பாவேந்தம் 12 உரைநடை நாடக இலக்கியம் - 5 ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் இளங்கணி பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 12 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16» வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 192 = 224 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 140/- கெட்டி அட்டை : உருபா. 190/- படிகள் : 1000 நூலாக்கம் : திருமதி வ. மலர், சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : திருமதி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.  : 044 2433 9030. பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! பாரதிதாசன் பெற்ற பேறு ‘பாவேந்தத் தொகுதிகளை ஒரு சேரப் பதிப்பிக்கப் பெற்ற பேறு! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. இதனை எதிர்த்துப் பெரியார் தலைமையில் மறைமலை அடிகள், திரு.வி.க., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப் படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின் மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  நூன்முகம் தமிழில் நாடகக் கலைக்கு நெடிய வரலாறு உண்டு. நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலனெறி வழக்கம் இருந்தமை தொல்காப்பியத்தால் (999) அறியப்படுகிறது. முத்தமிழில் மூன்றாவது நாடகம். முதலிரண்டும் கலந்தது நாடகம். சங்க இலக்கியத் தில் நாடகம் நிகழ்ந்தமைக்கும், மக்கள் விரும்பிப் பார்த்தமைக்கும் சான்றுகள் உள. நாடக மகளி ராடுகளத் தெடுத்த எனப் பெரும் பாணாற்றுப் படையும் (55) பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும் எனப் பட்டினப்பாலையும் (113) நாடக மகளிர் ஆடுகளத்தையும், மக்கள் விரும்பி நாடகம் பார்த்ததையும் குறிப்பிட்டுள்ளன. கலித்தொகையில் நாடகக் காட்சிகளாய்ப் பல பாடல்கள் அமைந்துள்ளன. நாடகம் என்பது ஒரு கதை தழுவி வரும் கூத்து என்றார் அடியார்க்கு நல்லார். ஆடரங்கின் அமைப்பு முதலியவற்றை அரங் கேற்றுக் காதையும் அதன் உரைகளும் சிறப்புற விவரிக்கின்றன. அரசரும் அவரைச் சார்ந்த மக்களும், எளிய மக்களும் நாடகம் பார்க்கும் நிலை சங்க காலத்திற்கு முன்பே இருந்தது. வேத்தியல், பொது வியல் என்னும் இருபிரிவுகளும் இருந்தன. வேத்தியல் அரசர் முதலி யோர்க்கு உரியது. பொதுவியல் பிற மக்களுக்கு உரியது. நாடகம் கூத்து என்றும் கூறப்பட்டது. இவ்வழக்கு இன்று வரை நிலவுகிறது. கூத்தில் வல்லார் கூத்தர் எனப்பட்டனர். கூத்தினை ஆடல் என்றும் வழங்கினர். இறைவனையே ஆடல்வல்லான், கூத்தன், கூத்தபிரான் என்றெல்லாம் போற்றினர். தமிழ்க் காப்பியங்களில் பல நாடகக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. மறைந்துபோன நாடக நூல்களையும், நாடக இலக்கண நூல்களையும் சிலப்பதிகார உரையாசிரியர்கள் தம் உரையில் குறிப்பிட்டுள்ளனர். இந்நூல்களின் மறைவால் தொன்மைத் தமிழ் நாடகங்களின் இயல்புகளை அறிய இயலாதவராகிறோம். முதலாம் இராசராசன் ஆட்சிக் காலத்தில் (கி.பி.985-1012) தஞ்சை பெரிய கோவிலில் இராசராச நாடகம் நிகழ்ந்தமைக்குச் சான்றுகள் உண்டு. பிற கோயில்களிலும் பூம்புலியூர் முதலிய நாடகங்கள் நிகழ்ந்தமைக்குக் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. தளிச்சேரிப் பெண்டுகளால் நாட்டிய நாடகங்களும் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் பிறமொழி ஆட்சியாளர்களால் தமிழ் நாடகமரபுச் சிதைந்தது. பொருநர், கூத்தர், விறலியர், பாணர், பாடினியர் முதலியோர் தத்தம் கலைகளை மறந்தனர். போற்றுவாரின்றி அழிந்த கலைகளுள் நாடகமும் ஒன்று. பக்தி நெறியின் செல்வாக்கால் வடமொழிப் புராணங்கள் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றன. புராணக் கதைகள் நாடகங்களாய் நடிக்கப்பட்டன. ஊர் ஊருக்குப் பல குழுக்கள் முளைத்தன. நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமிகள் பல புராண நாடகங்களைப் புதிதாக இயற்றி நாடக மேடையேற்றினார். தமிழகமெங்கும் ஆங்காங்கே பாவலர்க ளாலும் கலைஞர்களாலும் நாடகங்களும் நாடகக்குழுக்களும் தோன்றின. ஊர் விழாக்களின் போது விடிய விடிய புராண நாடகங்கள் நிகழ்த்தப் பெற்றன. ஆங்கிலக் கல்வியின் தாக்கத்தால் ஆங்கில நாடகங்களைப் போலத் தமிழிலும் அங்கம், காட்சி (களம்) அமைக்கும் முறை தோன்றியது. பெ. சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம், பரிதிமாற் கலைஞரின் ரூபாவதி, மதிவாணன், மறைமலையடிகளின் சாகுந்தலம், பம்மல் சம்பந்தனாரின் சபாபதி முதலிய நாடகங்கள் தோன்றின. தேசிய விடுதலை உணர்வு மிக்கெழுந்தபோது கதரின் வெற்றி முதலிய நாடகங்கள் எழுந்தன. புராண நாடகங்களும் ஊடே அமைந்த பாடல்களால் விடுதலையுணர்வுக்கு வித்திட்டன. திராவிட இயக்கத்தவரின் பகுத்தறிவுக் கருத்துகள் நாடெங்கும் பரவின. சமூகச் சீர்த்திருத்த எண்ணங்கள் தளிர்த்தன. பகுத்தறிவு, மூட நம்பிக்கையொழிப்பு, மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு, மறுமணம், பெண்ணுரிமை, குழந்தைமணக் கொடுமை, தொழிலாளர் நலன், தமிழிசை இயக்கம், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு முதலியவற்றை வலியுறுத்தும் சமூக நாடகங்கள் கனல் தெறிக்கும் உரையாடல்களுடன் மக்கள் நெஞ்சத்தைத்தொட்டன. புலவர்களும், கலைஞர்களும் இத்தகைய சமூகச் சீர்திருத்த நாடகங்களைப் படைத்தனர். பல நாடகக் குழுக்களும் வேளை தவறாமல் இவ்வேலையைச் செய்தன. அரசியல் கட்சிகளின் மாநாடுகளிலும் நாடகங்கள் இடம் பெற்றன. பள்ளிகளின் இலக்கிய மன்றங்களில் மாணவர்கள் இலக்கிய, புராண நாடகங்களை நடித்தனர். இக்காலச் சூழலில் பள்ளியில் பயிலும் போதே கனகசுப்புரத்தினம் பள்ளி ஆண்டுவிழாவில் நடித்துள்ளார். தமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்கு கற்றுப் பெரும்புலமையுற்ற நம் கவிஞர் இசைப்புலமையும் நிறைந்திருந்தார் பாடல்களைப் பாடிக் குவிக்கும் பாவேந்தரானார். ஆசிரியப் பணியாற்றும்போதே சிந்தாமணி, வீரத்தாய் என்ற நாடகங்களை மாணவர்களால் பள்ளி மேடைகளில் அரங்கேற்றியுள்ளார். இளமையிலிருந்தே, இயற்றமிழிலும், இசைத்தமிழிலும் ஆர்வ மும் ஈடுபாடும் கொண்ட நம் கவிஞருக்கு நாடகத் தமிழும் கைவந்த கலையாயிற்று. திரைப்படங்களுக்குப் பாடல் எழுதத் தொடங்கினார். கதைகளும், கவிதைகளும் எழுதிக் குவித்த நம் கவிஞர் அவற்றை நாடகமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். 1938-இல் முதல் கவிதை நாடகம் வீரத்தாய் வெளிவந்தது. பாவேந்தரின் நாடகங்களைக் கவிதை நாடகங்கள், உரைநடை நாடகங்கள் இரண்டும் கலந்த நாடகங்கள் எனப் பகுக்கலாம். fhjyh flikah?, புரட்சிக்கவி ஆகியன முன்னர்க் கதைப்பாடலாயிருந்து பின்னர் நாடகமாயின. பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி முதலியன முதலில் நாடகங்களாகப் படைக்கப்பட்டுப் பின்னர் கதைப்பாடல் களாயின. 1941-இல் தோழர் இராசவேலுக்குப் பாவேந்தர் எழுதிய கடிதத் தில்கவிதைகள், நாடகம், சிறுகதை தமிழர் கொள்கை சுவைக்கான கருத்துமாக எழுத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் பாவேந்தரின் நாடகங்கள், தமிழர் கொள்கையை வலியுறுத்துவனவாய், சுவையுடையனவாய், கருத்துகள் நிறைந்ததாய் விளங்கின என்பது தெளிவு. 1943-இல் முத்தமிழ் அரங்கு என்னும் நாடகக்குழு அமைப்பதில் ஆர்வமும் ஈடுபாடும் காட்டியுள்ளார். தோழர் செல்லப்ப ரெட்டியாருக்கு எழுதிய கடிதங்களில் நாடக அரங்கு, நடிகர்கள், பாடகர், ஆடல் வல்லவர், வாத்தியக்காரர், நாட்டியக்காரர் ஆகியோரை அமைக்கவும், அவர்களைத் தங்க வைக்கவும், சம்பளம் கொடுக்கவும் பாவேந்தர் காட்டிய ஆர்வம், நெருக்கடி முதலியன புலப்படுகின்றன. முத்தமிழ் நிலையத்தையும் நாடகத்திற்கென்றே சென்னை சாந்தோம் பகுதியில் கடற்கரையொட்டி ஒரு பெரிய வீட்டில் அமைத்திருந்தார். புரட்சிக் கவி, இசையமுது நாடகங்கள் இதன் சார்பில் நடிக்கப்பட்டன. நடிப்பு, காட்சியமைப்பு, நாட்டியம், இசை முதலிய ஒவ்வொன்றிலும் பாவேந்தர் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். தேர்ந்த இயக்குநராய் விளங்கினார் எனலாம். சில நாடகங்கள் பாவேந்தரின் முன்னிலை யில் ஒத்திகை செய்யப்பட்டுள்ளன. அப்போது நடிக்கும்முறை, பாடிய முறை முதலியவற்றில் திருத்தங்களைக் கூறிச் செயற்படுத்தியுள்ளார். இன்ப இரவு என்னும் நாடகம் தந்தை பெரியார் முன்னிலை யில் சென்னை சாந்தோம் பகுதியில் 2.4.1944 இல் நடிக்கப்பட்டது. பார்த்த பெரியார் பாராட்டியுள்ளார். பாராட்டு 8. 1. 44 குடி அரசு இதழில் வெளிவந்ததின் ஒரு பகுதி: இன்று இந்த நாட்டில் தமிழும் தமிழ்க் கவியும், தமிழ் இசையும் தமிழர்களுடைய முன்னேற்றத்துக்கும், தன் மானத்துக்கும் பயன்படும்படி மக்கள் உணர, மக்களை ஊக்குவிக்க அவர் ஒருவரே என் கண்ணுக்குத் தென்படுகிறார். அவரை நாம் பயன்படுத்திக் கொள்வதில் தான் நம் வெற்றியின் தன்மை இருக்கிறது இதனால் பெரியாரின் கொள்கைக்கேற்ற தன் மானமிக்கவராய்ப் பெரியார்க்கு தெரிந்த ஒரே கவிஞர் நம் பாவேந்தர்தாம். பாவேந்தரின் நாடகங்களில் இளங்கணி பதிப்பகத் தொகுப்பு களில் இடம் பெற்றுள்ளவை 52. ஆய்வுத் தேடல்களுக்கு அகப்பட வேண்டியவையும் உள்ளன. இவற்றுள் முழுமை பெற்ற நாடகங்கள் பல. முழுமை பெறாமல் - முடிவு இல்லாமல் உள்ளனவும் இருக்கின்றன. வானொலிக்காகவும் சில நாடகங்களைப் படைத்துள்ளார். அவற்றில் உள்ள ஒலிக்குறிப்புக்களால் அக்குறிப்பு புலப்படுகின்றது. பாவேந்தர் படைப்புகள் பல. மாணவர் குறிப்பேடுகளில் எழுதப்பட்டவை. அவற்றின் பழைமையால் தெளிவில்லாப் பகுதிகளும் தெரிய வந்துள்ளன. இத்தொகுதியில் புதியனவாய் வருவனவும் உள்ளன. பாவேந்தரின் நாடகங்கள் ஆய்வாளர்களின் ஆய்வுக்குட் பட்டுள்ளன. முனைவர் ச.சு.இளங்கோ பல வகைகளாகப் பகுத்துள்ளார். அவை: தமிழ் இலக்கியச் சார்பு நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், கற்பனை வரலாற்று நாடகங்கள், சமூக நாடகங்கள், அங்கத நாடகங்கள், ஆரியப்புரட்டு விளக்க நாடகங்கள், குழந்தைகளுக்கான நாடகங்கள், குறு நாடகங்கள் என்பன. வேறுவகையாகப் பகுப்பாரும் உளர். இன்பியல் நாடகம், துன்பியல் நாடகம் எனவும் நடிப்பதற்குரிய நாடகம், படிப்பதற்குரிய நாடகம் எனவும் பார்க்கும் பார்வையும் உள. படிப்பதற் குரிய நாடகங்களுள் சில, சில மாற்றங்களுடன் நடிப்பதற்குரியனவாக மாற்றப்பட்டுள்ளன. பழந்தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள், தனிப்பாடல்கள் முதலியவற்றில் கொண்டிருந்த ஈடுபாடும், புராணங்கள், பழக்க வழக்கங்கள், மத அமைப்புகள் முதலியவற்றின்மீது வைத்திருந்த எண்ணங்களும், திராவிட இயக்கக் கோட்பாடுகளின் செயல் வேகங் களும், மொழி ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சியும் இத்தகைய நாடகங்கள் தோன்றக் காரணமாயின. - பி. தமிழகன்  அறிஞர்கள் பார்வையில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்க்கவி; தமிழரின் கவி; தமிழின் மறுமலர்ச்சிக் காகத் தோன்றிய கவி; தமிழரின் புகழ் மீண்டும் மேதினியில் ஓங்க வேண்டு மெனப் பிறந்த கவி; அவர் நமது கவி. - கோவை அ. அய்யாமுத்து  நிமிர்ந்த பார்வை, அச்சமில்லை என்ற முறுக்கான மீசை வயதை விழுங்கிய வாலிப வீறு உரப்பான பேச்சு புதுமை வேட்கை கொண்ட உள்ளம் - இவையே பாரதிதாசர்! - சுத்தானந்த பாரதியார்  பாரதிதாசன் மொழிவரையறையால் தமிழ்க் கவிஞர் ஆனால் கருத் தளவையால், கவிதைச் சுவையளவையால், மொழி எல்லையையும், நாட்டு எல்லையையும், கால எல்லையையும் கடந்த உலகக் கவிஞர் களுள் ஒருவர். - கா. அப்பாத்துரையார்  மதத்தின் பேராலும், சாதியின் பேராலும் தர்மத்தின் பேராலும் நீதியின் பேராலும் யார் யார் கொள்ளையடிக்கிறார்களோ, யார் யார் மற்றவர்களை ஏமாற்றுகிறார்களோ யார் யார் பிறர் உழைப்பில் இன்பம் அனுபவிக்கின்றார்களோ அத்தனை பேர்களையும் துவேசிக்கிறார் பாரதிதாசன். - ஏ.கே. செட்டியார்  சாதி மதக் கொடுமைகளைத் தூள்தூளாக்க குருட்டுப் பழக்க வழக்கங்களைத் தகர்த்தெறிய, பகுத்தறிவை விரிவாக்க, தமிழ்ப் பற்று பொங்கியெழ, பெண்ணடிமைத்தனம் நொறுங்க, பொதுவாக நில, பண முதலாளிகளின் கொடுமையை உணர்த்த, சுருங்கச் சொன்னால் தொழி லாளித்துவ சீர்திருத்தமான பாடல்களைத் தந்துள்ளார் பாரதிதாசன் - ப. ஜீவானந்தம்  பாரதியாரின் பாடல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தில் சுதந்திர உணர்ச்சியை உண்டுபண்ணியது போல, பாரதிதாசனுடைய பாடல்கள் சமூகச் சீர்திருத்த உணர்ச்சியை மக்களுக்கு ஊட்டி வருகின்றன என்றால் மிகையாகாது. மதங்களிலும், பழைய ஆசாரங்களிலும் ஊறிக் கிடந்த மக்களிடையே இவருடைய பாடல்கள் ஒரு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணியிருக்கின்றன. ஆதலால் இவர் ஒரு புரட்சிக்கவி. அமெரிக்கப் புரட்சிக்கவி வால்ட்விட்மன். தமிழ் நாட்டுப் புரட்சிக்கவி பாரதிதாசன் - கவிமணி தேசி விநாயகம் பிள்ளை  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1 : இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி - 2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஒருநாள் நிகழ்ச்சி) இரண்டாம் பகுதி (விருந்தோம்பல்) மூன்றாம் பகுதி (திருமணம்) நான்காம் பகுதி (மக்கட்பேறு) ஐந்தாம் பகுதி (முதியோர் காதல்) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10 : உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரஸ்புடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (தீபாவளி) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (முத்துப் பையன்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஒரு காட்சி சிறு நாடகம்) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் ஐ & ஐஐ 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா 1. ஆக்கம், 2. தீவினை 7. கொய்யாக் கனிகள் (கவிதை நாடகம்) தொகுதி -12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி -13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி - காரியக்காரன் (கடவுள் விஷயத்தில் ஜாக்கிரதை) 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை (செவ்வாயுலக யாத்திரை) 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (விதவைகள் துயர்) 14. திருந்திய ராமாயணம்! (பால காண்டம் - டெலிபோன் படலம்) 15. இதயம் எப்படியிருக்கிறது? (ஏழைகள் சிரிக்கிறார்கள்) 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி (மான்களின் ஒற்றுமை கண்டு அஞ்சி இறந்தது) 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (னுசைநஉவடிச)யின் தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (அவளும் நானும்) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. “வாரி வயலார் வரலாறு” அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி -14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி -15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி -16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி -17 : பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி -18 : பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி -19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி -20 : கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி -22 : கட்டுரை இலக்கியம் - 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி -23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி -24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் (தொகுதி 23இன் தொடர்ச்சி) 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி -25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (நெடுங்கதை) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (சூநபயவiஎந): பிராசசு இந்தியா (ஞசடிஉநளள ஐனேயை) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. பொருளடக்கம் பொங்கல் மாமழை iii நுழையுமுன்‘... vii வலுவூட்டும் வரலாறு x பதிப்பின் மதிப்பு xiv நூன்முகம் xvii 1. போர்க்காதல் 2 2. படித்த பெண்கள் 45 3. ஆனந்த சாகரம் 91 4. புரட்சிக்கவி 164 5. சிந்தாமணி 167 6. லதா க்ருகம் 175 7. பாரதப் பாசறை 180 8. கருஞ் சிறுத்தை 188 9. ஏழை உழவன் 189 10. தமிழச்சியின் கத்தி! 190 11. பாண்டியன் பரிசு 190 போர்க்காதல் போர்க்காதல் நாடகம் அறிமுகம் எந்தையாரின் அழகிய கையெழுத்துப் படியாகக் கிடைத்த இந்த நாடகம், பீலிக்குடி என்ற ஊர்ப் பெயரில் தொடக்கமாகிப் பதின் மூன்று காட்சிகளில் நிறைவுறாமல் நிற்கிறது. பொன்னிறம் வீசிடும் மயிலிறகுக் கண்களும், கரும்பச்சைக் கதிர்களின் வீச்சும், மென்மையுமாய் நம் கண்ணைக் கவரும் மயிற்பீலி, அதனைப் போன்றே மென்மையான சொல்லாட்சியுடன் இயன்றிருக்கிறது இச்சிறு நாடகம். போர்க்காதல் எனும் தலைப்புக்குப் பொருத்தம் காண இயலாமல் இறுதிநிலை தெரியாமல் கிடைத்திருப்பதால் உறுதியாய் மதிப்பீடு செய்ய இயலவில்லையே என்கிற ஏக்கம் என்னுள் எழுந்தது. காலச்சூழலை ஒருவாறு கணித்தால், முடிவை நம் கற்பனையில் கண்டுகொள்ள வழி தோன்றும் என்கிற ஆவல். தன்மனங்கவர்ந்த பொற்கிளை என்னும் மங்கையைத் தாம் திருமணம் புரிந்துகொள்ள முடியாமல் தடுத்தார் தந்தை; மகன் சொக்கன், மனம் வெதும்பிச் செய்வ தறியாது திகைத்தான். எனை ஈன்ற தந்தையும், தாயும் மனம் குளிர்ந்து வாழட்டும் என்றெண்ணி ஊரைவிட்டு அகன்று துறவுக் கோலம் பூண்டு அண்டை நகர் சென்றடைகிறான். துன்பமற்ற நிலை எய்த வழி என்ன? ஆன்றோரைத் தேடியபோது, நரி ஒருவன் வழிகாட்டப், போலி ஒருவரின் முன் போய் நிற்கிறான். அவர்களின் பணம் பறிக்கும் திட்டம் வெளிப்படவே, அங்கிருந்து வேறு சான்றோரை நாடி நல்லுரை பெறுகிறான். இங்கே நாடகம் நின்று போயிருக்கிறது. முதலில் சந்தித்த நரியின் பெயர் கண்ணன். அந்தப் போலியின் பெயர் பாரதியார். சந்தித்த இடம் ஆசிரமம் போலியின் உரையிலிருந்தும் பெயரைக் கொண்டும் என்னுள் ஒரு கருத்து மின்னிற்று. குடும்ப விளக்கு, இரண்டாம்பகுதியில், முதியவர் மாவரசர் தம் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வரிசையாய் எடுத்துக்கூறுகிறார். ஆசிரமம் எனும் குறுந்தலைப்பில் வரும் பகுதி. ஆசிரமப் பேரால் அறவிடுதி கண்டு நல்ல பேச்சியம்பிச் சொத்தைப் பெருக்கியே - போய்ச்செல்வர் கூட்டம் பெருக்கிக் குடித்தனத்தைக் தாம் வளர்த்தார் என்று விவரிக்கும் மாவரசர், திருமால் பிறப்பென்று தீட்ட நூல்விற்க வருவாய் விழுக்காடு வாங்க ஒரு நரியார் வீட்டிலும் அந்நரிக்கும் பொய்புரட்டு வேலைக்கோ ஆட்டுக்கண்ணன் சேய் அவனொருவன் - நாட்டில் துறவோன் அறவீ(டு) இஃதொன்று.... இவ்வாறு தொடர்கின்றார் மாவரசர். அவர்தான் நம் பாவரசர். மாவரசர் செப்பும் அத்துணை நிகழ்ச்சிகளும் எந்தையாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளே என்பதைப் பலபட விரித்துரைக்க நான் கேட்டிருக்கிறேன். நெல்லை மாடசாமியைக் காத்ததும், பாவல்லார் பாரதியார் சற்படி உருவான பாரததேவி உருவப்படிமங்களைத் தோளிற் சுமந்து சென்னைக்குச் சென்றதும், இரவில் பார்த்த தெருக்கூத்தின் பாடலைப் பள்ளியில் பாடிப் பிரம்படி வாங்கியதும் அக்கால இளையவரான சுப்புரத்தினத்தின் வாழ்க்கை நிகழ்ச்சிகளே! பிற்காலத்தில், தம்மைச் சூழ்ந்திருந்த உலகப் போர் நிலவரங்க ளாலும், தம் ஊரில் இருந்த போலிகளின் அடாத செயல்களாலும் நொந்து மன உணர்வுகளை வடித்திருக்கிறார். இனி நான் கூறப்போகும் செய்திகள் அப்பட்டமான உண்மை நிகழ்ச்சிகள், கற்பனை, எள்ளின் மூக்களவும் கலப்பற்றவை. நான் நிறுவிட விரும்பும் முடிவுக்கு ஆதாரம் காட்டவே இவற்றை விவரிக்க நேர்ந்தது. அரவிந்தர் புரட்சியாளராக உருவெடுத்துச் சிறையேகி, பாரதியின் அழைப்பிற்கிணங்கப் புதுச்சேரி வந்து சேர்ந்தார்.போராட்டப் போக்கைக் கைவிட்டு ஆன்மா, யோகம், போன்ற கருத்துகளில் மூழ்கியதால் ஆசிரமம் உருவெடுத்தது. பாரதியார் இங்கிருந்தபோது அரவிந்தரை நாள்தோறும் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார். உடன் எந்தையாரும்! ஆசிரமம் என்ற அமைப்பு ஏற்பட்ட பின்னர், அந்தக் கட்டுக் கோப்பின் போக்கில் கருத்தூன்ற முடியாத நிலையில் அரவிந்தரைச் சந்திப்பது நின்று போயிற்று. பாரதியும் தம் காலத்தின் தொடர்பை நிறுத்திவிட்டார். ஆசிரமக் கட்டுக்கோப்பு பற்றி உள்ளூரில் பற்பல முறையீடுகள் அவ்வப்பொழுது எழுந்து வந்திருக்கின்றன. கவியோகி சுத்தானந்தர் ஆசிரம சீடராக வந்து, தமிழ்நூல் பதிப்புப் பொறுப்பும் ஏற்றார். தம் நூற்களையும் பதிப்பித்தார். புதுவை பாரத சக்தி நிலையம் பாலசுப்பிரமணியம் என்பாரின் துணையுடன் புதுக்கோட்டை அன்பு நிலையம் என்ற அமைப்பின் ஆதரவுடன் சுத்தானந்தரின் நூற்கள் பெருமளவில் செட்டிமா நாட்டில் விற்றன. இந்த வணிகத் தொடர்பு ஆசிரம நிருவாகத்தைச் சீண்டவே, சிக்கல் முளைத்தது. அதுவரை தம்மைக் காணவரும் அன்பர்களிடம் அரவிந்தர் கிருஷ்ணாவதாரம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர், சில குறைபாடுகளைச் சுட்டிக் காட்டத் தொடங்கினார். நல்லுறவு இருந்த காலத்தில், வெளியூரிலிருந்த தமிழ் அன்பர்கள், பாரதிதாசனைப் பார்க்கப் போகிறோம் என்று வாய் தவறிச் சொல்ல சேர்ந்தால், யோகியார் சீற்றம் கொள்வார். புத்தக வணிகத் தொடர்பில் சிக்கல் தோன்றியபோது, பாலசுப்பிரமணியம் எந்தையாரிடம் வந்து சேர்ந்தார். அங்கே நடக்கும் அநியாயங்களை மணிக்கணக்கில் சொல்லிக் காட்டுவார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்து, அப்போ யாபாரம் படுத்துட்டுதோ என்பார் தந்தையார் கிண்டலாக! மாலைவேளையில் வந்து மாலைமாலையாய் கண்ணீர் சொரிவார் பாலசுப்பிரமணியம்.பின், கெஞ்சல், கொஞ்சல்! தம் அச்சகம் வேலையற்றுப் போக நேரிடும், பதிப்பகம் பல இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றெல்லாம் விவரித்துச சொல்லச் சொல்ல எந்தையார் நெகிழ்ந்து போவதை அறிந்த பாலசுப்பிரமணியம் வாத்தியாலே, திருமண முதலிய விழாக்களில் செட்டிமார் நாட்டில் பல்லாயிரம் சிறுநூற்கள், தம் பெயரில் பொறித்து அன்பளிப்பாக வழங்குவது இப்போதும் நடைமுறையில் உள்ளது. நீங்கள் ஏதாவது எழுதிக் கொடுங்களேன்! என்றார். தலையாட்டிவிட்டார் எந்தையார். குடும்ப விளக்கு ஒளி வீசிற்று. சிறிய வடிவத்தில் பல்லாயிரம் படிகள், கலிக்கா கட்டு என்ன, வெல்வெட் துணிக்கட்டு என்ன, பொன்னிற எழுத்தோடு தோற்கட்டு என்ன, செட்டி நாட்டில் எந்தையாரின் குடும்ப விளக்கு விரைந்து விற்பனை ஆயிற்று. தொடர்ந்து இசையமுது விற்பனையில் உச்சத்தை எட்டிற்று! சுத்தானந்தரின் சீற்றம், சுப்புரத்தினத்துக்கு ஏற்றம் அளித்த தென்றால் மிகையன்று. சுத்தானந்தருக்கும், ஆசிரம நிர்வாகத்துக்கும் இடையே அறுந்து போயிருந்த உறவு - இழை மீண்டும் இணைந்து கொண்டதால், பாலசுப்பிரமணியம் தாம் பெற்றிருந்த வெளியீட் டுரிமையைச் செட்டிநாட்டு அன்பர் ஒருவருக்கு விற்றுவிட்டார். குடும்பவிளக்கு மூலம் எங்கட்கு உரிமைப் பணமாக ரூபாய் நூறு மட்டுமே கிடைத்தது. இசையமுதுக்கு அதுவும் இல்லை. அதனால் இசையமுது இரண்டாம் பதிப்பை வேறு பதிப்பகத்தார் மூலம் வெளியிட்டோம். பாலசுப்பிரமணியம் நம் வீட்டுப் பக்கமே தலைகாட்டுவதில்லை. எதிர்பாராத இந்தத் திருப்பம் ஏற்பட்டபோது புதிய வெளியீட்டு முயற்சிகள் தொடங்கப்பட்டுவிட்டதால் எந்தையார் இந்த உறவைத் துடைத்தெறிந்துவிட்டதில் வியப்பு ஏதும் இல்லை. இந்த பாலசுப்பிர மணியத்தின் குடும்பப்பெயர் ஆட்டுக் கண்ணன் வீடு என்று எக் காரணத்தாலோ வழக்கில் வந்திருக்கிறது. குடும்பவிளக்கு இரண்டாம் பகுதியில் நான் எடுத்துக் காட்டிய இடத்தில், ஆட்டுக்கண்ணன் சேய் என்று சொல்லப்பட்டதையும், இந்தப் போர்க்காதல் நாடகத்தில் ஒரு பாரதியார் வருவதையும், கிருஷ்ணாவதாரம் பற்றி உரையாடுவதையும் நம் நினைவிற் கொண்டு வந்தால், நாடகம் எழுதப்பட்ட காலம் எதுவாக இருக்கலாம் என்பதற்கு ஓர் வரையறை கிடைக்கிறது. குடும்பவிளக்கு முதற்பகுதி வெளிவந்த 1942-ஆம்ஆண்டிற்குப் பிற்காலம். இரண்டாம் பகுதிக்கு முற்பட்ட காலம். அது இரண்டாம் உலகப் போர்க்காலம். போரில் மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என நீதிக்கட்சியின் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் மிகுந்திருந்த நேரம். விடுதலை நாளேடு சென்னையில் போர் ஆதரவு ஏடாக - நேசநாடுகளின் குரலாக மாறியிருந்த காலம். 1942-ஆம் ஆண்டில் சக்தி மாத இதழுக்கு எந்தையார் குடி யானவன் என்று தலைப்பிட்டு ஒரு பாடலை அனுப்பினார். பேராயக் கட்சி சார்ந்த அந்த இதழின் ஆசிரியர் வை.கோவிந்தன், போர் ஆதரவுப் பகுதியை நீக்கித்தர வேண்டினார். எந்தையார் மறுத்துவிட்டார். அந்த இறுதிப்பகுதி: மெத்தைவீடு மென்மை ஆப்பிள் முத்தரிசி, பாலில் முழுக்கியசோறு விலைதந்து தன்புகழ் விதைக்கும் ஆட்கள் இவற்றினின்றுதான் இன்பமும் அறமும் துவங்கும் என்று சொல்லல் பொய்ம்மை! இதை அவன் கண்டதில்லை, ஆயினும் அக்குடியானவன் எழுந்தான் நிற்கவில்லை! நிறைந்தான் போரிலே! இட்லரின் பிடி உருசிய நாட்டில் இறுகியபோது நாட்டுப்பற்று மிகுந்த உருசியர் தன்னலம் துறந்து, போர்ப்படையை வலிமை உடையதாக்கிச் சீறி எழுந்து வெற்றி பெற்றனர். அந்த நாட்டுக் குடியானவனும் போரில் நிறைந்தான் என்ற கருத்தை மாற்றித்தர வேண்டினார் வை.கோவிந்தன். மறுத்தார் எந்தையார். 1943-ம் ஆண்டின் தொடக்கத்தில் நடந்தது இது. பாரிசு நகரம், இட்லரின் முற்றுகையை முறியடித்து வெற்றி பெற்றதைக் கொண்டாடிய புதுவை நிகழ்ச்சியில் எந்தையார் பாடிய வாழ்த்துப் பாவின் தொடக்க வரிகள் இவை: வெண்ணிலா முகிலினின்று மீண்டதுபோலே மீண்டாய் எண்ணிலா மகிழ்ச்சியூட்டும் எழில் பாரி நகரே நீதான்! கண்ணிலா இட்லர் நின்பால் கால் வைத்தான், தோல்விபெற்றான்! மண்ணுளார் துயரினின்று மீண்டனர். மகிழ்ச்சியுற்றார். 01.10.1944-இல் இந்த விழா நடைபெற்றது. உலகமெங்கும் போர்க்குரல் எழுந்த சூழலில், மக்களை அடியோடு தீர்த்துக் கட்டும் தீயோர்களை எதிர்கக மககள் முன்வரவேண்டும் என்ற கருத்தை இந்தக் கவிஞர் ஏற்றுக்கொண்டு, தம் படைப்புகளில் அந்தக் கருத்துக்கு ஆக்கம் தருகிறார். உள்ளூரில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்தும், போலிகளின் முகத்திரையைக் கிழித்தும் தம் சமுதாயத் தொண்டை ஆற்ற விரும்புகிறார். இவற்றையெல்லாம் ஒருசேர எண்ணிப் பார்த்தால், இந்தப் போர்க் காதல் நான் முன்பே குறித்தபடி 1944 - 45 கால எல்லைக்குள் எழுதப் பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். நாடகத்தின் இறுதிக் காட்சியாக இங்கே அமைந்துள்ளபடி கருத்துக்கள் நம் முடிவை உறுதி செய்கின்றன. காலவரம்பு எப்படியிருந்தாலும், போர்க்காதல் கற்கண்டுத் தமிழ் நடையிலே காதலில் தொடங்கிக், கனிச்சுவை ஆறாய்ப் பெருகிப் பின் காரச்சாடலாகவும், முடிவில் சான்றோர் அறிவுரைத் தண்மையில் நிறைவேறுகின்றது. சரி, இறுதிக்காட்சி எப்படி இருக்கலாம்? கதைத் தலைவன் சொக்கன். மன அமைதி பெற்றுத் தன் சொந்த ஊரான பீலிக்குடிக்கு வந்து காதல் பொற்கிளையை மறந்து, உழைப்பின் பெருமையையும், ஈகையின் உவகையையும் பெற்றான். பொதுநலத் தொண்டில் புகழ் உற்றான் என்றோ. அல்லது உழவுத் தொழில் மேம்பாட்டுக்கு உழைத்தான். அல்லது போர்ப்படையிலே சேர்ந்தான். என்றோ. பொதுநலம் பேணும் துறவை மேற்கொண்டான், தொழிலாளர் நலப்போரில் இறங்கினான் என்றோ - இறுதிக் காட்சி அமைக்கலாம்! எந்தையார் என்ன எண்ணியிருந்தாரோ, ஏடுகள் கிடைக்க வில்லை. கிடைத்த ஏடுகளில் நம் கருத்தைப் பதிக்கலாம் வாருங்கள். ஓர் ஐயத்தை நண்பர் ஒருவர் எழுப்பினார்: முற்றுப்பெறாத இந்தக் கையெழுத்துப் படியை வெளியிடத்தான் வேண்டுமா? என்றார் நண்பர். பாவேந்தரின் படைப்புத் திறன், காலமாற்றத்திலும் களம்மாறாத் திண்மை, கருத்து வளர்ச்சி, சொல்லாட்சி போன்றவற்றை நாட்டு மக்கள் அறியும் வண்ணம் இப்படி ஒரு முயற்சி. குறிப்பாக ஆய்வு மாணவர்க்கு அரும் பெட்டகமன்றோ? அனைவரும் ஆதரிக்க! 2003 - மன்னர்மன்னன் காட்சி - 1 பீலிக்குடி என்னும் சிற்றூரில் தம் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந் திருக்கிறார். வெற்றிலைப்பெட்டியுடன், வேல் வருகிறான் வெண்ணூர் நகரத்திலிருந்து. சீனி : வாயேன் தம்பி, சொக்கனைப் பார்க்க வந்தாற் போலிருக் கிறது. அவன் இல்லை, கொல்லையில் மரம் வெட்டுகி றார்கள். அங்கே போயிருக்கிறான். வேல் : மரம் வெட்டும் வேலையை மேற்பார்க்கவா? நன்றாயிருக் கிறது; சீக்கிரம் அழையுங்கள். சீனி : அப்படிப்பட்ட அவசரமா? வேல் : நீங்கள் கூப்பிட்டனுப்புங்கள். சீனி : சரி, அங்கே யாரடா? செங்கான். நீ அங்கே இருந்து கொண்டு சின்ன ஐயாவை இங்கே அனுப்பு, வேலப்பர் தேடி வந்திருக்கிறார் என்று சொல்லி, ஓடு! உட்கார் தம்பி, என்ன சேதி? வேல் : சொக்கன் ஓர் கபோதி. இவ்வளவு படித்தும் அவன் உத்தி யோகம் இல்லாதிருக்கிறான். சீனி : இருக்கிறான். கேட்டால் சிரிக்கிறான். வேல் : காமாட்சி உயர்நிலைப்பள்ளியில் ஒருவருக்கு இடம் இருக்கிறது. சீனி : இவன் வாத்தியாய் இருக்க ... வேல் : நேர்த்தியானவன் ஆயிற்றே! சீனி : அதோ அவனும் வந்து விட்டான். வேல் : வா சொக்கு. சொக்கு : நலந்தானே? வேல் : படித்த நீ, மரம் வெட்டப்போவது முறையா? சொக்கு : அது என்ன குறைவா? வேல் : உன்னோடு படித்துத் தேர்ந்தவர்களில் நான் உட்பட அனைவரும் வேலையில் அமர்ந்துவிட்டோம். நீதான் பாக்கி சொக்கு : இப்போதோவது கிராக்கி... வேல் : இல்லாமலா! சொக்கு : என்ன? வேல் : சொல்லாமலா? நம் காமாட்சி உயர்நிலைப் பள்ளியில் ஓரிடம் காலி. சொக்கு : என்ன கூலி? வேல் : கூலியா? அப்போதென்ன நாங்களெல்லாம் கூலிக்காரர்களா? சொக்கு : உனக்காக வேண்டுமானால் எசமான்கள் என்று சொல்லு கிறேன். வேல் : விண்ணப்பம் போடுகிறாயா? இல்லையா? சொக்கு : காமாட்சி உயர்நிலைப்பள்ளியில் என்னை ஆசிரியராக்கும் படிதானே? வேல் : தப்பா? சொக்கு : அப்பா, நீ என்மீது வைத்துள்ள அன்புக்கு நன்றி. ஆனால் நான் படித்தது உத்தியோகம் பார்க்க அல்ல. என் பயிர்த் தொழிலைத் திறமையுடன் பார்க்க, உன்னை ஒன்று கேட் கிறேன். படிப்பது உத்தியோகத்திற்கா? அப்படியானால் நாலுகோடித் தமிழரும் படித்து உத்தியோகம் உத்தியோகம் என்று உயிரை விட்டால் பயிரிடுதல் முதலிய பிற தொழில் களின் நிலை என்ன? உனக்கு உன் உத்தியோகத்தால் ஏற்படும் ஆதாயம், பெருமை, இன்பம் எனக்கு என் பயிர்த் தொழிலால் கிடைக்காது என்று நினைக்கிறாயா? படிப்பு அறிவுக்கு. பயிர்த் தொழிலாளி படித்திருக்க வேண்டும். தொழிலாளி எவனுக்கும் படிப்பே உயிர். படிக்காதவன் செய்யும் எந்த வேலையும் உருப்படாது. இன்று தொழில்கள் தாழ்நிலையில் வைத் தெண்ணப்படுவதற்குக் காரணம் அவைகள் படிக்காதவர்களால் நடத்தப்படுவது தான். கரம்பாகக் கிடந்த எங்கள் நிலத்தையெல்லாம் பிடி எருவும் வேண்டாது விளையும் உயர் நஞ்சையாக்கி னேன். இதோ இருக்கிறார் அப்பா, கேட்டுப்பார். நன்செய்ச் சாகுபடியில் ஒருபுது முறை. ஒட்டிக்கிரட்டி விளைவு. எங்கள் கலப்பை முன்போல் இல்லை. இன்னும் கேள், எதற்கும் உதவாதென்றிருந்த கட்டாந் தரையில் கற்கண்டுக் கனி ஒட்டு மாமரங்கள் கொட்டுமே ஆண்டுக்கு ஆயிர ரூபாய் எதிர்பாராத வரும்படி, எதற்கு என்னைக் காமாட்சிப் பள்ளியில் குந்தி ஈயடிக்கச் சொல்லுகிறாய். வசதியில்லாத அறிஞர்கட்கு உத்தியோகத்தை விட்டு விடுவோம். எழுந்திரு! கைகால் கழுவிக் கொள்! சாப்பிடலாம். சீனி : மெய்தானே வேலப்பா? சொக்கு : பொய்தான் என்கிறாயா வேல், இன்னும்! வேல் : இல்லையில்லை. எண்ணம் இருக்குமோ என்று..... சொக்கு : பார்த்தாயா, உன் ஐயப்பாடு தீர்த்தாயா? நான் உன் நிலைக்கு வருந்துகிறேன். உனக்குள்ள நாற்பது காணிக் கண்ணான நன்செய்யைக் குத்தகைக்கு விட்டுவிட்டுச் செத்ததற்கு எழுதும் உத்தியோகத்தில் தொத்தி மாதம் பத்து ரூபாய் முத்தாகச் சம்பாதிக்கிறாய் ஒத்தாப்போல் பத்துத் தென்னை கொடுத்து விடும் அத்தொகையை! இதில் என்ன தொல்லை? அதிகாரி கட்குக் கைகட்டிப் பதில் சொல்லுவது கொஞ்சமா? சட்டை, குல்லாய், குட்டை, குடை பட்டுச்சோடு இவற்றை அணிந்து உத்தியோகசாலை போவதில் ஓர் ஆவல். மேலும் அதன் பேர் முன்னேற்றம். உள்ளே பார்த்தால் ஏமாற்றம். வேல் : நான் இதையெல்லாம் யோசியாதது வெட்கக் கேடுதான். ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக் கடை, என்பதையும் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழு துண்டு பின் செல்பவர் என்பதையும் படித்தேன். சொக்கு : படித்தேன். அந்தப் படித்தேனை ஏன் மறதியில் வடித்தாய்? வேல் : சொக்கு, உன் அறிவுரையால் என் வாழ்க்கையிலேயே ஓர் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டாய். சொக்கு : மாற்றத்தை அல்ல முன்னேற்றத்தை என்று சொல்லு! வேல் : ஆம், அதுவும் உண்மை. (போகிறார்கள், உணவுண்டு வெளிவருகிறார்கள்) வேல் : நான் ஊருக்குப் போய்வருகின்றேன். சொக்கு : இரண்டு நாட்கள் இருந்து போகலாமே. வேல் : இல்லை. சொக்கு : பழமலை, பூங்கா, சோலை மூவரையும் அழைத்துக் கொண்டு நாளைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே வரலாமே? வேல் : சரி, கட்டாயம் வருகிறோம். சொக்கு : நிச்சயமாக? வேல் : நிச்சயமாக. சொக்கு : எதிர்பார்த்திருப்பேன். வேல் : உறுதி என்கிறேனே. சொக்கு : சரி. (போதல்) காட்சி - 2 மறுநாள் காலை சொக்கன் தன் வீட்டின் கீழ்ப்புறத்தில் இருக்கும் தொழுவத்தை யடுத்து அமைக்கப்பட்டிருக்கும் கல் தொட்டிகளில் வண்டி மாடுகளுக்குத் தீனி வைக்கிறான். அவன் வாய் மெதுவாகப் பாடிக் கொண்டிருக்கிறது. உயர்ந்த நிலை தவறிவிட்டால் ஒருபடிக் கீழ் இறங்கு - நெஞ்சே அயர்ந்திடாமல் வேறு தொழில் அப்போதே தொடங்கு! துயரமென்று சொல்வதெல்லாம் சோம்பலுக்கோர் பேராம் - நெஞ்சே உயர்ந்தநிலை அத்தனைக்கும் ஊக்கமொன்றே வேராம். தொழில் துறையில் உயர்வுதாழ்வு சொல்லுவது மடமை - நெஞ்சே பிழைஇலாமல் எத்தொழிலும் பேணுவது கடமை! தொழில் புரிவாய் தொழில் புரிவாய் துரத்து வறுமைக் காட்டை - நெஞ்சே எழில் புரிவாய் எழில் புரிவாய் இனிய தமிழ்நாட்டை (இதற்குள் அவ்வூர் வீரப்பன் அவ்வழி வருகிறான்) வீரப்பன் : ஏன் தம்பி சொக்கு, மாட்டுத் தொழுவம் கட்டியாயிற்றா. சொக்கு : முடிந்தது. ஏன் இத்தனை பெரிது என்கிறீர்களா? மூன்று பசுக்கள், இரண்டு ஜதை வண்டி மாடுகள், உழவு மாடுகள் அதிகம் இருக்கின்றன, கட்டுத் தரை ஒத்தாற்போல் இருக்க வேண்டும், ஒரு நாள் தொழுவத்தின் கட்டுத் துறைகளைக் கழுவும்போது அதற்கு முன் கழுவிக் காய்ந்த தரை தயாரில் இருக்க வேண்டும். ஈ, கொசுக்கள் அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழுவம் கட்டி முடிக்க 2,000 ரூபாய் சென்றது. ஒழுங்காகப் பாதுகாக்கப் படும் மாடு நோயின்றி நீண்ட நாட்கள் உழைக்கும். பசுக்கள் அதிகம் கறக்கும், பாலும் நோயற்றதாக இருக்கும். மாட்டுத் தொழுவம் மட்ட இனமாகத் தோன்றலாம் ஆயினும் பயிரிடுவார் வாழ்வு மாட்டுத் தொழுவத்தைப் பொறுத்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். வீரப்பன் : ஆமப்பா, அதுமட்டும் உண்மை. நானும் அப்படித் தான் செய்ய வேண்டும். பயிரிடுவோனுக்குக் கல்வி இன்றியமை யாதது என்பதற்கு நீ ஓர் உதாரணம் தம்பி, நான் வருகிறேன். சொக்கு : நல்லது. (போதல்) (மாடுகள் தீனி தின்கின்றன. எதிர்த்த சரகில் ஆள் உயரத் தில் எழுப்பப்பட்டுள்ள மதிற் சுவரின் உட்புறமிருந்து ஓர் கிளி பறந்து வெளியில் போகிறது. அந்தக் கிளிக்காக, அவ்வீட்டின் மங்கை. பொற்கிளை மதிற்சுவர்மேல் தலை நீட்டுகிறாள். நீட்டியவள் கிளியை மறந்தாள். சொக்கனைக் கண்ட அவள் விழிகளை அவள் மீட்க முடியாமல் இருக்கிறாள். சொக்கன் பார்க்கவில்லை. ஆயினும், தொழுவத்தில் சிட்டொன்று தன் பெட்டையுடன் பிணங்கிச் சட்டென்று மதிற்சுவரின் பக்கம் பறந்ததை நோக்கிய சொக்கன், சிட்டை மறந்தான். மதிற் சுவரின்மேல் வட்ட நிலாவைக் கண்டான். அவன் விழி அவள் விழியிற் பட்டது. கட்டழகி மறைந்தாள். மற்றொருமுறை அவள் காட்சி தர மாட்டாளா என்று மதிலில் இட்ட விழியை எடுக்கா திருந்தான் சொக்கன். மாடுகள் தீனி தின்றுவிட்டன. சற்று நின்று பார்த்தன. பின், தாமே தம் இடம் நோக்கி நகர்ந்தன. எதிரில் வந்த செங்கான் என்னும் சொக்கனின் காரியக் காரன் சொக்கனை நோக்கி... செங்கான் : ஏன் நிற்கிறீர்கள்? சொக்கு : (மதில் மேல் வைத்த பார்வையைச் செங்கான் மேல் திருப்பி) மாடுகள் தீனி தின்கின்றன. செங்கான் : மாடுகள் உங்களை எதிர்பார்ப்பதில் பயனில்லை என்று நினைத்துத் தாமே தம் இடம் நோக்கிப் போய்விட்டன. சொக்கு : அடா! இல்லை. இங்கிருந்து பறந்தோடிற்றுப் பொற்கிளை - அல்ல, சிட்டு, சிட்டு. செங்கான் : அதைப் பார்த்து வேர்த்து நிற்கிறீர்களா? சொக்கு : வேர்த்தா நிற்கிறேன், இல்லையே செங்கான் : எண்ணிப் பாருங்கள் உங்கள் சொல்லையே. சொக்கு : சிட்டு என்று சொல்வதற்குப் பொற்கிளை என்று சொல்லி விட்டேன் மறந்து! செங்கான் : அப்படிச் சொல்லுங்கள் திறந்து! சின்னஞ்சிறுசாய்ப் பார்த்தீர்கள் அப்போது! பொன்னின் சிலைபோல் பார்த்தீர்கள் இப்போது. சொக்கு : செங்கான்! செங்கான்!! வான்மேற் பறந்த ஒரு கிளிக்கு மதிற்மேற் கண்டேன் முக விளக்கு! குவளை விழியிமைகள் கொட்டாமற் பார்த்தாள் அவளை நான் பார்த்தேன் அகன்றாள் - கவலையுற்றேன்! வாக் கெடுத்துப் பின்னி மணிநாகம் போல் துவளும் பூங் குழலாளைக் கண்ட போதுதான் - நாக்குளறி நின்றேனே! மங்கை நிலா முகத்தைப் பார்த்தவுடன் ஒன்றும் உரையா திருந்தேனே! - அன்று தெருவில் விளையாடித் தின் பண்டம் வாங்கி ஒருவர்க்கொருவர் உதவித் - திருநாளில் பட்டாடை கட்டிப் பல கதைகளும் பேசிச் சிட்டாய்ப் பறந்து திரிந்திட்ட - கட்டங்கள் என் நினைவில் இன்னும் இருப்பதுபோல் பொற்கிளை தன் நினைவில் தட்டுப்படு மன்றோ? - இன்னொரு நாள் மங்கையை நான் பார்க்கும் வகை வாய்க்குமோ வாய்க்காதோ செங்கான், நான் தும்பி! அவள் தேன்! செங்கான் : வழி செய்வேன் நான்! அதோ அந்தக் கிளிதானே பொற் கிளையுடையது? (அதைக் கைப்பற்றுகிறான்) சொக்கு : உன் முரட்டுக் கையால் அதை ஒன்றும் செய்யாதே. செங்கான்: மாந்துளிரை ஏந்துவதுபோல் ஏந்திச் செல்வேன். சொக்கு : அந்தக் கனியிடத்திலா? சரி அவளைத் தனியிடத்தில் சந்தி. செங்கான்: இதைக் கொடுத்து? சொக்கு : அவளைச் சரிப்படுத்து, மறக்காதே. செங்கான்: பறக்காதே, வந்துவிட்டேன். (போதல்) காட்சி - 3 தன் வீட்டின் கொல்லையில் சொக்கன்மேல் நினைவோடு பொற்கிளை நிற்கிறாள். கிளியுடன் செங்கான் செல்லுகிறான். பொற்கிளை : எங்கிருந்தது. நீர் எதிர்த்த வீட்டின் காரியக்காரா? (கிளியை வாங்கிக் கொள்ளுகிறாள்) செங்கான் : (மெல்லிய குரலால்) எதிர்வீட்டில் சின்ன ஐயா இருக் கிறாரே அவர்தாம் சொக்கு! கிளி அவர் கண்ணிற் பட்டது. பிடித்தார். அது உங்களுடையது என்று அவருக்குத் தெரியும் போலிருக்கிறது. அதற்கு முத்தங் கொடுத்தார். முப்பழம் கொடுத்தார். அவர் சித்தம் களித்ததை என்னென்று செப்புவேன்! பொற்கிளை : கொல்லையில், என் கையில் கொஞ்சிய இக்கிளி நில்லாது மதிற்சுவர்க்கப்பாற் பறந்தது. பார்த்தேன் எட்டி! அவரைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார். சின்ன வயதில் தெரியும் இளமன்னர் போல் இருக்கிறார் இப்போது, கிளிக்கு முத்தம் தந்தார். ஐயோ அது பொல்லாதது. தொல்லை உண்டாக்கிற்றோ அவர்க்கு? செங்கான் : இல்லை. எனவே நீங்கள் இருவரும் இன்று தற் செயலாகச் சந்தித்தீர்கள். பொற்கிளை : ஆம்! செங்கான் : பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்பது போலவே நீஙகள் இருவரும் பேசவில்லை போலிருக் கிறது. அல்லது பேசிக் கொண்டீர்களா? பேசியிருந் தால் அதை என்னிடம் மறைப்பது இயற்கை தானே? பொற்கிளை : அவர் பேசவில்லை. செங்கான் : நீங்கள் பேசாததால்! பொற்கிளை : நாணத்தால் தயக்கம். செங்கான் : அவருக்கோ மயக்கம்! இருக்கட்டும் அவருக்கு ஏதாவது சேதியுண்டா? பொற்கிளை : நான் அவரைக் கண்டபோது பேசாதிருந்து விட்டேன். அதுபற்றி மன்னிப்புக் கேட்டதாகக் கூறுங்கள். செங்கான் : ஐயோ அது முறையல்லவே! மன்னிப்பு என்பது நேரில் கேட்க வேண்டியதல்லவோ? பொற்கிளை : என் ஆசை மறைக்க முடியாதது. நான் நேரில் பேச ஒப்புகிறேன் காரியக்காரரே. செங்கான் : மதிற்சுவர்மேல் நிலாக் கிளம்பட்டும். அவரை, நான் அங்க நிற்கச் சொல்லுகிறேன். பொற்கிளை : அவரிடத்தில் நான் என்ன சொல்லவேண்டும்? செங்கான் : இன்னதென்று உங்கள் நெஞ்சம் உங்களைத் தூண்டும். பொற்கிளை : அவரை நான் அப்போதெல்லாம் பெயர் சொல்லி அழைப்பது வழக்கந்தான். செங்கான் : அது ஒழுக்கந்தான். பொற்கிளை : ஆனால் அப்போது எனக்கு நண்பர் முறை. செங்கான் : இப்போது? திறந்து சொல்லுங்கள். பொற்கிளை : மின்சாரம் தொட்டால் உடலில் பாயும். விழி ஒன்றுபட்டால் உயிரில் பாயும், பழிகாரர் இவரைப்போல் நான் பார்த்ததேயில்லை. நான் அவரைக் கண்டபோதே அவர் என் சொத்தானார். செங்கான் : எனவே, என் முத்தான அத்தானே என்று அழைக்க வேண்டியதுதான். பொற்கிளை : சரி, ஆகட்டும். செங்கான் : இங்கேயே நில்லுங்கள். நான் அவரைக் கூட்டிவந்து மதிலின் புறத்தே நிறுத்திக் - கனைக்கிறேன். நீங்கள் தலையை நீட்டுங்கள். பொற்கிளை : சரி. (போதல்) காட்சி - 4 சீனியப்பர் (சொக்கன் தந்தை) மாட்டுத் தொழுவத்தண்டை நிற்கும் மகனை நோக்கி விரைவாகத், தம்பீ! சொக்கு : ஏனப்பா? (ஓடுகிறான்) சீனி : அட்டூர் அப்பாத்துரை வந்து பேசியிருந்தார். வழக்கு விஷயமாக! இப்போதுதான் போகிறார். இன்னும் புகை வண்டி நிலையத்திற்குப் போய்ச் சேர்ந்திருக்கமாட்டார். அவர் கையோடு கொண்டுபோக வேண்டிய பத்திரங்களை வைத்துவிட்டுப் போய்விட்டார். என்ன செய்யலாம்? (இதற்குள் செங்கானும் சொக்கனெதிரில் நின்று கையாலும், கண்ணாலும் சேதியைத் தெரிவிக்கிறான். சொக்கனுக்கு அது நன்றாய்ப் புரியவில்லை) சொக்கு : நான்... (இது தந்தையை நோக்கிக் கூறத் துவங்கிய மொழி) சொங்கான் : அட... சொக்கு : போகிறேன். (என்று பேச்சை முடித்துவிடுகிறான். தந்தை பத்திரங் களைச் சொக்கனிடம் கொடுத்துவிடுகிறார். சொக்கன் வெளியிற் சென்றுவிடுகிறான். செங்கான் வழிமறித்து...) செங்கான் : இதைக் கேள்! சொக்கு : இப்போது நேரமில்லையே! செங்கான் : இப்போது உன்னைப் பாராவிட்டால் உயிர்போய் விடும் அவளுக்கு! நான் கனைக்க வேண்டியதுதான், மதில் மீது வட்டநிலா! சொக்கு : கனைக்காதே! (என்று கூறிச் செங்கானின் வாயைப் பொத்துகிறான். செங்கான் கனைத்து விடுகிறான்). (அத்தான் என்ற அன்பு மொழி கேட்கிறது சொக்கன் காதில். அவன் பார்க்கிறான். முத்துச் சுடர்போன்ற சிரிப்புடன் மொய் குழல் முகம்! இதற்குள் அட்டூர் அப்பாத்துரை குடையையும் வைத்துப் போய்விட்டார் என்று கையில் தூக்கிக் கொண்டு மகனைத் தொடர்ந்து வந்த சீனியப்பர், மகன் - அவள் இருவரும் பார்வைச் சரட்டில் செங்கானால் கோக்கப்பட்டிருப்பதை நேரில் காணுகிறார். தந்தை கண்டுவிட்டதை அவள், அவன், செங்கான் ஆகிய மூவரும் காணுகிறார்கள். திகைத்துச் செயலிழந்து நின்ற மறுநொடியில் மங்கை மறைகிறாள்) சொக்கு : ஏனப்பா? சீனி : குடையையும் வைத்துப் போய்விட்டார். (சொக்கன் வாங்கிக் கொள்கிறான். தந்தை வீட்டுக்குள் போகிறார். செங்கானும், சொக்கனும் விரைந்து செல்லுகிறார்கள். பேசிக் கொண்டே). செங்கான் : நீங்கள் போவதாக ஒத்துக் கொண்டிருக்கக் கூடாது. சொக்கு : தந்தை தவித்தால் என் சதை ஆடாது - அப்படித் தானே? செங்கான் : மற்றவர்கள் போகிறார்கள் என்றேன். சொக்கு : நான்தான் எதிரில் நின்றேன். நேரில் கண்டு விட்டாரே அப்பா! என்ன செய்வது? செங்கான் : என்னைத்தான் கேட்பார். நான் ஏதாகிலும் சாக்குப் போக்குச் சொல்லிவிடுகிறேன். சொக்கு : இனியும் மறைத்துப் பேசுவது பிழைமேற் பிழை. என் எண்ணத்தைக் கூறிவிடு அவர் கேட்டால்! நீ போ. நான் இதோ வருகிறேன். செங்கான் : நான் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வந்து விடுகின்றேனே. சொக்கு : அப்பா முகத்தில் விழிக்க வெட்கமாக இருக்கிறது. நானே போகிறேன். காட்சி - 5 சீனியப்பரின் வீட்டில், சீனியப்பர் செங்கானை நோக்கி; வயது வந்த பெண்ணோடு வார்த்தை என்ன? அந்தப் பெண்ணின் பெற்றோர் கள் கண்டால் என்ன ஆகும். செங்கான் : இருவரும் சிறுவயதுமுதல் அறிமுகம் உடையவர்கள். சீனி : அந்த அறிமுகத்தின் இன்றைய நிலை? செங்கான் : காதல் என்றுதான் நினைக்கிறேன். சின்ன ஐயா அந்தப் பெண்ணைத்தான் மணக்க இருக்கிறார். சீனி : அங்கே யார் வருவது பார். செங்கான் : சின்ன ஐயாவின் நண்பர்கள், நாலுபேர். சீனி : வாருங்கள், உட்காருங்கள். தம்பி அட்டூர் வரைக்கும் போயிருக்கிறான். இதோ வந்துவிடுவான். செங்கான் நீ போய் வேலையைப் பார். (போகிறான்) சீனி : உங்களிடம் ஒரு செய்தி! சொக்கு எதிர்விட்டுப் பெண் பொற்கிளை மேல் கண்ணாக இருக்கிறான். எனக்குப் பிடிக்கவில்லை. முதற்காரணம் எதிர்த்த வீடு. இரண்டாவது காரணம் அவர்கள் வழிவேறு, எங்கள் கொள்வன கொடுப்பன வேறு. மூன்றாவது, அந்தப் பெண் அவ்வள வாகப் படித்தவளல்ல. நான்காவது அந்தக் குடும்பம் எப்போதும் நம்மை மதிப்பதில்லை. ஐந்தாவது, அவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். நாம் மட்டும் ஒத்துக் கொள்ளவா போகிறோம்? தம்பிக்கு நீங்கள் சொல்லுங் கள். தங்கமான வேறு பெண். அங்கே இருக்கிறாள் - மங்கப்பாடியில், நல்ல இடம். சுமார் நூறு காணி நன்செய். பதினாயிரம் ரொக்கம் உண்டு. நமக்கு அதல்லவா தோது. சோலை : பெண்ணும், பிள்ளையாண்டானும் மனம் ஒத்துப்போன தாகத் தெரிகிறதா? சீனி : அப்படித்தான் தெரிகிறது. சோலை : ஐந்து காரணம் கூறினீர்கள். பயனில்லை. அவன் விருப் பத்தை நிறைவேற்றுங்கள். இல்லாவிட்டால் குடும்பத் தொல்லையைத் கூவியழையுங்கள். காதல் இருவர் கருத்தொன்றி ஆதரவு பட்டதே இன்பம். சீனி : என் எண்ணத்தை (என்) பொன்னொத்த பிள்ளை மதிக்க வேண்டாமா? பழமலை : இரு சோலை! அவர்கள் கூறுவதைக் கேட்டு அதன்படி சொக்கு நடக்கவேண்டும். அதுதான் முறை. சீனி : வேறுபெண் இருப்பதாகக் கூறினேனே, அப்பெண்ணை மணப்பதால் மிக்க நலமுண்டு. பெற்றவர்க்கு ஒரு பெண் அவள். பிறகு சொத்தெல்லாம் சொக்கனுக்கே. பூங்கா : மிக்க நலமாயிற்றே. வேல் : அப்படித்தான் செய்யவேண்டும். நாங்கள் சொக்கனுக்குச் சொல்லுகிறோம். உங்கட்குக் கவலை வேண்டாம். சோலை : உறுதி பெற்ற நெஞ்சம் மற்றொரு பெண்ணிடம் திரும்புமா? வேல் : உம். ஒட்டுப்புல்! ஒருத்தியிடம் ஓடிற்று உள்ளம் மற்றொருத் தியைக் காணாததால்! இன்னோரழகியைக் கண்டால் அவளி டம் ஒட்டிக் கொள்ளும் அந்த உள்ளம். காதல் என்பது அவ்வளவு தான். சொக்கு நல்லவன். சொன்னால் கேட்பான். மக்கு அல்ல. சோலை : சரி நாம் வெளியிற் சென்று உலாவலாமே! எதிரில் சொக்கு வரக்கூடும். பழமலை : ஆம், போவோம். நீங்கள் இருங்கள்! நாங்கள் சொல்லித் திருத்துகின்றோம். (போதல்) காட்சி - 6 நண்பர் நால்வர் மந்தைவெளியில் உலாவுகையில் எதிரில் சொக்கன் வருவதைக் காணுகிறார்கள். வேல் : நான் பேசுகிறேன் அவனிடத்தில் சொக்கு : மன்னிக்கவேண்டும் என்னை. அப்பா சொல்லைத் தட்ட முடியாமல் அவசரமாகப் போய்வர வேண்டியதாயிற்று. வேல் : தந்தை சொல்லை மைந்தன் தட்டி நடப்பது முறையல்ல அல்லவா? சொக்கு : அதை இன்னொருமுறை நான் சொல்லவா? வேல் : நீ எதிர்வீட்டுப் பெண்ணை மணக்க இருப்பதை உன் தந்தை விரும்பவில்லை. மங்கப்பாடிப் பெண்ணை நீ மணக்க வேண்டும் என்கிறார். என்ன சொல்லுகிறாய்? சொக்கு : அவர் சொன்னாரா? வேல் : சொன்னார். சோலை : பல காரணங்களோடு. பழமலை : எதிர்விட்டுப் பெண்மேல் உள்ள உன் காதலை மாற்றிக் கொள். சோலை : எதிர்வீடு என்பதற்காகவே! அல்லாமலும் கேள். அவர்கள் வழிவேறு! உங்கள் வழிவேறு! இரண்டு வழிக்கும் அரை மைல், முக்கால் மைல் சுற்றாக இருக்கலாம் அல்லவா. வேல் : கிண்டலுக்கு வழியில்லை, இதில் சும்மா இரு. சோலை : அதற்கு நான் சொல்லவில்லை சொக்கு. தக்க காரணம் ஐந்து சொன்னார் அப்பா. எதிர்வீட்டுப் பெண்ணை நீ மறந்துவிட வேண்டும் என்பதற்கு. அவற்றில் இரண்டு காரணத்தைச் சொன்னேன். தப்பா? வேல் : இரு அப்பா. நான் பேசுகிறேன். மேலும் சொக்கு, அந்தப் பெண் அவ்வளவாகப் படித்திருக்கவில்லை. சோலை : எவ்வளவாகப் படித்திருக்கவில்லை? அதைப் பற்றிக் கூறவில்லை தந்தையார். வேல் : அதுவுமில்லாமல், உங்களை அவர்கள் மதிப்பதே யில்லை. சோலை : நீ மணந்து கொண்டால் இவர்கள் உங்களைச் சிலசமயம் மதிக்க ஆரம்பித்துவிட்டால்? மிக்க கெடுதி யில்லையா? வேல் : இன்னொன்று கேள். அந்தப் பெண்ணை அவர்கள் உனக்குக் கொடுக்க மாட்டார்கள். சோலை : கேட்டுப் பார்ப்பதற்குள் உங்கள் தகப்பனார் தெரிந்து கொண்ட உண்மை இது! (சொக்கு, சோர்ந்து உட்காருகிறான் ஓர் ஆலின்கீழ். மற்றவரும் உட்காருகிறார்கள் வேரின் மேல்) சொக்கன் சொல்லுகிறான்: நான் நேற்றுத்தான் ஓர் இன்ப உலகைக் கண்டேன். அவ்வுலகில் நானும், பொற்கிளையும் குடியேறி னோம். மயிலிறகின் அடி போலப் பயிலும் அவன் சிரிப்பின் ஒளியில் நான் ஈடுபட்டுக் கிடந்தேன். எங்கள் அன்பு இணையற்ற தாயிற்று. அறம்பல புரிந்தோம். திறம்பட நடந்தோம். சிங்க மக்களைப் பெற்றோம். அவள் பிரிவை நான் பொறுப்பதேயில்லை. ஏனெனில் கன்று, தன் தாயை அன்புடன் பார்ப்பதுபோல் இரக்கத்தோடு பார்க்கும் அவள் பார்வையை நான் விலக்குவான் கண்ட இன்ப உலகு அழியாதது என்று நினைத்தேன். அது மறைந்தது. அதுமட்டுமா? நான் துன்ப உலகில் இழுத்துத் தள்ளப்பட்டேன். இப்போது? புத்தன் சொன்னது சரி. உனக்கென ஒன்று தேடாமல் தனித்திரு! அதனால் துன்ப உலகில் உனக்கு இன்பம் கிடைக்கும் என்றான். அவன் தந்தை, தாய், மனைவி மக்கள் அனைவரையும் துறந்தான். இன்பம் கருதி! நான் என் மனோ லோகத்தைவிட முடியாதா? என் பொற்கிளையை நான் கைவிடுவதால் என் தந்தைக்கு மகிழ்ச்சி. அன்னைக்கு மகிழ்ச்சி! நண்பர்கட்கு மகிழ்ச்சி! எத்தனை இன்பம் எனக்கு? புத்தனைப் போலே பொற்கிளையையும் அன்னை, தந்தை, நண்பர்களையும் துறப்பதால் ஏன் நான் அளவற்ற இன்பத்தை அடையக் கூடாது? பழமலை : சொக்கு, நாங்கள் நடுங்கத்தக்க வழியை நீ நோக்குகிறாய். நீ யாரையும் துறக்க வேண்டியதில்லை, தந்தை குறிக்கும் பெண்ணை மணந்தால். சொக்கு : ஒன்றில் உறுதி கொண்டேன் அன்றே அதற்கோர் இறுதி கண்டேன். காதல்! அப்போதே அதற்கோர் மோதல்! ஆம்! இவ்வையம் எதிலும் அப்படி! பழமலை : நீ உன் தந்தை சொல்லும் பெண்ணை மணக்க வேண்டும். சொக்கு : வேண்டும், ஆம் திறக்காத மலர்வாய் திறந்து சிறக்க அத்தான் என்றழைத்த, அவள் இவ்வுலகில் பிறக்கவே யில்லை என்று நான் என்னவேண்டும். தன் காதல் கருத்துரைத்து என்னை வேண்டிக் கொண்ட அவள் மலர் போன்ற கண்ணை நான் புண்ணென்று எண்ண வேண்டும். முயற்சி செய்வேன் நண்பர்களே. சோலை : அதுதான் நல்ல பிள்ளைக்கு அடையாளம், எழுந்திருங்கள். வேல் : இதை உன் தகப்பனாரிடம் சொல்லிவிடுகிறோம். சோலை : அவர் மகிழ்ச்சி அடையட்டும், சில நாட்கள். (போதல்) காட்சி - 7 சொக்கு : நான் கூண்டறையில் காத்திருப்பேன். அவளிடம் என் உறுதியைக் கூறிவிட்டு, அவள் சொன்னதை என்னிடம் வந்து சொல்லு, அதன்பின் உன் அவசர வேலைக்குப்போ. செங்கான் : மணந்தால் உன்னை மணப்பது அல்லது மண மின்றி இருப்பது என்றுதானே. சொக்கு : பின் என்ன? ஓடு! (மற்றொருபுறம்) வேல் : உன் தந்தை மங்கப்பாடிப் பெண்ணை நீ மணக்க வேண்டும் என்று திண்ணமாகக் கருதுகிறார் என்று கூறினோம். கொஞ்சம் கவலையடைந்தான். பிறகு ஒத்துக் கொண்டான். சீனி : வேறு மாற்றமில்லையே. சோலை: மாற்றமாவது மண்ணாங்கட்டியாவது. நாங்கள் விடை பெற்றுக் கொள்ளுகிறோம். சீனி : இன்னும் இரண்டு வாரத்தில் அவனுக்கு மணத்தை முடித்துவிட நினைக்கிறேன். சோலை: ஏன் முடிக்க முடியாது? ராமன் பட்டாபிஷேகம் நாளைய சூரியோதத்திற்கு என்று நாள் குறிக்கிறார் திடீரென்று வசிஷ்டர். சீனி : அவனிடம் அதையும் சொல்லிவிட்டுப் போங்கள், போகும் போது! அவன் அதோ தெருப்பக்கத்துக் கூண்டறையில் தான் இருப்பான். வேல் : சரி போய் வருகிறோம். (போதல்) (மற்றொருபுறம்) கூண்டறையில் நண்பர் நால்வரும் சொக்கனைக் காணுகிறார்கள். வேல் : மற்றொரு புதுச்சேதி. சோலை: உனக்கு நல்ல சேதி! சொக்கு : என்ன ... (சொக்கன் எழுந்து அவர்களுடன் போகிறான்) வேல் : இன்னும் இரண்டு வாரத்தில் உன் வாழ்க்கையில் ஓர் புதுமை. சொக்கு : இதென்ன சோதிடமா? வேல் : இல்லை. உண்மைதான். சொக்கு : சோதிடம் உண்மையில்லை என்று யார் சொன்னது? புதுமை என்று சொன்னாயே. சோலை : அதைச் சொல் நாயே என்று கேட்கிறார், நண்பர் சொக்கு. (தெருவைத் தாண்டித் சென்றுவிடுகிறார்கள்) (சீனியப்பர் தன்பிள்ளை சொக்கனின் கூண்டறைக்கு வருகிறார். சொக்கன் உள்ளிருப்பதாக எண்ணி, தம்பீ! (பதில் இல்லை) என்று அழைக்கிறார். அங்கிருந்த நாற்காலியில் உட்காருகிறார். நாழிகை ஆய் விட்டதென்று கருதிய செங்கான் பரபரப்புடன், தெருப் பக்கத்தில் இருந்தபடி, கூண்டறையில் சொக்கன் உட்கார்ந்திருப்பதாகக் கருதி சேதி சொல்லுகிறான்). நான் சொன்னேன். அவர் உன்னை மணந்தால் மணப்பாராம். அல்லது மணமின்றி இருப்பாராம் என்று! அதற்கு அந்தப் பொற்கிளை நான் அவரை மணந்தால் மணப்பேன். வேறு ஒருவனை மணக்க என் பெற்றோர் வற்புறுத்தினால் உயிர் துறப்பேன் என்று தம் காதல் மேல் ஆணையிட்டுச் சொன்னார்கள். நான் போய் வருகிறேன். (ஓடுகிறான்) (இது கேட்ட சீனியப்பர் திகைத்து மேசைமேல் தலை சாய்த்துக் கிடக்கிறார்) காட்சி - 8 செங்கான் சொக்கனைக் காணுகிறான், வழியில். செங்கான் : அந்தக் கூனன் புகைவண்டி நிலையத்துக்குப் போய் விடுவான். அதற்குள் இந்த இருபத்தைந்து ரூபாயையும் அவனிடம் ஓடிக் கொடுத்துவிட்டு வா என்றார் அப்பா! அதனால் தான், பொற்கிளை சொன்னதை உங்களிடம் அவசரமாகக் கூறிவிட்டு ஓடினேன். ரூபாயைக் கொடுத்து விட்டேன். கூனனிடம். சொக்கு : பொற்கிளை கூறியதை என்னிடம் எப்போது கூறினாய்? செங்கான் : கூண்டறையில் யார் இருந்தது! நீங்களல்லவா? சொக்கு : சரி அப்பாதான். என்ன கூறினாய்? செங்கான் : மணந்தால் உன்னை மணப்பேன் அல்லது மணமில்லாது கிடப்பேன் என்று சொன்னார் என்றேன். அதற்குப் பொற் கிளை மணந்தால் அவரை மணப்பேன் அல்லது மண மின்றியிருப்பேன். பெற்றோர் வற்புறுத்தினால் இறப்பேன் என்று கூறினார்கள் என்று கூறினேன். சொக்கு : வேறு வேண்டியதேயில்லை. செங்கான் : கூண்டறையில் இருந்தவர் அப்பாவா? சொக்கு : எனக்கு இம்மிகூட ஐயமில்லை. நீ வேண்டுமானால் இன்னொரு முறை கூண்டறையில் இருப்பவர் அப்பா தானா என்று பார்த்து விட்டு, மாட்டுத் தொழுவத்தில் என் கைப்பெட்டி வைத்திருக் கிறேன். அதை எடுத்துக் கொண்டு வந்துவிடு. (போதல்) காட்சி - 9 தெருவின் கடைசியில் நிற்கிறான் சொக்கன். குட்டியப்பர் வருகிறார். குட்டியப்பன் : சொக்கு ஏன் நிற்கிறாய்! உழவைப் பற்றிய உன் கொள்கைகளை நான் கேள்விப்பட்டேன். மிக்க சிறந்ததப்பா! ஏனெனில், உழவனுக்குக் கல்வி தேவை என்கிறாய். பயிரிடுவோனுக்குக் கல்வி தேவை என்கிறாய். நல்ல வசதி தேவை என்கிறாய். படித்தவர்கள் உழவுத் தொழிலில் நடத்த முன்வராவிடில் உழவுத் தொழில் மதிப்பிழந்து போவது உண்மை. இப்போது அப்படித் தானே இருக்கிறது? இன்னும் அதுபற்றித் தெரிந்து கொள்ள நினைக்கிறேன். வேலை ஒழியவில்லை. சொக்கு : உழவுத் தொழில் மேலானது. அதைவிட மேலானது இன்னொன்று இருக்கிறது. எதையும்விட்டுச் சும்மா இருப்ப தென்று இருக்கிறது. புத்தன் இதைத்தான் கூறினான், உலகத்துக்கு! குட்டி : ஐயோ! இந்த உலகம் இந்நாளில் புத்தர் கூட்டத்தை விரும்ப வில்லையே. சொக்கர்களையல்லவா அது எதிர்பார்த்துத் தவங்கிடக்கிறது. (செங்கான் கைப்பெட்டியோடு வருகிறான்) சொக்கு : நான் போய் வருகிறேன். வா செங்கான்! (செங்கானும், சொக்கனும் குட்டியப்பரை விட்டுச் சிறிது தூரம் சென்று விட்டார்கள்) சொக்கு : என்ன சேதி? செங்கான் : நான் சொன்னதை உன் தகப்பனார் (உன்) தாயாரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் வருத்தத்துடன். சொக்கு : சரி தீர்ந்தது. செங்கான் : மேலே நடக்க வேண்டியது என்ன? சொக்கு : தொட்டதெற்கெல்லாம் கெட்டதே விளையும் இவ்வுலகப் பற்றை விட்டிருப்பது தவிர வேறொன்றும் காணேன். செங்கான் : துறவா? சொக்கு : வேறு? இவ்வுலகில் உறவா?! செங்கான் : மற்றோர் துணையின்றி இருக்கும் பெற்றோர்களைத் துறப்பதா! உங்களின் தோளுழைப்பால் நாளும் தங்கம் நல்கக் காத்திருக்கும் நன்செய், புன்செய்களைத் துறப்பதா? வீடுவாசல், தோட்டம், துறவு, மாடு, கன்றுகளைத் துறப்பதா? ஐயா என்னையுமா துறக்கின்றீர்! சொக்கு : எனக்கு விடை கொடு! செங்கான் : என்னையும் துறக்கின்றீரா? எல்லாப்பறையும் ஒழித்தீரா? அந்த நல்லாளையுமா? தேன் போன்ற சொல்லாளையுமா? முல்லைக் காட்டை மூசு வண்டு மறந்ததென்றால், சொல்வார் சொல்லினும், கேட்பார் மதி கெட்டாரோ? சொக்கு : ஆம்! ஒரு பற்று மட்டும் என் உள்ளத்தை விட்டு நீங்க வில்லை. செங்கான், நீ அவளுக்கு ஆதரவாக இரு! அவளால் முடிந்தால், அவள் என்மேல் வைத்த அன்பைத் துறக்கும்படி கூறு. என்னைத் தனியே விடு. (சொக்கு கைப்பெட்டியோடு விரைந்து செல்லுகிறான். செங்கான் முகத்தில் அறைந்து கொண்டு நின்று, சொக்கன் செல்லும் திசை நோக்கிப் பார்த்திருக்கிறான்) காட்சி - 10 நல்லான்குப்பத்தின் நடுவீதியில் சொக்கன் கைப் பெட்டியோடு போகிறான். கட்டியப்பர் தம் வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருக் கிறார். சொக்கனைப் பார்த்து விடுகிறார். கட்டி : வரவேண்டும், வரவேண்டும் வண்டி எங்கே? களைப் புடன் கால்நடையாகவா? எதற்காக? வந்து உட்காருங்கள். பயிர்த் தொழிலாளிகளுக்குக் குறைந்த விழுக்காடு நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாயாவது கொடுக்க வேண்டும் என்று கூறுகிறீர்களாமே. சொக்கு : அவனால் நாள் ஒன்றுக்கு ஒன்றேகால் ரூபாயாவது நிலத்துக்கு உடையவருக்குப் பயன் உண்டாகும்போது தான், ஒரு ரூபாய் கொடுக்கும்படி கூறினேன். ஒருவனால் ஒன்றேகால் ரூபாய் நமக்கு வருமானம் ஏற்படும்படி நாம் சாகுபடியைத் திருத்தமான முறைக்குக் கொண்டுவர நமக்குப் படிப்பு வேண்டும். எனக்கு நேரமில்லை. வரும்போது வருகிறேன். கட்டி : சரி, நடந்தா போகிறீர்கள்? (பதில் சொல்லாமலே சொக்கன் விரைவாகச் சென்று மறைகிறான். சிறிது தூரம் சென்றபின், எதிரில் இரட்டை மாட்டு வண்டியில் வந்து கொண்டிருக்கும் மூக்கறையன் முனியன், சொக்கனை நோக்கி, எங்கே? வண்டி, கிண்டி இல்லாமலா என்ற கருத்தில் ஹெங் வங் ஹிங் என்று கூச்சலிடுகிறான்.) சொக்கு : கொஞ்சம் அவசரம்! (என்று விரைவில் நடந்து மறைந்த சொக்கன், அங்கொரு புறமிருந்த மாமரத்தின் நிழலில் தங்கிப் பெட்டியைத் திறந்து ஒரு பொய்த் தாடியையும், பொய் மீசையையும் முகத்தில் அணிந்து, ஓர் ஆண்டிபோல் காவியுடைகள் பூண்டு, தலைத்துண்டும் கட்டிக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.) காட்சி - 11 பொற்கிளை தன் கொல்லை மதிற்சுவர் மேல் தலையை நீட்டுவதும், உள்ளே வாங்குவதுமாய் இருக்கையில், செங்கான் வீதியில் அவளை நோக்கி வருகிறான். செங்கான் : அம்மா நீங்களும், அவரும் கண்ணொடுகண் நோக்கி இருந்த நிலையை அவர் தந்தைக் கண்டாரல்லவா? அதன் பிறகு அவர் நண்பர்களை விட்டுச் சொக்கருக்குப் புத்திமதி சொல்லச் சொன்னார். அப்படியே நண்பர்கள், சொக்கரிடம் பொற் கிளையை மணக்க வேண்டாம், தந்தை கூறும் பெண்ணைத்தான் மணக்க வேண்டும் என்று கூறினார்கள். அதன் மேல் சொக்கர் துறவுள்ளத் தோடு ஊரைவிட்டுச் சென்றுவிட்டார். நான் இதை, அவர் தந்தையிடம் கூறினேன். அவர் துடிதுடித்து, என்னையும் இன்னும் பலரையும் அனுப்பிப் பல பக்கங்களிலும் தேடச் சொன்னார். தேடினோம். கால்கள் கோயில் யானை போல் வீங்கியது தவிர அவர் என்னமோ அகப்படவேயில்லை. அவர் போகும்போது கடைசியாக ஒர சேதி சொல்லிப் போனார். எதிலும் பற்று நீக்கினேன். ஆனால் என் பொற்கிளை மேல் வைத்த அன்பை மட்டும் மாற்ற முடிய வில்லை. நீ அவளுக்கு ஆதரவாக இரு என்று கூறிக் கட்டளை இட்டுக் தெருவை விட்டு மறைந்தார். பொற்கிளை : சென்றவர் வராமலா இருந்துவிடுவார். என் அன்பு அவர் மனதில் இருக்குமானால் அந்த மனம் அவரை அங்கேயே நிறுத்தி வைத்திருக்குமாயென்ன? நீயா எனக்கு ஆதரவு? அதெப்படி? நீ எனக்குப் பிட்டும், முறுக்கும் வாங்கிக் கொடுப்பதா? இரண்டு, மூன்று நாளில் நான் அவரைக் காணவேண்டும் அல்லது என் உயிர் இவ்வுலகை விட்டு நீங்க வேண்டும். காரியக் காரரே, என் தந்தைக்கும் உடல் நலமில்லை. நானோ அவருக்கு ஒரே பெண். சொக்கருக்கும், எனக்கும் விரைவில் திருமணம் செய்து கண்ணால் காண வேண்டும் என்பது அவர் அவா. இச்செய்தியைக் கேள்விப்பட்டால் அவர் சாவது உறுதி. என் தந்தையோ என்னைச் சொக்கருக்கு மணம் செய்து கொடுக்க வேண்டியிருக்கும் என்று, என்னை நன்றாகப் படிக்க வைத்தார். அதுவுமில்லாமல், சொக்கரின் தந்தையிடம் அதிக மரியாதை காட்டி வந்தார். எங்கள் குடும்பமும் அவர் குடும்பமும் ஒரே வழியுடையது. செங்கான் : சரியாய்ப் போயிற்று! உங்களைச் சொக்கர் மணக்க லாகாது என்பதற்கு ஐந்து காரணங்கள் கூறினார் அவர் தந்தை அந்த ஐந்தில் நான்கு காரணங்கள் பொய் என்று இப்போது தெரிகிறது. மற்றொரு காரணம் நீங்கள் பணக்காரர் இல்லை என்பது. மங்கப் பாடியில் இருக்கும் பெண் வீட்டார் பணக்காரர். அவர்கட்கு ஒரே பெண். பெற்றவர்கட்குப்பின், சொத்து சொக்கருக்கே சேரும் என்றும் கூறினார். பொற்கிளை: மங்கப்பாடியார் எங்களைவிடப் பணக்காரர். ஐயமில்லை. செங்கான் : சொக்கருக்கு இதெல்லாம் தெரியாதா? பொற்கிளை: நன்றாய்த் தெரியும். அவர் நண்பர்களிடம் அவர் ஏன் இதையெல்லாம் மறுக்கவில்லையென்றால், தம் தந்தை சொத்து ஒன்றையே பெரிதாகக் கருதுவதை வெளிக்காட்டிக் கொள்ள அவருக்கு விருப்பமில்லை. தந்தை, சொத்தையே பெரிதென்றும் பிள்ளையின் விருப்பம் சிறிதென்றும் கருதியதைப் பொறுக்க முடியாமல்தான் அவர் துறவு பூணவும் துணிந்தார். துறவு என்றால் என்ன காரியக் காரியக்காரரே? அது இன்ன தென்று எனக்கு விளக்கிக் கூற முடியுமா? செங்கான் : துறவு என்றால், உங்களைத் தவிர, மற்றவர்களையும், மற்ற செய்திகளையும் நினைக்காமல் ஒரு புறமாக இருந்து விடுவது. பொற்கிளை: அப்படியானால் என்னைவிடப் பெரும் பேறு பெற்றவர்கள் எவர்? செங்கான் : ஏன்? பொற்கிளை: வேறென்ன, எதையும் நினைக்காமல் ஒருபுறமாக என்னுடன் வாழ்வதென்றால் எங்கள் இருவர் உள்ளமும் ஒட்டிய அணுவுக்கணு விட்டிட வழியிராதன்றோ? மேலும் அவர் தந்தையைக் கண்டால் நான் கூறியதாகக் கூறுங்கள். செங்கான் : என்னவென்று? பொற்கிளை: அவர் இழுந்த மகன் மீண்டும் வருவாராயின் அது என்னால்தான் என்று. அவர் என்னை மருமகளாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நான் அவரை மாமனாராக ஒத்துக் கொண்டதால்தான் அவர் தன் அருமை மகனை அவர் அடைய முடிகிறது! இல்லையா? செங்கான் : அது மட்டும் உண்மைதான். பொற்கிளை: நாளைக்கு அவர் வருவார். ஆயினும் நாளைக்கு வரைக்கும் என் உடல், உயிரைத் தாங்கி வாழுமா? காரியக் காரரே, அவர் வந்ததும் நேரே என்னை வந்து அழையும். எனக்கு விடைகொடும். (போதல்) செங்கான் : பொற்கிளைக்கு என்ன நம்பிக்கை! அவள் நம் பிக்கை பொய்யாகுமானால்? காட்சி - 12 சீனியப்பர், செங்கான் இருவரும் பேசியிருக்கிறார்கள். சீனி : செங்கான், பலப்பல ஊர்களில் தேடியாயிற்று, பிள்ளையைக் காணோம். தாயோ ஊண் உறக்கம் இல்லாமல் உயிர் துடிக்கிறாள். வற்புறுத்திக் கூறுவானாயின் நான் மறுத் திருக்க மாட்டேன். எங்கு இன்னல் அடைகின்றானோ? என்னை எவ்வாறு தூற்றுகின்றானோ! செங்கான் : நீங்கள் ஐந்து காரணங்கள் கூறினீர்கள், பொற்கிளையை அவர் மணக்கக் கூடாது என்பதற்கு முதற் காரணம், எதிர்த்துவிடு. சீனி : எதிர்த்த வீடாயிருந்தால் கெடுதலில்லையே! செங்கான் : இப்போது சொல்லுகிறீர்கள். இரண்டாவது காரணம் அவர்கள் வழி வேறு எங்கள் வழிவேறு - இதுவும் சரியில்லை என்று கேள்விப்படுகிறேன். சீனி : யார் சொன்னது? செங்கான் : பொற்கிளை சீனி : ஒரே வழிதான். ஆனால் பலநாட்களாகத் தொடர் பில்லாமல் இருக்கிறது. அதைத்தானே சொன்னேன். செங்கான் : இப்போது இப்படிச் சொல்லுகிறீர்கள். மூன்றாவது காரணம்: அந்தப் பெண் படித்தவள் அல்ல, என்பது. பொற் கிளை படித்தவள். உலகமறிந்த விஷயம் மங்கப்பாடிப் பெண்ணுக்கு எழுத்தே தெரியாது. சீனி : மிகவும் படித்தவள் என்று கேள்விப்பட்டேனே! செங்கான் : இப்போது கேள்விப்பட்டால் பயனில்லையே. நான்காவது காரணம்: அந்தக் குடும்பம் எப்போதும் நம்மை மதிப்ப தில்லை. அவர்கள் எப்போதும் உங்கட்கு மரியாதை செலுத்தத் தவறியதே இல்லை. நானா சொல்லுகிறேன். பொற்கிளை சொன்னார்கள். நீங்கள் கூறிய ஐந்தாவது காரணம் மட்டும் உண்மை! மங்கப் பாடிப் பெண்வீட்டுக் காரர் பொற்கிளை வீட்டாரைவிடப் பணக்காரர். ஆனால், பொற்கிளை வீட்டார் ஏழைகளல்லர். சீனி : அப்படியானால் பணத்தைப் பெரிதென்று நினைத்தேன் என்கிறாயா! செங்கான்: அப்படி நான் நினைக்கவில்லை. ஊரான் வீட்டுச் சொத்து நமக்கு வந்துவிட வேண்டும். அதற்காகப் பிள்ளை உங்கள் சொற்படி மணம் புரிந்து கொண்டு வாழ்க்கையை மண்ணாக்கிக் கொண்டாலும் உங்கட்குக் கவலையில்லை. சீனி : என்ன செங்கான்? நீதான் பேசுகிறாயா? செங்கான் : உங்கள் பணப் பேராசையைக் காலமெல்லாம் அறிந்த நான்தான் பேசுகிறேன். பணத்துக்காகப் பிள்ளையைக் கொன்ற கதை இவ்வுலகுக்குப் புதிது அல்லவா? நான் அயலான். கூலிக் காரன் அவரைப் பிரிந்து வாழ எனக்குப் பிடிக்கவில்லையே. சீனி : கொன்றேனா? பிள்ளை உயிரோடில்லையா? செங்கான்: சே, சே, உயிரைப் பெட்டியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார் கண்ணான தகப்பனாரைக் காண. சீனி : செங்கான் நீ கேள்விப்பட்டாயா? சொல்ல மாட்டாயா? இறந்தா போய்விட்டான்? செங்கான்: எங்கும் நான் கேள்விடப்படவில்லை, இறந்ததாக! தகப்பனார் என்றால் பொற்கிளையின் தகப்பனாருக்குத் தான் பொருந்தும். பொற்கிளை அவருக்கு ஒரே பெண்! நீங்கள் அதையும் முன்பு மறைத்துப் பேசினீர்கள். பொற் கிளை, தன் காதலனப் பிரிந்து வருந்துவது கண்டு அதுவே நினைவாகி நோயால் வருந்துகிறார். அன்னை யோ, பொற்கிளைக்கு முடிசூட்டி அம்மா உன் எண்ணப்படி ஒருவனை மணந்து கொள். இன்பமாய் இரு. உன் இன்பம், என் இன்பம் என்று கூறிவருகிறார்கள். சீனி : அப்படியானால் நானும் சாக வேண்டுமோ? செங்கான் : யார் சொன்னாது? தகப்பன் என்றால் அப்படி யிருக்க வேண்டும் -கால் உயிரோடு -என்கிறேன். (இதற்குள் ஓர் ஆள் ஓடிவந்து பொற்கிளையின் தந்தை இறந்தார் என்ற சேதியைக் கூறுகிறான்) சீனி: என் உயிரும் நில்லாது. செங்கான்: ஆம். ஆனால் அவர்கள் வழிவேறு, தங்கள் வழி வேறு. பணம்! அதனால் எத்தனை, பிணம் காணப்போகிறோமோ! இன்னும் சிலமணி நேரமும் ஆக வில்லை, பொற்கிளை யோடு பேசியிருந்தேன்! உயிர்போகும் நிலையில் இருந்த தன் தந்தையைப் பற்றிய கவலையையும் அவளிடம் நான் காண வில்லை, ஆனால் பிரிந்து சென்ற பெருமானுக் காகவே கதறினாள் அந்தக் கட்டழகி! நான் இங்கிருக்க முடியாதே! ஐயா நான் சாவு வீட்டுக்குப் போகவேண்டும். சீனி: ஏனப்பா இவ்வீடு பிடிக்கவில்லையா? வேலை பார்க்க விருப்பமில்லையா, அதையாவது சொல்லிவிடு. செங்கான்: ஆ! அப்படியா? சரி! ஐயா உண்மையில், உங்கள் வீட்டை விட எனக்குச் சாவு வீடுதான் மேல் என்று தோன்று கிறது. வேலை வேண்டாம். (போதல்) சீனி: உலகில் ஏசலுக்கு ஆளாகினேன். மெய்யாகவே நான் பணத்தாசையால் மகளின் நல்ல மனத்தை மறுத்தேன்! (தலை சாய்ந்து வருந்துகிறான்) காட்சி - 13 காக்கைப்பாடி என்னும் ஊர். இரிசன் புத்தகமும் கையுமாக வீதியிற் செல்லுகிறான் சொக்கன் கண்டு, தாங்கள் இந்த ஊர்தானே இரிசன் : ஆம்! ஏன்? சொக்கன் : நான் ஓர் துறவி. அயலூரன். இவ்வூரில் படித்தவர்களைக் கண்டு அவர்களின் வாய்ச்சொல்லால் நலம் அடைய விரும்பு கிறேன். புலவர்களின் சொற்பொழிவுகளில் ஏதாவது கேட்க விருப்பம்! இரிசன் : இவ்வூரில் ஆசிரமம் ஒன்று இருக்கிறது. அந்த ஆசிரமத் தில் ஒருபக்கம் யோகி சரவதிவாமி சுந்தராநந்த பாரதியார் என்றொருவர் இருக்கிறார் அவர் பேசுவதே கிடையாது. உங்கள் போன்றோரின் ஐயப்பாடுகளைத் தெரிவித்தால் எழுதிக் காட்டுவார். அவரை நான் நேரில் பார்த்ததில்லை, வேள்வி. சொக்கு : அப்படியானால் ஆசிரமம் எங்கே? நீங்கள் சொன்ன பேர்வழி இருப்பிடம் தெரியவேண்டுமே! இரிசன் : அதோ தெரிகிறதே, அதுதான் ஆசிரமம். அங்கே போய்ப் பாரதியார் எங்கே இருக்கிறார் என்று கேட்டால் கூறுவார்கள். சொக்கு : நன்றி ஐயா, நான் போய் வருகிறேன். (மற்றொருபுறம்) (பாரதியார் இருப்பிடத்தின் முற்புறமிருந்த ஒருவரை நோக்கிச் சொக்கு, பாரதியாரவர்களைப் பார்க்க வேண்டும்) கண்ணன் : நீர் யார்? சொக்கு : நான் அயலூர். ஓர் துறவி. கண்ணன் : அவரைப் பார்க்க முடியாது. பார்த்தாலும் பேச முடியாது. அவர் மௌன விரதம் பூண்டவர். மேலும், இப்போது யோகத்தில் இருக்கிறார் சுவாமி. அவர் எழுதிய நூற்கள் அநேகம் உண்டு. அவைகளை வாங்கி வாசிக்கலாமே. சொக்கு : இருந்தால் கொடுங்கள். விலை கொடுக்கிறேன். கண்ணன் : விலை அதிகமாயிற்றே. சொக்கு : அதனால் என்ன? இருக்கட்டும். கண்ணன் : இதோ 20, புத்தகங்கள் 65, ரூபாய். 2 (சொக்கு, தன் பெட்டியைத் திறந்து பணத்தை எடுத்துக் கொடுத்துப் புத்தகங்களை மட்டும் கையில் வைத்துக் கொண்டு! பெட்டியில் நோட்டுக் கற்றைகளைக் கண்ட கண்ணன்) பணம் அதிகமாக வைத்திருக்கிறீர்கள். எங்கே தங்கி இருக்கிறீர்கள்? நான் பத்திரமான இடம் காட்டுகிறேன். அங்கு தங்கலாமே! சொக்கு : சரி. (உடனே அடுத்த ஓர் அறையில் சொக்கனைத் தங்கும்படி செய்கிறான் கண்ணன். அங்கே சொக்கன் கையிலிருந்த புத்தகத்தை ஆவலாய்ப் படித்துக் கொண்டிருக்கிறான். கண்ணன் கூடவே ஒருபுறம் உட்கார்ந்திருக்கிறான்) கண்ணன் : நீங்கள் சுவாமியைக் காணவேண்டும் என்று நினைப்பது எதைக் கருதி? சொக்கு : நல்வழிப்படவேண்டும் என்பதற்காகத்தான், வேறென்ன? கண்ணன் : உங்களைப் பார்த்தால் அறிஞராய்த் தெரிகிறது. உங்களைச் சந்திப்பதில் சுவாமிகளுக்கு விருப்பம் இருக்கும். நான் கேட்டுச் சொல்லுகிறேன். சொக்கு : அப்படியானால் நன்று! (கண்ணன் சென்று பாரதியாரை நோக்கி) கண்ணன் : ஒரு துறவி, தாடி மீசையுடன் விளங்குகிறார். சிறுவயது, கையில் அதிகப்பணம் இருக்கிறது, உங்கள் இருபது புத்தகத்தையும் அறுபத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டார். உங்களைப் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகிறார். பாரதி : அவர் எந்த ஊர்? கண்ணன் : துறவி என்கிறார், ஊரைக் கேட்கவில்லை. பாரதி : படித்தவராகக் காணப்படுகிறாரா? கண்ணன் : இருக்கலாம். பாரதி : வரவிடுவதுதானே. கண்ணன் : முதலில், நீங்கள் யோகத்தில் இருப்பதாகக் கூறி விட்டேன். மேலும் நீங்கள் மௌனவிரதமுடையவர் என்றும் கூறிவிட்டேன். பிறகுதான் தெரிந்து அவர் ஓர் பணக்காரர் என்று. பாரதி : இருக்கட்டும். யோகம் முடிந்துவிட்டது என்றும், சுவாமி துறவிகளிடம் வாய் திறந்து பேசுவது உண்டு என்றும் கூறி அழைத்து வாருங்கள். (கண்ணன் சென்று சொக்கனை அழைத்துப் போகிறான்) சொக்கு : வணக்கம். பாரதி : ஆசி இங்கு (அதாவது நான்) எப்போதும் மௌன விரதம், அங்கு (நீ என்றுபொருள்) துறவு கண்டு பேச உடன்பட்டது! மேலும் இன்றுதான் யோகமும் கலைந்தது, எந்த ஊர்? எதற்காக இங்கு? சொக்கு : தரிசனமே பெரும் பயன்! மேலும் உபதேசம்! பாரதி : அவ்வாறா? நன்று! சொக்கு : ஆரமத்தில் இடம் இருக்குமோ? பாரதி : ஆரமம் ப்ரயோசனமற்றதாக இருக்கிறது. சொக்கு : ஆரம கர்த்தா? பாரதி : சாகப் போகிற கிழம். ஒன்றும் பயனில்லை. மெய்யன்பர்கள் சௌகரியப்படி இங்கு (நான்) வேறு - தனியாக அருள் நிலையம் என்பதாக ஏற்பாடு பண்ணியது. அதில் அங்கு (நீ) சௌகர்யமாகத் தாமதிக்கலாம். சொக்கு : இவ்வாசிரம கர்த்தா மகாவிஷ்ணு அவதாரமென்று வாமி இதோ இந்த நூலில் அருளிச்செய்துவிட்டு அது கிழம் பயனில்லை என்று கிருபை சாதிக்கிறது இப்போது, என்னிடம் அதிகப் பணம் இருக்கிறது. அவைகளைக் கொண்டு தனியாக ஒரு - பெரிய - இதுபோன்று ஆரமத்தை ஏற்படுத்த உத்தேசம். பாரதி : தனியே எதற்கு? அருள் நிலையத்தில் போட்டு அதை விருத்தி செய்யலாம். இங்கு(நான்)கூடிய சீக்கிரம் அருள் நிலையத்திற்குப் போய்விடுவதாக உத்தேசம் உண்டு. எப்படி? சொக்கு : சரிதான் தனியாக ஓர் ஆரமத்தை வாமிகளின் கூட்டுறவால் ஏற்பாடு செய்ய உத்தேசம் அதில் வரும் வருமானத்தில் வாமிக்கும் சமர்ப்பித்து விடுவது. பாரதி : அதில் வருமானம் ஏது? சொக்கு : பலசரக்குக் கடை இருக்கிறது. ஜவுளிக் கம்பெனி இருக்கிறது. மண்ணெண்ணெய்க் கம்பெனி வைக்கிறார்கள். அவைகளி லெல்லாம் வருமானம் வராமலா? பாரதி : ஆரமம் கம்பெனியாகுமா? அதில் வருமா? சொக்கு : வாமிகளின் மாதச் செலவுக்கு எது ஆதராம்? வாமி ஆரமம் வேறு, கம்பெனி வேறு என்று நினைக்க லாமோ? ஆரமம் சமகிருதம், கம்பெனி இங்கிலீஷ், இவ்வளவுதானே வித்தியாசம். பாரதி : போய் வருகிறீர்களா? சொக்கு : போகாமல் இங்கு இருக்கவா? தாங்கள் யோகம் ஆரம்பிக்க வேண்டிய நேரமாய் இருக்கலாம். மௌன விரதத்தையும் துவக்க வேண்டும். துவக்குங்கள் வேறு பணக்காரரைச் சந்திக்கும் வரைக்கும், வருகிறேன். ஐயோ பாவம்! உம்மை வெறுக்க வேண்டியதில்லை. பொதுமக்களுக்குப் படிப்பை தராது மறுக்கும் இந்தக் காலக் கோளாறு இருக்கிறதே அதைத்தான் வெறுக்க வேண்டும். வணக்கம், ஐயா இருங்கள். (போதல்) (போனபின் பாரதி, கண்ணனை நோக்கி இப்படிப்பட்ட பேர் வழிகளையா அழைத்துவர வேண்டும்?) கண்ணன் : நல்ல மனிதன் என்று நினைத்தேன். அவன் அவ்வாறின்றிப் படித்த மனிதனாயிருந்து விட்டான். நான் என்ன செய்வது? பாரதி : இந்த இழவில் நீ முதலிலேயே சுவாமிகள் மௌன விரதம் என்றும், யோகத்தில் இருக்கிறார் என்றும் கூறிவிடுகிறாய். கண்ணன் : முதலில் அவன் ஏழையென்று நினைத்தேன். பிறகு அவன் பெட்டியில் நிறையப் பணத்தைக் கண்டேன். பாரதி : இனிமேல், நன்றாய் மனிதனை ஆராய்ந்து பேச்சை விடு, போய் வா. (போதல்) காட்சி - 14 மல்லியூரில் ஒரு வீதியில் கட்டடம் ஒன்றில் தமிழர் சங்கம் என்ற பலகை தொங்குகிறது. சொக்கன் நுழைகிறான். சங்கத்தின் தலைவர் நெடுமுடியார் தனியாக அங்கு உட்கார்ந்திருக்கிறார். நெடுமுடி : யார் நீங்கள்? சொக்கு : நான் பீலிக்குடி. இப்படித் துறவியாக வந்துவிட்டேன். நெடுமுடி : துறவு! அதன் பயன் என்ன ஐயா? சொக்கு : பேரின்பம்! நெடுமுடி : யாருக்கு? சொக்கு : துறந்தார்க்கு! நெடுமுடி : அதன்பேர் சுயநலம் என்று நினைக்கிறேன். சொக்கு : சுயநலமற்ற வழியில் கிடைக்கும் இன்பம்? நெடுமுடி : அறத்தால் வருவது. சொக்கு : ஆ, அப்படியா? அறம் என்பதென்ன? நெடுமுடி : இன்பத்தை அடையும் ஆற்றல். சொக்கு : ஆற்றல்! ஆனால் நான் அவ்வறத்தை மேற்கொள்ளு கிறேன். அதுபற்றி இன்னும் விளக்க வேண்டும். நெடுமுடி : நல்ல வழியில் பிறருக்கு நலம் செய்க. நீர் எவ்வளவு நலம் புரிகின்றீரோ அவ்வளவாக உமக்கு இன்பம் கிடைக்கும். ஒன்றைப் பிறருக்குக் கொடும். அதனால் உம் உள்ளத்தில் ஏற்படும் இன்பத்தை உற்று நோக்குக. ஈத்துவக்கும் இன்பம் அறியார் கொல்! என்றார் வள்ளுவர். பிறருக்கு நீர் உழையும்! நலந் தேடும்! அவ்வுழைப்பும், காலத்துக்கும் மக்களின் தேவைக்கும் ஏற்றதாக இருத்தல் வேண்டும். சொக்கு : அறப்பாதையின் ஒன்றைக் குறிப்பிட்டுக் கூறவேண்டும். அப்பாதை இக்காலத்துக்கும் மக்கள் தேவைக்கும் ஏற்றதாகக் கூற வேண்டுகிறேன். நெடுமுடி : இவ்வுலகம் தொழிலால் மேம்படுவது. உலக மக்கள் யாவரும் தொழிலில் ஈடுபட வேண்டியவர்கள். தொழி லாளிகளின் உழைப்பைத் தங்கட்குப் பயன்படுத்துவதால் உழைக்காமல் உண்டு கிடக்கும் முதலாளிகள் இருக்கிறார் கள். அவர்களின் முதலாளித் தன்மை நிலையானது அன்று! கடலில் மிதக்கும் பனிக்கட்டித் துண்டுகள்! நாளடைவில் தொழிலாளர் என்னும் உலக மக்களோடு அவர்களும் கரைந்து கலந்துவிட வேண்டியது தான். அந்த நிலையில், உலகின் செல்வம் அனைத்தும் அனைவர்க்கும் சமமாகும். யார்க்கும் சம உணவு, யார்க்கும் சரி இருப்பிடம்! ஒத்த கல்வி, சுதந்திரம். இந்த நிலையை விரைவில் உண்டாக்க வேண்டும். இன்றைய மக்களின் அறம் இதுதான். மக்களின் விருப்பப்படி நடைபெறும் ஆட்சி இங்கிலாந் திலும், அமெரிக்காவிலும் நடைபெறுகிறது. தொழிலாளர் வளர்ச்சிக்கு அந்த நாடுகளின் ஆட்சிமுறை வழி செய்கிறது. ரஷ்ய நாடு தொழிலாளர் ஆட்சியுடையது. அங்கு மேலே நான் கூறியபடி பனிக்கட்டிகள் இல்லை, நாட்டு மக்கள் என்னும் கடலில் கரைந்து விட்டன. அங்கு உடைமை பொது! அது இன்ப உலகத்தின் ஒருபகுதி ஒளி. உலகத்தின் கூடத்துறை. துன்ப உலகத்தை இன்ப உலகமாக்கிவிட புத்தர் அன்று பாடுபட்டார். ஆனால் அவர் கையாண்ட முறை சரியில்லை. தொழிலாளர்களுக்குச் சொந்தமானது இந்த உலகம். இந் நாட்டில் தொழிலாளர்க்கு உரிமை, போதிய வசதி, போதிய உணவு ஒன்றுமில்லை. தொழிலாளர் முன்னேற்றத்திற்கு அவர்களின் கல்விக்கு, அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு பாடுபடுவதே இன்று மேற்கொள்ள வேண்டிய அறம் என்று கூறுவேன். நீவிர் அறம் செய்க. இன்பம் எய்துக.  படித்த பெண்கள் காட்சி - 1 (ராஜப்பா வீடு. காலை 11 மணி, ராஜப்பா மனைவி புனிதா தென்றல் என்ற தினசரிப் பத்திரிகை வாசித்துக் கொண்டிருக் கிறாள். சாய்மான நாற்காலியில் சாய்ந்தபடி! புனிதாவின் தமக்கை ரமணி வருகிறாள்.) புனிதா : வாங்க அக்கா! ரமணி : இரண்டு நாளாக ஜுரமாம் அவருக்கு. புனிதா : அப்படியா? கடிதம் வந்ததா? ரமணி : எனக்கென்னமோ மனசு அமைதிப்படலை. புனிதா : கவலையாகத்தான் இருக்கும் மாமாவோட வேலைக் காரர் போயிருக்கிறாராம். ரமணி : அதக்கெல்லாம் குறைவு ஒன்றுமில்லே. சமீபத்திலியா இருக்குது பம்பாய்? (கார் ஆர்ன் சப்தம் கேட்கிறது.) புனிதா : பள்ளிக்கூடம் விட்டாச்சா? (மணியைக் கவனிக்கிறாள்.) ரமணி : கண்ணப்பனா? (முன்னே டிரைவரும், பின்னே கண்ணப்பனுமாக வருகிறார்கள்) டிரைவர் : (புனிதாவை நோக்கி) சின்னையாவுக்கு உங்க மேலே கோவம்மா. ரமணி : தம்பி வா உட்காரு! (டிரைவர் புத்தகத்தை அங்கிருந்த மேஜைமேல் வைத்துப் போகிறான். கண்ணப்பன் உட்கார்தல்.) புனிதா : தம்பி, என்மேலே கோபமா ஒனக்கு? கண்ணப்பன்: ஆமாம்! பந்து கேட்டேனே? (ரமணி கண்ணப்பனின் பூட்ஸை கழற்றுகிறாள்.) கண்ணப்பன் : நீங்க சும்மா இருங்க. ரமணி : அக்கரையில்லை தம்பி! (இதற்குள் புனிதா உட்சென்று பந்து கொண்டுவந்து கொடுக்கின்றாள்.) கண்ணப்பன் : மறந்து போகாமே வாங்கி வந்து வச்சிருந்தீங்களா அண்ணி! (அதற்குள் வேலைக்காரன் ஒருவன் சூப் - டவல் கொண்டு வந்து வைக்கிறான். புனிதா டவலை அவன் மார்பில் போர்த்தி சூப்பைக் குடிக்கக் கொடுக்கிறாள். முடிவில்) கண்ணப்பன் : அண்ணி! பூமி சாதிரத்திலே எனக்கு 10 மார்க்கு வந்தது. புனிதா : சந்தோஷந்தானே உனக்கு? கண்ணப்பன் : நீங்க பாடம் சொல்லிக் கொடுக்கறிங்களே, அப்போ எனக்கு வருத்தமாயிருக்கும். வாத்தியார் 10 மார்க் கொடுத்தார் அப்போ சந்தோஷம். புனிதா : பேஷ்! ரமணி : பேஷ்! பேஷ்! புனிதா : பெரியண்ணியைவிட்டு அண்ணாத்தை பம்பாய்க்குப் போனாங்களே. ரமணி : சும்மா இரு! சந்தோஷ நேரத்திலே வருத்தத்தை இழுக்கிறே? (கார் ஆர்ன் சப்தம் கேட்கிறது. டிரைவர் தோளில் ஒரு கையை ஊன்றியபடி கண்ணப்பன், ராஜப்பா இருவரின் தந்தையாகிய வயது முதிர்ந்த சுந்தரம் பிள்ளை வருகிறார். மருமகள் புனிதாவும், ரமணியும் கலவரத் துடன் அவரை எதிர் கொள்ளுகிறார்கள்.) புனிதா : மாமா! என்னமாயிரக்கிறது உடம்பு? ரமணி : மெதுவாக நடந்துவாருங்கள். சுந்தரம் பிள்ளை : மயக்கம்! கை கால் அயர்வு! புனிதா : நான் அழைத்து வருகிறேன். நீ போ. டிரைவர் டாக்டரை ஓடி அழைத்துவா. (போகிறான்.) (பாங்கர் சுந்தரம்பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறார். அவர் மருமகள் புனிதாவும், ரமணியும் (புனிதாவின் தமக்கை) பாங்கரின் இரண்டாவது பிள்ளையாகிய 8 வயதுள்ள கண்ணப்பனும் அருகிலிருந்து நோயாளிக்கு உதவி புரிகிறார்கள்.) நோயாளி சுந்தரம் : அவன், ராஜப்ப எங்கே? இப்படி பாங்கை கவனிக்காமல் கிண்டி ரேசே கதியா இருக்கிறான். புனிதா : நீங்க அமைதியா இருங்க. தூங்குங்க மாமா! சுந்தரம் : உனக்கென்னம்மா தெரியும்? இதுவரைக்கும் அவன் கிண்டி ரேசில் அழிச்ச பணம் லட்சரூபா. இப்படியே இருந்தா சின்னவன் கதி என்ன ஆகும்? பாங்கு பாழா போவுது. புனிதா : பாங்கை நான் கவனித்துக் கொள்கிறேன். நீங்க கவலைப் படாதீங்க. சுந்தரம் : நீ சாமர்த்தியசாலி மெய்தான். அவன் வீட்டில்தானே, அவன் பெண்களை நம்புகிறவனா? பெண்களை அடிமையாக வைத்திருக்கவேண்டும் என்பதுதான் அவன் கருத்து. (இச்சமயத்தில் டாக்டர் வருகிறார். சுந்தரம் பிள்ளையின் உடம்பைப் பரிசோதிக்கிறார்) (அதே சமயம் அடுத்த அறையில் ராஜப்பா கிண்டி நண்பன் வேலுவிடம் பேசிக் கொண்டிருக்கிறான்) ராஜப்பா : எப்படியாவது, பதினாயிரம் ரூபா பாத்து எடுத்துக் கொண்டு வர்ரேன். இந்த தடவையாவது வெற்றி ஏற்படாதா? வேலு : எவன் சொன்னாலும் நான் ஒத்துக் கொள்ள போவ தில்லை. நீ அதிஷ்டசாலி. விசேஷ வெற்றி அடைய வேண்டியவன் நீ! பாளையத்துச் சோசியர் விஷயத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. (இதற்குள்) ஓர் ஆள் : டாக்டர் வந்திருக்கிறார், உங்களை கூப்பிடுகிறார்கள். ராஜப்பா : யார் கூப்பிடுவது? ஆள் : டாக்டர். ராஜப்பா : எனக்கு மீளாத தொல்லை! வேலு இரு! இதோ வந்து விட்டேன். (போகிறான்) (தந்தையிடம் ராஜப்பா வந்து நிற்கிறான்.) டாக்டர் : தொண்டையிலே கவம் இருக்குது. சுரம் இருக்றது. மருந்து எழுதித் தர்ரேன். மணி நேரத்துக்கு ஒரு தேக்கரண்டி கொடுத்து வாங்க. லேசான ஆகாரமா யிருக்கட்டும்! அவருக்கு மனக் கவலையும் இருக்கும் போலிருக்குது. ராஜப்பா : அதெல்லாம் ஒண்ணுமில்லே. டாக்டர் : கொஞ்சம் ஜாக்கிரதையா பாத்துக்கணும். வயது என்ன ஆவுதா? ராஜப்பா : அறுவது. டாக்டர் : வயதாய்ட்டுது ஜாக்கிரதை! நான் போய்வர்றேன். (போகிறார்.) (ராஜப்பா நழுவுகிறான். புனிதா ராஜப்பாவைத் தொடர்ந்து) புனிதா : அத்தான், மாமா நோயாளியா இருக்கிறார். நீங்க வெளி யூருக்குப் போகவேண்டாம். ராஜப்பா : அவருக்கு இந்த நோவு புதிதல்ல புனிதா. (தன் அறைக்குப் போகிறான்.) காட்சி - 2 (சுந்தர் பாங்கில் முத்துரெட்டியார் 5,000 ரூபாய் செக் மாற்றி, எதிரில் எண்ணிவைத்து, மடியில் இருக்கும் பையை எடுக்கிறார். கும்பலில் கையைவிட்டு, பாங்கு பியூன் ரத்தினம் எடுத்துக் கொண்டு போய், பாங்கின் உள்ளிருந்த எட்கிளார்க் ராமச் சந்திரனிடம் கொடுக்க அவன் அதைத் தன் மேஜையில் வைத்துக் கொள்ளுகிறான். ரெட்டியார், நோட்டுக் கற்றையைக் காணாமையால்...) ரெட்டி : ஐயையோ, நோட்டெல்லாம் காணோமே. பியூன் : என்னது என்னா நோட்டா? எல்லாரையும் சோதி யுங்கள். (ரெட்டியாரும், பியூனும் எல்லாரையும் சோதிக் கிறார்கள். ஒருவரிடமும் அகப்படவில்லை. இதற்குள் எட்கிளார்க் ராமச்சந்திரனும் அங்கே வந்து நிற்கிறான்.) பியூன் : ஏன் ரெட்டியாரே, ஒங்க ஆள் ஒருத்தரிடம் பேசியிருந் தீங்களே அவரிடம் கொடுத்து கிடுத்து...) ரெட்டி : ஐயோ நான் யாரிடமும் பேசியிருக்கலியே, ஐயோ பாடுபட்டபணம் ஐயா. (தலையில் அடித்துக் கொள்ளுகிறார். அரைகுறையாய்க் கவனித்திருந்த நாகரத்தினம் கூறுகிறான். பியூனை நோக்கி...) நாகரத்தினம் : ஏனய்யா நீர் சற்று முன்னே இங்கு நிக்லே. பிறகு உள்ளே போய் வரலே? பியூன் : நானா, ஏங்காணும்? பார்த்தீரா நீர்? போங்காணும் வெளியே? நாகரத்தினம் : ரெட்டியாரே, பியூன்மேல் எனக்குச் சந்தேகம். (ரெட்டியார் பியூனண்டை ஓடி அவன் முகத்தைப் பிடித்துக் கொண்டு...) ரெட்டி : ஐயா, நீர் நூறு ரூபாய் எடுத்துக் கொள்ளும். என் முட்டாள் தனத்துக்காக! பாக்கியை கொடுத்துடும். பியூன் : யாரு? என்னையா? ஜாக்கிரதை! எட்கிளார்க் : ரெட்டியாரே, அவன் பாங்கு பியூன். அவன் மேலே சந்தேகப்படாதீங்க. பியூன் : பல்ல ஒடச்சுட மாட்டேனா! (ரெட்டியார் சந்தேகத்தால் எட்கிளார்க்கைப் பார்த்து....) ரெட்டி : என்னையா பியூனுக்காகச் சிபாரிசு சொல்லுகிறீரே ஒழிய, அவரை சோதிக்கும்படி சொல்லலியே நீர். நாகரத்தினம்: பியூன் உள்ளே போய் அவரிடந்தான் பேசியிருந்தான். பியூன் : டேய்! (என்று அவன் மேல் பாய்ந்தான். ரெட்டியார் எட் கிளார்க் ராமச்சந்திரன் மேல் பாய்ந்து அவன் கழுத்தைத் கட்டிக்கொண்டு...) ரெட்டி : என் பணத்தை நீதான் எடுத்தே. (என்று கூச்சலிட்டார். பியூன் ஓடிவந்து ரெட்டியாரை விலக்கிப் பார்த்தான்.) ரெட்டி : என்னைக் கொண்ணாலும் சரிதான்... விடமாட்டேன். என் பணத்துக்கு வழி? நாகரத்தினம் : பாங்கு பியூன்! எட்கிளார்க்! ரெட்டியாரே விடாதிங்க! இதோ பாங்கு சொந்தக்காரரை நான் போய் அழைத்து வர்றேன். (நாகரத்னம் ஓடுகிறான்) பியூன் : ரெட்டியாரே, நான் சொல்றதைக் கேளும். அவர் எட் கிளார்க். ஒங்க மேலே குத்தம் ஏற்படும். மரியாதை யாகச் சொல்றேன். ரெட்டி : போடா திருட்டுக் காமாட்டி! (பியூன் வந்து விலக்க முயலுகிறான். முடியவில்லை. அடிக்கிறான்.) ரெட்டி : அடி! கொல்லு! அத்தனையும் வட்டியும், முதலுமாகக் கொடுத்துடறேன். ஊம்! (பியூன் பாங்கிலிருப்பவர்களைக் குறித்து) பியூன் : பாங்கில் இருக்கும் மற்றவர்கள் சும்மா இருந்தால் என்னமா போறது! ரெட்டி : திருட்டுப் பசங்களுக்குப் பரிஞ்சி வருவாங்க. (இதற்குள் புனிதா காரில் இறங்குகிறாள், நாகரத்னத் துடன்) நாகரத்தினம்: ரெட்டியாரே, இதோ இந்தம்மா பாங்குக்கு உடைய வங்க. ரெட்டி : அம்மா! பாடுபட்டுச் சம்பாதித்த பணம் அம்மா! புனிதா : ரெட்டியாரே வருத்தப்படாதீர்கள். உங்கள் பணம் போனால் பாங்குப் பணத்தைத் தருவேன். அவரை விடுங்கள். (எட்கிளார்க்கை விட்டுவிட்டு...) ரெட்டி : அம்மா என் உயிர் வந்ததம்மா. புனிதா : (எட்கிளார்க்கை நோக்கி) நீர் செய்யவேண்டும். கணவர் வந்திருப்பார் அழைத்து வாருங்கள். எட்கிளா : பாங்கில் இப்படி நடந்திருக்கிறது.... புனிதா : நான் சொல்லுகிறபடி நீர் செய்ய வேண்டும். எட். கிளா : சரி.... (பாங்கில் உள்ளே போகப் பிரயத்தனப்படுகிறான்) புனிதா : நீர் நேரே, என் வீட்டை நோக்கிப் போக வேண்டும். எட். கிளா : சரி... (போகிறான். போனபிறகு புனிதா பாங்கினுள் எட் கிளார்க் மேஜையைத் திறந்து பார்க்கிறாள். நோட்டுக் கற்றை கிடைக்கிறது. இதற்குள்...) ரெட்டி : இப்படிப்பட்ட திருட்டுப் பசங்களையா வைப்பது பண நடமாட்டமுள்ள இடத்தில்! பியூன் : அடே வாயை அடக்கு, உதைபடுவே. (இதற்குள் புனிதா வந்து பியூனை ஓர் அறை கொடுத்து இழுத்து விட்டு...) புனிதா : பியூன், நீ திருடி, அந்த எட்கிளார்க்கிடம் கொடுக்க வில்லை இந்த நோட்டுக்கத்தையை? (பியூன் விழித்து) பியூன் : என்னை மன்னிக்கணும் தாயே! நான் புள்ளைக் குட்டிக் காரன். ரெட்டி : உயிர் வந்ததம்மா எனக்கு. நல்ல வழியில் சம்பாதித்த பணம் அது. நாகரத்தினம்: அம்மா ரெட்டியாரை அடித்தானம்மா அந்த அயோக்யன். (இதற்குள் எட்கிளார்க் ராமச்சந்திரன் வந்து விடுகிறான்) புனிதா : ரெட்டியாரே, நீர் போகலாம். ரெட்டி : நல்லதம்மா. (போய்விட்ட பிறகு புனிதா அறை நோக்கிப் போக, எட்கிளார்க்கும் போய் நிற்கிறான். புனிதா குறிப்புப் புத்தகத்தில் ஏதோ எழுதிவிட்டு...) புனிதா : பாங்குக்குக் கெட்ட பெயர் வந்துவிடப் பார்த்தது. எட். கிளா : என்ன சொல்லி அனுப்பினீர்கள்? புனிதா : பணம் கொடுத்து அனுப்பினேன். பாங்கு பணத்தைத் தான்! உமக்கும் கெட்ட பெயர் வந்துவிடக் கூடா தல்லவா? எட்கிளா : அவ்வளவு பாசம் என்மீது வைத்திருப்பதற்காக நன்றி பாராட்டுகிறேன். தங்கள் கணவர் அடிக்கடி கிண்டி ரே கிண்டி ரே என்று போய்விடுகிறார். (இந்த வார்த்தைகள் நடக்கும்போது ராஜப்பாவும், அவன் நண்பன் வேலுவும் வெளியில் நின்று கேட்டிருக்கிறார்கள்) ராஜப்பா : வேலு! கேள்! என்ன அக்கிரமம் பார்! எட்கிளார்க் மேல் அவளுக்குப் பக்ஷமாம். என்னைப்பற்றிய வசை புராணம்! இதற்காக அல்லவா நான் பாங்கைக் கவனித்துக் கொள்ளுகிறேன், கவனித்துக் கொள்ளுகிறேன் என்று அடிக்கடி என்னைக் கேட்டது. என் மானம் பறிபோகிறது. (தன் சட்டைப்பையிலிருக்கும் ரிவால்வரைக் கோபமாய் எடுத்து) ஒழித்துவிடுகிறேன் அவளை! வேலு : இரு! இரு! பதறாதே. (என்று ராஜப்பாவைப் பிடித்துக் கொள்ளுகிறான்.) புனிதா : ஆனால் ஒரு விஷயம். 5,000 ரூபாய்க்கு நீர் வழி சொல்ல வேண்டும். எட்கிளா : நான் ஏன் வழி சொல்லுவேன்? புனிதா : திருடியது யார்? எட் கிளா : பியூன்! (பியூன் வந்து நிற்கிறான்) புனிதா : யார் திருடியது? பியூன் : நான் எடுத்துப் போய் இவரிடம் கொடுத்தேன். புனிதா : என்ன சொல்லுகிறீர்? (இச் சமயம் வேலு ராஜப்பாவை நோக்கி) வேலு : என்ன சொல்லுகிறீர்? (ராஜப்பா புனிதாவிடம் சென்று) (புனிதா குறிப்புப் புத்தகத்தைக் கணவனிடம் கொடுக்க, அவன் அதை வாங்கி அவனை நோக்கி) ராஜப்பா : கிளார்க்! வெளியிற் போய்விடு! டேய் பியூன் வெளியிற் போ! எட்கிளா : நான் செய்ததென்ன? ராஜப்பா : நீ அவனிடம் நோட்டை வாங்கி மேஜையில் வைத்தாய். தண்டனைக்குத் தயாராய் இருக்கிறாயா, மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள இஷ்டமா? (இருவரும் போகிறார்கள்) ராஜப்பா : புனிதா நீ போ வீட்டுக்கு! புனிதா : நீங்கள்? ராஜப்பா : பிறகு வருகிறேன். காரிற் போம். (போகிறாள். ராஜப்பா தன் நண்பன் வேலுவிடம்) ராஜப்பா : நீ இல்லாவிட்டால் என் கோபம் அநர்த்தமாய் முடிந்திருக்கும். வேலு : நீர் பொதுவாகப் பெண்களைப் பற்றிக் கொண்டிருக்கும் அபிப்ராயம் சரியில்லை. பணம் ஏற்பாடாயிற்றா? ராஜப்பா : ஏதேஷ்டம். ரயிலுக்குத் தயாராய் இரு! நான் வீட்டுக்குப் போய் வருகிறேன். (வேலு போகிறான்) காட்சி - 3 (சுந்தரம்பிள்ளை மரணாவதை அடைகிறார். மற்றவர்கள் அருகி லிருந்து வருந்துகிறார்கள்) புனிதா : மாமா! மாமா! சுந்தரம் : கண்ணப்பன் எங்கே? ராஜப்பா வந்துவிட்டானா? (அதற்குள் ராஜப்பா வருகிறான்.) புனிதா : அத்தான், உங்களுக்கு உடம்பு எப்படியிருக்கிறது. சுந்தரம் : மார்பு வலிக்கிறது. அவ்வளவுதான். ராஜப்பா : சற்று நேரம் நித்திரை செய்யுங்கள். உங்களுக்கு ஒன்று மில்லை, பயப்படாதீர்கள். (ராஜப்பா தன் அறைக்குப் போகிறான். டிரைவர் வந்து ராஜப்பாவைப் பணிந்து நிற்கிறான்.) ராஜப்பா : டிரைவர், அந்தப்படுக்கையைக் கட்டு. உடுப்பு களை எடுத்துப் பெட்டியில் அடுக்கு. (ராஜப்பா உடையணிகிறான். புனிதா அங்கு வருகிறாள்.) புனிதா : அத்தான், ஊருக்கா? மாமாவுக்கு இப்படியிருக்கையில் ஊருக்குப் போகிறீர்களே. இன்னும் இரண்டு நாள் சென்று போகலாம் அத்தான். ராஜப்பா : அவர் உயிரோடிருப்பது உங்கட்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. நல்ல நிலையிலிருக்கிறவரை இறந்து விடுவார், இறந்துவிடுவார் என்று நீயும், உன் தமக்கையும் சொல்லிக் கொண்டிருக்கும் சங்கதிதான் புரியவில்லை. (கார் டிரைவர்) படுக்கைகளையும், பெட்டியையும் எடுத்துக் கொண்டு காரில் வைக்கப் போகிறான். புனிதா கண்ணீர் விடுகிறாள்.) புனிதா : தத்துக் குத்தலா இருக்கும்போது பெற்ற பிள்ளைகள் அருகில் இருக்க வேண்டாமா அத்தான்? வேண்டாம் அத்தான் போகாதீர்கள் அத்தான். (புனிதா வழிமறித்து வாசற்படியில் நின்று பரிதாபமாக அழுகிறாள்.) ராஜப்பா : வழியை மறிக்காதே புனிதா. கையை எடு. அபச குனம்! (கையை விலக்கிவிட்டுப் போகிறாள்.) காட்சி - 4 (படுத்த படுக்கையில் இருக்கும் சுந்தரம் பிள்ளை ஈன சுரத்தோடு பேசுகிறார். அருகில், புனிதாவும், ரமணியும் கண்ணப்பனும் இருக்கிறார்கள்.) சுந்தரம் : நீ சொல்லிப் பார்த்தாயா, புனிதா? புனிதா : வழியை மறித்து அழுதேன் மாமா. சுந்தரம் : என்ன பண்ணுவது, நான் பாவி, போகிறான்! பாங்கில் எட் கிளார்க் இல்லை. பியூன் இல்லை. விடுதலைப் பத்திரிக் கைக்கு விளம்பரம் அனுப்பு. 50 ரூபாய் சம்பளத்தில் ஒரு பாங்க் எட்கிளார்க்கும். 15 ரூபாய் சம்பளத்தில் ஒரு பியூனும் தேவை என்று! உடனே எழுது. ரமணி : ஆம் எழுதத்தான் வேண்டும். பாங்காவது நடக்கட்டும் ஒழுங்காக. (புனிதாவும், ரமணியும் போகிறார்கள் ஒருபுறமாக) சுந்தரம் : கண்ணப்பா அண்ணியைக் கூப்பிடு. (கண்ணப்பன் போகிறான். பிறகு கண்ணப்பனும், புனிதாவும் வருகிறார்கள்.) புனிதா : ஏன் மாமா? சுந்தரம் : சுவாச பந்தம் அதிகமாக இருக்கிறது. பாங்கை அதிக நாள் மூடிவிடக் கூடாது. புனிதா : உங்களுக்கு எப்படியிருக்கிறது மாமா. ஐயோ, அக்கா, அக்கா மாமாவைப் பாருங்கள். (ரமணி ஓடிவருகிறாள்) சுந்தரம் : அப்பா, தேவலை! என் சமீபத்தில் இருங்கள். என் சின்ன மகனை நீங்கள்தாம் காப்பாற்ற வேண்டும். நன்றாகப் படிக்க வையுங்கள். புனிதா : எங்கள் உயிரையும் தந்து காப்பாற்றுகிறோம். அதுபற்றிய கவலை வேண்டாம் உங்களுக்கு. மாமா, மாமா. (சுந்தரம்பிள்ளை கை கண்ணப்பனைத் தடவுகிறது. ரமணி, கண்ணப்பன் கைகளை அவர் கைகளில் சேர்க்கிறாள். சுந்தரம்பிள்ளை கண்ணப்பன் கைகளைப் பிடித்து இரு பெண்களிடமும் ஒப்படைக்கிறார். சுந்தரம்பிள்ளை உயிர் போகிறது. அனைவரும் அழுகிறார்கள்.) காட்சி - 5 (புனிதாவும், ரமணியும் கண்ணப்பனும் துயரத்தோடு இருக்கிறார்கள். பந்துக்களாகிய அலமேலு, ஆதி, இரிசம்மா முதலியவர்கள் பிரேதத்தின் எதிரில் கட்டிக் கொண்டு அழுகிறார்கள். ஒருபுறம் ஆடவர் சிலர் சூழ்ந்துகொண்டு பந்துகட்குத் தந்தி, தபால் எழுதுகிறார்கள்.) அலமேலு: சீமை தலப்பாகை - என்னருமை ஐயாவே -நீ தெக்கித்தி சோமங்கட்டி கோமுட்டி செட்டியாட்டம் -நீ கோலம் வரக்காணாமே. பட்டுக் கொடெ புடிச்சி என்னருமை ஐயாவே -நீ பாளையக்காரனாட்டம் எட்டி நடந்தாக்கா - எல்லாரும் பாப்பாங்க. (இதற்குள் அலமேலுவின் மகள் வந்து அலமேலுவை இழுத்து...) அலமேலு மகள் : ஏம்மா ராத்ரி அப்பா வாழப்பழம் வாங்கி வந்தாங்களே. எங்க வச்சிருக்கே? (கட்டி அழுது கொண்டிருந்த அலமேலு திடீரென்று அழுகையை நிறுத்தி.) அலமேலு : பீரோவிலே அறைக்கதவு சாவி இருக்குது. தெறந்து எடுத்துக்க. எனக்கு நாலுபழம் வைக்கச் சொல்லு. (சிறுமி சிறிது தூரம் போகவிட்டு) அலமேலு : இந்தாம்மா. (சிறுமி வருகிறாள்.) அலமேலு : அல்லாத்தியும் துண்ணுடாதீங்க. (என்று அழுகையை முன்விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறாள்.) வாங்கி கடிகாரம் என்னரிமை ஐயாவே மாரணிஞ்சி போகையிலே பாங்கிக்கார் என்று சொல்லி - ஒன்னே பார்ப்பாங்க அல்லாரும். (ஆஹூம்..) ஆதி : சந்தனக்கட்டிலிலே சாஞ்சியிருக்கையிலே ஒனக்கு - தங்க தாம்பாளத்தில்- லட்டு வந்து காத்திருக்கும். (ஆஹூம்..) தேக்குமரக்கட்டிலிலே - சீராகச் சாஞ்சிருக்கும் ஒனக்கு - பாக்கு வந்து காத்திருக்கும் பச்ச ரவேசோடு (ஆஹூம்) (இதற்குள் ஆதியின் புருஷன் வந்து..) ஆதி புருஷன் : அங்கே ஆரு! ஆதி : ஏன்? புருஷன் : நாழி ஆவுது வூட்டுக்குப் போயி வா. இங்கே நாழி ஆவும் போல இருக்குதே. ஆதி : தோ வந்துட்டேன். இதை முடிச்சிட்டு வந்துடுறேன். (முன்விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறாள்.) துப்பட்டா தோளிலிட்டு - சுருட்டுக் குடிச்சபடி துரையே நீ போகையிலே - மரியாதி பண்ணுவாங்க. (புருஷன் போய்விடுகிறான். இரிசம்மாவுக்குக் கோபம் வந்து விடுகிறது.) இரிசம்மா : இங்கே ஆம்பளை என்ன வர்ரது? ஆதி : வந்தா எண்ணா முழுகிப் போவுது? அலமேலு : அதெப்படி வரலாம்? வந்தா என்னாவாமே! ஆதி : நீ என்னமோ காட்டறே. மாங்காய்க்குப் புளிப்பு. இரிசம்மா : நீ என்னமோ நீட்டறயே ஒரேமுட்டா. அலமேலு : இழவு வீடா? சண்டே போடற இடமா? நிறுத்துங்க. (என்று கூறிக்கட்டிப்பிடித்து அழத் தொடங்குகிறாள். பாட்டு முன் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறது.) ஆதி : நூக்கமரக் கட்டிலிலே சாஞ்சியிருக்கையிலே, ஒனக்கு செலேபி வந்து காத்திருக்கும். காப்பி வந்து காத்திருக்கும். (ஆஹூம்). அலமேலு : அல்லாரும் எழுந்திருங்களேன். (அனைவரும் எழுந்திருக்கிறார்கள். வட்டமாக நின்று சாய்ந்து சாய்ந்து ஆடி மார்பில் அடித்துக் கொண்டு பாடுகிறார்கள்.) அனைவரும்: போனீங்களே! போனீங்களே! பொன்னே மணியே - போனீங்களே! மறந்தீங்களே! மறந்தீங்களே! மகராசாவே மறந்தீங்களே! (இதைக் கண்டிருக்கும் கண்ணப்பனும் மற்ற சிறுவர் களும் பேசுகிறார்கள்.) கண்ணப்பன்: உங்க அம்மாதாண்டா நன்றாகப் பாடுறாங்க! நன்றாக ஆடறாங்க. (அதற்கு அவன்.) ஆமாண்டா. (இன்னொருவன் தன் தாயை நோக்கி.) எம்மா இவனைப் பாருமா நீ நல்லாப் பாடலையாம். நல்லா ஆடலையாம். இவன் சொல்றான். ஒரத்திப்பாடுமா. (இதைக் கேட்ட அவள் உரத்த குரலில் பாடுகிறாள்.) மறஞ்சீங்களே, மறஞ்சீங்களே! மகாராசாவே மறஞ்சீங்களே! காட்சி - 6 (கிண்டியில் ரே முடிந்தது. தோற்றவர்கள் வருத்தத்தோடு வருகிறார்கள். ராஜப்பாவும், வேலுவும் அடக்க முடியாத துன்பத்தோடு வெளியில் வந்து நிற்கிறார்கள்.) ராஜப்பா : வேலு உன்னிடத்தில் என்ன இருக்கிறது? வேலு : என்னிடத்தில் ஒரு காசுகூட இல்லையே. ராஜப்பா : அவள், தங்கத்திடம் வாங்கிக் கொடுத்துவிடலாம். ஒரு வாடகைக் கார்பேசு. வேலு : அவளை நம்பவேண்டாம் கையை விரித்துவிடுவாள். ராஜப்பா : அப்படி நினைக்காதே, எவ்வளவோ செய்திருக்கிறேன் அவளுக்கு, பேசு. (அங்கு இருந்த வாடகைக் காரில் ஏறிக்கொண்டு சென்னைக்கு வருகிறார்கள்.) காட்சி - 7 (ஆதியப்பர் நாயக்கர் தெருவில் தங்கம் வீட்டில் தங்கம் தன் வேலைக்காரன் பொன்னனிடம் கூறுகிறாள்.) தங்கம் : பொன்னு, இங்கு வா. புதுச்சேரியார் வந்து இரண்டு நாள் ஆச்சி. கிண்டி ரேசுக்குப் போய் அவர் வரும் நேரமாகிறது. முந்தாநாள் அவருக்கு ஒரு தந்தி வந்தது. இந்தா இதை வைத்துக் கொள். இது, அநேகமாக அவர் தகப்பனார் செத்துப் போன சேதியாகத் தான் இருக்கும். நான் தங்க சாலைத் தெருவுக்குப் போய் விடுகிறேன். அவர் வந்ததும், ஏதாகிலும் பணம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார். பனாதியாய் வந்திருக்கிறார் என்று தெரிந்தா என்னைக் கூப்பிடாதே. தங்கம் செங்கல் பட்டுக்குப் போயிருக்காங்க என்று சொல்லி அனுப்பிவிடு. சந்தோஷமா வந்திருந்தால் என்னை உடனே கூப்பிடு. (என்று சொல்லிப் போகிறாள்.) (காரில் ராஜப்பாவும், வேலுவும் வந்து இறங்குகிறார்கள்.) ராஜப்பா : பொன்னு, தங்கத்திடம் இரண்டு ரூபா இருந்தால் வாங்கி வா. பொன்னு : ஐயோ, அவுங்க இல்லிங்களே, செங்கல்பட்டில் அவுங்க தங்கச்சிக்குத் தடபுடலா இருக்குதுன்னு தந்தி வந்து அங்க போயிருக்காங்க. ராஜப்பா : உன்னிடம் ஒன்றுமில்லையே? பொன்னு : எங்கிட்டே அரையணா இருந்தது. ஆப்பம் வாங்கித் துண்ணு புட்டு கொழாத் தண்ணியைக் குடிச்சேன். மத்தியானம் பட்டினிங்க. வேலு : நான் சொன்னேனே! ராஜப்பா : என்ன செய்வது வேலு? நேரே புதுச்சேரிக்குப் போய் விடலாமா? பொன்னு : தந்திகூட வந்திருக்குது. முந்தாநாள் வந்தது. ராஜப்பா : ஐயோ காட்டு. (தந்தியை எடுத்துவந்து பொன்னு கொடுங்க. ராஜப்பா வாசித்துவிட்டு, வேலு முந்தாநாள் இறந்தார் என் தகப்பனார். வாசற்காலைப் பிடித்துக் கொண்டு தலையைச் சாய்த்துக் கதறுகிறான்.) வேலு : டிரைவர்! நேரே புதுவைக்கு விடுகிறாயா காரை? டிரைவர் : வராது. வேலு : வராதா, ஏன்? இந்த மனுஷாள் மட்ட ரகமப்பா. இருக்கும் வரைக்குந்தான் கொஞ்சுவார்கள். இல்லாவிட்டால் ஆளைக் காண்பதே அரிதாய்ப் போய்விடும். டிரைவர் : கிண்டி ரேசில் சூதாடுகிற மனிதர்கள் ஒசந்த ரகம். நான் என்ன பண்றது? சத்தம் கொடுத்து அனுப்புங்க. வேலு : இரட்டிப்பாகச் சத்தம் தருகிறேன். புதுவைக்கு ஓட்டு! டிரைவர் : ஐம்பது ரூபாய் கொடுப்பீங்களா? வேலு : சரி, ஓட்டு. (வேலு படுக்கை, பெட்டிகளைக் கொண்டு வைக்கிறான். ராஜப்பா, வேலு ஆகியோர் காரில் ஏற கார் புறப்படுகிறது.) காட்சி - 8 (புதுச்சேரியில் சுந்தரம்பிள்ளை வீட்டில் பாங்கின் காஷியர் சொக்கலிங்கம் பிள்ளை, புனிதா, ரமணி, அலமேலு, ஆதி இரிசம்மா முதலியவர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.) காஷியர் : இன்று வரைக்கும் ராஜப்பா இரண்டு லட்சம் ரூபாய் எடுத் திருக்கிறார். பாங்கில் நடமாட்டத்தில் இருப்பது மீதியுள்ள இரண்டு லட்சம்தான். நிலங்கள் வாங்கப் பட்டிருக்கின்றன. நிலுவை 50,000 ரூபாய் நிற்கிறது. இவை பாங்கின் லாபம். (இதற்குள் கண்ணப்பன் நடுவில் வருகிறான். அவனைக் கண்ட அலமேலு சொல்லுகிறாள்.) அலமேலு: பாவம், இந்தப் பிள்ளையைப் பார்க்கும்போது பரிதாபமா இருக்குது. ஆதி : அவனுக்கென்ன கொறவு? அவன் பாகம் இருக்குதல்லவா? (இவைகளையெல்லாம் காரில் வந்து இறங்கிய ராஜப்பா கேட்டிருக்கிறான். உள்ளே, ராஜப்பாவைக் கண்ட புனிதாவும், ரமணியும் கண்ணீர் விடுகிறார்கள். ராஜப்பா தலையை நட்டுக் கொண்டு நிற்கிறான்.) காஷியர் : உங்களுக்கு எப்போது கிடைத்தது தந்தி! ராஜப்பா : இன்றுதான் கிடைத்தது. காஷியர் : அப்படியா. நேற்றுச் சென்னையில் இல்லையா நீங்கள்? (ராஜப்பா மற்றொருபுறம் போய்...) ராஜப்பா : புனிதா! (புனிதா போகிறாள்.) ராஜப்பா : ஊராரையெல்லாம் கூட்டி வைத்துக் கொண்டு கதை வளர்க்கிறாய் போலிருக்கிறதே. அதற்குள் எனக்கும், என் தம்பிக்கும் விதி கூட தீருகிறது போலிருக்கிறதே. புனிதா : சாவுக்கு வந்துள்ள பந்துக்களைப் போ என்று சொல்ல முடிகிறதா அத்தான்? ராஜப்பா : சரி, சரி! அந்தக் கார் காரனிடம் ஐம்பது ரூபாய் கொடுத்து அனுப்பு. காட்சி - 9 (அன்றிரவு 11 மணி, ராஜப்பா தன் அறையில் பாங்குக் கணக்கைக் கவனித்துக் கொண்டிருக்கிறான். புனிதா வந்து...) புனிதா : மணி. 11 ஆகிறது அத்தான். சென்னையிலிருந்து வந்தீர்கள். கண் விழிக்கிறீர்கள். ராஜப்பா: வேலையிருக்கிறது நீ போய்ப் படுத்துக்கொள். (புனிதா திரும்பித் தன் அறைக்குப் போகிற வழியில் கட்டிலில் தூங்கும் கண்ணப்பனுக்குக் குளிராதிருக்க ஓர் சால்வையைப் போர்த்துவிட்டுப் போகிறாள். சிறிதுநேரம் செல்ல ராஜப்பா வுக்கு...) அவனுக்கென்ன கொறவு? அவன் பாகம் இருக்கு தல்லவா என்று பகலில் ஆதி சொல்லிய வார்த்தை காதில் விழுவதுபோல் இருந்தது. சிறிது நேரம் சிந்தித்திருந்தான். பிறகு எழுந்து தன் படுக்கை அறை நோக்கிப் புறப்பட்டான். வழியில் கண்ணப்பன் கட்டிலில் நித்திரை செய்வதைப் பார்த்து நின்று சிந்திக்கிறான். திரும்பவும் முன்னிருந்த அறையை நோக்கிப் போகிறான். தன் மேஜையைத் திறந்து அதில் இருந்த கத்தியைப் பார்க்கிறான். மீண்டும் அதை எடுக்கா மலே கட்டிலண்டை வருகிறான். கடைசியில் மேஜையி லிருந்த கத்தியை ஓடி எடுத்து வந்து கண்ணப்பன் எதிரில் நின்று யோசிப்பானாயினான். இச்சமயம் புனிதா கணவனை அழைக்க, மீண்டும் எழுந்து வருகையில் ராஜப்பா கத்தியும் கையுமாக... நிற்பதைக் கண்டு திடுக்கிட்டு...) புனிதா : ஐயோ அத்தான். அத்தான் திருடன், திருடன். (என்று கூச்சலிடவே ராஜப்பா அங்கு மீண்டும் ஓடிப், பிறகு புனிதாவிடம் சென்று..) ராஜப்பா: எங்கே திருடன்? புனிதா உன் கூச்சல் கேட்டு நான் கத்தியோடு ஓடிவந்தேன். புனிதா : நான் கனவு கண்டேன் அத்தான். என்னைத் திருடன் குத்த வந்தது போல் இருந்தது. பயந்து கூச்சலிட்டேன். (புனிதா தன் கட்டிலில் படுத்துக் கொள்ளுகிறாள். ராஜப்பா அதன் பக்கத்தில் இருக்கும் கட்டிலில் படுத்துக் கொள்ளுகிறான்.) புனிதா தன் கணவன் செய்கையை, அடிக்கடி, தான் போர்த்தி யிருந்த போர்வையைத் திறந்து திறந்து பார்த்து வருகிறாள். கடைசியாக, இருவரும் நித்திரை போய் விடுகிறார்கள். காட்சி - 10 (புனிதா விடிந்ததும் தன்னிடம் வந்த தன் தமக்கை ரமணியிடம் கூறுகிறாள்.) புனிதா : அக்கா, நான் இடையில் திருடன் திருடன் என்று கூச்ச லிடாதிருந்திருப்பேனாகில் கண்ணப்பன் இறந்திருப்பான். ரமணி : தேம்புகிறாய். சத்தம் கேட்கிறது அறையில். அத்தான் நமது டிரைவரிடம் பேசியிருக்கிறார். அவருக்குக் கேட்டுவிடும். இனி அவர் செய்கைகளையெல்லாம் நாம் கூர்ந்து கவனித்து வரவேண்டும். (மற்றொரு புறத்தில் அறையில், ராஜப்பா டிரைவரை நோக்கிக் கூறுவான்.) ராஜப்பா : டிரைவர்! என் தகப்பனார் உன்மேல் விசுவாசமாக இருந்தார். அதுபோலவே நான் இருப்பேன். நீயும் எப்படி என் தந்தையிடம் உண்மையாக நடந்தாயோ அப்படியே என்னிடமும் நடந்துகொள்ள வேண்டும். இந்தா இதை வைத்துக் கொள்! (ராஜப்பா 10 ரூபாய் நோட் ஒன்றை எடுத்துக் கொடுக்கிறான்.) டிரைவர் : இனி நீங்கள்தான் நான். நான்தான் நீங்கள். அப்படி வைத்துக் கொள்ளுங்கள். ராஜப்பா : உன்னிடம் சில ரகசியச் சேதி சொல்ல வேண்டும். பிறகு ஆகட்டும். டிரைவர் : அதுதான் நான் ஒரே வார்த்தையில் முடித்து விட்டேன். நான் போய் வருகிறேன். ராஜப்பா : போய் வா டிரைவர். (போகிறான்.) (புனிதாவும், ரமணியும் பேசியிருக்குமிடத்திற்கு டிரைவர் வருகிறான்.) ரமணி : வாங்க டிரைவர்! ஐயா என்ன சொன்னார்? டிரைவர் : ஐயா என்மீது அளவு கடந்த பாசம் காட்டுகிறார்! பத்து ரூபாய் கூட எனக்கு இனாம் கொடுத்தார். ரமணி : புனிதா, கேட்டாயா? புனிதா : ஆம் அக்கா. ரமணி : டிரைவர்! இந்தக் குடும்பத்தின் கீர்த்தியும் அபகீர்த்தியும் உனது நல்லெண்ணத்தைப் பொறுத்ததாயிருக்கப் போகிறது. அப்படிப் பட்ட சேதியை அத்தான் உம்மிடம் சொல்லப் போகிறார் சீக்கிரத்தில்! நீரும் அவரிடம் உண்மையுள்ளவர் போல் நடந்து கொண்டால் சீக்கிரம் கேட்பீர் உம் காதில்! உடனே எம்மிடம் நீர் சொல்லும் பட்சத்தில் நாங்கள் தக்க ஏற்பாடு செய்கிறோம். தயவு வைக்க வேண்டும். டிரைவர் : என்ன இப்படிக் கலங்குகின்றீர்களா? அவரும் என்னிடம் சில ரகசியச் சேதி சொல்லவேண்டும் என்று சொன்னா ரம்மா. புனிதா : பார்த்தீரா அக்கா? ரமணி : ஐயா டிரைவரே, இராத்திரி கண்ணப்பனை அவர் கத்தியால் குத்திக்கொல்லப் பார்த்தார். அதற்குள் புனிதா எதிர்ப்பட்டதால் தடைப்பட்டது. டிரைவர் : ஐயோ இக் கதிக்கு வந்துவிட்டதா குடும்பநிலை? இந்த மணி நேரத்திலிருந்து நீங்கள் என்னிடம் பேசாதீர்கள். அவர் இங்கு வந்துவிடக்கூடும். நான் போய் வருகிறேன். (ரமணி அவனை இடைமறித்து ஏதோ ரகசியம் கூற அவன் சம்மதித்துப் போகின்றான்.) காட்சி - 11 (டிரைவரும், ராஜப்பாவும் ரகசியம் பேசுகிறார்கள்) ராஜப்பா : டிரைவர், என் முற்போக்கு உன்னிடந்தான் இருக்கிறது. என்னை நீ நம்பு. உன் குடும்பத்தை நான் பச்சென்று ஆக்கி விடுகிறேன். இது சத்தியம். அது போலவே நான் உன்னை நம்புவதா இல்லையா? நான் நம்புகிறேன். பரபர நம்பிக்கை யில்லாத நண்பர்களால் ஒரு காரியம் செய்ய முடியாது. டிரைவர் : ஐயா உங்களை நான் நம்புகிறேன். உங்கள் முற் போக்கைக் கருதி நான் எதையும் செய்யத் தயார். என் உயிரையே கேட்டாலும் கொடுப்பேன். இந்தக் காலத்தில் ஒருவன் பிறரால் நன்மையடைய வேண்டுமானால் அப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும். ராஜப்பா : நண்பரே, இங்கு வாரும், என் தம்பியை ஒழித்து விட வேண்டும். என்ன சொல்லுகிறீர்? டிரைவர் : இதுதானா? பயப்படாதீர்கள் ! ஒன்றுக்கும் பயப்படாதீர்கள் என்கிறேன். சின்ன விஷயம், என்ன மலைக்கிறீர்கள், மலைக்காதீர்கள். என் உயிருக்கு உயிரான நண்பர்கள் இருவர் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு முடித்துத் தருகிறேன். இந்த விஷயத்தை! காலையில் உங்களிடம் அனுப்புகிறேன். விஷயத்தைச் சொல்லி விடுங்கள். அவர்களிடம் ஒன்றும் மலைக்காதீர்கள். எடுத்த காரியத்தை உடனே முடித்துவிட வேண்டும். ஒரு விஷயம், நான் இப்போதே போனால் தான் அவர்களைத் தயார்செய்ய முடியும். அவர்கள் எங்கேயாவது போய் விடுவார்கள். நிச்சயமாக நடத்திவிட வேண்டியது தானே? ராஜப்பா : நிச்சயம். நிச்சயம், நாளைக்கே முடித்துவிட வேண்டும். உனக்கு ... டிரைவர் : அதுபற்றி என்ன! விஷயம் நடந்தபிறகு உங்கட்கு இஷ்ட மானதைக் கொடுங்கள். நான் போய்வரட்டுமா? ராஜப்பா : உன்னை நம்பலாமா டிரைவர்? டிரைவர் : உமக்குத் துரோகம் செய்வதில்லை. என் அன்பான மனைவி மேல் ஆணை. ராஜப்பா : சரி, சரி, சரி போதும், போதும் போய் வா! என் காரியம் வெற்றி. காட்சி - 12 (புதுச்சேரி வசந்த விலாசம் போஜனசாலை, பெரியதோர் பூஞ் சோலையில் அமைந்துள்ளது. அதில் ஒருபால் காப்பி ஓட்டல், மற்றொருபால் போஜனத்திற்குரிய இடம், உயர் வகுப்பு மாணவர்கள் தங்கி வசிக்க அறைகள், பேசி மகிழ்ந்திருக்கும் கூடங்கள் உடையது. மாலை 3 மணிக்கு ராஜப்பா தாழ்வார (தெருப்பக்கத்தி லிருப்பது)த்தில் இருந்து யாரையோ கவலையோடு எதிர் பார்த்திருந்தான். வேங்கடாசலமும், கிருஷ்ணனும், சுப்பிர மணியனும் அங்கே வருகிறார்கள். மழை பெய்கிறது. வேங்டாசலம் : என்ன ராஜப்பா ஏது சகவாசமாக? ராஜப்பா : இங்கு ஒருவரை எதிர்பார்த்திருக்கிறேன். கிருஷ்ணன் : கொஞ்சநேரம் கடிதாசி போடலாமே? சுப்பிரமணியன்: போட்டால் போகிறது. (மூவரும் மேசையைச் சுற்றி உட்கார்ந்து கொள்ள, வேறு வழியின்றி ராஜப்பாவும் உட்காருகிறான். வேங்கடாசலம் தான் போடுகிறான்.) கிருஷ்ணன் : முந்நூற்று நாலா? சுப்பிர : ஆம். வேங்கடா : கேளுங்கள்! கிருஷ்ணன் : என்ன ராஜப்பா? ராஜப்பா : நானா மூன்றுபடி? கிருஷ்ணன் : முந்நூத்தி நாலப்பா. ராஜப்பா : முந்நூத்தி நாலா? இல்லை. சுப்பிர : இருநூறு கிருஷ்ணன் : இல்லை வேங்கடா : இல்லை ட்ரம்பு சொல்லு! சுப்பிர : ஆட்டீன், நீ தான் ராஜப்பா! (இதற்குள் ராஜப்பா தெருவில் போய் எவரையோ பார்த்து விட்டு வருகிறான். ஆதலால் ட்ரம்பு ஞாபகமில்லாமல் ஆட்டீனை இறக்கிவிடுகிறான்.) கிருஷ்ணன் : என்ன! ட்ரம்பை இறக்கிவிட்டாயே ராஜப்பா. ஞாபகம் உனக்கு எங்கே இருக்கிறது? கொலை செய்தவன் மாதிரி முழிக்கிறியே! ராஜப்பா : எனக்கு உடம்பு சௌகர்யமில்லை. சுப்பிர : முன்னே ஆரையோ எதிர்பார்ப்பதாகக் கூறினாய். இப்போது உடம்பு சௌகர்யமில்லையென்கிறாய்! என்ன சங்கதி? (ராஜப்பாவும் எழுந்து வெளியில் பரபரப்போடு போய் விடுகிறான்.) கிருஷ்ணன் : அட பைத்தியமே! ஆட்டத்தைக் கலைத்து விடு வோமா? சுப்பிர : காப்பி சாப்பிடுவோம்! (அனைவரும் காப்பி சாப்பிடப் போகிறார்கள் ஒருபக்கம். அதே சமயம் நிறைய கிருதா, முகம் நிறைய மீசை, தலை நிறைய முண்டாசு, கால் வரைக்கும் தொங்கும் மழையங்கி, இவற்றோடு இருவர் அடிமயக்கத்தோடு காப்பிக் கிளப்பில் நுழைகிறார்கள்) ஒருவன் : என்ன இருக்கிறது? பார்ப்பான் : என்ன ஓணும்? ஒருவன் : அப்போ நாங்க பனாதிபசங்களா? ஏண்டா? பார்ப்பான் : இன்னது தேவை இன்னு தெரிஞ்சாஞ்சில்லியோ, திட்றீரே. ஒருவன் : எங்களைத் தெரியாதா ஒனக்கு? ஒதியஞ்சாலைக் கில்லாடி டிரைவர் இன்னு. பார்ப்பான் : ஓய் மரியாதை! மரியாதையாய் பேசு, தெரியுமா? ஒருவன் : அண்ணே இந்தாண்டை வா ஒதிக்கிறேன், பார் அவனே. அண்ணன் : ஐயரே, சும்மா இரும் அவன் போக்கிறி. பார்ப்பான் : அடடா, இதோ வந்தார் பாருங்க மத்யதக்காரர். அண்ணன் : வந்ததைப்படுடா. சின்ன-டிரை : டேய் பலகாரம் கேட்டா என்னாடா சொல்றது. எனக்கா குடி, ஏண்டா. பார்ப்பான் : நானா சொன்னேன், காமாட்டி மரியாதையாகப் பேசு. சின்ன-டிரை : காமாட்டியா? இந்தா இதோ பார் மஞ்சா, கும்தா, சீலா ஒதை பார். இதுதான் நாலடி. (சிலம்ப வித்தையைச் சேர்ந்த நாலடி போடுகிறான். ஆனால் தட்டுத் தடுமாறி விழுகிறான்) பார்ப்பான் : கல்லு பெயர்ந்துவிடப் போகிறது. பெரிய-டிரை : ஐயரே, போனால் போகிறது. காப்பி கொண்டாரும். (பார்ப்பான் இருவர்க்கும் காப்பி கொண்டு வைத்து) பார்ப்பான் : ஐயா நாலடி போட்றவரே, மெதுவா இரண்டடி வைச்சி உழுந்துடாமே, வாரும். (இதற்குள் ராஜப்பா அங்கே வந்துவிடுகிறான். இருவரும் காப்பி சாப்பிட்டு முடித்து ராஜப்பாவுடன் ஒருபுறமாகப் போய் நிற்கிறார்கள்) ராஜப்பா : (பரபரப்புடன்) என்ன வேலை முடிந்துவிட்டதா? (என்று கேட்டதும், பெரியடிரைவர் மறைத்து வைத்திருந்த கத்தியை ராஜப்பாவிடம் எடுத்துக் காட்டுகிறான். அக் கத்தியில் புதிய ரத்தம் தோய்ந்து கிடக்கிறது. ராஜப்பா அதைக் கண்டு பரபரப்புடன்) ராஜப்பா : வேலை முடிந்துவிட்டது? கத்தியை மறைத்துக் கொள்ளுங்கள். (டிரைவர் கத்தியை மறைத்துக் கொள்ளுகிறான். இதற்குள் அப்பக்கம் சென்ற முத்தன் ராஜப்பாவை நோக்கி) தெரியும்! தெரியும்! ராஜப்பா! (என்று கூற ராஜப்பா திடுக்கிட்டு முத்தனிடம் ஓடி) என்ன முத்தா நீ இவ்வளவு நேரம் இங்குத்தானா இருந்தாய்? ஏன் முத்தா? கேட்கிறேனே. முத்தன் : எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டுதானிருக் கிறேன். ராஜப்பா : அப்படியா முத்தா, உன் தகப்பனாருக்கும், என் தகப்பனாருக்கும் உள்ள சிநேகம் கொஞ்சமல்ல. உன் விஷயத்தில் நான் எப்போதும் பிசகி நடந்த தேயில்லை. நாங்கள் என்ன பேசியிருந்தோம்? முத்தா இங்கு வா. சின்ன-டிரை : அட என்னாங்காணும் அவனைக் கெஞ்சுகிறீர்? டேய் போடா நீ! முத்தன் : ஆரை, என்னையா? பல்லை எடுத்துவிடுவேன். முது கெலும்பு டக்கென்று ஒடீந்துவிடும். தோல் பிஞ்சிப் புடும். ஆரை? என்னையா? குத்தினால் தலை கீழே லொட்டேன்று விழுந்துவிடும். சின்ன-டிரை : நீயா? என்னையா? போடா. முப்பத்திரண்டு பல்லுமே உதிந்துவிடும். தலையைத் திருவி எடுத்துவிட்டு எறிந்து விடுவேன். என்னிடம் சண்டை போட உத்தேசமிருந்தால் போ. நேரே உன் கருமாதிக்குச் செலவு வாங்கி வைத்துவிட்டு வந்துவிடு! முத்தன் : ராஜப்பா! கட்டாயம் உதைப்பேன் அவனை. ராஜப்பா : வேண்டாம் முத்து. (என்று கூறி முத்தனை மறிக்கிறான். அவ்வாறு மறிப்பதால் முத்தன் அதிக கோபம் அடைகிறது போல) இந்தண்டை போகவிடமாட்டேன் அவனை! சின்ன - டிரை : விடையா அவனை! (என்று சின்னடிரைவரும் முந்துகிறான்) பெரிய-டிரை : முத்தண்ணா போதும். அவன் கெடக்கிறான். அறியாதவன். உங்களைப் பார்த்தா பெரிய மனிதர் விட்டுப் பிள்ளைபோல இருக்கிறது. அவனோடு சரிசரியா வைத்துக் கொள்ளுகிறீரே! முத்தான் : அதற்காகத்தான் பார்க்கிறேன். பெரிய-டிரை : நாங்கள் புதுச்சேரியிலிருந்து தீர்வை கொடாமல் இங்கிலீஷ் இலாகாவுக்கு ஜரிகை மார்க் எடுத்துக் கொண்டு போவது பற்றிப் பேசியிருந்தோம். அவ் வளவுதான். முத்தன் : எனக்குத் தெரியாதா? அதுப்பற்றித்தான் பேசி யிருந்தார். ராஜப்பா சம்பாதிப்பதில் எனக்குப் பொறாமையா என்ன? நான் அப்பேர்பட்டவனல்ல! என் தகப்பனார் இருக்கிறாரே கந்தசாமிப் பிள்ளை இந்த ஊரிலே எல்லாருக்கும் தெரியும். கமலக் கம்பி குடைதான் கையில் இருக்கும். காலில் பித்தளைத் தகடுகளில் வேலை செய்த மிதியடியைத்தான் போட்டிருப்பார். சின்ன-டிரை : அட அப்படியா ஆச்சரியமாக இருக்கே! முத்தன் : ஆச்சரியமா ஆரைக் கேட்டுகினு? நடுவெள்ளச் சோமன் கட்டிகினு வெளியே புறப்பட்டா தெருவில் இருக்கிறவர்கள் எழுந்து நிக்க வாண்டாமா? என்ன அப்படி சொல்லிறியே? ராஜப்பா : எனக்குத் தெரியாதா என்ன? முத்தா, நாழியாகிறது. முத்தன் : நான் அதற்குச் சொல்லவில்லையே. பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளைபோல் இருக்கிறேன் என்று என்னைச் சொன்னாரே அதற்காகத்தான் சொல்லு கிறேன். அக்கம் பக்கத்திலே கலியாணம் நடக்கட்டும், கருமாதி நடக்கட்டும், எல்லாரும் எங்க தாயாரைத் தான் கூப்பிடுவாங்க. குங்குமப் பொட்டை அகலமாக வைச்சிக்கினு வெளியில் புறப்பட்டால் லட்சுமி போல இருக்கும். எங்கம்மாவைப் பார்த்தாக்கா. ராஜப்பா : எனக்கு நன்றாகத் தெரியுமே. போய் வருகிறாயா முத்தா? முத்தன் : நான் அதற்குச் செல்லவில்லை. இதோ இருக்கிறது வண்டிப்பாளையம். எனக்குப் பெண்கட்டிய இடம். நெல்லுத் தரகு எல்லப்பன் என்றால் அழுத பிள்ளை யும் வாயை மூடும். அவர் தான் என் மாமனார். ஊர் நாட்டாமையும் அவர் தான். காலையில் காப்பிதான் சாப்பிடுவார். சின்ன-டிரை : மத்தியானம் கேழ்வரகு கூழோ! முத்தன் : கூழ் என்ற பேச்சும் பேசலாம். ராஜப்பா : என்ன சின்ன டிரைவர் நீர் ஒரு பக்கம் வளர்த்துகிறீரே. சின்ன-டிரை : நானா வளர்த்துகிறேன். இப்படித்தானப்பா திடீரென்று நல்லவர்கட்கெல்லாம் ஆபத்து வந்து விடுகிறது. முத்தன் : நான் அதற்குச் சொல்லவில்லை. பெரியமனிதர் வீட்டுப் பிள்ளைமாதிரி என்றாரே அவர்... சின்ன-டிரை : அதற்கல்லவா சொல்லுகிறார். ராஜப்பா : நாழியாகிறது முத்தப்பா. முத்தன் : என் மாமனார் சாமான்யமானவர் அல்ல. (இதற்குள் இரு டிரைவர்களும், அங்குப் போட் டிருக்கும் பெஞ்சியின் மேல்படுத்துக் கொள்ளுகி றார்கள்.) முத்தன் : அவர் இரும்புத்தலை படைத்தவர் தெரியுமா? சின்ன-டிரை : உமக்குப் பிள்ளைகள் எத்தனைபேர்? முத்தன் : நான் இருக்கிறேன்... சின்ன-டிரை : உம் கதை முடிந்தல்லவோ பிள்ளைகள் கதை? ஆகட்டும். (இரு டிரைவர்களும் கொட்டாவி விட்டுப் படுத்துக் குறட்டை விடுகிறார்கள்.) முத்தன் : நான் சுகவாசி. தகப்பனார் முகத்தைச் சுருக்க வேண்டுமே. கிடையாதே என்னடா வேலை யில்லாமல் சுற்றிவருகிறாயே என்று பெற்றவர்கள் கேட்கலாம் அல்லவா, ஊரில் உலகத்தில் வழக்கந் தானே. ராஜப்பன் : ஆகா, அவர் மிகவும் நல்லவரல்லவா. முத்தா, நேரம் ஆகிறது. போய் வருகிறாயா? முத்தன் : நான் அதற்குச் சொல்லவில்லை. நம் பையனுக்கு ஆறு வயது ஆகிறது. இந்தச் சித்திரை வந்தால், பாட்டியாரும், பாட்டனாரும் அந்தப் பிள்ளை மேல் உயிரைத்தான் வைத்திருக்கிறார்கள். மாசம் ஒரு தரம் அந்தப் பையனுக்கு சட்டைதான் துண்டுதான். (இதற்குள் பெரிய டிரைவர் எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டு உள்ளே ஓடி, பல்துலக்கும் பிரஷ் பல்பசை இவைகளைத் தன் தம்பியைத் தட்டி எழுப்பிக் கொடுக்க அவனும் பல் விளக்கிக் கொண்டே...) சின்ன-டிரை : இவர் நேற்று வந்தாரே இன்னமா முடியவில்லை ராமாயணம்! பெரிய-டிரை : முடியுந் தருணந்தான் போலிருக்கிறது. அடுத்தபடி இளைய பிள்ளை, பிறகு மனைவி, உடனே பட்டாபிஷேகந்தான். சின்ன-டிரை : நடுவில் நான் சில நல்ல அத்தியாயங்களை யெல்லாம் கேட்கக் கொடுத்து வைக்கவில்லை. பெரிய-டிரை : அவைகளைத் திரும்பவும் ஆரம்பிக்கச் சொன்னால் போகிறது. ராஜப்பா : ஐயையோ சும்மா இருங்கள். (இதற்குள் முத்தனுடைய அண்ணன் அங்குவந்து...) ஏண்டா முத்தா என்ன இங்குவந்து புளுகிக் கொண் டிருக்கிறாய். பீடி கடையில் செல்லாத காசைக் கொடுத்து ஏமாற்றி விட்டா யாமே. செட்டி வந்து வீட்டில் சண்டை போடுகிறானே. (முத்தன் தன் அண்ணனோடு போய்விடுகிறான்) சின்ன-டிரை : பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளையைப் பாருங்களேன். பெரிய-டிரை : ஏனையா? முத்தனிடம் சேதியையெல்லாம் நீரே சொல்லிவிடப் பார்த்தீரே. சின்ன-டிரை : முட்டாள்தனமாக அவனை அழைத்து, எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்கிறீரே. ராஜப்பா : நண்பர்களே என் உள்ளம் அமைதியில் இல்லை. நீங்கள் இல்லாவிடில் அவனிடம் உண்மையைக் கொட்டி விட்டிருப்பேன். நீங்கள் உங்கள் வேலையை முடித்தபோது யாரும் பார்க்கவில்லையே. சின்ன-டிரை : சேதியைச் சொன்னவுடன் உமது மனம் அமைதி யற்றுப் போயிற்று என்கிறீரே. பதைக்கப் பதைக்கக் கொலை செய்த எமது மனம் எப்படியிருக்கும்? நடந்ததைக் கேளும். உமது தம்பி கண்ணப்பனைப் பாடசாலையிலிருந்து இட்டுக் கொண்டு போங்கள் என்றீரல்லவா? காரை ஓட்டிக் கொண்டு பாட சாலைக்குப் போனோம். மணி 11 அடித்தது. பாட சாலை விட்டார்கள். உங்கள் தம்பி கண்ணப்பன் வெளியில் வந்தான். நான் அவனை அணுகி தம்பி, உன் அண்ணனும், அண்ணியும் கோரிமேட்டில் ஒரு பங்களாவில் இருக் கிறார்கள். உன்னை அழைத்துவரச் சொன்னார்கள் என்று சொன்னேன். அவனுக்கு என்ன சந்தோஷம்! சிவந்த முகம்! கண்கள் ஒளியுள்ளவை. கத்தரித்து விட்ட பட்டுமயிர் குலுங்க சிரிப்பு. அவன் பொன் னுடல் முழுதும் சிரித்தது போலிருந்தது. அண்ணி என் பந்தை எடுத்து வந்தார்களா என்று கேட்டான். எடுத்து வந்திருப்பதாய்ச் சொன்னேன். சந்தோஷத்தால் கைதட்டினான். ஒரு செந்தாமரைப்பூ மற்றொரு செந்தாமரைப்பூவில் சேர்ந்து பிரிந்தது போலிருந்தது அவன் கை தட்டியது! உதடு மாணிக்கத்தின் ஒளியைச் சிந்திற்று. என்ன அழகான சிரிப்பு. பெரிய-டிரை : கார் புறப்பட்டது. நான் கேட்டேன் அவனை உங்கள் தகப்பனார் எங்கே என்று. எங்கள் தகப்பனார் இறந்து போனார். அதற்குமுன் என் தாயார் இறந்தார்கள். எனக்கு இப்போது என் அண்ணியும், அண்ணனும் இருக்கிறார்கள் என்றான். அவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்றேன். அதற்கு அவன் என் அண்ணி படத்தையும், என் அண்ணன் படத்தையும் தினந் தோறும் கும்பிடு கிறேன் என்று கூறினான். என் நெஞ்சம் இளகிற்று. என்ன செய்வது? சின்ன-டிரை : கார் கோரிமேட்டையடைவதற்குள் கண்ணப்பன் நாலைந்து தரம் இருக்கும் அண்ணன் எங்கே? அண்ணி எங்கே? பங்களா எங்கே? என்று அவன் கேட்டது. காரை கோரி மேட்டில் ஒரு முந்திரித் தோப்புக்குள் செலுத்தினோம். இறங்கு என்றேன். அவன் இறங்கினான். எங்கே அண்ணன், அண்ணி என்றான். இதோ என்று இடையில் மறைத்து வைத் திருந்த பட்டாக்கத்தியை உயர்த்திப் பிடித்தேன். எனது கொடுமையான வார்த்தையால் கண்ணப்பன் உடல் விடவிடவென்று ஆடிற்று. எங்கள் இதயமும் ஆடிற்றுப் பரிதாபத்தால்! பெரிய-டிரை : கண்கலக்கிக் கருத்துக் கலங்கி ஐயா... என்று பதறித் தன் தலையை எங்கள் காலில் வைத்து நிமிர்ந்து, என்னை ஒன்றும் செய்யாதீர்கள் என்று கெஞ்சி அழுதான். அந்தத் தாயும், தகப்பனும் அற்ற இளம்பிள்ளை, நாங்கள் சுற்றும், முற்றும் பார்த்தோம். யாருமில்லை. மரம் மட்டைகள் அழுவதுபோல் தோன்றின. அச் சமயத்தில் கண்ணப்பன், என்னை ஒன்றும் செய்யாம லிருந்தால் என் அண்ணனிடம் சொல்லி உங்கட்கு ஆயிரம் ரூபாய் வாங்கித் தருகிறேன் என்றான். இரக்கமாயிருந்தது எங்களுக்கு. நாங்கள் யோசித்தோம். தாயும், தகப்பனும் ஆக உள்ள அண்ணனே கொலை செய்யச் சொல்லியிருக்கை யில் நமக்கென்ன பரிதாபம், சரிதான் வேலையைப் பார்ப்போம் என்று உடனே பையனைப் பிடித்தோம். அவன் வாயில் துணியை அடைத்தோம். சின்ன-டிரை : பேச்சில்லை. ஆயினும் அவன் முகம் எங்களைக் கெஞ்சிற்று. அவன் கண்கள் எம்மைக் கெஞ்சின. குவளை அரும்பு போல் உள்ள அவன் பத்து விரல்களையும் ஒன்றாய்க் குவித்து எம்மைக் கும்பிட்டான். மெழுகு பொம்மை உருகி விழுவது போல் அவன் உடல் வளைந்து, சோர்ந்து பூமியில் விழுந்தது. விழுந்த உடல் படபடவென்று பயத்தால் துடித்தது. ஐயோ பாவம். அந்த நிர்மானுஷ்யமான காட்டில் அவனுக்கு யார் இருக்கிறார்கள்? அவன் எம்மைக் கெஞ்சுவதால் என்ன பயன்? நாங்கள் ஆட்டை, அதன் மாமிசத்துக்காக அறுப்பதுபோல் கூலிக்காக அவனை அறுக்கக் கத்தியோடு நின்றிருந்தோம். ராஜப்பா : நீங்கள் ஏன் இவ்வளவு வளர்த்தினீர்கள். உடனே ஒரே வெட்டாய் வெட்டி விடுவதுதானே. பெரிய-டிரை : அதுதான் எங்கள் உத்தேசம். வேறென்ன? வாயில் துணியை அடைத்துக் கீழே தள்ளினோம். கத்தியைப் புறங்கழுத்தில் வைத்து அறுத்தோம். கத்தி கூராய் இல்லை. அதனால் புறங்கழுத்து கொஞ்சம் அறுந்தது. அப்படியே விட்டுவிட்டுக் கத்தியைத் தீட்டிக்கொண்டுவரப்போனேன். சின்ன-டிரை : புறங்கழுத்திலிருந்து ரத்தம் ஆறாய்ப் பெருகிற்று. அந்த ரத்த வெள்ளத்தில் அவன் சரிரம் புரண்டது. அவனால் வலி பொறுக்க முடியவில்லை. வாயில் துணியடைத்திருந்ததால் சத்தம் போட முடிய வில்லை. இருந்தாலும் அவன் மூக்கின் வழியாக பரிதாபமான, பயங்கரமான ஒரு குமுறல் வெளிப் பட்டது. கைகளால் தரையை மோதினான் அவன். என் காலைத் தாவித் தாவிப் பிடித்தான். மாலைச் சூரியன் செந்நிற ஒளியில் மறைவது போல் அவன் பொன்னுடல் ரத்தத்தில் புரளுவதைப் பார்க்கச் சகிக்கவில்லை. பலமுறை அவன் எழுந்து ஓட எத்தனித்தான். கண்ணில் அகப்பட்ட பறவையைப் பிடித்துப் பிடித்துக் கீழே தள்ளினேன். கொஞ்ச நேரம் மூச்சற்றுக் கிடப்பான். பிறகு அவன் உடம்பு துடிக்கத் துடிக்க எழும்புவான். பிறகு தீட்டிய கத்தி வந்தது. பெரிய-டிரை : இவனைக்குழி தோண்டச் சொன்னேன். சின்ன குழியாய் இருந்தது. இதற்குள் கண்ணப்பன் தன் வாயில் இருந்த துணியை எப்படியோ எடுத்து விட்டான். நாங்கள் ஏமாந்துபோனோம். ஆயாசமாகக் கூவினான். பழயபடி அவனைத் தள்ளி அவன் வாயில் துணியை அடைத்தோம். குழி சிறியதா யிருந்ததால் கண்ணப்பனைச் சிறுசிறு துண்டாக வெட்டுவதா கைகால்களை, தனித்தனியாகப் பிய்த்துப் போடுவதா என்று யோசித்தோம்! ராஜப்பா : நீ அப்படியெல்லாம் அவனுக்குபாதையை உண்டாக்கி இருக்கலாகாது. (ராஜப்பாவின் உடல் நடுங்கிற்று. அவன் முகத்தில் பரிதாபம் நிறைந்தது) சின்ன-டிரை : பிறகு, நாருள்ள இளங் கிளையைத் திருகி இழுப்பது போல் அவனுடைய வலது கையைத் திருகிப் பிய்த்தோம். ராஜப்பா : ஐயோ ... சின்ன-டிரை : அப்போதுதான் அவன் நீலவிழிகள் ரத்தமயமாக மாறின. அப்படிப் பிய்த்த கையை அந்தக் குழியில் போட்டதில், குழியைவிடக் கை நீளமாயிருந்தது. இரண்டாவது கையை ஓர் கருங்கல்லின் மேல் வைத்தோம். மணிக்கட்டை வெட்டினோம். முன் கை தெறித்தது. மேலே கிளம்பிற்று! அதே உயரத்திற்குக் கண்ணப்பன் உடலும் துடித்துக் கிளம்பி விழுந்தது பாருங்கள். ராஜப்பா : ஐயோ இவ்வளவு பாடுபடுத்தினீர்களா? பாவிகளே. பெரிய-டிரை : அவன் இருதயம் வெடித்துவிட்டது என்று எண்ண வேண்டியதிருந்தது. ஏனெனில் அவன் காதும், மூக்கும் ரத்தத்தைக் குடம்குடமாகப் பொழிந்தன. ராஜப்பா : என்னால் கேட்க முடியவில்லையே. என்ன காரியம் செய்தேன். அப்பா தம்பி! ஐயோ பாவிகளே! பாவிகளே!! உங்களுக்கு இரக்கமில்லையா? உங்கள் நெஞ்சம் என்ன கல்லா! இரும்பா! நாருள்ள கிளையை முறுக்கி இழுப்பது போலவா என் உடன்பிறந்த தம்பியைக் கிடத்தி அவன் கையைப் பிய்த்து எடுத்தீர்கள்! நான் பாதகன். ஐயா நான்தான் வாய் தவறிச் சொன்னாலும், நீங்களாவது எனக்கு புத்திமதி சொல்லியிருக்க லாகாதா? அவன் படும் பாட்டைக் கண்டீரே. அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடக் கூடாதா? அப்பா, அப்பா, என்ன கொடுமைக் குள்ளாக்கி விட்டானடா உன்னை? சின்ன-டிரை : நீர் வாய்தவறிச் சொன்னீரா? நன்றாகயிருக்கிறதே கதை. நாங்கள் அப்போதே சொன்னோமே. இளம் குழந்தையை ஏன் கொல்ல வேண்டுமென்று. இந்தக் காலத்தில் ஒருவன் சொத்தாளியாக வேண்டுமானால் மற்றொருவரை ஏமாற்றியோ, கொலை செய்தோதான் ஆகவேண்டும், என்று எமக்கு நீதி சாத்திரம் போதித்தீர். உம்மையே கதியாக நம்பிய உம் தம்பியை நீரே கொல்லச் சொன்னால் கூலிக்கார ராகிய எமக்கு என்ன இரக்கம். ஏதோ உமது நிச்சயப் படி பிள்ளை தொலைந்தான். அவன் சொத்தாகிய இரண்டு லட்சம் ரூபாய்க்கு நீர் இனி உடையவர் ஆகி விட்டீர். ஏதோ அழவேண்டிய வழக்கத்திற்கு அழுது விட்டீர். அவ்வளவுதான். எம்மைப் பாவிகளே, பாவிகளே என்று சொல்வது சரியா? பெரிய-டிரை : நாங்கள் பாவியானால் நீர் தர்மதுரை என்ற எண்ணமா உமக்கு? (ராஜப்பாவின் மனக் கண்ணில் கண்ணப்பன் அழகிய உருவம் தோன்றுகிறது.) சின்ன-டிரை : அதன்பிறகு அவன் பற்களையெல்லாம் கத்தி முனை யால் கொந்திக் கொந்தியெடுத்தோம். ராஜப்பா : ஐயோ, அது ஏன்? பெரிய-டிரை : பின் என்ன? நாளை ஒருகாலம், சர்க்கார் விஷயம் தெரிந்து தோண்டிப் பார்த்தால், இறந்தவனின் அடையாளம் தெரிந்துவிட்டால்! ராஜப்பா : ஒரே அடியால் உயிரைப் போக்கிவிடலாகாது? சின்ன-டிரை : முதலில் உயிரைப் போக்கிவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? உடலைத் துண்டு துண்டாக அறுப்பது கஷ்டமாக இருக்கும். கடைசி வரைக்கும் அவன் உயிர் போகவில்லை. ராஜப்பா : ஐயையோ. பெரிய-டிரை : செவந்த தாமரைப் பூவின் வர்ணம் அவன் முகத்தை விட்டுக் கடைசி வரைக்கும் நீங்கவில்லை. ராஜப்பா : அந்தோ! அப்பா! அப்பா! சின்ன-டிரை : அட போங்க. அவன் துடையை வெட்டியெடுக்கும் போது அவன் உடல் மேலே கிளம்பி விழுந்தது. கொடுமை! கொடுமை! ஏதோ பிறகு தலையும், வயிறும் மாத்திரம் உயிர் போகாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. கண்களை அடிகொண்டு தோண்டித் தீர்த்தோம். பெரிய டிரைவர் பரிதாபப் பட்டான். பரிதாபப்பட்டால் 2,000 ரூபாய் எப்படி வரும்? கூடப் பிறந்த புண்ணியவானுக்குத்தான் இரண்டு லட்சம் எப்படிக் கிடைக்கும்? சொல்லுங்கள். ராஜப்பா : நான் கொலைகாரன்! அவன் சொத்துக்காக பெற்ற தாயும், தந்தையுமாக என்னை நம்பியிருந்த சகோதர னென்றும் எண்ணாது கொலை செய்யச் சொன்ன கொடும்பாவி நான்! பெரிய-டிரை : பிறகு ஒரு பெரிய கல்லையுருட்டி வந்து அவன் தலையில் போட்டு நசுக்கினோம். மார்பையும், வயிற்றையும் சிறு துண்டுகளாக அறுத்துக் குழியில் தள்ளினோம். மண்ணைத் தள்ளினோம். தீர்ந்தான் கண்ணப்பன். நீரும் மேலுக்கு அழ வேண்டிய அளவு அழுதீர். பலித்தது உமக்கு 2 லட்சம் ரூபாய். ஏன் கூச்சலிடுகிறீர்? ராஜப்பா : கல்லால் மண்டையை நசுக்கினீர்களா? உடலைத் துண்டு துண்டுகளாக அறுத்துப் போட்டீர்களா! ஐயோ! என் இதயம் துடிக்கிறதே. பதறுகிறதே. காலால் தள்ளி, மண்ணையா தள்ளீர்கள்! நான் கொலைகாரன். (உரக்க) நான் கொலைகாரன். (எழுந்து) தன்னுயிர்போல் மன்னுயிரை எண்ணும் தயாநிதிகளை எதிர்பார்த்துத் தவங்கிடக்கும் ஏ மானிட உலகமே! தனியுடைமைத் தத்துவம் கொடிது கொடிது என்று இனிது முழங்கும் ஏ! அறிவுலகமே! தன்னலங் கோரிச் சகோதரனைக் கொலை செய்வித்த வன்னெஞ்சனை நீ க்ஷமிப்ப துண்டா? நல்லாரின் சேவையால் நல்வழிச் செல்ல ஆரம்பித்துள்ள இந்த மனித சமூகத்தினிடையில் பொல்லாத நச்சரவிங் கிருக்கலாமா? மாசற்ற நெஞ்சுடையான் தன்னை மனமாரக் காசுக்கா இன்று கழுத்தறுத்தாய் ராஜப்பா! (தன் மார்பில் அடித்துக் கொள்ளுகிறான்.) அண்ணன் என்று கூவுகையில் ஐயோ உனது உடம்பை மண்ணிலே தள்ளி மறைத்தாரா கண்ணப்பா! வெம்பி யழுது நீ வெட்ட வந்தவர் காலில் கும்பிட்ட போதும், கொலை செய்யப் பட்டாயா? உய்ய வழியின்றி உயிர் வாதை ஏற்கையிலும் கைகாலை அந்தோ கழித்தாரா? என் தம்பி! உன்னுடம்பை, என்றன் உடன்பிறந்த நல்லுடம்பைப், பொன்னுடம்பைப் பூமியிலே தூக்கி எறிந்தாரா? பெரிய-டிரை : ஐயா! யாராவது வந்துவிடப் போகிறார்கள். நிறுத்தும்! ராஜப்பா : உலக மக்களே! (உரக்க) நான் கொலையாளி. ஏ! அக்ஞா சக்கரமே! நான் சகோதரனைக் கொன்றேன். என்னால் என் தம்பி சித்திரவதை செய்யப்பட்டது போல் என்னைச் சித்திரவதை செய்யத் தீர்ப்பு செய். ஆ! என் தலையைத் திருகிக் கொண்டு சாகிறேன். (தன் தலையைத் திருகிக் கொண்டு மூர்ச்சையற்றுக் கீழே விழுதல்) சின்ன-டிரை : என்ன இது நமக்கல்லவா அண்ணா ஆபத்து! (ராஜப்பாவுக்கு மூர்ச்சை தெளியும்படி உபசாரம் செய்கிறார்கள். மூர்ச்சை தெளிந்து தரையில் ஊன்றியபடி உட்கார்தல்) சின்ன-டிரை : (ராஜப்பாவை நோக்கி) ஏனையா நீர் உலகை வெறுத்து விட்டீர். அதனால் என்னைக் கொன்று விடுங்கள், கொன்று விடுங்கள், நான்தான் கொலை செய்யச் சொன்னேன் என்று கூவுகிறீர். நாங்கள் அகப்பட்டுக் கொள்வோமே. என்ன செய்வது? போனவன் போய் ஒழிந்தான். இனி என்ன? அவனுடைய 2 லட்சம் உனக்கு லாபம். ராஜப்பா : மெய்தான். மெய்தான்! கொலை செய்தவர்களும், கொலைக்குக் காரணமாயிருந்தவர்களும் குற்ற வாளிகளே. ஆயினும் உம்மைப் பற்றி எனக்கு வருத்தமில்லை. எப்படிப்பட்ட சித்திரவதை! ஐயோ! அவன் அருமைத் தாய், தந்தையர் இருந்தால் - ஐயோ! தம்பி! தம்பி! நீ என்ன துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந் தாயப்பா. (சோர்ந்து பழையபடி நிலத்தில் சாய்தல், டிரைவர் இருவரும் விழித்து அங்குப் போட்டிந்த சாய்வு நாற்காலியில் கிடத்திவிட்டு இருவரும் வெளிப்புறம் பெஞ்சில் உட்கார்ந்திருத்தல்) உயர்வகுப்பு மாணவர் தனி அறை அந்த அறை ராஜப்பா சாய்வு நாற்காலிக் அடுத் திருப்பது. கேசவன், வேலு, நாராயணன், சேதுராமன், முருகன் தமக்குள் பேசுகிறார்கள்.) கேசவன் : இன்றைக்கு எப்படி சாப்பாடு? வேலு : கீரைத்தண்டு குழம்பு, மேற்படி கீரைக் கடையல், முருங்கக்காய் பொரியல், ஒரே உப்பு. பூசணிக்காய் கூட்டு புகைச்சல் அடிச்சிப் போச்சு. நாராயணன் : எதுதான் நன்றாயிருக்கிறது? வேலு : வழக்கப்படி ஒண்ணுமே நண்ணாயில்லை. சேதுரா : அப்படி சொல்லாதேண்ணேன். வேலு : சொல்லேன் புடிச்சத்தே. முருகன் : சொல்லேன், எதுதான் ஒனக்கு நல்லாயிருந்தது? சேதுரா : நான் சொல்லிப்புட்டா அதுக்கப்புறம் நீங்க ஒத்துக்கு விங்க. முருகன் : சொல்லேன். சேதுரா : பச்சதண்ணி வச்சாளில்லியோ, பரமானந்தமா யிருந்தது. முருகன் : ஆமாமாமாம்! நாராயணன் : வாழையிலையும் அவ்வாறே. வேலு : ஆமாண்டாப்பா. கேசவன் : விசிறி மட்டை மறந்துடாதீங்கப்பா. சேதுரா : ஆமாம்! ஆமாம்!! மறந்துடலே மற்றவர் : ஐயையோ! ஐயையோ! ஆமாம்! ஆமாம்! முருகன் : ஏதோ பல பக்கங்களிலிருந்து இந்த ஊரில் பி.ஏ வாசிக்க வந்தோம். இங்கே சாப்டுறோம். பி.ஏ. பா ஆகிறதுக்குள்ளே உயிரே பாஸாயிடும் போலே இருக்குதுதே. கேசவன் : அதெல்லாம் இருக்கட்டும். இப்போ ஆக வேண்டியதைப் பார்ப்போம். வேலு : இப்போ ஆக வேண்டியது என்ன? ஆருக்குக் கருமாதி தலைக்கட்டுக்குச் சோமன் வாங்கணும்? கேசவன் : தலைக்கொரு பாட்டு பாடுங்க. ஆனந்தமா கேக்கிறேன். நாராயணன் : நானும் கேக்கறேன். சேதுரா : நீதானே பாடணும். கேசவா : ஆமாம், நாராயணா பாடு. ஒண்ணே ஒண்ணு. நாராயணன் : கிண்டல் பண்றதுக்கா நா மாட்டேன். சேதுரா : சேச்சே. நாராயணன் : சரி (நாராயணன் பாட்டை நினைத்துப் பார்க்கிறான், மேலேபார்த்தபடி) கேசவன் : அதென்ன, மேலேயா எழுதி வச்சிருக்கே பாட்டை நாராயணன் : பாத்யா, பாத்யா? முருகன் : சும்மா இருப்பா. கேசவன் : சரி, (தன் உதடுகளை மடக்கி வாயை மூடிக் கொள் கிறான்.) வேலு : பாடு. நாராயணன் : சுந்தரி சௌந்தரி நிரந்திரிது ரந்திரி சோதியாய் நின்ற உமையே. (வேலு அதைத் தொடர்ந்து பூசாரி ராகம் இழுக்கிறான்) அனைவரும் சிரிக்கிறார்கள்.) நாராயணன் : எனக்குப் பாடத் தெரியாதுன்னா கேக்கறிங்களா நீங்க. முருகன் : எப்ப சொன்னே? கேசவன் பாடு. பாரப்பா கேசவன் பாடப் போறார், அமிர்தமாட்டம். கேசவன் : சரிதான். எம்பக்கம் திரும்பி இருக்கிறீங்களோ. முருகன் : சேச்சே. கேசவன் : (தாளமில்லாமல் பாடுகிறான்) ... ... ஆய்வாளர் குறிப்பு நமக்குக் கிடைத்த எழுத்துப்படியில் இந்த இடத்தில் நிற்கிறது நாடகம். கொய்யாக்கனிகள் கவிதை நாடகம், மாணவர்களின் அரட்டைக் காட்சியில், ஒரு மாணவர்களின் வேண்டுகோளின்படி பாடத் தொடங்குவதாகவே, நிறைவுறாமல் நின்றிருக்கிறது. சற்றேறத் தாழ அதே இடத்தில் இந்த படித்த பெண்கள் எழுத்துப் படியும் முடிவுறாமல் கிடைத்திருக்கிறது. கவிதை நாடகத்தில் இழையோடிய நடை, நகை, அவலம், துயரம் போன்ற சுவைகள் அனைத்தும் இந்த உரை வடிவ நடையிலும் காணப்பெற்றன. நாடகத்தின் இறுதிக் காட்சியை நாம் கற்பனை செய்ய வேண்டியதில்லை. 1949-ல் எந்தையார் எழுதி வெளியிடப்பெற்ற படித்த பெண்கள் மூன்றாம் வடிவ நூலில் நமக்குக் கிடைக்கிறது. அதனுடன் ஒப்பிட்டு மகிழலாம். ஆனந்த சாகரம் நாடகத்தில் ஒரு புனிதாவும், இந்த உரைநடை நாடகத்தில் ஒரு புனிதாவும் வந்திருப்பது கவனிக்கத்தக்கது. ரமணி என்ற பெயர் என் இரண்டாம் தங்கையின் பெயரும் அதுவே என்பதைத் தகவலாகத் தருகிறேன். - மன்னர்மன்னன்  ஆனந்த சாகரம் அறிமுகம் தமிழ் நெஞ்சங்களுக்கு இந்த நூற்றாண்டில் கிடைத்த அரிய நூல் பாண்டியன் பரிசு எந்தையாரின் இயற்றமிழ்ப் புலமையும், குமுகாய எழுச்சிக் கருத்தாழமும், பழந்தமிழ் இலக்கிய நடையை மிஞ்சும் பாட்டுத்திறமும் ஒரு சேர அமைந்த இந்த இனிய பாவியத்தின் மூலம் தான் இனி நீங்கள் படிக்கப் போகிறீர்கள். முழுவெள்ளைத் தாளின் நான்கு பக்கங்களில் காரீய எழுது கோலில் படைத்திருக்கிறார் சிறுகதை வடிவில்! தாம் படைக்க எண்ணியதன் கதைச் சுருக்கமாக இதனை எழுதியுள்ளார். பாண்டியன் பரிசு என்ற சொற்றொடரும், கதைப் போக்கும், கருத்துகளும் பிற்காலத்தில் தோன்றிய பாவியத்தின் முற்பிறப்பு என்று கருத வாய்ப்பளிக்கின்றன. விரோதன், விநோதன், வனஸா என்ற கதை மாந்தர்கள் முற்றும் வடமொழி வடிவங்கள். இறுதிக் காட்சியில், முகிலுக்குள் முழுநிலவு - பின் முகிலை விட்டு வெளிவரும் முழுநிலவு. இந்தக் காட்சி மாற்றத்தால், கதைத் தலைவன் இடுகாட்டில் ஒரு பெண்ணின் பிணத்தைக் கண்டு குறை கூறி அழுவதும், பின்புறம் கதைத் தலைவி வந்ததை நேரிற்கண்டு அகம் மகிழ்வதும் பாண்டியன் பரிசு பாவியக்காட்சிகளை நினைவுறுத்தும் நிகழ்ச்சிகள். அடுத்து, ஆனந்த சாகரம் உரைநடையில் இயன்ற குமுகாயச் சித்திரம். மேடைக்கு ஏற்றபடிக் காட்சி அமைப்புகள், குறிப்புகள். இங்கேயும் உச்சக் காட்சியாக முகிலுக்குள் நிலவு வருகிறது. இந்த நாடகம் முடியாட்சிக் காலமாக இல்லாமல், நம் கால நிகழ்ச்சிகளாக உருமாறியுள்ளது. பாண்டியன் பரிசு பாவியத்திற்கு எந்தையார் எழுதிய முன்னுரை ஈண்டு நோக்கத்தக்கது: உரை நடையால் எழுதுவதிலும் கவிதையால் குறைந்த சொற்களால் ஒன்றைச் சொல்லி முடித்துவிடலாம் பல சொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற சில சொல்லல் தேற்றாதவர். - என்றார் வள்ளுவர். முதலில் உரைநடையால் இக்கதையை ஆக்கினேன். மிகப் பெருஞ் சுவடியாதல் கூடும் எனத் தோன்றவே, ஏறக்குறைய நானூறு எண்சீர் விருத்தங்களால் எழுதிமுடித்தேன். தொடக்கப் படிப்பினரும் புரிந்து கொண்டார்கள். இச்செய்யுளின் பொருளை எனின் அதுதான் எனக்கு மகிழ்ச்சியூட்டுவது. எளிய நடை ஒன்றாலேயே தமிழின் மேன்மையைத் - தமிழின் பயனைத் தமிழர்க்கு ஆக்க முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த முன்னுரையின் வாயிலாக முன்பொரு பாண்டியன் பரிசை உரைநடையில் ஆக்கிய செய்தியை அறிய முடிகிறது. அது இந்த ஆநந்த சாகரம்தான் என்பது உறுதிப்படவில்லை பிற்காலப் பாண்டியன் பரிசு பாவியம், முடியாட்சிக் கால அமைப்பைக் கொண்டிலங்குவது. ஒத்துப்போகும் சில பகுதிகள்; வேறு சில மாறுபடும். ஆயினும் ஒப்புநோக்கிப் படிப்பவர்க்கு ஓராயிரம் சுவைகள் விருந்தாகும் என்பது உறுதி. எந்தையாரின் மாணவரும் பிற்காலத்தில் தமிழாசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றியவருமான வ. பொன்னம்பலம் அவர்கள், இந்த உரைநடை நாடகத்தைத் தாமே அரங்கேற்ற முயன்றும், வெற்றிபெற வில்லை. பொன்னம்பலம் அவர்கள் எந்தையாரின் மாணவருள் தலைசிறந்தவர்; பகுத்தறிவியக்கக் கொள்கைகளி னின்று ஒரு சிறிதும் வழுவாத நெறியாளர்; மேடை நாடகங்கள் பல இவர் இயற்றி அரங்கேற்றிக் கைப் பொருளை இழந்தும், கொள்கைக் காவலராகவே திகழ்ந்தார். புதுவையிலே நடைபெற்ற திராவிடர் கழகத் தொடக்கவிழா மாநாட்டில் எந்தையார் எதிர் அணியினரால் தாக்கப்பட்டபோது, எதிர்நின்று எந்தையாரைக் காத்த உறுதியாளர். மேடை நாடகமாக அரங்கேறத் தம் முயற்சி கை கூடவில்லை என்பதால் என்னிடம் ஒப்படைத்தார் இந்தப் படிகளை! அவரின் அன்புக் கொடையை உங்களிடம் ஒப்படைப்பதில் பெருமை கொள்கிறேன். ஆனந்தசாகரம் கையெழுத்துப்படி, மாணவர் பயிற்சிச் சுவடியின் 90 பக்கங்களில், 45 காட்சிகள் தம் கையெழுத்திலேயே எழுதியிருக்கிறார் பாவேந்தர். கருஞ்சிறுத்தை முகமூடி என்ற கதை மாந்தன் இவர் எழுதியதாகப் பல இடங்களில் குறிக்கப்பட்ட ஒரு நாடகத்தின் பெயரை நினைவூட்டுகிறான். அந்த கருஞ்சிறுத்தை எங்குள்ளான்? தெரியவில்லை. சென்னையில் 1963-64-ம் ஆண்டில் மற்றொரு கருஞ்சிறுத்தை நாடகத்தை எழுதியதாக ஒரு தகவல். அந்த நாடகம் யார் கையில் உள்ளது? கருஞ்சிறுத்தையைத் தேடிப் புலனாய்வு நடத்தி வருகிறேன். முகிலுக்குள் நிலவு மறைந்த நேரத்தில் காதலியிடம் பாண்டியன் பரிசை ஒப்படைக்கும் போது, இந்தக் கையெழுத்துப்படி முற்றுப்பெறாத நிலையில் உள்ளது. இந்த உச்சக்கட்டக் காட்சியைப் பிற்காலப் பாண்டியன் பரிசு பாவியத்தின் இறுதிக் காட்சியைப் படித்து ஒப்பு நோக்கினால், இந்த நாடகத்தின் ஆனந்த சாகரம் தலைப்பு பொருந்திவிடும். முதல் பாண்டியன் பரிசை வினோதன் தேடிக் கண்டுபிடித்தான். இரண்டாவது முறையாகத் தினகரன் தேடிக் கண்டுபிடித்தான். மூன்றாம் முறையாக வேலன் கண்டு எடுத்தான் பாவியத்தில்! ஆனந்த சாகரம் பாரதிதாசன் என்ற நூலின் பெயர் தொடங்கி நாடக முழுதும் பிறசொற் கலப்பு உள்ளது. ஆயினும், சிற்சில இடங்களில் பாச் சுவை நம்மை மகிழ்விக்கிறது. இப்போது நமக்குப் பாண்டியன் பரிசு மூன்று கிடைத்துள்ளது. படித்து ஆய்ந்து, மகிழ உங்களை அழைக்கின்றேன். 2003 - மன்னர் மன்னன் முதலில் எழுதப்பட்ட கதைச் சுருக்கம் சேனாதிபதி தற்காலிகமாக ஆட்சி நடத்துகிறான். விரோதனால் விநோதனுக்கு அநேக ஆபத்துக்கள் உண்டா கின்றன. வனஸாவைப் பலாத்காரம் பண்ணிப் பார்த்தும் முடியாமை யால் விரோதன் தன் ஆட்களைக் கொண்டு வனஸாவையும், தோழியையும் பிடித்துப் பத்திரப் படுத்துகிறான். வனஸாவைக் கொன்று சுடுகாட்டில் ஆலமரத் தடியில் புதைத்து விட்டதாகத் தோழியை நம்ப வைக்கிறார்கள். தோழி, விநோதன் வீட்டில் கிழவியிடம் அதே விதம் கூறியிருக்கிறாள். விநோதன் தன் தாயாகிய கிழவி தந்த கடிதப்படி, பாண்டியன் பரிசைக் கண்டுபிடித்து விடுகிறான். தன்னை எதிரிகள் சதா வேவு பார்த்து வருகிறார்கள் என்பதற்காக சார மலையின் உச்சியில் இரவில் ஒரு பொம்மையை நிறுத்தி அதன் பக்கத்தில் ஒரு பொய்ப் பெட்டியை வைத்து விடுகிறான். அந்தப் பொம்மையை விநோதன் என்று நினைத்து எதிரிகள் மலையைச் சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள் இறங்கட்டும் என்று. விநோதன் பெட்டியை எடுத்துக் கொண்டு தன் தாயிடம் போகிறான். தாயும், தோழியும் வனஸாவின் பிரேதம் சுடுகாட்டில் ஆல மரத்தின் அடியிற் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். விநோதன் சோகத்தால் விழுகிறான். பெட்டியை எடுத்துக் கொண்டு ஆலமரத்தடிக்கு ஓடுகிறான். அங்கிருந்த ஓர் சவக் குழியைத் தோண்டுகிறான். அதில் ஏற்கனவே புதைக்கப்பட்டிருந்த ஒரு பிரேதத்தை வனஸாவென்று நினைத்துக் கதறுகிறான். அச்சமயம் நிலா முகிலைக் கிழித்துக்கொண்டு வெளிவருகின்றது. பிரேதத்தின் விநோத தோற்றத்தை விநோதன் பார்த்து, பெண் என்பது ஒரு ஆபாசம் என்றும், இதற்காகத் தானா இத்தனை கஷ்டப்பட்டோம் என்றும் வெறுத்துக் கதறுகிறான். அதே சமயம் வனஸா எதிரிகளிடமிருந்து தப்பி, விநோதன் தாயால் சேதியறிந்து மயானத்தில் வந்து விநோதனைக் காணுகிறாள். விநோதன் அவளை ஆநந்தத்தோடு தழுவப் போகிறான். அவள், இந்நேரம் இவ்வுலகையே வெறுத்தீர்கள் என்று கேட்கிறாள். விநோதன் ஆம், வனஸாவை இழந்த உலகம் பயனற்றது என்று தழுவிக் கொள்ளுகிறான். பாண்டியன் பரிசு திறக்கப்படுகிறது. அதில் இருந்த பாண்டியன் - பாண்டியன் தேவி ஆடையுடன் - இருவரும் நகரில் பிரவேசிக் கிறார்கள். நகர ஜனங்கள் எதிர்கொள்ளுகிறார்கள். விநோதனுக்கும், மந்திரிகுமாரிக்கும் மணமுடிக்க வேண்டும் என்றும், நாட்டை விநோதன் ஆள வேண்டும் என்றும் உத்தரவிட்டு - சேனையுடன் வனஸாவின் சொந்த நாட்டைப் பிடித்திருக்கும் அரசனுக்குத் தூது போகிறார்கள்.  பாண்டியன் பரிசு என்ற காப்பியம் எழுதுவதற்கு ஏறத் தாழப் பத்தாண்டுக்கு முன்னதாக எழுதப்பட்ட கதைச் சுருக்கம் இது. புகழ்க் காப்பியமான பாண்டியன் பரிசுக்கு வித்தான இக் கதைக் கருவில் கதைமாந்தர்கள், காட்சி அமைப்புகள் அக் காலத்தில் நடைமுறையில் இருந்தவைகளோடு ஒத்துப் போகின்றன. இறுதிக் காட்சியில் நிலவு தோன்று முன்னரும், பின்னரும் வரும் கருத்துகள் பாண்டியன் பரிசு பெருங் காப்பியத்துடன் ஒத்திசைந்து காணப்படுகின்றன என்பதைக் கருதிப்பார்க்க! 2003 - மன்னர் மன்னன் பாத்திரங்கள் தினகரன் : கதாநாயகன் கருஞ்சிறுத்தை, முகமூடி : (புதுச்சேரி) தீனதயாளன் : கதாநாயகன் தந்தை தெய்வயானை : கதாநாயகன் தாய் சொக்கலிங்கம் : கதாநாயகன் காரோட்டி (டிரைவர்) புனிதா : கதாநாயகி (ஆதிரேலியாவிலிருந்து தீனதயாளன் வீட்டுக்கு வந்தவர்கள்) பூரணலிங்கம் : கதாநாயகி தந்தை சங்கரன் : தீனதயாளன் வீட்டுக் காரியக்காரன். கலகக்காரனின் உதவியாள். சாரங்கம் : கலகக்காரன் ரங்கு : கொள்ளைக் கூட்டத்தலைவர். மற்றும் சேரி சனங்கள், கோயில் தரும கர்த்தர்கள், கோயில் குருக்கள், கொள்ளைக் கூட்டம், டாக்டர்மு தலியவர்கள். மற்றும் சேரி சனங்கள், கோயில் தரும கர்த்தர்கள், கோயில் குருக்கள், கொள்ளைக் கூட்டம், டாக்டர் முதலியவர்கள். காட்சி - 1 புதுச்சேரி புனிதா, பூரணலிங்கம், சங்கரன் ஆகிய மூவரும் ஏறியுள்ள கார் ஒன்றும், மற்றும் இருப்புப் பெட்டிச் சாமான் கள் ஏற்றிய கார் ஒன்றும், புதுவை தீனதயாளன் வீடு நோக்கி வருகின்றன. சங்கரன் : அதோ அந்த மாடி வீடுதான். புனிதா : அதுதானா? (கார்கள் இரண்டும் வீட்டின் எதிரில் நிற்கின்றன) பூரணலிங்கம் : பத்திரமாக உள்ளே வந்து சேரணுமே இவைகள்! சங்கரன் : அதற்கென்ன. (ஆளை நோக்கி) பத்திரமாக இறக்கித் தூக்கி வாருங்கள். நீங்க வாங்க. (அனைவரும் உள்ளே நுழைகிறார்கள். வீட்டில் தீனதயாளன் நோயாளி நாற்காலியில் சாய்ந்திருக்கிறார். அவர் எதிரில், மேசையின்மேல் மருந்து சீசாக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.) தீனதயாளன் : (பூரணலிங்கம் வருகையை நோக்கி) வரவேண்டும்! உங்களை எதிர்கொண்டழைக்கக் கொடுத்து வைக்க வில்லை. (எழுந்திருக்க முயலுகிறார்) பூரணலிங்கம் : எழுந்திருக்க வேண்டாம். இருங்கள்! இருங்கள்!! தங்கள் காரியக்காரர் சங்கரன் சொல்வார் உங்கட்கு உடல் நலமில்லை யென்று. தீனதயாளன் : ஏதோ பித்த மயக்கமாம். டாக்டர் அபிப்ராயப்படுகிறார். உட்காருங்கள்! அம்மா உட்கார்! சுமார் 30 வருடமிருக்கலாம் தங்களை நான் பார்த்து. சங்கரன் : இரும்புப் பெட்டியை ... ... இடம்? தீதை : அதோ அந்த அறைதான் இருக்கிறதே! எல்லாச் சாமான்களை யும் அதில் இறக்கிவிடு! - தாம்பூலம் கொண்டு வா! போஜனம் சித்தப்படுத்தச் சொல்! (மனைவியைக் குறித்து) அங்கே என்ன செய்கிறாய்? தெய்வானை : இதோ வந்துவிட்டேன். (வெற்றிலைத் தட்டுடன் வந்து) வாருங்கள் சௌக்கியம்தானா? பூரண : இதோ! குழந்தை புனிதா! மனைவிதான் சென்ற வருடம் காலமாகிவிட்ட விஷயம் தெரியுமே உங்களுக்கு! தெய்வ : ஆமாம், கடிதம் எழுதியிருந்தீர்கள்... புனிதா! தாம்பூலம் போட்டுக் கொள்வதுண்டா? புனிதா : நீங்கள் உட்காருங்கள். (தெய்வயானையும் உட்காருகிறாள்.) தெய்வ : பாவம் புனிதா, அனாதை ஆயினும் தங்களை அடைந்ததால் அதிர்ஷ்டசாலி என்றே சொல்ல வேண்டும். பூரண : என்ன செய்வது? தீனத : போஜனம் சித்தப்படுத்து! பூரண : அதிக அவசரமில்லை. தீனத : அப்படியல்ல. ஆள் : (வந்து) நாநம் பண்ணலாம். தீனத : குளித்துவிடுங்கள். பேச வேண்டிய விஷயங்களைத் தினந்தோறும் பேசலாம்! முதல் விஷயம் போஜனம். பூரண : இருக்கட்டுமே! உங்களை நான் பார்க்க வேண்டும் என்ற ஆவல்கூட இன்னும் தணியவில்லையே! தங்கள் குமாரர் சென்னையில் வசிப்பதாக எழுதி இருந்தீர்களே! தீனத : பி.ஏ. (B.A.,) பரிட்சையில் தேறிவிட்டான். சென்னையில் தான் இருக்கிறான். அவனைச் சென்னையிலுள்ள வாலிபர் சங்கம் விடமாட்டேன் என்கிறது! சங்கர்!! சங்கரன் : ஏன்? தீனத : தினகரனுக்குத் தந்தி கொடு! இங்கு வரும்படி. தெய்வ : எழுந்திருங்கள். தீனத : சாப்பிடலாம் எழுந்திருங்கள். (அனைவரும் போஜனத்துக்குப் போகிறார்கள்.) காட்சி - 2 (பூரணலிங்கம், தீனதயாளன் இருவரும் சாய்மான நாற்காலியில் படுத்தபடி பேசுகிறார்கள். அப்போது புனிதா உள்ளிருந்து வெளிவந்து கூறுகிறாள்.) புனிதா : (தீனதயாளுவை நோக்கி) கார் தெருவில் நிற்கிறது. சென்னைக்கா? தீனத : ஆமாம், புள்ளையாண்டானை அழைத்து வர. புனிதா : நானும் சென்னைக்குப் போய் வருகிறேனே. தீனத : தனியாகவா? புனிதா : அதனாலென்ன? தீனத : உலகம் என்ன சொல்லும்? புனிதா : அறிவுலகம் எதுவும் சொல்லாது. மூடவுலகம் எது வேண்டு மானாலும் சொல்லும். தீனத : உன் தகப்பனாரைக் கேட்டாயா உத்தரவு. புனிதா : ஏனப்பா! பூரண : போய் வரட்டுமே! (புனிதாவை நோக்கி) போய் வா அம்மா! தீனத : (விழிக்கிறார்).... அப்படியா? காரோட்டியைக் கூப்பிடு! (ஆள் சென்று காரோட்டியைக் கூப்பிட்டு வருகிறான்.) தீனத : சொக்கலிங்கம்! புனிதாவை அழைத்துக்கொண்டு சென்னைக்குப் போ! தினகரன் இருப்பிடத்தைக் காட்டு! வரும்போது தினகரனையும் அழைத்து வா! பத்திரம். காட்சி - 3 (தீனதளாயன், பூரணலிங்கம், புனிதா) தீனத : இனி நீங்கள் ஆதிரேலியாவுக்குப் போக வேண்டிய அவசியமில்லையே! பூரண: இல்லையில்லை, சிக்கறுத்துக் கொண்டுவந்து விட்டேன். புனிதாவுக்கு மறுமணம் செய்து என் கண்ணால் பார்க்க வேண்டும். நண்பரே. புனிதா ஒரு வயது குழந்தையா யிருக்கையில் லிங்கக் கிழவர் ஆதிரேலியாவுக்குத் தூக்கி வந்தார். எனக்குப் பிள்ளையில்லை. குழந்தையை வாங்கி வளர்த்து வந்தேன். பால்ய வயதிலேயே கலியாணம் பண்ணினேன். அந்தப் பிள்ளையாண்டான் இறந்து விட்டான். பிறகு லிங்கக் கிழவரும் இறந்துவிட்டார். என் மனைவியும் சென்ற வருடம் இறந்தாள். நான் லிங்கக் கிழவருக்கு வாக்குத் தத்தம் செய்தபடி இந்தப் புனிதாவுக்கு மறுமணம் செய்துவிட வேண்டும். அதுமாத்திரமல்ல. புனிதாவின் பூர்வீகச் சொத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். புனிதாவின் தந்தையாரைக் கொலை செய்தவர்கள் இன்னாரென்பதை அறிய வேண்டும். தீனத : பூஷனப்பெட்டி என்பதாக எழுதியிருந்தீரே அதென்ன? பூரண: அதுவா! பாண்டிய அரசன் புனிதாவின் முன்னோருக்குப் பரிசாகக் கொடுத்தது. அந்தப் பொக்கிஷத்தின் பொருட்டுத் தான் புனிதாவின் பெற்றோர் கொலை செய்யப்பட்டார்கள். தீனத : இருக்கட்டும்! கூடியமட்டும் முயற்சி செய்வோம். காட்சி - 4 (புனிதா தன் தனியறைக்குள் உடையணிந்து கொள்கிறாள். இடையில் ஒரு முழ நீளமுள்ள அழகிய கத்தியைக் கட்டுகிறாள்.) தீனத : புனிதா தனியாகச் செல்ல உத்தேசிப்பது சரிதான். ஆயினும் என் பழைய இதயம் ஆச்சரியப்படுகிறது. பூரண : இந்தியாவில் பெண்கள் விடுதலையை வற்புறுத்தும் பத்திரிகைகள் பல நல்ல வேலை செய்து வருகின்றன. உங்கள் இருதயம் பழமையைவிட்டுத் தாண்டாதது எனக்குக் கூட ஆச்சரியமாகவே இருக்கிறது. தீனத : வெளியுலகோடு நான் அதிகம் சம்பந்தம் வைத்துக் கொள்ளாதது இப்போதுதான் எனக்கு ஞாபகம் வருகிறது. (புனிதா வருகிறாள்) புனிதா : நான் போய் வருகிறேன். தீனத : சரியம்மா! காட்சி - 5 (கார் போகிறது) டிரைவர் சொக்கலிங்கம்: இந்தக் கார் போலவே என் சொந்தத்தில் ஒரு கார் வாங்கியிருக்கிறேன். புனிதா : அப்படியா? .... சென்னையில் தினகரர் இருக்கும் இடம் உனக்குத் தெரியுமா? டி.சொக் : தெரியும். நான் சம்பளத்துக்காகவே வேலை பார்க்கிறதாக நினைக்க வேண்டாம். எனக்கும் இருபதினாயிரம் ரூபாய் சொத்து இருக்கிறது. புனிதா : தினகரர் இருக்கும் வீடு எந்த வீதியில் இருக்கிறது? டி.சொக் : கோவிந்தப்ப நாய்க்கன் தெரு. உங்கட்கு வயது என்ன இருக்கும்? புனிதா : ஏன்? இருபது ஆகிறது. டி.சொக் : என்னைவிட ஒருவயதுதான் நீங்கள் இளமை. புனிதா : கார் போகட்டும். பேச்சுப் பராக்கில் தவறிவிடப் போகிறது. (கார்போகிறது.) காட்சி - 6 (பூரணலிங்கம் வீடு) (பூரணலிங்கம், தீனதயாளன், கோயில் தர்மகர்த்தர் ஆகிய சுந்தரம், சுதரிசனம், கந்தன், காளியப்பன், நந்தன், காவற்காரன் அனைவரும் உட்கார்ந்து பேசுகிறார்கள்.) சுந்தரம் : நீங்கள் ஆதிரேலியாவிலிருந்து பதினாயிரம் ரூபாய் அனுப்பினீர்கள். பெருமாள் கோயிலுக்கும், நமது கோயிலுக்கும் ஏற்பட்ட வழக்கில் 6,000 ரூபாய் செலவழிந்து போயிற்று. நிலத்தகராறு இன்னும். ஐக்கோட்டில் தீர்ப்பாக வில்லை. இதுவரைக்கும் அதில் இரண்டு பக்கமும் அதிகச் செலவு. கும்பாபிஷேகம் குறையாய் நிற்கிறது. பூரண : (உட்சென்று ஒரு தங்கப் பாளத்தை எடுத்து வந்து) இதன் மதிப்பு இருபதினாயிரம் ரூபாய். பத்திரம். வேலையை ஆரம்பியுங்கள். (அனைவரும் போகிறார்கள்) காட்சி - 7 (சென்னைக்கு இப்புறமுள்ள சிறுநகர். கடைவீதியை நெருங்குகிறது கார்) டி.சொக் : சோடா கீடா வேண்டுமா? புனிதா : எனக்கு வேண்டாம். உனக்கு வேண்டுமானால் சாப்பிடு! டி.சொக் : எனக்குச் சோடா பிடிக்காது. பால் இருந்தால்! புனிதா : இதோ என்னிடமிருக்கிறது. (கூஜாவிலிருந்து ஒரு டம்பளரில் பால் ஊற்றிக் கொடுக்கிறாள். டிரைவர் சொக்கன் வாங்கிக் குடிக்கிறான். அதற்குள் சொக்கனுக்கு நேசனான கண்ணன் வருகிறான்.) கண்ணன் : என்ன சொக்கலிங்கம், எங்கே? டி.சொக் : சென்னைக்குப் போகிறேன். (என்று சொல்லி இறங்கி அவனுடன் போகிறான்.) (தனியிடத்தில்) கண்ணன் : அந்த ஆசாமி யார்? தனியாக! டி.சொக். : என் எஜமான் வீட்டு விருந்தாளி! கண்ணன் : சும்மா தொட்டுப் பாரேன்! டி.சொக் : ஆமாம், நான் ஆரம்பிக்கலாகாது. நீ தொட்டுப் பார். நான் இங்கே இருக்கிறேன். (கண்ணன் தனியாகக் காரருகில் வந்து) கண்ணன் : சென்னைக்கா? புனிதா : ஆம். அவர் எங்கே? கண்ணன் : காப்பி சாப்பிடுகிறார். (புனிதாவின் பக்கத்தில் உட்காருகிறான். காரின் கதவைத் திறந்து கொண்டு) வெற்றிலையிருக்கிறதா? புனிதா : இல்லை. கண்ணன் : நானும் அதோ அதுவரைக்கும் வருகிறேன். புனிதா : அதற்கென்ன. டி.சொக். : (அங்கு வந்து காரில் ஏறி) காரை விடட்டுமா? புனிதா : விடு! டி.சொக் : கண்ணா எங்கே போகிறாய்? (இதற்குள் கண்ணன் புனிதாவை நெருங்குகிறான். கார் போகிறது. புனிதா சிறிது விலகிப் போகிறாள். கார் போகிறது. பின்னும் அதிகம் சமீபிக்கிறான். புனிதா தன் இடையிலிருந்து கத்தியை எடுத்து அதன் கூர்ப்பக்கத்தில் விரலை வைத்துக் கூர்மையைப் பரிசோதிப்பவள்போல் பாவனை காட்டுகிறாள்.) புனிதா : ஏன் காரை நிறுத்தவில்லையா? (கண்ணன் நடுங்குகிறான். சொக்கன் திரும்பிப் பார்த்து விழிக்கிறான்) இறங்கலாமா... ஏன் அவர் ஓடுகிறார்? டி.சொக் : நீங்கள் கத்தியை எடுக்கவே, பயந்துவிட்டான். புனிதா : நீ பயப்படவில்லையே! சரி கவனமாகக் காரை விடு! (கார் போகிறது) காட்சி - 8 (சென்னை கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ஒரு வீடு. சென்னை வாலிபர் சங்கக் கட்டிடம்) (தினகரன் தலைமையில் கோவிந்தன், கேசவன், முத்து, காங்கேயன் முதலிய பத்துப்பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். வேலு பேசுகிறான்.) வேணு : நண்பர்களே, இந்தியப் பெண்களுக்கு நம் பழைய காலப் பெரியோர் விதித்துள்ள கட்டுப்பாடுகளை நான் ஆதரிக்கிறேன். (இச்சமயம் ஓர் ஆள், ஒரு கடிதம் கொண்டு வந்து தினகரிடம் தருகிறான். தினகரன் வாசிக்கிறான்) தினகரன் : அழைத்து வா! (ஆள் போகிறான்) (ஒரு வாலிபன் கூட்டத்தில் பிரவேசிக்கிறான். தினகரன் அவனுக்கு ஒரு நாற்காலியைக் காட்ட வாலிபன் உட்காருகிறான்.) வேணு : பெண்கட்கு விடுதலை வேண்டும் என்றும், ஆடவர் கள் போலவே பெண்களும் எல்லாத் துறைகளிலும் பிரவேசிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. எந்தப் பெண் விடுதலை கேட்கிறாள் என்பதுதான் தெரியவில்லை. விடுதலையைப் பெண்கள் வெறுக் கிறார்கள். விதவைகள் மறுமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதை நான் பார்த்ததேயில்லை. கணவன் இறந்தான் என்ற சேதி வெடிகுண்டு போல் அவர்கள் காதில் விழுந்தவுடன், இருந்த காதல் இறந்து விடுகிறது. காதலால் அவர்கள் வாடுகிறார்கள் என்பது முழுப் பொய்! (என்று சொல்லி உட்காருகிறான்) வந்த வாலிபன் : தலைவரே நான் சற்றுப் பேச அனுமதி கொடுக்க வேண்டுகிறேன். தினகரன் : நமது புதிய நண்பர் பேச அனுமதிக்கிறேன் வந்தவன் : நண்பர்களே, பெண்கள் விடுதலை வேண்டும் என்று ஆடவர்களைப் போய்க் கெஞ்சவில்லை. ஏமாந்த பெண்களை இழிவுபடுத்தித் திரிய வேண்டாம் என்றுதான் கேட்டுக் கொள்ளுகிறார்கள். விதவைப் பெண்களுக்கும் காதல் தன் கணவனுடன் போய் விடுகிறதாம். இல்லை காதல் இல்லாத உயிர்ப் பொருள் இந்த உலகில் இல்லை. நான் உதாரணம். (தனது ஒட்டு மீசையையும், தலைத் துண்டையும் எடுத்து விட்டுப் புனிதா தன் சொந்த உருவத்துடன் நிற்கிறாள். அனைவரும் கரகோஷம்) நான் விதவை. ஆனால் காதல் உண்டு (கேளுங்கள் கேளுங்கள் என்ற கூச்சல்) தினகரன் : நான் இதையே ஆதரிக்கிறேன். இத்துடன் கூட்டம் முடிகிறது. வேணு : இந்த அம்மையார் யார்? தினகரன் : என் வீட்டு விருந்து. (அனைவரும் மரியாதை செலுத்திப் போகிறார்கள்.) தினகரன் : என்றைக்கு வந்தீர்கள் அப்பா? புனிதா : இன்று காலை! அப்பா புதுவையில் உங்கள் வீட்டில் தான் இருக்கிறார். புதுவைக்குப் புறப்படலாமே. தினகரன் : சரி. (இருவரும் போகிறார்கள்.) காட்சி - 9 (புதுச்சேரி சாரங்கன் வீடு) (காரியக்காரனாகிய சங்கரனும், சாரங்கமும் சாரங்கம் வீட்டின் குறட்டில் நின்று பேசுகிறார்கள்.) சங்கரன் : தீனதயாளன் வீட்டில் ஆதிரேலியாவிலிருந்து விருந் தாளிகள் வந்திருக்கிறார்கள். இருப்புப் பெட்டி நிறைய தங்கக் கட்டியும், நோட்டும் கொண்டு வந்திருக் கிறார்கள். சிவன் கோயிலுக்கு 20,000 ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டி தருமம் செய்தார் ஆதிரேலியக்காரர். அவருக்கு ஒரே மகள். விதவை! 20 வயது ஆகிறது. நல்ல அழகு! மறு மணம் செய்து கொள்ள மாப்பிள்ளை தேவையாம். சாரங்கம் : அப்படியானால் ஒரு கை பார்க்கலாமே! விதவையாக இருந்தால், அவர்களிடம் உள்ள பணமுமா விதவை? சங்கரன் : அதுதான் நானும் சொல்லுகிறேன். ஏதோ நாமிருவரும் ஒன்றுக்குள் ஒன்று. நீ நன்றாயிருந்தால் எனக்கு நல்லது. (தினகரனும், புனிதாவும் ஏறிவரும் கார் தெரு வழியாக வருகிறது) சங்கரன் : (தலையைக் குனிந்து) அதோ பார்! பார்!! காரில்! அவள்தான் புனிதா! அவளைத் தெரிகிறதா? தீனதயாளன் மகள்! (கார் நெருங்குகிறது) சங்கரன் : இப்போது தான் வருகிற பயணமோ! (இதற்குள் சாரங்கம், வீட்டின் உள் ஓடித் தன் அறையில் அவசரமாக உடையணிகிறான். கிராப் சீவுகிறான்) தினகரன் : ஆமாம். சங்கரன் : வந்து போகலாம். நிறுத்துங்கள். தினகரன் : (கார் நிற்கிறது) சரி! சங்கரன் : போகலாம் வாருங்கள் அம்மா. இது என் மைத்துனர் வீடுதான். (சாரங்கமும் அறையிலிருந்து வருகிறான்.) சாரங்கம் : உட்காருங்கள்! (அனைவரும் உட்காருகிறார்கள்) சங்கரன் : இவர் எனது மைத்துனர். தாய் மாத்திரம் இருக்கிறார்கள். இன்னும் கலியாணம் ஆகவில்லை. ஆக வேண்டிய நல்லது, கெட்டதுக்கு நான்தான் என்று வைத்துக் கொள்ளுங் களேன். தினகரன் : சரிதான். சங்கரன் : இந்த வீடு, மடுவில் பேஷான நிலங்கள், இன்னும் புன்செய் அநேகம். சொத்தாளி வீட்டுப் பிள்ளை. பிள்ளை யாண்டான் படித்திருக்கிறார். தினகரன் : சரிதானே! புனிதா : வீடு மிக்க வசதியானது. சங்கரன் : அந்த வீடு வசதியில்லாவிட்டால் இதில் வந்து விடலாமே! புனிதா : அதற்கென்ன! நாழிகை ஆகிறது. சாரங்கம் : இருந்து சாப்பிட்டுப் போகிறதுதானே! புனிதா : அக்கறையில்லை. இன்னொரு சமயம் பார்த்துக் கொள்வோம். சாரங்கம் : காப்பியாவது. புனிதா : இப்போதுதான் சாப்பிட்டோம். சாரங்கம் : (சிரித்துக் கொண்டு) எங்கே? புனிதா : கையோடு கொண்டு வந்திருந்தோம். (இருவரும் எழுந்திருக்கிறார்கள். கூடவே சங்கரன், சாரங்கம் இருவரும் எழுந்திருக்கிறார்கள்.) புனிதா : சாவகாசமாக வருகிறோம், நமகாரம்! (கார் போகிறது) காட்சி - 10 (தீனதயாளன் வீடு) (கார் தீனதயாளன் வீடு சேர்கிறது. வீட்டினுள் தீனதயாளன், பூரண லிங்கம் இருவரும் உட்கார்ந்து இருக்கும் சமயம் புனிதா, தினகரன் இருவரும் போகிறார்கள்.) பூரண : எப்போது சென்னையை விட்டுப் புறப்பட்டீர்கள். வாருங்கள் தம்பி, உட்காருங்கள். தீனத : இவர்தான் புனிதாவின் தந்தையப்பா! தினகரன் : அப்படியா? நமகாரம். காலையில் புறப்பட்டோம். (அனைவரும் உட்கார்ந்தபின்) பூரண : களைப்பாக இருப்பீர்கள். முதலில் போஜனத்தை முடித்துக் கொள்ளுங்கள். புனிதா : இன்னும் ஒரு மணி நேரம் செல்ல வேண்டும். தினகரன் : எனக்கும் அப்படித்தான். பூரண : அப்படியானால் ஒரு கதை! அது மிக்க ரசன்ய மானது. அனைவரும் கவனிக்க வேண்டும். தினகரன் : மிக்க சந்தோஷம். (அனைவரும் பூரணலிங்கத்தின் பக்கம் திரும்பிக் கவனிக்கிறார்கள்.) பூரண : புதுவைப் பூமிநாதனுடைய முன்னோரில் ஒருவர் பாண்டிய மன்னனிடம் சேனாதிபதியாய் இருந்தார். அதற்குப் பரிசாக விசேஷ நகைகள் அடங்கிய பொக்கிஷம் ஒன்றைத் தந்தான். கடைசியாக அது பூமிநாதனிடம் இருந்தது. பூமி நாதனையும், பூமிநாதன் மனைவியையும் ஒரு நாள் நள்ளிர வில் ஒருவன் கொலை செய்தான். அப்போது, பூமி நாதன் மகளுக்கு ஒரு வயது. பூமிநாதனிடமிருந்து வந்த லிங்கக் கிழவர் அந்தக் குழந்தையைக் காப்பாற்றியதும் தவிர, கொலை செய்தவனையும் செஞ்சிப் பக்கத்தில் கண்டு பழீக்குப்பழி வாங்கிவிட்டார். பூமிநாதனைக் கொன்றவன் அந்த பொக்கிஷத்தை எங்கேயோ ஒளித்து வைத்தான். அதன் ரகசியம் தெரியவில்லை. கொலைக் குற்றம் செய்த அந்த லிங்கக் கிழவர் பயந்து அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஆதிரேலியாவுக்கு வந்துவிட்டார். அந்தக் குழந்தைக்கு நான் பாலியத்திலேயே விவாகம் செய்தேன். மாப்பிள்ளை இறந்தார். லிங்கக் கிழவரும் பிறகு இறந்தார். என் மனைவியும் இறந்தாள். அந்தக் குழந்தை தான் இந்தப் புனிதா. அந்த லிங்கக் கிழவர் என்னிடம் சொல்லியவை களை நான் குறித்து வைத்திருக்கிறேன். புனிதாவுக்கு மறு மணம் செய்யவேண்டும். பெட்டியைக் கண்டுபிடிக்க வேண்டும் அந்தப் பெட்டியில் உள்ளவை நவரத்தின பூஷணங்கள், ஒரு கோடி ரூபாய் மதிப்பு! தீனத : அந்தப் பூமிநாதன் வீடுமாத்திரம் இன்னதென்று தெரிகிறகு. செட்டித் தெருவிலுள்ள சாரங்கம் வீடுதான். தினகரன் : புனிதா! நாம் வரும்போது இறங்கினோமே! புனிதா : சரிதான். என் வீட்டில்தான் நாம் இறங்கினேனோ! தினகரன் : செட்டித்தெரு வீட்டுக்கு நீங்கள் குடிபோய் விடுவது நல்லது. பூரண : சரி! இரும்புப் பெட்டியை மாத்திரம் இங்கேயே வைத்துப் போனால் போகிறது. தீனத : அப்பா இது விஷயத்தில் நீ இவர்கட்கு ஒத்தாசையாயிரு! ஊராரின் ஆதரவு கோரியே இதுவரைக்கும் பூரணலிங்கம் அவர்கள் இந்த ஊரில் விசேஷ தர்மங்கள் செய்திருக்கிறார். நேற்றுக்கூட 20,000 ரூபாய் பெறக்கூடிய தங்கக் கட்டியை நம்மூர் சிவன் கோயிலுக்குத் தர்மம் செய்தார். தினகரன் : பரிதாபமான சரித்திரம்! போஜனத்துக்குப் போவோம். காட்சி - 11 (தீனதயாளன் வீடு) (தீனதயாளன், தினகரன், சங்கரன் பேச்சு) தினகரன் : சாரங்கம் வீடு புனிதாவுக்குப் பிடிக்கிறதா? சங்கரன் : சவுகரியமாக இருக்கிறது. தினகரன் : சாரங்கத்திற்கு என்ன ஆதியிருக்கறது? சங்கரன் : அந்த வீடு, மடுவெளியில் 20 காணி நன்செய் ரொக்கம், நகைகள், 10,000 ரூபாய் இருக்கும். தினகரன் : வீடு மிக்க பழசி! சங்கரன் : அதைச் சாரங்கத்தின் தகப்பனார் விலைக்கு வாங்கியபின் பழுது பார்க்கவேயில்லை. அவரும் இறந்துவிட்டார். தினகரன் : இருப்பது யார்? சங்கரன் : தாயார். செவிடு. தள்ளாதகாலம். பிள்ளையாண்டானுக்குக் கலியாணம் நடந்தால்தான் குடும்பம்! (இச்சமயம் சாரங்கமும், புனிதாவும் வருகிறார்கள்.) சங்கரன் : அவர்களும் வந்துவிட்டார்கள், பேசிக் கொண் டிருங்கள். நான் போய் வருகிறேன்! (போகிறான்.) தினகரன் : வாருங்கள்! உட்காருங்கள். வீடு சவுகரியமாகவே இருப்ப தாக கேள்விப்பட்டேன். ஏன் பழுது பார்க்காமல் வைத்திருக்கிறீகள்? சாரங்கம் : என் தகப்பனார் அதை விலைக்கு வாங்கினார். இறந்து விட்டார். பழுதுபார்க்க சிரத்தையில்லை. தினகரன் : குடும்ப ஆதரவு உங்கட்கும் கம்மி! கல்யாணம் நடந்தால் தான் குடும்பம்! சீக்கிரம் முடிந்து விடுமல்லவா? சாரங்கம் : யாருக்குத் தெரியும்? தினகரன் : ஏன் புனிதாவுக்குத் தெரியுமே! புனிதா : துவக்கி விட்டீர்களா கிண்டல்! சாரங்கம் : உங்கட்கு எப்போது கல்யாணம்? தினகரன் : அதுபற்றிக் கவலையில்லை எனக்கு. சாரங்கம் : வருகிற மாதம் உங்கட்குக் கல்யாணமாமே! தினகரன் : எனக்குத் தெரியாமலா? சாரங்கம் : தெரியாமலா, தெரிந்துதான். தினகரன் : பெண் எங்கே? சாரங்கம் : புனிதாவைக் கேட்க வேண்டும். புனிதா : எனக்கு இங்கே பரீட்சை நடக்கிறதா என்ன? எந்தக் கேள்விக்கும் எனக்குப் பதில் தெரியாததால் எனக்கு பூஜ்யம் போடுங்கள்! (சாரங்கம், தினகரன் நகைக்கிறார்கள்.) சாரங்கம் : நாழிகை ஆகிறது. போகலாமா புனிதா? புனிதா : தினகரர் தகப்பனாரைப் பார்த்துவிட்டு வருகிறேன். சாரங்கம் : சரி! நான் போகிறேன். (போகிறான்) காட்சி - 12 (தீனதயாளன் வீடு) (புனிதா, தினகரன் பேச்சு) புனிதா : சாரங்கம் தகப்பனார் இந்த வீட்டை வாங்கியதாக அல்லவா தெரிகிறது. ஆகையால் சாரங்கம் தகப்பனார் குற்றவாளி யல்ல. தினகரன் : நான் சங்கரனையும் விசாரித்தேன். சாரங்கம் சொல்வது போலவே அவனும் சொன்னான். புனிதா : அதனால் சாரங்கம் கொலை செய்தவன் மகன் அல்ல! தினகரன் : இருவர் பேச்சும் ஒன்று போலிருப்பதால் எனக்குச் சந்தேகம். சங்கரன் : (வந்து) ஏனம்மா வீட்டுக்குப் போவோமா? கார் காத்திருக் கிறது. புனிதா : போகவேண்டியதுதான்! தினகரன் : ஆம்! நாழிகை ஆகிறது. (போகிறார்கள்) காட்சி - 13 (சாரங்கம் வீடு, மேல் மாடி - அரை நிலா இரவு) (ஒரு சோபாவின் மேல் புனிதா உட்கார்ந்திருக்கிறாள். விரகதாபம்! அவள் மனக்கண்ணில் நோன்றும் தோற்றம் வருமாறு) 1. சிட்டுக்களும், புறாக்களும் சோலையில் காதல் இன்பம் அனுபவிக்கின்றன. 2. மான்கள் காதல் அனுபவிக்கின்றன. 3. காதலன் காதலி - காதல் இன்பம் நுகர்கிறார்கள். இவைகளால் வருந்துகிறாள். 4. தினகரன் உருவம் அதன்பின் 5. சாரங்கம் உருவம் (இச்சமயம் சாரங்கன் வருகிறான்) புனிதா : யார் நீங்களா... நீங்களா? சாரங்கம் : புனிதா! என்னை மன்னிக்க வேண்டும். நிலவெரிக்கும் நேரத்தில் நான் மாடிக்கு வருவது வழக்கம். நீ யிருப்பதை மறந்துவிட்டேன். புனிதா : அதனாலென்ன! சாரங்கம் : நீ ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து கிடக்கிறாய் என்று நினைக்கிறேன். புனிதா : அப்படி ஒன்றுமில்லை. சாரங்கம் : புனிதா, கீற்றுப் பிறை நீலவானம் பெற்ற குழந்தை போல்! ஒலி! குளிர்ந்த இரவு! இதயத்தில் களங்கம் இருக்க வழி யில்லை. இச்சமயத்தில்தான் உன்னை ஒன்று கேட்கிறேன். என்னை நீ அங்கீகரிக்கிறாயா? உன்னைவிட வேறு எனக்குக் கதியில்லை. உன் சம்மதம் வந்தால்தான் எனக்கு உயிர்வரும்! புனிதா : (சாரங்கத்தின் முகத்தைக் கவனிக்கிறாள் சந்தோஷத்துடன். பிறகு வேறு பக்கம் திரும்புகிறாள். அவள் இதயத்தில் தினகரன் தோன்றுகிறாள்) உங்களுக்குச் சிறிது தாமதமாகத்தான் பதில் சொல்லக் கூடும். சாரங்கம் : சரி! உன்னை அப்படித் தாமதிக்க வைப்பது எது? அதை என்னிடம் ஒளிக்காதே. நீ என் நிலைமையை உணர வில்லையா? புனிதா : (யோசிக்கிறாள்) என்னை என்ன சொல்லச் சொல்லுகிறீர்கள்? சாரங்கம் : என் குடும்பத்தின் தூண்டாமணி விளக்காயிருக்க உன்னைச் சம்மதிக்கச் சொல்லுகிறேன். புனிதா : நண்பரே, எனது சங்கல்பத்தை உம்மிடம் சொல்லி விடுகிறேன். என் தந்தையை ஒருவன் கொலை செய்து. என் தந்தையின் புராதன பூஷண பொக்கிஷத்தை அப கரித்துக் கொண்டான். அதை யார் தேடிக் கொடுக்கிறாரோ அவரைத்தான் நான் மணம் செய்து கொள்வேன். சாரங்கம் : என்ன பொக்கிஷம்? புனிதா : எங்கள் முன்னோரில் ஒருவருக்குப் பாண்டியனால் பரிசாகக் கொடுக்கப்பட்ட பூஷண பொக்கிஷம் நவரத்தின சகிதமான நகைகள் அடங்கிய பெட்டி! சாரங்கம் : அப்படியானால் நீயார் (ஆச்சரியத்துடன்) புனிதா. நான் கொலை செய்யப்பட்ட அந்தப் பூமிநாதன் மகன்! இந்த வீட்டில்தான் என் தந்தை வசித்து வந்தார். சாரங்கம் : ஆ! இதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே! என் தந்தை பெயர் கந்தசாமி. இந்த வீட்டை அவர் 10 ஆண்டுகட்கு முன்புதான் வாங்கினார். இவைகளையெல்லாம் தினகர னிடம் சொல்லவில்லையே. புனிதா : சொல்லியிருக்கிறேன். என் மீது உண்மையான காதல் உள்ளவர்கள் என் புராதன சொத்தை. என் குடும்ப மானத்தை, என் உயிரைத் தேடிக் கொடுக்க வேண்டும். சாரங்கம் : எனக்கு உன் மீதுள்ள காதலை நீ சந்தேகிக்கிறாயா? புனிதா : பயனற்ற கேள்வி இது! சாரங்கம் : வருந்தாதே. நான் தேடுகிறேன். அதற்காகவே என் உடல், பொருள், ஆவி மூன்றையும் தத்தம் செய்கிறேன். நான் போய் வருகிறேன். புனிதா : நமகாரம்! (தலைகுனிந்து கொண்டே சாரங்கம் போகிறான்) காட்சி - 14 அதே நேரம்: (புனிதா தன் அறைக்கு வந்து உடைவாளை எடுத்து இடையில் கட்டிக்கொண்டு தினகரன் வீடு நோக்கிப் போகிறாள்) காட்சி - 15 (தினகரன் வீடு) புனிதா : (கதவைத் தட்டி) யார்? தினகரன் : (கதவைத் திறந்து புனிதா வா!! (இருவரும் உள்ளே சென்று தனித்தனி நாற்காலியில் உட்கார்ந்து) புனிதா : சாரங்கம் தன்னை மணந்து கொள்ளும்படி கூறினார். யோசிக்க வேண்டும் என்றேன் நான் என் சரித்திரம் முழுவதும் சொன்னேன். தினகரன் : சொல்லிவிட்டாயா (ஆச்சர்யமாக)வீட்டைப் பற்றிச் சொல்வதற்கு என்ன சொன்னான்? புனிதா : சில ஆண்டுகட்குமுன் தமது தகப்பனார் விலைக்கு வாங்கினாராம். அவர் தகப்பனார் பெயர் கந்தசாமியாம். தினகரன் : அப்போதே தெரியும். அவனை நீ நம்பிவிட்டாய் என்று. உன் தந்தையாரைக் கொலைசெய்த விஷயத்தை நீ சொன்ன போது அவன் முகம் ஏதாவது மாற்றம் அடைந்ததா? புனிதா : அப்படி ஒன்றுமில்லையே! என் பொக்கிஷத்தை யார் தேடித் தருகிறாரோ அவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்ளுவேன் என்று உறுதியாகச் சொல்லி விட்டேன். தினகரன் : புனிதா நான் வருந்துகிறேன். என் உடல் பலகீனமாக இருக்கிறது. அடிக்கடி எனக்குச் சித்தபிரமை உண்டாகிறது. இந்த நிலையில் என்னால் உனக்கு என்ன செய்ய முடியும்? புனிதா : என்ன இப்படிச் சொல்லுகிறீர்கள்? என் ஆவல் அனைத்தும் விழலாமா? தினகரம் : உன் ஆவல் வீணாகி விடாது. உன் சொல்லைக் கொண்டு நான் சாரங்கத்தை நல்லவன் என்று மதிக்க வேண்டியிருக் கிறது. ஆயினும் நீ வைத்துள்ள பந்தயத்தில் ஜயிப்பவனை நீ மணந்து கொள்ளுவதாக உறுதி செய்ததை நான் பாராட்டு கிறேன். புனிதா : உங்கள் உடம்பை டாக்டரிடம் காட்டலாமே! தினகரன் : பார்ப்போம்! இதற்கிடையில் சென்னையிலிருக்கும் என் நண்பனையும் அழைக்கலாம் என்று நினைக்கிறேன். எனக்கு பயமாக இருக்கிறது. நான் படுத்துக்கொள்ள உத்தரவு கொடு. புனிதா : (வருத்தமாக) அப்படியா! நான் போகவா! தினகரன் : உனக்கும் நித்திரை கெடுகிறதல்லவா? புனிதா : எனக்கு நித்திரையும் ஒரு கேடா? நான் போய் வருகிறேன். (துக்கத்துடன் போகிறாள்) காட்சி - 16 தினகரன் வீடு (தினகரன் படுத்துக் கொண்டிருக்கிறான். தெய்வயானை வந்து...) தெய்வயானை : தினகரா! சாப்பிடாமலா நித்திரை செய்கிறாய்? அப்பா அப்பா!! (சமீபத்தில் வந்து) தினகரா! (தினகரன் புரண்டு படுக்கிறான்.) என்னப்பா உடம்புக்கு? தினகரன் : ஒன்றுமில்லையம்மா. அலைச்சல் அதிகம். தெய்வ : உன்னை ஒரு விஷயம் விசாரிக்கும்படி சொன்னார் அப்பா! தினரகன் : என்ன விஷயம்? தெய்வ : நீ புனிதாவை மணந்து கொள்ள உத்தேசமா? தினகரன் : என்மீது காதல் கொள்பவளை நான் மணப்பேன். தெய்வ : சகஜந்தானே! அப்படியானால் புனிதா உன்னை உண்மையாக நேசிக்கவில்லையா? தினகரன் : எப்படிச் சொல்ல முடியும்? எவன் அவளுடைய நகைப் பெட்டியைத் தேடித் தருகிறானோ, அவனை மணப்பதாக அல்லவே அவள் கூறுகிறாள். தெய்வ : உனக்கு அவளுடைய அழகு, குணம், செயல் பிடிக் கின்றனவா? தினகரன் : பிடிக்கின்றன. எனக்குச் சம்மதமானால் பாதிக் கல்யாணம் ஆகிவிட்டது என்கிறீர்களா? (நகைக்கிறான்) மேலும் துணையிழந்தாரை மணப்பது புண்ணியம் என்பது என் கொள்கை. புனிதா துணையிழந்தவள், விதவை! அம்மா இன்னொரு விஷயம். என் உடல் பலஹீனமாக இருக்கிறது. அடிக்கடி புத்தி மாறுகிறது. டாக்டரிடம் காட்ட வேண்டும். தெய்வ : அப்படியா ஐயோ! இதென்னப்பா இப்படிக் கூறுகிறாய்? தினகரன் : எனக்குக் கொஞ்சம் பால்சாதம் கொண்டு வாருங்கள் அம்மா! (விரைந்து போகிறாள்) காட்சி - 17 சாரங்கன் வீடு (புனிதா, பூரணலிங்கம் தனியாக) பூரண : உன் கல்யாண விஷயம் முதலில் முடிந்துவிட்டால் தேவலை. புனிதா : சாரங்கம் தம்மை விவாகம் செய்துகொள்ளும்படி என்னைக் கேட்டார். என் சரித்திரம் முழுதும் அவரிடம் சொன்னேன். பூரண : ஏன்? உனக்கு விருப்பமிருந்தால் உடனே கல்யாணத்தை முடித்துக் கொள்ளலாமே. புனிதா : என்மீது சாரங்கம் உண்மையான காதல் உடையவரா? அல்லது எனது சொத்துக்கா? என்று தெரியவேண்டும். நான் விதவை. பின்னால் என்னை விலக்கவும் கூடும். என்மீது உண்மையான காதல் உற்றவர் என் நகைப் பெட்டியைக் கண்டுபிடித்து முதலில் என்னிடம் சேர்க்கட்டும் அப்பா! (போகிறார்கள்.) காட்சி - 18 சாரங்கம் வீடு - அதிகாலை (சாரங்கம், சங்கரன் பேச்சு) சாரங்கம் : மாமா அந்தப் பூமிநாதன் மகள்தான் இந்தப் புனிதா. இந்த வீடு தன்னுடையது என்பதும் அவளுக்குத் தெரிந்திருக் கிறது. இனி, என் தந்தைதான் புனிதாவின் பெற்றோரைக் கொலை செய்தார் என்ற உண்மை அவளுக்குத் தெரியா மலாபோய் விடும்? தினகரனும் அவளுக்கு துணையாக இருக்கிறானே! சீக்கிரம் என்னை விவாகம் செய்து கொள்ளும்படி அவளை வேண்டினேன். நகைப் பெட்டியைத் தேடித் தருபவரை நான் மணப்பேன் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். புனிதாவின் சொத்துக்காக அவளை நான் மணக்க நினைப்பது எவ்வாறு கைகூடும்? நீயே சொல்லு! சங்கரன் : அதைத் தேடுவதாக நீ கூறினாயா? சாரங்கம் : வேறுவழி அப்படித்தான் சொன்னேன். பெட்டி எங்கே இருக்கிறது? அணுவளவுகூடப் பெட்டியைப் பற்றித் தகவல் கிடைக்கவில்லையே. நாமும் பல ஆண்டுகளாகத் தான் விசாரிக்கிறோம். சங்கரன் : தைரியத்தை விடாதே. இரும்புப் பெட்டியை அவர்கள் தினகரன் வீட்டில் வைத்திருக்கிறார்கள் பார்த்தாயா? எதற்கும் ரங்கு அங்கு இருக்கிறான். அவன் உதவியைத் தேடிக்கொள்ளவேண்டும். போய் நித்திரை செய்! (போகிறார்கள்) காட்சி - 19 தினகரன் விடு. (தினகரன் வெறிபிடித்த நிலையில், கண்ணாடியை உடைக் கிறான். புத்தகங்களைக் கிழிக்கிறான். பாதரட்சைகளைக் கையில் எடுத்து அணைத்து முத்தமிடுகிறான். சிரிக்கிறான், குதிக்கிறான். இதைப் புனிதா, அறைக்கு வெளியில் இருந்து பார்த்து வருந்துகிறாள். ஓடிப் போகிறாள். பிறகு தினகரன் தாய், தந்தையாரை அழைத்து வந்து காட்டுகிறாள்.) தந்தை : அப்பா! அப்பா!! அந்தோ ஆசைக்கொரு பிள்ளையாயிற்றே. (துக்கம்) தெய்வ : (ஓடி நெருங்கி) அப்பா, என்னடா உனக்கு? (கண்ணீர்) தீனத : சங்கரா! சங்கரன் : இதோ வந்துவிட்டேன். தீனத : டாக்டரைப் போய் அழைத்துவா! (டாக்டர் வருகிறார்) டாக்டர் : நீங்கள் அனைவரும் கூடத்தில் போய் உட்காருங்கள். தனியாக நான் நோயாளியின் செய்கையைக் கவனிக்க வேண்டும். (அனைவரும் கூடத்தில் தலை குனிந்து நாற்காலிகளில் உட்காருகிறார்கள்.) தீனத : புனிதா, வருந்தாதே. என் துரதிருஷ்டம் அம்மா! (புனிதா எழுந்து தினகரனைப் பார்க்கப் போகிறாள். வழியில் சங்கரன் புனிதாவை நோக்கி) சங்கரன் : நீயேன் வருந்துகிறாய்? அவன் தேறுவானென்று எனக்கும் தோன்றவில்லை. பசிவேளை, நீ வீட்டுக்குப் போ. புனிதா : (பழையபடி கூடத்துக்குத் திரும்புகிறாள். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு) டாக்டர் இன்னமா பரிசோதிக்கிறார்? தீனத : அதோ வருகிறார். என்ன செய்தி டாக்டர்? டாக்டர் : அயர்ந்து படுத்திருக்கிறார். இப்போது எழுப்புவது உசிதமல்ல. விழித்ததும் வந்து பார்க்கிறேன். ஆபத்தொன்று மில்லை. சொதமாகிவிடும். சங்கரன் : புனிதா! வா! கார் காத்திருக்கிறது. (வருத்தத்துடன் போகிறாள்) காட்சி - 20 (புதுவையின் புறத்தில் ஒரு கிராமம் (ரங்கு, தன் கொள்ளைக்காரர், சங்கரன். ரங்கு தன் ஆட்களுடன் ஓர் ஆலமரத்தடியில் கட்குடித்துப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். சங்கரன் வருவதைக் கண்டு ரங்கு தனியாக வந்து...) ரங்கு : வாங்க ஐயா. சங்கரன் : இதோ கார் கொண்டு வந்திருக்கிறேன். சுமார் 10பேர் பலசாலிகளாக அழைத்துக் கொண்டு கிளம்பு! புனிதாவும், அவள் தகப்பனும் செஞ்சிக்கு அதோ கிளம்பிவிட்டார்கள். ரங்கு : அடே! புறப்படுங்கள். பத்துப்பேர். (காரில் ஏறிக் கொண்டார்கள்.) சங்கரன் : நான் சொல்லியதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா? ரங்கு : இதென்ன வெக்ககேடு, அதுக்குள்ளவா மறந்துவிடுவேன்? சங்கரன் : சரி, போய் வா! (போகிறார்கள்.) காட்சி - 21 செஞ்சிக்காடு - மாலை 6 மணி. (செஞ்சிப் பாதையில் புனிதாவின் காரை, ரங்கு கார் வேகமாகத் துரத்துகிறது. ரங்கு கார் முன்னே ஓடி உடனே திரும்பிப் புனிதாவின் காரை மறிக்கிறது. புனிதா, பூரணலிங்கம், டிரைவர் ஆகிய மூவரையும் பிடித்துக் கைகால்களைக் கட்டுகிறார்கள். வாயில் பொத்துகிறார்கள். பிறகு மூவரையும் தமது காரில் வைத்துக் காட்டுக்குள் நுழைகிறார்கள். புதர்கள் அடர்ந்த பெரிய பாறையின் பக்கத்தில் உள்ள பள்ளத்தாக்கில் புனிதா ஒரு மரத்ததடியில் கட்டப்படுகிறாள். ரங்கு ஒரு தாள், பேனாவை எடுத்துப் பூரணலிங்கத்திடம் கொடுத்துக் கட்டையவிழ்த்து விட்டு...) ரங்கு : நான் சொல்லுவதைப் போல் எழுத வேண்டும். இல்லை, ஒன் மகள் செத்தாள். பூரண : (எழுத ஆரம்பிக்கிறார்)... (இதற்குள் அவர்களை நோக்கி வேகமாக ஒரு கார் ஓடிவருகிறது. அந்தக் காரில் முகமூடிய ஒரு கறுப்பு உடை போர்த்தப்பட்ட மனிதன் நான்கு திசைகளையும் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறான்.) ரங்கு : நான் சொன்னபடி எழுதினாயா? (வாங்கிப் படிக்கிறான்) கையொப்பம் இடு. புனிதா : அப்பா கையொப்பமிடாதீர்கள். ரங்கு : இதோ பார் கத்தி! கொன்றுவிடுவேன். பூரண : (கையொப்பம் இடுகிறார்) இதோ உங்கள் இஷ்டப்படி! ஐயா எம்மை ஒன்றும் செய்யாதீர்கள்! பூரண : கட்டிவை இவனையும்! (ஒருவன் பூரணலிங்கத்தைக் கட்டுகிறான் மரத்தில். இதற்குள் முகமூடியாகிய கருஞ்சிறுத்தை ஒருபக்கம் காரை நிறுத்தி குதித்தோடி வந்து ரிவால்வரை நீட்டுவது கண்ட ரங்கும், அவனது ஆட்களும் பூரணலிங்கத்தை மாத்திரம் தூக்கிக் கொண்டு ஓடிவிடுகிறார்கள். இரண்டு கார்களில் ஏறிக் கொண்டு! புனிதாவின் கட்டுகளைக் கருஞ்சிறுத்தை அவிழ்த்து விடுகிறான்.) கருஞ் : அந்தப் பெரியவர் உனது தந்தையா? புனிதா : ஆம் ஐயா, நீங்கள் யார்? கருஞ் : அதிருக்கட்டும். உன் தந்தையிடம் என்ன கேட்டார்கள்? புனிதா : ஒரு கடிதம் எழுதச் சொல்லி வாங்கிக் கொண்டார்கள். அந்தக் கடிதத்தில், நண்பர் தீனதயாளன் அவர்கட்கு எழுதுவது; எனக்குச் சொந்தமாகிய இரும்புப் பெட்டியை உடனே இது கொண்டு வரும் ஆட்கள் வசம் கொடுத்தனுப் பவும். நாங்கள் வேறுதேசம் போய் மறைந்து வசிக்க வேண்டும். இப்படிக்கு. பூரணலிங்கம். கருஞ் : இரும்புப் பெட்டி என்ன பெறும்? புனிதா : 20 லட்சம் பெறக்கூடிய - தங்கக்கட்டிகளும், நோட்டு களும் அதில் இருக்கின்றன. கருஞ் : அப்படியா? காரில் ஏறிக் கொள்! விரைவாக! (போகிறார்கள் - காரில் ஏறிக் கொள்ள, கார் அடுத்துள்ள சேரியில் நிற்கிறது. கருஞ்சிறுத்தை ஓர் குடிசைக்குள் நுழைந்து அங்கிருந்த ஒருவனிடம் ஏதோ சொல்லுகிறான்.) பறையன் : அம்மா வாருங்கள். இதற்குள் பத்திரமாக இருக்கலாம். கருஞ் : உன் தந்தையைத் தேடிப்பிடிக்கிறேன். நான் வரும் வரைக்கும் இதில் இரு. (கார் போகிறது) காட்சி - 22 செஞ்சிக்காடு - ஆலமரத்தின் அடியில் ரங்கு : (கூட்டத்தினரைப் பார்த்து) இந்த ஆலமரத்தின் அடியில் இந்தக் கிழவனைக் கட்டிப் போட்டு இரண்டு பேர் காவல் இருங்கள். நான்கு பேர் புதுவைக்குக் காரில் போய் - குருக்கள் தந்த கடிதம் இந்தா, அதன்படி செய்யுங்கள். வழியில் கருஞ்சிறுத்தையைக் கண்டால் விடாதீர்கள். நான் போக வேண்டும். பூரண : உங்கட்கு வேண்டிய பொருள் கொடுக்கிறேன். என்னையும், என் பெண்ணையும் விட்டுவிடுங்கள். ரங்கு : நீ என்னடா குடுப்பது? (அனைவரும் கள்ளு குடிக்கிறார்கள்) காட்சி - 23 (கருஞ்சிறுத்தையின் கார் வேகமாகப் போகிறது. ரங்குக் கூட்டத்தைச் சேர்ந்த நால்வர் ஏறிப்போகும் கார் அதற்கு முன்னே போவதைக் கருஞ்சிறுத்தை பார்க்கிறான். இரு காரும் நெருங்குகிறது. கருஞ் சிறுத்தை தன் காரிலிருந்து எதிரிகள் காரில் தாவிக் குதித்து நால்வரையும் எதிர்த்துச் சண்டையிட்டு ஒவ்வொருவராகக் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கீழே போடுகிறான். கார் போகிறது. டிரைவர்... ... ... நடுங்குகிறான். கார் நிற்கிறது) கருஞ் : பெரியவரை எங்கே வைத்திருக்கிறீர்கள்? டிரைவர் : நீங்க சண்டை போட்டு அந்தப் பெண்ணை அழைச்சிகினு போனீங்களே. அதுக்கு ஒரு மைல் கெழக்கே வந்தா ஒரு ஆலமரம் இருக்கும். அங்கே அவரைக் கட்டிப் போட்டு நாலு பேரே காவல் வைச்சிருக்கான் ரங்கு. கருஞ் : சரி நீ போ! இப்படியே.... டிரைவர் : ஒரு பீடி இருந்தா குடுங்க. கருஞ் : இந்தா காசு. பீடி வாங்கிக்கொள். அதென்ன சட்டைப் பையில்? டிரைவர் : ஒண்ணுமில்லே. கருஞ் : எடு! (தானே அதைப்பிடுங்கி வாசிக்கிறான்.) நண்பர் ரங்குவுக்கு, சிவன் கோயில், நடராஜ குருக்கள் எழுதியது. இன்று இராத்திரி சுமார் ஒரு மணிக்கு, தர்மகர்த்தா சுந்தரம் வீட்டில், நான் சொல்லிய தங்கக் கட்டியை, ஒரு கருமானைக் கொண்டு வெட்டி, ஐந்து தர்மகர்த்தர்களும் பங்கு பிரித்துக் கொள்ளப் போகிறார்கள். அந்தச் சமயம் ஆட்களை அனுப்பி வைக்கவும். இப்படிக்கு, உன் பக்ஷம் மறவாத நடராஜ குருக்கள். குருக்களில் இவர் கொஞ்சம் தீவிரவாதி போலிருக்கிறது. சரி! போய்வா நீ. (கருஞ்சிறுத்தை காரில் ஏறிப் புதுவை நோக்கி போகிறான்.) காட்சி - 24 அதே இரவு (ரங்கு ஆட்கள் ஏறியுள்ள கார் தீனதயாளன் வீட்டெதிரில் நின்றது. நால்வர் வீட்டினுள் போகின்றார்கள். அச்சமயம், வீட்டில் தீனதயாளன், சங்கரன், சாரங்கம் உட்கார்ந்திருக் கிறார்கள்.) 1-வது ஆள்: (தீனதயாளனிடம் ஒரு கடிதத்தைக் கொடுக்கிறான். தீனதயாளன் கடிதத்தை வாசித்துவிட்டு) என்ன ஆச்சரியம்! (கடிதத்தை சங்கரனிடம் கொடுக்கிறான்) சங்கரன் : நண்பர் தீனதயாளன் அவர்கட்கு பூரணலிங்கம் வந்தனம். என்னுடைய இரும்புப் பெட்டியை அப்படியே இக் கடிதம் கொண்டு வருபவர் வசம் அனுப்பவும். எங்களுக்கு ஏற்பட்டிருக் கும் சர்க்கார் நெருக்கடி யினால் நாங்கள் தூரதேசம் போய்ச் சிலகாலம் மறைந்து வசிக்க வேண்டும். மற்ற விவரம் பிறகு! தங்கள் பூரணலிங்கம். ... ... ... அட. இதென்ன? சாரங்கம் : அவர்களை ரகசியப் போலீசார் சுற்றிக் கொண்டிருந் தார்கள். அப்போதே எனக்கு மாத்திரம் சந்தேகந்தான்! பெட்டியைக் கொடுத்து அனுப்பி விடுங்கள். உங்கள் மீது குற்றம் ஏற்படுவதற்குள்! தீனத : அதோ ... ... அந்த ணஅறையில்! (மற்ற மூன்று ஆட்கள் தூக்கிப் போகிறார்கள்.) 1-வதுஆள்: சாவி? (தீனதயாளு சாவியை, எழுந்து சென்று தேடிப் பார்த்து விட்டு) தீனத : சாவி அவர்களிடந்தானிருக்கிறது. 1-வது ஆள்: சரி போய் வருகிறோம். (போகிறார்கள்.) காட்சி - 25 தர்மகர்த்தா வீடு - இரவு 1 மணி (கருமான் தங்கக் கட்டியை உளி கொண்டு வெட்டப் போகிறான். தர்மகர்த்தர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்) சுந்தரம் : சத்தம் அதிகமாய்க் கேட்கக் கூடாது. (வெட்டுகிறான்) (வெளியில் கருஞ்சிறுத்தை வந்து சத்தத்தைக் கவனித்து வீட்டின் மேல் ஏறி வாசலில் குதிக்கிறான். அனைவரும் திடுக்கிடுகிறார்கள். கருஞ்சிறுத்தை ரிவால்வரைக் காட்டி அனைவரையும் ஒரு பக்கமாகப் போகும்படி சைகை காட்டுகிறான். நடுங்குகிறார்கள். கருஞ்சிறுத்தை, தங்கக் கட்டியைத் தூக்கிக் கொண்டு. கருஞ் : நீங்கள் சிவன்கோயில் கட்டுகிற சேதி இப்படித் தானோ உங்கள் கோயில் குருக்கள் சேதி தெரியுமா? இதைப் பாருங்கள். (என்று சொல்லித் தன் கையில் இருந்த கடிதத்தை அவர்கள் எதிரில் எறிந்துவிட்டுத் தெருக்கதவைத் திறந்து கொண்டு போகிறான்.) சுந்தரம் கடிதம் வாசிக்கிறான். காட்சி - 26 (ரங்கு செஞ்சிக் காட்டில் ஆட்களுடன் இருக்கையில் கருஞ்சிறுத்தை யால் துரத்தப்பட்ட டிரைவர் வருகிறான்.) ரங்கு : கருஞ்சிறுத்தையிடம் காரைப் பறிகொடுத்து விட்டா யல்லவா? டிரைவர் : கடிதத்தையும் பிடுங்கிக் கொண்டான் கருஞ்சிறுத்தை! ரங்கு : கருஞ்சிறுத்தை புனிதாவை எங்கே விட்டுப் போயிருக்கக் கூடும்? டிரைவர் : அநேகமாக இந்தச் சேரியில்தான் பதுக்கி வைத்திருப்பான் என்று நினைக்கிறேன். ரங்கு : போய்த் தேடுவோம் வாருங்கள். (அனைவரும் போகிறார்கள்) காட்சி - 27 (சேரியில்) 1-வது ஆள் : யாரடா சேரியில்? சேரி ஆள் : ஏன் சாமி! 1-வது ஆள் : வெளியில் வா. அந்தப் பெண் எங்கே? சேரி ஆள் : கூவாதிங்க! இருக்கு! ரங்கு : இழுத்து வா அவளை. (1-வது ஆள் புனிதாவை இழுத்து வருகிறான்.) (2-வது ஆள் அந்தச் சேரியானையும் பிடித்துக் கொள்ளுகிறான். மற்ற கொள்ளைக்காரர்கள் சேரி மக்களை அடித்துத் துரத்துகிறார்கள்.) ரங்கு : இருவரையும் அந்தக் குடிசையில் தள்ளு! கதவை அடை! உள்ளே இருக்கும் கம்பத்தில் இறுகக் கட்டு. (அவ்வாறு செய்து குடிசைக்குத் தீ வைத்துப் போகிறார் கள். குடிசை தீப்பற்றி எரிகிறது. அச்சமயம் கருஞ் சிறுத்தை காரில் வருகிறான். தீ எரிவதைக் கவனித்து ஓடிவந்து குடிசையின் வெளிப் பூட்டை உடைத்து உட் புகுந்து தூக்கி வந்து வெளியே கிடத்துகிறான்.) புனிதா : யார்? என்னுடன் இருந்தவர் எங்கே? (கருஞ்சிறுத்தை மீண்டும் உட்புகுந்து சேரி ஆளைக் காப்பாற்றுகிறான்.) சேரி ஆள் : ஐயா நீங்கள் ஒரு நிமிஷம் கழித்து வந்திருந்தால் நாங்கள் சாம்பலாகிப் போயிருப்போம். கருஞ் : சரி, நான் பிறகு வந்து கூரை கட்ட நிறையப் பணம் தருகிறேன். புனிதா எழுந்திரு! அதோ கார்! புனிதா : ஐயா நீங்கள் யார்? எனக்கு ஏன் இத்தனை உபகாரம் செய்கிறீர்கள்? நான் இதற்கு எல்லாம் பிரதியுபகாரமாக என்ன செய்ய முடியும்? கருஞ் : என்னை இன்னாரென்று தெரிந்துகொள்ள நீ ஆசைப்படாதே. நீ எனக்குப் பதில் உதவி ஒன்றும் செய்ய வேண்டாம். உனது ஞாபகர்த்தமாக நீ விரலில் அணிந்திருக்கும் மோதிரத்தைக் கொடு. புனிதா : இதோ, (மோதிரத்தைக் கொடுக்கிறாள். கருஞ்சிறுத்தை விரலில் அணிந்து கொண்டு... ...) கருஞ் : புனிதா! நேரத்தை வளர்த்தலாகாது. காரில் ஏறு! (புனிதா ஏறியதும் கார் போகிறது) காட்சி - 28 செஞ்சிக்காடு - ஆலமரத்தின் அடியில். (கருஞ்சிறுத்தை, ஆலமரத்திற்கு இப்புறமே காரை நிறுத்தி...) கருஞ் : புனிதா காரிலேயே நீ இரு! நான் இதோ வந்து விடுகிறேன். புனிதா : ஏதாகிலும் ஆபத்து நேருமோ என்னமோ. கருஞ் : இவ்வுலகமே ஆபத்தானதுதானே! (ஆலமரத்தின் அடியில் கட்டிப் போட்டிருந்த பூரணலிங்க மும், நால்வரும் தூங்குகிறார்கள். கருஞ்சிறுத்தை பூரண லிங்கத்தை எழுப்பி, கட்டோடு தூக்கிக் கொண்டு வந்து காரில் போட்டுக் கட்டை அவிழ்த்துவிடுகிறான்.) பூரண : விழித்துப் பார்த்து) அம்மா, இருக்கிறாயா? புனிதா : இதோ இவர் கருணையிருந்ததால்தான் இருக்கிறேனப்பா! இல்லாவிட்டால் சேரியில் இந்நேரம் வெந்து நீறாகி யிருப்பேன். பூரண : அப்படியா! இந்த மீளாத தொல்லையில் புழுப் போல் துடிக்கிறோமே, இதற்கு முடிவில்லையா? என்னால் பேச முடியவில்லை. ஐயா, நீங்கள் யார்? கருஞ் : நான் யாரோ! அது தெரியவேண்டாம். பூரண : எமக்கு இந்தத் தொல்லை விளைப்பவர் யார் என்பதாவது தெரிகிறதா உங்கட்கு? கருஞ் : உங்கட்குத்தான் தெரியவேண்டும். நேரமாகிறது. (கார் புதுவைக்குப் போகிறது.) காட்சி - 29 சாரங்கம் வீடு - மேல்மாடி. புனிதா : அத்தப் பொக்கிஷமானது எனது குடும்பத்தின் மகோன் னதத்தைக் காட்டப் போதிய உதாரணமாகும். மேலும் நவரத்ன ஆபரணங்கள் நிறைந்தது. நண்பரே, அது பற்றி நீங்கள் சிறிதும் கவலை கொள்ளவில்லை. சாரங்கம்: (சிரித்து) புனிதா அதுபற்றி நான் இரவும், பகலும் வேலை செய்துவருவது இப்போது தெரியாவிடிலும் பிறகு தெரியும். புனிதா : (ஆச்சரியமாக) அப்படியா? (புனிதா சாரங்கத்தின் முகத்தை உற்று நோக்குகிறான். அவள் இதயத்தில் சாரங்கம் கருஞ் சிறுத்தையாக மாறுவதான ஒரு தோற்றம் உண்டாகிறது) எனக்கும், என் தந்தைக்கும் இடைவிடாது துன்பத்தை யுண்டாக்கி வருவது யார் என்பது விளங்க வில்லையே. எங்கள் இரும்புப் பெட்டியின் கதி என்ன ஆயிற்று? (திடுக் கிட்டு) நான் போய் தீனதயாளுவைப் பார்க்கவேண்டும். (எழுந்து தன் தந்தையிடம் ஓடிவிடுகிறாள்.) காட்சி - 30 சாரங்கம் வீடு -கூடம் (பூரணலிங்கம் துக்க சாகரத்தில் ஆழ்ந்தவராய் ஓர் சாய்வு நாற்காலியில் கிடக்கிறார்) புனிதா : அப்பா இரும்புப் பெட்டியின் கதி என்ன? பூரண : அம்மா அம்மா! இரும்புப் பெட்டி போய் விட்டது. நான் ஆதிரேலியாவில் உழைத்த உழைப்பின் பயன் அனைத்தும் ஒரு நொடியில் மறைந்து போயின. துளித் துளியாய்ச் சேர்த்த தேன்கூட்டைப் பறிகொடுத்து ஏங்கும் தேனீ ஆனேன். (மூர்ச்சை அடைதல்) புனிதா : அப்பா, அப்பா (தந்தையின் முகத்தை நிமிர்த்திப் பார்க்கிறாள்) வயோதிக காலத்தில் நீங்கள் அனுபவிக்கும் இத்தனை துன்பத்துக்கும் காரணம் பாவியாகிய நானல்லவா? என்ன செய்வேன்! யாராகிலும் போய் தீனதயாளுவை அழைத்து வாருங்கள். சங்கரன் : இதோ நான் போய் அழைத்து வருகிறேன். (போகிறான்) புனிதா : (அங்கு வந்து உட்கார்ந்திருக்கும் சாரங்கத்தை நோக்கி) ஐயா! எப்படியாவது இரும்புப் பெட்டியைத் தேடித் தரமுடியாதா உங்களால்? ... ... இச்சமயம் வெறிபிடித்த தினகரன் வந்து விடுகிறான். புனிதா : சொத்துப் போன ஏக்கத்தால் என் தந்தையின் உயிர் போய் விடும் போலிருக்கிறதே, என்ன செய்யலாம்? சாரங்கம் : உன் விஷயத்தில் சிரத்தை கொள்ளும்படி நீ மனிதரைச் சம்பாதித்துக் கொள்ளவில்லை. இது உன் குற்றந் தானே! வீணில் வருந்துவதில் பயன் என்ன? புனிதா : என்னை, என்ன செய்யும்படி கூறுகிறீர்கள்? சாரங்கம் : உனக்கு ஏற்பட்ட இன்ப துன்பங்கள் எனக்கு ஏற்பட்டதாக நான் நினைக்க வேண்டுமல்லவா? புனிதா : ஆம்! அப்படி நினைக்கும்படி தான் உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன். சாரங்கம் : அதற்குத் தக்க உறுதி கூறவேண்டியவள் நீயல்லவா? புனிதா : கல்யாண விஷயத்திலா கேட்கிறீர்கள்? இரும்புப் பெட்டி வந்தால் என் தந்தை நிச்சயம் பிழைப்பார். சாரங்கம் : தேடுவோம். நிச்சயமாகக் கிடைக்கும். புனிதா : கொடுத்தால் என்னுள்ளம் உங்கட்குக் கடமைப் பட்டதாகி விடாதா? சாரங்கம் : ஆனால் புறப்படு! கார் தயாராக இருக்கிறது. புனிதா : தடையில்லை (இருவரும் காரில் ஏறுகிறார்கள்) காட்சி - 31 அதே இடம் தீனதயாளு பூரணலிங்கத்திடம் வந்து உட்கார்ந்து, நண்பரே, நண்பரே! (பூரணலிங்கம் விழிக்கிறார்) என்ன உடம்புக்கு? பூரண : ஒன்று ... ... மில்லை ... ... இரும்புப் பெட்டி தீனத : எங்கும் போய்விடாது. தைரியமாக இருங்கள். இது வரைக்கும் உதவி செய்த அந்த கருஞ்சிறுத்தை இனி உதவி செய்யாமலா இருந்துவிடுவார்? தைரியத்தை விடாதீர்கள். சங்கரா டாக்டரைக் கூட்டிவா. (சங்கரன் போகிறான்) காட்சி - 32 (செஞ்சிக்காட்டில், அதாவது செஞ்சிக்கு மூன்று மைல் கிழக்கி லிருக்கும் பாறையைச் சார்ந்த பள்ளத்தாக்கு. அங்கே இரும்புப் பெட்டியை ரங்கும், மற்றும் ஆட்களும் சேர்ந்த கற்களால் உடைக்கிறார்கள். சாரங்கம், புனிதா இருவரும் காரில் வந்து அங்கு இறங்குகிறார்கள்.) சாரங்கம் : அடே நிறுத்துங்கள். பெட்டியைத் தூக்கிக் காரில் வையுங்கள். ரங்கு : என்னா சங்கதி? வழிக்கு வந்துட்டாங்களா? சாரங்கம் : ஆம், இனி நீங்கள் புனிதாவின் காப்பாளர். ரங்கு : ஆயினும் இதுவரைக்கும் என் பிரயாசைக்கு ஏதாவது கொடுக்க இல்லாவிட்டா, பொட்டி மேலே வெரல வைக்க வேண்டாம். சாரங்கம் : பிறகு தருகிறேன். ரங்கு : முடியாது. யாரைக் குல்லா போட பாக்கிறீங்க? சாரங்கம் : இதன் சாவி எங்கே புனிதா? புனிதா : என்னிடம் இல்லையே! (இச்சமயம் சாவி வந்து விழுகிறது. பாறையின் மேலிருந்து! அந்தச் சாவியின் கருஞ்சிறுத்தை என்ற சீட்டு ஒன்று தொங்குகிறது.) சாரங்கம் : (அதை எடுத்து வாசித்துவிட்டு) கருஞ்சிருத்தை வந்து விட்டான். புனிதா : அவரும் இனி நம் நண்பர்தானே. சாரங்கம் : அப்படியானால் சரி! எங்களை கருஞ்சிறுத்தை ஒன்றும் செய்யாதிருக்கும்படி நீ ஏற்பாடு செய்யவேண்டும் (சாவியை எடுத்துப் பெட்டியைத் திறக்கிறார். பெட்டியி லிருந்து ஒரு பூனை குதித்து வெளியில் ஓடுகிறது. மற்றும் பெட்டிக்குள் துடைப்பம், முறம், எந்திரம், அம்மி முதலியவை இருக்கின்றன. தங்கப்பாளம், நோட்டு ஒன்றுமில்லை) கருஞ் : கல்யாணம் எப்போது? சாரங்கம் : ரங்கு! கருஞ்சிறுத்தையைப் பிடி! (ஆட்கள் ரங்கு அனைவரும் பாறையின் மீதேறிக் கருஞ்சிறுத்தையைத் தொடர்கிறார்கள். கருஞ்சிறுத்தை வேறு வழியாக ஓடித் தன் காரில் ஏறிக்கொண்டு போய் விடுகிறான்.) சாரங்கம் : (புனிதாவை நோக்கி) கருஞ்சிறுத்தை ஏய்த்தான் உன்னை. புனிதா : என்னையும், என் தந்தையையும் காப்பாற்றிய உத்தமர் அவர். சாரங்கம் : பெட்டியிலிருந்த பணம் எங்கே? தங்கக்கட்டிகள் எங்கே? புனிதா : அவரே எங்கட்குக் தேடித்தரக்கூடும். சாரங்கம் : மோசம் போகிறாய், கருஞ்சிறுத்தைமேல் சர்க்காருக்குப் பிராது கொடு. உன் காரியம் சித்தியடையும். உன் தந்தையும் பிழைப்பார்! புனிதா : எங்கள் இரும்புப் பெட்டியைக் கருஞ்சிறுத்தை எடுத்திருந் தால் அதைவிட நாங்கள் அவருக்குத் தரும் பரிசு வேறென்ன இருக்க முடியும்? சாரங்கம் : பொருள் இல்லாவிட்டால் உன்னை எவன் மணப்பான்? நீ தாலியறுத்தவளாயிற்றே. புனிதா : நண்பரே! பணத்துக்காக மணம் செய்ய நினைப்பவனை நான் மணப்பதாக உத்தேசமில்லை. சாரங்கம் : அப்படியனால் கல்லறையில்தான் உனக்குக் கலியாணம். புனிதா : சந்தோஷம் நண்பரே! என் தந்தையின் கதி என்ன ஆயிற்றோ தெரியவில்லை. சாரங்கம் : ஆனால் சீக்கிரம் நடந்து ஓடு! புனிதா : அதுவும் சரிதான். (புனிதா ஓடுகிறாள்) காட்சி - 33 செஞ்சிப்பாதை (புனிதா ஆத்திரத்தோடும் தன் தந்தையின் நிலையைக் காணும் அவாவோடும் ஓடிவருகிறாள். வரும் வழியில், மண்ணில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. அதை வாசிக்கிறாள். ஒரு விநாடி நிதானித்துச் சிரிக்கிறாள்.) எழுதியிருந்தது:- சாரங்கத்தால் நீ கால்நடையாகத் துரத்தப்படுவாயானால், ஆயாசப் படாதே. கொஞ்ச தூரத்தில் நான் காரை நிறுத்தி வைத்திருக் கிறேன். கருஞ்சிறுத்தை பின்னர் சிறிது தூரம் ஓடுகிறாள். கார் நிற்கிறது. கருஞ் : சாரங்கம் எங்கே? கார் எங்கே? புனிதா : நீங்கள் மண்ணில் எழுதியது போலவே ஆயிற்று. கருஞ் : பயப்படாதே ஏறு? புனிதா : பெட்டியில் ஒன்றுமில்லையென்று தகப்பனாரிடம் சொன்னால் அவர் கதி என்ன ஆகும். கருஞ் : நடந்ததைத்தானே கூறவேண்டும்? ஏறு, நாழிகை ஆகிறது. (ஏறுகிறார்கள். புதுவை நோக்கி கார் போகிறது) காட்சி - 34 சாரங்கம் வீடு (பூரணலிங்கம் படுத்தபடுக்கையில் இருக்கிறார். சமீபத்தில் புனிதா சஞ்சலத்தால் தலைசாய்ந்து கிடக்கிறாள். மற்றவர்களும் விசனத்துடன் இருக்கிறார்கள். சங்கரன், சாரங்கம் நடப்பதைக் கவனித்து வருகிறார்கள்) டாக்டர் : (பரிசோதனை செய்துவிட்டு) வியாதி ஒன்றுமில்லை. மனோவியாகூலமாக இருக்கலாம். புனிதா : (தலைநிமிர்ந்து கண்ணீரும் கம்பலையுமாய்) சுமார் இருபதுலட்சம் ரூபாய் கையைவிட்டுப் போயிற்று. இது ஒரு வருத்தம். இன்னொன்று தமக்குப் பின்னால் என் நிலைமை என்ன ஆகுமோ என்பது தான். டாக்டர் : இரு காரணங்களும் சரியே! தமக்குப்பின் தம் பிள்ளை பெண்டாட்டி எவ்வாறு வருந்துவார்களோ என்ற சஞ்சலமே உலகத்தில் நடைபெறும் பரிதாப சம்பவங்களுக் கெல்லாம் காரணமாக இருக்கிறது. இந்த சஞ்சலத்தை எந்தத் தேசச் சர்க்கார் நிவர்த்தி செய்கிறதோ, அந்தத் தேசந் தான் இன்ப மயமான தேசம். தேசமக்களின் நன்மைக்காக சர்க்கார் இருக்கிறது என்றால், அந்தச் சர்க்கார் தேசக் குழந்தைகளை வளர்க்கும் கடமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் எல்லோருக்குமே தாயும், தந்தையுமாகவே இருக்க வேண்டும் என்ன செய்வது? (இச்சமயம் பூரணலிங்கம் கண்விழிக்கிறார்) புனிதா : அப்பா, என்ன உங்களுக்கு? வாய்திறந்து சொல்லுங்கள். பூரண : பெ ... ட் ... டி! க ... ல் ... யா ... ண ... ம்!! தீனத : கருஞ்சிறுத்தையிடந்தான் பெட்டி இருக்கும். எங்கும் போகாது. பூரண : கருஞ்சிறுத்தை எங்கே? கண்ணால் பார்க்க வேண்டும். (அவாவுடன்) அவராவது என் மகளுக்குத் துணை யிருந்தால் ஒரு குறைவும் இருக்காது. புனிதா : அவர் துணையிருப்பார். நீங்கள் எழுந்து உட்காருங்கள் அப்பா! பூரண : என்னால் எழுந்திருக்க முடியாதம்மா. உன்னைப் பற்றிய அன்பால்தான் என் உயிர் நீடிக்கிறது. ஆயினும் இன்னும் அதிக நேரம் நீடிக்க வழியில்லை. (இச்சமயத்தில் கூடத்தில் ஒரு மூலையில் கருஞ்சிறுத்தை தோன்றுகிறான். அனைவரும் எழுந்து மரியாதை செய்கிறார்கள்.) (புனிதா எழுந்து நின்று) புனிதா : அப்பா, அப்பா! அதோ அவர்! பூரண : (மெதுவாகத் தன் தலையைத் திருப்பிப் பார்த்துச் சிரமத் துடனும் பரபரப்புடனும் எழுந்து அடிமேல் அடி எடுத்து வைத்து நாலடி நடந்து) என் மகளைக் காப்பாற்றுங்கள்! கருஞ் : தைரியத்தை விடாதீர்கள். உங்களுக்கும், புனிதாவுக்கும் ஒரு குறையுமில்லை. பூரண : அப் ... பப ... டி ... யா ... சந் ... தோ ... ஷம். இரும்புப் பெட்டி? கருஞ் : அதிலுள்ள ஒரு தம்பிடிக்கூடத் தவறாமல் காப்பாற்றி வைத்திருக்கிறேன். (அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்) நீங்கள் கோயில்கட்டக் கொடுத்த தங்கக் கட்டியை, கோயில் தர்மகர்த்தர்களும், குருக்களும் ஏப்பமிட இருந்தார்கள். அதையும் காப்பாற்றி வைத்திருக் கிறேன். எல்லாம் தீனதயாளன் வீட்டுக் கிணற்றிலும், களஞ்சியத்திலும் இருக்கின்றன. தீனத : புனிதா, வா! எடுத்துவரலாம். (ஓடுகிறார்கள்.) பூரண : அப்படியா? மிக்க சந்தோஷம். நானும், புனிதாவும் எங்கள் சொத்தும், உங்கள் சொந்தப் பொருள்! கருஞ் : மனித சமூகம் பலஹீனமானது. ஒருவருக்கொருவர் உதவி செய்வதன் மூலம் அதை நிவர்த்தி செய்யவேண்டும். ஆதலால் என் கடமையைத்தான் நான் செய்தேன். (இச்சமயம் நோட்டுக் கட்டுகள், தங்கப் பாளங்களுடன் புனிதாவும், தீனதயாளனும் ஓடி வந்து...) புனிதா : அப்பா! அப்பா! இதோ பாருங்கள். (இருவரும் பூரணலிங்கத்தின் எதிரில் வைக்கிறார்கள். பூரணலிங்கம் அவைகளை ஆசையுடனும், சிரிப்புடனும் அள்ளி அணைத்துக் கொள்ளுகிறார்.) பூரண : பொருள் கிடைத்துவிட்டது. ஆயினும் இந்த ஆபத்தான உலகில் எனக்குப் பின் என் அருமை மகளுக்குத் துணைவர் எவர்? புனிதா உன் சம்மதம் என்ன? புனிதா : நான் அவரையே காதலிக்கிறேன். கருஞ் : புனிதா! எவன் உருவத்தை நீ பார்க்கவில்லையோ அவனை நீ காதலிப்பது எப்படி? புனிதா : உண்மையாகக் காதலிக்கிறேன். கருஞ் : பிறகு நீ வருத்தப்பட நேரிட்டால்? புனிதா : ஐயா, நீர் என்னை அங்கீகரிக்கிறீரா? கருஞ் : நான் உன்மேல் மட்டற்ற காதல் உடையவன்தான். புனிதா : என்னுடலும், என்னுயிரும் உடமைகளும் தங்கள் சொத்துக்கள். கருஞ் : என்மீது பிறகு வருந்தாதே. புனிதா : இம்மியுமில்லை. கருஞ் : உன்னிடம் அன்று அடையாளமாக வாங்கிய மோதிரம் இதுதானா? பார்த்துக்கொள். (புனிதா சென்று மோதிரத்தையும் கையையும் கவனித்து) புனிதா : மோதிரம் அதுதான். என்னை எரிகின்ற குடிசையிலிருந்து காப்பாற்றும்போது தங்கள் கையிற்பட்ட காயமும் இதோ இருக்கிறது. கருஞ் : என்னைப் பார்! (தன் முகமூடியை எடுக்கிறான். குஷ்டரோகம் நெளியும் முகம் தெரிகிறது) புனிதா : (அதைப் பார்த்தவுடன் ஆ! ... (என்று தன் கண்களை மூடிக் கொண்டாள்.) கருஞ் : புனிதா! நான் ஓர் அழகிய புருஷனாயிருந்தால் ... புனிதா : அதற்கு நான் கொடுத்து வைக்கவில்லை. (கண்ணீர்விடுகிறாள்.) கருஞ் : ஆயினும் புனிதா வருந்தாதே. (தன் முகத்தை மூடியிருந்த மற்றொரு மூடியை எடுக்கிறான். தினகரனாக நிற்கிறான்) புனிதா : ஆ! அப்பா, தினகரா நீதானா? தீனத : இத்தனையும் நீதானா?? (சாரங்கமும், சங்கரனும் விழிக்கிறார்கள்.) பூரண : பரோபகார சிந்தையுள்ளவரே! எங்களைக் கண்ணை இமை காத்தது போல் காத்து வந்தவரே, என் பெண்ணை மணந்து கொள்ளுவதற்கான ஆயத்தம் செய்ய எனக்கு உத்தரவு தாருங்கள். சாரங்கம்: அதெப்படி? ஆபரண பொக்கிஷத்தைத் தேடித்தந்தால் தானே! கருஞ் : சரியான ஆஷேபனை. புனிதா : பொக்கிஷத்தை உங்களால் தேடமுடியாவிட்டால், நான் வேறொருவரை மணப்பதா? முடியாது. தினகரன் : அதை நான் தேடிப்பிடிக்க முடியாமற் போய்விடுமானால் என் உயிரை தானே மாய்த்துக்கொள்வேன். அதன்பிறகு நீ வேறு ஒருவனை மணந்து கொள்வதால் பாதகமில்லை. சாரங்கம்! நாம் இருவரும் விஷயத்தில் முயற்சி செய்யலாம். நீ ஜயித்தால் உனக்கு நல்ல நேரமல்லவா? (என்று சொல்லிப் போய்விடுகிறான். புனிதா வருத்தத்தோடு அந்தக் காட்சியைக் கவனிக்கிறாள். அனைவரும் அவ்வாறே) புனிதா : எனது வீர மணாளரா தோற்பார்? பூரண : (மீண்டும் சோர்வுடன் படுத்துக் கொள்கிறார்) என் மகளை நான் என்றைக்கு மணக்கோலத்துடன் பார்ப்பது? காட்சி - 35 சங்கரன் வீடு (புனிதா ஒருபுறம் சோபாவில் உட்கார்ந்து தினகரனை நினைந்து. சந்தோஷமும், துக்கமும் அடைகிறாள். அவள் மனக் கண்ணில் தினகரன் உருவம் தோன்றுகிறது. புனிதா அணைக்கத் தாவுகிறாள். மறைகிறது. வருந்துகிறாள். மீண்டும் தினகரன் உருவம் தோன்றிப் புனிதாவை ஆலிங்கனம் செய்கிறது. பிறகு மறைகிறது. அச்சமயம். சாரங்கமும், சங்கரனும் ஒரு புறமாக வந்து புனிதா அறியாமல் மாடியில் ஏறுகிறார்கள். காட்சி - 36 சாரங்கம் வீட்டு மாடியில் (தினகரன் கழட்டிப் போட்டிருக்கும் கரிய உடை அங்கே மாட்டப் பட்டிருக்கிறது. சாரங்கம் அதன் பையில் தடவிப் பார்க்கிறான். ஒரு குறிப்புப் புத்தகம் கிடைக்கிறது. வாசித்துப் பார்க்கிறான்.) சாரங்கம் : இதைப்பார்! (வரிமேல் கைவைத்து வாசித்துக் காட்டுகிறான்) சிகாமணியானவன் பூமிநாதனையும், அவன் மனைவியை யும் கொலைசெய்துவிட்டு நகைப் பொக்கிஷத்தைத் தூக்கிக் கொண்டு வெளியில் ஓடிவிட்டான். லிங்கக்கிழவர் தேடிச் சென்றார். சிகா மணியை பழிக்குப்பழி வாங்க எண்ணிச் சிகாமணியைத் தேடிச் சென்றார். சிகாமணி செஞ்சிப் பாதையில் அகப்பட்டான். உடனே லிங்கக் கிழவர் அவனைக் குத்திக் கொன்றார். அந்தக் கொலைக் குற்றத் திற்குப் பயந்து லிங்கக் கிழவர் பூமிநாதனின் ஒருவயது குழந்தையாகிய புனிதாவைத் தூக்கிக் கொண்டு ஆதி ரேலியாவுக்கு வந்து சேர்ந்தார். இதைக் கொண்டு யோசித்தால் புனிதாவுக்கு எல்லா உண்மையும் தெரிந் திருக்கிறது. ஆனால் அந்த சிகாமணி என்பது என் தந்தை யின் பேர்தான் என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை. சங்கரன் : பெட்டி இன்ன இடத்தில்தான் இருக்கலாம் என்ற ரகசியம் கொஞ்சம் கூடத் தெரியவில்லையல்லவா. சாரங்கம் : கொஞ்சங்கூடத் தெரியவில்லையே, என்ன செய்யலாம்? சங்கரன் : தினகரன் பேசுகிற மாதிரியிலிருந்து அவன் பெட்டியைக் கண்டுபிடித்துவிடுவான் என்று எண்ணவேண்டியதிருக்கிறது. தினகரனை நாம் விடக்கூடாது. அவனைப் பின் தொடர வேண்டும். அவன் போகுமிடமெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும். அதுமாத்திரம் போதாது. புனிதாவையும் நம் வசத்தில் பத்திரப்படுத்தவேண்டும். தினகரன் ஒருக்கால் பெட்டியைக் கைப்பற்றிவிட்டால், அதை நாம் பிடுங்கிக்கொள்ள வேண்டும். சாரங்கம்: நிச்சயமாக அப்படித்தான் செய்யவேண்டும். காட்சி - 37 சாரங்கம் வீட்டுத் தோட்டம். (புனிதா தோட்டத்தில் தனியாகத் தனது காதலன் தினகரனைப் பற்றிய சிந்தனையிலிருக்கிறாள். அச்சமயம் சாரங்கம் அவளின் பின்புறமாக அவன் தோளில் கை வைக்கிறான். அவள் திடுக்கிட்டுத் திரும்புகிறாள்.) சாரங்கம் : என்ன சிந்திக்கிறாய்? புனிதா : சிந்தனையின்றி இருக்க யாரால் முடியும்? சாரங்கம் : நகைப் பெட்டியைப் பற்றி உனக்குத் தெரிந்துள்ள ரகசியங் களை ஒருதலைப்பட்சமாக அந்தத் தினகரனுக்கு மாத்திரம் தெரிவித்தாயல்லவா? புனிதா : என்ன தெரிவித்தேன்? சாரங்கம் : உனக்கு நினைவில்லையா? புனிதா : எனக்குத் தெரிந்தவைகளை நீரே என்னைக் கேட்காததால், அவைகள் உமக்குத் தெரிந்திருக்கும் என்று நான் நினைத்தேன். சாரங்கம் : அவைகள் எனக்குத் தெரிந்திருந்தால் நான் இத்தனை நாள் பெட்டியைத் தேடியிருப்பேன். புனிதா : இனி, சீக்கிரம் பெட்டியைத் தேடிவிடுவீர் போலிருக்கிறது. சாரங்கம் : இன்னும் மூன்று நாட்களில் புனிதா : ஆனால் என் பொற்றோரைக் கொலை செய்த சிகாமணி என்பவன் யார் என்பதும், உமக்குத் தெரிந்திருக்குமே! சாரங்கம் : தெரியும்! அதைச் சொல்லத்தான் இப்போது வந்தேன். வருந்தாதே. தினகரன் தந்தைதான் உனது பெற்றோரைக் கொன்றவன்! புனிதா : என் பெற்றோரைக் கொன்றவன் லிங்கக்கிழவரால் கொலை செய்யப்படவில்லையா? சாரங்கம் : அதெல்லாம் சுத்தப்பொய், தீனதயாளன்தான் அந்தப் பெட்டியையும் அபகரித்தவன். ஆனால் அது அப்போது வேறொருவரால் அபகரிக்கப்பட்டு, மறைக்கப் பட்டது. புனிதா : எந்த இடத்தில்? சாரங்கம் : இதற்குள் அதை வெளியிடமுடியாது. ஆனால் நீ என்னை மணப்பதாக உறுதிகூறு! இல்லாவிட்டால் பெட்டியை உன்னிடம் கொடுக்கமாட்டேன். புனிதா : உறுதி என்ன கூறுவது? சாரங்கம் : அடையாளமாக, என் கன்னம் சிவக்க ஒரு முத்தம். புனிதா : என்னை, பலாத்காரம் செய்ய உமக்கு உத்தேசமா? சாரங்கம் : அப்படித்தான்! ஏன் செய்யலாகாது? (என்று அவள் கையைப் பிடிக்கிறான். புனிதா தன் இடையிலிருந்த கத்தியை எடுக்கிறாள். உடனே பக்கங்களில் ஒளிந்திருந்தவர்கள் ஓடிவந்து அவள் வாயைத் துணியால் அடைத்துத் தூக்கிப் போகிறார்கள்.) காட்சி - 38 செஞ்சிக் காட்டில் கற்பாறையின் பள்ளத்தாக்கில்: (ஆதித் திராவிடர்கள் கூட்டமாக அங்கங்கே மண்ணை வெட்டிக் கொண்டு இருக்கிறார்கள். தினகரன் பார்வை யிட்டுக் கொண்டிருக்கிறான்.) தினகரன் : கற்பாறையின் ஓரமாகவே தோண்டுங்கள். பெட்டி ஆழத்தில் இல்லை. மேலோடுதானிருக்கும். காட்சி - 39 சாரங்கம் : என்ன ரங்கு? இவ்வளவுக்கும் தினகரன் இன்ன இடத்தில் இருக்கிறான். இன்னது செய்கிறான் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே உன்னால். ரங்கு : ஆமாமாம், நீர் வெகுசா கிழிச்சிபுட்டீர்! அதான் எங்கப் பார்த்தாலும் தேடச் சொல்லி இருக்கிறேனே. சாரங்கம் : கோபிக்காதே. லாபகரமாக முடியும். சங்கரன் : மடுவெளியில் புனிதாவைப் போய்ப் பார்த்தாயா? ரங்கு : எல்லாம் பத்திரமாகத்தான் இருக்கிறாள். சங்கரன் : செஞ்சிப்பக்கம் போய்ப் பார்க்கிறதுதானே. ரங்கு : நாளைய காலையில்! சாரங்கம் : புனிதாவைப் பயன்படுத்தி எனக்குக் காந்தர்வ விவாகம் பண்ணிக் கொள்ளச் சொன்னால் நலமாக இருக்கும். அதை மாத்திரம் செய்தால் போதும். நீ போய் வா! இன்னொன்று செய்கிறாயா? வேலை முடித்துவிட்டால்? ரங்கு : புனிதா சொல்லுகிற வார்த்தைகள் அப்படிப்பட்ட கோபத்தைத்தான் உண்டாக்குகிறது. (என்று சொல்லிக்கொண்டே போகிறான்) காட்சி - 40 மடுவெளியில் ஓர் வீடு - முன்புறம் ரங்கு : அடே யாராடா கொல்லைப் புறத்தில் ஒரு குழிதோண்டு. கூரான கத்தி ஒன்று கொண்டு வா. (புனிதா இதைக் காதில் வாங்கி, விழிக்கிறாள்.) ஆள் : சரி. (இருவர் மண்வெட்டியைத் தூக்கிக்கொண்டு கொல்லைப் புறம் போகிறார்கள். மற்றோர் ஆள் ஒரு நீண்ட கத்தியைக் கொண்டு வந்து ரங்குவிடம் கொடுக்கிறான். ரங்கு கத்தியை வாங்கிக் கொண்டு புனிதாவிடம் போய் அவள் எதிரில் நின்று...) ரங்கு : நீ சாரங்கத்தை இதே நேரம் கட்டிக்கொள்ள வேண்டும். என்னா? புனிதா : நான்தான் முடியாது என்று மறுத்துவிட்டேனே! (ரங்கு தன் கத்தியைப் புனிதாவின் மார்புக்கு நேராக குத்து வதற்காக ஓச்சுகிறான். இதே நேரத்தில் புனிதா தனது வயிரப் பதக்கத்தைக் கழற்றி அவன் எதிரில் நீட்டுகிறாள்.) (இதற்கிடையில் ஓர் ஆள் ஓடிவந்து ...) ஆள் : எசமான், நிறுத்துங்கள். அப்புறம் ஆகட்டும். வெளியில் கார் சப்தம் கேட்கிறது. ரங்கு : தினகரனா பார். (ஆள் வெளியில் ஓடிவிடுகிறான்.) காட்சி - 41 தீனதயாளன் வீட்டுக் குறட்டில் (சாரங்கமும், தீனதயாளனும் நின்று பேசுகிறார்கள்.) தீனத : நகைப் பொக்கிஷத்தைப் பற்றி ஏதாவது முயற்சி நடைபெறு கிறதா? சாரங்கம் : உங்கள் குமாரர்தான் வெற்றி அடைவார். (இச்சமயத்தில் ஒரு பிணத்தை ஆபத்திரியிலிருந்து தூக்கிப் போகிறார்கள்) சாரங்கம் : யாரப்பா அது? பிணந் : ஒரு திக்கற்ற பிணம்! ஆரோ குத்திப் போட்டுட்டாங்களாமே ஒரு பொண்ணே! சங்கரன் : (அழுதுகொண்டே தீனதயாளனிடம் வந்து) புனிதாவை யாரோ குத்திக் கொன்றுவிட்டார்களாம். இறந்துவிட்டாளாம். தீனத : அடடா! என்ன வாழ்வு ஐயோ! அவளுக்காக எத்தனை பேர்! எத்தனை பிரயாசை! இந்த பரிதாபமான விஷயத்தை அந்தப் பூரணலிங்கத்திடம் சொன்னால் அவர் உயிர் போய்விடுமே! (அனைவரும் அழுதுகொண்டே வீட்டுக்குள் போகிறார்கள்.) காட்சி - 42 (பூரணசந்திரன் உதயம். சாரங்கம், சங்கரன், ரங்கு மற்றும் ஆட்கள் இருக்கிறார்கள். காரிலிருந்து குதித்து ஓர் ஆள் வேகமாக ஓடிவந்தான்....) ஆள் : அந்தக் கற்பாறையின் அடியிலிருந்து நகைப் பெட்டியைத் தினகரன் கைப்பற்றி விட்டான். என் கண்ணால் பார்த்தேன். ஐயையோ, எழுந்து ஓடி வாருங்கள். (அனைவரும் இது கேட்டுப் பதை பதைப்புடன் ஓடுகிறார்கள்.) சாரங் : ஆட்களையெல்லாம் கூப்பிடு. ஏனடா தினகரனுடன் எத்தனை ஆட்கள் இருக்கிறார்கள்? ஆள் : உம்! 20 பேர். சேரி ஆட்கள்! சாரங்கம் : ஆனால் கிளம்புங்கள். (அனைவரும் காரில் ஏறிக்கொண்டு பறக்கிறார்கள்.) காட்சி - 43 புதுவைக்குச் சற்று தூரத்தில் (தினகரன் காரும் அந்தக் காரைச் சூழ்ந்து 20 ஆட்களும் ஒரு மைதானத்தில் வந்து கொண்டிருக்கிறார்கள். சாரங்கம் கார் எதிரில் ஓடி வந்து வளைக்கிறது. இருபக்கத்து ஆட்களும் கைகலந்து சண்டை போடுகிறார்கள். இச்சமயம், சாரங்கனும், சங்கரனும் கும்பலைவிட்டு நீங்கித் தினகரன் காரைச் சோதிக்கிறார்கள். தினகரன் இல்லை. பெட்டி மாத்திரம் இருக்கிறது. இருவரில் சாரங்கம் பெட்டியைத் தூக்கி ஓட சங்கரனும் ஓடி, இருவரும் தமது காரில் ஏறிப் போக எத்தனிக்கிறார்கள். இதற்குள் சேரி ஆட்கள் பின்னோக்கி ஓட எத்தனிக்கிறார்கள். ரங்கும் தினகரன் காரில் ஏறிக் கொண்டு சாரங்கம் காரை நெருங்குகிறார்கள். இருகாரும் நிற்கின்றன. பெட்டியை உடைக்கிறார்கள். திறந்து பார்க்கையில் அதனுள் சுருங்கற்களும், ஒரு கடிதமும் இருக்கின்றன. ஏமாற்றம் அடைகிறார்கள். கடிதத்தை வாசிக்கிறான் சாரங்கம்) கடிதம்: சாரங்கம்! சங்கரன் இருவரும் எனது கல்யாணத்தைச் சிறப்பாக நடத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்படிக்கு, நன்றியறிதலுள்ள தினகரன் (இதைக் கண்ட) சங்கரன் : ரங்கு நாம் விரைவாகப் புனிதாவை நோக்கிப் போவோம். ரங்கு : முட்டாளே, நான்தான் புனிதாவைக் கொன்று போட்டேனே. சாரங்கம் : அட ஆஹா! சங்கரன் : அப்படியா? கொலைக் குற்றத்திற்கும் நாம் ஆளாக வேண்டுமா? (ரங்கும், தினகரனும் காரில் விரைவாகப் போகிறார்கள்.) காட்சி - 44 (தினகரன் தன் காரை விட்டுக் குதித்துப் பெட்டியும் கையுமாய்த் தன் வீடு நோக்கி ஓடுகிறான்.) தீனத : (ஆத்திரத்தோடு) அப்பா, ஐயோ புனிதாவைக் குத்திக் கொன்றுவிட்டார்கள். ஆபத்திரியிலிருந்து கொண்டு போய்ப் புதைத்தும் ஆகிவிட்டதப்பா. தினகரன் : ஆ! ஐயோ! புனிதா! புனிதா! உனக்காக! ஐயோ உனக்காக எத்தனை பிரயாசை! பொக்கிஷத்தையாவது கண்டு களித்துப் போகலாகாதா? ஐயோ! (சோபாவில் விழுகிறான்) தீனத : அப்பா வருந்தாதே! தினகரன் : அப்பா அந்தப் பொக்கிஷத்தை அந்தச் சவக்குழியில், அவளோடு சேர்த்துவிட்டு வந்து விடுகிறேன். (ஓடுகிறான் பெட்டியுடன்) காட்சி - 45 காடு: (தினகரன் கார் இடுகாட்டில் ஒருபுறம் நிறுத்தப்பட்டது. தினகரன் பெட்டியைத் தூக்கிக் கொண்டு சமாதிகளில் புதிதா யிருப்பதைத் தேடுகிறான். ஒரு சமாதியைத் தோண்டுகிறான். இச்சமயம் ...) மேகத்தினுள் முழு நிலவு மறைந்துவிடுகிறது. சவம் கிடைக்கிறது. தன் மடியில் கிடத்திக் கொண்டு உட்கார்ந்து கொள்ளுகிறான்.) தினகரன் : புனிதா! புனிதா! (அழுது) உனக்காக எத்தனை எத்தனை அல்லல்கள் அடைந்தேன். உன் மூதாதையர்க்குப் பாண்டி யன் தந்த பரிசு இதோ இருக்கிறதே. உன் கண்களால் பார்த்தாவது இறந்தாயா? சொத்துக்குக் காத்திருந்தாய். அப் பாதகர்களால் குத்தப்பட்டு இறந்தாயா?  புரட்சிக் கவி புரட்சிக்கவி - மேடை நாடகம் கவிஞர் நவிலு மொழி கோடி பெறும் `பில்கணீயம் என்ற வடமொழி நூலைத் தழுவி `புரட்சிக் கவி என்னும் காப்பியத்தை நம் பாவேந்தர் இயற்றினார். இக்காப்பியம் சிறு நூலாக 1937 ஆம் ஆண்டில் புதுவை திரு. எல். துரைராஜ் அவர்களால் வெளியிடப்பெற்றது. இரண்டணா விலையில் அக்காலத்தில் வெளியான இந்நூலுக்குக் கவிஞர் எழுதியிருக்கும் முன்னுரையில் `முதனூலான பில்கணீயத்தின் கதைப்போக்கை ஓரளவே எடுத்துக்கொண்டு நாட்டுக்கு இன்று தேவைப்படும் புதிய நோக்குடன் இதனை எழுதி யிருக்கிறேன். புத்தகத்தின் பெயரைப் பார்த்ததும் பயப்படும் சுபாவ முள்ளவர்கள் பயப்படாமலிருக்க இதை முன் மொழிந்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். `இச்சிறு நூலே பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியிலும் சேர்க்கப்பட்டு உள்ளத்தைத் தமிழர் அறிவர். அரசன் அழைப்புக்கிணங்க உதாரன் என்ற தமிழ்க் கவிஞன் இளவரசிக்குத் தமிழ் இலக்கிய இலக்கணம் கற்பிக்க வருகிறான். இதனைப் புரட்சிக் கவிஞர் விவரிக்கிறார். யாப்பு முறை உரைப்பான் - அணி யாவும் உரைத்திடுவான் பாப்புனைதற் கான - அநு பவம் பல புகல் வான்; தீர்ப்புற அன்ன வளும் - ஆசு சித்திரம் நன் மதுரம் - எனும் தீங்கவிதைகள் அனைத்தும் சுற்றுவரலானாள்! இவ்வரிகளால் கூறப்படும் காட்சி, முதலில் கவிஞரால் பாக்களின் வகை, யாப்பு முதலான விளக்கங்களைத் தருவதாக அமைக்கப் பெற்றது. யாது காரணம் பற்றியோ அந்தப் பாடல்கள் நீக்கப்பெற்றன. `குயில் அன்பர்க்கு அவற்றை இப்போது வழங்குகின்றோம். சுவைத்துச் சுவைத்து இன்புறலாம். உதாரன் : உன் பெயர்? ... ... ... ... ... ... அமுதவல்லி : ... ... ... ... ... ... அமுதவல்லி! உதாரன் : உற்றுக்கேள்... ... ... ... ... ... அமுதவல்லி : ... ... ... ... ... ... ஆணை, ஆணை! உதாரன் : முன்பு வெண்பாவுரைப்பேன் முப்பாவும் பின் புரைப்பேன் பூவிற் சிறந்தது தாமரை பொன் மயிலே, பாவிற் சிறந்தது வெண்பா! வெண்பாவிற் காய், விள, மா வேண்டும்சீர் ஈற்றுறவோ விண்காய் விளமுன்னர் நேர்வேண்டும் - பெண்பாவாய்! நாற்சீரும் முச்சீரும் நாப்பண் ஒருசீரும் நாற்சீரும் முச்சீரும் நாடு. நேரிசைஎன் பார்இதைத்தான் நேரிழையே ஈற்றினிலே ஓரசையோ நாள்பிறப்போ ஓடிவரும் - ஓரடியில் மோனை வரவேண்டும் முன்றிரண்டில் நல்லெதுகை தானமையச் சாற்றுதல் வேண்டும். குறள்வெண்பா ஒன்றுமுக்கால்! கொள்பஃ றொடையோ அறுநூறடியாலும் ஆக்கு! - நெறியாக ஒன்றுமுக்கால் நற்றனிச்சொல் என்றாக நீண்டு வந்தால் பன்னுகின்ற சிந்தியல்வெண் பா. முன்பாக வெண்பாவில் கொஞ்சம் முறைசொன்னேன் அன்பாய் அனைத்துரைப்பேன் பின்பு எண்ணம், இசை, மொழிகள் மூன்றும் கவிதை எனும் வண்ணம் கவிஞனிடம் வாய்ப்பதுவாம் - திண்ணம் புதுமைக் கருத்தின்றிப் பாடல் பழைய பதுமைக்குப் பட்டுடுப் பதாம். வையம் அழகின் களஞ்சியங்காண்! மானே நீ உய்ய விழிகளினால் உண்ணுகையில் - பெய்யு மொரு கார்போல் உளத்தில் களிமிஞ்சும் - கார்பொழிந்த நீர்போல் நிகழ்த்தும் உன்வாய் பாட்டு. அமுதவல்லி : எடுத்துக்காட் டாகஓர் வெண்பா எனக்குத் தொடுத்துக்காட் டுங்கள் சுவைப்பேன் - தொடுப்பதிலும் சோலைச் சிறப்புரைக்க வேண்டும்இத் தோகைநிலை மேலும் விளக்குதல் வேண்டும். உதாரன் : வண்டு கவிபாடக் கண்ட மலர், மகிழ்ச்சி கொண்டுதேன் நல்கும் குளிர்சோலை - அண்டையில் நீ பாடப் பயில்கின்றாய் பார்பெண்ணே பச்சைமயில் ஆடப் பயில்கின்ற தங்கு. அமுதவல்லி : மகிழ்ச்சியிலே தள்ளிவிட்டீர் என்னை வரையாப் புகழ்ச்சிப் புதுக்கவிதை சொல்லி ... ... ... ... உதாரன் : ... ... ... ... மகிழ்ச்சி அணங்கேநான் நாளை வருகின்றேன் ... ... அமுதவல்லி : ... ... ... ... ஐயா வணங்குகிறேன் வண்ணமலர்த் தாள்! (அமுதவல்லி வணங்குகிறாள். உதாரன் போகின்றான். ஒருபுறம் நின்றிருந்த தோழி அமுதவல்லியிடம் நெருங்குகின்றாள்.) தோழி : இப்போது நீபாடு! நான் கேட்பேன்! எங்கே, என் ஒப்பில்லாளே ஒன்றே ஒன்று. அமுதம் : பச்சைக் கிளிக்குப் பழந்தந்து அதுகொடுக்கும் கொச்சைத் தமிழைத் தான்கொள் வார்கள் - உச்சி குளிரும் தமிழைக் கொடுக்கும் தமிழர்க்கு எளியேன் கொடுப்ப தெது? தோழி : நன்றுசொன்னாய் பெண்ணே கவிஞர் நவிலுமொழி ஒன்றொன்று கோடி பெறும்! (போகிறவர்கள்) அமுதவல்லியின் தோழியுடன் அமிழ்தான கவிதையைச் சுவைத்த நாமும் கூறுகிறோம்; பாவேந்தர் சொல் ஒவ் வொன்றும் பசும்பொன் கோடி பெறும் என்று! இல்லையா? - முதல் ஆக்கம் 1937; பாரதிதாசன், குயில், புதுச்சேரி, 10.5.1967  கிடைக்கப் பெறாத நாடகங்கள் 1. சிந்தாமணி அ. பாவேந்தர் வாழ்வில் 1931 ஆம் ஆண்டு புதுவை எக்கோல் பிரிமேர் என்னும் அரசினர் பாடசாலையில் ழுய்ல் பெரி என்பாரின் ஆண்டுவிழா, மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பெற்றது. ழுய்ல்பெரி என்பவர் பிரஞ்சு நாட்டு மக்களால் மிகவும் போற்றக் கூடிய ஒருவராவர். அக்காலத்தில், மதத் துறைக்கு அடிமைப்பட்டிருந்த கல்வித் துறையை மீட்டுக் குடியாட்சியிடம் ஒப்படைத்தவர் அவர். ஆதலால் அவர் நினைவு நாளைப் பிரஞ்சு மக்கள் சிறப்பாகக் கொண் டாடினார்கள். பிரஞ்சுக் குடியேற்ற நாடுகளிலும் இவ்விழா கொண் டாடுவது வழக்கம். அம்முறையில், புதுவையிலும் நடத்தப் பெற்றது. இவ்விழா நிகழ்ச்சிகளில் சிறு நாடகம் ஒன்றும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்குக் கதை, வசனம், பாட்டு அமைக்கும் பொறுப்பும், நாடக உறுப்பினர்க்கேற்ப மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அதைச் செவ்விய முறையில் நடத்திக் கொடுக்கும் பொறுப்பும் அப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியிருந்த திரு கனக சுப்புரத்தினம் (கவிஞர் பாரதிதாசன்) அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. அவரும் அதை நல்லமுறையில் அமைத்திருந்தார். விழா நாள் வந்தது. விழாவில், ஆசிரியப் பெருமக்களும், அலுவலர்களும், மற்றும் கற்றறிந்த பெரியவர்களும் குழுமி இருந்தனர். அந்த விழா நிகழ்ச்சி கவர்னர் (ழுய்லானோ என்ற நினைவு) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த நாடகத்தில் இடம் பெற்ற கதைக்குச் சிந்தாமணி என்பது பெயர். இதில், கதைக்குத் தொடர்பில்லாத ஒரு தனிப் பாட்டுப்பாட ஏற்பாடு செய்திருந்தார் கவிஞர். அந்தப் பாட்டின் கருத்து, அன்றைய அரசியலில் மிக முக்கியத்துவம் பெற்றிருந்த ஒன்றாகும். சுதந்தரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்ற மூன்று தத்துவங் களையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட பிரஞ்சு குடியாட்சியை உலகமே பாராட்டியது! போற்றிப் புகழ்ந்தது! இவ்வுயர்ந்த நெறி கொண்ட பிரஞ்சு ஆட்சி, பிரஞ்சிந்தியாவில் மட்டும் மாறுபட்டுத் தன் பெருமைக்குக் களங்கம் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. மேலோர் - கீழோர் என்ற பிரிவு, சமத்துவ நெறிகொண்ட ஓர் ஆட்சிப் பரப்பில் இருப்பதென்றால், யாவர்க்கும் வியப்பைத்தானே அளிக்கும். அந்தப் பாகுபாடு அன்றைய பிரஞ்சிந்தியாவான புதுவையில் வளர்க்கப்பட்டு வந்தது! மேலோர் என்பவர் முதற்பிரிவினர். அதாவது, முதல்தரக் குடிமக்கள்; முதல் பட்டியலைச் சேர்ந்தவர்கள். கீழோர் என்பவர் இரண்டாம் பிரிவினர். அதாவது இரண்டாம் தரக்குடி மக்கள்; இரண்டாம் பட்டியலைச் சேர்ந்தவர்கள். முதற் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிரஞ்சிந்தியாவிலேயே சுமார் 800 - க்கும் குறைவானவர்களே இருந்தார்கள். இவர்கள் பிரஞ்சுக் காரர்களும், அவர்களைப் பின்பற்றிய ஒரு சிலருமேயாவார்கள். இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிரஞ்சிந்தியக் குடிமக்களாகிய சுமார் மூன்று இலட்சம் தமிழர்கள். இரு சாராருக்கும் சட்டமன்றப் பிரதிநிதித்துவம் சரிசமமாக இருந்ததால், சிறுபான்மையாராகிய முதற் பிரிவினர்க்கு அரசாங்கத்தில் அதிகச் சலுகையும், மேம்பாடும், எல்லா நலன்களும் கிடைத்து வந்தன. இதனால் அவர்கள் பெரும் பான்மையினராகிய மூன்று இலட்சம் மக்களையும் அடக்கி ஆண்டுவர முடிந்தது. இக் கொடுமையை மக்கள் சற்றும் உணராதபடி அன்றைய அரசியல் சூழ்நிலைகள் இருந்து வந்தன. படித்த வட்டாரமே இக் கொடுமையை உணரவில்லையென்றால், மற்றவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? எனினும், மானவுணர்வுடைய சிலர், ஏற்படும் இடையூறு களையும் பொருட்படுத்தாது இக்கொடுமையை ஒழித்துக் கட்ட முன் வந்தனர். பிரெஞ்சு ஆட்சிக்கும் பிரஞ்சிந்திய மக்களுக்கும் தீராக் களங்கத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கும் இப்பழிப்பை நீக்கப் போர்க்கொடி உயர்த்தினர். இதற்குச் சட்ட நுணுக்க வல்லுநரும், சிறந்த வழக்கறிஞருமான உயர்திரு ஏ. செல்லான் அவர்கள் தலைமை தாங்கினார்கள் இவருக்கு ஆதரவாகப் பலரும் ஒன்று சேர்ந்து கிளர்ச்சியை வலுவடையச் செய்தனர். அவர்களுள், நம் புரட்சிக் கவிஞரும் ஒருவராவர். மக்களின் உரிமைக் குரலாக முழக்கமிட நம் கவிஞர் முன் வந்ததில் வியப்பு இல்லை! முயல்பெரி விழாக் கொண்டாட்டத்தில், உயர் அதிகாரிகளான பிரஞ்சுக்காரர்களும், படித்தவர்களும் நிறைந் திருப்பர் என்பதையறிந்த நம் கவிஞரவர்கள், சும்மா இருந்து விடுவாரா? தம் இலட்சியக் கருத்தை உணர்த்த வாய்த்ததெனக் கருதி அப்பாடலைப் பாடச் செய்திருந்தார். அன்று, அப்பாடல் மிக இனிமையாகவும் அழகாகவும் பாடப்பட்டது. அப்பாட்டு வந்திருந்த எல்லோர் உள்ளத் திலும் ஓர் உணர்ச்சியைத் தூண்டிவிட்டது என்பதை அப்பாட்டு முடிந்ததும் எழுந்த ஆரவாரக் கையொலியே உணர்த்திற்று. தலைமை ஏற்ற திரு கவர்னர் அவர்களும் அப்பாட்டின் கருத்தை உணர்ந்து தம் முடிவுரையில் பிரஞ்சு ஆட்சிக்கே களங்கம் விளைவிக்கும் இந்த வாக்காளர் பேதத்தை ஒழித்துக்காட்ட என்னால் கூடியவரை முயல்வேன்! என்று உறுதி கூறினார். சில காலத்துக்குப் பின்னர், அந்த வாக்காளர் பேதம் ஒழிந்தது. அனைவரும் பெருமகிழ்ச்சியுற்றனர். அதுவரை, பல கூட்டங்களிலும் பாடப்பட்டு, மக்களுக்கு உணர்ச்சியூட்டி வந்த கவிஞரின் அந்த இலட்சியத் தனிப்பாட்டு இது: கூவாயோ கருங்குயிலே யாவரும் ஒன்றென்றே - கூவாயோ ஏவலர் இந்தியர்கள், இரண்டாம் தொகுதியென்றார் இக்குறை நீங்கிற் றென்றே இனிதாய் நன்றே குவலயத்தில் சமத்துவநிலை காட்டவந்த பிரெஞ்சுக் குடியரசின் நிழலில் இவனுயர்ந்தோன் இவன் தாழ்ந்தோன் என்றுரைத்தால் யார் சகிப்பார் அந்த அமலை? கவிந்திருக்கும் ஒருகுடைக்கீழ் உள்ளவரின் சிலர்க்கு நிழல்; சிலர்க்கு வெளிலோ? குவிந்த பொருளோ விஷமோ சமமாக அடையாத தெவ்வகையிலோ? மேலவர் என்றோர் தொகுதி; மீதிப் பெயர்க்கோர் தொகுதி! மேன்மைக் குடியரசில் இதுவோ கதி? குயிலை விளித்து உரிமைக்குரல் எழுப்பிய கவிஞரின் கொள்கைப் பிடிப்பை இப்பாடல் உணர்த்துவதை உற்று நோக்கிப் பயன் அடைவோமாக! - புதுவை சிவம் என்கிற ச. சிவப்பிரகாசம், முதல் ஆக்கம் 1931; பாரதிதாசன் குயில், புதுச்சேரி, 10.6.1967  ஆ. சிந்தாமணியில் ஒரு பாட்டு சிந்தாமணி என்று இங்கே குறிப்பிடுவது, ஐம்பெருங் காப்பியங் களுள் ஒன்றான சீவ சிந்தாமணியன்று; புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களால் எழுதப்பெற்ற ஒரு சிறு நாடக நூலுக்கு அமைந்த பெயரே சிந்தாமணி என்பது (இந்நாடகம் 1931 ஆம் ஆண்டு ழுய்ல்பெரி, விழாக் கொண்டாட்டத்தின் போது அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பிரஞ்சிந்திய ஆளுநர் முன்பாக நடத்திக் காட்டப்பட்டதேயாகும்.) இச்சிறு நாடக நூல், படித்த குடும்பம் சர்வகலாசாலை என்ற கருத்தை உள்ளடக்கமாகக் கொண்டதாகும். இந்நூலின் கருத்தே குடும்ப விளக்கு என்னும் கவிதை நூலாக வெளிவரலாயிற்று இந்நாடகம் நடைபெற்றபோது கவிஞரால் இயற்றபெற்ற பல பாடல்கள் பாடப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான். உலகமே உயர்வடைவாய்! உள்ளவர்க்கெல்லாம் நீயே தாய்! என்ற பாடலுமாகும். இங்கு எடுத்துக் கொண்டது இப்பாடல் பற்றியல்ல; இக் கவிதையின் தலைவியான சிந்தாமணி என்னும் தாய்க்கும், அவள் மகளான சிறுமிக்கும் நடைபெற்ற உரையாடல் பற்றியதாகும். சிந்தாமணியின் மகளான சிறுமி, பள்ளிக்கூடம் சென்று வருகிறாள். அவள் நடுநிலைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆரவார மற்ற நாகரிக வாழ்வை மேற்கொண்ட குடும்பத்தில் தோன்றியவள். ஒரு பள்ளி என்றால், அதில் பலவகைக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளை களும் படிப்பது இயல்பு. பணக்காரர் வீட்டுப் பிள்ளைகளாயிருந்தால் அதற்கேற்ற அணிவகைகளோடு பள்ளிக்கு வருவதைக் காணலாம். அதிலும் சிறு குறும்புக்காரப் பிள்ளைகள் - செருக்குக் கொண்ட பிள்ளைகள், ஏழ்மை நிலையிலுள்ள மற்ற பிள்ளைகளைப் பார்த்துக் கேலியும் கிண்டலும் செய்வது உண்டு. அந்த வகையில், இந்த எளிய சிறுமியைப் பார்த்துக் கேலி செய்தார்களோ என்னவோ! அல்லது இந்தச் சிறுமி, மற்ற பணக்காரச் சிறுமியர்போல் விளங்க வேண்டு மென்று எண்ணினாளோ என்னவோ! தனக்கு நகை ஏதுமில்லாக் குறையால், மனம் மிக வருந்தியவாறே வருகிறாள். வந்த சிறுமியைச் சிந்தாமணி அன்போடழைத்து, பின், பள்ளியில் நடைபெற்ற பாட விவரங்களைக் கேட்கிறாள். சிறுமியிடமிருந்து விடை வரவில்லை சிந்தாமணி திடுக்கிட்டவளாய் அவளின் வருத்தமுற்ற முகத்தைக் கவனிக்கிறாள்; காரணம் வினவுகிறாள். பள்ளியில் பல பிள்ளைகளும், பலவகை நகைகளணிந்து பொலிவோடு வருகிறார்கள். எனக்கு ஒரு நகைகூட இல்லை. இதனால் மற்றவர்களைப் பார்க்கும் போது எனக்கு வெட்கம் உண்டாகிறது. ஆகையால், என் காதுக்கேனும் ஒரு தோடு கட்டாயம் வாங்கிப் போட்டாக வேண்டும். அல்லாவிட்டால் நான் எப்படிப் பள்ளிக்கூடம் போக முடியும்? என்றாள் சிறுமி. சிறுமியின் வருத்தத்திற்குக் காரணம் புரிந்து கொண்டாள் சிந்தாமணி. அவளின் வருத்தத்தைப் போக்குவதற்குத் தோடு (கம்மல்) வேண்டியதுதான்; அதைச் சிந்தாமணியால் வாங்கித் தர முடியும். ஆனாலும், சிறுமியர்க்கு, அதிலும் படிக்கும் சிறுமியர்க்கு, நகை யணிவதில் ஆர்வம் எழாமல் இருப்பதே நல்லது என்பது அவளின் எண்ணம்; சிறு வயதிலேயே நகையணிவதில் ஆர்வத்தை உண்டாக்குவது பிறகு பெற்றோர்களுக்குத் தொல்லையாக முடியும்; அச்சிறுமியர்க்கும் கேடாய் முடியும். எனவே, தன் மகளின் எண்ணத்தை மாற்ற நினைத்து, குழந்தாய்! காதுக்குக் கம்மல் அழகு தருவதுதான். ஆனாலும், அது உண்மையான அழகைத் தருவதல்ல. அதைவிடச் சிறந்த அழகைத் தருவது ஒன்றுண்டு. அதைத்தான் நீ அணியவேண்டும்! என்கிறாள். அதற்குச் சிறுமி என்னம்மா அது? என ஆவலோடு கேட்கிறாள். சிந்தாமணி, `கல்வியறிவிற் சிறந்த நல்லோர்களது அறிவுரையை உன் காதிற் போட்டுக்கொள்ள வேண்டும். நீ அப்படிச் செய்தால், பலரும் உன்னைப் பாராட்டுவார்கள். நகையணிந்த காதின் அழகைவிடக் கல்விச் செல்வத்தையுடைய காதே சிறந்த அழகினையுடையதாகும் என்கிறாள். அப்பாடல் வருமாறு: மகள் கூறுவது: அம்மா என் காதுக்கொரு தோடு - நீ அவசியம் வாங்கிவந்து போடு! சும்மா இருக்க முடியாது - நான் சொல்லிவிட்டேன் உனக்கிப்போது! (அம்மா) தாய்சொல்வது: காதுக்குக் கம்மல் அழகன்று - நான் கழறு வதைக் கவனி நன்று! நீதர் மொழியைவெகு பணிவாய் - நிதம் நீகேட்டு வந்துகாதில் அணிவாய்! (காதுக்) அதைக்கேட்ட சிறுமிக்கும் ஏதும் சொல்ல இயலவில்லை. ஆயினும் மனதை ஒருவாறு திடப்படுத்திக்கொண்டு, `நகைகள் ஒன்றும் அணிந்து செல்லாவிட்டால், என்னைப் பார்க்கும் பிள்ளைகள் `பக்கி (விதி யற்றவள்) என்றல்லவா கேலி செய்வார்கள். ஆதலால் கைக்கு இரண்டு வளையல்கள் வீதம், கடன் பட்டாவது போடம்மா! என்று நயந்து கேட்கிறாள். இதைக்கேட்ட தாய் புன்முறுவல் செய்து, சிறுமியை அணைத்து அவள் தலையைத் தடவிக்கொடுத்தபடி, கண்ணே! வளையல் என்பது வளைந்திருப்பது; அதாவது தொடர்பு அறாமல் இருப்பது; இதை அணிவதால்தான் கைக்கு அழகும், மதிப்பும் உண்டாகும் என்பதல்ல. சுற்றம் என்பது, சுற்றியிருப்பது. அதாவது, வாழ்வில் ஏற்படும் நல்ல தீய காரியங்களில் உறவு அறாமல் சூழ்ந்திருப்பது. அத்தகைய சுற்றத்தார் களும் நல்லோர்களும் நம் வீட்டுக்கு விருந்தினராக வந்தால் வந்த அவர்கள் களைப்புத்தீர விருந்தோம்பு! அதுவே, பலரும் போற்றத் தகுந்த உயர்ந்த நகையாகும். அத்தகைய வரவேற்பைப் பெறாத கைகள், எத்தனை வலையல்களை அணிந்துதான் என்ன பயன்? அந்தக் கைகளை யார் மதிப்பார்கள்? அக்கைகளிலுள்ள வளையல்கள், அக் கைகளுக்கிடப்பட்ட விலங்கன்றோ! என்றாள். மகள் சொல்வது: கைக்கிரண்டு வளையல் வீதம் - நீ கடன்பட்டுப் போட்டிடினும் போதும்! `பக்கி என் றெனையெல் லோரும் - என் பாடசாலையிற் சொல்ல நேரும்! (கைக்) தாய்: வாரா விருந்து வந்த களையில் - அவர் மகிழ உபசரித்தல் வளையல்! ஆராவமுதே மதி துலங்கு - கண்ணே அவர் சொல்வ துன்கைக்கு விலங்கு! (வாரா) மறுமொழி சொல்லிவிட்ட தாயின் முகத்தை, உற்று நோக்கினாள் சிறுமி. `நகைகள் அணிந்து கொள்வதை உலகம் மதிக்கிறது! அப்படி நகைகள் அணிந்து மதிப்பாகச் செல்லாதவர்களை யாரம்மா மதிக்கிறார்கள்? பள்ளிப் பிள்ளைகள் நடுவே எனக்கும் ஒரு மதிப்பு இருக்க வேண்டாமா? வேண்டாம் அம்மா! நீங்கள் மனம் வைத்தால், எப்படியும் என் குறையைத் தவிர்க்க முடியும்! ஏதேனும் ஒரு நகையாவது வாங்கிப் போடம்மா! என்று கெஞ்சுகிறாள். இதற்கு எப்படி விடையிறுத்து அவளைத் தேற்றுவது என்பது சிந்தாமணிக்குச் சிறிது கடினமாகவே இருந்தது. எனினும், அவள் மனதை எப்படியேனும் மாற்றியாக வேண்டும் என்ற உறுதியில் கூறுகிறாள். `பெண்களுக்குச் சிறந்த அழகிய நகைகள் எது தெரியுமா கண்ணே! குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்ட ழகும் மஞ்ச ளழகும் அழகல்ல; நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி யழகே அழகு என்று ஆன்றோர்கள் கூறியுள்ளார்கள். கல்பதித்துச் செய்த நகைக ளெல்லாம், பெண்களுக்கு அழகைத் தருவனவல்ல; அவை ஆறாத புண்ணைத் தருவனவாகும். கற்றறிந்த பெண்களையே உலகம் மதிக்கும்; புகழும்; ஆதலால், நீ உலகத்தார் நடுவே சிறந்த புகழுக் குரியவளாக மதிக்கத் தக்கவளாக விளங்குவதே, உனக்குப் பேரழகைத் தருவதாகும். ஆதலால், நீ கற்பதில் மகிழ்ச்சி கொள் என்று அவள் கன்னத்தை வருடி முத்தமிட்டுக் கல்வியில் ஆர்வத்தை உண்டாக்கு கிறாள். சிறுமியும் சிந்தித்துத் திருந்தித் தெளிவு பெறுகிறாள்! அப்பாடல் வருமாறு: மகள் சொல்வது: ஆபர ணங்கள் இல்லையானால் - என்னை ஆர்மதிப் பார்தெருவில் போனால்? கோபமா அம்மா இதைச் சொன்னால்? - என் குறை தவிர்க்க முடியும் உன்னால்! தாய் சொல்வது: கற்பது பெண்களுக்கா பரணம்! - கெம்புக் கல் வைத்த நகை தீரா ரணம்! கற்ற பெண்களை இந்த நாடு - தன் கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு! (கற்பது) மாணவ மாணவியர் நல்லொழுக்கம் கூறும் அக்காட்சியும், கருத்தமைந்த பாடலும் அந்நாளில் நம் பாவேந்தரால் எழுதப் பெற்றவை. எல்லோரும் பாராட்டினர். அன்று மட்டுமல்ல; இவை என்றென்றும் பாராட்டுவதற்குரியன அன்றோ - புதுவை சிவம் என்கிற ச. சிவப்பிரகாசம், பாரதிதாசன் குயில், புதுச்சேரி, 10.9.1967  2. லதா க்ருகம் இத்தலைப்பைப் பார்த்தவுடனே உங்கட்கு வெறுப்புத் தோன்றும். தமிழ்நாட்டில் - தமிழ்மொழி எழுச்சிபெற்று விளங்கும் இக்காலத்தில் - தமிழ் ஆர்வம் மிகுந்துள்ள இந்நேரத்தில், புரியாத வடமொழியில் இப்படிப்பட்ட ஒரு தலைப்பா? என்றெல்லாம் எண்ணக்கூடும்; ஆம்! தமிழ் வளர்ச்சி பெற வேண்டும்! எழுச்சி பெற வேண்டும்! தனித் தமிழே எங்கும் வழங்க வேண்டும்! தமிழகத்தின் எல்லாத் துறைகளிலும் தமிழே வழங்கவேண்டும்! என்ற பேராசையால், அல்லும் பகலும் ஆர்வ மோடுழைத்து வந்த ஒருவரால் சொல்லப்பட்டதுதான் இந்தத் தலைப்பு. தமிழுக்குப் பாடுபட்ட ஒருவரா இப்படிப்பட்ட தலைப்புத் தந்தார்? இதை எப்படி நம்புவது? - என்றெல்லாம் எண்ணுவீர்கள். பிந்தி வடக்கினிலே - மக்கள் பேசிடும் பேச்சினிலே பாட்டு நடத்தினன்; எந்தவிதம் சகிப்பேன்! - கண்ட இன்பம் அனைத்திலும் துன்பங்கள் சேர்ந்தன! என்றும், பொருளற்ற பாட்டுக்களை - அங்குப் புத்தமு தென்றனர் - கைத்தாள மிட்டனர் இருளுக்குள் சித்திரத்தின் - திறம் ஏற்படுமோ? இன்பம் வாய்த்திடக் கூடுமோ? என்றும் பாடிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனவர்கள், தாம் எழுதிய ஒரு நாடகத்திற்கு இட்ட பெயரே லதா க்ருகம் என்பது. பாரதிதாசனவர்களா இப்படிப் பெயர் வைத்தார்? அப்படிப்பட்ட ஒரு நாடகத்தை நாங்கள் அறியோமே என்றெல்லாம் ஐயப்படுவீர்கள். உண்மைதான். அந்நாடகம் யாரும் பார்க்க முடியாதபடி மறைந்தே போயிற்று! அதை நடித்துக் காட்டுவதற்காக, இருமுறை முயன்று, பல ஒத்திகைகளும் நடைபெற்றன. ஆனால் நாடகம் நடைபெறாமலே போயிற்று. மறைந்து போயிற்று. என்ன இருந்தாலும், தமிழின் அழகிய பெயர் இருக்க, வடமொழிப் பெயரையா வைப்பது? என்று கேட்கலாம். இதில், ஒரு வரலாறே அடங்கியிருக்கிறது. அதைத்தான் இங்கே விவரிக்கிறேன். இன்றைக்குச் சற்றேறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் உங்களை அழைத்துச்செல்ல விரும்புகிறேன். அப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டில், தமிழ் சாகாமல் இருந்திருக்கின்றது. அவ்வளவுதான். தமிழைப் போற்றி வளர்க்க கடமைப்பட்ட புலவர்களெல்லாம், அதனை மறந்து புரியாத வடமொழியில் புலமை உடையவராகக் காட்டிக் கொள்வதி லேயே புகழுண்டு என வீண்மயக்கங் கொண்டிருந்த காலம் அது. சங்க காலத்திற்குப் பிறகு, தமிழ்ப் புலவர்கள் தமிழை வளர்க்க வில்லை. மாறாகத் தமிழ்நாட்டில் வடமொழியை வளர்க்கப் போட்டி யிட்டுக் கொண்டு முன் வந்தனர். வடமொழி அறிந்தால்தான், எழுதினால்தான், தமக்கு மதிப்பு உண்டு என்றும் கருதினர். இந்த மயக்கத்தைப் பகுத்தறிவு இயக்கமுங் கூடத் தொடக்கத்தில் போக்க முனைய வில்லை. அப்பொழுதெல்லாம் அது இந்து மதம், சாதி, சமயம், மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில்தான் புரட்சியை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது. தமிழ், தமிழன், தமிழ்நாடு என்பன பற்றிய எண்ணமே கொண்டிராத நேரம்! தமிழர்களும் தம்மை மறந்திருந்தகலாம். இப்படிப்பட்ட காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் - அவர்கள் சீர்திருத்த ஆர்வலராக இருந்தாலும் - வடமொழியை மிகுதியாகக் கலந்து எழுதுவதையே பெருமையாகக் கொண்டிருந்தனர் என்றால், நம் கவிஞரவர்களும் அம்முறையைப் பின்பற்றி எழுதியதில் வியப்பில்லை அன்றோ! இன்று, இந்தித் திணிப்பை எல்லோரும் கண்டிக்கிறார்கள். தமிழ் நாட்டில் பிறமொழி ஆட்சி என்றால், எல்லோரும் வெறுக்கிறார்கள். தமிழகத்தில், தமிழே ஆட்சிமொழி என்ற ஆர்வக் குரல் எழுப்பு கிறார்கள். சீனர்கள் கஞ்சாப் புகைக்குக் கட்டுப்பட்டிருந்ததுபோல், வடமொழி மயக்கத்தில் தம்மை மறந்திருந்த தமிழருக்கு இந்த எழுச்சியும் விழிப்பும் எப்படி வந்தன? பகைவன் செய்த கெடுதியும் ஒருவகையில் நன்மையாகவே முடிந்தது என்பது போல், இந்தி வெறியர்கள் தம்மொழியை இங்குத் திணிக்க முற்பட்டதே, தமிழின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் முதற் காரணமாகி விட்டிருக்கின்றது. அவர்கள் இந்தியைத் திணிக்கும் நோக்கம் என்றென்றும் பிறரை அடிமை ஆக்கி வைக்கும் சூழ்ச்சித் திட்டமாக இருந்தபோதிலும் அது தமிழரிடையே ஒரு விழிப்புணர்ச் சியை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. இதற்காகவேனும் நாம் அவர்கட்கு நன்றி தெரிவிக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால், தமிழ் இந்த அளவுக்கு ஏற்றம் பெற முடியுமா இவ்வளவு விரைவில்? பாரதிதாசனவர்கள் பகுத்தறிவு இயக்கத்தில் ஈடுபட்ட பின்னர், அக்கொள்கை களையெல்லாம் அமைத்து, 1932ஆம் ஆண்டில் ஒரு நாடகம் எழுதினார். அந்நாடகந்தான் லதா க்ருகம் என்பது. அதில் மடங்களின் முறைகேடுகள், தீண்டாமை ஒழிப்பு முதலாவதாக விளக்கப் பட்டிருக்கிறது.  லதா க்ருகம் சீர்திருத்தத் தொண்டர் தம் பணியை மேற்கொண்டபோது, மடத்தலைவர்கள் சூழ்ச்சித் திட்டத்திற் சிக்கித் துன்பத்திற்கும் கேட்டிற்கும் ஆளாகி முடிவில் சாவை எதிர்நோக்கும் நிலையை அடைகிறார்கள். அவர்களிலிருந்து தப்பிய சிலர் புரட்சி வீரர்களாக மாறிக் காட்டைப் புகலிடமாகக் கொண்டு, இன்னலிற் சிக்கிய தோழர்களைக் காப்பாற்றுகிறார்கள். பின்னர், பழமை வலுவிழந்து சீர்திருத்தம் வெற்றி வாகை சூடுகிறது. இந்நாடகத்தின் தலைவனும் தலைவியும் புரட்சி வீரர்களாகிக் காட்டிற்குள் இருப்பவர்கள். ஒருகால் அவர்கள் காட்டில் தம் குடிசை முன் அமர்ந்திருந்தபோது, இக்குடிசைக்கு ஏன் லதா க்ருகம் என்று பெயரிட்டீர்கள் என்று தலைவி கேட்கிறாள். அதற்குத் தலைவன், `நம் நோக்கம் வெற்றியாக நிறைவேறுவதற்கு உறு துணையாக இருப்பவள் நீயே யாதலின் லதா என்னும் உன் பெயரையே இக்குடிசைக்குச் சூட்டினேன் என்கிறான். அதற்கவள், எல்லாவற்றிலும் முதற் காரணமாக இருப்பவர் நீரேயாதலின், உம் பெயரால் இக்குடிசைப் பெயர் அமைவதே சிறப்புடையதாகும் என்கிறாள்; அதற்குத் தலைவன், `நாம் தங்கியிருக்கும் இவ்விடம், மாட மாளிகையல்ல, தழைகளால் வேயப்பட்ட ஒரு குடிசை. லதா என்றால் தழை: க்ருகம் என்றால் வீடு. தழை வீடு என்பதே அதன் பொருள். அதே நேரத்தில் லதாவின் வீடு என உன் பெயராலும் அமைந்திருப்பது எவ்வளவு பொருத்தம் என மகிழ்வதாகக் கூறுகிறான். இதுவே, இந்நாடகத்தின் தலைப்பாக அமைந்தது. நாடகம், பல சுவைகளையும் ஒருங்கே கொண்டிருந்தது. இதற்குப் பாவேந்தர் எழுதிய பாடல்களும், மிகப் பொருத்தமாகவே அமைந் திருந்தன. அக்காலத்தில் ஒத்திகை பார்த்தபோது, என் மனத்தில் பதிந்த ஒரு பாட்டு, இன்றும் என் நினைவில் இருந்து வருகிறது. இப்பாட்டு, இன்று எங்கும் கிடைக்காது; எதிலும் வெளிவரவுமில்லை. சீர்திருத்தம் கூட்டத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண் இந்நாடகத்தின் தலைவி. பெண்ணடிமை போக்கத் தொண்டாற்றுகிறாள். அவளிடம் சீர்திருத்தக்காரர்களுக்கு ஏற்படும் தொல்லை, துன்பம் ஆகியவற்றை எடுத்துக் கூறி - நீ இப்பணியில் ஈடுபடாதே எனத் தாய் தடுக்கிறாள். அப்படித் தடுக்கும் தாய்க்கு, எழுச்சியோடு கூறும் பாடலே அது. வீரச் சுவைமிகுந்த அப்பாடல், இன்றும் நம் பெண்ணினத்திற்கு தேவைப் படுவது தான். கானடைந்து போய்விட்ட கவிஞரின் இப்பாடல், வீரச் சுவைக்கு ஓர் இலக்கியமாகும். என் நினைவிலுள்ள அப்பாட்டு எல்லோர் நினைவிலும் இருக்க வேண்டும் என்று கருதியே அப்பாட்டுத் தோன்றிய நிகழ்ச்சியையும் விளக்க வேண்டிய தாயிற்று. அப்பாடல் வருமாறு: பறந்த தம்மா - கோழைத்தனம் மறைந்த தம்மா - நெஞ்சுறுதி பிறந்த தம்மா - நீர் வருந்த வேண்டாம் சும்மா! இறந்தாரைப் போலிருந்தால் என்னாகும் பெண்கள் நிலை! அறங்கூறும் மார்க்க மென்றே அடுப்பின் இடுக்கில் ஒடுக்கி வைத்தது (பறந்த தம்மா) அஞ்சுவதால் - ஆடவரைக் கெஞ்சுவதால் - மாதர்குலம் துஞ்சுவதே - அன்றி ஒரு சுகங் காண்கிலோம் வஞ்சியர்க்குத் தீமை செய்யும் வஞ்சகரை யொழித்திடுவேன்! கொஞ்சமும் பின்வாங்கேன் கொடிய நிலையை நொடியில் தவிர்க்க! (அஞ்சுவதால்) - புதுவை சிவம் என்கிற சிவப்பிரகாசம், பாரதிதாசன் குயில், புதுச்சேரி, 21.4.1968  3. பாவேந்தர் எழுதிய பாரதப் பாசறை இந்நாடகத்தைப் பற்றிய செய்திகள் வருமாறு: நாடகக்கதை, வசனம், பாடல்கள் : கவிஞர் பாரதிதாசன் நாடக நடிகர் : ஆர். பக்கிரிசாமி (காரைக்கால் - முன்பு மாடர்ன் தியேட்டர்) நாடக நடிகை : இந்திரா (சிவாஜி மேனேஜர் மோகன்தா துணைவி) மூலக்கதை படியெடுத்தோர் : இராகவராஜ், திருமலைராஜபட்டினம் த. நடராசன். நாடகம் நடந்த இடம் : இராசா சர் அண்ணாமலை மன்றம், சென்னை நாடகத் தலைமை : வி.பி. இராமன் நாடக அமைப்புச் செயலர் : தஞ்சைவாணன் (தஞ்சாவூர்) பாபு சனார்த்தனம் (திருவில்லிப்புத்தூர்) நாடக இசையமைப்பு : கே. சுப்பிரமணியம் இசை ஒத்திகை இடம் : 10, இராமன் தெரு, தியாகராய நகர், சென்னை. நடிப்பு ஒத்திகை இடம் : நடிகர் பிரண்ட் இராமசாமி வீட்டின் மேல்மாடி, இராயப்பேட்டை, சென்னை. நாடக இயக்குநர் : எ. ஏ. கண்ணன், 18, பசுமர்த்தி தெரு, ரங்கராஜபுரம், சென்னை - 20. நாடகம் பற்றிய செய்திகளைத் தந்தவர் : கவிஞர் தஞ்சை வாணன் (நேருரை: நாள் 28.7.1984) பாரதப் பாசறை சீனப்போர் கடுமையாக நடந்துகொண்டிருந்த நேரம். பஞ்சசீலம் பேசிய சீனாவை நம்பியிருந்த இந்தியா, திடீரெனத் தாக்கப்பட்டு தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரம். உயர்ந்த இமயமலை முகடுகளில் எந்த வசதியும் இல்லாத இந்திய வீரர்கள், எல்லாவித வசதிகளையும் பெற்றிருந்த சீனப்படையால் சூழப்பட்டு, செங்குருதி சிந்திக்கொண்டிருந்த அச்செய்தி பரபரப்பாக வெளிவந்து கொண் டிருந்தது. இமயமலையிலிருந்த லடாக் போர் முனையில் இராணுவத் தின் பல போர்ப்படை முகாம்கள் வீழ்ந்து கொண்டிருக்கும் சோகச் செய்தியை அன்றாடம், காலை, மாலை நாளேடுகள் பரபரப்பாக வெளியிட்டுக்கொண்டிருந்தன. இந்தியாவின் தோல்விகள் பாவேந்தரை உணர்ச்சி வசப்பட வைத்திருந்தன. சீனாவை நம்பிய இந்தியா கிடைத்தற்கரிய வீரர்களை இப்படி இழக்கும் நிலை வந்துவிட்டதே என்று பலமுறை சொல்லிச் சொல்லி உள்ளம் உருகிக் கொண்டிருந்தார் பாவேந்தர். ஒரு நாள் மாலை மாலை முரசு பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தார் கவிஞர். அதில் ஒரு சீக்கியப் போர்மறவர் லடாக் போர்முனையில் பெருந்திரளாக வந்து தாக்கிய சீனப்போர் வீரர்களோடு தனியே போரிட்டு, தன் துப்பாக்கியிலிருந்த குண்டுகள் தீர்ந்துவிட்ட நிலையிலும், தான் படுகாயமுற்ற நிலையிலும் சீனப்போர் வீரர்கள் மத்தியில் பாய்ந்து, குண்டில்லாத துப்பாக்கிக் கட்டைகளால் அவர்களைத் தாக்கி வீரமரணம் அடைந்த செய்தி வந்திருக்கிறது. இதைப்படித்த கவிஞர் உணர்ச்சி வசப்பட்டு, ‘இங்கே பார்த்தாயா, தன் துப்பாக்கியிலிருந்த குண்டுகள் தீர்ந்த நிலையிலும், பெருந்திரளாகச் சூழ்ந்த சீன வீரர்கள் மத்தியில் புகுந்து தாக்கி, நாட்டுக்காக வீரமரணம் அடைந்த சீக்கிய வீரரின் வீரச்செயலை! இச்செயல் நம்முடைய சங்க இலக்கியங்களில், குறிப்பாக புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை நூல்களில் கூறப்பட்டுள்ள தமிழ் மறவர்களின் வீரச் செயல் களுக்கு ஒப்பானது. இதுபோன்ற வீரச் செயல்கள் காவியங்களாக்கப் படவேண்டியவை. நாடகங்களாக்கப்பட்டு மக்களிடையே பரப்பப்பட வேண்டியவை. அப்போதுதான் இந்திய இளைஞர்கள் வீறு கொள்வார்கள்; விழிப்படைவார்கள். வருங்காலத்தில் அந்நியர்களிட மிருந்து இந்தியாவைக் காக்கும் வீரத்திறனைப் பெறுவார்கள். என்ன இருந்தாலும் சீனர்களால் நேரு ஏமாற்றப்பட்டு விட்டார். இந்தியா இப்போதைக்கு தோற்கடிக்கப்பட்டு விட்டது. தற்காப்புக் கொள்கையில் இந்தியா எப்படியிருக்க வேண்டும்; எப்படியிருக்கக்கூடாது என்பதற்கு இது ஒரு நல்ல படிப்பினை. அதற்காக நாம் கொடுத்திருக்கும் விலை தான் பெரிது என்று கூறிவிட்டுச் சிறிது நேரம் அமைதியில் ஆழ்ந்துவிடுகிறார். பிறகு கொஞ்சநேரம் கழித்து, பக்கத்தில் நின்றிருந்த என்னைப் பார்த்து, நீ உடனே பாரி நிலையம் சென்று புறப்பொருள் வெண்பா மாலை நூல் ஒன்று வாங்கிவா என்று ஆணையிடுகிறார். நான் அய்யா, அந்த நூல் நம்மிடம் இருக்கலாம். தேடிப்பார்க்கிறேன். இங்கு இல்லை யென்றால் புதுவையில் இருக்கலாம். அண்ணனுக்கு (மன்னர் மன்னனுக்கு) மடல் எபதி அஞ்சலில் அனுப்பப் சொல்லலாம் என்று கூறுகிறேன். உடனே பாவேந்தர் தன் வலது கையை அசைத்து, இல்லை யில்லை; அது இருக்கட்டும்; நீ முதல்ல உடனே, போய் இன்னொரு நூல் வாங்கிவிட்டு வா என்று முற்றுப் புள்ளி வைக்கிறார். இப்பொழுது மாலை ஆறுமணிக்கு மேல் ஆகிவிட்டது. நாளை காலையில் போய் வாங்கி வருகிறேனுங்க அய்யா என்று நான் கூறியவுடன், சரி, சரி! நாளைக்கே போய் வாங்கிவா என்று அமைதியடைகிறார். மறுநாள் காலை பத்து மணிக்குப் பாரி நிலையத்திற்குப் புறப்படுகிறேன். அப்போது பாரி நிலையத்தில் தணிக்கை முடிந்ததன் தொடர்பாக உங்களது நூல்களுக்கு வரவேண்டிய தொகைக்குக் காசோலை அனுப்பியிருந்தனரே; அதை நாம் நம் கணக்கில் வரவு வைத்துக்கொண்டோம். அதையும் பாரி நிலைய உரிமையாளர் திரு. செல்லப்பாவிடம் நினைவுபடுத்தட்டுமா? என்று கேட்கிறேன். ஆமாம், அது அவர்களின் கணக்குக்கு உதவியாய் இருக்கும். அதைத் தெரிவித்து விடு என்று ஒப்புதல் அளிக்கிறார். நண்பகல் பதினோரு மணிவாக்கில் பாரி நிலையம் செல்கிறேன். பாவேந்தரின் பேரன்புக் குரியவரும், நிலையத்தின் உரிமையாளருமான திரு.செல்லப்பா அவர்கள் இருக்கிறார். அதன் அப்போதைய நிர்வாகியான திரு. பரதனும் இருக்கிறார். இவரும் பாவேந்தரின் அன்புக்குரியவர். இவர் குடும்பமும் இவர் தந்தையாரும், தாயும் தமிழில் சிறந்த புலமை மிக்கவர்கள். இவருடைய மாமாவும், சமண நெறி அறிஞருமான திரு. ஜீவபந்து ஸ்ரீ பால் அவர்கள் பாவேந்தருக்கு மிகவும் வேண்டியவர். நான் கேட்ட புறப்பொருள் வெண்பா மாலை நூல், அவர்களிடம் இல்லாததால் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கு ஆள் அனுப்பி ஒரு நூல் வாங்கிக் கொடுத்தனர். பாவேந்தருக்கு வந்த காசோலையைப் பாவேந்தர் கணக்கில் வைத்துக் கொண்டதையும் திரு. செல்லப்பா அவர்களிடம் கூறியதும், சரியென்று ஒப்புக்கொள்கிறார். பிறகு அவர்களிடம் விடை பெற்று வீடு திரும்பினேன். நூலைப் பாவேந்தரிடம் கொண்டுவந்து கொடுத்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்து அந்த நொடியிலிருந்தே புறப்பொருள் வெண்பா மாலை யைப் படிக்கத் தொடங்கிவிட்டார். பிறகு குறிப்பெடுப்பதற்கு, தாள்களை மடித்துச் சிறிய வடிவில் சுவடிபோல் செய்து கொடுக்கும்படி கேட்கிறார். நானும் அப்படியே இருபது பக்கங்களுடைய சிறு சுவடியாக மடித்து அமைத்துக் கொடுக்கிறேன். அதில் முதல் பக்கத்தின் தலைப்பில் 1 என்று போட்டு புறப்பொருள் வெண்பா மாலை - குறிப்பு என்று அவரே தன் கைப்பட எழுதுகிறார். அந்த நூலிலிருந்து பதினேழு பாடல்களைப் பொறுக்கியெடுத்து அவர் கைப்படவே அச்சுவடியில் எழுதினார். அன்றே சீனர்களை எதிர்த்து ஒரு பாடலும் எழுதினார். அவர் எழுதிய பாடல் இதோ: சென்றதடா அமைதி நோக்கி உலகம் - அட சீனாக்காரா ஏண்டா இந்தக் கலகம்? நன்றாகநீ திருந்த வேண்டும் - ஞாலம் உன்னை மதிக்க வேண்டும்! ஒன்றாய்ச் சேர்ந்து வாழ வேண்டும்! ஒழுக்கம் கெட்டால் என்னவேண்டும்? உலகம் எல்லாம் பொதுவென்றாய் உரிமை எல்லாம் பொதுவென்றாய் கலகம் செய்து நிலத்தை எல்லாம் கைப்பற்றத்தான் முயலுகின்றாய்! பொதுவுடைமைக் கொள்கை ஒன்று பூத்துக் காய்த்து வருமின்று பொதுவுடைமை எனக்கென்று புகன்றாயே குறுக்கில் நின்று! கொலைகாரப் பசங்களோடு கூடுவது மானக் கேடு! இலைக்காக மரத்தை வெட்டி ஏற்றுக் கொள்வதெந்த நாடு! உயிர்காப்பது பொதுவுடைமை உயிர்போக்குதல் பெருமடமை! உயர்வான இக்கருத்தை உணர்வதுதான் உன்கடமை! - இந்தப் பாடலை எங்களிடம் இனிமையாகப் பாடியும் காட்டினார். இப்படி உணர்ச்சி ததும்பும் சீன எதிர்ப்புப் பாடல்களை, இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பாடல்களை, உலக அமைதியை நாடும் பாடல்களை எழுதினார். இந்தப் பாடல்களை அப்பொழுது அவரிடம் வந்த இசைமாமணி குடந்தை சீனிவாசன் அவர்களிடம் கொடுத்து பாவேந்தர் பாடிக் காட்டியதோடு, அவரையும் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தார். திரு.குடந்தை சீனிவாசன் அவர்கள் இன்றைய சென்னை இசைக் கல்லூரியின் முதல்வராக உள்ள இசையறிஞர் திரு.திருப்பாம்பரம் சண்முக சுந்தரம் அவர் களுடன் அன்று வந்திருந்தார். அவரின் தந்தையான திரு.சோமசுந்தரம் பிள்ளையும், பெரியப்பா திரு.சாமிநாத பிள்ளையும் பெரிய இசை மேதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. திரு.குடந்தை சீனிவாசன் அவர்கள் பாவேந்தரின் பேரன்பில் பல ஆண்டுகளாகக் கலந்திருந்தவர். அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1945ஆம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்த போதே பாவேந்தரின் அன்பிற்குரியவராகிவிட்டவர். அவரின் குரலினிமையினாலும் பாவேந்தரின் பாடல்களை உணர்ச்சியோடு பாடியமையினாலும் அன்று முதல் அவர் நெஞ்சைக் கவர்ந்தவர் இவர். சென்னையில் அந்நாளில் பழைய மாம்பலத்திலுள்ள அஞ்சுகம் உயர் நிலைப் பள்ளியில் இசையாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர், திரு.தில்ரூபா சண்முகம் போன்றாருடன் அவ்வப்போது பாவேந்தரைப் பார்க்க வருவார். சீனப்போரின் பாதிப்பினால் அவர் எழுதிய இசைப் பாடல்களில் சூ என் லாய் - நீ சீனமக்களுக்கு ஏற்பட்ட ஒரு நோய் என்று தொடங்கும் பாடலை கோபக் குமுறலோடு, சோகம் இழைய அவர் பாடும்போது அவ்வளவு உருக்கமாக இருக்கும். இப்படி எழுதப் பட்ட பாடல்கள் பல இனமுழக்கம் என்ற பத்திரிகையில் வெளி வந்தன. திரு.கணேசன் என்பவரை நம்பி கவியரசு கண்ணதாசன் தென்றல் பத்திரிகையை ஒப்படைத்திருந்தார். தமிழ்த் தேசிய கட்சி, சொல்லின் செல்வர் திரு.சம்பத்தினால் தொடங்கப்பட்டு இயங்கி வந்த நேரம். கவிஞர் கண்ணதாசனின் தென்றலைத் திரு. கணேசனிடமிருந்து இன்னொருவர் விலைக்கு வாங்கி விட்டார். தென்றல் பத்திரிகையை இழந்தபின் தென்றல் திரை என்றவொரு பத்திரிகையை வாங்கி கவி யரசு கண்ணதாசன் நடத்தி வந்தார். அப்போது இனமுழக்கம் என்ற பத்திரிகைக்கும் அவர் ஆசிரியராக இருந்தார். அதன் உரிமையாளர் முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் திரு.தேவராசன் என்பவர். இந்தப் பத்திரிகையின் அலுவலகம் பழைய வண்ணையில் இயங்கிவந்தது. அந்தப் பத்திரிகையின் நிர்வாகியாக இருந்தவர் பல பத்திரிகைகளில் பணியாற்றி, புகழ்பெற்ற திரு.விவேகானந்தன் அவர்கள். விவேக் என்ற பெயரிலும் இவருடைய படைப்புகள் வெளிவரும். பாவேந்தரின் விருப்பத்தின்படியும் கவிஞர் கண்ண தாசனின் வேண்டுகோளின் படியும் சீனப் போரின் போது எழுதப்பட்ட பல நாட்டுணர்ச்சிப் பாடல்களை இனமுழக்கம் பத்திரிகைக்குக் கொண்டுபோய்க் கொடுத்தேன். நிர்வாகியும், நிர்வாக ஆசிரியருமான திரு.விவேகா னந்தன் அவர்கள் அவற்றைப் பெற்று இனமுழக்கம் பத்திரிகையில் வெளியிட்டு வந்தார்கள். பாவேந்தர் தமிழ், மற்றும் தமிழருக்காக மட்டுமே பாடினார் என்று பாவேந்தரை முழுமையாக உணராதவர்கள் கூறிவருகிறார்கள். நாட்டுக்கும் மக்களுக்கும் எந்தெந்தக் காலங்களில் எது எது தேவையோ, அவற்றை அந்தந்தக் காலங்களில் பாவேந்தர் பாடி யிருக்கிறார். சீனப் போரினால் இந்திய நாட்டுக்கும் இந்திய ஒருமைப் பாட்டிற்கும் ஆபத்து வந்தபோது கொதித்தெழுந்தார்; பாவேந்தர் பாடினார் என்பதை அவர்கள் இனியேனும் உணரவேண்டும். அதுமட்டுமல்லாமல், பாவேந்தர் சீனப் போரை மையமாக வைத்து பாரதப் பாசறை என்ற நாடகத்தையும் எழுதினார். அதை தமிழக அரசு ஏற்று நடத்தி, நாட்டு மக்களிடையே நாட்டுப்பற்றை ஊட்ட வேண்டும் என்று விரும்பினார். அதற்காகப் பலமுறை புரட்சிக் கவிஞர் அப்போதைய செய்தித்துறை அமைச்சர் திரு.பூவராகவன், பாவேந்தரின் பேரன்புக்குரிய மற்றொரு அமைச்சர் திரு. மஜீத் போன்றோரைச் சந்தித்துத் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அவர்களுடன் பலமுறை நானும் ஆயிரம் விளக்கில் குடியிருந்த காங்கிர இயக்கப் பெரியவர் திரு.பண்டிட் முகமதுவும், திரு.குடந்தை சீனிவாசன் அவர்களும் சென்றிருக்கிறோம். ஆனால் பாவேந்தரின் இந்த விருப்பம் என்ன காரணத்தாலோ நிறைவேறவில்லை. இருப்பினும் பாவேந்தர் தன் விருப்பத்தைத் தானே நிறைவேற்றினார். அந்த நாடகத்தை (பாரதப் பாசறை) பெரும் இன்னல்களுக்கும், செலவுகளுக்குமிடையே சென்னை இராசா அண்ணாமலை மன்றத்தில் அரங்கேற்றினார். அப்படியென்றால் இந்திய நாட்டின் ஒற்றுமை மீதும் வெற்றியின் மீதும் அவருக்கிருந்த பற்றையும் பாசத்தையும் தெளிவாகக் காணமுடிகிறதல்லவா? - பாரதிதாசன் குயில், புதுச்சேரி, 10.6.1967  4. ஏழை உழவன் பாவேந்தர் இயற்றி வெளிவந்துள்ள காப்பியமான காதலா? கடமையா? முதலில் ஏழை உழவன் என்ற பெயரில் பல்லாண்டுகள் முன்னர் எழுதப் பெற்றது. தனித்தமிழ் இயக்கத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஆழ்ந்த பற்றுதலும் கவிஞருக்கு ஏற்பட்ட பின்னர் வடசொல் விரவிய முதனூலான ஏழை உழவனை எடுத்துவைத்து விட்டார்! ஏழை உழவன் காப்பியத்தில் பாவேந்தர் தீட்டிய `ஏழையின் குடிசை தமிழ் அன்பர்க்கு இங்கே காட்டப்பெறுகிறது. இரங்கத்தக்க அக்குடிசை நம் மனம் மகிழத்தக்க சுவையுடைய தாய் இருக்கின்றதன்றோ? பானையிலே நற்சிலந்திக் கூடு, பழ அடுப்பில் பூனையின் தூக்கம், பொலி - எருமை மாட்டின் முதுகெலும்பு போலும் முருங்கக்காய் காய்க்கும் அதுவும் தலைமொட்டை அன்னை கிழவி மனைக் கட்டை மேல் தனது மண்டை உறுத்தக் கணுக்கால் வயிறெட்டக் கட்டிச் சுருட்டிப் படுத்த படுக்கை, பரிக்கோ குடல் தான் கடித்துண்ணத்தக்க கறியுணவு, பச்சை மயிலடியைப் போன்ற கிளைநொச்சி மண்டும், அயலிடத்தில் நின்றபடிஅம்மே எனக்கதறும் வற்றற் பசுமாட்டின் வாய்க்கதறல், காற்றசைவைச் சற்றும் பொறுக்காமல், தள்ளாடும் மேற் கூரை ஆன இவைகள் அடுக்காய் அமைந்ததுதான் கூனக்கிழவர் குனிந்து புகும் குடிசை! - மன்னர் மன்னன், பாரதிதாசன் குயில், புதுச்சேரி, 10.6.1967  1. தமிழச்சியின் கத்தி! விரைவில் வெளிவரும் (ஆசிரியர்: பாரதிதாசன்) இது பெண்மக்கள் பெருமை, கல்வியின் அவசியம், வீரம் ஆகியவைகளைப்பற்றி மிகவும் அழகிய - எளிய நடையில் கவிதையாலமைந்த ஒருசிறு நாடகம். படிப்போர் மனதைக் கவரத்தக்கது. ஒவ்வொரு பெண்மக்களிடமும் அவசியம் இருக்க வேண்டியது. குறைந்த விலையில் சொற்ப காப்பிகளே அச்சியற்ற இருப்பதால், தேவையுள்ளோர் முன்னதாகத் தெரிவித்துக் கொள்ளவும். 2. பாண்டியன் பரிசு ஏழுமுறை எழுதப்பெற்று உயிரான பாவியமாகப் பின்னர் வெளியிடப் பெற்றதாக நாம் நினைவு மண்டபத்தில் குறிப்பிட்டோம். `பாண்டியன் பரிசு நாடக உருவில் அமைந்திருந்தபோது ஏறத்தாழ இற்றைக்கு இருபத்தேழு ஆண்டின் முன்னால் எழுதப்பெற்ற ஓர் உரையாடலை இங்கே தருகிறோம். பாண்டியன் பரிசான பேழையைத் தேடி எடுத்து வந்த வேலன், அன்னத்தைக் காணுகிறான் - பிணமாக! பாவியத்தில் அன்னமாகக் குறிக்கப்பட்ட தலைவி, நாடகத்தில் புனிதா என்று அழைக்கப்பட்டாள். இனி படியுங்கள், சுவையுங்கள்! இந்நாட்டுப் பெண்களில் நீ அடிமையுளம், கொண்டவள் அலவே! அடி, முழுநிலவே! பெண்குலத்திற்கே நீ ஓர் வழிகாட்டி என நினைத்திருந்தேன்! உன் எழில் காட்டி மறைந்தாயா? கூர்வாள் சுமந்த உன் இடையும் சீர்திருத்த நடையும் கண்டால் பெண்ணுலகமே விழிப்படையும்! கணத்துக்குக் கணம் உன் இடுக்கண் களைந்தது உன் பணத்துக்கும் செல்வத்துக்கும் அலவே! குணத்துக்கும் எழிலுக்கும் தானே அடி தித்திக்கும் தேனே! இந்தா உன் பழங்காலப் பெட்டகத்தை உன்னிடமே வைத்துக்கொள் புனிதா ஒரு முத்தம் கடைசியாக! (முத்தங் கொடுக்க முனைகிறான்) - பாரதிதாசன் குயில், புதுச்சேரி, 10.11.1967 