நூற்றாண்டுநினைவுவெளியீடு புலவர்குழந்தை படைப்புகள் - 5 கொங்குகுலமணிகள் கொங்குநாடும்தமிழும் தீரன்சின்னமலை அண்ணல்காந்தி அனைத்துநூல்களும்ஒருசேரத்தொகுத்து, பொருள்வழிப்பிரித்து, காலவரிசையில் ஒரேவீச்சில்வெளிவருகின்றன. ஆசிரியர் புலவர்குழந்தை நூற்பெயர் : புலவர்குழந்தை படைப்புகள் - 5 ஆசிரியர் : புலவர்குழந்தை பதிப்பாளர் : இ. இனியன் முதல்பதிப்பு : 2008 தாள் : 16 கிவெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 288 = 304 நூல்கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா.190/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர்கணினி தி.நகர், சென்னை - 17. அட்டைவடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீவெங்கடேசுவரா ஆப்செட்பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : வளவன்பதிப்பகம் 2, சிங்காரவேலர்தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் :tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். திராவிட இயக்கச் சான்றோர்கள் வரிசையில் முன்னவர். 1906இல் தோன்றி 1973இல் மறைந்தார். 68 ஆண்டுகள் தமிடிந மண்ணில் வாடிநந்தவர். பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களால் பாராட்டப்பட்டவர். தமிழர்கள் ஆரிய சூடிநச்சியால் பட்ட அவலங்களை எண்ணி யெண்ணி நெஞ்சம் குமுறியவர். தம் நெஞ்சத்து உணர்வுகளை எதிர்காலத் தமிடிநச் சமுதாயத்திற்கு பதிவுகளாக எழுதி வைத்துச் சென்றவர். தமிடிந இன எழுச்சி வரலாற்றில் அளப்பரும் தொண்டாற்றியவர். இவர் எழுதிய நூல்கள் 29. இந்நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து, பொருள் வழிப் பிரித்து, கால வரிசைப்படுத்தி 1 முதல் 15 படைப்புகளாக ஒரே வீச்சில் வெளியிடு கின்றோம். பல்வேறு அணிகலன்கள் அடங்கிய முத்து மாலை யாகத் தந்துள்ளோம். இவர் நூல்கள் அனைத்தும் தமிடிநமொழி இன நாட்டின் மேன்மைக்கும், வாடிநவுக்கும், வளத்துக்கும் வித்திடுபவை. குறிப்பாக இராவண காவியம் படைப்பு திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல். ஆரிய எதிர்ப்பு உணர்வைக் கட்டியமைத்த இன எழுச்சிக் காவியம். தமிடிந மண்ணில் தன்மானக் கொள்கைகள் நிலைத்து நிற்பதற்கு செயற்கரிய செயல்களைத் தமிடிந இளைஞர்கள் செடீநுவதற்கு முன் வரவேண்டும் எனும் இன உணர்வோடு எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். இப்படைப்புகள் வெளிவரப் பல்லாற்றானும் துணை நின்றதமிடிநப்பெருமக்களுக்கும்,இந்நூல்களுக்கு அறிமுகவுரை தந்துதவிய பெரும் புலவர் இரா. வடிவேலன் அவர்களுக்கும், எம் பதிப்பக ஊழியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. தமிடிந ஆடீநுவாளர்களுக்கும், தமிடிந ஆர்வலர்களுக்கும் பயன் கொள்ளும் வகையில் பிழையற்ற பதிப்பக வெளிவருகின்றது. வாங்கிப் பயனடையுங்கள். (இராவண காவியம் நூலுக்கு மிகச்சிறந்த தெளிவுரை எழுதப்பட்டு வருவதால் இப்படைப்பு வரிசையில் சேர்க்க முடியவில்லை. விரைவில் வெளிவரும்.) கோ. இளவழகன் செந்தமிழ்க் குழந்தை’ பள்ளி சென்று படித்த காலம் 5 ஆண்டு எட்டு மாதம்தான்! ஆனால் திருக்குறளுக்கும், தொல்காப்பியத்துக்கும் உரை எழுதி, பேரிலக்கியம் ஒன்றைப் படைத்து, நாடகக் காப்பியம் உருவாக்கிப் பல இலக்கண நூல்களையும், வரலாற்று நூல்களையும் எழுதியவர் பெரும்புலவர் அ.மு. குழந்தை. ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த ஓல வலசில் 1.7.1906 அன்று முத்துசாமிக் கவுண்டர், சின்னம்மையார் தம்பதியினருக்கு ஒரே மகனாகப் பிறந்தவர் குழந்தைசாமி; பின்பு தன்னைக் ‘குழந்தை’ என்றே குறிப்பிட்டுக் கொண்டார். ஈரோடு லண்டன் மிஷன் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் “எலிமெண்டரி கிரேடு”, “லோயர் கிரேடு”, ஹையர் கிரேடு” ஆசிரியர் பயிற்சி பெற்ற அவர் திருவையாறு சென்று தேர்வு எழுதி 1934இல் ‘வித்துவான்’ பட்டம் பெற்றார். மொத்தம் 39 ஆண்டுகள் ஆசிரியப் பணிபுரிந்தார். பவானி மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் மட்டும் தொடர்ந்து 21 ஆண்டுகள் பணி புரிந்தார். தொடக்க காலத்தில் கன்னியம்மன் சிந்து, வீரக்குமாரசாமி காவடிச்சிந்து, ரதோற்சவச் சிந்து போன்ற பக்திப் பாடல்களைப் பாடினாலும் 1925க்குப் பின் பெரியாரின் பெருந் தொண்டராகவே விளங்கினார். ‘தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக விளங்கும் நூல் திருக்குறள்; அது மனித வாழ்வின் சட்ட நூல்’ என்ற கொள்கையுடைய குழந்தை 1943, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற திருக்குறள் மாநாடுகளில் பெரும் பங்காற்றினார். தான் எழுதிய பள்ளிப்பாட நூல்களுக்கு ‘வள்ளுவர் வாசகம்’ வள்ளுவர் இலக்கணம்’ என்று பெயரிட்டார். வள்ளுவர் பதிப்பகம் வைத்துப் பல நூல்களை வெளியிட்டார். அவற்றுள் பெரியார் நூல்கள் நான்கு. பள்ளிக்கு வெளியே வந்தவுடன் கருப்புச்சட்டை அணிந்து கடவுள் மறுப்பாளராக விளங்கினாலும் பள்ளிப் பாடங்களில் உள்ள பக்திப் பாடல்களை மிகவும் சுவைபட நடத்துவார். தான் இயற்றிய ‘யாப்பதிகாரம்’ ‘தொடையதிகாரம்’ போன்ற நூல்களில் திருஞான சம்பந்தர் தேவாரப் பாடல்கள் பலவற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அரசியல் அரங்கம், நெருஞ்சிப்பழம், காமஞ்சரி, உலகப் பெரியோன் கென்னடி, திருநணாச் சிலேடை வெண்பா, புலவர் குழந்தை பாடல்கள் போன்றவை கவிதை நூல்கள், ‘காமஞ்சரி’ பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் மனோண்மனியத்திற்குப் பின் வந்த மிகச் சிறப்பான நாடகக் காப்பியம் ஆகும். தொல்காப்பியர் காலத் தமிழர், திருக்குறளும் பரிமேலழ கரும், பூவா முல்லை, கொங்கு நாட்டு வரலாறு, தமிழக வரலாறு, தமிழ் வாழ்க, தீரன் சின்னமலை, கொங்குக் குலமணி கள், கொங்கு நாடும் தமிழும், அருந்தமிழ் அமுது, சங்கத் தமிழ்ச் செல்வம், அண்ணல் காந்தி ஆகியவை உரைநடை நூல்கள். ‘தமிழ் வாழ்க’ நாடகமாக நடிக்கப்பட்டது. தீரன் சின்னமலை பற்றி முதன்முதலில் நூல் எழுதி அவர் வரலாற்றை வெளிக் கொணர்ந்தவர் புலவர் குழந்தை. தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்குப் புதிய எளிய உரை எழுதினார். திருக்குறளுக்குப் புத்துரை எழுதியதுடன் தமிழில் வெளிவந்த அனைத்து நீதி நூல்களையும் தொகுத்து உரையுடன் “நீதிக் களஞ்சியம்” என்ற பெயரில் பெரு நூலாக வெளியிட்டார். தமிழ் அறிந்தவர்கள் அனைவரும் கவிஞராக ‘யாப்பதி காரம்’, ‘தொடையதிகாரம்’ என்ற யாப்பு நூல்களை எழுதினார். கும்மி, சிந்து ஆகியவற்றிற்கும் யாப்பிலக்கணம் வகுத்துள்ளார். இலக்கணம் கற்க நன்னூல் போல ஒரு நூல் இயற்றி ‘இன்னூல்’ என்று பெயரிட்டார். ‘வேளாளர்’ ‘தமிழோசை’ போன்ற இதழ்களையும் நடத்தினார். வகுப்பில் பாடம் நடத்தும்போது பாடல்களை அதற்குரிய ஓசை நயத்துடன் ஒலிப்பார். உரைநடைபோலத் தமிழாசிரியர்கள் பாடல்களைப் படிக்கக் கூடாது என்பது அவருடைய கருத்தாகும். தமிழைப் பிழையாகப் பேசினாலோ, எழுதினாலோ கண்டிப்பார். ஈரோட்டில் வாழ்ந்த மேனாட்டுத் தமிழறிஞர் ‘பாப்லி’லியுடன் நெருங்கிப் பழகியவர். அவரைப் பற்றிப் ‘பாப்புலி வெண்பா’ என்ற நூலே எழுதியுள்ளார். அவர் படைப்பில் தலையாயது ‘இராவண காவியம்’ ஆகும். பெயரே அதன் பொருளை விளக்கும். 5 காண்டங்கள், 57 படலங்கள், 3100 பாடல்கள். இந்நூல் 1946-ல் வெளிவந்தது. பின் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. தடை நீங்கி 1971-ல் இரண்டாம் பதிப்பும் 1994-ல் மூன்றாம் பதிப்பும் வெளிவந்தது. அண்மையில் நான்காம் பதிப்பை சாரதா பதிப்பகம் (சென்னை - 14) வெளியிட்டுள்ளது. மிகச்சிறந்த நயமுடைய இராவண காவியத்தைக் கம்பனில் முழு ஈடுபாடு கொண்ட அறிஞர்களும் பாராட்டியுள்ளனர். ‘கம்பன் கவிதையில் கட்டுண்டு கிடந்தேன். இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது’ என்று ரா.பி.சேதுப்பிள்ளை கூறினார். கம்பர் அன்பர் ஐயன்பெருமாள் கோனார் ‘இனியொரு கம்பன் வருவானோ? இப்படியும் கவிதை தருவானோ? ஆம், கம்பனே வந்தான்; கவிதையும் தந்தான்’ என்று புலவர் குழந்தையைப் பாராட்டுவார். அறிவியல் தமிழ் அறிஞர் பெ.நா.அப்புசாமி போன்றோரின் துணையுடன் அரிய செய்திகள் சேகரித்துத் ‘திராவிட காவியம்’ பாட முயன்றபோது 24.9.1972 அன்று புலவர் குழந்தை மறைந்தார். பாரதிதாசன் ‘செந்தமிழ்க் குழந்தை’ என்று பாராட்டியது போலத் தமிழாக வாழ்ந்த அவருடைய நூற்றாண்டு நிறைவு நாள் 1.7.2006 ஆகும். பொருளடக்கம் பதிப்புரை iii புலவர்குழந்தைஅவர்களின்நூற்றாண்டு புகழ்பூத்தவரலாறு vi செந்தமிழ்க்குழந்தை viii கொங்குகுலமணிகள் (1953) அணிந்துரை 1 வி.சி. வெள்ளிங்கிரிக்கவுண்டர் 3 டி.ஏ. இராமலிங்கம்செட்டியார் 12 பழையகோட்டைப்பட்டக்காரர் 21 சர். ஆர். கே. சண்முகம்செட்டியார் 32 பா.வெ. மாணிக்கநாயக்கர் 42 கே. ஏ. நாச்சியப்பகவுண்டர் 53 கொங்குநாடும்தமிழும் (1953) அணிந்துரை 65 1. தமிழ்வளர்த்தோர் 67 2. கொங்குநாடு 77 3. வணங்காமுடிவாணராயர் 90 4. பல்லவரயன்சிறுவன் 95 5. பாரியூரான் 100 6. பொப்பணகாங்கேயன் 106 7. ஐவேலசதி 113 8. பழையகோட்டைச்சர்க்கரை 119 9. மசக்காளிமன்றாடியார் 130 10. வணங்காமுடிக்கட்டி 135 11. முளசைவேலப்பன்மனைவியார் 140 தீரன்சின்னமலை (1954) முன்னுரை 149 1. வீரவரலாறு 151 2. சர்க்கரைமரபு 156 3. தமிழறிவு 160 4. சிலம்பப்பயிற்சி 165 5. பெயர்க்காரணம் 168 6. தமிழ்நாட்டுஅரசியல் 170 7. நாட்டுப்பற்று 174 8. நல்லவாய்ப்பு 178 9. சேனைத்தலைவன் 183 10. கோவைக்கோன் 186 11. வணங்காமுடி 190 12. முதற்போர் 195 13. ஓடாநிலைப்போர் 197 14. குதிரைப்படை 202 15. பீரங்கிப்படை 206 16. இனவிரண்டகன் 212 17. சிறையில்சின்னமலை 215 18. வீரமுடிவு 218 அண்ணல்காந்தி (1966) 1. அண்ணல்காந்தி 225 2. உண்மையேபேசுதல் 232 3. சொன்னசொல்தவறாமை 237 4. அறப்போர்த்தொடக்கம் 243 5. விடாப்பிடி 249 6. பொறுமையின்எல்லை 254 7. தொட்டிற்பழக்கம் 259 8. இன்னாசெய்யாமை 264 9. துறவுறள்ளம் 270 10. எளியோர்க்குதவுதல் 275 11. வழக்கறிஞர்தொழில் 280 12. தன்கையேதனக்குஉதவி 283 கட்டுரைப்பயிற்சி 287 அணிந்துரை “கொங்கு நாட்டுக் குலமணிகள்” புலவர், முனைவர் ஈரோடை இரா. வடிவேலன் 32. தியாகி குமரன் தெரு, ஈரோடை - 638 004. இச்சிறு நூலுள் பெரியார் அறுவர் வாழ்க்கை வரலாறு சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. இவ்வறுவரும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையவர்கள். இவை, கற்போரை எளிதில் பொதுவாழ்வுக்கு அழைத்துச் செல்லும். இந்நூல் இனிய, எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் படிப்போர்க்குப் பயன்படுமாறு பழக்கத்தில் உள்ள ஆக்கச் சொல் அகரவரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குத் தமிழ்மொழி அறிவையும், பொதுநல உணர்வை யும், வாழ்வில் முன்னேற வேண்டுமென்ற ஆர்வத்தையும் இந்நூல் ஏற்படுத்தும். வி.சி. வெள்ளியங்கிரிக்கவுண்டர் வரலாறு : இவர் வெள்ளைக்கிணறு என்றும் ஊரைச் சார்ந்தவர். இவர்தம் பெற்றோர் சின்னப்பக் கவுண்டர் - பார்வதி அம்மையார் ஆகியோர். அவர் யாரையும் அடே என்று அழைக்கமாட்டார். இவர் எளியோர்க்கு உதவும் குணம் உடையவர். காந்தியடிகளிடம் அளவற்ற பற்றுக்கொண்டவர். கள் இறக்கப்படுவதைத் தடுத்தார். கோவை, நீலகிரி, சேலம், திருச்சிக் கோட்டத் தேர்தலில் வெற்றி பெற்றார். சர்.ஆர்.கே.சண்முகத்திற்கு விட்டுக் கொடுத்தார். இவர் கோவை நாட்டாண்மைக் கழகத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டி.ஏ.இராமலிங்கம் செட்டியார் இவர் காலத்தில் ஆங்கிலத்திலேயே அரசியல் நடந்தது. ஒருசிலர் தாய்மொழிப்பற்றிற்காகத் தமிழைப் படித்து வந்தனர். இவருள் ஒருவர் டி.ஏ. இராமலிங்கம் செட்டியார் அவர்கள். இவர் மாநிலக் கல்லூரியில் படித்துப் வந்தனர். இவர் மாநிலக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். இவர் தமிழில் உள்ள பத்துப்பாட்டுக்கு உரை எழுதினார். செட்டியார் 18.5.1881இல் பிறந்தார். திருப்பூரில் உயர்கல்வி கற்றார். பிறகு வழக்கறிஞர் ஆனார். பேரும், புகழும் பெற்றார். இவர் பொது நலப் பணிகளில் ஈடுபட்டார். கல்வி வளர்ச்சிக்கு உதவினார். பின்பு கோவை நகர நாட்டாண்மைக் கழகத்தலைவராக ஆனார். இவர் மாநில உள்ளாட்சி அமைப்பிற்குச் செயலராக ஆனார். சென்னைச் சட்டமன்றத்தின் உறுப்பினரானார். கூட்டுறவுச் சங்கத்திற்குத் தலைவரானார். பழையகோட்டைப் பட்டக்காரர் : பழையகோட்டை ஈரோடு காங்கேயம் வாயில் அமைந் தது. கடைக்கழக காலத்திலிருந்தே புகழப்பட்ட குடும்பம் இது. பட்டக்காரர் என்பது கொங்குச் சமுதாயத்தலைவருக்கு ஏற்பட்ட பெயராகும். இவர் விருந்தோம்பலில் வள்ளல். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு உணவிட்டு விருந்தோம்பினார். புலவர்களை ஆதரித்தார். நிரைகளைப் பாதுகாத்தார். காங்கேயக் காளைகளை உருவாக்கினார். இவர் செடி, கொடிச் சித்தர் என்றும், புதிய காய்கறிகளை உருவாக்கினார். இவருக்கு மக்களிடத்தில் அளவற்ற பற்று உண்டு. உடல் நலம் குன்றிய போதும் மாடுகளிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். பிறகு கோவை நாட்டாண்மைக் கழகத் தலைவராக ஆனார். பிறகு சட்டமன்ற உறுப்பினராக ஆனார். இவர்கழகக் (சங்க) கால வள்ளல் போன்று கொடைக்குணம் மிக்கவர். வி.சி. வெள்ளிங்கிரிக் கவுண்டர் 1. தோற்றுவாய் நம் நாட்டில் இப்பொழுது மக்களாட்சி நடக்கிறது. பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் நம் நாட்டை ஆளுகிறார்கள். இது மக்களாட்சி அல்லது குடியாட்சி எனப்படும். ஊராட்சியும் இன்று அவ்வாறுதான் நடந்து வருகிறது. ஊராண்மைக் கழகத் தலைவரும் உறுப்பினரும் பொது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களே. முன்பு நம் நாட்டை அரசர்கள் ஆண்டு வந்தார்கள். தமிழ் நாட்டைச் சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தர் ஆண்டு வந்தனர். அது முடியாட்சி அல்லது கோனாட்சி எனப்படும். அவ்வரச மரபினர் வழி வழியாக ஆண்டு வந்தனர். அதாவது தந்தைக்குப்பின் மைந்தன் அரச னாவான் முன்பு ஊராட்சியும் இவ்வாறுதான் நடந்து வந்தது. வழி வழியாக ஒரு குடும்பத்தினரே ஊர்த்தலைவராக இருந்து வந்தனர். தந்தைக்குப் பின் மைந்தன் ஊர்த்தலைவனாவான். ஊர்த்தலைவர் ஊர் மக்களிடம் அன்பாக இருப்பர். ஊர் மக்கள் யாதொரு குறையும் இன்றி நல்வாழ்வு வாழும்படி செய்வது ஊர்த் தலைவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். ஊர் மக்களும் தலைவரிடம் அன்பாக நடந்து கொள்வர்; தலைவர் கட்டளைக்கு அடங்கி நடப்பர்; தலைவர் சொல்லை ஒரு நாளும் தட்ட மாட்டார்கள்; தலைவர் ஆணைக்கடங்கி, சண்டை சச்சரவு, திருட்டுப் புரட்டு, வம்பு வழக்கு இல்லாமல் ஒற்றுமை யாகவும் அமைதியாகவும் இருப்பர். குடும்பத் தலைவனும் குடும்பத்தினரும் போல அவ்வளவு ஒற்றுமையாக இருந்து வந்தனர் ஊர்த் தலைவரும் ஊர் மக்களும். இத்தகைய ஊர்கள் இன்றும் தமிழ் நாட்டில் பல உண்டு. அத்தகைய ஊர்களில் வெள்ளக் கிணறு என்பதும் ஒன்று. வெள்ளக் கிணறு என்னும் ஊர் கோவைக்கு ஆறு கல் வடக்கில் இருக்கிறது. கவுண்டர் குடும்பம் என்பது அவ்வூரின் தலைமைக் குடும்பம். அது ஒரு பழம்பெரும் குடும்பம். கவுண்டர் குடும்பத் தினரே அவ்வூரின் வழிவழித் தலைவராவர். அக்குடும்பத் தினர் தலைமைக் கேற்ற பெருந் தன்மையும், ஊர் மக்களிடத்தில் அன்பும் உடையவர். கவுண்டர் குடும்பத் தலைமையில் அவ்வூர் மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். 2. பிறப்பு வளர்ப்பு வெள்ளக் கிணற்றுக் கவுண்டர் குடும்பத்தில் வந்த சின்னப்ப கவுண்டர் என்பவர், அக்குடும்பத்துக் கேற்ற பெருந்தன்மையும் தாராள குணமும் உடையவர். அவர் வாழ்க்கைத் துணைவியார் பார்வதியம்மையார் கணவனுக் கேற்ற மனைவியார். அப்பெற் றோரின் தலைப் பிள்ளையே வி.சி. வெள்ளிங்கிரிக் கவுண்டர் அவர்கள். இவர் அக்கவுண்டர் குடும்பத்தின் தலைமகன் ஆகையால், அவ்வூர் மக்கள் இவரைப் “பெரிய கவுண்டர்” என்று பெருமையாக அழைத்து வந்தனர். அப் பெயரே இவர்க்கு இயற்பெயர் போல அமைந்து விட்டது. வெள்ளக் கிணற்றுப் பெரிய கவுண்டர் என்றால் நம் நாடு முழுதும் நன்கு தெரியும். பெரிய கவுண்டர் என்னும் சொல்லில் உள்ள “பெரிய” என்னும் அடைமொழி, ஆண்டில் பெரிய என்பதை விட, அன்பில் பெரிய, அருளில் பெரிய, அடக்கத்தில் பெரிய, அமைதியில் பெரிய, ஒழுக்கத்தில் பெரிய, உண்மையில் பெரிய, பொறுமையில் பெரிய, பொது நலத்தில் பெரிய, கொடையில் பெரிய, கொள்கையில் பெரிய கவுண்டர் என்பதே மிகவும் பொருத்தமாகும். அவ்வளவு பெருந்தன்மை வாய்ந்தவர் நம் பெரிய கவுண்டர். இவர் பெருங்குடும்பத்திற் கேற்ற பெருந்தன்மையும் தாராள குணமும் உடையவர்; அடக்கமான நடக்கையும் அமைதியான வாழ்க்கையும் உடையவர்; பெருஞ் செல்வராக இருந்தும் செல்வச் செருக்குச் சிறிதும் இல்லாதவர்; ஏழை யெளியவரிடத்தில் மிகவும் இரக்க முள்ளவர். அன்பு கனிந்த இதழ், அருள் ததும்பிய கண், அமைதியான முகம் - இவையே பெரிய கவுண்டரின் அடையாளம். பொறுமைக்கு நிலத்தை உவமை சொல்வர். பெரிய கவுண்டரின் பொறுமைக்கு அந்நிலமும் ஒப் பாகாது. அவ்வளவு பொறுமை! பொறுமை யே உருவம் எனலாம். பெரிய கவுண்டரிடம் இல்லாதது பகை, அவர் கொள்ளாதது சினம், கல்லாதது வஞ்சம், சொல்லாதது பொய். இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம் பெரிய கவுண்டரின் பெருந் தன்மையை. அவ்வளவு பெருந்தன்மை இனி ஒருவரிடம் அமைவது அருமையே. பெரிய கவுண்டர் வாயில் நுழையாத சொல் ஒன்று உண்டு. அதுதான் அடே என்பது. அவர் யாரையும் அடே என்று கூப்பிட மாட்டார்; வண்டியோட்டுபவனைக் கூட ‘வாப்பா’ என்றுதான் கூப்பிடுவார். பண்டமேய்க்கியும் அவருக்குத் ‘தம்பி, அப்பா’ தான்; அடே என்னும் சொல்லை நம் பெரிய கவுண்டர் வாய் ஒரு நாளும் உச்சரித் தறியாக் குறையுடையதாகும். ஒருவரைத் திட்டுதல், கடுஞ் சொல் சொல்லுதல், அதட்டிப் பேசுதல் என்பன அவருக்குப் பழக்கமே இல்லை. எவரிடமும் அன்பாகவும் அடக்கமாகவுமே பேசுவார். சட்ட மன்றக் கூட்டங்களிலோ, பொதுக் கூட்டங்களிலோ ஒன்றைக் கண்டித்துப் பேசும் போதுகூட மெல்லிய குரலில் மெதுவாகத்தான் பேசுவார். பெரிய கவுண்டர் 25-11-1881-ல் பிறந்தார்; செல்வமாக வளர்க்கப்பட்டார்; பள்ளிப் படிப்பை முடித்துக் கோவைக் கல்லூரியில் படித்து வந்தார் (கு.ஹ.); தந்தையார் இறந்து விட்டதால் படிப்பை நிறுத்தி விட்டுக் குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார்; தம்பிமார்களை மக்கள் போலவே கருதி வளர்த்து வந்தார். தம்பிமார்களும் இவரைத் தந்தை போலவே மதித்து நடந்து வந்தனர். கடைசி வரையிலும் அவ்வாறே நடந்துகொண்டது குறிப்பிடத் தக்கது. 3. விருந்தோம்பல் விருந்தோம்பல் என்பது தமிழ் மக்களின் தனிப் பண்பாடாகும். தமிழ்ப் பெருங் குடும்பத்தில் பிறந்த பெரிய கவுண்டருக்கு அப்பண்பு இயல்பாக அமைந்திருந்தது. இவர் பல பொது நிறுவனங்களில் இருந்து பொதுநலம் புரியும் பெரியாராகையால் இவரைப் பார்க்க வருவோர் பலராவர். உதவி நாடி வருவோர்க் கெல்லாம் இயன்ற உதவி செய்வதோடு அவர்களுக்கு விருந்திட்டே அனுப்புவார். பெரிய கவுண்டரைப் பார்க்க வெள்ளக்கிணறு வந்தோர் விருந்துண்ணாமல் போக முடியாது. பெரிய கவுண்டரை ஊருக்கு வடபுறமுள்ள தோட்டத்து விடுதியில்தான் பார்க்கலாம். அவ்விடுதியில் எப்பொழுதும் சமையல்காரர் இருந்து வருவர். யாராவது பெரிய கவுண்டரைப் பார்க்க வந்தால் போதும், சமையல்காரர் சமையல் செய்து விடுவார். வந்தவரிடம் பேசி முடிந்ததும், “எழுங்கள் சாப்பிடலாம்” என்பார். ஏழை யெளியார் போனாலும் சாப்பிடாமல் வரமுடியாது. பெரிய கவுண்டர் ஊரிலில்லாத போதும் அவரைப் பார்க்க வந்தவர்க்குச் சமையல்காரர் விருந்திட்டு அனுப்புவர். அத்தகைய ஏற்பாட்டுடன் விருந்தோம்பி வந்தார் நமது பெரிய கவுண்டர். 4. எளியர்க்குதவல் நம் நாடு கல்வியில் மிகவும் பிற்போக்கானது. நூற்றுக்குப் பத்துப் பேர்கூடச் சரியாகப் படிக்கவில்லை அதிலும், ஏழையுழவர்கள் நாட்டுப்புறத்தினர். நாட்டுப்புறங்களில் அன்று, இன்று போல் உயர்நிலைப் பள்ளிகள் அவ்வள வில்லை; நகரங்களுக்கு அனுப் பித்தான் உழவர்கள் தங்கள் மக்களைப் படிப்பிக்க வேண்டும். அங்குச் செலவு அதிகமாகும். அவர்களால் அவ்வளவு செலவு செய்ய எவ்வாறு இயலும்? அதனாலேயே உழவர் மக்கள் உயர்நிலைப் படிப்புப் படிக்க முடியாமல் இருக்கின்றனர். உள்ளூரில் பள்ளியிருந்தாலும் சம்பளம் கட்ட முடியாமல் சில ஏழைப் பிள்ளைகள் பள்ளியை விட்டு நின்றுவிடுகின்றனர். எனவே, நம் பெரிய கவுண்டர் ஏழையுழவர் மக்களுக்கு உதவி செய்ய எண்ணினார். உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்குமாக மாதம் ஒன்றுக்கு ரூ 100 க்கு மேல் உதவிச் சம்பளம் கொடுத்து வந்தார். இது 1923-ல் இருந்து இறுதி வரை (1948) நடந்து வந்தது. பெரிய கவுண்டரின் உதவி பெற்றுப் படித்து வந்த மாணவர் பலர் இன்று பட்டதாரிகளாகவும், அதிகாரி களாகவும், வழக்கறிஞர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறிவலாளர் களாகவும் (இஞ்சினியர்) இருந்து, பெரிய கவுண்டரின் பெருந் தன்மையை விளக்கி வருகின்றனர். 5. நன்மை கடைப்பிடித்தல் பெரிய கவுண்டர் காந்தியடிகளிடத்தில் அளவு கடந்த பற்றுடையவர்; அடிகளிடத்திலுள்ள பற்றோடு மட்டும் அவர் நிற்கவில்லை; அடிகளின் கொள்கைகளை அப்படியே கடைப் பிடித்து வந்தார்; அடிகளின் கொள்கைகளை அணுவளவும் தவறாமல் அப்படியே கடைப்பிடித்துவந்தவர் இந்நாட்டில் ஒருவர் உண்டென்றால், அவர் நம் பெரிய கவுண்டரே யாவர். “ஒருவரிடம் அன்புடையராய் இருப்பதைவிட, அவர் குணம் கொள் கைகளைப் பின்பற்றி நடப்பதே சிறந்த தாகும்” என்னும் உண்மையை நம் பெரிய கவுண்டர் அப்படியே உண்மை யாக்கினார். காந்தி கொள்கைகளில் ‘மதுவிலக்கு’ ஒன்று. ‘மது, மக்களின் அறிவை மயக்குகிறது; குற்றஞ்செய்யத் தூண்டுகிறது. குடியினாலேயே கொலை, களவு, கொள்ளை, அடிதடி, சண்டை சச்சரவு, வம்பு வழக்கு முதலிய குற்றங்கள் நடைபெறுகின்றன. குடி குடியைக் கெடுக்கும். குடியினால் கெட்ட குடும்பங்கள் இந்நாட்டில் எத்தனையோ உண்டு. குடி ஏழை மக்களுக்குக் கேடு செய்கிறது. குடித்துத் தொலைத்துக் குடும்பத்தைக் கஞ்சியின்றித் தவிக்க விடுகிறான் ஏழை. ஆகையால், கள் சாராயம் முதலிய மதுவகைகளை ஒருவரும் குடிக்கக் கூடாது’ என்பது காந்தியடிகளின் கொள்கை. மது விலக்கு, காங்கிரசுக் கொள்கை களில் ஒன்று. ‘கள் தென்னை, பனை மரங்களிலிருந்து இறக்கப் படுகிறது. அம்மரங்களை ஒருவரும் கள்ளுக்குக் கொடுக்காதிருந்தால், குடிக்கக்கள் கிடைக்காது’ என்பது அடிகளின் கருத்து. எனவே, ‘கள்ளுக்கு மரம் கொடுக்காதீர்கள். அவ்வாறு மரம் கொடுப்பது ஏழை மக்களின் குடியைக் கெடுப்பதாகும்’ என்று அடிகள் நாட்டு மக்களுக்கு நல்லுரை கூறி வந்தனர். பெரிய கவுண்டர் பண்ணையம் பெரிய பண்ணையம். தென்னையும் பனையும் தென்னாட்டுச் செல்வங்கள், பெரிய கவுண்டர் பண்ணையத்தில் ஆயிரக் கணக்கான தென்னை மரங்களும் பனைமரங்களும் உண்டு. அவர் தகப்பனார் காலத்தி லிருந்து அம்மரங்கள் கள்ளி றக்கக் கொடுக்கப்பட்டு வந்தன. ஆண்டொன்றுக்குப் பல ஆயிரம் வருமானம் வந்து கொண்டிருந்தது. பெரிய கவுண்டர் வருமானத்தைப் பொருட் படுத்தாது ஒரு மரங்கூடக் கள்ளிறக்கக் கொடுக்க வில்லை. அப்போது இந்நாட்டை வெள்ளைக்காரர் ஆண்டு வந்தனர். கள் சாராயம் முதலிய மது விற்பனையால் அரசியலார்க்கு ஆண்டொன்றுக்கு ரூ 17 கோடி வருமானம் வந்து கொண்டிருந்தது. அதனால், கள்ளுக்கு மரங்கொடுக் காதீர் என்பதே குற்றமாகக் கருதப்பட்டு வந்தது. அவ்வாறு கூறுவோர் தண்டனைக்குள்ளாவர். ஆனால், நம் பெரிய கவுண்டரோ அதற்கு அஞ்சவில்லை; கள்ளுக் கடைக்கு மரங்கொடுப்பதை அறவே நிறுத்தி விட்டார்; அதிகாரிகள் மிரட்டலுக்கு அஞ்சினாரில்லை. பெரிய வருமானத்தினும் தாங்கொண்ட கொள்கையே, நாட்டுமக்கள் நலமே பெரிதெனக் கொண்ட பெரிய கவுண்டரின் பெருந்தன்மையே பெருந்தன்மை! 6. பெருந்தன்மை ஒருவர் குற்றங் குறையில்லாமல் ஒழுங்காக நடந்து கொண்டால், அவரை நல்ல தன்மையுடையவர் என்பது வழக்கம். இனி, ஒரு சிலரிடம் அத்தன்மை மிகுந்து காணப்படும். அது ‘பெருந்தன்மை’ எனப்படும். அப் பெருந் தன்மையுடை யவரே ‘பெரிய’ என்னும் அடைமொழிக்கு உரியவராவர். நம் பெரிய கவுண்டரோ அப்பெருந்தன்மை யிலும் மிகுந்த பெருந் தன்மை யுடையவர். உலகிலுள்ள பெருந்தன்மைகள் ஒன்றுகூடி அவரிடம் அடைக்கலம் புகுந்துவிட்டன எனலாம். அவருக்கு மிகவும் வேண்டிய தொன்றைக்கூடப் பிறர் கேட்டால் இல்லையென்னாமல் கொடுக்கும் பெருந் தன்மை நம் பெரிய கவுண்டருக்கென்றே அமைந்த பெருங்குண மாகும்; இதில் ஏமாறுபவர் என்று கூடச் சொல்லலாம்; அவ்வளவு தாராள குணம் படைத்தவர். கடைச்சங்க காலத்தே தகடூரில் (தர்மபுரி) அதியமான் நெடுமான் அஞ்சி என்ற வள்ளலொருவன் இருந்தான். அவன் தனக்கு அரிதில் கிடைத்த அருநெல்லிக் கனியை, அதை உண்டவர் நெடுநாள் உடல் நலத்துடன் இருப்பர் என்பதை அறிந்திருந்தும் அதை ஓளவைக்குக் கொடுத்தான். அதியமான் ஒளவையாரிடம் மிக்க அன்பும் நண்பும் உடையவன்; ஒளவை யாரின் தமிழ்த் தொண்டுக்காகத் தமிழ்ப் பற்றுடைய அதியன் அந் நெல்லிக் கனியை ஒளவைக்குக் கொடுத்தான். நம் பெரிய கவுண்டரோ அத்தகைய காரணம் ஒன்றும் இன்றி, எனக்கு வேண்டும் என்று கேட்பவர்க்கு எதையும் மறுக்காமல் கொடுக்கும் மாண்புடையவர். இதற்கோர் எடுத்துக் காட்டு: 1930ல் இந்தியச் சட்டமன்றத் தேர்தல் வந்தது. கோவை, நீலகிரி, சேலம், திருச்சிக் கோட்டங்கள் (ஜில்லா) நான்கும் சேர்ந்தது ஒரு தொகுதி. அதற்குப் பெரியகவுண்டர் நிற்பதாக முடிவு செய்தார்; பெயர்க் குறிப்புத் தாளும் போட்டுவிட்டார். நிலக்கிழார்களே அதன் வாக்காளர்கள். அந் நான்கு கோட்டங் களிலும் உள்ள நிலக்கிழார்களிடம் நம் பெரிய கவுண்டருக்கு நல்ல மதிப்பு உண்டு. வெள்ளக்கிணற்றில் இருந்த படியே வெற்றி மாலை சூடலாம். ஆனால், ஆர்.கே. சண்முகம் அவர்கள் தான் அத்தொகுதியில் நிற்க விரும்புவதாக நேரில் வந்து கேட்டுக் கொண்டார். பெரிய கவுண்டருக்கு வேண்டியவர்கள், ‘நீங்கள் விட்டுக் கொடுக்காதீர்கள்; எளிதில் வெல்லலாம்; நீலகிரியை விட்டு விடுங்கள்; மற்ற மூன்று கோட்டங்களிலும் உள்ள நிலக்கிழார்கள் தங்களை இயல்பாகவே தலைவராகக் கொண்டு மதித்து வருகிறார்கள்; மேலும், தாங்கள் சென்னைச் சட்டமன்றத்தில் உழவர் நலனுக் காகத்தானே உழைத்து வந்தீர்கள்? உழவர் பெருமக்கள் அந்நன்றியை மறந்தா விடுவார்கள்! தாங்கள் கட்டாயம் வெற்றி பெறலாம்; எக்காரணங்கொண்டும் விலகிக்கொள்ளக்கூடாது; நின்றே ஆக வேண்டும்’ என்று வற்புறுத்தினர். ஆனால், பெரிய கவுண்டரின் பெருந்தன்மை அவ்வாறு செய்ய இடந்தரவில்லை. ‘சண்முகம் ஓர் இளைஞர், சட்டப் படிப்புப் படித்தவர், நல்ல பேச்சுத் திறமை யுடையவர், அரசியலில் முன்னுக்கு வரக்கூடியவர், விரும்பிக் கேட்கிறார், அவரே நிற்கட்டும்; அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்’ என்று தமது பெயர்க் குறிப்புத் தாளைத் திருப்பி வாங்கிக் கொண்டார். சண்முகம் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப் பட்டார். பெரிய கவுண்டர் போட்டி போட்டிருந்தால் சண்முகம் ஒருக்காலும் வெற்றி பெற்றிருக்க முடியாது. இதை விடப் பெரிய கவுண்டர் பெருந்தன்மைக்கு வேறு என்ன சான்று வேண்டும்? 7. பொதுநலப் பணி நம் பெரிய கவுண்டர் இயல்பாகவே பொது நலம் செய்வதில் ஆர்வமுடையவர்; ஒவ்வொருநாளும் பிறர்க்கு ஏதாவது உதவி செய்வதையே வாழ்க்கைப் பயனாகக் கொண்டவர்; ஒரு நாளும் வீணாகாமல் ஏதாவது பொது நலம் செய்தே வருவர். எனவே, பொதுமக்கள் இவரை 1921-ல் சென்னை மேல் மன்றத்திற்கும், 1924-ல் சென்னைச் சட்ட மன்றத்திற்கும் உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தனர். பெரிய கவுண்டர், தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களின் நலனுக்காக ஓயாதுழைத்துவந்தார்; குறிப்பாக, உழவர் குறைபாடுகளை நீக்குவதில் முழு முயற்சி எடுத்துவந்தார். கோவை நாட்டாண்மைக் கழகத் தலைவர்: பெருந் தன்மை யுடையாரை எவரும் விரும்புவது இயல்பு தானே? மேலும் பெருந் தன்மையே உருவெடுத்து வந்த ஒருவரை யார்தான் விரும்பாமலிருப்பார்? எனவே, 1933-ல் கோவை நாட்டாண்மைக் கழகம் நம் பெரிய கவுண்டரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. இயற்கையிலேயே தலைவராக உள்ள ஒருவரைத் தலைவராகப் பெற்ற பெருமை கோவை நாட்டாண்மைக் கழகத்திற்கே உரியதாகும். ஒரு நிறுவனத்திற்குத் தலைவராகி ஒருவர் பெருமை பெறுவதற்கு மாறாக, நம் பெரிய கவுண்டரைத் தலைவராகப் பெற்றதால் கோவை நாட்டாண்மைக் கழகம் பெருமை பெற்றது. பெரிய கவுண்டர் தலைமையில் கோவைக் கோட்ட மக்கள் பன்னலமும் பெற்றனர். இந்தியச் சட்டமன்ற உறுப்பினர்: பெரிய கவுண்டர் பெருந்தன்மை சென்னை மாநிலத்தோடு நிற்கவில்லை; டில்லிக்கும் எட்டியது. அதற்கும் இவர் பெருந்தன்மையைப் பெற விருப்பம் உண்டாயிற்று. 1933-ல் தன்னிடமுள்ள இந்தியச் சட்டமன்றத்திற்கு உறுப்பினராக்கிக் கொண்டது அம்மன்றம் மூன்றாண்டுகள் பெரிய கவுண்டருடன் அளவளாவியும் அமையாமல், 1946-ல் மறுபடியும் அவரை உறுப்பினராக்கிக் கொண்டது. அங்கும் உழவர் நலத்துக்காகவே உழைத்து வந்தார்; இன்று உழவர்களுக்குக் கிடைத்துள்ள பல நன்மைகளுக்கு இவருழைப்பும் காரணமாகும் என்பதைச் சொல்ல வேண்டிய தில்லை. இன்னும், பயிர்த்தொழில் சங்கம், கூட்டுறவுப் பயிர்த் தொழில் சங்கம், மத்திய பருத்திக்குழு, மத்திய புகையிலைக்குழு, கால்நடை வளர்ச்சிச் சங்கம், கால்நடை உணவுச் சங்கம், கூட்டுறவு வணிகச் சங்கம், கோவைப் பயிர்த்தொழில் கல்லூரிக் குழு முதலிய எத்தனையோ பொது நிறுவனங்களில் நம் பெரிய கவுண்டர் தலைவராகவும், உறுப்பினராகவும் இருந்து பொதுத் தொண் டாற்றி வந்தார். பிரிவு: பெருந்தன்மையே உருவான நம் பெரிய கவுண்டர், கால்நடை ஆக்க அமைச்சர் வி.சி. பழனிச்சாமிக் கவுண்டர், தமிழ் நாடு உழவர் சங்கத் தலைவர் வி.சி. சுப்பைய கவுண்டர், வழக்கறிஞர், வி.சி. குமரசாமிக் கவுண்டர் ஆகிய அருமைத் தம்பிமார்களும், மக்களும், மருமக்களும், பொதுமக்களும் நின்றேங்க, 7-11-1948-ல் நம்மை விட்டுப் பிரிந்தார். கொங்கு நாடு ஒரு குலமணியை இழந்து வருந்தியது. வாழ்க பெரிய கவுண்டர் பெருந்தன்மை! டி.ஏ. இராமலிங்கம் செட்டியார் 1. தோற்றுவாய் தமிழ் நமது தாய் மொழி. தாய் மொழி தாயினும் சிறந்தது. எம்மொழி பேசுவோரும் தாய்மொழிப் பற்றுடைய ராய்த் திகழ் கின்றனர். அவ்வாறே பழந்தமிழ் மக்களும் தாய்மொழிப் பற்று டையராய் விளங்கினர்; தமிழைக் கண்போல் போற்றி வளர்த்து வந்தனர். தமிழ் அன்று அரசியல் மொழியாக இருந்தது. அரசரும் அமைச்சரும் அதிகாரிகளும் தமிழில் சிறந்த அறிவுடையராய் இருந்தனர். ஆட்சி நூல்களெல்லாம் அன்று தமிழில் தான் இருந்தன. ஆங்கிலேயர் இந் நாட்டுக்கு ஆள்வோர் ஆகும் வரையிலும் தமிழ்நாட்டில் தமிழாட்சிதான் நடந்துவந்தது. ஆங்கிலேயர் இந்நாட்டை ஆளத் தொடங்கியதும் ஆங்கிலம் அரசியல் மொழி ஆக்கப்பட்டது. தமிழ் அரியணை யிலிருந்து இறக்கப்பட்டது. அரசியலுக்கும் தமிழுக்கும் யாதொரு தொடர்பும் இல்லாமல் போயிற்று. அரசியல் அலுவல் நடக்கும் பக்கம் தமிழ் அணுக முடியாத நிலை உண்டானது. திண்ணைப் பள்ளிகளைத் தவிர உயர் நிலைப் பள்ளிகளும் அன்று தமிழைப் புறக்கணித்தன. உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பாடம் தவிர, கணக்கு, நில நூல், வரலாறு, பொது அறிவு ஆகிய எல்லாப் பாடங்களும் ஆங்கிலத்தில் தான் படிக்க வேண்டும். உயர் நிலைப் பள்ளி மாணவர்கள், பள்ளியில் இருக்கும் போது ஒருவர்க்கொருவர் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும்; தமிழில் பேசக் கூடாது. தப்பித் தவறித் தமிழில் பேசிய பிள்ளை களுக்குத் தண்டனை விதிக்கும் பள்ளிகளும் அன்று உண்டு. அதனால், தமிழ் மாணவர் களுக்குத் தமிழ்ப்பற்று அறவே இல்லாமற் போயிற்று. இனிக் கல்லூரியிலோ தமிழறிவுக்கு இடமே இல்லை. இடை நிலை வகுப்பில் (இன்டர்) பேருக்குத் தமிழ்ப் பாடம் ஒன்று இருக்கும். அதை மாணவர்கள் பேருக்குப் படித்து வருவார்கள். இறுதி வகுப்பில் (க்ஷ.ஹ.) தமிழ் என்னும் பேச்சே இல்லை. கல்லூரி மாணவர்கள் கல்லூரியிலும் வெளியிலும் பேசுவதெல்லாம் ஆங்கிலத்தில் தான்; தமிழில் மறந்தும் பேச மாட்டார்கள். அன்று படித்துப் பட்டம் பெற்ற எந்தத் தமிழ் மகனுக்கும் தமிழில் சரியாகப் பேசத் தெரியாது. ஆங்கிலத்தில் தான் எல்லாக் கூட்டங்களும் நடக்கும். ஆங்கிலத்தில் சிறந்த அறிவுடையவரே நன்கு மதிக்கப் பட்டனர். ஆங்கிலப் பேச்சாளருக்கே அன்று அரசியலில் முதலிடம். தமிழில் பேரறிவுடையோர்க்கும் அன்று மதிப்பில்லை. ஆங்கிலந் தெரியாத தமிழறிஞர்கள் அதிகாரிகள் முன் ஊமர்களாயினர். ஆங்கிலம் படியாத வர்க்கு அரசியல் வேலை இல்லை. இத்தகைய ஆங்கில இருள் தமிழ் நாட்டை மூடியிருந்த அக்காலத்திலும் ஒரு சில கல்லூரி மாணவர், கல்லூரிப் பாடங்களோடு தமிழ் நூல்களையும் கற்றுவந்தனர். எதற்காக அவர்கள் தமிழைப் படித்தனர்? வாழ்வுக் காகவா? இல்லை. தமிழறிவுதான் அன்று மதிக்கப்படுவ தில்லையே. ஆங்கிலந் தானே அரசியல் வேலைக்கு அளவு கோலாக இருந்தது? பின் எதற்காக ஒரு சிலர் பயனின்றித் தமிழைப் படித்து வந்தனர்? அதுதான் அவர்கள் தாய்மொழிப் பற்று. தாய்மொழிப் பற்றே அவர்களைத் தமிழ் படிக்கத் தூண்டிற்று. அத்தகைய தமிழ் மக்களுக்குத் தமிழ் நாடு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளது. அத்தகைய தாய்மொழிப் பற்றுள்ள மாணவர்களில் டி.ஏ. இராமலிங்கம் செட்டி யாரும் ஒருவராவர். நம் செட்டியார் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். மற்ற கல்லூரிகளை விட மாநிலக் கல்லூரி அன்று ஆங்கில மயமானது. மாநிலக் கல்லூரியில் படிப்பது அன்று பெருமையாகக் கொள்ளப் பட்டது. அக்கல்லூரியில் படித்தோர்க்கு அரசியலில் முதலிடம் கிடைக்கும். ஆங்கிலத்தில் கெட்டிக்கார மாணவர்களையே அக்கல்லூரி யில் சேர்த்துக் கொள்வர். அங்குத் தமிழுணர்ச்சிக்கே இடமில்லை. ஆனால், நம் செட்டியார் மட்டும் அதற்கு விலக்கானார். கல்லூரிப் பாடங்களோடு தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் முயன்று கற்று வந்தார்; மாணவப் பருவத்திலேயே தமிழில் சிறந்த புலமை யுடையவரானார். சங்க இலக்கியங்களில் பத்துப் பாட்டு என்பது ஒன்று. அதன் பழைய உரை இக்காலத்தவர்க்கு நன்கு விளங்காத நிலையில் உள்ளது. செட்டியார் கல்லூரியில் படிக்கும் போது (க்ஷ.ஹ.), பத்துப் பாட்டில் சுவையான பகுதிகளைப் பொறுக்கி எடுத்து எளிய நடையில் உரை ஒன்று எழுதினார். அவ் வுரையைத் தமிழறிஞர்கள் பாராட்டினரெனில் , செட்டியாரின் தமிழுணர்ச்சியை என்னென்பது! 2. பிறப்பு வளர்ப்பு ஈரோடு, கோவை இருப்புப் பாதையில் திருப்பூர் என்னும் ஊர் இருக்கிறது. அது வணிகத்திற்கும் தொழிலுக்கும் பெயர் பெற்ற இடம். நாட்டு விடுதலைக்கு நல்லுயிர் வழங்கிய திருப்பூர்க் குமரன் இவ்வூரினன் தான். திருப்பூர் அங்கப்ப செட்டியார் என்பவர் செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறந்த தமிழறிவுடையவர். வணிகத்தினால் பெரும் பொருளீட்டித் தன் குடியை மேம்பாடுறச் செய்தவர். அவர் வாழ்க்கைத் துணைவியார் மீனாட்சியம்மையார் என்பவர். இவர்களே நம் செட்டியாரின் பெற்றோர்கள். செட்டியார் 18-5-1881-ல் பிறந்தார்; திருப்பூரில் உயர்நிலைக் கல்வி பயின்றார். அப்போது தந்தையார் ஊட்டிய தமிழுணர்ச்சி தான் செட்டியாரின் தமிழ்ப் பற்றுக்குக் காரணமாகும். செட்டியார் பள்ளியில் படிக்கும் போதே தமிழ் நூல்களை விரும்பிப் படிப்பார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் செட்டியார் கோவைக் கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார். (க்ஷ.ஹ.)., செட்டியாரின் அறிவுச் செறிவையும் பேச்சுத்திறத்தையும் கண்ட ஆசிரியர்கள் அவரைச் சட்டம் படிக்கும்படி கூறினர். அவ்வாறே செட்டியார் சட்டம் படித்து வழக்கறிஞரானார். 3. வழக்கறிஞர் செட்டியார் கோவையில் தன் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். செட்டியார் சிறந்த நுண்ணறிவும் நேர்மையும் நாவன்மையும் உடையவர். அதனால், விரைவில் இவர் பெயர் கோவைக் கோட்டம் முழுவதும் பரவியது; வெகுவிரைவில் பெரிய வழக்கறிஞர் ஆனார். செட்டியாரின் நேர்மை எளிதில் நாட்டுப்புற மக்களின் நன்மதிப்பைப் பெறச் செய்தது. செட்டியார் பேரும் புகழும் அடைந்ததற்கு அவரது குணமே சிறந்த காரணமாகும். உண்மையானதும் நேர்மையானது மான வழக்குகளையே செட்டியார் ஏற்று நடத்துவார்; உண்மையை நிலை நாட்டத் தன் முழுத் திறமையையும் பயன்படுத்துவார். நேர்மையற்ற வழக்குகளைச் செட்டியாரிடம் கொண்டுவரக் கட்சிக்காரர்கள் அஞ்சுவார்கள். இத்தகைய நேர்மைக் குணத்தால் செட்டியார்க்கு நீதிமன்றங்களில் நல்ல மதிப்பு ஏற்பட்டது. தீர்ப்பாளர்களும் (மாஜிஸ்ட்ரேட்) , நடுவர்களும் (ஜட்ஜ்) செட்டியாரின் நேர்மையைப் பாராட்டு வார்கள். செட்டியார் எடுத்த எந்த வழக்கும் தோல்வியுறுவதே கிடையாது. அதனால், இவருக்கு மதிப்பும் வருவாயும் பெருகின. மதிப்பும் வருமானமும் பெருகப் பெருகச் செட்டியாரின் நேர்மையும் திறமையும் வளர்ந்தன. 1905 முதல் 1937 வரை இவர் அத்தொழிலைத் திறம்பட நடத்தி வந்தார். செட்டியாரின் நேர்மை, திறமை. பெருமை என்னும் முப்பண்பையுங் கண்ட கோவை வழக்கறிஞர் சங்கம் இவரைத் தலைவராக்கிக் கொண்டது. சங்கக் கூட்டங்களின் போதெல்லாம் செட்டியார் வழக்கறிஞர்களுக்கு நேர்மை இன்றியமையாதது என்பதை, பொய் பேசிப் பொருள் பறிப்பதற்காக வழக்கறிஞர்கள் ஏற்படவில்லை. இது தப்பான கருத்து. இக் கருத்தை மக்கள் மனத்திலிருந்து போக்க வேண்டும். பொய் வழக்குகளை ஏற்று நடத்தக் கூடாது. உண்மையான வழக்குகளையே ஏற்றுக் கொள்ள வேண்டும். உண்மை வெல்லாதெனப் பொய் வழக்குகளை உருவாக்கக் கூடாது. ‘வழக்கறிஞர்கள் தம் சட்ட அறிவால் பொய்யை மெய்யாகவும் மெய்யைப் பொய்யாகவும் செய்து பணம் பறிக்கிறார்கள்; நாட்டு மக்கள் நல்வாழ்வைக் கெடுக்கின்றனர். வழக்கறிஞர்களின் திறமையால் குற்றஞ் செய்யாதவர் தண்டிக்கப் படுகின்றனர். கொலை செய்தவர் விடுதலை பெறுகின்றனர்’ என நாட்டில் பரவியுள்ள தப்பான எண்ணத்தை நாம் போக்க வேண்டும். ‘ சட்ட அறிவு இல்லாத மக்களின் சார்பில் வழக்காடி உண்மையை நிலை நாட்டுவதே வழக்கறிஞர் தொழில். தன் வழக்கைத் தான் எடுத்துக்கூறி வெற்றிகாண முடியாதவர்களுக்காக ஏற்பட்டதே வழக்கறிஞர் தொழில்’ என்பதை மக்கள் மனத்தில் வேரூன்றச் செய்ய வேண்டும். “பொய்யுடை ஒருவன் சொல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே; மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையால் பொய்போ லும்மே பொய்போ லும்மே” (வெற்றி வேற்கை) என்றபடி, பேச்சுவன்மையுடையோர் பேச்சுவன்மை இல்லாரை வெல்லாமல் இருப்பதற்காகவே வழக்கறிஞர் தொழில் நடத்த வேண்டும். சட்ட அறிவைக் கொண்டு, வழக்கைச் சட்டவரம்புக்கு உட்ப்படுத்திப் பொய்யைப் பொய்யாகவும், மெய்யை மெய்யாகவும் செய்து, நாட்டில் நேர்மையை நிலை நாட்டுவதற்காக ஏற்பட்டதே வழக்கறிஞர் தொழில் என்பதை வழக்கறிஞர்கள் நன்கு உணர வேண்டும். வருவாய்க்காகவே தொழில் நடத்தாமல் நேர்மைக்காக, நீதியை நிலை நாட்டு வதற்காகவே வழக்கறிஞர்கள் தொழில் நடத்த வேண்டும் என வற்புறுத்திக் கூறுவார்; அதற்குத் தானே வழிகாட்டியாகத் திகழ்ந்து வந்தார். செட்டியாரின் நேர்மையையும் திறமையையும் கண்ட சென்னை வழக்கறிஞர் கழகம் அவரை உறுப்பின ராக்கிக் கொண்டது. 4. பொதுநலப்பணி மற்ற வழக்கறிஞர்கள் போல் செட்டியார் அத் தொழிலையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை; எஞ்சிய நேரத்தைப் பொதுநலப் பணிக்குச் செலவிட்டு வந்தார். கோவைக் கலைக்கல்லூரி அரசினர்க்கு விடப்படும் வரை, அக்கல்லூரிக் குழுவின் செயலாளராக இருந்து செட்டியார் அருந்தொண்டாற்றி வந்தார். அக்கலைக் கல்லூரி இன்று பல துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு நம் செட்டியாரின் உழைப்பே காரணமாகும். மேலும், சென்னை, ஆந்திரா, அண்ணா மலைப் பல்கலைக் கழகங்களின் ஆய்வுக்கழக (செனட், சிண்டிக்கேட்) உறுப்பினராக இருந்து, செட்டியார் தென்னாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்து வந்தார். செட்டியார் கோவை இருமல் நோய்ச் (க்ஷயரோகம்) சங்கத் தலைவராக இருந்த போதுதான் பெருந்துறை இருமல் நோய் மருத்துவசாலை ஏற்பட்டது. அம்மருத்துவசாலை இன்று அடைந்துள்ள முன்னேற்றத்திற்குச் செட்டியாரின் உலையா முயற்சியே காரணமாகும். செட்டியார் தன் பெயரால் விடுதி யொன்று கட்டியுதவி, பிற செல்வரும் உதவ வழி காட்டினார். நகர நாட்டாண்மைக் கழகத் தலைவர்: செட்டியாரின் பொதுநல ஆர்வத்தைக் கண்ட அரசினர், இவரைக் கோவை நாட்டாண்மைக் கழகத் துணைத் தலைவராக்கினர். (1914 - 20) செட்டியார் தன் பொறுப்புணர்ந்து செயலாற்றினார். செட்டியாரின் ஆளும் திறமையைக் கண்ட அரசியலார் இவரைக் கோவை நகர்மன்றத் தலைவராக்கினர். (1919) நகரமக்களின் நலனுக்காகச் செட்டியார் தன் தலைமையை நன்கு பயன்படுத்தினார். 1921ல் நாட்டாண்மைக் கழகத் தேர்தல் நடந்தது. செட்டி யாரின் நேர்மையையும், பொதுநல ஆர்வத்தையும், செயலாற்றுந் திறனையும் கண்ட கோவை நாட்டாண்மைக் கழகம் செட்டியாரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. இவரே பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கோவை நாட்டாண்மைக் கழகத்தின் முதல் தலைவராவர். செட்டியாரின் திறமையை அறிந்த மாநில உள்ளாட்சிச் சங்கம் (மாகாண தலஸ்தாபன சங்கம்) இவரைத் தன் செயலாள ராக்கிக் கொண்டது. பெங்களூரில் நடந்த உள்ளாட்சி மாநாட்டில் செட்டியார் தலைமை தாங்கி, உள்ளாட்சிக் கழகங்களின் முன்னேற்றம் பற்றிப் பல இன்றியமையாத திட்டங்களை எடுத்தியம் பினார். மாநாட்டினர் செட்டியாரின் நுண்ணறிவை மிகவும் பாராட்டினர். உள்ளாட்சிக் கழகங்களின் பொருளாதாரத் தைக் கண்டறிய அரசியலார் ஒரு குழுவை நிறுவினர். அதிலும் செட்டியார் உறுப்பினராக இருந்து பல அறிவுரைகள் கூறினார். சென்னைச் சட்டமன்ற உறுப்பினர்; செட்டியாரின் பொதுநலத் தொண்டையும், திறமையையும், உண்மையுழைப் பையும் கண்ட பொதுமக்கள் 1921-ல் நடந்த பொதுத் தேர்தலில் செட்டியாரைச் சென்னைச் சட்டமன்ற உறுப்பின ராகத் தேர்ந் தெடுத்தனர். இடையில் இரண்டாண்டுகள் தவிர, 1921 முதல் 1939 வரை செட்டியார் அம்மன்ற உறுப்பினராக இருந்துவந்தார். செட்டியார் இயல் பாகவே ஏழைகளிடத்தில் இரக்க முள்ளவர்; கூட்டுறவு இயக்கத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டு ஏழையுழவர்களின் நிலையை உள்ளபடி உணர்ந்ததவர்; எனவே, ஏழையுழவர்களின் குறைபாடுகளை அடிக்கடி வற்புறுத்தி வந்தார். 1938-ல் சட்டமாக்கப்பட்ட உழவர் கடன் நீக்கச் சட்டத்தைக் கொண்டுவந்து சட்டமாக்கி வைத்தவர் நம் செட்டியாரேயாவர். அச்சட்டத்தால் நன்மையடைந்த ஏழையுழவர்கள் எண்ணிறந் தோர். ஏழை உழவர்களைக் கடன் தொல்லையிலிருந்து காப்பாற்றிய செட்டியாரை இந்நாடே வாழ்த்தியது. இந்தியச் சட்டமன்ற உறுப்பினர். சென்னை மாநில மக்களுக்கு மட்டும் செட்டியாரின் பெருந்தொண்டு பயன்படுவ தோடு நிற்கவில்லை. 1945-ல் காங்கிரசின் சார்பில் இந்தியச் சட்ட மன்ற உறுப்பினரானார்; நாடு விடுதலை பெற்றபின் இந்திய அரசியல் சட்டம் வகுத்த அரசியல் அமைப்புக் கழக உறுப்பினராக இருந்து, அச்சட்டம் உருவாகப் பல அறிவுரைகள் கூறினார். 1951-ல் நடந்த உரிமை இந்தியாவின் முதல் தேர்தலில் இந்தியச் சட்டமன்றத் திற்குப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டார். அச்சட்ட மன்றத்தில் செட்டியாருக்கு நல்ல மதிப்பு உண்டு. நேரு முதலிய தலைவர்களும் செட்டியார் அறிவுரையைக் கேட்டுவந்தனர். கூட்டுறவு இயக்கம்:- உழவர்களின் நலனுக்காக ஏற்பட்டது கூட்டுற வியக்கம். இயல்பாகவே உழவர்கள் நலத்தில் அக்கறையுள்ள செட்டியார், கூட்டுற வியக்கத்தில் பங்கு கொண்டு உழவர்களுக்கு நலம் செய்ய முற்பட்டார். தென்னாட்டுக் கூட்டுற வியக்கத்தின் நற்றாயும் செவிலித்தாயும் செட்டியாரே எனல் மிகையாகாது. 1912-ல் இருந்து, 12-2-1952-ல் நம்மை விட்டுப் பிரியும் வரை, செட்டியார் கூட்டுற வியக்கப் புரவலராகவே இருந்து வந்தனர். கூட்டுறவுத் துறைகளில் செட்டியார் இதில் இருந்தார், அதில் இல்லை என்று கூறமுடியாது. தென்னாட்டிலுள்ள அத்தனைக் கூட்டுறவுச் சங்கங்களிலும் செட்டியார் தொடர்பு கொண்டு உழவர்க்கு நலஞ்செய்து வந்தார். சென்னை மாநிலக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம், சென்னை மாநிலக் கூட்டுறவு விற்பனைச் சங்கம், , சென்னை மாநிலக் கூட்டுறவு ஈட்டுறுதிச் சங்கம், கோவைக் கூட்டுறவுச் சங்கம், தமிழ் நாடு கூட்டுறவுச் சங்கம், கோவைக் கூட்டுறவுப் பயிற்சிச்சாலை ஆகியவற்றைத் தோற்றுவித்தவர்களில் செட்டியாரே முதன்மை யானவராவர். இவைகளின் முதல் தலைவர் செட்டியாரே. இவற்றின் முன்னேற்றத்துக்காக உழைத்த பெருமை செட்டியாரையே சேரும். சென்னை மத்திய நில அடமானப் பாங்கு, கோவைக் கூட்டுறவு வீட்டடமானப் பாங்கு, சென்னை மாநிலக் கூட்டுறவு யூனியன் இவற்றின் தலைவராக இருந்து செட்டியார் செய்த பொது நலம் மிகப் பலவாம். கோவை நீலகிரிக் கூட்டுறவு மத்தியப் பாங்கு, சென்னை மாநிலக் கூட்டுறவுப் பாங்கு ஆகிய இரண்டிலும் செட்டியார் இறுதி வரை, தலைவராய் இருந்து வந்தார். இவர் தலைமையில் உழவர்கள் அடைந்த நன்மைகள் அளவி லடங்கா. செட்டியார், 1928ல் ஏற்படுத்தப்பட்ட கூட்டுறவுப் பாங்கு விசாரணைக் குழுவின் உறுப்பினராக இருந்து, குடியானவர் களின் கடன் சுமையைக் குறைக்கப் பல வழிகள் கண்டனர். கூட்டுற வியக்கத்தில் இந்தியா முழுவதுமே செட்டியார்க்கு நல்ல செல்வாக்குண்டு. அதனால், அவர் கூட்டுறவாளர்க்கு வேண்டிய நலன்களை எளிதில் செய்து வந்தார். இந்திய வைப்புப் பாங்கின் பயிர்த் தொழில் கடன் துறை ஆய்வுக் குழுவில் உறுப்பினராக இருந்து, செட்டியார் உழவர்க்குச் செய்த தொண்டு குறிப்பிடத் தக்கதாகும். உழவர்க்கு உதவி புரிய, கூட்டுறவு மத்தியப் பாங்குகளுக்கு இந்திய வைப்புப் பாங்கிட மிருந்து பொருளுதவி பெறுவதில் செட்டியார் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். வைப்புப் பாங்கிலிருந்து குறைந்த வட்டிக்குக் கூட்டுறவு மத்தியப் பாங்குகள் கடனுதவி பெறச் செட்டியார் செய்த தொண்டைக் கூட்டுறவாளர்கள் எளிதில் மறக்க முடியாது. செட்டியாரின் நேர்மையும் பொது நலத் தொண்டும், கூட்டுறவுத் தலைவர்களுக்கும், கூட்டுறவு அதிகாரிகளுக்கும் செட்டியாரிடத்தில் பெரு மதிப்பை உண்டாக்கின. அம்மதிப்பே செட்டியாரின் வெற்றிக்குக் காரணமாக இருந்து வந்தது. 5. குணநலம் செட்டியார் ஏழை மக்கள் இடத்தில் இரக்கமுள்ளவர்; எடுத்ததை முடிக்கும் ஈடெடுப்பில்லாத் திறத்தினர்; சலியா உழைப்பினர்; பொது நலமே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு இறுதி வரை ஓயாதுழைத்து வந்த பெரியார். செட்டியார் வெளிக்குக் கண்டிப்பும் கடுமையும் உடையவராகத் தோன்றுவர்; ஆனால், உள்ளுற அவரது உள்ளம் பத்தரை மாற்றுப் பசும் பொன்னாகும்; குற்றங் கண்ட இடத்தில் கடிந்து கொள்வார்; அடுத்த நொடியே அது மறைந்து அன்பு ததும்பும்; ‘ஆறுவது சினம்’ என்ற இலக்கணத்திற்குச் செட்டியார் இலக்கியமாக விளங்கினார். நாட்டுக் குழைத்த நல்லறிவாளராகிய நம் செட்டியார் 12-2-1953-ல் நம்மை விட்டுப் பிரிந்தார். வாழ்க அன்னார் வான் புகழ்! பழைய கோட்டைப் பட்டக்காரர் 1. தோற்றுவாய் ‘என்ன அழகு! எவ்வளவு அழகு! எத்தனை அழகு! காண்போர் கண்ணையும் கருத்தையும் ஒருங்கு கவரும் அத்தனைக் கட்டழகு! படத்தில் எழுத முடியாத எழிலுருவம்! ஒன்றன் அழகையும் சரியாகப் பார்க்க முடியவில்லை. எவ்வளவு நேரமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அடடா! அழகென்னும் தனிப் பொருளால் அமைந்தன போலும்! கடைசியில் பார்த்த இரண்டும் ஒரே அச்சில் உருக்கி வார்த்தாற் போல் ஒரே உருவம்! என்னே அழகின் உருவங்கள்! வேறு எங்கும் இவ்வளவு அழகுடையதைப் பார்த்ததே இல்லை.’ இது, பழைய கோட்டை மாடுகளைப் பார்த்தவர் பேச்சு. உண்மையில் பழைய கோட்டை மாடுகள் அத்தகைய அழகு வாய்ந்தவையே. கண்பெற்றோர் கண்டு களிக்கும் காட்சிப் பொருள்களில் பழைய கோட்டை மாடும் ஒன்றாகும். ஆலம் பாடி, பர்கூர், அமிர்தமகால், அல்லிக் கறை, சிந்தி என மாடுகளில் பல இனங்கள் உண்டு. அவைபோல் காங்கய இனம் என்னும் பழைய கோட்டை மாடும் ஒன்றாகும். ஆனால், மற்ற இன மாடுகள் போல் காங்கய இனம் தானாக உண்டான இனமன்று. அது பழைய கோட்டைப் பட்டக்காரர் நல்ல தம்பிச் சர்க்கரை மன்றாடியார் அவர்களால் கலப்பு முறையால் உருவாக்கப்பட்ட இனமாகும். 2. பிறப்பு வளர்ப்பு பழைய கோட்டை என்னும் ஊர் பழம் பெருமை வாய்ந்தது. அது, ஈரோடு காங்கயம் வழியில், ஈரோட்டின் தெற்கில் 18-ஆவது கல்லில் இருக்கிறது. பழைய கோட்டைப் பட்டக்காரர் குடும்பம் பழம் பெருமை வாய்ந்த ஒரு செல்வக் குடும்பம்; கொங்கு நாட்டுக் குறுநில மன்னர் குடும்பங்களில் பட்டக்காரர் குடும்பமும் ஒன்று. அது, கடைச் சங்க காலத்திலிருந்து தமிழ் வளர்த்துப் புகழ்பெற்ற தனித் தமிழ்க் குடும்பம்; புலவர் பாடும் புகழுடைய குடும்பம். ‘பட்டக்காரர்’ என்பது- கொங்கு வேளாளர் குலத் தலைவராகப் பட்டம் சூட்டப் பெற்றதால் ஏற்பட்ட பெயராகும். பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபில், நம் நல்ல தம்பிச் சர்க்கரை மன்றாடியார் அவர்கள் ‘பட்டக்காரர்’ என்ற அம் மரபுப் பெயராலேயே அழைக்கப்படும் அத்தகு புகழுடை யோராவர். குகன் பரதனைப் பார்த்து, ‘உங்கள் மரபினோர் புகழை யெல்லாம் உன் புகழ் ஆக்கிக் கொண்டாய்! என்று புகழ்வதாகக் கம்பர் கூறுகிறார். அப் பரதன் போலவே, நமது பட்டக்காரரும் அவர் மரபினோர் புகழை யெல்லாம் தன் புகழ் ஆக்கிக் கொண்டார். பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபில் வந்த சேனா பதிச்சர்க்கரை மன்றாடியார் என்பவரும், அவரது வாழ்க்கைத் துணைவியார் வள்ளியம்மையார் என்பவருமே நம் பட்டக் காரரின் பெற்றோர்களாவர். நல்ல தம்பிச் சர்க்கரை மன்றாடியார் 30-12-1886-ல் பிறந்தார்; சீரும் சிறப்புடன் செல்வமாக வளர்க்கப்பட்டார்; பட்டக்காரர் ஓரளவு தமிழறிவு பெற்றாரே யன்றிக் கல்வியில் கருத்தைச் செலுத்தவில்லை. இளமையிலே அதிகாரம் செலுத்து வதிலும், குடிமக்கள் குறை கேட்டு முறை செய்வதிலும், பண்ணையம் பார்ப்பதிலும் கருத்தைச் செலுத்தி வந்ததால், அவர் வெளியூர் சென்று கல்வி கற்க விரும்பவில்லை. மேலும், பட்டக்காரர் ஆக்களிடத்தில் வைத்திருந்த அளவு கடந்த அன்பு அவரை வெளியூர் செல்ல விடவில்லை. எனவே 1905-ல் பழைய கோட்டைப் பட்டக் காரராகப் பட்டஞ் சூட்டப் பெற்றுக் குடியோம்பி வந்தார். 3. விருந்தோம்பல் விருந்தோம்பல் என்பது தமிழர்களின் தனிப் பண்பாடாகும். திருக்குறளில் ‘விருந்தோம்பல்’ என்னும் அதிகாரத்தில் விருந்தோம்பலின் இலக்கணம் நன்கு கூறப்பட்டுள்ளது. நம் பட்டக்காரரின் விருந்தோம்பலோ அவ் விலக்கணத்தில் அடங்காத தனிச் சிறப்பினை உடையதாகும். பழைய கோட்டை அரண்மனை தமிழ் மக்களின் விருந்தோம்பல் என்னும் ஒழுக்க முறைக்கு எடுத்துக் காட்டாக உள்ளதெனலாம். ஒருவர் பழைய கோட்டை சென்று பட்டக்காரரைப் பார்த்ததும், ‘நீ யார்? எங்கே வந்தாய்? எதற்காக வந்தாய்?’ என்பன போன்ற நாகரிகமற்ற கேள்விகள் கேட்கப் பட மாட்டா. பழைய கோட்டை அரண்மனைக்குள் நுழைந்ததும், பட்டக்காரரைப் பார்த்ததும், ‘வாருங்கள், சாப்பிடுங்கள். அடே! உள்ளே அழைத்துக் கொண்டு போ’ என்பதே பட்டக்காரரின் முதல் முகமன் (முகமன் - உபசாரம்). வந்தவர் சாப்பிட்டு வந்த பிறகே வந்த காரியத்தைப் பற்றிக் கேட்பார். சாப்பாட்டு வேளை அல்லாதிருப்பின், ‘காப்பி சாப்பிடுங்கள்’ என்பார். என்னாமுன் அங்கு நிற்கும் ஏவலாளன் காப்பி கொண்டு வந்து கொடுப்பான். பழைய கோட்டை செல்வோர்க்குச் சோற்றுக்கு என்ன செய்வது என்ற எண்ணமே தோன்றாது. ஏன்? பழைய கோட்டைப் பட்டைக்காரரின் விருந்தோம்பல் உலகப் புகழ் பெற்ற தன்றோ? பட்டக்காரரின் விருந்தோம்பலுக்கு ஏழை, பணக்காரர், தெரிந்தவர் தெரியாதவர், வேண்டியவர், வேண்டா தவர் என்ற வேறுபாடே கிடையாது. ஒவ்வொரு நாளும் இரவு எட்டொன்பது மணிக்கு மேல், அரண்மனையின் வெளிப் பக்கங்களிலும், வந்தவர் தங்கும் விடுதியிலும் ஆள்விட்டுத் தேடிப் பார்த்து, தன்னைப் பார்க்க வந்தவரோ, வழிப் போக்கரோ படுத்திருப்பின் அழைத்துவந்து உணவிட்டுப் படுக்க வைப்பது நம் பட்டக்காரருக்கே உரிய தனிப் பண்பாடாகும். பழைய கோட்டை சென்றோர் அரண் மனையின் சந்து பொந்து மூலைமுடுக்கு எங்கு ஒளிந்திருந்தாலும் அரண்மனை விருந்துக்குத் தப்ப முடியாது. பட்டக்காரரோடு உடனிருந்து உண்போரை, ‘உண்ணுங்கள் உண்ணுங்கள்’ என்று வற்புறுத்துவதும், உணவு பரிமாறு வோனை ‘இன்னும் அவருக்கு நெய் ஊற்று; ஊற்று’ இன்னும் தயிர் போடு, போடு இன்னுங் கொஞ்சம் என்பதும் அவனும் விருந்தினர் போதும் போதும் மறுக்க மறுக்க நெய்யும், தயிரும் ஊற்றுவதும் ஆகிய பட்டாக்காரரின் விருந்தோம்பும் பெருமையை உடனிருந் துண்டோர் அறிவர். பிறர் மனமகிழும்படி உண்பிப்பதில் பட்டக்காரருக்கு உள்ள விருப்பத்துக்கு எல்லையே இல்லை. உண்பவர்களைப் பார்த்து, ‘குழம்பு நன்றாக இருக்கிறதா? தயிர் எப்படி? துவையல் நன்றாக இல்லை யல்லவா? நெய் மணக்கிறதா?, என்பன போன்ற முகமன் மொழிகள் கூறிக் கொண்டே உண்பார். தமது விருந்தில் ஒரு குறையும் இருக்கக் கூடாதென்பதே அவருடைய முழு நோக்கம். பழைய கோட்டை அரண்மனை விருந்தில் செய்யும் தயிரும் தனிச் சிறப்புடையவையாகும். இனிப் பட்டக்காரர் ஊரிலிருக்கும் போதேயன்றி, வேறு எங்குச் செல்லினும் அங்கெல்லாம் ‘உண்டிக்கழகு விருந்தோ டுண்டல்’ என்றபடி, பலருடன் ஒருங்கிருந்தே உண்பர். 4. நிரையோம்பல் பட்டக்காரரை உலகறியச் செய்தது நிரையோம்பலே யாகும். நிரை-மாட்டுக்கூட்டம். பட்டக்காரரால் கலப்பு முறையில் உண்டாக்கப்பட்ட ‘காங்கய இனம்’ என்னும் பழைய கோட்டை மாடுகள் இன்று உலக முழுவதும் பரவி, பட்டக்காரரின் பெயரை விளம்பரம் செய்துகொண்டு இருக்கின்றன. பட்டக்காரர் அமரிக்கா, ஐரோப்பா முதலிய மேனாட்டில் பிறந்திருந்தால் விஞ்ஞானிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பார்; புதுக்கண்டு பிடிப்புக்குப் பெறும் நோபிள் பரிசு பெற்றிருப்பார். ஆனால், தமிழ் நாட்டில் பிறந்ததால் அப்பேறுகள் பெறவில்லை. செடி கொடிச் சித்தர் என உலகப் புகழ் பெற்ற அமரிக்க நாட்டு விஞ்ஞானியாரான லூதர் பர்பாங் (டுரவாநச க்ஷரசயெமே) என்பவர், மரம் செடி கொடிகளை ஒன்றொடொன்று ஒட்டி, ஒட்டு முறையால் எவருங்கண்டறியாத இரண்டாயிரம் வகை புதிய காய்கனி மலர்களை உண்டாக்கினார். அவர் சிறியதைப் பெரிதாக் கினார்; மணமும் நிறமும் சுவையும் இல்லாததை அவை உள்ளதாக் கினார்; விரைவில் கெட்டுப் போவதை நெடு நாள் அழுகிக் கெட்டுப் போகா திருக்கச் செய்தார். செடி கொடிச் சித்தர் போலவே, நம் பட்டக்காரரும் கலப்பு முறையினால் உண்டாக்கியதேயாகும் அழகும் ஆண்மையும் வாய்ந்த காங்கய இனமாடுகள். மன்றாடியார் இளமையி லிருந்தே மாடு வளர்ப்பதில் தனி ஆர்வம் உடையவர். அவர் நல்ல அழகும் நிறமும் ஆண்மையும் உள்ள மாடுகள் வளர்ப்பதில் மிகுந்த ஊக்கம் செலுத்தி வந்தார்; அதற்காகப் பல இன மாடுகளையும் வாங்கி வளர்த்து, அவற்றை ஒன்றோடொன்று கலப்புச் செய்து வந்தார்; அக்கலப்பினத்திற்குப் பிறந்த கன்றுகளையும் அவ்வாறே மறுபடியும் மறுபடியும் கலப்புச் செய்து முடிவில் இப்போதுள்ள காங்கய இனம் என்னும் உயர்ந்த இன மாடுகளை உண்டாக்கினார். பட்டக்காரரின் அறிவு நுணுக்கத்தால், ஆராய்ச்சித் திறத்தால், உண்டாக்கப் பட்ட அவ்வினத்தைக் காங்கய இனம் என்பதைவிடப் பழைய கோட்டை இனம் என்பதுதான் ஏற்புடைத்தாகும். பட்டக்காரருக்கு ஆக்களிடத்தில் உள்ள அன்பு அளவி லடங்காதது. அவர் காணுங்கனவுகளில் மாட்டு வளர்ச்சியைப் பற்றியல்லது வேறொன்றும் இராதெனலாம். இளங்கன்றுகள் பாலைக் குடித்து விட்டுத் துள்ளி விளையாடு வதைக் கண்டால், தன் குழந்தைகளின் விளையாட்டைக் கண்டு களிப்பதினும் மிக்க களிப்பெய்துவர். அழகான கன்று போடும் மாடுகளிடத்தில் அவர் காட்டும் அன்புக்கு உவமை கூறுதல் அரிது. ஒரு நாளைக்கு மாடுகளைப் பார்க்காவிட்டால் பட்டக் காரருக்கு ஊணும் உறக்கமும் குறைந்துவிடும்; சேர்ந்தாற்போல் நாலைந்து நாளைக்குக் காணாவிடில் உடல் நலம் குன்றிவிடும். அவர் எண்ணு தெல்லாம் மாடுகளைப் பற்றியே. மாடுகளைப் பற்றி ஒரு நாள் முழுவதும் பேசாமல் இருக்கும் போட்டிப் பந்தயம் வைத்தால் பட்டக்காரர் ஒருக் காலும் அதில் வெற்றி பெறமாட்டார். அவர் மாடுகளை அன்போடு கையால் தடவிக் கொடுப்பார்; அம்மாடுகளும் அவர்மீது அளவு கடந்த அன்புடையவையாய் இருக்கும். இரண்டு மூன்று நாட்கழித்துச் சென்றால், அவை தாயைக் கண்ட சேய்போல் கத்திக் கதறும்; அவர் கையை நக்கித் தம் அன்பை வெளியிடும். நோய் கண்ட மாட்டண்டை நின்று பட்டக்காரர் கண்ணீர் விட்டுக் கலங்குங் காட்சி காண்போர் நெஞ்சைக் கலக்கும்.. எத்தயை முரட்டு மாடுகளும் பட்டக்காரரிடத்தில் அன்பாக இருக்கும். பக்கத்தில் நெருங்க முடியாத பாய்ச்சல் காளைகளைப் பட்டக்காரர் பிடித்தால் அவை காதுகளை ஆட்டிக்கொண்டு சும்மா இருக்கும். காரணம் அன்பென்னும் கயிற்றால் பிணைக்கப் பட்டதேயாகும். ‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’ எவ்வளவு இடக்குள்ள வண்டிக் காளைகளும் பட்டக்காரர் ஒட்டினால் இடக்கில்லாமல் போகும். என்னே பட்டக்காரருக்கும் ஆக்களுக்கும் உள்ள அன்பின் தொடர்பு! ஒரு நாட் காலை தூங்கி யெழுந்ததும் பட்டக்காரர் புதூர் மாட்டுப் பண்ணைக்குப் போனார். மாடுகளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். ஒரு மாடு கன்று போட்டுக் கொண்டிருந்தது. பக்கத்தில் ஒருவன் இருந்தான். பட்டக்காரரும் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்; மாடு கன்று போடும்போது வருத்தத்தால் கதறியது. அதன் வருத்தங்கண்டு பொறாத பட்டக்காரர், ‘பாவம்! வாயில்லாப் பண்டம்! எவ்வளவு வருத்தம்?’ என்று கூறிக் கொண்டே கன்று வெளிவருவதைப் பார்த்துக் கொண் டிருந்தார். கன்றின் தலை வெளியே வந்ததும் மாடு திடீரென எழுந்தது. கன்று தலைகீழாய் வெளியே வந்தது. அது கண்ட பட்டக்காரர், கன்று கீழே விழுந்துவிடும் என்று எண்ணிக் கன்றைக் கைகளால் தழுவிப் பிடித்துக் கொண்டார்; கன்று முழுவதும் வெளிவரவே அதை மார்போடணைத்து மெதுவாகக் கீழே வைத்தார்; கன்றின்மீ திருந்த அளவு கடந்த அன்பால், விலையுயர்ந்த அழகிய ஆடை களையும் கவனித்தாரில்லை. வேட்டி, துண்டு, சட்டை எல்லாம் கன்றின்மீதிருந்த வாலாமை (அசுத்தம்) ஆகி விட்டது. அதையும் பொருட்படுத்தாது, ‘அவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்தால் கன்று என்னாவது? நல்ல வேளை; ஒருவரும் இல்லாதி ருந்தால்? இதற்கு அறிவே இல்லை; கன்று போடுவதற்குள் என்ன?’ என்று அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாராம். என்னே ஆக் களிடத்தில் பட்டக்காரருக் குள்ள அன்பின் பெருக்கு! பட்டக்காரர் உடல் நலங்குன்றிப் படுத்த படுக்கையில் இருக்கையில், மாடுகளைப் பார்க்கவேண்டும் என்றனர். மருத்துவர், ‘உடல் அசையக் கூடாது. உடல் நலமுற்ற பின் பார்க்கலாம்’ என்றனர். ‘பார்த்து எத்தனை நாள் ஆய் விட்டது; இனி மாடுகளைப் பாராமல் என்னால் இருக்க முடியாது’ என்று இன்னூர்தியில் மெதுவாகச் சென்று, காளைகளையும் மாடு கன்றுகளையும் கண்குளிரக் கண்டு களித்து வந்தார். அதனால் தான் உடல் நலம் மிகவும் சீர்கெட்டதாம். தன்னுயிரிலும் தான் வளர்த்த மாடுகளைப் பெரிதாகக் கொண்ட பட்டக்காரரின் அன்பே அன்பு! 1936 முதல் 38 வரை அரசினர் கால்நடை வளர்ச்சிக் கழக உறுப்பினராகவும், 1941, 42, 43-இல் சென்னைக் கால்நடை வளர்ச்சிக் கழக உறுப்பினராகவும் , 1944, 45-ல் போர்ப் பிற்காலக் கால் நடை மருத்தவச் சீர்திருத்தக் குழு உறுப்பினராகவும் இருந்து, கால்நடை விஞ்ஞானியான நம் பட்டக்காரர், கால்நடை வளர்ப்பு முறையைக் கற்றுப் பட்டம் பெற்ற வல்லுநரும் வியக்கும் வண்ணம், கால்நடை வளர்ச்சி பற்றிய தமது கருத்துக்களை எடுத்துரைத்தனர். சிம்லாவில் நடந்த அனைத்திந்தியக் கால்நடைக் கண் காட்சியில் மூன்று முறை (1937, 39, 42) மதிப்பாளராக இருந்து, மாடுகளை ஒரு முறை பார்த்து வந்ததும், நல்ல மாடுகளைத் தேர்ந்தெடுத்துத் தரம் பிரித்துக் கூறும் மன்றாடியாரின் மாட்டிலக் கணக் குறிப்பறிவின் திறத்தைக் கண்டு, அக்கண்காட்சிக் குழுவினர் வியந்தனர். பழைய கோட்டை மாட்டுப் பண்ணையில் இரண்டாயிரம் மாடுகளுக்கு மேல் உள்ளன. தனி யொருவ ரால் நடத்தப்படும் இவ்வளவு பெரிய மாட்டுப் பண்ணை உலகில் வேறு எங்குமே இல்லை. பழைய கோட்டைமாடுகள் இந்தியா முழுவதுமேயன்றி, இலங்கை, ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, மலேயா, அமெரிக்கா முதலிய வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி யாகின்றன. எங்கு கால் நடைக் கண்காட்சி நடக்கினும் அங்கெல்லாம் பழைய கோட்டை மாடுகள் இருக்கும்; போன இடங்களி லெல்லாம் பல பரிசுகள் பெற்று வெற்றி மாலை புனைந்து மீளும், முதற் பரிசுகளும், தங்கப்பதக்கங்களும், வெள்ளிக் கிண்ணங் களும், வெள்ளிப் பதக்கங்களும் பெற்றுள்ள மாடுகள் பழைய கோட்டை மாட்டுப் பன்ணையில் பல உண்டு. இத்தகைய மாடுகளை உண்டாக்கி வளர்த்து வந்த பட்டக்காரர் ஆவேந்தர் எனப் போற்றிப் புகழப்பட்டார். பட்டக்காரர் போலவே அவர் மைந்தர், நல்ல சேனாபதிச் சர்க்கரை மன்றாடியார் அவர்கள் அந்நிரையை இன்று இனிது ஓம்பி வருகின்றனர். 5. பொது நலப் பணி கோவை நாட்டாண்மைக் கழக உறுப்பினர்: பட்டக் காரர் வழிவழியாக நாடாண்ட மரபில் பிறந்தவரல்லவா? அதனால், இவர்க்கு ஆளுந்திறமை இயல்பாக அமைந்திருந்தது; பன்னூற்றுக் கணக்கான பண்ணையாட்களை வைத்து நடத்தியும், குடியோம்பியும் ஆளும் திறமையைப் பெற்றார். இவரது தகுதி யறிந்த அரசினர் இவரை 1906-ல் கோவை நாட்டாண்மைக் கழக உறுப்பின ராக்கினர். அன்று முதல் நம்மை விட்டுப் பிரியும் வரை (1945) அக்கழக உறுப்பினராக இருந்து வந்தார். அப்போது பட்டக்காரர் மக்களுக்குச் செய்த நன்மையொன்று பொன்னே போலப் போற்றத்தக்க தாகும். நல்ல விதை விதைத்தால்தான் நல்ல பலன் தரும் என்பது பயிர்த்தொழில் ஆராய்ச்சி அறிஞர்கள் கண்ட முடிவு. அதுபோல, நல்ல காளை சேர்த்தால்தான் மாடுகள் நல்ல கன்றுபோடும் என்பது கால்நடை ஆராய்ச்சி அறிஞர்கள் கண்ட முடிவு. ஏழை உழவர்களால் ஐந்நூறு ஆயிரம் போட்டு நல்ல பொலிகாளைகள் வாங்கமுடியாது. ‘நாட்டான்மைக் கழகம் நல்ல பொலி காளைகளை வாங்கி, அங்கங்கேயுள்ள பெரும் பண்ணையக் காரர்களிடம் கொடுத்து, அச்சுற்று வட்டாரங் களிலுள்ள மாடுகளுக்குச் சேர்த்தும்படி செய்ய வேண்டும்’ என்ற திட்டத்தை நம் பட்டக்காரர் கழகக் கூட்டத்தில் எடுத்துக் கூறினார். கழகத்தினர் ஒப்புக்கொண்டு அவ்வாறே செய்தனர். சில ஆண்டுகளில் நல்ல பலன் தந்தது. அது கண்ட சென்னை அரசினர் மாநிலத்திலுள்ள எல்லா நாட்டாண்மைக் கழகங்களையும் அத்திட்டத்தை ஏற்று நடத்தும்படி கட்டளை யிட்டனர். இப்போது சென்னை மாநிலம் முழுவதும் அத்திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு கூற்றாண்மைக் கழகத் தலைவர்; 1921 முதல் கூற்றாண்மைக் கழகம் (தாலூகா போர்டு) கலைக்கப்படும்வரை (1933) ஈரோடு கூற்றாண்மைக் கழகம் நம் பட்டக்காரரையே நிலையான தலைவராகப் பெற்றிருந்தது. இயற்கையாகவே தலைவராக உள்ள ஒருவரைத் தலைவராகப் பெற்ற பெருமை அக்கழகத்திற்கே உரியதாகும். கூற்றாண்மைக் கழகத்தால் மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ அவ்வளவையும் நம் பட்டக் காரர் செய்தார்; மூலை முடுக்குகளிலெல்லாம் பாதைகள் அமைத்தார்; ‘பள்ளியில்லா ஊரில் குடி கொள்ள வேண்டாம்’ என்னும் பழமொழியைப் பயனுடைய மொழியாக்கினார்; எல்லா மக்களும் எழுத்தறிவைப் பெறுதற் கேற்றவாறு வேண்டிய ஊர்களிலெல்லாம் பள்ளிகள் ஏற்படுத்தினார்; வேண்டிய இடங் களில் மருத்துவ சாலைகள் அமைத்தார்; குடி கிணறுகள் வெட்டிவைத்தார். பெருந்தன்மை; நம் பட்டக்காரர் கழக உறுப்பினர் விரும்பும்படி நடந்து கொள்வார்; உறுப்பினர் கூறும் கருத்துக்களை ஒரு நாளும் புறக்கணியார்; உறுப்பினர்கள் தம்மைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு எதைச் செய்ய வேண்டினும் மற்ற உறுப்பினர் களையும் அதற்கு உடன்படச் செய்து, அவ்வுறுப்பினர் தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களிடம் நன்மதிப்பைப் பெறும்படி செய்வார்; இவ்வாறு எல்லா உறுப்பினர்க்கும் செய்வதால்,எந்த உறுப்பினரும் தம் கூட்டாளிகளின் கருத்துக்குக் குறுக்கே நிற்காத குண முடை யோராயினர். அதனால், பொதுமக்கள் அக்கழகத்தால் பெற வேண்டிய நன்மைகளை இயல்பாகப் பெற்று வந்தனர். மற்ற கழகத் தலைவர்கள் ஆயிரக் கணக்கில் பயணச் செலவு தொகை பெற்றுவந்தனர். ஆனால் நம் பட்டக் காரரோ, தலைவராக இருந்த பன்னீராண்டும் பயணச் செலவு தொகை பெறவில்லை. அதைக் கழகத்திற்கே சேர்த்துப் பொது மக்கள் நலனுக்குப் பயன்படுத்தி வந்தனர். இஃதொன்றே இவரது பெருந்தன்மைக்குச் சான்றாகும். தனிச்சிறப்பு; ‘ஆங்கிலப் பட்டம் பெற்றவர்க்குத் தான் ஆளுந் திறமையுண்டு’ என்ற தப்பான கொள்கையை நம் பட்டக் காரர் திருத்தினார். பட்டக்காரர் ஆங்கிலப் பள்ளியை எட்டியே பாராதவர். ஆனால், இயல்பாகவே ஆளுந்திறமையுடைய பட்டக்காரர், அரசியலறிவால் ஆளுந்திறமை பெறுவதற்கு மாறாக ஆளுந்திறமையால் அரசியலறிவைப் பெற்றவர்; கழகத்தைத் தம் சொந்தச் சொத்தாகவே கொண்டு செயலாற்றி வந்தார்; தம் பண்ணைய ஆக்கத்தில் எவ்வளவு அக்கரையுடையரோ அதைவிடப் பொது மக்கள் பண்ணையமாகிய கழக ஆக்கத்தில் அக்கரை கொண்டு பணியாற்றிவந்தார். சுருக்கமாகச் சொல்ல வேண்டு மானால், பட்டக்காரரை ஈரோட்டுக் கூற்றாண்மைக் கழகம் என்னும் பொதுமக்கள் பண்ணையத்தைப் பொறுப்பேற்று நடத்தி வந்த பண்ணாடி என்றே சொல்லலாம். வேறூர்க்கு மாற்றப்பட்ட ஓர் ஆசிரியர், பட்டக்காரர் பண்ணையத்தில் இருக்கும்போதோ, நண்பர்கள் வீட்டில் இருக்கும் போதோ சென்று, அம்மாறுதலைத் தவிர்த்துப் பழைய இடத்திலேயே இருக்கும்படி செய்யுமாறு கேட்டுக் கொண்டால், ‘சரி போய் இருங்கள்; நான் சொன்னதாகத் தலைமை ஆசிரியரிடம் சொல்லுங்கள்’ என்று வாய்மொழி யாகவே கட்டளையிடுவார்; கழகத்திலிருந்த ஒருவர்க்குக் கொடுக்க வேண்டிய பணமோ, வேறொன்றோ கையெழுத் திட்டுக் கட்டளை பிறப்பித்துக் கொடுக்கக் கூடியதாக இருந்தாலும், ‘செயலாளரிடம் நான் ‘சொன்னதாகச் சொல்லி வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லியனுப்புவார். இது துணிவும் சொந்தப் பொறுப்பும் நம்பிக்கையும் உடைய ஆட்சித் திறமையேயாகும். இவ்வாறு பொறுப்போடும், தகுதியோடும் பொறுப்பாட்சி நடத்தி வந்த திறமையை மெச்சி அரசியலார் ராய் பஹதூர் என்னும் பட்டத்தை வழங்கிப் பட்டக்காரரைப் பெருமைப்படுத்தினர். சட்டமன்ற உறுப்பினர்: பட்டக்காரரின் பொது நலப் பணியையும் செயலாற்றுந் திறத்தையும் கண்ட பொது மக்கள் இவரைச் சென்னைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந் தெடுத்தனர். 1932 முதல் 1937 வரை அம்மன்ற உறுப்பினராக இருந்தார்; இன்னும் பல பொது நிறுவனங்களில் இருந்து பட்டக்காரர் பொது நலம் புரிந்து வந்தார். இவ்வாறு பொது நலம் புரிந்து புகழொடு வாழ்ந்த நம் பட்டக்காரர் மக்களும் மருமக்களும் பொதுமக்களும் பிரிவாற்றாது வருந்த, 27-8-1945-ல் நம்மை விட்டுப் பிரிந்தார். அவர் தம் பேரும் புகழும் நின்று நிலவுவதாக! 6. குணநலம் பட்டக்காரர் உயர்ந்த மக்கட் பண்பு பலவும் ஒருங்கு அமையப் பெற்றவர்; சங்க கால வள்ளல்கள் போன்ற கொடைக் குணம் உள்ளவர்; ஏழைகள் எதைக் கேட்டாலும் இல்லை யென்னாமல் கொடுப்பர்; பகைவரும் தன்னை நாடிவந்தால் அப்பகைமையை மறந்து அன்போடு வரவேற்றுப் போற்றும் அருங் குணமுடையவர்; பொது நலப் பணியைப் பொறுப்புடனும் அக்கறையுடனும் செய்யும் செம்மையுடையார்; நேர்மை யொன்றுக் கன்றி வேறெதற்கும் வணங்காமுடி மன்னர்; தன்னலத்தினும் பொது நலத்தை விரும்பும் பெருந்தகையாளர். வாழ்க பட்டக்காரர் வண்புகழ்! சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் 1. தோற்றுவாய் ஒரு நாள் மாலை நாலு மணி இருக்கும். கோவை லண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் ஒரு பாராட்டுக் கூட்டம் நடந்தது. அது அப்பள்ளி மாணவ சங்கத்தாரால் நடத்தப் பட்டது. அதற்கு முன் அப்பள்ளியில் நடந்திராத அவ்வளவு பெரிய கூட்டம்! அக் கூட்டம் பெரும் பாலும் பள்ளி மாணவர்களும் பழைய மாணவர்களும் கொண்ட கூட்டம். மேடையின் அருகில் பள்ளி ஆசிரியர்களும், அதிகாரிகளும், உள்ளுர்ப் பெருங் குடி மக்களும் அமர்ந் திருந்தனர். ஓர் இளைஞன் மலர் மாலை சூட்டிப் பெருமைப் படுத்தப் பட்டான். பல இளைஞர்கள் அவ்விளைஞனைப் பாராட்டிப் பேசினர். தலைவரும் அவனை நன்கு பாராட்டினார். அவ் விளைஞன் பாராட்டுக்கு நன்றி கூறினான்; பின்னர் ‘ஐரோப்பிய வரலாறு’ என்பது பற்றிப் பேசினான். அவன் தமிழில் பேசவில்லை; ஆங்கிலத்தில் மிக அழகாகப் பேசினான். அக் கூட்டம் கைதட்டி அவன் பேச்சு வன்மையைப் புகழ்ந்தது. தலைவரும் பிறரும் தலை யசைத்து அவன் சொல் வன்மையைப் பாராட்டினர். கைதட்டும் தலையசைப்பும் அவ் விளைஞனை மேலும் மேலும் திறம்படப் பேசும்படி ஊக்கம் ஊட்டின. தலைமை தாங்கிய பேராசிரியர் பேசும்போது அமைதி யின்றிப் பேசிக்கொண்டிருந்த அப்பெருங் கூட்டம்., அவ்விளைஞன் பேசும் போது அலையடங்கிய கடல் போல் அமைதியாக இருந்த தெனில், அவ் விளைஞன் பேச்சு வன்மையை என்னென்பது! அவ் விளைஞன் யார்? எதற்காக அவனைப் பாராட்டினர்? அவன் ஒரு கல்லூரி மாணவன்; கல்லூரிப் பேச்சுப் போட்டியில் முதற் பரிசு பெற்றான். அதற்காக அவன் முன்னர்ப் படித்த பள்ளி மாணவர்கள் அவனைப் பாராட்டினர். சர், ஆர்.கே. சண்முகம் தான் அவ் விளைஞன். நம் சண்முகம் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் படித்து வந்தார். சென்னைக் கிறித்துவ இளைஞர் கழகத்தில் (லு.ஆ.ஊ.ஹ.) கல்லூரி ஆங்கிலப் பேச்சுப் போட்டி ஒன்று நடந்தது. அப் போட்டியில் சென்னை மாநிலக் கல்லூரிகளெல்லாம் கலந்து கொண்டன. நம் சண்முகம் அதில் முதற் பரிசு பெற்றார். சண்முகம் கோவை லண்டன் மிஷன் உயர் நிலைப் பள்ளியில் பழைய மாணவராதலால், அப் பள்ளிமாணவர்கள் சண்முகத்தைப் பாராட்டிப் பெருமைப் படுத்தினர். அது முதல் நம் சண்முகம் பெற்ற பாராட்டுதல் எத்தனையோ! கோவைப் பெருங்குடி மக்களில் இராமசாமி செட்டியார் என்பவர் ஒருவர். அவர் மிக்க பெருந்தன்மையுடையவர். இராமசாமி செட்டியாரின் செல்வ மகன் கந்தசாமி செட்டியார் என்பவரும், செல்வமருகி சீரங்கம்மாள் என்பவரும் தான் நம் சண்முகத்தின் பெற்றோர்கள். சண்முகம் 17-10-1892-ல் பிறந்தார்; உயர் நிலைப் பள்ளிப் படிப்பு முடியு முன்னரே தந்தையை இழந்து, பாட்டனாரின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார். 2. பள்ளிப் பருவம் சண்முகம் பள்ளிப் படிப்பு முடிந்ததும் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். (க்ஷ.ஹ.); சென்னைச் சட்டக் கல்லூரியில் கற்று வழக்கறிஞரானார்., சண்முகம் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் போது பேச்சுக்கும் தேர்ச்சிக்கும் பெற்ற பரிசுகள் பல. சண்முகம் சிறந்த நுண்ணறிவுடையவர்; அவர் கல்லூரிப் பாடத்தோடு நில்லாமல் பேரறிஞர்களால் எழுதப்பட்ட அரசியல், பொருளாதார நூல் களையும் கருத்துடன் கற்று வந்தனர். தான் கண்ட கருத்துக்களைக் கல்லூரித் தோழர்களுக்கு எடுத்துரைப் பதும், அவர்களோடு சொற்போர் நடத்துவதுமே சண்முகத்தின் ஓய்வு நேர வேலையாகும். இத்தகைய உலையா முயற்சியே சண்முகத்தை உலகப் பேரறிஞ ராக்கியது. தன் முயற்சியால் முன்னுக்கு வந்தவர்க்குச் சண்முகமே எடுத்துக் காட்டாவர். 3. பேச்சு வன்மை பேச்சு வன்மை என்பது ஒரு தனிக்கலை. ‘சொல் வன்மை’ என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் அதன் இலக்கணத்தை நன்கு விளக்கியுள்ளார். பேச்சு என்பது தானாக வராது; பேசிப் பேசிப் பழகவேண்டும். ‘செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பது பேச்சுக்கும் பொருந்தும். பேசிப் பழகுவோர், பேச்சுக்கு வேண்டிய கருத்துக் களைக் கற்றுக் கொள்ள வேண்டும். கூட்டத்தில் பேசுவது போலவே தனியறையில் நின்று பேசிப் பழக வேண்டும். சண்முகம் இவற்றை யெல்லாம் அப்படியே கையாண்டு வந்தார். அவர் இவ்வளவோடு நிற்கவில்லை. உலகப் புகழ் பெற்ற பேச்சாளர் மூவரில் அன்னிப் பெசண்டு அம்மையார் ஒருவர். அவர் மேனாட்டினர்; சென்னையில் இருந்து வந்தார். நம் சண்முகம் அவ்வம்மையாரிடம் பேச்சுக்கலை கற்றுத் தேறினார்; ‘சிறந்த பேச்சாளன்’ என அவ்வம்மையாரே மெச்சும் பெருமையைப் பெற்றார். மேலும், பெரும் பேச்சாளர் பேச்சு எங்கு நடக்கினும் அக்கூட்டத்தின் முதல் வரிசையில் நம் சண்முகத்தைக் காணலாம். செல்வத்தில் சிறந்த செல்வமாகிய செவிச் செல்வத்தை நம் சண்முகம் முயன்று தேடி வந்தார். சண்முகத்தின் பேச்சு, ஆற்றொழுக்குப் போல் தட்டுத் தடையின்றிச் செல்லும்; வினாவிடையும் விழுமிய கருத்தும் நகைச் சுவையும் நடையழகும் எளிமையும் எடுத்துக் காட்டும் உவமையும் உயர்நெறியும் தெளிவும் திண்மையும் உடைய தாக இருக்கும், சண்முகத்தின் வெண்கலத் தொண்டை அவர் பேச்சுக்கு அழகு செய்தது. சண்முகம் இந்தியச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, சர் ஜார்ஜ் ஷுஸ்டர் என்னும் வெள்ளைக் காரர் பொருளமைச்சராக இருந்தார். அவர் சிறந்த பொருளாதார வல்லுநர். எந்த உறுப்பினர் எழுந்து பேசினாலும் அந் நிதியமைச்சர் பொருட்படுத்த மாட்டார்; இருக்கையில் சாய்ந்தபடியே வேறு எதையோ எண்ணிக் கொண்டு இருப்பார்; சண்முகம் பேச எழுந்தால் அவர் எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்து, அச்சங்குடி கொண்ட முகத்துடன், எழுது கோலைக் கையில் எடுத்துக் குறிப்பெடுக்க எச்சரிக்கையாக இருப்பார். மற்றவர் பேசும்போது வெளியே சென்று பொழுது போக்கிக் கொண்டிருந்த உறுப்பினர்கள், சண்முகம் பேச எழுந்ததும், விருந்துண்ண வரும் பசியாளர் போல விரைந்து வந்து அவரவர் இருக்கையில் அமர்வர். அப்பேரவையில் பேச்சு மூச்சு இருக்காது. சண்முகத்தின் அறிவும் ஆராய்ச்சியும் நிறைந்த பேச்சில் மயங்கி, பண்ணி வைத்த பாவைபோல் அப்படியே அசைவற்று உட்கார்ந் திருப்பர் அப் பேரவையோர். ஒரு நாள் (1933) சட்ட மன்றக் கூட்டம் நடந்து கொண்டி ருந்தது. சர் சண்முகம் எதிர்க்கட்சி நாற்காலியில் இல்லை. பொருளமைச்சர் ஷுஸ்டர் எழுந்து நின்று புன்முறுவல் பூத்தார்; உறுப்பினர்களைப் பார்த்தார்; ‘இன்றைக்கு என் பொறுப்பு மிக மிக எளிதாகிவிட்டது. ஏனெனில், எப்போதும் எனக்குத் தலைவலியைத் தருகின்ற சர் சண்முகம் அவர்கள் இப்போது சட்டமன்றத் தலைவராக வந்து விட்டார். வழக்கம்போல அவர் இன்றும் என்னைப் புளிய மிலாறினால் அடித்திருப்பின் நான் இவ்வளவு மகிழ்ச்சியுடன் எழுந்து நிற்க முடியுமா?’ என்று தன் பேச்சைத் தொடங்கினார். இதைவிடச் சண்முகத்தின் நாவன்மைக்கு வேறு என்ன சான்று வேண்டும்? 4. பொதுநலப் பணி: சண்முகம் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, (1917) கோவை நகர் மன்ற உறுப்பினரானார். பின்னர் அம்மன்றத் துணைத் தலைவராக இருந்து பொதுப்பணியாற்றினார். சட்டம் பயின்ற பின் சில ஆண்டுகள் சண்முகம் வழக்கறிஞர் தொழில் நடத்தினார். சென்னைச் சட்டமன்ற உறுப்பினர்: பெரும் பேச்சாளரான சண்முகத்தை மக்கள் கோவை நகரிலேயே வைத்துக் கொள்ள விரும்பவில்லை. சென்னை மாநில முழுவதும் அவருடைய அறிவும் ஆற்றலும் பயன்பட வேண்டும் என விரும்பினர். 1921-ல் நடந்த பொதுத் தேர்தலில் நம் சண்முகத்தைச் சென்னைச் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந் தெடுத்தனர். அப்போது நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப் பேற்றது. முதலமைச்சர் பனகால் அரசர் அமைச்சரவை அமைத்தார். ஆக்க அமைச்சர் சர். ஏ.பி. பாத்ரோவின் செயலாளராக இருந்து சண்முகம் அரசியலறிவைப் பெற்றார். இந்தியச் சட்டமன்ற உறுப்பினர்: சண்முகத்தின் பேரும் புகழும் சென்னை மாநிலம் முழுவதும் பரவின. அவை அவ்வளவில் நிற்கவில்லை; உலக முழுவதும் பரவ முனைந்தன. மேலும், சண்முகத்தின் பொருள் நூல் அறிவு சென்னை மாநிலத்துடன் மட்டும் இருப்பது முறையன் றல்லவா? அது இந்நாட்டுக்கே பயன்பட வேண்டும். ஏன்? உலகத்துக்கே பயன் பட வேண்டும். தமிழ் நாடு தன் புகழை உலகெலாம் பரப்பவேண்டும். எனவே, 1923-ல் மக்கள் நம் சண்முகத்தை இந்தியச் சட்டமன்ற உறுப்பின ராக்கினர். அது ஆங்கில ஆட்சிக் காலம். ஆள்வோரின் குறைபாடுகளை எடுத்துக் காட்டச் சுயராச்சியக் கட்சி எதிர்க் கட்சி யாக அமைந்தது. பண்டித ஜவஹர்லால் நேருவின் தந்தையா ரான பண்டித மோதிலால் நேரு அவ்வெதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். சண்முகம் நேருவின் வலக்கையாக இருந்து ஆள்வோரை ஆட்டிப் படைத்தார். உலகப் பொருளாதார அறிஞர்களில் நம் சண்முகமும் ஒருவர் எனக் கொள்ளும் படி செய்த காலம் அக்காலமே. இந்தியச் சட்டமன்றத் தலைவர்: சர்தார் விட்டல் வாய்ப் படேல் என்பவர் இந்தியச் சட்டமன்றத் தலைவராக இருந்தார். 1932ல் அவர் திடீரென இறந்து விட்டார். சட்ட மன்றத் தலைவர்க்குத் தகுதியானவர் யார் என்ற கேள்வி எழுந்தது. யாரைத் தலைவராக்குவதென்று தோன்றவில்லை. பெரும் பேச்சாளர்களையும் பேரறிஞர்களையும் உறுப்பினராகக் கொண்டது அம்மன்றம். ஆண்டிலும் அறிவிலும் ஆளுந்திறத்திலும் நேர்மையிலும் நெஞ்சத்துணிவிலும் மிகுந்த படேல் இருந்த இடத்தில் ஒருவர் அமர்வதென்பது எளிதான தொன்றோ? அச் சட்டமன்றம் தனது தலைவரைத் தேடத் தொடங்கியது. முடிவில் நம் சண்முகமே அத் தலைமையிடத்திற்குத் தகுதியுடையவர் என ஒரு மனமாகத் தீர்மானிக்கப் பட்டது. சண்முகம் இந்தியச் சட்ட மன்றத் தலைவரானார். அரியேறு போன்ற சர்தார் படேல் வீற்றிருந்த இடத்திற்கு, நாற்பது ஆண்டு நிரம்பப் பெறாத சண்முகத்தைத் தலைவராகத் தேர்ந் தெடுத்தது - அதுவும் போட்டியின்றி ஒரு மனமாகத் தேர்ந் தெடுத்தது உலக வரலாற்றிலேயே கண்டறியாத புதுமையாகும். வேறெவரும் இவ்விளம் பருவத்தில் அத் தலைமைப் பதவி பெற்றதில்லை. நம் சண்முகத்தினால் தமிழ் நாட்டின் திறமை இந்தியச் சட்டமன்றத்தின் தலைமையிடத்தில் வைக்கப் பட்டது. சண்முகத்தின் தலைமைத் திறமையைப் பாராட்டிச் ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது. பொறுப்பாட்சித் தந்தை: சர் சண்முகம் 1935ல் கொச்சித் திவான் ஆனார். உரிமை வேட்கையுடைய கொச்சி மக்கள் மன்னரை வெறுத்தது போலவே திவானையும் வெறுத்தனர். மக்களின் உரிமை வேட்கையைக் கண்ட சண்முகம், மன்னரை உடன்படச் செய்து மக்கட்குப் பொறுப்பாட்சி வழங்கினார். இந்தியாவில் முதல் முதல் மக்களுக்குப் பொறுப்பாட்சி வழங்கியது கொச்சிதான். எனவே, நம் சண்முகம் பொறுப்பாட்சித் தந்தையெனப் புகழப்பட்டார். உரிமை நாட்டில் பொருளமைச்சர்: 1947ல் இந்தியா உரிமை பெற்றது; ஆங்கில அடிமைத் தளையை அறுத்துக் கொண்டது. ஆங்கில அரசியல் அறிஞர்களெல்லாம் இந்தியாவை விட்டுச் சென்றனர். பண்டித நேரு அவர்கள் முதலமைச் சர் ஆனார். நாட்டு நலம் புரியும் பல துறைகளுக்கும் அமைச்சர்களை ஏற்படுத்தினார். பொருளாதாரத் துறை மிகவும் சிக்கலானது. ஒரு நாட்டின் நல்வாழ்வு அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தைப் பொறுத்ததே. அதற்குத் தகுதியானவர் வேண்டும். சர் சண்முகமே அதற்குத் தகுதியானவர் என்று நேரு முடிவு செய்தார்; சண்முகத்தைப் பொருளமைச்சர் ஆக்கினார். உரிமை இந்தியாவில் சண்முகம் வகுத்த வரவு செலவுத் திட்டம் உலகப் புகழ் பெற்றது. அதுபோது இங்கிலாந்து சென்று வழக்காடி, இங்கிலாந்திடம் இருந்த பல கோடிக் கணக்கான கையிருப்புப் பணத்தை நமக்கு வாங்கித் தந்த பெருமை நம் சண்முகத்தையே சாரும். உலகப்புகழ்: இந்தியாவின் ஆணையாளராக (பிரதி நிதி) நம் சண்முகம் உலக மாநாடுகள் பலவற்றிற்குச் சென்று புகழ் நாட்டியுள்ளார். ஜினிவாவில் நடந்த உலகத் தொழிலாளர் மாநாட்டுக்கு ஐந்து முறை சென்று அறிவுமழை பொழிந்தார். ஆஸ்திரேலியாவில் நடந்த ஆங்கிலக் குடியேற்ற நாடுகளின் மாநாட்டில் நம் சண்முகம் பேசிய பேச்சு, குடியேற்ற நாடுகளுக்கு ஒரு விழிப்பை உண்டாக்கிற்று. கனடா நாட்டில் உள்ள ஒட்டாவா நகரில் 1932-ல் நடந்த வணிக ஒப்பந்த மாநாட்டுக்குச் சென்று நம் சண்முகம் ஒப்பந்தம் செய்து மீண்டார். பொருளாதார நுணுக்கமறியாத வர்கள் அது நாட்டுக்கு நலன்தராத ஒப்பந்தமெனச் சண்முகத்தைக் குறை கூறினர். சண்முகம் தன் ஆராய்ச்சி மிக்க அறிவுரையால், அது நாட்டுக்கு நலம் தரும் நல்ல ஒப்பந்தமென நம்பும்படி செய்தார். நம் நாடு ஆங்கில ஆட்சியினின்று விடுதலை பெற்ற பின் இங்கிலாந்தில் நடந்த வணிக மாநாட்டில், ‘இந்தியர்களாகிய நாங்கள் போர்க்களங்களிலே உங்களுக்கு ஒப்பாகப் போர் செய்து வீழ உரிமையிருக்கும் போது, உலகிலே எங்கள் நாடு உங்கள் நாட்டுடன் சரி நிகராக வாழ ஏன் உரிமை இல்லை?’ என்று மேனாட்டாரைப் பார்த்து நம் சண்முகம் நெஞ்சுத் துணிவுடன் கேட்டார். இன்னும் நம் சண்முகம் எத்தனையோ நிறுவனங்களில் உறுப் பினராகவும் தலைவராகவும் இருந்து பொதுநலப்பணி புரிந்துள்ளனர். கடைசியாக அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராகப் பணி புரிந்தார். 5. தாய்மொழித் தொண்டு: தமிழறிவு: நம் சண்முகம் படிப்பதும் கேட்பதும் நினைப்பதும் பேசுவதும் அனைத்தும் ஆங்கிலம். தமிழறிவு பெறச் சண்முகத்திற்குச் சிறிதும் வாய்ப்பில்லை. சண்முகம் ஒரு நாள் ஒரு சிற்றூரில் தமிழில் பேச நேர்ந்தது. பெரும் பேச்சாளரெனப் பெயர் பெற்ற அவரால் தமிழில் சரியாகப் பேசமுடியவில்லை; தக்கித் தக்கிப் பேசினார். சண்முகத்தின் அறிவுரையைக் கேட்கவேண்டும் என்ற ஆவலுடன் வந்த தமிழ்மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்; சண்முகத் திற்குப் பேசத் தெரியவில்லை என்பதை முகச்சுழிப்பின் மூலம் வெளியிட்டனர்; ஒருவர்க் கொருவர் பேசத்தலைப்பட்டனர். தன் ஆங்கிலப் பேச்சின் போது கூட்டம் இருக்கும் அமைதிக்கும் ஆர்வத்துக்கும் நேர்மாறாகத் தன் தாய் மொழிப் பேச்சுக்கு இருப்பதைக் கண்ட சண்முகம் வெட்கப்பட்டார். ஆங்கிலப் பேச்சுப் புகழேணியின் முடியிலிருந்த சண்முகம் தமிழ்ப் பேச்சினால் பலபடி கீழே இறக்கப்பட்டார். அவர் பேச்சைச் சுருக்கமாக முடித்துக் கொண்டு மனக்கவலை யுடன் வீட்டை அடைந்தார். சண்முகத்துக்கு அன்று இரவு தூக்கம் வரவில்லை. பகலில் அடைந்த மானக்கேடு அவர் மனத்தை வாட்டி வதைத்தது; தன் அறியாமைக்கு மிகவும் வருந்தினார்; அயல் மொழியில் பெரும் பேச்சாளன் என்று பெயர் பெற்ற நாம் நம் தாய்மொழியில் பேசமுடியாத நிலையில் உள்ளோமே என எண்ணி இரங்கினார்; முடிவில் தமிழைக் கற்றுக்கொள்வ தென முடிவு செய்தார். ஒரு தமிழாசிரியரை அடுத்து முறையாகப் பாடங் கேட்டுக் கொண்டார்; முன் ஆங்கில அறிவைப் பெற எடுத்துக்கொண்ட முயற்சியில் பன்மடங்கு எடுத்துக் கொண்டார்; சில ஆண்டுகளில் சிறந்த தமிழறிவைப் பெற்றார். தமிழ் மொழியின் பாதுகாப்பாக உள்ள பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய நூல்களை ஆராய்ந்து கற்றுணர்ந்தார்; ஆங்கிலத்தில் போலவே தமிழிலும் கேட்போர் வியக்கும்படி இனிமையாகப் பேசுந் திறமையைப் பெற்றார். தமிழ்த் தொண்டு: தமிழறிவைப் பெற்ற சண்முகம் தமிழ்த் தொண்டு செய்யத் தலைப்பட்டார்; தமிழின் பழம் பெருமையை, தமிழ் நூல்களின் தனிச் சிறப்பினை, தமிழ் மொழியறிவின் இன்றியமையாமையை, தமிழைப் போற்ற வேண்டியதன் காரணத்தைத் தமிழ் மக்களுக்கு எடுத்தியம் பினார். சண்முகம் அதோடு நிற்கவில்லை; சிலப்பதிகாரத் திற்குச் சிறந்ததோர் உரை எழுதினார்; இன்னும் பல தமிழ் நூல்களும் எழுதித் தமிழ்த் தொண்டாற்றினார். தமிழிசைத் தொண்டு: தமிழ், இயல் இசை நாடகம் என மூவகைப் படும். தமிழ்ப் பாட்டுக்கள் இயற்றமிழ் எனப்படும். அப்பாட்டுக்களை இசை யுடன் பாடுவது இசைத் தமிழ், இசையுடன் பாடிக்கொண்டு, பாட்டின் கருத்து விளங்க, முகம் கண் கைகளால் குறிப்புக்காட்டி ஆடுவது நாடகத்தமிழ். இம்முத்தமிழையும் நம் முன்னையோர் பொன்னேபோல் போற்றி வளர்த்து வந்தனர். தமிழிசைப் பாட்டுக்கள் இருந்த இடத்தில் பிற்காலத்தே அயல் மொழிப் பாட்டுக்கள் வந்து அமர்ந்து கொண்டன. இசையரங்குகளி லெல்லாம் தமிழ் மக்களுக்கு விளங்காத தெலுங்கு முதலிய பிறமொழிப் பாட்டுக்களே பாடப்பட்டு வந்தன. தமிழிசை வானருக்குத் தமிழ்ப் பாட்டுப் பாடத் தெரியாத நிலை உண்டானது. தமிழின் இவ்விரங்கத் தக்க இழி நிலையைக் கண்ட நம் சண்முகம் மனந் துடித்தார்; பழையபடி தமிழிசையை வளர்க்கக் கருதினார்; அதற்காக 1940-ல் தமிழிசை இயக்கம் கண்டார். செட்டிநாட்டரசர் அண்ணாமலை செட்டியார் அவர்கள் அம்முயற்சிக்குத் துணை செய்ய முன்வந்தார்; ரூ. 10,000 நன்கொடை கொடுத்தார். இன்று இசையரங்குகளி லெல்லாம் தமிழ்ப் பாட்டுக்களே பாடுவதற்குச் சர் சண்முகத்தின் ஓயா உழைப்பே காரண மாகும். பிரிவு: சர் சண்முகம் ஓயா உழைப்பினால் உடல் நலம் குன்றினார். அவ்வுடல் நலக் குறையைத் துணையாகக் கொண்டு 5-5-1953 என்னும் கொடும் பொழுது, உலகப் பேரறிஞராகிய நம் சண்முகத்தை நம்மிடை நின்று பிரித்துவிட்டது. ஆனால், சண்முகத்தின் புகழை அது அணுக முடிய வில்லை. 6. குணநலம்: தலைவர்க்கு வேண்டிய சிறந்த குணங்கள் அனைத்தும் நம் சண்முகம் அவர்களிடம் அப்படியே அமைந்திருந்தன. தலைவர்க்குரிய தலையாய குணங்களில் நேர்மையே தலையாயது. அது சண்முகத்தின் தனி யுடைமையாக இருந்தது. 1926-ல் காந்தியடிகள் கோவைக்கு வந்திருந்தார்; சண்முகத்தின் இல்லத்திலே தங்கியிருந்தார். சண்முகம் அடிகளின் நிழற் படம் ஒன்றை எடுத்துப் போய் அதில் கையெழுத் திடும்படி கேட்டுக் கொண்டார். அடிகள், ‘என்னுடைய கையெழுத்து வேண்டுமானால் அதற்குத் தகுந்த விலை கொடுக்க வேண்டும்’ என்றார். சண்முகம் சிறிதும் தயங்காமல் ‘எவ்வளவு பணம் வேண்டும்’ என்றார். அடிகள், ‘நீ எனக்குப் பணம் ஒன்றும் தரவேண்டாம்; நான் கேட்கும் வாக்குறுதி கொடுத்தால் போதும்’ என்றார். என்ன கேட்பாரோ என்று சண்முகத்திற்குச் சிறிது தயக்கம் உண்டாயிற்று; ‘என்னால் என்ன ஆகவேண்டும்?’ என்றார். அடிகள், ‘நாள்தோறும் அரைமணி நேரத்திற்குக் குறையாமல் கைராட்டையில் நூல் நூற்பதாக வாக்குறுதி கொடுக்கவேண்டும்’ என்றார். சண்முகம் சிரித்தபடியே ‘இது என்னால் முடியாத காரியம்’ என்றார். அடிகள் மகிழ்ந்து, ‘வாக்குறுதி கொடுத்துத் தவறுவதை விட ஒளியாமல் உண்மை பேசியதைப் பாராட்டுகிறேன். உனது உண்மையினையே விலையாகக் கொண்டு கையெழுத் திடுகிறேன்’ என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். உலகப் புகழ் பெற்ற காந்தியடிகள் கேட்டதற்கும் சரி சரி என்று தலையாட்டாமல், முடியாததை முடியாது என்று உண்மை பேசிய சண்முகத்தின் நேர்மைக்கு வேறு என்ன சான்று வேண்டும்? பா.வெ. மாணிக்க நாயக்கர் 1. தோற்றுவாய் ‘ஊரெனப் படுவது உறையூர்’ என்று உறையூரைப் புகழ்ந் துள்ளனர். ஆம்: உறையூர் பழஞ் சிறப்பினை யுடைய பழைய ஊர். அது சோழ நாட்டின் தலைநகரங்களில் ஒன்று. இன்று அது திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாக உள்ளது. உறையூர் போலப் புகழுடன் விளங்கும் பழைய ஊர்களைப் பழவிறல் மூதூர் என்பர் நம் முன்னையோர். பழவிறல் மூதூர் - பழஞ் சிறப்பினையுடைய பழைய ஊர். ஓர் ஊருக்குப் புகழ் அவ்வூரில் வாழ்ந்த புகழுடையோரால் உண்டாகிறது. புகழுடையாரைப் பெற்ற ஊரே புகழுடன் விளங்குகிறது. இவ்வாறு புகழ் பெற்ற பழவிறல் மூதூர்கள் தமிழ் நாட்டில் பன்னூற்றுக் கணக்கில் உண்டு. அத்தகைய ஊர்களில் பாகற்பட்டி என்பதும் ஒன்று. இவ்வூர், சேலம் புகைவண்டிச் சந்திப்பின் மேற்கில் நாலாவது கல்லில் இருக்கிறது. நாயக்கர் குடும்பம் என்பது பாகற்பட்டியில் உள்ள பழம் பெருமை வாய்ந்த குடும்பம். அக்குடும்பமே பாகற்பட்டியின் புகழுக்குக் காரணமாகும். நாயக்கர் குடும்பம் என்றால் அந்தப் பக்கத்தில் அக்குடும்பத்தையே குறிக்கும் அது ஒரு செல்வ மிக்க செந்தமிழ்க் குடும்பம். வெங்கட்டசாமி என்பவன் அக்குடும்பத்தின் செல்வ இளைஞன். அவன் நல்ல அழகும் ஆண்மையும் உடையவன். அவன் பெற்றோர்கள் அவனுக்கு ஒரு செல்வக் குடும்பப் பெண்ணை மணம் பேசினர். வெங்கட்டசாமி அதை மறுத்து, முத்தம்மாள் என்னும் ஓர் ஏழைக் குடும்பப் பெண்ணை மணந்து கொண்டான். முத்தம்மாளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவள் நாகரிகம் என்பதை இன்னதென்றறியாத ஒரு பட்டிக்காட்டுப் பெண். நாயக்கர் குடும்பம் நாகரிகமான குடும்பம். முத்தம்மாள் நாயக்கர் குடும்பத்திற்குப் பொருந்தாத ஒரு தனிப்பட்ட பெண்ணாக இருந்தாள். திருமணத்தின் போது முத்தம்மாளுக்கு பத்து அல்லது பதினோராண்டுதான் இருக்கும். அவள் நாயக்கர் வீட்டுக்கு ஒரு வேலைக்காரப் பெண்போல் வந்து சேர்ந்தாள். வெங்கட்டசாமி முத்தம்மாளை அவ்வாறு எண்ணவில்லை. அவளிடம் அவனுக்கு அளவு கடந்த அன்பு. அவளை அவன் ஒரு நல்ல நாகரிகப் பெண்ணாக்க எண்ணினான்; அவளுக்குத் தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தான்; நல்ல பாவாடை தைத்துக் கொடுத்தான்; மேலாடை வாங்கிக் கொடுத்தான்; சில வேளை அவன் அவளுக்குச் சடை பின்னிப் பூச்சூடியும் விடுவான். முத்தம்மாள் கல்வியறிவில்லாத ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவளாதலால், தன் கணவன் எதைச் சொன்னாலும் தட்டாமல் செய்வாள்; கணவனின் கருத்துக்கு ஏற்றவாறு நடந்து கொள்வாள். அதனால், அவள் ஒரு நல்ல நாகரிகப் பெண் ஆனாள். முத்தம்மாள் அதோடு நிற்கவில்லை; தன் கணவனைக் குருவாகக் கொண்டு தமிழைக் கருத்துடன் கற்றுவந்தாள்; ஓய்வு நேரங்களைக் கற்பதிலேயே செல விட்டாள். அவள் சமையல் செய்யும்போதும் கையில் ஒரு தமிழ் நூல் அணி செய்யும். திருக்குறள், நாலடியார் முதலிய சங்க இலக்கியங்களிலும் அவள் கொஞ்சம் பயிற்சி யுடையவள் ஆனாள். வெங்கட்டசாமி தன் மனைவிக்கு இலக்கிய அறிவோடு கொஞ்சம் இலக்கண அறிவையும் ஊட்டினான். ஓளவையார் மரபில் வந்த நம் முத்தம்மாள் கவிபாடும் ஆற்றலையும் பெற்றாள்; குடும்ப நிகழ்ச்சிகளை அழகிய தமிழ்க்கவியாகப் பாடிக் குடும்பத் தினரை மகிழ்விப்பாள். அக் கல்வியறிவுடைய வாழ்க்கைத் துணைவர்கள் இனிது இல்லறம் நடத்தி வந்தனர். அத்தகு சிறப்புடைய வெங்கட்டசாமி நாயக்கரும் முத்தம்மாளுமே நமது மாணிக்க நாயக்கரின் பெற்றோர்களாவர். முத்தம்மாள் பெற்ற மாணிக்கத்தினாலேயே அந்நாயக்கர் குடும்பமும் பாகற்பட்டியும் விளக்க முற்றன. மாணிக்கம் 24-2-1871-ல் பிறந்தான்; செல்வமாக வளர்க்கப் பட்டான். ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்றபடி, மாணிக்கம் பிள்ளைப் பருவத்திலேயே சுறுசுறுப்பு, ஊக்கம், விடாப்பிடி, அஞ்சாமை, ஆராய்ச்சி முதலிய அருங்குணங்களுடன் விளங்கினான். முத்தம்மாள் மாணிக்கத் திற்குத் தமிழ் கற்றுக் கொடுத்தாள்; மாணிக்கத் தின் இளமை யுள்ளத்தில் பசுமரத்தில் அடித்த ஆணிபோல் நன்கு பதியும்படி தமிழுணர்ச்சியை ஊட்டினாள். தாயார் இளமையில் ஊட்டிய தமிழுணர்ச்சியே நம் மாணிக்கத்தைச் சிறந்த தமிழறிஞராக்கித் தமிழ் மக்களுக்குத் தமிழுணர்ச்சி ஊட்டச் செய்தது. எல்லாத் தாய்மாரும் முத்தம்மாள் போலவே இருந்தால் தமிழ் மக்கள் எல்லோரும் மாணிக்கங்கள் ஆய்விடுவார்கள் அல்லவா! 2. பள்ளிப்பருவம் நம் மாணிக்கம், பிள்ளைப் பருவத்தில் விளை யாட்டிலும் வேடிக்கை யிலும் கருத்தைச் செலுத்தினானே யன்றிக் கல்வியில் கருத்தைச் செலுத்தவில்லை. பிள்ளைக் குறும்பு என்பது மாணிக்கத் திடம் மிக்க நட்புக் கொண்டிருந்தது. எனினும், மாணிக்கம் வரவரக் கல்வியில் கருத்தைச் செலுத்தலானான்; சேலம் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துச் சேலம் கல்லூரியில் சேர்ந்தான். அப்போது மாணிக்கத்தின் குடும்பம் செல்வமிழந்து ஏழ்மை நிலையை அடைந்துவிட்டது. மாணிக்கத்திற்குப் பாட நூல்கள் வாங்கக்கூடப் பணம் இல்லை; மற்ற மாணவர்கள் நூல்களைப் பார்த்து எழுதிப் படித்து வந்தான்; வறுமைத் துன்பத்தினாலும், நூல்கள் இல்லாததினாலும் இடைநிலை வகுப்பில் (இன்டர்) முதல் தடவை தவறிவிட்டான்; பின் முயன்று படித்து இரண்டாந் தடவை தேறினான். இளமையிலிருந்தே மாணிக்கத்திற்குக் கணக்கில் விருப்பம் அதிகம்; மற்ற பாடங்களை அவ்வளவு கவனித்துப் படியாமல் எப்போதும் கணக்குப் போட்டுக் கொண்டே இருப்பான்; இதுவும் இடைநிலை வகுப்பில் தவறியதற்கு ஒரு காரணமாகும். கணக்கேயன்றிக் கைத்தொழிலிலும் மாணிக்கத் திற்கு விருப்பம் அதிகம். அதனால், தானொரு பொறிவ லாளன் (இஞ்சினீயர்) ஆக வேண்டும் என்று மாணிக்கம் விரும்பினான்; பொறியியற் கல்லூரியில் சேர விண்ணப்பம் செய்தான்; அக் கல்லூரியில் சேர்த்துக் கொள்வதாகப் பதில் வந்தது. பொறியியற் கல்வி நான்காண்டுகள் படிக்கவேண்டும். மேலும், அக்கல்லூரி சேலத்தில் இல்லை; சென்னை சென்று படிக்கவேண்டும். செலவு நிரம்ப ஆகும். குடும்பமோ ஏழையாகி விட்டது. குடும்பச் செலவுக்கே தட்டுதல். சென்னை யில் சென்று படிக்கக் குறைந்தது மாதம் ரூ. 50 ஆவது வேண்டும். அன்று அது பெருந் தொகையாகும். மாதந் தோறும் அவ்வளவு பணத்திற்கு எங்கு போவது? தனது ஆவலுக்கு முட்டுக் கட்டை யாக, முன்னேற்றத்திற்குத் தடையாக வறுமை வந்து குறுக்கே நிற்பதை எண்ணி வருந்தினான் மாணிக்கம். பாகற்பட்டி ஒரு மிட்டாவுக்கு உட்பட்டது மிட்டாதார் பெருஞ் செல்வர். மாணிக்கத்தின் குடும்பம் பெரியது. குடும்பச் செலவு போக மிட்டாதாருக்கு வரி கொடுக்கவே திண்டாட்டம். சொந்த நிலத்தில் பெரும் பகுதி கடனில் முழுகிப் போயிற்று. மேலும், கடன் தொல்லை வேறு, எனவே, மாணிக்கத்தின் பெற்றோர் மிட்டாதார் நிலத்தைக் குத்தகை க்கு உழுது வந்தனர். இந்த நிலைமையில் உள்ள மாணிக்கத் தின் பெற்றோரால் எப்படி மாணிக்கத்தைச் சென்னைக்கு அனுப்பிப் படிப்பிக்க முடியும்? மாணிக்கம் இளமையிலிருந்தே மிக்க தாய்மொழிப் பற்றுடைய வனாக விளங்கினான்; பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும்போது அப்பாடங்களோடு தமிழ்நூல்களையும் விரும்பிப் படித்து வந்தான். மேலும், மாணிக்கத்தின் தாயார் ஒரு தமிழ்க் கவியல்லவா? அவ்வம்மை யார் மாணிக்கத்திற்கும் கவிபாடும் திறமையை உண்டாக்கினார். மாணிக்கம் தன் வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளைக் கவியாகப் பாடுவான்: நண்பர்களுக்குக் கவியிலேயே கடிதம் எழுதுவான். இவ்வாறு அவன் கவிபாடும் பழக்கத்தை வளர்த்து வந்தான். மாணிக்கம் அம்மிட்டாதார் மீது சில கவிகள் பாடினான்; தன் ஆவலை யும் நிலைமையையும் ஒரு கவியில் குறிப்பிட்டிருந்தான். மாணிக்கத்தின் கவித் திறத்தையும் கற்பதில் உள்ள ஆவலையும் கண்டு மிட்டாதார் மகிழ்ந்தார்; ஆண்டொன்றுக்கு 500 ரூபாய்க்கு அடைபடும் நிலத்தை நான்கு ஆண்டுகளுக்குக் குத்தகையில்லாமல் உழும்படி கொடுத்தார். தம் பிள்ளையின் தமிழறிவையும் கவித்திறத்தையும் நுண்ண றிவையும் கண்ட மாணிக்கத்தின் பெற்றோர்கள் பெற்றபொழுதினும் பெரிது உவந்தனர். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து முதன்மையாகத் தேறினான்; ஆறு பவுன் தங்கப் பதக்கமும் ஒரு கடிகாரமும் பரிசு பெற்றான். பட்டம் பெற்றதும் வேலை கிடைத்தது. பொறிவலாளர் மாணிக்க நாயக்கர் தம் வேலையைத் திறம்படச் செய்து பேரும் புகழும் பெற்றார். 3 வேலைத்திறம் நாயக்கர் தம் அரசியல் அலுவலைத் திறம்படச் செய்து வந்தார். ஆனால், மற்ற பொறிவலாளர்கள் போலத் தமக்கேற்பட்ட வேலையை மட்டும் செய்வது என்ற அளவோடு அவர் நிற்க வில்லை. அத்தொழிலில் நுட்பமான ஆராய்ச்சித் திறமுடையவர். எதையும் நன்கு ஆராய்ந்து பார்த்துச் செய்யும் அவரது வேலைப் பாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டு: மேட்டூர் அணையைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது, மேட்டூர் என்னும் இடத்தில் காவிரியாற்றில் கட்டப் பட்டிருக்கிறது. அவ் வணை ஆறே முக்கால் கோடி செலவில் பத்தாண்டுகள் கட்டி முடிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் சென்று கண்டுகளிக்கும் காட்சிப் பொருள்களில் மேட்டூர் அணையும் ஒன்று. அது ஈரோட்டின் வடக்கில் 38-ஆவது கல்லில் இருக் கிறது. மேட்டூர் அணையின் நீர்வீழ்ச்சியிலிருந்து மின்சாரம் எடுக்கப் படுகிறது. அம் மின்சாரம் தமிழ் நாடு முழுதும் விளக் கெரிக்கவும், தண்ணீர் இறைக்கவும், தொழிற்சாலைகள் நடத்தவும் பயன்படுகிறது. ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது திறமையான வேலை. அணை கட்டுவதற் கேற்ற இடத்தைத் தேர்ந்தெடுப் பதும், அணை கட்டும் இடத்தை அளந்து வரையறுப்பதும் அதைவிடத் திறமையான வேலை. மேட்டூர் அணைகட்ட இடத்தைத் தேர்ந் தெடுத்து அளந்து கொடுத்தவர் நம் நாயக்கரே எனில், நீங்கள் வியப்புறுவீர்கள். மேட்டூர் அணை கட்டியபோது (1925-34) வெள்ளைக்காரர் இந் நாட்டை ஆண்டு வந்தனர். அணை கட்ட ஏற்படுத்திய அதிகாரிகள் (இஞ்சினீயர்) அத்தனை பேரும் வெள்ளைக் காரரே. நாயக்கர் அவர்களின் கீழ் வேலை பார்த்து வந்தார். நம் நாட்டினர் பெயர் வாங்கவோ, தலைவராக இருக்கவோ வெள்ளைக்காரர் விரும்புவ தில்லை. தாங்களே எல்லாந் தெரிந்தவர்; தலைவராக இருக்கத் தகுதியுடையவர் தாங்களே என்னும் எண்ணம் உடையவர். மேட்டூர் அணை முதல் முதல் கட்டத் தொடங்கினது இப்போதுள்ள இடத்திலன்று; இதற்கு ஒருகல் தெற்கில் தூக்கணாம்பட்டி என்னும் இடத்தில் வேலை தொடங்கப் பட்டது. மேனாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட பொறிவலாளர் களால் திட்டமிட்டு வேலை தொடங்கப்பட்டது. ஆனால், அவர்கள் கீழ் வேலை பார்க்கும் நமது நாயக்கரோ, அந்த இடத்தில் அணைகட்டினால் செலவு அதிகம் ஆகும்; மேலும் அணை நிற்காது; பெரிய வெள்ளம் வந்தால் உடைத்துக் கொள்ளும் என்று காரணத்துடன் கூறினர். வெள்ளைக்காரப் பொறிவலாளர்கள் நாயக்கர் பேச்சைக் கேட்கவில்லை. நாயக்கரை ஏளனஞ் செய்தனர். நாயக்கர் விடாப்பிடியுடைய வரல்லவா? தனது கொள்கையை விட்டுக் கொடுக்க வில்லை. மேலதிகாரிகள் சொல்லுகிறார்களே என்று அஞ்ச வில்லை; கட்டாயம் பெரிய வெள்ளம் வந்தால் உடைத்துக் கொள்ளும்; பெரிய வெள்ளத் தாக்குதலை இது தாங்காது. என்று மறுத்துக் கூறினார். அவர்கள் இவர் கூறுவதை ஒப்புக்கொள்ளவில்லை. காரணம், தங்கள் கீழ் வேலை பார்க்கும் ஒரு தமிழன் சொல்வதைக் கேட்பதா? அவன் புகழ் பெறுவதா? என்னும் பொறாமைக் குணமே யாகும். நாயக்கர் அதோடு விடவில்லை; கட்டவிருக்கும் அவ் வணையைப் போலப் பசைமாவினால் மாதிரி அணை ஒன்று செய்து பத்து வள்ளம் (பக்கெட்) தண்ணீரை ஒரே முட்டாக ஊற்றினார். அம் மாதிரி அணை உடைத்துக் கொண்டது. அது கண்ட வெள்ளைக்கார அதிகாரிகள் நாயக்கரின் அறிவுத் திறமையை மெச்சினர். அதன்பின்னர் நாயக்கர் முன்குறிப்பிட்ட இப்போதுள்ள இடத்தில் அணைகட்டப்பட்டது. பார்த்தீர்களா நாயக்கரின் வேலைத் திறமையை! 4. சீமைப் படிப்பு அன்று இங்கிலாந்து ஜெர்மனி முதலிய மேல் நாடுகளைச் சீமை என்பது வழக்கம். ஒருவர் அம் மேனாடுகளுக்குச் சென்று படித்து வந்தால், ‘அவர் சீமைக்குப் போய்ப் படித்து வந்தவர்; பெரிய படிப்பாளி’ என்று பேசுவது வழக்கம். மேனாட்டுப் படிப்புக்கு அவ்வளவு மதிப்பிருந்தது அக்காலத்தில். நம் நாயக்கரும் மேனாடு சென்று படித்துப் பட்டம் பெற்றுவர எண்ணினார். மதிப்புப் பெறுவதில் யாருக்குத்தான் விருப்பம் இருக்காது? 1911-ல் நாயக்கர் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு படிப்பதோடு மட்டும் அவர் நிற்கவில்லை; தான் கண்டறிந்த புதிய கணக்குகளைப் போட்டுக் காட்டினார். கணக்கில் வல்லவரான மேனாட்டு அறிஞர்களெல்லாம் நாயக்கரின் நுண்ணறிவை மெச்சினார்கள். கணக்குத் திறமைக்காக நாயக்கர் பல பரிசுகள் பெற்றார். நாயக்கர் படித்துப் பட்டம் பெற்று (பார் - அட் - லா) வெற்றியுடன் மீண்டார். நாயக்கருக்கு வேலையுயர்வு கிடைத்தது; மதிப்பும் உயர்ந்தது. 5. அறிவின் நுட்பம் 12-12-1912-ல் டில்லியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டுவிழா நடந்தது. அதற்கு நம் நாயக்கருக்கு அழைப்பு வந்தது. நாயக்கர் தம் நண்பரான நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களையும் உடனழைத்துச் சென்றார். இருவரும் முடிசூட்டு விழாவைப் பார்த்துவிட்டு, வடநாட்டிலுள்ள முதன்மையான ஊர்களைச் சுற்றிப் பார்த்து வந்தனர். அப்போது இந்தியாவின் வடமேற்கு மூலையில் ஓர் அணைக்கட்டு வேலை நடந்தது. மூன்று கல் தூரம் மலையைக் குடைந்து வாய்க்கால் வெட்டப்பட்டது. அவ்வணைகட்டும் இடம், இந்தியாவுக்கும் ஆப்கானிஸ் தானத்திற்கும் இடையில் உள்ள மலைப் பகுதியில் வாழ்ந்து வரும் எல்லைப்புறச் சாதியார்க்குச் சொந்தமானது. அதனால், அவர்கள் இந்திய அரசினரோடு பகை கொண்டனர்; அடிக்கடி இந்தியாவுக்குள் வந்து ஆடுமாடு களையும், சிலவேளை மக்களையும் பிடித்துக் கொண்டு போய் விடுவர். அதற்காக இந்திய அரசினர் அங்கே ஏராளமான படைகளை வைத்துப் பாதுகாத்து வந்தனர். நாயக்கரும் கவிஞரும் அவ்வாய்க்காலைச் சுற்றிப் பார்த்து விட்டு, ஒரு மலைக் கோட்டையைப் பார்க்கப் போனார்கள். பார்த்துவிட்டுத் திரும்பி வரும்போது இருட்டி விட்டது. குகை போன்ற மலைமுடுக்குப் பாதை ‘படார்’ என்று ஒரு வெடியோசை கேட்டது. நாமக்கல் கவிஞர் நடுநடுங்கி விட்டார். நாயக்கர் மோட்டார்க் கால்வண்டியை (மோட்டார் பைக்) நிறுத்தி, வெடியோசை கேட்ட திசையைப் பார்த்து ஒரு சலாம் செய்தார். மலைமேல் நின்ற ஒருவன் அப்படியே நிற்கும்படி கை காட்டினான். பக்கத்துப் புதருக்குள் இருந்து ஏழெட்டுப் பேர் வந்து மோட்டாரைத் தள்ளிக் கொண்டு, இருவரையும் இழுத்துக்கொண்டு போய் ஒரு வீட்டுக்குள் விட்டுச் சென்றனர். அது, அவ் வெல்லைப்புற மக்களின் தலைவன் வீடு தலைவன் இருவரையும் உற்றுப் பார்த்தான்; என்னென்னவோ கேட்டான்; இருவர்க்கும் புரியவில்லை. உருமாலையை எடுக்கச் சொன்னான்; எடுத்தனர். இருவரும் குடுமி வைத்திருந்தனர். குடுமியைத் தொட்டுப் பார்த்து அவன் சிரித்தான். பின் நாயக்கரைப் பார்த்து ‘நீங்கள் ஆங்கிலேயரா? என்று கேட்டான். நாயக்கர் இந்துஸ் தானியும் தமிழும் கலந்த மொழியில், ‘இல்லை இல்லை; நாங்கள் ஆங்கிலேயரைச் சேர்ந்தவர்களல்ல’ என்பதுபோல் சொன்னார். பின்னர் ஆங்கிலந் தெரிந்த ஒருவனை அழைத்து வந்தனர். அவன் இருவர் பேச்சையும் மொழிபெயர்த்துச் சொன்னான். நாயக்கர். ‘எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது; அந்த மொழி எங்களுக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்காது; ஆங்கிலேயர்கள் மிகவும் பொல்லாதவர்கள்; அவர்களுக்கும் எங்களுக்கும் பகை’ என்று மிகவும் கொச்சையான ஆங்கிலத்தில் தக்கித் தக்கிச் சொன்னார். தலைவன் முகமலர்ந்தது; ‘பின் எதற்காக ஆங்கிலே யருடன் சேர்ந்து இங்கே வந்தீர்கள்?’ என்றான். நாயக்கர் தட்டுத்தடுமாறித் தமிழ் கலந்த ஆங்கிலத்தில், ‘இங்கே யாரோ எல்லைபுறச் சாதியார் இருக்கிறார்களாம்; அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் ஆங்கிலேயன் அணை கட்டி விட்டானாம்; அதற்காக அவர்கள் ஆங்கிலேய னோடு பகை கொண்டுள்ளார்களாம். நாங்களும் அவனோடுபகை கொண்டுள்ளோம். அவர்களைப் பார்த்து நட்புச் செய்து கொண்டால், ஒரே காலத்தில் இரண்டு பக்கத்திலும் தாக்கி அவனைத் தொலைத்துவிடலாம். அந்த எல்லைப்புறச் சாதியாரைப் பார்க்கவே நாலைந்து நாளாக இந்தப் பக்கம் சுற்றிக் கொண்டிருக் கிறோம். அந்த எல்லைப்புறச் சாதியார் யாரென்று தெரியவில்லை’ என்றார். தலைவன் மகிழ்ந்தான்; ‘நாங்கள்தான் அவ் வெல்லைப் புறத்தார்; உங்கள் உருமாலையைக் கண்டுதான் வேறுபக்கம் சுட்டேன்; நீங்கள் சலாம் செய்யவும் பகைவர்களைச் சேர்ந்தவர்கள் அல்லவென்று எண்ணினேன்; உங்களுக்கு வேண்டிய உதவி செய்கிறேன்; நாம் இருவரும் சேர்ந்து வெள்ளைக்காரனைத் தொலைப்போம்’ என்று நாயக்கர் கையைப் பிடித்துக் குலுக்கி உட்கார வைத்தான். அப்போதுதான் நாமக்கல் கவிஞர்க்கு நல்லுயிர் வந்தது. இரவு நல்ல விருந்து. காலையில் மறுபடியும் பேச்சுவார்த்தை தொடங்கிற்று. எல்லைப் புறத்தலைவன், ‘எங்களிடம் நாலு லட்சம்போர் வீரர்கள் இருக்கிறார்கள்; இன்னும் ஒருமாதத்தில் வெள்ளைக் காரனோடு போர் தொடுக்கப் போகிறோம்; உங்களுடைய படை எத்தனைப் பேர் கொண்டது?’ என்றான். நாயக்கர், ‘எங்களுடைய படை பத்து லட்சம்பேர் கொண்டது’ என்றார். பின்னர்ப் போர் நடத்தப்போகும் வழி பற்றிய பேச்சு நடந்தது. நாயக்கர் கோணல் மாணலாக ஓர் இந்தியப் படம் வரைந்து, அதில் எல்லைப் புறத்தைக் காட்டி, விந்தமலை வரைக்கும் எங்களுக்குச் செல்வாக்குள்ள இடம் என்று கோடிழுத்துக் காட்டி, என்னென்னவோ பொய்யும் புழுகுமாகப் போர்க்கு அணிவகுத்துக் காட்டினார். அங்குள்ளவர் எவருக்கும் நில நூல் அறிவு இல்லை என்பதை அறிந்து கொண்டே நாயக்கர் அவ்வாறு பொய் பேசினார். ‘நன்மை பயக்குமானால் பொய்யும் மெய்யாகும்’ என்ற வள்ளுவர் வாக்கை நாயக்கர் அறிந்தவரல்லவா? போர்த் திட்டங்களெல்லாம் தீட்டியபின், கடிதப் போக்கு வரத்துக்காக நாயக்கர் சென்னையில் பொய்யான ஒரு முகவரியைக் கொடுத்தார். அவர்களும் ஒரு முகவரி கொடுத்தனர்; இதையெல்லாம் வெளியில் சொல்லக் கூடா தென வாக்குறுதி வாங்கிக் கொண்டனர். பகலில் சிறந்த விருந்து நடந்தது. மாலையில் மாலை மதிப்புடன் முதல் நாள் பிடித்துக் கொண்டு போன இடத்தில் கொண்டு வந்து விட்டுப் போயினர். கவிஞர் நாயக்கரின் அறிவின் நுட்பத்தை மெச்சினார். என்னே நாயக்கரின் அறிவின் நுட்பம்! 6. தமிழறிவு நாயக்கர் குடும்பமே நல்ல தமிழறிவுடைய குடும்பம். தாய் ஒரு தமிழ்க்கவி; தந்தை தமிழறிஞர், நாயக்கரின் அண்ணார், பா.வெ. பொன்னுச்சாமி நாயக்கர் சிறந்த தமிழ்ப்புலமை யுடையவர்; தங்கை பா.வெ. சொர்ணம் மையார் நல்ல தமிழறிவுடையவர்; நம் நாயக்கர் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் சிறந்த புலமையும் ஆராய்ச்சியும் உடையவர். தமிழில் ஜ, ஷ,க்ஷ, ஸ, ஹ, கு.ஷ் முதலிய எழுத்துக்கள் இல்லை. எனவே, இவ்வெழுத்துக்களை யுடைய மொழிச் சொற்களைத் தமிழில் எழுத முடியாது. ஆகையால், தமிழ் எழுத்துக் குறையுடைய மொழி. அவ்வெழுத்துக்களை யெல்லாம் தமிழில் கடன் வாங்கிக் கொள்ளவேண்டும் என்று ஒரு சிலர் தமிழைக் குறை கூறி வந்தனர். தமது தாய்மொழி குறையுடைய மொழி என்று பழிக்கப்படுவது கேட்டுப் பொறாத நாயக்கர், தமிழ் எழுத்துக்களை நுணுகி ஆராய்ந்தார்; தமிழில் ஆய்த எழுத்து (ஃ) என ஒன்று இருப்பது எதற்கென எண்ணிப் பார்த்தார்; அஃது, இஃது என்னும் சில சொற்களுக்குப் பயன்படமட்டும் ஆய்தவெழுத்து உண்டாக்கப்படவில்லை; அது வேறு பெரும் பயனுக்காக உண்டாக்கப்பட்டதாகும்; பிற்காலத்தினர் அதைப் பயன்படுத்தாது விட்டுவிட்டனர்; அந்த ஆய்த எழுத்தைக் கொண்டு, உலகமொழிகளில் உள்ள எல்லா எழுத்துக் களையும் தமிழில் எழுதி விடலாம் என்ற முடிவைக் கண்டார். தாங்கண்ட ஆராய்ச்சி முடிவைத் தமிழறி ஞர்கள் கூட்டத்தில் எழுதி உச்சரித்துக் காட்டினார். தமிழறி ஞர்கள் நாயக்கரின் ஆராய்ச்சித் திறனைப் பலபடப் பாராட்டிப் புகழ்ந்தனர். ஃப்ரான்ஸ் (குசயnஉந), ஆஃப்ரிக்கா (ஹகசiஉய), காஃபி (ஊடிககநந) என்று எழுதுவது, அதாவது, ‘ப்’ என்பதன்முன் ஆய்தத்தைஇட்டு, ‘கு’ என்பதன் ஒலியை உண்டாக்குவது நாயக்கர் கண்டதேயாகும். ஆய்த எழுத்தைத் தமிழ் எழுத்துக்களின் முன்னும் பின்னும் இடுவதால் பல எழுத்தொலிகளையும் தமிழெழுத்துக்களைக் கொண்டே எழுதலாம் என்பது நாயக்கர் கண்டறிந்த முடிவு. இன்னும் நாயக்கர் , ‘ஓம்’ என்னும் ஒலியிலிருந்தே தமிழ் எழுத்துக்க ளெல்லாம் உண்டாகின்றன என்பதை விளக்கி ஒரு நூல் எழுதியுள்ளார். நாயக்கர் எழுதிய ‘தமிழ் அலகைத் தொடர்’ என்னும் சிறு நூலால், அவரது தமிழ் இலக்கண ஆராய்ச்சி அறிவு விளங்கும். நாயக்கர் சிறந்த நாவன்மை யுடையவர். அவர் தம் வேலைக் கிடையே தமிழ்ச் சொற் பொழிவை முதன்மையாகக் கொண்டு தமிழ் வளர்த்து வந்தார். 7. பல்கலைச் செல்வர் நாயக்கர் ஒன்றைக் கண்டால் அப்படியே செய்யும் அறிவுத் திறம் படைத்தவர். ‘கண் கண்டால் கை செய்யும்’ என்பதை உண்மையுரையாக்கியவர் இவரே. நாயக்கருக்குக் கவிபாடத் தெரியும், கதையெழுதத் தெரியும், கட்டுரை யெழுதத் தெரியும், அழகாகப் பேசத் தெரியும், இசைபாடத் தெரியும்; வீணை, கின்னரம் (பிடில்). புல்லாங்குழல், மத்தளம் முதலிய இசைக் கருவிகளெல்லாம் வாசிக்கத் தெரியும், நடிக்கத் தெரியும் ஓவியம் எழுதுவார், பாவை பண்ணுவார், நிழற்படம் எடுப்பார். சும்மா இருப்பதென்பது நாயக்கருக்குத் தெரியாததொன்று. அவர் ஒரு வேளை தையல் தைத்துக்கொண் டிருப்பார்; இன்னொரு வேளை கடிகாரம் பழுது பார்த்துக் கொண்டிருப் பார்; பின்னொரு வேளை கையச்சு அடித்துக் கொண்டிருப் பார்; மற்றொரு வேளை மோட்டார்க் கால் வண்டியைப் பிரித்துப் பூட்டிக்கொண்டிருப்பார்; ஒருமுறை பார்க்கும் போது மரவேலை செய்வார்; மறுமுறை பார்க்கும்போது இரும்புவேலை செய்வார்; இன்னொருமுறை பார்க்கும்போது செருப்புத் தைப்பார். நாயக்கருக்கு இன்னது தெரியும், இன்னது தெரியாதென்பதில்லை; எல்லாம் தெரியும்; தொழில்களில் தாழ்வுயர்வில்லை; எத்தொழி லையும் எவரும் செய்யவேண்டும் என்னும் கொள்கையுடையவர்; அதற்குத் தானே வழிகாட்டியாக இருந்து வந்தார். தமிழின் பயக்குறையால் 25-12-1931- ல் நம்மை விட்டுப் பிரிந்தார். கே. ஏ. நாச்சியப்ப கவுண்டர் 1. தோற்றுவாய் எறும்புகளைப் பாருங்கள். அவை எப்போதும் ஊரிக் கொண்டே இருக்கின்றன. அவை ஏன் அப்படி ஓயாமல் உழைக் கின்றன? உணவுக்காகவே; உண்டு வாழ்வதற்காகவே. நாம் மட்டும் ஏன் சும்மா இருக்க வேண்டும்? கை கால் முதலிய உறுப்புக்கள் நமக்கு உழைப்பதற்காக ஏற்பட்டவை. உறுப்புக் குறைவில்லார் நன்கு உழைக்க வேண்டும்; உழைப்பின் பயனால் உண்டு உடுத்து வாழவேண்டும். உழைப்பு உடம்புக்கு நல்லது; உள்ளத்திற்கும் நல்லது. ஒருவர் முதலில் தன் வாழ்வை நல்வாழ் வாக்கிக் கொள்ள வேண்டும். ‘தன் கையே தனக்கு உதவி’ என்னும் உண்மையை உணர்ந்து, நன்கு உழைத்து உண்டு உடுத்து வாழவேண்டும். உழைப்பதற்கு வேண்டிய உறுப்புக்கள் இருந்தும் உழைக்காமல் சோம்பித் திரியக் கூடாது ஒருவர் தன் நல்வாழ்வுக்காக உழைப்பது தன்னலம் எனப்படும். ஒருவர் தன் வாழ்வுக்கு உழைப்பதோடு பிறர் வாழ்வுக் காகவும் உழைக்க வேண்டும். ஏன்? நாட்டு மக்கள் எல்லோரும் நல்வாழ்வு வாழ்வ தில்லை. ஒரு சில சோம் பேறிகளைத் தவிர, எல்லோரும் உழைக்கின்றனர். சிலர் இரவு பகல் எந்நேரமும் ஓயாமல் உழைக்கின்றனர். உழைப்பவ ரெல்லாம் உழைப்பின் பயன் முழுவதையும் பெறுவதில்லை. பலர் உழைத்தும் உணவும் உடையும் இன்றித் தவிக்கின்றனர். வாழ முடியாதவர்க்கு வாழ்வோர் உதவ வேண்டும். ‘நாடெங்கும் வாழின் கேடொன்றும் இல்லை’ என்பது ஆன்றோர் அமுதமொழியாகும். பிறர் நல்வாழ் வுக்காக உழைப்பது பிறர் நலம் அல்லது பொது நலம் எனப்படும். ஒருவர் செய்யும் பொது நலத்தால் அவர்க்குப்பேரும் புகழும் உண்டாகின்றன. பேரும் புகழும் உண்டாக உண்டாக அவர் மேலும் மேலும் முனைந்து பொது நலம் செய்ய முற்படு கின்றனர். பிறர்க்குச்செய்யும் பொதுநலத்தால் தனக்குப் பேரும் புகழும் உண்டாகின்றன. இத் தன்னலத்தின் பொருட்டே ஒருவர் பொது நலம் செய்கின்றனர். எனவே, தன்னலத்தின் பிள்ளையே பொது நலம் ஆகும். தன்னலம் இல்லையேல் பொது நலம் என்பதும் இல்லை. ஒருவர் தான் செய்யும் பொது நலத்தை மக்கள் புகழப் புகழ மேன் மேலும் பொது நலம் செய்து பொன்றாப் புகழடைய விரும்புகின்றனர். பொது நலம் தன்னலத்தின் பிள்ளை யெனினும், தன்னலத்தினும் பொது நலமே மக்களால் விரும்பப் படுகிறது; நன்கு மதிக்கப் படுகின்றது. இதனாலேயே நல்லறி வாளர்கள் பொது நலத்தை விரும்பிச் செய்து பொன்றாப் புகழை நிலை நாட்டுகின்றனர். ஒரு சில நல்லோர், தன்னலத்தையே மறந்து பொது நலம் செய்கின்றனர். இத்தகையோரைத் ‘தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளர்’ என்பர். இவ்வாறு பொது நலம் புரிந்து புகழ் பெற்ற பெரியோர்கள் நம் நாட்டில் பலருண்டு. இன்றும் பலர் உள்ளனர். பொது நலம் புரியும் இப்பெரி யோர்களாலேயே இவ்வுலகம் நடைபெற்று வருகின்ற தெனலாம். அத்தகைய பொது நலப் பெரியோர்களில் கொங்கணா புரம் நாச்சியப்பகவுண்டரும் ஒருவராவர். 2. பிறப்பு வளர்ப்பு கொங்கணா புரம்என்பது சேலம் இடைப்பாடி வழியில், இடைப்பாடிக்கு ஐந்துகல் கிழக்கில் இருக்கிறது. பதினெண் சித்தர்களில் கொங்கணர் என்பவர் ஒருவர். அவர் கொங்கு நாட்டினர் அவர் பெயரால் ஏற்பட்டதே இவ்வூர் ஆகும். ‘கொங்கணர் புரம்’ என்பதே கொங்கணபுரம், கொங்கணா புரம் எனத்திரிந்து வழங்குகிறது. கொங்கணாபுரத்தில் உள்ள பெருநிலக் கிழார் (ஜமீன்தார்) குடும்பங்களில் அர்த்த நாரிக் கவுண்டர் குடும்பமும் ஒன்று. அர்த்தநாரிக் கவுண்டர் வாழ்க்கைத் துணைவியார் நல்லம்மாள் என்னும் நல்லம்மை யார். அர்த்த நாரிக் கவுண்டரும் நல்லம்மாளும் தேடிய அரும்பெறல் செல்வமே நம் நாச்சியப்ப கவுண்டர். நாச்சியப்பா 15-1-1904-ல் பிறந்தார்; அறியாப் பருவத் திலேயே அருமைத் தந்தையை இழந்தார்; அன்னையால் அன்புடன் வளர்க்கப்பட்டுவந்தார். நாச்சியப்பா நாமக்கல்லில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் படித்துவந்தார் (1923). நாச்சியப்பாவின் பள்ளிப் பருவம் பிற்கால மாணவர் களுக்கு ஓர் எடுத்துக் காட்டாக அமைந்தது. ஒரு நன் மாணாக் கனுக்கு வேண்டிய நற்பண்புகள் அனைத்தும் நம் நாச்சியப் பாவிடம் அப்படியே அமைந்திருந்தன. அந் நற்பண்புகளே பிற்காலத்தில் இவருக்குப் பேரும் புகழும் பெருகுவதற்குக் காரணமாக இருந்தன. 3. பொது நலப் பணி கல்லூரிக்குச் சென்றதும் நாச்சியப்பாவின் பொது வாழ்வு பூக்கத் தொடங்கியது. கல்லூரியில் படிக்கும் போதே அவர் சங்ககிரிக் கூற்றாண்மைக் கழக உறுப்பினராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். ஆனால், சென்னையில் கல்வி பயிலும் தான், தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நலம்புரிய முடியாமல் பேருக்கு உறுப்பினராக இருக்க விரும்பவில்லை; அதனால், உறுப்பினர் பதவியை விட்டு விட்டார். அப்போது நாச்சியப் பாவுக்கு ஆண்டு பத்தொன்பது தான். அவ்வாண்டே நாச்சியப்பாவுக்குத்திருமணமானது; நாமக்கல் கூற்றாண்மைக் கழகத்தலைவர் பர்லி பி.எஸ். சிங்கைய கவுண்டர் என்பவர் மாமனாராக வாய்த்தார். பொது நலத்தில் விருப்பமுள்ள நாச்சியப்பா, கல்லூரி செல்வதை விட்டுப் பொது நலப் பணியில் ஈடுபடலானார். சங்ககிரிக் கூற்றாண்மைக் கழகத் துணைத் தலைர்: நாச்சியப்பாவின் பொது நலப்பணி பொதுமக்களுக்குத் தெரிந்துவிட்டது. இவரைச் சும்மா விட்டுவைக்க அவர்கள் விரும்பவில்லை; 1928-ல் மறுபடியும் சங்ககிரிக் கூற்றாண்மைக் கழக உறுப்பினராக்கினர். இவர் அக்கழகத் துணைத் தலைவராக இருந்து பணியாற்றிவந்தார். நாச்சியப்பாவின் பொதுநல ஆர்வத்தையும், செயலாற்றுந் திறத்தையும் கண்ட அக்கழகத் தலைவரும், நாச்சியப்பாவின் உறவினரும் ஆன கொங்கணாபுரம் என்.செங்கோட்டுவேல கவுண்டர் என்பவர் கழகத்தின் ஆட்சிப் பொறுப்பு அனைத்தையும் நாச்சியப்பாவிடமே ஒப்பு வித்தார். ‘கரும்பு தின்னக் கூலியா வேண்டும்’ பொதுநலம் புரிவதில் பேரார்வங் கொண்டுள்ள நாச்சியப்பா அவ்வாட்சிப் பொறுப்பை உவந்தேற்றார்; ஆட்சியைத் திறம்பட நடத்தினார். அதுபோது இவர் சேலம் நாட்டாண்மைக் கழக உறுப்பின ராகவும் இருந்து வந்தார்; அங்கு பொது மக்கட்குக் கேடுதரும் திட்டங்களை அஞ்சா நெஞ்சுடன் எதிர்த்தொழித்தும், நன்மை தருவனவற்றைச் செய்யும் படி வற்புறுத்திக் கூறியும் மக்கட்கு நன்னலம் புரிந்து வந்தார். அதனால், நாச்சியப்பாவின் பெயர் சேலங்கோட்டம் முழுவதும் பரவியது. சேலங்கோட்டப் பொது மக்கள் நாச்சியப்ப கவுண்டரின் தலைமையை எதிர்நோக்கி யிருந்தனர். சேலம் நாட்டாண்மைக் கழகத் தலைவர்: சேலம் நாட்டாண்மைக் கழகம் 1936-ல் சேலம், தர்மபுரி என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. பொது நலப் பணியே தன் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டுள்ள நாச்சியப்பா அவர்கள் சேலம் பகுதிக்குத் தலைவராகப் போட்டி இல்லாமல் தேர்ந் தெடுக்கப்பட்டார். பின்னர் (1938-ல்) அவ்விரு பகுதிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டது. அதற்கும் நாச்சியப்பா அவர்களே தலைவரானார். 1936-ல் இருந்து 1946 வரை சேலம் நாட்டாண்மைக் கழகம் நம் நாச்சியப்பாவையே தலைவராகப் பெற்றிருந்தது. பெரும்பாலோர் பொதுப்பணியைப் பொறுப்புடன் செய்யினும், அப் பொதுப்பணிக்குச் செலவிடும் காலம் சிறிதளவும், ஓய்வுக்குரிய காலம் பெரிதளவுமாக இருக்க விரும்புவர். ஆனால், நம் நாச்சியப்பாவோ அதற்கு நேர்மாறானவர். பொதுநலத் தொண்டருக்குக் கடமையைச் செய்யவே காலம் போதாதபோது ஒய்வை விரும்புவது எங்ஙனம்? பொதுநலப் பொறுப்பேற்ற பின் ஓய்வு என்பதை நாச்சியப்பாவின் உள்ளம் ஒரு நாளும் எண்ணி யிருக்காது. தூங்கும் போதும் நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்கு என்னென்ன செய்யலாம் என்று கனவு கண்டுகொண்டே தூங்கு வாரெனில், அவர் ஓய்வை எங்ஙனம் விரும்ப முடியும்? நாட்டாண்மைக் கழக அலுவலகத்தில் நுழைந்து, எல்லா வற்றையும் தானே பார்த்து, செய்வன வற்றைச் செவ்வனே செய்து முடித்தால்தான் அவர் மனம் மகிழ்ச்சியுறும். எதிலும் படித்துப் பாராது கையெழுத்துப் போடமாட்டார். நாச்சியப்பாவின் ஓயா உழைப்பும், உலையா முயற்சியும், பொதுநலத் தொண்டும், ஆளுந்திறமையும், நேர்மையுமே அவர் உயர்நிலை யடையும் ஏணிப்படிகளாய் அமைந்தன. அவர்கீழ் வேலை செய்வோர் எவரும் ஏமாற்றிப் பொதுமக்கட்குக் கேடுசூழ முடியாது. பொம்மைக்கூத் தாட்டுவோன் அப்பொம் மைகளின் கயிற்றைக் கையில் பிடித்துக் கொண்டு ஆட்டுவது போலவே இவர் ஆட்சி நடத்தி வந்தார். ‘சீமைப் பட்டதாரிகள் தான் (ஐ.ஊ.ளு. காரர்) ஆளுந் தகுதியுடையவர். அவர்களுக்குத்தான் ஆளுந்திறமை உண்டு’ என்ற பொய்யான கொள்கையை நம் நாச்சியப்பா பொய்யாக்கினார். சேலம் கோட்டத்தில் அவருக்குத் தெரியாத இடம் ஒன்றுமே இராது. மூலை முடுக்குகளையும் நேரில் சென்று பார்த்து, அங்கங்குள்ள குறைபாடுகளை அறிந்து களைந்து மக்கட்கு நலஞ் செய்து வந்தார்; தன் ஆட்சிக் குட்பட்ட எவ்வெவ் விடங்களில் எவ்வெவர் பணியாற்றுகின்றனர்; எத்தகையர், எப்பணியை, எவ்வாறு ஆற்றிவருகின்றனர் என்பது நாச்சியப் பாவுக்கு நன்கு தெரியும். எடுத்துக் காட்டாக: சேலம் நாட்டாண்மைக் கழகப் பள்ளிகளில், எந்தெந்தப் பள்ளியில் எந்தெந்த ஆசிரியர் இருக் கின்றனர்? அவர் சொந்த ஊர் எது? அவர் குடும்பம் எத்தகையது? அவர்குணம் என்ன? என்பவற்றைப் பேர்புள்ளியுடன் தெரிந்து வைத்திருந்தார் என்றால், நாச்சியப்பாவின் நேர்முக ஆட்சியின் மாட்சிக்கு வேறு என்ன சான்று வேண்டும்? குறிப்பாக, எங்கோ, ஒரு மூலையில் உள்ள பள்ளி ஆசிரியர் அப்பள்ளிக்கு வந்து எவ்வளவு காலம் ஆகிறது என்பதையும் நினைவு வைத்திருந்தா ரெனில், அவர் தம் பொறுப்புணர்ச்சியை என்னென்பது! எல்லா இடங்களுக்கும் இவர் தானே நேரில் சென்று வருவதால், எங்கெங்கு சாலைகள் போடவேண்டும், எங்கெங்கு சாலைகள் பழுதுபார்க்க வேண்டும், எங்கெங்கு பாலங்கள் கட்டவேண்டும் என்பதை அறிந்து, அங்கங்கே வேண்டிய வசதிகளை அவ்வப்போது செய்து போக்குவரத்து வசதியை உண்டாக்கினார். நம் நாட்டின் தற்குறித்தனத்தைப் போக்குவதில் அக்கறையுள்ள நாச்சியப்பா அவர்கள், வேண்டிய அளவு பள்ளிகளை ஏற்படுத்து வதில் முழு அக்கறை எடுத்துக் கொண்டார்; மூன்றுகல் சுற்றளவில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தால் தான் எல்லாப் பிள்ளைகளும் எழுத்தறிவைப் பெறமுடியும் என்பதை உணர்ந்த அவர் அவ்வாறே பள்ளிகளை ஏற்படுத்தி வந்தார். சேலங் கோட்டம் கல்வியில் பிற்போக்கான தென்று அரசினருடன் வழக்காடிச் சிறப்பு உதவி பெற்றார். பள்ளிகள் ஏற்படுத்தினால் போதுமா? சம்பளங் கொடுக்க முடியாத ஏழைப் பிள்ளைகள் எப்படிப் படிக்க முடியும்? சம்பளம் இல்லாமல் இருந்தால் ஏழைமக்களும் ஒருவாறு படிக்கமுடியும் என்பதை அரசினர்க்கு எடுத்துக்காட்டி, அதற்காக அரும்பாடு பட்டார். 1-9-1937 முதல், எட்டாம் வகுப்புவரை சம்பளமில்லாமல் படிக்கும் இலவசக் கல்வி முறையை நடை முறைக்குக் கொண்டுவந்த பெருமை நம் நாச்சியப்பாவையே சாரும். இன்றும் சேலம் நாட்டாண்மைக் கழகத்தில் இது நடைமுறையில் இருக்கிறது. எந்த ஒரு மாணவனும் ஐந்து கல் நடந்து சென்றால் ஆங்கோர் உயர்நிலைப் பள்ளியை அடைதல் வேண்டும் என நாச்சியப்பா திட்டமிட்டார். ஆனால், கழகத்தின் செல்வநிலை அதற்கு இடந்தரவில்லை. ஆனாலும் அவர் தன் திட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை; யார் தங்களுக்கு உயர்நிலைப் பள்ளி வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் கட்டிடம் கட்டித் தந்தால் அவ்வூரில் உயர்நிலைப்பள்ளி ஏற்படுத்தப்படும். ‘நிதி படைத்தவர் பொற்குவை தாரீர். ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்’ எனக் கேட்டுக் கொண்டார்; அவ்வாறே கட்டிடம் கட்டிக் கொடுத்த ஊர்களிலெல்லாம் உயர்நிலைப் பள்ளிகள் ஏற்படுத்தினார். பிறநாட்டாண்மைக் கழகங்களும் இவர் வழியைப் பின்பற்றின. பெரும்பாலோர் பொதுப்பணியை மதிப்புக்காக மேற் கொள்கின்றனர். ஆனால், நம் நாச்சியப்பாவோ பொதுப் பணியைத் தன் சொந்த வாழ்க்கைத் தொழிலாகவே கொண்டார்; இரவு பகல் எந்நேரமும் அக்கழக வளர்ச்சியிலேயே தன் கருத்தைச் செலுத்தி வந்தார்; சேலங்கோட்ட மக்களை எந்தெந்த வழிகளில் முன்னேற்றலாம்; என்னென்ன நன்மைகள் செய்யலாம் என்பதே அவர் கவலை. பெரும் பண்ணையக் காரராய் இருந்தும் அவர் தன் பண்ணையத் தைப் பற்றிச் சிறிதும் பொறுப்பேற்றுக் கொள்ள வில்லை. பண்ணையத்தின் வரவு செலவும் அவருக்குத் தெரியாது. ஊரிலிருந்தாலும் கழக வேலை பார்த்துக்கொண்டிருப்பாரே யன்றிப் பண்ணையத்திற்குப் போவதோ, அதைக் கவனிப்பதோ செய்யார்; பொதுநலப் பணியை மேற்கொண்டதிலிருந்து பண்ணையத்தைத் தன் அருமை அன்னையார் பொறுப்பில் விட்டுவிட்டார். அதிலிருந்து அவ்வன்னையேதான் பண்ணையம் பார்த்துக் குடும்பம் நடத்தி வந்தார். தன் கைச் செலவுக்கு அன்னையாரிடம் மாதம் ரூ. 100 பெற்று வந்தாரெனில், நாச்சியப் பாவின் பொதுநலப் பணியின் பொறுப்புணர்ச்சியை என்னென்பது! சென்னைச் சட்டமன்ற உறுப்பினர்: நாச்சியப் பாவின் பொதுத் தொண்டு சேலத்தோடு நிற்கவில்லை; மூன்று முறை (1933,37,46) சென்னை சட்ட மன்ற உறுப்பினராக இருந்தார். இவர் ஆளுங் கட்சியைச் சேர்ந்தவராய் இருந்தும், பொது மக்கட்குக் கேடுதரும் திட்டங்களைச் சட்டமாக்கக் கருதினால் தக்க காரணங்காட்டி எதிர்த்தே வந்தார்; மதுவிலக்குக் குழுவின் தலைவராய் இருந்து, சென்னை மாநிலம் முழுதும் சுற்றி, அத்திட்டம் வெற்றிகரமாக நடந்தேறக்தக்க திட்டமொன்று தீட்டித் தந்தார். கூட்டுறவுப் பணி: நாச்சியப்பா அவர்கள் உழவர் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். ஆகையால், உழவர் நலத்திற்காகவே நடைபெறும் கூட்டுறவு இயக்கத்திலும் பங்கு கொண்டு பணியாற்றி வந்தார். அவர் சேலங்கோட்டக் கூட்டுற வியக்கத் தலைவராக இருந்த போதுதான் சேலங்கோட்டக் கூட்டுறவு மத்தியப் பாங்கு முதல் வரிசையில் திகழ்ந்தது; இலட்சக்கணக்கான ஊதியமும் பெற்றது. அதே போல் கோட்டக் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையும் இம் மாநிலத்தின் முதன்மை நிலையைப் பெற்றது. கூட்டுறவு முறையில் மக்களுக்கு நலம் செய்யும் திட்டங்கள் அனைத்தையும் தன் சொந்த ஊராகிய கொங்கணா புரத்தில் திறம்பட நடத்தி, மற்ற இடங்களில் நடத்துவோர்க்கு வழிகாட்டினார். சென்னை மாநிலக் கூட்டுறவு யூனியன், சென்னை மாநிலக் கூட்டுறவுப் பாங்கு, சென்னை மாநிலக் கூட்டுறவு விற்பனைச் சங்கம் இவற்றின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் தமிழ் நாடு கூட்டுறவுக் கழகத் துணைத் தலைவராகவும், இந்தியக் கூட்டுறவு யூனியன் உறுப்னிராகவும் இருந்து நம் நாச்சியப்பா உழவர்க்கு நலம் பல புரிந்தார். இன்னும் எத்தனையோ பொது நிறுவனங் களில் பங்கு கொண்டு பொதுப் பணி புரிந்து வந்தார். பிரிவு: பொது நலத்துக்காகவே பிறந்து, பொது மக்கள் நல்வாழ்வுக்காகவே 23 ஆண்டுகள் இரவு பகல் இன்றி ஒயாது உழைத்து வந்த நம் நாச்சியப்ப கவுண்டர் அவர்கள் ஒயா உழைப்பால் உடல் நலிவுற்றார்; உடல் நலிவையும் பொருட் படுத்தாது, மக்கட்கு நலம் செய்யும் பொருட்டுச் சட்ட மன்றக் கூட்டத்திற்குச் சென்ற நாச்சியப்பா அவர்கள், 21-8-1951 காலை, சென்னை அரச மாளிகையில், தன் முதுமைத் தாயையும், தன் மக்களையும், நாட்டு மக்களையும் ஏங்கவிட்டுச் சென்றனர். இரு சட்ட மன்றங்களையும் ஒத்தி வைத்துச் சென்னை அரசினர் நாச்சியப்பாவின் பிரிவாற்றாத வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டனர். 4. நற்பண்புகள் நாச்சியப்பா அன்னையினிடத்தில் அளவு கடந்த அன்புடை யவர்; தான் பல நிறுவனங்களில் தலைவராக இருந்தும், ஆளுந் திறமை பெற்றிருந்தும் எதற்கும் அன்னையின் கருத்தைக் கேட்பார்; இறக்கும் வரைiயிலும் தாய் சொல்லை ஒரு நாளும் தட்டிய தில்லை. நாச்சியப்பா ஆடம்பரமற்ற எளிய வாழ்க்கையினர்; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர்; பொது மக்கள் பணிக்கே தன்னை ஆளாக்கிக் கொண்டவர்; அறியாது செய்த குற்றங்களைப் பொறுத்துக் கொள்வார்; ஆனால், நேர்மையில் தவறியவர்களை அஞ்சாது கண்டிப்பார்; செய்வதைத் திருந்தச் செய்வார்; எதையும் நன்கு எண்ணிப் பார்த்தே செய்வார்; செயலில் இறங்கிவிட்டால் மலைபோன்ற தடைவரினும் கலக்க மடையார்; பணியாற்றத் தொடங்கினால் இரவும் பகலும் இவருக்கு ஒன்றேதான். உண்பதற்கென்றும் உறங்குவதற் கென்றும் தனிக்காலம் ஒதுக்கியறியார்; நாச்சியப்பா வாய்ப்பேச்சு வீரரல்லர், செயல் வீரர். வாழ்க நாச்சியப்ப கவுண்டரின் வண் புகழ்! 1. தமிழ் வளர்த்தோர் தமிழ்மொழி: தமிழ்மொழி நமது தாய்மொழி. தமிழ் பேசுவதால் நாம் தமிழர் எனப்பெயர் பெற்றோம். தமிழ் வழங்குவதால் நம்நாடு தமிழ்நாடு எனப்பெயர் பெற்றது. தமிழ் நாடு, தமிழகம் எனவும் வழங்கப்பெறும். தமிழ் என்னும் சொல் தமிழ் மொழியையும், தமிழ் நாட்டையும் குறிக்கும். வடக்கே வேங்கடமலையையும், தெற்கும் கிழக்கும் மேற்கும் கடலையும் எல்லையாக உடையது நம் தமிழகம். தெற்கே குமரியாற்றை எல்லையாக் கொண்டிருந்த காலமும் உண்டு. ‘‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம், ’’ என்பது தொல்காப்பியப் பாயிரம். குமரியாற்றின் தெற்கே குமரிமலை, மணிமலை, பன்மலைத் தொடர் முதலிய மலைகள் பல அணி செய்ய, குமரியாறு , பஃறுளியாறு முதலிய பல்லாறுகள் வளஞ்செய்யப் பன்னூறுகல் பரப்புடையதாயிருந்த பெருவள நாடு என்னும் பழந்தமிழ் நிலப்பரப்பைப் கடல் கொண்டு விட்டதென்பது. ‘‘ பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள’’ என்னும் இளங்கோவடிகள் உரையால் விளங்குகிறது. ‘‘பஃறுளி யாற்று மணலினும் பலவே’’ என்னும் புற நானூற்றடி, பஃறுளியாறு பாய்ந்த நிலப்பரப்பிருந்த தென்பதற்குச் சான்றாக உள்ளது. அப்பெருநிலப் பரப்பு.‘தென்பாலி நாடு,’ ‘பெருவள நாடு’ என்னும் பெயர்களுடன் பொலிந்தது. இன்றைய ஆராய்ச்சி அறிஞர்கள் அதைக் ‘குமரிக் கண்டம்’ என்கின்றனர். நனிமிகு பழங்காலத்தே தமிழகம் வடக்கே பனி மலையை எல்லையாகக் கொண்டிருந்ததாகவும் கூறுகின்றனர் ஆராய்ச்சி யறிஞர்கள். இதற்குச் சிந்துவெளி நாகரீக ஆராய்ச்சி சான்று பகர்கின்றது. பழந்தமிழ் மக்கள் தாய்மொழிப்பற்றும்., தாய் நாட்டுப் பற்றும் மிக்குடையராக இருந்தனர்; தமிழை உயிரினும் பெரிதாகக் கருதி ஓம்பி வளர்த்து வந்தனர். தமிழ்மொழி அன்று உலக முதன் மொழியாகத் திகழ்ந்தது. தமிழ் மக்கள் அன்று உயரிய நாகரீக நல்வாழ்வு வாழ்ந்து வந்தனர்.உலக நாகரீக முன்னேற்றம் அன்று தமிழ் நாட்டை எதிர்நோக்கி நின்றது. தமிழ் என்பதற்கு இனிமை என்பது பொருள், தமிழ் மொழி இனிமையானமொழி.‘‘ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்குங்காணோம்’’ என்றார் பாரதியார், ‘‘தமிழுக்கு அமிழ்தென்று பேர்- அந்தத் - தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்’’ தீந்தமிழ்த்தேன்’ என்றெல்லாம் சிறப்பித்துக் கூறுவர் தமிழ் மொழியை. கற்போர் உள்ளத்தையும் உணர்வை யும். கேட்போர் உள்ளத்தையும் உணர்வையும்ஒருங்கு இன்புறச் செய்யுந் தன்மை தமிழ்மொழிக்கே உரிய தனித் தன்மையாகும். தமிழ் இனியமொழி மட்டும் அன்று; கரடு முரடில்லாத இயல்பாகிய மொழியும் ஆகும். தமிழ் இனிமை, இயல்பொடு எளிமையும் உடையதொரு மொழியாகும். தமிழ்மொழியை யாரும் எளிதில் கற்றுக் கொள்ளலாம். தமிழ் எழுத்துக்களைத் தெரிந்து கொண்டால், எழுத்துக் கூட்டி எல்லாத் தமிழ்ச் சொற் களையும் எளிதில் படித்து விடலாம். இவ்வளவு எளிதான மொழி உலகில் வேறொன்றும் இல்லையெனலாம். இனிமை, இயல்பு, எளிமை என்னும் மொழிப்பண்பு மூன்றும் ஒருங்கமையப் பெற்றது நம் தமிழ் மொழியேயாகும். தமிழ் மிகப்பழமையான மொழி. தமிழ்மொழி எப்போது உண்டானது என்று வரையறுத்துக் கூற முடியாது. “கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன்தோன்றிய மூத்த தமிழ்” என்றனர் முந்தையோர். “என்றுமுள தென்றமிழ்” என்றார் கம்பர். தமிழ் பழமையோடு இளமை யும் உடைய மொழியாகும். தமிழ், ஈப்புரூ, லத்தீன், கிரேக்கம், ஆரியம் என்னும் மொழிகள் தாம் உலகமொழிகளில் மிகவும் பழமையான மொழிகள். தமிழ் ஒழிந்த ஏனை நான்கு மொழிகளும் உலக வழக்கு ஒழிந்து விட்டன. அம்மொழிகளை எழுதப் படிக்க முடியுமே தவிரப் பேச முடியாது. உலகப் பழம்பெருமொழிகள் என உடனெண்ணப்படும் ஏனைய நான்கு மொழிகளும் பேச்சுவழக்கொழிந்தும், தமிழ் மட்டும், “உலகவழக் கழிந்தொழிந்து சிதையா நின் சீரிளமைத்திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே” என மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் வியப்பதுபோல், உலகம் வியப்புறும் வண்ணம் அன்று முதல் இன்றும் பேசவும் எழுதவுங் கூடியதாய் இருந்து வருகிறது. இவ்வாறு பழமையோடு இளமையும் உடைமை யால் தமிழ் மக்கள் தமிழைக் ‘கன்னித்தமிழ் எனப் பெருமை யோடு கூறிக் கொள்ளுகின்றனர். “என்றும் இளமையுடைய இருந்தமிழே” என்றார் ஒரு தமிழ்ப் புலவர். தமிழை ‘இளம் பழந்தமிழ்’ எனல் பொருத்தமுடையதாகும். உலகில் பல நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப் படுகின்றன. அவற்றுள் ஒரு சில மொழிகளுக்கு எழுத்தே இல்லை. சில மொழிகளுக்கு இலக்கண வரையறையே இல்லை. சில மொழி களில் ஒரு சிறு நூல்கூட இல்லை. நூலியற்றுந் தன்மையை அம்மொழிகள் இன்னும் பெறவில்லை. பல மொழிகள் தோன்றிச் சில ஆண்டுகளே ஆகின்றன. லத்தீன், கிரேக்கம் முதலிய மேனாட்டு மொழிகளின் கலப்புப் புதுமொழியே ஆங்கிலம். இந்தி முதலிய வடநாட்டு மொழிகள் ஆரியத்தின் கான் முளைகள். கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய தென்னாட்டு மொழிகள் தமிழ் மொழியின் தலைப் பிள்ளைகள். “கன்னடமும் களி தெலுங்கும் கவின்மலையாள முந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்” என்பது மனோன்மணீயம். மிகப் பழமையோ டிளமை யுடையதும், பேசவும் எழுதவும் படுவதும். இலக்கியப் பரப்பும் இலக்கணவரை யறையும் உடையதும் ஆகிய மொழி ‘உயர்தனிச் செம்மொழி’ எனப்படும். தமிழ் பழமை யோடு இளமையுடையது; பேச எழுதப்படுவது; நற்றிணை, குறுந் தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரி பாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், சிந்தாமணி முதலிய ஏராளமான இலக்கியங்களையுடையது; தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கணங்களை யுடையது. எனவே, தமிழ் உயர்தனிச் செம் மொழியாகும். இன்று உலகிலுள்ள உயர்தனிச் செம் மொழி யாகும். இன்று உலகிலுள்ள உயர்தனிச் செம்மொழி தமிழ் ஒன்றே என்பதை அறிந்து தமிழ் மக்கள் இன்புறுவதில் வியப் பொன்றுமில்லை. நமது முன்னோர்கள் தமிழை இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என மூன்றாகப் பகுத்துப் போற்றி வளர்த்துப் பயன டைந்து வந்தனர். அதனால், தமிழ் ‘முத்தமிழ்’ எனப் பெயர் பெற்றது. இத்தகைய பெயர் வேறு எம்மொழிக்கும் இல்லை. இத்தகைய மொழிச் சிறப்பும் தமிழர் தனிப் பண் பாட்டுக்குச் சான்றாகுமன்றோ? “மோனை முத்தமிழ் மும் மதமும் பொழியானை” என ஒட்டக்கூத்தர் தம்மைப் பெருமை யோடு கூறிக் கொண்டார். தமிழ்ப் பாட்டுக்கள் இயற்றமிழ் எனப்படும். அப்பாட்டுக் களை இசையுடன் பாடுவது இசைத்தமிழ் எனப்படும். இசையுடன் பாடிக் கொண்டு, கேட்போர்க்குப் பாட்டின் பொருள் நன்கு விளங்கும்படி மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத் தமிழ் எனப்படும். மெய்ப்பாடு என்பது, உள்ளக்குறிப்பை உறுப்புக்களின் மூலம் வெளிப்படச் செய்யும் நகை, அழுகை, அச்சம், வீரம், இழிவு, உவகை, வெகுளி, வியப்பு என்பவை, பழந்தமிழர்களாகிய நமது முன்னோர்கள், இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழிலும் ஏராளமான இலக்கிய நூல்களும் இலக்கண நூல்களும் செய்து முத்தமிழையும் முறையாக வளர்த்து வந்தனர். சிலப்பதிகாரம் முத்தமிழ் இலக்கிய நூல், சீரும் சிறப்பும் வாய்ந்த இத்தகைய முத்தமிழை நமது முன்னையோர் எவ்வாறு போற்றி வளர்த்து வந்தனர்? இதழ்: இன்று உலகில் அன்றன்று நிகழும் நிகழ்ச்சிகளை நாம் இதழ் வாயிலாகத் தெரிந்து கொள்கிறோம். (இதழ் பத்திரிக்கை) இதழே இன்று செய்தி தெரிவிக்கும் தூதனாக விளங்கி வருகிறது. அதனால், இதழ் ‘செய்தித் தாள்’ எனவும் வழங்குகிறது. இன்று நம்மை ஆள்வது கூட இதழ்தான். எந்த ஒரு சமூக, அரசியல் சீர்திருத்தத்தை, சட்டதிட்டத்தை எல்லா இதழ்களும் போற்றி எழுதுகின்றனவோ அதைத்தான் அரசியலார் நடைமுறைக்குக் கொண்டு வருகின்றனர். பெரும்பாலான இதழ்கள் போற்றி எழுதுவதையே மக்களும் விரும்பிக் கைக்கொள்ளுகின்றனர். மக்களை முன்னேற்றப் பாதையில் முடுக்குவதும், நாகரீக நல்வழியில் நடத்துவதும் இதழ்களேயாம். ஒரு சில நாட்களுக்கு எல்லா இதழ்களையும் வெளிவராமல் நிறுத்திவிட்டால் உலகமே இருண்டு விடும்; உலகில் நடப்பது ஒன்றுமே நமக்குத் தெரியாது. குருடன் பார்த்த கூத்துப் போலாகும் உலக நிகழ்ச்சி. அத்தகு நிலையில் உள்ளது இன்று இதழ்! இதழ்கள் நமக்குச் செய்தியறிவிப்பதோடு மட்டும் நிற்கவில்லை; மொழியறிவையும் கலையறிவையும் ஊட்டி வருகின்றன. இதழ்ப் படிப்பினால் மொழியறிவும் பொது அறிவும் பெருகி வருகின்றன நாட்டில். அரசியலறிவின் உயிர் நாடி இதழ்ப் படிப்பேயாகும். எனவே, இன்று மொழியை வளர்ப்பதும், மொழியறிவையுண் டாக்குவதும், நல்லது கெட்டதை எடுத்துக்காட்டுவதும், நன்னெறி புகட்டுவதும், அரசியலறிவை யூட்டுவதும், வாழவழி காட்டுவதும் இதழ்களே யாகும். இதழ்களே இன்று உலகை இயக்கி வருகின்றன என்னலாம். அவ்வளவு சிறப்பியல்புடையது இதழ்! அணுகுண்டுக்கு அஞ்சாத அரசியல் தலைவரும் இதழ்களின் எழுத்துக் குண்டுக்கு அஞ்சுகின்றரெனில், இதழ்களின் சிறப்பியல்பினைப் பற்றி எடுத் துரைக்க என்ன இருக்கிறது? வாழ்வில், அரசியல் உலகைப் படைத்துக் காத்து அழிக்கும் முத்தொழிலும் இன்று இதழ்களின் கையில்தான் இருக்கின்றன. புலவர்: இன்றைய இதழ்களின் நிலையிலேயே அன்றையத் தமிழ்ப் புலவர்கள் இருந்து வந்தனர். தமிழ்நாட்டைப் பண்டு இயக்கி வந்தவர் தமிழ்ப் புலவர்களே யாவர். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழுக்கும் தனித் தனிப் புலவர்கள் இருந்து வந்தனர். இயற்றமிழ்ப் புலவர்கள் சிறந்த புலமையுடைமையால், ‘புலவர்’ எனவும், பாக்கள் இயற்றும் வன்மையால், ‘பாவலர்’ எனவும், சிறந்த நாவன்மை - பேச்சு வன்மை- உடைமையால் ‘நாவலர்’ எனவும் பெயர் பெற்றிருந்தனர். அப்புலவர் பெரு மக்கள் நுண்மாண் நுழைபுலம் உடையவராய்த் திகழ்ந்தனர். இசைத் தமிழ்ப் புலவர்கள் ‘பாணர்’ எனப்படுவர். பாண்- இசை, பாணர் - இசையில் வல்லவர். பாணர் மகளிர் பாணிச் சிரியர் எனப்படுவர். அப்பாண் மகளிரும் இசையில் வல்லுநர் ஆகையால், ‘பாடினி’ ‘பாட்டி’ எனப்பட்டனர். பாணர்க்கு யாழ் இன்றியமையாததாகும். அதனால், பாணர் ‘யாழ்ப்பாணர்’ என்றே அழைக்கப்பட்டனர். நாடகத் தமிழ்ப் புலவர்கள் ‘கூத்தர்’, ‘பொருநர்’ என இருவகைப்படுவர். பொருநுதல் - வேறொருவர் போல் கோல மிட்டாடுதல். (கோலம் - வேஷம்) கூத்தர், பொருநர் என்னும் இருவகையினரும் இருவகைப்பட்ட ஒரு பிரிவினரே. கூத்தர் மகளிர் - ‘கூத்தி, ஆடினி’ எனப்படுவர். அம்மகளிர் விறல் பட ஆடுதலால், ‘விறலியர்’ எனப்பட்டனர். விறல் - மெய்ப்பாடு. இசை நாடகப் புலவர்கள் ஒன்று பட்டே இசை நாடகத் தமிழை வளர்த்து வந்தனர். இசை நாடகப் புலவர்கள் யாழ், குழல், பறை, தாளம் என்னும் நால்வகை இசைக்கருவிகளின் துணை கொண்டு அவ்விரு தமிழையும் மக்கட்கறிவுறுத்தி வந்தனர். இயற்றமிழ்ப் புலவர்கள் அவ்வக் காலத்துக்கேற்ற கருத்துக் களை யமைத்துப் புதுப்புது பாட்டுக்கள் பாடியும், இசைத் தமிழ்ப் புலவர்கள் அப்பாட்டுக்களை இசைக் கருவி களுடன் இசைத்து இசையுடன் பாடியும், நாடகத் தமிழ்ப் புலவர்கள் அவ்விசைக் கேற்பப்பாட்டுக்களின் பொருள் விளங்க ஆடியும் முத்தமிழையும் முறையாக வளர்த்துவந்தனர். இம்முப் புலவரும் தமிழ் வளர்ப் பதையே தங்கள் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். இவர்கள் தமிழ்நாட்டு ஊர்தோறும் சென்று தமிழ்ப் பொது மக்களுக்கு முத்தமிழறி வினை ஊட்டி வந்தனர். இம் முப்புலவர்களின் உலையா முயற்சியால், ஓயா உழைப் பினால் முத்தமிழும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வந்தன. பழந்தமிழ்ப் புலவர்கள் சிறந்த அறிஞர்களாகவும், நல் லொழுக்க முள்ளவர்களாகவும், நாவன்மை படைத்தவர்களாகவும், அஞ்சா நெஞ்சம் உடையவர்களாகவும், பொது நலத் தொண்டே தம் பிறப்பின் பயனெனக் கொண்டவர் களாகவும், தன்னல மென்பதைக் கனவிலும் கருதாதவர் களாகவும், தமிழ் மொழி வளர்ச்சியிலும் தமிழர் முன்னேற்றத் திலும் அளவு கடந்த அக்கறையும் ஆர்வமும் உடையவர் களாகவும் இருந்தனர்; அன்பு, அருள், அடக்கம் பொறை, நாச்செம்மை முதலிய நற்குணங்களுக்கு இருப்பிடமாகத் திகழ்ந்தனர். இத்தகைய சால்புடைமை பற்றியே அவர்கள் ‘சான்றோர்’ எனப்பட்டனர். அச்சான்றோர் இல்லாத ஊர் குடியிருத்தற்கு ஏற்ற ஊர் அன்றென அக்காலத் தமிழ் மக்கள் கருதிவந்தனர். “சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின் தேன்தேர் குறவர்தேயம் நன்றே” என்பது வெற்றிவேற்கை. அப்புலவர்கள் தம்மை நன்னெறிக்கண் நிறுத்த தேயன்றித் தமிழ்ப் பொது மக்களையும் நன்னெறிக்கண் நிறுத்தி வந்தனர். தமிழ்த் தலைவர்கள் தவறு செய்தால் அஞ்சாது இடித்துரைத்து நன்னெறியில் நடக்கும்படி செய்வர். மலையமான் திருமுடிக் காரியின் இளங் குழந்தைகளை யானைக்காலில் மிதித்துக் கொல்ல முயன்ற கிள்ளி வளவனுக்கு அஞ்சாது அறிவுரை புகட்டி, அக்குழவிகளைக் கொல்லாது காத்த கோவூர் கிழார் என்னும் புலவர் பெருமான் வரலாறு இதற்கு எடுத்துக்காட்டாகும். அவர்கள் ஒருவருடைய நல்ல குணங்களையும் கெட்ட குணங்களை யும் நாடறியச் செய்வர். நன்னன் என்பான் பெருங் கொடையாளனாக இருந்தும், இரக்கமின்றி ஒரு பெண்ணைக் கொலை செய்த குற்றத்திற்காக அவனைப் ‘பெண் கொலை புரிந்த நன்னன்’ என நாடறிய செய்தமை இதற்கு எடுத்துக் காட்டாகும். இத்தகைய சீரிய குணங்களால் தமிழ்ச் செல்வர்கள் அன்னாரிடம் மிகுந்த அச்சமும் மதிப்பும் உடையவராக நடந்துவந்தனர். தமிழகத்தில் அன்றன்று நிகழும் நிகழ்ச்சிகள் புலவர் பெருமக் களாலேயே நாடு முழுதும் பரப்பப்பட்டு வந்தன. பண்டு தமிழ்நாட்டை நன்னெறி பிறழாது ஆண்டவர் தமிழ்ப்புலவர்களே யென்பது மிகையாகாது. இவ்வாறு அவர்கள் தமிழ் வளர்ப்பதையும், தமிழ் மக்களை நல்வழியில் நடத்துவதையுமே தம் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு, என்றும் நிலையாக ஓரிடத்தில் தங்கியிராமல் தமிழ் நாடெங்கணும், பள்ளத்தை நோக்கிச் செல்லும் வெள்ளம்போல ஊரூராகச் சுற்றிக்கொண்டே இருந்ததால், வருவாயுடைய தொழிலெதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர். தமிழ்ச் செல்வர்கள் கொடுக்கும் பரிசே - பாட்டின் விலையே - அவர்களது குடும்ப வருவாயாக இருந்து வந்தது. இதனால், ‘பரிசில் வாழ்நர், பாவாணர் ’ என்னும் காரணப் பெயர்கள் அவர்கட்குண்டாயின. அவ்வாறு அவர்கள் பரிசில் பெறப் பாடிய பாட்டுக்களே பத்துப் பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்கச் செய்யுட்களில் பெரும்பாலானவை. அன்னார் பாடிவைத்த எத்தனையோ அரும்பெரும் செய்யுட்கள் நமக்குக் கிடைக்காமல் போயின. அவற்றுள் முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, மாபுராணம், பூதபுராணம், இசை நுணுக்கம், குணநூல், செயிற்றியம். சயந்தம், கூத்து, வரி, பேரிசை, சிற்றிசை என்பன சிறந்தவை. கழிந்ததற் கிரங்கு வதிற்பயனென்ன? கிடைத்துள்ள வற்றையாவது அழியாமல் போற்றிப் படித்துப் பயன்பெறுவது தமிழ் மக்களின் நீங்காக் கடமையி லொன்றாகும். செல்வர் : தமிழ்ச் செல்வர்களும், சிற்றரசர்களும்., பேரரசர்களும் தங்களைப் பாடிப் பரிசில் பெறவரும் புலவர்கள் விரும்பியதை விரும்பியவாறு இல்லையென்னாமல் கொடுத்து வந்தனர். அச்செல்வர்களின் கொடை மிகுதியால் புலவர்கள் ஏராள மாகத் தோன்றினர். அவர்கள் தம்முட் போட்டி போட்டுக் கொண்டு பாட்டுப் பாடியும் ஆடியும் தமிழை வளர்த்து வந்தனர். பழமரம் நாடிச்செல்லும் பறவைகள்போல முத்தமிழ்ப் புலவரும் செல்வரை நாடிச் செல்வர்; தாம்பெற்றபரிசிலை வேண்டு வார்க்கு வரையாது கொடுப்பர். ‘தாம்பெற்ற செல்வம் பெறுக இவ் வையகம்’ என்னும் உயர் பண்புடைய புலவர் பெருமக்கள், தாம் பரிசுபெற்ற செல்வரிடத்தே தம்மெதிர்ப்பட்ட புலவரைப் போம்படி அனுப்பி வந்தனர். இதற்குச் சான்றாக உள்ளவையே புலவராற்றுப்படை, பாணராற்றுப்படை, கூத்தாற்றுப்படை, பொருணறாராற்றுப் படை, விறலியராற்றுப்படை என்னும் ஆற்றுப் படைத்துறை களும் நூல்களும். பழந்தமிழ் மன்னர்களும் செல்வர்களும் புலவர்கள் தங்களைப் புகழ்ந்து பாடுவதை அவ்வளவு பெருமையாக மதித்து வந்தனர்; புலவர் பாடாததை மிகமிக இழிவாக எண்ணி வந்தனர் .தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன், ‘என்னை மதியாது வந்துள்ள அவ் வெழு வரைப் புறங்காட்டி யோடும்படி செய்யேனெனில், மாங்குடி மருதன் முதலிய புலவர்கள் பாடாது வரைக என் நிலவரை’ என்று வஞ்சினங் கூறியதே இதற்குச் சான்றாகும் . ஒருவர் எய்தும் புகழில் புலவர் பாடும் புகழே தலையாய புகழாக மதிக்கப்பட்டு வந்தது. ஒரு பழந்தமிழ்க் குடியைக் குறிப்பிடும் போது ‘புலவர் பாடும் புகழொடு வாழ்ந்த குடி’. என்பது வழக்கம். தமிழ்ப் புலவர்களுக்குக் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டு வறுமையுற்ற தமிழ்ச் செல்வர்கள் எண்ணிறந்தோர். தாய்மொழிமேல் உள்ள பற்றினால், ஒப்புரவறிந்த உயர் பண் பாட்டால் புலவர்கள் எதைக் கேட்டாலும் இல்லை யென்னாமல் கொடுத்துப் பொன்றாப் புகழை நிலை நாட்டினர் தமிழ்ப் பெருங்குடி மக்கள், ஈதல் இசைபட வாழ்தலே மக்கட் பிறப்பின் பயன். அதைவிட மக்கட் பிறப்பினால் அடையும் பயன் வேறில்லை. ‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்னும் பொரு ளுரையை யுணர்ந்த தமிழ்ச் செல்வர்கள். தமிழ்ப்பற்றின் தூண்டு தலினால் புலவர்க்கு வாரி வாரிக் கொடுத்தனர் .இதனாற்றான் கொடைமடம் பட்ட பாரி, காரி, ஒரி, ஆய், நள்ளி, பேகன், அதியன், எவ்வி, பண்ணன், குமணன், புல்லி முதலிய தமிழ் வள்ளல்கள் தோன்றினர். புலவர்க்கு நாடு கொடுத்தும், ஊர் கொடுத்தும், தலையைக் கொடுத்தும், உயிரைக் கொடுத்தும், அரசு கொடுத்தும், அரசிளங்கு மரனைக் கொடுத்தும், மலையேறிக் கண்ட மாநில வருவாயைக் கொடுத்தும், தமிழ் வளர்த்த வள்ளல்கள் பலர். இத்தமிழ்ப் புலவர்களும் வள்ளல்களும் இல்லா திருந் திருந்தால் தமிழும் எப்பொழுதோ இறந்து செத்த மொழிப் பட்டியலில் சேர்ந்திருக்கும் . இந்நேரம் தமிழென்னும் பெயரே கூட மறைந்தொழிந்திருக்கும். தமிழ் மொழி அழிந்தொழிந்து சிதையாது அப்படியே நிலைத்திருப்பதற்குப் புலவர் வறுமையும் செல்வர் புகழ்மையும் காரணமோ? அன்றி அவ்விருபாலாரின் தமிழ்ப்பற்று காரணமோ? யாதாயினும் அது வாழ்க! பாரி முதலியோர் சங்ககால வள்ளல்கள்; அவர்கள் வரலாற்றினை ஒருவாறு நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர் களுக்குப் பின்னரும் தமிழ் நாட்டில் எத்தனையோ கொடை மடம் பட்ட தமிழ்ப் பெருவள்ளல்கள் இருந்து வந்தனர். அவர்களில் சிலரது கொடை மிகவும் வியக்கத்தக்க கொடையாகும். அத்தகைய தமிழ்க் கொடையாளர்களில், கொங்கு நாட்டுக் கொடையாளர்கள் சிலரின் வரலாறே இந்நூலில் கூறப்படுகிறது. உங்கள் முன்னோராகிய அன்னாரின் தமிழ்ப் பற்றையும், கொடைத் திறத்தையும் அறிந்து இன்புறுவதோடு. தாய்மொழிப் பற்றுடையீராகித் தமிழ் வளர்ப்பீர்களாக. 2. கொங்கு நாடு தமிழ்நாட்டுப் பிரிவுகள்: வடக்கில் வேங்கட மலையையும், ஏனை மூன்று திசையினும் கடலையும் எல்லையாக உடையது பண்டைத் தமிழகம். தமிழகத்தில் ஆட்சி முறை என்று ஏற்பட்டதோ அன்றிருந்து தமிழகம் முடியுடை மூவேந்தர் என்று சிறப்பிக்கப்படும் சேர, சோழ, பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. அதனால், பழந்தமிழகம் சேர நாடு, சோழ நாடு, பாண்டி நாடு என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. இவை சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் எனவும் வழங்கும். சேர சோழ பாண்டியர் என்போர், பழந்தமிழ்ப் பெருங்குடிகளில் மூத்த முதற் குடியினராவர். “பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒரு தனிக் குடி” என்பது சிலப்பதிகாரம். இம்மூன்றில், பாண்டிய அரசமரபே முதலில் தோன்றியதாகும். சேர சோழ பாண்டிய நாடுகளேயன்றித் தமிழத்தில் தொண்டை நாடு, நடு நாடு, கொங்கு நாடு, என்ற பிரிவுகளும் உண்டு. இவற்றுள், தொண்டை நாடும், நடு நாடும் பிற்காலத்தே ஏற்பட்டவையாகும். கொங்கு நாடு பழங் காலத்திலிருந்தே இருந்து வருகிறது. சேர நாடு: மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேல்புறம் உள்ள நிலப்பரப்பு சேரநாடு எனப்படும். அதாவது, திருவாங்கூர்- கொச்சி நாடும், மலையாளக் கோட்டமும் (கோட்டம் - ஜில்லா) ஆகும். இதன் தலைநகர் வஞ்சி என்பது. முசிறி, தொண்டி என்பவை சேர நாட்டின் துறைமுகப்பட்டினங்கள். சோழ நாடு: திருச்சி, தஞ்சைக் கோட்டங்கள் சோழ நாடு எனப்படும். அதாவது, சிதம்பரத்துக்கு வடக்கேயுள்ள வட வெள்ளாற்றுக்கும், புதுக்கோடைக்குப் பக்கத்தில் பாயும் தென் வெள்ளாற்றுக்கும் இடைப்பட்டது சோழநாடு. இதன் தலைநகர் உறையூர். பின்னர்ப் புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினமும் தலைநகராக இருந்தது. காவிரிப்பூம்பட்டினமும், நாகப் பட்டினமும் சோழ நாட்டின் துறைமுகப் பட்டினங்கள். பாண்டி நாடு: மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலிக் கோட்டங் கள் பாண்டி நாடு எனப்படும். வடகிழக்கில் தென் வெள்ளாறும், வடக்கில் பழனியும், பாண்டி நாட்டின் எல்லையாகும். இதன் தலைநகரம் மதுரை, கொற்கை என்பது பாண்டி நாட்டின் துறைமுகப் பட்டினம். தொண்டை நாடு: சென்னை, செங்கற்பட்டு, வடவார்க்காட்டுக் கோட்டங் களும், தென்னார்க்காடு, சித்தூர்க் கோட்டங்களில் ஒரு பகுதியும் தொண்டை நாடு எனப்படும். இதன் வடக்கெல்லை திருப்பதி மலை; தெற்கெல்லை பாலாறு. இதன் தலைநகர் காஞ்சி நகர். கடன்மல்லை என்பது இதன் துறைமுக பட்டினம். தொண்டை நாடு முதலில் சோழ மன்னர்களாலும், பின்னர் பல்லவர் களாலும் ஆளப்பட்டு வந்தது. “தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து” என்னும் பெருமையுடையது இந்நாடு. நடுநாடு: தென்னார்க்காட்டுக் கோட்டத்தின் பெரும் பகுதியும், வடஆர்க்காட்டுக் கோட்டத்தின் ஒரு பகுதியும் நடுநாடு எனப்படும். இது சோழ நாட்டின் வடக்கெல்லையான வடவெள்ளாற்றுக்கும், தொண்டை நாட்டின் தெற்கெல்லை யான பாலாற்றுக்கும் இடைப்பட்டதாகும். இதன் தலைநகர் திருக்கோவிலூர். இந்நாட்டை மலையமான் மரபினர் ஆண்டு வந்தனர். சங்ககாலத் தமிழ் வள்ளல்களில் ஒருவனான மலைய மான் திருமுடிக்காரி இம்மரபினனே. சேர சோழ பாண்டியர் என்னும் பேரரசர்களின் கீழ்ச் சிற்றரசர்கள் பலர் இருந்து, அப்பழந்தமிழ் நாட்டைச் சீரும் சிறப்புடன் திறம்பட ஆண்டு வந்தனர். அச்சிற்றரசர்கள் தன்னுரி மையுடன் இருந்து வந்தனர். முடியுடை மூவேந்தர் - பேரரசர், பெருநில மன்னர், நெடுநில மன்னர் எனவும், சிற்றரசர் - குறுநில மன்னர் எனவும் பெயர் பெறுவர். அத்தமிழ்ப் பெருநில மன்னர், குறுநில மன்னர் ஆட்சிக்கீழ் இருந்தபோது, தமிழ்நாடு பெற்றிருந்த பெருமையும் இன்பமும் பேரும் பெருவாழ்வும் இனியொருகால் பெறுமா என்பது கனவு நிலையேயாகும். அவற்றைப் பழந்தமிழ் நூல்களில் படித்தின்புற வேண்டியது தான். கொங்குநாடு: கோவை, நீலகிரி, சேலங் கோட்டங்களும், திருச்சி மதுரைக் கோட்டங்களில் வடபகுதியும் கொங்கு நாடு எனப்படும். மதுரைக் கோட்டத்திலுள்ள பழனியும், திருச்சிக் கோட்டத்திலுள்ள குளித்தலையும் கொங்கு நாட்டின் தெற்கெல்லையாகும். கொங்குநாட்டின் இடையில், சேலம் கோவைக் கோட்டங் களின் எல்லையாகக் காவிரியாறு தெற்கு நோக்கிச் செல்கிறது. தமிழ் நாட்டின் பெரியதோர் உயிராறு - வற்றாத ஆறு - காவிரியே. தமிழ்நாட்டின் வளத்துக்குக் காரணமாய் இருப்பது காவிரியாறே. ‘மாற்றாத காவேரி வளநாடு’ என்றார் கம்பர். காவிரியின் மேல்பகுதி மேல்கொங்கு எனவும், கீழ் பகுதி கீழ்கொங்கு எனவும் பெயர் பெறும். கோவைக் கோட்டம் மேல்கொங்கு நாடாகவும், சேலம் கோட்டம் கீழ்கொங்கு நாடாகவும் அமைந்துள்ளன. கொங்கு நாடு -பூந்துறை நாடு, காங்கய நாடு, வடகரை நாடு முதலிய இருபத்து நான்கு உள்நாடு களையுடையது இன்றும் அவ்வுள் நாட்டுப் பிரிவு வழக்கத்தில் இருந்து வருகிறது. கொங்கு நாடு அயலாராட்சிக் குட்படு முன்னர், அவ்வுள் நாடொவ்வொன்றும் ஒரு தலைவரின் தலைமையின் கீழ் இருந்து வந்தது. இவர் நாட்டுத் தலைவர் எனப்படுவர். அந்நாட்டு மக்கள் மிகுந்த நாட்டுப்பற்றுடைய வராய், தம்நாட்டுச் சமூக சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுக் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வந்தனர். பெயர்க் காரணம்: கொங்கு நாடு என்னும் பெயர் இந்நாட்டுக்கு எப்படி உண்டானது? பெயர்க்காரணம் என்ன? ‘கொங்கு’ என்பது பூந்தாது, மணம், தேன் என்னும் பலபொருள் ஒருசொல். (பூந்தாது - மகரந்தம்) கொங்கு நாடு முழுவதும் மலைத் தொடரும் பெருமலையும், சிறுமலையும், குன்றுகளும் மிகுந் துள்ளன. எனவே, பண்டு நாடெங்கும் மரம் செடி கொடிகள் மிகுந்து, தழைத்துப் பூத்து மணங்கமழ்ந்ததனாலும், தேன் மிகுதியாக இருந்ததனாலும் நமது முன்னோர்கள் இந் நாட்டுக்குக் கொங்கு நாடு என்று பெயர் வைத்தனர். அருமை யான காரணம், அழகான பெயர்! ‘கொல்லிமலைத் தேன் சொரியும் கொற்றவா’ (கம்பர்) எனக் கொங்கு நாட்டுத்தேன் இலக்கியச் சிறப்புப் பெற்றுள்ளது. கொல்லிமலை கொங்கு நாட்டு மலைகளிலொன்று, ‘பூநாடு, மணநாடு, தேனாடு’ என்னும் மூன்றையும் உள்ளடக்கிக் ‘கொங்கு நாடு’ என்றனர். கொங்கு நாட்டினர் ‘கொங்கர்’ எனப்படுவர். ‘கொங்கர் செங்களம்’என்பது சிலப்பதிகாரம். இயற்கை வளம்: ‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்’ என்பது ஒரு தமிழ் நாட்டுப் பழமொழி. மலிதல் - நிறைதல். பல்வகை வளமும் குறையாது நிறைந்திருத்தல். இப்பழமொழி எதனால் எழுந்தது? இதன் கருத்தென்ன? ஒரு நாட்டின் வளத்துக்குக் காரணமாய் இருப்பவை மலைகளும் ஆறுகளுமே யாகும். கொங்கு நாட்டின் மேற்கெல்லையாக அகன்றுயர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கிறது. இது தமிழ்நாட்டின் செவிலித் தாயாகும். வடக் கெல்லையாக வளமலிந்த பாலைமலைத் தொடர் இருக்கிறது. இவ்விரண்டு மலைத் தொடர்களும் கொங்கு நாட்டின் மேற்கிலும் வடக்கிலும் இயற்கை அரணாக அமைந்துள்ளன. அகநாட்டில் ஆனைமலை, வெள்ளிமலை (வெள்ளியங்கிரி), சேர்வராயன்மலை, கொல்லிமலை என்னும் பெருமலைகளும், சென்னிமலை, சிவன்மலை, பழனிமலை, வெண்ணெய்மலை, தலைமலை, மருதமலை, திருச்செங்கோடு, கஞ்சமலை முதலிய சிறு மலைகளும், நாடெங்கும் ஊற்றிருந்தூறும் பல குன்றுகளும் அமைந் துள்ளன. ஆனைமலை முதலிய பெருமலைகள் நான்கும் பல கல் பரப்புடைய வளமிக்க பெருமலைகளாகும். அம் மலைகளின் மேல் ஊர்கள் பல உள்ளன. அவ்வூர்கள் குடிவளம் மிக்கவை. அம்மலைகளை மலை என்பதைவிட மலைநாடெனல் பொருந்தும். அத்தொடர் மலைகளும், பெருமலைகளும், சிறுமலைகளும் குன்றாக் கொழுநீர்க் களஞ்சியங்களாகும். மாரி காலத்தே உட்கொண்ட மழைநீரைக் கோடைக் காலத்தே அருவிகளாகத் தந்து, நாட்டை வளமுடையதாக்கி, மக்களை வாழ்விக்கும் வள்ளன்மைமிக்கவை அம்மலைகள். வான் பொய்ப்பினும் தான் பொய்யா வளநீர்ச் செல்வமான காவிரியாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றிக் கொங்கு நாட்டின் வழியாகச் செல்கிறது சேர்வராயன் மலையில் சரபங்க யாறும், கஞ்சமலையில் பொன்னியாறும், மேற்குத் தொடரில் வானியாறும் வெள்ளி மலையில் நொய்யலாறும், ஆனைமலையில் அமராவதி யாறும் தோன்றி வந்து காவிரியில் கலக்கின்றன. வானியும் வற்றாதே ஆறே. காவிரி பாலை மலைத் தொடரைக் கடந்துவரும்போது மலையருவிகள் பல வந்து அதில் கலக்கின்றன. இன்னும் எத்தனையோ சிற்றாறுகளும் பெறும் பள்ளங்களும் ஓடைகளும் வந்து காவிரியில் கலக்கின்றன. இத்தகைய வருவாயி னையுடைய தாய்க் கொழுநீர்ச் செல்வக் குவையினதாய்ப் பொலிகின்றது கொங்கிற் காவிரி! மற்றும் திருமணிமுத்தாறு, தொப்பையாறு, செய்யாறு, நள்ளாறு, சண்முகயாறு, சண்பகயாறு, பாலையாறு, வாழையாறு காரியாறு, குடவனாறு முதலிய எத்தனையோ சிற்றாறுகளும் பெரும் பள்ளங்களும் கொங்கின் வளத்துக்குக் காரணமாக உள்ளன. சோழ நாட்டில் நெல்விளைகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நெற் கொடை கொடுப்பது சோழ நாடே. நெல் விளைய நீர் நிரம்ப வேண்டும். ‘நீருயர நெல்லுயரும்’ என்றார் ஒளவையார், ‘கோள் நீலை திரிந்து கோடை நீடினும் தான் நிலைதிரியாத் தண்டமிழ்ப் பாவை’ யாகிய காவிரி கொங்கு நாட்டின் சொத்து. காவிரியின் நற்றாயான மேற்குத் தொடர்ச்சி மலை கொங்கு நாட்டின் உடைமை. கொங்கில் மழை பெய்து கொழு நீர்க் காவிரியில் வெள்ளம் வந்தால் தான் சோழ நாட்டில் நெல் விளையும்; ‘சோழவள நாடு சோறுடைத்து’ என்னும் சிறப்பைப் பெறும்; ‘புனல் நாடு’ என்னும் புகழைப் பெறும். சோழ நாடு நெற்களஞ்சியம் ஆகக் கொங்கு நாட்டின் நீர்க் களஞ்சியம் தேவை. சோழ நாட்டுக்கு வேண்டும் போது நீர்க்கொடை கொடுக்கும் மேட்டூர்த் தேக்கமும் கொங்கு நாட்டின் உடைமையே. சோழ நாட்டின் வளம் கொங்கு நாட்டின் கையில்தான் இருக்கிறது. எனவே, ‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்’ என்னும் பழமொழி யிலுள்ள ‘எங்கும்’ என்பது பெரும்பாலும் சோழ நாட்டையே குறிக்கும். மேலும், நமக்கு நெல்லுணவு மட்டும் இருந்தால் போதாது, அவரை, துவரை, உளுந்து, கடலை, தட்டை, பச்சை, கொள்ளு முதலிய பருப்பு வகைகள், காய்கறி கிழங்குகள், எண்ணெய், மிளகாய் முதலியனவும் வேண்டும். ஆடைக்குப் பருத்தி வேண்டும். இவையெல்லாம் கொங்கு நாட்டில் தான் மிகுதியாக விளைகின்றன. மற்றும் கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு, சாமை, தினை முதலிய தவசங்களும் கொங்கில் நிறைய விளைகின்றன. இதனால் தான் ‘கொங்கு மலிந்தால்’ எங்கும் மலியும்’ என்னும் பழமொழி எழுந்தது. உணவு, உடை இரண்டும் மக்களுக்கு இள்றியமையாதவை. இதனால்தான், ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப்படுபவன் தான் கெடுவதோடு, அவன் சுற்றமும் ‘உடுப்பதும் உண்பதும் இன்றிக்கெடும்’ என்றார் வள்ளுவர். உணவுக்கும் உடைக்கும் வேண்டுவனவெல்லாம் கொங்கு நாட்டில் குறைவின்றி விளைகின்றன. தன்னிடத்தில் பெய்யும் மழையாலும், தனது விளைவாலும் வாழ்ந்து வருவது கொங்கு நாடு. மழை வளந்தப்பிய காலத்தும் வளந்தப்பாத ஏராளமான ஆழ்ந்தகன்ற கிணறுகளையுடையது கொங்கு நாடு. கொங்கு நாட்டில் உள்ள கிணற்று வளம் வேறு எந்நாட்டினும் இல்லை. உலகப் புகழ்பெற்ற சிறந்த கால்நடைச் செல்வத்தை மிகுதியாக உடையதும் கொங்கு நாடேயாகும். கொங்கு நாட்டு உழவர்கள் உழைப்பின் செல்வர்கள்; ‘இலம் என்று அசைஇ’ இராதவர்; உலையா முயற்சியுடையவர். இதனாலேதான், ‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்’ என்பதோடு, ‘கொங்கு வெறுத்தால் எங்கும் வெறுக்கும்’ என்னும் பழமொழியும் வழங்கி வருகிறது. மழை பெய்வதற்குக் காரணமான உயர் மரக்காடுகள். மலை, குன்று, ஆறு, ஏரி, குளம், குட்டை, பள்ளம், படுகை களெல்லாம் எங்கு பார்த்தாலும் அடர்ந்து, வானங் கவிந்தாற் போல் பச்சைப் பசேலென்றிருந்தது பழங் கொங்குநாடு. கொங்கு நாட்டின் வளத்துக்குக் காடும் ஒரு காரணமாகும். கொங்கு நாட்டின் வளத்துக்கு நிலைக்களனாக இருந்து வந்த பன்னூற்றுக் கணக்கான ஏரி, குளம், குட்டைகளெல்லாம் அழிந்து போயின. அவற்றை யெல்லாம் பழுதுபார்த்துப் புதுக்கிப் பழையபடி நாட்டை வள முடையதாக்கி மக்களை வாழ்விப்பது ஆள்வோர் கடமையாகும். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனப் பழந்தமிழ் நாடு நால்வகைப் பாகுபாடுடையதாக அமைந்திருந்தது. அவ்வாறு நிலத்தை நால்வகையாகப் பகுத்துப் பயன்கொண்டு வாழ்ந்து வந்தனர் பழந்தமிழ் மக்கள். முல்லை நில மக்கள், குறிஞ்சி நில மக்கள், மருத நில மக்கள், நெய்தனில மக்கள், என அந்நில வேறுபாட்டால்தான் பெயர் வேறுபட்டிருந்தனர் பழங்காலத் தமிழ் மக்கள், அந்நானிலத்தின் சிறப்பினை, அந்நாளில் மக்களின் பழக்க வழக்கங்களைச் சங்க நூல்களிற் பரக்கக் காணலாம். காடும், காடு சார்ந்த இடமும் முல்லை நிலம். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம். வயலும் வயல்சார்ந்த இடமும் மருத நிலம். கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலம். காடு சார்ந்த இடம் புன் செய்க் காடுகள். வயல் சார்ந்த இடம்- தோட்டங்கள். கொங்கு நாடு காடும் மலையும் தலை மயங்கிய நாடு; வயல் போன்ற வளமுடைய தோட்டங்களை யுடைய நாடு; கடல்போல வற்றாத காவிரிக் கரையையுடைய நாடு. எனவே, கொங்கு நாடு, நானிலமும் ஒருங்கமைந்த நன்னாடாகும். அரசியல்: கொங்கு நாடு பழங்காலத்திலிருந்தே சேர, சோழ பாண்டி யர்களாகிய முடியுடை வேந்தர் மூவர் ஆட்சிக் குட்படாது தனியாட்சி நாடாகவே இருந்து வந்தது; தமிழ்ப் பேரரசர்க்குரிய வீரம், கொடை, புகழ் என்னும் முப்பண்பும் ஒருங்கு வாய்க்கப் பெற்ற தமிழ்ச் சிற்றரசர்களால் சீரும் சிறப்புடன் ஆளப்பட்டு வந்தது. அச்சிற்றரசர்களில் சிலர் முடியுடை வேந்தர் மூவரும் ஒன்று கூடி எதிர்க்கினும் எதிர்த்து நிற்கும் அவ்வளவு ஆற்றலும் போர்த்திறனும் உடையவராக இருந்தனர். அவர்களிற் பெரும் பாலோர் வேளிர் என்ற சிறப்புப் பெயர்பெற்ற வேளாண் குலச் செல்வர்களே யாவர். அக் குறுநில மன்னர்கள் தமக்குள் பகையின்றி, நாட்டு நலனே தம் வாழ்க்கை நலனெனக் கொண்டு. குற்றங்கடிந்து குடிபுறங் காத்து வந்தனர். அன்னார் தம்மை ஒரு மூத்த முதற்குடி மகனாக எண்ணிச்செம்மையிற்றிறம்பாது செங் கோலினராய் நாடாண்டு வந்தனர். அவர்கள் முடியுடை வேந்தர் மூவரிடத்தும் உறவுடைய ராகவே இருந்து வந்தனர்; ஒவ்வொரு கால் ஒரு சிலர் மூவரசரோடும் தனித்தனி போர் புரிந்தும் இருக்கின்றனர். கொங்குப் படைத் துணையில்லா மூவரசர் போர்க்கள வெற்றி இன்றெனலாம். அத்தகு மறக் குணத்தோடு, கொங்குக் குறுநல மன்னர் சிறந்த தமிழ்ப் புலமையும் தமிழ்ப்பற்றும் உடையராகத் திகழ்ந்தனர். கொங்கு நாட்டுக் குறுநில மன்னர்கள் நாட்டதி காரத்தோடு, தலைமலை, காவேரிபுரம், தொப்பூர் பொன்முடிக் கணவாய்களின் வழியாக வடக்கத்தியார் தமிழ் நாட்டுக்குள் படையெடுத்து வாரா வண்ணம் பாதுகாத்து வந்தனர். கொங்கரின் போர்த் திறமையே அயலார் நினைக்கவும் முடியாத படி செய்து வந்தது ஊர்த் தலைவர்களால் திறம்பட ஊராண்மை நடத்தும் பெருமை கொங்கு நாட்டுக்கே உரிய தனிப் பெருமையாகும். “சேரர் கொங்கு வைகாவூர் நன்னாடு” என்னும் அருண கிரியார் திருப்புகழ்க் கூற்றைக் கொண்டு, ‘கொங்கு நாடு சேர மன்னர்க்குரியது’ என்பது தவறான கொள்கையாகும். ஏதோ ஒரு சிலகாலம், அதுவும் மிகப்பிற்காலத்தே, கோவை கோட்டத்தின் தென் மேற்குப் பகுதி சேரர் ஆட்சிக்கீழ் இருந்திருப்பதாகத் தெரிகிறதேயன்றிக் கொங்கு நாடு சேரர்க் குரியது என்பதற்கு யாதொரு சான்றும் இல்லை. அருணகிரியார் காலத்துச் சிற்றரசன் ஒருவன், கொங்கு இரு பத்துநான்கு நாட்டில் ஒன்றான வையா புரி நாட்டைப் பிடித்து (பழனி) ஆண்டிருக்கலாம். வைகாவூர் அல்லது வையாபுரி நாடு கடைச் சங்கக் காலத்தே வையாவிக் கோப்பெரும் பேகன் மரபினர்க் குரியதாயிருந்தமையால், அருண கிரியார்க் கூற்றைக் கொண்டு கொங்கு நாடு சேர மன்னர்க் குரியது என்பது பொருந்தாது. ஒவ்வொரு காலத்தே பாண்டி யரும் சோழருங்கூட கொங்கு நாட்டின் தென் பகுதியையும், தென் கிழக்குப் பகுதியையும் பிடித்து ஆண்டிருக்கின்றனர். கொங்கு நாட்டின் முதன்மையான ஊர்களிலொன்றான கருவூர் (கரூர்) ஒரு காலத்தே சோழ மன்னரின் வாழ்விடமாக இருந் திருப்பதே இதற்குச் சான்றாகும். கொங்கு நாடு சேரர்க் குரிய தெனின், சேரன் செங்குட்டுவன் ‘கொங்கர் செங்களத்துப் போர்’ புரிந்திருந்திருக்க ஏதுவில்லையல்லவா? கி.பி.9-ம் நூற் றாண்டுக்கு முன் கொங்கு நாடு கொங்குக் குறுநில மன்னர்களின் தனியரசு நாடாகவே இருந்து வந்தது. பெருமை: வள்ளல்கள்; கொடைக் குணம் உடையோர் உலகில் எங்கும் உண்டு. ஆனால், கொடுத்துக் கொடுத்து வறுமை யுற்றவர் தமிழ் நாட்டில்தான் உண்டு. இரவலர் எதைக் கேட்டாலும் இல்லையென்னாது, தம்மிடத்துள்ளதை வரையாது கொடுப்போர் வள்ளல் எனப்படுவர். அத்தகைய வள்ளல்களை மிகுதியாக உடையது தமிழ்நாடு. கடைச் சங்க காலத்தில் இருந்த தமிழ் வள்ளல்கள் எனப்படுவோர் எழுவர். அவர் பாரி, காரி, ஓரி, ஆய், அதியன், பேகன், நள்ளி என்பவர். இவ்வெழுவருக்கும் பின்னர் இருந்த ஒரு பெரு வள்ளல் குமணன் என்பான். இவர்களுள் அதியன், ஓரி, பேகன், குமணன் என்னும் நால்வரும் கொங்கு நாட்டினராவர். அதியாமான் என்பவன் சேலங் கோட்டத்தில் உள்ள தகடூர் நாட்டை ஆண்டு வந்தான். தகடூர் (தர்மபுரி) என்பது அந்நாட்டின் தலைநகர். இவன் அதியமான் நெடுமான் அஞ்சி எனப்படுவான். ஒளவைக்கு அருநெல்லிக்கனி கொடுத்த வள்ளல் இவனே. இவன் அக்கனியைக் கஞ்சமலையில் இருந்து பறித்துவந் தான். கரும்பை முதன் முதல் பயிர்செய்தவன் இவ்வதியமான் அஞ்சியின் முன்னோனொருவனேயாவான். அதியமான் மரபினர் பொன்முடிக் கணவாயைப் பாதுகாத்து வந்தனர். கொல்லிமலை என்பது சேலங்கோட்டத்தில், நாமக் கல்லுக்குப் பக்கத்தில் இருக்கிறது. அம்மலையும் அதைச் சுற்றி யுள்ள நிலப்பரப்பும் கொல்லிமலை நாடு எனப்படும் அது மிக்க வளம் பொருந்திய நாடு. கொல்லிமலை நாட்டை ஓரி என்பவன் ஆண்டு வந்தான். ஆதன் ஓரி என்பது அவன் பெயர், அவன் விற்போரில் வல்லவன். அதனால், அவன் ‘வல்வில் ஒரி’ எனப் பட்டான். ஓரி மலைமேல் இருந்துவந்தான். அவன் தன்னைப் பாடிவரும் புலவர்க்குத் தன் நாட்டைப் பங்கிட்டுக் கொடுத்த பெருவள்ளல். பழனி என்னும் ஊர் உங்களுக்குத் தெரியும். வையாபுரி என்பது பழனியின் பழைய பெயர். கொங்கு இருபத்து நான்கு நாட்டில் வையாபுரி நாடும் ஒன்று. அந்நாட்டின் தலைநகர் வையாபுரி (பழனி), அது மலைவளம் பொருந்திய நாடு. அந் நாட்டை ‘வையாவிக்கோப்பெரும்பேகன்’ என்பவன் ஆண்டு வந்தான். இப்பேகனே மழையின் நனைந்த மயிலுக்குப் போர்வை கொடுத்த வள்ளியோனாவான். உடுமலைப்பேட்டைக் கூற்றத்திலும் கொழுமம் என்று ஓர் ஊர் இருக்கிறது. அவ்வூரையடுத்துக் குதிரை மலை என்னும் மலை இருக்கிறது. அக் குதிரைமலை முன்னர் முதிரமலை அல்லது முதிரம் என்று வழங்கிற்று. அம்முதிர மலை நாட்டைக் குமணன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் பெருங்கொடை யாளன். பெருந்தலைச் சாத்தனாருக்குத் தன் தலையைக் கொடுக்க இசைந்த தனிப்பெரு வள்ளல் இவனே. பழனிக்குப் பொதினி என்ற பெயரும் உண்டு. பழனிக்குப் பக்கத்தில் ஆய்க்குடி என்னும் ஊர் இருக்கிறது. அவ்வூரில்தான் ஆய் என்னும் வள்ளல் இருந்ததாகவும், பொதினிமலை நாட்டின் ஒரு பகுதியை அவன் ஆண்டு வந்தனன் எனவும் கூறுகின்றனர். இது ஆராய்ச்சிக்குரியது. பவணந்தி முனிவரைக் கொண்டு நன்னூல் செய்வித்த சீயகங்கன் என்னும் அரசனும், வில்லிப்புத்தூராழ்வாரைக் கொண்டு பாரதம் பாடுவித்த வரபதியாட்கொண்டான் என்னும் மன்னனும் கொங்கு நாட்டினரே. இன்னும் கொங்கு நாட்டில் எத்தனையோ வள்ளல்கள் வரையாது கொடுத்து வண்டமிழ் வளர்த்து வந்திருக்கின்றனர். புலவர்கள்: ஒரு நாட்டின் புலவர்களே அந்நாட்டின் பெருமைக்குக் காரணமாவர். ‘தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து’ எனத் தொண்டை நாட்டின் பெருமை கூறுதல் காண்க. கடைச்சங்ககால புலவர்கள் தமிழ் நாடு முழுதும் இருந்தவராவர். அவர்களில் பெரும்பாலோர் இந்நாட்டின ரெனத் துணிந்துகூற முடியாதவார யிருக்கின்றனர். அவர்களில் கொங்கு நாட்டுப் புலவர்கள் எத்தனை பேர்? யார் யார்? என அறிய அவாவுதல் இயல்பே. சங்க நூற் புலவர்களில் பதினாறு பேர் கொங்கு நாட்டுப் புலவர்களாவர். கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார், கருவூர்க் கலிங்கத் தார், கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், கருவூர்க் கோசனார், கருவூர் கீழார், கருவூர்க் கண்ணம் பாளனார், கருவூர்ச் சேரமான் சாத்தன், கருவூர் நன்மார்பனார், கருவூர்ப் பவுத்திரனார், பூதஞ்சாத் தனார் என்போர் கொங்கு நாட்டுக் கருவூரினர். செங்குன்றூர்க் கிழார் - திருச்செங்கோடு, பொன் முடியார் - தகடூர் நாட்டுப் பொன்முடி என்னும் ஊர். பெருந்தலைச் சாத்தனார்- பவானிக் கூற்றத்துப் பெருந்தலையூர். (கூற்றம் - தாலுக்கா) அந்திகீரனார் - பவானிக் கூற்றத்து அந்தியூர் உல கடத்துக் கந்தரத் தனார் - அந்தியூரை அடுத்துள்ள உலகடம் என்னும் ஊர். தகடூர் யாத்திரை ஆசிரியர் ஒருவர். சங்க நூற் புலவர்களில் இன்னும் எத்தனை பேர் கொங்கு நாட்டுப் புலவர்களோ? அறிந்து கொள்ள முடியவில்லை. ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்றான பெருங்கதை ஆசிரிய ரான கொங்கு வேளிர், ஈரோடு கோவை வழியில், ஈரோட்டின் மேற்கில் 16-வது கல்லில் உள்ள விசயமங்கலம் என்னும் ஊர். சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார், விசயமங்கலத்திற்குப் பக்கத்தில் இருந்த நிரம்பை என்னும் ஊர். நன்னூல் ஆசிரியரான பவணந்தி முனிவர். விசயமங்கலத்தை அடுத்துள்ள சீனாபுரம் என்னும் ஊர். வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியல் ஆசிரியர் குணவீர பண்டிதரும், அவருடைய ஆசிரியரான வச்சணந்தி முனிவரும் பொள்ளாச்சிக் கூற்றத்துக் களந்தை என்னும் ஊர். இன்னும் பிற்காலத்தே கொங்கு நாட்டில் பன்னூற்றுக் கணக்கான தமிழ்ப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்குக் காரணமாய் இருப்பவை மருத்துவம், வாகடம் என்னும் இருகலைகளுமே யாகும். இக் கலைகளில் தமிழர் உலகப் புகழ் பெற்றவர். அவ்விரு கலைகளையும் நன்கு ஆராய்ந்து, தமிழ் மக்களை உலகப் புகழுக்குரியமை யாக்கியவர் தமிழ்ச்சித்தர் களே யாவர். இவர்கள் மருத்துவ வாகட ஆராய்ச்சியேயன்றி, மெய்ப் பொருளாராய்ச்சியிலும் வல்லுனர். மருத்துவ நூல்களும், வாகட நூல்களும், அறிவு நூல்களும், செய்து மக்களை வாழ்வித்த தமிழ்ச் சித்தர்களில் பலர் கொங்கு நாட்டினரா வார். கருவூர்ச் சித்தர் - கருவூர் கஞ்சமலைச் சித்தர் - கஞ்சமலை,. போகர், புலிப்பாணி இருவரும் பழனி. கொங்கணர் - தாராபுரக் கூற்றத்து ஊதியூர். இடைஞானி யார் - அரூர்க் கூற்றத்துத் தென்கரை என்னும் ஊர். பாம்பாட்டிச் சித்தர் - கோவைக் கூற்றத்து மருதலை. சித்தர் பதி னெண்மர் என்பர். அவர்களுள் எழுவர் கொங்கு நாட்டினர். அதியமான், ஓரி, பேகன், குமணன் என்னும் வள்ளல் களும், கொங்கு நாட்டு ஊர்தோறும் இருந்து வந்த பெருஞ் செல்வர்களும், கொடைமடம் பட்ட கொங்கர்களாகையால், சேர, சோழ, பாண்டிய, தொண்டை நாட்டுப் புலவலர் பெரு மக்கள், பழமரம் நாடிவரும் பறவைகள் போலக் கொங்கு நாட்டை நோக்கி வந்த வண்ணம் இருப்பர். கொங்கு நாடு புலவர் பெருமக்களின் உறைவிடமாகத் திகழ்ந்தது. கொடைவள மிக்கது கொங்கு நாடு, என்பது புலவர் புகழ்மொழி. சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த பெருமை பாண்டி நாட்டிற்குண்டெனில், தமிழ்ப் புலவர்களுக்கு வரையாது வாரி வாரிக் கொடுத்துத் தமிழ் வளர்த்த பெருமை கொங்கு நாட்டுக்கேயுண்டு. கொங்கு நாட்டின் கொடைத் திறத்தால், கொங்கர்களின் கொடை மடத்தால் எழுந்தவையே சங்கநூற் செய்யுட்களில் பெரும் பாலவை எனல் மிகையாகாது. ‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்’ என்ற பழமொழி எழுந்ததற்கு இதுவுமொரு காரணமாகும். 3. வணங்காமுடி வாணராயர் பழந்தமிழ் நாடு - சேர நாடு, சோழ நாடு, பாண்டி நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு என ஐந்து கூறாகப் பிரித்து ஆளப்பட்டு வந்தது; கொங்கு நாட்டைக் கொங்கு வேளிர் என்னும் சிற்றரசர்கள் சீரும் சிறப்புடன் செம்மையாகத் தனியாட்சி புரிந்து வந்தனர் என்பதை முன்னர்ப் படித்தறிந் தீர்கள். தமிழ் நாட்டில் முடியுடை மூவேந்தர் ஆட்சியொழிந்து, நாயக்க மன்னர் ஆட்சி ஏற்பட்ட பின்னர் அக்கொங்குச் சிற்றரசர்கள் தம் அரசுரிமையை இழந்து வெறும் படைத் தலைவர் நிலையை அடைந்தனர். இந்நிலைக் கேற்ப அவர்கள் ‘பாளையக்காரர்’ எனப்பட்டனர். பாளையம் - படை, பாளையக் காரர்- படைத் தலைவர். வஞ்சிபாளையம், மேலப்பாளையம், வேப்பம்பாளையம் என்னும் ஊர்ப்பெயர் அப்பாளையக்காரர் தங்கியிருந்ததால் ஏற்பட்ட பெயரே யாகும். பாளையம் என்பது, காளிப்பட்டி, தேனாம்பேட்டை, ஓலவலசு என்னும் ஊர்ப் பெயர்களிலுள்ள பட்டி, பேட்டை, வலசு என்பன போல இன்று ஊர்ப்பெயராக வழங்கிவருகிறது. தமிழ்நாட்டில் ஆங்கில ஆட்சி ஏற்பட்ட பின்னர் அப் பாளையக்காரர் படையை வைத்திருக்கும் உரிமையும் படை யேந்தும் உரிமையும் பறிக்கப்பட்டு, அரசினருக்கு நிலவரி வாங்கித் தரும் நிலையினர் ஆயினர். அவர்தான் ஜமீன்தார், மிட்டதார் என்பவர், அவ்வுரிமையும் இப்போது பறிக்கப்பட்டு விட்டது. அவர்களுள் சமத்தூர்ப் பாளையக் காரரும் தொன்று தொட்டு வந்த பாளையக்காரரேயாவர். அதாவது தமிழ்ச் சிற்றரசராக இருந்து, தமிழ் நாட்டில் ஏற்பட்ட அயலாராட்சியினால் பாளையக்காரரானவர். சமத்தூர் என்பது கோவைக் கோட்டம், பொள்ளாச்சிக் கூற்றத்தில் இருக்கிறது. இது கொங்கு நாட்டுப் பழவிறலூர் களில்- பழஞ் சிறப்பினையுடைய ஊர்களில் ஒன்றாகும். சமத்தூர்ப் பாளையக்காரர் கொங்கு வேளாள மரபினர். அதாவது, பழைய வேளிர் மரபைச் சேர்ந்தவர். இம்மரபினர், வாணராயர் என்னும் குடிப்பெயரையும், வணங்காமுடி என்னும் வழிவழிப் பட்டப் பெயரையும் உடையவர். இம்மரபினர் இன்றும் செல்வாக்குடன் இருந்து வருகின்றனர். இம்மரபினர் செந்தமிழ் வேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களிடம் பல சிறப்புக்கள் பெற்றுள்ளனர். ‘வணங்கா முடி’ என்னும் வழிவழிப் பட்டம் ஒரு பாண்டி மன்னனால் வழங்கப்பட்ட பட்டமேயாகும். இம் மரபின னொருவன், ஒரு சிற்றரசனைக் காணச் சென்று, நெடுநேரம் காத்திருந்தும் அவனைக் காணப் பெறாமையால், விரைவில் காணும் பொருட்டு, அவ்வரசன் அருமையாக வளர்த்து வந்த வாயிலில் கட்டியிருந்த ஒரு செம்மறிக் கடாயின் காதுகளை அறுத்து அம் மன்னனால், ‘வளர்கடாயைக் காதறுத்த வணங்கா முடி வாணராயன்’ என்று பாராட்டப் பெற்றான். இவ்வாணராயர் மரபினர் பழந்தமிழ் மன்னர்க்குரிய வீரம், கொடை, புகழ் என்னும் முப்பண்பும் ஒருங்குடைய வராவர்; தம் தாய்மொழியாம் தமிழ் மொழி வளர்ப்பதையே கடமையாகக் கொண்டவர்; புலவரைப் போற்றிப் புகழொடு வாழ்ந்து வந்தனர். இவ்வாணராயர் மரபில், கி.பி.15ஆம் நூற்றாண்டில், வணங்காமுடி வாணராயர் என்பவர் இருந்தார். இவரது இயற்பெயர் தெரியவில்லை. சமத்தூர் வாணராயர் மரபினர் புகழைக் கல்மேல் எழுத்துப் போல் நிலைபெறச் செய்தவர் இவரே. இவர் தமிழை முறையாகக் கற்றுணர்ந்தவர்; தமிழ் இலக்கிய இலக்கணங்களில் நல்ல பயிற்சி உடையவர்; தமிழின் இனிமையை நன்கு சுவைத்தறிந்தவர்; எப்போதும் தமிழ்ப் புலவர்களால் சூழப்பட்டே இருப்பவர். இவரைத் தனியாகக் காண்பதே அரிது. பண்ணையத்தை மேற்பார்வை பார்க்கும் போதும் இரண்டொரு புலவர் உடனிருப்பர். தமிழ் நூல்களைப் படிப்பதும், தமிழ்ப் புலவர்கள் கூறும் பொருளுரையைக் கேட்பதுமே பொழுதுபோக்காக உடையவர்; தமிழ்ப் புலவர்கள் எதைக் கேட்டாலும் இல்லை என்னாமல் கொடுக்கும் இயல்புடையவர். வரையாது கொடுக்கும் வள்ளல் எனலாம். கொடைமடம் பட்டவர் தமிழர். கொடுத்தல் தமிழர்களின் பிறவிக்குணம். கேட்டுக் கொடுத்தல், கேளாது கொடுத்தல், அழைத்துக் கொடுத்தல், அளவின்றிக் கொடுத்தல், வற்புறுத்திக் கொடுத்தல், வரையாது கொடுத்தல் எனக் கொடையில் பலவகை யுண்டு. இரவலர் இன்னது ஈஎன இரக்க, அதை இல்லை என்னாமல் மனமுவந்து கொடுப்பதே இயல்பான கொடையாகும். பாரி முல்லைக்குத் தேர் கொடுத்ததும்; பேகன் மயிலுக்குப் போர்வை கொடுத்ததும்; கேளாமல் கொடுத்தக் கொடையாகும். கொடை முரசறைந்து கொடுத்தல் அழைத்துக் கொடுத்தலாகும். இலைக்கறி மேல் தூவும் மாவுக்காக கொஞ்சம் அரிசி வேண்டுமென்று கேட்க, ஆய் கன்றுடன் யானையைக் கொடுத்ததும், சேரமன்னர் சிலர் மலையேறிக் கண்ட நிலவரு வாயைக் கொடுத்ததும்; அளவின்றிக் கொடுத்த கொடையாகும். அதியமான் நெடுமான் அஞ்சி ஒளவைக்கு அருநெல்லிக்கனி கொடுத்தது வரையாது கொடுத்ததாகும். இவையெல்லாம் பழங்கொடை வகை. ஆனால் நமது வணங்காமுடி வாணராயர் கொடையோ புத்தம் புதிய புதுக்கொடையாகும். ஒருநாள் சமத்தூருக்கு ஒரு தமிழ்ப் புலவர் வந்தார். அவர் வணங்கா முடியை இனிய தமிழ்ப் பாட்டுக்களால் புகழ்ந்து பாடினார். பாட்டின் பொருளையுணர்ந்த வணங்கா முடி பெரிதும் மகிழ்ந்தார்; புலவரின் கவித் திறத்தை மெச்சினார்; புலவர்க்கு விருந்திட்டு மகிழ்வித்தார்; புலவரின் பொருளுறை யைக் கேட்டு இன்புற்றார். புலவர் வந்ததை மறந்து, விருந்துண்டு களித்து, வணங்காமுடியின் அன்புக் கயிற்றால் கட்டுண்டு கிடந்தார். அவர் பெருமுயற்சி செய்து அக்கட்டைச் சிறிது தளர்த்தி, போக விடைகேட்டார். புலவரைப் பிரிய மனமில்லாத வள்ளல் வாணராயர், ‘நாளைக்குப் போகலாம்’ என்றார். தளர்ந்த கட்டு மறுபடியும் இறுகியது. அதனால் புலவர் மறுமொழி பேசாது இருந்துவிட்டார். மறுநாட் காலையில் எழுந்ததும் போக விடை கேட்டார் புலவர். முன்னாட் சொன்னதை மறுக்க முடியாத வள்ளல், புன்னகை பூத்த முகத்துடன், சரி ‘தங்களுக்கு என்ன வேண்டும்? விரும்பியதைக் கேளுங்கள் தருகிறேன்’ என்றார். புலவர் மிகுந்த மானமும் நாணமும் உடையவர். மனத் திலுள்ளதைக் கேட்க அவர்க்கு வாய் வரவில்லை. கொடுத் ததை வாங்கிக் கொள்ளும் குணமுள்ளவர். கேட்டு வாங்கும் பழக்கம் அவர்க்கில்லை; அதனால், விரும்பியதைக் கொடுங்கள்’ என்றார். ‘தயங்க வேண்டியதில்லை; தங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள். எனக்கு விருப்பமானது தங்களுக்கு எப்படிப் போதும்; தாங்கள் விரும்புவது - தங்களுக்கு வேண்டியது இன்னதென எனக்கு எப்படித் தெரியும்? என் செல்வம் தமிழ்ச் செல்வம். அது தமிழ்ப் புலவர்க்கு உரியது. ஆகவே, தங்களுக்கு வேண்டியது எதுவானாலும் தயங்காமல் கேளுங்கள்’ என்றார் வள்ளல் வாணராயர். வள்ளலின் வற்புறுத்தலின்மேல் புலவர் தமக்கு வேண்டி யதை ஒருவாறு வெளியிட்டார். வணங்காமுடி மகிழ்ந்து, புலவர் விரும்பியதைவிடப் பன்மடங்கு கொடுத்து மகிழ்வித்தார். புலவர் பெருமகிழ்வடைந்து வணங்காமுடி வாணராயரின் தமிழ்ப் பற்றையும், வள்ளற்றண்மையையும், தமிழ்ப் புலவரிடத்துக் கொண்டு உள்ள மதிப்பையும் பலப்படப் பாராட்டி, வள்ளலை மனமார வாழ்த்தி விடைபெற்றுச் சென்றார். அன்றிரவு நெடுநேரம் வரையிலும் வணங்காமுடிக்குத் தூக்கம் வரவில்லை. அவர் கண் துஞ்சாமையால் மனமும் துஞ்சவில்லை. அப்புலவரின் நிலைமை அவர் மனத்தை வாட்டி வதைத்தது. பிறர் துயர்கண்டு பொறாத அவர் மனம் அதை எண்ணியெண்ணிப் புண்ணானது. ‘ஒருவர் எதிரில் நின்று, மானத்தையும் நாணத்தையும்விட்டு, எனக்கு இன்னது ஈயென இரத்தல் எளிதில் முடிவதொன்றோ? அவ்வாறு இரந்தும் இரக்கப் பட்டோர் இல்லையெனில் இரப்போர் நிலை என்னாவது? ஒழுக்கமே உருவெடுத்தாற்போன்ற புலவர் பெருமக்களுக்கு இது ஏற்ற செயலாகுமோ? அவர்கள் விரும்புவது இன்னவெனக் குறிப்பறிந்து கொடுப்பதும் எளிதில் ஆகக்கூடியதொன்றல்லவே; மானங்கெடாமல், நாணாமல் நடுங்காமல் அப்புலவர் பெருமக்கள் விரும்பியதை விரும்பிய வாறு பெறும்படி செய்வதெப்படி? அத்தமிழ்ச் சான்றோர்கள் செய்யுந் தமிழ்த் தொண்டுக்கு மானக் கேடா பரிசு? என்னே தமிழ்ப் பெரியார்களின் இரங்கத்தக்க இன்ன நிலை’ எனப் பலவாறு எண்ணி வருந்தினார். ஒரு வழியும் தோன்றவில்லை. வள்ளலின் கண்களோ துஞ்சவில்லை. முடிவில் ஒரு வழி கண்டார்; மனமுவந்து உறங்கினார். ஈவோரின் எதிரில் நின்று, எனக்கு இன்னது வேண்டும் என்று கேட்பதுதான் நாணந்தரும் செயலாகும். அது மான முடையவரால் செய்ய முடியாததொன்றே. ஆனால், ஓலையில் இன்னவேண்டும் என்று எழுதுதல் நாணந்தரும் செயலன்று. மனங் கூசாமல் எழுதலாம். எனவே, தம்மை நாடிவரும் பலரைத் தமக்கு வேண்டியதை எழுத்து மூலம் அறிவிக்கும்படி ஓர் ஏற்பாடு செய்தலே ஏற்றது என முடிவு செய்தார் வள்ளல் வாணராயர். அவ்வாறே அரண்மனைத் தலைவாயிலில் ஏடும் எழுத்தாணியும் கட்டித் தொங்கவிட்டார்; ‘அன்புகூர்ந்து தங்களுக்கு வேண்டியதை எழுதியனுப்புங்கள்’ என்ற விளம்பரப் பலகையையும் அவ்வேடெ ழுத்தாணியின் பக்கத்தில் தொங்க விட்டார். அதிலிருந்து வணங்காமுடியிடம் பரிசு பெறவரும் புலவர்கள், தங்களுக்கு வேண்டியதை அவ்வேட்டில் எழுதி விடுவர். ஏவலாள் கொண்டுபோய் அதை வள்ளலிடம் கொடுப் பான். வள்ளல் வணங்காமுடி அவ்வோலையில் குறித்துள்ள தை அந்த ஆளிடம் கொடுத்தனுப்பி, புலவர் அதைப்பெற்று மகிழ்ந்த பின்னர் அங்கு வருவார்; புலவரை அன்புடன் வரவேற்று அரண் மனைக்குள் அழைத்துச் செல்வார்; விருந்திட்டு மகிழ்விப்பார்; புலவர் போக விரும்பின போது, முன்னர் ஆளிடம் கொடுத் தனுப்பிய பரிசுடன் பின்னரும் வேண்டிய பரிசுகள் கொடுத் தனுப்புவார். இத்தனிச் சிறப்புடைக் கொடைமுறை அவ்வணங்கா முடி வாணராயரின் வழிவழியாக நடந்து வந்தது. வணங்கா முடி கண்ட புதுவழி எப்படி? இத்தகைய வள்ளல்களை நம் தமிழ்நாடு என்று பெறுமோ! வாழ்க வாணராயரின் வண்புகழ். 4. பல்லவரயன் சிறுவன் கொங்கு இருபத்து நான்கு நாடுகளில் காங்கயநாடு ஒன்று. கொங்குப் பெருங்குடி மக்களின் நாகரிக நற்பண்புக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்வது காங்கய நாடு. காங்கயம் என்றவுடன் உலகப் புகழ்பெற்ற காங்கய மாடுகள் நம் கண்முன்னர் வந்து நின்று காட்சியளிக்கும். கண்பெற்றவர் ஒரு முறையாவது கட்டாயம் கண்டு களிக்கவேண்டிய அவ்வளவு அழகு வாய்ந்தவை அக் காங்கய மாடுகள். அழகு மட்டுமா! அவை அழகோடு ஆண்மையும் வாய்ந்தவை. காங்கய நாட்டின் மண் வளமும் அங்கு வளரும் கொழுக்கட்டைப் புல்லின் உயரிய உயிர்ச் சத்துமே காங்கய மாடுகளை அவ்வளவு வனப்பும் வன்மையும் உடையவை யாக்குகின்றன. காங்கய நாட்டின் சிறப்புக்குக் காரணமாய் இருப்பவை அக்காங்கய மாடுகளே யாகும். காங்கய நாட்டின் தலைநகர் காங்கயம் என்னும் ஊராகும். காங்கயம் என்னும் அவ்வூர், கோவைக் கோட்டம், தாராபுரப் கூற்றத்தில்,ஈரோடு தாராபுரம் வழியில், ஈரோட்டின் தெற்கே முப்பதாவது கல்லில் இருக்கிறது. காங்கயம் உடல் நலத்திற்கு ஏற்ற இடம். அங்கு வீசும் தூயக்காற்றே அதற்குக் காரணமாகும். காங்கயத்திற்குச் ‘சிங்கை’ என்ற பெயரும் உண்டு. காங்கயத்தின் ஊர்த்தலைவர் பல்லவராயர் என்னும் பட்டப் பெயரையுடைய கொங்கு வேளாள மரபினராவர். பல்லவராயர் மரபு வழிவழியாகச் சீரும் சிறப்புடன் திகழ்ந்து வந்த பழந்தமிழ்ப் பெருங்குடி மரபாகும். ‘பல்லவராயர்’ என்பது பல்லவ மன்னனை வென்ற திறமையைப் பாராட்டி ஒரு சோழ மன்னனால் வழங்கப்பட்ட வழிவழிச் சிறப்புப் பெயராகும். இப்பல்லவராயர் மரபுக்கு மும்முடி என்னும் பட்டப் பெயரும் உண்டு. பல்லவராயர் மரபினர் சிறந்த தமிழறிவுடையவராகவும், தமிழ்ப் புலவர்களைப் போற்றும் பெருங்குணம் படைத்த வராகவும் திகழ்ந்து வந்தனர். பழந்தமிழ்ச் செல்வர்க் கமைந்துள்ள வீரமும் கொடையும் பொறையும் இயல்பாக வே இப் பல்லவராயர் மரபினர்க்கும் அமைந்திருந்தன. ‘மும்முடி’ என்னும் சிறப்புப் பெயரும் வீரத்தால் பெற்ற பெயரேயாகும். இது முடியுடை மூவேந்தரின் மதிப்புக்கறி குறியான பெய ராகும். எனவே, முடியுடை மூவேந்தர்க்கும் படைத்துணை யாதற்குரிய பழம் பெருங்குடி பல்லவராயர் குடி என்பது பெறப்படும். மும்முடிக் கணபதிப் பல்லவராயர் என்பது இப்போதுள்ளவர் பெயர். இவர் காங்கயத்தின் கிழக்கு மூன்றாவது கல்லில் உள்ள ‘பட்டக் காரர்புதூர்’ என்னும் ஊரில் இருந்து வருகிறார். இவரும் நல்ல தமிழறிவும் தமிழ்ப்பற்றும் உடையவர். இச் சிங்கைப் பல்லவராயர் மரபில், கி.பி. 13-ம் நூற்றாண்டில் மும்முடிப் பல்லவராயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிறந்த தமிழறிவுடையவர்; தமிழ் இலக்கிய இலக்கணங்களை ஒருவாறு ஓதியுணர்ந்தவர். செல்வத்துட் செல்வமாகிய செவிச் செல்வத்தை நிரம்பப்பெற்றவர்; தம் தாய் மொழியாம் தமிழ் மொழியிடத்து அளவு கடந்த பற்றுடையவர்; தமிழ் மொழி வளர்ச்சியில் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் உடையவர்; தமிழ்ச் செல்வர்களின் கடமை தமிழ் வளர்ப்பதே என்னும் உண்மையை நன்குணர்ந்தவர்; தமிழ்ப் புலவர்க்கு இல்லையென்னாது கொடுத்துத் தமிழ் வளர்ப்பதையும்; ஈகையின் பயனான புகழ் ஈட்டுவதையும் தம் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டலர். பல்லவராயர் அரண்மனை எப்போதும் தமிழ்ப் புலவர்கள் தங்கும் இடமாக இருந்துவந்தது. தம்மை நாடி வரும் புலவர்களை வரவேற்பதும், விருந்திட்டுப் போற்று வதும், தமிழ்ச் செய்யுகளின் பொருளைக் கேட்டு இன்புறுவதும், புலவர்கள் விரும்பும் பரிசில் கொடுப்பதுமே பல்லவராயரின் வாழ்க்கை முறைகளாகும். ஆய் என்னும் வள்ளல் யானைக் கொடையில் சிறந்து விளங்கினது போலப் பல்லவராயர் ஆக்கொடையில் சிறந்து விளங்கினார். காங்கயம் ஆக்களுக்குப் பெயர் பெற்ற இடமல்லவா? பல்லவராயர் பல தமிழ்ப் பனுவல்களின் தலைவரானார். அவர் புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியது. புலவர் பெருமக்களால் பரப்பப்பட்டது. அதுதானே அன்னார் தொழில்! மும்முடி பல்லவராயர்க்குச் செல்வச் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் நடை வண்டியோட்டி விளையாடும் பருவத்தன். இப்பருவம் ‘பிள்ளைத் தமிழ்’ என்னும் நூலின் பத்துப் பருவங்களில் ஒன்று. அது ‘சிறுதேர்ப் பருவம்’ எனப்படும். சிறுதேர்- நடைவண்டி. அப்பருவம் இருபத் தொன்றாவது மாதத்தில் பாடுவது. தவழ்ந்து இருந்து எழுந்து நடந்து பழகும் சிறுவர்கள். விரைந்து நடந்து பழக நடைவண்டி. உருட்டிச் செல்வர். அச்செயலைப் புலவர்கள் அழகாகச் சிறப்பித்துப் பாடுவர். பல்லவராயருக்குச் சங்கிராம சோழன் என்னும் சோழ மன்னன் நண்பனாக இருந்தான் . அச்சோழ மன்னன். மணிகள் பதித்து அழகிய வேலைப்பாட்டுடன் செய்யப்பட்ட பொன் நடை வண்டி ஒன்றை அப்பல்லவராயன் சிறுவனுக்கு அன்பளிப் பாகக் கொடுத்தான் . சிங்கைச் சிறுவன் அந் நடை வண்டியை உருட்டி விளையாடிக் கொண்டிருந்தான். வறுமையால் வாடிய புலவரொருவர் பல்லவராயரின் புகழைக் கேள்விப்பட்டார்; அவ் வள்ளலைப்பாடிப் பரிசு பெற்றும் தம் வறுமை நோயைப் போக்கிக் கொள்ள எண்ணினார். காங்கயத்தை நோக்கி நடந்தார்; காங்கய மாடுகளின் கட்டழகைக் கண்டுகளித்த வண்ணம் பல்லவரா யரின் அரண்மனையை அடைந்தார்; பல்லவராயர் ஊரில், இல்லை யென்பதைக் கேள்விப் பட்டார்; வறுமையின் கொடுமையை எண்ணி மனம் வருந்தினார்; வருந்திய மனத்தோடு வெளி வாயிலுக்கு வந்தார். அவ்வெளி வாயிலில் பல்லவராயன் சிறுவன் நடை வண்டி யோட்டி விளையாடிக் கொண்டிருந்தான். புலவர் அச் செல்வச் சிறுவனை நோக்கிச் சென்றார். சிறுவன் புலவரை உற்றுபார்த்தான். சிறுவனின் முகமலர்ச்சியையும் அன்புப் பார்வையையுங் கண்ட புலவர் வறுமைப் பிணியால் உண்டான மனவருத்தத்தை மறந்து, சிரித்த முகக்துடன் அச்சிங்கைச் சிறுவன் பக்கத்தில் சென்றார். சிறுவன் புன்முறுவல்பூத்த முகத்துடன் புலவரையே பார்த்தான். ‘செல்வ! நின் தந்தை இப்போது ஊரில் இருந்திருப்பா ரானால் நான் மிகுந்த பரிசுபெற்றுச்செல்வேன்; நான் நெடுந் தொலைவிலிருந்து உன் தந்தையின் புகழைக் கேள்விப்பட்டு வந்தேன்; நான் நின் தந்தை மீது பாடி வந்த அருமையான தமிழ்ப் பாட்டுக்களைக் கூடப் படித்துப் பொருள் கூறி மகிழ முடியாமற் போனேன்; புலவர்கள் குறித்துவந்த இடத்துப் பரிசு பெறாது திரும்பிச் செல்லுதல் முறையன்று; நான் இது வரை அவ்வாறு சும்மா திரும்பிச் சென்றதில்லை’ என்றார் புலவர். புலவர் கூறிய அப்பொருளுரையைச் சிறுவன் கூர்ந்து கவனித்துவந்தான்; அவர் கூறிய அவ்வுரை அவனுக்கு ஒருவாறு புலனாயிற்று. வருத்தத்துடன் முகத்தைச் சுழித்தான். பல்லவ ராயர் அரண்மனை எப்போதும் புலவர்களால் பொலிவுற்று விளங்குவது; எந்நேரமும் தமிழ்க்கவிகளின் ஒலி ஒலித்து கொண்டே இருக்கும், புலவர்க்கு அள்ளியள்ளிக் கொடுக்கும் வள்ளன்மையுடைய வரல்லவா பல்லவராயர்? புலவர்கள் தந்தை மீது பாடிவந்த புகழ்கவிகளைப்படிக்கும் போதும் தந்தை அவர்கட்குப் பரிசில் கொடுக்கும் போதும் உடனிருந்து பழகிய வனல்லவா நம் செல்வச் சிறுவன்? ‘குலவித்தை கல்லாமல் பாகம் படும்’ என்பது உண்மையுரை யல்லவா? பாகம் - சரிபாதி. ‘தந்தையின் தகுதியை மைந்தரால் அறியலாம்’ என்பது வள்ளுவர் வாய்மொழியன்றோ? நம் பல்லவராயன் சிறுவன் அம் மொழியை மெய்ம் மொழியாக் கினான். இரண்டாண்டுகள் நிரம்பப் பெறாத நம் சிங்கைச் சிறுவன், தான் உருட்டிக்கொண்டு விளையாடும் அப்பொன் வண்டியை இருகையாலும் எடுத்து. ‘இதை வைத்துக் கொள்ளுங்கள்’ என்று தன் குதலைமொழியால் கூறிக் கொடுத்தான். அச் செந்தமிழ்ச் செல்வச் சிறுவனின் தாரள குணத்தைக் கண்ட புலவர் உவகைக் கடலில் மூழ்கினார். வியப்புக் கரையை அடைந்தார்; இதற்குக் காரணமான மும்முடிப் பல்லவராயரின் கைவன்மையை வியந்தார்; நன் மக்கட் பேற்றின் சிறப்பினை எண்ணியெண்ணி இறும் பூதடைந்தார்; ‘விளையும் பயிர் முளை யிலேயே தெரியும்’ என்ற முன்னோர் முதுமொழிக்கு இலக்கியமாக நின்ற அச்சிறுவனை இருகையாலும் வாரி யெடுத்து மார் போடணைத்தார்; அச்செல்வனின் பெருங் குணம் வாழ்க வாழ்க என வாழ்த்திய வண்ணம் மலர்ந்த முகத்துடன் அரண்மனைக்குட் சென்றார். அப்பெருங்குணச் செல்வனைப் பெற்றெடுத்த தாயினிடம் நடந்ததைக் கூறினார். தன்மகனின் மாண்பினைக் கேட்ட அன்னையார், அச் செந் தமிழ்ச் செல்வனை ஈன்ற பொழுதினும் பெரிதும் உவந்தார். புலவரிடம் இருந்து தம் மகனை வாங்கி, ‘நான் பெற்ற செல்வம் ’ என்று ஒரு முத்தம் கொடுத்தார். ‘இவன் தந்தையார் வந்து விடுவார், இருங்கள்’ என்று இன்சொல்கூறி, விருந்திட்டுப் புலவரைப் போற்றினார். புலவர் சிறுவனின் பெருங்குணத்தை வியந்தவண்ணம் இருந்தனர். வெளியில் சென்றிருந்த பல்லவராயர் வந்தார்; தம் செல்வனின் செயலைக் கேட்டு அளவிலா மகிழ்ச்சி கொண்டார்; புலவர் பாடிவந்த பாட்டைக்கேட்டு இன் புற்றார்; தம் செல்வன் கொடுத்த பரிசுடன் ஆடையும் அணியும் ஆவுங்கன்றும் பொன்னும் பொருளும் வேண்டிய அளவு கொடுத்தார். புலவர் பொன் வண்டியை அவ்விளம்வள்ளலுக்கே திருப்பித்தந்து, தந்தையையும் மைந்தனையும் வாயுற வாழ்த்தி விடை பெற்றுச் சென்றார். ‘குலத்தளவே யாகும் குணம்’ என்பது உண்மையுரை யாகிவிட்ட தன்றோ? அச்சிங்கை சிறுவனைப் போலப் பெருங் குணம் அமையும்படி தத்தம் மக்களை வளர்ப்பது தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் நீங்காக் கடமையாகும். 5. பாரியூரான் ஆய்க்குடி, கோதைமங்கலம், பழையனூர், கீரனூர், வீரசோழ புரம்,பூதப்பாண்டி போன்ற எத்தனையோ ஊர்ப் பெயர்கள் பழந்தமிழ்த் தலைவர்களின் நினைவுக் குறியாக நின்று நிலவுகின்றன. அவ்வூர்ப் பெயர்களைக் கேட்குந்தோறும் நம் முன்னோராகிய அப்பழந்தமிழ்த் தலைவர்களின் வீர வரலாறு நம் நினைவுக்கு வருகிறது. அந்நினைவு நம்மைத் தமிழ்ப் பற்றுடையராக்கு கின்றது. தலைவர்கள் பெயரை ஊர்க்கிட்டு வரும் வழக்கம் தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும். அத்தகு மரபில் வந்த பெயரே பாரியூர் என்பதும் , இவ்வூர், கோவை கோட்டத்தில், கோபிசெட்டி பாளையத் திற்குப் பக்கத்தில் இருக்கிறது. இதுநல்ல நீர்வளமும் நிலவளமும் குடிவளமும் உள்ள ஊர். இவ்வூர் நம்மைச் சங்க காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. ‘வேளாண்குலச் செல்வன், வேளிர் தலைவன்,‘வேள்’ என்னும் பட்டத்திற்குரியவன், முடியுடை வேந்தர் மூவர்க்கும் மகட்கொடை நேரும் மாண்புடை மரபினன், தொல்குடிக் குரியோன், வீரருள் வீரன், கொடை மடம் பட்டோன், முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல், தன்னாட்டு முந்நூறு ஊர்களையும் புலவர்க்குப் பரிசாகக் கொடுத்த பண்புடையோன், பரம்புக் கிழவன்., தமிழுக்காகப் பிறந்து., தமிழுக்காக உயிர் வாழ்ந்து , தமிழுக்காகவே உயிர்விட்ட தகைமையோன்., புலவரின் புகலிடம், இல்லோர் செல்வம் , சேர, சோழ, பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர் மூவரும் பொறாமை கொள்ளும் அவ்வளவு புகழோன்’ என்றெல்லாம் புலவரால் புகழ்ந்து பாடப்பெற்ற சங்ககால வள்ளல்களிலொரு வனான பாரியை நமக்கு நினைப்பூட்டுகிறது. அவன் வீர வரலாறு நம் உள்ளத்தைக் கிள்ளுகிறது; தமிழ்ப்பற்றை யுண்டாக்குகிறது. அவ்வூர் பரம்பிற் கோமான்பாரியின் நினைவுக் குறியாக நின்று நிலவுகிறது. பாரியூரை யடுத்து வடக்கில் பெரிய மலைத்தொடர் ஒன்று இருக்கிறது. அம் மலைமேல் ஊர்கள் பல உள்ளன. அது மிக்க வளம்பொருந்திய மலை. எங்கு பார்த்தாலும் வானுற வுயர்ந்த பல்வகை மரக்காடுகள், மா, பலா, முதலிய பழ மரச் சோலைகள், கண்ணுக் கெட்டிய வரையிலும் படர்ந் தடர்ந் துயர்ந்த மூங்கிற் றூர்கள்; தோசை தோசையாய்ச்சுவைமிக்க நறுந்தேன் கூடுகள், வற்றாத நன்னீர்ச்சுனைகள், மலைவீழும் நீரருவிகள்; இன்ன பல இயற்கை வளம் உடையது அம்மலை. பாரியின் உயிர் நண்பரான கபிலர்கூறும் புறநானூற்றுப் பாடலில் உள்ள பரம்பு மலையின் வளம் அப்படியே இன்றும் அமைந்துள்ளது அம்மலையில். இதுதான் பாரி என்னும் வள்ளல் இருந்த ‘பரம்புமலை’ என்கின்றனர். பாரியூரை அடுத்துள்ள அம்மலை மேற்குத் தொடர்ச்சி மலையின் கிளையாகும். அது கிழக்கு மேற்காகக் கொங்கு நாட்டின் வடக்கெல்லையாக அமைந்துள்ளது என்றுங் கூறலாம். தமிழ் நாட்டின் வடக்கு மலையரண் என்றுங் கூறலாம்., இம் மலைத் தொடரில் பல கணவாய்கள் உள்ளன. அவை சத்திய மங்கலத்துக்குப் பக்கத்தே உள்ள தலைமலைக் கணவாய் காவேரி புரங்கணவாய், தொப்பூர்க் கணவாய், பொன்முடிக் கணவாய் என்பன. முன்பு அக் கணவாய்களின் வழியாய் வடக் கத்தியார் கொங்கு நாட்டிற்குள் புகாமல் பாதுகாக்கப்பட்டு வந்தது. பொன்முடிக் கணவாயைத் தகடூரிலிருந்து அதியமான் மரபினரும், தொப்பூர், காவேரிபுரம் கணவாய்களை அமர குந்தியி லிருந்து கட்டி மரபினரும் காத்து வந்தது போலவே, தலைமலைக் கணவாயைப் பாரி மரபினர் காத்து வந்தனர் என்கின்றனர். இது ஆராய்ச்சிக்குரிய தொன்றாகும். தமிழ் ஆராய்ச்சி அறிஞர்கள் முயல்வார்களாக. எவ்வாறாயினும் பாரியூர் என்பது வள்ளல் பாரியின் பெயரால் ஏற்பட்ட ஊரேயாகும். பாரியூரை நினைக்கும் போதெல்லாம் பாரியின் வீரமும், கொடையும் எல்லையில்லாத் தமிழ்ப் பற்றும் நமது நினைவுக்கு வருதல் போற்றற்குரியதே. பாரியூரில் செட்டிப்பிள்ளையப்பன் என்னும் வள்ளல் ஒருவன் இருந்தான். அவன் கி.பி.13ஆம் நூற்றாண்டினன்; கொங்கு வேளாளரில், வடகரைக் கவுண்டர் என்னும் பிரிவைச் சேர்ந்தவன்; பெரும்பண்ணையக்காரன்; அவ்வூர்த் தலைவன் அவனே. அவன் சிறந்த தமிழறிவுடையவன்; வேள்பாரி போலவே இப் பாரியூரானும் வரையாது கொடுக்கும் வள்ளலாக விளங்கினான்; தன்னைப் பாடிவரும் தமிழ்ப் புலவர்களுக்கு மாரியும் நாணும் வண்ணம் வாரிவாரிக் கொடுத்தான்; பாரியின் பெயர் கொண்டுள்ள ஊரினனா தலால், அப்பாரிபோலவே கொடுத்துத் தன் மரபினனான பாரியின் பெயரை விளங்கச் செய்து வந்தான். தண்டாமரை மலரில் தேனுண்டு களிக்கும் வண்டுகள் போல, புலவர்கள் தண்டமிழ்ச் செல்வனான பாரியூரான் மனையில் விருந்துண்டு களித்து வந்தனர். பாரியூரான் புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியது. பண்ணைய வருவாய் புலவர்களின் பரிசானது. பணப்பெட்டி காலியானது. கடன்பட்டுங் கொடுத்து வந்தான்; வறுமைக் காளானான்; பண்ணையில் பெரும் பகுதியை இழந்து ஏழை யானான்; எனினும், தன்னை நாடிவரும் தமிழ்ப்புலவர்களுக்கு இல்லை யென்னாமல் இயன்றதைக் கொடுத்து வந்தான். ‘நான் வறியவன்; என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் - இல்லை’ என்று ‘இலம் என்னும் எவ்வம் உரைப்பது நற்குடிப் பிறந்தவர்க்கு இயல்வ தொன்றோ? ஒருபோதும் இயலாது, பாரியும் இவ்வாறு தானே செய்தான்? பாரி ஊரான் வேறு என்ன செய்வான்? தன் முன்னோன் வழியையே பின்பற்றி வந்தான். ஒரு நாள் புலவர் ஒருவர் பாரியூர் வந்தார்; பாரியூரான் அன்புடன் வரவேற்றான். புலவர் பாரியூரான் கொடைத் திறத்தையும் தமிழ்ப் பற்றையும் பலவாறு புகழ்ந்துபாடினார். அவர் அறிவாரா இவன் நிலைமையை? புலவரின் கவித் திறத்தைக் கண்டு பாரியூரான் மகிழ்ந்தான்; அன்போடு உணவிட்டுப் போற்றினான்; புலவரோடு அளவளாவினான்; புலவரின் தமிழ்ப் புலமையைக் கண்டு களிப்புற்றான்; இரவு பத்துமணி வரையிலும் தமிழின்பத் தேனுண்டு களித்தான்; புலவரைப் பஞ்சணையில் படுக்கவைத்துத் தானும் பக்கத்துக் கட்டிலில் படுத்துக் கொண்டான். ஆனால், அவன் தூங்க வில்லை. அவனுக்குத் தூக்கம் வரவில்லை. புலவரோ பெரும் புலமையுடையவர். அவரது கல்வியின் தரத்திற்கு ஆயிரம் பொன் கொடுத்தாலும் போதாது. பாட்டுக்குப் பன்னூறாயிரம் பணம் பரிசு கொடுத்துத் தமிழ் வளர்த்த வள்ளல்களின் வரலாற்றை அறிந்தவனல்லவா நம் பாரியூரான்? தானும் வாரி வாரிக் கொடுத்துப் பழகியவனல்லவா? வீட்டிலோ பணம் இல்லை, பொழுது கிளம்பியதும் எழுந்து புலவர் போகிறேன் என்றால் என் செய்வான் பாவம்! இல்லையென்று சொல்லவோ அவன் நாவுக்குப் பழக்கமில்லை. எப்படித் தூக்கம் வரும்? பாடிவந்த புலவர்க்குப் பரிசு கொடுக்கப் பணம் இல்லையே என்ற மனக்கவலை அவனைத் தூங்கவிடவில்லை. ‘புலவர் போகிறேன் என்றால் என் செய்வது? ஒன்றுங் கொடாமல் ‘போய் வாருங்கள்’ என்பதா? அல்லது, ஏதாவது வேண்டுமென்று கேட்டால் இல்லையென்பதா? கையிலோ காசில்லை. நம்மைவிட இவ் ஊரில் வேறு பணக்காரரும் இல்லை. பொருள் உள்ள போது கேட்டால் யாரும் இல்லை யென்னாது கொடுப்பார்கள். இல்லாதபோது கேட்டால் எவரும் இல்லையென்றுதான் சொல்வர். இது மக்கள் மனப் பான்மை. இயல்பென்றுங் கூடச் சொல்லலாம். “இல்லானை இல்லாளும் வேண்டாள்; ஈன்றெடுத்த தாய் வேண்டாள்; செல்லாதவன் வாயிற்சொல்” என்பது நாட்டு நடப்பின் படப் பிடிப்பன்றோ? புலவர் போகிறேன் என்றால், ‘இருங்கள் வருகிறேன்’ என்று புலவரைத் தனியாக வீட்டில் விட்டு விட்டு நாம் வெளிச் செல்வதோ முறையன்று. யாரைப் போய்ப் பணம் கேட்பது? மேலும் கேட்டவுடன் யார் இந்தாவென்று தூக்கித் தரப் போகிறார்கள்?’ என்று அவன் பலவாறு எண்ணினான். ஒருவழியும் தோன்றவில்லை. ஒருவரிடம் சென்று எனக்கு இன்னது வேண்டும் என்று கேட்பது சிறுமை. அவ்வாறு கேட்போருக்கு இல்லையென்று சொல்வது சிறுமையினும் சிறுமை. இவரோ பெரும்புலவர்; நம்மை நாடி வந்திருக்கிறார்; எவ்வளவு வேண்டுமோ? நம்மீது பாடிவந்த புலவர்க்கு இல்லையென்பது நமக்கும் நம் மரபுக்கும் வசை தேடிக் கொண்டதாகும்; வழிவழியாகப் புலவர் பாடும் புகழொடு வாழ்ந்து வந்த நம் குடிக்கு இழுக்கை உண்டாக்கக் கூடாது; இன்னானால் அவன் மரபின் புகழ் கொல்லப்பட்டது என்ற பெயரெடுக்கக் கூடாது. ஒருவர்க்குப் புகழும் பழியும் புலவர்கள் வாய்ச் சொல்லால் உண்டாகின்றன. பரிசில் வேண்டி வந்த புலவர்க்கு இல்லையென்பது மானக்கேடாகும். மானங் கெடவரின் உயிர்விட்டேனும் மானங்காப்பதன்றோ தமிழர் மரபு? புலவர்க்கு இல்லையென்று சொல்லி வசையைத் தேடிக் கொள்வதைவிட, இசையை நிலைநிறுத்தி இறப்பதேமேல்’ என அவன் முடிவு செய்தான். எவ்வாறு இறப்பது? வெடியால் சுட்டுக் கொள்வதோ, கத்தியால் குத்திக் கொள்வதோ தற்கொலையாகும். தற்கொலை செய்து கொள்வது அறிவுடன் பட்ட செயலன்று. தற்கொலை தகாச்செயல்; தற்கொலையினும் புலவர்க்கு இல்லையென்பது தகாச் செயலன்றோ! மேலும், பரிசு கொடாமல் பாடி வந்த புலவரைத் தூங்க வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்வது நற்குடியிற் பிறந்த ஓர் ஆண்மகனின் செயலாகுமோ? இன்ன செய்வதென்று தோன்றாது அவன் இருதலைக் கொள்ளி எறும்பு போல் திண்டாடினான். முடிவில் அவனுக்கு ஒரு வழி தோன்றிற்று. பாரியூர்க்குப் பக்கத்தே பெரிய காடு ஒன்று இருந்தது. அது மலையையடுத்த காடு, அக்காட்டில் ஒரு புலித்தூறு இருந்தது. அப்புலி ஆடுமாடுகளையும், அவ்வழிச் செல்வோரையும் கொன்று தின்று வந்தது. அப்புலித்தூறில் புகுந்து புலிக்கு இரையாகி விடுவதெனத் தீர்மானித்தான் வள்ளல். புலி கொல்வதால் அது தற்கொலையல்ல வென்பது அவன் முடிவு; மெதுவாகக் கட்டிலைவிட்டு எழுந்தான்; பிறரறியாமல் வெளியே சென்று அக்காட்டை அடைந்தான்; அப்புலித்தூறை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். பக்கத்து ஊரில் கொள்ளையிட்ட கள்வர்கள், தாங்கள் கொள்ளையிட்ட பொருளை அப்புலிப் புதரின் மறைவில் பங்கிட்டுக் கொண்டிருந்தனர். இது பாரியூரானுக்குத் தெரியாது. அவன் தங்களை நோக்கி வருவதைத் திருடர்கள் கண்டனர்; திருட்டுக் கொடுத்தவர்தான் தேடிக்கொண்டு வருகிறார் என எண்ணினர்; அச்சத்தால் அப்பொருளை அப்படியே போட்டு விட்டு ஓடிவிட்டார்கள். பாரியூரான் புலித்தூறை யடைந்தான்; கூறுகூறாகக் கிடந்த பணக்குவியலைக் கண்டான்; ஒருவாறு மகிழ்ந்தான். பிறர் பொருளெனினும் புலவர்க்குக் கொடுக்கத்தானே என்று துணிவு கொண்டான்; மேலும் அது கொள்ளை கொண்ட பொருள் தானே? அப்பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு வீட்டை யடைந்தான்; புலவர் அறியாமல் தன் கட்டிலில் படுத்துக் கொண்டான். காலையில் எழுந்ததும் நடந்ததைக் கூறி, அப்பணம் அவ்வளவையும் அவன் புலவர்க்குக் கொடுத்தான். புலவர் பாரியூரான் தமிழ்ப்பற்றையும், வள்ளன்மையையும், பெருங் குணத்தையும் மெச்சினார்; பைந்தமிழ்ப் பாக்களால் பலபடப் பாராட்டினார்; தமக்கு வேண்டிய அளவு எடுத்துக் கொண்டு, ‘இதை வைத்துக் கொள்க’ என்று மீதிப் பணத்தை வள்ளலுக்கே திருப்பித் தந்துவிட்டு விடைபெற்றுச் சென்றார். பாரியூரான் கொள்ளை கொடுத்தவரை வரவழைத்து, நிகழ்ந்ததைக்கூறி, அம்மீதிப் பணத்தைக் கொடுத்துவிட்டான். பார்த்தீர்களா பாரியூரான் தமிழ்ப் பற்றை! 6. பொப்பண காங்கேயன் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்றார் வள்ளுவர். புகழொடு தோன்றுதல் - புகழொடு வாழ்தலே யாகும். அதாவது, புகழுக் கேதுவாகிய நல்ல செயல்களைச் செய்து வாழ்தல். அவ்வாறு புகழொடு வாழ்வார் சிலரே. அவருள்ளும் வழிவழிப் புகழோடு வாழ்வோர் பெருங்குடும்பம் மிகச் சிலவே. இது அருமையும் ஆகும். அப்படிப் புகழொடு வாழ்ந்தாலும் இரண்டு மூன்று தலைமுறைக்குமேல் இருப்பது மிகவும் அரிதே. இதற்குத் தப்பிய சில குடும்பங்களே பல தலைமுறை மாறாப்புகழுடன் வாழ்ந்து வரும். அத்தகைய தொல் குடும்பங்களுக்கே மரபு என்னும் சிறப்புப் பெயர் உரியதாகும். சேரர் மரபு, சோழர் மரபு, பாண்டியன் மரபு, அதியமான் மரபு, மலையமான் மரபு, சடையன் மரபு எனக் காண்க. இம்மரபுகள் தொன்றுதொட்டுத் தொடர்ந்த புகழொடு பொலிந்த தொன்மரபுகள். இத்தகைய மாறாத் தொடர்பமைந்த வழிவழிப் புகழுடைய மரபுகளில் ‘மோரூர்க் காங்கேயர் மரபும்’ ஒன்று. தமிழ் மொழி யுள்ளளவும், ஒரு தமிழன் உயிரோடுள்ளளவும் நின்று நிலவும் நீள் புகழுடைய மரபாகும், மோரூர்க் காங்கேயர் மரபு! மோரூர் என்பது சேலங்கோட்டத்தில் திருச்செங் கோட்டுக்கு எட்டுக்கல் தொலைவில் இருக்கிறது. இது மிகமிகப் பழமையான பழவிறலூர்; புலவர் நாவிற் பொலியும் புகழுர். மோரூர்க் காங்கேயர் குடும்பமும் பழம்பெருமை வாய்ந்த வேளாண் குடும்பமாகும். இக்குடும்பத்தினர் கொடை, படை என்னும் இருவகைப் புகழும் உடையவர்; தமிழ் வளர்ப்பதையே தங்கள் குலப் பெருமையாகக் கொண்டவர். தமிழ்த்தாய்க்கு இம்மரபினர் செய்துள்ள அரும்பெருந் தொண்டுகள் பலப்பல. இக்காங்கேயர் மரபில் தோன்றிய சூரிய காங்கேயன் என்பவன் சிறந்த படைவீரன்; மிகுந்த வெற்றிப் புகழை யுடையவன்; புலவர் பாடும் புகழுடையோனாய் வாழ்ந்தவன்; பல தமிழ்ப் பனுவல் மாலைகள் சூடியுள்ளான்; ஒரு புலவரைப் பொன்முழுக் காட்டிய புகழாளன். தமிழில் ‘அகரவரிசை’ (அகராதி) தோன்றுமுன் சொற் பொருளறிய நிகண்டு கற்று வந்தனர். பிங்கல நிகண்டு, திவாகர நிகண்டு, சூடாமணி நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, ஆசிரிய நிகண்டு எனத் தமிழில் பல நிகண்டுகள் உள்ளன. உரிச்சொல் நிகண்டு செய்த காங்கேயன் என்பவன் இம்மரபினனே. இவன் நூல் செய்யும் புலவனாக இருந்ததோடு, பெரு வீரனாகவும், பெருங்கொடை வள்ளலாகவும் இருந்தான். உரிச்சொல் நிகண்டு வெண்பாவினால் ஆனது. தொண்டை மண்டலத்துப் பொன்விளைந்த களத் தூரினரான படிக்காசுப் புலவர்க்குத் தந்தப் பல்லக்குக் கொடுத்த குமார காங்கேயன் என்பானும் இம்மரபினனே. சங்ககிரியி லிருந்த எம்பெருமான் என்னும் புலவரைக் கொண்டு ‘தக்கை’ என்னும் ஒருவகை இசையினால், தக்கை ராமாயணம் செய்வித்த நல்லதம்பிக் காங்கேயன் என்பவனும் இம்மரபினனே. இம் மோரூர்க் காங்கேயர் மரபில், கி.பி.12ஆம் நூற் றாண்டில் பொப்பண காங்கேயன் என்னும் பெருந்தகையாள னொருவன் இருந்தான். மோரூர்க்காங்கேயர் குடும்பத்தின் இடையறாப் புகழுக்கு இவனே காரணமாவான். பொப்பணன் தமிழ் இலக்கிய இலக்கணங்களை முறையாகப் படித்தவன்; மிகுந்த தாய்மொழிப் பற்றுடையவன்; தமிழ் வளர்ப்பதையே தன் கடமையாகக் கொண்டவன்; தமிழ் வளர்ப்பதற் காகவேயுள்ள தமிழ்ப் புலவர்களைப் போற்றித் தமிழ் வளர்த்து வந்தான். பழந்தமிழ்ப் பாட்டுக்களைக் கேட்பதில் பொப்பணன் மிகுந்த ஆர்வமுள்ளவன்; தன்னிடம் பரிசுபெற வரும் புலவர் களைப் பழந்தமிழ்ச் செய்யுட்களுக்குப் பொருள் கூறுமாறு கேட்டு இன்புறுவான்; பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டு, பழந்தமிழர்களாகிய தன் முன்னோரின் பெருமையை எண்ணியெண்ணி இன்புறுவான்; அன்னாரின் கொடை, வீரம், புகழ், ஒழுக்கம், உயர்வு, அரசியல் முதலிய வாழ்க்கை முறைகளைத் தன் கண்முன் கொண்டு வந்து களிப் புறுவான். தன்னையொரு பழங்கால தமிழ்ச் செல்வனாகவே எண்ணி வாழ்ந்து வந்தான் பொப்பணன். அவன் வாழ்க்கை முறையும் அவ்வாறே தான் அமைந்திருந்தது. பெருங்காப்பியம், சிறுகாப்பியம் எனத் தமிழ்க் காப்பியம் இருவகைப்படும். சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பன பெருங் காப்பியங்கள், பெருங்கதை, சூளாமணி, நாககுமார காவியம், உதயணகுமார காவியம், யசோதர காவியம் என்பன சிறுகாப்பியங்கள். ஐம் பெருங் காப்பியங்களில் தலையாயது சிலப்பதிகாரம். சிலப்பதி காரம் இளங்கோவடிகள் என்னும் புலவர் பெருமகனால் செய்யப் பட்டது. இவர் சேரன் செங்குட்டுவன் தம்பியாவர். சிலப்பதிகாரம் சிறந்த தமிழ்ப் பெருங்காப்பியம், அது தமிழ் நாட்டின் அக்கால நாகரிக நிலையை நம் கண்முன் காட்டும் காலக்கண்ணாடி. சிலப்பதிகாரத்திற்கு ‘அரும்பதவுரை, அடியார்க்கு நல்லார் உரை’ என்னும் இரண்டு பழைய உரைகள் உள்ளன அவ்வுரைகள் இல்லையேல் சிலப்பதிகாரத்தின் பொருளை நாம் அறிந்து இன்புற முடியாது. அரும்பதவுரை தமிழில் நல்ல புலமையுடை யார்க்கே பயன்படுவதாகும். அடியார்க்கு நல்லாருரையே தமிழ் மக்கள் எல்லோரும் சிலப்பதிகாரத்தின் சீரிய கருத்தைத் தெரிந்து கொள்ள உறுதுணையாக உள்ளது. அடியார்க்கு நல்லார் சிலப்பதி காரத்திற்கு உரையெழுதிய வரலாறு அறிந்தின் புறத்தக்க தொன்றாகும். அடியார்க்கு நல்லார் பொப்பண காங்கேயன் காலத்தவர்; கொங்கு நாட்டினர்; கோவைக் கோட்டத்தினர்; நிரம்பை என்னும் ஊரினர். நிரம்பை என்னும் ஊர், ஈரோடு கோவை வழியில், ஈரோட்டின் மேற்கில் 16-வது கல்லில் உள்ள விசய மங்கலம் என்னும் ஊருக்கப் பக்கத்தில் இருந்தது. இவ்வூர் கொங்கு இருபத்து நான்கு நாட்டில் குறும்பி நாட்டைச் சேர்ந்தது. குறும்பி நாட்டு ஊர்த்தொகைச் செய்யுளில் நிரம்பை என்னும் ஊர் வந்துள்ளது. ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்றான ‘பெருங்கதை, கொங்கு வேண்மாக்கதை’ என வழங்கும் உதயணன் கதை ஆசிரியரான ‘கொங்கு வேள்’ என்பவர் விசயமங்கலத்தவர் என்பதை அறியுங்கள். நூலாசிரியர், உரையாசிரியர் எனப் பழந்தமிழ்ப் புலவர்கள் இருவகைப்படுவர். நூலாசிரியரினும் உரை ஆசிரியரே சிறந்த வராவர். நூல் செய்வதைவிட ஒருவர் செய்த நூலுக்கு ஆசிரியர் கருத்தறிந்து உரை கூறுவது கடினம். சிறந்த உரையினாலேதான் ஒரு நூலின் பெருமை வெளிப்படும். நூலாசிரியர் பெருமைக்கு உரையாசிரியரே காரணமாவர் என்றுகூடச் சொல்லலாம். இதனாலேதான் நூலாசிரியரினும் உரையாசிரியர் நன்கு மதிக்கப் பட்டனர். முன்னர்ப் பன்னூற்றுக்கணக்கான நூலா சிரியர்கள் இருந்திருக்க, ஒரு சில உரையாசிரியர்களே இருந் திருப்பது உரையின் சிறப்புக்குச்சான்றாகும். நூலென்னும் குளத்திற்கு உரையே கரையாகும். வீட்டுக்கு விளக்குப் போன்றது பாட்டுக்கு உரை. அடியார்க்கு நல்லார் சிறந்த தமிழ்ப் புலமையுடையவர்; இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் முழுத் திறமை யுடையவர்; இல்லையேல், முத்தமிழ்ப் பெருங்காப்பியமாகிய சிலப்பதிகாரத்திற்கு எங்ஙனம் விரிவுரை யெழுத முடியும்? பழந்தமிழ்ச் செய்யுட்களுக்குப் பொருள் கூறுவதில் அவர் தலைசிறந்தவர். அவர் ஒரு சிறந்த உரையாசிரியர் என்பது சுருங்கக் கூறி விளங்க வைத்தலாகும். இளமையிலிருந்தே தான் ஒரு சிறந்த உரையாசிரியர் ஆக வேண்டும் என அவர் ஆர்வங் கொண்டார்; அவ்வாறே முயன்று கற்றுச் சிறந்த உரையாசிரியரானார். பிற தமிழ்ப் புலவர்கள் போல் கவிபாடிப் பரிசு பெற்று வாழும் தொழிலை அடியார்க்கு நல்லார் மேற் கொள்ள வில்லை. பழந்தமிழ்ப் பாட்டுகளுக்குப் பொருள் கூறிப் பரிசில் வாழ்க்கை நடத்தி வந்தார். காரணம், கவிபாட தெரியாத தனால் அல்ல; அவர் சிறந்த கவித் திறமையுடையவர். ‘புதிதாகக் கவிபாடுவதை விடப் பழம் பாட்டுக்களின் பொருளை எடுத்துக் கூறுவதே சிறந்த தமிழ்த் தொண்டாகும். இல்லையேல், அப்பழம் பாட்டுக்கள், படிப்பாரற்றுப் போவதோடு, நம் முன்னோர்கள் அருமையாகச் செய்து வைத்த அச்செய்யுட்கள் இறந்தொழியவும் ஏதுவாகும். அவை இறந்தொழியின், தம் முன்னோர் வாழ்க்கை முறைகளைப் பிற்காலத் தமிழ் மக்கள் அறிய முடியாமல் போய்விடும். பழந்தமிழ்ச் செய்யுட் கருத்துக்களை நாட்டில் பரப்பாவிட்டால் தமிழர் வாழ்க்கை முறையே மாறு பட்டு விடும்’ என்னும் உண்மையுணர்வேயாகும். அதனால் தான் இவர் பழந்தமிழ்ப் பாட்டுக்களுக்கு உரை சொல்வதையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டார்; பழந்தமிழ் மக்களின் கொடை, வீரம், புகழ், நேர்மை முதலிய வாழ்க்கை முறைகளை விளக்கிக் கூறித் தமிழ்ப் பொது மக்களுக்குத் தமிழறிவும், தமிழ்ப்பற்றும், தமிழினவுணர்ச்சியும் ஊட்டி வந்தார். தமிழ்ச் செல்வர்கள் இவர் உரைக்கு உரையாய் பொன்னை வரையாது கொடுத்து ஊக்கி வந்தனர். அடியார்க்கு நல்லார் பொப்பணனது தமிழ்ப் பற்றைக் கேள்வியுற்றார்; அச்செந்தமிழ்ச் செல்வனைக் காண விரும்பினார்; மோரூர் சென்றார். பொப்பணன் புலவரை அன்புடன் வரவேற்றான். பிற புலவர்கள் போல் இவர் பொப்பணன்மேல் கவிபாடிக் கொண்டு வரவில்லை; பின் என் செய்தார்? சங்கச் செய்யுட்கள் சிலவற்றிற்கு விரிவுரை கூறினார். பொப்பணன் அளவிலா மகிழ்ச்சியடைந்தான்; தனது கொள்கையுடைய புலவரொருவர் தானாக வந்து கிடைத்ததை எண்ணியெண்ணி இறும்பூதெய் தினான்; புதுவிருந்திட்டுப் புலவரை மகிழ்வித்தான்; அன்பு கலந்த உரையால் அளவளாவினான்; பல பகல் புலவரின் பொருளுரையைக் கேட்டு இன்புற்றான்; புலவரது பொருள் கூறுந் திறமையை வியந்தான்; அடியார்க்கு நல்லாரைக் கொண்டு உரையில்லாத சங்க நூல்களுக்குச் சிறந்த உரை யெழுதி தமிழ் மக்களுக்கு உதவ எண்ணினான். ஐம்பெருங் காப்பியங்களில் தலையாய சிலப்பதிகாரத் திற்கு விளக்கமான உரையில்லை. தமிழ்த்தாயின் கண்போன்ற சிலப்பதிகாரம் தமிழ் மக்களால் படித்தின்புற முடியாமல் இருக்கிறது. அதற்குச் சரியான விரிவுரை எழுதுவிக்க வேண்டும் என முடிவு செய்தான்; தனது கருத்தைப் புலவரிடம் தெரிவித்தான். அதே கருத்துடைய அடியார்க்குநல்லார் அத்தமிழ் தொண்டை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். பெருங்காப்பியமாகிய சிலப்பதிகாரத்திற்குப் பேருரை எழுதப் பலமாதங்கள் ஆகுமன்றோ? அது வரை புலவர் குடும்பத் தைவிட்டுத் தனியாக இருப்பது முறையல்லவே. குடும்பத்தின் நினைவு வந்தால் புலவர் கவலையுற நேரும். மனக்கவலை தெளிவான உரையெழுதுவதற்கு இடையூறு செய்யும். எனவே, புலவர் குடும்பத்தை வரவழைத்துத் தன் வீட்டிலேயே வைத்துக் கொள்வதே நலமென எண்ணினான் வள்ளல்; அவ்வாறே புலவர் குடும்பத்தை வரவழைத்துத் தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டான். வறுமையே வடிவான புலவர் குடும்பம் செல்வக் குடும்பமானது. புலவர் குடும்பம் பொப்பண காங்கேயன் குடும்பத்துடன் ஒன்றுபட்டது. குடும்பக் கவலை புலவர் மனத்தை விட்டகன்றது. முத்தமிழ்ப் பெருங்காவியமாகிய நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்திற்கு உரை யெழுதத் தொடங்கினார் புலவர். உரை எழுதவெழுத பொப்பணன் அவ்வப்போது படித்து மகிழ்ந்தான்; அடியார்க்கு நல்லாரின் உரையெழுதுந் திறத்தினை வியப்பான்; உரையின் சிறப்பினைப் பாராட்டு வான். புலவர் ஒரு செல்வக் குடி மகன் போலக் குடும்பக் கவலையும் சோற்றுக் கவலையும் இன்றி உரையெழுதி வந்தார். இதை ஒரு புலவர், “பொப்பண காங்கேயர் கோனளித்த சோற்றுப் பெருக் கல்லவோ தமிழ் மூன்றுரை சொல்வித்ததே” என்று பாராட்டி யுள்ளனர். ஒரு நாள் பகலுணவுக்குப் பின்னர்ப் புலவர் உரையெழுதிக் கொண்டிருந்தார். அது முதுவேனிற் காலம். ஒரு வேலைக்காரன் புலவர்க்குப் பின்னின்று விசிறி வீசிக் கொண்டிருந்தான். அவ்வேலைக்காரனைச் சுருக்காக வேறொரு பக்கம் அனுப்ப வேண்டியிருந்தது. விசிறி வீசுவதை நிறுத்தி விட்டுப் போகச் சொல்வது முறையன்று. வேறு ஆளும் அப்போது அங்கில்லை. எனவே புலவர்க்குத் தெரியாது பொப்பணன் விசிறியை கொண்டு வேலையாளை அனுப்பினான். பெரிய விசிறியைப் பிடித்து வீசிப்பழக்க மின்மையால் பொப்பணன் விசையாக வீசினான். புலவர் ‘மெதுவாக’ என்றார். பொப்பணன் மிகவும் மெதுவாக வீசினான். புலவர் திரும்பிப் பார்த்தார்; வள்ளல் விசிறி வீசிக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்; இருக்கையை விட்டெழுந்தார்; என்ன இருக்க என்ன செய்தீர்கள்? தமிழ்ப் புலவர்க்கு அள்ளியள்ளிக் கொடுக்கும் தங்கள் கார் வளக்கையா இத்தொழில் செய்யத்தக்கது? தங்கள் தமிழன்புக்கு எல்லையே இல்லை போலும் என்றார். ‘தங்களுக்குச் செய்யுந் தொண்டு தமிழன்னைக்குச் செய்யுந் தொண்டாகும். இத்தமிழ்த் தொண்டு செய்யக் கொடுத்து வைத்ததற்கு நான் பெரிதும் மகிழ்கிறேன்’ என்று தன் அன்பை வெளியிட்டான் பொப்பணன். என்னே காங்கேயன் தமிழ்ப் பற்று! உரையெழுதி முடிந்தது. புலவரைப் பொன் முழுக் காட்டினான் பொப்பணன்; முத்துச் சிவிகையில் ஏற்றி ஊர்வலஞ் செய்தான்; பல புலவர்கள் முன்னிலையில் சிலப்பதி கார அடியார்க்கு நல்லார் உரை’யை அரங்கேற்றி மகிழ்ந்தான். மோரூர்ப் பொப்பண காங்கேயன் தமிழ்ப் பற்றன்றோ நமக்கு அடியார்க்கு நல்லார் உரையைத் தந்தது! 7. ஐவேலசதி சேலங் கோட்டத்தில் சங்ககிரி என்னும் ஊர் இருக்கிறது. இது சேலம் பவானி வழியில். பவானிக்குப் பன்னிரண்டு கல் கிழக்கில் உள்ளது. இது ஒரு பழஞ் சிறப்பினையுடைய மூதூர். இங்குள்ள மலைமீது ஏழு சுற்றுக் கற்கோட்டை இருக்கிறது. அக்கோட்டை வரலாற்றுச் சிறப்புடையதாகும். அது மதுரையிலிருந்து தமிழ்நாட்டை ஆண்டு வந்த நாயக்க மன்னரின் அரசியல் அலுவலகமாகவும், மைசூரை யாண்ட திப்புச் சுல்தானின் படைவீடாகவும் இருந்து வந்தது. தென்னாடு ஆங்கில ஆட்சிக்கு உட்பட்டபின் அது ஆங்கிலப் பாசறையானது. சென்னைக்கும் கள்ளிக்கோட்டைக்கும் இடை யிலுள்ள இதை நடு நிலைப்படை வீடாக வைத்துக் கொண்டு ஆங்கிலேயர் தென்னாட்டுப் போரை நடத்தி வந்தனர். எத்தனையோ தமிழ்நாட்டு மறக்குடித் தலைவர்களுக்குக் கொலைக்களமாக அமைந்திருந்தது இக்கோட்டை. சங்ககிரிக்கு இரண்டு கல் கிழக்கில் ஐவேலி என்னும் ஓர் ஊர் இருந்தது. அது சங்ககிரியைச் சேர்ந்தது. அது ஒரு சிற்றூராயினும் புலவர் நாவில் பொலியும் பெருமையுடைய ஊராகும். அது ‘ஐவேல்’ எனவும் வழங்கும். ஐவேலியில் அசதி என்னும் இடைக்குலத் தலைவன் ஒருவன் இருந்தான். இடையர் என் போர் முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலங்களில் ஒன்றான முல்லை நில மக்களாவர். அசதி பெருஞ் செல்வமும் அதற்கேற்ற கொடைக் குணமும் உடையவன்; கொடைக் குணம் உள்ளவரிடத்து மறக்குணமும் அமைவது இயல்பு. எனவே, அசதி பெரு வீரனாகவும் விளங்கினான். அவன்தான் அவ்வூர்த் தலைவன். அவன் பெரிய பண்ணைக் காரன்; ஏராளமான ஆடுமாடுகள் வளர்த்து வந்தான்; அதாவது பெரிய கால்நடைப் பண்ணை உடைய வனாக இருந்தான். அவன் ஆடுமாடுகளை மிகுந்த அக்கறையாக வும் அன்பாகவும் பாதுகாத்து வளர்த்து வந்தான். மற்ற தமிழ்ச் செல்வர்களைப் போலவே அசதியும் மிகுந்த தமிழ்ப் பற்று உடையவனாக விளங்கினான். இது அக்காலத் தமிழ்ச் செல்வர்க்குரிய இயல்பு போலும்! பறம்பிற் பாரி, தகடூர் அஞ்சி, மோரூர்க் காங்கேயன், சிறுகுடிப் பண்ணன் எனக் கொடை யாளர் ஊர்ப் பெயரோடு சேர்த்து அழைக்கப்படுவது போலவே, நம் அசதியும் ‘ஐவேலசதி’ என ஊர்ப் பெயரோடு சேர்த்தே அழைக்கப்பட்டு வந்தான். ஒளவையாரைப் பற்றித் தெரியாத தமிழ் மக்கள் ஒருவரும் இருக்கமாட்டார்கள். கற்றவர், கல்லாதவர் எல்லார்க்கும் தெரிந்த புலவர் அவர் ஒருவர்தான். தமிழ் மக்களுக்கு அவ்வளவு அறிமுக மானவர் ஒளவையார், அவ்வளவு பெயர் பெற்றவர் எனலாம். ஒளவையார் செய்த ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி முதலிய நூல்களை நீங்கள் படித்திருப் பீர்கள், ஒளவையாரைப் பற்றி வழங்கும் பல கதைகளையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழ் மக்களால் தமிழ்த்தாய் என்றே மதித்துப் போற்றப்பட்டு வந்தவர் ஒளவையார். ஒளவையார் என்னும் பெயருள்ள புலவர் இருவர் இருந்திருக்கின்றனர். சங்க கால ஒளவையார் வேறு, ஆத்திச்சூடி முதலிய நூல்கள் பாடிய ஒளவையார் வேறாவர். ஒளவையார் தமிழ்நாடு முழுவதும் சுற்றித் தமிழ் மக்களுக்கு நல்லறிவு புகட்டுவதையே, தமிழ் மக்களை நல்வழி யில் நடக்கச் செய்வதையே தம் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர்; நாலைந்து நாளைக்கு நிலையாக ஓரூரில் தங்கியிருக்கமாட்டார்; தமிழ் மக்கள் எவரும் ஒளவையார் சொல்லைத் தட்டி நடவார்கள். தமிழ் மக்களுக்கு அவ்வளவு வேண்டியவர் ஒளவையார். ‘ஒளவை அமிழ்த மொழி’ என அவர் சொல்லைச் சிறப்பித்து மேற்கொள்வர். ஒளவையார் சொல்லில் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தனர் தமிழ் மக்கள். ஏதாவதொன்று பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒருவர் ‘அது முடியாது’ அல்லது ‘ஆகாது என்றால், ‘என்ன அவச்சொல் சொல்கிறாய்?’ என்னும் வழக்கமே ஒளவையார் சொல்லில் தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்குச் சான்றாகும். ‘ஒளவை சொல்’ என்பதே ‘அவச் சொல்’ ‘அவைச் சொல்’ எனத் திரிந்து வழங்குகிறது. ஆண்பாற் புலவர்களைப் போலவே ஒளவையாரும் பாடிப் பிழைக்கும் பரிசில் வாழ்க்கையே நடத்தி வந்தனர். பாண்டி நாடு, சோழ நாடு, தொண்டை நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு கொங்கு நாட்டுச் சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார் ஒளவையார்; கொங்கு நாட்டி லுள்ள பழவிறலூர் பலவற்றிற்கு சென்றார்; கொங்கு நாட்டுத் தமிழ்ச் செல்வர்கள் பலரைப் பாடிப் பரிசு பெற்றார்; சேலத்தி லிருந்து சங்ககிரியை நோக்கிச் சென்று கொண்டி ருந்தார்; அது முதுவேனிற்காலம், வெயில் கடுமையாக இருந்தது. கடும் வெயிலில் நெடுந்தொலைவு நடந்தார்; வழியில் ஊர் ஒன்றும் தென்படவில்லை. நேர் மேற்காகச் சென்று கொண்டி ருந்தார்; நண்பகல் நேரம். பகலவன் தன் முழு வலிமையுங் கொண்டு தாக்கினான். அவ்வெய்யவன் தாக்குதலை எதிர்த்துச் சென்று கொண்டிருந்தார் ஒளவையார்; வெப்பத்தைத் தாங்க முடியாது களைப்படைந்தார்; வரவர மிகவும் களைத்துவிட்டார்; பக்கத்தில் கிணறொன்றும் இல்லை. நீர் வேட்கையோ பொறுக்க முடியவில்லை. தொண்டை வறண்டுபோய் விட்டது. உமிழ்நீர் ஊறவில்லை. என் செய்வார் பாவம்! நடந்த களைப்பு வேறு. உடலைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. கால்கள் ஓய்ந்து விட்டன. ஓர் எட்டிகூட எடுத்துவைக்க முடியவில்லை. சாலை யோரத்தில் இருந்த ஒரு மரத்து நிழலில் சுருண்டு படுத்து விட்டார்; அப்படியே அசைவற்றுக் கிடந்தார். அது அசதியின் காடு. அங்கு அவன் ஆடுமாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. வழக்கம்போல ஆடு மாடுகளைப் பார்த்துக் கொண்டே அசதி அப்பக்கம் வந்தான்; ஒளவையார் படுத்தி ருப்பதைக் கண்டான்; பக்கத்தில் போய்ப் பார்த்தான்; பெரும் புலமையுடையாரென முகக் குறியால் அறிந்தான்; தனியாக ஒரு மரத்தடியில் படுத்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டான்; ஒரு பெண். அதுவும் முதுமைப் பருவமுள்ள ஒருத்தி, ஒரு காட்டில் தனியாகக் சாலையோரத்தில் படுத்திருப்பதன் காரணம் அவனுக்கு விளங்கவில்லை. மேலும், அது அவனுடைய காடு; அவன் அதிகாரத்துக்குட்பட்டது. ‘பாட்டி, பாட்டி!’ என்று மெதுவாகக் கூப்பிட்டான் அசதி. ஒளவையார் மெதுவாகக் கண்ணைத் திறந்து பார்த்தார்; தன் பக்கத்தில் அன்பு ததும்பிய முகத்துடன் ஒருவன் நிற்பதைக் கண்டார்; அவரால் பேச முடியவில்லை. தொண்டை வறண்டு கிடந்தது. தண்ணீர் வேண்டும் என்பதைக் கைக் குறிப்பால் தெரிவித்தார். அசதி திடுக்கிட்டான்; வெயிலில் நடந்து வந்த தால் களைத்துப் படுத்திருக்கிறார் என்பதையுணர்ந்தான். பக்கத்திலோ கிணறு இல்லை. பாட்டியின் நிலைமையோ படு மோசமாக இருக்கிறது. அவனுக்கு இன்னது செய்வதென்று ஒன்றும் தோன்ற வில்லை. கொஞ்சந் தொலைவில் பண்ட மேய்க்கிகள் நின்று கொண்டிருந்தனர். (பண்டம் -ஆடு மாடுகள்) அசதி அங்கு விரைந்து ஓடினான். அவர்களிடம் தண்ணீர் இருக்கிறதா என்று கேட்டான்; அவர்கள் ‘தண்ணீர் இல்லை, வெறுங் கலயந்தான் இருக்கிறது’ என்றனர். என் செய்வான் பாவம்! தனது இடத்தில் வந்து களைத்துப் படுத்திருக்கும் ஒரு தமிழ்ப் பாட்டிக்கு நீர் வேட்கைக்குக் கொஞ்சம் தண்ணீர் உதவ முடியாமைக்கு வருந்தினான். அவனுக்கு திடீரென்று ஒர் எண்ணம் தோன்றிற்று. பண்டமேய்க்கிகளிடம் இருந்த தண்ணீர்க் கலயத்தை வாங்கினான்; கொஞ்சம் ஆட்டுப் பால் கறந்து கொண்டுபோய் அத்தமிழ் மூதாட்டிக்குக் கொடுத்தான். ஒளவையார் அப்பாலை இரண்டு முரடு குடித்தார். அசதி தொண்டையை நீவி விட்டான். தொண்டை நனைந்தது. பின்னும் கொஞ்சம் குடித்தனர்; களை தெளிந்து கண்ணைத் திறந்து பார்த்தார். கம்மிய குரலில், அசதியைப் பார்த்தபடியே ‘அசதி’ என்றார். அசதி, தன் பெயரைத் தெரிந்து கூப்பிடுவதாக எண்ணினான்; பாட்டி! இதோ இருக்கிறேன்; இனிக் கவலையில்லை; இன்னும் கொஞ்சம் பால் குடியுங்கள்’ என்று பால் கும்பத்தை இரு கையாலும் எடுத்து அன்புடன் கொடுத்தான். அசதி தன் அன்பைக் கலந்து கொடுத்த அப்பாலை ஒளவையார் தென்புடன் குடித்தார்; கொஞ்சநேரம் பூங்கொத்தால் விசிறினான் அசதி. ஒளவையார் ஒருவாறு களை தெளிந்தார். மெதுவாக எழுந்து உட்கார்ந்து, ‘காலத்தே வந்து காப்பாற்றினாய்; நீ இல்லையேல் நான் இந்நேரம் இறந்திருப்பேன்; நல்ல வேளை; நீ நன்றாயிரு; காலத்தினால் செய்த இந்நன்றி ஞாலத்தினும் மாணப் பெரி தாகும்’ என்று அன்பு ததும்பிய அமிழ்த மொழியால் கூறினார். ‘நல்லவேளை. என்னமோ என்னாலான தைச் செய்தேன்; அது என் கடமை; பாட்டி! தாங்கள் யார்?’ என்றான் அசதி; ‘ஒளவை’ என்றார் ஒளவையார். அவ்வளவுதான்! ‘தமிழ்த்தாயே! எங்கிருந்து வருகிறீர்கள்? அந்தோ! இன்னும் கொஞ்ச நேரம் நான் காணாமல் இருந் திருந்தால் என்னாவது? தமிழ்நாடு தன் தாயை இழந்திருக்குமே. செந்தமிழ்த்தாயே! எப்போது இங்கு வந்து படுத்தீர்கள்? இந்தக் கடுவெயிலில் ஏன் வந்தீர்கள்?’ என்று பலவாறு வருந்தினான் அசதி. ஒளவையாரின் கால்களைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டான். ஒளவையார் நன்கு உட்கார்ந்து, ‘அப்பா! நீ யார்?! என்றார். அசதி, ‘அசதி’ என்றான். ‘நல்ல பெயர் நீ ஒரு செல்வக் குடிமகன் போல் காணப்படுகிறாய்; உன் ஊர் எது? இங்கெதற்கு வந்தாய் என்னைக் காப்பாற்ற?’ என்றார் ஒளவையார். அசதி தன் ஊர் முதலியவற்றைக் கூறினான். ஒளவையார் மகிழ்ந்து, ‘அப்பா அசதி! நீ அன்பால் கொடுத்த உன் பால் என்னைக் காப்பாற்றியது. உன் வானிகர் வண்கையால் இன்னும் கொஞ்சம் பால் ‘கொடு’ என்றார். அசதி கலயம் நிறையப் பால் கறந்து வந்து கொடுத்தான். ஒளவையார் அப்பாலை அருந்தி மகிழ்ந்தார். வண்டி கொண்டு வந்து, அசதி ஒளவையாரை ஊருக்கு அழைத்துச் சென்றான்; பொன் வட்டிலில் அன்னமிட்டுப் போற்றினான்; தமிழ்ப் பெரு மூதாட்டியாராகிய ஒளவை யாரை நேரில் கண்டு அளவளாவவும், விருந்திட்டுப் போற்ற வும், அவர் அமிழ்த மொழியை நேரில் கேட்கவும் கிடைத்த பெரும் பேற்றினை எண்ணி மகிழ்ந்தான்; ஒளவையாரின் அரும் பொருள் செறிந்த அமுத மொழியைக் கேட்டுக் கேட்டு இன்புற்றான். ஒளவையார் அசதியின் அளவில்லா அன்புக்கு உவந்தார்; அவன் தமிழ் மொழிமீது கொண்டுள்ள அளவுகடந்த பற்றினைப் பாராட்டினார்; அவன் பெயரை என்றும் நின்று நிலவுமாறு செய்ய எண்ணினார்; உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத் தன்றோ? “அறப்பயன் தான் சிறிதாயினும் தக்கார்கைப் பட்டக் கால் வான்சிறிதாப் போர்த்துவிடும்” என்பது வாய்மையுரை யன்றோ? அசதி அக்காலத்தே செய்த சிறிய உதவியின் பயனை ஞாலத்தினும் மாணப் பெரிதாகக் கொண்டார்; அசதி மேல், அசதிக் கோவை என ஒரு நூல் செய்தார், அது நானூறு பாட்டுக்களையுடையது; ஒவ்வொரு பாட்டிலும் அசதியின் பெயர் வந்துள்ளது. தேனினும் இனிய இச்செந்தமிழ்க் கோவையைக் கேட்டு அசதி அளவிலா மகிழ்ச்சியடைந்தான்; ஒளவையாரை அங்கேயே இருக்கும்படி வேண்டிக் கொண்டான். தமிழர் முன் னேற்றத்தின் பொருட்டு நாடு சுற்றிவரும் தமது நற்றொண்டைக் கூறி ஒளவையார் விடை கேட்டார். அசதி ஒளவையார்க்கு வெறுக்க வெறுக்கப் பரிசு கொடுத்துப் பிரியா விடையுங் கொடுத்தான். ஒளவை மூதாட்டியார் அசதியை வாயுற வாழ்த்தி விடை பெற்றுச் சென்றார். ஐவேலி என்னும் அவ்வூர் இன்றில்லை. இன்றும் அவ்விடம் ‘ஐவேலிக் கிராமம்’ என்றே வழங்கி வருகிறது. அவ்வூர் நத்தத்தையடுத்து இருநூறு வீடுகள் உள்ள இடையர் பட்டி என்னும் ஊர் இருக்கிறது. 8. பழைய கோட்டைச் சர்க்கரை 1. சர்க்கரை மரபு : பழைய கோட்டைச் சர்க்கரை குடும்பம் சர்க்கரை போன்ற குடும்பம். அது சங்க காலத்திலிருந்து தமிழ் வளர்த்து வரும் பழம் பெருமை வாய்ந்த வேளாண் குடும்பம். இக்குடி முதல்வனான கரியான் சர்க்கரை என்பவன் பாண்டியனுக்கு படைத்துணையாகி, உத்தமக்காச் சோழனை வென்றமைக்காகப் பாண்டியன் மகிழ்ந்து, உத்தமக்கா மிண்டன் என்னும் பட்டப் பெயரை வழங்கினான். மிண்டன் - கெட்டிக்காரன். சர்க்கரை மரபினர் அப்பட்டப் பெயரோடு, ‘சர்க்கரை’ என்னும் தம் குடிமுதல்வன் பெயரையும், மன்றாடியார் என்னும் நாட்டுத் தலைமைப் பெயரையும் வழிவழிப் பட்டப் பெயராக வைத்து வழங்கி வருகின்றனர். பழைய கோட்டைச் சர்க்கரை மரபு, வெற்றிப் புகழை யுடைய வீரக்குடி மரபாகும். ‘சேனாதிபதிச் சர்க்கரை, கொற்றவேல் சர்க்கரை’ என்னும் இம் மரபினர் பெயர்களே அதற்குச் சான்றாக உள்ளன. செம்மறிக்கிடாய்க் கொம்புபோல இருபக்கமும் கூர்மையாக, இடையில் கைப்பிடியையுடையது சொட்டை என்னும் படை, சர்க்கரை மரபினர் அச்சொட்டைப் படையில், ‘ஓங்கு சொட்டைக் காரர்கண்டன் உத்தமக்கா மிண்டன்’ எனப் புலவர் புகழ்ந்து பாடும் தனிச்சிறப்பினை யுடையவராக இருந்தனர், இம்மரபினர் கொங்கு வேளாளரின் பட்டக்காரராக - சமூகத் தலைவராக - இருந்து வருகின்றனர். திரு. நல்ல சேனாபதிச் சர்க்கரை உத்தமக்கா மிண்ட மன்றாடியார் என்பது இப்போதுள்ள பட்டக்காரரின் பெயர். இவருந் தம் தொல்குடிக்கேற்ற நல்லியல்புடையவராவர். பழைய கோட்டை என்னும் ஊர், கோவைக் கோட்டத்தில், ஈரோடு, காங்கயம் வழியில், ஈரோட்டின் தெற்கில் 18வது கல்லில் இருக்கிறது. இதன் பழம் பெயர் பழையனூர் என்பது. “பழை யனூர்க் காரியன்றீந்தகளைக் கொட்டும்” என்று ஒளவையா ரால் பாராட்டப் பெற்ற, அன்பால் ஒளவைக்குக் களைக் கொட்டுக் கொடுத்த ‘காரி’ தங்கள் முன்னோன் என்கின்றனர் சர்க்கரை மரபினர். கரியன் என்னும் பெயரே காரி என மருவி வழங்கியது. பழையன் ஊர் என்பதே பழையன் கோட்டை - பழைய கோட்டை எனப்பட்டது. கோட்டை - ஊர். இடைய கோட்டை, புதுக் கோட்டை, பட்டுக்கோட்டை எனக் கோட்டை என்பது ஊர் என்னும் பொருளில் வந்திருத்தல் காண்க. பழைய கோட்டைக்கு ஒரு கல் தெற்கில் ‘நத்தக் காரையூர்’ என்னும் ஊர் இருக்கிறது. காரையூர் என்பதே அதன் பழம் பெயர். சர்க்கரை மரபினர் அவ்வூர்ப் பெயரோடு சேர்த்துக் ‘காரைக்கோன்’ எனப் புலவரால் புகழப் பட்டுள்ளனர். காரை யூர் என்பது, காரியூர் என்பதன் திரிபாக இருக்கலாம். காரியூர் காரியின் பெயரால் ஏற்பட்டதாகும். இது களைக் கொட்டீந்த காரியின் வரலாற்றுக்குத் துணை செய்கிறது. இது ஆராய்ச் சிக்குரியது. பழைய கோட்டைக்குச் ‘செங்குளம்’ என்ற பெயரும் வழங்கி வருகிறது. சேரன் செங்குட்டுவன் செய்த போர்களில் ஒன்றெனச் சிலப்பதிகாரம் கூறும் ‘கொங்கர் செங்களத்துப் போர்’ இங்கு நடந்தது போலும்! செங்களம் என்பதே இன்று ‘செங்குளம்’ எனத் திரிந்து வழங்குகின்றது போலும்! கொங்கர் - கொங்கு நாட்டினர் - கொங்கு மன்னர். இது ஆராய்ச்சிக்குரியது. பழைய கோட்டை அரண்மனை, தமிழ் மக்களின் விருந்தோம்பல் என்னும் பெருங்குணத்திற்கு இன்றும் எடுத்துக்காட்டாக இலங்கி வருகிறது. பழைய கோட்டைச் சர்க்கரை குடும்பம், சிற்றரசர் போன்ற செல்வாக்குடைய குடும்பம். பழைய கோட்டைப் பண்ணையத்தில் உலகப் புகழ் பெற்ற காங்கய மாடுகளை யுடைய பெரிய மாட்டுப் பண்ணையொன்று இருக்கிறது. அப்பண்ணையில் சுமார் மூவாயிரம் மாடுகள் இருக்கின்றன. ஒரு தனிப்பட்டவரால் நடத்தப்படும் இவ்வளவு பெரிய மாட்டுப் பண்ணை உலகில் வேறு எங்குமேயில்லை. பல்லாயிரக்கணக்கான ஆக்களை அன்புடன் போற்றிப் புரக்கும் சிறப்பினால் சர்க்கரை மரபினர் ‘ஆவேந்தர்’ எனச் சிறப்பிக்கப்படுகின்றனர். அக்காங்கய மாடு களைக் ‘காங்கய இனம்’ என்பதைவிடப் ‘பழைய கோட்டை இனம்’ என்பதே சாலப் பொருத்தமுடையதாகும். பழைய கோட்டைச் சர்க்கரை மரபு, “சர்க்கரையை யன்றி வேறு எவரையும் பாடோம்” என்று புலவரால் சிறப்பித்துப் பாராட்டப் பெற்ற புகழுடைய மரபு; ஒரு தமிழ்ப் புலவர் கையில் சவுக்கடி பெற்றும், ஒரு புலவர் தெருவில் விலை கூறி விற்க இசைந்தும், ஒரு புலவரின் உண்ட எச்சில் வாயைக் கழுவி விட்டும் தமிழ்த் தொண்டாற்றிய தனிப் பழம் பெருங்குடி மரபு, காதல், குறவஞ்சி, தாலாட்டு முதலிய பல பனுவல் மாலைகள் சூடியுள்ளனர் இம்மரபினர். 2. பொறுமையின் எல்லை தொண்டை மண்டலத்துக் குன்றத்தூரில் எல்லப்பன் என்னும் வள்ளலொருவன் இருந்தான். அவன் பெருங் கொடையாளி; “செங்குன்றை எல்லனெங்கே அங்கே இரவல ரெல்லாம்” என்னும் புகழ்ச்சிக்குரியவன்! தன்னூரில் வந்து இறந்த ஒரு யாழ்ப்பாணன் பிணத்தைத்தானே சுமந்து புகழ் பெற்றவன். “நாணந்தராமல் நடுங்காமல் கூசாமல் பாணன் பிணத்தைப் பரிக்குங் கை” எனக் கம்பரும் அவ்வருஞ் செயலைப் பாராட்டி யுள்ளார். எல்லப்பன் கி.பி.11 ஆம் நூற்றாண்டினன். அக்காலத்தே அழகன் சர்க்கரை என்பவர் சர்க்கரை மரபின் குல விளக்காக விளங்கினார். அவர் ‘பொறுமையின் எல்லை’ என்று புலவரால் புகழப்பட்டவர்; அளவு கடந்த தமிழ்ப் பற்றுடையவர்; தமிழ்ப் புலவரை உயிரினும் பெரிதாக மதித்துப் போற்றிப் புகழொடு வாழ்ந்து வந்தார். அழகன் சர்க்கரை மன்றாடியாரின் அரண்மனைப் புலவ ரொருவர் தொண்டை நாட்டுக் குன்றத்தூர் சென்றார்; குன்றை எல்லனைப் புகழ்ந்து பாடினார். எல்லப்பன் மகிழ்ந்து தகுந்த பரிசு கொடுத்தான். புலவர் இடக்கையை நீட்டினார்; எல்லப்பன் புலவரை நோக்கி ‘பரிசு பெறும் முறையைத் தாங்கள் இன்னும் அறிய வில்லைபோலும்’ என்றான். ‘நான் நன்றாக அறிந்துள்ளேன்; தமிழறிவும் கொடைக் குணமும் ஒருங்கே யமைந்து, பொறுமையே உருவான பழைய கோட்டை அழகன் சர்க்கரைபால் எப்போதும் ஏற்கும் வலக்கையை வேறு எவ ரிடமும் நீட்டுவதில்லை என்று கொண்டிருக்கும் கொள்கையே தங்களிடம் நான் இடக்கையை நீட்டியதற்குக் காரணம். தாங்கள் அதற்காக வருந்தக் கூடாது’ என்றார் புலவர். அது கேட்ட எல்லப்பன் வியப்புற்று, ‘அங்ஙனமாயின் மிக்க மகிழ்ச்சி; நான் அறியாது வினாவியதைப் பொருத்தருள்க. ஆனால், என் அவைப் புலவர்கள் சென்று, அவ் வள்ளலின் கொடை அன்பு, அடக்கம், பொறை முதலிய உயர் குணங்களை அறிந்து வருமளவும் தாங்கள் எமது விருந்தினராக இருந்துவர வேண்டும்’ என்று வேண்டினான். புலவர் அவன் வேண்டு கோளுக் கிணங்கினார். எல்லப்பன் தன் அவைக்களப் புலவர் களில் தக்கார் இருவரை அழகன் சர்க்கரையின் அருங் குணங் களை அறிந்து வரும்படி பழைய கோட்டைக்கு அனுப்பினான். தொண்டை நாட்டுப் புலவர்கள் குன்றத்தூரை விட்டுப் புறப்பட்டுச் சென்று பழைய கோட்டையை அடைந்தனர்; ஆனால், அவர்கள் சர்க்கரையைப் பார்க்கவில்லை; அரண் மனைப் பூங்காவுக்குள் புகுந்தனர்; அங்கு அருமையாக வளர்க்கப் பட்டிருந்த பூஞ்செடிகளைக் கண்டபடி வெட்டி யெறிந்தனர்; அதுகண்ட காவலாளன் சென்று சர்க்கரையிடம் கூறினான். சர்க்கரையார் திடுக்கிட்டு, ‘தமிழ்ப் புலவர்கள் அத்தகைய தகாச் செயலை ஒருபோதும் செய்யத் துணியாரே, அன்னார்க்குச் சினமுண்டாகும்படி ஏதும் சொல்லாமல் இன்சொல்கூறி அன்போடு இங்கு ‘அழைத்துவா’ என்றார். அக்காவலாளி சென்று, அவ்வாறே அப்புலவர் பெருமக்களை அழைத்து வந்தான். மன்றாடியார் புலவர்களை அன்போடு வரவேற்று, இருக்கை நல்கி, இன்சொற்கூறி, மலர்ந்த முகத்துடன், அருந்தமிழ் வளர்க்கும் பெருந்தமிழ்ப் புலவீர்! அப்பூஞ் செடிகள் அங் கிருக்கத் தகாவெனில் ஆட்களைவிட்டு வெட்டி யெறியலாமே. ஏடும் எழுத்தாணியும் பிடித்துத் தமிழ்ப் பாட்டுக்கள் எழுதும் தங்கள் மெல்லிய கைகள் கடினமான அரிவாளைப் பிடித்து அக்கடுந்தொழிலைச் செய்ய லாமோ? ஒரு நாளும் அத்தகைய தொழிலைச் செய்தறியாத தங்கள் மலர் போன்ற கைகள் வலிக்குமே. தாங்கள் இத்தகைய தொழிலை செய்யப் புகுந்தால் தமிழ்த் தொண்டு செய்பவர்யாவர்? என்பால் ஏதாவது குற்றங்குறை இருந்தால் அன்பால் பொருத்தருள வேண்டும்’ என அன்புரை கூறி, புலவர் கைகளுக்கு மருந்தெண் ணெய் பூசி வெந் நீராட்டுவித்தார். புலவர்கள் மன்றாடியாரின் அன்பையும் பொறையை யும் அளவு கடந்த தமிழ்ப் பற்றையும் வியந்தனராயினும் அதோடு நிற்கவில்லை. இன்னும் சர்க்கரையின் நற்குணங்களை நன்கு ஆராய்ந்தறிய எண்ணினார்கள். சர்க்கரையார் புலவர்களோடு உடனிருந்து உணவு உண்டனர். சர்க்கரையின் தாயார் உணவு படைத்துக் கொண்டிருந்தார். உணவருந்திக் கொண்டிருந்த புலவரின் ஒருவர் எழுந்து, அவ்வம்மையின் முதுகின்மேல் ஏறி உட்கார்ந்தனர். திடுக்கிட்ட அவ்வம்மையார் மைந்தன் முகத்தை நோக்கினார். உடனிருந்து உண்டவர்கள் திடுக்கிட்டனர்; அத் தகாச்செயலைக் கண்டு மனந்துடித்தனர்; அக்கொடுங் காட்சியைக் காண நாணினர். சர்க்கரையார் என் செய்தார்? ‘என் அன்புள்ள அன்னையே! என்னைப் பத்து மாதம் பொறுமையோடு சுமந்த தாங்கள், இப் புலவர் பெருமானை ஒரு நொடி நேரம் சுமக்கமாட்டீரோ? தங்கள் பொறுமை எங்கு போய் ஒளிந்தது? அன்னையே பொறாவிட்டால் பின்னை யார் பொறுப் பவர்?’ என்று அன்போடு கேட்டார். அப்பொன் மொழியைக் கேட்ட புலவர் சடக்கெனக் கீழே இறங்கி, ‘பொறுமையே உருவாகிய அண்ணலே பொருத்தருள வேண்டும்; பொறுமையின் எல்லையை இன்றுதான் கண்டேன்; தங்கள் பொறுமையைக் கண்டறிவதற்காகவே நான் இத்தகாச் செயலைச் செய்தேன். “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல” என்று பொறைக்கு நிலத்தை உவமை சொல்வர்; பொறுமையே உருவான தங்கள் அன்னையாரின் பொறைக்கு உவமையும் உண்டோ? அன்னையின் முதுகில் அயலானொருவன் ஏற, அன்னை நும்முகத்தை நோக்க, வெகுளாது, விம்மாது, ‘என்னை ஈரைந்து திங்கள் இன்பாய்ச் சுமந்த தாங்கள் இவரை ஒரு நொடி சுமக்கமாட்டீரோ’ என்ற தங்கள் பொறை, தங்களை இவ்வாறு வளர்த்த தங்கள் அன்னையின் பொறையிலும் பெரிதன்றோ? வாழ்க நும் பொறுமை. நாங்கள் பெருங்கொடை வள்ளலாகிய தொண்டை நாட்டுக் குன்றத்தூர் எல்லப்பன் அவைக்களப் புலவர்கள்; அவ்வள்ளலின் ஏவலால் இங்கு வந்தோம்’ என அங்கு நடந்ததையும், பழையகோட்டைப் புலவர் குன்றத்தூரில் இருப்பதையும் எடுத்துரைத்தனர். அது கேட்ட மன்றாடியார் பெருமகிழ்வுற்று, ‘தொண்டை நாட்டார் சோதனையைக் கொங்கு நாட்டார் ஆற்ற வல்லரோ? பாணன் பிணம் சுமந்த எல்லப்பன் பெருமையை முன்னரே கேள்விப்பட்டுள்ளேன். அப்பெருந்தகையோன் அவைக்களப் புலவரைக் காணும் பேறு இன்று பெற்றேன்’ என்று இனிமொழி கூறினார். சர்க்கரை யின் அன்னையாரும் அகமகிழ்ந்தனர், பின்னர்ப் புலவர்கள் போதும் போதும் என்று கூறக் கூறப் பரிசுகள் பல நல்கி, ‘எல்லப்பனுக்கு எங்கள் நன்றியைச் சொல்லுங்கள்’ என்று விடை கொடுத்தனுப்பினார். மன்றாடியாரிடம் விடைபெற்றுச் சென்ற புலவர்கள் தாம் பெற்ற பரிசுகளுடன் குன்றத்தூரையடைந்தனர்; எல்லப்பனைக் கண்டு, தாங்கள் பழைய கோட்டை சென்றதையும், அங்கு செய்ததையும், சர்க்கரையின் பெருங்குணத்தையும் எடுத்தியம் பினர். எல்லப்பன் மகிழ்ந்தான்; தனது விருந்தினராயிருந்த பழைய கோட்டைப் புலவர்க்கு இடக்கை வருந்தப் பரிசு கொடுத்தான்; தன் அவைப் புலவர்கள் செய்த தகாச் செயலைப் பொறுத்தருளுமாறு அன்புடன் வேண்டிக் கொண்டதாகச் சர்க்கரையிடம் கூறுங்கள் என்று கூறியனுப்பினான். பார்த்தீர்களா பழைய கோட்டைச் சர்க்கரையிடம் தமிழ்ப் பற்றை? பொறுமைக்கும் ஓர் எல்லையே இல்லை போலும்! 3. அருங்கொடை வள்ளல்: தமிழாட்சி ஏற்பட்ட காலந்தொட்டுச் சேர, சோழ, பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர்களாலும் தமிழ் சிற்றரசர் களாலும் சீரும் சிறப்புடன் ஆளப்பட்டு வந்தது தமிழ்நாடு. இப்பேரரசரும் சிற்றரசரும் தொன்று தொட்டு வந்த பழந்தமிழ்ப் பெருங்குடி மக்களாவர். பிற்காலத் தமிழரசர்கள் தாய் மொழிப் பற்றுக் குறைவாலும், ஒற்றுமை யின்மையாலும் ஒருவர்க் கொருவர் பகைகொண்டு போரிட்டுச் சீர்குலைந்து ஆளுந் திறமை குன்றினர். தமிழர்க்கு இயல்பாக உள்ளமறப் பண்பும் அவர்களை விட்டகன்றது. அதனால், அயலார்க்குத் தமிழ்நாட்டின் மேல் கண்ணோட்டம் விழுந்தது. தமிழ்மொழி பேசாத - தெலுங்கைத் தம் தாய்மொழியாகக் கொண்ட- நாயக்க மன்னர் தமிழ்நாட்டின் அரசராயினர். அன்னார் மதுரையைத் தலைநகராகக் கொண்டு தமிழ்நாட்டை ஆண்டு வந்தனர். மதுரையிலிருந்து தமிழ்நாட்டை யாண்டுவந்த நாயக்க மன்னர்களில் சிறந்தவர் திருமலை நாயக்கர் என்பவர். அவர் கி.பி.17ஆம் நூற்றாண்டினர். திருமலை நாயக்கர் தமிழ் நாட்டைப் பல பிரிவாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் ஓர் அதிகாரியை ஏற்படுத்தியிருந்தார். அவ்வதிகாரிக்குத் தளவாய் என்று பெயர். தளவாய் - படைத் தலைவர். அவ்வதிகாரிக்குத் துணையாகப் பெரிய படை இருந்து வந்ததால் அப்பெயர் உண்டானது. அத்தளவாய்கள் நாட்டதிகாரத்தோடு, நிலவரி வாங்கியனுப்பும் அதிகாரிகளாகவும் இருந்து வந்தனர். தளவாய் ராமப்பய்யர் என்பவர் கொங்கு நாட்டு அதிகாரியாக ஏற்படுத்தப்பட்டார். அவர் சங்ககிரிக் கோட்டை யில் இருந்து வந்தனர்; நிலவரி செலுத்தத் தவறியவர்களை யெல்லாம் அவர் சங்ககிரி மலைக்கோட்டையில் சிறை வைப்பது வழக்கம். பட்டக்காரர், பாளையக்காரர், காணியாளர் முதலிய கொங்கு நாட்டுச் செல்வர் சிலரும் அச்சிறையில் இருந்து வந்தனர். அக்காலத்தே பழைய கோட்டைச் சர்க்கரை மரபில் இருந்தவர் சம்பந்தச் சர்க்கரை என்பவர். இவர் தம் முன் னோரைப் போலவே சிறந்த தமிழறிவும், தமிழ்ப்பற்றும், கொடைக்குணமும் உடையவர்; தமிழ்ப் புலவர்களைப் போற்று வதைத் தம் பெருங் கடமையெனக் கொண்டவர். இவர் அரண் மனை எப்போதும் புலவரின் உறைவிடமாகத் திகழும். இவர் காலத்தே கொங்கு நாட்டில் பெரும் பஞ்சம் ஒன்று வந்தது. இரண்டாண்டுகள் சரியாக மழை பெய்யவில்லை. கிணறுகளுக்குப் பெயர் பெற்றது கொங்கு நாடு. ஆழமான கிணறுகள்கூட ஊற்றுக் கண் வறண்டு போயின. மக்கள் உண்ண உணவின்றித் தவித்தனர். பெருஞ் செல்வர்கள் கூட உணவுத் தட்டுதலுக்காளாயினர். அத்தகைய கொடிய பஞ்சம் அது. மன்றாடியார் பெருநிலக்கிழார். பழைய கோட்டைப் பண்ணையம் ஒரு சிற்றரசு போன்றது. பண்ணையத்திற் பெரும் பகுதி குடிமக்கட்குக் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. பண்ணை யம் உழுவோரால் குத்தகை கொடுக்க முடியவில்லை; சோற்றுக் கும் திண்டாடினர். மன்றாடியார் உணவுப் பொருள் உதவித் தம் குடி மக்களைக் காத்து வந்தார்; மேலும் இல்லையென்று வந்து கேட்கும் ஏழை யெளியவர்க்கெல்லாம் இல்லையென்னாமல் வாரி வாரி வழங்கினார். இது அவர் குடியின் இயல்பாகும். தவசக் களஞ்சியம் காலியாயிற்று. பொருட்சாலையும் பொருட்குறையுற்றது. இந்நிலை மையில் தளவாய் ராமப்பய்யர் நிலவரி கொடுக்கும் படி வற்புறுத் தினார். குத்தகை கொடுக்கும்படி குடிகளை வற்புறுத்த மன மில்லாத மன்றாடியார் வரிகொடுக்க முடியாமல் சிறைக் கோட்டம் புக்கார். தமிழ்ப் புலவரொருவர் பரிசில் நாடிப் பழைய கோட்டைக்குச் சென்றார்; அரண்மனை அலுவலரால் சர்க்கரையார் சங்ககிரிச் சிறையில் இருக்கிறார் என்பதை அறிந்து மனங்கலங்கினார்; ‘புலவர் வறுமை’ என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. அப்பழ மொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் நம்புலவர் பெருந்தகை. ஆகையால், ஊருக்குப் போக அவர் மனம் இடங் கொடுக்க வில்லை. என் செய்வார் பாவம்! அத்தகு நிலையில் வைத்துள்ளது அவரது வறுமைப் பிணி அவரை. சர்க்கரையின் கொடை மருந்தைப் பெற்றுத் தம் வறுமைப் பெரும் பிணியைப் போக்கிக் கொள்ளலாம் என்று உறுதியாக நம்பி வந்தார். அவர் உறுதி உடைந்தது; நம்பிக்கை நலிந்தது. அவருக்கல்லவோ தெரியும் அவரது குடும்ப நிலை! வேறு வழியொன்றுந் தோன்ற வில்லை; சங்ககிரி சென்று சர்க்கரையைப் பார்ப்பதென முடிவு செய்தார்; வரி கொடுக்க முடியாமல் சிறையில் இருப்பவரால் எவ்வாறு பரிசு கொடுக்க முடியும் என்பதை எண்ணிப் பார்க்க இடந்தரவில்லை அப்புலவர் வறுமை. நேராகச் சங்ககிரிக்குச் சென்றார். சிறைச்சாலைக்குள் அயலார் செல்ல முடியுமா என்ன? ஒரு போதும் முடியாது. ஆனால், சிறைக் காவலரின் அன்பு இருந்தால் தாராளமாகச் செல்லலாம். நமது புலவர் நாவ லரல்லவா? தமது இனிய பேச்சுவன்மை யால் சிறைக் காவலரை நட்பாக்கினார்; சிறைச் சாலைக்குள் தாராளமாகச் சென்றார்; சிறைக்குள் இருந்த தமிழ்ச் செல்வர்களைக் கண்டார்; அன்னாரின் இரங்கத்தக்க இன்னா நிலைக்கு இரங்கி, ‘என்று தொலையுமோ இக்கொடுங் கோலாட்சி? கண்ணியமான தமிழ்ப் பெருங்குடி மக்களெல்லாம் இப்படிச் சிறையில் அடைபட்டுக் கிடப்பதா? இவரையே நம்பியிருக்கும் நம் தமிழ் மொழியின் நிலையும் தமிழ்ப் புலவர்கள் நிலையும் என்னாவது? என்று எண்ணியிரங் கினார்; சம்பந்தச் சர்க்கரை இருக்கும் இடத்தை யறிய அச்செல்வர்களிடம் சென்றார். தம்மை இன்னாரென அறிமுகப் படுத்திக் கொண்டார். அது கேட்ட அச்செல்வர்கள், ‘புலவர் பெருந்தகையீர்! பரிசு பெறுகின்ற இடம் இதுதானா? எதனால் நாங்கள் சிறை வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நீர் அறியீரோ? நாங்கள் விடுதலையாகி மகிழ்ச்சியுடன் ஊரிலிருக்கும் போது வந்து கேட்கலாகாதா? எங்கள் பரிசே இப் பரிசாய் இருக்கும்போது நாங்கள் எப்பரிசு தருவோம்’ என்று நகைத்தனர். அது கேட்ட புலவர், ‘ஐயன்மீர்! இரப்பானுக்குச் சிறைக் கூடமென்ன வீடென்ன? எல்லாம் ஒன்றுதான்; முகிலால் மூடப் பட்ட திங்கள் ஒருபுறத்தே ஒளி வீசுகிற தன்றோ? கொடுப் பவர்க்கு எங்கிருந்தாலென்ன? அவரை வேகும் முன்னம் கடுகு பொடியாகி விடுமன்றோ? நீங்கள் விடுதலை யாகும் வரை என் வறுமை காத்துக் கொண்டிருக்குமா என்ன? நான் இங்கு ஒரு பெருந்தகை யாளரைத் தேடிவந்தேன்; அவர்தான் பழைய கோட்டைச் சம்பந்தச் சர்க்கரை. அவர் எங்கே இருக்கிறார், சொல்லுங்கள்?’ என்றார். இதுகேட்டு, அங்கிருந்த சம்பந்தச் சர்க்கரை மன்றாடி யார் புலவரை இருகையாலும் தழுவிக் கொண்டார். தழுதழுத்தக் குரலில். ‘பெரியீர்; இச் சிறைச்சாலைக்குள் என்னை வந்து பார்க்க மிகவும் துன்பப்பட்டிருப்பீர்கள்; இப்போதுதான் வருகிறீர் களா? பழைய கோட்டை போயிருந்தீர்களா?’ என்று அன்போடு கேட்டார். ‘ஆம். பழைய கோட்டைக்குப் போயிருந்தேன்; தாங்கள் அங்கில்லாததால் ஏமாற்றமடைந்தேன்; இங்கிருப்ப தாகச் சொன்னார்கள். நேராக இங்கு வந்தேன்’ என்றார் புலவர். அரண்மனையில் சாப்பிட்டீர்களா? ‘விருந்தோம்பலுக் கென்றே இருக்கும் தங்கள் அரண்மனை என்னை எப்படிச் சும்மா விடும்?’ இவ்வுரையாடலைக் கேட்டு அங்கிருந்த வர்கள் பெருவியப் புற்றனர்; தாங்கள் முன்பு புலவரை இகழ்ந்ததற்காக வெட்கப் பட்டனர். புலவர் தாம் பாடிவந்த பாட்டைப் படித்துக் காட்டினார்; மன்றாடியார் மகிழ்ந்தார், சிறைச்சாலைக்குள் தேடி வந்த புலவருக்குப் பரிசு கொடுக்கப் பணம் இல்லையே என மனம் வருந்தினார்; மன்றாடியாரின் மனைவியார் சிறைக் கூடத்திற்கு வெளியே தங்கியிருந்தார்; புலவரொருவர் வந்திருப்ப தாகக் கூறும்படி மனைவியாரிடம் ஓர் ஏவலாளனை அனுப்பினார். ஏவலாளன் சென்று, அவ்வம்மையாரிடம் சர்க்கரை சொல்லியனுப்பி யதைச் சொன்னான். அப்பெண்ணரசி யிடமும் பணம் இல்லை; விலையுயர்ந்த அணிகலன்களும் அவர் அணிந் திருக்கவில்லை; எதைக் கொடுத்தனுப்புவார்? கொடுத்துக் கொடுத்துப் பழகிய பெருமனையாட்டி யல்லவா அவ்வம்மையார்? இல்லையென்று சொல்ல மனந் துணியவில்லை. அது நற்குடிப் பெண்டிர்க்கு இயலுவ தொன்றா? எனவே, தம் கழுத்தில் அணிந் திருந்த தாலியைக் கழற்றி, ஒரு துணியில் சுற்றி, ‘இதைக் கொண்டு போய் எங்கணவரிடம் கொடும்’ என்று அந்த ஆளிடம் கொடுத் தனுப்பினார் என்னே அத்தமிழரசியின் தமிழ்ப் பற்று! மனைவியார் கொடுத்தனுப்பிய அச்சிறந்த அணி கலத்தை வாங்கிச் சர்க்கரையார் கண்ணில் ஒற்றிக் கொண்டார்; புலவரைப் பார்த்து, ‘இப்போது இதனைப் பெரிதாக மதித்து ஏற்றுக் கொள்ளுங்கள்; சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததும் வேண்டியது தருகிறேன்; தப்பாக நினைக்கக் கூடாது’ என்று அன்புரை கூறி அத்தாலியைப் புலவர் கையில் கொடுத்தார். புலவர் திடுக்கிட்டார்; சர்க்கரையின் தமிழ்ப் பற்றையும் தாராள குணத்தை யும் கண்டு பெருவியப்புற்றார்! மகிழ்ச்சியோடு அத்திருத்தாலியைப் பெற்றுக் கொண்டு மன்றாடியாரை வாயுற வாழ்த்தி விடைபெற்றுச் சென்றார். சென்றவர் நேராகத் தம் ஊருக்குச் சென்றாரா என்ன? இல்லை. அத்தாலியைக் கையில் ஏந்திக் கொண்டு தளவாய் ராமப்பய்யரிடம் சென்றார்; ராமப்பய்யரை வெறுப்புடன் பார்த்தவண்ணம், கொங்கினில் ராமப்பய்யன் செய்யுங் கொடுங் கோலாட்சியினால், இச்சிறையில் இருக்கும் பழைய கோட்டைச் சம்பந்தச் சர்க்கரை என்பார், தம் தேவி திருக் கழுத்தில் அணிந்திருந்த தாலியைக் கழற்றி ஒரு தமிழ்ப் புலவனுக்குக் கொடுத்தார்’ எனக்கடிந்து கூறி, அத்தாலியைக் காட்டினார். தாலியைக் கண்டு தளவாய் வியப்புற்றார்; புலவர்க்கு இருக்கை நல்கி இன்சொல் கூறினார்; மன்றாடியாரைச் சிறையி லிருந்து வரவழைத்து, ‘சர்க்கரையாரே! உம்முடைய பெருங் குணத்தைக் கண்டு அளவிலா மகிழ்ச்சியடைந்தேன்; இக்கொடை இதுவரை யாருங்கொடாத அருங் கொடையாகும்; அருங்கொடை வள்ளலாகிய நீர் செலுத்த வேண்டிய வரியைக் காலம் செழித்த பின் செலுத்தலாம்; நும்மை விடுதலை செய்துள்ளேன்; ஏதேனும் வேண்டுமா? தயங்காமல் கேளும்,’ என்றார், ‘எனக்கு வேறொன்றும் வேண்டியதில்லை; வரி செலுத்த முடியாமல் என்னுடன் சிறையில் இருக்கும் மற்றவர் களையும் விடுதலை செய்ய வேண்டுகிறேன்’ என்றார் சர்க்கரையார். தளவாய் சர்க்கரையின் பெருங் குணத்துக்கு மகிழ்ந்து அவ்வாறே எல்லோரையும் விடுதலை செய்தார். விடுதலை பெற்ற அவர்கள், புலவரையும் சர்க்கரையாரையும் புகழ்ந்து பாராட்டி விடைபெற்றுச் சென்றனர். புலவர் மன்றாடி யாரிடம் தாலியைத் திருப்பிக் கொடுத்தார். ‘புலவர்க்குக் கொடுத்ததைத் திருப்பிப் பெறலாமோ?’ எனச் சர்க்கரையார் வாங்க மறுத்தார். ‘தங்கள் பெருங்குணத்துக்குப் பரிசாக இதைக் கொடுக்கிறேன்’ எனப் புலவர் வற்புறுத்திக் கொடுத்தார். சர்க்கரை புலவரைப் பழைய கோட்டைக்கு அழைத்துப் போய் வேண்டிய பரிசுகள் கொடுத்து மகிழ்வித்தார். சர்க்கரையாரின் அருங்குணத்தைப் புகழ்வதா? அல்லது, அவர் தேவியாரின் பெருங்குணத்தைப் புகழ்வதா? நீங்களே முடிவு செய்யுங்கள். 9. மசக்காளி மன்றாடியார் கோயமுத்தூருக்குப் பக்கத்தில் கவசை என்னும் ஓர் ஊர் இருக்கிறது. அது கோவை சத்தியமங்கலம் வழியில், கோவையின் வடக்கில் சுமார் பத்துக்கல் தொலைவில் உள்ளது. இப்போது அவ்வூர் ‘கோயிற் பாளையம்’ என்று வழங்குகிறது. கவசை பழம் பெருமை வாய்ந்த பயனுடையச் சீரூர். கொங்கு நாட்டின் புகழுக்குச் சான்றாக உள்ளது அத்தொல்புகழ்க் கவசை. கவசை என்னும் அப்பழவிறலூரில். கி.பி.17-ஆம் நூற்றாண்டில் மசக்காளி மன்றாடியார் என்னும் வேளாண்குலச் செல்வ ரொருவர் இருந்தார். அவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர்; கற்றவர் களிடத்தில் மிகுந்த அன்புடையவர்; கொங்கு இருபத்து நான்கு நாட்டின் ஒன்றான ஆறை நாட்டுத் தலைவர்; சங்ககால வள்ளல்கள் போன்ற கைவண்ணம் யுடையவர்; தமிழ்மொழி வளர்ச்சியில் அளவு கடந்த அக்கரையும் ஆர்வமும் உடையவர்; ‘தமிழ் வளர்ச்சியே தமிழர் வளர்ச்சி என்னும் கொள்கை யுடைவர்; தாய்மொழிப் பற்றோடு சிறந்த தாய் நாட்டுப் பற்றும் மிக்கவர். ‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்’ என்ற பழமொழிக் கேற்பக்கொங்கு நாடு நல்ல குடிவளம் உடையது. சங்க கால வள்ளல்களில் நால்வர் கொங்கு நாட்டினரே. சங்க காலப் புலவர்களில் பலர் கொங்கு நாட்டுப் புலவர்களாவர். சங்க காலத்தே பழமரம் நாடிவரும் பறவைகளைப் போலத் தமிழ் நாட்டின் ஏனைப் பகுதிகளிலுள்ள புலவர் பெருமக்கள் கொங்கு நாட்டை நோக்கி வந்தனர். அன்று கொங்கு நாடு தமிழ்ப் புலவர்களின் வாழ்விடமாக இருந்து வந்தது. கொங்கில் எங்கு பார்த்தாலும் பரிசு பெற்றுச் செல்லும் புலவர்களை காணலாம். பாணரும் கூத்தரும் பொருநரும் கூட்டங் கூட்டமாகச் செல்வர். ‘சேர நாடு, பாண்டி நாடு, தொண்டை நாடுகளை விடத்தமிழ் வளர்த்த பெருமை கொங்கு நாட்டுக்குத் தான் உண்டு’ எனக் கொங்கு நாட்டின் பெருமையைப் புலவர் வாயிலாய் அறிந்தார் மன்றாடியார்; பெருமகிழ்வு கொண்டார். தான் பிறந்த நாட்டின் பெருமையைக் கேட்டால் யாருக்குத்தான் மகிழ்ச்சி யுண்டா காது? அது இயல்புதானே? சொந்த ஊர்ப்பற்றுத் துறவி களுக்கும் உண்டல்லவா? மேலும் தன்காலத்திலும் கொங்கு நாட்டு ஊர்தோறும் தமிழ் வளர்த்துவரும் செல்வர்கள் இருத்தலையும், புலவர் பலர் இருந்தலையும் அறிந்தார்; பாண்டி நாட்டைப் போலத் தாம் பிறந்த கொங்கு நாட்டுக்கும் ‘தமிழ் வளர்த்த நாடு’ என்னும் பெருமையான பெயரை உண்டாக்க எண்ணினார். எண்ணியபடியே செய்ய முடிவு செய்தார்; கொங்கு நாட்டுப் பெரும் புலவர்களை எல்லாம் ஒன்று கூட்டினார்; பழந்தமிழ்ப் பாண்டியர்கள்போல, கவசையில் ‘கொங்குத் தமிழ்ச் சங்கம்’ என்ற பெயருடன் தமிழ் வளர்க்கும் சங்கம் ஒன்றை ஏற்படுத்தினார். அது ‘கவசைத் தமிழ்ச் சங்கம்’, எனவும் வழங்கிற்று. சிறந்த புலவர்களைக் கொண்டு பழந்தமிழ்ப் பாடல்களையும் நூல்களையும் ஆராயவும், புதிய செய்யுட்கள் பல செய்யவும் ஏற்பாடு செய்தார்; அக்கொங்குத் தமிழ்ச் சங்கத்தில் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் பயிற்று விக்கச் செய்தார்; அச்சங்கப் புலவர்களைக் கொண்டு கொங்கு நாட்டு மக்களுக்குத் தமிழறி வூட்டல், தமிழ்ப் பற்றுண்டாக்கல் முதலிய தமிழ்த் தொண்டாற்றி வந்தார். அக்கொங்குத் தமிழ்ச் சங்கத்தார் அதோடு நிற்கவில்லை. தமிழ்ச் செய்யுட்களிலே பாடுதற்கு மிகவும் கடினமானது, கேட்போர்க்கு மிகவும் இனிமை பயப்பதும் ‘வண்ணம்’ என்னும் ஒருவகைச் செய்யுளாகும். தொல்காப்பியச் செய்யுளியலில் பாஅவண்ணம், தாஅவண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம்’ முதலிய இருபது வண்ணங்களின் இலக்கணம் கூறப் படுகிறது. பிற்கால யாப்பிலக்கண நூலார் அவ்வண்ணம் இரு பதையும் நூறாக விரித்துரைத்துள்ளனர். அருணகிரியார் திருப்புகழ், வண்ணப் பாக்களால் இயன்ற நூலாகும். கவசைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் வண்ணம் பாடுவதில் சிறந்த பயிற்சி பெற்றனர். சிலர் ‘வண்ணப்புலி’யெனப் பட்டம் பெற்றனர். “ஆசுவலர்க்கும் வண்ணம் புலியாம்” என்ற பொருளு ரையைப் பொய்யுரையாக்கினர். இவ்வண்ணப் புலிகளிடம் அவ்வண்ணப் புலி தோற்றோடிற்று. விலங்குகளில் வலிமையும் தலைமையும் உடையது அரிமா. அதனால், அரிமாவுக்கு ‘விலங்கரசன்’ என்ற பெயர் வழங்கி வருகிறது, அவ்வரிமாவையும் கொன்று தின்னும் ஆற்றலுடைய பறவை யொன்றுண்டு. அது எட்டுக்கால்களையுடையது; ‘சரபம்’ என்னும் பெயரை யுடையது. கவசைத் தமிழ்ச்சங்கப் புலவரில் ஒரு சிலர் ‘வண்ணச் சரபம்’ எனவும் பெயர் பெற்றனர். அப்புலவர்கள் எவ்வண்ணத்தை எவ்வண்ணம் பாட வேண்டுமோ அவ்வண்ணத்தை அவ்வண்ணம் பாடி மக்களை மகிழ்விக்கும் வல்லுநர்களாய் விளங்கினர்’. அதைக் கொங்குத் தமிழ்ச் சங்கம், என்பதே பொருத்தமான பெயராகும். அச்சங்கப் புலவர்கள் அவ்வளவு வல்லுநராகத் திகழ்ந்தனர் வண்ணத்தில். அக்காலத்தே தொண்டை நாட்டுப் பொன் விளைந்த களத்தூரில் படிக்காசுப் புலவர் என்றொரு தமிழ்ப் புலவர் இருந்தார். அவர் ஒரு சிறந்த கவிஞர்; தமிழ்க்கலை முழுதும் உணர்ந்தவர். தமிழ்ப் புலவர், தலைவர், கவியரசர் என்றெல்லாம் சிறப்பிக்கப்பட்டவர்; கவியுலகில் பெருமித வாழ்வு வாழ்ந்து வந்தவர். படிக்காசுப் புலவர், தாம் பிறந்த தொண்டை நாட்டின் பெருமை விளங்க, தொண்டை நாட்டில் இருந்த வள்ளல்கள், புலவர்கள் வரலாறுகளும், பிற சிறப்பியல்புகளும் அமைந்த ‘தொண்டை மண்டல சதகம்’ என்னும் நூலைச் செய்தவர்; இராமனாதபுரம் இரகுநாத சேதுபதி மன்னரின் அவைக்களப் புலவர்; காயற் பட்டினத்தில் இருந்த பெருஞ் செல்வனும், வரையாது கொடுக்கும் வள்ளலும், மிகுந்த தமிழ்ப் பற்றுடைய வனுமான சீதக்காதி என்னும் முகமதியச் செல்வனிடம் உளங்கலந்த உயிர் நட்புற்று, அச்சீதக்காதி இறக்க உடனிறந்த சிறப்பியல் புடையவர். இவர் வண்ணம் பாடுவதில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்; ‘வண்ணக்கவி மன்னர்’ எனப் பெயர் பெற்றிருந்தார். தொண்டை மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் மூன்றிலும் இவர்க்கு நல்ல மதிப்பு. அன்று புவியரசர்கள் நாற்றிசையும் சென்று ஆங்காங் குள்ள அரசர்களை விற்போரில் வென்று அடிமைப்படுத்தி வெற்றிப் புகழுடன் திரும்புவது போலவே, கவியரசர்களும் திசையெங்கும் சென்று ஆங்காங்குள்ள கவியரசர்களைச் சொற்போரில் வென்று அடிமைப்படுத்தி வெற்றிப் புகழுடன் திரும்புவது வழக்கம். அவ்வாறே அம்மும் மண்டலங்களிலும் செல்வாக்குப் பெற்றிருந்த படிக்காசுப் புலவர் கொங்கு மண்டலத்தில் சுற்றுப் பயணம் செய்ய எண்ணினார். எண்ணிய வண்ணம் கொங்கு நாட்டை நோக்கிப் புறப்பட்டார்; கொங்கு நாட்டுச் செல்வர் பலரைப் பாடிப் பரிசு பெற்றார். கொங்கு இருபத்து நான்கு நாடுகளில் ஒன்றான கீழ்கரைப்பூந்துறை நாட்டிலுள்ள மோரூர்க்குச் சென்றார். மோரூர்க் காங்கேயர் மரபில் அப்போது குமார காங்கேயன் என்பவன் சீரும் சிறப்புடன் வாழ்ந்து வந்தான். அவன் தன் முன்னோர் போலவே சிறந்த தமிழ் அறிவும் தமிழ்ப் பற்றும் உடையவன்; தமிழ்ப் புலவர்களைப் போற்றித் தமிழ் வளர்த்து வந்தான்; படிக்காசுப் புலவர் குமார காங்கேயனைப் புகழ்ந்து பாடினார்; காங்கேயன் மகிழ்ந்து, புலவரை அன்போடு வரவேற்று, இன்சொல் கூறி விருந்திட்டுப் போற்றினான்; பல பரிசுகள் கொடுத்தான்; புலவரின் வழிச் செலவிற்காக, யானைத் தந்தத்தால் அழகிய வேலைப் பாடுடன் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்றையும் பரிசாகக் கொடுத்தான். புலவர் அப்பரிசுகளைப் பெற்று. காங்கேயனிடம் விடை கூறி அந்தப் பல்லக்கில் ஏறிக் கொண்டு சென்றார்; வழி நெடுகச் செல்வர்கள் பலரைப் பாடிப் பரிசில் பெற்றுக் கொண்டே கவசையை அடைந்தார். மன்றாடியார் படிக் காசுப் புலவரை அன்புடன் வரவேற்றார்; விருந்திட்டு மகிழ் வித்தார்; புலவரின் புகழ்க் கவிகளைக் கேட்டு மகிழ்ந்தார். வண்ணப் பாக்களால் புலவர் மசக்காளி மன்றாடியாரின் மனத்தைக் கவர்ந்தார். கவசைத் தமிழ்ச் சங்கப்புலவர்களுக்கும் படிக்காசுப் புலவர்க்கும் வண்ணப் போட்டி நடந்தது. வண்ணம் பாடுவதில் யார் வல்லுநர் எனக் கண்டறிவதே அப் போட்டியின் கருத்து. படிக்காசுப் புலவர் கருத்துப்படி கவசைப் புலவர்கள் பாடினர். கவசைப் புலவர்கள் கருத்துப்படி படிக்காசுப் புலவர் பாட முடியாது தோல்வியுற்றார். முன் செய்து கொண்ட ஒப்பந்தப் படி படிக்காசுப் புலவர் பல்லக்கு முதலிய விருதுகளை இழந்தார். ‘வண்ணம்பாடுவதில் வல்லுநர், வண்ணக்கவி மன்னர், என்னும் புகழுக்கு இழுக்குண்டானது. புலவர் தமது இழிவுக்கு மிகவும் வருந்தினார்; ‘கொங்கு நாடு இவ்வளவு பெருமையுடைய தென்று நான் கனவிலும் கருதவில்லை; கொங்குப் புலவர்கள் எல்லோரும் செந்தமிழைப் பஞ்சாகப் பண்ணிக் காசுக்கு ஒரு வண்ணம் பாடுகின்றனர். என் தமிழ் கொங்குநாடெங்கணும் நஞ்சாகப் போயிற்று’ என்று மனம் நொந்து கூறி வருந்தினார்; மோரூர்க் குமாரகாங்கே யனைப் பாடிப் பெற்ற பரிசிலான தந்தப் பல்லக்கு முதலியவற்றை இழந்து, அதுவும் வண்ணக்கவிப் போட்டியில் தோற்று இழந்து வெறுங்கையோடு வெளிச் செல்ல அவர் மிகவும் வெட்கி மனம் வருந்தினார். புலவரின் வருத்ததைக் கண்ட மன்றாடியார், புலவர் பெருமகனே! தமிழ் வளர்ச்சிப் போட்டியில் தோற்றதற்காக வருந்துவது சரியன்று, அவ்வருத்தம் தமிழ்ப் பற்று இன்மை யையே குறிக்கும். தோல்விக்கு வருந்துவது தங்கள் போன்ற பேரறிஞர்க்கழகன்று. தோல்வியே வெற்றிக்குக் காரணம் என்பது தாங்கள் அறியாததன்றோ! இத்தோல்வி வண்ணப்பாப் பாடுவதில் தங்களை இன்னும் வல்லுநராக்கு மாகையால், இத்தோல்வி ஒரு வகைத் தமிழ் வளர்ச்சியேயாகும். பாடிப் பாடித் தோல்வியுற் றோரல்லவோ பெருங்கவிஞராகத் திகழ் கின்றனர்? பல போரில் தோற்றவனன்றோ பெருவீரனாகின்றான்? தாங்களும் இனி வண்ணக் கவி முடிமன்னர் ஆகலாம். போட்டி யிட்ட இருபாலாரும் வெல்வதென்பது இயற்கை யல்லவே? யாரோ, ஒருவர் தானே வெல்லமுடியும்?’ என்று தேற்றினார்; தம்மீது பாடிய பாடல்களுக்குப் பரிசாகப் பல்லக்கு முதலிய பரிசுகள் கொடுத்தார். புலவர் ஒருவாறு மனம் தேறி வருத்தம் நீங்கி, மன்றாடியாரை வாழ்த்தி விடைபெற்றுச் சென்றார். கவசைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியது. கொங்கில் தமிழ்ச் சங்கங்கண்டு தமிழ் வளர்த்த மும்முடி மசக்காளி மன்றாடியாரைத் தமிழ்நாடு கொண்டாடியது. மன்றாடியார் புலவர் நாவிற் பொலிந்தனர். அத்தகைய வள்ளல்களின் உதவியை எதிர்நோக்கி நிற்கின்றது இன்று தமிழ்நாடு. 10. வணங்காமுடிக் கட்டி தமிழ் மக்களின் சிற்பவேலைத் திறத்திற்குச் சான்றாக இருந்து வருகிறது தாரமங்கலம் என்னும் ஊர். ஓவியக் கலையிலும், சிற்பக்கலையிலும் ஒப்பற்ற புகழுடையது தமிழ்நாடு என்பது உலகறிந்த உண்மை. தாரமங்கலம் கல்லோவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. தமிழ்நாட்டுக் கற்றச்சர்களின் கைத் திறனை, நுண்மாண் நுழைபுலக் கைவினையைத் தார மங்கலம் கைலாயநாதர் கோயிலில் கண்டின்புறலாம். அக்காலத் தமிழர் சிற்ப வேலைப் பாட்டைப் பார்க்க ஐரோப்பா, அமெரிக்கா முதலிய வெளி நாட்டறிஞர்கள் பலர் தார மங்கலத்திற்கு வந்து போகின்றனர் எனில், தாரமங்கலச் சிற்பக்கலைத் திறனை, தமிழ்க் கற்றச்சர்களின் கைத்தொழிற் பெருமையை விரித்துக் கூறுவது வீண் வேலையாகு மன்றோ? இன்று தமிழ்நாட்டில் கோவில்கட்ட ஒப்பந்தம் பேசும் சிற்பிகள், ‘தாரமங்கலம் சிற்ப வேலைப்பாடு நீங்கலாக வேறு எந்தக் கோயில் கல்லோவியங்கள் போலவேனும் செதுக்கித் தருகிறாம்’ என்று ஒப்பந்தம் செய்வது வழக்கம். அவ்வளவு செயற்கரிய வேலைப்பாடுடையவை அக்கோயிலில் செதுக்கி யுள்ள சிற்பங்கள். தாரமங்கலம் சென்று, தங்கள் முன்னோரின் சிற்பக் கலைத் திறனைக் கண்டு களிக்காத தமிழர் தமிழராய்ப் பிறந்தும் பிறவாதவரே யாவர். ‘கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே’ என்ற புலவர் இன்றிருப்பின், “நற்சிற்பக் கலைமணக் கும் நற்றாரை மங்கலத்துச் கற்சிற்பங் காணாதார் கண்ணென்ன கண்ணே” என்று பாடியிருப்பார் என்பது திண்ணம். தார மங்கலம் சேலத்தின் வடமேற்கில் இருபதுகல் தொலைவில் உள்ளது. இச்சிற்பக் கோயிலைக் கட்டினவர் கட்டி மரபினராவர். ‘கட்டி’ என்பது ஒரு கொங்கு வேளாண் குடும்பத்தின் பெயர். இக்குடும்பம் சங்க காலத்திலிருந்து கி.பி.17-ம் நூற்றாண்டு வரை நாடாண்ட குடும்பம். பல்வேற் கட்டி, கங்கன் கட்டி, இம்முடிக்கட்டி, இளமன் கட்டி, வேம்பன் கட்டி, மும்முடிக் கட்டி, சீயால கட்டி, வணங்காமுடிக் கட்டி என்போர் இக்கட்டி மரபில் பேரும் புகழும் பெற்ற பெருந்தகையாளர்களாவர். இவர்கள் வீரத்திற்கும் கொடைக்கும் இருப்பிடமாகத் திகழ்ந்தவர்; தண்டமிழ் வளர்த்த தனிப் பெருந்தகைமையர். பல்வேற்கட்டி, கங்கன் கட்டி என்போர் சங்கப் புலவர்களால் புகழ்ந்து பாடப் பெற்ற பழமையோர். இக் கட்டி மரபினர் தாரமங்கலத்திற்குப் பக்கத்தில் உள்ள அமரகுந்தி என்னும் ஊரில் இருந்து கட்டி நாட்டை ஆண்டு வந்தனர். தாரமங்கலம் அரசியல் தலைமை அலுவலகமாக இருந்தது. சேலங்கோவைக் கோட்டங்களின் வடபகுதியே கட்டி நாடு ஆகும். தெற்கே பவானியும், ராசிபுரமும், வடக்கே தகடூரும் (தர்மபுரி), மேற்கே பவானி யாறும், கிழக்கே பொன்முடியும் கட்டி நாட்டின் எல்லைகளாகும். கட்டி மரபினர் நாட்டுப் பாது காப்பிற்காகத் தாரமங்கலம், அமரகுந்தி, ஓமலூர், காவேரிபுரம், குளத்தூர், அந்தியூர், பவானி, தென்கரை, ஆற்றூர், பேளூர், தலைவாசல் என்னும் இடங்களில் திண்ணிய மண்கோட்டைகள் கட்டி நாடாண்டு வந்தனர்; நீர்வளத்தின் பொருட்டுப் பல ஏரிகளும், குளங்களும் அமைத்திருந்தனர். நெருஞ்சிப்பேட்டை என்னும் ஊர்க்குப் பக்கத்தில் காவிரியாற்றில் சிறந்த அணை யொன்று கட்டியிருந்தனர். இம் மரபினர் முடியுடை மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களின் கொடிகளாகிய புலி விற் கெண்டை யைத் தங்கள் கொடியாகக் கொண்டிருந்தனர். இத்தமிழ்க் கொடியைத் தங்கள் கொடியாகக் கொண்டிருந்தமையே இவர்களது தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தும். முடியுடை மூவேந்தர்களால் இம்மரபினர் ‘இம்முடி., மும்முடி, வணங்கா முடி’ என்னும் பட்டங்கள் பெற்றிருந்தனர். சிற்ப வேலைப்பாடுள்ள கோயில்கள் சில ஆண்டுகளில் கட்டிமுடிக்கக் கூடியவையல்ல. ஒரு கல்லோவியத்தைச் செதுக்கவே பலமாதங்கள் ஆனாலும் ஆகும். அவ்வாறு அரிதில் முயன்று செதுக்கியதும் கண், காது, மூக்குப் போன்ற நுண்ணிய உறுப்புக்கள் செதுக்கும் போது சிறிது பழுதுபட்டாலும் அவ்வளவு பாடும் வீணாகப் போய்விடும். அதனால்தான் சிற்பக் கோயில்கள் கட்டிமுடிக்கப் பல ஆண்டுகள் ஆகின்றன. உலகப் புகழ் பெற்ற தாரமங்கலம் கோயில் கட்டி முடித்த காலத்தைக் கேட்கின் நீங்கள் வியப்புறுவீர்கள். மும்முடிக்கட்டி என்பவனால் தொடங்கப் பெற்று, கட்டி முடிக்காமல் அவன் இறக்கவே, அவன் மகன் சீயாலகட்டி என்பவன் தொடர்ந்து வேலை செய்து, பாதி வேலையோடு அவனும் இறக்கவே, அவன் மகன் வணங்கா முடிக்கட்டி என்பவன் கட்டி முடித்தான். அக்கோயில் கட்டி முடிக்க சுமார் நாற்பது (40) ஆண்டுகளுக்குமேல் ஆயின. மூன்று தலை முறையில் தொடர்ந்து கட்டி முடிக்கப்பட்ட தாகும் தாரமங்கலம் சிற்பக் கோயில். தாரமங்கலம் சிற்பக் கோயிலைக் கட்டி முடித்த வணங்காமுடிக்கட்டி என்பவன், கி.பி. 17-ம் நூற்றாண்டினன்; மாபெரும் வீரன்; பெயருக் கேற்ற வெற்றிப் புகழ் உடையவன்; பெருங்கொடையாளன்; தமிழ் மொழியிடத்து அளவுகடந்த பற்றுடையவன்; ஆண்டு தோறும் தமிழறிவுப் போட்டி யொன்று நடத்தி வந்தான்; குறுகிய காலத்தில் நிறைந்த தமிழறிவைப் பெறுவோர்க்கும், சிறந்த தமிழ்க் கவி இயற்று வோர்க்கும் பரிசு வழங்க நடந்ததே அப்போட்டியாகும். தமிழ் நாட்டுப் புலவர் களெல்லாம் அப்போட்டியில் கலந்து பரிசு பெற்றுத் தமிழ் வளர்த்து வந்தனர். வணங்காமுடிக்கட்டியின் புகழ்போல் கொங்கில் தமிழ் வளர்ந்து வந்தது. கட்டி நாட்டின் வடக்கெல்லை மதில் போன்ற உயர்ந்த மலைத்தொடரையுடையது. அம்மலைத் தொடரில் உள்ள காவேரிபுரம், தொப்பூர்க் கணவாய்கள் கட்டி நாட்டிற்குட் பட்டவை. மைசூர் மன்னனான தொட்டதேவராயன் என்பவன் காவேரிபுரம் கணவாய் வழியாக அடிக்கடி கட்டி நாட்டின் மேல் படையெடுத்து வந்தான். வணங்காமுடிக் கட்டிக்கும் தொட்ட தேவராயனுக்கும் அடிக்கடி போர் நடந்து கொண்டு வந்தது. கி.பி.1665 தொட்டதேவராயன் பெரும் படையோடு அமரகுந்தியை நோக்கி வந்துகொண்டிருந்தான். அப்படை வலிமிக்க பெரும்படை. வணங்காமுடிக்கட்டி கடுஞ்சினங் கொண்டான்; தமிழர் திறமையை அறியாத அப்பகைவனின் கொட்டத்தை அடக்கு வேனெனச் சீறி யெழுந்தான்; போர்க்கோலம் பூண்டு போர்க்குப் புறப்பட்டான்; அரண்மனை வாயிலில் அரியேறுபோல வந்து கொண்டிருந்தான். போர்ப்பறை முழங்கின. தமிழ் மறவர்கள் அணி வகுத்து நின்று ஆர்த்தனர். அப்போது ஒரு தமிழ்ப் புலவர் வணங்காமுடிக் கட்டியிடம் பரிசுபெற வந்தார். வந்தவர் பூங்கோதை யார் என்னும் பெண்பாற் புலவர்; ஆண்டிலும் அறிவிலும் மூத்தவர்; சிறந்த தமிழ்ப் புலமையும் கவித் திறமையும் உடையவர்; சங்ககாலப் பெண் புலவர்கள் போன்ற சால்பு மிக்கவர். அரண்மனை வாயிலில் வந்து கொண்டிருந்த வணங்காமுடியின் எதிர்நோக்கிச் சென்றார் பூங்கோதையார். அந்நிலையில் வணங்காமுடி அந்நல்லியற் புலமை வாய்ந்த மெல்லியலாரை அன்புடன் வரவேற்றான். பூங்கோதையார் ஓர் இனிய செந்தமிழ்ப் பாட்டால் கட்டியின் பெருமையைப் புகழ்ந்து பாடினார். ‘சங்க கால வள்ளல்களெல்லாம் தாங்கள் முயன்று ஈட்டிய பொருளைக் கொண்டு தங்கள் பெயரைச் சொல்லில் செதுக்கி வைத்தனர். மாற்றலரை வாட்டக் கொண்ட மறக் கோலத்துடன் நிற்கும் வணங்காமுடிக்கட்டி! நீ உன் நன் முயற்சியால் ஈட்டிய பொருளைக் கொண்டு உன் பெயரைக் கல்லில் செதுக்கி வைத்தனை. அவர்கள் பெயர் கற்றவர்க்கு மட்டுந் தெரியும்; நின் பெயரோ கற்றவர் கல்லாதவர் எல்லார்க்குமே தெரியும். எனவே, அன்னார் புகழினும் நின் புகழ் பெரிது. ‘வாழ்க நின் பெயர்’ என்பதே அப்பாட்டின் பொருள். அது தாரமங்கலம் சிற்ப வேலைத் திறத்தினைப் புகழ்வது. (சொல்லில் செதுக்கல் - புலவர்களால் பாட்டிலமைத்துப் பாடுதல்.) அப்பாட்டைக் கேட்டு வணங்காமுடி மகிழ்ந்தான்; அப் பாட்டுக்குத் தக்க பரிசு இன்னவென்று தெரியாது மயங்கினான்; பூங்கோதையாரை வணங்கி, ‘தமிழ் மூதாட்டி யே! தங்கள் பாட்டுக்குத் தகுந்த பரிசு இது வென எனக்குத் தோன்றவில்லை; எனது நாட்டைக் கொடுத்தாலும் தங்கள் பாட்டுககு ஈடாகாது; பாரி உயிரைக் கொடுத்ததும், குமணன் தலையைக் கொடுத்ததும் தமிழ்ப் பாட்டுக்கெனின், அவற்றை விடச் சிறந்த பொருள் என்ன இருக்கிறது? எனினும், ‘என் அரசே தங்கள் பாட்டின் பரிசு’ என்று தன் மணி முடியைப் புலவர் தலையில் சூட்டினான்’; இதைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று வெற்றிவாளை யுருவிப் புலவர் கையில் கொடுத்தான். அங்கிருந்தோர் திடுக்கிட்டனர். பூங்கோதையார் வாளைக் கையில் வாங்கிக் கொண்டு, ‘வணங்காமுடிக்கட்டி! நின் தமிழ்ப்பற்றை மெச்சுகிறேன்; நின் நாட்டு ஆட்சியை நான் ஏற்றுக் கொள்கிறேன்; நான் இக்கட்டி நாட்டின் அரசி; நீ என்நாட்டுக் குடிமகன்; உனது தமிழ்ப் பற்றுக்காக இந்நாட்டுக்கு உன்னை அரசனாக்குகிறேன்; என் அரசை உனக்குப் பரிசாகக் கொடுக்கிறேன்; நீ பகை வென்று பைந்தமிழ்க் காப்பாயாக’ என் மணிமுடி சூட்டி, வீரவாளைக் கையில் கொடுத்தார். வணங்காமுடி மறுமொழி கூறமுடியாமல், ‘அன்னாய்! தங்கள் கட்டளை!’ என்று அவற்றை ஏற்றுக் கொண்டான். பூங் கோதையார் தமக்கு வேண்டியதைப் பெற்றுச் சென்றார். வணங்கா முடி படையுடன் சென்று எதிரிப் படையைப் புறங்காட்டி யோடும்படி செய்து வெற்றியுடன் மீண்டான். பார்த்தீர்களா வணங்கா முடிக் கட்டியின் தமிழ்ப் பற்றின் எல்லையை! 11. முளசை வேலப்பன் மனைவியார் பண்டுதொட்டுத் தண்டமிழ் வளர்த்த பெருமை தமிழ்ச் செல்வக்குடியில் பிறந்த ஆடவர்க்கு மட்டும் உரியதன்று. அக்குடிப் பெண்டிர்க்கும் சரிபங்கு உண்டு. செல்வர் மனைக்குப் பரிசில் வேண்டிவரும் புலவர்களை வரவேற்று, முகமலர்ந் தினியன கூறி, ‘உண்ணீர் உண்ணீர்’ என்று உணவிட்டுப் போற்றி மகிழ்விப்பது அம்மனைக்குரிய மாட்சிமையுடைய மங்கை நல்லார்கள் அன்றோ? மனைத்தக்க மாண்புடைய மனைவியர் வாய்க்கப் பெறாதவர் எவ்வாறு புலவரை வரவேற்று, விருந்திட்டுப் போற்றித் தமிழ் வளர்க்க முடியும்? ஒளவையாரை விருந்துக்கு அழைத்துக் கொண்டுபோன ஒருவன் மனைவி, அவன் எவ்வளவோ எடுத்துக் கூறியும், கெஞ்சிக் கேட்டும் ஒளவையார்க்கு விருந்திட இணங்காமல், கணவனையே முறத்தால் அடித்து வீட்டைவிட்டுத் துரத்தினதாக “பழ முறத்தால் சாடினாள் ஓடோடத்தான்” என ஒளவையாரே கூறுவது போன்ற மனைவியர் வாய்க்கப் பெறின், எப்படி வரையாது கொடுத்து வள்ளல் என்று பெயர் பெறமுடியும்? எப்படிப் புலவர் பாடும் புகழுடையோராய்த் திகழ்ந்திருக்க முடியும்? தம் கணவரை வள்ளல்களாக்கின பெருமை, புலவர் பாடும் புகழொடு பொலியச் செய்த பெருமை அன்னாரின் மனைவியர்க்கே உண்டென்பது மிகையாகாது. சோழ நாட்டுத் தஞ்சாக்கூரிலிருந்து வள்ளலாகிய தஞ்சை வாணன் என்பான் மனைவியார், தங்கணவர் ஊரில் இல்லாத போது, அவர் மீது ‘தஞ்சை வாணன் கோவை’ என்னும் செந்தமிழ்ப் பனுவல் பாடிவந்த பொய்யா மொழிப் புலவரை அன்புடன் வரவேற்று, விருந்திட்டுப் போற்றி, அக்கோவையைக் கேட்டு, பாட்டுக்கு ஒன்றாக நானூறு பொற்றேங்காய் பரிசு கொடுத்துத் தமிழ் வளர்த்த வரலாறு நாடறிந்த தொன்றாகும். பழைய கோட்டை சம்பந்தச் சர்க்கரை மனைவியார், புலவர்க்குத் தாலி கொடுத்துத் தமிழ் வளர்த்த வரலாற்றை முன்னர்ப் படித்தறிந் தீர்கள் இவ்வாறு தமிழ் வளர்த்த மகளிரில் வேலப்பன் மனைவி யாரும் ஒருவராவர். முளசை என்பது சேலங் கோட்டத்தில், திருச்செங் கோட்டுக்குப் பக்கத்தில் உள்ள பழம் பெருமை வாய்ந்த ஓர் ஊர். இது தன் தலைவனோடு சேர்த்துச் சிறப்பித்துப் பாடப் பெறும் பெருமையுடைய ஊர்களிலொன்று. முளசையில் வேலப்பன் என்ற வேளாண் குலச் செல்வனொருவன் இருந்தான். அவன் சிறந்த படைத் திறமையும் கொடைப் பெருமையும் உடையவன்; ஒரு பெரும் படையை வைத்துக் காக்கும் அவ்வளவு செல்வப் பெருக்குடையவன்; வேலப்பன் குடி வழிவழியாகத் தமிழ் வளர்த்துப் புகழ்பெற்ற தகைசால் பெருங்குடி. வேலப்பன் அத்தொண்டில் தனிச் சிறப்புடையவன். இவனைத் தமிழ் வளர்க்கவே பிறந்தவன் எனலும் சாலும். இவன் காலத்தே பாண்டி நாட்டை ஆண்ட பாண்டியனுக்கு வேலப்பன் சிறந்த நண்பனாக இருந்தான். பாண்டியன் படைத் துணைவர்களில் வேலப்பனும் ஒருவன். அத்தகு படைப் பயிற்சி யுடையவன் வேலப்பன். செஞ்சிக் கோட்டைத் தேசிங்கு என்பவன் டில்லி முகமதிய மன்னனின் அடங்காக் குதிரையை அடக்கிப் பெரும் புகழ் பெற்றது போல, நம் வேலப்பனும் பாண்டியனது அடங்காக் குதிரையொன்றை அடக்கிப் பெரும் புகழ் பெற்ற வனாவான். அக் காலத்தே பாண்டி நாட்டில் பெரும் பஞ்சம் வந்தது. பல மாதங்கள் மழை பெய்யவில்லை. ஏரி, குளங்களெல்லாம் இறைக்க நீரின்றி வறண்டுபோயின குடிநீர்க்கே தட்டுதலாயிற்று. பாண்டி நாட்டு மக்கள் வாழ வகையின்றி வருந்தினர்; உணவுக்கு அயல் நாட்டை எதிர்பார்த்து ஏங்கி நின்றனர். பாண்டியன் தனதுபெரும் படையைக் காப்பாற்ற முடியாத நிலையை அடைந் தான்; தன் படையின் ஒரு பகுதியை தனது நண்பனான வேலப்பன் ஊரான முளசைக்கனுப்பினான். நல்ல மழை பெய்து நாடு செழிக்கும் வரையிலும் அப்படை முளசையிலிருந்து வந்தது. பாண்டி நாட்டு மறவர்கள் யாதொரு குறையும் இன்றிக் கொங்கு நாட்டில் உண்டு களித்திருந்தனர். அப்படையில் பன்னூற்றுக் கணக்கான குதிரைகளும் இருந்தன. வேலப்பன் அப்பாண்டிநாட்டு வீரர்க்கு வயிற்றுக்கு மட்டும் உணவூட்டுவதோடு நின்றுவிடவில்லை. செவிக்கும் உணவூட்டி வந்தான்; சிறந்த தமிழ்ப் புலவர்களைக் கொண்டு, பழந்தமிழ் நூல்களில் உள்ள சிறந்த கருத்துக்களை எடுத்துரைக் கும்படி செய்து, தமிழறிவையும், தமிழ் பற்றையும், தமிழினப் பற்றையும் உண்டாக்கி வந்தான். தமிழ்ப் புலவர்கள் அவ் வாய்ப்பை நன்கு பயனுடைய தாக்கினர்; புறநானூற்றில் கூறப் படும் பழந் தமிழ் மக்களின் வீர வரலாற்றை எடுத்துரைத்து, அப்பாண்டி மறவரை வீரர்க்குள் வீரராக்கினர்; திருக்குறளின் ஒழுக்க முறைகளை எடுத்தியம்பி அன்னாரைச் சிறந்த ஒழுக்க நெறியில் அழுத்த முடையவராக்கினர். பஞ்சம் பிழைக்கவந்த பாண்டி நாட்டு மறவர்கள் பைந்தமிழ்ப் புலமையும் பெற்றனர். மழை பெய்து நாடு செழித்தபின் அப்படையைப் பாண்டி நாட்டிற்கனுப்பினான் வேலப்பன். இவ்வுதவிக்கு நன்றியறிதலாகப் பாண்டியன் வேலப்பனுக்கு அன்னத்தியாகி என்னும் பட்டத்தை வழங்கினான். வேலப்பன் புகழ் பாண்டிநாடு முழுவதும் பரவியது. சிறந்த தமிழ் வளர்ச்சித் தொண்டல்லவா இது? ஏன் பரவாது? வேலப்பன் பெருந்தன்மையைப் பேருதவியை- பாண்டி நாட்டு மக்கள் பாராட்டினர். பாண்டியன் அவைக்களப் புலவரொருவர் வேலப்பன் தமிழ்த் தொண்டைக் கேட்டு வியப்புற்று, வேலப்பனை நேரில் கண்டு, அவனுடைய அரும்பெருங் குணத்தைப் பாராட்ட எண்ணினார்; அவ்வாறே அவர் கொங்கு நாட்டை நோக்கிப் புறப்பட்டார்; கொங்கு நாட்டுக்குடி வளத்தைக் கண்டு களித்த வண்ணம் முளசையை நோக்கிச் சென்றார். வேலப்பன் குடும்பம் தமிழ் வளர்க்கும் தகைமிகு தனிப் பெருங் குடும்பமல்லவா? வேலப்பன் வீட்டில் எப்போதும் புலவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். பரிசு பெற்றுச் செல்வோரையும், பரிசு பெறவருவோரையும் நீங்கா நிலையை யுடையது வேலப்பன் வீட்டுப் பெருவாயில். தமிழ்ச் செய்யுட் களைக் கேட்பதையும், புலவர்க்குப் பரிசு கொடுப்பதையுமே பொழுது போக்காக உடையவன் வேலப்பன். வேலப்பன் வீட்டு வேலைக்காரரும் கொடுத்துக் கொடுத்துப் பழக்கமானவர்கள் வேலப்பன் கொடைப் புகழ் அவ்வேலைக்காரரையும் கொஞ்சம் அணுகாமல் இராது. ‘கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்’ என்பார்கள். வேலப்பன் வீட்டு வேலைக்காரியும் கொடைக் குணம் மிக்கவளாகத் திகழ்ந்தாள். அத்தகு விழுக்குடி வேலப்பன் குடி. வேலப்பன் மனைவியார் மனைத்தக்க மாண்புடைய மங்கை நல்லாள்; செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் செந்தமிழ்ச் செல்வி; சுற்றம் தழீஇத் தன் தொல் குடியை மேம்படுக்கும் துரிசில்லாள், வேலப்பன் விழுக்குடிக்கு விளக்கன்ன மேதக்காள்; தமிழ் வாழத் தான் வாழும் தகை சான்ற தண்ணளியாள்; வேலப்பன் தமிழ்த் தொண்டுக்கு மேதக்க நற்றுணையாள். அவ்வம்மையார் வேலப்பன் வீட்டை விளக்க வரும் பொழுது சுமாராக எழுதப்படிக்க மட்டுந்தான் தெரிந்திருந்தார்; வேலப்பன் மனைக்குத் தலைவியான பிறகே சிறந்த தமிழறிவைப் பெற்றார்; புலவர்கள் பழந்தமிழ்ச் செய்யுட்களுக்குப் பொருள் கூறும் போதும் பரிசு பெற வரும் புலவர்கள் தாம் பாடி வந்த பாட்டுக்களுக்குப் பொருள் கூறும் போதும் உடனிருந்து கேட்டுக் கேட்டே அவ்வாறு சிறந்த தமிழறிவுடையவரானார்; அவ்வம் மையார், ‘கற்றிலனாயினும் கேட்க’ என்னும் வள்ளுவர் வாய் மொழியைக் கடைப்பிடித்தொழுகி, ‘செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம்’ என்னும் சிறந்த செல்வத்தைப் பெற்றுச் சிறப்புடன் விளங்கினார். புலவர்கள் பாடிவரும் பாட்டின் தரமறியும் ஆற்றலும் பெற்றார்; வேலப்பன் வீட்டில் இல்லாத போது, அவ்வம்மையே பாட்டைக் கேட்டுப் பரிசு கொடுப்பதும் உண்டு. அதனால் வேலப்பன் வீடு புலவர்க்கு மாமியார் வீடு போல் இருந்து வந்தது. பாண்டி நாட்டிலிருந்து வந்த புலவர் முளசையை அடைந்தார்; வேலப்பன் வீட்டுக்குச் சென்றார்; வேலப்பன் ஊரில் இல்லை. அவன் மனைவியாரும் வீட்டில் இல்லை. வேலைக்காரி தான் வீட்டில் இருந்தாள். அவள் புலவரை அன்புடன் வரவேற்று, ‘ஐயா, வெளியூர் போயிருக்கிறார்கள். நாளைக்குத்தான் வருவார்கள். தோட்டத்தில் கம்மங்கதிர் வெட்டுகிறது. அம்மா தோட்டத் துக்குப் போயிருக்கிறார்கள்; வந்து விடுவார்கள்; வாருங்கள் குளித்துக் கொண்டு சாப்பிடலாம்’ என்று அன்புடன் அழைத்தாள். வேலைக்காரியின் வரவேற்பிலிருந்து வேலப்பனது பெருந் தகைமையை அறிந்த புலவர் உள்ளூற மகிழ்ந்தார். ‘பசியில்லை; கொஞ்சம் பொறுத்துச் சாப்பிடுகிறேன்; தோட்டத்தைப் போய் பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று வேலைக்காரி வழி காட்டத் தோட்டத்துக்குச் சென்றார் புலவர். தோட்டத்துக் களத்தில் கம்மங்கதிர் குவித்திருந்தது. அதைக் கண்டதும் அவரது பண்பட்ட கவியுள்ளம் களம் பாடத் தலைப்பட்டது. ‘போர்க்களம் பாடுமுன் புலவர்கள் பாடும் பெருமையையுடையது ஏர்க்களம். ஏர்க்களத்தின் பயன் கூட்டு மிடமே போர்க்களம். உயிரைக் கொன்று குவிப்பது போர்க்களம்; கதிரைக் குவித்து உயிரைக் காப்பது ஏர்க்களம்’, என்று ஏர்க்களத்தின் சிறப்பைப் பாராட்டினார்; கதிர்க் குவியலின் காட்சி புலவர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது; கொஞ்சம் கதிரை எடுத்துக் கொண்டு போய்ச் சாலைத் திண்ணையில் உட்கார்ந்து தின்று கொண்டிருந்தார். கதிர் கொண்டு வந்து களத்தில் கொட்டிய ஆள் சென்று, புலவர் கதிர் தேய்த்துத் தின்று கொண்டிருப்பதை வேலப்பன் மனைவியாரிடம் சொன்னான். அவ்வம்மையார் உடனே களத்துக்குச் சென்று புலவரை வணங்கி, அவர் யார் என்பதை அறிந்ததும், ‘தண்டமிழ்ப் பெரியீர்! தமிழ்ப் பாட்டு எழுதும் தங்கள் கைகளுக்கு இத் தொழில் ஏற்றதாமோ? தேய்த்துத் தருதற்கு இங்கென்ன ஆளா இல்லை? மேலும், கதிரில் கொம்மை இருக்கிறது. கொம்மையோடு தின்னக் கூடாது. கொம்மை போக ஊதத் தங்களுக்குப் பழக்கமிருக்காது. நான் தேய்த்துத் தருகிறேன்’ என்று நல்ல கதிராகப் பொறுக்கி யெடுத்துத் தேய்த்து ஊதிக் கொடுத்தார். புலவர், அம்மையின் பெருங்குணத்தையும், தமிழ் மொழியிடத்துள்ள அளவு கடந்த பற்றினையும் வியந்து, மகிழ்ச் சியுடன் வாங்கித் தின்றார். அம்மை யார் புலவர்க்குச் செய்யும் அத்தொண்டைத் தமிழ்த் தாய்க்குச் செய்யும் தொண்டாகக் கொண்டு மகிழ்ந்தார். புலவர் அம்மையின் அவ்வரும்பெருஞ் செயலை “பூங்கொடி மணமுள்ள பூக்களைப் பூத்துக் கொடுத்தது; கனிமரம் சுவையுள்ள கனிகளைக் காய்த்துக் கொடுத்தது; முளசை வேலப்பன் தேவியின் திருக்கை, தமிழ்ப்புலவர் பசியகல, பயனுள்ள கம்மங்கதிரைத் தேய்த்துக் கொடுத்தது” எனக் கையின் மேல் வைத்துப் பாராட்டிப் பாடினார். வேலப்பன் மனைவியார் புலவரை வீட்டுக்கு அழைத்துப் போய் விருந்திட்டுப் போற்றினார். புலவரின் பொருளுரையைக் கேட்டு மகிழ்ந்தார்; புலவரின் புலமையின் தகுதிக் கேற்ற பரிசில் பல நல்கி மகிழ்வித்தார்; வெளியூர் சென்றிருந்த வேலப்பன் வந்தான்; நடந்ததையறிந்து மகிழ்ந்தான்; அத்தகைய வாழ்க்கைத் துணைவியைப் பெற்றவனுக்கு மகிழ்ச்சிக்கென்ன குறைச்சலா? தன் மனைவி கொடுத்த பரிசுடன் தானும் பரிசு பல கொடுத்துப் புலவரைப் பெருமைப் படுத்தினான். அவ்வாழ்க்கைத் துணைவர் களின் தமிழ்ப் பற்றையும், தமிழ்ப் புலவர்களிடம் வைத்துள்ள மதிப்பையும், தாராள குணத்தையும் புலவர் பலபடப் பாராட்டி விடைபெற்றுச் சென்றார். இத்தகைய செல்வக் குடும்பப் பேற்றைத் தமிழ்நாடு எதிர்நோக்கி நிற்கிறது. பெறுக அப்பேறு! 1. தமிழ் வளர்த்தோர் தமிழ்மொழி: தமிழ்மொழி நமது தாய்மொழி. தமிழ் பேசுவதால் நாம் தமிழர் எனப்பெயர் பெற்றோம். தமிழ் வழங்குவதால் நம்நாடு தமிழ்நாடு எனப்பெயர் பெற்றது. தமிழ் நாடு, தமிழகம் எனவும் வழங்கப்பெறும். தமிழ் என்னும் சொல் தமிழ் மொழியையும், தமிழ் நாட்டையும் குறிக்கும். வடக்கே வேங்கடமலையையும், தெற்கும் கிழக்கும் மேற்கும் கடலையும் எல்லையாக உடையது நம் தமிழகம். தெற்கே குமரியாற்றை எல்லையாக் கொண்டிருந்த காலமும் உண்டு. ‘‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம், ’’ என்பது தொல்காப்பியப் பாயிரம். குமரியாற்றின் தெற்கே குமரிமலை, மணிமலை, பன்மலைத் தொடர் முதலிய மலைகள் பல அணி செய்ய, குமரியாறு , பஃறுளியாறு முதலிய பல்லாறுகள் வளஞ்செய்யப் பன்னூறுகல் பரப்புடையதாயிருந்த பெருவள நாடு என்னும் பழந்தமிழ் நிலப்பரப்பைப் கடல் கொண்டு விட்டதென்பது. ‘‘ பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள’’ என்னும் இளங்கோவடிகள் உரையால் விளங்குகிறது. ‘‘பஃறுளி யாற்று மணலினும் பலவே’’ என்னும் புற நானூற்றடி, பஃறுளியாறு பாய்ந்த நிலப்பரப்பிருந்த தென்பதற்குச் சான்றாக உள்ளது. அப்பெருநிலப் பரப்பு.‘தென்பாலி நாடு,’ ‘பெருவள நாடு’ என்னும் பெயர்களுடன் பொலிந்தது. இன்றைய ஆராய்ச்சி அறிஞர்கள் அதைக் ‘குமரிக் கண்டம்’ என்கின்றனர். நனிமிகு பழங்காலத்தே தமிழகம் வடக்கே பனி மலையை எல்லையாகக் கொண்டிருந்ததாகவும் கூறுகின்றனர் ஆராய்ச்சி யறிஞர்கள். இதற்குச் சிந்துவெளி நாகரீக ஆராய்ச்சி சான்று பகர்கின்றது. பழந்தமிழ் மக்கள் தாய்மொழிப்பற்றும்., தாய் நாட்டுப் பற்றும் மிக்குடையராக இருந்தனர்; தமிழை உயிரினும் பெரிதாகக் கருதி ஓம்பி வளர்த்து வந்தனர். தமிழ்மொழி அன்று உலக முதன் மொழியாகத் திகழ்ந்தது. தமிழ் மக்கள் அன்று உயரிய நாகரீக நல்வாழ்வு வாழ்ந்து வந்தனர்.உலக நாகரீக முன்னேற்றம் அன்று தமிழ் நாட்டை எதிர்நோக்கி நின்றது. தமிழ் என்பதற்கு இனிமை என்பது பொருள், தமிழ் மொழி இனிமையானமொழி.‘‘ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்குங்காணோம்’’ என்றார் பாரதியார், ‘‘தமிழுக்கு அமிழ்தென்று பேர்- அந்தத் - தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்’’ தீந்தமிழ்த்தேன்’ என்றெல்லாம் சிறப்பித்துக் கூறுவர் தமிழ் மொழியை. கற்போர் உள்ளத்தையும் உணர்வை யும். கேட்போர் உள்ளத்தையும் உணர்வையும்ஒருங்கு இன்புறச் செய்யுந் தன்மை தமிழ்மொழிக்கே உரிய தனித் தன்மையாகும். தமிழ் இனியமொழி மட்டும் அன்று; கரடு முரடில்லாத இயல்பாகிய மொழியும் ஆகும். தமிழ் இனிமை, இயல்பொடு எளிமையும் உடையதொரு மொழியாகும். தமிழ்மொழியை யாரும் எளிதில் கற்றுக் கொள்ளலாம். தமிழ் எழுத்துக்களைத் தெரிந்து கொண்டால், எழுத்துக் கூட்டி எல்லாத் தமிழ்ச் சொற் களையும் எளிதில் படித்து விடலாம். இவ்வளவு எளிதான மொழி உலகில் வேறொன்றும் இல்லையெனலாம். இனிமை, இயல்பு, எளிமை என்னும் மொழிப்பண்பு மூன்றும் ஒருங்கமையப் பெற்றது நம் தமிழ் மொழியேயாகும். தமிழ் மிகப்பழமையான மொழி. தமிழ்மொழி எப்போது உண்டானது என்று வரையறுத்துக் கூற முடியாது. “கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன்தோன்றிய மூத்த தமிழ்” என்றனர் முந்தையோர். “என்றுமுள தென்றமிழ்” என்றார் கம்பர். தமிழ் பழமையோடு இளமை யும் உடைய மொழியாகும். தமிழ், ஈப்புரூ, லத்தீன், கிரேக்கம், ஆரியம் என்னும் மொழிகள் தாம் உலகமொழிகளில் மிகவும் பழமையான மொழிகள். தமிழ் ஒழிந்த ஏனை நான்கு மொழிகளும் உலக வழக்கு ஒழிந்து விட்டன. அம்மொழிகளை எழுதப் படிக்க முடியுமே தவிரப் பேச முடியாது. உலகப் பழம்பெருமொழிகள் என உடனெண்ணப்படும் ஏனைய நான்கு மொழிகளும் பேச்சுவழக்கொழிந்தும், தமிழ் மட்டும், “உலகவழக் கழிந்தொழிந்து சிதையா நின் சீரிளமைத்திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே” என மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் வியப்பதுபோல், உலகம் வியப்புறும் வண்ணம் அன்று முதல் இன்றும் பேசவும் எழுதவுங் கூடியதாய் இருந்து வருகிறது. இவ்வாறு பழமையோடு இளமையும் உடைமை யால் தமிழ் மக்கள் தமிழைக் ‘கன்னித்தமிழ் எனப் பெருமை யோடு கூறிக் கொள்ளுகின்றனர். “என்றும் இளமையுடைய இருந்தமிழே” என்றார் ஒரு தமிழ்ப் புலவர். தமிழை ‘இளம் பழந்தமிழ்’ எனல் பொருத்தமுடையதாகும். உலகில் பல நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப் படுகின்றன. அவற்றுள் ஒரு சில மொழிகளுக்கு எழுத்தே இல்லை. சில மொழிகளுக்கு இலக்கண வரையறையே இல்லை. சில மொழி களில் ஒரு சிறு நூல்கூட இல்லை. நூலியற்றுந் தன்மையை அம்மொழிகள் இன்னும் பெறவில்லை. பல மொழிகள் தோன்றிச் சில ஆண்டுகளே ஆகின்றன. லத்தீன், கிரேக்கம் முதலிய மேனாட்டு மொழிகளின் கலப்புப் புதுமொழியே ஆங்கிலம். இந்தி முதலிய வடநாட்டு மொழிகள் ஆரியத்தின் கான் முளைகள். கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய தென்னாட்டு மொழிகள் தமிழ் மொழியின் தலைப் பிள்ளைகள். “கன்னடமும் களி தெலுங்கும் கவின்மலையாள முந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்” என்பது மனோன்மணீயம். மிகப் பழமையோ டிளமை யுடையதும், பேசவும் எழுதவும் படுவதும். இலக்கியப் பரப்பும் இலக்கணவரை யறையும் உடையதும் ஆகிய மொழி ‘உயர்தனிச் செம்மொழி’ எனப்படும். தமிழ் பழமை யோடு இளமையுடையது; பேச எழுதப்படுவது; நற்றிணை, குறுந் தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரி பாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், சிந்தாமணி முதலிய ஏராளமான இலக்கியங்களையுடையது; தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கணங்களை யுடையது. எனவே, தமிழ் உயர்தனிச் செம் மொழியாகும். இன்று உலகிலுள்ள உயர்தனிச் செம் மொழி யாகும். இன்று உலகிலுள்ள உயர்தனிச் செம்மொழி தமிழ் ஒன்றே என்பதை அறிந்து தமிழ் மக்கள் இன்புறுவதில் வியப் பொன்றுமில்லை. நமது முன்னோர்கள் தமிழை இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என மூன்றாகப் பகுத்துப் போற்றி வளர்த்துப் பயன டைந்து வந்தனர். அதனால், தமிழ் ‘முத்தமிழ்’ எனப் பெயர் பெற்றது. இத்தகைய பெயர் வேறு எம்மொழிக்கும் இல்லை. இத்தகைய மொழிச் சிறப்பும் தமிழர் தனிப் பண் பாட்டுக்குச் சான்றாகுமன்றோ? “மோனை முத்தமிழ் மும் மதமும் பொழியானை” என ஒட்டக்கூத்தர் தம்மைப் பெருமை யோடு கூறிக் கொண்டார். தமிழ்ப் பாட்டுக்கள் இயற்றமிழ் எனப்படும். அப்பாட்டுக் களை இசையுடன் பாடுவது இசைத்தமிழ் எனப்படும். இசையுடன் பாடிக் கொண்டு, கேட்போர்க்குப் பாட்டின் பொருள் நன்கு விளங்கும்படி மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத் தமிழ் எனப்படும். மெய்ப்பாடு என்பது, உள்ளக்குறிப்பை உறுப்புக்களின் மூலம் வெளிப்படச் செய்யும் நகை, அழுகை, அச்சம், வீரம், இழிவு, உவகை, வெகுளி, வியப்பு என்பவை, பழந்தமிழர்களாகிய நமது முன்னோர்கள், இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழிலும் ஏராளமான இலக்கிய நூல்களும் இலக்கண நூல்களும் செய்து முத்தமிழையும் முறையாக வளர்த்து வந்தனர். சிலப்பதிகாரம் முத்தமிழ் இலக்கிய நூல், சீரும் சிறப்பும் வாய்ந்த இத்தகைய முத்தமிழை நமது முன்னையோர் எவ்வாறு போற்றி வளர்த்து வந்தனர்? இதழ்: இன்று உலகில் அன்றன்று நிகழும் நிகழ்ச்சிகளை நாம் இதழ் வாயிலாகத் தெரிந்து கொள்கிறோம். (இதழ் பத்திரிக்கை) இதழே இன்று செய்தி தெரிவிக்கும் தூதனாக விளங்கி வருகிறது. அதனால், இதழ் ‘செய்தித் தாள்’ எனவும் வழங்குகிறது. இன்று நம்மை ஆள்வது கூட இதழ்தான். எந்த ஒரு சமூக, அரசியல் சீர்திருத்தத்தை, சட்டதிட்டத்தை எல்லா இதழ்களும் போற்றி எழுதுகின்றனவோ அதைத்தான் அரசியலார் நடைமுறைக்குக் கொண்டு வருகின்றனர். பெரும்பாலான இதழ்கள் போற்றி எழுதுவதையே மக்களும் விரும்பிக் கைக்கொள்ளுகின்றனர். மக்களை முன்னேற்றப் பாதையில் முடுக்குவதும், நாகரீக நல்வழியில் நடத்துவதும் இதழ்களேயாம். ஒரு சில நாட்களுக்கு எல்லா இதழ்களையும் வெளிவராமல் நிறுத்திவிட்டால் உலகமே இருண்டு விடும்; உலகில் நடப்பது ஒன்றுமே நமக்குத் தெரியாது. குருடன் பார்த்த கூத்துப் போலாகும் உலக நிகழ்ச்சி. அத்தகு நிலையில் உள்ளது இன்று இதழ்! இதழ்கள் நமக்குச் செய்தியறிவிப்பதோடு மட்டும் நிற்கவில்லை; மொழியறிவையும் கலையறிவையும் ஊட்டி வருகின்றன. இதழ்ப் படிப்பினால் மொழியறிவும் பொது அறிவும் பெருகி வருகின்றன நாட்டில். அரசியலறிவின் உயிர் நாடி இதழ்ப் படிப்பேயாகும். எனவே, இன்று மொழியை வளர்ப்பதும், மொழியறிவையுண் டாக்குவதும், நல்லது கெட்டதை எடுத்துக்காட்டுவதும், நன்னெறி புகட்டுவதும், அரசியலறிவை யூட்டுவதும், வாழவழி காட்டுவதும் இதழ்களே யாகும். இதழ்களே இன்று உலகை இயக்கி வருகின்றன என்னலாம். அவ்வளவு சிறப்பியல்புடையது இதழ்! அணுகுண்டுக்கு அஞ்சாத அரசியல் தலைவரும் இதழ்களின் எழுத்துக் குண்டுக்கு அஞ்சுகின்றரெனில், இதழ்களின் சிறப்பியல்பினைப் பற்றி எடுத் துரைக்க என்ன இருக்கிறது? வாழ்வில், அரசியல் உலகைப் படைத்துக் காத்து அழிக்கும் முத்தொழிலும் இன்று இதழ்களின் கையில்தான் இருக்கின்றன. புலவர்: இன்றைய இதழ்களின் நிலையிலேயே அன்றையத் தமிழ்ப் புலவர்கள் இருந்து வந்தனர். தமிழ்நாட்டைப் பண்டு இயக்கி வந்தவர் தமிழ்ப் புலவர்களே யாவர். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழுக்கும் தனித் தனிப் புலவர்கள் இருந்து வந்தனர். இயற்றமிழ்ப் புலவர்கள் சிறந்த புலமையுடைமையால், ‘புலவர்’ எனவும், பாக்கள் இயற்றும் வன்மையால், ‘பாவலர்’ எனவும், சிறந்த நாவன்மை - பேச்சு வன்மை- உடைமையால் ‘நாவலர்’ எனவும் பெயர் பெற்றிருந்தனர். அப்புலவர் பெரு மக்கள் நுண்மாண் நுழைபுலம் உடையவராய்த் திகழ்ந்தனர். இசைத் தமிழ்ப் புலவர்கள் ‘பாணர்’ எனப்படுவர். பாண்- இசை, பாணர் - இசையில் வல்லவர். பாணர் மகளிர் பாணிச் சிரியர் எனப்படுவர். அப்பாண் மகளிரும் இசையில் வல்லுநர் ஆகையால், ‘பாடினி’ ‘பாட்டி’ எனப்பட்டனர். பாணர்க்கு யாழ் இன்றியமையாததாகும். அதனால், பாணர் ‘யாழ்ப்பாணர்’ என்றே அழைக்கப்பட்டனர். நாடகத் தமிழ்ப் புலவர்கள் ‘கூத்தர்’, ‘பொருநர்’ என இருவகைப்படுவர். பொருநுதல் - வேறொருவர் போல் கோல மிட்டாடுதல். (கோலம் - வேஷம்) கூத்தர், பொருநர் என்னும் இருவகையினரும் இருவகைப்பட்ட ஒரு பிரிவினரே. கூத்தர் மகளிர் - ‘கூத்தி, ஆடினி’ எனப்படுவர். அம்மகளிர் விறல் பட ஆடுதலால், ‘விறலியர்’ எனப்பட்டனர். விறல் - மெய்ப்பாடு. இசை நாடகப் புலவர்கள் ஒன்று பட்டே இசை நாடகத் தமிழை வளர்த்து வந்தனர். இசை நாடகப் புலவர்கள் யாழ், குழல், பறை, தாளம் என்னும் நால்வகை இசைக்கருவிகளின் துணை கொண்டு அவ்விரு தமிழையும் மக்கட்கறிவுறுத்தி வந்தனர். இயற்றமிழ்ப் புலவர்கள் அவ்வக் காலத்துக்கேற்ற கருத்துக் களை யமைத்துப் புதுப்புது பாட்டுக்கள் பாடியும், இசைத் தமிழ்ப் புலவர்கள் அப்பாட்டுக்களை இசைக் கருவி களுடன் இசைத்து இசையுடன் பாடியும், நாடகத் தமிழ்ப் புலவர்கள் அவ்விசைக் கேற்பப்பாட்டுக்களின் பொருள் விளங்க ஆடியும் முத்தமிழையும் முறையாக வளர்த்துவந்தனர். இம்முப் புலவரும் தமிழ் வளர்ப் பதையே தங்கள் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். இவர்கள் தமிழ்நாட்டு ஊர்தோறும் சென்று தமிழ்ப் பொது மக்களுக்கு முத்தமிழறி வினை ஊட்டி வந்தனர். இம் முப்புலவர்களின் உலையா முயற்சியால், ஓயா உழைப் பினால் முத்தமிழும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வந்தன. பழந்தமிழ்ப் புலவர்கள் சிறந்த அறிஞர்களாகவும், நல் லொழுக்க முள்ளவர்களாகவும், நாவன்மை படைத்தவர்களாகவும், அஞ்சா நெஞ்சம் உடையவர்களாகவும், பொது நலத் தொண்டே தம் பிறப்பின் பயனெனக் கொண்டவர் களாகவும், தன்னல மென்பதைக் கனவிலும் கருதாதவர் களாகவும், தமிழ் மொழி வளர்ச்சியிலும் தமிழர் முன்னேற்றத் திலும் அளவு கடந்த அக்கறையும் ஆர்வமும் உடையவர் களாகவும் இருந்தனர்; அன்பு, அருள், அடக்கம் பொறை, நாச்செம்மை முதலிய நற்குணங்களுக்கு இருப்பிடமாகத் திகழ்ந்தனர். இத்தகைய சால்புடைமை பற்றியே அவர்கள் ‘சான்றோர்’ எனப்பட்டனர். அச்சான்றோர் இல்லாத ஊர் குடியிருத்தற்கு ஏற்ற ஊர் அன்றென அக்காலத் தமிழ் மக்கள் கருதிவந்தனர். “சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின் தேன்தேர் குறவர்தேயம் நன்றே” என்பது வெற்றிவேற்கை. அப்புலவர்கள் தம்மை நன்னெறிக்கண் நிறுத்த தேயன்றித் தமிழ்ப் பொது மக்களையும் நன்னெறிக்கண் நிறுத்தி வந்தனர். தமிழ்த் தலைவர்கள் தவறு செய்தால் அஞ்சாது இடித்துரைத்து நன்னெறியில் நடக்கும்படி செய்வர். மலையமான் திருமுடிக் காரியின் இளங் குழந்தைகளை யானைக்காலில் மிதித்துக் கொல்ல முயன்ற கிள்ளி வளவனுக்கு அஞ்சாது அறிவுரை புகட்டி, அக்குழவிகளைக் கொல்லாது காத்த கோவூர் கிழார் என்னும் புலவர் பெருமான் வரலாறு இதற்கு எடுத்துக்காட்டாகும். அவர்கள் ஒருவருடைய நல்ல குணங்களையும் கெட்ட குணங்களையும் நாடறியச் செய்வர். நன்னன் என்பான் பெருங் கொடையாளனாக இருந்தும், இரக்கமின்றி ஒரு பெண்ணைக் கொலை செய்த குற்றத்திற்காக அவனைப் ‘பெண் கொலை புரிந்த நன்னன்’ என நாடறிய செய்தமை இதற்கு எடுத்துக் காட்டாகும். இத்தகைய சீரிய குணங்களால் தமிழ்ச் செல்வர்கள் அன்னாரிடம் மிகுந்த அச்சமும் மதிப்பும் உடையவராக நடந்துவந்தனர். தமிழகத்தில் அன்றன்று நிகழும் நிகழ்ச்சிகள் புலவர் பெருமக் களாலேயே நாடு முழுதும் பரப்பப்பட்டு வந்தன. பண்டு தமிழ்நாட்டை நன்னெறி பிறழாது ஆண்டவர் தமிழ்ப்புலவர்களே யென்பது மிகையாகாது. இவ்வாறு அவர்கள் தமிழ் வளர்ப்பதையும், தமிழ் மக்களை நல்வழியில் நடத்துவதையுமே தம் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு, என்றும் நிலையாக ஓரிடத்தில் தங்கியிராமல் தமிழ் நாடெங்கணும், பள்ளத்தை நோக்கிச் செல்லும் வெள்ளம்போல ஊரூராகச் சுற்றிக்கொண்டே இருந்ததால், வருவாயுடைய தொழிலெதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர். தமிழ்ச் செல்வர்கள் கொடுக்கும் பரிசே - பாட்டின் விலையே - அவர்களது குடும்ப வருவாயாக இருந்து வந்தது. இதனால், ‘பரிசில் வாழ்நர், பாவாணர் ’ என்னும் காரணப் பெயர்கள் அவர்கட்குண்டாயின. அவ்வாறு அவர்கள் பரிசில் பெறப் பாடிய பாட்டுக்களே பத்துப் பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்கச் செய்யுட்களில் பெரும்பாலானவை. அன்னார் பாடிவைத்த எத்தனையோ அரும்பெரும் செய்யுட்கள் நமக்குக் கிடைக்காமல் போயின. அவற்றுள் முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, மாபுராணம், பூதபுராணம், இசை நுணுக்கம், குணநூல், செயிற்றியம். சயந்தம், கூத்து, வரி, பேரிசை, சிற்றிசை என்பன சிறந்தவை. கழிந்ததற் கிரங்கு வதிற்பயனென்ன? கிடைத்துள்ள வற்றையாவது அழியாமல் போற்றிப் படித்துப் பயன்பெறுவது தமிழ் மக்களின் நீங்காக் கடமையி லொன்றாகும். செல்வர் : தமிழ்ச் செல்வர்களும், சிற்றரசர்களும்., பேரரசர்களும் தங்களைப் பாடிப் பரிசில் பெறவரும் புலவர்கள் விரும்பியதை விரும்பியவாறு இல்லையென்னாமல் கொடுத்து வந்தனர். அச்செல்வர்களின் கொடை மிகுதியால் புலவர்கள் ஏராள மாகத் தோன்றினர். அவர்கள் தம்முட் போட்டி போட்டுக் கொண்டு பாட்டுப் பாடியும் ஆடியும் தமிழை வளர்த்து வந்தனர். பழமரம் நாடிச்செல்லும் பறவைகள்போல முத்தமிழ்ப் புலவரும் செல்வரை நாடிச் செல்வர்; தாம்பெற்றபரிசிலை வேண்டு வார்க்கு வரையாது கொடுப்பர். ‘தாம்பெற்ற செல்வம் பெறுக இவ் வையகம்’ என்னும் உயர் பண்புடைய புலவர் பெருமக்கள், தாம் பரிசுபெற்ற செல்வரிடத்தே தம்மெதிர்ப்பட்ட புலவரைப் போம்படி அனுப்பி வந்தனர். இதற்குச் சான்றாக உள்ளவையே புலவராற்றுப்படை, பாணராற்றுப்படை, கூத்தாற்றுப்படை, பொருணறாராற்றுப் படை, விறலியராற்றுப்படை என்னும் ஆற்றுப் படைத்துறை களும் நூல்களும். பழந்தமிழ் மன்னர்களும் செல்வர்களும் புலவர்கள் தங்களைப் புகழ்ந்து பாடுவதை அவ்வளவு பெருமையாக மதித்து வந்தனர்; புலவர் பாடாததை மிகமிக இழிவாக எண்ணி வந்தனர் .தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன், ‘என்னை மதியாது வந்துள்ள அவ் வெழு வரைப் புறங்காட்டி யோடும்படி செய்யேனெனில், மாங்குடி மருதன் முதலிய புலவர்கள் பாடாது வரைக என் நிலவரை’ என்று வஞ்சினங் கூறியதே இதற்குச் சான்றாகும் . ஒருவர் எய்தும் புகழில் புலவர் பாடும் புகழே தலையாய புகழாக மதிக்கப்பட்டு வந்தது. ஒரு பழந்தமிழ்க் குடியைக் குறிப்பிடும் போது ‘புலவர் பாடும் புகழொடு வாழ்ந்த குடி’. என்பது வழக்கம். தமிழ்ப் புலவர்களுக்குக் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டு வறுமையுற்ற தமிழ்ச் செல்வர்கள் எண்ணிறந்தோர். தாய்மொழிமேல் உள்ள பற்றினால், ஒப்புரவறிந்த உயர் பண் பாட்டால் புலவர்கள் எதைக் கேட்டாலும் இல்லை யென்னாமல் கொடுத்துப் பொன்றாப் புகழை நிலை நாட்டினர் தமிழ்ப் பெருங்குடி மக்கள், ஈதல் இசைபட வாழ்தலே மக்கட் பிறப்பின் பயன். அதைவிட மக்கட் பிறப்பினால் அடையும் பயன் வேறில்லை. ‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்னும் பொரு ளுரையை யுணர்ந்த தமிழ்ச் செல்வர்கள். தமிழ்ப்பற்றின் தூண்டு தலினால் புலவர்க்கு வாரி வாரிக் கொடுத்தனர் .இதனாற்றான் கொடைமடம் பட்ட பாரி, காரி, ஒரி, ஆய், நள்ளி, பேகன், அதியன், எவ்வி, பண்ணன், குமணன், புல்லி முதலிய தமிழ் வள்ளல்கள் தோன்றினர். புலவர்க்கு நாடு கொடுத்தும், ஊர் கொடுத்தும், தலையைக் கொடுத்தும், உயிரைக் கொடுத்தும், அரசு கொடுத்தும், அரசிளங்கு மரனைக் கொடுத்தும், மலையேறிக் கண்ட மாநில வருவாயைக் கொடுத்தும், தமிழ் வளர்த்த வள்ளல்கள் பலர். இத்தமிழ்ப் புலவர்களும் வள்ளல்களும் இல்லா திருந் திருந்தால் தமிழும் எப்பொழுதோ இறந்து செத்த மொழிப் பட்டியலில் சேர்ந்திருக்கும் . இந்நேரம் தமிழென்னும் பெயரே கூட மறைந்தொழிந்திருக்கும். தமிழ் மொழி அழிந்தொழிந்து சிதையாது அப்படியே நிலைத்திருப்பதற்குப் புலவர் வறுமையும் செல்வர் புகழ்மையும் காரணமோ? அன்றி அவ்விருபாலாரின் தமிழ்ப்பற்று காரணமோ? யாதாயினும் அது வாழ்க! பாரி முதலியோர் சங்ககால வள்ளல்கள்; அவர்கள் வரலாற்றினை ஒருவாறு நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர் களுக்குப் பின்னரும் தமிழ் நாட்டில் எத்தனையோ கொடை மடம் பட்ட தமிழ்ப் பெருவள்ளல்கள் இருந்து வந்தனர். அவர்களில் சிலரது கொடை மிகவும் வியக்கத்தக்க கொடையாகும். அத்தகைய தமிழ்க் கொடையாளர்களில், கொங்கு நாட்டுக் கொடையாளர்கள் சிலரின் வரலாறே இந்நூலில் கூறப்படுகிறது. உங்கள் முன்னோராகிய அன்னாரின் தமிழ்ப் பற்றையும், கொடைத் திறத்தையும் அறிந்து இன்புறுவதோடு. தாய்மொழிப் பற்றுடையீராகித் தமிழ் வளர்ப்பீர்களாக. 2. கொங்கு நாடு தமிழ்நாட்டுப் பிரிவுகள்: வடக்கில் வேங்கட மலையையும், ஏனை மூன்று திசையினும் கடலையும் எல்லையாக உடையது பண்டைத் தமிழகம். தமிழகத்தில் ஆட்சி முறை என்று ஏற்பட்டதோ அன்றிருந்து தமிழகம் முடியுடை மூவேந்தர் என்று சிறப்பிக்கப்படும் சேர, சோழ, பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. அதனால், பழந்தமிழகம் சேர நாடு, சோழ நாடு, பாண்டி நாடு என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. இவை சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் எனவும் வழங்கும். சேர சோழ பாண்டியர் என்போர், பழந்தமிழ்ப் பெருங்குடிகளில் மூத்த முதற் குடியினராவர். “பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒரு தனிக் குடி” என்பது சிலப்பதிகாரம். இம்மூன்றில், பாண்டிய அரசமரபே முதலில் தோன்றியதாகும். சேர சோழ பாண்டிய நாடுகளேயன்றித் தமிழத்தில் தொண்டை நாடு, நடு நாடு, கொங்கு நாடு, என்ற பிரிவுகளும் உண்டு. இவற்றுள், தொண்டை நாடும், நடு நாடும் பிற்காலத்தே ஏற்பட்டவையாகும். கொங்கு நாடு பழங் காலத்திலிருந்தே இருந்து வருகிறது. சேர நாடு: மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேல்புறம் உள்ள நிலப்பரப்பு சேரநாடு எனப்படும். அதாவது, திருவாங்கூர்- கொச்சி நாடும், மலையாளக் கோட்டமும் (கோட்டம் - ஜில்லா) ஆகும். இதன் தலைநகர் வஞ்சி என்பது. முசிறி, தொண்டி என்பவை சேர நாட்டின் துறைமுகப்பட்டினங்கள். சோழ நாடு: திருச்சி, தஞ்சைக் கோட்டங்கள் சோழ நாடு எனப்படும். அதாவது, சிதம்பரத்துக்கு வடக்கேயுள்ள வட வெள்ளாற்றுக்கும், புதுக்கோடைக்குப் பக்கத்தில் பாயும் தென் வெள்ளாற்றுக்கும் இடைப்பட்டது சோழநாடு. இதன் தலைநகர் உறையூர். பின்னர்ப் புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினமும் தலைநகராக இருந்தது. காவிரிப்பூம்பட்டினமும், நாகப் பட்டினமும் சோழ நாட்டின் துறைமுகப் பட்டினங்கள். பாண்டி நாடு: மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலிக் கோட்டங் கள் பாண்டி நாடு எனப்படும். வடகிழக்கில் தென் வெள்ளாறும், வடக்கில் பழனியும், பாண்டி நாட்டின் எல்லையாகும். இதன் தலைநகரம் மதுரை, கொற்கை என்பது பாண்டி நாட்டின் துறைமுகப் பட்டினம். தொண்டை நாடு: சென்னை, செங்கற்பட்டு, வடவார்க்காட்டுக் கோட்டங் களும், தென்னார்க்காடு, சித்தூர்க் கோட்டங்களில் ஒரு பகுதியும் தொண்டை நாடு எனப்படும். இதன் வடக்கெல்லை திருப்பதி மலை; தெற்கெல்லை பாலாறு. இதன் தலைநகர் காஞ்சி நகர். கடன்மல்லை என்பது இதன் துறைமுக பட்டினம். தொண்டை நாடு முதலில் சோழ மன்னர்களாலும், பின்னர் பல்லவர் களாலும் ஆளப்பட்டு வந்தது. “தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து” என்னும் பெருமையுடையது இந்நாடு. நடுநாடு: தென்னார்க்காட்டுக் கோட்டத்தின் பெரும் பகுதியும், வடஆர்க்காட்டுக் கோட்டத்தின் ஒரு பகுதியும் நடுநாடு எனப்படும். இது சோழ நாட்டின் வடக்கெல்லையான வடவெள்ளாற்றுக்கும், தொண்டை நாட்டின் தெற்கெல்லை யான பாலாற்றுக்கும் இடைப்பட்டதாகும். இதன் தலைநகர் திருக்கோவிலூர். இந்நாட்டை மலையமான் மரபினர் ஆண்டு வந்தனர். சங்ககாலத் தமிழ் வள்ளல்களில் ஒருவனான மலைய மான் திருமுடிக்காரி இம்மரபினனே. சேர சோழ பாண்டியர் என்னும் பேரரசர்களின் கீழ்ச் சிற்றரசர்கள் பலர் இருந்து, அப்பழந்தமிழ் நாட்டைச் சீரும் சிறப்புடன் திறம்பட ஆண்டு வந்தனர். அச்சிற்றரசர்கள் தன்னுரி மையுடன் இருந்து வந்தனர். முடியுடை மூவேந்தர் - பேரரசர், பெருநில மன்னர், நெடுநில மன்னர் எனவும், சிற்றரசர் - குறுநில மன்னர் எனவும் பெயர் பெறுவர். அத்தமிழ்ப் பெருநில மன்னர், குறுநில மன்னர் ஆட்சிக்கீழ் இருந்தபோது, தமிழ்நாடு பெற்றிருந்த பெருமையும் இன்பமும் பேரும் பெருவாழ்வும் இனியொருகால் பெறுமா என்பது கனவு நிலையேயாகும். அவற்றைப் பழந்தமிழ் நூல்களில் படித்தின்புற வேண்டியது தான். கொங்குநாடு: கோவை, நீலகிரி, சேலங் கோட்டங்களும், திருச்சி மதுரைக் கோட்டங்களில் வடபகுதியும் கொங்கு நாடு எனப்படும். மதுரைக் கோட்டத்திலுள்ள பழனியும், திருச்சிக் கோட்டத்திலுள்ள குளித்தலையும் கொங்கு நாட்டின் தெற்கெல்லையாகும். கொங்குநாட்டின் இடையில், சேலம் கோவைக் கோட்டங் களின் எல்லையாகக் காவிரியாறு தெற்கு நோக்கிச் செல்கிறது. தமிழ் நாட்டின் பெரியதோர் உயிராறு - வற்றாத ஆறு - காவிரியே. தமிழ்நாட்டின் வளத்துக்குக் காரணமாய் இருப்பது காவிரியாறே. ‘மாற்றாத காவேரி வளநாடு’ என்றார் கம்பர். காவிரியின் மேல்பகுதி மேல்கொங்கு எனவும், கீழ் பகுதி கீழ்கொங்கு எனவும் பெயர் பெறும். கோவைக் கோட்டம் மேல்கொங்கு நாடாகவும், சேலம் கோட்டம் கீழ்கொங்கு நாடாகவும் அமைந்துள்ளன. கொங்கு நாடு -பூந்துறை நாடு, காங்கய நாடு, வடகரை நாடு முதலிய இருபத்து நான்கு உள்நாடு களையுடையது இன்றும் அவ்வுள் நாட்டுப் பிரிவு வழக்கத்தில் இருந்து வருகிறது. கொங்கு நாடு அயலாராட்சிக் குட்படு முன்னர், அவ்வுள் நாடொவ்வொன்றும் ஒரு தலைவரின் தலைமையின் கீழ் இருந்து வந்தது. இவர் நாட்டுத் தலைவர் எனப்படுவர். அந்நாட்டு மக்கள் மிகுந்த நாட்டுப்பற்றுடைய வராய், தம்நாட்டுச் சமூக சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுக் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வந்தனர். பெயர்க் காரணம்: கொங்கு நாடு என்னும் பெயர் இந்நாட்டுக்கு எப்படி உண்டானது? பெயர்க்காரணம் என்ன? ‘கொங்கு’ என்பது பூந்தாது, மணம், தேன் என்னும் பலபொருள் ஒருசொல். (பூந்தாது - மகரந்தம்) கொங்கு நாடு முழுவதும் மலைத் தொடரும் பெருமலையும், சிறுமலையும், குன்றுகளும் மிகுந் துள்ளன. எனவே, பண்டு நாடெங்கும் மரம் செடி கொடிகள் மிகுந்து, தழைத்துப் பூத்து மணங்கமழ்ந்ததனாலும், தேன் மிகுதியாக இருந்ததனாலும் நமது முன்னோர்கள் இந் நாட்டுக்குக் கொங்கு நாடு என்று பெயர் வைத்தனர். அருமை யான காரணம், அழகான பெயர்! ‘கொல்லிமலைத் தேன் சொரியும் கொற்றவா’ (கம்பர்) எனக் கொங்கு நாட்டுத்தேன் இலக்கியச் சிறப்புப் பெற்றுள்ளது. கொல்லிமலை கொங்கு நாட்டு மலைகளிலொன்று, ‘பூநாடு, மணநாடு, தேனாடு’ என்னும் மூன்றையும் உள்ளடக்கிக் ‘கொங்கு நாடு’ என்றனர். கொங்கு நாட்டினர் ‘கொங்கர்’ எனப்படுவர். ‘கொங்கர் செங்களம்’என்பது சிலப்பதிகாரம். இயற்கை வளம்: ‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்’ என்பது ஒரு தமிழ் நாட்டுப் பழமொழி. மலிதல் - நிறைதல். பல்வகை வளமும் குறையாது நிறைந்திருத்தல். இப்பழமொழி எதனால் எழுந்தது? இதன் கருத்தென்ன? ஒரு நாட்டின் வளத்துக்குக் காரணமாய் இருப்பவை மலைகளும் ஆறுகளுமே யாகும். கொங்கு நாட்டின் மேற்கெல்லையாக அகன்றுயர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கிறது. இது தமிழ்நாட்டின் செவிலித் தாயாகும். வடக் கெல்லையாக வளமலிந்த பாலைமலைத் தொடர் இருக்கிறது. இவ்விரண்டு மலைத் தொடர்களும் கொங்கு நாட்டின் மேற்கிலும் வடக்கிலும் இயற்கை அரணாக அமைந்துள்ளன. அகநாட்டில் ஆனைமலை, வெள்ளிமலை (வெள்ளியங்கிரி), சேர்வராயன்மலை, கொல்லிமலை என்னும் பெருமலைகளும், சென்னிமலை, சிவன்மலை, பழனிமலை, வெண்ணெய்மலை, தலைமலை, மருதமலை, திருச்செங்கோடு, கஞ்சமலை முதலிய சிறு மலைகளும், நாடெங்கும் ஊற்றிருந்தூறும் பல குன்றுகளும் அமைந் துள்ளன. ஆனைமலை முதலிய பெருமலைகள் நான்கும் பல கல் பரப்புடைய வளமிக்க பெருமலைகளாகும். அம் மலைகளின் மேல் ஊர்கள் பல உள்ளன. அவ்வூர்கள் குடிவளம் மிக்கவை. அம்மலைகளை மலை என்பதைவிட மலைநாடெனல் பொருந்தும். அத்தொடர் மலைகளும், பெருமலைகளும், சிறுமலைகளும் குன்றாக் கொழுநீர்க் களஞ்சியங்களாகும். மாரி காலத்தே உட்கொண்ட மழைநீரைக் கோடைக் காலத்தே அருவிகளாகத் தந்து, நாட்டை வளமுடையதாக்கி, மக்களை வாழ்விக்கும் வள்ளன்மைமிக்கவை அம்மலைகள். வான் பொய்ப்பினும் தான் பொய்யா வளநீர்ச் செல்வமான காவிரியாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றிக் கொங்கு நாட்டின் வழியாகச் செல்கிறது சேர்வராயன் மலையில் சரபங்க யாறும், கஞ்சமலையில் பொன்னியாறும், மேற்குத் தொடரில் வானியாறும் வெள்ளி மலையில் நொய்யலாறும், ஆனைமலையில் அமராவதி யாறும் தோன்றி வந்து காவிரியில் கலக்கின்றன. வானியும் வற்றாதே ஆறே. காவிரி பாலை மலைத் தொடரைக் கடந்துவரும்போது மலையருவிகள் பல வந்து அதில் கலக்கின்றன. இன்னும் எத்தனையோ சிற்றாறுகளும் பெறும் பள்ளங்களும் ஓடைகளும் வந்து காவிரியில் கலக்கின்றன. இத்தகைய வருவாயி னையுடைய தாய்க் கொழுநீர்ச் செல்வக் குவையினதாய்ப் பொலிகின்றது கொங்கிற் காவிரி! மற்றும் திருமணிமுத்தாறு, தொப்பையாறு, செய்யாறு, நள்ளாறு, சண்முகயாறு, சண்பகயாறு, பாலையாறு, வாழையாறு காரியாறு, குடவனாறு முதலிய எத்தனையோ சிற்றாறுகளும் பெரும் பள்ளங்களும் கொங்கின் வளத்துக்குக் காரணமாக உள்ளன. சோழ நாட்டில் நெல்விளைகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நெற் கொடை கொடுப்பது சோழ நாடே. நெல் விளைய நீர் நிரம்ப வேண்டும். ‘நீருயர நெல்லுயரும்’ என்றார் ஒளவையார், ‘கோள் நீலை திரிந்து கோடை நீடினும் தான் நிலைதிரியாத் தண்டமிழ்ப் பாவை’ யாகிய காவிரி கொங்கு நாட்டின் சொத்து. காவிரியின் நற்றாயான மேற்குத் தொடர்ச்சி மலை கொங்கு நாட்டின் உடைமை. கொங்கில் மழை பெய்து கொழு நீர்க் காவிரியில் வெள்ளம் வந்தால் தான் சோழ நாட்டில் நெல் விளையும்; ‘சோழவள நாடு சோறுடைத்து’ என்னும் சிறப்பைப் பெறும்; ‘புனல் நாடு’ என்னும் புகழைப் பெறும். சோழ நாடு நெற்களஞ்சியம் ஆகக் கொங்கு நாட்டின் நீர்க் களஞ்சியம் தேவை. சோழ நாட்டுக்கு வேண்டும் போது நீர்க்கொடை கொடுக்கும் மேட்டூர்த் தேக்கமும் கொங்கு நாட்டின் உடைமையே. சோழ நாட்டின் வளம் கொங்கு நாட்டின் கையில்தான் இருக்கிறது. எனவே, ‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்’ என்னும் பழமொழி யிலுள்ள ‘எங்கும்’ என்பது பெரும்பாலும் சோழ நாட்டையே குறிக்கும். மேலும், நமக்கு நெல்லுணவு மட்டும் இருந்தால் போதாது, அவரை, துவரை, உளுந்து, கடலை, தட்டை, பச்சை, கொள்ளு முதலிய பருப்பு வகைகள், காய்கறி கிழங்குகள், எண்ணெய், மிளகாய் முதலியனவும் வேண்டும். ஆடைக்குப் பருத்தி வேண்டும். இவையெல்லாம் கொங்கு நாட்டில் தான் மிகுதியாக விளைகின்றன. மற்றும் கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு, சாமை, தினை முதலிய தவசங்களும் கொங்கில் நிறைய விளைகின்றன. இதனால் தான் ‘கொங்கு மலிந்தால்’ எங்கும் மலியும்’ என்னும் பழமொழி எழுந்தது. உணவு, உடை இரண்டும் மக்களுக்கு இள்றியமையாதவை. இதனால்தான், ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப்படுபவன் தான் கெடுவதோடு, அவன் சுற்றமும் ‘உடுப்பதும் உண்பதும் இன்றிக்கெடும்’ என்றார் வள்ளுவர். உணவுக்கும் உடைக்கும் வேண்டுவனவெல்லாம் கொங்கு நாட்டில் குறைவின்றி விளைகின்றன. தன்னிடத்தில் பெய்யும் மழையாலும், தனது விளைவாலும் வாழ்ந்து வருவது கொங்கு நாடு. மழை வளந்தப்பிய காலத்தும் வளந்தப்பாத ஏராளமான ஆழ்ந்தகன்ற கிணறுகளையுடையது கொங்கு நாடு. கொங்கு நாட்டில் உள்ள கிணற்று வளம் வேறு எந்நாட்டினும் இல்லை. உலகப் புகழ்பெற்ற சிறந்த கால்நடைச் செல்வத்தை மிகுதியாக உடையதும் கொங்கு நாடேயாகும். கொங்கு நாட்டு உழவர்கள் உழைப்பின் செல்வர்கள்; ‘இலம் என்று அசைஇ’ இராதவர்; உலையா முயற்சியுடையவர். இதனாலேதான், ‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்’ என்பதோடு, ‘கொங்கு வெறுத்தால் எங்கும் வெறுக்கும்’ என்னும் பழமொழியும் வழங்கி வருகிறது. மழை பெய்வதற்குக் காரணமான உயர் மரக்காடுகள். மலை, குன்று, ஆறு, ஏரி, குளம், குட்டை, பள்ளம், படுகை களெல்லாம் எங்கு பார்த்தாலும் அடர்ந்து, வானங் கவிந்தாற் போல் பச்சைப் பசேலென்றிருந்தது பழங் கொங்குநாடு. கொங்கு நாட்டின் வளத்துக்குக் காடும் ஒரு காரணமாகும். கொங்கு நாட்டின் வளத்துக்கு நிலைக்களனாக இருந்து வந்த பன்னூற்றுக் கணக்கான ஏரி, குளம், குட்டைகளெல்லாம் அழிந்து போயின. அவற்றை யெல்லாம் பழுதுபார்த்துப் புதுக்கிப் பழையபடி நாட்டை வள முடையதாக்கி மக்களை வாழ்விப்பது ஆள்வோர் கடமையாகும். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனப் பழந்தமிழ் நாடு நால்வகைப் பாகுபாடுடையதாக அமைந்திருந்தது. அவ்வாறு நிலத்தை நால்வகையாகப் பகுத்துப் பயன்கொண்டு வாழ்ந்து வந்தனர் பழந்தமிழ் மக்கள். முல்லை நில மக்கள், குறிஞ்சி நில மக்கள், மருத நில மக்கள், நெய்தனில மக்கள், என அந்நில வேறுபாட்டால்தான் பெயர் வேறுபட்டிருந்தனர் பழங்காலத் தமிழ் மக்கள், அந்நானிலத்தின் சிறப்பினை, அந்நாளில் மக்களின் பழக்க வழக்கங்களைச் சங்க நூல்களிற் பரக்கக் காணலாம். காடும், காடு சார்ந்த இடமும் முல்லை நிலம். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம். வயலும் வயல்சார்ந்த இடமும் மருத நிலம். கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலம். காடு சார்ந்த இடம் புன் செய்க் காடுகள். வயல் சார்ந்த இடம்- தோட்டங்கள். கொங்கு நாடு காடும் மலையும் தலை மயங்கிய நாடு; வயல் போன்ற வளமுடைய தோட்டங்களை யுடைய நாடு; கடல்போல வற்றாத காவிரிக் கரையையுடைய நாடு. எனவே, கொங்கு நாடு, நானிலமும் ஒருங்கமைந்த நன்னாடாகும். அரசியல்: கொங்கு நாடு பழங்காலத்திலிருந்தே சேர, சோழ பாண்டி யர்களாகிய முடியுடை வேந்தர் மூவர் ஆட்சிக் குட்படாது தனியாட்சி நாடாகவே இருந்து வந்தது; தமிழ்ப் பேரரசர்க்குரிய வீரம், கொடை, புகழ் என்னும் முப்பண்பும் ஒருங்கு வாய்க்கப் பெற்ற தமிழ்ச் சிற்றரசர்களால் சீரும் சிறப்புடன் ஆளப்பட்டு வந்தது. அச்சிற்றரசர்களில் சிலர் முடியுடை வேந்தர் மூவரும் ஒன்று கூடி எதிர்க்கினும் எதிர்த்து நிற்கும் அவ்வளவு ஆற்றலும் போர்த்திறனும் உடையவராக இருந்தனர். அவர்களிற் பெரும் பாலோர் வேளிர் என்ற சிறப்புப் பெயர்பெற்ற வேளாண் குலச் செல்வர்களே யாவர். அக் குறுநில மன்னர்கள் தமக்குள் பகையின்றி, நாட்டு நலனே தம் வாழ்க்கை நலனெனக் கொண்டு. குற்றங்கடிந்து குடிபுறங் காத்து வந்தனர். அன்னார் தம்மை ஒரு மூத்த முதற்குடி மகனாக எண்ணிச்செம்மையிற்றிறம்பாது செங் கோலினராய் நாடாண்டு வந்தனர். அவர்கள் முடியுடை வேந்தர் மூவரிடத்தும் உறவுடைய ராகவே இருந்து வந்தனர்; ஒவ்வொரு கால் ஒரு சிலர் மூவரசரோடும் தனித்தனி போர் புரிந்தும் இருக்கின்றனர். கொங்குப் படைத் துணையில்லா மூவரசர் போர்க்கள வெற்றி இன்றெனலாம். அத்தகு மறக் குணத்தோடு, கொங்குக் குறுநல மன்னர் சிறந்த தமிழ்ப் புலமையும் தமிழ்ப்பற்றும் உடையராகத் திகழ்ந்தனர். கொங்கு நாட்டுக் குறுநில மன்னர்கள் நாட்டதி காரத்தோடு, தலைமலை, காவேரிபுரம், தொப்பூர் பொன்முடிக் கணவாய்களின் வழியாக வடக்கத்தியார் தமிழ் நாட்டுக்குள் படையெடுத்து வாரா வண்ணம் பாதுகாத்து வந்தனர். கொங்கரின் போர்த் திறமையே அயலார் நினைக்கவும் முடியாத படி செய்து வந்தது ஊர்த் தலைவர்களால் திறம்பட ஊராண்மை நடத்தும் பெருமை கொங்கு நாட்டுக்கே உரிய தனிப் பெருமையாகும். “சேரர் கொங்கு வைகாவூர் நன்னாடு” என்னும் அருண கிரியார் திருப்புகழ்க் கூற்றைக் கொண்டு, ‘கொங்கு நாடு சேர மன்னர்க்குரியது’ என்பது தவறான கொள்கையாகும். ஏதோ ஒரு சிலகாலம், அதுவும் மிகப்பிற்காலத்தே, கோவை கோட்டத்தின் தென் மேற்குப் பகுதி சேரர் ஆட்சிக்கீழ் இருந்திருப்பதாகத் தெரிகிறதேயன்றிக் கொங்கு நாடு சேரர்க் குரியது என்பதற்கு யாதொரு சான்றும் இல்லை. அருணகிரியார் காலத்துச் சிற்றரசன் ஒருவன், கொங்கு இரு பத்துநான்கு நாட்டில் ஒன்றான வையா புரி நாட்டைப் பிடித்து (பழனி) ஆண்டிருக்கலாம். வைகாவூர் அல்லது வையாபுரி நாடு கடைச் சங்கக் காலத்தே வையாவிக் கோப்பெரும் பேகன் மரபினர்க் குரியதாயிருந்தமையால், அருண கிரியார்க் கூற்றைக் கொண்டு கொங்கு நாடு சேர மன்னர்க் குரியது என்பது பொருந்தாது. ஒவ்வொரு காலத்தே பாண்டி யரும் சோழருங்கூட கொங்கு நாட்டின் தென் பகுதியையும், தென் கிழக்குப் பகுதியையும் பிடித்து ஆண்டிருக்கின்றனர். கொங்கு நாட்டின் முதன்மையான ஊர்களிலொன்றான கருவூர் (கரூர்) ஒரு காலத்தே சோழ மன்னரின் வாழ்விடமாக இருந் திருப்பதே இதற்குச் சான்றாகும். கொங்கு நாடு சேரர்க் குரிய தெனின், சேரன் செங்குட்டுவன் ‘கொங்கர் செங்களத்துப் போர்’ புரிந்திருந்திருக்க ஏதுவில்லையல்லவா? கி.பி.9-ம் நூற் றாண்டுக்கு முன் கொங்கு நாடு கொங்குக் குறுநில மன்னர்களின் தனியரசு நாடாகவே இருந்து வந்தது. பெருமை: வள்ளல்கள்; கொடைக் குணம் உடையோர் உலகில் எங்கும் உண்டு. ஆனால், கொடுத்துக் கொடுத்து வறுமை யுற்றவர் தமிழ் நாட்டில்தான் உண்டு. இரவலர் எதைக் கேட்டாலும் இல்லையென்னாது, தம்மிடத்துள்ளதை வரையாது கொடுப்போர் வள்ளல் எனப்படுவர். அத்தகைய வள்ளல்களை மிகுதியாக உடையது தமிழ்நாடு. கடைச் சங்க காலத்தில் இருந்த தமிழ் வள்ளல்கள் எனப்படுவோர் எழுவர். அவர் பாரி, காரி, ஓரி, ஆய், அதியன், பேகன், நள்ளி என்பவர். இவ்வெழுவருக்கும் பின்னர் இருந்த ஒரு பெரு வள்ளல் குமணன் என்பான். இவர்களுள் அதியன், ஓரி, பேகன், குமணன் என்னும் நால்வரும் கொங்கு நாட்டினராவர். அதியாமான் என்பவன் சேலங் கோட்டத்தில் உள்ள தகடூர் நாட்டை ஆண்டு வந்தான். தகடூர் (தர்மபுரி) என்பது அந்நாட்டின் தலைநகர். இவன் அதியமான் நெடுமான் அஞ்சி எனப்படுவான். ஒளவைக்கு அருநெல்லிக்கனி கொடுத்த வள்ளல் இவனே. இவன் அக்கனியைக் கஞ்சமலையில் இருந்து பறித்துவந் தான். கரும்பை முதன் முதல் பயிர்செய்தவன் இவ்வதியமான் அஞ்சியின் முன்னோனொருவனேயாவான். அதியமான் மரபினர் பொன்முடிக் கணவாயைப் பாதுகாத்து வந்தனர். கொல்லிமலை என்பது சேலங்கோட்டத்தில், நாமக் கல்லுக்குப் பக்கத்தில் இருக்கிறது. அம்மலையும் அதைச் சுற்றி யுள்ள நிலப்பரப்பும் கொல்லிமலை நாடு எனப்படும் அது மிக்க வளம் பொருந்திய நாடு. கொல்லிமலை நாட்டை ஓரி என்பவன் ஆண்டு வந்தான். ஆதன் ஓரி என்பது அவன் பெயர், அவன் விற்போரில் வல்லவன். அதனால், அவன் ‘வல்வில் ஒரி’ எனப் பட்டான். ஓரி மலைமேல் இருந்துவந்தான். அவன் தன்னைப் பாடிவரும் புலவர்க்குத் தன் நாட்டைப் பங்கிட்டுக் கொடுத்த பெருவள்ளல். பழனி என்னும் ஊர் உங்களுக்குத் தெரியும். வையாபுரி என்பது பழனியின் பழைய பெயர். கொங்கு இருபத்து நான்கு நாட்டில் வையாபுரி நாடும் ஒன்று. அந்நாட்டின் தலைநகர் வையாபுரி (பழனி), அது மலைவளம் பொருந்திய நாடு. அந் நாட்டை ‘வையாவிக்கோப்பெரும்பேகன்’ என்பவன் ஆண்டு வந்தான். இப்பேகனே மழையின் நனைந்த மயிலுக்குப் போர்வை கொடுத்த வள்ளியோனாவான். உடுமலைப்பேட்டைக் கூற்றத்திலும் கொழுமம் என்று ஓர் ஊர் இருக்கிறது. அவ்வூரையடுத்துக் குதிரை மலை என்னும் மலை இருக்கிறது. அக் குதிரைமலை முன்னர் முதிரமலை அல்லது முதிரம் என்று வழங்கிற்று. அம்முதிர மலை நாட்டைக் குமணன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் பெருங்கொடை யாளன். பெருந்தலைச் சாத்தனாருக்குத் தன் தலையைக் கொடுக்க இசைந்த தனிப்பெரு வள்ளல் இவனே. பழனிக்குப் பொதினி என்ற பெயரும் உண்டு. பழனிக்குப் பக்கத்தில் ஆய்க்குடி என்னும் ஊர் இருக்கிறது. அவ்வூரில்தான் ஆய் என்னும் வள்ளல் இருந்ததாகவும், பொதினிமலை நாட்டின் ஒரு பகுதியை அவன் ஆண்டு வந்தனன் எனவும் கூறுகின்றனர். இது ஆராய்ச்சிக்குரியது. பவணந்தி முனிவரைக் கொண்டு நன்னூல் செய்வித்த சீயகங்கன் என்னும் அரசனும், வில்லிப்புத்தூராழ்வாரைக் கொண்டு பாரதம் பாடுவித்த வரபதியாட்கொண்டான் என்னும் மன்னனும் கொங்கு நாட்டினரே. இன்னும் கொங்கு நாட்டில் எத்தனையோ வள்ளல்கள் வரையாது கொடுத்து வண்டமிழ் வளர்த்து வந்திருக்கின்றனர். புலவர்கள்: ஒரு நாட்டின் புலவர்களே அந்நாட்டின் பெருமைக்குக் காரணமாவர். ‘தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து’ எனத் தொண்டை நாட்டின் பெருமை கூறுதல் காண்க. கடைச்சங்ககால புலவர்கள் தமிழ் நாடு முழுதும் இருந்தவராவர். அவர்களில் பெரும்பாலோர் இந்நாட்டின ரெனத் துணிந்துகூற முடியாதவார யிருக்கின்றனர். அவர்களில் கொங்கு நாட்டுப் புலவர்கள் எத்தனை பேர்? யார் யார்? என அறிய அவாவுதல் இயல்பே. சங்க நூற் புலவர்களில் பதினாறு பேர் கொங்கு நாட்டுப் புலவர்களாவர். கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார், கருவூர்க் கலிங்கத் தார், கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், கருவூர்க் கோசனார், கருவூர் கீழார், கருவூர்க் கண்ணம் பாளனார், கருவூர்ச் சேரமான் சாத்தன், கருவூர் நன்மார்பனார், கருவூர்ப் பவுத்திரனார், பூதஞ்சாத் தனார் என்போர் கொங்கு நாட்டுக் கருவூரினர். செங்குன்றூர்க் கிழார் - திருச்செங்கோடு, பொன் முடியார் - தகடூர் நாட்டுப் பொன்முடி என்னும் ஊர். பெருந்தலைச் சாத்தனார்- பவானிக் கூற்றத்துப் பெருந்தலையூர். (கூற்றம் - தாலுக்கா) அந்திகீரனார் - பவானிக் கூற்றத்து அந்தியூர் உல கடத்துக் கந்தரத் தனார் - அந்தியூரை அடுத்துள்ள உலகடம் என்னும் ஊர். தகடூர் யாத்திரை ஆசிரியர் ஒருவர். சங்க நூற் புலவர்களில் இன்னும் எத்தனை பேர் கொங்கு நாட்டுப் புலவர்களோ? அறிந்து கொள்ள முடியவில்லை. ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்றான பெருங்கதை ஆசிரிய ரான கொங்கு வேளிர், ஈரோடு கோவை வழியில், ஈரோட்டின் மேற்கில் 16-வது கல்லில் உள்ள விசயமங்கலம் என்னும் ஊர். சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார், விசயமங்கலத்திற்குப் பக்கத்தில் இருந்த நிரம்பை என்னும் ஊர். நன்னூல் ஆசிரியரான பவணந்தி முனிவர். விசயமங்கலத்தை அடுத்துள்ள சீனாபுரம் என்னும் ஊர். வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியல் ஆசிரியர் குணவீர பண்டிதரும், அவருடைய ஆசிரியரான வச்சணந்தி முனிவரும் பொள்ளாச்சிக் கூற்றத்துக் களந்தை என்னும் ஊர். இன்னும் பிற்காலத்தே கொங்கு நாட்டில் பன்னூற்றுக் கணக்கான தமிழ்ப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்குக் காரணமாய் இருப்பவை மருத்துவம், வாகடம் என்னும் இருகலைகளுமே யாகும். இக் கலைகளில் தமிழர் உலகப் புகழ் பெற்றவர். அவ்விரு கலைகளையும் நன்கு ஆராய்ந்து, தமிழ் மக்களை உலகப் புகழுக்குரியமை யாக்கியவர் தமிழ்ச்சித்தர் களே யாவர். இவர்கள் மருத்துவ வாகட ஆராய்ச்சியேயன்றி, மெய்ப் பொருளா ராய்ச்சியிலும் வல்லுனர். மருத்துவ நூல்களும், வாகட நூல்களும், அறிவு நூல்களும், செய்து மக்களை வாழ்வித்த தமிழ்ச் சித்தர்களில் பலர் கொங்கு நாட்டினரா வார். கருவூர்ச் சித்தர் - கருவூர் கஞ்சமலைச் சித்தர் - கஞ்சமலை,. போகர், புலிப்பாணி இருவரும் பழனி. கொங்கணர் - தாராபுரக் கூற்றத்து ஊதியூர். இடைஞானி யார் - அரூர்க் கூற்றத்துத் தென்கரை என்னும் ஊர். பாம்பாட்டிச் சித்தர் - கோவைக் கூற்றத்து மருதலை. சித்தர் பதி னெண்மர் என்பர். அவர்களுள் எழுவர் கொங்கு நாட்டினர். அதியமான், ஓரி, பேகன், குமணன் என்னும் வள்ளல் களும், கொங்கு நாட்டு ஊர்தோறும் இருந்து வந்த பெருஞ் செல்வர்களும், கொடைமடம் பட்ட கொங்கர்களாகையால், சேர, சோழ, பாண்டிய, தொண்டை நாட்டுப் புலவலர் பெரு மக்கள், பழமரம் நாடிவரும் பறவைகள் போலக் கொங்கு நாட்டை நோக்கி வந்த வண்ணம் இருப்பர். கொங்கு நாடு புலவர் பெருமக்களின் உறைவிடமாகத் திகழ்ந்தது. கொடைவள மிக்கது கொங்கு நாடு, என்பது புலவர் புகழ்மொழி. சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த பெருமை பாண்டி நாட்டிற்குண்டெனில், தமிழ்ப் புலவர்களுக்கு வரையாது வாரி வாரிக் கொடுத்துத் தமிழ் வளர்த்த பெருமை கொங்கு நாட்டுக்கேயுண்டு. கொங்கு நாட்டின் கொடைத் திறத்தால், கொங்கர்களின் கொடை மடத்தால் எழுந்தவையே சங்கநூற் செய்யுட்களில் பெரும் பாலவை எனல் மிகையாகாது. ‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்’ என்ற பழமொழி எழுந்ததற்கு இதுவுமொரு காரணமாகும். 3. வணங்காமுடி வாணராயர் பழந்தமிழ் நாடு - சேர நாடு, சோழ நாடு, பாண்டி நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு என ஐந்து கூறாகப் பிரித்து ஆளப்பட்டு வந்தது; கொங்கு நாட்டைக் கொங்கு வேளிர் என்னும் சிற்றரசர்கள் சீரும் சிறப்புடன் செம்மையாகத் தனியாட்சி புரிந்து வந்தனர் என்பதை முன்னர்ப் படித்தறிந் தீர்கள். தமிழ் நாட்டில் முடியுடை மூவேந்தர் ஆட்சியொழிந்து, நாயக்க மன்னர் ஆட்சி ஏற்பட்ட பின்னர் அக்கொங்குச் சிற்றரசர்கள் தம் அரசுரிமையை இழந்து வெறும் படைத் தலைவர் நிலையை அடைந்தனர். இந்நிலைக் கேற்ப அவர்கள் ‘பாளையக்காரர்’ எனப்பட்டனர். பாளையம் - படை, பாளையக் காரர்- படைத் தலைவர். வஞ்சிபாளையம், மேலப்பாளையம், வேப்பம்பாளையம் என்னும் ஊர்ப்பெயர் அப்பாளையக்காரர் தங்கியிருந்ததால் ஏற்பட்ட பெயரே யாகும். பாளையம் என்பது, காளிப்பட்டி, தேனாம்பேட்டை, ஓலவலசு என்னும் ஊர்ப் பெயர்களிலுள்ள பட்டி, பேட்டை, வலசு என்பன போல இன்று ஊர்ப்பெயராக வழங்கிவருகிறது. தமிழ்நாட்டில் ஆங்கில ஆட்சி ஏற்பட்ட பின்னர் அப் பாளையக்காரர் படையை வைத்திருக்கும் உரிமையும் படை யேந்தும் உரிமையும் பறிக்கப்பட்டு, அரசினருக்கு நிலவரி வாங்கித் தரும் நிலையினர் ஆயினர். அவர்தான் ஜமீன்தார், மிட்டதார் என்பவர், அவ்வுரிமையும் இப்போது பறிக்கப்பட்டு விட்டது. அவர்களுள் சமத்தூர்ப் பாளையக் காரரும் தொன்று தொட்டு வந்த பாளையக்காரரேயாவர். அதாவது தமிழ்ச் சிற்றரசராக இருந்து, தமிழ் நாட்டில் ஏற்பட்ட அயலாராட்சியினால் பாளையக் காரரானவர். சமத்தூர் என்பது கோவைக் கோட்டம், பொள்ளாச்சிக் கூற்றத்தில் இருக்கிறது. இது கொங்கு நாட்டுப் பழவிறலூர் களில்- பழஞ் சிறப்பினை யுடைய ஊர்களில் ஒன்றாகும். சமத்தூர்ப் பாளையக்காரர் கொங்கு வேளாள மரபினர். அதாவது, பழைய வேளிர் மரபைச் சேர்ந்தவர். இம்மரபினர், வாணராயர் என்னும் குடிப்பெயரையும், வணங்காமுடி என்னும் வழிவழிப் பட்டப் பெயரையும் உடையவர். இம்மரபினர் இன்றும் செல்வாக்குடன் இருந்து வருகின்றனர். இம்மரபினர் செந்தமிழ் வேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களிடம் பல சிறப்புக்கள் பெற்றுள்ளனர். ‘வணங்கா முடி’ என்னும் வழிவழிப் பட்டம் ஒரு பாண்டி மன்னனால் வழங்கப்பட்ட பட்டமேயாகும். இம் மரபின னொருவன், ஒரு சிற்றரசனைக் காணச் சென்று, நெடுநேரம் காத்திருந்தும் அவனைக் காணப் பெறாமையால், விரைவில் காணும் பொருட்டு, அவ்வரசன் அருமையாக வளர்த்து வந்த வாயிலில் கட்டியிருந்த ஒரு செம்மறிக் கடாயின் காதுகளை அறுத்து அம் மன்னனால், ‘வளர்கடாயைக் காதறுத்த வணங்கா முடி வாணராயன்’ என்று பாராட்டப் பெற்றான். இவ்வாணராயர் மரபினர் பழந்தமிழ் மன்னர்க்குரிய வீரம், கொடை, புகழ் என்னும் முப்பண்பும் ஒருங்குடைய வராவர்; தம் தாய்மொழியாம் தமிழ் மொழி வளர்ப்பதையே கடமையாகக் கொண்டவர்; புலவரைப் போற்றிப் புகழொடு வாழ்ந்து வந்தனர். இவ்வாணராயர் மரபில், கி.பி.15ஆம் நூற்றாண்டில், வணங்காமுடி வாணராயர் என்பவர் இருந்தார். இவரது இயற்பெயர் தெரியவில்லை. சமத்தூர் வாணராயர் மரபினர் புகழைக் கல்மேல் எழுத்துப் போல் நிலைபெறச் செய்தவர் இவரே. இவர் தமிழை முறையாகக் கற்றுணர்ந்தவர்; தமிழ் இலக்கிய இலக்கணங்களில் நல்ல பயிற்சி உடையவர்; தமிழின் இனிமையை நன்கு சுவைத்தறிந்தவர்; எப்போதும் தமிழ்ப் புலவர்களால் சூழப்பட்டே இருப்பவர். இவரைத் தனியாகக் காண்பதே அரிது. பண்ணையத்தை மேற்பார்வை பார்க்கும் போதும் இரண்டொரு புலவர் உடனிருப்பர். தமிழ் நூல்களைப் படிப்பதும், தமிழ்ப் புலவர்கள் கூறும் பொருளுரையைக் கேட்பதுமே பொழுதுபோக்காக உடையவர்; தமிழ்ப் புலவர்கள் எதைக் கேட்டாலும் இல்லை என்னாமல் கொடுக்கும் இயல்புடையவர். வரையாது கொடுக்கும் வள்ளல் எனலாம். கொடைமடம் பட்டவர் தமிழர். கொடுத்தல் தமிழர்களின் பிறவிக்குணம். கேட்டுக் கொடுத்தல், கேளாது கொடுத்தல், அழைத்துக் கொடுத்தல், அளவின்றிக் கொடுத்தல், வற்புறுத்திக் கொடுத்தல், வரையாது கொடுத்தல் எனக் கொடையில் பலவகை யுண்டு. இரவலர் இன்னது ஈஎன இரக்க, அதை இல்லை என்னாமல் மனமுவந்து கொடுப்பதே இயல்பான கொடையாகும். பாரி முல்லைக்குத் தேர் கொடுத்ததும்; பேகன் மயிலுக்குப் போர்வை கொடுத்ததும்; கேளாமல் கொடுத்தக் கொடையாகும். கொடை முரசறைந்து கொடுத்தல் அழைத்துக் கொடுத்தலாகும். இலைக்கறி மேல் தூவும் மாவுக்காக கொஞ்சம் அரிசி வேண்டுமென்று கேட்க, ஆய் கன்றுடன் யானையைக் கொடுத்ததும், சேரமன்னர் சிலர் மலையேறிக் கண்ட நிலவரு வாயைக் கொடுத்ததும்; அளவின்றிக் கொடுத்த கொடையாகும். அதியமான் நெடுமான் அஞ்சி ஒளவைக்கு அருநெல்லிக்கனி கொடுத்தது வரையாது கொடுத்ததாகும். இவையெல்லாம் பழங்கொடை வகை. ஆனால் நமது வணங்காமுடி வாணராயர் கொடையோ புத்தம் புதிய புதுக்கொடையாகும். ஒருநாள் சமத்தூருக்கு ஒரு தமிழ்ப் புலவர் வந்தார். அவர் வணங்கா முடியை இனிய தமிழ்ப் பாட்டுக்களால் புகழ்ந்து பாடினார். பாட்டின் பொருளையுணர்ந்த வணங்கா முடி பெரிதும் மகிழ்ந்தார்; புலவரின் கவித் திறத்தை மெச்சினார்; புலவர்க்கு விருந்திட்டு மகிழ்வித்தார்; புலவரின் பொருளுறை யைக் கேட்டு இன்புற்றார். புலவர் வந்ததை மறந்து, விருந்துண்டு களித்து, வணங்காமுடியின் அன்புக் கயிற்றால் கட்டுண்டு கிடந்தார். அவர் பெருமுயற்சி செய்து அக்கட்டைச் சிறிது தளர்த்தி, போக விடைகேட்டார். புலவரைப் பிரிய மனமில்லாத வள்ளல் வாணராயர், ‘நாளைக்குப் போகலாம்’ என்றார். தளர்ந்த கட்டு மறுபடியும் இறுகியது. அதனால் புலவர் மறுமொழி பேசாது இருந்துவிட்டார். மறுநாட் காலையில் எழுந்ததும் போக விடை கேட்டார் புலவர். முன்னாட் சொன்னதை மறுக்க முடியாத வள்ளல், புன்னகை பூத்த முகத்துடன், சரி ‘தங்களுக்கு என்ன வேண்டும்? விரும்பியதைக் கேளுங்கள் தருகிறேன்’ என்றார். புலவர் மிகுந்த மானமும் நாணமும் உடையவர். மனத் திலுள்ளதைக் கேட்க அவர்க்கு வாய் வரவில்லை. கொடுத் ததை வாங்கிக் கொள்ளும் குணமுள்ளவர். கேட்டு வாங்கும் பழக்கம் அவர்க்கில்லை; அதனால், விரும்பியதைக் கொடுங்கள்’ என்றார். ‘தயங்க வேண்டியதில்லை; தங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள். எனக்கு விருப்பமானது தங்களுக்கு எப்படிப் போதும்; தாங்கள் விரும்புவது - தங்களுக்கு வேண்டியது இன்னதென எனக்கு எப்படித் தெரியும்? என் செல்வம் தமிழ்ச் செல்வம். அது தமிழ்ப் புலவர்க்கு உரியது. ஆகவே, தங்களுக்கு வேண்டியது எதுவானாலும் தயங்காமல் கேளுங்கள்’ என்றார் வள்ளல் வாணராயர். வள்ளலின் வற்புறுத்தலின்மேல் புலவர் தமக்கு வேண்டி யதை ஒருவாறு வெளியிட்டார். வணங்காமுடி மகிழ்ந்து, புலவர் விரும்பியதைவிடப் பன்மடங்கு கொடுத்து மகிழ்வித்தார். புலவர் பெருமகிழ்வடைந்து வணங்காமுடி வாணராயரின் தமிழ்ப் பற்றையும், வள்ளற்றண்மையையும், தமிழ்ப் புலவரிடத்துக் கொண்டு உள்ள மதிப்பையும் பலப்படப் பாராட்டி, வள்ளலை மனமார வாழ்த்தி விடைபெற்றுச் சென்றார். அன்றிரவு நெடுநேரம் வரையிலும் வணங்காமுடிக்குத் தூக்கம் வரவில்லை. அவர் கண் துஞ்சாமையால் மனமும் துஞ்சவில்லை. அப்புலவரின் நிலைமை அவர் மனத்தை வாட்டி வதைத்தது. பிறர் துயர்கண்டு பொறாத அவர் மனம் அதை எண்ணியெண்ணிப் புண்ணானது. ‘ஒருவர் எதிரில் நின்று, மானத்தையும் நாணத்தையும்விட்டு, எனக்கு இன்னது ஈயென இரத்தல் எளிதில் முடிவதொன்றோ? அவ்வாறு இரந்தும் இரக்கப் பட்டோர் இல்லையெனில் இரப்போர் நிலை என்னாவது? ஒழுக்கமே உருவெடுத்தாற்போன்ற புலவர் பெருமக்களுக்கு இது ஏற்ற செயலாகுமோ? அவர்கள் விரும்புவது இன்னவெனக் குறிப்பறிந்து கொடுப்பதும் எளிதில் ஆகக்கூடியதொன்றல்லவே; மானங்கெடாமல், நாணாமல் நடுங்காமல் அப்புலவர் பெருமக்கள் விரும்பியதை விரும்பிய வாறு பெறும்படி செய்வதெப்படி? அத்தமிழ்ச் சான்றோர்கள் செய்யுந் தமிழ்த் தொண்டுக்கு மானக் கேடா பரிசு? என்னே தமிழ்ப் பெரியார்களின் இரங்கத்தக்க இன்ன நிலை’ எனப் பலவாறு எண்ணி வருந்தினார். ஒரு வழியும் தோன்றவில்லை. வள்ளலின் கண்களோ துஞ்சவில்லை. முடிவில் ஒரு வழி கண்டார்; மனமுவந்து உறங்கினார். ஈவோரின் எதிரில் நின்று, எனக்கு இன்னது வேண்டும் என்று கேட்பதுதான் நாணந்தரும் செயலாகும். அது மான முடையவரால் செய்ய முடியாததொன்றே. ஆனால், ஓலையில் இன்னவேண்டும் என்று எழுதுதல் நாணந்தரும் செயலன்று. மனங் கூசாமல் எழுதலாம். எனவே, தம்மை நாடிவரும் பலரைத் தமக்கு வேண்டியதை எழுத்து மூலம் அறிவிக்கும்படி ஓர் ஏற்பாடு செய்தலே ஏற்றது என முடிவு செய்தார் வள்ளல் வாணராயர். அவ்வாறே அரண்மனைத் தலைவாயிலில் ஏடும் எழுத்தாணியும் கட்டித் தொங்கவிட்டார்; ‘அன்புகூர்ந்து தங்களுக்கு வேண்டியதை எழுதியனுப் புங்கள்’ என்ற விளம்பரப் பலகையையும் அவ்வேடெ ழுத்தாணியின் பக்கத்தில் தொங்க விட்டார். அதிலிருந்து வணங்காமுடியிடம் பரிசு பெறவரும் புலவர்கள், தங்களுக்கு வேண்டியதை அவ்வேட்டில் எழுதி விடுவர். ஏவலாள் கொண்டு போய் அதை வள்ளலிடம் கொடுப் பான். வள்ளல் வணங்காமுடி அவ் வோலையில் குறித்துள்ள தை அந்த ஆளிடம் கொடுத்தனுப்பி, புலவர் அதைப்பெற்று மகிழ்ந்த பின்னர் அங்கு வருவார்; புலவரை அன்புடன் வரவேற்று அரண் மனைக்குள் அழைத்துச் செல்வார்; விருந்திட்டு மகிழ்விப்பார்; புலவர் போக விரும்பின போது, முன்னர் ஆளிடம் கொடுத் தனுப்பிய பரிசுடன் பின்னரும் வேண்டிய பரிசுகள் கொடுத் தனுப்புவார். இத்தனிச் சிறப்புடைக் கொடைமுறை அவ்வணங்கா முடி வாணராயரின் வழிவழியாக நடந்து வந்தது. வணங்கா முடி கண்ட புதுவழி எப்படி? இத்தகைய வள்ளல்களை நம் தமிழ்நாடு என்று பெறுமோ! வாழ்க வாணராயரின் வண்புகழ். 4. பல்லவரயன் சிறுவன் கொங்கு இருபத்து நான்கு நாடுகளில் காங்கயநாடு ஒன்று. கொங்குப் பெருங்குடி மக்களின் நாகரிக நற்பண்புக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்வது காங்கய நாடு. காங்கயம் என்றவுடன் உலகப் புகழ்பெற்ற காங்கய மாடுகள் நம் கண்முன்னர் வந்து நின்று காட்சியளிக்கும். கண்பெற்றவர் ஒரு முறையாவது கட்டாயம் கண்டு களிக்கவேண்டிய அவ்வளவு அழகு வாய்ந்தவை அக் காங்கய மாடுகள். அழகு மட்டுமா! அவை அழகோடு ஆண்மையும் வாய்ந்தவை. காங்கய நாட்டின் மண் வளமும் அங்கு வளரும் கொழுக்கட்டைப் புல்லின் உயரிய உயிர்ச் சத்துமே காங்கய மாடுகளை அவ்வளவு வனப்பும் வன்மையும் உடையவை யாக்குகின்றன. காங்கய நாட்டின் சிறப்புக்குக் காரணமாய் இருப்பவை அக்காங்கய மாடுகளே யாகும். காங்கய நாட்டின் தலைநகர் காங்கயம் என்னும் ஊராகும். காங்கயம் என்னும் அவ்வூர், கோவைக் கோட்டம், தாராபுரப் கூற்றத்தில்,ஈரோடு தாராபுரம் வழியில், ஈரோட்டின் தெற்கே முப்பதாவது கல்லில் இருக்கிறது. காங்கயம் உடல் நலத்திற்கு ஏற்ற இடம். அங்கு வீசும் தூயக்காற்றே அதற்குக் காரணமாகும். காங்கயத்திற்குச் ‘சிங்கை’ என்ற பெயரும் உண்டு. காங்கயத்தின் ஊர்த்தலைவர் பல்லவராயர் என்னும் பட்டப் பெயரையுடைய கொங்கு வேளாள மரபினராவர். பல்லவராயர் மரபு வழிவழியாகச் சீரும் சிறப்புடன் திகழ்ந்து வந்த பழந்தமிழ்ப் பெருங்குடி மரபாகும். ‘பல்லவராயர்’ என்பது பல்லவ மன்னனை வென்ற திறமையைப் பாராட்டி ஒரு சோழ மன்னனால் வழங்கப்பட்ட வழிவழிச் சிறப்புப் பெயராகும். இப்பல்லவராயர் மரபுக்கு மும்முடி என்னும் பட்டப் பெயரும் உண்டு. பல்லவராயர் மரபினர் சிறந்த தமிழறிவுடையவராகவும், தமிழ்ப் புலவர்களைப் போற்றும் பெருங்குணம் படைத்த வராகவும் திகழ்ந்து வந்தனர். பழந்தமிழ்ச் செல்வர்க் கமைந்துள்ள வீரமும் கொடையும் பொறையும் இயல்பாக வே இப் பல்லவராயர் மரபினர்க்கும் அமைந்திருந்தன. ‘மும்முடி’ என்னும் சிறப்புப் பெயரும் வீரத்தால் பெற்ற பெயரேயாகும். இது முடியுடை மூவேந்தரின் மதிப்புக்கறி குறியான பெய ராகும். எனவே, முடியுடை மூவேந்தர்க்கும் படைத்துணை யாதற்குரிய பழம் பெருங்குடி பல்லவராயர் குடி என்பது பெறப்படும். மும்முடிக் கணபதிப் பல்லவராயர் என்பது இப்போதுள்ளவர் பெயர். இவர் காங்கயத்தின் கிழக்கு மூன்றாவது கல்லில் உள்ள ‘பட்டக் காரர்புதூர்’ என்னும் ஊரில் இருந்து வருகிறார். இவரும் நல்ல தமிழறிவும் தமிழ்ப்பற்றும் உடையவர். இச் சிங்கைப் பல்லவராயர் மரபில், கி.பி. 13-ம் நூற்றாண்டில் மும்முடிப் பல்லவராயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிறந்த தமிழறிவு டையவர்; தமிழ் இலக்கிய இலக்கணங்களை ஒருவாறு ஓதியுணர்ந்தவர். செல்வத்துட் செல்வமாகிய செவிச் செல்வத்தை நிரம்பப்பெற்றவர்; தம் தாய் மொழியாம் தமிழ் மொழியிடத்து அளவு கடந்த பற்றுடையவர்; தமிழ் மொழி வளர்ச்சியில் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் உடையவர்; தமிழ்ச் செல்வர்களின் கடமை தமிழ் வளர்ப்பதே என்னும் உண்மையை நன்குணர்ந்தவர்; தமிழ்ப் புலவர்க்கு இல்லையென்னாது கொடுத்துத் தமிழ் வளர்ப்பதையும்; ஈகையின் பயனான புகழ் ஈட்டுவதையும் தம் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டலர். பல்லவராயர் அரண்மனை எப்போதும் தமிழ்ப் புலவர்கள் தங்கும் இடமாக இருந்துவந்தது. தம்மை நாடி வரும் புலவர்களை வரவேற்பதும், விருந்திட்டுப் போற்று வதும், தமிழ்ச் செய்யுகளின் பொருளைக் கேட்டு இன்புறுவதும், புலவர்கள் விரும்பும் பரிசில் கொடுப்பதுமே பல்லவராயரின் வாழ்க்கை முறைகளாகும். ஆய் என்னும் வள்ளல் யானைக் கொடையில் சிறந்து விளங்கினது போலப் பல்லவராயர் ஆக்கொடையில் சிறந்து விளங்கினார். காங்கயம் ஆக்களுக்குப் பெயர் பெற்ற இடமல்லவா? பல்லவராயர் பல தமிழ்ப் பனுவல்களின் தலைவரானார். அவர் புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியது. புலவர் பெருமக்களால் பரப்பப்பட்டது. அதுதானே அன்னார் தொழில்! மும்முடி பல்லவராயர்க்குச் செல்வச் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் நடை வண்டியோட்டி விளையாடும் பருவத்தன். இப்பருவம் ‘பிள்ளைத் தமிழ்’ என்னும் நூலின் பத்துப் பருவங்களில் ஒன்று. அது ‘சிறுதேர்ப் பருவம்’ எனப்படும். சிறுதேர்- நடைவண்டி. அப்பருவம் இருபத் தொன்றாவது மாதத்தில் பாடுவது. தவழ்ந்து இருந்து எழுந்து நடந்து பழகும் சிறுவர்கள். விரைந்து நடந்து பழக நடைவண்டி. உருட்டிச் செல்வர். அச்செயலைப் புலவர்கள் அழகாகச் சிறப்பித்துப் பாடுவர். பல்லவராயருக்குச் சங்கிராம சோழன் என்னும் சோழ மன்னன் நண்பனாக இருந்தான் . அச்சோழ மன்னன். மணிகள் பதித்து அழகிய வேலைப்பாட்டுடன் செய்யப்பட்ட பொன் நடை வண்டி ஒன்றை அப்பல்லவராயன் சிறுவனுக்கு அன்பளிப் பாகக் கொடுத்தான் . சிங்கைச் சிறுவன் அந் நடை வண்டியை உருட்டி விளையாடிக் கொண்டிருந்தான். வறுமையால் வாடிய புலவரொருவர் பல்லவராயரின் புகழைக் கேள்விப்பட்டார்; அவ் வள்ளலைப்பாடிப் பரிசு பெற்றும் தம் வறுமை நோயைப் போக்கிக் கொள்ள எண்ணினார். காங்கயத்தை நோக்கி நடந்தார்; காங்கய மாடுகளின் கட்டழகைக் கண்டுகளித்த வண்ணம் பல்லவரா யரின் அரண்மனையை அடைந்தார்; பல்லவராயர் ஊரில், இல்லை யென்பதைக் கேள்விப் பட்டார்; வறுமையின் கொடுமையை எண்ணி மனம் வருந்தினார்; வருந்திய மனத்தோடு வெளி வாயிலுக்கு வந்தார். அவ்வெளி வாயிலில் பல்லவராயன் சிறுவன் நடை வண்டி யோட்டி விளையாடிக் கொண்டிருந்தான். புலவர் அச் செல்வச் சிறுவனை நோக்கிச் சென்றார். சிறுவன் புலவரை உற்றுபார்த்தான். சிறுவனின் முகமலர்ச்சியையும் அன்புப் பார்வையையுங் கண்ட புலவர் வறுமைப் பிணியால் உண்டான மனவருத்தத்தை மறந்து, சிரித்த முகக்துடன் அச்சிங்கைச் சிறுவன் பக்கத்தில் சென்றார். சிறுவன் புன்முறுவல்பூத்த முகத்துடன் புலவரையே பார்த்தான். ‘செல்வ! நின் தந்தை இப்போது ஊரில் இருந்திருப்பா ரானால் நான் மிகுந்த பரிசுபெற்றுச்செல்வேன்; நான் நெடுந் தொலைவிலிருந்து உன் தந்தையின் புகழைக் கேள்விப்பட்டு வந்தேன்; நான் நின் தந்தை மீது பாடி வந்த அருமையான தமிழ்ப் பாட்டுக்களைக் கூடப் படித்துப் பொருள் கூறி மகிழ முடியாமற் போனேன்; புலவர்கள் குறித்துவந்த இடத்துப் பரிசு பெறாது திரும்பிச் செல்லுதல் முறையன்று; நான் இது வரை அவ்வாறு சும்மா திரும்பிச் சென்றதில்லை’ என்றார் புலவர். புலவர் கூறிய அப்பொருளுரையைச் சிறுவன் கூர்ந்து கவனித்துவந்தான்; அவர் கூறிய அவ்வுரை அவனுக்கு ஒருவாறு புலனாயிற்று. வருத்தத்துடன் முகத்தைச் சுழித்தான். பல்லவ ராயர் அரண்மனை எப்போதும் புலவர்களால் பொலிவுற்று விளங்குவது; எந்நேரமும் தமிழ்க்கவிகளின் ஒலி ஒலித்து கொண்டே இருக்கும், புலவர்க்கு அள்ளியள்ளிக் கொடுக்கும் வள்ளன்மையுடைய வரல்லவா பல்லவராயர்? புலவர்கள் தந்தை மீது பாடிவந்த புகழ்கவிகளைப்படிக்கும் போதும் தந்தை அவர்கட்குப் பரிசில் கொடுக்கும் போதும் உடனிருந்து பழகிய வனல்லவா நம் செல்வச் சிறுவன்? ‘குலவித்தை கல்லாமல் பாகம் படும்’ என்பது உண்மையுரை யல்லவா? பாகம் - சரிபாதி. ‘தந்தையின் தகுதியை மைந்தரால் அறியலாம்’ என்பது வள்ளுவர் வாய்மொழியன்றோ? நம் பல்லவராயன் சிறுவன் அம் மொழியை மெய்ம் மொழியாக் கினான். இரண்டாண்டுகள் நிரம்பப் பெறாத நம் சிங்கைச் சிறுவன், தான் உருட்டிக்கொண்டு விளையாடும் அப்பொன் வண்டியை இருகையாலும் எடுத்து. ‘இதை வைத்துக் கொள்ளுங்கள்’ என்று தன் குதலைமொழியால் கூறிக் கொடுத்தான். அச் செந்தமிழ்ச் செல்வச் சிறுவனின் தாரள குணத்தைக் கண்ட புலவர் உவகைக் கடலில் மூழ்கினார். வியப்புக் கரையை அடைந்தார்; இதற்குக் காரணமான மும்முடிப் பல்லவராயரின் கைவன்மையை வியந்தார்; நன் மக்கட் பேற்றின் சிறப்பினை எண்ணியெண்ணி இறும் பூதடைந்தார்; ‘விளையும் பயிர் முளை யிலேயே தெரியும்’ என்ற முன்னோர் முதுமொழிக்கு இலக்கியமாக நின்ற அச்சிறுவனை இருகையாலும் வாரி யெடுத்து மார் போடணைத்தார்; அச்செல்வனின் பெருங் குணம் வாழ்க வாழ்க என வாழ்த்திய வண்ணம் மலர்ந்த முகத்துடன் அரண்மனைக்குட் சென்றார். அப்பெருங்குணச் செல்வனைப் பெற்றெடுத்த தாயினிடம் நடந்ததைக் கூறினார். தன்மகனின் மாண்பினைக் கேட்ட அன்னையார், அச் செந் தமிழ்ச் செல்வனை ஈன்ற பொழுதினும் பெரிதும் உவந்தார். புலவரிடம் இருந்து தம் மகனை வாங்கி, ‘நான் பெற்ற செல்வம் ’ என்று ஒரு முத்தம் கொடுத்தார். ‘இவன் தந்தையார் வந்து விடுவார், இருங்கள்’ என்று இன்சொல்கூறி, விருந்திட்டுப் புலவரைப் போற்றினார். புலவர் சிறுவனின் பெருங்குணத்தை வியந்தவண்ணம் இருந்தனர். வெளியில் சென்றிருந்த பல்லவராயர் வந்தார்; தம் செல்வனின் செயலைக் கேட்டு அளவிலா மகிழ்ச்சி கொண்டார்; புலவர் பாடிவந்த பாட்டைக்கேட்டு இன் புற்றார்; தம் செல்வன் கொடுத்த பரிசுடன் ஆடையும் அணியும் ஆவுங்கன்றும் பொன்னும் பொருளும் வேண்டிய அளவு கொடுத்தார். புலவர் பொன் வண்டியை அவ்விளம்வள்ளலுக்கே திருப்பித்தந்து, தந்தையையும் மைந்தனையும் வாயுற வாழ்த்தி விடை பெற்றுச் சென்றார். ‘குலத்தளவே யாகும் குணம்’ என்பது உண்மையுரை யாகிவிட்ட தன்றோ? அச்சிங்கை சிறுவனைப் போலப் பெருங் குணம் அமையும்படி தத்தம் மக்களை வளர்ப்பது தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் நீங்காக் கடமையாகும். 5. பாரியூரான் ஆய்க்குடி, கோதைமங்கலம், பழையனூர், கீரனூர், வீரசோழ புரம்,பூதப்பாண்டி போன்ற எத்தனையோ ஊர்ப் பெயர்கள் பழந்தமிழ்த் தலைவர்களின் நினைவுக் குறியாக நின்று நிலவுகின்றன. அவ்வூர்ப் பெயர்களைக் கேட்குந்தோறும் நம் முன்னோராகிய அப்பழந்தமிழ்த் தலைவர்களின் வீர வரலாறு நம் நினைவுக்கு வருகிறது. அந்நினைவு நம்மைத் தமிழ்ப் பற்றுடையராக்கு கின்றது. தலைவர்கள் பெயரை ஊர்க்கிட்டு வரும் வழக்கம் தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும். அத்தகு மரபில் வந்த பெயரே பாரியூர் என்பதும் , இவ்வூர், கோவை கோட்டத்தில், கோபிசெட்டி பாளையத் திற்குப் பக்கத்தில் இருக்கிறது. இதுநல்ல நீர்வளமும் நிலவளமும் குடிவளமும் உள்ள ஊர். இவ்வூர் நம்மைச் சங்க காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. ‘வேளாண்குலச் செல்வன், வேளிர் தலைவன்,‘வேள்’ என்னும் பட்டத்திற்குரியவன், முடியுடை வேந்தர் மூவர்க்கும் மகட்கொடை நேரும் மாண்புடை மரபினன், தொல்குடிக் குரியோன், வீரருள் வீரன், கொடை மடம் பட்டோன், முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல், தன்னாட்டு முந்நூறு ஊர்களையும் புலவர்க்குப் பரிசாகக் கொடுத்த பண்புடையோன், பரம்புக் கிழவன்., தமிழுக்காகப் பிறந்து., தமிழுக்காக உயிர் வாழ்ந்து , தமிழுக்காகவே உயிர்விட்ட தகைமையோன்., புலவரின் புகலிடம், இல்லோர் செல்வம் , சேர, சோழ, பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர் மூவரும் பொறாமை கொள்ளும் அவ்வளவு புகழோன்’ என்றெல்லாம் புலவரால் புகழ்ந்து பாடப்பெற்ற சங்ககால வள்ளல்களிலொரு வனான பாரியை நமக்கு நினைப்பூட்டுகிறது. அவன் வீர வரலாறு நம் உள்ளத்தைக் கிள்ளுகிறது; தமிழ்ப்பற்றை யுண்டாக்குகிறது. அவ்வூர் பரம்பிற் கோமான்பாரியின் நினைவுக் குறியாக நின்று நிலவுகிறது. பாரியூரை யடுத்து வடக்கில் பெரிய மலைத்தொடர் ஒன்று இருக்கிறது. அம் மலைமேல் ஊர்கள் பல உள்ளன. அது மிக்க வளம்பொருந்திய மலை. எங்கு பார்த்தாலும் வானுற வுயர்ந்த பல்வகை மரக்காடுகள், மா, பலா, முதலிய பழ மரச் சோலைகள், கண்ணுக் கெட்டிய வரையிலும் படர்ந் தடர்ந் துயர்ந்த மூங்கிற் றூர்கள்; தோசை தோசையாய்ச்சுவைமிக்க நறுந்தேன் கூடுகள், வற்றாத நன்னீர்ச்சுனைகள், மலைவீழும் நீரருவிகள்; இன்ன பல இயற்கை வளம் உடையது அம்மலை. பாரியின் உயிர் நண்பரான கபிலர்கூறும் புறநானூற்றுப் பாடலில் உள்ள பரம்பு மலையின் வளம் அப்படியே இன்றும் அமைந்துள்ளது அம்மலையில். இதுதான் பாரி என்னும் வள்ளல் இருந்த ‘பரம்புமலை’ என்கின்றனர். பாரியூரை அடுத்துள்ள அம்மலை மேற்குத் தொடர்ச்சி மலையின் கிளையாகும். அது கிழக்கு மேற்காகக் கொங்கு நாட்டின் வடக்கெல்லையாக அமைந்துள்ளது என்றுங் கூறலாம். தமிழ் நாட்டின் வடக்கு மலையரண் என்றுங் கூறலாம்., இம் மலைத் தொடரில் பல கணவாய்கள் உள்ளன. அவை சத்திய மங்கலத்துக்குப் பக்கத்தே உள்ள தலைமலைக் கணவாய் காவேரி புரங்கணவாய், தொப்பூர்க் கணவாய், பொன்முடிக் கணவாய் என்பன. முன்பு அக் கணவாய்களின் வழியாய் வடக் கத்தியார் கொங்கு நாட்டிற்குள் புகாமல் பாதுகாக்கப்பட்டு வந்தது. பொன்முடிக் கணவாயைத் தகடூரிலிருந்து அதியமான் மரபினரும், தொப்பூர், காவேரிபுரம் கணவாய்களை அமர குந்தியி லிருந்து கட்டி மரபினரும் காத்து வந்தது போலவே, தலைமலைக் கணவாயைப் பாரி மரபினர் காத்து வந்தனர் என்கின்றனர். இது ஆராய்ச்சிக்குரிய தொன்றாகும். தமிழ் ஆராய்ச்சி அறிஞர்கள் முயல்வார்களாக. எவ்வாறாயினும் பாரியூர் என்பது வள்ளல் பாரியின் பெயரால் ஏற்பட்ட ஊரேயாகும். பாரியூரை நினைக்கும் போதெல்லாம் பாரியின் வீரமும், கொடையும் எல்லையில்லாத் தமிழ்ப் பற்றும் நமது நினைவுக்கு வருதல் போற்றற்குரியதே. பாரியூரில் செட்டிப்பிள்ளையப்பன் என்னும் வள்ளல் ஒருவன் இருந்தான். அவன் கி.பி.13ஆம் நூற்றாண்டினன்; கொங்கு வேளாளரில், வடகரைக் கவுண்டர் என்னும் பிரிவைச் சேர்ந்தவன்; பெரும்பண்ணையக்காரன்; அவ்வூர்த் தலைவன் அவனே. அவன் சிறந்த தமிழறிவுடையவன்; வேள்பாரி போலவே இப் பாரியூரானும் வரையாது கொடுக்கும் வள்ளலாக விளங்கினான்; தன்னைப் பாடிவரும் தமிழ்ப் புலவர்களுக்கு மாரியும் நாணும் வண்ணம் வாரிவாரிக் கொடுத்தான்; பாரியின் பெயர் கொண்டுள்ள ஊரினனா தலால், அப்பாரிபோலவே கொடுத்துத் தன் மரபினனான பாரியின் பெயரை விளங்கச் செய்து வந்தான். தண்டாமரை மலரில் தேனுண்டு களிக்கும் வண்டுகள் போல, புலவர்கள் தண்டமிழ்ச் செல்வனான பாரியூரான் மனையில் விருந்துண்டு களித்து வந்தனர். பாரியூரான் புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியது. பண்ணைய வருவாய் புலவர்களின் பரிசானது. பணப்பெட்டி காலியானது. கடன்பட்டுங் கொடுத்து வந்தான்; வறுமைக் காளானான்; பண்ணையில் பெரும் பகுதியை இழந்து ஏழை யானான்; எனினும், தன்னை நாடிவரும் தமிழ்ப்புலவர்களுக்கு இல்லை யென்னாமல் இயன்றதைக் கொடுத்து வந்தான். ‘நான் வறியவன்; என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் - இல்லை’ என்று ‘இலம் என்னும் எவ்வம் உரைப்பது நற்குடிப் பிறந்தவர்க்கு இயல்வ தொன்றோ? ஒருபோதும் இயலாது, பாரியும் இவ்வாறு தானே செய்தான்? பாரி ஊரான் வேறு என்ன செய்வான்? தன் முன்னோன் வழியையே பின்பற்றி வந்தான். ஒரு நாள் புலவர் ஒருவர் பாரியூர் வந்தார்; பாரியூரான் அன்புடன் வரவேற்றான். புலவர் பாரியூரான் கொடைத் திறத்தையும் தமிழ்ப் பற்றையும் பலவாறு புகழ்ந்துபாடினார். அவர் அறிவாரா இவன் நிலைமையை? புலவரின் கவித் திறத்தைக் கண்டு பாரியூரான் மகிழ்ந்தான்; அன்போடு உணவிட்டுப் போற்றினான்; புலவரோடு அளவளாவினான்; புலவரின் தமிழ்ப் புலமையைக் கண்டு களிப்புற்றான்; இரவு பத்துமணி வரையிலும் தமிழின்பத் தேனுண்டு களித்தான்; புலவரைப் பஞ்சணையில் படுக்கவைத்துத் தானும் பக்கத்துக் கட்டிலில் படுத்துக் கொண்டான். ஆனால், அவன் தூங்க வில்லை. அவனுக்குத் தூக்கம் வரவில்லை. புலவரோ பெரும் புலமையுடையவர். அவரது கல்வியின் தரத்திற்கு ஆயிரம் பொன் கொடுத்தாலும் போதாது. பாட்டுக்குப் பன்னூறாயிரம் பணம் பரிசு கொடுத்துத் தமிழ் வளர்த்த வள்ளல்களின் வரலாற்றை அறிந்தவனல்லவா நம் பாரியூரான்? தானும் வாரி வாரிக் கொடுத்துப் பழகியவனல்லவா? வீட்டிலோ பணம் இல்லை, பொழுது கிளம்பியதும் எழுந்து புலவர் போகிறேன் என்றால் என் செய்வான் பாவம்! இல்லையென்று சொல்லவோ அவன் நாவுக்குப் பழக்கமில்லை. எப்படித் தூக்கம் வரும்? பாடிவந்த புலவர்க்குப் பரிசு கொடுக்கப் பணம் இல்லையே என்ற மனக்கவலை அவனைத் தூங்கவிடவில்லை. ‘புலவர் போகிறேன் என்றால் என் செய்வது? ஒன்றுங் கொடாமல் ‘போய் வாருங்கள்’ என்பதா? அல்லது, ஏதாவது வேண்டுமென்று கேட்டால் இல்லையென்பதா? கையிலோ காசில்லை. நம்மைவிட இவ் ஊரில் வேறு பணக்காரரும் இல்லை. பொருள் உள்ள போது கேட்டால் யாரும் இல்லை யென்னாது கொடுப்பார்கள். இல்லாதபோது கேட்டால் எவரும் இல்லையென்றுதான் சொல்வர். இது மக்கள் மனப் பான்மை. இயல்பென்றுங் கூடச் சொல்லலாம். “இல்லானை இல்லாளும் வேண்டாள்; ஈன்றெடுத்த தாய் வேண்டாள்; செல்லாதவன் வாயிற்சொல்” என்பது நாட்டு நடப்பின் படப் பிடிப்பன்றோ? புலவர் போகிறேன் என்றால், ‘இருங்கள் வருகிறேன்’ என்று புலவரைத் தனியாக வீட்டில் விட்டு விட்டு நாம் வெளிச் செல்வதோ முறையன்று. யாரைப் போய்ப் பணம் கேட்பது? மேலும் கேட்டவுடன் யார் இந்தாவென்று தூக்கித் தரப் போகிறார்கள்?’ என்று அவன் பலவாறு எண்ணினான். ஒருவழியும் தோன்றவில்லை. ஒருவரிடம் சென்று எனக்கு இன்னது வேண்டும் என்று கேட்பது சிறுமை. அவ்வாறு கேட்போருக்கு இல்லையென்று சொல்வது சிறுமையினும் சிறுமை. இவரோ பெரும்புலவர்; நம்மை நாடி வந்திருக்கிறார்; எவ்வளவு வேண்டுமோ? நம்மீது பாடிவந்த புலவர்க்கு இல்லையென்பது நமக்கும் நம் மரபுக்கும் வசை தேடிக் கொண்டதாகும்; வழிவழியாகப் புலவர் பாடும் புகழொடு வாழ்ந்து வந்த நம் குடிக்கு இழுக்கை உண்டாக்கக் கூடாது; இன்னானால் அவன் மரபின் புகழ் கொல்லப்பட்டது என்ற பெயரெடுக்கக் கூடாது. ஒருவர்க்குப் புகழும் பழியும் புலவர்கள் வாய்ச் சொல்லால் உண்டாகின்றன. பரிசில் வேண்டி வந்த புலவர்க்கு இல்லையென்பது மானக்கேடாகும். மானங் கெடவரின் உயிர்விட்டேனும் மானங்காப்பதன்றோ தமிழர் மரபு? புலவர்க்கு இல்லையென்று சொல்லி வசையைத் தேடிக் கொள்வதைவிட, இசையை நிலைநிறுத்தி இறப்பதேமேல்’ என அவன் முடிவு செய்தான். எவ்வாறு இறப்பது? வெடியால் சுட்டுக் கொள்வதோ, கத்தியால் குத்திக் கொள்வதோ தற்கொலையாகும். தற்கொலை செய்து கொள்வது அறிவுடன் பட்ட செயலன்று. தற்கொலை தகாச்செயல்; தற்கொலையினும் புலவர்க்கு இல்லையென்பது தகாச் செயலன்றோ! மேலும், பரிசு கொடாமல் பாடி வந்த புலவரைத் தூங்க வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்வது நற்குடியிற் பிறந்த ஓர் ஆண்மகனின் செயலாகுமோ? இன்ன செய்வதென்று தோன்றாது அவன் இருதலைக் கொள்ளி எறும்பு போல் திண்டாடினான். முடிவில் அவனுக்கு ஒரு வழி தோன்றிற்று. பாரியூர்க்குப் பக்கத்தே பெரிய காடு ஒன்று இருந்தது. அது மலையையடுத்த காடு, அக்காட்டில் ஒரு புலித்தூறு இருந்தது. அப்புலி ஆடுமாடுகளையும், அவ்வழிச் செல்வோரையும் கொன்று தின்று வந்தது. அப்புலித்தூறில் புகுந்து புலிக்கு இரையாகி விடுவதெனத் தீர்மானித்தான் வள்ளல். புலி கொல்வதால் அது தற்கொலையல்ல வென்பது அவன் முடிவு; மெதுவாகக் கட்டிலைவிட்டு எழுந்தான்; பிறரறியாமல் வெளியே சென்று அக்காட்டை அடைந்தான்; அப்புலித்தூறை நோக்கிச் சென்று கொண்டி ருந்தான். பக்கத்து ஊரில் கொள்ளையிட்ட கள்வர்கள், தாங்கள் கொள்ளையிட்ட பொருளை அப்புலிப் புதரின் மறைவில் பங்கிட்டுக் கொண்டிருந்தனர். இது பாரியூரானுக்குத் தெரியாது. அவன் தங்களை நோக்கி வருவதைத் திருடர்கள் கண்டனர்; திருட்டுக் கொடுத்தவர்தான் தேடிக்கொண்டு வருகிறார் என எண்ணினர்; அச்சத்தால் அப்பொருளை அப்படியே போட்டு விட்டு ஓடிவிட்டார்கள். பாரியூரான் புலித்தூறை யடைந்தான்; கூறுகூறாகக் கிடந்த பணக்குவியலைக் கண்டான்; ஒருவாறு மகிழ்ந்தான். பிறர் பொருளெனினும் புலவர்க்குக் கொடுக்கத்தானே என்று துணிவு கொண்டான்; மேலும் அது கொள்ளை கொண்ட பொருள் தானே? அப்பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு வீட்டை யடைந்தான்; புலவர் அறியாமல் தன் கட்டிலில் படுத்துக் கொண்டான். காலையில் எழுந்ததும் நடந்ததைக் கூறி, அப்பணம் அவ்வளவையும் அவன் புலவர்க்குக் கொடுத்தான். புலவர் பாரியூரான் தமிழ்ப்பற்றையும், வள்ளன்மையையும், பெருங் குணத்தையும் மெச்சினார்; பைந்தமிழ்ப் பாக்களால் பலபடப் பாராட்டினார்; தமக்கு வேண்டிய அளவு எடுத்துக் கொண்டு, ‘இதை வைத்துக் கொள்க’ என்று மீதிப் பணத்தை வள்ளலுக்கே திருப்பித் தந்துவிட்டு விடைபெற்றுச் சென்றார். பாரியூரான் கொள்ளை கொடுத்தவரை வரவழைத்து, நிகழ்ந்ததைக்கூறி, அம்மீதிப் பணத்தைக் கொடுத்துவிட்டான். பார்த்தீர்களா பாரியூரான் தமிழ்ப் பற்றை! 6. பொப்பண காங்கேயன் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்றார் வள்ளுவர். புகழொடு தோன்றுதல் - புகழொடு வாழ்தலே யாகும். அதாவது, புகழுக் கேதுவாகிய நல்ல செயல்களைச் செய்து வாழ்தல். அவ்வாறு புகழொடு வாழ்வார் சிலரே. அவருள்ளும் வழிவழிப் புகழோடு வாழ்வோர் பெருங்குடும்பம் மிகச் சிலவே. இது அருமையும் ஆகும். அப்படிப் புகழொடு வாழ்ந்தாலும் இரண்டு மூன்று தலைமுறைக்குமேல் இருப்பது மிகவும் அரிதே. இதற்குத் தப்பிய சில குடும்பங்களே பல தலைமுறை மாறாப்புகழுடன் வாழ்ந்து வரும். அத்தகைய தொல் குடும்பங்களுக்கே மரபு என்னும் சிறப்புப் பெயர் உரியதாகும். சேரர் மரபு, சோழர் மரபு, பாண்டியன் மரபு, அதியமான் மரபு, மலையமான் மரபு, சடையன் மரபு எனக் காண்க. இம்மரபுகள் தொன்றுதொட்டுத் தொடர்ந்த புகழொடு பொலிந்த தொன்மரபுகள். இத்தகைய மாறாத் தொடர்பமைந்த வழிவழிப் புகழுடைய மரபுகளில் ‘மோரூர்க் காங்கேயர் மரபும்’ ஒன்று. தமிழ் மொழி யுள்ளளவும், ஒரு தமிழன் உயிரோடுள்ளளவும் நின்று நிலவும் நீள் புகழுடைய மரபாகும், மோரூர்க் காங்கேயர் மரபு! மோரூர் என்பது சேலங்கோட்டத்தில் திருச்செங் கோட்டுக்கு எட்டுக்கல் தொலைவில் இருக்கிறது. இது மிகமிகப் பழமையான பழவிறலூர்; புலவர் நாவிற் பொலியும் புகழுர். மோரூர்க் காங்கேயர் குடும்பமும் பழம்பெருமை வாய்ந்த வேளாண் குடும்பமாகும். இக்குடும்பத்தினர் கொடை, படை என்னும் இருவகைப் புகழும் உடையவர்; தமிழ் வளர்ப்பதையே தங்கள் குலப் பெருமையாகக் கொண்டவர். தமிழ்த்தாய்க்கு இம்மரபினர் செய்துள்ள அரும்பெருந் தொண்டுகள் பலப்பல. இக்காங்கேயர் மரபில் தோன்றிய சூரிய காங்கேயன் என்பவன் சிறந்த படைவீரன்; மிகுந்த வெற்றிப் புகழை யுடையவன்; புலவர் பாடும் புகழுடையோனாய் வாழ்ந்தவன்; பல தமிழ்ப் பனுவல் மாலைகள் சூடியுள்ளான்; ஒரு புலவரைப் பொன்முழுக் காட்டிய புகழாளன். தமிழில் ‘அகரவரிசை’ (அகராதி) தோன்றுமுன் சொற் பொருளறிய நிகண்டு கற்று வந்தனர். பிங்கல நிகண்டு, திவாகர நிகண்டு, சூடாமணி நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, ஆசிரிய நிகண்டு எனத் தமிழில் பல நிகண்டுகள் உள்ளன. உரிச்சொல் நிகண்டு செய்த காங்கேயன் என்பவன் இம்மரபினனே. இவன் நூல் செய்யும் புலவனாக இருந்ததோடு, பெரு வீரனாகவும், பெருங்கொடை வள்ளலாகவும் இருந்தான். உரிச்சொல் நிகண்டு வெண்பாவினால் ஆனது. தொண்டை மண்டலத்துப் பொன்விளைந்த களத் தூரினரான படிக்காசுப் புலவர்க்குத் தந்தப் பல்லக்குக் கொடுத்த குமார காங்கேயன் என்பானும் இம்மரபினனே. சங்ககிரியி லிருந்த எம்பெருமான் என்னும் புலவரைக் கொண்டு ‘தக்கை’ என்னும் ஒருவகை இசையினால், தக்கை ராமாயணம் செய்வித்த நல்லதம்பிக் காங்கேயன் என்பவனும் இம்மரபினனே. இம் மோரூர்க் காங்கேயர் மரபில், கி.பி.12ஆம் நூற் றாண்டில் பொப்பண காங்கேயன் என்னும் பெருந்தகையாள னொருவன் இருந்தான். மோரூர்க்காங்கேயர் குடும்பத்தின் இடையறாப் புகழுக்கு இவனே காரணமாவான். பொப்பணன் தமிழ் இலக்கிய இலக்கணங்களை முறையாகப் படித்தவன்; மிகுந்த தாய்மொழிப் பற்றுடையவன்; தமிழ் வளர்ப்பதையே தன் கடமையாகக் கொண்டவன்; தமிழ் வளர்ப்பதற் காகவேயுள்ள தமிழ்ப் புலவர்களைப் போற்றித் தமிழ் வளர்த்து வந்தான். பழந்தமிழ்ப் பாட்டுக்களைக் கேட்பதில் பொப்பணன் மிகுந்த ஆர்வமுள்ளவன்; தன்னிடம் பரிசுபெற வரும் புலவர் களைப் பழந்தமிழ்ச் செய்யுட்களுக்குப் பொருள் கூறுமாறு கேட்டு இன்புறுவான்; பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டு, பழந்தமிழர்களாகிய தன் முன்னோரின் பெருமையை எண்ணியெண்ணி இன்புறுவான்; அன்னாரின் கொடை, வீரம், புகழ், ஒழுக்கம், உயர்வு, அரசியல் முதலிய வாழ்க்கை முறைகளைத் தன் கண்முன் கொண்டு வந்து களிப் புறுவான். தன்னையொரு பழங்கால தமிழ்ச் செல்வனாகவே எண்ணி வாழ்ந்து வந்தான் பொப்பணன். அவன் வாழ்க்கை முறையும் அவ்வாறே தான் அமைந்திருந்தது. பெருங்காப்பியம், சிறுகாப்பியம் எனத் தமிழ்க் காப்பியம் இருவகைப்படும். சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பன பெருங் காப்பியங்கள், பெருங்கதை, சூளாமணி, நாககுமார காவியம், உதயணகுமார காவியம், யசோதர காவியம் என்பன சிறுகாப்பியங்கள். ஐம் பெருங் காப்பியங்களில் தலையாயது சிலப்பதிகாரம். சிலப்பதி காரம் இளங்கோவடிகள் என்னும் புலவர் பெருமகனால் செய்யப் பட்டது. இவர் சேரன் செங்குட்டுவன் தம்பியாவர். சிலப்பதிகாரம் சிறந்த தமிழ்ப் பெருங்காப்பியம், அது தமிழ் நாட்டின் அக்கால நாகரிக நிலையை நம் கண்முன் காட்டும் காலக்கண்ணாடி. சிலப்பதிகாரத்திற்கு ‘அரும்பதவுரை, அடியார்க்கு நல்லார் உரை’ என்னும் இரண்டு பழைய உரைகள் உள்ளன அவ்வுரைகள் இல்லையேல் சிலப்பதிகாரத்தின் பொருளை நாம் அறிந்து இன்புற முடியாது. அரும்பதவுரை தமிழில் நல்ல புலமையுடை யார்க்கே பயன்படுவதாகும். அடியார்க்கு நல்லாருரையே தமிழ் மக்கள் எல்லோரும் சிலப்பதிகாரத்தின் சீரிய கருத்தைத் தெரிந்து கொள்ள உறுதுணையாக உள்ளது. அடியார்க்கு நல்லார் சிலப்பதி காரத்திற்கு உரையெழுதிய வரலாறு அறிந்தின் புறத்தக்க தொன்றாகும். அடியார்க்கு நல்லார் பொப்பண காங்கேயன் காலத்தவர்; கொங்கு நாட்டினர்; கோவைக் கோட்டத்தினர்; நிரம்பை என்னும் ஊரினர். நிரம்பை என்னும் ஊர், ஈரோடு கோவை வழியில், ஈரோட்டின் மேற்கில் 16-வது கல்லில் உள்ள விசய மங்கலம் என்னும் ஊருக்கப் பக்கத்தில் இருந்தது. இவ்வூர் கொங்கு இருபத்து நான்கு நாட்டில் குறும்பி நாட்டைச் சேர்ந்தது. குறும்பி நாட்டு ஊர்த்தொகைச் செய்யுளில் நிரம்பை என்னும் ஊர் வந்துள்ளது. ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்றான ‘பெருங்கதை, கொங்கு வேண்மாக்கதை’ என வழங்கும் உதயணன் கதை ஆசிரியரான ‘கொங்கு வேள்’ என்பவர் விசயமங்கலத்தவர் என்பதை அறியுங்கள். நூலாசிரியர், உரையாசிரியர் எனப் பழந்தமிழ்ப் புலவர்கள் இருவகைப்படுவர். நூலாசிரியரினும் உரை ஆசிரியரே சிறந்த வராவர். நூல் செய்வதைவிட ஒருவர் செய்த நூலுக்கு ஆசிரியர் கருத்தறிந்து உரை கூறுவது கடினம். சிறந்த உரையினாலேதான் ஒரு நூலின் பெருமை வெளிப்படும். நூலாசிரியர் பெருமைக்கு உரையாசிரியரே காரணமாவர் என்றுகூடச் சொல்லலாம். இதனாலேதான் நூலாசிரியரினும் உரையாசிரியர் நன்கு மதிக்கப் பட்டனர். முன்னர்ப் பன்னூற்றுக்கணக்கான நூலா சிரியர்கள் இருந்திருக்க, ஒரு சில உரையாசிரியர்களே இருந் திருப்பது உரையின் சிறப்புக்குச்சான்றாகும். நூலென்னும் குளத்திற்கு உரையே கரையாகும். வீட்டுக்கு விளக்குப் போன்றது பாட்டுக்கு உரை. அடியார்க்கு நல்லார் சிறந்த தமிழ்ப் புலமையுடையவர்; இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் முழுத் திறமை யுடையவர்; இல்லையேல், முத்தமிழ்ப் பெருங்காப்பியமாகிய சிலப்பதிகாரத்திற்கு எங்ஙனம் விரிவுரை யெழுத முடியும்? பழந்தமிழ்ச் செய்யுட்களுக்குப் பொருள் கூறுவதில் அவர் தலைசிறந்தவர். அவர் ஒரு சிறந்த உரையாசிரியர் என்பது சுருங்கக் கூறி விளங்க வைத்தலாகும். இளமையிலிருந்தே தான் ஒரு சிறந்த உரையாசிரியர் ஆக வேண்டும் என அவர் ஆர்வங் கொண்டார்; அவ்வாறே முயன்று கற்றுச் சிறந்த உரையாசிரியரானார். பிற தமிழ்ப் புலவர்கள் போல் கவிபாடிப் பரிசு பெற்று வாழும் தொழிலை அடியார்க்கு நல்லார் மேற் கொள்ள வில்லை. பழந்தமிழ்ப் பாட்டுகளுக்குப் பொருள் கூறிப் பரிசில் வாழ்க்கை நடத்தி வந்தார். காரணம், கவிபாட தெரியாத தனால் அல்ல; அவர் சிறந்த கவித் திறமையுடையவர். ‘புதிதாகக் கவிபாடுவதை விடப் பழம் பாட்டுக்களின் பொருளை எடுத்துக் கூறுவதே சிறந்த தமிழ்த் தொண்டாகும். இல்லையேல், அப்பழம் பாட்டுக்கள், படிப்பாரற்றுப் போவதோடு, நம் முன்னோர்கள் அருமையாகச் செய்து வைத்த அச்செய்யுட்கள் இறந்தொழியவும் ஏதுவாகும். அவை இறந்தொழியின், தம் முன்னோர் வாழ்க்கை முறைகளைப் பிற்காலத் தமிழ் மக்கள் அறிய முடியாமல் போய்விடும். பழந்தமிழ்ச் செய்யுட் கருத்துக்களை நாட்டில் பரப்பாவிட்டால் தமிழர் வாழ்க்கை முறையே மாறு பட்டு விடும்’ என்னும் உண்மையுணர்வேயாகும். அதனால் தான் இவர் பழந்தமிழ்ப் பாட்டுக்களுக்கு உரை சொல்வதையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டார்; பழந்தமிழ் மக்களின் கொடை, வீரம், புகழ், நேர்மை முதலிய வாழ்க்கை முறைகளை விளக்கிக் கூறித் தமிழ்ப் பொது மக்களுக்குத் தமிழறிவும், தமிழ்ப்பற்றும், தமிழினவுணர்ச்சியும் ஊட்டி வந்தார். தமிழ்ச் செல்வர்கள் இவர் உரைக்கு உரையாய் பொன்னை வரையாது கொடுத்து ஊக்கி வந்தனர். அடியார்க்கு நல்லார் பொப்பணனது தமிழ்ப் பற்றைக் கேள்வியுற்றார்; அச்செந்தமிழ்ச் செல்வனைக் காண விரும்பினார்; மோரூர் சென்றார். பொப்பணன் புலவரை அன்புடன் வரவேற்றான். பிற புலவர்கள் போல் இவர் பொப்பணன்மேல் கவிபாடிக் கொண்டு வரவில்லை; பின் என் செய்தார்? சங்கச் செய்யுட்கள் சிலவற்றிற்கு விரிவுரை கூறினார். பொப்பணன் அளவிலா மகிழ்ச்சியடைந்தான்; தனது கொள்கையுடைய புலவரொருவர் தானாக வந்து கிடைத்ததை எண்ணியெண்ணி இறும்பூதெய் தினான்; புதுவிருந்திட்டுப் புலவரை மகிழ்வித்தான்; அன்பு கலந்த உரையால் அளவளாவினான்; பல பகல் புலவரின் பொருளுரையைக் கேட்டு இன்புற்றான்; புலவரது பொருள் கூறுந் திறமையை வியந்தான்; அடியார்க்கு நல்லாரைக் கொண்டு உரையில்லாத சங்க நூல்களுக்குச் சிறந்த உரை யெழுதி தமிழ் மக்களுக்கு உதவ எண்ணினான். ஐம்பெருங் காப்பியங்களில் தலையாய சிலப்பதிகாரத் திற்கு விளக்கமான உரையில்லை. தமிழ்த்தாயின் கண்போன்ற சிலப்பதிகாரம் தமிழ் மக்களால் படித்தின்புற முடியாமல் இருக்கிறது. அதற்குச் சரியான விரிவுரை எழுதுவிக்க வேண்டும் என முடிவு செய்தான்; தனது கருத்தைப் புலவரிடம் தெரிவித்தான். அதே கருத்துடைய அடியார்க்குநல்லார் அத்தமிழ் தொண்டை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். பெருங்காப்பியமாகிய சிலப்பதிகாரத்திற்குப் பேருரை எழுதப் பலமாதங்கள் ஆகுமன்றோ? அது வரை புலவர் குடும்பத் தைவிட்டுத் தனியாக இருப்பது முறையல்லவே. குடும்பத்தின் நினைவு வந்தால் புலவர் கவலையுற நேரும். மனக்கவலை தெளிவான உரையெழுதுவதற்கு இடையூறு செய்யும். எனவே, புலவர் குடும்பத்தை வரவழைத்துத் தன் வீட்டிலேயே வைத்துக் கொள்வதே நலமென எண்ணினான் வள்ளல்; அவ்வாறே புலவர் குடும்பத்தை வரவழைத்துத் தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டான். வறுமையே வடிவான புலவர் குடும்பம் செல்வக் குடும்பமானது. புலவர் குடும்பம் பொப்பண காங்கேயன் குடும்பத்துடன் ஒன்றுபட்டது. குடும்பக் கவலை புலவர் மனத்தை விட்டகன்றது. முத்தமிழ்ப் பெருங்காவியமாகிய நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்திற்கு உரை யெழுதத் தொடங்கினார் புலவர். உரை எழுதவெழுத பொப்பணன் அவ்வப்போது படித்து மகிழ்ந்தான்; அடியார்க்கு நல்லாரின் உரையெழுதுந் திறத்தினை வியப்பான்; உரையின் சிறப்பினைப் பாராட்டு வான். புலவர் ஒரு செல்வக் குடி மகன் போலக் குடும்பக் கவலையும் சோற்றுக் கவலையும் இன்றி உரையெழுதி வந்தார். இதை ஒரு புலவர், “பொப்பண காங்கேயர் கோனளித்த சோற்றுப் பெருக் கல்லவோ தமிழ் மூன்றுரை சொல்வித்ததே” என்று பாராட்டி யுள்ளனர். ஒரு நாள் பகலுணவுக்குப் பின்னர்ப் புலவர் உரையெழுதிக் கொண்டி ருந்தார். அது முதுவேனிற் காலம். ஒரு வேலைக்காரன் புலவர்க்குப் பின்னின்று விசிறி வீசிக் கொண்டிருந்தான். அவ்வேலைக்காரனைச் சுருக்காக வேறொரு பக்கம் அனுப்ப வேண்டியிருந்தது. விசிறி வீசுவதை நிறுத்தி விட்டுப் போகச் சொல்வது முறையன்று. வேறு ஆளும் அப்போது அங்கில்லை. எனவே புலவர்க்குத் தெரியாது பொப்பணன் விசிறியை கொண்டு வேலையாளை அனுப்பினான். பெரிய விசிறியைப் பிடித்து வீசிப்பழக்க மின்மையால் பொப்பணன் விசையாக வீசினான். புலவர் ‘மெதுவாக’ என்றார். பொப்பணன் மிகவும் மெதுவாக வீசினான். புலவர் திரும்பிப் பார்த்தார்; வள்ளல் விசிறி வீசிக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்; இருக்கையை விட்டெழுந்தார்; என்ன இருக்க என்ன செய்தீர்கள்? தமிழ்ப் புலவர்க்கு அள்ளியள்ளிக் கொடுக்கும் தங்கள் கார் வளக்கையா இத்தொழில் செய்யத்தக்கது? தங்கள் தமிழன்புக்கு எல்லையே இல்லை போலும் என்றார். ‘தங்களுக்குச் செய்யுந் தொண்டு தமிழன்னைக்குச் செய்யுந் தொண்டாகும். இத்தமிழ்த் தொண்டு செய்யக் கொடுத்து வைத்ததற்கு நான் பெரிதும் மகிழ்கிறேன்’ என்று தன் அன்பை வெளியிட்டான் பொப்பணன். என்னே காங்கேயன் தமிழ்ப் பற்று! உரையெழுதி முடிந்தது. புலவரைப் பொன் முழுக் காட்டினான் பொப்பணன்; முத்துச் சிவிகையில் ஏற்றி ஊர்வலஞ் செய்தான்; பல புலவர்கள் முன்னிலையில் சிலப்பதி கார அடியார்க்கு நல்லார் உரை’யை அரங்கேற்றி மகிழ்ந்தான். மோரூர்ப் பொப்பண காங்கேயன் தமிழ்ப் பற்றன்றோ நமக்கு அடியார்க்கு நல்லார் உரையைத் தந்தது! 7. ஐவேலசதி சேலங் கோட்டத்தில் சங்ககிரி என்னும் ஊர் இருக்கிறது. இது சேலம் பவானி வழியில். பவானிக்குப் பன்னிரண்டு கல் கிழக்கில் உள்ளது. இது ஒரு பழஞ் சிறப்பினையுடைய மூதூர். இங்குள்ள மலைமீது ஏழு சுற்றுக் கற்கோட்டை இருக்கிறது. அக்கோட்டை வரலாற்றுச் சிறப்புடையதாகும். அது மதுரையிலிருந்து தமிழ்நாட்டை ஆண்டு வந்த நாயக்க மன்னரின் அரசியல் அலுவலகமாகவும், மைசூரை யாண்ட திப்புச் சுல்தானின் படைவீடாகவும் இருந்து வந்தது. தென்னாடு ஆங்கில ஆட்சிக்கு உட்பட்டபின் அது ஆங்கிலப் பாசறையானது. சென்னைக்கும் கள்ளிக்கோட்டைக்கும் இடை யிலுள்ள இதை நடு நிலைப்படை வீடாக வைத்துக் கொண்டு ஆங்கிலேயர் தென்னாட்டுப் போரை நடத்தி வந்தனர். எத்தனையோ தமிழ்நாட்டு மறக்குடித் தலைவர்களுக்குக் கொலைக்களமாக அமைந்திருந்தது இக்கோட்டை. சங்ககிரிக்கு இரண்டு கல் கிழக்கில் ஐவேலி என்னும் ஓர் ஊர் இருந்தது. அது சங்ககிரியைச் சேர்ந்தது. அது ஒரு சிற்றூராயினும் புலவர் நாவில் பொலியும் பெருமையுடைய ஊராகும். அது ‘ஐவேல்’ எனவும் வழங்கும். ஐவேலியில் அசதி என்னும் இடைக்குலத் தலைவன் ஒருவன் இருந்தான். இடையர் என் போர் முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலங்களில் ஒன்றான முல்லை நில மக்களாவர். அசதி பெருஞ் செல்வமும் அதற்கேற்ற கொடைக் குணமும் உடையவன்; கொடைக் குணம் உள்ளவரிடத்து மறக்குணமும் அமைவது இயல்பு. எனவே, அசதி பெரு வீரனாகவும் விளங்கினான். அவன்தான் அவ்வூர்த் தலைவன். அவன் பெரிய பண்ணைக் காரன்; ஏராளமான ஆடுமாடுகள் வளர்த்து வந்தான்; அதாவது பெரிய கால்நடைப் பண்ணை உடைய வனாக இருந்தான். அவன் ஆடுமாடுகளை மிகுந்த அக்கறையாக வும் அன்பாகவும் பாதுகாத்து வளர்த்து வந்தான். மற்ற தமிழ்ச் செல்வர்களைப் போலவே அசதியும் மிகுந்த தமிழ்ப் பற்று உடையவனாக விளங்கினான். இது அக்காலத் தமிழ்ச் செல்வர்க்குரிய இயல்பு போலும்! பறம்பிற் பாரி, தகடூர் அஞ்சி, மோரூர்க் காங்கேயன், சிறுகுடிப் பண்ணன் எனக் கொடை யாளர் ஊர்ப் பெயரோடு சேர்த்து அழைக்கப்படுவது போலவே, நம் அசதியும் ‘ஐவேலசதி’ என ஊர்ப் பெயரோடு சேர்த்தே அழைக்கப்பட்டு வந்தான். ஒளவையாரைப் பற்றித் தெரியாத தமிழ் மக்கள் ஒருவரும் இருக்கமாட்டார்கள். கற்றவர், கல்லாதவர் எல்லார்க்கும் தெரிந்த புலவர் அவர் ஒருவர்தான். தமிழ் மக்களுக்கு அவ்வளவு அறிமுக மானவர் ஒளவையார், அவ்வளவு பெயர் பெற்றவர் எனலாம். ஒளவையார் செய்த ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி முதலிய நூல்களை நீங்கள் படித்திருப் பீர்கள், ஒளவையாரைப் பற்றி வழங்கும் பல கதைகளையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழ் மக்களால் தமிழ்த்தாய் என்றே மதித்துப் போற்றப்பட்டு வந்தவர் ஒளவையார். ஒளவையார் என்னும் பெயருள்ள புலவர் இருவர் இருந்திருக்கின்றனர். சங்க கால ஒளவையார் வேறு, ஆத்திச்சூடி முதலிய நூல்கள் பாடிய ஒளவையார் வேறாவர். ஒளவையார் தமிழ்நாடு முழுவதும் சுற்றித் தமிழ் மக்களுக்கு நல்லறிவு புகட்டுவதையே, தமிழ் மக்களை நல்வழி யில் நடக்கச் செய்வதையே தம் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர்; நாலைந்து நாளைக்கு நிலையாக ஓரூரில் தங்கியிருக்கமாட்டார்; தமிழ் மக்கள் எவரும் ஒளவையார் சொல்லைத் தட்டி நடவார்கள். தமிழ் மக்களுக்கு அவ்வளவு வேண்டியவர் ஒளவையார். ‘ஒளவை அமிழ்த மொழி’ என அவர் சொல்லைச் சிறப்பித்து மேற்கொள்வர். ஒளவையார் சொல்லில் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தனர் தமிழ் மக்கள். ஏதாவதொன்று பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒருவர் ‘அது முடியாது’ அல்லது ‘ஆகாது என்றால், ‘என்ன அவச்சொல் சொல்கிறாய்?’ என்னும் வழக்கமே ஒளவையார் சொல்லில் தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்குச் சான்றாகும். ‘ஒளவை சொல்’ என்பதே ‘அவச் சொல்’ ‘அவைச் சொல்’ எனத் திரிந்து வழங்குகிறது. ஆண்பாற் புலவர்களைப் போலவே ஒளவையாரும் பாடிப் பிழைக்கும் பரிசில் வாழ்க்கையே நடத்தி வந்தனர். பாண்டி நாடு, சோழ நாடு, தொண்டை நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு கொங்கு நாட்டுச் சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார் ஒளவையார்; கொங்கு நாட்டி லுள்ள பழவிறலூர் பலவற்றிற்கு சென்றார்; கொங்கு நாட்டுத் தமிழ்ச் செல்வர்கள் பலரைப் பாடிப் பரிசு பெற்றார்; சேலத்தி லிருந்து சங்ககிரியை நோக்கிச் சென்று கொண்டி ருந்தார்; அது முதுவேனிற்காலம், வெயில் கடுமையாக இருந்தது. கடும் வெயிலில் நெடுந்தொலைவு நடந்தார்; வழியில் ஊர் ஒன்றும் தென்படவில்லை. நேர் மேற்காகச் சென்று கொண்டி ருந்தார்; நண்பகல் நேரம். பகலவன் தன் முழு வலிமையுங் கொண்டு தாக்கினான். அவ்வெய்யவன் தாக்குதலை எதிர்த்துச் சென்று கொண்டிருந்தார் ஒளவையார்; வெப்பத்தைத் தாங்க முடியாது களைப்படைந்தார்; வரவர மிகவும் களைத்துவிட்டார்; பக்கத்தில் கிணறொன்றும் இல்லை. நீர் வேட்கையோ பொறுக்க முடியவில்லை. தொண்டை வறண்டுபோய் விட்டது. உமிழ்நீர் ஊறவில்லை. என் செய்வார் பாவம்! நடந்த களைப்பு வேறு. உடலைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. கால்கள் ஓய்ந்து விட்டன. ஓர் எட்டிகூட எடுத்துவைக்க முடியவில்லை. சாலை யோரத்தில் இருந்த ஒரு மரத்து நிழலில் சுருண்டு படுத்து விட்டார்; அப்படியே அசைவற்றுக் கிடந்தார். அது அசதியின் காடு. அங்கு அவன் ஆடுமாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. வழக்கம்போல ஆடு மாடுகளைப் பார்த்துக் கொண்டே அசதி அப்பக்கம் வந்தான்; ஒளவையார் படுத்தி ருப்பதைக் கண்டான்; பக்கத்தில் போய்ப் பார்த்தான்; பெரும் புலமையுடையாரென முகக் குறியால் அறிந்தான்; தனியாக ஒரு மரத்தடியில் படுத்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டான்; ஒரு பெண். அதுவும் முதுமைப் பருவமுள்ள ஒருத்தி, ஒரு காட்டில் தனியாகக் சாலையோரத்தில் படுத்திருப்பதன் காரணம் அவனுக்கு விளங்கவில்லை. மேலும், அது அவனுடைய காடு; அவன் அதிகாரத்துக்குட்பட்டது. ‘பாட்டி, பாட்டி!’ என்று மெதுவாகக் கூப்பிட்டான் அசதி. ஒளவையார் மெதுவாகக் கண்ணைத் திறந்து பார்த்தார்; தன் பக்கத்தில் அன்பு ததும்பிய முகத்துடன் ஒருவன் நிற்பதைக் கண்டார்; அவரால் பேச முடியவில்லை. தொண்டை வறண்டு கிடந்தது. தண்ணீர் வேண்டும் என்பதைக் கைக் குறிப்பால் தெரிவித்தார். அசதி திடுக்கிட்டான்; வெயிலில் நடந்து வந்த தால் களைத்துப் படுத்திருக்கிறார் என்பதையுணர்ந்தான். பக்கத்திலோ கிணறு இல்லை. பாட்டியின் நிலைமையோ படு மோசமாக இருக்கிறது. அவனுக்கு இன்னது செய்வதென்று ஒன்றும் தோன்ற வில்லை. கொஞ்சந் தொலைவில் பண்ட மேய்க்கிகள் நின்று கொண்டிருந்தனர். (பண்டம் -ஆடு மாடுகள்) அசதி அங்கு விரைந்து ஓடினான். அவர்களிடம் தண்ணீர் இருக்கிறதா என்று கேட்டான்; அவர்கள் ‘தண்ணீர் இல்லை, வெறுங் கலயந்தான் இருக்கிறது’ என்றனர். என் செய்வான் பாவம்! தனது இடத்தில் வந்து களைத்துப் படுத்திருக்கும் ஒரு தமிழ்ப் பாட்டிக்கு நீர் வேட்கைக்குக் கொஞ்சம் தண்ணீர் உதவ முடியாமைக்கு வருந்தினான். அவனுக்கு திடீரென்று ஒர் எண்ணம் தோன்றிற்று. பண்டமேய்க்கிகளிடம் இருந்த தண்ணீர்க் கலயத்தை வாங்கினான்; கொஞ்சம் ஆட்டுப் பால் கறந்து கொண்டுபோய் அத்தமிழ் மூதாட்டிக்குக் கொடுத்தான். ஒளவையார் அப்பாலை இரண்டு முரடு குடித்தார். அசதி தொண்டையை நீவி விட்டான். தொண்டை நனைந்தது. பின்னும் கொஞ்சம் குடித்தனர்; களை தெளிந்து கண்ணைத் திறந்து பார்த்தார். கம்மிய குரலில், அசதியைப் பார்த்தபடியே ‘அசதி’ என்றார். அசதி, தன் பெயரைத் தெரிந்து கூப்பிடுவதாக எண்ணினான்; பாட்டி! இதோ இருக்கிறேன்; இனிக் கவலையில்லை; இன்னும் கொஞ்சம் பால் குடியுங்கள்’ என்று பால் கும்பத்தை இரு கையாலும் எடுத்து அன்புடன் கொடுத்தான். அசதி தன் அன்பைக் கலந்து கொடுத்த அப்பாலை ஒளவையார் தென்புடன் குடித்தார்; கொஞ்சநேரம் பூங்கொத்தால் விசிறினான் அசதி. ஒளவையார் ஒருவாறு களை தெளிந்தார். மெதுவாக எழுந்து உட்கார்ந்து, ‘காலத்தே வந்து காப்பாற்றினாய்; நீ இல்லையேல் நான் இந்நேரம் இறந்திருப்பேன்; நல்ல வேளை; நீ நன்றாயிரு; காலத்தினால் செய்த இந்நன்றி ஞாலத்தினும் மாணப் பெரி தாகும்’ என்று அன்பு ததும்பிய அமிழ்த மொழியால் கூறினார். ‘நல்லவேளை. என்னமோ என்னாலான தைச் செய்தேன்; அது என் கடமை; பாட்டி! தாங்கள் யார்?’ என்றான் அசதி; ‘ஒளவை’ என்றார் ஒளவையார். அவ்வளவுதான்! ‘தமிழ்த்தாயே! எங்கிருந்து வருகிறீர்கள்? அந்தோ! இன்னும் கொஞ்ச நேரம் நான் காணாமல் இருந் திருந்தால் என்னாவது? தமிழ்நாடு தன் தாயை இழந்திருக்குமே. செந்தமிழ்த்தாயே! எப்போது இங்கு வந்து படுத்தீர்கள்? இந்தக் கடுவெயிலில் ஏன் வந்தீர்கள்?’ என்று பலவாறு வருந்தினான் அசதி. ஒளவையாரின் கால்களைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டான். ஒளவையார் நன்கு உட்கார்ந்து, ‘அப்பா! நீ யார்?! என்றார். அசதி, ‘அசதி’ என்றான். ‘நல்ல பெயர் நீ ஒரு செல்வக் குடிமகன் போல் காணப்படுகிறாய்; உன் ஊர் எது? இங்கெதற்கு வந்தாய் என்னைக் காப்பாற்ற?’ என்றார் ஒளவையார். அசதி தன் ஊர் முதலியவற்றைக் கூறினான். ஒளவையார் மகிழ்ந்து, ‘அப்பா அசதி! நீ அன்பால் கொடுத்த உன் பால் என்னைக் காப்பாற்றியது. உன் வானிகர் வண்கையால் இன்னும் கொஞ்சம் பால் ‘கொடு’ என்றார். அசதி கலயம் நிறையப் பால் கறந்து வந்து கொடுத்தான். ஒளவையார் அப்பாலை அருந்தி மகிழ்ந்தார். வண்டி கொண்டு வந்து, அசதி ஒளவையாரை ஊருக்கு அழைத்துச் சென்றான்; பொன் வட்டிலில் அன்னமிட்டுப் போற்றினான்; தமிழ்ப் பெரு மூதாட்டியாராகிய ஒளவை யாரை நேரில் கண்டு அளவளாவவும், விருந்திட்டுப் போற்ற வும், அவர் அமிழ்த மொழியை நேரில் கேட்கவும் கிடைத்த பெரும் பேற்றினை எண்ணி மகிழ்ந்தான்; ஒளவையாரின் அரும் பொருள் செறிந்த அமுத மொழியைக் கேட்டுக் கேட்டு இன்புற்றான். ஒளவையார் அசதியின் அளவில்லா அன்புக்கு உவந்தார்; அவன் தமிழ் மொழிமீது கொண்டுள்ள அளவுகடந்த பற்றினைப் பாராட்டினார்; அவன் பெயரை என்றும் நின்று நிலவுமாறு செய்ய எண்ணினார்; உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத் தன்றோ? “அறப்பயன் தான் சிறிதாயினும் தக்கார்கைப் பட்டக் கால் வான்சிறிதாப் போர்த்துவிடும்” என்பது வாய்மையுரை யன்றோ? அசதி அக்காலத்தே செய்த சிறிய உதவியின் பயனை ஞாலத்தினும் மாணப் பெரிதாகக் கொண்டார்; அசதி மேல், அசதிக் கோவை என ஒரு நூல் செய்தார், அது நானூறு பாட்டுக்களையுடையது; ஒவ்வொரு பாட்டிலும் அசதியின் பெயர் வந்துள்ளது. தேனினும் இனிய இச்செந்தமிழ்க் கோவையைக் கேட்டு அசதி அளவிலா மகிழ்ச்சியடைந்தான்; ஒளவையாரை அங்கேயே இருக்கும்படி வேண்டிக் கொண்டான். தமிழர் முன் னேற்றத்தின் பொருட்டு நாடு சுற்றிவரும் தமது நற்றொண்டைக் கூறி ஒளவையார் விடை கேட்டார். அசதி ஒளவையார்க்கு வெறுக்க வெறுக்கப் பரிசு கொடுத்துப் பிரியா விடையுங் கொடுத்தான். ஒளவை மூதாட்டியார் அசதியை வாயுற வாழ்த்தி விடை பெற்றுச் சென்றார். ஐவேலி என்னும் அவ்வூர் இன்றில்லை. இன்றும் அவ்விடம் ‘ஐவேலிக் கிராமம்’ என்றே வழங்கி வருகிறது. அவ்வூர் நத்தத்தையடுத்து இருநூறு வீடுகள் உள்ள இடையர் பட்டி என்னும் ஊர் இருக்கிறது. 8. பழைய கோட்டைச் சர்க்கரை 1. சர்க்கரை மரபு : பழைய கோட்டைச் சர்க்கரை குடும்பம் சர்க்கரை போன்ற குடும்பம். அது சங்க காலத்திலிருந்து தமிழ் வளர்த்து வரும் பழம் பெருமை வாய்ந்த வேளாண் குடும்பம். இக்குடி முதல்வனான கரியான் சர்க்கரை என்பவன் பாண்டியனுக்கு படைத்துணையாகி, உத்தமக்காச் சோழனை வென்றமைக்காகப் பாண்டியன் மகிழ்ந்து, உத்தமக்கா மிண்டன் என்னும் பட்டப் பெயரை வழங்கினான். மிண்டன் - கெட்டிக்காரன். சர்க்கரை மரபினர் அப்பட்டப் பெயரோடு, ‘சர்க்கரை’ என்னும் தம் குடிமுதல்வன் பெயரையும், மன்றாடியார் என்னும் நாட்டுத் தலைமைப் பெயரையும் வழிவழிப் பட்டப் பெயராக வைத்து வழங்கி வருகின்றனர். பழைய கோட்டைச் சர்க்கரை மரபு, வெற்றிப் புகழை யுடைய வீரக்குடி மரபாகும். ‘சேனாதிபதிச் சர்க்கரை, கொற்றவேல் சர்க்கரை’ என்னும் இம் மரபினர் பெயர்களே அதற்குச் சான்றாக உள்ளன. செம்மறிக்கிடாய்க் கொம்புபோல இருபக்கமும் கூர்மையாக, இடையில் கைப்பிடியையுடையது சொட்டை என்னும் படை, சர்க்கரை மரபினர் அச்சொட்டைப் படையில், ‘ஓங்கு சொட்டைக் காரர்கண்டன் உத்தமக்கா மிண்டன்’ எனப் புலவர் புகழ்ந்து பாடும் தனிச்சிறப்பினை யுடையவராக இருந்தனர், இம்மரபினர் கொங்கு வேளாளரின் பட்டக்காரராக - சமூகத் தலைவராக - இருந்து வருகின்றனர். திரு. நல்ல சேனாபதிச் சர்க்கரை உத்தமக்கா மிண்ட மன்றாடியார் என்பது இப்போதுள்ள பட்டக்காரரின் பெயர். இவருந் தம் தொல்குடிக்கேற்ற நல்லியல்புடையவராவர். பழைய கோட்டை என்னும் ஊர், கோவைக் கோட்டத்தில், ஈரோடு, காங்கயம் வழியில், ஈரோட்டின் தெற்கில் 18வது கல்லில் இருக்கிறது. இதன் பழம் பெயர் பழையனூர் என்பது. “பழை யனூர்க் காரியன்றீந்தகளைக் கொட்டும்” என்று ஒளவையா ரால் பாராட்டப் பெற்ற, அன்பால் ஒளவைக்குக் களைக் கொட்டுக் கொடுத்த ‘காரி’ தங்கள் முன்னோன் என்கின்றனர் சர்க்கரை மரபினர். கரியன் என்னும் பெயரே காரி என மருவி வழங்கியது. பழையன் ஊர் என்பதே பழையன் கோட்டை - பழைய கோட்டை எனப்பட்டது. கோட்டை - ஊர். இடைய கோட்டை, புதுக் கோட்டை, பட்டுக்கோட்டை எனக் கோட்டை என்பது ஊர் என்னும் பொருளில் வந்திருத்தல் காண்க. பழைய கோட்டைக்கு ஒரு கல் தெற்கில் ‘நத்தக் காரையூர்’ என்னும் ஊர் இருக்கிறது. காரையூர் என்பதே அதன் பழம் பெயர். சர்க்கரை மரபினர் அவ்வூர்ப் பெயரோடு சேர்த்துக் ‘காரைக்கோன்’ எனப் புலவரால் புகழப் பட்டுள்ளனர். காரை யூர் என்பது, காரியூர் என்பதன் திரிபாக இருக்கலாம். காரியூர் காரியின் பெயரால் ஏற்பட்டதாகும். இது களைக் கொட்டீந்த காரியின் வரலாற்றுக்குத் துணை செய்கிறது. இது ஆராய்ச் சிக்குரியது. பழைய கோட்டைக்குச் ‘செங்குளம்’ என்ற பெயரும் வழங்கி வருகிறது. சேரன் செங்குட்டுவன் செய்த போர்களில் ஒன்றெனச் சிலப்பதிகாரம் கூறும் ‘கொங்கர் செங்களத்துப் போர்’ இங்கு நடந்தது போலும்! செங்களம் என்பதே இன்று ‘செங்குளம்’ எனத் திரிந்து வழங்குகின்றது போலும்! கொங்கர் - கொங்கு நாட்டினர் - கொங்கு மன்னர். இது ஆராய்ச்சிக்குரியது. பழைய கோட்டை அரண்மனை, தமிழ் மக்களின் விருந்தோம்பல் என்னும் பெருங்குணத்திற்கு இன்றும் எடுத்துக்காட்டாக இலங்கி வருகிறது. பழைய கோட்டைச் சர்க்கரை குடும்பம், சிற்றரசர் போன்ற செல்வாக்குடைய குடும்பம். பழைய கோட்டைப் பண்ணையத்தில் உலகப் புகழ் பெற்ற காங்கய மாடுகளை யுடைய பெரிய மாட்டுப் பண்ணையொன்று இருக்கிறது. அப்பண்ணையில் சுமார் மூவாயிரம் மாடுகள் இருக்கின்றன. ஒரு தனிப்பட்டவரால் நடத்தப்படும் இவ்வளவு பெரிய மாட்டுப் பண்ணை உலகில் வேறு எங்குமேயில்லை. பல்லாயிரக்கணக்கான ஆக்களை அன்புடன் போற்றிப் புரக்கும் சிறப்பினால் சர்க்கரை மரபினர் ‘ஆவேந்தர்’ எனச் சிறப்பிக்கப்படுகின்றனர். அக்காங்கய மாடு களைக் ‘காங்கய இனம்’ என்பதைவிடப் ‘பழைய கோட்டை இனம்’ என்பதே சாலப் பொருத்தமுடையதாகும். பழைய கோட்டைச் சர்க்கரை மரபு, “சர்க்கரையை யன்றி வேறு எவரையும் பாடோம்” என்று புலவரால் சிறப்பித்துப் பாராட்டப் பெற்ற புகழுடைய மரபு; ஒரு தமிழ்ப் புலவர் கையில் சவுக்கடி பெற்றும், ஒரு புலவர் தெருவில் விலை கூறி விற்க இசைந்தும், ஒரு புலவரின் உண்ட எச்சில் வாயைக் கழுவி விட்டும் தமிழ்த் தொண்டாற்றிய தனிப் பழம் பெருங்குடி மரபு, காதல், குறவஞ்சி, தாலாட்டு முதலிய பல பனுவல் மாலைகள் சூடியுள்ளனர் இம்மரபினர். 2. பொறுமையின் எல்லை தொண்டை மண்டலத்துக் குன்றத்தூரில் எல்லப்பன் என்னும் வள்ளலொருவன் இருந்தான். அவன் பெருங் கொடையாளி; “செங்குன்றை எல்லனெங்கே அங்கே இரவல ரெல்லாம்” என்னும் புகழ்ச்சிக்குரியவன்! தன்னூரில் வந்து இறந்த ஒரு யாழ்ப்பாணன் பிணத்தைத்தானே சுமந்து புகழ் பெற்றவன். “நாணந்தராமல் நடுங்காமல் கூசாமல் பாணன் பிணத்தைப் பரிக்குங் கை” எனக் கம்பரும் அவ்வருஞ் செயலைப் பாராட்டி யுள்ளார். எல்லப்பன் கி.பி.11 ஆம் நூற்றாண்டினன். அக்காலத்தே அழகன் சர்க்கரை என்பவர் சர்க்கரை மரபின் குல விளக்காக விளங்கினார். அவர் ‘பொறுமையின் எல்லை’ என்று புலவரால் புகழப்பட்டவர்; அளவு கடந்த தமிழ்ப் பற்றுடையவர்; தமிழ்ப் புலவரை உயிரினும் பெரிதாக மதித்துப் போற்றிப் புகழொடு வாழ்ந்து வந்தார். அழகன் சர்க்கரை மன்றாடியாரின் அரண்மனைப் புலவ ரொருவர் தொண்டை நாட்டுக் குன்றத்தூர் சென்றார்; குன்றை எல்லனைப் புகழ்ந்து பாடினார். எல்லப்பன் மகிழ்ந்து தகுந்த பரிசு கொடுத்தான். புலவர் இடக்கையை நீட்டினார்; எல்லப்பன் புலவரை நோக்கி ‘பரிசு பெறும் முறையைத் தாங்கள் இன்னும் அறிய வில்லைபோலும்’ என்றான். ‘நான் நன்றாக அறிந்துள்ளேன்; தமிழறிவும் கொடைக் குணமும் ஒருங்கே யமைந்து, பொறுமையே உருவான பழைய கோட்டை அழகன் சர்க்கரைபால் எப்போதும் ஏற்கும் வலக்கையை வேறு எவ ரிடமும் நீட்டுவதில்லை என்று கொண்டிருக்கும் கொள்கையே தங்களிடம் நான் இடக்கையை நீட்டியதற்குக் காரணம். தாங்கள் அதற்காக வருந்தக் கூடாது’ என்றார் புலவர். அது கேட்ட எல்லப்பன் வியப்புற்று, ‘அங்ஙனமாயின் மிக்க மகிழ்ச்சி; நான் அறியாது வினாவியதைப் பொருத்தருள்க. ஆனால், என் அவைப் புலவர்கள் சென்று, அவ் வள்ளலின் கொடை அன்பு, அடக்கம், பொறை முதலிய உயர் குணங்களை அறிந்து வருமளவும் தாங்கள் எமது விருந்தினராக இருந்துவர வேண்டும்’ என்று வேண்டினான். புலவர் அவன் வேண்டு கோளுக் கிணங்கினார். எல்லப்பன் தன் அவைக்களப் புலவர் களில் தக்கார் இருவரை அழகன் சர்க்கரையின் அருங் குணங் களை அறிந்து வரும்படி பழைய கோட்டைக்கு அனுப்பினான். தொண்டை நாட்டுப் புலவர்கள் குன்றத்தூரை விட்டுப் புறப்பட்டுச் சென்று பழைய கோட்டையை அடைந்தனர்; ஆனால், அவர்கள் சர்க்கரையைப் பார்க்கவில்லை; அரண் மனைப் பூங்காவுக்குள் புகுந்தனர்; அங்கு அருமையாக வளர்க்கப் பட்டிருந்த பூஞ்செடிகளைக் கண்டபடி வெட்டி யெறிந்தனர்; அதுகண்ட காவலாளன் சென்று சர்க்கரையிடம் கூறினான். சர்க்கரையார் திடுக்கிட்டு, ‘தமிழ்ப் புலவர்கள் அத்தகைய தகாச் செயலை ஒருபோதும் செய்யத் துணியாரே, அன்னார்க்குச் சினமுண்டாகும்படி ஏதும் சொல்லாமல் இன்சொல்கூறி அன்போடு இங்கு ‘அழைத்துவா’ என்றார். அக்காவலாளி சென்று, அவ்வாறே அப்புலவர் பெருமக்களை அழைத்து வந்தான். மன்றாடியார் புலவர்களை அன்போடு வரவேற்று, இருக்கை நல்கி, இன்சொற்கூறி, மலர்ந்த முகத்துடன், அருந்தமிழ் வளர்க்கும் பெருந்தமிழ்ப் புலவீர்! அப்பூஞ் செடிகள் அங் கிருக்கத் தகாவெனில் ஆட்களைவிட்டு வெட்டி யெறியலாமே. ஏடும் எழுத்தாணியும் பிடித்துத் தமிழ்ப் பாட்டுக்கள் எழுதும் தங்கள் மெல்லிய கைகள் கடினமான அரிவாளைப் பிடித்து அக்கடுந்தொழிலைச் செய்ய லாமோ? ஒரு நாளும் அத்தகைய தொழிலைச் செய்தறியாத தங்கள் மலர் போன்ற கைகள் வலிக்குமே. தாங்கள் இத்தகைய தொழிலை செய்யப் புகுந்தால் தமிழ்த் தொண்டு செய்பவர்யாவர்? என்பால் ஏதாவது குற்றங்குறை இருந்தால் அன்பால் பொருத்தருள வேண்டும்’ என அன்புரை கூறி, புலவர் கைகளுக்கு மருந்தெண் ணெய் பூசி வெந்நீராட்டுவித்தார். புலவர்கள் மன்றாடியாரின் அன்பையும் பொறையை யும் அளவு கடந்த தமிழ்ப் பற்றையும் வியந்தனராயினும் அதோடு நிற்கவில்லை. இன்னும் சர்க்கரையின் நற்குணங்களை நன்கு ஆராய்ந்தறிய எண்ணினார்கள். சர்க்கரையார் புலவர்களோடு உடனிருந்து உணவு உண்டனர். சர்க்கரையின் தாயார் உணவு படைத்துக் கொண்டிருந்தார். உணவருந்திக் கொண்டிருந்த புலவரின் ஒருவர் எழுந்து, அவ்வம்மையின் முதுகின்மேல் ஏறி உட்கார்ந்தனர். திடுக்கிட்ட அவ்வம்மையார் மைந்தன் முகத்தை நோக்கினார். உடனிருந்து உண்டவர்கள் திடுக்கிட்டனர்; அத் தகாச்செயலைக் கண்டு மனந்துடித்தனர்; அக்கொடுங் காட்சியைக் காண நாணினர். சர்க்கரையார் என் செய்தார்? ‘என் அன்புள்ள அன்னையே! என்னைப் பத்து மாதம் பொறுமையோடு சுமந்த தாங்கள், இப் புலவர் பெருமானை ஒரு நொடி நேரம் சுமக்கமாட்டீரோ? தங்கள் பொறுமை எங்கு போய் ஒளிந்தது? அன்னையே பொறாவிட்டால் பின்னை யார் பொறுப் பவர்?’ என்று அன்போடு கேட்டார். அப்பொன் மொழியைக் கேட்ட புலவர் சடக்கெனக் கீழே இறங்கி, ‘பொறுமையே உருவாகிய அண்ணலே பொருத்தருள வேண்டும்; பொறுமையின் எல்லையை இன்றுதான் கண்டேன்; தங்கள் பொறுமையைக் கண்டறிவதற்காகவே நான் இத்தகாச் செயலைச் செய்தேன். “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல” என்று பொறைக்கு நிலத்தை உவமை சொல்வர்; பொறுமையே உருவான தங்கள் அன்னையாரின் பொறைக்கு உவமையும் உண்டோ? அன்னையின் முதுகில் அயலானொருவன் ஏற, அன்னை நும்முகத்தை நோக்க, வெகுளாது, விம்மாது, ‘என்னை ஈரைந்து திங்கள் இன்பாய்ச் சுமந்த தாங்கள் இவரை ஒரு நொடி சுமக்கமாட்டீரோ’ என்ற தங்கள் பொறை, தங்களை இவ்வாறு வளர்த்த தங்கள் அன்னையின் பொறையிலும் பெரிதன்றோ? வாழ்க நும் பொறுமை. நாங்கள் பெருங்கொடை வள்ளலாகிய தொண்டை நாட்டுக் குன்றத்தூர் எல்லப்பன் அவைக்களப் புலவர்கள்; அவ்வள்ளலின் ஏவலால் இங்கு வந்தோம்’ என அங்கு நடந்ததையும், பழையகோட்டைப் புலவர் குன்றத்தூரில் இருப்பதையும் எடுத்துரைத்தனர். அது கேட்ட மன்றாடியார் பெருமகிழ்வுற்று, ‘தொண்டை நாட்டார் சோதனையைக் கொங்கு நாட்டார் ஆற்ற வல்லரோ? பாணன் பிணம் சுமந்த எல்லப்பன் பெருமையை முன்னரே கேள்விப்பட்டுள்ளேன். அப்பெருந்தகையோன் அவைக்களப் புலவரைக் காணும் பேறு இன்று பெற்றேன்’ என்று இனிமொழி கூறினார். சர்க்கரை யின் அன்னையாரும் அகமகிழ்ந்தனர், பின்னர்ப் புலவர்கள் போதும் போதும் என்று கூறக் கூறப் பரிசுகள் பல நல்கி, ‘எல்லப்பனுக்கு எங்கள் நன்றியைச் சொல்லுங்கள்’ என்று விடை கொடுத்தனுப்பினார். மன்றாடியாரிடம் விடைபெற்றுச் சென்ற புலவர்கள் தாம் பெற்ற பரிசுகளுடன் குன்றத்தூரையடைந்தனர்; எல்லப்பனைக் கண்டு, தாங்கள் பழைய கோட்டை சென்றதையும், அங்கு செய்ததையும், சர்க்கரையின் பெருங்குணத்தையும் எடுத்தியம் பினர். எல்லப்பன் மகிழ்ந்தான்; தனது விருந்தினராயிருந்த பழைய கோட்டைப் புலவர்க்கு இடக்கை வருந்தப் பரிசு கொடுத்தான்; தன் அவைப் புலவர்கள் செய்த தகாச் செயலைப் பொறுத்தருளுமாறு அன்புடன் வேண்டிக் கொண்டதாகச் சர்க்கரையிடம் கூறுங்கள் என்று கூறியனுப்பினான். பார்த்தீர்களா பழைய கோட்டைச் சர்க்கரையிடம் தமிழ்ப் பற்றை? பொறுமைக்கும் ஓர் எல்லையே இல்லை போலும்! 3. அருங்கொடை வள்ளல்: தமிழாட்சி ஏற்பட்ட காலந்தொட்டுச் சேர, சோழ, பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர்களாலும் தமிழ் சிற்றரசர் களாலும் சீரும் சிறப்புடன் ஆளப்பட்டு வந்தது தமிழ்நாடு. இப்பேரரசரும் சிற்றரசரும் தொன்று தொட்டு வந்த பழந்தமிழ்ப் பெருங்குடி மக்களாவர். பிற்காலத் தமிழரசர்கள் தாய்மொழிப் பற்றுக் குறைவாலும், ஒற்றுமை யின்மையாலும் ஒருவர்க்கொருவர் பகைகொண்டு போரிட்டுச் சீர்குலைந்து ஆளுந் திறமை குன்றினர். தமிழர்க்கு இயல்பாக உள்ளமறப் பண்பும் அவர்களை விட்டகன்றது. அதனால், அயலார்க்குத் தமிழ்நாட்டின் மேல் கண்ணோட்டம் விழுந்தது. தமிழ்மொழி பேசாத - தெலுங்கைத் தம் தாய்மொழியாகக் கொண்ட- நாயக்க மன்னர் தமிழ்நாட்டின் அரசராயினர். அன்னார் மதுரையைத் தலைநகராகக் கொண்டு தமிழ்நாட்டை ஆண்டு வந்தனர். மதுரையிலிருந்து தமிழ்நாட்டை யாண்டுவந்த நாயக்க மன்னர்களில் சிறந்தவர் திருமலை நாயக்கர் என்பவர். அவர் கி.பி.17ஆம் நூற்றாண்டினர். திருமலை நாயக்கர் தமிழ் நாட்டைப் பல பிரிவாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் ஓர் அதிகாரியை ஏற்படுத்தியிருந்தார். அவ்வதிகாரிக்குத் தளவாய் என்று பெயர். தளவாய் - படைத் தலைவர். அவ்வதிகாரிக்குத் துணையாகப் பெரிய படை இருந்து வந்ததால் அப்பெயர் உண்டானது. அத்தளவாய்கள் நாட்டதிகாரத்தோடு, நிலவரி வாங்கியனுப்பும் அதிகாரிகளாகவும் இருந்து வந்தனர். தளவாய் ராமப்பய்யர் என்பவர் கொங்கு நாட்டு அதிகாரியாக ஏற்படுத்தப்பட்டார். அவர் சங்ககிரிக் கோட்டை யில் இருந்து வந்தனர்; நிலவரி செலுத்தத் தவறியவர்களை யெல்லாம் அவர் சங்ககிரி மலைக்கோட்டையில் சிறை வைப்பது வழக்கம். பட்டக்காரர், பாளையக்காரர், காணியாளர் முதலிய கொங்கு நாட்டுச் செல்வர் சிலரும் அச்சிறையில் இருந்து வந்தனர். அக்காலத்தே பழைய கோட்டைச் சர்க்கரை மரபில் இருந்தவர் சம்பந்தச் சர்க்கரை என்பவர். இவர் தம் முன் னோரைப் போலவே சிறந்த தமிழறிவும், தமிழ்ப்பற்றும், கொடைக்குணமும் உடையவர்; தமிழ்ப் புலவர்களைப் போற்று வதைத் தம் பெருங் கடமையெனக் கொண்டவர். இவர் அரண் மனை எப்போதும் புலவரின் உறைவிடமாகத் திகழும். இவர் காலத்தே கொங்கு நாட்டில் பெரும் பஞ்சம் ஒன்று வந்தது. இரண்டாண்டுகள் சரியாக மழை பெய்யவில்லை. கிணறுகளுக்குப் பெயர் பெற்றது கொங்கு நாடு. ஆழமான கிணறுகள்கூட ஊற்றுக் கண் வறண்டு போயின. மக்கள் உண்ண உணவின்றித் தவித்தனர். பெருஞ் செல்வர்கள் கூட உணவுத் தட்டுதலுக்காளாயினர். அத்தகைய கொடிய பஞ்சம் அது. மன்றாடியார் பெருநிலக்கிழார். பழைய கோட்டைப் பண்ணையம் ஒரு சிற்றரசு போன்றது. பண்ணையத்திற் பெரும் பகுதி குடிமக்கட்குக் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. பண்ணை யம் உழுவோரால் குத்தகை கொடுக்க முடியவில்லை; சோற்றுக் கும் திண்டாடினர். மன்றாடியார் உணவுப் பொருள் உதவித் தம் குடி மக்களைக் காத்து வந்தார்; மேலும் இல்லையென்று வந்து கேட்கும் ஏழை யெளியவர்க்கெல்லாம் இல்லையென்னாமல் வாரி வாரி வழங்கினார். இது அவர் குடியின் இயல்பாகும். தவசக் களஞ்சியம் காலியாயிற்று. பொருட்சாலையும் பொருட்குறையுற்றது. இந்நிலை மையில் தளவாய் ராமப்பய்யர் நிலவரி கொடுக்கும் படி வற்புறுத் தினார். குத்தகை கொடுக்கும்படி குடிகளை வற்புறுத்த மன மில்லாத மன்றாடியார் வரிகொடுக்க முடியாமல் சிறைக் கோட்டம் புக்கார். தமிழ்ப் புலவரொருவர் பரிசில் நாடிப் பழைய கோட்டைக்குச் சென்றார்; அரண்மனை அலுவலரால் சர்க்கரையார் சங்ககிரிச் சிறையில் இருக்கிறார் என்பதை அறிந்து மனங்கலங்கினார்; ‘புலவர் வறுமை’ என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. அப்பழ மொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் நம்புலவர் பெருந்தகை. ஆகையால், ஊருக்குப் போக அவர் மனம் இடங் கொடுக்க வில்லை. என் செய்வார் பாவம்! அத்தகு நிலையில் வைத்துள்ளது அவரது வறுமைப் பிணி அவரை. சர்க்கரையின் கொடை மருந்தைப் பெற்றுத் தம் வறுமைப் பெரும் பிணியைப் போக்கிக் கொள்ளலாம் என்று உறுதியாக நம்பி வந்தார். அவர் உறுதி உடைந்தது; நம்பிக்கை நலிந்தது. அவருக்கல்லவோ தெரியும் அவரது குடும்ப நிலை! வேறு வழியொன்றுந் தோன்ற வில்லை; சங்ககிரி சென்று சர்க்கரையைப் பார்ப்பதென முடிவு செய்தார்; வரி கொடுக்க முடியாமல் சிறையில் இருப்பவரால் எவ்வாறு பரிசு கொடுக்க முடியும் என்பதை எண்ணிப் பார்க்க இடந்தரவில்லை அப்புலவர் வறுமை. நேராகச் சங்ககிரிக்குச் சென்றார். சிறைச்சாலைக்குள் அயலார் செல்ல முடியுமா என்ன? ஒரு போதும் முடியாது. ஆனால், சிறைக் காவலரின் அன்பு இருந்தால் தாராளமாகச் செல்லலாம். நமது புலவர் நாவ லரல்லவா? தமது இனிய பேச்சுவன்மையால் சிறைக் காவலரை நட்பாக்கினார்; சிறைச் சாலைக்குள் தாராளமாகச் சென்றார்; சிறைக்குள் இருந்த தமிழ்ச் செல்வர்களைக் கண்டார்; அன்னாரின் இரங்கத்தக்க இன்னா நிலைக்கு இரங்கி, ‘என்று தொலையுமோ இக்கொடுங் கோலாட்சி? கண்ணியமான தமிழ்ப் பெருங்குடி மக்களெல்லாம் இப்படிச் சிறையில் அடைபட்டுக் கிடப்பதா? இவரையே நம்பியிருக்கும் நம் தமிழ் மொழியின் நிலையும் தமிழ்ப் புலவர்கள் நிலையும் என்னாவது? என்று எண்ணியிரங் கினார்; சம்பந்தச் சர்க்கரை இருக்கும் இடத்தை யறிய அச்செல்வர்களிடம் சென்றார். தம்மை இன்னாரென அறிமுகப் படுத்திக் கொண்டார். அது கேட்ட அச்செல்வர்கள், ‘புலவர் பெருந்தகையீர்! பரிசு பெறுகின்ற இடம் இதுதானா? எதனால் நாங்கள் சிறை வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நீர் அறியீரோ? நாங்கள் விடுதலையாகி மகிழ்ச்சியுடன் ஊரிலிருக்கும் போது வந்து கேட்கலாகாதா? எங்கள் பரிசே இப் பரிசாய் இருக்கும்போது நாங்கள் எப்பரிசு தருவோம்’ என்று நகைத்தனர். அது கேட்ட புலவர், ‘ஐயன்மீர்! இரப்பானுக்குச் சிறைக் கூடமென்ன வீடென்ன? எல்லாம் ஒன்றுதான்; முகிலால் மூடப் பட்ட திங்கள் ஒருபுறத்தே ஒளி வீசுகிற தன்றோ? கொடுப் பவர்க்கு எங்கிருந்தாலென்ன? அவரை வேகும் முன்னம் கடுகு பொடியாகி விடுமன்றோ? நீங்கள் விடுதலை யாகும் வரை என் வறுமை காத்துக் கொண்டிருக்குமா என்ன? நான் இங்கு ஒரு பெருந்தகை யாளரைத் தேடிவந்தேன்; அவர்தான் பழைய கோட்டைச் சம்பந்தச் சர்க்கரை. அவர் எங்கே இருக்கிறார், சொல்லுங்கள்?’ என்றார். இதுகேட்டு, அங்கிருந்த சம்பந்தச் சர்க்கரை மன்றாடி யார் புலவரை இருகையாலும் தழுவிக் கொண்டார். தழுதழுத்தக் குரலில். ‘பெரியீர்; இச் சிறைச்சாலைக்குள் என்னை வந்து பார்க்க மிகவும் துன்பப்பட்டிருப்பீர்கள்; இப்போதுதான் வருகிறீர் களா? பழைய கோட்டை போயிருந்தீர்களா?’ என்று அன்போடு கேட்டார். ‘ஆம். பழைய கோட்டைக்குப் போயிருந்தேன்; தாங்கள் அங்கில்லாததால் ஏமாற்றமடைந்தேன்; இங்கிருப்ப தாகச் சொன்னார்கள். நேராக இங்கு வந்தேன்’ என்றார் புலவர். அரண்மனையில் சாப்பிட்டீர்களா? ‘விருந்தோம்பலுக் கென்றே இருக்கும் தங்கள் அரண்மனை என்னை எப்படிச் சும்மா விடும்?’ இவ்வுரையாடலைக் கேட்டு அங்கிருந்த வர்கள் பெருவியப் புற்றனர்; தாங்கள் முன்பு புலவரை இகழ்ந்ததற்காக வெட்கப் பட்டனர். புலவர் தாம் பாடிவந்த பாட்டைப் படித்துக் காட்டினார்; மன்றாடியார் மகிழ்ந்தார், சிறைச்சாலைக்குள் தேடி வந்த புலவருக்குப் பரிசு கொடுக்கப் பணம் இல்லையே என மனம் வருந்தினார்; மன்றாடியாரின் மனைவியார் சிறைக் கூடத்திற்கு வெளியே தங்கியிருந்தார்; புலவரொருவர் வந்திருப்ப தாகக் கூறும்படி மனைவியாரிடம் ஓர் ஏவலாளனை அனுப்பினார். ஏவலாளன் சென்று, அவ்வம்மையாரிடம் சர்க்கரை சொல்லியனுப்பி யதைச் சொன்னான். அப்பெண்ணரசி யிடமும் பணம் இல்லை; விலை யுயர்ந்த அணிகலன்களும் அவர் அணிந் திருக்கவில்லை; எதைக் கொடுத்தனுப்புவார்? கொடுத்துக் கொடுத்துப் பழகிய பெருமனையாட்டி யல்லவா அவ்வம்மையார்? இல்லையென்று சொல்ல மனந் துணியவில்லை. அது நற்குடிப் பெண்டிர்க்கு இயலுவ தொன்றா? எனவே, தம் கழுத்தில் அணிந் திருந்த தாலியைக் கழற்றி, ஒரு துணியில் சுற்றி, ‘இதைக் கொண்டு போய் எங்கணவரிடம் கொடும்’ என்று அந்த ஆளிடம் கொடுத் தனுப்பினார் என்னே அத்தமிழரசியின் தமிழ்ப் பற்று! மனைவியார் கொடுத்தனுப்பிய அச்சிறந்த அணி கலத்தை வாங்கிச் சர்க்கரையார் கண்ணில் ஒற்றிக் கொண்டார்; புலவரைப் பார்த்து, ‘இப்போது இதனைப் பெரிதாக மதித்து ஏற்றுக் கொள்ளுங்கள்; சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததும் வேண்டியது தருகிறேன்; தப்பாக நினைக்கக் கூடாது’ என்று அன்புரை கூறி அத்தாலியைப் புலவர் கையில் கொடுத்தார். புலவர் திடுக்கிட்டார்; சர்க்கரையின் தமிழ்ப் பற்றையும் தாராள குணத்தையும் கண்டு பெருவியப்புற்றார்! மகிழ்ச்சியோடு அத்திருத் தாலியைப் பெற்றுக் கொண்டு மன்றாடியாரை வாயுற வாழ்த்தி விடைபெற்றுச் சென்றார். சென்றவர் நேராகத் தம் ஊருக்குச் சென்றாரா என்ன? இல்லை. அத்தாலியைக் கையில் ஏந்திக் கொண்டு தளவாய் ராமப்பய்யரிடம் சென்றார்; ராமப்பய்யரை வெறுப்புடன் பார்த்தவண்ணம், கொங்கினில் ராமப்பய்யன் செய்யுங் கொடுங் கோலாட்சியினால், இச்சிறையில் இருக்கும் பழைய கோட்டைச் சம்பந்தச் சர்க்கரை என்பார், தம் தேவி திருக் கழுத்தில் அணிந்திருந்த தாலியைக் கழற்றி ஒரு தமிழ்ப் புலவனுக்குக் கொடுத்தார்’ எனக்கடிந்து கூறி, அத்தாலியைக் காட்டினார். தாலியைக் கண்டு தளவாய் வியப்புற்றார்; புலவர்க்கு இருக்கை நல்கி இன்சொல் கூறினார்; மன்றாடியாரைச் சிறையி லிருந்து வரவழைத்து, ‘சர்க்கரையாரே! உம்முடைய பெருங் குணத்தைக் கண்டு அளவிலா மகிழ்ச்சியடைந்தேன்; இக்கொடை இதுவரை யாருங்கொடாத அருங்கொடை யாகும்; அருங்கொடை வள்ளலாகிய நீர் செலுத்த வேண்டிய வரியைக் காலம் செழித்த பின் செலுத்தலாம்; நும்மை விடுதலை செய்துள்ளேன்; ஏதேனும் வேண்டுமா? தயங்காமல் கேளும்,’ என்றார், ‘எனக்கு வேறொன்றும் வேண்டியதில்லை; வரி செலுத்த முடியாமல் என்னுடன் சிறையில் இருக்கும் மற்றவர் களையும் விடுதலை செய்ய வேண்டுகிறேன்’ என்றார் சர்க்கரையார். தளவாய் சர்க்கரையின் பெருங் குணத்துக்கு மகிழ்ந்து அவ்வாறே எல்லோரையும் விடுதலை செய்தார். விடுதலை பெற்ற அவர்கள், புலவரையும் சர்க்கரையாரையும் புகழ்ந்து பாராட்டி விடைபெற்றுச் சென்றனர். புலவர் மன்றாடி யாரிடம் தாலியைத் திருப்பிக் கொடுத்தார். ‘புலவர்க்குக் கொடுத்ததைத் திருப்பிப் பெறலாமோ?’ எனச் சர்க்கரையார் வாங்க மறுத்தார். ‘தங்கள் பெருங்குணத்துக்குப் பரிசாக இதைக் கொடுக்கிறேன்’ எனப் புலவர் வற்புறுத்திக் கொடுத்தார். சர்க்கரை புலவரைப் பழைய கோட்டைக்கு அழைத்துப் போய் வேண்டிய பரிசுகள் கொடுத்து மகிழ்வித்தார். சர்க்கரையாரின் அருங்குணத்தைப் புகழ்வதா? அல்லது, அவர் தேவியாரின் பெருங்குணத்தைப் புகழ்வதா? நீங்களே முடிவு செய்யுங்கள். 9. மசக்காளி மன்றாடியார் கோயமுத்தூருக்குப் பக்கத்தில் கவசை என்னும் ஓர் ஊர் இருக்கிறது. அது கோவை சத்தியமங்கலம் வழியில், கோவையின் வடக்கில் சுமார் பத்துக்கல் தொலைவில் உள்ளது. இப்போது அவ்வூர் ‘கோயிற் பாளையம்’ என்று வழங்குகிறது. கவசை பழம் பெருமை வாய்ந்த பயனுடையச் சீரூர். கொங்கு நாட்டின் புகழுக்குச் சான்றாக உள்ளது அத்தொல்புகழ்க் கவசை. கவசை என்னும் அப்பழவிறலூரில். கி.பி.17-ஆம் நூற்றாண்டில் மசக்காளி மன்றாடியார் என்னும் வேளாண்குலச் செல்வ ரொருவர் இருந்தார். அவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர்; கற்றவர் களிடத்தில் மிகுந்த அன்புடையவர்; கொங்கு இருபத்து நான்கு நாட்டின் ஒன்றான ஆறை நாட்டுத் தலைவர்; சங்ககால வள்ளல்கள் போன்ற கைவண்ணம் யுடையவர்; தமிழ்மொழி வளர்ச்சியில் அளவு கடந்த அக்கரையும் ஆர்வமும் உடையவர்; ‘தமிழ் வளர்ச்சியே தமிழர் வளர்ச்சி என்னும் கொள்கை யுடைவர்; தாய்மொழிப் பற்றோடு சிறந்த தாய் நாட்டுப் பற்றும் மிக்கவர். ‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்’ என்ற பழமொழிக் கேற்பக்கொங்கு நாடு நல்ல குடிவளம் உடையது. சங்க கால வள்ளல்களில் நால்வர் கொங்கு நாட்டினரே. சங்க காலப் புலவர்களில் பலர் கொங்கு நாட்டுப் புலவர்களாவர். சங்க காலத்தே பழமரம் நாடிவரும் பறவைகளைப் போலத் தமிழ் நாட்டின் ஏனைப் பகுதிகளிலுள்ள புலவர் பெருமக்கள் கொங்கு நாட்டை நோக்கி வந்தனர். அன்று கொங்கு நாடு தமிழ்ப் புலவர்களின் வாழ்விடமாக இருந்து வந்தது. கொங்கில் எங்கு பார்த்தாலும் பரிசு பெற்றுச் செல்லும் புலவர்களை காணலாம். பாணரும் கூத்தரும் பொருநரும் கூட்டங் கூட்டமாகச் செல்வர். ‘சேர நாடு, பாண்டி நாடு, தொண்டை நாடுகளை விடத்தமிழ் வளர்த்த பெருமை கொங்கு நாட்டுக்குத் தான் உண்டு’ எனக் கொங்கு நாட்டின் பெருமையைப் புலவர் வாயிலாய் அறிந்தார் மன்றாடியார்; பெருமகிழ்வு கொண்டார். தான் பிறந்த நாட்டின் பெருமையைக் கேட்டால் யாருக்குத்தான் மகிழ்ச்சி யுண்டா காது? அது இயல்புதானே? சொந்த ஊர்ப்பற்றுத் துறவி களுக்கும் உண்டல்லவா? மேலும் தன்காலத்திலும் கொங்கு நாட்டு ஊர்தோறும் தமிழ் வளர்த்துவரும் செல்வர்கள் இருத்தலையும், புலவர் பலர் இருந்தலையும் அறிந்தார்; பாண்டி நாட்டைப் போலத் தாம் பிறந்த கொங்கு நாட்டுக்கும் ‘தமிழ் வளர்த்த நாடு’ என்னும் பெருமையான பெயரை உண்டாக்க எண்ணினார். எண்ணியபடியே செய்ய முடிவு செய்தார்; கொங்கு நாட்டுப் பெரும் புலவர்களை எல்லாம் ஒன்று கூட்டினார்; பழந்தமிழ்ப் பாண்டியர்கள்போல, கவசையில் ‘கொங்குத் தமிழ்ச் சங்கம்’ என்ற பெயருடன் தமிழ் வளர்க்கும் சங்கம் ஒன்றை ஏற்படுத்தினார். அது ‘கவசைத் தமிழ்ச் சங்கம்’, எனவும் வழங்கிற்று. சிறந்த புலவர்களைக் கொண்டு பழந்தமிழ்ப் பாடல்களையும் நூல்களையும் ஆராயவும், புதிய செய்யுட்கள் பல செய்யவும் ஏற்பாடு செய்தார்; அக்கொங்குத் தமிழ்ச் சங்கத்தில் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் பயிற்று விக்கச் செய்தார்; அச்சங்கப் புலவர்களைக் கொண்டு கொங்கு நாட்டு மக்களுக்குத் தமிழறி வூட்டல், தமிழ்ப் பற்றுண்டாக்கல் முதலிய தமிழ்த் தொண்டாற்றி வந்தார். அக்கொங்குத் தமிழ்ச் சங்கத்தார் அதோடு நிற்கவில்லை. தமிழ்ச் செய்யுட்களிலே பாடுதற்கு மிகவும் கடினமானது, கேட்போர்க்கு மிகவும் இனிமை பயப்பதும் ‘வண்ணம்’ என்னும் ஒருவகைச் செய்யுளாகும். தொல்காப்பியச் செய்யுளியலில் பாஅவண்ணம், தாஅவண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம்’ முதலிய இருபது வண்ணங்களின் இலக்கணம் கூறப் படுகிறது. பிற்கால யாப்பிலக்கண நூலார் அவ்வண்ணம் இரு பதையும் நூறாக விரித்துரைத்துள்ளனர். அருணகிரியார் திருப்புகழ், வண்ணப் பாக்களால் இயன்ற நூலாகும். கவசைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் வண்ணம் பாடுவதில் சிறந்த பயிற்சி பெற்றனர். சிலர் ‘வண்ணப்புலி’யெனப் பட்டம் பெற்றனர். “ஆசுவலர்க்கும் வண்ணம் புலியாம்” என்ற பொருளு ரையைப் பொய்யுரையாக்கினர். இவ்வண்ணப் புலிகளிடம் அவ்வண்ணப் புலி தோற்றோடிற்று. விலங்குகளில் வலிமையும் தலைமையும் உடையது அரிமா. அதனால், அரிமாவுக்கு ‘விலங்கரசன்’ என்ற பெயர் வழங்கி வருகிறது, அவ்வரிமாவையும் கொன்று தின்னும் ஆற்றலுடைய பறவை யொன்றுண்டு. அது எட்டுக்கால்களையுடையது; ‘சரபம்’ என்னும் பெயரை யுடையது. கவசைத் தமிழ்ச்சங்கப் புலவரில் ஒரு சிலர் ‘வண்ணச் சரபம்’ எனவும் பெயர் பெற்றனர். அப்புலவர்கள் எவ்வண்ணத்தை எவ்வண்ணம் பாட வேண்டுமோ அவ்வண்ணத்தை அவ்வண்ணம் பாடி மக்களை மகிழ்விக்கும் வல்லுநர்களாய் விளங்கினர்’. அதைக் கொங்குத் தமிழ்ச் சங்கம், என்பதே பொருத்தமான பெயராகும். அச்சங்கப் புலவர்கள் அவ்வளவு வல்லுநராகத் திகழ்ந்தனர் வண்ணத்தில். அக்காலத்தே தொண்டை நாட்டுப் பொன் விளைந்த களத்தூரில் படிக்காசுப் புலவர் என்றொரு தமிழ்ப் புலவர் இருந்தார். அவர் ஒரு சிறந்த கவிஞர்; தமிழ்க்கலை முழுதும் உணர்ந்தவர். தமிழ்ப் புலவர், தலைவர், கவியரசர் என்றெல்லாம் சிறப்பிக்கப்பட்டவர்; கவியுலகில் பெருமித வாழ்வு வாழ்ந்து வந்தவர். படிக்காசுப் புலவர், தாம் பிறந்த தொண்டை நாட்டின் பெருமை விளங்க, தொண்டை நாட்டில் இருந்த வள்ளல்கள், புலவர்கள் வரலாறுகளும், பிற சிறப்பியல்புகளும் அமைந்த ‘தொண்டை மண்டல சதகம்’ என்னும் நூலைச் செய்தவர்; இராமனாதபுரம் இரகுநாத சேதுபதி மன்னரின் அவைக்களப் புலவர்; காயற் பட்டினத்தில் இருந்த பெருஞ் செல்வனும், வரையாது கொடுக்கும் வள்ளலும், மிகுந்த தமிழ்ப் பற்றுடைய வனுமான சீதக்காதி என்னும் முகமதியச் செல்வனிடம் உளங்கலந்த உயிர் நட்புற்று, அச்சீதக்காதி இறக்க உடனிறந்த சிறப்பியல் புடையவர். இவர் வண்ணம் பாடுவதில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்; ‘வண்ணக்கவி மன்னர்’ எனப் பெயர் பெற்றிருந்தார். தொண்டை மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் மூன்றிலும் இவர்க்கு நல்ல மதிப்பு. அன்று புவியரசர்கள் நாற்றிசையும் சென்று ஆங்காங் குள்ள அரசர்களை விற்போரில் வென்று அடிமைப்படுத்தி வெற்றிப் புகழுடன் திரும்புவது போலவே, கவியரசர்களும் திசையெங்கும் சென்று ஆங்காங்குள்ள கவியரசர்களைச் சொற்போரில் வென்று அடிமைப்படுத்தி வெற்றிப் புகழுடன் திரும்புவது வழக்கம். அவ்வாறே அம்மும் மண்டலங்களிலும் செல்வாக்குப் பெற்றிருந்த படிக்காசுப் புலவர் கொங்கு மண்டலத்தில் சுற்றுப் பயணம் செய்ய எண்ணினார். எண்ணிய வண்ணம் கொங்கு நாட்டை நோக்கிப் புறப்பட்டார்; கொங்கு நாட்டுச் செல்வர் பலரைப் பாடிப் பரிசு பெற்றார். கொங்கு இருபத்து நான்கு நாடுகளில் ஒன்றான கீழ்கரைப்பூந்துறை நாட்டிலுள்ள மோரூர்க்குச் சென்றார். மோரூர்க் காங்கேயர் மரபில் அப்போது குமார காங்கேயன் என்பவன் சீரும் சிறப்புடன் வாழ்ந்து வந்தான். அவன் தன் முன்னோர் போலவே சிறந்த தமிழ் அறிவும் தமிழ்ப் பற்றும் உடையவன்; தமிழ்ப் புலவர்களைப் போற்றித் தமிழ் வளர்த்து வந்தான்; படிக்காசுப் புலவர் குமார காங்கேயனைப் புகழ்ந்து பாடினார்; காங்கேயன் மகிழ்ந்து, புலவரை அன்போடு வரவேற்று, இன்சொல் கூறி விருந்திட்டுப் போற்றினான்; பல பரிசுகள் கொடுத்தான்; புலவரின் வழிச் செலவிற்காக, யானைத் தந்தத்தால் அழகிய வேலைப் பாடுடன் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்றையும் பரிசாகக் கொடுத்தான். புலவர் அப்பரிசுகளைப் பெற்று. காங்கேயனிடம் விடை கூறி அந்தப் பல்லக்கில் ஏறிக் கொண்டு சென்றார்; வழி நெடுகச் செல்வர்கள் பலரைப் பாடிப் பரிசில் பெற்றுக் கொண்டே கவசையை அடைந்தார். மன்றாடியார் படிக் காசுப் புலவரை அன்புடன் வரவேற்றார்; விருந்திட்டு மகிழ் வித்தார்; புலவரின் புகழ்க் கவிகளைக் கேட்டு மகிழ்ந்தார். வண்ணப் பாக்களால் புலவர் மசக்காளி மன்றாடியாரின் மனத்தைக் கவர்ந்தார். கவசைத் தமிழ்ச் சங்கப்புலவர்களுக்கும் படிக்காசுப் புலவர்க்கும் வண்ணப் போட்டி நடந்தது. வண்ணம் பாடுவதில் யார் வல்லுநர் எனக் கண்டறிவதே அப் போட்டியின் கருத்து. படிக்காசுப் புலவர் கருத்துப்படி கவசைப் புலவர்கள் பாடினர். கவசைப் புலவர்கள் கருத்துப்படி படிக்காசுப் புலவர் பாட முடியாது தோல்வியுற்றார். முன் செய்து கொண்ட ஒப்பந்தப் படி படிக்காசுப் புலவர் பல்லக்கு முதலிய விருதுகளை இழந்தார். ‘வண்ணம்பாடுவதில் வல்லுநர், வண்ணக்கவி மன்னர், என்னும் புகழுக்கு இழுக்குண்டானது. புலவர் தமது இழிவுக்கு மிகவும் வருந்தினார்; ‘கொங்கு நாடு இவ்வளவு பெருமையுடைய தென்று நான் கனவிலும் கருதவில்லை; கொங்குப் புலவர்கள் எல்லோரும் செந்தமிழைப் பஞ்சாகப் பண்ணிக் காசுக்கு ஒரு வண்ணம் பாடுகின்றனர். என் தமிழ் கொங்குநாடெங்கணும் நஞ்சாகப் போயிற்று’ என்று மனம் நொந்து கூறி வருந்தினார்; மோரூர்க் குமாரகாங்கே யனைப் பாடிப் பெற்ற பரிசிலான தந்தப் பல்லக்கு முதலியவற்றை இழந்து, அதுவும் வண்ணக்கவிப் போட்டியில் தோற்று இழந்து வெறுங்கையோடு வெளிச் செல்ல அவர் மிகவும் வெட்கி மனம் வருந்தினார். புலவரின் வருத்ததைக் கண்ட மன்றாடியார், புலவர் பெருமகனே! தமிழ் வளர்ச்சிப் போட்டியில் தோற்றதற்காக வருந்துவது சரியன்று, அவ்வருத்தம் தமிழ்ப் பற்று இன்மை யையே குறிக்கும். தோல்விக்கு வருந்துவது தங்கள் போன்ற பேரறிஞர்க்கழகன்று. தோல்வியே வெற்றிக்குக் காரணம் என்பது தாங்கள் அறியாததன்றோ! இத்தோல்வி வண்ணப்பாப் பாடுவதில் தங்களை இன்னும் வல்லுநராக்கு மாகையால், இத்தோல்வி ஒரு வகைத் தமிழ் வளர்ச்சியேயாகும். பாடிப் பாடித் தோல்வியுற் றோரல்லவோ பெருங்கவிஞராகத் திகழ் கின்றனர்? பல போரில் தோற்றவனன்றோ பெருவீரனாகின்றான்? தாங்களும் இனி வண்ணக் கவி முடிமன்னர் ஆகலாம். போட்டி யிட்ட இருபாலாரும் வெல்வதென்பது இயற்கை யல்லவே? யாரோ, ஒருவர் தானே வெல்லமுடியும்?’ என்று தேற்றினார்; தம்மீது பாடிய பாடல்களுக்குப் பரிசாகப் பல்லக்கு முதலிய பரிசுகள் கொடுத்தார். புலவர் ஒருவாறு மனம் தேறி வருத்தம் நீங்கி, மன்றாடியாரை வாழ்த்தி விடைபெற்றுச் சென்றார். கவசைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியது. கொங்கில் தமிழ்ச் சங்கங்கண்டு தமிழ் வளர்த்த மும்முடி மசக்காளி மன்றாடியாரைத் தமிழ்நாடு கொண்டாடியது. மன்றாடியார் புலவர் நாவிற் பொலிந்தனர். அத்தகைய வள்ளல்களின் உதவியை எதிர்நோக்கி நிற்கின்றது இன்று தமிழ்நாடு. 10. வணங்காமுடிக் கட்டி தமிழ் மக்களின் சிற்பவேலைத் திறத்திற்குச் சான்றாக இருந்து வருகிறது தாரமங்கலம் என்னும் ஊர். ஓவியக் கலையிலும், சிற்பக்கலையிலும் ஒப்பற்ற புகழுடையது தமிழ்நாடு என்பது உலகறிந்த உண்மை. தாரமங்கலம் கல்லோவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. தமிழ்நாட்டுக் கற்றச்சர்களின் கைத் திறனை, நுண்மாண் நுழைபுலக் கைவினையைத் தார மங்கலம் கைலாயநாதர் கோயிலில் கண்டின்புறலாம். அக்காலத் தமிழர் சிற்ப வேலைப் பாட்டைப் பார்க்க ஐரோப்பா, அமெரிக்கா முதலிய வெளி நாட்டறிஞர்கள் பலர் தார மங்கலத்திற்கு வந்து போகின்றனர் எனில், தாரமங்கலச் சிற்பக்கலைத் திறனை, தமிழ்க் கற்றச்சர்களின் கைத்தொழிற் பெருமையை விரித்துக் கூறுவது வீண் வேலையாகு மன்றோ? இன்று தமிழ்நாட்டில் கோவில்கட்ட ஒப்பந்தம் பேசும் சிற்பிகள், ‘தாரமங்கலம் சிற்ப வேலைப்பாடு நீங்கலாக வேறு எந்தக் கோயில் கல்லோவியங்கள் போலவேனும் செதுக்கித் தருகிறாம்’ என்று ஒப்பந்தம் செய்வது வழக்கம். அவ்வளவு செயற்கரிய வேலைப்பாடுடையவை அக்கோயிலில் செதுக்கி யுள்ள சிற்பங்கள். தாரமங்கலம் சென்று, தங்கள் முன்னோரின் சிற்பக் கலைத் திறனைக் கண்டு களிக்காத தமிழர் தமிழராய்ப் பிறந்தும் பிறவாதவரே யாவர். ‘கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே’ என்ற புலவர் இன்றிருப்பின், “நற்சிற்பக் கலைமணக் கும் நற்றாரை மங்கலத்துச் கற்சிற்பங் காணாதார் கண்ணென்ன கண்ணே” என்று பாடியிருப்பார் என்பது திண்ணம். தார மங்கலம் சேலத்தின் வடமேற்கில் இருபதுகல் தொலைவில் உள்ளது. இச்சிற்பக் கோயிலைக் கட்டினவர் கட்டி மரபினராவர். ‘கட்டி’ என்பது ஒரு கொங்கு வேளாண் குடும்பத்தின் பெயர். இக்குடும்பம் சங்க காலத்திலிருந்து கி.பி.17-ம் நூற்றாண்டு வரை நாடாண்ட குடும்பம். பல்வேற் கட்டி, கங்கன் கட்டி, இம்முடிக்கட்டி, இளமன் கட்டி, வேம்பன் கட்டி, மும்முடிக் கட்டி, சீயால கட்டி, வணங்காமுடிக் கட்டி என்போர் இக்கட்டி மரபில் பேரும் புகழும் பெற்ற பெருந்தகையாளர்களாவர். இவர்கள் வீரத்திற்கும் கொடைக்கும் இருப்பிடமாகத் திகழ்ந்தவர்; தண்டமிழ் வளர்த்த தனிப் பெருந்தகைமையர். பல்வேற்கட்டி, கங்கன் கட்டி என்போர் சங்கப் புலவர்களால் புகழ்ந்து பாடப் பெற்ற பழமையோர். இக் கட்டி மரபினர் தாரமங்கலத்திற்குப் பக்கத்தில் உள்ள அமரகுந்தி என்னும் ஊரில் இருந்து கட்டி நாட்டை ஆண்டு வந்தனர். தாரமங்கலம் அரசியல் தலைமை அலுவலகமாக இருந்தது. சேலங்கோவைக் கோட்டங்களின் வடபகுதியே கட்டி நாடு ஆகும். தெற்கே பவானியும், ராசிபுரமும், வடக்கே தகடூரும் (தர்மபுரி), மேற்கே பவானி யாறும், கிழக்கே பொன்முடியும் கட்டி நாட்டின் எல்லைகளாகும். கட்டி மரபினர் நாட்டுப் பாது காப்பிற்காகத் தாரமங்கலம், அமரகுந்தி, ஓமலூர், காவேரிபுரம், குளத்தூர், அந்தியூர், பவானி, தென்கரை, ஆற்றூர், பேளூர், தலைவாசல் என்னும் இடங்களில் திண்ணிய மண்கோட்டைகள் கட்டி நாடாண்டு வந்தனர்; நீர்வளத்தின் பொருட்டுப் பல ஏரிகளும், குளங்களும் அமைத்திருந்தனர். நெருஞ்சிப்பேட்டை என்னும் ஊர்க்குப் பக்கத்தில் காவிரியாற்றில் சிறந்த அணை யொன்று கட்டியிருந்தனர். இம் மரபினர் முடியுடை மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களின் கொடிகளாகிய புலி விற் கெண்டை யைத் தங்கள் கொடியாகக் கொண்டிருந்தனர். இத்தமிழ்க் கொடியைத் தங்கள் கொடியாகக் கொண்டிருந்தமையே இவர்களது தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தும். முடியுடை மூவேந்தர்களால் இம்மரபினர் ‘இம்முடி., மும்முடி, வணங்கா முடி’ என்னும் பட்டங்கள் பெற்றிருந்தனர். சிற்ப வேலைப்பாடுள்ள கோயில்கள் சில ஆண்டுகளில் கட்டிமுடிக்கக் கூடியவையல்ல. ஒரு கல்லோவியத்தைச் செதுக்கவே பலமாதங்கள் ஆனாலும் ஆகும். அவ்வாறு அரிதில் முயன்று செதுக்கியதும் கண், காது, மூக்குப் போன்ற நுண்ணிய உறுப்புக்கள் செதுக்கும் போது சிறிது பழுதுபட்டாலும் அவ்வளவு பாடும் வீணாகப் போய்விடும். அதனால்தான் சிற்பக் கோயில்கள் கட்டிமுடிக்கப் பல ஆண்டுகள் ஆகின்றன. உலகப் புகழ் பெற்ற தாரமங்கலம் கோயில் கட்டி முடித்த காலத்தைக் கேட்கின் நீங்கள் வியப்புறுவீர்கள். மும்முடிக்கட்டி என்பவனால் தொடங்கப் பெற்று, கட்டி முடிக்காமல் அவன் இறக்கவே, அவன் மகன் சீயாலகட்டி என்பவன் தொடர்ந்து வேலை செய்து, பாதி வேலையோடு அவனும் இறக்கவே, அவன் மகன் வணங்கா முடிக்கட்டி என்பவன் கட்டி முடித்தான். அக்கோயில் கட்டி முடிக்க சுமார் நாற்பது (40) ஆண்டுகளுக்குமேல் ஆயின. மூன்று தலை முறையில் தொடர்ந்து கட்டி முடிக்கப்பட்ட தாகும் தாரமங்கலம் சிற்பக் கோயில். தாரமங்கலம் சிற்பக் கோயிலைக் கட்டி முடித்த வணங்காமுடிக்கட்டி என்பவன், கி.பி. 17-ம் நூற்றாண்டினன்; மாபெரும் வீரன்; பெயருக் கேற்ற வெற்றிப் புகழ் உடையவன்; பெருங்கொடையாளன்; தமிழ் மொழியிடத்து அளவுகடந்த பற்றுடையவன்; ஆண்டு தோறும் தமிழறிவுப் போட்டி யொன்று நடத்தி வந்தான்; குறுகிய காலத்தில் நிறைந்த தமிழறிவைப் பெறுவோர்க்கும், சிறந்த தமிழ்க் கவி இயற்று வோர்க்கும் பரிசு வழங்க நடந்ததே அப்போட்டியாகும். தமிழ் நாட்டுப் புலவர் களெல்லாம் அப்போட்டியில் கலந்து பரிசு பெற்றுத் தமிழ் வளர்த்து வந்தனர். வணங்காமுடிக்கட்டியின் புகழ்போல் கொங்கில் தமிழ் வளர்ந்து வந்தது. கட்டி நாட்டின் வடக்கெல்லை மதில் போன்ற உயர்ந்த மலைத்தொடரையுடையது. அம்மலைத் தொடரில் உள்ள காவேரிபுரம், தொப்பூர்க் கணவாய்கள் கட்டி நாட்டிற்குட் பட்டவை. மைசூர் மன்னனான தொட்டதேவராயன் என்பவன் காவேரிபுரம் கணவாய் வழியாக அடிக்கடி கட்டி நாட்டின் மேல் படையெடுத்து வந்தான். வணங்காமுடிக் கட்டிக்கும் தொட்ட தேவராயனுக்கும் அடிக்கடி போர் நடந்து கொண்டு வந்தது. கி.பி.1665 தொட்டதேவராயன் பெரும் படையோடு அமரகுந்தியை நோக்கி வந்துகொண்டிருந்தான். அப்படை வலிமிக்க பெரும்படை. வணங்காமுடிக்கட்டி கடுஞ்சினங் கொண்டான்; தமிழர் திறமையை அறியாத அப்பகைவனின் கொட்டத்தை அடக்கு வேனெனச் சீறி யெழுந்தான்; போர்க்கோலம் பூண்டு போர்க்குப் புறப்பட்டான்; அரண்மனை வாயிலில் அரியேறுபோல வந்து கொண்டிருந்தான். போர்ப்பறை முழங்கின. தமிழ் மறவர்கள் அணி வகுத்து நின்று ஆர்த்தனர். அப்போது ஒரு தமிழ்ப் புலவர் வணங்காமுடிக் கட்டியிடம் பரிசுபெற வந்தார். வந்தவர் பூங்கோதை யார் என்னும் பெண்பாற் புலவர்; ஆண்டிலும் அறிவிலும் மூத்தவர்; சிறந்த தமிழ்ப் புலமையும் கவித் திறமையும் உடையவர்; சங்ககாலப் பெண் புலவர்கள் போன்ற சால்பு மிக்கவர். அரண்மனை வாயிலில் வந்து கொண்டிருந்த வணங்காமுடியின் எதிர்நோக்கிச் சென்றார் பூங்கோதையார். அந்நிலையில் வணங்காமுடி அந்நல்லியற் புலமை வாய்ந்த மெல்லியலாரை அன்புடன் வரவேற்றான். பூங்கோதையார் ஓர் இனிய செந்தமிழ்ப் பாட்டால் கட்டியின் பெருமையைப் புகழ்ந்து பாடினார். ‘சங்க கால வள்ளல்களெல்லாம் தாங்கள் முயன்று ஈட்டிய பொருளைக் கொண்டு தங்கள் பெயரைச் சொல்லில் செதுக்கி வைத்தனர். மாற்றலரை வாட்டக் கொண்ட மறக் கோலத்துடன் நிற்கும் வணங்காமுடிக்கட்டி! நீ உன் நன் முயற்சியால் ஈட்டிய பொருளைக் கொண்டு உன் பெயரைக் கல்லில் செதுக்கி வைத்தனை. அவர்கள் பெயர் கற்றவர்க்கு மட்டுந் தெரியும்; நின் பெயரோ கற்றவர் கல்லாதவர் எல்லார்க்குமே தெரியும். எனவே, அன்னார் புகழினும் நின் புகழ் பெரிது. ‘வாழ்க நின் பெயர்’ என்பதே அப்பாட்டின் பொருள். அது தாரமங்கலம் சிற்ப வேலைத் திறத்தினைப் புகழ்வது. (சொல்லில் செதுக்கல் - புலவர்களால் பாட்டிலமைத்துப் பாடுதல்.) அப்பாட்டைக் கேட்டு வணங்காமுடி மகிழ்ந்தான்; அப் பாட்டுக்குத் தக்க பரிசு இன்னவென்று தெரியாது மயங்கினான்; பூங்கோதையாரை வணங்கி, ‘தமிழ் மூதாட்டி யே! தங்கள் பாட்டுக்குத் தகுந்த பரிசு இது வென எனக்குத் தோன்றவில்லை; எனது நாட்டைக் கொடுத்தாலும் தங்கள் பாட்டுககு ஈடாகாது; பாரி உயிரைக் கொடுத்ததும், குமணன் தலையைக் கொடுத்ததும் தமிழ்ப் பாட்டுக்கெனின், அவற்றை விடச் சிறந்த பொருள் என்ன இருக்கிறது? எனினும், ‘என் அரசே தங்கள் பாட்டின் பரிசு’ என்று தன் மணி முடியைப் புலவர் தலையில் சூட்டினான்’; இதைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று வெற்றிவாளை யுருவிப் புலவர் கையில் கொடுத்தான். அங்கிருந்தோர் திடுக்கிட்டனர். பூங்கோதையார் வாளைக் கையில் வாங்கிக் கொண்டு, ‘வணங்காமுடிக்கட்டி! நின் தமிழ்ப்பற்றை மெச்சுகிறேன்; நின் நாட்டு ஆட்சியை நான் ஏற்றுக் கொள்கிறேன்; நான் இக்கட்டி நாட்டின் அரசி; நீ என்நாட்டுக் குடிமகன்; உனது தமிழ்ப் பற்றுக்காக இந்நாட்டுக்கு உன்னை அரசனாக்குகிறேன்; என் அரசை உனக்குப் பரிசாகக் கொடுக்கிறேன்; நீ பகை வென்று பைந்தமிழ்க் காப்பாயாக’ என் மணிமுடி சூட்டி, வீரவாளைக் கையில் கொடுத்தார். வணங்காமுடி மறுமொழி கூறமுடியாமல், ‘அன்னாய்! தங்கள் கட்டளை!’ என்று அவற்றை ஏற்றுக் கொண்டான். பூங் கோதையார் தமக்கு வேண்டியதைப் பெற்றுச் சென்றார். வணங்கா முடி படையுடன் சென்று எதிரிப் படையைப் புறங்காட்டி யோடும்படி செய்து வெற்றியுடன் மீண்டான். பார்த்தீர்களா வணங்கா முடிக் கட்டியின் தமிழ்ப் பற்றின் எல்லையை! 11. முளசை வேலப்பன் மனைவியார் பண்டுதொட்டுத் தண்டமிழ் வளர்த்த பெருமை தமிழ்ச் செல்வக்குடியில் பிறந்த ஆடவர்க்கு மட்டும் உரியதன்று. அக்குடிப் பெண்டிர்க்கும் சரிபங்கு உண்டு. செல்வர் மனைக்குப் பரிசில் வேண்டிவரும் புலவர்களை வரவேற்று, முகமலர்ந் தினியன கூறி, ‘உண்ணீர் உண்ணீர்’ என்று உணவிட்டுப் போற்றி மகிழ்விப்பது அம்மனைக்குரிய மாட்சிமையுடைய மங்கை நல்லார்கள் அன்றோ? மனைத்தக்க மாண்புடைய மனைவியர் வாய்க்கப் பெறாதவர் எவ்வாறு புலவரை வரவேற்று, விருந்திட்டுப் போற்றித் தமிழ் வளர்க்க முடியும்? ஒளவையாரை விருந்துக்கு அழைத்துக் கொண்டுபோன ஒருவன் மனைவி, அவன் எவ்வளவோ எடுத்துக் கூறியும், கெஞ்சிக் கேட்டும் ஒளவையார்க்கு விருந்திட இணங்காமல், கணவனையே முறத்தால் அடித்து வீட்டைவிட்டுத் துரத்தினதாக “பழ முறத்தால் சாடினாள் ஓடோடத்தான்” என ஒளவையாரே கூறுவது போன்ற மனைவியர் வாய்க்கப் பெறின், எப்படி வரையாது கொடுத்து வள்ளல் என்று பெயர் பெறமுடியும்? எப்படிப் புலவர் பாடும் புகழுடையோராய்த் திகழ்ந்திருக்க முடியும்? தம் கணவரை வள்ளல்களாக்கின பெருமை, புலவர் பாடும் புகழொடு பொலியச் செய்த பெருமை அன்னாரின் மனைவியர்க்கே உண்டென்பது மிகையாகாது. சோழ நாட்டுத் தஞ்சாக்கூரிலிருந்து வள்ளலாகிய தஞ்சை வாணன் என்பான் மனைவியார், தங்கணவர் ஊரில் இல்லாத போது, அவர் மீது ‘தஞ்சை வாணன் கோவை’ என்னும் செந்தமிழ்ப் பனுவல் பாடிவந்த பொய்யா மொழிப் புலவரை அன்புடன் வரவேற்று, விருந்திட்டுப் போற்றி, அக்கோவையைக் கேட்டு, பாட்டுக்கு ஒன்றாக நானூறு பொற்றேங்காய் பரிசு கொடுத்துத் தமிழ் வளர்த்த வரலாறு நாடறிந்த தொன்றாகும். பழைய கோட்டை சம்பந்தச் சர்க்கரை மனைவியார், புலவர்க்குத் தாலி கொடுத்துத் தமிழ் வளர்த்த வரலாற்றை முன்னர்ப் படித்தறிந் தீர்கள் இவ்வாறு தமிழ் வளர்த்த மகளிரில் வேலப்பன் மனைவி யாரும் ஒருவராவர். முளசை என்பது சேலங் கோட்டத்தில், திருச்செங் கோட்டுக்குப் பக்கத்தில் உள்ள பழம் பெருமை வாய்ந்த ஓர் ஊர். இது தன் தலைவனோடு சேர்த்துச் சிறப்பித்துப் பாடப் பெறும் பெருமையுடைய ஊர்களிலொன்று. முளசையில் வேலப்பன் என்ற வேளாண் குலச் செல்வனொருவன் இருந்தான். அவன் சிறந்த படைத் திறமையும் கொடைப் பெருமையும் உடையவன்; ஒரு பெரும் படையை வைத்துக் காக்கும் அவ்வளவு செல்வப் பெருக்குடையவன்; வேலப்பன் குடி வழிவழியாகத் தமிழ் வளர்த்துப் புகழ்பெற்ற தகைசால் பெருங்குடி. வேலப்பன் அத்தொண்டில் தனிச் சிறப்புடையவன். இவனைத் தமிழ் வளர்க்கவே பிறந்தவன் எனலும் சாலும். இவன் காலத்தே பாண்டி நாட்டை ஆண்ட பாண்டியனுக்கு வேலப்பன் சிறந்த நண்பனாக இருந்தான். பாண்டியன் படைத் துணைவர்களில் வேலப்பனும் ஒருவன். அத்தகு படைப் பயிற்சி யுடையவன் வேலப்பன். செஞ்சிக் கோட்டைத் தேசிங்கு என்பவன் டில்லி முகமதிய மன்னனின் அடங்காக் குதிரையை அடக்கிப் பெரும் புகழ் பெற்றது போல, நம் வேலப்பனும் பாண்டியனது அடங்காக் குதிரையொன்றை அடக்கிப் பெரும் புகழ் பெற்ற வனாவான். அக் காலத்தே பாண்டி நாட்டில் பெரும் பஞ்சம் வந்தது. பல மாதங்கள் மழை பெய்யவில்லை. ஏரி, குளங்களெல்லாம் இறைக்க நீரின்றி வறண்டுபோயின குடிநீர்க்கே தட்டுதலாயிற்று. பாண்டி நாட்டு மக்கள் வாழ வகையின்றி வருந்தினர்; உணவுக்கு அயல் நாட்டை எதிர்பார்த்து ஏங்கி நின்றனர். பாண்டியன் தனதுபெரும் படையைக் காப்பாற்ற முடியாத நிலையை அடைந் தான்; தன் படையின் ஒரு பகுதியை தனது நண்பனான வேலப்பன் ஊரான முளசைக்கனுப்பினான். நல்ல மழை பெய்து நாடு செழிக்கும் வரையிலும் அப்படை முளசையிலிருந்து வந்தது. பாண்டி நாட்டு மறவர்கள் யாதொரு குறையும் இன்றிக் கொங்கு நாட்டில் உண்டு களித்திருந்தனர். அப்படையில் பன்னூற்றுக் கணக்கான குதிரைகளும் இருந்தன. வேலப்பன் அப்பாண்டிநாட்டு வீரர்க்கு வயிற்றுக்கு மட்டும் உணவூட்டுவதோடு நின்றுவிடவில்லை. செவிக்கும் உணவூட்டி வந்தான்; சிறந்த தமிழ்ப் புலவர்களைக் கொண்டு, பழந்தமிழ் நூல்களில் உள்ள சிறந்த கருத்துக்களை எடுத்துரைக் கும்படி செய்து, தமிழறிவையும், தமிழ் பற்றையும், தமிழினப் பற்றையும் உண்டாக்கி வந்தான். தமிழ்ப் புலவர்கள் அவ் வாய்ப்பை நன்கு பயனுடைய தாக்கினர்; புறநானூற்றில் கூறப் படும் பழந் தமிழ் மக்களின் வீர வரலாற்றை எடுத்துரைத்து, அப்பாண்டி மறவரை வீரர்க்குள் வீரராக்கினர்; திருக்குறளின் ஒழுக்க முறைகளை எடுத்தியம்பி அன்னாரைச் சிறந்த ஒழுக்க நெறியில் அழுத்த முடையவராக்கினர். பஞ்சம் பிழைக்கவந்த பாண்டி நாட்டு மறவர்கள் பைந்தமிழ்ப் புலமையும் பெற்றனர். மழை பெய்து நாடு செழித்தபின் அப்படையைப் பாண்டி நாட்டிற்கனுப்பினான் வேலப்பன். இவ்வுதவிக்கு நன்றியறிதலாகப் பாண்டியன் வேலப்பனுக்கு அன்னத்தியாகி என்னும் பட்டத்தை வழங்கினான். வேலப்பன் புகழ் பாண்டிநாடு முழுவதும் பரவியது. சிறந்த தமிழ் வளர்ச்சித் தொண்டல்லவா இது? ஏன் பரவாது? வேலப்பன் பெருந்தன்மையைப் பேருதவியை- பாண்டி நாட்டு மக்கள் பாராட்டினர். பாண்டியன் அவைக்களப் புலவரொருவர் வேலப்பன் தமிழ்த் தொண்டைக் கேட்டு வியப்புற்று, வேலப்பனை நேரில் கண்டு, அவனுடைய அரும்பெருங் குணத்தைப் பாராட்ட எண்ணினார்; அவ்வாறே அவர் கொங்கு நாட்டை நோக்கிப் புறப்பட்டார்; கொங்கு நாட்டுக்குடி வளத்தைக் கண்டு களித்த வண்ணம் முளசையை நோக்கிச் சென்றார். வேலப்பன் குடும்பம் தமிழ் வளர்க்கும் தகைமிகு தனிப் பெருங் குடும்பமல்லவா? வேலப்பன் வீட்டில் எப்போதும் புலவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். பரிசு பெற்றுச் செல்வோரையும், பரிசு பெறவருவோரையும் நீங்கா நிலையை யுடையது வேலப்பன் வீட்டுப் பெருவாயில். தமிழ்ச் செய்யுட் களைக் கேட்பதையும், புலவர்க்குப் பரிசு கொடுப்பதையுமே பொழுது போக்காக உடையவன் வேலப்பன். வேலப்பன் வீட்டு வேலைக்காரரும் கொடுத்துக் கொடுத்துப் பழக்கமானவர்கள் வேலப்பன் கொடைப் புகழ் அவ்வேலைக்காரரையும் கொஞ்சம் அணுகாமல் இராது. ‘கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்’ என்பார்கள். வேலப்பன் வீட்டு வேலைக்காரியும் கொடைக் குணம் மிக்கவளாகத் திகழ்ந்தாள். அத்தகு விழுக்குடி வேலப்பன் குடி. வேலப்பன் மனைவியார் மனைத்தக்க மாண்புடைய மங்கை நல்லாள்; செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் செந்தமிழ்ச் செல்வி; சுற்றம் தழீஇத் தன் தொல் குடியை மேம்படுக்கும் துரிசில்லாள், வேலப்பன் விழுக்குடிக்கு விளக்கன்ன மேதக்காள்; தமிழ் வாழத் தான் வாழும் தகை சான்ற தண்ணளியாள்; வேலப்பன் தமிழ்த் தொண்டுக்கு மேதக்க நற்றுணையாள். அவ்வம்மையார் வேலப்பன் வீட்டை விளக்க வரும் பொழுது சுமாராக எழுதப்படிக்க மட்டுந்தான் தெரிந்திருந்தார்; வேலப்பன் மனைக்குத் தலைவியான பிறகே சிறந்த தமிழறிவைப் பெற்றார்; புலவர்கள் பழந்தமிழ்ச் செய்யுட்களுக்குப் பொருள் கூறும் போதும் பரிசு பெற வரும் புலவர்கள் தாம் பாடி வந்த பாட்டுக்களுக்குப் பொருள் கூறும் போதும் உடனிருந்து கேட்டுக் கேட்டே அவ்வாறு சிறந்த தமிழறிவுடையவரானார்; அவ்வம் மையார், ‘கற்றிலனாயினும் கேட்க’ என்னும் வள்ளுவர் வாய் மொழியைக் கடைப்பிடித்தொழுகி, ‘செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம்’ என்னும் சிறந்த செல்வத்தைப் பெற்றுச் சிறப்புடன் விளங்கினார். புலவர்கள் பாடிவரும் பாட்டின் தரமறியும் ஆற்றலும் பெற்றார்; வேலப்பன் வீட்டில் இல்லாத போது, அவ்வம்மையே பாட்டைக் கேட்டுப் பரிசு கொடுப்பதும் உண்டு. அதனால் வேலப்பன் வீடு புலவர்க்கு மாமியார் வீடு போல் இருந்து வந்தது. பாண்டி நாட்டிலிருந்து வந்த புலவர் முளசையை அடைந்தார்; வேலப்பன் வீட்டுக்குச் சென்றார்; வேலப்பன் ஊரில் இல்லை. அவன் மனைவியாரும் வீட்டில் இல்லை. வேலைக்காரி தான் வீட்டில் இருந்தாள். அவள் புலவரை அன்புடன் வரவேற்று, ‘ஐயா, வெளியூர் போயிருக்கிறார்கள். நாளைக்குத்தான் வருவார்கள். தோட்டத்தில் கம்மங்கதிர் வெட்டுகிறது. அம்மா தோட்டத் துக்குப் போயிருக்கிறார்கள்; வந்து விடுவார்கள்; வாருங்கள் குளித்துக் கொண்டு சாப்பிடலாம்’ என்று அன்புடன் அழைத்தாள். வேலைக்காரியின் வரவேற்பிலிருந்து வேலப்பனது பெருந் தகைமையை அறிந்த புலவர் உள்ளூற மகிழ்ந்தார். ‘பசியில்லை; கொஞ்சம் பொறுத்துச் சாப்பிடுகிறேன்; தோட்டத்தைப் போய் பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று வேலைக்காரி வழி காட்டத் தோட்டத்துக்குச் சென்றார் புலவர். தோட்டத்துக் களத்தில் கம்மங்கதிர் குவித்திருந்தது. அதைக் கண்டதும் அவரது பண்பட்ட கவியுள்ளம் களம் பாடத் தலைப்பட்டது. ‘போர்க்களம் பாடுமுன் புலவர்கள் பாடும் பெருமையையுடையது ஏர்க்களம். ஏர்க்களத்தின் பயன் கூட்டு மிடமே போர்க்களம். உயிரைக் கொன்று குவிப்பது போர்க்களம்; கதிரைக் குவித்து உயிரைக் காப்பது ஏர்க்களம்’, என்று ஏர்க்களத்தின் சிறப்பைப் பாராட்டினார்; கதிர்க் குவியலின் காட்சி புலவர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது; கொஞ்சம் கதிரை எடுத்துக் கொண்டு போய்ச் சாலைத் திண்ணையில் உட்கார்ந்து தின்று கொண்டிருந்தார். கதிர் கொண்டு வந்து களத்தில் கொட்டிய ஆள் சென்று, புலவர் கதிர் தேய்த்துத் தின்று கொண்டிருப்பதை வேலப்பன் மனைவியாரிடம் சொன்னான். அவ்வம்மையார் உடனே களத்துக்குச் சென்று புலவரை வணங்கி, அவர் யார் என்பதை அறிந்ததும், ‘தண்டமிழ்ப் பெரியீர்! தமிழ்ப் பாட்டு எழுதும் தங்கள் கைகளுக்கு இத் தொழில் ஏற்றதாமோ? தேய்த்துத் தருதற்கு இங்கென்ன ஆளா இல்லை? மேலும், கதிரில் கொம்மை இருக்கிறது. கொம்மையோடு தின்னக் கூடாது. கொம்மை போக ஊதத் தங்களுக்குப் பழக்கமிருக்காது. நான் தேய்த்துத் தருகிறேன்’ என்று நல்ல கதிராகப் பொறுக்கி யெடுத்துத் தேய்த்து ஊதிக் கொடுத்தார். புலவர், அம்மையின் பெருங்குணத்தையும், தமிழ் மொழியிடத்துள்ள அளவு கடந்த பற்றினையும் வியந்து, மகிழ்ச் சியுடன் வாங்கித் தின்றார். அம்மை யார் புலவர்க்குச் செய்யும் அத்தொண்டைத் தமிழ்த் தாய்க்குச் செய்யும் தொண்டாகக் கொண்டு மகிழ்ந்தார். புலவர் அம்மையின் அவ்வரும்பெருஞ் செயலை “பூங்கொடி மணமுள்ள பூக்களைப் பூத்துக் கொடுத்தது; கனிமரம் சுவையுள்ள கனிகளைக் காய்த்துக் கொடுத்தது; முளசை வேலப்பன் தேவியின் திருக்கை, தமிழ்ப்புலவர் பசியகல, பயனுள்ள கம்மங்கதிரைத் தேய்த்துக் கொடுத்தது” எனக் கையின் மேல் வைத்துப் பாராட்டிப் பாடினார். வேலப்பன் மனைவியார் புலவரை வீட்டுக்கு அழைத்துப் போய் விருந்திட்டுப் போற்றினார். புலவரின் பொருளுரையைக் கேட்டு மகிழ்ந்தார்; புலவரின் புலமையின் தகுதிக் கேற்ற பரிசில் பல நல்கி மகிழ்வித்தார்; வெளியூர் சென்றிருந்த வேலப்பன் வந்தான்; நடந்ததையறிந்து மகிழ்ந்தான்; அத்தகைய வாழ்க்கைத் துணைவியைப் பெற்றவனுக்கு மகிழ்ச்சிக்கென்ன குறைச்சலா? தன் மனைவி கொடுத்த பரிசுடன் தானும் பரிசு பல கொடுத்துப் புலவரைப் பெருமைப் படுத்தினான். அவ்வாழ்க்கைத் துணைவர் களின் தமிழ்ப் பற்றையும், தமிழ்ப் புலவர்களிடம் வைத்துள்ள மதிப்பையும், தாராள குணத்தையும் புலவர் பலபடப் பாராட்டி விடைபெற்றுச் சென்றார். இத்தகைய செல்வக் குடும்பப் பேற்றைத் தமிழ்நாடு எதிர்நோக்கி நிற்கிறது. பெறுக அப்பேறு! தீரன் சின்னமலை முன்னுரை நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் மாமன் வீட்டில் வள்ர்ந்து வந்தேன். எனது தாய்ப்பாட்டனார் நன்கு தமிழ் படித்தவர். அவர் எனக்கு நாடோம் பாட்டும் கதையும் சொல்லுவது வழக்கம். ஒருநாள் (1951-ல்) தீரன் சின்னமலை கதையைச் சுருக்கமாகச் சொன்னார். சொல்லி முடிந்ததும், ‘இதை யாரிடமும் சொல்லாதே’ என்றார். நான், ‘ஏன்?’ என்றேன். ‘இது நாம் நாட்டை ஆளும் வெள்ளைக்காரரை எதிர்த்தவர் கதையல்லவா? ஆகையால் இக்கதையை யாருக்கும் சொல்லக் கூடாதென்று தடை போட்டிருக் கிறார்கள். மீறிச் சொன்னால் தண்டிப்பார்கள்’ என்றார். நான், ‘யாரிடமும் சொல்லவில்லை. விளக்கமாகச் சொல்லுங்கள்’ என்றேன். ஒரு வாரம் சொன்னார். என்ன வீர வரலாறு! அவ் வீரன் வரலாற்றைக் கேட்டு அவ் விளம்பருவத்திலேயே நானொரு வீரனாகிவிட்டேன். கதை சொல்லும்போது இடையிடையே சின்னமலை கும்மிப் பாட்டுக் களும் சொன்னார். அக்கும்மி சின்னமலையின் வீரவரலாற்றை அப்படியே படம் பிடித்துக் காட்டும் நாட்டுப் பாடல்களா லானது. அக்கும்மி முழுவதும் அப்படியே எனக்குப் பாடமாக இருந்தது. 35 ஆண்டுகளுக்கு மேலான தால் அப்பாட்டுக்கள் எல்லாம் மறந்து போய்விட்டன. படித்ததையோ கேட்டதையோ அடிக்கடி திருப்பிப் படித்தோ, பிறர்க்குச் சொல்லியோ வந்தால் தானே மறக்காமல் இருக்கும்? இதைத்தான் யாருக்கும் சொல்லக் கூடாதே. எப்படி மறக்காமல் இருக்கும்? நம் நாடு விடுதலை பெற்றதும், விடுதலை வீரன் வரலாறாகிய இந்நூலை எழுத முயன்றேன். கதை தொடர்ச்சியாக நினைவுக்கு வரவில்லை. எத்தனையோ அரிய நிகழ்ச்சிகள் மறந்து போய் விட்டன. யார் யாரையோ கேட்டுப் பார்த்தேன். ஒருவருக்கும் ஒழுங்காகத் தெரிய வில்லை. இரண்டாண்டுகளுக்கு முன் சின்னமலையின் மரபினரான வாழைத்தோட்ட வலசு, திரு.சின்னமலைக் கவுண்டர் அவர்களைக் கேட்டேன். அவருக்கும் முழு வரலாறும் ஒழுங்காகத் தெரியவில்லை. எனினும், ஒருவாறு இந்நூலை எழுதி முடிப்பதற்கு வேண்டிய செய்திகள் சொன்னார். (இவர் தகப்பனாரின் தகப்பனார், சின்னமலை யின் அண்ணன் மகன்) ‘தமிழ்ப்பற்று’ என்னும் தலைப்பில் உள்ள இரு பாடல்களும் அவர் சொன்னவைதான். இன்னும் சின்னமலை செய்த எத்தனை யோ வியக்கத்தக்க வீரச்செயல் கள் உண்டு. அவற்றையெல்லாம் தமிழ் மக்கள் அறிந்து இன்புறமுடியாமல் மறப்பெனும் பகைவன் வாரிக் கொண்டனன். ‘தீரன் சின்னமலை’ என்னும் இந்நூலை, எதிர் காலக் குடி மக்களும், ஆள்வோருமாகிய மாணவருலகுக்கு ஏற்றவாறு எழுதுதலே நல்லது எனக்கொண்டு அவ்வாறே எழுதியுள்ளேன். இந்நூல் தமிழ் இளைஞர்களுக்கு மொழியறிவையும், நாட்டுப் பற்றையும், வீரவுணர்ச்சியையும் ஊட்டி, அவர்களை நன்மக்கள் ஆக்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்நூல், உயர் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்ற எளிய இனிய செந்தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும் உள்ள கல்வியுலகம் இந்நூலை வரவேற்று, தமிழ் மாணவருலகிற்குப் பயன்படுமாறு செய்யுமென நம்புகிறேன். பவானி, அன்புள்ள, 25-10-54. அ.மு.குழந்தை. 1. வீர வரலாறு ஒரு நாட்டு வரலாற்றில் வீரமே முதலிடம் பெறுகிறது. வீரத்தின் அடிப்படையிலேயே ஒரு நாட்டின் வரலாறு எழுகின்றது. வீரமற்ற மக்களையுடைய நாடு எதுவும் வரலாற்றுத் தொடர்பு பெறுவதில்லை. வரலாறு அந்நாட்டின் பக்கங்கூடத் திருப்பிப் பார்ப்பதில்லை. வீரம் வரலாற்றின் அடிப்படையாக மட்டும் நின்று விடுவதில்லை. வரலாற்றின் வளர்ச்சியும் வீரத்தின் ஏற்றத் தாழ்வைப் பொறுத்ததே யாகும். வீரம் வளர வளர வரலாறும் வளர்ந்து கொண்டே போய், உலக வரலாற்றின் முதலிடத்தைப் பெறுகிறது. வீர மக்களை ஈன்ற நாடே வரலாற்றில் முதலிடத்தைப் பெறுகிறது என்று விளக்கமாகக் கூறலாம். அத்தகைய வீர வரலாறு பெற்ற நாடே, “நன்னாட்டின் முன்னாட்டும் நாடு.” என்று புலவர் பெருமக்களாற் புகழப் படுகிறது. உலக அறிஞர்களின் பேச்செல்லாம் அந்நாட்டைப் பற்றிய தாகவே இருக்கும். அரசியல் கண்களெல்லாம் அந்நாட்டின் மீதே பாயும். எந்த மேடைப் பேச்சாளர் பேச்சிலும் அந்நாடு இடம் பெறாமல் இருப்பதில்லை. எந்த எழுத்தாளர் எழுத்துக்கும் அந்நாடு தப்புவதில்லை. அந்நாட்டைப் பற்றிப் பேசாத திண்ணைப் பேச்சுச் சுவையற்ற பேச்சாகத்தான் இருக்கும். ஒரு காலத்தே ஆசியாவின் நோயாளி என்று இகழத் தக்க நிலையில் இருந்த துருக்கி இதற்கு எடுத்துக் காட்டாகும். தமிழ் நாடு வீரத்திற்குப் பெயர் பெற்றது. தமிழ் நாடு வீரத்தின் விளை நிலம். மறக்குடி மக்களின் வாழ் விடமாய் அமைந்தது தமிழ்நாடு. தமிழ் நாட்டின் வீரம் உலகப் புகழ் பெற்றது; உவமைப் பொருளற்றது; உயர்வுக் குயர்வுற்றது; உலகில் தனையொத்தது. தமிழர் வீரம் கதிரவனின் ஒளி போன்றது; காற்றின் அலைபோன்றது; மலையின் நிலை போன்றது; மாகடலின் வளம் போன்றது. வீரமே உருவானவர் தமிழ் மக்கள் என்பது சுருங்கக்கூறி விளங்க வைத்தலாகும். புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய சங்க நூல்களில் தமிழர் வீரத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளக்கமாகக் காணலாம். அகம், புறம் என்னும் தமிழர் ஒழுக்கக் கூறுபாட்டில் புறம் என்பது வீரத்தின் திரட்சியேயாகும். தமிழ் மக்களின் வீரக் கருவூலமே புறப்பொருள் என்னலாம். தமிழ் மக்கள் வீரத்திற்கு இலக்கியங் கண்டதோடு மட்டும் நிற்கவில்லை; வீர இலக்கியத்திற்கு இலக்கணமும் கண்டு எழுச்சி யுடன் வாழ்ந்து வந்தனர். தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணையியல் வீர இலக்கணப் பிழம்பாகும். வீரத்தை ஓர் ஒழுக்கமாகக் கொண்டு, அதற்கு இலக்கியமும் இலக்கணமும் கண்ட பெருமை தமிழ் மக்களுக்கே உரிய தனிப் பெருமையாகும். தமிழர் வீரம் சங்க காலத் தமிழ் மக்களோடு இறந்துபட வில்லை; அன்று இருந்தபடியே இன்றும் உயிரோடுதான் இருந்து கொண்டிருக்கிறது. சென்ற இரண்டாவது உலகப் பெரும் போரில் தமிழர் வீரம் உலகப் புகழ்பெற்றது. உலக வல்லரசுக ளெல்லாம் தமிழ்மக்களின் மறப்பண்பை உள்ளபடி உணர்ந்தன. ஆனால், அன்றிருந்ததுபோல் இன்று தமிழ் நாட்டில், தமிழர் வீரத்திற்குத் தனி மதிப்பில்லை. தமிழர் வீரம் இன்று நீறுபூத்த நெருப்புப் போல் உள்ளடங்கிக் கிடக்கிறது. தமிழர் இன்று வீரமற்றவர் போல் காணப்படுகின்றனர். “வீரம் என்ன சார் விலையென் றாச்சு” என்று ஒரு புலவன் எள்ளி நகையாடும் இரங்கத் தக்க இழிநிலையில் இருந்துவரு கின்றனர். ஏன் இந்நிலைமை? இந்நிலைமை எதனால் உண்டானது? ஒன்றரை நூற்றாண்டாக நம் நாடு அயலார் ஆட்சியில் இருந்துவந்தது. நாம் அயலார்க்கு அடிமையாக இருந்து வந்தோம். அதனால் உண்டானதே இவ்விரங்கத் தக்க இழிநிலைமை! அடிமைப்பட்ட தமிழன் தனக்கு இயல்பாக உள்ள வீரத்தை மறந்தான். மறக்கவில்லை; அடிமை வீரத்தை மறக்கும்படி செய்துவிட்டது. நம் நாடு அயலாராட்சி யினின்று இப்போது விடுதலை யடைந்துவிட்டது. விடுதலை பெற்ற நாட்டில் தமிழன் தனக்குரிய வீரத்தோடு வாழ வேண்டு மல்லவா? அப்போது தானே அடைந்த உரிமையை இழக்காமல் காக்க முடியும்? வீரமற்ற மக்களிடம் உரிமை எங்ஙனம் நிலைத்து நிற்கும்? எனவே, தமிழன் தனது பழைய நிலையை அடைய வேண்டும். அவன் மறத் தமிழன் ஆக வேண்டும்; வீர உணர்ச்சி பெறவேண்டும். இவ் வீர உணர்ச்சியைத்தான் தமிழர் தலைவர்கள் இன்று தமிழ் மக்களுக்கு உண்டாக்கி வருகின்றனர்; தூங்கும் தமிழர்களைத் தட்டி யெழுப்பி வருகின்றனர்; “தமிழா! உறங்காதே; இவ்வளவு நாளாய் நீ உறங்கிக்கிடந்தது போதும்; விழித்தெழு; முகத்தைத் துடை, நிமிர்ந்து உட்கார்; தலையைச் சொறியாதே; உனது பழம் பெருமையை எண்ணிப்பார்; மறத் தமிழா! உனது முன்னோர் வீர வரலாற்றை நினைவுகூர்; சங்க காலத் தமிழகத்துக்குச் செல்; ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன் வரலாற்றைப் படி; கரிகாற்சோழன் வரலாற்றைக் கல்; இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனை எண்ணிப்பார்; செங்குட்டுவன் வீரச்செயலைச் சிந்தனைசெய்; பாரி பறம்பைப் பார்; கட்டாயம் தமிழ்ச்சங்கத்தை எட்டிப்பார்; புறநானூற்றைப் புரட்டு; தொல்காப்பியத் துறையிலாடு; மூதின் முல்லை, இல்லாள் முல்லை, வல்லாண் முல்லை, இள முல்லை என்னும் துறைகளிற் படிந்தெழு! “சரி, பத்தாம் நூற்றாண்டுக்கு வா; இராசராசர் சோழன் வெற்றிச் சிறப்பைச் சற்றுக் கவனி; அவன் மகன் கங்கை கொண்ட சோழனிடம் செல்; சங்க காலத் தமிழ் மன்னர்கள் இமயத்தில் வில்லையும் புலியையும் மீனையும் பொறித்துப் புகழ் கொண் டார்கள்; இவன் இமயத்தோடு நிற்கவில்லை; இமயத்துக் கப்பாலுஞ் சென்றான்; கடாரங்கொண்டான் (கடாரம் - பர்மா) தெற்கே இலங்கைத் தீவு, தென்மேற்கு பழந்தீவு, மேற்கே பவளத் தீவு, அவ்வளவுங் கொண்டான்!” “இளந்தமிழா! அவனிருக்கட்டும்; பதினெட்டாம் நூற்றாண்டுக்கு வா! வெள்ளையரை எதிர்த்து நின்ற வீரத்தமிழர் வரலாற்றைக்கவனி; மறத்தமிழா! தமிழ் நாட்டுக்காக, தமிழருக்காக, தமிழர் உரிமைக்காக, தமிழுக் காக மறப்போர் புரிந்த அவ்வண்ட மிழரை நாம் மறந்து விட்டோம்; நாம் பழைய நிலையை அடைய வேண்டுமானால் அன்னாரின் வீர வரலாற்றைப் படித்தறிய வேண்டும்”, எனக் கரிகாலன் முதல் கட்டபொம்மன் ஈறாகவுள்ள வீரர்களின் வரலாற்றினை விளக்கிக்கூறி வருகின்றனர். நம்மை அடக்கி யாண்டுவந்த அயலார், இவ்வளவு நாளாய்த் தமிழ் மக்களுக்குத் தமிழ் நாட்டு வரலாற்றைக் கற்பிக்கவில்லை. தமிழ் இளைஞர்களுக்குத் தம் முன்னோர் யாரென்று தெரிந்து கொள்ள முடியாமல் மறைக்கப் பட்டுவந்தது. தமிழ் இளைஞர்கள் தங்கள் முன்னோர் வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்பாத நிலையில் அவர் களுக்குப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. யாரோ அயலார் போர்த்திறனைப் பற்றியதுதான் அவர் வரலாற்றுப் பாடம்! இனி அந்நிலைமை மாற வேண்டும். சங்க முற்காலத் திலிருந்து நேற்றுவரை உள்ள வீரத்தமிழர்களின் வீரவரலாறுகளைத் தமிழ் இளைஞர்கள் கட்டாயம் படித்தறிய வேண்டும். இவரும் தங்கள் முன்னோர் போல் வீரர்களாக வேண்டும்; வீர வாழ்வு வாழ வேண்டும்; வெற்றிக் களிப்பால் இன்புற வேண்டும். இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் வீரவரலாறு தமிழர் தலைவர் களால் பேசப்படுகிறது. அவன் வரலாறு பள்ளிச் சிறுவர்கள் படித்தறியும் அளவுக்குத் தமிழ் நாட்டில் மதிப்புப் பெற்று விட்டது. கட்டபொம்மன் செய்த வீரச்செயல் என்ன? இந்நாட்டுக்கு வாணிகம் செய்ய வந்து, இந்நாட்டு மன்னரை ஏமாற்றி வரிவாங்கும் உரிமையைப் பெற்ற வெள்ளைச் 1சாத்தர்க்கு அவன் வரி கொடுக்க மறுத்தான்! அவர்தம் படைவலி கண்டு அவன் அஞ்சவில்லை; அவரோடு எதிர்த்துக் கடும்போர் செய்தான்; முடிவில் வெள்ளைக் காரரால் மரத்தில் தூக்கிக் கட்டிக் கொல்லப்பட்டான். அவன் பூதவுடல் தூக்கு மரத்தில் தொங்கிற்று. அவன் புகழுடல் தமிழர் உள்ளத்தில் தங்கிற்று. ஆனால், இதுகாறும் அவன் வீர வரலாற்றைப் பேசக் கூடாதெனத் தடை விதிக்கப் பட்டிருந்தது. கட்டப்பொம்மனைப் போல வெள்ளைக்காரரை எதிர்த்த வீரத் தமிழர்கள் தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் உண்டு. அவர்கள் வீரவரலாறுகளெல்லாம் அவ்வாறேதான் பேசக் கூடாதென அடக்கப்பட்டுவிட்டன. அடக்கு முறைக்கு அஞ்சிய தமிழர்களால் அவை மறுக்கப்பட்டு விட்டன. கட்டபொம்மன் கதைபோல எத்தனையோ வீரக்கதைகளும், பாட்டுக்களும் ஆங்கில ஆட்சியாளரின் அடக்குமுறையால் மறைந்து விட்டன. இதற்கென அறிஞர் கூட்டமொன்று தமிழ்நாடு முழுதும் சுற்றினால் எத்தனையோ வீரர்கள் வெளிப்படுவார்கள். எத்தனையோ கட்ட பொம்மன்களைக் காணலாம். இவ்வாறு தமிழர்களால் மறக்கப்பட்டுப் போன வீரர்களில் நம் சின்னமலையும் ஒருவனாவன். தீரன் சின்னமலையின் வீரவரலாறு எப்படித் தமிழ் மக்களால் மறக்கப் பட்டது? தமிழர்கள் என்ன அவ்வளவு செய்ந்நன்றி கொல்லும் தீக்குணம் உடையவர்களா? இல்லை. சின்னமலை பெயரைச் சொல்வதும் குற்றமென அடக்கியாண்டு வந்தனர் ஆங்கில ஆட்சியாளர். தென்கொங்கு நாட்டில் இன்றும், ஒருவர் ஒருவரை அதட்டி ஏதாவது சொன்னால், “என்ன சின்னமலைக் கவுண்டன் அதிகாரம் போல் இருக்கிறதே!” என்பது வழக்கம். இவ்வாறு சொல்வதையும் அதிகாரிகள் தடுத்து வந்தார்க ளென்றால், தமிழர்களால் சின்னமலையின் வீரவரலாற்றை எப்படி மறக்காமல் இருக்க முடியும்? சின்னமலை வரிகொடுக்க மறுத்து வெள்ளைக் காரருடன் போர்புரியவில்லை; அவர்கள் இந்நாட்டில் இருப்பதையே மறுத்தான்; அவர்களை இந்நாட்டை விட்டு ஓட்டவே போரிட்டான்; அன்னார் வென்று கொண்ட நாட்டை விடாமல் தான் ஆண்டு வந்தான்; பலமுறை ஆங்கிலப் பெரும் படைகள் அஞ்சியலறிப் புறங்காட்டி யோடும்படி அடித்துத் துரத்தினான்; அன்னார் ஆட்சிக்குக் கீழ் இருக்க மறுத்தான்; அடிமை வாழ்வை அறவே வெறுத்தான்; சாவை அன்போடு வரவேற்றான். சின்ன மலையின் வீரவரலாறு செந்தமிழ் நாட்டு இளைஞர்களுக்குத் தெளிவூட்டும் வரலாறாகும். இது அவர்கள் சொந்த வரலாறு! வாழ்க சின்னமலை வீர வரலாறு! 2. சர்க்கரை மரபு சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் சோழ நாட்டை உத்தமக்காச் சோழன் என்பவன் ஆண்டு வந்தான். அப்போது பாண்டி நாட்டைச் சத்துருசாதனன் என்னும் பாண்டியன் ஆண்டு வந்தான். உத்தமக்காச் சோழன் சத்துருசாதன பாண்டிய னோடு பகை கொண்டான்; பாண்டி நாட்டின் மீது படையெடுத் தான். சோழன் படை உறையூரை விட்டுப் புறப்பட்டது. ‘இனி பாண்டிநாடு என்னாகுமோ’ என்று கண்டோர் இரங்கும்படி பாண்டி நாட்டு ஊர்களைச் சூறையாடிக்கொண்டு மதுரையை நோக்கிச் சென்றது அச்சோழப்படை. அது கண்ட பாண்டியன், பெரும் படையுடன் படைத் தலைவரை ஒருவர்பின் ஒருவராக ஏவினான். அச்சேனைத் தலைவர்கள் முறையே சென்று பொருது சோழப்படையை வெல்ல முடியாது வாளா மீண்டனர். தன் தானைத் தலைவர்கள் பலரும் சோழன் படைக்குத் தோற்றதைக் கண்ட பாண்டியன் சினந்து, தானே போருக் கெழுந்தான். போர் முரசுகள் இடியென முழங்கின. செந்தமிழ் மறவர்கள் திரண்டெழுந்தனர். மறக் குடிமகளிர் தம் மைந்தரையும் கணவரையும் வாழ்த்தி விடைகொடுத் தனுப்பினர். தலைவர்கள் படையை அணி வகுத்து நிறுத்தினர். அந்நிலையில், கரியான் சர்க்கரை என்னும் படைத் தலைவன் பாண்டியனை வணங்கி, ‘செந்தமிழ் வேந்தே’ என் போன்ற வீரர்களிருக்க அவ்விகலாரை வெல்லத் தாங்கள் செல்லுதல் தகுதியாமோ? இதோ நான் சென்று அச்சோழரை வென்று துரிசில் மீள்வேன். விடைதந்தருள்க,’ என வேண்டி னான். சர்க்கரையின் மறக்குணத்தைக் கண்ட மாறன்வழுதி மகிழ்ந்து, வாழ்த்தி வாள் கை கொடுத்தனுப்பினான். செழியன்பால் விடைபெற்றுச் சென்ற சர்க்கரை, சோழன் படைமேல் அரியேறெனப் பாய்ந்தான். இரு படையும் கைகலந்தன. பெரும்போர் நடந்தது. சர்க்கரையின் போர்த்திறத்தைக் கண்டு பகைவரும் புகழ்ந்தனர். முடிவில் சர்க்கரையின் தோள்வலிக்கு எதிர் நிற்க மாட்டாமல் சோழன் படை புறங்காட்டியோடிற்று. சர்க்கரை அச்சோழப் படையைத் துரத்தி யடித்து விட்டு வெற்றிக் களிப்புடன் மதுரையை அடைந்தான். சோழன் தனது தோல்விக்கு வருந்தி உறையூர் புக்கான். வளவன் படையை யோட்டி வாகை புனைந்து வந்த சர்க்கரையின் போர்த்திறனைக் கண்ட தென்னவன் அகமிக மகிழ்ந்தான்; சர்க்கரையை மனமாரப்புகழ்ந்தான்; உத்தமக்காச் சோழனை வென்றதால் உத்தமக்கா 1மிண்டன் என்னும் பட்டம் வழங்கி, கொங்கு மண்டலத்துக் காங்கய நாட்டுக் காரையூர்க்கு அரசனாக்கினான். தன் ஆண்மையால் அரசெய்திய கரியான் சர்க்கரை அன்புடன் குடிகாத்து வந்தான். சர்க்கரையின் இவ் வெற்றியை ஒரு புலவர், “ஆறெல்லாம் செந்நீர், அவனியெல்லாம் பல் பிணங்கள், தூறெல்லாம் சோழன் சுரிகுஞ்சி - வீறுபெறு கன்னிக்கோன் ஏவலினால் காரைக்கோன் பின்தொடரப் பொன்னிக்கோன் ஓடும் பொழுது” 2 என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். இப்பாட்டு சர்க்கரை காரைக் கோன் ஆனபின் பாடியதாகும். இக்காரையூர், நத்தக் காரையூர் என்று இப்போது வழங்குகிறது. அது ஈரோட்டுக்கு 19 கல் தெற்கில் உள்ளது. கரியான் சர்க்கரை என்னும் இப்படைத் தலைவன், சோழ நாட்டின் தலைநகரான உறையூர்க்குப் பக்கத்தே இருந்த உறந்தைப் பாக்கம் என்னும் சிற்றூரினன்; இளமையிலேயே பாண்டியன் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றுத் தன் முயற்சி யால் படைத் தலைவன் ஆனவன். கரியான் சர்க்கரையின் வழிவந்த ஒருவர், காரையூரின் தென்கிழக்கில் நான்கு கல் தொலைவில் உள்ள ஆனூர் என்னும் ஊரில் புதிய கோட்டை ஒன்று கட்டி அங்குக் குடியேறினார். அவ்வானூர் இன்று பழைய கோட்டை என்று வழங்குகிறது. அப் பழைய கோட்டையில் ஆனூரம்மன் கோயில் என்பது பழைய ஆனூர்க்குச் சான்றாக இருக்கிறது. இன்றுள்ள (1954) சர்க்கரையின் பாட்டனார்தான் அப்பழையை கோட்டையி லிருந்து (ஆனூரில்) நத்தக் காரையூர்க்கு ஒரு கல் வடக்கில் உள்ள பழைய கோட்டைக்குக் குடியேறினார். இக்காரையூர்ச் சர்க்கரையின் வழி வந்தோரெல்லாம் சர்க்கரை என்னும் தங்கள் குலமுதல்வன் பெயரையும், உத்தமக்கா மிண்டன் என்னும் பட்டப்பெயரையும், மன்றாடி யார் என்னும் தலைமைப் பெயரையும் வழிவழிப் பெயர்களாகக் கொண்டு வழங்கி வருகின்றனர். இன்றுள்ள பழைய கோட்டைப் பட்டக்காரர் பெயர் நல்ல சேனாதிபதிச் சர்க்கரை உத்தமக்கா மிண்ட மன்றாடியார் என்பது. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இச்சர்க்கரை மரபினர், கொங்கு இருபத்து நான்கு நாட்டு வேளாண் குடிமக்களின் குரு போன்ற தலைவராகப் பட்டஞ் சூட்ட பெற்றனர். அதிலிருந்து சர்க்கரை மரபினர்க்குப் பட்டக்காரர் என்னும் பட்டப் பெயர் வழங்கிவருகிறது. ஆனூர்ச் சர்க்கரை மரபில் வந்த கொற்றவேற் சர்க்கரை மன்றாடியார் என்பவர், கி. பி. 1725 - இல் பட்டத்துக்கு வந்தார். இவர் சிறந்த தமிழறிவுடையவர்; தமிழ்ப் புலவர்கள் விரும்பி யதைக் கொடுத்துத் தமிழ் வளர்த்துவந்த தகவுடையார்; குடிமக்க ளிடத்தில் மிக்க அன்பும் ஆதரவும் உடையவர்; விருந்தோம்பல் என்னும் தமிழர் தனிப்பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங் கியவர். இவருக்கு மனைவியர் இருவர். மூத்ததாரம் - காங்கயம். இளையதாரம் - காங்கயத்தை அடுத்த ஆரியபட்டி. இருவர்க்கும் குழந்தை இல்லை. குழந்தையில்லாக் குறையைத் தவிரச் சர்க்கரைக்கு வேறொரு குறையும் இல்லை. அதனால், அவர் தம் சொந்தக்காரச் சிறுவர் இருவரை வளர்ப்புப் பிள்ளைகளாக்கிக் கொண்டார்; மூத்தவனுக்குச் சேனாபதி என்றும், இளையவனுக்கு இரத்தினம் என்றும் பெயர் வைத்தார். சேனாபதியை மூத்த மனைவியாரும் இரத்தினத்தை இளைய மனைவியாரும் அன்போடு வளர்த்து வந்தனர். அவர்கள் மணப்பருவத்தை அடைந்ததும் சேனாபதிச் சர்க்கரைக்குக் காங்கயத்திலும், இரத்தினச் சர்க்கரைக்கு ஆரியபட்டியிலும் அவர் தம் மாமன்மார் மகளிரை மண முடித்தனர். சேனாபதிச் சர்க்கரை மன்றாடியார் ஆனூர்ப் பட்டக்காரரானார். இரத்தினச் சர்க்கரை, ஆனூர்க்கு மேல்புறம் உள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் இருந்துவந்தனர். இவருக்குக் குழந்தைசாமி, தீர்த்தகிரி, தம்பி, கிலேதார், குட்டிச்சாமி என்னும் ஐந்து ஆண் மக்களும் ஒரு பெண் மகளும் பிறந்தனர். தமிழர்கள் என்றென்றும் மறக்கமுடியாத ஆண்டாகிய 1756 - இல் பிறந்த தீர்த்தகிரிதான் நமது தீரன் சின்னமலை. 3. தமிழறிவு தீர்த்தகிரி பள்ளிப் பருவத்தை அடைந்ததும் அரண்மனைப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். சேர்ந்ததிலிருந்து அவன், ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்னும் முதுமொழிக்கு எடுத்துக் காட்டாக விளங்கினான்; எந்நேரமும் ஏடுங்கையுமாக இருப்பான். தீர்த்தகிரி அப்பள்ளியின் முதன் மாணாக்கனாகத் திகழ்ந்தான். தீர்த்தகிரி நன்கு எழுதப்படிக்கத் தெரிந்ததும் அரண்மனைத் தமிழ்ப் புலவரிடம் தமிழ் கற்றுவந்தான். அவர் முறையாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்பித்தனர். தீர்த்தகிரி அன்னத்தைப் போலவும் ஆவைப் போலவும் முதல் மாணாக்கனாக விளங்கினான்; ஆசிரியரிடத்தில் அன்பாகவும் அடக்கமாகவும் நடந்து கொள்வான்; அவர் குணத்தோடு பழகுவான்; குறிப்பறிந்து நடப்பான்; மிக்க ஆர்வத்தோடு பாடங் கேட்பான்; படித்த பாடங்களை நன்கு பயில்வான். தமிழ்ச செய்யுட்களெல்லாம் நகை, உவகை, வியப்பு, அச்சம் அழுகை, இழிவு, வீரம், வெகுளி என்ற எண்வகைச் சுவைகளில் ஏதாவதொன்றை உடையனவாகவே இருக்கும். அவற்றுள், நகை உவகை, வியப்பு என்பன இன்பச் சுவைகள் அச்சம், அழுகை, இழிவு என்பன துன்பச் சுவைகள். வீரம்,வெகுளி என்பன வீரச் சுவைகள். ஏனையிரண்டையும் விட வீரச்சுவையுடைய பாட்டுக்களைத்தான் தீர்த்தகிரி விரும்பிக் கேட்பான்; அத்தகைய பாட்டுக்களைச் சொல்லித் தரும்படி ஆசிரியரை அன்போடு கேட்டுக் கொள்வான். தீர்த்தகிரியின் தமிழ்ப்பற்றியையும், தமிழினப் பற்றையும், செய்யுட்களைச் சுவைக்குந் திறத்தையுங் கண்ட அந்நல்லாசிரியர், சங்க இலக்கியங்களிலுள்ள பழந்தமிழர் வீரவரலாறு என்னும் தமிழ்ச்சாற்றைப் பிழிந்தெடுத்து, வீரச் சுவையுடன் குழைத்து, தீர்த்தகிரியின் செஞ்செவியில் வார்த்தனர். அவ்வீரச்சுவைத் தமிழுண்ட தீர்த்தகிரி வீரவெறி கொண்டான். செங்குட்டுவன் வீரத்தைச் சிறப்புறச் சொல்லும்போது தீர்த்தகிரி செங்குட்டுவனே யாகிவிடுவான்; கரிகாலன் வீரத்தைக் கருத்துடன் கற்பிக்கும் போது கரிகாலனையே கண்ணெதிரில் கொண்டு வந்து நிறுத்துவான். ஆரியப் படைகடந்த நெடுஞ் செழியன் வீரத்தை அறையும்போது இவன்அவனாகவே காட்சி தருவான்; தன் குல முதல்வனான சர்க்கரையின் வீரச் செயலைத் தகவுடன் சாற்றும்போது இவன் உவகைப் பெருக்கால் உள்ளம் வீங்கி ஓங்கல் போல் உயர்வெய்துவான். திருக்குறட் படைச் செருக்கு என்னும் அதிகாரத்தை ஆசிரியர் சுவையோடு பகரும்போது அவனை அறியாமலே அவனிடம் அப்படைஞர் கள் செயல்கள் நிகழும் “ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்தனள், செருமுகம் நோக்கிச் செல்கென விடுக்கும், ஈன்ற வயிறோ இதுவே” என்னும் புறநானூற்றுப் பாட்டுக்களின் பொருளை யுரைக்கும்போது தீர்த்தகிரி தானோர் ஆண்மகன் என்பதையே மறந்து மறக்குடி மகளிரே யாகிவிடுவான். போர்க்களத்தில் பழந்தமிழ் மறவர்கள் புரிந்த மறச் செயல்களை விரித்துரைக்கும் போது இவன் அப்போர்க்களத்துக்கே சென்று விடுவான். ஆசிரியர் தொல்காப்பியப் புறத்திணையியல் கற்பிக்கத் தொடங்கினார். அவ்வளவுதான்! தீர்த்தகிரி தன் காலத்தையே மறந்துவிட்டான். அவன் தன் உடல், உள்ளம், உணர்வு என்னும் மூன்றிலுமே புதியவனாகிவிட்டான். அவனை இனித் தீர்த்தகிரி என்று அழைப்பது சரியன்று. இனி அவனது வீரப் பெயரான சின்னமலை என்றழைப்பதே ஏற்புடைத் தாகும். வெட்சித் திணை, வஞ்சித்திணைகளின் துறைகளை விளக்கும்போது அத்துறைகளுக்கெல்லாம் அவனே எடுத்துக் காட்டாக விளங்கு வான். உழிஞைத் திணையின் அகழ்ப்போர், மதிற்போர் களின் துறைகள் அவனை அப்படியே பழந்தமிழ் நாட்டுக் கோட்டைக்குள் கொண்டு போய் விட்டுவிடும். தும்பைத் திணைத் துறைகளைத் துளக்கற விளக்கும்போது அவன் தன்னை யறியாது அத்துறைச் செயல்களைச் செய்வான். இன்னும் சின்னமலை பெற்ற வீரவுணர்ச்சியை எழுதிக் கொண்டே போகலாம். சுருக்க மாகவும் விளக்கமாகவும் சொல்ல வேண்டுமானல், நம் சின்னமலை பதினெட்டாம் நூற்றாண்டினன் அல்லன்; அவன் ஒரு சங்ககால வீரத்தமிழ் மகனே ஆகி விட்டான் எனல் சாலப் பொருந்தும். ‘குலவித்தை கல்லாமல் பாகம்படும்’ என்னும் பழமொழியைப் பழமொழியாக்கிவிட்டான் சின்னமலை. ஆசிரியர் ஒன்று சொன்னால் இவன் ஒன்பது தெரிந்து கொள்வான்! முதன் மாணாக்கனுக்கு அன்னத்தையும் ஆவையும் உவமை கூறினது பொருந்தா உவமை யென்றாக்கி, இவனொரு தனக்குவமை யில்லாத் தனி மாணாக்கனாகத் திகழ்ந்தான். சின்னமலையின் தமிழாசிரியர் அவனை இப்போதே கோவைக் கோனாகத் தயார் செய்துவிட்டார். கோவைக் கோட்டம் அவன் பருவத்தை எதிர்ப் பார்த்துக் கொண்டிருந்தது. பழந்தமிழ்ப் புலவர்களெல்லாம் இவ்வாறுதான் பழந்தமிழ் வீரர்களையெல்லாம் தயார் செய்தார்கள் போலும்! தமிழ்ப்பற்று நம் சின்னமலை தழிழறிவுடையவனாக மட்டும் இருக்க வில்லை; மிகுந்த தமிழ்ப் பற்றுடையவனாகவும் விளங்கி னான். “கொங்கதனில் சர்க்கரையைப் பாடலாம்”, “எப்போதும் சர்க்கரை பால் ஏற்கும் வலக்கை,” எனப் புலவர் பாடும் புகழுடை மரபு சர்க்கரை மரபு. ‘பெற்ற தாயின் முதுகில் ஒரு தமிழ்ப் புலவர் ஏறப் பொறுத்தும், ஒரு தமிழ்ப் புலவரது உண்ட எச்சில் வாயைக் கழுவிவிட்டும், ஒரு புலவர்கையில் சவுக்கடி பெற்றும், ஒரு புலவர் தெருவில் விலை கூறி விற்க இசைந்தும், ஒரு புலவர்க்கு மனைவியின் தாலியைப் பரிசாகக் கொடுத்தும், தண்டமிழ் வளர்த்து வண்புகழ் கொண்டவர் சர்க்கரை மரபினர். அத்தகைய தமிழ்த் தொல்குடியில் பிறந்தவனல்லவா நம் சின்னமலை? விதையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்? சின்னமலையோ தமிழ் இலக்கிய இலக்கணங் களை நன்கு கற்றறிந்தவன்! தமிழ் வள்ளல்களின் வரலாற்றைப் படித்து மனவளம் பெற்றவன். பழங்காலத் தமிழ்ச் செல்வர் களின் கொடைத் திறத்தாலேயே சங்க நூல்களெல்லாம் தோன்றின என்னும் உண்மையை உள்ளபடி உணர்ந்தவன். தன் முன்னோரின் தமிழப் பற்றையறிந்து அதியுவப் புற்றவன். புலவர் பெருமையை உள்ளபடி உணர்ந்தவன். தன் தந்தை, புலவர்களை அன்போடு வரவேற்கும்போதும், அன்னார் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து அவர்கட்குத் தரமறிந்து பரிசு கொடுத்து மகிழ்விக்கும்போதும் உடனிருந்து பழகியவன். ஆகையால், இளமையிலிருந்தே தமிழப் புலவர்கள் வந்தால் அன்போடு வரவேற்பான். அவர்களிடம் அன் பாகவும் அடக்க மாகவும் நடந்துகொள்வான். அவர்கட்கு ஏதாவ தொன்றை அன்போடு கொடுத்து மகிழ்வான். மறக்குணம் உள்ள இடத்தில் கொடைக்குணம் இருப்பது இயல்பு. சங்க கால வள்ளல் களெல்லாரும் தலைசிறந்த வீரர்களாகவும் இருந்தமை இதற்குச் சான்றாகும். அவ்வாறே பெருவீரனாகிய நம் சின்னமலை, வீரத்திற்போலவே கொடையிலும் சிறந்து விளங்கி னான். இளமையிலிருந்தே புலவர்களைப் போற்றித் தமிழ் வளர்த்து வந்தான்; பல புலவர்கள் இவனைப் பாடிப் பரிசு பெற்றுள்ளனர். பல பனுவல்கள் பெற்றுள்ளான் சின்னமலை. பூந்துறை அம்பிகாபதிப் புலவர் என்பவர் சிறந்த புலமையுடையவர்; நல்ல கவித்திறம் உள்ளவர். அவர் பால் பாடல் பெறுவதைப் பெருமையாகக் கருதி வந்தனர் தமிழ்ச் செல்வர்கள். ஒரு நாள் அவர் மேலப் பாளையம் வந்தார். சின்னமலை அவரை அன்புடன் வரவேற்றுப் போற்றினான். புலவர் சின்னமலையை இனிய செந்தமிழ்ப் பாடல்களால் புகழ்ந்து பாடினார். சின்னமலை அப்பாடல்களைக் கேட்டு அகமிக மகிழ்ந்தான். புலவரின் தரமறிந்த சின்னமலை, அவரைப் பொன்முழுக் காட்டிப் பெருமைப் படுத்தினான். அதாவது, புலவரை ஒரு மனையி லிருத்திப் பொன்னை அவர் தலைமேல் சொரிந்தான். புலவர் சின்னமலையின் பெருங்குணத்தையும் தமிழ்ப் பற்றையும் வியந்து, மேலும் பல பாடல்கள் பாடிப் புகழ்ந்தார். அவற்றுள் இருபாடல்கள் வருமாறு: 1“கங்கையென்பார் நின் குலத்தைக் கமலையென்பார் ஆனூ ரைக் கவின்சேர் நல்ல மங்கையென்பார் நினதுதெய்வம் மாதேவர் செயங்கொண்டார் வாணர்க் கீகை நின்கையென்பார் போர்க்களத்துக் கொருவிசயன் நின்னையென்பார் நிலத்தில் கீர்த்தித் தங்கமென்பார் ரத்தினத்தின் தீர்த்தகிரி யென்றசொலும் தகுங்கண் டாயே” “சென்னி மலைக்குஞ் சிவன்மலைக் கும்மிடை தீரமிகு சின்ன மலையென்று மேனாம்பு பேசிய தீர்த்தகிரி சொன்ன மலையினால் யானவன் கீர்த்தியைச் சொன்னதற்கா என்னை யடித்துத் துரத்திவிட் டானினி யென்செய்வனே.” உடன் பிறந்தார் சின்னமலையின் பிறந்தவர்கள் நால்வரில் குழந்தை சாமியும், குட்டிச்சாமியும் தம் உடன்பிறந்தவர்களுடன் ஒன்றாகவே படித்தனர்; படிப்பு முடிந்ததும் ‘வீடுண்டு தோட்டங் காடுண்டு’ என மற்றைச் செல்வர் மக்களைப் போல் தங்கள் பாட்டுக்கு இருந்து வந்தனர். மற்ற இருவரும் சின்னமலையின் தம்பியரே யாயினர். சின்னமலை தம்பி, கிலேதார் மூவரும் ஒரே உள்ளமும் உணர்வும் உடையவராய் விளங்கினர். ‘ஈருடல் ஓருயிர்’ என்பது போல், இவர்களை ‘மூவுடல் ஓருயிர்’ என்ன லாம். மூவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பர். சின்னமலை சொல்வ தெதையும் தம்பியும் கிலேதாரும் தட்டவே மாட்டார் கள். சின்னமலையை அவர்கள் தங்கள் முன்னவனாக மட்டும் கொள்ளவில்லை; மன்னவனாகவே கொண்டு அதற்கேற்ப நடந்துவந்தனர். உலகை விளக்கும் முச்சுடர் போல, அம்மூவரும் சர்க்கரை மரபை விளக்கும் முச்சுடராக விளங்கினர். 4. சிலம்பப் பயிற்சி சின்னமலை ஒரு சிறந்த உணர்ச்சி வீரனாகி விட்டான்; இனிச் செயல் வீரனாக வேண்டாமா? வெறும் உணர்ச்சி மட்டும் இருந்தால் போதாது; உடற் பயிற்சியும் வேண்டும். அப்போது தான் அவன் உண்மையான வீரனாக விளங்க முடியும். பழந்தமிழ் வீரர்களெல்லோரும் ஒப்பில்லா உடற்பயிற்சியாலன்றோ வெற்றி வீரராக விளங்கினர்? அவ்வுடற் பயிற்சி - கைத்திறம், தோள்வலி, எனவும் பெயர் பெறும். செந்தமிழ் வேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர்களின் கைத்திறத்தாலன்றோ இமயத்தில் புலிவிற் கெண்டை பொறிக்கப்பட்டது! செங்குட்டுவன் கைவலிக்கு ஆற்றாமலன்றோ கனகவிசயர் முடித்தலைகள் அடித் தலத்தைத் தொட்டன? ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் தடந்தோட்கு அஞ்சியன்றோ ஆரியப் படை அஞ்சியலறி யோடியது? இளஞ்சேட் சென்னியின் மொய்ம்புக்கு முன்னிற்க முடியா மலன்றோ மோரியர் படை முதுகு காட்டி ஓடியது? கங்கை கொண்ட சோழன் கைத்திறங் கண்டன்றோ உலகமே அன்று ஒருங்கு நடுங்கிற்று? இவ்வீர வரலாறுகளையெல்லாம் சின்னமலை கருத்துடன் கற்றுத் தெளிந்தவனல்லவா? அவ்வீர வரலாறுகளன்றோ அவனை ஒரு பெரு வீரனாக்கின? எனவே சின்னமலை சிலம்பம் பயிலாமலா இருப்பான்? அக்காலத்தே ஊர்தோறும் இரண்டொரு சிலம்பக் கூடம் இருக்கும். சிலம்பத்தில் தேர்ச்சி பெற்றவர் ஊருக்கு நாலைந்து பேருக்கு மேல் இருப்பர். அவர்கள் தடிவீச்சு, வாள்வீச்சு, புலிப் பாய்த்து, மற்போர் முதலிய சிலம்பங்களை இளைஞர்களுக்குக் கற்பித்து வருவர். மேலப்பாளையத்திலும் சிலம்பக் கூடம் இருந்தது. சின்னமலை முதலிய மூவரும் அதில் சேர்ந்து பயின்று வந்தனர். பின்னர்ச் சிறந்த சிலம்பப் பயிற்சியுள்ள ஓர் ஆசிரியரிடம் ஒழுங்காகப் பயின்று வந்தனர். புலிப் பாய்ச்சில் சின்னமலை குருவுக்கு மிஞ்சிவிட்டான். எந்தக் கிணற்றையும் அவன் எளிதில் தாண்டி விடுவான். உயர்ந்த மதிலைத் தாண்டுவது சின்ன மலைக்கு ஒரு வரப்பைத் தாண்டுவது போலாகும். உண்டை வில்லில் சின்னமலை ஒப்பிலொப்பிலி ஆயினான். ‘தனக்குவமை யில்லாதான்’ என்னும் வள்ளுவர் வாய்மொழி சின்னமலையின் உண்டைவிற் பயிற்சிக்கும் தகுந்த இலக்கிய மாகும். அவ்வளவு கெட்டிக்காரன் அவன் அதில்! மேலப்பாளையம் ஊர்க் கிணறு மிகுந்த அகலமும் நீளமும் உடையது. ஊர்ப் பெண்களெல்லாரும் அக் கிணற்றில் தான் தண்ணீர் எடுப்பார்கள். சின்னமலை முதல் மூவரும் புலிப்பாய்த்து, உண்டைவிற் பயிற்சி இரண்டிற்கும் அக்கிணற்றை நிலைக்களனாகக் கொண்டனர். காலையில் எழுந்ததும் அவர்கள் அக்கிணற்று மேட்டுக்குப் போவார்கள்; தண்ணீர் இறைப்போன் பறியில் நீர் மொண்டுவரும் போது மூவரும் ஒரு புறம் நிற்பர்; அவன் தண்ணீர் சாய்த்துவிட்டுத் திரும்புவதற்குள் மறுபுறம் நிற்பர். நாம் ஒரு கிணற்று வாய்க்காலைத் தாண்டுவது போல அவர்கள் அக்கிணற்றை அவ்வளவு எளிதாகத் தாண்டுவார்கள். சில வேளை கவலை இறைப்போன் இவர்கள் கிணறு தாண்டுவதைப் பார்த்துக் கொண்டே நின்று விடுவான். தண்ணீர் எடுக்கும் பெண்டிர் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ? அவ்வூர் மகளிர்க்கு அக்கிணறு தண்ணீர் எடுக்கும் இடமாக மட்டுமின்றி, வேடிக்கை பார்க்கும் இடமாகவும், வீரச்சுவை யூட்டும் இடமாகவும் இருந்து வந்தது. அம்மகளிரில் ஒரு சிலர், ‘ஆளப் பிறந்தவர்கள்’ என எதிர்காலத்தை உணர்ந்தவர்கள் போலப் பேசிக் கொள்வார் கள். ஒருசிலர், ‘பெற்றால் இப்படிப் பிள்ளைகளைப் பெற வேண்டும்,’ என்று வியப்புரை விளம்புவர். ஒரு சிலர், ‘எங்கள் பாட்டி கதை சொல்லும்போது இப்படிச்செய்ததாகச் சொல்லுவர்’ என உண்மையை உரைப்பர். இன்னும் அவர்கள் என்னென்ன பேசிக் கொண்டார்களோ அவர்களுக்குத் தான் தெரியும்! கிணறு தாண்டல் முடிந்ததும் அவர்கள் உண்டைவிற் பயிற்சி தொடங்குவர். மதனகாமன் என்னும் அரசிளங் குமரனும், புத்தி சாதுரி என்னும் அமைச்சிளங் குமரனும் உண்டைவிற் பயிற்சி, செய்ததைப் பற்றி மதனகாமராசன் கதையில் படிக்கும்போது, ‘இப்படிச் செய்ய முடியுமா!’ என்று எண்ணி வியப்புக் கொள்கிறோம். பொய்யெனவுங்கூட எண்ணுகிறோம். அது பொய்யன்று; நாட்டில் நடப் பதைத்தான் கதையில் எழுது கிறார்கள். இதோ பாருங்கள் அந்நாட்டு நடப்பை: ஊர் மகளிர் குடத்தில் தண்ணீர் முகந்து கொண்டு போகும் போது, தம்பியும் கிலேதாரும் வில்லை வளைத்து, சுட்ட களிமண் உண்டையைக் கொண்டு தண்ணீர்க் குடத்தில் துளை செய்வார்கள். சின்னமலையோ பச்சைமண் உண்டையால் தண்ணீர் வெளி வருமுன் அத்துளையை அடைத்து விடுவான். குடத்தில் துளை செய்வது செயற்கருஞ் செயலன்று. அத்துளையின் வழியாகத் தண்ணீர் வெளிவருவதற்குள், ஒரே குறியில், அத்துளையை அடைப்பதன்றோ வியத்தற்குரிய செயற்கருஞ்செயல்! பச்சை மண் உண்டை உடையாமல் மெதுவாகப் பிடித்து, துளையில் நீர் வெளிவருவதற்குள் குறிபார்த்துத் துளையை அடைப்பது எவ்வளவு அறிவொடு பட்ட அருஞ்செயல்! சின்னமலையின் இக் கைகள் பிடித்த 1வெடிதான் வெள்ளையரை வெருண்டோடச் செய்தது, ‘குறிதவறுதல்’ என்பது சின்னமலைக்குத் தெரியாத தொன் றாகும். இவ்வாறு அவ்விரு கலைகளையும் அக்கிணற்று மேட்டில் பயின்று வந்தனர் நம் வீரர்கள் மூவரும். இன்றும் அக்கிணறு அவர்கள் புகழ் போல அப்படியே இருக்கிறது. மற்றும் வெடி சுடுதல், கவணெறிதல், குதிரையேற்றம் முதலியவற்றிலும் நம் சின்னமலை தனக்குவமை யில்லாதவ னாயினன். செஞ்சிக்கோட்டைத் தேசிங்கு மன்னன் குதிரை யேறுவதில் மிகவுங் கெட்டிக்காரன் என்று புகழப்படுகிறது. சின்னமலை அவனை விட மிகமிகக் கெட்டிக்காரன். சின்ன மலையின் குதிரை யேற்றத்திறமையை, ‘குதிரைப் படை’ என்னுந் தலைப்பில் கண்டுகளியுங்கள். 5. பெயர்க்காரணம் கோவை, சேலங்கோட்டங்களும், திருச்சி, மதுரைக் கோட்டங்களின் வடபகுதியும் கொங்கு நாடு எனப்படும். காவிரியாறு கொங்கு நாட்டின் இடையில் தெற்கு நோக்கி ஓடுகிறது. கொங்கு நாட்டின் வடக்கில் பாலைமலைத் தொடரும், தெற்கில் கருமலைத் தொடரும் இயற்கை யெல்லை யரணாக அமைந்துள்ளன. கொங்கு நாடு அன்று மைசூர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கொங்கு நாட்டின் அதிகாரி சங்ககிரிக் கோட்டையில் இருந்து வந்தார். சங்ககிரி பவானி சேலம் வழியில், பவானிக்குப் பன்னிரண்டு கல் கிழக்கில் இருக்கிறது. மலைமேல் கற்கோட்டை ஒன்று இருக்கிறது. அக்கோட்டையில் தான் அவ்வதிகாரி இருந்து வந்தார். கொங்கு நாட்டு நிலவரிப்பணம் அவ்வதிகாரிக்கு அனுப்பப்பட்டு வந்தது. அன்று தண்டற்காரன் குதிரைமீது வரிப்பணம் கொண்டு செல்வது வழக்கம். சின்னமலைக்கு ஆண்டுபதினாறு அல்லது பதினேழு இருக்கும். அப்போதே சின்னமலை குதிரையேறிக் கொண்டு ஊர்களைச்சுற்றிப் பார்த்து வருவது வழக்கம். ஒரு நாள் சின்ன மலை வழக்கம் போல் வெளியூர்க்குச் சென்று விட்டு ஊர்க்கு வந்து கொண்டிருந்தான். வருகிற வழியில் ஒரு தண்டற்காரன் வரிப்பணத்துடன் குதிரைமீது சென்றான். சின்னமலை அவனைப் பார்த்து, ‘நீ யார்? எங்கே போகிறாய்?’ என்றான். அவன் தானொரு தண்டற்காரன் என்றும், சங்ககிரிக்கு வரிப்பணம் கொண்டு போவதாகவும் கூறினான். ‘யாருக்கு?’ என்றான் சின்னமலை. ‘மைசூர் மன்னருக்கு’ என்றான் தண்டற் காரன். அது கேட்ட சின்னமலை, ‘நம் நாட்டு வரிப்பணத்தை மைசூர் மன்னருக்கு எதற்காகக் கொடுக்க வேண்டும்?’ என்று வெறுப்புடனும் வியப் புடனும் கேட்டான். அதற்கு அவன்‘நம் கொங்கு நாட்டை மைசூர் அரசர் ஆளுகிறார்; அதற்காக நாம் அவருக்கு வரி கொடுக்க வேண்டும்’, என்றான். சின்னமலை சினத்துடன், ‘நம் நாட்டை மைசூர் அரசர் ஏன் ஆளவேண்டும்? நமக்கென்ன ஆளவா தெரியாது? இந் நாட்டை ஆள்வதற்கு இங்கு என்ன ஆளா இல்லை? பணத்தை இங்கே கொடு,’ என்றான். ‘ஐயா! நான் அதிகாரிக்கு என்ன சொல்லட்டும்? எங்கள் ஊராளி சும்மா இருப்பாரா? நான் சொன்னதைச் செய்யும் ஆளுக்காரன்’, என்று தன்னிலைமையைக் கூறி வேண்டினான் அத்தண்டற்காரன். ‘இல்லை; நம் நாட்டு வரிப்பணம் அயலாருக்குப் போகக் கூடாது. பாடுபடுவது ஒருவர், பயன் பெறுவது மற்றொருவரா? சென்னி மலைக்கும் சிவன் மலைக்கும் நடுவில் உள்ள சின்னமலை வாங்கிக் கொண்டதாகச் சொல்’ என்று பணத்தை வாங்கிக் கொண்டு சென்றான் சின்னமலை. இவ்வளவு இளம் பருவத்திலேயே சின்னமலையின் நாட்டுப் பற்றையும் தீரத்தையும் பார்த்தீர்களா? ‘நம் நாட்டு வரிப் பணம் அயலாருக்குப் போகக்கூடாது.’ இது எவ்வளவு பொருள் பொதிந்த பொன் மொழி! ‘நம் நாட்டை மைசூர் அரசர் ஏன் ஆள வேண்டும்? நமக்கென்ன ஆளவா தெரியாது? இந்நாட்டை ஆள்வதற்கு இங்கென்ன ஆளா இல்லை? இவைதாம் என்ன பொருளற்ற புன்மொழிகளா? இத்தகைய நாட்டுப் பற்றுத்தான் ஆங்கிலேயரை எதிர்க்கும்படி சின்னமலையைத் தூண்டிற்று; அவர்களை ஆட்டி வைத்தது; முடிவில் வீரச் சாவை அன்போடு வரவேற்றது; என்றும் பொன்றாப் புகழை நிலை நாட்டியது. வாழ்க சின்ன மலையின் நாட்டுப்பற்றும் தீரமும்! இதிலிருந்துதான் தீர்த்த கிரிக்குச் ‘சின்னமலை’ என்னும் பெயர் வழங்கலானது. ‘சென்னி மலைக்கும் சிவன் மலைக்கும் நடுவிலுள்ள சின்னமலை’ மோனையும் எதுகையும் இயைபும் பொருந்திய அழகான சொற்றொடர்! நம் சின்னமலை, பெயரிலோ சின்ன மலை. செயலிலோ பெரிய மலை! 6. தமிழ் நாட்டு அரசியல் தமிழகத்தில் எப்போது ஆட்சியேற்பட்டதென்பது வரையறுத்துக் கூற முடியாத தொன்றாகும். தமிழ் நாட்டில் அரசியலமைப்பு ஏற்பட்டதிலிருந்து தமிழ்நாட்டைச் சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தர் மரபினர் ஆண்டு வந்தனர். கி.பி. 16-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் நாடு அயலாராட்சிக் குட்பட்டது. வீரமே உருவான மூவரசர் ஆட்சி ஒழிந்ததன் காரணம் சரியாகத் தெரியவில்லை. இதைத் தான் ‘காலச்சுழல்’ என்பது. 1510 - இல் இருந்து இருபது ஆண்டுகள் விசயநகர அரசரான கிருஷ்ண தேவராயர் என்பவர் தமிழ் நாட்டின் அரசராய் இருந்து வந்தார். பின்னர் தமிழ் நாட்டாட்சி நாயக்கர் மன்னர் கைக்கு மாறியது. 18-ஆம் நூற்றாண்டில் கிழக்கு மலைத் தொடருக்கும் கீழ்கடலுக்கும் இடைப்பட்ட கர்நாடகத்தை ஆற்காட்டு நவாப்பு ஆண்டு வந்தார். தஞ்சையை சிவாஜி மரபினரான மராட்டிய மன்னர் ஆண்டுவந்தனர். மற்றப் பகுதிகளைத் தமிழ்ச் சிற்றரசர் கள் ஆண்டு வந்தார்கள். 1672 - இல் மைசூர் மன்னன் தொட்டதேவராயன் என்பவன் கொங்கு நாட்டரசன் ஆனான். அதிலிருந்து கொங்கு நாடு மைசூர் ஆட்சிக்கு உட்பட்டுவிட்டது. 1760 - இல் ஐதர் அலி என்பான் மைசூர் மன்னன் ஆனான். அப்போது இந்நாட்டுக்கு வாணிகம் செய்ய வந்த ஆங்கி லேயரும், ஃபிரஞ்சுக்காரரும் இந்நாட்டைக் கைப் பற்றுவதில் ஈடுபட்டு முனைந்து வேலை செய்துவந்தனர். அவர்கள் இந்நாட்டு மன்னர்களுக்குள் பகையை மூட்டி விட்டுத் தாங்கள் துணை செய்வது போல ஒவ்வொரு பக்கம் சேர்ந்து போரிட்டு வந்தனர். அதற்கு இந்நாட்டு மண்ணைக் கூலியாகப் பெற்றுவந்தனர். இந்நாட்டு மன்னர்கள் அவ்வயல் நாடர் விரிக்கும் அரசியற் சூழ்ச்சி வலையிற் பட்டு, இந்நாட்டை அன்னார்க்கு வலியச் சொந்தமாக்கி வந்தனர். கரும்பு கட்டோடு இருந்தால் எறும்புக்கு அங்கு என்ன வேலை? இந் நாட்டு மன்னர்களின் ஒற்றுமை யின்மையே இந் நாட்டை அயல் நாடர்க் குரிமையாக்கி வந்தது. அவ்வயல் நாடர் மேலும் கூலிகொடுத்து இந்நாட்டு மக்களைப் படையில் சேர்த்துப் பயிற்சிகொடுத்துத் தம் நாட்டு மன்னரோடு போரிடவும் செய்து வந்தனர். அப்போது நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் கொள்ளையும் கலகமும் கொலையும் கொடுமையுமாக இருந்தன. நாட்டு மக்கள் பட்டபாடு சொல்லுந்தரமல்ல. போர் வீரர்கள் மனம்போனபடி ஊரைச் சூறையாடி வந்தனர். நாடு வீரர்களின் விளையாட்டுப் பொருளானது. நாட்டு மக்களின் உயிரைக் காக்க ஏற்பட்ட படை உயிரைப் போக்கி வந்தது. நாட்டில் கேள்வி கேட்பாடென்பதே இல்லாமல் போயிற்று, மக்கள் உயிருக்கும் பொருளுக்கும் பாதுகாப் பின்றி உழன்றனர். ‘படை வருகிறது’, என்றால் மக்கள் காடுகரைகளில் ஓடியொளிந்து உயிர் காத்து வந்தனர். சில ஊர்கள் மக்களேயின்றி யிருக்கும். சில ஊர்கள் வீரர்களின் பாடி வீடாக இருக்கும். நாட்டில் தடியெடுத்தவன் தண்டற்காரனானான். கைவலுத்தவன் காரியக்காரனானான். மக்கள் தங்கள் பொல்லாத காலத்தை எண்ணி யிரங்கினர். பெரியோர்கள் நல்லரசின்மையால் நாட்டு மக்கள் படும் பாட்டைக் கண்டு வருந்தினர். அயல் நாடர் செய்யும் அரசியற் சூழ்ச்சியால் நாடு அல்லோலகல்லோலப் பட்டது. அமைதி என்பது நாட்டில் இல்லாப் பொருளாகி விட்டது. ஒருவர் ‘விரைவில் வா’ என்றால், ‘என்ன படையா வருகிறது?’ என்னும் பழமொழி, அக்கால நிலையை விளக்க எழுந்ததேயாகும். முடிவில் ஃபிரஞ்சுக்காரர் தோற்றனர்; ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். 1767- இல் ஆங்கிலேயருக்கும் ஐதரலிக்கும் போருண் டானது. அப்போரில் கொங்கு நாட்டுக்கும் பங்கு கிடைத்தது. 1782 -இல் ஐதர் அலி இறந்தான். மகன் திப்பு பட்டத்துக்கு வந்தான். திப்புவுக்கும் ஆங்கிலேயருக்கும் அடிக்கடி போர் நடந்தது. அப்போர் நாட்டை ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. 1792 - இல் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி சேலம், மதுரை, மலையாளம், கோட்டங்கள் ஆங்கிலே யர்க்குச் சொந்தமாயின. அதோடு நாட்டு மக்கள் நலிவு தீர்ந்த பாடில்லை. மீண்டும் இருவருக்கும் போருண்டானது. அப்போரில் 1799-இல் திப்பு இறந்தான். மைசூர் ஆட்சி ஆங்கிலேயர் கைக்குச் சென்றது. மைசூர் ஆட்சிக் குட்பட்டிருந்த கோவைக் கோட்டமும் ஆங்கிலேயர்க்குச் சொந்தமாயிற்று. இம்மைசூர்ப் போர் முப்பத் தோராண்டு தொடர்ந்து நடந்தது. ஆற்காட்டு நவாப்பு பெயரளவில்தான் தென்னாட்டின் பேரரசனாக இருந்து வந்தான். குறுநில மன்னர்களில் பெரும் பாலோர் சரியாக வரிப்பணம் கொடுப்பதில்லை. வற்புறுத்தி வாங்கும் ஆற்றல் நாவாப்புக்கில்லை. 1792 - இல் நவாப்புக்கும் வெள்ளைச்சாத்தர்க்கும் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி நவாப்பு கொடுக்க வேண்டிய கடனுக்காகக் தென்னாட்டின் வரி வாங்கிக் கொள்ளும் உரிமையை வெள்ளைச் சாத்தர்க்கு வழங் கினான் நவாப்பு. வணிகம் செய்ய வந்த சாத்தர்கள் வரி வாங்கும் அதிகாரிகளாக மாறினர். நாளடைவில் நவாப்பு தன் அதிகாரம் முழுவதையும் அச்சாத்தர்களிடம் ஒப்படைத்துவிட்டு அரசன் என்ற பெயரளவில் இருந்துவந்தான். ‘வரி வாங்குதல்’ என்னும் பெயரால் அச்சாத்தர்கள் தென்னாட்டின் செல்வத்தைக் கொள்ளையடித்து வந்தனர். உழவர்களின் நிலங்களை அளந்து அதிக வரி விதித்து வற்புறுத்தி வாங்கி வந்தனர். பெரும்பாலான பாளையக்காரர்கள் அவ்வெள்ளைச் சாத்தர்க்கு அடங்கி ஒடுங்கி வாழ்ந்து வந்தனர். 1800 - இல் கர்நாடக நவாப்பு இறந்தான். அவனுக்குப் பிள்ளை யில்லாததனால் அவன் ஆட்சிகுட்பட்ட நாட்டை அச்சாத்தர்கள் தங்கள் சொந்தமாக்கிக் கொண்டனர்; அதே ஆண்டில் தஞ்சாவூர் மன்னனும் இறந்தான். அவனுக்கும் பிள்ளை யில்லாததால் தஞ்சையையும் தங்கள் நாட்டுடன் சேர்த்துக் கொண்டனர். 1792-இல் பாஞ்சாலங் குறிச்சிப் பாளையக்காரனான வீரபாண்டியக் கட்டப்பொம்மன் வெள்ளை சாத்தர்க்கு வரி கொடுக்க மறுத்தான். இருவருக்கும் பெரும் சச்சரவு ஏற்பட்டது. ஆறாண்டுகள் இருவருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. 1798-இல் கட்டபொம்மனைத் தூக்கிக் கொன்றனர். அவன் தம்பி ஊமைத்துரை என்பவன் அச்சாத்தரை எதிர்த்து நான் காண்டுகள் புரட்சி செய்தான். 1801 - இல் அவனையும் தூக்கிக் கொன்றனர். 1799-இல் இருந்து தென்னாட்டு மக்கள் யாரும் படைக்கலம் வைத்திருக்கக் கூடாதென மறத்தமிழரின் வாளேந்தும் உரிமையை பறித்தனர். இந்நிலையில் இருந்து வந்தது தமிழ் நாட்டின் அரசியல். 7. நாட்டுப் பற்று பதினாறாண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் ‘நம் நாட்டை மைசூர் அரசர் ஏன் ஆள வேண்டும்? நமக்கென்ன ஆளவா தெரியாது? இந்நாட்டை ஆள்வதற்கு இங்கென்ன ஆளா இல்லை? நம் நாட்டு வரிப் பணம் அயலாருக்குப் போகக் கூடாது’ என்று வரிப் பணத்தை வாங்கிக் கொண்டு வந்தானல்லவா நம் சின்னமலை? அன்றிருந்தே சின்னமலை அரசியலில் ஈடுபட லானான். பழங்காலத் தமிழ் நாட்டின் அரசியலைக் கருத்துடன் கற்றவனல்லவா சின்னமலை? அதனோடு இக்காலத் தமிழ் நாட்டின் அரசியல் நிலையை ஒப்பிட்டுப் பார்க்கலானான். நாளாகாகச் சின்னமலையின் அரசியலுணர்ச்சி நாட்டுப் பற்றாக மாறியது. சின்னமலை ஆளாகாக - அவனுடைய நாட்டுப் பற்று முதிர முதிர அவன் தன் தாய்நாட்டு நலத்திற் குழைப்பதையே வாழ்க்கைப் பயனாகக் கொண்டான். எப்போதும் நாட்டு நலத்தொண்டுக்காக ஊரூராய்ச் சுற்றுவதே அவன் வேலை யானது. தன் சொந்தக் குடும்பம், சொந்தக்காரர், சொந்தப் பண்ணையம், சொந்த நலம் என்பதொன்றும் சின்னமலைக்குத் தெரியாது. ஊர் நலமே தன் உயர் நலமெனக் கொண்டான்; நாட்டுநலமே தன் நலமெனக் கொண்டான். கொங்கு நாட்டின் வடக்கெல்லையில் போர் நடக்கிறது. கொங்கு நாட்டின் அரசியல் மாற்றம் அப்போரின் முடிவைப் பொறுத்ததாகும். அயலார்கையிலிருந்து அது அயல் நாடர் கைக்குப் போனாலும் போகலாம். இது அரசியலறிவுடைய சின்னமலைக்குத் தெரிந்தது. அதனால், அவன் கொங்கு நாட்டை அயலார் கையிலிருந்து மீட்கவேண்டும். நம் நாட்டை நாமே ஆளவேண்டும். ஒரு நாட்டை அந்நாட்டுக்குச் சொந்தக்கார னல்லாத அயலானொருவன் ஆளுதல் முறையன்று. அவ்வய லாராட்சியால் நாட்டு மக்களுக்கு யாதொரு நன்மையும் ஏற்படாது; தீமைதான் ஏற்படும். மேலும் அயலானொருவன் தங்கள் தாய் நாட்டுக்கு அரசனாக இருப்பது அந்நாட்டு மக்களுக்கு மானக் கேடுமாகும். இமயமுதல் குமரிவரை ஒரு மொழி வைத்தாண்ட முடியுடை மூவேந்தர் ஆட்சிக் கீழ் இருந்த தமிழ் நாடு, தமிழ் தெரியாத அயல் மொழியாளர் ஆட்சிக்குட்பட்டு அலைவதா? நூற்றைம்பதாண்டுகளாய்த் தமிழ் நாடு அயல் மொழியாளர் மேற்பார்வையில் (நாயக்க ராட்சியில்) இருந்து வந்ததனாலேயே தமிழ் மொழி தன் பழம்பெருமையை இழந்து விட்டது. இனி அயல் மொழியாளர் நேராட்சிக்குட் பட்டால் நம் தாய் மொழி யென்னாகும்? வேற்று மொழி பேசுவோர்க்குத் தம் தாய்மொழி யல்லாத பிறமொழி பேசும் மக்களிடம் எங்ஙனம் அன்புண் டாகக் கூடும்? ‘தம் தாய்நாட்டை அயலார் ஆள, அவ்வயலாட்சிக் கீழ் அடிமை வாழ்வு வாழ்வது அந்நாட்டு மக்களின் ஆண்மைக் கழகா? தமிழர்கள் என்ன வீரமில்லா வெற்றுடம்பினரா? தமிழர் வீரம் என்ன இறந்தொழிந்தா போய்விட்டது? இல்லை!உயிரோடு தான் இருக்கிறது. ஆனால், குகைப் புலிப்போல் உறங்கிக் கிடக்கிறது. தட்டி யெழுப்ப ஓர் ஆள் வேண்டும். அதை ஏன் நாம் சின்னமலை செய்யக்கூடாது?’ என்று எப்போதும் எண்ணிய வண்ணமிருந்தான். 1792 - இல் கொங்கு நாட்டின் சரி பகுதியான சேலங்கோட்டம் ஆங்கிலேயருக்குச் சொந்தமானதை யறிந்த சின்னமலையின் ஆர்வம் மேலும் மிகுதி யாயிற்று. ‘அயலார் கையிலிருந்து சேலம் அயல்நாடர் கைக்கு மாறிவிட்டது. கோவையும் விரைவில் ஆங்கிலேயர்க்குச் சொந்த மானாலும் ஆகக்கூடும்! அப்புறம் நாம் இருப்பதும் இறப்பதும் ஒன்றுதான்! திப்பு அயலான் எனினும் இந்நாட்டவன். தமிழ் நாட்டின் ஒரு பகுதியைச் சேர்ந்தவன்; இந்நாட்டின் மீது பற்றுள்ளவன்; ஆங்கிலேயரோ அயல் நாடர்; இந்நாட்டின் மீது சிறிதும் பற்றில்லாதவர், இந்நாட்டைச் சுரண்டிப் பிழைக்க வந்தவர்; அவர்கட்கு இந்நாட்டு நலத்தில் எள்ளளவும் அக்கறையிருக்க முடியாது. ஆகையால், நாம் திப்புவின் படையில் சேர்ந்து வெள்ளைக்காரரை இந்நாட்டை விட்டே விரட்ட வேண்டும்; அதன்பின் தமிழாட்சியை ஏற்படுத்தல் எளிது. இனிக் காலந் தாழ்த்தக் கூடாது’, என்று முடிவு செய்தான் சின்னமலை. தம்பிமாருடன் கலந்து ஆராய்ந்தான். ‘நாம் மட்டும் படையில் சேர்ந்தால் போதாது. கொங்கு நாட்டு இளைஞர்களை ஏராளமாகப் படையில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் நமது எண்ணம் முற்றுப்பெறும்’ என்று மூவரும் முடிவு செய்தனர். அன்றே அத் தாய் நாட்டுத் தொண்டைச் செய்யத் தொடங்கினர். மூவர் குதிரையும் கோவைக் கோட்ட மூலை முடுக்குகளெல்லாம் பறந்தன. படையில் சேரவேண்டியதன் இன்றியமையாமையை எடுத்தியம்பினர். இவ்வளவு நாளாய் மைசூர் அரசின் அதிகாரிகள் எவ்வளவோ எடுத்துரைத்தும் எவரும் படையில் சேர வில்லை. அதிகாரிகளின் மிரட்டலுக்கு யாரும் அஞ்சவில்லை. சின்னமலையின் தாய்நாட்டுப் பற்றையும் பொதுத் தொண்டையும் கண்டு, வீரவுரையைக் கேட்டு வீர வுணர்ச்சி பெற்ற கொங்கிளங் காளையர் கொக்கரித் தெழுந்தனர். புற்றீசல் போலப் புறப்பட்டனர்; பல்லாயிரக் கணக்கில் படையில் சேர்ந்தனர். திப்புவின் படை காவிரி வெள்ளம்போல் பெருகியது. அதை அதிகாரிகளின் வாயிலாய் அறிந்த திப்பு, சின்னமலையின் தாய்நாட்டுத் தொண்டை மனமாரப் பாராட்டினான். மூவரும் இவ் வேலையைத் தொடர்ந்து செய்து வந்தனர். ஓடாநிலை சின்னமலை முழு நேர நாட்டுத் தொண்டனானதும் மேலப்பாளையம் அவன் தொண்டுக்கு ஏற்ற இடமாக அமைய வில்லை. தன் தாய்நாட்டின் எதிர்கால வாழ்வை வரையறுக்கும் போர் நடப்பதோ வடக்கில். மேலப்பாளையத் திற்கு வடக்கில் நொய்யலாறு குறுக்கே ஓடுகிறது. அதில் அடிக்கடி வெள்ளம் வந்து வடக்கே போகமுடியாமல் தடை செய்யும். சின்னமலையின் வேலையிற் பெரும் பகுதி நொய்யலாற்றின் வடக்கேதான். ஆகையால், சின்னமலை நொய்யலாற்றுக்கும் வடபுறம் குடியேற முடிவு செய்தான்; குடியேறுவதற்கு ஏற்ற இடம் பார்த்தான். ஓடாநிலை என்னும் ஊர் அவன் உள்ளத்தைக் கவர்ந்தது. சங்க நூல்களில் இடம் பெற்றுள்ள கங்கன் கட்டி பல்வேற் கட்டி வழிவந்த கட்டி மரபினர். கி. பி. 800 முதல் 1672 வரை வட கொங்கு நாட்டைச் சீரும் சிறப்புடனும் ஆண்டு வந்தனர். கட்டிநாடு ஒரு காலத்தே தெற்கே தாராபுரம் வரையிலும் பரவியிருந்தது. 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத் தில் மைசூர் மன்னன் அடிக்கடி கட்டிநாட்டின் மேல் படை யெடுத்தான். ஒருகால் மைசூர்ப் படையொன்று கொங்கு நாட்டு ஊர்களைச் சூறையாடிக் கொண்டே தெற்கு நோக்கிச் சென்றது. ஓடாநிலை என்னும் இடத்தில் கொங்குப் படை யொன்று அப்படையை எதிர்த்தது. மைசூர்ப் படை பெரியபடை; கொங்குப் படையோ மிகச் சிறிய படை. அப்படியிருந்தும் ஒருநாள் முழுவதும் புறங்காட்டி யோடாமல் அம்மைசூர்ப் பெரும்படையை எதிர்த்து நின்றது. பின்பொரு துணைப்படை வந்து மைசூர்ப்படையை வடக்கு நோக்கி ஓடும்படி செய்தது. அதிலிருந்து அவ்வூர்க்கு ஓடாநிலை என்னும் பெயர் வழங்கலானது. எனவே வரலாற்றுப் புகழ்பெற்ற அவ்வூரில் புதிதாக அரண்மனை கட்டி அங்குக் குடியேறினான் சின்னமலை. 8. நல்ல வாய்ப்பு சின்னமலையின் முன்னவனான குழந்தைசாமிக்கு ஆரியப் பட்டித் தாய்மாமன் மகளை மணஞ் செய்தனர். குட்டிச் சாமிக்கும் வேறு இடத்தில் மணமுடித்தனர். சின்னமலை முதலிய மூவரும் மணசெய்து கொள்ளவில்லை. மணஞ் செய்து கொண்டு இல் வாழ்க்கை நடத்த அவர்களுக்கு நேரமேது? அதற்காகவா அவர்கள் பிறந்தார்கள்? நாட்டு விடுதலைத் தொண்டுதான் அவர்கள் இல்வாழ்க்கை. ஆளானதிலிருந்து அவர்கள் ஒரு நொடி நேரத்தைக்கூட வீணாகக் கழிக்கவில்லை, காலக் கொலைக்கு அவர்கள் ஒருபோதும் ஆளாகவில்லை. ஓயா உழைப்பு; உலையா முயற்சி; ஊருக்கு உழைப்பதனால் உண்டாகும் இன்பமே அவர்களது வாழ்க்கைப் பேரின்பம்! அவர்கள் தாங்கள் மட்டும் சிலம்பம் பயின்றதோடு நிற்க வில்லை. ஊரூராகச் சென்று கொங்கிளங்காளைகளுக்குச் சிலம்பம் பயிற்றுவித்து வந்தனர். மனம்போலச் செல்லும் அவர் தம் குதிரைகள் நூறு கல்லானாலும் நினைத்தநேரத்தில் செல்லும். கோவைக் கோட்டத்தில் எங்கும் எப்போதும் அவர் களைக் காணலாம். சிலம்பம் பயிற்றுவிப்பது, படைக்கு ஆட் சேர்த்தனுப் புவது இவைதான் அவர்கள் வாழ்க்கைப் பயன். வெளியில் சென்று வரும்போதெல்லாம் படை வருவதுபோல் பலரோடுதான் வருவர். ஊரில் இருக்கும்போது ஓடாநிலைக்கு நான்கு கல் வடக்கில் உள்ள அறச்சலூர் மலைக்குச் சென்று வேட்டையாடு வார்கள். ஏன் அதுவரையிலும்? மற்றைச் செல்வர் மக்களைப் போல வீண்பொழுது போக்கிக் கொண்டா இருப்பார்கள்? அது தான் அவர்களிடத்தி லில்லையே. ஊர் நலத்தொண்டில் அவ்வளவு ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவில் வந்தாலும் தூக்கங்கெட எழுந்து சோறாக்கிப் போடும் வேலை அண்ணன் மனைவியைச் சேர்ந்ததாகும். சமையற்காரர்கள் இருந்தாலும் குடும்பத் தலைவியாகிய அவ்வம்மை எழுந்துதானே ஆகவேண்டும்? மேலும், வரும்போது படை போலப் பலரைக் கூட்டிக் கொண்டு வருவதும், நேரங் கெட்ட நேரத்தில் வந்து சோறாக்கிப் போடச் சொல்வதும் அவ்வம்மைக்குப் பிடிக்க வில்லை. சின்னமலையின் பொதுத் தொண்டு அவன் அண்ணிக்குத் தொந்தரவாக இருந்தது. உலகம் போற்றும் முதல்வர் காந்தியடிகளின் பொதுத் தொண்டை அன்னை கஸ்தூரிபாய் ஒரு காலத்தே தொந்தரவாக எண்ண வில்லையா? அவ்வாறே சின்னமலையின் பொதுத் தொண்டு அவ்வம்மையார்க்குப் பிடிக்காததால் அதைத் தொந்தரவாகக் கொண்டாள். தங்கணவரோ தம்பிக்கு அடங்கினவர். அவரிடம் சொல்லி யாதொரு பயனும் ஏற்படவில்லை. எனவே, கெம்பாயம்மாள் என்னும் நம் சின்னமலையின் அண்ணன் மனைவி, ஆரியப்பட்டிக்குப் போன போதெல்லாம், ‘அப்பா! அவர்கள் தொந்தரவு பொறுக்க முடியவில்லை. யாமம் ஏமம் என்பதுண்டா? எப்போதும் படை வருவதுபோல் பலரைக் கூட்டிக் கொண்டு வந்து ஆக்கிப்போடச் சொல்வது. அவர்களுக் கென்ன தண்டுவர்கள்? இப்படியே போட்டால் எத்தனைதான் கிடைத்தாலும் எத்தனை நாளைக்கு வரும்? உங்கள் மருமகனோ அவர்கள் எதிரில்கூட நிற்கத் துணிவில்லாதவர். அவரிடம் சொல்லுவதும் சொல்லா திருப்பதும் ஒன்று தான். நீங்கள் சொல்லி அடக்கிவையுங்கள், ’என்று தந்தையிடம் முறையிடுவாள். இந்த முறை போனவள் ‘நான் உங்களிடம் பல முறை எவ்வளவோ சொல்லியும் நீங்கள் காதில் கூடப் போட்டுக் கொள்ளவில்லை. உங்களுக்கென்ன இங்கு இருக்கிறீர்கள்? அங்கிருந்து பார்த்தால் தானே தெரியும் அவர்கள் செய்யும் அட்டூழியத்தை! இனிமேல் என்னால் அவர்கள் தொந்தர வைப் பொறுத்துக் கொண்டு அங்கிருக்க முடியாது. அதற்காகத்தான் குழந்தை குட்டிகளையெல்லாம் கூட்டிக் கொண்டு வந்தேன். இனி அங்குப் போகச் சொன்னால் அவ்வளவுதான்! மறுபடி என்னை நீங்கள் பார்க்க முடியாது. கிணறு குட்டையில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வேன்,’ என்று தேம்பித் தேம்பி அழுதாள். தகப்பனார், ‘அந்தப் பயல்களை அடக்கிவைக்கிறேன்; அழாதே சும்மா இரு,’ என்று மகளைத் தேற்றினார். சின்னமலை முதல் மூவரும் 1795-இல் சென்னிமலைத் தேருக்குச் சென்றிருந்தனர். சென்னிமலை, ஓடாநிலைக்கு ஆறுகல் மேற்கில் இருக்கிறது. ஆரியபட்டி மாமன் வீட்டாரும் தேருக்கு வந்திருந்தனர். மாமன், சின்னமலையைத் தண்டிக்க இதுதான் தக்க காலமென்று எண்ணினார். சின்னமலையைத் தண்டிப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமா? எப்படி யாவது தேர்க்கூட்டத்தில் மானக்கேடு செய்வதென்று முடிவு செய்தார். அதற்கெனவே ஊரிலிருந்து சில முரடர்களைக் கூட்டிக் கொண்டு வந்திருந்தார். சின்னமலை முதல் மூவரையும் பிடித்துத் தேர்க்காலில் கட்டி வரும்படி அம் முரடர்களை ஏவினார். அவர்கள், சின்னமலை முதல் மூவரும் தேர்க்குப் பக்கத்தில் தெருவில் சென்றுகொண்டிருக்கும் போது, திடீ ரென்று போய்ப் பிடித்துத் தேர்க்காலோடு சேர்த்துப் பின் கட்டாகக் கட்டினர்; யாரும் அவிழ்த்து விடாதபடி அங்கேயே காத்து நின்றனர். தேர்க் கூட்டத்தினர் காண மூவரும் நெடுநேரம் கட்டுண்டு கிடந்தனர். அக் கொடுமையைக் கண்ட மக்கள் மனந் துடித்தனர். துடித் தென்ன செய்வது? அம்முரடர்கள் விட்டாலல்லவோ கட்டவிழ்த்து விட முடியும்? அவர்கள்தான் தடியுங் கையுமாய் நின்று கொண்டி ருக்கிறார்களே! சின்னமலை தங்கையைச் சென்னிமலைக்குப் பக்கத்தில் உள்ள உலகபுரம் என்னும் ஊரில் மணஞ் செய்து கொடுத் திருந்தனர். தேருக்கு வந்திருந்த உலகபுரத்து மைத்துனர் இச் செய்தியைக் கேட்டு சில ஆட்களைக் கூட்டிக்கொண்டு ஓடிவந்தார். அவர்கள் ஓடிவருவதைக் கண்ட முரடர்கள் ஓடி விட்டனர். மைத்துனர் கட்டவிழ்த்து விட்டு மூவரையும் ஊருக்கு அழைத்துச் சென்றார் பிறந்தவன்மார்களுக்கு ஏற்பட்ட மானக்கேட்டைக் கேட்ட தங்கை, அண்ணா! இந்த உலகமே கைகட்டி நிற்கும் உங்களுக்கா இந்தமானக்கேடு? அதுவும் பல பேர் காணத் தேர்க்கூட்டத்திலா? அவ்வளவு நெஞ்சுத் துணிவா அந்த ஆரியப்பட்டியான்களுக்கு? நேரில் நின்று பேசத் தகுதியில்லாத கோழைகள்! பிறந்தவள் மக்களென்று கொஞ்சங் கூட எண்ணிப் பார்க்கவேண்டாம்? மாமனாம் மாமன்! நல்ல மாமன்! வெல்லம் போட்ட மாமன்! அப்படித்தான் அவளை என்ன அடித்துதைத்தா தொந்தரவு செய்தீர்கள்? உங்கள் சொத்தைச் செலவழிக்க ஊரான் மகளேன் குறுக்கே நிற்கவேண்டும்? ‘ஐயோ! அண்ணா! உன் பிறந்தவன்மார்கள் தேர்காலில் கட்டப்பட்டுக் கிடந்தனர் என்று இவ்வூர் என்னை ஏசுமே. அண்ணா! இனி நான் எப்படி ஊர்க்குள் தலை நீட்டுவேன்? என் பிறவிகளே! அக்கொடிய முரடர்கள் திடீரென்று வந்து பிடித்துத் தேர்க்காலோடு சேர்த்து பின் கட்டாய்க் கட்டின போது நீங்கள் எப்படிப் பொறுத்திருந்தீர்களோ! உங்கள் வீர தீரமெல்லாம் அப்போது எங்கு போய் ஒளிந்ததோ? தேர்க்காலில் கட்டிக் கிடப்பதைப் பலரும் பார்த்து எள்ளி நகையாடிக் கொண்டு சென்றபோது உங்கள் மனம் என்னபாடு பட்டதோ? கட்டப் பட்டான் என்று நாளை உலகம் பழிக்குமே. புராணங் களில் படித்த துண்டு, தேர்க்காலில் கட்டியடித்தனர் என்று. அது நமக்கே வந்ததே, அண்ணா! வழி வழியாக மாசிலா மணிகளாய், வணங்காமுடி மன்னர்களாய் வாழ்ந்து வந்த ஆனூர்ச் சர்க்கரை மரபு உங்களால் மாசு படலானதே! என் பிறப்பே! இனி இந்த மாசை எப்படித் துடைப்பது? இந்த மானக்கேட்டை எப்படிப் போக்குவது?’ என்று சின்னமலையைக் கட்டிக் கொண்டு அழுதாள். சின்னமலை, ‘தங்காய்! அழாதே. வஞ்சித்து விட்டனன் வஞ்சகன். நேராக எதிர்த்து என்னை வெல்லவில்லை. கட்டிய இக் கைத் தழும்பு மறைவதற்குள், அந்த ஆரியப்பட்டித் தம்பான் தலையை வெட்டி இக்களங்கத்தைப் போக்குகிறேன். இல்லையேல் என் பெயர் சின்னமலை யன்று,’ என்று உறுதி மொழி கூறித் தங்கையைத் தேற்றினான். அன்றிரவு சின்னமலைக்குத் தூக்கம் வரவில்லை. தனக்கு நேர்ந்த மானக் கேட்டை எண்ணியெண்ணி மனம் புழுங் கினான். ஆனால், கழிந்ததற்கு இரங்குவதால் பயனில்லை என்பது சின்ன மலைக்குத் தெரியாததன்று. எனவே, அவன் முடிவில் தன் தம்பியாருடன் கலந்து கீழ்வருமாறு முடிவு கட்டினான். ‘நமக்கு நேர்ந்த மானக்கேட்டுக்காகப் பழிக்குப் பழி வாங்குவதில் இப்போது நாம் காலத்தைச் செலவிடலாகாது. நாட்டுக்கு நேர்ந்துள்ள மானக்கேட்டைப் போக்குவதே நாம் முதலில் செய்யவேண்டிய வேலையாகும். நமக்கு நேர்ந்த மானக்கேடு, ஏன் இன்னும் காலத்தைக் கடத்திக்கொண் டிருக்கிறீர்கள்? உடனே சென்று படையில் சேருங்கள். நாட்டுக்கு நேர்ந்துள்ள மானக்கேட்டைப் போக்குங்கள். நாடு அயல் நாட்டார் கைக்குப் போனால் மானத்தோடு வாழ முடியாது. இனி ஒரு நொடியும் இங்கு நில்லாதீர்கள். உடனே செல்லுங்கள்,’ ’ என்று நமக்கு அறிவுறுத்தும் அறிகுறியேயாகும். ஆகையால், நாம் நாளையே சென்று படையில் சேர்ந்து, சிறந்த படைக்கலப் பயிற்சி பெற்று வரவேண்டும். அப்போதுதான் நாட்டின் மானத்தைக் காப்பாற்ற முடியும். திப்பு வெற்றி பெற்றாலும் அது நம் நாட்டு வெற்றியே. ஆங்கிலேயர் வென்றால் அது அயல்நாட்டு வெற்றியே யாகும். ஆதலால், இனி நாம் இங்கு இருக்கக் கூடாது. இந்த நல்ல வாய்ப்பை உண்டாக்கினது நமது மானக்கேடே யாகும். நமக்கு நேரும் ஒவ்வோர் இடையூறும் ஒரு நன்மையின் பொருட்டே என்பர் பெரியோர். இதுவுமொரு நன்மையின் பொருட்டே நேர்ந்தது என்று மனவமைதியுடன் விடியலை எதிர் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான் சின்னமலை. விடிந்ததும் விடியாததும் எழுந்து மூவரும் தங்கையிடமும், மைத்துனரிடமும் விடைபெற்றுக்கொண்டு, நேராக மைசூர் சென்று திப்புவின் படையில் சேர்ந்தனர். 9. சேனைத்தலைவன் துறைமங்கலம் சிவப்பிரகாசர் என்பவர் சிறந்த தமிழ்புலவர்; செய்யுளியற்றுவதில் தனித்திறமை யுடையவர்; சிறந்த தமிழ்க் கவிஞரான பின்பு அவர் இலக்கணங் கற்க விரும்பினார். திருநெல்வேலி நகரின் ஒரு பகுதி சிந்துபூந்துறை என்பது. அங்கிருந்த வெள்ளியம் பலத்தம்பிரான் என்பவர் இலக்கணக் கடல் என்பதைக் கேள்வியுற்று அவரிடம் சென்று இலக்கணங் கற்றாராம். பதினைந்து நாட்களில் எழுத்துச் சொற் பொருள் யாப்பணி என்னும் ஐந்திலக்கணங் கiயும் ஐயந்திரிபறக் கற்றுத் தேர்ந்தாராம். சிவப்பிரகாசர் இலக்கணங் கற்றது போலவே இருந்தது சின்னமலை படைப் பயிற்சி பெற்றது. குறி பார்த்தலோ, வெடி சுடுதலோ, வாள் வீச்சோ, குதிரை யேற்றமோ எதுவானாலும் சின்னமலைக்குப் பழையதாகவே இருந்தது. மற்றப் படைப் பயிற்சிகள் எதுவானாலும் ஒரு முறை பார்த்தால் அப்படியே செய்வான். மற்றிருவரும் இவன் தம்பிமார்தாமே! அதற்காகவே சென்ற இவர்களது படைப் பயிற்சியைக் கேட்கவா வேண்டும்? சில மாதங்களில் சிறந்த போர் வீரர்களானார்கள். பின்னர்ப் படை யணிகளின் தலைவர்களாக்கப்பட்டனர். படை நடத்துவதில் சின்ன மலைக்கு நிகரானவர் யாருமில்லை எனப் பெயர் பெற்றான். சின்னமலை என்ன, பயிற்சி பெற்றுத் தலைவனாக வேண்டியனா? இவன் இயற்கையான தலைவன்; தலைவனாகவே பிறந்தவன். தலைமையிடம் அவனை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தது. சின்னமலையின் தீரம் திப்புவின் காதுக் கெட்டியது. அவன் சின்னமலையின் படைப் பயிற்சியையும், படை நடத்தும் திறமையையும் நேரில் கண்டு களித்துச் சின்னமலையைச் சேனைத் தலைவனாக்கினான். திப்புவின் பல வெற்றிகளுக்கும் சேனைத் தலைவன் சின்னமலையே காரண மாவான். சேனைத்தலைவன் என்னும் பெயரைக் குலப்பெயராகக் கொண்டவனல்லவா? சின்னமலை? இவன் மரபு எத்தனையோ சேனாதிபதிகளைக் கொண்ட மரபாகும். ஏனைத் தானைத் தலைவர்கள் போலச் சின்னமலை கூலிக்கு வேலை செய்பவன் அல்லன்; தன் தாய் நாட்டுக்கு நேர்ந்துள்ள மானக்கேட்டைப் போக்க வேண்டும்; அயல் நாட்டாரை நாட்டை விட்டு ஓட்ட வேண்டும் என்ற பெரு நோக்குடன் சேனையில் சேர்ந்தவ னல்லவா சின்னமலை? அதனால், அவன் படையில் சேர்ந்ததி லிருந்து படைப் பயிற்சி செய்வதோடு மட்டும் நின்றுவிட வில்லை. படை வீரர்களுக்கு நாட்டுப் பற்றை உண்டாக்கும் வேலையையும் உடன் செய்துவந்தான். தனது படையிலிருந்த கொங்கு நாட்டு மறவர்களை யெல்லாம் அவன் ஒன்று திரட்டி இனவுணர்ச்சியூட்டி வந்தான்; சேனைத் தலைவனானதும் அத்தொண்டைத் தீவிரமாகச் செய்து வந்தான். சேனைத்தலைவனான சில மாதங்களில் கொங்குப் படையின் தனித்தலைவன் ஆனான். மாலவல்லி என்னும் இடத்தில் நடந்த போரில் நாற்பதாயி ரத்திற்கு மேற்பட்ட வீரர்களைக் கொண்ட ஆங்கிலப் படையைத் திணற வைத்தது சின்னமலையின் கொங்குப் படையேயாகும் என்பது குறிப்பிடத் தக்கது. திருவரங்கப் பட்டணப் போரிலும் சின்னமலை தீரச் செயல் புரிந்தான். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை; சூழ்ச்சி வென்றது. 1799 - இல் மிக நெருக்கடியான கட்டத்தில் திப்பு இறந்தான். திருவரங்கக்கோட்டை ஆங்கிலப் படையின் கைவசமாயிற்று. வெள்ளையர் வெற்றிக் கொடி நாட்டினர். மைசூர்ப் படை சிதறிற்று. பல்லாயிரக்கணக்கான வீரர்கள் ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டனர். அப்போது சின்னமலை செய்த செயற் கருஞ் செயலைப் பாராட்டாமல் இருக்க முடியாது. கோட்டையைப் பிடித்ததும் ஆங்கிலேயர் மைசூர் வீரரைச் சிறைபிடிக்கத் தொடங் கினர். இது சின்னமலைக்குத் தெரியும். ஆகையால், கோட்டை பிடி பட்டதும் சின்னமலை கொங்கு மறவர்களை ஒருங்குதிரட்டி, தெற்கு நோக்கி விரைந்து சென்று காவிரியாற்றைக் கடந்து, காவிரியின் தென் கரையில் உள்ள ஒரு மலையை யடைந்தான். வெள்ளைப் படையொன்று பின்தொடர்ந்தது. ஆனால், ஆற்றங் கரையிலிருந்த முட்புதர்கள் அடர்ந்திருந்ததனால் அவ்வெள்ளைப் படை கொங்குப் படையை அணுக முடியாமல் வந்த வழியே திரும்பிச் சென்றது. 1பின்னர் அக் கொங்குப் படை அங்கிருந்து எளிதில் கொங்கு நாட்டை யடைந்தது. கொங்கு மறவர்களை அவரவர் ஊர்க்கு அனுப்பச் சென்ற சின்னமலை நேராக ஓடாநிலைக்குச் செல்லவில்லை. தங்கைக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டாமா? அவன் அப்படியே ஆரியபட்டிக்குச் சென்றான்; மாமன், மாமன் மகன் இருவர் தலைகளையும் வெட்டி, ஆரியப் பட்டித் தலைவாசலில் இருந்த ஒரு புளிய மரத்தில் கட்டித் தொங்க விட்டான். இன்றும் அந்தப் புளிய மரத்தைத் தூக்குப் புளிமரம் என்கின்றனர். பின் சின்னமலை அங்கிருந்து உலகபுரம் போய்த் தங்கையிடம் இச்செய்தியைக் கூறிவிட்டு ஓடாநிலை சென்றான். 10. கோவைக் கோன் தமிழரசு ஏற்பட்டதிலிருந்து தமிழ் நாட்டைச் சீரும் சிறப்புடன் ஆண்டு வந்த முடியுடை மூவேந்தர் ஆட்சி, கி.பி.பதினான்காம் நூற்றாண்டுடன் முடிவடைந்தது. 14- ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழ் நாட்டு ஊர்தோறும் இருந்த பெரும் செல்வர்கள் 1பாளையக்காரர் என்னும் பெயருடன் ஊராட்சி நடத்தி வந்தனர். தமிழ்ச் சிற்றரசர்களும் பாளையக் காரர் எனப் பெயர் பெற்றனர். பெரும்பாளையத்தில் நூற்றுக்கணக்கான சிற்றூர்கள் அடங்கியிருக்கும். எல்லாப் பாளையக்காரரும் தம் பாளையத்தின் அளவுக்கேற்றபடி படை வைத்திருந்தனர். அதனாலேயே அவர்கட்குப் பாளையக்காரர் என்று பெயர் பெற்றது. மைசூரிலிருந்து வந்ததும் சின்னமலை சும்மா இருக்க வில்லை. சும்மா இருக்கவா அவன் படையிற் போய்ச் சேர்ந்தான். கோவைக் கோட்டத்திலுள்ள எல்லாப் பாளையக் காரரையும் ஒன்று சேர்த்து வெள்ளையரை எதிர்க்க எண்ணினான்; அவ்வாறே எல்லாப் பாளையக்காரரையும் நேரில் சென்று பார்த்துத் தன் எண்ணத்தை வெளியிட்டான். ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லாப் பாளையக்காரரும் ஓடாநிலையில் ஒன்று கூடினர். ஒரு பாளையக் காரர்கூட இக்கூட்டத்திற்கு வராமல் இருக்கவில்லை. தனது வேண்டுகோளுக்கிணங்கி எல்லாரும் வந்ததற்காகச் சின்னமலை அக மிக மகிழ்ந்தான்; அதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டான். பின்னர், சின்னமலை அவர்களைப் பார்த்து, “இந்நாட்டுப் பெருங்குடி மக்களே! நாம் இன்று எதற்காக ஒன்று கூடியுள்ளோம் என்பதை நான் உங்களுக்கு எடுத்துக்கூற வேண்டிய தில்லை. நாம் நெருக்கடியான நேரத்தில் ஒன்று கூடியிருக்கிறோம். மேல் கொங்கு நாட்டுப் பாளையக்கார ரெல்லாம் ஓரிடத்தில் ஒன்று கூடினது இதுதான் முதல் தடவை என்று எண்ணுகிறேன். இது இந்நாட்டுக்கு வாய்த்துள்ள ஒரு நல்ல காலமாகும். வெள்ளைக் காரர் இன்னும் நாட்டில் நிலையான ஆட்சி ஏற்படுத்தவில்லை. அவரைக் கோவைக்குள் விடாமல் நாம் எதிர்க்க வேண்டும். சென்னையிலிருந்து மலையாளத்திற்கு அவர்கள் கோவை வழியாகத்தான் போக வேண்டும். காவிரி யாறு வேறு குறுக்கே இருக்கிறது. இங்கோ ஏராளமான போர்வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் போர் செய்து நல்ல பயிற்சி பெற்று இப்போதுதான் வந்திருக்கிறார்கள்; வெள்ளைக்காரர்மீது அடங்காச்சினமும் வெறுப்பும் உடையவர்களாக உள்ளார்கள். நாம் எல்லோரும் ஒன்றுபட்டால் அவர்கள் எளிதில் இவ்வழியாகச் செல்ல முடியாது. மேலும், சேலம் அவர்கள் ஆட்சிக்கீழ் இருந்தாலும், நாம் எதிர்த்தால் சேலத்தாரும் நமக்கு உதவி செய்வார்கள். கோவைக் கோட்டம் அவர்கள் கைக்குப் போகாவிட்டால் அவர்கள் இந்நாட்டில் முழு வெற்றிய டைந்ததாக ஆகாது. பின்னர்த் தமிழ் நாட்டின் மற்றப் பகுதியில் உள்ளவர் களையும் ஒன்று சேர்த்து அவ்வயல் நாட்டாரை எதிர்த்துத் துரத்தலாம். இது உங்கள் எல்லோருடைய ஒத்துழைப்பையும் பொறுத்திருக்கிறது. மராட்டிய மன்னர், நிசாம் வேந்தர், மைசூர் அரசர் ஆகிய மூவரும் ஒற்றுமையாக இருந்திருந்தால் வெள்ளைக் காரர் இந்த நாட்டைப்பற்றிக் கனவுதான் கண்டிருப்பார்களா? போனதைப் பற்றிப் பேசிப்பயனென்ன? இனிமேல் ஆக வேண்டியதைப் பார்ப்பது தானே அறிவுடைமை? நாம் நமது கடமையைச் செய்வோம். ஆவது ஆகட்டும்” என்று தன் ஆர்வத்தால் தோன்றிய ஆக்க வேலைத் திட்டத்தை எடுத்துரைத்தான். சின்னமலையின் நாட்டுப்பற்றையும், அரசியலறி வையும், ஆர்வத்தையும் எல்லோரும் பாராட்டினர். சின்ன மலையையே தலை வனாக இருக்கும்படியும், தாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு ஒத்துழைப்பதாகவும் ஒரே மனமாக உறுதி கூறினார்கள். சின்ன மலை கோவைக்கோன் ஆனான். கோவை நாடு தன்னிகரில்லா வீரனொருவனைத் தலைவனாகப் பெற்றது. இதுதானே ஒரு நாட்டுக்குத் தேவை! சின்னமலை கோவைக்கோன் ஆனதும் நாட்டைப் பாதுகாப் புடையதாக்கினான்; காவிரிக்கரையில் நெடுகப் பெருங் காவற் படையை வைத்தான். மேற்கிலும் பாதுகாப்பு ஏற்படுத்தினான்; நல்ல போர்ப்பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்டு நாடு முழுவதும் இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து வந்தான். ஒவ்வொரு பாளையத் திலும் இருந்த வீரர்கள் சிறந்த பயிற்சிபெற்று வந்தனர். வீரர்களுக்குப் படைக்கலப் பயிற்சி யோடு இனவுணர்ச்சியும் ஊட்டப்பட்டது. தம்பியும் கிலேதாரும் இவ்வேலையை மேற்பார்வை பார்த்து வந்தனர். நாட்டில் அமைதி குடிகொண்டது. மக்கள் அச்சமும் கவலை யுமின்றி வாழ்ந்து வந்தனர். கோவை ஒர் ஆற்றல் மிகுந்த பாதுகாப்பு நாடானது. கறுப்ப சேர்வைகாரன் ஓடாநிலையில் பெரும்படை இருந்தது. அதில் வாள்வீரர், வெடிவீரர், குதிரைவீரர்கள் மட்டுமின்றித் தடிக்காரர் என்னும் ஒரு புதுவகை வீரரும் இருந்து வந்தனர். இவர்களது ஒப்பற்ற சிறப்பினைப் பின்னர்க் காண்பீர். தடிவீச்சென்பது தமிழ் நாட்டுக்கேயுரிய தனிச் சிலம்பக் கலையாகும். கறுப்ப சேர்வைகாரன் என்பவன் சின்ன மலையின் சேனைத்தலைவ னாக இருந்தான். இவன் யார்? சின்னமலை முதல் மூவரும் இளைஞர்களாய் இருந்த திலிருந்து கறுப்பன் என்னும் நாவிதச் சிறுவன் கூடவே இருந்து வந்தான். சின்னமலை எங்குச் சென்றாலும் அவனுங் கூடவே செல்வான்; வர வரச் சின்ன மலையின் மெய்காப்பாளன் ஆனான். அவனும் சிலம்பத்தில் நல்ல திறமையுடையவன். சின்னமலை சென்னி மலைத்தேருக்குப் போயிருந்தபோது கறுப்பனும் உடன் சென்றிருந் தான். அவர் களோடு இவனும் போய்ப் படையில் சேர்ந்தான்; படையில் நல்ல பயிற்சி பெற்று ஓரணித் தலைவனாக இருந்தான்; சின்னமலை மைசூரிலிருந்து வந்தபோது கறுப்பனும் கூடவே வந்தான். அவன் அளவு கடந்த நாட்டுப் பற்றுடையவன்; சின்ன மலையை உயிர்போல் கருதுபவன்; சிறந்த போர்த்திறமை யுடையவன்; சின்ன மலை கோவைக்கோன் ஆனதும் கறுப்பனைச் சேனைத்தலைவன் ஆக்கினான். அதிலிருந்து அவன் கறுப்ப 1சேர்வைகாரன் என்று அழைக்கப்பட்டு வந்தான். இவன் வழி வந்தோர் இன்று இருக்கின்றனர். “கட்டுத் தடிக்காரர் முன்னடக் கவுடன் கறுப்ப சேர்வையும் பின்னடக்க வட்டப்பொட் டுக்காரச் சின்ன மலையதோ வார சவுரியம் பாருங்கடி - (சின்னமலை கும்மி) 11. வணங்கா முடி ஓடாநிலை கோவைக் கோட்டத்தின் தலைநகரானதும் அது பெருங் கோட்டையாகப் புதுப்பிக்கப்பட்டது. கோட்டைச் சுவரின் நான்கு மூலைகளிலும் ஒரு பனையுயரம் உள்ள கொத்தளங்கள் அமைந்திருந்தன. அயலார் படைவரவைப் பார்த்துக் கொண்டு இரவு பகல் இருபத்து நான்கு மணி நேரமும் அக்கொத்தளங்களில் வீரர்கள் காவலிருப்பார்கள். பழங்காலக் கோட்டைச் சுவரைச் சுற்றிலும் ஆழ்ந்தகன்ற அகழியும் காவற் காடும் அமைந் திருந்தன போல இக்கோட்டைச் சுவரைச் சுற்றிலும் ஏழு சுற்று முள்வேலி அமைந்திருந்தது. அது அடிக்கடி கட்டுக்குலை யாமல் பழுது பார்க்கப்பட்டு வந்தது. அவ் வேலிக்குக் கவை முள் கொண்டு வரும் ஆட்கள் படை வீரர்களைப் போல அணியணியாகச் செல்லும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். மலையைக் குடைந் தாக்கியது போலப் பெரிய கட்டிட மொன்று அக்கோட்டை யின் முகம் போன்று அமைந் திருந்தது. அதுதான் அரசியல் அலுவலகம். அக் கட்டிடத்தின் தரை அழகிய உளியடிச் செதுக்குக் கற்கள் பாவப்பட்டிருந்தது. அத்தரைக் கற்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்புதான் (1924) அகழ்ந்தெடுக்கப் பட்டன. கோட்டையின் வடக்கு மூலையில் பெரிய உலைக்களம் ஒன்று இருந்தது. அதில் எப்பொழுதும் வாள், வெடி, பீரங்கிக்குண்டு முதலிய போர்க் கருவிகள் செய்யப் பட்டு வந்தன. உலைக்களக் கிணறு மூலைக்கு மூலையாக வெட்டப்பட்டிருந்தது. இவ்வாறு வெட்டினால் சலக்கண் குறுக்கறுபட்டு நிறைய தண்ணீர் ஊறும் என்கின்றனர் நீர்நிலை ஆராய்ச்சி யறிஞர்கள். கோட்டைக்குட் குதிரைகள் வான் செவிடு படும்படி கனைக்கும். சுருங்கக் கூறினால், ஓடா நிலைக் 1கோட்டை, பழந்தமிழ் வேந்தர்கள் கோட்டைகளைப் போலச் சிறந்து விளங்கிற்று. சின்னமலை ஆட்சியில் கோவை நாட்டின் எல்லை தெற்கே கருமலை, வடக்கே பாலைமலைத் தொடர், கிழக்கே காவிரியாறு, மேற்கே வெள்ளியங்கிரியாக இருந்தது. இந்நான் கெல்லைக் குட்பட்ட நாட்டை ஐந்தாண்டுகள் அரசு செலுத்தினான் சின்னமலை. அப்போதுதான் கருமலையிலிந்து விராலிச் செடியைக் கொண்டு வந்து அறச்சலூர்மலை, பாலைமலை முதலிய மலைகளில் பயிர் செய்தான்; கருமலை, சிறுமலை, விருப்பாட்சி மலை முதலிய வற்றில் வாழைப் பயிர் செய்தான். அன்று பயன் படுத்தத் தெரியாமல் காட்டிலிருந்த கரும்பைக் கண்டு பயிர் செய்து மக்கட்கு பயன்படச் செய்த அதியமான் முன்னோன் போல, நமக்குச் சிறந்த மலை வாழைப் பழத்தை உதவினவன் சின்னமலையே. ஏசுநாதர் பிறந்த பாலத்தீன நாட்டின் நடுவில் சமாரியா என்ற சிறிய நாடு ஒன்று இருந்தது. அது கிழக்கு மேற்கில் கத்திபோல் நீண்டிருக்கும். அச்சமாரிய நாட்டில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களே (ஆயக்காரர்) வாழ்ந்து வந்தனர். அதனால், பாலத்தீன நாட்டு யூதர்கள் அச்சமாரிய நாட்டை மிதிப்பதும் தீட்டென எண்ணினார்கள். சமாரியாவுக்குத் தென்புற முள்ள பாகத்திற்குப் போகவேண்டு மானால், ஐந்து கல் குறுக்கே போவதை விட்டு, ஐம்பது கல் கிழக்கிலும் மேற்கிலும் சுற்றிக்கொண்டு போவார்கள். தீட்டைக் கண்டு அவ்வளவு அச்சம் யூதர்க்கு! அவ் யூதர் நிலைமையில் தான் அன்று வெள்ளைக் காரர் இருந்தனர். யூதர்கள் சமாரியரின் தீட்டுக் கஞ்சினார்கள். வெள்ளைக்காரர் சின்னமலையின் தீரத்துக் கஞ்சினர். கோவையைத் தவிரத் தமிழ்நாடு முழுவதும் வெள்ளைக் காரர் ஆட்சிக்கீழ் வந்தது. வரிகொடுக்க மறுத்த பாஞ்சாலங் குறிச்சிக் கட்டபொம்மன் தூக்கிக் கொல்லப்பட்டான். வாளேந்தும் உரிமையோ தமிழ் மக்களிடத்திலிருந்து பறிக்கப் பட்டு விட்டது. வடக்கே மைசூர், கிழக்கே சேலம், திருச்சி, தெற்கே மதுரை, மேற்கே மலையாளம் எல்லாம் வெள்ளைக் காரருக்குச் சொந்த மாயின. தமிழ்க்கடலின் நடுவிலுள்ள ஒரு தீவு போல விளங்கிற்றுக் கோவைக்கோட்டம். கிழக்கே சென்னையி லிருந்து மேற்கே மலையாளத்திற்குக் கோவையின் வழியாகத் தான் போகவேண்டும். கோவையின் வடபுறம் எளிதில் கடந்து செல்ல முடியாத மலைத் தொடர். தெற்கே நூறுகல் சுற்ற வேண்டும். கோவைக் கோட்டத்தின் தெற்கெல்லையான கருமலையிலும் சின்னமலையின் காவற்படை யுண்டு. சின்ன மலையின் காவற் படையைக் கடந்து கிழக்கிருந்து மேற்கும், மேற்கிருந்து கிழக்கும் ஆங்கிலேயரால் போக முடிய வில்லை. கோவை வீரர் என்ன போலி வீரர்களா? அவர்கள் தாய் நாட்டுக்காகவே உயிர் வாழ்பவர்கள். அயல் நாடர்களாகிய வெள்ளையர் மேற்கிலுள்ளவர் மேற்கிலும், கிழக்கிலுள்ளவர் கிழக்கிலுமே இருக்க வேண்டியதாயிற்று.. மேலும், தங்களுக்குச் சொந்தமான - தாங்கள் கடும்போர் செய்து பிடித்த நாட்டைத் தங்களுக்கு விடாமல் வேறு ஆண்டு வருகிறான் சின்னமலை. எனவே, சின்ன மலையை வென்று கோவையைக் கைப்பற்றினால் தான் இந்நாட்டை ஆங்கிலேயர் வென்றதாகும்; இந்நாட்டில் அவர்கள் அமைதியாக ஆட்சி செலுத்த முடியும்; இந்நாட்டின் அரசர்களாய் வாழ முடியும். என்ன செய்வதென்று அவர்கள் நன்கு ஆராய்ந்து பார்த்தனர். திப்புவுடன் பல மாதங்கள் தொடர்ந்து கடும்போர் செய்ததால் வீரர்களெல்லாம் மிகவும் அலுத்துப் போயிருந்தனர். காவலுள்ள காவிரியாற்றை வேறு கடக்க வேண்டும். எனவே, உடனே ஆங்கிலேயர் போர் செய்ய விரும்பவில்லை, போரில்லாமலேயே கோவையைக் கொள்ள எண்ணினர். இத்தகைய சூழ்ச்சியில் தான் வல்லவர்களாச்சே அவர்கள்! தங்கள் ஆட்களை உளவாளிகளாக விட்டு, மேல் கொங்கிலுள்ள பாளையக்காரர்களைத் தங்களுடன் சேரும்படி சூழ்ச்சி செய்தனர். எவ்வளவோ ஆசைகாட்டிப் பார்த்தனர். தன்மான மும் தாய்நாட்டுப் பற்றும் உள்ள அப்பாளை யக்காரர் ஒருவரும் ஆங்கிலேயரின் சூழ்ச்சி வலையில் அகப்பட வில்லை. சின்ன மலையின் தீரத்தால் கட்டுண்ட அவர்கள் எப்படி அவ்வலையிற் போய் விழமுடியும்? கட்டப்பொம்மனைக் காட்டிக் கொடுத்த கயவரைப் போன்றார் இங்கு யாருமில்லை. தங்கள் தூண்டில் இரைக்கு அப்பாளையக்கார மீன்கள் வராதது கண்ட வெள்ளை வலையர்கள் வருந்தினர்; இனி என்ன செய்வ தென்று கூடியாராய்ந்தனர். பின்னர், அவ்வெள்ளையர், ‘நாட்டை நீங்களே ஆளுங்கள், நாங்கள் மைசூர் மன்னரை வென்று கைக்கொண்ட தாகையால் அதற்காக நீங்கள் கொஞ்சம் வரி தரவேண்டும். மேலும், நிசாம் முதலிய மன்னர்களைப் போல் எங்கள் காவற்படை யொன்றை உங்கள் நாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படைக் காகும் செலவை நீங்களே போட்டுக் கொள்ள வேண்டும். எங்களால் வெல்லப்பட்ட மற்ற மன்னர்கள் இவ்வாறு தான் உடன்படிக்கை செய்து கொண்டு அந்நாடுகளை ஆண்டு வருகிறார்கள்’ என்ற சின்னமலை யிடம் தூதனுப்பினர். தூதர் வந்து சின்னமலையிடம் கூறினர். சின்னமலை, ‘இது எங்கள் சொந்த நாடு; மைசூர் மன்னருக் குரிய தன்று. மேலும், அவர்கள் மைசூர் மன்னரோடு போரிட்டதே தப்பு. இந்நாட்டுக்கு வாணிகம் செய்ய வந்த அவர்கள் இந்நாட்டு மன்னர்களாக எண்ணியது மக்கட் பண்புக்குச் சிறிதும் ஒவ்வாத தொன்றாகும். எங்கள் முன்னோர் உலக நாடுகள் முழுவதிலும் வாணிகம் செய்து வந்தார்கள். அவர்கள் எந்த நாட்டைப் பிடிக்கச் சூழ்ச்சி செய்தார்கள்? அவ்வாறு எண்ணித் தான் இருப்பார்களா? முதலில் அவ்வெள்ளைக் காரரை இந்நாட்டுக்குள் விட்டதே தப்பு. என்னவோ தொலைந்து போகிறார்கள். பிழைக்க வந்தவர்கள் பாவம்! என்று இருக்க இடம் கொடுக்க, இப்போது படுக்கவே இடம் தேடுகிறார்கள். அவர்கள் பாட்டில் தங்கள் நாட்டை நல்லாட்சி புரிந்து கொண்டிருந்த இந்நாட்டு மன்னர் களை ஒருவர்க்கொருவர் பகை கொள்ளும்படி செய்து, எங்கள் நாட்டை அல்லோல கல்லோலப் படுத்தினதுமல்லாமல், சிறுகச் சிறுக எங்கள் நாட்டையும் கைக் கொண்டனர். வரிகொடுக்க வேண்டுமாம். தங்கள் படையொன்றை இங்கு வைத்துக்கொள்ள வேண்டுமாம். எதற்கு? எங்களிடம் என்ன படைவீர்களா இல்லை? எங்கள் மக்கள் பாடுபட்டுப்போட அவ்வயல் நாடரை இங்குச் சும்மா வைத்துக்கொண்டு சோறு போடுவ தென்பது என்ன முறை? மற்ற மன்னர்கள் என்னவோ தெரியாத் தனமாக நடந்து கொண்டார்களென்றால் எல்லோரும் அப்படியே நடந்து கொள்ள வேண்டுமா? வீரர்களென்ன? வெறும் ஆளொருவன் கூட இங்கு வந்திருக்க விடமாட்டேன். இனியாகிலும் தங்கள் தவற்றை ஒப்புக்கொண்டு, வந்த வேலை எதுவோ அதைப் பார்த்துக் கொண்டு இருக்கட்டும். சின்னமலை உயிரோடு இருக்கிறவரை கோவைக்குள் அவர்கள் நுழைய முடியாது. நுழைவதென்ன? கோவை மண்ணில் அவர்கட்கு ஒரு பிடி வேண்டுமென்றாலும் கிடைக்காது. விருந்தினர்களை வர வேற்றுப் போற்றுவது தமிழர் தனிப்பண்பு. ஆனால் இவர் களிடம் தமிழன் அப்பண்பையும் இழக்க வேண்டிய தாகி விட்டது. அப்படியே அவர்கள் தமிழ் நாடு முழுவதையும் வென்று இந்நாட்டு மன்னர்களாவதாகவே வைத்துக் கொள்வோம். அவர்கள் எத்தனை நாளைக்கு இந்நாட்டை ஆளமுடியும்? இந்நாட்டு மக்கள் அவர்களைத் தங்கள் தலைவர்களாக ஒப்புக் கொள்வார்களா என்ன? நீறுபூத்த நெருப்புச் சுடாமலா இருக்கும்? புலிக் கூட்டத்து நடுவே புல்வாய் எவ்வளவு நாள் தாக்குப் பிடிக்கும்? இந்த எண்ணத்தை விட்டுவிட்டு வேறு ஏதாவது பார்க்கச் சொல்லுங்கள், ’ என்று தூதரிடம் சொல்லி யனுப்பினான் சின்னமலை. தூதர் சென்ற பிறகு, காவிரிக்கரைக் காவலை ஆங்கிலேயர் அணுக முடியாதபடி அவ்வளவு வலியுடைய தாக்கினான் சின்னமலை. நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் படைப் பயிற்சிக் கூடங்கள் ஏற்படுத்தப் பட்டன. படையைப் பல மடங்கு பெருக்கினான். தம்பியும், கிலேதாரும் பறக்கும் பறவை களாயினர். இளைஞர்களைப் படையில் சேர்த்தல், பயிற்சி கொடுத்தல், மேற்பார்வையிடல் இன்ன பல ஆக்க வேலைகளை அவர்கள் செய்து வந்தனர். ஓய்வு என்பது அவர்கள் அறியாப் பொருளானது. ஆங்கிலேயரின் தூதுச் செய்தியைக் கேட்ட கோவை இளைஞர்கள் கொதித்தெழுந்தனர். ‘நான் நீ’ என்று போட்டிப் போட்டுக்கொண்டு படையிற் சேர்ந்தனர். காவிரிக்கரை கறுப்ப சேர்வையின் இருப்பிடமானது. பாளையக்கார ரெல்லாம் சின்ன மலையோடு உடலும் உயிரும் போல ஒத்துழைத்தனர். “பட்டத்துக் கத்தி பளபளெ னெச்செல்லும் பாளையக் காரர்கள் முன்னடக்க வெட்டுந் துரைமகன் சின்ன மலைவரும் வேடிக்கை தன்னையும் பாருங்கடி” (சின்னமலை கும்மி) சின்னமலை வணங்காமுடி மன்னனாய் மண்ணாண்டு வந்தான். சின்னமலை ஆளத்தொடங்கி ஒன்றரை ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. 12. முதற்போர் சங்ககிரி மலைக் கோட்டையில் மைசூர் மன்னரின் கொங்கு நாட்டு அதிகாரி இருந்து வந்தார் என்று முன்னர்ப் படித்தோம். சேலம் வெள்ளைக்காரருக்குச் சொந்தமானதும் அக்கோட்டை அன்னார் படை வீடானது, சின்னமலையின் மறுமொழியைக் கேட்ட வெள்ளையர் திடுக்கிட்டனர். சின்ன மலை இவ்வாறு சொல்வானென்று அவர்கள் கனவில் கூட எதிர்ப்பார்க்க வில்லை. அவனை அதிகார ஆசை பிடித்தவன் என்று எண்ணி ஏமாந்தனர். எனவே, அவர்கள் மின்னல் தாக்குதலைக் கைக் கொள்ள முடிவுசெய்தனர். சங்ககிரிக் கோட்டையில் பெரும் படை யொன்றைக் கொண்டு வந்து வைத்தனர். கோவைக்குட்புகுந்து அழிவு வேலை செய்யும்படி வீரர்களை ஏவினான் கர்னல் மேக்ஸ் வெல் என்னும் அடிப்படைத் தலைவன். வெள்ளை வீரர்கள் அடிக்கடி காவிரியாற்றைக் கடந்து வந்து ஊரைச் சூறையாடி வந்தனர். காவிரிக் கரையில் இருந்த கோவைப் படைக்கும் அவ்வெள்ளைப் படைக்கும் ஓயாமல் போர் நடந்து கொண்டே இருந்தது. மேலும் மேலும் சங்ககிரிக் கோட்டையில் வெள்ளை வீரர் குவிந்த வண்ணம் இருந்தனர். எதிரிப் படை பெருகுவது சின்னமலைக்குத் தெரிந்தது. ‘மேலும் அடிக்கடி வந்து வேறு நாட்டில் அழிவு வேலை செய்கின்றனர். படையும் பெருகுகிறது. இதை இப்படியே விட்டுக் கொண்டிருந்தால் பின் பெருந் தொல்லையாக முடியும். வள்ளுவர் “இளைதாக முள் மரம் கொல்க” என்றாரல்லவா? இப்போதே அவர்கள் கொட்டத்தை அடக்கவேண்டும்,’ என்று முடிவு செய்தான் சின்னமலை. எனவே, அவன் பெரும் படையோடு சென்று அவ்வாங்கிலப் படையை எதிர்த்தான். காவிரிக் கரையில் இரு படையும் கைகலந்தன. போர் கடுமையாக நடந்தது. இதுதான் வெள்ளைக்காரருக்கும் சின்னமலைக்கும் நடந்த முதற்போர். முதற்போரில் சின்னமலை வெற்றி பெற்றான். வெள்ளைப் படை சின்ன மலையின் தோள்வலிமுன் நிற்கலாற்றாது புறங் காட்டி ஓடிற்று. சின்னமலையின் குதிரைப்படை வெருண் டோடும் வெள்ளைப் படையைத் துரத்தி யடித்தது. வெள்ளை வீரர்கள் உயிர் தப்பினால் போதுமென்று ஓட்டம் பிடித்தனர். சின்னமலை வெற்றிமாலை புனைந்து வீறுடன் மீண்டான். இவ்வெற்றியை, “பூனைக் குலமென வெள்ளைப் படையோடப் பூரித்து வீரப் புலிபோலச் சேனைக் கதிபதி சின்ன மலைவரும் தீரத்தை வந்துமே பாருங்கடி” (சின்னமலை கும்மி) எனப்பாடிப் புகழ்ந்தனர் கோவை மக்கள். “பல இடங்க ளிலும் வெற்றி பெற்ற கர்னல் மேக்ஸ்வெல் படை, கோயமுத்தூரில் ஒரு சிறு படைக்குத் தோற்றது” 1என ஒரு வெள்ளையரே எழுதும் படி, வெற்றிக் களிப்பால் வெறி கொண்டிருந்த வெல்மன முடைந்தான். இப்போரில் சங்ககிரிக்கோட்டையிலிருந்த படையில் பாதிக்குமேல் இழந்தனர் ஆங்கிலேயர். இந்நிலைமையில் சேலம் மக்களும் ஆங்கிலேயரோடு ஒத்துழைக்க வில்லை. கோவையின் வெற்றியைக் கண்ட சங்ககிரிப் பக்கத்தே யுள்ளவர்கள் முன்போல் கோட்டையில் சென்று வேலை செய்வதில்லை; உணவுப் பொருள் கொடுப்பதில்லை. அதனால் சங்ககிரிக் கோட்டையில் பெரும்படையை வைத்துத் தாக்க அவர்களால் முடியவில்லை. மேலும், மராட்டியத்தில் அப்போது ஆங்கிலேயர் போர் செய்து கொண்டிருந்தனர்; தெற்கே பாஞ்சாலங்குறிச்சிப் புரட்சியும் நடந்துகொண்டிருந்தது. அதனால் மறுபடியும், கோவைமேல் படையெடுக்க அவர்கள் விரும்பவில்லை. 13. ஓடாநிலைப் போர் சின்னமலையின் ஆட்சி தொடங்கி இரண்டரை ஆண்டு களுக்கு மேல் ஆகிவிட்டன. 1804-5-இல் முதற்போர் நடந்தது. அதன்பின் ஓராண்டு சென்று விட்டது. இவ்வளவு நாளாய்ச் சும்மா இருந்த ஆங்கிலேயர் பெரும்போர் செய்ய முடிவு செய்தனர். இதுவே முடிவான போராக இருக்கும்படி ஏராள மான வீரரை அனுப்புவதாகத் திட்டமிட்டனர். அதன்படி சென்னை யிலிருந்து பெரும்படை யொன்று மேற்கு நோக்கிப் புறப்பட்டது. பத்தாயிரம் வீரர்களுக்கு மேல் இருப்பர்; அத்தனை பேரும் வெள்ளைக்காரர்; தகுந்த பயிற்சி பெற்றவர்கள்; பல போர்களில் வெற்றி பெற்றவர்கள். படை சங்ககிரியில் வந்து தங்கி மேற்கு நோக்கி புறப்பட்டது. காவிரிக் காப்புப் படையால் அப்பெரும் படையைத் தடுக்க முடியவில்லை. காவிரியைக் கடந்து கோவைக்குள் நுழைந்து வழியிலுள்ள ஊர்களைச் சூறையாடிக் கொண்டே படை தெற்கு நோக்கி வந்தது. அப்போது ஆங்கில வீரர்கள் செய்த அட்டூழியமும் அழிவு வேலையும் சொல்லுந் தரமல்ல; ஊர்க்குட் புகுந்து தமிழரைக் கொல்வதையே தங்கள் தகுதியெனக் கொண்டனர். பெரும்படை வருவதை யறிந்தான் சின்னமலை; போர்க்குத் தயாராகும்படி படைத்தலைவனுக்குக் கட்டளையிட்டான். படைகளைத் திரட்டக் குதிரைகள் நாலாப் பக்கமும் பறந்தன. போர்ப்பறை முழங்கின. தமிழ் மறவர்கள் போர்க்கோலம் பூண்டெழுந்தனர். கறுப்ப சேர்வை படையை அணிவகுத்து நிறுத்தினான். சின்னமலை போர்க்கோலம் பூண்டு சினப்புலி போல் சீறியெழுந்தான். ஆங்கிலப்படை ஒடா நிலையை நோக்கி வந்து கொண்டிருந்தது. தமிழ்ப்படை வடக்கு நோக்கிப் புறப் பட்டது. எதிரிப்படை ஓடா நிலைக்குப் பக்கத்தே வந்து விட்டது. தமிழ்ப் படை சென்று எதிர்த்தது. வெள்ளைப் படையோ வெள்ளம் போன்ற பெரும்படை. தமிழ்ப் படையோ சிறுபடை. கோவைப் படை பெரும்பாலும் எல்லை புறங்களில் இருந்தன. தலைநகரில் எப்போதும் உள்ள நிலைப்படைதான் இருந்தது. அதில் மூவாயிரத்துக்குக் குறைவான வீரர்கள்தாம் இருப்பர். வெள்ளைப் படை காவிரியைக் கடந்த பின்புதான் சின்னமலை படைகளைத் திரட்டி வரும்படி குதிரை வீரர்களை நாலாபக்கமும் அனுப்பி னான். ஆனாலும், சின்னமலை மனங் கலங்கவில்லை. அதுதான் அவனுக்குத் தெரியாதே! இருபடையும் கைகலந்தன. ஆங்கிலப் படைத் தலைவன் தமிழ் மறவர்கள் அத்தனை பேரையும் கொன்றுவிட்டுச் சின்ன மலையையும் சிறை பிடித்து விடுவதென முடிவுசெய்தான். வீரர்கள் முழு மூச்சுடன் எதிர்த்து நின்று தாக்கினர். உயிர் போனாலும் உடல் அவ்விடத்தை விட்டு விரற்கிடைகூடப் பின்வாங்கக்கூடாதெனக் கட்டளை யிட்டான் சின்னமலை. கட்டளையிடு முன்னரே தமிழ் மறவர்கள் அவ்வாறு தான் எண்ணி எதிர்த்தனர்; தமிழர் வீரம் இத்தகையது என்பதை வெள்ளை மறவர்கள் கண்டு வியக்கும்படி பொருதனர். சின்னமலை செய்த போர்த்திறமையை இங்கு எழுதுந் திறம் நம் எழுது கோலுக்கில்லை; அவ்வளவுதான் எழுத முடியும்! இன்னும் துணைப்படை வரவில்லையே. இச்சிறு படையைக் கொண்டு அப்பெரும் படையை எப்படி வெல்ல முடியும் என்று சின்னமலை எண்ணினானா? தமிழ் வீரர்களே அவ்வாறென்ன வில்லை யென்றால் சின்னமலை எப்படி அவ்வாறெண்ண முடியும்? ஒரு நேரமெல்லாம் கடும்போர் நடந்தது. ஆங்கில வீரர்கள் இன்றோடு சின்னமலை ஆட்சி ஒழிந்தது என்னும் படி அவ்வளவு ஆற்றலுடன் பொருதனர். இங்கே சின்னமலையின் வியத்தகு போர்த்திறமை யொன்றை நீங்கள் கட்டாயம் கண்டு களிக்க வேண்டும். ஆங்கிலப் பெரும்படையுடன் எதிர்த்துப் பொருதால் தன் படையில் அழிவு நேரும்; விரைவில் தோல்வி ஏற்படும். எதிர்ப்படை ஊரை முற்றுகையிட்டுவிடும். பின்னர் வெல்ல முடியாது. துணைப் படை வரும் வரையில் ஊரை முற்றுகை யிடாமல் எதிர்த்து நிற்க வேண்டும். எனவே, எதிர்த்துத் தாக்குதலைவிட, ஆங்கில வீரர் தாக்குதலைத் தாங்குவ திலேயே வீரர்களை ஈடுபடும்படி செய்தான். தமிழ் மறவர்கள் அவ்வாறே செய்தனர். வெள்ளை வீரர்கள் எவ்வளவோ அரும்பாடுபட்டுத் தாக்கியும் அச்சிறு படையை ஒரு மயிர் கிடை கூடப் பின்வாங்கும் படி செய்ய முடியவில்லை. தங்கள் பெருந் தாக்குதலைப் பொருட்படுத்தாது பொறுத்துக் கொண்டு எதிர்த்து நிற்கும் தமிழ் மறவர்களின் ஆற்றலைக் கண்டு ஆங்கிலப் படைத் தலைவனே வியப்பெய்தினா னென்றால், நாம் எழுதுவதற் கென்ன இருக்கிறது! அவன் மேலும் விரைந்து தாக்கும்படி கட்டளை யிட்டான். என்ன தாக்கியும் துணைப்படை வரும் வரையிலும் சின்னமலை படை ஓடாமல் ஒரே நிலையாகச் சென்னிமலை போல நின்றது. இது ஓடா நிலைக்கு இரண்டாவது பட்டம். நாலா பக்கமும் இருந்து படைகள் வந்து சேர்ந்தன. சின்னமலை படைவரவு கண்டு மகிழ்ந்தான். அவ்வளவுதான்! கடுந்தாக்குதல் தொடங்கிற்று. கொடிய போர்! கவியாக இருந்தால் ஆயிரக்கணக்காக எழுதிக்கொண்டே போகலாம். வெடியோசை வானைப் பிளந்தது. இரு படை வீரரும் கைகலந்தனர். ஒருவரை யொருவர் சுட்டுக்கொண்டும் வெட்டிக் கொண்டும் முனைந்தனர். இரு படையிலும் வீரர்கள் பலர் வீரச் சாவெய்தினர். குருதி வெள்ளம் போய் நொய்யலாறு பெருக் கெடுக்கும்படி செய்தது. எங்கும் பிணக்குவியல். வெட்டுண்ட கைகள் குருதி வெள்ளத்தில் வாளைமீன்கள் போல நீந்தின. தலைகள் ஆமைபோல அசைந்தன. கொலைக்களம் என்பதன் பொருட் பொருத்த முடையதாக இருந்தது அப்போர்க்களம். ஆனாலும் போர் ஓய்ந்தப்பாடில்லை. முடிவு என்னாகுமென்று ஒருவருக்கும் தெரியாது. தமிழ் மறவர்களின் வீரம் தலைக் கொண்டது; உயிரைக் கொடுத்துப் பொருதனர். இருபடையும் கரைந்து கொண்டு வருகின்றனவே யன்றி வெற்றிதோல்வி என்பது மட்டும் ஏற்படவில்லை. இருபடைத் தலைவர்களும் காட்டிய வீரம் வீரர்களை வீர வடிவ மாக்கியது. இரவிலும் போர் நடந்தது. இரண்டா நாட் பிறந்ததும் ஒரு முடிவும் ஏற்படாதது கண்ட சின்னமலை கடுஞ்சினங் கொண்டான். தடிக்காரரை முன்னேறித் தாக்கும்படி கட்டளை யிட்டான். தடி வீச்சில் பழக்கமில்லாதவர் வெள்ளையர். அதனால், தடியடியை அவர் களால் சரியாகத் தடுக்கமுடிய வில்லை; தாங்கவும் முடியவில்லை. தடிக்காரரோ தங்கள் முழுக் கைத் திறத்தையும் ஒருங்கு காட்டினர். அவ்வேளை வீரமே உருவெடுத்தார் போலச் சின்னமலை முன்னணிக்குச் சென்றான்; வெள்ளை வீரர்கள் தலைகலைச் செவ்விள நீர்க்காய்களை வெட்டித் தள்ளுவது போல வெட்டித் தள்ளினான். சின்னமலையின் தீரத்தைக் கண்ட செந்தமிழ் மறவர்கள் முழு மூச்சுடன் முனைந்து தாக்கினர். அது கண்ட ஆங்கிலப் படைதலை வனும் முன் வந்து முனைந்து பொருதான். முடிவில் தலைவர்கள் இருவரும் எதிர்ப்பட்டு அரியும் அரியும் எதிர்த்ததுபோல் எதிர்த்தனர்; தங்கள் போர்த்திறமை முழுவதையும் காட்டிப் பொருதனர்; வெற்றி தோல்வி ஏற்படவில்லை. அது கண்ட சின்னமலை, தனது உயிராற்றல் எவ்வளவோ அவ்வளவையும் ஒருங்க கொண்டு ஓங்கி வெட்டினன். ஆங்கிலப் படைத்தலைவன் தலை செவ்விள நீர்க்காய்போல் தரையில் விழுந்தது. உடல் சாய்ந்து நிலத்தில் உருண்டது. தலைவனையிழந்த வெள்ளைப் படை யுடைந்தது; திடீரெனக் கலைந்து ஓட்டமெடுத்தது. தமிழ்ப்படை அதைத் துரத்தியடித்தது. அப்பாடா! எதிர்பாராத முடிவு! என்னே சின்னமலையின் தீரம்! சின்னமலை வெற்றிக் களிப்புற்றானெனினும் படையில் பெரும்பகுதி அழிந்ததற்கு வருந்தினான்; வீரர்களின் தீரச்செயல் களைப் பாராட்டினான்; இவ்வெற்றிக்குக் காரணமாகிய தடி வீரரின் தனிப்பெருமையைப் பலப்படப் பாராட்டினான். இத்தடிக் காரர்கள் இல்லா திருந்திருந்தால் இப்போரின் முடிவு என்னாயிருக்கும் என்பது எவர்க்கும் தெரியாது. சின்னமலை இவர்களிடம் தனிமதிப்பு வைத்திருந்தான். “கச்சைகட் டுந்தடிக் காரர்க ளேவெள்ளைக் காரர் களையெங்குக் கண்டாலும் காலை யொடித்துத் துரத்துங்க ளென்றுமே கட்டளை யிட்டானாம் சின்னமலை” (சின்னமலை கும்மி) எதிரிகளை அடித்துக் காலையொடித்துக் கீழேவீழ்த்தி, பின் தலை யிலடித்துக் கொல்வதில் இவர் கைதேர்ந்தவர். பின் சின்னமலை, அன்று செங்குட்டுவன் வென்று கொண்டு வந்த கனகவிசயரைச் சோழ பாண்டியர்க்குக் காட்டி வரும்படி அனுப்பியதை நினைவு கூர்ந்தான் போலும்! அவ்வாங்கிலப் படைத்தலைவன் தலைக்கு மாலை சந்தனம் அணிந்து, ஒரு தட்டத்தில் வைத்து ஊர்தோறும் அனுப்பி, தமது வெற்றிக் களிப்பைத் தன்னாட்டு மக்கட்குத் தெரிவித்துக் கொண்டான். தமிழ் மறவர்கள் அவ்வெள்ளைப் படைத் தலைவன் தலையை வீடுவீடாகக் கொண்டு போய்க் காட்டி, ‘நமது பகை யொழிந்தது; இனி நீங்கள் அச்சமின்றி அமைதியாய் இருங்கள்,’ என்று கூறிவந்தனர்.1 இது ஒரு வியத்தகு வீரச் செயலல்லவா? சின்னமலையின் இந்த வெற்றியைத் தமிழ் நாடே போற்றிப் புகழ்ந்தது. கோவை உள்ளும் புறமும் குளிர்ந்தது; சின்னமலையை வாயார மனமார வாழ்த்திற்று. ஆனால், ஆங்கிலேயர்க்கு இத்தோல்வி மிகுந்த வருத்தத்தையும் அச்சத்தையும் தந்தது; சின்னமலையை வெல்ல முடியுமா வென்று ஐயுற்றனர்; தாங்கள் இவ்வளவு நாளாய்ப் பெற்ற வெற்றியெல்லாம், பட்ட பாடெல்லாம், கட்டிய மனக் கோட்டையெல்லாம் வீணானது கண்டு அகமிக நொந்தனர். சென்னைக் கோட்டையே துயர் கடலில் ஆழ்ந்தது. சென்னை யென்ன? கல்கத்தாவும் கதி கலங்கிற்று. 14. குதிரைப் படை ஓராண்டு அமைதியாகக் கழிந்தது. கோவை மக்கள் அச்சமின்றி வாழ்ந்து வந்தனர். சின்னமலை புதிய வீரர்களைச் சேர்த்து அழிந்த படைக்கு ஈடு செய்து வந்தான்; தடியடி வரிசைப் பயிற்சியைக் கண் போலக் கவனித்து வந்தான். பாளையக் காரர்களும் மிகுந்த ஊக்கத்துடன் ஒத்துழைத்து வந்தனர். இத்தோல்விக்குப் பின் ஆங்கிலேயர், சின்னமலையைக் காலாட் படையினால் வெல்ல முடியாதென்பதைக் கண்டனர்; சிறந்த பயிற்சி பெற்ற குதிரைப் படையொன்றை அனுப்ப முடிவு செய்தனர். அவ்வாறே 1803-4-இல் ஒரு பெருங்குதிரைப் படையைக் கோவை நோக்கி அனுப்பினர். அப்படையில் மூவாயிரங் குதிரை வீரர்கள் இருந்தனர். அப்படையைத் தலைமை தாங்கி நடத்தி வந்தவன் கர்னல் ஹாரீஸ் என்பவன். திருவரங்க பட்டணத்தை முற்றுகை யிட்டுத் திப்புவை வென்றவன் இவன்தான். குதிரைப் படை நடத்துவதில் ஒப்பற்றவன்; கெட்டிக்காரன் என்று பெயர் பெற்றவன். காவிரியில் நடைத்ண தண்ணீர் ஓடுங்காலம். திடீரென்று வந்து அப்படை ஆற்றைக் கடந்து விட்டது. படை தெற்கு நோக்கிச் சென்று வைகறைப் பொழுதில் 1அறச்சலூரை யடைந்தது. எல்லாக் குதிரைகளும் வந்து சேருகிற வரை படை கொஞ்ச நேரம் அங்கு நின்றது. அப்போது அறச்சாலையம் மனுக்கு வழிபாடு நடந்தது. மணியோசை கேட்ட அப் படைத் தலைவன் அம்மன் கோவிலுக்குச் சென்று, வேடிக்கையாக அம்மன் சிலையின் தலையில் வாளால் வெட்டினான். சிலையின் தலை கொஞ்சம் செவிண்டு போய் விட்டது. அதற்கு இன்றும் பூசை செய்யும்போது எண்ணெய்ப்பஞ்சு போட்டு வருகிறார்கள். அதாவது, சாம்பலை எண்ணெயில் குழைத்து, அதில் பஞ்சை நனைத்துப் பத்துப் போடுகின்றனர். இது எதிர்பாராத படையெடுப்பாகும். தூங்கப் போட்டுத் தோற்கடிப்பது என்னும் போர் முறையை ஆங்கிலேயர் கைக்கொண்டனர். ஓராண்டு கோவைப் பக்கங்கூடத் தலை வைத்துப் படுக்காமல் இருந்தனர். ஓராண்டுக்குப் பிறகு திடீரென எடுத்த படையெடுப்பு இது. முன்னேற்பாடில்லாமல் திடீரென படை வந்தது கண்டும் சின்னமலை மனங்கலங்கவில்லை. அது வீரர்க்கழகன்றல்லவா? படை திரட்டுவதற்குக் கூட நேரமில்லை. அவ்வளவு தான்! இன்னும் ஒரு நாழிகை பார்க்காமல் இருந் திருந்தால் ஓடாநிலை அவ்விடத்தில் இல்லாமல் தன் பெயருக்கு மாறாக எங்கேயோ ஓடிப் போய் இருக்கும். ஆங்கிலப் படை ஊரை முற்றுகை யிட்டு அழித்திருக்கும். இருளுப் பிரியப் பிரிய அறச்சலூரை விட்டுப் புறப்பட்டது அக்குதிரை படை. சின்னமலை அப்போதுதான் கொலுமண்டப வாயிலில் வந்து உட்கார்ந்தான். கொத்தளத்தின் மேல் காவலிருந்த வீரனொருவன் ஓடிவந்து, வடக்கிலிருந்து ஒரு குதிரைப்படை வருகிறதுபோல் இருக்கிறது என்றான். கிலேதார் ஓடிப்போய்க் கொத்தளத்தின் மேல் ஏறிப் பார்த்துவிட்டு வந்து, ‘அண்ணா! ஆமாம்; பெரிய குதிரைப்படைப் போல் இருக்கிறது. தம்பட்டப் பாறை1 வந்துவிட்டது. கொஞ்ச நேரத்தில் ஊரை வளைத்துக் கொள்ளும். என்ன செய்வது?’ என்று பதைபதைப் புடன் கூறினான். சின்னமலை சிரித்துக் கொண்டே, ‘என்ன செய்வது? இரண்டி லொன்று செய்யவேண்டியது தான்,’ என்று கூறிக் கொண்டே சரேலென எழுந்து படைக்கல அறைக்குப் போனான். ஒரு வெடியுடன் வெளியே வந்தான். சின்னமலை குதிரை எப்போதும் பயணத்துக்குத் தயாராய் வாயிலில் நிறுத்தப்பட்டிருக்கும். சின்னமலை வெளியே வந்ததும் ஒன்றும் பேசாமல் குதிரை மேல் ஏறினான். அவ்வளவுதான்! அக் குதிரை இன்ன பக்கம் போகவேண்டும் என்பதை அறிந்தது போல் வடக்கு நோக்கிப் பறந்தது. கிலேதார் குதிரைப்படை வீரரைப் புறப்படுங்கள் என்று கூறிவிட்டு அண்ணணைப் பின்தொடர்ந்து சென்றான். தம்பி ஊரில் இல்லை. வெள்ளைக் குதிரைப் படை தங்கு தடையின்றி வந்து கொண்டிருந்தது. சின்னமலை குதிரை காற்றினும் கடிய வேகமாக எதிர்நோக்கிச் சென்றது. ஆங்கிலப் படைத்தலைவன் தம்மை நோக்கி ஒரு குதிரைக் காரன் வெகு விரைவாக வருதலைக் கண்டு தம் குதிரையை மிக மெதுவாக நடத்திச் சென்றான். எதிர் நோக்கிக் குருவி போலப் பறந்து வந்த சின்னமலை குதிரை திடீரென நின்றது. அவ்வளவு தான், படாரென ஓர் ஓசை கேட்டது. படைத்தலைவன் குதிரையின் மார்பில் மடாரென ஒரு குண்டு பாய்ந்தது. குண்டு பட்ட அக் குதிரை வலி பொருக்க முடியாமல் வந்த வழியே திரும்பி விரைந்து ஓடினது. எல்லாக் குதிரைகளும் அதைப் பின் தொடர்ந்து ஓடின. படைத் தலைவன் எவ்வளவோ முயன்று தன்னாலான மட்டும் பார்த்தும் குதிரையைத் திருப்பவோ நிறுத்தவோ முடியவில்லை. அவனுக் கடங்காமல் கண் கொண்ட காளை போல் ஓடினது அக்குதிரை. மேலே உட்கார்ந்திருப்பவனுக் கென்ன? குண்டு பட்ட வலி அக் குதிரைக் கன்றோ தெரியும். ஈரோடு வரையிலும் ஓட்டுவாரின்றி ஓட்ட மெடுத்தது அக்குதிரைப் படை. அதுவரையிலும் முயன்று குதிரையை நிறுத்தினான் படைத்தலைவன். குண்டு பட்ட துளையில் குருதி சேறாடிக் கிடந்தது. குதிரை சோர்ந்து போயிற்று. அதனால் மறுபடியும் திரும்பி வர மன உறுதி யில்லாத அப்படைத் தலைவன் அப்படியே சென்று விட்டான். சின்னமலை அறச்சலூர் வரையிலும் அப்படையைத் துரத்திச் சென்றான்; அறச்சலூரில் வந்து குதிரைகள் ஓடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றான். அப்போதுதான் கிலேதாரும் குதிரைப் படைஞரும் வந்து சேர்ந்தனர். அக் குதிரைப் படையை ஓட்டியதை கேட்ட அவர்கள் பெருவியப் புற்றனர். என்னே சின்னமலையின் மனத்துணிவு! பல்லாயிரக் கணக்கான பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்ட குதிரைப்படை போருக்குத் தயாராக வந்து கொண்டிருக்கிறது. ஒருவனும் தனியாக அப்படையை எதிர்க்கச் செல்வதென்பது மக்கட் செயலுக்கு அப்பாற்பட்ட செயலாக வன்றோ இருக்கிறது! ஊரை நோக்கித் திடீரென்று பெரிய குதிரைப் படை வருகிறது என்றவுடன், ‘முதலில் படைத்தலைவன் குதிரை வரும். அக்குதிரையைச் சாகாமல் நோகும்படி சுட்டால் அது திரும்பி யோடும். படைத்தலைவன் குதிரை யோடினால் அதைப் பின்பற்றி மற்றக் குதிரைகளும் ஓடும். குண்டடி பட்ட குதிரையை எளிதில் நிறுத்த முடியாது. அப்படி ஒரு வேளை நின்றாலும் அதனால் போர் முனையில் எதிர்த்து நிற்க முடியாது. அதற்குள்ளே நமது படை வந்துவிடும். இதைத் தவிர இப்போது அப்படையை வெல்வதற்கு வேறு வழியொன்று மில்லை,’ என்னும் எண்ணம், அவ்விடுக்கான நேரத்தில் சிறிது கோழை மனம் உடையவர்க்கு உண்டாகுமா? ஒரு போதும் உண்டாகாது. குதிரை முதலிய வற்றை இறக்காமல் வலியுண்டாகும்படி சுடுவதில் சின்னமலை கைதேர்ந்தவன். இது அவனுடைய தனிக்கலை. சின்னமலையின் இத்தீரச் செயலை யறிந்த கோவை நாடு அவனை வாயார, மனமாரப் புகழ்ந்தது; அவன் துணிச்சலையும் நுண்ணறிவையும் பலப் படியாகப் பாராட்டியது. பகைவனாகிய அக்குதிரைப் படைத்தலைவனே புகழ்ந்தா னென்றால் தம்மவர் புகழ்வதைச் சொல்லவா வேண்டும்? இதை யறிந்த தம்பி, கிலேதார் முதலியவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். “சின்ன மலைவெடிக் குண்டுக்குத் தப்பியே சீமைப் படையின் குதிரையெல்லாம் ஒன்னின்பின் னொன்னாகக் குள்ள நரிபோல ஓடுமொய் யாரத்தைப் பாருங்கடி” (சின்னமலை கும்மி) சின்னமலை அறச்சாலை யம்மையை வழிபடு தெய்வமாகக் கொண்டிருந்தான்; ‘படை வருகிறது’ என்றதைக் கேட்டு எழும் போதே ‘அம்மையே! நான் ஒருவனாக அப்படையை வென்றேனானால் எட்டே நாளில் புதுத்தேர் செய்து ஓட்டி வைக்கிறேன், ’ என்று அம்மையை வேண்டிக் கொண்டு எழுந்தான்; அவ்வாறே வென்றான்; தான் வேண்டிய படியே எட்டே நாளில் புதுத்தேர் செய்து ஓட்டித் தன் சொல்லை நிறைவேற்றினான். 15. பீரங்கிப்படை இவ்வாறு மூன்றாமுறை ஆங்கிலப்படையை வென்று சின்னமலை அரும்புகழ் கொண்டான். இத்தோல்வி ஆங்கி லேயரை நிலைகலங்கச் செய்தது. மலையாளத்திற்கும் சென்னைக்கும் நேராகச் செல்ல முடியாத குறைவேறு அவர்கட்கு. ஐதரையும் திப்புவையும் வென்றது அவர்கட்கு வெற்றியாகத் தோன்ற வில்லை. நிசாமைச் சூழ்ச்சியால் பணிய வைத்ததும், ஆற்காடு, தஞ்சை மன்னர்களை அடிமை களாக்கியதும் அவர்களுக்கு ஒரு பெரிதாகத் தோன்றவில்லை. ‘எப்படியாவது சின்னமலையை வென்றால்தான் தமிழ் நாட்டை வென்றதாகும். சின்ன மலையை வெல்லாவிட்டால் அரும்பாடு பட்டுவென்ற வெற்றி யெல்லாம் வீணாகப் போய்விடும்,’ என்று எண்ணி ஆங்கிலத் தலைவர்கள் வருந்தினர். ஒரேயடியாகச் சின்னமலையை ஒழித்துக்கட்டத் திட்டம் தீட்டிக்கொண் டிருந்தனர். கல்கத்தாவும் சென்னையும் அடிக்கடி கலந்து பேசின. சின்னமலையின் ஆட்சி ஐந்தாவதாண்டு நிறைவுற்றது; ஆறாவதாண்டு பிறந்தது. சென்ற ஓராண்டாய் ஆங்கிலேயரைப் பற்றிய எண்ணமேயின்றிச் சின்னமலை ஆக்க வேலைகள் செய்து வந்தான். நாட்டில் அமைதி குடி கொண்டிருந்தது. மக்கள் அச்சமின்றியிருந்தனர். ஆனால். சின்னமலை ஏமாந்திருக்க வில்லை; எப்போதும் எச்சரிக்கையாகவே இருந்து வந்தான்; பாம்பின் கால் பாம்புக்கன்றோ தெரியும்? படைப் பயிற்சியையோ, படைப் பெருக்கையோ அவன் நிறுத்தவில்லை. எந்த நேரத்திலும் பகைவர்கள் வருவார்கள் என்பதை அவன் ஒரு நாளும் மறக்க வில்லை. அடி தின்ற பாம்பு கடிக்க நேரம் பார்த்திருக்கும் என்பது அவனுக்குத் தெரியாத தன்று. ஆங்கிலேயரின் தந்திரத் தோடு அரச தந்திரமும் நன்கு தெரிந்தவனல்லவா சின்னமலை? பண்டித மோதிலால் நேரு ஒரு பெரிய வழக்கறிஞர்; பெருஞ் செல்வர். பண்டித ஜவர்கலால் நேருவின் தந்தையார். அவர் வழக்கறிஞராய் இருந்தபோது, காலையில் போட்ட காற்சட்டை, மேற்சட்டைகளை மாலையில் போட மாட்டார்; ஒவ்வொரு நாளும் புதிதாக வெளுத்தவற்றையே போடுவது வழக்கம். இது ஒரு செல்வப் பெருக்கின் செயல் போலும்! அதுபோல், நம் சின்னமலை ஒவ்வொரு நாளும் புதுச் செருப்புதான் தொடுவது வழக்கம். சக்கிலி புதுச் செருப்புச் செய்து கொண்டு வந்து விடியற்காலையில் வைத்து விடுவான். சின்னமலை காலையில் எழுந்து வெளியே போகும்போது அப்புதுச் செருப்பைத் தொட்டுக் கொண்டு போவான்; மாலையில் அதே இடத்தில் அதைக் கழற்றி விடுவான். சக்கிலி ஒவ்வொரு நாளும் புதுச் செருப்பைக் கொண்டு வந்து வைத்து விட்டு முதல் நாளைய செருப்பை எடுத்துச் செல்வது வழக்கம். ஒரு நாட் காலை சின்னமலை தூங்கி யெழுந்து வெளியே வந்ததும் செருப்பைத் தொட்டான். செருப்பின் மேல்வார்க்குள் ஒரு காகிதம் இருந்தது. அது கொஞ்சம் வெளியே தெரிந்தது. சின்னமலை அக்காகிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தான். அதில் கீழ்க் கண்டவாறு எழுதி யிருந்தது. ‘அன்புமிக்க தலைவரே! வணக்கம். தாங்கள் குதிரைப் படையை விரட்டியடித்த வியத்தகு வெற்றியைக்கேட்டு அளவிலா மகிழ்ச்சி யடைந்தேன். தங்களைப் போன்ற வீரரைத் தலைவராகப் பெற்ற நமது நாட்டின் பேறே பேறு! பல மாதங்கள் இங்கு அத் தோல்வியைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. அவர்கள் அதோடு நிற்கவில்லை. எப்படியாவது தங்களை வெல்லவேண்டும்; கோவையைக் கைப்பற்றவேண்டும் என்று முடிவு செய்து விட்டனர். அதற்காகவே தயார் செய்யப்பட்டுள்ளன முப்பத்தாறு பீரங்கிகள். ‘ஒரு நாளில் எட்டுத் தேர் செய்யும் தச்சன், ஒரு மாதம் ஆராய்ந்து செய்த தேருருள் போன்ற வலி’ என்ற புறநானூற்றுப் பாட்டுக்கு அவை எடுத்துக்காட்டாகும். அவ்வளவு கொடியவை அவை. அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு கோட்டையை அழித் தொழிக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்தது. அவற்றின் முன் நமது பீரங்கிகளைக் கொண்டு எதிர்க்க முடியாது. வருகிற எட்டா நாள் அப்பீரங்கிப் படை கள்ளிக் கோட்டையை விட்டுப் புறப்படத் தயாராக இருக்கிறது. ஆகையால், தாங்கள் கட்டாயம் ஓடாநிலையை விட்டு வேறிடம் சென்று தலைமறைவாய் இருத்தல் வேண்டும். இதைக் கோழைத்தனம் என்று எண்ணாதீர்கள். போர்ச் செயலேயாகும். அவர்கள் ஒரு வேளை நமது கோட்டையை அழித்தாலும் அழிப்பார்கள். அதனால் நமக்கொன்றும் குறை யுண்டாகாது. தாங்கள் மட்டும் இக்கடிதம் கண்டதும் கட்டாயம் வேறிடத்திற்குச் சென்று விடுங்கள். தமிழ் நாடு தங்களைத் தான் நம்பியிருக்கிறது. இந்நாட்டின் எதிர்கால வாழ்வைப்பற்றி முடிவு செய்யும் பொறுப்புத் தங்களையே சார்ந்ததாகும் மேலும், அவர்கள் எப்படியாவது தங்களைச் சிறை பிடிக்கத் திட்டமிட்டிருக் கின்றனர். ஆகையால், தாங்கள் கட்டாயம் தலைமறைவாய் இருக்க வேண்டும். இதை விட நான் தங்களுக்குக் கூறவேண்டிய தொன்றும் இல்லை யென நம்புகிறேன். தாங்கள் கட்டாயம் வேறிடம் செல்லுங்கள். அங்கும் எச்சரிக்கையாக இருங்கள். படித்துவிட்டு இக்கடிதத்தைக் கிழித்து விடுங்கள். தங்கள் வணக்கமுள்ள, சுபேதார் வேலப்பன், கள்ளிக்கோட்டை. சின்னமலை அக்கடிதத்தை இருமுறை படித்துப் பார்த்தான்; நன்கு எண்ணிப் பார்த்தான்; தம்பிமார்களையும் படைத் தலை வனையும் அழைத்துக் கடிதத்தைப் படித்துக் காட்டினான். நால்வருங்கூடி நன்கு ஆராய்ந்து பார்த்தனர்; சங்கிலியைக் கூப்பிட்டுக் கேட்டனர். அவன், கள்ளிக் கோட்டையில் இருந்து வந்த ஒரு போர் வீரன் கொடுத்தா னென்றும், சுபேதார் வேலப்பன் தங்களிடம் கொடுக்கும்படி கொடுத்தனுப்பியதாகச் சொன்னா னென்றும், நேரில் கொடுக்க அஞ்சி அவ்வாறு செய்தேன் என்றும் சொன்னான். அதன்மேல் கருமலைக்குச் சென்று கொஞ்ச நாள் அங்கு இருக்கலா மென்று முடிவு செய்தனர். பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யுங்கள் என்று கூறிவிட்டு எழுந்து போகும் போது, அக்கடிதத்தை அங்கேயே வைத்துவிட்டுப் போய்விட்டான் சின்னமலை. படைக்கலங்கள், மருந்து முதலியவற்றையும், போர் வீரர்களையும் வேறிடத்திற்கு மாற்றும் படி படைத் தலைவனிடம் கூறிவிட்டு அன்றிரவே கருமலைக்குப் புறப்பட்டனர் மூவரும். அவர்கள் அங்குப் போகும் போது வெறுங்கையோடு போக வில்லை. நூற்றுக்கணக்கான மாடுகள், குதிரைகள், வேலையாட்கள், திறமை வாய்ந்த சில போர் வீரர்கள், சமையற்காரர்கள், இன்னும் வேண்டிய பலவகை வசதிகளுடனும் போனார்கள். கோட்டையைக் கொளுத்தல்: குறிப்பிட்ட நாளில் கள்ளிக் கோட்டையிலிருந்து பீரங்கிப் படை புறப்பட்டது. அப்படையுடன் சுபேதார் வேலப்பனையும் அனுப்பினர். பீரங்கி வண்டிகள் சில நாட்களில் ஓடாநிலைக்கு ஒரு கல்மேற்கில் உள்ள ஓலவலசு1 என்னும் ஊரை அடைந்தது. ஊர்க்குக் கீழ்ப்புறம் உள்ள கிழக்குத் தோட்டத்தில் கேழ்வரகுக் கதிர் வெட்டும்படி முதிர்ந்திருந்தது. 72 காரி யெருதுகளையும் அக்கதிரில் அவிழ்த்து விட்டனர். ஆங்கிலேயர் நம் நாட்டுச் செல்வத்தைக் கொள்ளையடித்ததைப்போல, அவ்வெருதுகள் கதிர் முழுவதையும் தின்றன.1 அப்பீரங்கிப் படைஞர், வருகிற வழியிலேயே சின்னமலை வேறிடம் சென்று விட்டதாகவும், கோட்டை காலியாக இருப் பதகாவும் கேள்விப் பட்டனர். ஆனாலும் அவர்கட்கு நம்பிக்கை ஏற்படவில்லை. மாலை மூன்று மணிக்கெல்லாம் அங்கிருந்து புறப்பட்டனர். ஓடாநிலைக்கு மேல்புறம் கொண்டு போய்ப் பீரங்கி வண்டிகளைக் கோட்டையை நோக்கி நிறுத்தினர். பீரங்கிகளைச் சுடுவதற்குத் தயாராக வைத்துக் கொண்டு, சுபேதார் வேலப்பனுடன் சில வீரர்களை அனுப்பிப் பார்த்து வரச் செய்தனர். அவர்கள் போய்ப் பார்த்து விட்டு வந்து, ‘கோட்டைக்குள் யாருமில்லை. கோட்டைக் கதவு திறந்தபடியே இருக்கிறது,’ என்றனர். ஆனாலும், அவர்களுக்குக் கோட்டைக்குட் செல்லத் துணிவு ஏற்படவில்லை. சின்ன மலையின் தீரம் அவர்களுக்கு அவ்வளவு அச்சத்தை உண்டாக்கி விட்டது. பின்புறமாக ஒரு பீரங்கியைக் கொளுத்தினர். பின்பு பீரங்கிப் படைத் தலைவன், வேலப்பனை உடனழைத்துக் கொண்டு கோட்டைக்குட் சென்று, கோட்டையைச் சுற்றிப் பார்த்து விட்டு வெளியே வரும்போது, வெளித் திண்ணை யண்டை கிடந்த அக்கடிதத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். அதில் சுபேதார் வேலப்பன் கையெழுத் திருப்பதைக் கண்டான். வேலப்பனைப் பாதுகாப்பில் வைத்து விட்டு, தமிழ் தெரிந்த வீரனைக்கொண்டு அக்கடிதத்தைப் படித்துச் செய்தி யுணர்ந்தான். அவ்வளவு தான்! வேலப்பன் உடல் கோட்டை வாயிலின் முன் இருந்த மரத்தில் தொங்கிற்று. பின்னர்ச் சில பீரங்கிகளைக் கொளுத்தினர். கோட்டை பாழாயிற்று. அப்பீரங்கி யோசை பல கல் தொலைவு கேட்டது. நிலமெல்லாம் அதிர்ந்தது. மக்கள் அஞ்சியலறினர். கோவை யின் தலைநகர்க் கோட்டை வெள்ளைக்காரர் பீரங்கிக்கு இரையாயிற்று. உடனே அப் பீரங்கிப் படை கள்ளிக் கோட்டையை நோக்கிப் புறப்பட்டது. சுபேதார் வேலப்பன்: சுபேதார் வேலப்பன் என்பவன் யார்? எவ்வூரினன்? அவன் வரலாறென்ன? என்பவற்றை யறிய நீங்கள் ஆவலுள்ள வர்களாய் இருப்பீர்களல்லவா? இதோ அவ்வீரன் வரலாறு: வேலப்பன், ஓடாநிலைக்குப் பக்கத்தேயுள்ள நல்ல மங்கை பாளையம் என்னும் ஊரினன். சின்னமலை முதலியோர் போல இவனும் மைசூர்ப் படையில் போய்ச் சேர்ந்தான். சின்னமலை அங்குப் படைத்தலைவனாக இருந்தபோது இவன் அப் படையில் ஒரு வீரனாக இருந்தான்; சின்னமலையின் நாட்டுப் பற்றைக் கண்டு அவனிடம் அளவற்ற அன்பு கொண்டவன்; திப்பு இறந்தபோது ஆங்கிலேயரால் போர்க் கைதியாகப் பிடித்துச் செல்லப் பட்டவன்; தன் திறமையால் சுபேதார் நிலையை அடைந்தவன் எல்லையற்ற நாட்டுப் பற்றுடையவன். சின்ன மலையின் பல வெற்றிகளுக்கு நமது வேலப்பனே காரண மாவான். வேலப்பன் முதலில் சங்ககிரிக் கோட்டையில் இருந்தான். அப்போது ஆங்கிலப்படை புறப்படும் நாளையும், அதன் அளவு, தகுதி, திறமை முதலியவற்றையும் முன்னாடியே அறிவித்து விடுவான். ஆனால் குதிரைப் படை வரும்போது வேலப்பன் கள்ளிக் கோட்டைக்கு மாற்றப்பட்டதால் அதை முன்னாடியே அறிவிக்க முடியாதவனானான். ‘நல்ல வேளை’ என்கிறார்களே. அதனால் தான் அவன் கள்ளிக்கோட்டைக்கு மாற்றப்பட்டான் போலும்! இவன் அங்கு இருந்ததனால்தான் பீரங்கிப்படை வரவை முன்னாடியே தெரிவிக்க முடிந்தது. அவன் இல்லை யென்றால் என்னாகியிருக்கும்! வேலப்பன் செய்தது இரண்டகச் செயல் என்று சிலர் நினைக்கலாம். அது இரண்டகமன்று; இனத் தொண்டே யாகும்; நாட்டுத் தொண்டேயாகும். ஆங்கிலேயர் படையில் அவனாகப் போய்ச் சேர்ந்து இவ்வாறு செய்திருந்தால் ஒரு வேளை இரண்டகம் எனலாம். இவனோ போர்க் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்டு அங்கிருந்தானே யன்றி, இவனாக வெள்ளையர் படையில் போய்ச் சேரவில்லை. அங்கு வேண்டா வெறுப்புடன் இருந்து வந்தான். அவர்கள் பிடித்துச் செல்லா திருந்தால் கோவைப் படையில் ஓர் உயர்தர அதிகாரியாக இருந்து அவ்வெள்ளையரோடு எதிர்த்துப் போரிட்டிருப்பான் வேலப்பன். தன் தாய் நாட்டு விடுதலைக்காகவே உழைத்து உயிர்விட்ட வேலப்பனுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? அவன் பெயர் விளங்கச் செய்வதுதான் நாம் அவனுக்குச் செய்யுங் கைம்மாறு. வீரன் வேலப்பன் புகழ் வாழ்க! சின்னமலை மரபு: சின்னமலைக்குக் குழந்தைசாமிக் கவுண்டர் என்னும் அண்ணார் ஒருவர் உண்டல்லவா? சின்னமலையைக் கோவைக் கோன் ஆக்கினது இவருடைய மனைவி கெம்பாயம்மாள் தானே? சின்னமலை முதலியோர் கருமலைக்குச் சென்ற அன்றே இவர் குடும்பத்துடன் வேறோர் ஊர்க்குச் சென்று விட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஓடாநிலைக்கு வந்து, ஒரு தோட்டத்தில் வீடு கட்டி இருந்து வந்தனர். அதுதான் இன்று அவர் வழியினர் இருக்கும் வாழைத்தோட்ட வலசு என்னும் ஊர். இது ஓடாநிலைக்கு ஒரு கல் தெற்கில் உள்ளது. குழந்தைசாமிக் கவுண்டருக்கு நல்லதம்பிக் கவுண்டர், சின்னண கவுண்டர், தீர்த்தகிரிக் கவுண்டர், அப்பாச்சிக் கவுண்டர் என நான்கு மக்கள், அந்நால்வர் வழிவந்தோர் இன்று பல குடும்பத்தினராக வாழ்ந்து வருகின்றனர். அந்நால்வருள், அப்பாச்சிக்கவுண்டர் மகன் அரங்கசாமிக் கவுண்டர். அரங்கசாமிக் கவுண்டர் மகன் சின்னமலைக் கவுண்டர் என்பவர்தான் இவ்வரலாற்றை எழுதத் துணை புரிந்தவர். அவருக்கு 1952 - இல் 84 ஆண்டு. 16. இனவிரண்டகன் கோட்டையைக் கொளுத்திய செய்தி கேட்டுச் சின்னமலை சினங் கொண்டான். ஆனாலும், அவன் அதற்காக வருந்தவில்லை. அது இயல்பு என்பதை அவன் அறியாதவ னல்லன்; ஆனால், வேலப்பன் கொலைக்குத் தானே காரணம் என்பதை யறிந்து வருந்தினான்; தன்னை மிகவும் நொந்து கொண்டான்; ஊருக்குப் போவதா, இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கேயே இருப்பதா என்னும் இருமனப்பாடு தோன்றிற்று. முடிவில் இன்னும் கொஞ்ச நாளைக்கு அங்கேயே இருப்பதென முடிவு செய்தான். சின்னமலை கருமலையில் இருந்தாலும் நாட்டில் கட்டுக் காவல் அப்படியேதான் இருந்து வந்தது. படைத்தலைவன் தலைமையில் பாளையக்காரரெல்லாரும் அவ் வேலையைப் பொறுப்பேற்றுச் செய்து வந்தனர். நாட்டில் நடப்பதைச் சின்ன மலைக்கு அவ்வப்போது குதிரை வீரர்கள் அறிந்து வந்து கூறி வந்தனர். சின்னமலை முதல் மூவரும் பகல் பன்னிரண்டு மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள வீட்டில் வந்து சாப்பிட்டு வந்தார்கள். மற்ற நேரமெல்லாம் மலைமீதே இருப்பர். இரவில் எங்கு இருப்பார்கள், எங்கு படுத்துத் தூங்குவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. சாப்பிடும்போது கூடக் கைவெடியைக் கீழே வைக்காமல் எச்சரிக்கையாகவே சாப்பிடுவார்கள்; காரணம், வெள்ளைக்காரர் தங்களைப் பிடிக்க மறைமுகமாக முயன்றுவருவதாகக் கேள்விப் பட்டனர். அதனாலேதான் அவர்கள் அவ்வளவு எச்சரிக்கையாக இருந்து வந்தனர். அறிவறிந்த மகனல்லவா சின்னமலை? கருமலையில் இருந்த போதுதான் அங்கு வாழைத்தோட்டத்தைப் பெருக்கினான். கோட்டையைக் கொளுத்திச் சென்ற வெள்ளையர் அதோடு சும்மா இருந்துவிடவில்லை. சின்னமலையைப் பிடிக்க மறைமுகமாக வேலை செய்யத் தலைப்பட்டனர். கைக்கூலி கொடுத்துச் சிலரை உடன் படுத்தி, அவர்களைக் கொண்டு மன்னர்களை மடக்கி நாடு பிடிப்பதில் வெள்ளைக் காரர் கைதேர்ந்தவர். அவ்வாறேதான் இந்நாட்டைக் கைப்பற்றினர். வெள்ளைக்காரரின் இந்தச் சூழ்ச்சியைப் பற்றித் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர் என்பது, “வெள்ளைக்கா ரன்பணம் சின்னப் பணமது வேடிக்கை செய்யுதாம் வெள்ளிப்பணம் வெள்ளிப் பணத்துக்கிங் காசைப்பட் டேயதில் வீசம்போச் சுமுத்து வீராயி.” என்னும் முத்து வீராயி கும்மி என்ற ஒரு நூலில் வரும் பாடலால் விளங்குகிறது. வேடிக்கை செய்தல் - பணத்தைக் கொடுத்து உளவாளியாக்குதல், ‘வீசம் போச்சு’ என்பது நம்நாட்டில் ஒருபகுதி அவர்கட்குப் போய்விட்டது என்ப தாம். அதாவது வெள்ளைக்காரர் கொடுக்கும் கைக்கூலிக்கு ஆசைப்பட்டு நம் நாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர் களுக்கு உரியதாக்கி விட்டோம் என்பதாம். இக்கும்மிப் பாட்டு இன்றும் நாட்டுப் புறங்களில் வழக்கத்தில் இருந்து வருகிறது. இச்சூழ்ச்சியைச் சின்னமலையைப் பிடிப்பதிலும் கையாண்டனர் அவ்வெள்ளைக் காரர்; முடிவில் வெற்றியும் பெற்றனர். சின்னமலையின் சமையற்காரன் ஊரிலிருந்தே கூட்டிப் போகப்பட்டவன்; மிகவும் நம்பிக்கையும் நாணயமும் உடையவன்; இதுநாள் மட்டும் சின்னமலையை உயிர் போலவே எண்ணி நடந்து வந்தான். பணமென்றால் பிணமும் வாய்திறக்கு மல்லவா? பணத்தைவிடக் கொடியதும் வலியதும் உலகில் வேறொன்று இருப்பதாகத் தெரியவில்லை. கொள்ளையும் கொடுமையும் கொலையும் பணத்தினால் தானே நடக்கின்றன. அண்ணனையும் கொல்லும் ஆற்ற லுடைய தன்றோ பணம்! ‘வெள்ளையப்பன் உண்டானால் கொல்லி மலையைக்கூடத் திருப்பலாம்’, ‘பணம் பத்தும் செய்யும்’, என்னும் பழமொழிகள் பொருளற்ற வையல்ல; பணத்தின் பெருமை கூற எழுந்தனவேயாம். தடியால் அடித்தால் மடங்காதவர்களும், பணத்தால் அடித்தால் உடனே மடங்குவர். பணஞ் செய்வதைக் குணஞ் செய்யாது. எனவே, உள்ளாளைக் கொண்டு நிறையப் பணங்கொடுத்துச் சமையற்காரனை உளவாளி யாக்கிக் கொண்டனர் வெள்ளையர். அந்தோ! அவன் பணத்துக் காசைப்பட்டுக் குணத்தை விட்டு, உண்ட வீட்டுக்கு இரண்டகம் (துரோகம்) செய்ய உடன்பட்டான். தன்னை உயிர் போல நம்பிய தலைவனைக் காட்டிக் கொடுக்கும் கயவனானான். வெள்ளைக்காரன் வஞ்சகச் செயலுக்கு இவன் உடந்தையானான். வேலியே பயிரை மேய்ந்தால் வேறு என்னசெய்வது? தாயே சேயின் கழுத்தைத் திருகினால் தப்புவதெப்படி? அக்கொடியோன் சோற்றில் நஞ்சிட்டு மூவரையும், கொன்றிருந்தால்கூட, என்னவோ இறந்துவிட்டனர் என்று போய்விடுமே? அவ்வின விரண்டகன் (இனத்துரோகி) பகைவருக் காளானான். அறை போய் இந்நாட்டை அயல் நாட்டுக்குரிய தாக்கினான். வெள்ளிப் பணத்துக்கு ஆசைப்பட்டு வீணனானான். கைக்கூலி பெற்றுக் காட்டிக் கொடுத்த அக்கடை மகன் கல்மேல் எழுத்தானான். ஆங்கிலேயர் நூற்றைம்பதாண்டுகள் இந்நாட்டின் அரசர் களாகவும், இந்நாட்டு மக்களாகிய நாம் அடிமைகளாய் அலையவும் செய்தான். அக்கயவனும் ஒரு தமிழ் மகன் தான். தமிழ் நாட்டில் பிறந்தவன், தமிழ் மொழி பேசுபவன்தான்! ஆனால், அவன் தமிழர் பண்பாட்டுக்கு மாறாக நடந்து கொண்டவன்; காட்டிக் கொடுத்தான்; யாரை? தன் தலைவனை, தமிழ் நாட்டின் விடுதலை வீரனை, தமிழர் செல்வத்தை, அரசாளப் பிறந்த மகனை! காலம் அவனை அப்படி ஆக்கிக் கொண்டது. நாம் என் செய்வது! இரவில் எல்லோரும் படுத்துத் தூங்கின பிறகு வஞ்சகச் செயல் நடந்து வந்தது. அச்சமையல் வீட்டைச் சுற்றி நூற்றுக் கணக்கான பேர் தங்கியிருக்கத் தக்க நிலவறை யொன்று வெட்டப் பட்டது. பல இரவு அவ்வேலை நடந்தது. அந் நிலவரையின் வாயில் கண்ணுக்குத் தெரியாத தொலைவில் இருந்தது. வீட்டின் அருகில் வெளிவரும் மறைவழி யொன் றமைத்தனர்; அம்மறைவழி மூவரும் இருந்து சாப்பிடும் இடத்திற்கு நொடிப் பொழுதில் வரக்கூடிய அவ்வளவு பக்கத்தில் இருந்தது. நிலவறை வேலை முற்றுப் பெற்றது. நூற்றுக்கணக்கான வெள்ளை வீரர்கள் அந்நிலவறையில் அமர்த்தப் பட்டனர். ஆனால், சின்னமலை முதல் மூவரும் எப்போதும், உண்ணும் போது கூடக் கைவெடியைக் கீழே வைப்பதில்லையே; அவர் களை எப்படிப் பிடிப்பது? அவ்வளவு நெஞ்சத்துணிவு அவ் வெள்ளைக்காரருக் கேது? அதற்கும் அச்சமையற் காரனையே கருவியாக்கினர். 17. சிறையில் சின்னமலை நீண்டகாலமாகச் சின்னமலையிடம் சமையலுக்கு இருந்து வருபவனும் நம்பிக்கையுடையவனுமாகையால், அச்சமையற் காரன் சின்னமலையிடம் ஏதாவதொன்றைத் துணிவுடன் கூறுவான். அவன் சொல்வதைச் சின்னமலை கேட்பான். முன்னெல்லாம் சின்னமலையின் நன்மை பற்றியதையே சொல்வான். அவ்வாறே சில நாளாக, ‘இங்கு யார் எதிரியிருக் கிறார்கள்? எதற்காக வெடியைக் கையில் வைத்துக் கொண்டே சாப்பிட வேண்டும்?’ என்று குறிப்பாகக் கூறி வந்தான். ஒரு நாள், முன்னேற்பாடாக நிலவறையில் வெள்ளை வீரர்களை வைத்துவிட்டு, சின்னமலை, முதல் மூவரும் சாப்பிட வந்ததும் வெளிப்படையாகவே, ‘எதற்காகத் தாங்கள் கைவெடி யுடனே சாப்பிட வேண்டும்? நம்ம இடத்திற்கு வர யாருக்கு அவ்வளவு நெஞ்சத்துணிவு? அதுவும் இந்தப் பட்டப் பகலில்! வீட்டைச் சுற்றி என்ன மறைவா இருக்கிறது? கண்ணுக்குத் தெரியுமட்டுந்தான் வெட்ட வெளியாகக் கிடக்கிறதே. தாங்கள் ஏன் எப்போதும் அச்சத்துடனேயே இருக்க வேண்டும். வீட்டுக் குள்ளேயே ஒரு பக்கம் வெடிகளை வைத்துவிட்டுச் சாப்பிடலா மல்லவா? சாப்பிடு வதற்குள்ளாக அப்படி என்ன வந்துவிடும்?’ என்று உண்மையாளன் போலப் பேசினான். அவ்வஞ்சகன். அவ் விரண்டகன் சொல்லை உண்மை யென்று நம்பிய மூவரும், வீட்டுக்குள் சுவரோரமாகக் கைவெடிகளை வைத்து விட்டு உட்கார்ந்து சாப்பிட்டனர். அக்கொடியோன் உணவு பரிமாறிக் கொண்டிருந்தான். முன்னமே நிலவறைக்குள் தயாராக இருந்த வெள்ளை வீரர்கள், நிலவறையிலிருந்து மெதுவாக வெளிக் கிளம்பினர். வீரர்கள் வெளிவரும் ஓசை, கவனத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த கிலேதார் செவியில் பட்டது. காலடி யோசை யென்பதைக் குறிப்பாலுணர்ந்த கிலேதார், ‘அண்ணா! ஆபத்து’ என்றான். அச்சொல் செவி புகாமுன், பரிமாறிக் கொண்டிருந்த சமையற்காரனைச் சின்னமலை ஓங்கி யறைந்தான். அப்பாவி அப்படியே விழுந்திறந்தான். ‘ஆபத்து’ என்று சொல்லிக் கொண்டே கிலேதார் எழுந்தான். அதற்குள் ஒவ்வொருவரின் ஒவ்வொரு கையையும் பத்தெட்டு வெள்ளை வீரர்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். வெளியில் நூற்றுக் கணக்கான வீரர்கள் நீட்டிய வெடியுடன் நின்றனர். மூவர்க்கும் கைகால்களுக்கு விலங்குகள் பூட்டப்பட்டன. அதற்குள்ளாக, நிலவறைக்குள் இருந்து இழுத்து வந்த இரண்டு மூன்று பீரங்கிகள் அங்கே நிறுத்தப்பட்டன. பீரங்கி வண்டிகளுக்கு மாடுகள் பூட்டப்பட்டன. இனிப் பேசுவதற்கு என்ன இருக்கிறது! அவ்வெள்ளை வீரர்கள் என்ன செய்திருப் பார்கள் நம் தமிழ் வீரர்களை? நீட்டிய வெடியுடன், முன்னும் பின்னும் பீரங்கி வண்டிகள் செல்ல, கண்கொண்ட காளைகளை முன்கயிறு பின்கயிறு போட்டுக் கட்டுத்தறிக்குப் பிடித்துக் கொண்டு போவது போலக் கொண்டு போயினர். அரசாளப் பிறந்தவர்களை, இந்நாட்டை ஆளப் பிறந்த ஆணரியேறுகளைத் திருடர்களைப் பிடித்துக் கொண்டு போவது போலப் பிடித்துக் கொண்டு போயினர். யார்? அயல் நாடர்! அவ்விடுதலை வீரர்களின் தாய் நாட்டு மக்கள் கண்டு கண்ணீர் வடிக்கக் கொண்டு போயினர். எங்கு? சங்ககிரிக் கோட்டைக்கு. “கட்டுக் கடங்காத காளை களைப்போலக் கட்டிப் புடித்துக் கவலையுடன் வெட்டிச் செயங்கொண்ட சின்ன மலைதனை வெள்ளைக்கா ரர்கொண்டு போவதைப்பார்” (சின்னமலை கும்மி) கோவையே அழ, கோவையென்ன, தமிழ்நாடே கண்ணீர் விட்டுக் கலங்கியழக் கொண்டு போய்ச் சங்ககிரிக்கோட்டையில் சிறைவைத்தனர் நம் தண்டமிழ் வீரர்களை. குற்றவாளிகளை அடைக்கும் சிறையில் அடைத்தனர் நம் கொங்கிளங் கோக்களை, கோவைக் குரிசில்களை, சின்னமலை சிறை புகுந்தான். அன்றே இந்நாடு ஆங்கிலேயருக்குச் சொந்தமாயிற்று. ஆறாயிரங் கல்லுக்கு அப்பாலுள்ள அயல் நாடர்க்குத் தமிழ் நாடு அடிமையா யிற்று. தமிழர் பண்பாடு. மொழி, கலை, நாகரிகம் ஆகியவை முற்றிலும் வேறுபட்ட ஒரு கூட்டத்திற்குத் தமிழர் அடிமை களாயினர். அண்டிப் பிழைக்கவந்த ஒரு கூட்டத்திற்கு நாடாண்ட மரபினர் தலை வணங்கலாயினர். அயல் நாடர் ஆட்சி தமிழ் நாட்டில் நிலை பெற்றது. தமிழன்னை அரியணையினின்றும் இறக்கப் பட்டாள்; சின்னமலையைப் போலவே கை கால்களுக்கு விலங் கணிந்து சிறையிலடைக்கப் பட்டாள். தமிழர் கலை, நாகரிகம், பண்பாடு என்பன வெல்லாம் மறைந்தன. ஆங்கில ஆதிக்கம் தமிழ் நாட்டில் தலைதூக்கத் தொடங்கியது. வெள்ளையரின் அச்சம் தலைதூக்கத் தொடங்கியது. வெள்ளையரின் அச்சம் நீங்கிற்று; குலை நடுக்கம் நின்றது; ஆறுதல் ஏற்பட்டது; ஆவல் நிறைவேறிற்று. வெல்லெஸிலி மகிழ்ந்தான். சென்னைக் கோட்டையிலும், கல்கத்தாக் கோட்டையிலும் அன்னார் கொடிகள் உயர ஓங்கிப் பறந்தன. இனி எங்களுக்கு அச்சமில்லை அச்சமில்லை என்று அவை மகிழ்ந்தாடின. வெற்றி விழாக் கொண்டாடி வெறிக்கூத்தாடினர் வெள்ளையர். ஆனால், தமிழர் எண்ணியிருந்த எண்ணத்தில் மண் விழுந்தது. ஒரு கயவனால், ஒரு கடைமகனால் ஒரு வஞ்சகனால் அதுவும் ஒரு தமிழ் மகனால் தமிழர் வாழ்வு சரிந்தது. உலகுக்கே ஒருகால் தலைமை தாங்கி நின்ற தமிழ்நாடு அயல்நாட்டுக்குத் தலைசாய்த்தது! தமிழர் வரலாற்றில் இஃதொரு புதிய படலம்! கொங்கு நாடு துன்பக் கடலில் ஆழ்ந்தது. கோவைக் கோட்டம் கல்லாய்ச் சமைந்தது. புலவர் சொல்வர், ‘கிள்ளை அழுத, பூவை யழுத, கிளர்மாடத் துள்ளுறையும் பூனையழுத, இளம் பிள்ளையழுத கள்ளவிழும் பூங்காவில் கலங்கி மரமழுத’ என்று அவை யெல்லாம் உயிருள்ளவை உணர்வுள்ளவை; அழுவதில் வியப்பொன்றுமில்லை. ஆனால், சின்னமலை சிறைசென்ற போது தமிழ் நாட்டு மண்ணே அழுதது, என்று என் அடிமை நிலை நீங்கும் என்று! இதை எழுதும் போதே நம் கண்கள் அழும்போது, அன்று அவை அழுததைக் கேட்கவா வேண்டும்? ஆனால், அவர்கள் மூவரும் அழுதார்களா? அது தான் இல்லை; ஊர்வலம் செல்வது போலச் சென்று, தமது கோட்டைக்குட் புகுவதைப் போலச் சிறைச்சாலைக்குட் புகுந்தனர். கண்ணை இமை காப்பது போல அச்சிறைச் சாலையை அவ்வளவு எச்சரிக்கையாகக் காத்து வந்தனர் வெள்ளையர். 18. வீர முடிவு சங்ககிரிக் கோட்டை ஒரு சில நாள் விடுதலை வீரர்களுக்கு விடுதியாக இருக்கும் பேற்றைப் பெற்றது. ஆனால், அதுவே அவ்வீரர்கள் கொலைக்களமும் ஆனது. 1805 - ஆம் ஆண்டு. ஒருநாள் பகல் பதினொரு மணியிருக்கும். சங்ககிரிக் கோட்டை வாயில்களெல்லாம் போர் வீரர்களால் அடைக்கப்பட்டிருந்தன. புலிக்கூண்டிலிருந்து ஆணிளம் புலிகளைப் பிடித்து வருவது போல, விலங்கணிந்த கைகால்களுடன், இடுப்பிலணிந்த விலங்கை இருபக்கமும் சிலர் பிடித்துவர, சின்னமலை முதல் மூவரையும் கொண்டு வந்து நிறுத்தினர். மூவரும் அசையாமல் அப்படியே நிமிர்ந்து நின்றனர். சங்ககிரிக்கோட்டை சில நொடிநேரம் அமைதிக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது. ஆங்கிலப் படைத்தலைவன் வந்து இருக்கையில் அமர்ந்தான். அவன் மூவரையும் ஏறிட்டுப் பாத்தான். வெள்ளை வீரர்கள் நீட்டிய வெடிகளுடன் எச்சரிக்கையாக நின்று கொண்டிருந்தனர். அன்று கோட்டைக்குள் ஒரு மானுடம்பு கூடக் கிடையாது. எல்லாம் வெள்ளையுடம்பு கள்! எச்சரிக்கை என்றது ஒரு குரல். ‘உங்கள் வீரத்தையும் தீரத்தையும் மெச்சுகிறேன்; உங்கள் போன்ற குற்றவாளிகளுக்கு உரியது கொலைத் தண்டனைதான். ஆனால், நாங்கள் உங்களை அப்படிச் செய்ய விரும்பவில்லை. உங்கள் குற்றத்தைப் பொறுத்துக் கொண்டோம். ‘தீரன் சின்னமலை’ என்பது உனக்குப் புகழ் பெயரன்று, பொருட் பொருத்தமுடைய பொருந்திய பெயரே. ஆகையால், உன்னை எங்கள் படைத் தலைவனாக வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம். உன் விருப்பம் என்ன என்பதை நன்கு எண்ணிப்பார்த்துச் சொல்லுக,’ என்று கூறி முடித்தான் படைத் தலைவன். அது கேட்ட சின்னமலை நிமிர்ந்து நின்று, ‘நன்கு எண்ணிப் பார்த்துத்தான் சொல்லுகிறேன். உங்களை மூன்று முறை வென்றேன். ஐந்தாண்டுகள் கோவை நாட்டைத் தனியாட்சி புரிந்து வந்தேன். அரசனாக இருந்து இந்நாட்டை ஆளவேண்டும் என்பதன்று என் ஆசை. அயல் நாடாராகிய நீங்கள் இங்கு இருக்கக்கூடாது. எங்கள் தாய் நாடு அண்டிப் பிழைக்க வந்த உங்களுக்கு அடிமையாய் அடங்கி ஒடுங்கிக் கிடக்கக் கூடாது. எந்தாய் நாட்டு மக்கள் உங்களிடம் தலை குனிந்து நிற்கக் கூடாது. நீங்கள் ஆள்வோராகவும் நாங்கள் ஆளப்படுவோராகவும் இருக்கக் கூடாது. அடிமை வாழ்வைத் தமிழ்நாடு என்றும் கண்டறிந்ததில்லை. தமிழர் தன்மதிப் புடையவர்கள். அவர்கள் மானமிழந்து, மதிப்பிழந்து மாற்றாருக் கடங்கி வாழக்கூடாது. அயல் மொழியாள ராகிய உங்களிடம், எந்தமிழ் மக்கள் தேனினும் இனிய செந்தமிழால் பேசமுடியாது தியங்கி நிற்கக்கூடாது. மேலும், உலக முதன் மொழி, உலக மொழிகளுக்கே கண்போன்ற எண்ணைக் கொடுத்த மொழி, இனிய எளிய இயல்பாகிய எங்கள் தாய்மொழியாந் தமிழ்மொழி பிழைக்க வந்த உங்கள் தாய்மொழிக்கு அடிமை யாகக் கூடாது. உங்கள் தாய்மொழி அரியணையிலமர, இவ்வளவென அறிய முடியாத அவ்வளவு காலமாய் அரசு வீற்றிருந்த எங்கள் தாய் மொழி அடிமைபோல நின்று குற்றேவல் செய்யக்கூடாது. வீரத்தமிழன் அண்டிப் பிழைக்க வந்த அயல் நாடர்க் கடிமையானான் என்னும் பழமொழி உண்டாகக் கூடாது என்பதுதான் என் ஆசை. அதற் காகத்தான் உங்களோடு எதிர்த்துப் போர் புரிந்தேன். நீங்கள் இங்கு அண்டிப் பிழைக்க வந்தீர்கள். நாங்கள் உங்களை அன்போடு வரவேற்றோம்; வாணிகம் செய்யும் உரிமையை வழங்கினோம்; எங்கள் அன்பை அளித்தோம்; ஆதரவைக் கொடுத்தோம். அந்நிலையில் நீங்கள் அமைதியாக இந்நாட்டில் என்றென்றும் இருந்து இனிது வாழலாம். ஆனால், நீங்கள் அவ்வாறு செய்யவில்லை. எங்கள் நாட்டை, எங்களை நீங்கள் ஆள ஆசை கொண்டீர்கள். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய்த் தன்னரசர்களாய் வாழ்ந்துவந்த எங்களுக்கு நீங்கள் தலைவர்களாய் இருக்க ஆசை கொண்டீர்கள். அதுவுந்தான் உங்கள் திறமையாலா? இல்லை, சூழ்ச்சியால். எங்கள் நாட்டு மன்னர்களை ஒருவர்மேல் ஒருவரைக் குத்திவிட்டு, ஒற்றுமையைக் குலைத்து, பகையை உண்டாக்கி, அவர்களில் ஒருவர்க்கு உதவி செய்வது போல் எங்கள் நாட்டைக் கொள்ளை கொளத் துணிந்து விட்டீர்கள். நீங்கள் எதற்காக எங்கள் நாட்டரசர்களுக்கு உதவவேண்டும்? எம்மரசர் கொடுமை செய்கின்றனர்; அன்பு கூர்ந்து தாங்கள் வந்து, அவர்களை விலக்கிவிட்டு எங்களுக்கு அரசர்களாக இருங்கள்; எங்களை ஆளுங்கள், ’ என்று இந்நாட்டு மக்கள் வந்து உங்களை அன்போடு வெற்றிலை பாக்கு வைத்தா அழைத்தார்கள்? அப்படியே தான் நாங்கள் இன்று அடித்துக்கொண்டால் நாளை தாயும் பிள்ளையுமாகப் போகிறோம். நீங்களேன் குறுக்கே வந்து விழுந்தீர்கள்? ஆடு நனைகிறதென்று ஓநாய்க்கென்ன அவ்வளவு அக்கறை! ஆகையால், அயல் நாடாராகிய உங்களை இந்நாட்டை விட்டு ஓட்டவே நான் உங்களோடு போர் புரிந்தேன். தமிழர் தனித்த வீரமுடையவர்; சிறந்த போர்த்திற முடையவர்! பல பெரும் போர்கள் செய்து வெற்றி மாலை சூடியவர். ஆனால், உங்களைப்போல் மறப்போர் செய்யத் தெரியாதவர். அறப்போர் செய்வோர். கைக்கூலி கொடுத்து எங்கள் ஆளையே உளவனாக்கி, வஞ்சனையாக எங்களைப் பிடித்தது போலத் தமிழர் வீர வரலாற்றில் எப்போதாவது, யாராவது செய்ததாகக் கேட்டதுண்டா? கோட்டைக்குள் கதவடைத்திருப்போனையும், “வெளியே வா! களம் வகுத்துப் போர் புரியலாம்”, என்று அறைகூவி அழைப்ப தன்றோ தமிழர் போர்முறை? கள்வர்களைப்போல் மறைந்திருந்து, படைக்கல மின்றி வெருங்கையோடு உண்ணும்போது திடீரென வந்து சிறைப்பிடிப்பதா போர் முறை? இதுவா வீரம்? ஓகோ! இது வெள்ளைக்காரராகிய உங்கள் போர் முறை போலும்! ஐந்தாண்டுகள் உங்களை அடக்கி யாண்டேன். அதை விட்டு, உங்களுக்கு அடிமையாக, உங்கள் படைத்தலை வனாக இருந்து உங்களை இந்நாட்டை விட்டு ஓட்டவா முடியும்? ஒருபோதும் முடியாது. பகைவர்களாகிய உங்கள் காலைக் கும்பிட்டு வயிறு வளர்க்க நாங்கள் என்ன மானங் கெட்டவர்களா? மானத்தின் பிறப்பிடம் தமிழ் நாடென்பதை உங்களிடம் மதிப்புடன் கூறிக்கொள்கிறேன். வாழ்க்கைக்காக மானத்தை விற்கும் வழக்கம் தமிழனுடைய தன்று. நீங்கள் நினைக்கிறபடி நான் உங்கள் அடிமையாயிருந்து எம்தாய் நாட்டு மக்களை, எம்மினத்தவரை, ஒரு பிறப்பை யடக்கி யாண்டால், எம்மவர்கள் என்ன நினைப் பார்கள்? அல்லது நீங்கள் தான் என்ன நினைப்பீர்கள்? மானம் பெரிதா, வாழ்வு பெரிதா? மேலும், நீங்கள் என்ன எம்மவருக்கு நன்மை செய்யவா போகிறீர்கள்; உங்களுக்கு அடிமையாயிருந்தாகிலும் எம்மவர்க்கு நன்மை செய்ய? நீங்கள் எம்மவர்க்குச் செய்ய விருக்கும் கொடுமைக்கு நாங்களுமா துணையாக வேண்டும்? அதுவும் உங்களுக்கு அடிமையாக இருந்து கொண்டா துணைசெய்ய வேண்டும்? நாங்கள் எப்போதும் இந்தக் கோட்டைக்குள்ளேயே இருந்து கொண்டே இருப்போம்? எம்தாய் நாட்டு மக்கள் முகத்தில் நாங்கள் விழிக்க வேண்டாமா? நீங்கள் இந்நாட்டைவிட்டுப் போவதாகச் சொல்லுங் கள்; உங்களை வழியனுப்ப உங்களுக்கு அடிமையாக இருக்கிறோம். எங்கள் நாட்டை நாங்கள் ஆளவோ நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். ஆகவே, உங்கள் விருப்பம் போல் என்னவேண்டு மானாலும் செய்யுங்கள். உங்களுக்கு அடிமையாக இருப்ப தென்பது மட்டும் எங்களால் முடியாத தொன்றாகும்,’ என்று பேசி முடித்தான். பழையபடி மூவரையும் சிறையில் வைக்கும் படி கட்டளை பிறந்தது. அவ்வாறே வீரர்கள் மூவரையும் சிறைக்குக் கொண்டு போயினர். அதன் பிறகு என்ன செய்தனர் என்பது யாருக்கும் தெரியாது. என்ன செய்திருப் பார்கள்? நீங்கள் சொல்லுங்கள்! இன்னும் சிறைக்குள்ளே இருந்தாலும் இருக்கலாம்; யார் கண்டார்! 1. அண்ணல் காந்தி அம்மா, அப்பா என்னும் சொறக்ளைப் போல, நமக்கு அவ்வளவு பழக்கமும் சொந்தமும் உடைய சொல் ஆகிவிட்டது, காந்தி என்னும் சொல். காந்தி என்னாமுன், அண்ணல் காந்தியின் திருவுருவம் நம் கண்முன்னே வந்து நிற்கின்றது. அண்ணலின் புன்னகைத் திருமுகம் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றது. கண்ணைவிட் டகலாக் காட்சியதாகிவிட்டது அண்ணலின் அத் திருவுருவம். காரணம் என்ன? நம் நாட்டின் விடுதலைக்கு அண்ணல் காரணமாக இருந்தமையே காரணமாகும். பழம் பெருமை வாய்ந்தது நம் நாடு. உலகில் உள்ள எந்நாட்டினும் முன்னாட்டும் நன்னாடாகத் திகழ்ந்தது நம் நாடு. உலக நாகரிகத்தின் பிறப்பிடமாக, வீரத்தின் இருப்பிட மாக இருந்தது நம் நாடு. மக்களுக்காகவே வாழ்ந்த இந்நாட்டு மன்னர்களால் முறை திறம்பாது ஆளப்பட்டு வந்தது நம் நாடு இந்நாட்டு மக்களாகிய நம் முன்னோர்கள் யாதொரு குறையும் இன்றி வாழ்ந்து வந்தனர். அவ்வாறு, நம் முன்னோர்கள் யாதொரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்ததனால் நல்லாட்சியின்கீழ் நலமாக இருந்து வந்ததனால், மிக்க நாகரிகம் உடையராய் வாழ்ந்து வந்தனர். இந்திய நாகரிகம் பழம் பெருமை வாய்ந்த தொன்றாகும். எந்நாட்டவரும் விரும்பிப் போற்றக் கூடிய அத்தகு நாகரிகம் இந்நாட்டு நாகரிகம்! உலக நாகரிகத்திற்கே வழிகாட்டியாக இருந்தது இந்திய நாகரிகம்! ஆனால், இத்தகைய சீருஞ்சிறப்புடன் வாழ்ந்து வந்த நாம், அரசை இழந்து, வரிசை யிழந்து, இடையில் பல்லாண்டுகள் அல்லற்பட லானோம். “ஒற்றுமை யாயிரு, மாற்றானுக்கிடங் கொடேல்” என்னும் ஆன்றோர் அறவுரைகளை மறந்த இந்நாட்டு மன்னர்களால், இந்நாடு அயல் நாடர் கைக்கு மாறியது. அன்னார்க்கு இந்நாடு சொந்தமானது. ஆறாயிரங் கல்லுக்கு அப்பாலுள்ள ஆங்கிலேயர்க்கு நாம் அடிமை யாயினோம். ஆங்கிலேயர்களாகிய அவ்வயலார் நமக்கு அரசர்களாயினர். வெளிநாட்டினராகிய வெள்ளைக்காரர்கள் நம்மை ஆள்வோர் ஆயினர்; நாம் ஆளப்படுவோர் ஆயினோம். நூற்றைம்பது ஆண்டுகட்கு மேல், அவ்வயல் நாடர்க்கு அடிமையாக இருந்து வந்தோம். இந்நாட்டில் அவர்கள் இட்டதே சட்டமாயிற்று! அதனால், அன்னாரின் அடக்குமுறை ஆட்சியினால், நமது நாகரிகம் சீர்குலைந்து போயிற்று. தமது பழமையான பழக்க வழக்கங்களை யெல்லாம் நம்மவர் கைவிடலாயினர். நம் பழம் பெருமை வாய்ந்த பண்பாடுக ளெல்லாம் மாறுபட லாயின. உலக நாகரிகங்கட்கே வழிகாட்டியாக இருந்து வந்த நமது நாகரிகம், நம்மவர்களால் ஒரு புறம்போக்குப் பொருளாக மதிக்கப் படலானது. தம்மை ஆள்வோராகிய அம்மேனாட்டினர் நாகரிகத் தை, பழக்க வழக்கங்களை, நடையுடைகளை நம்மவர் மேற்கொள்ள லாயினர். தங்கள் குழந்தைகள் பசியால் வாடி வருந்த, அவற்றைப் புறக்கணித்துவிட்டு, அயலார் குழந்தையை எடுத்து வளர்த்தும் பெற்றோர் நிலையில் வாழ்ந்து வரலாயினர் நம்மவர். ஆனால், அந்நிலைமை மாறி, நம் நாட்டை இன்று நாமே ஆண்டு வருகிறோம். அன்று போல் இன்று இந்நாட்டில் முடியரசு இல்லை; குடியரசு நடந்து வருகிறது. இந்நாட்டுப் பொது மக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற தலைவர்கள் இந்நாட்டை ஆண்டு வருகின்றனர். அதாவது, மன்னராட்சி ஒழிந்து நம் நாட்டில் இன்று மக்களாட்சி நடந்து வருகிறது. இப்புது வாழ்வு நமக்கு எப்படிக் கிடைத்தது? அன்று ஆங்கிலேயர் நம்மை ஆண்டு வந்தனர். அவர் அயலார்; அயல் நாட்டினர். ஒரு நாட்டு மக்களை மற்றொரு நாட்டினர் அடக்கி யாளுதல் தகாது என்பது காந்தியடிகளின் கருத்து. அடிமை வாழ்வில் வெறுப்பும் உரிமை வாழ்வில் விருப்பும் உடையவர் அவர். எனவே, இயல்பாகவே விடுதலை வேட்கையுடைய அண்ணல் அவர்கள், தம் தாய் நாட்டின் அடிமை நிலை கண்டு வருந்தினார்; வெள்ளைக்காரர் கையிலிருந்து நம் நாட்டை மீட்க எண்ணினார். அதற்காக அவர், நம் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டு வந்த காங்கிரசு இயக்கத்தில் பங்கு கொண்டார்; அதன் நிலையான தலைவர் ஆயினார். அண்ணல் அதன் பின் தம் வாழ்வையே இந்நாட்டு விடுதலைக்காக ஒப்படைத்தார்; ‘காந்தி என்றால் காங்கிரசு, காங்கிரசு என்றால் காந்தி’ - என்னும் நிலையை அடைந்தார். இங்ஙனம் தம் தாய் நாட்டு விடுதலைக் காகத் தம்மை ஒப்படைத்து விட்ட அண்ணல் காந்தி அவர்கள், காங்கிரசுக் கட்சியைப் பொதுமக்கள் சொத்தாக்கினார்; பொதுமக்கட்கு விடுதலை வேட்கையை உண்டாக்கினார்; பொதுமக்களை விடுதலை வீரர்களாக்கினார்; வீறுகொண் டெழச்செய்தார். வெள்ளையர் அரசை எதிர்த்து, அண்ணல் பல ஆண்டுகள் தொடர்ந்து அறப்போர் புரிந்து வந்தார். திருப்பூர்க் குமரன் போன்ற ஆயிரக்கணக்கான அறப்போர் வீரர்கள், தாய்நாட்டு விடுதலைக்காகத் தம் உயிரைக் கொடுத்தனர்; சொல்லொணா இன்னல்கள் பட்டனர். முடிவில் அண்ணல், ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற வீரமுழக்கத்துடன், வெள்ளையர் அரசை எதிர்த்து விடுதலைப் போர் புரிந்தார்; பலமுறை சிறை சென்றார்; இன்னல்கள் பல அடைந்தார். ஆட்சியாளர் அடக்குமுறையை அள்ளி வீசினர். கொடுங் கோலாட்சி தலைவிரித் தாடியது. ஆனால், அண்ணலோ அவ் வடக்கு முறையைக் கண்டு சிறிதும் அஞ்சினாரில்லை. எப்படி யேனும் வெள்ளையரை வெளியேற்றியே தீரவேண்டும் என அண்ணல் முடிவு செய்தனர். அடிக்க அடிக்க மேலெழுகின்ற பந்துபோல், அடக்க அடக்க வீறு கொண்டெழுந்தனர் அறப்போர் வீரர்கள். அவ்வறப்போர்ப் படைத் தலைவரான நம் அண்ணல் முடிவில் வாகை சூடினார். 15-8-1947ல், வெள்ளைக்காரரிட மிருந்து நம் நாட்டை நமக்கு வாங்கித் தந்தார்; நம் நாட்டு அரசியலை, ஆட்சியை நம் கைக்கு மாற்றினார். நம் நாடு விடுதலை அடைந்தது. நாம் நம் நாட்டு மன்னர்களாயினோம். நம் அடிமைத் தளையை அறுத்தெறிந்த, நம் நாட்டை நாமே ஆளும்படி செய்த, இழந்த உரிமையை நாம் எய்தும்படி செய்த, நம் எல்லோரையும் இந்நாட்டு அரசர்களாகவும், அரசி களாகவும் ஆக்கிய அண்ணலை - நாம் மனமார, வாயார வாழ்த்தினோம்; விடுதலை விழாக் கொண்டாடி மகிழ்ந்தோம்; ஆண்டுதோறும் விடுதலை விழாக் கொண்டாடி வருகிறோம். இப்போது விளங்குகிறதா, ‘காந்தி என்னும் சொல் - அம்மா, அப்பா என்னும் சொற்களைப்போல நமக்கு அவ்வளவு பழக்கமும் சொந்தமும் உடைய சொல் ஆகிவிட்டது’ என்பதன் காரணம்? இந்நாட்டு விடுதலைக் காகவே பிறந்த, இந்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவே வாழ்ந்த, நம் நாட்டை, நம் நாட்டு அரசை அயலாரிடமிருந்து நமக்கு வாங்கித் தந்த அண்ணலின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? தெரிந்து கொள்ள விரும்புவீர் களல்லவா? இதோ, அண்ணலின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம். தமிழ்நாடு, ஆந்திர நாடு, கன்னட நாடு, மலையாள நாடு முதலிய பதினைந்து மாநிலங்களை உடையது இந்தியப் பெருநாடு என்பதை நீங்கள் அறிவீர்கள். இவற்றுள், குசராத்தி மாநிலம் ஒன்று. இது மேல்கடற்கரையைச் சார்ந்துள்ளது. கத்தியவார் என்பது, இம் மாநிலத்தில் உள்ள ஒரு தீபகற்பம். நம்நாடு விடுதலை பெறுமுன், இந்நாட்டில் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட சிற்றரசுகள் (சமஸ்தானங்கள்) இருந்தன. அவற்றுள், போர்பந்தர் என்பது, கத்தியவாரில் இருந்த ஒரு சிற்றரசுப் பகுதியாகும். அப்போர்பந்தரில், காபாகாந்தி என்ற வணிகர் ஒருவர் இருந்தார். அவர் மனைவியார், புத்திலிபாய் என்பவர். காபா காந்தி, புத்திலிபாய் என்னும் பெற்றோர்களின் கடைசிப் பிள்ளை தான் நம் அண்ணல் காந்தியடிகள். 2-10-1869ல் அண்ணல் பிறந்தார். பெற்றோர்களால் இவர் பெரிதும் பாராட்டி வளர்க்கப் பெற்றனர். மோகன தாஸ் கரன்சந்திர காந்தி என்பது, அண்ணலின் முழுப் பெயர். ‘காந்தி’ என்பது குடிப் பெயர். ‘மோகனதாஸ் கரன்சந்திரன்’ என்பது பிள்ளைப் பெயர். எம்.கே. காந்தி என்று தான் அண்ணல் கையெழுத்துப் போட்டு வந்தார். பள்ளிப் பருவத்திலேயே இவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. திருமணம் ஆகும் போது, அண்ணல் 13-ஆண்டு நிரம்பப் பெறாதவராக இருந்தார். கஸ்தூரிபாய் என்னும் பெண்மணி அண்ணலின் வாழ்க்கைத் துணைவி ஆனார். 1887ல் இவர் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். அப்போது இவர்க்கு ஆண்டு பதினெட்டு. 4-9-1887ல் வழக்கறிஞர் படிப்புப் படிப்பதற்காக அண்ணல் இலண்ட னுக்குச் சென்றார். இவர் எப்போதும் கல்வியைக் கண்ணுங் கருத்து மாகக் கற்று வந்தார். அங்கும் அவ்வாறே கற்றுத் தேறினார். வழக்கறிஞர் படிப்பை முடித்துக் கொண்டு, 2-6-1891ல் இலண்டனி லிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்தார். இந்தியாவுக்கு வந்ததும், பம்பாய் நகரில் வழக்கறிஞர் வேலை தொடங்கினார். தாம் எடுத்துக் கொண்ட முதல் வழக்கில், இவர் முதல் முதலாக நீதிமன்றத்தில் பேச எழுந்தார்; ஆனால், பேச்சு வரவில்லை; மேலெல்லாம் வியர்த்துக் கொட்டியது. தலை சுழன்றது. ஒன்றும் தோன்றாமல் அப்படியே அசைவற்று நின்றார். அது கண்ட அந்நீதி மன்றமே சிரித்தது. என் செய்வார் பாவம்! வெட்கத்தால் தலை குனிந்தபடி, நீதி மன்றத்தை விட்டு வெளிவந்தார்; தம் கட்சிக்காரரிடம் வாங்கின பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றார். அதன் பின் இவர் அந்த நீதி மன்றத்தின் பக்கமே செல்லவில்லை. பின்னர், பம்பாயி லிருந்து இராச கோட்டைக்குச் சென்று, வழக்குத் தொடுப்போர்க்கு விண்ணப்பம் எழுதிக் கொடுத்துக் கொண்டு அங்கு இரண்டாண்டைக் கழித்தார். அண்ணலின் சொந்த ஊரான போர்பந்தரில், தாதா அப்துல்லா என்னும் பெருஞ் செல்வர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு பெரு வணிகர் ஆவர். ‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பதற் கேற்ப, அவர் கடல் கடந்த வெளிநாடுகளிலும் வாணிகம் செய்து வந்தார். தென்னாப்பிரிக்காவிலும் அவர் கடை இருந்தது. தென்னாப்பிரிக்காவின் தென் பகுதியில் உள்ள நெட்டால் நீதிமன்றத்தில், தமக்கு வரவேண்டிய 40000 பவுனுக்கு அவர் ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தார். அவ்வழக்கை நடத்திவந்த வழக்கறி ஞர்க்கு உதவி செய்வதற்காக, 1893ல் அண்ணல் நெட்டாலுக்குச் சென்றார்; அப்துல்லாவால் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார். அண்ணலின் சட்ட அறிவுத் திறத்தால், அப்துல்லா அவ்வழக்கில் வெற்றி பெற்றார். அதனால், அண்ணலுக்கு அந் நீதிமன்றத்தில் நல்ல பெயர் கிடைத்தது. நம் நாட்டு மக்கள் தென்னாப்பிரிக்காவில் ஏராளமாகக் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். தென்னாப்பிரிக்காவாழ் இந்திய மக்கள், அங்குள்ள வெள்ளைக்காரரால் அடிமை களாக நடத்தப்பட்டு வந்தனர். இந்திய மக்கள், அவ்வயல் நாட்டில், அயலார்க்கு அடிமைகளாக வாழ்ந்து வந்தனர். நம் அண்ணல் அவர்கள், தென்னாப்பிரிக்கா இந்திய மக்களின் அவ்வடிமைத் தனத்தைப் போக்க எண்ணினார். அதனால், அப்துல்லாவின் வழக்கு வெற்றி பெற்றதும் அவர் இந்தியாவுக்கு வரவில்லை. அப்பொதுத் தொண்டில் ஈடுபட லானார்: அதற்காக ஒரு சங்கம் நிறுவினார்; அங்குள்ள இந்திய மக்களை அச்சங்கத்தின் உறுப்பினர்களாகச் செய்தார். அவர்கட்கு விடுதலை வேட்கையை உண்டாக்கினார். தம் தாய் நாட்டு மக்களின் அடிமை நிலையைப் போக்க, தென்னாப்பிரிக்கா வெள்ளையருக்கு எதிராக அறப்போர் தொடுத்தார்; பலமுறை சிறை சென்றார். முடிவில் வெற்றி பெற்றார். அறம் வென்றது. அண்ணலின் புகழ் உலகெங்கும் பரவியது. தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர் விடுதலைப் போரில் அண்ணல் வாகைசூடிய பின், 1914ல் இந்தியாவுக்கு வந்தார்; தாய்நாட்டின் விடுதலைத் தொண்டில் ஈடுபட்டார்; தமக்கென ஒன்றின்றித் தாய்நாட்டின் பொதுச் சொத்தானார்; தம் வாழ்நாள் முழுவதும் இந்நாட்டின் விடுதலைக்காகவே பாடுபட்டார்; 15-8-1947ல் விடுதலை இந்தியாவைக் கண்டு களித்தார்; 30-1-1948ல் நம்மை விட்டுப் பிரிந்தார். அண்ணலின் புகழுடம்பு நம் கண்முன் காட்சி அளிக்கிறது. அண்ணலின் பூதவுடம்பு மறைந்தது. அவர் தம் புகழுடம்பு நம் மனக்கண்முன் காட்சியளிக்கிறது. நம் மனக்கண்முன் நின்று நமக்கு நல்லுணர்ச்சியை உண்டாக்கு கிறது; நம்மை நல்வழியில் நடக்கும்படி செய்கிறது; நமக்கு ஊக்கத்தையும் உறுதியையும் தருகிறது. பூதவுடம்பு என்பது - நமது உடம்பு. புகழுடம்பு என்பது - நமது பெயர். நாம் இறந்த பிறகு மக்களால் புகழ்ந்து பேசப்படும் நமது பெயரே புகழுடம்பு எனப்படும். பூதவுடம்பு என்றும் அழியக் கூடியதே. பூதவுடம்பு அழிவதற்குள் நாம் புகழுடம்பை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அதாவது, நற்செயல்களைச் செய்து புகழ் தேடிக் கொள்ள வேண்டும். என்றும் நிலையான புகழை அண்ணல் தேடிக் கொண்டது போல், நீங்களும் தேட முயலுங்கள். முயற்சி திருவினை ஆக்கும். அண்ணலின் தன்னலமற்றபொதுத் தொண்டுக்காகவே, இந்திய மக்கள் அவரை, மகாத்துமா என்றழைத்தனர். மகாத்துமா என்னும் சொல்லுக்கு - பெரியார் என்று பொருள். “செயற்கரிய செய்வார் பெரியார்” என்றார் வள்ளுவர். அண்ணலின் செயற்கரிய செயல்கள் சிலவற்றை நீங்கள் அறிந்து இன்புற வேண்டாமா? 2. உண்மையே பேசுதல் கருங்காக்கையைப் பார்த்து, அதோ வெள்ளைக் காக்கை என்பது, பொய் எனப்படும். கருங்காக்கையை, கருங்காக்கை என்றே சொல்வது, மெய், அல்லது உண்மை எனப் படும். உள்ளதை உள்ளபடியே சொல்வது, உண்மை. உள்ளதை விட்டு, இல்லாததைச் சொல்வது, பொய். வீட்டில் இருந்த பழத்தை எடுத்துத் தின்றுவிட்டு, நான் தின்ன வில்லை என்பது, பொய். நான் தான் தின்றேன் என்பது, உண்மை. செய்ததைச் செய்யவில்லை என்பது பொய். செய்ததைச் செய்தேன் என்பது உண்மை. பொய் பேசக் கூடாது; உண்மையே பேச வேண்டும். ‘உண்மை உயர்வு தரும்’ என்பது, பழமொழி. ‘பொய்யா விளக்கே விளக்கு’ என்றார் வள்ளுவர். ‘உண்மையே பேசுதல்’ என்பது, அண்ணலின் அருங்குணங்களில் ஒன்று. அவர் எப்போதும், தான் கண்ட ஒன்றை, காணவில்லை என்றும்; தாம் செய்த ஒன்றை, செய்யவில்லை என்றும் சொல்லியது கிடையாது. பிறரிடம் கூறமுடியாத ஒன்றைக் கூட அவர் மறைப்ப தென்பதே கிடையாது. இவ்வரும் பெருங்குணத்தை இளமையிலிருந்தே அவர் கடைப்பிடித்து வந்தார். தம் வாழ்நாளில் அண்ணல் பொய் பேசினதே இல்லை. இது, எல்லோராலும் எளிதில் கடைப்பிடித்து நடக்கக் கூடிய தொன்றன்று சொன்னால், தமக்குத் தீங்கு தரக்கூடிய தொன்றையோ, பிறர் பழிக்கக் கூடிய தொன்றையோ யாரும் பிறரிடம் சொல்ல விரும்பார். ஆனால், நம் அண்ணலோ, பெருங்குற்றங்களுள் ஒன்றான திருட்டையுங் கூடத் தானே ஒப்புக் கொள்ளும் அத்தகு சிறந்த குணம் உடையவர். அண்ணல், இராசகோட்டை உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஆண்டு 15 இருக்கும். இவருடைய அண்ணன் ஒருவரும் இவருடன் படித்து வந்தார். அவர் கண்டபடி செலவு செய்யும் இயல்புடையவர்; எவ்வளவு கிடைத்தாலும் அன்றே செலவு செய்து விடுவார். கையில் காசு இல்லாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்யக் கூடிய குணம் உள்ளவர். ஒருகாசு கையில் இருந்தால் இரண்டு காசு செலவு செய்யக் கூடிய இயல்புடையவர் என்னலாம். அண்ணலின் அவ்வண்ணன் ஒருவரிடம் ரூ. 25 கடன் பட்டு விட்டார். கொடுப்பதாகக் கூறிய தவணைக்கு மேல் பல மாதங்கள் ஆயின. கடன் கொடுத்தவர் அடிக்கடி கேட்டார். கேட்காமலா இருப்பர்? கேட்ட போதெல்லாம் தவணைதான். பள்ளிப் பருவத்தில் ஒரே அடியாய் அவ்வளவு பணம் எப்படிக் கிடைக்கும்? கொஞ்சங் கொஞ்சமாகக் கொடுக்கலா மென்றாலோ, கைக்குக் கிடைப்பதைத்தான் அப்பொழுதே செலவு செய்து விடுவதாயிற்றே. எப்படிக் கொஞ்சங் கொஞ்ச மாகக் கொடுப்பது? எனவே, வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்க வழி யில்லாமல் அண்ணலின் அண்ணன் திண்டாடினார்; எப்போதும் அதே கவலை; மகிழ்ச்சி என்பது அவரை விட்டுக் குடிபோய் விட்டது. வருத்தம் என்பது பிரியா நட்பாகி விட்டது. கடன் கொடுத்தவனைக் கண்டால் அவர் அஞ்சி நடுங்கினார். ஒருவருடைய மனக்கலக்கத்திற்கு, “கடன் கொண்டார் நெஞ்சம் போலக் கலங்கினான்” என, இதனையே உவமை கூறுவர் புலவர். அண்ணன் வருந்துவதைக் கண்ட நம் அண்ணலின் மனம் அனலிடைப் பட்ட புழுப்போல் துடிதுடித்தது; எப்படியாவது அக்கடனைக் கொடுத்து, அண்ணனது வருத்தத்தைப் போக்கி மானத்தைக் காக்க எண்ணினார். ஆனால், கையிலோ ஒரு காசுகூட இல்லை. தாய் தந்தையரைக் கேட்கவோ அவ்வளவு துணிவு உண்டாக வில்லை. அண்ணன் பட்ட கடனைக் கட்டி, அண்ணனை மகிழ்விப்பதற்கு ஒருவழியும் தோன்றாது மனம் வருந்தினார். தானே கடன் பட்டவர் போல நெஞ்சங் கலங்கினார். அண்ணனைவிட அல்லும் பகலும் மனம் வருந்தினார். உலக மக்களின் வருத்தத்தைக் கண்டே வருந்திய மனம் அல்லவா அது! அண்ணனது வருத்தத்தைக் கண்டு வருந்தாமலா இருக்கும்? கடன் பட்ட அண்ணனது கைக்காப்புகள் வீட்டில் இருந்தன. ஒருவருக்கும் தெரியாமல் இவர் அப்பொன் காப்புகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு போய், அதில் கொஞ்சம் வெட்டி எடுத்துக் கொண்டு, முன்போலவே ஒருவருக்கும் தெரியாமல் அக்காப்பை இருந்த இடத்தில் வைத்து விட்டார். வெட்டி எடுத்துச் சென்ற அப் பொன்துண்டை விற்று, கடனைக் கட்டி அண்ணனை மகிழ்வித்தார்; அண்ணனது மானத்தைக் காப்பாற்றினார். அண்ணன் அகமிக மகிழ்ந்தார்; தம்பியின் அறிவுத் திறத்தினை, கெட்டிக்காரத் தனத்தை மெச்சினார். தன் மானத்தைக் காத்ததற் காகத் தம்பியைப் பலபடப் பாராட்டினார். எப்படியோ அண்ணல் தம் அண்ணனது கவலையைப் போக்கிவிட்டார்; அண்ணனது மகிழ்ச்சியைக் கண்டு தானும் மகிழ்ந்தார்; அண்ணனது கவலையைப் போக்க அரிய வழியைக் கண்டு, அரும் பெருஞ் செயலைச் செய்து விட்டதாக எண்ணி உள்ளம் உவந்தார். அண்ணனுடைய மகிழ்ச்சியும் பாராட்டு தலும் இவரது மகிழ்ச்சிக்குத் துணை செய்தன. அண்ணனும் தம்பியும் அன்று ஒரு புதுவாழ்வு பெற்றதாக எண்ணி மகிழ்ந்தனர். இவ்வாறு அன்றையப் பகற்பொழுது சென்றது. ஆனால், அன்று இரவு அண்ணலுக்குத் தூக்கம் வரவில்லை. பகலில் இருந்த மகிழ்ச்சி யெல்லாம் மனத்தை விட்டுப் பறந்து விட்டது. அம்மகிழ்ச்சி இருந்த இடத்தில் கவலை குடி கொண்டு விட்டது. வீட்டில் இருந்த காப்பைக் காணாமல் எடுத்து வந்த அந்நிகழ்ச்சி கண்முன் வந்து நின்றது. அத் திருட்டுக் குற்றத்தை அவரால் பொறுக்க முடிய வில்லை. திருட்டு என்ற பெரிய குற்றத்தைச் செய்து விட்டோமே என்ற கவலை அவர் மனத்தை வாட்டி வருத்திற்று. தமது அறியாமைக்கு மிகவும் வருந்தினார் அண்ணல். திருடுவது குற்றம் என்பதை அண்ணல் அறியாத வரல்லர். அதுவும் தம் பெற்றோர்களுக்குத் தெரியாமல், தங்கள் வீட்டில் உள்ள தங்கள் பொருளைத் திருடுவது மாபெருங் குற்றம் என்பது அவர்க்கு நன்றாகத் தெரியும். பொய், சூது முதலிய பெருங் குற்றங்களோடு ஒருங்கு எண்ணப்படுவது களவு என்பது, அவர்க்கு மனப்பாடம் ஆகும். பின் ஏன், காப்பைக் களவாடினார்? தம் வீட்டுப் பொருளையே தாம் ஏன் திருடினார்? உடன் பிறந்தவ னிடத்தில் உள்ள அன்பே, அண்ணன் படும் துன்பத்தைக் கண்டு மனம் பொறாமையே அத்தகாத செயலைத் துணிந்து செய்யும்படி தூண்டின. அதனால், முன்பின் எண்ணிப் பாராமல் அத்தகாத செயலை - திருட்டை - தகுதியுடையதாக எண்ணிச் செய்து விட்டார். “ஆனால், காப்பு வெட்டப்பட்டிருப்பதையும், அதில் ஒரு துண்டு காணாமல் இருப்பதையும் எப்போதும் யாரும் பார்க் காமலா இருப்பர்? இன்றில்லா விட்டாலும் என்றோ ஒரு நாளைக்குத் தாயார் பார்த்து, ‘யார் காப்பை வெட்டினது?’ என்று கேட்டால் நாம் என்ன சொல்லுவது? வீட்டிலுள்ள யாரோ ஒருவர்தானே அதைச் செய்திருக்க வேண்டும்? செய்தவன் நான் இருக்க, பிறர் அதற்கு என்ன விடை சொல்வர்? ‘நான் இல்லை’ என்பர். நாமும் அப்படியே சொல்வதா? அது இரட்டைக் குற்றம் அல்லவோ ஆகும்?’ என, எண்ணி எண்ணி மனம் புண்ணானார். இதுவன்றோ மக்கட்பண்பு என்பது! ‘செய்தவன் நான் இருக்க, பிறர் அதற்கு என்ன விடை சொல்வர்?’ ஆம், ஒருவர் செய்ததற்கு இன்னொருவர் எப்படி விடை சொல்ல முடியும்? இது, எவ்வளவு உண்மையில் கிடந்து ஊறிய உணர்ச்சியோடு பட்ட பேச்சு. எல்லோராலும் இங்ஙனம் சொல்ல முடியுமா என்ன? ‘மற்றவர் நான் இல்லை என்றுதானே சொல்வர்?’ இது, உண்மையே பேசவேண்டும் என்பதை அப்படியே வெளிப் படுத்துகிற தல்லவா? எனவே, காப்பு வெட்டப்பட்டிருப்பதைக் கண்டு பெற்றோர் கேட்குமுன், நான்தான் அவ்வாறு செய்தேன் எனத் தானே சொல்லிவிடுவதே நல்லது என முடிவு செய்தார். இனி எப்போதும் களவு என்பதைக் கனவிலுங் கூட நினைப்பதில்லை என உறுதி பூண்டார். தான் செய்த அக்குற்றத்தைத் தந்தையிடம் ஒப்புக் கொள்வதென்று தீர்மானித்தார். ஆனால், தந்தையிடம், ‘நான்தான் திருடினேன்’ என்று எப்படிச் சொல்வது? தந்தையின் எதிரில் நின்று இதைச் சொல்வதற்கு அண்ணலுக்கு மனத் துணிவு உண்டாகவில்லை. சொல்லவோ மனத் துணிவில்லை; சொல்லாதிருக்கவோ மனம் ஒப்புக் கொள்ளவில்லை. என்செய்வார் பாவம்! இருதலைக் கொள்ளி எறும்பு போல் ஆனார். முடிவொன்றும் தோன்றவில்லை. தான் செய்த அத்தீச்செயலை எண்ணி யெண்ணி மனம் புண்ணானார். முடிவில், தான் செய்த குற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதி, தந்தையிடம் கொடுத்து மன்னிப்புக் கேட்டுக் கொள்வ தென்று முடிவு செய்தார். மறுநாட்காலை, “வீட்டில் வைத்திருந்த அண்ணன் கைக்காப்பை நான் திருடிவிட்டேன். அதற்காக எனக்குத் தகுந்த தண்டனை கொடுங்கள். இனி மேல் என்றென்றும் நான் திருடுவதே இல்லை” என்று எழுதிக் கொண்டு தந்தையிடம் சென்றார். தந்தை உடல் நலம் இன்றி, ஊஞ்சல் பலகை மேல் படுத்துக் கொண்டிருந்தார். சென்றவர், கடிதத்தைத் தந்தையிடம் கொடுத்து விட்டுத் தலையைக் குனிந்தபடியே தந்தைக்கு எதிரில் உட்கார்ந்தார். தகப்பனார் எழுந்து உட்கார்ந்து, கடிதத்தை முழுதும் படித்துப் பார்த்தார். படிக்கும் போது அவர் கண்களிலிருந்து முத்துமுத்தாகக் கண்ணீர் உதிர்ந்தது. கடிதம் கண்ணீரால் நனைந்து போயிற்று. கொஞ்ச நேரம் அவர் கண்ணை மூடிக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பின் அக்கடிதத்தைக் கிழித்துப் போட்டுவிட்டுப் படுத்துக் கொண்டார். படுத்தபடியே கண்ணீர் உதிர்த்தார். அண்ணலும் அழுதார். தந்தையின் கண்ணீர்த் துளிகளால் மைந்தனின் உள்ளம் தூய்மையாயிற்று. மெதுவாக எழுந்து, அங்கிருந்து சென்றார். அவர் மனத்தை வாட்டி வதைத்த கவலை, மனத்தைவிட் டகன்றது. அவர் உள்ளத்தில் இருந்த பெருஞ் சுமை நீங்கிற்று. மன அமைதி ஏற்பட்டது. அன்று முதல் அண்ணல் திருட்டு என்பதை இன்ன தென்றே அறியார். குற்றத்தை ஒப்புக் கொள்வதே மீண்டும் குற்றம் செய்யாமல் இருப்பதற்கு வழி என்பது, அண்ணலின் கொள்கை. உண்மையும் அதுவே. நீங்களும் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் அண்ணலின் இவ்வருங்குணத்தை, உண்மையே பேசும் இவ்வுயர் குணத்தை மேற்கொண்டு உயர்வடையுங்கள். அண்ணலின் இவ் வரும் பெருங் குணங்களே அவரை உலகப் புகழுக் குரியவராகச் செய்தன. இத்தகைய அரும் பெருங் குணத்தை, ‘குணம் என்னும் குன்று’ என்றார், வள்ளுவர். 3. சொன்ன சொல் தவறாமை அண்ணல் காந்தி அவர்கள், இலண்டன் சென்று, சட்டப் படிப்புப் படித்துப் பட்டம் பெற்ற வழக்கறிஞர் என்பதை முன்பு கண்டோம். அன்று சட்டப் படிப்பு அவ்வளவு உயர்வுடைய தாகக் கருதப்பட்டு வந்தது. அன்று வழக்கறிஞர் தொழிலுக்கு அவ்வளவு மதிப்பு இருந்து வந்தது. அக்காலத்தே பெரும்பாலும் செல்வர் மக்களெல்லாம் சட்டப் படிப்புப் படித்து வழக்கறிஞர் தொழிலே செய்து வந்தனர். அன்று ஆங்கிலேயர் இந்நாட்டை ஆண்டு வந்தனர். ஆங்கிலம் படிப்பது தான் படிப்பாகக் கருதப்பட்டது. ஆங்கிலம் படித்தவர்தான் படித்தவராகக் கருதப்பட்டனர். அன்று ஆங்கி லேயரின் சொந்த நாடான இங்கிலாந்தை - சீமை என்பது வழக்கம். ‘அவர் சீமையில் படித்தவர்’ என்பது, ஒருவரைச் சிறப்பிக்கும் சிறப்புச் சொல்லாக இருந்தது. சீமையில் படித்த வர்க்கு இங்கு தனி மதிப்பு இருந்த காலம் அது. எனவே, இலண்டன் சென்று, அச் சட்டப் படிப்புப் படிப்பது, அன்று அவ்வளவு சிறப்பாகக் கருதப்பட்டு வந்தது. சட்டப் படிப்புப் படிப்பதற்காக, அண்ணலை இலண்டனுக்கு அனுப்புவ தென முடிவு செய்யப்பட்டது. பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்யப்பட்டது. மேற்படிப்புப் படிக்கச் சீமைக்குப் போவதில் அண்ணலுக் கிருந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இலண்டனுக்குப் புறப்படும் அந்நன்னாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். புறப்படும் நாளும் குறிப்பிடப் பட்டது. ‘பம்பாய்த் துறைமுகத்தில் கப்பல் ஏற வேண்டும். ஏறிக் கப்பலில் பயணம் செய்ய வேண்டும். இலண்டன் மாநகரைப் போய்ப் பார்க்க வேண்டும். சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும். கல்லூரித் தோழர்களுடன் அளவளாவ வேண்டும்’ என்ற ஆவல், அண்ணலின் மகிழ்ச்சியை அளவு கடந்து தாக்கியது. ஆனால், அண்ணலின் அத்தகைய மகிழ்ச்சிக்கு அவரது அன்னையார் முட்டுக்கட்டை போடத் தொடங்கினார். அவ்வம்மையார் இலண்டனின் நிலைமையைக் கேட்டுத் தெரிந்திருந்தார். தன் மைந்தனை அங்கு தனியாக அனுப்புவதில் அவ் வம்மையார்க்குச் சிறிதும் விருப்பம் இல்லை. எனவே, அவர், “காந்தி! இலண்டன் என்ன இரண்டொரு நாளில் போய் வரக் கூடிய தாகவா உள்ளது. அடேயப்பா! ஆறாயிரம் கல்லுக்கு அப்பால் இருக்கிறதாம். கப்பலேறிக் கடல் கடந்து வேறு செல்ல வேண்டும். அவ்வளவு தொலைவில் உன்னைத் தனியாக விட்டு விட்டு நான் எப்படி இங்கு மன அமைதியோடு இருப்பேன்? மேலும், சீமைக்குச் செல்வோர் புலால் உண்ணத் தொடங்கி விடுவார்களாம். மது அருந்தாமல் அங்கு வாழவே முடியா தாம். குடியும் புலாலும் நம் மரபுக்கு அடுக்குமா? அங்கு போக வேண்டாம்; இங்கேயே படி.” என்றார். அண்ணல் திடுக்கிட்டார். அவர்க்கு இன்ன சொல்வ தென்றே முதலில் தோன்ற வில்லை. தாய் சொல்லை ஒரு நாளும் தட்டியது கிடையாது. அன்னையிடம் அவ்வளவு அன்புடையவர். பின்னர், “அன்னையே! நான் தங்களுக்கு உறுதி கூறுகிறேன். என் சொல்லை நம்புங்கள். நான் குடி, புலால் இரண்டையும் கனவிலும் கருதேன். என் மனம் அவற்றை ஒரு போதும் நினையாது. சொன்ன சொல்லை நான் ஒரு போதும் தவறேன். இது உண்மை, உறுதி. ‘போய் வருக!’ என்று வாழ்த்தி விடை கொடுங்கள்” என்று மன்றாடினார். அன்னை ஒருவாறு இசைந்தார். இவ்வாறு அன்னைக்கு வாக்குறுதி கொடுத்து விட்டு இலண்ட னுக்குப் புறப்பட்டார் அண்ணல். இலண்டனைப் பற்றி அன்னைக்குத் தெரிந்த போது, அண்ணலுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்? அன்னை கேட்டறிந்த போது, அண்ணல் கேட்டறியாமலா இருந்திருப்பார்? இலண்டனில் நான்காண்டுகள் தங்கிப் படிக்கப் போகின்றவர், அந்நகரைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலா இருந்திருப்பார்? எப்படியும் அன்னைக்குக் கொடுத்த வாக்குறு தியைக் காப்பாற்ற வேண்டும். ‘அது நம்மைப் பொறுத்ததுதானே? பிறர் இதில் எதற்காகத் தலையிடுகிறார்’ என்று எண்ணிக் கொண்டு செல்லும் போதே, அவ்வெண்ணத் திற்கு ஒரு இடையூறு உண்டானது. கப்பலில் போகும் போது, வெள்ளைக்காரர் ஒருவர் அண்ணலுக்கு நண்பர் ஆனார். இருவரும் நெருங்கிப் பழகினர். அண்ணலிடம் அந்நண்பர் அளவு கடந்த அன்புடையவர் ஆனார். அவர் சிறந்த கல்வியறி வுடையவர். அவர் அண்ணலைப் புலால் உண்ணும்படி வேண்டினார். அன்னைக்குக் கொடுத் துள்ள உறுதிமொழியைக் கூறி, அண்ணல் உண்ண மறுத்தார். “நண்பர், காந்தி! இங்கிலாந்து இந்தியாவைப் போன்ற தட்பவெப்ப முடைய நாடன்று. அது மிக்க குளிர்ச்சியான நாடு. புலால் உண்ணாமல் அங்கு உயிர் வாழ முடியாது. மேலும், நீர் படிப்பதற்காக அங்கு செல்கிறீர். உடல்வலி குன்றினால் படிப்ப தெங்ஙனம்? இலண்டனுக்குப் போனால் புலாலின் இன்றியமை யாமை தெரியும்.” என்றார். “இல்லை, புலால் உண்ணாமல் அங்கு வாழ முடியும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார் காந்தி. “அதெல்லாம் வெறுங் கதை. உமக்கு ஐயமே வேண்டாம். எனக்குத் தெரிந்தவரையில் அங்கு புலால் உண்ணாதவர் ஒருவர் கூடக் கிடையாது. நான் உம்மை மதுவருந்தச் சொல்ல வில்லை. புலால் மட்டும் உண்ணும். இதிலென்ன இருக்கிறது? இலண்டனில் புலால் உண்டே ஆகவேண்டும். அஃதில்லாமல் அங்கு வாழவே முடியாது” என்று வற்புறுத்தினார் அவ் வெள்ளைக்கார நண்பர். “அன்பு கூர்ந்து புலால் உண்ணும்படி என்னை வற்புறுத் தாதீர். அது எங்கள் குலப்பழக்கமே அன்று; அன்னைக்குக் கொடுத்த வாக்குறுதியை நான் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன்” என்று புலால் உண்ண மறுத்துவிட்டு, அன்னைக்குக் கொடுத்த வாக்குறுதியுடன் அண்ணல் இலண்டன் போய்ச் சேர்ந்தார். இலண்டனில் புலாலும் மதுவும் இன்றியமையாத முதன்மையான உணவு வகைக ளாகும். புலால் இல்லாத உணவுச் சாலைகளே அங்கு இல்லை! ‘சைவ உணவு’ என்பது, அங்கு குதிரைக் கொம்புதான். உணவு விடுதியில் தங்கியிருந்த இரண்டு மூன்று நாளும் அண்ணல், பம்பாயி லிருந்து கொண்டு போன உணவுப் பொருளைக் கொண்டே தாட்டினார். பின்னர், ஒரு வீட்டில் சாப்பிட்டு வந்தார். அவ் வீட்டுக்கார அம்மையார், காலையில் ஓட் என்னும் ஒருவகைத் தவசக் கூழ் காய்ச்சிக் கொடுத்தார். நண்பகலிலும் இரவிலும் அண்ணல் பட்டினியாகவே இருந்து வந்தார். அண்ணலுடன் இருந்த நண்பரொருவர், புலால் உண்ணும் படி எவ்வளவோ வற்புறுத்தியும் இவர் உண்ண மறுத்துவிட்டார். அவர், “காந்தி! என்ன இது? எழுதப் படிக்கத் தெரியாத தாயாருக்குக் கொடுத்த வாக்குறுதியை என்னவோ விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறீர். முன்பின் பாராமல் ஒருவர்க்குக் கொடுத்த உறுதிமொழியை விடாப் பிடியாக பிடித்துக்கொண் டிருப்பது, மூட நம்பிக்கையாகும் அல்லவா? இதற்கா படிப்பது? இவ்விடாப் பிடியினால், நீர் இங்கே வந்த வேலை இனிது முற்றுப் பெறாது. இங்கே புலால் உணவு அவ்வளவு இன்றியமை யாதது என்பதை நீர் புறக்கணிக்கக் கூடாது” என்று, அந்நண்பர் பலவாறு வற்புறுத் தியும், அண்ணல் அதை உண்ண மறுத்து விட்டார். படிக்கும் நேரத்தைத் தவிர, மற்ற பொழுதெல்லாம் அண்ணல் சைவ உணவுச் சாலை ஒன்றை, அதாவது புலால் இல்லாத உணவுச்சாலை ஒன்றைத் தேடி அலைந்தார்; ஒவ்வொரு நாளும் இதற்காகப் பத்துப் பன்னிரண்டு கல் சுற்றுவார். கடைசியில், ஒரு சைவ உணவுச் சாலையைக் கண்டு பிடித்தார். இது, அங்கு மணமில்லாத மலர்போன்ற தாகும். இலண்டன் சென்ற பிறகு அன்றுதான் அண்ணல் வயிறார உண்டார். ஒரு நாள் தம் பழைய நண்பர் ஒருவருடன் அண்ணல் நாடகம் பார்க்கச் சென்றார். நாடகக் கொட்டகைக்கு முன்புள்ள உணவுச் சாலைக்கு இருவரும் உணவுண்ணச் சென்றனர். முதலில் குழம்பு பரிமாறப் பட்டது. அது, இன்ன குழம்பென்று தெரிந்து கொள்ள விரும்பினார் அண்ணல். ஆனால், நண்பரைக் கேட்கத் துணிவுவரவில்லை. பரிமாறுவோனைக் கேட்கலா மென்று அவனை அழைத்தார். இதனைக் கவனித்த நண்பர், ‘என்ன?’ என்று கடுமையான குரலில் கேட்டார். “குழம்பு, புலால் கலவாததா என்று கேட்கக் கூப்பிட்டேன்” என்று தயக்கத்துடன் கூறினார் காந்தி. உடனே அந்நண்பர், “காந்தி! நீர் நாகரிக மக்களுடன் பழகுவதற்குச் சிறிதும் தகுதியற்றவர். காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றபடி நடந்து கொள்ளத் தெரியாவிட்டால், வெளியே சென்று, வேறெங்காவது சாப்பிட்டு வெளியில் இரும். நான் சாப்பிட்டுவிட்டு வருகிறேன்” என்று, கடுகடுப் புடன் கூறினார். அண்ணல், ‘சரி’ என எழுந்து வெளியே சென்றார். அன்றிரவைப் பட்டினியால் கழித்தார். இலண்டனில் வழக்கறிஞர் படிப்புப் படிப்போர், படிப்பில் தேறுவது மட்டும் போதாது. வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோருடன் கூடி, சட்டப்படிப்புப் படிக்கும் மாணவர்கள் விருந்துண்ண வேண்டும். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு - குறைந்தது 24 விருந்துகள் நடைபெறும். அவற்றுள், ஆறு விருந்துகளில் ஒரு மாணவன் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மொத்தம் மூன்றாண்டுகள் விருந்துண்ண வேண்டும். விருந்துக்குச் செல்வோர் சாப்பிட வேண்டும் என்பதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் சென்று, விருந்து முடியும் வரை அங்கிருந்தால் போதும். அவ்விருந்துகளில் உயர்ந்த மதுவகைகளும் புலவு வகைகளும் நிரம்ப இருக்கும். ஒவ்வொரு விருந்துக்கும் ஒருவர் குறைந்தது ரூ. 3 கொடுக்க வேண்டும். மூன்று மாதத்திற் கொருமுறை சிறப்பு விருந்தொன்று நடைபெறும். அதில், மிக உயர்ந்த மதுவகைகள் வழங்கப்படும். அவ்விருந்துகளில் எல்லாம் அண்ணல் பழம், வெந்த உருளைக்கிழங்கு முதலியவற்றையே உண்டு வந்தார். இவ்விருந்துகளுக்குச் சென்று, இவ்வாறு மதுவையும் புலாலையும் தீண்டாதவர், அவ்விருந்து வரலாற்றிலேயே இவரைத் தவிர வேறு யாரும் இல்லை யெனலாம். இவ்வாறு தாய்க்குக் கொடுத்த வாக்குறுதியை, தாயாரிடம் சொன்ன உறுதிச் சொல்லைக் காப்பாற்றிக் கொண்டு, இலண்டனில் ஏறக்குறைய மூன்றாண்டுகளைக் கழித்தார் அண்ணல்; சட்டப் படிப்பில் தேறிப் பட்டமும் பெற்றார். 12-8-1891ல் இலண்டனை விட்டுப் புறப்பட்டுத் தாய்நாடு வந்து சேர்ந்தார். அண்ணலின் சொன்ன சொல் தவறாமையைக் கேட்டு, அன்னையார் உள்ளும் புறமும் ஒருங்கே உவந்தனர். ‘காந்தி! உண்மையில் நீ சொன்னதை நான் அன்று அப்படியே நம்பவில்லை. புறப்பட எல்லா ஏற்பாடும் செய்து முடித்த பிறகு, புறப்படுவதற்கு நாளுங் குறித்த பிறகு, நான் வேண்டாமென்றால் நீ நிற்கவா போகிறாய்? நீ நின்றாலும் அதற்காக அவ்வளவு ஏற்பாடுகளையும் செய்து முடித்த உங்கப்பா நிறுத்துவாரா என்ன? என்னவோ நான் சொல்லிப் பார்க்கலாமென்று சொன்னேன். நீயும் எனக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி விட்டாய். இதேபோல் இனி எதிலும் வெற்றி பெற்று நீ வாழ்வாய்’ என, அன்னை மனமார வாழ்த்தினார். பார்த்தீர்களா அண்ணலின் மனவுறுதியை? எத்தனை வற்புறுத்தல்! எத்தனை இடையூறுகள்! அவ்வளவையும் பொருட் படுத்தாது, சொன்ன சொல்லைக் காப்பாற்றுவ தென்பது, எல்லோராலும் எளிதில் முடியக்கூடிய தொன்றா? ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பது, எவ்வளவு பொருள் பொதிந்த பொன்மொழி! அண்ணலின் இத்தகைய மனவுறுதியா லன்றோ, ஆங்கிலப் பேரரசை எதிர்க்கும் அத்தகைய அருஞ் செயலைச் செய்ய முடிந்தது? அண்ணல் காந்தியின் அத்தகு அருங் குணத்தை நீங்களும் கடைப்பிடிக்கப் போகிறீர்களா! 4. அறப்போர்த் தொடக்கம் ‘கரும்பு தின்னக் கூலியா?’ என்பது, பழமொழி. ‘சர்க்கரை யாட்டப் பேசுகிறான்’ என்பது, ஒரு உவமைத் தொடர். கரும்புச் சாற்றிலிருந்து சர்க்கரை செய்யப்படுகிறது. கரும்பும் சர்க்கரையும் இங்ஙனம் எடுத்துக்காட்டுப் பொருள்களாக விளங்குவதற்கு அவற்றின் இனிமையே காரணமாகும். சங்ககாலத் தமிழ் வள்ளல்களில் அதியமான் என்பவன் ஒருவன். அவன் கொங்கு நாட்டுக் குறுநில மன்னர்களில் ஒருவன். சேலமாவட்டத்திலிருந்து பிரிந்த, தருமபுரி மாவட்டத்தின் தலைநகரான தருமபுரியே, அதியமான் மரபினர் இருந்தாண்ட ஊராகும். தகடூர் என்பது, தருமபுரியின் பழம் பெயர். சங்ககாலத் தமிழ் வள்ளலான அதியமானின் முன்னோ னொருவனே, பயிர் செய்து அதன் பயன் கொள்ள அறியாமுன், காட்டில் வளர்ந்த கரும்பை முதன்முதல் நாட்டில் பயிர்செய்து மக்களுக்குப் பயன்படும்படி செய்தனன் என்கின்றது புறநானூற்றுப் பாடல் (99). எனவே, கரும்புப்பயிர் செய்வதில் தமிழர்கள் மிக்க பயிற்சியுடைய வராவர். இன்று நாம்-நெல், கம்பு, சோளம் முதலிய தவசங்கள்; கடலை, அவரை, துவரை முதலிய பயிறுகள்; கத்தரி, வெண்டை முதலிய காய் கறிகள்; வாழை, மா, பலா முதலிய கனிகள் ஆகிய வகை வகையான உணவுப் பொருள்களைப் பயிர் செய்து, அதாவது விளைவித்து உண்டு வாழ்ந்து வருகிறோம். இவை யெல்லாம் ஒரே அடியாய், ஒரே நாளில் உண்ணத் தக்கவை என்று கண்டுபிடித்துப் பயிர் செய்யப் பட்டவையல்ல. ஒவ்வொன்றாகப் பயன்படுத்திப் பார்த்துப் பயிர் செய்யப் பட்டவையே யாகும். அவ்வாறே, கரும்பின் பயனையுங் கண்டு பயிர் செய்தனர் தமிழர். உலகிலேயே உழவுத் தொழிலில் சிறந்தவர் தமிழர் என்பதை நீங்கள் மறத்தல் கூடாது. உழவுத் தொழிலில் தனிச் சிறப்புடைய தமிழர், கரும்புப் பயிர் செய்வதிலும் சிறந்து விளங்கினதில் வியப்பொன்றும் இல்லை. தென்னாப்பிரிக்காவின் தென் கோடியில் நெட்டால் என்னும் பகுதி உள்ளதென்பதை முன்பு கண்டோம். அந் நெட்டால், வெள்ளைக்காரரின் குடியேற்றப் பகுதியாகும். அதாவது, வெள்ளைக்காரர் புதிதாக அங்கு குடியேறி வாழ்ந்து வருகின்றனர். அவ் வெள்ளைக்காரர் அங்கு கரும்பு நன்கு விளையும் என்பதை அறிந்தனர். நெட்டால் பகுதியில் கரும்புப் பயிர் செய்ய விரும்பினர். ஆனால், அந் நெட்டாலின் பழங்குடி மக்களுக்குக் கரும்புப் பயிர் செய்யத் தெரியாது. எனவே, அங்கு கரும்புப் பயிர் செய்வதற்காக, இந்தியர்களை, குறிப்பாகத் தமிழர்களை அங்கு அழைத்துச் செல்ல நெட்டால் வெள்ளை அரசினர் விரும்பினர். எனவே, 1860ல், நெட்டால் அரசினர், இந்திய அரசினர்க்கு எழுதி, இங்கிருந்து ஆட்களை அழைத்துச் செல்ல இந்திய அரசினரிடம் உடன்பாடு பெற்றனர்; ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டனர். “கரும்புப் பயிர் செய்வதற்காக நெட்டால் செல்லும் இந்தியர், நெட்டாலில் கட்டாயம் ஐந்தாண்டுகள் வேலை செய்வதாக ஒப்பந்தம் எழுதித் தரவேண்டும். ஐந்தாண்டுகள் கழிந்ததும் அவர்களுக்கு, அங்கேயே குடியேறும் உரிமையும், சொந்த நிலம் வைத்துக் கொள்ளும் உரிமையும் அளிக்கப்படும்” என்பதே அவ்வொப்பந்தம். அவ்வொப்பந்தத்தில் கண்ட ஆசை வார்த்தையை நம்பி, ஏராளமான இந்தியர் நெட்டால் சென்றனர். நெட்டாலைச் செல்வங் கொழிக்கும் திருநாடாகச் செய்தனர். நெட்டால் சென்ற இந்தியரில் பெரும்பாலோர் தமிழர் என்பதை மறக்கக் கூடாது. நெட்டால் சென்ற நம்மவர், கரும்புப் பயிர் செய்வ தோடு நிற்கவில்லை. நம் நாட்டுக் காய்கறி வகைகளைக் கொண்டு போய் அங்கு குறைந்த செலவில் பயிர் செய்தனர். தென்னாப் பிரிக்கா வில் மாந்தோப்பை எங்கும் காணும்படி செய்தவர்கள் நம்மவர்களே. நம்மவர் அங்கு பயிர்த்தொழில் செய்வதோடு மட்டும் நிற்கவில்லை. நாளடைவில் ஒருசிலர் வணிகம் செய்யவும் தொடங்கினர். சிலர் நிலம் வாங்கிச் சொந்தமாக வீடு கட்டிக் கொண்டனர். ஒப்பந்தக் கூலிகளாகச் சென்ற சிலர், சொந்த வீடும் நிலமும் உடைய குடிமக்களாயினர். அவர்களைப் பின்பற்றி நம் நாட்டு வணிகர் சிலரும் அங்கு குடியேறினர். இந்தியர் வாணிகம் அங்கு விரைவில் செழித்தோங்கியது. அது கண்ட தென்னாப்பிரிக்கா வெள்ளைக்கார வணிகர்கள், தங்கள் தனியுரிமைக்குக் கேடு நேரிடலாம் என்று அச்சங் கொண்டனர். இந்தியர் சொந்த நிலம் வாங்கி உழவுத் தொழில் செய்வதோடு மட்டும் நில்லாமல், வணிகத்துறையிலும் தங்களுக்குப்போட்டியாக வந்து விட்டனர் என, அவ்வெள்ளை வணிகர்கள் பொறாமையும் வெறுப்புங் கொண்டனர். எப்படி யாவது இந்தியரை நெட்டாலை விட்டுத் துரத்திவிட வழி பார்த்தனர். நெட்டால் அரசும் இதற்கு உதவியாக இருந்தது. 1894ல், இதற்கொரு வழி கண்டனர். நெட்டால் வாழ் இந்தியரின் உரிமையைப் பறிக்கும் ஏற்பாடொன்றைச் செய்தனர். நெட்டால் சென்ற இந்தியர், அங்கு ஐந்தாண்டுகள் வேலை செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு சென்றன ரல்லவா? 1. ‘அவ்வொப்பந்தம் முடிந்ததும் ஒப்பந்தத் தொழிலாளி இந்தியாவுக்குப் போய்விட வேண்டும். 2. இல்லையேல், மறுபடியும் இரண்டாண்டுக் கொரு முறை புதிதாக ஒப்பந்தம் எழுதித் தர வேண்டும். 3. அவ்வொப்பந்தத்தைப் புதுப்பிக்கும் போதெல்லாம் சம்பள உயர்வு தரப் படும். 4. இரண்டாண்டுக் கொரு முறை ஒப்பந்தத்தைப் புதுப்பிக் காதும், இந்தியாவுக்குப் போகாதும் இருப்பவர் ஆண்டொன்றுக்கு 25 பவுன் வரி கொடுக்க வேண்டும்’ என்று ஒரு சட்டம் செய்தனர். உள்ளவர், இல்லாதவர் ஆகிய எல்லா நெட்டால் வாழ் இந்தியரும் இதனால், நாளடைவில் ஆளொன்றுக்கு, அதாவது தலைக்கு ஆண்டொன்றுக்கு 25 பவுன் தலைவரி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற் குள்ளாயினர். நெட்டால் வாழ் ஏழை இந்தியர் அவ்வரி கொடுக்க முடியாமல் மிகவும் வருந்தினர். வரி கொடுக்க முடியாதவர் பல கொடுமைக் காளாயினர். அது காலை, அப்துல்லாவின் வழக்குக்கு உதவுவதற்காக நெட்டால் சென்ற அண்ணல் காந்தி அவர்கள், இத்தலைவரிக் கொடுமையை அறிந்தார். அயல் நாட்டினரால், அந்நாட்டை வளப்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட தம் தாய் நாட்டு மக்கள், இவ்வாறு தலைவரிக் கொடுமைக்கு ஆளாகித் தவிப்பதைக் கண்ட அண்ணல், மனம் உருகினார்; எப்படியாவது அக்கொடுமையைப் போக்கித் தாய் நாட்டு மக்களை உரிமை வாழ்வு வாழும்படி செய்ய வேண்டும் என எண்ணினார். நெட்டால் இந்தியத் தொழிலாளரின் உரிமைக்குப் பாடுபடு வதற்காக, அண்ணல், 22-5-1894ல், நெட்டால் இந்தியக் காங்கிரசு என்னும் சங்கத்தைத் தோற்று வித்தார். அச்சங்கத்தின் மூலம், ஆளொன்றுக்கு ஆண்டொன்றுக்கு 25 பவுன் வரி கொடுக்க வேண்டும் என்னும் சட்டத்தை எதிர்த்துக் கிளர்ச்சி செய்ய முடிவு செய்தார்; அதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் தாமே முன்னின்று செய்தார். நெட்டால் இந்தியர் வாழும் இடங்களுக் கெல்லாம் சென்று, கிளர்ச்சி செய்வதன் முறை பற்றி எடுத்துக் கூறினார். குறிப்பிட்ட நாளில் கிளர்ச்சி தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் கூட்டங்கள் போட்டு, தலைவரிக் கொடுமையைக் கண்டித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றி, அந் நாட்டு அரசுக்கு அனுப்பப்பட்டன. அக் கிளர்ச்சியின் பயனாக, ஆளொன்றுக்கு 25 பவுன் என்பது, 3 பவுனாகக் குறைக்கப் பட்டது. நெட்டால் வாழ் இந்தியர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்; அண்ணலை மனமாரப் பாராட்டினர். இதற்குமுன், ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் தலைக்கு 25 பவுன் வரி கட்ட வேண்டியிருந்தது. அன்று பிறந்த குழந்தைக்கும் 25 பவுன் கட்ட வேண்டும். அக்கிளர்ச்சியின் வெற்றிக்குப் பின், ஒரு குடும்பத் தலைவன் தலைவியோடு, அக் குடும்பத்திலுள்ள 16 ஆண்டுக்கு மேற்பட்ட ஒவ்வொரு ஆண் பிள்ளைக்கும், 10 ஆண்டுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் மட்டுமே தலைக்கு 3 பவுன் வரி கட்ட வேண்டும். ஆனால், அண்ணல் அத்துடன் நின்று விடவில்லை. ஒருகா சென்றாலும் வரி வரிதானே? அது நெட்டால் வாழ் இந்தியரின் அடிமைத் தனத்துக்கு அறிகுறியாகு மன்றோ? என எண்ணிய அண்ணல், அம் மூன்று பவுன் தலைவரியையும் நீக்க முடிவு செய்தார். தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர் எல்லோரையும் அச்சங் கத்தில் பங்கு கொள்ளும்படி செய்ய விரும்பினார்; அதற்காக நெட்டால் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார்; தலைவரிக் கொடுமையினையும், அதை அடியோடு ஒழிக்க வேண்டியதன் இன்றியமையாமையினையும் எடுத்துரைத் தார். தென்னாப் பிரிக்கா வாழ் இந்தியர் பெரு வாரியாக அச்சங்கத்தில் சேர்ந்தனர். அண்ணலைத் தங்கள் தலைவராகக் கொண்டனர்; தங்கள் உரிமைக்காக, விடுதலைக்காகப் பாடுபடுவர் என முழுமனத் துடன் நம்பினர். அண்ணல் எதைச் சொன்னாலும் அதை அப்படியே செய்வதாக உறுதி பூண்டனர். இங்ஙனம் தென்னாப் பிரிக்கா வாழ் இந்திய மக்கள் எல்லோரும் ஒருமுகப் பட்டதும், அண்ணல் தலைவரி எதிர்ப்புப் போரைத் தொடங்கினர். அறப்போர் வீரர்கள் ஒன்று கூடினர். “தடியடி படவும், சிறை செல்லவும் அஞ்சா நெஞ்சம் உடையவரே இவ்வறப் போரில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். உயிரை இழக்கவும் நேரிடலாம். அடியுதை படவோ, சிறை செல்லவோ, உயிரை இழக்கவோ அஞ்சுவோர் இதில் கலந்து கொள்ளா திருப்பதே நல்லது” என, அறப்போர் வீரர்களுக் கேற்படும் விளைவினை அண்ணல் எடுத்துரைத்தார். தொண்டர்கள் முகத்தில் ஒரு வகைத் தயக்கக்குறி தென்பட்டது. ‘எனக்காக முன்வர வேண்டாம். உங்களுக்காக முன் வாருங்கள்’ என்றார் அண்ணல். கூட்டத்திலிருந்து ஒரு காளையும் ஒரு கன்னியும் எழுந்தனர். “எங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளுங்கள். என் பெயர் - கந்தன். என் பெயர் வள்ளி. இவள் என் தங்கை. இவர் என் அண்ணன். நாங்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள்; தமிழர். எங்கள் சொந்த ஊர் - தரங்கம்பாடி” என்றனர். அது கண்ட அண்ணல், அவ்விருவரின் மன வுறுதியையும், தமிழர் வீரத்தையும், பலபடப் பாராட்டினர். ‘இவ்விருவரின் இத்தகைய வீரத்திற்கு, இவர்களின் தாய் மொழியே காரண மாகும். தமிழ் மொழி வீர உணர்ச்சியை உண்டாக்கும் மொழி. பழந்தமிழ் மக்கள் மிக்க வீரர்களாக வாழ்ந்ததாக வரலாற்றில் படித்துள்ளேன். அன்னாரின் அத்தகைய வீர வாழ்வுக்கு அவர்கள் தாய் மொழியாம் தமிழ் மொழியே காரணமாகும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை’ என்று பாராட்டினார். அவ் விருவரையும் பின்பற்றி அக்கூட்டத்தினர் வரிசை வரிசையாக அறப்போர் வீரர்களாகத் தங்களைப் பதிவு செய்து கொண்டனர். குறிப்பிட்ட நாளில் அண்ணல் அறப்போரைத் தொடங்கினர். தென்னாப்பிரிக்கா அரசினர் அடக்கு முறையை மேற்கொண்டனர். தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர் பதினாயி ரத்துக்கு மேல் சிறை சென்றனர் சிலர் குண்டுக் கிரையாயினர். அண்ணலும் சிறை சென்றார். 1914ல் தலைவரிக் கொடுமை ஒழிந்தது, அண்ணல் வெற்றிக் களிப்புடன் சிறையினின்று வெளி வந்தார். அண்ணலை உலகமே புகழ்ந்தது. தென்னாப்பிரிக்கா இந்தியர் அடைந்த மகிழ்ச்சியை அளவிட்டுரைக்க யாரால் முடியும்? ‘காந்தியே எங்கள் கண்கண்ட தெய்வம்’ எனக் கொண்டாடினர். தென்னாப் பிரிக்கா இந்தியர் அடிமையும் இழிவும் நீங்கி, உரிமை வாழ்வுடைய ராயினர். ஆனால், தலைவரி ஒழிந்தும், இந்தியாவிலிருந்து தென்னாப் பிரிக்காவுக்கு ஒப்பந்தக் கூலிகள் அனுப்பும் வழக்கம் ஒழிய வில்லை. அண்ணல் இந்தியா வந்ததும் (1914ல்) அவ்வழக் கத்தையும் ஒழிக்க விரும்பினார். அது பற்றி இந்தியா முழுவதும் பெருங் கிளர்ச்சி நடத்தினார். 13-7-1917ல் அவ்வழக்கமும் ஒழிந்தது. இதிலிருந்து அண்ணல் காந்தியின் பொது வாழ்வு தொடங் குகிறது. இவ்வறப்போர் வெற்றியே அண்ணலின் முதற் பொது வாழ்வுப் போராட்ட வெற்றியாகும். இதுவே, அண்ணல் ஆட்சி யாளரை, அரசை எதிர்த்துச் செய்த முதல் அறப்போராகும். அடிமைப் பட்டு அல்லலுறும் மக்களின் அல்லலைப் போக்குதலே தம் வாழ்க்கைப் பயன் எனக்கொண்ட அண்ணல் காந்தியின் புகழ் வாழ்க! 5. விடாப் பிடி “அந்திக்குப் போறோம் நாங்கள் அகத்தினில் விளையா டாமல் சுந்தர விளக்கு முன்னே சுவடிகள் அவிழ்த்துப் பார்த்து வந்தது வராத தெல்லாம் வகையுடன் படித்துக் கட்டி இந்திரன் கோழி கூவ எழுந்திருந் தோடி வாரோம்” என்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன், பள்ளி மாணவர்கள், மாலையில் வீட்டுக்குப் போகும் போது பாடும் பாடல். ‘இந்திரன் கோழி கூவ’ என்பது-தலைக்கோழி கூவும் போது என்பது. அதாவது, அதிகாலை ஐந்து மணிக்கு முன். தலைக் கோழி கூப்பிட எழுந்திருப்பதே அன்றைய வழக்கம். அதிகாலையில் - தலைக்கோழி கூப்பிடுகிற நேரம் எழுந்து படிப்பது நல்லது. ‘படிக்க, தொழில் செய்ய நேரமாயிற்று; எழுங்கள்’ என்றே கோழி கூவுகிறது; கூவி நம்மை எழுப்புகிறது. ஆனால், அந்நேரத்தில் எழுந்திருக்கத் தூக்கம் நம்மை விடுவதில்லை. கோழி கூப்பிட்டதும் அம்மா நம்மை எழுப்புவர். தூக்கம் நம்மை எழவிடுவதில்லை. அதனால் நம்மால் எழுந் திருக்க முடிவதில்லை. கோழிக்குத் தெரியுமா நமது நிலைமை? அது நாடோறும் அதே நேரத்தில், அதிகாலையில் கூவி நம்மை எழுப்புகிறது. நாம் வேண்டாம் என்றால் கேட்காது விடாப்பிடியாக அதே நேரத்தில் கூவுகிறது. ஆனால், தூக்கமோ நம்மை எழ விடாமல் விடாப் பிடி செய்கிறது. கோழியின் விடாப்பிடிக்கு இணங்கினால் எழுந்து பாடம் படிக்கலாம். தூக்கத்தின் விடாப் பிடிக்கு இணங்கினால் பாடம் படிக்க முடியாது. நேரமே எழுந்து பாடம்படிப்பது தானே நல்லது? “நன்மை கடைப்பிடி” என்றார், ஒளவையார். கோழி விடாப் பிடியாகக் கூவி எழுப்பி, நமக்கு எவ்வளவு நன்மை செய்கிறது தெரியுமா? கோழி கூப்பிட்டதும், ‘கோழி கூப்பிடுகிறது. நேர மாயிற்று’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, அம்மா எழுந்து, முதலாவதாக வாசலுக்குச் சாணித் தண்ணீர் தெளித்து, வாசல் கூட்டி, வீட்டு வேலையைத் தொடங்கு கிறார். அப்பா எழுந்து தோட்டத்திற்குப் போகிறார். காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து அவரவர் வேலையை அவரவர் செய்யத் தொடங்குவதற்குக் கோழி எவ்வளவு உதவி செய்கிறது! எனவே, கோழியின் விடாப்பிடியே நமக்கு நன்மை செய்வதாகும். அண்ணல் காந்தியின் அருங்குணங்களில் விடாப் பிடியும் ஒன்றாகும். அண்ணலின் இவ்வருங்குணமே, வணங்கா முடியென இறுமாந்திருந்த ஆங்கிலப் பேரரசையும் வணங்க வைத்தது. அண்ணலின் பொதுநல வெற்றிக் கெல்லாம் இக்குணமே காரண மாகும். பொதுத் தொண்டு செய்வோர், தமக்கு நன்மையெனப் பட்டதில் விடாப்பிடி யாய் இருந்தால் தான் அதில் வெற்றி பெற முடியும். ஆனால், தகாத ஒன்றிற்காக விடாப்பிடி செய்யக் கூடாது. தூக்கத்தின் விடாப்பிடி போன்றதை விட்டு, கோழியின் விடாப்பிடி போன்றதை மேற்கொள்ள வேண்டும். அண்ணல் இத்தகைய பொதுநலப் பணிகளுக்கே விடாப்பிடி செய்து வெற்றி பெற்றுள்ளார். 1. தாதா அப்துல்லா வழக்கிற்காக, அண்ணல் நெட்டால் உயர்நீதி மன்றத்திற்கு முதல் முதல் சென்றபோது உருமாலை அணிந்து கொண்டு சென்றார். உயர்நீதி மன்ற நீதிபதி, சற்று நேரம் அண்ணலை உற்றுப் பார்த்துவிட்டு, தலைப்பாகையை (உருமாலை) எடுத்துவிடும்படி சொன்னார். அண்ணல் அவ்வாறு செய்ய மறுத்து வெளியே சென்றார். தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர், நீதிமன்றம் முதலிய அரசாங்க அலுவலகங்களுக்குள் சென்றால் தலைப்பாகை அணிந்துகொண்டு செல்லக் கூடாது; தலைப்பாகையை எடுத்து விட வேண்டும். தலைப்பாகை அணிந்து கொண்டு செல்வது, வெள்ளைக்காரரை அவமதிப்பதாகும் என, வெள்ளைக்காரரால் எண்ணப்பட்டு வந்தது. இதனாலேயே நீதிபதி, அண்ணல் அணிந்திருந்த உருமாலையை எடுக்கச் சொன்னார். “பிறர் கட்டளைப்படி இந்தியத் தலைப் பாகையை எடுப்பது, இழிவுக்குத் தலை குனிந்ததாக முடியும். இந்திய உருமாலையை நீக்கிவிட்டு ஆங்கில முறையில் தொப்பி அணிந்தாலோ, இதற்கு முன்னிருந்து, ‘எங்கள் நாட்டு தலைப்பாகைதான் அணிவோம்’ என்று வற்புறுத்தி வருவோரைக் காட்டிக் கொடுத்ததாகும். எனவே, ‘தலைப் பாகையை எடுப்பதில்லை’ என முடிவு செய்தார் காந்தி. நீதிமன்றத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியைச் செய்தித் தாள்களில் வெளியிட்டு வழக்காடினார். முடிவில் தலைப்பாகை அணியும் உரிமையைப் பெற்றார். இதற்காக முன்னிருந்தே முயன்று வந்தோர் அகமிக மகிழ்ந்து அண்ணலைப் பாராட்டினர். 2. டர்பன் என்பது, நெட்டாலின் தலைநகர். அண்ணல் ஒரு நாள், டர்பனிலிருந்து பிரிடோரியா என்ற நகருக்குப் புறப் பட்டார்; புகை வண்டிக்கு முதல் வகுப்புப் பயணச் சீட்டு வாங்கிக் கொண்டு முதல் வகுப்பில் சென்றார். வண்டி வழியில் ஓரூரில் நின்றது. ஒரு வெள்ளைக்காரர், அண்ணல் இருந்த வண்டியில் வந்தேறினார். அவர் அண்ணலை மேலும் கிழும் உற்றுப் பார்த்தார்; காந்தி ஒரு கறுப்பர் என்பது தெரிந்ததும், ஓர் அதிகாரியை அழைத்து வந்தார். ‘வெளியே வாரும். நீர் சரக்கு வண்டிக்குப் போக வேண்டும்’ என்றார் அந்த அதிகாரி. ‘என்னிடம் முதல் வகுப்புச் சீட்டு இருக்கிறது’ ‘இருக்கட்டும். ஆனால், நீர் சரக்கு வண்டிக்குத் தான் போக வேண்டும்.’ “இந்த வண்டியில் செல்ல டர்பனில், எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. முதல் வகுப்புச் சீட்டும் இருக்கிறது. நான் இந்த வண்டியில் தான் செல்வேன்’ ‘ஒருக்காலும் இல்லை. வண்டியை விட்டு இறங்குகிறீரா, உம்மை வெளியே பிடித்துத் தள்ளக் காப்பாளனைக் (போலீஸ் காரன்) கூப்பிடட்டுமா?’ ‘காப்பாளன் வரட்டும். நானாக இங்கிருந்து நகர மாட்டேன்.’ அதிகாரி காப்பாளனைக் கூப்பிட்டார். காப்பாளன் வந்தான்; கையைப் பிடித்து இழுத்து அண்ணலை வெளியே தள்ளினான்; பெட்டி, படுக்கைகளும் வெளியே எடுத்து எறியப் பட்டன. அண்ணல் வேறு வண்டிக்குப் (பெட்டி) போக மறுத்தார். வண்டி சென்று விட்டது. புகை வண்டித் தலைமை அதிகாரிக்கும், அப்துல்லாவுக்கும் அண்ணல் தந்தி கொடுத்தார். மறு நாள் முதல் வகுப்பு வண்டியில் சென்றார். முதல் நாள் அதே வண்டியிலிருந்து கீழே இறக்கிவிட்ட அவ்வதிகாரி, வெட்கித் தலை குனிந்தார். இந்நிகழ்ச்சி, ‘நிறவேற்றுமை என்னும் கொடிய நோயை அடியோ டொழிக்க வேண்டும். அதனால் ஏற்படும் எத்தகைய துன்பங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்னும் உணர்ச்சியை அண்ணலுக்கு உண்டாக்கியது. இவ்வுணர்ச்சியே, நம் நாட்டுக்கு வந்ததும் அண்ணல், இந்நாட்டு மக்களின் கொடிய நோய்களில் ஒன்றான தீண்டாமையைப் போக்க அரும்பாடு படத் தூண்டிற்று. 3. அண்ணல் தென்னாப்பிரிக் காவில் இருந்தபோது, அன்னை கஸ்தூரி பாய்க்கு நோய் கண்டது. நோயினால் அவர் மிகவும் வருந்தினர். என்னென்னவோ மருந்துகள் சாப்பிட்டும் நோய் குணம் அடைந்தபாடில்லை. அண்ணலுக்கு இயற்கை மருத்துவத்தில் கொஞ்சம் பயிற்சி உண்டு. உப்பும் பருப்பு வகைகளும் நோயை வலுவுடைய தாக்கும் என்பது இயற்கை மருத்துவம். எனவே, உப்பையும் பருப்பு வகைகளையும் உணவில் சேர்க்காமல் நிறுத்தி விடும் படி அண்ணல் எவ்வளவோ கேட்டும் அன்னையார் கேட்கவில்லை. கேட்காததோடு, ‘அவற்றை உங்களைவிட்டு விடும்படி சொன்னால் நீங்கள் விட்டு விடு வீர்களா? ஒருக்காலும் விடமாட்டீர்கள்’ என்றார். ‘நீ சொல்வது தவறு. நான் உன்போல நோயுற்று, மருத்துவர் இவற்றையோ, அல்லது வேறு எந்த உணவுப் பொருளையோ சாப்பிடாமல் இருக்கச் சொன்னால், தயக்க மின்றி உடனே சாப்பிடுவதை நிறுத்தி விடுவேன். அதிருக்கட்டும்; இனி ஓராண்டுக்கு நான் உப்பும் பருப்பும் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை’ என்றார். அன்னையார் திடுக்கிட்டுப் போனார். ‘அன்பு கூர்ந்து என்னை மன்னித்து விடுங்கள். உப்பையும் பருப்பையும் தொடுவதே இல்லை என்று உறுதியாகச் சொல்கிறேன். ஆனால், உங்கள் உறுதிமொழியை விட்டு விடுங்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என்னைக் கடுந்தண்டனைக் குள்ளாக்கக் கூடாது’ என்று மன்றாடினார். ‘உப்பையும் பருப்பையும் விட்டுவிட நீ உடன்பட்ட தற்கு மகிழ்கிறேன். உன்னுடைய உடன்பாட்டுக்குக் காரண மாய் இருந்தது என்னுடைய உறுதிமொழியே யல்லவா? ஆகையால், அதனால் உனக்கு நன்மை உண்டாகும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை’ என, மனைவியைத் தேற்றினார் அண்ணல். உப்பு, பருப்பு நீக்கத்தால் கஸ்துரிபாயின் நோய் விரைவில் குணம் அடைந்தது. கணவனின் விடாப் பிடி, மனைவியின் நோய்க்கு மருந்தாகியது. அண்ணலின் இத்தகைய விடாப் பிடியே இன்று நம் நாட்டை நாமே ஆள்வதற்குக் காரணமாகும். கோழியின் விடாப்பிடி, நம்மை நேரமே எழுந்து படிக்கச் செய்து, படிப்பில் கெட்டிக் காரர் ஆக்குகிறது; அம்மாவை நேரமே எழுந்து வீட்டு வேலைகள் செய்யச் செய்து, நம்மை நேரமே காலை உணவை உண்ணும்படி செய்கிறது; அப்பாவை நேரமே எழுந்து காட்டுக்குப் போய் உழவுத் தொழில் செய்து நன்கு உணவுப் பொருள் விளைவிக்கும்படி செய்து, நாட்டில் உணவுத் தட்டுதல் உண்டாகாமல் செய்கிறது. காந்தியடிகளின் விடாப்பிடி, நாம் விடுதலையடைந்து நம் நாட்டை நாமே ஆளும்படி செய்தது! வாழ்க காந்தியின் விடாப்பிடி! 6. பொறுமையின் எல்லை பிறர் கடுஞ்சொல் சொன்னால் நாமும் அதைத் திருப்பிச் சொல்லாமலும், பிறர் தீமை செய்தால் நாமும் அதைத் திருப்பிச் செய்யாமலும் இருத்தல் - பொறுமை எனப்படும். அதிலும், மெலியோர் சொன்ன தீச்சொல்லையும், செய்த தீமையையும் வலியோர் பொறுத்துக் கொள்ளுதலே பொறுமையின் சிறப்பாகும். ஒரு குழந்தை தன் அன்னையைத் தன் மழலை மொழியால் ஏதோ வைகிறது; காலால் உதைக்கிறது. அவற்றைத் தாயார் பொறுத்துக் கொள்கிறார். இது பொறுமை எனப்படாது. தன்குழந்தை தன்னைத் திட்டு வதும், காலால் உதைப்பதும் தாய்க்கு இன்பஞ் செய்கின்றன. பிறர் சொல்லும் செயலும் இன்பஞ் செய்தால், திருப்பிச் சொல்லாமலும் செய்யாமலும் இருப்பது பொறுமையாகாது. பிறர் சொல்லும் செயலும் சின முண்டாக்கினால், அப்போது பொறுத்துக் கொள்வதே பொறை யாகும். ஒரு ஏழைப் பாட்டாளி ஒருவன், சினமுண்டாகும் படி திட்டினாலோ, அல்லது ஏதாவது தீங்கு செய்தாலோ, அதைச் செல்வனொருவன் பொறுத்துக் கொள்வதே பொறையின் இலக்கணமாகும். இத்தகைய பொறுமைக்குத்தான், வெட்ட வெட்ட, வெட்டு வோனுக்கு நிழலைத் தரும் மரத்தையும், தோண்டத் தோண்டத் தோண்டு வோனைத் தாங்குகின்ற நிலத்தையும் உவமை காட்டுவர். இத்தகைய பொறுமை என்னும் குணம், நம் அண்ணலுக் கென்றே ஏற்பட்ட ஒரு தனிப் பெருங் குணமாகும். இப்பொறுமைக் குணமே, அண்ணலுக்குப் பேரும் புகழும் பெருமையும் பெருவாழ்வும் தந்த இன்னா செய்யாமை (அஹிம்சை) என்னும் அரும்பெருங் குணத்திற்குக் காரணமாகும். பொறுமைக்கு நிலத்தை உவமை சொல்வர் புலவர் பெருமக்கள். அந்நிலத்தின் பொறுமையை விடப் பெரியது அண்ணலின் பொறுமை! ‘இந்தக் கன்னத்தில் அறைந்தால் அந்தக் கன்னத்தைக் காட்டு என்பது, ஏசுநாதர் பொறுமை. வல்லமையில் எல்லாம் வல்லமை, அறிவில்லார் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளல்’ என்பது, வள்ளுவர் கண்ட பொறுமையின் இலக்கணம். ஆனால், நம் அண்ணலின் பொறுமை எத்தகையது? அதன் இலக்கணம் என்ன? ‘பொறுமையின் எல்லை; பொறுமையே உருவானவர்’ என்பது தான் அண்ணலின் பொறுமைக்கு இலக்கணம். அண்ணலின் பொறுமைக்கு, அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த இரண்டொரு நிகழ்சிகளைக் கண்டு இன்புறலாம். 1. டர்பனில் இருந்து பிரிடோரியாவுக்குப் புகை வண்டியில் போனபோது அண்ணல்பட்ட பாட்டை முன்பு கண்டோம். அப்பயணத்தின் போது கொஞ்ச தூரம் குதிரை வண்டியில் போக வேண்டியிருந்தது. அதற்கும் முன்னமேயே சீட்டு வாங்கி யிருந்தார். ஆனால், வண்டித் தலைவனுக்கோ அண்ணலை ஏற்றிச் செல்ல மனம் இல்லை. ஏன்? அங்கு செல்ல விருக்கும் வெள்ளைக் காரருக்கெல்லாம் வண்டியில் இடங்கொடுத்தாக வேண்டும். அண்ணலோ கூலி. அதாவது, தென்னாப்பிரிக்கா வெள்ளையர், இந்தியர் எல்லோ ரையும் கூலி என்று அழைப்பது வழக்கம். மேலும், புதியவர். இவரை வெள்ளைக்காரரோடு ஒன்றாக உட்காரவைக்காமல் இருப்பது நலம் என்று எண்ணினான் அவ்வண்டித் தலைவன். அதனால், அவன், ‘உமது சீட்டுச் செல்லாது’ என்றான். செல்லும் என்பதை அண்ணல் ஒழுங்காக எடுத்துக் கூறினார். வண்டியை மேற்பார்வை செய்வோனுக்குத் ‘தலைவன்’ என்று பெயர். வண்டியின் பெட்டி மீது வண்டியோட்டி உட்காரும் இடத்திற்கு இரு பக்கத்திலும் இரண்டு இருக்கை கள் இருந்தன. அவ்விரண்டில் ஒன்றில் வண்டித் தலைவன் உட்கார்ந்து செல்வது வழக்கம். ஆனால், அண்ணலுக்குத் தன்னிடத்தைக் கொடுத்து விட்டு அவன் உள்ளே உட்கார்ந்து கொண்டான். இது பெரிய முறைகேடாகும். மேலும், இது தன்னை அவமதிப்பதாகும் என்பது அண்ணலுக்குத் தெரியும். விடாப்பிடி யுடைய அவர், வண்டிக்குள்ளே நுழைந்திருக் கலாம். வலுக் கட்டாயமாக உள்ளே செல்ல முயன்றிருந்தால் வண்டி அவரை விட்டுவிட்டுப் போய்விடும். முன்னமே புகைவண்டி விட்டு விட்டுப் போனதினால் ஒருநாள் வீணாயிற்று. ஆகவே, நாளை வீணாக்க அண்ணல் விரும்ப வில்லை. பொறுமைக்கு எடுத்துக் காட்டாக, வண்டி யோட்டிக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு போனார். வண்டி, வழியிலுள்ள ஓரூரை அடைந்தது. அண்ணல் உட்கார்ந்திருக்கும் இடத்தில் உட்கார்ந்து, சற்றுக் காற்று வாங்கவும் சுருட்டுக் குடிக்கவும் வண்டித்தலைவன் எண்ணினான்; வண்டி யோட்டியிட மிருந்து அழுக்குப் படிந்த சாக்குத் துணி யொன்றை வாங்கினான்; கால் வைத்தேறும் படி மீது அதைப் போட்டான்; அண்ணலைப் பார்த்து, அப்படியைச் சுட்டிக் காட்டி, ‘சாமி! நீ அதன் மேல் உட்காரும். நான் வண்டியோட்டிக்குப் பக்கத்தில் உட்கார வேண்டும்’ என்றான். ‘சாமி’ என்றால், கூலி என்பது பொருள். அதைக் கேட்டதும் அண்ணல் திடுக்கிட்டார். அவரால் அதைப் பொறுக்க முடியவில்லை. அச்சத்தால் உடல் நடுங்கிற்று. தழுதழுத்த குரலில், ‘முறையாக என்னை உள்ளே உட்கார வைத்திருக்க வேண்டும். அதை விட்டு, நீரே என்னை இங்கு உட்கார வைத்தீர். அந்த இழிவை நான் பொறுத்துக் கொண்டேன். இப்பவோ உமது கால்வைத்தேறும் படியில் உட்காரச் சொல்கிறீர். நான் அங்கு உட்கார மாட்டேன். உள்ளே வேண்டு மென்றால் உட்காருகிறேன்’ என்றார் அண்ணல். அண்ணல் இவ்வாறு சொல்லிக்கொண் டிருக்கும் போதே அவன் காதோடு சேர்த்துக் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்; கையைப் பிடித்துக் கீழே இழுக்க முயன்றான். அண்ணல் வண்டிப் பெட்டியின் கம்பியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்; மணிக்கட் டெலும்புகள் முறிந்து போனாலும் சரி, பிடித்த பிடியை மட்டும் விடுவதில்லை என உறுதி பூண்டார். அவ்வண்டித் தலைவன் வாயில் வந்தபடி திட்டிக் கொண்டே இழுப்பதையும் அடிப்பதையும், அண்ணல் சும்மா இருப்பதையும் கண்ட வண்டிக்குள் இருந்தோரிற் சிலர் இரக்கங் கொண்டனர். ‘அப்பா! அவரை அடிக்காதே; விட்டுவிடு. அவர் மீது குற்றம் இல்லை. அவர் கூறுவது உண்மை. நீதானே அங்கு உட்கார வைத்தாய்? அங்கு இடம் இல்லாவிட்டால் அவர் உள்ளே வந்து எங்களோடு உட்காரட்டும்’ என்றனர். ‘ஒருக்காலும் இல்லை’என்றான் அந்நிறவெறி பிடித்த வெள்ளையன். ஆயினும், கொஞ்சம் மானக்கேடுற்றான். அடிப்பதை நிறுத்தி, கையையும் விட்டான். பின்னும் கொஞ்ச நேரம் கண்டபடி திட்டி விட்டு, வண்டியோட்டிக்கு மறுபக்கத்தில் உட்கார்ந்திருந்த வேலைக்காரனை வண்டிப் படியில் உட்காரச் செய்து, தான் அவன் உட்கார்ந்திருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டான். வண்டி புறப்பட்டது. அண்ணல் அவன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காது பொறுமையின் எல்லையைக் கடைப் பிடித்தார். 2. தென்னாப்பிரிக்கா நகரங்களில் ஒன்று டிரான்சு வால் என்பது. அண்ணல் சிலமாதம் அங்கிருந்தார். ‘அந்நகரத்துப் பொது நடைபாதையில் இந்தியர் நடக்கக் கூடாது. இரவு ஒன்பது மணிக்கு மேல் ஒப்புமைச் சீட்டு இல்லாமல் வெளியே போகக் கூடாது’ என்னும் சட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. அண்ணல் உலாவப் போனால் எப்போதும் பத்து மணிக்கு முன்னர் வீடு திரும்புவதில்லை. இதற்காகக் காப்பாளர் தொந்தர வின்றி எப்போதும் வெளியே போய் வர உரிமைச் சீட்டு பெற்றிருந்தார். அண்ணல் உலாவப் போகும் போதெல்லாம் அந் நகர் மன்றத் தலைவரின் வீட்டின் வழியாகவே செல்வது வழக்கம். அவ் வீட்டின் முன் எப்போதும் ஒரு காப்பாளன் நின்று காவல் காத்து வருவான். ஒவ்வொரு நாளும் அண்ணல் அவ்வீட்டுக்கு முன்னுள்ள கால்நடைப் பாதை வழியாக அக்காப்பாளனைக் கடந்தே செல்வது வழக்கம். நீண்ட நாள் எவ்வகைத் தொந்தரவும் ஏற்படவில்லை. அவ்வீட்டின் முன் நின்று காவல் காப்பவர் அடிக்கடி மாறுவர். ஒருநாள் அண்ணல் அவ்வழியாகப் போய்க் கொண்டி ருந்தார். காவலன் புதியவன். கால்நடைப் பாதையை விட்டு அப்புறம் போகும்படி சொல்லாமலும் சிறிதும் முன்னெச்சரிக்கை செய்யாமலும் அக்கொடியோன் அண்ணலைப் பிடித்து உதைத்துத் தெருவில் தள்ளினான். அண்ணல் திடுக்கிட்டுப் போனார். எழுந்து, அவனை ஏன் அடித்தாய் என்று கேட்பதற்குள் அவ்வழியாகக் கோடஸ் என்னும் நண்பர் குதிரையில் வந்தார். ‘காந்தி! நான் நடந்ததை யெல்லாம் பார்த்தேன். இவன் மீது வழக்குத் தொடுத்தால் நான் சாட்சி சொல்கிறேன். இப்படி முரட்டுத்தனமாக இவன் உங்களை அடித்துவிட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்’ என்றார். ‘நீங்கள் வருந்த வேண்டாம். அவனுக்கு என்ன தெரியும் பாவம்! கறுப்பர்கள் எல்லோரும் அவனுக்கு ஒன்றுதான். என்னுடைய சொந்தக் குறைபாடு எதற்காகவும் நான் நீதி மன்றத்துக்குப் போவதாக இல்லை’ என்றார் அண்ணல். அக்காவலன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். ‘நான் உன்னை முன்னமே மன்னித்து விட்டேன்’ என்று அண்ணல் அவனைத் தேற்றினார். அது கண்ட அந்நண்பர், அண்ணலின் அவ்வரும் பெருங் குணத்தைப் பாராட்டியதோடு, பொறுமையின் எல்லையை இன்றுதான் கண்டேன்’ என்றார். திட்டத் திட்ட அதைச் செவியில் போட்டுக் கொள்ளாத, அடிக்க அடிக்க அதை அடியென்று கொள்ளாத அண்ணலின் பொறுமைக் குணத்திற்கு மரமும் நிலமும் எங்ஙனம் உவமை யாகக் கூடும்? முன்னமே மன்னித்து விட்டாராம். இச் சொல்லைக் கேட்டதும் நமக்குமெய்மயிர் சிலிர்க்கின்ற தல்லவா! என்னே! அண்ணலின் அளப்பரும் பொறுமைக் குணம் இருந்த வாறு! 7. தொட்டிற் பழக்கம் காந்தியடிகளின் போக்கே ஒரு தனிப்போக்கு! அவர் வாழ்வே ஒரு தனிவாழ்வு! அவர் தன்மையே ஒரு தனித்தன்மை! இல்லையானால், அவர் ‘உலகப் பெரியார்’ ஆகியிருக்க முடியுமா? வலிமை வாய்ந்த ஆங்கிலப் பேரரசைச் சிறிதும் மதியாது எதிர்த்து அறப்போர் புரிந்திருக்க முடியுமா? அண்ணல் தென்னாப்பிரிக் காவில் இருந்தபோது, தனி வாழ்க்கையைக் கைவிட்டுக் கூட்டு வாழ்க்கை நடத்தத் தொடங்கினார். 1904ல் டர்பனுக்கு 13 கல் தொலைவில் உள்ள போனக்ஸ் என்னும் இடத்திற் புதுக்குடி ஏறினார். காடாகக் கிடந்த 100 படி (ஏக்கர்) நிலத்தை விலைக்கு வாங்கிப் புதுப் பண்ணை யாக்கிப் புதுக்குடி யேறினார். ஒரு பெரிய பொதுக்குடும்பத்தை உருவாக் கினார். அப்பொதுக் குடும்பத்தில் - இந்தியர், முகமதியர், கிறித்துவர், பார்சியர் முதலிய பல சமயத்தினரும்; தாழ்த்தப் பட்டோர், வெள்ளைக்காரர் முதலிய பல சாதியினரும் இருந்தனர். அவர்கள் எல்லோரும் ஒருங்கிருந் துண்டு ஒன்றா யொருகுலமாய் ஒரே குடும்பமாய் வாழ்ந்து வந்தனர். எல்லோரும் அப்புதுப் பண்ணையாகிய பொதுப் பண்ணையில் உழவுத் தொழில் செய்தனர். சமையல் முதல் தோட்டி வேலை யீறாக எல்லா வேலைகளையும் அப்பண்ணையத்தார் எல்லோரும் சரிநிகராகவே செய்து வந்தனர். அதாவது, தெருவைத் துப்புரவு செய்தல் முதலிய எல்லா வேலைகளையும் மாறி மாறி எல்லோரும் செய்து வந்தனர். இதில் அண்ணலும் சமப்பங்காளியே. அப்புதுப் பண்ணை, பொதுவுடைமைக் கொள்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது; ‘சரி நிகர் சமானமாக வாழ்வோம்’ என்ற பாரதியார் பாடலுக்குத் தெளி பொருளாக விளங்கியது; ‘ஒன்றே குலம்’ என்னும் திருமூலர் சொல்லுக்கு இலக்கியமாக விளங்கியது. ‘சோம்பித் திரியேல்’, ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்று, முழக்க மிட்டுக் கொண் டிருந்தது அப்புதுப் பண்ணை. புதுக்குடியான அப் பொதுக் குடியானவரின் குழந்தை களுக்காகப் பள்ளி ஒன்றை அண்ணல் தொடங்கினார். அப்பள்ளியில் இவரும் ஓர் ஆசிரியர் ஆவர். அப்பள்ளியில் பல வகையான சாதி சமயங்களைச் சேர்ந்த ஆண் பெண் இருபாற் பிள்ளைகளும் படித்து வந்தனர். சமையல் வேலை செய்யாத சிறியவர் பெரியவர் யாரா யினும் தோட்ட வேலை செய்ய வேண்டும். குழிதோண்டுதல், மண்ணெடுத்தல், மரம் வெட்டுதல், மூட்டை தூக்குதல் முதலிய எல்லா வேலைகளையும் அப்பள்ளிச் சிறுவர்கள் ஆர்வத்துடனும், அன்புடனும் செய்து வந்தனர். செருப்புத் தைத்தல் சமையல் செய்தல் முதலிய எல்லாத் தொழில்களும் அப்பள்ளியில் கற்பிக்கப் பட்டன. அண்ணலும் செருப்புத் தைத்துப் பழகினார். சிறுவர்கள் இவ்வேலைகளை விளை யாட்டாகவே செய்து வந்தனர். உடற் பயிற்சிக் காகத் தனியாக விளையாட வேண்டிய நேரம் அப்பள்ளிச் சிறார்க்கு மிச்சமாயிற்று. அப்பள்ளியில் சில கெட்ட பையன்களும், இரண் டொரு முரட்டுப் பையன்களும் இருந்தனர். அண்ணலின் சிறார்களும் அப்பள்ளியில்தான் படித்து வந்தனர். அவர்கள் அக்கெட்ட பிள்ளைகளுடன் நெருங்கிப் பழகி வந்தனர். இது இளம் பருவத்தின் இயல்பு. பிஞ்சுள்ளங்களுக்கு அது பிழையெனப் படாது. கெட்டவர்களோடு சேரக் கூடாது என்னும் கொள்கை யுடைய காலன் பாக்கு என்பவர், இது கண்டு மிகவும் வருத்தப் பட்டார். அவர்க்கு அது கொஞ்சங் கூடப் பிடிக்க வில்லை. ‘தங்கள் பிள்ளைகளை அக்கெட்ட பிள்ளைகளோடு சேர விடுவது எனக்குப் பிடிக்கவில்லை. அவர்களால் இவர்களும் கெட்டு விடுவார்கள். அவர்கள் கட்டாயம் இவர்களைக் கெடுத்து விடுவார்கள். சிற்றினஞ் சேர விடலாமா? அக்கெட்ட பிள்ளை களோடு ஒன்றாகச் சேர்ந்து இவர்களைப் படிக்கவிடுவதே தப்பு’ என்று அவர் அண்ணலிடம் கூறினார். ‘நீங்கள் நினைப்பது தவறு. கெட்டவர்களோடு சேர்ந்து நல்லவர்கள் கெட்டுப் போவார்க ளென்றால், நல்லவர் களோடு சேர்ந்து கெட்டவர்கள் ஏன் நல்லவர்கள் ஆகமாட்டார்கள்? கெட்டவர்களோடு சேராதே சேராதே என்று, அக் கெட்ட குணமுள்ளவர்களை வேறாகவே விலக்கி வைத்து வந்தால், அவர்கள் நல்லர்கள் ஆவதுதான் எப்படி? கெட்டவர்கள் கெட்ட வர்கள் என்று அவர்களைத் தனியாகவே ஒதுக்கி வாழும்படி செய்தால், அவர்கள் தங்களைக் கெட்டவர்கள் என்று எப்படித் தெரிந்து கொள்வார்கள்? தங்கள் குணம் கெட்ட குணம்; தங்கள் செயல் கெட்ட செயல் என அவர்களுக்கு எப்படித் தெரியும்? இவ்வாறு அவர்களை வேறாக ஒதுக்கி வைத்துக் கொண்டே வந்தால், மேலும் மேலும் அக்கூட்டம் பெருகிக் கொண்டே தானே போகும்? கெட்டவர்களோடு கூடிப் பழகி அவர்களையும் நல்லவர்க ளாக்குவதுதான் நல்லவர்களின் கடமையாகும். ‘சிற்றினம் சேராதே’ என்பது, கெட்டவர் களோடு சேர்ந்து அவர்களுடைய கெட்ட குணங்களை நாம் பின்பற்றக் கூடாது என்பதேயாகும். ‘சிற்றினம் சேராதே’ என்பதன் பொருள் இதுவே யாகும். பூவோடு சேர்ந்து நார் மணம் பெறுகிறது. இவ்வாறு நல்லவர்களோடு சேர்ந்து, கெட்டவர்கள் நல்ல குணத்தை, நல்ல நடக்கையைப் பெற வேண்டும். செம்பில் களிம்பு இருக்கிறது. செம்பில் ஊற்றி வைத்த பால் கைத்துப் போகிறது. கைப்பு - கசப்பு. களிம்பு-கசப்புத் தன்மை யுடையது. அவ்வாறு கெட்டவர்க ளோடு சேர்ந்து நல்லவர்கள் கெட்டுவிடக் கூடாது. கெட்டவர் களின் கெட்ட குணம் செயலைப் பின்பற்றக் கூடாது. இதுவே, ‘நல்லினம் சேர்’, ‘சிற்றினம் சேராதே’ என்பவற்றின் கருத்தாகும். ‘அதோ அந்தக் களர்நிலத்தை நாம் எப்படி நல்ல நிலம் ஆக்கினோம்? களர்மண்ணோடு நல்ல மண்ணைக் கலந்தோம். அதாவது, களர் நிலத்தில் நல்ல மண்ணைக் கொட்டினோம். அக்களர் பட்டு அது நல்ல நிலம் ஆனது. இங்ஙனமே, நாம் கெட்டவர்களோடு சேர்ந்து அவர்தம் கெட்ட குணத்தை மாற்றி அவர்களை நல்லவர்க ளாக்க வேண்டும். நல்ல மண்ணைக் கொட்டாமல் இருந்திருந்தால் அக் களர்நிலம் நல்ல நிலம் ஆகியிருக்குமா? நன்கு எண்ணிப் பாருங்கள். என் குழந்தைகளை அக்கெட்ட பிள்ளைகளுடன் சேராமல் கட்டு மானம் செய்தால், மற்றவர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர் என்னும் எண்ணம் அவர்களுக்கு உண்டாகி விடும். அவ் வெண்ணம் மிகவும் கெட்டது. அதனால், மக்கள் சமூகத்துக்குக் கேடு உண்டாகும். அவ்வுயர்வு தாழ்வு எண்ணந்தானே மக்களினத்தை முன்னேற விடாமல் தடுத்து வருகிறது? அந்த உயர்வு தாழ்வு எண்ணத்தைச் சிறுவர்கள் மண்டையில் ஏற்றக் கூடாது. அது அவர்களை வழியில்லாத வழியில் செலுத்தி விடும். இளமைப் பருவத்திலேயே ‘எல்லோரும் ஒன்று’ என்னும் ஒற்றுமை மனப்பான்மையை வளர்ப்பதே சிறுவர்கட்கு நாம் செய்யும் பேருதவி யாகும். ‘தொட்டில் பழக்கம் தானே சுடுகாடு மட்டும்?’ அவர்கள் மற்ற பிள்ளைகளுடன் கலந்து பழகுவதால், தாங்களே நன்மை தீமைகளைப் பகுத் தறிய வழி ஏற்படும். பெருஞ் செல்வர் மக்களைத் தனிப் பள்ளியில் படிக்க வைப்பதால்தானே, அவர்கள் தங்களை உலகத்துக்கே வேறாக எண்ணி, அப்படியே நடந்தும் வருகிறார்கள்? தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் தனிப் பள்ளியில் படிப்பதால் தானே மற்ற பிள்ளைகளோடு பழக் முடியாமல் போகிறது? ஆனால், அக்கெட்ட பிள்ளைகளிடத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களது கெட்ட பழக்கத்துக்கு நாம் ஆளாகக் கூடாது. நம்மை அவர் பின் பற்றும் படி நடந்து கொள்ள வேண்டும். இதற்காகவே தான் என் பிள்ளைகளை அவர்களுடன் பழகும் படி விட்டிருக்கிறேன். அவர்களை ஒரே வகுப்பில் படிக்கும் படி செய்துள்ளேன். வெளியிலும் அவர்கள் ஒன்று கூடியே இருக்கும்படி விட்டு வருகிறேன்’ என்றார் அண்ணல். காலன்பாக்கு, உண்மையை உணர்ந்து மகிழ்ந்தார். அண்ணலின் அறிவு நுணுக்கத்தையும், ஆராய்ச்சித் திறனையும், மக்களினத்தின் பால் அண்ணலுக்குள்ள அளவு கடந்த அன்பையும் பலபடப் பாராட்டினார். அக் கெட்ட பிள்ளைகளிடம் அண்ணல் சில நாள் கொஞ்சம் எச்சரிக்கையாக நடந்து வந்தார். அவர்கள் நாளடைவில் கொஞ்சங் கொஞ்சமாக முரட்டுத் தனத்தையும் கெட்ட நடவடிக் கையையும் கைவிட்டு வந்தனர். முடிவில் அவர்கள் மிகவும் நல்ல பிள்ளைகளாயினர். அதுகண்ட காலன் பாக்கு அகமிக மகிழ்ந்தார்; அண்ணலின் உண்மை யறிவினை மனமாரப் பாராட்டினார். பள்ளிப் பிள்ளைகளாகிய நீங்கள், அண்ணலின் இம் மேற்கோளை மேற்கொள்ளுங்கள். உங்கள் வகுப்பில் உள்ள கெட்ட பிள்ளைகளோடு சேர்ந்து பழகி அவர்களது கெட்ட குணத்தைப் போக்கி அவர்களை நல்ல பிள்ளைகளாக்க முயலுங்கள். மக்கள் இனத்தை நல்லினம் ஆக்குங்கள். தீயவை வீழ்க! நல்லவை வாழ்க! 8. இன்னா செய்யாமை ‘நம்மைப் பிறர் அடித்தால் நமக்கு நோகிறது. அங்ஙனமே, நாம் பிறரை அடித்தால் அவர்க்கும் நோகும்’ - என்னும் உண்மையை அறியார் உலகில் ஒருவரும் இரார். பெரும்பாலோர் இந்த உண்மையை உணர்ந்து அதற்குத்தக நடப்பதனாலேயே உலகம் நடைபெற்று வருகிறது. ‘இவ்வுண்மையை உணராத சிலரைப் போல, உலகமக்கள் எல்லோரும் நடக்கத் தலைப்பட்டால், அவ்வாறு நடக்கத் தொடங்கிய அன்றே உலகம் அழிந்தொழிந்து விடும்’ - என்பது, கற்றறிந்த மேலோர் கருத்து. எல்லா உயிர்களும் நல்ல பாம்பைப் போல நஞ்சுடையனவாக இருந்து, ஒன்றுக் கொன்று கடித்துக் கொன்று கொண்டால் உயிர்கள் என்னாகும்? எல்லா உயிர்களும் புலி போலக் கொடிய தாக இருந்து, ஒன்றுக் கொன்று கொன்று கொண்டால் உலகம் உயிரற்ற பொருளாகி விடுமல்லவா? ‘நச்சுக் கண்ணி’ என்று ஒரு வகைப் பாம்பு உண்டு. அது கண்ணில் நஞ்சை (விஷம்) உடையது. அது சினங் கொண்டு பார்த்தால், அதன் கண் ணெதிரில் பட்ட பொருள் எரிந்து போகுமாம். மக்கள் எல்லோரும் நச்சுக் கண்ணிப் பாம்பு போல் கண்ணில் நஞ்சையுடையவ ரானால், அன்றே மக்களினம் அழிந்து விடுமல்லவா? இதையே மேலோர் அவ்வாறு சொல்லி வைத்தனர். ஒருவர் மற்றவர்க்குச் செய்யும் தீமை- இன்னா எனப்படும். இன்னா-துன்பம் ‘தமக்கு உள்ளது பிறர்க்கும் உண்டு’ என்ற உண்மையை உணர்ந்து, பிறர்க்கு எவ்வகையிலும் யாதொரு தீமையும் செய்யாதிருத்தல்’ இன்னா செய்யாமை எனப்படும். ‘தான் ஒரு குற்றமும் செய்யா திருக்கத் தனக்குத் துன்பஞ் செய்தார்க்கும் திருப்பித் துன்பஞ் செய்யா திருக்க வேண்டும். தமக்குத் தீமை செய்தவரைக் தண்டித்தலாவது, அவர் வெட்கப் படும்படி நன்மை செய்த லோடு, அவர் செய்த தீமையை மறந்து விடுவதேயாகும்’ என்று, இன்னா செய்யாமைக்கு இலக்கணங் கூறுகிறார் வள்ளுவர். நம் அண்ணலின் அரும்பெருங் குணங்களில் ‘இன்னா செய்யாமை’ என்பது, தலையாய குணமாகும். அண்ணலின் இவ்வரும்பெருங் குணமே அவரை உலகப் பெரியார் ஆக்கியது. ‘இன்னா செய்யா ஏந்தல்’ (அஹிம்சாமூர்த்தி) என்ற சிறப்புப் பெயருக்குரியார் உலகில் இவர் ஒருவரே எனலாம். இந்நாட்டின் விடுதலைக்காக, ஆங்கில அரசினை எதிர்த்து அறப்போர் தொடங்கிய போதெல்லாம், அறப்போர் வீரர்களுக்கு அண்ணல் சொல்வது இதுதான்: ‘நாம் ஆங்கிலப் பேரரசை எதிர்த்து அறப்போர் தொடங்கி யுள்ளோம். அடித்து உதைத்து ஆட்சியாளர் எவ்வளவு கொடுமைப் படுத்தினாலும், நீங்கள் அக்கொடுமை களை யெல்லாம் புன்முறு வலுடன் ஏற்றுக் கொள்ள வேண்டுமே யன்றி, திருப்பி யாதொரு இன்னலும் அவர்க்குச் செய்யக் கூடாது. இந்த அறப்போரில் உங்களது கடமை இன்னா செய்யாமை என்னும் அறத்தைக் கடைப்பிடித்து நடப்ப தேயாகும்’ என்பதே அது. இன்னா செய்யாமையே அண்ணலின் அறப்போர்ப் படைக்கலம் ஆகும். 1893ல், அண்ணல் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார்; தாதா அப்துல்லாவின் வழக்கை நடத்தும் வழக்கறிஞராக அங்கு சென்றார்; அவ்வழக்கில் வெற்றி பெற்றதோடு, பொதுத் தொண்டுப் பயிற்சியிலும் வெற்றி பெற்றார். அவ் வெளி நாட்டில் வாழும் தம் தாய் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக அரும் பாடுபட்டு வந்தார் அண்ணல். அப்பொதுத்தொண்டுப் பயிற்சியே, அண்ணலைத் தாய் நாட்டின் விடுதலைத் தந்தையாக்கியது. 1896-ஆம் ஆண்டின் இடையில் அண்ணல் இந்தியாவுக்கு வந்தார். இந்திய மக்கள் அண்ணலை அன்புடன் வரவேற்றனர்; வெளிநாட்டில் வாழும் தம் தாய்நாட்டு மக்களுக்காக அண்ணல் ஆற்றிவரும் அரும்பெருந் தொண்டினைப் பாராட்டினர். தம் தாய்நாட்டுக்கு வந்தும் அண்ணல் சும்மா இருக்கவில்லை. அவ்வெளிநாட்டில் வாழும் இந்திய மக்களை அவர் மறந்துவிட வில்லை; தென்னாப்பிரிக்கா இந்தியர் நிலைமையை ஓர் அறிக்கை மூலம் வெளியிட்டார்; இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்று, அவ்வறிக்கையின் கருத்தை விளக்கிக் கூறினார்; நமது தமிழ் நாட்டின் தலைநகரான சென்னைக்கும் வந்திருந்தார். அண்ணல் தென்னாப் பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்ததே இதற்காகத் தான். அன்று இந்தியா, தென்னாப் பிரிக்கா இரண்டும் ஆங்கிலேயர் ஆட்சிக் கீழ் இருந்து வந்தன. இவ்விரு நாடுகளையும் இங்கிலாந்து அரசரே ஆண்டு வந்தனர். எனவே, தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர் நிலைபற்றி, இந்திய மக்கள் எல்லோரும் அவ்வளவு அக்கறை காட்டு கின்றனர். தென்னாப்பிரிக்கா இந்தியரின் அடிமை நிலையைப் போக்க வேண்டும் என்பதே இந்திய மக்களின் ஒருமுகமான கருத்து என்பதை, ஆங்கில அரசர்க்கு எடுத்துக் காட்டுவதற்காகவே அவ்வாறு செய்தார். சென்ற இடங்களி லெல்லாம் பொதுக் கூட்டங்கள் கூட்டி, அக் கூட்டத்தில் தென்னாப் பிரிக்கா இந்தியர் நிலை பற்றித் தீர்மானம் நிறைவேற்றி. ஆங்கில அரசுக்கும், தென்னாப் பிரிக்க அரசுக்கும் அனுப்பினார். இங்கு வந்த வேலை முடிந்ததும், அவ்வாண்டின் இறுதியில், மனைவி மக்களுடன் அண்ணல் நெட்டாலுக்குப் புறப்பட்டார். பம்பாயிலிருந்து புறப்பட்ட கப்பல், 18-ஆவது நாளில், நெட்டாலின் தலைநகரான டர்பன் துறை முகத்தை அடைந்தது; துறைமுகத்தில் கப்பல் நங்கூரம் போட்டு நிறுத்தப்பட்டது. டர்பனில் உள்ள வெள்ளைக்காரர்கள், ‘காந்தியை இங்கு கப்பலினின்று இறக்கிவிடக் கூடாது; திருப்பி இந்தியாவுக்கே அனுப்பிவிட வேண்டும். என்று கிளர்ச்சி செய்தனர். காரணம், அண்ணல் இந்தியாவில் இருந்த போது, தென்னாப்பிரிக்கா இந்தியர் நிலைமை பற்றி அறிக்கை வெளியிட்டு, இந்தியாவின் பலபகுதிகளுக்கும் சென்று அதை விளக்கிக் கூறினாரல்லவா? அதை, ‘காந்தி இந்தியாவில் இருந்தபோது நெட்டால் வெள்ளை யரைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் கண்டித்தார்; நெட்டால் வாழ் வெள்ளையரைப் பற்றி இந்திய மக்களுக்குக் கெட்ட எண்ணம் உண்டாகும்படி செய்தார்’ என, தென்னாப் பிரிக்காச் செய்தித்தாள்கள் திரித்து வெளியிட்ட பொய்ச் செய்தியை நம்பியதே யாகும். கிளர்ச்சி மும்முரமாக நடந்தது. எங்கு பார்த்தாலும் கூட்டமும் கூச்சலுமாக இருந்தன. ‘இந்தியாவுக்குத் திரும்பிப் போகாவிட்டால் கடலில் தள்ளப்படுவீர். வீணாக உயிருக்கு உலைதேடிக் கொள்ளாதீர்’ என்பன போன்ற அச்சுறுத்தல் கடிதங்களும் எழுதினர். கடைசியாக, உயிரோடு இருக்க விரும் பினால், கண்டிப்பாய் இந்தியாவுக்கே திரும்பிப் போய்விடும்படி செய்தி அனுப்பப்பட்டது. உடனிருந்தோ ரெல்லாம் அஞ்சி நடுங்கினர். திரும்பிப் போய் விடலாம் என்று வற்புறுத்தினர். ஆனால், அண்ணலோ ‘நெட்டால் துறைமுகத்தில் இறங்க எங்களுக்கு உரிமை உண்டு. என்ன நேரிட்டாலும் அதைப்பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாது, நெட்டாலில் இறங்கி எங்கள் உரிமையை நிலைநாட்ட உறுதி பூண்டுள்ளோம்’ என்று தெரிவித்து விட்டனர். ஐந்து நாளைக்குப் பிறகு அதாவது 23-ஆம் நாள் கப்பல் கரைக்கு வர ஒப்புக் கொள்ளப்பட்டது. கப்பல் கரை சேர்ந்தது. கப்பலில் இருந்த யாவரும் இறங்கினர். அண்ணலை அழைத்துச் செல்ல அப்துல்லாவின் வழக் கறிஞரான திரு.லாப்டன் என்பார் கப்பலுக்கு வந்தார். கத்தூரிபாய் அம்மையையும் குழந்தைகளையும் வண்டியி லேற்றி அனுப்பினார். அவர்கள், தென்னாப்பிரிக்காவில் வாணிகம் செய்து வந்த இந்தியப் பெருஞ்செல்வரான, ரஸ்டம்ஜி என்பாரின் வீடு போய்ச் சேர்ந்தார்களெனச் செய்தி கிடைத்தது. வழியில் யாதொரு இடையூறு மின்றி அவர்கள் நலமாக வீடு போய்ச் சேர்ந்தது கேட்டு அண்ணல் மகிழ்ந்தார். பின்னர், அண்ணலும் லாப்டனும் கப்பலை விட்டு இறங்கினர். சில வெள்ளைக்காரச் சிறுவர்கள், ‘காந்தி! காந்தி!’ எனக் கத்தினர். போகப் போகக் கூட்டம் ஏராளமாகக் கூடி விட்டது. லாப்டனை அண்ணலினின்று பிரித்தனர். அண்ணலின் மீது கற்களையும் அழுகிய முட்டைகளையும் எறிந்தனர். ஒருவன் அண்ணலின் உருமாலையைப் பிடுங்கிக் கொண்டான். அக்கூட்டத்தினர், அண்ணலை அடித்து உதைதுத் துன்புறுத்திக் கொண்டே இழுத்துச் சென்றனர். வழியில் புதிதாக வந்து அக்கூட்டத்துடன் கூடுவோர்க ளெல்லாம் அண்ணலை அடித்துக் கொண்டே இருந்தனர். ஒரு குற்றமும் செய்யாத அவர், ஒரு பெருங் கூட்டத்தின் வெறிச் செயலுக்கும் கொடுமைக்கும் ஆளாயினார் பாவம்! அண்ணல் மிகவும் களைத்துப் போய்விட்டார்; ஒரு வீட்டின் முன்புறமுள்ள வேலியின் கம்பியைப் பிடித்துக் கொண்டு கீழே விழாமல் நின்றார்; மூச்சு விட முடியாமல் மேலும் மேலும் தாக்கப் பட்டனர். அவ்வெள்ளைக் கும்பலின் வெறிச் செயல் அளவு கடந்துவிட்டது. அண்ணல் படும் இன்னலும் அப்படியே! அந்நிலையில், தற்செயலாக அவ்வழியாக வந்த, காவற் கண்காணிப்பாளர், (போலீஸ் சூப்பிரிண்டெண்டண்ட்) திரு. அலெக்சாண்டரின் மனைவியார், அக்கொடுஞ் செயலை கண்டு திடுக்கிட்டார். அவ்வம்மையார் முன்னமே அண்ணலைத் தெரிந்தவர். தீர முள்ள அப் பெண்மணி, கூட்டத்தோடு கூட்டமாக அண்ணலின் அருகிற் சென்று, குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு நின்றார். அவ்வம்மை யார் மீது படாது அண்ணலைத் தாக்க அக்கூட்டத்தினால் முடிய வில்லை. இந்திய இளைஞரொருவர் ஓடிப்போய் அலெக்சாண்டரிடம் சொன்னார். அவர் உடனே சில காப்பாளரை அனுப்பினார். அவர்கள் அங்கு வந்து அண்ணலைச் சுற்றி வளையம் போல் நின்று காப்பகத்திற்கு (போலீஸ் ஸ்டேஷன்) அழைத்துச் சென்றனர். அலெக்சாண்டர் காப்பகத்திலேயே அண்ணலை இருக்கும் படி சொன்னார். ஆனால், அண்ணல் அங்கிருக்க மறுத்து, மனைவிமக்கள் இருக்கும் ரஸ்டம்ஜியின் வீடு போய்ச் சேர்ந்தார். அவ்வீட்டினுள் அண்ணல் இருப்பதை அறிந்த வெள்ளைக் கும்பல் அவ்வீட்டினைச் சூழ்ந்து கொண்டது. பொழுதும் விழுந்து விட்டது. ‘காந்தியை வெளியே அனுப்புங்கள்’ என்னும் கூச்சல் பெரிதாக இருந்தது. அதற்குள் அலெக்சாண்டர் அங்குவந்து சேர்ந்தார். தீச்செயல் எதுவும் நிகழாத படி அவர் பார்த்து வந்தார். அவர் கருத்துப்படி, அண்ணலும் வேறு இருவரும் இந்தியக் காப்பாளர் போலக் கோலம் பூண்டு, வீட்டுக்குள் ளிருந்து வேறு வழியாகத் தப்பிச் சென்றனர். அதன் பின் அலெக்சாண்டர், அக் கும்பலைப் பார்த்து, ‘நீங்கள் தேடுபவர் வீட்டினுள் இல்லை; அவர் பக்கத்துக் கடை வழியாகத் தப்பியோடிவிட்டனர்’ என்றார். சிலர் வீட்டுக்குட் சென்று பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் வெளி வந்தனர். அக் கூட்டம் வருத்தத்துடன் கலைந்து சென்றது. அன்று இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டு வந்தனர். ஆங்கில அரசர், இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டனில் இருந்து வந்தார். அரசரின் ஆணையாளர், இந்தியாவில் இருந்து இந்நாட்டினை ஆண்டு வந்தனர். தென்னாப் பிரிக்காவும் அன்று ஆங்கில அரசரின் ஆட்சிக் கீழ்தான் இருந்து வந்தது என்பதை முன்பு கண்டோம். அப்போது, ஆங்கிலப் பேரரசின் குடியேற்ற நாட்டு அமைச்சராயிருந்த திரு. சேம்பர்லேன் அவர்கள், இக் கொடு நிகழச்சியை அறிந்து வருந்தினார். அண்ணல் காந்தியைத் தாக்கியவர்களைச் சிறை செய்து வழக்குத் தொடரும் படி நெட்டால் அரசினர்க்குத தந்தி கொடுத்தார். நெட்டால் அரசினர் அண்ணலைக் கேட்டனர். அதற்கு அண்ணல், ‘நான் யார் மீதும் வழக்குத் தொடரப் போவதில்லை. ஒருவர் இருவரை நான் அடையாளங் கண்டு பிடிக்க முடியும். ஆனால், அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தருவதால் யாது பயன்? தங்களைப் பற்றி நான் இந்தியாவில் மிகைப்படுத்திக் கூறினேன் என்னும் தப்பான செய்தியை நம்பினதாலன்றோ அவர்கள் என்மீது சினங் கொண்டனர்? என்னைப் பற்றித் தப்பாக வெளியிட்ட தென்னாப்பிரிக்காச் செய்தித்தாள்களே இதற்குக் காரணமாகும். யாருக்கும் தண்டனை வாங்கித் தர எனக்கும் விருப்பம் இல்லை. உண்மை தெரிய வரும் போது அவர்களே தங்கள் தகாத நடத்தைக்கு வருந்துவார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை’ என எழுதிக் கொடுத்தனர். அதுகண்ட நெட்டால் அரசினர் பெருவியப் புற்றனர். எத்தகைய தீங்கு செய்தோர்க்கும் திருப்பித் தீங்கு செய்யா மையாகிய அண்ணலின் இன்னாசெய்யாமை என்னும் அரும் பெருங் குணத்தைக் கண்ட நெட்டால் வெள்ளையர் வெட்கித் தலை குனிந்தனர்; தங்கள் அறியாமைக்கு மிகவும் வருந்தினர். சொல்லொணாக் கொடுமை செய்த அக்கொடியோரைத் தண்டிக்க அவ்வளவு வாய்ப்பு இருந்தும், அன்னார்க்கு இன்னா செய்ய விரும்பாத அண்ணலின் பெருந்தன்மையைப் பார்த்தீர்களா! ஒப்புயர்வற்ற இத்தகைய பெருந்தன் மையன்றோ அண்ணலை உலகப் பெரியா ராக்கியது! தமக்கு எத்தகைய தீங்கு செய்தார்க்கும் திருப்பி அத்தகைய தீங்கு செய்ய விரும்பாத அண்ணலின் இத்தகைய ஒப்புயர் வற்ற பெருங் குணத்தை நாம் ஓரளவாவது பின்பற்றி நடக்க வேண்டாமா? கற்பவை கசடறக் கற்க கற்ற பின் அதற்குத் தக நிற்க’ என்பது, வள்ளுவர் வான்குற ளன்றோ! 9. துறவுள்ளம் பூ-என்றால், தாமரைப் பூவையே குறிக்கும். அத்தகு சிறப்புடையது தாமரைப்பூ. அதன் மணமும் நிறமும் அழகுமே இத்தகைய சிறப்புக்குக் காரணமாகும். சிங்கத்தினை-விலங்கரசு என்றும், பருந்தினை-புள்ளரசு என்றும் அழைப்பது போல, தாமரைப் பூவை-மலரரசு என்று அழைத்தல் தகும். தாமரைப் பூவுக்கு இத்தகைய சிறப்பு இருப்பது போலவே, தாமரை இலைக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. தாமரை, தண்ணீரில் வளரும் ஒருவகைப் பூங்கொடி. அது நீரில் அன்றி நிலத்தில் வளராது. தாமரை, தண்ணீரிலேயே இருந்தாலும் தாமரை இலையில் தண்ணீர் ஒட்டு வதில்லை. அதாவது, தாமரை இலை தண்ணீரி லேயே இருந்தும் அது தண்ணீரில் ஒட்டாமல் இருந்து வருகிறது. குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டே குடும்பத்தில் பற்றில்லாமல், குறிப்பாகப் பொருட்பற்றில்லாமல் இருந்து வருவோர்க்குத் தாமரை இலை எடுத்துக் காட்டாக உள்ளது. நம் அண்ணலின் வாழ்க்கைக்குத் தாமரை இலை அப்படியே எடுத்துக் காட்டாகும். அண்ணல் மனைவி மக்களுடனேயே வாழ்ந்து வந்தார். ஆனால், மற்றவர்களைப் போல், தனக்கெனச் சொந்தமாக வீடு, நிலம், காசு பணம் ஒன்றும் வைத்துக் கொள்ள வில்லை. எந்த ஒரு பொருட் பற்றும் இல்லாதவராய், துறவுள்ளம் உடையராய் வாழ்ந்து வந்தார். ஆனால், இதற்கு மாறாக நாட்டு மக்களிடத்தில், நாட்டு மக்கள் நல்வாழ்வில் அளவு கடந்த பற்றுள்ளம் உடையவராய் இருந்து வந்தனர். இந்நாட்டுப் பற்றுடை மையே அண்ணலின் துறவுள்ளத்திற்குக் காரணம் ஆகும் எனலாம். 1896ல், நெட்டாலிலிருந்து அண்ணல் இந்தியாவுக்குப் புறப்பட்டார். அண்ணல் தங்களுக்குச் செய்த அரும் பெருந் தொண்டினைப் பாராட்டி, நெட்டால் இந்தியர் ஒவ்வொரு குறிப்பிட்ட ஊரிலும் வழியனுப்புக் கூட்டம் நடத்தினர். விலையு யர்ந்த அன்புப் பரிசுகள் வழங்கினர். இரண்டாவதாக, 1901ல் இந்தியாவுக்குப் புறப்பட்டபோதும் ஊர் தோறும் வழியனுப்புக் கூட்டங்கள் நடத்தினர். 1896ல், அண்ணல் நெட்டால் இந்தியர்க்கு மட்டும் தலைவராக இருந்தார்; 1901ல் தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர் எல்லோர்க்கும் தலைவரானார். அன்றைவிட இன்று ஏராளமான அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. அவற்றுள், தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்த பொருள்களும், விலையுயர்ந்த வைர நகைகளும் அடங்கியிருந்தன. இவ்வன்புப் பரிசுகளில், தங்கத் தினால் செய்த 52 பவுன் பெறுமானமுள்ள கழுத்துமாலை ஒன்றும் இருந்தது. அது, அன்னை கஸ்தூரிபாய்க் கென்று கொடுக்கப்பட்டது. இப் பரிசளிப்புகள் முடிந்த அன்றிரவு முழுவதும் அண்ணல் தூங்கவில்லை; தூக்கம் வரவில்லை. படுக்கை அறையில் அங்குமிங்கும் நடந்து கொண்டே ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தனர். ஏன் தூக்கம் வரவில்லை? என்ன ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து சிந்தித்தார்? தென்னாப்பிரிக்கா வாழ் இந்திய மக்கள் இவர் மீது அவ்வளவு அன்புடையவராய், அவ்வளவு அன்புப் பரிசு வழங்கிப் பெருமைப் படுத்தினரே! தூக்கம் வராமைக்குக் காரணம் என்ன? இதுகாறும், அவர் நகை யொன்றும் அணிந்ததில்லை. வீட்டில் நகையொன்றும் இல்லை. எளிய வாழ்க்கை முறையினையே மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், தங்கக் கடியாரங்களையும், தங்கச் சங்கிலிகளையும், வைரமோதிரங் களையும் அணிவது எப்படி? சும்மா அவற்றை வீட்டில் வைத்திருப்பதால் பயனென்ன? நகைப் பித்தை ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கட்கு எடுத்து ரைக்கும் இவரே நகையணிவ தெப்படி? இதுவே தூக்கம் வராமைக்குக் காரணம். இதுபற்றி ஆழ்ந்து சிந்தித்தனர். ஒரு முடிவும் தோன்ற வில்லை. மேலும், மனைவி மக்களைப் பொதுத் தொண்டுக்குத் தகுதி யுடைய ராக்கி வந்தார். ‘தொண்டுக்குத் தொண்டே பரிசு’ என்று அவர்களை உணரும்படி செய்து வந்தார். இந்நிலையில், விலையுயர்ந்த நூற்றுக்கணக்கான நகைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்று எண்ணி யெண்ணிப் பார்த்ததனா லுண்டான கவலையே அண்ணலுக்குத் தூக்கம் வராமைக்குக் காரணம் ஆகும். முடிவில், அவற்றைச் சமூகச் சொத்தாக்கி விடுவதென முடிவு செய்தார். இதற்கு மக்களை எளிதில் இணங்க வைத்து விட்டார். ஆனால், மனைவியை இணங்க வைப்பது அவ்வளவு எளிதாகத் தோன்றவில்லை. குழந்தைகளைக் கொண்டு தாயாருக்குச் சொல்லச் செய்தார். “உங்களுக்கு இந்த நகை நட்டுக ளெல்லாம் தேவை யில்லா திருக்கலாம். உங்கள் பிள்ளைகளுக்கும் தேவையில்லா திருக்கலாம். கொஞ்சம் தூக்கி விட்டுவிட்டால் அவர்கள் உங்கள் விருப்பப்படி கூத்தாடுவார்கள். என்னை நகை யணிந்து கொள்ளக் கூடாதென்று சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், எனக்கு மருமக்கள்மார் வந்தால் அவர்களுக்கு நகை வேண்டாமா? நாளைக்கு நமது நிலைமை எப்படியிருக்குமோ யார் கண்டார்? அவ்வளவு அன்புடன் அளிக்கப்பட்ட அன்புப் பரிசுகளைத் திருப்பிக் கொடுக்க நான் ஒருக்காலும் இசையேன்” எனக் கண்ணீர் வடித்தபடி கூறினார் அன்னை கஸ்தூரிபாய். “இப்படிச் சொல்வாய் என்பது எனக்குத் தெரியும். எதற்காகக் கண்ணீர் சிந்த வேண்டும்? கண்ணீர்விட்டழும்படி என்ன நிகழ்ந்து விட்டது?” “இன்னும் என்ன நிகழ வேண்டும்; இவ்வளவு போதாது?” “குழந்தைகளுக் காகத்தானே வேண்டும் என்கிறாய்? அவர்கள் ஆளானபின் அவர்களே அவர்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்வார்கள். மேலும், நகைப் பித்துப் பிடித்த பெண்களை நான் கட்டாயம் நமது பையன்களுக்கு மணம் செய்யப் போவதில்லை. அப்படி அவர்களுக்கு நகை வேண்டுமானால், வாங்கிக் கொடுப்பதற்கு நானில்லையா? அப்போது என்னைக் கேள்.” “உங்களையா கேட்பதா? இத்தனை நாட்கள் பழகியும் நீங்கள் எப்பேர்ப்பட்டவர் என்பது எனக்குத் தெரியாதா? மூவாயிரம் பெறுமானமுள்ள என்னுடைய நகைகளை நான் போட்டிருக்க விடாத நீங்களா என் மருமகளுக்கு நகை செய்து போடப் போகிறீர்கள்?” “மறுபடியும் அதே பாட்டைத்தானே பாடுகிறாய்? அவனவன் மனைவிக்கு அவனவன் நகை போட்டுக் கொள்ளவா மாட்டான்?” “இப்போதே என் குழந்தைகளைச் சாமியார் ஆக்கப் பார்க்கிறீர்களே நீங்கள்; அவர்கள் உங்களைவிட ஒருபடி மேலே தானே இருப்பார்கள்? அவர்களா தங்கள் மனைவி மார்களுக்கு நகை போடுவார்கள்? இல்லை இல்லை; கட்டாயம் அந்நகை களைத் திருப்பிக் கொடுக்கவே கூடாது” “நான் சொல்வதைக் கொஞ்சம் கவனித்துக் கேள். நாம் இனித் தனிவாழ்க்கை நடத்தப் போவதில்லை. நம் நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்வதே இனி நம் வாழ்க்கை முறையாகும். சொந்த ஊர், சொந்த வீடு, சொந்தக் காரர் என்பன இனி நமக்கில்லை. நம் தாய் நாடு தான் நமது சொந்த ஊர். அன்றன்று நாம் இருக்கும் இடம் தான் நமது சொந்த வீடு. இந்திய மக்கள் தான் இனி நம் சொந்தக்காரர். இவ்வாறு நான் முடிவு செய்து விட்டேன். இம் முடிவை இனி ஒருக்காலும் நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை. ஆகையால், பொது மக்களுக்குச் செய்த தொண்டுக்காகக் கொடுத்த நகைகளைப் பொது மக்களுக்கே பயன்படும்படி செய்வதே முறையாகும்.” “சரி, உங்கள் விருப்பப் படியே செய்யுங்கள். ஆனால், என்னுடைய கழுத்து மாலையைக் கேட்க உங்களுக் கென்ன உரிமை இருக்கிறது?” ‘அக்கழுத்து மாலை, உன்னுடைய ஊழியத்தைப் பாராட்டிக் கொடுக்கப் பட்டதா? என்னுடைய ஊழியத்தை முன்னிட்டா?” “உங்களுடைய ஊழியத்தை முன்னிட்டுத் தான்! ஆனால், நீங்கள் செய்த ஊழிய மெல்லாம் நான் செய்த ஊழிய மல்லவோ? இரவு பகலாய் உங்களுக்காக நான் ஓயாது உழைத்த தெல்லாம் என்ன ஆயின? அவ்வுழைப் பெல்லாம் ஊழியம் அல்லவா?” அன்னையின் இக்கேள்விகள், அண்ணலின் நெஞ்சில் சுருக்கென்று தைத்தன. அவை உண்மையான கேள்விகள் என்பதை அவர் உணர்ந்தார். ‘என்னுடைய ஊழியத்தை முன்னிட்டா?’ என்று கேட்டது தவறு என்பதை அவர் மனம் ஒத்துக் கொண்டது. அதற்காக தனக்குள் வருந்தினார். பின் மனைவியைப் பார்த்து, ‘உன்னுடைய உழைப்பை மதியாது, நானே எல்லாம் செய்ததாக எண்ணியது தவறு. நீ வீட்டில் உழைத்திரா திருந்தால் நான் நாட்டுக்கு உழைத்திருக்க முடியாது. நான் உன் உழைப்பை மதியாது உன்னை அவமதித்ததற்காக என்னை மன்னித்து விடு’ என்று, மனைவியிடம் தன் தவற்றை ஒப்புக் கொண்டார். அண்ணலின் வெள்ளையுள்ளத்தைக் கண்ட அவ்வன்னையும் தன் கணவனது கருத்துக்கு இணங்கினார். பின்னர், அதற்கென ஓர் அறங்காப்புக் குழுவை ஏற்படுத்தினார். அப்பரிசுப் பொருள்களை யெல்லாம் அவ்வறங்காப்பாளர் களிடம் ஒப்படைத்தார். அவற்றைப் பொது மக்களின் நன்மைக்கே செலவழிக்க வேண்டு மென ஏற்பாடு செய்தார். முடிவில் கஸ்தூரிபாயும் அப்படிச் செய்ததுதான் முறை என்பதை உணர்ந்தனர். பார்த்தீர்களா, அண்ணலின் துறவுள்ளத்தை? பொதுத் தொண்டில் ஈடுபட்டோர் விலையுயர்ந்த பரிசுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாதென்பது, அண்ணலின் உறுதியான கொள்கை. 10. எளியோர்க் குதவுதல் அண்ணல் தம் வாழ்நாளில், தமக்காக, தமது குடும்பத் திற்காக வாழ்ந்த காலம் மிக மிகக் குறைவாகும். தம் வாழ்நாளில் ஐம்பதாண்டுகளுக்கு மேல் பொது வாழ்விலேயே கழித்தார்; தனக் கென வாழாப் பிறர்க்குரி யாளராகவே இருந்து வந்தார். அப்பொது வாழ்வுக் காலத்தே-சொந்த ஊர், சொந்த வீடு, சொந்தச் சொத்து, சொந்தக்காரர் என்பன அண்ணலுக் கில்லை. இந்தியாவே சொந்த ஊர்; இருந்த இடமே சொந்த வீடு; இந்தியாவின் சொத்தே சொத்து; இந்திய மக்களே சொந்தக்காரர் என வாழ்ந்து வந்தார்; இந்திய மக்களின் விடுதலையே தம் வாழ்க்கைப் பயனெனக் கொண்டு, அதற்காகவே அல்லும் பகலும் அயராது உழைத்து வந்தார். முடிவில் வெற்றியுங் கண்டார். அண்ணலின் பொது வாழ்வு தென்னாப்பிரிக்காவில் தொடங்கியது. தாதா அப்துல்லாவின் வழக்கின் பொருட்டு, அப்துல்லாவின் கட்சி வழக்கறிஞராக அண்ணல் தென்னாப் பிரிக்காச் சென்றார் என்பதை முன்பு கண்டோம். அண்ணல் அங்கு அவ்வழக்கின் வெற்றிக்காகப் பாடுபட்டு வந்ததோடு நிற்க வில்லை; நெட்டால் இந்தியரின் நல்வாழ்வுக்காகவும் தொண்டு செய்யத் தொடங்கினர். தென்னாப் பிரிக்கா வாழ் இந்தியரின் தலைவரி தவிர்த்து, ஒப்பந்தக் கூலி முறையை ஒழித்து, அவர்களை உரிமை வாழ்வு வாழும்படி செய்ததையும் முன்பு கண்டோம். இங்ஙனம் பொதுத் தொண்டு செய்வதற்கு ஏழை எளியாரிடம் கொள்ளும் இரக்கமே காரணமாகும். அவ்விரக்க குணமே அன்னார்க்கு உதவும்படி தூண்டும். ஓயாது உடல்தேய உழைத்தாலும் உணவுக்கும் உடைக்கும் போதுமான வருவாய் கிடைக்கப் பெறாதவர்-ஏழை எனப்படுவர். தமக்குத் தீமை செய்வோரை எதிர்க்கும் ஆற்றல் இல்லாதவர்-எளியர் எனப்படுவர். எனவே, ஏழைக்குதவுதல் செல்வர் கடமையும், எளியோர்க் குதவுதல் வலியோர், அல்லது பெரியோர் கடமையும் ஆகும். அண்ணல் இயல்பாகவே ஏழை எளியார்க்கிரங்கும் அருளுள்ளம் உடையவர். அத்தகைய அருளுள்ளமே-அருட் குணமே அவரைப் பொது வாழ்வு வாழச் செய்தது. இந்திய மக்களின் அடிமை வாழ்வைக் கண்டு இரக்கங் கொண்டு தம் வாழ்நாளை இந்நாட்டின் விடுதலைக்கே ஒப்படைத்ததற்கு அவ்வருட் குணமே காரண மாகும். இந்திய மக்கள், தென்னாப்பிரிக்காவுக்கு ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர் என்பதை முன்பு கண்டோம். தென்னாப்பிரிக்காத் தோட்டக்காரர், அல்லது பண்ணையக்காரர்களெல்லாம் வெள்ளைக்காரர்களே! ஒரு தோட்டக்காரரிடம் பல ஒப்பந்தக் கூலிகள் வேலை செய்து வந்தனர். அவ்வொப்பந்தக் கூலிகள், அத் தோட்டத்தலைவர் களால் வண்டி மாடுகள்போல் மதித்து நடத்தப்பட்டு வந்தனர். ஒருவன் தன் எருத்து மாடுகளை வண்டியில் பூட்டி ஓயாமல் நெடுநேரம் ஓட்டுகிறான்; ஓடஓட விரைவாக ஓட்டுகிறான்; பெரும் பாரத்தை ஏற்றி, மாடுகள் இழுக்க முடியாமல் திண்டாடினால், ஈவிரக்க மின்றித் தடியால் அடியடியென்று கண்டபடி அடிக்கிறான்; உழைத்துக் களைத்த மாடுகளுக்கு வயிறாரத் தீனி போடாமல் கட்டித் தள்ளுகிறான். இதை உங்களில் சிலர் பார்த்திருக் கலாம். ஆனால், இக் கொடுமையை ஏனென்று கேட்பவர் யாரும் இல்லையல்லவா? அம் மாடுகள் தனக்கு வேண்டா மென்றால் வேறொருவருக்கு விற்று விடுகிறான். வண்டிக் காரன் வண்டி மாடுகளை நடத்துவது போலவே, அத்தோட்டத் தலைவர்கள் அவ்வொப்பந்தக் கூலிகளை நடத்தி வந்தனர். இவ்விருவர்க்கும் சிறிதும் வேறுபாடே இல்லை. இத்தகைய கொடுமையைக் கண்டு மனம் பொறாத தனாலேயே, அண்ணல் அவ்வொப்பந்தக் கூலி முறையை அரும்பாடுபட்டு அறவே ஒழித்தார். அண்ணல் தென்னாப்பிரிக்காவில் பொதுத் தொண்டாற்றிக் கொண்டிருந்தபோது, தோட்டத் தலைவர்களால் துன்புறுத்தப் பட்ட ஒப்பந்தக் கூலிகளாகிய ஏழை எளியோர், அடிக்கடி வந்து அண்ணலிடம் தங்கள் குறைகளை முறையிடுவர். உடனே அண்ணல் அதற்கு வேண்டிய முயற்சி செய்து, அவர்கள் குறை பாடுகளைத் தீர்த்து உதவுவர். நெட்டால் இந்தியரில் பெரும்பாலோர் தமிழர்களாவர். அண்ணலின் தாய்மொழி-குசராத்தி. அண்ணலுக்குத் தாய் மொழியோடு ஆங்கிலமும் தெரியும்; ஆனால், தமிழ் தெரியாது. அவ்வேழைத் தமிழர்கள் சொல்வதைக் கேட்டுத் தெரிந்து கொள்வதும், தாம் அன்னார்க்கு வேண்டியதைச் சொல்வதும், எங்ஙனம்? அதற்காகத் தமிழ்க் கணக்குப் பிள்ளை ஒருவரை அண்ணல் தம்மிடம் வைத்திருந்தார். அக்கணக்குப் பிள்ளை, தமிழர் சொல்வதை ஆங்கிலத்திலும், அண்ணல் சொல்வதைத் தமிழிலும் மொழி பெயர்த்துச் சொல்லி வந்தார். ஒருநாள் அண்ணல் தம் வீட்டின் முன்னறையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். தமிழ்க் கணக்குப் பிள்ளையும் கூட இருந்தார். அப்போது ஒரு தமிழ் இளைஞன் அங்கு ஓடிவந்தான். இடுப்பில் கந்தைத்துணி; கையில் அழுக்கடைந்த தலைத் துண்டு - இக்கோலத்துடன் வந்த அவன், அழுது கொண்டு நின்றான். அவன் முன்பற்கள் இரண்டு உடைந்துபோயிருந்தன. உதடுகள் கிழிந்திருந்தன. வாயிலிருந்து குருதி (ரத்தம்) கொட்டிற்று. அவன் உடல் நடுங்கிற்று; உள்ளங் கலங்கிற்று; மேலெல்லாம் வேர்த்துக் கொட்டியது. அண்ணல் அவனை அந்நிலையில் கண்டார்; உள்ளம் உருகினார். அவன் கண்களைப் போலவே அண்ணல் கண்களும் கண்ணீரை உதிர்த்தன. தமது தமிழ்க் கணக்குப் பிள்ளையைக் கொண்டு நடந்ததை அறிந்தனர். அறிந்ததும், ‘நானிருக்கிறேன்; அஞ்சாதே; என்னால் இயன்றதைச் செய்கிறேன்’ என்று அவனைத் தட்டிக் கொடுத்தார்; அவன் கண்ணீரைத் துடைத்தார். அவன் ஒரு தென்பாண்டி நாட்டுத் தமிழன்; டர்பனில் உள்ள ஒரு வெள்ளைக்காரனிடம் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை செய்து வந்தான். அவன் பெயர் - பாலசுந்தரம். அவன் தலைவன் அவன் மீது ஏதோ சினங் கொண்டான். அவ்வளவு தான்! அடியடியென்று அடித்தான்; அதாவது நையப் புடைத்தான். முன் பற்கள் இரண்டையும் உடைத்து விட்டான். கேள்வி கேட்பாடுதான் இல்லையே, ஒப்பந்தக் கூலிக்கு. உடல் நைந்ததும் பற்கள் உடைந்ததுந்தான் மிச்சம்! மூச்சுப் பேச்சின்றி வந்து, அண்ணலைப் புகலடைந்தான் பாலசுந்தரம். உடனே அண்ணல் பாலசுந்தரத்தை மருத்துவரிடம் அழைத்துப் போய் மருத்துவம் செய்வித்தார். அவன் உடம்பில் இருந்த புண்களைப் பற்றி மருத்துவரிடம் சான்றிதழ் வாங்கினார்; பாலசுந்தரத்தை நீதிபதியிடம் அழைத்துப் போய், அவன் வாக்கு மூலத்தைக் கொடுக்கும்படி செய்தார். இவற்றை யெல்லாம் பாலசுந்தரத்தினால், இவ்வளவு விரைவில், இவ்வளவு எளிதில் செய்ய முடியுமா? இதற் கெல்லாம் அவன் பணத்துக்கெங்கே போவான்? நீதிபதியை அவன் உடனே பார்க்க முடியுமா என்ன? அண்ணலின் உதவியில்லையேல், பாலசுந்தரத்தின் நிலை அதே நிலைதான்! பாலசுந்தரத்தின் தலைவனுக்குத் தண்டனை வாங்கித் தரவேண்டும் என்பது அண்ணலின் நோக்கமன்று. பாலசுந் தரத்தை அவன் தலைவனிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்பதே அண்ணலின் நோக்கம். ஒப்பந்தக் கூலிதான் மாடுபோன்ற வனாயிற்றே; தலைவனின் உடன்பாடில்லாமல் அவன் வேறு யாரிடமும் போய் வேலைக்குச் சேரமுடியா தல்லவா? விற்றுக் கொள்ளத்தக்க அத்தகு அடிமையல்லவா ஒப்பந்தக் கூலி? எனவே, அவனை விடுதலை செய்வதற்காக, அண்ணல் ஒப்பந்தத் தொழிலாளியின் சட்டத்தை நன்கு படித்துப் பார்த்தார். ‘ஓர் ஒப்பந்தத் தொழிலாளி, முன்னாடியே தன் தலைவனுக்கு அறிவிக்காமல் வேலையை விட்டு நின்றால், அவன் மீது சட்டப் படி வழக்குத் தொடரலாம். குற்றம் உறுதி செய்யப் பட்டால், அவனைச் சிறைக் கனுப்பலாம்’ என்று காணப் பட்டது. இந்நிலைமையில் பாலசுந்தரத்தைக் காப்பதெப்படி? அத்தலைவனிடமே அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை. பாலசுந்தரம் தம்மிடம் வந்தது, மருத்துவரிடம் சான்றிதழ் வாங்கியது, நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்தது ஆகியவற்றை அத்தலைவன் அறிந்தால், பாலசுந்தரத்தைச் சும்மாவா விடுவான்? அவன் கடுஞ்சினத்துக் கல்லவா இவன் ஆளாக நேரிடும்? பாக்கியுள்ள பற்களும் அல்லவா உடைபடும்? பாலசுந்தரத்தைக் கொன்றால் கூடக் கேட்பவர் யார்? அண்ணல் நன்கு எண்ணிப் பார்த்தார்; முடிவில் அத்தலைவனிடமே சென்றார்; “உங்கள் மீது வழக்கு தொடர்ந்து உங்களுக்குத் தண்டனை வாங்கித் தரவேண்டும் என்பது என் விருப்ப மன்று; பால சுந்தரத்தின் ஒப்பந்தத்தை வேறொருவருக்கு மாற்றிக் கொடுத் தீர்களானால் போதும்” என்றார். அத்தலைவன் அதற்கு உடன் பட்டான். பின்னர், ஒப்பந்தத் தொழிலாளரின் பாது காவலர் என்னும் அதிகாரியைப் பார்த்தார். அவரும் அதற் கிசைந்தார். இனி, ஒரு புதிய தலைவனைப் பார்க்கவேண்டும். பால சுந்தரத்தை ஏற்றுக் கொள்ளும்படி அத்தலைவனைச் செய்ய வேண்டும். இந்தியர்க்கு ஒப்பந்தக் கூலி வைத்துக் கொள்ளும் உரிமை இல்லை. எனவே, ஒரு வெள்ளைக் காரனைப் பார்த்துச் செய்தியைச் சொன்னார். அவன் ‘சரி’ என்று இசைந்தான். பால சுந்தரத்தின் பழைய ஒப்பந்தத்தை விடுதலை செய்தார். பாலசுந்தரத்தின் செய்தி ஒவ்வொரு ஒப்பந்தத் தொழிலாளி செவிக்கும் எட்டியது. அவர்கள் அண்ணலை மனமாரப் பாராட் டினர்; அண்ணலிடம் அளவுகடந்த அன்புடையராயினர்; தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டனர். இச்செய்தி தமிழ்நாடு முழுவதும் பரவியது. தமிழ்ச் செய்தித் தாள்களின் வாயிலாய் அறிந்த தமிழ் மக்கள், அண்ணலை மனமார வாழ்த்தினர். தமிழர் தலைவர்கள் அண்ணலுக்குத் தங்கள் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டனர். தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர் எவரும் வெள்ளைக் காரரைப் பார்க்கும் போது உருமாலையை எடுத்துக் கொள்ள வேண்டும். ஓர் இந்தியன் உருமாலை கட்டிக் கொண்டு தங்கள் முன் வருவது தங்களைஅவமதிப்பதாகும் என அவ் வெள்ளைக் காரர் எண்ணினர். இதற்காகவே அத்தகைய வழக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர். அவ்வழக்கப் படியே பாலசுந்தரம், தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்துக் கையில் பிடித்துக் கொண்டு அண்ணலிடம் வந்தான். அவன் வந்ததும் துண்டைத் தலையில் கட்டிக் கொள்ளும் படி சொன்னார். அவன் முதலில் தயங்கி விட்டுப் பின் தலையில் சுற்றிக் கொண்டான். அப்போது அவன் உள்ளூற மகிழ்ந்தான்; மனத்துக்குள்ளாகவே அண்ணலை வாழ்த்தினான். அண்ணல் இல்லையேல் பாலசுந்தரத்தின் நிலை அதே நிலைதான்! 11. வழக்கறிஞர் தொழில் உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும், உங்களிற் பலர் கலைக் கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் பெறலாம். ஒரு சிலர் அரசியல் அதிகாரிகளாகலாம். சிலர் வேறு வேலைகளில் அமரலாம். சிலர் பயிற்சிக் கல்லூரியில் படித்து இதே பள்ளி ஆசிரியராகலாம். சிலர் தமிழ்க் கல்லூரியில் படித்துத் தமிழாசிரியர் ஆகலாம். சிலர் பொறியியற் கல்லூரியில் படித்துப் பொறிவலாளர் (எஞ்சினீயர்) ஆகலாம். சிலர் மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவர் (டாக்டர்) ஆகலாம். சிலர் சட்டக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று வழக்கறிஞர் ஆகலாம். வழக்கறிஞர் தொழில் மிகவும் சிக்கலான ஒரு தொழிலாகும். பொய்யை மெய்யாக்குவதும், மெய்யைப் பொய்யாக்குவதுமே பெரும்பாலும் வழக்கறிஞர் தொழிலாக இருந்து வருகிறது. அடிதின்றவன், ‘அவன் என்னை அடித்து விட்டான்’ என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கிறான். அடித்தவன், ‘நான் அவனை அடிக்க வில்லை’ என்று எதிர்வழக் காடுகிறான். அடிபட்டவனும் வழக்கறிஞர் வைத்து வழக்காடுகிறான். அடித்த வனும் வழக்கறிஞர் வைத்து வழக்காடுகிறான். அதாவது, வழக்காளி, எதிர்வழக்காளி ஆகிய இருவருமே வழக்கறிஞர் வைத்து வழக்காடுகின்றனர். இவ்விரண்டனுள் ஒன்று பொய்யாகவே தான் இருக்க வேண்டும். ‘சொல்வன்மையினால் பொய் மெய்யாகும்; சொலமாட்டா மையால் - சொல்வன்மை இன்மையால் - மெய் பொய்யாகும்’ என்கின்றார், வெற்றி வேற்கை நூலாசிரியர். ஒரு வழக்கு வெல்வதும் தோற்பதும், அவ்வழக்கை நடத்தும் வழக்கறிஞரின் சொல்வன்மை, சொல்வன்மை யின்மையைப் பொறுத்ததே யாகும் என்பதாம். ஒரு வழக்குத் தோற்பது போல் இருந்தால், பெரிய வழக்கறிஞரை வைப்பதும் இது பற்றியேயாகும். இது, காந்தியடிகளுக்குத் தெரியாத தொன்றல்ல. ஓர் உண்மையான வழக்குத் தொடர்ந்த ஒருவனுக்கு, அவ்வழக்கை எடுத்துரைக்கும் சொல்லாற்றல் இன்மையால், அவ்வழக்குத் தோற்று விடுகிறது. வீண்பழி சுமத்தப் பெற்ற ஒருவன், அதனை எடுத்துக் காட்டும் சொல்வன்மை இன்மையால், தண்டனைக் குள்ளாகின்றான். இதற்காகவே, வழக்காளி, எதிர்வழக்காளி இருவரும் வழக்கறிஞர்களைக் கொண்டு தங்கள் வழக்கை நடத்துகிறார்கள். உலகில் உண்மையை நிலை நாட்டவே நீதி மன்றங்கள் உள்ளன. நீதிபதியும் ஒரு வழக்கறிஞரே என்னும் உண்மையை அண்ணல் நன்கு அறிவர். எனவே, அவர் உண்மையை நிலை நாட்டவே வழக்காடி யிருக்கிறார். உண்மையல்ல வென்று தெரிந்த வழக்குகளின் கட்சிக்காரரை, அதை ஒப்புக் கொள்ளும் படியும் செய்திருக்கிறார். ‘வழக்கில் உண்மை கிடைக்காதவர் பக்கம் நின்று வழக்காடி, அவர்க்கு உண்மை கிடைக்கும்படி செய்வதே வழக்கறிஞர் தொழிலாகும்’ என்று அண்ணலே கூறியுள்ளார். 1. அண்ணல் ஒரு வழக்கை நடத்திக் கொண்டிருந்தார்; கட்சிக்காரர் தம்மை ஏமாற்றி விட்டார் என்பதைக் கண்டு கொண்டார். எதிரி வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யும் போது, அக் கட்சிக்காரர் விழித்தார். அது கண்ட அண்ணல், வழக்காடாமலே அவ்வழக்கைத் தள்ளிவிடும்படி நீதிபதியைக் கேட்டுக் கொண்டார். அது கண்ட எதிர் தரப்பு வழக்கறிஞர் கள் வியப்புற்றனர். நீதிபதியும் வியப்படைந்தார். தம்மிடம் பொய் வழக்குக் கொண்டு வந்ததற்காக அண்ணல் தம் கட்சிக் காரரைக் கண்டித்தார். பொய் வழக்குகளை அண்ணல் ஏற்றுக் கொள்வதில்லை என்பது, அக்கட்சிக் காரருக்கு முன்னமே தெரியும். ஆகவே, அவர் தம் தவற்றை ஒப்புக் கொண்ட தோடு, அண்ணலிடம் மிக்க அன்புங் கொண்டார். காந்தியடிகள் ஒரு கறுப்பர் என்பதையுங்கூட மறந்து, வெள்ளைக் கார வழக்கறி ஞர்கள் அண்ணல் பால் அளவு கடந்த அன்புடையராயினர். 2. அண்ணலின் கட்சிக் காரர்களில் மிகச் சிறந்தவர் ஒருவரின் வழக்கு. அதில் மிகச்சிக்கலான கணக்கு மிக அதிகம். பல நீதி மன்றங்களில் நீண்ட காலமாய் அவ்வழக்கு நடந்து வந்தது. கடைசியாக நீதிமன்றத்தாரால், திறமை வாய்ந்த கணக்கர் களின் தீர்ப்புக்கு அது விடப் பட்டது. அன்னார், அண்ணலின் கட்சிக்கு முற்றும் நன்மையாகத் தீர்ப்புக் கூறினர். ஆனால், அவர்கள் கணக்கில் ஒரு தவறுதல் செய்து விட்டனர். அதாவது, பற்றுக் கலத்தில் பதிய வேண்டிய ஒரு தொகையை வரவு கலத்தில் பதிந்து விட்டனர். அதனால், எதிரிகள் அத்தவறு தலைக் கண்டு பிடிக்க வில்லை. வேறு காரணங்கள் காட்டி அத்தீர்ப்பை எதிர்த்தனர். அண்ணல் இத்தவறுதலை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார். அவ்வாறு ஒப்புக் கொண்டால் தம் கட்சிக்காரர் வழக்கிழப்பர். எனவே, பெரிய வழக்கறிஞர், தம் கட்சிக் காரரைக் காட்டிக் கொடுத்தல் அறிவுடைமை ஆகாது என மறுத்தார். ‘நீதி மன்றத்தாரோ, எதிர் தரப்பினரோ இத் தவறுதலைக் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்பது, என்ன உறுதி? அப்புறம் நாம் என்ன செய்வது?’ என்றார் அண்ணல். கட்சிக்காரரும் ‘சரி’ என ஒப்புக் கொண்டார். அண்ணல் அத்தவறுதலை எடுத்துக் காட்டி, அது ஏற்பட்டதன் காரணத்தையும் விளக்கினார். நீதிபதிகள் அண்ணலின் விளக்கத்தை ஒப்புக் கொண்டனர். ஆனால், கவனக் குறைவால் ஏற்பட்டதென, அவர்களே அத்தவற்றைத் திருத்தினர். அதனால், அண்ணலின் கட்சிக் காரருக்கு வெற்றி கிடைத்தது. கட்சிக்காரரும் பெரிய வழக்கறிஞரும் பெரு மகிழ்ச்சியடைந்தனர். ‘உண்மைக்கு உட்பட்டு வழக்கறிஞர் தொழில் நடத்தலாம்’ என்பதை அண்ணல் உண்மையாக்கினார். நீங்களும் வழக்கறிஞர் களானால், உண்மையைக் கடைப்பிடித்து நீதியை நிலை நாட்டுங்கள். 12. தன்கையே தனக்கு உதவி ‘தொட்டாற் சிணுங்கி’ என்னும் செடி, நாம் தொட்டால் சுருங்கி விடுகிறது. நீங்கள் அதைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து, அது சுருங்குவதைக் கண்டு களித்திருப்பீர்கள். எனவே, மரம் செடி கொடிகள், தொட்டால் அறியும் மெய்யறிவுடைய ஓரறி வுயிர்களாகும். மரஞ் செடி கொடிகள் தமது உணவைத் தாமே எடுத்துக் கொள்கின்றன, அதாவது, தமது வேலையைத் தாமே செய்து கொள்கின்றன. அட்டை, குடவளைப் பூச்சி முதலியன, மெய்யறி வோடு, நாவினால் சுவைத்தறியும் ஈரறி வுயிர்கள். கறையான், எறும்பு முதலியன, அந்நாவறிவோடு, மூக்கால் முகர்ந்தறியும் மூவறிவுயிர்கள். தும்பி தேனீக்கள் முதலியன, அம் மூக்கறி வோடு, கண்ணால் கண்டறியும் நாலறிவுயிர்கள். பறவையும் விலங்கும், அக் கண்ண றிவோடு காதால் கேட்டறியும் ஐயறி வுயிர்கள். இவை யெல்லாம் தம் உணவைத் தாமே தேடிக் கொள்கின்றன. எறும்புகள் தாமே தம் வளையைத் தோண்டிக் கொள்வதைப் பார்க்கிறோம். கறையான் புற்று, ஒரு வியத்தகு வேலைப்பாடுடைய தாகும். அதைக் கறையான்கள் தாமே தம் வாயில் ஊறும் நீரால் மண்ணை நனைத்துக் கட்டிக் கொள் கின்றன. தும்பிகள் பூக்களில் சென்று தாமே தேனுண்கின்றன. பறவைகள் தம் கூட்டைத் தாமே கட்டிக் கொள்கின்றன. தூக்கணங் குருவிக் கூடு வியத்தகு வேலைப்பாடுடைய தொன்றாகும். அக் கூட்டை அக்குருவிகள் தாமாகவே கட்டிக் கொள்கின்றன. எனவே, ஓரறிவுயிர் முதல் ஐயறிவுயிர் ஈறாகவுள்ள எல்லா உயிர் வகைகளும் தங்கள் வேலையைத் தாங்களே செய்து கொள்கின்றன. ஆறறிவுடைய மக்களாகிய நாம் மட்டும், அன்றன்று நம் துணிகளை நாமே துவைத்துக் கொள்ள முயலுவ தில்லை. வெளியூர் போய் வந்தால், வண்டிப் பேட்டையி லிருந்து ஒரு சிறு கைப்பையைக் கூட நாமே கொண்டுவர வெட்கப்படு கிறோம். இயன்ற மட்டும் தம் சொந்த வேலைகளைத் தாமே செய்து கொள்வதே தகுதியாகும். ‘தன்கையே தனக்கு உதவி’ என்பது, ஒரு பொருள் பொதிந்த பொன்மொழி யாகும். எளிய வாழ்க்கைக்கு இலக்கிய மாய் விளங்கியவர் அண்ணல் காந்தி. தம் சொந்த வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாத் தொழில் களையும் தாமே செய்து கொள்ளுதல், எளிய வாழ்க்கைக்கு ஏற்றதாகும். இதைக் கடைப் பிடித்து நடப்பதில் பெரு விருப்பு உடையவர் காந்தியடிகள். தமது மலக்குழியைத் தாமே துப்புரவு செய்து வந்தாரெனில், வேறு தொழில்கள் எம்மாத்திரம்? வாழ்க் கைக்கு இன்றியமையாத எல்லாத் தொழிலும் சரிநிகர் என்பது அண்ணலின் கொள்கை. அண்ணல் நெட்டாலில் இருந்த போது, துணி வெளுப்போர் கூலி நிரம்ப ஆனது. குறித்த காலத்தில் துணிகளைக் கொண்டு வந்து கொடுப்பதுமில்லை. நாள் தவறாது கழுத்துப் பட்டியும், நாள் விட்டு நாள் சட்டையும் மாற்றியாக வேண்டும். ஒரு நாட் கட்டிய கழுத்துப் பட்டியை மறுநாளுங் கட்டிக்கொண்டு நீதி மன்றத்துக்குப் போகக் கூடாது. ஆதலால், முப்பத்துக்கு மேல் சட்டையும் கழுத்துப் பட்டியும் இருந்தாலுங் கூடப் போதவில்லை. இது, எளிய வாழ்க்கைக்கும் ஏற்றதாக இல்லை. எனவே, அண்ணல் சலவை கருவிகள் வாங்கினார்; சலவைத் தொழிலைப் பற்றிய நூலொன்று வாங்கி அத்தொழில் செய்யும் முறையைக் கற்றுக் கொண்டார்; மனைவி யார்க்கும் கற்றுக் கொடுத்தார். முதல் முதல் ஒரு கழுத்துப் பட்டியை வெளுத்துப் பெட்டி போட்டார். மாப்பசையை அளவுக்கு மேல் தடவி விட்டார். பெட்டி போதுமான அளவு சூடாக இல்லை. தீப்பட்டுக் கழுத்துப் பட்டி வெந்து போகுமெனப் பெட்டியைப் போதிய அளவு அழுத்தித் தேய்க்கவும் இல்லை. இவ்வாறு பெட்டி போட்ட அக்கழுத்துப் பட்டியைக் கட்டிக் கொண்டு நீதிமன்றத் துக்குப் போனார். வழக்கறிஞர்களெல்லாம் கொல்லென்று சிரித்தார்கள். “என் கழுத்துப்பட்டியை நானே வெளுத்தது இதுதான் முதல் தடவை. ஆகையினால்தான் மாவு உதிர்ந்து கொண்டிருக்கிறது. மாவு கொஞ்சம் அதிகமாகப் போய் விட்டது; அவ்வளவு தான். அதற்காக நான் கவலைப் படவில்லை. மேலும், நீங்கள் கொஞ்சம் சிரித்து மகிழ்வதற்கு அது காரணமாக இருப்பதுபற்றி எனக்கு மகிழ்ச்சியே” என்றார் அண்ணல். “இங்கே சலவைச் சாலைகளுக்கு குறைவா என்ன?” என்றார் ஒருவர். “சலவைச் சாலைகட்குக் குறைவில்லை. ஆனால், சலவைக் கூலி அதிகம் ஆகிறது. ஒருகழுத்துப்பட்டி வெளுக்குங் கூலி ஏறக்குறைய அதன் விலை அளவுக்கு ஆகிவிடுகிறது. மேலும் வெளுப்போரை நம்பியே எத்தனை நாளைக்கு வாழ்க்கை நடத்துவது? ஆகையால், என் உடைகளை நானே வெளுத்துக் கொள்ள விரும்புகின்றேன்” என்றார். அண்ணலின் தன்னம்பிக்கையைக் கண்ட அவர்கள் வியந்தனர். நாளடைவில் அண்ணல் சலவைத் தொழிலில் மிகவும் தேர்ச்சி பெற்றனர். கோபால கிருஷ்ணக் கோகலே அவர்களின் விலையுயர்ந்த மேல் வேட்டியைப் பெட்டி தேய்த்துக் கொடுத்து, அவரிடம் நற்சான்று பெறும் அளவுக்கு அத்தொழிலில் வல்லு நரானார். பிரிடோரியாவில் இருந்தபோது, அண்ணல் ஒரு வெள்ளைக் கார நாவிதன் கடைக்குச் சென்றார். அவன் அண்ணலை மிக இழிவாக மதித்து மயிர்வெட்ட மறுத்து விட்டான். அதனால் மனம் புண்பட்ட அண்ணல் ஒரு கத்தரிக் கோல் வாங்கினார்; பெரிய கண்ணாடி முன் நின்று மயிரை வெட்டிக் கொண்டார்; முன்புறத்து மயிரைக் கூடியவரை நன்றாக வெட்டிக் கொண்டார். ஆனால், பின்புறத்து மயிரைச் சரியாகக் கத்தரித்துக் கொள்ள முடியவில்லை. வேறுவழியில்லை. அப்படியே நீதிமன்றம் சென்றார். நீதி மன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள் குலுங்கக் குலுங்கச் சிரித்தனர். ‘நண்பர், காந்தி! உமது மயிருக்கு என்ன இக்கட்டு வந்தது? எலி கடித்துவிட்டதா என்ன?’ என்று கேட்டார் ஒருவர். “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இவ்வூர் வெள்ளை நாவிதன் என் கறுப்பு மயிரை வெட்ட மறுத்து விட்டான். அவனுக்கு அதனிடத்தில் அவ்வளவு அன்பு. எனவே, நன்றா யிருக்கிறதோ இல்லையோ, ‘தானே வெட்டிக் கொள்வதே சரி’ என்று நானே வெட்டிக் கொண்டேன்” என்றார். நாளடைவில் நாவிதர்களும் வியக்கும் வண்ணம் அவ்வளவு பயிற்சி பெற்றார். ‘தன்கையே தனக்கு உதவி’ என்பதற்கு அண்ணலே எடுத்துக்காட்டாவர். உங்கள் தொழிலை நீங்கள் செய்ய வெட்கப் படாதீர்கள். நமது படுக்கையை நாமே போட்டுப் படுத்தல், காலையில் படுக்கையைச் சுருட்டி வைத்தல், உண்ட கலத்தைக் கழுவி வைத்தல் முதலிய வற்றால் அம்மாவுக்கு வேலை மிச்சம். நமது துணிகளை நாமே துவைத்தல், நாமே முகமழித்துக் கொள்ளுதல் முதலியவற்றால் அப்பாவுக்கு பணம் மிச்சம்! கட்டுரைப் பயிற்சி 1. அண்ணல் காந்தி 1. காந்தி என்னும் சொல் 2. நாட்டுத் தொண்டு 2. உண்மையே பேசுதல் 1. அண்ணல் செய்த குற்றம் 2. அண்ணலின் ஆறுதல் 3. சொன்ன சொல் தவறாமை 1. இலண்டன் பயணம் 2. உறுதி மொழிக் கிடையூறு 3. சீமைப் படிப்பு 4. அறப்போர்த் தொடக்கம் 1. தென்னாப்பிரிக்கா இந்தியா 2. அண்ணலும் தென்னாப்பிரிக்காவும் 5. விடாப்பிடி 1. கோழி கூவுதல் 2. நிறவெறிக் கொடுமை 3. கஸ்தூரிபாயும் அண்ணலும் 6. பொறுமையின் எல்லை 1. வண்டித் தலைவனின் வன்செயல் 2. காப்பாளனின் கடுஞ்செயல் 7. தொட்டிற் பழக்கம் 1. புதுப்பண்ணைப் பொதுக்குடும்பம் 2. கெட்டவரும் நல்லவரும் 3. சிற்றினஞ் சேராமை 8. இன்னா செய்யாமை 1. வெள்ளையர் வெறிச்செயல் 2. அண்ணலின் பெருங்குணம் 9. துறவுள்ளம் 1. அண்ணலும் தென்னாப்பிரிக்கா இந்தியரும் 2. அன்னையும் அண்ணலும் 3. பொதுநலத் தொண்டர் கடமை 10. எளியோர்க் குதவுதல் 1. ஒப்பந்தக் கூலி 2. பாலசுந்தரத்தின் நிலை 11. வழக்கறிஞர் தொழில் 1. உண்மை வழக்கறிஞர் 2. வழக்கறிஞரும் வழக்கும் 12. தன்கையே தனக்கு உதவி 1. எளிய வாழ்க்கை 2. அண்ணலும் நற்செயலும்