் ஒரு சாளுக்கிய குலப் பெண்ணை மணந்திருந்தான். அவ்விந்திரன் மகனான தந்தி துர்க்கன் என்பவன், இரண்டாம் நந்திவர்மன் அன்பைப் பெற்றுச் சாளுக்கிய நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றினான். அவனே இராட்டிர கூட மரபின் முதல் மன்னனாவான். (725-758). தந்தி துர்க்கனுக்கு - வைரமேகன் என்ற பெயரும் உண்டு. வைரமேகன் மகள் இரேவாளை நந்திவர்மன் மணந்து கொண்டான். அவள் பால் பிறந்தவனே தந்திவர்மன். 2. முதலாங் கிருஷ்ணன் (758-772): தந்திதுர்க்கனுக்குப் பிள்ளை யில்லை. தந்திதுர்க்கன் இறந்தபின் அவன் சிற்றப்பன் முதலாங் கிருஷ்ணன் தன் முதுமைப் பருவத்தில் அரியணை ஏறினான். அவன், கன்னரதேவன் எனவும் பெயர் பெறுவான். இவன், காஞ்சியரசனை வென்றவனாக-காஞ்சிக் குணாலங் கிருதன் என, தலகோன் பட்டயத்தில் தன்னைக் கூறிக் கொள்கிறான். இவன், 768 இல் கங்கமன்னன் ஸ்ரீபுருஷனை வென்றான். எல்லோராக் கைலாசநாதர் கோயிலைக் கட்டியவன் இக் கிருஷ்ணனே. பூவிக்கிரமன் (665-679) என்னும் கங்கமன்னன் பரமேசுவரப்பல்லவனை வென்று, உக்கிரோதயம் என்னும் பல்லவர் மணியாரத்தைக் கவர்ந்து கொண்டான் என்பதை முன்பு கண்டோம். விளந்தை என்னும் இடத்தில் நடந்த போரில், நந்தி வர்மன் ஸ்ரீபுருஷனை வென்று அவ்வுக்கிரோதயத் தை மீட்டுக் கொண்டான். இந்நந்திவர்மன் காலத்துப் பல்லவ நாடு-வேங்கட முதல் புதுக்கோட்டை வரை பரவியிருந்தது. இவன் சிறந்த வைணவன். 2. நெடுஞ்சடையன் பராந்தகன் (765-790): இவன், அரிகேசரிக்கு-கங்கமன்னன் ஸ்ரீபுருஷன் மகள் பூசுந்தரி பால் பிறந்தவன். வேள்விக்குடி, சீவரமங்கலம் செப்பேடுகளையும்; ஆனைமலை, திருப்பரங்குன்றம் கல்வெட்டுக்களையும் வெளி யிட்டவன் இவனே. இவனுக்கு முன்னிருந்த பாண்டிய மன்னர் செப்பேடுகளாவது கல்வெட்டுக்களாவது கிடைக்கவில்லை. இச் செப்பேடுகள் கிடைக்காதிருந்தால், சங்ககாலத்திற்குப் பிறகு, கி.பி. எட்டா நூற்றாண்டு முடிய ஆண்ட பாண்டிய மன்னர்களின் வரலாற்றை அறிந்தின்புறமுடியாது போயிருக்கும். இவன், இரண்டாம் நந்திவர்மப் பல்லவனை, தஞ்சைக் கண்மையிலுள்ள பெண்ணாகடப் போரில் புறங்காட்டி ஓடும்படி செய்தான். கொங்கு நாட்டுப் புகழியூர் (புகலூர்), ஆயிர வேலி, அயிரூர் (அயிலூர்) ஆகிய இடங்களில் நடந்த போரில், தகடூர் அதியமானை வென்று மதுரையில் சிறை வைத்தான். இப்போரில் அதியமானுக்குத் துணை வந்த சேரனையும் பல்லவனையும் வென்று துரத்தினான். பல்லவன் - இரண்டாம் நந்திவர்மன், அல்லது தந்திவர்மனாக இருக்கலாம். இவன் வேணாட்டரசனை (ஆய்வேளை) வென்று, விழிஞத்தை அழித்து, எண்ணிறந்த களிறும் மாவும் பெரும்பொருளும் கைப்பற்றினான். தென்திசையில் தான் வென்று பிடித்த நாடு களைக் காக்க, கரவந்தபுரம் என்ற ஊரில் ஒரு பெரிய கோட்டை கட்டி, அங்குப் பெரிய நிலைப்படையை வைத்தான். இப்பராந்தகன், பெரியாழ்வாரால் வைணவனாக்கப் பட்டான். எனவே, பெரியாழ்வாரும், ஆண்டாளும் இவன் காலத் தவரென்பது பெறப்படும். கொங்கு நாட்டுக் கோவையை அடுத்த பேரூரில், இவன் திருமாலுக்குக் குன்றமன்னதோர் கோயில் எடுப்பித்தான் (சீவரசெப்பேடு). இதனாலும், அதிய மானை வென்றதனாலும், கொங்கு நாடு முழுவதும் இவனாட்சிக் குட்பட்டிருந்த தென்பது பெறப்படுகிறது. இவன் 23 வட மொழிப் பெயர்கள் வைத்துக் கொண்டுள்ளான் என்பது உன்னற்பாலது. 2. தந்திவர்மன் (775-825): இவன், இரண்டாம் நந்தி வர்மப் பல்லவன் மைந்தன்; இரேவா மகன். இவன் தாய்ப்பாட்டனான தந்திதுர்க்கனின் சிற்றப்பனான இராட்டிரகூட முதலாங் கிருஷ்ணனுக்கு-இரண்டாங் கோவிந்தன்(772-780), துருவன் (780-794) என, இருமைந்தர். 772இல் கோவிந்தன் பட்டத்திற்கு வந்தான். அவன் அரசியலைச் சரியாகக் கவனிக்கவில்லை யென்று, துருவன் சிற்றரசர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு அண்ணனை வெல்ல முற்பட்டான். கோவிந்தனும் கோலார்க் கங்கமன்னன் இரண்டாஞ் சிவமாறனையும் (778-817), வேங்கி அரசனையும் துணைக்கொண்டான். தந்திவர்மப் பல்லவன் கோவிந்தன் பக்கம் சேர்ந்து கொண்டான். போர் மிகக் கடுமையாக நடந்தது. துருவனே வெற்றி பெற்று, 780 இல் இராட்டிர கூடப் பேரரசனானான். இப்போரில் சிவமாறன், துருவனுடைய கணக்கற்ற குதிரைப் படைகளைத் தோற்கடித்ததாக ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. சிவமாறன் கோவிந்தனுக் குதவியதன் காரணம், சிவமாறனது நாட்டைக் கைப்பற்ற முயன்ற தலைக்காட்டுக் கங்கன் முதலாம் நீதிமார்க்கனை வெல்லக் கோவிந்தன் உதவியதேயாகும். துருவன் அரசனான சில ஆண்டுகளில், தன் அண்ணனுக் குதவிய இரண்டாஞ் சிவமாறனை வென்று சிறை வைத்து, கோலாரைத் தன் மூத்த மகன் கம்பரசனை ஆளச் செய்தான். பின் காஞ்சியை முற்றுகை யிட்டான். தந்தி வர்மன் தோற்று, பெரிய யானைப்படையைக் கொடுத்துப் பணிந்தான். துருவன் அவனைத் திறைதருமாறு பணித்து மீண்டான். துருவன் 794இல் இறந்தான். இறப்பதற்கு முன்னரே தன் மக்கள் நால்வரில், மூன்றாமவனான மூன்றாங் கோவிந்தனுக்கு முடிசூட்டினான் (794-814). கோலாரை ஆண்ட கம்பரசன், சிற்றரசர் சிலரைச் சேர்த்துக் கொண்டு குழப்பம் விளைவித்தான். கோவிந்தன் சிற்றரசர்களையெல்லாம் வென்றடக்கி, முன் தன் தந்தையால் சிறை வைக்கப்பட்ட இரண்டாஞ் சிவமாறனை விடுதலை செய்து கோலாரை ஆளும்படி செய்தான். இக்கோவிந்தன் ஒரு பெருவீரன்; கீழைச்சாளுக்கிய இரண்டாம் விசயாதித்தன் (799-843) என்பானுடன் இவன் செய்த போர்கள் பல. அவ்விசயாதித்தனும் இவன் போன்ற பெரு வீரனே. கங்கர், இராட்டிரகூடர்களை எதிர்த்து, அவன் பன்னிரண்டு ஆண்டுக்குள் 108 போர்களில் ஈடுபட்டான் (கா. அப்பாதுரை யார் - தென்னாடு - 90). கோவிந்தன், 803இல் காஞ்சியைத் தாக்கினான். தந்தி வர்மன் தோற்று, அடங்கி நடப்பதாக ஒப்புக் கொண்டான். கோவிந்தன் தெற்கே இராமேசுவரம் வரை சென்று அங்கு 804இல் பட்டயம் ஒன்றை விடுத்து மீண்டான். இவன் தெக் ணம் முழுவதற்கும் அரசனானான். கங்க நாடும் கொங்கு நாடும் இவன் ஆட்சியின்கீழ்ப் பட்டே இருந்து வந்தன. தெற்கண் வாகைசூடிச் சென்ற கோவிந்தன், வட நாடு களை வெல்லப் படையெடுத்தான். கூர்ச்சரத்தைக் கைப்பற்றி, தன்கீழ் அதைத் தன் தம்பி இரண்டாம் இந்திரனை ஆளும்படி செய்தான். பின்னர் அவ்விந்திரன், தனிக் கூர்ச்சரமரபுகண்டான். கோவிந்தன் வடக்கே சென்றிருந்த போது, கங்கர், தந்திவர்மன், சேர சோழ பாண்டியர் ஆகிய அனைவரும் ஒன்று கூடிக் கோவிந்தனை வெல்லச் சூழ்ச்சி செய்தனர் என்று, சஞ்சன் பட்டயம் கூறுகிறது. அதனால், பெருவீரனாகிய கோவிந்தன் கடுஞ்சினங்கொண்டு, பெரும் படையுடன் தெற்கு நோக்கிப் புறப்பட்டான்; தென்னாட்டு மன்னர்கள் அனைவரையும் வென்றான். காஞ்சியைக் கைப்பற்றினான். தந்திவர்மன் இம்முறையும் கோவிந்தனுக்குப் பணிந்தான். சோழ பாண்டிய நாடுகளை இராட்டிரகூட வீரர்கள் அளந்து திரிந்தனர். இதை யறிந்த இலங்கை மன்னன் அஞ்சி, பரிசுகள் பல அனுப்பிக் கோவிந்தனுடன் நட்புக் கொண்டான். 3. இரண்டாம் இராசசிம்மன்(790-792): இவன், நெடுஞ் சடையன் பராந்தக பாண்டியன் மைந்தன். வரலாற்றுச் செய்தி ஒன்றுமில்லை. 4. முதலாம் வரகுண பாண்டியன் (792-835): இவன், இரண்டாம் இராசசிம்மன் மகன்; பேராற்றல் வாய்ந்தவன். இவன் தகடூர் அதியமானோடு பொருதபோது, தந்திவர்மப் பல்லவனும், ஒரு சேரமன்னனும் அதியமானுக்குதவினர். வரகுணன் அனைவரையும் வென்று வாகை சூடினான். இவன் கல்வெட்டுக்கள் சோழநாடு முழுவதும் காணப்படுகின்றன. இவன் தனது 16வது ஆட்சியாண்டில், தென்பெண்ணை யாற்றங் கரையிலுள்ள அரசூரில் இருந்து, நெல்லை மாவட்டத்து அம்பாசமுத்திரம் பட்டயம் வெளியிட்டுள்ளதால், சோழ நாடேயன்றித் தொண்டை நாட்டிலும் பெண்ணை யாற்றங் கரைவரை இவன் கைப்பற்றிக் கொண்டமை பெறப்படும். பெண்ணை யாற்றுக்குத் தென்பாற்பட்ட தமிழக முழுவதையும் ஆண்ட பேரரசன் ஆவானிவன். இவன் காலத்து, அல்லது அதன் பின்னர்த்தான் மாணிக்கவாசகர் இருந்தனர். திருக்கோவை யார்-306,327 பாடல்களில் அவர் இவனைப் பாராட்டியுள்ளார். 3. மூன்றாநந்திவர்மன் (825-850): இவன், தந்திவர்மன் மகன். இராட்டிரகூட மூன்றாங் கோவிந்தன் காஞ்சியை இருமுறை கைப்பற்றித் தந்திவர்மனைப் பணியவைத்தான் என்பதை முன்பு கண்டோம். மூன்றாங் கோவிந்தனுக்குப் பின், முதலாம் அமோகவர்ஷ நிருபதுங்கன் (814-880) இராட்டிர கூடப் பேரரசனானான். நந்திவர்மன், இராட்டிரகூடர் செய்த அக்கொடுமையை ஒழிக்க எண்ணினான். தெற்கே பெண்ணை யாற்றங் கரைவரை பாண்டியர் தன் நாட்டைக் கைப்பற்றி யுள்ளதையும் பொருட்படுத்தாது, பட்டம் பெற்றவுடன் அவன் வடக்கு நோக்கிப் படையெடுத்தான். பெல்லாரிக் கோட்டத்தில் துங்கபத்திரைக் கரையிலுள்ள குருக்கோடு என்னும் கோட்டையை முற்றிலும் அழித்தான் (நந்திக்கலம் பகம்). குருக்கோட்டில் இருந்தாண்ட அமோக வர்ஷனின் சிற்றரசர் இருவரையும் வென்று துரத்தினான். முதலாம் நீதிமார்க்கன், தன் மைத்துனன் நுளம்பாதி ராசனுடன் கூடி, அமோகவர்ஷனை எதிர்த்து வென்றான். அமோகவர்ஷன், பேரழகியான சந்திரபலப்பை என்ற தன் மூத்தமகளை நீதிமார்க்கன் மகன் முதலாம் பூதுகனுக்கும் (837-870), சங்கா என்ற இளைய மகளை நந்திவர்மனுக்கும் மணந்து கொடுத்து, விந்தமலைக்குத் தென்பால் பகைவரின்றி, அமைதியாகத் தன் காலத்தைக் கழித்தான். இவன் அவைப் புலவரான ஸ்ரீவிஜயர் செய்த கவிராச மார்க்கம் என்னும் நூலே கன்னட மொழியின் முதனூலாகும். ஆனால், இத்தகைய மணத்தொடர்பு, மன்னரிடை நட்புறவை நிலைநாட்டவில்லை என்பது, கீழ்க்காணும் பட்டிய லாற் பெறப்படுகிறது. 1. இராட்டிரகூடத் தந்திதுர்க்கன் (725-758) மகள்-இரேவா X இரண்டாம் நந்திவர்மப்பல்லவன் 710-775. 2. முதலாம் அமோகவர்ஷன் (814-880) மகள்-1, சந்திர பலப்பை X கங்கா முதலாம் பூதுகன் 837-870. 2. சங்கா X மூன்றா நந்திவர்மப் பல்லவன் 825-850. முதலாம் இராசமல்லன் மகள்-செயப்பை X நுளம் பாதிராசன். 4. சீமாறன் சீவல்லப பாண்டியன் (835-862) மகள் - அடிகள் கண்டன் மாறன் பாவையார் X மூன்றா நந்திவர்மன் 825-850. 5. கங்க முதலாம் பிருதிவிபதி மகள் - 1. X பாய முதலாம் விக்கிரமாதித்தன் 835-868. 2. பிருதிவிமாணிக்கம் x நிருபதுங்கப் பல்லவன் 850-882. 6. இராட்டிர இரண்டாங்கிருஷ்ணன் (880-913) மகள்- இளங்கோப்பிச்சி X ஆதித்தசோழன் 870-907) 7. முதற் பராந்தகச் சோழன் (907-954) மகள்-வீரமாதேவி X இராட்டிரகூட நான்காங் கோவிந்தன்-918-934. 8. இராட்டிர மூன்றாங்கிருஷ்ணன் (940-968) மகள்-இரேவகா X கங்க இரண்டாம் பூதுகன்-938-960. இவ்வரச மரபினர்க்குள், மணத்தொடர்பால் நட்பு நிலவிற்றா என்பதை எண்ணிப் பாருங்கள். 5. சீமாறன் சீவல்லபன் (835-862): இவன், வரகுண பாண்டியன் மகன். விழிஞம், குன்னூர் என்ற இடங்களில் இவன் சேரரை வென்று வாகைசூடினான். குன்னூர் என்பது, நீலகிரிக் குன்னூரே யாகும். இவன், இலங்கை மேற் படையெடுத்துச் சென்று, அந் நாட்டு மன்னன் முதற் சேனனை (822-842) வென்று துரத்தினான். அவன் இலங்கையை விட்டு மலேயாவிற்கு ஓடிவிட்டான். இளவரசனாகிய மயிந்தன் அப்போரில் இறந்தான் (மகாவமிசம்). பின்னர் வந்து பணிந்த சேரனுக்கு நாட்டை வழங்கி மீண்டான். முதற்சேனனுக்குப் பின், இலங்கை மன்னனான இரண்டாஞ் சேனன் (842-877), சீமாறனோடு முரண்பட்டிருந்த அவனது மாற்றாந்தாயின் மகனான மாய பாண்டியனுடன் சேர்ந்து, பாண்டி நாட்டின்மேற் படையெடுத்தான். சீமாறன் அவ்விரு வரையும் புறங்காட்டி ஓடும்படி செய்தான். பின், தனக்கடங்கிய சேர சோழரைச் சேர்த்துக் கொண்டு, வடக்கு நோக்கிப் படையெடுத்துச் சென்றான். மூன்றா நந்திவர்மன் வட நாட்டுப் போரை முடித்துக் கொண்டு மீண்டான். வடார்க்காட்டுக் கோட்டத்து வந்தவாசி வட்டத்திலுள்ள தெள்ளாறு என்னுமிடத்தில் இருபடையும் கைகலந்தன. பல்லவன் பாண்டியனை முறியடித்தான். தோற் றோடிய பாண்டிப் படையை நந்திவர்மன் துரத்திச் சென்று, கடம்பூர், வெறியலூர், வெள்ளாறு, பழையாறு என்னுமிடங் களிலும் தோற்கடித்துப் பாண்டியநாட் டெல்லைவரை துரத்திச் சென்றான். பாண்டியன் முதலானோர் ஒரு கோட்டைக் குட் புகுந்தனர். பல்லவன் அன்னாரை அங்கும் பொருது வென்றான். சீமாறன், தன்மகள் அடிகள் கண்டன் மாறன் பாவையார் என்பாளை நந்திவர்மனுக்கு மணஞ் செய்து கொடுத்துச் சந்து செய்து கொண்டான். இதன் பின் சோணாடு பல்லவர்க்குரிய தாயிற்று. இவ்வெற்றிகுறித் தெழுந்ததே நந்திக் கலம்பகம். நந்தி வர்மன் தெள்ளா றெறிந்த நந்தி எனச் சிறப்பிக்கப் பெற்றான். சில ஆண்டுகட்குப் பிறகு, நடந்த குடமூக்குப் (கும்ப கோணம்)போரில், சீமாறன் நந்திவர்மனை முறியடித்தான், பல்லவனுக்குத் துணைவந்த கங்க மன்னன் முதலாம் பூதுகன் (837-870), சோழன் முதலியோரையும் பாண்டியன் வென்று துரத்தினான். சோழன் விசயாலயனாக இருக்கலாம். பார்த்தீர் களா மணவுறவை? பாண்டியனும் பல்லவனும் மாமனார் மருமகன்தாமே? 4. நிருபதுங்கன் (850-882): இவன், மூன்றா நந்திவர்மன் மைந்தன்; தாய்-சங்கா. கும்பகோணத்திற்குத் தென்புறமாக ஓடும் அரிசிலாற்றங்கரையில் நடந்த போரில், சீமாறனையும், அவன் மகன் இரண்டாம் வரகுணணையும் நிருபதுங்கன் தோற்கடித்தான். நிருபதுங்கன் மனைவி பிருதிவிமாணிக்கம் என்பாள், கோலார்க் கங்கமன்னன் முதலாம் பிருதிவிபதியின் மகளாவள். இப்போரில் முதலாம் பூதுகன் நந்திவர்மன் பக்கம் இருந்தான். திருப்புறம்பியப்போர் 6. இரண்டாம் வரகுண பாண்டியன் (862-880): இவன், சீமாறன் முதல் மகன். நிருபதுங்கப் பல்லவனிடம் இவன் நண்ப னாகவே இருந்தான். கி.பி. 880இல் நிருபதுங்கன் மிகவும் முதுமை யடைந்திருந்தான். நிருபதுங்கன் மகன் அபராசித வர்மன் (882-890) இளவரசனாக இருந்தான். வரகுணன், தன் தந்தை இழந்த சோழ நாட்டையும் தொண்டை நாட்டுப் பகுதியையும் மீட்டுப்பெற எண்ணி, 880இன் தொடக் கத்தில் வடக்கு நோக்கிப் படையெடுத்தான். காவிரியாற்றுக்கு வடக்கில் இருந்த இடவை என்னும் இடத்தில், தஞ்சை விசயாலயச் சோழன் (850-870) மகனான ஆதித்த சோழன் (870-907) எதிர்த்தான். வரகுணன் அவனை வென்று வடக்கு நோக்கிச் சென்றான். கும்பகோணத்திற்கு 5கல் வடமேற்கில், மண்ணியாற்றங் கரையில் உள்ள திருப்புறம்பியம் என்னும் இடத்தில் இளவரசன் அபராசிதவர்மப் பல்லவன் பாண்டியனை எதிர்த்தான். கோலார்க் கங்கமன்னன் முதலாம் பிருதிவிபதியும் (817-880) ஆதித்த சோழனும் பல்லவன் பக்கம் இருந்தனர். போர் மிகக் கடுமையாக நடந்தது. போரில் முதலாம் பிருதிவிபதி இறந்தான். எனினும், வரகுண பாண்டியன் தோற்றான். பல்லவன் வெற்றி பெற்றான். எனினும், அவ்வெற்றியின் பயனை அடைந்தவன் ஆதித்த சோழனேயாவன். அவன் சோழ நாட்டைப் பெற்றான். கி.பி.882இல் நிருபதுங்கன் இறந்ததும், ஆதித்தன் செங்கற்பட்டு வரையுள்ள தொண்டை நாட்டுப் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அபராசிதவர்மன் ஆட்சி 890 உடன் முடிந்தது. அத்துடன் பல்லவப் பேரரசும் முடிவுற்றது. கி.பி. 250 முதல் 890 வரை, ஏறக்குறைய 600 ஆண்டுகள் சோழ தொண்டை நாடுகளைப் பல்லவர் ஆண்டு வந்தனர். அவர் தம் ஆட்சிக் காலத்தே தமிழ் நாட்டில் கலைக்கோயில் பல ஏற்பட்டன எனினும், பெரும்பாலும் வடமொழி ஆதிக்கம் செலுத்தியது; பல்லவர் அவையை வடமொழிப் புலவர்கள் அணி செய்தனர்; பழந்தமிழ்ப் பண்பாடு அழிந்தொழிந்தது தமிழ் இலக்கிய மரபு வழிமாறிப் போய் விட்டது. இந்நிலையில், தமிழ் நாட்டில் அயலாட்சி ஒழிந்து தமிழாட்சி ஏற்படுவதற்கும், தமிழர் புகழ் மறுபடியும் உலகெங்கும் ஒளிவீசுவதற்கும் காரணமாக அமைந்தது இத்திருப்புறம்பியப் போர்! 7. பராந்தக பாண்டியன் (880-900): இவன், சீமாறனின் இரண்டாவது மகன். இவன் கொங்கு நாட்டின்மேற் படை யெடுத்துச் சென்று, தருமபுரி வட்டத்துக் கரகிரி என்ற இடத்தில் நடந்த போரில் அதியமானை வென்று, ஒகேனகல்லுக் கண்மை யிலுள்ள பெண்ணாகரம் என்ற ஊரை அழித்தான் என்கின்றது அங்குள்ள கல்வெட்டு. சின்னமனூர்ச் செப்பேடும், இவன் கொங்கரை வென்றான் என்கின்றது. 1. விசயாலயச் சோழன் (846-881): இவன், பல்லவர் கீழ்ச் சிற்றரசனாக இருந்து, தன் திறமையினால் தஞ்சையைக் கைப் பற்றித் தன்னுரிமை அடைந்து, மறுபடியும் சோழப் பேரரசுக்கு அடிகோலியவன். இவன் முதல் சோழமன்னர் - இராசகேசரி, பரகேசரி என்ற வடமொழிப் பட்டத்தை மாறிமாறிப் புனைந்து வந்தனர். இவன் பரகேசரி. இவன் தந்தை இராசகேசரி யாக இருக்கலாம். இவன் தந்தையே தஞ்சைச் சோழ மரபுக்கு, இடைக்காலச் சோழப் பேரரசுக்கு வித்திட்டான் போலும். 2. ஆதித்த சோழன் (881-907): இவன், விசயாலயன் மகன். 890 இல் இவன் அபராசிதனை வென்று, பல்லவப் பேரரசைத் தமிழ் மண்ணிலிருந்து அகற்றி விட்டான். எனினும், அயலா ராகிய அப்பல்லவராட்சியைத் தமிழகத்தினின்றும் அகற்றிய பெருமை பாண்டியர்க்கே உரியதாகும். ஆதித்தன், 894 இல் கங்க நாட்டையும் கொங்கு நாட்டை யும் கைப்பற்றினான். சேலத்திலும் திருச்செங்கோட்டிலும் இவன் கல்வெட்டுக்கள் உள்ளன. இவன், கொங்கு நாட்டுப் பொன் கொண்டு, தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்னம்பலம் ஆக்கினான். “ சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன்” என்பது, நம்பியாண்டார் நம்பி, திருத்தொண்டர் திருவந்தாதி. இவன் மனைவி இளங்கோப் பிச்சி என்பாள், இராட்டிரகூட இரண்டாங் கிருஷ்ணன் மகளாவள். கங்கர் - நுளம்பர் - வாணர் நுளம்பர்: நுளம்ப வாடி என்பது - தற்கால மைசூர் நாட்டின் - கங்கவாடியின் - வடகிழக்கில் உள்ள பகுதியாகும். இது, கங்க நாட்டை அடுத்திருந்தது. பல்லவாதி ராசன் என்பான், நுளம்ப அரசமரபின் முதல்வனாவன். 1. பல்லவாதிராசன் 5. அண்ணிகன் 2. நுளம்பாதிராசன் 6. இருளன் 3. மகேந்திரன் 7. திலீபன் 4. ஐயப்பன் - ஆகியோர், நுளம்ப அரசர்களாவர். வாணர்: மைசூர் நாட்டின் கிழக்கில், சேல மாவட்டத்தின் வடபாகமும்/ வடார்க்காடு மாவட்டத்தின் மேல் பாகமும் - வாணநாடு ஆகும். வடுகவழிமேற்கு, பெரு வாணப்பாடி என அவ்வாண நாடு வழங்கிற்று. வாணபுரம் என்பது-வாணப் பாடியின் தலைநகர். அது, திருவல்லத்தின் பழம் பெயராகும். இவ்வாணர்கள் - வாணாதிராயர் எனப்படுவர். இவர்கள், தாங்கள் மாவலி மரபினர் எனத் தங்கள் கல்வெட்டுக்களிற் கூறிக் கொள்கின்றனர். 1. முதலாம் விக்கிரமாதித்தன் -835-868 2. இரண்டாம் விசயாதித்தன் -868-912 3. இரண்டாம் விக்கிரமாதித்தன் -912-940 1. கங்க முதலாம் இராசமல்லன் (775-817), தன் மகள் செயப்பை என்பாளை நுளம்பாதிராசனுக்கு மணஞ்செய்து கொடுத்தான். 2. கங்க முதலாம் நீதிமார்க்கன் (807-837) நுளம்ப ரோடு சேர்ந்து கொண்டு. இராட்டிரகூடரோடு பொருது தோல்வியடைந்தான். 3. நுளம்ப மகேந்திரன், கி.பி. 878இல் பட்டம் பெற்றான். அவனது தருமபுரிக் கல்வெட்டு, 892இல் ஏற்பட்டது. மகேந்திரன் வாணரை வென்று, வாண நாட்டுப் பகுதியான, தருமபுரி மாவட்டத்து ஒசூர், கிருஷ்ணகிரி வட்டங் களின் வடபகுதியான பாராமகாலைக் கைப்பற்றிக் கொண்டான். (தருமபுரிக் கல்வெட்டு). 4. தருமபுரியில், மகேந்திரன் மகன் ஐயப்பன் கல்வெட்டு 2 உள்ளன. 5. கங்க இரண்டாம் இராசமல்லன் (870-901), நுளம்பரோடு பொருது இறந்தான். 6. கங்க இரண்டாம் நீதிமார்க்கன் (901-938), நுளம்பரோடு நட்பாக இருந்து வந்தான். 7. ஐயப்பன் பேரன் இருளனின் தருமபுரிக் கல்வெட்டு, 930இல் ஏற்பட்டது. 8. கங்க இரண்டாம் மாறசிம்மன் (960-975), பட்டம் பெற்றதும் நுளம்பரை வென்று, நுளம்ப குலாந்தகன் என்று பட்டம் பெற்றான். 9. கங்க முதலாம் பிருதி விபதியின் (817-880) மகள் - வாண முதலாம் விக்கிரமாதித்தன் மனைவியாவள். இவற்றால், நுளம்பர் ஆட்சிக்காலமும் வரலாறும் ஒருவாறு விளங்கும். கங்கர், இராட்டிரகூடர், பல்லவர், சோழர் ஆகியவர் களால் நெருக்குண்டு, இவ்விரு அரச மரபும் அழிந்தன. 4. இடைக்காலம் 1. சோழர் - பாண்டியர் - 900 - 985 சோழர்: 1. முதற்பராந்தகன் 907-953 2. கண்டராதித்தன் 953-957 3. அரிஞ்சயன் 956-957 4. இரண்டாம் பராந்தகன் 957-970 5. உத்தமச் சோழன் 970-985 பாண்டியர்: 1. மூன்றாம் இராசசிம்மன் 900-946 2. வீரபாண்டியன் 946-966 இராட்டிரகூடர்: 8. இரண்டாங் கிருஷ்ணன் 880-913 9. இரண்டாம் அமோகவர்ஷன் 10. மூன்றாம் இந்திரன் 913-934 11. நான்காம் கோவிந்தன் 918-935 12. முன்றாம் அமோகவர்ஷன்935-939 13. மூன்றாம் கிருஷ்ணன் 940-972 14. நான்காம் அமோகவர்ஷன்972-973 கங்கர்: 5. இரண்டாம் பிருதிவிபதி (கோ)914-940 28. இரண்டாம் பூதுகன் 938-960 29. இரண்டாம் மாறசிம்மன் 960-975 30. நான்காம் இராசமல்லன் 975-984 இலங்கை: 5. ஐந்தாங் காசிபன் 913-923 6. நான்காந் தப்புலன் 923-934 7 நான்காம் உதயன் 945-953 8. நான்காம் மகிந்தன் -- மே.சாளுக்கியர்: 1. இரண்டாந் தைலப்பன் 973-997 வாணர்: 1. இரண்டாம் விசயாதித்தன் 868-912 2. இரண்டாம் விக்கிரமாதித்தன் 912-940 1. முதற்பராந்தகன் (907-953): இவன், ஆதித்தசோழன் மகன். இவன் பட்டம் பெற்ற போது, வடக்கே காளத்திவரை இவனாட் சிக்குட்பட்டிருந்தது. கொங்கு நாடும் இவன் ஆட்சியின் கீழ் இருந்தது. சேலத்திலும் திருச்செங்கோட்டிலும் இவன் கல் வெட்டுக்கள் உள்ளன. இவன் காலத்தே, சடையவர்மன் பராந்தக பாண்டியன் மகனான மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் (900-946) பாண்டி நாட்டை ஆண்டு வந்தான். 910 இல், பராந்தகன் இராச சிம்ம பாண்டியனை வென்று மதுரையைக் கைப்பற்றினான். முன்பு வாணர்களைப் பற்றி அறிந்தோம். பல்லவர்கீழ் சிற்றரசராக இருந்த அவ்வாணர்கள், ஆதித்தசோழன் தொண்டை நாட்டைக் கைப்பற்றிய காலத்தில் தன்னுரிமை எய்தினர். 912 இன் இறுதியில், கங்கமன்னனான இளவரசன் இரண்டாம் பிருதிவிபதியின் (914-940) உதவியுடன் பராந்தகன் அவ்வாண நாட்டின் மேற் படையெடுத்தான். வல்லம் என்னும் இடத்தில் நடந்தபோரில் வாணகுல மன்னரை வென்று, வாணகப் பாடியைக் கங்க மன்னனுக்கு வழங்கியதோடு, செம்பியன் மாவலி வாண ராயன் என்ற பட்டத்தையும் வழங்கினான். வல்லம் என்பது-வாணநாட்டின் தலைநகர். அது, வடார்க்காடு மாவட்டத்துக் குடியேற்ற வட்டத்தில் உள்ளது. வாணமன்னன் முதலாம் விக்கிரமாதித்தன் மகனான இரண்டாம் விசயாதித்தன் (868-912) இப்போரில் இறந்தான். அவன் மகன் இரண்டாம் விக்கிரமாதித்தன் (912-940). இராட்டிரகூட இளவரசனான மூன்றாம் கிருஷ்ணனிடம் (940-968) அடைக்கலம் புகுந்து, ஏற்ற காலத்தை எதிர்ப் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போரில், வாணர்க்கு நண்பனான வைதும்ப மன்னனையும் பராந்தகன் வென்றான். அவனும் மூன்றாங் கிருஷ்ணனிடம் அடைக்கலம் புகுந்தான். கடப்பை, கர்நூல் கோட்டங்களைக் கொண்டது-வைதும்ப நாடு, வைதும்பர்-தெலுங்கர். முன்பு பராந்தகனிடம் தோற்ற இராசசிம்ம பாண்டியன், இலங்கை மன்னன் ஐந்தாங் காசிபன் (913-923) உதவியை வேண்டினான். அவன், சக்கசேனாபதி என்பான் தலைமையில் பெரும்படை யொன்றை அனுப்பினான், 919இல் வெள்ளுர் என்ற இடத்தில் நடந்த போரிலும் பராந்தகனே வெற்றி பெற்றான். இப்போர் முடிவில் பாண்டிநாடு முழுமையும் பராந்தகன் ஆட்சிக்குட்பட்டது. நாடிழந்த இராசசிம்ம பாண்டியன் இலங்கை கொன்று இலங்கை மன்னன் நான்காந் தப்புலன் (623-934) பால் உதவி பெறுமாறு அங்கு தங்கியிருந்தான். ஆனால், உறுதி கூறிய தப்புலன் உதவாமையால் மனமுடைந்த இராசசிம்மன் தன்தாய் வாணன் மாதேவியின் பிறந்தகமான சேரநாடு சென்று அங்கு தங்கியிருந்தான். பராந்தகன் பாண்டி நாடு முழுமையும் தன்னாட்சிக் குட்படுத்திய பின், மதுரையில் முடிசூட்டு விழா நடத்த முயன்ற போது, பாண்டியர்க்குரிய முடியும் பிற சின்னங்களும் அங்குக் காணப்படாமையால், பாண்டிய மன்னன் இலங்கை மன்னனிடம் கொடுத்துள்ளான் என்பதை அறிந்து, அவற்றைக் கொடுக்கும் படி இலங்கை மன்னன் பால் தூதனுப்பினான். அக்காலத்து இலங்கையை ஆண்ட நான்காம் உதயன் (945-953) கொடுக்க மறுக்கவே, பராந்தகன் இலங்கைமேற் படையெடுத்து உதயனை வென்றான். அவன், பாண்டியன் முடி முதலியவற்றை எடுத்துக் கொண்டு, இலங்கையின் கீழ்ப்பகுதியான உரோகண நாட்டிற்குப் போய்விட்டான். சோழப்படை அங்கு செல்ல முடியாமல் திரும்பிற்று. பராந்தகன் படைத்தலைவனான மாறன் பரமேசுவரன் என்பான், 914இல் சீட்புலி நாட்டை வென்று, நெல்லூரையும் அழித்ததாகத் திருவொற்றியூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. சீட்புலி என்பது-நெல்லூர் மாவட்டத்தின் வட பகுதியில் இருந்த ஒரு நாடு. அது, கீழைச் சாளுக்கிய இரண்டாம் வீமனின் படைத் தலைவனான சீட்புலி என்பான் அந்நாட்டை ஆண்டு வந்தான். மாறன் அவனை வென்று நெல்லூரை அழித்தான் போலும். அக்காலத்தே வடபலத்தில் ஆண்ட பேரரசர் இராட்டிர கூடராவர். இராட்டிரகூட இரண்டாங் கிருஷ்ணன் (880-913) தன் மகள் இளங்கோப் பிச்சியை ஆதித்த சோழனுக்கு மணஞ் செய்து கொடுத்திருந்தான். எனவே, ஆதித்தன் காலத்தில் சோழரும் இராட்டிரகூடரும் மணவுறவினால் பிணிக்கப் பட்டிருந்தனர். 913இல் இரண்டாங் கிருஷ்ணன் இறக்கவே, அவன் பேரன் மூன்றாம் இந்திரன் அரசுகட்டிலேறினான். இவ்விந்திரன் தந்தையான இரண்டாம் அமோகவர்ஷன் இளமையிலேயே இறந்து விட்டான் போலும். இவ்விந் திரனுக்கு நான்காங் கோவிந்தன் என்றொரு மகனிருந்தான். 918இல், இந்திரன் அவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியிருந்தான். பராந்தகன், தன் மகள் வீரமாதேவியை அக்கோவிந்தனுக்கு மணம் செய்து கொடுத்து, அவ்வரச குடும்பத்தை நெருங்கிய உறவாக்கிக் கொண்டான். நான்காங் கோவிந்தன் குந்தள நாட்டில் முடி சூடி 935 வரை ஆண்டான். அவன் நடத்தையை மக்கள் வெறுத்தனர். குறு நில மன்னர்களும் அதிகாரிகளும் அவன்பால் அன்பில்லாதவ ராயினர். அதுகாலைக் கீழைச் சாளுக்கிய மன்னர்களான யுத்தமல்லனுக்கும் இரண்டாம் வீமனுக்கும் பகை மூண்டது. 934 இல், நான்காம் கோவிந்தன் யுத்தமல்லனுக்கு உதவியாகச் சென்று போரில் தோற்றான். அதுகாலை, கோவிந்தனின் சிறிய தந்தையின் (மூன்றாம் அமோகவர்ஷன்) மகனான மூன்றாங் கிருஷ்ணன் நாட்டில் குழப்பமுண்டாக்கித் தன் தந்தையை இராட்டிரகூட அரசனாக்கினான். எனவே, மூன்றாங் கிருஷ்ணன் தந்தையும், மூன்றாம் இந்திரனின் தம்பியுமான மூன்றாம் அமோகவர்ஷன் 935இல், மானியகேடத்தில் இராட்டிரகூட மன்னனாக இருந்து ஆளத் தொடங்கினான். நாட்டை இழந்த நான்காங் கோவிந்தன் தன் மனைவியுடன் தஞ்சையில் இருந்து வந்தான். 939இல் அமோகவர்ஷன் இறந்த போது கோவிந்தன் வேண்ட பராந்தகன் படை இரட்ட மண்டலத்திற்குப் புறப்பட்டது. மூன்றாங் கிருஷ்ணனுடைய தமக்கையின் கணவனான கங்க இரண்டாம் பூதுகன் அதையறிந்து, கிருஷ்ணனுக்குதவப் பெரும்படையுடன் வந்தான். 940இல் பெரும் போர் நடந்தது. அப்போரில் சோணாட்டுப்படை தோல்வியுறவே மூன்றாங் கிருஷ்ணன் இராட்டிரகூடப் பேரரசனானான் (940 - 972) இதனால், மூன்றாங் கிருஷ்ணன் பராந்தகனுக்குதவப் பெரும் பகைவனானான். அவன் ஆட்சி நிலை பெற்றது. பூதுகனும் அவனுக்கு உதவியாக இருந்து வந்தான். வாண இரண்டாம் விக்கிரமாதித்தனும், வைதும்பனும் கிருஷ்ணனிடம் அடைக்கலம் புகுந்து அங்கிருந்து வந்தனர். அந்நிலையில், பராந்தகன்பால் பேரன்புடையவனாக இருந்த, கோலார்க் கங்க மன்னன் இரண்டாம் பிருதிவிபதி 940இல் இறந்தான். அவன் மகன் விக்கியண்ணன் என்பவன் தந்தை இறப்பதற்கு முன்னரே இறந்து விட்டான். எனவே, கங்க நாடு முழுதும்-கங்கரில் மற்றொரு கிளை யினனான தலைக்காட்டுக் கங்கனும், மூன்றாங் கிருஷ்ணனின் தமக்கை கணவனும், பராந்தகனுக்குப் பகைவனுமான இரண்டாம் பூதுகன் ஆட்சிக்குள்ளாயிற்று. எனவே, சோழ நாட்டுக்கு வடக்கே உள்ள நாடுகளில் பராந்தகனுக்குப் பகைவர்கள் மிகுந்து ஒருங்கு சேர்ந்திருந்தனர். தனக்கு வடபுலத்தில் பகை மிகுந்துள்ளதை யுணர்ந்த பராந்தகன், 936இல் தன் முதல் மகனான இராசாதித்தனைப் பெரும்படையுடன் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரி லிருந்து, நாட்டின் வடபகுதியைக் கண்காணித்து வருமாறு ஏற்பாடு செய்தான். திருநாவாலூர் என்பது, தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள திருநாம நல்லூரின் பழம் பெயராகும். அப்பகுதி-திருமுனைப்பாடி நாடாகும். அரிகுலகேசரி (அரிஞ்சயன்) என்ற இராசாதித்தன் தம்பியும் அங்கிருந்து வந்தான். 940இல் தான் முடி சூட்டிக்கொள்ள ஏற்பாடு நடந்த போது, பராந்தகன் படை கொண்டு தன்னைத் தாக்கினதை இராட்டிரகூட மூன்றாங் கிருஷ்ணன் மறந்தானில்லை. அவன் பத்தாண்டுகளாகத் தன் படையைப் பெருக்கிக் கொண்டே வந்தான். 949இல் சோழநாட்டின் மீது படையெடுத்தான். கங்க இரண்டாம் பூதுகன் துணைவந்தான். வடார்க்காடு மாவட்டத்து அரக்கோணத்திற்குத் தென்கிழக்கே 6 கல் அளவில் உள்ள தக்கோலம் என்ற இடத்தில் இருபடையும் கைகலந்தன. போர் கடுமையாக நடந்தது. இரண்டாம் பூதுகன் விடுத்த அம்பொன்று யானை மீதிருந்து பொருது கொண்டிருந்த இராசாதித்தன் மார்பில் தைத்து இறந்தான். அதனால், மூன்றாங் கிருஷ்ணன் வாகை சூடினான். தொண்டை நாடும் திருமுனைப்பாடி நாடும் இராட்டிரகூடர் ஆட்சியில் சேர்ந்தன. ஆனால், 940 முதல் 955 வரை மிகவும் முயன்றே கிருஷ்ணன் அவற்றைத் தன் நாட்டொடு சேர்த்தான். அதனால் சோழநாடு சுருங்கிற்று. கிருஷ்ணன் பூதுகனுக்கு வனவாசி நாட்டை வழங்கினான். பூதுகனுக்குப் பின், அவன் மகன் இரண்டாம் மாற சிம்மன் (960-975) பட்டம் பெற்றான். இவனும் கிருஷ்ணனுக்கு உதவி யாகவே இருந்து வந்தான். இவனொரு பெருவீரன். இவன் பட்டம் பெற்றதும் நுளம்பரை வென்றான் என்பதை முன்பு கண்டோம். தென்னாட்டிலேயே இவன் நாடு மிகப் பெரியதாக இருந்தது. தார்வார் மாவட்டத்து லச்வேசுவரர் கல்வெட்டு, இவன் பரமேசுவரன் என்று பட்டஞ் சூட்டிக் கொண்டதாகக் கூறுகிறது. இவன் தன் இறுதிநாளில் தன் மகன் நான்காம் இராச மல்லனை (972-984) அரசனாக்கி விட்டு, பங்காபுரம் என்னுமிடத்தில் அசிதசேனர் என்னும் சமண முனிவர் முன்னிலையில் சல்லேகானம் (வடக்கிருத்தல்-உண்ணா திருந்து உயிர் விடுதல்) செய்து கொண்டான். நான்காம் இராச மல்லனும் (975-1004) சிறப்புடன் ஆண்டு வந்தான். சிரவண வெண்குளக் குன்றுகளில் உள்ள சமணக் கோயில்கள் இந்நான்காம் இராசமல்லன் அமைச்சனான சாமுண்டன் என்பவனால் கட்டப்பட்டவைகளேயாகும். மூன்றாங் கிருஷ்ணனுக்குப் பின் இவன் மகன் நான்காம் அமோகவர்ஷன் (972-973) அரசனானான். இவன் மேலைச் சாளுக்கிய இரண்டாந் தைலப்பனால் கொல்லப் பட்டான். இவனுடன் இராட்டிரகூட அரசும் முடிவுற்றது. அதே இடத்தில் கல்யாணிச் சாளுக்கிய மரபு தொடங்கிற்று. இரண்டாந்தை லப்பன் (973-997), அப்புதிய சாளுக்கிய மரபின் முதல்வனாவன். 2. கண்டராதித்தன் (953-957): இவன், முதற்பராந்தகனின் இரண்டாவது மைந்தன். சோழர்க்குத் திறை செலுத்திக் கொண்டு வந்த மூன்றாம் இராசசிம்மன் மகன் வீரபாண்டியன் (946-966), கண்டராதித்தன் காலத்தில் தன்னுரிமை எய்தியதால், இவன் பாண்டிநாட்டையும் இழந்து சோழ நாட்டை மட்டும் ஆண்டு வந்தான். நாட்டாட்சியைவிட, இவன் சமய ஆட்சியில் அக்கறை செலுத்தி வந்தான். ஒன்பதாந் திருமுறையைச் சேர்ந்த கோயில் திருப்பதிகம் இவன் பாடியதே. 956 இல், இவன் தன் தம்பி அரிஞ்சயனிடம் ஆட்சியை ஒப்படைத்தான். 3. அரிஞ்சயன் (956-957): இவன், கண்டராதித்தன் தம்பி. இவன் செய்த வராலாற்றுச் செய்தி ஒன்றும் இல்லை. 4. இரண்டாம் பராந்தகன் (957-970): இவன், அரிஞ்சயன் மகன். இவன் பழையாறையிலிருந் தாண்டான். இவ்வூர் - கும்பகோணத்திற்குத் தென்மேற்கே மூன்றுகல் அளவில் உள்ளது. இவனுக்கு-சுந்தரச் சோழன் என்றும் பெயர். சோழ அரசகுமரன் ஒருவனை வீரபாண்டியன் கொன்றதனாலும், பாண்டி நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத் தினாலும் பராந்தகன் பாண்டி நாட்டின் மேற் படையெடுத் தான். 962இல் சேவூர் என்ற இடத்தில் நடந்த போரில் வீரபாண்டியன் தோற்றோடிக்காட்டில் ஒளிந்து கொண்டான் வீரபாண்டியனுக்கு இலங்கை மன்னன் நான்காம் மகிந்தன் படையனுப்பினதால், 965இல் பராந்தகன் இலங்கைக்கு ஒரு படையை அனுப்பினான். அங்கு நடந்த போரில் சோழர் படைத் தலைவன் இறந்தான். சோழப்படை தோற்றது. சுந்தரச் சோழன் மகிந்தனோடு உடன்பாடு செய்து கொண்டான். தோற்றோடிய வீரபாண்டியன் மறுபடியும் மதுரையி லிருந்தாளத்தொடங்கினான் (965-6). மறுபடியும் சோழன் பாண்டி நாட்டின் மேற் படையெடுத்தான். சுந்தரச் சோழன் மைந்தன் ஆதித்த கரிகாலன் (956-969) (இவன் பட்டம் பெற்று ஆளவில்லை). படைத்தலைமை தாங்கிச் சென்றான். கரிகாலன் வீர பாண்டியனைப் பொருது கொன்றான். ஆனால், வெற்றி பெற்ற சோழன், பாண்டி நாட்டைக் கைப்பற்றி ஆளவில்லை. இராட்டிரகூடர் கைப்பற்றியிருந்த தொண்டை நாட்டையும் திருமுனைப்பாடி நாட்டையும் இவன் மீட்டான். தன்மகள் குந்தவையை-கீழைச் சாளுக்கிய மன்னனான வல்லவரையன் வந்தியதேவன் என்பானுக்கு மணஞ் செய்து கொடுத்தான். ஆதித்த கரிகாலனுக்கு 966இல் இளவரசுப் பட்டங்கட்டினான். ஆனால், யாதோ சூழ்ச்சி பால்,969இல் சோமன் முதலிய நான்கு பார்ப்பன உடன் பிறந்த அதிகாரிகளால் ஆதித்தகரிகாலன் கொலை செய்யப் பட்டான். ஆராத் துயரத்தால், அதே ஆண்டில் சுந்தரச் சோழன் இறந்தான். அவன் மனைவி வானவன் மாதேவி உடன் கட்டை யேறினாள். தளர்ந்த சோழப் பேரரசின் தளர்ச்சியை இவன் ஒருவாறு நீக்கிய வனாவான். உத்தமச் சோழன் (970-965): இவன், கண்டராதித்தன் மகன். இவன் காலத்துப் பொற்காசு ஒன்று கிடைத்துள்ளது. 2. சோழர்-சாளுக்கியர்-985-1070. சோழர்: 1. முதல் இராசராசன் 985-1014 2. முதல் இராசேந்திரன் 1014-1044 3. முதல் இராசாதிராசன் 1044-1054 4. இரண்டாம் இராசேந்திரன்1054-1063 5. வீரராசேந்திரன் 1063-1070 6. அதிராசேந்திரன் 1070 (இக் காலத்தே பாண்டியர், சோழர்கீழ்ச் சிற்றரசாக இருந்துவந்தனர்) மே. சாளுக்கியர்: 2. சத்தியசிரயன் 997-1008 3. ஐந்தாம் விக்கிரமாதித்தன் 1008-1016 4. இரண்டாம் சயசிங்கன் 1016-1042 5. முதலாஞ்சோமேசுவர ஆகவமல்லன் 1042-1067 6. இரண்டாங் சோமேசுவரன் 1067-1076 7. ஆறாம் விக்கிரமாதித்தன் 1068-1126 கீ. சாளுக்கியர்: 3. இரண்டாம் வீமன் 934-945 4.அம்மராசன் 945-970 5. தனார்ணவன் 970-973 6. பாடபன் 973-1000 7. தாழன் 973-1000 8. சத்திவர்மன் 999-1011 9. விமலாதித்தன் 1011-1024 10. இராசராசநரேந்திரன் 1024-1062 11. ஏழாம் விசயாதித்தன் 1062-1077 இலங்கை: 9. ஐந்தாம் மகிந்தன் 981-1017 10. முதலாம் விக்கிரமபாகு 1029-1041 11. கித்தி (8 நாள்) 1044- 12. மகாலானகித்தி 1041-1044 13. விக்கிரம பாண்டியன் 1044- 14. மானாபரணன் (பாண்டியன்) 15. வீரசலாமேகன் (கலிங்கன்) 16. விசயபாகு சேரன்: பாற்கர இரவிவர்மன் 978-1036 கடம்பன்: இரண்டாம் சயகேசி கலிங்கன்: விமலாதித்தன் வடநாட்டரசர்: 1. இந்திரரதன் 4. கோவிந்த சந்திரன் 2. தன்மபாலன் 5. மகிபாலன் 3. இரணசூரன் கடாரத்தரசன்: சங்கிராம விசயோத்துங்கவர்மன் 1. முதல் இராசராசன் (985-1014): இவன், சுந்தரச் சோழன் மைந்தன். இடைக்காலச் சோழப் பேரரசை நிறுவியவன் இவனே. கல்வெட்டின் தலைப்பில் மெய்க் கீர்த்தியை அமைத்தவனும் இவனே. சேரமான் பாற்கர இரவிவர்மன் (978-1036), இராசராசன் அனுப்பிய தூதனை உதகைச் சிறையிலிட்டான். அதனால், இராசராசன் 988இல் பெரும் படையுடன் மேற்கு நோக்கிச் சென்றான். பாண்டி நாட்டைக் கடந்து செல்லும் போது, எதிர்த்த பாண்டியன் அமரபுயங்கனை வென்று சேரநாட்டை அடைந்து, காந்தளூரில் நடந்த போரில் சேரனை வென்று, அங்கிருந்த கடற்படையை அழித்தான்; பின் அப்பகுதியி லிருந்த விழிஞம், கொல்லம், கொடுங்கோளூர் முதலியவற்றையுங் கைப் பற்றினான். பின்னர், தூதுவன் சிறையிருந்த உதகை செல்லும் வழியில், மேல்கொங்கில் - வள்ளுவ நாட்டில் உள்ள முட்டம் என்னும் ஊர்க்கு, மும்முடிச் சோழ நல்லூர் எனப் பெயரிட்டு, அதை அந்நாட்டுத் திருக்கரைக் கோயிலுக்கு இறையிலியாக விட்டான். இம்முட்டம்-வெள்ளிமலையின் அடிவாரத்தில் இருக்கிறது. பின் உதகை சென்று, அதனை அழித்துத் தூதனைச் சிறை மீட்டான். இது, நீலகிரியில் உள்ள உதகையேயாகும். அதன் பின் இராசராசன், கொங்காள்வான் மரபினன் ஆண்ட குடகை வென்று கைப்பற்றியதோடு, கொண்கானம், துளுநாடு ஆகிய வற்றையும் கைப்பற்றினான். பின் கிழக்கே சென்று - கங்கவாடி, நுளம்பவாடி, தடிகை வாடி ஆகியவற்றைக் கைப்பற்றினான். கங்கவாடியை அடுத்துக் கிழக்கிலுள்ள நுளம்பவாடி. தடிகை வாடி-தகடூர்நாடு. சோழர் படைத்தலைமை தாங்கி நடத்தியவன், இராசராசன் மகன், முதல் இராசேந்திரன் ஆவான், ‘இராசராசன் பெற்ற களிறு - மலையம், கொண்கானம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றியதோடு, சேரனையும் நாட்டை விட்டோடச் செய்தது’ என்கின்றது, மைசூர்க்கல்வெட்டு. 981இல் பட்டம் பெற்ற இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தன் பாண்டியசேரர்க்குதவினதால், 991இல் இராசேந்திரன் தலைமையில் சென்ற படை, இலங்கையின் பழைய தலை நகரான அநுராதபுரத்தை அழித்து விட்டதனால், அம் மண்ட லத்தின் நடுவில் உள்ள பொலனருவாவுக்கு-சனநாத மங்கலம் எனப் பெயரிட்டு, அதைச் சோழர் தலைநகராக்கி, இலங்கைக்கு-மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிட்டுத் தன்னாட்சிக் குள்ளாக்கினான். சாளுக்கியர்: கல்யாணிச் சாளுக்கிய மரபின் முதல்வனான இரண்டாந் தைலப்பன் இறந்தபின், அவன் மகன் சத்தியாசி ரயன் (997-1008) சாளுக்கிய அரசனான். இராசேந்திரன் படையெடுத்துச் சென்று அவனை வென்றான். அதனால், துங்க பத்திரை யாற்றுக்குத் தெற்கேயுள்ள பகுதி இராசராசன் ஆட்சிக்குட் பட்டது. கிருஷ்ணனை கோத வரியாறுகட் கிடைப்பட்ட கீழ்கடற் பகுதியான வேங்கிநாட்டைக் கீழைச் சாளுக்கியர் ஆண்டு வந்தனர். பிற்காலத்தே அவர்கள் மூத்தோன் வழியினர், இளையோன் வழியினர் என இரண்டுபட்டனர். மூத்தோன் வழியினனான அம்மராசன் (945-170) என்பவன் ஆள்கையில், இளையோன் வழியினனான பாடபன் என்பான் இராட்டிர கூட மூன்றாங் கிருஷ்ணனது (940-972) உதவி பெற்று, நாட்டில் கலகம் செய்து ஒரு பகுதியைக் கவர்ந்து ஆண்டு வந்தான். 970இல் அம்மராசன் இறக்கவே, அவன் மாற்றாந் தாயின் மகனான தனார்ணவன் என்பான். 970இல் முடிசூடி 973 வரை ஆண்டான். இளையோன் வழியினர் முயன்ற 973இல் வெற்றி பெற்று, பாடபனும் (973-1000), அவன் தம்பி தாழனும் (973-1000) நாடு முழுவதையும் 27 ஆண்டுகள் ஆண்டனர். அரசிழந்த மூத்தோன் வழியினனான சத்திவர்மன் என்பான் இராசராசன்பால் அடைக்கலம் புகுந்தான். சீட்புலி நாடு, பாகி நாடு (நெல்லூர் மாவட்டத்தின் வட பகுதி) என்பவற்றை முதற் பராந்தகன் (907-953) கைப்பற்றித் தன்னாட்சிக் குட்படுத்தி யிருந்தான். அன்று அப்பகுதி, வீமன் என்னும் தெலுங்கச் சோழன் ஆட்சிக்குட்பட்டிருந்தது. பராந்தகன் ஆட்சியின் பிற் பகுதியில் நிகழ்ந்த இராட்டிரகூடப் படையெடுப்பினால், சோழ மன்னர் அவற்றை இழந்தனர். இராசராசன் அவற்றைக் கைப்பற்ற 991இல் ஒரு பெரும் படையை அனுப்பினான். அதில் சத்திவர்மனும் சென்று வெற்றி பெற்றான். சீட்புலி, பாகி நாடுகள் இராசராசன் ஆட்சிக்குட் பட்டன. 999 இல் இராசராசன் வேங்கி மேற் படையெடுத்துச் சென்று, இளையோன் வழியினரை வென்று, சத்திவர்மனை வேங்கி வேந்தன் ஆக்கினான் (999-1011); தன் மருமகனும் - குந்தவை கணவன் - சத்திவர்மன் தம்பியுமான விமலாதித்தனுக்கு இளவரசுப் பட்டமும் கட்டினான். சத்திவர்மன் இறந்த பின், விமலாதித்தன் (1011-1024) அரசனானான். இராசராசன் வேங்கியைத் தன்னாட்சிக் குட்படுத்தவில்லை. கலிங்க மன்னன் விமலாதித்தன் என்பான், கீழைச் சாளுக்கிய விமலாதித்தனுக்கு அடிக்கடி இடையூறு செய்து வந்ததால் இராசராசன் படையெடுத்துச் சென்று அக்கலிங்க மன்னனை வென்றடக்கினான். கலிங்கம்-கோதாவரி மகாநதி கட்கு இடைப்பட்ட கீழ்கடலோரப் பகுதியாகும். இராசராசன் முடிவாக, சேரநாட்டின் தென்மேற்கில் கடலிடையிருந்த பழந்தீவு பன்னீராயிரத்தையும் கைப் பற்றினான். கலிங்க நாட்டிலிருந்து தென்னாடு முழுதும் இராச ராசன் ஆட்சிக்குட்பட்டிருந்தது. தஞ்சைப் பெரிய கோயிலான இராசராசேச்சுரம் இராசராசனால் கட்டப் பட்டதே. 2. முதல் இராசேந்திரன் (1014-1044): இவன், இராசராசன் மகன். இவன் மேலும் தன்னாட்டைப் பெருக்க எண்ணினான். இவன் வடக்கே படையெடுத்துச் சென்று-வனவாசி, இடை துறை நாடு, கொள்ளிப் பாக்கை, மண்ணைக் கடக்கம் ஆகிய வற்றை வென்றான். வனவாசி-மைசூர் நாட்டின் வடமேற்குப் பகுதி. இடைதுறை நாடு-காவிரியுடன் கீழ்ப்பூவானி (கொப்பானி யாறு) கலக்கும் பகுதி. கொள்ளிப் பாக்கை-ஐதரபாத்துக்கு 45கல் வடகிழக்கில் உள்ள குல்பாக் என்ற ஊராகும். மண்ணைக் கடக்கம்-இராட்டிரகூடரின் தலைநகரா யிருந்த மானியகேடம் (மால்கேட்) என்ற நகர். இராட்டிரகூடருக்குப் பின் சில ஆண்டுகள் இது, மேலைச் சாளுக்கியர்க்குத் தலைநகரா யிருந்தது. வடக்கே இருந்த மாளவ நாட்டு மன்னரும், தெற்கே இருந்த சோழ மன்னரும் அடிக்கடி இந்நகர் மீது படை யெடுத்துச் சென்று அழித்து வந்தமையால், மேலைச் சாளுக்கியர், இந்நகருக்கு 48 கல் வடகிழக்கில் உள்ள கல்யாண புரத்தைத் தலைநகராகக் கொண்டனர். மண்ணைக் கடக்கத்தில் இராசேந்திரன் சாளுக்கிய ஐந்தாம் விக்கிரமாதித்தனை (1008-1016) வென்றிருக்கலாம். இலங்கைப் போர்: இராசராசன் காலத்துத் தோற்றோடி உரோகண நாட்டிலிருந்த ஐந்தாம் மகிந்தன் (981-1017) பெரும்படை திரட்டி இழந்த நாட்டைப் பெற முயன்றான். 1017இல் இராசேந்திரன் ஈழத்தின் மேற் படையெடுத்துச் சென்று மகிந்தனை வென்றதோடு, ஈழ மன்னர்க்கு வழி வழி உரிமையுடையதான முடியினையும், அன்னார் தேவியர் அழகிய முடியினையும் கைப்பற்றினான். மேலும், 919இல் மூன்றாம் இராச சிம்ம பாண்டியன் இலங்கை மன்னனிடம் அடைக்கலமாக வைத்த பாண்டியர் முடியையும் இந்திரன் ஆரத்தையும் கைப்பற்றி மீண்டான். முதற்பராந்தகன் (907-953) இவற்றைப் பெறவே இலங்கை மேற் படையெடுத்தான். அது அன்று கை கூடவில்லை; அவன் பேரனுக்குப் பேரனான இராசேந்திரனால் கைகூடியது. இப்போரில் புறங்காட்டி ஓடிய ஐந்தாம் மகிந்தனைப் பிடித்து வந்து, இராசேந்திரன் சோழ நாட்டில் சிறை வைத்தான். அவன் சோழ நாட்டில் 12 ஆண்டுகள் சிறையிருந்து 1029இல் இறந்தனன். ஐந்தாம் மகிந்தன் மைந்தன் காசிபன் என்பானை அந்நாட்டு மக்கள் மறைவாக வைத்திருந்து, அவன் தந்தை இறந்த பின், சோழப் படைகளுடன் ஆறு மாதம் போராடி உரோகண நாட்டைக் கைப்பற்றி, முதலாம் விக்கிரமபாகு என்ற பெயருடன் அவனுக்கு முடி சூட்டினர் (1029-1041) என்கின்றது, மகாவமிசம். இராசேந்திரன், சேரமன்னரின் வழிவழி முடியையும் ஆரத்தை யும் கவர்ந்தான். இராசேந்திரன் மகன், சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்ற பெயருடன் மதுரையிலிருந்து, தந்தையின் ஆணையாளனாகப் பாண்டிய சேர நாடுகளை ஆண்டு வந்தான் (1018-1042). மேலைச் சாளுக்கிய ஐந்தாம் விக்கிரமாதித்தன் தம்பியான இரண்டாம் சயசிங்கன் என்பான் 1016இல் முடி சூடி, தன் தந்தையும் தமையனும் சோழரிடம் இழந்த நாட்டைப் பெற முயன்று சிறிது வெற்றியும் பெற்றான். அதாவது, அவன் பெல்லாரியையும் மைசூர் நாட்டின் ஒரு பகுதியையும் கைப் பற்றினான். அதனால், இராசேந்திரன் படையெடுத்துச் சென்று, அச்சாளுக்கிய நாட்டு முயங்கி என்னும் இடத்தில் நடந்த போரில் சயசிங்கனை வென்றடிப்படித்து மீண்டான். வடநாட்டு வெற்றி: தென்னாடு முழுதும் வென்றடிப்படுத்த இராசேந்திரன், தான் புதிதாக அமைத்த நகரைத் தூய்மைப் படுத்த - கங்கைவெளியி லுள்ள மன்னர்களை வென்று, கங்கை நீரைக் கொணர எண்ணினான்; தன் சிறந்த படைத் தலைவன் தலைமையில் பெரும்படை யொன்றை வடக்கு நோக்கியனுப் பினான். அப்படை கைப்பற்றிய இடங்கள்: 1. சக்கர கோட்டம்: விசாகப்பட்டின மாவட்டத்திற்கு வடக்கே, மத்திய மாநிலத்தில், வத்ச நாட்டில் இருந்த ஒரு நகர். அது, அந்நாட்டின் தலைநகராகிய இராசபுரத்திற்கு 8 கல் அளவில் இந்திராவதி யாற்றின் தென்கரையில் இருந்தது. இன்று அது, சித்திர கோட்டம் என வழங்குகிறது. அதை அன்று நாக அரச மரபினர் ஆண்டு வந்தனர். அச்சோழப் படைத்தலைவனால் கைப்பற்றப்பட்ட மதுரை மண்டலம், நாமனைக்கோணம், பஞ்சப்பள்ளி ஆகியவை அந்த வத்ச நாட்டில் இருந்திருக்கலாம். இவை, வேங்கி நாட்டுக்கு வடக்கே இருந்தன. பின்னர் அப்படைத்தலைவன், தாராநகரத்திருந்த போச ராசனுக்குப் பகைவனான இந்திராதனை ஆதிநகரில் வென்று ஒட்டரம், தென்கோசலம் என்னும் நாடுகளைப் பிடித்தான் (இப்போசராசனே வடமொழிப்புலவர்களைப் போற்றியவனாவன்) அதன்பின் அப்படைத்தலைவன், தன்மபாலனுடைய தண்டபுத்தி, இரணசூரனது தக்கணலாடம், கோவிந்த சந்திரனுடைய வங்காளம், மகிபாலனது உத்திரலாடம் ஆகிய வற்றைக் கைப்பற்றினான். அதன்பின் அவன் கங்கையை அடைந்தான். 1. தண்டபுத்தி-வங்காள மாநிலத்தில், மிதுலபுரி மாவட்டத்தின் தென்பகுதியும், தென்மேற்குப் பகுதியும் ஆகும். அது, சொர்ணரேகை யாற்றின் இருகரையிலும் பரவியிருந்த நாடாகும். எனவே அது, ஒட்டர நாட்டுக்கும் வங்காளத்திற்கும் இடைப்பட்டதாகும். 2,3. தக்கணலாடம், உத்தரலாடம் - பீகார், வங்காளம் ஆகிய மாநிலங்களின் கங்கையாற்றின் தென் கரையிலிருந்த நாடுகளாகும். தண்டபுத்தி மண்டலத்திற்கு வடக்கே தக்கண லாடமும், அதன் வடக்கிலும் கிழக்கிலும் உத்தரலாடமும் இருந்தன. உத்தரலாடத்து மகிபாலனுக்கு உட்பட்ட சிற்றரச ராவர் மற்ற மூவரும். மகிபாலன் பேரரசன். மகிபாலன் ஆட்சி வடக்கே காசிவரை பரவியிருந்தது. அந்நாளில் வங்காள மாநிலம் பல உள் நாடுகளைத் தன்னகத்துக் கொண்டிருந்தது. அந்நாடுகளின் அரசர் களெல்லாரும் மகிபாலனுக்குத் திறை செலுத்தி வந்தனர். சோழர் படைத்தலைவன் முதலில் சிற்றரசர்களையெல்லாம் வென்று, இறுதியாக மகிபாலனையும் வென்று, தோற்ற மன்னர்களின் தலையில் கங்கை நீர்க்குடங்களை வைத்துக் கொண்டு நாட்டிற்குத் திரும்பினான். அக்குடங்களை ஏற்றி யிறக்கிச் சோழ மன்னனை எதிர்ப்படும் போது ஏற்றிக் கொண்டு வந்திருக்கலாம். கங்கையாற்றில் வரிசையாக யானைகளை நிறுத்திப் பாலம் அமைத்து, அதன்மீது அப்படை எளிதாக ஆற்றைக் கடந்தது. வெற்றிக் கொடியுயர்த்துக் கங்கை நீருடன் வந்த அப் படைத் தலைவனை, இராசேந்திரன் கோதாவரியாற்றங் கரையிற் கண்டு மகிழ்ச்சியுற்று நாட்டிற்குத் திரும்பினான். அவ்வெற்றியின் அறிகுறியே - கங்கை கொண்ட சோழ புரமும், சோழகங்கமும். கங்கை கொண்ட சோழபுரம்-கும்ப கோணத்துக்கு 10 கல் வடக்கில் உள்ள திருப்பனந்தாளுக்கு வடக்கே, கொள்ளிட அணையிலிருந்து அரியலூர் செல்லும் வழியில் இருந்தது. சோழகங்கம்-இன்று பொன்னேரி என வழங்குகிறது. இவ்வெற்றிக்குப் பின் இராசேந்திரன்-கங்கை கொண்ட சோழன் எனப் பெயர் பெற்றான். அப்படைத்தலைவன், கங்கைக் கரையிலிருந்து பல சிவாசாரியர்களை அழைத்து வந்தான். இராசேந்திரன் அவர் களைக் காஞ்சியிலும் சோழ நாட்டிலும் குடியேற்றினான். சோழப்படையொடு சென்ற தலைவர்களிலொருவன் மேற்கு வங்காளத்தில் தங்கிவிட்டான். அவன் வழிவந்த சாமந்தசேனன் என்பானே, பிற்காலத்தே வங்காளத்தில் ஆட்சிபுரிந்த சேனமர பினரின் முதல்வனாவன். கடார வெற்றி: மலேயா, சுமத்தரா உள்ளிட்ட நிலப் பரப்பு, அன்று ஸ்ரீ விசயம் என வழங்கிற்று. அது, கடாரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்ததால், கடாரநாடு எனவும் வழங்கியது. அக்கடாரத்தை அப்போது, சங்கிராம விசயோத் துங்கவர்மன் என்பவன் ஆண்டு வந்தான். இராசேந்திரன் 1025 இல், கப்பற்படை கொடு கடாரஞ் சென்று, கடாரத் தரசனை வென்று, கடாரங்கொண்ட சோழன் என்னும் வென்றிப் பெயருடன் மீண்டான். இராசேந்திரனின் ஆணையாளனாக மதுரையிலிருந் தாண்ட, சடையவர்மன் சுந்தரசோழ பாண்டியனுக் கடங்காது. மானாபரணன், வீரகேரளன், சுந்தரபாண்டியன் என்ற மூவரும் கலகம் செய்யவே, இராசேந்திரன் மகனான இளவரசன் இராசாதிராசன் படையெடுத்துச் சென்று முன்னிருவரையுங் கொன்றான். சுந்தரபாண்டியன் தோற்றோடி ஒளிந்து கொண்டான். இவ்வாறே, அடங்காத சேரரையும் அவன் அடக்கினான். 1041இல், இராசாதிராசன் படையெடுத்துச் சென்று தன்னுரிமை பெற முயன்ற இலங்கை மன்னன் விக்கிரம பாகுவைப் பொருதுகொன்றான். பின்னர் கித்தி என்பான் 8 நாள் ஆண்டான். அவனுக்குப் பின் அரசனான மகாலான கித்தி (1041-1044) என்பான். சோழரோடு புரிந்த போரில் தோல்வியுற்றுத் தானே கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்தான். அவன் இறந்தது கேட்டு, முன் இலங்கையில் இருப்பதற்கஞ்சித் துளுநாட்டில் சென்றிருந்த மகாலான கித்தியின் மகனான விக்கிரமபாண்டியன் என்பான் உரோகணம் வந்து, 1044இல் அரசனானான். இவன், மகாலான கித்திக்கும் பாண்டியன் மகளுக்கும் பிறந்தவன். சாளுக்கியப்போர்: மேலைச்சாளுக்கிய இரண்டாம் சயசிங்கன் 1042இல் இறக்கவே, அவன் மகன் முதலாஞ் சோமேசுவரன் என்ற ஆகவமல்லன் அரசனானான். சயசிங்கன் காலத்திலேயே சாளுக்கியர் இடைதுறை நாட்டைக் கைப்பற்றினர்; பின்னர் மேலும் சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். அதனால், இளவரசன் இராசாதிராசன் 1042இல் வடக்கே படையெடுத்துச் சென்றான். ஆகவமல்லன் மக்களான - இரண்டாஞ் சோமேசு வரனும் ஆறாம் விக்கிரமாதித்தனும் போர்க்களத்தைவிட்டு ஓடி விட்டனர். இராசாதிராசன் கொள்ளிப்பாக்கையை எரியூட்டி, ஏராளமான யானை குதிரைகளையும் பெரும் பொருளையும் கைப்பற்றி மீண்டான். இராசேந்திரனின் அரசகுரு - சர்வசிவபண்டிதர் என்பார். இவர், கங்கைக்கரையிலிருந்து அழைத்து வரப்பட்டவர். இராசேந்திரன் இவருக்கு, ஆண்டுக்கு 2000 கலநெல் ஆசிரிய போகமாக அளித்து வந்தான். இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், இராசமகேந்திரன், வீரராசேந்திரன் என, இவனுக்கு ஆண்மக்கள் நால்வர்; அருள்மொழிநங்கை, அம்மங்கை தேவி எனப் பெண் மக்களிருவர். அம்மங்கை தேவி-கீழைச் சாளுக்கிய மன்னனான தன் மைத்துனன் (குந்தவை கணவன்) விமலாதித்தன் மகனான இராசராச நரேந்திரனுக்கு மணஞ் செய்து கொடுத்தான். இவர்கள் மைந்தனே குலோத்துங்கன். இராசேந்திரன் 1044இல் இறந்தான். அவன் கோப்பெருந்தேவி - வீரமாதேவியும் உடன் கட்டை யேறினாள். 3. முதல் இராசாதிராசன் (1044-1054): இவன், இராசேந்திரன் முதல் மகன். 1018-1044 வரை இவன் இளவரசனாக இருந்து வந்தான். பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளில்-பாண்டியரும் சேரரும் இலங்கை மன்னரும் ஒருவருக்கொருவர் மணத்தொடர்பு கொண்டு தமக்குப் பெரும் பகைவராயிருந்து வந்த சோழரிட மிருந்து தத்தம் நாட்டைக் கைப்பற்றித் தனியரசாள முயன்று வந்தனர். எனவே, இராசாதிராசன் 1046இல் இலங்கை மேற் படை யெடுத்துச் சென்று, விக்கிரமபாண்டியனை வென்றடிப் படுத்தான். பாண்டிநாட்டின் ஒரு பகுதியை ஆண்ட வீரபாண்டி யனைப் பொருது கொன்றான். சாளுக்கியப்போர்: சோழரால் அடக்க அடக்க, சாளுக்கியர் பந்துபோல் மேலோங்கி வந்தனர். அதனால், 1046 இல் இராசாதிராசன் குந்தள நாட்டின் மேற் படையெடுத்துச் சென்று, கண்டர் தினகரன் (கண்டராதித்தன்) முதலிய சாளுக்கியத்தலை வரைப் புறங்காட்டியோடும்படி செய்து, காம்பிலி நகரின் மாளிகையினையும் தகர்த்து மீண்டான். இந்நகர் - பெல்லாரி மாவட்டத்து ஆஸ்பெட் வட்டத்திலுள்ளது. சா.போர்-2: மறுபடியும் 1048இல் குந்தள நாட்டின்மேற் படையெடுத்துச் சென்ற இராசாதிராசன், கிருஷ்ணையாற்றங் கரையிலுள்ள பூண்டூரில் நடந்த போரில் விச்சையன் முதலிய சாளுக்கியத் தலைவர்களை வென்று, விச்சையன் தாய் தந்தையரையும், எண்ணரும் மகளிரையும் சிறைபிடித்ததோடு, அந்நகரின் மதில்களையும் இடித்தான்; மண்ணதிப்பதியில் இருந்த சாளுக்கியர் மாளிகைக்கு எரியூட்டி, அந்நகரில் வேங்கை பொறித்து வெற்றித்தூண் நட்டான்; வராக இலச்சினை பொறித்தவராகக் குன்றில் புலி பொறித்தான். அவன் தன் பாசறை வந்த ஆகவமல்லன் ஒற்றர்கள் மார்பில்- ‘ஆகவமல்லன் அஞ்சிப் புறங்காட்டி ஓடினான்’ என எழுதியனுப் பினான். அவ்வவமானத்தைப் பொறுக்க முடியாமல் ஆகவமல்லன் வந்து மறுபடியும் பொருது தோற்றான். ஆகவமல்லன், தன் அமைச்சரோடு வேறு இருவரையும் ஒரு செய்தி தெரிவிக்குமாறு இராசாதிராசனிடம் அனுப்ப, இவன் அவர்களுள் ஒருவனுக்கு ஐங்குடுமி வைத்து - ஆகவமல்லன் என்றும், மற்றொருவனுக்குப் பெண்ணுடை யுடுத்து-ஆகவமல்லி என்றும் பெயரிட்டுத் திருப்பி யனுப்பினான்; சாளுக்கியர் தலைநகரான கல்யாணபுரத்து அரண்மனையை இடித்து, அங்கே வீரமுடிசூடி, விசயராசேந் திரன் என்ற பட்டமும் புனைந்து கொண்டான். சா.போர்-3: இராசாதிராசன் மூன்றாமுறையாக, கிருஷ்ணை யாற்றங் கரையிலுள்ள கொப்பம் என்னும் இடத்தில் சாளுக்கிய ரோடு பொருதான். சாளுக்கியப் படையை ஆகவ மல்லனும், சோழப்படையை இராசாதிராசனும் தலைமை யேற்று நடத்தினர். இராசாதிராசன் தம்பி, இரண்டாம் இராசேந்திரன் பாடிவீட்டிலிருந்தான். போர் மிகக் கடுமையாக நடந்தது. சாளுக்கியப் படைகள் ஒருமுகமாகத் திரண்டு இராசாதிராசன் ஏறியிருந்த யானையைத்தாக்கின. யானை இறக்கவே இராசாதி ராசன் பகைவர் அம்புக் கிரையானான். சாளுக்கியப் படைகள் சோழர் படையை நாற்புறமுந்தாக்கவே, சோழப்படைகள் புறங்காட்டத் தொடங்கின. இந்நிலையில், பாசறையிலிருந்த இரண்டாம் இராசேந்திரன் பட்டத்து யானைமீதேறிப் போர்க்களஞ் சென்று ‘அஞ்சேல்! அஞ்சேல்!’ எனச் சோழப்படைக்கு வீரவுணர்ச்சி யூட்டி அமைதி யுண்டாக்கி, மீண்டும் போர் செய்யத் தொடங்கினான். இராசேந் திரன் ஏறியிருந்த யானையை முன்போலவே சாளுக்கிய வீரர்கள் தாக்கினர். யானையின் நெற்றியில் அம்புகள் தைத்தன. இராசேந் திரன் தோளிலும் தொடையிலும் தைத்துப் புண் படுத்தின. யானைமேலிருந்து பொருத சோணாட்டு வீரர்பலர் உயிர் துறந்தனர். எனினும், சாளுக்கியப் படைத்தலைவர் பலர் இராசேந் திரனால் கொல்லப்பட்டனர். ஆகவமல்லனும் தோற்றோடினான். மற்ற சாளுக்கியப் படைத்தலைவர்களும் அஞ்சியோடினர். இராசேந்திரன் வாகை சூடினான்; அப்போர்க் களத்திலேயே சோழப் பேரரசனாக முடியுஞ் சூடிக் கொண்டான். சாளுக்கியரின் யானைகள் குதிரைகள் ஒட்டகங்கள் வராகக் கொடிகள் முதலிய வற்றோடு, சத்தியவ்வை, சங்கப்பை என்ற கோப்பெருந்தேவி யரையும் இவன் கைப்பற்றினான். சாளுக்கிய நகராகிய கொல்லர் புரத்தில் ஒரு வெற்றித்தூண் நாட்டினான். 4. இரண்டாம் இராசேந்திரன்(1054-1063): சாளுக்கி யரைவென்றுமீண்ட இராசேந்திரன், 1055இல் இலங்கை மேற் படையெடுத்துச் சென்று, இலங்கையின் ஒரு பகுதியைக் கைப் பற்றியாண்ட கலிங்க மன்னன் வீரசலாமே கனைக் கொன்று, இலங்கை மன்னன் மானாபரணன் மக்கள் இருவரையுஞ் சிறைபிடித்து மீண்டான் 1056இல் நடந்த கிருஷ்ணையாற்றங் கரையிலுள்ள முடக் காற்றுப் போரில், இராசேந்திரனிடம் ஆகவமல்லனும், அவன் மகன் ஆறாம்விக்கிரமாதித்தனும் தோற்றோடினர். இப்போரில், இராசேந்திரன் தம்பியான இராசமகேந்திரனும், வீரராசேந்திரனும் கலந்து கொண்டனர். இராசமகேந்திரன் மதுரையிலிருந்து பாண்டிய சேர நாடுகளை ஆண்டுவந்த சுந்தர சோழ பாண்டியன் ஆவன். இவன் பட்டம் பெறுமுன்னே இறந்தான் போலும். வீரராசேந்திரன் (1063-1070): இவன், இராசேந்திரன் தம்பி. ஆகவமல்லன், தன் இரண்டாமகனான ஆறாம்விக்கிர மாதித் தனைத் தன் நாட்டின் தென்பகுதியைக் கண்காணித்து வருமாறு செய்திருந்தான். வீரராசேந்திரன் முடி சூட்டு விழாவில் ஈடுபட்டிருந்தபோது, விக்கிரமாதித்தன் கங்கவாடியைக் கைப்பற்ற முயன்றான். அதையறிந்த வீரராசேந்திரன் பெரும்படையும் சென்று, விக்கிரமாதித்தனைக் கங்கவாடிக் களத்தினின்றும் துங்க பத்திரையாற்றுக் கப்பால் துரத்தினான். கீழைச் சாளுக்கியர், தமக்கு வழிவழிப் பகைவராயுள்ள சோழருடன் சேர்ந்திருப்பதைக் கண்டு வருந்தி அவ்விருவரையும் பிரித்து, கீழைச் சாளுக்கியரைத் தனக்கு உற்ற துணைவராக்கிக் கொள்ள மேலைச் சாளுக்கியர் காலம் பார்த்திருந்தனர்-அதற் கேற்ப, 1062இல் வீரராசேந்திரன் மைத்துனனான. அம்மங்கை தேவி கணவன் - கீழைச் சாளுக்கிய இராசராச நரேந்திரன் வேங்கியில் இறந்தான். உடனே ஆகவமல்லன், வனவாசியில் தன் ஆணையானனாக இருந்த படைத் தலைவன் சாமுண்டரா யனைப் பெரும் படையுடன் வேங்கி நாட்டிற்கனுப்பினான். இதையறிந்த வீரராசேந்திரன் பெரும் படையுடன் வேங்கி சென்று எதிர்த்துப் பொருது சாமுண்டராயனைக் கொன்றான். 1064இல், வீரராசேந்திரனுக்கும் மேலைச் சாளுக்கியருக் கும், கிருஷ்ணை துங்கபத்திரை யாறுகள் கூடுமிடமாகிய கூடல்சங்கமத்தில் போர் நடந்தது. ஆகவமல்லனும், அவன் மக்களான விக்கிரமாதித்தன், சயசிங்கன் முதலானோரும் புறங்காட்டியோடினர். வீரராசேந்திரன், ஆகவ மல்லன் பாசறையை முற்றுகையிட்டு, அவன் மனைவியர், பட்டத்து யானை, வராகக் கொடி, யானை குதிரைகள், மற்றுமுள்ள பொருள்களையுங் கைப்பற்றிக் கொண்டு மீண்டான். 1064இல், தன் மகன் கங்கைகொண்ட சோழனை-சோழ பாண்டியன் என்னும் பட்டத்துடன் பாண்டி நாட்டுக்கு ஆணையாளனாக்கினான். சீவல்லப பாண்டியன் மகனான வீரகேசரி என்பான், அவனுக் கடங்காமல் கலகஞ் செய்யவே, வீரராசேந்திரன் பாண்டி நாட்டின்மேற் படையெடுத்துச் சென்று அவனைக்கொன்றான்; 1065இல் கடப்பை மாவட்டத்தில் இருந்த பொத்தப்பி நாட்டு மன்னனைப் பொருது கொன்றான்; 1066 இல், சேர நாட்டின் மேற் படையெடுத்துச் சென்று, சேரர்களை வென்று, அவர்கள் திறையாகத் தந்த யானைகளையும் பிற பொருள்களையும் பெற்று மீண்டான். மறுபடியும் வீரராசேந்திரனுக்கும் ஆகவமல்லனுக்கும் போர் மூண்டது. கிருஷ்ணை, அல்லது துங்கபத்திரை யாற்றுப் பக்கம் இப்போர் நடந்தது. சோழன் சாளுக்கியத் தண்டநாயகர் பலரைக் கொன்றான்; மேலும் இப்போரில், கங்கர், நுளம்பர், காடவர், வைதும்பராயன் ஆகியோரும் உயிர் நீத்தனர். அதனால் மிகவும் வருந்திய ஆகவமல்லன் ஒருவாறு தேறி, முன்னர்த் தான் தோல்வியுற்ற கூடல் சங்கமத்திலேயே தன்னோடு போர் புரிய வரவேண்டும் என்றும், அங்ஙனம் வராதவர் வீரர் அல்லர் என்றும் ஓர் திருமுகம் எழுதி, 1067இல் ஓர் ஆள் மூலம் வீரராசேந்திரனுக்கு அனுப்பினான். அத்திருமுகம் பெற்ற வீரராசேந்திரன் மகிழ்ந்து அவ்வாறே சென்று, கூடல் சங்கமத்துக் கணித்தான கரந்தை என்னும் இடத்தில் சாளுக்கியர் வருகையை எதிர்பார்த் திருந்தான். அத்திருமுகத்தில் குறிக்கப் பெற்ற நாளுக்குப் பிறகு ஒரு மாதம் காத்திருந்தும் ஆகவமல்லன் வராததால், வீரராசேந்திரன் கடுஞ்சினங் கொண்டு, அப்பகுதியிலிருந்த சாளுக்கியத் தலைவர் களைப் புறங்காட்டியோடும்படி செய்து, பல இடங்களில் எரியூட்டி, துங்கபத்திரைக் கரையில் ஒரு வெற்றித் தூணும் நாட்டினான். மேலும், ஆகவமல்லனைப் போல் ஓர் உருவம் செய்து, அதன் கழுத்தில் கண்டிகை அணிந்து, ஆகவமல்லனும் அவன் மைந்தரும் தனக்கஞ்சி ஐந்து முறை புறங்காட்டி ஓடிய செய்தியை ஒரு பலகையில் எழுதி, அதை அவ்வுருவத்தின் மார்பில் தொங்கவிட்டு, மற்றும் சில அவமானங்களும் செய்தான். பின்னர், ‘வேங்கி நாட்டை மீட்காமல் திரும்புவதில்லை. வல்ல வனாகில் வந்து காக்க’ என்று சொல்லியனுப்பிவிட்டு, வேங்கி நாட்டை நோக்கிச் சென்றான். இதனால், 1067இல் விக்கிரமாதித் தனால் வேங்கி நாடு கைப்பற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது பெறப் படுகிறது. ஆகவமல்லன் குறித்த நாளில் வராமைக்குக் காரணம், திடீரென்று அவன் தீராத நோய்வாய்ப் பட்டு எத்தகைய மருத்து வத்தினும் அது தீராமையால், துங்கபத்திரை யாற்றில் விழுந்து இறந்துவிட்டமையேயாகும். வேங்கி நோக்கிச் சென்ற வீரராசேந்திரனை சாளுக்கியப் படைத்தலைவர் பெரும் படையுடன் வந்து தடுக்கவே, விசய வாடையில் (பெசவாடா) நடந்த போரில், வீரராசேந்திரன் அம்மூவரையும் முறியடித்துத் துரத்தி விட்டு, கோதாவரி யாற்றைத் தாண்டி எழுகலிங்கமும் கடந்து, சக்கரகோட்டத்துக் கப்பாலும் சென்று திரும்பி, வேங்கியைக் கைப்பற்றி, தன்னை அடைக்கலம் புகுந்த ஏழாம் விசயாதித்தனுக் களித்து மீண்டான். உரோகணத்தை ஆண்ட விசயவாகு என்பான், இலங்கை முழுவதையும், கைப்பற்ற முயலவே, 1067 இல் வீரராசேந்திரன் ஒரு பெரும் படையை இலங்கைக் கனுப்பினான். அப்படை விசயவாகுவை ஓடியொளியுமாறு செய்ததோடு, அவன் மனைவி யைச் சிறை பிடித்து அளப்பரும் பொருளுடன் திரும்பிற்று. 1025இல் இவன் தந்தை கடாரத்தை வென்றான். தன்பால் அடைக்கலம் புகுந்த கடாரத்தரசன் பொருட்டு, 1068இல் இவன் பெரும்படை யொன்றைக் கடாரத்திற்கனுப்பி, அந்நாட்டைக் கைப்பற்றி அக்கடாரத் தரசனுக்களித்தான். இப்படையுடன் வீரராசேந்திரன் தங்கை மகனான கீழைச் சாளுக்கிய முதற் குலோத்துங்கனும் சென்றிருந்தான். 1067இல் ஆகவமல்லன் இறந்தான். அவன் முதல் மகனான இரண்டாம் சோமேசுவரன் சாளுக்கியப் பேரரச னானான். அவன் தம்பி ஆறாம் விக்கிரமாதித்தன் அண்ணனின் ஆணை யாளனாகக் குந்தளநாட்டின் தென்பகுதியை ஆண்டு வந்தான். இருவர்க்கும் எதனாலோ முரண்பாடு உண்டானது. விக்கிர மாதித்தன் தம்பி சயசிம்மனும், கடம்ப மன்னன் இரண்டாஞ் சயகேசியும் விக்கிரமாதித்தன் பக்கம் இருந்தனர். சயகேசி காஞ்சி சென்று வீரராசேந்திரனுக்கும் விக்கிரமாதித்தனுக்கும் நட்புரிமை ஏற்படும்படி செய்தான். வீரராசேந்திரன் இரண்டாஞ் சோமேசுவரனைப் பொருது வென்று, சாளுக்கிய நாட்டின் தென்பகுதிக்கு விக்கிரமாதித்தனை அரசனாக்கிய தோடு, தன்மகளையும் அவனுக்கு மணஞ்செய்து கொடுத்தான். மிழலைக் கூற்றத்துப் பொன்பற்றி நகரின் சிற்றரசனான புத்தமித்திரன் செய்த வீரசோழியம் என்னும் நூல், இவ்வீரராசேந்திரன் பெயருடையதே. 6. அதிராசேந்திரன் (1070): இவன், வீரராசேந்திரன் மகன். இவன் அரியணை யேறிய சில தினங்களில் இறந்து விட்டான். இவனுடன் முடியுடை மூவேந்தருள் ஒருவராகிய சோழர் ஆட்சியும், தொன்று தொட்டு வந்த பழந்தமிழ்ச் சோழர் மரபும் முடிந்து விட்டன. இவன், தீராத நோயால் இறந்தனன் என்றும், தீராத நோயும் உள்நாட்டுக் குழப்பமும் இவனைக் கொன்று விட்டன என்றும், உள்நாட்டுக் குழப்பத்தால் கொல்லப்பட்டான் என்றும், ஆட்சியைக் கைப்பற்ற உள்நாட்டுக் குழப்பத்தை உண்டாக்கிக் கொன்று விட்டனர் என்றும் இன்னும் பலவாறு கூறுகின்றனர். இனி, ‘அதிராசேந்திரன் இறந்ததும், அவனுக்கு மகப்பேறின் மையாலும், சோழர் மரபில் வேறு அரச குமாரன் ஒருவனும் இல்லாமையாலும் சோணாடு அரசின்றி அல்லலுற்றது’ (டி. வி. எஸ். பாண்டாரத்தார் - பிற்காலச் சோழர் சரித்திரம், பாகம்-2. பக்கம்-5,6) என்பதும் பொருந்துவதாக இல்லை. முதல் இராசேந்திரன் மக்கள் நால்வருள்-முதல் இராசாதி ராசன் மக்கள் பெயர் குறிக்கப்படாவிடினும், அவன் மெய்க் கீர்த்தியில், “ தன்சிறிய தந்தை யுந்திருத் தமையனும் குறிகொள்தன் னிளங்கோக் களையு நெறியுணர் தன்றிருப் புதல்வர் தம்மையும்” எனக் குறிக்கப்பட்டுள்ளது. உடன் பிறந்தார்க்கும், தன் புதல் வர்க்கும் தான் வென்ற நாடுகளில் ஆட்சியுரிமை வழங்கி, அவர்கள் அந்நாடுகளை ஆண்டு வருமாறு செய்தான் என்கின்றது. இவன் தம்பி இரண்டாம் இராசேந்திரனுக்கு மக்கள்: இயற்பெயர் பட்டப்பெயர் 1. இராசராசேந்திரச் சோழன் - உத்தமச் சோழன் 2. முடி கொண்ட சோழன் - விசயாலயச் சோழன் 3. சோழகேரளன் - சோழகேரளன் 4. கடாரங்கொண்டசோழன் - சோழசனகராசன் 5. முடிகொண்டசோழன் - சுந்தரச் சோழன் 6. இரட்டபாடி கொண்ட சோழன் - சோழகன்னக்குச்சிராயன் என அறுவரும்; மதுராந்தகச்சோழன், நிருபேந்திரச் சோழன் எனப் பேரன்மார் இருவரும் இருந்தனர் என்கின்றது இவன் மெய்க்கீர்த்தி. இனி, வீரராசேந்திரனுக்கு - இயற்பெயர் பட்டப்பெயர் 1. மதுராந்தகன் - சோழேந்திரன் 2. கங்கை கொண்ட சோழன் - சோழபாண்டியன் என, இருபுதல்வர்கள் இருந்தனர் என்பது, இவன் கல்வெட்டால் பெறப்படுகிறது. எனவே, இரண்டாம் இராசேந்திரன் மக்கள் 6 பேர் “ பேரர் 2 பேர் வீரராசேந்திரன் மக்கள் 2 பேர் ஆகப் பத்துப் பேர். முதல் இராசாதிராசனுக்கு இரு மக்கள் எனினும், மொத்தம் 12 பேர்களாயினர். இராசாதிராசன் மெய்க்கீர்த்தியில், ‘புதல்வர்க்கும்’ என்பதால், இருவர் கட்டாயம் இருந்திருக்க வேண்டும். எனவே, வீரராசேந்திரன் மக்கள் இருவருள், அதிராசேந்திரன் போக, பதினொரு பேர் இருக்கின்றனர். அதிராசேந்திரன் அரியணையேறியபோது, அல்லது இறந்த போது, அத்தனை பேருமா இறந்து போயிருப்பர்? அதிராசேந் திரனுக்குப் பிள்ளையில்லாவிடினும், அவன் உடன் பிறந்தானுக் குமா பிள்ளையில்லாமல் இருந்திருக்கும்? இரண்டாம் இராசேந்திரன் மக்கள் இருவருக்கும் இருமக்கள் தாமா இருந்திருப்பர்? மேலும், இரண்டாம் இராசேந்திரனுக் கடுத்த இராசமகேந் திரனுக்கும் பிள்ளையில்லாமலா இருந்திருக்கும்? அல்லது சோழ மரபிலேயே ஒரு பிள்ளை கூட இல்லாமலா இருந்திருக்கும்? “இங்ஙனம் சோழநாடு அரசின்றி நிலைகுலைந் திருந்த செய்தியை வடபுலத்தில் போர்புரிந்துகொண்டிருந்த இராசேந் திரன் (குலோத்துங்கன்) அறிந்து, கங்கை கொண்ட சோழனு டைய மகள் வயிற்றுப் பேரன் என்னும் உரிமை பற்றி, அச்சோழ நாட்டு ஆட்சியைத் தான் அடையலாமென் றெண்ணிக் கங்கை கொண்ட சோழ புரத்திற்கு விரைந்து சென்றான்”. (டி.வி.எஸ். பண்டாரத்தார்-பி.சோ.சரித்திரம், பாகம்-2. பக். 7.) என்பதும் இங்கு நோக்கற் பாலது. 985-1070 காலப் பாண்டியர் முதல் இராசராசச் சோழன் (985-1014) காலத்திலிருந்து, வீரராசேந்திரன் (1063-1070) காலம் முடியப் பாண்டியர்கள், சோழர்கீழ்ச் சிற்றரசர்களாக இருந்து வந்தனர். அவர்கள்: 1. அமரபுயங்கன் 5. விக்கிரமபாண்டியன் 2. மானாபரணன் 6. வீரபாண்டியன் 3. வீரகேரளன் 7. சீவல்லப பாண்டியன் 4. சுந்தரபாண்டியன் 8. வீரகேசரி 1. இவன் முதல் இராசராசனால் வென்றடக்கப் பட்டான். 2. 3. முதல் இராசேந்திரனால் கொல்லப் பட்டனர். 4. தோற்றோடி ஒளிந்து கொண்டான். 5. இலங்கைக்கு ஓடி, இலங்கையின் ஒரு பகுதியை ஆண்டு கொண்டிருக்க, அங்கும் இராசாதிராசனால் வென்ற டக்கப் பட்டான். 6. இராசாதிராசனால் கொல்லப்பட்டான். 7. இரண்டாம் இராசேந்திரனுக்குத் திறை செலுத்திக் கொண்டு, பாண்டி நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். 8. வீரராசேந்திரனால் கொல்லப் பட்டான். நெடியோன் மரபு, இக்கொடுகிய நிலையை அடைந்து விட்டது பாவம்! 1070இல் அதிராசேந்திரன் இறந்ததும் சோழநாடு பெருங் குழப்பத்திற் குள்ளாகியது, பாண்டி நாட்டில் இருந்த சோழ பாண்டியரின் ஆட்சியும் அங்கு நடை பெறவில்லை. அதுகாலை பாண்டியர் சிலர் இழந்த நாட்டைக் கைப்பற்றி, 1081 வரை ஒருவாறு அமைதியாக ஆண்டு வந்தனர். 5. பிற்காலம் 1. சோழர் - பாண்டியர் - 1070 - 1218 சோழர்: 1. முதற்குலோத்துங்கன் 1070-1120 2. விக்கிரமன் 1118-1136 3. இரண்டாங்குலோத்துங்கன் 1133-1150 4. இரண்டாம் இராசராசன் 1146-1163 5. இரண்டாம் இராசாதிராசன் 1163-1178 6. மூன்றாங் குலோத்துங்கன் 1178-1218 பாண்டியர்: 1. ஐந்து பாண்டியர் 2. சடையவர்மன் குலசேகர பாண்டியன் 1162-1175 3. மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் 4. சடையவர்மன் வீரபாண்டியன் 1168-1180 5. மாறவர்மன் விக்கிரம பாண்டியன் 1180-1190 6. முதல் சடையவர்மன் குலசேகர பாண்டியன் 1190-1218 மே.சாளுக்கியர்:6. இரண்டாஞ்சோமேசுவரன் 1067-1076 7. ஆறாம் விக்கிரமாதித்தன் 1068-1126 8. மூன்றாஞ் சயசிங்கன் ஒய்சளர்: 2. எரியங்கன் 1075-1080 4. பிட்டிதேவன் 1104-1141 கொங்குச்: 1. குலோத்துங்கன் 1148-1183 சோழன் : சேரன் : 1. வீரரவிவர்மன் இலங்கை: 16. முதலாம் விசயபாகு 17. முதலாம் பராக்கிரமபாகு 18. சீவல்லபன் 19. இரண்டாம் விக்கிரமபாகு தெலுங்கச் 1. வெதுரா சோழர்: 2. முதலாங் கொங்கன் மகன் சோடன் 3. நல்ல சித்தன தேவன் கடம்பன் : இரண்டாஞ் சயகேசி நுளம்ப பாண்டியன்: திரிபுவன மல்லன் யாதவன் : இரண்டாஞ் சேவுணன் வேங்கி : நம்பய்யன் காகதீயன் : கணபதி தென்கலிங்கன்: வீமன் வடகலிங்கன் : அனந்தவர்மன் 1. முதற்குலோத்துங்கன் (1070-1120): இவன், கீழைச்சாளுக்கிய இராசராசநரேந்திரன் மகன்; தாய்-முதல் இராசேந்திரன் மகள் அம்மங்கதேவி. கீழைச் சாளுக்கிய மன்ன னாகிய இவன், சோழநாட்டு ஆட்சியைக் கைப்பற்றிய தன் காரணம் விளக்கமில்லாத நிலையில் உள்ளது. தன் தாய்மா மனான இரண்டாம் இராசேந்திரன் மகள் மதுராந்த கியை இவன் மணந்து கொண்டான். (எனது ‘பூவாமுல்லை’ எனும் நூலில் ‘போலிச் சோழர்’ என்பது பார்க்க) குலோத்துங்கன் முதலிய எண்மரும், தமிழர் அல்லாமை யோடு சோழரும் அன்மையால், இவர்களைச் சோழர் எனல் பொருத்தமுடையதாக இல்லை. பாண்டி நாட்டை ஆண்ட சோழர் - சோழபாண்டியர் எனப் பட்டாற்போல, இவர்களைச் சாளுக்கியச் சோழர் என்பதே பொருத்தமுடைய தாகும். வடக்கே வேங்கி நாடு குலோத்துங்கன் ஆட்சியில் இருந்த மையால், துங்கபத்திரைக்கு வடபாலுள்ள குந்தள நாட்டு மேலைச் சாளுக்கியர் சோழநாட்டின்மேல் எளிதில் படை யெடுக்க இயலவில்லை. சக்கர கோட்டப் போர்: குலோத்துங்கன் வேங்கி இளவர சனாக இருந்தபோது, சக்கர கோட்டத்தை ஆண்ட தாரா வருடனை வென்று, அந்நாட்டு வயிராகரம் என்ற நகரிலிருந்த எண்ணிறந்த யானைகளைக் கைப்பற்றினான். (சக்கர கோட்டம் பற்றி, முதல் இராசேந்திரன் வரலாற்றில் காண்க). சா. போர்: குலோத்துங்கன் காலத்தே, குந்தள நாட்டின் தென்பகுதியை மேலைச்சாளுக்கிய ஆறாம் விக்கிரமாதித்தனும், வடபகுதியை அவன் அண்ணன் இரண்டாஞ் சோமேசுவரனும் ஆண்டு வந்தனர். குலோத்துங்கன் சோழ நாட்டு மன்னனாக முடி சூட்டிக் கொண்டதை அறிந்த விக்கிரமாதித்தன், சோழநாடும் வேங்கிநாடும் ஓராட்சியின் கீழ் இருப்பது தனக்கு இடுக்கன் தருமென எண்ணித் தன் படையைப் பெருக்கி வந்தான். அதை யறிந்த குலோத்துங்கன், இரண்டாஞ் சோமேசு வரனைத் தன்பாற் சேர்த்துக் கொண்டான். விக்கிரமாதித்தன் பக்கம் - அவன் தம்பி மூன்றாஞ் சயசிங்கன், ஒய்சள மன்னன் எரியங்கன், கடம்ப மன்னன் இரண்டாஞ்சயகேசி, நுளம்ப பாண்டியன் திரிபுவன மல்லன், தேவகிரி இரண்டாஞ் சேவுணன் ஆகியோர் இருந்தனர். 1075இல், விக்கிரமாதித்தன் படை சோழநாட்டை நோக்கி வந்தது. குலோத்துங்கன் படை வடக்கு நோக்கிச் சென்றது. மைசூர் நாட்டில் இருபடையும் கைகலந்தன. இப்போரில் இரண்டாஞ் சோமேசுவரன் தன் தம்பியால் சிறைபிடிக்கப் பட்டான். போர் தொடர்ந்து நடந்தது. கோலார் மாவட்டத்தில் உள்ள நங்கிலி என்னும் இடத்தில் நடந்த போரில் குலோத்துங்கன் வெற்றி பெற்று, விக்கிரமாதித்தனைத் துங்க பத்திரை ஆற்றுக்கப்பால் துரத்திச் சென்றனன். துரத்திச் சென்றவன், இடையிலுள்ள மணலூர், அளத்தி முதலான இடங்களில் நடந்த போரிலும் விக்கிரமாதித்தனைப் புறங்கண்டனன்; மைசூர் நாட்டு நவிலை யில் சாளுக்கியத் தண்டநாயகரால் பாதுகாக்கப்பெற்ற ஆயிரம் யானைகளையுங் கவர்ந்தனன். துங்கபத்திரைக்கரையில் நடந்த போரில் விக்கிரமாதித்தனும் அவன் தம்பியும் தோற்றோடினர். இவ்வெற்றியால், கங்க மண்டலமும் கொண்கானமும் குலோத்துங்கனுக் குரியவாயின. வெற்றி பெற்ற குலோத் துங்கன், எண்ணிறந்த யானைகளையும் பொருட்குவியல்களையும் பெண்டிர்களையுங் கைப்பற்றிக் கொண்டு, கங்கை கொண்ட சோழபுரத்தை அடைந்தான். பாண்டிப்போர்: முதற் பராந்தகன் (907-953) முதல், முதல் இராசராசன் (985-1014) ஈறாக ஆண்ட சோழ ராட்சிக் காலத்தில், பாண்டியர் தம் நிலைகுலைந்து, சோழர் கீழ்ச் சிற்றரசர்களாய் இருந்து வந்தனர். அவர்கள் அந்நிலை யினின்றும் நீங்க முயன்று அடிக்கடி சோழருடன் முரண்பட்டு வந்தனர். அதனால், சோழ மன்னர்கள் அடிக்கடி பாண்டி நாட்டின்மேற் படையெடுக்க வேண்டியதாயிற்று. அதனால் உண்டாகும் இன்னல்களை யுணர்ந்த கங்கை கொண்ட சோழன், தன் புதல்வருள் ஒருவனைத் தன் ஆணையாளனாக மதுரையிலிருந்து ஆளும்படி செய்தான். 1070 இல் அதிராசேந்திரன் இறந்ததும் சோழ நாட்டில் உண்டான குழப்பத்தால், மதுரையிலிருந்தாண்ட சோழ பாண்டியர் ஆட்சி ஒழிந்தது. பாண்டியர் ஐவர், பாண்டி நாட்டை ஐந்து பகுதி யாகப் பிரித்துத் தன்னுரிமையுடன் ஆண்டுவந்தனர். 1081 இல் குலோத்துங்கன் பாண்டி நாட்டின் மேற் படை யெடுத்துச் சென்று, அப்பாண்டியர் ஐவரையும் வென்றடக்கித் திறைதருமாறு செய்து மீண்டான். மதுரையிலிருந் தாண்ட சோழபாண்டியரே சேர நாட்டையும் ஆண்டு வந்தனர். சோழபாண்டியர் ஆட்சி ஒழிந்ததும், சேரரும் பாண்டியர் போலவே தன்னுரிமை எய்தினர். பாண்டியரை வென்றடக்கிய அதே ஆண்டின் (1081) இறுதியில், குலோத்துங் கன் சேரநாட்டின்மேற் படையெடுத்துச் சென்று, திருவாங் கூருக்குத் தெற்கே 10 கல் அளவில் மேலைக் கடற்கரையில் உள்ள விழிஞத்திலும், திருவனந்த புரத்தைச் சார்ந்த காந்தளூரிலும், குமரிமுனைக்கு 10 கல் வடக்கிலுள்ள கோட்டாற்றிலும் நடந்த போரில் சேரரை வென்றடக்கித் திறைதருமாறு செய்து, சேர நாட்டிலும் பாண்டிநாட்டிலும் தக்க நிலைப்படைகளை வைத்து மீண்டான். தென்கலிங்கப்போர்: கோதாவரியாற்றுக்கும் மகேந்திர கிரிக்கும் இடையில் கீழ்கடலைச் சார்ந்திருந்தது தென் கலிங்க நாடு. அதை வேங்கி நாட்டுக் குட்பட்ட குறுநில மன்னர் ஆண்டு வந்தனர். வேங்கியைக் குலோத்துங்கனின் நான்காம் புதல்வனான விக்கிரமன் ஆணையாளனாக இருந்து ஆண்டு வந்தான். அவனை இளைஞனென்றெண்ணித் தென்கலிங்க மன்னனான வீமன் கலகஞ் செய்தான். விக்கிரமன், 1096இல் பெரும்படை யொடு சென்று வீமனை வென்றடக்கினான். இப்போரில், பாண்டியன் சடையவர்மன் பராந்தகனும் சோழர் படைத்துணை யாகச் சென்றிருந்தான். 1081 இல் நடந்த சேரநாட்டுப் போரிலும் இவன் குலோத்துங்கனுக்குத் துணையானான். வடகலிங்கப்போர்: வடகலிங்க மன்னனான அனந்தவர்மன் என்பான் இருமுறை திறை தராமையால், குலோத்துங்கன் 1112 இல் கருணாகரத் தொண்டைமான் என்ற படைத்தலைவன் தலைமையில் பெரும்படையொன்றை அனுப்பினான். கருணா கரன் கலிங்கஞ் சென்று, அனந்தவர்மனை வென்று சிறைப்படுத்தி, நூற்றுக்கணக்கான யானை குதிரை ஒட்டகங்கள், பொன்மணிக் குவை இவற்றுடன், அவன் மகளிரையுங் கொண்டு மீண்டான். இப்போர் வெற்றி பற்றியதே, செயங் கொண்டார் - கலிங்கத்துப் பரணி. இலங்கை: 1058 முதல், 1073 வரை உரோகணத்தையாண்ட முதலாம் விசயபாகு என்பான், 1072 இல் இலங்கையிலிருந்த சோழப் படையை வென்று இலங்கை முழுமைக்கும் அரசனானான். சோழநாட்டிலிருந்து சென்ற படையும் பொலனருவா, அநுராத புரம் ஆகிய இடங்களில் நடந்த போரில் தோற்றது. குலோத்துங்கன் இலங்கையை இழந்து விட்டான். விசயவாகு 1114 வரை இலங்கை முழுவதும் ஆண்டான். கங்கவாடி: தகடூர் அதியமான்மரபினர், சோழர் ஆணையாள ராகக் கங்கவாடியையும் ஆண்டு வந்தனர். ஒய்சள மன்னன் பிட்டிதேவன் (1104-1141) தண்டநாயகன் கங்கராசன் என்பான், 1116இல் அதியனை வென்று கங்கவாடியைக் கைப்பற்றிக் கொண்டான். முதல் இராசராசன் (985-1014) காலமுதல் சோழ ராட்சிக் குட்பட்டிருந்த கங்கவாடியையுங் குலோத்துங்கன் இழந்து விட்டான். வேங்கிநாடு: குலோத்துங்கன் சிறியதந்தையான ஏழாம் விசயாதித்தன் 1062 முதல் 1077 வரை வேங்கி நாட்டை ஆண்டு வந்தான். விசயாதித்தன் மகன் சத்திவர்மன் 1063லேயே இறந்து விட்டதால், சோழ நாட்டின் வடக்கு அரணாக இருந்த வேங்கி நாட்டிற்குத் தன் புதல்வர்கள் எழுவருள் ஒருவனான இராசராச மும்முடிச் சோழனை ஆணையாள னாக்கினான். அவன் ஓராண்டில் திரும்பி விட்டான். பின், அவன் தம்பி வீரசோழனை ஆணையாளனாக்கினான் (1078-1084), பின், அவனை வர வழைத்துக் கொண்டு, தன் முதல் மகனான இராசராசச் சோழ கங்கனை அனுப்பினான். அவன், 1084-1089 வரை ஆண்டான். மீண்டும் 1089இல் வீரசோழனை அனுப்பினான். அவன் 1093 வரை ஆண்டான். அப்போது அவன், நுளம்பவாடிப் பாண்டிய னோடு போர் செய்ய நேர்ந்தது. அப்போரில் உதவிய இரண்டாம் வெதுரா(வெலநாண்டு அரசகுமாரன்) என்பானுக்கு, கிருஷ்ணை கோதாவரி யாறுகட் கிடைப்பட்ட நிலத்தை(சிந்துயுக் மாந்தர தேசம்) வழங்கினான். 1098 இல் வீரசோழனுக்குப் பதில் விக்கிர மனை அனுப்பினான். அவன் 1118 வரை ஆண்டான். அப்போது தான் அவன், தென் கலிங்க வீமனை வென்றது. குலோத்துங்கன் முதுமை எய்தியதும் விக்கிரமனை அழைத்து 1118 இல் இளவரசுப் பட்டம் கட்டினான். பின்னர் வேங்கி நாட்டை, வெலநாண்டுத் தலைவனான முதலாங் கொங்கன் மகனான சோடன் என்பானுக்குக் கொடுத்து ஆளும் படி செய்தான். (இவன் தெலுங்கச் சோழன்). இதை யறிந்த சாளுக்கிய ஆறாம் விக்கிரமாதித்தன் வேங்கி நாட்டைக் கைப்பற்றி, அத்தெலுங்கச் சோழனைச் சிற்றரசனாக்கினான். 1118இல் வேங்கி நாடும் குலோத்துங்கன் ஆட்சியினின்று நீங்கி விட்டது. குலோத்துங்கன்-சீனம், கடாரம், காம்போசம் முதலிய நாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தான்; நாட்டில் சுங்கவரியை நீக்கினான். 2. விக்கிரமச் சோழன் (1118 - 1136): இவன், முதற் குலோத்துங்கன் மகன். 1118 இல் இளவரசுப் பட்டங்கட்டப் பெற்றவன். 1126இல் சாளுக்கிய ஆறாம் விக்கிரமாதித்தன் இறந்ததும், விக்கிரமன் வேங்கி நாட்டை மீட்டு, நம்பய்யன் என்பானைத் தன்கீழ் ஆளும்படி செய்தான். கங்கவாடியையும் இவன் கைப்பற்றினான். இவன் அவைக்களப் புலவராகிய ஒட்டக் கூத்தர், இவன் மகன் இரண்டாங் குலோத்துங்கன், அவன் மகன் இரண்டாம் இராசராசன் ஆகிய மூவர் காலத்தும் இருந்தார். இம் மூவர் மீதும் கூத்தர் பாடியதே மூவருலா, 3. இரண்டாங்குலோத்துங்கன் (1133-1150): இவன், விக்கிரமன் மகன். 1133இல் இளவரசுப் பட்டம் கட்டப் பெற்றவன். இவன் முறுகிய சைவப் பற்றுடையவன். இரண்டாம் நந்திவர்மப் பல்லவனால் (710-775) தில்லையம்பல முன்றிலில் நிறுவப் பெற்ற திருமால் உருவத்தை இவன் கடலில் போட்டு விட்டு, தில்லைக்கோயில் திருப்பணி செய்தான். புகழேந்தி, தண்டி யலங்கார ஆசிரியர்-தண்டி முதலிய புலவர்களும் இவன் அவையில் இருந்தனர். இவன் அமைச்சராகத்தான் சேக்கிழார் இருந்தனர். 4. இரண்டாம் இராசராசன் (1146-1168): இவன், இரண்டாங் குலோத்துங்கன் மகன். 1146இல் இளவரசுப் பட்டங்கட்டப் பெற்றவன், திறைதர மறுத்த பாண்டியனையும் சேரனையும் இவன் வென்றடக்கினான். வேங்கி நாடும் கங்க நாடும் இவன் ஆட்சிக்குட் பட்டிருந்தனவாக அந்நாடுகளில் உள்ள கல்வெட்டுக்களால் தெரிகிறது. 1081 முதல் 1162 வரை, சோழர் கீழ்ச் சிற்றரசர்களாய்ப் பாண்டி நாட்டில் இருந்த பாண்டிய மன்னர்கள்: 1. சடையவர்மன் சீவல்லபன் 2. மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் 3. சடையவர்மன் பராந்தக பாண்டியன் 4. மாறவர்மன் சீவல்லபன் (1182-1162) 1,2 இவர்கள் முதற்குலோத்துங்கன் (1070-1120) காலத்தில் இருந்தவர். 3. இவன், முதற்குலோத்துங்கன் ஆட்சியின் பிற்பகுதியிலும், அவன் மகன் விக்கிரமச் சோழன் (1118-1136) ஆட்சியின் முற்பகுதியிலும் இருந்தவன். அவ்விருவரும் செய்த போர்கள் பலவற்றிலும் துணையானவன். 4. இவன், தென்பாண்டி நாட்டை ஆண்டவன். திருவாங்கூர் நாட்டை ஆண்ட வீரரவிவர்மன் இவனுக்குத் திறை செலுத்தி வந்தான். இதனால் இவன் ஒருவாறு தனியுரிமை யெய்தினன் என்பது பெறப்படும். 5. இரண்டாம் இராசாதிராசன் (1163-1178): இவன், இரண்டாம் இராசராசன் தாயத்தாருள் ஒருவனான நெறியுடைப் பெருமாள் மகனான எதிரிலிப் பெருமான் என்னும் பெயரு டையவன். இரண்டாம் இராசராசன் இறுதிக்காலத்தில் நோய் வாய்ப்பட்டிருந்தமையாலும், தன் மக்களிருவரும் ஈராண்டும் ஓராண்டும் நிரம்பிய குழந்தைகளாக இருந்தமை யாலும், இவனுக்கு இளவரசுப் பட்டங்கட்டினான். பட்டம் பெற்றபின் இவன், இராசராசன் என்ற பட்டப் பெயர் பூண்டான். பாண்டிய-சோழ-ஈழப்போர்: மாறவர்மன் பராக்கிரமபாண்டியன் என்பான், மதுரையி லிருந்து பாண்டி நாட்டின் வடபகுதியை ஆண்டுவந்தான். மாறவர்மன் சீவல்லபன் (1132-1162) மகனான சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1162-1175) திருநெல்வேலியிலிருந்து பாண்டி நாட்டின் தென் பகுதியை ஆண்டுவந்தான். தாயத் தாரான இவ்விருவர்க்கும் பாண்டிநாடு முழுமையும் ஆளும் உரிமை பற்றிப்பகை உண்டானது. குலசேகர பாண்டியன் மதுரையை முற்றுகையிட்டான். பராக்கிரம பாண்டியன், இலங்கை அரசனான முதலாம் பராக்கிரம பாகுவை உதவுமாறு வேண்டினான். இலங்கை மன்னன், இலங்காபுரி என்பான் தலைமையில் பெரும்படை யொன்றை அனுப்பினான். அவ்வீழப்படை மதுரையை அடையுமுன், குலசேகரன் பராக்கிரம பாண்டி யனை யும் அவன் மனைவி மக்களையும் கொன்று மதுரையைக் கைப்பற்றி ஆளலானான். இந்நிகழ்ச்சியை அறிந்த இலங்காபுரி கடுஞ்சினங் கொண்டு, மதுரையை நோக்கி வந்தான். குலசே கரனுக்கும் இலங்காபுரிக்கும் பல இடங்களில் போர் நடந்தது. முடிவில் இலங்காபுரி வெற்றி பெற்றான். அதன்பின் குலசேகரன், கொங்குநாட்டை யாண்ட கொங்குச் சோழனான தன்மாமன் குலோத்துங்கன் (1148-1183) படையை யையும், சிதறிக்கிடந்த பராக்கிரம பாண்டியன் படையையும், தன்படையையும் ஒருங்கு சேர்த்து இலங்காபுரியை எதிர்த்தான். இப்போரிலும் இலங்காபுரியே வெற்றி பெற்று மதுரையைக் கைப்பற்றி, சேர நாட்டில் ஒளிந்து கொண்டிருந்த கொலை யுண்ட பராக்கிரம பாண்டியன் கடைசி மகனான வீரபாண்டியனை வரவழைத்துப் பாண்டி நாட்டை ஆளும்படி செய்தான். குலசேகரன் மறுபடியும் படைதிரட்டி, இலங்கைப் படையை வென்று, வீரபாண்டியனை மதுரையை விட்டுத்துரத் தினான். கொங்கு வீரரின் தீரமே இவ்வெற்றிக்குக் காரண மென லாம். அது கண்ட இலாங்காபுரி, இலங்கையிலிருந்து ஒரு பெரும் படையை வரவழைத்துக் குலசேகரனை வென்று, மீண்டும் வீரபாண்டியனை அரியணையேற்றினான். இவ்வாறு இலங்கையர்பால் பன்முறை தோல்வியுற்ற குலசேகரன், 1167இன் இறுதியில், இரண்டாம் இராசாதிராசச் சோழனின் உதவியை வேண்டினான். சோழன், பகைவராகிய இலங்கையரை அடக்கற் கேற்ற வாய்ப்பினை எண்ணி, சிற்றம் பல முடையான் பெருமானம்பிப் பல்லவராயன் என்பான் தலைமையில் பெரும்படை யொன்றை அனுப்பினான். அச்சோழப் படைக்கும் ஈழப்படைக்கும்-தொண்டி, பாசிப் பட்டினம் முதலான இடங்களில் பெரும் போர்கள் நடந்தன. இப்போர் களில் சோழப்படை தோற்றது. பின்னர் நடந்த போர்களில் சிற்றம்பல முடையான் சிங்களப் படையைத் தோற்றோடும் படி செய்ததோடு இலங்காபுரி, சகத்விசயன் ஆகிய இலங்கைப் படைத் தலைவர் இருவரையும் கொன்று, அவர்கள் தலைகளை மதுரைக் கோட்டை வாயிலில் பலருங்காணும்படி தொங்க விட்டான்; குலசேகரனை மதுரை யிலிருந்தாளும்படி செய்தான். சில ஆண்டுகள் அமைதியாக ஆட்சி நடந்தது. இலங்கை மன்னனான பராக்கிரமபாகு, இராசாதி ராசனை வென்று, பாண்டி நாட்டில் தன் செல்வாக்கை நிலைநாட்ட எண்ணிப் பெரும் படை திரட்டலானான். அதை யறிந்த சோழ அமைச்சனான வேதவன முடையான் அம்மையப்பனான அண்ணன் பல்லவராயன் என்பான், பராக்கிரமபாகு வோடு பகை கொண்டு வந்து சோழநாட்டில் தங்கி யிருந்த - பராக்கிரம பாகுவின் உடன் பிறந்தாள் (மித்தா x மானாபரணன்) மகனான சீவல்லபன் என்பானுக்கு ஆற்றல் வாய்ந்த பெரும் படையுதவி, ஈழத்தின் மீது படையெடுக்கும்படி செய்தான். ஈழஞ்சென்ற அச்சோழப்படை-ஊராத்துறை, வல்லி காமம், மட்டவாழ், புலைச்சேரி, மாந்தோட்டம் முதலிய ஊர்களை அழித்து, அவ்வூர்களிலிருந்த யானைகளைக் கைப் பற்றிச் சில சிங்களத் தலைவர்களைக் கொன்று, எஞ்சியோரைச் சிறைப்படுத்திக் கொண்டு சோழநாடு திரும்பியது. அது கண்ட பராக்கிரமபாகு, குலசேகரபாண்டியனை நண்பனாக்கிக் கொள்வது நலமென்று எண்ணி, அவனுக்குச் சில பரிசுகள் அனுப்பினான். குலசேகரன் சோழ மன்னன் தனக்குச் செய்த உதவியை மறந்து, அப்பரிசுகளை ஏற்று, பராக்கிரம பாகுவுடன் நட்பும் மணத்தொடர்புங் கொண்டதோடு, மதுரைக் கோட்டை வாயிலில் இருந்த இலங்கைப் படைத் தலைவர் களின் தலைகளையும் அப்புறப்படுத்தி விட்டான்; மேலும், சோழ வேந்தன் பால் அன்புடையவர்களான பாண்டிநாட்டுத் தலைவர்கள் சிலரைப் பாண்டி நாட்டை விட்டுப் போகும்படி செய்தான். இதையறிந்த இராசாதிராசன், குலசேகரனை அரியணை யினின் றகற்றி, பாராக்கிரம பாண்டியன் மகன் வீர பாண்டி யனை அரியணையேற்றுமாறு, அண்ணன் பல்லவராயனுக்கு ஆணை யிட்டான். அவன் அவ்வாறே செய்தான். 1175 முதல் 1180 வரை வீரபாண்டியன் ஆண்டு வந்தான். இராசாதிராசன் உதவியால், 1168இல் பாண்டி நாட்டைப் பெற்று ஆண்டு வந்த குலசேகரன், தன் தகாத செயலால், 1175இல் அதனை இழந்தான். இராசதிராசன் புதிதாகச் சோழப் பேரரசனானவனாகை யால், இவனுக்குக் குறுநில ம்ன்னர்களின் ஆதரவும், அதிகாரி களின் அன்பும் இன்றியமையாதனவாயிருந்தன. அதுபற்றி அன்னார்பால் அவன் தாராள மனப்பான்மையுடன் நடந்து வந்தான். அவர்கள் அதனையே வாய்ப்பாகக் கொண்டு, தங்கள் அதிகாரங்களை அங்கங்கே நிலையுடையதாகச் செய்து கொண்டனர். அதுவே, இச் சோழ மன்னரின் வீழ்ச்சிக்குக் காரண மாக அமைந்தது. 6. மூன்றாங்குலோத்துங்கன் (1178-1218): இவன், இரண்டாம் இராசராசன் மகன்; தன் தந்தை இறந்தபோது இரண்டாண்டுச் சிறுவனாக இருந்தவன். இவன் தொடர்ந்து அப்பாண்டிய ஈழப்போரை நடத்தி ஒரு முடிவு கண்டான். முன் (1175) அரசிழந்த குலசேகர பாண்டியனுக்கு-விக்கிரமபாண்டியன் என்ற மகனொருவன் இருந்தான். இம் மூன்றாங் குலோத்துங்கன் பட்டம் பெற்றவுடன் அவன் இவன் பால் அடைக்கலம் புகுந்து, தன் தந்தை இழந்த நாட்டைத் தான் அடைய உதவுமாறு வேண்டினான். அதுகாலை பாண்டி நாட்டை ஆண்டு கொண்டிருந்த வீரபாண்டியனும், இராசாதிராசன் தனக்குச் செய்த நன்றியை மறந்து, இலங்கை அரசனோடு சேர்ந்து கொண்டு, சோழனோடு முரண்பட்ட நிலையில் இருந்து வந்தான். ஆகவே, மூன்றாங் குலோத்துங்கன் பாண்டி நாட்டின் மேற்படையெடுத்துச் சென்று, வீர பாண்டியனை வென்று துரத்திவிட்டு, விக்கிரம பாண்டியனை அரசனாக்கினான். 1180இல் நாட்டை இழந்த வீரபாண்டியன், மலைநாடு சென்று சேரமன்னனின் உதவி பெற்று, மதுரை மீது படையெடுத் தான். இதையறிந்த குலோத்துங்கன் பெரும் படையொடு சென்று, வீரபாண்டியனை வென்று, பாண்டியர்க்கு வழிவழியாக உள்ள முடியைக் கைப்பற்றியதோடு, வீரபாண்டியன் பட்டத்தரசி யையும் சிறை பிடித்து வந்து வேளம் ஏற்றினான். (வேளம்-அரசியரின் பணிப்பெண்கள் படை; அந்தப்புரப் பாதுகாப்புப் படையுமாம்) மானக்கேடடைந்த வீரபாண்டியன், தன் உரிமைச் சுற்றத்துடன் சேரமன்னன்பால் அடைக்கலம் புகுந்தான். வீரபாண்டியனுக் குதவினமை பற்றிச் சோழ மன்னன் ஏதேனும் தீங்கிழைக்கக் கூடுமென் றஞ்சிய சேரமன்னன் வீரபாண்டி யனையும் அவன் மக்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சோணாடு சென்று, குலோத்துங்கன்பால் புகலடைந்தான். குலோத்துங்கன் அவர்களை அன்புடன் ஏற்று, வீரபாண்டி யனுக்குப் பாண்டி நாட்டின் ஒரு பகுதியையும் தான் கைப்பற்றிய பாண்டியர் முடியையும் அளித்தான்; அவன் புதல்வர்களான-வீரகேரளனுக்கும், பருதிகுலபதிக்கும் தன் பக்கத்திலிருந் துண்ணும் சிறப்பினை அளித்தான். ஈழப்போர் : இலங்கை மன்னன் இரண்டாம் விக்கிரம பாகு வீரபாண்டியனுக்குப் படைத்துணை செய்ததால், குலோத்துங்கன் இலங்கை மீது படையெடுத்துச் சென்று, அவனை வென்றடிப் படுத்து மீண்டான். கொங்குப் போர்: இரண்டாம் இராசாதிராசன் ஆட்சிக் காலத்தே, கொங்குநாட்டை ஆண்ட கொங்குச் சோழன் தன்னுரிமை எய்தியதால், இவன் காலத்துக் கொங்குச் சோழனான வீரசோழன் (1183-1206) திறை தர மறுத்தான். எனவே, 1094 இல் குலோத்துங்கன் கொங்கு நாட்டின் மேற் படையெடுத்துச் சென்று, தென் கொங்கின் சிறந்த நகரான கரூரைக்கைப்பற்றி வீரசோழனைத் திறை தருமாறு செய்து மீண்டான். தெலுங்கச் சோழன்: குலோத்துங்கன் பாண்டி நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்தபோது, (1092)இல் கடப்பை மாவட்டத்து மகாராசபாடி நாட்டை, வல்லூரபுரத்திலிருந் தாண்டுவந்த புசபல வீர நல்ல சித்தனதேவ சோழமகாராசன் என்ற தெலுங்கச் சோழன் தன்னுரிமை எய்திச் சில ஆண்டுகள் திறை தராததோடு காஞ்சியையும் கைப்பற்றியிருந்தான். எனவே, குலோத்துங்கன் 1096இல் ஆந்திர நாட்டின் மேற் படையெடுத்துச் சென்று, நல்ல சித்தன தேவனை வென்றடிப்படுத்தான். காகதீய கணபதி: 1199இல் பட்டம் பெற்ற ஓரங்கல் மன்ன னாகிய காகதீய கணபதி என்பான், அப்பகுதியிலிருந்த வேங்கி, பொத்தப்பி முதலான நாடுகளைப் பிடித்தாண்ட தோடு, சோழ நாட்டுப் பகுதியையுங் கைப்பற்ற முயன்றான். இதையறிந்த குலோத்துங்கன் வடக்கே படையெடுத்துச் சென்று அவனை வென்று துரத்தி மீண்டான். பாண்டிப் போர்-3: குலோத்துங்கன் பேருதவியினால் அரசெய்திய (1180) விக்கிரம பாண்டியன் 1190 இல் இறந்தான். அவன் மகன் முதல் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190-1218) பாண்டிநாடு முழுவதையும் ஆண்டு வந்தான். குலசேகரன் தன் பகைவர்களோடு சேர்ந்து தன்னோடு முரண் படுவது கண்ட குலோத்துங்கன், பாண்டி நாட்டின் மேற் படை யெடுத்தான். மட்டியூர், கழிக்கோட்டை என்ற இடங்களில் நடந்த போரில் பாண்டியன் புறங்காட்டி ஓடினான். குலோத் துங்கன் தன் படையுடன் மதுரை நகருட் புகுந்து, அரண் மனையின் அழகிய சில மண்டபங்களை இடித்துப் பாழ் படுத்தினான்; பின், சோழபாண்டியன் எனப்பட்டம் புனைந்து வீரமுடி சூட்டிக் கொண்டான்; பாண்டி நாட்டிற்கு-சோழ பாண்டிய மண்டலம் எனவும், மதுரைக்கு-முடித்தலை கொண்ட சோழபுரம் எனவும் பெயரிட்டான்; பின்னர், திரிபுவன வீரதேவன் எனப்பட்டம் சூட்டிக் கொண்டான். சில ஆண்டுகட்குப் பிறகு, பாண்டி நாட்டைக் குலசேகரனுக்கே தந்து திறை தரும்படி செய்தான். இவன், தன் காலத்தைப் பெரும்பாலும் போரிலேயே கழித்தான். இக்காலப்பகுதிப் பாண்டியர்களால் பாண்டிநாடு பட்டபாட்டை உன்னுக. ஈசுவரசிவனார் என்பார், குலோத்துங்கனின் அரசகுரு ஆவர். கம்பர்-இவன் அவைக்களப் புலவராவர். கொங்கு நாட்டுக் களந்தை வச்சணந்தி முனிவர். குணவீர பண்டிதர், பவணந்தி முனிவர் ஆகியோர்-இவன் காலத்துப் புலவர்களாவர். பாரதத்தைத் தமிழில் மொழி பெயர்த்த அரும்பாக்கத்து அருணிலை விசாகன் என்னும் புலவரும் இவன் காலத்தவரே. எனவே, பாரதம், இராமாயணம் இரண்டையும் இவன் தமிழில் பாடுவித்தவன் ஆவன். 2. பாண்டியர் - சோழர் - 1216 - 1310 பாண்டியர்: 1. முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் 1216-1238 2. இரண்டாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் 1238- 3. இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் 1239-1251 4. முதல்சடையவர்மன் சுந்தரபாண்டியன் 1251-1271 5. முதல் மாறவர்மன் குலசேகரபாண்டியன் 1268-1310 சோழர்: 7. மூன்றாம் இராசராசன் 1216-1256 8. மூன்றாம் இராசேந்திரன் 1256-1279 ஒய்சளர்: 7. இரண்டாம் வீரநரசிம்மன் 1220-1233 8. வீரசோமேசுவரன் 1234-1264 கொங்குச்சோழர்: 8. வீரராசேந்திரன் 1206-1255 9. இரண்டாம் விக்கிரமன் 1255-1263 சேரன்: 1. வீரரவி உதயமார்த்தாண்டன் இலங்கை: 20. முன்றாம் பராக்கிரம பாகு வாணகோவரையன் சேதிராயன் கோப்பெருஞ்சிங்கன் காடவராயன் சம்புவராயன் கண்டகோபாலன் 7. மூன்றாம் இராசராசன் (1216-1256): இவன், மூன்றாம் குலோத்துங்கன் மகன். இவன் காலத்தே, சோழ நாட்டுக்கு வட மேற்கே ஒய்சாளரும், தெற்கே பாண்டியரும் வல்லரசு களாகித் தம் பேரரசை நிறுவுவதற்குப் பெரிதும் முயன்று வெற்றியும் பெற்று வந்தனர். அவ்விரு பேரரசும் ஒருவர்க் கொருவர் முரண் பட்டு நின்றமையால்தான், சோழநாடு அவர்களால் கவர்ந்து கொள்ளப்படாமல் நிலை பெற்றிருந்தது எனலாம். சோழ நாட்டுக்கு வடக்கே நெல்லூர்ப் பக்கத்தில் ஆண்ட தெலுங்கச் சோழர், தமக்கு வடக்கே இருந்த காகதீயரை உறவினராகக் கொண்டு வலிமை யெய்தி வந்தனர். மகத நாட்டு வாணகோவரையர், திருமுனைப்பாடி நாட்டுக் காடவராயர் முதலான குறுநில மன்னர்களும் இராசராசனோடு பகை கொண்டு உள்நாட்டில் குழப்பம்செய்து தனியரசராக முயன்று வந்தனர். எனவே, இவன் அமைதியின்றி அரசாண்டு வந்தான். மகதநாடு என்பது-சேலமாவட்டத்து ஆற்றூர் வட்டத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள ஆறகழூரைத் தலைநகராகக் கொண்ட அதன் கீழ்ப்பகுதியாகும். திருமுனைப்பாடி நாடு என்பது-மகத நாட்டை அடுத்துக் கிழக்கில் உள்ள பகுதி; பெரும்பாலும் தென்னார்க்காடு மாவட்டமாகும். மூன்றாம் இராசராசன் பட்டம்பெற்ற அதே ஆண்டில்-1216இல், முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியனும் பட்டம் பெற்றான் (1216-1238). இவன் ஒரு பெருவீரன்; முதல் சடைய வர்மன் குலசேகரபாண்டியன் தம்பி. மூன்றாம் குலாத்துங்கச் சோழனால் தன் அண்ணன் காலப் பாண்டிய அரசும் நாடும் மரபும் பட்டபாட்டை எண்ணி எண்ணி இவன் மனம் புழுங் கினான், மதுரை அரண்மனையின் இடிபாடு அவன் மனத்தை உறுத்திக் கொண்டே இருந்தது. சோழப் பேரரசை வீழ்த்திப் பழிக்குப்பழி வாங்கவேண்டும் என அவன் முடிவு செய்தான். பெருவீரனாகிய மூன்றாங் குலோத்துங்கன் 1218 இல் இறந்து விடவே, காலங் கருதிக்கொண்டிருந்த சுந்தர பாண்டியன், 1219இல் சோழ நாட்டின் மேற் படையெடுத்தான்; தஞ்சையில் நடந்த போரில் இராசராசன் தோற்றோடி ஒளிந்து கொண்டான். சோழ நாட்டின் பழைய நகரங்களான தஞ்சையும் உறையூரும் பாண்டிய வீரர்களால் கொளுத்தப்பட்டன. மாட மாளிகை களும் கூட கோபுரங்களும் தவிடு பொடி யாக்கப்பட்டன. இரண்டாங்கரிகாலனால் (கி.மு. 60-10) தன் மீது பட்டினப் பாலை பாடிய உருத்திரங் கண்ணனாருக்குப் பரிசிலாக வழங்கியிருந்த, உறையூர்ப் பதினாறுகால் மண்டபம் ஒன்றுதான் சோழ நாட்டில் பாண்டிய வீரர்களால் இடிக்கப்படாமல் விடப்பட்ட தென்கின்றது, திருவெள்ளாறைக் கல்வெட்டு (மூன்றாங் குலோத்துங்கன் மதுரையை அழித்தது நினைவு கூரத் தக்கது). தன் எண்ணப்படி வாகை சூடிய சுந்தர பாண்டியன் சோழர் தலைநகரான பழையாறை (இவ்வூர்-கும்பகோணத் திற்கு மேல்புறமுள்ள தாராசுரம் புகைவண்டி நிலையத்திற்கு ஒன்றரைக் கல் அளவில் உள்ளது). சென்று, சோழரது முடிசூட்டு விழா மண்டபத்தில் வீர முடிசூட்டு விழா நிகழ்த்தினான். திரும்பி மதுரை செல்லும் வழியில் புதுக்கோட்டைப் பகுதி யிலுள்ள பொன்னமராவதியில் தங்கி வெற்றிக் கொலு வீற்றிருந் தான். அதுபோது, இராசராசச் சோழன் தன்மனைவி மக்களொடும் சென்று பணியவே, பாண்டியன் அவனுக்குச் சோழநாட்டை அளித்துத் திறை தருமாறு பணித்து மதுரையை அடைந்தான். மகத நாட்டு வாணகோவரையனும், சேந்தமங்கலத்துப் பல்லவக் கோப்பெருஞ்சிங்கனும் ஒன்று கூடி இராசராசனுக் கெதிராகக் கலகம் செய்தனர். இதையறிந்த ஒய்சள இரண்டாம் வீர நரசிம்மன் (1220-1230), 1222இல் பெரும் படையுடன் கொங்கு நாட்டின் வழியாகக் கிழக்கு நோக்கிச் சென்று, உறத்தி என்ற இடத்தில் நடந்த போரில் அவ்விரு வரையும் வென்ற டக்கினான். இந்நரசிம்மன் தந்தையாகிய இரண்டாம் வீர வல்லாளன் (1172-1219) ஒரு சோழகுலப் பெண்மணியை மணந்திருந்தான். இவ்வுறவே, நரசிம்மன் இராசராசனுக்குதவிய தற்குக் காரணமாகும். அதன் பின், நரசிம்மன் தெற்கு நோக்கிச் சென்று, திருச்சிக்கு 7 கல் வடக்கில் உள்ள கண்ணனூர் வரையிலும் சோழ நாட்டுப் பகுதியைக் கைப்பற்றி, கண்ணனூரில், போசளேச்சுரம் என்ற கோயிலையுங் கட்டினான். போசளர்-ஒய்சளர். கண்ணனூர் - கண்ணனூர்க்கொப்பம் எனவும் வழங்கும். இன்று அவ்வூர்-சமயவுரம் என வழங்குகிறது. சோழ நாட்டை வடக்கே இருந்து வந்த ஒய்சாளரும், தெற்கே இருந்த பாண்டியரும் பங்கு போட்டுக் கொள்ளத் தொடங்கினர். இதன் விளைவாகச் சோழ நாடு உருக்குலைந்து போயிற்று. நரசிம்மன் தான் கைப்பற்றிய சோழ நாட்டுப் பகுதி யைத் தன் கீழ் இராசராசனை ஆளும்படி செய்தான். சில ஆண்டுகட்குப் பிறகு இராசராசன், சுந்தரபாண்டியன் ஏவலைப் பொருட்படுத்தாமலும் திறைதர மறுத்தும் வந்தான். அதனால் கடுஞ்சினங் கொண்ட சுந்தரபாண்டியன், 1231இல் சோழ நாட்டின் மேற்படையெடுத்துச் சென்றான். பாண்டிப் படையை எதிர்த்துப் பொருது பேரிழப்புக்குள்ளான இராசராசன் தோற்று நாட்டை விட்டே ஓட நேர்ந்தது. அவனுடைய உரிமை மகளிரும் பாண்டியனால் சிறை பிடிக்கப் பட்டனர். வாகை சூடிய சுந்தர பாண்டியன், சோழர் தலைநகரான முடி கொண்ட சோழபுரம் (பழையாறை) சென்று, எட்டுத் திசையினும் வெற்றித் தூண் நிறுவி, வெற்றி முடி சூட்டு விழாவும், வீர முடி சூட்டு விழாவும் நிகழ்த்தினான். தோற்றோடிய இராசராசன், தன் நண்பனாகிய குந்தள நாட்டரசனிடம் உதவி பெறும் பொருட்டு வடக்கு நோக்கிச் சென்றான். வடார்க்காடு மாவட்டத்து வந்தவாசிக் கருகிலுள்ள தெள்ளாறு என்னும் இடத்தில் கோப்பெருஞ் சிங்கன் எதிர்த்துப் பொருது வென்று, தன் தலைநகரான சேந்தமங்கலத்தில் இராசராசனைச் சிறைவைத்தான். இதையறிந்த போசள வீர நரசிம்மன், 1232இல் துவார சமுத்திரத்திலிருந்து பெரும் படையுடன் வந்து, திருவரங்கத் திற்கு அருகிலுள்ள பாச்சூரில் தங்கினான்; கோப்பெருஞ்சிங் கனை வென்று சோழனைச் சிறைமீட்டு வரும்படி, அப்பண்ணன், சமுத்திரகொப்பையன் என்ற படைத் தலைவர்களை அனுப் பினான். அவர்கள் பெரும் படையுடன் சென்று, பெரம்பலூர் என்னுமிடத்தே நடந்த போரில் கோப்பெருஞ் சிங்கனை முறியடித்துச் சோழனைச் சிறைமீட்டனர். சோழனை மீட்கப் படைத்தலைவர்களை அனுப்பி விட்டு, நரசிம்மன் பாண்டி நாட்டின்மேற் படை யெடுத்துச் சென்றான். மகேந்திரமங்கலம் என்ற இடத்தில் நடந்த போரில் சுந்தர பாண்டியன் படுதோல்வி அடைந்தான்; நரசிம்மனைப் பணிந்து திறைதருவதாக உடன்பட்டான். பாண்டியன் ஆட்சிக்குட் பட்டிருந்த சோணாட்டுப் பகுதியை இராசராசனுக்களித்து விட்டு, நரசிம்மன் மீண்டு செல்லும் போது, மகதநாட்டை அழித்து, வாணகோவரையனைச் சிறைபிடித்துச் சென்றான். 1230 முதல், 1240 வரை முறையே-போசள வீர நரசிம்மன் படைத் தலைவர்களும், அவன் மகன் வீர சோமேசுவரன் (1234-1264) படைத்தலைவர்களும், காஞ்சியில் இருந்து வந்த தாகக் கல்வெட்டுக்களால் தெரிவதால், அவர்கள் நிலையாகக் காஞ்சியில் தங்கியிருந்து, இராசராசனுக் கெதிராகக் கலகம் செய்த-கோப்பெருஞ் சிங்கன், வாணகோவரையன், சேதிராயன், சம்புவராயன் முதலிய சிற்றரசர்களை அடக்கி இராசராசனுக் குதவிவந்தவராவர், எனவே, இராசராசன் தன் இறுதிக் காலத்தில் (1256), ஒய்சளர் துணையாலேயே நாடாண்டு வந்தனன் என்பது பெறப்படும். கொங்கு மன்னர்: சுந்தர பாண்டியன் காலத்தே, கொங்கு நாட்டை ஆண்ட வட தென் கொங்கு மன்னர்களுக்குள் முரண் பாடு உண்டானது. அதனால் பல இன்னல்களுக்குள்ளான வட கொங்கு மன்னன், சுந்தர பாண்டியன் பால் அடைக்கலம் புகுந்து தனக்கு உதவுமாறு வேண்டினான். இதையறிந்த தென் கொங்கு மன்னனும் மதுரை வந்து பாண்டியனைப் பணியவே, சுந்தர பாண்டியன் இருவரையும் அச்சுறுத்தித் தன் முடிபினை ஏற்றுக் கொள்ளுமாறு செய்து, அவர்கள் முரண்பாட்டினைப் போக்கினான். சுந்தர பாண்டியன் காலத்தே தென் கொங்கை ஆண்டவன் வீரராசேந்திரன் (1206-1252) என்னும் கொங்குச் சோழன் ஆவன். இவன் தன்னை, ‘இரு கொங்கும் ஆண்டவன்’ என்று தன் கல்வெட்டில் கூறிக்கொள்கிறான். எனவே, அவன் வடகொங்கைக் கைப்பற்றியபோது ஏற்பட்ட முரண்பாடே ஆகும் இது. அவ்வட கொங்கு மன்னனனுக்கு இடையூறு செய்யாமல் இருக்கும்படி திட்டம் செய்து அனுப்பியிருக்கலாம். 8. மூன்றாம் இராசேந்திரன் (1246-1279): இவன், மூன்றாம் இராசராசன் மகன். இராசராசன் இவனுக்கு 1246 இல் இளவரசுப் பட்டங் கட்டி, இவனையே நாட்டை ஆளும்படி செய்தான். முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் 1238 இல் இறந்தான். அவனுக்குப் பின் இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் 1238 இல் முடி சூட்டப் பெற்றுச் சில திங்களில் இறந்தான். அவனுக்குப் பின், இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1239-1251) பட்டம் பெற்றான். இவன் தன் முன்னோரைப் போல் அத்துணை ஆற்றல் படைத்தவன் அல்லன். எனினும், ஒய்சள வீரசோமேசுவரன் (1234-1264) இவனுக்கு மாமனும், கொங்குச் சோழனாகிய இரண்டாம் விக்கிரம சோழன் (1255-1263) இவனுக்கு மைத்துனனும் ஆவதால், விக்கிரமன் தந்தையாகிய வீரராசேந்திரன், வீரசோமேசுவரன் ஆகியோர் துணை இவனுக்கிருந்தது. சுந்தர பாண்டியனின் வலியற்ற நிலையை யுணர்ந்த மூன்றாம் இரசேந்திரச் சோழன் பாண்டி நாட்டின் மேற் படையெடுத்து வந்து, சுந்தரப் பாண்டியனை வென்று தனக்குத் திறை செலுத்தும்படி செய்தான். இதையறிந்த ஒய்சள வீர சோமேசுவரன் பெரும் படையுடன் வந்து பல இடங்களில் இராசேந்திரனோடு பொருது வென்று, சோழராட்சிக்குட் பட்டிருந்த பாண்டி நாட்டை மீட்டுச் சுந்தர பாண்டியனுக் களித்தான். மூன்றாம் இராசேந்திரனும் வீரசோமேசுவரனுக்கு உடன் பிறந்தாள் மகனே எனினும், ஒய்சள மன்னர்கள் பாண்டியர் பேரரசு நிறுவ முயலுங்கால் பாண்டியர்க்கு உதவியும் தங்கள் நிலையைக் காப்பாற்றி வந்தனர். ஆகையால், சோமேசுவரன் ஆற்றல் மிக்க சோழனை வென்று, ஆற்றலில்லாத பாண்டியனுக்கு உதவினான். இவன் அடுத்துச் சோழனுக் குதவுதல் இதற்குச் சான்றாகும். தெலுங்கச் சோழர்: நெல்லூர், கடப்பை, சித்தூர் மாவட்டங் களில் ஆட்சி புரிந்துகொண்டிருந்த தெலுங்கச் சோழர்கள், சோழ மன்னரின் சிற்றரசர்களாய் இருந்து வந்தனர். மூன்றாம் இராச ராசனுக்கும், முன்றாம் இராசேந்திரனுக்கும் உற்ற நண்பர்களாய் உதவி வந்தனர். திக்க நிருபதி என்ற கண்டகோபாலன் என்பான், இராசராசன் காலத்திலிருந்து நெல்லூரிலிருந்தாண்டு வந்தான். காடவராயன் முதலிய சிற்றரசர்களை அடக்கின தோடு, போசள வீரசோமேசுவர னோடும் போர் புரிந்து சோழர்க்கு உதவினான். இராசேந் திரனுக்கு அவன் உற்றுழி உதவியாளனாக இருந்து வந்தான். சிற்றரசர் பலர் தொல்லை கொடுத்து வந்ததால், பெருவீரனாகிய அக்கண்ட கோ பாலனுக்குக் காஞ்சியைக் கொடுத்து, இராசேந்திரன் அவனை உற்ற நண்பனாக்கிக் கொண்டான். காஞ்சியிலும் அதன் சுற்றுப் புறங் களிலும் கண்டகோபாலன் கல் வெட்டுக்கள் காணப்படுதல் இதனை உறுதிப் படுத்தும். வடவிலங்கை: ஓய்மா நாட்டு நல்லியக் கோடன் என்பான்,, மாவிலங்கை என்னும் ஊரின் தலைவன் என்று, சிறு பா ணாற்றுப் படையும், 176 புறப்பாட்டும் கூறுகின்றன. அது, தொண்டைமண்டலத்தில் உள்ளதோர் ஊராகும். அவ்வூரி லிருந்து தொண்டைநாட்டின் ஒருபகுதியை ஆண்டு வந்த, குறுநில மன்னனான சம்புவராயனை வென்றடக்க, கண்ட கோபாலன் இராசேந்திரனுக்குதவினான். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்குப் பிறகு, முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251-1271) பட்டம் பெற்றான். இவன், இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் மகன். இவன் இயல்பாகவே பேராற்றலுடையவன். பிற்காலப் பாண்டியப் பேரரசைப் பெரும் பேரரசாக்கிய பெருமை இவனையே சாரும். இவன் முதலில் சேரநாட்டின் மேற்படையெடுத்துச் சென்று, வீரரவி உதயமார்த்தாண்டவர்மனை வென்றடிப் படுத்துச் சேரநாட்டைக் கைப்பற்றினான். இவனது பேராற்றலைக் கண்டு பெரிதும் அஞ்சிய ஒய்சள வீரசோமேசுவரன், முன்பு பகை கொண்டிருந்த மூன்றாம் இராசேந்திரச் சோழனோடு நட்புக் கொள்ளத் தொடங்கினான். அந்நட்பு, வீரசோமேசுவரன் மகன் வீரராமநாதன் (1254-1294) காலத்தும் நிலைபெற்றிருந்தது. பாண்டிய-சோழ இறுதிப்போர்: 1251இல் பட்டம் பெற்றது முதல் சுந்தரபாண்டியன் தன் படையைப் பெருக்கி வந்து, 1257இல் சோழ நாட்டின்மேற் படை யெடுத்து, மூன்றாம் இரா சேந்திரச் சோழனை வென்று திறைசெலுத்தும்படி செய்தான். இப்போரில், சோழனுக்கு உதவியாக வந்த வீரசோமnவரனும் தோற்றோடினான். தோற்றோடிய வீரசோமேசுவரன், பெரும்படை திரட்டிப் பாண்டி நாட்டின்மேற் படையெடுத்தான். 1264இல் கண்ண Qர்க்கருகில் ஒய்சளப் படையும் பாண்டிப் படையுங் கைகலந்தன. போர் மிகவுங் கடுமையாக நடந்தது. ஒய்சளப் படைத் தலைவர் பலர் கொல்லப்பட்டனர். களம் பல கண்ட ஒய்சளப் பெரும் படைத்தலைவன் சிங்கணனும் மாண்டான். முடிவில் வீரசோ மேசுரவனும் கொல்லப்பட்டான். ஒய்சளப் படையில் எஞ்சிய யானை குதிரை படைக்கலங்களோடு, கண்ணQரில் குவித்து வைத்திருந்த ஒய்சளர் பெருஞ் செல்வக் குவையும் பாண்டியர் கைப்பட்டது. வீரசோமேசுவரன் மகன் வீரராமநாதன், பாண்டி யர்க்குத் திறை செலுத்திக் கொண்டு அக்கண்ணனூர்ப் பகுதியை ஆண்டு வந்தான். பின்னர்ச் சுந்தர பாண்டியன், கோப்பெருஞ்சிங்கனை வென்று தன் கீழ்ச் சிற்றரசனாக்கினான்; மகத நாட்டையும் கொங்கு நாட்டையுங் கைப்பற்றினான்; கண்டகோபாலனைப் போரில் கொன்று காஞ்சியைக் கைப்பற்றினான்; அவன் தம்பி வந்து பணிய, அவர்க்குரிய பழைய பகுதியை அளித்துத் திறை தரும்படி செய்தான்; காகதீயக் கணபதியை வென்று, நெல்லூரைக் கைப்பற்றி, அங்கு வீர முடி சூடிக் கொண்டான். இச்சுந்தர பாண்டியன் காலத்தே பாண்டிப் பேரரசு-தென்குமரி முனை முதல், வடக்கே கிருஷ்ணையாறு வரையிலும் பரவியிருந்தது. சோழ நாடு அப்பேரரசின் கீழ்த் திறை செலுத்தும் சிறு நாடா யிற்று. மூன்றாம் இராசேந்திரன் 1279 இல் இறந்தான். அவனுக்குப் பிள்ளையில்லை. அவனோடு தமிழகத்தே சாளுக்கியச் சோழ அரச மரபு முடிவுற்றது. சோழ நாடு பாண்டி நாட்டோடு சேர்க்கப் பட்டது. தமிழகம், சங்க காலத் தமிழகத்தின் நிலையை அடைந்தது. முதல் இராசராசனும், முதல் இராசேந்திரனும் அரும் பாடுபட்டுத் தேடிய சோழப் பேரரசு என்னானது! அவர் தம் ஆட்சிக் காலம் முழுவதும் போர்ச் செயலில் ஈடுபட்டு அடைந்த அல்லல்தான் மிச்சம். முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268-1310): இவன், முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியன் மகன். சுந்தர பாண்டியன் இறப்பதற்கு மூன்றாண்டு கட்கு முன்னரே இவனுக்கு இளவரசுப் பட்டங் கட்டினான். இவன், ஆரியச் சக்கரவர்த்தி என்னும் படைத்தலைவன் தலைமையில் பெரும்படை யொன்றை இலங்கைக்கு, அனுப்பினான். அவன் அந்நாட்டிற் பல நகரங்களைப் பேரழிவிற்குள்ளாக்கி, கொள்ளையிட்டு, சுபகிரி என்ற நகரின் பெருங் கோட்டையையும் கைப்பற்றினான். முடிவில் அப்படைத் தலைவன், பெரும் பொருளோடு, புத்தரது மாட்சிமை வாய்ந்த பல்லையுங் கைப்பற்றி வந்தான். ஈழத் தரசனான மூன்றாம் பராக்கிரமபாகு என்பான் மதுரைக்கு வந்து பாண்டியனைப் பணிந்து நட்புரிமை கொண்டு, அப்பல்லைப் பெற்றுச் சென்றனன். பின்னர்க் குலசேகரன், சேர நாட்டின் மேற் படை யெடுத்துச் சென்று, சேரனை வென்று கொல்லத்தைக் கைப் பற்றினான். அதன் பின் இவன், தன் பேரரசிற்குட்பட்ட நாடு களில் உண்டான உள் நாட்டுக் குழப்பங்களை அடக்கி அமைதி யாக ஆண்டு வந்தான். இவன் காலத்தே பாண்டி நாடு வந்த இத்தாலி நாட்டு மார்க்கோ போலோ என்பான், இவன் ஆட்சியை மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளான். அக்காலத்தே பாண்டி நாடு வந்த முகமதிய ஆசிரியனான வாசப் என்பானும் அவ்வாறே எழுதியுள்ளான். இக்குலசேகர பாண்டியனுடன் பாண்டியப் பேரரசு முடிவடைந்தது. ஏன்? இவனுடன் தமிழரசுமே முடிவடைந்து விட்டது எனலாம். பாண்டியப் பேரரசர், தாம் வென்று கைக் கொண்ட நாடுகளில் பெரும்பாலும் தம் தம்பியர், அல்லது மைந்தர் களையே ஆணையாளராக இருந்து ஆண்டு வரும்படி செய்து வந்தனர். அவ்வாணையாளர்கள் தங்கள் பெயராலேயே கல் வெட்டுக் களும் வெளியிட்டு வந்தனர். அக் கல்வெட்டுக்களில், தம் பேரரசுடன் சென்று, அவர் கொண்ட வெற்றிகளையும் தாங் கொண்டனவாகக் குறித்து வந்தனர். 1. சடையவர்மன் வீரபாண்டியன் (1253-1268); இவன் முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1251-1271) ஆட்சிக் காலத்தில் - சோழ நாடு, நடுநாடு, தொண்டை நாடுகளில் ஆணை யாளனாக இருந்து ஆண்டவன். இவன், 1281 வரை வாழ்ந் திருந்தான். 2. சடையவர்மன் விக்கிரம பாண்டியன் (1249-1258): இவனும் அச்சுந்தர பாண்டியன் ஆட்சிக் காலத்தில் தொண்டை நாட்டிலும் நடு நாட்டிலும் இருந்தாண்டு வந்தான். பேரரசன் செயல்களில் சில இவன் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. 3. சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1276-1293): இவன். முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268-1310) ஆட்சிக் காலத்தில் கொங்கு நாட்டில் இருந்தாண்டவன். இவன் கல் வெட்டுக்கள்-சேலம், தென்னார்க்காடு, கடப்பை மாவட்டங் களில் காணப்படுகின்றன. கொங்கு நாட்டின் கீழ்ப்பகுதியி லிருந்து அம்மாவட்டங்களையும் ஆண்டு வந்திருக்கலாம். 4. மாறவர்மன் விக்கிரம பாண்டியன் (1268-1281): இவன், முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் தம்பி, இவன் நடுநாடு, தொண்டை நாடுகளில் இருந்தாண்டான். 5. மாறவர்மன் வீரபாண்டியன்: இவன், தென்னார்க்காடு மாவட்டத்தில் ஆணையாளனாக இருந்தான். முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்கு (1268-1310) சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் என்ற மைந்தர் இருவர் இருந்தனர். அவர்களுள்சுந்தர பாண்டியன் பட்டத்தரசியின் மைந்தன். வீரபாண்டியன் வேறு மனைவியின் மகன். இவ்விரு வருள், வீரபாண்டியன் பேருக்குத் தகுந்த வீரமும் ஆண்மையும் உடையவனாக இருந்தமையின், தனக்குப்பின் பாண்டி நாட்டை ஆளத் தகுதியுடையவன் அவனே என்று கருதி, குலசேகர பாண்டியன் 1296 இல் வீரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டங் கட்டினான். சுந்தர பாண்டியன் தந்தையின் செயலை வெறுத்து, 1310 இல் தந்தையைக் கொன்றோ, அல்லது தந்தை இறந்த பிறகோ, வீர பாண்டியனைத் துரத்தி விட்டு மதுரையில் அரியணை ஏறினான். இளவரசனாக இருந்த வீரபாண்டியன் மதுரையை விட்டு ஓடி, சோழ நாட்டு வீரதவளப் பட்டினத்திலிருந்து அப்பகுதியை ஆண்டு வந்தான் (முகமதிய ஆசிரியர் வாசப்). இவர்களில், சடையவர்மன் வீரபாண்டியன் 1296-1341 வரையிலும், சடையவர்மன் சுந்தர பாண்டியன் 1303-1311 வரையும் ஆண்டதாக அவர்கள் கல்வெட்டுக்களால் தெரிகிறது. இரு வர்க்கும் அரசுரிமை பற்றி அடிக்கடி போர் நடந்து கொண் டிருந்தது. (இதன் முடிவை அடுத்த காலப் பகுதியில் காண்க). 6. அயலாட்சிக் காலம் இனி, தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றொடு தொடர்பு பட்டுள்ள, தமிழகத்திற்கு வடபாலுள்ள தென்னாட்டு அரசியல் வரலாற்றையும், அத்தென்னாட்டு அரசியல் வரலாற்றுக் கமைந்த, தமிழக அரசியல் தொடர்புடைய டில்லி முகமதியப் பேரரசையும் பற்றி ஒருவாறு அறிந்து கொள்ளுதல், தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றினை அறிய எளிதாக இருக்கும். 1. முகமதியப்பேரரசு: டில்லியில் ஆப்கானிய மரபினர் (1193-1526) நான்கு நூற்றாண்டுகளும், அதன் பின்னர், ஆங்கில ஆட்சி ஏற்படும் வரை (1526-1858) ஆசியத் துருக்கி இனத்த வரான மொகலாய மரபினரும் ஆண்டனர். ஆப்கானியருள் ஐந்து அரசமரபினரும் ஒருவர் பின் ஒருவராக ஆண்டனர். அவர், 1. அடிமை மரபினர் 1193-1287 2. கில்ஜி மரபினர் 1290-1320 3. துக்ளக் மரபினர் 1320-1412 4. சயித் மரபினர் 1412-1443 5. லோடி மரபினர் 1443-1526 என்பவராவர். மொகலாயர்களில் - 1. பாபர் 1526-1530 2. உமாயூன் 1530-1555 3. ஷெர்ஷா 1556-1605 4. ஜெகாங்கீர் 1605-1627 5. ஷாஜகான் 1627-1658 6. ஒளரங்கசீப் 1658-1707 ஒளரங்கசீப்புக்குப் பின்னர், பெயரளவில் பேரரசராகச் சிலர் 1858 வரை ஆண்டனர். 3 ஷெர்ஷா என்பான், உமாயூன் ஆட்சியில் இடைமறித்து ஆண்ட ஆப்கன் மரபினன் ஆவன். 2. தென்னாட்டுப் பேரரசுகள்: கி.பி. 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் தென்னாட்டில், விந்தமலைக்கு இப்பால் வடபகுதியில்-யாதவப் பேரரசும், காகதீயப் பேரரசும், இடையில் ஒய்சளப் பேரரசும், தென்பகுதியில்-தமிழகத்தில்-பாண்டிய சோழப் பேரரசுகளும் தென்னாட்டைப் பகிர்ந்து கொண்டு முழு உரிமையுடன் ஆண்டு வந்தன. சோழப் பேரரசு-1279 இல் முடிவுற்றது. யாதவ காகதீயப் பேரரசுகளுக்கும், ஒய்சளப் பேரரசுக்கும் இடையில் காம்பிலி அரசு இருந்தது. வடபகுதியில் இருந்த இவ்வரசுகளைப் பற்றி இங்கு சுருக்க மாகத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். 1. யாதவப் பேரரசு: கோதவரி யாற்றுக்கும் தபதி யாற்றுக்கும் இடையில், தென்னகத்தின் மேல் பகுதியில் இருந்தது இப்பேரரசு. இதன் தலைநகர்-தேவகிரி. இப்பேரரசு, கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. 1. ஐந்தாம் பில்லாமன் 1185-1193 2. ஜயதுகி 1193-1200 3. சிங்களன் 1200-1247 4. கிருஷ்ணன் 1247-1260 5. மகாதேவன் 1260-1271 6. இராமதேவன் 1271-1310 7. சங்கர தேவன் 1310- 1. இவனே இப்பேரரசின் முதலரசன். 2,3,4. இம்மூவரும் யாதவப் பேரரசை விரிவு படுத்தினர். 5. இவன், கிருஷ்ணன் தம்பி. இவன், காகதீய உருத்திராம் பாளுடன் பொருது வென்று, பலயாணைகளையும் அரச சின்னங் களையும் கவர்ந்து கொண்டு பெண்ணென்று அவளைக் கொல்லாமல் விடுத்தான். 6. இவன், கிருஷ்ணன் மகன்; மகாதேவன் மகனிடமிருந்து நாட்டைக் கைப்பற்றி ஆண்டான். இவன், ஒய்சள மூன்றாம் வீர நரசிம்மனுடனும், மூன்றாம் வீர வல்லாளனுடனும் பொருதான். மாலிக்காபூர் படையெடுப்பினால் அப்போர் முற்றுப் பெறாது நின்றது. 7. இவன், இராம தேவன் மகன். 2. காகதீயப் பேரரசு: கோதாவரி கிருஷ்ணையாறுகட் கிடைப்பட்ட கீழ்ப்பகுதியிலிருந்தது இப்பேரரசு. ஓரங்கல் அல்லது வாரங்கல் இதன் தலைநகர். பிற்காலச்சோழர்களுக்கும், சாளுக்கியருக்குங்கீழ்ச் சிற்றரசர்களாய் இருந்தவர் களால் ஏற்பட்டதே காகதீயப் பேரரசு. 1. முதலாம் பிரதாபருத்திரன் 1158-1195 2. கணபதி 1199-1262 3. உருத்திராம்பாள் 1262-1296 4. இரண்டாம் பிரதாபருத்திரன் 1396-1322 1. இவன், தன் ஆற்றலினால் தன்னுரிமை எய்தியவன். 2. இவன், வளமிக்க பல நாடுகளைக் கைப்பற்றி அரசைப் பெருக்கியதோடு, நாட்டின் வளத்தையும் வாணிகத்தையும் பெருக்கினான். அனும கொண்டாவில் இருந்து தலைநகரை இவன்தான் ஓரங்கலுக்கு மாற்றியவன்: தன் வீரமகளான உருத்தி ராம்பாளை, உருத்திர தேவ மகாராசா என்றே அழைத்து வந்தவன். இக்கணபதி-மூன்றாங் குலோத்துங்கன் (1178-1216), மூன்றாம் இராசராசன் (1216-1246). மூன்றாம் இராசேந்திரன் (1246-1279) ஆகிய சோழ மன்னர் மூவர் காலத்துமாக 63 ஆண்டுகள் மாட்சியோடாட்சி புரிந்தவன். முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியனால் (1251-1271) இவன் வெல்லப் பட்டான். 3. இவள், கணபதி மகள்: வீரமிக்க நல்லரசி. 4. இவன், உருத்திராம்பாளின் பெண் வயிற்றுப் பேரன். இவன் திருச்சிவரையுள்ள தமிழ் நாட்டுப் பகுதியைக் கைப் பற்றினான். அப்போது அப்பகுதி ஒய்சளரிடம் இருந்தது. பாண்டிய ரோடும், யாதவ இராமநாதனோடும் இவன் போர் புரிந்தான். இவன் ஆட்சியின் பிற்பகுதியில் காகதீய நாடு - கோதாவரியி லிருந்து திருச்சி வரை விரிவடைந்தது. 1322 இல், உலூகான் என்பான் வராங்கல் மீது படையெடுத்து, இவனோடு பொருது வென்று சிறைசெய்து டில்லிக்குக் கொண்டு போகும் வழியில் இவன் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டான். 3. ஒய்சளப் பேரரசு: மைசூர் நாடும், துங்கபத்திரை யாற்றுக்குத் தென்பாற்பட்ட நிலப்பரப்பும்-ஒய்சளநாடு ஆகும். இது, கங்கவாடியின் வடக்கில் இருந்தது. துவரை, அல்லது துவார சமுத்திரம் என்பது, இந்நாட்டின் தலைநகர். இம்மரபின் முதல்வனான சளன் என்பான். ஒரு துறைவியைக் கொல்ல வந்த புலியைக் கொன்று, ஒய்சளன் எனப் பெயர்பெற்றான் எனப் படுகின்றது. (பழங் கொங்குநாடு’ என்ற தலைப்பில், ‘இருங்கோவேள்’ என்பது பார்க்க) ஒய்சள-கொல் சள, ஒய்சளர் - போசளர் எனவும் வழங்கப் பெறுவர். இம்மரபினர் கொடி-புலிக்கொடி, மைசூர் நாட்டு ஹாசன் மாவட்டத்திலுள்ள பேளுரில் இம்மரபு தோன்றிற்று. 1. விநயாதித்தன் 1047-1075 2. எரியங்கன் 1075-1080 3. முதலாம் வல்லாளன் 1080-1104 4. பிட்டி தேவன் 1104-1141 5. முதலாம் வீரநரசிம்மன் 1136-1171 6. இரண்டாம் வீரவல்லாளன் 1171-1219 7. இரண்டாம் வீரநரசிம்மன் 1220-1233 8. வீரசோமேசுவரன் 1234-1264 9. மூன்றாம் நரசிம்மன் 1254-1293 10. வீரஇராமநாதன் 1254-1295 11. விசுவநாதன் 1295-1300 12. மூன்றாம் வீரவல்லாளன் 1293-1342 13. நான்காம் வீரவல்லாளன் 1342-1346 1. விநயாதித்தன் (1047-1075): இவன், துவார சமுத்திரத்தி லிருந்து, கங்கவாடியின் வடக்கிலுள்ள பகுதியை ஆண்டு வந்தான். துவாரசமுத்திரம் இன்று ஹளபீடு (பழைய வீடு) என்று வழங்குகிறது. பண்டு இது, துவரை என்று வழங்கிற்று. 2. எரியங்கன் (1075-1080): இவன், விநாயாதித்தன் தம்பி; துவாரசமுத்திரத்திலிருந் தாண்டான். இவன் சாளுக்கிய ஆறாம் விக்கிரமாதித்தனுடன் சேர்ந்து, முதற் குலோத்துங் கனுடன் பொருததை முன்பு கண்டோம். முதலில் இவர்கள், சாளுக்கியருடன் நண்பர்களாகவே இருந்துவந்தனரென்பது இதனாற் பெறப்படும். 3. முதலாம் வல்லாளன் (1080-1104): இவன், விநயாதித்தன் மகன். இவன், சசபுரத்திலே இருந்தாண்டான். சசபுரம் என்பது - துவார சமுத்திரத்தின் மறுபெயர். இவனுக்கு-பிட்டி தேவராயன், உதயாதித்தன் என இரு தம்பியரும், பிட்டிதேவன் என்ற ஒரு மகனும் இருந்தனர். இவன்தன் தம்பிமாருடன் படையெடுத்துச் சென்று, கங்கவாடியின் வடபகுதியையும், கங்கவாடியின் மேற்கில் உள்ள வனவாசி யையும், கிழக்கேயுள்ள நுளம்பவாடி யையும் கைப்பற்றினான். இவன் சமணன்; சமண நூல்களில் நல்ல தேர்ச்சியுடையவன். 4. பிட்டிதேவன் (1104-1141): இவன், முதலாம் வல்லாளன் மகன். இவனொரு பெருவீரன். இவன் முதற் குலோத் துங்கன் (1070-1120) ஆட்சியின் இறுதியிலும், இரண்டாங் குலோத்துங்கன் (1133-1150) ஆட்சியின் முதலிலும் இருந்தான். கங்கவாடியைச் சோழரின் ஆணையாளராகத் தகடூர் அதியமான் மரபினர் ஆண்டு வந்தனர். இவன் காலத்தே தகடூரை, விடுகா தழகிய பெருமாள் என்னும் அதியமான் ஆண்டு வந்தான். பிட்டிதேவன் 1116 இல் தன் படைத் தலைவன் கங்கராசன் என்பானைக் கங்க நாட்டின் மேற் படை யெடுக்குமாறு செய்து, அதியமானைவென்று, கங்கவாடியின் தலைநகரான தலைக் காட்டைக் கைப்பற்றிக் கொண்டான். அவ்வெற்றியின் அறிகுறி யாக ‘தலைக்காடு கொண்ட ஒய்சளன்’ எனப் பட்டஞ் சூடிக் கொண்டான். இவன் தலைக்காடு கொண்டது பற்றிய இரு கல் வெட்டுக்கள், கொள்ளேகால் வட்டத்திலுள்ள முடிகொண்டத்தில் உள்ளன. தலைக்காட்டி லிருந்த சமணக் கோயில்கள், சோழ ராட்சிக் காலத்தே அழிக்கப் பட்டமையே இவன் சோழரை எதிர்த்ததற்கு முதற்காரணமாகும். இவன், சோழரை எதிர்த்தது போலவே, சாளுக்கிய ஆறாம் விக்கிரமாதித்தனைக் கூட எதிர்க்க முயன்றான். ஆனால், இரு பேரரசுகளை ஒருங்கே பகைப்பது தவறு என எண்ணி அம் முயற்சியைக் கைவிட்டான். தும்மே என்னுமிடத்தில் நடந்த போரில், உச்சங்கியிலாண்ட நுளம்ப பாண்டியனான திரிபுவன மல்லனை வென்று, இவன் உச்சங்கியைக் கைப்பற்றிக் கொண்டான். இவன் படைத்தலைவனான மாதவத்தணாயக்கன் என்பான் படையெடுத்துச் சென்று, துளுநாடு, சக்கர கூடம், குவளாலபுரம் (கோலார்), நிலாவளதுர்க்கம், இராயராயோத்தபுரி, தென்யாக் கூர், கொத்தவாடி, கொங்கு ஆகியவற்றைக் கைப்பற்றினான். 1137க்குள், வடக்கே சாதிமலை, மேற்கே குடகு நாடு, தெற்கே கொங்கு நாடு, கிழக்கே ஆலம்பாடி-இவற்றின், இடை யேயுள்ள பகுதி இவன் ஆட்சிக்குட்பட்டது. ஆலம்பாடி-பருகூர் மலைப் பகுதிக்குக் கிழக்கேயுள்ள அம்மலைத் தொடரின் பகுதியாகும். இவ் வாலம்பாடியின் கிழக்கில் அதியமான் தகடூர் நாடு இருந்தது. கோவை மாவட்டத்துச் சத்தியமங்கலப் பகுதி யாகும். இவன் கைப்பற்றிய கொங்கு, இந்நான்கெல்லைக்குட் பட்டனவே இவன் படைத்தலைவன் கைப்பற்றிய நாடுகளாகும். கங்கரின் பழைய தலைநகரான காந்தபுரக் கோட்டையை மிக்க வலியுடைய தாக்கி அங்கு பாதுகாப்புப் படையை வைத்தான். படைத் தலைவன் மாதவத்தணாயக்கனே அக்கோட்டையி லிருந்து அப்பகுதியைக் காத்து வந்தான். அதனால் அக் கோட்டை - தணாயக்கன் கோட்டை எனப்பெயர் பெற்றது. தணாயக்கன்-தண்டநாயக்கன் - படைத்தலைவன். இம்மாதவன். நீலகிரி யிலுள்ள ஒத்தை என்னும் ஊரை வென்று பிடித்ததனால், ஒத்தைக்கு மிண்டன், நீலகிரிச் சாதாரணன் என்ற பட்டப் பெயர்கள் பெற்றான். ஒத்தை, நீலகிரியின் தலைநகர் போலும், மிண்டன்-கெட்டிக்காரன். சாதாரணன்-பகைவரை எளிதாக மதிப்பவன்; கெட்டிக்காரன் என்பதே பொருள். இம்மாதவத் தணாயக்கன் வழியினர், ஒய்சளரிடம் வழிவழியாகப் படைத் தலைவர் களாக இருந்து வந்தனர். இத்தணாயக்கன் கோட்டை-பவானியாற்றுடன் மாயாறு கலக்குமிடத்திற்குப் பக்கத்தில் இருந்தது. இன்று கீழ்பவானி அணையினுள் மூழ்கிவிட்டது. பிட்டிதேவன் முதலில் சமணனாக இருந்தான். இவன் முதல் மனைவியான சாந்தலாதேவி சமண சமயத்தைச் சார்ந்தவன். அவள் 1130 இல் இறந்து விடவே, இரண்டாந் தாரமாக இலக்குமிதேவி என்பாளை இவன் மணந்து கொண்டான். அவள் வைணவ சமயத்தைச் சார்ந்தவள். அப்போது சோழ நாட்டை ஆண்ட இரண்டாங்குலோத்துங்கன் (1133-1150), வைணவ சமயத்தினிடம் வெறுப்புடையவனாக இருந் தமைக் கஞ்சி, சீரங்க பட்டணத்தில் வந்து தங்கியிருந்த வைணவ சமயப் பெரியாரான இராமாநுசர், இலக்குமிதேவி யின் அழைப்பிற் கிணங்கித் தலைக்காட்டுக்கு வந்தார். இராமநுசரால் பிட்டிதேவன் வைணவனாக்கப் பட்டான். சீரங்கப்பட்டணம் வரும்போது தான் இராமாநுசர், கொங்கு நாட்டுக் கொங்குப் பிராட்டியார் வீட்டில் தங்கி வந்தார். பிட்டிதேவன் வைணவனான பின், விஷ்ணுவர்த்தனன் என்று பெயர் சூட்டிக்கொண்டான். கோவையை அடுத்த பேரூரில் இடிந்துபோன சென்னகேசவ நாராயணசாமி கோயிலைக் கட்டி நிலமும் விட்டான். இன்னும் பல விண்ணகரங்களும் கட்டினான். 5. முதலாம் வீரநரசிம்மன் (1136-1171): இவன், பிட்டி தேவன் மகன்; 1136 இல் இளவரசுப் பட்டம் கட்டப் பெற்றான். இவன் போரில் இறங்கவில்லை; நாட்டைச் செம்மையாக ஆண்டுவந்தான். 6. இரண்டாம் வீரவல்லாளன் (1171-1219): இவன், முதலாம் வீரநரசிம்மன் மகன். இவனொரு பெருவீரன். ஹாங்கல் போரில் கலசூரியரையும் யாதவரையும் வென்று கிருஷ்ணை யாறு வரை தன் நாட்டைப் பெருக்கினான். தெற்கே தமிழ் நாடுவரை சென்றிருந்தது இவன் நாடு. முடிகொண்டத்தில் இவன் கல்வெட்டுக்கள் 3 இருக்கின்றன. 1181 ஆண்டுக் கல்வெட்டு, ‘இந்த நாடு முடிகொண்ட சோழ மண்டலத்தில், கங்கை கொண்ட சோழ வளநாட்டில் படிநாடு என்ற பெயருடைய தென்றும், ஊரின் பெயர் முடிக்கொண்ட சோழபுரம், அல்லது தேசி உய்யக் கொண்ட பட்டணம்’ என்றும் கூறுகிறது. அவ்வூர் முள்ளாச்சம்மன் கோயில் கல்வெட்டு, இவன் பெயர்-புசபலவீரகங்கன் என்கின்றது. முடிகொண்டத்தில் உள்ள 12 கல்வெட்டுக்களில் 11 தமிழ், ஒன்று கன்னடம். இது முன் சமண நகரமாக இருந்தது. இவன் சேரரை வென்றடக்கித் திறைதரும்படி செய்தான். பாளையக்காரர் களெல்லாம் இவனிடம் அடங்கி நடந்து வந்தனர். இவன் கொண்கானத்தின் மீது படையெடுத்த போது, வீரர்களுக்குக் குளிர்காய்ச்சல் வந்ததால் திரும்பி விட்டான். 7. இரண்டாம் வீரநரசிம்மன் (1220-1233): இவன், இரண்டாம் வீரவல்லாளன் மகன்; பெரு வீரமும் பேராற்றலும் வாய்ந்தவன். இவன் பட்டத்திற்கு வந்த போது, சோழர் ஆட்சி நிலைகுலைய, பாண்டியர் முன்னேறத் தொடங்கினர். இவன் வரலாற்றை, மூன்றாம் இராசராசச் சோழன் வரலாற்றில் காண்க. 8. வீரசோமேசுவரன் (1234-1264): இவன், இரண்டாம் வீரநரசிம்மன் மகன். இவன் வரலாற்றை, மூன்றாம் இராசராசச் சோழன், முதற்சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1250-1274) வரலாறுகளில் காண்க. கொங்கு நாட்டு விசயமங்கலத்தின் மேற்கில் உள்ள திங்களுரில், இவன் இளவரசனாக இருந்த போது, 1224 இல் பொறிக்கப்பட்ட கல்வெட்டொன்றும், கரைவழி நாட்டுக் கொழுமத்தில், இவன் ஆட்சிக்காலத்தே கொங்கு நாட்டில் ஒய்சளர் ஆதிக்கம் இருந்த நிலை பெறப் படும். இவனும் இவன் தந்தையும் சோழ பாண்டியப் போர்களில் பெரிதும் ஈடுபட்டிருந்தமையால், கொங்கு நாட்டைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. இவ்வீரசோமேசுவரனுக்கு-மூன்றாம் வீரநரசிம்மன், வீரஇராமநாதன் என இருமைந்தர். வடக்கிலும் தெற்கிலும் தனக்குப் பகைவர்கள் சூழ்ந்திருந்ததால், தான் இறப்பதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்னரே தன் நாட்டை இரண்டாகப் பிரித்து, வடபகுதியை மூன்றாம் நரசிம்மனுக்கும், தென்பகுதி யை-தமிழ் நாட்டுப் பகுதியை வீர இராமநாதனுக்குங் கொடுத்தான். மூன்றாம் நரசிம்மன் ஆட்சியில் கங்கநாடும் அதன் வடக்கிலும் மேற்கிலுமுள்ள பகுதியும், வீர இராமநாதன் ஆட்சியில்-கொங்கு நாடும், தெற்கே திருச்சி வரை, வடக்கே பெல்லாரி வரை உள்ள பகுதியும் இருந்தன. வீரஇராமநாதன், திருச்சியின் 7கல் வடக்கி லிருந்த கண்ணனூரில் இருந்து தன் பகுதியை ஆண்டு வந்தான். வீரசோமமேசுவரன், 1264 இல் கண்ணனூர்க்குப் பக்கத்தே நடந்த போரில், முதற்சடைய வர்மன் சுந்தர பாண்டியனால் கொல்லப் பட்டான். அங்குக் காண்க. 9. மூன்றாம் வீர நரசிம்மன் (1254-1293): இவன் கல்வெட்டு இரண்டு கிடைத்துள்ளன. ஒன்று கொள்ளே காலத் திலும், மற்றொன்று முடிகொண்ட சோழபுரத்திலும் உள்ளன. இரண்டும் இலட்சுமி நாராயணசாமி கோவிலிலேயே உள்ளன. இக்கல்வெட்டுக்களின்படி, கொள்ளேகாலத்தின் பழம் பெயர்-கொள்ளகரம் என்ற திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம் என்பது. 10. வீரஇராமநாதன் கண்ணனூரில் இருந் தாண்டதால், கொங்கு நாட்டில் கல்வெட்டுக்கள் வெளியிட வில்லைப் போலும். 11. விசுவநாதன் (1295-1300): இவன், வீரஇராமநாதன் மகன். இவன் ஐந்தாண்டுகள் ஆண்டான். அதன் பின் இவன் பகுதி மற்ற பகுதியோடு சேர்ந்தது. அவ்வாறு சேர்ந்த முழு நாட்டுக்கும் மூன்றாம் நரசிம்மன் மகன்மூன்றாம் வீரவல்லாளன் அரசனானான். 12. மூன்றாம் வீரவல்லாளன் (1293-1342): இவன், மூன்றாம் நரசிம்மன் மகன். இவன் பட்டம் பெற்றபோது, பாண்டியர்கள் ஒய்சளரைக் கொஞ்சங் கொஞ்சமாகக் கொங்கு நாட்டினின்று வடக்கே துரத்தத் தொடங்கினர். ஆனால், பெரு வீரனாகிய வீரவல்லாளன், அதற்கு எதிராகப் பாண்டியரை வென்று, கொங்கு நாட்டில் தன் ஆணை செலுத்த வேண்டுமென்று முயன்றான். அதற்குத் துணையாக ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்தது. கொங்கு நாட்டை அப்போது கொங்குப் பாண்டியனான குலசேகர பாண்டியன் ஆண்டு வந்தான். இவன் வலியற்றவன். மாலிக்காபூர் படையெடுப்பே அந் நிகழ்ச்சி யாகும். 1311 இல், மாலிக்காபூர் என்பான் தென்னாட்டின்மேற் படையெடுத்தான். இவன் டில்லிச் சுல்தானான அலாவுதின் படைத் தலைவன். இவன் படையெடுப்பால், தென்னாட்டு அரசுகள்-யாதவர், காகதீயர், ஒய்சளர், பாண்டியர்-நிலை குலைந்தன. அக்காலத்தே பாண்டி நாட்டில் மாறவர்மன் குல சேகர பாண்டியன்மக்களான- சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் என்போர். நாட்டுரிமை பற்றி போரிட்டுக் கொண்டு வலியற்ற வர்களாய் இருந்தனர். மாலிக்காபூர் தமிழ்நாட்டைக் கொள்ளை யடித்துக் கொண்டு டில்லி சென்றான். அவ்வேளை வீரவல் லாளன் கொங்கு நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். இவனு டைய எஞ்சிய வரலாற்றை ‘முகமதியர் படையெடுப்பு, மதுரையில் முகமதியராட்சி’ என்ற பகுதிகளில் காண்க. கொங்கு நாட்டில் இவன் கல்வெட்டுக்கள் பல கிடைத் துள்ளன. அவை-பேரூர், வெள்ளலூர், அவிநாசி, சேவூர், ஆதியூர், விசயமங்கலம், ஈரோடு, அந்தியூர், தணாயக்கன் கோட்டை, அயிலுர், எலத்தூர், சேலம் ஆகிய இடங்களில் உள்ளன. அவிநாசிக் கல்வெட்டொன்றில், மாதப் பதணாயக்கன் என்பான், ஒரு நில தானம் செய்தது குறிக்கப்பட்டுள்ளது. இம்மாதப்பன், வீர வல்லாளன் படைத் தலைவன் ஆவான். இவன் பெருமாள் தணாயக்கன்மகன். பெருமாள்தணாயக்கன், இவ்வல்லாளன் தந்தை காலத்தும், அவன் தந்தை காலத்தும் படைத்தலைவனாக இருந்தான். இப்பெருமான் தணாயக்கன், பிட்டி தேவன் படைத் தலைவனும், தணாயக்கன் கோட்டையிலிருந்து கொங்கு நாட்டுப் பகுதியை ஆண்டவனுமான மாதவத்தணாயக்கன் பேரன். இந்த மாதப்பதணாயக்கனுக்கு-கேதையன், சிங்கையன் என இரு மைந்தர். இவ்விருவரும், கங்க நாட்டிலுள்ள தெற் காணம்பி, அல்லது தென்கடம்பை நாட்டிற்கு அதிகாரியாய் இருந்தான். கேதையன், தந்தைக்குப்பின் கொங்கு நாட்டு அதிகாரி யானான். சேலம் கல்வெட்டில், சிங்கையதணாயக்கன் என்று குறிக்கப்பட்டுள்ளதால், சிங்கையன்-சேலமாவட்டத் திற்கும், கேதையன், கரைவழி நாட்டு ஒத்தைக்கு மிண்டன் என்ற ஊரைத் தானம் செய்துள்ளான் (158-1909). கரைவழி நாடு- உடுமலைப்பேட்டையை அடுத்துக் கிழக்கிலுள்ள அமராவதிக் கரைப் பகுதியாகும். எனவே, வல்லாளன் ஆட்சி கொங்குநாடு முழுவதும் பரவியிருந்த தென்பது பெறப்படும். தணாயக்கன் கோட்டைக்கல்வெட்டில் 11 படியெடுக்கப் பட்டுள்ளன. அவற்றுள் ஒரு கல்வெட்டில் (1223), ‘உண்ணா மலைப் பட்டணத்தைத் தலைநகராகக் கொண்ட வீரவல் லாளன் காலத்து’ என்று காணப்படுகிறது. பேரூர்க் கல் வெட்டிலும் (1323) ‘உண்ணாமலைப்பட்டணம் இராசதானியில் எழுந் தருளியிருந்து’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. உண்ணாமலைப் பட்டணம்-திருவண்ணாமலை-அருணாசலம். அருணாசலப் புராணத்தில், வல்லாள மகாராசன்-இவ்வீர வல்லாளனேயாவன். அதிலுள்ள புராணக் கற்பனையை நீக்கி விடுக. திருப்பத் தூரிலும் இந்த வீர வல்லாளன் கல்வெட்டொன்று இருக்கிறது. திருப்பத்தூர் அன்று கொங்குநாட்டைச் (சேலமாவட்டத்தை) சேர்ந்ததாக இருந்தது. 1911இல் அது, வடார்க்காடு மாவட்டத் தோடு சேர்க்கப்பட்டது. எனவே, மூன்றாம் வீரவல்லாளன், மாலிக்காபூர் படை யெடுப்புக்குப் பின், கொங்கு நாடு முழுவதையும் கைப்பற்றி ஆண்டு வந்தான் என்பது விளங்குகிறது. மதுரையை ஆண்ட முகமதிய மன்னனான தியாசுதீன் என்பான், 1342இல் இவ் வீர வல்லாளனை வஞ்சித்துக் கொன்றுவிட்டான். அவ் வரலாற்றை ஆண்டுக் காண்க. 13. நான்காம் வீரவல்லாளன்(1342-1346): இவன் காலத்தில் ஒய்சளநாடு, வெற்றிநகர்ப் பேரரசுடன் இணைக்கப் பட்டது. இவனுடன் ஒய்சளப் பேரரசு மறைந்தது. 4. காம்பிலி அரசு: காம்பிலி நகர்-பெல்லாரி மாவட்டத்தில் இருந்தது. காம்பிலி நாடு-துங்கபத்திரைக்கும் வடபெண்ணைக் கும் இடையில் கீழ்ப்பகுதியில் இருந்தது. காம்பிலி நகரில் முன் சாளுக்கியர் அரண்மனை இருந்தது. சோழப் பெரும்போர்க் காலத்தில் அதற்கு அடிக்கடி எரியூட்டப்பட்டது. காம்பிலி அரசு, அந்நகரையே தலைநகராகக்கொண்டு-பெல்லாரி மாவட்டம், பம்பாய் மாநிலத்தின் இரெய்ச்சூர் இடைநிலம், தார்வார் மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. காம்பிலி அரசை நிறுவியவன் சிங்கராயன் என்பவன், அவன் காலத்தும், அவன் மகன் காம்பிலிதேவன் காலத்தும் காம்பிலி அரசு மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது. தேவகிரி யாதவர்க்கும் ஒய்சாளர்க்கும் நடந்த போரில், காம்பிலி மன்னர் தேவகிரியை ஆதரித்தனர். அதனால் காம்பிலிக்கும் ஒய்சாளர்க்கும் பகை வளர்ந்து வந்தது. 1327 இல் காம்பிலி அரசு வீழ்ந்தது. 3. முகமதியப் படையெடுப்பு. டில்லியை ஆண்ட முகமதிய மன்னனான ஜலாலுதீன் கில்ஜியின் (1290-1296) உடன் பிறந்தான் மகனும், மருமகனும் ஆன (கில்ஜியின் மகள் கணவன்) அலாவுதீன் என்பான், 1296இல் பெரும்படையுடன் தென்னகத்திலுள்ள யாதவ நாட்டிற் புகுந்து, தேவகிரியைத் தீடீரென்று தாக்கினான். தேவகிரியை அப்போது ஆண்டவன் முதலாம் இராமதேவன், அவன் மகன் சங்கரதேவன், படையுடன் தன் பேரரசைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தமையால், முதியவனான இராமதேவன் எதிர்த்துப் பொருது தோற்று பெரும் பொருளைத் திறையாகத் தந்து அலாவுதீனுடன் சந்து செய்து கொண்டான். சந்து-உடன்பாடு. அவன் யாதவ வேந்தனிடம் பெற்ற அளவற்ற செல்வத்தோடு டில்லி சென்று சுல்தானைக் கொன்று 1296இல் டில்லி அரியணை ஏறினான். தென்னாட்டுப் பேரரசு நான்கும் ஒற்றுமையின்றி ஒருவரோ டொருவர் போரிட்டுக் கொண்டிருந்தமையால், அலாவுதீன் இராமதேவனை எளிதில் வென்றான். பின்னர் அலாவுதீன் வடக் கேயுள்ள நாடுகளையெல்லாம் வென்றடிப் படுத்தான். ஏறக் குறைய வடநாடு அவன் ஆதிக்கத்திற்குள்ளாயிற்று. அவன் 1303இல் மாலிக் பகுருதீன் என்ற படைத் தலைவனைக் காகதீய நாட்டு வாரங்கல் மீது ஏவினான். அவன் காகதீயர்களால் தோற்கடிக்கப்பட்டான். அதனால் யாதவ மன்னன் சங்கரதேவன் திறைதர மறுத்ததால், 1307இல் மாலிக் காபூர் என்பானை யாதவ நாட்டின் தலைநகரான தேவகிரிக் கனுப்பினான். போரில் சங்கரதேவன் தோற்றோடினான். மாலிக் காபூர் தேவகிரியைக் கொள்ளையடித்து நாட்டைக் கைப்பற்றிய தோடு, சங்கரதேவன் தந்தையான இராமதேவனைக் குடும்பத் தோடு சிறைப்படுத்தி டில்லிக்குக் கொண்டு சென்றான், அலாவுதீன் அவனை ஆறுமாதம் டில்லியில் வைத்திருந்து, பின் யாதவநாட்டை ஆளும்படி அனுப்பினான். அதனால், இராம தேவன் தன் வாழ்நாள் முழுவதும் அலாவுதீனுக்கு நண்பனாகவே இருந்து வந்தான். முன்னே தோற்றுவந்த அவமதிப்பைப் போக்கும் பொருட்டு, 1310இல் அலாவுதீன், மாலிக்காபூரைக்காகதீய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வாரங்கலை முற்றுகை யிட்டான். ஒரு மாதத்திற்குப்பின், காகதீய மன்னனான இரண்டாம் பிரதாப ருத்திரன் திறைதர உடன்பட்டான். மாலிக்காபூர் பெரும் பொருளுடன் டில்லி திரும்பினான். யாதவ நாட்டு மன்னன் நண்பனானான். காகதீய வேந்தனும் திறைதர ஒப்புக் கொண்டான். இனி எஞ்சி நின்றன. தமிழகத் தின் வடக்கிலிருந்த போசளநாடும் பாண்டிநாடுந்தாம். வெற்றிமேல் வெற்றி கண்ட அலாவுதீன், அத்தென்னாடுகளின் மீது படையெடுத்துச் செல்லும்படி மாலிக்காபூரை அனுப்பினான். மாலிக்காபூர் பெரும்படையுடன் யாதவ நாட்டுத் தேவகிரியை அடைந்து, இராமதேவனின் உதவி பெற்று ஒய்சள நாட்டைத் தாக்குவதற்கு அங்கு தங்கியிருந்தான். ஒய்சள மன்னனான மூன்றாம் வல்லாளன் தனக்குப் பகைவனா யிருந்தமையால், இராமதேவனும் அவனுக்குத் துணைசெய்ய ஒப்புக்கொண்டான். அப்போது மூன்றாம் வீரவல்லாளன், இழந்த தன் நாட்டுப் பகுதியை மீட்கும் பொருட்டு வடக்கு நோக்கிப் படையெடுத்துச் சென்றிருந்தான். அதையறிந்த மாலிக்கபூர் அங்கிருந்து சென்று, ஒய்சள நாட்டின் தலைநகரான துவார சமுத்திரத்தைத் தாக்கினான். இதையறிந்த வீரவல்லாளன் விரைந்து தலை நகர்க்கு வந்து, பகைவனின் படைப் பெருக்கைக் கண்டு, வெற்றி பெற முடியா தென்பதை அறிந்து திறைதர உடன்பட்டான்; பெரும் பொருள் கொடுக்கவும் இசைந்தான். ஆனால், மாலிக்காபூர் அப்பொருளைப் பெற்றுக் கொண்டு டில்லி செல்லவில்லை; பாண்டி நாட்டின் மீது படையெடுப்பதற்காகத் துவரையில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தான். இந்நிலையில், அரசுரிமை பற்றி வீர பாண்டியனோடு போராடிக் கொண்டிருந்த சுந்தர பாண்டியன், மாலிக்கா பூரிடம் ஒரு தூதனை அனுப்பித் தனக்கு உதவுமாறு வேண்டினான் (S.I.IV 01.NO247 கல்வெட்டில் இச்செய்தி குறிக்கப்பட்டுள்ளது). அது, மாலிக்காபூருக்குக் குறித்துச் சென்ற பொருள் குறுக்கே கிடைத்ததுபோலாயிற்று. அவன் 1311 இல், பாண்டி நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வீர தவளபட்டினத்தைத் தாக்கினான். வீரபாண்டியன் 120 யானைகளின் மீது பொன் முதலிய பல பொருள்களையும் ஏற்றிக் கொண்டு ஊரை விட்டு ஓடினான். வீரபாண்டியன் அகப்படவில்லை. ஆனால், அந்த யானைகள் மாலிக்கபூர் கைப்பட்டன. அவன் வழியிலுள்ள ஊர்களைக் கொள்ளையடித்துக் கொண்டு இராமேசுவரம் வரை சென்று திரும்பி வரும்போது மதுரையை அடைந்து, உதவி வேண்டிய சுந்தர பாண்டியனையும் தாக்க முனைந்தான். சுந்தர பாண்டியன் மனைவி மக்களுடன் மதுரையைவிட்டோடி விட்டான். மாலிக்காபூர் மதுரையைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த போது, சுந்தர பாண்டியன். தன் சிற்றப்பன் விக்கிரம பாண்டிய னோடு வந்து தாக்கினான். மாலிக்காபூர் சுந்தர பாண்டியன் தந்தையான குலசேகர பாண்டியன் ஈட்டி வைத்திருந்த 96000 மணங்கு பொன், யானை குதிரைகளின் மீது ஏற்றிச் செல்லப்பட்ட முத்து அணிமணிப் பெட்டிகள் பல்லாயிரம், 612 யானை, 20000 குதிரை ஆகிய தமிழர் செல்வத்தைக் கொள்ளை கொண்டு சென்றான் (வாசப், அமீர்குசுரு ஆகிய முகமதிய வரலாற்றாசிரி யர்கள் குறிப்பு). அரசுரிமைப் போட்டியால் தமிழர் செல்வம் பறிபோயிற்று. முகமதியப் படைவீரர்கள் வரும்போதும் போகும் போதும் தமிழகத்தே செய்த அட்டூழியங்கள் சொல்லுந்தரத்தவல்ல. எண்ணிறந்த ஊர்கள் அழிக்கப்பட்டன. எத்தனையோ கோயில்கள் இடிக்கப்பட்டன. கொள்ளையுங் கொலையுமே அவர்கள் குறிக் கோளாக இருந்தன. ஆனால் மாலிக்காபூர் தமிழ் நாட்டு அரசியலில் தலையிட்டதாகத் தெரியவில்லை. இந்நிலையில், இரவிவர்மன் குலசேகரன் என்னும் திருவாங்கூர் மன்னன் திடுமெனக் கிளர்ந்தெழுந்து, கொல்லத் தையும் பிற வடமலையாள நாடுகளையும் வென்று, கொல்லத் தில் தன்னைப் பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான். பின்னர் அவன், 1312 இல் பாண்டி நாட்டின் மேற் படையெடுத்து வந்து சுந்தர பாண்டியனை வென்று, சோழ நாடு சென்று, சீகாழியில் - ‘தமிழகப் பேரரசன்’ என்று மீண்டும் முடி சூடிக் கொண்டான். முடிவில் அவன் தெலுங்கச் சோழரை வென்று, காஞ்சியில் மூன்றாவது முடி சூட்டு விழா நடத்தினான். 1317இல் வீரபாண்டியன், இரவிவர்மன் குலசேகரன் உதவியோடும், சுந்தர பாண்டியன், காகதீய இரண்டாம் பிரதா பருத்திரன் (1296-1322) படைத் துணையோடும் போரிட்டனர். இரவிவர்மன் தோற்றுத் தன் நாட்டுக்கே ஓடினான். வீரபாண்டி யனும் தோற்றோடினான். டில்லியில் அலாவுதீன் இறந்ததும், அவன் மகன் முபாரக்ஷா டில்லிச் சுல்தானான். அவன், 1317 இல், குஸ்ருகான் என்பானைப் பெரும் படையுடன் தமிழகத்திற் கனுப்பினான். அவன் தெற்கே வரும் வழியில், அது காலை தேவகிரியை ஆண்டு கொண்டிருந்த, இராமதேவனின் மருமகனான அர பாலனை வென்று, உயிரோடு தோலை உரித்துக் கொன்று விட்டுத் தெற்கே நோக்கி வந்தான். குஸ்ரூகான் தெற்குநோக்கி வரும்போது, வீரபாண்டியன் தனக்குதவுமாறு அவனை வேண்டினான். குஸ்ரூகான் அவன் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு தமிழகம் நோக்கி வந்தான். ஆனால், டில்லிச் சுல்தானுக்கு எதிராக அவன் செய்த சூழ்ச்சி களை அறிந்த மற்ற படைத்தலைவர்கள். இவனைச் சிறைசெய்து டில்லிக்குக் கொண்டு சென்றனர். அதனால், வீரபாண்டியன் எண்ணம் நிறைவேறவில்லை. டில்லிக்குக் கொண்டு போகப்பட்ட குஸ்ரூகான், சுல்தானைக் கொன்று டில்லிச் சுல்தானானான். குதிரைப் படைத் தலை வனான துக்ளக் என்பான் குஸ்ரூகானைக் கொன்று 1320 இல் சுல்தான் ஆனான். அவன் மகன் முகமது பின்துக்ளக் என்பான் 1325இல் டில்லிச் சுல்தான் ஆனான். அவன், மஜீர் அபுரிஜா என்பானைப் பெரும்படையுடன் பாண்டிநாட்டிற் கனுப்பினான். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்பான், 1326இல் அம்முகமதியப் படையை எதிர்த்துத் தோல்வியுற்றுச் சிறைப்பட்டு டில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டான். ஜலாலுதீன் என்பான், டில்லி சுல்தானின் ஆணையாளனாக மதுரையிலிருந்தாண்டு வந்தான். அரசு என்பதன் பொருள் இன்னதென்பதை அறியாத மண்ணாசை தலைக்கொண்ட சுந்தரபாண்டியனும் வீரபாண்டி யனும், உலக முதலரசான பாண்டியப் பேரரசை அடியோ டொழித்ததோடு, தமிழகத்தை அயலார்க் கொப்படைத்து விட்டனர். அன்றிருந்து தமிழகம் அயலாட்சியிலேயே இருந்து வரலானது! நினைவிருக்கட்டும் - 1326. 4. மதுரையில் முகமதியராட்சி - 1333 - 1378 தமிழ் நாடு முழுவதும் ஆங்கங்கே முகமதியப் பாதுகாப்புப் படைகள் ஏற்படுத்தப்பட்டன. தென்னாட்டு அரசுகளெல்லாம் ஒழிந்தன. ஒய்சள மூன்றாம் வல்லாளன் ஒருவனே டில்லிச் சுல்தான் ஆதிக்கத்திற்குட்பட்ட உரிமையுடைய மன்னனாக இருந்து வந்தான். பஞ்சாப்பு முதல் பைந்தமிழ் நாட்டுக்குமரிமுனைவரை இந்தியநாடு முகமது துக்ளக் ஆட்சிக்குள் அடங்கியிருந்தது. இதனால் அவன், 1327இல் டில்லியிலிருந்து தலைநகரைத் தேவகிரிக்கு மாற்றி, மறுபடியும் 1329இல் தேவகிரியிலிருந்து டில்லிக்கு மாற்றினான். அதனால், பேரிழப்பும் பெருங் குழப்பமும் உண்டாயின. அதுகாலை தென்னாட்டிலிருந்த ஒய்சள மூன்றாம் வீரவல்லாளன் அக்குழப்ப நிலையைப் பயன்படுத்தி, வாரங் கலை முகமதியர் ஆதிக்கத்தினின்று விடுவித்தான்; தொண்டை நாட்டில் தங்கியிருந்த முகமதியப் பாதுகாப்புப் படையை துரத்திவிட்டு, அப்பொழுது அப்படை வீரரின் கொடுமையில் கீழ் அங்கிருந்த சம்புவராயர்களிடம் ஆட்சியை ஒப்பித்தான். இங்ஙனமிருக்க, மதுரையிலிருந்து தமிழ் நாட்டை ஆண்டு வந்த ஜலாலுதீன் 1333 முதல் முழு உரிமையோடு ஆளத்தொடங் கினான். அவன் தன் பேராலேயே பொற்காசுகளையும் வெள்ளிக் காசுகளையும் வெளியிட்டான். 1340இல் ஜலாலுதீன் கொல்லப்பட்டான். அலாவுதீன் உடௌஜி என்பான் மதுரைச் சுல்தான் ஆனான். இவன், ஒய்சள மூன்றாம் வீரவல்லாளன் திருவண்ணாமலையில் இருந்தபோது, 1341இல் அங்கு படையெடுத்துச் சென்று வல்லாளனோடு பொருது போரில் இறந்தான். அவனுக்குப்பின், உடௌஜியின் மருமகனான குத்புடீன் என்பான் சுல்தான் ஆனான். இவன் 40 நாட்களிற் கொல்லப் பட்டான். அடுத்து, கியாசுதீன் என்பான் சுல்தான் ஆனான், இவன் மிகவும் கொடியவன் கியாசுதீன் மனைவியின் உடன் பிறந்தான் கணவனே (இபின்பதூதா என்ற மூர்வகுப்பைச் சேர்ந்த முகமதிய வரலாற்றாசிரியன்) கியாசுதீனின் சொல் லொணாக் கொடுமை களைப் பற்றி எழுதி வைத்துள்ளான். கியாசுதீன் மதுரைச் சுல்தானாக இருந்த போது, மூன்றாம் வீரவல்லாளன், முகமதியப் பாதுகாப்புப் படை தங்கியிருந்த கண்ணணர்க் கொப்பத்தை முற்றுகையிட்டான். முற்றுகை ஆறுதிங்களுக்குமேல் நடந்தது. கோட்டைக்குள்ளே உணவுப் பொருள் தீரும் நிலையில் இருந்தது. கோட்டைக்குள் இருந்த முகமதிய வீரர்கள் வல்லாளனுக்கு அடிபணிய உடன்பட்டு, மதுரைச் சுல்தானிடம் இசைவு பெற்றுவர இசைவு தருமாறு வேண்டினர். வல்லாளன் சிறிதும் எண்ணிப் பாராது அதற்கு இசைந்தான். கியாசுதீன், தன்னிடம் வந்த தூதவரால் அதை அறிந்ததும் பெரும்படையுடன் கண்ணQரை அடைந்தான். முகமதியப் படை வெற்றி பெற்றது. கியாசுதீன் வீரவல்லாளனைச் சிறைப் படுத்தி, 80 ஆண்டு நிரம்பப் பெற்ற அவ்வீரனை உயிரோடு தோலை உரித்து, உரித்த திருமேனியாகவே அத்திருமேனியை மதுரை நகர் மதில் வாயிலில் கட்டித் தொங்கவிட்டான். தாய் நாட்டுக்காகவே உடல்பொருள் உயிர் அனைத்தையும் ஒப் படைத்த தியாகமூர்த்தியாகிய அம்மூன்றாம் வீரவல்லாளன் திருவுடல், செந்தமிழ் மதுரைத் திருமதில் வாயிலில் தொங்கிக் கொண்டிருந்ததை, 1342இல் பார்த்ததாக இபின்பதூத குறிப்பிட்டுள்ளான். இவ்வல்லாளனுடன் இத்தென்னாட்டு அரசு ஒழிந்தது. கொடியவனான கியாசுதீனுக்குப் பின் நாசின்உதீனும், அடில்ஷாவும் (1356-7), பகுருதீன் முபாரக் ஷாவும் (1358-72), அலாவுதீன் சிக்கந்தரும் (1372-1377) மதுரைச் சுல்தான்களாகித் தமிழகத்தை ஆண்டு வந்தனர். 1326 முதல் 1378 வரை 52 ஆண்டுகள் மதுரையில் முகமதியராட்சி நடந்தது. இம் முகமதிய ராட்சியைக் குறிக்கும் இரண்டு கல் வெட்டுக்கள், புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள இராங்கியம், பனையூர் ஆகிய ஊர்களில் உள்ளன. அவர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்கள் பட்ட அல்லலையும், அன்னார் செய்த வன்கொடுமைகளையும் - வெற்றிநகர்க் குமாரகம்பண்ணன் மனைவி கங்காதேவி எழுதிய மதுராவிஜயம் (மதுரைவெற்றி) என்னும் வடமொழிக் காவியத்தில் பரக்கக்காணலாம். இபின் பதூதா என்ற முகமதிய வரலாற்றாசிரியனும் அப்படியே எழுதி யுள்ளான். இவர்கள் ஆட்சிக் காலத்திலேதான் தமிழர்கள் வலுக் கட்டாயமாக முகமதியராக்கப்பட்டனர். ‘தமிழ்நாடு முழுவதும் முகமதிய வீரர்கள் தமிழ் மக்களுக்குக் கொடுமை செய்வதையே பொழுது போக்காகக் கொண்டிருந் தனர். மதுரைப் புறநகரிலிருந்த தென்னந் தோப்புகள் - மரங்கள் - வெட்டப்பட்டு, அம்மரங்கள் இருந்த இடங்களைக் கழுமரங்கள் அணி செய்தன. மதுரை நகர்த் தெருவெல்லாம் தமிழர் தலைத் தோரணங்கள் தொங்கின. மதமாற மறுத்த தமிழர்களை உயிரோடு தோலை உரித்தனர்: கண்களைத் தோண்டி எடுத்தனர்; பச்சிளங் குழவிகளைத் தாயாரின் மார்பில் கிடத்தி வெட்டிக் கொன்றனர். கோயில்கள் இடிக்கப்பட்டன. 50 ஆண்டுகள் தமிழ் நாட்டுக் கோயில்களும் மடங்களும் மூடிக் கிடந்தன. மதுரையி லிருந்த தமிழ்க் கருவூலங்களான பழந்தமிழ் நூல்களெல்லாம் தீக்கிரையாக்கப்பட்டன. அவர்கள் இட்ட தீக்குத்தப்பின நாட்டுப் புறங்களிலிருந்த சில தமிழ்நூல்கள் தாம் நமக்குக் கிடைத்துள்ளன (கோவைக்கிழார்-கொங்குநாட்டு வரலாறு-309). திருப்பத்தூர்க்(இராமநாதபுர மாவட்டம்) கல்வெட் டொன்று. 1340 இல் துலுக்கர்களால் இடித்துத்தள்ளிய கோயில் களை, அந்நாட்டுச் சூரைக்குடித் தலைவன் விசயாலயத்தேவன், அத்துலுக்கர்களைத் துரத்தி விட்டுப் புதுப்பித்ததாகக் கூறுகிறது. அதற்கடுத்துள்ள குன்றக்குடி, திருக்கோளக்குடி, சூரைக் குடி முதலிய ஊர்க்கோயில்களும் புதுப்பிக்கப் பட்டனவாகத் தெரிகிறது (கோ.கிழார்-கொ.வரலாறு-311). ஓவியச் சிற்ப வுறையுளாய்-வான் ஓங்கிய கோயில்கள் பாழ்படக் கூவி யழக்கொல் கொடியர்போல்-வெறி கொண்டே யிடித்து நொறுக்கினர். 40 அம்மத மாற மறுத்தவர்-தமை ஆடு குட்டிகளைப் போலவே தம்மனம் போலக் கொடியவர்-துயர் தாங்கொணா வன்கொலை செய்தனர். 47 கண்களைத் தோண்டி யெடுத்தனர்-அந்தோ! கா தொடு மூக்கை யறுத்தனர் புண்களில் தீக்கோல் புதைத்தனர்-உயிர் போகும் வரையும் வதைத்தனர். 48 கட்டி வெயிலில் கிடத்தினர்-நகக் கண்களில் ஊசி கடத்தினர் கட்டையில் வைத்தெரி மூட்டினர்-உந்தியில் கம்பியை விட்டுமே ஆட்டினர் 49 கன்னெஞ்சர் என்பதைக் காட்டவோ-பசுங் காய்போலுஞ் செந்தமிழ்ச் சேய்களை வன்னெஞ்ச முள்ள கொடியவர்-தாயின் மார்பில் கிடத்தியே கொன்றனர். 51 (வேறு) டில்லித் துலுக்கவீரர்-அன்று செய்த கொடுமையெல்லாம் சொல்லுந் தரத்ததாமோ-சொல்லித் துன்பம் விளைக்கலாமோ. 59 படைகள் வருவதாச்சு-மக்கள் பறந்து திரியலாச்சு உடைமை யிழக்கலாச்சு-மக்கள் ஓடி யொளிக்கலாச்சு. 60 குடியி ருக்கும்வீட்டில்-புகுந்து கொள்ளை யடிக்கலாச்சு விடிவ தற்குமுன்னே-ஊரும் வெந்து தணியலாச்சு. 65 தெருவினில் குலமகளிர்-நடந்து செல்லு முரிமைபோச்சு உரிய வுடைமையெல்லாம்-இழந்தே ஒடுங்கி வாழலாச்சு. 67 (இப்பாடல்கள், புலவர் குழந்தை-அரசியலரங்கம் 4:7. ‘முகமதியராட்சி’ என்னும் பகுதியிலுள்ளவை.) மதுரைச் சுல்தான்கள் 1. ஜலாலுதீன் அசன்ஷா 1326-33-1340 2. அலாவுதீன் உடௌஜி 1340-1341 3. குத்புடீன் பிரூஜ்ஷா (40-நாட்கள் 4. கியாசுதீன் 1341-1344 5. நாசிர் உதீன் 1344-1356 6. அடில்ஷா 1356-1357 7. பகுருதீன் முபாரக்ஷா 1358-1368 8. அலாவுதீன் சிக்கந்தர் 1369-1377 இவர்களேயன்றி, நஸ்ஸரத்துதீன், விம்சுதீன், நாசருதீன், இஸ்மாயில் என்போரும் ஆண்டதாகத் தெரிகிறது. முகமதிய ராட்சிக் காலத்தே பாண்டி நாட்டில் பாண்டிய மன்னர்கள் சிலர் இருந்தனர். 1. மாறவர்மன் குலசேகர பாண்டியன் 1314-1346 2. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் 1315-1347 3. மாறவர்மன் வீரபாண்டியன் 1334-1380 4. மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் 1335-1352 இவர்கள் கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டில் பல இடங் களில் காணப்படுகின்றன. ஆனால், இவர்கள் எவ்வெவ்வூர் களிலிருந்து எவ்வெப் பகுதிகளை ஆண்டு வந்தனர் என்பது தெரியவில்லை. இவர்கள் அம்முகமதியர்கள் செய்த அட்டூழியங் களை எப்படிப் பொறுத்துக் கொண்டு, மன்னர்கள் என்னும் பெயரோடு உயிர் வாழ்ந்து வந்தார்களோ! 5. விடுதலை இயக்கம் முகமது பின்துக்ளக் 1325 இல் டில்லிச் சுல்தானானான். காம்பிலி தேவன் அவன் ஆட்சித் தொடக்கத்திலேயே திறைதர மறுத்தான். துக்ளக் காம்பிலியைக் கைப்பற்றப் பெரும் படை யொன்றை அனுப்பினான். காம்பிலிதேவன் அம்முகமதியப் படையை எதிர்த்து வீரத்துடன் போராடி முடிவில் வீரவாழ் வெய்தினான். தலை துண்டிக்கப்பட்டு வைக்கோல் திணிக்கப் பெற்ற அவன் உடல் டில்லிக் கனுப்பப்பட்டது. காம்பிலி நாட்டை முகமதிய அதிகாரி ஒருவன் ஆண்டு வந்தான். காம்பிலி தேவனின் வீரமறைவு வீண்போகவில்லை. இதனால், தென்னாட்டு மக்கள் முகமதிய ராதிக்கத்தை வெறுத்தனர். அப்பிடியிலிருந்து விடுபட விடுதலை இயக்கம் ஒன்றைத் தொடங்கினர். கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் இடையில் தோன்றி அந்நாட்டில் இயங்கி வந்த வீரசைவ இயக்கம். இவ்விடுதலை இயக்கத்திற்குப் பெருந்துணை செய்தது. வரிச் சுமையால் கொடுமைக்காளான குடியானவர்கள் அவ்வியக்கத்திற்குப் பேருதவி தந்தனர். குறுநில மன்னர் பெரும்பாலோர் அவ்வியக் கத்தினால் உரிமை எய்தினர். சோமதேவன் என்னும் சிற்றரசன் காம்பிலி நாட்டு அதிகாரிக்கெதிராகக் கிளர்ச்சி செய்து, அந்நாட்டுக் கோட்டைகள் சிலவற்றைப் பிடித்துக் கொண்டான். இதுகாறும் முகமதியராட்சிக் கடங்கியிருந்த ஒய்சள மூன்றாம் வல்லாளனும் காம்பிலி மீது படையெடுத்து விட்டான். எனவே, காம்பிலியை ஆண்ட முகமதிய அதிகாரி இன்ன செய்வதென்றே தோன்றாதவனாய், நாட்டு நிலைமையை டில்லிச் சுல்தானுக்குத் தெரிவித்தான். துக்ளக் டில்லியிலிருந்த அரிகரன், புக்கன் என்பார் இருவரையும் அழைத்து, தனக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டுமென உறுதிமொழி வாங்கிக் கொண்டு, அவ்விருவரையும் பெரும்படையுடன் காம்பிலி நாட்டுக் கனுப்பினான். இவ்விருவரும், சங்கமன் என்பானின் ஐந்து மக்களில் முதல் மகனும் மூன்றா மகனுமாவர். மற்றவர்-கம்பண்ணன், மாறப்பன், முத்தப்பன் என்போர். அரிகரனும் புக்கனும் காகதீய மன்னனான இரண்டாம் பிரதாபருத்திரனிடம் கருவூல அதிகாரி களாக இருந்தனர். 1322 இல் காகதீய அரசு அழிவுற்றதும் காம்பிலிக்குச் சென்று, காம்பிலி தேவனிடத்தில் பணிபுரிந்து வந்தனர். 1327 இல் காம்பிலி நாடு டில்லிச் சுல்தானால் கைப்பற்றப் பட்டபோது, இவ்விருவரும் சிறைபிடிக்கப்பட்டு டில்லிக்குக் கொண்டுபோகப் பட்டனர். சுல்தானின் வற்புறுத்தலின் பேரில் இருவரும் முகமதிய சமயத்தைத் தழுவி, சுல்தானின் அன்புக்கு உரியவர்களாக இருந்து வந்தனர். அதனாலேயே துக்ளக் இவர்களைக் காம்பிலிக் கிளர்ச்சியை அடக்க அனுப்பினான். அரிகரனும் புக்கனும் காம்பிலி வந்ததும் முகமதிய சமயத்தைக் கைவிட்டனர்; நாட்டில் அமைதி நிலவச் செய்தனர்; தென்னாட்டில் முகமதிய நெறிக்கெதிராகப் பணிபுரிய ஓர் அரசைத் தோற்றுவிக்க வேண்டுமென்று எண்ணினர். அதற்கு, வித்தியாரணியர் என்னும் பெரியார், மக்கள் ஆதரவைத் திரட்டித்தர முன்வந்தனர். (மாதவர் என்ற இந்த வித்தியாரணியர் - தமது 36 ஆம் ஆண்டுப் பருவத்தில் (1331இல்) சிருங்கேரிமடாதி பதியாய்ச் சங்கர குரு பீடம் அமர்ந்து, 1386 வரை அப்பீடத்தில் இருந்தவர்; வேதங்களுக்கு உரை எழுதிய சாயனரின் உடன் பிறந்தார்). அவ்வுதவியால், அரிகரனும் புக்கனும் டில்லி ஆட்சியின் மேலுரிமையை வீசி எறிந்து விட்டு, எதிர்ப்பாளரின் - விடுதலை இயக்கத்தின் - தலைமையை ஏற்றுக் கொண்டனர். துங்கபத்திரை ஆற்றின் கரையில், பம்பா நதி கூடுமிடத்தில், ஆனைகுந்திக்கு எதிரில்-வித்தியாரணிய நகர் என்னும் பெயரில் தலைநகரை அமைத்தனர். அது பின்னர் வெற்றி நகர் (விஜய நகரம்) என்னும் பெயருடன் விளங்கலானது. 18-4-1336 அன்று, அரிகரன் அந்நாட்டின் தலைவனாய் முடி சூட்டிக் கொண்டான். அதுதான் வெற்றி நகர்ப் பேரரசின் தொடக்க நாளாகும். அந்நகரின் இறைவன் பெயர்-விருப்பாட்சர். 6. பாமினிப் பேரரசு இனி, பாமினிப் பேரரசின் வரலாறும், அப்பாமினிப் பேரர சினின்று பிரிந்ததான ஐந்து முகமதிய அரசின் வரலாறும், வெற்றி நகர்ப் பேரரசின் வரலாற்றோடு பிணைந்துள்ளமையால், அவற்றைப் பற்றி ஒருவாறு தெரிந்துகொண்டு, இப்பேரரசின் வரலாற்றினைக் காண்போம். டில்லிப் பேரரசின் மாநிலங்களில் வரிவாங்கி அனுப்பும் பொறுப்பு, நூற்றுவர் என்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. முகமது துக்ளக்கின் ஆட்சி இறுதிக் காலத்தே, மாளவத்தின் நூற்றுவர் வரி வாங்கி அனுப்பாத குற்றத்திற்காகக் கொலைத்தண்டனைக்காளாயினர். இதை அறிந்த தேவகிரி நூற்றுவர் கிளர்ந்தெழுந்து, மாநில ஆட்சித் தலைவனைக் கொன்று, இஸ்மாயில் என்பவனைத் தென் மாநிலத்தின் மன்னவனாக்கினர். முகமது துக்ளக் தானே நேரில் சென்று, கிளர்ச்சிக் காரர் அனைவரையும் சிறைப்படுத்தி மீண்டான். சிறைப்பட்டவர் ஒன்றுபட்ட முயற்சியினால் சிறையினின்றும் வெளியேறினர். துக்ளக், குசராத்தில் நடந்த கிளர்ச்சியை அடக்கச் சென்றிருந்த போது, சிறைமீட்சி முயற்சிக்குத் தலைமை தாங்கிய அசன்கங்கு என்பவன், பெரும் படை திரட்டிப் பேரரசுப் படையை முறியடித்து, 1347 இல் தன்னைத் தெக்கணத்தின் அரசனாக்கிக் கொண்டான். அவன் அரசனானபோது, வைத்துக் கொண்ட அலாவுதீன் பாமினிஷா என்னும் அரசுரிமைப் பெயரால் அவ்வரசு பாமினி அரசு என வழங்கலானது. குல்பர்கா என்பது அதன் தலைநகர். அப்பாமினிப் பேரரசர் 1347 முதல், 1527 வரை 17 பேர் ஆண்டனர். அப்பேரரசு முழு வளர்ச்சி அடைந்த போது, தென் னாட்டின் வடபகுதியில், மேல் கடலிலிருந்து கீழ்கடல் காறும் பரவியிருந்தது. 1. அலாவுதீன் பாமினி 1347-1358 2. முதலாம் முகமது 1358-1377 3. முஜாகித் 1377-1378 4. தாவூது 1378- 5. இரண்டாம் முகமது 1378-1397 6. கியாசுதீன் 1397 7. பிரூஸ் 1397-1422 8. அகமதுஷா 1422-1435 9. இரண்டாம் அலாவுதீன் 1436-1458 10. ஜாலிம் உமாயூன் 1458-1461 11. நிஜாம்ஷா 1461-1463 12. மூன்றாம் முகமது லஷ்கரி 1463-1482 13. மாமூது 1482-1518 14-17. மாமூதீன் மக்கள் நால்வர்1518-1527 இத்துடன் பாமினிப் பேரரசு முடிந்தது. 7. ஐந்து முகமதிய அரசு உமாயூனின் (1458-1461) உள்நாட் டமைச்சனும் பீசப்பூர் மாநிலத் தலைவனுமான மகமது கவான் என்பான். பாமினிப் பேரரசைப் பல மாநிலங்களாகப் பிரித்து, நல்லாட்சி நடத்தற் கான ஏற்பாடு செய்தான். மாமூதின் மக்கள் நால்வராட்சிக்குப் பின் (1527) பாமினிப் பேரரசு அழிந்து, ஐந்து முகமதியத் தனியரசுகள் தோன்றின. பாமினிப் பேரரசின் இறுதிக் காலத்திலே, அப்பேரரசின் மாநிலத் தலைவர்கள், அப்பேரரசுப் பரப்பை ஐந்து தனியரசு களாகப் பிரித்துக் கொண்டனர். 1. பீசப்பூர்-அதில்ஷா மரபு 1490-1690 2. கோல்கொண்டா-குதுப்ஷாஹி மரபு 1512-1672 3. அகமது நகர்-நிஜாம்ஷாஹி மரபு 1490-1595 4. பீடார்-பாரீத் ஷாஹி மரபு 1492-1609 5. பேரார்-இமத்ஷாஹி மரபு 1485-1568 இவ்வைந்தும் வலிமை வாய்ந்த அரசுகளாக நிலவின. பாமினிப் பேரரசை வீழ்த்திய இம்மன்னர்கள் ஐவரும் 1501 இல் ஒன்று கூடி ஒரு புதுவகையான இஸ்லாமிய ஒருமைப் பாட்டை ஏற்படுத்தினர். ‘ஆண்டுதோறும் ஒரு நாள், ஐந்தரசரும் பெருமக்களும் படைத்தலைவர்களும் பீடாரில் கூடி, அத்திரு நாளையே, ‘இஸ்லாமின் தெய்வீகத் திருப்போர்’ (ஜிஹாத்) நாளாகக் கொள்ள வேண்டும்’ என்பதே அது. ஆண்டுதோறும் அந்த ஒரு நாளிலாவது, இந்துப் பேரரசாகிய வெற்றிநகரைத் தாக்கி இஸ்லாம் வளர்க்க வேண்டும் என்று திட்டமிட்டனர். வெற்றி நகர்ப் பேரரசையேயன்றி, மற்ற இந்து அரசுகளையும் ஒழித்து இந்நாட்டில் இஸ்லாம் அரசை ஏற்படுத்த வேண்டும் என்பதே அத்திட்டம். எனவே, இவ்வேறுபாடு, உண்மையில் கொள்ளை கொலைக்கும், பணம் பறிப்பதற்கும் உரிய ஓர் அரசியல் கூட்டு ஏற்பாடாகவே அமைந்தது. பாமினிப் பேரரசும், அதன்பின் ஏற்பட்ட இந்த ஐந்து முகமதிய அரசுகளும் எப்போதும் வெற்றி நகர்ப் பேரரசுடன் போராடிக் கொண்டே இருந்தன என்பதை நினைவில் நிறுத்தவும். 8. வெற்றிநகர்ப் பேரரசு 1. சங்கம மரபு 1336-1485(12) 2. சாளுவ மரபு 1486-1503(2) 3. துளுவ மரபு 1505-1542(4) 4. அரவீடு மரபு 1544-1647(5) இந்நான்கு மரபினும் முறையே தொடர்ந்து 23 அரசர்கள், 311 ஆண்டுகள் ஆண்டனர். 1. சங்கம மரபு 1. முதலாம் அரிகரன் 1336-1357 2. முதலாம் புக்கன் 1344-1377 3. இரண்டாம் அரிகரன் 1377-1404 4. முதலாம் விருப்பாட்சன் 1404-1406 5. இரண்டாம் புக்கன் 1405-1406 6. முதலாந் தேவராயன் 1406-1422 7. இராம ராயன் 1422- 8. முதலாம் வீரவிசயராயன் 1422-1426 9. இரண்டாந் தேவராயன் 1426-1446 10. மூன்றாந் தேவராயன் 1446- 11. மல்லிகார்ச்சுனன் 1447-1465 12. இரண்டாம் விருப்பாட்சன் 1465-1485 1. முதலாம் அரிகரன் (1336-1357): இவன், சங்கமன் முதல் மகன். அக்கன் என்பது, இவன் இயற்பெயர். அரிகரன் என்பது, அரசுரிமைப் பெயர். 2. முதலாம் புக்கன் (1344-1377): இவன், சங்கமன் மூன்றாவது மகன், பேரரசின் ஒரு பகுதியை ஆண்டு வந்து அண்ணனுக்குப் பிறகு பேரரசனானான். 1344இல் அண்ணன் ஆட்சியுடன் தன் ஆட்சியை இணைத்து ஆண்ட இவன், 1346 இல் ஒய்சள நான்காம் வீரவல்லாளனை வென்று, அவ்வரசை வெற்றி நகர்ப் பேரரசின் ஒரு பகுதியாக்கினான். ‘ஒய்சளர் குடிமரபுக் குரியதாயிருந்த நிலவலய மேகலை, வெற்றிநகர் அரசுக்குரிய வண்ணமேகலையாயிற்று’ என, அக்காலக் கல்வெட்டுக்கள் அவ்வெற்றியை அழகாகக் குறிக் கின்றன. ஒய்சளப்பேரரசின் அருகே சிறிய அரசாகத் தோன்றிய வெற்றிநகர் அரசு அதை விழுங்கிய பின் விரைந்து தென்பேரர சாக வளரத் தொடங்கிற்று. முன் ஒய்சளர் கைப்பற்றி யாண்ட தமிழகப் பகுதியையே, அரிகரன் ஆட்சியின் போது இம்முதலாம் புக்கன் ஆண்டு வந்தான். இவன் பேரரசனானபின், தான் ஆண்டு வந்த அத் தமிழகப் பகுதிக்கு, தன் மகன் குமார கம்பண்ணனை ஏற்படுத் தினான். அவன் அத்தமிழகப் பகுதிக்கு நான்காண்டுகள் மாமண் டலத் தலைவனாக இருந்தான். கம்பண்ணனுக்குப் பிறகு, இரண்டாம் அரிகரன் மகனான முதலாம் விருப்பாட்சன் அத்தமிழகப் பகுதியின் மாமண்டலத் தலைவனாக ஏற்படுத்தப் பட்டான். இம் முதலாம் புக்கன் காலத்திலிருந்தே, பாமினி-வெற்றி நகர்ப் போராட்டம் தொடங்கிற்று. குமார கம்பண்ணன் படையெடுப்பு மதுரையிலிருந்தாண்ட முகமதிய ஆட்சியாளர்கள் செய்த அட்டூழியங்களை முன்பு கண்டோம். வரவர அவர்கள் அட்டூழியம் அளவு கடந்து விட்டது. அதைக் காரணமாகக் கொண்டும்-தெற்கே அவ்வரசை வளர விடுவது தம் பேரரசுக்கு இடுக்கிபோலாகும் என்பதையும், தமிழகத்தைத் தம் பேரரசுக் குட்படுத்த வேண்டும் என்பதையும் உள்நோக்கமாகக் கொண்டும்-இம்முதலாம் புக்கன் மகனான குமார கம்பண்ணன் தமிழ் நாட்டின் மேற் படையெடுத்தான். கோபணன் என்பானும், வெற்றி நகர்ப் பேரரசின் இரண்டாவது மரபான சாளுவ மரபின் முன்னோனான சாளுவமங்கு என்பானும் கம்பண்ணனுக்குப் படைத்தலைவர்களாக இருந்தனர். இப்படையெடுப்பு, 1365 க்குப் பின் நிகழ்ந்ததாகும். முதலில் கம்பண்ணன் காஞ்சியை நோக்கிச் சென்றான். அங்கு வெற்றி நகர்ப் படைக்கும், தொண்டை நாட்டை ஆண்டு வந்த சம்புவராயர்க்கும் பல போர்கள் நடந்தன. முடிவாக, காஞ்சியை அடுத்த மரகதபுரம் என்னும் விரிஞ்சிபுரம் போரில் சம்புவராயர் முறியடிக்கப்பட்டனர். கம்பண்ணன் சிறிதுகாலம் காஞ்சியில் தங்கி அமைதியை நிலைநாட்டினான். பின்னர் அங்கு தன் பாதுகாப்புப் படையை வைத்து விட்டுச் சோழ நாடு சென்று, அங்கிருந்த முகமதியப் பாதுகாப்புப் படையை வைத்து, மதுரையை அடைந்து மதுரையை ஆண்ட முகமதிய அரசனை வென்றான். இவ்வெற்றியை, கம்பண்ணன் மனைவி கங்காதேவி செய்த மதுராவிசயம் என்னும் வடமொழிக் காவியம் விரித்துக் கூறுகிறது. அதன் பின் கம்பண்ணன் பாண்டி நாடு முழுதும் சுற்றி, முகமதியப் பாதுகாப்புப் படைகளை வென்றுதுரத்தி அமைதியை நிலைநாட்டி, அங்கங்கே பாதுகாப்புப் படைகளை வைத்துச் சென்றான். இதிலிருந்து தமிழகம் முழுவதும் வெற்றி நகர்ப் பேரரசுக்குட்பட்டு விட்டதெனலாம். தமிழகத்தினின்று முகமதி யராட்சியை ஒழிப்பதையே நோக்கமாகக் கொண்டு, கம்பண்ணன் படையெடுத்திருக்கின், அம்முகமதியரை வென்றபின், ஒரு பாண்டியனைத் தமிழகப் பேரரசனாக்கிச் சென்றிருக்கலாம். அவன் அவ்வாறு செய்யாதது உன்னற்பாலது. மேலும், தமிழர் களாகிய சம்புவராயரை இவன் வென்றிருக்க வேண்டிய தில்லை. மதுரையில் முகமதியராட்சி ஒழியினும், மிகவும் வலியற்ற நிலையில், 1378 வரை தமிழகத்தில் அன்னார் ஆட்சி இருந்து வந்தது. குமார கம்பண்ணன் படையெடுப்பைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் சில தமிழ் நாட்டில் உள்ளன. கொங்கு நாட்டுச் சடையம்பாளையத்தில் உள்ள கல்வெட்டில், மதுரைச் சுல்தான்களால் இடிக்கப்பட்ட கூறையூர்க் கோயில்களைக் கம்பண்ணன் புதுப்பித்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது. கொங்கு நாட்டில் ஏற்படுத்திய பாதுகாப்புப் படைத் தலைவனைப் புதுப்பிக்கும்படி ஏற்பாடு செய்திருக்கலாம். வெற்றி நகர்ப் பாதுகாப்புப் படைத் தலைவர்களின் கண்காணிப்பின் கீழ், தமிழகத்தில் அங்கங்கே பாண்டிய சோழச் சிற்றரசர்கள் சிலர் ஆண்டு வந்தனர் என்பது, விசுவநாத நாயக்கன் வரலாற்றால் தெரிகிறது. 3. இரண்டாம் அரிகரன் (1377-1404): இவன், முதலாம் புக்கனின் மூன்றாம் மகன். குமார கம்பண்ணன் 1374 இல் இறந்து விட்டதால், இவன் பட்டம் பெற்றான். கொள்ளேகால் வட்டத்து ஏகண்டகள்ளியிலும் சிங்காநல்லூரிலும் இவனுடைய 1386, 1390, 1397 ஆண்டுக் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. சிங்கா நல்லூர்க் கல்வெட் டொன்றில், மகாப் பிரதான நாகம நாயக்கன் என்னும் பெயர் காணப்படுகிறது. இவன் வேறு, விசுவநாத நாயக்கன் தந்தை வேறு ஆவர். அன்று கங்கவாடிப் பகுதியை மேற்பார்த்து வந்தவனாவன் இவன். 4. முதலாம் விருப்பாட்சன் (1404-5): இவன், இரண்டாம் அரிகரன் மூத்த மகன். இவன், தமிழ் நாட்டின் மாமண்டலத் தலைவனாக இருந்த போது, 1385 இல் இலங்கை அரசனை வென்று திறைதருமாறு செய்தான். இவன், தொண்டை, சோழ, பாண்டிய நாடுகளை வென்றதாக, இவனது ஆலம்பூண்டிக் கல்வெட்டுக் கூறுகிறது. அங்கெல்லாம் கிளர்ச்சி செய்த சிற்றரசர்களை வென்றடக்கியிருக்கலாம். பழனிப் பக்கமுள்ள விருப்பாச்சி என்னும் ஊர், இவன் பெயரால் ஏற்பட்டதாகும். 5. இரண்டாம் புக்கன் (1405-6) : இவன், இரண்டாம் அரிகரனின் இரண்டாம் புதல்வன். விருப்பாட்சன் பட்டத்திற்கு வந்ததும், இவன் அவனை வென்று துரத்திவிட்டு ஆட்சியைக் கைப்பற்றி இரண்டாண்டுகள் ஆண்டான். 6. முதலாந் தேவராயன் (1406-1422) : இவன், இரண்டாம் அரிகரனின் மூன்றாம் புதல்வன். இவன், பாமினிச் சுல்தானுடன் செய்த போரில் முதலில் தோற்று அடுத்த போரில் வெற்றி பெற்றான்; வெற்றிநகரின் கோட்டை யை நன்கு கட்டினான். துங்கபத்திரையில் அணையொன்று கட்டினான். இவன் கல்வெட்டொன்று, கொள்ளேகால் வட்டத்துச் சிங்காநல்லூரில் உள்ளது. இவன் காலம் வரை, கொங்கு நாட்டில் வெற்றிநகர் ஆட்சி அவ்வளவு பரவவில்லை. 7. இராமராயன் (1422-) : இவன், முதலாந் தேவராயன் மூத்தமகன்; பட்டத்துக்கு வந்த சில திங்களில் இறந்துவிட்டான். 8. முதலாம் வீரவிசயராயன் (1422-1426) : இவன், முதலாந் தேவராயனின் இளைய மகன். இவன், பாமினிச் சுல்தானுக்கு ஆண்டுதோறும் பெரும்பொருள் கொடுத்துக் கொடுத்துச் சந்து செய்துகொண்டு வந்தான். துங்கபத்திரைப் போரில் பாமினிச் சுல்தானிடம் தோற்று, கந்தை கட்டிக் கொண்டு ஒரு கம்பங் கொல்லையில் பதுங்கித் திரிந்தான் பாவம்! இவன் கல்வெட்டு, கொங்கு நாட்டு விசயமங்கலத்தில் ஒன்றும், குமரமங்கலத்திலொன்றும் கிடைத்துள்ளன. விசயமங் கலம் ஈரோடுக்கு 16 கல் மேற்கில் உள்ளது. குமரமங்கலம் உடுமலைப் பேட்டைக்குக் கிழக்கில் அமராவதிக் கரையில் உள்ளது. எனவே, இவன் காலத்தில் வெற்றிநகர் ஆட்சி கொங்கு நாடு முழுவதும் பரவி விட்டதென்பது பெறப்படும். 9. இரண்டாந் தேவராயன் (1426-1446) : இவன், வீரவிசராயன் மகன், இவன் பாமினி அரசுக்குத் திறை செலுத்திக் கொண்டு வந்தான். மேலும் 7 நூறாயிரம் கேட்க இவன் மறுக்கவே போர் மூண்டது. இலக்கணத்தண்ட நாயகன் என்பார், வெற்றிநகர்ப் படை செலுத்தினான். போரில், தேவராயனின் இரண்டாம் புதல்வனான மல்லிகார்ச்சுனன் சிறை பிடிக்கப் பட்டான். முடிவில் தேவராயன் தோற்று, முன்கேட்ட படியே கொடுத்து உடன் பாடு செய்து கொண்டான். இவன்தான் முதன் முதல் முகமதிய வீரர்களைத் தன்படையில் சேர்த்தவன். இவனுக்கு - பிரபுட தேவராயன் என்றும் பெயர். இவன் காலத்தில்தான் திருப்புகழ் - அருணகிரிநாதர் இருந்தார். இவன் காலத்தில், இலக்கண்ணன் - மதுரை நாட்டுக்கும், மாதண்ணன் தஞ்சை நாட்டுக்கும் மாமண்டலத் தலைவராக இருந்தனர். இவன் கல்வெட்டுக்கள் இரண்டு, (1440, 1441) கொங்கு நாட்டுத் தாராபுரத்தையடுத்த கொழுஞ்சிவாடியில் கிடைத் துள்ளன. ஒரு கல்வெட்டில், முகமதியரால் அழிக்கப்பட்ட சொக்க நாதர் கோயிலை, தரங்கைய மன்றாடியார் என்ற தலைவன் புதுப் பித்ததாகக் காணப்படுகிறது. மேலும், பழனியிலும், சேலம் திருச்சி மாவட்டங்களிலும் நான்கு கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவை வெற்றி நகரின் வளர்ச்சியைக் காட்டும். 10. மூன்றாந் தேவராயன் (1446-) : இவன், இரண்டாந்தேவராயனின் மூத்தமகன், ஆட்சியேற்ற அதே ஆண்டில் இறந்து விட்டான். 11. மல்லிகார்ச்சுனன் (1447-1465) : இவன், மூன்றாந் தேவராயன் தம்பி, இவன் காலத்தே பேரரசு தளர்வடைந்தது. கொங்கு நாட்டு வெள்ளகோவிலிலும் பழனியிலும் இவன் கல்வெட்டுக்கள் உள்ளன. 12. இரண்டாம் விருப்பாட்சன் (1465-1485) : இவன், மல்லிகார்ச்சுனன் சிற்றப்பன் மகன். இவன் மிகவும் திறமையற்றவன். எனினும், ஆற்றல் மிக்க மாநிலத் தலைவர்கள் பேரரசு சரியாமல் காத்து வந்தனர். அவர்களுள் - பேரரசின் நடு ஆட்சிப் பொறுப்பொடு, கிழக்கு மாநிலமான சந்திரகிரி நாட்டை யும் ஆண்டு வந்த சாளுவ நரசிம்மனும், தமிழகப் பகுதியை ஆண்டுவந்த சாளுவகோபதிம்மண்ணனும் குறிப்பிடத் தக்கவராவர். சாளுவ நரசிம்மனிடம் துளுவமரபைச் சேர்ந்த ஈசுவரன் என்ற படைத்தலைவன் துணையாக இருந்தான். வெற்றி நகர்ப் பேரரசின் மூன்றா மரபாகிய துளுவமரபின் மூல முதல்வன் இவ்வீசுவரனே. விருப்பாட்சன் பெயருக்கு மட்டும் பேரரசனாக இருந்து வந்தான். இவன் ஆட்சி சாளுவ நரசிம்மன் ஆட்சியாகவே இருந்தது. இவனுக்குப்பின் அவனே ஆட்சியைக் கைப்பற்றி, இரண்டாவது மரபான சாளுவமரபின் முதல்வனானான். 2. சாளுவமரபு 1. சாளுவ நரசிம்மன் 1486-1491 2. இரண்டாம் நரசிம்மன் 1491-1505 1. சாளுவநரசிம்மன் (1486-1491) : இவனுக்குப் பெருந்துணையாய் இருந்தவன் துளுவமரபு ஈசுவரன். ஈசுவரன் மகன் நரசநாயகனே நரசிம்மனின் ஒப்பற்ற படைத் தலைவன் ஆனான். வெற்றி நகர்ப் பேரரசைத் தென்ன கத்தின் புகழ் வாய்ந்த முதற்பேரரசாக்கியவர் இவ்விருவருமே யாவர். நரசிம்மன் பேரரசனாகு முன்னரே அப்பணியை நிறைவேற்றி னான். நரசிம்மனுக்கு திருமலை என்ற திம்மன், தம்மராயன் என்ற இம்மடி நரசிம்மன் என இருமக்கள். (இம்மடி - இரண்டாம்.) நரசிம்மன் தன் இறுதிக்காலத்தில் தன் மக்கள் இருவரையும், படைத்தலைவன் நரசநாயகன் பாதுகாப்பில் விட்டுச் சென்றான். திருமலை, 1491இல் கொலையுண்டான். 2. இரண்டாம் நரசிம்மன் (1491-1505) : இவன், சாளுவநரசிம்மனின் இரண்டாமகன். இவனுக்கு இம்மடி நரசிம்மன் என்றும் பெயர். இவன் பெயரளவில் பேரரசனாக இருந்து வந்தான். படைத்தலைவன் நரசநாயகனே நாடாண்டு வந்தான். சாளுவ மரபு 20 ஆண்டுகளே நாடாண்டது. இரண்டாம் நரசிம்மனுக்குப் பின் துளுவ மரபு ஆட்சிக்கு வந்தது. துளுவ மரபின் முதல்வன் இந்நரச நாயகனே யாவான். இம்மடி நரசராயன் (1492), வீரநரசராயன் (1506) என்ற பெயர் கொண்ட இரண்டு கல்வெட்டுக்கள் கொங்கு நாட்டில் கிடைத்துள்ளன. 1492 கல்வெட்டு சாளுவ நரசிம்மன் மகன் இரண்டாம் நரசிம்மனுடையது. இவனுக்கு இம்மடி நரசராயன் என்றும் பெயர். 1506 கல்வெட்டுத் துளுவமரபு முதலரசனான வீர நரசிம்மனுடையது. அவனுக்கு வீரநரசராயன் என்றும் பெயருண்டு. எனவே, இடையில் உண்டான அரசுரிமைக் குழப்பத் தினால் - அரசியல் மாற்றத்தினால் - இரண்டாந் தேவராயனுக்குப் பிறகு (1426 - 1446), கிருஷ்ணதேவராயன் (1509-1529) காலம் வரை, சுமார் முக்கால் நூற்றாண்டு வெற்றிநகர் ஆட்சி மங்கி யிருந்தது. இரண்டாம் தேவராயனுக்குப் பின் வந்த மூவரும் வலு வற்றவர்கள். சாளுவ நரசிம்மன் ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்று வதிலேயே முனைந்திருந்தான். அவன் மகன் இம்மடி நரசிம்மன்-நரசநாயகனாலேயே ஆளப்பட்டான். ஆகவே, அக்காலங்களில் நாட்டாட்சியில் அவர்கள் அவ்வளவு அக்கறையெடுத்துக் கொள்ளவில்லை. அதனாலேயே அவ்விடைக் காலத்தில் கொங்கு நாட்டாட்சியிலும் அவர்கள் அவ்வாறே இருந்தனர் என்பதை அறிதல் வேண்டும். எனினும், பில்லலமர்ரி பினவீரபத்திர என்ற தெலுங்கு கவிஞர் செய்த ஜெமினி பாரதத்தில், சாளுவ நரசிம்மன் கொங்கு நாட்டுத் தாராபுரத்துக் கோட்டையைக் கைப்பற்றினான் என்று கூறப்படுவதால், அவன் கொங்குநாட்டுக் குறுநில மன்னரை யோ, அல்லது அடங்காத ஆணையாளரையோ அடக்கியுள்ளான் என்பது பெறப்படும். ஆனால், அரசியல் மாற்றக் குழப்பத்தால் கல்வெட்டுக்கள் வெளியிடவில்லை. மேலும், இரண்டாந் தேவராயன் (1426-1446) மைசூர் நாட்டிலுள்ள உம்மத்தூர்த் தலைவனைக் கொங்கு நாட்டின் - உம்மத்தூர், தெற்காணம்பி, அல்லது தென்கடம்பை, சீரங்கப் பட்டணம், சிங்கராயப்பட்டணம், இக்கேரி, மைசூர் முதலிய குறுநில மன்னர்கள் பேரரசுக்குட்பட்டு ஆண்டு வந்தனர். அவர்கள் பேரரசு வலுவாக உள்ள காலத்து அடங்கியிருப்பார்கள்; பேரரசு தளர்ந்த காலத்தில் தனியுரிமையுடைய வராகி விடுவார்கள். இது, அரசியல் உலகில் இயல்பாக நிகழ்வதொன்றாகும். இரண்டாந் தேவராயனுக்குப் பின்னிருந்த வெற்றிநகர் மன்னர் மூவரும் வலியற்றவர்களாய் இருந்ததனால், உம்மத்தூர்த் தலைவர் தனியுரிமையை மேற்கொள்ளத் தொடங்கினர்; தங்கள் பேராலேயே கல்வெட்டு வெளியிடும் நிலையில் இருந்து வந்தனர். திறை செலுத்துவதும், போர்க் காலத்துப் படைத் துணை யாவதுமே சிற்றரசர்கள் பேரரசுக்குச் செய்ய வேண்டுவன வாகும். எனவே, அக்காலத்தே உம்மத்தூர்த் தலைவர்களே கொங்கு நாட்டைத் தனியாட்சி புரியலானார்கள். உம்மத்தூர்த் தலைவர்கள் 1. வீர நஞ்சராயன் 1489-1500 2. வீர சிக்கராயன் 1500-1512 3. வீர நஞ்சண்ணன் 1512-1517 1. வீரநஞ்சராயன் (1489-1500) : இவன், தனியுரிமையுடன் கொங்கு நாட்டை ஆண்ட உம்மத்தூர்த் தலைவன். இவன் கல்வெட்டுக்கள்-அவிநாசி, திருமுருகன் பூண்டி, சேவூர், பெரியபாளையம்(குரக்குத்தளி), தணாயக்கன் கோட்டை, கொடுவாய், மரப்பாளையம், ஆரத் தொழு, தாராபுரம், பழனி ஆகிய இடங்களில் 15 கிடைத்துள்ளன. திருப்பூருக்கு 6 கல் தொலைவில் உள்ள பெரியபாளையம் கல்வெட்டில் இவன் ‘மகாமண்டலேசுவரன்’ என்ற பட்டந் தாங்கியுள்ளான். இக்கல்வெட்டுக்கள் - 1489 முதல் 1499 வரையுள்ள ஆண்டுகட்குரியவை. இதனால், இவன் ஆட்சி கோவை மாவட்டம் முழுவதும் பரவியிருந்தமை பெறப்படுகிறது. இவன், பெரிய பாளையத்தில் - நள்ளாற்று நீரால் நிரம்பும் படி ஒரு குளம் வெட்டியுள்ளான், இன்றும் அது, நஞ்சராசன் குளம் என்றே வழங்கி வருகிறது. அவிநாசியில் இவன் கல் வெட்டொன்றும், இவன் மகன் அக்கராயன் கல்வெட் டொன்றும் கிடைத்துள்ளன. அவற்றின்படி, நஞ்சராயனுக்கு, தெற்காணம்பி நாட்டு எம்மர்கால் ஒன்னக்கன் செட்டி என்பான் அமைச்சனாக இருந்திருக்கிறான். தெற் காணம்பி - உம்மத்தூருக்குப் பக்கத்து நாடு, இவ்வீர நஞ்சராயன், மதுரைச் சுல்தான்களால் இடிக்கப் பட்ட கொடுவாய்ப் (குடவாயில்) பெருமாள் கோயிலைப் புதுப்பித்துள்ளான். 2. வீரசிக்கராயன் (1500-1512) : இவன், வீரநஞ்சராயன் மகன். இவன் கல்வெட்டுக்கள்-அவிநாசி, குறுமந்தூர், குன்னத்தூர், ஈரோடு ஆகிய ஊர்களில் உள்ளன. அவை 1500-1512 ஆண்டுகளில் பொறிக்கப்பட்டவை. 3. வீரநஞ்சண்ணன் (1507-1517) : இவன், தெப்பண்ணன் என்பான் மகன். அவனுக்கும் வீரசிக்கராயனுக்கும் என்ன உறவென்று தெரியவில்லை. 1507-1517 வரை பொறிக்கப்பட்ட இவன் கல்வெட்டுக்கள்-நம்பியூர் (கோபி வட்டம்), பட்டணம் (பல்லடவட்டம்), தாராபுரம், பழனி ஆகிய இடங்களில் உள்ளன. இவனும், ‘மகாமண்டலே சுவரன்’ என்ற பட்டம் தரித்துள்ளான். பட்டணம் கல்வெட்டு, அவ்வூர் - வாயிரக்கா நாட்டைச்(வாரக்க நாடு) சேர்ந்த தென்றும், அது, மதுக்கோடு என்ற பழம் பெயரையுடைய தென்றும், முன் பாழடைந்திருந்த அவ்வூரை, ஆறு நானாதேசிகள் (பல நாட்டினர்) புதுப்பித்துக் கட்டி, அதற்குச் சினநாதபட்டணம் என்று பெயர் வைத்தனர் என்றும் கூறுகிறது. இவனொடு உம்மத்தூர் மரபு முடிந்தது. 1509இல் அரியணை யேறிய வெற்றி நகர்க் கிருஷ்ணதேவராயன், 1512இல் உம்மத்தூர் மரபை அழித்துவிட்டு, அங்கு நேரடியாட்சியை ஏற்படுத் தினான் என்பது, 1510, 11 ஈரோட்டுக் கல்வெட்டால் தெரிகிறது. உம்மத்தூர்த் தலைவர்களுக்குப் பின்னர், உம்மத்தூரை அடுத்த சிறு நாடான தெற்காணம்பி மாதையன் என்பான், கொங்கு நாட்டின் ஆணையாளனாக இருந்தான். இவன் ஒரு வீர சைவன். இவன் பேரூரில் ஒரு குளம் வெட்டி, ஒரு கோயிலும் கட்டியுள்ளான். அக்குளத்தின் கீழ்க் கரையில் உள்ள அக்கோயில், இவன் பெயரால் மாதேசுவரம் என்று வழங்கி வருகிறது. பேரூரில், பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகன் (765-790) கட்டிய குன்ற மன்னதோர் திருமால் கோயிலை இடித்து, அக்கல்லைக் கொண்டு இவன் இம்மாதேசுவரம் என்னும் கோயிலைக் கட்டினான். அக்குளத்திலுள்ள கல்வெட்டில், ‘தெற்காணம்பிச் சங்கரையன் மகன் மாதையன் சேவை’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. கோவை நகரிலுள்ள மாதேராசா மகால் இவன் கட்டியதே. பாலமலைத் தொடரிலுள்ள மாதேசு வரன் கோயில் இவன் கட்டினதே. அக் கோயிலின் பெயரே அம்மலைப் பகுதிக்கும் பெயராக இன்று வழங்குகிறது. இவன், மைசூர் நாட்டிலிருந்து வீர சைவக் குடிகளைக் கொங்கு நாட்டில் குடியேற்றினான். 3. துளுவ மரபு நரசநாயகன் (1491-1503) : இவன், சாளுவ நரசிம்மன் படைத் தலைவனான ஈசுவரன் மகன். சாளுவ நரசிம்மன் மகனான இரண்டாம் நரசிம்மனைப் பெயரளவில் பேரரசனாக வைத்து, அவன் கால முழுதும் இவன் தானே ஆண்டு வந்தான் என்பதை முன்பு கண்டோம். எனவே, இவன் அரசவரிசையில் சேரவில்லை. இவன் காலத்தே, சீரங்க பட்டணம் பகுதியை ஆண்ட நஞ்சராசன் என்பான் பேரரசுடன் முரண்படவே, இவன் காவிரியாற்றின் மீது பாலம் அமைத்துச் சென்று, சீரங்க பட்டணத்தைத் தாக்கி நஞ்சராசனை அடக்கினான்; அடங்காத பாண்டியன் மானபூஷணனை வென்றடக்கினான். பீசப்பூர்ச் சுல்தானை வென்று, இரேய்ச்சூர், முட்டக்கல் கோட்டைகளைக் கைப்பற்றினான். பீசப்பூர்ச் சுல்தான் அதில்ஷா எதிர்த்து நிற்க முடியாமல் ஒரு கோட்டைக்குட் பதுங்கினான். ஆனால், அவன் பணிந்து விடுவதாகக் கூறி நரசநாய கனை அழைத்துக் கொன்று விட்டான். அதனால் ஏற்பட்ட குழப்பத்தால், இரண்டாண்டு கழித்தே நரசநாயகனின் முதல் மகனான வீரநரசிம்மன் அரியணையேற முடிந்தது. நரசநாயகனுக்கு மூன்று மனைவியர். அவர்களுள், திப்பாம்பாளுக்கு - வீரநரசராயனும், நாகலாதேவிக்கு - கிருஷ்ணதேவராயனும், உமாம்பிகாதேவிக்கு - அச்சுதராயனும் அரங்கராயனும் பிறந்தனர். நரசநாயகனுக்குப் பின் (இரண்டாம் நரசிம்மனுக்குபின்) முதல் மூவரும் ஒருவர் பின் ஒருவராக அரசராயினர். 1. வீரநரசிம்மன் 1505-1509 2. கிருஷ்ணதேவராயன் 1509-1529 3. அச்சுதராயன் 1530-1542 4. சதாசிவராயன் 1543-1572 1. வீரநரசிம்மன் (1505-1509) : இவன், நரசநாயகனின் முதல் மனைவியின் மகன். இவன் காலத்தில் போர்த்துக்கீசியர் மேல் கடற் பகுதியிலுள்ள கண்ண னூர்ப் பக்கம் இருந்து, தம் வாணிக சமய அரசியல் ஆதிக்கத் தைப் பரப்பி வந்தனர். நரசிம்மன் அவர்களுடன் நட்பாக இருந்ததுடன், தன் படைகளை மேலை நாட்டு முறையில் பயிற்று வித்தற்கு உதவி நாடி அவர்களிடம் தூதனுப்பினான். போர்ச்சுக் கீசிய ஆட்சித் தலைவனான அல்மேடா என்பான், பாட்கலில் ஒரு கோட்டை கட்ட இயைபு வேண்டிய போது, நரசிம்மன் இணக்கமும் அளிக்கவில்லை மறுக்கவுமில்லை. பாட்கல் - பாழிக்கல். அன்று மோரியப் படை தங்கியிருந்த செருப்பாழி என்பது இதுவே. படைத்துறையில் மட்டுமன்றி, பொதுமக்களிடையே மற்போர் முதலிய போட்டிகள் வைத்து, வெற்றி பெற்றவர்க்குத் தக்க பரிசீந்து, இவன் பொது மக்களிடையேயும் வீரவுணர்ச்சியை வளர்த்து வந்தான். இவன் ஆட்சியின் இறுதி நாளில் உம்மத்தூர்த் தலைவன் சென்று, சீரங்க பட்டணத்தை முற்றுகையிட்டான். முற்றுகை மூன்று மாதம் நடந்தும் வெற்றி பெறாமலேயே இவன் வீர வாழ்வு பெற்றான். அன்று சீரங்க பட்டணமும் உம்மத்தூர்த் தலைவர் ஆட்சிக் கீழ் இருந்தது. இவன் 1506 ஆம் ஆண்டுக் கல்வெட்டு கொங்கு நாட்டில் உள்ளது. 2. கிருஷ்ணதேவராயன் (1509-1529) : இவன், நரச நாயகனின் இரண்டாவது மனைவியின் மகன். இவனொரு பெரு வீரன். இவன் சிறந்த அரசியல் அறிஞனும் புலவனுமாவன். இவன் தன் முன்னோர் இழந்த நாடுகளை யெல்லாம் மீட்டான். எதிர்த்த முகமதிய மன்னர்களைப் புறங் காட்டி ஓடும்படி செய்தான். வெற்றி நகர்ப் பேரரசு இவன் காலத்தே, வடக்கே துங்கபத்திரை முதல், தெற்கே குமரிமுனை வரை பரவியிருந்தது. இவன் தன் நாடு முழுவதும் அடிக்கடி சுற்றி வந்து அமைதியை நிலைநாட்டினான். இவன் காலத்தில் வெற்றிநகர் - வாணிகம், செல்வம், கல்வி முதலியவற்றில் சிறந்து விளங்கிற்று. இவன் காலத்தும் போர்த்துக்கீசியர், போரில் வெற்றி நகர்க் குதவுவதாகவும், குதிரைகளை எதிரிகளுக்கு விற்பதில்லை யென்றும் ஆவல் காட்டி, பாட்கலில் கோட்டை கட்ட உரிமை வேண்டினர். அண்ணனைப் போலவே இவனும் இணக்கம் அளிக்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. வடதிசைப் போரில் இடை ஓய்வு ஏற்பட்டதும், இவன் தன் அண்ணன் முடிக்காது விட்டுச் சென்ற உம்மத்தூரை அடக்கத் தெற்கே சென்றான். அப்போது உம்மத்தூர்த் தலைவன் கங்கராயன் என்பான் பெனுகொண்டாவையும் கைப்பற்றி யிருந்தான். கிருஷ்ணதேவராயன் பெனுகொண்டாவோடு, உம்மத்தூரின் தலைநகராயிருந்த சிவசமுத்திரத்தையுங் கைப்பற்றினான். கங்கராயன் தோற்றோடிக் காவிரியில் விழுந்திறந்தான். பழைய தலைநகர் தரைமட்ட மாக்கப்பட்டு, சீரங்க பட்டணத்தைத் தலைநகராகக் கொண்ட புதிய மாநிலம் ஆக்கப் பட்டது. சாளுவ கோவிந்தராயன் அதன் ஆட்சித் தலை வனாகவும், பெங்களூர்க் கெம்பேகவுடன் உதவியாள னாகவும் அமர்த்தப்பட்டனர். ஈரோடு வட்டத்து அறச்சலூர்க் கல்வெட்டில், இக்கோவிந்தராயன், ‘மகாமண்டலேசுவரன்’ எனக் குறிக்கப்படு கிறான். பேரரசுக் குட்பட்ட குறுநில மன்னர்களை யெல்லாம் இவன் தன் ஆணைப்படி நடக்க வேண்டுமென்று கட்டளை யிட்டான்; அடங்காதவர்களை அச்சுறுத்தியும் தண்டித்தும் அடக்கினான். அதனால், பேரரசு இவன் காலத்தில் உயர்ந்த நிலைக்கு வந்தது. கிருஷ்ணதேவராயன் ஆட்சியேற்றதும், தமிழகத்தை மூன்று மண்டலங்களாகப் பிரித்து, செஞ்சியைத் தலைநகராகக் கொண்ட நெல்லூர் முதல் கொள்ளிடம் வரையுள்ள பகுதிக்கு - துப்பாக்கிக் கிருஷ்ணப்ப நாயக்கனையும், தஞ்சையைத் தலை நகராகக் கொண்ட, கொள்ளிடத்துக்கும் காவிரிக்கும் இடைப் பட்ட பகுதிக்கு - விசயராகவ நாயக்கனையும் மதுரையைத் தலை நகராகக் கொண்ட காவிரிக்குத் தெற்கேயுள்ள பகுதிக்கு - வேங்கடப்ப நாயக்கனையும் தலைவர்களாக்கினான். நாகம நாயக்கன் என்பான். தமிழகத்தின் மாமண்டலத் தலைவனாக இருந்தான். கிருஷ்ணதேவராயன் காலத்தே தெலுங்கிலக்கியம் தழைத்தது. இவனே தெலுங்கில் புலவனாவான். கொங்கு நாட்டில் இவன் காலத்துக் கல்வெட்டுக்கள் பல கிடைத்துள்ளன. அவை 1515 முதல் 1528 வரையுள்ளவை. அவி நாசியை அடுத்த சேவூர், திருச்செங்கோடு, திருச்செங்கோட்டை அடுத்த கொக்கராயன் பேட்டை, சேலத்தை அடுத்த உத்தமச் சோழபுரம், தருமபுரி வட்டத்து இந்தூர், பழனி, திண்டுக்கல் வட்டத்துத் தாடிக்கொம்பு, அகரம், குளித்தலை வட்டத்துக் கடம்பர் கோயில் ஆகிய இடங்களில் உள்ளன அவை. திருச்செங்கோட்டுக் கல்வெட்டில், அரசனுடைய சாமந்தன் திரியம்பக உடையான் செயலாளன் - சாமநாயனார் என்பான், திருச்செங்கோட்டில் சாமசமுத்திரம் என்ற ஒரு குளம் வெட்டினான் என்று காணப்படுகிறது. மற்றொரு கல்வெட்டில், சில விழாக்கள் நடத்துவதற்காகச் சந்தைச் சுங்கவரியை ஒதுக்கிய தாகக் குறிக்கப்பட்டுள்ளது. தாடிக் கொம்புக் கல்வெட்டில், 24 வீடுகள் கட்டிக் குடிகளுக்குக் கொடுக்கப் பட்டன என்று காணப்படுகிறது. இது, தெலுங்குக் குடியேற்றமாகும். தமிழகத்தில் நாயக்கராட்சி 1. மதுரை நாயக்கர் கிருஷ்ணதேவராயன், தமிழகத்தை மூன்று மண்டலங் களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வாரு தலைவனை ஏற்படுத்தினானல்லவா? அத்தலைவர்களின் கீழ்ப் பழைய தமிழ் அரச மரபினரே அத்தமிழகப் பகுதிகளை ஆண்டு வந்தனர். மதுரையில் சந்திரசேகர பாண்டியன் என்பான் ஆண்டு வந்தனன். வீரசேகரன் என்னும் சோழ மன்னன் படையெடுத்து வந்து மதுரையைக் கைப்பற்றிக் கொண்டான். மதுரை மண்டலத் தலைவனால் அச்சோழ மன்னனை எதிர்க்க முடியவில்லை. அதனால், சந்திரசேகர பாண்டியன், கிருஷ்ண தேவராயனிடம் சென்று முறையிட்டான். இராயன், தென்மண்டலங் களின் மா மண்டலத் தலைவனான நாகம நாயக்கனை மதுரைக்கனுப் பினான். நாகமன் பெரும்படை யுடன் மதுரை சென்று சோழனை வெருட்டி விட்டு, மதுரையைப் பாண்டியனிடம் ஒப்படைக்காமல் தானே ஆளத் தொடங்கினான். இதையறிந்த கிருஷ்ணதேவராயன் சினங்கொண்டு, நாகமனைத் திரும்பி வரும்படி கட்டளையிட்டான். நாகமன் பேரரசன் கட்டளையைப் பொருட்படுத்தவில்லை. அதனால், கடுஞ்சினங் கொண்ட இராயன், ‘நாகமனைக் கொன்று அவன் தலையைக் கொண்டு வருவோர் இங்கு ஒருவரும் இல்லையா?” என்றான். அவையிலிருந்த யாரும் பேசவில்லை. அங்கிருந்த நாகமன் மகன் விசுவநாதன் எழுந்து, ‘நான் கொண்டு வருகிறேன்’ என்றான். கிருஷ்ணதேவராயன் மகிழ்ந்து, பெரும் படையுடன் விசுவ நாதனை மதுரைக்கனுப்பினான். விசுவநாதன் மதுரை சென்று, தந்தையுடன் சந்து செய்ய முயன்று பயன்படாமை யால் கடும்போர் புரிந்து வென்று சிறைப்படுத்திக் கொண்டு போய் நாகமனை இராயன் முன் நிறுத்தினான். இராயன், விசுவ நாதனின் அரசன்பையும் அருந்திறலையும் அருஞ் செயலையும் கண்டு மகிழ்ந்து, அவன் வேண்டுகோட்படி நாகமனை விடுதலை செய்து, விசுவநாதனைத் தமிழ்நாட்டின் அதிகாரியாக்கினான். விசுவநாதன் பேரரசில் ஒரு படைத்தலைவனாக இருந்ததோடு, இராயனுடன் நெருங்கிப் பழகியவனும் ஆவான். விசுவநாதன், அரியநாத முதலியார் என்னும் படைத் தலைவனுடன் மதுரை சென்று அதிகாரப் பொறுப்பேற்றான். 1529இல் சந்திரசேகர பாண்டியன் பிள்ளையில்லாமல் இறந்து போகவே, விசுவநாதன் பாண்டி நாட்டின் முழு ஆட்சிப் பொறுப் பையும் ஏற்று, தளவாய் அரியநாதருடன் பாண்டி நாட்டை ஆண்டு வந்தான். தளவாய் - அரசியல் தலைமை அதிகாரி, எல்லா அதிகாரிகட்கும் மேலதிகாரி; முதலமைச்சனும் இவனே. தளவாய்க்குக் கீழ்-பிரதானி, இராயசம் என்ற பெரிய அதிகாரிகள் இருந்து வந்தனர். பிரதானி-தலைமைப் படைத் தலைவன். இராயசம்-அரசியற் செயலாளன்; நாட்டின் நிருவாகத்தைக் கவனிப்பது இவன் பொறுப்பாகும். தமிழ் நாட்டில் முன் (1365-70), குமாரகம்பண்ணன் ஊன்றிய வெற்றிநகர் ஆட்சி விதை முளைத்து வளர்ந்து 1529 இல் மரமாகி விட்டது. தமிழ் நாட்டில் நாயக்கராட்சி நிலை பெற்று விட்டது. விசுவநாதன் தலைமையை ஏற்க மறுத்து, தென் பாண்டி நாட்டில் இருந்த பாண்டிய மன்னர் (பஞ்சபாண்டியர் கிளர்ச்சி) செய்தனர். கயத்தாற்றுப் போரில் விசுவநாதன் அவர் களை அடக்கினான். இவ்வாறே கிளர்ந்தெழுந்த சேர மன்னர் களையும் தோவாளைக் கணவாய்ப் போரில் விசுவநாதன் வென்ற டக்கினான். இக்கிளர்ச்சிகளை அடக்கத் தென்மாமண்டலத் தலை வனான விட்டலராசன் என்பான், விசுவநாதனுக்கு உதவினான். 1535இல், விசுவநாதன் மதுரைநாட்டை 72பாளையங் களாக-பாளையப்பட்டக-பிரித்து, ஒவ்வொரு பாளையத்துக்கும் ஒரு தலைவனை ஏற்படுத்தினான். அவர் பாளைக்காரர் எனப் படுவர். ஒரு பெரியபாளையத்தின் கீழ்ப் பல சிறு பாளையங்கள் இருந்தன. திண்டுக்கல்லைச் சார்ந்த கன்னிவாடிப் பாளையப் பட்டுக்குக் கீழ் 18 சிறு பாளையங்கள் இருந்தன. கொங்குநாடு - இம்மதுரை நாட்டில் சேர்ந்திருந்தது. அப்பாளையக்காரரில் பெரும்பாலோர் தெலுங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில், குமாரகம்பண்ணன் (1365-1370) காலமுதலே வந்து தமிழ்நாட்டில் தங்கிச் செல்வாக்குப் பெற்றவரே பலராவர். அதாவது, அங்கங்கே பாதுகாப்புப் படைத் தலைவர்களாயிருந்தவரேயாவரிவர். அப்பாளையக் காரர் தங்கள் பாளையவருவாயில் மூன்றில் ஒரு பங்கை மதுரை நாயக்கருக்கும், ஒன்றைப் படைச்செலவுக்கும், ஒன்றைத் தங்கள் செலவுக்கும் உரியவாகக் கொண்டிருந்தனர். போர்க் காலத்தில் மதுரை நாயக்கருக்கு அப்பாளையக் காரர்கள் படைத்துணை யாக வேண்டும். விசுவநாதன் நாட்டில் பல நற்பணிகள் செய்தான். இவன் 1564 வரை ஆண்டான். மதுரை நாடு - விசுவநாத நாயக்கனுக்கு முன் 159 ஆண்டுகள் வெற்றிநகர்ப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. இனி, மதுரை நாயக்கர் வரலாற்றோடும், வெற்றிநகர்ப் பேரரசின் வரலாற்றோடும் தொடர்புடையனவாக உள்ள தஞ்சை, செஞ்சி, இக்கேரி நாயக்கர் வரலாற்றை இங்கு ஒருவாறு தெரிந்து கொள்ளுதல் வேண்டும். ஏறக்குறைய அவையும் இதே காலத்தில் தொடங்கியனவேயாகும். 1. தஞ்சை நாயக்கர் 1. கேசவப்பன் : இவன், தஞ்சையில் நாயக்க ராட்சியைத் தொடங்கி, 1540 வரை ஆண்டான். 2. செவ்வப்ப நாயக்கன் (1540-1580) : இவன், அச்சுதராயன் மனைவியின் உடன்பிறந்தாள் கணவன். 1565இல் தலைக் கோட்டைப் போரில் பேரரசு வீழ்ச்சி யடைந்ததும் இவன் முழுஉரிமை யுடையவனானான். எனினும், பேரரசுக்கு நண்பனாகவே இருந்து வந்தான். 3. அச்சுதப்ப நாயக்கன் (1580-1600) : இவன், செவ்வப்ப நாயக்கன் மகன். மதுரை வீரப்ப நாயக்கன், வெற்றி நகர் இரண்டாம் வேங்கடனை எதிர்த்த போது, இவன் இரண்டாம் வேங்கடனுக்கு உதவினான். 4. இரகுநாத நாயக்கன் (1600-1634) : இவன், அச்சுதப்பன் மகன், இவன் வரலாறு பின்னர் கூறப்படும். 5. விசயராகவ நாயக்கன் (1635-1672) : இவன், இரகுநாதன் மகன். தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் இவனே. இவனுக்குப் பின் தஞ்சை, மராட்டியர் கைப்பட்டது. பின்னர்க் காண்க. 2. செஞ்சி நாயக்கர் 1. முதலாங் கிருஷ்ணப்ப நாயக்கன் : இம் முதலாங் கிருஷ்ணப்பன்தான் முதலில் செஞ்சி நாயக்கர் ஆட்சியைத் தொடங்கினவன். இவன் வழியினர் தொடர்ந்து ஆண்டு வந்தனர். 2. இரண்டாங் கிருஷ்ணப்ப நாயக்கன் : இவன், பேரரசன் இரண்டாம் வேங்கடன் (1586-1614) காலத்தில் செஞ்சியை ஆண்டவன். இவன் வரலாறு அங்குக் காண்க. 1649இல் செஞ்சி, பீசப்பூர் ஆட்சிக்குட்பட்டது. 1678 இல் செஞ்சியைச் சிவாஜி கைப்பற்றினான். 3. வேலூர் : செஞ்சி நாயக்கருக்குக் கீழ் - பொம்ம நாயக்கன் (1549-1566) என்பானும், அவன் மகன் இலிங்கமனும் (1566-1603) வேலூரை ஆண்டு வந்தனர். 1603இல் வேலூர் - வெற்றி நகர்ப் பேரரசின் தலைநகர் ஆனது; 1647இல் வேலூரைப் பூசப்பூர்ச் சுல்தான் கைப்பற்றினான். 1678இல் வேலூர் - சிவாஜிக்குரிய தாயிற்று. 4. இக்கேரி : இது, மைசூர் நாட்டின் மேல் பகுதியிலிருந்த நாடாகும். இங்கு முதலில் நாயக்க ராட்சியைத் தொடங்கியவன், சதாசிவன் என்பான். 2. முதல் வேங்கடப்பன் (1589-1629): இவன் முழு உரிமை யுடன் ஆளத் தொடங்கினான். 3. வீரபத்திரன் (1629-1645): இவன், முதல் வேங்கடப்பன் பேரன். இக்கேரியின் தலைநகரை, இவன் பெத்தனூருக்கு மாற்றி னான். பெத்தனூர் - அந் நாட்டின் மேல் பகுதியில், குடகுமலைக் கீழ்சாரலில் இருந்தது. 4. செவ்வப்பன் (1645 - 1680): இவன், வீரபத்திரன் மகன்; பேரரசன் மூன்றாஞ் சீரங்கனுக்குப் பேருதவி செய்தவன். 1763இல் மைசூர் ஐதர் அலி பெத்தனூரைக் கைப்பற்றியபின் இம்மரபு முடிந்தது. மதுரை நாயக்கர் - தொடர்ச்சி 2. கிருஷ்ணப்ப நாயக்கன் 1564-1572 3. வீரப்ப நாயக்கன் 1572-1595 4. இரண்டாங் கிருஷ்ணப்ப நாயக்கன் 1595-1601 5. முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கன் 1601-1609 6. முதலாம் முத்துவீரப்ப நாயக்கன் 1609-1623 7. திருமலை நாயக்கன் 1623-1659 8. இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கன் 1659- 9. சொக்கநாத நாயக்கன் 1659-1682 10. மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கன் 1682-1689 11. மங்கம்மாள் 1689-1706 12. விசயரங்கச் சொக்கநாத நாயக்கன் 1706-1782 13. மீனாட்சி 1732-1736 2. கிருஷ்ணப்ப நாயக்கன் (1564-1572): இவன், விசுவநாத நாயக்கன் மகன். தந்தையால் இவன் அரசியற் பயிற்சி பெற்றான். துப்பிச்சியூர்ப் பாளையக்கார னான துப்பிச்சி நாயக்கன் தன்னுரிமை பெற விரும்பிக் கிளர்ச்சி செய்யவே, இவன் படைத்தலைவன் சின்னக் கேசவப்பன் துப்பிச்சியைப் போரில் வென்று, அவன் தலையை வெட்டி மதுரைக்கனுப் பினான். கண்டி மன்னன் துப்பிச்சிக் குதவியதனால், கிருஷ்ணப்பன் 72 பாளையப் படைகளுடன் இலங்கைமேற் படையெடுத்துச் சென்றான். புட்டளம் என்ற இடத்தில் நடந்த போரில் கண்டி மன்னன் தோற்றுத் தற்கொலை செய்து கொண்டான். கிருஷ்ணப்பன், தன் மைத்துனன் விசய கோபால நாயக்கனை இலங்கையின் ஆட்சியாளனாக ஏற்படுத்தி மீண்டான். தலைக்கோட்டைப் போருக்குப் பின்னும் (1565), வெற்றி நகர்ப் பேரரசுக்கு இவன் திறை செலுத்தி வந்தான்; தலைக் கோட்டைப் போருக்குத் தளவாய் அரியநாதனைப் பெரும்படை யுடன் அனுப்பினான்; மதுரை மீனாட்சி கோயில் திருப்பணி செய்தான். இவன் மிகவும் நல்லவன். 3. வீரப்ப நாயக்கன் (1572-1595): இவன், கிருஷ்ணப்ப நாயக்கன் மகன். இவனும் பேரரசுக் கடங்கியே இருந்து வந்தான். இவன் காலத்தில் (1592இல்) பாண்டி நாட்டில் கிறித்துவ சமயப் பரப்புத் தொடக்கம். வாணாதிராயர்: மூன்றாங் குலோத்துங்கச் சோழன் (1178-1218) பாண்டி நாட்டைக் கைப்பற்றி ஆண்ட காலத்தில், பலாற்றங்கரையிலிருந்த வாண நாட்டை ஆண்டு வந்த மாவலி வாணர் என்னும் சிற்றரசர் சிலரை, பாண்டியர் கலகஞ் செய்யாது பார்த்துக் கொள்ளும் பொருட்டுப் பாண்டிநாட்டிற் குடியேற்றி னான். பாண்டியர் ஆதிக்க காலத்தில் அவர்கள் பாண்டியர்கீழ்ச் சிற்றரசராக இருந்து வந்தனர். பாண்டியர் தளர்ச்சி எய்திய காலத்தில் அவ்வாணாதிராயர்கள் பாண்டியர் களைப் போரில் வென்று மதுரையைக் கைப்பற்றிக் கொண்ட தோடு மதுரையைச் சூழ்ந்துள்ள நாட்டையும் - வடபாண்டி நாட்டை-தாமே தனியரசு புரியவுந் தொடங்கினர். இவ்வாணாதி ராயர்கள் தம்மை - ‘மதுரா புரிநாயகன்’ பாண்டியகுலாந்தகன்’ என்று கூறிக் கொள்வதைப் புதுக் கோட்டை நாட்டு நெக்கோணம் என்ற ஊரிலுள்ள 1483 ஆண்டுக் கல்வெட்டில் காணலாம். வில்லிபுத்தூரில் 1453இல் பொறிக்கப்பட்ட கல்வெட்டொன்று, ‘மாவலி வாணதரையர் சீமையான மதுரை மண்டலம்’ என்று கூறுகிறது. மேலும், புதுக் கோட்டை நாட்டுக் குடுமியான் மலையி லுள்ள இரண்டு கல்வெட்டுக்கள், பாண்டியர் வாணாதிராயர்களிடம் தோல்வி யுற்று வேற்றிடம் சென்றனர் என்பதை வலியுறுத்து கின்றன. எனவே, வாணாதி ராயர்களிடம் தோற்ற பாண்டியர்கள் தென்பாண்டி நாட்டிற் சென்று, அப்பகுதியில் பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை ஆண்டு வந்தனர் என்பது, அங்குள்ள கல்வெட்டுக்களாற் புலப்படுகிறது. வீரப்ப நாயக்கன் ஆட்சி யேற்ற காலத்தில் மானாமதுரையி லிருந்த வாணாதிராயன் தன்னுரிமை பெற எண்ணிக் கலகம் செய்தான். வீரப்பன் அவனை வென்றடக்கிய தோடு, பாளையத் தையும் பறித்துக் கொண்டான். நாட்டில் அமைதி நிலவியது. 4. இரண்டாங் கிருஷ்ணப்ப நாயக்கன் (1595-1601): இவன், வீரப்ப நாயக்கன் மகன். இவன் காலத்தில் குறிப்பிடத் தக்க செய்தி யொன்றும் இல்லை. தளவாய் அரிய நாத முதலியார், வீசுவநாத நாயக்கன் காலத்திலிருந்து (1529) இவன் காலம் முழுதும் தளவாயாக இருந்து, 1600இல் காலமானார். இவர் தொண்டை மண்டல முதலியார் (வேளாளர்) மரபினர். இவர் காலத்தே தொண்டை மண்டல முதலியார் சிலர் பாண்டி நாட்டிற் குடியேறினர். 5. முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கன் (1601-1609): இவன். விசுவநாத நாயக்கன் பேரனான வீரப்ப நாயக்கனின் இரண்டாவது மகனான விசுவப்ப நாயக்கன் மகன். இவன் காலத்தே, இராமநாதபுர நாட்டில் கொள்ளையும் குழப்பமும் நிகழ்ந்தன. போர்த்துக்கீசியர்கள் மதமாறியவர்களிடத்து வரிவாங்கியும், முத்து வாணிகத்தின் பயனைப் பெற்றும் வந்தார்கள். அது கண்ட கிருஷ்ணப்பன், போகலூர் என்னும் சிற்றூர்த் தலைவனான சடைய தேவன் என்பானை மறவர் நாட்டின் தலைவனாக் கினான். அவன் கொள்ளை, கொலை முதலியவற்றை அடக்கி, இராமேசுவரம் செல்பவர்களுக்குப் பாதுகாப்பாக அங்கங்கே காவற்படையை ஏற்படுத்தினான். இச்சடைய தேவன் வழி வந்தவர்களே இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள். இக் கிருஷ்ணப்பன் காலத்தில்தான், வீரமா முனிவர் (ராபர்ட்-டி-நொபிலி) என்ற இத்தாலிய நாட்டு கத்தோலிக்கப் பாதிரியார் பாண்டி நாட்டில் இருந்து வந்தார். 6. முதலாம் முத்துவீரப்ப நாயக்கன் (1609-1623): இவன், முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கன் மகன். இவன் முழு உரிமை யடைய முயற்சி செய்தான். வெற்றி நகர் இளவரசனான இரண்டாம் சீரங்கன், கொப்பூரி ஜக்கராயன் என்பவனால் கொல்லப்பட்டான். சீரங்கன் மகன் இராமதேவனுக்காக, வேலுகோடி யாசம நாயுடு என்னும் படைத் தலைவன் அரும்பாடு பட்டு வந்தான். தோப்பூரில் நடந்த போரில் இம் முத்து வீரப்பன், ஜக்கராயனுக் குதவினான். அப்போரில் ஜக்கராயன் கொல்லப்பட்டான். இராமதேவன் பட்டத்துக் குரியவனானான். (இராமதேவன் வரலாறு பார்க்க) அதனால், முழுஉரிமையடைய முத்துவீரப்பன் செய்த முயற்சி முற்றுப் பெறவில்லை. 1616 இல் இவன், மதுரையிலிருந்து தலை நகரைத் திருச்சிக்கு மாற்றினான். மைசூர் இராச உடையார் (1578-1617), முகிலன் என்பான் தலைமையில் திண்டுக்கல்லைத் தாக்குமாறு பெரும் படையை அனுப்பினான். விருப்பாட்சிப் பாளையக்காரனும் கன்னிவாடிப் பாளையக்காரனும் அப்படையை எதிர்த்துப் பொருது துரத்தித் திண்டுக்கல்லைப் பாதுகாத்தனர். இம் முத்துவீரப்பன் மத மாற்றத்தை அவ்வளவு விரும்பவில்லை. 7. திருமலை நாயக்கன் (1628-1659). இவன், முத்து வீரப்பன் தம்பி. இவன், வெற்றி நகர்க் கிருஷ்ணதேவராயன் போன்ற திறமையும் புகழும் உடையவன். இவன் திருச்சியிலிருந்து 1634இல், பழையபடி தலைநகரை மதுரைக்கு மாற்றினான். அழகிய கட்டிடங்கள் பல கட்டி மதுரையை அழகிய நகர மாக்கினான். திருமலைநாயக்கன் மகால், புதுமண்டபம் முதலியன இவன் புகழ்வடிவாகக் காட்சி யளிக்கின்றன. இவன் முழுஉரிமையுடன் ஆண்டு வந்தான். மைசூர்ச் சாமராச உடையார் (1617-1637), 1630 இல் மதுரை மீது படை யெடுத்தான். மதுரைத் தளவாய் இராமப் பய்யன் எதிர்த்து, திண்டுக்கல்லில் நடந்த போரில் அம் மைசூர்ப் படையை வென்று துரத்திச் சென்று, மைசூரை முற்றுகையிட்டு வெற்றி பெற்று மீண்டான். திருவாங்கூர் உண்ணி கேரள வர்மன் (1634 இல் பட்டம்) திறைதர மறுக்கவே, 1635இல் இராமப்பய்யன் படையெடுத்துச் சென்று, அவனை வென்ற டக்கினான். இராமநாதபுரம் பகுதியில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்கினதோடு, திறைதர மறுத்த இரண்டாஞ் சேதுபதியை 1637இல் தளவாய் வென்று பணிவித்தான். வெற்றி நகர் மூன்றாம் வேங்கடன் (1633-1641), செஞ்சி நாயக்கனோடு மிகுந்த நட்புறவு கொண்டிருப்பதால், ஒரு வேளை தங்கள் மீது படையெடுக்கவுங் கூடும் என்று ஐயங் கொண்ட திருமலை, தஞ்சை நாயக்கனைத் தன்னோடு சேர்த்து, மூன்றாம் வேங்கடனைச் சிறை செய்யச் சூழ்ச்சி செய்து அதில் தோல்வியடைந்தான். இதை யறிந்து சினங்கொண்ட வேங்கடன், 1637 இல் தஞ்சை மதுரை நாயக்கரோடு போர் தொடுத்தான். இரு கட்சியினர்க்கும் போர் கடுமையாக நடந்தது. முடிவில் ஒருவாறு உடன்பாடு செய்து கொண்டனர். மூன்றாம் வேங்கடனுடன் அவன் தம்பி மகன் மூன்றாம் சீரங்கன் பகை கொண்டு, பீசப்பூர்ச் சுல்த்தானுடைன் சேர்ந்து 1638 இல் வேங்கடனுடன் போர் தொடுத்தான். வேங்கடன் வேண்ட, திருமலை இராமப்பய்யனைப் பெரும் படையுடன் அனுப்பியுதவினான். இராமப் பய்யன் வெற்றி பெற்று மீண்ட தாக இராமப்பய்யன் அம்மானை கூறுகிறது. 1647 இல் கோல்கொண்டா, பீசப்பூர்ச் சுல்தான்கள் ஒன்று கூடி வேலூரைக் கைப்பற்றினர். அதன்பின் கோல்கொண்டாச் சுல்த்தான் செஞ்சியை முற்றுகையிட்டான். அதையறிந்த தஞ்சை விசயராகவ நாயக்கன் அஞ்சிப் பகைவனிடம் புகலடைந் தான். ஆனால், திருமலையோ, பீசப்பூர்ச் சுல்தானோடு ஒப்பந்தஞ் செய்து கொண்டு, அவனிடமிருந்து 17000 குதிரை வீரர்களைப் பெற்று, தன்னுடைய 30000 வீரர்களுடன் சென்று செஞ்சி நாயக்கனுக்கு உதவினான். சில மாதங்கள் முற்றுகை நடந்தபின், கோல்கொண்டாப் படைத்தலைவனும் பீசப்பூர்ச் சுல்தானும் ஒப்பந்தஞ் செய்து கொண்டு ஒன்று பட்டனர். முற்றுகை தொடர்ந்து நடந்தது. இந்நிலையில் செஞ்சி வீரர்கட்கும் மதுரை வீரர்கட்கும், மனவேறுபாடுண்டானதால், பகைவர்கள் கோட்டைக்குட் புகுந்து விட்டனர். 1648இல் செஞ்சி பகைவர் கைப்பட்டது. திருமலை மனமுடைந்து மதுரைக்குத் திரும்பினான். வெற்றி கண்ட பீசப்பூர்ச் சுல்தான் படையெடுத்துச் சென்று, தஞ்சையையும் மதுரையையும் கொள்ளை யிடலானான். திருமலை பெரும் பொருள் கொடுத்து மதுரையைக் காக்க வேண்டியவனானான். பீசப்பூர்ப் படையை வென்று துரத்திய தாக நாட்டு வரலாறு கூறுகிறது. மூக்கறுப்புப் போர்: மைசூர் மன்னனான கண்டீரவ நரசராசன் (1638-1659), முன்பு (1645) இல் பேரரசுக்கெதிராகக் கோல்கொண்டாச் சுல்தானொடு சேர்ந்து, அவனை வேலூரைத் தாக்கும்படி தூண்டி, வேலூரை மீட்கமுடியாதவாறு வஞ்சனை செய்த திருமலையைப் பழிக்குப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருந்தான். முகமதியப் படை மதுரையை விட்டகன்றதும் (1656) இல் நரசராசன், அம்பையா என்னும் படைத் தலைவனை மதுரை மீது படையெடுக்கும்படி செய்தான். மைசூர் வீரர்கள் கொங்கு நாட்டுச் சத்தியமங்கலங் கோட்டையை எத்தகைய எதிர்ப்புமின்றி எளிதில் கைப்பற்றி, மதுரையை நோக்கிச் சென்றனர். செல்லும் வழியில்-அவ்வரக்கமனம் படைத்த இரக்க மற்ற வீரர்கள், ஊர்களைக் கொள்ளையடித்தும் எரியூட்டியும் கொடுமைகள் செய்தது மட்டுமல்லாமல், கையில் அகப்பட்ட ஆண்பெண் குழந்தை குட்டிகளின் மூக்கினை அறுத்து வன் கொடுமை செய்து கொண்டே போய் மதுரையை அடைந்தனர். இக்கொடியரால் தமிழ் மக்கள் பட்ட துன்பத்தை நினைத்தால் கூட நெஞ்சம் நடுங்குகிறது. இக் கொடுமைக் காளானதில் கொங்கு நாடே பெரும்பங்குடையதாகும். ‘சிறை பிடிக்கப் பட்ட மதுரைவீரர்களின் மூக்கை அறுத்துக் கொண்டு வருக’ என்ற மன்னன் கட்டளையை, மைசூர் வீரர்கள் இவ்வாறு நிறைவேற்றியதாகக் கூறப்படுகிறது. திருமலை அப்போது நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கை யில் கிடந்தான். ஆண்டு எழுபத்தைந் திருக்கும். நகரில் போது மான படைகள் இல்லை. திருமலைக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. முடிவாகத் தனது மூத்த மனைவியை அழைத்து, நிலைமையை விளக்கி உதவி வேண்டி, இரகுநாத சேதுபதிக்கு ஒரு கடிதம் எழுதியனுப்புமாறு கூறினான். முடங்கலைக் கண்டதும் சேதுபதி, 25000 வீரமறவர் களைத் திரட்டிக் கொண்டு மதுரை வந்து. கோட்டை மதிலுக்கும் பகைவர் பாசறைக்கும் இடையில் அப்படையை நிறுத்தி, அஞ்சாதிருக்குமாறு திருமலைக்குச் சொல்லி யனுப்பினான். மதுரை வீரர் 35000 பேர் சேதுபதி படையொடு சேர்ந்தனர். மைசூர்ப் படைத்தலைவன் அப்பெரும் படையைக் கண்டஞ்சி, மைசூரிலிருந்து உதவிப்படை வரும்வரை காலங் கடத்திக் கொண்டிருந்தான். மதுரைப்படை பெருமுயற்சி யுடன் எதிர்த்துப் பொருது மைசூர்ப் படையைப் புறங்காட்டி ஓடும்படி செய்தது. ஓடுகின்ற மைசூர்ப் படையை மதுரைப்படை திண்டுக்கல் வரை துரத்திச் சென்றது. மைசூரிலிருந்து 12000 வீரர்கள் வரவே, மைசூர் வீரர் திருப்பித் தாக்கினர். ஆனால், மதுரை வீரரால் முறியடிக்கப்பட்டனர். சிறை பிடிக்கப்பட்ட மதுரை வீரரின் மூக்கையெல்லாம் அக்கொடியோர் அறுத்துக் கொடுமை செய்தனர். இக்கொடுமையைக் கேட்ட திருமலை மனம் பதைத்துத் தன் தம்பி குமாரமுத்து நாயக்கனை, பழிக்குப்பழி வாங்கி வருமாறு பெரும்படையுடன் மைசூருக்கனுப்பினான். மதுரை வீரர்களும் மைசூர் நாடு சென்றதும், மைசூர் வீரர் செய்தவாறே எதிர்ப்பட்டவரின் மூக்கை அறுத்துக் கொண்டு போய் மைசூரை முற்றுகையிட்டு வென்று, சிறைப்பட்ட வீரர்கள் மூக்கோடு, மன்னன் மூக்கையும் அறுத்துக் கொண்டு மீண்டனராம் (அ.கி. பரந்தாமனார்-நாயக்கர் வரலாறு). மன்னர் வாழ்வுக்காக மக்கள் படும்பாட்டை என்னென்பது! கொங்கு நாட்டில் திருமலை நாயக்கன் கல்வெட்டுக்கள் - திருமுருகன் பூண்டி (1642), ஈரோடு(1655), கண்ணாடிப் புத்தூர் (1655), திருச்செங்கோடு (1659) முதலிய இடங்களில் இருக்கின்றன. திருமலை நாயக்கன் மைத்துனன் அழகாத்திரி என்பான், கோவையை அடுத்த வடவழியில் (வடபள்ளி) இருந்து அப்பகுதியை ஆண்டு வந்தான். அவன் பேரூரில் பொன்னம்பலம் கட்டினான். திருமலையின் தளவாய் இராமப் பய்யன், பழனியில் அது காறும் இறைபணி (பூசை) செய்துவந்த பண்டாரத்தினிடம் பிரசாதம் வாங்க மறுத்து, பண்டாரத்தை நீக்கிக் குருக்கள் மாரை ஏற்படுத்தினான். 8. இரண்டாம் முத்துவீரப்பநாயக்கன் (1659): இவன், திருமலை நாயக்கன் மகன், இவனுடைய சிற்றப்பனான குமார முத்து நாயக்கன் சிவகாசி நாட்டையும், திருநெல்வேலியில் ஒரு பகுதியையும் ஆண்டு வந்தான். முத்து வீரப்பன் முடிசூடியபின் நான்கு மாதங்கள் தான் இருந்தான். அதற்குள், திருச்சிக் கோட்டையை வலுவுடையதாகச் செய்து, எண்ணற்ற வீரர் களையும் ஏராளமான வெடி மருந்தையும் நிரப்பி வைத்தான். இதுவே, பீசப்பூர்ப் படை வீரர்கள் இருமுறை (1659, 1663) தாக்கியும் திருச்சியைக் கைப்பற்ற முடியாததற்குக் காரண மாகும். வாழ்ந்தது நான்கு திங்களே எனினும் இவன் வீரத்துடன் வாழ்ந்தான். 9. சொக்கநாத நாயக்கன் (1659-1682): இவன், முத்து வீரப்பன் மகன். ஆட்சியேற்ற போது இவன் 16 ஆண்டு இளை ஞனாக இருந்தான். அதனால், தளவாய் இலிங்கம நாயக்கனும், பிரதானியும் இராயசமும் ஒன்று கூடிச் சூழ்ச்சித் திட்டம் வகுத்து, சொக்க நாதனைப் பெயரளவில் அரசனாக வைத்து அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டனர். மன்னற்கு வேண்டிய சிலரைச் சிறையிட்டனர்; சிலரை நாடு கடத்தினர். அப்போது செஞ்சி, பீசப்பூர்ச் சுல்தான் ஆட்சியில் இருந்து வந்தது. செஞ்சியைப் பிடிப்பதாக இலிங்கமன் பெரும்படை யுடன் சென்று, அதை முற்றுகையிட்டு செஞ்சியை ஆண்ட சகோசி என்னும் தலைவனிடம் பெரும் பொருளைக் கையுறை யாகப் பெற்றுக் கொண்டு, முற்றுகையை நீடித்துக்கொண்டிருந் தான். மதுரையில் பிரதானியும் இராயசமும் மக்களைத் துன்புறுத்திப் பணம் பறித்துக் கொண்டிருந்தனர். இச்சூழ்ச்சியை அறிந்த சொக்கநாதன், நாடு கடத்தப் பட்டஇருபடைத்தலைவர்களின் உதவியால், இராயசத்தைக் கொன்றான்; பிரதானியைக் குருடாக்கினான்; அதிகாரத்தைக் கைப்பற்றி அவன் முழு உரிமையோடு ஆளத் தொடங்கினான். இவன் மதுரையிலிருந்து தலைநகரைத் திருச்சிக்கு மாற்றினான். இதிலிருந்து கடைசிவரை திருச்சிதான் தலைநகராக இருந்து வந்தது. ஆனால், இவன் மதுரைத் திருமலைமகாலின் பெரும் பகுதியை இடித்து, அதிலுள்ள பொருள்களைத் திருச்சிக்குக் கொண்டு போனது, அடாத செயலாகும். ஆட்சி வலுப்பட்ட பின் சொக்கநாதன், தளவாய் இலிங்க மனைத் தண்டிக்க முற்பட, அவன் உயிருக்கஞ்சிச் செஞ்சிக் கோடிச் சகோசியைத் தஞ்சமடைந்து, திருச்சியைத் தாக்குமாறு அவனைத் தூண்டினான். அவனும் அதற்கு உடன்பட்டு, தஞ்சை விசயராகவ நாயக்கனின் உதவிப் படையோடு வந்து திருச்சியைத் தாக்கினான். போர்ப் பொறுப்பை ஏற்று நடத்திய புதிய பிரதானியும் வஞ்சம் புரிந்ததால், மதுரைப் படைத்தலைவர்களிற் பலர் மடிந்தனர். சிலர் சிறைப்பட்டனர். இலிங்கமன் சொக்கநாத னைச் சிறைப்படுத்தற்கு முயன்றான். ஆனால், சொக்கநாதன் தானே படைத்தலைமை தாங்கிப் பகைவரைத் தாக்கினான். மதுரை வீரர்கள் வீறுகொண்டெழுந்தனர். எதிரிப் படை ஓட்ட மெடுத்தது. சகோசியும் இலிங்கமனும் தஞ்சையை நோக்கி ஓடினர். சொக்கநாதன், 70000 வீரர்களடங்கிய பெரும் படையுடன் தஞ்சையை நோக்கிச் சென்றான். இலிங்கமனும் சகோசியும் தலைதப்பினால் போதும் என்று செஞ்சியை நோக்கி ஓடினர். தஞ்சை மன்னன் தஞ்சம் அடைந்தான். ஓயாத முகமதியர் படையெடுப்புக்களால் மூன்று நான்காண்டுகள் மக்கள் பட்ட தொல்லை கொஞ்சநஞ்சமல்ல. போதாக் குறைக்கு நாட்டில் பஞ்சம் வேறு வந்தது. இந் நிலையில் 1663 இல், பீசப்பூர்ப் படைத்தலைவனான வனமியான் என்பான் பெரும்படையுடன் வந்து திருச்சியைத் தாக்கினான். கோட்டை வீரர்கள் குண்டுமாரி பொழிந்தனர். கோட்டையைப் பிடிக்க முடியாதெனக் கண்ட வனமியான், சுற்றுப்புற ஊர்களிற் புகுந்து சொல்லொணாக் கொடுமைகள் செய்தான். அது கண்ட சொக்கநாதன், அவன் கேட்ட பொருளைக் கொடுத்து அவனை நாட்டை விட்டகற்றினான். சொக்கநாதன் தனக்குப் பெண் கொடுக்கும்படி, தஞ்சை, விசயராகவ நாயக்கனிடந் தூதனுப்பினான். அவன் பெண் கொடுக்க மறுத்து விட்டான். அதனால், சொக்கநாதன், தளவாய் வேங்கடகிருஷ்ணப்பநாயக்கனைப் பெரும் படையுடன் தஞ்சைக் கனுப்பினான். அப்போதும் தளவாய் கேட்க, அவன் பெண் கொடுக்க மறுத்துவிட்டான். மதுரைப் படை நகருக்குட் புகுந்தது. அந்நிலையிலும் விசயராகவன் முன்போலவே மறுத்து அந்தப்புர மகளிரை வெடிவைத்து மாய்க்க ஏற்பாடு செய்து விட்டு, தந்தையும் மைந்தனும் வெஞ்சமர் புரிந்து வீரவாழ் வெய்தினர். அந்தப்புர மகளிரும் மன்னன் மகளும் அடியோடு அழிந்து விட்டனர். தளவாய் தஞ்சையில் பாதுகாப்புப் படையை வைத்து விட்டுத் திருச்சி சென்றான். சொக்கநாதன், தன் சிற்றன்னையின் மகனும் தன் தம்பியுமான அழகிரி நாயக்கனைத் தஞ்சை அதிகாரியாக ஏற்படுத்தினான். ஆனால், அழகிரி சில ஆண்டுகளில் தன்னுரிமை பெற முயன்றான்; வரிப்பணத்தை மன்னற்கு அனுப்பவில்லை. எனினும், சூழ்நிலைக்கேற்பச் சொக்கநாதன் ஒன்றும் செய்யாமல் இருந்து வந்தான். விசயராகவ நாயக்கனிடம் பணிபுரிந்த வெங்கண்ணா என்பவன், அழகிரியிடம் செயலாளனாக (இராயசம்) இருந்தான். தனக்கு உயர்பதவி கிடைக்காமையால் வெறுப் படைந்த அவன், அழகிரியை ஒழிக்கத் திட்டமிட்டான். விசயராகவன் மகன் மன்னார்தாசனின் மைந்தனான செங்கமலதாசன் என்னும் இரண்டாண்டுக் குழந்தை, நாகப் பட்டினத்தில் ஒரு வணிகன் வீட்டில் வளர்ந்து வந்தது. வெங் கண்ணா அங்கேயே சென்று இருந்து கொண்டு அழகிரிக்கும் சொக்கநாதனுக்கும் படைவளர்த்து வந்தான். செங்கமலதாசனுக்குப் பன்னிரண்டானதும், வெங்கண்ணா அவனைப் பீசப்பூர்ச் சுல்தானிடம் அழைத்துச் சென்று, ‘இவன் தஞ்சை நாயக்க மன்னன். இவனைத் தஞ்சைக்கு அரசனாக்கி யருள வேண்டும்’ என்று, செங்கமல தாசன் சார்பில் வேண்டினான் சுல்தான், அழகிரியைத் தஞ்சையினின்று துரத்துமாறு படைத் தலைவன் வெங்காஜிக்குக் கட்டளை யிட்டான். வெங்காஜி அவ்வாறே தஞ்சை சென்று, அழகிரியைப் போரில் வென்று துரத்திவிட்டு, செங்கமலதாசனைத் தஞ்சை மன்னனாக்கினான். ஆனால், செங்கமலதாசன், தன்னை வளர்த்த தாயின் சொற்படி, அரும்பாடுபட்டுத் தன்னை அரசனாக்கிய வெங்கண்ணாவைப் புறக்கணித்து விட்டு, தன்னை வளர்த்த வணிகனைத் தளவாயாக்கினான். இதனால் வெறுப்புற்ற வெங்கண்ணா, கும்பகோணத்தில் தங்கியிருந்த வெங்காஜியைக் கண்டு தஞ்சையைக் கைப் பற்றுமாறு தூண்டினான். அவன் பீசப்பூர்ச் சுல்தானுக்கஞ்சி அதை மறுத்தான். சில நாளைக்குப் பின் சுல்தான் இறந்து விட்ட தாகச் செய்தி எட்டியது. வெங்காஜி படையெடுக்க உடன் பட்டான். வெங்கண்ணா செங்கமலதாசனிடம் வெங்காஜி படை யெடுப்பதைக் கூறி அச்சமுண்டாக்கவே, அவன் குடும்பத் துடன் அரியலூருக்கோடி விட்டான். வெங்காஜி போரின்றி அரசு கட்டிலேறித் தஞ்சையை ஆளத் தொடங்கினான் (1675-1684). ஆனால், இரண்டு அரசர்களைக் கெடுத்த வெங் கண்ணாவை வெங்காஜி நம்பாததால், அவனும் தண்டனைக் கஞ்சி ஓட நேர்ந்தது. இவ்வெங்காஜியே தஞ்சை மராட்டிய மன்னரின் முதல்வனாவான். இவ்வெங்காஜி, மராட்டியப் பேரரசை நிறுவிய வீர சிவாஜியின் தம்பி. இவனுக்கு - எக்கோஜி என்றும் பெயர். பீசப்பூர்ச் சுல்தானிடம் படைத்தலைவனாக இருந்த ஷாஜி என்பானின் மூத்த மனைவியின் மகன் சிவாஜி; இளைய மனைவியின் மகன் வெங்காஜி. ஷாஜி 1664 இல் இறந்த பின், வெங்காஜி பீசப்பூர்ப் படைத்தலைவனானான். வேலூர், செஞ்சிக் கோட்டைகளைச் சிவாஜி பிடித்துக் கொண்டான். தஞ்சையும் மராட்டியர் கைப்பட்டது. இன்று தமிழ் நாட்டிலுள்ள மராட்டியர், தஞ்சை மராட்டிய மன்னர் ஆட்சிக் காலத்தே குடியேறியவராவர். தஞ்சை மராட்டிய மன்னர்களில் சிறந்தவன் சரபோஜி மன்னனாவான். சரபோஜி மன்னன் ஏற்படுத்தியதே, தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையம். இங்ஙனமாக, மைசூர்ச் சிக்கதேவராயன் (1672-1704) கொங்கு நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். வெங்காஜி யிடமும் சொக்கநாதன் தோற்றுவிட்டான். எனவே, அரசியல் பெருமக்கள் சொக்கநாதன்மேல் வெறுப்புற்று 1678 இல் இவனைச் சிறை வைத்து, இவன் தம்பி அழகிரியை அரசனாக் கினர். அழகிரியின் திறமையின்மையைக் காரண மாகக் கொண்டு, சொக்கநாதனின் குதிரைப் படைத் தலைவனான ரஸ்டம்கான் என்பான், சொக்கநாதனைச் சிறை மீட்டுப் பெயரளவில் அரசனாக வைத்துக் கொண்டு தான் ஆளத் தொடங்கினான். அதுகாலை, மைசூர்ச் சிக்கதேவராயன் படைத்தலைவன் குமாரய்யா என்பான், 1680 இல் திருச்சியை முற்றுகை யிட்டான். ரஸ்டம்கானால் நகரத்தைப் பாதுகாக்க முடியவில்லை. அதுகண்ட பெருமக்கள் ரஸ்டம்கானையும் அவன் கையாட் களையும் ஒழித்துவிட்டு மறுபடியும் சொக்க நாதனை அரசனாக் கினர். அப்பெரு மக்களுள் கிழவன் சேதுபதியும் ஒருவனாவன். இந்நிலையில் தஞ்சை வெங்காஜியும், செஞ்சிச் சம்பாஜியும் (சிவாஜியின் மகன்) படைத்துணை செய்து, மைசூர்ப் படையைத் திரும்பி ஓடும்படி செய்தனர். சொக்கநாதன் வாழ்வு அல்லலுந் தொல்லையுமாக முடிந்தது. கொங்கு நாட்டில் இவன் கல்வெட்டுக்கள் உள்ளன. 10. மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கன் (1682-1689): இவன், சொக்கநாதன் மகன். இவன் பட்டத்துக்கு வந்த போது மதுரை நாட்டில் சிறுபகுதியே இவனுக்கு உரியதாயிருந்தது. தஞ்சை மைசூர் மன்னர்களும் சேதுபதியும் பெரும்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர். அப்போது மைசூர்க்கும் ‘செஞ்சிக்கும் கடும்போர் நடந்து கொண்டிருந்தாலும், வெங்காஜியின் கொடுங் கோன்மையை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்ததாலும், நான்காண்டுக்குள் முத்துவீரப்பன் தந்தை இழந்த நாட்டை எளிதில் மீட்டு விட்டான். டில்லிச் சுல்தானான ஒளரங்கசீப் (1658-1707), தென்ன கத்தை வென்று-தென்னக மன்னர்களிடம் திறை வாங்கி வந்தான். அவன் ஆண்டு தோறும் தன் கால் செருப்பொன்றை மணிகளால் அணி செய்து யானைமேல் வைத்து, படைவீரர் புடை சூழத் தென்னாட்டின்கண் நாட்டுவலமாக (ஊர்வலம்) அனுப்புவது வழக்கம். திறை தராத மன்னர்கள் அச்செருப்புக்குத் தலை வணங்கிப் படைத் தலைவனிடம் திறைதர வேண்டும். அவ்வாறு வணங்க மறுத்தால் போர் நடக்கும். முத்துவீரப்பன் மதுரையில் தங்கியிருந்தபோது அச்செருப் பூர்வலம் வந்தது. ‘அரசர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். காண்பதற்கில்லை’ எனச் சொல்லும்படி சொல்லி யனுப்பி விட்டான். முத்துவீரப்பன் மதுரையிலிருந்து சென்று திருச்சியி லிருந்த போது அவ்வூர்வலம் அங்கு வந்தது. ஆனால் முத்து வீரப்பன் அதனை வரவேற்கவில்லை. டில்லிப் படைத்தலைவன் அச்செருப்பை எடுத்துக்கொண்டு அத்தாணி மண்டபத்தை அடைந்து, ‘இதை வரவேற்று வணக்கஞ் செலுத்துங்கள்’ என்றான். முத்துவீரப்பன் அரியணையி லமர்ந்துகொண்டே, அந்தச் செருப்பை வாங்கிக் காலில் அணிந்து உங்கள் மன்னர் ஒரு செருப்பு மட்டுந்தான் அனுப்பினாரா? என்றான். படைத் தலைவன் சீற்றங் கொண்டான். முத்து வீரப்பன் அவனை வெளி யேறுமாறு கட்டளையிட்டான். அவன் வெளியேறிக் கோட்டை யைத் தாக்க முற்பட்டான். முத்துவீரப்பன் தன் படைவீரரை ஏவி அவர்களைக் கண்ட துண்டமாக்கினான். எஞ்சிய வீரர்கள் அஞ்சியோடி ஒளரங்கசீப்பிடம் கூறினர். அது கேட்ட அவன் செருக்கடங்கி, அறிவு தெளிந்து, அக்கெட்ட வழக்கத்தை விட்டு விட்டான். முத்துவீரப்பன் பேராற்றலும் பெருங் குணமும் உடையவன். 11. மங்கம்மாள் (1689-1706): இவ்வரசியார் சொக்க நாத நாயக்கனின் மனைவியார்; மூன்றாம் முத்து வீரப்பன் தாயார். முத்து வீரப்பன் இறந்தபோது, அவன் மனைவி முத்தம் மாள் நிறை கருவுடையவளாய் இருந்தாள். அதனால், அவள் கணவனுடன் உடன்கட்டையேறாமல் குழந்தை பிறக்கும் வரை உயிர் வைத்திருந்து, குழந்தை பிறந்த நாலாநாள் பன்னீரைக் குடித்துச் சன்னிகண்டிறந்துவிட்டாள். அக் குழந்தைக்கு - விசயரங்கச் சொக்கநாதன் என்று பெயர்வைத்து, மூன்றாந் திங்களிலே அதற்குப்பட்டங்கட்டி, பாட்டியாகிய மங்கம்மாள், அக்குழந்தையின் சார்பாக ஆட்சி புரிந்து வந்தாள். அல்லி, மீனாட்சி ஆகிய பாண்டி நாடாண்ட நல்லரசியர்க்குப்பின், நல்லரசி மங்கம்மாள் பாண்டி நாடாண்டது குறிப்பிடத்தக்கது. சிவாஜி மறைந்த பின் (1680), ஓளரங்கசீப் அச்சமின்றித் தென்னக முழுதும் ஆளலானான். மைசூர், தஞ்சை முதலிய எல்லா மன்னரும் டில்லிக்குத் திறைதந்து வந்தது போல் மங்கம் மாளும் திறைதந்து நாட்டை அமைதியுடன் ஆண்டு வந்தாள். டில்லிப் பேரரசுக்கு அடங்கியதோடு, அப்பேரரசின் உதவியால், பகைவர்கள் கைப்பற்றியிருந்த தன் நாட்டுப் பகுதிகளை யெல்லாம் எளிதில் மீட்டுக் கொண்டாள். மைசூர்ச்சிக்கதேவராயன் படைத்தலைவன் குமாரய்யா ‘நான் திருச்சிக் கோட்டையைப் பிடிக்காமல் மைசூர் மண்ணில் காலெடுத்து வையேன்’ என்று சூளுரைத்துக் கொண்டு திருச்சிக் கோட்டையை முற்றுகை யிட்டிருந்தான். ஆனால், அதுகாலை மராட்டியர் மைசூரைத் தாக்கவே, குமாரய்யா முற்றுகையை விட்டு மைசூருக்குப் போகவேண்டிய தாயிற்று, எஞ்சியிருந்த மைசூர்ப் படையை மங்கம்மாள் வென்று துரத்தினாள்; திறை தர மறுத்த, திருவாங்கூர் மன்னன் இரவிவர்மனை (1684-1718) வென்றடக்கினாள். தளவாய் நரசய்யன் தஞ்சை மன்னன் ஷாஜியை (வெங்காஜி மகன்) வென்று நட்பாக்கினான். கிழவன் சேதுபதி முழுஉரிமையோடு சேது நாட்டை ஆளத்தொடங்கினான்; 1688இல் மதுரை நகரையே கைப் பற்றிக் கொண்டான். தளவாய் நரசய்யன் படையெடுத்துச் சென்று, சேதுபதியை மதுரையிலிருந்து வென்று துரத்தினான். 1702இல் சேதுபதியுடன் செய்த போரில் தளவாய் நரசய்யா கொல்லப் பட்டான். தஞ்சை ஷாஜி சேதுபதிக்குத் துணை செய்தான். மதுரை தோற்றதால் சேதுபதி முழு உரிமை பெற்றான். மங்கம்மாள் நற்குண மிக்கவள்: நாடெங்கும் நல்ல சாலைக ளமைத்து, அங்கங்கே சத்திரம் சாவடிகளைக் கட்டினாள். மங்கம்மா சாலை மலைமேலே மதுரைக்குப் போகும் வழிமேலே’ என்பது நாட்டுப்பாடல். மங்கம்மாள் மதுரையிலும் பல கட்டிடங் களைக் கட்டியுள்ளாள். ‘நல்லரசி மங்கம்மாள்’ என நாட்டு மக்களால் அழைக்கப்பட்டவள் மங்கம்மாள். 12. விசயரங்கச் சொக்கநாத நாயக்கன் (1706-1732): இவன், முத்து வீரப்பன் மகன்; மங்கம்மாளின் மகன் வயிற்றுப் பேரன். இவனுக்காகவே மங்கம்மாள் நாடாண்டாள். இவன் கோயிலாட்சியை மேற்கொண்டு நாட்டாட்சியில் அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை; எப்போதும் தலயாத் திரை செய்துகொண்டே இருந்தான். அரசியல் நடவடிக்கை களை அறவே மறந்தான்; மேலும், அறிவும் ஆற்றலும் இல்லாதவன். அதனால், தளவாய் கத்தூரி ரங்கய்யனும், பிரதானி வேங்கட கிருஷ்ணையாவும் மக்களை வருத்தி அளவுக்குமேல் வரிவாங்கிக் கொடுமை செய்து வந்தனர். 1720 க்குள் மைசூர் மன்னன் தொட்டகிருஷ்ணராயன் (1713-1731) கொங்கு நாட்டை நிலையாக மைசூரோடு சேர்த்துக் கொண்டான். தாயுமானவர்- இவ்விசயரங்கனிடந்தான் அரசியல் கணக்கராக இருந்து வந்தார். 13. மீனாட்சி (1732-1736): இவன், விசயரங்கச் சொக்கநாதன் மனைவி. விசயரங்கனுக்குப் பிள்ளையில்லை. அதனால், கணவனுக்குப்பின் மீனாட்சி தானே நாடாண்டு வந்தாள். ஆனால், மங்கம்மாள் போல இவள் அரசியலறிவும் திறமையும் வாய்க்கப்பெற்றவள் அல்லள். ஆர்க்காட்டு நவாப்பின் மருமகனான சந்தா சாகிப்பு என்பான், திருச்சியை முற்றுகை யிட்டு மீனாட்சியைச் சிறைப்படுத்தினான். மீனாட்சி நஞ்சுண்டு இறந்து விட்டாள். இவளுடன் மதுரை நாயக்கராட்சி முற்றுப் பெற்றது. பாண்டி நாட்டில் நாயக்கராட்சி (1529-1736) 207 ஆண்டுகள் நடந்தது. இந்நாயக்கர் ஆட்சிக் காலத்தே, இந் நாயக்க மன்னர்களும், மைசூர் மன்னர்களும் அடிக்கடி வடக்குந் தெற்குமாக எடுத்த படையெடுப்புக்களினாலும், கொங்கு நாட்டை அடைய இவ்விரு மன்னர்களும் போட்ட போட்டி யினாலும் கொங்கு நாடுபட்ட அல்லோல கல்லோலத்தை நினைக்கினும் நெஞ்சு நடுக்குறும். இன்றும் கொங்கு நாட்டு மக்கள், ஒருவர் விரைவு படுத்தினால், ‘அதற்குள்ளே என்ன படையா வருகிறது?’ என்பது, அதனை நினைவுறுத்தும். பாண்டியர்: மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தும், அதற்குமுன் வெற்றிநகர்ப் பேரரசின் நேரடி ஆட்சிக் காலத்தும், அன்னார் கீழ்ச் சிற்றரசர்களாய்ப் பாண்டிய மன்னர்கள் சிலர் - திருநெல்வேலி, தென்காசி, கரிவலம்வந்த நல்லூர், கொற்கை முதலிய ஊர்களிலிருந்து, தென்பாண்டி நாட்டினை ஆண்டு வந்தனர். அவர்களுள் முதல் மூவரும் ஒரே பெயரை யுடையவ ராவர். அவராவார்: 1. பராக்கிரம பாண்டியன்: இவன், 1387இல் குற்றாலக் கோயில் திருப்பணி செய்தவனாவன். 2. பராக்கிரம பாண்டியன்: 1384-1415 வரை ஆண்டவனாவன். 3. பராக்கிரம பாண்டியன்: 1401-1434 வரை ஆண்டவனாவன். 4. சடையவர்மன் குலசேகர பாண்டியன்: இவன், 1395இல் பட்டம்பெற்றுக் கரிவலம்வந்த நல்லூரிலிருந்தாண்வன். 5. விக்கிரம பாண்டியன் (1401-1422): யாதொரு செய்தியும் தெரியவில்லை. 6. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (1422-1463): இவன், தென்காசியிலிருந் தாண்டு வந்தான்: குற்றாலப் போரில் ஒரு சேரனை வென்றான்; தென்காசிக் கோயில் கட்டினான். 7. சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1429-1473): இவன், பராக்கிரமன் தம்பி: அண்ணனுடன் சேர்ந்து நாடாண்டு வந்தான். 8. அழகன்பெருமாள் பராக்கிரம பாண்டியன் (1473-1506): இவன், குலசேகர பாண்டியன் மகன். 9. பராக்கிரம பாண்டியன் குலசேகரதேவன் (1479-1499). 10. அபிராம பராக்கிரம பாண்டியன் 11. ஆகவராம பாண்டியன். இவ்விருவரும் பராக்கிரம பாண்டியன் குலசேகரதேவன் தம்பியர். 12. சடையவர்மன் சீவல்லப பாண்டியன் (1534-1543): இவன், ஆகவராமன் மகன்; தன் நாட்டைக் கவர்ந்து கொண்ட சேரனை வென்று, தன் நாட்டை மீட்டுக் கொடுத்ததற்காக, அச்சுத ராயனுக்குத் தன் மகளை மணந்து கொடுத்தவன். 13. சடையவர்மன் பராக்கிரம குலசேகர பாண்டியன் (1543-1552): இவன், அபிராம பராக்கிரம பாண்டியன் முதல் மகன். 14. நெல்வேலி மாறன் (1552-1564): இவன், அபிராம பராக்கிரம பாண்டியன் இரண்டாவது மகன்; கொற்கையி லிருந் தாண்டவன். 15. சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் (1564-1604): இவன், நெல்வேலி மாறன் முதல் மகன்; நைடதம், வெற்றி வேற்கை முதலிய நூல்கள் செய்தவன். இவன் தென்காசி யிலிருந்தாண்டான். 16. வரதுங்கராம பாண்டியன் (1588-1609): இவன், பராக்கிரம குலசேகர பாண்டியன் இரண்டாவது மகன்; அதிவீரராம பாண்டியன் பெரியப்பன் மகன். இவன் கரிவலம் வந்த நல்லூரிலிருந்தாண்டவன்; திருக் கருவை அந்தாதி, பிரமோத்தர காண்டம் முதலிய நூல்கள் செய்தவன். 17. வரகுணராம குலசேகர பாண்டியன்: இவன், 1613இல் பட்டம் பெற்றவன்; ‘குலசேகர சோமாசியார்’ எனவும் பெயர் பெறுவன். 18. வரகுணராம குலசேகர தேவ தீட்சிதர்: இவன், 1748 இல் பட்டம் பெற்றவன். கடைசி இருவர் பெயர்களைக் கவனி யுங்கள். தண்டமிழ் வளர்த்த வண்டமிழ்ப் பாண்டியர் மரபு தன்னி கரற்ற சங்க காலப் பாண்டியர் மரபு, அயல் மொழியாளர் ஆட்சிக் கீழ் அடங்கியொடுங்கி வாழும் இந்நிலையை அடைந்து விட்டது. புலவர்கள்: நாயக்க மன்னர்கள் தெலுங்கர்களானதால், தமிழ் மொழியிடத்து அவ்வளவு அக்கறை கொள்ளாததோடு, போதிய தமிழறிவும் இல்லாதவராக இருந்தனர் என்பது, மதுரை நாயக்க மன்னர்களிலேயே சிறந்தவனான திருமலை நாயக்கன் மீது, சுப்பிரதீபக் கவிராயர் என்பார், திருமலை நாயக்கன் காதல் என்னும் நூல் செய்து அரங்கேற்றினாராம். அரங்கேற்ற முடிவில், திருமலை, ‘அரவம் அத்துவானம்’ என்றானாம். அரவம்-தமிழ். அத்து வானம்-மோசம், சிறப் பில்லாதது. பின்னர்க் கவிராயர் அதை, ‘கூளப்ப நாயக்கன் காதல்) என மாற்றி, கூளப்ப நாயக்கன் என்ற பாளையக்காரன் அவையில் அரங்கேற்றினார் என்பதால் விளங்குகிறது. குமர குருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் முதலிய செந்தமிழ் நூல்களைத் திருமலை எவ்வாறு சுவைத்தானோ! சுப்பிர தீபக் கவிராயர், பின்னர்ப் பாடிய விறலிவிடு தூது என்ற நூலில், “சந்தியிலே மாமியிட்ட சண்டையிலே வந்ததொரு தொந்தி வடுகன் சுகிப்பானோ” என, திருமலையிடம் தனக்கிருந்த வெறுப்பைக் காட்டி யுள்ளார். இங்ஙனமாயினும், தமிழ்ச் செல்வர்களின் துணையால், அந்நாயக்க மன்னர் காலத்தே சில தமிழ்ப் புலவர்களும் இருந்து வந்தனர். 1. அநாதாரிப் புலவர், வீரப்ப நாயக்கன் 2. திருக்குறுகைப் கவிராயர் (1572-1596) காலத்தவர். பெருமாள் 3. சுப்பிரதீபக் கவிராயர், 4. குமரகுருபரர், திருமலை நாயக்கன் (1623-1659) 5. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் காலத்தவர். 6. கடிகை முத்துப் புலவர், 7. உமறுப் புலவர், 8. திரிகூடராசப்ப விசயரங்கச் சொக்கநாதன் கவிராயர் (1706-1732) காலத்தவர். 9. தாயுமானவர் வெற்றிநகர்ப் பேரரசுத் தொடர்ச்சி 3. அச்சுதராயன் (1530-1542): இவன், கிருஷ்ண தேவராயன் தம்பி; நரசநாயகனின் மூன்றாவது மனைவியின் மூத்த மகன். கிருஷ்ணதேவராயனுக்கு 18 மாத மகனொருவனிருந் தான். கிருஷ்ணதேவராயன் தன் ஆட்சியின் இறுதிக் காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்தமையால் தன் சிறுவனை அரசனாக்க முயன்றான். அதனால் கொஞ்சம் அரசியல் குழப்பம் உண்டானது. அக்குழப்பத்தைப் போக்கி அமைதி யுண்டாக்கு வதன் பொருட்டு, நெருக்கமான அரச குடும்பத்தினர் சந்திரகிரிக் கோட்டையில் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களுள், கிருஷ்ணதேவராயன் தம்பியான அச்சுதராயனும் ஒருவனாவன். கிருஷ்ணதேவராயனின் புகழ் வாய்ந்த அமைச்சரான திம்மரசின் (அப்பாஜி) மகனான இராமராயன் என்ற ஆற்றல் வாய்ந்த தலைவன், கிருஷ்ணதேவ ராயனின் குழந்தையின் அரசுரிமையை அளித்து அக்குழந்தை பேரால் தானே ஆள எண்ணினான். இவன், கிருஷ்ணதேவராயனுக்கு மருமகனாத லாலும், கிருஷ்ணதேவ ராயனின் மூத்த மகள் திருமலாம் பாளை- இராமராயனும், இளைய மகள் வெங்கலம்பாளை- இராமராயன் தம்பி திருமலைராயனும் மணஞ் செய்திருந்தனர். இராமராயனும், அவன் தம்பியரும் (திருமலை, வேங்கடாத்திரி) அச்சுத ராயனுக்கும், அவன் தம்பி அரங்கராயனுக்கும் மைத்துனராதலாலும்-இராமராயன் தங்கையரை அச்சுதராயனும் அவன் தம்பி அரங்கராயனும் மணந்திருந்தனர். அரசியர் ஆதரவு இராமராயன் பக்கமே இருந்தது. ஆனால், சாளுவ வீரநரசிம்மன் என்ற தலைவன் அச்சுதராயனை ஆதரித்தான் இந்நிலையில், அரசியல் பெருமக்களுள் ஒருவனான சாளுவதிம்மன் என்பான், அச்சிறுவனை நஞ்சிட்டுக் கொன்று விட்டான். அதனால், அவன் குடும்பத்தினர் அனைவரும் காவலில் வைக்கப்பட்டு, ஒரு மகன் தப்ப முயன்றதற்காக, அனைவர் கண்களும் குருடாக்கப்பட்டன. கிருஷ்ண தேவராயன் சிறுவன் இறந்து விட்டதனால், சந்திரகிரியிலிருந்து அச்சுதராயன் வரவழைக்கப்பட்டான். அவன் வந்து சேருமளவும் அரசுரிமையை எவருங் கைப்பற்றாத படி, சாளுவ நரசிம்மன் பேணிக்காத்து வந்தான். ஆனால், அச்சுதராயன் முடி சூட்டிக் கொண்டதும், தன் மைத்துனன் இராமராயனின் உதவியோடாள எண்ணி, இராமராயனை ஆட்சிப் பொறுப்பிற் பங்கு கொள்ளச் செய்ய முடிவு செய்தான். இது, அச்சுதராயனையே ஆதரித்து வந்த சாளுவ நரசிம்மனுக்கு மனக்கசப்பை உண்டாக்கிற்று. அதனால், சாளுவ நரசிம்மன் தான் ஆட்சி புரிந்து வந்த தஞ்சைக்குச் சென்று, பேரரசனுக்கு எதிராகக் கிளர்ச்சிக் கொடியை உயர்த்தினான். இக்கிளர்ச்சியில் உம்மத்தூர்த் தலைவனும், திருவாங்கூர்-வேணாட்டு-உதய மார்த்தாண்ட வர்மனும் கலந்து கொண்டனர். 1532இல், அச்சுதராயன் தமிழ் நாட்டின் மேற் படை யெடுத்துச் சென்று திருவரங்கத்தில் தங்கினான். சாளுவ நரசிம்மன் தண்டனைக் கஞ்சித் திருவாங்கூருக்கு ஓடிவிட்டான். அச்சுதராயன் திருவரங்கத்தில் தங்கியிருந்தபோது, திருவாங்கூர் மன்னன் உதயமார்த்தாண்டவர்மன் தன் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டதாக, தென்பாண்டி நாட்டை ஆண்ட சடையவர்மன் சீவல்லப பாண்டியன் (1534-1543) வந்து அச்சுதராயனிடம் முறையிட்டான். மேலும், திருவாங்கூர் மன்னன் பேரரசுக் கெதிரான கிளர்ச்சியில் கலந்து கொண்டதோடு, திறைதரா மலும் இருந்தான். எனவே, அச்சுதராயன், தன் மைத்துனன் சாலகம் திருமலையையும் அவன் மகன் திம்மனையும் பெரும் படையுடன் திருவாங்கூருக்கனுப்பினான். அப்படைத் தலைவர்கள் திருவாங்கூர் சென்று பொருது வென்று, சேர மன்னனையும் சாளுவ நரசிம்மனையும் சிறைப் பிடித்து வந்தனர். அவ்விருவருக்கும் தக்க தண்டனை அளிக்கப்பட்டது. தன் நாட்டைப் பெற்ற சீவல்லப பாண்டியன், தன் மகளை அச்சு தராயனுக்கு மணஞ் செய்து கொடுத்தான். இது, விசுவநாத நாயக்கன் மதுரையிலிருந்தாண்ட காலம். சாளுவ நரசிம்மன் மாமண்டலத் தலைவனாக இருந்தாண்ட தஞ்சையில்-அச்சுதராயன் மனைவி திருமலாம்பாளின் உடன் பிறந்தாள் கணவனான செவ்வப்ப நாயக்கன் தலைவனாக அமர்த்தப்பட்டான். அவன், கேசவப்பனுக்குப் பின் (1540) தானே ஆட்சித் தலைவனானான். உம்மத்தூர்த் தலைவனும் பணிந் தளிக்கும் வணக்கத்தை ஏற்கும் வண்ணம், அச்சுதராயன் அவ்வழி யாகத் தலைநகர் சென்றான். கொங்கு நாட்டில், அச்சுதராயன் கல்வெட்டுக்கள்-எரசளகள்ளி, குந்தூர், மொதகள்ளி, நஞ்சனகள்ளி- (இவை கொள் ளேகால் வட்டம்) அவிநாசி, அறச்சலூர், காங்கயம், கீரனுர் (பழனிப்பக்கம்),திண்டுக்கல்,திருச்செங்கோட்டை அடுத்த கொக்கராயன் பேட்டை, தாரமங்கலம், அதமன் கோட்டை (அதியமான் கோட்டை)ஆகிய ஊர்களில் உள்ளன. 1532 நஞ்சன கள்ளிக் கல்வெட்டின்படி, சங்கமர்களுக்கும் பிராமணர்களுக்கும் நிலம் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. 1538 அவிநாசிக் கல் வெட்டின்படி, சிங்கள உடையான் என்பவன் அரை வேலி நிலங் கொடுத்து, சிங்களசமுத்திரம் என்ற குளம் வெட்டினான். 4. சதாசிவராயன் (1543-1572): 1542இல் அச்சுதராயன் உலக வாழ்வை நீத்தான். சிறுவனான அவன் மகன் முதலாம் வேங்கடனுக்கு முடி சூட்டப் பெற்று, அவன் தாய் மாமனான சாலகம் திருமலை ஆட்சிப் பேராளனானான்- ஆனால். வேங்கடன் தாயான வராதாதேவி, தன் உடன் பிறந்தான் மீது ஐயங் கொண்டு, பீசப்பூர்ச் சுல்தானை உதவிக்கழைத்தான். ஆனால், சுல்தான் வரும் வழியிலேயே திருமலை பணம் கொடுத்துச் சுல்தானை திருப்பி அனுப்பி விட்டு, அரசியின் செயலுக்கு எதிர்செயலாக, குத்தியில் காவலில் வைக்கப் பட்டிருந்த அச்சுதராயன் தம்பி அரங்கராயன் மகனான முதலாம் சதாசிவனை அரியணையில் அமர்த்தி, அவனுக்கு, உதவியாக மீண்டும் பீசப்பூர்ச்சுல்தானேயே படையெடுக்கும் படி தூண்டினான். ஆட்சி நிலைமைபற்றி அச்சங் கொண்ட நகரமக்கள் திரண்டெழுந்து, திருமலையையே ஆட்சியாளனாக இருக்கும் படி வேண்டினார். அதனால், தானே வரவழைத்த பீசப்பூர்ப் படையைத் திருமலை தானே முறியடித்துத் துரத்தினான். ஆனால், கொடியவனான அத்திருமலை, முதலாம் வேங்கடனை யும், சதாசிவன் நீங்கலான அரச குடும்பத்தினர் அனைவரையும் கொன்று குவித்துக் கொடுங்கோலோச்சினான். அதுகண்ட நகரப் பெரு மக்கள் கிளர்ந்தெழுந்து, மீண்டும் பீசப்பூர் மன்னனின் உதவியை நாடினர். முன்னமே ஆதிக்கக் கயிற்றைக் கைப்பற்றி யிருந்த இராம ராயன் (கிருஷ்ண தேவராயன் மருமகன்), திருமலையைப் பொருது கொன்று, சதாசிவன் பேரால் தானே ஆட்சி செய்யத் தொடங்கினான். சதாசிவராயன் பெயரளவில் அரசனாக இருந்து வந்தான் (1543-1572).இராமராயனே உண்மையில் பேரரசனாகி (1542-1565), அரவீட்டு மரபின் முதல்வனானான். சதாசிவன் பெயரளவில் பேரரசனாக இருந்தாலும், கல்வெட்டுக்கள் அவன் பேராலேயே பொறிக்கப்பட்டன. கொங்கு நாட்டில் சதாசிவராயன் கல் வெட்டுக்கள் 8 கிடைத் துள்ளன. அவை சிங்காநல்லூர், இரத்தினகிரி (சிரவணம் பட்டி), தார மங்கலம், காரிமங்கலம் (இவை இரண்டும் சேல மாவட்டம்) ஆகிய இடங்களில் உள்ளன. கோவையை அடுத்த இரத்தின கிரிக் கல்வெட்டில், 1545இல் திம்மராசன் என்ற படைத் தலைவன் படையெடுத்து வந்தபோது, அவ்வூர்க் கோயிலுக்குச் செய்ததானம் குறிக்கப்பட்டுள்ளது. 1556 காரிமங்கலம் கல் வெட்டில், இராமராயன் பெயர் குறிக்கப் பட்டுள்ளது. இராமராயன் (1542-1565): இவன், இன்னான் என்பதை முன்னரே கண்டோம். இவன், சதாசிவராயனுக்காகவே ஆண்ட தால், அரசவரியில் இவன் எண்ணப்படவில்லை. இவ்வரசுரிமை பற்றிய குழப்பத்தால், பேரரசுக்குட்பட்ட நாடு முழுவதும் எழுந்த கிளர்ச்சியை இராமராயன் திறமையுடன் அடக்கினான். இவன் மிக்க திறமையும், அதற்கேற்ற பெரு மிதமும் தளராத உள்ளமும் உடையவன்;ஆனால், பேரவாவும் செருக்கும் மிக்கவன். இராமராயன், வெற்றிநகர்க்குப் போட்டியாக இருந்த ஐந்து முகமதிய அரசுகளையும் ஒன்றோடொன்று பகை கொண்டு போரிடுமாறு செய்து வந்தான். முடிவில் பீசப்பூர்ச் சுல்தானைத் தவிர, கோல்கொண்டா, அகமதுநகர், வெற்றி நகரை எதிர்க்கத் தொடங்கினர். 1565இல் கிருஷ்ணையாற்றங் கரையில் உள்ள தலைக் கோட்டை என்னும் இடத்தில் வெற்றிநகர்ப் படையும் முகமதியப் படையும் கைகலந்தன. இறுதியில் பீசப்பூர்ச் சுல்தானும் மற்ற நால்வருடன் சேர்ந்து கொண்டான். இதுதான் இனப்பற் றென்பது! போரில் இராம ராயன் கொல்லப்பட்டான் இராமராயன், திறமை வாய்ந்த அதிகாரிகளை நீக்கி விட்டு, அவ்விடத்தில் தன் உறவினர்களை அமர்த்தினான்; ஏராள மாக முகமதியர்களைப் படை வீரர்களாகச் சேர்த்தான்; படைத் தலைவர்களாகவும் ஏற்படுத்தினான். ஓற்றர்களாகவுங் கூட முகமதியர்கன் இருந்து வந்தனர். இதுவே அவன் அழிவுக்குக் காரணமானது. வெற்றி நகர்ப் பக்கம்வெற்றி கிடைக்க விருக்கும் நேரத்தில், வெற்றி நகர்முகமதியப் படைத் தலைவர் இருவர் திடீரென்று எதிர்ப்பக்கம் சேர்ந்ததோடு, இராமரா யனையே எதிர்க்கவும் தொடங்கினர். அவர்கள் ஒவ்வொருவர் கீழும் முறையே எழுபதினாயிரம் எண்பதி னாயிரம் வீரர் களிருந்தனராம். இராமராயன் கொல்லப்பட்டதை அறிந்ததும் அவன் தம்பியரான திருமலையும், வேங்கடாத்திரியும் நகர மக்களைத் தவிக்க விட்டுவிட்டு, பெரளவிலே பேரரசனாகச் சிறைப்பட்டுக் கிடந்த சதாசிவராயனுடன் பெனு கொண் டாவுக்குச் சென்று விட்டனர். இராமராயன் ஈட்டிக் குவித்து வைத்திருந்த செல்வங்கள் (முன்னிருப்பும்) 1550 யானைகளிற் சென்றனவாம். போர் முடிந்தது. களத்திலேயே வெற்றி நகர் வீரர் ஒரு நூறாயிரத்துக்கு மேல் படுகொலை செய்யப் பட்டனர். வெற்றி நகர் படுகொலைக் குள்ளானது. முகமதிய வீரர்கள் நகரிலுள்ள பொருள்களைக் கொள்ளையிட்டுப் பெருஞ் செல்வர்களாயினர் என்று, முகமதிய வரலாற்றாசிரியரான பெரிஷ்டா என்பவர் எழுதியுள்ளார். முகமதியர்களால் வெற்றி நகர் பாழ்படுத்தப் பட்டது. பெனுகொண்டா சென்ற திருமலை, (இராமராயன் தம்பி) தன் அண்ணனைப் போலவே சதாசிவராயனைப் பெயரளவில் பேரரசனாக வைத்து ஆண்டு வந்தான். திருமலையில் ஆட்சிக் கெதிராக, இராமராயன் மகனான பெரிய திருமலை என்பான் போட்டியிட்டு, பீசப்பூர்ச் சுல்தானை உதவிக் கழைத்தான். பெனுகொண்டாத் தலைவன் சிவராம சின்னப்ப நாயக்கனின் போர்த் திறமையே அப்போது திருமலையைக் காத்தது. திருமலை பெனுகொண்டாவிலும், அவன் தம்பி வெங்கடாத்திரி சந்திரகிரியிலும் இருந்தாண்டு வந்தனர். பின்னர்த் திருமலை, மூன்று மண்டலங்களாகப் பிரித்துத் தன் பேரரசை. மூன்று புதல்வர்களையும் அம்மண்டலத் தலைவர்களாக்கினான். முதல் மகன் முதலாஞ் சீரங்கன் பெனுகொண்டாவைத் தலைநகரமாகக் கொண்ட தெலுங்கு நாட்டையும், இரண்டாம் புதல்வன் இராமன், சீரங்க பட்டணத்திலிருந்து கன்னட நாட்டையும், மூன்றாம் மைந்தன் வேங்கடபதி, சந்திரகிரியைத் தலைநகராகக் கொண்டு தமிழகத் தையும் ஆண்டு வந்தனர். சென்ன பட்டினத்தை ஆங்கிலேயர்க் களித்த சென்னப்ப நாயக்கன், இச்சந்திரகிரித் தலைவன் மரபினனே யாவன். 4.அரவீடு மரபு 1. முதலாஞ் சீரங்கன் 1572-1585 2. இரண்டாம் வேங்கடன் 1586-1614 3. இராம தேவன் 1620-1633 4. மூன்றாம் வேங்கடன் 1633-1641 5. மூன்றாஞ் சீரங்கன் 1642-1647 1. முதலாஞ் சீரங்கன் (1572-1585): இவன், திருமலையின் மூத்த மகன்; பெனுகொண்டாவிலிருந்தாண்டு வந்தவன். சதாசிவ ராயனுக்குப் பின் இவன் பட்டம் பெற்றான். இச்சீரங்கனே, இராமராயனால் தோற்றுவிக்கப்பெற்ற அரவீட்டு மரபின் முதலரசனாவான். 2576 இல் பீசப்பூர்ச் சுல்தானான அலி அடில்ஷா பெனு கொண்டாவைத் தாக்கினான். சீரங்கன் அதன் பாதுகாப்பைத் தன் படைத்தலைவன் சென்னப்ப நாயக்கனிடம் விட்டு விட்டுத் தலைநகரைச் சந்திரகிரிக்கு மாற்றிக் கொண்டான். பேரரசின் பெரும் படையாற்றலால், சென்னப்பநாயக்கன் பீசப்பூர்ச் சுல்தானை முறியடித்தான். பின்னர்ச் சீரங்கன், பீசப்பூர்ச் சுல்தானை எதிர்க்கக் கோல்கொண்டா மன்னனை உதவிக்கழைத்தான். பீசப்பூரும் கோல்கொண்டாவும் தங்கட்குள் ஒரு மறைமுகக் கூட்டு ஒப்பந்தஞ் செய்து கொண்டிருந்தமையால், கோல் கொண்டாச் சுல்தான் உதவவில்லை. ஆனால், கோல்கொண்டாவின் படைத்தலைவனாயிருந்த மராட்டியனான முரகரிராவ் என்பவன், 1579இல் சீரங்கன் கீழுள்ள பெருமக்களோடு சேர்ந்து சீரங்கனைத் தாக்கியதோடு, பேரரசுக்குட்பட்ட வினுகொண்டா, கொண்டவீடு, உதயகிரி ஆகிய கோட்டைகளையுங் கைப்பற்றிக் கொண்டான். 2. இரண்டாம் வேங்கடன் (1586-1614): இவன், முதலாஞ் சீரங்கன் தம்பி; சந்திரகிரியிலிருந்தாண்டவன். முதலாஞ் சீரங்கன் மைந்தர்கள் சிறுவர்களாய் இருந்தமையால் இவன் பட்டத்திற்கு வந்தான். சீரங்க பட்டணத்திலிருந்தாண்ட முதலாஞ் சீரங்கன் தம்பி இராமன் இறந்தமையால், அவன் மகன் திருமலைக்கு அந்த இடம் அளிக்கப்பட்டது. இவ்வேங் கடன் ஆட்சிக் காலத்தே வெற்றி நகர்ப்பேரரசு ஒருவாறு மறுமலர்ச்சி யடையத் தொடங்கியது. இவன் பட்டம் பெற்றதும், கோல்கொண்டாப் படைத் தலைவன் கர்நூல், கடப்பை, அனந்தப்பூர்ப் பகுதிகளைக் கைப் பற்றிக் கொண்டதோடு, பெனுகொண்டாவையும் முற்றுகை யிட்டான். வேங்கடன் பணிந்து நட்புறவு செய்து கொண்டு, தன் படையைப் பெருக்கிக் கொண்டான். அதன் பின் வேங்கடன் படையெடுத்துச் சென்று குத்தி, கண்டி கோட்டா ஆகிய கோட்டை களைக் கைப்பற்றினான். பெண்ணை யாற்றங்கரையில் நடந்த போரில் இவன் கோல்கொண்டாப் படையைத் தோற் கடித்தான்; வேறு பல கோட்டைகளையுங் கைப்பற்றினான். அது கண்ட கோல்கொண்டாச் சுல்தான். மீண்டும் கிருஷ்ணை யாற்றையே கோல்கொண்டாவுக்கும் வெற்றி நகர்க்கும் எல்லை யாக இருக்கும் படி ஒப்புக் கொண்டான். இதனால், பீசப்பூரும் அடங்கிற்று. புறப்பகையை ஒருவகையாக அடங்கிய வேங்கடன் பேரரசுக் கடங்காது குழப்பஞ் செய்து வந்த சிற்றரசர்களை யெல்லாம் சில ஆண்டுகளில் வென்றடக்கினான். இதற்கு வேலு கோடி யாசமநாயுடு என்பான் வேங்கடனுக்குப் பெருந்துணை யாக இருந்தான். 1589 இல் யாசமன், உதயகிரியைக் கைப்பற்றி, கோலாற்றுத் திம்மய்ய கௌடனை அடக்கினான்; 1598இல் நந்தேலா (நந்தியால்) கிருஷ்ணமராயன் வென்று சிறையிலிடப் பட்டான். இராமராயன் தம்பி வேங்கடாத்திரியின் பேரன் கோபாலராயன் என்பான். 1601 இல் வேங்கடனுக் கெதிராகக் கிளர்ச்சி செய்தான். வேங்கடன் அவனை வென்றடக்கினான். செஞ்சி இரண்டாங் கிருஷ்ணப்ப நாயக்கனின் கீழ் வேலூரை ஆண்ட இலிங்கமன் துணைத் தலைவனான நாகனிட மிருந்து வேலுகோடி, உத்தரமேரூர்க் கோட்டையைக் கைப் பற்றினான். அதனை மீட்க இலிங்கமன் - மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக்கர்களின் படைத்துணையுடன் வேலுகோடியை எதிர்த்தான். வேலுகோடி, தன் தம்பி சிங்கனுடன் அப்பெரும் படையை முறியடித்து வெற்றி பெற்றான். வேங்கடன் 1603இல், சென்ன வேங்கடன் என்னும் படைத் தலைவன் வேலூரை முற்றுகை யிடும்படி அனுப்பினான். சென்ன வேங்கடன் வேலூர் செல்லும் வழியில் வேலூருக் கருகில் உள்ள மின்னல் என்னுமிடத்தில் எதிர்ப்பட்ட இலிங்கமனை முறியடித்துச் சென்று வேலூரை முற்றுகையிட்டு, இரண்டுமாத முற்றுகைக்குப் பின் வேலூர்க் கோட்டையைக் கைப்பற்றினான். இலிங்கமன் சிறைப்பட்டான். சென்ன வேங்கடன் வேலூர் முற்றுகையில் ஈடுபட்டிருந்த போது, பேரரசன் வேங்கடனும் வேலுகோடியும் தெற்கு நோக்கிப் படையெடுத்துச் சென்று, உத்தரமேரூர்ப் போரில் எதிரிக்குதவிய செஞ்சி, தஞ்சை, மதுரை நாயக்கர்களை - செங்கற்பட்டு, திருச்சி, மதுரைப் போர்களில் வென்றடக்கினர். இப்போர்களின் இடையில், தஞ்சை இரகுநாத நாயக்கன் பேரரசன் பக்கம் சேர்ந்து கொண்டான். வேலூர்க் கோட்டை பிடிபட்ட பின், வேங்கடன் தலைநகரை வேலூர்க்கு மாற்றிக் கொண்டான். இது பேரரசின் நாலாவது தலைநகர். வெற்றிநகர் (1336-1565), பெனுகொண்டா (1565-1576), சந்திரகிரி (1576-1603), வேலூர் (1603-1647). மதுரை வீரப்ப நாயக்கன் (1572-1595) திறைதராதிருந் தான். சீரங்கபட்டணத்திலிருந்தாண்ட தன் அண்ணன் (இராமன்) மகன் திருமலையை வேங்கடன் மதுரைக்கனுப்பினான். திருமலை, மதுரை சென்று, வீரப்பநாயக்கனை அடக்கித் திறைதருமாறு செய்தான். ஆனால், திருமலை முறைப்படி அத்திறைப் பணத்தைப் பேரரசுக் கனுப்பாமல் சீரங்கப் பட்டணம் சென்று விட்டான். 1610 இல் திருமலை நோய்வாய்ப் பட்டுத் தலைக்காடு சென்று தங்கி யிருந்தபோது, மைசூர்ச் சிற்றரசனான இராச உடையார் (1578-1617) என்பான், திடுமெனச் சென்று சீரங்க பட்டணத்தைக் கைப்பற்றிக்கொண்டான். ஆனால், திருமலை யின் மனப்போக்கை எண்ணி. வேங்கடன் சும்மா இருந்து விட்டதோடு, புதிய நட்புறவைக் கருதி, 1612 இல் இராச உடையாருக்கே அதை ஆளும் உரிமை யளித்தான். சரிந்து போன பேரரசை உயர்நிலைக்குக் கொண்டுவந்த பெருமை இரண்டாம் வேங்கடனையே சேரும். இவன் கல்வெட்டு - சிவசமுத்திரத்தில் ஒன்றும் (1604), ஈரோட்டில் இரண்டும் (1588) உள்ளன. 3. இராம தேவன் (1620-1633): இரண்டாம் வேங் கடனுக்கு மனைவியர் பலரிருந்தும் பிள்ளையில்லை. அவன் மனையரி லொருத்தியான கொப்பூரி ஜக்கராயன் தங்கை வே றொருவர் பிள்ளையை எடுத்து வளர்த்து வந்தாள். அதாவது, தான் கருப்ப முற்றிருப்பதாக நடித்து, தான் பெற்ற பிள்ளையென அப்பிள்ளையை வளர்த்து வந்தாள். ஆனால், வேங்கடன் சீரங்கபட்டணத்திலிருந்து கன்னட மண்டலத்தை ஆண்ட திருமலையின் தம்பி இரண்டாஞ்சீரங்கனைத் தனக்குப் பின் ஆட்சிக் குரியவனாகத் தெரிவித்து விட்டு, 1614 இல் இறந்தான். கொப்பூரிஜக்கராயன், தன்உடன்பிறந்தாள் வளர்த்து வரும் அப்போலிப் பிள்ளையை அரசனாக்க முயன்றான். வேலு கோடி யாசமன், இரண்டாஞ் சீரங்கனை ஆதரித்தான். ஜக்கராயன் இரண்டாஞ் சீரங்கனையும் அவன் குடும்பத்தினரையும் சிறைப் படுத்தி விட்டு, அப்போலி மகவுக்கே முடிசூட்டினான். வேலு கோடி, இரண்டாஞ் சீரங்கன் மகனாகிய இராம தேவன் என்ற குழந்தையைச் சிறையினின்று வெளிக்கொணர்ந்து, தஞ்சைக்குக் கொண்டு சென்றான். கொடியவனான ஜக்கராயன், இரண்டாஞ் சீரங்கனையும் அவன் குடும்பத்தினரையும் ஒருவர் கூட விடாமல் கொன்று விட்டு, பெரும் படையுடன் வேலுகோடியைப் பின் தொடர்ந்தான். இதையறிந்த தஞ்சை இரகுநாத நாயக்கன் பெரும் படையுடன் வேலு கோடிக்குத் துணை செய்ய எதிர்வந்தான். காவிரியின் தென்கரையில் பேரணைக் கருகிலுள்ள தோப்பூரில்-வேலுகோடி, இரகுநாத நாயக்கன் ஆகிய இருவரையும் எதிர்த்து- ஜக்ராயன், செஞ்சி, மதுரை நாயக்கர்கள், நெல்வேலிப் பாண்டியர், திருவாங்கூர் மன்னன், மதுரை நாயக்கர்க் குறவாயிருந்த போர்த்துக்கீசியர் ஆகியோர் பொருதனர். வேலுகோடியும் இரகுநாதனம் வெற்றி பெற்றனர். ஜக்கராயன் கொல்லப் பட்டான். 1620இல் வேலூரில் இராமதேவனுக்கு முடிசூட்டினர். ஜக்கராயன் தம்பி எதிராசன் என்பான், ஜக்கராயனைப் போலவே அப்போலிப் பிள்ளையை ஆதரித்துக் கிளர்ச்சி செய்தான். அவன், செஞ்சிக் கிருஷ்ணப்ப நாயக்கனுடன் சேர்ந்து, சிதம்பரத்துக்கு வடமேற்கில் வெள்ளாற்றங் கரையிலுள்ள புதுக்கோட்டை என்னும் இடத்தில், வேலுகோடி, இரகுநாதன் ஆகிய இருவருடனும் போரிட்டான். கிருஷ்ணப்ப நாயக்கன் சிறைப்பட்டான். எதிராசன் தோற்றோடினான். அப்போலிப் பிள்ளை இறந்து விட்டது. எதிராசன் மகளை இராமதேவன் மணந்து கொண்டு உறவாயினர். கொங்கு நாட்டில் - பழைய கோட்டையை அடுத்த நத்தக்காரையூர், திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு ஆகிய ஊர்களில் இராமதேவன் கல்வெட்டுக்கள் உள்ளன. 4. மூன்றாம் வேங்கடன் (1633-1641): இராம தேவனுக்கும் பிள்ளையின்மையால், இறக்குமுன், முதலாஞ் சீரங்கன் பேரனான மூன்றாம் வேங்கடனை அரசனாக்கினான். ஆனால், இறந்து போன இராமதேவன் சிற்றப்பனான திம்மராயன் என்பான், அவ்வரசுரிமைக்காகப் போட்டியிட்டான். செஞ்சி, தஞ்சை, மதுரை நாயக்கரும், மூன்றாம் வேங்கடன் தம்பி மகனான மூன்றாஞ் சீரங்கனும் மூன்றாம் வேங்கடனை ஆதரித்தனர். திம்மராயன் உள்நாட்டுக் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தான். 1635இல் செஞ்சி நாயக்கனால் அவன் கொல்லப் பட்டான். அதன் பின் அமைதியுண்டானது. ஆனால், மூன்றாஞ் சீரங்கன் எக்காரணத்தாலோ பேரரசனுக் கெதிரியாகி. பீசப்பூர்ச் சுல்தானுடன் சேர்ந்து கொண்டு, 1638இல் வேங்கடனுக்கு எதிராகச் சுல்தானைப் படையெடுக்கும் படி செய்தான். அவ்வாறே சுல்தான் பெங்களூரை முற்றினான். வேங்கடன் சுல்தானுக்குப் பெரும் பொருள் கொடுத்துப் பெங்களூர் முற்றுகையை நீக்கினான். மறுபடியும் 1641 இல் சுல்தான் வேலூரை நோக்கிப் படையெடுத்தான். இம்முறை தமிழக நாயக்கரின் உதவி வேலூரைக் காத்தது. ஆயினும் இதேபோது கோல் கொண்டாப்படை கீழ்கரையோரமாக வேலூரை நோக்கி வந்தது. அப்படைகளை எதிர்க்க முடியா தெனக் கண்ட பேரரசன் வேங்கடன் மனமுடைந்து, சித்தூர்க் கோட்டத்தி லுள்ள ஓர் காட்டுக்குள் ஓடி ஒளிந்து ஆதரவற்று வாழ்ந்து, 1641இல் இறந்தான். 5. மூன்றாஞ் சீரங்கன் (1642-1647): மூன்றாம் வேங் கடனும் பிள்ளையில்லா திறக்கவே, மூன்றாஞ் சீரங்கன் அரச னானான். நாயக்க மன்னர்கள் இவனை வெறுத்தனர். கோல் கொண்டாச் சுல்தான் பேரரசின் மேற் படையெடுத்தான். சீரங்கன் பீசப்பூர் உதவியை வேண்டினான். பீசப்பூர்ச் சுல்தான் பெரும் படை ஒன்றை அனுப்பினான். அப்படைத் தலை வனான ஷாஜி (சிவாஜியின் தந்தை), பேரரசுக் குதவும்படி -மதுரை, தஞ்சை, செஞ்சி, இக்கேரி நாயக்கர்களை ஒருங்கு திரட்டிச் சீரங்கனுக்குக் குதவினான். 1644இல் நடந்த உதயகிரிப் போரில், சீரங்கன் கோல்கொண்டாவை முறியடித்தான். சீரங்கன் நீக்குப் போக்கின்றி நாயக்க மன்னர்களிடம் நடந்து கொண்டான்; பெரும்படையுடன் சென்று அவர்களிடம் வற்புறுத்திப் பணம் வாங்கினான். அதனால், மதுரைத் திருமலை நாயக்கன், மற்ற நாயக்கரையும் சேர்த்துப் பேரரசனை எதிர்க்கத் திட்டமிட்டான். தஞ்சை விசயராகவன் அதில் சேர மறுத்ததோடு, அத்திட்டத்தையும் சீரங்கனுக் கறிவித்து விட்டான். தஞ்சை மன்னன் பேரரசனுடன் சேர்ந்ததை யறிந்து திருமலை, கோல் கொண்டாச் சுல்தானை வேலூரைத் தாக்கும்படி தூண்டினான். கோல்கொண்டாப் படைத்தலைவன் 1645 இல் வேலூரை நோக்கிப் படையெடுத்தான். சீரங்கன், உதயகிரிக் கோட்டைக் காவலை மல்லையா என்பவனிடம் ஒப்படைத்திருந்தான். அவன் எதிரியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, கோட்டை யைக் கோல்கொண்டாப் படைத் தலைவனிடம் ஒப்படைத்து விட்டான். சீரங்கன், இக்கேரி நாயக்கன் உதவியை நாடினான். இக்கேரிச் செவ்வப்ப நாயக்கன், 400000 வீரர்களுடன் வந்து உதவினான். வேலூர் முற்றுகை இம்முறை தவிர்க்கப் பட்டது. அதன்பின், கோல்கொண்டா, பீசப்பூர்ச்சுல்தான்கள் இருவரும் ஒன்று சேர்ந்து சீரங்கனை எதிர்க்க முற்பட்டனர். இரு முகமதிய அரசர்களும் ஒன்று சேர்ந்து பேரரசனை எதிர்க்க முற்பட்டதை அறிந்தவுடன், மதுரைத் திருமலை நாயக்கன் தவிர, மற்ற நாயக்க மன்னர்கள் அனைவரும் பேரரசுக் குதவ முன்வந்தனர். அவர்களுடன் மைசூர் மன்னனும் கலந்து கொண் டான். ஆனால், அவ்வளவு பேரின் உதவி பெற்றும், 1646 இல் காஞ்சியை அடுத்த விரிஞ்சிபுரம் என்னும் இடத்தில் நடந்த போரில் சீரங்கன் படுதோல்வி அடைந்தான். 1647 இல் கோல்கொண்டாவும் பீசப்பூரும் சேர்ந்து வேலூரை முற்றுகையிட்டனர். சீரங்கனிடமிருந்து 50 நூறாயிரம் பொன்னும், 150 யானைகளும் போர்த்தண்டமாகப் பெற்றனர். இந்நிலையில், பீசப்பூர்ப் படைத்தலைவன் ஷாஜி, சீரங்கனைத் தப்பி ஓடும்படி செய்தான். வேலூர் பகைவர் கைப்பட்டது. சீரங்கன், தமிழக நாயக்கர்களை ஒன்று திரட்டும் முயற்சியில் ஓராண்டைக் கழித்தான். அவர்கள் அனைவருங் கைவிட்டனர். சிலநாள் சீரங்கன், தஞ்சைப் பக்கம் அலைந்து திரிந்து, பின்னர் மைசூரிலும் இக்கேரியிலுமாகத் தன் இறுதி நாளைக் கழித்தான். இவனுடன் வெற்றி நகர்ப் பேரரசு முடிவுற்றது. 1336 முதல், 1647 வரை - 311 ஆண்டுகள் பேரரசு செலுத்தி ஒழிந்தது வெற்றி நகர்ப் பேரரசு! சீரங்கன் கல்வெட்டுக்கள், கொங்கு நாட்டில்-சிங்கா நல்லூர், கண்ணாடிப் புத்தூர், குமரலிங்கம் ஆகிய இடங்களில் உள்ளன. அவை - 1655-1667 ஆண்டுகட்குரியவை. இப்போது கொங்குநாடு, மதுரை நாயக்கர் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது அவர்கள் பேரரசுக்குட்படாமல் தனியாட்சி புரிந்து வந்தனர். மரியாதைக்காகச் சீரங்கன் பெயரால் அவை வெளி யிட்டன வாகும். சீரங்கன் அதுகாலை மைசூர் நாட்டில் இருந்து வந்தான். கொங்கு நாட்டில் - வெற்றி நகர்ப் பேரரசின் முதல் கல்வெட்டு, 1368 இல் பொறிக்கப்பட்டது. கொள்ளேகால் வட்டத்து மொதகள்ளியில் ஒன்றும் கோவைக் கோட்டத்துச் சடையம்பாளையத்தில் இரண்டுமாக அவ்வாண்டுக் கல்வெட்டுக் கொங்கு நாட்டில் 3 உள்ளன. அவை, குமார கம்பண்ணன் கல் வெட்டுக்கள் இறுதிக்கல்வெட்டு 1667இல் பொறிக்கப் பட்டது. அது மூன்றாஞ் சீரங்கனுடையது. இவை, கொங்கு நாட்டில் வெற்றிநகர் ஆட்சி நடந்த எல்லையைக் குறிக்கும். 1667-1368 = 299, அதாவது, வெற்றி நகர்ப் பேரரசு 300 ஆண்டுகள் கொங்கு நாட்டின் மீது ஆணை செலுத்தி வந்த தென்பது பெறப்படும். தமிழகத்தில் வெற்றிநகர் ஆதிக்கம் செலுத்தியதும் இக்காலமே. 9. மைசூர்மன்னர் மைசூர் மன்னர் மரபு, மைசூரிலிருந்தாண்ட சின்னஞ் சிறு சிற்றரச மரபு. மைசூர்மன்னர் மரபு- மைசூர் உடையார் மரபு எனப்படும். வெற்றி நகரின் தலைக்கோட்டைப் போருக்குப் பின் (1565) இம்மைசூர் மன்னர், வெற்றிநகர்ப் பேரரசுக்குத் திறை தருவதை நிறுத்தி விட்டனர். 1. இராச உடையார் 1578-1617 2. முதலாஞ் சாமராச உடையார் 1617-1637 3 இரண்டாம் இராச உடையார் 1637-1638 4. கண்டீரவ நரசராசன் 1638-1659 5. தொட்ட தேவராயன் 1659-1672 6. சிக்கதேவராயன் 1672-1704 7. கண்டீரவன் 1704-1713 8. தொட்டகிருஷ்ணராயன் 1713-1731 9. இரண்டாஞ் சாமராசன் 1731-1734 10. சிக்ககிருஷ்ணராயன் 1734-1766 11. நஞ்சராயன் 1767-1770 12. மூன்றாஞ் சாமராசன் 1770-1775 13. நான்காஞ் சாமராசன் 1775-1799 14. கிருஷ்ணராசன் 1803-1868 1. இராசஉடையார் (1578-1617): இவன் 1612 இல், வெற்றி நகர் இரண்டாம் வேங்கடனிடம், சீரங்க பட்டணத்தை ஆளும் உரிமை பெற்றான் என்பதை அங்கு கண்டோம். பின்னர்ச் சுற்றுப் புறத்திலிருந்த தலைவர்களையெல்லாம் அடக்கி நாட்டைப் பெருக்கிக் கொண்டான். 2. முதலாஞ் சாமராச உடையார் (1617-1637): இவன், இராச உடையார் பேரன். இவன் படைத்தலைவனான கரசூரி நந்திராசன் என்பான், 1625இல் திண்டுக்கல் மீது படையெடுத்துச் சென்று, மதுரைத் தளவாய் இராமப்பய்யனிடம் தோல்வி அடைந்தான். சாமராசன், அடுத்த குறுநில மன்னனான செகதேவ ராயனை வென்று, அவன் நாட்டைத் தன் ஆட்சியில் சேர்த்துக் கொண்டான். இவன் காலத்திற்குள், தற்கால மைசூர் நாட்டுத் தென் மாநிலமான சென்னபட்டண மாநிலத்தின் பாராமகால் (தருமபுரி மாவட்டத்தின் ஓசூர் கிருஷ்ணகிரி வட்டங்களின் வடபகுதி) நீங்கலான பகுதி மைசூர் நாட்டில் சேர்க்கப் பட்டு விட்டது. ஆனால், மைசூர்க்குப் போட்டியாக, மைசூர் நாட்டின் மேற்கில் உள்ள இக்கேரி வலுவடைந்து வளர்ந்து வந்தது. மேலும் சாமராசன், நாகமங்கலத்துச் சிற்றரசனான சென்னையன் என்பானை நாட்டை விட்டுத் துரத்தினான். அவன், பீசப்பூர்ச் சுல்தானிடம் உதவி கோரி அடைக்கலம் புகுந்தான். 3. இரண்டாம் இராச உடையார் (1637-1638): இவன், சில மாதங்களில் இறந்து விட்டான். 4. கண்டீர நாசராசன் (1638-1659): இவனைக் கந்தருவ நாசராசன் என்பதும் உண்டு. இவன் மிக்க திறமை வாய்ந்தவன். இவன் பட்டம் பெற்றதும், வசவ பட்டணத்துச் சிற்றரசன் கெங்க அனுமனை, இக்கேரி வீரபத்திரனுக்கு (1629-1645) எதிராகத் தூண்டினான். வீரபத்திரன் அவனை வென்று நாட்டை விட்டுத் துரத்தினான். அவனும் பீசப்பூர்ச் சுல்தானிடம் அடைக்கலம் புகுந்தான். முதற் பராந்தகச் சோழனால் நாட்டை விட்டுத் துரத்தப் பட்டு, வாண இரண்டாம் விக்கிரமாதித்தனும், வைதும்பனும், இராட்டிரகூட மூன்றாங் கிருஷ்ணனிடம் அடைக்கலம் புகுந் திருந்ததை நினைவு கூர்க. எனவே வலிமை வாய்ந்த இக்கேரி, மைசூர் அரசுகளைக் கடந்து தெற்கே பரவ முடியாமல் இருந்த பீசப்பூருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாயிற்று. சென்னையன், கெங்க அனுமன் ஆகியோரின் தூண்டு தலினால், பீசப்பூர்ச்சுல்தான் மைசூர் இக்கேரி மேல் படை யெடுத் தான். 1638-39இல் தொடர்ந்து நடந்த பீசப்பூர்ப் படையெடுப் பினால் இக்கேரியின் பெரும் பகுதியும், மைசூரின் வடகீழ்ப் பகுதியும் பீசப்பூராட்சிக்குட்பட்டன. ஆனால், நரசராசன் தன் திறமையினால் சில ஆண்டுகளுக்குள் தான் இழந்த பகுதியை மீட்டுக் கொண்டான். 1653க்குள், தருமபுரி மாவட்டத்துப் பாராம காலோடு அதன் தெற்கிலுள்ள பெண்ணாகரம் வரை நரசராசன் கைப்பற்றிக் கொண்டான். 1656இல் இவன் மதுரையோடு நடத்திய மூக்கறுப்புப் போரைப் பற்றித் திருமலை நாயக்கன் வரலாற்றில் காண்க. இவன், மூன்றாஞ் சீரங்கனுக்குப் பேருதவியாக இருந்த தை அறிக. 5. தொட்ட தேவராயன் (1659-1672): இவனுக்கு- கெம்ப தேவன் என்றும் பெயர். 1667இல் மைசூர் மீது படையெடுத்து வந்த மதுரைச் சொக்கநாதனை (1659-1682) இவன் முறியடித்து, சேலம் கோவைப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். அதாவது, அத்தோல்வியால் வடகொங்கைச் சொக்கநாதன் இழந்து விட்டான். ஈரோட்டுப் போர்: மைசூர் விரைந்து முன்னேறுவதைத் தடுக்கும் பொருட்டு, 1672 இல் மதுரைச் சொக்கநாதன், தஞ்சை விசயராகவன், இக்கேரிச் செவ்வப்பன் ஆகியோர் பீசப்பூர்ச் சுல்தானையுஞ் சேர்த்துக் கொண்டு தொட்ட தேவராயனை எதிர்த்தனர். நாடிழந்த வெற்றி நகர்ப் பேரரசன் மூன்றாஞ் சீரங்கனும் எதிர்ப்புக் குழுவில் இருந்தான். தன் குடிப் பகைவனான பீசப்பூர்ச் சுல்தானுடன் சேர்ந்து, தனக்குப் பேருதவி செய்த மைசூரை எதிர்க்கும் சீரங்கன் செயல் புதுமையினும் புதுமை யுடையதாகும். மதுரையும் இக்கேரியுமே இவ்வெதிர்ப்புக்கு மூல காரணமாகும். தொட்ட தேவராயன் மகன், இளவரசன் சிக்க தேவராயன் மைசூர்ப் படைக்குத் தலைமை தாங்கி நடத்தினான். இரு படையும் ஈரோட்டில் கைகலந்தன. போர் மிகக் கடுமையாக நடந்தது. முடிவில் சிக்கதேவராயனே வெற்றி பெற்றான். இவ்வெற்றியால் கொங்குநாடு முழுவதும் மைசூ ராட்சிக்குட்பட்டது. தாரமங்கலம் வணங்காமுடிக் கட்டியும் எதிர்ப்புக் குழுவில் சேர்ந்து தன் நாட்டை இழந்தான். இப்போருக்குப் பின் மைசூர் வலிமிக்கதோர் அரசரானது. இப்போருக்குப் பின் சீரங்கன் இக்கேரிக் கோடி விட்டான். 6. சிக்கதேவராயன் (1672-1704): இவன், தொட்ட தேவராயன் மகன், இவன் மிக்க வீரமும் அதற்கேற்ற ஆண்மை யும் உடையவன். ஆனால், தன் திறமையை இவன் போரில் பயன் படுத்தவில்லை, இவன் முகமதியரிடமும் அவ்வளவாக முட்டிக் கொள்ளவில்லை. மராட்டியரிடமும் செல்லவில்லை. ‘பொரு ளில்லார்க் கிவ்வுலகில்லை’ என்னும் உண்மையை நன்குணர்ந்த சிக்கதேவன், ஒவ்வொரு நாளும் 1000 வராகன் கொண்ட இரண்டு பைகளைக் கருவூலத்தில் சேர்க்காமல் சாப்பிட மாட்டானாம். கண்ணுங் கருத்துமாகப் பெரும் பொருளை ஈட்டிக் குவித்து, இவன் நவகோடி நாராயணன் எனப் பெயர் பெற்றான். நாட்டைப் பெருக்கப் பெங்களூரை விலைக்கு வாங்கினான்; நாட்டை வளமாக்கக் காவிரியில் பேரணை கட்டினான். மூன்றாஞ் சீரங்கன் தூண்டுதலினால், 1675 இல் இக் கேரிக்கும் மைசூருக்கும் நடந்த சக்கரப்பட்டணம் போரிலும் சிக்கதேவராயனே வாகை சூடினான். 1677 இல் மூன்றாஞ் சீரங்கன் அண்ணன் மகனான கோதண்டராமன் என்பான். சில சிற்றரசர்களைச் சேர்த்துக் கொண்டு மைசூர் மேற் படை யெடுத்தான். ஆசன் என்ற இடத்தில் நடந்த அப்போரிலும் மைசூர்ப் படைத் தலைவன் குமாரையாவே வெற்றிமாலை சூடினான். இதன் பின்னர், மைசூர் அசைக்க முடியாத அத்தகு வலிமை வாய்ந்த அரசானது. குமாரை யாவின் திருச்சி முற்றுகையை, மங்கம்மாள் வரலாற்றிற் காண்க. 7. கண்டீரவன் (1704-1713): மூக்கரசு என்னும் இவன் ஊமை. இவன் காலத்தே, தளவாய் முதலிய அதிகாரிகளின் செல் வாக்கு மிக்கது. 8. தொட்டகிருஷ்ணன் (1713-1731): இவன், மூக்கரசின் மகன். அரசிய லறிவு சிறிது மில்லாதவன். அதோடு திறமையற்றவன். சிக்கதேவராயன் காலத்தே ஒளிவீசிய மைசூர் அரசு, இவன் காலத்தே மங்கத் தொடங்கியது. இந்நிலையில், தென்னாட்டிலிருந்த ஐந்து முகமதியத் தனியரசுகளில், பீசப்பூரும் கோல்கொண்டாவுமே அது காலைத் தனியரசு புரிந்து வந்தன. டில்லிச் சுல்தானான ஓளரங்கசீப் (1653-1707), 1687 இல் பீசப்பூரையும் 1668 இல் கோல் கொண்டாவையுங் கைப்பற்றிக் கொண்டான். ஓளரங்கசீப் 1707 இல் இறந்தான். அவன் மக்களுக்குள் அரசுரிமைப் போராட்டம் உண்டானது. அக்குழப்ப நிலையில், ஓளரங்கசீப்பின் அமைச் சனாக இருந்த மீர்காமருதீன் என்பான் தெற்கே வந்து, தென் பகுதியின் தலைவனாக, நிஜாம் உல்முல்க் (1773-1748) என, ஐதராப்பாத்தைத் தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினான். இவன் தனக்குக் கீழ், சாதத்துலாகான் என்பானை ஆர்க்காட்டு நவாப்பாக்கினான் (1710-1732). இவர்களிலிருந்து முறையே-ஐதராபாத் நிஜாம் மரபும். ஆர்க்காட்டு நவாப்பு மரபும் தொடங்கின. இவ்விருவரும் தன்னுரிமையுடன் கருநாடகப் பகுதியை ஆண்டு வந்தனர். இவர்கள் சுற்றிலும் உள்ள நாடுகளைக் கைப்பற்றத் தொடங்கினர். மூக்கரசின் தளவாயான வசவராசன் என்பான், அம் முகமதியத் தாக்குதல் கிளம்பு முன்னரே வடக்கே இருந்த சில நாடுகளைக் கைப்பற்றினான். தொட்ட கிருஷ்ணன் காலத்தே அம்முகமதியர் தாக்குதல் மிகுதியாயிற்று. மைசூர்த் தளவா யினால் அவர்களை எதிர்த்து வெற்றி பெற முடியவில்லை; ஒரு கோடி பொருள் கொடுத்து அவர்களைத் திருப்பியனுப்பினான். சிக்கதேவராயன் ஈட்டிய செல்வம் இப்போது மைசூரைக் காத்தது. ஆனால், நிஜாம் மன்னன் மீண்டும் படையெடுத்து வந்து, காவிரிக் கரைவரையிலும் உள்ள மைசூர் நாட்டுப் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். தளவாய் ஆட்சி: 1731 இல் தொட்ட கிருஷ்ணன் இறந்தான். அவனுக்குப் பிள்ளையில்லை. இவனுடன் மைசூர் நேர்வழி அரச மரபு ஒழிந்து விட்டது. தளவாய்கள் தங்களுக்கு விருப்ப மானவரை அரியணையேற்றி வந்தனர். அரசன் திறமை யுடையவனாய் இருந்தால் தளவாய்கள் அடங்கி யிருப்பார்கள்; அரசன் திறமையற்றவனானால் தளவாய்கள் தலை நிமிர்வார்கள். ஓர் அரசன் போக்குத் தங்களுக்குப் பிடிக்கவில்லையானால், அவனை நீக்கி விட்டு வேறொருவனை அரசனாக்குவார்கள். அரசின் தலைமை யதிகாரத்தோடு, படையின் மேலதிகாரமும் இவர்கள் கையிலிருந்ததே இதற்குக் காரணமாகும். சிக்கதேவ ராயன் இறந்தது (1704) முதற் கொண்டே மைசூர் நாட்டில் தளவாய் ஆட்சி தொடங்கிய தெனலாம். அது முதல் 60 ஆண்டுகள், மைசூர் நாடு தளவாய் ஆட்சி நாடாகவே இருந்து வந்தது. மூக்கரசு, தொட்ட கிருஷ்ணன் ஆகியோர் காலத்தில் வசவராசன், கண்டீரவன் என்போர் தளவாய்களாக இருந்தனர். தொட்ட கிருஷ்ணன் இறந்தபோது, தேவராசன் என்பான் தள வாயாகவும், நஞ்சராசன் என்பான் பிரதானியாகவும் இருந்தனர். (பிரதானி-படைத்தலைவன்) நஞ்சராசன், தேவராசன் தம்பி, இவ்விருவரும் சேர்ந்து, இறந்து போன தொட்ட கிருஷ்ணன் தாயத்தானான சாமராசன் என்பானை அரியணை யேற்றினர். அவன் சிறிது ஆற்றல் காட்டத் தொடங்கவே, அவனைச் சிறையி லிட்டு, வேறொரு ஐந்தாண்டுச் சிறுவனை அரியணையேற்றினர். (இவர்கள்-9, 10 எண்ணுள்ளவராவர்). இவ்வேளை, ஆர்க்காட்டு நவாப்பு சீரங்கப்பட்டணத்தின் மேல் படையெடுத்தான். தளவாய் தேவராசன் மிக்க திறமையுடன் போர் புரிந்து நவாப்பை வென்று துரத்தினான். 1746இல் நஞ்சராசன், கொங்கு நாட்டுப் பாளையக் காரரை அடக்கப்படையெடுத்துச் சென்றான். அவ்வேளை பார்த்து நிஜாம், தன் மகனை மைசூர் மீது படையெடுக்கும்படி செய்தான். அப்படையை எதிர்க்கக் கூடிய படை மைசூரில் இல்லாததால், தளவாய் அவனுடன் உடன்பாடு செய்து கொண்டான். கொங்கு நாட்டின் மேற் படையெடுத்துச் சென்ற நஞ்சராசன், தாராபுரத்தும் அதன் சுற்றுப் பக்கத்துமுள்ள பாளையக்காரர் களை அடக்கி விட்டு மைசூர் வந்தவுடன், தன் நிலையை உயர்த்துக் கொள்வதற்காகத் தன் மகளை அப்பொம்மை அரசனுக்கு (சிக்க கிருஷ்ணராயன்) மணஞ் செய்து கொடுத்தான். நஞ்சராசன் தாராபுரத்திலிருந்து மைசூர் செல்லும்போது திருச்செங் கோட்டுக் கோயிலில் கொள்ளையடித்துச் சென்றான். இவனுக்கு ‘கொள்ளைக் கார நஞ்சராசன்’ என்றே பெயர். இச்சிக்ககிருஷ்ணன் (1734-1766) காலத்திலும், ஐதரலி (1761-1782) காலத்திலும் குறிக்கார மாதையன் என்பவன் கோவையில் ஆணையாளனாக இருந்தான். இவன் 40 ஆண்டுகள் ஆண்டு வந்தான். இவன் ஒரு வீர சைவன். மைசூர் நாட்டிலிருந்து வீரசைவக்குடிகளை (லிங்காயத்தார்) மிகுதியாகக் கொங்கு நாட்டில் குடியேற்றினான். நஞ்சராசன், 1749 இல் தேவகள்ளிக் கோட்டையை முற்று கையிட்டான். முற்றுகை 9 மாதம் நடைபெற்றது. அம் முற்று கையின் போது ஒரு முகமதிய இளைஞன் காட்டிய தீரச்செயலுக் காக, நஞ்சராசன் அவ்விளைஞனை 200 வீரர்களும் 50 குதிரை களுங் கொண்ட ஒரு படைக்குத் தலைவனாக் கினான். அவ் விளை ஞனே புகழ்பெற்ற மைசூர்த் தலைவனான ஐதர் அலி ஆவன். ஐதர்அலி தன் திறமையினால் படிப்படியாக உயர்ந்து, 1761இல் மைசூர் நாட்டு முழு அதிகாரத் தலைவன் ஆனான். முதல் ஐதராபாத் நிஜாமுக்கும் ஆர்க்காட்டு நவாப்புக்கும் பின், அவ்விரண்டிடத்தும் அரசுரிமைப் பூசல் உண்டானது. அக்காலத்தே சென்னையில் ஆங்கிலேயரும் புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரரும் இருந்து கோட்டை கட்டிக் கொண்டு வாணிகம் செய்து வந்தனர். அவர்கள் உள்நாட்டுப் பூசலில் தலையிட்டுத் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள ஆவல் கொண்டனர். ஐதராபாத்திலும் ஆர்க்காட்டிலும் நடந்த அரசுரிமைப் பேராட்டத்தில் ஆங்கிலேயர் ஒரு பக்கமும் பிரெஞ்சுக்காரர் ஒரு பக்கமும் சேர்ந்து போராடினர். இதில் மைசூரும் கலந்து கொண்டது. முடிவில் ஆங்கிலேயர் பக்கம் வெற்றியடைந்தது. பின்னர் மைசூர்த் தலைவனான ஐதர் அலி ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினான். இருபக்கமும் வெற்றியும் தோல்வியும் ஏற்பட்டன எனினும். ஐதரைக் கண்டு ஆங்கிலேயர் அஞ்சி நடுங்கினர். வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றபடி, இரண்டு மைசூர்ப் போரில் வீரத்தோடு போர் புரிந்து ஆங்கிலேயரை அலற வைத்து, 1782 , டிசம்பர் 7இல் ஐதர் வீரப் புகழெய்தினான். நிஜாமும் நவாப்பும் ஐதருடன் சிறிது ஒத்துழைத்திருந்தால், ஆங்கில ஆட்சி இங்கு ஏற்பட்டிருக்காது. ஐதருக்குப் பின், அவன் வீர மைந்தன் திப்புசுல்தான் ஆங்கிலேயரை எதிர்த்து இரண்டு மைசூர்ப் போர் புரிந்தான். திப்புவை வெல்ல முடியும் என்ற எண்ணத்தையே ஆங்கிலேயர் கைவிட்டனர். ஆனால், தீரன் திப்புவின் உப்பைத் தின்று வாழ்ந்த மைசூர் முதலமைச்சன் பூரணை யாவும், திவான் மீர்சாதிக்கும் சதி செய்து வெள்ளையர் வெற்றி பெறும்படி செய்து விட்டனர். 4-5-1799 பகல் 12 மணிக்குத் தீரன் திப்பு வீரவாழ் வெய்தினான். சீரங்க பட்டணம் ஆங்கிலேயர் கைப்பட்டது. ஆங்கிலேயரின் ஆட்சி உறுதிப்பட்டது. மராட்டி யரும் நிஜாமும் ஆரிக்காட்டு நவாப்பும் ஆங்கிலேயருக்குதவி, இந்நாட்டின் விடுதலை வீரனைக் கொன்று, இந்நாட்டை ஆங்கிலேயர்க்கு அடிமையாக்கினர். 1799க்கு முன்னரே கொங்கு நாட்டுச் சேலமாவட்டம் ஆங்கிலேயர்க் குரியதாயிற்று. உட்பகைவர்களைக் கொண்டு 1799இல் கைக்கொண்ட கோவைக் கோட்டத்தை ஆங்கிலே யர்க்கு விடாமல், கோவைக் கோனான தீரன் சின்னமலை ஐந் தாண்டுகள் ஆண்டு வந்தான். 1804இல் உள்ளானைக் கொண்டு தீரன்சின்னமலையைப் பிடித்துத் தூக்கிலிட்டுக் கொன்ற பின், இந்நாடு முழுவதும் ஆங்கில ஆட்சிக்குட்பட்டது 15-8-1947 வரை, இந்நாட்டில் ஆங்கில ஆட்சிக் கொடி பறந்தது. ஆங்கில ஆட்சி ஏற்பட்டபோது, நொய்யலுக்கு வடபாற் பட்ட கோவை சேலங் கோட்டக் கொங்கு நாட்டூப் பகுதிக்கு பவானிதலைநகராகவும், நொய்யலின் தென்பாற்பட்ட கொங்கு நாட்டுப் பகுதிக்குத் தாராபுரம் தலைநகராகவும் இருந்து வந்தன. அதன் பின்னர் இன்றுள்ளபடி தமிழகம் மாவட்டங் களாகப் பிரிக்கப்பட்டது. 2. கொங்கு நாட்டு வரலாறு தமிழகத்தே, சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர் ஆட்சி ஏற்பட்ட அன்று முதல் சங்ககால இறுதி வரை, தமிழகத்தின் ஒரு பகுதியாகிய கொங்கு நாடு-அம்முடியுடை மூவேந்தர் ஆட்சிக் குட்படாது, வேளிர் எனும் குறுநில மன்னர்களாலேயே ஆளப்பட்டு வந்தது. அன்று, இன்றைய மைசூர்நாடு-வடகொங்கு எனவும், அதன் மேற்கிலுள்ள குடகு, கொங்கணம் உள்ளிட்ட பகுதி-மேல்கொங்கு எனவும், இன்றையக் கொங்குநாடு - தென் கொங்கு எனவும் வழங்கி வந்ததோடு, அம்முக்கொங்கும் சேர்ந்த அப்பெருநிலப் பரப்பு-பெருங்கொங்குநாடு என வழங்கி வந்தது. அவ் வடகொங்கும் மேல்கொங்கும் அன்று தமிழ் நில மாகவே இருந்தன. சங்க காலத்தே மைசூர் நாட்டின் வடபகுதி-எருமை நாடு எனவும், தென்பகுதி- கங்கநாடு எனவும் வழங்கின. கங்கநாடு, பிற்காலத்தே கங்கவாடி என்னும் வழக்குப் பெற்றது. அக்கங்க நாடு, கொங்கு நாட்டைச் சேர்ந்த கொள்ளேகால் வட்டத்தின் வடக்கெல்லையான காவிரிக்கும் எருமை நாட்டுக்கும் இடைப் பட்டு, காவிரியின் வடபகுதியில் மேற்கே பரவியிருந்தது. கங்க நாட்டின் தலைநகர் - தளவனபுரம் என்னும் தலைக்காடு ஆகும். அது, கொள்ளேகால் என்னும் ஊர்க்கு வடமேற்கில், காவிரியின் வட கரையில் இருந்தது. சங்க காலத்தே கங்கர் என்னும் அரச மரபினர் அக் கங்க நாட்டை ஆண்டு வந்தனர். கங்கர் ஆண்டதால் அந்நாடு, கங்கநாடு எனப் பெயர் பெற்றது. அக்கங்கர்கள் சங்ககாலத்தே தனியரசர்களாக இருந்து வந்தனர் என்பது. “ நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி” (அகம்-44) என்னும் அகப்பாட்டால் பெறப்படும். ‘துன்னரும் கடுந்திறல்’ - பகைவர்கள் அணுகுதற்கரிய மிக்கதிறலினையுடைய -என்பதால், அக்கங்கமன்னர்கள் மிக்க வீரமும் ஆற்றலும் உடையராய் இருந்தனர் என்பது விளங்கும். மேலும், “கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர் பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்து” (சிலப் -25:156-8) என, சேரன் செங்குட்டுவனை எதிர்த்த - சேரநாட்டின் வடக்கில் இருந்த-மன்னர்களில் இக் கங்கரும் ஒருவராக, இளங்கோ வடிகள் கூறுதலையும் அறிக. அகநானூற்றுப் பாடலிலும், சிலப்பதிகாரத்திலும் கங்கருடன் ஒருங் கெண்ணப் பெற்ற கட்டி மரபினர், அன்று கொங்கு நாட்டுச் சத்தியமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு, வானி யாற்றின் வடக்கும், காவிரியாற்றின் மேற்கும் உள்ள கோவைக் கோட்டப் பகுதியை ஆண்டு வந்தனர். இக்கட்டி யரையே, அசோகன் கவ்வெட்டு, ‘சத்திய புத்திரர்’ என்று குறிக்கிறது என்பதை முன்பு கண்டோம். கி.பி 143 இல் பட்டம் பெற்ற வீரராயன் என்னும் கங்கமன்னன், சத்தியமங்கலத்திற்கு மேற்கில் இருந்த கட்டி நாட்டின் மலைக்கோட்டையைக் கைப்பற்றி அப்பகுதியைத் தன்னாட்டுடன் சேர்த்து ஆண்டு வந்தான். நாளடைவில் அவன் பின்வந்தோர், கட்டியரை வென்று சத்திய மங்கலப் பகுதியை யும் பிடித்துக் கொண்டனர். அதன்பின் கட்டிமரபினர் கிழக்கே சென்று, சேலமாவட்ட, ஓமலூர் வட்டத்துத் தாரமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு, அப்பகுதியை ஆண்டு வந்தனர். நிற்க, ‘கொங்குதேச ராசாக்கள்’ என்னும் நூல் - ரெட்டிகுல மன்னர் எழுவரும், கங்க மன்னர் இருபத்தொருவரும், சோழர் அறுவரும், ஒய்சளர் எழுவரும், வெற்றிநகர் வேந்தர் பன்னிரு வரும் ஆகிய 53 பேர் முறையே கொங்கு நாட்டையும் கங்க நாட்டையும் ஆண்டனர் என்கின்றது. மேலும் அந்நூல், ரெட்டி குலத்தார் எழுவரும், முதலிரு கங்க மன்னரும் காந்தபுரத்தில் இருந்தும், மற்ற கங்க மன்னர்கள் தலைக் காட்டிலிருந்தும், ஒய்சளர் துவாரசமுத்திரத்திலும் தலைக் காட்டிலும் இருந்தும் ஆண்டு வந்தனர் என்கின்றது. கங்க மன்னர்கள், கொங்கு நாட்டின் - நொய்யலாற்றுக்கு வடபாற்பட்ட கோவைக் கோட்டத்தின் வடபகுதியையும், தருமபுரி மாவட்டத்து ஓசூர் கிருஷ்ணகிரி வட்டங்களின் வடபகுதியையும் (பாராமகால்)மட்டுமே ஆண்டு வந்தனர். சோழமன்னர்கள் ஆணையாளர் மூலம் ஆண்டுவந்தனர். அவ்வாணையாளர், தலைக்காட்டின் தெற்கில், காவிரியின் தென்கரையில், கொள்ளேகால் வட்டத்தில் இருந்த முடி கொண்ட சோழபுரத்தில் இருந்தாண்டு வந்தனர். வெற்றிநகர் வேந்தர் முதலில் குறுநில மன்னர் மூலமும், பின்னர் ஆணை யாளர் மூலமும் ஆண்டு வந்தனர். அவ்வாணையாளர், மைசூர் நாட்டுச் சீரங்க பட்டணத்திலிருந்தாண்டு வந்தனர். சோழரும் வெற்றிநகர் வேந்தரும் கொங்குநாடு முழுவதையும் ஆண்டனர். ஒய்சளர், வெற்றிநகர் வேந்தர்களின் வரலாறுகள் ‘அயலாட்சிக் காலம்’ எனும் பகுதியில் கூறப்பட்டுள்ளன. ஒய்சளர் வடகொங்கை ஆண்டபோது, கொங்குச் சோழர்கள் - தாராபுரத்திலிருந்து, நொய்யலாற்றுக்குத் தென்பாற்பட்ட தென்கொங்கை ஆண்டு வந்தனர். கொங்குச் சோழர்க்குப் பின் கொங்குப் பாண்டியரும் அத்தென் கொங்கையே ஆண்டு வந்தனர். இவர்களுள் ஒரு சிலர் வடகொங்கினைப் பிடித்துக் கொண்டனர். ‘கொங்குதேச ராசாக்கள்’ கூறும் ரெட்டி குலத்தினரை, தெலுங்கு ரெட்டி குலத்தினர் என்று சிலர் கருதுகின்றனர். இக்குல முதலரசனான வீரராயன் என்பான், கி.பி. 143இல் பட்டம் பெற்றவனாதலால், அக்காலத்தே தெலுங்குமொழி தோன்றவே இல்லை. இது, பிற்காலத்தவரான அந்நூலாசிரியர் கொண்ட பெயராகும். ரெட்டி என்னும் சொல், முதலி என்னும் தமிழ்ச் சொல்லின் வட மொழியாக்கமாகும். முதலி-சிரேஷ்டி முதலி-தமிழ்.சிரேஷ்டி-அதன் வடமொழி ஆக்கம். சிரேஷ்டம்-முதன்மை எனப் பொருள் படுதலை அறிக. சிரேஷ்டி என்பதே, சிரேஷ்டி - சிரேட்டி - ரெட்டி எனத் திரிந்தது. அரைக்கீரை-ரக்கீரை-ரக்கிரை - ரக்கிரி எனத் திரிந்து வழங்குதலை அறிக. முதலி-முதன்மையுடையவன். இது வேளாளர் பெயர்களிலொன்று. சிரேஷ்டி திரிந்தாகிய ரெட்டிகுலம்-வேளாண்குலமேயாகும். முதலி-தமிழ் நாட்டு வேளாளர். வேளாண்குலச் செல்வரே- குறுநில மன்னராhகிய வேளிர் ஆவர். குறுநில மன்னர் திறமையால் தனியரசர் ஆதலும் உண்டென்பதை அறிக. எனவே, ‘கொங்குதேச ராசாக்கள்’ கூறும் முதல் எழுவரும் -கங்கை குலத்தார் - கங்கரே யாவர் என்க. இஃதறியார், அவ்வெழுவரையும் - இராட்டிர கூடர் எனவும், மராட்டியர் எனவும் கூறிப் போந்தனர். எனவே, கொங்குதேசராசாக்கள் என்னும் நூல் கூறும், கொங்கு நாட்டை ஆண்ட முதல் 28 பேரும் கங்கரேயாவர் என்பது தேற்றமாம். 1. கங்க மன்னர் கொங்குதேசராசாக்கள், கங்கரை- ‘காண்வாயன கோத் திரத்திலே கெங்கர் குலத்திலே உண்டாயிருக்கிற ஸ்ரீமத் கொங்கணி வர்ம மகாதிராயன்’ என்கின்றது. காண்வாயினி-கங்கை, கங்கை குலத்தினர்-வேளாண் குடியினர், ஏரி குளம் ஆறு கிணறு முதலிய நீர் நிலைகட்கு - கங்கை என்பது பெயர். அந்நீரின் பயன்கொண்டு உழவுத் தொழில் செய்து வாழ்வதால், உலகை வாழ்விப்பதால், வேளாண்குலத்தினர்-கங்கை குலத்தினர் -கங்கர் எனப்பட்டனர். மழைநீரின் பயன் கொள்வதால், வேளாளர்க்கு - காராளர் என்ற பெயரும் ஏற்பட்டது. அப்பெயரும் இப்பொரு ளுடையதே. கார்-மழை. ‘கங்கை குலக் காராளர் கருவியெழுபது முரைக்க’ என்பது, ஏரெழுபது. வேளாண்குல முதல்வன் கங்கை யாற்றில் பிறந்ததால், வேளாளர் கங்கை குலத்தார் எனப்பட்டனர் என்பது, புராணமரபு. இனி, கங்க மன்னர் ஒன்பதின்மர் இருந்தாண்ட காந்த புரம் என்பது- தாராபுரம் எனவும், கரூர் எனவும் சிலர் கருது கின்றனர். கங்க மன்னர்கள் முதலில் கங்கவாடியை மட்டும் ஆண்டு வந்தனர். பின்னர், வீரராயன் காலத்தில் வடகொங்கில் இருந்த ஒரு மலைக்கோட்டையைக் கைப்பற்றி அப்பகுதியையும் ஆண்டு வந்தனர். அதன் பின்னர்ப் படிப்படியாய் வட கொங்கைப் பிடித்தனர். பத்தாவது மன்னன் மறுபடியும் தலைக் கோட்டையையே தலைநகராகக் கொண்டான். இதற்குமுன் இருந்தாண்ட தாராபுரம், அல்லது கரூரை விட்டு, அவ்வளவு தொலை சென்று தலைநகரைக் கொண்டதற்கு யாதொரு காரணமும் இல்லை. கங்கர்கள், நொய்யலாற்றுக்கு வடக்கேயுள்ள வட கொங்கின் வட பகுதியைத்தான் ஆண்டு வந்தனரேயன்றி, தாராபுரம் கரூர்ப் பகுதியை என்றும் ஆளவில்லை. மேலும், தாராபுரம் பாண்டி நாட்டிற் கணித்ததாகவும், கரூர் சோழ நாட்டிற் கணித்ததாகவும் உள்ளன. கங்கர்கள் காந்தபுரத்தி லிருந் தாண்ட அக்காலத்தே, பழனிப் பகுதியை ஆவியர் மரபினரும், தாராபுர வட்டத்தின் மேற்கெல்லையில் உள்ள கொழுமம் பகுதி யைக் (முதிரநாடு) குமணன் மரபினரும் ஆண்டு வந்தனர். எனவே, தங்களாட்சிக் குட்படாத பகுதி யிலுள்ள தாராபுரம், அல்லது கரூரைத் தலைநகராகக் கொண்டனர் என்பது எவ்வாற்றானும் பொருந்தாது. 20, பிருதிவி கொங்கணிவர்மன் என்னும் முதலாம் சிவமாறன் என்ற கங்க மன்னன், தன் படைத்தலைவன் ஸ்ரீபுருஷன் என் பானுக்குக் காந்தபுரப் பகுதியில் 12 கிராமங் களைக் கொடுத்துக் காந்தபுரத்திலிருந்து ஆளும்படி செய்தான் என்கின்றது, கொங்குதேச ராசாக்கள் என்னும் நூல், அதுபற்றிய கல்வெட்டு, ‘பிருதிவி கொங்கணிமகாதிராயன், தன் சேனாதிபதி ஸ்ரீபுருஷ ராயனுக்கு, விசய காந்தபுரத்திலே சேர்ந்த கணவாய் மேலேயிருக் கிற பன்னிரண்டு கிரமத்துடனே கூட, விசயகாந்த புரம் தருமம் பண்ணிக் கொடுத்தான்’ என்கின்றது. அப்பன்னிரு கிராமங்களும் கணவாய் மலைமேல் இருந்த தாகக் கூறப்படுவதால், அவை மலைநாட்டில் உள்ள கிராமங்க ளேயாகும். அக்காலத்தே இங்கு வந்து போன மேனாட்டு யாத் திரையரும், காந்தபுரம்-ஆற்றங்கரையில் நன்செய் நிலத்தின் நடுவில் இருந்ததாகக் குறித்துள்ளனர். நீலகிரியைத் தொடர்ந் துள்ள குண்டா மலைத் தொடரில் தோன்றி, வடக்கு நோக்கிச் செல்லும் மாயாறு, வானியாற்றோடு கலக்கும் இடத்திற்குப் பக்கத்தில் தணாயக்கன் கோட்டை இருந்தது. அது, வானி யாற்றங் கரையில் நன்செய் நிலங்களாற் சூழப்பட்டதாகும். அக்கோட்டை, கோபி வட்டத்திற்கும் கொள்ளேகால் வட்டத் திற்கும் இடையில் போக்குவரத்து வழியாக அமைந்த மலைப் பாங்கான கச்சல கட்டிக் கணவாயை அடுத்திருந்தது. அப்பகுதி முன்னர்த் தணாயக்கன் கோட்டைக் கூற்றம் என வழங்கியது. அச்கூற்றத்தைச் சார்ந்த நாடுகள் ஏழு. அக்கோட்டையை அடுத்திருந்த வாணியாற்றின் பழைய அணை உடைந்துபோன பிறகு நன்செய் நிலங்கள் காடாகப் போயின. அக்கோட்டை, கீழ்பவானி அணையினுள் மூழ்கு முன் அங்கு பல தென்னை மரங்கள் இருந்தனவாம் (கொ.ம. சதகம்-பக்-115). இப்பொழுது கோபி செட்டி பாளையத்திலுள்ள வட்ட அலுவலகம், முன்பு சத்தியமங்கலத்திலும், அதற்கு முன்னர்த் தணாயக்கன் கோட்டை யிலும் இருந்து வந்ததாம். இக்கோட்டை ஒடுவங்க நாட்டில் துறவலூர் என்னும் இடத்தில் இருந்தது. இக்கோட்டை யிலுள்ள மாதவப் பெருமாள் கோயில் முதலியவற்றிலிருந்து 11 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டுள்ளன. ஒய்சள மன்னன் பிட்டிதேவன் (1104-1141) படைத் தலைவனான மாதவத்தணாயக்கன் என்பான், அப்பழைய காந்தபுரக்கோட்டையைப் புதுக்கி வலுவுடையதாகக்கட்டி, அப்பகுதியின் ஆணையாளனாக அக்கோட்டையிலிருந் தாண்டு வந்தான். அம்மாதவத் தணாயக்கன் வழி வந்தோர் நான்கு தலை முறைக்கு மேல் தொடர்ந்து அங்கிருந்தாண்டு வந்ததால் அது, தணாயக்கன் கோட்டை என வழங்கலானது (தணாயக்கன் - தண்ட நாயக்கன் -படைத் தலைவன்) அந்தக் கோட்டை தான் வீரராயன் பிடித்த கோட்டை-காந்தபுரம் ஆகும். இப் பகுதியில் ஆட்சி நிலை பெற்ற பின்னர், ஒருவனை ஆணை யாளனாக அக்காந்தபுரக் கோட்டையிலிருந்து கொங்கு நாட்டுப் பகுதியைக் கண்காணித்து வரும்படி செய்து, பின்வந்தோர் கங்கவாடியின் பழைய தலைநகரான தலைக்காட்டிலிருந் தாண்டு வந்தன ரென்க. ‘அவன் மகன் அரிவர்ம மகாதிராயன் விசயகாந்த புரத்திலே கொங்க தேசம் பட்டாபிஷேகம் பண்ணிக் கொண்டு, கருநாடக தேசத்துக்குப் பெரிய பட்டணமாயிருக்கிற தளவன புரத்திலேயும் (தலைக்காட்டில்) இருந்து கொண்டு’ (கொங்கு தேச ராசாக்கள்-4) என்பதால், தலைக்காடு முன்னமே கங்க வாடியின் தலைநகராக இருந்து வந்ததென்பதும், இவ்வரிவர்மன் புதிதாகக் கொண்ட காந்தபுரத்தை விட்டுப் பழைய தலை நகர்க்கே சென்று விட்டனன் என்பதும் பெறப்படும். ‘தளவன புரத்திலேயும் இருந்து கொண்டு’ என்பதால், காந்தபுரத்திலும் இருந்து வந்தனன் என்பது பெறப் படுதலான், இவனுக்கு முன்னிருந்தோரும் தலைக்காட்டிலும் இருந்து வந்தனர் என்பதும் பெறப்படும். அதாவது, வீரராயன் முதல் ஒன்பதின்மரும் காந்த புரத்திலிருந்து, தலைகாட்டைத் துணை நகராகக் கொண் டாண்டு வந்தனர் அரிவர்மன் முதல் தலைக்காட்டிலிருந்து, காந்தபுரத்தைத் துணைநகரமாகக் கொண்டாண்டு வந்தனர் என்பதாம். இக்கங்க மன்னர் வரலாறு, வரலாற்று நூல்கள் பலவற்றினும் ஒருவாறு கூறப்பட்டுள்ள தெனினும், கங்கர் வரலாறு கூறும் தனிநூல்கள் - கொங்குதேசராசாக்கள் என்னும் தமிழ் நூலும், எம்.வி. கிருஷ்ணராவ் எழுதிய தலைக்காட்டுக் கங்கர் என்னும் ஆங்கில நூலுமே யாகும். ஆங்கில நூல், தமிழ் நூலின் வழி நூலாகும். இவ்விரு நூல்களும் ஏனோ ஒரு சிலர் ஆட்சி யாண்டைக் குறிப்பிடவில்லை. இவ்விரு நூல்களிலும் உறவு முறை முதலியவற்றில் சிற்சில மாறுபாடுகள் உள்ளன. கொங்கு தேசராசாக்கள் என்னும் நூலில் கோலார்க் கங்கர் வரலாறு கூறப்படவில்லை. ஆங்கில நூலில் வீரராயன் முதலிய முதலெழுவர் வரலாறு கூறப்படாததோடு, கோலார்க் கங்கர் வரலாறு தனியாகக் கூறப்படவில்லை. கொங்குதேச ராசாக்கள்: கங்க மன்னர்களின் செப்பேடுகள், கல்வெட்டுக்கள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு, வரலாற்று முறைப்படி சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. இந்நூல், ஆனால், புராண மரபு வரலாற்றை அடக்கியாள் கின்றது. இந்நூல் குறிப்பிடும் அரசர்களின் காலங்கள், இவர்களோடு வரலாற்றுத் தொடர்புடைய மற்ற அரசர்களின் காலங்களோடு ஒத்து வராததோடு, முன்னுள்ள அரசர்களின் காலங்கள் மிகக் குறைந்தும், பின்னுள்ள சில அரசர் காலங்கள் மிகுந்தும் உள்ளன. இதன் காரணம் விளங்கவில்லை. இந் நூலாசிரியர், கி.பி. 17ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவ ரென்பது- இவரது தமிழ் நடையி லிருந்து தெரிகிறது. சங்க காலத்து -எருமையூரன், மையூர் கிழான், நன்னன், ஆய்எயினன், பிட்டங்கொற்றன் முதலியோர் இருந்த இடத்தும் காலத்தும் இருந்த கங்க மன்னர்களின் பெயர்கள் தூய வடமொழிப் பெயர்களாக உள்ளமை வியப்பாக இருக்கிறது. அரசர் பெயர் களை இந்நூலாசிரியர் எவ்வாறு திரித் துள்ளார் என்பதற்கு, கொங்கு நாட்டை ஆண்ட சோழ மன்னர்கள் பெயர்கள் எடுத்துக்காட்டாகும். இவ்வாறே, தங்காலத்து வழங்கிய இடப் பெயர்களைக் கையாண்டு, அவற்றின் பழைய பெயர்களை அறிய முடியாது செய்து விட்டனர். எனினும், கங்க மன்னர்களின் வரலாற்றுச் செய்தியை அறியப் பயன் பாடுடைய தாக உள்ளது இந்நூல். 1. தலைக்காட்டுக் கங்கர் 1. வீரராயன் கி.பி. 143-168 2. கோவிந்தராயன் கி.பி. 168-193 3. கிருஷ்ணராயன் கி.பி. 193-218 4. கலவல்லவராயன் கி.பி.218-243 5. இரண்டாங் கோவிந்தராயன் கி.பி.243-291 6. சதுர்ப்புய கன்னர தேவன் கி.பி.291-339 7. திருவிக்கிரமதேவன் கி.பி.339-350 8. முதலாங் கொங்கணிவர்மன் கி.பி.350-400 9. முதலாம் மாதவன் கி.பி.400-436 10. ஆரியவர்மன் கி.பி.436-460 11. விஷ்ணுகோபன் கி.பி.460-473 12. இரண்டாம் மாதவன் கி.பி.473-505 13. கிருஷ்ணவர்மன் கி.பி.505-550 14. இரண்டாங் கொங்கணிவர்மன் கி.பி.550-605 15. துர்வினீதன் கி.பி.605-655 16. முஷ்கரன் கி.பி.655-660 17. திருவிக்கிரமன் கி.பி.660-665 18. பூவிக்கிரமன் கி.பி.665-674 19. மூன்றாங் கொங்கணிவர்மன் கி.பி.674-679 20 முதலாஞ் சிவமாறன் கி.பி.679-726 21. விசயாதித்தன் கி.பி.726-765 22. முதலாம் இராசமல்லன் கி.பி.765-807 23. முதலாம் நீதிமார்க்கன் கி.பி.807-837 24. முதலாம் பூதுகன் கி.பி.837-870 25. இரண்டாம் இராசமல்லன் கி.பி.870-907 26. இரண்டாம் நீதிமார்க்கன் கி.பி.907-920 27. மூன்றாம் இராசமல்லன் கி.பி.920-938 28. இரண்டாம் பூதுகன் கி.பி.938-960 29. இரண்டாம் மாறசிம்மன் கி.பி.960-974 30. நான்காம் இராசமல்லன் கி.பி.975-985 31. இரக்கச கங்கன் கி.பி.985-1024 2. கோலார்க் கங்கர் 1. ஸ்ரீபுருஷன் கி.பி. 725-778 2. இரண்டாஞ் சிவமாறன் கி.பி. 778-817 3. முதலாம் பிருதிவிபதி கி.பி. 817-880 4. முதலாம் மாறசிம்மன் கி.பி.880-914 5. இரண்டாம் பிருதிவிபதி கி.பி.914-940 இக்கங்கர் பட்டியல் - கொங்குதேசராசாக்கள், எம்.வி. கிருஷ்ணராவ் - தலைகாட்டுக் கங்கர் (ஆங்கிலம்), கலைக் களஞ்சியம், கோவைக்கிழார் - கொங்கு நாட்டு வரலாறு, டாக்டர், இராசமாணிக்கனார்-பிற்காலச் சோழர் வரலாறு, பாண்டியர் வரலாறு, கா. அப்பாத்துரையார் - தென்னாட்டுப் போர்க்களங்கள் முதலியவற்றின் துணைகொண்டு அமைக்கப்பட்டது. இப்பட்டியலில் உள்ள 8வது முதலாம் கொங்கணி வர்மன், கி.பி. 189இல் பட்டம் பெற்றதாகக் கூறுகிறது. ‘கொங்கு தேச ராசாக்கள்’ என்னும் நூல். அதைத் தொடர்ந்து செல்கிறது பின் வரும் அரசர்களின் ஆட்சியாண்டு. அதன்படி, மற்ற அரசர்கள் காலத்திருந்த கங்க மன்னர்கள் காலம் மாறுபடுகிறது. வரலாற்றுப் பட்டியற்படி-’தலைக்காட்டுக் கங்கர்’ என்ற நூலில் உள்ளபடி - இக் கொங்கணிவர்மன் ஆட்சித் தொடக்கம், கி.பி. 350 ஆகும். எனவே, இரண்டற்கும் (350-189 = 161) ஆண்டுகள் மாறுபடுகின்றன. ஆகையால், வரலாற்றுப் பட்டியற்படி, முன்னுள்ள எழுவர்க்கும் முறையே 161 கூட்டப்பட்டுள்ளது. கொங்கு தேச ராசாக்கள் என்னும் நூலில் 7வது, 5 வது மன்னரின் ஆட்சித் தொடக்கம் முறையே 178, 82 எனக் குறிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5வது மன்னன் ஆட்சித் தொடக்கம் 82+161=243-291 6வது மன்னன் ஆட்சித் தொடக்கம் 291-339 7வது மன்னன் ஆட்சித் தொடக்கம் 178+161=339-350 7இன் தொடக்கம் -339, 5இன் தொடக்கம்-243) எனவே, (339-243=)96 இடையீடு. இதன் செம்பாகமான (96 ÷ 2=)48 முறையே 5,6 உடன் சேர்க்கின், 5வது-243+48=291 6வது-291+48=339 ஆகும். முன்னுள்ள நால்வர்க்கும் வரலாற்று மரபுப்படி, முறையே 25 ஆண்டு கொள்ளப்பட்டது. 243இல் இருந்து, முறையே நான்கு முறை 25 கழித்துக் கொள்க. குறிப்பு: 1. ‘கொங்குதேச ராசாக்கள்’ என்னும் நூலில், 19, மூன்றாங் கொங்கணி வர்மனுக்குப் பின்-இராசகோவிந்தன், சிவகாமராயன் என்னும் இருவர் வரலாறு கூறப்படுகிறது. இவ்விருவரும் கொங்கணிவர்மன் மக்களாவர். அவ்விருவரும் முகுந்த பட்டணத்திலிருந்து அப்பகுதியை ஆண்டு வந்ததாக அந்நூலே கூறுகிறது. முகுந்தப்பட்டணம் - சீரங்கப்பட்டணம். முகுந்தன் என்பது, திருமாலின் பெயர்களி லொன்றாதனால், இந்நூலாசிரியர் இவ்வாறு ஆக்கிக் கொண்டனர். 2. முதலாம் இராசமல்லன் மகன் என்று, ‘தலைக்காட்டுக் கங்கர்’ என்னும் நூல் கூறும், முதலாம் நீதிமார்க்கன் வரலாற்றை இந்நூல் ஏனோ கூறவில்லை. முதலாம் இராச மல்லனுக்குப் பின்- கெந்ததேவமகராயன், சத்திய வாக்கியராயன், குணதுத்தம ராயன் என்போர் வரலாறு கூறப்படுகிறது இந்நூலில். அரசர் கட்குப் பல பெயர் உண்டாகையால், கெந்ததேவ மகராயன் என்பது, முதலாம் பூதுகன் மறுபெயராகும். இந்நூலாசிரியர் அவ்வாறு மறு பெயரால் கூறுதல், முதற் பராந்தகச் சோழனை, அவன் மறு பெயரால் வீரசோழன் என்று கூறுவதால் பெறப் படும். முதலாம் பூதுகன்-முதலாம் நீதி மார்க்கன் மகனாவன். இரண்டாம் இராசமல்லன் இரண்டாம் நீதிமார்க்கன் என்போர்- முதலாம் பூதுகனின் மக்களாவர். அந்நூலும் மற்ற மூவரையும் கெந்த தேவராயன் மைந்தர்க ளென்றே கூறுகிறது. சத்திய வாக்கிய ராயன் என்பது இரண்டாம் நீதிமாக்கனின் மறுபெய ராகும். குணதுத்தமராயன், காந்தபுரத்தி லிருந்தாண்டு வந்ததாக அந்நூலே கூறுகிறது. 3. ‘கொங்குதேச ராசாக்கள்’ என்னும் அந்நூல்-20, முதலாஞ் சிவமாறன், தன் படைத் தலைவனான ஸ்ரீபுருஷன் என்பானை, கங்கரின் தலைநகரி லொன்றான காந்தபுரத்திலிருந்து அப் பகுதியை ஆளும்படி செய்தான் என்கின்றது. ‘தலைக்காட்டுக் கங்கர்’ என்னும் ஆங்கில நூல் - கரி கொண்டா ஐந்நூறு, ஏலநகர் நாடு எழுபது, அவனிய நாடு முந்நூறு, பொன்குண்டம் பன்னிரண்டு - ஆகிய பகுதிக்கு ஸ்ரீபுருஷன் ஆணையாளனாக இருந்து வந்தான், என்கின்றது. இவை, கோலார்ப்பகுதியி லுள்ளவை. எனவே, ஸ்ரீபுருஷன் தன் மக்களி லொருவனைக் காந்த புரத்திலிருந் தாளும்படி செய்து, தான் கோலார்ப் பகுதியை ஆண்டு வந்து, நாளடைவில் தன்னுரிமை எய்திக் கோலார்க் கங்க மரபைத் தோற்றுவித்தனன் என்பது பெறப்படும். முதலாஞ் சிவமாறனுக்கு - ஸ்ரீபுருஷன் தம்பி யாகவோ. அல்லது ஒன்று விட்ட தம்பியாகவோ இருக்கலாம். மூன்றாங் கொங்கணி வர்மனுக்கு, அவன் அண்ணன் வல்லபாக்கியராயன் படைத் தலைவனாக இருந்தமை இதற்குச் சான்றாகும். தலைக்காட்டுக் கங்கர்-10, 12, 15, 18,20, 23,24, 28,29,30 எண்ணுள்ளோர் வரலாறும்; கோலார்க்கங்கர் 1,2,3,5 எண்ணுள் ளோர் வரலாறும், ‘தமிழ் நாட்டு வரலாறு’ என்னும் பகுதியில் ஒருவாறு கூறப்பட்டுள்ளன. 1. தலைக்காட்டுக் கங்கர் 2. வீரராயன் (143-168): இவனே கொங்குநாட்டின் ஒருபகுதியைக் கைப்பற்றி ஆண்ட கங்கமரபின் முதலரசன் ஆவன். தன் பெயரால் இவன் சிறு பொன் நாணயம் வெளியிட்டான். அது ஒருகாசளவு இருக்கும். கொங்கு நாட்டில் முன்பு அக்காசு பல இடங்களில் புதைபொருளாகக் கிடைத்தது. குத்து வைத்து அதை மாலையாகக் கோத்து மகளிர் அணிந்து வந்தனர். அது, வீரராயன் பணம் என்று வழங்கியது. ‘கெண்டி வீரராயன் கேசரி சக்கரம்’ என, கொங்கு வேளாளர் மங்கல வாழ்த்துப் பாடல் அதைக் குறிப்பிடுவதால், நீண்டகாலம் அப்பணம் கொங்கு நாட்டில் புழக்கத்தில் இருந்து வந்த தென்பது தெரிகிறது. இவன் முதல் ஒன்பது கங்க மன்னர்கள் காந்தபுரத்தில் இருந்தாண்டு வந்தனர். 2. கோவிந்தராயன் (168-193): இவன், வீரராயன் மகன் ; தன் தந்தையை விடப் புகழுடன் ஆண்டு வந்தான். 3. கிருஷ்ணராயன் (193-218): இவன், கோவிந்தராயன் மகன்; முறையோடு ஆண்டுவந்தான். 4. கலவல்லவராயன் (218-243): இவன், கிருஷ்ணராயன் மகன், கலம்-படைக்கலம், கலவல்லவன் - வேல் வாள் முதலிய படைக்கலப் பயிற்சியில் வல்லவன். இவன் பெயரால், இவன் சிறந்த போர்வீரன் என்பது தெரிகிறது. 5. இரண்டாங் கோவிந்தராயன் (243-291): இவன், கலவல்லவராயன் மகன். இவன் பக்கத்து நாட்டரசர்களை வென்று, அவர்களிடம் திறை பெற்று வந்தான். சத்திய மங்கலத்துக் கட்டி மன்னனையும் இவன் வென்றிருக்கலாம். இவன் சமணன்; பெருங்கொடையாளன், இவன் காலத்தே-அரிட்டணன், அவர் குரு-பிரபனாச்சாரி, பஞ்சநந்தி, சொக்கப்பன், செயதேவன் முதலான சமணத்தலைவர்கள் காந்தபுரத்தில் இருந்து வந்தனர். அரிட்டணனுக்கு, இவன் ஏழுகண்டக (சலகை) விதைப்பு நிலத்தை இறையிலியாகக் கொடுத்தான். சேரன் செங்குட்டு வனை எதிர்த்ததாகச் சிலப்பதிகாரம் (25:156-8) கூறும் கங்கமன்னன் இவன், அல்லது இவன் தந்தையாக இருக்கலாம். 6. சதுர்ப்புய கன்னரதேவன் (291-339): இவன், முன்னவனுக்கு இன்ன முறையினன் என்பது தெரியவில்லை. சதுர்ப்புயம் - நான்கு கைகள் இருந்தன என்பது, ஆறுமுகம் பன்னிருகை, ஆயிரந்தலை இரண்டாயிரங்கை என்பன போன்ற புராண மரபாகும். இத்தகைய புராணமரபு இந்நூலில் நிரம்ப உண்டு என்பதை நினைவு கூர்க. போரில் வல்லவன் என்பது பொருள். இவன் வீணை, பரதம் முதலிய கலைகளில் வல்லவனாம். கோ தண்டம் முதலிய நாகாதி மந்திரம் தெரிந்தவனாம்; இவன் காலத்தே மூன்று சமணப் பெரியார்கள் காந்தபுரத்தில் இருந்தனர். அவர்களுள் நாகநந்தி என்பவர் சமண நூல்களில் வல்லவர். இவன் அரசகுரு ஆவார். வீரராயனையும் இவனையும் அடுத்த வனையும்-கொங்குதேச ராசாக்கள் என்னும் நூல், சக்கரவர்த்தி என்கின்றது. 7. திருவிக்கிரம தேவன் (339-350): இவன், கன்னரதேவன் மகன்.. இவன் போருக்குப் புறப்படுமுன் நில முதலியவற்றைத் தானம் செய்துவிட்டுச் செல்வான். இவன் சுற்றிலுமுள்ள சிலநாடு களை வென்று பிடித்தான். மேற்கே குடகுவரை இவன் கைப் பட்டது. சங்கரதேவர் என்பவரால் இவன் சைவனாக்கப் பட்டான்; காந்தபுரத்தில் அவருக்குக் கோயில் கட்டினான். மூன்று சங்கரர் காலமும் இவன் காலத்தோ டொவ்வாமையால், இச்சங்கர தேவர் வேறொரு வராவர். நரசிங்கப்பட்டர் என்ற குருவுக்கு, கொங்குநாட்டிலுள்ள பஞ்ச சதகோடி என்ற ஊரகத்தை இவன் இறையிலியாகக் கொடுத்தான். 8. முதலாங் கொங்கணிவர்மன் (350-400): ‘கொங்கு தேச ராசாக்கள்’ என்னும் நூலாசிரியர் இவனைப் புதிய மரபின னாகக் கொண்டமையால், உறவுமுறை குறிக்கப் படவில்லை. இவன் போருக்குப் புறப்படும் போது, வாளால் ஒரு கல்லை வெட்டித் துண்டாக்கி விட்டு, ‘இக்கல் துண்டானது போல் பகைவர் உடலைத் துண்டஞ் செய்வேன்’ எனச் சூளுரைத்துச் சென்று, அவ்வாறே வெற்றி பெற்று மீள்வானாம். இதனால், இவன் ஒரு பெருவீரன் என்பது தெரிகிறது. இவன் காலத்தே கட்டிநாடு முழுவதும் கங்கராட்சிக் குட்பட்டிருக்கலாம். பாலாற்றை மேற்கெல்லையாகக் கொண்டு கோலார் வரை பரவியிருந்த வாணநாட்டை இவன் வென்றடிப் படுத்தான். ‘கொங்கணி’ என்பது, கொங்கணத்தை வென்றதால் பெற்ற பெயராகும். ‘கொங்கண வேண்மான்’ என்பதே இந்நூலாசிரியரால், ‘கொங்கணி வர்மன்’ என மாற்றப்பட்டது. தன் ஆசிரியர் சிம்ம நந்தி கட்டளைப்படி, காந்தபுரத்தில் இவன் சமணக் கோயில் கட்டினான்; மிக்க நீதிநூற்றேர்ச்சியுள்ளவன். இவனுக்கு-திண்டிகன் என்ற தம்பி ஒருவன் உண்டு. 9. முதலாம் மாதவன் (400-436): இவன், கொங்கணி வர்மன் மகன். இவனுக்கு-தடங்கல மாதவன் என்றும் பெயர். இவன் தந்தையை விடக் குடிகளுக்கு நன்மைகள் பல செய்தான். இவன் கல்வி கேள்விகளிற் சிறந்தவன்; பல புலவர்களைத் தன் அவையில் வைத்துப் போற்றி வந்தான்; புலவர்க்கு வாரி வழங்கினான்; தட்டகசூத்திரம் என்ற நூலாசிரியனாவன். 10. அரிவர்மன் (436-460): இவன், மாதவன் மகன். இவன், தலைநகரைத் தலைக்காட்டுக்கு மாற்றிக் கொண்டு, காந்தபுரத்தில் ஓர் ஆணையாளனை வைத்து அப்பகுதியை ஆண்டு வரும்படி செய்தான். இவன் மிக்க ஆற்றலுடையவன் சுற்றுப்புற நாடுகளை வென்று திறைதரும்படி செய்தான். இவன் சைவன்; ஒரு புத்த பிக்குவை வாதில் வென்ற ஒரு பிராமணனுக்கு - வாதிவசிம்மன் என்ற பட்டத்தையும், ஓரிக்கோடு என்ற ஊரையும் வழங்கினான். தகடூர் என்ற ஊரை, தலைக்காட்டுப் பேட்டையிலுள்ள போர் வீரர்க்கு மூன்று பங்கும், அவ்வூர்க் கோயில் இறைப்பணி செய்வானுக்கு ஒருபங்கு மாகக் கொடுத் தான். இது, தலைக்காட்டுப் பக்கமிருந்த ஊராகும்; தனித் தமிழ்ப் பெயர். இவன் வரலாறு முன்னுங் கூறப்பட்டது. 11. விஷ்ணுகோபன் (460-473): இவன், அரிவர்மன் மகன்; வடதிசையிலுள்ள பல நாடுகளை வென்றான். இவன் வைணவ சமயத்தைத் தழுவி, சில திருமால் கோயில்கள் கட்டினான். நாராயண சரண அநுத்தியாதன் என்பது, இவனது பட்டப் பெயர். 12. இரண்டாம் மாதவன் (473-505): இவன், விஷ்ணு கோபன் தம்பி. விஷ்ணு கோபனுக்கு- முதலில் பிள்ளை யில்லாத தனால் தன் தம்பியை வளர்த்துக் கொண்டான். பின்னர் விஷ்ணுகோபனுக்கு கிருஷ்ணவர்மன் என்பவன் பிறந்தான். அவன் பருவமடையும் வரையிலும் இம்மாதவன் பட்டம் பெற்று ஆண்டு வந்தான். கிருஷ்ணவர்மன் பட்டத்திற்கு வந்ததும், இம் மாதவன் காந்தபுரத்திலிருந்தாண்டு வந்தான். இவன் சைவன் எனினும், சமண பௌத்த மடங்களுக்கும் மிகுதியாக நிலதானம் செய்தான்; பாலாசிகாக் கடம்பனான சிம்மவர்மன் மகளை மணந்து கொண்டான். முன்னும் இவன் வரலாறு கூறப்பட்டது. 13. கிருஷ்ணவர்மன் (505-550) : இவன், விஷ்ணு கோபன் மகன். இவன் சைவ சமயத்தைத் தழுவினான். இவன் கோயில்கள் பல கட்டி அவற்றிற்கு இறையிலிநிலமும் விட்டான். 14. இரண்டாங் கொங்கணி வர்மன் (550-605): இவன், இரண்டாம் மாதவன் மகன். கிருஷ்ணவர்மனுக்குப் பிள்ளை யில்ல. அதனால், தன் தாயத்தானான பரிதி குலாதித்தராயன் மகன் எரேசந்திர டிண்டீகராயனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினான். அதை அரசியற் பெருமக்கள் விரும்பாததனால், முன் வளர்த்துக் கொண்ட இரண்டாம் மாதவன் மகனான கொங்கணி வர்மனை அரசனாக்கினான். இவனுக்கு அவநிதன் என்றும் பெயர். இவன் கடம்ப இளவரசியின் மகன். இளமையி லேயே பட்டம் பெற்றான்; விசயகீர்த்தி என்பாரிடம் கல்வி கற்றான். முன் இளவரசுப் பட்டங் கட்டப்பெற்ற ஏரேசந்திர டிண்டீக ராயனுக்கும் தன் நாட்டில் ஒரு பகுதியைக் கொடுத்து ஆண்டு வரும்படி செய்தான். 15. துர்விநீதன் (605-655): இவன், கொங்கணி வர்மன் மகன். இவன் வரலாறு முன்னுங் கூறப்பட்டது. இவனுக்கு மாற்றாந் தாய் மகனொருவன் இருந்தான். கொங்கணிவர்மன் இறக்கு முன் அவனுக்குப் பட்டங் கட்டினான். விசய கீர்த்தியின் சொற் படி, சாளுக்கிய இரண்டாம் புலிகேசிக்குத் தன் மகளை மணஞ் செய்து கொடுத்து அவனுதவியால் தன் தம்பியை வென்று, இவன் அரசனானான். அப்போரில் இராட்டிரகூடரும் பல்லவரும் இவன் தம்பிக் குதவினர். புலிகேசி துணையுடன் துர்விநீதன் பல்லவருடன் பொருது, அந்தேரி, ஆலத்தூர் (கோவை), பெண்ணாகரம் (சேலம்) ஆகிய இடங்களில் நடந்த போரில் வெற்றி பெற்றான் (நகர்க்கல்வெட்டு) . புன்னாட்டை ஆண்ட கடம்ப மன்னனான கந்தவர்மனின் ஒரே மகளை மணந்து கொண்டதால், துர்விநீதனுக்குப் புன்னாடுங் கிடைத்தது. இரண்டாம் புலிகேசியின் சிற்றப்பனான மங்களேசன் என்பான் அரசைக கைப்பற்றிக் கொண்டு புலிகேசியை நாட்டை விட்டோடினான். துர்வினீதன் மங்களேசனை வென்று புலிகேசியை அரசனாக்கினான். இவன் சமணன்; தென்மொழியிலும் வடமொழியிலும் மிக்க வல்லவன். பாரவி என்ற வடமொழிப்புலவர் இவன் அவைப்புலவராக இருந்தார். அவர் செய்த கிராதார்ச்சுனீயம் என்ற வடநூலின் 15 சருக்கங்களுக்கு இவன் உரை எழுதினான்; குணாட்டியர் என்னும் புலவர் பைசாச மொழியிற் செய்த பிருகத்சுதா என்ற நூலை வடமொழியில் இவன் மொழி பெயர்த்தான். அப்பிருகத் கதையினையே, கொங்கு நாட்டு விசய மங்கலத்து வேளிரும் சமணப் புலவருமான கொங்கு வேளிர் என்பார், பெருங்கதை எனத் தமிழாக்கினர். இவன் ஆசிரிய ரான பூஜியபாதர் செய்த சப்தாவதாரம் என்ற நூலை, துர்வினீ தன் செய்ததாகவும் சில கல்வெட்டுக்கள் கூறுகின்றன. 16. முஷ்கரண் (655-660): இவன், துர்வினீதன் மகன், இவன் தந்தையைப் போலவே மிக்க திறமையுடையவன். இவனுக்கு-மொக்கரன் என்றும் பெயர். பெல்லாரிக்குப் பக்கத்தில் தன் பெயரால் மொக்கரபசதி என்ற சமண மடம் கட்டினான். (பசதி-சமண மடம்) இவன் சமண சமயத்தில் மிக்க பற்றுடையவன். அதனால் இவன் பிராமணர்களுக்குத் தானங் கொடாததனால் இவனைப் பிரமகத்திராயன் என்று அழைத் தனராம். இவன் சிந்துராசன் மகளை மணந்து கொண்டான். 17. திருவிக்கிரமன் (660-665): இவன், முஷ்கரன் மகன் சிந்துராசன் மகள் மகன். இவன் சிறந்த கல்வியறிவுடையவன்; பல்கலை வல்லுநன். இவன் மனைவி ஒரு சோழ இளவரசி. 18. பூவிக்கிரமன் (665-674): இவன், திருவிக்கிரமன் மகன்; சோழஇளவரசியின் மகன். இவன் ஏராளமான யானை களைச் சேர்த்து வைத்து, கஜபதி என்று பெயர் பெற்றான்; யானைக் கொம்புகளால் படைக் கலங்கள் செய்தான். தலைக் காட்டுக் கோட்டையை வலுவுடையதாகக் கட்டினான். இவன் வரலாறு முன்னுங் கூறப்பட்டது. 19. மூன்றாங் கொங்கணி வர்மன் (674-679): இவன், பூவிக்கிரமன் இளைய மகன். இவன், தன் அண்ணன் வல்ல பாக்கியராயனைப் படைத்தலைவனாகக் கொண்டிருந்தான். எனவே, இவன் அண்ணனை விட மிக்க திறமையுடையவன் என்பதும், அக்கால மக்கள் திறமையுடையவனையே அரசனாக ஏற்றுக் கொண்டனர் என்பதும், அக் காலத்தே அண்ண னிருக்கத் தம்பி அரசனாவதும் மரபென்பதும் இதனால் பெறப்படு கின்றன. இவனுக்கு-இராசகோவிந்தன், சிவகாமராயன் என இரு மைந்தர். அவ்விருவரும் சீரங்க பட்டணத்திலிருந்து அப்பகுதியை ஆண்டு வந்தனர். இருவரும் வீரசைவ சமயத்தைத் தழுவினர். அதனால் முன்னவன் நந்திவர்மன் என்று பெயர் பெற்றான். 20. முதலாஞ் சிவமாறன் (676-726): இவன், பூவிக்கிரமன் மூத்த மகனாகிய வல்லபாக்கியாயன் மகன். இவனுக்கு பிருதிவி கொங்கணிவர்மன் என்றும் பெயர். அரசைக் கைபற்றப் போட்டியிட்ட, தன் தாயத்தினரான பரம குல மகாதிராயன், அஜவர்மன் ஆகிய இருவரையும் வென்று இவன் அரசனானான். கங்க நாட்டின் மேற் படையெடுத்த பல்லவரை இவன் முறி யடித்தான்; ஆனால், சாளுக்கிய வினயாதித்தனிடம் (680-695) தோற்றுத் தன் நாட்டின் சில பகுதியை இழந்தான். 21. விசயாதித்தன் (726-765): இவன், முதலாஞ் சிவமாறன் தம்பி. கங்க நாட்டின் மேற் படையெடுத்த கீழைச் சாளுக்கியரை இவன் தோல்வியுறச் செய்தான். 22. முதலாம் இராசமல்லன் (765-807): இவன், விசயாதித்தன் மகன். கங்க நாட்டை அடுத்துக் கிழக்கில், வடபுறம் நுளம்பவாடியும், தென்புறம் வாணகப் பாடியும் இருந்தன. வாண வித்தியாதரன் என்பான் கங்கவாடி ஆறாயிரம் என்ற பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். நுளம்ப சிம்மபோதன் பேர்த்தியைத் தான் மணந்து கொண்டு தன் மகள் செயப்பையை நுளம்பதிராசனுக்கு மணஞ் செய்து கொடுத்து இராசமல்லன் நுளம்பரோடு மணவுறவு செய்து கொண்டான். பின்னர் நுளம்பர் உதவியால் வாணரை வென்றடிப்படுத்தான்; இதனால், இராட்டிர கூடர் கீழ் இருந்த சிற்றரசர்களைத் தன்கீழ்க் கொண்டு வந்தான். அதனால் இராட்டிர கூடர், வனவாசியின் ஆணையாள னாக இருந்த பங்கேசன் என்பானைக் கங்க நாட்டின் மீது படை யெடுக்குமாறு செய்தனர். ஆனால், பங்கேசன் வெற்றி பெற வில்லை. காரணம், இராட்டிர கூடத்தில் அது போது உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டதால், பங்கேசன் அங்கு அழைக்கப் பட்டான். இராசமல்லன் இத்தருணத்தைப் பயன் படுத்திக் கொண்டு, முன் சிவமாறன் காலத்தில் இழந்த பகுதிகளை யெல்லாம் மீட்டுக் கொண்டான். 23. முதலாம் நீதிமார்க்கன் (807-837): இவன், முதலாம் இராசமல்லன் மகன், இவனுக்கு- இரண விக்கிரமன் என்றும் பெயர். தன் மைத்துணன் நுளம்பாதி ராசன் துணையுடன் இவன் வாணரை வென்று வாண நாட்டைக் கைப்பற்றினான்; இராட்டிர கூட அமோக வர்ஷனோடு (814-880) கடும்போர் செய்து, இராச ராமுடு என்ற இடத்தில் அமோகவர்ஷனைப் புறங்கண்டான். அதனால் அமோகவர்ஷன், தன் மகள் சந்திர பலப்பையை நீதி மார்க்கன் மகள் முதலாம் பூதுகனுக்கு மணந்து கொடுத்து நட்புச் செய்து கொண்டான். அமோக வர்ஷனின் அவைப் புலவ ரான ஸ்ரீவிஜயர் செய்த கவிராச மார்க்கம் என்ற கன்னட நூலில், நீதிமார்க்கன் சிறப்பிக்கப் பட்டுள்ளான். 24. முதலாம் பூதுகன் (738-870): இவன், முதலாம் நீதிமார்க்கன் மகன். இவன் நுளம்ப மகேந்திரனை வென்றடிப் படுத்தான். கீழைச் சாளுக்கிய மூன்றாம் விசயாதித்தன் படை யெடுத்து நுளம்பவாடியைப் பிடித்து, கங்கவாடியிலும் சில கோட்டைகளைக் கைப்பற்றிக் கொண்டான். ரெமியா, குங்கூர் என்ற இடங்களில் நடந்த போரில் பூதுகன் விசயாதித்தனை முறியடித்தான். இவன் வரலாறு முன்னுங் கூறப்பட்டது. 25. இரண்டாம் இராசமல்லன் (870-901): இவன், முதலாம் பூதுகன் மூத்த மகன். கோலார்க் கங்கனான முதலாம் பிருதிவிபதிக்கும் (817-880) இவனுக்கும் அனந்தப்பூர் மாவட்டத்துப் பெனுகொண்டாவட்டத்தைச் சேர்ந்த சோரமதி என்னும் இடத்தில் 878 இல் நடந்த போரில் இவன் தோல்வி யுற்றான் எனினும், 880 இல் பிருதிவிபதி இறந்த பின் வலுவுடைய வனானான்; குடகு நாட்டுப் பன்னகடங்கா என்ற ஆற்றங்கரை யிலுள்ள சத்தியவாக்கிய சமணக் கோயிலுக்கு 12 கிராமங்களை இறையிலியாக விட்டான். இவன் நுளம்பரோடு செய்த போரில் இறந்தான். 26. இரண்டாம் நீதிமார்க்கன் (901-920): இவன், இரண்டாம் இராசமல்லன் தம்பி சந்திரபலப்பையின் மகன். இவன் சிற்றப்பனான சத்தியவாக்கியனிடம் ஆட்சி முறை பயின்றான். இவனுக்கு-எறிகங்கன் என்றும் பெயர். முதலாம் இராசமல்லன் மகளும், நுளம்பாதிராசன் மனைவியுமான செயப் பையின் மகனான மகேந்திரனும், அவன் மகன் ஐயப்பனும் வாணரை வென்றதோடு, நீதிமார்க்கனுடனும் பகை கொண்டனர். பெஞ்சேறு என்ற இடத்தில் நடந்த போரில் நீதிமார்க்கன் மகேந்திரனைக் கொன்று மகேந்திராந்தகன் என்று பெயர் பெற்றான் பெஞ்சேறு, திப்பேறு, சூரூர், நடுகனி, மிடிகை முதலிய நுளம்பர் கோட்டைகளையுங் கைப்பற்றினான். நீதிமார்க்கன் மனைவியான செயப்பை என்பாள் ஒரு சாளுக்கிய இளவரசி, முடகள்ளி, தோரிமாவு என்ற இடங்களிலுள்ள சமணக் கோயில் களுக்கு இவன் இறையிலி நிலம் விட்டான். இவன் தாய் சந்திபலப்பை - குனிகல் என்ற பகுதிக்குத் தலைவியாக இருந்தமை குறிப்பிடத் தக்கது. 27. மூன்றாம் இராச மல்லன் (920-938): இவன், இரண்டாம் நீதிமார்க்கன் மகன். இவன்-நுளம்ப ஐயப்பன். அவன் மகன் அண்ணிகன் இவர்கள் துணையுடன், 934 இல் கீழைச் சாளுக்கிய இரண்டாம் வீமனுடன் பொருத போரில் ஐயப்பன் இறந்தான். அண்ணிகன் - வல்லபை என்ற கங்க இள வரசியின் மகன், பின்னர் அவன்-கீழைச் சாளுக்கியர், இராட்டிர கூடர்களை எதிர்த்ததோடு, கங்கவாடி மீதும் படையெடுத்தான். கோட்டமங்கலம் என்ற இடத்தில் நடந்த போரில் அண்ணிகன் தோற்று, இராசமல்லனைப் பணிந்தான். இராட்டிரகூட மூன்றாங் கிருஷ்ணனிடமும் அண்ணிகன் தோல்வியுற்றான். 28. இரண்டாம் பூதுகன் (938-960) இவன், இரண்டாம் இராசமல்லன் மகன், கங்க நாராயணன், கங்ககாங்கேயன், நன்னிய கங்கன் என்பன இவன் பட்டப் பெயர்கள். இவன் இளமையாக இருந்தமையால் பட்டம் பெற்று ஆண்டு வந்த இவன் சிற்றப்பன் மகனான மூன்றாம் இராசமல்லன் அரசைத் தர மறுக்கவே, இராட்டிரகூட மூன்றாம் அமோகவர்ஷன் துணைகொண்டு இராசமல்லனை வென்று இவன் பட்டம் எய்தினான். மூன்றாம் அமோக வர்ஷன் தன் மகள் இரண்டாம் இரவேகையை இரண்டாம் பூதுகனுக்கு மணந்து கொடுத்தான். அதனால், மைசூர் நாட்டின் வடக்கில் உள்ள தார்வார், பெல்காம், பீசப்பூர் ஆகியவை பூதுகனுக்குச் சீர்வரிசையாhகக் கிடைத்தன. 939இல் மூன்றாம் அமோக வர்ஷன் இறந்த போது, அவன் மகன் மூன்றாங் கிருஷ்ணன் வட பகுதியில் போர் செய்து கொண்டிருந்தான். அப்போது லல்லியன் என்பான் சில சிற்றரசர்களைச் சேர்த்துக் கொண்டு, இராட்டிரகூட அரசைக் கைப்பற்ற முயன்றான். பூதுகன் படையுடன் சென்று, லல்லியனை வென்று கிருஷ்ணனுக்குதவினான். லல்லியனுக் குதவிய ஆச்சாள புரம் கங்கராயன், வனவாசித் தந்திவர்மன், நுலுகுன்றி நாகமன் முதலியோரைப் பூதுகன் வென்றடக்கினான். 949இல் நடந்த தக்கோலப் போரில் இவன், சோழப்படையை வென்று கிருஷ்ணனுக் குதவியதை முன்பு கண்டோம். பூதுகன் சோழ நாட்டிலிருந்து மீளும் போது, சித்திர கூடத்தைத் (சிதம்பரம்) தாக்கிக் கைப்பற்றினான். 7மழவர் களை வென்றடக்கி, அன்னாரைத் தத்தம் பகுதியை ஆளும்படி செய்து அப்பகுதிக்கு, மழவகங்கம் என்று பெயர் சூட்டினான்; நுளம்ப தீலிபனை வென்று பணிவித்தான். 949இல் மூன்றாங் கிருஷ்ணன்-வனவாசி பன்னிராயிரம், வெண்குளம், பெலிகிரி, பாகநாடு ஆகிய பகுதியைப் பூதகனுக்குக் கொடுத்தான். பூதுகன் ஒரு புத்தத் துறவியுடன் வாதிட்டு வென்றதாகக் குட்லூர்ச் செப்பேட்டில் உள்ளது. பூதுகன் மூத்தமகனான மருளதேவன் என்பான், மூன்றாங் கிருஷ்ணன் மகளை மணந்து கொண்டான். கிருஷ்ணன் அவனுக்கு, மதனாவதார என்னும் குடையை வழங்கினான். இதுகாறும் இத்தகைய மதிப்பை வேறு யாருக்கும் வழங்கின தில்லை. பூதுகன் தன் மகளை (இரேவகாமகள்) இராட்டிரகூட நான்காம் அமோகவர்ஷ னுக்கு மணந்து கொடுத்தான். இவள், இராட்டிரகூடக் கடைசி அரசனான இந்திர ராசன் தாயாவாள். 29. இரண்டாம் மாறசிம்மன் (960-974): இவன், இரண்டாம் பூதுகன் இளைய மகன். (இவன் அண்ணன் மருளதேவன் பட்டம் பெறவில்லை). இவன் வரலாறு முன்னர்க் கூறப்பட்டது. கல்லபரசி என்பது இவன் தாய் பெயர். இவன் தென்னாட்டிலேயே ஒரு பேரரசனாக வாழ்ந்தான். குடிய கங்கன், நுளம்ப பராந்தகன், சத்திய வாக்கிய கொங்கணி வர்மன், பெருமானடி, மாயசிம்மன், தர்மவதாரன், செகதேக வீரன், கங்க சிம்மன், கங்க வச்சிரன் என்பவை இவன் பட்டப் பெயர்கள். மூன்றாங் கிருஷ்ணன் தன் கையினாலேயே இவனுக்கு முடி சூட்டினான். கூர்ச்சரர்-கலசூரியர் போரில். கிருஷ்ணனுக் காக, கலசூரியர்க் குதவியாக மாறசிம்மன் கூர்ச்சரத்தின் மீது படையெடுத்துச் சென்று, மூலராசன், சீயகன் என்போரைத் தோற்கடித்தான். சீயகன், கூர்ச்சரத்தின் வட பகுதியையும், மாள வத்தையும் ஆண்டு வந்தான். இவ்வெற்றியால் மாறசிம்மன், கூர்ச் சராதிராசன் என்று பெயர் பெற்றான். மாறசிம்மன் படைத் தலைவர் காலஞ்சரம், சித்திரகூடம் முதலிய கோட்டை களைப் பிடித்தனர். காலஞ்சரம், விந்தத்தின் வடக்கில் உள்ளது. சிரவண வெண்குளக் கல்வெட்டுக்கள் சித்திரகூட வெற்றியைக் குறிப்பிடுகின்றன. இவன் வனவாசி வச்சலனை வென்றான். சோழ இளவரசனான இராசாதித்தனை வென்று உச்சங்கிக் கோட்டையைக் கைப்பற்றினான். சபரர்கள் என்னும் கொள்ளைக் கூட்டத்தினரை அடக்கி அவர்கள் தலைவனான நரகன் என்பானைக் கொன்று அவனது பராசிக் கோட்டையைக் கைப்பற்றினான். 966இல் இராட்டிரகூட மூன்றாங் கிருஷ்ணன் இறந்தான். கொட்டிகன், இரண்டாங்கக்கன் என்போர் அரசுக்காகப் போட்டியிட்டனர். சாளுக்கிய இரண்டாந் தலைநகரான மானிய கேடத்தைக் கைப்பற்றினான். மாறசிம்மன் தன் மருமகனான இராட்டிரகூட இந்திரனை அரசனாக்க முயன்று தோல்வியுற்றான். மாறசிம்மன் நுளம்பர் எதிர்ப்பை முறியடித் தான் எரிகங்கல பட்டன் என்னும் இலக்கண ஆசிரியருக்கு இறையிலி நிலம் அளித்தான். 972 இல் மாறசிம்மன் பங்காப்பூர் என்னுமிடத்தில் தங்கி, 974இல் அசிதசேனர் என்னும் சமண குருவின் முன் சல்லேகானம் புக்கான். இவன் மருமகனான இந்திரனும் பல தொல்லைப்பட்டு 982 இல் சிரவண வெண்குளத்தில் சல்லேகானம் புக்கான் (சல்லேகானம் - உண்ணாதிருந்து உயிர் விடுதல். இது சமணமரபு). 30. நான்காம் இராசமல்லன் (975-985) : இவன், இரண்டாம் மாறசிம்மன் மைந்தன். தந்தை இறக்கும் பொழுது இவனும், இவன் தம்பி இராக்கசகங்கனும் பித்தெரிகிரி என்னுமிடத்தில் இருந்தனர். மாறசிம்மனின் பெரும்படைத் தலைவனான பாஞ்சால தேவன் என்பான், முதுராசையன் என்னும் படைத் தலைவனைச் சேர்த்துக் கொண்டு 974-5 வரை ஆண்டான். தைலப்பனுக்கு எதிராகத் தன்னைப் பேரரசன் என்று அறிவித்தான். தைலப்பனும், கங்க அமைச்சனான சாமுண்டராயனும் சேர்ந்து, 975இல் பாஞ்சால தேவனைக் கொன்றனர். சாமுண்டராயன், பகியூர் என்ற இடத்தில் முதுராசை யனைக் கொன்று, நான்காம் இராசமல்லனை அரசனாக்கினான். இவ்விரு போர் வெற்றியால் சாமுண்டராயன், சமர பரசுராமன் என்ற பட்டம் பெற்றான். இவன் இராசமல்லனின் அமைச்சனானான். இவன் மிகவும் நல்லவன். நுளம்பர் போரிலும் இராசமல்லனுக்கு உதவினான். முன் உச்சங்கிக் கோட்டையைக் கைப்பற்றியவன் இவனே. கேடகம் என்ற இடத்தில் வச்சுவல தேவனை முறியடித்தான். 978இல், கன்னடத்தில் சாமுண்டராய புராணம் எழுதினான். இந்நூல், சமண தீர்த்தங்கரர் இருபத்து நால்வர் புராணங் கூறுவது இப்புராணத்தில் தமிழ்ச் சொற்களும் நிரம்ப உள்ளன. ஆதிபுராணம் செய்த பம்பா என்பான் இவன் காலத்தவனே. சாமுண்டராயன், அசிதசேனர் மாணவன். சிரவண வெண் குளத்தில், 54 1/2 அடி உயரமுள்ள கோமடேசுவரர் சிலை, சாமுண்டராயன் அமைத்ததேயாம். சாமுண்டராயன் மகன், சீனதேவனும் சிரவண வெண்குளத்தில் கோயில்கள் கட்டியுள்ளான். 31. இராக்கச கங்கன் (985-1024): இவன், நான்காம் இராசமல்லன் தம்பி. அண்ணன் ஆட்சிக் காலத்தே இவன் குடகு நாட்டின் அதிகாரியாக இருந்து வந்தான். இவன் நுளம்பரை அடக்கினான். இவனுக்குப் பிள்ளையின்மையால், தம்பி மகனையும் மகளையும் எடுத்து வளர்த்தான். இராச வித்தியா கரன் என்னும் அவ் வளர்ப்பு மகன் இளமையிலேயே இறந்து விட்டான். வளர்ப்பு மகளை அரசியாக்க முயன்றான். அம்முயற்சி கைகூடவில்லை. அவளை மேலைச் சாளுக்கிய முதலாம் சோமேசு வரனுக்கு மணஞ்செய்து கொடுத்தான். அவன் மக்கள்தாம் இரண்டாம் சோமேசுவரனும் ஆறாம் விக்கிரமாதித்தனும். சந்தோம்புதி என்ற கன்னட நூலை எழுதிய நாகவர் மனை இராக்கசகங்கன் பெரிதும் போற்றினான். 990க்குப் பின் கங்கவாடியைச் சோழர் கைப்பற்றினர். கொங்கு நாடும் சோழராட்சிக் குட்பட்டது. தலைக்காட்டுக் கங்க மன்னர்கள் இரண்டொருவரைத் தவிர எல்லோரும் சமணர்களாகவே இருந்து வந்தனர். சமணப் பெரியார்கள் அரச குருவாக இருந்து வந்தனர். அரிட்டணன், பிரபனாச்சாரி, பஞ்சநந்தி, சொக்கப்பன், செயதேவர், நாகநந்தி முதலியோர் அரச குருவாக இருந்து வந்ததைக் கண்டோம். சிம்மநந்தி, விசய கீர்த்தி. பூஜ்யபாதர், அரிட்ட நேமி, அசிதசேனர் முதலியோரும் அரசகுருவாக இருந்து வந்தனர். சமணக் கோயில்கள் கட்டியும், கோயில் களுக்கு இறையிலி நிலங்கள் விட்டும் கங்க மன்னர்கள் சமண சமயத்தை வளர்த்து வந்தனர். கங்கர்கள் ஆட்சிக் காலத்தே கங்கநாடு சமணசமய மாக இருந்து வந்தது. கொங்கு நாட்டிலும் சமணம் பேராதிக்கம் செலுத்தியது. 2. கோலார்க் கங்கர் 1. ஸ்ரீபுருஷன் (725-778): இவன், இன்னான் என்பது முன்னர்க் கூறப்பட்டது. இவன் வரலாறும் முன்னர்க் கூறப் பட்டது. இவனே கோலாரைக் கைப்பற்றி, கோலார்க் கங்க மரபைத் தோற்றுவித்தவனாவான். இவன், விசயாதித்தன் என்னும் பாணனை அரசனாக்கி னான். பின்னர் அவன் மகன் செகதேவமல்லன் என்பான். எதிர்க்கவே ஸ்ரீபுருஷன் அவனை வென்றடிப் படுத்தான். பாண்டிய பல்லவ சாளுக்கியப் போரில் இவன் அவ்வப்போது ஒவ் வொரு பக்கம் சேர்ந்து, தெற்கிலும் கிழக்கிலும் தன் செல்வாக்கை வலுவுறச் செய்து கொண்டான். கங்க பல்லவப் போர் இவன் ஆட்சிக் காலத்தே மிகவும் முதன்மை யுற்றிருந்தது. 760 முதல் 776 வரை இவன் இராட்டிர கூடருடன் போரிட்டு வந்தான். இராட்டிர கூடரின் படைப் பெருக்கைக் கண்டு தன் தலைநகரை மண் குண்டத்திலிருந்து மன்னிய புரத்திற்கு மாற்றிக் கொண்டான். இராட்டிரகூட முதலாங் கிருஷ்ணனுடன் போரிட்டுப் பெல்லாரி வரை வென்றான். அதன் அறிகுறியாகப் பெல்லாரியிலுள்ள ஒரு சமணக் கோயிலுக்கு இறையிலி நிலம் வழங்கினான். இவன் யானைப்போரில் மிகவும் வல்லவன், கஜசாஸ்திரம் என்னும் நூல் செய்துள்ளான். பிருதிவி கொங்கணி, கொங்கணி முத்தரசன், கொங்கணி இராசாதிராச பரமேசுவர ஸ்ரீபுருஷன் முதலிய பட்டங்களை யுடையவன். இவனுக்கு மனைவியர் பலர்; மக்களும் பலராவர். இவன் மைந்தருள் ஒருவனான விசயாதித்தன் என்பவன், சாளுக்கிய இளவரசியான விசயமா தேவியின் மகனாவான். இவ் விசயாதித்தன், கீழைச்சாளுக்கிய இரண்டாம் விசாயதித்தனுடன் 12 ஆண்டுகட்குள் 108 போரில் ஈடுபட்டனன். 2. இரண்டாம் சிவமாறன் (778-817): இவன் ஸ்ரீ புருஷனின் மூத்தமகன். இவன் வரலாறு முன்னர்க் கூறப்பட்டது. இவனே கோலார்க் கங்கமரபின் முதல்வனாவான். இவன் தம்பி துர்க்கமாறன் என்பான் பட்டம் பெறப் போட்டியிட்டான். நுளம்பச் சிங்கபோதன் துணை கொண்டு தம்பியை அடக்கினான். பின்னர்த் தலைக்காட்டுக் கங்கனான முதலாம் நீதிமார்க்கனை வென்று துரத்தினான்., இராட்டிர கூடத் துருவனால் வென்று சிறையிலடைக்கப்பட்டு, அவன் மகன் மூன்றாங் கோவிந்தனால் விடுதலை செய்து அரசனாக்கப் பட்ட செய்தியை முன்னரே கண்டோம். இவன் கும்மடவாடா என்ற ஊரில் ஒரு சமணக் கோயில் கட்டி இறையிலி நிலம் விட்டான். சிரவண வெண்குளக் குன்றின்மீது ஒரு சமணமடம் கட்டினான். இவன் சிறந்த கல்வியறி வுடையவன்; பெருங்கவிஞன் என்கின்றன இவன் கல்வெட்டுக்கள், இவன் கஜசதகம் சேது பந்தம் என்னும் கன்னட நூல்கள் செய்துள்ளான். 3. முதலாம் பிருதிவிபதி (817-880): இவன், இரண்டாஞ் சிவமாறன் மகன், இவன் வரலாறு முன்னர்க் கூறப்பட்டது. தமிழக வாலாற்றிற் குறிப்பிடத்தக்க தொன்றான திருப் புறம்பியப் போரில் வீரப்புகழ் பெற்றவன் இவனே. 4. முதலாம் மாறசிம்மன் (880-914): இவன், முதலாம் பிருதிவிபதியின் மகன். அமைதியாக ஆண்டுவந்தான். 5. இரண்டாம் பிருதிவிபதி: (914-940): இவன், முதலாம் மாறசிம்மன் மகன். இவன் வரலாறு முன்னர்க் கூறப் பட்டது. இவனுடன் கோலார்க் கங்கமரபு முடிவுற்றது, இவனுக்குப் பின் அக்கோலார்ப் பகுதி, தலைக்காட்டுக் கங்க ராட்சிக் குட்பட்டது. 2. கொங்குச் சோழர் (1004-1303) இடைக் காலச் சோழ மன்னர்களின் முதல்வனான தஞ்சைச் சோழன் விசயாலயன் மகனான முதல் ஆதித்த சோழன் (881-907). கங்கரிடமிருந்து கொங்கு நாட்டைக் கைப்பற்றி னான். சேலம், திருச்செங்கோட்டுக் கல்வெட்டுக்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஆதித்தன் மகன் முதற் பராந்தகன் (907-953) கல்வெட்டுக்கள் கொங்கு நாட்டில் பல கிடைத்துள்ளன. தந்தை பிடித்த கொங்கு நாட்டுப் பகுதியை இவன் ஆட்சிக் குட்படுத்தினான். கொங்கின் கீழ்ப்பகுதி சோழ நாட்டின் ஒரு மண்டலமானது. ஆனால். கி.பி. 949 இல் நடந்த தக்கோலப் போரில் சோழ மன்னன் தோற்றான். அப்போரில் சோழ இளவரசன் இராசாதித்தன் இறந்தான். அத்தோல்வியிலிருந்து சோழர்கள் தலையெடுக்க 50 ஆண்டுகள் ஆயின. 997இல் மேலைச் சாளுக்கிய மன்னன் இரண்டாம் தைலன் இறந்தான். அவ்வரசின் ஆற்றல் தளர்ந்தது. அது காலை முதல் இராசராசச் சோழன் (985-1014) படையெடுத்துச் சென்று, கங்கவாடி முதலிய நாடுகளை வென்று கைப்பற்றி னான். 1004இல் தன் மகன் முதல் இராசேந்திரனைப் பெரும் படையுடன் அனுப்பினான். அவன் தலைக்காட்டைக் கைப்பற்றி, மேற்குக் கங்க மரபையே அழித்து விட்டான். கங்கவாடியும் சோழர் கைக்கு வந்தது. இவன் தந்தையே முன் கங்கவாடியைப் பிடித்தனன் எனினும், அது முழு வெற்றியாக முடியவில்லைப் போலும். அக்காலத் தரசர்கள், தாம் பிடித்த நாடு நகர்கட்குத் தங்கள் பெயரை இடுவது வழக்கம் அல்லது தம் வெற்றியைக் குறிக்கப் புதிய நகர்களை அமைத்து, அவற்றிற்குத் தங்கள் பெயரை இடுவது வழக்கம். தலைக்காட்டைப் பிடித்த இராசேந்திரன், தலைக் காட்டுக்குத் தெற்கில், காவிரியின் தென்கரையில், கொள்ளே காலம் என்ற ஊர்க்குத் தெற்கில் ஒரு புதிய நகர் அமைத்து, அதற்கு முடிகொண்ட சோழபுரம் என்று தன் பெயரை இட்டான். ‘முடிகொண்ட சோழன்’என்பது, இராசேந்திரன் பெயர்களி லொன்று. அந்நகர், முடிகொண்டம் என இப்போது வழங்கு கிறது. அவ்வூர் நடுவில் உள்ள ஒரு பிள்ளையார் கோயில் மேடை மீது, கி.பி. 11ஆம் நூற்றாண்டில் வழங்கிய தமிழெழுத்துக்களால் பொறித்த கல்வெட்டுக்கள் உள்ள 4 கற்பலகைகள் நிற்கின்றன. அவற்றை மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். அக் கல்வெட்டில் அவ்வூர். ‘முடிகொண்ட சோழபுரம்’ என்றிருக்கிறது. 1004இல் தலைக்காடுபோய், முடிகொண்ட சோழபுரம் தலை நகரானதும், கொங்கு நாடு முழுவதும் சோழர் ஆதிக்கத்திற் குட்பட்டது. தமிழ் நாடு முழுவது மன்றி, அதற்கடுத்த நாடுகளும் தங்கள் கைக்கு வந்தபின், சோழ மன்னர்கள் அந் நாடுகளை ஆறு மண்டலங்களாகப் பிரித்து, அவற்றுக்குத் தங்கள் பெயரை இட்டு, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் ஆணையாளரை ஏற்படுத்தி ஆண்டு வந்தனர். 1. சோழ மண்டலம் - பழைய சோழ நாடு 2. செயங்கொண்ட சோழ மண்டலம்- தொண்டை நாடு 3. இராசராச மண்டலம் -பாண்டி நாடும், சேர நாட்டின் தென்பாகமும் 4. கங்கை கொண்ட சோழ மண்டலம் - கங்க வாடியின் மேல் பாகமும், சேர நாட்டின் வடபாகமும் 5. நிகரிலிச் சோழ மண்டலம் - கங்கவாடியின் கீழ் பாகமும். வாண நாடும் 6. அதிராசராச மண்டலம் அல்லது கொங்கு நாடு சோழ கேரள மண்டலம் கொங்கு நாட்டுத் தருமபுரி மாவட்டத்து ஓசூர், கிருஷ்ண கிரி வட்டங்களின் வடபகுதி (பாராமகால்) நிகரிலிச் சோழ மண்டலத்தைச் சேர்ந்திருந்தது. இவ்வாறு பிரிக்கப் படினும், பழைய பெயர்கள் வழக்கத்திலிருந்தே வந்தன. இம்மண்டலப் பெயர்கள், வேறுவேறு அரசர்கள் காலத்தில் வேறு வேறாக மாறி வந்தன. காட்டாக, கொங்கு நாடு-முதல் இராசேந்திரன் (1012-1044), வீரராசேந்திரன் (1063-1070) காலங்களில் அதிராசமண்டலம் எனவும், விக்கிரமச் சோழன் (1114-1136) காலத்தில் வீர சோழ மண்டலம் எனவும், மூன்றாங் குலோத்துங்கன் (1178-1218) காலத்தில், சோழ கேரள மண்டலம் எனவும் வழங்கி வந்தது. கடைசிப்பெயர், கொங்குப் பாண்டியர் ஆட்சிக் காலத்தும், வெற்றி நகர் வேந்தனான சதாசிவராயன் (1543-1572) காலத்துங்கூட வழங்கி வந்தது. கொங்கு 24 உள் நாட்டுப் பிரிவுகளும் இக்காலங்களில் அப்படியே (முன் போலவே) வழங்கி வந்தன. ஆதித்தன் முதல், முதல் இராசராசன் ஈறாக ஆறு சோழமன்னர்கள் தஞ்சையில் பட்டங் கட்டிக் கொண்டு, கொங்கு நாட்டை ஆண்டு வந்ததாகக் ‘கொங்குதேசராசாக்கள்’ என்னும் நூல் கூறுகிறது. அந்நூல் செய்த காலத்தே தமிழ்மொழி அடைந்த நிலையை அறிந்து கொள்வதற்காக, அந்நூலில் உள்ளபடியே இங்கு எழுதுகின்றோம். அவராவர்: 1. ஆதித்த வருமராயன் 2. வீர சோழன் 3. தேசோதித்தியராயன் 4. பராந்தகன் 5. திவியராயன்(அரிதிட்டுராயன்) 6. அரிவாரி தேவன் என்பவராவர். இவ்வறுவர்க்குப் பின், ஒய்சள மன்னர் தலைக் காட்டைப் பிடித்து ஆண்டு வந்ததாக அந்நூல் கூறுகிறது. சோழர் வரலாற்று நூல் கூறும், 1. ஆதித்தன் 2. முதற் பராந்தகன் 3. இராசாதித்தன் - முதற் பராந்தகன் மூத்த மகன் 4. இரண்டாம் பராந்தகன் - முதற் பராந்தகனின் மூன்றாவது மகனான அரிஞ்சயன் மகன். 5. ஆதித்தகரிகாலன் - இரண்டாம் பராந்தகனின் மூத்த மகன் 6. முதல் இராசராசன் இவன், ஆதித்த கரிகாலன் தம்பி; அதாவது, இரண்டாம் பராந்தகனின் இரண்டாவது மகன். ஆகிய இவ்வறுவருமே, ‘கொங்குதேச ராசாக்கள்’ என்னும் நூல் கூறும் அறுவருமாவர். அந்நூல், முதற் பராந்தகனின் இரண்டாவது மகனான கண்டராதித்தனைக் கூறவில்லை. அவன் தம்பி அரிஞ்சயன் - திராவிடதேயத்தை-தொண்டை நாட்டை-ஆண்டு வந்தான் என்கின்றது. கண்டராதித்தனைக் கூறாததால், அவன் மகன் உத்தமச் சோழனையுங் கூறவில்லை. கண்டராதித்தனுக்குப் பதில், அவன் அண்ணன் இராசாதித்தனையும், உத்தமச் சோழ னுக்குப் பதில், இரண்டாம் பராந்தகனின் மூத்தமகனான ஆதித்த கரிகாலனையும் கூறுகிறது. விளக்கம்: 1. ஆதித்த வருமராயன் 4. பராந்தகன் 2. வீரசோழன் 5. திவியராயன் 3. தேசோதித்தியன் 6. அரிவாரி தேவன் இவர்களுள், 1. ஆதித்தன், 2. முதற் பராந்தகனுக்கு வீரசோழன் என்ற பெயரும் உண்டு. 3. இராசாதித்தன் என்பதையே, தேசோதித் தியன் என்று திரித்துக் கூறுகிறது. அந்நூல், ஆதித்தன்-ஆதித்தியன், ராசா-தேசோ, இராசாதித்தன்-949இல் நடந்த தக்கோலப் போரில் இறந்தான். இவன் இளவரசனாக இருந்தபோது, கொங்குநாட்டு ஆணை யாளனாக இருந்து வந்தான் போலும். 5. திவியராயன்: வீரபாண்டியன் காதை அறுத்ததால் இவனுக்கு, அரிதிட்டுராயன் என்று பெயர் ஏற்பட்டதாக அந்நூல் கூறுகிறது. ஆதித்த கரிகாலன் என்பதையே, அந்நூல் தனது நடையில், அரிதிட்டுராயன் என்கின்றது. சோழர் வரலாறும், ஆதித்த கரிகாலன் வீர பாண்டியனைக் கொன்ற தால், ‘வீர பாண்டியனைத் தலை கொண்ட கோப்பரகேசரி வர்மன்’ என்கின்றது. இவ்வாதித்த கரிகாலன், 966இல் இளவரசுபட்டங் கட்டப்பெற்று 999இல் சில வஞ்சகரால் கொல்லப் பட்டான். இவன் இளவரசனாக இருந்த போது கொங்கு நாட்டு ஆணை யாளனாக இருந்திருக்கலாம். 6. அரிவாரிதேவன்: முதல் இராசராசனுக்கு - அருள் மொழித்தேவன் என்பது பிள்ளைப் பெயர். அருள்மொழித் தேவன் என்பதையே, அரிவாரி தேவன் என்கின்றது அந்நூல். இவன் இராசராசாக்களைச் செயித்ததனாலே, ‘இராசராசன்’ என்று பெயர் வந்தது என்கின்றது அந்நூலும். ‘கொங்கு தேசராசாக்கள்’ என்னும் நூலின் சொல்லாட்சியும் நடையும், எத்தகைய தமிழ்வல்லாரையும் திகைக்க வைத்து விடும் என்பதற்கு, இப்பெயர்களே சான்றுபகரும். அருள்மொழித் தேவன் - அரிவாரிதேவனும், இராசாதித்தன் - தேசோதித்தியனும் ஆனால், அதன் தமிழ் நடையை என்னென்பது? பிற்காலத்தே தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட வடமொழிப் பற்றும், தமிழ்ப்பற் றொழிந்ததுமே தமிழை இவ்வாறு திரித்து எழுதியதற்குக் காரணமாகும். ‘கொங்கு தேசராசாக்கள்’ என்ற நூலின் வரலாற்றுப்படி, 1. ஆதித்தன் 881-902 2. முதற்பராந்தகன் 907-953 3. இராசாதித்தன் - 4. இரண்டாம் பராந்தகன் 957-970 5. ஆதித்தகரிகாலன் 956-969 (இளவரசன்) 6. முதல் இராசராசன் 985-1014 ஆகிய சோழமன்னர்கள் அறுவரும், கி.பி.894 முதல், 1004 வரை தஞ்சையிலிருந்து கொண்டு ஆணையாளர் மூலம் கொங்கு நாட்டை ஆண்டு வந்தனர். 1004 லிலிருந்து அவ்வாணையாளர் தன்னுரிமை பெற்று, 1303 வரை தனியாட்சி நடத்தி வந்தனர் என்பது பெறப்படும். கொங்குச் சோழர்கள் தஞ்சையிலிருந்து கொண்டு தம் ஆணையாளர் மூலம் கொங்கு நாட்டை ஆண்டு வந்த தஞ்சைச் சோழர்கள், 894 முதல் 1004 வரை 110 ஆண்டுகள், தங்கள் பேராலேயே கொங்கு நாட்டு அரசியற் காரியங்களை நடத்தி வந்தனர். இந்த 110 ஆண்டுகளும் கொங்கு நாட்டில் இருந்தாண்டு வந்த சோழ வேந்தர்களின் ஆணையாளர்களைப் பற்றிய கல்வெட்டொன்றும் கொங்கு நாட்டில் கிடைக்கவில்லை. ஆனால். கிபி. 1004 முதல் 1303 வரை, கொங்கு நாட்டை ஆண்ட அவ்வாணையாளர்களின் கல்வெட்டுக்கள் நூற்றுக் கணக்கில் கிடைத்துள்ளன. அவற்றிலெல்லாம் தஞ்சைச் சோழர் களின் பெயர்களே காணப்படுகின்றன. ஆனால், கொங்கு நாட்டுக் கல்வெட்டுக்களில் காணும் சோழர்களின் பெயர்களுக்கும் வேறுபாடு காணப்படுகின்றன. அதாவது, கொங்கு நாட்டுச் சோழர்களும், விசயாலயன் வழிச் சோழர்களும் வேறுவேறாவர் என்பதாம். அதாவது, கொங்கு நாட்டை ஆண்ட அவ்வாணை யாளர்கள், தலைமையிடத்தின் அதிகாரம் தளரத்தளரத் தன்னுரிமை எய்தித் தங்களுக்கென ஒரு தனிமரபை ஏற்படுத்திக் கொண்டனர். 1004 முதல், அவர்கள் சோழர் என்ற உரிமை பூண்டு, தங்கள் பெயராலேயே கல்வெட்டுக்கள் வெளியிட்டுத் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்டனர். இது உலக அரசியல் வரலாற்றில் அடிக்கடி நிகழ்வ தொன்றாகும். மதுரை, தஞ்சை நாயக்கர் வரலாறு இதற்கு எடுத்துக் காட்டாகும். தஞ்சைச் சோழமன்னர், தாங்கள் கைப்பற்றிய நாடுகளை ஆளத் தங்கள் இளவரசர்களையே ஏற்படுத்தினார்கள். அவ்வாறு கொங்கு நாட்டை ஆள ஏற்படுத்திய இளவரசனும் அவன் வழியினரும் ‘சோழர்’ என்ற பெயராலேயே அழைக்கப்பட்டு வந்திருக்கலாம். 1004 முதல், அவர்கள் தமக்கென ஒருதனி மரபை ஏற்படுத்திக் கொண்டனர். வரலாற்றாசிரியர்கள், அவர்கட்குக் ‘கொங்குச் சோழர்கள்’ என்று பெயரிட்டுள்ளனர். சோழ நாட்டுச் சோழரும்-சோழப் பேரரசரும்-கொங்குச் சோழரும் வேறுவேறாவர் என்பதற்கு எடுத்துக்காட்டு, கொங்குச் சோழர் ஆண்டு 1. விக்கிரமச் சோழன் 1004-1045-41 2. குலோத்துங்கன் 1149-1183-34 3. வீரசோழன் 1183-1206-23 4. வீரராசேந்திரன் 1206-1255-49 சோழநாட்டுச் சோழப்பேரரசர் 1. விக்கிரமச் சோழன் 1118-1136-17 2. குலோத்துங்கன் 1 1070-1120-40 குலோத்துங்கன் 2 1133-1150-17 குலோத்துங்கன் 3 1178-1218-40 3. வீரசோழன் 1078-1088-10 4. வீரராசேந்திரன் 1063-1070-7 ஒரே பெயருடைய கொங்குச் சோழர், சோழப் பேரரசர் களின் பட்டியலைப் பாருங்கள். (சோழப் பேரரசர் அட்ட வணையில் மூன்றாவதாக உள்ள வீரசோழன், சோழர் ஆணை யாளனாக வேங்கி நாட்டை ஆண்டு வந்தவன்.) அவ்விரு மரபினர் காலமும், ஆண்ட ஆட்சி யாண்டும் மாறு பட்டிருத் தலைக் காணலாம். அவ்விரு அட்டவணைகளும் இரண்டு வெவ் வேறான மரபுக் குரியவை என்பன பெறப்படும். கொங்குச் சோழர் ஆண்ட காலத்தில், அதே பெயரையுடைய சோழப் பேரரசர் ஆளவில்லை. எனவே, கொங்குச் சோழர் மரபும், தஞ்சைப் பேரரசர் சோழர் மரபும் வேறுவேறென்பதை அறிய வேண்டும். கொங்கு நாட்டில் கிடைத்துள்ள சோழர் ஆட்சிக் காலத்துக் கல்வெட்டுக்களை யெல்லாம் ஒருங்கு படுத்தி நன்கு ஆராய்ந்து கண்டு அமைத்தது. கீழ்வரும் கொங்குச் சோழர் மரபுப் பட்டியல். கொங்குச் சோழமரபு - 1004-1303 1. விக்கிரமச் சோழர் 1004-1045 2. அபிமான சோழ இராசாதிராசன் 1080-1110 3. இராசாதிராச உத்தமன் 1110-1117 4. இராசாதிராச வீரசோழன் 1117-1135 5. உத்தமச் சோழ வீரநாராயணன் 1135-1149 6. குலோத்துங்கன் 1149-1183 7. வீரசோழன் 1183-1206 8. வீரராசேந்திரன் 1206-1255 9. இரண்டாம் விக்கிரமன் 1255-1263 10. ஒரு இராசகேசரி 1263-1273 11. மூன்றாம் விக்கிரமன் 1273-1303 (இவ்வட்டவணை-கோவைக் கிழார் - ‘கொங்கு நாட்டு வரலாறு’ என்னும் நூலில் உள்ளபடி) தஞ்சைச் சோழர்களைப் போலவே, இக்கொங்குச் சோழர் களும்-இராசகேசரி, பரகேசரி என்ற பட்டப் பெயர்களை ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி முறையே வைத்து வழங்கி வந்துள்ளனர். அதனால், அரசவரிசையை அறிதற்கு, இப்பெயர்கள் பெரிதும் பயன்படும். குறிப்பு : இக் கொங்குச் சோழர்களின் ஆட்சித் தொடக்க காலத்திலிருந்து முடிவுவரை (1047-1341), கங்கவாடியை ஒய்சளர் பிடித்து ஆண்டு வந்தனராகையால், ஆட்சித் தொடக்க காலத்திலிருந்து இக்கொங்குச் சோழர்கள், முன்னிருந்தாண்ட முடிகொண்ட சோழபுரத்தை விட்டு, இராசராசபுரம் என்னும் தற்காலத் தாராபுரத்தைத் தலைநகராகக் கொண்டு, தென் கொங்கையும், மேல் கொங்கின் ஒரு பகுதியையுமே ஆண்டு வந்தனர் என்பதை, அறிதல் வேண்டும். 1. விக்கிரமச்சோழன் (1004-1045): இவனே முதற் கொங்குச் சோழனாவான். இவன் சோழர் கீழிருந்து தன்னுரிமை எய்தித் தனிக் கொங்கு மன்னன் ஆனவனாவன். இவன்- பரகேசரி, இவனுடைய மற்ற பட்டப் பெயர்களான-கோனாட் டான், கலிமூர்க்கன், பரகேசரிவர்மன், திருச்சிற்றம்பல முடையான், கோக்கலி மூர்க்கன் என்பன. கொங்குத் தட்டைய நாடு, சோழ நாட்டின் மேற் கெல்லை யாகும். அம்மேற்கெல்லையிலுள்ள சோழ நாட்டுப் பகுதி-கோனாடு எனப்படும். இவன் அக் கோனாட்டையும் ஆண்டு வந்ததனால், அப்பெயர் பெற்றான். ‘ஆ-அன்’ என, னகரச் சாரியை பெற்றுவருதல் போல, ‘கோகோன்’ என, னகரச் சாரியை பெற்று வந்தது. கோ-மாடு. இவன் கல்வெட்டுக்கள் தென்கொங்கு, மேல் கொங்கு இரண்டினும் மிகுதியாகக் கிடைத்துள்ளமையால், இவன் அப்பகுதியை ஆண்டு வந்தனன் என்பது பெறப்படும். தாராபுரம், கீரனூர், கண்ணாடிப்புத்தூர், குமரலிங்கம், வெள்ளலூர், போளுமாம்பட்டி, அன்னூர், கோயிற்பாளையம் (கவசை, சர்க்கார் சாம்பற்குளம்) திருமுருகன் பூண்டி, திங்களுர், விசயமங்கலம் ஆகிய ஊர்களில், இவன் ஆட்சியாண்டு 2 முதல் 40 வரையுள்ள, சுமார் 80 கல்வெட்டுக்களுக்கு மேல் கிடைத் துள்ளன. இவன் கல்வெட்டொன்றில், ‘தன்குடிகளுக்கு, பிறந்த குழந்தைகளுக்குத் தாயிருப்பது போல் இருந்து வந்த அரசன்’ என்று காணப்படுவதால், இவன் குடிகளை மிகவும் அன்புடன் காத்து வந்தனன் என்பது பெறப்படுகிறது. விக்கிரம சோழமா தேவியார் என்பது, இவன் மகள் பெயர். அவள் பெயரால் ஏற்பட்டதே சோழமாதேவி என்னும் ஊர். இவன் காலத்தில் கொங்கு நாட்டில், ஐயபொழில் என்ற வாணிகச்சங்கம் ஒன்றிருந்து வந்தது. அதில் 500 உறுப்பினர் இருந்தனர். அவ்வுறுப்பினர் பல ஊர்களைச் சேர்ந்தவராவர். அச்சங்கத்தின் மூலம் கொங்கு வணிகம் சிறப்பாக நடந்து வந்தது. 2. அபிமான சோழ இராசாதிராசன் (1080-1110): விக்கிரமனுக்குப் பின், 35 ஆண்டுகளுக்குப் பின் இவன் ஆட்சி தொடங்குவதால், இவ்விருவர்க்கும் இடையில் ஒருவன் ஆண் டிருக்க வேண்டும். அக்காலக் கல்வெட்டொன்றும் கிடைக்காமை யால், அவனைப் பற்றிய வரலாறொன்றும் தெரியவில்லை. விக்கிரமனைப் போலவே, இவனும் பரகேசரி என்ற பட்ட முடையவனாதலால் இருவர்க்கும் இடையில் ஒரு இராசசேரி இருந்திருக்க வேண்டும். ஒருவன் தன் முழுப் பெயரையும் எழுதும் போது, தன் தகப்பன் பெயரை முன் வைத்துத் தன் பெயரைப் பின் வைத்து எழுதுவது பழைய வழக்கம். அவ்வழக்கம் இன்றுங் கூட இருந்து வருகிறது. இவன் பெயர்-அபிமான சோழ இராசாதி ராசன் என்றிருப்பதால், இவன் தகப்பன் பெயர்-அபிமான சோழனாக இருக்க வேண்டும். அவன் விக்கிரமன் மகனாக இருக்கலாம். இவன் கல்வெட்டு 8 கிடைத்துள்ளன. திருமுருகன் பூண்டிக் கல்வெட்டொன்றில், கோயில் பணியாளர்க்கு இவன் சில உரிமைகள் வழங்கியதாகக் குறிக்கப்பட்டுள்ளது. அவை-’இராசாதிராசன் என்னும் கொடியை ஏற்றுதல், குதிரை ஏறுதல், ஊர்வலம் வரும் போது- பேரிகை சேகண்டி அடித்தல், இரண் டடுக்கு வீடுகட்டுதல், இரண்டு வாயில் வைத்து வீடு கட்டுதல், வீட்டுச் சுவர்களுக்குக் காரை போடுதல்’ என்பன வாகும். இவற்றை நோக்கினால் இதற்குமுன் அன்னார்க்கு இவ்வுரிமை இல்லையென்பது விளங்கும். இன்றுங்கூட ஒரு சில ஊர்களில், ஊர்க்குள் குதிரை ஏறிக் கொண்டோ, குடை பிடித்துக் கொண்டோ போகக் கூடா தென்ற கட்டுப்பாடு உண்டு. விசயமங்கலத்துக் கல்வெட்டில் ‘வீரசோழ வளநாட்டு உத்தம சதுர்வேதிமங்கலம்’ என்ற பெயர் காணப்படுகிறது. இவன் ஆட்சி -தென் கொங்கோடு நடுக் கொங்கிலும் பரவியிருந்தது. 3. இராசாதிராச உத்தமன் (1110-1117): இவன் அபிமான சோழன் மகன், இவனுக்கு வீரசோழன் என்ற தம்பி ஒருவன் உண்டு. இவன் கல்வெட்டுக்கள் இரண்டேதான் கிடைத்துள்ளன. அவையும் தாராபுர வட்டத்திலேயே கிடைத் திருப்பதால், இவன் அப்பகுதியை மட்டும் ஆண்டு வந்திருக் கலாம் போலும். இவன் இராசகேசரி 4. இராசாதிராச வீரசோழன் (1117-1135): இவன் உத்தமன் தம்பி, உத்தமனுக்கு வீரநாராயணன் என்ற ஒரு மகனிருந்தான். அவன் சிறுவனாக இருந்ததால், இவ்வீர சோழன் பட்ட மேற்றான். இவன் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவன் பரகேசரி. இவனுக்குக் கலிமூர்க்கன் என்ற பட்டமும் உண்டு. கொங்கு நாட்டின் நடுப்பகுதி இவன் ஆட்சிக்குட் பட்டிருந்த தாகத் தெரிகிறது. தாராபுர வட்டத்துப் பிரமியத்துக் கல்வெட் டொன்றில், ‘வீரசங்காத சுதுர்வேதி மங்கலத்தில், காமக்கண்ணி சோமாசி என்ற பார்ப்பனன் ஒருவன், அரச இரண்டகமான (ராஜத்து ரோகம்)காரியங்களைச் செய்ததால், அவன் நிலம் அரசனால் பறிமுதல் செய்யப்பட்டது. அரசனுடைய பெரிய அதிகாரியான பெரியான் சோழன் என்ற வீரசோழ காங்கேயன். அந்நிலத்தை விலைக்கு வாங்கி, அதன் விலை 30 பொன்னையும் அரச பண்டாரத்தில் செலுத்தி, அந்நிலத்தை அவ்வூர்க் கோயிலுக்குத் தானம் செய்தான்’ என்பது காணப்படுகிறது. இதனால் அரசியற் குற்றங்கட்கு நிலத்தைப் பறிக்கக் கூடிய அத்தகு தண்டனை அக்காலத்தே உண்டென்பது தெரிகிறது. வீர சங்காத சதுர்வேதி மங்கலம் என்பது, பிரமியத்தின் பழம் பெயர். பிரமியம்-தாராபுரத்தின் வடக்கில் இருக்கிறது. மேலும், அப்பிரமியம் கல்வெட்டு, சோழமாதேவியார் என்னும் அரசி, அவ்வூரவைக்கு, கோயில் திருவலகிடுவதற்காக 1 1/2 மா நிலத்தைத் தானம் செய்ததாகக் குறித்துள்ளது. இவ்வம்மையார் - முதல் விக்கிரமச் சோழன் மகள். இதனால், அக்காலத்தே ஊரவைகள் இருந்தனவென்பதும், கோயில்கள் அவ்வூரவைகளின் கண்காணிப்பில் இருந்து வந்தன என்பதும், அரசியர் போன்ற அரச சுற்றத்தினரும் அவ்வூர்மன்றங்களிடத்து அக்கறை கொண்டிருந்தன ரென்பதும் தெரிகின்றன. அதே பிரமியம் கல்வெட்டில், மழநாடு, அயிலூர் என்னும் பெயர்கள் காணப்படுகின்றன. மழநாடு என்பது மழ கொங்கு. அது, நாமக்கல் வட்டத்துத் தென்பகுதி. அயிலூர்-அம்மழ கொங்கில் உள்ள ஓர் ஊராகும். எனவே, இவன் ஆட்சி அதுவரை பரவியிருந்தென்பது பெறப்படுகிறது. 5. உத்தமச்சோழ வீரநாராயணன்: (1135-1149) இவன், இராசாதிராச உத்தமன் மகன். தந்தை இறந்தபோது இவன் சிறுவனாக இருந்தமையால், இவன் சிற்றப்பன் இராசாதிராச வீரசோழன் பட்டம் பெற்றான். அவனுக்குப்பின் இவன் அரசனானான். இவன் இராசகேசரி, கோனேரின்மை கொண் டான் என்ற பட்டமும் இவனுக்குண்டு. இவன் கல்வெட்டுக்கள்-கண்ணாடிப் புத்தூர், குமரலிங்கம், கொழுமம், கத்தாங்காணி (காத்தான்காணி) , நடுவச்சேரி, கோயிற்பாளையம் (கவசை) ஆகிய ஊர்களில் கிடைத்துள்ளன. சிறந்த செய்தியொன்றும் இல்லை. 6. குலோத்துங்கச் சோழதேவன் (1149-1183): உத்தமச் சோழ வீரநாராயணனும் இவனும் இராசகேசரி என்ற பட்டம் பெறுவதால், இவன் அவன் மகனல்லன். பரகேசரிப் பட்டத்துக் குரிய ஒருவன் பட்டம் பெற்றதும் இறந்திருக்கலாம் போலும். திரிபுவன சக்கரவர்த்திகள், கோனேரின்மை கொண்டான் என்பன இவன் பட்டப் பெயர்கள். இவன் கல்வெட்டுக்கள்-அன்னூர், அவிநாசி, திருமுருகன் பூண்டி, சேவூர், நடுவச்சேரி, சத்தியமங்கலம், பாரியூர், திங்களூர், விசயமங்கலம், முத்தூர், கீரனூர், கொங்கூர், காவேரிபுரம், தீர்த்தமலை முதலான கொங்கு நாட்டின் நாலா பக்கங்களிலும் காணப்படுகின்றன. காவேரிபுரம்-மேட்டூர்ப்பக்கம், தீர்த்தமலை- அரூர் வட்டம், கீரனூர்-காங்கயத்துக்கு வடக்கில் உள்ளது. இவன் பெயர் கொண்ட ஊர்களும் கோயில்களும் இருந்தன வாகத் தெரிகிறது. இதனால், கொங்குநாடு முழுதும் இவன் ஆட்சிக்குட் பட்டிருந்ததென்பது பெறப்படுகிறது. ‘பாரியூர்க் கல்வெட்டொன்றில், நறையூர் நாடு (வட கொங்கு), பொங்கலூர்க்கா நாடு, தென்கரை நாடு, அண்ட நாடு, தலையூர் நாடு, வடகரை நாடு, மணலூர் நாடு, அரைய நாடு, கிழங்கு நாடு, வெங்கல நாடு, தட்டைய நாடு, இடப் பிறத்தி நாடு, காங்கய நாடு, வீர சோழவள நாடு, வலுப்புக்கா நாடு, குறுப்பு நாடு, வடபாரிச நாடு, காஞ்சிக் கோயில் நாடு, பூந்துறை நாடு- ஆகிய கொங்கின் இருபது உள்நாடுகளைக் குறிப்பிட்டு, அந்நாடுகளிலுள்ள கொடுமுடி, கரூர், திருமுக் கூடல், வெஞ்ச மாக் கூடல், திருமுருகன் பூண்டி, அவிநாசி, அன்னியூர் முதலிய கோயில்களின் வருமானம் நாட்படிச் செலவுக்கே போதுமான தாயிருப்பதால், அக்கோயில்கள் அரசுக்குச் செலுத்தும் ஒட்டச்சு என்ற வரியை நீக்கி விட்டதாக அக்கோயில்களின் குருக்கள் களுக்கும், காணியாளர்களுக்கும் அரசன், ஆணையிட்டுள்ள தாகக் காணப்படுகிறது. மேலும், 1. அரசனது ஓலை காட்டினாலும் கோயில் அதிகாரிகள் வேறு வரிகள் கொடுக்க வேண்டியதில்லை. 2. நாட்டுத் தலைவர்கள் கேட்டாலும் அவர்கள் கொடுக்க வேண்டிய தில்லை. 3.அரசனுடைய கைமுத்திரையுள்ள கட்டளைகளுக்கு ஒரு பணமும், அரசனது உடன்பாட்டின் பேரில் வெளியிட்ட கட்டளை களுக்கு ஒரு பணமு மட்டும் கொடுக்கலாம். 4. அரசனுடைய அலுவலாளர்களுக்கு வழிச் செலவோ, உணவோ, ஒரு பிடி அரிசியோ கூடக் கொடுக்க கூடாது. 5.மேலே சொன்ன இரண்டு பணங்களும் முன் பெற்றுக் கொண்டிருந்த வர்களுக்கே கொடுக்க வேண்டும். 6.அரசன் கட்டளைப்படி அரசுக்குச் சேர வேண்டிய 600 அச்சும், தொண்டைமானாருக்குக் கொடுக்க வேண்டிய 100 அச்சும் கட்டின பிறகு வேறொன்றும் கொடுக்க வேண்டிய தில்லை. 7. இத்திட்டங்களைக் கல்லிலும் செம்பிலும் பொறிக்க வேண்டியது என்பது காணப்படுகிறது. அச்சு-ஒருவகைப் பொன் நாணயம். வராகன் எட்டுக் கொண்டது ஓர் அச்சு. 32 குன்றிமணி-ஒரு வராகன் எடை. இதனால், பணங்கையாடல், அரசுக்குப் புறம்பானவர் வரி வாங்குதல், மிகுதியாக வாங்குதல் போன்ற ஊழல்கள் மலிந்து விட்டதனால் அரசன் இவ்வாறு கடுமையான கட்டளை பிறப்பிக்க வேண்டி நேர்ந்த தென்று தெரிகிறது. முத்தூர்க் கல்வெட்டொன்று, கோயில் வருமானத்திலிருந்து சில குடிகளுக்குக் கடன் கொடுக்கப்பட்டதென்று கூறுகிறது. காவேரிபுரம் சலகண்டேசுரர் கோயில் கல்வெட்டு கள்ளைப் பாழி தாருவனம் பொழில் சேரமான் சக்கரவர்த்தியை நடைகொண்ட நாட்டுக் குடியானவன் என்பவன், அக்கோயிலைக் கற்கோயிலாகக் கட்டியதாகக் கூறுகிறது. இதில், சேரமான் தோல்வி குறிப்பாகக் கூறப்படுகிறது. தாராபுர வட்டத்துக் கொங்கூர் என்கின்ற சயங் கொண்ட சோழநல்லூர்க் கல்வெட்டால் கொங்கூர் என்பது, கொங்கு நாட்டின் சான்றாக உள்ளமை பெறப்படும். இனி, விசயமங்கலத்துக் கல்வெட்டொன்றில், வீர சங்க நாதப் பெரும் பள்ளிக்கு நில தானம் செய்தது. கூறப்படுவ தால், ஒரு சைவ மன்னன் ஆட்சிக் காலத்தில் சமணப் பள்ளிக்கு நில தானம் செய்யப்பட்டது, அன்று சமயப் பூசல் இன்மை பெறப் படுவதோடு, அன்றைய விசயமங்கலத்துச் சமணச் செல்வாக்கு நிலையும் பெறப்படும். பள்ளி-சமணர் இருக்கை, சமணக் கோயில். நடுவச்சேரிக் கல்வெட்டு, சீபூமன் நம்பி என்ற வணிகன் மனைவி சோழன் உமை என்று குறிப்பிடுவதால், அன்று குடி மக்களில் பெண்பாலரும் அரசன் பெயர் வைத்துக் கொண்டமை பெறப்படும். 7. வீரசோழன் (1183-1206): இவன், குலோத்துங்கன் மகன். இவன் பரகேசரி. சங்கிராம நல்லூர்க் கல்வெட்டொன்று, இவனை ‘இருகொங்கையும் ஆண்டவன்’ குறிப்பிடுகிறது. சேலம் மாவட்டத்து அரூர் வட்டத்துத் தீர்த்த மலையில் இவன் தந்தை கல்வெட்டிருப்பதால், அவனே சேல மாவட்டம் முழு வதையும் தன்னாட்சிக்குட் படுத்தியவனாவன். அக் காலத்தே சேல மாவட்டத்தின் வடபகுதி ஓய்சளர் ஆட்சிக்குட்பட்டிருந் தமையால், இவனோ, இவன் தந்தையோ ஒய்சளரை வென்று அப்பகுதியைப் பிடித்திருக்கலாம். மேலும், அதே சங்கிராம நல்லூர்க் கல்வெட்டு, ‘சேரனை வெந்கண்ட சோழன் பெருவழி’ என்பதால், அவ்விடத்தில் நடந்த போரில், இவனோ, இவன் தந்தையோ ஒரு சேர மன்னனை வென்றிருக்கலாம். எனவே, கொங்கு நாடு முழுமையும் இவன் ஆட்சிக்குட்பட்டிருந்தமை பெறப்படும். அன்னூர்க் கோயில் கல்வெட்டொன்றில், அக்கோயில் வரிகளை வசூலிப்பதற்காகப் பல ஊர்க்குடிகளுக்கு மன்றாடி என்ற வரியில் 5 பங்கு கொடுத்திருப்பதாகக் குறிக்கப்படுவதால், அக்காலத்தே நாட்டதிகாரிகட்கு மன்றாடி என்ற பெயர் வழங்கிய தன் பொருள் புலப்படுகிறது. மசக்காளி மன்றாடி, கோபண மன்றாடி, நல்ல தம்பிச் சர்க்கரை மன்றாடிஎனக் காண்க. அக்கல்வெட்டில், வடபாரிச நாட்டு வெள்ளைப்பாடி என்ற ஊர்க்கு வீர சோழ நல்லூர் என, இவன் பெயர் இடப்பட்ட தாகக் குறிக்கப்பட்டுள்ளது. 8. வீரராசேந்திரன் (1206-1255): இவன், வீரசோழனுக்கு இன்ன முறையினன் என்று தெரியவில்லை. இவன் கொங்குச் சோழமன்னர்களில் பெரும் புகழ்பெற்றவன். இரு கொங்கையும் ஆண்டவன். அதாவது, கொங்கு நாடு முழுவதையும் ஆண்டவன். இவன் இராசகேசரி இவன் கல்வெட்டுக்கள் 161 கிடைத்துள்ளன. இவன் 49 ஆண்டுகள் ஆண்டிருக்கிறான். திரிபுவன சக்கரவர்த்திகள், உலகுடைய பெருமாள், கோனேரின்மை கொண்டான், இருகொங்கும் ஆண்டவன் என்பன இவன் பட்டப் பெயர்கள். இவன் கரைவழி நாட்டின் மீது படையெடுத்தபோது, பல ஊர்களும், கோயில்களும் அழிவுற்றன. அதற்காக இவன், கரை வழி நாட்டுப் பலகோயில்களுக்கு, வைகாவி நாட்டு இரட்டையன் பாடி என்ற ஊரைத் தானம் செய்தனன். வைகாவி நாடு- பழனி சூழ்ந்த பகுதி. கரைவழி நாடு-அமராவதிக் கரைப்பகுதி. முன்னது-கொங்கு இருபத்து நான்கு நாடுகளுள் ஒன்று. பின்னது - இணைநாடு. கரைவழி நாடு, தலைநகர்க்கு (தாராபுரம்) அண்மையிலே இருப்பதால், திறை கொடாதாரை அடக்கி அமைதியை நிலைநாட்டப் படை யெடுத்திருக்கலாம். கரைவழி நாட்டு உலகுடைய பிராட்டி சதுர்வேதி மங்கலத்து நிலத்தை, பாண்டி மண்டலத்துக் கீழ் இரணிய முட்ட நாட்டுத் திருமாலிருஞ்சோலை அழகர் கோயிலில், ஆழ்வார் பதின்மர்க்கு வழிபாடு நடத்தற்காகத் தானம் .செய்ததாகக் குமரலிங்கம் கல் வெட்டுக் கூறுகிறது. இரணிய முட்டம் என்பது, பெருங் கௌசிகனார் என்னும் சங்ககாலப் புலவர் நாடு. இவரால் பாடப் பட்டதே பத்துப்பாட்டில் ஒன்றான, மலைபடு கடாம் குமரலிங்கம் விசுவநாதர் கோயிலில், அதிராசராசன் திருமடை வளாகத்தில் ஒரு மடமும், கொழுமம் முத்திரட்டீ சுர முடையார் கோயிலுக் கருகே திருநீறிட்டான் திருமடம் என ஒரு மடமும், சோழமாதேவியிலுள்ள கோயிலுக்கு மேற்கில் ஒருமடமும் இருந்தன. கச்சிராயன் என்பான், கரைவழி நாட்டுக் கொழுமம் வீரசோழீசுவர முடையார் கோயிலில், நித்தநின் றாடுவார் கோயிலைக் கட்டியதாகச் சங்கிராம நல்லூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. இக்கச்சிராயன் கொங்கு நாட்டில் பல கோயில்களைப் புதுப்பித்தவன் என்று, சோழர் பூர்வ பட்டயம் என்ற நூல் கூறுகிறது. இவ்வீர சோழன் காலத்தே கொங்கு நாட்டில் பல கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டன. 9. இரண்டாம் விக்கிரமன் (1255-1263): இவன், வீர ராசேந்திரன் மகன், இவன் பரகேசரி, இவன் கல்வெட்டுக்கள் 26 கிடைத்துள்ளன. அன்னூர்க் கல்வெட்டொன்றில், துளுநாயகர் முதலி என்ற பெயர் காணப்படுகிறது. இவன், துளு நாட்டி லிருந்து குடிவந்த படைத் தலைவனாக இருக்கலாம். முதலி-படைத் தலைவன். இன்றும் கொங்கு நாட்டில் துளுவவேளாளர் இருந்து வருகின்றனர். இவன், தன் தந்தையின் பெருநாட்டை அமைதியாக ஆண்டு வந்தான். 10. ஒரு இராசகேசரி (1263-1273): இரண்டாம் விக்கிரமன் 1263 இல் பட்டம் துறந்தான். மூன்றாம் விக்கிரமன் 1273 இல் பட்டத்திற்கு வந்தான். இவர்கள் இருவரும் பரகேசரிகள். எனவே, இவ்விருவர்க்கும் இடையே ஒரு இராசகேசரி இருந் திருக்க வேண்டும். அவன் பெயரும் தெரிய வில்லை. அவனைப் பற்றிய கல்வெட்டுக்களும் இல்லை. எனவே, அவன் குறுகிய காலத்தில் யாதொரு செயலும் செய்யாமல் மறைந்திருக்க வேண்டும். அவன் காலத்தில் கொங்குச் சோழர் ஆட்சி வலிகுன்றி யிருக்கலாம். காரணம், தெற்கே இருந்து வீர பாண்டியன் (1253-1263) கொங்கு நாட்டின் பெரும் பகுதியைப் பிடித்துக் கொண் டான். வடக்கே கங்க நாட்டை ஆண்ட ஒய்சளர்கள், கொங்கு நாட்டின் வடபகுதியைப் பிடித்துக் கொண்டார்கள். ஆகவே, இவன் பெயருக்கு மட்டும் அரசனாக இருந்து வந்திருக்க வேண்டும். 11. மூன்றாம் விக்கிரமன் (1273-1303): இவன்தான் கொங்குச் சோழரின் கடைசியரசன். இவனைப் பற்றிய ஒன்றி ரண்டு கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவன் தாராபுரத்தைச் சுற்றியுள்ள பகுதியை மட்டும் ஆண்டு வந்திருக்கலாம். அப்படி யிருந்தும் இவன், பரகேசி வர்மன், திரிபுவன சக்கர வர்த்திகள், பரகேசி சிற்றம்பல முடையான்- என்ற பட்டங்களை விட வில்லை. கி.பி. 1265இல் கொங்கு நாட்டில் பாண்டியர் ஆட்சி ஏற்பட்டு விட்டதால், கடைசிக் கொங்குச் சோழர்களிருவரும் பாண்டியர் கீழ்ச் சிற்றரசர்களாக இருந்து வந்தனர் என்பதை அறியவும். கரிகாற் சோழன்: இப் பெயர் மட்டும் கொண்ட கல் வெட்டுக்கள் கொங்கு நாட்டில் 9 கிடைத்திருக்கின்றன. அவை 2 முதல் 12 வரை உள்ள ஆட்சியாண்டுகளில் பொறிக்கப் பட்டு ள்ளன. ஆனால். சக ஆண்டு குறிக்கப்படவில்லை. பேரூரில் 6உம், சாமளாபுரத்தில் ஒன்றும், குமரலிங்கத்தில் இரண்டும் உள்ளன. இவன் பெயரால் பேரூர் நொய்யலாற்றங்கரையில் கரிகாற் சோழன் துறை என்ற படித்துறை இன்றும் இருக்கிறது. பேரூர்ப் புராணத்தில் கரிகாற் சோழன் பட்டீச் சுரரை வழிபட்டுள்ள தாகக் கூறப்பட்டுள்ளது. சோழர் பூர்வ பட்டயம் என்ற நூலின் படி கரிகாற் சோழன் பேரூர்ப் பட்டீசுரர் கோயிலைக் கட்டு வித்தான். கொங்கு நாட்டில் 36 கோயில்களை இவனே கட்டு வித்தான். இது மிகையுரையாக இருக்கலாம். ‘நன்மை தீமைகளுக்கு இரட்டைச்சங் கூதுதல், போகும் போது செருப்புப் போட்டுக் கொள்ளுதல், இரட்டை மாடி வீடு கட்டுதல், வீட்டுக்குக் காரை போடுதல்’ ஆகிய உரிமைகளை - தென்கரை நாடு, வெங்கால நாடு, காஞ்சிக் கோயில் நாடு, தலையூர் நாடு முதலிய ஏழு நாடுகளில் வாழும் கம்மியர்களுக்கு இவன் வழங்கினான். அது பற்றிய கல்வெட்டு - பேரூர், முடச்சூர், பாரியூர், குடிமங்கலம், கரூர் ஆகிய ஐந்தூர்க் கோயில்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்குமுன் அவர்கட்கு அவ்வுரிமை இல்லை என்பது பெறப்படுகிறது இவ்வாறே அபிமான சோழன் என்பான் திருமுருகன் பூண்டிக் கோயிற் பணியாளர்க்கு இத்தகைய உரிமைகள் வழங்கியதாகத் திரு முருகன் பூண்டிக் கல்வெட்டுக் கூறுவதை முன்பு கண்டோம். கரூர்ப் பசுபதீசுரர் கோயிற் கல்வெட்டில், ‘திரிபுவன சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான், வெங்கால நாட்டுக் கண்மாளர்க்கு -நன்மை தீமைகளுக்கு இரட்டைச் சங்கூதி...சொன்னோம், என்றிருக்கிறது. (கொங்கு மண்டல சதகம்-90. குறிப்பு) ‘திரிபுவன சக்கரவர்த்திகள். கோனேரின்மை கொண்டான்’ என்பன கரிகாலனுடைய பட்டப் பெயர்கள். ‘கோனேரின்மை கொண்டான்’ என்பதை-உத்தமச்சோழ வீரநாராயணன், குலோத் துங்கன், வீரராசேந்திரன் ஆகிய கொங்குச் சோழர்களும். வீர பாண்டியனும் வைத்துக் கொண்டுள்ளனர். கோன் நேர் இன்மை கொண்டான்- பிற மன்னர்களைத் தனக்கு ஒப்பின்மையாகக் கொண்டவன்; அதாவது. மதியாதவன் என்பதாம். இக்கரிகாற் சோழன் என்பான், தஞ்சையில் பட்டம் கட்டிக் கொண்டு கொங்கு நாட்டை ஆண்டு வந்ததாகக் ‘கொங்கு தேசராசாக்கள்’ என்னும் நூல் கூறுகின்ற அறுவரில், ஐந்தாம வனான ஆதித்தகரிகாலன் (956-969) ஆவான். இவன் தஞ்சையி லிருந்து சோழ நாட்டை ஆளவில்லை. இளவரசு பட்டம் கட்டு வதற்கு முன்னரே ஆணையாளனாக இருந்து கொங்கு நாட்டை ஆண்டு வந்தவனாவன். அதனாலேயே இவன் கல்வெட்டுக் களில் சக ஆண்டு குறிக்கப்படவில்லை. இவன் இரண்டாம் பராந்தகச் சோழன் மூத்த மகன், கி.பி.966 இல் பராந்தகன் இவனுக்கு இளவரசுப் பட்டங் கட்டினான். இவனொரு பெருவீரன்; வீர பாண்டியனைக் கொன்று, ‘வீர பாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி’ என்று பாராட்டுப் பெற்றவன். 969 இல் சில வஞ்சகர்களால் கொல்லப்பட்டான். 12வது ஆட்சி ஆண்டு வரை இவன் கல்வெட்டுக்கள் கிடைத் திருப்பதால், இளவரசுப் பட்டங் கட்டுவதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னிருந்து ஆணையாளனாக இருந்து இவன் கொங்கு நாட்டை ஆண்டு வந்திருக்கலாம். அவ்வாண்டிலிருந்தே, சக ஆண்டு குறிக்காமல் கொங்கு நாட்டு ஆட்சி ஆண்டுடன் தன் பெயரால் கல் வெட்டுக்கள் வெளியிட்டு வந்திருக்கலாம். 3. கொங்குப் பாண்டியர்-1265-1304 ‘ஆறிடு மேடும் மடுவும்போல் ஆம் செல்வம்’ என்பது, அரச வாழ்வுக்கு விலக்கான தன்று. கி.பி. 900 முதல் 1190 வரை பாண்டியர் சோழர்க் கடங்கியவராக இருந்து வந்தனர். 1190க்குப் பின் மறுபடியும் பாண்டியர் பேரரசராயினர். முதல் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190-1216) என்பான், மறுபடியும் பாண்டியப் பேரரசுக்கு அடிகோலினான். அவனுக்குப் பின் ஐந்தாமவனாக முதல் சடைய வர்மன் சுந்தர பாண்டியன் (1251-1271) பட்டத்திற்கு வந்தான். இவனொரு பெருவீரன்; சிறந்த அரசியலறிவுடையவன். இவனுக்கு முன் கொங்கு நாட்டாட்சியைப் பாண்டியர் நேரடியாக நடத்த வில்லை. இவன் காலத்தில் பாண்டியப் பேரரசு தமிழக முழுவதையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருந்தது. அப்போதுதான் கொங்கு நாடு முழுவதும் பாண்டியரின் நேரடியாட்சிக்கு வந்தது. தான் வென்று கைப்பற்றிய நாடுகளைத் தோற்ற வரிடமே விட்டுத் திறை பெற்று வருவது சரியான ஆட்சி முறை அல்ல வென்பதை இவன் உணர்ந்தான்; கொங்கு நாட்டை ஆள்வதற்குத் தம் மரபு இளவரச னொருவனை ஆணையாளனாக ஏற்படுத்தினான். அவ்வாணையாளன் தன் பெயராலேயே கல்வெட்டுக்கள் வெளியிடல் முதலிய உரிமையோடு கொங்கு நாட்டை ஆண்டு வந்தான். அவ்வாறு கொங்கு நாட்டை ஆண்ட பாண்டியர்களை, வாலாற்றாசிரியர்கள். ‘கொங்குப் பாண்டியர்’ என்றழைத் தனர். இக்கொங்குப் பாண்டியர் வேறு மதுரைப் பாண்டியர் வேறு என்பதை அறியவும். 1. வீரபாண்டியன் (1265-1285): இவனே முதல் கொங்குப் பாண்டியனாவன். ஏறக்குறைய இவன் ஆட்சி கோவை மாவட்டம் முழுவதும் பரவியிருந்தது எனலாம். இவன் கல் வெட்டுக்கள் 63 பதியப் பெற்றுள்ளன. திரிபுவன சக்கர வர்த்திகள், கோனேரின்மை கொண்டான், கோராச கேசரி வர்மன், கோமாறவர்மன் என்பன இவன் பட்டப் பெயர்கள். இவனே இராசகேசரி என்ற சோழர் பட்டத்தையும், மாற வர்மன் என்ற பாண்டியர் பட்டத்தையும் சூட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்க செய்தியாகும். இவன் காலத்திலேதான் கொங்குச் சோழர்களில் ஒரு இராசகேசரி (1263-1273) கொங்கு நாட்டை ஆண்டிருக்கிறான். அவன் இவன் கீழ்ச் சிற்றரசனாக ஒரு பகுதியை ஆண்டு வந்திருக்கலாம். அவன் கல்வெட் டொன்றும் வெளியிடாததன் காரணம் இதுவேயாம். அதனா லேயே இவன் இருவர் பட்டங்களையும் சூட்டிக் கொண்டான் போலும். அவிநாசியில் இவன் பெயரால் ஒரு தெரு இருந்தது. வாகைப்புத்தூர் என்னும் ஊரில், வீரபாண்டிப்பேரேரி என்ற ஏரியொன்று இவன் வெட்டுவித்துள்ளான். கோவையின் வடக்கிலுள்ள பெரிய நாயக்கன் பாளையத்தை அடுத்த வீர பாண்டி என்னும் ஊர், இவன் பேரால் ஏற்பட்ட ஊரேயாகும். இவன் காலத்தில் தெலுங்கச் சோழன் கண்ட கோபாலனும், காகதீய மன்னன் கணபதியும் இருந்தனர். 2. சுந்தரபாண்டியன் (1285-1300) இவனைப் பற்றிய 40 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. இவனும் ஏறக் குறையக் கோவைக் கோட்டம் முழுவதையும் ஆண்டு வந்தான். இவன் ஆட்சிக் காலத்தேதான், இவன் கீழ்ச் சிற்றரசனாக மூன்றாம் விக்கிரமச் சோழன் (1273-1303) கொங்கு நாட்டின் ஒரு பகுதியை ஆண்டுவந்தான். வாரக்க நாட்டுச் சூரலூரை, இவன் தன் பெயரால் சுந்தர பாண்டிய நல்லூர் என மாற்றினான். அவ்வூரின் பக்கத்தே உள்ள ஒரு ஆற்றில் அணை கட்டி, அதிலிருந்து கால்வாய் வழியாக ஒரு பெரிய ஏரியில் நீரைத் தேக்கி வயல்களுக்குப் பாய்ச்சப்பட்டது. அணை, கால்வாய், ஏரி முதலியவற்றைக் கண்காணித்து வர ஒருவனை ஏற்படுத்திஅவனுக்கு ஒரு நிலத்தை இறையிலியாக விட்டிருந்ததாகக் குரக்குத்தளிக் கல்வெட்டால் தெரிகிறது. குரக்குத் தளி-திருப்பூர்க்கு 6கல் கிழக்கில் உள்ளது. கோவைக்கும் திருப்பூர்க்கும் இடையிலுள்ள சூலூரே (புகை வண்டி நிலையம்) இச்சூரலூர் ஆகும். இவன் காலத்திற்குப் பிறகு, மதுரைப் பாண்டியர் ஆட்சி தளர்ச்சியடையத் தொடங்கியது. அதனால், கொங்குப் பாண்டியர் ஆட்சியும் தளர்வுற்றது. வடக்கில் கங்க நாட்டை ஆண்ட ஒய்சள அரசுப் பெருக்கமும் இதற்குக் காரணமாகும். இவனுக்குப் பின், 1300-1335 வரை மூன்று கொங்குப் பாண்டியர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஒய்சளர் கீழ்ச் சிற்றரசர்களாக இருந்திருக்க வேண்டும். அம்மூவர் கல்வெட்டுக் களிலும் ஆட்சியாண்டு முதலியன குறிக்கப்பட வில்லை. 3. குலசேகர பாண்டியன்: இவனைப்பற்றிய 3 கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. திரிபுவன சக்கரவர்த்தி என்று பட்டம் வைத்துக் கொண்டுள்ளான். 4. திரிபுவன வீர பாண்டியன்: இவனைப் பற்றிய 3 கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. பாரியூர்க் கல் வெட்டில், போசள நாட்டு மாம்பள்ளி மல்லைய சாகனியின் உறவினனான முடி கொண்ட சாகணி என்பான், ஒரு கதவும் நிலவும் கொடுத்த தாகக் காணுதலால், அக்காலத்தே பாரியூர்க் கோயில் திருப்பணி நடந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. போசள நாடு என்பது-கொள்ளேகால் வட்டத்தின் மேற்கில் இருந்தது. 5. சடையவர்மன் சுந்தரபாண்டியன்: இவனைப் பற்றிய 13 கல்வெட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. களந்தை ஆதிபுரீசுரர் கோயில் கல்வெட்டில் சுந்தர பாண்டியபுரத்து நகரத்தார், வாயிரக்கா நாட்டுக் (வாரக்கநாடு) களந்தை ஊராளிக்கு 20 பணம் கொடுத்து, அவ்வூர்க் குடிமக்கட்கும் அவர் களுடைய கால் நடை முதலிய சொத்துக்களுக்கும் பாடிகாவல் செய்து தரும்படி ஒப்பந்தம் செய்து கொண்டார்களென்று காணப்படுகிறது. இதனால் அக்கால நாட்டு நிலை ஒருவாறு புலப்படும். இவனுடன் கொங்குப் பாண்டியர் ஆட்சி முடிவுற்றது. 4. கொங்கு நாடும் சேரரும் தமிழகத்தில் ஏற்பட்ட வடவராட்சிக்குப்பின், கி.பி, 575இல் பழையபடி பாண்டியப் பேரரசு ஏற்பட்டது. பாண்டிய மன்னர்களின் பெரு முயற்சியால், பல்லவப் பேரரசு ஒழிந்து, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் மறுபடியும் சோழப் பேரரசு ஏற்பட்டது. ஆனால். அதன் பின்னர்ச் சேரப் பேரரசு ஏற்படவே இல்லை. அது பல சிற்றரசுகளாகச் சிதறி விட்டது. பெருமாள் என்னும் பெயருடன் ஒரு சில சேர மன்னர்கள் சேர நாட்டை ஆண்டு வந்ததாகக் காணப்படுகிறது. (துடிசைக் கிழார் - சேரர் வரலாறு). அவராவார். 1. முதலாம் குலசேகரப் பெருமாள் 2. சேங்கால் வீரராகவப் பெருமாள் 3. இரண்டாம் குலசேகரப் பெருமாள் 4. பாற்கர இரவிவர்மன் 5. மூன்றாங் குலசேகரப் பெருமாள் இவர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்தி ஒன்றும் இல்லை. 6. முதலாம் சேரமான் பெருமாள் (667-712): இவர், 63 சிவனடியார்களி லொருவர்; பெருமாக்கோதை என்னும் பிள்ளைப் பெயரையும், கழறிற்றறிவார் என்னும் சிறப்புப் பெயரையும் உடையவர். திருக்கைலாய ஞான உலா இவர் பாடியதே. இவர் காலத்தவரே, சுந்தரர். எனவே, இவர் பெயருக்கு மட்டும் சேர அரசர் வரிசையில் உள்ளவராவர். 7. தம்பிரான் தோழன் பெருமாள்: வரலாற்றுச் செய்தி ஒன்றும் இல்லை. 8. இரண்டாம் சேரமான் பெருமாள் (754-798): முதலாம் சேரமான் பெருமாள், சைவ அடியார் ஆனது போல், இவர் வைணவ ஆழ்வார் பன்னிருவரில் ஒருவரானார். குலசேகர ஆழ்வார் என்பது, இவரது சிறப்புப் பெயர். நாலாயிரப் பிரபந்தத்திலுள்ள, பெருமாள் திருமொழி இவர் பாடியதே. 9. மார்த்தாண்டவர்மன்: இவன், இரண்டாம் சேரமான் பெருமாளின் மகன். வேணாட்டடிகள் என்னும் பெயருடன் திருவாங்கூர்ப் பகுதியை ஆண்டு வந்தான். இப் பெயரே, திருவாங்கூர் அரசர்க்கு வழிவழியாக வழங்கி வந்தது. பின்னர், தந்தைக்கு மாறாக இவர் சைவப்பற்று மிக்கவரானார். வேணாட் டடிகள் திருவிசைப்பா என்பது, இவர் பாடியதே. 10. மூன்றாம் சேரமான் பெருமாள் (798-834): இவனே பெருமாள் மரபில் கடைசி மன்னன். கி.பி. 834இல் இவன் சேர நாட்டை 12 பாகமாகப் பிரித்துப் பன்னிருவர்க்குக் கொடுத்து விட்டு, முகமதிய சமயத்தைத் தழுவி, மெக்காவுக்குச் சென்று விட்டனன் (துடிசைக்கிழார்-சேரர் வரலாறு). அப்பன்னிருவரும் தனியாட்சி நடத்திவந்தனர். அப்பன்னிரு நாடுகளாவன; 1. கோழிக்கோடு 7. சிரக்கல் 2. வள்ளுவ நாடு 8. கடத்த நாடு 3. கொச்சி 9. பாலக்காடு 4. திருவிதங்கூர் 10. பெய்ப்பூர் 5. குறும்பரநாடு 11. பரப்பநாடு 6. கோட்டயம் இது, இருபகுதி. இப்பன்னிரு நாடுகளில், கொங்கு நாட்டுக்கு அணித்தா யுள்ளவை பாலக்காடும், கோழிக்கோடும் ஆகும். கோயிற் கோட்டை என்பதே, கோழிக்கோடு எனத்திரிந்து பின் கள்ளிக் கோட்டை ஆனதாம். கொங்கு நாட்டைச் சேர்ந்த வள்ளுவ நாட்டின் மேல்பகுதியைச் சேரர் கைப்பற்றிக் கொண்டனர். இவ்விரு நாட்டுத் தலைவர்களும் கொங்கு நாட்டோடு அடிக்கடி குறும்பு செய்து கொண் டிருந்தனர். பாலக் காட்டுக் கணவாய் இதற்கு ஏதுவாக இருந்தது. கோவைக்கு 5 கல் தென் கிழக்கில், அதாவது, கோவையை அடுத்த போத்தனூரின் கிழக்கில் உள்ளது வெள்ளலூர் என்னும் பழைய ஊர். அவ் வெள்ளலூர்க் கல்வெட் டொன்றால், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில், மலை நாட்டு மன்னர்கள் அவ்வெள்ள லூர் வரை வந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அக்கல் வெட்டில், கோக்கண்டன் வீர நாராயணன், கோக்கண்டன் இரவிகோதை என்ற இருசேர மன்னர்கள் பெயர் காணப் படுகின்றன. இவர்களைச் ‘சந்திர சூரிய மரபின் இரத்தினங்கள்’ என்கின்றது அக்கல்வெட்டு. சேரர், சூரிய மரபினர் என்கின்றது நாமக்கல் கல்வெட்டொன்று. தமிழ் இலக்கியங்களில் இக் குறிப்பு இல்லை. பாண்டிய சோழ மரபுப் பெண்வழித் தோன்றியவர்களாக இருக்க வேண்டும் இவர்கள். மற்றொரு வெள்ளலூர்க் கல்வெட்டு, வரகுணபராந்த கன் என்ற சேரமன்னனை, சந்திராதித்திய குலதிலகன் என் கின்றது. இவன் கி.பி. 862-88 இல் இருந்த வரகுண பாண்டியன் பெயரையும், 907-953 இல் இருந்த முதற்பராந்தகச் சோழன் பெயரையும் வைத்துக் கொண்டனன் என்று தெரிகிறது. வெள்ள லூர்க் கவ்வெட் டொன்றில், அவ்வூர் வள்ளலூர் அல்லது அன்னதான சிவபுரி என்று காணப்படுகிறது. எனவே, அக்காலத்தே அவ்வூர் ஒரு சிறப்புடைய நகராக இருந்திருக் கலாம். முன்னர் அவ்வூரில் மேனாட்டு வணிகர் தங்கி வாணிகம் செய்து வந்தனர். முட்டம் கல்வெட்டொன்றில், அதிராசராசன், இராச ராசன்; என்னும் சேரமன்னர்கள் இருவர், முட்டம் நாகேசுவரர் கோயிலுக்கு நிலதானம் செய்தது குறிக்கப் பட்டுள்ளது. அந்நிலங்கள் முட்டம் என்ற ஊரில் இருந்தன. முட்டம் என்னும் ஊர்-கோவைக்கு மேற்கில், வெள்ளிமலை அடி வாரத்தில் காஞ்சியாற்றின் (நொய்யல்) கரையிலுள்ள ஒரு பழைய ஊர். அக்காலத்தில் அதற்கு இரவி வர்ம சதுர்வேதி மங்கலம், அமரபுசங்க நல்லூர் என்ற சேரநாட்டுப் பெயர்கள் வழங்கி வந்தன. இக்கல்வெட்டில் கண்ட தான நிலங்களை வீரராசேந் திரச் சோழன் (1206-1255) புதுப்பித்ததாக, அவனது 27 வதாண்டு முட்டம் கல்வெட்டால் தெரிகிறது. பழனியில் சேரமன்னர்கள் கல்வெட்டுக்கள் பல உள்ளன. அவற்றில் காணும் சேர மன்னர்கள் பெயர்களாவன: 1. வீர நாராயண வீரகேரளன் 2. வீர கேரள வீரநாராயணன் 3. வீரகேரள அமரபுசங்கன் 4. வீர கேரள அதிராசராசதேவன் 5. கேரள அதிராசராச ஸ்ரீ இராசராசதேவன் என்பன. அமராவதி ஆற்றோரமாக உள்ள கோயில்களிலும் சேர மன்னர்கள் கல்வெட்டுக்கள் பல உள்ளன. ஊர், கோயில், மூர்த்தி களின் பெயர்களுங்கூடச் சேரர் பெயர்களாக உள்ளன. வீர நாராயண வீரகேரள மன்னனின் 11வதாண்டுப் பழனிக் கல்வெட்டில், இரவிமங்கலம் என்ற ஊர்ப்பெயரும் 8 வதாண்டுக் கல்வெட்டில், கோதை மங்கலம், அமரபுசங்கம் என்ற ஊர்ப் பெயர்களும் காணப்படுகின்றன. மேலும், வீர நாராயண அதிசயச் சோழன் என்ற பெயரில் நான்கு கல்வெட்டுக் களும், அதிராசராசதேவன் 40 வதாண்டுக் கல்வெட்டொன்றும் உள்ளன. அதிராசராசனுக்கு-அதிசயச்சோழன் என்ற பெயரும் உண்டு. இதுகாறும் கண்டவற்றால், கிழக்கே வெள்ளலூரையும் மேற்கே முட்டத்தையும் உள்ளடக்கிய பேரூர் நாட்டினும், பழனிப் பகுதியான வைகாவூர் நாட்டினும், அமராவதிக் கரையிலுள்ள கரைவழி நாட்டினும் அன்று சேரர்கள் ஆதிக்கம் இருந்து வந்ததென்பதை அறியலாம். கோவைக்கு 25கல் தென்மேற்கில் சித்தூர் என்ற ஊர் இருக்கிறது. அது சேர நாட்டைச் சேர்ந்தது. அவ்வூர் அம்மன் பெயர் - சித்தூரம்மன் என்பது. ஆண்டுக்கொரு முறை நடக்கும் அவ் வம்மன் திருவிழாவில், ‘கொங்கப்படை’ என்ற நிகழ்ச்சி யொன்று நடந்து வருகிறது. கொங்கு நாட்டரசன் சேர நாட்டின் மீது படை யெடுத் தான். சித்தூர் என்னும் இடத்தில் சேரர்க்கும் கொங்கர்க்கும் போர் நடந்தது. கொங்கரை எதிர்த்து நிற்க முடியாமையால் சேரர் சித்தூரம்மனை வேண்ட, அவ்வம்மன் தோன்றிக் கொங்கு நாட்டரசனை வெட்டி, அவ்வாளை ஆற்றில் கழுவினாள். அதனால் அவ்வாற்றிற்கு, வாளையாறு (வாள் ஆறு) என்று பெயர் ஏற்பட்டது எனக் கொங்கப் படைக் கதை வழங்குகிறது. கொங்கப்படை மூலமுறி என்ற ஓலைச்சுவடி, இன்றும் பாது காக்கப்பட்டு வருகிறது. இன்றும் சித்தூர்ப் பள்ளிச் சிறுமியர், இக்கதையைக் கூறும் பாடலைக் கைகொட்டிக் களிப்பாகப் பாடுகின்றனர். அது, “முத்தொடு தாமர குணமுள்ள கொங்கு இராசாதி ராச னேகேள் முந்தின நாடுவா ழாதேமந் தன்னு சங்கீத கர்ப்பா சனனாய் எத்தி தரநான் கொழிச்சங் கிருந்து தங்களை வன்னு காண்பான் ஏகேள் உதவி குடியே நாளில் இங்ஙனே வன்னு கண்டு” என்று தொடங்குகிறது. இதன்படி, சேரநாட்டின்மேற் படை யெடுத்த கொங்கு மன்னன், இராசாதி ராசன் என்று தெரிகிறது. கொங்குச் சோழர்களில், கி.பி. 1080 முதல் 1135 வரை மூன்று இராசாதி ராசர்கள் ஆண்டிருக்கிறார்கள். இவர்களில் ஒருவன் படையெடுத்திருக்கலாம். சித்தூரம்மன் திருவிழாவில் நடைபெறும் கொங்கப் படை விழாவில், கொங்குப்படை அங்கு செல்வது சேரப்படை வந்து அதைத் தடுப்பது; மற்போர், வாட்போர் முதலியன செய்து விழுந்து மாள்வது; பின்னர்க் கொங்கப் படையைச் சேரப்படை துரத்தி ஓட்டுவது போன்ற நிகழ்ச்சிகள் நடப்பதைக் காணலாம். இந் நிகழ்ச்சி முடிவில் பூசாரி கொங்கப்படைக் கதைப் பாடலைப் படிப்பான். இப்போரில் சேரர் வெற்றி பெற்றிருக் கலாம். ஆனால், தோல்வியைக் கல்வெட்டில் குறித்தல் பெரும் பான்மையும் இன்மையால், கொங்குச் சோழர்கள் கல்வெட்டில் இச்செய்தி காணப்படவில்லை. வீர சோழனுடைய 21 வதாண்டுச் சங்கிராம நல்லூர்க் கோயில் கல்வெட்டில், ‘சேரனை வெந்கண்ட சோழன் பெருவழி’ என்று காணப்படுவதால், அவ்விடத்தில் நடந்த போரில் சேரர் தோற்று, பின் சித்தூரில் நடந்த போரில் வெற்றி பெற்றிருக்கலாம். மேலும், குலோத்துங்கச் சோழன் (1149-1183) காவேரி புரங் கல்வெட்டில், ‘சேரமான் சக்கரவர்த்தியை நடை கொண்ட நாட்டுக் குடியானவன்’ என்பது காணப்படுகிறது. வீரரா சேந்திரச் சோழன் (1207-1252), சங்கிராம நல்லூர்க் கல்வெட் டொன்றில் ‘அவன் கரைவழி நாட்டின் மீது படையெடுத்த போது பல ஊர்களும் கோயில்களும் அழிவுற்றதால், வைகாவூர் நாட்டு இரட்டையன் பாடி என்ற ஊரை அக்கோயில்களுக்குத் தானம் செய்தான்’ என்று காணப்படுகிறது. இப்பகுதியைக் கைப்பற்றிய சேரர்களையே இவன் படையெடுத்துச் சென்று வென்று துரத்தி யிருக்கலாம் என்று தெரிகிறது. நில தானம் இவன் வெற்றியைக் குறிக்கும். இங்ஙனம் பல இடங்களில் தோற்ற சேரர் சித்தூர்ப் போரில் வெற்றிப் பெற்றிருக்கலாம். வீரராசேந்திரனுக்குப் பின் சோழர்கள் வலிகுன்றி விட்டனர். இந்நிலையில், வீரகேரளன் என்னும் சேரன் பெரும் படை யுடன் சேர நாட்டின் எல்லையாகிய வாளையாற்றைத் தாண்டிப் பேரூர் நாடு புகுந்தான். அப்போது எதிர்ப்பில்லாமை யால் பேரூர் நாடு முழுவதையும் பிடித்துக் கொண்டான். கோய முத்தூர், பேரூர் நாட்டின் ஓரூர். அப்போது அதற்குக் கோவன் புத்தூர் என்று பெயர். வீரகேரளன் கோயமுத்தூருக்கு-வீரகேரள நல்லூர் என்ற புதுப் பெயரிட்டான்; அப்பெயரை யே கல் வெட்டுக்களிலும் பொறித்தான். அக்கல்வெட்டுப் பேரூரிலும் குமரமங்கலத்திலும் உள்ளன. இவன் பேரூர்க் கோயிலுக்கு கண்ணாடிப் புத்தூரில் உள்ள நிலத்தைத் தானம் செய்துள்ளான். குமரலிங்கமும் கண்ணாடிப்புத்தூரும் - அமராவதிக் கரைப் பகுதியான கரைவழி நாட்டில் உள்ளன. கரைவழி நாட்டிலுள்ள கண்ணாடிப்புத்தூர் நிலத்தை இவன் பேரூர்ப் பட்டீசுவரர் கோயிலுக்குத் தானம் செய்திருப்ப தால், இவன் கோவையிலிருந்து-பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை வட்டங்கள் வரை-மேல் கொங்கின், தென் கொங்கின் மேல் பகுதி இவற்றைப் பிடித்து ஆண்டு வந்தமை பெறப்படும். இது கொண்டே ‘சேரர் கொங்கு வைகாவூர் நன்னாடு’ என்றார் அருணகிரிநாதர். ஆனால், கொங்கு நாட்டில் சேரர் ஆட்சி நிலை பெறவில்லை. காரணம், அடுத்து-பாண்டியர் கொங்கு நாடு முழுவதையும் பிடித்தாண்டு வந்தனர். 