பாவேந்தம் 10 உரைநடை நாடக இலக்கியம்-3 ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் இளங்கணி பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 10 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16» வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 272 = 304 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 190/- கெட்டி அட்டை : உருபா. 240/- படிகள் : 1000 நூலாக்கம் : திருமதி வ. மலர், சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : திருமதி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.  : 044 2433 9030. பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? jÄœ¤bj‹wš âU.É.f., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! பாரதிதாசன் பெற்ற பேறு ‘பாவேந்தத் தொகுதிகளை ஒரு சேரப் பதிப்பிக்கப் பெற்ற பேறு! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. -இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர் களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டு கோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. ïjid v⮤J¥ bgÇah® jiyikÆš kiwkiy mofŸ, âU.É.f., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப் படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின் மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  நூன்முகம் தமிழில் நாடகக் கலைக்கு நெடிய வரலாறு உண்டு. நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலனெறி வழக்கம் இருந்தமை தொல்காப்பியத்தால் (999) அறியப்படுகிறது. முத்தமிழில் மூன்றாவது நாடகம். முதலிரண்டும் கலந்தது நாடகம். சங்க இலக்கியத் தில் நாடகம் நிகழ்ந்தமைக்கும், மக்கள் விரும்பிப் பார்த்தமைக்கும் சான்றுகள் உள. நாடக மகளி ராடுகளத் தெடுத்த எனப் பெரும் பாணாற்றுப் படையும் (55) பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும் எனப் பட்டினப்பாலையும் (113) நாடக மகளிர் ஆடுகளத்தையும், மக்கள் விரும்பி நாடகம் பார்த்ததையும் குறிப்பிட்டுள்ளன. கலித்தொகையில் நாடகக் காட்சிகளாய்ப் பல பாடல்கள் அமைந்துள்ளன. நாடகம் என்பது ஒரு கதை தழுவி வரும் கூத்து என்றார் அடியார்க்கு நல்லார். ஆடரங்கின் அமைப்பு முதலியவற்றை அரங் கேற்றுக் காதையும் அதன் உரைகளும் சிறப்புற விவரிக்கின்றன. அரசரும் அவரைச் சார்ந்த மக்களும், எளிய மக்களும் நாடகம் பார்க்கும் நிலை சங்க காலத்திற்கு முன்பே இருந்தது. வேத்தியல், பொது வியல் என்னும் இருபிரிவுகளும் இருந்தன. வேத்தியல் அரசர் முதலி யோர்க்கு உரியது. பொதுவியல் பிற மக்களுக்கு உரியது. நாடகம் கூத்து என்றும் கூறப்பட்டது. இவ்வழக்கு இன்று வரை நிலவுகிறது. கூத்தில் வல்லார் கூத்தர் எனப்பட்டனர். கூத்தினை ஆடல் என்றும் வழங்கினர். இறைவனையே ஆடல்வல்லான், கூத்தன், கூத்தபிரான் என்றெல்லாம் போற்றினர். தமிழ்க் காப்பியங்களில் பல நாடகக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. மறைந்துபோன நாடக நூல்களையும், நாடக இலக்கண நூல்களையும் சிலப்பதிகார உரையாசிரியர்கள் தம் உரையில் குறிப்பிட்டுள்ளனர். இந்நூல்களின் மறைவால் தொன்மைத் தமிழ் நாடகங்களின் இயல்புகளை அறிய இயலாதவராகிறோம். முதலாம் இராசராசன் ஆட்சிக் காலத்தில் (கி.பி.985-1012) தஞ்சை பெரிய கோவிலில் இராசராச நாடகம் நிகழ்ந்தமைக்குச் சான்றுகள் உண்டு. பிற கோயில்களிலும் பூம்புலியூர் முதலிய நாடகங்கள் நிகழ்ந்தமைக்குக் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. தளிச்சேரிப் பெண்டுகளால் நாட்டிய நாடகங்களும் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் பிறமொழி ஆட்சியாளர்களால் தமிழ் நாடகமரபுச் சிதைந்தது. பொருநர், கூத்தர், விறலியர், பாணர், பாடினியர் முதலியோர் தத்தம் கலைகளை மறந்தனர். போற்றுவாரின்றி அழிந்த கலைகளுள் நாடகமும் ஒன்று. பக்தி நெறியின் செல்வாக்கால் வடமொழிப் புராணங்கள் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றன. புராணக் கதைகள் நாடகங்களாய் நடிக்கப்பட்டன. ஊர் ஊருக்குப் பல குழுக்கள் முளைத்தன. நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமிகள் பல புராண நாடகங்களைப் புதிதாக இயற்றி நாடக மேடையேற்றினார். தமிழகமெங்கும் ஆங்காங்கே பாவலர்க ளாலும் கலைஞர்களாலும் நாடகங்களும் நாடகக்குழுக்களும் தோன்றின. ஊர் விழாக்களின் போது விடிய விடிய புராண நாடகங்கள் நிகழ்த்தப் பெற்றன. ஆங்கிலக் கல்வியின் தாக்கத்தால் ஆங்கில நாடகங்களைப் போலத் தமிழிலும் அங்கம், காட்சி (களம்) அமைக்கும் முறை தோன்றியது. பெ. சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம், பரிதிமாற் கலைஞரின் ரூபாவதி, மதிவாணன், மறைமலையடிகளின் சாகுந்தலம், பம்மல் சம்பந்தனாரின் சபாபதி முதலிய நாடகங்கள் தோன்றின. தேசிய விடுதலை உணர்வு மிக்கெழுந்தபோது கதரின் வெற்றி முதலிய நாடகங்கள் எழுந்தன. புராண நாடகங்களும் ஊடே அமைந்த பாடல்களால் விடுதலையுணர்வுக்கு வித்திட்டன. திராவிட இயக்கத்தவரின் பகுத்தறிவுக் கருத்துகள் நாடெங்கும் பரவின. சமூகச் சீர்த்திருத்த எண்ணங்கள் தளிர்த்தன. பகுத்தறிவு, மூட நம்பிக்கையொழிப்பு, மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு, மறுமணம், பெண்ணுரிமை, குழந்தைமணக் கொடுமை, தொழிலாளர் நலன், தமிழிசை இயக்கம், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு முதலியவற்றை வலியுறுத்தும் சமூக நாடகங்கள் கனல் தெறிக்கும் உரையாடல்களுடன் மக்கள் நெஞ்சத்தைத் தொட்டன. புலவர்களும், கலைஞர்களும் இத்தகைய சமூகச் சீர்திருத்த நாடகங்களைப் படைத்தனர். பல நாடகக் குழுக்களும் வேளை தவறாமல் இவ்வேலையைச் செய்தன. அரசியல் கட்சிகளின் மாநாடுகளிலும் நாடகங்கள் இடம் பெற்றன. பள்ளிகளின் இலக்கிய மன்றங்களில் மாணவர்கள் இலக்கிய, புராண நாடகங்களை நடித்தனர். இக்காலச் சூழலில் பள்ளியில் பயிலும் போதே கனகசுப்புரத்தினம் பள்ளி ஆண்டுவிழாவில் நடித்துள்ளார். தமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்கு கற்றுப் பெரும்புலமையுற்ற நம் கவிஞர் இசைப்புலமையும் நிறைந்திருந்தார் பாடல்களைப் பாடிக் குவிக்கும் பாவேந்தரானார். ஆசிரியப் பணியாற்றும்போதே சிந்தாமணி, வீரத்தாய் என்ற நாடகங்களை மாணவர்களால் பள்ளி மேடைகளில் அரங்கேற்றி யுள்ளார். இளமையிலிருந்தே, இயற்றமிழிலும், இசைத்தமிழிலும் ஆர்வ மும் ஈடுபாடும் கொண்ட நம் கவிஞருக்கு நாடகத் தமிழும் கைவந்த கலையாயிற்று. திரைப்படங்களுக்குப் பாடல் எழுதத் தொடங்கினார். கதைகளும், கவிதைகளும் எழுதிக் குவித்த நம் கவிஞர் அவற்றை நாடகமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். 1938-இல் முதல் கவிதை நாடகம் வீரத்தாய் வெளிவந்தது. பாவேந்தரின் நாடகங்களைக் கவிதை நாடகங்கள், உரைநடை நாடகங்கள் இரண்டும் கலந்த நாடகங்கள் எனப் பகுக்கலாம். fhjyh flikah?, புரட்சிக்கவி ஆகியன முன்னர்க் கதைப்பாடலாயிருந்து பின்னர் நாடகமாயின. பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி முதலியன முதலில் நாடகங்களாகப் படைக்கப்பட்டுப் பின்னர் கதைப்பாடல் களாயின. 1941-இல் தோழர் இராசவேலுக்குப் பாவேந்தர் எழுதிய கடிதத் தில்கவிதைகள், நாடகம், சிறுகதை தமிழர் கொள்கை சுவைக்கான கருத்துமாக எழுத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் பாவேந்தரின் நாடகங்கள், தமிழர் கொள்கையை வலியுறுத்துவனவாய், சுவையுடையனவாய், கருத்துகள் நிறைந்ததாய் விளங்கின என்பது தெளிவு. 1943-இல் முத்தமிழ் அரங்கு என்னும் நாடகக்குழு அமைப்பதில் ஆர்வமும் ஈடுபாடும் காட்டியுள்ளார். தோழர் செல்லப்ப ரெட்டியாருக்கு எழுதிய கடிதங்களில் நாடக அரங்கு, நடிகர்கள், பாடகர், ஆடல் வல்லவர், வாத்தியக்காரர், நாட்டியக்காரர் ஆகியோரை அமைக்கவும், அவர்களைத் தங்க வைக்கவும், சம்பளம் கொடுக்கவும் பாவேந்தர் காட்டிய ஆர்வம், நெருக்கடி முதலியன புலப்படுகின்றன. முத்தமிழ் நிலையத்தையும் நாடகத்திற்கென்றே சென்னை சாந்தோம் பகுதியில் கடற்கரையொட்டி ஒரு பெரிய வீட்டில் அமைத்திருந்தார். புரட்சிக் கவி, இசையமுது நாடகங்கள் இதன் சார்பில் நடிக்கப்பட்டன. நடிப்பு, காட்சியமைப்பு, நாட்டியம், இசை முதலிய ஒவ்வொன்றிலும் பாவேந்தர் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். தேர்ந்த இயக்குநராய் விளங்கினார் எனலாம். சில நாடகங்கள் பாவேந்தரின் முன்னிலை யில் ஒத்திகை செய்யப்பட்டுள்ளன. அப்போது நடிக்கும்முறை, பாடிய முறை முதலியவற்றில் திருத்தங்களைக் கூறிச் செயற்படுத்தியுள்ளார். இன்ப இரவு என்னும் நாடகம் தந்தை பெரியார் முன்னிலை யில் சென்னை சாந்தோம் பகுதியில் 2.4.1944 இல் நடிக்கப்பட்டது. பார்த்த பெரியார் பாராட்டியுள்ளார். பாராட்டு 8. 1. 44 குடி அரசு இதழில் வெளிவந்ததின் ஒரு பகுதி: இன்று இந்த நாட்டில் தமிழும் தமிழ்க் கவியும், தமிழ் இசையும் தமிழர்களுடைய முன்னேற்றத்துக்கும், தன் மானத்துக்கும் பயன்படும்படி மக்கள் உணர, மக்களை ஊக்குவிக்க அவர் ஒருவரே என் கண்ணுக்குத் தென்படுகிறார். அவரை நாம் பயன்படுத்திக் கொள்வதில் தான் நம் வெற்றியின் தன்மை இருக்கிறது இதனால் பெரியாரின் கொள்கைக்கேற்ற தன் மானமிக்கவராய்ப் பெரியார்க்கு தெரிந்த ஒரே கவிஞர் நம் பாவேந்தர்தாம். பாவேந்தரின் நாடகங்களில் இளங்கணி பதிப்பகத் தொகுப்பு களில் இடம் பெற்றுள்ளவை 52. ஆய்வுத் தேடல்களுக்கு அகப்பட வேண்டியவை யும் உள்ளன. இவற்றுள் முழுமை பெற்ற நாடகங்கள் பல. முழுமை பெறாமல் - முடிவு இல்லாமல் உள்ளனவும் இருக்கின்றன. வானொலிக் காகவும் சில நாடகங்களைப் படைத்துள்ளார். அவற்றில் உள்ள ஒலிக்குறிப்புக்களால் அக்குறிப்பு புலப்படுகின்றது. பாவேந்தர் படைப்புகள் பல. மாணவர் குறிப்பேடுகளில் எழுதப்பட்டவை. அவற்றின் பழைமையால் தெளிவில்லாப் பகுதிகளும் தெரிய வந்துள்ளன. இத்தொகுதியில் புதியனவாய் வருவனவும் உள்ளன. பாவேந்தரின் நாடகங்கள் ஆய்வாளர்களின் ஆய்வுக்குட் பட்டுள்ளன. முனைவர் ச.சு.இளங்கோ பல வகைகளாகப் பகுத்துள்ளார். அவை: தமிழ் இலக்கியச் சார்பு நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், கற்பனை வரலாற்று நாடகங்கள், சமூக நாடகங்கள், அங்கத நாடகங்கள், ஆரியப்புரட்டு விளக்க நாடகங்கள், குழந்தைகளுக்கான நாடகங்கள், குறு நாடகங்கள் என்பன. வேறுவகையாகப் பகுப்பாரும் உளர். இன்பியல் நாடகம், துன்பியல் நாடகம் எனவும் நடிப்பதற்குரிய நாடகம், படிப்பதற்குரிய நாடகம் எனவும் பார்க்கும் பார்வையும் உள. படிப்பதற் குரிய நாடகங்களுள் சில, சில மாற்றங்களுடன் நடிப்பதற்குரியனவாக மாற்றப்பட்டுள்ளன. பழந்தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள், தனிப்பாடல்கள் முதலிய வற்றில் கொண்டிருந்த ஈடுபாடும், புராணங்கள், பழக்க வழக்கங்கள், மத அமைப்புகள் முதலியவற்றின்மீது வைத்திருந்த எண்ணங்களும், திராவிட இயக்கக் கோட்பாடுகளின் செயல் வேகங் களும், மொழி ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சியும் இத்தகைய நாடகங்கள் தோன்றக் காரணமாயின. பிசிராந்தையார் சங்கப்புலவர் பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் நட்பை அடிப் படையாகக் கொண்டது. தலைமலை கண்ட தேவர் தலைமலைகண்ட தேவர் கண்ணில்லாதவரானாலும் பாடல் புனை வதில் வல்லவர். பரத்தை வீட்டில் திருடப் போய்ப் பதுங்கிக் கவிதை பாடிப் பரத்தையின் காதலைப் பெற்றதையும், பரத்தையருக்கும் தமிழ்ப் பற்றுண்டு என்பதையும் காட்டுவது. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் குடும்ப விளக்கில் வரும் தங்கம் போல இயங்குபவள் தில்லைக்கண்: அவள் கணவன் திருக்காமு முதலியார், குடும்பப் பொறுப்பற்றவராக இருக்கிறார். விளக்கு இருக்கும் இடமெல்லாம் ஒளிவீசும் பெண்டிரையும் இருந்த இடத்தைவிட்டு அசையாதிருக்கும் குண்டுக்கல் போல குடும்பப் பொறுப்பற்ற ஆடவரையும் காட்டுவது. ஆரியப் பத்தினி மாரிஷை ஆரியப் பெண்களிடம் தமிழர்கள் விழிப்பாயிருக்க வேண்டியதை எள்ளல் சுவையுடன் காட்டுவது. ரபுடீன் இஷ்யாவில் ஜார் மன்னன் அவையில் குருவாக விளங்கிய ரபுடீன் ஒழுக்கக் கேடான போலித் துறவி. மதத்தின் பேரால் மக்களைச் சிந்திக்க விடாமல் செய்தவன். இவனது வரலாற்றின் சில முக்கியப் பகுதிகளைக் காட்டுவதும், போலி மதத்தலைவர்களின் தன்னலப் போக்கையும் சாதி ஆதிக்கத்தையும் மக்கள் எதிர்த்துப் புரட்சி செய்ய வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டது ரபுடீன்; அம்மைச்சி அந்தகக் கவி வீரராகவர் பாடல் ஒன்று காஞ்சியில் வாழ்ந்த அம்மைச்சி என்னும் தமிழச்சியின் வீடு இனப் பகைவர்களால் அழிக்கப் பட்டதைக் குறிப்பிடுகிறது. இதனை மையமாக வைத்துத் தமிழர் அயலா ரின் சூழ்ச்சிக்கும் வஞ்சகத்துக்கும் இரையாகக் கூடாது என்பதை வலி யுறுத் துவது. வஞ்சவிழா தமிழர் வாழ்க்கையை அழிக்க ஆரியர்கள் திட்டம் போட்டுத் தமிழரின் துணையால் தமிழரை வென்றதன் அடையாளச் சின்னம் தீபாவளி. அதுவே வஞ்சவிழாவாகிறது. தீபாவளி தமிழர்க்குத் துக்கநாள்; விகடக்கோர்ட் கடவுள், சமய நம்பிக்கைகளை எள்ளுகிற முறையில் மக்களிடையே பகுத்தறிவுச் சிந்தனைகளை வளர்க்கும் நோக்கத்தில் எழுதப்பட்டது. நாடக மாந்தர் பெயர்களே நகைச் சுவையையும் எள்ளலையும் தருகின்றன. கோயில் இரு கோணங்கள் மக்களின் மதியை மயக்கும் மதங்களின் நிலையை மக்கள் உள்ளத்தில் பதிய வைக்க எழுதப்பட்டது. சமணமும் சைவமும் மதுரையில் நின்ற சீர் நெடுமாறன் ஆட்சியின்போது நிகழ்ந்த சமயக் கலவரத்தில் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்ட கொடுமை நிகழ்ச்சியை மையக் கருத்தாகக் கொண்டது. குலத்தில் குரங்கு ஆணாதிக்கச் சமுதாயத்தில் ஆண் அழகற்றவனாக - குரங்காக இருந்தாலும் பெண் அவனுடன் வாழவேண்டும் என்னும் கொடுமை சித்திரிக்கப்படுவதும், திருமணத்தின் மூலம் நடக்கும் ஏமாற்று வேலைகளை வெளிப்படுத்துவதாகும். மருத்துவர் வீட்டில் அமைச்சர் அரசியல் வாதிகளை (1948இல் கல்வியமைச்சர் தமிழாசிரியர்களை எண்ணியதை உள்ளத்தில் கொண்டு) எள்ளும் போக்கில் இரட்டுற மொழிதல் நயத்தோடு அமைக்கப்பட்டது. முத்துப்பையன் முந்தைய தலைமுறையைவிட பிந்தைய தலைமுறை நுட்ப அறிவுடன் விளக்குவதைக் காட்டும் குறுநாடகம். மேனிக்கொப்பளித்ததோ ஒரு காட்சி சிறு நாடகம் உருவகக் காட்சி எனப் பாவேந்தர் தலைப் பிட்ட மேனிக்கொப்பளித்ததோ கவிதை நாடகமாகக் கருதத்தக்கது. பாவேந்தர் நாடகங்கள் அவர் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு கற்பனை நயம் செறிய, நகைச் சுவை பொதுள எளிய நடையில் தமிழர், மொழி, இன, நாட்டு உணர்வு பெற்றுத் தமிழராக வாழ வேண்டும் என்பதற்காகப் படைக்கப்பட்டவை. இத் தொகுதியைப் படிப்பார் அதனைப் பெறவேண்டும் என்பது எம் விழைவு. - முனைவர் பி. தமிழகன்  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1 : இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி - 2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஒருநாள் நிகழ்ச்சி) இரண்டாம் பகுதி (விருந்தோம்பல்) மூன்றாம் பகுதி (திருமணம்) நான்காம் பகுதி (மக்கட்பேறு) ஐந்தாம் பகுதி (முதியோர் காதல்) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10 : உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரஸ்புடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (தீபாவளி) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (முத்துப் பையன்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஒரு காட்சி சிறு நாடகம்) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் ஐ & ஐஐ 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா 1. ஆக்கம், 2. தீவினை 7. கொய்யாக் கனிகள் (கவிதை நாடகம்) தொகுதி -12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி -13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி - காரியக்காரன் (கடவுள் விஷயத்தில் ஜாக்கிரதை) 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை (செவ்வாயுலக யாத்திரை) 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (விதவைகள் துயர்) 14. திருந்திய ராமாயணம்! (பால காண்டம் - டெலிபோன் படலம்) 15. இதயம் எப்படியிருக்கிறது? (ஏழைகள் சிரிக்கிறார்கள்) 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி (மான்களின் ஒற்றுமை கண்டு அஞ்சி இறந்தது) 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (னுசைநஉவடிச)யின் தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (அவளும் நானும்) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. “வாரி வயலார் வரலாறு” அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி -14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி -15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி -16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி -17 : பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி -18 : பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி -19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி -20 : கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி -22 : கட்டுரை இலக்கியம் - 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி -23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி -24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் (தொகுதி 23இன் தொடர்ச்சி) 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி -25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (நெடுங்கதை) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (சூநபயவiஎந): பிராசசு இந்தியா (ஞசடிஉநளள ஐனேயை) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. பொருளடக்கம் பொங்கல் மாமழை v நுழையுமுன் ... ix வலுவூட்டும் வரலாறு xii பதிப்பின் மதிப்பு xv நூன்முகம் xvii 1. பிசிராந்தையார் 1 2. தலைமலை கண்ட தேவர் 135 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 143 4. ஆரிய பத்தினி மாரிஷை 176 5. ரபுடீன் 188 6. அம்மைச்சி 201 7. வஞ்சவிழா 212 8. விகடக் கோர்ட் 218 9. கோயில்இருகோணங்கள் 225 10. சமணமும் சைவமும் 235 11. குலத்தில் குரங்கு 243 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 260 13. குழந்தை நாடகம் 262 14. மேனி கொப்பளித்ததோ? 266 15. நிமிஷ நாடகம் 268  பிசிராந்தையார் முகவுரை பண்டைத் தமிழகச் சான்றோரில் நரை திரை மூப்பு இன்றிப் பல்லாண்டு வாழ்ந்த நற்றமிழ்ப் பெரியார் பிசிராந்தையார். இவர் பாடிய பாடல்கள் தொகை நூல்களுள் அகநானூற்றில் ஒன்றும் (308), நற்றிணை யில் ஒன்றும் (91), புறநானூற்றுள் நான்கும் (67, 184, 191, 212) ஆக ஆறு பாடல்களே. இவர் பாண்டிய நாட்டிலே பிசிர் என்னும் சிற்றூரில் வாழ்ந்தவர்; ஆந்தையார் என்பது இவர்குரிய இயற்பெயர். ஊர்ப் பெயருடன் சார்த்தியே இவர் தம் பெயரை வழங்குவர். இரும் பிசிர் ஆந்தை அடியுறை எனினே (புறம்.67) எனப் பிசிராந்தையாரே அன்னச் சேவலுக்குத் தன் பெயரை மொழிகின்றார். பிசிராந்தையார் பாண்டிய சோழ மன்னர்களால் பெரிதும் மதித்துப் போற்றப் பெற்றவர்; பாண்டியன் அறிவுடை நம்பியின் அரசவைப் புலவர்; கோப்பெருஞ் சோழனின் ஆருயிர் நண்பர். கோப்பெருஞ் சோழனிடத்தும் பிசிராந்தையாரிடத்தும் பெருகிய நட்பு, ஒருவரைப் பற்றி ஒருவர் பிறர் வாயிலாகக் கேட்டு வளர்ந்த பெரு நட்பு. புலவர் பிசிராந்தையார் தம் பெயரைப் பிறர்க்குச் சொல்லும் பொழுது கோப்பெருஞ்சோழன் பெயரையே தமக்குப் பெயராகக் கூறுவாராம். கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து தன் உயிர் துறக்க முற்பட்ட பொழுது, தன் நண்பர் பிசிராந்தையாரும் தன்னுடன் வடக்கிருக்க வருவார் என்று கூறி, அவருக்கும் ஓர் இருப்பிடம் அமைக்கப் பணிக்கின்றான். அவனுடைய அரசவைப் புலவர் பொத்தியார், புல்லாற்றூர் எயிற்றியனார் முதலியோர் வியப்புறும் வண்ணம் பிசிராந்தையாரும் சோழ நாடு வந்து கோப்பெருஞ் சோழனுடன் வடக்கிருந்தனர். புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் என்னும் வள்ளுவர் வாய்மொழிக்குத் (78 நட்பு:5) தக்க சான்றாய்த் திகழ்ந்தது பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழன் நட்பு. இக்குறளின் உரையில், கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி ஒப்பின் அதுவே உடனுயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும் எனப் பரிமேலழகர் எடுத்துக் காட்டுவதும் இன்பம் பயக்கும். ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோராக விளங்கிய பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழர்களின் புகழ்மிக்க வரலாற்றை அடி நிலையாகக் கொண்டு புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் புனைந்த நாடக நன்னூல் இது. பழம் பாடல்களில் கண்ட செய்திகளைக் கருவாகக் கொண்டு, கவிஞர் தம் கற்பனைத் திறனால் நிகழ்ச்சிகளைக் கோவைப்பட வகுத்துக்காட்டி, அவையெல்லாம் நம் கண்ணெதிரில் நிகழ்வனபோன்று சித்திரித்துள்ளார். எல்லாரும் நல்லவராய் இருந்தால் மட்டும் போதாது; எல்லாரும் செல்வராய் இருந்தால் மட்டும் போதாது; எல்லாரும் வல்லவராயும் இருத்தல் வேண்டும் என்னும் கருத்தை உயிர் நிலையாக எடுத்து மொழிகின்றார் கவிஞர். இங்ஙனமாக இவர் இடையிடையே கதைப் போக்கில் இழையவிடும் இலட்சியக் கருத்துக்கள் பலப்பல. தமிழனுக்கு வேண்டுவது உறுதி: தவறுவது வாழ்வின் இறுதி. தமிழனின் உயிர் தமிழே ஆகும்; தமிழிற் பற்றில்லாதவன் தமிழன் அல்லன்; அவன் உயிர் உடையவனும் அல்லன். தமிழர் நிறை மனைவியின் கற்பை வைத்து நிறுக்கப் படும். இது ஆலின் குற்றமன்று; அந்த ஆலின் நிழலில் அண்டிய பறவை செய்த குற்றம். முதற்பக்கம் பார்க்காமல் சுவடியைத் திருப்பிக் கொண்டே போனால் புரியாதுதான். இவைபோன்ற கருத்துரைகளால் கவிஞர் கற்பார் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறார். நாடகச் சிறு காப்பியமாக உள்ள இந்த நூலில் அங்கங்கே ஏற்றபெற்றி இடையிடையே பாட்டுகளையும் கவிஞர் புகுத்தியுள்ளார். இவற்றுள் இசைப் பாட்டுகள் பல; அகவற் பாக்களும் சில உள. இவை மனோன்மணீய நாடகப் பாடலை நினைவூட்டுகின்றன. கதை உறுப்பினருக்கு ஏற்ற பா நடை பாவலர்க்குப் பெரு விருந்து. பச்சைக்கிளி தன் மணவாளனோடு வீட்டுத் தோட்டத்தில் பொன்னூசலாடும்போது, அவ்விருவரின் வாய்ப்பிறப்பாக வைத்துக் கவிஞர் பாடிய பாடல்களில் தமிழர்தம் வாழ்க்கைக்கு வேண்டும் உயரிய குறிக்கோள்களை வெளியிட்டுள்ளார். மாறாத இளமை வேண்டும்; வற்றாத அன்பு வேண்டும் என்று தொடங்கி, தென்னாடு வாழ வேண்டும்; செந்தமிழ் வாழ வேண்டும்; முன்னேறும் திறமை வேண்டும்; தன் மானம் நாம் பெற வேண்டும் என்று முடிக்கின்றார். இவையெல்லாம் இளந் தலைமுறை யினர்க்கு ஊக்கமூட்டும் உயர்வுரைகளாம். கவிஞர்தம் உரைநடையும் திட்ப நுட்பம் வாய்ந்துளது. கதை மாந்தரின் இயல்புக்கு ஏற்ற நடையை எங்கும் கண்டு களிக்கலாம். நாடக அமைப்பில் இடைப் பிறவரலாகவும், கதைத் தொடர்பாகவும் நாடகத்துள் நாடகம் என ஈரிடங்களில் புகுத்தியுள்ள அமைப்பு கலைத்திறம் வாய்ந்தது. ஒவ்வொரு காட்சியிலும் வரும் நிகழ்ச்சிகளின் உயிர்நிலையாக அழகிய கட்டுரைச் சொற்றொடர்களிலே காட்சித் தலைப்புகள் தரப் பெற்றிருக்கின்றன. இத் தலைப்புகளும்கூடக் கவிஞர்தம் கற்பனையைக் காட்டுகின்றன. இவ்வாறாக உண்மை வரலாறு ஒன்றன் அடிப்படையில் கவிஞர் தம் கற்பனைத் திறங்கொண்டு ஆக்கிய இப் புதுமை இலக்கியம் காட்சிக்குக் காட்சி கவினுறு கலை நுட்பம் வாய்ந்து, நூலை மேலும் மேலும் படிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இம் மாட்சி பெரிதும் வியத்தற் குரியது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் புதுமைப் படைப்புகளைப் படித்துப் பாராட்டி வரும் தமிழகம் பிசிராந்தையார் நாடகத்தையும் போற்றி வரவேற்கும் என்பது திண்ணம். நண்புக் குயிர்தந்தான் நண்பு பெரிதென்றான் உண்மை யுடையான் பிசிராந்தை நற்பெயர் தெண்ணிலவும் செங்கதிரும் உள்ளநாள் வாழியவே! v©QyÉ ešyw« v‹bw‹W« thÊant! என்பது கவிஞரின் வாழ்த்துரை. நல்லறம் தழைக்க! நாடு செழிக்க! கவிமணி நிலையம் சென்னை-33, 24.5.67 மு. சண்முகம் காட்சி - 1 யானை குப்பை வாருகின்றது இடம் : பாண்டிய நாட்டுத் தலைநகர் மதுரையில் இறைவர் தெருவில் பிசிராந்தையார் வீடு. நேரம் : மாலை ஐந்து மணி. கதை உறுப்பினர் : பிசிராந்தையார், பேரன், மேற்படியார். நிகழ்ச்சி : பிசிராந்தையாரின் வீட்டுக் குறட்டில் யானைக்கு இட்ட கரும்பின் கட்டுகளை அது மென்றுமிழ் கின்றது. அதனால் குவிந்த கருப்பஞ் சக்கைகளை அதுவே கூட்டி அள்ளிப் பெருங் கூடையில் நிரப்பி நிரப்பித் தொலைவிற் சென்று கொட்டி விட்டு வருகின்றது. பிசிராந்தையார் தம் கடைசிப் பேரனாகிய கோப்பெருஞ் சோழனைத் தோளில் தூக்கியபடி வெளியில் வருகின்றார். அவரைத் தொடர்ந்து புலவர் பலர் வருகின்றார்கள். கோப்பெருஞ்சோழன்: மண்டியிடச் சொல்லுக தாத்தா யானையை! பிசிராந்தையார்: மண்டியிடு கோப்பெருஞ் சோழனார்க்கு! (மண்டியிடுகின்றது. பிசிராந்தையார் பேரனை அதன் மேல் உட்கார வைக்கின்றார்.) புலவர்.1 : ஏறுவோர் கோப்பெருஞ்சோழனார். ஏவுவோர்ஆந்தையார், ஏனையா யானை மண்டியிடாது? (யானை நகராது நிற்கிறது.) கோப் : என்ன தாத்தா! யானை போகமாட்டேன் என்கிறது. பிசிரா : நீ விழுந்து விடக்கூடும் என்று. கோப் : இல்லை! இல்லை! அதற்குப் பசி தாத்தா? (இதற்குள் புலவர் ஒருவர் பிசிராந்தையாரை அணுகிப் பாடுகின்றார். பேரனும் மற்றப் புலவரும் புதுப் புலவரை நோக்குகின்றார்கள்.) புதுப்புலவர் பாட்டு ஈண்டிய நற்புகழ் எண்டிசை போற்றிடும் தென் மதுரைப் பாண்டியன் போற்றிடும் பாவலரே நான் பசித்து வந்தேன் வேண்டிய முத்தமிழ்ச் சோறிட்டு வாழ்வில் விளக்கேற்றுவீர் ஆண்டிநான்! நீர் அருட்செல்வரன் றோதமிழ் ஆண்டவரே! (கை கூப்புகின்றார்.) பிசிரா : வேண்டிய மட்டும்! கோப் : யானைப் பசிக்கு... பிசிரா : வேண்டிய மட்டும். (புதுப்புலவரை நோக்கி) இருக்கலாமே! கோப் : யானை? பிசிரா : போகலாமே. (யானை போகின்றது. பேரன் முகத்தை மகிழ்ச்சி தழுவு கின்றது. புதுப்புலவர் ஒருபுறம் திண்ணையில் அமர்கின்றார். அவர் உள்ளம் பூரிக்கின்றது.) புலவர் 1 : (புதுப் புலவரை நோக்கி) எந்த ஊர்? புதுப் புல : சோழநாடு! ஐயா, உங்களை ஒன்று கேட்க எண்ணுகிறேன். புலவர் 1 : நன்றாக! புதுப்புல: (பிசிராந்தையாரைக் காட்டி) இவர்கள் பேரனுக்கு என்ன பெயர்? புலவர் 1 : கோப்பெருஞ்சோழன்! புனைபெயர்! இயற்பெயர் முருகு. உங்கட்கு வியப்பாயிருக்கும், கோப்பெருஞ்சோழனென்று இவர்கள் தம் பேரனுக்குப் புனைபெயர் இட்டது பற்றி. புதுப் புல: ஆம் ஐயா! புலவர் 1 : சோழநாட்டு வேந்தர் கோப்பெருஞ்சோழனார் இவர்கட்கு நெருங்கிய நண்பர். புதுப் புலவர்: அடிக்கடி அவரை இவர் நெருங்குவதுண்டோ? புலவர் 1 : உடல் நெருக்கமில்லை, உள்ளத்தின் நெருக்கந்தான். புதுப்புலவர்:நானும் சோழவேந்தர் அவையில் இருந்தவன். ஒருமுறை யாவது இவர்களை அங்குக் கண்டதில்லை. புலவர் 1 : கண்டிருக்க முடியாது. நட்பின் இலக்கணம் புணர்ச்சி பழகுதல் மட்டுமா? புதுப்புலவர்: இல்லை! உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும். புலவர் 1 : இவர்களின் உள்ளக் கோயிலில் என்றும் நிலையாக எழுந் தருளியிருப்பவர் கோப்பெருஞ்சோழரே! பிசிரா : இதுவரைக்கும் கோப்பெருஞ் சோழரை நான் காணும் வாய்ப்புப் பெறவேயில்லை; அவரை நான் என்றும் மறவாமல் நினைவில் வைத்திருப்பதற்குக் காரணமும் அதுதான் என்று எண்ணுகிறேன். (அதே நேரம் மேற்படியார் என்ற புலவர் வருகின்றார்.) பிசிரா : வருக மேற்படியாரே! என்ன வர வர மேற்படியார் கீழ்ப்படி யாராகி விட்டார். காலையில் வரும்படி சொன்னேன். கீழ்ப்படிந்தாரா? மேற்படியார்: வரும்படியிருந்தால்தானே வரும்படியாய் இருக்கும். என் குழந்தை சோறு கேட்டான். மனைவி இல்லையென்றாள். இரும்படி உன் நெஞ்சம் என்றேன். ஒரு பணம் தரும்படி கேட்டாள் அரிசி வாங்க. வரும்படியிருந்தால்தானே! திரும்படி உன் ஆத்தாள் வீட்டுக்கு என்றேன். பெரும்படி வருந்தினாள். அங்கிருக்க முடியவில்லை. இங்கு வரும்படி நேர்ந்தது. பிசிரா : அரிசி வாங்க ஒரு பணமா இல்லை! சிரிக்கவைத்து என்னை இன்பத்திற் சேர்க்கும் நீவிர் இப்போது அழ வைத்துத் துன்பத்திற் சேர்த்தீர். முதலில் இதைக்கொண்டு போய் மனைவி மக்களின் பசித்துன்பத்தைப் போக்கி வரவேண்டும். (மார்பின் கல்லிழைத்த பதக்கத் தொங்கலைக் கழற்றி மேற்படியார் கையில் கொடுக்க அவர் வாங்கிக் கொள்கிறார்.) மேற்படியார்: (மற்றப் புலவர்களைப் பார்த்து நகைத்து) இதைக் கொண்டு போய் வீட்டில் வைத்துவிட்டு வந்துவிடுகிறேன். புலவர் 1 : அப்படியானால் பணமில்லை அரிசியில்லை என்றதெல்லாம் பச்சைப் புளுகுதானா? மேற் : வேறென்ன? (அனைவரும் சிரிப்புக் கடலில் மூழ்குகின்றார்கள்.) புலவர் 1 : (கரையேறி) ஐயா (பிசிராந்தையாரை நோக்கி) நகை தந்து நகையைப் பறித்தார் உங்களிடமிருந்து......! பிசிரா : நகை இழந்தது பெரிதன்று. நகைப்பைப் பெற்றேன், அது பெரிது. பெறற்கரிது! நீரே அணிந்து கொள்க மார்பணியை. புலவர் 1 : பொய் சொல்லியதற்காக பிசிரா : இல்லை! இல்லை! அந்தப் பொய்யை நான் நம்பியதற்காக. எல்லாரும் நல்லவர் இந்த நாட்டில், எல்லாரும் செல்வர்கள் இந்த நாட்டில். அரிசி இல்லை என்று மேற்படியார் சொல்லி யதை நான் ஏன் நம்பினேன் என்றால், ஏழைகள் ஒருசிலர் தோன்ற மாட்டார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தது என் உள்ளம். ஏழ்மை தோன்றிற்று. நம்பிவிட்டது என் உள்ளம். புலவர் 1 : ஏழைகள் இருக்க வேண்டுமா? எதற்காக ஐயா? பிசிரா : எல்லாரும் நல்லவர் இந்த நாட்டில், எல்லாரும் செல்வர் கள் இந்த நாட்டில். வாழ்வில் தொல்லை இல்லையே தவிர மன மகிழ்ச்சிக்கு வழியுண்டா? மேற்படியாரின் ஒரே ஒரு பொய் தானே நமக்கு விடா நகைப்பை உண்டாக்கிற்று! எல்லாரும் நல்லவர் இந்த நாட்டில். எல்லாரும் செல்வர் கள் இந்த நாட்டில். தீயவர் சிலர் இருக்கவேண்டும். ஏழைகள் சிலர் இருக்கவேண்டும், இல்லையானால், மக்கள் இயக்கம் மரப்பாவை இயக்கம். இதே நேரம் யானை விரைவாகத் திரும்புகின்றது. பேரன் அஞ்சித், தாத்தாவைத் தாவுகின்றான். மழையும் காற்றும் வந்ததால் தாத்தா பேரனைத் தூக்கிக் கொண்டு உள்ளே போக, மற்றவரும் உட்செல்லுகின்றார்கள். (காட்சி முடிவு)  காட்சி - 2 வேலமரம் பந்து - ஆலமரம் அம்மானைக்காய் இடம் : பாண்டிய நாட்டுத் தலைநகராகிய மதுரையில் அரண்மனை நிலாமுற்றம். நேரம் : முன்னிரவு கதை உறுப்பினர் : பாண்டியன் அறிவுடை நம்பி, அரசி, பிறர். நிகழ்ச்சி : நிலாமுற்றத்தில் அரசன் அரசி நின்று காற்று மழையின் நிலை காணுகின்றார்கள். பாண்டியன் : தூங்காமணி விளக்கத்தைத் தூக்கிக் கொண்டு ஓடிய கள்ளனைப் போல் வெள்ளிய நிலாவை அள்ளிக் கொண்டு போய் மறைத்தது கருமுகில். நள்ளிருள் உலகுக்குத் திரையிட்டது. பாண்டி மன்னி : ஒன்றையொன்று தொடரும் கடலலை போல் அந்தக் கருமுகிற் கூட்டம் தடதடவென்று தாளத்தோடாடித் தகதகவென்று மின்னலைச் செய்தது அத்தான்! பாண்டியன் : இது வரைக்கும் நடந்த கதை இது! இப்போது பார்! காற்றும் மழையும் கைகோத்து ஆடி மகிழ்ந்தபடி துடுக்குத் தனத்தையும் தொடங்கிவிட்டன. என்ன இது? பூக்களின் இதழும் ஈக்களின் குரலும் நனைந்தன. மேலும் நடுங்கின. பா. மன்னி : அத்தான்! அத்தான்! புன்னை மரங்கள் புரளுகின்றன தரையில், தென்னை மரங்கள் சிரிக்கின்றன வானில். பாண்டியன் : துன்ப அறிவிப்பா! (மணி ஓசை கேட்டு) ஓடிவிடு கண்ணே உன் அறைக்கு! ஆராய்ச்சிமணி அலறுகின்றதே! (அரசன் வெளிநோக்கிச் செல்ல அடி எடுக்கின்றான்.) மன்னி : நீங்கள் போகவேண்டாம். (நடுங்கும் விழி மறுக்கும் அங்கை) மன்னன் : வேறு? (கண்ணிற் சினம்) மன்னி : ஆட்களை அனுப்பலாமே. மன்னன் : அதற்கும்? மன்னி : நீங்களா? எதற்கு? உங்கட்கு ஒன்று நேர்ந்தால்? மன்னன் : மக்கட்கு என்ன நேர்ந்தாலும் நேரட்டும். எனக்கு மட்டும் ஒன்றும் நேர்ந்துவிடக்கூடாது. அதுதானே உன் குறுகிய நோக்கம். தீமை வந்தபோது காட்டிக் கொடுக்கும் தீயவனா நான்? காற்றென்றும் மழை என்றும் வந்த கடுங்கூற்றின் உடலை என் வாள் இரு கூறாக்க வேண்டும், அல்லது அக்கூற்று என் தலையைச் சுக்கல் நூறாக்க வேண்டும். (அரசன் செல்லுகின்றான். அவள் மறுக்கின்றாள். கை விலக்குகின்றான் மன்னன். மெய் சாய்கின்றாள் மன்னி. போய்விட்டான்.) மற்றொரு புறம்: அரண்மனையின் புறவாயில் படீரென்று திறக்கப்படு கின்றது, அரசன் வெளிவந்து பார்க்கின்றான், யானை மேல் நின்று ஆராய்ச்சிமணி அசைத்த ஓர் உருவம் தூக்கி எறியப்படுகின்றது காற்றால்! பாய்ந்து பற்றப் போன அரசனும் தூக்கி எறியப்படுகின்றான் மற்றொரு புறம். மற்றொருவன் வீழ்ந்து கிடக்கும் ஆலின் பெருங் கிளையை அணைத்தபடி வாயசைப்பது தெரிகின்றது. பேசுவது கேட்கவில்லை. மற்றொருபுறம்: பலர் ஒரு வீட்டில் பந்தம் கொளுத்துகிறார்கள். அவை கொளுத்தும் போதே அவிகின்றன. சில கொளுத்திய பின்பு குப்பென்று அவிகின்றன. மற்றொருபுறம்: இடி முழக்கம் கேட்கின்றது. மழை மண்ணைக் குழிவு செய்கின்றது. மின்னாதபோது இருண்டிருக்கும் உலகு மின்னுகின்றபோது ஒளிபெறுகின்றது. ஒரு மின்னலில்: வேலமரம் பந்தாடப்படுகின்றது வேரறுபட்டு. மற்றொரு மின்னலில், ஆலமரம் அம்மானைக்காய். மற்றொருபுறம்: பலகணி சாத்தப்பட்ட அறை. அவ்வறையில் அவியாது அங்கையால் அணைக்கப்பட்ட விளக்கு. அவ் விளக்கொளியில் இரு மங்கையர் தோற்றமளிக் கின்றார்கள். அரசி அங்கம் நடுங்குகின்றாள். கண்ணீர் கலங்குகின்றாள். தோழி ஆடாத அசையாத அச்சுப்பாவை. அரசி நூறாவது தடவையாகப் பலகணி திறந்து வெளியே கை நீட்டுகின்றாள். அரசி : காற்றுத் தணிந்தது சற்று! மழையும் மட்டு! மட்டு! தோழி : (கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சிரிக்கிறாள்) இனி அஞ்ச வேண்டியதில்லை. அரசி : அரசர் நிலை என்ன ஆயிற்றோ! மற்றொருபுறம் தெரு, விழுந்த மரங்களால் போர்த்தப்பட்டு காட்சி யளிக்கின்றது, பாண்டியன் மன்னன். பந்தங்கள் ஏந்திய வீரர்கள், பிசிராந்தையார், புலவர் மேற்படியார் ஆகியோர் மக்கள் நிலைகாணச் செல்லுகின்றார்கள். அரசன் : மக்கள் நிலை என்ன ஆயிற்றோ? புலவர் மேற் : அரசர் அஞ்ச வேண்டியதில்லை. மக்கள் காற்று மழையில் வெளியில் வந்திருக்கமாட்டார்கள். வீட்டினுள்ளேயே இருந்திருப்பார்கள். அவர்கள் யானை மேலிருந்து வானமேற் சுழன்று மரக் கிளைகளால் தாக்குண்டு மேற்கொண்டு மண்ணுண்டு நாமுண்டு என்று வீழ்ந்து உருண்டு புரண்டு இடந் திருக்கமாட்டார்கள். அரசர் : (சிரித்து) புலவர் பெருமான் கிடந்த நிலையைக் காண என் கண்கள் நடுங்கின. உலகின் முடிவை நினைப் பூட்டிக் கொண்டிருந்தன காற்றும் மழையும். அந்த நிலையிலும் வெளிவந்தீர்கள். புலவர் : அதிலும் யானைமேல் ஏறிக்கொண்டு! இவர் பதினெட்டு ஆண்டு மாப்பிள்ளையல்லவா! பிசிரா : ஏன் காணும் மேற்படியாரே, வீழ்ந்து கிடந்த ஆலின் கிளையை அணைத்தபடி இருந்தவர் நீர்தாமோ? மேற் : வேறு! பிசிரா : பிறகு? மேற் : ஆலமரம் என்னை இழுத்தது. விட்டுவிட்டேன். வேல மரம் வரவேற்றது. உடம்பின் செங்குருதி குடிப்பாட்டி. அதையும் அனுப்பினேன். ஆலும் வேலும் மேலே கிளம்பின. பிசிரா : யானை! மேற் : அதையும் தூக்கிக்கொண்டுதான். அரசர் : (தாங்க முடியாத சிரிப்புக்கிடையில்) புலவர் பெருமான் வீட்டுக்குப் போகலாமே. பிசிரா : துன்பத்திற்கு மேல் துன்பம்! அரசர் : இங்கே! பிசிரா : மேற்படியாரின் நகைச்சுவை துன்பத்தை நீக்கி விடுகின்றது. மேற் : யானையும் போனதே நடக்கவும் ஆனதே ஐயா. பிசிரா : நடப்போம். மக்கள் நிலை என்ன ஆயிற்றோ? மேற் : உங்களை ஒன்று கேட்க எண்ணுகின்றேன். காற்று மழை வலுத்தன. நாட்டுமக்கள் இல்லையா? நான் இல்லையா? நீர் என்ன ஆராய்ச்சி மணியை அசைக்கக் கிளம்பியது? நீவிர் தாம் நாட்டு மக்களைக் காப்பவரோ? அரசர் : வேறு யார் புலவரே! பாண்டிய நாட்டில் எல்லாரும் நல்லவர், எல்லாரும் செல்வர் என்ற நிலை ஏற்பட அல்லும் பகலும் தொண்டு செய்தது ஓர் ஆற்றல்! என் அறிவுக்கு மெருகு - என் ஆற்றலுக்கு ஊட்டம் இவர்கள்! எவரை நான் இழக்க முடியாதோ அவரை நான் இழந்துவிடவில்லை. காற்று மழை ஏமாந்தன. மீண்டும் பெற்றேன் என் ஆற்றலை - அறிவை. மேற் : வாழ்க பாண்டியர் அறிவுடை நம்பியார். பிசிரா : அரசர் இந்தத் தொல்லையினின்று அரண்மனை செல்லலாமே. அங்கு அரசியார் நிலை என்ன என்று அறிய வேண்டாமா! அரசர் : ஒன்றும் நேர்ந்திராது. நடப்போம்.  காட்சி - 3 பெட்டியில் பெண்ணுடல் இடம் : பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரையை அடுத்த சிற்றூரில் ஒரு தோப்பு. நேரம் : விடியுமுன், உறுப்பினர் : பாண்டியன் அறிவுடைநம்பி, பிசிராந்தையார், மேற் படியார், உடையப்பன், அவன் மனைவி ஓடைப்பூ. நிகழ்ச்சி : உடையப்பன் தோப்புக் குட்டையில் வலை போடுவதும், அதில் மீன் ஒன்றும் அகப்படாமை கண்டு மீண்டும் வலை போடுவதுமாயிருக்கிறான். அவனைத் தேடிக் கொண்டு ஓடைப்பூ வருகின் றாள். கணவனைத் பார்த்த வுடன் அவளுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாகிறது. இதையெல்லாம், வீழ்ந்து கிடக்கும் மரம் மட்டை களில் ஒளிந்துகொண்டு பாண்டியன், பிசிராந்தை யார், மேற் படியார் மூவரும் பார்த்துக் கொண் டிருக்கிறார்கள். ஓடைப் : (பாட்டு) கண்ணுக்குக் கண்ணான மாமாடி - இந்தக் காற்று மழைக்குத் தப்பினையே மாமாடி! என்னைவிட்டுப் போயிருந்தால் மாமாடி - நீ பிறப்பாயோ இன்னொருகால் மாமாடி? உடையப்பன் : அப்படியா? (வியப்பும் சிரிப்பும்) (பாட்டு) ஓடிவந்து முகத்தைக் காட்டும் ஓடைப்பூ - நல்ல ஓசைவண்டு தேன் குடிக்கும் வாடைப்பூ ஆடி வந்தாய் பாடி வந்தாய் ஓடைப்பூ - என் அச்சமெல்லாம் போனதடி ஓடைப்பூ! ஓடைப்: காற்று மழை என்னைத்தூக்கிப் போடாதா - இந்த கன்னிமனம் உன்னை எங்கும் தேடாதா? சேற்றுக் குளத்தில் பிடித்தமீனும் போதாதா - நீ திரும்பவலை வீசுவதும் இப்போதா? உடையப்பன்: பத்தாயிரம் தடவை வலை போட்டேனே - அதில் பட்டதுண்டா ஒருகெண்டை? - செந்தேனே செத்தாலும் நான்இங்கேசாவேன் கண்ணாட்டி - ஒரு சின்ன மீனா வதுபிடிக்க வேணுமடி. ஓடைப் : என்ன மாமா! இரவு சாப்பிடவில்லை. இதுவரைக்கும் மீன்படவில்லை. வரவோ கொஞ்சமும் மனமில்லை. நான் வாழவில்லை மாமா. (தரையில் துண்ணென உட்கார்ந்து, தலையில் அடித்துக் கொள்கிறாள்.) உடையப்பன்: நினைத்தது முடிக்கும் நெஞ்சழுத்தம் வேண்டும்! இனிப்புப் பண்டத்துக்கு அழும் இளங்குழந்தையா நீ? மீன் பிடிப்பது, வீட்டுக்கு வருவது, நான் பிடித்த உறுதி இது. இந் நேரம்வரைக்கும் ஒரு மீன் கிடைக்க வில்லை. இப்படி நடந்ததே இல்லை. இதில் காற்று ஒரு தொல்லை. மழை ஒரு தொல்லை. கேள் என் சொல்லை: தமிழனுக்கு வேண்டியது உறுதி. தவறுவது வாழ்வின் இறுதி. உனக்காக இன்னும் மூன்று தரம் வலை வீசுவேன். அந்த மூன்று தரமும் ஒரு மீனாவது கிடைக்கவில்லையானால் நான் உயிர் விடுவேன், இதே குட்டைக் கரையில். ஓடைப் : ஐயோ! ஐயோ! என் வாழ்வு என்ன ஆவது மாமா? கொண்டை நிறையப் பூ வைத்துக் கொள்வதில் உனக்கு விருப்ப மில்லையா? நெற்றி நிறையப் பொட் டிட்டுக் கொள்வதில் உனக்கு விருப்பமில்லையா? உடை : ஒரு மீன் - ஒரே மீன் அகப்படட்டுமே! ஓடைப் : என் வாழ்வையும் - சாவையும் ஒரு மீனா கணக்கிடு வது? இது சரியா? உடை : இதுதான் சரி. (குட்டைக்கரை நோக்கி விரைந்து சென்று வலையை வீசுகின்றான் உடையப்பன். அதே நேரம் ஓடைப்பூவும் கரை நோக்கிச் சென்று தன் இருகையும் ஏந்தி) ஓடைப் : (பாட்டு) வலையில் வந்து சேரவேண்டும், வாழும்படி செய்ய வேண்டும், மீன்களே! - என்னை வாழும்படி செய்ய வேண்டும், மீன்களே! தலையைத் தாழ்த்தி நான் அடைந்த தாலிக்கயிறு நிலைக்கவேண்டும், மீன்களே! - கட்டிய தாலிக்கயிறு நிலைக்கவேண்டும், மீன்களே! எண்ணியது முடிந்ததில்லை. இளம்பருவம் மாறவில்லை, மீன்களே! - என் இளம்பருவம் மாறவில்லை, மீன்களே! கண்ணுக்கொரு மகிழ்ச்சியில்லை, கைக்குழந்தையும் பெறவில்லை, மீன்களே! - ஒரு கைக்குழந்தையும் பெறவில்லை மீன்களே! தாவி வலையில் வந்திடுவீர் சாவை வந்து நீக்கிடுவீர், மீன்களே! - என் சாவை வந்து நீக்கிடுவீர், மீன்களே! கூவிக்கூவி நான் அழுதேன் கூவுங் குரல் கேட்கவேண்டும், மீன்களே! - நான் கூவுங் குரல் கேட்கவேண்டும், மீன்களே! (இதற்குள் வீசிய வலையை இழுத்துப் பார்க்கிறான். ஓடைப் பூவும் ஓடிவந்து பார்க்கிறாள். ஒரு மீன்கூட இல்லை. துன்பத் தால் வான் ஏறுகின்றது ஓடைப்பூவின் முகம். தலைமேல் அணைக்கின்றன அவளிருகைகள்.) ஓடைப் : ஐயையோ ஒன்றுமில்லையே! (கீழே சாய்ந்து விழுகின்றது அவள் உடல்) உடைப் : (இரு! இரு! இன்னும் இரண்டு தடவை இருக்கிறது. (வலை வீசுகின்றான்.) ஓடைப் : (குட்டையை நோக்கி, பாட்டு) என்கணவன் தான் - எனக் கின்பந்தரு வான் - அந்த இன்பத்தையே நான் - இனி எப்போதும் பெறுவேன் - ஒரு மீன்! ஒரு மீன்! ஒரு மீன் வரவேண்டும்! கையால் அணைப் பான் - என் கன்னத்தைக் கடிப் பான் - அவன் மெய்யாய் உழைப்பான் - எனை விட்டுப் பிரியான் - ஒரு மீன்! ஒரு மீன்! ஒரு மீன் வரவேண்டும்! பேராசைக் காரன் - ஒரு பிள்ளையும் கொடுப் பான் - நான் ஆராரோ என் பேன் - தா லாட்டி மகிழ் வேன் - ஒரு மீன்! ஒரு மீன்! ஒரு மீன் வரவேண்டும்! (வலையிழுக்கப்படுகிறது இருவராலும். ஒரு வராலுமில்லை; ஒரு கெண்டையுமில்லை.) ஓடைப் : (பாட்டு) அறுந்த யாழும் ஆவேனோ - கெட் டழிந்த ஓவியம் ஆவேனோ? எறிந்த மாலையும் ஆவேனோ! - நான் இடிந்த கட்டடம் ஆவேனோ! துறந்த துண்டோ என் காதல் - தீச் சொரிந்த துண்டோ என்மீதில் அறுந்த துண்டோ என் வாழ்க்கை! அறுந்த துண்டோ அவன் சேர்க்கை! (மீண்டும் வலை வீசுகின்றான்.) ஓடைப் : (பாட்டு) துன்ப வாழ்வே நீ போ, போ, போ! இன்ப வாழ்வே நீ வா, வா, வா! அன்பன் வாழ்ந்தால் நான் வாழ் வே னே! அன்பன் செத்தால் நான் சா வே னே! துன்ப வாழ்வே நீ போ, போ, போ! இன்ப வாழ்வே நீ வா, வா, வா! (மூன்றாவது முறை இருவரும் வலையை இழுக்கின் றார்கள். இழுக்க முடியவில்லை.) உடையப்பன் : என்னடி இது! இழு, இழு, ஓடைப் : உம்... உம்... உம்... மாமா, குட்டையிலிருந்த எல்லா மீன்களும் அகப்பட்டுக் கொண்டன. இல்லையா மாமா! (இழுக்கிறார்கள், முடியவில்லை.) உடையப்பன் : என்ன இது! ஓடைப் : நான் வேண்டிக் கொண்டேனா இல்லையா? அதனாலே மீன்களும் ஒருமிக்க வந்து வலையில் மொய்த்துக் கொண்டன, மாமா! அப்படித்தானே! (இருவரும் சேர்ந்து மிக்க தொல்லையுடன் இழுக்கின் றார்கள். முடியவில்லை. சோர்ந்து நிற்கின்றார்கள்.) மற்றொருபுறம்: பிசிரா : (அரசனை நோக்கி) இனி நாம் சும்மா இருத்தல் கூடாது. துணைபுரிய வேண்டும், அந்தத் தூயவர்களுக்கு. அரசன் : நானும் வரவேண்டுமா? பிசிரா : நானும் புலவர் மேற்பாடியாரும் போனால் போதும். (இருவரும் போகின்றார்கள்.) உடையப்பன்: கொஞ்சம் எனக்கு உதவி செய்யவேண்டும். மேற் : கிடைப்பதில் எங்கட்குப் பாதி. உடையப்பன் :ஆகட்டும்! ஆகட்டும்! (அனைவரும் இழுக்கின்றார்கள். ஒரு பெரும் பெட்டி வலைக்குள் காட்சி அளிக்கிறது.) பிசிரா : பேழை! பேழை! உடையப்பன்: ஐயையோ! மீன் இல்லையா? பிசிரா : மீனும் உண்டு! உனக்கு வாழ்வும் உண்டு மகளே! (பெட்டி கரையில் வைக்கப்படுகிறது. அரசனும் அங்கே வந்து விடுகின்றான், பெட்டி திறக்கப்படுகின்றது. பெரும் புண்கள் நிறைந்த ஒரு பெண்ணின் உடல் காணப்படு கின்றது.) அரசன் : ஆ! பிசிரா : பாட்டுக்கு நல்ல பொருள் கிடைத்தது பாவாணர்கட்கு! (ஓடைப்பூ கண்ணைப் பொத்திக் கொள்ளுகின்றாள். உடையப்பன் தலையை இரு கைகளாலும் ஏந்தியபடி குனிகின்றான்.) அரசன் : அனைவரும் அரண்மனைக்குப் போதல் வேண்டும். வலை காரரே, பெண்ணே, உங்கட்கு வேண்டிய பொருள் தரப்படும். அரண்மனைக்கு வாருங்கள். ஓடைப்பூ: ஏன் மாமா, மீன் கிடைத்துவிட்டதல்லவா? அதோ இரண்டு கெண்டைகள். சாகமாட்டாய் இல்லையா? உடையப்பன்: சாகமாட்டேன்; உறுதி. நட! (பிசிராந்தையார் பெட்டி தூக்கத் தலைகொடுக்கிறார். அரசன் விலக்கித் தன் தலை கொடுக்கிறான்.) பிசிரா : எல்லாருமே சேர்ந்து தூக்கவேண்டும். அப்போதுதான் முடியும். (முன்னிருவர் பின்னிருவர் தூக்கிப்போக பெண் உடன் செல்லுகிறாள்.) வழியில் : மேற்படியார் : (பாட்டு) பாண்டி நாட்டில் பாவை ஒருத்தி பச்சைப் படுகொலையால் மாண்டாள் மாண்டாள்! அறமே மாண்டதோ மாளா அருள் உளமே! மாண்ட துண்டோ, மாண்ட துண்டோ! மனையாள் இறந்ததனால் யாண்டு தலைவன் துன்புற் றானோ! எவன் செய்த கொலையோ?  காட்சி - 4 ‘bfhiy brŒjh® ah®? இடம் : பாண்டி நாட்டுத்தெரு. நேரம் : நடுப்பகல். கதை உறுப்பினர் : பறைமுழக்குவோன், பாண்டியன், பாண்டி மன்னி, பிசிராந்தையார், அமைச்சன், தச்சுப் புலவர். நிகழ்ச்சி : யானைமேல் பறையறைவோன் அமர்ந்திருக்க - யானை ஒரு தெருவின் நடுவில் வந்து நிற்கின்றது. கூட்டமாக மக்கள் கேட்க நிற்கின்றார்கள். பறை முழக்கப்படுகின்றது. பறை முழக்குவோன்: குட்டையில் பெட்டி ஒன்று கிடைத்தது. பெட்டியில் பெண் உடல் ஒன்று காணப்பட்டது. இறந்த அப் பெண் ணின் உடலில் நிறைந்த புண்கள் காணப் படுகின்றன. அந்தப் பெண்ணும் ஏறத்தாழ ஏழு திங்கள் குழந்தையை ஈனாத வயிறுடையாள். நெற்றியிற் குங்குமம் நிறைந் திருக்கின்றது. கற்றைக் குழலில் கமழ்கின்றது மலர்! இருக்கும் உடலம் எரிக்கப்படுமுன் வந்து காண்க, காணு மாளிகையில்! உறவினர் கேட்டால் உடல் தரப்படும். கொலைபுரிந்த கொடியவன் யாவன் என்பதை அறிந்தவர் இயம்ப வேண்டும். பாண்டியன் அறிவுடை நம்பி கட்டளை. (போதல்) கேட்டவன் 1 : எல்லாரும் நல்லவர், எல்லாரும் செல்வர். இந்தப் படுகொலை எப்படி நேர்ந்தது? ஐயோ! கேட்டவன் 2 : பாண்டிய நாட்டிலும் படுகொலையா? கேட்டவன் 3 : அறிவுடைநம்பி ஆட்சியின் வீழ்ச்சி இது! கேட்டவள் 1 : பிசிராந்தையார் நாட்டிலும் பெண் கொலை நேர்ந்ததா? கேட்டவள் 2 : நிறைந்த குங்கும நெற்றியாமே! தலையில் நிறைமலர் மணமாமே! குத்தப்பட்டுச் செத்தாளாமே! வெட்டப்பட்டு வீழ்ந்தாளாமே! கேட்டவள் 3 : மணந்தவன் எங்கே வருந்துகின்றானோ! துணைவன் எங்கே துடிக்கின்றானோ! கேட்டவன் 4 : அலைந்து கொண்டிருப்பான் அவள் ஆம்படையான்; தொலைந்ததைக் கேட்டால் துடித்துப் போவான். ஒருபுறம் : பறை முழக்குவோன் பகர்ந்தது கேட்ட கருத் தாங்கிய ஒருத்தி தன்வீட்டுக் குறட்டில் வெலவெலத்து வீழ்கின்றாள். அவள் உடல் நடுங்குகின்றது. நிறையாக் கருவும் நெகிழ் கின்றது. தாய்மார் பலர் திரைபிடிக்கின்றனர். மங்கைமார் பலர் வாரித் தூக்குகின்றனர். கருவுடையாள் :குத்தக் கத்தி எடுத்து வருகின்றான் யாரோ ஒருவன்! வெட்டக் கத்தி எடுத்து வருகின்றான் யாரோ ஒருவன்! தாய் ஒருத்தி : ஒன்றுமில்லையம்மா!ஒன்றுமில்லையம்மா! (வீழ்ந்தவள் வீட்டினுள் தூக்கிச் செல்லப்படுகின்றாள்.) அரண்மனையில் ஒருபுறம்: பாண்டியன் : (அமைச்சனை நோக்கி) அறமே புரிந்தனர் அனைவரும் என்றாய் பாவம் புரிபவர் இலைஎனப் பகர்ந்தாய் பொய் யுரைப்பவர் பொல்லாங் கிழைப்பவர் இந்த நாட்டில் இல்லை என்றே அடிக்கடி என்னிடம் அறிவித் தாயே திடுக்கிடத் தக்க படுகொலைச் செய்தி உலகங் கேட்டால் கான்றுமி ழாதா! அழகாய் இருந்ததே அமைச்சர் கண்காணிப்பு! ஏசலும் பூசலும் இருந்த உலகுக்கே ஆசாரம் கற்பித்த இந்த அரண்மனை பிள்ளைத் தாய்ச்சியின் பிணத்தையும் காண்பதா? (ஊர் காவலர், பொதுமருத்துவர், ஒற்றர் பலர் வருகின் றனர். அரசன் அவர் பக்கம் திரும்புகின்றான்.) அரசன் : கண்டது கண்டவாறு கழற வேண்டும், பொய்யுரைக் காதீர்! பொய்யுரைக் காதீர்! என்ன சொல் கின்றனர் என்நாட்டு மக்கள்? அன்னை மார்கள் அலறு கின்றாரா? என்றன் ஆட்சியை இகழ வில்லையா? பண்பிலாப் பாண்டியன் பாழாய்ப் போகென மன்ணை வாரி இறைக்கின் றாரா? ஒன்றே யேனும் ஒளித்தால் என்னைத் தின்றவர் ஆவீர்! செப்புவீர் நிலைமையை! (இருந்தவர் அனைவரும் இரு காதுகளையும் பொத்திக் கொள்ளுகிறார்கள்.) ஊர்க்காவலன் : பாவலர்கள் நெஞ்சம் புழுங்கு கின்றனர்! நாவலர் அனைவரும் நடுங்கு கின்றனர்! பாவாணர் கேட்டுப் பதறு கின்றனர்! அறிவுடை நம்பியார் ஆட்சி தன்னிலா இந்தப் படுகொலை, என்று கூவினார்! பிசிராந்தை யாரின் பெரும்பாண்டி நாட்டிலும் கசியும் செந்நீர் கறைபடிந்ததா? என்று மிகமிக இழித்துரைத் தார்கள் பேய்க்கனவு கண்ட தைப் போலப் பிள்ளைகள் தாய்க்கு மனம்நோவத் தாவினர் நடுங்கி! அஞ்சத் தக்க செய்தியால் அனைவரும் நெஞ்சு வெடிக்க நிலைக லங்கினர்! கருத்தாங்கி யிருந்த கன்னித் தாய்மார் கருச்சிதை வுற்றுக் கலங்கு கின்றனர் அறத்தின் வேரே ஆடிவிட்டது. பொது மருத்துவன்: துன்பம் பற்றிய சொல்லையும் தாங்காத மென்மை யான உள்ளம் மிகவும் கடுஞ்செய்தி தாங்குதல் கடினம் ஐயனே! களவும் கொலையும் கண்டறி யாதவர், கேடும் கெடுப்பும் கேட்டறி யாதவர், அப்படி அறம் எனும் சிறையில் அடைபட்டு மனக்கோட் டம்எனும் வகையறி யாதவர், கருவைத் தாங்கிய கட்டிக் கரும்பு படுகொலை செய்யப் பட்டது கேட்டு, விழுந்தார் எழுந்தார் என்பது வியப்பா? சாகா திருப்பது தந்தையே வியப்பு! அரசன் : நல்லவர் நிறைந்த நாட்டிலே ஒரு பொல்லா தவனும் இருந்தா னன்றோ! அமைச்சர் : இக்கொலை புரிந்தவன் இந்த நாட்டானோ? எந்த நாட்டானோ? யாருக்குத் தெரியும்? அரசன் : ஆம்! ஆம்! எந்தப் புலனும் கிடைக்கவில்லை. கொலை செய்தவன் எவன்? ஏன் கொலை செய்தான்? - என்பதை எல்லாம் அறியவேண்டும், அமைச்சரே! விரைவில் அறியவேண்டும். (தலை தாழ்கின்றது. உடல் ஒடிகின்றது.) நான் உயிர் வாழவேண்டுமானால் விரைவில் தகவல் அறிவிக்கவேண்டும். (இருக்கையில் சாய்தல். மற்ற அனைவரும் அரசர்க்கு உதவி செய்கிறார்கள், விசிறியும் முகத்துக்கு நீர் தெளித்தும்.) அமைச்சர் : அரசர் அறியவேண்டும் என் சூளுரை: மூன்று நாட்களில் கொலையைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிந்து கூறுவேன். முடியாவிட்டால் செத்து மடிவேன். அரசன் : (விழி திறந்து) அப்படியா! நன்று. அரண்மனையில் மற்றொருபுறம்: (பெண்ணுடல் விசிப்பலகையில் கிடத்தப்பட்டிருக்க அரசியும் மற்றப் பெண்டிரும் சூழ்ந்திருக்கிறார்கள்.) அரசி : (துன்பக் கண்ணீருடன்) பாண்டிய நாட்டுப் பச்சைக் கிளியே! தூண்டா விளக்குத் துண்ணென அவிந்ததா? எவன்செய்த படுகொலை? ஏன் செய்தான் கெடுதலை? தவம்செய்து பெற்றஉன் தாய் யார்? தந்தையார்? எவன் பெண்ணே நீதரும் இன்பம் இழந்தவன்? (பிசிராந்தையார் வருகின்றார்.) தாங்கமுடியவில்லையே சாவின் காட்சி! பிசிரா : சிலந்தி வலை மலையையா தாங்கும்! செவ்விய உள்ளம் தீச்செயல் தாங்குமா? அரசியாரே! அம்மைமாரே! விரை வில் நீங்கள் இவ்விடத்தை விட்டு விலக வேண்டும். மாண்ட உடலை மருத்துவர் ஆராயவேண்டும். அரசி : உறவின் முறையார் ஒருத்தரும் இல்லையே! நாங்களும் பிரிவது நன்றோ ஐயோ? பிசிரா : (உரத்த குரலில்) தாங்காத துன்பத்தால் சாக விருப்பமா? நீங்கி இருந்து நிலைக்க விருப்பமா? (அனைவரும் ஒருபுறம் போக மருத்துவப் பெண்டிர் வருகின் றார்கள். பிணத்தின் நிலை ஆராய்கின்றார்கள்.) மருத்துவச்சி :உடல் அழுகிவிட்டது. இன்னும் வைத்திருப்பது கூடாது. மேலும் வயிற்றுக்குள் இருந்த குழந்தையும் செத்து விட்டது. அதையும் எடுக்கவேண்டும். பிசிரா : தச்சுப் புலவரைக் கொண்டு இப்பிணம் போல் அச் செடுக்கச் செய்யவேண்டும். வேலையைப் பாருங்கள். (பிசிராந்தையார் போதல்.) ஒருபுறம் தச்சுப்புலவன் ஒருவனுக்குப் பிசிராந்தையார் கட்டளை யிடுகின்றார். பிசிரா : தச்சுப் புலவரே, இவ்வுடல் எரிக்கப்படவேண்டும். ஆயினும் பிணத்திற்கு உடையவரையும் கொலை செய்தவரையும் கண்டுபிடிக்க அப்பிணம் தேவைப் படுகின்றது. ஆதலின் பிணம் இருக்கும் நிலையில் பாவைப்பிணம் ஒன்று தேவைப்படுகின்றது. தச்சன் : நன்று ஐயா! (போதல்)  காட்சி - 5 உயிர்ப்பிச்சை இடம் : பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் ஒரு தெரு. நேரம் : காலை கதை உறுப்பினர் : பறையறைவோன், ஊர் மக்கள், அமைச்சன் மனைவி யான அனிச்சை, தோழிமார். நிகழ்ச்சி : பறை, முழக்கத்துடன் யானை வந்து நிற்கின்றது. ஊர் மக்கள் சூழ்ந்து கேட்கின்றார்கள். பறை முழக்குவோன்: இந்நேரம் வரைக்கும் தகவ லில்லை இறந்த மங்கையின் உறவினர் யாவர்? கொம்பனை யாளைக் கொன்றவன் யாவன்? என்ற தகவல் கிடைக்க வேண்டும் இன்று மாலை நான்கு மணிக்குள் தகவல் ஒன்றுமே தெரியாவிட்டால் அமைச்சர் அரண்மனைக் கெதிர்வெளி அரங்கில் தூக்கி லிட்டுத் தொலைக்கப் படுவார் அரசர் இட்ட கட்டளை அறிக. (யானை செல்லுகின்றது. கேட்ட அனைவரும் வியப்புக்கு உட்பட்டு, அச்சத்தால், இரக்கத்தால், உடல் நடுங்கித் திகைக்கின்றார்கள்.) கேட்டவன் 1 : இன்று வரைக்கும் - கொலை செய்தவன் தகவல் கொடுக்க வில்லையா? கேட்டவன் 2 : கை தவறி உளந்தவறி இப்படிப்பட்ட குற்றம் செய்திருக் கலாம். குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டாமா? கேட்டவன் 3 : ஐயோ, இதற்காக அமைச்சர் அல்லவா ... கேட்டவன் 4 : ... மடிய வேண்டியதாகிறது. கேட்டவன் 5 : பாவை ஒருத்தியை இழந்த இந்தப் பாண்டிய நாடு அமைச்சரையும் இழக்கவேண்டுமானால் இந்தத் தொல்லையை யார் பொறுப்பார்? கேட்டவன் 6 : பழி சுமந்தது பாண்டிய நாடு! கடைத்தெருவில் ஒருபுறம்: விற்பாரும் வாங்குவாருமாகிய ஆடவர் பெண்டிர் குழுமுகின்றார்கள். அமைச்சன் மனைவியான அனிச்சை தன் முந்தானை ஏந்தியபடி நிற்கிறாள். தோழியர் சிலர் உடன் நிற்கிறார்கள். அனிச்சை : உங்கள் அமைச்சராம் என்கணவர் சாகின்றார் - தந்தைமாரே! உண்மை உரைத்திடுக பெண்கொலை புரிந்தவர்கள் - அன்னைமாரே! அங்கம் நடுங்கிடுதே அவர் இறந்தால் நான்வாழேன் - தந்தைமாரே! அமைச்சர் இறக்குமுன்னே அறிவிப்பீர் உண்மையினை - அன்னைமாரே! உயிர்ப்பிச்சை கேட்கின்றேன் உண்மை உரைத்திடுக தந்தைமாரே! உண்மை தெரிந்தவர்கள் உரைக்கா திருப்பதுண்டோ - அன்னைமாரே! தயக்கம் சரியாமோ தாய்நாட்டின் பேர் காக்கத் தந்தைமாரே! தாண்டாதீர் நல்லறத்தைப் பாண்டியனார் ஆட்சியிலே - அன்னைமாரே! தோழிமாரில் 1 : பெட்டியில் கிடைத்த பெண்ணுடல் பற்றிய செய்தி இதுவரை தெரியவே இல்லை இன்று மாலைக்குள் எந்தத் தகவலும் அகப்படா விட்டால் அமைச்சர் இறப்பார். அமைச்சர் இறந்தால் அமைச்சரின் மனைவியார் அனிச்சையும் இறந்து போவார் அல்லவா? அன்பு நாட்டின் அன்னை மாரே அறிவுடை நாட்டின் அப்பன் மாரே அமைச்சர் மனைவியார் அனிச்சையம்மையை உயிர்ப்பிச்சை தந்து காக்க வேண்டும். (அனைவரும் கண்ணீர் விடுகின்றார்கள்.) கேட்டவன் 1 : அஞ்ச வேண்டாம் அம்மை யாரே! அம்மையார் கணவர் எங்கள் அமைச்சர் அறிவின் மிக்கவர் நெறி பிழையாதவர் அவரையா அரசர் தூக்கில் இடுவார்? அவர்தாம் அப்படிச் செய்தாலும் நாங்கள் சும்மா இருப்போமா சொல்லுங்கள் அம்மா! அன்றியும் அடாச்செயல் செய்த அவனே இப்போதே வந்து ஒப்புக் கொள்வான். பண்பாட்டி லுயர்ந்தஇப் பாண்டி நாட்டில் நீர் கண்ணீர் சிந்தத் தகுமா? எண்ணங் கலங்கா தேகு வீரே! கேட்டவன் 2 : கொன்றவன் நான் தான்! கொன்றவன் நான் தான்! என்னை அரசர் தூக்கில் ஏற்றட்டும்! (அனிச்சை வியப்பு - தோழிமார் வியப்பு.) கேட்டவன் 3 : யாரை? அந்த ஏந்திழையாளையா? கேட்டவன் 2 : ஊரைக் காத்த உண்மை யாளரை அறத்தைக் காத்த அமைச்சர் தம்மைத் தூக்கில் இடுதல் தூய்மை யாகாது என்னைத் தூக்கில் இடட்டும் அரசர். கேட்டவன் 4 : கொன்றவன் யார்? அதை முதலிற் கூறு! கேட்டவன் 2 : கொன்றவன் நான் தான்! நான்தான் கொன்றவன்! கேட்டவன் 4 : அமைச்சர் உயிரைக் காப்பதற் காக இவ்வாறு கூறினீர் என்றெண்ணு கின்றேன் கொன்ற துண்மையா? கூறுவீர் ஐயா! துய்ய நீர்க்குமிழ் தோன்றும் உடையும் பொய்யும்அவ் வாறே உடைந்து போகுமே. கேட்டவன் 2 : அமைச்சரைக் காக்க வேறு வழி ஏது? (தலையில் அறைந்து கொள்ளுகிறான். அனிச்சையும் தோழிமாரும் மறுபுறம் போகிறார்கள்.) மதுரைநகர்ப்புற வாயில்: வெளிநாட்டார் ஏறிவரும் குதிரைகளும், யானைகளும் மூடு பல்லக்குகளும், முன்தானை ஏந்திக் கண்ணீர் விட்டுக் கதறி வரும் அனிச்சை தோழிமார்களைக் கண்டு நின்று விடுகின்றன. பலர் ஊர்தியினின்று இறங்கி அனிச்சை சொல்வதைக் கேட்டுக் கண்ணீர் விடுகின்றனர். ஒருசிலர் மகிழ்ச்சியுடன் காது கொடுக்கின்றனர். அனிச்சை : கருவினைத் தாங்கிய திருவுடைப் பெண்ணாள் கொலைசெயப் பட்டாள். குளத்தில் பெட்டியில் கிடைத்த அவ்வுடல் திடுக்கிட வைத்ததே! இறந்தவள் யார்? பேரென்ன? கொலைஞன் யார்? ஏன்? இன்று வரைக்கும் ஒன்றுமே புரிய வில்லை. அதற்காக மன்னர் அமைச்சரை என்றன் அருமைத் துணைவரை இன்று மாலையில் தூக்கில் இடுவாராம். சிறியஓர் தகவல் தெரிந்திட் டாலும். கண்ணான கணவர் காப்பாற்றப் படுவாராம். கொலைபு ரிந்தவர் உண்மை கூறினால் நிலைக்கும் என் உயிரும் அருளுடையோரே. உயிர்ப்பிச் சை எனக் கிடுவீர் துயரம் கண்டும் சும்மா யிருந்தீரே! கேட்டவன் 1 : எனவே, இதுவரைக்கும் எந்தத் தகவலும் கிடைக்க வில்லை. கேட்டவன் 2 : துன்பக் காட்சி காணத்தான் போகின்றோம். கேட்டவன் 3 :பாண்டிய நாட்டிலும் படுகொலை புரிபவன் இருந்தா னன்றோ இதுவோர் புதுமைதான்! கேட்டவன் 4 : குற்றம் புரிந்தவன் வாழ்ந்து கொண்டிருக்கவும் குற்றம் செய்யாத அமைச்சரைக் கொல்வதா? கேட்டவன் 5 : கதிரவன் மேற்கில் கால்வைக் கின்றான் நகரப் பொதுமன்று நோக்கி நாம் நடப்போம் உண்போம் சற்றே உறங்குவோம் பிறகு ஊர்க்குள் தூக்கு மேடை பார்க்கலாம் விரைவில் வந்தால் தானே! (ஒரு சிலர் போகின்றார்கள்.) கேட்டவன்6: எல்லாரும் நல்லவர்! எல்லாரும் செல்வர்! என்ன இறு மாப்புப் பேச்சு? வயிற்றில் கருத்தாங்கிய ஒரு கரும்பின் உயிரைப் படுகொலை புரிந்த கட்டாரிப் பாண்டிய நாடு - சோழ நாட்டுக்கு நிகராவதெப்படி? (மற்றவர்களும் போகின்றார்கள்.) அரண்மனையில் ஒரு புறம்: (படைத்தலைவனும் பிற அலுவலர்களும் அரசன் வாய் பார்த்துக் காத்திருக்கிறார்கள். அரசன் பின்புறம் கைகட்டி உலவியபடி இருக்கிறான்.) அரசன் : மேலுக்கு அமைதி; உட்புறம் குமுறல், தெருவில் நடிப்பு; திரைமறைவில் கொலைக்கான சூழ்ச்சிகள். அடுக்களை யில் அமிழ்தின் தோற்றம்; அகப்பை நிறைய நஞ்சு. எத்தனை பேர்கள் வேவுகாரர்கள்! ஊர் காவலர்கள் எத்தனை பேர்கள்! கொலை, களவு முதலிய குற்றங்கள் நடவாமல் பார்த்துக் கொண்டிருந்தார்களா? தூங்கிக் கொண்டிருந் தார்களா அனைவரும்! கேட்டபோதெல்லாம் கேடு ஒன்றும் நிகழவில்லை என்றே நாட்டி வந்தார்கள் அமைச்சரும் பிறரும். இந்த நாழிகை வரைக்கும் குற்றத்தை எவனும் ஒப்புக் கொள்ளவில்லை! ஐயோ அது மட்டுமா? இவள் என் மனைவி! இவள் என் மகள்! என்று கூற ஒருவன், ஒருத்தி முன்வரவேண்டுமே! நன்று இன்றைய நிலை! இதோ மாலைப்போது அமைச்சர் உயிரைக் குடிக்க வாயைத் திறந்துகொண்டு வருகின்றது. படைத்தலைவன்: (அரசனை நோக்கி) தூக்குமேடை வேலை துவக்க வேண்டுமா? மன்னன் : என்னைக் கேட்பதாவது? அங்கே அமைச்சர் இருப்பார். அவரையே கேட்டுக் கொள்ளுவீர்! விரைவாகச் சொல்லுங்கள். மறுபுறம் : (அமைச்சன் காலடியில், தலைக்குழல் அவிழ ஆடை நெகிழ நீங்கா உயிரோடு கிடக்கின்றாள் அனிச்சை. படைத்தலைவன் வந்து காணுகின்றான்.) படைத்தலைவன்: மாலை வருகின்றது. வேலை துவங்க வேண்டுமா? - அரசரைக் கேட்டேன்; அமைச்சரைக் கேள் என்றார். பாண்டிநாடு பேரிழவு கொள்ளத்தான் வேண்டுமா? வேறுவழி இல்லையா? சூல்கொண்ட மங்கை துடிக்கத் துடிக்கத் துறு துறுத்தே வேல்கொண்டு தாக்கி வெடுக்கென்று சாய்த்த விலங்கனையான் கோல்கொண்ட பாண்டிய நாட்டிற் பிறந்ததும் வாழ்ந்ததுவும் மால்கொண்டு வாழ்ந்தஎன் னால்,இனிக் கொண்டிலேன் வாழ்வினையே! (படைத்தலைவன் கண்ணீர் சிந்தியபடி தலை குனிகின்றான்.) அமைச்சன் : தூக்குமேடை வேலை தொடங்கப்படவேண்டும், விரைவில், (படைத்தலைவன் போகின்றான்.) அமைச்சன் : (அங்கு நிற்கும் பணியாளனை நோக்கி) என் மேலா டையை நீல ஆடை ஆக்கு! நாழிகை ஆகின்றது. நானும் தலை முழுகி வருகின்றேன். (போகின்றான் அமைச்சன். அரை நாழிகைக்குப் பின்; தோழி வருகின்றாள். வீழ்ந்து கிடக்கும் அனிச்சையைத் தூக்கு கின்றாள்.) அனிச்சை : தோழி, துணைவர் எங்கே? தோழி : தூக்கில் ஏறுமுன் தலைமுழுகி வரவேண்டும் என்று சொல்லிப் போகின்றார் அம்மா. அனிச்சை : இருப்பதா நான் மட்டும். நெருப்பை மூட்டு. காதலன் இறந்த பின் கன்னிக்கு இங்கு என்ன வேலை? கட்டை ஏறவேண்டும் என் உடல். (மற்றும் அங்கு வந்த தோழிமார்கள் வாய் வாளாது கண்ணீர் விட்டபடி இருக்கிறார்கள்.) தோழி 1 : அமைச்சரைத் தூக்கும் அந்தத் தூக்குமரத்தின் ஆண வத்தை நாம் பார்க்க வேண்டும் அருகில் இருந்து! தோழி 2 : தூக்குமரத்தின் விசையைத் தட்டும்படி அரசர் கை தூக்கி ஆணை இடுவாரன்றோ? அதையும் பார்க்க வேண்டும் அருகில் இருந்து! தோழி 3 : தூக்கில் ஏற்ற என்ன துணிவு இந்த ஆட்சிக்கு? அடுக் காதது செய்யும் அரசர் முகத்தையும் பார்க்கவேண்டும். நாம் அருகில் இருந்து. அஞ்சுதல் வேண்டாம் அம்மையே! தூக்கு மேடையை நோக்கிச் செல்வோம். அனிச்சை : நான் புனைந்த மங்கல அணியை வலக்கையில் ஏந்தியபடி! (தன் விரலில் அணிந்த கணையாழியைக் கழற்றி - மாலையைக் கழற்றிக் கையில் பிடித்துக் கொள்ளுகிறாள். தோழி ஒருத்தி அனிச்சையைத் தன் தோளில் தாங்கியபடி நடக்க, மற்றவரும் உடன் செல்லுகிறார்கள்.)  காட்சி - 6 நானே குற்றவாளி இடம் : அரண்மனைக்கு எதிரில் அமைந்த வெளி. நேரம் : மாலை. கதை உறுப்பினர் : அரசன், அமைச்சன், படைத் தலைவன், அனிச்சை, தோழிமார், பெருமக்கள். நிகழ்ச்சி : நீல உடை பூண்டு அமைச்சர் மேடையில் ஒரு பால் அமர்ந்திருக்க, அண்டையில் தலையவிழ்த்து மணவணியும் கணையாழியும் கையில் தாங்கிப் பொட்டிழந்து பூவிழந்து அனிச்சை நீர் சோரும் கண்ணளாய் நின்றழுவ, அரசர் அருகில் வீற்றிருக்கத், தோழிமார் சிலர் அனிச்சையைத் தாங்கி நிற்க, அரசன் பேசத் தொடங்குகின்றான். அரசன் :பாண்டிய நாட்டுப் பல்சான்றீரே! தாய்மாரே! செல்வர் எல்லாரும்! நல்லவர் எல்லாரும்! இந்நாட்டின் நிலை இது என்று நம்பினோம். படு கொலை கண்டு வெம்பினோம். முன் ஆண்ட என் முதியோர் எல்லாம் முறைதவறாமல் ஆண்டார்கள் என்று நாம் படித்ததுண்டு. இன்று இந்தப் படுகொலை கேட்டு நாம் துடித்ததுண்டு, பாண்டிய நாட்டிற் பிறந்த ஒரு பச்சைக்கிளியை, அமிழ்தின் துளியைக் கருப்பம் கொண்டவள் என்றும் கருதாமல், இரக்கம் நன்று என்பதும் தெரியாமல் படுகொலை செய்து பதுங்கினான். கெடுதலைக் கண்டு நடுங்கினோம். இப்படி ஒரு பழிகாரன் உண்டானால், எப்படி அவன் உண்டானான்? அறம் இப்படி மாய்ந்ததற்கும் அன்பு இப்படிச் சாய்ந்ததற்கும் ஏது இந்நாட்டில் வாய்ப்பு? இதுதானா நம் கண்காணிப்பு? அறம் கோணாதிருக்க வேண்டியதோர் இருப்பு, மறம் தோன்றாதிருக்க வேண்டியதோர் இருப்பு, அமைச்சர் பொறுப்பு, மூன்று நாளில் கொலைபற்றிய உளவைக் கண்டுபிடித்து விடுகின்றேன் என்றார் அமைச்சர். அவ்வாறு கண்டு பிடிக்கத் தவறினால் தூக்கில் ஏறுகின்றேன் என்றார். அப்படியே இதோ நின்றார். இப்போதும் அவரைக் காக்கலாம். தூக்குத் தண்டனையி னின்றும் அவரை நீக்கலாம். கொலைபுரிந்தவன்கூறிவிடவேண்டும்;வேறென்னவேண்டும்? அமைச்சர் சாகப் போகின்றார். நம்மை விட்டுப் போகப் போகின்றார். அமைச்சர் அருகில் பாருங்கள்! அந்த அம்மை யாரின் நன்மையைக் கோருங்கள்! அமைச்சர் இறப்பார். அம்மையார் உயிர் துறப்பார். இரண்டு சாவுகளைக் காக்கும் நான்தான் கொன்றேன் என்ற ஒரு சொல். ஒரே சொல்! கடைசி நேரம் வேண்டியது நெஞ்சில் சிறிது ஈரம். உண்மை கூற விருப்பம் இல்லையா? (அமைச்சனைத் தூக்கில் பொருத்தியாயிற்று. தூக்கைத் தட்டென்று சொல்வதோர் சொல் அரசனிட மிருந்து எதிர் பார்க்கப்படுகின்றது.) அரசன் : (ஆணையிடத் திரும்புகின்றான்) என்ன? அனிச்சை : ஐயோ! (என்று கதறுகின்றாள்.) அரசன் : என் ஆணை, தூக்கிலிடுக. ஒரு குரல் : நான்தான் கொலைசெய்தேன். அமைச்சரைக் கொல்ல வேண்டாம். (கூட்டத்தில் வியப்பு. எல்லாரும் குரல் வந்த பக்கம் திரும்பு கின்றார்கள்.) (தூக்கைத் தட்ட அரசன் கட்டளையிட்ட மறுகணம் நான் தான் கொலை செய்தேன். அமைச்சரைக் கொல்ல வேண்டாம் என்று ஒரு குரல் கூட்டத்தினின்று எழுந்த வுடன், குரல் வந்த பக்கம் எல்லாரும் திரும்பினார்கள்.) அரசன் : தவிப்பு நிலையில் வியப்பின் ஒளி! மேடைக்கு வரவேண்டும். (குரல் உடையான் வந்து மேடையில் ஏறிக் காட்சியளிக் கின்றான்.) குரல் உடையான்: நான்தான் கொலை செய்தேன். என்னைத் தூக்கில் போடும்படி அரசரை வேண்டிக்கொள்கிறேன். அரசன் : உன் பெயர்? குரல் உடையான்: கூற விருப்பமில்லை. அரசன் : இறந்த மங்கைக்கும் உனக்கும் என்ன தொடர்பு? குரல் உடையான்: கூற விருப்பமில்லை. அரசன் : கொலைபுரியக் காரணம்? குரல் உடையான்: கூற விரும்பவில்லை. அரசன் : கொன்றது நீ மட்டுமா? மற்றவரும் துணை புரிந்தார்களா? குரல் உடையான்: நான் மட்டும் அரசன் : கொலைக் கருவி, வாளா? வேலா? கட்டாரியா? குரல் உடையான்: பயனற்ற கேள்வி. அரசன் : குற்றவிளக்கம் இல்லாமல் கொலை செய்யமுடியுமா உன்னை? குரல்உடையான்: கொன்றவன் ஏற்றுக்கொள்ளுகின்றான். கொலை விளக்கம் தேவையில்லை. அரசன் : கொலை செய்த ஒருவன் கூலிக்கு ஆள்பிடித்துக் கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளச் சொல்லி இருக்கலாமன்றோ? குரல் உடையான்: வீண் மனக்குழப்பம். அரசன் : உன்னை இன்னான் என்றும் கூறவில்லை. கொலை செய்ததற்குக் காரணமும் கூறவில்லை. மூன்று நாட் களில் அமைச்சர் ஆராய்ச்சி செய்து உண்மையை விளக்க வேண்டும். தவறினால், அமைச்சரும் நீயும் தூக்கிலிடப் படவேண்டும், இது என் தீர்ப்பு! (கூட்டம் கலைகிறது.) ஒருபுறம் : பார்த்தவன் 1 : குற்றத்தை ஏற்றுக்கொண்டவன் இந்த நாட்டானா? பார்த்தவன் 2 : அதிலும் ஐயமா? பார்த்தவன் 3 : அவன் சோழ நாட்டான் என்று தோன்றுகின்றது. பார்த்தவன் 4: சோழநாட்டில் இத்தகைய கொலைகாரன் இருக்கவே மாட்டான். பார்த்தவன் 5: நான் உறுதியாகக் கூறுகின்றேன் அவன் சோழநாட்டான். பார்த்தவன் 6: சோழ நாட்டான் பாண்டிய நாட்டில் வந்து இப்படிப் பட்ட படுகொலை செய்கின்றவரைக்கும் என்ன செய்து கொண்டிருந்தான் பாண்டிய நாட்டான்? இதெல்லாம் வீண்பேச்சு! கொலை செய்ததாக ஒப்புக் கொண்ட ஆள் பாண்டிய நாட்டான்தான். பார்த்தவன் 7: எல்லாரும் நல்லவர், எல்லாரும் செல்வர், பாண்டிய நாட்டில். பார்த்தவன் 8: அது தவறு. பாண்டிய நாட்டில் எல்லாரும் கொலைஞர், எல்லாரும் வறியர். (காட்சி முடிகின்றது.)  காட்சி - 7 ‘m¢r¥ gyif Midia¤ jh§Fkh? இடம் : பிசிராந்தையார் ஊராகிய பிசிர், சோலை. நேரம் : மாலை. கதை உறுப்பினர் : பிசிராந்தையார், மேற்படியார் என்னும் புலவர், உருமாறியுள்ள சோழ இளவரசு, சோழ நாட்டார் இருவர், பாண்டிய நாட்டான் ஒருவன். நிகழ்ச்சி : மேற்படியாரும், பிசிராந்தையாரும் பேசியிருக் கிறார்கள். ஓடையைத் தாண்டி வர முடியாத யானை தாண்டி வர ஒரு பலகை போடப் பட்டது. யானை அதன் மேல் வரும் நேரம். மேற்படியார்: எல்லாரும் நல்லவர், எல்லாரும் செல்வர் ஆகும் நிலையை உண்டாக்கினீர்கள் ஐயா! பிசிரா : அரசர் துணையால். மேற் : அதை யார் மறுப்பார்! அப்படிப்பட்ட நிலையை உண் டாக்கிய நீங்களே, அதைத் தலைகீழாக்க எண்ணுகின் றீர்களா? பிசிரா : தீயாரும் சிலர் இருக்கத்தான் வேண்டும், வறியரும் சிலர் இருக்கத்தான் வேண்டும் என்று எண்ணியதுண்டு, சொல்லியதும் உண்டு. மேற்படி : எல்லாரும் நல்லவர், எல்லாரும் செல்வர் என்ற நிலையே நீடித்தால் வரும் இழுக்கு என்ன? பிசிரா : நீடித்தது! ஏற்பட்ட நன்மை என்ன? மேற்படி : நன்மை இல்லை என்றா சொல்லுகின்றீர்கள்? பிசிரா : நன்மையில்லை, அதனால் தீமைதான் ஏற்பட்டது என்று கூறுகின்றேன். இதில் நீர் வியப்படைவது கண்டு வியப்படை கின்றேன். விரிவாகச் சொல்லுகின்றேன், எல்லாரும் நல்லவ ராகி விட்டார்கள். எல்லாரும் செல்வராகி விட்டார்கள். இதனால் மக்கள் உள்ளம் மென்மை அடைந்து விட்டது. பகைவராலோ இயற்கையாலோ ஏற்படுந்துன்பத்தை - ஒரு சிறிதும் தாங்க மாட்டாதவராகிவிட்டார்கள். இதுமட்டுமன்று; முக்குணங்களின் மாறுபாட்டால் மக்கள் உள்ளத்தில் திடீரென நன்மை செய்வதும் தீமை செய்வதும் ஆகிய கோளாறுகள் ஏற்படும். தீமை படையெடுக்கும்போது அதைத் தடுத்துத் தன்னை காத்துக் கொள்ளும் வன்மையும் இல்லாதொழிந்தது. மேற்படி : எனவே, எல்லாரும் நல்லவர், எல்லாரும் செல்வர் என்ற நிலைமையால் மக்கள் உள்ளம் மெல்லிதாகி விட்டது; வரும் துன்பத்தைச் சிறிதும் தாங்கவில்லை என்றீர்கள். இது எனக்கு விளங்கவில்லை. (திடும் என ஒர் ஓசை கேட்டு இருவரும் திரும்புகின் றார்கள். ஓடையைக் கடந்த யானை அந்த ஓடை மேலிடப் பட்ட பலகை முறியத் திடும் என ஓடையில் விழுகிறது.) பிசிரா : அச்சப் பலகை ஆனையைத் தாங்கவில்லை, மேற்படி யாரே! மேற் : நல்ல எடுத்துக்காட்டு. மெலிந்த உள்ளம் வெம்மையைத் தாங்காது. விளங்கிற்று. பிசிரா : தீயவர் சிலரும், வறியர் சிலரும் தோன்றத்தான் வேண்டும் என்று ஏன் சொன்னேன் எனில், இவ்வாறு தீயவர் சிலரும், வறியர் சிலரும் நாட்டில் தோன்றினால், வாழ்க்கையில் சுவைப் பகுதி இது சுவையற்ற பகுதி இது, என்று உணர முடியும். அதுமட்டுமல்ல அப்போது தானே இன்னும் என்ன வேண்டும் மக்களுக்கு என்று நமக்குப் புரியும். மேற் : எல்லாரும் நல்லவர், எல்லாரும் செல்வர் ஆகி விட்டார்கள். அவர்கட்கு இன்னும் என்ன வேண்டும்? பிசிரா : வல்லமை வேண்டும். மேற் : ஓகோ! எல்லாரும் நல்லவர், எல்லாரும் செல்வர், எல்லாரும் வல்லவர், ஓகோ... ஓகோ... ! பிசிரா : இன்னும் இதில் உமக்குத் தெளிவு ஏற்படவில்லை போலும்! மேற்படியாரே! இந்த நாட்டில் எல்லாரும் நல்லவரா யிருந்தார்கள் - எல்லாரும் செல்வர்களா யிருந்தார்கள். ஒரு தீயவன் உண்டானான். அவன் கொலை செய்தான். நாடே நடுங்கி அழுதது. அவர்களின் அச்ச உள்ளம் தாங்கவில்லை, தீமை யானையை, எல்லாரும் வல்லவர் ஆகி இருந்தால் நிலைமை என்ன ஆகியிருக்கும்? கருப்பமுடைய ஒரு மங்கையை மற்றவன் கொலை செய்யக் கத்தியை எடுப்பானா? எடுத்தான் என்றால் அந்த வல்லவள் அவனைத் தூக்கித் தரையிலல்லவா அடித்திருப்பாள், அவள் குற்றவாளிகூட அல்லள். (இதற்குள் மற்றொருவன் வருகின்றான்.) பிசிரா : யார்? வந்தவன் : நான் பாண்டி நாட்டான், நாட்டின் இப்போதைய நிலை கண்டு துடிப்பவன். உங்களைக் கண்டு ஓர் ஐயப் பாட்டைக் கேட்டுக் கொண்டு போக வந்தேன். என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன். பிசிரா : இப்போதைய நிலை கண்டு துடிப்பவரோ நீவீர்! ஏன் துடிக்கின்றீர்? வந்தவன் : நீங்கள் துடிக்கவில்லை. உண்மைதான். நாடு துடிக் கின்றது. நான் துடிக்கின்றேன். அதோ தூக்கு மரம் வாய் திறந்து கொண்டிருக்கிறது! அதோ அமைச்சரையும் கொலை யாளியையும் அழைத்து வரப் போகின்றார்கள். நீங்கள் துடிக்கவில்லை, உண்மைதான்; நாடு துடிக்கின்றது, நான் துடிக்கிறேன், புலவர் பெருமானே! பிசிரா : ஏன்? கொலையாளி கொலை செய்ததற்குள்ள காரணத்தை கூறவில்லையோ? வந்தவன் : எதையும் கூறவில்லை. அதனால்.. பிசிரா : அமைச்சரையும் அவனையும் தூக்கில் இட்டு விடுவார் மன்னர் என்று துடிக்கின்றீரோ! நண்பரே, கொலைசெய்தவன் அவனல்லன். கொலை செய்தவன் வேறு ஒருவன்! அவனும் நான்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொள்வான். துடிக்காதீர். போய்வரு கின்றீர்களா? வந்தவன் : நீங்கள் பிசிருக்கு வந்து தங்கியுள்ளீர்; அங்கே எழுந்தருள வேண்டும், ஐயா! பிசிரா : தேவையில்லை. (போகின்றான் வணங்கி - கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.) ஒருபுறம்: பிசிராந்தையார் வேறுபுறம் - ஆலடியில் சென்று அமர, உடன் தொடர்ந்த மேற்பாடியாரும் அவருக்குச் சற்றுத் தொலைவில் அடக்கமாக அமர்கின்றார். மூவர் பிசிராந்தையாரை நோக்கி வந்து வணக்கம் செலுத்து கின்றார்கள். அவர்களில் ஒருவன் மட்டும் பிசிராந்தை யாருக்கு எதிரில் உட்கார்ந்துகொள்ள, மற்ற இருவரும் நின்றபடியிருக்கிறார்கள். பிசிரா : நீவீர் இருவரும் ஏன் நிற்க வேண்டும்? அமர்வதுதானே! இருவர் 1 : நிற்கின்றோமையா! பிசிரா : எந்த ஊர்? என்ன செய்தி? உட்கார்ந்திருப்பவன்: நானும் இவர்களும் சோழநாட்டினர். பிசிரா : கோப்பெருஞ்சோழனார் நலந்தானே? மங்காத மகிழ்ச்சி யுடன் தங்கடமை செய்து வருகின்றாரா? உட்கார்ந்திருப்பவன்: அதுபற்றித்தான் புலவரிடம் சொல்ல வந்தேன். இன்று தூக்கிலிடப் போகின்றார்கள் ஒரு கொலை யாளியை. அந்தக் கொலையாளி சோழநாட்டான். இன்று சோழ மன்னர் ஆட்சி கொலைகாரர்களையும், கொள்ளைக் காரரையுமே உண்டாக்கி வருகின்றது. வறுமை தாண்டிக் குதிக்கிறது சோழநாட்டில். பாண்டிய நாட்டிற்கும், சோழநாட்டிற்கும் போர் மூண்டால் நாம் வியப்படைவதற்கில்லை. எல்லாரும் நல்லவர். எல்லாரும் செல்வர் என்ற நிலையில் வைக்கப் பட்டிருக்கும் பாண்டிய நாட்டில் சோழ நாட்டான் புகுந்து நிலை கலக்கினான் என்றால், இரு நாடுகளுக்கிடையில் அமைதி வாழப்போகின்றதா? இந்த நிலையை - சோழ நாட்டான் பாண்டிய நாட்டிற்சென்று நடத்தியுள்ள இந்தக் கொலையைச் சோழமன்னன் காதில் போட்டோம்; மன்னர் வருந்தவில்லை; நாணவில்லை. அதற்கு மாறாகப் பாண்டியநாட்டு நிலையை அவர் தாழ்வுப்படுத்திப் பேசினார், கற்பிழந்த பெண்டிர் வாழும் நாடு பாண்டிய நாடு என்று கூறி மகிழ்கின்றார். இந்தத் தீய உள்ளத்தை நாட்டு மக்கள் அறிந்து வருந்துகின்றார்கள்! மன்னர் இந்த நிலையை அடைந்ததற்குக்காரணம் அவரின் முதுமையே என்று முடிவு செய்கின்றார்கள். மகனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கச் சொல்லுகின்றார்கள். அரசர் காதுகொடுக்கவில்லை. ஆட்சிக் கட்டிலில் ஒட்டிக்கொண்டிருக்கவே ஆசைப்படு கின்றார். பிசிரா : அதற்கென்ன செய்யலாம் சொல்லுங்கள். உட்கார் : புலவர் சோழ நாட்டுக்கு வரவேண்டும். சோழவேந்தருக்கு அறிவுரை கூறவேண்டும், நாடு நல்லவண்ணம் இருக்க வேண்டுமானால் அரசர் விரைவில் ஆட்சியை மகனிடம் ஒப்படைக்க வேண்டும். புலவரே! உங்கள் சொல்லுக்குச் சோழமன்னர் பெரு மதிப்பு வைப்பவர். இதை நீங்கள் செய்ய வேண்டும். சோழ நாட்டைக் காப்பாற்ற வேண்டும். இன்று அமைச்சரைத் தூக்கில் இடாமல் காக்க வேண்டி யதும் உங்கள் பொறுப்பு. அதே நேரம் கொலை யாளியைத் தூக்கி லிட்டுக் கொலைசெய்து தண்டிக்க வைக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு. பிசிரா : உலகு தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரைக்கும் மேம்பட்டு வருகின்ற சோழர் ஆட்சியின் அடிப்படையி லேயே மாசு ஏற்பட்டு விட்டதா? உட்கார் : அப்படி ஒன்றுமில்லை. பிசிரா : போகட்டும், இன்னொன்று கேட்க விரும்புகின்றேன். தமிழனின் உயிர் தமிழே ஆகும். தமிழிற் பற்றில் லாதவன் தமிழன் அல்லன். அவன் உயிருடையவனும் அல்லன். சோழமன்னன் தமிழ் வளர்க்கும் பணியில் மனத்தளர்ச்சி அடைந்ததுண்டா? உட்கார் : அப்படி ஒன்றுமில்லை. பிசிரா : போகட்டும்; மற்றொன்று கேட்க விரும்புகிறேன். ஆட்சித் துறைகள் ஆறு. அவை உழவு, தொழில், வாணிகம், வரைவு, தச்சு, கல்வி என்பன. இந்த ஆறு துறைகளில் ஏதாவது அசைவற்றுப் போனதுண்டா? செவ்வனம் நடவாது போனதுண்டா? உட்கார் : அப்படி ஒன்றுமில்லை. பிசிரா : வேறு என்ன குறைபாடு கூறுகின்றீர் சோழமன்னர் மேல்? உட்கார் : மூப்பின் வாய்ப்பட்ட மன்னர், தம் காப்புத் தொழிலில் கண்கெட்டு வருகின்றனரே என்றேன். அன்றியும், புலவரே! தலைக்குயர்ந்த பிள்ளைகள் இருக்கையில் அவர்கட்கு முடிசூட்டாமல் இவரே தொல்லையுற்று வருவதில் மக்கட்கு வெறுப்பு ஏற்படாதா என்று கேட்கின்றேன். பிசிரா : இன்ன துறையில் கண்காணிப்பில்லாத காரணத்தால் இன்ன குற்றம் ஏற்பட்டது என்று கூறுங்கள். உட்கார் : பாண்டிய நாட்டில் ஏற்பட்ட படுகொலைக்குச் சோழ நாட்டின் தீய ஆட்சியேதான் காரணம் என்று கூறுகின்றேன். பிசிரா : படுகொலையின் முடிவு தெரிந்துவிடவில்லை. சோழ நாட்டானே இந்தக் கொலைக்குற்றம் புரிந்தான் என்று கூற முடிந்தாலும், சோழ மன்னன் ஆட்சி மாசு பட்டு விடாது. மாசுபட்டதாகச் சொல்லப்படலாம். (இந்த நேரத்தில் ஆலினின்று பறவை எச்சமிடுகின்றது. அது உட்கார்ந்திருப்பவனின் துடை மேல் விழுந்ததால் அவன் முகம் சுருங்குகின்றது.) பிசிரா : நண்பரே, இது ஆலின் குற்றமன்று. அந்த ஆலின் நிழலில் அண்டிய பறவை செய்த குற்றம். ஆலைப் பாருங்கள்! அதன் வேரைப் பாருங்கள்! அடிமரத்தைப் பாருங்கள்! கிளை இலைகளைப் பாருங்கள்! அவை மாசற்றவை! இருந்தபடியே இருக்கின்றன. பறவை இழைத்த குற்றம், ஆலமரம் இழைத்த குற்றமன்று. இருக்கட்டும், மற்றொன்று கேட்க விரும்புகின்றேன், உங்களை! தமிழர் நிறை மனைவியின் கற்பை வைத்து நிறுக்கப்படும் தமிழ்நாட்டில் சோழமன்னர் மனைவியார் கற்புத் தவறியதுண்டோ? உட்கார் : (சினத்துடன் ) என் அன்னையரா? பிசிரா : முகமூடியைத் கிழித்துக் கொண்டீர் இளவரசே! பண்பு வேறுபாட்டால் தந்தைக்கு மாசு ஏற்படுத்த முனைந்து விட்டீர், ஆலின் மேலிருந்து எச்சமிடும் பறவை போல? உங்கள் மனநிலை திருந்தவேண்டும். அல்லது பொறுத் திருக்கவேண்டும். குறைபாடுள்ளது உலகம். பல திருத்தங்களைப் பெறவேண்டும், அது. அதற்கான கருவூலம் உம் தந்தையார் சோழமன்னர். இளவரசன் : புலவரே, நீங்கள் தூக்குமேடை, நோக்கி வரவேண்டு மல்லவோ? பிசிரா : வருகின்றேன். இளவ : அமைச்சரைக் காக்க வேண்டுமல்லவோ? பிசிரா : தீர்ப்பு அறத் தராசில் வைக்கப்பட்டுவிட்டது. தீர்ப்புக் கூறுவோன் உரிமையில் தலையிட எவனுக்கும் உரிமை யில்லை, தலையிடுவது இழிசெயலும் ஆகும். இளவ : சோழநாட்டுக் கொலையாளிக்கு ஏற்ற தண்டனை ஏற்பாடு செய்வது பிழையா? பிசிரா : பிழையில்லாமல் வேறென்ன? இளவ : எது எப்படியிருப்பினும் அங்குப் போகலாம் வாருங்கள். பிசிரா : நன்று. போகலாம். (போகின்றார்கள்.)  காட்சி - 8 நானே கொலை செய்தேன் இடம் : தூக்குமேடை நேரம் : தூக்கிலிடும் நேரம். கதை உறுப்பினர் : அமைச்சன், அரசன், கொலையாளி, பிசிராந்தை யார், மேற்படியார், பெருமக்கள், அமைச்சர் மனைவி அனிச்சை. நிகழ்ச்சி : துன்பக்கேணியில் அனைவரும் ஆழ்ந்து கிடக் கின்றார்கள். என்ன தீர்ப்பு என்று ஆவல் கொள்ளு கிறார்கள். அரசன் : பெருமக்களே! படுகொலை புரிந்ததாகக் கூறினான்; கடுகளவு காரணமும் கூற மறுத்தான். இந்தப் படுகொலை யின் உட் புறத்தில் கெடுதலையுள்ளங்கள் ஆயிரமிருக்கும். அவைகளைக் கண்டறிந்தால் களைகளை அடியோடு வெட்டியதாகும். நாடு மாசு நீங்கும். உளவை வெளிப்படுத் துவேன் என்ற அமைச்சர் அது செய்யவில்லை. கடன் பட்டவர் அக்கடனைக் கழிக்கவில்லை. தண்டனைக்காகக் காத்திருக்கிறார். கொலைக் காரணம் தெரிந்தவர்கள் இங்கிருந்தால் கூறி, அமைச்சரைக் காக்கலாம். இல்லை, இல்லையா? தூக்குக! ஒருகுரல் : நானே கொலை செய்தேன்! தூக்கில் இடுக என்னை! (ஓர் இளைஞன் மக்கள் கூட்டத்தைக் தாண்டித் தூக்கு மேடையை நோக்கி ஓடி வருகின்றான். கூட்டத்தில் வியப்பு.) அரசன் : நீரோ கொலை செய்தீர்! ஏன் கொலை செய்தீர்? உமக்கும் இறந்த மங்கைக்கும் என்ன தொடர்பு? பொது நலங்கருதி எல்லாவற்றையும் விளக்க வேண்டுகிறேன். இளைஞன் : எதையும் கூற விரும்பவில்லை பொது நலங்கருதி. அரசன் : இப்படிக் கூறினால் உம்மை எப்படித் தண்டிப்பது? முன்னர் அவர் சொன்னார், நானே கொலை செய்தேன் என்று. இந்நாள் நீர் சொல்லுகின்றீர் நானே கொலை செய்தேன் என்று. இதுபோல் இன்னமும் இருக்கக் கூடுமே! எதிர்வந்த உம் சொல்லிலும் பொய்ம்மை இருக்கக் கூடுமே! உண்மை விளக்கம் ஆக வேண்டாமா? இப்படியெல்லாம் நீண்டு கொண்டு போனால் நாம் அமைச்சரையல்லவா இழக்க நேருகின்றது? பிசிரா : அமைச்சருக்கு ஒன்றானால் அரசர் வாழமாட்டார். அறுதி யிட்டுக் கூறுகின்றேன்; அரசருக்கு ஒன்றானால் நான் உயிர் வாழேன். இதோ செத்துக் கொண்டிருக்கிறார்கள் அன்னை அனிச்சையார். அப்பரே, திரையை விலக்குங்கள், நடந்ததை, நீங்கள் கண்டதை அப்படியே நடத்துங்கள். நாடகத்துள் நாடகத்தை மக்கள் ஆவலாய் எதிர்பார்க்கின்றார்கள். பாவாணர்கள் பதைக்கின்றார்கள். பாட்டு எழுத! இளைஞன் : நான் மட்டும் நடந்ததைக் கூற முற்பட்டால் கதை வரிசைப் பட்டு வராது. (இதோ இதற்குமுன் நான் தான் கொலை செய்தேன் என்றவனைக் காட்டி) இவரும் ஒத்துழைக்க வேண்டும். அவன் : பொது நலம் கருதி.  காட்சி - 9 நாடகத்துக்குள் நாடகம் இடம் : பாண்டிய நாட்டில் ஒரு தோப்பு. அதுசார்ந்த ஒரு தாமரைக்குளம். நேரம் : மாலை உறுப்பினர்: பாண்டிய நாட்டுப் பச்சைக்கிளி. சோழநாட்டுத் தூயன், சிறுமியர் பலர். நிகழ்ச்சி : தாமரைக் குளம் நோக்கித் தண்ணீர் எடுக்க வந்த சிறுமியர் குடத்தை ஒரு புறம் வைத்துவிட்டுப் பாடி ஆடுகின்றார்கள். (பாட்டு) குளிர் - தென்றல் ஓடைதனில் ஆடுவோம் தென்னவன் சந்தனப் பொதிகையைப் பாடுவோம். (தென்றல்) அன்றன்று மலர்ந்த மலர் மணத்தையும் அணுஅணு வாகிய தங்கப் பொடியையும் சென்று சென்று தென்னகம் பரப்பும் சேயிழைமார் தமையும் மகிழச் செய்யும் (தென்றல்) கிளையின் தளிரை மெல்ல அசைக்கும் கேட்க இனிக்கும் பண்ணும் இசைக்கும் துளி துளியாக மலர்த்தேன் மாரி தூவும்! நாமெலாம் அன்புடன் தாவும் (தென்றல்) அன்னை தழுவிய செங்கையின் நலமோ அன்பர் செய்யும் துணையின் நலமோ பொன்னிறக் கலவைப் பூச்சின் நலமோ புலவர் கொள்ளும் மகிழ்ச்சி நலமோ (தென்றல்) நிலைமை : ஆடிப்பாடியிருந்த சிறுமியர் அங்குமிங்கும் ஓடுகின்றார்கள். ஒருபுறம் குரங்கு விளாம்பழம் பறித்துப் போடுகிறது. அதை நோக்கிக் கையேந்தி நிற்கின்றார்கள் சிறுமியர் சிலர். பச்சைக் கிளி நெல்லிமரத்தில் ஏறிக் கிளைமுறிந்ததால் அங்கிருந்த சேற்றில் விழுகின்றாள். ஒருத்தி : ஐயோ! மேலெல்லாம் சேறாகிவிட்டதே! மற்றொருத்தி: எழுந்திரு! குளித்துவிடு! ஆடையை நனைத்துப் பிழிந்துவிடு. (பச்சைக்கிளி குளிக்கின்றாள். தன் குடத்தைக் குளத்தில் கவிழ்த்து அந்தத் தெப்பத்தின் உதவியால் நடுக்குளத்தில் நீந்தி விளையாடுகின்றாள்.) ஒருத்தி : கரடி! (கரையிலிருந்தவர்கள் வேறுபுறமாக ஓடிவிடுகின்றார்கள். பச்சைக்கிளி நடுக்குளத்தை விட்டுக் கரை திரும்ப முடிய வில்லை. கரடி குளத்தின் ஓரம் அணுகுகின்றது.) பச்சைக்கிளி : ஐயோ, குளத்திலும் இறங்க வருகின்றதே! எல்லோரும் எங்கே போய்விட்டீர்கள்? (இதற்குள் ஓடிவந்த தூயன் என்ற இளைஞன் கல்ஒன்றைத் தூக்கி - மரத்தின் மேல் ஏறி நின்றபடி - கரடி மேல் விட்டெறியக் கரடி ஓடி விடுகின்றது.) பச்சைக்கிளி: தொலைந்துவிட்டதா? திரும்பி வருமா? தூயன் : ஏன் இத்தனை வெறுப்பு ? பச்சை : விரும்பச் சொல்லுகிறீர்களா? தூயன் : வேறென்ன? பச்சை : என்னைப் பிடிக்க வரவில்லையா அது? தூயன் : எப்படித் தெரிந்துகொண்டாய் அதை? பச்சை : என்னை நோக்கித்தானே குளத்தில் இறங்கப் பார்த்தது? தூயன் : அப்படி உன்மனம் குழப்பம் அடைந்தது! பச்சை : சரி! அதை விரும்பச் சொன்னீர்களே, ஏன்? தூயன் : தண்ணீர் குடிக்கக் குளத்தில் இறங்கியது. அதன் விருப்பத்தைத் தடுத்தேன் நான்! அவ்வாறு செய்தும் என்னையும் உன்னை யும் அது மன்னித்தது. ஊறு செய்தவர்களை விலங்குகள் மன்னிப்பது அரிது! பச்சை : அது எதிர்த்திருந்தால்... ! தூயன் : அஞ்சி ஓடியிருப்பேன். ஓடுவதால் எனக்குத் துன்பம் ஏற்பட்டிராது. நான் ஓடியபின் உன் நிலை என்னாகுமோ என்று எண்ணித் துன்பமடைய நேர்ந்திருக்கும்... பச்சை : அப்படியா... ஆம் மெய்தான். இப்போது நீங்கள் வரா திருந்தால்... தூயன் : நான் வராதிருந்தால், எனக்குத் தொல்லை ஏற்பட்டிராது. பச்சை : என்ன தொல்லை உங்களுக்கு? தூயன் : உன்னை விட்டுப் பிரிய வேண்டுமே இப்போது! பச்சை : கரடி வராது. நீங்கள் போகலாம். தூயன் : கரடி வராது. உன்னிடம் சென்ற மனமும் வரமாட்டேன் என்கிறது. பச்சை : அதற்கு நான் என்ன செய்வது? தூயன் : சொன்னால் செய்கின்றாயா? உன் பெயர் என்ன? பச்சை : பச்சைக்கிளி! தூயன் : பச்சைக்கிளியே, சொன்னால் செய்கின்றாயா? - உன் மனத்தை என்னிடம் அனுப்பு! பச்சை : அப்படி என்றால் என்ன? தூயன் : எனக்கு உன்மேல் ஆசை! உனக்கு என்மேல் ஆசை தானே. பச்சை : கரடியிடமிருந்து காத்ததற்காக. தூயன் : நன்றி செலுத்துகிறாயா? பச்சை : ஆமாம்! (உடையைப் பிழிந்து உடுத்துக் கொண்டாள்.) தூயன் : ஆசை வைத்தேன் உன்மேலே, அப்படிச் செய் நீ என் மேலே! பச்சை : பின்னே, ஆசை வைக்காமலா இருக்கிறேன்? தூயன் : பேசிக் கொண்டே போகலாம்! பச்சை : கரடி வராது, நான் போகிறேன்! தூயன் : ஆசை வைத்த இப்படியா பேசுவது? பச்சை : கூடவே வர வேண்டுமா? தூயன் : பின்னென்ன? (போகிறார்கள்; வழியில்) பச்சை : என்னை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார்கள் அம்மா அப்பா! தூயன் : இவர் யார் என்று கேட்டால் என்ன சொல்லுவாய்? பச்சை : உங்களையா? கரடியிடமிருந்து இவர்தாம் காப்பாற்றினார் என்று சொல்லுவேன். தூயன் : ஏன் கூட வருகிறார் என்று கேட்டால்? பச்சை : இவருக்கு என் மேல் ஆசை என்று சொல்லுவேன். தூயன் : வருத்தப்படுவார்களோ என்னமோ! பச்சை : வருத்தப்பட மாட்டார்களே! தூயன் : என்னையும் இங்கே இரு என்று சொல்லுவார்களா? பச்சை : ஏன் - உங்களுக்கு வீடு இல்லையா? தூயன் : நீயும் நானும் திருமணம் செய்துகொள்ள ஒப்புவார்களா, என்றேன்! பச்சை : என்னமோ தெரியவில்லையே? தூயன் : என்னை நீ மணந்து கொள்ளுகிறாயா? பச்சை : என்னமோ தெரியவில்லையே? தூயன் : அட! என்மேல் ஆசை என்று சொன்னாயே? பச்சை : ஆசைதானா திருமணம். தூயன் : பின்னென்ன? பச்சை : என் பெற்றோர்களைக் கேட்டுத்தான் சொல்ல வேண்டும். எனக்கொன்றும் புரியவில்லை! வீடு jhŒ : இவர் யார் அம்மா? ஏன் இத்தனை நேரம்? உன்னோடு வந்த பெண்கள் எல்லோரும் முன்பே வந்து விட்டார்களே! பச்சை : என்னை அவர்கள் விட்டுவிட்டு ஓடி வந்து விட்டார்கள். கரடியிடமிருந்து இவர் தாம் என்னைக் காப்பாற்றினார். தாய் : அப்படியா? நீ யார் தம்பி? பச்சை : அவருக்கு வீடு இல்லையாம்? அவர் இங்கேயே இருக்கட்டுமே அம்மா. (தாய் முகத்தைத் தூயன் நோக்குகிறான்.) தூயன் : நான் இருப்பது சோழ நாடு. பாண்டியநாட்டின் அழகு பார்க்க வந்தேன். தோப்புக்குச் சென்றேன். கரடி வந்ததால் மற்றப் பெண்கள் ஓடிவிட்டார்கள். தனியாய் இருந்த பச்சைக் கிளியைக் காப்பாற்றி அழைத்து வந்தேன். இங்குச் சில நாள் தங்கிப் போகலாம் என்பது என் விருப்பம். உங்கள் ஒப்புதல் எப்படியோ! தாய் : நன்றாய்! இங்கேயே தங்கியிரு! ஊரையெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டுப் போ, தம்பி, கையலம்பிச் சாப்பிடு!  காட்சி - 10 மிளகு வண்டிகள் இடம் : பச்சைக்கிளி வீடு நேரம் : மாலை உறுப்பினர் : பச்சைக்கிளியின் தந்தையாகிய பட்டுக்குடை, ஆட்கள், பச்சைக்கிளி யின் தாய் முத்துநகை, மான்வளவன். நிகழ்ச்சி : மிளகு ஏற்றிச் சென்ற வண்டிகள் வந்து வீட்டெதிர் நின்றன. பட்டுக்குடை வண்டியினின்று ஆட்களுடன்இறங்குகின்றான். மனைவி எதிர்கொள்கிறாள். பட்டுக்குடை: முத்துநகை நலமா? வாணிகம் நன்று. வருவாய் மிக நன்று. பச்சைக்கிளி எங்கே? மரப்பாவைகள் வாங்கி வந்தேன் அழகழகாய்! முத்துநகை: பாவை கேட்கும் பருவம் போயிற்று. இப்போது பன்மணிக் கோவை கேட்கின்றாள். தோழிமார் வந்தார்கள். தோப்பு நோக்கிச் சென்றார்கள். உடன் சென்றாள் பச்சைக்கிளி. (உள்ளே போகின்றான் பட்டுக்குடை.) தோப்பில் ஒருத்தி : முன்னாளில் இது தோப்பு! இந்நாளில் இது சோலை என்னும் இன்பத்தின் வாய்ப்பு! முன்னாளில் இது குரங்கு விளாம் பந்தடிக்கும் குறுங்காடு; இந்நாளில் மணமலர் வீடு. தடுத்து விழுந்தால் தலைதப்பாத கொலைக் களம் அப் போது! படித்துறை அமைந்த தாமரைக் குளம் இப்போது. கரடி ஓடிவரும்! கருங்குரங்கு தேடிவரும்; கருஞ் சிறுத்தை கொல்ல வரும்; பெரும்புலிகள் தொல்லை தரும். கொன்றை ஒரு வரிசை, கோங்கு மறுவரிசை, கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப் பூ வரிசை வரிசை! தாமே வந்தன அல்ல, தாமரை அழைக்க வந்த அன்னங்கள்! ஒளித்து ஒளித்து ஓடவில்லை; ஏன்? அவை வளர்த்து விட்ட மயில்கள்! அந்த ஈக்கள் கற்ற பாக்கள் எழுப்பும் பூக்களை! மணம், அவற்றின் இயற்கைக் குணம்! தங்கச் சரக்கொன்றைத் தள்ளும். அங்குச் சரக்கொன்றை சிந்தாம்; அரைபாடிய வண்டு பின் ஓடிச் செந்தாமரை பாடும்; போதாக் குறைக்கு வெண்டாமரை பாடும். சில்லி வண்டு அல்லி பாடிப் பின் மல்லிகை பாடும். எங்கப்படிப் போயிற்றென்று பார்த்தால் தும்பி தங்கப் பொடி அள்ளித் தாவி அன்னத்தின் கண்கெடுக்கும் அப்பாவி! தூவித் தூவி. முளரி : ஒன்றல்ல; ஆயிரமலர்களின் மணத்தை அள்ளி, இன்றல்ல - எந்நாளும் இன்பம் தருமிந்தத் தென்றல். பொன்னை நடுவிற் சுமந்த புன்னை; அண்டையில் அலரி மாணிக்கத் தென்னை. தங்கம் : ஒளிந்தாடுவோமா பச்சைக்கிளி? கொன்றை: ஆடுவோம், ஆனால் ஒன்று. வெய்யில் மேற்கில் விழுந்த வுடன் ஒருத்தி மற்றவர்க்காகக் காத்திருக்காமல் ஓடிவிட வேண்டும் வீட்டுக்கு! பச்சைக்கிளி: நினைப்பு வருகிறது. நான் சின்னவளாயிருந்தபோது, கரடி வந்ததென்று என்னைவிட்டு ஓடி விட்டார்கள் கூட வந்த குட்டிகள்! நடுக்குளத்தில் தத்தளித்தேன் நான்! அருள் ஒழுகும் கண்ணன் ஒருவன் என் உடன்பிறந்த அண்ணன் போல் வந்து காத்தான் என்னை. அவன் என்னோடு வீட்டுக்கு வந்தான். அடுத்தடுத்து வருவான்; போவான். இப்போது நாம் பிரிவது கூடாது! தங்கம் : ஒன்று செய்யலாம். அதோ அந்தப் புன்னையடியில் ஒருவரை ஒருவர் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்க வேண்டும். சேர்ந்தே போகவேண்டும். வீட்டுக்கு. முளரி : அப்படியானால் துவக்குங்கள் ஆட்டத்தை! (முளரியின் கண்கள் கட்டப்பெறுகின்றன. மற்றவர் பல புறங்களிலும் ஓடி மறைகிறார்கள். முளரி கட்டவிழ்த்துப் பார்க்கின்றாள் பல புறங்களிலும்.) ஒருபுறம் : மான் ஒன்று ஆடுகின்றது. அதன் எடுத்தடி ஊன்றல் தாளத்திற்கு ஒத்ததாக இருக்கின்றது. அப்பக்கம் ஓடிவந்த பச்சைக்கிளி பார்த்து வியந்து நிற்கின்றாள். மானிடம் காணப்படும். செயற்கை முறையை அவள் மறக் கின்றாள். அவள் உள்ளம் கலைத்திறத்தில் கவிழ்கின்றது. இரு கைகளையும் கூப்பிய படி தாளம் போடுகின்றாள். அவள் கால்கள் நிலைக்கவில்லை; நிலைபெயர்கின்றன; ஆடத் தொடங்கி விடுகின்றாள். அதே தாளமுடைய பாட்டொன்றை அவள் வாய் விட்டுப் பாடத் தொடங்கி விடுகின்றாள். தன்னை மறந்தவளாய்! பாட்டு முத்தமிழ் மணப்ப தென்ன இந்நாட்டிலே - முத்து முல்லை மணப்ப தென்ன தென்னாட்டிலே! ஒத்தவர் மணப்பதென்ன இந்நாட்டிலே - நல்ல உண்மைகள் மணப்ப தென்ன தென்னாட்டிலே! வித்தகம் பிறந்த தென்ன இந்நாட்டிலே- நல்ல வீரர் பிறந்த தென்ன தென்னாட்டிலே! தத்துவம் பிறந்த தென்ன இந்நாட்டிலே - நல்ல தருமம் பிறந்த தென்ன தென்னாட்டிலே முறைகள் விளைந்த தென்ன இந்நாட்டிலே - நல்ல முத்து விளைந்த தென்ன தென்னாட்டிலே! மறைகள் விளைந்த தென்ன இந்நாட்டிலே - நல்ல வாய்மை விளைந்த தென்ன தென்னாட்டிலே! இறைமை சிறந்த தென்ன இந்நாட்டிலே- நல்ல ஈதல் சிறந்த தென்ன தென்னாட்டிலே! திறமை சிறந்த தென்ன இந்நாட்டிலே - நல்ல திருவும் சிறந்த தென்ன தென்னாட்டிலே ஒருகுரல் : மாலையும் போனது வாடி, பச்சைக்கிளி! (இந்த அழைப்பு அவர்கள் விரைந்தாடும் நிலையை ஊடுருவுகின்றது. மான் ஆடாது நிற்கின்றது. பச்சைக் கிளி பாடாமல் ஆடாமல் நிற்கிறாள். அதன்பிறகு சோர்வு அவர்களைக் கொள்கின்றது. மான் நிலை தளர்ந்து விழுகின்றது. பச்சைக்கிளி விழுகின்றாள் சோர்ந்து.) பச்சைக்கிளி : கலையுலகைப் பிரிந்தோம்! மான்வளவன்: கவலையுலகில் வீழ்ந்தோம்! பச்சை : தோழிமார்கள் காத்திருப்பார்கள். எழுந்திருக்கவும் வலியில்லை எனக்கு. மான் : மெல்ல எழுந்திரு! (தூக்கி விடுகிறான்.) பச்சை : நல்ல உதவிக்கு நன்றி! மான் : உன் பெயர். பச்சை : பச்சைக்கிளி! மான் : மான் என்று ஆடுவேன். மான் வளவன் நான். இந்த நாடு! பச்சை : என் நாணம் என் வாயை அடைக்க வேண்டாம். நான் உன்னைத்தான் மணப்பேன். நீயும் அப்படித்தானே? மான் : அப்படியானால் நாம் பெற்றோருக்கு அறிவிப்போம், நம் கருத்தை! பச்சை : அவர்கள் ஒப்பாவிட்டால் ... மான் : அவர்கள் தங்களுக்குண்டாகும் மரியாதையை இழக்கவா எண்ணுவார்கள்? பச்சை : எப்போது திருமணம் நடக்கும்? மான் : இப்போது! (அன்பு முத்தம்! தோழிமார் வந்து விடுகின்றார்கள். அவன் போகிறான். அவள் நாணி நிற்கின்றாள்.) தோழி - 1 : சந்தனச் சேற்றில் புதைந்தது அந்தத் தங்கத் திரு மேனி. இதழமுதில் நனைந்தது இந்த இன்பத்தமிழ்! நல்ல வேடிக்கை! தோழி - 2 : இளமையின் வாழ்க்கை! பச்சைக்கிளி : வீட்டில் சொல்லிவிட வேண்டாம்! தோழி - 3 : சொல்லச் சொன்னானே உன் அகமுடையான். பச்சை : ஐயோ, எப்போது...? தோழி - 1 : சொன்னால் தப்பேது? விரைவில் திருமணம் நடக்க வேண்டாமா? நீயும் இந்தத் துன்பநிலையைக் கடக்க வேண்டாமா? தோழி - 2 : பச்சைக்கிளி! எனக்குத் தெரியும், இனி என்ன செய்ய வேண்டும் என்பது! (போகின்றார்கள்.) சோழநாட்டில் ஒருபுறம் - ஒரு வீடு சோழநாட்டுத் தூயன்: (தன் தாயை நோக்கி) பாண்டிய நாட்டில் அந்தப் பச்சைக் கிளியைத்தான் நான் மணப்பேன். நீங்கள் சொல்லும் குரங்கை நான் மணக்கவே மாட்டேன். தாய் : அவளைத்தான் நீ மணந்து கொள்ளவேண்டுமென்று நானா சொன்னேன்? நானா சொல்வேன்! பண்பாடுள்ள தமிழ்மகள் அப்படிச் சொல்வாளா தம்பி? பாண்டிய நாட்டுப் பச்சைக் கிளிக்கு நல்லுதவி செய்ய உனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அவள் உன் மட்டில் நன்றி யுடை யவள்! -அன்புடையவளா? இதை நீ நன்றாய் ஆராய்ந் தாயா? நீ காதல் செலுத்து கின்றாய். அவளும் அப்படித் தானா? உன் மேல் எனக்கு ஆசை என்றாள். அவள் இளையவளாயிருந்தபோது! அவள் சொன்ன ஆசை, காதல் இல்லை தம்பி! தூயன் : எனக்கும் அந்த ஐயப்பாடு உண்டு. ஆயினும் அவள் பெற்றோர் என் மீதில் அன்புடையவர்கள் அம்மா. சென்ற திங்கள் கூடச் சென்று அவர்கள் வீட்டில் விருந்துண்டேனே! தாய் : விருந்திட்டார்கள். வந்த விருந்தினரை வருக என அழைத்து உண்பித்தல் தமிழர். பண்பாடு, அது கொண்டு நீ பெண் கொடுக்க ஒப்பிவிட்டதாக எண்ணிவிடலாகாது. தூயன் : அவர்கள் ஒப்பக்கூடுமே! தாய் : தப்பவும் கூடுமே! ஆய்ந்து முடிவு செய். தூயன் : பச்சைக்கிளிக்கும் எனக்கும் திருமணம் என்று செய்தி அனுப்பு கிறேன். வந்து சேருங்கள் அப்பாவும் நீங்களும். என்ன? தாய் : நன்றாய்! தூயன் : அப்பா ஊரில் இல்லை. வந்தால் அவரிடம் சொல்லுங்கள் அம்மா! பாண்டிய நாட்டுக்கு நான் போயிருப்பதாக! (போகிறான்.) மற்றொருபுறம் : (சோழ நாடு) (நண்பனோடு பேச்சு) நண்பன் : உன் கண்கள் எண்ணத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. தூயன் : பெரும் பொறுப்பு என் தலைமேல் இருக்கிறது. ஒரு நெஞ்சே துணையாக உலகியலிற் புகுதல் எளிது! இனி இருநெஞ்சுகள் எதிலும் ஒத்துப்போக வேண்டும் இது அரிது! அவள் நல்லவள்; நான் நினைப்பதையே அவள் நினைப்பாள்; ஏன் எனில், என்னை அவள் உயிர் என்று கொண்டவள். என்றாலும், அறம் ஒன்று செய்யப் புகுங்கால் அவளையும் கூட்டிக்கொண்டே செல்லவேண்டும். அதுமட்டுமல்ல! அவளும் நானும் மனம் ஒத்தவிடத்திலேயே குடித்தனம் ஒன்று தோன்றிவிடுகின்றது. ஒருவர் ஒன்று சொல்லாத வகையில் நடத்தியாக வேண்டுமே! அது மட்டுமா? குடித்தனத்தில் ஈடுபடும்போது, அதன் பயன் தேடப்படும். குடித்தனப்பயன், மக்களைப் பெறுவது அல்லவா? குழந்தை ஒன்று கையில் பலாப்பழம்போல் அவள் பெற்றுக் கொடுத்துவிடுவாள். காப்பாற்ற வேண்டுமே! எளிதா அது? நண்பன் : ஒன்றுமே புரியவில்லை அப்பனே! தூயன் : முதற்பக்கம் பார்க்காமல் சுவடியைத்திருப்பிக் கொண்டே போனால் புரியாது தான். நான் மதுரையில் பெண் கொள்ளப் போகிறேன். அதுபற்றி ஒன்று கேட்க எண்ணுகின்றேன். நான் அழகாக இருக்கின்றேனா? நண்பன் : இனிமேல் சரிப்படுத்தியாக வேண்டுமோ பெண்ணை? தூயன் : இல்லை! இல்லை! இல்லை! அவள் தன்னை எனக்குக் கொடுத்துவிட்டாள். இருந்தாலும், அவள் என்னைக் காணும் போதெல்லாம் கருக்கான அழகோடு நான் காணப்பட வேண்டாமோ? நண்பன் : உன் முகத்தில் இளமை இல்லை. தூயன் : அதற்கு? நண்பன் : வளர்ந்துள்ள மீசையைச் சிரைத்துவிடவேண்டும். தூயன் : அப்போதே நினைத்தேன். நண்பன் : புருவத்தையும் சிரைத்து விடுக! தூயன் : அப்போதே நினைத்தேன். அவ்வளவுதானே? விடைபெற்றுக் கொள்கின்றேன். (போதல்) மற்றொரு புறம்: நண்பன் 2 : என்ன நண்பர் எங்கே ... ? தூயன் : திருமணம்! பாண்டிய நாட்டில்! உம்மை ஒன்று கேட்க வேண்டும். என் முகத்தில் இளமை தோன்றுகிறதா? நண்பன் 2 : இளமை என்பது அறியாமைதானே! தோன்றுகிறது! தோன்றுகிறது! பெண் உன்னை ஒத்துக் கொள்ள வில்லையோ? தூயன் : ஆயிற்று, ஆயிற்று! அவள் என் மேல் வைத்துள்ள ஆசை நிலைக்க வேண்டுமே! அழகிருந்தால்தானே! நண்பன் : கற்புள்ள பெண்தானே. தூயன் : உண்டு! உண்டு! வலிய அணைக்கும் இன்பம் என்பது தனி! அந்த இன்பத்தை நான் பெற வேண்டும். அதற்கு என்ன வேண்டும்? நண்பன் : ஓகோ! தூயன் : விளங்கிற்றா? நண்பன் : இருட்டில் கருநாய்க்குப் புரிவது போல் புரிந்தது! தூயன் : இன்னொன்று. என் காதலி ஆடல் பாடலில் விருப்பம் உடையவள். எனக்கு இரண்டும் வருவதில்லை. நண்பன் : ஒன்று செய்வீர். ஒரு கையில் ஓடு. மற்றொரு கையில் நரம்பில்லாத யாழ் தேடிக் கொள்ளும். பார்ப்பவர் இவர் பாணர் என்பார். அந்த உம் காதலியும் அப்படி நினைக்க முடியும். தூயன் : சரி. யாராவது யாழ் மீட்டு - பாட்டுப்பாடு என்றால்? நண்பன் : நரம்பு அறுந்துவிட்டது என்றால் போகிறது. தூயன் : ஓகோ! இடையில் நாள் இல்லை! மதுரை சென்றாக வேண்டும். நண்பன் : நலமே போய் வாரும்! (போதல்)  காட்சி - 11 அவள் மறந்தாள் - நான் மறக்கவில்லை இடம் : பாண்டி நகரவாயில். நேரம் : காலை கதை உறுப்பினர் : சோழ நாட்டுத் தூயன், ஊரார் நிகழ்ச்சி : சோழநாட்டுத் தூயன் வலக் கையில் சட்டியும், இடக் கையில் நரம்பறுந்த யாழும் ஆகப் பாண்டி நாட்டின் நகர வாயிலில் நுழைகின்றான். வெற் றிலையும் பூவும் ஏந்திய வாழ்வரசி ஒருத்தியும், அவளின் மண வாளனும் எதிர்ப்படுகின்றார்கள். தூயன் முகம் மலர்கின்றது. தூயன் : மங்கலக் காட்சி! வாழ்வரசி மலர்கொண்டு வருகின்றாள்! அவள் மணாளன் மலர்ந்த முகம் கொண்டு வருகின்றான். (மேற் செல்லுகின்றான்) நகருள் ஒரு தெரு: குதிரை மேல் வரும் ஓர் ஆடவனின் மேலணிந்திருந்த பொன் னாடை கீழ் விழுந்து விட்டதால், குதிரையை நிறுத்தி, இறங்கி அதை எடுக்கின்றான். அதே நேரம் எதிரில் வரும் தூயனை அவன் கண்டு வியப்பில் ஆழ்ந்து விடுகின்றான். வியப்பில் ஆழ்ந்த அவன் விழிகள் மீண்டு இரக்கத்தில் குதிக்கின்றன. தூயன் அருகில் நெருங்க நெருங்க இரக்க விழிகள் அச்சத்தில் குதிக்கின்றன. குதிரை மருளுகின்றது. தூயன் : உங்களை அடிக்கடி நான் காணுவதுண்டு. இந்த ஊர் தானே? (குதிரைக்குடையவன் அச்சத்தால் ஒதுங்கிக் குதிரை மேல் ஏறக் குதிரை பறக்கின்றது.) தூயன் : (போகும் குதிரையை உற்றுநோக்கி) இவன் ஒரு வெறியன்! அதில் ஒன்றும் ஐயமில்லை. (போகிறான்.) மற்றொரு தெருவில் தூயனை அருகிற் கண்ட ஒரு மக்கட் கூட்டம் மேலும் தூயனை உற்றுநோக்கி விலகி நிற்கின்றது. கூட்டத்தில் ஒருவன்: அவன் என்னை அடித்தா தின்று விடுவான்? நில்லுங்கள். (தூயனைச் சுற்றிப் பிறை வளைவாக நின்ற மக்கள் ஏதும் பேசாமல் நிற்கிறார்கள். தூயன் வியப்புறுகின்றான்.) தூயன் : நீங்கள் எல்லோரும் இந்த ஊர்தானே! ஒருவன் : இல்லை, இல்லை! வானத்திலிருந்து வருகின்றோம்! தூயன் : கடுமொழிக்குக் காரணம்? ஒருவன் : உம் மூளைக்கோளாறு தான்! தூயன் : எதைக்கொண்டு அவ்வாறு கூறுகின்றீர்கள்? ஒருவன் : அது உமக்கு விளங்கவில்லையா? தூயன் : நீங்கள் சொல்லுவது என்னிடமில்லையே? ஒருவன் : ஒரு கண்ணாடி எடுத்துப் பாருமே, நாங்கள் சொல்லுவது பொய்யென்று நினைத்தால்! தூயன் : என் உடலுக்கு முப்பதாண்டு மதிப்பு - உள்ளது. பதினாறு ஆண்டுதான் இளமையின் முறுக்கு! உங்களை வியப் படையச் செய்திருக்கலாம். உங்கள் வியப்பு என் மூளைக் கோளாறா? ஒருவன் : அப்படியானால்? மற்றவன் : எங்களுக்கு மூளைக்கோளாறு போலிருக்கிறது. அப்படித் தானா? ஒருவன் : விடுங்கள் அவரை. நமக்கென்ன? மற்றவன் : அது சரி, ஊர் காவலர் வேலை! நீர் போம் ஐயா. வழியோடு போம். இளைஞர்கள் கல்லால் அடிக்கக் கூடும்! ஒருவன் : ஏடா! வருகின்றாயா இல்லையா, பைத்திய மருத்துவ விடுதிக்கு? (என்று கைதாவத் தூயன் ஓடுகிறான்.) பச்சைக்கிளியின் வீட்டுத்தெருவில் தூயன் : என்ன மக்களின் நடமாட்டம்? ஏது மங்கலச் செய்தி? தேனப்பன்: பச்சைக் கிளிக்குத் திருமணம் நடந்தது இல்லையா? தூயன் : என் பச்சைக்கிளிக்கா? எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறதே தேனப்பா! மெய்தானா? விளையாடு கிறாயா? தேனப்பன்: இன்னொரு தரமா உனக்குப் பைத்தியம் பிடிக்க வேண்டும்? தூயன் : இனி என் நிலை? தேனப்பன்: சாவுதான்! அதோபார்! வீட்டின் அண்டையில் தோட்டம்! உற்றுப்பார், காதலர் இருவர் பொன்னூசல் ஆட்டம்! (தேனப்பன் போய்விடுகின்றான்.) தோட்டத்தில் பாட்டு: மாறாத இளமை வேண்டும் வற்றாத அன்பு வேண்டும் பேறெலாம் நாம் பெறவேண்டும். வேறென்ன வேண்டும் பேறெல்லாம் நாம் பெறவேண்டும் மீறாத நெஞ்சம் வேண்டும் வீழாத வாழ்வு வேண்டும் வீறெலாம் நாம் பெறவேண்டும் வேறென்ன வேண்டும் வீறெலாம் நாம் பெறவேண்டும் குன்றாத ஆசை வேண்டும் கொள்ளாத இன்பம் வேண்டும் நன்றெலாம் நாம்பெற வேண்டும். வேறென்ன வேண்டும் நன்றெலாம் நாம்பெற வேண்டும். அன்றாடம் மகிழ வேண்டும் ஆரும் நமைப் புகழ வேண்டும் வென்றெலாம் நாம் பெற வேண்டும். வேறென்ன வேண்டும் வென்றெலாம் நாம்பெற வேண்டும். ஏராளச் செல்வம் வேண்டும் எல்லார்க்கும் நல்க வேண்டும் சீரெல்லாம் நாம்பெற வேண்டும். வேறென்ன வேண்டும் சீரெலாம் நாம்பெற வேண்டும் பாராளும் திறமும் வேண்டும் பட்டாளத் தமிழர் வேண்டும் நேரெலாம் நாம் பெறவேண்டும் வேறென்ன வேண்டும் நேரெலாம் நாம்பெற வேண்டும். தென்னாடு வாழ வேண்டும் செந்தமிழ் வாழ வேண்டும் பொன்னெலாம் நாம் பெற வேண்டும் வேறென்ன வேண்டும் பொன்னெலாம் நாம்பெறவேண்டும். முன்னேறும் திறமை வேண்டும் மொய்ம்பேறும் தோள்கள் வேண்டும். தன்மானம் நாம்பெறவேண்டும். வேறென்ன வேண்டும் தன்மானம் நாம்பெறவேண்டும். (பொன்னூசல் ஆடுவார்க்குச் சற்றுத் தொலைவில் உள்ள ஓர் ஆலின் பின்னே நின்று - பச்சைக் கிளியைப் பார்த்த தூயன், தன் இரு கையாலும் தன் முகத்தை மூடியபடி ஆலடியில் குப்புற விழுகின்றான்.) தூயன் : அவள் என்னை மறந்தாள்; நான் அவளை மறக்கவில்லை. நான் வாழும் நாட்டில் அவளில்லை. ஆனால் அவள் வாழும் நாட்டில் நான் இருக்கிறேன். அந்த அளவு பேறு பெற்றேன் வீடுண்டு! எனக்கு; வீட்டில் அவளில்லை - பயனில்லை! நாடுண்டு எனக்கு; அந்நாட்டில் அவளில்லை - பயனில்லை! அப்பா உண்டு எனக்கு - அப்பாவுக்கு ஒரு மருமகளில்லை - பயனில்லை! அம்மாவுண்டு எனக்கு - அம்மாவுக்கு இவள் மருமகளாக அங்கில்லை - பயனில்லை! மேலுக்கு ஏந்திய இந்த வெறுஞ்சட்டி என் வாழ்வுக்கே நிலைத்து விட்டது. பகட்டுக்கு ஏந்திய இந்தப் பாசமற்ற யாழும் என் பங்கில் குந்திக் கொண்டது. பச்சை மாறிய பழுப்பில்லை நான் - அச்சு வளைந்த வண்டி நான். பிச்சையெடுத்துண்டு, திரிவேன் இங்கே. ஏன்? அவள் இங்கிருப்பதால் தான்! அவளை நாள்தோறும் பார்ப்பேன்; போகும் என் உயிரை மீட்பேன். (தன் பார்வை அவள் பக்கம் சென்று விடாமல் கையால் மறைத்தபடி, தள்ளாடிச் செல்கின்றான்.)  காட்சி - 12 இலந்தைக் கனி ஐந்தாண்டுகட்குப் பின் இடம் : பாண்டிய நாடு, மேற்படி பச்சைக் கிளியின் வீடு. நேரம் : காலை கதை உறுப்பினர் : பச்சைக்கிளி - அவள் கணவன் - ஐந்து ஆண் டுடைய பொன்னன் என்ற பெயருள்ள மகன். நிகழ்ச்சி : கணவன் தன் பணிமனைக்குச் செல்லுமுன், கரு வுற்றிருக்கும் பச்சைக்கிளியுடன் பேசுகின்றான். மகன் பொன்னன் உடனிருக்கின்றான். கணவன் : பச்சை! இரண்டுயிர் உடையவள் நீ. என்னவேண்டும்? ஆசைப் பட்டதைக் கேட்கவேண்டும். உள்ளத்தை மறைக்காதே இரண்டாவது பிள்ளைக்குத் தாயாகப் போகின்றாய். இன்னும் நாணத்தால் சாகின்றாய்! முந்தா நாள் செந்தாழை வேண்டுமென்றாய். இந்தா என்று கொண்டு வந்தேன். மகிழ்ந்தாய் அல்லவா; அதுகண்டு நானும் மகிழ்ந்தேனில்லையா? பச்சை : எனக்கு வெட்கமாக இருக்கிறது அத்தான்! கணவன் : சொல்லுவதற்கா? நாம் கலக்குமுன் விலக்க முடியாதது வெட்கம். கலந்தபின் - இத்தனை ஆண்டுகள் ஆனபின்? பச்சை : இலந்தைக் கனி வேண்டும்! கணவன் : இந்த ஆசை இயற்கையானதுதான்! இலந்தைக் கனி புளிப்புக் கலந்த இனிப்புடையது. கருவுற்ற பெண்கள் நினைப்பைக் கவர்வது! நன்றி! இலந்தைக் கனிதானே, நன்று! இதுதானே கூடைகூடையாக! பொன்னு : எனக்கும் அப்பா! கணவன் : உனக்கில்லாமலா? போய் வருகின்றேன் பச்சை! விழிப்போடிரு. பச்சை : பொன்னு பள்ளிக்குப் போகமாட்டேன் என்கிறானே, சொல்லிவிட்டுப் போனால் தானே! கணவன் : தம்பி பள்ளிக்குப் போகவேண்டும் தெரியுமா? பொன்னு : இலந்தம் பழம்! கணவன் : பள்ளிக்குப் போனால் தான். பொன்னு : இலந்தம் பழம் கொடுத்தால் தான். கணவன் : சிறுவர்களை வைத்துக்கொண்டு ஒன்றும் பேசக் கூடாது. தம்பி, இலந்தம்பழம் கொண்டு வருகின்றேன். நீ பள்ளிக்குப் போய் வா! என்ன, நான் போய் வருகின்றேன். (போதல்.) ஒருபுறம் : (திண்ணைப்பள்ளி) நிகழ்ச்சி : மாணவர் சிலர் ஒரு மாணவனைத் தூக்கிக்கொண்டு பள்ளியினுள் புகுகின்றார்கள். பையன் அழுகின்றான். ஆசிரியர் : (அழும் பையனைப் பிரம்பால் அடித்து) அழாதே. இப்படி உட்கார்ந்திரு! முதியவர் : (பள்ளிக்கு அருகில் உட்கார்ந்து நிலைமையை உற்று நோக்கி) ஏன் ஆசிரியரே, நீரே அவனை அடித்துவிட்டு அழாதே என்கிறீரே, சரியா அது? ஆசிரியர் : நாவையடக்கிக் கொண்டிரும் நரம்பறுந்த யாழ் போல! அடே பொன்னு! காலையில் எழுந்து காலைக் கடனை முடித்துக் கொண்டு இட்டதை உண்டு இரண்டாம் பேர் அறியாமல் பள்ளிக்கு வந்துவிட வேண்டியதுதானே! பொன்னு : எங்கம்மா பிள்ளைத் தாய்ச்சி! ஆசிரியர் : இருந்தால்? பொன்னு : இலந்தம்பழம் கேட்டாங்க. ஆசிரியர் : யாரை? உன்னையா? பொன்னு : எங்க அப்பாவை! ஆசிரியர் : அதற்காக? பொன்னு : அவுங்க வாங்கி வர்ரேண்ணாங்க ஆசிரியர் : நீ எதற்காக ...? பொன்னு : ஒரு கூடை வாங்கி வர்ரேண்ணாங்க. ஆசிரியர் : சொன்னால்...? பொன்னு : எனக்கும் குடுக்கறேண்ணாங்க. ஆசிரியர் : கொடுக்கட்டுமே! நீ பள்ளிக்கு வருவதற்கென்ன? பொன்னு : அதை வாங்கித் தின்னுட்டு வரலாமிண்ணு இருந்தேன். ஆசிரியர் : வரும்போது வாங்கியுண்பதா? அதற்காகப் பள்ளிக்கும் வராமல் வீட்டிலேயே காத்திருப்பதா? பொன்னு : அல்லாட்டி. அல்லாத்தியும் அவுங்களே திண்ணுட்டா நீங்க குடுப்பீங்களா? முதியவர் : கொடுப்பார் தம்பி, பிரப்பம் பழம் கொடுப்பார். ஆசிரியர் : ஐயா, ஓட்டைச் சட்டியாரே, ஒன்றும் பேசாதிரும்! ஏன் பொன்னு, நேற்றுச் சொல்லிக் கொடுத்த பாடம் நினைவிருக்கிறதா! பொன்னு : இருக்கிறது. ஆசிரியர் : சொல்லு! பொன்னு : இலந்தம்பழம்! முதியவர் : வேறென்ன? ஆசிரியர் : உன் சுவடி எங்கே? பொன்னு : வீட்டில் இருக்கிறது, போய் எடுத்து வரட்டுமா? ஆசிரியர் : போக வேண்டாம். பொன்னு : நாக்கு வறண்டு போவுது. தண்ணீர் குடிச்சுப்புட்டு வரட்டுமா? ஆசிரியர் : மெய்யாகவா? பொன்னு : என் நாக்கைப் பாருங்க. ஆசி : இங்கே தண்ணீர் கொண்டுவரச் சொல்லுகிறேன் குடி! ஆரடா அங்கே கண்ணப்பா! இவனுக்குத் தண்ணீர் கொண்டுவந்து கொடு. பொன்னு : யாருகிட்டேயும் தண்ணீர் குடிக்காதேண்ணாங்க எங்கம்மா. ஆசி : இப்பொழுது நீ வீட்டுக்குப் போகவேண்டும். அதுதானே! பொன்னு : அதாங்க! ஆசி : ஏன்? முதி : இலந்தம்பழம் வந்திருக்கும். ஆசி : அப்படித்தானா? பொன்னு : தாடிக்காரர் சொன்னார் இல்லீங்க? ஆசி : உன் நினைவு இங்கில்லை. வீட்டுக்குப் போய் நடுப்பகல் உணவுண்டு வந்துவிடு என்ன? பொன்னு : சரிங்க! ஆசி : நீ தனியாக வீட்டுக்குப் போவாயா? முதி : நான் அந்த வழியாகத்தான் போகிறேன். அவனை வீட்டில் விட்டு விட்டுப் போகிறேன். (போதல்)  காட்சி - 13 அவள்மேல் ஐயம் இடம் : பச்சைக்கிளியின் வீடு. நேரம் : நடுப்பகல். கதை உறுப்பினர் : பச்சைக்கிளி, கணவன் மான்வளவன், மருத்துவச்சி, பொன்னன். நிகழ்ச்சி : மருத்துவச்சி வருகின்றாள். பச்சைக் கிளியும் பொன் னனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பச்சை : பள்ளிக்குச் செல்வது உனக்குப் பெருங்கசப்பு. சென்று விட்டால் அங்குச் சிறிது நேரம் தங்கியிருப்பதும் பிடிக்கின்ற தில்லை. பொன்னு : அப்பா இலந்தம்பழம் கொண்டாருவாங்க, இல்ல. (இதற்குள் மருத்துவச்சி வந்துவிடுகின்றாள். பையன் தெருவில் விளையாடப் போய்விடுகின்றான்.) மருத்து : என்ன செய்கின்றது? பச்சை : இரண்டு தடவை வயிறு போயிற்று. மருத்து : ஏன்? பச்சை : பொரி விளங்காய் உருண்டை பின்னும் இரண்டு - ஆசையாய் இருந்தது - உண்டேன். மருத்து : எதிர் வீட்டு ஏந்திழையம்மா வந்து விரைவாக வா, விரைவாக வா என்றார்கள். என்னமோ ஏதோ என்று ஓடிவந்தேன். இது தானே. இதோ மூன்று சரக்கையும் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி இறக்கிச் சிறிது இனிப்புச் சேர்த்துக் குடிக்க வேண்டும். அவ்வளவுதான். பச்சை : அவர் வரும் நேரம் தெருக் கதவைச் சாத்திக் கொண்டு அடுப்படி யில் இருந்து நீங்களே காய்ச்சிக் கொடுக்க வேண்டும், அவருக்குத் தெரியவேகூடாது. அவர் வந்து கதவைத் தட்டினால் நீங்கள் கொல்லை வாயிலால் போய்விடுங்கள். மருத்து : தெரிந்தால் என்ன? பச்சை : தெரியவே கூடாது. அவர் படித்துப் படித்துச் சொன்னார், பொரி விளங்காய் உருண்டை உண்ணாதே உண்ணாதே என்று; கேட்கவில்லை. ஆதலால்தான் தெரியக் கூடாது என்கிறேன். (மருத்துவச்சி புறக்கட்டில் அடுப்படி நோக்கிச் செல்கிறாள். சிறிதுநேரம் செல்லக் கணவன் வந்து கதவைத் தட்டுகிறான்.) மான் : பச்சைக்கிளி. பச்சை : இதோ வந்துவிட்டேன். (ஓசை கேட்டு மருத்துவச்சி கொல்லைக் கதவைத் திறந்து கொண்டு போகிறாள்.) மான் : (உள்ளே வரும்போதே) அங்கே யார் சமையல் கட்டில்? பச்சை : கலகலத்த கதவு! காற்று வசத்தால் அப்படித்தான்! அதென்ன அத்தான் கையில்? மான் : மாறு காலம். இலந்தைக்கனி இவ்வளவுதான் கிடைத்தது. இந்தா ஐந்து தான். (இதற்குள் பொன்னன் வந்து விடுகின்றான்.) பொன்னு : எனக்கப்பா இலந்தைப்பழம்! மான் : அதில் தம்பிக்கு ஒன்று கொடு! (கொடுத்துவிட்டு மற்ற நான்கு பழங்களையும் படுக்கையில் தலையணைக்குக் கீழே வைக்கிறாள்.) பச்சை : ஏன் இத்தனை நாழிகை இன்று? உணவை. முடித்துக் கொள்ளுங்கள். தம்பி, கை கால் கழுவிக் கொள். (இலையிடுகின்றாள். வட்டிக்கின்றாள். உண்ணுகிறார்கள்.) உணவுண்ட பின். மான் தம்பி, பள்ளிக்குப் போனதுண்டா? பச்சை : போனதுண்டு, தூக்கிக் கொண்டு போனதால், உடனே வந்ததுண்டு, ஆசிரியர் ஏமாந்ததால்! பொன்னு : ஆசிரியர் தாம்பா அனுப்புறாரு! மான் : ஏன் அனுப்பிவிட்டார்? பொன்னு : தண்ணீர் குடிக்கணுமின்னேன். மான் : அங்கேயே தண்ணீர் கொடுப்பார்களே! பொன்னு : ஆமாம், எங்கம்மா அந்தத் தண்ணீரைக் குடிக்க வேண்டா மின்னாங்கண்ணு பொய்யடிச்சேன் மான் : பொய் பேசலாமா தம்பி? பொன்னு : (கலக்கம்) இனிமே இல்லேப்பா! மான் : பச்சைக்கிளி, நான் விரைவாகப் போகவேண்டும். (போகின்றான்.)  காட்சி - 14 ‘பிணப் பெட்டி’ இடம் : பச்சைக்கிளியின் வீடு. நேரம் : மாலை. கதை உறுப்பினர் : தூயன், பொன்னு, பச்சைக்கிளி, மான்வளவன். நிகழ்ச்சி : பொன்னன் தெருத்திண்ணையில் இரண்டு இலந்தைக் கனிகளை உருட்டி விளையாடிக் கொண்டிருக் கையில் அம்மருங்கு தாடிக்காரர் வருகின்றார். தாடி : ஏன் தம்பி, நாழிகை ஆகின்றதே, பள்ளிக்கு வரவில்லையா? பொன் : சரி, இதோ வந்து விடுகின்றேன். (உள்ளே போக முயலுகின்றான்.) தாடி : (இடைமறித்து) அதென்ன தம்பி, கையில், இங்கு வா காட்டு. பொன்னு : (ஓடி அவன் அருகில் நின்று) இலந்தம்பழம்! அஞ்சி கொண்டாந்தாங்க, எனக்கு ஒண்ணு குடுத்தாங்க. மீதியை அம்மா வாங்கி அப்புறம் உண்ணுவதாகச் சொல்லித் தலை யணை அடியிலே வச்சுக்கிட்டுத் தூங்கறாங்க. நானு அவங்களுக்குத் தெரியாமே இப்ப ரெண்டு எடுத்துக்கிட்டு வந்துட்டேன். ஆனால் பழம் நல்லாயில்லே. தாடி : எனக்குக் கொடுத்துவிடு. (கொடுத்துவிட்டு, உள்ளே ஓடிச் சுவடியுடன் பள்ளிக்குப் போகிறான்.) மற்றொருபுறம் - முன் மாலை: தெருவில் தன் கையிலுள்ள இரண்டு இலந்தைக் கனிகளை யும் வெளிப்படையாகக் காட்டியபடி அவைகளை உற்று ஆராய்வான் போலத் தாடிக்காரன் நடந்து செல்லுகின்றான். எதிரில் பச்சைக்கிளியின் கணவன் வருகின்றான். இலந்தைக் கனிகளை அவன் பார்க்கின்றான். மான் : ஐயா, இலந்தைக் கனிகளா? இன்னும் கிடைக்குமா? எங்கே கிடைத்தன? தாடி : ஒருத்தி வழியாகக் கிடைத்த அன்பளிப்பு! அவள் கணவன், ஐந்து பழம் தேடிப் பிடித்து அவளுக்குத் தந்தான். அவள் அவற்றில் ஒன்றைத் தன் பையனுக்குக் கொடுத்துவிட்டு மீதி நான்கை வைத்திருந்தாள். அதில் இரண்டை எனக்குக் கொடுத்தாள். அப்போதே அவளுக்குச் சொன்னேன்; நீதான் கருத்தாங்கி இருக்கின்றாய், உனக்குத்தான் இலந்தை மேல் ஆசை என்று. அவள் கேட்கவில்லை. மறுத்தால், வருந்துவாள். (போகின்றான் தாடி, ஓடுகிறான் பச்சைக்கிளியின் கணவன் தன் வீடு நோக்கி. பச்சைக்கிளி எழுந்தவள் மீண்டும் படுத்துத் தூங்குகின்றாள். மனக்கொதிப்புடன் வந்த மான்வளவன் அவள் தூங்குவதை நோக்கிப் பின், அவள் தலையணையை மெதுவாகத் தூக்கிப் பார்க்கிறான். இரண்டு இலந்தைக் கனிகளையே அவன் பார்க்கின்றான். வீட்டில் மற்றொருபுறம் ஓடிக் கத்தியை எடுத்துக்கொண்டு அறையில் நுழைகின்றான். முன்கதைத் தொடர்ச்சி அரசன் : (மான்வளவனை நோக்கி) வெட்டிவிட்டாயோ! மான் : ஆம். பல வெட்டுக்கள்; பெட்டியில் போட்டு வைத்தேன். அன்றிரவு தோப்புக் குட்டையில் அமிழ்த்தினேன். ஆதலால் நான் கொலையாளி. தூக்குத் தண்டனைக்கு உரியவன் நான். சாகவேண்டும். தூயன் : என்னால் நேர்ந்த கொலை. நான் கொலையாளி. நான் சாகவேண்டும். இவ்விளக்கத்தை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்த அரசன், அமைச்சன், அனிச்சை, பிசிராந்தையார் முகங்களில் மகிழ்ச்சியும் துன்பமும் மாறி மாறிக் காட்சியளிக்கின்றன. அரசன் : தீர்ப்பைப் பின்னர் அறிவிக்கின்றேன்.  காட்சி - 15 ‘இறந்தவள் இவள்தானா?’ இடம் : பாண்டிநாட்டுத் தலைநகராகிய மதுரை அரண் மனையின் ஓர்பால் அமைந்த ஆய்வு மன்றம். நேரம் : காலை. கதை உறுப்பினர் : பாண்டியன் அறிவுடைநம்பி, அரசி, தோழியர், பிசிராந்தை யார், மேற்படியார், அமைச்சன், அனிச்சை, சோழநாட்டுத் தூயன், பச்சைக் கிளியின் கணவன் மான்வளவன், அவன் மகன் ஐந்து ஆண்டுடைய பொன்னன், வலை போட்ட உடையப்பன், ஓடைப் பூ, பச்சைக்கிளியின் தந்தை பட்டுக்குடை, தாய் முத்துநகை, பெருங்குடி மக்கள் பலர். நிகழ்ச்சி : ஆய்வு மன்றம், பாண்டியன் அறிவுடைநம்பியின் தலைமையில் துவங்குகின்றது. பாண்டியன் : பெருங்குடிமக்களே, அமைச்சரே, பாவேந்தர் பிசிராந்தை யாரே, தோழர்களே! பச்சைக்கிளியைப் படுகொலை செய்தவன் அவள் கணவ னாகிய மான்வளவன் என்றும், அவ்வாறு கொலை செய்யத் தக்க கொடிய உள்ளத்தை அவனுக்கு உண்டாக் கியவன் சோழ நாட்டுத் தூயன் என்றும் விரித்துரைக்கக் கேட்டோம். விரித்துரைத்தவர் அந்த மான்வளவனும், சோழநாட்டுத் தூயவனுமே ஆவார். பாண்டிய நாடு பச்சைக்கிளியை இழந்தது; மக்களின் கண்ணீர் வழிந்தது. உலகம் நம்மைத் தூற்றுதல் பொழிந் தது. இப்பெருங் குற்றம் புரிந்தவர் மான்வளவனும் தூயனுமே. ஆயினும், அவர்கள் குற்றத்தை உணருகின் றார்கள். அதுபற்றி அவர்கள் தூக்கில் ஏறவும் துணிகின் றார்கள்; அவ்வாறு செய்யும்படி பணிகின்றார்கள். இங்கு ஆராய வேண்டியது என்னவெனில், குற்றவாளி களின் வாய்ப்பிறப்பை மட்டும் கொண்டு, இவர்கள் குற்றவாளிகள் என்று முடிவு கட்டிவிடலாமா என்பதுதான். அனிச்சை : குற்றவாளிகள் ஏற்றுக் கொள்ளுகின்றார்கள் குற்றத்தை! மற்றும் ஆராயவேண்டியது ஒன்றுமில்லை. அரசன் : அமைச்சர்! அமைச்சர் : குற்றவாளிகள் இவர்கள்; இதில் எனக்கு ஐயப்பாடில்லை. அரசன் : பாவேந்தர் சும்மா இருந்துவிடலாகாது. பிசிரா : குற்றம் செய்தவர்களை மறைக்க நாங்கள் தாம் குற்ற வாளிகள் என்று இவர்கள் சொல்லியிருக்கவும் கூடுமே! அரசன் : நான். எண்ணியதும் அதுதான்! அரசி : இறந்த பச்சைக்கிளியின் வாய்ப்பிறப்புத் தேவை. அரசன் : இதுபற்றிப் பெற்றோர் - தெரிந்ததைக் கூற வேண்டுகிறேன். பட்டுக்குடை : (முன்வந்து) அரசே! இறந்த பச்சைக் கிளி என் மகள். சோழ நாட்டுத் தூயன் என்பவர் பச்சைக்கிளியை மணக்க எண்ணியிருந்தார். பச்சைக் கிளி மான்வளவனை மணக்க எண்ணியதால் அவ்வாறே மணத்தை ஆதரித்தோம். இதில் சோழ நாட்டுத் தூயருக்குப் பச்சைக்கிளியைப் பழிவாங்க வேண்டும் என்றோ, மான்வளவனைப் பழிவாங்க வேண்டும் என்றோ எண்ணமிருந்தால் அது எங்கட்குத் தெரியாது. முத்துநகை : நான் பச்சைக்கிளியின் தாய். என் பெயர் முத்துநகை. என் கணவர் சொன்னதையே நான் சொல்லுகிறேன். அரசன் : நன்று, நன்று! வலைபோட்ட உடையப்பன் இதுபற்றித் தெரிந்ததைக் கூறுக. உடையப்பன் : எனக்குத் தெரிந்தது அரசர்க்குத் தெரிந்ததுதானே. அரசன் : ஓடைப்பூ? ஓடைப்பூ : நானும் அதைத்தான் சொல்லுகிறேன். கடைசி முறையாக வலையை இழுத்தார் என் கணவன். இழுக்க முடிய வில்லை. அரசர் வந்தார். புலவர் வந்தார். அவர் வந்தார் (அமைச்சரைக் காட்டி) சேர்த்து இழுக்கப் பிணப்பெட்டி கரைக்கு வந்தது. திறந்து பார்த்தோம். திடுக்கென்று தூக்கிவாரிப் போட்டது. பச்சைப் பிள்ளைத் தாய்ச்சி குத்துப்புண் வெட்டுப்புண்ணுடன் பிணமாகி இருந்ததைப் பார்த்தோம். அரசன் : இனி, இறந்த பச்சைக்கிளியின் பிள்ளையாகிய பொன்னன் வாய்ப் பிறப்பைக் கேட்டாக வேண்டும். (பொன்னன் அரசர் எதிர் நிறுத்தப்படுகின்றான் பெற்றோரால்.) பொன்னு : எங்க அம்மா செத்துப் பூட்டாங்க. அரசன் : எப்படி? பொன்னு : எப்படியா (விழிப்பு)? பிசிரா : அரசர் கேள்வி அவனுக்கு விளங்கவில்லை. ஏன் குழந்தாய், அம்மாவைக் கொன்றவர் யார்? பொன்னு : எங்க அம்மாவைக் கேளுங்க. (நகைப்பு) பிசிரா : அம்மா எங்கே? பொன்னு : செத்துப் பூட்டாங்க! பிசிரா : உன் தாயைக் கொன்றவர் யார் என்று கேட்கவேண்டும். யாரைக் கேட்டால் தெரியும்? பொன்னு : எங்க அம்மாவைக் கேட்டால் தெரியும்? (நகைப்பு) பிசிரா : தாடிக்காரர் இலந்தம்பழம் கேட்டார், நீ கொடுத்தாய் என் றெல்லாம் நீ சொன்னதுண்டு. அது கொண்டு இன்னார்தாம் அம்மாவைக் கொன்றிருக்க வேண்டும் என்று உனக்குத் தெரியவில்லையா? பொன்னு : எனக்கொண்ணும் தோணல்லே. எங்கப்பா நான்தான் கொன்னேன்னு சொல்றாங்க. அவுங்க கொல்லவே இல்லை. அரசன் : எதைக்கொண்டு சொல்லுகின்றாய்? பொன்னு : நான் பாக்கிலேல்ல! (சிரிப்பு) அரசன் : குற்றவாளிகள் இருவரின் வாய்ப்பிறப்புகளும் ஒன்றோ டொன்று முரண்படவில்லை. இருவர் வாய்ப்பிறப்புக் களை மற்றவர்களின் வாய்ப்பிறப்பு எதிர்க்கவில்லை. ஆயினும், கொலை செய்ததாகக் கொலையாளி சொல்லு வதைத் தவிர, அதை நேரிற் பார்த்ததற்குச் சான்றில்லை. கொலைசெய்த ஒருவரை மறைக்க நான்தான் கொலை செய்தேன் என்று மான்வளவன் சொல்லக்கூடும் என்று பாவேந்தர் கூறியதை மறுக்க வழியில்லை. பிசிரா : அதுமட்டுமா! மான்வளவன் யாரைக் கொலைசெய்தான்? அடையாளம் காட்டவில்லை. அரசன் : ஆம்; அதுதான் காட்டப் போகிறோம். நீ கொலை செய்தது இவளைத்தானா என்று கேட்கப் போகின்றோமே! பொன்னு : எங்கே இருக்கிறாங்க எங்க அம்மா? உள்ளேயா? பிசிரா : காட்டுவார் அரசர். இரு தம்பி. அரசன் : குற்றவாளிகளை அழைத்து வாருங்கள். பிசிரா : இரண்டு குற்றவாளிகளும் ஒரே நேரத்தில் பார்க்கும் படிசெய்யலாகாது. அரசன் : ஓகோ! முதலில்? பிசிரா : மான்வளவன் வரட்டும்; அவன் வந்தபின் அவனைச் சூழ்ந்த படி இரண்டு போர் வீரர்கள் இருக்கும்படி செய்ய வேண்டும். அரசன் : அவ்வாறே ஆகட்டும். படைத்தலைவரே ஏற்பாடு செய்க. (படைத்தலைவன் செல்லுகின்றான். இரண்டு போர் வீரர் சூழ மான்வளவன் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறான்.) அரசன் : மான்வளவனே, ஒருத்தி உன் கண் எதிரில் காட்சி யளிப்பாள். உன்னால் கொலை செய்யப்பட்டவள் அவள் தானா என்று பார்த்துச் சொல்லவேண்டும். (அங்கு ஒருபுறம் கட்டப்பட்டிருந்த திரை விலக்கப் படுகின்றது. இறந்த பச்சைக்கிளி காட்சியளிக்கின்றாள்.) மான் : ஆ! பச்சைக்கிளி ... (அவள் மேல் பாயும் முன் சூழ்ந்திருந்த போர் வீரர்கள் பிடித்து நிறுத்துகின்றார்கள்.) ... கற்புள்ளவளே! கருதாது உன்னைக்கொல்ல முயன்றேன். உயிர் தப்பினாய்! உடல் நலம் அடைந்தாய் அரசர் அருளாலே! துன்பப் படுத்தினேன். ஆயினும், எதிரில் நின்று என்னை இன்பப் படுத்தினாய். என்னை மன்னித்துவிடு. அரசர் பெருமானே! அவையத்தாரே! கத்தியால் குத்தினேன். கத்தியால் வெட்டினேன். அதுபற்றி நீங்கள் இடும் தண்டனையை ஏற்றுக்கொள்ள அட்டியில்லை. ஆனால் அவள் இதோ இருக்கின்றாள். இதோ வாழ்கின்றாள். நான் வாழ விரும்புகின்றேன். எனக்குத் தூக்குத் தண்டனை மட்டும் வேண்டாம். பிசிரா : பொறு! பச்சைக்கிளி! இவள்தானா? மான் : ஆம் ஐயா, இவளேதான்! பிசிரா : உன் மனைவி இவள்தானா? மான் : ஆம் ஐயா, இவளேதான். பிசிரா : ஏன் தம்பி, அம்மா இவள்தானா? பொன்னு : இவுங்கதான். (மகிழ்ச்சி முகம்) பிசிரா : அம்மாவைக் கொன்றவர் யார் தம்பீ? பொன்னு : அவுங்களே கேட்டுக்குங்க. சொல்லுமா! பிசிரா : அது பாவை தம்பி! தச்சுப் புலவர் செய்தது. மான் : ஆ! பொன்னு : மரமா? எங்கம்மா எங்கே? மான் : அந்தத் தீயவன் செய்த வஞ்சத்தால் - தெரியாமல் மறைத் தேனோ அழகோவியத்தை. பிசிரா : கழிவிரக்கம் வேண்டாம். இதைக்கேள். இந்தப் பாவையை - இந்தப் பச்சைக்கிளியை - நீ எந்த நிலையில் எப்படிக் குத்தினாய்? அதுபோல இப்போது நீ செய்து காட்ட வேண்டும். மான் : ஐயோ, ஐயோ! அவையத்தார்களே! அரசர் பெருமானே, நான் அவ்வாறு செய்யமாட்டேன். என் மனைவியைத் துன்புறுத்தச் சொல்லாதீர்கள். அரசன் : அவள் உரு அமைந்த மரக்கட்டையைத் துன்புறத்தவும் ஒப்பாத நீ, உயிரோவியத்தையே படுகொலை செய்தாயே அப்பா! மான் : கொடியவன்! நான் தொலைய வேண்டும். என் போன்ற கொடியவர் களைப் பாண்டிய நாடு சுமக்கப் பொறாது. நான் உயிரோடிருந்தால் என் மனத்தொல்லை ஆறாது! அரசன் : அப்படியானால், அவளைக் கொலை செய்ததுபோல் செய்து காட்டமாட்டாயா? மான் : நினைத்தாலே நெஞ்சு வெடித்துவிடும் போலிருக் கின்றதே! அரசன் : அப்படியானால், புண்படுத்தப்பட்ட நிலையில் அவளை நீபார்! இப்படித்தான் அவளை வெட்டிச் சிதைத்தேன் என்று ஒப்புக்கொள். (மற்றொரு திரை விலக்கப்படுகின்றது. கட்டிலில் பச்சைக் கிளியின் சிதைந்த உடல் காணப்படுகின்றது.) பொன்னு : அம்மா! (அழுகின்றான்) (அனைவரும் அழுகிறார்கள்.) மான் : ஆமாம் இந்தத் தீயவனே. (அண்டையிலிருந்த போர் வீரனின் கத்தியைப் பறிக்க முயலுகின்றான். போர் வீரன் மான் வளவனைப் பிடித்து நிறுத்துகிறான்.) பிசிரா : மனத்தைச் சிதறவிட வேண்டாம். மான் : (மற்றொரு போர்வீரனை நோக்கி) ஐயா நான் ஏன் இவ்வாறு அலைக்கழிக்கப்பட வேண்டும்? அருள்கூர்ந்து கத்தியைக் கொடுங்கள். அரசன் : மான்வளவனை அழைத்துப் போவீர்கள். அதுபோலவே தூயன் வரும்படி செய்வீர்கள். (இரண்டு திரைகளும் மூடப்பெறுகின்றன. தூயன் இரண்டு போர்வீரர் சூழத் தோன்றுகிறான்;) அரசன் : தூயனே! தச்சுப்புலவரால் பச்சைக்கிளியின் உருவத்தை மரத்தில் செதுக்கி வைத்துள்ளோம். அவள்தானா பச்சைக் கிளி என்பதை நேரில் பார்த்துச் சொல்லவேண்டும். அவளில்லை என்றால் அதையும் சொல்லிவிடலாம். (திரை விலகுகின்றது. உருவத்தைப் பார்த்துத் தூயன் தலைகுனிகின்றான்.) அரசன் : மரப்பாவை! தூயன் : ஆ! அரசர் பெருமானே, இது அவள் உருவமைப்பே! (உற்றுப் பார்க்கிறான்) உயிரிழந்தாய், என்னால்...? பிசிரா : அது பாவை. மறந்து விடுகின்றீரே! தூயன் : (அழுது கொண்டே) உயிரிழந்தாள் அவள், என்னால். (அருகில் இருக்கும் போர் வீரனை நோக்கி) அந்தக் கத்தி வேண்டும் (போர் வீரன் கை மறுக்கிறது.) அரசர் பெருமானே! மனத்தொல்லை தாங்கவில்லை; என்னை மாய்த்து விடுங்கள். (தன் கண்களைக் கையால் மூடிக்கொள்ளுகின்றான்.) பிசிரா : தூயனே! உன் வஞ்சகக் செயலால் பச்சைக்கிளி பட்ட பாட்டைப்பார், உன் கண்நேர். (திரை விலகுகின்றது. சிதைந்த உடல் காட்சியளிக்கிறது.) தூயன் : ஐயோ! (தலையில் அடித்துக் கொண்டு) கற்புக்கரசி நீ! உன் கற்பில் ஐயப்படும்படி செய்தேன் நான். மனந்தவறி நான் அப்படிச் செய்தேன். என்றாலும். இப்படிச் செய்யலாமா ஆராயாமல் அந்தப் பாவி! ஆயினும், உடல் துடிக்க உயிர் துடிக்க இவ்வாறு குத்தியவன் அவனல்லன் நான்! அவையத்தாரே, நான் சாகவேண்டும். என் சின்ன உயிர் இத்தனை பெரும் துன்பத்தைச் சுமக்காது. பிசிரா : தூயனே, சற்றே விலகி நில். மான்வளவனையும் உன்னை யும் எதிரெதிர் வைத்து வாய்பிறப்பைக் கேட்கவேண்டும். (வீரர்கள் தூயனை அழைத்துச் செல்லுகிறார்கள். பிசிராந்தையார் படைத் தலைவரை அழைத்து ஏதோ காதில் முணுமுணுக்கிறார். அவன் செல்லுகின்றான்.) அரசன் : பாவேந்தரே! இன்னும் அவர்கட்குத் தண்டனை வேண்டுமா? அவர்கள் அடைந்துள்ள துன்பம் போதாதென்றா எண்ணு கிறீர்கள்? பிசிரா : ஓர் உள்ளத்தின் மேல் படையெடுத்த தீய எண்ணங்கள், எவ்வாறு பின்வாங்குகின்றன என்பதைப் பார்க்க வேண்டாமா? அரசன் : வந்து சேரட்டும் இருவரும்! (தூயனும், மான்வளவனும் வருகின்றார்கள். திரைகள் இரண்டும் விலகு கின்றன. தூயனும் மான்வளவனும் முகத்தை மூடிக் கொள்ளுகிறார்கள்.) பிசிரா : கண்ணைத் திறவுங்கள்! உற்றுப் பாருங்கள். வாழப் பிறந்தவளாயிற்றே அன்பர்களே! சாகப் பிறந்தவளா அவள்? வட்டில் அமிழ்தாயிற்றே! கொட்டிக் கவிழ்க்க லாமா? எத்தால் குறைந்தாள்? எக்குற்றம்தான் புரிந்தாள்? வைத்து வைத்துப் பார்க்கும் வடிவழகுக்குக் குத்தும் வெட்டுமா அன்பளிப்பு? பாண்டிய நாட்டின் நடை முறைக் குறிப்பில் யாண்டும் இத்தகைய கொடிய வரலாறு காண்டல் உண்டா? தூக்கிய கத்தி அவளின் துணுக்குற்ற விழி கண்டும் தாக்கத் துணிந்ததுண்டா? ஏந்திய கொடுவாள் கண்ட ஏந்திழையின் மாந்தளிர் மேனி நடுங்கக் கண்டும் மாய்ந்திடச் செய்ய மனமும் வருமா? காதல் இருவர் கருத்து ஒருமித்து வாழ்வதைக் கண்டு மகிழ வேண்டுமா? அவள் சாதலைக் கண்டு மகிழ வேண்டுமா? தூயனே எண்ணிப் பார்! தூயன் : ஐயோ! ஐயா, நான் மகிழவில்லை, என்னை நான் இகழுகிறேன். பிசிரா : நாளெல்லாம் அவள் நடத்தையில் நலங்கண்ட நீ, கோள் சொன்னது கொண்டு, ஆராயாமல் வாள் கொண்டு மங்கையை மாய்த்தது மடமை இல்லையா மான் வளவனே? (அங்கு நடுவில் ஓர் பெட்டி மேல் வாள் வைக்கப்பட்டிருக் கிறது. அதை உற்றுப் பார்க்கிறான். தூயன், அதை அறிந்து கொள்ளுகின்றார் பிசிராந்தையார்.) பிசிரா : தற்கொலை செய்து கொள்வது பெருங்குற்றம். நீங்கள் செய்த குற்றத்திற்குத் தண்டனை கேட்பது மெய்தானா? மனமாரச் சொல்லுகின்றீர்களா? மேலுக்கா? தூயன் - மான்வளவன்: மனமாரச் சொல்லுகின்றோம். தூயன் : சாகாதிருக்கும் ஒவ்வொரு கணமும் நான் தணியாத தணலில் துடிக்கின்றேன் ஐயா, (உடல் துவளல் தலை தொங்கல்) மான் : இருக்கும் வரை துன்பம். இறந்தால் தான் இன்பம்! (சோர்ந்து உட்கார்ந்து விடுகின்றான்.) பிசிரா : நம் தாய்நாடு நல்லதொரு தமிழ் மகளை இழந்துவிட்டது. யார் காரணம்? தூயன் : (உடனே) நான்! பிசிரா : என்ன தண்டனை வேண்டும்? தூயன் : சாவு வேண்டும். பிசிரா : அன்பு மனைவியை இழந்த மான்வளவனைக் கேள். மான் : ஐயா, கொலை செய்தவன் நான் அல்லவா? பிசிரா : என்ன தண்டனை வேண்டும்? மான் : சாவு வேண்டும். பிசிரா : இரங்கி அழும் தூயனைக் கேள். தூயன் : (கத்தியை எடுத்து மான்வளவனெதிர் நீட்டி) படுகொலை செய்யத் தூண்டிய பாவி நான்! நிகழ்த்திய தீச்செயலை என் நெஞ்சு தாங்கவில்லை. இன்பமான சாவை எனக்குக் கொடுக்க வேண்டும். மான் : (வாங்க மறுத்து) நானா வாழத் தகுந்தவன். நீரா சாகத் தகுந்தவர்? என் உள்ளம் கொடியது. அதைப் பார்க்க முடிந்தால் பார்க்கட்டும் இந்த உலகம்; பார்க்க முடியாது. நல்லாரை எண்ணித் தவங்கிடக்கும் நானிலமே! கேள்! தூக்கிய வாளை முதலில் அவள் தோளில் பாய்ச்சினேன்! அவள் அலறவில்லை! உடலை ஒருக்கணித்தாள். முதுகின் ஓரத்தில் குத்தினேன்; அவள் ஓலமிடவில்லை. துடையில் குத்தினேன்; துடிக்க வில்லை! மேடிட்டிருந்த வயிற்றை நோக்கியது என் கத்தி; வயிற்றிற் பிள்ளை என்று வாய்விட்டு அலறி வயிற்றைக் காக்கப் பறந்தாள். என் இரும்பு நெஞ்சம் கருப்பையிற் குழந்தையும் துண்டாகும்படி கத்தியைப் பாய்ச்சியது. அரசன் : குற்றத்தை உணர்ந்தீர்கள்; அதற்காக வருந்துகின்றீர்கள். அதனால் திருந்தி விட்டீர்கள். உங்களை விடுதலை செய்கிறேன் உயிர்விட எண்ணுகிறீர்கள். வேண்டாம்! பச்சைக் கிளியை இழந்து வருந்தும் பாண்டியநாடு நல்ல உள்ளம் படைத்த உங்களையுமா இழக்கவேண்டும்? பாவேந்தரே. இந்த வழக்கின் நினைவாக நீவிர் பாண்டிய நாட்டுக்குச் சொல்லவேண்டிய அறிவுரை இருந்தால் பகர்ந்தருள வேண்டும். பிசிரா : உண்டு! உண்டு! எல்லாரும் நல்லவராய் இருந்தால் மட்டும் போதாது. எல்லாரும் செல்வராய் இருந்தால் மட்டும் போதாது. மற்றும் இருக்க வேண்டியது என்ன? எல்லாரும் வல்லவராயும் இருத்தல் வேண்டும். வாழ்க பாண்டியன் அறிவுடைநம்பி. வாழ்க பாண்டிய நாட்டு மக்கள். வாழ்க அறம்! வாழ்க தமிழ்! (குற்றவாளிகள் அவையத்தாரைப் பணிந்து வருத்தத்தோடு செல்லுகின்றார்கள்.)  காட்சி - 16 ‘அரசியும் குற்றவாளி’ இடம் : அரண்மனை உணவு விடுதி. நேரம் : தொடர்ச்சி. கதை உறுப்பினர் : அரசியார், அரசர், பிசிராந்தையார், தோழி, மேற்படி யார். நிகழ்ச்சி : சிற்றுண்டி அருந்த உட்கார்ந்தார்கள். பணிப் பெண்கள், அப்பங்கள், பழங்கள் கொண்டு வந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசி : பாவேந்தர் இந்த வழக்கின் நினைவாக வெளியிட்ட அறிவுரை மிக்க நன்று. ஆனால், பாவேந்தரின் உள்ளத்தில் மறைந்துள்ள ஒரு கருத்துப்பற்றி என் ஐய வினா! இறந்த பச்சைக்கிளியும் ஒரு குற்றவாளி என்பது உங்கள் கருத்தா? பிசிரா : அவள் மட்டுமா? அரசரும் நானும் குற்றவாளிகளே! என்ன? தன்னைக் காத்துக்கொள்ளும் ஆற்றல் ஒவ்வொருவனுக்கும் தேவை; ஒவ்வொருத்திக்கும் தேவை. அந்த ஆற்றலை நாம் மக்களுக்கு உண்டாக்கினோமா? படுத்திருந்தவளைத் திடீரென்று குத்தினான் வளவன். ஒரு குத்து எதிர்பாராதது! மறு குத்தைத் தடுத்துக் கொள்ளத்தக்க ஆற்றல் அவளிடம் இல்லை இருந்தால் தெரியும் சேதி! தன்னைக் காத்துக்கொள்ளாதவள் தவறு செய்தவள்தான்! ஆதலால் அவளும் குற்றவாளிதான். அரசி : அரசர் குற்றவாளி. நீங்கள் குற்றவாளி. பச்சைக் கிளி குற்றவாளி ஒருவகையில்! இது சரி தான். இதில் ஒரு வியப்பு என்ன வெனில், நான் தான் குற்றமற்றவள் இல்லையா? தோழி : அப்படிச் சொல்லும் அரசியாரும் குற்றவாளிதாம். என்ன! இந்த வழக்கில் தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்க வேண்டும் என்று அவையத்தார் சொன்ன போது தெரிந்ததை அவரவர் சொன்னார்கள். அரசியார் தெரிந்ததைச் சொல்லவே இல்லை. அரசன் : அப்படியா? அதென்ன தோழி? தோழி : பச்சைக்கிளியின் உடல் அரண்மனையில் ஒரு புறம் வைக்கப் பட்டது. பெண்டிர் அனைவரும் கண்டு துடித்து அழுதார்கள்! அரசியாரோ பாண்டிய நாட்டுப் பச்சைக்கிளியே என்று சொல்லி அழுதார்கள். இதனால் பச்சைக்கிளி இன்னார் என்பது அரசியார்க்குத் தெரிந்துதானே இருந்தது.! அரசன் : தெரிந்ததை மறைத்தது குற்றமே. இதற்கு என்ன சொல்லுகின்றாய் நீ? அரசி : பச்சைக்கிளியின் சிதைந்த உடலைப் பார்த்தேன். அதற்கு முன் அவளை நான் பார்த்ததில்லை. ஆயினும் பாண்டிய நாட்டுப் பச்சைக்கிளியே என்று கூறிப் பதைத்ததுண்டு. ஏன் நான் பச்சைக்கிளியே என்று பகர்ந்தேன். காரணம் கூறுகிறேன். காட்சி - 17 நாடகத்துள் நாடகம் ‘பாண்டிய நாட்டுப் பச்சைக்கிளி’ இடம் : அதே இடம். நேரம் : சில திங்களின் முன்பு. கதை உறுப்பினர் : அரசி, தோழி, பிசிராந்தையார். நிகழ்ச்சி : இதுபோலவே சிற்றுணவு அருந்துமுன் அரசியின் தோள்மீது இருந்து கொஞ்சும் கிளியைநோக்கிப் பிசிராந்தையார் மகிழ்ச்சி முகம் காட்டினார். அரசி : பச்சைக்கிளியைப் பற்றிப் பாடினால்தான் உங்கள் உணர்வு முற்றுப்பெறும். பிசிரா : பச்சைக்கிளிக்குத் தனியழகு ஒன்றும் வந்துவிடவில்லை. அரசி : பச்சைக்கிளி அல்லாமல் எனக்கொன்றும் தனிச் சிறப்பு உண்டாகிவிடவில்லை. பிசிரா : பாண்டிய நாட்டு அரசியர்க்கா தனிச் சிறப்பில்லை? அரசி : பச்சைக் கிளியைப் பிரிந்த பாவைக்குச் சிறப்பேது? பிசிரா : அரசிக்கும் கிளிக்கும் ஆகுமாறு பாடிவிடுகின்றேன்; வேண்டியபோது கனிஅமு துண்ணுமாம் வெய்யபசி தூண்டிய போது தமிழ்கற்கு மாம்தனி யேவிரும்பி ஈண்டிய மன்னவன் தோள்மீது வாழுமாம் யார்க்குவரும். பாண்டிய நாட்டுப் பச்சைக் கிளிக்கேயுள்ள பாக்கியமே! அரசி : கிளி என் தோளில் வாழ்வது. நான் மன்னவர் தோள்மீது வாழ்பவள். நன்று! மிக்க இனிமை. “பாண்டிய நாட்டுப் பச்சைக்கிளி” அருமையான சொற்றொடர். இதை நான் மறக்கவே மாட்டேன். முற்றிற்று அரசி : அந்த நினைவாகத்தான் சிதைந்த பெண்ணுடலைப் பார்த்த போது அவ்வாறு சொல்லி அழுதேன். பிசிரா : எல்லாரும் குற்றவாளிகள். சரியான தண்டனை கொடுக்க எண்ணுகின்றேன். அரசர் எண்ணம் என்ன? அரசன் : தீர்ப்பளிக்க வேண்டுகிறேன். பிசிரா : இங்குத் தட்டில் படைத்துள்ள பண்ணியங்கள் பழங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அருந்திவிட்டுச் சுவை நீரை யும் வைக்காமல் குடிக்க வேண்டும், இடையில் பேசக்கூடாது.  காட்சி - 18 ‘கோப்பெருஞ்சோழன் முடி துறக்க வேண்டும்’ இடம் : சோழ நாடு; அரண்மனை (உறையூர்) நேரம் : காலை. கதை உறுப்பினர் : கோப்பெருஞ்சோழன், அமைச்சன், படைத் தலைவன், புலவர் பொத்தியார், புல்லாற்றூர் எயிற்றியனார். நிகழ்ச்சி : கோப்பெருஞ்சோழன் அமைச்சர் முதலியவ ருடன் பாண்டிய நாட்டுச் செய்தி பற்றிப் பேசிக் கொண்டிருக் கின்றான். கோப் : பிறகு தீர்ப்பு என்ன? அமைச் : தன் குற்றத்தையுணர்ந்தவர் தண்டனைக்குரியவர் அல்லர் ஆதலால், குற்றவாளிகளை விடுதலை செய்தனர் பாண்டிய நாட்டு அறிவுடை நம்பியார். கோப் : சோழ நாட்டுத் தூயன் என்பவன்தான் கொலைக்குக் காரணமானவன் என்பதென்ன? அமைச் : தூயன் மணக்க எண்ணியிருந்த பச்சைக்கிளி மான்வளவனை மணந்துகொண்டாள். அதனால் தூயன் வாழ்க்கையில் வெறுப்புற்றுப் பாண்டிய நாட்டிலேயே திரிந்து கொண் டிருந்தான். ஒருநாள் நல்லதொரு வாய்ப்புக் கிடைத்தது தூயனுக்கு மனைவிமேல் மான்வளவனுக்கு எரிச்சல் உண்டாகும்படி கோள்மூட்டி விட்டான். அதனால் மான் வளவன் அவள் கற்பில் ஐயமுற்றுக் - கருவுற்றிருந்தை யும் எண்ணாமல், அவளைக் கொலை செய்துவிட்டான். கோப் : சோழநாடு பழிசுமந்தது தூயனால்! இது வருந்தத்தக்கது. தூயனைப் பாண்டிய மன்னர் விடுதலை செய்தார். ஆயினும் தூயனைத் தண்டிக்க வேண்டியது நம் கடனாகும். (இதற்குள் வாயில் காப்போன் அரசனை வந்து பணிகின்றான்.) கோப் : என்ன? வாயில் : பாண்டிய நாட்டு மன்னர் அனுப்பிய மறவர் ஒருவர் அரசரைக் காண வந்துள்ளார். கோப் : அப்படியா? வரவிடு! (மறவர் வருகிறார், அரசரை வணங்குகின்றார். கையி லிருந்த சுருளை அரசரிடம் நீட்டுகின்றார். அரசர் வாங்கிப் படிக்கின்றார். அரசர் விழிகள் வியப்பில் ஆழ்கின்றன.) மறவர் : நானும் அமைச்சரும் பிறரும் பாண்டிய மன்னருக்கு மிகுதியாகச் சொன்னோம், அவர் கேட்கவில்லை, பாண்டிய நாட்டுப் பச்சைக்கிளியைத் தூயன் கொன்ற தற்குச் சோழன் தீய ஆட்சியே காரணம் என்றே நம்புகின்றார். கோப் : (சுருளைப் படிக்கின்றான்.) பாண்டியன் அறிவுடைநம்பி, கோப்பெருஞ்சோழ மன்னர்க்குக் கூறுவது; உம் ஆட்சி கொலைஞர்கள் விளைநிலமாயிற்று. பாண்டிய நாட்டுப் பச்சைக்கிளியின் படுகொலைக்குச் சோழ நாட்டுத் தூயன் காரணமானான். இச்செய்தி கண்டவுடன் (கோப்பெருஞ்சோழன்) நீர் முடிதுறக்க வேண்டும். ஒரு நாழிகையும் வீணாக்கக் கூடாது. அங்கு அறம் காக்கப்படவேண்டும். இன்றே, இது கண்டவுடன் முடிதுறக்கும் விழா நடந்தாக வேண்டும். இல்லையெனில், காத்துக் கொள்ளுக உம்மை! அமைச் : புதுமையிலும் புதுமை! புலவர் : சுருள் கொண்டு வந்தவரே, பாண்டியனார் தந்ததா இந்த ஓலை? மறவர் : ஓலை தந்தார். படையையும் கிளப்பிவிட்டார். வந்து கொண்டிருக்கின்றது. சோழநாட்டை நோக்கி. புல்லாற் : படையுமா கிளம்பிற்று? என்ன, சோழநாட்டை நோக்கியா? (இதே நேரத்தில் கோப்பெருஞ்சோழன் மகன் இளங்கோச் சோழன் வருகின்றான்.) இளங்கோ : தந்தையே! அன்றே எண்ணினேன் தூயனால் தொல்லை நேரும் என்று. நினைத்தது சரியாயிற்று. ஓர் இமைப் போதும் நாம் வாளாயிருக்கக் கூடாது. எல்லை காப்போன் என்னிடம் கூறினான். பாண்டியன் படை நம்நாட்டை நோக்கி விரைகின்றது என்று. நானும் சிறிது தொலைவு சென்று பார்த்தேன். அப்பக்க மிருந்து வரும் காற்றில் தூசு கலந்திருந்தது. பறவைகள் அஞ்சிப் பறந்து வருகின்றன. எனக்கு விடை கொடுங்கள்! என் தலைமையில் ஒரு படை அனுப்புங்கள். கிளம்பும் புலியைக் குகையிலேயே தொலைத்து வருவேன். படைத் தலைவரே, என்ன சும்மா இருக்கிறீர்? எழுந்திரும்! நீரும் ஓய்வு பெற்றுக் கொள்ளும். உங்கள் அதிகாரத்தை என்னிடம் ஒப்படைத்துப் பாரும். முதுமைக்கும் படைத் தலைமைக்கும் ஒத்துவராது. என் போன்ற கூரிய கத்தியிருக்கவும் கூர்மழுங்கிய கிழத்தால் ஆவதென்ன? எதிர்கொண்டு தாக்கவேண்டும் எழுந்திரும்! தந்தையே! மூத்த பிள்ளை நானிருக்கிறேன். ஆதலால் நீங்கள் எல்லாம் அடைந்திருக்கின்றீர். ஆனால், இந்த எதிர்ப்புக்கு நாம் தோற்பது நான் என் மானம் தோற்பதாகும். விரைந்து எழுங்கள்; விடைதாருங்கள்; படை தாருங்கள்! படைத்தலை : மகிழ்ச்சி! என் முதுமை இகழ்ச்சிக்குரியதுதான் ஆயினும், பகைப்படை வருவது உண்மையா என்பது தெரிய வேண்டுமே! கோப் : படைத்தலைவரே, படையொன்றை இளவரசரிடம் ஒப்படைக்கத்தான் வேண்டும். பெரும் படை ஒன்றை நீங்கள் ஆயத்தப் படுத்தத்தான் வேண்டும். ஓலை கொண்டு வந்தவரே, பாண்டியனார் எண்ணப் படி முடிந்தால் என் முடியைப் பற்றிக் கொள்ளட்டும்! நீவீர் போகலாம். மறவர் : முடிதுறப்பதே நல்லது. போர் தொடுப்பது பயன்படாது. கோப் : விரைவில் நீவீர் போய்விட வேண்டும். (போதல்.) படைத்தலை : இளவரசருக்கு முழுப் படைத் தலைமை கொடுப்பதா? புலவர் : சிறு படைக்கு அவர் அதிகாரி! அவ்வளவே, கோப் : அவ்வளவே! (போகின்றார்கள்.)  காட்சி - 19 ‘வஞ்சக் கூத்து’ இடம் : சோணாட்டு உறையூரில் ஒரு தெரு. நேரம் : மாலை. கதை உறுப்பினர் : படைத்தலைவர் பரூஉத்தலையார், அவர் மகள் மணியிடை, இளங்கோச்சோழன், வீட்டினர், படையினர். நிகழ்ச்சி : இளங்கோச் சோழன் தேரேறி முன்னணியிற் செல்ல, நாற்படை பின் தொடர்ந்து செல்கின்றது. இசைக் கருவிகள் முழக்கமிடுகின்றன. தெருவி லுள்ளார் ஆடவர், பெண்டிர் படையை வாழ்த்து முகத்தால் மலர் மாரி பொழிகின்றார்கள். படை, படைத்தலைவராகிய பரூஉத் தலையாரி வீட்டை நெருங்கின்றது. அவர் வீட்டின் மேல் மாடியில் படைத் தலைவர் மகளாகிய மணி யிடை, கண்டு வருந்துகின்றாள் அதை இளங்கோச் சோழன் காணுகின்றான். ஆயினும், அதே நேரத் தில் படைத் தலைவராகிய பரூஉத் தலையாரும் வீட்டினின்று வெளிவந்து விடுகின்றார். இளங்கோச் சோழன்: (தேரினின்றே - மாடியிலுள்ள அவளுக்கும் தேற்று மொழி கூறுகின்றான். படைத் தலைவர்க்கும் உறுதிமொழி கூறுகின்றான்.) பாட்டு வாடா மலர்முகம் வாடுவதென்ன மறப்பதுண்டோ? வீடேறி இன்றிரா மேன்மாடி ஏறி வருவதுண்டு, கூடாத கோதை முழுவெற்றி மங்கை! குறைதவிர்க! பாடேறும் இந்தப் படையுண்டு, நல்ல பயனுமுண்டே! (படையும் தேரும் போகின்றன. கண் மறையும் வரைக்கும் அவள் அவனையே பார்த்திருந்து போகின்றாள்.) இடைக்காட்சி மேற்படி (வஞ்சக்கூத்து) இடம் : படைத்தலைவர் பரூஉத்தலையார் வீடு. நேரம் : மேற்படி (மாலை) கதை உறுப்பினர் : படைத்தலைவர், மணியிடை, அவள் அன்னை. நிகழ்ச்சி : பேசுகின்றார்கள். மனைவி : கூத்து! படைத்தலைவர் : வஞ்சக்கூத்து! இவனுக்கு வெற்றிமங்கை வந்து விடுவாளாம்! அதிலும் அவள் வீடேறிவருவாளாம். வீட்டின் மேல்மாடி ஏறி வருவாளாம், மேலும் இன்றிரவேயாம். மணியிடை : பகையிருந்தால் தானே வெற்றி கிடைக்கும். படை கூட்டிக் கொண்டு எங்கேதான் போகின்றாரோ தெரியவில்லை? மனைவி : பாண்டியனார் படை வந்து கொண்டிருக்கிறதாமே? படைத்தலைவர் : யார் சொன்னார்? மனைவி : இளங்கோச் சோழன் சொல்லவில்லையா? படைத் : அதுமட்டுமல்ல, பாண்டியன் அனுப்பிய ஒரு மறவனும் போர் தொடங்கப் போவதாகக் கூறிப் போனான். அத்தனை யும் அடியோடு பொய்! மணியிடை : ஏதோ படை தேவை என்றார் இளவரசர் - கொடுத்தார் அரசர். கேட்டவர்க்குக் கேட்டபடி கொடுப்பதுதானே அவர் வேலை? படைத் : ஆம்! இப்போது மன்னவர் கேட்டவர்க்குக் கேட்ட படி கொடுக்கவில்லை. கெட்டவர்க்குக் கெட்டபடி கொடுத்தார் என்று எண்ணுகின்றேன். மனைவி : நான் நினைப்பது வேறு. படைத் : கூறு. மனைவி : இளவரசுக்குப் பகைவர் யாரோ இருக்கின்றார்கள். அந்தப் பகைவர் பாண்டியமன்னர் அல்லர். படை கூட்டிக் கொண்டு போகின்றார் இளவரசர். மணியிடை : திரும்பினால் தான் - பெற்றவர்க்குப் பிள்ளை! படைத் : நன்று கூறினாயம்மா! மணியிடை : இன்றிரவு அரசினர் பணி உண்டோ உங்களுக்கு? படைத் : மேலைத் தெருவைச் சுற்றிப் பார்த்து வரவேண்டும். மணியிடை : என்ன பார்ப்பது? திருடர் உண்டா? எல்லாரும் நல்லவர் இந்த நாட்டில்! எல்லாரும் செல்வர் இந்த நாட்டில்! படைத் : ஆயினும் பிசிராந்தையார் சொன்னபடி, எல்லாரும் வல்லவராயில்லையே! வலியார் மெலியாரை வாட்டவும் கூடுமன்றோ? மணியிடை : உணவு படைத்தாய்விட்டது! (போதல்) அன்று நள்ளிரவில் (மேல் மாடியினின்று ஒரு நூலேணி இறங்குகின்றது. அதில் இளங்கோச் சோழன் ஏறுகின்றான். பஞ் சணையில் படுத்தபடி இளங்கோச் சோழனும் மணி யிடையும் பேசுகின்றார்கள்.) இளங்கோ : ஊரில் இருக்கமாட்டேன் என்று உறுதியாக நம்பினார்கள் உன் பெற்றோர்கள். மணியிடை : (கையால் முகத்தை மறைத்துக் கொள்ளுகின்றாள்) ஆமாம்! இளங்கோ : மேலைத் தெருவில் சுற்றுகின்றார் உன் தந்தை. மூலையில் நின்றிருந்ததைப் பார்த்தேன். நம் முதல் நாள் இன்பமும் முடிந்தது இங்கே. மணி : (கையை எடுத்துக் கண்ணீர் விடுத்து) இன்பத்தை நான் அடையவில்லை. துன்பத்தையே அடைகின் றேன். இளங்கோ : வியப்பு! நன்றாகச் சொல்லிக்காட்டு. மணி : வராதிருந்தாலும் வருத்தம் உண்டாகாது. இளங்கோ : வந்ததால்? மணி : பிரியத்தானே நேரும்? என் மனம் படும் பாடு எனக் கல்லவா தெரியும்? இளங்கோ : பிரியாதிருக்கப் பெரியதோர் திட்டம் இட்டிருக்கிறேன். மணி : படை எங்கே? இளங்கோ : காத்துக் கொண்டிருக்கிறது அண்டியூரின் ஒரு புறம். மணி : பகைவர் எங்கே? இளங்கோ : படுத்திருக்கின்றார் மாளிகையின் மகளிர் இல்லத்தில்! மணி : விளங்கவில்லை! இளங்கோ : மனத்தில் வைத்திரு! அரசர் - என் தந்தையார்தாம் என் பகைவர் - நம் பகைவர்! விரைவில் தெரியும் செய்தி! சுருக்கமாகச் சொல்லுகிறேன். நான்தான் இந் நாட்டுப் பேரரசன். நீதான் பேரரசி. பிரியாதிருப்போம். மாளிகை யின் மகளிரில்லத்தில் மணிக்கட்டிலில் நாம் பிரியா திருப்போம் பெண்ணே. எனக்கு விடை கொடு. நாழிகை யாகின்றது. மணி : வாழ்வது எப்படி? கடல் நீர்களனைத்தும் உண்ணக் காத்திருந்தேன். துளி நீர் உண்டால் தொலையுமோ நீர் வேட்கை? ஒன்று செய்யுங்கள். உடனழைத்துப் போய் விடுங்கள். வந்தது வரட்டும். என் உடலில் உயிர் தங்கட்டும். இளங்கோ : நினைத்ததொன்று முடிவதொன்றா? மணி : வாழப் பிறந்தோமா, சாகப் பிறந்தோமா? பிரிந்து வாழ முடியும் ஆடவரால்! மகளிரால் அது முடியுமா? நூலேணியை மாடியிற் கட்டித் தொங்க விடு கின்றேன். இருவரும் இறங்கிப் போய்விடுவோம். இளங்கோ : வந்தது வரட்டும் - படை இருக்கிறது என் கையில்! (இருவரும் நூலேணியில் - முன்னே மணியிடையும் பின்னே இளங்கோச் சோழனுமாக இறங்குகின்றார்கள்) அவர்கள் நூலேணியை அப்படியே தொங்கவிட்டு அண்மையில் நிற்கும் குதிரையை நோக்கி விரைந்தோடி அதன் மேல் இருவரும் ஏறக் குதிரை விரைகின்றது.)  காட்சி - 20 ‘அண்டியூர்ச் சாலை’ இடம் : படைத்தலைவர் பரூஉத்தலையார் வீட்டின் வெளிப் புறம். நேரம் : மேற்படி உறுப்பினர் : படைத்தலைவர் பரூஉத்தலையார் மேற்படியார் மனைவி, ஆட்கள், மணியிடை, இளங்கோச் சோழன். நிகழ்ச்சி : படைத்தலைவர் பரூஉத்தலையாரும் ஆட்கள் இருவரும் குதிரையில் வருகின்றார்கள். படைத் தலைவர் வீடு நோக்கி! நூலேணி தொங்குவதைப் படைத்தலைவர் பார்க்கிறார். மூவரும் குதிரை விட்டு இறங்குகின்றார்கள். படைத்தலைவர் : நூலேணி! என் மகளை இளங்கோச்சோழன் கொண்டு போனான். (இதற்குள் படைத்தலைவர் மனைவி வெளிவந்து) மனைவி : மாடியில் மகளில்லை. வீட்டில் எங்கும் பார்த்தேன் இல்லையே! படைத் : வருந்தாதே! இளங்கோச் சோழன் செய்த வேலை. போவோம் அண்டியூர்ச்சாலை வழியாக! (மூன்று குதிரைகளும் பறந்தன) படைத் : (குதிரை மீதிருந்தபடி) அதோ இளங்கோச் சோழன், அதோ மணியிடை! (குதிரைகள் முன்னோக்கித் தாவுகின்றன. இளங்கோச் சோழன் குதிரையும் முன்னேறுகின்றது.) மணியிடை : (குதிரைமேல் இருந்தபடி) குதிரை நிற்கட்டும். நான் என் தந்தையிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். இளங்கோ : இப்போது தப்ப வழி பார்க்கவேண்டும். மன்னிப்புக் கேட்பது பின்னுக்கு ஆகட்டும். (இளங்கோச் சோழன் குதிரை ஓர் ஆலின் பின்புறம் மறைகின்றது. படைத்தலைவர் குதிரை நேரே செல்லுகிறது.) படைத் : குதிரை காணப்படவில்லை, இடையில் எங்கேனும் மறைந்து கொண்டிருக்க வேண்டும். (குதிரைகள் பின் நோக்குகின்றன.) ஆள் 1 : இதோ (படைத்தலைவரும், ஆட்களும் நெருங்குவது கண்ட இளங்கோச்சோழன் வாளை உருவுகின்றான். படைத் தலைவனும் வாளை உருவுகின்றான்.) மணியிடை : (இளங்கோச் சோழனின் வாளைப் பிடித்தபடி) எலிக் குஞ்சால் யானையை எதிர்க்கமுடியுமா! உறையிற் போடுங்கள் வாளை! (படைத்தலைவரை நோக்கி) அப்பா மன்னிக்க வேண்டும் என்னை! வாள் உருவிய இளவரசரை யும் மன்னிக்க வேண்டும். படைத் : அன்பு முறையில் நீ இளவரசரோடு வந்தாயா? வன்பு முறையில் அவர் உன்னைக் கொண்டுவந்தாரா? மணி : நானே அவரோடு வந்தேன், என் வாழ்க்கைத் துணைவர் அவர் ஆதலால்! படைத் : நல்ல துணைவர்தாமா அவர்? ஆராய்ந்தாயா? மணி : எல்லாம் உடையவர். அதில் ஐயம் என்ன அப்பா! படைத் : அறிவுடையார் எல்லாம் உடையார். அதுதான் இளவரசரிடம் இல்லை. அவரிடம் இருக்கிறது என்றால் அது அச்சந்தான்! என்னைக் கண்டதும் வாளை உருவுகின்றார்! அறிவும் இல்லை, ஆண்மையும் இல்லையே? இளங்கோ : மாமா! நீங்கள் எனக்கு இருக்கின்றீர்கள். அதனால் எனக்கு எல்லாம் இருக்கின்றன. நான் இனி எவர்க் கும் அஞ்ச வேண்டியதில்லை. நான் உங்கள்பால் தவறிழைத்தேன். நீங்கள் மன்னிக்கவேண்டும். எனக்கு நீங்கள் ஒரு வரம் அளிக்கவேண்டும். என் தந்தை முடி துறக்க வேண்டும். நீங்கள் அரசாள வேண்டும். நான் படைத் தலைவனாக விளங்க வேண்டும். உங்கள் முழு உதவி வேண்டும். படைத் : உன் உள்ளத்தில் மறைந்து கிடந்தது இதுதானா? இளவரசே, நல்ல எண்ணமன்று இது! தந்தையின் புகழ் உலகத்தனை பெரிது, அவரின் நல்லாட்சி உலகால் பாராட்டப்படுகின்றது. அது மட்டுமின்றி அவரிட மிருந்து ஆட்சியைப் பறிப்பேனானால், என்னை உலகம் தூற்றும், மகளை இளவரசருக்குக் கொடுத் தான். ஆட்சியைத் தான் கைப்பற்றினான் என்று சொல்லும்படி நான் நடந்து கொள்ளவேண்டுமா? மணி : ஆதலால் ஆட்சியை, இளவரசுக்கே ஆக்கிவிடலாமே அப்பா! இளங்கோ : என்னை அரசனாக்கிய பின் நான் மணியிடையை மணந்து கொள்கின்றேன். அதுவரை எங்கள் தொடர்பு பிறர் அறியாத படி இருக்கவேண்டும். மாமா, நல்ல இளம் பருவத்தை நான் துன்பத்தில் தொலைக்க வேண்டும். இந்த முதுபருவத்திலும் தந்தை முடி கழற்றக் கூடாது எனில், எங்கடுக்கும் இந்தக் கூத்து! அன்றியும் அரசர் நடந்துகொள்ளும் முறை எப்படி? வந்தார்க் கெல்லாம் வாரி வழங்குவது, விரும்பி னோர்க் கெல்லாம் பெரும்படியாக எடுத்து வீசுவது. இவர் தம் இரு பிள்ளைகளுக்கும் என்ன வைக்கப் போகின்றார்? மணி : அப்பா, வீட்டுக்குப் போவோம். அம்மாவின் வருத்தத்தைத் தீர்க்கவேண்டும். ஆனால் ஒன்று உறுதி; என் துணைவர் முடி புனைய வேண்டும். இல்லாவிடில் நான் உயிர் விடுவது தவிர்க்க முடியாதது. (அனைவரும் போகின்றார்கள்.)  காட்சி - 21 ‘உள்நாட்டுப் போர்’ இடம் : சோணாடு, உறையூர் அரண்மனை வாயில். நேரம் : காலை. கதை உறுப்பினர் : கோப்பெருஞ்சோழன், அரசி, அமைச்சர், படைத் தலைவர் பரூஉத்தலையார், இளங்கோச் சோழன், படை மறவர், செய்தி அறிவிப்போன், புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார். வேவு பார்ப்போன். நிகழ்ச்சி : அண்டியூர்ச் சாலையில் நிற்கும் இளங்கோச் சோழனின் பெரும்படையின் ஒரு பகுதி அரண்மனை வாயிலையடைகின்றது. அதற்குத் தலைமை தாங்கியிருக்கின்றார் இருவர். ஒருவன் இளங்கோச்சோழன். மற்றொருவன் அவன் தம்பியாகிய செங்கோச் சோழன். போர் முரசு முழங்குகின்றது. செய்தி அறிவிப்போன் ஒருவன் அரண்மனைக்குள் நுழைகின்றான். கோப் : (அமைச்சனை நோக்கி) அரண்மனை வாயிலில் கூச்சல் என்ன? முரசம் என்ன? அமைச்சர் : எதிர்பாராத புதுமை! படைத்தலைவரையும் காணோம். இதோ! (செய்தி கொண்டு வருகின்றான் ஒருவன்) செய்தி! : மாபெரும் புகழுடைக் கோப்பெருஞ்சோழனார்க்கு வணக்கத்தோடு விண்ணப்பித்துக் கொள்ளுவது. பெருமானே, ஆண்டு பலவாயின. உங்களை முதுமை வருத் திற்று. அதனால் ஆட்சிமுறை தவறிற்று. நீங்கள் முடிதுறக்க வேண்டும். ஆட்சியை இளங்கோச் சோழனாரிடம் இப் போதே ஒப்படைக்க வேண்டும். இந்த இறுதிச் செய்தியை உங்கட்குக் கூறிவரும்படி எனக்கு ஆணையிட்டார் தங்கள் இளங்கோச் சோழனாரும், செங்கோச் சோழனாரும். கோப் : எப்படி? எப்படி? இறுதிச் செய்தியா? எனக்கா? என் மக்களா சொன்னார்கள்? முரசு போர் முரசா? அரவம், படை யரவமா? என் மக்கள் எங்கே வாயிலில் உள்ளார்களா? செய்தி : ஆம்! போர் ஆயத்தமாக! (கோப்பெருஞ் சோழன் வாளை உருவிக் கொண்டு ஓடுகின்றான்.) வாயிலில் வாளுங் கையுமாகத் தந்தையைக் கண்ட இளங்கோச் சோழனும் செங்கோச் சோழனும் சிங்கத்தைக் கண்ட சிறு நரிகள் போலப் பறக்கின்றார்கள். முன்னின்ற துணைப் படைத்தலைவன் கழுத்தும், அவன் ஏறியிருந்த குதிரைக் கழுத்தும் துண்டாகி விழுகின்றன. மற்றும் பலர் கால், கை முதலிய உறுப்புக்கள் துணிக்கப்பட்டு விழுகின்றார்கள். மற்றவர் ஓடுகின்றார்கள். அதே நேரத்தில் வேவு பார்ப்போன் ஒருவன் அரசனை நோக்கி ஓடிவருகின்றான். வேவு : அரசே, அண்டியூர்ச் சாலையைவிட்டு வந்து கொண்டிருக் கின்றது ஒரு படை. அரசன் : படையை நடத்துகின்றவன்? வேவு : இன்னான் என்று அறியக் கூடவில்லை. அரசன் : என் மக்களைக் கண்டாயா? வேவு : இல்லை. ஆனால் படை இந்த நாட்டுப்படை! படைவீரர் அனைவரும் சோணாட்டாரே. அரசன் : படைத்தலைவர் பரூஉத்தலையார் எங்கே? வேவு : எங்கும் காணவில்லை. அரசன் : உடனே படைத்தலைவரைத் தேடுக, வீட்டில் வீட்டின் புறத்துச் சோலையில். உடனே போ. (வேவு பார்ப்போனாகிய அந்த மறவன் விரைந்து செல்லுகின்றான்.) மற்றொருபுறம்: அரசன் : (அமைச்சனை நோக்கி) அமைச்சரே, நம் படையை ஆயத்தப்படுத்த வேண்டும். போனவர் போக, இருக்கும் படை திரண்டால் போதும். என் மக்கள் எங்கே பதுங்கினார்கள். தெரிய வேண்டும். (அமைச்சர் விரைந்து செல்லுகின்றார். அரசனும் ஒரு குதிரையில் ஏறி நகரைச் சுற்றுகின்றான்.)  காட்சி - 22 ‘ஆண்டில் முதியன், ஆற்றலில் இளையான்!’ இடம் : சோணாடு; உறையூர்த் தெருக்கள் நேரம் : மாலை. கதை உறுப்பினர் :கோப்பெருஞ்சோழன், அரசி, அமைச்சன், படைத் தலைவனான பரூஉத்தலையார், இளங்கோச் சோழன், படைமறவர், ஒற்றர், மணியிடை, உழுவைத்திறல். நிகழ்ச்சி : மூன்று தேர்கள், மூன்றே யானைகள், மூன்றே குதிரைகள் முப்பதின்மரே காலாட்படை; இச்சிறு படையை உழுவைத்திறல் என்ற துணைப்படைத் தலைவன் நடத்தி வருகின்றான் தெருவழியாக! கோப்பெருஞ் சோழன் குதிரையில் எதிர்ப் படுகின்றான். உழுவைத்திறல் : எம்பெருமானே! முரசில்லை; கொடியில்லை; முழக்குவன இல்லை. எல்லாம் அண்டியூர்ச் சாலை யில் - இளவரசர் தலைமையில்! எஞ்சிய படை இது தான் நமக்கு. இவ்வாறு தீங்கு செய்தார் யார் என்பீரே! நவில் என்றால் என் நாவும் நாணுகின்றது. இந்தத் தீய நிலையை எம்பெருமானுக்கு உண்டாக் கியவர் படைத்தலைவன் மடப்புலையன் பரூஉத் தலையான். அரசன் : பரூஉத்தலையானும் பசங்களை ஆதரிக்கின் றானோ! படுகளத்தில் ஒப்பாரியா! அவனுக்கும் ஒரு குழி தோண்டச் செய். உழுவைத்திறல்! உன் படை சிறியது! அஞ்சவேண்டாம். நான் உன் கட்சி. படைமறவர் : வெல்க, வெல்க, சோழவேந்தரே! (இதற்குள் ஒற்றன் உலகன் வருகின்றான்.) உலகன் : அண்டியூர்ச் சாலையில் பெரும்படை குவிந் துள்ளது. எனினும் அப்படை நின்ற நிலையில் இருப்பது தவிர அடி பெயர்த்து வைக்க மறுக் கின்றது. அங்கொருபுறம் இளவரசர் இருவருடன் படைத்தலைவர் பரூ உத்தலையார் திகைப்பூடு மிதித்தார் போல் தயங்கி நிற்கின்றார். அவர்கள் வேப்பிலை அடிக்கிறார்கள். அவர் வாய்ப்பில்லை யே என்று கூறுகின்றார். இளவரசர் இருவரும் படைத்தலைவர்க்கு ஊக்கம் தருகின் றார்கள். அவர் ஏக்கம் கொள்ளுகின்றார். படை நடத்தச் சொல்லுகின்றார்கள் இளவரசர்கள். இடை இணைத்து நிற்கின்றார் படைத்தலைவர். அரசன் : பரூஉத்தலையான் என்னை எதிர்ப்பானேன்? என் முடிபறிப்பதுதான் அவன் நோக்கமோ? உலகன் : பெண்ணைக் கொடுத்தார் அன்றோ! அரசன் : அப்படியா! ஆரியர் வேலையன்றோ அது? மணி யிடை என்றொரு சிறுமி படைத்தலைவன் மகள்! அவளை நம் பெரிய பையனுக்குக் கொடுத்து அதன் பொருட்டு என்முடியைப் பெற ஆசைப்பட்டானா? இத்தனை நாள் இந்தப் பாம்புக் குட்டியையா நான் மடியில் கட்டிக் கொண்டிருந்தேன்? பாண்டிய மன்னன் படையெடுப்பதாக ஆள்வந்து சொன்னது அத்தனை யும் பொய்! என் முடிபறிப்ப தென்னும் இந்த ஏற்பாடு நீண்ட நாட்களாக அவர்கள் இட்ட திட்டத்தின் விளைவு! உலகன் : அரசர் பெருமானே, உங்கள் சோறு, உங்கள் உடை, நீங்கள் வளர்த்த உடல், நீங்கள் ஊட்டிய உரம் ஆகிய இந்தக் கூட்டுச் சரக்கு உங்களிடமே காட்டும் முறுக்கு! உலகப்புதுமை ஐயாவே! அரசன் : ஏன் இன்னும் வரவில்லை? எப்போது வரும் அந்தப் படை? எப்போது என் உயிரைப் போக்கும்? எப்போது அரசு கட்டிலில் ஏறுவான் என் மகன்? என் மகனோ? இல்லை இல்லை - பரூஉத் தலையான்? அடே! ஆள எண்ணமா? இல்லை மாள எண்ணம் கொண்டு விட்டாய்? முன்னேறித் தாக்குவோம். ஏறுங்கள் அண்டியூர்ச் சாலை நோக்கி (படை செல்லுகின்றது. மன்னன் ஒரு குதிரையில் முன்னணியிற் சென்று அழகு செய்கின்றான்.)  காட்சி - 23 ‘குறிகெட்டவர்கள் எங்கே?’ இடம் : உறையூரை அடுத்த அண்டியூர்ச் சாலை. நேரம் : முதுமாலை. கதை உறுப்பினர் :கோப்பெருஞ் சோழன், சிறுபடை மறவர், படைத் தலைவன் உழுவைத் திறல், அமைச்சன். நிகழ்ச்சி : மூன்று தேர்கள், மூன்றே யானைகள், மூன்றே குதிரைகள், முப்பதின்மரே காலாட்கள் ஆகிய சிறு படை உழுவைத் திறலின் தலைமையில் அண்டியூர் சாலையை அடைகின்றது. முன்னணியிற் செல்லும் சோழன் அண்டியூர்ச் சாலையில் ஆரையும் காண வில்லை. அரசன் : குறிகெட்டவர்கள் எங்கே? ஆரையும் காணோம்! அண்டி யூர்ச் சாலைதான் காட்சியளிக்கின்றது. என்னை எதிர்க்கும் நோக்கத்தவர் ஏன் எதிர்க்கவில்லை? என் முடி பறிக்கும் நோக்கத்தவர் ஏன் முன்வரவில்லை? செய்வது இன்னதென்று தெரியாது விழித்தார்களா? எண்ணத்தையே மாற்றிக்கொண்டு எங்கேயாவது ஓடி விட்டார்களா? நெறி தவறினோர்க்கு உறுதி ஏது? எத்தனை ஆயிரம் தேர்கள்! எத்தனை ஆயிரம் யானைகள்! எத்தனை ஆயிரம் குதிரைகள்! எத்தனை ஆயிரம் காலாட்கள்! பரூஉத் தலையாரவர்கள் வேறு ! அடி எடுத்து வைக்க வேண்டுமே என் அரண்மனை நோக்கி! முறி யடிப்பது எப்போது? அமைச்சரே, படைத்தலைவரே, என்ன பொருள் இவர்கள் மறைவுக்கு? அமைச்சன் : அவர்கள் மறைந்ததில் பொருள் இருக்கிறது அரசே! தங்கள் மைந்தர்களின் பெரும்படை மேல்நோக்கிச் சென்றிருக்கின்றது. அரண்மனைப் புறமாக இது திரும்பவே இல்லை. அடிச்சுவடு பாருங்கள். நம்மீது பற்றும் மதிப்பும் கொண்டுள்ள பாண்டிய மன்னனின் உள்ளத்தைக் கலைத்துச் சோணாட்டின் மேல் பாண்டியனார் படையெடுக்கும்படி செய்வதே இளவரசர் களின் நோக்கமா யிருக்கலாம். பாண்டிய மன்னர் நம்மீது படைகொண்டு வருவதாக முன்னொரு பொய் சொன்னார்கள். அன்றோ! நாம் பாண்டிய நாட்டின் மேல் படைகொண்டு வந்தது போல் காட்ட அங்குப் படையைத் திருப்பியும் இருக்கலாம் அன்றோ? நேர் நின்று நம்மை வெல்வது அவர்கட்கு முடியாத தொன்று! பெருங்கலகத்தைக் கிளப்பி அதற்கிடையில் காரியத்தைச் செப்பனிட்டுக் கொள்ள முடியும் என்று அவர்கள் தப்புக் கணக்குப் போடுகின்றார்கள். நிலைமை சிக்கலாகி விடுகின்றது. மிக ஊன்றி எண்ணுதல் வேண்டும். அரசன் : நன்று கூறினீர். செய்வார்கள். ஆண்மை அற்றவர் ஆதலின்! புலிக்குப் பிறந்தவை முயல்களாயின. என் மக்கள் இழிவு நடையை மேற்கொண்டார்கள். அமைச்சரே, இவர்கள் என் ஆட்கள் போலப் பாண்டிய மன்னனிடம் சிலர் போய், நான் குற்றம் சாட்டியதாகப் புளுகி, அதோ சோழனின் படையும் வருகின்றது என்று சொல்லும்படி செய்வார்கள். பாண்டியனார் நம்புவாரா? பாண்டியனார் நம்பினாலும் பிசிராந்தையார் நம்புவாரா? பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால் மெய்போலும். ஆதலால், அறிவுடை நம்பியார் படைஎடுக்கவும் கூடும். அவ்வாறு படை எடுத்து வரட்டுமே! படை எடுத்து எங்கே வருவார்கள்? யாரைக் காண்பார்கள்? என் மக்களின் படையைக் காண்பார்கள். எதிர்ப்பார்கள் மைந்தர் படை என்ன செய்யும்? எதிர்க்குமோ! எதிர்க்கட்டுமே! எதிர்த்து மடியட்டுமே! அமைச்சன் : இளவரசர் படையானது பின்வாங்கி நம் நாட்டில் நுழையும் என்றால் என்ன ஆகும்? அரசன் : துரத்திக்கொண்டு வருவார்களா? அஞ்சி ஓடுபவரை அழிப்பது அறமல்லவே! அமைச்சரே, ஆவது ஆகட்டும், எதுவரினும் தாங்கும் நம் தோள்! எது நேர்ந்தாலும் தாங்கும் நம் அறத்தின் திறம் நாம் இன்று அழுவது எது கருதி? பொதுவாக நம் நாட்டின் சோழநாட்டின் புகழ் இகழாகின்றதே என்பது கருதித்தான்! திரும்புவோம் அரண்மனை நோக்கி!  காட்சி - 24 ‘கடலும் வறண்டதோ?’ இடம் : பாண்டியநாடு, அரண்மனை நேரம் : காலை உறுப்பினர் : பாண்டியன் அறிவுடைநம்பி, அமைச்சர், படைத் தலைவர், புலவர் மேற்படியார், ஒற்றன், சோணாட்டின் ஒற்றன் நிகழ்ச்சி : பாண்டி நாட்டின் ஒற்றன் வந்து புதுமை கூறுகின் றான். அறிவு : பாவேந்தர் பிசிராந்தையார் நகரில்தானா? அமைச் : இல்லை இல்லை! பிசிருக்குப் போயிருக்கின்றார் மனைவி மக்களோடு! அறிவு : நானும் அவருடன் இருக்க ஆசைப்படுகின்றேன். ஒழி வில்லை. நான் பிசிராந்தையாருடன் இருக்கின்றேன் என்றால், நான் என் அன்னையின் மடியில் இருக்கின்றேன். தந்தையின் பிடியில் இருக்கின்றேன். நல்லாசிரியரின் திரு அடியில் இருக்கின்றேன். (இதற்குள் ஒற்றன் வருகின்றான். பணிந்து கூறுகின் றான். அவன் தோளில் ஓர் அதிர்ச்சியும் பெருமூச்சும் காட்சியளிக்கின்றன.) ஒற் : வியப்பு!... நம்... பாண்டிய நாட்டின் முள்ளிக் கோட்டத்தின் எல்லையை அடைகின்றது... சோழன்படை! சோழன் படைதான்! புலிக்கொடி தொலைவில் காட்சியளிக்கக் கண்டன என் கண்கள். அறிவு : கோப்பெருஞ்சோழனின் மாபெரும் புகழும் மாய்ந்ததா? அறம் வற்றிப் போயிற்றா? கடலா வறண்டது? அட! அப்பனே, இதற்கேன் நீ கலங்குகின்றாய்? அமைச் : அரசர் பதறிச் சூளுரைத்து விடவேண்டாம். இதில் ஏதோ மறைவு இருக்கின்றது. நான் நம்பவில்லை. சோழன் படை எடுத்ததை, ஒற்றர் கண்ணால் கண்டாராயினும்! மேற்படி : தாம் சாக மருந்துண்டாரா சோழர்! வருவது சோழர் படையானால் படைமேல் அவருக்கு வருத்தம் போலும். அதனால்தான் இங்கு அனுப்புகின்றார். (இதற்குள் வேற்றரசின் ஒற்றன் வருகின்றான். அவன் முகத்தில் அச்சம் கூத்தாடுகின்றது. அரசரைப் பணிந்தெழுகின்றான்.) ஒற் : அயலரசின் செய்தி கொண்டு வந்தாரை ஒன்றும் செய்ய மாட்டீர்கள் என்று நம்பியதால் இப்பணியை நான் மேற்கொண்டேன். இது கோப் பெருஞ்சோழன் அளித்தது. (என்று திருமுகத்தைப் பாண்டியனிடம் நீட்டப் பாண்டியன் வாங்கிப் படிக்கின்றான்.) அரசன் : “அறமிலாப் பாண்டியன் அறிவுடை நம்பிக்குக் கோப் பெருஞ்சோழன்: அறமில்லை. ஆட்சித் திறமில்லை உன்னிடத்தில்! அறிவில்லை. நல்ல நெறியில்லை உன்பால்! நிலை தவறிற்று; கொலை பெருகிற்று நின்நாட்டில்! உன் ஆட்சியை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையானால் போருக்கு வருக. எல்லைக்கண் படையோடு நிற்கின்றேன்.” அறிவு : நானும் படையுடன் இதோ வந்துவிட்டேன். இழித்துப் பேசிய சோழன் வாளைக் கிழித்துப் போடுகின்றேன். இதையும் சொல்போ! (ஒற்றன் ஓடுகின்றான்.) படைத்தலைவரே, நம் படை முழுவதும் திரட்டுக விரை வில்! எல்லையில் கால் வைக்குமுன் நாம் எதிர்த்துத் தாக்க வேண்டும். அமைச்சரே, தெருத்தோறும் கோப்பெருஞ் சோழன் உருவத்தை வைக்கோலால் புனைந்து நிறுத்தும்படி செய்க. கோப்பெருஞ்சோழன் மேல் நமக்குள்ள வெறுப்பைக் காட்ட அப்புல்லுருக்களில் தீ வைக்க. இதோ நான் பிசிருக்குப் போய் வந்துவிடுகின்றேன். (போதல்) வழியில் (அரசன் அமைச்சன் இருவரும் தேரிற் செல்லுகின்றார்கள். தெருவில் ஆட்கள் கூடிச் சோழன் உருவை வைக் கோலாற் புனைந்து நிறுத்துகின்றார்கள். தேரில் அரசன் காணுகின்றான்.) அரசன் : வெறுக்கத்தக்க சோழன்! பலர் : சோழன் வீழ்க! அமைச் : நாங்கள் வரும்போது கூறுவோம், அப்போது தீயிட்டுக் கொளுத்துக. (தேர் செல்லுகின்றது.) மற்றோரிடத்து: அரசன் : (சோழன் உருக்கண்டு) இகழத்தக்க சோழன்! பலர் : வீழ்க சோழன்! அமைச் : பொதுமக்களே, திரும்பி வரும்போது தீ வைக்கலாம் சோழன் உருவுக்கு! (தேர் செல்லுகின்றது) மற்றொரு தெரு: அரசன் : (சோழன் உருக்கண்டு) பகைக்கத் தக்க சோழன்! பலர் : சோழன் வீழ்க! அமைச் : இப்போது தீயிட வேண்டாம்! வரும்போது நாங்கள் சொல்லுவோம். (தேர் செல்லுகின்றது) மற்றொரு தெரு: அரசன் : (சோழன் உருக்கண்டு) கொல்லத்தக்கசோழன்: பலர் : சோழன் வீழ்க! அமைச் : நாங்கள் வரும்போது கட்டளை தருவோம், அப்போது தீ வைக்கலாம். (தேர் செல்லுகின்றது.)  காட்சி - 25 ‘ஆந்தையும் நாரையும்’ இடம் : பிசிர் என்னும் ஊர், ஓர் சோலை. நேரம் : மாலை. கதை உறுப்பினர் : பிசிராந்தையார், புலவர் பலர், பாண்டியன், படைத் தலைவர், புலவர் மேற்படியார், பாண்டிய நாட்டின் ஒற்றன். நிகழ்ச்சி : மாவின் அடியில் பிசிராந்தையார் வீற்றிருக் கின்றார். அவர்க்கு எதிரில் ஒளி மங்கிவரும் பெரு வெளி காட்சியளிக்கின்றது. அப்பெரு வெளியை வெள்ளை நாரைகள் ஊடுருவுகின்றன. அவ்வி னிய காட்சி பிசிராந்தையார் மனத்தைத் தொடு கின்றது. அவர் பாடுகின்றார். பாட்டின் ஒவ் வொரு சொல்லையும் சுவைக்கின்றார்கள். உட னிருக்கும் புலவர்களும் அடுத்துச் சிறிது தொலை வில் பதுங்கியிருக்கும் பாண்டியனும், பிறரும். பாட்டு அன்னச் சேவல்! அன்னைச் சேவல்! ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல் நாடுதலை யளிக்கும் ஒண்முகம் போலக் கோடுகூடு மதிய முகிழ்நிலா விளங்கும் மையல் மாலையாம் கையறு பிணையக் குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயின் இடையது சோழன் நன்னாட்டுப் படினே கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ வாயில் விடாது கோயில் புக்குஎம் பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர் ஆந்தை அடியுறை எனினே மாண்டநின் இன்புறு பேடை யணியத்தன் நன்புறு நன்கலன் நல்குவன் நினக்கே! (ஒருபுறப் பதிவிருந்து கேட்ட பாண்டியன் அறிவுடைநம்பி, தன்னுடனிருந்த அமைச்சர் முதலாயினோரை நோக்கி வியப்புடன் கூறுகின்றான்.) பாண்டிய : அதோ சீறுகின்றது அந்தக் கோப்பெருஞ்சோழன் படை. அச்சீற்றப் படைக்கு உடையவனான கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார்க்கு நெருப்பாவான் என்று எண்ணினோம். இல்லை அவன் அவருக்கு விருப்பானான். இஃது வியப்பே! என் பகைவன், என்னுடைய பிசிராந்தையார்க்கும் பகைவன் என்று எண்ணினேன். அவன்பால் தமக்குள்ள அன்பை நாவழியாக நவின்றருளினார். பாவேந்தர் உள்ளம் அவனைப் பகை என்று கொள்ள வில்லை. நண்பென்று நவிலுகின்றதே! அமைச் : இருக்கும் சூழ்நிலை கண்டு எதிர்காலத்தைக் கணக்கிடும் ஆற்றல் பாவேந்தர்க்கு உண்டு. நீங்கள் சோழனைப் பகை என்கின்றீர்கள். பாவேந்தர் நண்பர் என்கிறார் அந்தச் சோழனை. எனக்கொன்று தோன்றுகின்றது. வந்த செய்தியைப் பிசிராந்தையார்க்கும் நாம் சொல்ல வேண்டாம். திரும்பிப் போய்விடுவோம். விரைவில் தெரிந்துவிடும் சோழன் படையெடுப்பின் உண்மை! படைத் : நேரே நானே சென்று வந்த படை யாருடையது என்பதை அறிந்து வந்துவிடுகின்றேன். திரும்புவோம். சோழன் மேல் உயிர் வைத்துள்ளார் பாவேந்தர். அவரிடம் சென்று சோழன் நம் பகைவன் என்று கூறிப் பாவேந்தர் உள்ளத்தைப் புண் படுத்துவது கொலைத் தொழிலுக்கு ஒப்பாகும். (திரும்புகின்றார்கள்.)  காட்சி - 26 ‘அமிழ்தும் பாட்டும்’ இடம் : பிசிர் என்னும் ஊரினின்று நகருக்கு வரும் வழி. நேரம் : முன்னிரவு. கதை உறுப்பினர் : பாண்டியன், படைத்தலைவர் புலவர்கள், ஒற்றன். நிகழ்ச்சி : அன்னச்சேவல் என்னும் பிசிராந்தையார் பாட்டைக் கேட்டுத் திரும்பும் பாண்டியன் முதலியோர் அப் பாட்டின் அருமையை வியக்கின்றார்கள். பாண்டி : அன்னச் சேவலே! நீ குமரிப் பெருந்துறையிலுள்ள அயிரை மீன்களை நிறைய உண்டு வட திசைக்கண் இமய மலைக்குப் போகின்றாய் என்றால் இவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகிய நல்ல சோழநாட்டின் உட்சென்று பொருந்தினால், உறையூரின் கண் உயர்நிலை மாடத் திலே உன் பெட்டையோடு தங்கி, வாயில் காவலர்க்குச் சொல்லவேண்டுமே என்றுகூட எண்ணாமல் தடை யில்லாமல் கோயிலினுட் புகுந்து, பெருங்கோவாகிய கிள்ளி கேட்டால் நான் பெரிய பிசிர் என்னும் ஊரின்கண் உள்ள ஆந்தையுடைய அடியேன் என்று சொல்லி விட்டால், மாட்சிமையுடைய நின் பேடை பூணத் தனது நல்ல அணிகலத்தை அளிப்பான் - என்பதன்றோ பாவேந்தர் பாட்டின் கருத்து! கோப்பெருஞ் சோழனை எவ்வளவு மேலாக மதிக்கின்றார் பாவேந்தர். பாவேந்தரின் மதிப்பைப் பெற்ற கோப்பெருஞ்சோழன் எத்துணை நற்பண்புடையவனாயிருக்க வேண்டும்! அப் பெரியோனா இங்ஙனம் வஞ்சப்போர்க்கு முந்துவான்? அமைச்சன் : ஒருபோதுமில்லை. (செல்லுகிறார்கள் தேரில்! அங்கு ஒருபுறம் கோப்பெருஞ் சோழனின் உருவைச் சூழ்ந்து பலர் நிற்கிறார்கள். அவர்கள் பாண்டியன் தேர் நெருங்குவது கண்டு ‘சோழன் வீழ்க’ என்கிறார்கள்.) பாண்டி : சோழன் வாழ்க! (மற்றோரிடம்) கூட்டம் : இகழத்தக்க சோழன். பாண்டி : புகழத்தக்க கோப்பெருஞ்சோழன் (வரும்போது இகழ்ந்தான், பாண்டியன் சோழனை; போம்போது புகழ்ந்தான் பாண்டியன், அதே சோழனை. மக்கள் சோழன்மேல் கொண்ட வெறுப்பு விருப்பாக மாறுகின்றது.)  காட்சி - 27 ‘ஓடும் படை’ இடம் : பாண்டிய நாட்டின் எல்லை நேரம் : நள்ளிரவு. கதை உறுப்பினர் : சோழ நாட்டுப் படையும் பாண்டிய நாட்டுப் படையும். நிகழ்ச்சி : சோழன் மகனும், சோழன் படைத் தலைவனும் கூட்டி வந்த படை பாண்டிய நாட்டுப் புறத்தே நிற்க-அதைப் பாண்டியன் படை நெருங்குகின்றது. சோழன் மகன் : நாம் இப்போது என்ன செய்யவேண்டும் மாமா? படைத்தலைவன் : பாண்டியன் படையை எதிர்ப்பது நம் நோக்கமன்று. அப்படை நம் படையைத் துரத்திக்கொண்டே வரும் படி நாம் பின்னோக்கி இறங்கவேண்டும். வெளிப் படையாகச் சொல்ல வேண்டுமானால், நாம் ஓட வேண்டும், நம் நாட்டை நோக்கி! பாண்டியன் படை நம்மைத் துரத்தியபடியே வர நாம் நம் நாட்டில் ஒரு புறம் பதுங்கிக்கொள்ளவேண்டும். உன் தந்தை கோப் பெருஞ் சோழனார்க்கும் பாண்டியன் படைக்கும் சண்டை மூளட்டும். இந்த நிலையில் கோப்பெருஞ் சோழனார் தோற்பது உறுதியல்லவா. அதைத்தானே நாம் எதிர்பார்க் கின்றோம்? எப்படி! சோழன் மகன் : நன்று, நன்று! (பாண்டியன் படை துரத்துகின்றது. சோழன் மகன் படை ஓடுகின்றது.)  காட்சி - 28 ‘இருதலைக் கொள்ளி எறும்பு’ இடம் : சோழன் நாட்டின் ஒரு புறம். நேரம் : அதிகாலை. கதை உறுப்பினர் : கோப்பெருஞ் சோழனின் படைத் தலைவன், இளங்கோச் சோழன், சோழன் படை, நிகழ்ச்சி : கோப்பெருஞ்சோழனின் சிறு படைக்கும் துரத்தி வந்த பாண்டியன் படைக்கும் இடையில் சோழன் மகன் படை அகப்பட்டுக் கொள்ளுகிறது. இளங்கோச் சோழனும் படைத் தலைவனும் மாற்றுடை அணிந்து சோழ நகர்ப் புறம் நோக்கி ஓடி வருவதை ஒற்றர் பார்த்து விடுகின்றார்கள். ஒருபுறம் ஒற்றர் : (கோப்பெருஞ்சோழனை நோக்கி) வணக்கம் நம் படைக்கும் பாண்டியனார் படைக்கும் இடையில் அகப்பட்டுக் கொண்ட தங்கள் மகனார், படையைத் தத்தளிக்க விட்டுவிட்டார். தங்கள் மகனாரும், படைத்தலைவரும் மாற்றுடையோடு திறலூர்ப் பொது விடுதியில் ஒளிந்து கொண்டார்கள். அங்குத் தத்தளிக்கும் படையும் எப்படியாவது இருபுறப் படைகளுக்கும் தப்பி நகர் நோக்கி ஓடி வந்துவிட முயலுகிறது. கோப்பெருஞ்சோழன் : என் மகனையும் படைத் தலைவனையும் பொது விடுதியிலேயே சிறைப்படுத்துக. அவர்களின் படையையும் வளைத்து நொறுக்குங்கள். உடனே என் கட்டளை நிறைவேற வேண்டும் (ஒற்றர் ஓடுகின்றார்கள்.)  காட்சி - 29 ‘செயல் இல்லை’ இடம் : சோழ நாட்டு அரண்மனை. கதை உறுப்பினர் : கோப்பெருஞ்சோழன், புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார், மற்றும் புலவர்கள், துணைப் படைத் தலைவன், ஒற்றர், ஆட்கள், சோழ மன்னி. நிகழ்ச்சி : கோப்பெருஞ்சோழன் அவைக் களத்தில் ஒற்றன் பேருரை! அவன் விரைந்து அவையினுள் புகுந்தான். ஒற்றன் : வணக்கம்! செயலில்லை. திறலூர்ப் பொது விடுதியை நம் படை சூழ்ந்துகொண்டது! உள்நுழைந்தது. இளவரசரைக் கண்டது. படைத்தலைவரைக் கண்டது. செயலற்று நின்றது. சோழன் : விலங்கிட்டு இழுத்துவர வேண்டியதுதானே! ஒற்றன் : விலங்கா! படைத் தலைவருக்கா! இளவரசருக்கா? சோழன் : உன் கேள்வியே இப்படியா? ஒற்றன் : நானல்ல; நம் படையினர் சொன்னது. சோழன் : சரி. பிறகு? நின்றார் நின்றபடிதானா? ஒற்றன் : பொறுத்தருளுக. கூறுகின்றேன். செயலற்று நின்ற நம் படையினரை நோக்கி ‘எங்கு வந்தீர்கள்’ என்று கேட்டார் படைத்தலைவர்! ‘உங்களைச் சிறைப்படுத்தக் கட்டளை இட்டார் மன்னர்’ என்றனர் நம் படையினர். அரசர் தாம் பொறாது கூறினும் நீங்களும் அதற்கு ஒத்துக் கொள்ளலாமா என்றார் படைத்தலைவர். அதனால்தான் சும்மா நிற்கின்றோம் என்றார்கள் நம் படையினர். சோழன் : எனவே, இவர்களும் அவர்களோடு! அப்படித்தானே? ஒற்றன் : ஆம்! சோழன் : இனி அனைவரும் சேர்ந்து என் முடியைப் பறிக்கவேண்டும், அப்படித்தானா? சிரிப்பு வருகின்றது. பிறகு? ஒற்றன் : உங்கள் மகனாரின் படை துணைக்கு வந்து சேர்ந்தது. சோழன் : விரைவில் சொல்லிமுடி! ஒற்றன் : இளவரசர் அந்தத் துணைப் படைத்தலைவனை நோக்கி இவர்களைச் சிறைப்படுத்துங்கள் என்றார். அதற்கு அந்தத் துணைப் படைத்தலைவர். “இவர்கள் நம் பகைவர் அல்லரே” என்று கூறிச் சும்மா நின்றனர். அதன்பிறகு நம் படை மற்றொன்று வந்தது அங்கே. அதுவும் செயலற்று நின்றது. நிலைமை இதுதான். (இதே நேரத்தில் சோழ மன்னியும் அங்கு வந்து விடுகின்றாள்.) சோழன் : என் தோள் எனக்குத் துணை! என் ஒருவாள் எனக்குத் துணை! (வாளை உருவுகின்றான்.) பெற்றவள் பிள்ளைகளை இழக்கட்டும். என் நாடு தான் பெற்ற இன்னலை இழக்கட்டும். என் ஆட்சி தன் பெரும்படையை இழக்கட்டும். என் பெரும் படையினர் தம் தலைகளை இழக்கட்டும். (எழுகின்றாள். சோழமன்னி, சோழ மன்னனின் காலைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விடுகின்றாள்.) மன்னி : பெருந்தவங் கிடந்து பெற்ற பிள்ளைகளல்லவா அத்தான்! நீங்கள் போகவேண்டாம். நானே சென்று நல்லது சொல்லித் திருத்துகின்றேன். அவர்கள் திருந்துவார்கள். சோழன்: தாயாரும் சேயர் கட்சி! என்னைக் கொன்று என் முடி பறிக்க இருக்கும் பிள்ளைகளின் கட்சிதான் என் அன்பு மனைவியும்! உனக்கு உன் பிள்ளைகள் மேல் அன்பு தோன்றலாம். இயற்கை தான். ஆனால் நிலைமை வேறு. உன் அன்பைக் காட்டு. அழு! கண்ணீரால் நனை. இதோ கொண்டு வருகின்றேன் இரண்டு தலைகளையும்! (போக முயன்கிறான். புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார் இடை மறிக்கின்றார்.) எயிற் : பொறுத்தருளவேண்டும். எனக்குப் பட்டதை இயம்பு கின்றேன். கேட்டருளவேண்டும். (பாட்டு) மண்டமர் உற்ற மதனுடை நோன் தாள் வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே! பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து நின்தலை வந்த இருவரை நினைப்பின், தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர், அமர்வெங் காட்சியொடு மாறுஎதிர்பு எழுந்தவர் நினையுங்காலை நீயும் மற்றவர்க்கு அனையை அல்லை, அடுமான் தோன்றல்! பரந்துபடு நல்லிசை எய்தி மற்றுநீ உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும் ஒழிந்த தாயம் அவர்க்கு உரித்தன்றே? அதனால், அன்னதாதலும் அறிவோய் நன்றும் இன்னும் கேண்மதி, இசைவெய் யோயே! நின்ற துப்பொடு நின்குறித் தெழுந்த எண்ணில் காட்சி இளையோர் தோற்பின் நின்பெருஞ் செல்வம் யார்க்கு எஞ்சுவையே? அமர்வெஞ் செல்வம் நீ அவர்க்கு உலையின், இகழுநர் உவப்பப் பழி எஞ் சுவையே! அதனால் ஒழிகதில் அத்தைநின் மறனே வல்விரைந்து எழுமதி, வாழ்கநின் உள்ளம்! அழிந்தோர்க்கு ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது. செய்தல் வேண்டுமால், நன்றே - வானோர் அரும்பெறல் உலகத்து ஆன்றவர் விதும்புற விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே! சோழன் : (எண்ணத்தில் ஆழ்ந்தவனாக) ஆம்! (வாளை உறையில் போட்டு இருக்கையில் அமர்கின்றான்) இனி என் நிலை என்ன? இருக்கவேண்டுமா இவ்வுலகில் நான்? (அரண் மனையின் அமைப்பையும் வேலைப்பாட்டின் அருமை யையும் நோக்கியபடி எழுந்து செல்லுகின்றான். மன்னி முதலிய அனைவரும் உடன் தொடர்கின்றார்கள்.) தூய்மை கெடாமல் இருக்க அரண்மனையை நாடோறும் துடைத்துவரவேண்டும். வாய்மை கெடாதிருக்க ஆளுவோன் மனமானது மாசு கொள்ளா திருக்க வேண்டும். (மற்றொருபுறம் போகின்றான் மன்னன். உடன் செல்லுகின்றனர் மற்றவர்களும்.) அறமன்றம் : அரசன் என்பவன் அறிவிற் சிறந்தாரை மதிக்க வேண்டும். பெருங்குடி மக்களைச் சிறிதும் இகழக்கூடாது. நான் மக்களையா பெற்றேன்? நரிகளைப் பெற்றேன். எனக்குப் பின்? நூல் மன்றம் : பண்டைத் தமிழ்ச் சான்றோர் அருளிய சட்ட நூற்கள், தமிழ்ப்பெரும் புலவர் தந்த ஒழுக்க நூற்கள், தமிழிலக் கியம், இலக்கண நூற்கள், உயிர் என மதிக்கப்படுதல் வேண்டுமே. என் கண்ணே (மன்னியை) மறந்துவிடாதே! புலவர் பெருமானே. அறிவு தந்து உதவினீர் எனக்கு! அதுபோலவே என் வழி வருவோர்க்கு உதவவேண்டும். மன்னி : ஏன் இவைகள்? நீங்கள் எங்கே போகின்றீர்கள் அத்தான்? அதோ பாருங்கள். உணவுண்ண அழைப்போர் உங்கள் முகநோக்கி நிற்கின்றார்கள். சோழன் : அதுதான் முடியாது. அதுமட்டுமன்று என் தடக்கைகள், இனிச் செங்கோல் தாங்காது. இவ்வுடல் வடக்கிருந்து உயிர்விடும். (அனைவரும் அழுது துடிக்கின்றார்கள்.)  காட்சி - 30 ‘அறத்திற்குப் புத்துயிர் அளிப்பேன்’ இடம் : சோழ நாட்டின் புறத்தே ஓர் ஆலடி. நேரம் : முதுமாலை உறுப்பினர் : கோப்பெருஞ்சோழன், புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார், அமைச்சன், படைத்தலைவர், ஆட்கள், புலவர் பொத்தியார் , ஆன்றோர். நிகழ்ச்சி : கோப்பெருஞ் சோழன் ஆலடியில் நிற்க அவனடி யில் மன்னி கிடக்க. ஆட்கள் தரையில் மண்டி யுள்ள முட்செடிகளை வெட்டி மட்டம் செய்கின்றார்கள். அமைச்சன்: துன்பத் தலைமுளை தோய்ந்திலா மன்னரே முன்புறம் ஆடி அசையும் முழுத்தோல் பின்புறத் தாட்டுவான் பெருந்திறத் தால்ஆம் பிள்ளை அரசு நடத்த நீவிர் உள்ளிருந் துள்ளம் உதவ வேண்டாவோ வடக் கிருத்தல் அடுத்த தோ? விடுத்தல் வேண்டும், மன்னிக் குயிர்தரவே. சோழன்: அவரும் பாடினார் இவரும் பாடினார் இருவர் பாட்டினுள் வேறுபா டென் எனில் அவர் நற் பாட்டில் அறமே கண்டேன் அரசுக் குரியவர் அரசு மக்களே அன்னவர் மன்னனின் பகைவ ரல்லர். அவரைக் கொன்றபின் ஆட்சி எவர்க்(கு) ஆம்? என்ற புலவர் இனிய செய்யுள் காட்டிய அறமே கடைப் பிடித்தேன். அமைச்சர் பாட்டில் அறமே காணேன்; அமைச்சரே, நான் உமக் கறிவித்தபடி இதுவரை ஏதும் இயற்ற வில்லையா? இந்த நாட்டில் அறமே இறந்தது. புத்துயிர் அளிக்க இத்தகு முடிவு செய்தேன் உமக்கிதைத் தெளிவுறச் சொன்னேன். என்னைப் போலவே என் முன்னோர்கள் அறம்பெரி துயிர் பெரிதல்ல என்று வாழ்ந்தனர்; அவருடல் இந்த மண்ணில் கலந்தது! நிறைந்த ஆயுள் கண்டே இறப்பு வரும்போதும் வீரம் இறவா எண்ணிலாச் சோழர் இறந்தனர் எனில் உடல் இந்த மண்ணிற் கலந்தது. சோழ நாட்டில் நிறைந்த பூழ்தியின் அணுஒவ் வொன்றும் வீரமே ஆனது என்னும் இந்த உண்மை யாவற்றையும் உலகுக்கு நினை வூட்ட எண்ணியே பாண்டிய நாடுமுதல் பன்னாடு கட்கும் என்னிலை இயம்பு மாறு செய்க என்றேன். ஏன் செய்யா திருந்தீர்? அமைச் : ஆணை எப்படி? அப்படிச் செய்துளேன். மறப்பவன் நானோ? மறுப்பவன் நானோ? சோழன் : எனவே, என் பிசிராந்தையார்க்கும் இந்நேரம் என் நிலை எட்டியிருக்குமா? அமைச் : ஏந்தலே, இதிலும் ஐயம் எதற்கு? சோழன் : வடக்கிருக்க வாய்ப்பான இடம் எனக்கொன்று, மனக் கோட்டமிலாப் பிசிராந்தைக்கொன்று வேண்டும். அசதி வேண்டாம் ஏவலாளரே! சான்றோரில் ஒருவர் : நோற்றலில் நிகரிலா ஆற்றல் உமக்குண்டு. பிசிராந்தையார்க்கு அவ்வாற்றல் ஏது? அவர்க்கும் உமக்கும் என்ன தொடர்புண்டு? யாம் கண்ட தில்லை; கேட்டிருக்கின்றோம், பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனாரிடம் மிக்க மதிப்பு வைத்திருக்கின்றார் என்று! கெட்டபோது நட்டாரும் கைவிடுவார் என்பதும் அறிவோம். மன்னர் வடக்கிருக்கும்போது என்ன கருதி அவர் வருவார்? வந்தாலும் எதற்காக உமக்காக வடக்கிருக்க ஒப்புவார்? சோழன் : சான்றோரே நிறுத்துங்கள். கேளுங்கள். பாண்டிய நாடு அங்கே; சோழநாடு இங்கே; இடைவெளி மிகப் பெரியது. ஆயினும் அவர் என்னுடன் உறைவோரே! அவர் எனக்குச் செல்வங் கொழிக்கும் நாளில் வாராது நிற்பினும், நான் அல்லல் அடையும் இக்காலத்து வாராதிரார்.  காட்சி - 31 ‘பாவேந்தர் சென்றார் - பாண்டி நாடே சென்றது’ இடம் : பாண்டி நாடு, புறநகர். நேரம் : காலை கதை உறுப்பினர்:பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடைநம்பி முதலிய அனைவரும். நிகழ்ச்சி : பிசிராந்தையார் எங்கே? - இதை ஆராய்ந்து வர அனுப்பப்பட்ட ஆட்கள் பாண்டியன் அவையில் பகருகின்றார்கள். ஆள் 1 : வணக்கம்! பிசிராந்தையார் எங்குமில்லை. அவர் யானை எங்குமில்லை. நகர்ப்புறத்து மக்களிற் சிலர் சோழநாடு நோக்கிப் பிசிராந்தையார் யானை மேற்செல்வதைக் கண்டோம் என்றனர். விடியுமுன் அவருக்குக் கிடைத்த செய்தி கோப்பெருஞ்சொழனார் வடக்கிருந்து உயிர்விட எண்ணினார் என்பது! இல்லத்தில் உள்ளாரைக் கேட்டோம். “விடியுமுன் வந்த செய்தி கேட்டு அழுது கொண்டிருந்தார். கோப்பெருஞ்சோழன் நாட்டுத் திசை நோக்கித் தொழுது கொண்டிருந்தார். பின், நாங்கள் தூங்கி விட்டோம். விழித்தபோது அவரைக் காணாமல் ஏங்கி விட்டோம்” என்றார்கள். பாண்டியன் : காலத்திற்குக் கவிதை ஒன்று தருவதும்; ஞாலத்திற்கு நட்புணர்ச்சி காட்டுவதும் பிசிராந்தையாரின் நோக்க மாகும். நான் போகவேண்டும்; வர எண்ணுவோர் அனை வரும் வருக. தேர் வருக. செய்க, முன்னேற்பாடெல்லாம். நாழிகை ஒன்றில் நான் பிசிராந்தையாரை அடைந்துவிட வேண்டும்.  காட்சி - 32 ‘அன்னோனை இழந்த இவ்வுலகம் என்னாவது?’ இடம் : சோழநாடு வடக்கிருந்த இடம் நேரம் : முன்மாலை. கதை உறுப்பினர்:கோப்பெருஞ்சோழன், புலவர் பொத்தியார், சோழ மன்னி, அமைச்சன் முதலியோர், பிசிராந் தையார்; பாண்டியன் அறிவுடைநம்பி முதலி யோர். மற்றும் புலவர்கள். சோழன் மக்கள். நிகழ்ச்சி : வடக்கிருக்க அமர்ந்த கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கப் பிசிராந்தை யாரும் வருவார் என்று கூறியதை எதிர்த்துப் பேசி, வடக்கிருத்தலையும் சோழன் கைவிட வேண்டும் என்று கூறியிருக் கிறார்கள் அங்கிருப்பவர்கள். அரசி: வடக்கிருத்தலை விடப்படாதா! வாழ்வை எனக்குத் தரப்படாதா! ஆட்சியை மக்களுக் காக்கினீர். அவர்கள் தாழ்ச்சியை உலகு சாகும் வரைக்கும் மக்கள் நினைவில் வைக்கும் வண்ணம் மெய்க்கிறுதியை விரும்புதல் தக்கதோ! வாழ்வரசியாக வாழ்ந்த என்னைத் தாழ்வரசி என்று வையகம் சாற்றப் பிரிவீர் என்றால் நான் செய்த பிழை என்? சோழன்: மனம் ஒன்று விடுவது சாவு! மற்றொன்று தொடுவது பிறப்பு! நாட்டின் தொடர்பை விட்டேன்; செத்தேன். வடக்கே மேவினேன்! பிறந்தேன். பெண்ணே நீவேறு நான்வேறு. மண அணியாகத் தந்த கணையாழி கழற்றிச் சுழற்றி எறிவதுன் கடனாம். நான் இறந்தால் நீ இறப்பதா? ஏனது? மக்கள் பால் அன்புனக் கில்லையா? ஆளும் மைந்தர்க்கு நாளும் உடனிருந்து வேண்டுவ சொல்லித் தரவேண்டாமா? (சோழமன்னி சோர்ந்து விழுகின்றாள்.) பொத்தியீர் இத்தரை வாழ்வு போதும். எத்தனை புகழ்ச்செயல் இருந்தன உலகில் அத்தனை செய்தேன் அல்லவை செய்திலேன். வாழ்வான் போலச் சாவான் வீரன் சாவான் போல வாழ்வான் கோழை. என்கடன் நாட்டு மக்கட்குத் தொண்டு நன்கனம் நான் அது புரிந்ததுண்டு. புதுமலர் போன்ற முகங்கள், புலவீர்! எது பற்றிக் கூம்பின? ஏன் வருந்தினீர். என்சூள் உலகினர் உள்ளத் தெல்லாம் மன்னிடச் செய்தேன். என்னொரு நண்பர் அறியச் செய்தேன். அனைவர் வருவதோர் நெறியில் விழிவைத் திருந்தேன் நினைக்கிலீர் பொன்முடி முன்போல் பூண்டு கோவிலில் இன்னும் வருவேன் என்று நினைந்தனிர்! பொத்தியார் : பிசிராந்தையாரும் வருவதற்கிசைவரோ? சோழன்: நுணுகி அறிக மணியின் ஓசை யானை வருவதற்கான குறிப்பே! யானை அதுவும் ஆந்தையார் யானையே! நண்ணும் அவ்வி யானையை நடத்துவார் நண்பரே! பொத்தியார்: என்சிற் றறிவிற் கெட்டவே யில்லை அரசர் கண்ணும் ஆந்தையார் கண்ணும் ஒன்றின் ஒன்று புதைந்த தாகக் கண்டு மறியேன் கேட்டும் அறியேன். சோழன்: சேய்மையிற் கேட்ட மணிசெய் ஓசை அண்மை கேட்ப தறிக ஐயா! அதோ மீனக் கொடி! அதோ படை முழக்கம்! (பிசிராந்தையார் தனியே கால்கொண்டு ஓடிவந்து கோப்பெருஞ்சோழனைத் தழுவிக் கொள்ளுகிறார். பின்னே பாண்டியன் அறிவுடைநம்பி முதலியோர் தேர் முதலிய விட்டிறங்கி வடக்கிருத்தற்கு அமைந்த பிசிராந் தையாரையும் கோப்பெருஞ் சோழனையும் தொழுது நிற்கின்றார்கள். பொத்தியார் வியப்பில் ஆழ்கின்றார்.) பொத்தியார் : எதனினும் இவன் பெற்ற தலைமை. பெரிய தலைமையை யுடைய கோப்பெருஞ்சோழன் தனக்குள்ள சிறப்புக்களை எல்லாம் துறந்து வடக்கிருத்தற்கு வரத் துணிந்ததை நினைக்க வியப்பு! வேற்றரசனால் காக்கப்பட்டும், புகழே பெரிதென எண்ணியும், நட்பே அதற்குப் பற்றுக்கோடு என எண்ணியும் இந்தப் பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனின் துன்பப் போதில் இவ்விடத்தில் வந்தது வியப்பினும் வியப்பே! இவ்வாறு பிசிராந்தையார் வருவார் என்று துணிந்து சொன்ன வேந்தன் மேன்மை யும், அவ்வாறு வேந்தன் கூறியது பழுதுபடாது வந்த பிசிராந்தையாரின் அறிவும் வியக்குந் தோறும் அவ் வியப்பு வளர்கின்றது! ஆதலால் தன் செங்கோல் செல்லாத இடத்திலும் சென்றேன் என்ற நெஞ்சுடையானை இழந்தால் இந்த நாடு இடும்பையுறாதோ? இரங்கத்தக்கது அதுதான்! (புலவர் பொத்தியாரும் மூன்றாவதாக ஓர் இடந்தேடி வடக்கிருக்கலானார்.)  காட்சி - 33 ‘துறந்தார் பெருமை’ இடம் : சோணாடு வடக்கிருந்த இடம். நேரம் : ஒருநாள் முன்மாலை கதை உறுப்பினர் : கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், அமைச்சன், புலவர் பொத்தியார், மக்கள். நிகழ்ச்சி : கடல்போற் சூழ்ந்த மக்கள் கைகூப்பி நிற்கின் றனர். அமைச்சரின் வேண்டுகோள். அமைச்சர்: துன்பம் சிறிதும் சுவைத் தறியீரே: அன்பின் வேண்டுகோள் அகற்றல் ஆவதோ: குடலைப் பற்றிய கொடும்பசிப் பெருந்தீ உடலை உறுத்த உயிரும் பொறுக்குமோ? நீவீர் படுந்துயர் யாவரும் பட்டனர்: சாவீர் சாவீர் தடுக்க எண்ணோம். இச்சோறு நெய்ச்சோறு சிறிதே மெய்ச்சோர்வு மிகாமை உண்ணுக வேந்தே சோழன்: உண்ணோம் உணவு பருகோம் ஒருதுளிநீர் எண்ணோம் உலகை இனி. பிசிராந்தையார்: இனித்திருக்கும் எங்கள் சாவும்! எமக்குத் தனித்திருக்கும் வாய்ப்பளிப்பீர் சற்று. புலவர் பொத்தியார்: சாவோம் ஒரு நாளும் சாவாமை காண்கின்றோம் நோவாது செல்க நும் வீடு. (அனைவரும் நீங்கா உயிரோடு நீங்குகின்றார்கள். என்பில் ஒட்டிய தசையுடம்புகள் மூன்று மட்டும் அங்கே.)  காட்சி - 34 ‘உயிரினும் நட்புப் பெரிதே’ இடம் : வடக்கிருக்கும் இடம். நேரம் : ஒரு நாள் மாலை. கதை உறுப்பினர் : பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன், புலவர் பொத்தியார், இளங்கோச்சோழன் அவனுக் கிளையவன், உலக மக்கள். நிகழ்ச்சி : கோப்பெருஞ் சோழனின் மக்கள் இருவரும் மன்னிப்பு வேண்டி அழுகின்றார்கள். இளங்கோச் சோழன்: (தன் தம்பியுடன் ஓடி வந்து தந்தையின் திருவடி பற்றிக் கொண்டு.) உலகமெலாம் புகழும்நும் ஆட்சியை ஒழித்திடக் கலகம் செய்தோம் கலகம் செய்தோம் சிறியேம் பெரும்பிழை செய்தோம் பெரியீர் பொறுத்தருள் புரிக, பொறுத்தருள் புரிக! இந்த உலக மக்கள் எம்மைக் கொந்திக் கொலைசெய்யா திருக்கத் தந்தையிர் வடக்கிருத்தலை விடத்தான் வேண்டும். நீவீர் உயிர்விட நினைத்ததற்கு யாமே காரணம் என்று ஞாலம் எண்ணிற்று. யாமினி வாழ்வ தெங்கே? வாழினும் யாம்கொள் ஆட்சி வாழ விடுமோ நும்பெரு ஞாலமே? (கோப்பெருஞ்சோழனின் திருவடியில் கிடந்த இரண்டு தலைகள் நிமிர்கின்றன. தந்தை முகத்தை நோக்குகின்றனர் மக்கள் இருவரும். பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன், பொத்தியார் ஆகிய மூன்று உடல்கள் உயிர் அற்றுச் சாய்கின்றன.) மக்களிருவர் : ஐயோ இறந்தாரே! உய்வதெப்படி? (என்று அரற்றி விரைந்து ஓடுகின்றார்கள். மூன்றுடல்கட்கு முன் உலகம் கைகூப்பி நிற்கின்றது.) உலகம் பாடுகின்றது: நண்புக் குயிர்தந்தான் நண்பு பெரிதென்றான் உண்மை உடையான் பிசிராந்தை நற்பெயர் தெண்ணிலவும் செங்கதிரும் உள்ளநாள் வாழியவே, எண்ணுலவி நல்லறம் என்றென்றும் வாழியவே! முற்றும்.  தலைமலை கண்ட தேவர் காட்சி - 1 கை தொட்டது மனம் தொடவில்லை இடம் : பாண்டிநாட்டு நயினார் கோயிலைச் சேர்ந்த தேனூர் விடுதி. காலம் : விடியும் வேளை கதை உறுப்பினர் : தலைமலை கண்டதேவர் என்னும் கண்ணிலாப் பாவலர், தானப்பன், அவன் மனைவி. நிகழ்ச்சி : தானப்பனும் அவன் மனைவியும் விடுதியில் ஒரு புறம் படுத்துறங்குகின்றனர். கண்ணில்லாத பாவல ராகிய தலை மலை கண்டதேவர் அவர் களின் அண்டையில் வந்து படுத்துறங்கினார். புரண்டு படுத்த பாவலர் கை, தானப்பன் மனைவி மேல் பட்டுவிட்டது. மனைவி : (திடுக்கிட்டுக் கணவனைத் தட்டி) இங்கே பாருங்கோ எவனோ மேலே கையைப் போடுறான். தானப்பன் : டேய்! ஆர் நீ! ஏன் தொட்டே? வெட்டிப்புடுவேன் தானப்பண்டா நானு! பாவலர் : தேனூர் விடுதியிலே சேயிழையும் நீயும்நல் ஊனாய் உயிராய் உறங்குவதை - நானறியேன் தொட்டதென்கை தானப்பா தொட்டதில்லை நெஞ்சப்பா வெட்டுவதென்றால் வெட்டப் பா. தானப்பன் : ஓகோ! தற்செயலா கை தொட்டுட்டுதாம்! மனம் தொடலி யாமே! வருத்தப்படாதே பாட்டே பண்ணாமே எண்ணாமே பாய்ச்சுறார் பார்டி. மனைவி : சின்னவெளக்கா இருந்தாலும் சிமுக்கு சிமுக்குண்ணு எரி யறப்போ தெரியாமையா பூடும் பக்கத்லே படுத்திருக்கிறது. பாவலர் : சின்னவிளக் குண்டென்றாய் தீர்ந்தவிந்த கண்என்கண் என்ன விளக்கிடினும் ஏதறியும் - என்னிலையை என்னப்பா தானப்பா நம்பவில்லை என்றால் என் கண்ணைப்பார்த் துப்பொறப் பா தானப்பன் : பொறுத்துக்கிட்டேன் ஐயா, பொறுத்துக்கிட்டேன், கண்ணில்லாதவர்டி, கண்ணில்லாதவர்! மனைவி : ஐயோ எரக்கமாயிருக்குது பாக்கப் பாக்க! (இதற்குள் பாவலரைத் தேடிக்கொண்டு திண்ணத் தேவன் வந்து விடுகிறான்.) திண்ணன் : கூத்தர் வீட்டுக்குப் போனேன். நீவீர் கூத்து முடிந்தவுடன் கிளம்பிவிட்டதாகச் சொன்னார்கள். இங்கு வந்தேன். இங்கு வந்த நீர் சிறிது தொலைவில் உள்ள வீட்டுக்கே வந்துவிடுவதுதானே? புறப்படுவோம். (இருவரும் செல்கிறார்கள்) வழிநடைப் பேச்சு திண்ணன் : கூத்து எப்படி? பாவலர் : வல்லான் வரைந்தவற்றில் பேர்மாற்றி ஊர்மாற்றும் கல்லான் கலச்சோறும் கல்லேயாம் - சொல்லோ பிழை! பாட்டில் பின்னடி முன்னடி! என்னை அழைத்ததால் கண்விழித்தேன் அங்கு! திண்ணன் : அவ்வளவுதானா! நீர் வீடு சேர்ந்தவுடன் ஊரார் சேர்ந்து உம்மை ஒரு கேள்வி கேட்க எண்ணியிருக்கின்றார்கள். அக் கேள்வி என்ன தெரியுமா? நீர் எதற்காக இரவில் வீடு தங்குவதில்லை? என்பதே. இந்த கேள்விக்கு நீவீர் தக்கவிடை கூறவில்லையானால் தண்டனை கிடைக்கும். பாவலர் : கூடட்டும் கேட்கட்டும் குற்றமிருந் தால்என்னைச் சாடட்டும் தண்டிக்கட் டும். (போகின்றார்கள்) காட்சி - 2 வேண்டும், மனைக்கு விளக்கு இடம் : ³ நயினார்கோயிலை அடுத்த காடடர்ந்தகுடி என்னும் சிற்றூரில் பாவலர் வீடு. காலம் : காலை பத்து மணி கதை உறுப்பினர் : ஊரார், பாவலர் வீட்டார். நிகழ்ச்சி : வீட்டினரும் ஊராரும் உட்கார்ந்திருக்கின்றார்கள்; பாவலர் நிற்கின்றார். நாட்டாண்மைக்காரர்: நீவீர் வீட்டுக்கொருபிள்ளை, பெற்றோர் உள்ளத்தை வாட்டுகின்றீர்; எந்நேரமும் வெளியில் போய் விடுகின்றீர், இரவில் வீட்டுக்கு வருவதேயில்லை. இதற் கென்ன காரணம் கூறுகின்றீர். பாவலர் : கண்ணுமில்லை, கைக்குத் துணையாய்க் கடமைசெயும் பெண்ணுமில்லை பெற்றோர்க்குத் தொல்லைதரும் - எண்ணமில்லை, ஊராரோ என்இளைய உள்ளம் உணரவில்லை, யாரோடு போராடு வேன். நாட் : உம் திருமணம் குறித்து நீர் யாரோடும் போராட முடியாது. நீர், ஓர் கவிஞராயினும் கள்ளரே! கள்ளர்க்கு இருக்கவேண்டிய ஒழுக்கம் கடுகளவும் உம்மிடம் இல்லை. முன்னெல்லாம் மன்னர் இருந்தார். இப்போது இல்லை. படையில்லை, படையாட்சி இல்லை, நிலைமை இவ்வா திருந்தும் தலைவர் நமக்கில்லை. இருந்தால் அவரிடத்தில் நல்ல எண்ணமில்லை. கல்வி கற்க வாய்ப்பில்லை. கழனியில்லை, உழவுமில்லை; உயிர்வாழ ஒருவழிதான் கண்டோம் - கையாண்டோம். நீவீர் இந்நாள் வரைக்கும் எத்தனை முறை எவரெவர் பொருளைப் பறித்தீர்? இல்லை! எவர் உமக்குப் பெண் தருவார். பாவலர் : அன்னை யுடைமை; அழியாத் தமிழ்ச் சொற்கள்! அன்னவற்றை அள்ளி என்பாட் டாக்குவேன் - என்புகழைத் தாண்டும் ஒருகள்ளன் எங்குள்ளான் சாற்றுவீர்? வேண்டும் மனைக்கு விளக்கு. நாட் : கவித்தொழில், கள்ளர் தொழிலாகாது. ஒன்பது நாள் தவணை தந்தோம். ஒருமுறையாவது தொழில் செய்துகாட்ட வேண்டும். நம் தொழில் ஒழுக்கமற்றதாயிருக்கலாம். ஆயினும் பழக்கம் பழுதாகக் கூடாது. (கூட்டம் முடிந்தது. அவரவர் வீடு சென்றார்கள்) காட்சி - 3 நெஞ்சே வா இடம் : ³ ஊர் ஆலின் அடி காலம் : முதுமாலை கதை உறுப்பினர் : பாவலர் நெஞ்சு பாவலர் : பூவடியால் மைந்தார் புலன்கலக்கும் இந்தஊர்த் தேவடியா ளுக்களிப்பார் செல்வத்தைத் - தேவடியாள் எட்டி ஒருபக்கம் இடுவாள் அதைப்பறிப்பேன் கட்டிற்கீழ் நெஞ்சே கவிழ். (போகின்றார்) காட்சி - 4 பார்ப்பானைப் பாரா என் கண் இடம் : ³ யூர் தேவடியாள் வீடு காலம் : இரவு கதை உறுப்பினர் : தேவடியாள், பாவலர் நிகழ்ச்சி : தேவடியாள் சிவபூசை முடித்துத் திருப்பூவணநாதர் மேல் பாடத் தொடங்கினாள், திருப்பூ வணநாதா தேவர் அடியார் கருப்பூ வணந்தந்த கன்னி - கருத்தில்உன்தாள் சேர்ப்பாரைப் பார்ப்பேன், சிவம் பார்ப்பேன் ... நின்று விடுகிறது வெண்பா. முடிக்கச் சொல் தேடுகின்றாள். அதே நேரம் கட்டிலின் கீழிருந்து ஒருகுரல்.... ஊர்த்திருடும் பார்ப்பானைப் பாராஎன் கண். என வெண்பாவை முடிக்கக் கேட்ட தேவடியாள் உவப்பால் துள்ளுகின்றாள். தேவடியாள் : (கட்டிலின் கீழுள்ள பாவலரைத் தொட்டிழுத்து) இப்படி ஒரு பாவலர் இருந்தாரா? நீவீர் கட்டிலின்கீழ்க் கவிழ்ந்து படுத்துப் பதுங்கியது எதற்கு? பாவலர் : பொருள்வேண்டு மென்றுரைத்தா ரூர்ப்பொது வாளர் திருடத்தான் சேர்ந்திருந்தேன் இங்கு. தேவடியாள் : திருடவில்லையே! பாவலர் : அரிதில் அரிது திருடல், அதுவும் தெரிதற் கரிதாய ஒன்று. தேவடியாள் : ஊர்ப் பொதுவாளர் பொருள் கேட்டார், பெரும்பொருள் தருகின்றேன். அவரிடம் கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்து விடுங்கள். என் காதல் நோய்க்கு, மருந்து தந்து விடுங்கள். பாவலர் : அமிழ்துக்கும் கண்டுக்கும் தேனுக்கும் மேலாம் தமிழுக்குத் தொண்டுசெய்வோம் வாடி!தமிழ்த் தாயும் ஆரியத்தால் சாகையிலே காதலொன்றா! ஆருயிராம் காரியத்தில் கண்ணா யிரு! தேவடியாள் : தமிழுக்குத் தொண்டு செய்வோம்! (பாவலர் பெரும் பொருளோடு செல்கின்றார்) - குயில், 15.7.1958  குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் கதையுறுப்பினர் திருக்காமு முதலியார் : திருப்பாதிரிப்புலியூரில் ஒரு நடுத்தர குடும்பத்தினன். தில்லைக்கண் : மனைவி கண்ணப்பன் : மகன் கணக்கன் காளிமுத்து : கடைக் கணக்கன். 1 (அதிகாலை 5 மணி. திருப்பாதிரிப்புலியூர் திருக்காமு முதலியார் வீடு) தில்லைக்கண் காலையில் வாயில் பெருக்கித் தண்ணீர் தெளித்துக் கோலம் போடுகிறாள். கூடத்தில், ஒரு புறமிருந்த வீணையைச் சரிபார்த்து பாடிக்கொண்டே மீட்டத் தொடங்குகிறாள். பாட்டு மகிழ்ந்திரு மனமே - என்றும் மக்கள் தொண்டு செய்து மகிழ்ந்திரு மனமே இகழ்ந்திடும் செயல்களை நீக்கி எண்ணத்தில் அன்பினைத் தேக்கி - அறிஞர் புகழ்ந்திடும் அறவழி நோக்கிப் பொய்மையும் வஞ்சகச் செய்கையும் போக்கி மகிழ்ந்திரு மனமே ... ... ... ... ... ... ... ... (இதற்குள் அங்குத் தனிக்கட்டிலில் படுத்துத் தூங்கியிருந்த திருக்காமு முதலியாரும் (தில்லைக்கண் துணைவன்) கண்ணப்பனும் (மகன்) எழுந்து தில்லைக்கண் எதிரில் உட்கார்ந்து பாடலையும் வீணை இசையையும் நுகர்கின்றார்கள்.) திருக் : போகலாமா தில்லைக்கண்ணு? தில்லை : நல்லது அத்தான்! கண் : அப்பாவுக்கு ஆசை தீரவில்லையம்மா! தில்லை : நேரமாய்விட்டது தம்பி; காலைக்கடன் முடி. நான் பால் கறக்க வேண்டும். (இருவரும் வீட்டில் வேறுபுறம் போகிறார்கள். தில்லை பால் கறக்கிறாள்.) 2 திருக்காமு, பிள்ளையாரை எடுத்து வைத்துக் கொண்டு பூசை செய்கிறான் குளித்தபின், கண்ணப்பன் ஈர வேட்டியுடன் மேல் வேட்டியைப் பிழிந்தபடி பாடுகிறான். பாட்டு; திருமந்திரம் விருத்தம் ஒன்றே குலமும் ஒருவனே தெய்வமும்* நன்றே கருதுமின் நமனில்லை! நாணாமே சென்றே புகுங்கதி இல்லை நும் சித்தத்து நன்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே. (இதைத் திருக்காமு முதலியார் கேட்கிறார்) திருக் : தம்பி. சீர்திருத்தக்காரர் எழுதியதா அது? கண் : திருமந்திரம் அப்பா! திருக் : குலம் ஒண்ணுதானாமோ! முதலியார், செட்டி, ஐயர் நாயக்கர் இப்படி யெல்லாம் இல்லையா? கண் : இருக்கு; ஆனா நம் தமிழர் நூற்களில் இல்லே. திருக் : கடவுள் ஒண்ணே ஒண்ணுதானோ? கண் : ஆமாம்பா, அதுமட்டுமா. அந்த ஒரே கடவுளுக்கு உருவ மில்லே பெயருமில்லை. தன்னை வேண்டிக்கொள்ளச் சொல்றதுமில்லே. ஒருவரிடத்திலே ஒண்ணு வேணுமென்று அது விரும்புவதுமில்லை. திருக் : அப்ப இந்த பிள்ளையாரே கடல்லியா போட்டுடறது? ஏந்தம்பி? கண் : ஏம்பா அப்படி? மியூசியத்தில் வைத்துவிட்டால் போகிறது. (இதற்குள் தில்லைக்கண் அங்கு வந்து விடுகிறாள்.) தில்லை : மியூசியத்தில் இந்தப் பிள்ளையாரை வைத்துக் கொள்ள ஒத்துக் கொள்ளாவிட்டால்? கண் : வீட்டிலேயே ஒரு மாடத்தில் வைத்துக் கண்ணாடி போட்டு வைத்து விடலாம். தமிழரின் மூடத்தனத்தை அது நினைவு படுத்திகொண்டே இருக்கும் இல்லையா அம்மா? திருக் : சாதி கெட்ட பசங்க, சமயங் கெட்ட பசங்ககூட கூடுவதாலே தம்பி புத்தி கெட்டுப் போச்சிதில்லே. தில்லை : சாதி கெட்ட சமயங்கெட்ட இடத்தில்தான் அத்தான் தமிழர் விடுதலை இருக்கிறது. சிற்றுண்டி காத்திருக்கிறது வரலாம். (இருவரும் உள்ளே போகிறார்கள். அதே நேரத்தில் முன் கட்டில் கணக்கன் காளிமுத்து வந்து நிற்கிறான்.) கணக் : அம்மா! தில்லை : கணக்குப் பிள்ளையா? (கூடத்திற்கு வந்து கடைச் சாவியை எடுத்துக் கொடுத்துப் போகிறாள்.) 3 கூடத்தில் ஒரு மேசை; அதன் எதிரில் ஒரு நாற்காலி. அண்டையில் ஒரு சாய்வு நாற்காலி. எதிரில் ஒரு நாற்காலி, சற்றுத் தொலைவில் தையல்பொறி. தில்லை வெற்றிலைத் தட்டைக் கொண்டு வந்து மேசைமேல் வைத்துவிட்டுத் தையற்பொறி எதிரிலுள்ள நாற்காலியில் உட்காருகிறாள். திருக்காமு வெற்றிலை போட்டுக் கொண்டே கூறுகிறார். “தில்லைக்கண்ணு வரவர எனக்குப் பாக்குமெல்ல முடியலியே.” எதிரில் நாற்காலியிலுட்கார்ந்திருக்கும் கண்ணப்பன் கூறுகிறான்.:- ஒரு வேளை அல்ல திருவேளை வெற்றிலை போடு - நீ போடா திருப்பதும் நல்ல ஏற்பாடு. தில்லை : என்று இசையமுது கூறுகிறது. கண் : அம்மா இன்று ஞாயிற்றுக்கிழமை நினைவிருக்கிறதா? தில்லை : ஆமாம் இன்றிரவு நீ சென்னைக்குப்போக வேண்டும். திருக் : புலவர் முடிவுத் தேர்வு நெருங்கிவிட்டது. கருத்தா படிக் கணும் தம்பி. இப்ப எங்கே போகணும் நீ? கண் : பொன்னப்பனைப் பார்த்துவிட்டு வந்து விடுகிறேன் அப்பா! தில்லை : ஓகோ! (விரைவாக அவன் சட்டையை மடிப்பு விரித்துப் பார்க்கிறாள்; பொத்தான் அறுந்திருக்கிறது. வேறு பொத்தான் வைத்துத் தைத்துக் கொடுக்க, அவன் அதைப் போட்டுக் கொண்டு வெளியிற்போகுமுன் கூறுகிறான்:) போய் வருகிறேன் அம்மா! போய் வருகிறேன் அப்பா! (போகிறான்) (அப்போது ஏழரை மணி அடிக்கிறது. தில்லை தன்கைக் கடிகாரத்தைப் பார்க்கிறாள்) தில்லை : கால் மணி நேரம் முந்துகிறது. திருக் : நான் கடைக்குப் போகவேண்டும் தில்லைக் கண்ணு. (தில்லைக்கண்ணு வேட்டி, மேல்வேட்டி, சட்டை இவைகளை ஆராய்கிறாள், மேல் வேட்டியில் கிழிசல் இருக்கிறது. மற்றவைகளைத் துணைவனிடம் கொடுக்க, அவன் அவைகளை உடுத்திக் கொள்ள அறைக்குச் செல்கிறான்.) (மேல் வேட்டியைத் தைத்து முடிக்கிறாள் தில்லை.) (அவனுக்குச் சட்டை உடுத்திப் பொத்தான் மாட்டி, சீப்பால் தலை ஒதுக்கிச் செருப்பைத் துடைத்துக் காலில் மாட்டிக் குடையை எடுத்துக் கையில் கொடுத்து நிற்கிறாள்.) அவன் செல்லுகிறான். அன்புடன் - புன்சிரிப்புடன் அவன் பின்னழகு பார்த்து நிற்கிறாள் தில்லை. சுவர்க் கடிகாரத்தைப் பழுது பார்க்கத் தொடங்குகிறாள் தில்லை. 4 (கணக்கன் முன் கதவைத் தட்டுகிறான் ; திறக்கப்படுகிறது.) கண : தம்பி சொல்லிச்சி, அம்மா எல்லா வேலையையும் செய்றாங்க; கறி வாங்கக் கடைக்குப் போற வேலையைக் கணக்குப் பிள்ளையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லக் கூடாதாண்ணு. ஐயா அதுக்காக என்னே அனுப்புனாங்க, கடைக்குப் பூட்டு வந்துட்றேங்க. தில்லை : அதெப்படி முடியும்? ஐயாவுக்கு என்ன கறி ஒத்துக் கொள்ளும்; தம்பிக்கு எது ஒத்துக் கொள்ளும் என்பது எனக்கல்லவா தெரியும்? கண : இன்னது வாங்கி வாண்ணா, அந்தப்படி வாங்கி வர்றேன்; அவ்வளவுதானே! தில்லை : அதெப்படி? அவரைப் பிஞ்சு வாங்கி வா என்றால். அது இல்லை சும்மா வந்து விட்டேன் என்று சொல்லி விடுவீர். கண : சும்மா வந்து விடுவேனா? அவரைப் பிஞ்சு இல்லாட்டி பூசினிப் பிஞ்சு வாங்கி வராமலா வந்துவிடுவேன்? தில்லை : பார்த்தீர்களா! என் வீட்டுக்காரருக்கும் பூசனிக் காய்க்கும் திராவிடனுக்கும் சிரார்த்தத்துக்கும் உள்ள பொருத்தந்தான். நீங்கள் வீட்டைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் போய் வந்து விடுகிறேன். (காலில் செருப்பணிந்து கையில் குடையோடும் கைப் பையோடும் கடைக்குப் போய் விடுகிறாள்.) 5 (தில்லை போனபின் கணக்கன் காளிமுத்து கூடத்தில் ஒரு புறம் உட்கார்ந்து பாடிக் கொண்டிருக்கிறான்.) பாட்டு ஒருவனுக் கொரு புள்ளே சிறுத் தொண்டப் பத்தா - அப்பா சிறுத் தொண்டப் பத்தா - அவன் உத்தமனா இருக்கணும் சிறுத் தொண்டப் பத்தா. பெரிய ஆனைக் கறி சமைச்சா சிறுத் தொண்டப் பத்தா - அப்பா சிறுத் தொண்டப் பத்தா - கறி பிரியமா இருக்காதப்பா சிறுத் தொண்டப் பத்தா. என் பிள்ளை சீராளான் - அவன் இருக்கின்றான் சாமி இருக்கின்றான் சாமி அவனே இப்பவே கழுத்தறுப்பேன் யானுமே சாமி. பிள்ளை தலையை மட்டும் சிறுத் தொண்டப் பத்தா - அப்பா சிறுத் தொண்டப் பத்தா சூப்பு வைச்சிட வேணும் சிறுத் தொண்டப் பத்தா. 6 இதைத் தெரு நடையில் கேட்டுக் கொண்டே தலையிற் புண்ணும் குருதியுமாயுள்ள ஒருவனை இருவர் தாங்கியபடி வருகிறார்கள். உள்ளே வந்த ஒருவன்: ஐயா, அம்மா இருக்காங்களா? உள்ளே இருக்காங்களா? - இவன் எம்புள்ளே. அடிக்கடி மயக்கம் வர்றது. இப்போ அப்படித்தான் தீடிரிண்ணு மயக்கம் வந்து விழுந்திட்டான். மண்டே ஒடைஞ்சிப் போச்சி. அம்மா இருந்தா கட்டு கட்டி புடுவாங்க. நல்லாப் பூடும். கணக் : அவங்க கடைக்கிப்போயி இருக்காங்க, இருங்க, வந்து விடுவாங்க. அம்மா மருந்து போட்டு கட்டி விடுவாங்களா? ஒருவன் : முன்னே ஒரு தடவை இதே மாதிரிதான்! வந்தோம் (என்று நடந்ததைக் கூறுகிறான்) 7 (கட்டிலில் நோயாளி, தில்லை, செவிலி உடையுடன் மருத்துவம் செய்கிறாள். மருந்திட்டுக் கட்டுக் கட்டுகிறாள்; காய்ச்சலை ஆராய்கிறாள்; மருந்து தருகிறாள்.) 8 அவர்களில் ஒருவன் தெருவில் வழிகாட்டி அனுப்ப நிற்கும் தில்லைக் கண்ணை நோக்கிக் கூறுகிறான்:- ஒருவன் : ரொம்ப நன்றியம்மா. நாங்க நோயாளியே அழைச்சி வந்த போது நீங்க இல்லே - அதுமட்டுமா கூடத்திலே அவுரு. புள்ளே தலையே மட்டும் சிறுத் தொண்டப் பத்தா - அப்பா சிறுத் தொண்டப் பத்தா சூப்பு வைச்சிட வேணும் சிறுத் தொண்டப் பத்தா. - இன்னு பாடிக்கிட்டு இருந்தாரு. எங்களுக்கு ஒரே நடுக்கமா போச்சு, நல்லவேளையா வந்துட்டீங்க. கட்டுக் கட்டினீங்க; மருந்து குடுத்தீங்க, ரொம்ப நன்றியம்மா வர்றோம். (கும்பிட்டுப் போகிறார்கள்.) 9 உள்ளே வந்து, தில்லை, கணக்கனிடம் கூறுகிறாள்:- ஏன் கணக்கப்பிள்ளை உங்களுக்குச் சிறுத்தொண்டப் பத்தன் கதை நன்றாய் வருமோ? கணக் : ஏம்மா அவுங்க சொன்னாங்களா? அவுங்க வரும்போது எதுவோ கொஞ்சம் மகிழ்ச்சியா பாடிக்கிட்டிருந்தேன்; சிறுத்தொண்டப் பத்தன் கதை பாடறதிலே நானு இந்த வட்டாரத்திலேயே ஒரு பெரிய ஆளில்லையா? தில்லை : ஓகோ, அப்படியா? அவர்கள் வரும்போது எந்த அடி பாடிக் கொண்டிருந்தீர்கள்? கணக் : பாட்டு புள்ளே தலையை மட்டும் சிறுத் தொண்டப் பத்தா - அப்பா சிறுத் தொண்டப் பத்தா சூப்பு வைச்சிட வேணும் சிறுத் தொண்டப் பத்தா. தில்லை : இப்படி சிவனடியார் சிறுத்தொண்ட நாயனாரைக் கேட்டாரோ? கணக் : சிவனடியாரின்னா ஆரு? சிவபெருமாந்தான். தில்லை : என்ன கேட்டார்? கணக் : சீராளந் தலையைச் சூப்பு வைச்சுடுண்ணு சொன்னார். தில்லை : பாட்டு யாரால் எழுதப்பட்டது. கணக் : கதைக்கித் தக்காப் போல் நானே சொல்லிக்கிறதுதான். தில்லை : பிள்ளைக்கறி கேட்டாரே. சிறுத்தொண்டர் அப்படியே செய்தாரா? கணக் : அந்த எடத்தே நாடகத்திலே ஆடுவோம் பாரு!. கந்தண்ணு ஒருத்தன். பார்க்கிறவங்க கண்ணீர் உட்றுவாங்கல்ல. தில்லை : சிறுத்தொண்டருக்கு ஒரே பிள்ளை சீராளன் இல்லையா? கணக் : கோவிந்தன் கோவிந்தண்ணு ஒரு சின்ன பையந்தான் சீராளனா போடுவான்; என்னமா நடிப்பாந் தெரியுங்களா? தில்லை : அது சரி. பிள்ளையை அறுத்தாரா பெற்ற தந்தை? கணக் : அதாம்மா அறுக்கற மாதிரி காட்டுவோம் பாருங்க, அந்த நாடகக்காரன். ரொம்ப அப்பட்டமா நடக்கிற மாதிரியே இருக்கும். தில்லை : அப்படியானால் சிறுத்தொண்ட நாயனார் கதை அப்படி இருக்கும் இப்படி இருக்கும் நாடகத்தில். அது தவிர நடந்ததில்லையா அப்படி? கணக் : உம்! நாடகந்தான்! மெய்யாவா ஒருத்தன் வந்து புள்ளெயெ அறுத்துக் கேப்பான்? பெத்தவ தொடப்பத்தே எடுத்துக்க மாட்டாளா? என்னா சொல்றீங்க? தில்லை : தமிழ்நாடு திருந்தி வருகிறது என்றுதான் சொல்லுகிறேன். நாழிகை ஆகிறது! போய்வாருங்கள். (போகிறான்.) 10 (சென்னையினின்று கண்ணப்பன் வருகிறான். கூடத்தில் சாய்வு நாற்காலியில் திருக்காமு படுத்திருக்கிறார்.) திருக் : ஏன் தம்பி, பொன்னப்பன் உன்னோடு வரவில்லையா? கண் : தேர்வு நெருங்கிவிட்டது படிக்க வேண்டும் என்று வரவில்லை. திருக் : நீ மட்டும் ஏன் வந்து விடுகிறாயப்பா? கண் : அம்மாவைப் பாராதிருக்க முடியவில்லை. (என்று உட்கட்டுக்குப் போகிறான்) 11 திருக் : (சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி) தில்லைக் கண்ணு! சோற்றை வடியலில் விடித்தபடி இருக்கும் தில்லை:- இதோ (அவள் கைவேலையைக் கண்ணப்பன் ஒப்புக் கொள்கிறான்.) திருக் : (எதிரில் வந்து நிற்கும் தில்லையை நோக்கி மேசை மேல் இருக்கும் விசிறியைக் காட்டி) அந்த விசிறியை எடு. புழுங்குகிறது. (விசிறியை எடுத்துக் கொடுத்துவிட்டுப் போகிறாள்) உள்ளே - கண் : ஏம்மா அழைத்தார்கள் அப்பா? தில்லை : மேசை மேல் விசிறி இருந்தது எடுத்துக் கொடுக்கச் சொன்னார். கண் : அட! கூடத்தில் (சப்பாணி முதலியாரும் சாரங்கம் என்கிற அவர் நண்பரும் வருகிறார்கள்) திருக் : வாங்க ஏது? இவ்வளவு தொலைவு? சிதம்பரமிருந்து நேரே இங்கேதான் வர்றீங்களோ? சப்பாணி : எங்க மச்சான் மகனுக்கும் சீர்காழி தங்கவேலு முதலியார் மகளுக்கும் நிச்சயதார்த்தம். சாப்பிட்டுப் போகும்படி ரொம்ப சொன்னாங்க. தெரிஞ்சவர் ஒருத்தர் திருக்காமு முதலியார் இருக்கார் அவரு வருத்தப்படுவாருன்னு சொல்லிட்டு வந்தோம். திருக் : அப்படியா? சாப்பிடும் வேளைதான் கை கழுவுங்க. உள்ளே கண் : அவர்கள் வீட்டுத் தேவைக்கு வந்தார்களாம். திருக்காமு முதலியார் வருத்தப்படுவார் என்று இந்நேர வேளைக்குச் சாப்பிட இங்கே வந்தார்களாம். (அப்பாவும் அவர்களைக் கணிசமாக வரவேற்கிறார் சாப்பிடச் சொல்லி.) 12 (நான்கு இலைகள் போடப்பட்டிருக்கின்றன. திருக்காமு உட்பட மூவர் உட்கார்ந்து விட்டார்கள்.) சப்பாணி : தம்பி இல்லிங்களா? திருக் : இருக்கான். தம்பி சாப்பிடவா, வந்து உட்கார், கண் : (வந்து) சாப்பிட்டுவிட்டேன் அப்பா! நீங்கள் சாப்பிடுங்கள். உள்ளே தில்லை : நீ சாப்பிடவில்லையே. போய் உட்கார் தம்பி. கண் : சும்மா இருங்கள் அம்மா! (பரிமாறுகிறாள் தில்லை. சாப்பிட்டு முடிகிறது. கைக் கழுவிக் கொண்டு. வந்தவர்கள் சொல்லாமலேயே போய்விடு கிறார்கள்.) 13 (கண்ணப்பன் தன் தாய் அறியாமல் சோற்றுப் பானையைப் பார்க்கிறான். ஒரு பருக்கையுமில்லை. குழம்பு, கறி இவைகளைப் பார்க்கிறான், இல்லை.) கண் : (அங்கு வந்த அன்னையை நோக்கி.) அம்மா உங்களுக்குச் சாப்பாடு. தில்லை : சாப்பிடுகிறேன் அப்பா! - நீ சாப்பிட்டு விட்டதாகச் சொன்னாயே மெய்தானா அப்பா? கண் : ஆம் அம்மா. (எதையோ கருதிக் கண்ணப்பன் சோறெடுக்கும் அடுக்குடன் வெளியே ஓடுகிறான்.) 14 திருக் : (உள்ளே இருக்கும் தில்லையை நோக்கி) தில்லைக் கண்ணூ! வெளியில். போகவேண்டும். திருக்காமு தன் சட்டையை (மடிப்பிலிருந்து) விரித்துப் பார்க்கிறான். அதே நேரம் எதிரில் தில்லை வந்து நிற்கிறாள். திருக் : சட்டை சுருக்கம் சுருக்கமா இருக்கு! பெட்டிபோடு தில்லைக் கண்ணு. (தில்லைக்கண் பெட்டியில் கரி போட்டு ஊதுகுழலால் ஊதி, சூடுஏற்றி, விசிப்பலகையில், சட்டை விரிக்கிறாள்; சோறு எடுக்கும் அடுக்குடன் கண்ணப்பன் வருகிறான்.) 15 திருக் : இதென்ன தம்பி! கண் : (தன் தாயை நோக்கி) பிறகு வந்து பெட்டி போடலாம் அம்மா; சாப்பிடாமல் இருக்கிறீர்கள். சாப்பிட்டு வந்து விடுங்கள் அம்மா. திருக் : சாப்பிடவில்லையா! சீக்கிரம் பெட்டிப் போட்டுட்டுப் போய் சாப்பிடு தில்லைக்கண்ணு. கண் : பெட்டி போடவேண்டியதுதான் முதல் வேலையோ! அம்மா சாப்பிட்டு வந்து பெட்டி போடக்கூடாதோ? திருக் : இல்லை தம்பி! நான் கடைக்கு விரைவாகப் போகணும். தில்லை : இதோ வந்துவிட்டேன் தம்பி. (பெட்டி போடுகிறாள்) அதே நேரத்தில் பாடசாலை ஆசிரியை செல்வநாயகி வந்து பெட்டி போட்டுக் கொண்டிருக்கும் தில்லையிடம் நின்று பேசுகிறாள். 16 செல்வநாயகி : நம் கல்விக்கழகத்தின் தலைவியார் தங்கம்மா உங்களி டம் ஒரு வேலையாக அனுப்பினார்கள். தில்லை : ஏன்? செல்வ : நம் ஆசிரியை முத்தம்மா பென்ஷனில் விலகுகிறார்கள். அவர்களுக்குப் பிரிவு நலம் சொல்ல ஒரு கூட்டம் கூடுகிறது. அதில் நீங்கள் பெண்கள் பற்றி ஒரு சொற்பொழிவாற்ற வேண்டும். தில்லை : கூட்டம் எப்போது? செல்வ : இன்னும் ஒரு மணி நேரத்தில்! தில்லை : முன்னமே சொல்ல வேண்டாமா? செல்வ : சொல்லத்தான் வேண்டும். திடீரென்று இந்தக் கூட்டம் ஏற்பாடாயிற்று. தில்லை : வருகிறேன். செல்வ : வண்டி கொண்டு வருகிறேன் அம்மா. தில்லை : ஆடவர் வரலாமா? செல்வ : ஓ வரலாமே. கண் : நானும் வரலாமா? செல்வ : அதிக மகிழ்ச்சி! நீங்கள் வருவது மட்டும் போதாது, வந்தால் சிறிது பேசி எல்லாருக்கும் மகிழ்ச்சி யூட்டலாம். கண் : நானும் வருகிறேன். (போகிறாள். செல்வநாயகி) 17 கூட்டம் (செல்வநாயகி கூட்டத்தினரை வரவேற்றுப் பேசுகிறாள்.) அன்புள்ள தோழியர்களே, தோழர்களே, ஏறத்தாழ முப்பத் தைந் தாண்டுகள் வேலை பார்த்தவர்கள் ஆசிரியை முத்தம்மா அவர்கள். உதவிச்சம்பளம் பெற்று ஓய்வுபெறுகிறார்கள். எம்மை விட்டுப் பிரிகின்றார்கள். அவர்கட்கு பிரிவு நலம் செய்வதற்காக இக் கூட்டம் கூட்டப்பட்டது. எங்கள் அழைப்பின் பேரில் இங்கு நீங்கள் வந்தமைக்கு நன்றி. மனமார உங்களை வரவேற்கிறோம். இக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குமாறு ஊரின் சார்பில் தலைமை ஆசிரியையாரைக் கேட்டுக் கொள்ளுகிறேன். சொக்கம்மா : நான் முத்தம்மா அவர்களின் முன் மொழிதலை ஆதரிக்கிறேன். (கைதட்டலுக்கிடையே தலைமை ஆசிரியை இருக்கையை அணுகுகிறார்கள்.) தலைவியார் : தோழியர்களே! தோழர்களே! (இடையே பெரியநாயகி தலைவியாருக்கு மாலை இடுகிறார்கள். கைதட்டல்) ஆசிரியையார் முத்தம்மா அவர்கள் முப்பத்தைந் தாண்டும் குற்றம் ஒன்றும் அணுகாது அலுவல் பார்த்து வந்தார்கள். அவர்கள் மிக்க நற்பண்புடையவர்கள். மாணவியர்க்குச் சொல்லித் தருவதில் நல்ல ஆற்றல் உடையவர்கள். ஒரு காலத்தில் மாணவியாரின் வகுப்பு நேரத்தை நான்கு மணியளவாகக் குறைக்கலாமா என்று கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர், ஆசிரியைகளைக் கேட்டபோது வகுப்பு நேரம் மாணவர்க்கு ஆறுமணி நேரமாக்கப்பட வேண்டும் என்பதை விளக்கிக் காட்டி அதிகாரிகளின் மதிப்பை அடைந்தவர்கள் முத்தம்மா அவர்கள். இன்று முதல் அவர்கள் வீட்டுக் கூடத்துச் சாய்வு நாற்காலிக்கு நல்ல பேறு கிடைக்கிறது. அவர்கள், துணைவர் மக்களுடன் இனிது வாழ்க. இம் மலர் மாலையும். இப்பழத் தட்டுகளும், அவர்கட்கு! அவர்களின் மாறாத நினைவு எங்கட்கு! (கைதட்டல்) தலைவியார் : இந்த நேரத்தில் நமக்கெல்லாம் ஒரு நல்ல விருந்து ஏற்பாடாகிறது. நாவுக்கல்ல செவிக்கு! - பெண் என்ற பொருள் பற்றித் தோழியார் தில்லைக்கண் அம்மையார் பேசுவார்கள். அதாவது உங்கட்குச் சர்க்கரைப் பொங்கல் வட்டிப்பார்கள் தில்லைக் கண்ணம்மா! தோழியர் தில்லைக் கண்ணம்மா! தமிழ்ப் புலமை யுடையவர். அதுமட்டுமல்ல; இசை, ஓவியம் முதலிய பல்கலை வல்லவர்கள். அவர்களைப் பேசக் கேட்டுக் கொள்கிறேன். தில்லைக்கண் : சொற்பொழிவு:- அன்புள்ள தலைவர் அவர்களே, தோழியர்களே தோழர்களே! நான் பேசப் போவது ‘பெண்’ என்பது பற்றி. பண்படுத்தப்பட்ட மண்ணுக்கே நன்செய் என்று பெயர். படித்த பெண்ணுக்கே பெண் என்று பெயர். களர் நிலத்தில் நல்ல விளைவை எதிர்பார்க்க முடியாது. கல்வி இல்லாத தாய்மார்களிடம் கை காரக் குழந்தை களை எதிர்பார்க்க முடியாது. பெண்கள் படிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேற்றுமை இருக்காது; ஆனால். கற்பதைக் கசடு அறக் கற்க வேண்டும் என்று சொன்னால் அதென்ன என்று, விழிக்கிறார்கள் சிலர். ரேஷன் கடையில் அரிசியோடு கல்லையும் அளந்து வாங்குகின்றவர்கள் போல இந் நாட்டில் சரி என்று பிழையையும் வாங்குகின்றார்கள். காட்சி என்ற சொல் காண் என்பதன் அடிப்படையாக வந்த சொல் காவண்ணா இட்டண்ணா சிணா போட வேண்டும். அதைவிட்டுக் காவண்ணாவும் க்ஷி என்ற வட வெழுத்தையும் போடுகின்றார்கள். அப்படியே அதை ஒத்துக் கொள்வதென்பது முட்டாள்தனமல்லவா? துணி என்றால் துணிக்கப்படுவதற்குப் பெயர். துண்டு என்றால் துண்டிக்கப்படுவது. அறுவை என்றால் அறுக்கப்படுவது. கிழி என்றால் கிழிக்கப்படுவது. அதுபோலவே அளவாகத் தறியினின்று வெட்டப் படுவது வேட்டி. எனவே வேட்டி என்றசொல் தமிழ்ச் சொல். அதே வேட்டி என்ற தமிழ்ச்சொல்லை வேஷ்டி என்று எவனாவது சொன்னால் அதை நீங்கள் ஒத்துக் கொள்ள லாமா? இன்றைக்கு வேட்டியை வேஷ்டி என்றால் ஒத்துக்கொள்ளும் நீங்கள், நாளைக்கு ஆட்டுக்குட்டி ஒன்பதை ஆஷ்டுகுஷ்டி என்றாலும் மாட்டுப் பட்டி என்பதை மாஷ்டு பஷ்டி என்றாலும் ஒத்துக் கொள்ளத் தானே நேரும். இதுவரைக்கும் கசடு அறக் கற்கவேண்டும் என்பது பற்றிக் கூறினேன். கசடறக் கற்றால் போதாது. கற்கத் தகுந்த நூல்களையே கற்க வேண்டும் என்பதனை விளக்குகிறேன். தமிழர் கலை, ஒழுக்கம், நாகரிகம் இவைகளைப் புகட்டத் தகுந்த நூல்களைக் கற்க வேண்டும். அல்லாதவைகளை அகற்ற வேண்டும். ஒன்றே குலமும் ஒருவனே தெய்வமும் என்று கூறும் தமிழர் நூற்கள். நாலுசாதி பெரும் பிரிவும், நாலாயிரம் சாதி உட்பிரிவும் கூறும் பிறநூல்கள், மேலும் அவை பன்றிக் கறி கேட்கும் பெரியாண்டவன் முதல் மீன் காவடி விரும்பும் வேலவன் வரைக்குமுள்ள எண்ணற்ற கடவுள்களைக் காட்டி வைத்துக் காசைச் சுரண்டும் - மதமான பேய்ப் பிடியாதிருக்க வேண்டும் என்று கூறும் தமிழ் நூற்கள். ஒருத்தி ஒருவனைத்தான் மணக்கலாம் தமிழ் நூலின் படி. ஒருத்தி பல ஆண்களை மணக்க வைக்கும் பிற நூல்களும் உலகில் உண்டு. தலை போவதாயினும் தகாத செயல் செய்யக் கூடாதென்று கூறுகின்றது தமிழ்நூல். பசி வந்து விட்டால் பழக்காரி இடத்திலும் திருடலாம் என்று அயலார் நூல் சொல்லும். ஆதலால் கற்கத் தகுந்த நூல்களையே கற்க வேண்டும். இவ்வாறு கற்கத் தகுந்த நூல்களையே கற்றுவிட்டால் மட்டும் போதாது. கற்றபடி நடக்க வேண்டும். கற்றபடி நடக்காவிட்டால் கற்றதால் என்ன பயன்? கற்றபடி நடக்காதவர்களால் நாட்டுக்கு ஒரு நன்மையும் ஏற்படாது. பாலகுமரன் மக்கள், கனகனும் விசயனும் வடநாட்டில் மதிக்கத்தக்க அரசர்கள். அவர்கள் ஒரு விருந்து நடத்துகிறார்கள். அந்த விருந்துக்கு வந்தவர்களிடம் வாய் வீச்சாகத் தமிழை இகழ்ந்து பேசுகிறார்கள். இதை அங்கிருந்த தமிழ்த் துறவிகள் அறிந்து தென்னாடு வந்து செங்குட்டுவன் செவியில் போடுகிறார்கள். தமிழரின் மேன்மையை இகழ்ந்தவர்களை என் தாய் தடுத்தாலும் விடேன். என்று படைதிரட்டுகிறான் செங்குட்டுவன், வடநாடு தூள்படுகிறது. தோற்றோம் என்று கனகவிசயர்கள் ஓட்டம் எடுக்கப் பார்க்கிறார்கள். செங்குட்டுவன் வீரன். அவ்விருவரையும் கட்டி இழுத்து வந்து நிறுத்துகிறார்கள் செங்குட்டுவனெதிரில்! உலகம் கண்டு மகிழத்தக்க முறையில் அவர்கட்குத் தண்டனை வழங்குகிறான் சேரன். கண்ணகி உருவம் செய்யக் கல்வேண்டும் எமக்கு, அந்தக் கல்லை நீங்கள் தலையிற் சுமந்து நடவுங்கள் என்கிறான். இமயமலைக் கல் சுமந்து இந்நாட்டை நோக்கி வரலானார்கள் கனகவிசயர்கள். இதை படிக்கிறீர்கள் சிலப்பதிக்காரத்தில். பலநூறு மைல்களுக்கப்பால் பழந்தமிழைப் பழித்த கனக விசயர்களைத் தண்டித்ததாகப் படித்த நீங்கள், அண்டையில் தமிழையும் தமிழர்களையும் இகழ் கின்றவர்களைச் சும்மாவிட்டு இரு கைகளையும் கட்டிக் கொண்டிருக்கலாமா, அவர்களை ஒரு கை பார்க்க வேண்டாமா? கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. என்பது வள்ளுவர் வாய்மொழி (பலரும் கை தட்டுகிறார்கள்) (தலைவியார் எழுந்து, இப்போது, முன் பேசியவரின் மகனார் கண்ணப்பர் அதே பொருள்பற்றிப் பேசுவார்கள்.) கண்ணப்பன் பேச்சு: தலைவியார் அவர்களே, தோழர்களே, தோழியர்களே, இப்போது என் அன்னையார் பேசிய ‘பெண்’ என்பதைத் தொடர்ந்தே நான் பேச வேண்டும். அவர்கள், பெண்கள் படிக்கவேண்டும் என்று சொன்னார்கள், முடியக் கூடியதுதான். ஆனால் படித்த படி நடக்க வேண்டும் என்றார்கள் - அதுதான் முடியாது என்று நான் சொல்லுகிறேன். கணவனும் மனைவியும் நண்பர்கள் என்கிறார் வள்ளுவர். இது என் அன்னையாருக்குத் தெரியாததன்று. என் அன்னையாரும் தந்தையாரும் நண்பர்கள் போலவா நடந்து கொள்கிறார்கள்? வெளியிற் சொன்னால் வெட்கக்கேடு. தில்லைக்கண்ணம்மா திருக்காமு முதலியாருக்கு அசல் அடிமை. விடியுமுன் எழுந்து வீணையோடு பாடி அடிமை கொண்ட ஆண்டையை எழுப்பிக் குறடு கழுவிக் கோலம் போட்டுக் கறவை கறந்து, நிறைய மொண்டு தவலை சொம்பு குவளை குண்டான் கவலை இல்லாமல் கழுவித் தீர்த்து வட்ட நிலாவை வரவழைத்தது போல் இட்டலி சுட்டுத் தொட்டுக் கொள்ளத் துவையல் அறைத்துச் சுவை நீர் வைத்துக் கணவர்க்கு வெந்நீர் கடிய விளவி உடம்பு குளிப்பாட்டி உணவை ஊட்டி வெற்றிலை வைத்துப் பொத்தல் உடையைத் தைத்துக் குடையை விரித்துக் கொடுத்து வெளியில் அனுப்பி வெய்யிலில் பயறுகள் கல்லைப் பொறுக்கிக் காய வைத்துக் கடைக்குச் சென்று காய்கறி வாங்கிச் சோறு கறிகள் சுருக்காய் முடித்துச் சுவர் பழுதுக்குச் சுண்ணாம்பு பூசி உடைந்த நாற்காலியை ஒழுங்கு படுத்திக் கடைந்த வெண்ணெயைக் காய்ச்சி இறக்கி வந்த கணவர்க்கு வட்டித்துக் கூடத்தில் சாய்வு நாற்காலியைச் சரிப்படுத்தி வேர்வை நீங்க விசிறியால் விசிறிப் படுக்கை விரித்துப் படுக்கச் செய்து நனைத்துப் போட்ட நாலைந்து துணியையும் துவைத்துப் போட்டபின் தூங்கும் கணவர் எழுந்திடு வதற்குள் எண்ணெய்ச் சட்டியில் பண்ணியம் சுட்டுப் பரபரப் போடு சுவைநீ ரோடு துணைவருக் களித்துக் கடைக்குச் சென்றதும் துடைப்பம் எடுத்து வீடு பெருக்கி மாடுகறந்து உயர அண்ணாந்தே ஒட்டடை அடித்துச் சுவடிகள் ஏடுகள் தூசி தட்டி வெய்யிலில் காய்ந்ததை வீட்டில் சேர்த்துக் தையல் வேலை தச்சு வேலை முதல் எல்லாம் முடித்தே நல்விளக் கேற்றி இராச் சாப்பாட்டை இனிமையாய் ஆக்கிக் கணவர் வந்தபின் உணவுண் பித்து மாடு கன்றுக்கு வைக்கோல் போட்டுப் பானை சட்டியைப் பூனை தொடாமல் எல்லாம் மூடிக் கொல்லைக் கதவையும் தெருக் கதைவையும் தாழிட்டு இரவு பனிரண்டுக் குறங்குவர் தாயாரே! நாடோறும் இவ்வாறு உழைக்கும் நம் தில்லைக் கண்ணம்மை யாருக்கு நலிவு ஒன்றும் தோன்றவில்லை யாம். காரணம் அன்பாம், அன்பு இதுவும் செய்யுமாம் இன்னமும் செய்யுமாம், ஒத்துக் கொள்கிறேன். இவ்வளவு தொல்லையடையும் மனைவியிடம் துணைவர் நடந்துகொள்ளும் மாதிரியைக் கேளுங்கள். குறடு கழுவிக் கோலம் போடுகிறாள் மனைவி, தவலை துலக்கித் தண்ணீர் போடக்கூடாதா கணவர்? மாடு கறந்து தீனி வைக்கிறாள் மனைவி, கூட இருந்து குடிநீர் கொள்ளக் கூடாதா கொழுநர்? இட்லி அடுப்பில் எரிக்கின்றாளே மனைவி, தொட்டுக் கொள்ளத் துவையல் அறைக்கலாகாதா துணைவர்? காலை எட்டு மணிக்குக் கடைக்குப் போய்விடுகின்றார் கணவர்; பதினொரு மணிக்கெல்லாம் வந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொள்ளுகிறார். சாறு கூட்டித் தவிக்கின்றாளே துணைவி, சோறு கொதிப்பதை இறக்கினால் என்ன துணைவர்? அழகாய்த் துணியைத் துவைத்தாள் மனைவி, பிழிந்து வெய்யிலில் பிரித்தால் என்ன துணைவர்? நடுப்பகல் உணவுண்டு நாற்காலியிற் சாய்ந்து, பிறகு கட்டிலில் உறங்கிச் சுவை நீர் அருந்திக் கடைக்குப் போகின்ற துணைவர் இரவு எட்டு மணிக்கெல்லாம் வந்து விடுகின்றார். மனைவி, படும் பாடெல்லாம் பார்க்கும் கணவர் கடுகள வுதவி செய்தாலென்ன? சிறிய உதவியும் செய்வதில்லை. அதுபோகட்டும்! மேலும் மேலும் அன்னையார்க்குத் தொல்லை கொடாம லாவது இருக்கலாம் அல்லவா? தொல்லையுடன் சோறு வடித்துக் கொண்டிருக்கிறார் அன்னையார்! ‘தில்லைக்கண்’ என்று திடுக்கிடும்படி அழைக்கிறார் தந்தையார். கைக் கெட்டுந் தொலைவிலுள்ள விசிறியை எடுக்க ஆள் வேண்டும். எண்ணெய் தேய்க்க, சீயக்காய் தேய்க்க, உடம்பு துவட்ட? மாடியில் காயும் ஒரு வண்டி நெல்லை ‘மழை வந்தது மழை வந்தது வாரிவா வாரிவா’ என்கின்றார் தந்தையார். கூடவே நாலு கூடை வாரி வந்தால் இவரின் குண்டுக்கல் உடம்பு சுண்டைக்காயாகத் தேய்ந்தா போகும்? தாய்மார்களே, பெரியோர்களே, இன்னும் ஒன்றைக் கூறி என் சொற்பொழிவை முடித்துக் கொள்கிறேன்; இன்று நடுப்பகல் சாப்பாட்டு நேரத்தில், இரு விருந்தினர் திடீரென்று வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். வந்தவர்கள் என்ன சொன்னார்கள் எனில், ‘எங்க மச்சான் மகனுக்கும் சீர்காழி தங்கவேல் முதலியார் மகளுக்கும் நிச்சய தார்த்தம். அதற்காகத்தான் புதுவைக்கு வந்தோம். நிச்சயதார்த்தம் முடிந்தது; சாப்பிட்டுப் போகும்படி எங்களை வற்புறுத்தினார்கள். எங்களுக்குத் தெரிஞ்சவர் திருக்காமு முதலியார் இருக்கிறார், அவர் வருத்தப் படுவார்; அவர் வீட்டுக்குப் போகவேண்டும் என்று சொல்லிவிட்டு இங்கு வந்தோம்.’ என்றார்கள் சாப்பாட்டு நேரத்தில். அதைக் கேட்ட என் தந்தையாரும் சாப்பிடும் நேரந்தான் கையலம்புங்கள் என்றார். கையலம்பிக்கொண்டு வரிசையாக உட்கார்ந்தார்கள். என் அன்னை பட்டினி. அன்னை பட்டினி கிடக்க நேருமே என்பதையும் தந்தையார் கேட்கவில்லை; சாப்பிட்டாயா என்று கூடக் கேட்கவில்லை. நான் அடுக்கைத் தூக்கிக்கொண்டு ஓடி கடைச் சோற்றை வாங்கி வந்து அன்னையாரை உண்ணச் செய்து நானும் உண்டேன். இல்லத் துணைவியர்க்குத் துணைபுரியும் துணைவரின் போக்கு எப்படி இருக்கிறது? இதுபற்றிக் அவர்களை கேட்டால் உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு என்று பதில் கூறுகின்றார்கள். தலைவர் தலைவியர்க்குத் துணைவி என்றும் துணைவர் என்றும் பெயர் சொல்வதுண்டு. ஏன் துணைவிக்குத் துணையாய் இருக்கவேண்டும். துணைவன் என்பதற் காக மனைவிமார் குடும்ப விளக்காக இருக்க வேண்டும். கணவர் குண்டுக்கல்லாய் இருக்கலாகாது. துணைவரா யிருக்க வேண்டும் என்று கூறி என் சிற்றுரையை முடித்துக் கொள் கிறேன். (கைதட்டல்) தலைவியார்: (எழுந்து) இப்போது திருவாளர் திருக்காமு முதலியார் பேசுவார்கள். உங்கட்குத் தெரியும் திருக்காமு முதலியார் எனில் யார் என்று? அவர்கள்தாம் முன் பேசியவரின் தந்தையார் ; அதற்கு முன் பேசியவரின் துணைவர். (கைத் தட்டல்) திருக்காமு முதலியார்: (எழுந்து) தலைவியார் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே. இதுவரைக்கும் நல்ல அடி கிடைத்தது எனக்கு. கிடைத்த அடிகளை தாங்கிக் கொண்டிருந்த எனக்கு அழ உரிமை இப்போதுதான் கிடைத்தது. ஒரு குடும்பத்திற்கு ஒரு தலைவன் உண்டு; ஒரு தலைவி உண்டு. எனவே குடும்பத் தலைவர் இருவர். அதிகாரம் என்பது இருவர்க்கும் பொது. தலைவனுக்கு எவ்வள வோ அவ்வளவு அதிகாரம் தலைவிக்கும் உண்டு. இது இயற்கை முறை. ஆனால் அது மாறான வழியில்தான் சென்று கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் தமிழ் நாட்டில் தலைமையுடையவன் தலைவன் என்று இருந்தது. இப்போது எல்லாம் தலை கொழுத்தவன் தலைவன் என்று ஆக்கப்பட்டுவிட்டது. தலைமையுடையவள் தலைவி! இப்போதெல்லாம் இட்ட வேலைகளைத் தலையிற் சுமப்பவள் தலைவி என ஆக்கப்பட்டது. குடும்பத் தலைவன் கடிவாளம் இல்லாத குதிரையா? தலைவி நிபந்தனையற்ற அடிமையா! இந் நிலைமை இந்த மட்டோடு இருக்கிறது என்றும் சொல்லி விடுவதற் கில்லை. இந்த இழவில் வளர்ச்சி வேறு. (கைத் தட்டல்) குடும்பப் பணிகள் எவ்வளவோ உண்டு; அவைகளில் ஒன்று தவிர மற்றெல்லாவற்றிலும் நான் சரிபாதி பங்கு கொள்வதாக உறுதிகூறுகின்றேன். ஒன்று தவிர என்றேன். அதை என்னால் செய்ய முடியாது அதற்காக என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு முன் பேசியவர் அதையும் நான் செய்யத்தான் வேண்டும் என்று என்னைக் கட்டுப்படுத்த வேண்டாம்! அது என்னால் முடியாது. பிள்ளைபெற என்னால் முடியுமா? (சிரிப்பும், கைத் தட்டலும்) மற்றும் ஒரு புள்ளிபற்றிப் பேசி என் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்க எண்ணுகின்றேன். வருகின்ற விருந்தை வராதே என்று சொல்லுவது தமிழர் பண்பாடாகாது. அது மட்டுமன்று; உணவு நேரம் பார்த்து வந்த விருந்தினரை ஒழித்துபோக வேண்டும் என்று ஒழிப்பதும் குற்றமோ! துணைவன், துணைவி, மக்கள் ஆகியோர் தனித் தனியே உணவருந்தும் தீயமுறையை ஒழித்துக் கட்டி விட வேண்டும். உண்ணும்போது துணைவன், துணைவி, மக்கள் உடன் இருந்து உண்ணும் முறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். திடீரென்று வந்தார்க்கு உணவிட்டு மீந்ததை அனைவரும் உடனிருந்து உண்ணும் முறை ஏற்பட்டால் துணைவிக்குப் பட்டினித் தொல்லை நீங்கும் என்று எண்ணுகின்றேன். குடும்ப விளக்காகவே திகழவேண்டும் குடும்பப் பெண்கள். அவர்களுக்குக் குண்டுக் கல்லாகத் திகழவேண்டாம் குடும்ப ஆடவர்கள். வாழ்க தமிழ்! வாழ்க தமிழர்! வெல்க தமிழ்நாடு!  ஆரிய பத்தினி மாரிஷை ஆரிய பத்தினி மாரிஷை (முதலில் மணந்தவன் இறந்தான். மாரிஷை, ஆளனில்லாது துடிக்கிறாள். பருந்து வாகனன் வந்து பத்துக்கணவர்களை அருள் செய்கிறான்.) காட்சி - 1 (கண்டு மகரிஷி கடுந்தவம் செய்கிறார். பிரமலோசை என்னும் கந்தருவ மங்கை அங்குவருகிறாள்.) பிரமலோசை : மார்காட்டித் தோள்கட்டி மஞ்சள் உடல் காட்டி மயக்கும் படி சொன்னான் அந்த இந்திரன் இவனோ (கண்டு மகரிஷி) குட்டிச்சுவர்போல் அசையாமல் குரங்குபோல் கண்ணில் பீளை வடிய உறங்குகிறான். இவனை எழுப்பவேண்டும். எழுந்ததும் இவனைச் சேரவேண்டும் என் மனம் ஒப்பாவிடினும்! இழவு! இழவு! (கண்டு ரிஷியைத் தொட்டு) என்னைப் பாரும்! கண்டுமகரிஷி : (கண்திறந்து பார்க்கிறான். ஆசை தலைக்கேறுகிறது) உன்னைக் கண்டதும் கருத்தில் ஓர் எரிச்சல்! அது நான் உன் மேற்கொண்ட மையலின் பயனடி, ஓடாதே உன் காலில் விழுகிறேன். பிரமலோசை : முற்றும் துறந்தவராயிற்றே? கண்டுமகரிஷி : ஆமாண்டி முற்றும் துறந்தேன். இப்போது முற்றும் விழைந்தேன். காட்சி - 2 (புதர் மண்டிய ஆலமரத்தின் அடியில் சருகின் சலசலப்புக் கேட்கிறது. அங்கு வந்த கண்டு மகரிஷியின் மாணவன் அஞ்சுகிறான்.) மாணவன் : கரடி! அந்தப் புதரில் என்ன செய்கிறது. மகரிஷி! மகரிஷி! எங்கேயிருக்கிறீர்கள்? கண்டுமகரிஷி : தபஸ் தபஸ்! நீ போ! ஆஸ்ரமத்தில் இரு! (மாணவன் மரத்தடியில் ஒளிந்துகொண்டு புதரண்டை நிகழ்வதை நோக்குகிறான்.) கண்டுமகரிஷி : வாடி ஆஸ்ரமத்துக்கு! பிரமலோசை : ஆஸ்ரமத்துக்கா? இதோடு சரி. இனி நான் போக வேண்டும் கந்தர்வலோகம். கண்டுமகரிஷி : பிரிந்திருக்க முடியாது, முடியாது. பிரமலோசை : தவத்தை இனித் தொடங்குங்கள். கண்டுமகரிஷி : தவம் முடிந்துவிட்டது. தவத்தின் பயனை நுகரத்தானே உன்னை என்னோடு இருக்கச் சொல்லுகிறேன். பிரமலோசை : இழவு விட்டபாடில்லை. (போகிறாள்.) மாணவன் : மகரிஷி! அயோக்கிய பையன்! காட்சி - 3 (பல மாதங்கள் பின்) (ஒரு முனிவரின் குடிசையில் கண்டு மகரிஷியின் மாணவன் நுழைகிறான்.) முனி : என்னடா! கண்டு நலந்தானே? மாணவன் : அவருக்கென்ன! ஆஸ்ரமத்தில் வந்து பாருங்கள். அச்சுப் பாவை போல் அழகிய குட்டி ஒருத்தி; அதுமட்டு மல்லாமல் ஆறு மாதம் வயிற்றில், நாலு மாதம் போக வேண்டும். ஐயாவுக்குத் தலைக்கு உயர்ந்த பிள்ளை சில ஆண்டுகள் போனால். முனி : ஆ! அவன் என் அண்ணனாய்விட்டானே. முனி என்ற பேருக்கே முட்டு வந்து சேர்ந்துவிடுகிறது நகரத்துக் குட்டிகளால். மாணவன் : குட்டிகள் என்ன செய்வார்கள், இந்த மட்டிகள் சும்மா யிருந்தால், இதோ மற்ற முனிவர்களிடமும் சொல்லி விட்டு வந்துவிடுகிறேன். முனி : என்னவென்று? மாணவன் : ஏழாவது மாசத்தில் கண்டு வீட்டில் வளைகாப்பு என்று. (ஓடுகிறான், முனிவர் ஆஸ்ரமந்தோறும் சொல்லிவிடுகிறான்.) காட்சி - 4 (மகரிஷிகள் அனைவரும் கூட்டம் நடத்துகிறார்கள்.) இந்த அயோக்கியப் பையன் கண்டு இப்படி நம் மானத்தைக் கெடுத்து விட்டான். நான் தெரிந்து கொண்டேன். கண்டுவின் தவத்தைக் கெடுத்து வரும்படி பிரமலோசையை அந்த இந்திரன்தான் அனுப்பி யிருக்கிறான், அவன்தான் அனுப்பட்டும், இந்த மடையனுக்கு அறிவு எங்கே போயிற்று? (இதையெல்லாம் பிரமலோசை ஒரு மரத்தடியிலிருந்து கேட்டு விடுகிறாள். அவள் ஆத்திரத்தோடு அயலில் ஓடுகிறாள்.) காட்சி - 5 கண்டு : அடே மாணவா! நான் தவத்துக்குப் போகிறேன் மாரிஷையைக் காப்பாற்றி வா. மாண : இன்னும் தவம் எதற்கு மகரிஷியே? கண்டு : தவம் எதற்கா? மாண : ஒன்று போதாதா என்கிறேன் மகரிஷியே. கண்டு : என்ன ஒன்று. மாண : மாரிஷை கண்டு : தவத்திற்குப் போனால் இன்னும் இந்தப்படி பெண்ணுறவும் பிள்ளைப் பேறும் உண்டாகிவிடும் என்கிறாயா? மாண : நான் அப்படிச் சொல்லவில்லை. தவம் என்றாலே பெண்ணுறவு பிள்ளைப் பேறுதானே என்கிறேன். கண்டு : முனிவர்கள் செய்கையைப் பார்த்தால் அப்படித்தான் சொல்லும்படி இருக்கிறது. இழவு! இழவு! (தலையில் அடித்துக்கொண்டு மங்கைப் பருவமுள்ள மாரிஷையை மாணவனோடு விட்டு ஓடுகிறான் கண்டு ரிஷி.) காட்சி - 6 (ஒரு நாள் மாரிஷை மலர் சூடி மரவுரி அணிந்து, ஆலின் விழுதால் புனைந்த ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கிறாள். மாணவன் கண்டு காதல் கொள்கிறான்.) மாண : மாரிஷா! நான் ஊஞ்சலை ஆட்டுகிறேன். மாரிஷை : நான்தான் உந்துகிறேன் மரத்தில். ஆடுகிறது ஊஞ்சல்! உங்களுக்கு ஏன் தொல்லை. மாண : தொல்லையில்லை. அது எனக்கு இன்பம்! மாரிஷை : சரி! (ஊஞ்சல் ஆட்டுகிறான்) மாணவன் : மாரிஷா! நான் விசையாக ஆட்டுகிறேன். அப்போது என்னைவிட்டு நீ விலகுகிறாய். எனக்கு அது பொறுக்க முடியாத தொல்லை. என்னை நோக்கி வருகிறாய் இன்பம். மீண்டும் தொல்லை, மீண்டும் இன்பம்! மாரிஷை : உங்கள் தொல்லைக்கு நான் காரணமாகி விட்டேனா? மாணவன் : என்னை நீ நொடியும் விட்டுப் பிரியக்கூடாது. (ஊஞ்சலை விட்டு இறங்கி அவன் தோளோடுதோள் பொருந்த நிற்கிறாள்.) மாரிஷை : இன்னும் என்ன செய்யவேண்டும்; மாணவன் : தவந்தான்! வேறென்ன? மாரிஷை : அப்பாவைக் கேட்கலாமா? மாணவன் : உன் தாயிடம் உன் தந்தை கண்டு தவம் துவக்கியபோது யாரைக் கேட்டார்கள்? மாரிஷை : ஆம்! விடுதலை! இன்ப வெள்ளம் எதிரில் இதோ! அள்ளி யுண்ண ஆரைக் கேட்க வேண்டும்! காட்சி - 7 (மாரிஷையும், மாணவன் என்னும் அவள் கணவனும் ஆலின் விழுதால் பிணித்த ஊஞ்சலில் ஆடிப்பாடியிருக்கையில் முனிவர் பலர் காணுகிறார்கள்.) முனி 1 : அவளை அவன் மணந்துகொண்டான். இருவரும் இன்பம் நுகர்ந்து கிடக்கிறார்கள். முனி 2 : அவன் பொல்லாதவன். துறவிகளை இழித்துக் கூறுவது தான் அவன் வேலை. முனி 3 : நம் தலைக்குமேல் அவ்விருவர் கால்களும் உயர்கின்றன. அதோ பாரும் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். (அணுகுகிறார்கள்.) முனி 4 : உன்போல் இல்லறம் மேற்கொள்வது சிறப்பா? எம்போல் துறவு கொள்வது மேலா? மாணவன் : துறவறமும் இல்லறந்தான். பெண்களை வெறுப்பதாகச் சொல்லும் நீங்களும் பெண்களைக் கோரித்தான் வருந்திக் கிடக்கிறீர்கள். கண்டு மகரிஷி பிரமலோசையைப் கூடிப் பெற்ற மங்கைதான் இவள். இவள் பெயர் மாரிஷை. முனி 5 : எனவே நாங்கள் ரிஷிகள் அல்ல. துறவிகள் அல்ல. அப்படித்தானே? முனி 6 : எங்கள் துறவு பயனற்றதுதானே? மாணவன் : பயனுண்டு. ஏனெனில் ஒருத்தியைக் கூடுகிறீர்கள். உடனே விலக்குகிறீர்கள். விலக்குவதற்குக் காரணம் சொல்ல உதவுகிறது உங்கள் துறவு! (முனிவன் ஒருவன் தன் கையிலிருந்த துணைக் குறுந் தடியால் மாணவன் தலையில் அடிக்கிறான். மாணவன் விழுந்து இறந்து போகிறான்) காட்சி - 8 (தனியிடத்தில் மாரிஷை கதறுகிறாள்.) மாரிஷை : காதலனை இழந்தேன். என் காதல் நோய்க்கு மருந்து கொடு. பொன்னை இழந்தேன். வறுமையைத் தணி. உணவை இழந்தேன். பசியைப் போக்கு. (என்று கதறும் நேரம் திருமால் எதிர்ப்படுகிறான்.) திருமால் : என்னடி உனக்கு வந்த இன்னல்! மாரிஷை : எல்லாம் தெரிந்த தங்களுக்கு என் உள்ளந் தெரியவில்லையா? திருமால் : எனக்குத் தெரியும்! உன் வாயிலிருந்து வரவேண்டுமல்லவா? மாரிஷை : கணவன் இறந்தான். திருமால் : வேறு கணவன் வேண்டுமா? மாரிஷை : ஒருவன் மட்டும் அல்ல. திருமால் : மற்று? மாரிஷை : பத்துப்பேர் தேவை, ஒத்து இன்பம் நுகர. திருமால் : அசல் ஆரியகுல வீரி, அவ்வாறே உனக்குப் பத்துக் கணவன்மார் கிடைக்கட்டும். மாரிஷை : எப்போது? திருமால் : இன்றே கிடைப்பார்கள். காட்சி - 9 பரதேசிகள் பத்துப்பேர் அவ்வழியாக வருகிறார்கள். 1: செக்கெனப் பருத்தது நம் உடல், தீ என எரிகிறது நம் காதல் நோய். ஐந்து கழுதைக்குரிய ஆயுள் அடைந்தோம். ஒருத்தி அகப்பட வில்லை. 2: ஆரிய குலம். இது அழிவதே நலம். எங்கே அகப்படுகிறாள் ஒருத்தி. ஏன் அகப்படுவாள் நம் குலத்தில். 3: நம் குலத்தின் மங்கை அகப்படவில்லை. தவக்கோலம் கொள்வார் நம்மவர். விலங்குகளைக் கூடி வெறியடங்குவர். இன்னும் என்ன வேண்டும். 4: அதோ ஒருத்தி! 5: நான் தனியே சென்று பேசுகிறேன். 6: நான் போனால் இனிதாகப் பேசிச் சரிப்படுத்துவேன். 7: நான் போகிறேன். (என்று மாரிஷையை அணுகுகிறான்) மாரிஷை : மையலால் உன் உள்ளம் வருந்துகிறதா? தோகை மேல் வெறி, உன்னைத் துடிக்க வைக்கிறதா? ஐயோ நீ மட்டு மெனில் பயன்படமாட்டாயே. உன்போல் பத்து பேர் தேவையாயிற்றே. 7 : ஆம் நாங்கள் பத்து பேர். மாரிஷை : ஒத்த உள்ளம் வேண்டுமே! 7 : உருவத்தால் நாங்கள் பத்துபேர், உள்ளம் ஒன்று எமக்கு. மாரிஷை : அழை! (மற்றவரும் கடாக்கள் போல் ஓடி வருகிறார்கள். மாரிஷை அவர்களை அழைத்துக்கொண்டு தன் குடிசையை அணுகு கிறாள்.) காட்சி - 10 (ஒன்பது பேர் வெளியில் காத்திருக்கிறார்கள். மாரிஷையும் ஒருவனும் உள்ளே! இதே நேரத்தில் மாரிஷையின் தாய் பிரமலோசை தன் மகளின் நிலையறிய வருகிறாள்.) பிரமலோசை : மகளே நலந்தானே? மாரிஷை : ஒருவன் தந்த நலந்தான்! (அவ்வொருவன் வெளியில் வர மற்றொருவன் உள்ளே போகிறான்.) பிரமலோசை : மகளே நலந்தானே? மாரிஷை : இருவர் தந்த நலந்தான்! பிரமலோசை : (மூன்றாமவனுடன் இருக்கையில்) மகளே நலந்தானே? மாரிஷை : மூவர் நலந்தான் முடிந்தது. பிரமலோசை : அடடா! ஆரிய நாகரிகமே அநாமத்து? மகளே! சாக்காடு நல்லதடி இதைவிட. (போகிறாள்)  ரஸ்புடீன் இடம் : ரஷ்ய அரச மாளிகையின் மகளிர் இல்லம். நேரம் : மாலை காலம் : மேற்படி கதை உறுப்பினர் : ரஸ்புடீன், அரசி அலக்சாண்ட்ரா, தோழி. நிலைமை : குழந்தையைத் தொட்டிலில் இட்டு ஆட்டிக் கொண்டிருக்கின்றாள் தோழி. சோபாவில் வீற்றிருக்கின்றான் ரஸ்புடீன். அவன் காலடியில் உட்கார்ந்திருக் கின்றாள் அரசி அலக்சாண்ட்ரா. காட்சி - 1 ரஸ்புடீன் : எல்லாம் தன்னால்தான் முடியும் என்று எண்ணி இறுமாப்படைகிறான். ஏதுங்கெட்ட மனிதன். ஆண் குழந்தை இல்லையே என்று அல்லல் அடைந் திருந்த உனக்கு, இந்த ஆண் குழந்தையை அரசனால் தர முடிந்ததா? அலக்சாண்ட்ரா : ஆம் உங்கள் அருள்தான் வேண்டியதிருந்தது. நீங்கள் ஒரு மகான். ரஸ்புடீன் : மகான் மட்டுமல்ல! தோகையே உன் காதைத் தூய்மைப் படுத்திக் கொண்டு கேள். நான்தான் ஆண்டவன்! ஆண்டவன்தான் நான்! அலக்சாண்ட்ரா : (வியப்புறுகின்றாள்.) அப்போதே நினைத்தேன் சுவாமி! அரண்மனையில் இதுவரைக்கும் தாங்கள் செய்துள்ள அற்புதங்கள் ஆண்டவனுக்குத்தான் வரும். வேறு யாருக்கு வரும்? (இதோ நேரத்தில் செல்வி ஒருத்தி வருகின்றாள்.) அலக்சாண்ட்ரா: சுவாமி இவள்தான் அந்தப் பிரபுவின் தங்கை. ரஸ்புடீன் : நம் ஆசைப் பணிவிடைக்குக் கூசமாட்டாளே? கூச மாட்டாள் என்றே நம்புகின்றேன். அலக்சாண்ட்ரா : கருத்துள்ளவள்! ரஸ்புடீன் : கருத்திருந்து பயனில்லை. கைப்படாத கட்டித் தயிர் தானே? அலக்சாண்ட்ரா : நான் சொல்லவேண்டுமா தங்கள் ஞான திருஷ்டி இருக்கையில்? ரஸ்புடீன் : (அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு) வண்டு மொய்க்காத புதுப்பூ! ஆம்! மற்றவர் சூடி புகாத மணிமண்டபம்! கொண்டு உண்ணும் அமுதக் கவிதையின் முதற் பதிப்பு! அவள் முத்துச் சிரிப்பை மறைத்தாலும் முகத்தில் தெரிகின்றதே அவள் மோகத்தின் கொதிப்பு. என்னடி கண்ணே நாணிக்கொண்டு நிற்கின்றாய்; மாணிக்கப் பதுமை போல்! வா! ஆண்டவனிடம் வா! கூண்டோடு கைலாசம் போகலாம் வா! (அவளை இழுத்துத் தன் அண்டையில் இருத்தி அவள் தோளில் சாய்கின்றான்) அவள் : வெட்கமாக இருக்கு! (விலக முயல்கிறாள்) ரஸ்புடீன் : விளக்கின் முன் இருள் விலகத்தான் வேண்டும் அன்பைப் பெருக்கிவிடு. அதை என் ஆசையில் உருக்கிவிடு; வா உம் வா! (அதே நேரத்தில் அரசன் வருகின்றான். அவனைக் கண்டு அவள் விலக முயலுகிறாள்) அரசன் : (சிரித்து) நான் வந்துவிட்டேன் என்று நாணப்படுகின் றாய். ஆண்டவனை மனிதன் என்று எண்ணுகின்றாய். ரஸ்புடீன் : தோகை மயிலே, உன்னை, நான் தொட்டணைப்பது, போல் தோன்றும் உனக்கு; ஆயினும் அது தொட் டணைப்பதல்ல. ஓர் ஆடவனிடம் சிற்றின்பம் அநுப விப்பது போலிருக்கும் உனக்கு. ஆயினும் அது சிற்றின்பம் அல்ல. ஏன் என்றால் நான் மனிதனல்லேன். (அவள் மீண்டும் தானே விரும்பி அவன் மடியில் உட்காருகின்றாள்; இதற்குள் சிஷ்யன் வருகின்றான்.) ரஸ்புடீன் : என்னடா சிஷ்யா! சிஷ்யன் : சுவாமி புதுப்பழம் புசிக்கும் வேளை ... ரஸ்புடீன் : சும்மா வாடா சொல்லு; சிஷ்யன் : சொல்றது என்னாங்க! வர்றாங்க! ரஸ்புடீன் : யார்? சிஷ்யன் : அதாங்க! உங்க பஞ்சணையில் ஆடும் பச்சை மயில்கள்! (பல பெண்கள் ஆடி வந்து ரஸ்புடீன் காலடியில் முழந் தாளிடு கின்றார்கள். அவன் கன்னத்தில் முத்தமிடு கின்றான். ஆடல் தொடங்குகின்றது. ஒருத்தி ஆட்டத் தின் நடுவிலேயே ரஸ்புடீனைப் பார்த்துச் சிரிக் கின்றாள். அவன் தலையணையால் அவள் மார்பில் அடிக்கின்றான். விழுந்த தலையணையை எடுத்து ரஸ்புடீன் மேல் அவள் வீசுகின்றாள். ஒருத்தி ரஸ்புடீன் மேல் விழுகின்றாள். அவளை ரஸ்புடீன் தூக்கித் தள்ளி விடுகின்றான். மற்றொருத்தியின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிடுகின்றான். அதே நேரம் புதுப்பழமும் ஆடத் தொடங்கி விடுகின்றாள்.) ரஸ்புடீன் : அடி என் அச்சுப் பதுமையே ஆடு. (அவளுடன் ரஸ்புடீனும் ஆடுகின்றான். ஆடலின் முடிவில் ரஸ்புடீன் தன் சீடனிடம் வருகின்றான்.) சிஷ்யன் : திருப்திதானே! ரஸ்புடீன் : பேரின்பக் கொடுமுடி! இங்கே வாடா. அந்தப் பச்சை ரவிக்கைக்காரி அண்ணனுக்குப் படைத் தலைவன் வேலை கொடு. அவன் என் மச்சானில்லையா. சிஷ்யன் : ஊதாப் பாவாடை மகன்? ரஸ்புடீன் : உதவிப் படைத்தலைவன். இன்னும் என் இனத்தார் எல்லாரையும் பெரிய பெரிய அலுவலில் போடு. பிற்பாடு மக்களின் எழுச்சியை அடக்க அது நல்ல ஏற்பாடு! மேலும் அவர்கட்கெல்லாம் ஏற்பாடு செய் சாப்பாடு! அது மட்டுமல்ல. அவர்கட்கு இப்போதே கொடு தலைக்கு ஒரு லட்சம் விழுக்காடு. (சிஷ்யன் அரசனைப் பார்க்கிறான்.) ரஸ்புடீன் : யாரைப் பார்க்கின்றாய் சிஷ்யா? என்னுடையது ரஷ்யா. அள்ளி வீசு பொதுப் பணத்தை! சிஷ்யன் : நல்லதுங்க. (அரசி அரசன் பிரிகின்றார்கள்.) ரஸ்புடீன் : (பிரியும் புதுப் பழத்தை நோக்கி) போகின்றாயா? இப்போது நாம் நடத்தியது. இனி நாம் நடத்த இருக்கும் பக்தி நாடகங்களின் ஆரம்ப ஒத்திகை. வந்து போய்க் கொண்டிரு! வளர்ந்துகொண்டே போகும் சுவை! போய் வாடி! காட்சி - 2 இடம் : அரண்மனையில் ஒருபுறம் காலம் : காலை கதை உறுப்பினர் : ரஸ்புடீன், சீடன் நிலைமை : (குரல் ஒன்று கேட்கின்றது. உற்றுக் கேட்கின்றார்கள் ரஸ்புடீனும், சீடனும்) குரல் : “இருட்டறையில் உள்ளதடா உலகம்.” ரஸ்புடீன் : புரட்சிப் புயல் வீசுகின்றதோ. சிஷ்யன் : அவர்கள்தாம் சாமி. ரஸ்புடீன் : கேளடா அவர்கள் சொல்லுவதை, உலகம் இருட்டறையில் உள்ளதாம். இவர்கள் வெளிச்சத்தை உண்டாக்குகின்றார் களாம் மடப்பயல்கள். குரல் : “சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே” ரஸ்புடீன் : ஏனடா கேள்! நூல் என்று ஒன்று இருக்கும் வரைக்கும் மேல் என்றும் கீழ் என்றும் இருக்குமா இருக்காதா? சாதி வேண்டாமாம் காலாடிப் பசங்க. குரல் : “மருட்டுகின்ற மதத் தலைவன் வாழ்கின்றானே.” ரஸ்புடீன் : என் காலடியில் வீழ்கின்றார்கள். ரஸ்புடீன் வாழ்கின்றான். குரல் : “வாயடியும் கையடியும் மறைவதெந்நாள்.” ரஸ்புடீன் : வாய்ப் பந்தல் போடும் வழக்கம் என்னிடமில்லை. எல்லாம் செயலில் காட்டியிருக்கிறேன். மக்கள் அறிவை வடிகட்டி விட்டுத்தான் உட்கார்ந்திருக்கிறேன். குரல் : “சுருட்டுகின்றார் தம் கையில் கிடைத்தவற்றை.” ரஸ்புடீன் : நானா சுருட்டுகின்றேன். சுருட்டிக்கொண்டு வந்து என் காலடியில் வைக்கிறார்கள். அதை நான் எடுத்து வைத்துக் கொள்ளுகிறேன். குரல் : “சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார் தம்மை வெருட்டுவது பகுத்தறிவிலே!” ரஸ்புடீன் : ஆமாம் பகுத்தறிவை அப்படியே பச்சுப் பச்சென்று மக்களிடம் விட்டு வைத்திருக்கிறானா ரஸ்புடீன்? அரசியல் அதிகாரமும் மதவெறிப் பிரச்சாரமும் சேர்ந்தால் பகுத்தறி வுக்கு ரஷ்யாவில் என்ன ஜோலி? மக்களின் மேல்மாடி காலி! இல்லையடா? சிஷ்யன் : ஆமாங்க. குரல் : “மருட்டுகின்ற மதத்தலைவன் வாழ்கின்றானே.” ரஸ்புடீன் : நான் அழிந்து போக வேண்டுமாம்! சிஷ்யன் : இவர்கள் இப்படிக் கூத்தடிக்கிறார்கள். சும்மா இருக்கலாமா சுவாமி? ரஸ்புடீன் : இப்போது நான் சும்மாவாடா இருந்தேன். சிஷ்யன் : அவர்களின் புரட்சியில் ஒரு விருவிருப்புத் தோன்றுகிறது. நம் கட்சியில்? ரஸ்புடீன் : அஞ்சுகின்றாய் புரோகிதக் குஞ்சு ரஸ்புடீன்தான் ஆண்டவன். ஆண்டவன்தான் ரஸ்புடீன்! மதம் என்னுடையது. நான் மத கர்த்தா என்பதை மறந்து விடுகின்றாய். சிஷ்யா மதம் என்றால் என்ன? அதன் உள்ளே இருப்பவை எவை? கோயில் என்னிடம் சாராயக் குடம் ஒரு பக்கம். குருக்கள் என்னும் வெறுக்காத அபின் கூட்டு ஒரு பக்கம்! சாதியின் பணக்காரன் முன்னாடி தாழ்சாதி ஓர் அண்ணாடி என்று சொல்லும் கறுப்புக் கண்ணாடி ஒரு பக்கம். என் கையில் சராசரம் அடக்கம் என்றால் நம்பிக்கை கொள்ளச் செய்யும், அவதாரம், மகத்துவம், மந்திரம் என்னும் கஞ்சா மாத்திரை ஒரு பக்கம் ஆகிய மதமான பலசரக்கு மண்டிக்கு மண்டியிடாத மனிதனை ரஷ்யாவில் நீ எங்கேனும் கண்ட துண்டா? என் கை வரிசையைப் பார்த்து வருகின்றாயே, நாயே. சிஷ்யன் : நேற்று அந்தப் புரட்சித் தலைவன் பேசிய பேச்சுத் தெரியுமா உங்களுக்கு? ரஸ்புடீன் : எனக்காடா தெரியாது? (லெனின் போலப் பேசுகின்றான்.) தோழர்களே! “சார் சக்கரவர்த்தியையும் தையல் அலக்சாண்ட்ராவையும் ஆட்டிப் படைக்கின்றான் அந்த ரஸ்புடீன்! இயற்கை முறையில் பகுத்தறிவென்பதோர் இருப்புப் பாதையில் ஓடிக்கொண்டிருந்த ரஷ்ய மக்களின் வாழ்வு என்னும் வண்டித் தொடரை மதம் என்பதோர் வெடிகுண்டால் சுக்குநூறாக்கி, அவர்களைப் பக்தி என்பதோர் படுபாதாளத்தில் வீழ்த்தி, அவர்களின் சொத்து, சுதந் தரம், மானம், மரியாதை, ஆகிய பாற்குடத்தைத் தன் காமக் களியாட்டம் என்னும் கடும் பாவத்தில் சாய்த்துக் கொண்ட அந்த ரஸ்புடீனால் அதிகரித்த தொகை தொகையாய்ச் செல்வமெல்லாம் அடுக்கடுக்காய்ச் சிலரிடம் போய் ஏறிக்கொண்டு சதிராடும் தேவடியாள் போல் ஆடிற்று. தரித்திரரோ புழுப்போலத் துடிக்கின்றார்கள். பட்டினி என்று பதறும் பாட்டாளி மக்களின் கூப்பாடெல்லாம் பரமண்டலம் நோக்கிய உரைமண்டலமாகி ஒழிந்தது. மக்களின் ஏக்கமோ அவர்களை மரணத் தூக்கத்துக்கு அழைக்கின்றது. இந்த இரங்கத்தக்க ஒவ்வோர் அசைவுக்கும் ரஸ்புடீன் காரணம். மக்களின் மருண்ட பார்வையிலும் இருண்ட கண்களிலும் வற்றிய கன்னங்களிலும் அந்த ரஸ்புடீனின் வஞ்சகக் சூழ்ச்சிகளே காட்சி யளிக்கின்றன. மக்களை மத ஓடத்தில் சேர்த்தான். பலி பீடத்தில் சாய்த்தான். வாழ முடியாமல் இங்கு வந்தேறிய ஒரு கோழை கொடிய குள்ளநரி, மதாச்சாரியானான்; தன் வருணாச்சாரம் பரப்பினான். அது மட்டுமா? மக்களின் ஒட்டிய வயிற்றைக் காட்டிவிட்ட மூச்சைக் கேட்டால் சுட்டுத்தள்ள வேண்டும் என்பதற்காக முற்கூட்டியே தன் இனத்தாரையெல்லாம் பொறுப்புள்ள அலுவலில் புகுத்தினான்.” என்று கூறுகிறான் புரட்சித் தலைவன். சிஷ்யன் : பகைவன் பத்தும் சொல்லுவான். அது கிடக்கட்டும். நம்ப கட்சியிலுள்ள பிரபுக்களே நம்மை எதுக்குறாங்க, தெரியிலியே ஒங்களுக்கு. ரஸ்புடீன் : மடப்பயலே எனக்கா தெரியாது. (பிரபுக்கள் தலைவன் போல் பேசுகின்றான்) “புரட்சிக்காரர் கை வலுத்துவிட்டது. புடலங்காயாகிவிட்டது அரசர் கை! அவர்கள் மிஞ்சுகிறார்கள். இவன் அஞ்சுகிறான்.” இந்த நிலை ஏன்? யாரால்? பழம் படை வீரர்களும், கிழங்கு போன்ற இளைஞர்களும், பாடுபடும் பாட்டாளி உலகமும், ஏடு எழுதும் எழுத்தாளர் உலகமும், போன உரிமையை மீட்கத் துடிக்கும் புலிக் கூட்டமும் புரட்சிக்காரர் பக்கம். ஏன் இந்த நிலை? யாரால்? அந்த முடிச்சி மாறி அல்லவா காரணம்! இனியாகிலும் நாம் படிச்ச மாதிரி நடந்து கொள்ள வேண்டாமா? இன்றைக்கே இப்போதே நாம் செய்ய வேண்டியது ஒன்று. அதுதான் ரஸ்புடீனை ஒழிப்பது.” இது தான் அவனின் பேச்சின் சாரம். சிஷ்யன் : தெரிந்துதானே இருக்கிறது உங்களுக்கும்? செத்து போகத்தான் நெனைக்கிறீங்களா அவுங்க கையாலேயே. ரஸ்புடீன் : அதிலும் நானாடா செத்துப்போக நினைக்கிறவன். எம் பெருமான் எம்பெருமான் என்று என்னை இழுக்கும் ஏந்திழையார் எத்தனை பேர்? மகான் மகான் என்று என்னை மடக்கும் மாடப்புறாக்கள் எத்தனை பேர்? குருவே குருவே என்று என்னிடம் கொஞ்ச வரும் அஞ்சுகங்கள் எத்தனை பேர்?- இந்த, பஜனை கோஷ்டியைப் பிரிந்து பல்லக்கில் போக நினைப்பேனாடா? (இதற்குள் ஓர் ஆள் அஞ்சல் கொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கிக் கொள்ளுகிறான் ரஸ்புடீன்) இதைப்படி! சிஷ்யன் : ஏன் தங்களுக்கு? ரஸ்புடீன் : உம் (உதட்டைப் பிதுக்குதல்) சிஷ்யன் : நீங்க படிக்காதது வியப்புங்க. ரஸ்புடீன் : நீ படித்திருப்பதுதான் வியப்பு சார் ஆட்சியில்! படிடா. சிஷ்யன் : (படிக்கிறான்) அடிகளுக்கு, போவ். வணக்கம்! ரஸ்புடீன் : அடடா போவ் பிரபுவா? அப்புறம்? சிஷ்யன் : இருந்து, என் சீமாட்டியுடன் விருந்து சாப்பிட்டுப் போக வேண்டும். ரஸ்புடீன் : மகிழ்ச்சி! போகத்தான் வேண்டும். வண்டியைப் போடச் சொல்லு. சிஷ்யன் : அவன் அயோக்கியன் சாமி. ரஸ்புடீன் : நான்? சிஷ்யன் : அவன் வீட்டுக்குப் போகவே கூடாது. ரஸ்புடீன் : நான் போகாவிட்டால் “நான் வருவேன்” என்று கனவு கண்டு கொண்டிருக்கும் அந்தக் கற்கண்டு கிடைக்குமாடா? சிஷ்யன் : அவன் கொலைகாரன். ரஸ்புடீன் : நான்? சிஷ்யன் : வஞ்சகன் வீட்டில் கால் வைக்கலாமா நீங்கள்? ரஸ்புடீன் : அந்த வானம்பாடியை இழக்கலாமாடா நான்? சிஷ்யன் : அவன் சேதி உங்களுக்குத் தெரியாதுங்க. ரஸ்புடீன் : என் சேதி தெரியுமாடா உனக்கு? பகலில் தூண்டில் முள்ளை நெருடியும் இருட்டில் போனால் திருடியும் மனைவி மக்களைக் காப்பாற்ற முடியாமல் அவர்கள் வாடிய முகம் காணப் பிடியாமல் ஊரை ஏமாற்ற ஒரு வழி தேடிச் சாராயக் கடையில் சம்பாதித்ததுதான் இந்தப் பொய்த் தாடி ... (தாடியைக் கையால் எடுத்துக் காட்டிப் பழையபடி முகத்தில் பொருத்திக் கொள்ளுகின்றான்.) சந்நியாசி என்றும் சாதாரண மக்களைக் கண்டால் உபதேசி என்றும், மடையர்களிடம் போய் உபவாசி என்றும் உள்ளா ரிடத்தில் பரதேசி என்றும், ஏமாந்த பெண்களிடம் சுகவாசி என்றும் பேசிப் பொய்யையும் புனை சுருட்டையும் அள்ளி வீசி, மெள்ள மெள்ள மதவலையில் அரண்மனையைப் பிடித்துப் போட்டு அடித்தேன் அதிர்ஷ்டச் சீட்டு. மட்டமென்றும் உயர்வென்றும் தாழ்ந்த வர்க்க மென்றும் சொர்க்கமென்றும் வாய்ப்பந்தல் போடும் மதவெறியை நாட்டில் எழுப்பினேன்; சட்ட திட்டத்தை குழப்பினேன்; மக்களின் தன்மானத்தை மழுப்பினேன். அறிவைக் கெடுத்தேன். படைப்பலம் என்ன செய்யும். மக்கள் முட்டாள்களாயிருக்கு மட்டும் என் அதிகாரம் செல்லும். நீதான் பார்க்கின்றாயே என் மார்பிற் புதையாத மங்கையர் ஏது? ஊர் திருடிப் பயல் என்றாலும் சார் ஆட்சியில் நான் ஓர் சாது. என்னையும் வணங்கினான் போவ்! தன் மனைவியைத் தரவும் இணங்கினான் என்றால் போகாதிருக்கலாமாடா புளிக்கட்டு! வண்டி நிற்கின்றதல்லவா! (போகின்றான் ரஸ்புடீன்.) காட்சி - 3 இடம் : அரண்மனைக்குச் சிறிது தொலைவில் உள்ள புதிய மாளிகை காலம் : மாலை கதை உறுப்பினர் : ஸ்டீபானோஃப், ரஸ்புடீன், இளவரசன் மற்றும் பலர். நிலைமை : ரஸ்புடீன் வருகின்றான். ஸ்டீபானோஃப் வரவேற்கின்றான். ஸ்டீபானோஃப் : வரவேண்டும் பிதாவே, (மணியடிக்கிறது.) தொலை பேச்சுக் குழல் அழைக்கிறது. ரஸ்புடீன் : என்னையா? ஸ்டீபானோஃப் : கேட்டுச் சொல்லுகின்றேன் பிதாவே. (குழலைக் காதில் வைத்துக் கேட்டுவிட்டு) நங்கை இன்னும் வரவில்லை. ஆனால் வந்து கொண் டிருக்கிறாள் என்று இளவரசர் கூறுகின்றார் பிதாவே. ரஸ்புடீன் : போவ் பிரபு மனைவிதானே? அவளைக் காண நான் மிக்க ஆவலாயிருக்கிறேன் என்று பதில் சொல்லும். (அதைக் குழலில் ஸ்டீபானோஃப் கூறுகிறான். கூறிவிட்டு, ரஸ்புடீனைக் கூடத்தின் ஒரு மூலையில் இட்டிருந்த பெரிய மேசையை நோக்கி அழைத்து கொண்டு போகின்றான். போய்க், கண்ணாடிக் குவளையில் நஞ்சு கலந்த சாராயத்தை ஊற்றிக் கொடுக்க ரஸ்புடீன் அதைக் குடிக்கிறான். இதை அடுத்த அறையில் ஒளிந்து கொண்டிருக்கும் மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக் கின்றார்கள்.) ஒருவன் : என்னடா இது? ரஸ்புடீன் அதைக் குடித்தவுடன் திடீரென்று கீழே விழுந்து செத்துப் போவான் என்று நினைத்தோமே. மற்றொருவன்: அவனிடம் ஏதோ ஒன்று இருக்கிறதப்பா. வேறொருவன்: பகைவர் மாளிகைக்குப் போகும்போது, எவரும் நஞ்சை எதிர்க்கும் மருந்தை உண்டுவிட்டுத் தானே போவார்கள். (இதே நேரம் ரஸ்புடீன் நடந்து சென்று மற்றொரு புறத்திலிருந்த தங்கச் சிலுவையை எடுத்துக் கையில் வைத்து அதன் அழகைச் சுவைக்கின்றான்) ரஸ்புடீன் : சிறிது மயக்கமாய் இருக்கிறது. (மற்றவர்கள் அவன் நிலையை நோக்கிய வண்ணம் இருக்கின்றார்கள்.) ரஸ்புடீன் : இப்போது மயக்கம் இல்லை. (என்று ஒரு பிஸ்கட்டை எடுத்துக் கடிக்கிறான்.) ஸ்டீபானோஃப் : அப்படியா? தன் துப்பாக்கியை எடுத்துக்குறி வைத்து ரஸ்புடீனை கையின் கீழே சுட்டான். ரஸ்புடீன் குப்புற விழுந்தான். குரல். 1 : ஞானி இறந்தான்! குரல். 2 : அயோக்கியனிடமிருந்து ரஷ்யா மீட்சியடைந்தது. மற்றவர்கள் தாம் பெற்ற வெற்றிக்காகச் சாராயம் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஓர் ஓசை கேட்டது. அனைவரும் கதவைத் திறந்து பார்த்தனர். ரஸ்புடீன் : (நகர்ந்து கொண்டே) நீங்கள் என்னைக் கொல்ல முயன்று பார்த்தீர்கள். நான் உயிரோடிருப் பேன். கடவுள் எனக்காக உங்களைப் பழிக்குப் பழி வாங்குவார். (அனைவரும் நடுங்குகின்றார்கள். ஆனால், துப்பாக்கி யுடன் ஸ்டீபானோஃப் மட்டும் ரஸ்புடீனைத் தொடர்ந்து போய், அவன் மண்டைமேல் பன்முறையாகக் குண்டு களை செலுத்துகிறான்.) இளவரசன் : ஊர்ப்புறத்தில் இருக்கும் பனிப் பாறையின் நடுவில் பிணத்தை எறிந்து வர ஏற்பாடு செய்க. வாழ்ந்தது ரஷ்யா.  அம்மைச்சி காட்சி - 1 இடம் : காஞ்சி தேரோடும் தெருவில் ஒரு வீடு. காலம் : காலை கதை உறுப்பினர் : பாவல்லாள் அம்மைச்சி, பார்ப்பனன் பட்டாபிராமன். நிலைமை : அம்மைச்சி தடுக்கில் உட்கார்ந்து கருத்தாக எழுத்தாணியால் ஏட்டில் எழுதிக் கொண்டிருக்கிறாள். பார்ப்பனன் பட்டாபிரமான் பொன்னாடை போர்த்தி வைரக் கடுக்கண் முகத்துக்கு விளக்கேந்த மணப்பூச்சு தெரிவிக்க வந்து சேர்ந்தான். அம்மைச்சி : வருக! முன்னறிவிப்பு இல்லாமல் வந்தீர்கள். அப்படிப் பட்ட தேவை என்ன? வருக! பட்டாபிராமன் : ஏது ஏது, உனக்கு முன்னறிவிப்பும் வேண்டுமோ? சரி சரி, நான் வந்தது எதற்கு? அதைக் கேள். நீ தொழில் செய்வதில்லையாமே! சாதித் தொழிலை நிறுத்தலாமோ? இருக்கட்டும். என் நிலை உனக்குத் தெரியுமா? ஆத்துக் காரி இறந்துவிட்டாள், ஆறு திங்கள் ஆகின்றன. உன் நினைவு வந்தது பார்த்துப் போக வந்தேன். உனக்கு நல்ல வேளையாக இளமை மாறிப் போய்விடவில்லை. அழகும் குறைந்துவிடவில்லை, நீ என்னைப் பார்க்கிறாய், என்னைக் கிழவன் என்று எண்ணமாட்டாய், நான் அழகிலும் குறைந்தவன் அல்லேன் என்ன? பேசாமல் இருக்கிறாயே ...! அம் : தமிழுண்டு நானுண்டு, நான் வினவறிந்த நாள் முதல் கொண்டு! இனியும் தமிழுண்டு நான் உண்டு சாவுண்டு! அவ்வளவுதான். பிறகு ... பட் : என்னைப் போகவா சொன்னாய்? அம் : சொன்னால் என்னாய்விடும்? பட் : எண்ணத்தில் ஆழ்ந்துள்ள உனக்கு இடையூறு செய்ய வில்லையடி நான். அம் : எண்ணத்தில் ஆழ்ந்துள்ள என் எதிரில் நாயோடா நரியோடா? பட் : பாட்டுப் பாடலாம், நாட்டார் குளிக்கும் பொதுக் குளம் தானே நீ! அம் : கேட்டுத் திருந்தலாம், துறையறியாது கெட்டொழியும் துடுக்கு வேண்டாம். பட் : அம்மைச்சி தாசி அவள்தொழில் விட்டுவிட்டுச் செம்மைத் தமிழ்பாடச் சென்றதேன்? அம் : - உம்மனைவி தங்கச்சி அக்காபெண், தாசிகளாய்க் கண்டார்க்கும் தங்கச்சு விற்பதனால் தான். எனப் பட்டாபிராமன் முன்னிரண்டடி பாடி அம்மைச்சி, தனிச் சொல்லையும் பின்னிரண்டு அடிகளையும் பாடி வெண்பாவை முடிக் கிறாள். இதில் தங்கச்சு என்பதற்குப் பொருள் தமது இரவிக்கை என்பது பட்டாபிராமன் சினத்தோடு வெளியே செல்கிறான். காட்சி - 2 இடம் : மேற்படியூர்க் குளக்கரை காலம் : மாலை 4 மணி கதை உறுப்பினர் : பட்டாபிராமனும், பத்துப் பார்ப்பனர் களும் நிலைமை : படித்துறையில் பத்துப் பேரும் அமர்ந் திருக்கப் பட்டாபிராமன் நின்றபடி அறிவிக்கிறான். பட் : காலையில் அம்மைச்சி வீட்டுக்குப் போனேன். ஒரு பார்ப்பனன் : என்ன நடந்தது? பட் : காமக்கனல் தணிய அந்தக் காவேரியில் மூழ்கினேன். எல்லோரும் : மகிழ்ச்சி! மகிழ்ச்சி!! பட் : இன்பம் தந்தது மட்டுமல்ல, இருநூறு வெண்பொற் காசுகள் என் காலில் வைத்துக் கும்பிட்டாள், நான் உயர்ந்த குலத்தான் ஆதலால்! ஒருவன் : மேலே? பட் : நான் பெற்ற இன்பம் பெறுக என் இனத்தார். எல்லோரும் : மகிழ்ச்சி! மகிழ்ச்சி!! காட்சி - 3 இடம் : அம்மைச்சி வீடு காலம் : மறுநாள் காலை கதை உறுப்பினர் : அம்மைச்சி, திருப்புளி ஐயங்கார் நடைமுறை : அம்மைச்சி எழுதிக் கொண்டிருக்கிறாள். திருப்புளி சிரித்துக்கொண்டே உள்ளே நுழைகிறான். திருப்புளி : அம்மைச்சி, என்னைத் தெரியுமோ உனக்கு? நான் பரந்தாம ஐயங்கார் இளைய மகன். அம் : சரி, எங்கே, இங்கே? திரு : உன்னிடம் தான் வந்தேன். பூவிடம் வண்டு வந்ததென்றால் காரணம் கேட்கவா வேண்டும்? அம் : இது இரும்படிக்கும் இடமாயிற்றே, நாய்க்கு இங்கே வேலை யில்லையே என்றேன். திரு : பாடிவிடு ஒன்று, ஆடிவிடு சற்றே அம் : ஓடிவிடு விரைவில்! ... (என்று அதட்டிய அதட்டல் வெளியே தள்ளியது பார்ப்பனனை.) காட்சி - 4 இடம் : ³யூர்க் குளக்கரை காலம் : மாலை கதை உறுப்பினர் : பட்டாபிராமன், திருப்புளி முதலிய பதினோரு பேர்கள். பத்துப்பேர் : என்ன நடந்தது? திருப்புளி : காமக்கனல் தணிய அந்தக் காவேரியில் மூழ்கினேன். இருநூறு வெண்பொற் காசுகள் என் காலில் வைத்துக் கும்பிட்டாள். (இவ்வாறு திருப்புளி விட்ட கரடியின் பொருள் பட்டாபி ராமனுக்கு மட்டும் தெரிந்திருக்கும். மற்றவர் நம்பினார்கள், கூட்டமும் கலைகிறது.) காட்சி - 5 (ஒரு திங்கட்குப்பின்) இடம் : செங்குந்தர் தெரு, அந்தக் கவி வீர ராகவ முதலியார் வீடு. காலம் : காலை கதை உறுப்பினர் : அந்தகக் கவி வீர ராகவ முதலியார், பாவல்லாள் அம்மைச்சியம்மையார் நடைமுறை : கவிஞர் சாய்வு நாற்காலியில் உட்கார்ந் திருக்க அம்மைச்சியம்மையார் வருகின்றார். அம் : ஐயா! அம்மைச்சி வணக்கம். வீர : வருக, அம்மையாரே! அணுகிய பார்ப்பனர் அனைவர்க்கும் உங்கள் செருப்படி கிடைக்கவே, அவர்கள் எல்லோரும் உங்களுக்குப் பெருந்தொல்லை விளைக்கக் கூடிக் கூடிப் பேசு கிறார்களாம்! தேர் விழாவில் ஏதாவது நடக்கும் என்று சொல்லு கின்றேன். ஆயினும் அச்சப்படத் தேவையில்லை. அவர்கள் ஐந்நூறு பேர்; தமிழர் பல்லாயிரவர். நாம் தமிழர், எதற்கும் நம் நாட்டாண்மைக்காரரை நீங்கள் காணவேண்டும். நாம் நடந்ததை யெல்லாம் கூறவேண்டும். அவர்கள் அயலூருக்குப் போக வேண்டுமாம், இப்போதே நீங்கள் காணவேண்டும். அம் : சென்று திரும்பி வருகின்றேன் ஐயா, வணக்கம். காட்சி - 6 இடம் : தேரோடுந் தெரு காலம் : தேரோடும் திருவிழா நாள், தேர் அம்மைச்சி வீட்டை அணுகும் நேரம். கதை உறுப்பினர் : திருவிழாக் காண்போர், பார்ப்பனர், அம்மைச்சி அந்தகக் கவி. நடைமுறை : தேர் அம்மைச்சி வீட்டில் ஏற்றப் பட்ட தால் வீடு இடிகிறது. தமிழர்கள் கண்கள் எரிகின்றன. பார்ப்பனர் உதடுகள் சிரிக் கின்றன. அம்மைச்சி: (வெண்பா) பெருமாள் திருநாளைப் பேயாக்க என்றோ வருமாண்டு தோறுமிந்த மாண்பார் - ஒரு நாளும் மாக்குதிரை யேறறிய மாசனங்கள் ஆமணக்கஞ் சாய்க்குதிரை யேறினார் தாம். அந்தகக் கவி: (வெண்பா) பாப்புக் குரங்கைப் படையாகக் கூட்டிவந்தீர் தேப்பெருமா ளேகச்சிச் செல்வரே - கோப்பமைந்த கொம்மைச் சிகரளலங்கைக் கோட்டைஎன்று கொண்டீரோ அம்மைச்சி வாழ்வா ளகம். காட்சி - 7 இடம் : ஊர்க் காவலர் நிலையம் காலம் : பகல் கதை உறுப்பினர் : ஊர்க்காவலர் முதல்வர், பார்ப்பனர் நூறு பேர். நடைமுறை : முறையீடு பட்டாபி : பேசப் பலர்க்கு - எங்களில் பலர்க்கு உதடு இல்லை. உங்களைக் காண, எங்களில் பலர்க்குக் கண்ணின் மேற்புறம் திண்ணை போல் வீங்கியிருப்பதால் கண்ணில்லை. உயிர் தப்பியவர்கள் இந்த நூறு பேர்கள். ஊர்க் காவலர்: அடித்தவர்கள் யார்? பட்டாபி : தமிழர்கள் ஊர்க் காவலர்: எத்தனை பேர்? பட்டாபி : ஐயாயிரம் பேர்கள் ஊர்க் காவலர்: நாள் ஒன்றுக்கு ஐந்து பேர் விழுக்காடு அழைத்துக் கேட்கின்றோம். பேர் கொடுங்கள். பட்டாபி : அப்படியானால் போய் வாருகின்றோம்.  வஞ்சவிழா தீபாவளி காட்சி - 1 இடம் : கங்கைக் கரை கதை உறுப்பினர் : மகரிஷிகள், இந்திரன் மகரிஷிகள் சொல்லுகிறார்கள்: தென்பாங்கு வளம் மிக்கது. தமிழர்கள். நெய்யொழுகும் செந்நெற் சோறு உண்கிறார்கள் வேண்டுமட்டும். பெரும் பொழுதில் ஒரு பருவமாயினும் சிறு பொழுதில் ஒரே நாழிகையாயினும் ‘இல்லை’ என்னும் துன்பம் எத் துறையிலும் அவர்கட்கில்லை. முத்துக் குவிக்கும் அலைகடல் அங்கே! தெங்கும், கரும்பும்; தேனும் அமுதத்தினும் ஆயிரம் பாங்கு இனிமை அங்கே. தமிழர் வாழ்வைப் பறிக்க இந்திரா நீ துணை செய். இந்திரன் சொல்லுகிறான்: விண்ணப்பம் நன்று! மகரிஷிகள் அமைக! மூச்சுடையேன் தமிழர் வாழ்வைப் பறிப்பேன்; தோளுடையேன்; ஆரியரைக் காப்பேன். இன்று தமிழர் நிலை - இன்று தமிழர் தலைமை எவ்வாறு? மகரிஷிகள் சொல்லுகிறார்கள்: அவர்களின் ஒழுக்கம் நமக்குத் துணை செய்கிறது அவர்களின் தலைவராயினும். தந்திரம் அயோக்கியர் செயல் - கேடு விளங்கும் பெண்களும் மன்னிக்கப்படுதல் வேண்டும். இவைகள் அவர்களின் கொள்கை! இந்திரன் சொல்லுகிறான்: வினாடியில் அழிப்பேன். என் சிரிப்பு நாளைய வெற்றியை உறுதியாக்குவது - வாழிய ஆரியர். மகரிஷிகள் சொல்லுகிறார்கள்: வடித்தெடுத்த சோமரசம் இந்திரா உனக்கு மிகுதியாய்க் கிடைக்க! அமுதில் இணைந்த உன் வாழ்வு இமயத்திலும் பெரிதாகுக. காட்சி - 2 இடம் : தென்பாங்கில் ஓர்பால் பொதுவில் கதை உறுப்பினர் : தமிழ்ப் பெரியார் பலர், மன்னன். தமிழ்ப்பெரியார் சாற்றுகின்றார்கள்: தென்றலின் குளிரும், திங்களின் குளிரும் வாழிய! செந்தேனும் செங்கரும்பும் செந்தமிழும் இனிமை செய்க.அவை வாழிய. தமிழர் தோள் வெல்க.வானிடைக் கதிர் வரவு போல் அரசே, பொது ஆலிடை வருக; நின் செங்கோல் வாழ்க. அரசன் சொல்லுகிறான்: தமிழர் ஒழுக்கம் வாழ்க; அதை உலகு மேற்கொண்டு உய்க. அறிஞர் நீவிர் வாழ்க! பெரியீர் புதுமை உண்டோ? தமிழ்ப்பெரியார் சாற்றுகின்றார்கள்: அணைகடப்பது நீரின் இயற்கை; அன்பு தவிர்வது ஆரியர் இயற்கை. அரசன் அறைகின்றான்: தீயது கேட்கின்றேன். வாழிய தமிழர் தோள்கள். நீவீர் விரும்பாமை ஆரியர் இயற்றுவாராயின் நான் வாழ்தல் வீண்! தமிழ்ப்பெரியார் சாற்றுகின்றார்கள்: தமிழர் வாழ்வு பறிப்பது ஆரியர் நோக்கம், ஒன்று, இரண்டு, மூன்று முறை கேட்கலானோம் அவர்களின் கொடுஞ் செயல் பற்றி! அரசன் அறைகின்றான்: ஆரியர் அன்பு எய்துக. அவர்கள் ஒழுக்கத்தை மேற்கொள்க - என் ஆணை இது. தமிழ்ப்பெரியார் சாற்றுகின்றார்கள்: அரசே, ஆணை பன்முறை பயனற்றுப் போயிற்று. அரசன் அறைகின்றான்: தமிழர் படை எழுக, மேற்குத் தொடர் மலை போல்! எழுக! ஆரியர் மேல் செல்க. பெண்களை, முதியாரை, நோயி னரைக் கொல்லாது விடுக. வேல் மறவர் வேலின் நுனி, ஆரிய ரின் நடுமார்பில் பாய்ச்சாதிருக்க, அவர்கள் மாந்தராதலின். தமிழ்ப்பெரியார் சாற்றுகின்றார்கள்: அரசன் அறத்தோள் வாழ்க. காவிரியாற்றின் கருமணலின் தொகையள வாண்டுகள் அரசு, முறை செய்து வாழ்க! காட்சி - 3 இடம் : கங்கைக் கரை கதை உறுப்பினர்: மகரிஷிகள், கரியன் மகரிஷிகள் சொல்லுகிறார்கள்: இந்திரன், செந்தமிழரை வெல்லும் திறமிலான் யாம் அறிவோம். தந்திரத்தால் வெல்வான் என நினைத்ததும் தப்பு; அவன் தோற்றோடினான். தமிழர்க்கு நீ கரியன் தமிழன் போன்றாய்! நீ தந்திரன்! இந்திரன் போன்றானில்லை; வென்று வருக தமிழரை! நீ வாழ்க! கரியன் சொல்லுகின்றான்: பல்லாயிரம் பெண்கள் பச்சை மயில்கள் போல் எழுக! படைக்கலம் தூக்குக! பாவையரைத் தமிழர் கொல்லாராதலின். என் ஆருயிர்க் காதலி அமைக தேர் நடத்துபவளாக! அவள் தமிழச்சி எனப்படுவதால். தேரேறிச் செல்வேன் போரேறி வெற்றிமாலை பூண்பேன். எதிர்பார்த்திருக்க! காட்சி - 4 இடம் : கங்கைக் கரை கதை உறுப்பினர்: மகரிஷிகள், கரியன் மகரிஷிகள் சொல்லுகிறார்கள்: வென்றனை கரிய, உன் தந்திரம் வென்றது. வீழ்ச்சி தமிழர்க்கு! மீட்சி ஆரியர்க்கு! இமயமலை சாயினும்; மறத் தமிழர் சாயார் என்றது எங்கள் உள்ளம். அது தோற்றது, கரிய, தமிழரைத் தமிழ் மன்னனை உன் தந்திரம் - சூழ்ச்சி வெல்லும் என்றது எங்கள் உள்ளம். அது வென்றது - நிலை வாழ்க, தமிழ் மன்னன் அழிந்த நாள் நம் விழா நாள், தமிழர்க்குத் துன்ப நாளாயினும். தமிழர் வாழ்வை - தமிழ் நாட்டின் ஒரு பகுதியைப் பறித்த நாள் - நம் விழா நாளாகுக. தமிழர்க்கு அது இழிவு நாளாயினும்.  விகடக் கோர்ட் விகடக் கோர்ட் புதுவை நீதிபதி மிஸ்டர் தடிராமன் முன்பாக மோட்சத்திற்குப் போய்த் திரும்பிவந்த குற்றவாளி கோர்ட்டில் சிவபெருமான் வரட்டும்! வழக்கின் சாரம்: கணேசப் பிள்ளை கம்பெனியில் வேலை பார்த்துவந்த அமெரிக்கன் கிராப் அப்பாசாமி என்பவனிடம், மேற்படி கணேசப்பிள்ளை 300 ரூபாய் கொடுத்து, விழுப்புரம் போய் வியாபாரி ஒருவரிடம் செலுத்திவிட்டு வரச்சொன்னார். அந்த அமெரிக்கன் கிராப், விழுப்புரம் போகாமல் திருவண்ணாமலைத் தீபதரினத்திற்காகப் போன இடத்தில், பௌன் புட்டா மாணிக்கம் தாசி வீட்டில் விஷசுரம் கண்டு, இரண்டு நாளில் இறந்துபோனான் என்று தெரிந்து தாசி வீட்டைப் பரிசோதித்ததில், அமெரிக்க கிராப்பினுடைய துணிப் பெட்டி கிடைத்தது. அதன் பேரில் அந்தத் தாசியின் மேல், கணேசப்பிள்ளை வழக்குத் தெடர்ந்தார். இந்த வழக்கில், கணேசப் பிள்ளைக்காகச் சுயமரியாதைக்கார சுப்பிரமணியனும் (வக்கீல்), தாசிக்காக முற நாமம் முத்து நாயுடுவும் வாதிக்க ஏற்றுக் கொண்டார்கள். நீதிபதி : (வழக்கை ஆரம்பித்துப் பிரதிவாதியான தாசியை நோக்கி) இதில் நீ சொல்வதென்ன? தாசி : நான் குற்றவாளியல்ல. பணத்தை நான் கண்டதே கிடையாது. அவர், பிரஸ்தாபதேதியில் என் வீட்டுக்கு வந்தார். அவரை, ஏற்கனவே எனக்குத் தெரியும். என்ன செய்தி என்று நான் அவரை விசாரித்தபோது, தாம் 300 ரூபாயுடன் விழுப்புரம் வந்ததாகவும், விழுப்புரம் ஜங்ஷனில் தம் கண்ணில் திடீரென்று சிவகணந் தோன்றினதாகவும், சிவகணத்தோடு திருவண்ணாமலைத் தீப தரிசனம் தோன்றி மறைந்ததாக வும், அதனால் தாம் திருவண்ணாமலைக்கு வந்துவிட்டதாக வும், இதனால் தம் கையில் இருப்பது ஊரான் வீட்டுப் பணம் என்பதையும் தாம் நினைக்கவில்லை எனவும் சொன்னார். நான் உடனே அவரைப் பார்த்து, ‘ஐயா, சிவகணம் தோன் றியதையும், தீப தரிசனம் தோன்றியதையும் ஜங்ஷனில் நீர்மாத்திரமா பார்த்தீர்? இதை நான் நம்பவில்லை’ என்று சொன்னபோது, ‘நீ நம்பாவிட்டால், தென்னிந்திய ரயில்வே கம்பெனியாரை வேண்டுமானாலும் கேள்’ என்று சொன்னார். சில நேரம் என் வீட்டில் தங்கினார். துணிப் பெட்டியை என்னிடம் பூட்டியபடி கொடுத்துவிட்டுப் போனார். அதன் பிறகு, திருவண்ணாமலைத் தீப சுரத்தால் இறந்துபோன 150 பேர்களில், இந்த அமெரிக்கன் கிராப் அப்பாசாமியும் ஒருவர் என்று கேள்விப்பட்டேன். அதன்பிறகு ஒருநாள், என் வீட்டைப் பரிசோதித் தார்கள். இறந்தவருடைய துணிப்பெட்டியைக் கைப்பற்றிச் சென்றார்கள். (இதன்பிறகு தாசியைச், சுயமரியாதைச் சுப்பிரமணியம் குறுக்கு விசாரணை நடத்தினார்.) சுப்பிர : உனக்கும் இறந்தவருக்கும் இதற்குமுன் தேக சம்பந்தம் உண்டா? தாசி : இல்லவேயில்லை. சுப்பி : நன்றாய் யோசித்துச் சொல்! தாசி : நாங்கள் இருவரும் சகோதரர் மாதிரி. சுப்பி : இது யாருடைய படம் பார்த்துச் சொல்! (தாசியிடம் ஓர் உருவப் படம் கொடுக்கப்பட்டது) தாசி : (பார்த்து) ஆம். இந்த உருவம் என்னுடையதும் அவருடையதும் தான். சுப்பி : உடற்சம்பந்தம் உண்டு என்பது, இப்போது ஒத்துக் கொள்ளு கிறாயா? தாசி : ஆம், நான் தாசிதானே! சுப்பி : நீயும் இறந்தவனும் கூடிக்கொண்டு, திருவண்ணாமலைக் கடைக்குப் போனதுண்டா? தாசி : இல்லை. (இதன்பிறகு சிலர், சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். பின் ஐந்தாவது சாட்சியாகிய தென்னிந்திய ரயில்வே கம்பெனி மானேஜர் விசாரிக்கப்பட்டார்.) சுப்பி : மானேஜரே, அமெரிக்கன் கிராப் அப்பாசாமிக்கு - விழுப்புரம் ஜங்ஷனில் சிவகணம் தோன்றியதையும், தீப தரிசனம் தோன்றியதையும் நீவிர் அறிவீரா? மானேஜர் : எனக்கொன்றும் தெரியாது. சுப்பி : இறந்த குற்றாவளிக்குத் திருவண்ணாமலை ஞாபகம் வரும்படி, நீர் யாதாகிலும் காரியம் செய்ததுண்டா? மானேஜர் : (யோசித்து) அவனுக்கென்று செய்யவில்லை. எல்லாரும் திருவண்ணா மலைக்குப் போய்த் தீப தரிசனம் செய்யுங் கள் என்று, எம் கம்பெனியின் விளம்பரப்படம் ஒன்று ஸ்டேஷன்களிலெல்லாம் ஒட்டியிருக்கிறோம். சுப்பி : உமக்கென்ன கவலை? மானேஜர் : மக்கள் தீபதரிசனம் செய்து, மோட்சமடைய வேண்டும் என்ற கவலைதான்! சுப்பி : அப்படியானால், ஜனங்களை உங்கள் ரயிலில் சும்மா ஏற்றிச் செல்லலாமே? மானேஜர் : குருதட்சணைக்குப் பதிலாக, டிக்கட் விற்றுப் பணம் சம்பாதிக்கிறோம். சுப்பி : ஆனால், அ. கிராப் சிவகணமென்றதும், தீப தரிசனம் என்றதும், உங்கள் படத்தைப் பார்த்துச் சொன்னதுதானே? மானே : அப்படித்தானிருக்க வேண்டும்; படமும் அப்படித்தான் சித்தரித் திருக்கிறோம். சுப்பி : வீணாக உங்கள் விளம்பரங்களால் ஜனங்கள் அறிவு கெட்டுப் போகிறார்கள் என்பதை, இந்த வழக்கால் நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள்! மானே : என்ன ஐயா, அப்படிச் சொல்லி அவசரப்படாதீர்கள்; பிரமோத்தரகாண்டம் என்னும் சாத்திரத்தில், நைமி சாரண்யவாசிகட்குச் சூதபுராணிகர் ஸ்தல யாத்திரையைப் பற்றித் திருவாய் மலர்ந்தருள - அதற்காக நைமிசாரண்ய வாசிகள், சூதபுராணிகரின் காலில் விழுந்து விழுந்து கும்பிடுகிறார்கள். நாங்களும், இக்காலத்தில் அவருடைய வேலையைச் செய்து மோட்சம் அடையச் சொல்லு கிறோம். எங்களிடம் ஜனங்கள் நன்றி செலுத்த வேண்டும். சுப்பி : ஆனால், இப்போது இறந்த அமெரிக்கன் கிராப் அப்பா சாமியும், மோக்ஷத்திற்குத்தான் போயிருப்பானோ? மானே : அவன் மாத்திரமல்ல; மலேரியா சுரத்தால் அங்கு மாண்ட 150 பேருக்கும், நேரே மோக்ஷமே! நீதிபதி : (கடைசியாக) ஏ! பௌன்புட்டா மாணிக்கம் தாசி! உனக்கும் இறந்தவனுக்கும் சம்பந்தமிருந்து வந்ததாகவும், நீயும் அவனும் மதுபானமுண்டு களித்ததாகவும், உன் மாமனிடம் அன்றைக்கு 200 ரூபாய் கொடுத்து ஊருக்கு அனுப்பிய தாகவும், அவன் சுரத்தால் உன் வீட்டில் இறந்து போன போது நீ பிரேதத்தை முனிசிபாலிட்டியாரிடம் ஒப்படைத்த தாகவும், இப்போது சொன்ன சாட்சியங்களால் தெரிகிறது. கடைசியாக, நீ சொல்லவேண்டியதையும் சொல்! உனக்காக உன் வக்கீலும் வாதித்து விட்டார். எதிரி தரப்பு வக்கீலும் சொல்லியாயிற்று. இதற்குள் - ‘மோக்ஷலோகம் போய்த் திரும்பி வந்தேன்’ என்ற கூச்சல் கேட்டது. அ.கி. அப்புசாமி: (நீதிபதி முன் ஓடிவந்து நின்று) தாசி பௌன் புட்டா குற்றவாளியல்ல ஆகையால், நான் மோக்ஷலோகம் போக வேண்டும். அவளையும் விடுதலை செய்து அனுப்பும்படி, சிவபெருமான் உமக்குச் சொல்லச் சொன்னார். சீக்கிரம்! நாங்கள் இருவரும் போக வேண்டும்! - என்றான். (நீதிபதி தடி ராமனவர்கள் நடுங்கிப் போனார். கோர்ட்டில் நிசப்தமும் பயமும் ஏற்பட்டது. இச்செய்தி அதற்குள் எங்கும் பரவிற்று.) நீதிபதி : இறந்துபோன அ.கி. அப்பாசாமி திரும்பி வந்த ஆச்சரி யத்தைக் கொண்டும், அவன் திருமேனி திருநீற்றாலும் ருத்ராக்ஷத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பது கொண்டும், திகைத்துப் போய் வாய் குளறி அ.கி. அப்பாசாமியின் எதிர்ப்பக்கத்து வக்கீலான சுய மரியாதைச் சுப்பிர மணியனைப் பார்த்து, ‘என்ன சொல்லுகிறீர்?’ என்று கேட்பதுபோல தலையை அசைத்தார். இதற்குள், மோக்ஷம் போய் வந்த அ.கி. அப்பாசாமி வெகு கோபமாய்த் தனக்காக விமானம் காத்திருப்பதாகவும், சிவ கணங்கள் காத்திருப்பதாகவும் சொல்லி, ஓர் பெருஞ் சத்தம் போட்டான். கோர்ட்டில் இருந்த ஜனங்கள் எல்லாரும் ஓட்டம் பிடித்தார்கள். கோர்ட்டார் மாத்திரம், நடுக்கத்தோடு, தீர்ப்புச் சொல்லக் காத்திருந்தார்கள். சுப்பிர : அ.கி. அப்பாசாமி சட்டப்படி குற்றவாளியாகையால், குற்றவாளிகள் நிற்கவேண்டிய இடத்தில் நிற்கட்டும்! அ.கி. அப்பாசாமி: நானா குற்றவாளி? (நீதிபதியைப் பார்த்து) தீர்ப்புச் சொல்லமாட்டீரா? நான் தாசியை அழைத்துப் போகிறேன். (தாசியை நோக்கி) வா! நேரமாகிறது! நீதிபதி : நான் என்ன செய்வது? வக்கீல் சம்மதத்தையும் அனு சரிக்கத்தான் வேண்டும். இதற்குள், முற நாமம் முத்து நாயடுவாகிய தாசியின் தரப்பு வக்கீல் எழுந்து: - “நீதிபதியவர்களே! உங்கள் தாமதத்தால், இந்தக் கோர்ட் டாருக்கும் வக்கீல்களுக்கும் பெரிதோர் ஆபத்து வந்து விடும் போல் தோன்றுகிறது! பிரதிவாதியோ, இப்போது மனிதர் என்ற நிலையில் இல்லை! கேவலம் அவர்களை - ஒரு தாசியென்றும் நினைக்கக்கூடாது; தேவர்களின் வரிசையில் வைத்து எண்ணவேண்டும்! அவர்கள் கோபத் துக்குப் பாத்திரமாகக் கூடாது. அவரை அழைத்துப் போக வந்திருப்பவரைப் பற்றி, நான் அதிகம் சொல்லத் தேவை யில்லை. அ.கி. அப்பாசாமி (அப்பாசாமியை நோக்கி, ‘உங்கள் பேரைச் சொன்னதற்காக மன்னிக்கவும்’) குற்ற வாளி என்று எதிர் வக்கீல் சொல்கிறார். இந்து மதத்தின்படி பார்த்தால், அவர் குற்றவாளியல்ல. மாணிக்கவாசகர் என்ற மகத்வமிக்க சிவனடியார் ஒருவர், அரசன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தைக் கோயில் கட்டியும் மோக்ஷம் அடைந்தார். சுந்தர மூர்த்தியடிகள், பரவையாகிய தாசியை வைத்திருந்தார். இவர்களுக்கிடையில், சிவபெருமானே கூட்டிக் கொடுப்பவராக இருந்து வேலை பார்த்தார். அதே பரவை நாச்சியார் இந்தத் தாசி என்றும், - அதே சுந்தர மூர்த்தியடிகள் இந்த அ.கி. அப்பாசாமி என்றும்தான் நான் நினைக்கிறேன். கோர்ட்டார் அவசரப்படக் கூடாது. உடனே இருவரையும் விடுதலை செய்ய வேண்டும். சுப்பி : (எழுந்து) மாணிக்கவாசகர் விஷயமும், சுந்தரமூர்த்தி விஷயமும், பரவை விஷயமும் சிவபெருமான் விஷய மும் நடந்தபோது, இந்த வக்கீல் எங்கிருந்து பார்த்திருப் பாரோ தெரியவில்லை. உங்களிடம், இந்த நிலையில் நான் இப்போது அதிகம் பேச நினைக்கவில்லை. சுருக்கமாக என் வாதத்தை முடித்து விடுகிறேன். திருவண்ணா மலையில் இறந்துபோன 150 பேர்களில், இவன் ஒருவ னல்லன்! இதைப்பற்றி நன்றாய் ஆராய்ந்து பார்க்கச் சந்தர்ப்பம் தேவை. இன்னும் மற்ற விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படித் தெரிந்து கொண்ட அளவில் இந்தக் குற்றவாளிகள் - பணத்தை மோசஞ் செய்ததோடு, பல குற்றங்கள் செய்த தாக ருஜுப்படுத்த நினைக்கிறேன். அன்றியும், மோக்ஷம், சிவன், விமானம், சிவகணம் இந்தக் கதைகள் நம்பத்தக்க கதைகளல்ல! முறநாமம் : சிவனிருப்பதாக நம்புங்கள்! நீதிபதி : சிவனில்லையென்றா நினைக்கிறீர்? சுப்பி : சரி, அவர் இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். அப்படிப் பார்த்தாலும், குற்றவாளிகளைக் கோர்ட்டாரிடம் அனுப்பாமல் கோர்ட்டாரை அவமதித்துக், குற்றவாளி களைச் சிவலோகம் அழைத்துப்போவது, சிவபெருமான் மேல் பெரிய குற்றமாகிறது. ஆதலால், சிவபெருமானைக் கோர்ட்டுக்குக் கொண்டுவந்து சேர்க்கவேண்டும். அது வரைக்கும், இந்த இருவரையும் சிறையில் வைக்க வேண்டும்! எதிரி : ஐயையையையோ! சிவபெருமான் இவர்கட்குப் பரிந்து வந்து நம்மைச் சும்மா விடுவாரா? சுப்பி : பொய்யான சிவபெருமானுக்காகவும் இதோ நிற்கும் அயோக்கிய நாய்களுக்காகவும் நாம் நீதி தவறலாகுமா? அ.கி.அ. : ஆஹா அப்படியா சொன்னீர்? இதோபார்! இதோபார்? சுப்பிர : நீதிபதியவர்களே, வழக்கை ஒத்திப் போடவேண்டும். நீதிபதி : அதுவரைக்கும்? சுப்பிர : இவர்கள் கடுங்காவலில் இருக்கவேண்டும். நீதிபதி : எத்தனை வாரம்? சுப்பிர : நீங்கள் நம்பும் அந்தச் சிவன் அகப்படு மட்டும். நீதிபதி : (குற்றவாளியைப் பார்த்து) நீ தயவுசெய்து சிவபெருமானை அழைத்து வா - அவர் விலாசம் தெரிந்தால் சொல்! நீதிபதி : இந்த வழக்கில் அமெரிக்கன் கிராப், பௌன்புட்டா, சிவபெருமான் மூவரும் விசாரிக்கப்படவேண்டிய அம்ஸங்கள் இன்னும் இருக்கின்றன. சிவபெருமான் கோர்டுக்கு வரும்வரைக்கு இவர்கள் சிறையில் இருக்க நான் தீர்ப்புச் செய்கின்றேன்.  கோயில்இருகோணங்கள் காட்சி - 1 இடம் : வீடு (மகன் கூடத்தில் மேசையின் எதிரில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறான். தாய் வருகிறாள்.) தாய் : கோயிலுக்குப் போக வேண்டாமா தம்பி? மகன் : படித்துக் கொண்டிருக்கிறேனம்மா. தாய் : கோயிலைவிட முக்கியமா, படிப்பு? மகன் : சிக்கலான கேள்வி! ஏனம்மா, படிப்பைவிட கோயிலா முக்கியம்? தாய் : கோணல் புத்தி. கடவுள் அருளால் கல்வி வரும்; கல்வியால் கடவுள் அருள் கிடைக்குமா? மகன் : கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன் என்று சொல்லுகிறார்கள் தமிழ்ச்சான்றோர்கள். கடவுள் அருளால் கல்வி வருவது உண்மையானால் கல்விச் சாலைகள் எதற்கு? நான் கஷ்டப் பட்டு படிப்பது எதற்கு? தாய் : கல்வியால் கடவுள் அருள் கிடைக்குமானால் கட்டியிருக்கும் கோயில்கள் எதற்கு? மகன் : என் கேள்வியும் அதுதானம்மா? தாய் : (திகைப்பு) அப்படியானால் கோயிலுக்குப் போகமாட்டாயா? மகன் : போகிறேனம்மா! கோயிலுக்கு அப்பா போகிற வழக்கமாயிற்றே. தாய் : அவர் ‘எக்சிபிஷனு’ க்குப் போயிருக்கிறார். மகன் : கோயிலைவிட ‘எக்சிபிஷன்’ முக்கியமென்று அப்பா நினைக்கிறார். அது சரிதானே அம்மா? தாய் : தப்பு. அவருக்கு நாளாவட்டத்தில் கோயில் நினைவு குறைந்து கொண்டு வருகின்றது. மகன் : காரணம் ? தாய் : ஏழ்மைதான். மகன் : ஆமாம் அம்மா. பணக்காரருக்குத்தான் கோயில், கும்பா பிஷேகம், தேர், திருவிழா எல்லாம். அப்படியிருக்கும்போது...? தாய் : இப்போது கோயிலுக்குப் போகமாட்டேன் என்கின்றாயா? மகன் : போகிறேனம்மா. அப்பா கோயிலுக்குப் போகாவிட்டால் நீங்கள் போவீர்களே அம்மா? தாய் : பெண்கள் போகிற மாதிரியாகவா இருக்கிறது. இன்றைய கோயில்கள்! மகன் : உண்மை! வியப்பு! தாய் நுழையத் தகுதியற்ற கோயிலில் இந்தச் சேய் நுழையலாமா அம்மா? தாய் : அப்படியானால் இப்பொழுது கோயிலுக்குப் போகமாட்டாயோ? மகன் : போகிறேனம்மா. தாய் : அபிஷேக ஆராதனைக்குரிய சாமான்கள் எல்லாம் இதோ! இந்தாபணம் (பணத்தை நீட்டுகிறாள்.) மகன் : (பணத்தை வாங்காமல்) பரமன் பூசனைக்குப் பணம் எதற்கம்மா? தாய் : கோயிலில் நுழைய டிக்கட்! மூலவரை நெருங்க டிக்கட்! மகன் : ஷோ! கொட்டகை மாதிரி! டிக்கட் வாங்காவிட்டால்? தாய் : கதவின் தாழ் கடுகளவும் நகராது. மகன் : அன்புதானே அம்மா சிவம்! அதற்கு அடைக்கும் கதவு ஏன்? அகற்றும் தாழ் எதற்கு? தாய் : பெரியவர்கள் ஏற்பாட்டில் பிழை சொல்லலாமா, தம்பி. மகன் : அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? நீங்கள் சொல்லும் பெரியோர்களை நோக்கித்தானம்மா திருவள்ளுவர் கேட்கிறார் அப்படி. தாய் : கோயில் வருமானத்திற்காக அப்படி வைத்திருக்கிறார்கள். மகன் : நல்ல கூட்டுக் கம்பெனி! இன்னும் என்ன அம்மா செலவு? தாய் : அபிஷேகம்! சாத்துபடி ஆனபின்பு, அய்யர் அர்ச்சனை என்று வருவார், தட்சணை கொடுக்க வேண்டும். அதன் பிறகு உன் பெயர், குலம்,கோத்திரம், நட்சத்திரம் எல்லாம் கேட்பார். மகன் : வகுப்புவாத விலாசம் எதற்கம்மா? தாய் : தமிழிலே கேட்டுக்கொண்டு போய், சிவபெருமானிடம் இன்ன விலாசத்தாரை நல்லபடி வைக்கவேண்டும் என்று சமஸ் கிருதத்திலே ... மகன் : ரெகமண்டேஷனா? ஏனம்மா! தமிழிலே சொன்னால் சங்கரனுக்கு விளங்காதா? தென்னாடுடைய சிவனே போற்றி என்றாரே மாணிக்கவாசகர்; சிவபெருமான் திராவிடநாட்டு ஆசாமிதானே அம்மா? தாய் : அதெல்லாம் தமிழிலே சொல்லக் கூடாது என்று சொல்லுகிறார்கள். மகன் : எந்த மடப்பயல்? தமிழை அருளிச்செய்து, தமிழர் கட்டிய திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தென்னாடுடைய சிவபெருமானுக்கு தமிழ் நஞ்சானால், செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள அவமதிப்பு கொஞ்சமா அம்மா! தாய்மொழியை தலை கவிழ்க்க நிறுவப்பட்டதே சங்கரன்கோயில் என்றால் எந்த நாய் அணுகும் அந்த நச்சுப் பொய்கையை! தாய் : அப்படியானால் இப்போது கோயிலுக்குப் போகமாட்டாயா? மகன் : போக வேண்டுமா? தாய் : (கோபமாக) ஆமாம் ... போகத்தான் வேண்டும். மகன் : போகிறேனம்மா. நான் கோயிலுக்குப் போய் திரும்பிவர எவ்வளவு நேரம் பிடிக்கும்? தாய் : அபிஷேகம், சாத்துபடி, ஆராதனை, வேதபாராயணம், பிரசாத விநியோகம், பெரிய மேளம், சின்ன மேளம், சாமி அம்மன் திருப்பள்ளி, திருக்கடைக் காப்பு, பண்டாரத்தின் தேவாரப் பண்ணோடு கோயில் கதவடைப்பு! மகன் : தமிழுக்கு என்ன அவமதிப்பு! போகவா அம்மா? தாய் : (கோபமா) என்ன, போகவா -அம்மா. (மகன் கோயிலுக்கு வேண்டிய சாமான்களை எடுத்துக்கொண்டு போகிறான்.) காட்சி - 2 இடம் : கோயில் (கோயிலின் எதிரில் நூற்றுக்கணக்கான ஆண், பெண் பிச்சைக்காரர்கள் இரு வரிசையாக உட்கார்ந்து கோயிலுக்கு வருவார் போவாரை நோக்கிக் கெஞ்சி அழுகிறார்கள்.) 1. கால் இல்லாதவன் அய்யா! 2. இரண்டு காலும் இல்லாதவனய்யா! 3. கையில்லாதவனய்யா! 4. இரண்டு கையும் இல்லாத முண்டம் அய்யா! 5. கண் தெரியாத கபோதி அய்யா! 6. இரண்டு கண்ணும் தெரியாதவன் அய்யா! 7. புண்ணு புடிச்சவன் அய்யா! 8. புண்ணு வெடிச்சு புழுவு நெளியுதய்யா! 9. புள்ளைத்தாச்சி அய்யா! 10. பச்சைப் பிள்ளைக்கு பால் இல்லை அய்யா! (பணக்காரக் குடும்பம் சில பிச்சைக்காரர்கள் நீட்டிய கைகளை ‘சீச்சி’ என்று விலக்கிக் கொண்டு கோயிலுக்குள் போகிறார்கள். பூசனைத் தட்டுகளோடு, அவர்கள் ஏறிவந்த கார்கள், முழக்கத்தோடு ஒருபுறம் குழுவுகின்றன.) மகன் : (இக்காட்சியைக் கண்டு) பணக்காரரின் நடிப்பு! பஞ்சைகளின் துடிப்பு! ‘பசி பசி’ என்று ஏந்திய கைப் பந்தலின் கீழ் குனிந்து போகிறார்கள். கொடிய நெஞ்சம் படைத்தவர்கள். ஏங்கித் துடிக்கும் ஏழைகளைக் கண்டும் இரக்கங் காட்டாதே; என் தரகர்களின் நன்மை கருதி என் கோயிலுக்கே தட்டு எடுத்துக் கொண்டு வா என்று கூறுகிறதா இதிலுள்ள சிற்பச்சிலை? இரக்கமே உருவாயமைந்தவன், எல்லாம் வல்ல எம்பெருமா னென்றால் ஏழைகளைக் கண்டும் இரக்கமில்லாமல் உள்ளே செல்லும் இவர்கள் உள்ளத்தை அவன் அருளா அண்டும்? இல்லை; இருள்தான் மண்டும்! (இதற்குள் அவன் அருகில் அழுகின்ற பிள்ளையைக் காட்டி அலறுகின்றாள் ஒருத்தி.) ஒருத்தி : பச்சைக் குழந்தைக்கு உதட்டில் பால் பட்டு பத்து நாளிருக்குமய்யா! (மகன் பால் செம்பை எடுத்து அவளிடம் கொடுக்கிறான். பழத்தில் இரண்டைப் பிய்த்து அவளிடம் கொடுக்கிறான். அதைக் கண்ட பிச்சைக்காரர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். அனைவருக்கும் எல்லாவற்றையும் கொடுத்து விடுகிறான். கால் இல்லாதவர்களும் கண் இல்லாதவர்களும். இவனை அணுகும் முயற்சியில் தடுமாறி விழுந்து அலறுகின்றார்கள். பதறி ஓடி அவர்களை எல்லாம் தாங்கி நிறுத்திக் கையிலிருந்த பணத்தையெல்லாம் பங்கிட்டு விடுகிறான். மீதியிருந்த தட்டையும் வெறுங்கையோடு இருந்த கிழவனிடம் கொடுத்து விடுகிறான். கிழிந்த துணி போர்த்திய ஒரு கிழவிக்கு அவள் கெஞ்சியது கேட்டுத் தன் மேலாடையைப் போர்த்துகின்றான். கையை மெய்யில் போர்த்திய மற்றொரு கிழவனுக்கு தன் சட்டையைக் கழற்றிப் போடுகிறான். அரையில் கட்டியிருந்த எட்டு முழ வேட்டியில் பாதியை ஒரு பச்சைக் குழந்தையின் பரிதாபங் கண்டு கிழிக்க முயலுகையில், பிச்சைக் காரர்கள் இரக்கத்தால் வேண்டாம் என்று தடுக்கிறார்கள். ஓர் அர்ச்சகன் கோயிலுக்குள்ளேயிருந்து வெளியே வருகிறான்.) அர்ச்சகன் : நோக்கு அதுதானோ கோயில்? மகன் : ஆம்; நடமாடும் கோயில். அர்ச் : கொண்டு வந்ததை கோயிலுக்குண்ணோ கொடுக்கணும். மகன் : (பாட்டு) படம் ஆடு கோயில் பரமர்க்கு ஒன்றுஈயில் நடம்ஆடு அக்கோயில் நம்பர்க்கு அஃது ஆகா நடம்ஆடு அக்கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில் படம்ஆடு அக்கோயில் பரமர்க்கு அஃதுஆமே. நடமாடும் கோயில்களாகிய இந்த ஏழைகளுக்கு ஒன்று கொடுத்தால், படம் ஆடு கோயிலில் எழுந்தருளியிருக்கிற பரமர்க்கு கொடுத்தது மாதிரி. அதைவிட்டு கோயிலிலுள்ள சிலைக்கு ஒன்று செலவிட்டால் அது இந்த ஏழை மக்களை ஏமாற்றிய மாதிரி. அர்ச் : சுயமரியாதைக்காரர்கள் பேசும் ... பேச்சு! நடராஜ மூர்த்தியை நசுக்க நல்ல தந்திரம்! மகன் : நான் சொன்னது திருமூலர், திருமந்திரம். (ஏழைகளை மற்றொரு தரம் பார்க்கிறான். அவர்கள் ஆசையோடு ஒவ்வொன்றையும் அருந்தி மகிழக் கண்டு தன் முகத்தில் மகிழ்ச்சி காட்டிச் செல்லுகிறான்.) காட்சி - 3 இடம் : வீடு தாய் : இதென்ன அலங்கோலம்! யார் உன்னை இப்படி வருந்தச் செய்தார்? மகன் : சிவபெருமான் தன் திருமேனி காட்டி என்னைத் திருந்தச் செய்தாரம்மா. யாரும் வருந்தச் செய்யவில்லை. தாய் : சிரிப்பு வருகிறது. திருமேனி காட்டுவதாவது: நீ பார்ப்பதாவது! மகன் : உண்மையம்மா. இரக்கமே அவர் திருமேனி. என் இதயம் அதுவாயிற்றே. தாய் : எங்கே தம்பி? மகன் : கோயிலில்தானம்மா. தாய் : எந்தக் கோயில்? மகன் : நீங்கள் சொன்ன படமாடும் கோயிலின் பாதையில் வருந்தும் நடமாடுங் கோயில்களில்! தாய் : அப்படி என்றால் ... மகன் : அல்லலடையும் அனாதைப் பிச்சைக்காரர்கள். தாய் : கோயிலுக்குப் போகவில்லை? மகன் : ஆலயம் என்னை அழைக்கவில்லையே; எம்பெருமான் என் நெஞ்சத்தை இழுக்கவில்லையே; அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பார்கள். எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள். இயல்புடைய இந்த மூன்று தெய்வங்களும் என் மனத்தை துறந்ததே இல்லை. நான் அவர்களை மறந்ததே இல்லை. கோயில் என்னை கூப்பிடவில்லை தாயே! தாய் : கொண்டுபோன சாமான்கள் எங்கே? குட்டை எங்கே? சட்டை எங்கே? என்னடா கூத்தாடுகின்றாய்? மகன் : சொன்னேனே அம்மா. பாலுக்கு அழும் பிள்ளைக்குரியது. நீங்கள் தந்தபால் - பசியால் துடிக்கும் பஞ்சைக் குரியதல்லவா நீங்கள் தந்த பழம் - எண்ணெய் அறியாமல் ஈரும் பேனும் பிடித்த தலைகளுக்குரியதல்லவா நீங்கள் கொடுத்த எண்ணெய் - தேனும், கரும்பும், நீங்கள் கொடுத்த செவ்விள நீரும் கூனுங் குருடுமாய் பஞ்சப் படுகுழியில் பதைப்பவர்களுக்கு அளித்தேன்! அவர்கள் பசி தீர்வதைக் கண்டு களித்தேனம்மா! தாய் : களிப்பு! மகன் : அதுதானம்மா ஆண்டவன் அருளின் துளிர்ப்பு! தாய் : சாமான்கள், சாமான்கள் இருந்த தட்டு, சட்டை, குட்டை, சாமிக்குத் தந்த பணம் எல்லாம் ... மகன் : அவை இல்லாதவர்களுக்கே சொந்தமம்மா! எல்லாம் வல்ல ஏகனுக்கு அவற்றால் என்ன பிரயோஜனமம்மா. கோயிலில் காணும் கொல்லன் கை வேலைக்கும் தாயினும் சிறந்த தயாபரனுக்கும் சம்பந்தம் ஏதம்மா! எட்டுத்திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய் முட்டித் ததும்பி முளைத்தோங்கி சோதியை மூடரெல்லாம் கட்டிச் சுருட்டித் தம்கக்கத்தில் வைப்பர் கருத்தில் வையார் பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே. (தாய் வியப்போடும் ஆத்திரத்தோடும் மகனைப் பார்க்கிறாள். மகன் அச்சத்தோடும் மகிழ்ச்சியோடும் அன்னை முகம் பார்க்கிறான்.)  சமணமும் சைவமும் காட்சி - 1 (பெண்களின் அழுகுரல் கேட்கிறது. அங்கொரு மரத்தடியில் ஆறுமுகன் உட்கார்ந்து ஓடு திருப்புகிறான். ஆனைமுத்து வருகிறான்.) ஆனைமுத்து : ஐயா என்ன அழுகுரல்? வீதி உற்சவத்தில் வேத பாராயணமா? ஆறுமுகன் : கொலைக்களத்திலே! கோதையரின் நீலாம்புரி ராகம்! ஆனை : யாரோ இறந்து விட்டார்கள் போலிருக்கிறது. ஆறு : பூ! சைவக் கழுமரத்திலே சமணப் பழங்களின் சதையைத் தின்னப் பருந்தும் தெரிந்து வட்டமிடுகின்றன - ஊர் நரிகளும் தெரிந்து ஊளையிடுகின்றன. நீர் மதுரை ஆசாமியாயிருந்தும் வர்த்தமானந் தெரியவில்லை. ஆனை : நான் மதுரையல்ல. தொண்டை நாடு. மிளகு முதலிய பண்டம் வாங்கச் சேரநாடு செல்லுகிறேன். ஐயா, கழுமரத்தில் சமணரா? ஏன் ஐயா, மதிக்கத்தக்க மதுரையில் சதிக்கும் இடமா? மதுரை மன்னன் ஆட்சி யில் மதவாதிகளின் சூழ்ச்சியா? என்ன நடந்தது ஐயா? ஆறு : நீர் பலநாடும் சுற்றுபவர்; உள்ளதை உம்மிடம் சொல்லத் தான் வேண்டும். இந்தப் பாண்டிய நாட்டு மன்னர் இருக்கிறாரே, அவர் சமணப் படுகுழியில் வீழ்ந்து கிடந்தார்... சரியா அது? ஆனை : அது மடமை. நடுவு நிலைமை அல்லவா அரசனுக்கு உடைமை! எந்த மதத்திலும் சேராதிருப்பதே மன்னன் கடமை! ஆறு : அரசர் சமணர்! தீர்ந்ததா? ஆதிக்கம் சமணர்களுக்கே, தீர்ந்தது! அதனால் இந்த நாட்டில் பெரும்பான்மை ஜனங்கள் சமணர்களானார்கள்! ஆனால் நல்ல வேளை யாக அரசர் மனைவி மங்கையர்க்கரசி, மந்திரி குலச் சிறை இருவரும் ஒன்று. சைவ மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆனை : தீர்ந்தது! தீர்ந்தது தமிழரின் செம்மை நெறி! கூன் பாண்டியன் கொள்கை வேறு; மங்கையர்க்கரசியார் மதம் வேறு. கற்பின் இலக்கணத்தைக் கடலுலகுக்குக் காட்டிய மதுரை அரசியல் மஞ்சத்தில், எதிர்ப்பான இரண்டு உள்ளங்கள்! பிறகு? ஆறு : சமணரைத் தொலைக்க வேண்டும். சர்க்காரைச் சரிக்கட்ட வேண்டும்! இது அமைச்சர், அம்மையார் இருவரின் அந்தரங்கம். ஆனை : பெரிய இடத்தில் களங்கம்! ஆறு : அப்படி இருக்கையில் சம்பந்தர் தம் கூட்டத்தோடு மதுரைக்கு எழுந்தருளினார். மந்திரியும் மங்கையர்க் கரசியாரும் மகிழ்ந்தருளினார்கள். ஆனை : இருக்காதா! கழுத்தரியும் சிறுத்தொண்டர்களுக்குக் கத்தி ஒன்று கிடைத்தால் மகிழாமலா இருப்பார்கள்! ஆறு : அரசியும், அமைச்சரும் வந்த சம்பந்தரை தனியாக ஓர் மடத்தில் குடியேற்றினார்கள். ஆனை : ஆம்! கோள்மூட்டும் விழாவுக்குக் கொடியேற்றினார்கள். ஆறு : சம்பந்தரின் மதுரை விஜயம் கண்ட சமணர்களுக்கு ஒரே பயம்... ஆனை : படுக்கை அறையில் மூட்டைப் பூச்சி கண்ட மாதிரி. ஆறு : ஏன் பயம் என்று கேளும். ஆனை : கேட்பானேன்? அஞ்சாத வஞ்சப் பிறவியல்லவா மூட்டைப் பூச்சி ஆறு : ‘வந்துவிட்டானே சம்பந்தன். எங்களை வஞ்சித்துக் கெடுத்து விடுவானே’ - என்று கூக்குரல் இட்டார்கள் சமணர், கூன் பாண்டியனிடம், அதற்கு அந்த ஒரு ஞானமில்லாத கூன் பாண்டியன் திருஞானசம்பந்தர் மடத்தில் தீ வைக்கும்படி சொன்னான். ஆனை : சொன்னால்? ஆறு : தீ வைத்தார்கள். ஆனை : வைத்தவர்கள்? ஆறு : சமணர். ஆனை : நம்புகிறீரா? ‘கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்க, எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே’ என்ற கொள்கையுடைய சமணர் இப்படிச் செய்திருப்பார்களா? ஆறு : கொல்லா விரதமட்டுமல்ல; எல்லா விரதமும் சமணருக்கு ஏட்டளவில்தான். ஆனை : தீ இட்டதால் செத்தவர்கள் எத்தனை பேர்? ஆறு : யாரும் சாகவில்லை! ஆனை : மடத்துக்கு? ஆறு : அழிவு ஒன்றும் இல்லை. ஏனென்றால் அரசனால் இடப்பட்ட தீ, அரசனிடமே திரும்பிச் சென்று அவன் அடிவயிற்றில் கொடிய வெப்பு நோயாக ஆகிவிட்டது. ஆனை : அரசர் பிழைத்தாரா? ஆறு : சாகவில்லை. சமணரை அழைத்தார். தாங்காத நோயைத் தணிக்கச் சொன்னார். அவர்களால் முடியவில்லை. இதுதான் சமயம் என்று மந்திரியும் மங்கையர்க்கரசியும் சம்பந்தரிடம் ஓடி, இந்த நோய் தீர்க்கும் போட்டிப் பந்தயத்தில் கலந்து கொள்ள அழைத்தார்கள். ஆனை : இதுதான் சமயம் என்று அவர் ஒத்துக் கொண்டிருப்பார். ஆறு : அதுதான் இல்லை. சம்பந்தர் நேரே கோவிலுக்கு ஓடினார்; பதிகம் பாடினார். வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதம் இல்லி அமணரோடு தோரை வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே! சமணரை அழிக்க உத்தரவு கொடுக்கிறீரா, கோவிற் கடவுளே என்று கேட்டார். ஆனை : உத்தரவு கிடைத்ததா? ஆறு : ஓ! உள்ளத்தில் புகுந்து உத்தரவு கொடுத்திருப்பார். ஆனை : அன்பர் கேட்கிறார். ‘சமணரை அழிக்கவா’ என்று. அன்பு கொடுத்ததாம், உத்தரவு; ‘அழி அழி’ என்று. நற்றமிழ் நாடு நாணியிருக்குமே! முத்தமிழ் சான்றோர் வெட்கித் தலை குனிந்திருப்பார்களே ஐயா - பிறகு? ஆறு : சமணரால் தீர்க்க முடியாத அரசர் நோயை சம்பந்தர் தீர்த்தார். இது மட்டுமல்ல; ஏடெழுதி தீயில் இடுவது; ஏடெழுதி ஆற்றில் இட்டு எதிரேறச் செய்வது ஆகிய பந்தயங்களிலும் சம்பந்தர்க்குக் சரியான வெற்றி. சமணர்களுக்கோ சகிக்க முடியாத தண்டனை. ஆனை : விவரம்? ஆறு : எண்ணாயிரம் சமணர் கழுவேற்றப்பட வேண்டும். ஆனை : ஆ! ஆறு : அவர்களின் ஏந்திழைமார் கூந்தல் விரித்துக் கோ வென்று அழுவது தான்! அதோ அந்தச் சுருதி கூடாத வேத பாராயணக் குரல்கள்! ஆனை : இந்தப் படுகொலைக்குச் சம்பந்தர் ஒப்பினார் அல்லவா? ஆறு : அந்தச் சுவருக்கு அப்பால் எண்ணாயிரம் கழுமரத்தின் கொழுமுனை கிழித்த சமணர் உடம்பின் குருதி வெள்ளம் சம்பந்தர் திருவுள்ளம்! இம்மதம் அவர் சம்மதந்தானே! ஆனை : கோவில் - அரசன் - மதம்! இந்த முத்தலைச் சூலம் இழைத்த பச்சைப் படுகொலை பழந்தமிழ் இலக்கியத் தில் ஓர் நச்சுப் பொய்கையைச் சேர்த்துவிட்டது. இந்த நிலையைவிட்டு வைக்கும் நாள் ஒவ்வொன்றும் தமிழ் நாடு கெட்டுப் போகும் நாள் என்று தமிழர் உணரும் நாள் எந்நாளோ? சமணத் துறவியின் மேல் இந்தச் சாதாரணங்கள் சாற்றும் குற்றம் சைவ மடத்தில் தீ வைத்தார் என்பது. இது உண்மையானால் மாண்டவர் எத்தனை பேர்? ஒருவரும் இல்லையே! சமணரின் நோக்கம் சரி! இல்லையென்றால் அது பொறுத்துக் கொள்ள முடியாதா? “ ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்கு பொன்றும் துணையும் புகழ்” “ இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு” வள்ளுவர் காட்டிய இப்பாதை மண்மூடிப் போனதா? இல்லை; மத நெறியரின் கண்மூடிப் போனதா? ஆள வந்தாரை வசப்படுத்துவது; தம் அநியாய மதத்தை நிசப் படுத்துவது; அதன் பின் ஏழைகளுக்குக் கெடுதலை - ஏமாந்தால் படுகொலை அந்த எத்தர்களுக்குப் பக்தர் - ஜீவன் முக்தர் - உலகப் பிரசித்தர் என்றுபெயர்! ஐயா, காவலர், சமணர் எவர்க்கும் கருணை காட்டவில்லையா? ஆறு : கருணை காட்டினார்! சமணர்க்கு அல்ல; சமணர் இரத்தத்துக்கு அலையும் பருந்துக்கும் - நாய்க்கும் - நரிக்கும்! ஆனை : தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதா? ஆறு : சிரிப்பு வருகிறது; இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றால் நிறுத்திவிடுவீரோ? ஆனை : உள்ளத்தைக் கிளறும் கேள்வி! உலகின் ஒரு மூலையில் ஓர் தமிழனின் ஒரு துளி ரத்தம் சிந்தினான் என்றால், உறையில் உருவித் தூக்கிய உலகத் தமிழரின் வாள் ஒடிந்து போக வில்லை. ஆனால் மதமயக்கத்தால் அவை ஓய்ந்து கிடப்பது உண்மைதானய்யா. மெய்யாய்ச் சொல்லுவேன் வீரத்தமிழர் வீறுகொண்டு கிளம்பும் நாள் தூரத்தில் இல்லை. ஐயா! மதம் - மக்களை அதம் செய்யும் மதம், இதம் செய்கின்றதாமே! சைவச் சர்க்கார் சாய்த்த சமணர் தலை இதோ எண்ணாயிரம்! வைணவம் உடைத்த மண்டைகள் எண்ணற்ற ஆயிரம். சங்கரர் சர்க்கார் புத்தருக்குக் கிழைத்ததைப் புகலவும் வாய் நடுங்கும்! புத்த மதத்தாரை கண்ட இடத்தில் வெட்ட வேண்டும். பார்த்தும் வெட்டாமல் விட்டுப் போவாரை வெட்டிப் புதைக்க வேண்டும். சங்கர சர்க்காரின் சட்டம் இது. உருண்ட தலை ஒன்றல்ல; ஒரு கோடி. இதோ, இந்து மதம், முஸ்ஸீம் மதம் - இவைகளுக்குப் பரிந்து பாடுபடும் அறிஞர்களோ பலப் பலர்! அவர்கள் பெருக்கிய போரினால் தெருவில் ஓடிய ரத்த வெள்ளம் ஏரி அல்ல; இது மகா சமுத்திரம்! ‘மதத்தின் பேரால் நாட்டைக் கொலைக் களமாக்கி விட்டார்கள்!’ என்றார் ஓர் அறிஞர்! ‘மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’ என்றார் மற்றொரு பேரறிஞர். அண்ணல் காந்தியால் யாருக்குத் தீமை? அகிலத்தின் தந்தையை விட்டதா கோட்சே மதம்! படுகொலை! மதப்படுகொலை! சாகின்றார் எண்ணாயிரம் தமிழர்கள்! ஆறு : இல்லை! செத்துவிட்டார்கள். போய்ப் பாரும். (ஆனைமுத்து ஓடுகிறான்.) காட்சி - 2 (எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டு இருக்கிறார்கள். எதிரில் ஏந்திழைமார் குப்புற விழுந்து கிடக்கிறார்கள்.) ஆனை : ஆ! (ஆனைமுத்து முகத்தில் கைபொத்திக் கொண்டு மல்லாந்து விழுகிறான்.)  குலத்தில் குரங்கு காட்சி - 1 திருமண நினைவு சொக்கம்மா : அத்தான், கண்ணாட்டம் ஒண்ணு, பெத்தா தானா புள்ளே? சிக்கண்ணன் : என்னா சொல்றே? வெளங்கலையே! சொக் : நமக்கு வயசு வந்ததும், கண்ணாலம் எப்போ பண்ணுவாங் கண்ணு நெனச்சமா நெனைக்கிலையா? அந்த மாதிரி தானே இருக்கும்! புள்ளைக்கிப் புள்ளையாதானே வளக்றோம்? சிக் : அப்டி சொல்லேன். கண்ணாலம் பண்ணிட்டா போவுது. சொக் : அது எப்படி முடியும்? சிக் : அதுக்கு மேலே பேசாதே. முடியும், அதுவும் நாலு நாளிலே! போ, வேலையே, பாரு. நான்கு நாட்களுக்குப் பின் காட்சி - 2 பந்தலில் பரியம் உறவினர் 1 : மணிரெண்டு அடிச்சுட்டுது, இன்னம் ஒரு மணி நேரத்லே ஆவணும். உம், உம்! முழித்துக் கொள்ளுங்க. நீ பட்டி கட்டு; பூவை பந்து சுத்து! உறவினர் 2 : வாத்தியக்காரன் வந்தானா? தெருப்பந்தல்லே வாழை மரம் இன்னுமா கட்டலே? பரியச் சடங்கு தொவக்ற சமயம்! ஆவட்டும். ஒருபுறம் சொக் : ஏன் அத்தான்? காப்புத்தான் இருக்கு; கொலுசு, சங்கிலி தோப்பு நெல்லிக்கா தொங்கலு இதெல்லாம் இல்லையே. பரியத்திலே பொண்ணு வூட்டுக்கார் கேப்பாங்களே! சிக் : நீ சும்மா இரு. இப்ப ஒனக்கு ஒண்ணும் தெரியாது வெளக்கு ஏத்தியாச்சி. அதோ பாப்பானும் வந்துவிட்டான். பொண்ணுட்டுக்கார் வர்ற சமயம்! என்னே ஒண்ணும் கேக்காதே! நடக்க நடக்க பாரு! (விடிய மூன்று மணி. பரியக் கூட்டம் கூடியது.) காட்சி - 3 பரியச்சண்டை சிக் : வாங்க சம்மந்தி! வாங்க பொண்ணுட்டுக்காரரே! ஒக்காருங்க. பெண் தாய் : அவரு ஆரு? மாப்பிள்ளைக்கி தகப்பனாரா? ஓகோ வாங்க. இவுங்க ஆரு? மாப்பிள்ளைக்கி சித்தப்பாவா? ஓகோ வாங்க, எல்லோரும் வந்துட்டாங்களா? வந்துட்டாங்க! தொவங்க வேண்டியது தானே ஐயரே. ஐயர் : ஆஹா! சுக்கலாம் பரதரம் ... ... (ஒருபுறம்) சொக் : ஏன் பெண் தகப் : சொன்னபடி நகை! இஹி... ஹி... சிக் : ஐயா! நானு மாப்பிள்ளையை பெத்தவனல்ல. வளர்த்தவன். எனக்கும் இந்தக் கண்ணாலத்துக்கும் தொந்தார்த்தம் கெடையாது. கெடையாதின்னாலும் நாந்தான் மாப்பிள் ளையைப் பத்தி உத்தரவாதம்! ஏன்னா, நான்தான் ஒங்களெ அறிவேன். நான் தான் பெண்ணே வந்து கேட்டு முடிவு பண்ணனேன். நீங்க நல்லா கேளுங்க. கேட்க வேண்டியதே கேளுங்க. ஏம்பா மாப்பிள்ளையைப் பெத்தவனே! ஒன்னெதாம்பா சிங்கேரி யப்பா, ஒன்னெ தாம்பா, என்னமோ கேக்றாரே பொண்ணெ பெத்தவரு. சிங்கேரி : சரிதாங்க! ஆயிரம் பேருக்குமுன்னே - ஆயிரத்துக்கு மேலே இருக்கும் - தோ வந்திருக்காங்க சொல்றேன். இப்போ வேலை தீந்து கைக்கு வந்தது காப்பு மட்டுந் தானுங்க. கொலுசு, சங்கிலி, தோப்பு நெல்லிக்கா தொங்கலு இதெல்லாம் வேலை முடியிலே. இருக்கிறதே கொண்டு பரியத்தே முடியுங்க. பெண் தகப் : பரபரப்பா வேலை நடக்குது - பந்தலிலே பரியம் வைச் சிருக்கிங்க இன்னிங்க. இன்னம் வேலை முடியலே, நகை பின்னால் ஆவுட்டும் இண்றிங்க, இப்ப; இதென்ன எழவா இருக்கே. சிங்கேரி : ஓய்! நல்ல வேளையிலே எழவு கிழவுண்ணாதே. மூதேவியாட்டம். பெண்தகப் : மூதேவியாட்டமா இருக்றேன்? ஊஹும் அப்படியா? சொன்னபடி நகையெல்லாம் வைக்றியா, இல்லியா? சிங்கேரி : என்னங்காணும் பனாதித் தனமா பேசிறே. எங்கே பூடும்? பெண் தகப் : சீச்சீ! ஆருடா பனாதி, மடையா? சிங்கேரி : பல்லு ஓடைஞ்சிபுடும்! ஒடைஞ்சுபுடுண்ணா ஒடைஞ்சு பூடும். பெண் தகப் : போடா! கையையா நீட்றே! (ஓர் அறை கொடுக்கிறான்.) சிங்கேரி : ஆஹாங் (பதில் அறை) சிக்கண்ணன் : (இருவரையும் விலக்கி நடுவில் அமர்ந்து) ஏம்பா சிங்கேரி! இதுதான் மரியாதையா? அடிக்றதா? என்னே அடிச்சா என்னா அவரே அடிச்சா என்னா? இதெல்லாம் யாருக்கடா அவுமானம்? ஏண்டா. இதே நேரத்திலே இதே பந்தலிலே இதே பொண்ணுக்கு மாப்ளே பாத்து தாலி கட்ட என்னாலே முடியுண்டா. பெண் தகப் : அப்படிதான் செய்யுங்க. சிக் : தங்க தேர் மாதிரி கொண்டாருவண்டா மாப்ளே பெண் தகப் : அவன் கிடக்கறாங்க. நீங்க அப்படியே முயற்சி எடுங்க இப்பவே. சிக்கண் : ஏம் பொண்ணுண்ணா வேறே; அவரு பொண்ணுண்ணா வேறெண்ணு நினைக்கலேடா நானு... பெண் தகப் : நேரமாவுதுங்க எனக்கு. வந்த அவுமானத்தே காப்பாத் துங்க. மாப்ளே எங்கேங்க? சிக் : அவருக்கு வந்த அவுமானம் எனக்கல்ல? மடையா, மடையா (அடிக்கப் போகிறான்; பெண்ணின் தகப்பன் மறிக்கிறான்) இதோ போறேண்டா (பெண் தகப்பனை நோக்கி) இருங்க இங்கியே! தோ வந்துட்டேன். நீங்க பயப்படாதீங்க. இதே நேரத்திலே, முடிச்சுடறேன். ஆஹா நூறு பங்கிலியும் (போகிறான். பெண் தகப்பன், ஒருபுறமாகத் தங்கிச் சிக்கண்ணனை எதிர்பார்த்திருக் கிறான்.) காட்சி - 4 ஓங்களே நம்புறேன் (சிக்கண்ணனும் பெண்ணின் தகப்பனும் தனித்துப் பேசுகிறார்கள்.) சிக்கண் : ஒயர்ந்த எடம், ஏற்பாடு பண்ணிட்டேன். பெண் தகப் : கொலம்? சிக்கண் : ஒறவுங்க எனக்கு. பெண் தாய் : வசதி? சிக்கண் : இப்ப அடிச்சானே ஒரே அடி லட்ச ரூபாய். கள்ள மார்க்கட்டிலே ஜவுளிக்கடை. பெண் தகப் : கண்ணுக்குப் புடிச்சாப்லே இருக்றான்ணேன். சிக்கண் : கொலத்லே? பெண்தாய் : கொரங்கெ கொள்ளலாம். அது சரிதான்; கேட்டேன். சிக்கண் : எனக்குப் புடிக்குதுங்க! உட்டுடுங்க, அதோட பெண் தகப் : பரியம் ? சிக்கண் : அதெல்லாம் இப்ப வாயெ திறக்கப்படாது. ஏன் இண்ணு கேளுங்க. அவுங்கப்பா. அம்மா ஊர்லே இல்லே. வந்தா வயிரமா எழச்சிடுவாங்க. நம்புங்க என்னே. பெண் தகப் : அடியோட நம்பறேன். சிக்கண் : என்னா யோசிக்கறேண்ணா பையன் அரசூர் ஜமீன்தார் கூட! கார்லே திருவண்ணாமலைக்குப்போய் வந்தான். குளிர் காச்சலா இருக்கிறான். கண்ணாலத்தே நாளைக்கி வைச்சிக்க லாண்ணா, மத்தியிலே புகுந்து அவன் மனசே கலைச்சி புடுவாங்க. வேறே பொண்ணுக்கு ஒடையவங்க. பெண் தகப் : இப்பவே முடிச்சிபுடுங்க. சிக்கண் : சரி! இப்பவே குசும்புது. வேறெ பொண்ணூட்டுக்காரர் ஆளெ அனுப்பி வைக்கறாங்க அவங்கிட்டே! நேரமில்லே! ஆவட்டும் ஐயரே, ஆவட்டும். (ஐயர் தொடங்கினார் சடங்கை) காட்சி - 5 தோஷமில்லேண்ணேன் ஐயர் : பொண்ணு மாப்ளேயே அழைச்சுண்டு வர்ரது. சிக்கண் : பொண்ணு மாத்திரம் வரட்டும் முன்னே! தாலி கட்றபோது மாப்ளெ வர்லாமில்லே? ஐயர் : தோஷமில்லேண்ணேன். பெண் தகப் : முகூர்த்த நேரம் தவறிட்டுதே ஐயர் : தோஷமில்லேண்ணேன். பெண் தகப் : தாலி இல்லே. மஞ்சளை சரட்லே கட்டிக்கலாமா? ஐயர் : தோஷமில்லேண்ணேன்! மாப்ளையெ இட்டு வரலாமா? சிக்கண் : இதோ வர்ராரே (மாப்பிள்ளைக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் மறையப் போர்வையிட்டு, நான்கு பேர் கையால் தாங்கி வந்து மணவறையில் உட்கார வைக்கிறார்கள்.) ஐயர் : வாத்யம்! வாத்யம் (மாப்பிள்ளை தாலி கட்டுவது போலவே வேறு கைகள் பெண் கழுத்தில் தாலிகட்டுகின்றன.) சிக்கண் : பொண்ணு மாப்ளே போகலாமில்லே? ஐயர் : தோஷமில்லேண்ணேன்! சிக்கண் : மாப்ளே மாத்திரம் முன்னே எழுந்து போவலாமா? ஐயர் : தோஷமில்லேண்ணேன். சிக்கண் : ஏன் ஐயரே! இதுக்கு தட்சணை கொடுக்காவிட்டால்? ஐயர் : தோஷண்ணேன். (மாப்பிள்ளை முன்போலவே நால்வரால் அழைத்துச் செல்லப் படுகிறான்.) காட்சி - 6 மறு நாள் (திருமணம் நடந்த மறுநாள் காலை சிக்கண்ணன் கூடத்தில் மிகக் கருத்தாகக் கணக்கு எழுதிக் கொண்டும் வாயால் உரத்த குரலில் எண்களை கூட்டிக் கொண்டும் இருக்கிறான். பெண் தந்தையும், தாயும் சிக்கண்ணனை பார்க்க வருகிறார்கள். வாயில் காப்போன் மறிக்கிறான்.) வாயில் காப்போன் : இப்ப அவரே நீங்க பார்க்க முடியாது. பெண் தகப் : ஏன்? வாயில்காப் : அவரு கணக்குப் பாக்கறாரு. பெண் தகப் : நாங்க வந்திருக்கிறோம்ணு சொல்லு. வாயில் காப் : சரி. (போகிறான்; திரும்பி வந்து கூறுகிறான்.) போங்க! ஆனா ஒண்ணுங்க. பன்னிப் பன்னி பேசாதிங்க. அவர்கிட்டே ஒரு கேழ்வி - அதுக்கு அவரு ஒரே பதில்! அதுக்கு மேலே ஏடிச்சி ஏடிச்சி கேக்கக் கூடாது. சம்மதமா? பெண் தகப் : ஐயோ! அப்படியா? சரி. (உள்ளே போகிறார்கள். சிக்கண்ணனைப் பார்த்த படி நிற்கிறார்கள்.) சிக்கண் : (கணக்குச் சுவடியைப் பார்த்துக் கொண்டு) ஏழரை யும் மூணும் பத்தரை; பத்தரையும் ஒண்ணும் பதினொண்ணரை ... பெண் தகப் : நிக்றோமே? சிக்கண் : ஒக்காருங்க! பதனெட்டரையும் மூணே காலும் இரவத் தொண்ணே முக்கா. இரவத்தொண்ணே முக்க, இரவத் தொண்ணே முக்கா. இரவத் தொண்ணே முக்காலும் ... (பெண்ணின் தாயும் தகப்பனும் எதிரில் உட்காருகிறார்கள்.) பெண் தகப் : அப்றம் கணக்குக் கூட்டுங்களேன். சிக்கண் : அது முடியாது. ஐம்பத்தி ஆறேகால். ஐம்பத்தி ஆறே கால். ஐம்பத்தி ஆறரையும் மூணரையும் அறுவது... பெண் தகப் : மாப்பிள்ளையை இன்னம் நாங்க பார்க்கவேயில்லேங்க. சிக்கண் : நம்பள்ளே மாப்பிளையை பாத்தாக் கண்ணாலம் பண்றாங்க. நூத்திப்பதனேழரையும் காலும் நூத்திப் பதனேழேமுக்கா. நூத்திப் பதினேழே முக்காலும் அரையும் நூத்திப் பதினேட்டே கால்... பெண் தகப் : ராத்ரி மூணுமணி முகூர்த்தமா பூட்டதுலே ... சிக்கண் : நம்பள்ளே எல்லாரும் பகல்லேதானா முகூர்த்தம் பண்றாங்க! இரு நூத்திப் பதினஞ்சு. இரு நூத்திப் பதினஞ்சு. இருநூத்தி. பெண் தகப் : பொண்ணு மாப்ளையைக் கூட்டிப் போவணுமே? சிக்கண் : போறதுதானே! ரூபாய் நானூத்தி நாப்பத்தஞ்சியும் காலே அரைக் காலும்! அப்றம் மூணேகால், மூணே கால், மூணே காலும் ஒண்ணும்... பெண் தகப் : கூப்டுங்க மாப்ளயே ... சிக்கண் : மாப்ளையே கூப்பிட்றா காவக்காரா. நாலே வீசம்; நாலே வீசம்; நாலே வீசமும் நாலரைக்கால் ... (அங்கிருந்த காவற்காரன் உள்ளே செல்கிறான் உள்ளே யிருந்து காவற்காரனும் ஆளில் முக்கால் பங்கு. உயர முள்ள ஒரு வாலில்லாக் குரங்கும் வெளிவருவதைப் பெண்ணின் தந்தையும் தாயும் பார்த்து அஞ்சுகிறார்கள்.) பெண் தகப் : என்னங்க, மாப்ளையெ கூப்டச் சொன்னா? சிக்கண் : பின்னென்ன தென்னம்புள்ளையா நிற்பது? அஞ்சே அரைவீசம், அஞ்சே அரைவீசம், அஞ்சே அரை வீசமும் காவீசமும் அஞ்சே முக்காவீசம் ... பெண் தகப் : ஐயையோ ... பெண் தகப் : இது என்ன மோசம்? பெண் தகப் : என்னயா ... வெள்ளாட்றிங்களா? சிக்கண் : வெள்ளாடுமில்லே கறுப்பாடுமில்லே... ஆறு! ஆறு! ஆறும் வீசமும் ஆறேகா வீசமும் ... பெண் தகப் : தாலி கட்னது யாரைய்யா? சிக்கண் : கண்ணா தெரியிலே! தங்கத் தேராட்டம் புள்ளே எதிர்லே நிக்றானே! ஆறே அரை வீசமும் காவீசமும் ஆறே முக்கா வீசம் ... பெண் தகப் : மனுஷனா இது? ஏன்யா? சிக்கண் : எப்படி தெரியுது ஒங்களுக்கு? ஆறே முக்கா வீசமும் காவீசமும் ஆறேகால் ... பெண் தகப் : என்னய்யா! கொரங்கையா இது! சிக்கண் : நம்பள்ளே எல்லோரும் அழகாவா இருந்துட்றாங்க? ஆறேகாலும் காவீசமும் ஆறேகாலே வீசம். பெண் தகப் : அழகில்லாவிட்டால் போகிறது; கொரங்கில்ல ... சிக்கண் : பன்னிப் பன்னி பேசிறிங்க! ஆறேகாலே வீசமும் காவீசமும் ஆறேகாலே அரை வீசம் ... (இதற்கிடையில் காவற்காரன் பெண் தகப்பனைப் பார்த்து அதட்டுகிறான்.) காவற் : நான்தான் சொன்னேனே ஒரு கேள்வி. அதற்கு ஒரே பதில்! அவ்வளவுதான்! பெரிய எடத்லே வந்து தொந்தரவு பண்ணாதீங்க. எழுந்திருங்க. பெண் தகப் : பெரிய இடமோ இது? பெண் தகப் : எங்கே அடுக்கும் இந்த அக்குறும்பு? ஏம் பொண்ணு எங்கே? அம்மா கீரைமணி! (தன் மகளின் பேரைச் சொல்லி அழைக்கிறாள் தாய். உள்ளே இருந்து கீரைமணி ஓடிவந்து குரங்கைப் பார்த்து நடுங்கி உள்ளே ஓடுகிறாள். மகளின் பின்னால் தாய் ஓடுகிறாள்.) (ஒருபுறம்) தாய் : எங்கே அம்மா உன் நகையெல்லாம்? கீரைமணி : அத்தை கழட்டி வெச்சிகினாங்க. நீ ஆம்படையாங் கூட ஒத்துக் குடுத்தனம் பண்றதா இருந்தா குடுப்பேன். ஒங்க ஆத்தா வூட்டுக்குப் போறதா இருந்தா குடுக்கமாட் டேண்ணாங்க. அங்கே நிண்ணுதே, அது கொரங்கு தானேம்மா. அது என்ன அவ்வளவு ஒசரமா இருந்துதே. தாய் : அதுதாண்டி மவளே மாப்பிள்ளையாம்! கீரைமணி : ஊஹும். (முகத்தைக் கையால் மூடிக்கொண்டு அழுகிறாள் கீரைமணி.) காட்சி - 7 ஒத்துக் குடித்தனம் பண்ணலாம் (பெண்ணின் தாயும் தகப்பனும் நெஞ்சத் துடிப்புடன் தெருவில் வந்து கூச்சலிடுகிறார்கள். வழியிற் போய்க் கொண்டிருந்த ஒருவர் நிற்கிறார்.) வழிப்போக் : என்ன அது? பெண் தகப் : ஏம் பொண்ணுக்கு ஒரு கொரங்கைக் கட்டி வைச்சிட் டாங்க ஐயா! பொண்ணேயாவது அனுப்புங்க இண்ணா, நாங்க போட்ட நகையெல்லாம் கயிட்டிகினு அனுப்புவாங் களாம். அல்லாட்டி அந்தக் குரங்குகூட ஒத்துக் குடித்தனம் பண்ணனுமாம். வழிப்போக் : ஊம் ... கெடக்றதுதான். அல்லாருமே அழகா இருந்துடு றாங்களா. ஒத்து குடித்தனம் பண்ணும்படி சொல்லிட்டுப் போங்க. (பொண்ணின் தாய்க்கும் தகப்பனுக்கும் எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளியது போல் இருந்தது. அடுத்த தெருவை நோக்கிச் செல்லுகிறார்கள்.) காட்சி - 8 உங்கள் பெண் அழகாயிருக்குமா? (ஊர் நாட்டாண்மைக்காரர், ஊரார் பலருடன் தம் வீட்டுக் கூடத்தில் இருந்து கொண்டு, சிக்கண்ணனையும் பெண்ணின் தகப்பனையும் கேள்வி கேட்கிறார்.) நாட்டாண்மை : ஏனையா, பெண்ணைப் பெற்றவரே! நீர் என்ன சொல்லுகிறீர்? பெண் தகப் : ஏம் பொண்ணுக்கு இவுரு ஏற்பாடு பண்ணன மாப்பிளே ஒத்து வரலே. அதே பந்தல்லே இவுரு வேறே மாப்ளே கொண்டாந்தாரு! கொரங்குங்க. சிக்க : (இடையில்) அதோட, நிறுத்து (நாட்டாண்மைக்காரரை நோக்கி) இவுரு பொண்ணு மட்டும் ரொம்ப அழகோண்ணு கேளுங்க. வா. இந்த நாயத்தே நாட்டாண்மைக்காரரிடம் சொல்லிப் பாப்போம் இண்ணு நாந்தான் கூப்பிட் டேனுங்க. இருக்கட்டும். மாப்பிளே எப்படி இருந்தா தான் என்ன! அப்படி ஒண்ணும் அழகிலே கொறைச்சல் இல்லிங்க. நீங்க பெரிவுங்க. ஒரு குடும்பத்தே கலைக்கவா பாப்பிங்க. பொண்ணே ஒத்துக் குடுத்தனம் பண்ணச் சொல்லும்படி செய்யுங்க. நாட் : ஆமாம் ஐயா! எல்லாரும் அழகுடையவர்களாக இருந்து விடுவார்களா? பெண் தகப் : ஐயையோ, சுத்த குரங்குங்க. நாட் : சரிதான், போய் வாருங்கங்கள் குலத்லே குரங்கைக் கொள் என்ற பழமொழி கேட்டதில்லையா நீர்! பைத்தியக் காரரே! போம். போம்! பெண் தகப் : ஐயையோ, (தலையில் அடித்துக் கொண்டு வெளியில் ஓடுகிறான்.) காட்சி - 9 என் மானத்தைக் கெடுக்காதே (தெருத்தோறும் பெண்ணின் தகப்பனும் தாயும் கூச்சலிட்டுக் கதறிக்கொண்டு ஓடுகிறார்கள். அவர்களுடன் சிக்கண்ணனும் ஓடுகிறான்.) சிக்கண் : என் மானத்தைக் கெடுக்காதே. ஊர்லே ஒலகத்லே அழகு கம்மியாக ஆம்பளை இருக்றதில்லையா, இதை ஒரு பேச்சா அல்லாரிடத்லியும் சொல்லித் திரியிறிங்களே? (தெருவிலே நடப்பவர்களைப் பார்த்து) ஐயா! இந்த சேதியே கொஞ்சம் கேளுங்க. எம் பையனுக்கும் இவுங்க பொண்ணுக்கும் கண்ணாலம் நடந்தது. ஏதோ பையன் கொஞ்சம் கண்ணுக்குப் புடிக்லயாம்! அதுக்காக அவனெ எண்ணான்ணு திட்டறது? பெண் தகப் : ஐயா! கொரங்குகிட்ட தாலியெ கட்டச் சொல்லிட் டாங்க ஐயா. இந்த ஊர்லே கேக்றவங்க இல்லியா. என்ன அநியாயம் (அழுகிறான்) வழிப்போக்கர்கள் : என்னாங்காணும் ஒமக்குப் பைத்தியமா! ஆம்பிள் ளைக்கு அழகு ஏங்காணும். ஆம்பிளே சிங்கங் காணும். (என்று கூறிப் போகிறார்கள்.) காட்சி - 10 போகிறார்கள் பெண்ணின் தகப்பனும் தாயும், நல்ல வகையாக உண்மை அறிந்து தீர்ப்பளிப்பவர்களைத் தேடிக் கொண்டே போகிறார்கள்.  மருத்துவர் வீட்டில் அமைச்சசர்மருத்துவர் வீட்டில் அமைச்சசர் மருத்துவர் : வாங்க, வாங்க! நீங்க ஆரு? அமைச்சர் : கல்வி அமைச்சன் நான்! கண்ணா தெரியலே? மருத்துவர் : வாங்க வாங்க! நீங்கதானா? என்ன சேதிங்க? அமைச்சர் : இன்ன நோயிண்ணே இன்னும் புரியலே. கையைப் பாருங்க கருத்தா! (மருத்துவர் நாடியை நாடுகிறார்.) மருத் : தானே வந்த நோய் அல்ல. தேடி நீங்க சேத்த நோய் தானுங்க. அமைச் : இந்த நோய்க்குப் பேர் இன்னதிண்ணில்லியா? மருத் : இருக்ற குறிப்பே எடுத்துச் சொல்றேன். நாக்லே துடுக்கு, நடையிலே பதறல், மூக்லே எரிச்சல், முன்தொடை நடுக்கம், கண்ணிலே கொஞ்சம் கசப்பான தோற்றம். இருக்குதா, இல்லியா? அமைச் : இருக்குதே, இருக்குதே, என்ன பண்லாங்க? மருத் : இலேசாத் தீந்திடும். இந்த நோய் ஓர் வகைக் காரகத்தாலே கண்டது. சீரகத் தாலே தீரணும் அமைச்சரே! காரகம் : ஒரு நோய் அதுவே கார் அகம் எனப் பிரிந்து கருமையான உள்ளம். அதாவது, தெளிவற்ற உள்ளம் எனப் பொருள் படும். சீரகம் : மருந்துச் சரக்கு. அதுவே சீர் அகம் எனப் பிரிந்து உயர்ந்த உள்ளம் எனப் பொருள்படும்.  குழந்தை நாடகம் முத்துப்பையன் காட்சி - 1 (தெருத்திண்ணையில் முத்துப்பையன் உட்கார்ந்திருக்கிறான். சுட்ட பனங்கிழங்கு விற்றுக் கொண்டு போகிறாள் ஒருத்தி. முத்துக்கு வாய் ஊறிப் போகிறது.) முத்து : பனங்கிழங்கு! (அவள் அவனெதிரில் - திண்ணையில் பனங்கிழங்கின் கூடையை வைக்கிறாள்.) முத்து : கட்டு என்ன விலை? அவள் : அரையணா! முத்து : சரி. கொடுத்துவிட்டுப்போ. காசு பிறகு வந்து வாங்கிக்கொள். அவள் : முடியாது. முதலில் காசை வை. முத்து : அப்படியானால் இரு. (முத்து வீட்டுக்குள் ஓடுகிறான்.) காட்சி - 2 (முத்துப் பையனின் தாத்தா சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கிறார் கூடத்தில்) முத்து : தாத்தா! ஒரு புதுவேலை. அரையணா - ஒரே நாணயமாய் இருக்க வேண்டும். இரண்டு காலணா வேண்டாம் எடுங்க. தாத்தா : (அண்டையில் முக்காலியிலிருந்த பையில் தேடி அரையணா நாணயத்தைக் கொடுத்து) என்ன புது வேலை? காட்டு! (முத்து அரையணாவை வாங்கிக் கொண்டு தெருவில் ஓடிப் பனங்கிழங்கு வாங்கி உரித்துத் திண்ணையில் உட்கார்ந்தபடி ஒடித்து ஒடித்து மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறான். காட்சி - 3 (தாத்தா மெதுவாகத் தெருவில் வந்து முத்துப் பையனைப் பார்க்கிறார்.) தாத்தா : புதுவேலை என்றாயே! காட்டவில்லையே! முத்து : புதுவேலை காட்டிக் கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள். தாத்தா : என்ன? முத்து : புதுவேலை என்று உங்களிடம் அரையணாவை வாங்கி வந்து பனங்கிழங்கு வாங்கினேனே. அது புது வேலைதானே தாத்தா. தாத்தா : நீ சொல்வது மெய். முத்து : (தின்று கொண்டிருக்கிறான்.) காட்சி - 4 தாத்தா : தம்பி, கிழங்கு நடுவில் இருக்கும் நாகப்பூச்சியை எடுத்துக் கொடுக்கிறேனே. (பையன் மீதியுள்ள இரண்டு கிழங்குகளைக் கொடுக்கிறான்.) தாத்தா : (இரண்டு கிழங்குகளையும் பிளந்து நடுவிலுள்ள நாகப்பூச்சி இரண்டையும் எடுத்துப் பையனிடம் நீட்டி) இந்தா தம்பி. (மீதி கிழங்குகளையெல்லாம் தம் மடியில் வைத்துக் கட்டுகிறார்.) முத்து : என்ன? தாத்தா : பின்னென்ன? நாகப்பூச்சியைத் தானே எடுத்துத் தருவதாகச் சொன்னேன். முத்து : சரி, சரி! எனக்கு இனிமேல் வேண்டியது இல்லை. நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். (தாத்தா உள்ளே போகிறார். பையனும் தொடர்கிறான்.) காட்சி - 5 முத்து : வெற்றிலைப் பாக்கு உரலில் இடித்துத் தரட்டுமா. தாத்தா? உங்களுக்குப் பல்லில்லையே! தாத்தா : ஆம் அப்பா! (கொடுக்கிறார். பையன் இரு கிழங்கையும் இடித்து ஒரேயடியாய் வாயில் போட்டுக் கொண்டு உரலைத் தாத்தாவிடம் நீட்டுகிறான்.) தாத்தா : இடித்துத் தருவதாகச் சொன்னாயே! முத்து : உரலைத்தான் சொன்னேன்.  மேனி கொப்பளித்ததோ? ஒரு காட்சிச் சிறு நாடகம் உருவகக் காட்சி முதுமாலை தழுவிய ஒரு சோலையில் மொய்குழல் ஒருத்தி ஐயனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள். காதல் கனலாகின்றது. அவள் வானை நோக்குகின்றாள். வானிற் பூரித்த மீன்களை நோக்குகின்றாள். பாட்டு மேனிகொப் பளித்ததோ வானப்பெண்ணே - எங்கும் வெண்முத் திறைந்தனவோ வானப்பெண்ணே! நானே வாரேன் என்று வாராததால் - அவன் நாளோடு தோளைவந்து சேராததால் மேனிகொப் பளித்ததோ வானப் பெண்ணே! (மாமரத்தின் பின் ஒளிந்து கொண்டிருந்த குறும்புக் காரத் தலைவன் அவளை எட்டிப் பார்த்துச் சிரித்துப் பாடுகின்றான்.) பாட்டு ஏனோடி பூவில்லை கொண்டையிலே? - அடி இங்கேபார் மாமரத்தின் அண்டையிலே தேனோடைப் பக்கம் திரும்பாததால் - தேன் விரும்பி அருந்திட விரும்பாததால் மேனிகொப் பளித்ததோ வானப்பெண்ணே! (திரும்பிப் பார்த்தவள் விரும்பி ஓடிவரவில்லை. வந்தவன் நேரே ஓடி வாராமல் மாமரத்தைத் தழுவியது வருத்தத்தை அளித்தது. அவள் பாடுகின்றாள்.) பாட்டு மாவேஅக் காளைக்குக் காப்பிட்டதோ - மா மாவாவா என்றுதான் கூப்பிட்டதோ சாவோடு மாரடிக்கும் பெண்ணாதலால் - இங்குத் தாவிப் பறந்துவர எண்ணாததால் மேனிகொப் பளித்ததோ வானப்பெண்ணே? (மா அதாவது, மாமரத்துக்கும் அவனுக்கும் உண்டாயிருந்த தொடர்பு பற்றி இழித்துக் கூறிய தலைவியை நோக்கி, ‘நீ மட்டும் சாவோடு கொண்ட தொடர்பு சரியா? அதை நீ விடு. நான் மாவோடு கொண்ட தொடர்பை விடுகின்றேன்’ என்று பாடுகின்றான் தலைவன்) மாவை நான் விட்டிடுவேன் வஞ்சிக்கொடி - கெட்ட சாவை நீ விட்டுவிட்டு வா இப்படி வாழ்வோடும் இன்பத்தைக் கூட்டாததால் - இங்கு வந்தேறும் துன்பத்தை ஓட்டாததால் மேனிகொப் பளித்ததோ வானப்பெண்ணே (இருவரும் கூடி இன்புறுகின்றார்கள்)  நிமிஷ நாடகம் நடைபெறுமிடம் : ஆஸ்திரேலியா, ஓர் வீடு. சுந்தர் : எனது நாலாம் பாட்டனார் இந்தியாவில், மதுரையில் பிறந்தவர். இந்தியா அடிமையுற்றுக் கிடப்பது நேற்றுத்தான் தெரிந்தது. மதுரை மாத்திரம் சுதந்தரம் இழந்திராது. 63 திருவிளையாடல் செய்த மதுரைச் சோமசுந்தரக் கடவுள் இந்தியாவைக் காப்பாற்றலாகாதா என்று ஓர் கடிதம் இந்திய நண்பர் ஒருவருக்கு எழுதியுள்ளேன். டிக்! டிக்! டிக்! சுந்தர் : யார் கதவைத் தட்டுறது? (திறந்து பார்த்து) தபாலா (வாங்கிப் படித்து) என்ன ஆச்சரியம்! சோமசுந்தரக் கடவுளுமா அடிமை! ஆ!! - மு.ளு. 