பாவேந்தம் 11 ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 11 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16» வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 280 = 312 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 195/- கெட்டி அட்டை : உருபா. 245/- படிகள் : 1000 நூலாக்கம் : திருமதி வ. மலர், சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : திருமதி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! பாரதிதாசன் பெற்ற பேறு ‘பாவேந்தத் தொகுதிகளை ஒரு சேரப் பதிப்பிக்கப் பெற்ற பேறு! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளி யிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டு கோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. ïjid v⮤J¥ bgÇah® jiyikÆš kiwkiy mofŸ, âU.É.f., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப் படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின் மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப்பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக் கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  நூன்முகம் தமிழில் நாடகக் கலைக்கு நெடிய வரலாறு உண்டு. நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலனெறி வழக்கம் இருந்தமை தொல்காப்பியத்தால் (999) அறியப்படுகிறது. முத்தமிழில் மூன்றாவது நாடகம். முதலிரண்டும் கலந்தது நாடகம். சங்க இலக்கியத் தில் நாடகம் நிகழ்ந்தமைக்கும், மக்கள் விரும்பிப் பார்த்தமைக்கும் சான்றுகள் உள. நாடக மகளி ராடுகளத் தெடுத்த எனப் பெரும் பாணாற்றுப் படையும் (55) பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும் எனப் பட்டினப்பாலையும் (113) நாடக மகளிர் ஆடுகளத்தையும், மக்கள் விரும்பி நாடகம் பார்த்ததையும் குறிப்பிட்டுள்ளன. கலித்தொகையில் நாடகக் காட்சிகளாய்ப் பல பாடல்கள் அமைந்துள்ளன. நாடகம் என்பது ஒரு கதை தழுவி வரும் கூத்து என்றார் அடியார்க்கு நல்லார். ஆடரங்கின் அமைப்பு முதலியவற்றை அரங் கேற்றுக் காதையும் அதன் உரைகளும் சிறப்புற விவரிக்கின்றன. அரசரும் அவரைச் சார்ந்த மக்களும், எளிய மக்களும் நாடகம் பார்க்கும் நிலை சங்க காலத்திற்கு முன்பே இருந்தது. வேத்தியல், பொது வியல் என்னும் இருபிரிவுகளும் இருந்தன. வேத்தியல் அரசர் முதலி யோர்க்கு உரியது. பொதுவியல் பிற மக்களுக்கு உரியது. நாடகம் கூத்து என்றும் கூறப்பட்டது. இவ்வழக்கு இன்று வரை நிலவுகிறது. கூத்தில் வல்லார் கூத்தர் எனப்பட்டனர். கூத்தினை ஆடல் என்றும் வழங்கினர். இறைவனையே ஆடல்வல்லான், கூத்தன், கூத்தபிரான் என்றெல்லாம் போற்றினர். தமிழ்க் காப்பியங்களில் பல நாடகக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. மறைந்துபோன நாடக நூல்களையும், நாடக இலக்கண நூல்களையும் சிலப்பதிகார உரையாசிரியர்கள் தம் உரையில் குறிப்பிட்டுள்ளனர். இந்நூல்களின் மறைவால் தொன்மைத் தமிழ் நாடகங்களின் இயல்புகளை அறிய இயலாதவராகிறோம். முதலாம் இராசராசன் ஆட்சிக் காலத்தில் (கி.பி.985-1012) தஞ்சை பெரிய கோவிலில் இராசராச நாடகம் நிகழ்ந்தமைக்குச் சான்றுகள் உண்டு. பிற கோயில்களிலும் பூம்புலியூர் முதலிய நாடகங்கள் நிகழ்ந்தமைக்குக் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. தளிச்சேரிப் பெண்டுகளால் நாட்டிய நாடகங்களும் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் பிறமொழி ஆட்சியாளர்களால் தமிழ் நாடகமரபுச் சிதைந்தது. பொருநர், கூத்தர், விறலியர், பாணர், பாடினியர் முதலியோர் தத்தம் கலைகளை மறந்தனர். போற்றுவாரின்றி அழிந்த கலைகளுள் நாடகமும் ஒன்று. பக்தி நெறியின் செல்வாக்கால் வடமொழிப் புராணங்கள் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றன. புராணக் கதைகள் நாடகங்களாய் நடிக்கப்பட்டன. ஊர் ஊருக்குப் பல குழுக்கள் முளைத்தன. நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமிகள் பல புராண நாடகங்களைப் புதிதாக இயற்றி நாடக மேடையேற்றினார். தமிழகமெங்கும் ஆங்காங்கே பாவலர்க ளாலும் கலைஞர்களாலும் நாடகங்களும் நாடகக்குழுக்களும் தோன்றின. ஊர் விழாக்களின் போது விடிய விடிய புராண நாடகங்கள் நிகழ்த்தப் பெற்றன. ஆங்கிலக் கல்வியின் தாக்கத்தால் ஆங்கில நாடகங்களைப் போலத் தமிழிலும் அங்கம், காட்சி (களம்) அமைக்கும் முறை தோன்றியது. பெ. சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம், பரிதிமாற் கலைஞரின் ரூபாவதி, மதிவாணன், மறைமலையடிகளின் சாகுந்தலம், பம்மல் சம்பந்தனாரின் சபாபதி முதலிய நாடகங்கள் தோன்றின. தேசிய விடுதலை உணர்வு மிக்கெழுந்தபோது கதரின் வெற்றி முதலிய நாடகங்கள் எழுந்தன. புராண நாடகங்களும் ஊடே அமைந்த பாடல்களால் விடுதலையுணர்வுக்கு வித்திட்டன. திராவிட இயக்கத்தவரின் பகுத்தறிவுக் கருத்துகள் நாடெங்கும் பரவின. சமூகச் சீர்த்திருத்த எண்ணங்கள் தளிர்த்தன. பகுத்தறிவு, மூட நம்பிக்கையொழிப்பு, மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு, மறுமணம், பெண்ணுரிமை, குழந்தைமணக் கொடுமை, தொழிலாளர் நலன், தமிழிசை இயக்கம், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு முதலியவற்றை வலியுறுத்தும் சமூக நாடகங்கள் கனல் தெறிக்கும் உரையாடல்களுடன் மக்கள் நெஞ்சத்தைத்தொட்டன. புலவர்களும், கலைஞர்களும் இத்தகைய சமூகச் சீர்திருத்த நாடகங்களைப் படைத்தனர். பல நாடகக் குழுக்களும் வேளை தவறாமல் இவ்வேலையைச் செய்தன. அரசியல் கட்சிகளின் மாநாடுகளிலும் நாடகங்கள் இடம் பெற்றன. பள்ளிகளின் இலக்கிய மன்றங்களில் மாணவர்கள் இலக்கிய, புராண நாடகங்களை நடித்தனர். இக்காலச் சூழலில் பள்ளியில் பயிலும் போதே கனகசுப்புரத்தினம் பள்ளி ஆண்டுவிழாவில் நடித்துள்ளார். தமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்கு கற்றுப் பெரும்புலமையுற்ற நம் கவிஞர் இசைப்புலமையும் நிறைந்திருந்தார் பாடல்களைப் பாடிக் குவிக்கும் பாவேந்தரானார். ஆசிரியப் பணியாற்றும்போதே சிந்தாமணி, வீரத்தாய் என்ற நாடகங்களை மாணவர்களால் பள்ளி மேடைகளில் அரங்கேற்றியுள்ளார். இளமையிலிருந்தே, இயற்றமிழிலும், இசைத்தமிழிலும் ஆர்வ மும் ஈடுபாடும் கொண்ட நம் கவிஞருக்கு நாடகத் தமிழும் கைவந்த கலையாயிற்று. திரைப்படங்களுக்குப் பாடல் எழுதத் தொடங்கினார். கதைகளும், கவிதைகளும் எழுதிக் குவித்த நம் கவிஞர் அவற்றை நாடகமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். 1938-இல் முதல் கவிதை நாடகம் வீரத்தாய் வெளிவந்தது. பாவேந்தரின் நாடகங்களைக் கவிதை நாடகங்கள், உரைநடை நாடகங்கள் இரண்டும் கலந்த நாடகங்கள் எனப் பகுக்கலாம். காதலா கடமையா?, புரட்சிக்கவி ஆகியன முன்னர்க் கதைப்பாடலாயிருந்து பின்னர் நாடகமாயின. பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி முதலியன முதலில் நாடகங்களாகப் படைக்கப்பட்டுப் பின்னர் கதைப்பாடல் களாயின. 1941-இல் தோழர் இராசவேலுக்குப் பாவேந்தர் எழுதிய கடிதத் தில்கவிதைகள், நாடகம், சிறுகதை தமிழர் கொள்கை சுவைக்கான கருத்துமாக எழுத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் பாவேந்தரின் நாடகங்கள், தமிழர் கொள்கையை வலியுறுத்துவனவாய், சுவையுடையனவாய், கருத்துகள் நிறைந்ததாய் விளங்கின என்பது தெளிவு. 1943-இல் முத்தமிழ் அரங்கு என்னும் நாடகக்குழு அமைப்பதில் ஆர்வமும் ஈடுபாடும் காட்டியுள்ளார். தோழர் செல்லப்ப ரெட்டியாருக்கு எழுதிய கடிதங்களில் நாடக அரங்கு, நடிகர்கள், பாடகர், ஆடல் வல்லவர், வாத்தியக்காரர், நாட்டியக்காரர் ஆகியோரை அமைக்கவும், அவர்களைத் தங்க வைக்கவும், சம்பளம் கொடுக்கவும் பாவேந்தர் காட்டிய ஆர்வம், நெருக்கடி முதலியன புலப்படுகின்றன. முத்தமிழ் நிலையத்தையும் நாடகத்திற்கென்றே சென்னை சாந்தோம் பகுதியில் கடற்கரையொட்டி ஒரு பெரிய வீட்டில் அமைத்திருந்தார். புரட்சிக் கவி, இசையமுது நாடகங்கள் இதன் சார்பில் நடிக்கப்பட்டன. நடிப்பு, காட்சியமைப்பு, நாட்டியம், இசை முதலிய ஒவ்வொன்றிலும் பாவேந்தர் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். தேர்ந்த இயக்குநராய் விளங்கினார் எனலாம். சில நாடகங்கள் பாவேந்தரின் முன்னிலை யில் ஒத்திகை செய்யப்பட்டுள்ளன. அப்போது நடிக்கும்முறை, பாடிய முறை முதலியவற்றில் திருத்தங்களைக் கூறிச் செயற்படுத்தியுள்ளார். இன்ப இரவு என்னும் நாடகம் தந்தை பெரியார் முன்னிலை யில் சென்னை சாந்தோம் பகுதியில் 2.4.1944 இல் நடிக்கப்பட்டது. பார்த்த பெரியார் பாராட்டியுள்ளார். பாராட்டு 8. 1. 44 குடி அரசு இதழில் வெளிவந்ததின் ஒரு பகுதி: இன்று இந்த நாட்டில் தமிழும் தமிழ்க் கவியும், தமிழ் இசையும் தமிழர்களுடைய முன்னேற்றத்துக்கும், தன் மானத்துக்கும் பயன்படும்படி மக்கள் உணர, மக்களை ஊக்குவிக்க அவர் ஒருவரே என் கண்ணுக்குத் தென்படுகிறார். அவரை நாம் பயன்படுத்திக் கொள்வதில் தான் நம் வெற்றியின் தன்மை இருக்கிறது இதனால் பெரியாரின் கொள்கைக்கேற்ற தன் மானமிக்கவராய்ப் பெரியார்க்கு தெரிந்த ஒரே கவிஞர் நம் பாவேந்தர்தாம். பாவேந்தரின் நாடகங்களில் இளங்கணி பதிப்பகத் தொகுப்பு களில் இடம் பெற்றுள்ளவை 52. ஆய்வுத் தேடல்களுக்கு அகப்பட வேண்டியவையும் உள்ளன. இவற்றுள் முழுமை பெற்ற நாடகங்கள் பல. முழுமை பெறாமல் - முடிவு இல்லாமல் உள்ளனவும் இருக்கின்றன. வானொலிக்காகவும் சில நாடகங்களைப் படைத்துள்ளார். அவற்றில் உள்ள ஒலிக்குறிப்புக்களால் அக்குறிப்பு புலப்படுகின்றது. பாவேந்தர் படைப்புகள் பல. மாணவர் குறிப்பேடுகளில் எழுதப்பட்டவை. அவற்றின் பழைமையால் தெளிவில்லாப் பகுதிகளும் தெரிய வந்துள்ளன. இத்தொகுதியில் புதியனவாய் வருவனவும் உள்ளன. பாவேந்தரின் நாடகங்கள் ஆய்வாளர்களின் ஆய்வுக்குட் பட்டுள்ளன. முனைவர் ச.சு.இளங்கோ பல வகைகளாகப் பகுத்துள்ளார். அவை: தமிழ் இலக்கியச் சார்பு நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், கற்பனை வரலாற்று நாடகங்கள், சமூக நாடகங்கள், அங்கத நாடகங்கள், ஆரியப்புரட்டு விளக்க நாடகங்கள், குழந்தைகளுக்கான நாடகங்கள், குறு நாடகங்கள் என்பன. வேறுவகையாகப் பகுப்பாரும் உளர். இன்பியல் நாடகம், துன்பியல் நாடகம் எனவும் நடிப்பதற்குரிய நாடகம், படிப்பதற்குரிய நாடகம் எனவும் பார்க்கும் பார்வையும் உள. படிப்பதற் குரிய நாடகங்களுள் சில, சில மாற்றங்களுடன் நடிப்பதற்குரியனவாக மாற்றப்பட்டுள்ளன. பழந்தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள், தனிப்பாடல்கள் முதலியவற்றில் கொண்டிருந்த ஈடுபாடும், புராணங்கள், பழக்க வழக்கங்கள், மத அமைப்புகள் முதலியவற்றின்மீது வைத்திருந்த எண்ணங்களும், திராவிட இயக்கக் கோட்பாடுகளின் செயல் வேகங் களும், மொழி ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சியும் இத்தகைய நாடகங்கள் தோன்றக் காரணமாயின. குமரகுருபரன்: குமரகுருபரன் நாடகம் பாவேந்தரால் 1944இல் படைக்கப்பட்டது. திரைப்படத்திற்க என்று எழுதப்பட்டு பின் நாடகமாகியது. எதிர்பாராத முத்தத்தின் இன்னொரு வடிவம் குமரகுருபரன். எதிர்பாராத முத்தத் தின் கதைத் தலைவன் பொன்முடி. துணைப்பாத்திரம் குமரகுருபரன். இந்நாடகத்தில் கதைத் தலைவன் குமரகுருபரன். ஆயினும் இந்நாடகத் தின் பின் பகுதியில் பொன்முடி-பூங்கோதை பகுதி இடம் பெறுகிறது. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் குமரகுருபரர். அவர்மீது பாவேந்தருக்கு அளவுகடந்த பற்றுண்டு. தம் பாடல்களில் தமிழுக்கு மிகுதியான பல்வேறு அடைமொழிகளை பாடியவர் குமரகுருபரர். தமிழ் யாப்பு வடிவங்கள் அனைத்திலும் பாடல் இயற்றிய தமிழ்வல்லார். அவர் தமிழ்த் தொண்டராய், வட நிலத்தை - வடமொழியை வென்றவராய்த் திகழ்ந்தமையால் பாவேந்தருக்கு பற்றுமை ஏற்பட்டது எனலாம். புலவர்கள் யாரேனும் சாற்றுக் கவிக்குச் சென்றால் குமரகுருபரர் பாடல்கள் படித்துவா எனக் கூறிவிடுப்பவர் பாவேந்தர். குமரகுருபரன் நாடகத்தில் குழந்தை மணத்துக் கொடுமை, போலிச்சாமியார்களின் பொருளாசை, புலமைக் காய்ச்சல் முதலியன இடம் பெற்றுள்ளன. பாவேந்தர், தமிழ்ப் பண்பாட்டு மறுமலர்ச்சிக்காக - மீட்சிக்காக இலக்கிய வடிவத்தை மாற்றியவர். சில புதியனவாய்ப் புகும். பாவேந்தர் படைப்புகளில் குமரகுருபரன் தனித்துச் சுட்டத்தக்கது. குமரகுருபரன் சார்ந்தவை நான்கு படைப்புகள். காப்பியம், உரைநடை, நாடகம், திரைப் படம் என்னம் நான்கு வடிவத்திலும் குமரகுருபரனைப் படைத்தார் பாவேந்தர். மாறும் இலக்கிய வடிவம் படைப்பதிலும் புதுமைக் கவிஞர் நம் புதுவைக் கவிஞர். பழந்தமிழரிடம் இருந்த விரிச்சி (நற்சொல் கேட்டல்) இதில் இடம் பெறுகிறது. இது சைவத் தமிழுக்கானதும் கூட. எதுகை, மோனை, நடையது; 47 பாத்திரங்களையுடையது. இத்தகைய நாடகம் கைப்பிரதியாய் சேலம் பழம் புத்தகக் கடையில் வெயிலில் வதையுண்டு கிடந்தபோது 1987-இன் இறுதியில் கண்டறிந்து 1992-இல் அச்சேற்றித் தமிழுலகுக்குத் தந்தவர் சேலம் தமிழ்நாடன் அவர்கள். தமிழ்த் தேன் நுகரும் தமிழ்த்தும்பியர் நாண் மலராம் குமர குருபரனின் நன்மலரையும் நுகர்ந்து இன்புறுமாறு வேண்டுகிறோம். இசைக்கலை: யசோதர காவியத்தின் நாடக வடிவம் இது. 21 களங்களால் அமைந் தது. காப்பியத்தோடு ஒன்றுபட்டும் வேறுபட்டும் அமைந்த இடங்கள் உண்டு. யானைப்பாகனின் இசைக்கு மயங்கி அரசி காதல் வயப்பட்டு மக்களின் பழிப்புரைக்கு ஆளாகிறாள். அரசன் துறவியாகிறான் என்பதைக் காட்டுகிறது. பறவைக்கூடு: சைக்கோனில் வாழும் தமிழர்கள் தாய்மொழியின் மீதும், தாய் நாட்டின்மீதும் செலுத்தும் பேரன்பைப் பின்னணியாகக் கொண்டு பறவைக் கூடு உவமையாக விளக்கப்படுகிறது. தாய்ப்பறவை வெளியே இரை தேடச் சென்றாலும் கூட்டிலுள்ள குஞ்சுகளின் மீது பாசமும் கண்ணும் வைத்துக்கொண்டே இருக்கும். மக்கள் சொத்து: நிலக்கிழார் ஏழைகளை ஏமாற்றிச் சொத்து சேர்ப்பதையும், ஆலை முதலாளி தொழிலாளிகளை ஏமாற்றிச் சொத்து சேர்ப்பதையும் சேர்க்கப் பட்டவை மக்கள் சொத்தே எனக் காட்டுகிறது. ஐயர் வாக்குப் பலித்தது: மக்களிடமுள்ள மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்திப் பித்தலாட்டம் செய்து பகட்டு வாழ்வு வாழ விரும்புவோரைக் கண்டிக்கும் நோக்கில் படைக்கப்பட்டது. மூடநம்பிக்கை ஒழிந்தால் மக்கள் முன்னேற்றம் பகுத்தறிவு சார்ந்ததாக அமையும் என்பதை வலியுறுத் துகிறது. ஆக்கம், தீவினை: திருக்குறளின் கருத்துகளை எளிதில் விளக்கும் நோக்கில் கவிஞர் மேற்கொண்ட முயற்சி திருக்குறள்சினிமாஎன்னும்தலைப்பில்ஆக்கம்,தீவினைஎன்னும்நாடகங்கள்உருவாயின.ஆக்கம்அதர்வினாய்ச்செல்லும்... என்னும் குறளில் நாடக ஆக்கம் இது. உழைப்பவனையும் பிறர் பொருளைச் சுரண்டி வாழ்பவனையும் முறையே நெசவாளி யாகவும், பார்ப்பானாகவும் உருவகப்படுத்தியது. தீயவைசெய்தார்கெடுதல்... என்னும் திருக்குறளின் நாடகம் ஆக்கம். எங்குச் சென்றாலும் நிழல் உடன்வருவதுபோல செய்த தீவினையும் தொடரும் என்பதை வலியுறுத்துவது. இளங்கணி பதிப்பகம் பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1 : இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி - 2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஒருநாள் நிகழ்ச்சி) இரண்டாம் பகுதி (விருந்தோம்பல்) மூன்றாம் பகுதி (திருமணம்) நான்காம் பகுதி (மக்கட்பேறு) ஐந்தாம் பகுதி (முதியோர் காதல்) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10 : உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரஸ்புடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (தீபாவளி) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (முத்துப் பையன்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஒரு காட்சி சிறு நாடகம்) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் ஐ & ஐஐ 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா 1. ஆக்கம், 2. தீவினை 7. கொய்யாக் கனிகள் (கவிதை நாடகம்) தொகுதி -12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி -13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி - காரியக்காரன் (கடவுள் விஷயத்தில் ஜாக்கிரதை) 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை (செவ்வாயுலக யாத்திரை) 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (விதவைகள் துயர்) 14. திருந்திய ராமாயணம்! (பால காண்டம் - டெலிபோன் படலம்) 15. இதயம் எப்படியிருக்கிறது? (ஏழைகள் சிரிக்கிறார்கள்) 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி (மான்களின் ஒற்றுமை கண்டு அஞ்சி இறந்தது) 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (னுசைநஉவடிச)யின் தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (அவளும் நானும்) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. “வாரி வயலார் வரலாறு” அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி -14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி -15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி -16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி -17 : பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி -18 : பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி -19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி -20 : கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி -22 : கட்டுரை இலக்கியம் - 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி -23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி -24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் (தொகுதி 23இன் தொடர்ச்சி) 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி -25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (நெடுங்கதை) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (சூநபயவiஎந): பிராசசு இந்தியா (ஞசடிஉநளள ஐனேயை) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் ..  பொருளடக்கம் பொங்கல் மாமழை v நுழையுமுன்...ix வலுவூட்டும் வரலாறு xii பதிப்பின் மதிப்பு xv நூன்முகம் xvii 1. குமர குருபரர் I & II 3 2. இசைக்கலை 107 3. பறவைக் கூடு 135 4. மக்கள் சொத்து 191 5. ஐயர் வாக்குப் பலித்தது 215 6. திருக்குறள் சினிமா 221 ஆக்கம் 222 தீவினை 224 7. கொய்யாக் கனிகள் 227  குமரகுருபரர் முன்னுரை குமரகுருபரர் (1944) குமரகுருபரன் கதையின் பிரதான பாகங்கள் விரிவாக எழுதப் பட்டிருக்கின்றன. டைரக்டருக்கு, - வேண்டிய பகுதியை எடுத்துக் கொள்வதற்குச் சௌகரியமாக! இதில், குறித்துள்ள பாடல்களுக்கு ஏற்ற இராக தாளத்தை அமைத்துக் கொள்ளவேண்டும். அப்படி அமைக்கும்போது கருத்து மாறாமல் சில எழுத்துக்களைக் கூட்டவோ குறைக்கவோ செய்து கொள்ளலாம். இதில் 1. கனவில் முருகன் தோன்றுவது 2. கைலாயத்தில், பார்வதி பரமேவரன் சல்லாபம் 3. அரங்கேற்றுவதில், (பார்வதி) அர்ச்சகன் மகளாய்த் தோன்றுவது. முதலிய இடங்கள் ஓரியண்டல் நாட்டியத்தால் நிகழ்விக்கலாம். கூடியவரைக்கும் இடம் ஏற்பட்டபோதெல்லாம் நகைச்சுவை கூட்டப்பட்டிருப்பது கருதத்தக்கது. - பாரதிதாசன் I குமர குருபரர் 300 ஆண்டுகட்கு முன் திருநெல்வேலிக்கும், திருச் செந்தூருக்கும் நடுவே, நம்மாழ்வார் பிறந்த திருக்குருகூருக்குச் சிறிது மேற்கே, கயிலாசபுரம் என்னும் ஊரில் சண்முக சிகாமணிக் கவிராயர் - அவர் மனைவி சிவகாமியம்மை - வீட்டில் ஒருநாள் காலையில், விசிப் பலகையில் சண்முகசிகாமணிக் கவிராயர் உட்கார்ந்து, அண்டையில் தம் 5 வயதுள்ள குமரகுரு என்னும் பிள்ளையை உட்கார வைத்துக்கொண்டு அவனுக்குப் பேசக் கற்றுக் கொடுக்கிறார். சண்முகக் கவிராயர் : சொல்லப்பா அ ஆ என்று வாயைத் திற ஆ எங்கே ஆ (பிள்ளை வாயைத் திறக்கிறது. அ உச்சரிக்க வில்லை) சண்முகக் கவிராயர் : முருகா உன்னருளால் நான் பெற்ற பிள்ளை! அ என்று சொல்லப்பா என் செல்லப்பா. (சொல்லவில்லை) இதற்குள் உள்ளறையிலிருந்து சிவகாமி வருகிறாள். பிள்ளையின் அண்டையில் நின்று குனிந்து பிள்ளையைத் தொட்டுச் சொல்லுகிறாள் - சிவகாமி : என் கண்ணே சொல்லு அப்பா - அப்பா என்று சொல். அப்பா - சொல்லு! (பிள்ளை சொல்லவில்லை) (இடையில் வேலைக்காரி சுப்பு வந்து கூறுகிறாள்) வேலைக்காரிகுப்பு : அம்மா அது பழுக்காது. சண்முகசிகாமணி : (கோபமாய்) என்ன சொன்னாய், முருகன் திரு வருளால் பழுக்குமடி! அவச் சொல் சொன்னாய். சிவகாமி : இல்லை அத்தான்; வாழைக்காயைப் பழுக்கவை; கறிக்கு உபயோகப் படுத்தாதே என்று சொல்லி யிருந்தேன். அது பழுக்காது. கறிக்கு எடுத்துக் கொள்ளட்டுமா என்கிறாள். சண்முகசிகாமணி : பழுக்கும் என்று சொல்! அது பழுக்கும் அவனருளால்! சிவகாமி : குப்பு அது பழுக்கும்! (அவள் போகிறாள்) சண்முகசிகாமணி : அவள் வாயில் நல்ல சொல் வருவதில்லை. வேறு ஒருத்தியும் அகப்படவில்லையா வேலைக்கு? சிவகாமி : அப்பா என் கண்ணல்ல? (பிள்ளை சொல்லவில்லை) (வீட்டின் தெரு வாயில் குடுகுடுப்பைக்காரன்) குடுகுடுப்பைக்காரன்: நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது! கொல்லையில் சம்பா குலுங்கப் போவுது! சொல்லிலே மாணிக்கம் தோணப் போவுது! நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது! சண்முகசிகாமணி : சிவகாமி ஓடு! அவனுக்கு நிறைய அரிசி போடு. நல்ல காலம் பிறக்கவேண்டும். (சிவகாமி போய் அவனுக்கு அரிசி போடுகிறாள்) குடுகுடுப்பைக்காரன்: நல்ல காலம் பொறக்குது! ஒரு பழசி கிழசி இருந் தாக்கா குடுங்கம்மா. ஒங்க வூட்லெ சந்தோசம் பொறக்கப் போவுது. (சிவகாமி, ஒரு துணி கொண்டு வந்து கொடுக் கிறாள். குடுகுடு என்றசைத்துத் துணியைக் குடுகுடுப்பைக்காரன் வாங்கிப் போகிறான்.) சண்முகசிகாமணி : அப்பா! அம்மா என்று சொல், சொல்லு. (சொல்ல வில்லை) ஐந்து வயது ஆயிற்றே. செந்தூரான் தந்த மைந்தா! ஒரு சொல் சொல்ல மாட்டாயா? (இடையில் வீராசாமிக் கவிராயர் வந்து விடுகிறார்) சண்முகசிகாமணி : வாருங்கள் உட்காருங்கள். (அமர்கிறார் பலகையில் ஒரு புறம்) சிவகாமி : வாங்க அண்ணா! வீராசாமிக்கவி : நல்லதம்மா. சண்முகசிகாமணி : அம்மா என்று பசுவும் சொல்லுமே! அம்மா என்று சொல்லப்பா - அம்மா (சண்முகம், தன் கண்ணில் துளிக்கும் நீரைத் துடைக்கிறார்.) வீராசாமி : வருந்தாதீர்கள்! கிடையவே கிடையாது என்கிறார்களே. சண்முகசிகாமணி : உண்டு என்று சொல்லும் வீராசாமி : சமீபத்தில் மழை! சண்முகசிகாமணி : மழையா... ... உண்டு, உண்டு. (இதே நேரத்தில், தெருவாயிலில் பூக்காரியை நோக்கிச் சிவகாமி, அரும்பாக இருக்கிறதே முல்லை என்கிறாள்.) பூக்காரி : சீக்கிரம் பூக்கும். (அதைக் கேட்ட) சண்முகசிகாமணி : ஆம் சீக்கிரம் பூக்கும். முருகன் அருள் பூக்கும்! பிள்ளை வாயில் தமிழ் பூக்கும்! வீராசாமி : நான் சொன்னால் வருத்தப்படுகிறீர். வயது ஐந்தும் ஆயிற்று. உம் முயற்சியெல்லாம் பயனில்லாது போயிற்று. கவிஞரே! ஊமைப் பிள்ளை! பிறவி ஊமை! சண்முகசிகாமணி : ஊமை! தீமை என்ன செய்தோம் முருகா உனக்கு? உன் கோபம் எங்கள் மேலா தங்கவேலா! ஊமை! ஆசைக்கு நீ தந்த பிச்சை கொச்சை மொழி ஒன்று பேசச்செய். வீராசாமி : நான் வருகிறேன். (போகிறார். வழியில் தெருப்புறமிருந்து பூவும் கையுமாக வரும் சிவகாமியைச் சந்திக்கிறார்) வீராசாமி : அம்மா! கவிராயர் வீணாக வருந்துகிறார். பயனற்ற முயற்சி! பிறவி ஊமையம்மா. சிவகாமி : ஆ! பிறவி ஊமை! (வியப்புக் கலந்த துன்பம். கண்ணீர்) (தன் கணவரை நோக்கிப் போகிறாள்) (வீராசாமி, வெளிச் செல்லுகிறார்) சிவகாமி : (தன் கணவர் பால்) பிறவி ஊமையாம் அத்தான்! சண்முகசிகாமணி : அப்படித்தான் சொன்னார். சண்முகசிகாமணி : (நிதானித்து மறுநொடியில், உணர்ச்சியோடும் உரத்த குரலோடும்) இன்று, நம் செய்யத்தக்கது ஒன்று! நான் செய்த தவம் இப்படியென்று ஏன் பிறர் பழிக்க வேண்டும். நீங்காத அன்போடு நெடுமால் மருகன் பால் ஏங்கத் தவம் செய்து வயிறு தாங்காது தாங்கிப் பெற்ற பிள்ளை மூங்கைப் பிள்ளையா! அவன் பிள்ளை. சரவணபவன் பிள்ளை. நம் பிள்ளையன்று. இந் நிலை பொறுப்பதா! அவன் சந்நிதிக்குப் புறப்படு! (துன்பப் பதறல்) கனி கேட்டோம். கனியாக் காய் கொடுத்தாய் முருகா. உள்ளத்தில் நோய் கொடுத்தாய். கொடு என்று கேட்டேன். ஒரு சேய் கொடுத்தாய். நன்றாய்க் கொடுத்தாய்! அச்சேய்க்கு வாய் கொடுத்தால் கொடு. இல்லையேல் எம்மை மாய்த்து விடு. ஒருக் காலும் இங்கிரேன். உன்றன் திருக்கோவில் வருகின்றேன்! இனிப் பரிச்சேதம் இங்கிரேன். இதோ திருச்செந்தூர் வருகின்றேன்! உன்னடியிற் பிள்ளையைக் கிடத்துகின்றேன்! பிள்ளை, வாய் திறந்து பேசுமட்டும் திரும்பேன். போ என்றாலும் போகேன். நீ உன் அடியாரை ஏவி, என்னையும் என் மனைவியையும் பிள்ளையையும் கழுத்தைப் பிடித்து நெட்டச்சொல்! பெண்ணே கட்டச்சொல் வண்டியை. (அவள் போகிறாள்) சண்முகசிகாமணி : பிறவி ஊமை! என்ன தாழ்வு! எமக்கேன் முருகா இந்த வாழ்வு? (இரட்டை மாட்டு வண்டியில் அனைவரும் ஏற வண்டி ஓடுகிறது) வண்டிக்காரன் பாட்டு. (கண்ணி) ஏற்ற ராகம் தாளம் அமைத்துக் கொள்க பெருகாதோ என் வாழ்வு முருகா! திருமுருகா! அருகே வந்தெனைக் காப்பாய் முருகா! திருமுருகா! 2. கருதாயோ எனை நீதான் முருகா! திருமுருகா! வருவாய் நீ செந்தூர் வாழ் முருகா! திருமுருகா! II திருச்செந்தூர்த் திருக்கோயில் (கோயில் வீதியில் வண்டி நுழைந்ததும் வண்டி நிறுத்தப் படுகிறது) (சண்முக சிகாமணிக் கவிராயர், சிவகாமி அம்மையார், குமரகுரு மூவரும் இறங்குகின்றனர்) (கவிராயர், சிரசின் மேல் கை கூப்புகிறார். சிவகாமி கை கூப்புகிறாள். பையனின் கையைப் பிடித்துத் தூக்கிக் கை கூப்பும்படி தந்தை முயல்கிறார். அவனும், கை கூப்பியபடி நடக்கிறான் தன் பெற்றோருடன், கோபுரத்தை நோக்கி மூவரும் உணர்ச்சியும் விரைந்த நடையுமாகச் செல்லுகின்றனர்) சண்முகம், சிவகாமி பாட்டு பல்லவி வாழ்க வாழ்க! நின் அருளே வாழ்க! மெய்ப்பொருளே அநுபல்லவி ஏழையோடு படும் இன்னல் நீக்கி ஆள் ஈராறுதோள் கொள்வேள்! கதி உன் இருதாள் (வா) சரணம் அடியார் இடர்கள் களைவோனே! - எங்கள் அழகார் பச்சை மயிலோனே! பிடியானைக்கு இளையோனே! - யாம் இனித்தாங்கோம் உனைத்தான் அண்டிவந்தோம்(வா) (கோயிலினின்று பக்தர் பலர் வெளிச் செல்கின்றார்கள். சிலர் உட்செல் கின்றார்கள். வாத்திய முழக்கம் கேட்கின்றது. முரசு முழக்கம் கேட்கின்றது. மணிச் சத்தம் கேட்கின்றது. கற்பூர தீபாராதனை நடைபெறுகின்றது. அனைவரும் வணங்கிச் செல்கின்றனர். மூங்கைப் பிள்ளை, கவிராயர், சிவகாமி மூவரும் சந்நிதியை அடைகிறார்கள். வீழ்ந்து கும்பிடுகிறார்கள்.) சண்முகசிகாமணி : (அழுதபடியே கூறுகிறார்) இல்லார்க்கருளும் ஏந்தலே போற்றி! நல்லார்க்கருளும் நாதா போற்றி! பிரமனை வென்ற பிரானே போற்றி! அரனார் பெற்ற அப்பா போற்றி! மனையறம் நடத்தி நான் மகிழ்ந்து வருகையில் எனக்கோர் மனக்குறை ஏற்பட்டதன்றோ? செய்தேன் பெருந்தவம் திருவுளம் அறியும் ஐயா! உன்றன் அருளினாலே ஒருமகன் பிறந்தான்! ஒருமகன் பிறந்தான்! ஒரு மகன் ஊமை! ஊமை! என் செய்வேன். என்னபிழை செய்தேன் பன்னிரு கண்ணா மறந்ததுண்டோ வுன்னை வள்ளிமணாளா வாயிலாப் பிள்ளைக்கு வாய் கொடு அல்லது மாய்த்திடு என்னை! மானம் இழந்து வாழ்தலைப் பார்க்கிலும் சாதல் நன்று! என்னரு மைந்தனை உன்னரும் கோயிலில் கிடத்தினேன்; வேறு கதி கிடையாது! கிடையாது. இன்னும் சிலநாளில் என்றன் பிள்ளையைப் பேசவை! என்னைப் பிழைக்கவை! அதுவரை சன்னதிக்கெதிரில் சண்முக விலாசத்தில் என் குடும்பத்தோடு இருப்பேன் அடைக்கலம்! அடைக்கலம்! பிள்ளை உன் அடைக்கலம் அப்பனே! எட்டு நாளில் என்றன் பிள்ளை வாய்திறந்தால் உயிர் வாழ்வேன் உறுதி உயிர் திறவா விடில் நான் மாள்வதிங்குறுதியே. III சண்முக விலாசம் (சன்னதியின் முற்பக்கம்) (சண்முக சிகாமணிக் கவிராயர் சப்பளித்து உட்கார்ந்து கண் மூடிக் கைகூப்பியிருக்கிறார். மனைவி, சிவகாமியும் அவர் பக்கத்திலே அவ்வாறே பிள்ளையின் அண்டையில் படுத்திருக்கிறாள்.) சண்முக சிகாமணி பாட்டு பல்லவி அவனருளால் உயிர்கள் தோன்றும் தோன்றும் உலகு மூன்றும் (அவன்) அநுபல்லவி எவரும் அறிய முடியாத மூலன் ஏழைக்கிரங்கும் வடிவேலன் (அவன்) சரணம் ஆறுதலையான் நெஞ்சில் ஆறுதலைச் செய்வான் நல்லன்பு செய்தாரின் துன்பங்கள் கொய்வான் மாறுபிரமனைச் சிறைபடச் செய்வான் என் மகன் வாக்கில் செந்தமிழ் பெய்வான் (அவன்) (சண்முக விலாசத்தின் எதிரில் உள்ள சத்திரம். சத்திரத்தின் பெரிய பண்டாரம் மற்றொரு பண்டாரத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார்.) பெரிய பண்டாரம் : ஏஞ்சாமி? அன்னக்காவடி அனுப்பினியளோ? இன்னைக்கு யார் முறை? சின்ன பண்டாரம் : முத்துப்பண்டாரம் காவடி? முனியப் பண்டாரம் சேமகலம்! அச்சிப்பண்டாரம் சங்கு! ஆனைப் பண்டாரம் அரோகரா! பெரிய பண்டாரம் : மய்த்தவங்க? சின்ன பண்டாரம் : மய்த்தவங்களா? தோப்லே தாக சாந்தி செலபேர். கஞ்சா கசக்கிக்கிட்டு இருக்காங்க செலபேர். பொழுது போக்குக்காவ சூதாடுறவங்க செலபேர். பெரிய பண்டாரம் : கொஞ்சம் மெதுவா பேசெஞ்சாமி. ஆரோ பொறத்தியார் வர்ராங்க! சின்ன பண்டாரம் : (திரும்பிப் பார்த்துத் திடுக்கிட்டு) மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்திரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு பெரிய பண்டாரம் : கேக்கட்டும் சின்ன பண்டாரம் : (பாட்டை நிறுத்திக் கொண்டு) சொல்லட்டும். பெரிய பண்டாரம் : சீன் வீட்டு மாடுகள் இலுப்பைத் தோப்பிலே அலாதியா கட்டிக் கெடக்குதாமே. (இதற்குள், சண்முக சிகாமணி திருநீறு எடுக்க அங்குள்ள மடக்கு நோக்கி வருகிறார்) சின்ன பண்டாரம் : பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா! சண்முகசிகாமணி : சாமி! திருநீறு வேண்டும். பெரிய பண்டாரம் : அதோ, மடக்கில் இருக்கே. (சண்முகம் எடுத்துக்கொண்டு போகிறார்) பெரிய பண்டாரம் : கேட்கட்டும். சின்ன பண்டாரம் : சொல்லட்டும் பெரிய பண்டாரம் : இன்னையி ராத்திரிக்கு மாட்டு விஷயமா கவனிக் கறதுதானே. சின்ன பண்டாரம் : வேலுப் பண்டாரத்தையும், வேம்புப் பண்டாரத் தையுந்தான் அனுப்பணும். (பின்னால், கவிராயர் நெருங்குவதைச் சின்ன பண்டாரம் தெரிந்து கொள்ளவில்லை.) பெரிய பண்டாரம் : (சுதியை விட்டுத் தாளத்தை விட்டு ஆனால், துடையில் தாளம் போட்டுக்கொண்டு) கல்லார்க் கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே! கவிராயர் : செம்பு வேண்டும் சாமி! பெரிய பண்டாரம் : அதோ இருக்குது. எடுத்துக்கொண்டு போகலாமே (கவிராயர் எடுத்துப் போகிறார்) பெரிய பண்டாரம் : கேக்கட்டும் சின்ன பண்டாரம் : சொல்லட்டும் பெரிய பண்டாரம் : மாடுகளை அடித்துக் கொண்டு போய்ப் பொட்டலூர்ச் சந்தையிலே வித்துட்டு வந்துடச் சொல்லிடு சாமி. சின்ன பண்டாரம் : நல்லது சாமி பெரிய பண்டாரம் : வறண்ட குளத்தாண்டை பொதச்சி வச்சிருக்கிறோம் ரொம்ப பொருள், காபந்தா பாத்து வரீங்களா? (கவிராயர், செம்பை வைக்க வருகிறார்) பெரிய பண்டாரம் : பாட்டு பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகி! (கவிராயர் போகிறார்) பெரிய பண்டாரம் : கேக்கட்டும். சின்ன பண்டாரம் : சொல்லட்டும். பெரிய பண்டாரம் : நாலஞ்சி நாளாய் ராத்திரியிலே நம்ம சத்திரத் திலே வந்து படுத்துக்கிறாங்க இவரும் - இவர் மனைவி போல் இருக்கு - ரெண்டு பேரும் பகல்லே சண்முக விலாசத்லேயே இருப்பாங்க போல இருக்கு! இவர்கள் யார்? (சின்ன பண்டாரம், பதில் சொல்லத் துவங்கும்போது, கவிராயர் அங்கு நெருங்குகிறார்) சின்ன பண்டாரம் : இவர்களுக்கு ஒரு பிள்ளே! அது ஊமைப் பிள்ளே! அதுக்காக முருகனைக் கோரி வந்திருக் காங்க! முருகன் விசயத்லே ரொம்பப் பத்தி ரொம்பப் பத்தி! பெரிய பண்டாரம் : அப்படியா! சின்ன பண்டாரம் : ஊழ்வெனெ. பெரிய பண்டாரம் : வினை என் செயும்? குமரேசர் இரு தாள் இருக்கும்போது. கவிராயர் : நன்றாகக் கூறினீர்கள் சாமி. பெரிய பண்டாரம் : உட்காருங்கள். கவிராயர் : முருகன் அடியில், சண்முக விலாசத்தில் பிள்ளையைக் கொண்டு வந்து கிடத்தி விட்டேன். அவன் விட்டதுதான் வழி. பெரிய பண்டாரம் : உங்கள் தவம் பலிக்கும். தூங்கும் நேரம் ஆகிறது. கவிராயர் : நான் வருகிறேன் (போகிறார்) (கவிராயரும், சிவகாமியும், சண்முக விலாசத்தில் பிள்ளையைப் படுக்க வைத்துவிட்டுச் சந்நிதி பார்த்து, வணங்கிச் சத்திரம் வந்து படுத்துறங்குதல்) IV கவிராயர் கனவு (கவிராயர், வறண்ட குளம் நோக்கிப் போகிறார். பெரிய பண்டாரம், சின்ன பண்டாரம் முதலிய பல பண்டாரங்கள் தாம் சுமந்து வரும் திருட்டுப் பொருள்களை அங்கு ஒரு பக்கம் வைக்கிறார்கள்.) பெரிய பண்டாரம் : இந்நேரம், அந்த மாடுகளை அவிழ்த்துக் கொண்டு போயிருப்பார் களா? அல்லது, அகப்பட்டுக் கொண்டிருப்பார் களா? சீக்கிரம், இந்தச் சமான்களையெல்லாம், புதைச்சி விடுங்கள். ஏஞ்சாமி, அந்த முத்துவேல் வீட்டுக் குழந்தை நிறைய நகை போட்டுக் கொண்டு திரிகிறதே! சின்ன பண்டாரம் : என்னா பண்றது? பெரிய பண்டாரம் : தூக்கிவந்து கழுத்தை முறித்துப் போட்டுவிட்டு நகைகளை அனுபவிக்கிறதுதானே! சின்ன பண்டாரம் : நாளைக்குத்தான் பாக்கணும். பெரிய பண்டாரம் : ஆமாஞ்சாமி சின்ன பண்டாரம் : நல்லதுச்சாமி பெரிய பண்டாரம் : சாமான் பொதச்ச எடத்தெ தோண்டி இந்தச் சாமானையும் போட்டு மூடுங்கள். சீக்ரஞ்சாமி. (தோண்டுகிறார்கள்) (வானிலிருந்து, ஓர் ஒளிப்பந்து மண்ணில் இறங் குகிறது. அதினின்று மயில்மேல் வேல்கொண்ட இளமுருகன் காட்சி அளிக்கின்றான். (கவிரா யர்க்கு மட்டும் புலப்படுகின்றான்!) கண்டு, கவிரா யர் வணங்குகிறார். (முருகன் புன்னகை காட்டி மறைகிறான்) மழை பெய்கிறது. இடியுடன், மின்ன லுடன்! வறண்ட குளம் நிரம்புகிறது! புல்லற்ற தரை விளைநிலமாகிறது. பட்ட மரங்கள் தளிர்த்துத் தழைகின்றன. மழை நின்றது. வெண்ணிலவு தோன்றுகிறது. பெரிய பண்டாரம் ஏதோ ஓர் நல்லுணர்வால் தூண்டப்படுகிறான். தன் கைகள் தலைமேல் குவிகின்றன. பெரிய பண்டாரம் : மெய்யன்பர்களே! சைவ சித்தாந்த நெறியானது நலிவுறும் காலத்தில், சிவபிரான் அருளால் இம்மண்ணுலகில் சிவ ஒளி பரப்புவதற்குச் சமயத் தலைவர் தோன்றுவதுண்டு. திருவருளால் இந்நாள் அத்தகைய உத்தமர் தோன்றினார். நான் அதை உணர்கின்றேன். என் உணர்வே அதை எனக்குக் காட்டுகின்றது. நாம், தீமையில் கழித்த நாளுக்கு நாணுகின்றோம். இப் பண்டங்களை அடியார் நலத்துக்கு ஆக்குங்கள். இனி, அவவாழ்வு வேண்டாம். சிவ வாழ்வே வேண்டும். (பாடுகிறார்கள்) சங்கரா! சிவ, சங்கரா! சிவ ... சங்கரா! சிவ, சங்கரா! சிவ ... ... (அனைவரும் போதல்) (தூங்கும் கவிராயர், இந்தக் கனவினால் புரளுகிறார்.) (தூங்கும் குமரகுருவின் மேல், ஒரு மலர்ந்த செந்தாமரை விழுகிறது. உடனே அது மறைகிறது. உடனே, அதே உடம்பின் மேல் ஆடிவந்த இள முருகன் கைவைக்கிறான். குமரன் எழுந்து நின்று மகிழ்கின்றான்.) முருகன் : நீ, யார்? குமரகுருபரன் : அடியேன். முருகன் : இன்று முதல் உன் பெயர் குமரகுருபரன்! நீ! சைவ சமயமே மெய்ச்சமயம் என்பதை உணர்வாய். உனக்கு சைவ சித்தாந்தத்தை உணர்த்துகின்றேன். (முருகன் சிவனாக மாறுகின்றான், ஆடுகின்றான்) ஐந்தொழிற் கூத்து (நிகழ்வு) குமரகுருவுக்குக் காட்சி வான உலகமும் நானில வுயிர்களும் தானே படைத்த தனிக்கை உடுக்கை (முருகன் உடுக்கையைக் காட்டுதல்) தனித்தனி வகுத்த சராசரப் பகுதி அனைத்தையும் காக்கும் அபயக் கையே (முருகன் அபயதம் காட்டுதல்) தோற்றி நின்ற தொல்லுலகடங்கலும் மாற்றுகின்ற மங்கா நெருப்பே. (முருகன் அனலேந்திய கையைக் காட்டுதல்) ஈட்டிய வினைப் பயன் எல்லாம் மறைத்தே ஏட்டுவதாகும் ஊன்றியகாலே (முருகன் காலூன்றிக் காட்டல்) அடுத்தவுயிர்க் கெலாம் அளவிலா இன்பம் கொடுப்பது வாகும் குஞ்சித பாதமே. (முருகன் தூக்கிய காலைக் காட்டுதல்) இவை பின் பாட்டுக்கள். (கும்பிட்டு நின்ற குமரகுருபரனை நோக்கி) முருகன் : அப்பா! உனக்கு, எவனெதிரில் ஞானவாக்குத் தடைப்படுமோ அவனே உனக்கு ஞானகுரு! (முருகன் அபயம் காட்டி, மறைதல்) (குமரகுருபரன், தன் தாயையும் தந்தையும் நெருங்கி) குமர குருபரன் பாட்டு பல்லவி அம்மையே! அப்பா! முருகன் நம்மை ஆண்டான் அருமை - (அம்மை) (தாய் தந்தையர் எழுந்து வியந்து தழுவிக்கொண்டு தம் பிள்ளையின் வாயினின்று வருவதை உற்றுக் கவனிக்கிறார்கள்.) அநுபல்லவி செம்மையாய்ச் சிவம் காட்டிச், சைவ சித்தாந்தம் அனைத்தும் காட்டி (அம்மை) சரணம் குமர குருபரன் என்றெனைக் கூவிக் கொண்ட தண்ணருள் என்மீது தூவி, தமிழை என்னரும் நாவினில் ஏவித் தான் மறைந்தானே வான் அளாவி (அம்மை) கவிராயர் : வாழ்ந்தோம். வாழ்ந்தோம். முருகப் பெருமான் திருவடி வாழ்க! நான் கண்டது கனவா? அன்று இந்த நிகழ்ச்சிகள் கனவுலகிலா நடந்தன. இல்லை! மழை இதோ! (ஒரு பக்கம் ஓடுகிறார்) ஆ! இதோ பட்ட மரங்களில், தளிரும் தழையும்! நீர் நிறைந்த குளம்! பெரிய பண்டாரம் சொன்னார் சைவம் ஒங்க ஒரு சமயக் குரவர் தோன்றினார் என்று! என் பிள்ளைதான்! (ஓடி வருகிறார் பிள்ளையிடம்) குமரகுருபரன் : அப்பா! திருக்கோயிலுக்குச் செல்வோம். (போகுதல்) V திருக்கோயில் (பலரும் வந்து கூறுகின்றார்கள்.) 1 வது ஆள் : ஐந்து வயதுப் பிள்ளை, அருட்பாட்டுப் பாடுகின்ற தாமே. 2 வது ஆள் : ஊமையாயிருந்த பிள்ளை. 3 வது ஆள் : ஊமைப் பிள்ளைக்கு முருகன் உளம் இரங்கினான். அதுமட்டுமல்ல. சைவம் தழைக்கப் பாடும் திறமை அருள் செய்துவிட்டான். (தந்தை தாயுடன், குமர குருபரன் ஜீவ தம்பத்தின் முன்னின்று மூலவரை வணங்கிக் கோயில் புகுந்து மூலவர் முன் நின்று பாடுகிறார். அக் குமர குருபரன் தந்தை, ஓலையில் எழுத்தாணியால் எழுதுகிறார்.) திருச்செந்தூர்க் கந்தர் கலி வெண்பா (இசையுடன் பாடுகிறார்) பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு நாதமும் நாதாந்த முடிவும் நவை தீர்ந்த போதமும் காணாத போதமுமாய் - ஆதி கடு அந்தம் கடந்த நித்தியானந்த போதமாய்ப் பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த குறியும் குணமும் ஒரு கோலமுமற்றேங்கும் செறியும் பரமசிவமாய் ... ... ... சண்முக விலாசம் பெரிய பண்டாரம் : மெய்யன்பர்களே! அறிவுக்கு அநாதியாய் ஐந் தொழிற்கும் அப்பாலாய் மனத்திற்கு எட்டாதவன் அத் தனிமுதற் கடவுளாகிய சிவபெருமான் ... பாருங்கள், மக்கள், சைவ நன்னெறிச் செல்ல வேண்டுமே என்ற பேரருளால் குருபரனாரைப் புவிக்குத் தருகிறார். அடிகள் திருக்கோயில் சென்றாரோ? அங்கே என்ன செய்கிறார்? ஒருவன் : சாமி! கலிவெண்பா அருளிச் செய்கின்றார்கள். பெரிய பண்டாரம் : விரைந்து போகவேண்டும். வாருங்கள் வாருங்கள். திருக்கோயில் குமரகுருபரன் : (முன் தொடர்ச்சியாக) ஆயும் பழய அடியா ருடன் கூட்டித் தோயும் பரயோகம் துய்ப்பித்துச் - சேய கடியேற்கும் பூங்கமலக்கால் காட்டி ஆட்கொண்டு அடியேற்கு முன்னின்றருள். (வணங்குகிறார். அனைவரும் வணங்குகிறார்கள். அங்கு வந்த பெரிய பண்டாரம் முதலிய திருக் கூட்டமும் வணக்கம் புரிகின்றது) சிவகாமி : அப்பா! நம் ஊருக்குப் போகலாமா? கவிராயர் : ஆம் அப்பா! நாம் அடைந்த இந்தப் பெரு மகிழ்ச்சியை நம்முறவினரும், ஊராரும் அறிய வேண்டாமா? குமரகுருபரன் : (அவ்வாறே செல்வோம்) (மாட்டு வண்டி, அனைவரையும் ஏற்றிக் கொண்டு கைலாசபுரம் ஓடுகிறது) கைலாசபுரத்தில், கவிராயர் வீடு (கூடத்தில் குமரகுருபரன் உயர்ந்த மணையில் உட்கார்ந் திருக்க, அவனுக்கெதிரில் ஒரு சாய்வுப் பெட்டி இருக்கிறது. ஏடுகள், எழுத்தாணி அதன் மேல் உள்ளன. ஒருபுறம் விபூதி மடக்கு) வீட்டின் முன்புறம் கவிராயர் உட்கார்ந்திருக் கிறார். சிவகாமி ஒருபுறம் நின்றிருக்கிறாள். சுற்றத்தினரும். அண்டை அயலினரும் வருகின் றார்கள். வீராசாமிக் கவிராயர் வருகிறார்.) கவிராயர் : வாருங்கள்! வாருங்கள்!! வீராசாமி கவிராயர் : நான் எல்லாவற்றையும் கேள்விப் பட்டேன். மிக்க மகிழ்ச்சி! (பிள்ளை எதிரில் சென்று) முருகன் அருள் பாலித்தான் போலும்! மிக்க மகிழ்ச்சி! சைவத்திற்கோர் வெற்றி! திருவருள் திருவருள்! குமரகுருபரன் : என்னையும் ஒரு பொருளாய் எண்ணித் தன் னருளைத் தந்து போனான்! என் கடனும் இன்ன தென்று குறித்தான் முருகன். அவனருள் வாழ்க! (வந்தார் அனைவரும் குருபரனை வணங்கியும் வாழ்த்தியும் போகிறார்கள்) சண்முக சிகாமணிக் கவிராயர்க்கு வாய்த்த புதுப் புகழ். (வீட்டில் சண்முகக் கவிராயரும், வீராசாமிக் கவிராயரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.) சண்முகக் கவிராயர்: நம் பிள்ளை குமரகுருபரனுக்கு ஓய்வு சிறிதும் இல்லை. அக்கம் பக்கத்தாரும். அண்டை அயல் உள்ளாரும் பிள்ளையைத் தரிசனம் செய்ய வருகிறார்கள். எப்போதும் பாடியதை ஏட்டில் வரைந்தபடி இருக்கிறான். வீராசாமிக் கவிராயர்: அவனருள் பெற்றவர் அவன் தாள் மறப்பரோ? அன்றியும் குமரகுருபரன் உலகில் அவதரித்தது சைவத்தை நிலைநிறுத்த அல்லவா? இதென்ன வெட்கக் கேடாய் இருக்கிறது. அவனை அனை வரும் தொந்தரவு செய்யும்படி விடலாமோ? (முத்தப்பரும், அவர் நண்பர் நடேசனும் வருகிறார்கள்) சண்முகக் கவிராயர் : வருக! மைத்துனரே! முத்தப்பர் : (உட்கார்ந்து) என்ன செய்தி? குமரகுருபரன் என்ன செய்கிறான்? சண்முகக் கவிராயர் : சதா கடவுள் கவிதை! முத்தப்பர் : நான் ஒரு காரியமாக வந்தேன். கவிராயர் : என்ன? முத்தப்பர் : எனக்கும் வயதாகி விட்டது. நம் வீட்டிலும் நம் பெண்ணுக்குத் திருமணம் செய்து கண்ணால் பார்த்துவிட வேண்டும் என்ற கவலை. கவிராயர் : இருக்குமல்லவா? தங்கள் பெண்ணுக்கு என்ன வயதாகிறது? முத்தப்பர் : ஏன் நடேசா! கிட்டத்தட்ட ஐந்து ஆகவில்லை. நடேசன் : ஓ! தாரண வருஷம் பங்குனி மாசம் பிறந்தது, சர்வசித்து முடியப் போகிறது. முடிந்தால், விரோதி வராமலா இருந்து விடும். தாரண வருஷத்தையும் சேர்த்துக்கொண்டு இனிமேல் வரப்போகும் விரோதி யையும் கூட்டிக் கொண்டால் ஐந்து ஆகிறது. அதற்கு மேலும் சொல்லலாம் அல்லவா? வீராசாமி கவிராயர் : அப்படியானால் பெண்ணுக்கு மூன்று வயதாகிறது. தாரண பங்குனி என்றார் தாரண போயிற்று. பார்த்திப, விய, சர்வசித்து! சர்வதாரி, சித்திரை மாசந்தானே இது! கவிராயர் : இருக்கட்டுமே! ஐந்து ஆகிறது! ஏன் மைத்துனரே! இதற்குள் திருமணம் ஏன்? கொஞ்சம் போகட்டுமே. முத்தப்பர் : வயதாகிறதே. கவிராயர் : அப்படி என்ன ஆகிவிட்டது? முத்தப்பர் : நாற்பது ஆகி விடவில்லை? வீராசாமி கவிராயர் : இது அதிகமா? நடேசன் : சாகக்கூடிய வயதா, இது? முத்தப்பர் : பின் என்ன? நடேசன் : இல்லை அய்யா, இன்னும் நாள் இருக்கிறது. முத்தப்பர் : இல்லை ஆகிவிட்டது. நடேசன் : நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வீராசாமி : சாகக் கூடிய வயதில்லை. முத்தப்பர் : அப்படிச் சொல்லாதீர்கள்! மேலும் ஒரு நாளைக்கு இருக்கும் உடம்பு மறுநாளைக்கு இல்லை எனக்கு. எனக்கென்னமோ சந்தேகமாய் இருக்கிறது. பெண்ணுக்கு ஒரு முடிச்சைப் போட்டுப் பார்த்து விட்டா போதும். அதற்காகத் தான் அடுத்த வாரத்தில் முகூர்த்த நாள் இருக்கிறது. என்ன சொல்லுகிறீர் மச்சான்? நடேசன் : அப்படி ஒன்றுமில்லை. நீங்கள் இன்னும் ஐம்பது ஆண்டு இருப்பீர்கள். இதற்குள் திருமணமாவது காரியமாவது? வீராசாமி : நீங்கள் கோபிக்கவேண்டாம். உங்கள் குழந்தை அரும்பு; பூக்க வேண்டும். பூத்த பின் மணம்! அதுதான் தமிழர் திருமணம். குழந்தை மணம் தமிழர்கட்கு ஏற்றதல்ல. அறிவும் ஒப்பாது. கவிராயர் : யோசித்துச் சொல்கிறேன் மைத்துனரே! முத்தப்பர் : நல்லது. அப்படித்தான் செய். இந்த வாரத்தில் முகூர்த்த நாள் இருக்கிறது. கவிராயர் : நல்லது நீங்கள் இருந்து சாப்பிட்டுப் போவதுதானே? நடேசன் : பின்னென்ன அவர் இப்போதே போக வேண்டும் என்றா சொல்லுகிறார். அவர் ஒட்டுகிறார் நீர் வெட்டுகிறீரே? கவிராயர் : அப்படி ஒன்றுமில்லை. (திருக்கோயிற் பிள்ளை வருகிறார்) வருக! அண்ணா. மெதுவாக வாருங்கள். (திருக் கோயிற்பிள்ளை தடியை எதிரில் சாத்தி மெதுவாக உட்காருகிறார்) கவிராயர் : என்னசேதி? ஏன் நீங்கள் இந்தத் தள்ளாத காலத் தில் நடந்து வரவேண்டும்? என்னைக் கூப்பிட்டு அனுப்பினால் நான் வர மாட்டேனா? திருக்கோயிற்பிள்ளை : அப்படியா! முருகன் அருள் பெற்ற உன்னை நானல்லவா வந்து பார்க்கவேண்டும். ஒன்றுமில்லை. ஏதோ என் வாழ்நாளில் அதிகமாகச் சம்பாதித்து விட்டேன். சம்பாதித்து என்ன பயன்? பிள்ளை யில்லாத பாவிதானே. அதற்காகத்தான் குமர குருபரன் இருக்கானே. நடேசன் : கொள்ளிவைக்கச் சொல்லாதீர்கள். திருக்கோயிற்பிள்ளை : தத்து எடுத்துக் கொண்டால் என் சொத்துக்கள் எல்லாம் அவனுக்குத்தானே? நடேசன் : நல்லா. ஆமாம். உறவினரில் வேறுயாரும் இல்லையா? திருக்கோயிற்பிள்ளை : முருகன் அருள்பெற்ற பிள்ளை! நான் போகும் கதியும் நல்ல கதியாக இருக்கும்! கவிராயர் : யோசிக்கலாம். இருந்து சாப்பிட்டுப் போகலாம். நடேசன் : யார் வேண்டாம் என்கிறார்கள்.? திருக்கோயிற்பிள்ளை : இருக்கிறேன். (இருக்கிறார்) (கூடலிங்கம் பிள்ளை, குஞ்சிதபாதம்பிள்ளை ஆகிய இருவர் வந்து விடுகிறார்கள்.) கவிராயர் : வருக! அமருங்கள். என்ன செய்தி? திருக்கோயிற்பிள்ளை : ஒரு முக்கிய செய்தி! நடேசன் : அதைத்தான் கேட்கிறார்கள். கூடலிங்கம் பிள்ளை : ஒன்றுமில்லை... ... நடேசன் : ஒன்றுமில்லாவிட்டால் போவதுதானே கூடலிங்கம் பிள்ளை : உண்டு. நடேசன் : சொல்றது. கூடலிங்கம் பிள்ளை : நம்ம ஊர்லே ஒரு கோயில் இருக்கு. கொஞ்சம் போனால் தண்டவேணும். அதற்குக் குமரகுரு பரரும், ஒரு கையெழுத்துப் போடணும், அவ் வளவுதான். நடேசன் : எதில் கையெழுத்து? கூடலிங்கம் பிள்ளை : தரும கைங்கரியம் செய்யும்படி கேக்கிறவர் களில் இவரும் ஒருவராக. நடேசன் : பொருள் எதற்காக? கூடலிங்கம் பிள்ளை : கும்பாபிஷேகத்திற்கு நடேசன் : போன மாசந்தான் கும்பாபிஷேகம் நடந்ததே. கூடலிங்கம் பிள்ளை : கும்பாபிஷேகமில்லை. ஒரு மண்டபம் போடணும். நடேசன் : மண்படம் போட்டிருக்கே. கூடலிங்கம் பிள்ளை : மண்டபம் இல்லை தேர் செய்யணும். நடேசன் : தேர்தான் இருக்கே கூடலிங்கம் பிள்ளை : பெரிய தேர் இருக்குது, அம்மன் தேர். நடேசன் : அம்மன் தேர் மட்டும் போதுமா? கூடலிங்கம் பிள்ளை : பிள்ளைத் தேரும் இருக்கலாம். நடேசன் : என்ன கோயில் அது? கூடலிங்கம் பிள்ளை : மாரியாத்தா கோயில். நடேசன் : அட இழவே! உமக்கு என்ன வேலை? கூடலிங்கம் பிள்ளை : ஒரு வேலையும் இல்லீங்களே. ஜீவனத்துக்கு ரொம்ப கஷ்டங்க! பிள்ளை பேர் இருந்தா பணம் ரொம்ப சேரும். நடேசன் : எந்தப் பிள்ளை? கூடலிங்கம் பிள்ளை : குமரகுருபரன்! நடேசன் : அவர் பேர் இருந்தா, பணம் எப்படிச் சேரும்? கூடலிங்கம் பிள்ளை : எங்க பார்த்தாலும் அவர் பேர்தானே அடிபடுகிறது. நடேசன் : என்னவென்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்? கூடலிங்கம் பிள்ளை : குமரகுருபரர் ஊமையாய் இருந்தார். நேரே முருகன் வந்து அருள் செய்தார் என்று. நடேசன் : முருகன் அருள் செய்தார். அந்த அருளைப் பணம் காண உபயோகப்படுத்தலாம் என்பது உம் கருத்தா? நன்றாயிருக்கிறதல்லவா உங்கள் கருத்து? (இதற்குள் குமரகுருபரர் அங்கு வருகிறார். அங் கிருந்தோர் முகம் அனைத்தும் மகிழ்ச்சி! அனை வரும் எழுந்து நிற்கிறார்கள், கைகூப்பியபடி! தாயும் அங்கு வருகிறாள்) குமரகுருபரன் : அம்மையே அப்பா. நம்மூர்க் கைலாச நாதத்தைத் தரிசித்தேன். அவர் மேற்பாடினேன். மகிழ்ந்தேன். மற்றும் நான் தலங்கள் தோறும் சென்று, தரிசனம் செய்ய எண்ணுகிறேன். சென்று வருகின்றேன். விடை கொடுக்க வேண்டுகிறேன். (இதற்குள் திருச்செந்தூர்ப் பெரிய பண்டாரம் முதலிய பல பண்டாரங்களும் வந்து கை கூப்பி நிற்கிறார்கள்.) (தந்தை) சண்முகக் கவிராயர்: வெளிச்செல்ல முடிவு செய்து விட்டாயா? எப்போது திரும்புவது? இதோ பார் உன் திருமணத்தைக் கோரி வந்திருக்கிறார்கள். நீ இல்லறம் நடத்த வேண்டும் என்பது என் கோரிக்கை! உன் அன்னையும் அப்படியே நினைக்கிறாள். உன் கருத்தும் அதுதானே? குமரகுருபரன் : அம்மையே! அப்பா! என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன். நில்லாததை நிலை என்று நினைப்பது பிழையல்லவா? இளமை நீரிற் குமிழி! செல்வம் அந்த நீரின் அலை யாகும். உடம்போ நீர் மேல் எழுத்து! ஆதலினால் உலக நன்மைக் காக விரைந்து பாடுபடவேண்டும். அதற்காக அவனருளைப் பெறவேண்டும். சிவநெறி பற்றினாலன்றி இவ்வுலகு உய்யுமோ? சைவம் தழைக்க, தமிழ் தழைக்க, இவ் வையம் தழைக்க நான் தொண்டு செய்ய வேண்டும் என்பதே எம் பெருமான் எனக்கிட்ட பணியாகும்! இதற்குத் துறவே தக்கது! என்னை ஈன்றீர்கள். முருகன் அருளுக்கு இலக்கானீர்கள். இனி, நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று, நெடிய வேல் முருக னுக்கு என்னை, அடியனாக்குங்கள்! தண்ட பாணிக்கு என்னைத் தொண்டனாக்குங்கள்! சைவத் தொண்டு செய்வோனாக்குங்கள். தொல் லுலகுக் குழைக்கும் தொழும்பனாக்குங்கள்! இஃ தொன்றே தங்களிடம் வேண்டுகிறேன். (தாய்) சிவகாமி : அப்பா குழந்தாய்! எப்போது மீண்டும் வருவாய்? குமரகுருபரன் : இடையிடையே வந்து தங்களைக் காண்பேன் அன்னையே! (தந்தை) கவிராயர் : துறவு! ... குழந்தாய், நான் சொல்வதொன்று மில்லை. துறவு! ... ... குமரகுருபரன் : (வசனமாக) போற்றத் தகுந்ததைத் தூற்றுகின்றீர் கள் தந்தையே! மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே. இனமான சுற்றம் மயான மட்டே. வழிக்கேது துணை? தினையாமளவு எள்ளளவேனும் முன்பு செய்த தவம் தனையாள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே. (தந்தை) கவிராயர் : அப்பனே! நான் என்ன சொல்ல முடியும்? குமரகுருபரன் : நான் சென்று வருகிறேன். நடேசன் : அடிகளே! உலகம் உய்ய வேண்டும். உங்கள் துறவு நன்று. முத்தப்பர் : என் மகளைத் திருமணம் புரிந்து இல்லறத்தை நடத்த வேண்டும். திருக்கோயிற்பிள்ளை : உன்னை, நான் தத்துப்பிள்ளையாக்க எண்ணு கின்றேன். குமரகுருபரன் : முருகன் எனக்கிட்ட கட்டளை வேறு! நான் சென்று வருகின்றேன். (குருபரன் போகிறான். பண்டாரங்கள் தலைமீது கைகூப்பி உடன் தொடர்கின்றார்கள்) முத்தப்பர் : நடேசா! என்ன இப்படி முடிந்ததே? நடேசன் : திருமணம் செய்து கண்ணால் பார்க்க வேண்டும். என்று நினைத்தீர். சீக்கிரம் செத்துப் போகப் போவதாகவும் சொன்னீர்! பாவம்! முத்தப்பர் : ஆம் ஐயா. நடேசன் : சும்மா சாவுங்க, அதனாலென்ன? திருக்கோயிற்பிள்ளை : என்ன நடேசா! தத்து எடுக்க நினைத்தேன், கொள்ளி வைக்கப் பிள்ளை வேண்டுமே என்று. நடேசன் : சும்மா சாவுங்க! கூடலிங்கம்பிள்ளை : பிழைப்புக்கு வழியில்லை. இவர் இப்படிச் செய்து விட்டார். நடேசன் : சும்மா சாவுங்க! அதனாலென்ன! (அனைவரும் போகிறார்கள்) பல ஆண்டுகளுக்கு பின் ஒரு நாள் மதுரை (குமருகுருபரர், மற்றும் பரிசனங்கள் சூழச் சிவிகையில் ஏறி மதுரையை அணுகுகிறார். கோபுரம் தெரிகிறது. குருபரர் சிவிகையை விட்டு இறங்குகிறார்) குமரகுருபரர் துதி பாட்டு பல்லவி கோபுரம் காணப் பெற்றேன் - மதுரைக் கோபுரம் காணப் பெற்றேன் (மதுரைக் கோபுர) அனுபல்லவி மாபுரம் மூன்றும் எரித்தவன் மீனாட்சி மணவாளன் சொக்கேசன் அமர்ந்திருக்கும் திருக் (கோபுரம் காணப் பெற்றேன்) சரணம் பாவம் தீரும்! பற்றுக்கள் தீரும்! பழவினை அனைத்தும் அடியோடு தீரும்! கோபமும் அகந்தையும், முற்றும் தீரும்! கொழுக்கும் அஞ்ஞான இருள் தீரும்! மாபெரும் ஞானச் சுடரினை எழுப்பி வாழ்விக்கும் அருட் குருநாதனை அளிக்கும் (கோபுர...) (அனைவரும் கும்பிட்ட கையோடு மதுரைக்குள் நுழைகிறார்கள். அங்கயற்கண்ணி சந்நிதிக் கெதிரில் அமைந்த திருமடத்தின் அருகில், குருபரர் திருக்கூட்டம் நெருங்க; மடத்தின் பெரியார் எதிர் கொள்கின்றார்கள்) பெரியார், குமரகுருபரரை வீழ்ந்து பணிகிறார்) பெரியார் : அடிகள், இத்திருமடத்தில் எழுந்தருளலாம். குமரகுருபரன் : நன்று. (அனைவரும் மடத்துள் செல்கின்றனர்) அன்றிரவு. (திருமலை நாய்க்க மன்னன் துயில்கின்றான். அவன் கனவில் அங்கயற் கண்ணி (மீனாட்சி) தோன்றுகிறாள்) அங்கயற்கண்ணி: மன்னா! மதுரையில் என் சந்நிதிக்கெதிரில், அமைந்த மடத்தில், என் பிள்ளை குமரகுருபரன் வந்துள்ளான் அறிவாயோ? மன்னா! அவன் என்மீது மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழ் என ஒரு செந்தமிழ் நூலை இயற்றியுள்ளான். அதை அரங் கேற்றுவிப்பாய். (அம்மை, மறைதல்) (அரசன், திடுக்கிட்டு எழுதல்) திருமலை மன்னன் : யாரங்கே காவலர்? காவலன் : அடியேன். திருமலை : அமைச்சரை அழைத்துவா! புலவரை அழை! விரைவில்! (அரசி துயில் நீத்து எழுந்து வருகிறாள்) அரசி : என்ன புதுமை மணவாளரே? திருமலை : புதுமை! ஆம். புதுமையிலும் புதுமையென்பேன்! கடவுட் பதுமை! அம்மை வந்தாள்! எனக்கொன்று அறிவித்தாள்! அம்மையின் சந்நிதி மடத்தில் ஒரு பெரியார் வந்திருக்கி றாராம்! அவரை, அம்மை என் பிள்ளையென்று கூறினாள். என்னே! வியப்பு! மதுரை வாழ்ந்ததடி! மக்கள் வாழ்ந்தாரடி! அப்பெரியாரைப் பொழுது விடிந்ததும், எதிர் கொண்டழைத்துச் சிறப்புச் செய்து தொழுது, அவரால் பாடப்பெற்ற மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழை அரங்கேற்றச் செய்ய வேண்டும் பெண்ணே! இது அவள் இட்ட கட்டளையடி! நானா சொல்லுகிறேன்? அரசி : ஐயையோ! அம்மையா வந்தாள் கனவில்? அவள்தானா சொன்னாள்? (அமைச்சர் புலவர் வருகிறார்கள். வணங்கி நிற்கிறார்கள்) திருமலையரசன் : அமைச்சரே! புலவரே! உங்கள் அலுவலின் திறமை நன்றாயிருக்கிறது! நம் அம்மன் சந்நிதிக் கெதிரி லுள்ள மடத்தில் வந்திறங்கி இருப்பவர் யார்? அமைச்சர் : அரசே! மன்னிக்க வேண்டும். இன்றுதான் அறிந் தோம். குமருகுருபரர் மடத்தில் எழுந்தருளி யுள்ளார் என்பதை. குமரகுருபரர் 5 வயது வரைக்கும் ஊமையா யிருந்தாராம். முருகன் அருளால் வாய் பெற்றார்! அருளும் பெற்றார்! சைவம் பரப்பும் பேறு பெற்றார்! அவர், தம் கைலாசபுரத்திலிருந்து வெகு நாட்களின் முன்பே இல்லம் துறந்து, திருநெல் வேலி, திருக்குற்றாலம், திருச் சுழியல் திருக்கானப் பேர், திருவாடானை, திருப்புனவாயில், திருக் கொடுங்குன்றம், திருப்புவனம், திருப்புத்தூர், திருப்பெருந்துரை, திருவிராமேச்சுரம், திருப் பரங்குன்றம் முதலிய தலங்களை வணங்கி, திருப்பதிகம் பாடி, பல அற்புதங்கள் செய்து அரசர்களால் பெரு நிதியும் பெரும் பரிசுகளும் விருதுகளும் பெற்று நம் மதுரை வந்துள்ளார். அவருடன் திருக்கூட்டம் வந்துள்ளது. அரசன் : வையம், உய்யவும், சைவம் தழைக்கவும், ஐயன் திருவுளம் பற்றினான் போலும்! அவன் திரு விளையாட்டை யார் அறிவார்? அமைச்சரே! உடல் சிலிர்க்கிறது! இப்போதே ஏற்பாடு செய்வீர்! நாம் பரிவாரத்தோடு எதிர்கொண்டு அழைத்தல் வேண்டும். குமரகுருபரரைச் சுமந்துவர, முத்துச் சிவிகை அனுப்புக. சின்னம் பலவும் செலுத்துக. மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழ் என்னும் கடவுள் நூலைச் சுமந்துவர, நம் யானையை அனுப்புக! நகர்வலமாக அடிகளைச் சிறப்புடன் அழைக்க வேண்டும். தக்கபடி வரிசை குறை யாமல் அனைத்தையும் ஏற்பாடு செய்க! அடிகள், பிள்ளைத் தமிழை அரங்கேற்ற வேண்டும்; அரங்கு சிறப்புற அமையும்படி ஏற்பாடு செய்க! அமைச்சர் : நன்று வணக்கம். அரசன் : சென்று வருக. புலவர் : அரசே! வணக்கம்! அரசன் : கந்தப்புலவரே, நீரும் உடனிருந்து தக்கன புரிய வேண்டும். புலவர் : நன்று. நகர்வலம். (யானை மீது சுவடியும், முத்துச் சிவிகை மீது குமர குருபரரும் செல்ல, பரிசனங்களும் சின்னங்களும் செல்ல, அரசன் தன் பரிவாரத்துடன் சிவிகையில் எதிர் வந்தான், சிவிகை விட்டிறங்கி அடிகளையும் தமிழையும் தொழுது அடிகள் தந்த திருநீறு பெற்றுக் கூட்டத்தோடு நடந்து செல்கிறான். பெருங்கூட்டத்தின் பின்னணியில் பெரிய பண்டாரத்தின் சிறு கூட்டமும், அதையடுத்துக் கந்தப் புலவரின் கூட்டமும் செல்கின்றன) பெரிய பண்டாரம் : நீங்கள் தான் அரச சபையைச் சார்ந்த புலவரோ? கந்தப் புலவர் : ஆம். இதோ இவர்கள் எல்லாம் நம் மாணவர்கள். (மாணவர் கூட்டம் சிறிது தூரத்தில் வருகிறது.) பெரிய பண்டாரம் : குமரகுருபர அடிகள் பெருமை எப்படி? கந்தப் புலவர் : அடடா? தெய்வப் புலமையல்லவா? இதோ வந்து விடுகிறேன். (மாணவர் கூட்டத்தில் கலந்து கொள்ளுகிறார். மாணவரில் ஒருவன் பெயர் சோமு) சோமு : ஐயா! தெய்வப் புலவராமே அடிகள்? கந்தப் புலவர் : உம்! அதெல்லாம் சும்மா. நம்மிடம் யமகத்தில் நின்று பார்க்கட்டும். (இதற்குள், பெரிய பண்டாரம் கைகாட்டி அழைக்க, அங்கே ஓடுகிறார்) பெரிய பண்டாரம் : சாமி செய்திருக்கும் கைலைக் கலம்பகத்தைப் பார்த்ததுண்டா? கந்தப் புலவர் : ஓ! நன்றாக! ஒவ்வொரு எழுத்தும் ஒரு லக்ஷம் பெறுமே. இதோ வந்து விடுகிறேன். சோமு : அடிகள், அநேக நூல்கள் செய்திருக்கிறாராமே நீங்கள் பார்த்தீர்களோ? கந்தப் புலவர் : பார்த்தேன். ஒரு காசு பெறாது. குப்பை. (பெரிய பண்டாரம் அழைக்கிறார்) பெரிய பண்டாரம் : அடிகளின் கவிதை நயம் எப்படி? கந்தப் புலவர் : அமுதம்! தேன்! பால்! அடடா! என்ன போங்கள். இதோ வந்து விடுகிறேன். சோமு : அடிகளின் கவிதையில் ஏதாகிலும் சுவை? கந்தப் புலவர் : உம். எனக்கென்னமோ அதைப் படித்தால் எட்டிக் காய் போலிருக்கிறது. நம்முடைய அங்கயற் கண்ணி மாலையைப் பார்த்தீர்களல்லவா. அதற்கு எந்த மூலை இந்த அடிகளுடைய நூற்கள்! சும்மா. (அங்கே போகிறார்) பெரிய பண்டாரம் : பக்திச் சுவை எப்படி? கந்தப் புலவர் : பரமானந்தம்! பரமானந்தம்! பெரிய பண்டாரம் : கற்பனை எப்படி? கந்தப் புலவர் : கடல்! (மாணவர் அருகில்) சோமு : பக்திச் சுவை நன்றாய் அமைந்திருக்கிறதா? கந்தப் புலவர் : படுமோசம்! சோமு : கற்பனை? கந்தப் புலவர் : கடுகளவு? உம்! கிடையாது. (பெரிய பண்டாரத்தண்டை) பெரிய பண்டாரம் : சைவ சித்தாந்த உண்மைகளை அடிகள் எப்படி விளக்கியிருக்கிறார் பார்த்தீர்களா? (இதற்குள், சின்ன பண்டாரமும், சோமுவும் ஒருபுறம் சந்திக்கிறார்கள்.) கந்தப் புலவர் : அபாரம்! (பெரிய பண்டாரமும், கந்தப் புலவரும் பேசிக் கொண்டே போகிறார்கள். ஒரு புறமாகச் சின்ன பண்டாரமும், சோமுவும் பேசிக்கொண்டே போகிறார்கள்.) சின்ன பண்டாரம் : அடிகள் பெருமை எப்படி? சோமு : உம். என்ன பெருமை? ஒன்றுமில்லை. சின்ன பண்டாரம் : என்ன ... ... கைலைக் கலம்பகம் பார்த்ததுண்டா? சோமு : காசு பெறாது! குப்பை! சின்ன பண்டாரம் : கவிதை நயம் எப்படி? சோமு : எட்டிக் காய்தான். சின்ன பண்டாரம் : பக்திச் சுவை? சோமு : படுமோசம். சின்ன பண்டாரம் : கற்பனை? சோமு : கடுகளவு... உம். கிடையாது! எங்கள் ஆசிரிய ருக்கு அடிகள் எந்த மூலை? யமகத்தில் நிற்க முடியுமா அடிகள்? சின்ன பண்டாரம் : இதெல்லாம் உம்முடைய சொந்தக் கருத்தா? மற்றவர் சொல்லக் கேள்வியா? (இங்கு இதற்குள், பெரிய பண்டாரமும், கந்தப் புலவரும் நெருங்குகிறார்கள்.) சோமு : இதோ இவர்கள் எங்கள் ஆசிரியர். இவர்கள் தாம் சொன்னார் கள். சின்ன பண்டாரம் : புலவரே! உம்மிடம் அடிகளைப் பற்றிச் சில கேள்விகள்! உங்கள் மாணவர்களின் எதிரிலேயே கேட்கவேண்டும். குமரகுருபரனார் பெருமை எப்படி? கந்தப் புலவர் : பிறகு பேசிக் கொள்ளலாமே. பெரிய பண்டாரம் : இப்போது பேசினாலென்ன? சொல்லுமே. கந்தப் புலவர் : நடந்து பேசும் விஷயமா இது? சின்ன பண்டாரம் : இந்நேரம் எப்படிப் பேசினோம்? கந்தப் புலவர் : எதை, எப்போது, எப்படிச் பேச வேண்டும் என்று ஒரு வரம்பு இருக்கிறதையா. (புலவரின் இடது பக்கம் மாணவர் கூட்டமும் வலது பக்கம் பெரிய பண்டாரத்தின் கூட்டமுமாக நடந்து செல்லுகிறார்கள்.) சின்ன பண்டாரம் : அடிகளைப் பற்றிய ஒவ்வொன்றையும் எங்க ளிடம் மேன்மையாகவும், உம் மாணவரிடம் தாழ்மையாகவும் பேசியிருக்கிறீர்கள். கந்தப் புலவர் : எப்படி? சின்ன பண்டாரம் : அடிகள் பெருமை மிகப்பெரியதல்லவா? கந்தப் புலவர் : அதைத்தானே நான் சொன்னேன். (சின்ன பண்டாரம் பக்கம் சுட்டி) சோமு : அடிகள் பெருமை சாதாரணம் அல்லவா? (இதற்குக் கந்தப் புலவர் சின்ன பண்டாரத்தின் பக்கம் தன் கையைச் சுட்டிக் காட்டி அதைத்தானே நானும் சொன்னேன் என்கிறார். சின்ன பண்டா ரத்தை நோக்கிக் கையால் சுட்டுவதைச் சோமு முதலியவர்கள் பார்க்கவில்லை. மேலும் இப்படியே இருதரப்புக் கேள்விகட்கும் ஒரே பதிலைச் சொல்லித் தப்பித்துக் கொள்ளுகிறார்) சின்ன பண்டாரம் : அடிகளின், கைலைக் கலம்பகம் மேலானதல்லவா? கந்தப் புலவர் : அதைத்தானே நான் சொன்னேன். சோமு : கைலைக் கலம்பகம் காசு பெறாதல்லவா? புலவர் : அதைத்தானே நான் சொன்னேன். சின்ன பண்டாரம் : அடிகளின் கவிதை நயம் மேலானதல்லவா? புலவர் : அதைத்தானே நான் சொன்னேன். சோமு : கவிதை மட்ட ரகமல்லவா? புலவர் : அதைத்தானே நான் சொன்னேன். சின்ன பண்டாரம் : பக்திச் சுவை பரமானந்தம் அல்லவா? புலவர் : அதைத்தானே நான் சொன்னேன். சோமு : பக்திச் சுவை என்ன இருக்கிறது அதில்? புலவர் : அதைத்தானே நான் சொன்னேன்... சின்ன பண்டாரம் : கற்பனை அபாரமல்லவா? புலவர் : அதைத்தானே நான் சொன்னேன். சோமு : கற்பனை இல்லையே. புலவர் : அதைத்தானே, நான் சொன்னேன். (இதனால், என்ன ஆயிற்று எனில், மாணவர் கட்கு ஆசிரியர் மேல் வருத்தம். ஏன்? பண்டாரத் திடம் மேன்மையாகவும், தம்மிடம் தாழ்மையாகவும் அடிகளைப் பற்றிக் கூறியதாக நினைத்ததால்) (மாணவர் மேல், பண்டாரங்கட்கு வருத்தம். ஏன்? கந்தப் புலவர், நம்மிடம் சொல்லியது போலவே மாணவரிடம் சொல்லியிருந்தும், மாணவர்கள் தாமே அடிகளைக் குறைவாகப் பேசியதாகவும், அதுவுமல்லாமல் தம் ஆசிரியர் மேல் பழி போடுவதாகவும் நினைத்ததால்) புலவர் : சரி, நீங்கள் வாருங்கள் வேலையிருக்கிறது. (என்று கூறித் தம் மாணவர்களைத் தனியாக ஒரு புறம் அழைத்துப் போகிறார்) சோமு : என்ன ஐயா! அவர்கள் கேட்பதற்கும் அதைத் தானே நான் சொன்னேன். என்கிறீர்கள். நான் கேட்பதற்கும் அதைத்தானே நான் சொன்னேன் என்கிறீர்களே? புலவர் : அதுதான் புலமை என்பது. சோமு : அங்கொரு பேச்சு இங்கொரு பேச்சா? புலவர் : அது தான் புலமை என்பது. சோமு : சொந்த அபிப்பிராயம் இருப்பதே இல்லை. புலவர் : அதுதானப்பா புலமை என்பது. நீங்கள் இப்படியே வீட்டுக்குப் போய் விடுங்கள். நான் பண்டாரத் தாரிடம் போக வேண்டும். சோமு : அவர்களிடம் இச்சகம் பேச வேண்டுமா? புலவர் : அது தானப்பா புலமை என்பது. போய் விடுங்கள். சோமு : வயிற்றுப் பிழைப்புத்தான் பெரிது. புலவர் : அதுதான் புலமை. போய் விடுங்கள். (மாணவர் ஒருபுறம் முணுமுணுத்துக் கொண்டே போகிறார்கள்) (பண்டாரங்களிடம் கந்தப் புலவர் நெருங்குகிறார்) பெரிய பண்டாரம் : அந்தப் பசங்கள் அடிகளை இவ்வளவு குறைவு படுத்திப் பேசுகிறார்களே. மேலும் நீங்கள் அப்படிச் சொல்லியதாக அல்லவா சொல்கிறார்கள். இப்படித்தானா மாணவர்களைப் பழக்குவது? புலவர் : அதுதான் புலமை என்பது. பெரிய பண்டாரம் : அவர்களை நீங்கள் கண்டித்துப் பேசவே இல்லை. புலவர் : அதுதான் புலமை என்பது. வேறென்ன? பெரிய பண்டாரம் : இதுவா புலமை? உமக்கு வெட்கம் கிட்கம் இல்லை. புலவர் : அது தான் புலமை என்பது. பெரிய பண்டாரம் : நன்றாய் இருக்கிறது. சின்ன பண்டாரம் : சபையை நெருங்கிவிட்டோம். அரங்கேற்று மண்டபம் (பேரவை பெருந்தவிசில் குமரகுருபரர், அதையடுத்து ஒரு தவிசில் அரசர் அமர்ந்திருக்கிறார். பெருமக்களும் பொது மக்களும் பெண்களும் நிறைந்திருக்கிறார்கள். அடிகளின் இருபுறமும் தூங்கா விளக்குகள்! அரசர்க்கும் அடிகட்கும் அருகில் பெரிய பண்டாரமும் அமைச்சனும் கட்டளைக்குக் காத்திருக்கிறார்கள்.) அரசர் : அடிகளே! (வணங்கி) சைவம் தழைக்கவும் தமிழ் வளர்ச்சி பெறவும் உலகமுய்யவும் தாங்கள் இயற்றியருளிய கடவுள் நூல் ஆகிய மீனாட்சி யம்மன் பிள்ளைத் தமிழை அரங்கேற்றி எம்மை உய்விக்குமாறு வேண்டுகிறேன். குமரகுருபரர் : அரசர் வெற்றி எய்துக! மக்கள் நலம் பெறுக! திருவருளை முன்னிட்டு நாம் இப்போது, மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழில், காப்புப் பருவத்தைத் தொடங்குகின்றோம். நாள் ஒன்றுக்கு ஒரு பருவமாக அரங்கேற்றுவோம். காப்புப் பருவம் : முதற் செய்யுள் மணி கொண்ட நெடுநேமி வலயம் சுமந்தாற்றம் மாசுணச் சூட்டும், மோட்டு மால் களிறுபிடர் வைத்த வளரொளி விமானத்து வாலுளை மடங்கல் தாங்கும் அணி கொண்ட பீடிகையின் அம்பொன்முடி முடி வைத்தென் ஐயனொடு வீற்றிருந்த அங்கயற் கண்ணமுதை மங்கையர்க் கரசியை எம் அம்மனை யை இனிது காக்கக் கணி கொண்ட தண்டுழாய்க் காடலைத் தோடு தேங் கலுழி பாய்ந் தளறு செய்யக் கழனி படு நடவையிற் கமலத் தணங் கரசொர் கையணை முகந்து செல்லப் பணி கொண்ட முடவுப் படப்பாய்ச் சுருட்டுப் பணைத் தோள் எருத் தலைப்பப் பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலே! (அனைவரும், மகிழ்ச்சியால் தலையசைத்துக் கை கூப்பிச் சிவ சிவ என்று முணுமுணுக்கிறார்கள்) ஆறாம் நாள் அரங்கேற்று : வருகைப் பருவம். அரசர் வெல்க! மக்கள், நலம் அடைக! இன்று, அம்மை வருகைப் பருவத்தைத் தொடங்கு கின்றோம். சுண்டுபடு குதலைப் பசுங்கிளி ... ... ... கயிலாயத்தில் கயிலாயத்தின் காட்சி! (கயிலாயத்தில், ஒருபால் சிவனும் பார்வதியும் - ஒருவர் கண்ணை ஒருவர் மூடியும், ஓடியும், ஆடியும், ஒருவரை ஒருவர் பிடித்தும் விளையாடுவதாக நிழலுருவம் தோன்றுகிறது.) ஒரு குரல் (பார்வதியினுடையது) கேட்கிறது. மணவாளரே, குமரகுருபரன் என்மீது பிள்ளைத் தமிழ் பாடி அரங்கேற்று கின்றான். இன்று ஆறாம் நாள் வருகைப் பருவம் தொடங்கி யிருக்கிறான். நான் அங்குச் சென்று வருகிறேன். அர்ச்சகனின் குழந்தையுருவத்தோடு. (ஆறு வயதுள்ள அர்ச்சகனின் பெண் வடிவம், சிரித்த முகத்துடன் தோன்றுகிறது. பெண் ஓடுகிறாள்.) (அரங்கேற்றும் பேரவையில் அனைவரும் கூடி யிருக்கிறார்கள். குருபரர் பாடிக்கொண்டிருக் கிறார். அர்ச்சகர் பெண், சபை நடுவில் புகுதல் கண்ட அரசன் மகிழ்ச்சியடைந்தவனாய்க் கை யேந்துகிறான்.) அரசர் : அர்ச்சகர் மகளா? ஓடி வா அம்மா! இங்கு வா. (குழந்தை அரசன் மடியில் சென்று அமர்கிறாள்.) குமரகுருபரர் : இனி ஒன்பதாம் பாட்டு: தொடுக்கும் கடவுட் பழம்பாடற் றொகையின் பயனே! நறைபூத்த துறைத் தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே! அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு ஏற்றும் விளக்கே! வளர்சிமைய இமயப் பொருப்பில் விளையாடும் இளமென்பிடியே! எறிதாங்கம் உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே! மதுகரம்வாய் மடுக்கும் குழற்காடு ஏந்தும் இளவஞ்சிக் கொடியே! வருகவே! மலையத்துவசன் பெற்ற பெருவாழ்வே! வருக வருகவே! (அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, அர்ச்சகன் மகள் தலையசைத்து மகிழ்ச்சி காட்டி - அரசன் மார்பில் திகழும் முத்துமாலையைக் கழற்றிக் குருபரர் கழுத்தில் இட்டு அபயக் கை காட்டி மறைகிறாள்.) சபையில் வியப்பு! குமரகுருபரர் : திருவருள்! அன்னை வந்தாள்! என்னை ஆண்டு போனாள்! அரசன் : அர்ச்சகன் மகள் அல்ல; அங்கயற்கண்ணி அம்மையே! (தலைமீது கை கூப்புதல்! கூட்டத்தினர் அனைவரும் அவ்வாறே) (அநேகர் தம்மில் பலவாறு பேசிக் கொள்ளு கிறார்கள்) 1 வது ஆண் : திடீரென்று மறைந்துவிட்டாள் அம்மை. 2 வது ஆண் : என்ன வியப்பு!(போகிறார்கள்) 3 வது ஆண் : இன்னும் என்ன நடக்கிறது சபையில் என்று பார்ப்போமே! 4 வது ஆண் : இனி, நாளைக்குத்தானே. 3 வது ஆண் : அந்தப் பாட்டுத்தான் மீனாட்சியம்மையை வரும் படியாய்ச் செய்தது. 4 வது ஆண் : தொடுக்கும் கடவுள் பழம்பாடல் தொகையின் பயனே!ச் சொச் சொச்சொ அடடாடாடாடா. அந்த அம்மாளை அப்படியே தூக்கி வந்து சபையிலே உட்டுட்டுது அந்தப் பாட்டு! 5 வது ஆண் : எனக்கு அப்போதே தெரியும், இவ அந்தப் பாப்பாரக் குட்டி இல்லே, இவ மீனாட்சியம்மா தான், இண்ணு! ஒண்ணு! செய்திருக்கணும் நான், அப்படியே அவகாலெ கெட்டியா புடிச்சிக் கணும். 6 வது ஆண் : புடிச்சிக்கினு? 5 வது ஆண் : ஒன்னெ, உடமாட்டேன் எனக்கு வழி சொல்லிட்டுப் போ. 6 வது ஆண் : எதுக்கு வழி? 5 வது ஆண் : எங்க வூட்டு எழச்ச கம்மலே, ஆர் எடுத்தது சொல் லிட்டுப் போ. 6 வது ஆண் : நீ தேடு ஒனக்கு அறிவில்லே? 5 வது ஆண் : உம், அதெல்லாம் கூடாது. எல்லாத்துக்கும் காரணம் நீதான். ஒன்னெயல்லாமெ ஒண்ணும் நடக்லே! (இதற்குள் இந்த சம்பாஷணைகளின் கடைசிப் பகுதியை மட்டும் கேட்ட ஒரு ஊர்ச்சாவடிக்காரன் (போலீகாரன்) வந்து 6வது ஆளைப் பிடித்துக் கொள்ளுகிறான்.) சாவடிக்காரன் : என்ன நடந்தது? நீ என்ன செய்தாய்? என்ன சொன்னாய் இப்போது? உன் வாயாலேயே நீ அகப்பட்டுக் கொண்டாய். சாட்சி வேண்டியதில்லை. விளக்கம் வேண்டியதில்லை. 6 வது ஆண் : நான் என்ன செய்தேன் ? (நடுக்கம்) ஐயையோ! நான் ஒண்ணும் செய்யிலியே. சாவடிக்காரன் : ஏன்காணும் உம் வீட்டுக் கம்மலை இவர்தானே எடுத்தார்? 5 வது ஆண் : ஆகக் கூடி, கம்மல் களவு போய் விட்டுது. சாவடிக்காரன் : இப்போது சொன்னீரே இவர் எடுத்ததாக! 5 வது ஆண் : இவர் எடுத்ததாகச் சொல்லலை. அந்தம்மாவே வுட்டிருக்கக் கூடாது. கம்மலுக்கு வழி சொல்லுண்ணு கேட்டிருக்கணு மிண்ணேன். சாவடிக்காரன் : அந்தம்மா ஆர்? காட்டு! ஏன் விட்டே. எங்கே இருக்கிறது அவ? சொல்லு. 5 வது ஆண் : நான் அந்த மீனாட்சியம்மாவையல்லவா சொன்னது. சாவடிக்காரன் : காட்டேன், அவளைத்தான்! 5 வது ஆண் : எப்படிக் காட்ட முடியும்! வந்தா, மறைஞ்சா. (இதற்குள், 7வது ஆண் ஒருவன் அங்கு வந்து நடப்பதைக் கவனித்து நிற்கிறான்) சாவடிக்காரன் : அவள் கறுப்பா? செவப்பா? 5 வது ஆண் : அர்ச்சவர் மவளாட்டம் இருந்தா. சாவடிக்காரன்: என்னா வயசிருக்கும்? 5 வது ஆண்: ஆறு வயசுதான் இருக்கும். சாவடிக்காரன்: அவளா கம்மலைத் திருடினாள்? (7 வது ஆண் கடகடவென்று சிரிக்கிறான்) சாவடிக்காரன் : அவள், திருடிக் கம்மலைத் தன் அப்பனிடம் கொடுத்து விட்டாளா? (7 வது ஆணின் 2 வது சிரிப்பு) 6 வது ஆண் : இங்கே ஆரும் கம்மலெ திருடலே அய்யா. சாவடிக்காரன் : நீங்கள் இரண்டு பேரும் குற்றவாளிகள். அந்த அர்ச்சகரும் அர்ச்சகரின் மகளும் குற்றவாளிகள்தான். சாவடிக்கு வாருங்கள். (7 வது ஆண் விழுந்து விழுந்து சிரிக்கிறான்) சாவடிக்காரன் : ஏன் காணும் சிரிக்கிறே? (7 வது ஆண் மேலும் மேலும் சிரிக்கிறான்) சாவடிக்காரன் : என்னாங்காணும் பரிகாசமா பண்ணுறே? 7 வது ஆண் : மீனாட்சியா திருடினா? (சிரிப்பு) கம்மலையா? (சிரிப்பு) அவளையா காட்டணும் (சிரிப்பு) சாவடிக்காரன் : மரியாதை கெட்டுவிடுவே. என்ன பரிகாசமா பண்ணுறே இன்னும் என்கிட்டே? (என்று 7வது ஆண் கையைப் பிடிக்கிறான்.) 7 வது ஆண் : சாக்ஷாத் பரமேவரி இருக்றாளே அவ, இப்போது குமரகுருபரர் பாடியபோது நம்ம அர்ச்சகர் மவளைப் போல் அங்கு வந்திருந்தா, ராஜா போட்டிருந்த முத்து மாலையெ கயட்டிக் குருபரர் கழுத்திலே மாட்டிவிட்டு மறைஞ்சிட்டா, சட்டுண்ணு... ... அதைப் பத்தி இவர்கள் பேசிக்கொண்டு வந்தார்கள். அப்போது, அவர் சொன்னார். அந்தம்மாவை நான் அப்படியே பிடிச்சி, என் ஊட்டுக் கம்மல் காணாம போனதை ஆப்பிடும் படி செய் இண்ணு சொல்லிருந்தா அவ வழி செய்திருப்பா இண்ணார். அதுக்கு இவர் பதில் சொன்னார். இதுதான் நடந்தது. இவர்கள் பேசினதை நீங்க தப்பா அர்த்தம் பண்ணிட்டிங்க. இவர்கள் பேசினதே முட்டாத்தனம். அதுக்குமேலே நீங்க சாவடிக்காரன் : சரி, எப்போது கம்மல் காணாமல் போனது? 6 வது ஆண் : அது காணாடிச்சி இரவது வருசம் ஆச்சி. சாவடிக்காரன் : அட! (போகிறான்) (7 வது ஆண் - சிரிப்பு) ஞான குரு மடத்தில், பெரிய பண்டாரம் முதலிய பல பண்டாரங்கள் ஒரு புறம் அடக்கவொடுக்கமாக உட்கார்ந்து அடிகள் திருவாக்கை எதிர்பார்த்தபடி இருக்கிறார்கள். குமர குருபரர் ஏதோ நினைப்பில் ஆழ்ந்திருக்கிறார். பல சித்திரப் பெட்டிகள் (நிதி நிறைந்தவை) பொன்னுடைகள் நிறைந்த மூட்டைகள், ஆபரணத் தட்டுக்கள், முத்துமாலைகளின் கோவைகள், பல்லக்கு, மகர தோரணம், சுருட்டிகள், குடைகள் அனைத்தையும் பல ஆட்கள் சுமந்து, ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருக்கிறார்கள். மடத்தில்! பெரிய பண்டாரம் எழுந்தோடி அவர்களுக்கு முறை கூறுகிறார். பெரிய பண்டாரம் : அடிகளின் திருமுன் வையுங்கள் தட்டுகளை, பெட்டிகளை. (இன்னும் வந்து கொண்டிருக்கின்றனர்) அடிகளே! (வணங்கி) அரசர் அனுப்பியவை! குமரகுருபரர் : (தலையசைக்கிறார்) நன்று (ஆழ்ந்த யோசனை) அடிகள் நினைவு முருகன், அன்று சண்முக விலாசத்தில் அருள் புரிய வந்த கோலம்! முருகன் சொல்லுகிறான்: அப்பா, உனக்கு எவனெதிரில் ஞானவாக்குத் தடைப் படுகிறதோ அவனே உனக்கு ஞானகுரு! குருபரன் பாட்டு பல்லவி இருள் நீக்கும் ஞான குருவே, நீர் எங்குள்ளீர்? எங்குள்ளீர்? (இருள்) அநுபல்லவி பொருள் நோக்கி உண்மை உணரும் புது நோக்கம் அருள் புரிந்திட (இருள்) சரணம் அருண் நோக்கம் பெறுவதெந்நாள்? அதுவன்றோ வீடடையும் நந்நாள்? பெருவாதை தீர்வதெந்நாள்? பிறவாத நெறி உரைத்திட (இருள்) (குமரகுருபரர் வான் நோக்கிக் கெஞ்சுகிறார். கண்ணீர் சொரிகிறார்.) அடிவைக்கும் இடமெல்லாம் கொடிய பள்ளத் தாக்குள்ள இந்த உலகில், நான் வீழ்ந்து படு முன்பே என்னைப் பாதுகாக்க வேண்டும் ஞான குருவே! மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னை நண்ணு முன்பே எனக்கு நல்லருள் பாலிப்பீர் அருட்குருவே! சற்குருவே! ஞான குருவே! (வெறிபிடித்தவர்போல், வானோக்கியபடி மடத்தைவிட்டு வெளிப்படுகிறார்) அரசர், அமைச்சர் எதிர்ப்படு கிறார்கள். அடிகளின் அடியில் வீழ்ந்து கெஞ்சுகிறார்கள். அரசன் : அடிகளே! மடத்திலேயே இவ்வூரிலேயே, இன்னும் சில நாள் எழுந்தருளியிருக்க வேண்டுகிறேன். குமரகுருபரர் : அரசே! உடல் நிச்சயமற்றது. உடல் விழுமுன் உறுதி தேட வேண்டும். இமைப்பொழுதும் வீணாக்கக் கூடாது. அருட் குரு சற்குருவைத் தேடிச் செல்லு கிறேன். விடைபெற்றுக் கொள்ளுகிறேன். (வானோக்கியபடி அடிகள் செல்லுகிறார்.பெரிய பண்டாரம் முதலியவர்கள் பொருள்களையெல்லாம் வாரி ஆனை மேலும் குதிரை மேலும் மாடுகள் மேலும் ஏற்றிக் கொண்டு பின் தொடர்கிறார்கள். குருபரர் பிள்ளை பல்லக்கு போகிறது.)  பொன்முடி - பூங்கோதை தாமரைக்குளம் (வள்ளியூர் என்பது தருமபுரத்திற்கருகில் உள்ளது. வள்ளி யூரை அடுத்துள்ளது குடி தண்ணீருதவும் தாமரைக்குளம். தாமரைக் குளத்தைச் சார்ந்ததோர் பூந்தோட்டமுமுண்டு, அதிகாலையில் ஆடவர் ஒரு புறமாகவும் பெண்டிர் ஒரு புறமாகவும் தாமரைக் குளத்தில் நீராடுகிறார்கள்; சில பெண்கள் தண்ணீர் எடுத்துப் போகிறார்கள். தானப்பன் என்னும் தாடிப் பண்டாரமும் தேனொப் பாள் என்னும் அவன் மனைவியும் ஒரு புறம் குடலையில் பூக் கொய்கிறார்கள். மற்றொருபுறம் தானப்பனின் நண்பனும் பூக் காரனுமாகிய சொக்கு என்பவனும் பூக்கொய்திருக்கிறான். தானப்பன் சொக்கு இருவருக்கும் வீடு தோறும் பூசைக்குப் பூப் பொட்டணம் தருவதுதான் அலுவல்) தானப்பன் (தாடி): அடி தேனொப்பாள்! என்னடி செய்கிறே? அந்தக் குவளைப் பூவே பறியேன். நாழி ஆவுதே வீட்டுப் பெண்கள் குளிச்சிட்டு இரண்டாந் தடவை தண்ணி எடுத்துப் போகும் நேரமாச்சே. தேனொப்பாள் : அந்தச் சொறட்டுக்கோலெ குடுங்களேன் எட்ட லையே. தானப்பன் (தாடி): இதோ தாரேன் அந்த அலரியைப் பறிச்சிக்கிட்டு. சொக்கு : அண்ணேன்! ஒரு பாட்டு பாடண்ணேன் நல்லதா. தானப்பன் : (உடனே) வாக்குண்டாம் நல்ல .. .. என்று சுதியில் கலக்காமல் உரத்திக் கத்தத் தொடங்குகிறான்.) தேனொப்பாள் : மாமா! நீங்க பாடாதிங்க, நிறுத்துங்க. அவுங்க பரியாசம் பண்றாங்க. ஒங்களுக்குத்தான் பாடத் தெரியாதே. ஏன் பாடறீங்க. சொக்கு : என்னா அண்ணி! அண்ணனை அப்டி சொல்லிட் டிங்க! நேத்து கோயில்லே பாடுனாரு பாருங்க, அங்கே இருந்தவங்க அல்லாம் தெவிச்சிப் புட்டாங்களா. தேனொப்பாள் : பாத்திங்களா? பரிகாசம் பண்றத்தே. நேத்து கோயில்லே பாடுனிங்களா? யார் பாடச் சொன்னது உங்களே. கேலி பண்றதுக்குச் சொன்னா. நீங்கள் நம்பிப் பாடிபுடுறீங்களே! தானப்பன் (தாடி): நீதான் என்னை முட்டாள் இண்ணு நெனச்சிருக்கே மத்தவங்க என்னமோ என்னெ பெரிசாத்தான் மதிக்கிறாங்க. (பாடுகிறார்) வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலராள் நோக் குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. (இதைப் பாடிக்கொண்டே இடது கையால் தாளமும் போட்டுக் கொண்டு பூப்பறித்தார்) சொக்கு : (கேலியாகச் சிரித்துக்கொண்டு) அடடா! என்ன இசை! தாளம் கொஞ்சமாவது தவறுகிறதா? அடுத்தாப் போல் நன்றி ஒருவருக்கு பாடண்ணேன். ஒரக்கப் பாடினா இன்னம் ரொம்ப நல்லா இருக்குமே? உங்களுக்குத் தான் வளமான சாரீரமாச்சே! நல்லா கத்துங்க அண்ணேன். தேனொப்பாள் : அப்பா! என்னா அவுரு, கழுதையா. சொக்கு : திட்டாதிங்கோ அண்ணி அண்ணாவை! ஓங் களுக்குக் கெடைக்கத்தக்கவரா அவர். அவரை, இப்படிக் கேலி பண்றிங்களே! தானப்பன் (தாடி): பொறத்தியான் காறித் துப்றாண்டி! துப்றான்!! (இதற்குள், அப்பக்கம் போய்க் கொண்டிருந்த முத்தன் பணப்பை விழுந்து விடுகிறது. முத்தன், அதைக் கவனிக்காமலே போகிறான். பணப்பை விழுந்ததைத் தானப்பன் அறிந்து ஓடிவந்து அதை எடுத்துத் தன் மடியில் வைத்து மறைத்துக் கொள்ளுகிறான். பாடுகிறான்.) நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டாம் - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால் தேனொப்பாள் : பங்கம்! பங்கம்!! தானப்பன் (தாடி): இங்கே வாடி (என்று, கைகாட்டித் தனியே அழைக்கத் தேனொப்பாள் தனியே வருகிறாள். தானப்பன், காதில் வாய் வைத்துக் கூறுகிறான்) என்னே முண்டம் இண்ணா நெனச்சே? இதோ பாத்தியா பணப்பை! இதில், நிறையப் பணம் இருக்கு. ஒருத்தன் போட்டுட்டுப் பூட்டான். சத்தம் போடாமே எடுத்துக் கொண்டேனே தெரியுமா ஒனக்கு? சொக்குக்குத் தெரியுமா? உம்! தெரியாது. (இதற்குள் பணம் போட்டுவிட்டவன் பணத்தைத் தேடிக்கொண்டு அப்பக்கம் வருகிறான். தாடியின் முகத்தைப் பார்க்கிறான். தாடிக்குக் கோபம் வருகிறது. தானப்பன் (தாடி): பணப்பையா நானா எடுத்தேன்? எந்த மடையன் உன்னிடம் சொன்னான், நான்தான் எடுத்தேன் என்று. முத்தப்பன் : நான், பணத்தைத் தேடுகிறேன் என்று உனக்கு எப்படித் தெரியும்? அப்போ எடுத்தவன் நீதான். காட்டு மடியை! (தேனொப்பாள், மோசம் வந்தது என்று கூறுவது போல் தன் வாயைப் பொத்திக் கொள்ளுகிறாள். தானப்பன் (தாடி): நீ இப்படிப் போனியே, அப்போ உன் பணப்பை விழுந்ததே! அதை, நான் எடுக்கவே இல்லியே! முத்தப்பன் : மடியைக் காட்டு, மரியாதையாக, (முத்தப்பன், தானப்பன் மடியைத் திறந்து தன் பணப்பை இருக்கக் கண்டு, எடுத்துக் கொள்ளு கிறான். தாடி, முகத்தில் அசடு தட்ட நிற்கிறான். சொக்கு இங்கு வந்து நடப்பதைக் கவனித்து விழுந்து விழுந்து சிரிக்கிறான்) தேனொப்பாள் : இல்லிங்க, பணப்பை இருப்பதை ஒங்களிடம் சொல்லணுமின்ணு தான் அவரு அப்படிச் சொன்னாரு, நீங்கள் போங்க. முத்தப்பன் : அதுசரி தெரியிலியா? வேறொருத்தராயிருந்தா, சுத்தமா ஏப்பம் உட்டுடுவாங்க. தேனொப்பாள் : போங்க! (முத்தப்பன் போகிறான்) சொக்கு : எப்டிங்க அண்ணி, அண்ணா தெறமை? தேனொப்பாள் : தெறமைக்கு என்னா? அவுரு ஓணுமிணுதான் அப்டி மெய்யைச் சொன்னாரு. இல்லிங்க மாமா? தானப்பன் (தாடி): ஓணுமிண்ணுதான் சொக்கு! ஓணுமிண்ணுதான்! சொக்கு : மெய்யாலும் புத்திசாலி அண்ணா நீங்க. நானு நம்பறேன். நீங்க ஓணுமிண்ணுதான் அண்ணா அப்டிச் சொன்னிங்க. (பூங்கோதை, குடத்தில் நீர் மொண்டுகொண்டு கரையேறுகிறாள். அவளிடம் ஒரு பெண் பேசுகிறாள்) ஒருத்தி : ஏன் பூங்கோதை! இன்றைக்கு ஏது நீ தண்ணீர் எடுக்க வந்தது? பூங்கோதை : இல்லையக்கா. இன்றைக்கு வேலைக்காரி வரவில்லை. மடமட வென்று போய் ஒரு குடம் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்துவிடு என்று அம்மா சொன்னார்கள். நான் வருகிறேன் அக்கா. அண்டைவீட்டுப் பெண்: என்ன பூங்கோதை, நானும் குளிச்சி விட்டு வர்ரேனே. பூங்கோதை : இல்லேடி நான் சீக்கிரம் போகணும், அம்மா திட்டுவாங்க. போகட்டுமா? அண்டை வீட்டுப் பெண்: சரி. ஆனாப் போ. (பூங்கோதை போகிறாள். பூங்கோதை வருவதை தேனொப்பாள் பார்த்துத் தன் கணவனாகிய தானப்பன் (தாடி) இடம் கூறுகிறாள். மாமா! பூங்கோதை வருகிறாள். நாய்க்கன் வீட்டுப் பெண்! அவள் வீட்டுக்குக் கொடுக்கவேண்டிய பூப் பொட்டணத்தைக் கொடுத்தனுப்பிவிட்டா, வேலை மீதிதானே. அந்தத் தெருவுக்குப் போக வேண்டிய தில்லியே. தானப்பன் (தாடி): ஆமாமாம்! தங்கச்சி, இரு பூப் பொட்டலத்தை வாங்கிப்போ. இதோ தர்றேன். (அவள் நிற்கிறாள்) நான் தான் கொண்டு வர்றேன் போம்மா. (போகிறாள் அவள்) வாங்கிப் போயிடம்மா கையோடு கையா (நிற்கிறாள்) இல்லே, நீ போம்மா, நான் கொண்டு வர்ரேன் (போகிறாள்) சொக்கு : என்னாண்ணேன்? வயிசுப் பொண்ணே பரியாசம் பண்றே. தானப்பன் (தாடி): நில்லம்மா நில்லு. பொட்டணம் கட்னது இருக்கு. எடுத்துப் போய்டலாம். பூங்கோதை : என்ன பண்டாரம்? கேலியா. (பூங்கோதை போகிறாள்) (போய் விடுகிறாள்) தேனொப்பாள் : என்ன நீங்க! (சொக்குவை நோக்கி) கள்ளங் கவடில் லாமே பேசுறாரு அவுரு. நீங்க கலகம் வளர்த் திரிங்க. ஓகோ! சொக்கு : அவரா, கள்ளங்கவடு இல்லாதவர்? தானப்பன் (தாடி): பின்னென்ன சொக்கு? நான், நேத்து கத்திரிக்கா கார்ச்சிகிட்ட ஒதையா பட்டேன்? சொக்கு : ஏன்? எப்டிங்க அண்ணி? நேர்ல கத்தரிக்காக்காரி போனா! இவுரு அங்கே நிண்ணுக்கிட்டிருந்தாரு. அவ, கத்ரிக்கா ஓணுமாண்ணு கேட்டா! அதுக்கு இவுரு, கத்ரிக்கா வாணாம். நீதான் ஓணுமிண்ணார். அவ, சாத்து சாத்துண்ணு சாத்னா. தானப்பன் (தாடி): இல்லே தேனு! அவ, இடிக்கவுமில்லை; அடிச்சதி னாலே தோள்பட்டெ சுளிக்கிக்கவுமில்லே. ஆர் சொன்னாலும் நம்பாதே. தேனொப்பாள் : அட மம்ட்டி! கத்தரிக்கா காரியையா கூப்பிட்டே? பங்கம்! பங்கம்!! (தலையில் அடித்துக் கொள்ளுகிறாள்) (பூங் கோதை, தண்ணீர் குடத்தோடு போகிறாள். எதிரில் தூரத்தில் பொன்முடி வருகிறான்.) பொன்முடி : பாட்டு புலர்ந்தது பொழுது, பொன்னொளி வீசி மலர்ந்தது செங்கதிரே - நன்றாய் மலர்ந்தது செங்கதிரே. கலந்தன இசையைக் களித்தன பறவைகள் கண்டேன் கண் எதிரே ... ... ... (1) மரகதப் பந்தல் மாநிழற் சாலை பெரியதோர் நடைப்பாதை - இதுவே பெரியதோர் நடைப்பாதை. இருபுறம் கழனிகள் இசைபாடும் உழவர் ஏகிடும் வன பாதை! ... ... ... (2) (பொன்முடியின் கண்கள், உயர்ந்து வளர்ந்துள்ள மரங்களை அளாவுகின்றன. அவன் எதிரே ஒருத்தி நீர்க்குடத்தோடு தனியே வருவதைப் பார்க்கிறான். அவன் மேலும் முன்னோக்கி நடக்கிறான். அவளை உற்றுக் கவனிக்கிறான்.) பொன்முடி : பூங்கோதையா! ஆம்! இன்பக் கனவு! (பூங்கோதை தூரத்திலிருந்தே தனியே வரும் ஆணழகைக் கவனித்து வருகிறாள். சிறிது, நெருங்கியபின் உற்றுக் கவனிக்கிறாள்) பூங்கோதை : அத்தான்! ஆம்! (மேலும், முன்நோக்கி நடக்கிறாள்) (பொன் முடியின் நெஞ்சம் கூறுகிறது): இரண்டாண்டாக, நான் அவளைப் பார்க்க வில்லை. குடும்ப விரோதம்! சேர்ந்து விளையாடிய இரண்டு நெஞ்சங்கள்! அத்தான் என்றும், பூங்கோதை என்றும் அழைத்து மகிழ்ந்த இரண்டு வாய்கள்! இப்போது (பொன்முடி தன் உடையைத் தானே பார்த்துக் கொள்ளுகிறான். தன் நறுக்கிவிட்ட தலை முடியைச் சரிப் படுத்திக் கொள்ளுகிறான். பூங்கோதை, தன் ஆடையைத் திருத்திக்கொள்ளு கிறாள். எதிர் நோக்குகிறாள். அவர் உதடு சிரிக்கிறது. தலை குனிகிறாள்) அவள் நெஞ்சம் கூறுகிறது: அவரிடம் நான் இப்போது எப்படி நடந்து கொள்ளுவது? (ஓர் ஏற்றக் கோல் தூரத்தில், நெருங்குகிறார்கள். இருவர் முகமும் சந்தித்து மின்னி மறைந்தன. இரண்டு சிரிப்பு. பின்னும், நெருங்க இருவரும் ஒரே நேரத்தில்) பூங்கோதை : அத்தான்! பொன்முடி : பூங்கோதை! பொன்முடி : பூங்கோதை நீ, என்னிடம் இப்போது பேசுவாயோ பேசமாட்டாயோ என்று நினைத்து வருந்தினேன். அத்தான் என்றாய், அமுதம் பீறிட்டடித்ததுபோல்! பூங்கோதை : நான்கூட அப்படித்தான் அத்தான் நினைத்தேன். அப்பா, கையெல்லாம் அசந்து போகிறது. (என்று கூறிச் சாலை மருங்கில் ஓர் ஆலமரத்தின் வேர் நோக்கி விரைவாய் சென்று குடத்தை வைக்கிறாள். பொன்முடியும் விரைவாக அவளைத் தொடர்கின்றான்) (அவள் கைகள் இரண்டும் அவனைத் தாவுகின் றன. ஆனால், அவள் முகம் யாராவது வருகின்றார் களோ. என்று சுற்றும் முற்றும் பார்க்கிறது.) பொன்முடி : யாருமில்லை. (இருவரும் இறுகத் தழுவுகிறார்கள். இருமுகங் களும் இணைகின்றன) பூங்கோதை : விடாதீர் அத்தான்! (ஹ்ச்சொ என்று ஒரு முத்தம்! மெதுவாக கட்டவிழ் கின்றன கைகள்) பூங்கோதை : யாராவது வந்துவிடுவார்கள். எப்போது பார்ப்பேன் தங்களை! எப்படிப் பிரிந்திருப்பேன். அத்தான் (கண்ணீர் ததும்ப) தொட்டளித்த இன்பத்தை இனி விட்டிருக்க முடியாது. பொன்முடி : (கண்ணீர் ததும்ப) பூங்கோதை பூங்கோதை! போ. என் உயிர் உன்னோடு வருகிறது! கொண்டு போ. பிரிவு! நான் கரையில் இட்ட மீன். பூங்கோதை : எப்போது காண்பது? பொன்முடி : இப்போதே தொடங்குவேன் நல்லதோர் ஏற்பாடு. பூங்கோதை : போய் வருகிறேன். (போதல்) (பொன்முடி, உதட்டில் புன்சிரிப்பும், கண்ணில் கலக்கமுமாக அவளைப் பார்த்தபடியே நிற்கிறான்.) (சற்றுத் தூரம் போய்ப் பூங்கோதை, திரும்பிப் பார்க்கிறாள். அவள் தன் தலையால் போய் வருகிறேன் என்கிறாள்) (பொன்முடியும், தன் தலையால், போய்வா என்று கூறுகிறான்) (தூரத்தில், சென்றபின் மீண்டும் முகங்களின் சந்திப்பு, உடனே மறைவு) (பொன்முடியின் ஆழ்ந்த நினைப்பு. தளர்ந்த நடை) அன்றிரவு (பொன்முடி தன் வீட்டில் ஓர் அறையில், சாய்வுப் பெட்டியின் எதிரில் பாயின் மேல் உட்கார்ந்து ஓலைச் சுவடியைப் புரட்டுகிறான். நினைவு அவளை யல்லாமல் மற்றொன்றிலும் செல்ல வில்லை.) அவன் நெஞ்சம்: அவள், நாளைய காலையிலும் குளக்கரைக்கு வருவாள். நான் போகாவிட்டால் அவள் காதல் விழி ஏமாந்து போகும். (அன்னக்காவடி தெருவில் வருகிறது. மணி ஓசை காதில் கேட்கிறான்) அவன் நெஞ்சம் : அப்பா வரும் நேரம்... ... இன்று, என்னைப் பணம் தண்ட அனுப்பியது போல் நாளைய காலையிலும் அனுப்பு கிறாரோ இல்லையோ. அந்நடை, இன்னும் என் கண்ணை விட்டு அகலவில்லை. அவள் அமுதப் பேச்சு ஆருக்கு வரும்? எதிர்பாராத முத்தம்! என்னுடல் பொருள் ஆவி அவளுக்குத் தத்தம்! (பொன்முடியின் தந்தையான மானநாய்க்கன் வீடு வந்தான். அறையை நோக்கினான்.) மான நாய்க்கன் : பொன்முடி! என்ன செய்கிறாய்? (என்று கூறித் தெருத்திண்ணை நோக்கிப் போகப் பொன்முடியும் தொடர்ந்தான். தந்தை, திண்ணை யில் உட்காரப் பொன்முடி நின்றபடி இருந்தான்) மான நாய்க்கன் : இன்று, விற்று முதல் என்ன? எவ்வளவு முத்துக்கள் வாங்கினை? முத்துக்களில் குற்றமில்லையே? கணக் கெல்லாம் சரியாய் எழுதினையா? பொன்முடி : இன்று ஒரு முத்தும் வாங்கவுமில்லை; விற்கவு மில்லை. அதென்னமோ இன்று வியாபாரம் மந்தம். மான நாய்க்கன் : அப்படியா! காலையிலே நீ போய் கடையைத் திற! நான் வேலனிடம் போக வேண்டும். பொன்முடி : நான் போய் வருகிறேன். ஏன் உங்களுக்குத் தொந்தரவு? மான நாயக்கன் : உன்னை, அவன் ஏமாற்றி அனுப்பி விடுகிறான். நானே போகிறேன். பொன்முடி : நீங்கள் தயவுசெய்து தடை செய்யாதீர்கள். நானே வெய்யிலுக்கு முன் போய் வந்துவிடுகிறேன். மான நாயக்கன் : வேலன் கொடுக்க வேண்டிய முத்துக்களை கட்டாயம் வாங்கி வரவேண்டும். அதுவுமல்லாமல், அந்தச் சோலையப்பன் இருக்கிறானே, அவன் என்னை வரச் சொல்லியிருக்கிறான். நான் அவசியம் போக வேண்டும். தெரிகிறதா? காலையில், நீ சென்று கடையைத் திறந்து வியாபாரத்தைக் கவனி. (அன்னை, அன்னம் அங்கு வருகிறாள்) அன்னம் : ஏன் அப்பா, நீ இன்று பகல் கூடச்சாப்பிடலியே? மானநாய்க்கன் : ஏன் சாப்பிடலை? பொன்முடி : வயிறு, மந்தமாக இருந்தது. அன்னம் : வா, அப்பா எழுந்திரு. பொன்முடி : நீங்கள்? மான நாய்க்கன் : நான் குளக்கரைக்குப் போய்வரவேண்டும். நீ சாப்பிடு. (போகிறார்கள்.) மறைநாய்க்கன் வீடு. பூங்கோதையின் படுக்கை. (குள்ளக்காலுடைய அகன்ற விசிப்பலகையில் மெத்தை யிட்டுத் தலையணை இட்ட படுக்கையில், பூங்கோதை படுத்திருக்கிறாள். தூக்கமில்லை புரளுகிறாள். அவள் மனக்கண்ணில் - பொன்முடி -அவன் சிரிப்பு. தூக்கம்) கனவு - ஆலின் அடியில், கட்டியணைத்து முத்தமிடல். எப்போது காண்பது? பொன்முடி : தக்க ஏற்பாடு செய்கிறேன். மறுநாள் காலை (கோழி கூவுகிறது) மற்றும் பலகுரல்கள் பூட்டாங் கவுறெ எங்க வச்சிங்க ஆண்டெ? மாட்டுக் கொட்டாய்லேதாண்டா இருக்கும். சின்னாம்பையன் வந்தானா? கோழிகூடம் கூவிப்புட்டுது. சேரி ஆளுங்கொ இன்னம் வல்லிங்க. இருட்டோட ஏரைப்பூட்டி ஒழவு ஓட்டுங்க. (கோயில் மணிச் சத்தம்) ராத்திரி மடை மாறினியாடா? மாறுனங்கோ. (பொன்முடி, தன் வீட்டினின்று வெளியில் வருகிறான்.) (தானப்பன் என்னும் தாடிப் பண்டாரம் இடது கையில் பூக் குடலை தொங்க, வலக்கையில் ஒரு பூப்பொட்டணத் துடன் பொன்முடி வீட்டை நோக்கி வருகிறான்) (பண்டா ரத்தின் அடையாளம் - முழங்கால் வரைக்கும் தூக்கிக் கட்டிய வேட்டி, மேலாடையாகிய வெள்ளைத் துப்பட்டியை முக்காடிட்டு அந்த முக்காட்டின் மேல் ஒரு துண்டைக் கட்டியிருக்கிறான். வெள்ளைத்தாடி மீசை, நெற்றி நிறையத் திருநீறு) பொன்முடி : (பண்டாரத்தை அவாவுடன் அணுகி) ஏனையா? நீர் எல்லா வீட்டுக்கும் பூக்கொடுப்பதுண்டோ? பண்டாரம் : ஆமாம். பொன்முடி : மகர வீதியிலே மறைநாய்க்கன் வீடு தெரியுமா? மறை நாய்க்கன் மகள் தெரியுமா? மயில் போன்ற சாயல்! நிலா முகம்! நீல விழி! அமுதம் போல் பேசுவாள் தெரியுமா. ஒரு சேதி சொல்றேன் ஆருக்கும் தெரியாமல் அவளிடம் சொல்லுகிறீரா? காதைக் காட்டுங்கள்! (பொன்முடி, பண்டாரத்தின் காதில்) பத்து வராகன் தருகிறேன் போதுமா? (இரக்கம்) பண்டாரம் : ஆமாம் மறை நாய்க்கன் உன் மாமன்! அவன் மவள் ஒருத்தி யிருக்கா, தென்னம்பாளை பிளந்து சிந்திடும் சிரிப்புக்காரி. பொன்முடி : ஆம்! அவள்தான்! பண்டாரம் : இன்னம் கேள் அடயாளத்தே. இடெவஞ்சிக் கொடியாட்டம் அச்சம்! பொன்முடி : ஆம்! ஆம்!! பண்டாரம் : நண்ணாத் தெரியுமே. அந்த வூட்டுக்கும் நான் பூக் கொடுப்பதுண்டு. பொன்முடி : என்னப்பாவும் எங்கள் மாமாவும் எலியும் பூனையும்! நானும் அவளும் உயிரும் உடலும்! இப்போது குடத்தை எடுத்துக் கொண்டு குளக்கரைக்கு வருவாள். என்னை எதிர்பார்ப்பாள். நான் இன்று வர முடியவில்லை. இதைச் சொல்லுங்கள் அவளிடம்! மறுபடி எப்போது சந்திக்கலாம் என்று மறவாமல் கேட்டு வாருங்கள். பண்டாரம் : ஓ! சரி. போய் வர்ரேன். (தன் கையிலிருந்த பூப்பொட்டணத்தைப் பொன்முடி யிடத்தில் கொடுத்துப் போகிறான். பொன்முடி, நின்ற இடத்திலிருந்து பண்டாரத்தைப் பார்த்தபடி இருக்கிறான்.) (பண்டாரத்தின் எதிரில், சொக்கு வருகிறான்) சொக்கு : என்னா? தானப்பண்ணேன், காலையில்.....? பண்டாரம் : பொன்முடி என்னிடத்லே ஒண்ணும் சொல்லலியே. அந்த மறைநாய்க்கன் மகள் ... ... (இதைக் கேட்ட பொன்முடி, தன் கையை நொடித்துத் தான் பண்டாரத்தோடு உறவு வைத்துக் கொண்டதற்காக வருந்தி, சொக்குவை நோக்கி உரத்த குரலில் சொல்லுகிறான்.) சொக்கு விரைவாக இங்கு வாரும்! (சொக்கு ஓடி வருகிறான்) பொன்முடி : நம் கொல்லையில் அந்தத் தென்னை மரத்தின் பக்கத்தில் ஏதோ நீளமாகக் கண்டேன். பாம்புதான் போலிருக்கிறது. அதைக் கொஞ்சம் பார்த்து வாரும்! சொக்கு : அப்படியா? (என்று ஓடுகிறான்) (சொக்குக்காகக் காத்திருக்கும் பண்டாரத்தை நோக்கிப் போம்படி கைகாட்டப் பண்டாரம் போகிறான்) (பொன்முடி, கடைச்சாவிகள் சேர்ந்த கொத்தைத் தோளில் போட்டுக்கொண்டு கடைக்குப் போகிறான்.) (வயிரவன் என்பவன் மான நாய்க்கனை (பொன்முடியின் தந்தையை) தேடி வருகிறான்.) வயிரவன் : ஆர் உள்ளே? மான நாய்க்கன் : ஏன் வயிரவன், என்ன சேதி? வயிரவன் : குமர குருபரர் தம் திருக்கூட்டத்தோடு தருமபுரம் போகிறார். வழியில் நம்மூர் அறநிலையத்தில் தங்குகிறார். மான நாய்க்கன் : வள்ளியூர், புண்ணியம் பண்ணது தான். வயிரவன் : அதற்கென்ன சந்தேகம். அறநிலையத்தை அலங்கரிக் கணுமே; கொஞ்சம் பொதுப் பணத்தில் கொடுத்தால் தேவலாம். மானநாய்க்கன் : ஓ! எதேஷ்டமா. வயிரவன் : ஒரு பத்து வராகன் பணம் போதும். மான நாய்க்கன் : ஓ நல்லா செலவு பண்ணுங்கோ எடுத்து. முன்னிண்ணு வரவேற் பவர் யார்? வயிரவன் : ஒங்க மைத்துனர் இருக்காரல்ல, மறை நாய்க்கர் அவர்தான். இவரு யார்? அவனா? ... ... அவன் கெடக்றான்கறேன் ... ... இந்த வூரு இருக்ற நெலமைக்கி இப்ப, என்னாத்துக்கு அந்த குமரகுருபரரை இங்கே அழைக்கணும்? வயிரவன் : உமக்கும் அவுருக்கும் விரோதமிருந்தா பொதுக்காரியம் தடைபடலாங்களா? மான நாய்க்கன் : சரிசரி. அவன் வந்தா, நான் வரமாட்டேன். வயிரவன் : நீங்க, ஊர்க்கு நாட்டாமெ. அவுரு ஊர்க்குப் பெரிதனம் அல்லவுங் களா? ரெண்டு பேருந்தானே வரணும். நீங்க ஒருபுறமும் அவுரு ஒருபுறமுமா இருங்கோ. நான் ஒங்க நடுவ்லே இருக்கிறேன். மான நாய்க்கன் : சரி. எப்படியாவது செய்யுங்க. கடையில் போய் ஊர்க்கணக்கில் எழுதச் சொல்லிப் பத்துவராகன் வாங்கிப் போங்க. நானும் இதோ வந்துட்டேன். வயிரவன் : நல்லது. நான் வரன்க. (போகிறான்) அறமன்றம் (வள்ளியூர் அற மன்றத்தில் குமர குருபரர் பரிவாரத்தோடு வந்து இறங்குகிறார்) (அற மன்றத்தின் வாயிலில் மான நாய்க்கனும், மறை நாய்க்கனும் மற்றும் சிலரும் வணங்கி எதிர் கொள்ளு கிறார்கள்) (திருக்கூட்டத்தோடு அனைவரும், உள்ளே செல்ல நாயக்கன்மார் இருவரும் உள்ளே சென்று சிறிது நேரம் சென்று வெளியே வருகிறார்கள். வயிரவன் வடுவன் வருகிறான்.) (மூவரும், அறமன்றத்தின் வாயிலில் நின்றபடி மேலே ஆக வேண்டிய காரியத்தை பற்றி யோசிக்கிறார்கள்; மான நாய்க்கன், மேற்கே முகத்தை வைத்திருக் கிறான். மறை நாய்க்கன் கிழக்கே முகம் வைத்திருக் கிறான். நடுவில், நிற்கும் வயிரவன் இருவரையும் திரும்பிக் கவனிக்கிறான்.) மான நாய்க்கன் : திருவமுதுக்கு என்ன ஏற்பாடு? வயிரவன் : திருவமுதுக்கு என்ன ஏற்பாடு? மறை நாய்க்கன் : ஏற்பாடு செய்ய வேண்டியதுதான். வயிரவன் : ஏற்பாடு செய்ய வேண்டியது தான் மான நாய்க்கரே. மான நாய்க்கன் : நம்ம முத்து நல்லா சமைப்பான். வயிரவன் : நம்ம முத்து நாய்க்கன் நல்லா சமைப்பான். மறை நாய்க்கன் : ஏற்பாடு பண்றது அவனையே. வயிரவன் : ஏற்பாடு பண்றது அவனையே. மான நாய்க்கன் : அதுக்குச் சொல்லலேடா. அவனுக்குச் சமையல் கூலி குடுக்க வேண்டியதுதானே. வயிரவன் : அதுக்குச் செல்லலேடா அவனுக்குச் சமையல் கூலி குடுக்க வேண்டியதுதானே. மறை நாய்க்கன் : ஆரையடா அடபுடா இண்ணே? வயிரவன் : ஆரையடா வுடாபுடா இண்ணே? மான நாய்க்கன் : நான், ஒன்னேயல்லவோடா சொன்னேன். வயிரவன் : நான் ஒன்னெயல்லவோடா சொன்னேன். மான நாய்க்கன் : ஒன்னேத்தாண்டா வயிரவா. வயிரவன் : என்னெயா? என்னா சொன்னாரு! மறை நாய்க்கன் : அப்படிச் சொல்லு. வயிரவன் : அப்படிச் சொல்லு. மான நாய்க்கன் : அதட்றாப்லே இர்க்கே. வயிரவன் : அதட்றாப்லே இர்க்கே மான நாய்க்கன் : ஓகோ! வயிரவன் : ஓகோ! மறை நாய்க்கன் : என்னடா? ஓகோ, கீகோ. வயிரவன் : என்னடா? ஓகோ, கீகோ. (இருவரும் எதிர்த்துக் கொண்டு சண்டை தொடங்கு கிறார்கள். இதற்குள், பெரிய பண்டாரம் வந்து விடுகிறார்) பெரிய பண்டாரம் : என்னசெய்தி? சண்டை என்ன? வயிரவன் : ஆருமில்லே மச்சானும் மச்சானுந்தான்! நீங்க நல்ல வேளக்கி வந்துட்டிங்க! நாயக்கமாரே. நீங்க அடிச் சிக்க வாணாம் போய் வாருங்க.... போய் வர்ரேன் சாமீ. பெரிய பண்டாரம் : எல்லாம் ஏற்பாடு செய்தாயிற்றா? வயிரவன் : தங்கம் போல. பெரிய பண்டாரம் : இவ்வூர்க்குப் பெரிதனக்காரர், நாட்டாண்மைக் காரர் எங்கே? வயிவரன் : இவுருதான் நாட்டாமெக்காரர். அவுருதான் பெரிதனக் காரர். பெரிய பண்டாரம் : அடடா! இவர்களேன் இப்படி ஆனார்? வயிரவன் : ரொம்பச் சின்னதனம். பேர் மட்டும் பெரிதனம். பெரிய பண்டாரம் : போய் வாருங்கள். (வணங்கிப் போகிறார்கள்.) நள்ளிரவு (படுத்துத் தூங்குவது போல் இருக்கிறான். பொன்முடி. தலையைக் கிளப்பிப் பார்ப்பதும், பிறகு படுப்பதுமாய் இருக்கிறான்.. மெதுவாக எழுந்திருக்கிறான். சத்தமின்றி நடந்துபோய்த் தெருக் கதவைத் திறந்து வெளிவந்து கதவை மெல்ல மூடிவிட்டுத் தெரு வோடு போகத் தலைப்படுகிறான். கருக்கல்! பாதை தெரியவில்லை. மெல்ல, நிதானமாக நடக்கிறான்) பொன்முடி : நள்ளிருளில் வரச் சொன்னாள். கொல்லைக் கதவண்டை காத்திருப்பதாகக் கடிதம் எழுதினாள். அவளுக்குத் தூக்கம் கெடும். அவளுக்குத் தொல்லை என் பொருட்டு! (போகிறான்) பாட்டு பல்லவி காதல் ஒளியே வழிகாட்டு வருகிறேன் இருளில் (காதல்) அநுபல்லவி மாதாக வந்த அமுதே! வாழ்வின் மருந்தே! சரணம் காதினில் ஒன்றுமே கேட்கவில்லை என் கண்ணெதிர் இருளல்லால் ஏதுமில்லை. இப்போது நீ விழித்திருப்பாயோ! கொல்லைப்புறம் வா என்றாய் நம்பினேன் நானுன் சொல்லை (காதல்) (பொன்முடி போகிறான்) (மறை நாய்க்கன் வீட்டைச் சார்ந்த கொல்லைக் கதவண்டை அரவம் கேட்கிறது. பூங்கோதை உற்றுக் கேட்கிறாள்.) பூங்கோதை : (கொல்லைக் கதவைக் கையால் தடவும் பொன்முடியை) அத்தான்! பொன்முடி : வீணையில் ஓர் தந்தி, மெதுவாய் அதிர்ந்தது! பூங்கோதை! (இருவரும் கொல்லை நடுவில்! இச் என்று, சத்தம் கேட்கிறது. மற்றொன்று, மற்றொன்று!) (திடீரென்று, மறைநாய்க்கன் கூண்டு விளக்கோடு அங்கு வந்து விடுகிறான். பார்த்து விடுகிறான்) மறைநாய்க்கன் : (உரத்த குரலில்) ஆரடா, ஓடி வாடா, ஓடி வாடா. அடே பாவிப்பயலே. (இதைக் கேட்ட ஆட்கள் இருவர் ஓடி வருகிறார்கள்) மறை நாய்க்கன் : அவனைப் பிடித்துப் புன்னை மரத்தில் கட்டுங்கள். விட்டுவிடாதீர்கள். அடே எத்தனை நாளாய்க் காத்திருந்தாய் என் குடியைக் கெடுக்க... எடு.அந்த மிலாரை! (கட்டியாயிற்று, பொன்முடியை! மறைநாய்க்கன் பொன்முடியை, அடிக்கிறான்) பூங்கோதை! மறை நாய்க்கன் காலில் தன் முகத்தை ஒற்றி - பூங்கோதை : அப்பா, அடிக்காதீர் (மறை நாய்க்கன் அவளைக் காலால் உதைத்துத் தள்ளுகிறான்) (அப்போது, உள்ளிருந்து ஓடி வந்த வஞ்சி வடிவு என்னும் தாய், தன்மகளைத் தூக்கி அணைத்து அப்புறம் செல்லுகிறாள், பூங்கோதை, தன் தாயின் கையை விலக்கிப் பொன்முடியின் மேல் மறை நாய்க்கனின் மிலார் அடிவிழாமல் பொன்முடியை அணைத்துக் கொள்கிறாள். மறை நாய்க்கன் இருவரையும் அடித்துப் பின், பொன்முடியைக் கட்டவிழ்த்துத் துரத்துகிறான். பூங்கோதையை வீட்டுக்குள் நெட்டித் தள்ளிப் போகிறான் மறைநாய்க்கன்) (சூரியன் கடல்மிசைக் கதிர் எழுப்பினான்) (பொன்முடி, தள்ளாடி நடந்து வீடு நோக்கிப் பிதற்றிக் கொண்டே செல்லுகிறான்) எனக்காகக் கண்ணீர் விட்டாள். அவள், எனக்காக அடியும் பட்டாள். அவளை, இன்னும் என்ன கஷ்டப்படுத்துவார்களோ! தெரியவில்லை ... ... துன்பம் தாளாமல் ஒருக்கால் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளுவாளோ! இந்தத் துன்பம் அனைத்தும் என்னால் விளைந்ததென்று எண்ணி என்னைப் பழிப்பாளோ! (என்று, பலவாறு கதறிக்கொண்டே தன்னுடலில் ஒழுகும் இரத்தத்தையும் பொருட்படுத்தாது செல்லுகிறான்) பூங்கோதை : பாட்டு பல்லவி இன்பமாய்க் கொண்டாள் துன்பத்தை எனக்காக! எனக்காக! (இன்ப) அநுபல்லவி துன்பத்தை எனக்கிழைத்தார் அதைத் துரும்பென்று மதித்தேன் அவட்க்காக (இன்ப) சரணம் அன்பை, அவளுக்களித்தேன் அவளோ ஆவியை எனக்கே அளித்தாள். மன்பதை உலகில் உண்மைக் காதல் வாழ்வே உயிர்க்குறுதியாகும் (இன்ப) பொன்முடி (கடை, பொன்முடி, கடையின் நடுவிடத்தில் அகன்றதும் நீண்டதுமான குள்ளக்கால் விசிப் பலகையில் இட்டிருக்கும் மெத்தை தலையணை யோடு குந்தியிருக்கிறான்) (மற்றொருபுறம், கணக்கன் சாய்வுப் பெட்டியி னடியில் குந்திக் கணக்கெழுதுகிறான்) (பொன்முடிக்கு, அவள் நினைவல்லாமல் ஒரு நினைவும் இல்லை. அவன் விழிகள் அசைய வில்லை. உடலும் அசைய வில்லை) (ஆட்டப்பன், சிவம் என்ற இரண்டு முத்து வணிகர், வியாபார விஷயமாக பொன்முடியிடம் வருகிறார்கள்) ஆட்டப்பன் : கெட்டி முத்துக்கள் வேண்டும். காட்டுங்கள். (பொன்முடி பேசவில்லை) ஆட்டப்பன் : கெட்டி முத்துக்கள்! உங்களைத்தான்! பொன்முடி : இல்லை. நாளைக்கு ... ... ... சிவம் : இந்தச் சரக்கைப் பாருங்கள் (முத்து மாலைகளைக் காட்டல்) (பொன்முடி கவனிக்கவேயில்லை) சிவம் : இந்தச் சரக்கைப் பாருங்கள். உங்களைத்தான். பொன்முடி : நாளைக்கு! (இருவரும் கணக்கனிடம் போகிறார்கள்) ஆட்டப்பன் : என்ன இப்படி விழிக்கிறார் கடைக்காரர்? சிவம் : உடம்புக்கு ஏதாவது? ... ... ... கணக்கன் : நாளைக்கு வாருங்கள், அவருக்கு உடல்நலமில்லை. (போகிறார்கள்) (சன்னலில், பூங்கோதை!) (பூங்கோதை தன் வீட்டுத் தெருப்பக்கத்துச் சன்னலில் உட்கார்ந்திருக்கிறாள். அவள் மனக் கண்ணில் புன்னை மரத்தில், பொன்முடி கட்டப்ப டுகிறான். மறை நாய்க்கன் அடிக்கிறான். பூங் கோதை கண்ணீர் விடுகிறாள். இச்சமயம், தாடிப் பண்டாரம் குறட்டின் மேல் ஏறிப் பூங்கோதை சன்னலில் இருப்பதைக் கவனிக்காமல் பேசுகிறதைப் பூங்கோதையறிந்து சன்னலின் வெளியில் தன் கைநீட்டியழைத்துக் கனைக்கிறாள், பண்டாரம் திரும்பிப் பார்த்து சன்னலையடைகிறான். பூங் கோதை பண்டாரத்திடம் ஓர் ஓலைச் சுருள் தந்தாள். முத்துமாலையும் பணமும் பண்டாரத்துக்குக் கொடுத்தாள்) பூங்கோதை : ஓலையை அவரிடம் கொடும். இதை நீர் எடுத்துக் கொள்ளும் போய் வாரும். பண்டாரம் (தாடி) : என்ன சேதி? சொல்லு? பூங்கோதை : சொல்லுவது, ஒன்றுமில்லை. அப்பாவும் அம்மாவும் என் மேல் கண்ணாயிருக்கிறார்கள். போய்விடுங்கள். பண்டாரம் (தாடி) : அப்பா, அம்மா, ஒன்மேலே வர்த்தமாக இருக்றாங் களா, அப்டி ஒண்ணுமில்லையே? பூங்கோதை : (திரும்பிப் பார்த்து) சரி சரி சீக்கிரம் போங்கள். பண்டாரம் (தாடி) : ஒன் மச்சானை எப்போ வரச்சொல்ல? பூங்கோதை : அதெல்லாம் விவரமாக எழுதியிருக்கிறேன். நீங்கள் போய்விடுங்கள். பண்டாரம் (தாடி) : அவுரு அங்கே இல்லாட்டா, இந்த ஓலையெ ஆரிடம் கொடுக்க? சொல்லு, நிக்கலே. பூங்கோதை : அவரிடந்தான் கொடுக்க வேண்டும் போங்கள். பண்டாரம் (தாடி) : நீ கவலைப்படாதம்மா. நான் இருக்றேன். அதுவு மில்லாமே ... ... ... பூங்கோதை : முதலில் நீங்கள் சீக்கிரம் போய்விட வேண்டும். உம்! பண்டாரம் (தாடி): கன்னத்லே என்னம்மா வெப்பா? செவந்திருக்குது? பூங்கோதை : காயம் பண்டாரம் (தாடி) : இதுக்கு நல்ல மருந்து என்னிடம் இருக்குதம்மா. (பூங்கோதை உள்ளே ஓடிவிட முயல்கிறாள். பண்டாரம் விரலை நொடித்து அழைக்கிறான்) பண்டாரம் (தாடி) : பக்குவமா நடந்துக்கம்மா. பூங்கோதை : (கோபமுகத்தோடு) நிற்காதீர். போய்விடுங்கள். (பண்டாரம் போகிறான்) (பொன்முடிகடையில், முன் தொடர்ச்சி. முத்து வணிகர், பொன்முடியைப் பற்றிக் கணக்கனிடம் குறை கூறி விட்டுப் போனவுடன் ஒற்றைத் தந்தித் தம்பூராவுடன் ஒரு பிச்சைக்காரன் பாடிக்கொண்டு வருகிறான்) பாட்டு காயமே இது பொய்யடா - சிவ காற்றடைத்த பையடா மாயனார் குயவன் செய்த மண்ணுப்பாண்டம் ஓடடா. உலுத்த நரம்பும் வெளுத்த தோலும் இழுத்துக் கட்டிய கூடடா. பொன்முடி : என்ன பாட்டு? சாவுப் பாட்டு! நிறுத்து. பிச்சைக்காரன் : வாழ்வுப் பாட்டும் தெரியும் பாடட்டுங்களா? பொன்முடி : பாடு பார்ப்போம். பிச்சைக்காரன் பாடுகிறான் - பாட்டு பாழான கூடடி நான், பச்சைப் பசுங்கிளி நீ! வாழாத வீடடி நான், மங்கா விளக்கடி நீ! தாழாத குளமடி நான், தாமரைக் காடடி நீ! வீழாத வானடி நான், வெண்மை நிலாவடி நீ! பொன்முடி : (ஆகா! அப்பாட்டைத் தான் பாடுகிறான்) பாழான கூடடி நான் பச்சைப் பசுங்கிளி நீ ... ... ... ... ... ... ... ... என்ன அழகான பாட்டு? என்னுள்ளத்தின் கண்ணாடி! (தாடிப் பண்டாரம், வருவதைப் பார்த்து விடுகிறான்) ஆரங்கே, கணக்கர், அவனுக்குக் கால் வராகன் கொடுத்துப் போகச் சொல்லும் விரைவில். (கட்டளைப்படி, கணக்கன் கொடுத்தனுப்புகிறான்) (பண்டாரம் ஓலையை நீட்டுகிறான். பொன்முடி, அதை ஆவலாய் வாங்கிப் படிக்கிறான்) (ஓலை) (தனியாய் வந்து நின்று) இதைச் சாதாரண வசனமாய்ச் சொல்லுக: பழத்தோட்டம் அங்கே, தீராப் பழிகாரி இவ்விடத்தில், அழத்துக்கம் வரும்படிக்கே புன்னையில் உம்மைக் கட்டிப் புழுத்துடி துடிப்பதைப் போல் துடித்திடப் புடைத்தார் அந்தோ! புன்னையைப் பார்க்குந்தோறும் புலனெலாம் துடிக்கலானேன்; அன்னையை வீட்டிலுள்ள ஆட்களை அழைத்துத் தந்தை என்னையே காவல் காக்க ஏற்பாடு செய்து விட்டார். என் அறை தெருப் பக்கத்தில் இருப்பது நானோர் கைதி! அத்தான், என் ஆவி உங்கள் அடைக்கலம்! நீர் மறந்தால் செத்தேன்! இஃதுண்மை இந்தச் செகத்தினில் உம்மை அல்லால் சத்தான பொருளைக் காணேன்! சாத்திரம் கூறுகின்ற பத்தான திசை பரந்த பரம் பொருள் உயர்வென்கின்றார். அப்பொருள் உயர்குலத்தின் பேரின்பம் ஆவதென்று செப்புவார் பெரியார் யாரும் தினந்தோறும் கேட்கின்றோமே; அப்பெரியோர் களெல்லாம் - வெட்கமாக இருக்குதத்தான் கைப்பிடித்தணைக்கும் முத்தம் ஒன்றேனும் காணார் போலும்! கனவொன்று கண்டேன் இன்று காமாட்சி கோயிலுக்குள் என தன்னை தந்தை நான் இம் மூவரும், எல்லாரோடும் தொன தொன என்று பாடித் துதி செய்து நிற்கும் போதில் எனது பின்புறத்தில் நீங்கள் இருந்தீர்கள் என்ன விந்தை! காய்ச்சிய இரும்பாயிற்று காதலால் எனது தேகம்! பாய்ச்சலாய்ப் பாயும் உம்மேல் தந்தையார் பார்க்கும் பார்வை! கூச்சலும் கிளம்ப மேன் மேல் கும்பலும் சாய்ந்ததாலே ஒச்சாமல் உம் தோள் என் மேல் உராய்ந்தது! சிலிர்த்துப்போனேன். பார்த்தீரா நமது தூதாம் பண்டாரம் முக அமைப்பை? போர்த்துள்ள துணியைக் கொண்டு முக்காடு போட்டு மேலே ஓர் துண்டால் கட்டி மார்பில் சிவலிங்கம் ஊசலாட, நேரினில் விடியும் முன்னம் நெடுங்கையில் குடலை தொங்க, வருகின்றார், முகத்தில் தாடி வாய்ப்பினை கவனித்தீரா? பரிவுடன் நீரும் அந்தப் பண்டார வேஷம் போடக் கருதுவீரா என் அத்தான்! கண்ணெதிர் உம்மைக் காணும் தருணத்தைக்கோரி என்றன் சன்னலில் இருக்கவா? நான் அன்னையும் தந்தையாரும் அறையினில் நம்மைப்பற்றி இன்னமும் கட்சி பேசி இருக்கின்றார்; உம்மை அன்று புன்னையில் கட்டிச் செய்த புண்ணிய காரியத்தை உன்னதமென்று பேசி உவக்கின்றார் வெட்கமின்றி! குளிர் புனல் ஓடையே நான் கொதிக்கின்றேன் இவ்விடத்தில் வெளியினில் வருவதில்லை வீட்டினில் கட்டுக்குள்ளே கிளியெனப் போட்டடைத்தார் கெடு நினைப்புடைய பெற்றோர் எளியவள் வணக்கம் ஏற்பீர்! இப்படிக்குப் பூங்கோதை. பொன்முடி : (மகிழ்ச்சியோடு) இதே நேரம் ஒரு பொய்த் தாடி, மீசை உமக்கு உள்ளவை போலவே வேண்டும். கொண்டு வாரும். மற்றவை, பிறகு பேசிக் கொள்ளலாம் (இச்சமயம், கணக்கன் பொன்முடி யண்டை ஏதோ சொல்ல நெருங்குகிறான்) பண்டாரம் (தாடி): அவள் பாவம்! ஒரு வெள்ள நூலாட்டம் ஆய்விட்டா. பொன்முடி : மருந்து கொடுக்க வேண்டும். சரி போய்வாரும் (கணக்கனை நோக்கி) என்ன? தாடிப்பண்டாரம் : அவள் கவலையேதான் அவளுக்கு நோய்! பொன்முடி : உம்! தாய்க்கு! ஆம். கபடமற்றவள். ஏன் கணக்கரே? பிறகு வரலாம் போங்கள். தாடிப் பண்டாரம்: உங்களுக்கு ஏற்பட்ட கவலை அவருக்குந்தானே. பொன்முடி : என்ன பண்டாரம்? ஏதேதோ கதைகள்! (எழுந்து பண்டாரத்தின் கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளித் தெருவில் கொண்டு வந்த நிறுத்தி) குறிப்பறியாமல் நீர் குண்டான் தண்ணீரைப் போல் கொட்டுகிறீரே. கணக்கனுக்கு இதெல்லாம் தெரியலாமா? தாடிப்பண்டாரம் : அப்ப இருங்க, இதோ வந்துடுறேன். (என்று கூறிக் கணக்கனிடம் போகத் தலைப் படுகிறான்) பொன்முடி : (தடுத்து) ஏன்? தாடிப்பண்டாரம் : ஒனக்கும் அந்தப் பூங்கோதைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லேண்ணு போய்ச்சொல்லிப்புட்டு வந்துறேனே. பொன்முடி : ஐயோ! பழசி! பழசி! சும்மா போங்காணும், தாடி மீசை மட்டும் ஞாபகம் இருக்கட்டும்! உம்? தாடிப்பண்டாரம் : சரிதான் வர்ரேன். (போதல்) (தாடிப் பண்டாரத்தின் வீடு) (தேனொப்பாள், பூக்கட்டிக் கொண்டிருக்கிறாள்.) பண்டாரம் அறையிலிருந்து அவசரமாக அழைக்கிறான்) தாடிப்பண்டாரம் : தேனு, என்னா செய்றே, இங்கே வா. இதைக் கேட்டுகிணுப் போ. தேனொப்பாள் : ஏன் மாமா? அவசரமா? தாடிப் பண்டாரம்: ஆமாம் தேனு. தேனொப்பாள் : தோ. வர்ரேன். (போகிறாள்) தாடிப் பண்டாரம்: (தன் கையில் உள்ள தாடி மீசையைப் பார்த்துக் கொண்டிருந்தான். தேன் வந்ததும் அவளிடம்) இது இருக்கே பொன்முடிக்கல்ல. பொன்முடி கேட்டான். அவனுக்காவ ஏற்பாடு பண்றேன்னு நெனச்சிக் கிறியா? இல்லே. தேனொப்பாள் : ஒங்ககிட்டேயும் ஒரு ரகசியத்தெ சொன்னங்களே அவுங்க கெதி என்ன ஆவுறது? ஒங்களெப்போல வேஷம் போட்டுக்கினு பொன்முடி பூங்கோதைகிட்ட போவப் போராரு! இதே எங்கிட்ட சொன்னாப்லே நீங்கள் வேறே யார்கிட்டேயும் சொல்லாதிங்க மாமா. தாடிப்பண்டாரம் : நானா சொல்லுவேன்! (இதற்குள் பொன்முடி வந்துவிடுகிறான்) பொன்முடி : என்ன? ஐயா, தாடி மீசை ஏற்பாடு செய்தீரா? தாடிப்பண்டாரம் : ஓ! ஆய்ட்டுதே! அதோ பாருங்கோ (எடுத்துக் காட்டுகிறான்) பொன்முடி : சரி மூடிக் கொள்ளும். தாடிப் பண்டாரம்: ஆமாம் ஆர்க்கும் தெரியக்கூடாது. (இதற்குள் சொக்கு வந்துவிடுகிறான்) தாடிப்பண்டராம் : இந்தாப்பா சொக்கு நான் சொல்றத்தெ கேளு. பொன்முடி : (பண்டாரத்தை நோக்கி) நிறுத்தும் பேச்சை; சொக்கு இந்தா, சீக்கிரம் போய் இந்தக் கால் வராகனுக்கும் சந்தனம் நல்லதா பார்த்து வாங்கி வாரும், ஓடும். சொக்கு : இங்கென்னமோ பேசிக்கினு இருந்திங்க நானு வந்ததும் நிறுத்திப் புட்டிங்க. சந்தனமா ஓணும் (வராகனை வாங்கிக் கொள்ளுகிறான்) போகட்டுமா அண்ணேன்? அப்றம் வர்றேன். நடந்ததையெல்லாம் சுத்தமா சொல்லிப் புட்றீங்களா? தேனொப்பாள் : போங்கண்ணேன் தெரியும்! இங்கே என்னா நடந்தது? ஒங்ககிட்ட என்னாத்தே சொல்றது! தாடிப்பண்டாரம் : தாடி, கட்னேன்னு ... ... ... தேனொப்பாள் : (அவன் வாயைப் பொத்தி) பேசாதீங்க மாமா! நீங்க போங் கண்ணேன். இவுருக்குப் பல்வலி. பேசக் கூடா தின்னு வைத்யர் சொல்லியிருக்காரு? அதுக்காவத் தாண்ணேன்! நீங்க போங்க! சொக்கு : தாடி, கட்றேண்ணு ... ... ... அண்ணேன் சொன்னாரே! எதுக்குத் தாடி? தேனொப்பாள் : எங்க மாமாவுக்கு இருக்குதே தாடி, அதெ அப்படியே சேத்துப் புடிச்சிக் கட்டி வைக்கச் சொன்னாரு வைத்யரு. தாடி காத்திலே ஆட்னா. பல்லும் ஆடுமாமில்லே. சொக்கு : ஓகோ, நம்புறன் தங்கச்சி, போய்வரன். போய் வரணுங்கோ. (போகிறான்) பொன்முடி : தெரியாமல் உம்மிடம் மாட்டிக் கொண்டேன் நான். அவனவனைக் கூப்பிட்டு எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்கிறீரே. இந்தா இதை வைத்துக் கொள்ளும். (பணம் தருதல்) கொடும் தாடியை. தேனொப்பாள் : கட்டிப் பாருங்க, தாடி மீசையெ! (பொன்முடி, தாடி மீசையைக் கட்டிக் கொண்டு ஒரு துப்பட்டியை முக்காடிட்டு, உடலை மறைத்து, முக்காட்டின் மேல் ஒரு துண்டைக் கட்டித் திருநீறு பூசிக் கொள்ளுகிறான்.) தேனொப்பாள் : அசல், எங்க மாமாதான் நீங்க. அப்படியே இருங்க. பூக்குடலையும் எடுத்தாரேன். (தேனு, போகிறாள் வீட்டுக்குள். பூக்குடலையோடு திரும்பிவந்து தன் கணவனிடம் (கொண்டுவந்த) குடலையைக் கொடுத்துத் திடீரென்று பொன் முடியைக் கட்டி ஒரு முத்தம் கொடுக்கிறாள் முகத்தில்) தாடிப் பண்டாரம்: அடி! அடி! (பொன்முடியும், கையை விலக்கி அப்புறம் போகிறான்) தேனொப்பாள் : பூக்குடலையை, நீங்க வாங்கினீங்க அதனாலே ஒங்களை அவுருண்ணு நெனச்சிப்புட்டேன். அவரெ, நீங்கதாண்ணு நெனச்சி, தாடி நல்லா கட்டியிருக்கிங் கேண்ற சந்தோசஷத்லே, அப்டி ... ... ... என்னா இப்டி தெரியாமே செஞ்சிப்புட்டேனே! தாடிப்பண்டாரம் : தெரிஞ்சா செய்வியா நீ? அதப்பத்தி வருத்தப் பட்டுக்காதேடி என் தேனு. (தேனு தன் கீழ்க் கண்ணால் பொன்முடியைப் பார்த்துப் புன்முறுவல் கொள்கிறாள்.) தேனொப்பாள் : அந்தப் பூக்குடலையெ நீங்கள் ஒங்க எடது கய்லே தொங்கவுடுங்க பாக்கலாம். (பொன் மூடி அப்படியே செய்து நிற்றல்) தேனொப்பாள் : என் கண்ணான மாமாதான் நீங்க அப்டியே! (தேனு அறையின் உட்புறத்தில் கதவோரம் நிற்கிறாள். பொன்முடி குடலையைக் கழற்றி வைத்துவிட்டு மற்றவற்றையும் கழற்ற அறையில் நுழைகிறான்.) தேனொப்பாள் : என் மாமா (கட்டியணைத்தல்) தாடி செய்தீங்களா நல்லா! பொன்முடி : (கையுதறி) நான், பொன்முடி அம்மா. தேனொப்பாள் : அடடா (என்று, தன் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கிறாள்) தாடிப்பண்டாரம் : இப்டி வெளியிலே வாயேண்டி. தேனொப்பாள் : நீங்க ஒரு ஏமாந்த சோணகிரி. சொல்றதில்லே? (அவசரமாக, பொன்முடி, தன் சொந்தவுடையுடன், தாடி மீசை பூக்குடலையை மறைவாக எடுத்துப் போகிறான்.) (வெளுக்காத காலைப்போது! வஞ்சி வடிவு மாடு கறக்கப் போகிறாள். அடுத்தபடி கவனித்திருக்கும் பூங்கோதை, அவளுக்கு முன்பே செம்பில் தண்ணீரும் துடைப்பமுமாகத் தெருக்கதவைத் திறந்தாள். தெருப்புறம் வந்து தன் காதலன் வருந் திசையை நோக்கி நிற்கிறாள்; தன்னிடம்தான் வருகின்றானோ என்று வீட்டையும் பார்த்துக் கொள்ளுகிறாள்.) (பொன்முடி, பண்டாரத்தின் உருவத்தோடு அருகில் நெருங்குகிறான்) (பொன்முடியென நம்பி) பூங்கோதை : அத்தான்! பொன்முடி : ஆம் (தழுவிக்கொண்ட வண்ணம் வீட்டு நடையை அடைகிறார்கள். உடனே, பூப்பொட்டணம் ஒன்றைப் பூங்கோதையிடம் தந்து போகிறான்.) ஒரு குரல் (தாய்) : இன்னும் (தெருவில்) அங்கு, என்ன செய்கிறாய் பூங்கோதை? பூங்கோதை : ஏனம்மா? (என்று வீட்டுக்குள் செல்கிறாள்) தாய் : நீ, செய்து முடித்த வேலை என்ன? பூங்கோதை : நான் நெடுங்கயிற்றைத் தலை முடித்துத் தண்ணீர் மொண்டேன். நீங்கள் ஆ முடித்த கயிறவிழ்த்துப் பால் கறந்தீர்கள். நீங்கள் முடித்தீர்கள். நான் என் வேலையை முடித்தேன். இதோ பூ முடித்த பொட்டணம் பண்டாரம் தந்தார். (பூங்கோதை, தன் படுக்கையில் மீண்டும் படுத்தாள்) (சன்னலில் தேனொப்பாள் குந்திப் பொன்முடி யின் வருகையை ஆவலாய்ப் பார்த்திருக்கிறாள். பொன்முடி அங்கு வருகிறான்) தேனொப்பாள் : வாங்க மாமா வாங்க. உள்ள வாங்க. பொன்முடி : ஐயோ அம்மா, நான் பொன்முடி அல்லவா? தேனொப்பாள் : அப்டியா! இருந்தாயென்னா? சும்மா வாங்கவுள்ளே. பொன்முடி : அவர் இருக்காரா? தேனொப்பாள் : இல்லாததனால்தானே, இவளவு ஆசெயாயும்மை அழைக்கிறேன், வரலாம் வாங்க. சும்மா வுள்ளே வாங்க. பொன்முடி : இல்லையம்மா. இந்தப் பூக்குடலை, தாடி முதலியவை களை நடையில் வைத்துவிட்டுப் போகிறேன். ஆண் பிள்ளையில்லா வீட்டில் நான் ஏன்? தேனொப்பாள் : அதுசரிதான்க மாமா. பொன்முடி : மறுபடியும் என்னை மாமா என்கிறீர்களே. தேனொப்பாள் : நெஞ்சிலே இருக்றதுதானே வாயில வரும். மாமா உள்ளே வாங்க மாமா. பொன்முடி : அப்படியெல்லாம் என்னை நீங்கள் சொல்லக்கூடா தம்மா. தேனொப்பாள் : அப்டியானா வந்து நடையிலே வச்சுட்டுப் போங்களேன்! (பொன்முடி போகிறான் உள்ளே) தேனொப்பாள் : (எதிர் வந்து தெருவில் எட்டிப் பார்த்து) தோபாருங்க! ஒங்கப்பா எங்கப் போயிருந்தோ விறுவிறுன்னு வர்ராருங்க, இந்த வூட்டுப் பக்கமா. பொன்முடி : அப்படியா! (பயம்) அறைக்குள் போய்விடுகிறேன். தேனொப்பாள் : ஐயோ! ஆம்பளே இல்லா வூடாச்சே! சரி! (பொன்முடி அறையில் நுழைகிறான்) தேனொப்பாள் : ஐயையோ! அறைக்கு வர்ராரே. பொன்முடி : வந்தால் வரட்டுமே என்னை அடையாளம் தெரியாது. நீங்கள் உங்கள் மாமாவிடம் பேசுவதுபோல் என்னிடம் பேசுங்கள். தேனொப்பாள் : ஒங்களே என் மாமாண்ணு நெனச்சிப் பேசவா? பொன்முடி : ஆமாம். தேனொப்பாள் : நீங்களும், என்னே பூங்கோதை இண்ணு நெனச்சி, எங்கண்ணே எம் பொன்னேண்ணு பேசுங்க. பொன்முடி : (விழிக்கிறான்) சரி. தேனொப்பாள் : என் மாமா (அதோ வந்துட்டாரு) என்னெ முத்தம் கொடு முத்தம் கொடு ண்ணு சொல்றிங்களே! எப்ப முத்தம் கொடுக்கிறது? (இதோ வந்துட்டாரு என்று கட்டி முத்தம் கொடுக்க, பொன்முடி விலகிப் போகிறான். பொன்முடி வெளியில் ஓடிவந்து விடுகிறான். பார்க்கிறான். அப்பாவுமில்லை; வேறு யாருமில்லை. அனைத்தையும் சுழற்றி எறிந்து விட்டுப் போய்விடுகிறான். தேனொப்பாள் : வெளியே எங்கும் என்னெப் பத்திச் சொல்லா தீங்க. சொன்னா ஒங்க சேதி வெளிச்சமாப் பூடும். பொன்முடி : சரி சரி. (போகிறான்) பொன்னன், இரிசன் பொன்னன் : (மாடுகளை ஓட்டிக் கொண்டும் தோளில் ஏர் சுமந்து கொண்டும் போகிறான். இரிசனும் அவ்வாறே பின் போகிறான்) இரிசன் : ஆர் போறது, பொன்னனா? பொன்னன் : நான் தான் இரிசு. இரிசன் : ஒனக்குத் தெரிய்மா? ஒங்க எசமானுக்குத் தெரிய்மா? சேதி! பொன்னன் : எந்த சேதி? இரிசன் : எந்த சேதியா? ஊரெல்லாம் கெடிகெடியா இருக்குது! பொன்னன் : இன்னதின்னு சேதி சொன்னால்ல தெரியிம். இரிசன் : ஒங்காண்டெ வூட்டுப் பையன் இர்க்குதே பொன்னு முடியோ, வெள்ளை முடியோ, அவுரு எங்காண்டே வூட்டுப் பொண்ணே தேடி வந்தாரு ரெண்டு நாளுக்கு முந்தி ஒரு ராத்ரி. வூட்டுக் கொல்லியிலே ரெண்டுபேரும் ஒர்த்தரெ ஒர்த்தர் மாத்தி மாத்திக் கடிச்சிக்கினு இர்ந்தாங்க. பொன்னன் : உம்! அப்றம். இரிசன் : அப்றம் என்னா! எங்க ஆண்டெ பார்த்துட்டாரு. கூப் டாரு எங்களெ! வந்தோம்! புடிச்சோம் கட்டியாச்சி புள்ளாண்டானெ புன்ன மரத்லே! ஆண்டெ எடுத்தாரு மெலாரெ கய்யிலே. அடியடிண்ணு அடிச்சி தோலெ உரிஉரின்னு உரிச்சி அனுப்பிட்டாரு வூட்டுக்கு பொன்னன் : அப்டியா சேதி? அட! எண்ணிக்கி நடந்தது. இரிசன் : ரெண்டு நாளுக்கு முந்தி. பொன்னன் : ரெண்டு நாளுக்கு முந்தி, ரெண்டு நாளுக்கு முந்தி, ரெண்டு நாளுக்கு முந்தி. (என்று பாடம் பண்ணுகிறான் பொன்னன்) பொன்னன் : ரெண்டு நாளுக்கு முந்தி ராத்ரிலியா பகல்லெயா? இரிசன் : நடு ராத்ரி. பொன்னன் : ரெண்டு நாளுக்கு முந்தி, நடுராத்திரி. ரெண்டு நாளுக்கு முந்தி நடு ராத்திரி, ரெண்டு நாளுக்கு. முந்தி நடு ராத்ரி, ரெண்டு நாளுக்கு முந்தி நடு ராத்ரி.... எத்தாலெ அடிச்சாங்க? இரிசன் : மெலாராலே பொன்னன் : ரெண்டு நாளுக்கு முந்தி நடுராத்ரி மெலாராலே ரெண்டு நாளுக்கு முந்தி நடுராத்ரி மெலாராலே ரெண்டு நாளுக்கு முந்தி நடுராத்ரி மெலாராலே ரெண்டு நாளுக்கு முந்தி நடுராத்ரி மெலாராலே இரிசன் : ஏன் இத்தெ வரப்படுத்றே நீ? பொன்னன் : இல்லே சும்மா இரிசா. நீ போ. நானுவூட்டுலே வெத்லெப் பாக்குப் பையெ மறந்து வச்சிட்டு வந்துட்டேன். எடுத்து வர்ரேன். (இரிசன் போகப் பொன்னன்) ரெண்டு நாளுக்கு முந்தி நடு ராத்ரி மெலாராலே (2) ... ... ... ... (3) ... ... ... ... (4) (பொன்னன் போகிறான்) (மான நாய்க்கனும் மனைவி அன்னமும் தெருத் திண்ணையுள் குந்திப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.) மான நாய்க்கன் : என்ன அன்னம் நம்ம பையன் வெறி பிடித்தவன் போல இருக்கிறான்? இரண்டு மூன்று நாளாகவே! அன்னம் : சரியா அவன் சாப்பிடுறதுமில்லெ என்ன அது? மான நாய்க்கன் : பெட்டியண்டை உட்கார்ந்தால் பையன் உட்கார்ந்த படியே இருக்கிறானாம். ஓலையைத் தொட்டுக் கணக்கெழுதி நாலு நாளாகிறதாம். வந்த வியாபாரி களையும் வா என்பதில்லையாம். என்ன இது தொல்லை. அன்னம் : அப்பவே திருமணம் பண்ணச் சொன்னேன். நீங்க சும்மா இருந்திட்டிங்க. (இதற்குள், பொன்னன் தன் தோளில் இருந்த ஏரைக் கீழே இறக்கி வைத்து மாட்டை எதிரில் நிறுத்தி வைத்துக் கொண்டு நிற்கிறான்) மான நாய்க்கன் : என்னடா பொன்னா? என்ன சேதி, ஏண்டா திரும்பிட்டே? பொன்னன் : ஒண்ணுமில்லைங்க. இரிசன் இர்க்கான்னு பார்த்தெ. அவந்தாங்க ஆண்டெ ஒங்க மச்சினர் வூட்டுப் படியாளு. மான நாய்க்கன் : ஆமாமாம். பொன்னன் : அவென் தாங்க! சேதி ஒண்ணு சொன்னான்க. எனக்கு ரொம்ப வர்த்தமா போச்சிங்க. நம்பச் சின்னாண்டேயெப்பத்தி மான நாய்க்கன் : சின்னாண்டையைப் பத்தி என்னடா சொன்னான்? பொன்னன் : ரெண்டு நாளுக்கு முந்தி நடுராத்ரி மெலாராலெ ... ... மான நாய்க்கன் : என்னடா நடுராத்திரி? பொன்னன் : நம்பச் சின்னாண்டெயும் ஒங்க மச்சான் வூட்டுப் பொண்ணும் பேசிக்கினு இர்ந்தாங்களாம் நடு ராத்திரி. மான நாய்க்கன் : எந்த இடத்திலேடா? பொன்னன் : அவுங்க வூட்டுக் கொல்லையிலே. ஒங்க மச்சான் சின்னாண்டையை மரத்திலே கட்டிபுட்டு மெலாராலே அடிச்சாராம் ஆண்டே (அழுகிறான்) அன்னம் : ஐயோ! (என்று கண்ணீர் விட்டு அழுகிறாள்) மான நாய்க்கன் : (இரக்கக் குரல்) தான தருமங்கள் நான் செய்து பெற்ற பிள்ளை, ஏனென்று தட்டாமல் இன்றுவரைக்கும் சிறந்த வானமுதம் போல வளர்ந்து வரும் என் னருமைத் திருமகன்; வெள்ளை உடுத்து வெளியில் ஒருவன் வந்தால் கொள்ளிக் கண் பாய்ச்சும் இக் கொடிய வுலகத்தில், வீட்டில் அரச நலம் வேண்டு மட்டும் கொள்ளப்பா, நாட்டின் நடப்பினிலே நட்ட தலையோடு செல்லப்பா என்று அருமையாய் வளர்த்த பிள்ளை... ... கொல்லைப் புறத்தில் கொடுமை பல பட்டானா? பொன்னா! போ நீ. (பொன்னன் போகிறான்) (தாடிப் பண்டாரம் அங்கு வந்து பல்லைக் காட்டுகிறான்) மான நாய்க்கன் : (கோபமாய்) இங்கு நிற்காதே போ தாடிப்பண்டாரம் : என்னால் ஒண்ணுமில்லியே, சொல்லுண்ணு ஒங்க பிள்ளை சொன்னபடி நான் போய்ச் சொன்னேன்.. ... ... பூங்கோதைப் பொண்ணு, ஓலை ஒண்ணு குடுத்துப் போய்க் குடுண்ணா, நானு அத வாங்கி வந்து ஒங்க புள்ளையிடம் குடுத்தேன். மான நாய்க்கன் : அப்படியா சமாச்சாரம்! அதற்காக உனக்கென்ன கொடுத்தார்கள்? தாடிப்பண்டாரம் : பத்து வராகன் பணமும், முத்து மாலை ஒண்ணும் அவ குடுத்தாள்ண்ணு எந்த மடையஞ் சொன்னான். ஒங்கிட்ட. அந்த மடையனைக் காட்டுங்க என்கிட்ட ... ... தாடி ஒண்ணு கேட்டான் ஒங்கப்பிள்ளே. எனக்கென்னா! நானு குடுத்தேன். மூடி முக்காடிட்டு மூஞ்சிலே தாடியெ ஒட்டிக்கினு நானு நடக்ற மாதிரி நடந்து அவன் போனான் அவகிட்ட! காலையிலே நல்ல கரிக்கல்லெ ரெண்டு பேரும் உம்! ... ... ... உம்!! மான நாய்க்கன் : சரி. சரி. நிறுத்து உன் கதையை என்னிடம் இதை யெல்லாம் சொல்லிவிட்டதாகப் பொன்முடியிடம் சொல்லாதே. இன்றைக்கு முத்து வணிகர் வட நாட்டுக்குப் புறப்படுகிறார்கள். அவர்களோடு முத்து விற்றுவர இவனை அனுப்பி விட்டால் வர ஆறு மாசமாகும். அதற்குள் இவன் அவளை மறந்தே விடுவான். என்ன அன்னம்? என் யோசனை. அன்னம் : நல்ல யோசனை இது. அப்படித்தான் செய்யுங்களேன். (அன்னம், கண்ணைத் துடைக்கிறாள். பண்டாரம் போகிறான்) (பண்டாரமும், பொன்முடியும் தெருவில் சந்திக்கி றார்கள்) பொன்முடி : எங்கே போய் வருகிறீர். எங்க வீட்டுக்கா? நீங்க அப்பாவிடம் என்ன பேசியிருந்தீங்க? தாடிப்பண்டாரம் : ஒங்கப்பாவும் நானும் ஒண்ணும் பேசவில்லே. அவுளுக்கும் ஒனக்கும் இருக்ற ரகசிய விசயத்தெ அவுரு கேள்விப்படலே! ஒன்னெ புன்ன மரத்லெ கட்டி அடிச்சதும் கேள்விப்படலே. அவுருக்குத் தெரியாது. அதுக்காவ அவுரு எங்கே அழுதார். உம்! அழலியே. ஒன்னெ, ஒங்கப்பா இண் ணெக்கி வட நாட்டுக்கனுப்பப் போராரின்னு நீ நெனக்கிறியா? அதெல்லாம் ஒண்ணுமில்லே. (பொன்முடி நிதானிக்கிறான். தலையைத் தொங்கப் போட்டு வருத்தத்தோடு வீடு செல்கிறான்) எதிர்பாராப் பிரிவு (பல பொதி மாடுகள், முத்துப்பொதி சுமந்து செல்ல நாயக்கன்மார் பலர் உடன் செல்லுகிறார்கள். அவருடன் பொன்முடியும் ஒருவன்) (தெருவில் அவரவர் தம்தம் வீட்டின் குறட்டிலும், மேன்மாடியிலும் நின்றபடி மஞ்சள் நிற அரிசியும் பூவையும் பொதி மாட்டு வணிகர் மேல் தூவி வாழ்த்துகிறார்கள், வானை நோக்கிக் கும்பிட்டு, நல்லபடி திரும்ப வேண்டும் என்ற வாழ்த்தொலி வானை அலங்கரிக்கிறது) (பொன்முடி, கண்ணீர் துடைப்பதும், தலைகுனிவதும் நிமிர்ந்து எதிர் நோக்குவதுமாகச் செல்லுகிறான். கூட்டம், மகர வீதியை அடைகிறது. மறை நாய்க்கன் வீட்டு மேல் மாடியில் பூங்கோதை நிற்கிறாள். அவள் எதிர்பாராத வகையில் பொன்முடியின் பயணத்தைப் பார்க்கிறாள்; திடுக்கிடுகிறாள். தன் மார்பின் மீது கையமைத்துக் கண்ணீர் விட்டுக் கதறுகிறாள். பொன்முடி பார்க்கிறான். தன் கண்ணீர் பார்வையை மறைக்கிறது. பொன்முடி உடல் தளர்ந்து விழுகிறான். மாடியில் பூங்கோதை மல்லாந்து விழுகிறாள் இருவரும் மீண்டும் எழுகிறார்கள்... பார்த்த கண்கள் பார்த்தபடி நடக்கிறான் பொன்முடி! வீட்டைத் தாண்டுகிறான். திரும்பிப் பார்க்கிறாள் பூங்கோதை. இரு கை தாங்கி நிற்கிறாள். கண் பார்வை மறைகிறது) (பூங்கோதை, தள்ளாடி நடந்து, வீட்டில் ஒரு பக்கம் விரிந்து கிடக்கும் பாயிற் படுத்து புரண்டிருக்கிறாள். அவள் படுத்திருக்கும் இடத்திற்குச் சற்றுத் தூரத்தில் மறைநாய்க்கனும் வஞ்சி வடிவும் பேசுகிறார்கள்.) மறை நாய்க்கன் : தொலைந்தான் அவன். இனித் திரும்பவா போகிறான்! உம். வஞ்சி வடிவு : அவன் ஒடம்புக்கும், அவன் சொகுசுக்கும் ஆறுமாசப் பயணமா ஒத்துக்கும். உம் திரும்ப மாட்டான். மறை நாய்க்கன் : குமரகுருபரர் நம்மூர் அறவிடுதியில் தங்கியிருக்கிறார். நாளைக்கு வேறு ஊருக்குப் போகப் போறாராம். வஞ்சி வடிவு : எனக்கிருந்த பாரம் இன்னெக்கே தொலஞ்சிப்போச்சி. நான் வர்றேன். அந்தப் பையன்தான் ஒழிஞ்சிப் புட்டானே. குமரகுருபரரும் தருமபுரம் போறாராம். மறை நாய்க்கன்: ஆமாம். வழியிலிருக்கிற சிவாலயம் எல்லா வற்றையும் தரிசனம் பண்ணிக் கொண்டு அவர் தருமபுரம் போக இன்னும் இரண்டு மூன்று மாசம் பிடிக்காதா? இண்ணைய பொழுதுக்காப் போவோம். பூங்கோதை வீடு (மூன்று மாதத்தின் பின் ஒரு நாளிரவு) (பூங்கோதை, தன் படுக்கைமீது உட்கார்ந்தபடி) பூங்கோதை : தொண்ணுறு நாட்கள் சென்றன. என் விழிகள் தூக்கத்தை என்றைக்குத் தழுவும்? என்றைக்கு என் துணைவரை என்னுடல் தழுவும்? (சோகம்) கண்டவுடன், அவர் என்னைக் கண்ணே என்று தாவுவார். என் புண்பட்ட நெஞ்சம் குளிரும்! அன்பு நிலையும் அடையும் நாள் எந்நாள்? என்புருகிக் கோருகின்றேன். கண்ணிற் கருவிழியும், கட்ட விழும் செவ்வுதடும், விண்ணொலிபோல் வீசும் சிரிப்பு விருந்துண்டு, தோளின் மணிக்கிளையைச் சுற்றும் கொடியாகி, ஆளன் திருவருளுக்காளாதல் எந்நாளோ! அவர் சென்ற வடநாடு நோக்கி முத்து வணிகர் புறப்படுவார், நாமும் புறப்படுவோம் என்றிருந்தேன் ஒருவரும் புறப்படவில்லை. (அவள், கொல்லையில், புன்னை மரத்தை நோக்கிப் புறப்படுகிறாள். பெற்றோர் துயில்கின்றாரா விழித் திருக்கின்றாரா என்பதைக் கவனித்தபடி) பூங்கோதை : புன்னையே அவர் மிலாரால் அடிபடும்போது நீ, அவரைத் தழுவியிருந்தாய். அவரோடு நீயும் இன்னல் ஏற்றாய், நீ அவரின் நினைவில் இடம் பெற்றாய். எனை மறந்தாயோ! மறக்கவில்லை என்றாலும், நான் இறக்காமல் இருக்கவோ போகின்றேன். ஊண் ஏது? உறக்கம் ஏது? (தள்ளாடி நடந்து மரத்தைத் தழுவியபடி சோர்வு அடைகிறாள். தலை, தோளில் தொங்குகிறது) (சாக்குரல்) அத்தான்! (இரிசன், அந்த இருளில் ஒரு மாட்டை இழுத்துக் கொண்டு நுழைகிறான்) இரிசன் : ச்கெச்சே தே கழ்தே! திருட்டுக் கழ்தே! ராத்ரிய்லே கவுத்தை அறுத்துக்கினு ஓட்றது. ஊரான் முட்டுப் பய்ரே மேய்றது. (அடிக்கிறான் மாட்டை) (இரிசன், மாட்டைப் புன்னை மரத்தில் கட்டுவதற்காகக் கயிற்றைப் புன்னையையும் பூங்கோதையையும் இருட்டில் தெரியாமல் சேர்த்துக் கட்டுகிறான்.) இரிசன் : இதென்னா! மனசர் ஒடம்பு கைக்குத் தட்டுப்பட்ற திங்கே... ஆண்டே! ஆண்டே!! ஆண்டே!!! ஓடியாங்க வௌக்கொண்ணு எடுத்துக்கினு. (உள்ளே இருந்து மறைநாய்க்கன்) ஏண்டா? இதோ வந்துட்டேன். (விளக்குடன் வந்த மறை நாய்க்கன்) என்னாடா? இரிசன் : வௌக்கே இங்கே காட்டுங்க! (மறைநாய்க்கன், மரத்துடன் இருக்கும் தன் மகளைக் கண்டு திடுக்கிடுகிறான்) மறைநாய்க்கன் : அம்மா! அம்மா!! (கையால் தொட்டு இழுக்கிறான். தன் மனைவியின் பேர் சொல்லிக் கூவுகிறான்.) அடி! வஞ்சி வடிவு! ஐயோ! ஓடிவாடி, ஆசைக்கு ஒரு பெண் படைத்தேனே! நாசமாய்ப் போக அந்தப் பையன் என்னமோ பண்ணிட்டான் குழந்தையை! (வஞ்சி வடிவு வருகிறாள்) வஞ்சி வடிவு : ஐயோ! மகளே! (இருவரும் மரத்தோடு இருக்கும் பூங்கோதையைப் பிரித்து எடுத்துத் தூக்கிக் கொண்டு போய் வீட்டில் கூடத்தில் ஒரு பக்கம் கிடத்தி, முகத்தில் நீர் தெளித்துத் துடைக்கிறார்கள். தண்ணீர் குடிப்பிக்கிறார்கள்.) வஞ்சி வடிவு : அம்மா பூங்கோதை! அம்மா! (பெற்றோர், அவள் முகத்தை உற்று நோக்குகி றார்கள். பூங்கோதை முகம் புரளுகிறது) பூங்கோதை : அத்தான்! மறைநாய்க்கன் : அத்தான்! இன்னும் அதே நினைவா?. ஒழிந்தது (எழுந்து போகிறான்) வஞ்சி வடிவு : அத்தான் தான் தொலைந்தானேடி! பூங்கோதை : வருவாரம்மா. தொலைய வேண்டாம் அம்மா! (வஞ்சி வடிவும் போய் விடுகிறாள். பெற்றோர் படுக்கையை அடைந்து தூங்கி விடுகிறார்கள். கோழி கூவுகிறது) (மாடுகளை அதட்டும் சத்தம் எட்ட இருந்து கேட்கிறது. திடுக்கிட்டு எழுகிறாள் பூங்கோதை! அவள், சத்தம் வரும் வழியில் தன் காதைச் செலுத்துகிறாள்.) பூங்கோதை : முத்து வணிகர், முத்து வணிகர்தான்! (எழுந்து தன் தாய் தந்தையர் தூங்குகிறார்களா என்று பார்க்கிறாள். தன் உடை சிலவற்றைக் கட்டி எடுத்துக் கொள்கிறாள். துப்பட்டி ஒன்றால் உடல் மறைய முக் காடிட்டுக் கொள்ளுகிறாள். மெதுவாக நடக்கிறாள். கதவைத் திறக்கிறாள். ஓடுகிறாள்) (முத்துவணிகர் கூட்டம் பொதி மாடுகளுடன் போகிறது. அதைத் தொடர்கிறாள்) பூங்கோதை : வழிப்பாட்டு பல்லவி அத்தான் என்றழைப்பது கேட்குமோ காதில்! அழுது நான் இங்கே.... (அத்தான்) அநுபல்லவி கொத்தான மலர்த்தேனை நினைத்தொரு வண்டு கூறும் பண்போல நான் இங்கிருந்துகொண்டு (அ) சரணம் புத்தம்புதுநிலா கண்முன் பூக்காதோ பூங்கோதை என்றெனை அழைக்குஞ்சொல் கேட்காதோ தொத்தும் கிளிபோல அணைப்பதும் வாய்க்காதோ தோகை படுந்துன்பம் என்றனை மாய்க்காதோ (அ) (பூங்கோதை நடந்து செல்லுகிறாள், கண்ணீர் ததும்ப) பைதலி வனம் (பொன்முடி முதலிய முத்து வணிகர்தம் பொதி மாடுகளை மரங்களில் கட்டி அவற்றிற்குத் தீனி வைக்கிறார்கள்.) (சிலர் ஒருபுறம் கல்சேர்த்து அடுப்பு மூட்டுகிறார்கள் பொன்முடி அங்குள்ள ஒரு குளத்தை நோக்கிப் பூங்கோதை நினைவாகச் செல்லுகிறான் பொன்முடி. அதிலுள்ள தாமரை மலர்களையும், அங்குத் திரியும் வளர்ப்பு மான்களையும் கண்டு மனம் வருந்துகிறான்.) பொன்முடி பாடுகிறான் (பாட்டு) பல்லவி அவள் முகம் அழகிய தாமரை! எனைப் பிரிந் தங்கே அல்லல் படுகின்றாளே (அவள்) அநுபல்லவி கவலையின்றி உலவும் மான்கள் விழி கவலை கொண்ட அவள் விழியே! (அவள்) சரணம் துவள்கின்ற இடையோ வஞ்சிக்கொடி! தோகை நடை அன்னம் எப்படியோ அப்படி! அவள் அங்கே நானிங்கே எனும் படி ஆக்கினார் என் பெற்றோர் இப்படி! (அவள் (சமையல் செய்து கொண்டிருக்கும் வணிகரை நோக்கி ஆரியத் தவசிகள் சிலர் வருகின்றனர்.) ஆரியன் : தமிழர்களே! ஒரு விண்ணப்பம். சர்வேசனருளால் நீங்கள் சௌக்கியமா இருக்கணும். தமிழன் 1 : என்ன செய்தி? ஆரியன் 1 : வேறொன்றுமில்லை. உலக க்ஷேமாத்தம் யாகம் செய்யப் போகிறோம். நீங்கள் தமிழர், உத்தமர், மகா தியாகிகள். கொஞ்சம் பொன் கொடுக்க வேண்டும். மகா புத்திமான்கள் யாக காரியத்திற்கு இல்லையென்று சொல்ல மாட்டீர்கள். தமிழன் 2 : இதென்னடா இது! யாகமாம், யாகமென்றால் இன்ன தென்றே புரியவில்லையே. அதோ பொன்முடி நிற்கிறான். அவனெ கூப்பிடுங்க. (ஒருவன் சென்று அழைத்து வருகிறான்) பொன்முடி : என்ன செய்தி? ஆரியன் 1 : வரணும். ஆசீர்வாதம்! நாங்கள் ஆரிய தவசிகள். யாக காரியமா தருமம் கேட்டோம். இயன்ற அளவு பொன் கொடுங்கோ. பொன்முடி : (சிரித்து) இருக்கலாம் அய்யா. நாங்கள் தமிழர்களாயிற்றே உயிர்க் கொலை செய்யும் யாகத்தைத் தமிழர் ஆதரிப்ப துண்டா? இல்லவேயில்லை. யாகத்திற்கு நாங்கள் பொன் கொடுத்தால் நீங்கள் செய்யும் கொலைப்பழி எங்களை யல்லவா சாரும். உம்! முடியாது. தமிழன் 1 : அப்டியா? ஒரு காசுகூட குடுக்க முடியாது. தமிழன் 2 : போய்யா, போய்யா. கொலைகாரருக்குத் தருமமா குடுக்கணும். ஆரியன் 1 : நல்லது. இஷ்டமில்லேனது பத்தி எங்களுக்கு வருத்த மில்லே. நீங்க பகு க்ஷேமமாயிருக்கணும். நாங்க வருகிறோம்... ... ஒரு புறம்போய். (மற்றவர்களை நோக்கி) இவர்களே இப்ப ஒண்ணும் பண்ணப்படாது. இதோ சமீபத்தில் இருக்றது இவர்கள் முத்து விற்க வேண்டிய இடம். விற்றுவிட்டுக் கையிலே எதெஷ்டமாகப் பொன் முடிப்புடன் மறுபடியும் இங்கு வந்து தங்கித்தான் போவார்கள். அப்ப பார்த்துக்கலாம் இவர்களே. ஆரியன் 2 : அவ்வளவுதான், அந்தத் தமிழன், யாகத்தைக் குறை வாகப் பேசியபோது மகா கோபம் எனக்கு! வரும்போது அவர்களெ மடக்கிப் பொன்னைப் பறிப்பது மட்டுமா, அந்தப் பையன் இர்க்கானே - நம்ம யாகத்தெ பழிச்சவன் - அவனைச் சித்ரவதையும் செய்யணும். ஆரியன் 1 : ஆகட்டும் (போகிறார்கள்) பொன்முடி : தனியே (பாட்டு) பல்லவி உதிர்ந்த மலர்போல் படுமோ - அவள் உள்ளங்கை, என் தோளில் (உதிர்ந்த) அனுபல்லவி அதிர்ந்த மின்னல் போல் தோன்றுமோ அவள் நகை அளிந்த கனிபோல் கிடைக்குமோ அவள் இதழ் (உ) சரணம் புதைத்தனர் தூரமெனும் சேற்றில் பொழிற்தனல் காதலை, வரும் காற்றில் எதை நினைத்தழுவேன்? ஊர் தூற்றும் தூற்றல் உளத்தை வாட்டிட மறந்தாளோ ஈற்றில் (உ) பூங்கோதை வழிப்பாட்டு பல்லவி எதிரில் வர மாட்டீரா? அத்தான் எதிரில் வர மாட்டீரா? (எதிரில்) அநுபல்லவி கதிர்கொண்டு செய்த திருமுகத்தைக் காண மாட்டேனா உளம் குளிர (எதிரில்) சரணம் பதறும் நெஞ்சுக்கோர் பதில் இல்லையா? அத்தான்! படுந்தொல்லைதனை நீ பார்க்கவில்லையா? குதிகால் ஒடிந்திட நடக்கின்றேன் அத்தான்! கொஞ்சம் உம் திருமுகம் காட்டுதல் மலையா? (எ) முத்து வணிகன் 1: என்னா? பூங்கொடி இப்படி அழுவுறே நீ, காட்டுறோம் அவனெ. வா அம்மா அழாமே. முத்து வணிகன் 2: இதென்னடா எழவாப் போச்சி. மூஞ்சே மறச்சிக் கினு நீ, நெடுந்தூரம் கூடவே நடந்து வந்துட்டே. அங்கேயே தெரிஞ்சிருந்தா ஒன்னெ அப்பவே வூட்டுக்குத் தெருத்தி யிர்ப்பம். எப்பப் பார்த்தாலும் அத்தான் அத்தான்னு அழுவுறே. அழுமூஞ்சி! நட. முத்து வணிகன் 3: அம்மா! மனசெ வுடாதம்மா, சும்மா நட, அழா தேம்மா. (பூங்கோதை நடக்கிறாள்) (முத்து வணிகர், பைதலி வனத்தை அடைகிறார்கள்) வணிகர் 1 : நீர் எவ்வளவுக்கு வித்தீர் முத்து? வணிகர் 2 : மூணு கோர்வதானே நான் எடுத்தாந்தது. முந்நூர்ரு வராகன் நறுக்கா. வணிகர் 3 : எனக்கு ஒண்ணும் ரொம்ப லாபமில்லே. ஆறாய்ரம் வெராகந்தான் நின்னது. வணிகர் 4 : எனக்கு எல்லா முத்தும் வித்துட்டுது. ஆனா, நான் எடுத்துப்போன முத்து மட்டும் அப்படியே இர்க்குது. வணிகர் 1 : நல்லது தாண்டாப்பா நல்லதுதான். வணிகர் 2 : எஞ்சேதியெ கேட்டிங்களா? வணிகர் 1 : என்னா? ஒங்சேதி வணிகர் 2 : மூவாய்ரம் வெராகன் கொள்முதல் வித்த தொகயெ மட்டும் கேக்காதிங்கோ. வெக்கம்! வணிகர் 1 : சொல்லப்பா. வணிகர் 2 : அதே மூவாயிரம் வெராகந்தான்! வணிகர் 1 : (மற்றவர்களை நோக்கி) ஒங்களுக்கெல்லாம் நல்ல வூதியந்தான். அனைவரும் : ஆம். வணிகர் 1 : ஏன் பொன்முடி? பொன்முடி : இன்னும் எத்தனை நாட்கள் செல்லும் நாம் வீட்டை அடைய? வணிகர் 1 : நீ அதிலேயே இரப்பா. ஆதாயம் எப்படின்னா? பொன்முடி : நல்ல ஆதாயந்தான். போய்ச் சேர இன்னும் எத்தனை நாட்களாகும்? வணிகர் 1 : நாளக்கிப் போயிடலாம். வணிகர் 2 : ஏன் நாளக்கி? இண்ணக்கி ராத்ரிக்கே பொன்முடி : இன்னும் பதினைந்து நாள் செல்லுமா? வணிகர் 1 : செல்லும் மாடுகளயல்லாம் ஒழுங்கா கட்டுங்கள். (அனைவரும் ஒரு புறமாக உட்காருகிறார்கள். ஒரு வணிகன் ஒருபுறம் செல்லுகிறான். பொன் கேட்ட ஆரியர், அங்கொரு புறத்திலிருந்து கொடிய பார்வை செலுத்து வதைப் பார்க்கிறான். திரும்பி வந்து மற்றவர்களிடம் கூறுகிறான்) தமிழன் 1 : பொன்னு கேட்டார்களே அவர்கள், அங்கே ஒரு பக்கம் நிக்கிறார்கள். நம்மெக் குறிச்சி ஏதேதோ பேசுகிறார்கள். அவர்களுடைய முகக் குறிப்பல்லாம் நல்லா இல்லே. நம்ம சொத்துக்களுக்கு ஏதாவது தீங்கு தேடினாலும் தேடுவார்கள். தமிழன் 2 : என்ன தீங்கு தேடி விடுறது அஞ்சாறு பேரு. தமிழன் 1 : இல்லே, இல்லே, இல்லே, இப்ப அவர்கள் பெருங்கூட்டமா இர்க்கிறார்கள். தமிழன் 3 : ஒரே பேச்சு, சொல்றேன் கேளுங்க அப்படி ஏதாவது அவர்கள் நம்மெ எதுத்தா ஒடனே நாங்க ஏழெட்டுப்பேரு அவர்களெ எதுத்துச் சண்டெ போட்டுக்கினே இர்க்கி றோம். பொன்முடி நீ, இதோ கண்ணப்பன், இதோ பொன்னக்கன், நீங்க மூணு பேரும் சொத்துக்களெ யல்லாம் அப்டியே காப்பாத்திக்கினு ஒரு பக்கமாவூர்க்கு நழுவிடுங்க. தமிழன் 1 : பாருங்க. அண்ணமார்களா அதோ கத்தியும் கையுமாக நம்மைத்தான் எதுக்க வர்ரார்கள். எடுங்க கையிலே தடிகளை தமிழன் 3 : பொன்முடி! சொன்னபடி செய் சீக்கிரம். (பொன்முடியோடு மூவரும் போகிறார்கள் அனைவரும் ஆரியரை எதிர்க்கிறார்கள். தமிழர்கள் மடிகிறார்கள். பல பொதி மாடுகள் மூட்டைகளுடன் மூவரும் மறைந்து போய் விடுகிறார்கள். சில மாடுகள் சில மூட்டைகள் ஆரியர் வசம் அகப்படுகின்றன) ஆரியன் 1 : நம் பக்கத்திலே எத்தினி பேருக்குக் காயம்? ஆரியன் 2 : அதெல்லாமிர்க்கட்டும். அந்தப் பையன் எங்கே இங்கே காணோமே யாகத்தெயல்லவா பழிச்சான் நம்ம ஆரிய தர்மத்தையுமல்லவா அவன் இகழ்ந்தான். ராட்சசப் பயல். ஆரியன் 3 : நம்மப் பக்கம் சுமார் பத்துப்பேர் செத்துப்புட்டார்கள். நாலு அஞ்சிப் பேருக்குக் காலே கெடயாது. அந்த விவனுக்குக் கண்ணு போச்சி, ஆரியன் 1 : நாம இவ்வளவு பேரு இர்ந்துங்கூட... ஆரியன் 2 : தமிழனுங்க. தடி எடுத்தா கையிலே சுழலுகிறதே கிறு கிறுண்ணு! நம்ம கத்தி என்னா பண்ணும் அவுனுங்க கிட்டே. ஆரியன் 3 : இந்தப் பக்கமா போனான் அந்தப் பையன். இன்னம் சிலரையும் கூட்டிக்கினுப் போனான். மூட்டெ மூடிச்செ யெல்லாம் சந்தடி காட்டாமெ கையொட கொண்டும் போய்ட்டான் நம்மெ ஏமாத்திட்டு. ஆரியன் 1 : அவன் எங்கே பூடுவான்? இந்தப் பாட்டெயே போனா ஆப்பிட்டுக்குவான் பையன். ஆரியன் 2 : அப்டின்னா, எடு கத்தியே, ஆர் வர்ரது என்கூட? ஆரியன் 3 : நானே வர்ரேன். ஆரியன் 1 : நானும் வர்ரேன். (மூவரும் வாள் கொண்டு ஓடுகிறார்கள்) காதலர் சந்திப்பு (பூங்கோதையின் கூட்டம் எதிரில் வருகிறது. பொன் முடியின் சிறு கூட்டம் தூரத்தில் காணுகிறது) பூங்கோதையின் கூட்டம் 1 : அதோ வருகிற கூட்டம் நம்ப முத்து வணிகர் கூட்டந்தானே! பூங்கோதையின் கூட்டம் 2: அப்படித்தான் இருக்கும் ஆனா, சின்ன கூட்டமாகத் தெரியுதே. (பூங்கோதை, உற்று கவனிக்கிறாள். எதிரில் வரும் கூட்டத்தையும், அவர்கள் பேசுவதையும்) பொன்முடி கூட்டம் 1: அதோ வருகிறார்கள் நம்மூரார். (பொன்முடி, உற்றுக் கவனித்து) அவர்களோடு வரும் பெண் யார்? பெண் தானே? பெண்ணுருவா, அல்லது என் நினைவா! பொன்முடி கூட்டம் 2: ஆம்! ஆம்!! பெண்ணேதான். (பொன்முடி முன்னோக்கி விரைந்து நடக்கிறான். எதிரில், பூங்கோதையும் முன்னே, விரைந்து வருகிறாள்) பூங்கோதை : ஆம்! ஆம்!! என் அத்தான்தான் (முன்னோடி வருகிறாள். பொன்முடியும் முன்னோடி வருகிறான். இதே சமயம் மரத்தின் மறைவாக ஆரியனும் பொன்முடியை நெருங்குகிறான்) பொன்முடி : (நின்று முகமெல்லாம் வியப்பாக) பூங்கோதை! பூங்கோதை : அத்தான் (என்று இருகையும் நீட்டுகிறாள். அந்த இருகையும் பொன்முடி யின் தலையைத் தாங்கிக் கொள்ள, பூங்கோதை முத்த மிடுகிறாள். ஆனால் அவன் தலையை மரத்தின் மறைவிலிருந் தோர் வாள் வீசுகிறது. பூங்கோதை தன் அத்தானுடல் கீழே கிடப்பதையும், தலை மட்டும் தன் கையிலிருப்பதையும் உணர்கிறாள். தலையைத் தரையில் போட்டு ஐயோ! அத்தான்! என்று பூங்கோதை கீழே விழுந்து சாகிறாள்.) (மரத்தின் மறைவிலிருந்து வெட்டிய ஆரியன் ஓடுகிறான். மற்றொரு பக்கம் ஒளிந்திருந்த ஆரியரும் ஓடினார்கள். முத்து வணிகர் உடல் நடுங்கினர். இறந்தவர்களை நெருங்கினர்) வணிகர் 1, 2, 3, 4 (நால்வரும்) ஐயோ! என் செய்வோம்! அவளும் மடிந்தாளே! வணிகர் 1 : செந்தமிழர் மேன்மைக்குச் செத்தான்! அன்பன் செத்த தற்குச் செத்தாள் நம் தென்னாட்டன்னம். வணிகர் 2 : என்ன செய்யலாம்? (அழுது நிற்கிறார்கள்) இனி போக வேண்டிய வணிகன் 1: இன்னம் மத்த வங்கல்லாம் எங்கே? போய் வந்த வணிகன் 1: அத்தெ என்னாத்துக்குக் கேக்றே... யாகத் துக்குப் பொன்னு கேட்டானுங்க வந்து நாங்க தமிழர், ஒங்க யாகத்துக்கு நாங்கப் பொன்னு குடுக்கமாட்டோம். ஒங்க யாகம் கொலை பண்றதெச் சேர்ந்ததிண்ணோம்! இவளவு தான்! அந்தப் பைதலி வனத்தில் நடந்தது இது! வந்து கேட்ட அந்த ஆரியனுங்க சரிதாண்ணு போயிட்டானுங்க. நாங்க, போயி முத்தெ வித்துட்டு, வித்தப் பணத்தெ எடுத்துக்கினு திரும்பவும் அந்தப் பைதிலி வனத்துக்கு வந்தோம் ... வந்ததுதான்... ஒரே கூட்டம் கத்தியும் கையுமா எங்களிட்ட ஓடி வந்தது. ஒடனே, செத்தோம், பொழச் சோமின்னு பயந்தோடியாந்துட்டோம். மீந்தவங்க நாங்க தான். சொத்தெல்லாம் எவுளவோ போயிட்டுது. இனி போக வேண்டிய வணிகன் 1: ஐயையோ! நாம்ப மட்டும் எப்டிப் போறது! இப்டியே திரும்பிப் பூட்றது தான் நல்லது நாம்பளும். இனி போக வேண்டிய வணிகன் 2: அதான் சரி நம்மூரப் போயி இதுக்கு ஏதாச்சும் ஒரு வழியே இனி ஏற்பாடு பண்ணித்தான் ஆவணும். இனி போக வேண்டிய வணிகன் 3: நாம்ப போனதும், நம்பத் தென் னாட்டுப் படையெ அப்டியே தெரட்ட வேண்டியதுதான் வடநாட்டு மேலே. இனி போக வேண்டிய வணிகன் 4: ஆமாம். நம்மூரதி காரிகிட்டெ சொல்லியா? இனி போக வேண்டிய வணிகன் 3: உம்! இல்லெ. இனி போக வேண்டிய வணிகன் 1 : அப்டின்னா, நகர அதிகாரி யிடஞ் சொல்லியா? வணிகன் 3 : உம் உம்! இல்லே. போக வேண்டிய வணிகன் 2: நாட்டதிகாரியிடமே நேரிலேயே சொல்லியா? போ. வே. வணிகன் 3: உம்! அதுவுமில்லே. போ. வே. வணிகன் 1 : அரசரிடம் சொல்லியா? போ. வே. வணிகன் 3: உம்! அரசன், என்ன பண்ண முடியும். நம்ம தருமபுரப் பண்டாரச் சந்நிதி மனசு வைக்கணும். சந்நிதிக்கு அடக்கந்தானே அரசன்? போ. வே. வணிகன் 1: ஆமாமாம். போ. வே.வணிகன் 2: எல்லாரும் இப்டியே திரும்பிட வேண்டியது தான். (வருத்தமாய்) அப்பவே நாம் புறப்படும்போது பூனே ஒண்ணு குறுக்கே போச்சி. போ. வே. வணிகன் 3: இந்தப் பூனெயாங்காணும் இவளவும் செஞ்சிப் புட்டுது? சும்மா இருங்காணும். வயித்தெறிச்சலே கௌப்பாதிங்காணும் நீர்வேற. சிலர் : ஐயோ, மக்களா! ஒங்க அன்புக்கு இதுதானா பரிசு! தருமபுரம் (மாசிலாமணி தேசிகர், மடத்தின் நடுவில் வீற்றிருக்கிறார். மற்றும் சீடர்கள் புடை சூழ்ந்திருக்கிறார்கள்.) ஒரு பண்டாரம் வந்து குமர குருபரர், தரிசனம் நாடி வருகிறார். மாசிலாமணி தேசிகர்: வருக! (குருபரர் வந்து, மும்முறை விழுந்து பணிந்து நிற்கிறார்) மாசிலாமணி தேசிகர்: அமர்க! (குருபரர் அமர்கிறார்) நாம் கேள்வியுற்றோம். முருகனருளால் இந்நிலை அடைந்த தாக, மிக்க மகிழ்ச்சி. ஒரு கேள்வி கேட்போம். விடை சொல்லுக! மாசிலாமணிதேசிகர் பாடுகிறார். திரு விருத்தம் ஐந்து பேரறிவும் கண்களே அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே யாகக் குணமொடு மூன்றும் திருந்து சாத்துவிகமேயாகநீ இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப்பெருங்கூத்தின் வந்த பேரின்ப வெள்ளத்துத் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மகிழ்ந்தார் இதன் அநுபவப் பயனைக் கூறுக! (குருபரர் விழிக்கிறார். வாக்குத் தடைப்படுகிறது.) (எவன் எதிரில் உன் ஞான வாக்குத் தடைப்படுகிறதோ அவன் உன் ஞான குரு என்ற சொற்கள் குமரகுருபரர் காதில் ஒலிக்கிறது. குருபரன் மாசிலாமணி தேசிகர் அடியில் வீழ்ந்தபடி பாடும் பாட்டு) பல்லவி திருவடி சரணம் குருவே! ஞான குருவே! (திருவடி) அநுபல்லவி கருவடியில் இன்னும் எனைச் சேர்க்காமல் காக்கவே, அருள் நோக்கம் செய்யும் (திருவடி) சரணம் குருவடி இது என்று குறித்தான் அன்று - முருகன் குறுகினேன் அவன் அருளியே இன்று பெருவடி இதுவே ஆனந்தப் பெருவாழ்வும் அளிக்கும் நன்று நன்று (திருவடி) மாசிலாமணி தேசிகர்: (தொட்டு எழுப்பி) எழுக! குழந்தாய்! குருபரன் : (எழுந்து திரும்பித் தன் கூட்டத்தை நோக்கப் பெரிய பண்டாரம், பொருள், மூட்டை, பெட்டி அனைத்தையும் மாசிலாமணி தேசிகனின் பாதத்தில் வைத்து நிற்க, மாசிலாமணி தேசிகர் தலையால் அங்கீகரிக்கிறார்.) மாசிலாமணி தேசிகர்: குழந்தாய்! நன்று, நீ இன்று சிதம்பரம் சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்பிவருக! குருபரன் : நன்று. (பணிந்து போகிறார்) (தருமபுரத்தின் வீதியில், வணிகர் கூட்டமும் மான நாய்க்கன், மறை நாய்க்கனும், அழுத முகத்துடன் வந்து கொண்டிருக்கிறார்கள். தாடிப் பண்டாரமாகிய தானப் பனும் அவன் மனைவி தேனொப்பாளும் வருத்தத்துடன் வருகிறார்கள் ஒருபுறம்) வணிகன் 1 : சன்னதியில், சொல்லிக்க வேண்டியதுதான். இந்தச் செய்தியை! ஒடனே சன்னிதி, அரசனுக்கு ஆளனுப்பு வாரு! அரசன் ஓடியாந்துடுவான்! அப்றம் ஒடனே வட நாட்டுச் சண்டைக்குப் படெயெத் திரட்ட வேண்டியதுதான். வணிகன் 2 : அப்டித் தென்னாட்டாரைக் கொலெ செஞ்சிக்கினே இர்ந்தா தென்னாட்டுச் சொத்தையெல்லாம் கொள்ளெ அடிச்சிக் கினே இர்ந்தா எப்டிப் போவுறதுண்ணே. மான நாய்க்கன் : ஐயோ! மகன் சாகுமுன் என்னை எப்படி நிந்தித் தானோ! ஐயோ! அவனுக்காக அல்லவா என் வாழ்வு, என் சொத்துக்கள் (என்று தன் மைத்துனனிடம் இரு கையும் கட்டிக் கூறி யழுது தலையில் அடித்துக்கொண்டு மைத்துனன் மேல் சாய்கிறான்) மறை நாய்க்கன் : ஐயோ! மகள், தன் உயிரென்று நினைத்தாளே பொன்முடியை. நானன்றோ என் மகளுயிருக்கு எமனா யிருந்தேன் மச்சான். உன்மேல் பகை கொண்டேன். என்ன பகை! காதலர் நெஞ்சைக் களிப்பிப்பதை விட்டு அவர்களைச் சாதலிற் சேர்த்தோமே (என்று மைத்துனன் மேல் அழுது கொண்டே விழுகிறான்) அனைவரும் - (பார்த்துப் பரிதாபமாக) ஐயோ! (சன்னிதானத்தை நோக்கி வணிகர் அனைவரும் போகிறார்கள். அனைவரும் உள்ளே நுழைகிறார்கள் மான நாய்க்கனும், மறை நாய்க்கனும் விழுந்து வணங்க அனைவரும் அவ்வாறே விழுந்து வணங்குகிறார்கள்) மாசிலாமணி தேசிகர்: அனைவரும் அமருக! (அமர்கின்றார்கள்) மாசிலாமணி தேசிகர்: என்ன செய்தி? மறை நாய்க்கன்: சுவாமி! முத்து வணிகருடன் என் மைத்துனர் மகன் பொன்முடி என்பவன் சென்றான். அவனிடம் மெய்க் காதல் கொண்ட என் மகள் பூங்கோதை என்பவள் தன் காதலனைத் தேடிப் பின்சென்ற முத்து வணிகருடன் சென்றாள். அந்தப் பைதலி வனத்து ஆரியர்கள், அவ் வனத்தில் வந்து தங்கிய வணிகரைக் கொன்றதோடு, கொண்டு வந்த சொத்துக்களைக் கொள்ளை கொண்ட துடன், இவர் மகனையும் என் மகளையும் கொன்று விட்டார்கள். இவர்களைக் கேளுங்கள். வணிகன் : சுவாமி! நாங்க, போம்போது, பைதலி வனத்லே எறங்கி னோம். சில ஆரியருங்க வந்து தங்க யாகத்துக்குப் பொன்னு கேட்டாங்க. அதுக்கு எங்க கூட இருந்த பொன் முடி, நாங்க தமிழரு, சைவரு, ஒங்க யாகத்தெ நாங்க பொன்னு குடுத்து ஆதரிக்க முடியாதிண்ணு சொன்னான். அவ்வளவுதான். போயிட்டானுங்க ஆரியரு. நாங்கப் போயி முத்து வித்துட்டு ரொம்பச் சொத்துக்களோடு வரும்போதும் அதே வனத்தில் வந்து தங்கினோம். அந்த ஆரியனுங்க, பல ஆரியனுங்க கூடச் சேர்ந்து வந்த எதிர்த்து, எங்களிலே பல பேர்களெ கொண்ணுட்டானுங்க. சொத்துக்களையும் கொள்ளையிட்டானுங்க. எங்க கூட வந்த பொன்முடியை யும் கொல்லத் தொடர்ந்து வந்திருக் கிறானுங்க. இது எங்களுக்குத் தெரியாது. நாங்க வந்துகினு இருந்தோம். எதிரே எங்கவூர் வணிகரு வந்தாங்க. நாங்க ஒண்ணா சந்திச்சோம். எங்க கூட வந்த பொன்முடியும். எதிர்லே வந்த பூங்கோதையும் ஆவலா தழுவினாங்க. அப்ப, கத்தி ஒண்ணு சட்டுண்ணு பாய்ஞ்சுது. பொன்முடியின் ஒடம்பு மட்டும் விழுந்தது கீழே துண்டாமாக - முண்டமாக. தலெ, தன் கையிலும், ஒடம்பு தரையிலயும் கெடக்கக் கண்ட அந்தப் பூங்கோதைப் பொண்ணும் திட்டுண்ணு வுழுந்து செத்துப் புட்டுதுங்க. வணிகரனைவரும்: ஏஞ்சாமி? இப்படியே இருந்தா நாங்க வயிறு பிழைக்க எப்படி வடநாட்டுக்குப் போறது. இதுக்கு ஏதாச்சும் ஏற்பாடு ஒண்ணு நீங்க செஞ்சித்தான் ஆவுணும் இப்பவே. மாசிலாமணி தேசிகர்: எல்லோரும் அமைதியாய் இருங்கள், நான் கூறுவதைக் கேளுங்கள். . நம்மிடம் குமரகுருபரன் வந்தான். நம்மை ஞானாசிரியனாகப் பெற்றுச் சிதம்பரம் சென்றான். திரும்பி வரும் நேரந்தான். அவனைக் கொண்டே, அந்த கொலைக்கும், கொள்ளைக்கும் தக்க ஏற்பாடு செய்கிறோம்... ... பொன்முடி என்பவன் நம் சைவத்தின் உயர்வையும் அதன் உண்மைத் தத்துவத்தை யும் வடநாட்டில் நிலை நாட்டினான். மிக்க மகிழ்ச்சி! அதற்காகத் தன்னையும் அங்கே தத்தம் பண்ணினான்! பெற்றோர் வருந்துவது இயல்பே! நன்று; தக்கது புரிவோம்! அஞ்சற்க! வருந்தாதீர்கள். வணி 1 : அதற்குள், அரசரை ஆளைவுட்டு அழையுங்களேன் சாமி. வணிகர் 2 : எல்லாம் சாமிக்கித் தெரியும் சும்மா இருங்க. மாசிலாமணி தேசிகர்: அனைவரும் மடத்தில் சாப்பிட்டிருங்கள் (வணிகர், போகிறார்கள் ஒரு புறம்) மான நாய்க்கன் : என் குடும்பத்துக்கு வேரத்துப் பூட்டுது! கல்லு போலத் தழைத்த குடும்பம் என் பிள்ளையோடு அத்து விழுந்துதே! (அழுகை) மறை நாய்க்கன் : ஒரு பொண்ணு! என் ஆசைக்கொரு பொண்ணு! தேனொப்பாள் : பொன்முடியெ எழுப்பிக் குடுப்பாரிண்ணல்லோ நெனச்சேன். ஐயோ! என்ன அழவு? மறைஞ்சதேதானா (அனைவரும் போகிறார்கள். தாடிப் பண்டாரம் மாசிலா மணி தேசிகரின் எதிரில் நின்று முறையிடுகிறான்) தாடிப் பண்டாரம்: என்னாங்க இதுக்கொண்ணும் விமோசன மில்லீங் களா? சொத்து முத்துப் போவட்டும், மத்த வணிகரு போவட்டும், இந்தப் பொன்னுமுடி போனது தாங்க எனக்கு ரொம்ப வர்த்தமா இர்க்குதுங்க. எனக்கவன் பணத்தெ காசெ குடுப்பாண்ணு சொல்லலிங்க. நல்ல குணமுள்ள புள்ளெய்ங்க. எம் பொண்டாட்டிக் குங்கூட அவன்மேலே ரொம்ப ஆசெய்ங்க. ஆசெயிண்ணா வேறெ கெட்ட மாதிரி ஒண்ணுமில்லிங்க. மாசிலாமணி தேசிகர்: சைவம் பரவினால் வட நாடும் திருந்தும். தீ நெறிச் செல்லாது. தாடிப் பண்டாரம் : அப்ப, அழுதுதினு வந்தோம் ஒங்ககிட்ட. இப்ப அழுதுகினே திரும்ப வேண்டியதுதான், சரிங்க. (போதல்) குருபரர் வடநாடு செல்லுதல் (யானை, அலங்கரித்தபடி நிற்கிறது. திருக்கூட்டம் நிற்கிறது. சின்னம் முதலியவை அழகு செய்கின்றன. மாசிலாமணி தேசிகர், பீடத்தில் வீற்றிருக்கிறார். எதிரில், குமரகுருபரர் வாய் புதைத்தபடி நின்றிருக்கிறார். வணிகர் கூட்டம் புடை சூழ்ந்திருக்கிறது. மான நாய்க்கன் மறை நாய்க்கன் இருவரும் அழுதபடி நிற்கிறார்கள்.) மாசிலாமணிதேசிகர்:குமரகுருபரர்! வடநாட்டில் சைவம் தழைக்கும்படி செய்க. சிவபெருமான் திருக்கோயில் புதுக்குக. புதிதாய் ஏற்பாடு செய்க. மடம் கட்டுக. இதற்கு, அங்கு ஆட்சி நடாத்தும் துருக்க அரசரிடம் அனுமதி பெறுக. சென்று வருக. நீ கொண்டு வந்த பொருளை யெல்லாம் உடன் கொண்டு போக! (குருபரர் வணங்குகிறார். திருக் கூட்டமும் வணங்கு கிறது... குருபரர் யானை மீதுட்கார, அனைவரும் தொடர, யானை செல்லுகிறது) மான நாய்க்கன் : சுவாமி! எங்களுக்கு என்ன சொல்லுகிறிங்க? மாசிலாமணிதேசிகர்: வடநாட்டில் சைவம் தழைக்கும். அதன்மேல் அங்கு இத்தகைய கொடுஞ்செயல்கள் நடவா. வணிகர்: இவளவுதானா? (மானநாய்க்கனும், மறைநாய்க்கனும் அழுதுகொண்டே திரும்புகிறார்கள்) மான நாய்க்கன்: என் குடும்பத்தின் வேர் அற்றது. இண்ணையோடெ ஆல்போல் தழைத்த குடும்பம், என் பிள்ளையோடு அற்று வீழ்ந்ததே! (அழுகை) மறை நாய்க்கன்: ஒரு பெண்! என் ஆசைக்கொரு பெண் (அழுகை) தேனொப்பாள்: பொன்முடியை, எழுப்பிக் குடுப்பாரின்ணு நெனச்சேன். ஐயோ! என்ன அழகு! மறைஞ்சது மறைஞ்சதுதானா. (அனைவரும் போகிறார்கள்) (பண்டாரம் மட்டும், மாசிலாமணி தேசிகர் எதிரில் நின்று முறையிடுகிறான்) தாடிப்பண்டாரம்: என்னாங்க சாமி இதுக்கொண்ணும் விமோசனம் இல்லிங்களா? சொத்துப் போவட்டும், முத்துப் போவட்டும், மத்த வணிகரு போவட்டும். இந்தப் பொன்முடி போனதுதாங்க எனக்கு வர்த்தமா இருக்குதுங்க. அவன், எனக்குப் பணத்தெக் காசெ குடுப்பாண்ணு சொல்லலிங்க. ரொம்ப நல்ல புள்ளெயிங்க. எம் பொண்டாட்டிக்குக் கூட அவன்மேலெ ரொம்பவும் ஆசைங்க. ஆசையிண்ணா வேறே கெட்ட மாதிரி ஒண்ணு மில்லைங்க. மாசிலாமணி தேசிகர்: சைவம் பரவினால், வடநாடும் திருந்தும். தீ நெறி செல்லாது! தாடிப் பண்டாரம்: அப்பவும் அழுதுகினே வந்தோம் ஒங்ககிட்ட! இப்பவும் அழுதுகினே திரும்ப வேண்டியதுதான். சரிங்க (போதல்)  கதை உறுப்பினர் குமரகுருபரன் ... கதைத் தலைவன் சண்முகசிகாமணிக் குமரகுருபரனின் தாயாரும், கவிராயர் தகப்பனாரும் சிவகாமியம்மாள் குப்பு ... இவர் வீட்டின் வேலைக்காரி குடுகுடுப்பைக்காரன் ... கைலாசபுரத்திலிருப்பவன் வீராசாமிக் கவிராயர் ... சண்முகக் கவிராயர்க்கு வேண்டியவர் வண்டிக்காரன் ... இக் கவிராயர் வீட்டு வேலைக்காரன் பெரிய பண்டாரம் திருச்செந்தூர் சத்திரத்தில் சின்னப் பண்டாரம் இருப்பவர்கள் முருகன் ... திருச்செந்தூர்க் கடவுள் ஆட்கள் ... கோயிற் பணியாளர் முத்தப்பன் இவர்கள் சண்முக சிகாமணிக் நடேசன் கவிராயரின் பிரியா நண்பர்கள் திருக்கோயிற் பிள்ளை தருமத்திருப்பணியாளரில் ஒருவர் கூடலிங்கம் பிள்ளை பெரியார் ... மதுரை மடாதிபதி திருமலை நாயக்கன் ... மதுரைக்கு மன்னவன் அரசி ... இம்மன்னவனின் மனைவி அமைச்சன் ... அரண்மனை மந்திரி காவலன் ... சேவகன் கந்தப் புலவர் ... அரண்மனை வித்துவான் சோமு ... இப் புலவரின் தலை மாணவன் ஆண்கள் ... மதுரைவாசிகளில் சிலர் காவடிக்காரன் ... வள்ளியூர்ப் போலீகாரன் தானப்பன் ... தாடிப் பண்டாரம் தேனொப்பாள் (தேனு) ... இவன் மனைவி சொக்கன் (சொக்கு) ... இவர்களுக்கு வேண்டியவன் முத்தப்பன் (முத்து) ... வழிப்போக்கன் மானநாயக்கன் - அன்னம் ... பொன்முடியின் தாய் தந்தையர்கள் பொன்முடி ... பூங்கோதையின் காதலன் மறை நாயக்கன் பூங்கோதையின் தாய் தந்தையர்கள் வஞ்சி வடிவு பூங்கோதை ... பொன்முடியின் காதலி ஒருத்தி பூங்கோதைக்கு வேண்டியவர்கள் அண்டைவீட்டுப் பெண் வயிரவன், பொன்னன் ... மான நாய்க்கண் வீட்டுப் பண்ணையாள் இரிசன் ... மறைநாய்க்கன் வீட்டுப் பண்ணையாள் கணக்கன் ... மானநாய்க்கன் கடைக் கணக்கன் ஆட்டப்பன், சிவம் ... வியாபாரிகள் பிச்சைக்காரன் முத்து வணிகர் (முன்) ... பொன்முடியோடு வடநாடு போனவர் முத்து வணிகர் (பின்) ... பூங்கோதையுடன் வடநாடு போனவர் ஆரியர்கள் ... வடநாட்டு வழிப்பறி கள்வர்கள் மாசிலாமணி தேசிகர் ... தருமபுரத்து மடாதிபதி. இவர் குருபரனின் ஞானாசிரியர். கைலாபுரம் ... குமரகுருபரன் பிறந்த ஊர். திருச்செந்தூர், மதுரை, கயிலாயம், வள்ளியூர், தருமபுரம். அநுபந்தம் நகைச்சுவை நிகழ்ச்சியை இன்னும் சிறிது விரிவாக்க வேண்டு மாயின், கீழ்வருமாறு:- (சொக்கு என்பவனைக் கால்வராகனுக்குக் சந்தனம் வாங்கி வரும்படி பொன்முடி அனுப்பினான். சொக்கு, சந்தனம் வாங்கி வந்த போது பொன்முடி இல்லை. தெருவில் தாடிப்பண்டாரம் நிற்கிறான்.) பண்டாரம் : சந்தனம் வேண்டியதிருந்ததிண்ணுதான் ஒன்ன அனுப்பி னாரு, வேறெ ஒண்ணுத்துக்குமில்லை. என்னா உத்துப் பாக்றியே என்னே? தாடியும், மீசையும் என்னைக் கேட்டான் இண்ணையே? எவஞ்சொன்னான் இது ஒண்ணை மாத்ரம்? எண்பி. சொக்கு : பொன்முடிதான் கேட்டாரு, நீதான் குடுத்தயேண்ணேன்! பண்டாரம் : குடுத்தா? என்னாட்டம் வேசம் போட்டு கினு பூங்கோதை கிட்ட போறானோ அவன்? சொக்கு : இங்கேதான், வேசம் போட்டானே அவண்னேன் பொன்முடி. நானு இங்கே ஒளிஞ்சிருந்து பாத்துட்டுத்தானேண்ணேன் போனேன். பண்டாரம் : பாத்துட்டியா? சொக்கு யாருகிட்டியும் இத்தே சொல்லிப் புடாதே. நானின்னு நெனச்சி நெனச்சி தேனு அவுனுக்கு முத்துக் குடுத்துட்டா. ஓணுமிண்ணு குடுக்கலே. சொக்கு : செச்சே! தெரியாதா எனக்கு! இத்தெ நானு ஆருகிட்டியும் சொல்லமாட்டேன்ண்ணேன். இந்தாண்ணேன் சந்தனம். நானு நாளைக்கி வர்ரேன். நாம்ப இப்டியல்லாம் பேசிக்கினு இருந்தத்தே அண்ணிகிட்ட சொல்லாதிங்க. பண்டாரம் : இல்லே சொக்கு. (போகிறான்) (உடனே பண்டாரமும் தேனும் பேசிக் கொள்ளுகிறார்கள்) தேனு : எங்கே போயிருந்தீங்க? பண்டாரம் : உம்! சொக்குக் கூடப் பேசிலியே. தேனு : இப்போ பேசியிருந்திங்களே. பண்டாரம் : முத்துக் குடுத்தியே பொன்முடிக்கி அத்தையா நானு அவன்கிட்ட சொன்னே. அவன் தாண்டி பாத்துட்டானாம். தேனு : தீந்து போச்சா சொல்லி, இன்னம் பாக்கி இர்க்கா? (தலையில் அடித்துக் கொள்ளுகிறாள்) பண்டாரம் : அவனுக்குத் தெரிஞ்சா, என்ன தேனு? நம்ப சொக்கு தானே! அழாதே தேனு சும்மா. தேனு : பங்கம்! பங்கம்!! உள்ளே போயி அடங்கு. வெளி யிலே வாயெ தெறக்காதே இனிமே. (மறுநாள் வந்து சொக்கு தேனு வீட்டில் நுழைகிறான். நடையில் தாடி, மீசை, பூக்குடலை, துப்பட்டி இருப்பதைப் பார்க்கிறான். அப்படியே எடுத்து உடுத்திக் கொள்ளு கிறான். ஆயினும், சொக்கு உடுத்திக் கொள்ளுவதைத் தேனு எட்ட இருந்து தெரிந்துகொண்டு தெரியாதவள் போல் இருக்கிறாள். சொக்கு, (பண்டாரவுருவத்துடன்) உள்ளே நுழைகிறான்.) தேனு : ஆரு! சொந்த மாமாவா; பொன்முடி மாமாவா? சொக்கு : பொன்முடி மாமாதான். தேனு : பொன்முடி மாமாவா, வாங்க மாமா, வாங்க. சொந்த மாமா வந்துடுவாருண்ணு பயப்படாதீங்க! சொக்கு : நீ இருக்கும்போது எனக்கென்னா பயம்? தேனு! ஒன் பாட்டெ கேக்கணுமிண்ணு வெகுநாளா ஆசை எனக்கு ஒண்ணு பாடேன் கேப்பம். தேனு : எனக்குந்தான் மாமா, நீங்க பாடுறத கேக்கணுமிண்ணு ரொம்ப நாளா ஆசெ. நீங்க முந்தி ஒண்ணு பாடுங்க பாப்பம். அப்றம் நானு பாட்றேன். சொக்கு : (பாடுகிறான்) பாட்டு: ஆசையுள்ள மச்சி! - அடி அணைச்சிக் கொள்ளேண்டீ பிடிச்சி (ஆசை) பேசப் பொழங்க இருந்தா, அடி பின்பு சங்கதி தெரிந்தா ஓசை படாமெ அடுத்த ஊரிருக்குது பயணப்படுத்த (ஆசை) தேனு : (பாடுகிறாள்) பாட்டு - மோசக்கார மாமா! ஒன் முகத்தில் முழிச்சி வாழலாமா? (மோச) ஊசிய கொழுக்கட்டெ - அட உலுத்த கூழை மட்டே ஆசைப்பட்டாயா கொரங்கே! அவதிப்படப் போறாய் இங்கே (மோச) தேனு : இந்தப்பாட்டு, எங்கப்பா கூடப் பெறந்த எங்க அத்தெ சொல்லிக் குடுத்தாங்க. சொக்கு : என்னெ திட்றாப்லே இருக்கே? தேனு : நானு ஒங்களெ திட்டுவனா மாமா? அந்தப் பாட்லே அப்படி இருக்கே. சொக்கு : அதானே, வருத்தமில்லியே ஒனக்கு? தேனு : இல்லே நீங்க, அறைய்லெ போயிருங்க, தோ வந்துடுறேன். (சொக்கு, அறையிலே போகிறான். தேனு, அறைக் கதவை இழுத்துச் சாத்திக் கொள்ளுகிறாள்.) சொக்கு : ஏன் கதவெச் சாத்றே தேனு? தேனு : அண்ட வூட்டுப் பசங்க, திடீரிண்ணு வந்துடுவாங்க. அதோட்டுத்தான். இருங்கோ. (தேனு, தெருவில் போய்ப் பண்டாரம், வருகிறானா என்று பார்க்கிறாள். பண்டாரம் வந்து விடுகிறான்) தேனு : ஏன் மாமா நீங்க பொழுதூக்க வர்ரேண்ணு சொல்லிட்டுப் போனிங்களே. சரி, சீக்கிரம் கை கழுவிக்கிங்க. ஒக்கா ருங்க. இந்தப் பலகாரத்தெ சாப்பிடுங்க. (பண்டாரம் சாப்பிடுகிறான்). தேனு : என்ன மாமா நீங்க. முத்தம் குடுத்ததெ அந்தச் சொக்குகிட்ட சொல்லிட்டிங்களே பண்டாரம் : அவன் நல்லவன், சொன்னதினாலே பாதக மில்லே தேனு : அவனா நல்லவன்? பொன்முடி இருக்காரே அவரு சங்கதியெ எல்லாம் எல்லாருகிட்டியும் சொல்லிப்புட்டான். பூங்கோதை அப்பாகிட்டேயும் சொல்லிப்புட்டான். அவுரு, அடி ஆளை வுட்டுப் பொன்முடியைத் தேடறாரு. பொன்முடி பயந்துகினு வந்து நம்ப பட்டறையிலே பூந்துகினு இருக்காரு. (கதவைத் திறந்து) பண்டாரம் : ஏன் பொன்முடி ஐயா, மெய்தானே? சொக்கு : ஆமாம். மெய்தான். தேனு : பாத்திங்களா? (மறுபடியும் தேனு கதவைச் சாத்திவிடுகிறாள்) பண்டாரம் : அப்டியா? இது என்ன ஆச்சரியம்! இப்பத்தான், பொன் முடியெ அங்கே கண்டு பேசிருந்துட்டு வர்ரெனே. அதுங் காட்டியும் இங்கே அப்பொன்முடி எப்படி வந்தான்? தேனு : அப்ப, இவன் வேறு யாரோ? நடையிலெ, தாடி, மீசையெல்லாம் கெடந்துது. அதை வேற ஒரு திருட்டுப் பையன் எடுத்துத் கட்டிக்கினு நம்பளெ ஏமாத்றானா? பண்டாரம் : இருக்கும் இருக்கும் தெற கதவை. (பண்டாரம் எழுந்து கையலம்புவதற்குள், தேனு ஒரு முறம் உளுந்தைத் தெருவுக்குப் போகும் வாசற் படியண்டை கொட்டி இறைத்து வைக்கிறாள். சுருக்கிட்ட கயிற்றைக் கையில் தயாராக வைத்துக் கொள்ளுகிறாள். கதவைத் திறக்கிறாள். சொக்கு (பண்டாரவேஷத்துடன் ஓடுகிறான். வாசற்படியண்டை சருக்கி விழுகிறான். தேனு இரண்டு கால்களையும் சேர்த்துச் சுருக்கி விடுகிறாள். சொக்கு, எழுந்திருக்கிறான் ஓட. தேனு இழுக்கிறாள் கயிற்றை. சொக்கு விழுகிறான். இப்படியே) சொக்கு : நான்தான் அண்ணி, சொக்கு! சும்மா பரியாசத்துக்குச் செஞ்சேன் அண்ணி, என்னெ வுட்டுடு அண்ணி! தேனு : அவுரு, தாடியெ மீசெயை. (சொக்கு, அவிழ்த்துப் போட்டுச் சொந்தவுருவத்துடன், தோன்றுகிறான். பண்டாரம் வந்து ஒரு தடியைத் தூக்கு கிறான். சொக்கு ஓடி மறைகிறான்.)  இசைக்கலை களம் - 4 சுநீதி : அம்மா, அவன் பாட்டு இனிமையானது. அவன் உடல், நோய் மொய்த்த உடல். குரூபி. பார்க்க சகிக்கவில்லை. தத்தை : நீ பார்த்தாயா அவரை? எங்கேயிருக்கிறார்? சுநீதி : யானை கட்டும் கூடத்தில். அவன் யானைப் பாகனாயிருந் தவன், அரசாங்கத்தின் பழைய ஊழியன் அம்மா. தத்தை : நீ இரு, இங்கே. சுநீதி : அம்மா, நீங்கள் அவனை நாடிப் போகலாமா? தத்தை : இசைக்கலைக்காக... ... சுநீதி : போகின்றீர்களா? ஐயோ, அம்மா நானும் வரட்டுமா? தத்தை : தனியே போகிறேன் (போதல்) சுநீதி : ஆ! என்ன அந்யாயம்! கற்பைப் பரிசளித்தாள் களம் - 5 தத்தை : இந்த இருட்டிலா மறைந்திருக்கிறீர்கள்? பாகன் : யாரங்கே? தத்தை : நானா? உங்களிடமுள்ள இசைக்கலையாகிய சொத்தை இச்சித்த ராணி, தத்தை. பாகன் : அப்படியா, என்னிடம் வரக்காரணம் என்ன தாயே? தத்தை : பார்த்துப் போக வந்தேன். பாகன் : என்னை நீங்கள் பார்க்க வேண்டாம். என் பாட்டில் பிரியம் இருந்தால் பாடுகின்றேன் கேளுங்கள். தத்தை : இல்லை. பார்க்க வேண்டும் என்பதுதான் என் முதல் அவா. பாகன் : வேண்டாம் அம்மா. தத்தை : கெஞ்சுகின்றேன் ஐயா. பாகன் : நான் குரூபி. தத்தை : இல்லை. இசைக் கலையின் சொரூபி. பாகன் : கேட்கமாட்டேன் என்கிறீர்களே. விளக்கேற்றுகின்றேன். பார்த்தீர்களா? என்னை! தத்தை : ஆஹா! தமிழ் மணக்கும் மலர் உதடுகள். இசை சுரக்கும் ஆநந்த இருதயம். கலையின் புகழ் கனிந்த திருமேனி, நான் உங்கள் பக்கத்தில் உட்காருவதில் பெருமை கொள்ளு கின்றேன். இதோ என் முதற் பரிசு - இந்தத் தாம்பூலத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். பாகன் : என்ன விந்தை! நீங்கள் ராணி, நான் நோயாளி, இந்த சரசம் அடுக்குமா? தத்தை : கண்ணாளரே, உங்களை நீங்கள் குறைவுபடுத்திப் பேசுவதை என்னால் சகிக்க முடியவில்லை. என்னை அங்கீ கரிப்பது உங்கள் கடமை. ஒரே வார்த்தை நீங்களும் நானும் ஆவியும் உடலும் ... ... பாகன் : பெண்ணே. என்னை இன்பத்தில் ஆழ்த்தி விட்டாய். இனி உன்னை மறந்திருக்க என்னால் முடியாது. தத்தை : கவலையேன்? நான் உங்களிடம் வராத நேரமெல்லாம் துன்ப நேரம். நான் போய் வருகின்றேன். பாகன் : கட்டிக் கரும்பே. என்னை நீ மறந்தால். இறந்தேன். போய் வா. கெட்ட சேதி களம் - 6 அரசன் : தோழி சுநீதி வேட்டைக்குச் சென்று வந்தார் அரசர் என்று உன் தலைவிக்குக் கூறு. சுநீதி : முன்னே ஒரு சேதி அரசே! இராத்ரி அரசி உப்பரிகை நிலா முற்றத்தில் இருந்தார். நான் இருந்தேன். பாட்டொன்று கேட்டது காதில். பரவசப் பட்டார்கள் ராணி. அவன் யார் என்று பார்த்து வரச் சொன்னார்கள். பார்த்து வந்தேன். பிறகு அவனிடம் தனியே ராணி சென்று வந்தார்கள், தடுத்தும் கேளாமல். அரசன் : என்ன! ... ... அவன் யார்? சுநீதி : அதை ஏன் கேட்கிறீர்கள். யானை கட்டும் கூடத்தில் நோய் கொண்டு கிடக்கும் பாகன்! அரசன் : பரம்பரைக் கீர்த்தி ஒடிந்தது. முடிந்தது என் இன்ப வாழ்க்கை. தோழியே மனதில் வை. வெளிப்படுத்தாதே. ஐயோ! சுநீதி : அரசே, ராணி தினமும் போகிறார்கள். இன்றிரவும் அவனிடம் போக ராணி எத்தனிப்பார்கள். அரசன் : ஐயோ ... நீ போ ... அவன் மேல் நெஞ்சம் களம் - 7 தத்தை : நாதா, இந்த இரவும், சித்தப்படுத்தப் பட்டிருக்கும் இந்த சப்ர மஞ்சமும் எனக்கு ஒரு பயனும் விளைக்கப் போவதில்லை. ஒரு நாளில் வந்து விடுவதாய்ச் சொல்லி மூன்று நாள் கழித்து வந்த காரணம் என்ன? சொல்லுங்கள்! அரசன் : காட்டில் துஷ்டமிருகங்கள் எதேஷ்டம். தத்தை : நல்ல காரணம்! என்னிடம் பேசாதீர்கள். நான் தனியே துயில்வேன். நான் உங்கட்கு வேம்பு. அரசன் : இல்லையே நீ எனக்குக் கற்கண்டு ... ... தூங்கிவிட்டாயா ... தத்தையே ... அப்படியா ... உம் ... பின் தொடர்ந்தான் களம் - 8 அரசன் : யாரடா காவற்காரன்? காவற்காரன் : யார்? அரசன் : நான் அரசன், கூவாதே, இந்த வழியாக ராணி சென்றாளா சற்று நேரத்தின் முன்? காவற் : தினம் போவது போல்தான் இன்னைக்கும் போனாங்க. அவுங்களை இத்தனை நாள் தோழிண்ணு நெனச்சேன் மகாராஜா. அரசன் : மனதில் வைத்துக் கொள். நான் போகிறேன். கண்ணெதிரில் களம் - 9 அரசி : யார் அங்கே. ஏற்றுங்கள் விளக்கை. பாகன் : விளக்கையா ஏற்ற. ஏற்றினேன். ஏண்டி, ஏன் இத்தனை நேரம்? (ஒரு குட்டு அவள் தலையில் குட்டுகிறான்.) அரசி : ஐயோ இல்லை. அந்தப்பாவி அரசன் சீக்கிரத்தில் தூங்க வில்லை. கோபம் கொள்ளாதீர்கள். இந்தப் பக்ஷணங்களை அருந்துங்கள். பாகன் : ... ... ஆஹா. தத்தையே, இன்று பக்ஷணங்கள் வெகு நேர்த்தி. ஏண்டி உன்னைக் குட்டினேனே தலையில்? நொந்ததா உனக்கு? அரசி : குட்டு அல்ல அது. என் நெஞ்சத்தில் வீழ்ந்த அமுதத் தின் ஒரு சொட்டு. பாகன் : ஓகோ அப்படியா ... ... அரசி : நாதா, ஒரு பாட்டு பாகன் : நீ ஒன்று முதலில் (அரசி பாடுகிறாள்) பாகன் : தேன். நான் பாடட்டுமா? (பாகன் பாடுகிறான்) அரசி : அமுதம். நேரமாகிறது. நான் போய் வருகின்றேன் நாதா. பாகன் : நாளை ராத்திரிக்கு! அரசி : ஓ ... ... ! கபட நாடகம் களம் - 10 அரசன் தாய் : ஏண்டி தத்தே? தத்தை : ஏன் அத்தே? அத்தை : என்ன ஒரு மாதிரியாய் இருக்கிறாய்? தத்தை : கொஞ்ச நாளாக உங்கள் குமாரர் என்னிடம் நன்றாகப் பேசுவது கிடையாது. என்னைக் காணப் பிடிக்கவில்லை அவருக்கு. அதற்கு ஏதாவது காரணம் தெரியுமா மாமி. அத்தை : தெரியாதே. பிள்ளை நல்லவனாச்சே. நீ என்ன செய்தாயோ? தத்தை : நான் ஒரு பாவத்தையும் அறியேன். அவர் சந்தோஷமே என் வாழ்க்கை இலக்ஷியம். அவருடைய அன்பு ஓர் அணு - ஓர் இம்மி ஐயோ ... அத்தே தவறியதே கிடை யாதே. அவர்தாம் வேறு எவள் மேலோ காதல் கொண்டிருக்கிற மாதிரி தோணுது. அத்தை : வருந்தாதே! நான் சாவகாசமாகக் கேட்கிறேன். அரசன் கொலுவுக்குப் போகும் நேரமாயிற்று. அலங்கரித்துக் கொள். ஆயத்தப்படு. அதோ தோழி வருகிறாள். தோழி : ராணியாரே ... அரசர் கொலுவுக்குப் போகிறார். புறப்படுங்கள் சீக்கிரம். தத்தை : இதோ... பூப்பட்ட காயம் களம் - 11 (மங்கல வாத்தியம் முழங்குகிறது. முரசு ஒலிக்கிறது) வாழ்த்துநர் : நிறைகோல் போல முறை கோணாமல் ஆட்சி செலுத்தும் மாட்சி மன்னர் வந்தார் கொலுவில். பிறர் : பராக்! வாழ்த்துநர் : திங்கட்குடைக்கீழ் - தங்கும் வலிமைச் சிங்கப் புரவலர் வந்தனர், கொலுவில். பிறர் : பராக்! வாழ்த்துநர் : அற்புத சித்ரப் பொற் ப்ரதிமைச் - சீர்க் கற்பு மிகுந்த ராணியார் வந்தனர் கொலுவில். பிறர் : பராக்! அரசன் : மந்திரி ப்ரதானிகள் அனைவரும் அமர்ந்திருங்கள். சௌக்யந்தானே அனைவரும். நமது கொலுவை நாட வந்திருப்பவர் களை வரவிடுக. ப்ரதானி : புலவர் ஒருவர் சமூகத்தை நாடி வந்திருக்கிறார் ப்ரபு! அரசன் : வரட்டும். திங்கட் குடையான் ஜெயபால மன்னனென்றால் சிங்கப்பேர் கேட்டது போல் தீயபகை - எங்குப்போய் வீழ்வதென ஏங்கும் விறலுடையாய் காலமெல்லாம் வாழ்கநீ உள்ளம் மகிழ்ந்து அரசே, இந்தக் கனிவர்க்கத்தையும், பூங்கொத்தையும் அங்கீகரிக்க வேண்டுகின்றேன். அரசன் : கொடும் ... அரசி : ஆ! அரசன் : புலவர் தந்த பூங்கொத்தை உன்னிடம் கொடுக்க வேண்டும் என்ற முறைப்படி அப்பூங்கொத்தை உன்னிடம் நீட்டினேன் அப்பூங்கொத்து உன் தலையில் பட்டது. இந்த வலியை உன்னால் தாங்கமுடியவில்லை. பூப் பட்டதும் வலி தாங்காத உன் சிரசு, இராத்ரி - அந்த நோயாளி பாகன் ஏன் இத்தனை நேரம் என்று குட்டியதைத் தாங்கிற்றல்லவா? பாசாங்குக்காரி, பழிகாரி! மந்திரி : ஹா, என்ன அரசர் சபையை விட்டுப் போய்விட்டாரே. துறவு களம் - 12 அரசன் : அந்தப்புரத் தோழியே, நான் பார்க்க வந்திருப்பதாக என் அன்னைக்குக் கூறு. அம்மா அம்மா. வாருங்கள் வணக்கம். எனக்கு விடை கொடுங்கள். மனைவி, உறவினர்களுடன் இருந்து இல்லறம் நடத்தி அதனால் ஏற்படும் ஓயாத தொல்லைகளைவிட அவர்களை விட்டு நீங்கியிருப்பது நல்லதென்ற முடிவுக்கு வந்தேன். சதுரங்க சேனையும், வெண்கொற்றக் குடையும், விருதும் பிறிதும் கொண்டு புவி ஆளும் ஆட்சியைவிட அவற்றி னின்று மீளும் மீட்சி சிறந்தது, என்று தோன்றுகிறது. முட்புதர் போல் வஞ்சம், சூழ்ச்சி, பொய்மை நிறைந்த இவ்வுலக வாழ்வில் புரண்டு இனியும் இன்னலுறுவதாக உத்தேசமில்லை. ஊரார் சதமா? உற்றார் சதமா? உற்றுப் பெற்ற தாயார் சதமா? தந்தை சதமா? உம் இல்லவே யில்லை. செல்வம், இளமை, காயம் இவை நிலை நிற்பனவா. இல்லவேயில்லை. ஏகாந்தம் சிறந்தது. பிறக்கின்றான், மூப்படைகின்றான், இந்தப் பெருமை தான் மனிதனுக்கு உண்டு. பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில் ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பாவம், தோற்றம், வினைப்பயன் ஆகிய நிதானங்களை உலகிற் பிறந்தவர் அறிந்தாராயின் பெறும் பேறு அறிந்தவர். அறியாவிடில் பாழ் நரகைத்தான் அறிந்தார்கள். ஆதலால், மனிதன் பெறத்தக்கப் பேறு வேறு உண்டம்மா. உள்ளங் கசிந்து அறம் உரைத்தோன் அடிகாக்க! நான் போகின்றேன் உறுதி தேடி. தாய் : ஆ, அப்பா, அப்பா, நான் துஷ்டக் கனவு காண் கின்றேனோ? அப்பா ... அப்பா ... அத்தை, தத்தை களம் - 13 அன்னை : தத்தே! ஐயோ, என் கண்ணே, உன் நாதன் காட்டுக்குச் சென்று விட்டானடி. தத்தை : என்ன செய்வேன் அத்தே. என்னிடம் சொல்லக்கூட வில்லையே. நான் என்ன செய்வேன்? அரசர் இத்தனை ஐவரியங்களையும் விட்டுக் காட்டுக்கு ஏன் போனார். உங்களுக்குக் காரணம் தெரியாதா? அன்னை : உலக வாழ்வை அவன் வெறுத்தாண்டியம்மா. நீ கர்ப்பவதி என்பதையும் அவன் யோசிக்கவில்லையே. ஐயோ என் மனம் வேகிறதே. குடிகளின் கதி என்ன ஆவது? தத்தை : நமது யோசனைப் படி மந்திரி ஆண்டு வரட்டுமே அத்தே! அன்னை : மருமகளே. நீ புத்திசாலி. ஆட்சிமுறை தெரிந்தவள். அப்படித் தான் செய். ஐயோ நினைக்க நினைக்க என்மனம் உருகு கின்றதே. தத்தை : என் மனங் கூடத்தான், அத்தே! நெருப்பிலிட்ட வெண்ணெய் மாதிரி உருகுகின்றது. எனக்கு உத்தரவு கொடுங்கள்அத்தே, தனியே போய்க் கொஞ்சநேரம் அழுது கொண்டிருக்க. அன்னை : எப்படியடி சகிப்பாய்? ஐயோ, ஐயோ! தத்தையின் சந்தோஷம் களம் - 14 பாகன் : என்னாடி தத்தை, மாளிகையில் என்னமோ நூதனமாமே. தத்தை : நாதா, அதான் சொல்ல ஓடிவந்தேன். ஒரே ஓட்டமாய். பாகன் : மெய்தானா அது? தத்தை : மெய்தான். தொல்லை ஒழிந்தது. பெற்றவள் மனம் என்னமோ சகிக்கவில்லை. அவள் அழுகிறாள், பாவம். பாகன் : உனக்கு எப்படி? தத்தை : ஒரே ஆநந்தந்தானே, இனி நீங்கள் இங்கே இருக்க பாகன் : உம். தத்தை : யாருக்குத் தெரியப் போகிறது! தெரியட்டுமே அப்படித்தான்! நான்தான் அரசி. என் உத்தரவுப்படி நடக்க வேண்டியவர் கள் மந்திரிப் பிரதானிகள். எழுந்திரும். பாகன் : சரி ... நட. எனக்கு வந்த யோகமே யோகம். இருவர் பாட்டு களம் - 15 (தத்தை - பாட்டு; பாகன் - பாட்டு) தத்தை : நாதா எனக்கு பிரசவநேரம் கிட்டிவிட்டது என்று நினைக்கிறேன். வலி தோன்றுகிறது. நான் அந்தப்புரம் போகிறேன். பாகன் : சரி தத்தை : தோழி. அத்தைக்கு என் நிலைமையைக்கூறி அழைத்துவா. யசோதரன் ஜனனம் களம் - 16 சுநீதி : அம்மா, அரசி பிரசவ வேதனை அடைகிறார்கள். அன்னை : வேண்டிய ஏற்பாடுகளைச் செய். என் மகனின் அம்ஸம் வெளிப்படப் போகிறது. தத்தை சுகமாக ஓர் ஆண் பிள்ளையைப் பெற்றெடுக்கணும். தத்தை : அத்தே. நான் சுகமாக ஓர் ஆண் குழந்தை பெற்றால், மாவினால் கோழிசெய்து தெய்வத்துக்கு பலியிடுகிறேன். குழந்தை அழுகிறது சுநீதி : அம்மா, ஆண் குழந்தை அன்னை : அம்மா எனக்கு ஆறுதல் ஏற்பட்டது. குடிகள் அரசனைப் பெற்றார்கள். நான் பேரனைப் பெற்றேன். தத்தை தனக் கொரு பிள்ளை பெற்றாள். தாயும் சேயும் சௌக்யமாக இருக்கணும். தத்தையின் சந்தோஷம் களம் - 17 பாகன் : தத்தே, குடிகள் எல்லாரும் சந்தோஷப் பட்ராங்கடி நீ ஆண் குழந்தை பெற்றதால். தத்தை : உங்கட்கு எப்படி? பாகன் : சந்தோஷந்தான். ஊராள ஓர் அரசன் வந்தானல்லவா? தத்தை : எனக்கென்னவோ சந்தோஷமில்லை. இந்தப் பிள்ளை அந்த அரசன் அம்ஸம் பாகன் : உனக்கு என் மேல் உள்ள ப்ரேமை அளவு கடந்தது. குழந்தையைப் பத்திரமாகப் பார்த்து வா. ஆக வேண்டிய கர்மங்களைச் செய்யச் சித்தம் செய்யச் சொல். நான் அடுத்த மலர் மஞ்சத்தில் படுத்திருக்கிறேன். ஊர்ப்பேச்சு களம் - 18 ரகு : ஜெயபால மன்னர் காடு சென்று எத்தனை வருடமிருக்கும் ரஞ்சிதா? ரஞ்சிதன் : இருபத்தோர் ஆண்டு ஆகிறது. அவர் காடு சென்ற சில மாதங்களில் யசோதரன் பிறந்தார். யசோதரனுக்குப் பட்டம் கட்டப் போகிறார்கள். பிள்ளைக்கு ஏற்பட்ட இந்தப் பாக்கி யத்தை அவர் தந்தை பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை, பாவம். ரகு : இந்தத் தந்தை பார்க்கிறார் அல்ல. ரஞ்சிதன் : வெட்கக் கேடு. ரோகியை - பாகனாகிய வேலைக்காரனை – அரண்மனை யில் கொண்டுவந்து வைத்திருக்காளே அந்தத் தத்தை. ரகு : பாகன் தூங்க புஷ்ப மஞ்சம்! உண்ணுவது அரச உணவு! உடுத்துவது, இழையால் ஆயிரம் பெறத்தக்க பீதாம்பரம்! தண்டோரா களம் - 19 தண்டோராக்காரன்: டும், டும், டும். தத்தை ராணி புத்ரர் உத்தரதானத்தின் அரசரென்று பட்டங் கட்டப் பெரியார் இட்ட நாள் நாளைய சுபதினமாகும். நகரை அலங்கரிக்க அனைவரும் விஜயஞ் செய்க தாயும் சேயும் களம் - 20 தத்தை : அப்பா குழந்தாய் யசோதரா, நீ நாளைய தினம் பட்டாபிக்ஷேகம் செய்து கொள்ளப் போகிறாய். பிரசவம் ஆகிற காலத்தில் நான் செய்த பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும். யசோதரன் : அரசன் வீட்டில் அன்னத்திற்கும் பஞ்சமா அம்மா? இன்னதென்று சொல்லுங்களேன். தத்தை : மாவினால் சேவற்கோழி செய்து தெய்வத்திற்குப் பலி கொடுக்கிறதாகப் பிரார்த்தனை செய்தேன். யசோதரன் : ஐயோ அம்மா, கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்க எல்லார்க்கும் சொல்வது அல்லவா நம் மதம். மக்கட்கு மக்கள் மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் இன்னல் சூழ்வதும் மற்ற 84 லக்ஷம் ஜீவராசிகட்கும் ஹிம்சை நேராவண்ணம் நடந்து கொள்வதும், நமது வாழ்க்கை முறையல்லவா? ஜீவனைப் பலியிட மனிதன் விரும்பக்கூடாது என்பதே அறஞ்சொன்ன அடிகள் ஆக்ஞை யாயிருக்க, தெய்வமும் பலியை நாடுகிறது என்ற கொள்கையை நாம் மேற் கொள்வதா தாயே? தெய்வம் உயிர்ப்பலி கேட்குமானால், ஜீவ உலகம் எத்தனை நாளைக்கு இருக்க முடியும்? தத்தை : உயிர்ப்பலி கொடுக்கச் சொல்லவில்லையே! யசோதரா. யசோதரன் : மாவினால் இயற்றிய கோழிதான். இருக்கட்டும். மாவைத் தெய்வத்துக்குப் படையுங்கள். மாவினால் ஆக்கிய உருவத்தைப் பலியிடச் சொல்கின்றீரே. ஜீவனைக் கொல் லுவதோ, கொல்லுவதற்கு ஒப்பாகிய எண்ணத்தை அடை வதோ, அடுக்குமா? உயிர்க் கோழியைப் பலியிடுவதற்கும், மாக்கோழியைப் பலியிடுவதற்கும், சிறிது வேற்றுமை தவிர, பூர்வாங்க நோக்கம் ஒன்றுதானே அம்மா. தத்தை : அப்பா யசோதரா, நான் பிரார்த்தனை செய்து விட்டேன். ஜீவஹிம்ஸை வேண்டாம் என்கிற நீ என்னை ஹிம்சை செய்யாமல் என் மனதைப் பூர்த்தி செய்ய வேண்டு மல்லவா? யசோதரன்: தாயே, உன் மனதிற்கு இம்ஸையை உண்டாக்காதிருக்க நான் இன்றுவரை எவ்வளவோ பொறுமை காட்டி வந்திருக் கிறேன். மேலும் மேலும் உங்கள் விஷயத்தில் அஹிம்ஸையை மேற்கொள்வதால் என் அஹிம்சா தர்மத்தின் வேரையே நான் அறுத்துக்கொள்ள நேர்ந்து விட்டது. உன் மனத்தை ஹிம்ஸை செய்யாதிருக்க நம் மதத்தையே இம்ஸிக்க வேண்டுமா? தாயே, நான் ஒப்புகின்றேன். தாய்க்குசேய் செய்ய வேண்டிய தியாகம் இதுவானால் நான் மறுக்கவில்லை. உம் ... ஆரடா சேவகன். சிற்பிக்கு ஆக்ஞையிடு மாக்கோழி ஒன்று செய்யும்படி! ஜீவ சிற்பம் களம் - 21 சின்னம் ஊதப்படுகிறது உடுக்கைச் சத்தம் பம்பைச் சத்தம் கேட்கிறது பூசாரி : இந்தப் படையலுக்கு எதிரில் கொண்டு வந்து வை அந்த மாக் கோழியை. யசோதர மன்னர் இப்படி வந்து அமர்க. அரசர் அன்னையார் வந்து அமர்க. யசோதரன் : ஆஹா, மாக் கோழியா, உண்மைக் கோழியா என்ன அழகிய சிற்ப வேலை, பூசாரியே ஆகட்டும் பூசை. பூசாரி : சீர்காக்கும் தெய்வமே சிந்தித்தோம் உன்னையே பேர்காக்க வேண்டும் நீ பெற்றோரைக் காப்பாய் நீ ஊர்க்காக்க வேண்டும் நீ உற்றாரைக் காக்கணும் நீ கூர்ந்த மகிழ்ச்சியினால் கோழி பலி கொண்டிடுவாய். ... ... அது தலையை ... ... கோழி : 1. கொக்கோரிக்கோ 2. கொக்கோரிக்கோ 3. கொக்கோரிக்கோ அனைவரும் தனித்தனியாக ஆஹா! அட! என்ன? மாக்கோழி கூவிச்சே! யசோதரன் : என்ன ஆச்சரியம்! என் குடிக்கு ஏற்பட இருக்கும் தீமையின் அடையாளமா? ஐயோ தாயே. நான் முன்னமே வேண்டாம் என்றேனே ... பெரியோரை அடுத்து இதன் உண்மையைத் தெரிந்துகொள்ளு கிறேன். ஆலோசனை மண்டபம் செல்கின்றேன். அடிகள் ப்ராப்தம் களம் - 22 சேவகன் : அரசே! சேவித சரணர் எழுந்தருளுகின்றார். யசோதரன் : வாமி! என் சிந்தனையுணர்ந்து எழுந்தருளினீர்கள் என்று எண்ணுகிறேன். எழுத்தருளுங்கள் ஆசனத்தில்! சேவிதசரணர்: நலன் அடைக. யசோதரன் : அடிகளே, என் தாயின் பிரார்த்தனைப்படி மாக் கோழியைப் பலியிடுங்கால் அம்மாக்கோழி மூன்று தரம் கூவி உயிர்விட்டது. அதன் பொருள் இன்னதென்று தோன்றவில்லை. சேவித : யசோதரா, பிறவா நெறி அடைவது தான் மனிதன் அடையவேண்டிய பேறு. உன் தந்தை அப்படிப்பட்ட பெரிய பேறு அடையத் தக்கவனே. ஆயினும் அவன் மனைவி தத்தை கற்பிழந்தாள். கற்பிழந்த அவள் மாக்கோழி பலியிடவும் பிரார்த்தனை செய்தாள். இவை உன் தந்தையின் நற்கதியைக் கெடுத்தன. மாக்கோழி மூன்று முறை கூவிற்று. உன் தந்தை மூன்று பிறவி பிறந்து, பின் பிறவா நெறியடைவான். உன்தாய் அதை யுணர்ந்தாள். அதனால் உன் தந்தைக்கு ஏற்பட்ட சஞ்சலமும் உலகப்பற்றும், மூன்று பிறவி தொடர் கின்றன. என் செயலாம், உலக வியாபாரத்தை விட்ட போதல்லவா வீடு சித்திக்கும். உன் தாயின் செயல் உன் தந்தையை உலகிலிருந்து விடாதபடி பந்தித்தது. நான் சென்று மற்றொரு காலம் வருகின்றேனப்பா. அஹிம்ஸை களம் - 23 யசோதரன் : மந்திரி! அவமானத்திற்கு உடல் எடுத்தேன். நான் உலக மக்களின் காவலன். கல்வியில் நாவலன். கொடையில் கன்னன். தரணியின் மன்னன். இந்தக் கௌரவமெல்லாம் என்னுடன் பிறந்தன. ஆயினும் ஒருத்தியின் துர்நடத்தை யால் அனைத்தும் பறந்தன. ஆஹா! துர்நடத்தை கொண்ட தாயைத் தந்தை தண்டிக்கவில்லை. அஹிம்ஸா தர்மர் அவர். அஹிம்ஸை! நல்ல அஹிம்ஸை! ... அந்த அஹிம் ஸையே காரணம் என் தந்தையின் பிறவிக்கு. குற்றங் கண்டபோதே என் தந்தை தண்டித்திருந்தால் மன நிறைவு ஏற்பட்டிருக்கும் அவருக்கு. பிறவிக்குக் காரணமில்லாமல் போயிருக்கும். ஒரு குடியில் ஒருத்தியின் தீச்செயல் அக்குடியின் பல தலைமுறைகளிலும் சென்று அனைவர்க்கும் அவ மானத்தையும் அளவிலாத் துன்பத்தையும் ஏற்படுத்து கின்றது என்மனம் பற்றுக. நீதியின் நிலவுக, கொஞ்சநாள் வாழ்வு. பிறவா நெறி ஒன்றே சத்யம். அதில் துன்பமில்லை. உலகம் யாவும் பெருங் கனவு. அஃதுளே உண்டு, உடுத்து இடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சியின் வாழ்க்கையோர் கனவினும் கனவு அன்னது. நன்னெறி நடப்போம். மானமும் அவமானமும் செறிந்த இந்த உலகுக்கு நாம் பலியாகாமல் அரசாட்சி நடத்துவோம். பசங்கள் ஆச்சரியம் களம் - 24 முத்து : அடசீனு, இங்கு ஓடியாயேன். தெரியுமா சேதி. எங்கப்பா பேசிகினு இருந்தாங்களே. சீனு : உங்க அப்பா பேசியிருந்தா அது எனக்கு எப்பிட்ரா தெரியும்? முத்து : தெரியாட்டி சொல்றேனே. நம்பராஜா ஒரு வெள்ளெ கண்ணு குட்டி வாங்காந்து வளத்து வந்தாரே தெரியுமா ஒனக்கு? சீனு : ஆமாம். என்ன அதுக்கு? முத்து : பூட்டுதுடா சீனு : ஐயே என்னா எழவுடா அது. முத்து : ராணி கூட இருக்காரு பாரு, ஒரு மம்மதன். அந்தப் படவா பயன கொண்ணுட்டுது அது. சீனு : கொண்ணுட்டுதா? ரொம்ப சந்தோஷண்டா எனக்கு. முத்து : அதோட்டு அதெ வெட்டிபுட்டாங்க. சீனு : மனசு என்னமோ மாதிரி இருக்குதுடா; எனக்கு அரசர் தவத்துக்குப் போனதுக்குக் காரணம் அந்த நோயாளி செஞ்ச அக்குறும்புதான். அதான் அந்த ராஜா மாடா வந்து கொண்ணு குழியிலே வச்சுட்டாரு. முத்து : அதாங் கதை. நான் போரேன். சீனு : நானுந்தான். போவணும் - பூட்டவா. திண்ணைப் பேச்சு களம் - 25 சொக்கலிங்கம்: என்ன சுந்தரம் 5,6 மாசத்துக்கு முந்தி அந்த மாடு. எந்த மாடு. சுந்தரம் : ராஜா வீட்டுமாடு. சொக்க : பாகனை கொண்ணு போட்டுது. எந்தப் பாகனைப் கொண்ணு போட்டுது. சுந்தரம் : ராணி வச்சிருந்த பாகனை. சொக்க : அந்த மயில்! ... எந்த மயில். சுந்தரம் : ராஜா வளர்த்தாரே அந்த மயில். சொக்க : அந்தப் பத்தினி இருக்காளே - எந்தப் பத்தினி? சுந்தரம் : தத்தை சொக்க : அவ கண்ணைக் கொத்திட்டுது. என்னாத்தை கொத்திபுட்டுது? சுந்தரம் : சொல்லித் தொலையேன். சரி கண்ணை. சொக்க : வேணும் அவளுக்கு. என்னா வேணும் அவளுக்கு? சுந்தரம் : இந்தத் தண்டனை சொக்க : அவ இருக்காளே. எவ இருக்காளே? சுந்தரம் : சொல்லித் தொலையேன். அவதான் தத்தை சொக்க : அநுபவிக்கிறா. எதை அநுபவிக்கிறா? சுந்தரம் : அட சீ போ. முன்னே செய்ததின் பலனை. சரிதான் நிறுத்து. ஓங்கிட்டபேசறதேவிட சும்மா இருக்கலாம். கழிவிரக்கம் களம் - 26 சுநீதி : தாயே ஏன் விசனமாக உட்கார்ந்திருக்கிறீர்கள். போசனத்திற்கு எழுந்திருங்கள். தத்தை : தோழியே. பசியும் என்னை அண்டவில்லை. தத்தை என்ற என் பேர் சொன்னால் இகழாதவரில்லை. அப கீர்த்திக்கு ஆளானேன். என் ஒரு கண்ணைக் கொத்திய அந்த மயில் என் பிராணனை ஏன் வைத்தது, நான் எதற்காக இந்த உலகில் இருக்க வேண்டும்? சங்கீதம், கவிதை, ஓவியம் முதலிய கலைகள் மாயையின் பரிவாரங்கள். சுநீதி : அவை தக்கோர் அறிவின் பிரதிபிம்பம் என்கிறார்களே அம்மா? தத்தை : ஆம்... உண்மை... கலை ஞானங்கள் தீயவையல்ல. அவைகளை மேற்கொள்ளும் மனிதர்கள் தீயவரா யிருக்கலாம். சுநீதி : எழுந்திருங்கள் அம்மா தத்தை : இதோ வருகின்றேன். கொல்லைப்புறம் போய்க் கைகால் சுத்தம் செய்துகொண்டு சுநீதி : போய் வாருங்கள்...... (கொல்லைப்புறத்திலிருந்து) ஆ ... ...! சுநீதி : என்ன என்ன ... ... ஐயோ, தத்தையம்மாவை ஆடு குத்திவிட்டதே. ஐயோ இறந்துவிட்டார்களே. ஓடிவாருங்கள். பலர் தனித்தனியே: ஐயையோ ராணியம்மா இறந்து விட்டாங்க அரசருக்குச் சொல்லுங்கள் உங்கள் தாயை ஆடு கொன்று விட்டதென்று அரசரிடம் கூறு. அழைத்துவா அரசரே, இதோ பாரும் தங்கள் அன்னை ஐயோ இறந்து விட்டார்கள். யசோதரன் : அந்தோ தாயே இறந்தீரா? மறந்தீரா என்னை? வினைப் பயனை வெல்வதற்கு வேத முதலா எனைத்தாய நூலகத்துமில்லை. யாரடா சேவகன், அந்த வாளாயுதத்தை எடுத்து வா. சேவகன் : இந்தாங்க. யசோதரன் : துஷ்டக் கடாவே, மீளாத விடைபெற்றுக் கொள். சேவகன் : அதுதான் வேண்டும். (அதற்குள் இரண்டு துண்டாக விழுந்தது.) தெளிவு களம் - 27 சேவகன் : அரசே, சேவித சரணர் எழுந்தருளுகின்றார்கள். யசோதரன் : அடிகளே சரணம். தங்கள் வருகையால் புனிதனானேன். என் குடிக்கு ஏற்பட்ட இன்னல்கள் அபகீர்த்திகள் அனைத்தும் தாங்கள் அறிந்தவை. சே.சரணர் : அப்பனே, உன் தந்தை அடையவேண்டிய மூன்று பிறவிகள் தீர்ந்தன. யசோதரன் : எப்படி வாமிகளே? சே.சரணர் : மாடாகப் பிறந்தார். உன் வீட்டில் வளர்ந்தார் - பாகனை மாய்த்தார். யசோதரன் : ஆஹா! என் தந்தைதானா? சே. சரணர் : பின்னர் மயிலாகப் பிறந்தார். அன்னையின் கண்ணைக் கொத்தி மாண்டார். அதன்பின் ஆடாக உன் தாயைக் கொன்று வஞ்சம் தீர்த்தார். பிறவா நெறியடைந்தார். யசோதரன் : ஞான லோகத்தை நோக்கிச் செல்ல வைத்தீர்கள். வாமி என்னை. சே. சரணர் : யசோதரா! தெளிவு பெற்றாய். மயக்கம் அறுத்தாய். சிறிது காலம் இந்த ராச்சியத்தை ஆண்டு, பின் உபதேசத்திற்குப் பாத்திரனாகக் கடவை. வறுமை வந்த போதும், செம்மை அடைந்த போதும், அல்லன புரியாத நேர்மை வேண்டும் உனக்கு. எதிலும் பற்றுக் கொள்ளாமல் விடுதலை மேற்கொள் ஊருக்குழை. யசோதரன் : வாமி நான் க்ருதார்தன். களம் - 28 யசோதரன் : கலித்துறை - கட்டளைக் கலித்துறை. நேரசையில் தொடங்கி. ஐஞ்சீரடி நான்காய் அடிதோறும் பதினாறு எழுத்துப் பெற்று வருவது) மீனாக்க னற்குள் விழுந்த புழுப்போல் துடிப்பதற்கே ஆளாக்கி என்சீர் அதமாக்கி வாழ்வும் அகன்றதெனும் நாளாக்கி நெஞ்சை நலிவாக்கி நான்பெற்ற நன்மையெலாம் தூளாக்கி விட்டதே என்அன்னை எண்ணுமோர் துர்க்குறியே!.. வசனம் மந்திரி! அவமானத்திற்கு உடல் எடுத்தேன்.... இந்நாடகத்தில் எட்டு இசைப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை பின் இணைப்பில் காணலாம். பாவேந்தர் பாரதிதாசனின் மாணவரும் பன்மொழிப் புலவருமான புதுவை சுந்தர வடிவேலன் கொடுத்துதவிய கையெழுத்துப் படிநாடகம் அச்சு வடிவம் பெறாத இசைப் பாடல்கள் இசைக்கலை நாடகத்தின் கையெழுத்துப் படியில் இறுதியில் இணைக்கப் பெற்றுள்ள இசைப் பாடல்கள் 1 தத்தை : நாதர் சகியோடு ... ... (ஓர் இசை கேட்கிறது) பாகன் : மாமயி லேறி நீவா (என்ற மெட்டு) ராகம் : ஹம்ஸாநந்தி தாளம் : ஆதி (பல்லவி) சோலையிற் பூத்தநிலா! வானப்பசும் பூஞ் (சோ) தத்தை : ஆஹா! பாகன் : (அனுபல்லவி) கோலமென் சொல்வேன் பூமா தேவியின் குடையோ மணித்தீப ஒளியோ காணேன் (சோ) தத்தை : ஐயோ! பாகன் : சந்த்ரிகைக் கரத்தால் சகலமும் தழுவி விந்தை செய்கின்ற தெந்த விதமோ? காணேன் (சோ) தத்தை : அமுதப் பிரவாகம்! சுநீதி... அழைத்துவா 2 தத்தை : கண்ணாளரே! ... நீங்களும் நானும் ஆவியும் உடலும் பாட்டு நவீன சதாரம், உன்றனைக் கண்ட அன்றுமுதல் என் உள்ளத்தில் காதல் கொண்டேன் - என்ற மெட்டு சீதள தேகம் தணல்படுவதும் எதனால்? தேன் கசந்திடுவதும் ஏனோ, நாதா? காதகத் தென்றல் சீறுதல் ஏனோ? காரணம் உரைத்திட வாராய், மாரா! பாகன் : (மேற்படி மெட்டு) மாதினந் தேகம் குளிர்ந்திட வழி உளதே! மாமது வினிற்சுவை போமோ மானே? தீதகல் தென்றல் சீறலும் தீரும்! சீக்கிரம் மதனது நூலா ராய்வாய்! (வ-ம்)பெண்ணே,என்னை.... ... என்னால் முடியாது. 3 அரசி : நாதா ஒரு பாட்டு பாகன் : நீ ஒன்றுமுதலில் டி.கே. பட்டம்மாள் பாடிய வள்ளி fணவன்nபரை vன்ற»Ëக்கண்ணிk£L தத்தை : ஆன தமிழ் மறைகள் அன்புநிறை காதல் ஒன்றேமேனிலை யைக் காட்டுமென்றார் - மதனா விந்தையென்ன சொல்லிடுவேன்! பாகன் : தேன் நான் பாடட்டுமா? கானில் தவம்புரிவார் கண்டுவிட்ட காதற்கனா தேனாகப் பாயுமடி - கனியே சிந்தையெல்லாம் தோயுமடி! தத்தை : பஞ்சரக் கிளியும் வண்டும் பற்பலவும் பூமியிலே சஞ்சரித்தால் காதலினால் - மதனா சாவதுவும் காதலினால்! பாகன் : அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் அருமறையின் நெட்டெழுத்தும் கொஞ்சவரும் காதலுக்கே - கனியே கூட்டெழுத்தே யாகுமடி! 4 அரசர் : கொடும்... அரசி : ஆ! என்ன செய்வேன் வலிதாங்க முடியவில்லையே. அரசர் : (அரிச்சந்திராவில் ஆரடி நீ இங்குவந்த தாரடி நீ என்ற மெட்டு) என்னடி நீ காட்டுகின்றாய் சின்ன பூங்கொத்துப் பட்டதாலே சென்னி நொந்துவிட்ட தென்று ஜாலம் பண்ணுகின்றாய் - (என்) குஷ்ட ரோகிதான் கொட்டும் போது கஷ்டம் உனக்கில்லை புஷ்பம் பட்டதாலா தொல்லை? (என்) (வசனம்)நீலி,புலவர்தந்த.... ... ... ... பழிகாரி! 5 அரசன்: அந்தப்புரத்தோழிய... ... வாருங்கள் வணக்கம்!(பூகைலாஸ், எப்படிப் பிரிகுவேன் என்றன்ஆத்மலிங்கம்தனை என்றbமட்டு)ராகம் : சாரங்கா தாளம் : ஆதி பூமி ஆசை தீதே அம்மா - போகமோ நிலாது மண்மேல்nபாமித்nதகம்நீ தமாமோ?போதன்பாதம் நாடவேண்டும் காதல் மாதர் மோகம் அதே - கெடுகாலமாகும் அம்மா சாதல் உண்டு நோய்கள் உண்டு சாந்தன் பாதம் நாட வேண்டும்! 6 (பல்லவி) வனிதையர் நேயம் மிகவும் அபாயம் மாயா புவன மிதே - மனமே (வனி) (அனுபல்லவி) புனைந்த பொய்யுலகம் தினமதில் கலகம் பொருளால் இருளடைந்தாய் - மனமே (வனி) (சரணம்) ஆட்சியி னாலே மீட்சியுண்டாமோ அகங்காரம் தொலைப்பாய் - மனமே சாட்சியம் அவனே சர்வமும் அவனே சரணமென் றடைவாய் நீ மனமே! (வனி) 7 தத்தை : மாவினாற்சேவற்கோழி...... ... ... பிரார்த்தனை செய்தேன். யசோதரன் : (புகார் இல் கீத சுனா போக் ரெசைய்யா என்ற மெட்டு) (பல்லவி) ஜீவ வதை தாயே நன்றாமோ? ஜீவ tதைjயேe‹றாமோ?(ét) (அனுபல்லவி) பாவமும் பழியும் ஏற்றிட லாமோ? நாவும் கூசாதோ? நம் போன்ற (ஜீவ) (சரணம்) தன்னுயிர் போலே மன்னுயிர் தன்னை எண்ணல் நம்கொள்கை! நம்போன்ற (ஜீவ) நெஞ்சுக்கு ஒளித்தொரு வஞ்சகம் தகுமோ? கொஞ்சம் கேளீரோ? நம் போன்ற (ஜீவ) (வசனம்) ஐயோ, அம்மா.. 8 யசோதரன் : என்ன ஆச்சரியம்! என் குடிக்கு ஏற்பட இருக்கும் தீமையின் அடையாளமா? (பூகைலா, பாராய் பாராய் வனிதாமணி பாராய் என்ற மெட்டு) இவளா? (பல்லவி) தாயே தாயே என்ன மாயமோ அறியேன் (தாயே) (அனுபல்லவி) வாயும் திறந்து மாக்கோழியதே கூவிய மர்மக்குறி அறிகிலன் (தாயே) (சரணம்) பின்னர் விளையும் இன்னல் முன்னர் காட்டும் குறியோ சென்றே இதனைக் கேட்பேன் இன்றே பெரியார் இடமே (வசனம்) ஐயோ தாயே ... செல்கின்றேன். பறவைக் கூடு காட்சி - 1 இடம் : சைகோனில் பொன்னரசு வீடு. காலம் : ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி உறுப்பினர் : வட்டிக்கடை பொன்னரசு, அவர் மனைவி பட்டம்மா. அவர் மகள் புன்னை. குத்தகை கடை மேற்பார்வையாளன் முத்தப்பா. தீர்வைச் சாவடிக் கணக்கன் கரும்பாயிரம், தேயிலை விற்பனையாளர் சுப்ரஹ்மண்யன், சூசை, தேநீர்க் கணக்கன் கடைக்காரன் அப்துல்லா. அமைப்பு : பெரியவீடு, நடுத் தாழ்வாரத்தின் நடுவில் வட்ட மேசையும் பல நாற்காலிகளும் உள்ளன. அங் கொரு சாய்வு நாற்காலி யில் ஐம்பது வயதுள்ள பொன்னரசு சாய்ந்தபடி சுவடி யொன்றில் கருத் தூன்றியிருக்கிறார். பட்டம்மாள் வீட்டின் உட் புறத்தினின்று பொன்னரசை நோக்கி வருகிறாள். பட்டம்மா : காலைக்கடன் முடித்தீர்கள். எட்டு மணியும் ஆகிறது. காப்பி கொண்டு வரட்டுமா அத்தான்? பொன்னரசு : நண்பர்கள் வரட்டுமே. பட் : அவர்கள் வந்தால் அவர்களுக்குச் சாப்பிடத் தெரியாதா என்ன? என்ன படிக்கிறீர்கள் அத்தான்? பொன் : கலைத் தொண்டர் கவிதைகள் பட் : எத்தனை முறை கலைத்தொண்டர் கவிதைகள் படிப்பது? பொன் : நூல் கிடைத்ததும் படித்தேன். மறுபடியும் படித்தேன். மீண்டும், மீண்டும் படித்தேன். நேற்றுப் படித்தேன். படித்தேன். படித்தேன். கலைத் தொண்டர் கவிதைகள் படிக்கப் படிக்கப் படித்தேன் பட்டம்மா. (புன்னை வருகிறாள்) புன்னை : அந்தப் படித்தேனை மூடிவைத்தால் பிறகு உண்ணலாம். பருந்து கொண்டு போகாது. தோசை யுண்ணுங்கள் அப்பா சூடாறுமுன். பொன் : தோசையா! கொண்டுவா அம்மா! தொட்டுக் கொள்ள என்ன? புன்னை : எண்ணெய், மிளகாய்ப் பொடி. பொன் : அடடா இன்று இது தமிழ்நாடம்மா; சைகோனல்ல. மூடி விட்டேன் தமிழ்நூலை, முன்னே கொண்டுவா தமிழ்த் தோசையை. பட் : பழநி கொண்டு வா. (பழனி என்னும் வேலைக்காரன் மூவருக்குத் தோசை முதலியவை கொண்டு வந்து வட்டமேசையில் படைக் கின்றான்) பொன் : (உண்ணும்போதே) எங்கே அரைத்தீர்கள் அரிசி. சூசை வீட்டிலா? பட் : மா அரைத்தது சூசை வீட்டில்! மிளகாய்ப் பொடி நான் சொல்லி அளவின்படி சுவை குறையாமல் முடித்துக் கொடுத்தவன் அப்துல்லா. பொன் : இன்றைக்குத் தோசை சுட இருந்ததை எனக்கு சொல்லவே யில்லையே? புன்னை : சொல்லக்கூடாது. பொன் : ஏனம்மா அப்படி? புன்னை : முன்னே சொல்லிவிட்டுப் பிறகு எங்களால் தோசை சுட முடியாமல் போனால் நீங்கள் வருத்தப்படுவீர் களப்பா. பொன் : அது மட்டும் மெய்தானம்மா (கரும்பாயிரம் வருகிறான்) பொன் : கரும்பாயிராமா? வாருங்கள். அடடே பழநி கரும்பாயிரம் வந்திருக்கிறார். (தோசை பிடிக்குமா கொண்டு வந்து படைக்கின்றான் பழநி) பட் : தோசை பிடிக்குமா உங்களுக்கு? கரும்பா : உயிராச்சே அம்மா. இன்னொரு நாள் இடியாப்பம் சுடுங்களம்மா. பட் : பிழியச்சு வேண்டும், பார்ப்போம். (இதற்குள் முத்தப்பா, சுப்ரஹ்மண்யன், சூசை, அப்துல்லா வந்துவிடுகிறார்கள்) புன்னை : அப்பா முத்தப்பா வந்து விட்டார்! பொன் : வாருங்கள் முத்தப்பா. சுப்ரமணியனா! வாருங்கள் சூசை, அப்துல்லா வாருங்கள், வாருங்கள் உட்காருங்கள். பழநி, விரைவில் வா. (அனைவரும் உட்காருகிறார்கள்.) புன்னை : இதோ நான் போகிறேன். (உள்ளே ஓடுகிறாள்) சூசை : தோசை, மிளகாய்ப் பொடியா அம்மா? ஐயையோ என்பாடு ஆபத்து பட் : ஏன்? சூசை : இன்றைக்கெல்லாம் வைத்தால் எனக்கு இரண்டு தோசை மிஞ்சினால் மூன்று. எப்படிப் போதும். என் ஆசை எங்கே! நீங்கள் வைக்கும் மூன்று தோசையெங்கே! அப்துல்லா : மலை விழுங்கிக்குக் கடுகு ஒரு கண்டாங்கி என்கிறீரா? சூசை : ஆமாம் அப்படித்தான் சொல்லுகிறேன். உன் பங்கை எனக்குக் கொடுத்துவிட நினைக்கிறீரா என்ன? அப்து : கொஞ்சம் எட்டி உட்காரப்பா (அப்துல்லா எட்டிப் போகிறார்) பொன் : உனக்கு வைக்கும் தோசையைத் தூக்கிக் கொள்வார் என்றா? அப்து : பின்னென்ன ஐயா? சுப்ர : சூசைக்குப் பின்னும் இரண்டு வையுங்கோ பட்ட : ஓ! சூசை : சுப்ரமணியனுக்குக் கூடப் பின்னும் இரண்டு வையுங்களம்மா. அப்து : அதற்குத்தானே அவர் அப்படிச் சொல்லுகிறார். சுப்ர : சேச்சே. அதற்காகச் சொல்லவில்லை. எனக்குத் தோசை பிடிப்பதில்லை. (இதற்குள் புன்னை, முத்தப்பா முதலியவர்கட்குத் தோசை வைக்கிறாள்) சுப்ர : இதெல்லாம் எனக்குப் பிடிக்கிறதில்லே இன்னும் இரண்டு போடுங்கோ. அதென்ன மிளகாய்ப் பொடியோ. எனக்குப் பிடிக்காது. இன்னும் கொஞ்சம் கொஞ்சம் காட்டுங்கோ. புன்னை : மற்றவர்கட்கும் பிடிக்காது! உங்கட்கு அவ்வளவு தானுங்கோ. (சிரிப்புடன் அனைவரும் உண்ணுகிறார்கள்.) முத் : ஏன் ஐயா நீங்கள் தமிழ்நாட்டில் நாடோறும் இப்படிப்பட்ட சுவையுள்ள தோசைதானே தின்பீர்கள். பொன் : இன்னும் இதுபோல் என்னென்னவோ, அப்பம், இடி யப்பம், இட்டலி, பிட்டு நம் நாட்டுச் சிற்றுணவு வகையே ஒரு தனி இவைகளையெல்லாம் நீர் அறியமாட்டீர். நீர் தமிழர். உம் பெற்றோர் தமிழ் நாட்டார்! நீர் தமிழ் நாட்டைத் தாய்நாடாகப் பெற்றும் தமிழ் நாட்டுணவை நுகரத்தக்க வேளை உமக்கு இல்லை. எப்போதாவது தமிழ்நாட்டுக்கு வராமலா இருப்பாய்? முத் : நான் தாயை இழந்தேன், தந்தையையும் இழந்தேன். ஆயினும் உயிர் வாழ்கிறேன். என் தாய் நாட்டைக் காணும் விருப்பத்தால்! புன்னை : அடுத்த ஞாயிற்றுக் கிழமை அப்பம் சுட்டுத் தேங்காய்ப் பாலில் துவைத்து உண்ண வேண்டும். தேங்காய் முதலி யவை வேண்டுமே. முத் : தேடலாம் அம்மா. கரும்பா : இடியாப்பம் பிழியுங்கள் அம்மா புன்னை : அதற்கடுத்த ஞாயிற்றுக்கிழமை ஆகட்டும். கரும்பா : முதலில் இடியாப்பம் சுட்டால் என்ன? புன்னை : முதலில் முத்தப்பாவுக்கும் எனக்கும் தேங்காய்ப் பால் அப்பம் தேவை பொன் : எனக்கும் அதுதான் விருப்பம். என்னை மறந்து விடாதீர்கள். புன்னை : இல்லை, இல்லை பயப்படாதீர்கள் அப்பா. (இதற்குள் தபாற்காரன் வருகிறான். அவன் செய்தித் தாள்கள், கடிதங்கள் கொண்டு வந்து முன்புறமிருந்த மேசைமேல் வைத்துப் போகிறான்) பொன் : தமிழ்நாட்டு அஞ்சலா! தபாற்காரன் : ஆம் (போகிறான். அனைவரும் எழுந்து விடுகிறார்கள். கையலம்புகிறார்கள்). பொன் : (அஞ்சல்களைப் பிரித்துப் படிக்கிறார் அவர் முகம் வியப்பால் சூழ்கிறது) அடடா! எனவே இன்றுதான்! இன்றைக்குத்தான். கப்பல் துறைக்குப் போக வேண்டுமே! இந்த அஞ்சல் சென்ற கப்பலுக்கே வந்திருக்க வேண்டுமே! சுணங்கியது ஏன்? கப்பல் துறைக்குப் போக வேண்டுமே! உணவு முடிந்ததா? பட்ட : செய்தி இன்னதென்று சொன்னால்தானே. புன்னை : என்ன அப்பா ஊரிலிருந்தா? முத்தப்பா : நம் நாட்டிலிருந்தா? கரும்பா : உங்கள் மகிழ்ச்சி உங்களைத் திக்குமுக்காடச் செய்கிறதா என்ன? சுப்ர : அமைதி! அமைதி! பொறுமையாகப் பேசுங்கள் என்ன அஞ்சல்? பொன் : இந்த அஞ்சல் நமக்குச் சென்ற கிழமையே கிடைத்திருக்க வேண்டும். என் சிற்றப்பா தங்கவேலு பிள்ளை எழுதி யிருக்கிறார். கலைத் தொண்டர் இங்கு வருகிறாராம். இந்தக் கப்பலில்! இப்போது! பட்டு : ஓகோ! புன்னை : மகிழ்ச்சி, என்னால் தாங்கமுடியவில்லை! சூசை : எம்மா எம்மா எம்மா என் தலையில் கொஞ்சம் இறக்கி வைத்துவிடுங்கள். உங்கள் அப்பாவுக்கு நீங்கள் ஒரே பெண். பொன் : நம்முடைய கார் ஒன்று போதாது. இன்னும் மூன்று கார் வாடகைக்குப் பேசி விடுங்கள். மாலைகள் ஏற்பாடு செய்து விடுங்கள். பட்டு, இங்கே கவிஞர் மாலை நாலு மணிக்கு வந்து சேருவார் ஏறக்குறைய ஐம்பது பேருக்குச் சிற்றுணவு ஏற்பாடு செய்துவிடு. கூடத்தில் நாற்காலி முதலியவற்றை வரிசையுறப் போட்டு வைத்து விடும்படிசெய். பட்ட : நான் வரவேண்டாமா அத்தான். புன்னை : நானுந்தானே அப்பா. எல்லாம் முடிவு பெறவேண்டும். கிளம்பிவிட வேண்டும். நீங்கள் அனைவரும் வருகிறீர்கள் அல்லவா? சுப்ர : நான் மட்டும் வர முடியல்லே மன்னிக்கணும். நான் ஒருவனுக்கு அடிமை. புன்னை : மற்றவர்கள். முத்தப்பா நீங்கள்? முத்தப்பா : கட்டாயமாக! கரும்பா : என்னைக் கூப்பிடவில்லையே சூசை : உன்னையும் என்னையும் கூப்பிடவே வேண்டியதில்லை. அப்து : என்னையுந்தான். அனைவரையும் கருதி நாலுகாருக்கு திட்டம் பண்ணினார் ஐயா! இதுவுமா தெரியவில்லை? ஏன் கரும்பாயிரம்? முத்த : நான் கார் அமாத்தப்போகிறேன். பொன் : விரைவாக சூசை : நான் மாலைக்குப் போகிறேன். கரும்பா : மாலைக்கா? இப்போதே போகவேண்டும். சூசை : மாலை வாங்க என்கிறேன். காது காது என்றால் வேறு வேறு என்கிறாரே கரும்பாயிரம். அப்து : இல்லை அவர் மாலை என்பதை மாலைப்போது என்று பொருள் பண்ணிக் கொண்டார். பொன் : விரைவில் போனால் நலமாய் இருக்கும். அனைவரும் பிரிகிறார்கள். காட்சி - 2 இடம் : (மேற்படி) நேரம் : மாலை 6 மணிக்குள் உறுப்பினர் : மேற்படியனைவரும் மற்றும் பலர். அமைப்பு : கவிஞர் கலைத்தொண்டர், பட்டு மெத்தை தைத்த ஓர் நாற்காலியில் வீறுடன் அமர்ந்திருக்கிறார். அண்டையில் ஒருவன் அவருக்குப் பெருவிசிறி கொண்டு வீசிக் கொண்டிருக்கிறான். ஏறக் குறைய ஐம்பது பேர் அவர் முகம் பார்த்தபடி நாற்காலிகளில் அமர்ந்திருக்கிறார்கள். கவிஞர் : தோழர் பொன்னரசு அவர்களே, தமிழர் கழகத்தினர் களே! மற்றுமுள்ள இருபான்மைத் தமிழ்த் தோழர்களே, உங்களோடு இன்று இச் சைகோனில் உள்ள தமிழர்க ளாகிய உங்களிடம், முன்னேற்றத்திற்குரிய ஓர் நன்னிலைமையைக் காணுகிறேன். அது, எனக்கு ஈடற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ் நாட்டில் குற்றுயிராய்க் கிடக்கும் சாதிப்பிணக்கும், சமயப் பிணக்கும் சைகோன் தமிழர்களிடம் இறந்தே போயின! ஆத்திகருக்கு என் இரக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரிவின்றிச் சேர்ந்துள்ள அமைந்ததான இன்றைய விருந்தை நான் மறக்கமுடியாது. விருந்திட்டார்க்கு என் உளமார்ந்த நன்றி. என்னைப் பெருமைப்படுத்தி வரவேற்று மகிழ்வித்தமைக்கு மற்றொரு முறை நன்றி கூறுகிறேன். விருந்தில் மட்டுமல்லாமல் எப்போதுமே ஒருவர் வீட்டில் ஒருவர் வேறுபாடின்றியே உண்பீர்களா? புன்னை : போடாத குறைதான். கவிஞர் : அவ்வளவுதானா? மிக்க மகிழ்ச்சி! கொள்வன கொடுப்பன எப்படி? முத்த : இங்கேயே நிலையாக இருப்பவர்கள் கொள்வன கொடுப்பனவற்றிலும் வேறுபாடு பார்ப்பதில்லை. நம் தாய் நாட்டினின்று புதிதாக வந்தவர்களும், அடிக்கடி தாய் நாடு போய்வந்து கொண்டிருப்பவர்களும், தாய் நாட்டினரின் உறவினரைத் தழுவி நடக்க எண்ணும்போது தான் வேறுபாடு நினைவுக்கு வரும். கவிஞர் : நன்றாகச் சொன்னீர்கள். நான் இங்கு வந்தவுடன் தமிழ்நாட்டைப் பற்றி நீங்கள் மிக்க அவாவுடன் கேட்ட கேள்விகளைக் கொண்டு உங்களுக்குள்ள தமிழ்ப் பற்றையும் தமிழர் முன்னேற்றத்திலுள்ள பற்றையும் நான் அறிந்து கொண்டேன். தோழர்களே, உங்களுக் குள்ள அன்பின் அளவு தமிழ்நாட்டில் தமிழர்களிடம் காணமுடியவில்லை. புன்னை : என்னமோ எங்கட்கு அதிக அன்பு இருப்பது எங்கட்குத் தெரியவில்லை. தங்களைப் போல் இங்குப் புதிதாக வருகிறவர்கள் இப்படித்தான் சொல்லு கிறார்கள். கவிஞர் : உங்களுக்குத் தெரியாதது வியப்பில்லை இளைஞன் ஒருவன், தனக்கு கால் இருக்கிறதா கையிருக்கிறதா என்று கண்ணாடி பார்க்கும் போது நினைக்கிறதில்லை. எனினும் கால், கைகள் இருந்தே வருகின்றன. மேலும் அவை வளர்ந்தும் வருகின்றன. அது கிடக்கட்டும். சைகோனிலுள்ள உங்கட்குத் தமிழ், தமிழ்நாடு, தமிழர் முன்னேற்றம் ஆகியவற்றில் அன்பு மிகுதியாய் இருப்பானேன். தமிழ் நாட்டில் உள்ளவர்கட்கு அந்த அளவு இல்லாதிருப்பானேன்! பொன் : கவிஞரவர்களே விளக்குதல் வேண்டும். கவிஞர் : தாய்ப்பறவையானது குஞ்சுகள் உள்ள தன் வீட்டை வீட்டு இரைக்காக வெளியிற் செல்லும். அந்தத் தாய்ப் பறவை குஞ்சுகளுடன் கூட்டில் இருக்கையில் குஞ்சுகள் மேல் கொண்ட அன்பைவிட வெளியிற் சென்றுள்ள போது மிக்க அன்புடையதாக இருக்கிறது. அனைவரும் : ஆம்! ஆம்! (தம்மில் ஒருவரை ஒருவர் பார்த்துத் தலை யசைத்து வியப்பை வெளிப்படுத்திக் கொள்ளு கிறார்கள்.) பொன் : அரிய எடுத்துக்காட்டு! கவிஞர் : தாய்நாட்டின் மேல் இங்குள்ள உங்கட்கு ஏன் மிகுதியான பற்று என்றால் தாய் நாட்டை விட்டு இத்தனை தொலைவில் வந்திருப்பதுதான். சூசை : அப்படியானால் தமிழ் நாட்டார் அனைவரும், அடுத்த கப்பலில் இங்கு வந்து விடலாம் ஐயா. கவிஞர் : ஆம்! ஆனால் முடியக்கூடிய செயலா? தமிழ் நாட்டு மக்களைத் தமிழ் நாட்டில் வைத்தே உங்களைப் போல் அவர்கட்கும் அன்பை உண்டாக்குவதுதான் இப்போது தமிழ் வேண்டும். அது கட்டாயக் கல்வி ஆக்கப் பட வேண்டும். கூடவே பொதுமக்களின் உள்ளத்தை எளிதிற் கவரத்தக்க கவிதைகளும், உரைநடைகளும் குவிய வேண்டும். தமிழுக்குள்ள குறைபாடுகள் துறை தோறும் நீக்கப்படுதல் வேண்டும். தமிழ் ஏடுகள் தன்னலமற்றனவாக மிகப்பல தோன்ற வேண்டும். தமிழ் புலவர்களின் வறுமை தொலைய வேண்டும். அவர்கள் பிறரை நத்தி வாழும் நிலை ஒழிய வேண்டும். ஒரே பேச்சில் சொல்லுகிறேன். தமிழ், விடுதலை பெற வேண்டும். மற்றும் ஓர் உண்மை உங்கட்கு புலனாகியிருக்கும் என்று கருதுகிறேன். சாதி என்றோ சமயம் என்றோ மற்றும் பழக்க வழக்கம் என்றோ சொல்லுகின்ற வேறு பாடுகள் அனைத்தும் ஒழிவதற்கு நாட்டுப் பற்று இன்றியமையாதது. அனைவரும் : ஆம்! ஆம்! பொன் : கவிஞர் அவர்கள் இப்போது புதிதாக வெளியிட்ட நூல் எது? கவிஞர் : ஆம். நான் ஒரு பெருங்குற்றம் இழைத்துவிட்டேன். அண்மையில் நான் வெளியிட்ட நூற்களின் பெயர் முத்துப் பல்லக்கு ஒன்று, மற்றொன்று மாணிக்க கணை யாழி, இரண்டு சுவடிகளே என் கையில் உள்ளன. (பெட்டியொன்றைத் திறந்து இருபடிகளையும் எடுத்துப் பொன்னரசிடம் நீட்டுகிறார்) அவ்விரண்டு படிகளையும் பொன்னரசுவிடம் கொடுத்து விடுகிறேன். ஒன்று அவருக்கு. மற்றொன்று அவர் குறிக்கும் மற்றொருவருக்கு ஆகும். பொன் : எனக்கு, ஒன்றுமே தோன்றவில்லை. பட்டம்மா ஒரு சுவடியை உன்னிடம் ஒப்படைக்கிறேன். யாருக்கேனும் நீ கொடு! பட்டு : (அதை வாங்கிக் கொண்டு) நல்ல தேர்தல்! புன்னை, நீ தான் இந்தத் தொல்லையான பணியை ஏற்றுக் கொள்ள வேண்டும் (என்று புன்னையிடம் கொடுக்கிறாள்) கவிஞர் : நான் தாயகம் சென்றவுடன் கழகத்திற்குப் பல படிகள் அனுப்புகிறேன். சூசை : ஏன் புன்னை எனக்குத் தானே கொடுக்க நினைக்கி றீர்கள். விரைவில் ஒரு முடிவுக்கு வந்துவிடுங்கள். புன்னை : முடிவு செய்வது எளிதாகத் தோன்ற வில்லை. ஒரு நாளாகிலும் தவணை வேண்டும். அப்துல்லா : அதுவரைக்கும் என்னிடம் இருக்கட்டுமே அம்மா. அதனால் என்ன முழுகிப் போய் விடப் போகிறது. புன்னை : முடிவு செய்வது, எளிதாகத் தோன்றவில்லை. சூசை : ஆமாம் இரண்டும் ஒன்றே. அப்துல்லாவுக்கு நீங்கள் கொடுக்காமல் இருக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். அப்துல்லா : அந்த விண்ணப்பத்திற்குப் பதில் அளிக்கும் படி நான் புன்னை அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். புன்னை : பதில் அளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். கவிஞர் : புன்னை உங்களிடம் கிடைத்த நூலின் பெயர் என்ன? புன்னை : மாணிக்கக் கணையாழி! கவிஞர் : பொன்னரசுக்கு முத்துப்பல்லக்கோ? புன்னைக்கு ஒரு கேள்வி. நீங்கள் அந்த நூலை யாருக்குக் கொடுப்பது என்பது பற்றி முடிவு செய்ய ஒரு நாள் தவணை கேட்டது பொருத்தம். உங்கள் கணையாழியை நீங்கள் யாருக்குக் கொடுக்கிறீர்கள் என்பதையறிய எனக்கு நிரம்ப ஆவல் உண்டு. ஒரு மங்கைப் பருவமுடையவள் தம் கணையாழியைக் கொடுப்பதென்றால் நன்றாகக் கருதாமல் கொடுத்து விட முடியுமா? புன்னை : ஐயையோ! மிக்க பொறுப்புள்ள பணியை அளித்து விட்டீர்கள். எனக்கு ஒருநாள் தவணை போதாது. கவிஞர் : உங்கட்குத் தோன்றியபோது, கொடுங்கள் என்றைக் காவது! புன்னை : நன்றி ஐயா! (சிறிது நாணம்) கவிஞர் : பொன்னரசு அவர்களும், கணையாழி தந்தவரையும் பெற்றவரையும் வரவேற்க முத்துப்பல்லக்கோடு காத்திருப்பாராக! (அனைவரும் கை தட்டல்) பட்டு : நல்லது ஐயா! பொன் : நன்றி ஐயா. நான் விருப்பத்தோடு எதிர்பார்த்திருந்த நன்னாளை நீங்கள் அருகில் கொண்டுவந்து விட்டீர்கள். கவிஞர் : நாம் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்வோமே. பொன் : ஒரே ஒரு வேண்டுகோள். நாளை பலர் தமிழர் கழகத்தில் தங்களின் அரிய சொற்பொழிவை கேட்க அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் ஆவலோடு. கவிஞர் : சரி! என்ன பொருள் பற்றி? புன்னை : பெண்கள் கடமை பட்டம்மா : பெற்றோர் கடமை பொன் : பெற்றோர் கடமை அப்துல்லா : தமிழகம் கவிஞர் : அவரவர் ஒவ்வொன்று சொன்னீர் அவரவர் தலைப்பை ஒரு தாளில் எழுதி அவரவர் பெயரையும் அதில் குறியுங்கள். (அனைவரும் தனித்தனியே எழுதிய தாள்கள் அனைத்தும் கவிஞரிடம் சேர்கின்றன.) கவிஞர் : (ஒவ்வொன்றாகப் படிக்கிறார்) பெண்கள் கடமை - புன்னை, பெற்றோர் கடமை - பட்டம்மா, பெற்றோர் கடமை பொன்னரசு, தமிழகம் - அப்துல்லா, மக்கட்கு மதமும் சாதியும் வேண்டுமா - கரும்பாயிரம், தமிழ்நாட்டு இளைஞர் கடமை - முத்தப்பா, நாட்டன்பு - சூசை - வர்ணாரமதர்மம் காக்கப்படுதல் - ஆவகம் சுப்ரஹமண்யன். இங்கே உங்களிடையேயும் ஒருவர் இருக்கிறார் பசுப் பாலில் இட்ட நீலமணி போலும்! (அனைவரும் சிரிக்கின்றார்கள்) பொன் : நல்ல எடுத்துக்காட்டு. கவிஞர் : இருக்கட்டும், நான் நாளைக்கு நீங்கள் கொடுத்துள்ள எல்லாத் தலைப்புக்களைப் பற்றியும் பேசி என் கருத்தை விளக்கிவிடுகிறேன். பொன் : ஓய்வு கொள்ளுங்கள். (அனைவரும் கவிஞரை வணங்கிப் பிரிகிறார்கள்.) காட்சி - 3 இடம் : சைகோனில் தமிழர் கழகத்தையடுத்துள்ள ஓர் காட்சிச் சோலை. நேரம் : மறுநாள் காலை. உறுப்பினர் : கரும்பாயிரம், அப்துல்லா. அமைப்பு : பல மேடைகள் ஒருபுறம். (கரும்பாயிரம் அப்துல்லாவும் பேசுகிறார்கள்) கரும் : பார்த்தவரைக்கும் உமக்கு எப்படித் தோன்றுகிறது? அப்து : புன்னையுள்ளம் முத்தப்பாவை நாடுகிறதென்றே சொல்ல வேண்டும். ஆயினும் பெண்கள் உள்ளத்தை அறிவது எளிதல்ல. கரும் : நானும், பொன்னரசு, புன்னை, பட்டமாவும் தோசை உண்ணும்போது, நீரும், முத்தப்பாவும் வந்தீர்கள். அப்போது புன்னையின் நிலையைப் பார்த்தீரா? முத்தப்பா வருகிறார் முத்தப்பா வருகிறார் என்றல்லவா மகிழ்ச்சிக் கூத்தாடினாள். அப்து : அதுமட்டுமா அவளே ஓடினாள் முத்தப்பாவுக்குத் தோசை கொண்டுவர. மெய்தான். பெண்கள் உள்ளத்தை நம்பக் கூடாது. நட்புள்ளம் முத்தப்பா மேலும், காதல் உள்ளம் உம் மேலும் செலுத்தியிருக்கவும் கூடுமல்லவா? கரும் : இருக்கலாம். எப்படியாவது அவள் உள்ளத்தை அறிந்து கொள்ள வேண்டுமே? அதற்கு என்ன செய்யலாம் அப்துல்லா? அப்து : யாரையாவது அவர்களிடம் அனுப்ப வேண்டும். என்ன சொல்ல வேண்டுமென்றால் கரும்பாயிரத்துக்கு என் பெண்ணைக் கொடுக்க நினைக்கிறேன். கரும்பாயிரத்தின் நடத்தை எப்படி? என்று கேட்கவேண்டும். அதற்கு அவர்கள் சொல்லும் சொற்களிலிருந்து தெரிந்துவிடும் புன்னையின் எண்ணமும் பெற்றோரின் எண்ணமும். கரும் : நல்ல யோசனைதான். அதற்கு யாரை அனுப்பலாம்? திறமையுடையவராகவும் புன்னையும் புன்னையின் பெற்றோரும் நம்பும் நிலையில் உள்ளவராகவும் இருக்க வேண்டும். அப்து : சீனியை அனுப்பலாமா? கரும் : வேண்டாம் வேண்டாம். சீனியை புன்னைக்கும், பொன்ன ரசுக்கும் தெரியும். அப்து : அப்படியானால், ஒரு பகல் வேஷக்காரன் இருக்கிறான். அவனை யாரும் தெரிந்திருக்க முடியாது. நன்றாகப் பேசுவான். தோற்றமும் நன்றாயிருக்கும். அவன் பெயர் தெரியாது. ஆளைத் தெரியும். ஏற்பாடு செய்கிறேன். இன்று மாலை கவிஞரின் சொற்பொழிவு! நாளைக்கு அனுப்பலாம். கரும் : தம் தேயிலையைக் கடைக்கு வாங்கிக் கொள்வதால் சுப்ர மணியனுக்கு மிக்க வருவாய் ஏற்படும் அல்லவா! இரண்டு தடவை கேட்டுப் பார்த்தார். நானும் மறுத்து விட்டேன். பிறகு அது பற்றி ஒன்றும் சொல்வதில்லை. அப்து : சுப்ரமணியனின் தேயிலை நாம் நம் கடையில் பயன் படுத்துவதில் இருக்கும் தொல்லை என்னவென்றால் நாம் நெடுநாட்களாக விருதுநகர்த் தேயிலையைக் கொண்டு தேநீர் செய்து வருகிறோம். திடீரென்று சுப்ரமணியன் சொல்லும் பாம்பு குறியிட்ட தேயிலையைக் கொண்டு தேநீர் காய்ச்ச தலைப்பட்டால் கடை திடீரென்று விழுந்து விட்டால் வருமா? அன்றியும் விருதுநகர்த் தேயிலைக் குடையவர் உம் உறவினர். கரும் : பாம்பை எதற்காக அப்துல்லா ஒப்புக்கொள்வது? வெட்கக்கேடு. பிறகு நாளைக்கு அந்த ஆளை ஏற்பாடு செய்கிறீரா? நான் புன்னையை மணக்க வேண்டும், அவள் அழகுக்காக, அவள் சொத்துக்காக, அவள் படிப்புக்காக. அப்துல்லா : எல்லாப் பொருத்தமும் உள்ள பெண். கூடிய வரைக்கும் பார்ப்போம். நான் கடைக்குப் போக வேண்டும். கரும் : நல்லது போய்வாரும். நினைவிருக்கட்டும். அப்துல்லா : மறந்துவிடுவேனா என்ன! (அப்துல்லா போகிறான்) காட்சி - 4 இடம் : தமிழர் கழகம் நேரம் : மறுநாட்காலை 9 மணி உறுப்பினர் : புன்னை, பொன்னரசு, சொக்கு, அமைப்பு : தமிழர் கழகத்தில் புன்னையும், பொன்னரசும் தனித் தனி நாற்காலிகளில் குந்திச் சுவடி படித்திருக்கிறார்கள். மற்றும் பல சுவடிகள் மேசைமேற் கிடக்கின்றன. சொக்கு உள்ளே செல்கிறான். சென்று தானும் ஒரு சுவடியை எடுத்துப் பார்ப்பவன் போல் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுகிறான். சொக்கு : (பொன்னரசை நோக்கி) நீங்கள் கழகத்தின் தலைவரல்லவா ஐயா. பொன் : ஆம். நீங்கள் யார்? சொக்கு : சைகோனுக்கு வந்து சில மாதங்கள் ஆகின்றன. உங்கள் வீட்டுக்கு கரும்பாயிரம் என்பவர் அடிக்கடி வருவாரே? பொன் : வருவதுண்டு. ஏன் கேட்கிறீர்கள்? சொக்கு : தங்களுக்கு ஓய்வு இருக்கும்போது தங்களை வந்து பார்த்துச் சில தகவல்கள் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஒன்றுமில்லை. நம் பெண்ணுக்கு மணம் ஆக வேண்டியதிருக்கிறது. கரும்பாயிரத்துக்குக் கொடுத்து விடலாம் என்று சிலர் கூறினார்கள். தங்களைக் கேட்டால் கரும்பாயிரத்தைப் பற்றிய உண்மை நடத்தைகள் தெரியும் என்றும் கேள்விப்பட்டேன். நேற்றுத்தான் உங்களை எனக்குத் தெரியும். கவிஞர் சொற்பொழிவுக்கு வந்திருந்தேன். தாங்கள் சொற்பொழிவின் முடிவில் நன்றி கூறிப் பணமுடிப்பும் அளித்தீர்கள். தமிழர் கழகத்தின் தலைவர் என்றும் அப்போது தெரிந்து கொண்டேன். புன்னை : கரும்பாயிரம் மிக நல்லவர். படித்தவர். வருமானமுள்ளவர். ஒழுக்கக் குறைவான எவ்வகை நடவடிக்கையும் அவரிடம் இல்லையே. நன்றாய் மணத்தை முடித்துவிடலாமே. ஆனால் பெண்ணை அவர் பார்த்தாரா? பெண் அவரைப் பார்த்ததுண்டா? இருவரும் ஒத்துக் கொள்ளுகிறாரா? என்பதுதான் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள். சொக்கு : பெண்ணைப் பார்த்தால் பிடிக்காமல் போகாது. அதுமட்டும் உறுதி. அதுவுமின்றிக் கரும்பாயிரத்தைப் பற்றி அனை வரும் நல்ல படியாகத்தான் சொல்லுகிறார்கள். ஆனால் நம் கழகத் தலைவர் மகளைக் கரும்பாயிரத்துக்குக் கொடுக்கப் போவதாக. பொன் : என்ன என்ன புன்னை : சொல்லட்டுமே பிறகு? சொக்கு : கேள்விப்பட்டேன். அது மெய்யோ பொய்யோ? புன்னை : நான் அவர் மகள். என் தகப்பனார் தாம் இவர். நான் கரும்பாயிரத்தை மணந்துகொள்ள நினைத்ததில்லை. நினைக்கவும் மாட்டேன். என் தந்தைக்கும் அந்தக் கருத்தில்லை. பொன் : எனக்கு அந்த எண்ணமே இல்லை ஐயா. நீங்கள் நாளை வளர்த்தாமல் திருமணத்தை விரைவில் முடித்துவிடலாம். மிகவும் நல்ல பிள்ளை. சொக்கு : நல்லது. ஆனால் உங்கள் பெண்ணைக் கரும்பாயிரத்துக்குக் கொடுக்க மறுப்பதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டுமே? பொன் : காரணம் இல்லாமலா? காரணம், திருமணம் இப்போது செய்து கொள்வதாக என் பெண் எண்ணவில்லை. சொக்கு : மெய்தானா அம்மா! புன்னை : மெய்! விளக்கமாயிற்றா இப்போது! சொக்கு : வேறு எப்போது மணம் செய்து கொள்வதாக எண்ணம்? ஏன் கேட்கிறேன் என்றால், உங்களுக்காகக் கரும்பாயிர மும் காத்திருக்கவும் கூடுமே? புன்னை : காத்திருப்பதால் பயனில்லை. நான் அவரை மணக்கப் போவதில்லை. சொக்கு : வேறு யாரையோ உங்கள் உள்ளம் குறிப்பிட்டிருக்கலாம். புன்னை : நீங்கள் போய் வருகிறீரா? சொக்கு : படிப்பகம் அல்லவா இது? புன்னை : படிக்கப் போகிறீர்களா? சொக்கு : போகச் சொன்னால் போய்விடுகிறேன். புன்னை : படித்துக் கொண்டிருங்கள். (புன்னையும், பொன்னரசும் வெளியிற் போய் விடுகிறார் கள்.) காட்சி - 5 இடம் : சைகோனில் ஒரு தெரு. நேரம் : காலை 11 மணி உறுப்பினர் : கரும்பாயிரம், சொக்கு, சுப்ரமணியன். அமைப்பு : கரும்பாயிரம், எதிர்பார்த்து நிற்கிறான். சொக்கு எதிரில் வருகிறான். கரும் : என்ன சொக்கு? காயா? பழமா? சொக்கு : வறட்டுக்காய். எப்போதும் பழுக்காது. கரும் : அப்படியா? என்ன நடந்தது? சொக்கு : நீர் சொல்லியபடியே ஒழுங்காகத் துவக்கினேன். பேச்சு நேராகத் தொடர்ந்தது. அந்தப் பெண்ணே சொல்லிவிட்டாள் நான் கரும்பாயிரத்தை மணந்துகொள்ள நினைக்கவில்லை. இனியும் நினைக்க மாட்டேன். நீங்கள் உங்கள் மகளை விரைவில் கட்டி வைக்கலாம். என்று, நான் கேட்டேன் நீங்கள் கட்டிக்கொள்ள மறுப்பதால் கரும்பாயிரத்திடம் ஏதோ குற்றம் இருக்கிறது என்று. அவள் சொன்னாள் அப்படி ஒன்று மில்லை. நான் மணம் புரிந்து கொள்ள நாள் பிடிக்குமென்று. அதற்கும் நான் கேட்டேன். நீங்கள் கொஞ்சநாட்கள் பொறுத் திருப்பதால் கரும்பாயிரமும் அதுவரைக்கும் காத்திருக்க நினைப்பாரோ என்னமோ என்று. அவளுக்கு எரிச்சல் வந்து விட்டது. அவர் காத்திருந்து பயனில்லை என்று கூறி விட்டாள். அவள் தகப்பனாரும் அவள் பேச்சை முழுதும் ஆதரித்துப் பேசினார். அவளை நீர் கருதுவதிற் பயனே இல்லை! அவ்வளவுதான். நான் வருகிறேன். கரும் : நல்லது (கரும்பாயிரம் பெருமூச்செறிந்து அப்துல்லாவின் கடை நோக்கிச் செல்லுகிறான். எதிரில் சுப்ரமணியம் வருகிறான்). சுப்ர : என்ன கரும்பாயிரம்? கவிஞர் சொற்பொழிவைக் கேட்டீரோ? கிஞ்சித்தேனும் ப்ரயோசனம் இல்லையாமே? கரும் : ஆமாமாம். வர்ணாரமம் என்பதை வைத்துக் கொண்டு ஏமாற்றி வயிறு பிழைக்கும் பேர்வழிகளைக் கவிஞர் இழிவு படுத்திப் பேசினாராம். ஒரு ப்ரயோஜனமும் இல்லை யென்றுதான் கேள்வி. சுப்ர : அதற்காகச் சொல்லவில்லை நான். பொதுவாகவே பேச்சு வாரயப் படவில்லையாம். கரும் : எப்படிச் சுவாரயப்படும்? சாதிகள் இல்லையென்று அவர் சொன்னதாகக் கேள்வி. சாதியிருந்தால்தானே உயர் சாதி என்று ஊர்த்தாரியை உருவாக்கலாம். சுப்ர : உம் நிலைமையை அறியாமல் நீர் வர்ணாரமிகளை வெறுத்துக் கூறுகிறீர். சாதியும் சமயமும் வேண்டாம் என்பது பற்றிப் பேசும்படி கவிஞரைக் கேட்டுக் கொண்டீர். உம் நிலைமை நீர் அறிந்திருந்தால் அப்படிக் கேட்டிருக்க மாட்டீர். இருக்கட்டும் புன்னையின் காதல் யாரிடம்? கரும் : அதுவா? என்னை மணக்க அவள் விரும்பவில்லை. சுப்ர : வேறு யாரை மணக்க நினைக்கிறாள்? தெரிகிறதா? கரும் : முத்தப்பாவைக் காதலிக்கிறதாகத்தான் சொல்ல வேண்டும். சுப்ர : இந்த ஸுப்ரஹ்மண்யன் உதவி உமக்கு இருக்கும் பஷத்தில் ஈவரன் தடுத்தாலும் அவள் உம்மையே விவாஹம் செய்யும் படி நான் செய்வேன். ஞாபகத்தில் இருக்கட்டும் உமக்கு. கரும் : மெய்யாகவா? கரும் : நம்ப முடியவில்லையே! சுப்ர : தயவு செய்து நம்பும். கரும் : ஏன் அந்த உதவியை எனக்குச் செய்யக்கூடாது? அன்று நீ போய்விட்ட பிறகு கவிஞரும், மற்றவரும் அந்த முத்தப்பா வும் நம்மை எவ்வளவோ தாழ்மைப் படுத்தி பேசினார்கள். நானல்லவா அவர்களின் வாயை அடக்கினேன். அந்த எண்ணம் நமக்கு இருக்க வேண்டாமா? அவள் என்னை மணக்கும் வழியை எனக்கு ஏன் சொல்லக்கூடாது. முத்தப் பாவை அவள் வெறுக்கும்படி நீர் செய்வதால் நம் பகை வனைப் பழிக்குப் பழி வாங்கியதாக முடியுமே? சுப்ர : எதுபற்றியும் எனக்குக் கவலையில்லை. என் பாம்பு குறித் தேயிலையை அப்துல்லா வாங்கும்படி நீர் செய்ய வேண்டும். மறுநாள் உமக்கும் புன்னைக்கும் திருமணம். முத்தப்பாவை அவள் வேப்பங்காயாக எண்ணுவாள் உறுதியாக. கரும் : திரும்பத் திரும்பத் தேயிலைச் செய்தியையே கூறுகிறீரே. விருதுநகர் தேயிலை என் உறவினருடையது. அதை நானே வாங்க மறுக்கலாமா? விருதுநகர்த் தேயிலையால் அப்துல்லா கடை நன்றாக நடைபெறுகிறது. அதை மாற்றிப் பாம்பைப் கொண்டு வந்தால், கடை வீழ்ந்து விட்டால் என்ன செய்வது? உமக்கே தெரியும், அப்துல்லா கடையில் நானும் ஓர் கூட்டாளி. வேறு எதையாவது சொல்லும் ஒப்புக்கிறேன். பாம்புக் குறியுள்ள தேயிலைக்குரியவர் நீரல்ல. உமக்கு விற்பனை மேல் விழுக்காடு தான் வரும். அந்த வருமானத்தின் அளவு நான் ஒரு தொகை கொடுத்து விடுகிறேன். சுப்ர : கொஞ்ச நாள் போகட்டுமே. என்னிடந்தான் வந்தாக வேண்டும். நான் சொல்லுவதுபோல் கேட்டாக வேண்டும். என் தேயிலையை ஒப்பாதவரைக்கும் உமக்கு என்னால் ஒரு உதவியும் செய்யவே முடியாது. அது போகட்டும் சாதி ஏன் சமயம் ஏன் என்கிறீரே என்ன யோசனை உம் யோசனை. கரும் : நீர் அந்தப் பேச்சை எடுக்க வேண்டாம். சாதி வேண்டுமோ எதற்கு, சூத்திரன் என்றால் வேசி மகன், அடிமை, போரில் புறங்காட்டியவன் என்றெல்லாம் பொருள். என்னைச் சூத்திரன் என்று எவனாவது சொல்ல நினைப்பானாயின் அவன் தன் சாவுக்குப் பாடை கட்டி வைத்துவிட்டு அதன் பிறகு என்னிடம் சொல்ல வேண்டும். மக்கள் நிகர். மக்களைப் பிரிப்பது சாதியினால் அது ஒழிந்து போகட்டும். மக்களைப் பிரிப்பது மதமானால் அது மாய்ந்து மறையட்டும். மக்களைப் பிரிப்பது கடவுளானால் அது அழிந்து போகட்டும். பணக்காரன், ஏழை, முதலாளி, தொழிலாளி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற இரட்டைகள் ஒழிய வேண்டும். பொருளாதார ஒற்றுமை நிலவவேண்டும். அது உலகின் தேவை. இலட்சியம் இல்லையேல் போர், பசி, பிணி. சுப்ர : நீரே இதைத் தலைகீழாக மாற்றிப் பேச நேரும் உமக்கே தெரியப் போகிறது. சாதியில்லை என்பதில் உள்ள தீமை. நான் வருகிறேன். கரும் : எங்கே போகிறீர். சுப்ர : தேநீர் குடித்துவிட்டு விரைவாக நான் போக வேண்டும். கரும் : வருணாரம தர்மம் இருக்க வேண்டும்! அப்துல்லா கடையில் தேநீரும் குடிக்க வேண்டும். போய் வாரும். காட்சி - 6 இடம் : சைகோனில் ஒரு தெரு. முனையில் ஒரு குதிரை கட்டும் விடுதி. அவ்விடுதியில் ஒருபுறம் ஒரு சிறுகுடிசை. காலம் : இரவு மணி 10 உறுப்பினர் : பழநி, கரும்பாயிரம். அமைப்பு : குதிரை கட்டும் விடுதியின் எதிரில் கரும்பா யிரம் நிற்கிறான். கரும் : பழநி! பழநி! பழநி : ஆர் அங்கே? கரும் : நான் தானப்பா பழநி : நீ தானப்பாவா? முத்தப்பா உனக்கு என்ன உறவு? கரும் : இல்லை பழநி! நான் தான் என்றேன். கரும்பாயிரம். பழநி : (வெளிவந்து) வாங்க நீங்களா? ஏது இந்நேரத்திலே? இவ்வளவு தொலைவில்? கரும் : நாளைக்கு நம் வீட்டில் ஒரு விருந்து. பெரிதாக அல்ல. இங்கே. சமையல் ஆள் ஒருவன் தேவை. உன் வழியில் தெரிந்தவன் இருந்தால் ஏற்பாடு பண்ணிக் கொடுப்பாயே என்று வந்தேன். எனக்கு நேரமில்லை. பொன்னரசு வீட்டுக்குவர, முத்தப்பா வந்தாரா? இந்த ஞாயிற்றுக்கிழமை சிற்றுண்டி என்ன? பழநி : நீங்க கேட்டது இடியாப்பம். முத்தப்பா கேட்டது வெள்ளப்பம். முத்தப்பா கேட்டதுதான். கரும் : முத்தப்பா மேலேதான் அவர்கட்குப் பற்று அதிகம், இல்லையா? பழநி : அவர் நல்லவர். கரும் : மற்றவர்கள் கெட்டவர்களா? பழநி : நல்லவர் அவர். என்றால் மற்றவர்கள் கெட்டவர்களாகத் தான் இருக்கணுமா? அப்படியில்லை. மேலும் முத்தப்பா தனி ஆள். ஆதரவில்லாதவர். எவரும் அப்படிப் பட்டவர்கள் மேலே இரக்கம் கொள்ளுவாங்க. கரும் : நேற்று வந்தாரா முத்தப்பா அங்கு? பழநி : வந்தார் போலத்தான் இருக்குது. கரும் : நாளைக்கு வருவாரா? பழநி : வருவார் போலத்தான் இருக்குது. கரும் : நீ இங்குக் குடியிருப்பதற்கு என்ன வாடகை? பழநி : தொல்லையாய் இருக்குதுங்க. இதற்கு இரண்டு வெள்ளி. கரும் : அப்படியா. இந்தா இதை வைத்துக்கொள். ஒரு ஆள் தேவை என்றேனே. (ஒரு வெள்ளியைக் கொடுக்க பழநி பெற்றுக் கொள்ளுகிறான்.) பழநி : மகிழ்ச்சிங்க. நாளைக்கு ஆள் தேவை என்று இப்ப சொன்னா என்ன செய்வதுங்க? கரும் : நானும் சொல்லியிருக்கிறேன். அப்துல்லாவிடம். அது கிடக்கட்டும் புன்னைக்குத் திருமணம் எப்போது. பழநி : அதைப்பற்றி பேச்சைக் காணோமே. கரும் : அவள் உள்ளம் யாரிடத்திலாவது சென்றுதான் இருக்கும். ஏனென்றால், அவள் படித்தவள். உணர்ச்சியுள்ளவள். அதற்காகச் சொல்லுகிறேன். ஏன்? நீ என்ன நினைக்கிறாய்? பழநி : மெய்தாங்க. புன்னையின் நெஞ்சம் முத்தப்பா மேல் சென்றிருக்கும் என்று தோன்றுகிறது. கரும் : இருக்கலாம். எதைக் கொண்டு அப்படிச் சொல்லு கிறாய்? பழநி : முத்தப்பா மகிழ்வதற்குப் புன்னை மகிழ்ச்சியடை கிறாங்க. அவர் வருந்தினால் இவர் வருத்தப்படுவ துண்டுங்க. அவர் நன்மையில் புன்னைக்கு அக்கரை மிகுதி. கரும் : மற்றப்படி, தனித்துப் பேசுவது, தம் காதற் கருத்தைத் தெரிவித்துக் கொள்வது, செய்தி எழுதி அனுப்புவது, ஏதாகிலும் உண்டோ? பழநி : இருக்காதுங்க. நான் அப்படி ஒன்றும் பார்த்த தேயில்லை. சும்மா சொல்லலாமா? கரும் : அது சரி, பழநி, உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். நான் உன்னை வேறாக நினைக்கவில்லை. இன்று முதல் அப்படி வைத்துக்கொள். உனக்கு வந்தது, எனக்கு வந்தது. எனக்கு வந்தது, உனக்கு வந்தது. என்ன வென்றால், புன்னையை நான் மணந்து கொள்ள எண்ணுகிறேன். அவள் முத்தப்பாவை வெறுக்கும்படி உன்னால் ஆன உதவியை நீ செய்ய வேண்டும். பழநி : என்ன செய்ய வேண்டும்? கரும் : எனக்குத் தெரியாது. அது உனக்குத்தான் தெரியும். பழநி : முத்தப்பாவைப் பற்றி பேச்சு வந்தால், அவர் கிடக்கிறார். அவர் ஒரு நாடோடி. அப்படி, இப்படி என்று சொல்லுகிறேன். கரும் : ஆமாம், ஆமாம் அப்படித்தான். என்னைப் பற்றிப் பேச்சு வரும்போது அவர் அப்படிப்பட்டவர். இப்படிப் பட்டவர் அவரிடம் பெரிய பணக்காரர்கள் எல்லாம் வருகிறார்கள் என்றெல்லாம் சொல்ல வேண்டும். அப்படித்தானே? பழநி : ஆமாம் அவ்வளவுதான். கரும் : இன்னொரு வகையாகச் செய்யலாம். முத்தப்பா வேறு ஒரு பெண்ணை வைப்பாக வைத்திருக்கிறார் என்று சொன்னால், புன்னைக்கு உடனே அவன் மேல் வெறுப்பு ஏற்பட்டுவிடும். எப்படி? பழநி : அப்படித்தான் சொல்லுகிறேன் என்று வைத்துக் கொள் ளுங்கள். அதை அவர்கள் முத்தப்பாவிடம் சொல்லி விட்டால் உண்மை விளக்கமாகிவிடும். விளக்கமாகி விட்டால் என்பாடு வெறுஞ் சோற்று அரோகரா! கரும் : அப்படி உன் வாயிற் சொல்ல வேண்டாம். ஒரு பெண் முத்தாப்பாவுக்குக் காதல் கடிதம் எழுதியதாக ஒன்றை நானே எழுதித் தருகிறேன். உன்னிடம். அதை வைத்துக் கொண்டிரு, முத்தப்பா வந்து போனதும் அங்கே அந்தக் கடிதத்தைப் போட்டுவிடு புன்னை பார்க்கும் படி. நம் எண்ணத்தின்படி அவள் உள்ளம் அவனை வெறுத்துவிடும். பழநி : நல்ல ஏற்பாடுகள்! தேவலாங்க! மெய்தாங்க. கரும் : இப்படிச் செய்தால் உன் மேல் குற்றம் வராதல்லவா? அப்படி வந்தால் எனக்குத் தொல்லைதானே. அதுபற்றி அஞ்ச வேண்டாம். நான் முதலிலேயே அதாவது நாளைக்கே வேண்டாம். இப்போதே இருபது வெள்ளி கொடுத்து விடுகிறேன். அப்படி நீ செய்த பிறகு ஒரு பத்து வெள்ளி கொடுக்கிறேன். எப்படி? பழநி : சரி, அதுக்கென்னாங்க. இப்போ கொடுங்களேன். பத்து வெள்ளி கொடுக்கிறீங்களா? கரும் : இந்தா (கொடுக்கிறான்) நான் உன்னை முழுதும் நம்புகிறேன். பழநி : நல்லா நம்புங்க கரும் : காலையில் நீ பொன்னரசு வீட்டுக்குப் போகுமுன் வந்துவிடு கிறேன். ஏனென்றால் எனக்கு நாளைக்கு அலுவலகத்துக்குப் போக வேண்டும். விடுமுறை தீர்ந்து விட்டது. பழநி : அப்படியானால் நீங்க காலை ஆறு மணிக்கெல்லாம் வந்துவிட வேண்டும். கரும் : வந்து விடுகிறேன். வரட்டுமா? பழநி : நல்லதுங்க. (போகிறான்) காட்சி - 7 இடம் : பொன்னரசு வீடு. நேரம் : மறுநாள் மாலை 5.00 மணி. உறுப்பினர் : பழநி, பொன்னரசு, பட்டம்மா, புன்னை. அமைப்பு : பொன்னரசு சாய்வுநாற்காலியில் உட்கார்ந்திருக் கிறார். புன்னை : அப்பா காப்பி, சிற்றுண்டி கொண்டுவரட்டுமா? பொன்னரசு : அம்மா எங்கே? புன்னை : ஏனப்பா? உள்ளே வேலையாய் இருக்கிறார்கள். பொன் : வந்து என் பக்கத்தில் உட்காரச் சொல். புன்னை : அப்படியா? இதோ! (தாயை நோக்கி உள்ளே ஓடுகிறாள்) பட்டம்மா : (பரபரப்புடன் ஓடிவந்து) ஏன் அத்தான்? (அண்டையில் நாற்காலியில் உட்காருகிறாள்.) பொன் : கவிஞர் புன்னைக்கு என்ன சொன்னார்? உனக்கு எவர்மேல் விருப்பம்? அவருக்கு இந்த மாணிக்கக் கணையாழியை (நூலை)க் கொடு என்றார். கவிஞர் நினைப்பு என்ன வென்றால், புன்னைக்குத் திருமணத்திற்குரிய பருவம் வந்துவிட்டது. புன்னை விரைவில் ஒரு கணவனைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது தான். அப்படி யிருக்கப் புன்னை இன்னும் நாளைக் கடத்தி வருவது எனக்கு வருத்தத்தை உண்டாக்கு கிறது. புன்னையைக் கூப்பிடு. புன்னையின் கருத்தைக் கேள். திருமணத்தை முடித்து என் கண்ணால் பார்த்துவிட வேண்டும். இப்போதே கேள். அதைக் கேட்பதுதான் இந்தக் காது பெறும் பேறு. பட்டம்மா : எனக்கும் அப்படித்தான் அத்தான். புன்னை! இங்கு வா. இங்கு வந்து அப்பா எதிரில் உட்கார்! விரைவில்! (புன்னை எதிரில் உட்காருகிறாள்) உனக்குத் திருமணத்தை முடித்துவிட வேண்டுமே என்கிறார் அப்பா. எதற்காக நாளை வீணாக்குவது? வய தாகிறது. உன் கண்ணுக்கும் வாழ்க்கைக்கும் படிப்படியாக யாரையாவது நீ தேர்ந்தெடுக்திருக்கிறாயா சொல்லு. பொன் : திருமணம் விரைவில் முடிக்க வேண்டும் என்பதற் காகவே கவிஞர் நிகழ்ச்சியை உண்டாக்கினார். மாணிக்கக் கணை யாழியை உனக்குப் பிடித்த பேர்வழிக்குக் கொடு என்று பச்சையாகச் சொன்னார். கவிஞர் தமிழ்நாட்டுக்குப் போகும் முன் இங்கே வருவாரே, கேட்பாரே, சும்மா இருந்தால். பட்டு : அதுதானே. புன்னை : என் உள்ளத்தில் தட்டுப்படுகிற ஒன்றை நான் இன்னும் சிறிது ஆராய்ச்சி செய்யவேண்டும். அதன்மேல் வெளியிடுகிறேன். வெளியிட்ட பின் நீங்கள் இருவரும் மறுக்கக்கூடாது என் விருப்பத்தை. பட்டு : ஏன் மறுக்கிறோம். பொன் : மறுக்கமாட்டோம் உறுதி. (முத்தப்பா வருகிறான்) பட்டு : வரவேண்டும் முத்தப்பா. முத்தப்பா : வருகிறேன். அம்மா ஐயா அனைவருக்கும் வணக்கம் (உட்கார்தல்) புன்னை : சிற்றுண்டி கொண்டு வருகிறேன். (போகிறாள்) பட்டு : ஏன் முத்தப்பா நம் புன்னை தம் மாணிக்க கணையாழியை யாருக்கும் கொடுக்கவில்லையே முத்தப்பா : அதைப்பற்றி நாம் பேசவும் உரிமை இல்லை. அவர்களைக் கேட்பது கூடச் சரியில்லை. அவர்களின் உரிமை அது. அதில் அவர்களுக்குள்ள உரிமை தங்கத்தினும் விலை மதிப்புள்ளது அனிச்சம் பூப்போலும் மிக மெல்லியது. பொன் : உண்மைதான். (தேநீர் சிற்றுண்டி புன்னையும் பழநியும் கொண்டு வந்து வைக்கிறார்கள். புன்னையும் உணவுண்ண உட்கார்ந்து விடுகிறாள். முத்தப்பாவின் அண்டையில் உள்ள நாற்காலியில் பழநி பலமுறையாக உணவு கொண்டு வந்து கொண்டு வந்து வைக்கிறான். பேச்சின்றி உணவுண்ணுகிறார்கள். கை கழுவிக் கொள்ளுகிறார்கள். மீண்டும் அவரவர் உட்காருகிறார்கள்.) முத்தப்பா : கவிஞர் சொற்பொழிவு பற்றி உங்கட்கு என்ன தோன்று கிறது? பொன் : அவ்வளவு தெளிவாக விளக்குவது அருமை. சாதி என்பதும், சமயம் என்பதும், மக்களில் உயர்வு தாழ்வு என்பதும் ஒழிந்து போகும். மக்களிடம் நாட்டன்பு பெருகு மானால் என்கிறார். தமிழர் முன்னேறவேண்டும். தமிழ் நாடு விடுதலை பெறவேண்டும் என்று மக்கள் உள்ளத் தில் உண்டாகும் ஓர் உணர்ச்சியின் முன் எந்த வேறுபாடு தலைநீட்டமுடியும் என்று கவிஞர் கேட்டார். எவ்வளவு தெளிவு பாருங்கள். சைகோனில் உள்ள தமிழர்களிடம் சாதிப் பிரிவு சமயப் பிரிவு மூடவழக்கம் ஒழிந்து போனதற்குக் காரணம் அவர்களின் உள்ளத்தில் சுடர் விட்டெரியும் நாட்டன்புதான் என்று நம்மை உதாரணம் காட்டினார். மிக நன்று. மிக நன்று. முத்தப்பா : அவ்வகை நாட்டன்பைத் தமிழ்நாட்டின் தமிழர்கட்கு ஊட்டுவன புதிய இலக்கியங்களே என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டினார். மிக அழகாக, எளிதாக. புன்னை : தமிழ்க் கல்வி தமிழர்களிடம் பரவத் தமிழர்கள் பெரும் பாடுபட வேண்டும். செல்வர்கள் உதவவேண்டும். தமிழ் புலவர் களின் வறுமை ஒழிய வேண்டும். அவர்கள் இப்போதிருப்பது போல் அடிமையுள்ளம் உடையவர் களாய் இருத்தல்கூடாது. முத்தப்பா : என்ன தெளிவு பார்த்தீர்களா? மணி என்ன? ஏழு. ஐயா எனக்கு விடை கொடுங்கள். எழுத்து வேலை இருக்கிறது. பொன் : அப்படியா சரி. முத்தப்பா : அனைவர்க்கும் வணக்கம்! (போய்விடுகிறான்) பட்டம்மா : அத்தான் என்ன கறி வைக்கலாம். பொன் : எனக்கு ரொட்டி, பழம், பால் போதும். பட்டம்மாள் : உனக்கம்மா? புன்னை : அப்பா சொன்னவற்றுடன் கொஞ்சம் பச்சைப் பட்டாணி பொரியல், இளகலாக! உங்களுக்கு அம்மா? பட்டு : எனக்குச் சோறு, மிளகுநீர், நீ சொன்ன பொரியல் போதும். சரி கேட்டுக் கொண்டாயா பழநி? பழநி : நல்லதுங்க. பொன் : முத்தப்பா நல்ல உணர்ச்சி உள்ள பிள்ளை. பட்டம்மா : உழைப்பாளர், கடமை தவறாதவர். பொன் : ஒழுக்கம்? பட்டு : அணுவளவும் தவறாதவர். நான் போகட்டுமா சமையல் அறைக்கு? பழநி : (வட்ட மேசையிலுள்ள வட்டாக்களை எடுக்க வந்த பழநி மேசையின் கீழே கிடந்ததாக ஒரு கடிதத்தை மேசை மேல் வைத்து) இங்கே கிடக்கிறது? பட்டம் : (அதை எடுத்துப் படிக்கிறாள்) அன்புள்ள அத்தான் முத்தப்பா அவர்கட்கு, அரசம்மா எழுதுவது. என் சேர்க்கை தங்கட்கு ஏற்பட்டதிலிருந்து உங்கள் உடல் நலம் கெட்டு வருவதாகச் சொன்னீர் களாம். இதைத் தாங்கள் என் வேலைக் காரியிடந்தானா சொல்ல வேண்டும். இது கண்டதும் புறப்பட்டு வந்து சேரவும், இப்படிக்கு அரசம்மா. பொன் : ஒழுக்கம் தவறாதவர்! என்ன வியப்பு! எவரை நம்புவது இந்த சூழ்ச்சி நிரம்பிய வையகத்தில். பட்டு : இந்த அரசம்மாவிடந்தான் இப்போது முத்தப்பா போகிறார் போலிருக்கிறது. சுவையுள்ள பேச்சுக்களை அவர் திடீரென்று நிறுத்தியதும் அரசம்மாவிடம் செல்வதற்காகத் தான். நன்றாய் இருந்தது முத்தப்பாவின் நடத்தை. உம்! நமக்கென்ன! தள்ளுங்கள்! புன்னை : சமையலை நான் பார்த்துக் கொள்ளுகிறேன். நீங்கள் பேசிக் கொண்டிருங்கள். (போகிறாள் அவளுடன் பழநியும் வட்டாக்கள் சுமந்தபடி போகிறான்) பட்டம்மா : அத்தான் நீங்கள் அறிந்து வருகிறீர்களா இப்போது முத்தப்பா உடல் இளைத்திருப்பதை? பொன் : இப்போது தான் தெரிகிறது. அதற்குக் காரணம்! சைகோன், இளைஞரின் ஒழுக்கத்தை கெடுத்துவிடும். முத்தப்பாவின் துடிக்கும் இளமையை அது விட்டு வைக்குமா! (கரும்பாயிரம் வருகிறான்) பொன் : வாருங்கள் கரும்பாயிரம்! சில நாட்களாக உங்களைக் காண முடியவில்லையே! உட்காருங்கள்! (கரும்பாயிரம் கடைக் கண்ணால் பார்க்கிறான். மேசையின் மேல் உள்ள கடிதத்தை) கரும்பாயிரம் : வேலைத் தொல்லை. இப்போது சிறிது ஓய்வு ஐயாவைப் பார்க்க வேண்டுமே என்ற அவா! ஓடிவந்தேன். பட்டம்மா : முத்தப்பாவைப் பார்த்தீர்களா? கரும்பா : இப்போதா? பட்டு : உம்! கரும்பாயிரம்: அதோ போகிறார். நான் அவரைப் பார்த்தேன். அவர் என்னை பார்க்கவில்லை. பட்டு : முத்தப்பாவுக்கு உடல் நலம் குறைவோ! இளைப்பாக இருக்கவில்லை. கரும்பாயிரம்: இல்லையே. இப்போது முன்னிலும் பருத்திருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. என்னவென்றால் இப்போது அவர்கள் வாழ்க்கையில் ஓர் அமைதியேற்பட்டிருக் கிறது. பொன் : முன்பெல்லாம்! கரும் : அப்படியில்லை. வேலைக்காரன் சமையலும், உதவியும் அமைதியை உண்டாக்குமா? இப்போது ஒரு குடும்பம் போல்... வெளியில் தெரியக்கூடாது. அவருக்கு ஒரு குறைவு ஏற்பட்டால் நமக்குந்தானே! பொன் : முத்தப்பா இப்போது இங்கு வந்தார் அவருக்கு வந்த கடிதத்தை அவர் கைமறதியாகப் போட்டுவிட்டுப் போய் விட்டார். அதோ எடுத்துப் படித்துப் பாருங்கள். (கரும்பாயிரம் படித்து விடுகிறார்) கரும் : நன்றாயில்லை! ஆயினும் இதையெல்லாம் நீங்கள் கண்டு கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. பொன் : அதுசரிதான். பெண்ணுக்குடையவர் ஒருவர் உங்கள் நடத்தையைப் பற்றி என்னைக் கேட்டார். கரும் : ஓகோ. உம்? உம்? என்ன சொன்னீர்கள்? என்ன நடந்தது? அவர் எப்படி இருந்தார்? பொன் : நான் பொய்யா சொல்வேன். உங்களிடம் உள்ள மேன்மை களை விரிவாக கூறினேன். அவர் மகிழ்ச்சியோடு போனார். கரும் : பெண்ணையும் பார்த்தேன். அவர் என்னைப்பற்றியும் ஆராய்ச்சி செய்யட்டும் என்று இருக்கிறேன். ஒரே பெண்தான். ஏதோ சொத்தும் கையிருப்புத் தொகையும் கூடி நூறாயிரம் இருக்குமாம். சொல்லுகிறார்கள். இருக் கட்டும். பார்ப்போம் நாமும் ஆராய்ந்து தானே ஒன்றில் தலையிட்டுக் கொள்ள முடியும்! நான் வருகின்றேனையா! நாழிகை ஆகிறது. தேநீர் கொண்டு வா! (பழநி தேநீர் கொண்டு வருகிறான் கரும்பாயிரம் அருந்திப் போகிறான்) கரும் : நன்றி அம்மா வருகிறேன். வருகிறேன். ஐயா! பொன் : பிறகு எப்போது? கரும் : நாளைக்கு வருகிறேன். (வணங்கிப் போகிறான்.) காட்சி - 8 இடம் : தமிழ்நாடு, புதுச்சேரியில் தங்கவேற் பிள்ளை வீடு. நேரம் : காலை 9 மணி உறுப்பினர் : தங்கவேற்பிள்ளை வீட்டுக் கணக்கனாகிய முனியப்பன், நடேசப்பிள்ளை. அமைப்பு : தங்கவேற்பிள்ளை தாழ்வரத்தில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். எதிரில் முனியப்பன் பெட்டியடியில் உட்கார்ந்து கணக்கெழுதிக் கொண்டிருக்கிறான் நடேசப் பிள்ளை வருகிறார். தங்கவேற் : வா, நடேசு! சமையக்காரன் என்ன செய்தான் என்றால், நேற்று உருளைக் கிழங்கு பொரியல் பண்ணினான், வாய்க்கு சுவையாய் இருந்தது. பின்னும் இரண்டு தின்று விட்டேன். அதேன்ன செய்கிறதென்றால் இந்தக் கை கால்கள் எல்லாம் வலிக்கும்படி செய்துவிட்டது. எத்தனை நாட்கள். எத்தனை சமையல்காரர்கள் இருக்கட்டும். நமக் கென்று ஒருத்தி இல்லா விட்டால் ஒரு பயனும் இல்லை. என்ன சொத்து? பொற்றாலி யோடு எவையும் போம் என்றும், இல்லாள் அகத்திருள் இல்லாத தொன்றில்லை என்றும் பெரியோர் தெரியாமலா சொன்னார்கள்! என் வீட்டுக்காரி இறந்து இந்தச் சித்திரை வந்தால் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அண்ணன் மகன் இருக்கிறானே சைகோனில் அவன் இங்கு வந்துவிட்டால் அவன் மனைவி மகள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வார்கள். நிலைமையறிந்து வாய்க்கு ஏதுவாக நேரத்தோடு ஏதோ ஆக்கியும் போடுவார்கள். அவனும் இதோ அதோ என்கிறான். வந்தபாடில்லை. (தந்தி வருகிறது. தங்கவேற்பிள்ளை வாங்கிப் பிரித்து படிக்கிறார். அவர் முகம் வியப்புறுகிறது) தங்கவேற் : நடேசு! என் அண்ணன் மகன் வருகிறானப்பா! அவன் குடும்பத்தோடு வருகிறான். நண்பர்களும் வருகிறார் களாம். இரண்டு வீடும் தனித் தனியாகப் பார்த்து வைக்க வேண்டுமாம். போர் நெருக்கடி காரணமாக வருகிறார் களாம். போர் எனக்கு மிக நன்மையாக முடிந்தது. இல்லா விட்டால் இப்போது வருவானா இவன்? விட்டது தொல்லை என்னை, அவன் மகள் பேர் என்ன? எழுதியிருந்தானே! கணக்கன் : புன்னை! தங்க : ஆம் ஆம் புன்னை புன்னை. பெரிய பெண்ணாக இருக்கும். இப்போது என் அண்ணன் மகன் பொன்னரசு இருக்கிறானே, அவனுக்கும் இப்போது ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். பட்டம்மா மிக நல்ல பெண். நடேச : மகிழ்ச்சிச் செய்தி! என்றைக்கு வருகிறார்கள்? தங்க : இன்னும் மூன்று நாட்கள் இடையில் இருக்கின்றன பங்குனி இருபத்திரண்டில் நம் கடற்கரையில் இறங்கு கிறார்கள். கவிஞர் கலைத் தொண்டரும் வருகிறார் அட. அவர் அங்குப் போனவுடன் போர் முற்றியதப்பா! அவரை நான் தான் அனுப்பினேன். பையன் வீட்டில் தான் இறங்கினார். கையோடு பையன் குடும்பத்தை அழைத்து வந்து விட்டார். நிரம்ப மகிழ்ச்சி. முனியப்பா நடேசு, நம் கார் ஒன்று போதாது. சின்னப்பர், சீனி இருவரு ரிடமும் உள்ள கார்களைக் கேட்டு வைத்து விடுங்கள். நம் முனை வீட்டையும் ஒழித்து தூய்மைப் படுத்தி வையுங்கள். மெத்தை தலையணைகட்கு உறைகள் போட்டு நேர் செய்யுங்கள். நாற்காலிகள், மேசைகள் எல்லாவற்றையும் துடைத்து அங்கங்கு வரிசைப் படுத்துங்கள். அங்கங்கு இருக்க வேண்டிய உவர்க்கட்டி, சீயக்காய்தூள், தலைக்கெண்ணெய், சீப்பு கண்ணாடி, தட்டுமுட்டுக்கள் எல்லாம் ஏற்பாடு செய்து வையுங்கள். அந்த மாட்டு வண்டிகளை எங்கேயும் அனுப்பிவிட வேண்டாம். வேணு, தாண்டவன், முத்து, சோமு நாலு பேரையும் வந்திருக்கும்படி சொல்லி வையுங்கள். சமையல் ஆட்கள் இன்னும் இரண்டு பேர்கள் தேவை யிருக்கும். பிரப்பம்பாய், சமக்காளம், மேசை விரிப்புக்கள், தூக்குச் செம்பு, குவளைகள், எல்லாம் துலக்கி வைக்கச் சொல்லுங்கள். தவலை முதலியவைகள் சமையற் பொருட்கள் ஏனங்கள் எல்லாம் பல குடும்பங்களுக்கு வேண்டிய அளவு ஏற்பாடு செய்யுங்கள். அரிசி, பருப்பு முதலியவை தீட்டித் தூய்மை செய்து வைக்கச் சொல்லுங்கள். பழக்கடைக்குச் சொல்லி எல்லா வகைப் பழங்களும் வரும்படி செய்யுங்கள். பையன், வந்தபின் அது இல்லை இது இல்லை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சொல்லி விட்டேன். நடேசு : எல்லாம் ஒழுங்கு செய்துவிட்டால் போகிறது, அதற்கென்ன? தங்க : என்ன முனியப்பா? முனி : எல்லாம் ஏற்பாடு செய்து விடுகிறேன். தங்க : முதலில் காருக்குச் சொல்லிவிட்டு வந்து விடு நடேசு! (நடேசப்பிள்ளை போகிறார். அவருடன் முனியப்பன் போகிறான்) முனிய : பழக்காரனிடம் இப்போதே சொல்லி வைத்துவிட வேண்டும். தங்க : போ விரைவில் (போகிறான்) (நடேசப்பிள்ளையும் முனியப்பனும் வீட்டுக்கு வெளியில் குறட்டில் நின்று பேசிக் கொள்ளுகிறார்கள்) முனிய : என் நிலை என்ன ஆகிறது மாமா? நடேச : உன் நிலை எங்கே போய்விடும் வேலையைப் பாரடா! வருகிறாளே புன்னை அவள் உன் பெண்டாட்டி! அப்படி வைத்துக்கொள்! விட்டுவிடுவேனா? தந்தி வந்தது. அவர் படித்தார் உன் முகம் கெட்டுவிட்டது. நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். ஒன்றுக்கும் அச்சப்படாதே. அந்தக்குட்டி சைகோனிலிருந்து வருகிறாள். படிச்ச பெண். அதனால் கொஞ்சம் நாகரிகமாக இருப்பாள். நீயும் அதற்குத் தக்கபடி நடந்து கொள்ள வேண்டும். நல்ல உடுப்புக் கட்டாயம் வாங்கிவிடு. சும்மா இருந்து விடாதே. அலுவலில் இருப்பவர்கள் போட்டுக் கொள்ளுகிறார்களே தலையில். அந்தப்படி ஒன்று வாங்கிவிடு! முனிய : ஆம் ஆம் குல்லாய். நடேச : உள் சட்டை, நடுச்சட்டை, மேற்சட்டை மூன்றும் வாங்கி விடு. பணத்தைப் பார்க்காதே! கழுத்தில் கட்டிக் கொள் கிறார்களே தெரியுமா, முனி : நாடா நடேச : அது வாங்கி விடு. மூன்று சட்டைகளையும் ஒன்றின் மேல் ஒன்றாகப் போட்டுக் கொண்டால் போதுமா. மேலுக்குக் கெண்டை வேட்டி? முனி : ஏன் பட்டுத் துண்டு எடுத்து விடலாமே. நடேச : செய்யேன். இடுப்பில் கட்டிக் கொள்கிறார்களே அதில் ஒன்று வாங்கு! முனி : ஆமாம் மாமா. செட்டித் தெருவில் அந்தப் போலீ காரன் இடுப்பில் கட்டிக் கொள்வதை விற்றுவிடப் போகிறானாம். ஏன் என்றால் அவனுக்கு அலுவல் முடிந்துவிட்டதாம். நாளைக்கு அதை வாங்கி விடுகிறேன். நடேச : வேட்டி கட்டிக் கொள்ளலாமா? கால்சட்டை நல்லதா? எது அழகாய் இருக்கும்? முனி : கால் சட்டைதான் மாமா! நடேச : அப்படியானால் இன்றைக்கே துணிவாங்கிக் கொடுத்துத் தையற்காரனைத் தைத்துவிடச் சொல்லி விடு, காலுக்கு? முனி : காலுக்கா, துணியால் உறை ஒன்று விற்கிறதே அதை முதலில் காலுக்குப் போட்டுக்கொள்ள வேண்டும். அதுக்குப் பேர் உள்சோடு. மேல் சோடு தோலால் வாங்கி விடுகிறேன். நடேச : தளவாயாக இருக்கிறாரே அண்டைத் தெருவில், அவர் மூக்கில் கண்ணாடி போட்டிருக்கிறார். இத்தனைக்கும் அவர் சின்ன வயசுள்ளவர். அது ஒரு பகட்டாய் இருக்கிறது. அதுபோல நீயும் ஒரு கண்ணாடி வாங்கிவிடு முனி : என்னிடம் இருக்கிறது. அப்பாவுடையது. போட்டுக் கொள்ளுகிறேன். நடேச : இதெல்லாம் இருக்கட்டும். மேலே தடவிக் கொள்ள என்ன செய்வது? கண்ணாடிச் சீசாவில் இருக்குமே? முனி : அதுவா? மணமாக இருக்கும். நீலகிரித் தைலம் வாங்கிவிட்டால் போகிறது. நடேச : கையில் ஒரு துணி வைத்துக்கொள். முனி : கைக்குட்டை! இருக்கிறது. மெல்லிய துணியை எடுத்துச் சவுக்கத்துக்குச் சவுக்கம் சச்சவுக்கமாகக் கிழிச்சிருக் கேனே. நடேச : நாள்தோறும் காலையில் குளித்துவிடு. எண்ணெய்த் தோணித் தலையில் ஊற்றி மயிரைச் சீவிக் கொள்! திரு நீற்றைக் குழைத்து நெற்றி நிறைய இட்டுக் கொள். அதன் நடுவில் சந்தனப் பொட்டு, சந்தனப் பொட்டின் நடுவில் ஒரு சின்ன குங்குமப் பொட்டு! அதன் கீழே ஒரு கறுப்புக் கோடு! இத்தனையும் பார்த்தால் அந்தக் குட்டி புன்னை உன் மேல் உயிரை விட்டு விடுவாள். திருமணத்தை முடிப்பவன் நான். தங்கவேற்பிள்ளையின் கடல் போன்ற சொத்தும் பொன்னரசின் சொத்தும் உனக்கு! உறுதி! போடா! முனி : நீங்கள் ஒரு புள்ளி போட்டால் அது மாறாது மாமா. நினைவு இருக்கட்டும் மாமா. நான் போகட்டுமா? நடேச : போடா சும்மா! (இருவரும் தத்தம் வேலையை நாடிச் செல்லுகிறார்கள்) காட்சி - 9 இடம் : பல தெருக்கள். நேரம் : மூன்று நாட்களின் பின். உறுப்பினர் : பலர் அமைப்பு : ஏற்பன நடேசப்பிள்ளை : (ஒரு தெருவில் போகிறார் எதிரில் வேம்பு வருகிறான்) தெரியுமா செய்தி? வேம்பு : என்ன, என்ன! நடேச : நம் தங்கவேற் பிள்ளையின் அண்ணன் மகன் சைகோ னிலிருந்து குடும்பத்தோடு வருகிறானே. போர் நெருக்கடியால்தான். வேம்பு : அவனுக்கு ஒரு பெண் இல்லை? ஆண் பிள்ளை இல்லை என்று கேள்வி. அந்தப் பெண்ணுக்கு மணம் ஆயிற்றா? இல்லையா? ஏன் கேட்கிறேன் என்றால், நம் செல்லையா பிள்ளையிருக்கிறானே அவனுக்கு முடித்து விடலாம். நடேச : சேச்சே, முனியப்பன் இருக்கிறானே, குள்ளம் பாளையம் மூக்கன் மகன்! அவன்தான் காணும் தங்கவேற்பிள்ளை யிடத்திலேயே கணக்கு வேலை பார்க்கிறானே. அவனுக்கு முடியப் போகிறது. வேம்பு : அதாவது உம் அக்கா பிள்ளை! நல்ல நோக்கம். ஆனால் பையன் நாட்டுப்புறத்துப் பையன். நாகரிகம் தெரியாது. பெண்ணுக்குப் பிடிக்குமா? அந்த ஏற்பாடு தவறிவிட்டால் செல்லையாவின் மகனுக்கு முடித்து விடுங்கள். நடேச : தவறினால்தானே? ஆகட்டும். (வேறு தெருவில் முனியப்பன், கோதண்டனைக் காண்கின் றான்) கோதண்டன் : என்ன முனியப்பா இரண்டு நாளைக்கு முன் தந்தி வந்ததாமே. சைகோனிலிருந்து. அவர்கள் குடும்பத் தோடு வருவதாக! எங்கே போய் வருகிறாய்? முனி : தையற்காரனிடம் போய் வருகிறேன். உடுப்பு தைக்கச் சொன்னேன். அவர்கள் இருக்கிறார்களே திருமணம் ஒன்று. கோதன் : கேட்டால். முனி : நூறு ரூபாய்க்கு உடுப்புத் தைத்தாகிறது கேட்டால் என்ன? கோதன் : பெரிய இடமாச்சே என்றேன். முனி : நான் மட்டும் சின்ன இடமோ அவர்கள் வீட்டு கணக்குப் பிள்ளைதானே. கோதன் : எலுமிச்சபழம்! சரிதான் தாழங்காய்! வருகிறேன். (போகிறான்) (ஒரு தெருவில் வேம்பும், வேலுவும் பேசிக் கொள்கிறார்கள்.) வேம்பு : அதோ மூட்டைத் தூக்கிக் கொண்டு வருகிறானே கீழ்க் கண்ணாலே பார்! அவன் யார் தெரியுமா? தங்கவேற்பிள்ளையின் கணக்கன். குப்பைக்காட்டுப் பையன். தங்கவேற் பிள்ளை அண்ணன் மகன் குடும்பத்தோடு வருகிறான். அவனுக்கு ஒரு பெண். கல்வியுள்ளவள். நாகரிகமுடையவள். அவளை இவன் மணந்து கொள்ள எண்ணுகிறான். அதற்கு உடுப்புத் தைத்து எடுத்து வருகிறான். சிரிக்காதே. இரு, நான் அவன் வாயைக் கிண்டுகிறேன். சிரித்துவிடாதே. (முதுகில் ஒரு மூட்டையுடன் முனியப்பன் வருகிறான்.) வேம்பு : கணக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தாயே முனியப்பா? இதென்ன இப்போது! முனிய : கணக்கு வேலைதான் வேலு : கழுதை எங்கே? முனிய : ஏது கழுதை? வேம்பு : இல்லை, இல்லை கோவேறு கழுதை! முனிய : ஏது என்னிடத்தில். வேம்பு : கோவேறு கழுதையை நீ விலைக்கு வாங்கியதாக அவர் எண்ணிக் கொண்டார். ஜமீன்தார் மகன் போல் நீயிருக்கிறாய். நீதான் ஜமீன்தார் மகன் என்று வேறு நினைத்துவிட்டார், எப்போது அவர்கள் வருகிறார்கள்? முனிய : நாளைக் காலையில். வேம்பு : திருமணம் என்று கேள்விப்பட்டேன். முனிய : ஆமாம். வேம்பு : உடுப்புக்கிடுப்பெல்லாம் தைத்துவிட்டாயோ? முனிய : எல்லாம் ஆய்விட்டது. வேம்பு : என்னென்ன? முனிய : உள்ளங்காலுக்கு உறை. மேற்சோடு. காலுக்குக் காற்சட்டை. காற்சட்டைக்குப் போலீசு தோல்வார். உள்சட்டை, நடுச்சட்டை, மேற்சட்டை, கழுத்து நாடா, சேலம் கெண்டை வேட்டி, தலைக்குக் குல்லாய், வாசனை போட்டுக் கொள்ள நீலகிரித் தைலம். (வேலு சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியாமல் போகிற போக்கிற்கு வாயை திறந்து விட்டான். வேம்பும் தன் சிரிப்பில், தானே உடல் வளைந்து விழுகிறான்.) வேம்பு : வேறொன்றுமில்லை. முனியப்பா. எங்கள் இருவரோடு ஒரு முண்டம் சண்டைக்கு வந்தான். அவன் வாசனைப் புட்டி எது நல்லது என்றான். நான் நீலகிரித் தைலந்தான் நல்லது என்றேன். அதற்கு அவன் இல்லை இல்லை. ஓமத்ராக வந்தான் நல்லது என்றான். அதற்காகச் சிரித்தோம். முனி : அவன் ஒரு மடையன் போலிருக்கிறது. ஓமத்ராகம் தலையில் தடவிக் கொள்ளுவதாச்சே. இருவரும் ஓகோ (உரக்கச் சிரிக்கிறார்கள் விழுந்து விழுந்து...) முனி : ஏன் சிரிக்கிறீர்கள்? வேம்பு : ஓமத்ராகவத்தைத் தலையில் தடவலாம். அவன் தலை வழுக்கை. அதனை நினைத்துச் சிரிக்கிறோம். முனி : அப்படியா? வேம்பு : எல்லாம் இந்த மூட்டையில் அடங்கிவிட்டதா? முனி : ஓ வேம்பு : காலுக்கு, மேலுக்கு, கழுத்துக்கு, தலைக்கு, ஆயிற்று, கைக்கு? முனி : உம்! வேம்பு : எந்தக் கைக்கு? முனி : வலது கைக்கு. வேம்பு : இடக்கைக்கு ஏதாவது வேண்டுமே? முனி : என்ன வேண்டும்? முனி : ஒன்று வாங்கிக் கொள்ளுகிறேன். வேம்பு : கைப்புறத்தில் என்ன? முனி : கைப்புறத்திற்கு என்ன வேண்டும். வேம்பு : குடை! குடையில்லாவிட்டால் பார்ப்பவர் என்ன நினைப்பார்கள்? முனி : இருக்கிறது வீட்டில். அப்பாவுடையது! வேம்பு : எடுத்துக்கொள். மூக்குக் கண்ணாடி? முனி : சொன்னேனே. வேம்பு : இல்லையே முனி : எங்கப்பாவுடையது கண்ணாடி இருக்கிறது. வேம்பு : இந்த உடுப்பெல்லாம் புதிதாக தைத்தது. அப்படியே போட்டுக் கொண்டால் பார்ப்பவர்கள் இப்போதுதான் இவன் தைத்தான் போலிருக்கிறது இதற்கு முன் இதெல்லாம் இவனுக்கு இல்லை போலிருக்கிறது என்று நினைப்பார்களே! முனி : ஆம் என் செய்யலாம்? வேம்பு : நேரே வீரப்பசெட்டி குளம் போ. எல்லாவற்றையும் நனைத்துப் பிழிந்து காய வைத்து விடு. காய்ந்து விடும். எடுத்துக்கொண்டு வந்து வைத்துக்கொள். காலையில் உடுத்துக் கொண்டு வந்தவர்கள் அனைவரும் வந்த வுடன் விருந்து சாப்பிடுவார் கள். அப்போது போ. சிறப்பாக இருக்கும். முனி : துறைமுகத்துக்குப் போக வேண்டுமே? வேம்பு : போகாதே! பார்ப்பவர்கள் கூலி ஆள்போல் இருக்கிறது என்று நினைத்து விடுவார்கள். முனி : கடற்கரைக்குப் போகும்போது உடுத்துக் கொண்டு போகிறேனே? வேம்பு : அப்படித்தான் செய். அதுதான் நல்லது. ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. முனி : என்ன, என்ன? வேலு : இங்கிலீஷ் கொஞ்சம் பேசினால் நன்றாய் இருக்கும். பத்து வார்த்தை முனி : தெரியாதே. வேலு : இன்றிரவு எங்களுடன் தங்கு. சாப்பிட்டுவிட்டு வந்து விடு. பொறுக்காகப் பத்துச் சொல்லி விடுகிறோம். முனி : அப்படித்தான் செய்யுங்கள். மறந்து விடாதீர்கள். வேம்பு : நாங்களா மறந்துவிடுவோம். வேலு : நீ மறந்து விடாமல் வந்து சேர். (பிரிகிறார்கள்) இவன் யாரோ தெரியவில்லை அடுத்த சுவடியில் இதோ நான் வந்து விடுகிறேன். முத்தப்பாவை வீடுகாட்டச் சொல்லி அழைத்துப் போகிறேன். புன்னை : நல்லது (முத்தப்பாவை நோக்கி) போய் வருகிறீர் களா? கலைத் தொண்டர்: வராமலா. நான் முத்தப்பாவை அழைத்துக் கொண்டு போய்விடுவேன் என்று அஞ்சாதே. உன்னுடைய முத்தப்பா எனக்கேன். புன்னை : என்னை மன்னிக்க வேண்டும். நான் ஐயப்பட வில்லை. அப்படி ஒன்றும்! (அனைவரும் சிரிப்பு! முத்தப்பாவும், கலைத்தொண்டரும் போகிறார்கள்.) கலைத் : மாணிக்கக் கணையாழி என்றைக்கு? முத்த : மணம் புரிந்து கொள்வதானால் புன்னையை ஐயா! கலைத் : நாள்? விரைவில் இருக்கலாமா? முத்த : இருக்கலாம் தங்கள் விருப்பம் போல். கலைத் : இது கேட்கத்தான் உன்னை அழைத்தேன். அதோ இருக்கிறதே அதுதானே. முத்த : ஆம். நான் போகவா? கலைத் : போகாமல்! உன்னையும் புன்னையையும் நான் பிரித்து வைக்க நினைப்பேனா? (முத்தப்பா சிரிப்புடன் போகிறான்) கலைத் : இங்கு வாருங்கள் இந்தச் சீசாவை ஒருவரும் அறியாமல் வைத்திருங்கள். கேட்கும்போது கொடுங்கள் (கலைத் தொண்டர், ஒரு சுட்டு விரல் அளவுள்ள சீசாவைக் கொடுத்து விட்டுப் போகிறார்! முத்தப்பா அதில் உள்ள மொழிகளைப் படித்து வியப்புடன் போகிறான்) காட்சி - 10 இடம் : அடுத்த தெரு. ஒரு வீடு. நேரம் : ஐந்தே கால் மணி. உறுப்பினர் : கவிஞர் கலைத்தொண்டர், கரும்பாயிரம். அமைப்பு : புன்னையின் படத்தைக் கையில் வைத்துப் பார்த்த கரும்பாயிரம் உட்கார்ந்திருக்க, கலைத் தொண்டர் உள்ளே செல்லுகிறார். கரும் : வாருங்கள் ஐயா, உட்காரவேண்டும். கலைத் : என்ன செய்கிறீர்கள்? கரும் : காதற்பசி ஐயா, கனிந்த பழத்தை எண்ணி வருந்தி இருக்கிறேன். அதோ பாருங்கள் அவள் உருவப்படம். கலைத் : வருந்துகிறேன். நான் புன்னையைக் கேட்டேன். அவள் முத்தப்பாவை மணந்து கொள்ளப் போவதாகச் சொல்லி விட்டாள், உறுதியாக. கரும் : என் அன்பு தலை கவிழ்ந்தது. வேறு வழியில்லையா ஐயா! நீங்கள் எனக்காக முயன்றீர்களா? கலைத் : ஒத்த இரண்டுள்ளங்களின் இடையில் நான் புக வழியேது? கரும் : இரண்டுள்ளங்களும் ஒன்றாகிவிட்டனவா? நான் நம்ப வில்லை. அறியவேண்டும் ஐயா! கலைத் : அப்படியா நினைக்கிறீர்கள். ஏன்? கரும் : முத்தப்பாவின் நடத்தை சரியில்லை. அவன் நோயாளி. இது பொன்னரசுக்கும், புன்னைக்கும் சமையல் வேலை செய்யும் பழநிக்கும் தெரியும். கலைத் : முயற்சி செய்யுங்கள். நிலைமையைச் சொல்லிவிட்டு போக வந்தேன். இந்தச் சிறு கூடையை இங்கு ஒருபுறம் வைத்து விட்டுப் போகிறேன். கரும் : இதோ இந்த அறையில் வையுங்கள் (அறையில் ஒரு சிறிய அளவில் அமைந்த கூடை. அதில் பல சிறியதும், பெரியதுமான சீசாக்கள் அவற்றில் விரல் அளவுள்ள சீசா மூன்றும் உள்ளன. (அக்கூடையை வைத்துப் போகிறார்) கரும் : நீங்களும் சிறிது சொல்லுங்கள் எனக்காக. முத்தப்பாவின் நடத்தையை நினைவூட்டுங்கள். கலைத் : நன்று. (போய்விடுகிறார். அறையில் சென்று கரும்பாயிரம் கூடையில் இருந்த சீசாக்களைப் பார்க்கிறான்! அவைகளில் மூன்று சீசாக்கள் அவனை வியப்புறச் செய்கின்றன) காட்சி - 11 இடம் : தங்கவேற்பிள்ளை வீடு. நேரம் : இரவு ஒன்பது மணி. உறுப்பினர் : தங்கவேற்பிள்ளை, நடேசப்பிள்ளை, முனியப்பன். அமைப்பு : தங்கவேற்பிள்ளை சாய்வு நாற்காலியில் உட் கார்ந்திருக்கிறார். மற்ற இருவரும் கீழே உட் கார்ந்திருக்கிறார்கள். நடேச : அப்புறம் என்னதான் முடிவு. தங்க : முடிவு! என்ன முடிவு கேட்கிறாய்? அவன் புன்னையின் கண்ணுக்கு பிடிக்கவில்லை. அவள் ஒப்பவில்லை. அதிக நாட்கள் கணக்கு வேலை பார்த்தால் பெண்ணையும் சொத்தையும் கொடுக்க வேண்டுமா? பேராசையைப் பார்! ஒரு காணி நன்செய் கீழை வெளியில் இருக்கிறதே அதையும் முனை வீட்டையும் எழுதித் தருகிறேன் முனியப்பனுக்கு! விருப்பமானால் இருக்கட்டும் - இல்லையானால் இப்போதே எழுந்து வெளியில் போகட்டும். வேறு பேச்சுக் பேசக்கூடாது. குல்லாய் போட்டுக் கொண்டான் குல்லாய் குரங்கு போல! கையில் ஒரு துணி இராத்தல் துடைக்கிறவன் போல! ஒரு கையில் பிரம்பு! காக்காய் ஓட்டவாடா? பெண்ணை மயக்க வைக்கிறான் இவன் உடுப்பிலே! போடா எழுந்து! எல்லாவற்றையும் கழட்டிப் போட்டு வாடா! ஏன் கழுதை மாதிரி இத்தனையும் சுமந்து கொண்டிருக்கிறாய்? நடேச : எழுந்து போ முனியா (முனியப்பன் விசையாய் எழுந்து வெளியில் போகிறான்) (குறிப்பு: பல பக்கங்கள் காணவில்லை) கரும் : கார் கொண்டு வந்தால் என்ன செய்துவிடுவீர். இன்னும் அரை மணி நேரத்தில் திருமணம் நடந்துவிடும். ஈவரனே வந்து முயன்றாலும் முத்தப்பா அவளை மணந்துகொள்வதைத் தடுப்பேன் - என்றீர் சைகோனில். சுப்ரமணி : இன்னும் அரை மணி நேரம்! கார் வேண்டுமே! முனியப்பா ஓடுங்கள். ஓர் கார் கொண்டு வாரும். (கலைத் தொண்டர் வருகிறார்) சுப்ரமணி : திருமணத்திற்குப் போகவில்லையா நீங்கள் கவிஞரே! எனக்குத் தெரியாமல் திருமணத்தை நடத்துகிறாரோ! அடடா. கலைத் : இருவர் உள்ளமும் ஒத்துப்போனாலும் இருவர் உள்ளத்தை விட வலியுள்ளது ஒன்று இருக்கிறது. அதைத் தடுங்கள் என்றீர்கள். அதைப் பார்க்கத்தான் வந்தேன். இன்னும் அரைமணி நேரம் இருக்கிறது. சுப்ரமணி : ஆம் சொன்னேன். இதோ உங்கட்குக் காட்டி விடுகிறேன். என்னிடம் வைத்துள்ள சீசா முத்தப்பா முதலியவர்களிடம் இருந்தால் வேடிக்கையாய் இருக்கும். கலைத் : உங்களிடம் சீசா இருக்கிறது. பயனென்ன? உங்களிடம் கொள்கை இருக்க வேண்டும். கொள்கை இருந்துதான் பயனென்ன? சுப்ரமணி : மானவுணர்ச்சியால் நான் தோற்கவில்லை. என் கொள்ளை தோற்றது. நாம் நம்பும் சாதிரம் தோற்றது. உயிர் வாழேன். இதோ சீசா! எடுத்துக் கொண்டு வருகிறேன். கலைத் : ஏறுங்கள் காரில் இதோ கார். (குறிப்பு: ஒரு தாள் காணவில்லை) காதலாக இருக்கிறீர்களாம். அதைக் கெடுத்துவிட்டால் அவரை விரும்புவீர்களாம். புன்னை : ஏன் அப்பா? பார்த்தீர்களா? அன்றைக்குச் சிறிது நேரத்தில் முத்தப்பாவைக் கெட்ட நடத்தை உடையவர் என்று கூறிவிட்டீர்களே! பழநி : முத்தப்பா அவளை வைப்பாக வைத்திருக்கிறார், இவளை வைப்பாக வைத்திருக்கிறார் என்று உங்களிடம் சொல்லச் சொன்னார் என்னிடம். புன்னை : இன்னும் என்ன இதுபோல் செய்தார். சொல்லி யிருப்பாரே உன்னிடம்? கரும்பாயிரத்துக்குப் பெண் கொடுப்பதாக ஒருவர் எங்களிடம் வந்தாரே, அவரை யார் அனுப்பியது? பழநி : கரும்பாயிரந்தான். வந்தவன் ஒரு பகல் வேஷக்காரன். புன்னை : இனிமேல் எப்படி நடந்து கொள்ளுவார் தெரியுமா, உனக்கு? பழநி : தெரியாதுங்கள். பொன் : அம்மா விடு அவனை! இந்தா, இதைக் கேள் பழநி! நாங்கள் இதையெல்லாம் கேட்டதாகவோ, நீ எங்களிடம் சொன்ன தாகவோ கரும்பாயிரத்திடம் சொல்ல மாட்டாயே? பழநி : இல்லை. பொன் : சொன்னால் உன்னை வைக்க மாட்டேன். இனிக் கரும்பா யிரம் சொல்லுவதை எம்மிடம் அவ்வப்போது சொல்லி விடுகிறாயா? பழநி : உறுதிங்கள்! சொல்லிவிடுகிறேன். உறுதிங்க. பொன் : சரி, போ, உள்ளே! புன்னை : அம்மாவிடம் சொல்லி வைக்க வேண்டும். (போகிறார்கள் உள்ளேயிருந்து தங்கவேற்பிள்ளை வருகிறார்) கலைத் : என்ன தோழர்? உட்காருங்கள்! தங்க : நாட்கள் வீணாகின்றன. புன்னைக்குத் திருமணத்தை நடத்தி விட வேண்டும். பொன்னரசைக் கேட்டுப்பாருங்கள் மாப்பிள்ளை பார்த்திருக்கிறானா என்று. நல்ல பிள்ளை யாய் இருக்க வேண்டும். படித்தவனாயிருக்க வேண்டும். உறவினர் வீட்டுப் பையனாயிருந்தால் மிகவும் நலம். ஏனென்றால் சாதி, ஒன்றும் பார்க்கும் தொல்லையிராது! புது வழியில் போவது பொருத்த மில்லை. என் சொத் துக்கும், பொன்னரசு சொத்துக்கும் அவன் தானே உரியவ னாக வேண்டும். பொன்னரசுக்கும் ஆண் பிள்ளை இல்லை ... எனக்கும் ஆண்பிள்ளை இல்லை. எனக்குப் பொன்னரசு கொள்ளி வைப்பான். பொன்னரசுக்கு மாப்பிள்ளை கொள்ளி வைக்க வருகிறவன்தானே? கலைத் : அப்படியா! மெய்தான் தோழரே! விரைவில் திருமணத்தை முடித்துவிடவேண்டியது தான். நீங்கள் போய்ப் புன்னையை வரச்சொல்லுங்கள். (தங்கவேற்பிள்ளை போகிறார், புன்னை வருகிறாள்) கலைத் : புன்னை! நான் உன்னைக் கேட்பதற்கு நீ ஒளிவு மறை வின்றிப் பதில் சொல்ல வேண்டும். உன்னை நீ யாருக்குக் கொடுக்கப் போகிறாய். உன் நெஞ்சைப் பறித்தவர் யார்? புன்னை : முத்தப்பா. நான் முத்தப்பாவுக்கு வாழ்க்கைப்படாவிடில் உயிர் துறப்பேன் ஐயா. இது உறுதி. கலைத் : அம்மா, இது எனக்குத் தெரிந்த செய்திதானே! நீயும் முத்தப்பாவும் இன்பம் எய்தி நீடுழி வாழ்க. அம்மா இதோ இந்தக் கண்ணாடி சீசாவை மறைவாக உன்னிடம் வை. நான் கேட்கும் போது கொடு. நான் வெளியில் போய் வருகிறேன். (சுட்டுவிரல் நீளம், பருமனுள்ள அச்சீசாவைக் கொடுத்து விட்டு கலைத் தொண்டர் வெளியிற் போய்விடுகிறார்) காட்சி - 12 இடம் : அதே தெருவில் முனை வீடு நேரம் : மணி 4 உறுப்பினர் : சுப்ரமணியன், கலைத் தொண்டர் அமைப்பு : சுப்ரமணியன் ஏதோ எழுதிக் கொண்டிருக் கிறான். கலைத்தொண்டர் உள்ளே நுழைகிறார். சுப்ர : வரணும், வரணும் இந்த ஆசனத்தில் அமரலாமே. (உட்காருகிறார்) கலைத் : என்னமோ எழுதிக் கொண்டிருந்தீர்கள். நான் நடுவில் வந்தேன். சுப்ர : என் பந்துக்கள் திருவாரூரில் இருக்கிறார்கள் அவர்கட்குக் கடிதம்! வேறொன்றுமில்லை. மாணிக்கக் கணையாழி யாருக்குக் கிடைத்தது? கலைத் : நான் நினைத்தபடி முடிந்தது. முத்தப்பாவுக்கே. சுப்ர : ரொம்ப சந்தோஷம். அதிருக்கட்டும். சொந்தத்திலே மாப்பிள்ளை இருக்காப்லே இருக்கே? கலைத் : யார்? சுப்ர : தங்கவேற்பிள்ளையின் கணக்கன். கலைத் : கண்ணாடியும், கைப்பிரம்புமாகக் காட்சியளித்தாரே அவரா? சுப்ர : அதற்கென்ன! குலத்தே குரங்கையும் கட்டலாமின்னு சாதிரம். கலைத் : குலத்துக்காக குரங்கையும் புன்னை கட்ட வேண்டுமோ? குலம் எங்கே இருக்கிறது. சுப்ர : இல்லாமல் என்ன. நீங்கள் சைகோனில் கூடச் சொன்னீர்கள். தமிழ்நாட்டில் சாதிக் குற்றுயிராய்க் கிடக்கிறது. சைகோனில் அது செத்தே பூட்டு திண்ணு. சாதியின் பேரில் ஒரு சல்லிவேர் கூட அறுந்து போவது இருக்கட்டும். நைந்துகூடப் போக வில்லை என்று எண்ணுகிறேன். கலைத் : நம்மிருவர் கருத்தும் மாறுபடுகின்றன. முதியவர் சிலர் போக இளைஞர்களிடம் சாதியில்லை என்று எண்ணுகிறேன். நிற்க. கரும்பாயிரம் புன்னையை விரும்புவதாகத் தெரிகிறதே. சுப்ர : அப்படித்தான் தெரிகிறது. ஆனால் ஒன்று நிச்சயம். முத்தப்பாவுக்கு புன்னை மனைவியல்ல. கலைத் : இருவர் எண்ணமும் ஒன்றுபட்டிருக்கிறது. சுப்ர : சாமி என்பது இருவர் எண்ணத்தைவிட வலிமையுள்ளது. கலைத் : இருக்கலாம். நான் போய் வருகிறேன். சுப்ர : நான் சொல்லியவற்றில் தங்களுக்கு ஏதாவது ஆயாசம் உண்டோ? கலைத் : இல்லை, இல்லை. சுப்ர : சரி போய் வாருங்கள் (கலைத் தொண்டர் அங்கு ஒரு சீசாவை வைத்துவிட்டு மறந்தவர் போல் போகிறார். அதைச் சுப்ரமணியன் எடுத்துப் பார்க்கிறான்) சுப்ர : ஐயா! இந்தச் சீசாவை வைத்து விட்டீர்கள்! கலைத் : அப்படியா! அடடா. மறதி. மறதி ஆனால் நீங்கள் தான் அதை மறைவாக வைத்துக் காப்பாற்றித் தரவேண்டும். என்னிட மிருந்தால் வேறு எங்கேயாவது வைத்து விடுவேன். சுப்ர : சரி வைத்து வைக்கிறேன். (போகிறார் கலைத்தொண்டர், சுப்ரமணியன் அந்த சீசாவின் மேல் எழுதியிருக்கும் மொழிகளைப் படிக்கிறான் அவன் கண்ணில் வியப்புத் தோன்றுகிறது) காட்சி - 13 இடம் : அடுத்த தெரு. காலம் : மாலை மணி ஐந்து. உறுப்பினர் : முத்தப்பா, பொன்னரசு, புன்னை. அமைப்பு : முத்தப்பா, பொன்னரசு, புன்னை மூவரும் தெருவில் போய்க் கொண்டிருக்கும் சிலரைச் சுட்டிக் காட்டிச் பேசிக் கொண்டிருக்கிறார்கள். புன்னை : அதோ போகிறார்களே. அவர்கள் புதுச்சேரிக்கு வெளியிலிருக்கும் சிற்றூலிருந்து வைக்கோல் ஏற்றி வந்து விற்று விட்டுப் போகிறவர்கள். ஏன் அவர்கள் மற்றவர்களை நெருங்காமல் விலகிப் போகிறார்கள்? தீண்டாதவர்கள். முத்தப்பா : அதோ அவர்களை அடுத்துச் சிலர் போகிறார்கள். அவர்களும் அப்படித்தான் அழுக்காகவும், நல்ல உடை யில்லாமலும் இருக்கிறார்கள்! அவர்கள் அப்படி ஒதுங்கிப் போகவில்லையே! பொன் : தோற்றம் ஒன்றாகவே காணப்பட்டாலும் அவர்கள் பிறவியில் தாழ்ந்தவர்கள் என்றும் இவர்கள் பிறவியில் உயர்ந்தவர்கள் என்றும் எண்ணவேண்டுமாம். முத்தப்பா : எண்ணவேண்டும் என்று இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் எண்ணப்படும் மக்களை நான் இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். (கலைத் தொண்டர் காணப்படுகிறார்) முத்தப்பா : கவிஞர் வருகிறாரே! அனைவரும் : வரவேண்டும் ஐயா! எங்கே? கலைத் : முனைவீட்டைப் பார்த்தேன். அந்த வீட்டையும் பார்த்து வருகிறேன். முத்தப்பா என்னோடு வாருங்கள். அம்மா, ஐயா இருவரும் போகலாம். - தொடர்ச்சி இல்லை - நடந்தது ஒன்றிருக்க வேறு ஒன்றைக் கூறி நம்மை அரசினர் நினைக்கும்படி செய்ய முயலவும் கூடும். சுப்ர : ஆமாம் ஐயா, மிக்க அச்சம் உண்டாகிறது. ஒரு குடும்பமே கூண்டோடு உயிர் துறந்திருப்பதால் அவர்களுக்கு உத்தரவு ஏற்படும். ஏற்படவே அவர்கள் என் மீது சொல்லும் பழி அனைத்தும் உண்மை என்றே ஆகிவிடும். கொலையாளி நான் என்று தீர்ப்புக் கூறிவிட்டால்! (இதற்குள் மருத்துவர் வந்து சுப்ரமணியனை அழைத்து போகிறார்) மருத்துவர் : (கலைத் தொண்டரை நோக்கி) ஐயா, இதோ இவருடைய நெஞ்சில் நிலையை நேரில் பார்த்துக் குறித்துக் கொண்டு அனுப்பி விடுகிறேன். நீங்கள் இங்கேயே இருங்கள். கலைத் : நன்று ஐயா. (போகிறார்கள்) நடேச : சொத்துக்கள் எல்லாம் இனி முனியப்பனுக்குத்தான் ஏனென்று கேளுங்க. கலைத் : நான் ஏன் என்று கேட்கவில்லை. நடேச : நீங்கள் கேட்க வாணாம், நானா சொல்றேனே. கலைத் : இங்கே அமைதி வேண்டும். பேச்சுக் கூடாது. பிறகு பேசுவோம். நடேச : சரிதானுங்கள். முனியப்பனைவிட வேறுயாரும் இல்லை சொத்துக்குரியவர்கள் அதுக்காகச் சொல்ல வந்தேன். கலைத் : இறந்தே போய்விட்டார்களா நால்வரும்? (குறிப்பு: தொடர்ச்சி இல்லை)  குறிப்பு : பாவேந்தர் பாரதிதாசன் புதல்வி திருமதி வசந்தா தண்டபாணி இந்நாடகக் கையேட்டுப் படியை அளித்தார். மக்கள் சொத்து நிழலுருவக் காட்சிகள் - 4 (கதைச் சுருக்கம்) 1 ஒருவன் நடந்து போகிறான். ஒரு குரல் : இவன் யார்? பதில் குரல் : இவன் ஓர் ஏழையாயிருக்கலாம் 2 ஒரு முகமூடி குதிரையை விட்டிறங்கி ஒரு குகையில் நுழைகிறான் ஒரு குரல் : இவன் யார்? பதில் குரல் : இவன் மக்கட்குத் தொல்லை விளைப்பவனாகவும் இருக்கலாம்; அல்லது மக்களுக்குத் தொண்டு செய்பவ னாகவும் இருக்கலாம். 3 செல்வந்தன் ஒருவன் ஆடம்பரமான கூடத்தில் அமைந்த புத்தர் சிலைக்கு வணக்கம் செய்து, புத்தகங்களில் ஒன்றை விரித்துப் படித்தபடி நாற்காலியில் அமர்கின்றான். ஒரு குரல் : இவன் யார்? பதில் குரல் : இப் பணக்காரன், மக்களை ஏய்ப்பவனாகவும் இருக்கலாம்; காப்பவனாகவும் இருக்கலாம். 4 ஒருகுரல் : அதோ அவனைப் போலீசார் விலங்கிட்டு அழைத்துச் செல்லுகின்றார்களே? பதில் குரல் : இவன் ஓர் குற்றவாளியாகவும் இருக்கலாம். குற்றமற்ற வனாயும் இருக்கலாம். மெய்க் காட்சிகள்: (கோர்ட்) நீதிபதி இவன் யார் என்று தொடர்ந்து, அவன்மேல் குற்றப் பத்திரம் படிக்கிறான். அதன்பின் சாட்சி விளக்கம் நடக்கிறது. பின் பிராசிகூஷன் தரப்பு வாதம்! குற்றவாளி தரப்பு வக்கீல் நீ யார்? என்று குற்ற வாளியைக் கேட்கிறான். குற்றவாளி நான் யார்? என்று தொடங்கித் தன் வரலாறு கூறுகிறான்.  கதை ஏழுமலை முதலியார் இல்லம்! ஏழுமலை முதலியாரின் மனைவியாகிய காவேரி தன் ஆறாவது பெண்ணான பொன்னம்மாவை அழைத்துத் தலை பின்னி, பாட சாலைக்குப் போ என்று சொல்லுகிறாள். தூணைக் கட்டிக் கொண்டு நிற்கும் பொன்னம்மாவை நோக்கி ஏழுமலை முதலியார் தலைவாரிப் பூச்சூடி உன்னைப் - பாட சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை சிலை போல ஏனங்கு நின்றாய் - நீ சிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்? விலைபோட்டு வாங்கவா முடியும் - கல்வி வேளைதோ றும்கற்று வருவதால் படியும் மலைவாழை அல்லவோ கல்வி? - அதை வாயார உண்ணுவாய் போஎன்பு தல்லி என்று கூறுகிறார். பொன்னம்மா பாடசாலை செல்லுகின்றாள். மற்றும் மூத்த இரு குழந்தைகளும் செல்லுகிறார்கள். வீட்டின் கூடத்தில் மற்றப் பிள்ளைகளும் பெற்றோரும் உட்கார்ந்து பேசியிருக்கிறார்கள். மூத்தப் பெண்ணாகிய அன்னம், மாமியார் வீட்டிலிருந்து வந்திருக்கிறாள். அவளை அழைத்துப் போக அவள் கணவனாகிய சுந்தரமூர்த்தி வருவதாகத் தந்தி வருகிறது. ரயிலடிக்கு அன்னத்தின் பெரிய தம்பியாகிய இளஞ்சேரன் காரில் செல்லுகிறான். அவன் போன பின், பெற்றோர் தம் மருமகனைப் பற்றி பேசுகிறார்கள். அதுபற்றி அங் கிருக்கும் அன்னம் உள்ளுக்குள் வருந்துகிறாள். மருமகன் சுந்தர மூர்த்தி மாமனார் வீட்டுச் சொத்தைச் சுரண்டுவதிலேயே கருத்தா யிருப்பவன். அன்ன மும் தன் கணவனைப் பின்பற்றுகின்றவளே! ரயிலிலிருந்து சுந்தரமூர்த்தி மட்டுமல்ல; அவன் தங்கையான மங்கையர்க்கரசியும் இறங்குகின்றாள். மிக்க மகிழ்ச்சியுடன் இளஞ் சேரன் அவ்விருவரையும் வரவேற்று அழைத்து வருகின்றான். வரும்போதே சுந்தரமூர்த்தி தன் மைத்துனன் கையில் கட்டிக் கொண்டிருந்த வயிரச் செயினை வாங்கித் தன்கையில் கட்டிக் கொள்ளுகின்றான். வீட்டில் அனைவரும் சுந்தரமூர்த்தியையும், மங்கையர்க் கரசியையும் வரவேற்று, க்ஷேம லாபங்களைப் பேசுகையில் சுந்தரமூர்த்தி, இந்த ஊரில் இப்போது தொழிலாளர் கலாட்டா எப்படி இருக்கிறது என்கிறான். அதற்கு ஏழுமலை முதலியார், தொழிலாளிகள் தம் உழைப்பின் மதிப்புக்குத் தக்க கூலி கேட்கும் ஒரு முயற்சிக்கு, கலாட்டா என்று பெயரா? தொழிலாளர் கிளர்ச்சி என்று சொல் தம்பி என்று கூறியதிலிருந்து பேச்சு முற்றுகிறது. மனத் தாங்கல் உண்டாகின்றது. ஏழுமலை முதலியாரும், அவன் மகன் இளஞ் சேரனும் தொழிலாளர் கட்சி! சுந்தர மூர்த்தி தொழிலாளர் பகைவன்! ஏழுமலை : ஏன் அப்படி காவேரி? காவேரி : அவள் அத்தானிடம் உயிரை வைச்சிருக்காள். ஏழுமலை : சரி உயிரை வைச்சிருக்கட்டும், வயிரச் சங்கிலியையுமா வைக்கணும். காவேரி : நிறுத்துங்கள் (அன்னமும் சுந்தர மூர்த்தியும் மங்கையர்க் கரசியும் நடந்து வருகின்றார்கள்) சுந்தர : வணக்கம்! மங்கைய : வணக்கம்! (மங்கையர்க்கரசி, சுற்றுப் புறத்திலே உட்கார்ந் திருக்கும் காவேரி பூங்கோதையுடன் அமர்கின்றாள் இளஞ்சேரனும், அன்னமும் ஏழுமலையுடன் அமர்கின் றார்கள் சுந்தரமூர்த்தி அங்கிட்டு இருக்கும் நாற்காலிக்கு பின்புறம் நாற்காலியைப் பிடித்தபடி நிற்கிறான்) காவேரி : நலமா மங்கையர்க்கரசி? மங்கை : நலந்தான் அத்தே? சுந்தர : இங்கே தொழிலாளர் கலாட்டா இப்ப எப்படியிருக்குது? ஏழுமலை : தொழிலாளர் கலாட்டா! தொழிலாளிகளில் கூட்டு முயற்சிக்குக் கலாட்டா என்று பெயரா? தொழிலாளர் கிளர்ச்சி என்று சொல்லணும் தம்பி. சுந்தர : நீங்கதான் தொழிலாளர்களைத் தூக்கித் தலையில் வைச் சிருக்றீங்க, கயவாளி பசங்க தலை துள்ளிப் பேறாங் கண்ணா அதுக்குமா உங்க ஆதரவு? இளஞ்சேரன்: கயவாளி பசங்கள்! கருத்து நிறைந்த அன்பின் வலியால், கடுமுழைப்பால், கனவுலகை நனவில் கொண்டுவந்தவர்கள் கயவாளிகளா அத்தான்! காடு களைந்து நாடாக்கியும், கடலில் முத்தெடுத்தும், ஆடை தந்தும், அணி தந்தும், கோடை தவிர்க்கக் குளிர்மரங்கள் நட்டும், பாடையில் ஏறும் மக்கட்குப் பல்லுணவு தந்தும் காடைக் கழுத்துப்போல் கை இழுக்க உழைக்கும் கண்ணொத்த தோழர்கள் கயவாளியா அத்தான்? வெளியிலும் வெடிப்பும் பயிலும் கட்டுதரையை வயலும் வாய்க்காலு மாக்கி என்றும் பெரும்புனலும் தேக்கி, நெல் விளை வித்த நாமும் மக்கள் என்ற சொல்லினைத்... கயவாளியா அத்தான்! அன்றிருந்த அழகற்ற ஆட்சியற்ற அறிவற்ற பெருநிலத்தை இன்றிருக்கும் எழிலுற்ற இனிய வசதி யுள்ள ஆட்சியும் மாட்சியுமுடைய நாடாக்கிய நல் லுழைப்பாளர் கயவாளிகள் என்றால், அந்த நல்லுழைப் பாளர்களைக் குறை கூறும் உம் போன்றோருக்கு என்ன பெயர் அத்தான்? உழைப்பவன் கயவாளியா? உழைக்கா துண்டு கொழுப்பவன் கயவாளியா? இவ்வாறும் உண்டு பல் இளித்து வீறாப்புப் பேசும் பாதகன் கயவாளியா? அன்றும் இன்றும் என்றும் நம்மை ஆதரிக்க உழைக்கும் தொழிலாளி செய்யும் நன்றி மறந்த நயவஞ்சகர்க்குத் தரவேண்டிய கயவாளிப் பட்டத்தை அத்தான் முகவரி தெரியாமல் தூய உழைப்பாளி களிடம் சேர்க்க விடுகிறார். வெளியுலகின் வீண் முயற்சி இன்றும் செல்லாது. அறிவுலகம் ஆத்திரப்பட்டே தீரும்! அன்னம் : போதும் தம்பி! நீ ஏன் ஆத்திரப்படுகிறாய்? இளஞ்சேரன்: அக்கா என் பேச்சு உங்கட்கு ஆத்திர மூட்டு மானால் அதற்காக நான் வருந்துகிறேன் (சுந்தரமூர்த்தி நிதானிக்கிறான். குறுநகைப்புக் கொள் கின்றான்) சுந்தரமூர்த்தி : உங்களிடம் சிறிது பணம் அகப்பட்டுக்கொண்டு விழிக் கின்றது. அது தொழிலாளரை ஆதரிக்கின்றது. அது தான் தலைமேல் தானே மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளக்கூடாதே என்பது தான் என் கவலை. என்னை மன்னிக்கணும் மாமா. என்னை மன்னிக்கணும் மச்சான்! (சாப்பாட்டுக்குப்பின் சுந்தரமூர்த்தியும் அன்னமும் ஒருபுறம் பேசுகிறார்கள். அன்னம் தன் தகப்பனிட மிருக்கும் காரைக் கேட்க வேண்டுமாம். அன்றியும் பிறகு கொடுத்து விடுகிறேன் என்று பதினாயிரம் ரூபாயும் கேட்க வேண்டுமாம். அன்னமும் கேட்டு வாங்கித் தருவதாக ஒத்துக் கொள்ளுகிறாள். நான் உன் தகப்பனாரிடம் உங்கள் மகள் பூங்கோதையை எங்கவூர் இரிசப்ப முதலியார் மகன் எட்டியப்பனுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்பேன் அதை நீயும் ஆதரித்துப் பேச வேண்டும் என்று சுந்தரமூர்த்தி கூற அதற்கும் அன்னம் ஒத்துக் கொள்ளுகின்றாள். (எட்டியப்பன் நோயாளி; படியாதவன்) வீட்டின் தோட்டத்திலுள்ள திண்ணையில் இளஞ் சேரனும் மங்கையர்க்கரசியும் தங்கள் பழம் பாடல் ஒன்றைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.) பாட்டு செந்தமிழே! உயிரே! நறுந்தேனே - என் செயலினை மூச்சினை உனக்களித் தேனே - நீ நைந்தாயெனில் நைந்து போகும்என் ஆவி நன்னிலை உனக்கெனில் எனக்குத் தானே ... ... அதன் பிறகு இளஞ்சேரன் எப்போது ஊருக்கு? என்று கேட்க, அவள் இன்று மாலை என்று கூறுகின்றாள். பிரிவுக்கு இருவரும் வருந்துகிறார்கள். ஒன்றை ஒன்று பிரிந்தால் உயிர் மாளும் அன்றில் பறவைகள் அல்லவா - நாம்? என்று கூறிய இளஞ்சேரனுக்கு நான் உனக்கு! நீ எனக்கு! இந்த உறுதியை நம் உள்ளத்திற்கு ஆறுதல் ஆக்கிக் கொள்வோம். நம் திருமண நாளை நோக்கித் தவம் கிடப்போம். என்கிறாள். பிரிந்து வீட்டினுள் போய்விடுகின்றார்கள். மற்றொருபுறம் அன்னம் தன் தம்பிமார் தங்கைமார் போட்டிருக் கும் நகைகளை, சாக்குப் போக்குக்கூறி வாங்கித் தன் பெட்டியில் வைத்துக் கொள்ளுகிறாள். மேலும் அவர்களின் உதவியைக்கொண்டே வீட்டிலுள்ள வெள்ளிப் பாத்திரங்கள் தட்டுமுட்டுச் சாமான்கள், ஊறுகாய், வற்றல்கள், அரிவாள் மனை, தேங்காய், துவரம் பயறு, உளுந்து முதலிய தானியங்கள் முறுக்கு முதலிய தின்பண்டங்கள், புதுமுறம், துடைப்பக் கட்டு ஆகியவைகளை மூட்டை கட்டுகிறாள். இதையெல்லாம் ஏழுமலை முதலியாரும் காவேரியம்மாவும் பார்த்துப் போகிறார்கள். ஏழுமலையின் கிண்டல்! காவேரி யம்மாவின் வெறுப்பும், சிரிப்பும்! உரத்துப் பேச அஞ்சுகின்றனர்! ஊருக்குப் புறப்படும் அன்னம், சுந்தரமூர்த்தி, மங்கையர்க்கரசி மூவரும் ஏழுமலை காவேரி இருவரிடமும் பேசுகிறார்கள். சுந்தரமூர்த்தி, தன் மாமனார் எலக்ஷனில் போட்டியிட வேண்டிய அவசியத்தைக் கூறுகிறான். மாமனார் ஒப்புகிறார். அன்னம் கார் கேட்கிறாள். பத்தாயிர ரூபாய் கேட்கிறாள். கிடைக்கின்றன. ஊருக்குப் புறப்படுகிறார்கள்! ஏழுமலை முதலியார் வீட்டுப் பொருள்கள் எல்லாம் மூட்டைகள் வடிவத்தில் வண்டியில் ஏற்றப் படுகின்றன. மகளும் மருமகனும் போய் வருகின்றோம் என்று கூறு கின்றார்கள். காவேரியம்மா சும்மா இருக்கிறாள். அவள் உங்கள் பிரிவுக்கு வருந்துகிறாள். மகிழ்ச்சி நீங்கள் போய் வாருங்கள் என்று ஏழுமலை கூற மூவரும் தெருவிலுள்ள காரை நோக்கிச் செல்லுகின் றார்கள். இளஞ்சேரனும் பின் தொடர்கின்றான். கார் நகருமுன் நான்கு விழிகள் நீர் சொரிகின்றன. மங்கையர்க்கரசி அழுகையை உள்ளடக்கி, நான் போய் வருகின்றேன். அத்தான் என்கிறாள். இளஞ்சேரன் உதடுகள் நடுங்கின. உம் என்று விடை கூறினான். கார் பறந்தது! இந்த வட்டாரத்தில் ஏழுமலை முதலியார் நல்ல செல்வாக் குள்ளவர். அவரைக் காங்கிரஸில் இழுத்துப் போட்டுக் கொண்டால் காங்கிரஸின் மானம் கப்பலேறாமலிக்கும் என்று காங்கிர லீடர்கள் ஏழுமலையை அணுகுகின்றார்கள். ஏழுமலை முதலியார் தீங்கரசு செய்யும் காங்கிரசை நான் ஆதரிக்கமாட்டேன். நான் சுயேச்சையாய் நிற்கப் போகிறேன் என்று கூறி வெருட்டுகிறார். பல வட்டாரத்தினர்க்கு ஏழுமலை முதலியார் பணம் கொடுக்கிறார். ஓட்டுச் சேகரிக்க ரௌடி ரங்கனின் துணை அவசியம் என்று அவனை அணுகுகின்றார் ஏழுமலை முதலியார். அவன், சர்க்கிள் காங்கிரசுக்கு வேலை செய்யும்படி சொல்லி யிருக்கிறார் என்று கையை விரித்து விடுகிறான். பல கட்சிகளின் எலக்ஷன் பிரசாரக் கூட்டங்கள் கோஷங்கள் போட்டுக் கொண்டு போகின்றன. 1. காங்கிரசுக்கே ஓட்டு போடுங்கள் திட்டமில்லாத - செல்வாக் கில்லாத மற்றக் கட்சிகளைத் திரும்பியும் பாராதீர் (இது கேட்ட மக்கள் முணு முணுக்கிறார்கள்) 2. ஜனநாயகக் கட்சிக்கே ஓட்டுப் போடுங்கள். கண் கலங்க வைக்கும் காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள் (இப்படி ஒரு கட்சியா? ஓகோ) 3. ராஜா எ. ராமனாதன் கட்சிக்கே ஓட்டுப் போடுங்க; ஏங்க வைக்கும் காங்கிரஸை எதிர்த்து விரட்டுங்கள் (இப்படி ஒரு கட்சியா? இதுவும் காங்கிரஸை எதிர்க்கிறது) 4. ஜடி கட்சிக்கே ஓட்டுப்போடுங்கள். ஆறவுன்ஸை அழித்து ஒழியுங்கள். பிளாக் மார்க்கெட்டைப் பிடர் பிடித்து தள்ளுங்கள். தடியடிக் கட்சி தலை குனியச் செய்யுங்கள் (இது எப்போது கிளம்பிற்று? காங்கிரஸை எதிர்த்தே வேலை செய்கிறது) 5. சுயேச்சைக் கட்சியை ஆதரியுங்கள். காங்கிர கைதிகள் ஓட்டுக் கேட்டால் அவர்களுக்கு ஜெயிலின் கோட்டைக் காட்டுங்கள். (அப்படிச் சொல்லு! சபாஷ்) 6. திராவிடர் கழகம் அரசியலில் கலந்து கொள்ளாது. காங்கிர ஸுக்கு ஓட்டுப் போடாதீர்கள். (கலந்து கொள்ளாதா? அட!) 7. திராவிடர் முன்னேற்றக் கழகம் அரசியலில் கலந்து கொள்ளாது. காங்கிரஸுக்கு ஓட்டுப் போடாதீர்கள் (சின்ன பெரியாரும் அப்படியா? அட!) முதலியார் தோல்வியடைகிறார். பெருந்தொகை செலவாகிறது. சொத்தெல்லாம் கடனில் மூழ்கி விடுகின்றது. கடன்காரர் தொல்லை கொடுக்கத் தொடங்கி விடுகின்றார்கள். சொத்தையெல்லாம் விற்றுக் கடன்காரர்களுக்குக் கொடுத்துவிட எண்ணுகிறார் முதலியார். சொத்தின் மேல் இன்னும் சிறிது கடன் வாங்கிப் பூங்கோதையின் திருமணத்தை முடித்து விடலாம் என்று இளஞ்சேரன் சொல்ல, முதலியார் ஒப்புகிறார். சுந்தரமூர்த்தியும் அன்னமும் மாப்பிள்ளையை பார்த்துவிட்டு வந்தார்களாம். மாப்பிள்ளை எல்லா வகையிலும் பொருத்தமானவனாம். பெண்ணை மாப்பிள்ளையும், மாப்பிள்ளையைப் பெண்ணும் பார்க்க அனுமதிப்பதில் தமக்கு இஷ்ட மில்லையாம் இவ்வாறு சுந்தரமூர்த்தி யும் - அன்னமும் கூற இளஞ்சேரன் எதிர்க்கிறான். ஆயினும் அக்காவின் சொல்லை அவமதிக்க அவன் எண்ணவில்லை. ஐயர் திருமண நாள் வைக்கிறார். இளஞ்சேரன் ஆக்ஷேபம் சொல்லவில்லை. தலைக்குயர்ந்த தங்கள் தலைச்சன் மகள் சொல்லைத் தட்டி நடக்கப் பெற்றோரும் பிரியப்படவில்லை. காலை மூன்று மணிக்குத் திருமணம் நடக்கிறது. மாப்பிள்ளைக்குச் சிறிது காய்ச்சலாம். அவனை நடத்திக் கொண்டு வருவது போல் நாலுபேர் தூக்கி வந்து மணவறையில் உட்கார வைக்கிறார்கள். மாப்பிள்ளை தாலி கட்டுவது போல் மற்றவர்கள் தாலி கட்டுகிறார்கள். பெண் மாப்பிள்ளைக்குப் பாலும் பழமும் கொடுக்கிறார்கள். மணமகன் பிணமகனாகிறான். மணவீடு பிணவீடு! இளஞ் சேரன் கதறல்! வைதீக மணமுறைக்குச் சூடு! மறுநாள் இளஞ்சேரன் தோட்டத்துத் திண்ணையில் தனியே இருந்து வருந்துகிறான். அவனை வீட்டில் பெற்றோர் தேடுகின்றனர். அன்னம் தோட்டத்தில் தம்பியைக் கண்டு தேறுதல் கூற, அவன், நீங்கள் இருக்கையில் எங்களுக்கு ஏதும் வந்திருக்க ஞாயமில்லை என்கிறான். அதற்கவள் அந்தக் கனவு காண வேண்டாம். இப்போது எனக்குப் பிள்ளையில்லா விட்டாலும் இனிமேல் பத்துப்பிள்ளை பிறக்கும். எங்களிடத்திலிருந்து ஒரு செம்பாலடித்த காசையும் எதிர் பார்க்க வேண்டாம் என்று வீட்டினுள் நுழைகையில் எதிரில் மங்கையர்க்கரசி வேறு புறமாகத் தன் அத்தானிடம் ஓடிவந்து சில நகைகளை நீட்டி இதைச் செலவுக்காக விற்றுக் கொள்ளுங்கள் என்று கெஞ்ச அவன் மறுக்கிறான். ஏழுமலை முதலியாரின் சொத்தெல்லாம் போய்விட்டதால் வீட்டின் அசையும் பொருள் ஜப்தி நடக்கிறது. கொல்லையில் கிடக்கும் அம்மியைக் காரில் போட்டுக்கொண்டு அன்னமும் சுந்தர மூர்த்தியும் பயணப்படுகின்றார்கள். அப்போதும் அக்காளுக்குப் பிரியமான ஆப்பிள் பழக் கூடையை இளஞ் சேரன் காரில் வைத்து கை கூப்பி நிற்கிறான். ஏற இருக்கும் மங்கையர்க்கரசியை நோக்கி ஏறு சீக்கிரம் என்று சுந்தர மூர்த்தி அதட்ட அவளும் காரில் ஏறுகிறாள். கார் விற்ரென்று பறக்கிறது. குடும்பத்தில் பாலுக்குச் சீனியில்லாத துன்பம் போய், பசிக்குக் கூழுமில்லாத் துன்பம் பலப்படுகின்றது. இளஞ்சேரன் வேலைதேட வெளியில் புறப்படுகின்றான். அவன் தனக்குக் கிடைப்பதாயிருந்த வட்டிக் கடை குமாதா வேலையைக் கேட்கின்றான். இல்லை அதில் மைலாப்பூர் வாஞ்சி நாதய்யர் அமர்ந்திருக்கிறார். காமராஜ நாடார் சிபாரிசில். சாகக் கிடக்கும் அன்னை தந்தையர்க்குச் சோறிட்டுக் காத்ததாக இருக்கட்டும் என்று அநந்த ராம் சேட்டிடம் கணக்கு வேலை கேட் கின்றான் இளஞ்சேரன். அவன் சர்க்காருக்குக் காட்ட ஒரு கணக்கும் தனியார் ஒரு கணக்கும் எழுதத் தெரியுமா என்று கேட்கின்றான். இளஞ்சேரனுக்குத் தெரியாதாகையால் வேலை கிடைக்கவில்லை. வஞ்சிக்கொடி என்னும் நாட்டியப் பெண்ணும், இசையாசிரிய ரும் பாட்டு எழுதுவோரும் ஒரு கட்டிடத்தில் பாட்டு அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்குச் சென்ற இளஞ்சேரன் தன் தமிழ்த் திறமையாலும் பிடில் வாசிக்குந் திறமையாலும் பிடில் காரணமாக வேலையில் அமர்கிறான். வஞ்சிக்கொடி தனக்கொரு கொழுகொம்பாக இளஞ்சேரன் மதிக்கிறான். ஆயினும் இளஞ்சேரன் நெஞ்சில் இடைவிடாது வீற்றிருப்பவள் மங்கையர்க்கரசியே! வஞ்சிக்கொடி இளஞ்சேரன் அழகுக்கு மனுப்போட நேர மில்லை. இளஞ்சேரனும் மங்கையர்க்கரசியை எண்ணி இவளை மறுக்காத நேரமில்லை. நாட்டிய ஒத்திகை நடக்கிறது. வஞ்சிக் கொடியின் ஆடலில் அபாரக் கற்பனை காணப்படுகிறது. ஒரு நாள் காலை 10 மணி வரைக்கும் இளஞ்சேரனைக் காணாததால் வஞ்சிக்கொடி அவனைத் தேடிக் கொண்டு வீட்டுக்கு வந்து விடுகின்றாள். தந்தை கஞ்சியில்லாததால் உயிர்போகும் சமயம் - தாயும் பிள்ளைகளும் அடிவயிற்றைப் பிடித்தபடி அகம் நடுங்கிக் கிடக்கும் சமயம் - கடனாகக் காசு தேடி வர இளஞ்சேரன் வெளியிற் சென்றிருக்கும் சமயம் - அங்கு வந்த வஞ்சிக்கொடி நிலைமை அறிந்து - பெரியவர்க்குப் பாலும் மற்றவர்க்கு எடுப்புச் சோறும் கொண்டு வந்து இவை இளஞ்சேரன் கொடுக்கச் சொன்னவைகள் என்று அனைவர் பசியையும் தணித்துத் தெருவில் - வாசற் படியில் நின்று இளஞ்சேரன் வரவு பார்க்கின்றாள். எதிர்த்த வீட்டு எல்லம்மா அவளை அணுகி இந்த வீட்டுப் பையன் வேலையில் அமர்ந்திருப்பது மெய்தானா? என்கிறாள். வஞ்சிக்கொடி அவள் வாய் பிறப்பறிந்து அவளுக்குக் காவேரியம்மா கொடுக்க வேண்டிய கடனைத் தீர்க்கிறாள். தெருவில் கடன் கொடுத்த அனைவரும் வந்து விடுகின்றார்கள். குறட்டில் வைத்து வஞ்சிக் கொடி அனைவர்க்கும் கடன் பைசல் செய்து கொண்டிருக் கிறாள். அதே நேரம் இளஞ்சேரன் வருவதைக் கண்ட வஞ்சிக்கொடி, தன் முகத்தை முக்காடிட்டு மறைத்துக் கொள்ள இளஞ்சேரன் அனைவ ரையும் நோக்கி இங்கென்ன கும்பல் என்கிறான். அவர்களில் ஒருத்தி, கடன் கொடுக்கிறாங்க இந்தம்மா என்கிறாள். அது கேட்ட இளஞ்சேரன் நான் யாரிடமும் ஒன்றும் கொடுத்தனுப்பவில்லையே என்று தெருவில் சென்று பார்க்கும் போது வஞ்சிக்கொடி விரைந்து நடந்து மறைகிறாள். இளஞ்சேரன் இன்னார் என்றுதெரிந்து கொண்டு உள்ளே வருகின்றான். தாய் கேட்கின்றாள் இளஞ்சேரனை: ஏனப்பா ஒருவன் இரண்டு பெண்களை மணந்து கொள்ளச் சட்டம் இடந்தருகின்றதா? இளஞ்சேரன் : இல்லையம்மா என் விஷயத்தில் வஞ்சிக் கொடி வைத்தது இரக்கம்! தாய் : அப்பா உன்மேல் அவள் கொண்டது அன்பானால் அதை நிராகரிக்க முடியாது. நாட்டியம் பயிலும் கட்டிடத்தில் வஞ்சிக்கொடி இளஞ்சேரன் பேச்சு. என் தாயும் ஐயப்படுகின்றார்கள். எனக்கு உதவி செய்யாதே என்கின்றான் இளஞ்சேரன்! பசிக்கு வால் குழைக்கும் பரிதாபப் பிராணியைப் பார்க்க மறுக்கலாம் இரக்கமற்ற கண்கள்! என் நெஞ்சு இரக்கம் என்ற பருவ மழையை உங்கள் குடும்பப் பயிர் மறுக்க முடியாது என்கிறாள் கண்ணீரோடு வஞ்சிக் கொடி. இளஞ்சேரன் அறியாமல் எண்ணற்ற உதவி செய்து வருகின்றாள் வஞ்சிக்கொடி அவன் குடும்பத்திற்கு! நாட்டியக் கம்பெனி மானேஜர் சம்பள பட்டுவாடா செய்கிறார். வஞ்சிக்கொடிக்குச் சம்பளம் கொடுத்து, கம்பெனி பெங்க ளூருக்குச் செல்லுகிறது. நீ தாயராயிரு என்கிறார் மானேஜர். அவள் ஒன்றும் கூறாமல் சம்பளத்தை- வாங்கிக் கொண்டு எதிரிலுள்ள சோபாவில் அமர்ந்து விடுகின்றாள். அடுத்தபடி, இளஞ்சேரனிடமும் மானேஜர் இப்படிக் கூற, இளஞ்சேரன் நான் என் பெற்றோரை விட்டுப் பிரியலாகாது நான் வர மாட்டேன் என்கிறான். இதைக்கேட்ட வஞ்சிக்கொடியும், நானும் என் பெற்றோரைவிட்டு வர முடியாது இங்கேயேதான் இருந்தாக வேண்டும் என்றாள். அதற்கு மானேஜர் அவர் வர மறுக்கலாம். நீ மறுக்க முடியாது. அக்ரிமெண்ட் இருக்கிறதென்று கூற வஞ்சிக் கொடி நெஞ்சொடிந்து பதைக்கிறாள். வீடு வந்த இளஞ்சேரன் தந்த சம்பளப்பணம் அனைத்தும் பட்டிருந்த கடனுக்கே பற்றவில்லை. ஐந்து ரூபாய்க்கு அக்காளுக்கு ஆப்பிள் வாங்கி வந்ததாகவும் அதை எடுத்துக்கொண்டு அக்கா வீட்டுக்குச் சென்று ஏதாவது உதவி பெற்று வருவதாகவும் கூறுகிறான். தந்தை தடுக்கிறார்! தாய் மறுக்கிறாள்! விதவைப் பெண் வேண்டா மென்று கெஞ்சுகிறாள்! அனைவர்க்கும் சமாதானம் கூறி இளஞ்சேரன் அக்கா வீடு செல்கின்றான். முத்துப் பட்டணம் சுந்தரமூர்த்தி வீட்டில் ஆண் குழந்தை பிறந்ததில் முதல் திங்கள் விழா நடக்கிறது. பெரிய மனிதர் வந்து தாம் பூலம், செண்டு, லட்டு, ஜிலேபிப் பொட்டலம் பெற்றுப் போகிறார்கள். சுந்தரமூர்த்தியும் அன்னமும் தெரு வாசலில் நின்று வழியனுப்பு கிறார்கள். அவர்கள் இளஞ்சேரன் வருவதைக் காணுகிறார்கள். கார் டிரைவரை அழைத்து அதோ இளஞ்சேரன் வருகின்றான். அவனை இங்கே வரவிடாதே அவமானம்; கார்ஷெட்டில் இருக்கும்படி செய் என்று கூற அவனும் அப்படியே செய்கிறான். வேலைக்காரி இளஞ் சேரனுக்குச் சோறிடுகிறாள். கார்ஷெட்டில் சோறுண்ட இளஞ்சேரன் ஆப்பிள் கூடையை அக்காளிடம் கொடுக்க வேண்டும் என்று கூற வேலைக்காரி ஆப்பிளை வாங்கிக் கொண்டு, நீ ஊருக்குப் போக வேண்டும் பிறகு ஒரு சமயம் வரலாம் என்று கூற, இளஞ்சேரன் திடுக்கிட்டு அக்காவா - அப்படிச் சொன்னார்கள் என்கிறான். அக்கா வும் அத்தானும் சொன்னதைத்தான் சொன்னேன் என்று வேலைக்காரி கூற இளஞ்சேரன் ஊர் செல்கின்றான். இதை மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மங்கையர்க்கரசி ஓடிவந்து இளஞ்சேரனை வழி மறிக்க அதைக்கண்ட அன்னம் வழிமறிக்கும் மங்கையர்க்கரசியை இழுத்து வரும்படி வேலைக்காரியை அனுப்புகிறாள். உடன் பிறந்தே கொல்லும் வியாதி எனத் தள்ளாடி நடந்து தந்தை தாயை அடைகிறான் இளஞ்சேரன். இளஞ்சேரன் நடந்தவைகளைப் பெற்றோரிடம் உடன் பிறந்தோ ரிடமும் கூறுகின்றான். கஞ்சிக்கு வழியில்லையாயினும் பசி பொறுத் திருந்த அவர்கள் மானம் பொறுக்கமுடியாது வருந்தித் துடிக்கிறார்கள். பூங்கோதை புகலுகின்றாள். அண்ணா அடுத்த தெரு முனை யில் வீட்டுக்காரர் மகளுக்கு ஆர்மோனியம் சொல்லி வைக்க ஆள் தேடுகிறார்களாம். என்னை அழைத்து போய், அமர்த்தி முன் பணம் ஏதாகிலும் பெற்றுவரலாம் என்று கூற, இருவரும் போகிறார்கள். இருவரும் போனபின், ஏழுமலை முதலியார் தன் மனைவியை அழைக்கிறார். நம் தலைமுறையில் பேர் காக்க இளஞ்சேரனும் பூங்கோதையும் இவ்வுலகில் இருக்கட்டும். இந்தக் கொலையுலகை அவர்கள் சமாளித்துக் கொள்வார்கள். துன்பம் சிறிதும் இல்லாத உலகுக்கு என்னுடன் வந்துவிடு. அவ்விருவர்போக மற்றச் செல்வச் சிறுவர்களையும் கையோடு கூட்டிச் செல்வோம் என்று கூறி அங்கொருபுறம் சென்று ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த நஞ்சை எடுத்து வந்து தண்ணீரில் கலந்து மக்கட்குத் தந்து மனைவிக்குத் தந்து தானும் உண்டு மாய்கின்றான். அனைவரும் மாண்டார்கள். அண்டை வீட்டுக்காரி வந்து பார்க்க அயலாரும் கூடி விடுகின்றார்கள். அடுத்த தெருவுக்குச் சென்றுள்ள இருவரையும் அழைத்து வரச் சென்ற அருணாசலப் பெரியார் அவர்கட்கு உலகின் நிலையாமை கூறி அழைத்து வருகிறார். அவர்கள் ஏன் இங்குக் கூட்டம் என்று கேட்கிறார்கள். மேலும் அருணாசலப் பெரியார் தமிழர் பெருமை கூறத் தொடங்கி தமிழர் இளிவரின் வாழாத மானமுடையார் எனக்கூறி உன்னை உன் தமக்கை அவமானப்படுத்தியதை நீ உன் பெற்றோர் களுக்குக் கூறினாய். அதனால் அவர்கள் மானமிழந்து வாழ ஒப்பாது நஞ்சுண்டு மாண்டார்கள், என்கிறார். பிணங்களைச் சூழ்ந்திருந்தவர்கள் விலகுகிறார்கள். பெற்றோரும் உடன்பிறந்தோரும் இறந்து கிடப்பதறிந்த இருவரும் அலறித் துடித்து அழுகிறார்கள். பிணங்கள் படம் பிடிக்கப் படுகின்றன. இளஞ்சேரனும் பூங்கோதையும் அயலூர் செல்லுகிறார்கள். தெருவாரெல்லாம் பார்த்து இரங்குகின்றார்கள். ஒருவன் படம் பிடித்ததின் காப்பி ஒன்றை இளஞ்சேரனுக்குக் கொடுக்கிறான். பொன்னகரம் இரவு ஒரு சத்திரத்தை இருவரும் நெருங்குகிறார்கள். பொன்னகரத்து மைனர் மாணிக்கம் பூங்கோதை மேல் கண்வைத்துத் தன்னுடனிருந்த குண்டர்களுக்குச் சைகை காட்டிச் சென்று விடுகிறான். சத்திரத்தை அடைந்த இருவரும் சற்றுநேரம் சத்திரக் காவல் சபாபதிக் கிழவரிடம் பேசியிருந்து மிருதங்கம் வேணு விலாசம் தெரிந்து கொண்டு தங்கையை அங்கேவிட்டுச் சாப்பாடும் வாங்கி வந்து விடுகிறேன் என்று வெளிச் சென்றவுடன், குண்டர்கள் தந்திரமாய்ப் பேசி வெளியில் வரச்செய்து தூக்கிப்போய் விடுகிறார்கள் பூங்கோதையை! இளஞ்சேரன் வருகிறான். அவளைக் கொண்டுபோனவன் இருப்பிடத்தைக் கிழவரால் அறிந்து அங்கு ஓடி மாணிக்கத்தைத் தூணில் கட்டிப்போட்டுத் தங்கையை மீட்டு வருகிறான். தீயவரால் மேலும் தீமை வரும் என்று அஞ்சிக் கிழவர்தம் குடிசைக்குக் கொண்டு போகின்றார் இருவரையும்! குடிசையில் கிழவன் மகன் முத்துவேல் அறிமுகம் ஏற்படு கின்றது. பூங்கோதை சம்மதித்தால் பற்பொடி, பாடி விற்கும் வேலையில் அமர்த்துவதாக முத்துவேல் கூறப் பூங்கோதை சம்மதித்து வேலை ஒப்புக்கொண்டு நடத்துகிறாள். பெங்களூருக்கு நாட்டியக் கம்பெனியோடு சென்ற வஞ்சிக் கொடி திரும்பிவந்து பொன்னகரத்தில் தன் குடும்ப நண்பரான திருவரசனுடன் நாட்டியக் கலை மன்றம் ஏற்படுத்துகிறாள். ஒருபுறம் நாட்டியக் கலை மன்றத்தில் ஆட்கள் இருவர் சண்டை யிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த இளஞ் சேரன் அப்பக்கம் உலவுகிறான். இருவரில் அநியாய வழிச்சென்ற ஒருவனைக் கண்டிக்கிறான். அவன் எதிர்க்கிறான். இளஞ்சேரன் அடித்துத் துரத்துகிறான். துரத்தவே மற்றவன் நாட்டியக்கலை மன்றத்திற்குப் போக அஞ்சுகிறான். அவனை அழைத்துக் கொண்டு போக இளஞ்சேரனுக்கும் துரத்தப்பட்ட பார்ட்டிக்கும் போர் நடக்கிறது. திருவரசன் அங்கு வந்து செய்தியறிந்து அநியாயம் செய்தவனைக் துரத்திவிட்டு இளஞ்சேரனைக் காவற்காரனாய் அமர்த்துகிறான். அழக நம்பி முதலிய ஐந்துமில் ஓனர்கள் தங்களில் ஒற்றுமை ஏற்படுத்தக் கூட்டம் கூடிப் பேசுகின்றார்கள். மற்ற நால்வரின் அக்ரமப் போக்குக்கு அழகநம்பி ஒப்பாததால் மற்றவர்கள் அழகநம்பியைப் பழிவாங்க நினைக்கிறார்கள். இளஞ்சேரன் வழக்கப்படி குடிசைக்கெதிரில் கட்டிலில் படுத்திருக்கிறான். தூக்கம் வரவில்லை. தனியே செல்லுகிறான். கிழவர் தூங்கும்படி சொல்லுகிறார். தன்னுள் அநேக ரகசியங்களை அடக்கிக் கொண்டிருக்கும் இருட்டின் நடுவயிற்றைப் பிளக்க என்னைத் தனிமை அழைக்கிறது தாத்தா என்று கூறிச் செல்லுகிறான். அழகநம்பியின் கார் ஏரிக்கரையைத் தாண்டுகிறது. கார் வழி மறித்து நிறுத்தப்படுகிறது. உள்ளிருந்த அழகநம்பி தாக்கப்படுகிறான். இளஞ்சேரன் குண்டர்கள் மேல் பாய்ந்து எதிர்த்துப் போராடுகிறான். அடிபட்டு ஓடும் குண்டர்களில் ஒருவன் இளஞ்சேரன் மண்டையில் அடித்துவிட்டு ஓடி விடுகிறான். காயமுற்ற இளஞ்சேரனை அழகநம்பி காரில் ஏற்றிக் கொண்டு போய் ஆபத்திரியில் சேர்க்கிறான். காலையில் ஆபத்திரியில் இளஞ்சேரனைப் பார்க்க அழகநம்பி புறப்படுகிறான். அவன் மனைவியாகிய மங்கையர்க்கரசி! எங்குப் போகிறீர் என்று கேட்க இளஞ்சேரன் நிலையை அவன் தெரிவிக் கிறான். இளஞ்சேரன் என்ற பெயரைக் கேட்டதும் திடுக்கிட்ட மங்கையர்க்கரசி வெளியில் காட்டிக் கொள்ளாமல் நானும் வருகின்றேன் என்று காரில் ஏறிக் கொள்ளுகிறாள். அதே நேரம் திருவரசனும் ஆபத்திரிக்குப் புறப்படுகிறான். இங்கு வேலை செய்து கொண்டிருக்கும் இளஞ்சேரன் அடிபட்டு ஆபத்திரியில் இருப்பதாகவும், அவன் இங்கு வேலைக்கு வராதது பற்றி மன்னிக்க வேண்டு மென்றும் நண்பர் அழகநம்பி தெரிவித்தார் என்கிறான். வஞ்சிக்கொடியும் இளஞ்சேரன் என்ற பெயரைக் கேட்ட வுடன் திடுக்கிடுகிறாள். ஆயினும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் நானும் வருகிறேன் என்று காரில் ஏறிக்கொள்கிறாள். ஆபத்திரியில் இளஞ்சேரன் தலையில் கட்டிய கட்டோடு உறங்குகிறான். கட்டிலின் இடது புறத்தில் நிற்கும் மங்கையர்க்கரசி பழங்கனவு காணுகின்றவளாய் நெஞ்சில் இரக்கத்தோடு காத்திருக் கிறாள். வலப் புறத்தில் இரண்டு விழிகள் கலங்குகின்றன. ஓர் உள்ளம் பதைப்பு நீங்கி, இளஞ்சேரன் எப்போது விழிப்பானென்று ஏங்கியிருக் கிறது. விழித்தெழுந்த இளஞ்சேரன் மங்கையர்க்கரசியைத் தாவிச் செல்லும் காதல் பதைப்பினால் என் அன்பே, நீ எங்கு வந்தாய்; எப்போது வந்தாய்; ஏன் வந்தாய், என்று கூற அவள் மங்கிய குரலால் இரண்டு சொல் சொல்லி, சற்றே ஒதுங்கி நிற்கிறாள். இளஞ்சேரன் மறுபுறம் திரும்புகிறான். அவனை வஞ்சிக்கொடி மகிழப் பேசி கண்ணீர் வடித்து, சுருக்கமாகத் தன் நிலையைக் கூறி முடிக்கிறாள். அங்கிருந்த சங்தேக உள்ளங்கள் சிறிது நேரம் பேசி இருந்து, மறுநாள் இளஞ்சேரன் அழகநம்பி வீட்டிற்குச் செல்லவேண்டுமென்று முடிவு கட்டிப் பிரிகிறார்கள். மறுநாள் அழகநம்பி வீட்டில் ஓர் அறையில் அழகநம்பி, மங்கையர்க்கரசி, வஞ்சிக்கொடி திருவரசன் ஆகியோர் தமக்குள் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் இருந்து உள்ளே வந்த இளஞ்சேரன், கூடத்தில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருக்கும் மங்கையர்க்கரசியை பழைய நினைவோடு நெருங்கி, நான் செந் தமிழே உயிரே வாசிக்கிறேன். நீ அதைப் பாடிக்கொண்டே சற்றே ஆடு என்று கூறுகிறான். அவள் ஆடுகிறாள். இடைஇடையே இளஞ் சேரன் காதல் ததும்ப கண்ணே பொன்னே என்று நெருங்க அவள் பக்குவமாக விலகிக்கொள்கிறாள். ஆடல் உச்ச நிலையை அடைகிறது. அவள் ஆடைக்குள்ளிருந்த தாலி வெளியில் தோன்று கிறது. அவன் உற்று நோக்குகிறான். ஆத்திரம் கொள்ளுகிறான். காரணம் கேட்கிறான். நான் அழகநம்பியின் துணைவி என்று கூறுகிறாள். அவள் உள்ளே சென்று விடுகிறாள். இவன் மேற் போர்வையை முறுக்குகிறான். தூலத்தைப் பார்க்கிறான். இவன் தற்கொலை முயற்சியை கண்ட அறையில் உள்ளவர்கள் பதறு கிறார்கள். அழகநம்பி இளஞ்சேரனின் எதிரில் வந்து நின்று நண்பரே, நீர் மணக்க இருந்த மங்கையர்க் கரசியை நான் மணந்து கொண்டேன். அதன் பொருட்டு நீர் தற்கொலை செய்து கொள்ள முற்படுகிறீர். உங்கள் பொதுநலத் தொண்டை இவ்வுலகம் எதிர் பார்த்து தவம் கிடக்கிறது. நில உலகில் நீவிர் நீடுழி வாழ்ந்திருக்கவேண்டும். இதோ பாரும் நீளக்கத்தி. இதைப் பெற்றுக் கொள்வீர். பின்னடைய வேண்டாம். இரு துண்டாக என்னை வெட்டி வீழ்த்துவீர். மங்கையர்க்கரசி கைம்பெண்ணாவாள். நீவிர் மகிழ்ச்சி யோடு அவளை மறுமணம் புரிந்து நாட்டுக்கு வழி காட்டுவீர் என்று கூற, இளஞ்சேரன் சிந்தனை உலகில் சிறிது நேரம் சஞ்சரித்து, மீண்டும் எதிர் நிற்கும் அழகநம்பியை மங்கையர்க் கரசியை இன்று முதல் எனக்கு நீங்கள் அன்னையும் தந்தையும் ஆவீர். தீய வழியிற் சென்ற என் உள்ளத்தை நல்வழியிற் திருப்பி னீர்கள் என்று கூறுகிறான். அறையினின்று மற்றவர்கள் வெளி வருகிறார்கள். வஞ்சிக்கொடி விழிகள் இளஞ்சேரனுக்குப் புதிய விண்ணப்பம் எழுதுகின்றன. அழக நம்பியும் திருவரசனும் வஞ்சிக் கொடியை மணந்து கொள்ளும்படி குறிப்பாகக் கூற மண வாழ்க்கை எனக்கு வேண்டாம் என இளஞ்சேரன் மறுக்கிறான். இரவில் தனியே சென்று கொண்டிருந்த பூங்கோதையை மைனர் மாணிக்கம் பார்த்து விடுகிறான். பின் தொடருகிறான். விசில் அடித்த படி! அவள் அச்சத்தால் நிற்காது செல்லுகிறாள். மாணிக்கம் ஓடிப் பிடிக்க முந்துகிறான். ஒரு வீட்டின் எதிரில் நிற்கும் காருக்குப் பின் பதுங்குகிறாள். மாணிக்கம் தெரிந்து நெருங்கித் தாவுகிறான். அவள் காரினுள் குதித்து அதிலிருந்த இரும்புத் தடியால் அவன் மண்டையில் அடித்து வீழ்த்தி அயலில் ஓடுகிறாள். இவை அனைத்தையும் கார் நிற்கும் வீட்டிற்கு உடையவனாகிய திருவரசு பார்த்திருந்தானாகையால் அவனும் வெளி வருகிறான். சமாளித்துக் கொண்டு எழுந்த மாணிக்கம் பூங்கோதையைப் பிடிக்க ஓடுகிறான். திருவரசனும் அனாதைப் பெண்ணைக் காப்பாற்ற ஓடுகிறான். விவரத்தை விசாரித்து மாணிக்கத்திற்கு புத்திமதி கூறி அனுப்பி விட்டுப் பூங்கோதையை வீட்டிற்கு அழைத்து வருகிறான். பூங்கோதை யின் வீர உள்ளத்தைக் கண்ட திருவரசன் உள்ளம் அவளை நாடுகிறது. திருவரசனின் தரும சிந்தனை பூங்கோதையின் உள்ளத்தைக் கவர்கிறது. அவள் இளஞ்சேரன் தங்கை என்பதையும் திருவரசன் அறிந்து கொள்ளுகிறான். மறுநாள் இரவு கிழவர் முதலியவர்களுடன் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த இளஞ்சேரன் என்னைத் தனிமை அழைக்கிறது. மறை வான இரவை ஆராய்ச்சி செய்ய என்று கூறி, தனியே செல்லுகிறான். பாழடைந்த கோயிலின் கோபுரத்தில் ஒரு புறாவைக் கோட்டான் அடிக்கிறது. அங்கு ஒருபுறம் ஒண்டி நின்ற இளஞ்சேரன் சிந்தனையில் ஆழ்கிறான். அதே நேரத்தில் மூட்டை முடிச்சுக்களுடன் சில ஆட்களும் ஒரு முகமூடியும் செல்லுகிறார்கள். கண்ணை மறைக்கும் கருக்கலைப் பிளந்து கொண்டு இளஞ்சேரன் அவர்களைத் தொடர்கிறான். அவர்கள் நீண்ட தூரம் சென்று ஒரு குகையில் நுழைகிறார்கள். இளஞ்சேரன் பதுங்கி இருந்து பார்க்கிறான். குகையில் கட்குடி, ஆடல், பாடல் நடை பெறுகிறது. முடிவில் அவர்களிடம் அயர்வு தலை காட்டுகிறது. இளஞ்சேரன் அங்குக் கிடந்த நீளக் கத்தியால் முகமூடியைக் கொன்று ஆட்களைக் கட்டிப் போடுகிறான். இளஞ்சேரன் குகையை ஆராய்கிறான். பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், பாத்திரங்கள், பவுன்கள், வெள்ளி நாணயங்கள், நோட்டுக் கத்தைகள் காணப்படுகின்றன. மக்கள் சொத்து என்று கூறு கிறது இளஞ்சேரனின் பெருமூச்சு, சாட்டையால் கட்டுண்டு கிடக்கும் ஆட்களை அடித்து விவரமனைத்தையும் கேட்டு அவர்கட்குப் புத்திமதி கூறுகிறான். அவர்கள் நீங்களே இனி எங்கட்குத் தலைவர், நீங்கள் செல்லும் பாதையிலேயே நாங்கள் செல்லுவோம்; என்றும் கூற முகமூடியின் உடையைத் தான் அணிந்து கொண்ட இளஞ் சேரன் தொடங்குவோம் தொண்டு என்று பாடி அனைவரோடும் அங்கேயே தங்குகின்றான். தொழிலாளரை ஏய்க்கும் மில் முதலாளியின் சொத்து முகமூடியால் பறிக்கப்படுகிறது! தங்கக் கலசத்திற்கென பிளாக் மார்க்கட்டுக்கார பெரியசாமி முதலியார் கொடுத்த 500 பவுனைப் பங்கு போட்டுக் கொண்டிருந்த கோயில் பஞ்சாயத்தார், குருக்கள் ஆகியோரை முகமூடி கண்டித்துப் புத்திமதி கூறிவிட்டுப் பவுன்களையும் பறித்துச் செல்லுகிறான். பொதுமக்கள் முகமூடியின் பல தீவிரச் செயல்கள் பற்றிப் புகழ்ந்தும், இகழ்ந்தும் பயந்தும் பேசிக் கொள்கிறார்கள். கோவாப்ரேடிவ் பேங்க் கொள்ளையிடப்படுகிறது. போலீ அதிகாரிகள் பேங்க் கட்டிடத்தில் வந்து தங்கி, பேங்கிற்கு உடையவர்களை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் முகமூடியின் செயல்தான் இது என்கிறார்கள். போலீ காரர்கள் அவ்வாறே புனைந்து எழுதுகிறார்கள். அங்குள்ள ஒருவன் இந்த அக்கிரமச் செயல்களில் சில நாட்களாக முகமூடி தலையிடக் காணோம் என்றுகூற அவனை அனைவரும் அடித்துக் கட்டிப் போடுகிறார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் முகமூடி ஒரு காரை ஓட்டிக் கொண்டு வந்து பாங்கின் எதிரில் நிறுத்திவிட்டு இறங்கிச் செல்லுகிறான். அனைவரும் காரைச் சூழ்ந்து கொள்ளுகிறார்கள். பாங்கின் இரும்பு பெட்டி அழிவில்லாமல் இருக்கக் காணுகிறார்கள். ஐந்து மூட்டைகள் காரில் காணப்படுகின்றன. சாக்கினுள் மனிதர்கள் இருப்பதாக உணர்கிறார்கள். மூட்டைகள் பாங்கின் கூடத்தில் இறக்கி வைக்கப் படுகின்றது. உள்ளேயிருக்கும் கொள்ளைக்காரர்களைக் கட்டுவதற்குக் கயிறுகள் தயார் செய்யப்படுகின்றன. மூட்டைகளைச் சுற்றிப் போலீசுக் காரர்கள் நிற்க வைக்கப்படுகிறார்கள். ஐந்து மூட்டைகளும் அவிழ்க்கப் படுகின்றன. அவற்றின் உள்ளேயிருந்து ஐந்துபேர் கதர் குல்லாயுடனும் கதர்ச்சால்வையுடனும் எழுந்திருக் கிறார்கள். அவர்களைக் கண்ட போலீகாரர் திடுக்கிட்டுச் சலூட் அடித்து நிற்கிறார்கள். குடிசை யெதிரில் இரவு வேளையில் கயிற்றுக் கட்டிலில் இளஞ்சேரனும் முத்துவேலும் பேசுகிறார்கள். இலங்கையிலிருந்து ஒரு பெரும்பணக்காரர் வந்திருக்கிறார். கடை வீதியிலிருக்கும் பங்களாவை நீ காலையில் விலைபேசி வாங்கி விட வேண்டும். அதில் நிறைய மரச் சாமான்கள், சமையலுக்கு உரிய பாத்திரங்கள், பொருள்கள் எல்லாம் வாங்கிவிட வேண்டும். நீதான் அவருக்குக் கணக்கப்பிள்ளை. இந்தா இந்த ஆயிரம் ரூபாயையும் செலவுக்கு வைத்துக்கொள் என்று முத்துவேலைத் திட்டம் செய்து விட்டு இளஞ்சேரன் தனிமையே எனக்கு இனிமை என்று செல்லுகின்றான். கடைத்தெருப் பங்களாவில் இறங்கியுள்ள மயில் வாகனம் பிள்ளையின் வள்ளல் தன்மை எங்கும் பரவுகின்றது. மயில் வாகனம் பிள்ளை, கவிஞர்கட்கும், நூல் வெளியிடு வோருக்கும் ஒரு கோடி ரூபாய் மூலதனத்தில் ஒரு நிறுவனம் உண்டாக்குகின்றான். இவ்வாறே தொழிலாளர்க்கு ஒன்று, ஏழையும் வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழியும் படி தொழிற்சாலைகள் உண்டாக்குகின்றான். சுந்தரமூர்த்தி தன் ஊரில் சூதாடிக் கொண்டிருக்கிறான். அங்கு அவனிடம் அவன் குழந்தை வந்து அம்மாவின் தாலியைக் காணோம் என்று அழுகிறான் அதைக்கேட்ட சுந்தரமூர்த்தி, மஞ்சளைக் கட்டிப் போட்டுக் கொள்ளச் சொல்லியனுப்பி விட்டுத் தன் கடைசி ஆட்டத்தை முடிக்கிறான். அவன் அதிலும் தோல்வி யடைகிறான். நான் கடைசியாக என் மனைவியின் தாலியையும் தோற்றுவிட்டேன். இனி இவ்வூரில் இரேன். மயில் வாகனம் பிள்ளை இருக்கும் ஊருக்கு போய் பிழைக்க வேண்டும் என்று கூறி அயலூருக்கு பெண்டு பிள்ளையுடன் செல்லுகின்றான். மயில் வாகனம் பிள்ளை தொழிற்சாலையை மேற்பார்வை பார்க்க வருகிறார். அங்குத் தம் அக்கா, அத்தான்; குழந்தை ஆகியோரைக் கண்டு மனமிரங்கி, என் வீட்டு வேலைக்கு நீங்கள் வாருங்கள் என்று அழைத்துச் சென்று தம் வீட்டில் இருக்கச் செய்து விடுகிறார். சுந்தரமூர்த்தியும் அன்னமும் மயில்வாகனம் பிள்ளை என்பார் இன்னார் என்று தெரிந்து கொள்ளாவிட்டாலும் சகல உரிமைகளுடன் வீட்டைப் பார்த்து வருகிறார்கள். நாட்டியக் கலை மன்றத்தில் நாட்டிய ஒத்திகை நடக்கிறது. வஞ்சிக்கொடி முதலிய அனைவரும் இருக்கிறார்கள். நாட்டிய மன்றத்தைப் பெரிதாக்க எண்ணி, அனைவரும் மயில்வாகனம் பிள்ளையின் உதவியை நாடுவது என்று தீர்மானிக்கிறார்கள். இளஞ்சேரன் மயில்வாகனம் பிள்ளையின் நெருங்கிய நண்பன் என்று தெரிந்து கொள்ளுகிறார்கள். மயில்வாகனம் பிள்ளை வீட்டில் இல்லை. முதல் நாள் காலை சுந்தரமூர்த்தி அன்னம், பிள்ளையைத் தூக்கிக் கொண்டு எங்கேயோ போய்விட்டார்கள். இப்போது வீட்டில் இளஞ்சேரனும் முத்து வேலுந் தான் இருக்கிறார்கள். ஒரு காரில் மங்கையர்க்கரசியும், வஞ்சிக் கொடியும், திருவரசனும், பூங்கோதையும் வந்து இறங்கு கிறார்கள். மங்கையர்க்கரசி இளஞ்சேரனை நோக்கி... ஓ என்று கதறி நான் இனி என் கணவன் முகத்தில் விழிக்க மாட்டேன். நீதான் என்னை ஆதரிக்க வேண்டும் என்று வீழ்ந்து புரளுகின்றாள். இளஞ்சேரன் ஐயோ வேண்டாம். நீ போய்விடு நீ எனக்குத் தாய் என்று தலையி லடித்துக் கொள்ளுகின்றான். இந்த நிலைமையைச் சாதகமாகக் கொண்டு, திருவரசன், வஞ்சிக் கொடியை இளஞ்சேரன் மணம்புரிந்து கொள்ளும்படி செய்து விடுகின்றான். வஞ்சிக்கொடிக்கு இளஞ்சேரன் மாலையிடப் போகின்றான். அவள் மாலையை விலக்கித் தேம்பி அழுகின்றாள். ‘v‹nghš X® ïs« k§if ï‹g¤J¡»lÄ‹¿¤ Jo¡ifÆš vd¡F k£L« kzkh? என்று கூறி, திருவரசன் பூங்கோதையை மணக்கும்படி செய்துவிடுகின்றாள். அதே நேரத்தில் மங்கையர்க்கரசியின் கணவனான அழகநம்பி நாடகம் வெற்றிதானா என்று கூறிக்கொண்டு உள்ளே நுழைகிறான். மங்கையர்க்கரசி அவன் தோளில் சாய்ந்து சிரித்துக்கொண்டே ஒட்டிக்கு இரட்டிப்பான வெற்றி என்று கூறு கின்றாள். மங்கையர்க்கரசி மனதாபம் வெறும் நடிப்புத்தானா என்று கூறி இளஞ்சேரன் உண்மையைத் தெரிந்து கொள்ளுகின்றான். மாலையில் மயில்வாகனம் பிள்ளை மணவிருந்து வைக்கின் றான். அனைவரும் சென்று வாருங்கள் என்று இளஞ்சேரன் அனைவ ரையும் அனுப்பி வைக்கின்றான். விருந்தில் அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள். இளஞ் சேரனைக் காணவில்லை. ஆனால் அறையில் வாசற்படியில் மயில் வாகனம் பிள்ளை நிற்கிறார். அவர் எங்கே என்று வஞ்சிக்கொடி கேட்கிறாள். அதற்கு மயில் வாகனம் பிள்ளை, நீ என்னையே மணந்து கொள் என்று கூறுகிறான். அனைவரும் ஆத்திரம் அடைகிறார்கள். மயில்வாகனம் பிள்ளை அறைக்குள் சென்று விடுகிறார். முகமூடி தோற்ற மளிக்கிறான். முகமூடி கூறுகிறான் நீ என்னை மணந்து கொள் என்று. ஆத்திரம்! கடைசியில் மூவரும் ஒருவரே என்று தெரிந்து மகிழ்ந்து விருந்துண்ணுகிறார்கள். அதே நேரத்தில் மாறு வேஷத்தோடிருந்த மயில் வாகனம் பிள்ளையைப் போலீசுக்காரர்கள் விலங்கிட்டு அழைத்துச் செல்லுகிறார்கள். கோர்ட் நீதிபதி - தீர்ப்பில் இளஞ்சேரனுக்குப் பாராட்டும் விடுதலையும் அளிக்கிறார். காட்டிக் கொடுத்த சுந்தரமூர்த்திக்கு, இளஞ்சேரன் ஆதரவு தருகிறான்.  ஐயர் வாக்குப் பலித்தது ஐயர் வாக்குப் பலித்தது வைதிகப் பிடுங்கல் கேசவப் பிள்ளைக்கு வயது 65க்கு மேலாகிறது. அவருடைய சிங்காரம் பிள்ளை என்ற குமாரர் தம் மனைவி மக்களுடன் தகப்பனார் வீட்டிலேயே வசித்து வந்தார். சிங்காரம் பிள்ளைக்குச் சுயமரியாதையில் சிறிது நம்பிக்கையுண்டு. ஒருநாள் தம் தகப்பனாரிடம் பேசிக்கொண்டு இருந்த ராகவய்யரிடம் சிங்காரம் பிள்ளை குறும்பாய்ப் பேசிய தென்னமோ வாதவந்தான். ராகவய்யர் கோபத்தால் ஒருவரைச் சபித்தாலும் சந்தோஷத்தால் ஒருவரை அநுகிரஹித்தாலும் அது பலித்துவிடும். குறும்பாகப் பேசியதற்காகச் சிங்காரம் பிள்ளையை அய்யா ஏது - ஏது இந்தப் பையன் அற்பாயிசுக்காரன் என்று கடுகடுத்தார். குறும்புப் பையனுடைய தந்தை கேசவப் பிள்ளை பாவம் அசந்து போய் விட்டார். பின்னர்ப் பெருமூச்செறிந்தார். ஐயரைப் பார்த்துக் கிழவர் வாமி சிறுவனை மன்னிக்க வேண்டும், ஒன்றையும் மனதில் வைக்கலாகாது என்று கெஞ்சினார். தீர்ந்து போச்சு. ஐயர் கோபம் தணிந்ததோ தணியவில்லையோ அப்போது ஒன்றும் தோன்ற வில்லை. கிழவர் பையனைத் தனிமையில் கூப்பிட்டு, என்னடா வரவரப்புத்தி உனக்குக் கெட்டுப் போய்விட்டது என்றார். பையன் - எனக்கும் 40 வயது ஆகப்போகிறது. 16 வயதுள்ள பையனுக்கு நான் தந்தை. ஏதோ ஊரில் உலகில் பத்துப்பேரிடம் மரியாதையாய்க் காலந் தள்ளியாக வேண்டும். எப்போது பார்த்தாலும் இந்தப் பிராமணன் என்னை வாடா, போடா என்கிறான். ஏதோ உங்களுக்குப் பிடிக்கிறது. எனக்கு அதெல்லாம் சரிப்படாது. சுயமரியாதைக்குப் பங்கம் வர அவன் பேச நான் அவனிடம் கையேந்தி நிற்கப் போவதில்லை. கையேந்தும் காலம் வந்தாலும் மனிதனுக்கு மனிதன் இழிவுபடுத்துவதை எப்படிச் சகிப்பது. கிழவர். உம் வீட்டுப் புரோகிதர் பிராமணர். அவர் ஒன்று சொன்னால் அப்படியே பலித்துவிடும் அடடா என்ன புத்தியடா இதெல்லாம் என்ன கேடு காலத்திற்கோ அத்தியாயம் - 2 மேல் அத்தியாயம் நடந்து எண்ணிப் பத்து தினங்கள் ஆக வில்லை. கிழவர் வீடு அழுகுரலால் நிரம்பிற்று. சிங்காரம் பிள்ளை மனைவியின் துயரம் சொல்லி முடியாது. சிங்காரப் பிள்ளையின் பிள்ளைகள் அலறுகின்றன. வீட்டுக் கிழவி சிங்காரம் பிள்ளையின் தாய் வயது வந்த தன் ஒரு பிள்ளையைப் பறிகொடுத்தேனே என்று வாயிலும் வயிற்றிலும் அறைந்து கொண்டாள். சிங்காரப்பிள்ளை குற்றாலத்து அருவியில் வீழ்ந்து விட்டார் என்று சிங்காரப் பிள்ளையின் நண்பர் வந்து கிழவரிடம் சொல்லியதுதான். கிழவர் ஐயோ ஐயர் வாக்குப் பலித்ததே என்று மூர்ச்சையானவர் மூர்ச்சையானவரே, இதைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தார்கள் பொதுமக்களின் பணத்தால் குருகுலம் தாபித்து ஒருசார் மக்களையே உயர்த்தப் பார்த்த ஐயரை விழுங்கிய அருவி, ஒரு பாவத்தையும் அறியாத சிங்காரப்பிள்ளையை ஏன் தன் அகட்டில் மறைத்தது? என்று வருந்தினர். மற்றும் சில உறவினர் சிங்காரப்பிள்ளைக்குத் தண்ணீர்த் தத்து இருப்பதாக மாத்திரம் சோசியர் சொல்லியிருந்தார். ஆக, சரியாய் முடிந்தது என்றார்கள். பிரேதம் தேடப்போன ஆட்கள் அகப்படவில்லை என்று சொல்லிவிட்டார்கள். மறுநாளும் சென்றது. பல நாட்கள் போயின சிங்காரப் பிள்ளையின் மனைவி மாங்கிலியம் இழந்தாள். வெள்ளை உடுத்தினாள். புஷ்பம் இழந்தாள். மஞ்சள் குங்குமம் இழந்தாள். இறந்தவர்க்காகச் செய்யும் கிரியைகள் சம்பர்பமாய்ச் செய்யப்பட்டது. ஐயரின் சாபதுக்ர சக்தி ஆதிக சங்கத்தாருக்கும் ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தது. அத்தியாயம் - 3 பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய் மெல்லப் போனதுவே (பட்டினத்தார்) சிங்காரப்பிள்ளை இறந்த தலைத் திதியும் வந்துவிட்டது. தாய் தந்தையர்க்குச் சிங்காரப்பிள்ளை தலைப்பிள்ளையும் ஒரு பிள்ளையுமாகையால் திதியை இலேசாய் நடத்திவிடக் கிழவர் சம்மதிக்கவில்லை. வீட்டுப் புரோகிதரான ஐயரைக் கிழவர் அழைத்தார். திதிக்குத் திட்டம் போட்டார். 100 பிரமணோத்தமர்கட்கு சோமன், அங்கவதிரம், குடை, பாதை குறடு, விசிறி, செம்பு மணை இவைகள் தயார் செய்யுங்கள். 100 பேருக்கும் இயன்ற அளவு சொர்ண தானம் நடக்க வேண்டும். 5 பேருக்குக் கோ (பசு) தானம் நடந்தாலே போதும் ஏரியுட்வாயிலுள்ள நஞ்சையில் ஒரு காணி (எனக்கு) வீட்டுப் புரோகிதருக்குப் பூதானம் கொடுத்தால் போதும். இதுதான் வேறொன்று மில்லை. பையன் பிராமணனை நிந்தித் திருந்தான். கேவலம் பன்றி நாயாய்தான் அவன் பிறந்து கஷ்டப் படுவான். என்ன செய்கிறது? மேற்சொல்லிய காரியம் சரிவர நடந்தால் ஒருவாறு மீளுவான் என்று சாத்திரம் சொல்லுகிறது. மற்றபடி நானாக ஒன்றும் சொல்லவில்லை என்று ஐயர் சொன்னார். திங்கட்கிழமை நெருங்கிற்று. எல்லாம் தயாரில் இருந்தன. உள்ளூர் அயலூர்ப் பிராமணோத்தமர்கள் முதல்நாளே திதி நடக்கும் வீட்டை முற்றுகையிட்டனர். திங்கள் காலை மலர்ந்தது. தெரு நிறைய பிராமணோத்தமர்கள் கேசவப்பிள்ளை வீட்டுத் திதியில் பிதற்றும் மந்திரங்கள் பேரோசையோடு முழங்குகிறது. பிள்ளை வீட்டில் அயலூர் உறவின் முறையார் கூட்டம் சொல்லி முடியாது. அதில் ஒரு கிண்டல் காரக் கிழவன்வந்து தொலைந்தான். வீட்டுப் புரோகிதர் கிரியை ஆரம்பித்தார். ஐயர் எதிரில் மலைமலையாய் அரிசிக் குவியல்; பால், தயிர், கோமயம், பரிவாரம், மரக்கறிகள், தானப் பொருள்கள், மந்திர முழக்கம், சம்பாரமம்! சமப்பரமம்!! கிழவர், இறந்தவனின் மனைவி, கிழவி மற்றவர்களும் இருந்தார்கள். இறந்தவர் மகன் திதி கொடுக்கப் பக்தி சிரத்தையாய் எதிரில் உட்கார்ந்திருந்தான். ஐயர் சாணிப் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு ஓர் மந்திரத்தால் உருக் கொடுத்தார். கிழவர் : ஏன் சாமி பிள்ளையார் உரு - சத்தி அதில் வந்திருக்குமே? ஐயர் : ஆஹா! கிழவர் : ஏன் சுவாமி மற்றும் கிரியை நடந்து கொண் டிருக்கையில் செம்பு ஜலத்தில் சிந்து, கங்கை, யமுனா முதலிய ஜலம் வந்திருக்குமே? ஐயர் : மற்றெதற்கு மந்திரம்? ஐயர் மங்குப் பிரதிஷ்டை செய்த மூர்த்திகளுக்கு அர்ச்சிக்கச் சொர்ண புஷ்பம் கேட்கிறார். கிழவர் : சுவாமி இங்கு நதியையெல்லாம் கொண்டுவந்த, சாணியிலும் மஞ்சளிலும் மூர்த்திகளையெல்லாம் உண்டாக்கிய மந்திரம் இந்தப் புஷ்பத்தைச் சொர்ண புஷ்பமாய் ஆக்க முடியாதோ? ஐயர் : என்ன நீர் கிண்டல் செய்கிறீரா ஓய்... (கிழவர் முதலியவர் விழிக்கிறார்கள். இந்தக் கிழவர் யார் என்பதை அப்போது தான் நிதானிக்கிறார்கள்) தானங்கள் இறந்தவற்குப் பிரீதி செய்யப்படுகிறது. கிழவர் : இவையெல்லாம் இறந்தவற்குப் பிரீதியாகுமோ? அங்குப் போய்ச் சேருமோ? ஏன் சுவாமி! அவர் வாங்கிக் கொண்ட தாய்ப் பதில் எங்கட்குப் எப்போது வரும்? ஐயர் : (கோபமாய்) ஓய் சும்மாயிருக்க மாட்டீர்? இறந்தவனா பதில் எழுதி விடுவான். அவன் நாயாகவோ பன்றியாகவோ எங்குத் தவிக்கிறானோ? கிழவர் : இவ்வளவு மந்திரம் கற்றவர் அவரை (இறந்த வரை) வரவழைக்கிறதுதானே? ஐயர் : இறந்து தொலைந்தவன் உங்கள் அப்பன் காலத்தில் வருவானாங் காணும். கிழவர் : இதோ நான் வந்திருக்கிறேனே? ஐயர் : நீரா? கிழவர் : தம் பொய்த்தாடியை எடுத்து இறந்துபோன சிங்காரம் பிள்ளையாய் நின்றார். அவர் கையிலிருந்த தடியை இன்னும் அவர் ஓங்க வில்லை. புருவம் மாத்திரம் நெற்றியில் ஏறிற்று. ஐயர் : ஓட்டம் - அனைவரும் ஓட்டம் - இழக்க வந்த தானம் மீண்டது. கிழவருக்கு மகன் வந்தான். மனைவிக்கு நாயகன் வந்தான். பிள்ளைக்கு தந்தை வந்தார். சிங்கப்பூருக்குப் போயிருந்த சிங்காரம் பிள்ளையை அவர் நண்பர் அடைந்தார். சுயமரியாதைத் தொண்டன், (ஈரோடு, 6.7.1929), ப. 17; வெளியிடுவோர்: பி. சாமிநாதன், அச்சகம்: சென்ட்ரல் அச்சகம், ஈரோடு.  ஆக்கம் ஆக்கம் உன்னத சமூகப் படம் கதை, வசனம் : திருவள்ளுவர் டைரக்ஷன் : பாரதிதாசன் புரோடியூசர் : முத்து ஆக்டர் விவரம் ஆக்கம் : நெல்லுமூட்டைக் குதிரை வழிப்போக்கன் : பார்ப்பனன் ஊக்கமுடையான் : நெசவாளி சீன்ஒன்று : ஒரு குதிரை மேல் நெல்லு மூட்டையாகிய மனிதன் தன் தோளில் இரும்புப் பெட்டியும் மற்றொரு தோளில் பழக்கூடையும் இரு கையில், உடைகள், மாலையுமாகத் தோற்றமளிக்கிறான். சீன் இரண்டு : வழி: அவ்வழியில் ஓர் பார்ப்பனர் நிற்கிறார். சீன் மூன்று : ஆக்கம் கேட்கிறான்: அந்த ஊக்க முடையான் வீடு எது ஐயா? வழியில் நிற்கும் பார்ப்பனன்: அடடா! என் வீட்டுக்கு இல்லையா? அதோ அந்த நெசவாளி வீடு, போய்த் தொலை! சீன் நான்கு நெசவாளி - அவன் வீட்டில் ஆக்கமாகிய அப் பொருள்கள் வரிசையாக அமர்ந்திருக்கின்றன. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை ஆக்கம் - பொருள்; அதர் - வழி; வினாய் - கேட்டு (அசைவில்லாத ஊக்கமுடையானிடம் பொருள், வழி கேட்டுக் கொண்டு போய்ச்சேரும்) - முத்து, சிறுவர் வாரப் பத்திரிகை (தீவினை) டண்ட் கதை, வசனம் : திருவள்ளுவர் டைரக்ஷன் : பாரதிதாசன் புரோடியூசர் : முத்து சீன் ஒன்று : தீவினை செய்த இரண்டு பேரை வாரண்டுடன் தொடர்கின்றான் கான்டபிள். ஐயையோ! எங்கே போனாலும் வந்து விடுகிறதே இந்த வாரண்டு என்று ஓடுகிறார்கள் இருவரும். சீன் இரண்டு : ஒருவன் தன் காலடியைப் பார்க்கிறான். தன் நிழல் காணப்படுகிறது. ஐயையோ! எங்கே போனாலும் இந்த நிழல் என் அடியையே தொடர்கிறது என்று ஓடுகிறான் அவன். சீன் மூன்று : திருவள்ளுவர் அமர்ந்திருக்கிறார். அவருக்கு வலப்புறம்:- தீயவை செய்தார் இருவரும்; எங்கே போனாலும் வாரண்டு; என்ன செய்வதுங்க என்கிறார்கள் - அவருக்கு இடப்பக்கம்:- எங்கே போனாலும் நிழல் விடலேங்க என்ன செய்வது? என்கிறான். வள்ளுவர் கூறுகிறார், கெட்ட காரியம் செய்யாதீர்கள்! அதனால் ஏற்பட்ட கெடுதல் (வாரண்ட்) உம்மைத் தொடர்கின்றது. அது எது போல என்றால் இதோ இந்த ஆளின் அடியை நீங்காமல் நிழல் தொடர்வது போல. தீவினை செய்தார் கெடுதல் நிழல் தன்னை வீயாது அடிஉறைந் தற்று குறள் தீவினை - கெட்ட காரியம்; வீயாது - நீங்காமல் முத்து, சிறுவர் வாரப் பத்திரிகை தீவினை ஆக்கம் உன்னத சமூகப் படம் கதை, வசனம் : திருவள்ளுவர் டைரக்ஷன் : பாரதிதாசன் புரோடியூசர் : முத்து ஆக்டர் விவரம் ஆக்கம் : நெல்லுமூட்டைக் குதிரை வழிப்போக்கன் : பார்ப்பனன் ஊக்கமுடையான் : நெசவாளி சீன்ஒன்று : ஒரு குதிரை மேல் நெல்லு மூட்டையாகிய மனிதன் தன் தோளில் இரும்புப் பெட்டியும் மற்றொரு தோளில் பழக்கூடையும் இரு கையில், உடைகள், மாலையுமாகத் தோற்றமளிக்கிறான். சீன் இரண்டு : வழி: அவ்வழியில் ஓர் பார்ப்பனர் நிற்கிறார். சீன் மூன்று : ஆக்கம் கேட்கிறான்: அந்த ஊக்க முடையான் வீடு எது ஐயா? வழியில் நிற்கும் பார்ப்பனன்: அடடா! என் வீட்டுக்கு இல்லையா? அதோ அந்த நெசவாளி வீடு, போய்த் தொலை! சீன் நான்கு நெசவாளி - அவன் வீட்டில் ஆக்கமாகிய அப் பொருள்கள் வரிசையாக அமர்ந்திருக்கின்றன. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை ஆக்கம் - பொருள்; அதர் - வழி; வினாய் - கேட்டு (அசைவில்லாத ஊக்கமுடையானிடம் பொருள், வழி கேட்டுக் கொண்டு போய்ச்சேரும்) - முத்து, சிறுவர் வாரப் பத்திரிகை (தீவினை) டண்ட் கதை, வசனம் : திருவள்ளுவர் டைரக்ஷன் : பாரதிதாசன் புரோடியூசர் : முத்து சீன் ஒன்று : தீவினை செய்த இரண்டு பேரை வாரண்டுடன் தொடர்கின்றான் கான்டபிள். ஐயையோ! எங்கே போனாலும் வந்து விடுகிறதே இந்த வாரண்டு என்று ஓடுகிறார்கள் இருவரும். சீன் இரண்டு : ஒருவன் தன் காலடியைப் பார்க்கிறான். தன் நிழல் காணப்படுகிறது. ஐயையோ! எங்கே போனாலும் இந்த நிழல் என் அடியையே தொடர்கிறது என்று ஓடுகிறான் அவன். சீன் மூன்று : திருவள்ளுவர் அமர்ந்திருக்கிறார். அவருக்கு வலப்புறம்:- தீயவை செய்தார் இருவரும்; எங்கே போனாலும் வாரண்டு; என்ன செய்வதுங்க என்கிறார்கள் - அவருக்கு இடப்பக்கம்:- எங்கே போனாலும் நிழல் விடலேங்க என்ன செய்வது? என்கிறான். வள்ளுவர் கூறுகிறார், கெட்ட காரியம் செய்யாதீர்கள்! அதனால் ஏற்பட்ட கெடுதல் (வாரண்ட்) உம்மைத் தொடர்கின்றது. அது எது போல என்றால் இதோ இந்த ஆளின் அடியை நீங்காமல் நிழல் தொடர்வது போல. தீவினை செய்தார் கெடுதல் நிழல் தன்னை வீயாது அடிஉறைந் தற்று குறள் தீவினை - கெட்ட காரியம்; வீயாது - நீங்காமல் முத்து, சிறுவர் வாரப் பத்திரிகை கொய்யாக் கனிகள் கொய்யாக் கனிகள் இரண்டே காட்சிகள், இரண்டே நாட்களின் நிகழ்ச்சி, ஆச்சரியம், சோகம் உள்ளிட்ட இனிய நாடகம். இது சகோதரர்மீது அன்பு, பெண்கல்வி ஆகியவற்றை இனிது விளக்கும். (ப-ர்) காட்சி - 1 (fij நடைபெறுமிடம் òJ¢nrÇ) கமலம்: பெண்கள் யாவரும் பேதை களாம். அவர் பேச்சை ஆடவர் கேட்பது பிசகாம் அதனால் தான்அவ் வையார் கூட இதமாய்த் தையல் சொற் கேளேல் என்று சொல்லியுள் ளாராம். சுதந்தரம் என்பதே மெல்லியர்க் கில்லையாம். என்ன வியப்பு! கோகிலம்: எடி தங்காய் இந்நாட்டுப் பெண்கள் ஆடவர் கையில் அடிமை ஆயினர். சுதந்தர உணர்ச்சி தோன்ற வேண்டும் இதந்தரு கல்வி இலங்க வேண்டும். இவைகள் இல்லையேல் இந்நாட்டுப் பெண்கட்கு எந்த நாளும் இன்பமில்லை. டிரைவர்: அம்மா இல்லையா? ... ... கமலம்: ... ... ஆர்? இதோ வருகிறேன். ஐயா எங்கே ஆண்டி யப்பா! டிரைவர்: சேட்டுக் கடைக்குச் சென்றார். என்னை வீட்டுக்குப்போ விரைவாய் என்றார் மோட்டார் காரை ஓட்டிக் கொண்டு வீட்டுக் குவந்தேன் விசேஷம் ஒன்று. கமலம்: என்ன விசேஷம்? இங்குவா உள்ளே. என்ன விசேஷம் ஏன் ஆண்டியப்பா? ஆண்டியப்பன்: இந்த இடத்தில் எவரும் இல்லையே? கமலம்: என்றன் தமக்கை! இருந்தால் என்ன? அதனால் பாதகம் இல்லை. அக்கா! (கோகிலமும் வந்து அமர்ந்தாள்) ஆண்டியப்பன்: ஐயா ஒரு ரகசியம் அறிவித்தார். கமலம்: உன்னிடத்திலா? என்ன ரகசியம். ஆண்டி: உங்கள் கொழுந்தன் கோபால் உயிரை மாய்க்கும் படி எனை மன்றாடினார். அவன் மாண்டு போனால் லக்ஷம் வருமாம். கமலம்: அந்தோ! அக்கா அவர் எண் ணத்தை அறிந்து கொண்டீரா? ஆறு வயதுக் குழந்தையைத் தமது கூடப் பிறந்த குற்றமற்றவனை உற்ற தம்பியை ஆவி போக்கி அவனது சொத்தை அநுப விக்கவும் நினைவு கொண்டார். பிள்ளைபோல் வளர்த்தேன் பிரியமாய் வளர்த்த கிள்ளையைப் பூனைக்குக் கொள்ளை கொடுப்பதா? ஒரு லட்ச ரூபாய் வருவதை எண்ணி உடன்பிறந் தானை ஒழிப்பது தருமமா? அன்புதான் அவர் பால் அணுவும் இல்லையா? ஆர் செயும் செய்கை? அக்கா! இதென்ன? கோகிலம்: ஐயா சொன்னார் நீயாது சொன்னாய்? ஆண்டி: ஆகட்டுமென்றுதான் சொன்னேன் அம்மா! கமலம்: உடன்பட் டாயா! உனக்குக் கோபால் இடர் இழைத்ததென்ன அப்பா. கோகிலம்: அவனைக் கொன்றால் அவனது சொத்தை அவர்தாம் அடைவார் உனக்கா அளிப்பார்? ஆண்டி: அவனைக் கொன்றால் ஆயிரம் ரூபாய் அளிப்பதாக அவர் சொல்கின்றார். கோகிலம்: ஒன்று சொல்வேன் உற்றுக் கவனி! உன் எஜ மானனிடம் நீ உரைப்பாய் கோபாலன் தனைக் கூட்டிக் கொண்டு போய்க் கொல்லுதல் என்னால் கூடாது ஆயினும் சின்ன கொய்யா பெரிய கொய்யா என்னுமிருவர் இருக்கின்றார்கள். அவர்களால் இக்காரியம் ஆகும் அவர்களை நாளைக் கனுப்புகின்றேன் என்றுசொல் உன்றன் எஜமானிடத்தில் எம்மிடம் சொன்னதாய் இயம் பொணாது. ஆண்டி: சரிதான் அம்மா! தங்கள் கோபால் தாயற்ற பிள்ளை தந்தையை இழந்தவன் சொத்துக் காகத் தொலைத்து விடுவதா? சொத்தை வருத்தலாம். சோதரன் வருவனோ? கோகிலம்: இலஷம் ரூபாய் எளிதா அப்பா எங்களிடத்தில் இந்தச் சேதியைச் சொன்னதாகச் சொல்லி விடாதே சொன்னால் நமக்கெல்லாம் துன்பம் நேரும். ஆண்டி: அவ்வாறே ஆகட்டும் அம்மா. கோகிலம்: ஆண்டியப்பா மறவாதே யதை. ஆண்டி: இல்லை இல்லை இல்லை சொன்னதில் இம்மியும் மறவேன் இருங்கள் ... ... கோகிலம்: ... ... போய்வா. கோபாலன்: அண்ணீ நமது பெட்டையை அந்த அண்டை வீட்டுச் சேவல் கொத்துது. கமலம்: துரைக்கண் அதைப் போய்த் துரத்துவான் நீவா தோட்டக் கதவைப் பூட்டவில்லையா? ஏதோ சேவல் இருக்கிறதாமே எப்படி வந்தது? எங்குத் தூங்கினாய்? மின்சாரவிசிறி விடு. வியர்க்குது. மிட்டாய் கொண்டுவா. தம்பிக்கு வேண்டும். (ஒரு தட்டில் மிட்டாய் கொண்டுவந்து துரைக்கண் வைக்கிறான்) துரைக்கண்: ஐயாவுக்குக் காரை அவசர மாக ஆண்டி அப்பன் ஓட்டிச் சென்றான். சென்றவன் பங்களாக் கதவைத் திறந்த போட்டுச் சென்றான். அதனால் தெருவிலிருந்து சேவல் வந்து சேர்ந்தது. தம்பிசொல்லத் தெரிந்ததம்மா. கமலம்: சேட்டுக் கடைக்குச் சென்றார் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை பன்னி ரண்டுமணி ஆகுது பசியும் பார்ப்பதில்லை வார்த்தையே சதா. கோபாலன்: குச்சிநாய் வாங்கிக் கொடுக்கிறேன் என்றார் கொடுக்க வில்லை கோபமாய்ப் பேசினார் சைக்கிள் வாங்கித் தருவதாய்ச் சொன்னார் சைக்கிளு மில்லை கிய்க்கிளுமில்லை. கமலம்: ஏன் தம்பீ நீ இன்று காலை என்ன பாடம் எழுதிக் காட்டினாய்? வாத்தியார் கொடுத்த பாடம் வந்ததா? வகுப்பில் உனக்கு வாய்ப்பாடுண்டா? கோபாலன்: குச்சி நாய் வாங்கிக் கொடுப்பியா இல்லையா? கமலம்: கொடுக்கின்றேனே கொஞ்சம் பொறப்பா. கோபாலன்: சாப்பாட்டுக் கடைக்குக் கூப்பிட்டுப் போ எனை அண்ணனிடம் இதைச் சொல்ல வேண்டாம் அவரிடம் சொன்னால் என்னை அடிப்பார் என்றைக்கு வாங்குவது? ... ... ... கமலம்: ... ... ... இன்றைக்கு வாங்கி அளிப்பேன் உண்மையே! கமலம்: பசிவேளையும் போய்ப் பகலும் போய் நல்ல நிசிவேளை வந்தாலும் நீங்கள் - புசியாமல் பேசிக் கொண்டே இருப்பீர் நானிதைக் கேட்டுவிட்டால் ஏசிக் கொண்டே இருப்பீர் எப்போதும் ... ... ராகவன்: ... ... ... ஊசிக்கு வழியிருந்தால் நீயதை வாய்க்காலாய்ச் செய்வாய் பொழியாதே வார்த்தைகளைப் போதும் - ஒழியாத வேலை யேயல்லாமல் வீணில்லை நாளையதி காலையிற் சென்று கணக்கிட்டு - மாலைக்குள் வட்டிப் பணத்தை யெலாம் வாங்கிவிட வேண்டுமெனை முட்டாள் என்றாநினைத்தாய் முட்டாள் நீ! - அட்டி என்ன ஆசனத்தில் உட்கார்ந்தவனோடு கொஞ்சு கின்றாய் போசன மருந்தப் புறப்படலாம் - நீ சற்றும் தாமதிக்காதே தம்பி சாப்பிடுவோம் வாவாவா ஊமையா நீ கமலம் ஒட்டாரமா- மயிலே வருத்தமோ நேரம் வளர்த்தாதே - வாவா கமலம்: திருத்தம்சொல் கின்றீர் தெரியும் - தெரியும் நிறுத்துங்கள் நான் சாப்பிட் டாயிற்று. நீங்கள் உணவருந் துங்கள் உணவருந்தி விட்டு முணுமுணுத் துச்சண்டை மூட்டித் - தணியாத துன்பப் படுத்துங்கள் தொல்லையே யல்லாமல் இன்பமுண்டா, இம்மியுண்டா. இல்லையா - அன்பான வார்த்தையுண்டா? சொன்னால் வரும்கோபம் நாணந்தான் பார்த்து வருகின்றேன் பத்தாண்டாய் - தீர்த்தேன் அடியே அகிலாண்டம்! ஐயாவுக் கன்னம் கடிதில் பரிமாறு கையில் - கொடு வெந்நீர் ஆண்டியப்பா ... ... ஆண்டி: ... வந்துவிட்டேன் ... கமலம்: ... ... அக்காவைக் கூட்டிவா வேண்டியபெட் ரோல்ஊற்றி வேகமாய்த் தாண்டிநட காரைவிடு. கட்டாயம் நாலுமணிக் கெல்லாம் காரணியிற் பங்களா வுக்குப்போய் - ஊருக்கு நாலுநாள் தங்கி வரலாமாம் நாம்எனச் சொல் ஏலுமா னால்விரைவில் இட்டுவா - கேலியல்ல. ராகவன்: தம்பிபடிப் புக்குத் தடங்கல் புரியாதே தம்பியைவிட் டுப்போ தடையில்லை - தம்பி இங்கே இருக்கட்டும் நானுமிருக் கின்றேன் அங்கேஉன் அக்காவும் நீயும்போய்த் - தங்கி இரண்டுநாள் சென்றவுடன் இங்குவந்து சேர்க. சரி, நான்போய்ச் சாப்பிட்டு விட்டு - வருகின்றேன். கோகிலத்தம் மாவைப் போய்க் கூட்டிவா ஆண்டியப்பா! வாயகலம் கொஞ்சமும் வேண்டாம் - போகநல்ல பால்டின்கள் பிகட்டு, பழதினுசு மற்றவைகள் கால்ஸிலிப்பர் கைப்பாட் டரிவிளக்கு - மேலும் வியாதி எவற்றிற்கும் மின்சா ரரசம் தயார் செய்து கொள் நீ... ... கமலம்: ... ... சரி தான் - அயலாரால் துன்பங்கள் நேர்ந்தால் துணையார் ரிவால்வாரில் ஒன்று கொடுங்கள்! ... ... ராகவன்: ... ... நீ ஒன்றே - ஒன்று கொடு கட்டி முத்தம் கன்னத்தில் (முத்தமிடல்) கண்மணியிதோ வந்தேன் கமலம்: ... ... ... பட்டான தம்பி நீ வீட்டிலே தங்கிவிடு நாளைக்குப் பொம்மைகள் சாக்லெட் புதியகுடை பைசீக் கல் இம்மி தவறாமல் எல்லாம் நான் - மெய்ம்மையாய் வாங்கி வருகின்றேன் வருத்தப் படாமலிரு தூங்கி விழித்ததும் துரைக்கண்ணு - பாங்காகக் காப்பி பல காரம் தருவான் கனமாக ஆப்பில் பழந்தருவான் அக்காவைக் - கூப்பிட்டுக் கொண்டு நான் போகின்றேன் அண்ணன் இருக்கின்றார் அண்டையயல் வீட்டில் விளையாடாதே நொண்டி நாய் வந்தால் அடிக்காதே பாடம் வரப்படுத்துக் கந்தனும் நீயும் அதி காலையிலே - முந்தியே பண்டியிலேறிக் கொண்டு பாடசாலைக் குப்போ. குண்டு விளையாடக் கூடாது - ஒண்டியாய் எங்கும் போ காதே.. ... கோபாலன்: ... ... இருக்கட்டும் அண்ணி நான் பங்களாப் பார்க்க வருகின்றேன். - அங்கு மயில்கள் வளர்த்திருக்கும் மான்கள் இருக்கும் குயில்கூவும் பூக்கள் குவியும் - வெயிலும் தெரியாது. தென்ன மரத்தில் இளநீர்க்காய் பெரிது பெரிதாக இருக்கும் - தெரியுமா? கமலம்: தம்பி மழைக்காலம் நீ வந்தால் சங்கடம் வம்பு பேசாதே வருந்தாதே - நம்புவாய் சொல்லுவதை அண்ணி நான் சொன்னபடி கேட்பதுதான் நல்ல பிள்ளைக் கழகு நாகரிகம் - இல்லையா? கோபாலன்: எத்தனை நாள் அங்கே இருப்பீர்கள் ஐந்து நாள் பத்து நாள் தங்கிவிடப் பார்ப்பீர்கள்.... கமலம்: ... ... மொத்தம் இரண்டு நாள் தங்கி உடனே வருவோம் விருதாவாய். அங்கு வெகுநாள் - இருப்போமா. (இதற்குள் அக்கா கோகிலம் வருதல்) கமலம்: ஏனக்கா நாம் அங்கே எத்தனை நாள் தங்குவது? கோகிலம்: போனவுடன் திரும்ப வந்திடுவோம்... கோபாலன்: ... ... ... ஆனால் புளுகு முழுதும் புளுகு புளுகு வெளியாகிப் போச்சுதுங்கள் வேலை - ஒளிவாய் இரண்டு நாளில் வருவோம் என்று சொன்னீர்கள் பெரியண்ணி போவோம் உடனே - வருவோம் என்றார் இரண்டும் புளுகல்ல வா அண்ணி! கமலம்: என்னக்கா இப்படிநீ சொல்லிஎன் வார்த்தையைச் சின்னம் புரிந்துவிட்டீர்... ... கோகிலம்: ... ... சீச் சீ போ - என் கண்ணே நான் சொல்லும் வார்த்தையைக் கேள் காரணிக்கு நாங்கள் போய் மான்போல ஓடி வராவிட்டால் - ஏனென்று கேள் என்னைக் கேலிக்குச் சொல்லவில்லை உண்மையிது போளி, பகோடாகாரப் பூந்தியல்வா - நாளை வரும் போது வாங்கி வருகின்றோம் தம்பி தரும் போது சந்தோஷமாக - இருக்கும் பார். - ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதாமண்டலம் (மாத இதழ்), புத்தகம்-1; வெளியீடு-1, புதுச்சேரி, 1935. (ராகவன் வருதல்) கோகிலம்: வாருங்கள் அத்தான்! ... .... ராகவன்: ... ... வருக வருக இன்று காரணிக்குக் காரில் பயணமோ?... கோகிலம்: ... ... நீரும் கமலமும் சண்டையிடக் காரணமே வேண்டாம் உமக்கும் அவளுக்கும் வீடு - சமர்க்களம் எப்போதும் சண்டை! எதற்கும் மனக்கசப்பு! இப்போதிங்கென்ன நடந்தது - செப்புங்கள்? ராகவன்: ஒன்றுமில்லை! ஒன்றுமில்லை! ஊருக் கிருவரும் சென்றுவாருங்கள் தெரியுமம்மா - ஒன்று நான் சொன்னால் நீர் ஒன்பது சொல்வீர்கள்! உம்மிடம் என்னால் எதுவும் முடியாது! - அந்யாய காலமிது, பெண்கள் சுதந்திரமாம்! கல்வியாம்! கேலிக்கூத் தாயிற்றுக் கேட்டால் - சேலையும் வேண்டாம் என் பார் பெண்கள் வேட்டிதான் வேண்டுமென்பார்! ஏண்டி கமல முனக் கென்னென்ன - வேண்டுமென்றேன் தோட்டா ரிவால்வார் கொடுவென்று சொல்லுகின்றாள் கேட்டாளா இல்லை யா கேளுங்கள்?.... கோகிலம்: ... ... கேட்டாயா? கமலம்: ஆமாம்; அதனாற் பிழையென்ன சொல்லுங்கள்? தீமை அயலார்கள் செய்ய வந்தால் - நாமே நமைக் காத்துக் கொள்வதுதான் நன்று! - சுமை தூக்கச் சும்மாடு கோலுவதும் தீதாநீர் சொல்லுங்கள்! இம்மா நிலத்திலே எவ்விடத்தும் - பொய்ம்மையுளம் வஞ்சகமும் சூதும் மலிந்திருத்தல் நாமறிவோம் வஞ்சியர்கள் என்றால் மகிதலத்தில் - பஞ்சாய் மதிக்கின்றார்! .. .. .... கோபாலன்: பார்க்கின்றேன் உங்களது பச்சைப் புளுகையெல்லாம் ஊர்க்குப் போகின்றீரோ! உம்! போங்கள் - பார்க்கின்றேன்! (பையன் உள்ளே ஓடிவிட்டான்) கார் ஓட்டி: கார் வந்து நிற்கிறது காத்திருக்க வேண்டாம்; அவ் வூர்மிகவும் தூரம் உணர்ந்தீரா - நீர் விரைவில் ஏறுங்கள்! எல்லாம் தயார்செய்தும் ஆயிற்றே ஏறுங்கள்! ஏறுங்கள்! ... ... கோகிலம்: ... ... என்னப்பா! - கூறுவது? காதில்தான் கேட்கிறதே! காக்கைபோல் கத்துவதா? போதும் நிறுத்து! வருகின்றோம் - வாதனை செய்யாதே வந்து விட்டோம்! வந்தாயேடீ கமலம்! (கோபமாய்) செய்யாத தாமதம் நீ செய்! (உடனே கமலம் கோகிலம் இருவரும் காரில் ஏறிமறைதல்) காட்சி - 2 (புதுச்சேரியில் வசந்த விலாசம் என்ற போஜனசாலை; அது சிற்றுண்டிக்கும், போஜனத்துக்கும் வசதியுள்ளது. மேலும், உயர் வகுப்பு மாணவர்களும் உள்ளூரினரும் தங்கியிருக்கவும் வசதியுள்ளது.) (ஒருபுறம் சீட்டாட்டம் நடக்கிறது) விருத்தம் நாராயணன்: இரு நூறு! ... ... கண்ணன்: துருப்பென்ன? ... ... நாரா: ... ... துருப்பு க்ளாவர்! ராகவன்: இறங்கு நாராயணன்! நீ தான் இறங்கு! நாரா: சரி சரி நீ ஆடினது போதும் போதும் தட்டி வாங் கிடவேண்டும் துருப்பை - உன்றன் கருத்தெல்லாம் எங்கேயோ இருக்கு தப்பா! கவலையோ ராகவா? உடம்புக் கென்ன? குரங்குபோல் விழிக்கின்றாய் - ஆடும் போதே குறுக்கில்எழுந் தெழுந்து நீ வெளியிற் சென்றே ஆரையோ பார்க்கின்றாய்! உனது சிந்தை ஆட்டத்தில் இல்லவே இல்லை யப்பா. கண்ணன்: தேர்பார்க்க ஓடுகின்ற குழந்தையைப் போல் தெருவை நோக்கிச் செல்கின்றாய்! விரைவில் ஆர் அங்கே என்கின்றாய் வழிப்போவாரை! அழுமூஞ்சி கொண்டு விட்டாய் என்னசேதி? ராகவன்: ஓர் இழவுமில்லை! சும்மா விளையாடுங்கள் நாரா: உன் இழவு, வேண்டாமே! நிறுத்தாட்டத்தை. (ஆட்டம் கலைகிறது; ராகவன் போஜன சாலையின் தெருக் குறட்டில் நின்று யாரையோ எதிர்பார்க்கிறான்; சின்ன கொய்யா, பெரிய கொய்யா என்ற இரு காரோட்டிகள் மழை யுடையுடன், குடியால் தள்ளாடும் நடையுடன் வருகிறார்கள்.) ராகவன்: (காரோட்டிகளைச் சமீபத்தில் அழைத்துப் பரபரப்புடன்) என்ன நடந்தது? மெதுவாய்ப் பேசுங்கள்! நீர் எவ்விதத்தில்? எவ்விடத்தில் வேலை தீர்த்தீர்? சின்ன குரலால், மெதுவாய், பிறர் கேட்காமல், தெரிவியுங்கள்! சொன்னபடி செய்திட்டீரோ? பெரிய கொய்யா: சொன்னபடியே காரை ஓட்டிச் சென் றோம் சோதரன் - அக்கோ பாலன் பாடசாலை தன்னிலிருந்தான். பதினொன் றரை மணிக்குத் தான்வெளியிலே வந்தான். நாங்கள் கண்டு அண்ணன் உனை அழைத்துவரச் சொன்னார் என்றோம். அப்படியா? ஏன்? என்றான். அவரும் நீயும் அண்ணியைப் போய் அழைத்துவர வேண்டும் காரில் அதிவிரைவில் ஏறென்றோம். ஏறிக்கொண்டான். கண்ணழகும் மூக்கழகும் உம் தம்பிக்குக் காலழகும் மேலழகும் பார்க்கப் பார்க்க எண்ணத்தைக் கவர்ந்தன! அப் பையனைப் போல் எவ் விடத்தும் பார்த்ததில்லை. தங்கப் பொம்மை! மாணிக்கம் சிந்துகின்ற நகைப்பு ! நீல மாமணிபோற் கருவிழிகள்! முத்துப் பற்கள்! ஆணிப்பொன் மெரு கடைந்த அழகுமேனி அடுக்கிவரும் மழலைமொழி அமுது! தங்கத் தூணை - அந்தோ! தூங்கா விளக்கை - நல்ல சுடர்க்கொழுந்தைத் துடிக்கும் வண்ணம் வாள் நுனியால் முடித்துவிட்டோம்! ஒழிந்து போனான்; மண்ணுக்குள் புதைத்து விட்டோம்! வந்துவிட்டோம்! ராகவன்: ஒருவருக்கும் தெரியாதே? (சுற்றுமுற்றும் பார்த்தல்) பெரிய கொய்யா: ... ... கோரிமேட்டில் ஒருவருமில்லை முந்திரித் தோப்புக்குள்! (இதற்கிடையில் ஒருபுறமிருந்து மற்றொருபுறம் செல்லும் கந்தன் ராகவனை நோக்கிச் சொல்லுகிறான்) கந்தன்: தெரிகிறது தெரிகிறது சேதி யாவும்! தெரிகிறது ராகவா நன்றாகச் செய்! (ராகவன் திடுக்கிட்டு கந்தன் பின் அணுகி இரக்கமாய்) ராகவன்: தெரிகிறதா? இந்நேரம் எங்கிருந்தாய்? சேதிஎன்ன ஒன்றுமில்லையே! ஏன் கந்தா! ஒரு வார்த்தையும் பேசா திருக்கின்றாயே? உனக்கும் எனக்கும் வெகுநாள் நேசமாச்சே! கந்தன்: பேசிக் கொண்டிருந்ததெலாம் தெரியும். உன்வாய்ப் பிறப்பை அறிவதற்காகத்தான் கேட்கின்றேன். சின்னகொய்யா: (கோபமாய்) சீ சீ போ முட்டாளே! தெரிந்ததாம்! நீ தெரிந்து கொண்டால் என்னடா முழுகிப் போகும்? கந்தன்: ஆசாமி யாரப்பா ராகவா! நான் அவனோடு பேசவில்லை. அவன் தான் என்னைப் பேசுகின்றான். பல்லெல்லாம் உதிர்ந்து போகும்! பெயர்த்து விடுவேன் மூக்கை வாடா இங்கே! (கந்தன் சின்னகொய்யாவின்மேல் செல்லுகின்றான். ராகவன் குறுக்கிட்டு) ராகவன்: அவசரப்படாதே! அப்பிள்ளை யாண்டான் அறியாமற் சொல்லிவிட்டான். என்முகம் பார்! தவறிவிட்டாய் சின்னகொய்யா இதெல்லாம் என்ன சரியில்லை; சிறுவயது நண்பன் கந்தன் கவலைப் படாதே கந்தா பொறுப்பாய்! கனவானை - ஒரு பெரிய மனிதனை நீ அவசரப்பட் டிவ்வாறு பேசலாமா? கந்தன்: அந்தண்டை விலகுநீ உதைக்க வேண்டும்! பெரிய கொய்யா: (இடைமறித்து) பிழைசெய்தாய்; அவர் பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளையென்றும் நீ சிறிதும் நினைக்கவில்லை. கந்தன்: தழைத்த குடும்பத்தைச் சேர்ந்தவன் யான் - என்றன் தந்தை பெயரைச் சொன்னால் இந்தஊரில் அழுதபிள்ளை வாய்மூடும்! அவர் எழுத்தோ அச்சுப் போலே இருக்கும்! கணக்கப்பிள்ளை எழுத்தாணி பிடித்தெழுத இந்த ஊரில் எவனிருக்கின்றான் என் தந்தை யைப் போல்? பெரியகொய்யா: வெள்ளி ஜரிகை வாங்கி இங்கிருந்து வெளியூருக் கெடுத்துப் போய் விற்ப துண்டு; வெள்ளையாய்ச் சொல்லி விட்டேன் அதுதான் சேதி. மெதுவாக, ரகசியமாய், அதைப் பற்றித்தான் உள்ளபடி பேசிக் கொண்டிருந்தோம். நீவிர் ஒளிந் திருந்து கேட்டிருந்தீர். அதனா லென்ன? கந்தன்: உள்ளதுதான்! ராகவன் சம்பாதிக்கட்டும் உன்னைப்போல் எனக்குமதில் சந்தோஷந் தான்! ராகவன்: இருக்கட்டும் கந்தா நீ போய்வா இந்த இரகசியத்தை வெளிப்படுத்த வேண்டாம் சரி, நேரம் ஆகிறது. போய்வா அப்பா! தயவிருக்கட்டும் போய்வா கந்தா போய்வா. கந்தன்: இருக்கட்டும்! அதற்காகச் சொல்லவில்லை என் தந்தை மிக்க சிவப்பாயிருப்பார் பருத்த உடல்! ராஜாவைப் போன்ற மேனி! பச்சைப் பட்டுச்சட்டை போட்டிருப்பார். முறுக்கி விட்ட மீசையிலே எலுமிச்சங்காய் மூன்று நிற்க வைத்திடலாம்! தெருவில் வந்தால் குறுக்கில் ஒருமலை புரண்டு வருவதொக்கும்! குதிகாலில் தொங்கும் அவர் கட்டும் வேட்டி. நறுக்காக ஒன்றுசொன்னால் நாலு சொல்வார்! நாழிகைக்கு மூன்றுமைல் நடந்து போவார்! சிறுவிரலில் தம்பாக்கு மோதிரத்தைத் தேய்த்துக் கொண்டேயிருப்பார் பட்டுத்துண்டால்! சின்னகொய்யா: கண்மூக்கு வாய்குடுமி இவற்றில் மற்றும் கவனிக்க வேண்டிய விசேஷம் உண்டோ? உள்நாக்கு க்ஷேமமா? அதனை மாத்ரம் உரையப்பா! ஏனப்பா உன் தந்தைக்குப் பிண்ணாக்குப் பிடிக்குமா தின்பதற்குப் பிரியமாய்த் தின்பதெது? சொல்வாயப்பா? அண்ணாகேள்! நன்றாய்க்கேள்! அவர் அப்பாவின் அரியபெருஞ் சரித்திரத்தை! தொடங்கு கந்தா! கந்தன்: சின்னகொய்யா கேலியா என்னை இன்னம் செய்கின்றாய்! தெரியும் நீ வாயை மூடு! ராகவன்: சின்னகொய்யா! கேலி ஒன்றும் செய்ய வேண்டாம் தெரிகிறது கந்தா நீ போய்வா - எல்லாம் பின்னால் பேசிக்கொள்வோம் நேரம் ஆச்சு. பெரியதொரு வம்பன் நீ சின்ன கொய்யா! கந்தன்: என்னத்திற்காக நான் சொன்னேன் என்றால் எளிசாக எனை நினைத்தான் பிள்ளை யாண்டான். என் தகப்பன் பெண்கொண்ட இடமும் மெய்யாய் எளிசான இடமல்ல சொல்லி வைத்தேன். என் தகப்பன் மாமன்பேர் ராமசாமி இதோ ஆண்டிப் பாளையந்தான் விசாரித்துப்பார்! தின்னாத மருந்தில்லை தின்றாயிற்றுச் செய்யாத வைத்தியங்கள் செய்யச் செய்த பின்புதான் சௌக்கியமாயிற்றுச் சாதிப் பெரிய தனக்காரர் அவர்! அற்பர் அல்ல! - ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதாமண்டலம் (மாத இதழ்), புத்தகம்-1; வெளியீடு-2, புதுச்சேரி, 1935. (கந்தன் தன் பெருமைகளையெல்லாம் இன்னும் சொல்லு கிறான். ராகவன், சின்ன கொய்யா, பெரிய கொய்யா அனைவரும் உட்கார்ந்து கொட்டாவி விடுகிறார்கள்.) ராகவன்: நானறிவேன் உன்குடும்பப் பெருமை யெல்லாம் நல்லது நீபோய் வருகின்றாயா கந்தா! கந்தன்: கூனிச்சம் பட்டுக் கிராமந் தன்னில் குள்ளப்பன் என்றொருவன் வாழுகின்றான். நானந்த மனிதனையே பார்த்ததில்லை; நல்லவன் தான். யாராலே வந்த வாழ்வு? போன வருஷந்தான் என் தகப்பனாரைப் புதுநடவுக் காக என்று ரூபாய் கேட்டான். அவனுக்கும் தகப்பனார் பத்து ரூபாய் அடமானம் இல்லாமல் கடன் கொடுத்தார்! அவனந்த ரூபாயால் அதிக லாபம் அடைந் தானா இல்லையா அது தான் கேள்வி. எவன் கேட்டாலும் கொடுப்பார் எனது தந்தை இருபது ரூபாயின்னம் உண்டு கையில்! சவரன் ஒன்று முந்தாநாள் காப்படிக்க வாங்கினார் அம்மாவுக் கந்தக் காப்பு என்னிடத்தில் இருந்தாலும் பிச்சைக்காரர் எவர்வந்து கேட்டாலும் இரண்டு காசை அன்போடு கொடுப்பதுண்டு; போகட்டும் போ அவனுந்தான் சாப்பிடட்டும் என நினைப்பேன்! தென்னமரக் குத்தகைக்குப் பணமில் லாமல் செட்டியார் ஒருவரிடம் பணம்போய்க் கேட்டேன். என்ன சொன்னார்! சரியப்பா போய்வா கந்தா இரண்டுநாள் போகட்டும் என்று சொன்னார். நாணயத்தை விடலாமா இல்லா விட்டால் நம்மைஎவர் நம்புவார் சொல்லும் பார்ப்போம்? கோணல் நடை ஒரு சிறிதும் பிடிப்பதில்லை கொதிசோற்றுக் கொருசோறு பதம் என்பார்கள். நாணாமல் வாங்குவதும் கேட்கும் போது நட்டதலை நட்டபடி விழிப்பதும் வீண்! தூணாநாம், மனிதனா நீரே சொல்லும். (இதற்குள் ராகவன் முதலியவர்கள் தூங்கி விடுகிறார்கள். கந்தன் மேலும் சொல்லிக் கொண்டே போகிறான்) தூக்கமா? ... ... ராகவன்: ... இல்லை இல்லை! சொல்லுகந்தா! (கந்தன் மேலும் சொல்லுகிறான்) மாமனார் வீட்டுக்குப் போக வேண்டும் மாட்டுவண்டி நல்லதா? நடந்தால் என்ன? சின்னகொய்யா: (இடையில்) சாமியைத்தான் கூப்பிட்டுக் கேட்க வேண்டும் சங்கரயரைக் கேட்டால் சொல்லு வாரே! தீமை ஒன்றும் செய்யாமல் - இவ்விடத்தில் சிக்கி விட்டோம் இப்பெரிய சிறைச் சாலைக்குள் ஊமையைப்போ லிருந்தாலும் விடுவ தில்லை! உரையப்பா கந்தப்பா! இந்தப் பாடா? (பெரியகொய்யா விழித்துக் கொண்டான்) பெரிய கொய்யா இன்னுமா இவ்விடத்தில் இருக்கின் றாய் நீ? இவ்விடத்தில் நேற்றுவந்தாய். இன்றேன் வந்தாய்? சின்னகொய்யா நன்றண்ணே! நன்று நன்று! விடிந்து போச்சு நான் கொண்டு வரட்டுமா பல் தூள் அண்ணா! இன்னுந்தான் கந்தப்பர் கதைகள் சொல்ல இங்குவந்தார். நெடியகதை! கேட்டுக் கொள்ளும். ராகவன்: அன்றன்று! விடியவில்லை தூங்கினாய் நீ. இடையில் விழித்தாய்! அது தான் நடந்தசேதி. கந்தன்: அதற்கு நான் சொல்லவில்லை; எதற்கென் றால்நான் அவ்வளவு கேடுகெட்ட மனிதனல்ல. இதுநேரம் ஐந்தாறு ரூபாய் வேண்டும் எவரிடத்தில் கேட்டாலும் வந்தே தீரும்! அதனால் நான் எந்தவித மனிதன் என்ப தறிந்து கொள்ள முடியாதா நீரே சொல்லும்! இதையெல்லாம் யோசிக்க வேண்டாமா நீர்? இதுமட்டுமா இன்னும் சொல்லுகின்றேன். (இதற்குள் கந்தனின் மைத்துனன் சுந்தரன் வந்து, கந்தனை நோக்கிச் சொல்லு கிறான்) சுந்தரன்: என்னடா இங்குவந்து புளுகுகின்றாய்! ஏன் கந்தா? சிகரெட்டுக் கடையிற் சென்றே என்னமோ வாங்கினையாம்; காசு கேட்டான் இல்லையென்று சொல்லிவிட்டு வந்தா யாமே! உன்னாலே எனக்கிங்கே கெட்ட பேர்தான் உண்டாகி விட்டதடா இதெல்லாம் என்ன? முன்னே நீ கடைக்காரன் காலணாவை முடிச்சவிழ்த் தேனும் கொடுத்து மறுவேலைபார்! (கந்தன் ஓட்டம் பிடித்தான்; சுந்தரனும் மறைந்தான்) சின்னகொய்யா: (சிரித்து) பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளை யாண்டான்! பெரிய தொகை! காலணா! அடடா என்ன பெரிய மனிதர் பார்த்தீரா அண்ணாத்தை? பெரும் பெரிய மகாபெரிய மனித ரன்றோ? (ராகவனைப் பார்த்து) தெரியாத மனிதரையா நீவிர்! அந்தத் தெக்கணா முட்டியிடம் என்ன வார்த்தை? உரிய நம் இரகசியத்தை நீரே இந்த - ஊராரைக் கூப்பிட்டுச் சொல்வீர் போலும்; - ராகவன் வேண்டுகோள். ராகவன்: சொல்லிவிடப் பார்த்தேன் ரகசியத்தைச் சொல்லாமல் தந்திரமாய் நீர் தடுத்தீர், இல்லை ஐயா என்நினைவே என்னி டத்தில்! என்ன செய்வேன்! என் மனம் ஓர் நிலையிலில்லை, செல்லுவது சரியல்ல. என் வீட்டுக்குச் சென்றாலோ குட்டுவெளிப் பட்டே போகும்! இல்லத்தில் என் மனைவி வந்தி ருப்பாள் இன்றிரவை இவ்விடம் நான் கழிக்க வேண்டும். இன்றுவரை என்னோடு நீங்கள் தங்கி இருந்து நாளைக்குப் போய்விட லாம்இந்த ஒன்று மட்டும் தயைபுரிந்தால் போதும். தக்க உபகாரம் செய்கின்றேன் மாற்ற மில்லை என்சொல்கின் றீர்கள் இதற் கன்பரே நீர்? எது கேட்டாலும் தருவேன் அட்டி யில்லை. இன்று மட்டும் என்னுடன்நீர் இருங்கள் நாளை என்வீடு சென்றிடுவேன். என்சொல் கின்றீர்? சின்னகொய்யா நீங்கள் எதற்காக மனம் சிதற வேண்டும்! நிலைகலங்கிப் போகின்றீர் இது விநோதம்! நாங்களன்றோ பிள்ளையினைக் கொலை புரிந்தோம்! நாங்களன்றோ பரிதாபக் காட்சி கண்டோம்! ஈங்குமைப்போல் நாங்களு மிருந்தோமானால், இளைய வனின் கழுத்தறுக்க முடிந்தி ராது! ஏங்கினான் சிறு பையன் தோப்புக் குள்ளே! எங்கிருக்கின்றார் அண்ணன் என்று கேட்டான். கொலை செய்த விதம் சின்னகொய்யா: இதோபாரடா என்று பெரிய கொய்யா எடுத்துயர்த்துக் காட்டி னான் பட்டாக்கத்தி! விதிர் விதிர்த்துப் படபடத்து வெருண்டு பையன் வீணைமொழியாற் கெஞ்சிக் காலில் வீழ்ந்தே எதுவேண்டும் என்னுடைய நகைகள் எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் எனைவிட் டிடுங்கள்! உதைக்காதீர்! அடிக்காதீர்! எனக்கு நோகும்! உங்களை நான் கும்பிட்டேன் என்று சொன்னான். அதுசமயம் நானவனைத் தூக்கி மண்ணில் அறைந்தேனா ஆஆ வென் றலறி வீழ்ந்தான்! புதுக்கத்தி! கூர் இல்லை! கழுத்தில் வைத்தான் பொன்னான சிறுகழுத்தில் பாயவில்லை! கதியற்றுத் துடித்தாலும் ஆவ தென்ன கண்ணீரோ ஆறாகப் பாய்ந்த தையா! மிதித்தேனா அவன் தலையை! புழு வைப்போல மேலுமேலுந் துடித்தான்! கழுத்தில் ரத்தம்! கொஞ்சந்தான் அறுபட்ட தவ்விடத்தில்! கூராகப் பட்டாவைத் தீட்ட எண்ணிக் கொஞ்சதூரம் சென்றான் பெரிய கொய்யா குடம்குட மாய்ப் பச்சை ரத்தம் கழுத்தினின்று மிஞ்சியது! ரத்தத்தில் சுழன்றான் பையன்! விடுவிடென்று துடித்ததவன் தேகம்! கண்ணாற் கெஞ்சினான்! வீறிட்டுக் கத்தி விட்டான்! கிளிப்பச்சைப் பட்டெல்லாம் ரத்தச்சேறு! - ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதாமண்டலம் (மாத இதழ்), புத்தகம்-1; வெளியீடு-3, புதுச்சேரி, 1935. (தன் தம்பியைக் கொலைசெய்த விவரத்தைச் சின்ன கொய்யா வாற் கேட்டவுடன் ராகவன் சிறிது இரக்கமுடன் கூறுகிறான்.) ராகவன்: இவ்வளவு பாடெதற்குப் படுத்தினீர்கள்? இருதுண்டாய் வெட்டிப்போட் டிருக்கலாமே! அவ்விடத்தில் அப்போது மற்றயாரும் அணுகினரா? குட்டுவெளிப் பட்ட துண்டா? செவ்வையாய் அதனைஉரை. அதுதான் நன்று! செய்தவற்றைப் பின்னும் நீ உரைக்க வேண்டாம்! அவ்விடத்தில் கொலைசெய்யும் போது பையன் அழுதானா? யாரேனும் கேட்டிட்டாரா? (சின்ன கொய்யா மேலும் சொல்லுகிறான்) சின்னகொய்யா நான் சொல்லுவதை யெல்லாம் உற்றுக் கேளும் நடந்த வற்றை நடந்தபடி சொல்லு கின்றேன். ஏனதற்குள் அவசரப் பட்டுப் போகின்றீர்? எல்லாவற்றையும் கேட்டுக் கொள்ள வேண்டும். தேனைப்போல் இனித்திடும் அப்பையன் பேச்சுத் திணறிற்று! வழவழெனக் குளறலாச்சு! வானத்தைப் பார்த்தபடி விலவிலத்து மல்லாந்து தேகத்தை அசைக்கப் பார்த்தான் மாணிக்கம் போன்றிருந்த உதடு மட்டும் மடமடென ஆடிற்று! மார்பில் மட்டும் காண முடிந்ததுப்ராணன்! காயத்தின் வாய் கருத்ததுபின் ரத்தத்தின் கறையால் தேகம்! வேணமட்டும் கருமை நிறம் அடைந்து போச்சு விரித்தகை விரித்தபடி இருந்த தங்கே ஆணழகன் - இளங்காளை அழகை யெல்லாம் ஆரெடுத்துப் போனாரோ அந்த வேளை! கொஞ்சநேரம் செல்லப் பையன் தேகம் குலுங்கிற்று. வளையம்போல் சுழல லாச்சு. பஞ்சுமெத்தை மீதினிலே படுக்கும் பிள்ளை பரிதாபமாய்த் தரையில், ரத்தம் தோய, மிஞ்சுகினற் வாதையினால் துடித்தல் கண்டோம்! மெய்யாக எங்கள்மனம் சகிக்க வில்லை! அஞ்சுதடா தம்பி எனப் பெரியகொய்யா அலறினான் நான் சொன்னேன் அவனிடத்தில் தந்தையுமாய் அன்னையுமாய் இருந்த அந்தத் தனவந்தர் ராகவ னார் வாயே நம்மை இந்தவிதம் கொலைசெய்யச் சொன்ன தென்றால் இரக்கமென்ன? நாமிருவர் கூலிக் காரர்! வந்த காரியம் முடிப்போம். குழியைத் தோண்டு வாய்ப் பேச்சுப் பேசாதே என்று சொன்னேன். அந்தவிதமே பறித்தான் பெரிய கொய்யா அதுசிறிதாய் இருந்ததனால் துண்டு போட்டே (ராகவன் இது கேட்டு மனம் சகிக்காதவனாய்க் கூறுகின்றான்.) ராகவன்: ஐயையோ என்னருமைத் தம்பி! என்ன அரும்பாடு படலானாய்! எனது நெஞ்சம் நெய்யாக உருகுதடா! என்னதான் நீ நினைத்தாயோ அந்நேரம்! ஐயா நான்தான் துய்யவனை உடன் பிறந்த இளையோன் தன்னைத் தொலைத்துவிடச் சொன்னாலும், நீங்களேனும் செய்குவது சரியல்ல என்று சொல்லித் திருத்தலா காதா என் உளத்தின் போக்கை? இவ்வளவு துன்பங்கள் என்தம் பிக்கே இருக்குமென நானினைத்தால் சொல்லு வேனா? அவ்விடத்தில், என்தம்பி உடலைத் தூக்கி அடித்தீரா! துடித்தானா! விழியிரண் டும் எவ்வாறு சுழன்றனவோ! எவ்வாறந்த இளம்பிள்ளை வருந்தினனோ அந்தோ! அந்தோ! கவ்விற்றோ சாவுவந்து தம்பீ உன்னைக் காண்பதெந்நாள், என்னப்பா! அருமைப் பிள்ளாய் (வீழ்ந்து மூர்ச்சையாகிறான்) - ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதாமண்டலம் (மாத இதழ்), புத்தகம்-1; வெளியீடு-4 & 5, புதுச்சேரி, 1935. (தன் தம்பி கொலை செய்யப்பட்டபோது அவன் பட்ட பாடுகளைச் சின்ன கொய்யாவால் கேட்டதும் ராகவன் தன்னை மீறிய இரக்கத்தால் வருந்துகிறான்; அவ்வருத்தத் தின் முதிர்ச்சியால் சோகமுற்றுமண்ணிற் சாய்ந்தான். சின்ன கொய்யா பெரிய கொய்யா இருவரும் அவனைத் தேற்று கிறார்கள்.) சின்னகொய்யா ஐயா! ஐயா! என்ன அதிசயம்! ஐயா ஐயா எழுந்திரும் ஐயா, மனதை விடாதீர் எழுந்துவாரும்! வழியில் விழுந்து கண்ணீர் விடுகிறீர் வருவார் போவார் என்ன மதிப்பார்? தெரிந்து கொள்வார் நமது சேதி! எங்களுக் கன்றோ தண்டனை ஏற்படும் எழுந்திருமையா - ஏஏ இதென்ன! ஐயா! ஐயா என்ன அதிசயம்! அத்தனை சோகமா இதென்ன அவதி! உம்மைத் தாமே ஐயா உம்மைத்தாம் உடனே எழுந்திரும் உம்மைத் தாமே பெரிய கொய்யா: சோகத்தோடு மயக்கமும் சூழ்ந்தது. தொந்தரவு கொடுக்க வேண்டாம் சொல்கிறேன். உடனே ஓடி உள்ளே இருக்கும் விசிறியை எடுத்து விரைவிலே வா! (சின்ன கொய்யா விரைவில் ஓடி விசிறி எடுத்துக்கொண்டு வருகிறான்) விசிறு விசிறு நன்றாய் விசிறு! தண்ணீர் கொஞ்சம் சடுதியில் கொண்டுவா. (சின்னகொய்யா ஓடித் தண்ணீர் கொண்டு வருகிறான்) உண்ணாக்குத் தொண்டையில் ஊற்றுக் கொஞ்சமாய்த் ராகவன்: தம்பி! (எதிரில் இருவரையும் பார்த்து) ... நீங்களா? கொன்றீரா தம்பியை? பெரிய கொய்யா சடுதியில் எழுந்திரும் ரகய சங்கதி! உள்ளே சென்று நீர்ஒருபக்கம் படும்! (சின்ன கொய்யாவை நோக்கி) தூக்கடா தம்பி! தூக்குத் தோளைப் பிடித்துத் தூக்கித் தொலைய டா! (இருவரும் ராகவனைத் தூக்கி நடத்திப் போய் உள்ளே ஒரு பக்கம் போட்டிருக்கும் சாயுமான நாற்காலியில் வளர்த்துகிறார்கள்.) வேறு சந்தர்ப்பம் (வசந்த விலாசம் என்ற அந்தப் போஜனசாலையில் தங்கி யிருக்கும் உயர்வகுப்பு மாணவர்கள் பலர் போஜனம் முடித்துத் தம்மில் கூடிப்பேசிக் கொள்ளுகிறார்கள்.) நாராயணன்: வெண்டைக்காய்ச் சாம்பார்தான் கொஞ்சம் விசனசுரம்! சுண்டைக்காய் வற்றல் சுகமாயிருந்த தப்பா! குழந்தை: இன்றைக் கெனக்கோ எதுவும் பிடிக்க வில்லை. நன்றாயிருந்தவைகள் வாழையிலை நல்ல தண்ணீர்! முத்து: உப்பிலும் ஓர் தப்பில்லை உப்பளத்தின் நல்லருளால்! அப்பளந்தான் வைக்கவில்லை அந்த மட்டும் தப்பித்தோம்! சீரகச்சம்பா அரிசிச் சித்ரான்னத் தோடுவரு வோருக்குச் சாப்பாடு வடிப்போம் என்று சொல்லிக் கல்லோடு சேர்ந்த கழுதைச் சம்பா வடித்து மல்லையிலே புளித்த மோரைத்தான் வார்க்கின்றார். கந்தப்பன்: நாமோ வெளியூரார் வாசிக்க நாடி வந்தோம். தாய்மறந்து தந்தை தமைமறந்து சாப்பாட்டுச் சாலையிலே தங்கித் தகுந்த படி சாப்பிட்டுக் காலத்தைக் கல்விக் கவனத்தில் போக்கல் நமது கடமை இதற்கு நடுவில் நமைநாம் அடக்கி நடந்திடுதல் வேண்டுமன்றோ! எத்தனையோ போஜன சாலைகளை இன்றுவரை நத்தினோம் நாமெதைத்தான் நல்லதென்று சொன்னதுண்டு? சங்கரனின் சாப்பாட்டுச் சாலையிலே சாப்பிட்டோம் அங்கிருந்து பாய்ந்திட்டோம் அம்மணிவி லாசத்தில்! சண்டை வளர்த்துச் சவுகரியம் இல்லை யென்றே மண்டித் தெருவுக்கு வந்தோம்; அதன் பிறகு மீதியுள்ள சோற்று விடுதி யெல்லாம் பார்த்துவிட்டுச் சோதி பவனத்தைத் தொட்டோம்; அதை விட்டோம். இங்குவந்தோம் குந்தினோம் இக்கிளையை விட்டால்பின் எங்குக் குதிப்பதும்நாம் என்பதுதான் என்கவலை! நாராயணன்: வந்தார் மகாயோக்யர்! வாய்க்கு ருசியில்லை. இந்த இடமில்லை, வேறி டந்தான்! வேறென்ன! கந்தப்பன்: குன்றுதோறாடும் குரங்கே உன்அதிஷ்டம்! நன்றாயிருந்தால் நமக்கென்ன ஆக்ஷேபம்? முத்து: புத்தி சொன்னார் கந்தப்பர் போதனையைத் தள்ளாதீர்! கத்தர் அவர் என்று கருதுங்கள்! ஜாக்கிரதை!! குழந்தை: கத்தர் எனிலோ கரடு முரடாயிருக்கும்; புத்தரப்பா அந்தப் புண்ணியவான் போற்றுங்கள்! கந்தப்பன்: இந்த வசந்தவி லாசமும் இல்லைஎன்றால் சந்தையில் வண்டியின்கீழ் சாதம் சமைப் பவர்போல் நாமே நடுத்தெருவீல் நாலைந்து செங்கல்லைச் சேமிக்க வேண்டும் சிறிய அடுப்பிட்டுச் சோறாக்க வேண்டுமே என்றுதான் சொல்லு கின்றேன் வேறென்ன,செஞ்சிமலைக்குழந்தாய்வேறென்ன!! நன்றாயில்லை நன்றாய் இல்லையென்றுநாடோறு«தின்றுவிட்டு¤தின்Wவிட்டு¢சொன்னாšஅதுகேட்டு¥ போஜdசாலை¡குடையா®போவென்Wசொல்லாமšஆசையுட‹உம்kஅழைப்பாரேசொல்லுங்கŸ? முத்து: நீட்டாதே கந்தப்பா போதும் நிறுத்திவிடு! பாட்டொன்று பாடப்பா கேட்டாற் பயனுண்டு குழந்தை: கந்தப்பா பாடாதே கத்து, நலமுண்டு சொந்தவண் ணானுக்குத் தூக்கம் கலையுமன்றோ? கந்தப்பன்: கூவும் குயில்நம் குழந்தை! மரக்கிளையில் தாவும் குரங்கென்று சொல்லல் சரியா? முத்து: குயிற்குழந்தாய் கொஞ்சம் நிறுத்தப்பா! நண்பர் மயிற்கந்தர் பாட வழிவிடப்பா போதும். கந்தப்பன்: முதலிலே நீ பாடு முத்து! மறுத்தால் எதுவும் முடியாது சொன்னேன் எடுபாட்டை! குழந்தை: கத்தென்றால் கத்துமா சொல்வாய் கழுதையே! முத்து நீ பாடி முடி; அதன் பின் மற்றவர்கள். (முத்து பாடச் சம்மதித்து, மேலே பார்த்தபடி என்ன பாட்டுப் பாடலாம் என்று யோசிக்கிறான்) நாராயணன்: மேல் எதற்குப் பார்க்கின்றாய் முத்து! விருதாவாய்! தூலத்திலா வைத்தாய் சொல்லவந்த பாட்டை நீ? கந்தப்பன்: மல்லுக்கும் கேலிக்கும் வாய்த்தீரே யோசித்துச் சொல்லட்டும் சும்மா இரு! (முத்து பாடுகிறான் தாளத்தைவிட்டு, அனைவரும் சிரிப்பை அடக்கி அடக்கிப் பார்த்தும் முடியாமல் கலீர் என்று சிரிக்கிறார்கள்) - ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதாமண்டலம் (மாத இதழ்), புத்தகம்-1; வெளியீடு-6, புதுச்சேரி, 1935. முத்து: தெரிந்ததை நான் பாடினேன் நீங்கள் சிரிக்கின்றீர் தெரியாதென்றாலும் விடுவ தில்லை என்செயலாம்? மருந்துக்கு வேண்டும் ஒருபாட்டுப் பாடு மன்றாடுகின்றேன் குழந்தையப்பா உன்னைத்தான்! குழந்தை: சரிசரிநான் பாடுகின்றேன் அடக்குன்றன் வாயைச் சகானாவிற் பாடவா நாட்டையிலா சொல்லு! முத்து: சரிதான் நீ சகானாவில் பாடலாம்; ஆனாலும் சங்கரா பரணத்தில் ஒன்றுவிடு முதலில். நாராயணன்: சங்கரனுக் காபரணம் பாம்பப்பா பாம்பு! சர்ப்பத்திலா ஒன்றை இங்குவிடச் சொன்னாய்? சங்கரனார் ஆபரணம் இங்கு வரவேண்டாம் சகானாவே பாடினால் போதும் நீ பாடு! (குழந்தை ஆரடி நீ இங்குவந்தவள் என்ற பாட்டுப் பாடுகிறான்; எல்லாரும் சிரிக்கிறார்கள்.) முத்து: எங்கப்பா கற்றாய் நீ சகானாப் பாட்டை இதுதானா நீசொன்ன சகானா ராகம்? தங்குதடை இல்லாமல் பாடிவிட்டார் சகானாவைக் கேட்டீரா? சிரிக்கா தீர்கள்! நாராயணன்: சுகமான நேரத்தை வீணாக் காதீர்! சொல்லுவதைக் கேளுங்கள் கவனமாக! வகையான விண்ணப்பம் ஒன்றிப் போது வரைகின்றேன் கையொப்பம் இடுங்கள் நீங்கள்! தகுமான மனிதருக்கே அதை அனுப்பிச் சங்கீதம் கேட்கவழி தேட வேண்டும். நகநகென இவ்விடத்தில் நடக்கப்போகும் நாடகத்தைப் பார்க்கப் போகின்றீர் யாரும்! முத்து: கண்டு சொன்னால் போதாதோ விண்ணப் பந்தான் கந்ததுரை கேட்பாரோ! ஏன் கந்தப்பா? நாராயணன்: கண்டிப்பாய் விண்ணப்பம் வேண்டும் அப்பா! கனமுள்ள கந்தப்பா அவர்களுக்குத், தெண்டனிட்டுத் தெரிவிப்ப தென்ன வென்றால் தின்றுவிட்டுச் சுகமாக இருப்பதற்கு வண்டு ரீங்காரம் போல் கொஞ்சம் நீங்கள் வாய்விட்டுப் பாட யாம் கேட்க வேண்டும். இப்படிக்குத் தங்களது தாழ்மையுள்ள, ஈமுத்து. நா. குழந்தை. புதுவைக் கோட்டைக் குப்பம். நாராயணன் - சத்தம் போடாதீர் கூறவதைத் கேளுங்கள் - சபையோ ரேநீர். தப்பாமல் அழகாக நமது கந்தர் தண்டகராண்யத்தை நோக்கிப்போன அப்பரதனைக் கண்டு குகன் அடைந்த ஆங்காரப் பாட்டையெல்லாம் வசனமெல்லாம் சொல்லப் போகின்றார்கள். அதை எல்லாரும் சுகமாகக் கேளுங்கள்! கைதட்டுங்கள். (அனைவரும் கரகோஷம் செய்கிறார்கள்) கந்தப்பன்: சொல்லென்று கொடுத்ததொரு விண்ணப்பத்தைச் சொல்ல முடியாதென்று திருப்பிவிட்டேன். நாராயணன்: இல்லையப்பா! கந்தப்பா! கேட்க வேண்டும். என்முகத்தைப் பார்வெகுநாள் ஆசையுண்டு! நல்லபெயர் எடுத்தாயாம் குகன்வேடத்தில். நாங்களெல்லாம் கேட்டதில்லை தயவு செய்வாய்! கந்தப்பன்: கேலிசெய்யப் பார்க்கின்றீர் அதுதான் சேதி! கேளுங்கள்! சொல்லித்தான் தொலைக்க வேண்டும். - ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதாமண்டலம் (மாத இதழ்), புத்தகம்-1; வெளியீடு-7, புதுச்சேரி, 1935.  பாவேந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் 1891 : ஏப்ரல்29, புதன் இரவு 10.15 மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை, தாய் இலக்குமி. உடன் பிறந்தோர்; தமையன் சுப்பராயன், தமக்கை சிவகாம சுந்தரி, தங்கை இராசாம்பாள். 1895 : ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் தொடக்கக் கல்வி. ஆறாம் வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். 1908 : புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகாவித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும், பின்னர் பெரும்புலவர் பங்காரு பத்தரிடமும், தமிழ் இலக்கண - இலக்கியங்களையும், சித்தாந்த வேதாந்தப் பாடங்களையும் கசடறக் கற்றார். ஆசிரியர் பயிற்சித் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். புலவர் சுப்புரத்தினம். வேணு (வல்லூறு) நாயகர் வீட்டுத் திருமணத்தில் பாரதியாரைச் சந்திக்கும் பேறு பெற்றார். பாரதியாரின் தேர்வுத் தராசில் நின்றார், வென்றார், நட்பு முற்றியது. பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய சுப்புரத்தினத்தைப் பற்றியது. 1909 : கல்வி அதிகாரி கையார் உதவியால், காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியர் பணி ஏற்றல். 1916 : 23. 1. 1916 அன்று தந்தையார் கனகசபை இயற்கை எய்தல். 1918 : பாரதியாருடன் மிக நெருங்கிய பழக்கத்தால் சாதிமதம் கருதாத, தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய, தெய்விகப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில், புதுவை கே. எ. ஆர் கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எ. பாரதிதாசன் முதலிய புனை பெயர்களில், பாடல், கதை, கட்டுரை, மடல்கள் எழுதியுள்ளார். பத்து ஆண்டுக் காலம் பாரதியார்க்கு உற்றுழி உதவிய தோழனாய் இருந்தார். 1919 : திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில் பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம்சாற்றி 1¼ ஆண்டு சிறை பிடித்த அரசு, தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க, வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்தல். 1920 : இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல். புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனி அம்மையை மணத்தல். தம் தோளில் கதர்த் துணியைச் சுமந்து தெருத் தெருவாய் விற்றல். மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப் பாட்டு வெளியீடு. 1921 : 15. 9. 1921 அன்று மூத்த மகள் சரசுவதி பிறப்பு. 1922 : கே.எ. பாரதிதாசன் என்ற புனை பெயரைப் பயன்படுத்தி, தேச சேவகன், ஆத்மசக்தி, துய்ப்ளேச்சு, புதுவை கலைமகள், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்த போதினி, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதுதல். 1925 : மயிலம் ஸ்ரீ சண்முகக் கடவுள் பஞ்சரத்நம் வெளிவரல். 1926 : மயிலம் சுப்ரமணியர் துதியமுது - வெளியீடு. 1928 : தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ.வெ.ராவுடன் இணைதல் - அந்த ஈடுபாட்டால் சமூக மறுமலர்ச்சிக்கான பாக்களை எழுதத் தொடங்குதல். தாமும் தம் குடும்பமும் பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளல், குடும்பத் திருமணங்களில் தாலியைத் தவிர்த்தல். நவம்பர் - 3, கோபதி (மன்னர்மன்னன்) பிறப்பு. 1929 : குடியரசு, பகுத்தறிவு ஏடுகளில், பாடல், கட்டுரை, கதை எழுதுதல். 1931 : குடும்பக் கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலே பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புப் பெறல். 1930 : பாரதி, புதுவை வருகைக்கு முன்னும் பின்னும். பாடிய, சிறுவர் சிறுமியர் தேசிய கீதம், தொண்டர் படைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு நூல் வடிவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல்; தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு நூல்களை, ம. நோயேல் வெளியிட்டார்; திசம்பர் 10-இல் `புதுவை முரசு கிழமை ஏடு வெளியீடு. 1931 : `புதுவை முரசு (6.1.31) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை - சிறுகதை வரைதல். சுயமரியாதைச்சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலைக் கிண்டற்காரன் என்ற பெயரில் வெளியிடல் (குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படைப்பு) 18.6.31 இரண்டாம் மகள் வசந்தா (வேனில்) பிறப்பு. பள்ளி ஆண்டு விழாவில் `சிந்தாமணி என்ற முத்தமிழ் நாடகம் எழுதி இயக்குதல். வாரிவயலார் வரலாறு அல்லது கெடுவான் கேடு நினைப்பான் - எனும் புதினம் வெளிவரும் என அறிவிப்பு, வெளியார் நாடகங் கட்கும், தன்மான, பொதுவுடைமைக் கூட்டங்களுக்கும் பாட்டெழுதித் தருதல். 1933 : ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை ஒயிட்சு நினைவுக் கட்டடத்தில் (31. 1. 33) நடந்த நாத்திகர் மாநாட்டில் கலந்து கொண்டு வருகைப் பதிவேட்டில் `நான் ஒரு நிரந்தரமான நாத்திகன் என்று எழுதிக் கையெழுத்திடல். மூன்றாம் மகள் ரமணி பிறப்பு. 1934 : மாமல்லபுரத்திற்கு முழுநிலா இரவில் தோழர் ப. ஜீவானந்தம், குருசாமி, குஞ்சிதம், நயினா சுப்பிரமணியம், மயிலை சீனிவேங்கட சாமி, மாயூரம் நடராசன், சாமி சிதம்பரனார், எ.வி. இலிங்கம், நாரண துரைக்கண்ணனுடன் படகில் செல்லல்: `மகாபலிபுரச் செலவு - பாடல் பிறந்தது. 9.9.34-இல் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் பெரியார் தலைமையில் நடைபெறல் (குருசாமி - இரணியன், திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம் - பிரகலாதன்) 1935 : இந்தியாவில் முதல் பாட்டேடான - `ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் தொடக்கம். இதற்கு உறுதுணையாக இருந்தவர் எ.ஆர். சுப்பிரமணியம். (சர்வோதயத் தலைவர்.) 1936 : பெங்களூரில் பதினான்கு நாள் தங்கி (1.4.36) `தேசிங்குராஜன் வரலாற்றை அட்சின்சு குழுமத்தார்க்கு `ஹி மாடர் வாய் இசைத் தட்டுகளாய்ப் பதித்தல். 1937 : புரட்சிக்கவி - குறுங்காவியம் வெளியிடல். `பாலாமணி அல்லது பக்காத் திருடன் திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதுதல், இதில் நடித்தவர்கள்: தி.க. சண்முகம் உடன் பிறந்தோர் அனைவரும். 1938 : பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியைக் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்டனர். bghUSjÉ brŒjt® flÿ® â.கி. நாராயணசாமி (நாயுடு) தமிழிலக்கியத்திலேயே பெரும் புரட்சியை உண்டாக்கியதால், பெரியார் தன்மான இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர் என்று பாராட்டினார். டாக்டர் மாசிலாமணியார் நடத்திய `தமிழரசு இதழில் தொடர்ந்து எழுதுதல். 1939 : `கவி காளமேகம் - திரைப்படத்திற்குக் - கதை உரையாடல் பாடல் எழுதுதல். இரணியன் அல்லது இணையற்ற வீரன் நூல் வடிவில் வருதல். இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் வெளியிடல். குயில் மாத ஏட்டிற்குத் தடை. நாளேடாக்கல். 1941 : எதிர்பாராத முத்தம் காவியம், காஞ்சி பொன்னப்பாவால் வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடல். 1942 : குடும்ப விளக்கு - ஒருநாள் நிகழ்ச்சி, இசையமுது முதல் தொகுதி வெளியிடல். இந்தியப் போராட்ட எழுச்சியை மறைமுகமாக ஊக்குவித்தல். இரண்டாம் உலகப்போரை - இட்லரை எதிர்த்தல். 1944 : பாண்டியன் பரிசு காவியம் வெளியிடல். பெரியார் முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர். `இன்ப இரவு (புரட்சிக்கவி) முத்தமிழ் நாடகம் அரங்கேற்றம். இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல தீர்ப்பு (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் ஒன்றன்பின் ஒன்றாய் வெளியிடல். `சதிசுலோசனா என்ற திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாட்டு எழுதுதல். குடும்ப விளக்கு - விருந்தோம்பல் வெளியிடல், செட்டி நாடு முழுவதும் இலக்கியச் சொற்பொழிவுகள் நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தை காலூன்றச் செய்தல். எதிர்பாராத முத்தம் - நாடகமாகத் தீட்டுதல். கற்கண்டு, பொறுமை கடலினும் பெரிது எனும் நூல்கள் வெளியிடல். 1945 : புதுவை, 95 பெருமாள் கோவில் தெரு வீட்டை வாங்குதல், தமிழியக்கம் (ஒரே இரவில் எழுதியது) எது இசை நூல்கள் வெளியிடல். 1946 : முல்லை இதழ் ஆதரவாளர் பா.தா. என்ற அறிவிப்போடு முத்தையா அவர்களால் தொடங்கப்பட்டது. அமைதி - ஊமை நாடகம் வெளியிடல். 29.07.1946 அன்று நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில், பாவேந்தர் புரட்சிக் கவி என்று போற்றப்பட்டு ரூ. 25,000 - கொண்ட பொற்கிழியை, பொன்னாடை போர்த்தி, அறிஞர் அண்ணா வழங்கினார். தமிழகப் பேரறிஞர்கள் பலரும் வாழ்த்திப் பேசினர். 8. 11. 1946-இல் முப்பத்தேழாண்டு, தமிழாசிரியர் பணிக்குப் பின் பள்ளியிலிருந்து ஓய்வுபெறுதல். 1947 : புதுக்கோட்டையிலிருந்து குயில் 1, 2 மாத வெளியீடு. `சௌமியன் நாடக நூல். சென்னையில் குயில்; ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி திரைப்படக் கதை, உரையாடல், பாட்டு தீட்டல். புதுவையிலிருந்து `குயில் இதழ் வெளிவரல். கவிஞர் பேசுகிறார் சொற்பொழிவு நூல் வெளிவரல். 1948 : காதலா கடமையா? காவியம் முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாட்டு, படித்த பெண்கள் (உரைநாடகம்) கடல்மேற் குமிழிகள் காவியம்; குடும்பவிளக்கு திருமணம், திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட புதுக்கரடி நூல் வெளியிடல். 1949 : பாரதிதாசன் கவிதைகள் 2 ஆம் பகுதி; சேர தாண்டவம் (முத்தமிழ் நாடகம்) தமிழச்சியின் கத்தி காவியம் ஏற்றப்பாட்டு வெளியிடல். 1950 : குடும்ப விளக்கு மக்கட்பேறு, குடும்ப விளக்கு முதியோர் காதல் வெளியிடல். 1951 : செப்டம்பர் 15ல் வேனில் வசந்தா தண்டபாணி திருமணம். அமிழ்து எது? - கழைக்கூத்தியின் காதல் வெளியிடல். 1952 : `வளையாபதி திரைப்படம் கதை, உரையாடல் பாட்டு. இசையமுது இரண்டாம் பகுதி வெளியிடல். 1954 : பொங்கல் வாழ்த்துக் குவியல்; வெளிவரல். குளித்தலையில் ஆட்சிமொழி மாநாட்டுக்குத் தலைமை ஏற்றல், 7.2.1954 மூன்றாம் மகள் ரமணி சிவசுப்ரமணியம் திருமணம். 1955 : புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியுற்று தற்காலிக அவைத் தலைமை ஏற்றல். சூன் 26இல் மன்னர்மன்னன் மைசூர் வீ. சாவித்திரி திருமணம். கோவை. அ. அய்யாமுத்து தலைமை. பாரதிதாசன் கதைகள், பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி வெளியிடல். 1956 : தேனருவி இசைப்பாடல்கள் வெளியிடல் 1958 : தாயின் மேல் ஆணை; இளைஞர் இலக்கியம் வெளியிடல், தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல், `குயில் கிழமை ஏடாக வெளிவருதல். 1959 : பாரதிதாசனின் நாடகங்கள்; குறிஞ்சித் திட்டு வெளியிடல், குயில் கிழமை இதழில் பிசிராந்தையார் முத்தமிழ் நாடகம் தொடர்தல்; 1.11.59 முதல், திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல். 1961 : சென்னைக்குக் குடிபெயர்தல், பாண்டியன் பரிசு திரைப்படம் எடுக்கத் திட்டமிடல். செக் நாட்டு அறிஞர் பேரா. கமில் சுவலபில் செக் மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல். சென்னை தியாகராயர் நகர், 10. இராமன் தெரு வீடு. 1962 : சென்னையில் மீண்டும் `குயில் திங்களிருமுறை ஏடு வெளியீடு (15.4.62) அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம், கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா வெளியிடல். மூதறிஞர் இராசாசி தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கல். 1963 : தோழர் ப. ஜீவானந்தம் மறைவு குறித்துப் `புகழ் உடம்பிற்குப் புகழ்மாலை பாடல் எழுதுதல். சீனப் படையெடுப்பை எதிர்த்து, அனைத்திந்திய மக்களை வீறு கொண்டெழப் பாடல்கள் எழுதுதல். 1964 : பன்மணித்திரள் நூல் வெளியிடல். 72ஆம் ஆண்டு ஆண்டு பிறந்த நாள் விழா, வழக்கறிஞர் வி.பி. இராமன் தலைமையில் நடைபெற்றது. இராசிபுரத்தில் புலவர் அரங்கசாமி கூட்டிய கவிஞர்கள் மாநாட்டில் தலைமை ஏற்றல். பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர முயற்சி. `மகாகவி பாரதியார் வரலாறு திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு திரைக்கதை - உரையாடல் எழுதி முடித்தல். பொது மருத்துவமனையில் ஏப்ரல் 21-ல் இயற்கை எய்தல். மறுநாள் புதுவை கடற்கரையில் உடல் அடக்கம். வாழ்ந்த காலம் 72 ஆண்டு, 11 மாதம், 28 நாள். மறைவுக்குப் பின் ... 1965 : ஏப்ரல் 21. புதுவை கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம், புதுவை நகராட்சியினரால் எழுப்பப்பட்டது. 1968 : சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது, பாவேந்தரின் திருஉருவச்சிலை, மெரீனா கடற்கரையில் திறந்து வைக்கப்பட்டது. 1969 : தில்லி சாகித்திய அகாதமி - பிசிராந்தையார் நூல் தேர்ந்தெடுத்தல். 1970 : மார்ச், கவிஞரின் `பிசிராந்தையார் நாடக நூலுக்கு சாகித்ய அகாதமி ரூ. 5000 பரிசு வழங்கியது. ஜனவரியில் மகள் ரமணி மறைவு. 1971 : ஏப்ரல் 29ல் பாவேந்தரின் பிறந்த நாள் விழா. புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு 95-ஆம் எண் இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிக் கவிஞர் நினைவு அருங்காட்சியகம் - ஆய்வு நூலகம் நடந்து வருகிறது. 1972 : ஏப்ரல் 29. பாவேந்தரின் முழு உருவச்சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது. 1978 : தமிழக அரசால் பாவேந்தரின் பிறந்தநாள் விழாவை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடுவதென்றும் பாரதிதாசன் விருது ஆண்டுதோறும் ஏப்ரல் 29, 30 ஆகிய நாள்களில் வழங்குவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. 1979 : பாவேந்தரின் கடல்மேற் குமிழிகள் எனும் நூல் எல். கதலீ என்பவரால் பிரெஞ்சு மொழியில் ‘L’ Ecume de la mer’ எனும் பெயரில் நூலாக வெளியிடப்பெற்றது. 1982 : ஏப்ரல் 29இல் மேதகு தமிழக ஆளுநர் சாதிக் அலி அவர்கள் தலைமையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மா.கோ. இராமச்சந்திரன் அவர்கள் திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தைத் திறந்து வைத்தார். பாவேந்தரின் மருமகளும், தமிழ் மாமணி மன்னர்மன்னனின் மனைவியுமான திருமதி சாவித்திரி இயற்கை எய்தினார். 1986 : கருப்புக் குயிலின் நெருப்புக் குரல் எனும் தலைப்பில் தமிழ்மாமணி மன்னர்மன்னன் அவர்களால் வெளியிடப்பெற்ற பாவேந்தரின் வாழ்க்கை வரலாற்று நூலிற்குத் தமிழக அரசு பரிசு வழங்கியது. 1989 : மே 21இல் பாவேந்தரின் மனைவி பழனியம்மாள் இயற்கை எய்தினார். 1990 : புதுச்சேரி அரசால் பாவேந்தரின் நூற்றாண்டு விழா ஆகட் 26, 27 ஆகிய நாள்களில் கொண்டாடப்பெற்றது. மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு பாவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்கியது. பாவேந்தரின் நூற்றாண்டு தொடக்கவிழாக் கொண்டாடப்பட்டது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பாவேந்தரின் சிலையைத் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார்.  பாரதிதாசன் பாடல்கள் - காலவரிசை வ.எண் நூற்பெயர் முதற்பதிப்பு 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு 1920 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 1925 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 1926 4. கதர் இராட்டினப்பாட்டு 1930 5. சிறுவர் சிறுமியர் தேசியகீதம் 1930 6. தொண்டர்படைப்பாட்டு 1930 7. தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு 1930 8. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 1930 9. சுயமரியாதைச் சுடர் 1931 10. புரட்சிக்கவி 1937 11. பாரதிதாசன் கவிதைகள் 1938 12. எதிர்பாராத முத்தம் 1941 13. குடும்ப விளக்கு 1942 14. இசையமுது 1942 15. இருண்ட வீடு 1944 16. அழகின் சிரிப்பு 1944 17. காதல் நினைவுகள் 1944 18. குடும்ப விளக்கு இரண்டாம் பகுதி - விருந்தோம்பல் 1944 19. பாண்டியன் பரிசு 1944 20. தமிழியக்கம் 1945 21. முல்லைக்காடு 1948 22. காதலா? கடமையா? 1948 23. இந்தி எதிர்ப்புப் பாட்டு 1948 24. கடல் மேற் குமிழிகள் 1948 25. குடும்ப விளக்கு மூன்றாம் பிரிவு, திருமணம் 1948 26. அகத்தியன் விட்டபுதுக்கரடி 27. நல்லமுத்துக்கதை (ஒரே தொகுப்பில்) 1948 28. திராவிடர் திருப்பாடல் 1948 29. ஏற்றப்பாட்டு 1949 30. பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி 1949 31. தமிழச்சியின் கத்தி 1949 32. பாரதிதாசன் ஆத்திசூடி 1949 33. திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம் 1949 34. குடும்பவிளக்கு நான்காம் பிரிவு - மக்கட்பேறு 1949 35. குடும்ப விளக்கு ஐந்தாம் பிரிவு - முதியோர் காதல் 1950 36. அமிழ்து எது? 1951 37. பாரதிதாசன் கவிதைகள் - இரண்டாம் தொகுதி (இரண்டாம் பதிப்பு) 1952 38. இசையமுது - இரண்டாம் பகுதி 1952 39. பொங்கல் வாழ்த்துக் குவியல் 1954 40. பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதி 1955 41. தேனருவி 1956 42. இளைஞர் இலக்கியம் 1958 43. குறிஞ்சித்திட்டு 1959 44. கண்ணகி புரட்சிக் காப்பியம் 1962 45. மணிமேகலை வெண்பா 1962 46. பாரதிதாசன் பன்மணித்திரள் 1964 47. காதல் பாடல்கள் 1977 48. குயில் பாடல்கள் 1977 49. பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி 1977 50. தேனருவி (+ 38 பாடல்கள்) 1978 51. ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது 1978 52. தமிழுக்கு அமுதென்று பேர் 1978 53. புகழ் மலர்கள் 1978 54. நாள் மலர்கள் 1978 55. வேங்கையே எழுக 1978 56. பாரதிதாசன் ஆத்திசூடி (+ பொங்கல் வாழ்த்துக் குவியல், இளையார் ஆத்திசூடி) 1980 57. பாரதிதாசன் கவிதைகள் (நான்கு தொகுதிகள் + புதிய பாடல்கள் 17) 1982 பாடு பொருள் அடிப்படையில் பூம்புகார் பதிப்பகம் பகுத்தும், தொகுத்தும் வெளியிட்டவை: 1. பாரதிதாசன் கவிதைகள் - உயர்ந்தோர் (+ ஒரு புதிய பாடல்) 1992 2. இயற்கை 1992 3. தமிழ் (+ ஒரு புதிய பாடல்) 1992 4. சிறுகாப்பியங்கள் 1992 5. இளைஞர் இலக்கியம் 1 1992 6. சமுதாயம் (+ இரண்டு புதிய பாடல்கள்) 1992 7. இளைஞர் இலக்கியம் 2 1994 8. பொங்கல் வாழ்த்து இலக்கியம் 1994 (+ ஆறு புதிய பாடல்கள்) 9. காதல் (+ இரண்டு புதிய பாடல்கள்) 1994 குறிப்பிடத்தக்க பிற தொகுப்புகள் 1. பாரதிதாசன் கவிதைகள் (பாவேந்தர் பாடல்களின் முழுத்தொகுப்பு), ஆ. திருவாசகன், சுரதா கல்லாடன் (தொ. ஆ.) 1993 2. உலகம் உன் உயிர் (தலையங்கக் கவிதைகள்) (+நான்கு புதிய கவிதைகள்), ச.சு. இளங்கோ (ப.ஆ.) 1994 3. பாரதிதாசன் வண்ணப்பாடல்கள் (+நான்கு புதிய பாடல்கள்) ய. மணிகண்டன், (தொ. ப.) 1995 4. பாரதிதாசன் திரைப்பாடல்கள், வாமனன் (தொ.ஆ.) 2000 பிறர்படைப்புகளுடன் பாரதிதாசன் கவிதைகளும் nசர்க்கப்பட்டுbவளிவந்தüல்கள் 1. இந்தி எதிர்ப்பு பாடல்கள் 1937 2. எது இசை? 1945 3. தன்மானத் தாலாட்டு 1946 4. மகாகவி பாரதியார் 1948 இவற்றில் இடம்பெற்ற பாரதிதாசன் பாடல்கள் வேறு கவிதைத் தொகுப்புகளில் சேர்க்கப்பெற்றுள்ளன. முன்னர் வேறு நூல்களில் இடம்பெற்ற பாடல்களே தெரிவுசெய்து தொகுக்கப்பட்டு வேறு பெயரில் வெளிவந்த நூல்கள் 1. காதற்பாட்டு 1942 2. தாயின்மேல் ஆணை 1958 3. தமிழ் உணர்ச்சி 1993 இத்தகைய தொகுப்பு நூல்கள் பல வெளிவந்துள்ளன. பாரதிதாசனின் நாடகங்கள் - காலவரிசை ஐ.நூல் வடிவில் வெளிவந்தவை 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 1939 2. நல்ல தீர்ப்பு 1944 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது (ஒரே தொகுப்பில்) 1944 5. அமைதி 1946 6. சௌமியன் 1947 7. படித்த பெண்கள் 1948 8. சேரதாண்டவம் 1949 9. இன்பக்கடல் 10. சத்திமுத்தப்புலவர் (ஒரே தொகுப்பில்) 1950 11. கழைக்கூத்தியின் காதல் 1951 12. பாரதிதாசனின் நாடகங்கள் 1959 அ. கற்கண்டு ஆ. பொறுமை கடலினும் பெரிது இ. இன்பக்கடல் ஈ. சத்திமுத்தப் புலவர் 13. பிசிராந்தையார் 1967 14. தலைமலைகண்ட தேவர் 1978 அ. தலைமலைகண்ட தேவர் ஆ. கழைக்கூத்தியின் காதல் (1951) இ. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் ஈ. ஆரிய பத்தினி மாரிஷை உ. ரபுடீன் ஊ.அம்மைச்சி எ. வஞ்சவிழா ஏ. விகடக் கோர்ட் 15. கோயில் இருகோணங்கள் 1980 அ. கோயில் இருகோணங்கள் ஆ. சமணமும் சைவமும் இ. மூளை வைத்தியம் ஈ. குலத்தில் குரங்கு உ. மருத்துவர் வீட்டில் அமைச்சர் ஊ. ஆரிய பத்தினி மாரிஷை (தலைமலைகண்ட தேவர் நூலிலும்) எ. முத்துப்பையன் (குழந்தை நாடகம்) ஏ. மேனி கொப்பளித்ததோ? 16. குமரகுருபரர் நாடகம் (1944 - திரைப்படத்திற்காக எழுதியது) 1992 17. பாரதிதாசனின் புதிய நாடகங்கள் 1994 1. அச்சு வடிவம் பெறாமலிருந்த நாடகங்கள் அ. இசைக்கலை (யசோதர காவியம்) ஆ. பறவைக்கூடு I & II (சைகோன். பின்னணி) இ. மக்கள் சொத்து (கதை வடிவினது) 2. நூல் வடிவம் பெறாமலிருந்த நாடகங்கள் அ. ஐயர் வாக்குப் பலித்தது ஆ. கொய்யாக்கனிகள் (கவிதை நாடகம் முற்றுப்பெறாதது) இ. சங்கீத வித்வானோடு ஈ. ஆக்கம் உ. தீவினை II. .நாடகப் பாங்கின (காவியம், சிறுகாப்பியம் எனும் தலைப்புகளில் கவிதைத் தொகுதி களில் இடம் பெற்றவை) 18. புரட்சிக்கவி (1944 - சிறு மாற்றங்களுடன் 1937 நாடகமாக நடத்தப்பெற்றது) 19. வீரத்தாய் (1935 - நெட்டப்பாக்கம் பள்ளி (ஆண்டு விழாவில் மாணவர்கள் நடிப்பதற்கு முதலில் நாடகமாக எழுதப்பட்டது. பாவேந்தரின் மூத்த மகள் வீரத்தாயாகவும் மகன்சுதர்மனாகவும் நடிக்கநடத்தப்பெற்றது.) 1938 20. ஒன்பது சுவை 1949 21. போர் மறவன் 1949 22. காதல் வாழ்வு 1949 III. நாடகமாக நடிக்கப்பெற்றுக் கிடைக்காதவை 1. சிந்தாமணி 1931 2. பாரதப்பாசறை (கற்கண்டு, நாடகப் பகுதியையும் 1963 சீன எதிர்ப்பையும் இணைத்து எழுதப்பட்டது.) IV. நாடகமாக எழுதப்பெற்று ஒத்திகை நடத்தப்பெற்றும் அரங்கேறாதவை, முழுமையாகக் கிடைக்காததும் நூலாகாததும் 1. லதாக்ருகம் 1932 2. நடுநாட்டின் வர்த்தகன் அல்லது நட்பின் இலக்கணம் 1935 (சேக்சுப்பியரின் வெனிசு வாணிகன் நாடகத்தின் தமிழ்வடிவம்) V. பெயரளவில் நாடகம் எனக் குறிக்கப்பெற்றவை - நாடக வடிவில் நூல்களாக வெளிவராதவை 1. தமிழச்சியின் கத்தி 1937 2. பாண்டியன் பரிசு 1940 3. கருஞ்சிறுத்தை 1949 பாரதிதாசனின் பிற உரைநடை ஆக்கங்கள் I. கட்டுரைகள் 1.tªjt® மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? 1980 (சொல்லாய்வுகள்) 2. பாட்டுக்கு இலக்கணம் 1980 3. மானுடம் போற்று 1983 4. பாரதியாரோடு பத்தாண்டுகள் (+ பொழிவுகள், கவிதைகள்) 1992 5. உலகுக்கோர் ஐந்தொழுக்கம் (தலையங்கக் கட்டுரைகள்) 1994 6. இலக்கியக் கோலங்கள் (பாடல் விளக்கக்குறிப்புகள், செய்திகள்) 1996 II. உரை 1. பாரதிதாசன் திருக்குறள் உரை: டாக்டர் ச.சு. இளங்கோ (ஆ.ப.) 1992 2. பாவேந்தர் பார்வையில் வள்ளுவம் - திருக்குறள் உரை: முனைவர் நா. செங்கமலத்தாயார் (தொ. ஆ.) 1994 III. புனைகதைகள் 1. பாரதிதாசன் கதைகள் (+ கட்டுரைகள், கிண்டல் துணுக்குகள்) 1955 2. ஏழைகள் சிரிக்கிறார்கள் (நீக்கம் + புதிய கதைகள்) 1980 ச.சு. இளங்கோ. (தொ. ஆ.) 3. பாரதிதாசன் சிறுகதைகள் (நீக்கம் + புதிய கதைகள்) 1994 மு. சாயபுமரைக்காயர் (தொ.ஆ.) 4. பாரதிதாசன் புதினங்கள் 1994 M. அன்ன M. விஞ்ஞானி ï. அனைவரும் உறவினர் ஈ. பக்த bஜயதேவர்உ. குமரகுருபரர் ஊ.எதிர்பாராத முத்தம் v. ஆத்மசக்தி ஏ. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை ஐ. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் IV. கிண்டல் துணுக்குகள் சிரிக்கும் சிந்தனைகள் 1981 V. வினா விடைகள் கேட்டலும் கிளத்தலும் 1981 VI. திரைக்கதை உரையாடல்கள் 1. காளமேகம் 1940 2. சுபத்ரா 1946 3. சுலோசனா 1947 4. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி 1947 5. பொன்முடி 1950 6. வளையாபதி 1952 7. மகாகவி பாரதியார் வரலாறு 1964 VII. சொற்பொழிவுகள் 1. கவிஞர் பேசுகிறார் 1947 2. முத்தமிழ் (+ பிறர் பொழிவுகள்) 1950 தமிழ் இன்பம் 1954 3. பாரதிதாசன் பேசுகிறார் (+ புதிய பொழிவுகள்) 1980 (நூல்: பாவேந்தரின் உலகநோக்கு, பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி, 2002) 