பாவேந்தம் 6 காப்பிய இலக்கியம் – 5 கண்ணகி புரட்சிக் காப்பியம் மணிமேகலை வெண்பா ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் இளங்கணி பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 6 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16» வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 392 = 424 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 265/- கெட்டி அட்டை : உருபா. 320/- படிகள் : 1000 நூலாக்கம் : திருமதி வ. மலர், சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : திருமதி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.  : 044 2433 9030. பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! பாரதிதாசன் பெற்ற பேறு ‘பாவேந்தத் தொகுதிகளை ஒரு சேரப் பதிப்பிக்கப் பெற்ற பேறு! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. இதனை எதிர்த்துப் பெரியார் தலைமையில் மறைமலை அடிகள், திரு.வி.க., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப் படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின் மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  நூன்முகம் தமிழில் நாடகக் கலைக்கு நெடிய வரலாறு உண்டு. நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலனெறி வழக்கம் இருந்தமை தொல்காப்பியத்தால் (999) அறியப்படுகிறது. முத்தமிழில் மூன்றாவது நாடகம். முதலிரண்டும் கலந்தது நாடகம். சங்க இலக்கியத் தில் நாடகம் நிகழ்ந்தமைக்கும், மக்கள் விரும்பிப் பார்த்தமைக்கும் சான்றுகள் உள. நாடக மகளி ராடுகளத் தெடுத்த எனப் பெரும் பாணாற்றுப் படையும் (55) பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும் எனப் பட்டினப்பாலையும் (113) நாடக மகளிர் ஆடுகளத்தையும், மக்கள் விரும்பி நாடகம் பார்த்ததையும் குறிப்பிட்டுள்ளன. கலித்தொகையில் நாடகக் காட்சிகளாய்ப் பல பாடல்கள் அமைந்துள்ளன. நாடகம் என்பது ஒரு கதை தழுவி வரும் கூத்து என்றார் அடியார்க்கு நல்லார். ஆடரங்கின் அமைப்பு முதலியவற்றை அரங் கேற்றுக் காதையும் அதன் உரைகளும் சிறப்புற விவரிக்கின்றன. அரசரும் அவரைச் சார்ந்த மக்களும், எளிய மக்களும் நாடகம் பார்க்கும் நிலை சங்க காலத்திற்கு முன்பே இருந்தது. வேத்தியல், பொது வியல் என்னும் இருபிரிவுகளும் இருந்தன. வேத்தியல் அரசர் முதலி யோர்க்கு உரியது. பொதுவியல் பிற மக்களுக்கு உரியது. நாடகம் கூத்து என்றும் கூறப்பட்டது. இவ்வழக்கு இன்று வரை நிலவுகிறது. கூத்தில் வல்லார் கூத்தர் எனப்பட்டனர். கூத்தினை ஆடல் என்றும் வழங்கினர். இறைவனையே ஆடல்வல்லான், கூத்தன், கூத்தபிரான் என்றெல்லாம் போற்றினர். தமிழ்க் காப்பியங்களில் பல நாடகக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. மறைந்துபோன நாடக நூல்களையும், நாடக இலக்கண நூல்களையும் சிலப்பதிகார உரையாசிரியர்கள் தம் உரையில் குறிப்பிட்டுள்ளனர். இந்நூல்களின் மறைவால் தொன்மைத் தமிழ் நாடகங்களின் இயல்புகளை அறிய இயலாதவராகிறோம். முதலாம் இராசராசன் ஆட்சிக் காலத்தில் (கி.பி.985-1012) தஞ்சை பெரிய கோவிலில் இராசராச நாடகம் நிகழ்ந்தமைக்குச் சான்றுகள் உண்டு. பிற கோயில்களிலும் பூம்புலியூர் முதலிய நாடகங்கள் நிகழ்ந்தமைக்குக் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. தளிச்சேரிப் பெண்டுகளால் நாட்டிய நாடகங்களும் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் பிறமொழி ஆட்சியாளர்களால் தமிழ் நாடகமரபுச் சிதைந்தது. பொருநர், கூத்தர், விறலியர், பாணர், பாடினியர் முதலியோர் தத்தம் கலைகளை மறந்தனர். போற்றுவாரின்றி அழிந்த கலைகளுள் நாடகமும் ஒன்று. பக்தி நெறியின் செல்வாக்கால் வடமொழிப் புராணங்கள் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றன. புராணக் கதைகள் நாடகங்களாய் நடிக்கப்பட்டன. ஊர் ஊருக்குப் பல குழுக்கள் முளைத்தன. நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமிகள் பல புராண நாடகங்களைப் புதிதாக இயற்றி நாடக மேடையேற்றினார். தமிழகமெங்கும் ஆங்காங்கே பாவலர்க ளாலும் கலைஞர்களாலும் நாடகங்களும் நாடகக்குழுக்களும் தோன்றின. ஊர் விழாக்களின் போது விடிய விடிய புராண நாடகங்கள் நிகழ்த்தப் பெற்றன. ஆங்கிலக் கல்வியின் தாக்கத்தால் ஆங்கில நாடகங்களைப் போலத் தமிழிலும் அங்கம், காட்சி (களம்) அமைக்கும் முறை தோன்றியது. பெ. சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம், பரிதிமாற் கலைஞரின் ரூபாவதி, மதிவாணன், மறைமலையடிகளின் சாகுந்தலம், பம்மல் சம்பந்தனாரின் சபாபதி முதலிய நாடகங்கள் தோன்றின. தேசிய விடுதலை உணர்வு மிக்கெழுந்தபோது கதரின் வெற்றி முதலிய நாடகங்கள் எழுந்தன. புராண நாடகங்களும் ஊடே அமைந்த பாடல்களால் விடுதலையுணர்வுக்கு வித்திட்டன. திராவிட இயக்கத்தவரின் பகுத்தறிவுக் கருத்துகள் நாடெங்கும் பரவின. சமூகச் சீர்த்திருத்த எண்ணங்கள் தளிர்த்தன. பகுத்தறிவு, மூட நம்பிக்கையொழிப்பு, மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு, மறுமணம், பெண்ணுரிமை, குழந்தைமணக் கொடுமை, தொழிலாளர் நலன், தமிழிசை இயக்கம், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு முதலியவற்றை வலியுறுத்தும் சமூக நாடகங்கள் கனல் தெறிக்கும் உரையாடல்களுடன் மக்கள் நெஞ்சத்தைத்தொட்டன. புலவர்களும், கலைஞர்களும் இத்தகைய சமூகச் சீர்திருத்த நாடகங்களைப் படைத்தனர். பல நாடகக் குழுக்களும் வேளை தவறாமல் இவ்வேலையைச் செய்தன. அரசியல் கட்சிகளின் மாநாடுகளிலும் நாடகங்கள் இடம் பெற்றன. பள்ளிகளின் இலக்கிய மன்றங்களில் மாணவர்கள் இலக்கிய, புராண நாடகங்களை நடித்தனர். இக்காலச் சூழலில் பள்ளியில் பயிலும் போதே கனகசுப்புரத்தினம் பள்ளி ஆண்டுவிழாவில் நடித்துள்ளார். தமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்கு கற்றுப் பெரும்புலமையுற்ற நம் கவிஞர் இசைப்புலமையும் நிறைந்திருந்தார் பாடல்களைப் பாடிக் குவிக்கும் பாவேந்தரானார். ஆசிரியப் பணியாற்றும்போதே சிந்தாமணி, வீரத்தாய் என்ற நாடகங்களை மாணவர்களால் பள்ளி மேடைகளில் அரங்கேற்றியுள்ளார். இளமையிலிருந்தே, இயற்றமிழிலும், இசைத்தமிழிலும் ஆர்வ மும் ஈடுபாடும் கொண்ட நம் கவிஞருக்கு நாடகத் தமிழும் கைவந்த கலையாயிற்று. திரைப்படங்களுக்குப் பாடல் எழுதத் தொடங்கினார். கதைகளும், கவிதைகளும் எழுதிக் குவித்த நம் கவிஞர் அவற்றை நாடகமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். 1938-இல் முதல் கவிதை நாடகம் வீரத்தாய் வெளிவந்தது. பாவேந்தரின் நாடகங்களைக் கவிதை நாடகங்கள், உரைநடை நாடகங்கள் இரண்டும் கலந்த நாடகங்கள் எனப் பகுக்கலாம். fhjyh flikah?, புரட்சிக்கவி ஆகியன முன்னர்க் கதைப்பாடலாயிருந்து பின்னர் நாடகமாயின. பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி முதலியன முதலில் நாடகங்களாகப் படைக்கப்பட்டுப் பின்னர் கதைப்பாடல் களாயின. 1941-இல் தோழர் இராசவேலுக்குப் பாவேந்தர் எழுதிய கடிதத் தில்கவிதைகள், நாடகம், சிறுகதை தமிழர் கொள்கை சுவைக்கான கருத்துமாக எழுத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் பாவேந்தரின் நாடகங்கள், தமிழர் கொள்கையை வலியுறுத்துவனவாய், சுவையுடையனவாய், கருத்துகள் நிறைந்ததாய் விளங்கின என்பது தெளிவு. 1943-இல் முத்தமிழ் அரங்கு என்னும் நாடகக்குழு அமைப்பதில் ஆர்வமும் ஈடுபாடும் காட்டியுள்ளார். தோழர் செல்லப்ப ரெட்டியாருக்கு எழுதிய கடிதங்களில் நாடக அரங்கு, நடிகர்கள், பாடகர், ஆடல் வல்லவர், வாத்தியக்காரர், நாட்டியக்காரர் ஆகியோரை அமைக்கவும், அவர்களைத் தங்க வைக்கவும், சம்பளம் கொடுக்கவும் பாவேந்தர் காட்டிய ஆர்வம், நெருக்கடி முதலியன புலப்படுகின்றன. முத்தமிழ் நிலையத்தையும் நாடகத்திற்கென்றே சென்னை சாந்தோம் பகுதியில் கடற்கரையொட்டி ஒரு பெரிய வீட்டில் அமைத்திருந்தார். புரட்சிக் கவி, இசையமுது நாடகங்கள் இதன் சார்பில் நடிக்கப்பட்டன. நடிப்பு, காட்சியமைப்பு, நாட்டியம், இசை முதலிய ஒவ்வொன்றிலும் பாவேந்தர் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். தேர்ந்த இயக்குநராய் விளங்கினார் எனலாம். சில நாடகங்கள் பாவேந்தரின் முன்னிலை யில் ஒத்திகை செய்யப்பட்டுள்ளன. அப்போது நடிக்கும்முறை, பாடிய முறை முதலியவற்றில் திருத்தங்களைக் கூறிச் செயற்படுத்தியுள்ளார். இன்ப இரவு என்னும் நாடகம் தந்தை பெரியார் முன்னிலை யில் சென்னை சாந்தோம் பகுதியில் 2.4.1944 இல் நடிக்கப்பட்டது. பார்த்த பெரியார் பாராட்டியுள்ளார். பாராட்டு 8. 1. 44 குடி அரசு இதழில் வெளிவந்ததின் ஒரு பகுதி: இன்று இந்த நாட்டில் தமிழும் தமிழ்க் கவியும், தமிழ் இசையும் தமிழர்களுடைய முன்னேற்றத்துக்கும், தன் மானத்துக்கும் பயன்படும்படி மக்கள் உணர, மக்களை ஊக்குவிக்க அவர் ஒருவரே என் கண்ணுக்குத் தென்படுகிறார். அவரை நாம் பயன்படுத்திக் கொள்வதில் தான் நம் வெற்றியின் தன்மை இருக்கிறது இதனால் பெரியாரின் கொள்கைக்கேற்ற தன் மானமிக்கவராய்ப் பெரியார்க்கு தெரிந்த ஒரே கவிஞர் நம் பாவேந்தர்தாம். பாவேந்தரின் நாடகங்களில் இளங்கணி பதிப்பகத் தொகுப்பு களில் இடம் பெற்றுள்ளவை 52. ஆய்வுத் தேடல்களுக்கு அகப்பட வேண்டியவையும் உள்ளன. இவற்றுள் முழுமை பெற்ற நாடகங்கள் பல. முழுமை பெறாமல் - முடிவு இல்லாமல் உள்ளனவும் இருக்கின்றன. வானொலிக்காகவும் சில நாடகங்களைப் படைத்துள்ளார். அவற்றில் உள்ள ஒலிக்குறிப்புக்களால் அக்குறிப்பு புலப்படுகின்றது. பாவேந்தர் படைப்புகள் பல. மாணவர் குறிப்பேடுகளில் எழுதப்பட்டவை. அவற்றின் பழைமையால் தெளிவில்லாப் பகுதிகளும் தெரிய வந்துள்ளன. இத்தொகுதியில் புதியனவாய் வருவனவும் உள்ளன. பாவேந்தரின் நாடகங்கள் ஆய்வாளர்களின் ஆய்வுக்குட் பட்டுள்ளன. முனைவர் ச.சு.இளங்கோ பல வகைகளாகப் பகுத்துள்ளார். அவை: தமிழ் இலக்கியச் சார்பு நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், கற்பனை வரலாற்று நாடகங்கள், சமூக நாடகங்கள், அங்கத நாடகங்கள், ஆரியப்புரட்டு விளக்க நாடகங்கள், குழந்தைகளுக்கான நாடகங்கள், குறு நாடகங்கள் என்பன. வேறுவகையாகப் பகுப்பாரும் உளர். இன்பியல் நாடகம், துன்பியல் நாடகம் எனவும் நடிப்பதற்குரிய நாடகம், படிப்பதற்குரிய நாடகம் எனவும் பார்க்கும் பார்வையும் உள. படிப்பதற் குரிய நாடகங்களுள் சில, சில மாற்றங்களுடன் நடிப்பதற்குரியனவாக மாற்றப்பட்டுள்ளன. பழந்தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள், தனிப்பாடல்கள் முதலியவற்றில் கொண்டிருந்த ஈடுபாடும், புராணங்கள், பழக்க வழக்கங்கள், மத அமைப்புகள் முதலியவற்றின்மீது வைத்திருந்த எண்ணங்களும், திராவிட இயக்கக் கோட்பாடுகளின் செயல் வேகங் களும், மொழி ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சியும் இத்தகைய நாடகங்கள் தோன்றக் காரணமாயின. - பி. தமிழகன்  அறிஞர்கள் பார்வையில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்க்கவி; தமிழரின் கவி; தமிழின் மறுமலர்ச்சிக் காகத் தோன்றிய கவி; தமிழரின் புகழ் மீண்டும் மேதினியில் ஓங்க வேண்டு மெனப் பிறந்த கவி; அவர் நமது கவி. - கோவை அ. அய்யாமுத்து  நிமிர்ந்த பார்வை, அச்சமில்லை என்ற முறுக்கான மீசை வயதை விழுங்கிய வாலிப வீறு உரப்பான பேச்சு புதுமை வேட்கை கொண்ட உள்ளம் - இவையே பாரதிதாசர்! - சுத்தானந்த பாரதியார்  பாரதிதாசன் மொழிவரையறையால் தமிழ்க் கவிஞர் ஆனால் கருத் தளவையால், கவிதைச் சுவையளவையால், மொழி எல்லையையும், நாட்டு எல்லையையும், கால எல்லையையும் கடந்த உலகக் கவிஞர் களுள் ஒருவர். - கா. அப்பாத்துரையார்  மதத்தின் பேராலும், சாதியின் பேராலும் தர்மத்தின் பேராலும் நீதியின் பேராலும் யார் யார் கொள்ளையடிக்கிறார்களோ, யார் யார் மற்றவர்களை ஏமாற்றுகிறார்களோ யார் யார் பிறர் உழைப்பில் இன்பம் அனுபவிக்கின்றார்களோ அத்தனை பேர்களையும் துவேசிக்கிறார் பாரதிதாசன். - ஏ.கே. செட்டியார்  சாதி மதக் கொடுமைகளைத் தூள்தூளாக்க குருட்டுப் பழக்க வழக்கங்களைத் தகர்த்தெறிய, பகுத்தறிவை விரிவாக்க, தமிழ்ப் பற்று பொங்கியெழ, பெண்ணடிமைத்தனம் நொறுங்க, பொதுவாக நில, பண முதலாளிகளின் கொடுமையை உணர்த்த, சுருங்கச் சொன்னால் தொழி லாளித்துவ சீர்திருத்தமான பாடல்களைத் தந்துள்ளார் பாரதிதாசன் - ப. ஜீவானந்தம்  பாரதியாரின் பாடல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தில் சுதந்திர உணர்ச்சியை உண்டுபண்ணியது போல, பாரதிதாசனுடைய பாடல்கள் சமூகச் சீர்திருத்த உணர்ச்சியை மக்களுக்கு ஊட்டி வருகின்றன என்றால் மிகையாகாது. மதங்களிலும், பழைய ஆசாரங்களிலும் ஊறிக் கிடந்த மக்களிடையே இவருடைய பாடல்கள் ஒரு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணியிருக்கின்றன. ஆதலால் இவர் ஒரு புரட்சிக்கவி. அமெரிக்கப் புரட்சிக்கவி வால்ட்விட்மன். தமிழ் நாட்டுப் புரட்சிக்கவி பாரதிதாசன் - கவிமணி தேசி விநாயகம் பிள்ளை  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1 : இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி - 2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஒருநாள் நிகழ்ச்சி) இரண்டாம் பகுதி (விருந்தோம்பல்) மூன்றாம் பகுதி (திருமணம்) நான்காம் பகுதி (மக்கட்பேறு) ஐந்தாம் பகுதி (முதியோர் காதல்) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10 : உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரஸ்புடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (தீபாவளி) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (முத்துப் பையன்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஒரு காட்சி சிறு நாடகம்) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் ஐ & ஐஐ 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா 1. ஆக்கம், 2. தீவினை 7. கொய்யாக் கனிகள் (கவிதை நாடகம்) தொகுதி -12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி -13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி - காரியக்காரன் (கடவுள் விஷயத்தில் ஜாக்கிரதை) 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை (செவ்வாயுலக யாத்திரை) 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (விதவைகள் துயர்) 14. திருந்திய ராமாயணம்! (பால காண்டம் - டெலிபோன் படலம்) 15. இதயம் எப்படியிருக்கிறது? (ஏழைகள் சிரிக்கிறார்கள்) 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி (மான்களின் ஒற்றுமை கண்டு அஞ்சி இறந்தது) 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (னுசைநஉவடிச)யின் தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (அவளும் நானும்) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. “வாரி வயலார் வரலாறு” அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி -14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி -15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி -16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி -17 : பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி -18 : பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி -19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி -20 : கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி -22 : கட்டுரை இலக்கியம் - 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி -23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி -24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் (தொகுதி 23இன் தொடர்ச்சி) 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி -25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (நெடுங்கதை) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (சூநபயவiஎந): பிராசசு இந்தியா (ஞசடிஉநளள ஐனேயை) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. பொருளடக்கம் பொங்கல் மாமழை v நுழையுமுன் ix வலுவூட்டும் வரலாறு xii பதிப்பின் மதிப்பு xvi 1. கண்ணகி புரட்சிக் காப்பியம் 1 2. மணிமேகலை வெண்பா 229  கண்ணகி புரட்சிக் காப்பியம் பதிகம் இயல் - 1 வேள்குன்றத்தில் ஒருநாள் கண்ணகி, அங்கிருந்த குன்றவர் பால் தன்நிலை கூறி அழுது உயிர் விடுகின்றாள். அக் குன்றவாணர் கண்ணகியின் உடலைப் புதைத்தலாகிய அறத்தைச் செய்து புறத்திற் செல்கின்றார்கள் - என்பன இவ்வியலிற் காண்க! மலைநாட்டு நெடுவேள்குன் றத்தின் வேங்கை மரநிழலில் கண்ணகி தான்வந்து நின்று கலகலெனக் கண்ணீரால் அருவிசெய்துகுறவர்களின் மனமதுவும்கரையச்செய்தாள்! கொலைசெய்யப்பட்டான் என் கணவன் கண்டீர் குற்றமொன்றும் செய்தறியான்; குன்றத் தோரே! இலைஉலகில் பருவுடல்தான் எனினும் அன்னோன் என்னுள்ளத் துள்ளிருத்தல் காணு வீரோ 1 இல் - இல்லை. முலைதோன்றி முற்றாமுன் தொட்டுச் சென்றோன் முறையில்லா ளிடம்கிடந்தான், இறுதி யாய் என் தலைவாயி லிற்கண்டேன் தாவ லானேன்; தன்வறுமை கூறினான். என்செய் வேன் நான்! கலைச்செல்வி மாதவியின் முத்தம் வாங்கக் கைப்பொருள்கேட் டான்போலும் என்றே எண்ணி நலம்பெய்த என்சிலம்பு தரஇ சைந்தேன். நாமிருவர் இன்புற்று வாழ்வோம் என்றான். 2 முறையில்லாள் - மாதவி. மதுரையிலே வாணிகமே புரிவோம் நீயும் வாராயோ என அழைக்க: விரைந்து சென்றேன் இதன்பின்னர் என்காதல் நோய்ம ருந்தை இருதுண்டாய்க் கண்டவள்நான்; வாழேன் என்றாள்! எதிரேறும் இளங்கொடிதான் கொழுகொம் பற்றே விழுந்ததையும் இறந்ததையும் கண்டு ணர்ந்தே அதிர்ந்தஉளத் தோராகிக் கண்ணீர் மல்க அறஞ்செய்து புறஞ்சென்றார் குன்ற வாணர். 3 இறந்த கண்ணகியின் உடலைப் புதைத்தலாகிய அறத்தைச் செய்து சென்றார்கள் குன்றவாணர்கள். இயல் - 2 கண்ணகி உடலை அடக்கம் செய்து செல்லும் குறவர்களை அங்குவந்த செங்குட்டுவன் - புதுமை என்ன எனக் கேட்க, நடந்ததைக் கூறினர்; அது கேட்ட செங்குட்டுவன் மற்றும் இதுபற்றிய வரலாற்றை அறிந்துகொள்ள எண்ணிச் செல்லு கின்றனன். இவ்வாறு செங்குட்டுவன் சென்ற பின்னர், அக் குன்றவாணர்கள், குணவாயிற் கோட்டத்தில் உள்ள இளங்கோ அடிகளிடத்தும் சொல்ல எண்ணித் தம் ஊரோடும் சென்றனர் - என்பன இவ்வியலிற் காண்க. குன்றத்துக் குறவரெலாம் கைகள் கூப்பிக் கோமான்நின் திறல்வாழ்க செங்கோல் வாழ்க என்றைக்கும் தமிழ் வாழ்க என்று வாழ்த்த எல்லீரும் நலஞ்சார வாழ்கின் றீரோ இன்றுங்கள் முகத்திலொரு புதுமை என்ன என்றசெங் குட்டுவன்பால் குன்ற வாணர் ஒன்றுண்டே ஒன்றுண்டே உலகுக் கெல்லாம் உணர்வளிப்ப தொன்றுண்டென் றுரைக்க லானார் 4 எல்லீரும் - நீவீர் யாவரும். உணர்வளிப்ப தொன் றுண்டென் றுரைக்கலானார் - உணர்வளிப்பது ஒன்று உண்டு என்று உரைக்க லானார் எனப் பிரிக்க. ஆடலுற்ற பெண்கட்குத் தோற்றுப் போன அழகான பச்சைமயில் எதிரிற் கண்ட காடுபெற்ற தீயில்விழும் வேள்குன் றத்தில் கண்ணகிதான் கோவலனை உள்ளத் தேந்தி வீடுபெற்ற தைமன்னன் திருமுன் வைத்தோம் மெய்ம்மைஇது வென்றுரைக்க உயர்க ருத்தில் ஈடுபட்ட உள்ளத்தா னாகி மன்னன் இன்னுமுள வரவாற்றை அறியச் சென்றான். 5 முதல்மூன்று வரிகளும் வேள் குன்றத்தின் சிறப்பு. வீடு பெற்றது - இறந்தது. அவ்வாறு குட்டுவன் சென் றிடஇ ளங்கோ அடிகளிடத் தும்சொல்லக் குன்ற வாணர் செவ்வையுறு குணவாயிற் கோட்டம் நோக்கிச் சீரூரில் உள்ளவர்கள் அனைவ ரோடும் பெய்வளையின் கோவலனின் செய்தி ஏந்திப் பேருளத்திற் பெறுஞ்செய்தி ஆவல் ஏந்தி எவ்வாறு மலையருவி செலும்? அவ் வாறே ஈரமலைச் சாரல்கடந் தேகி னார்கள். 6 இளங்கோவடிகள் - செங்குட்டுவன் உடன் பிறந்தவன்: தம்பி. அவன் வாழுமிடம் குணவாயிற் கோட்டம். பெய்வளை - கண்ணகி. பேருளம் - பெரிய உள்ளம். பெறுஞ்செய்தி ஆவல் ஏந்தி - இன்னும் பெறவேண்டிய தகவலின்மேல் ஆவல் கொண்டு என்றபடி. செலும் - செல்லும். குட்டுவன் - செங்குட்டுவன். இயல் - 3 வஞ்சி நாட்டின் குணவாயிற் கோட்டம் சென்ற குன்ற வாணர்கள், அங்கிருந்த இளங்கோவடிகளிடத்து நடந்ததைச் சொன்னார்கள். அந்நேரத்தில் செங்குட்டுவன்பால் வந்திருந்த சாத்தனாரும், தாம் கண்ணகி பற்றிக் கேள்வியுற்றதையும் சொன்னார். இந்த நிகழ்ச்சிகளை ஒரு காப்பியமாக நான் எழுதவா - என்று அடிகளார் கேட்ட அளவில் - சாத்தனாரும், நன்று நன்று என்று புகன்றார் - அதனால் இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் செய்தார்; அதைச் சாத்தனார் கேட்டார் - அவ்வாறு இளங்கோவடிகளால் இயற்றப்பெற்ற சிலப்பதிகாரம் என்ற நூலினால் - தனித்தமிழில் சில பாடல்களால் இளங்கோவடிகளின் கருத்தைக் கலப்பில்லாமல் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஒரு நூல் செய்யவேண்டும். என்று தோன்றியதால், இந் நூலாசிரியர் கண்ணகி புரட்சிக் காப்பியம் என்ற இந்நூலைச் சொல்லப் புகுந்தார்; இதனால் தமிழர்கள் தூய தமிழின் சுவைகண்டு வாழ்வார் என்பன - இவ்வியலிற் காண்க. குன்றத்துக் குறவரெலாம் வழிந டந்து குணவாயிற் கோட்டத்தைச் சேர்ந்து இளங்கோ என்றுரைக்கும் அடிகளிடம் நெடுவேள் குன்றில் இரண்டுள்ளம் ஒன்றிலொன்று இணைந்த வண்ணம் சென்றனவே! கோவலனை ஏந்தும் நெஞ்சச் சேயிழையாள் கண்ணகியைப் பெற்ற தான நன்றான வீட்டுலகம் இன்று பெற்ற நற்புகழை முன்பெற்ற தில்லை என்றார். 7 கோவலன் மாதவியிடமிருந்து என் வீடு வந்தான்: நான் தாவலானேன் என்று கண்ணகி சொன்னது கொண்டும் கண்ணகி, கோவலன் தன் உள்ளத்தில் இருக்கின்றான் என்றது கொண்டும் இரண்டுள்ளம் ஒன்றிலொன்று இணைந்த வண்ணம் சென்றனவே என்று குறவர்கள் சொன்னார்கள். வீட்டுலகம் - சாவு. அந்நேரம் செங்குட்டு வன்பாற் சென்றே அடிகளிடம் வந்திருந்த சாத்த னாரும் முன்நிகழ்ந்த கண்ணகியின் செய்தி யெல்லாம் முறையாகக் கேள்வியுற்ற படியே சொல்ல இந்நிகழ்வைக் காப்பியமாய் இயற்ற வோநான்? எனக்கேட்டார்அடிகளார்! நன்று நன்று முந்நாடு பற்றியதாம் அதுமு டிக்கும் முழுத்தகுதி நுமக்கென்றார் சாத்த னாரும். 8 சேரன் செங்குட்டுவனிடம் சென்றுவிட்டு இளங்கோ வடிகளிடம் வந்தார் சாத்தனார். முந்நாடு - மூன்று நாடுகள்; அவை: சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு. புலப்பெரியார் சாத்தனார் இருந்து கேட்டார் புரைதீர்ந்த அடிகளார் உரைத்தார்! அந்தச் சிலப்பதிகா ரப்பெருநூல் எனைஅ ழைத்துத் தனித்தமிழில் சிலபாட்டால் அடிகள் உள்ளம் கலப்பற்ற பசுப்பாலே யாக மக்கள் கவிந்துண்ணத் தருகஎனச் சொன்ன தாலே சொலப்புகுந்தேன் என்தமிழர் இருந்து கேட்பார் தூயதமிழ்ச் சுவைகண்டு வாழ்வார் நன்றே! 9 சொன்னதிலே பிழையிருந்தால் மன்னிப்பார்கள்* புலப்பெரியார் - அறிவு சான்ற பெரியார்; புரை - குற்றம். அந்தச் சிலப்பதிகாரப் பெருநூல்... சொன்னதாலே என்றது என்ன? - நடைமுறையில் இருந்த சிலப்பதிகாரத்தைப் பற்றி இந்நூல் ஆசிரியர் எண்ணியதைக் கூறியபடி. சொலப் புகுந்தேன் - சொல்லப் புகுந்தேன். சொல்லப் புகுந்த நூல் கண்ணகி புரட்சிக் காப்பியம் என்பதை இந்நூலின் தலைப்பால் அறிக. பதிப்பாசிரியர் குறிப்பு: சிலப்பதிகாரத்தின் தொடக்கத்தில் உள்ள பதிக மரபைப் பெரிதும் பின்பற்றி மூன்று இயல்களை உள்ளடக்கி இப் பதிகத்தைப் பாரதிதாசன் இயற்றியுள்ளார். முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம் எனும் இலக்கண மரபுப்படி இப்பகுதி முகவுரை, நூன்மரபு எனக் கொள்ளத்தக்கது. சிலப்பதிகாரப் பெருநூல் என மூலநூலைப் போற்றுபவர், இளங்கோவடிகளின் உள்ளத்தைக் கலப்பற்ற பசுப் பாலாக மக்கள் கவிந்துண்ணத் தருக எனச் சிலப்பதிகாரம் அழைத்ததாகக் குறிப்பிடுவதும் நெஞ்சில் நிறுத்த வேண்டி யவை. நல்ல கவிதைத் தேனாறுதான் கண்ணகி புரட்சிக் காப்பியம் ஆகும். இதனையே இந்நூலுக்கான முன்னுரையாகக் கொள்க. புகார்க் காண்டம் இயல் - 4 புகாரில் மாசாத்துவான் ஊர்ப் பெரு மக்களை நோக்கி என் மகன் கோவலனுக்கு, மாநாய்கர் மகளாகிய கண்ணகியைக் கொடுக்க இசைகின்றார். மணத்தை இருந்து முடித்துவைக்க வேண்டுகிறேன். என்றான். அதுகேட்ட பெருமக்களில் ஒருவராகிய சேந்தனார் என்பவர், பைந்தமிழ் நான்மறைவகுத்த முறைமையானது செத்துப் போயிற்றா? ஒருவனும் ஒருத்தியும் உள்ளம் ஒன்றுபடுதலே திருமணமாகும். அதுபற்றிய பேச்சே இங்கு இல்லை. தந்தைமார் ஒத்துக்கொண்டார் என்பதை மட்டும் கேட்கின்றோம். மணமகள் என்பவள் தந்தையார் எடுத்துக் கொடுப்பதான ஓர் அஃறிணைப் பொருளா? என மறுக்கின்றார். மணமுடிக்க ஒத்துக்கொண்டு அங்கு வந்திருந்த ஆரியன் அது கேட்டு நடுங்கித் தமிழின் அழகையே குலைப்பான் போல உளறலானான். அவன் சொன்னதாவது, எனக்குச் சாக்காடு நெருங்குகின்றது. ஆதலால், நான் சாகுமுன் திருமணத்தை நடத்திக் கண்ணால் பார்க்கவேண்டும் என்று நாய்கர் சொன்னதால் நான் ஒத்துக் கொண்டேன். வேண்டாமென்றால் போய்விடுகின்றேன். என் உடம்பைப் புண்ணாக்கிவிட வேண்டாம் - என்பன இவ்வியலிற் காண்க! வரம்பற்ற செல்வத்தான் வாய்மை மிக்கான் மாசாத்து வான்உரைப்பான் பெரியீர்! என்றன் திருமகனாம் கோவலற்கு மாநாய் கர்தம் செல்வியாம் கண்ணகியைக் கொடுப்ப தற்குப் பெருமனது கொள்கின்றார் மகன்ம ணந்தால் பெருமைஎன் கின்றேன்நான் ஆத லாலே திருமணத்தை முடித்துவைப்பீர் என்று சொல்லச் சேந்தனார் எழுந்திருந்து செப்ப லுற்றார். 10 கோவலன் + கு - கோவலற்கு: ஒருமை. பெருமனது கொள்ளல் - ஒப்புதல். சேந்தனார் - ஊர்ப்பெரு மக்களில் ஒருவர். செந்தமிழ்நான் மறைமுறையும் செத்த தேயோ? செம்மலுளம் மங்கையுளம் ஒன்று பட்டால் அந்நிலைதான் மணமென்பார் அதனை விட்டே அப்பன்மார் ஒப்புவதால் ஆவதென்ன? தந்தைதரப் படும்பொருளா மங்கை நல்லாள்? தகுவதன்றே தகுவதன்றே என்று சொன்னார். வந்திருந்த ஆரியனும் நடுந டுங்கி வாய்திறந்து தமிழ்குலைக்கத் தொடங்க லானான். 11 செந்தமிழ் நான்மறை - ஆரியரின் நான்மறைக்கு முன்னரே தமிழகத்தில் தோன்றிய அறம், பொருள், இன்பம், வீடு பற்றிய தமிழ் நான்மறை. * சாகுமுன்வி வாஹத்தை நடத்திக் கன்னால் தரிசிக்க வேனுமெண்று நாய்ஹர் சொண்ணார் ஆகாகா எண்றேண்நான் ஆரி யர்கல் அப்பண்மார் உடம்பட்டாள் விவாஹம் செய்வாள். ஆகாது த்ரமிளர்க்கே இவ்வி வாஹம்! ஆணதிணாள் எணைஅளைத்தார் நாணும் வந்தேன்! போகாயோ என்றுறைத்தாள் போகிண்றேணே புன்னாக்க வேண்டாம்எண் உடம்பை என்றான். 12 விவாஹம் - திருமணம்; ஆரியச் சொல். கன்னால் - கண்ணால், தரிசிக்க - பார்க்க; ஆரியம். எண்று - என்று. நாய்ஹர் - நாய்கர். சொண்ணார் - சொன்னார். எண்றேண் நாண் - என்றேன் நான். ஆரியர்கல் - ஆரியர்கள். அப்பண்மார் - அப்பன்மார். உடம்பட்டாள் - உடம் பட்டால். செய்வாள் - செய்வார்கள். த்ரமிளர்க்கே - தமிழர்க்கே. ஆண திணால் - ஆனதினால். எணை - என்னை. அனைத்தார் - அழைத்தார். நாணும் - நானும். வந்தேண் - வந்தேன். என்றுறைத்தாள் - என்றுரைத்தால். போகிண்றேணே - போகின்றேனே. புன்னாக்க - புண்ணாக்க. எண் - என். இயல் - 5 சேந்தனார் எதிர்ப்புக்கு மாசாத்துவான், கண்ணகியை மணந்து கொள் என்றேன். கோவலன் ஒத்துக்கொண்டாலும், இவ்வகை யில் நடக்கும் திருமணத்தை நடத்தி வைக்கத் தமிழர் ஒப்பார். ஏனெனில் இது தமிழர் திருமணமன்று. அதனால் ஆரியனை அழைத்தேன். என் கண்ணிருக்கும்போதே நான் பார்க்கும்படி இதைநடத்திவைக்க வேண்டுகின்றேன் என்று கும்பிட்டான். அவ்வாறே ஊரார் ஏற்றுக்கொண்டபின், ஆனால் மண நடை முறை அத்தனையும் ஆரியமாய் இருத்தல்வேண்டாம். இல்லா விடில் தீய விளைவுகள் உண்டாகும் ஆதலால், செந்தமிழால் அவையினர் வாழ்த்துவதேயன்றி, நீ ஒருபுறம் நாயைப்போலக் குரைப்பதுவும், நரியைப்போல ஊளையிடுவதும் நம்மிடத்தில் வேண்டாம்! என்ன சொல்லுகின்றாய் என்று சேந்தனார் கேட்க - ஆரியன் மந்திரங்கள் ஆரியத்தால் செய்யவேண்டும்; மற்றச் சடங்குகளும் அப்படியே. அதன்பிறகு மணமக்களை ஒன்றுசேர்க்கப் பெரியதொரு சடங்குண்டு; மந்திரமுண்டு; அவையனைத்தையும் செய்து முடிக்கத்தான் வேண்டும். ஆனால் பெரும் பகுதியை அகற்றி விடுவேன். எனக்குக் கொடுக்க வேண்டிய கூலியைமட்டும் அளவில் குறைக்கக் கூடாது என்றான். எல்லாரும் நகைப்பில் ஆழ்ந்தார்கள் - என்பன இவ்வியலிற் காண்க. கண்ணகிஎன் றொருபெண்ணை மணப்பாய் என்றேன் கட்டளையை என்மகனும் ஒப்பி னான் இவ் வண்ணாந்தாள்* திருமணத்தை முடித்து வைப்போன் ஆரியனே ஆதலினால் அவனை வைத்தேன், கண்ணிருக்கும் போதேநான் காண வேண்டும் காளையுடன் பாவையினை மணவ றைக்குள் எண்ணநிறை வேற்றிவைப்பீ ரெனக்கும் பிட்டான்! மாசாத்து வான்சொல்லை ஏற்றார் ஊரார்! 13 காளை - கோவலன்; பாவை - கண்ணகி ஆயினுமச் சேந்தனார் எழுந்தி ருந்தார் அத்தனையும் ஆரியமாய் இருக்க வேண்டாம் தீயவிளை வுண்டாகும் ஆத லாலே செந்தமிழால் அவையத்தார் வாழ்த்த லன்றி நாயைப்போல் குரைப்பதெலாம் நம்பால் வேண்டாம்! நரியைப்போல் ஊளையிடல் நம்பால் வேண்டாம்! நீயென்ன சொல்லுகின்றாய் என்று கேட்க நின்றிருந்த ஆரியனும் நிகழ்த்த லானான். 14 ஆரிய மந்திரங்கள் சொல்லப்படும்போது நாய் குரைப்பது போலவும், நரி ஊளையிடுவது போலவும் இருக்கும் என்றவாறு. * மந்த்ரங்கல் ஆரியத்தால் செய்ய வேண்டும் மட்டுமுல்ல சடங்குகலும் அப்ப டித்தான் பிந்திஅந்த வதூவரரை ஒன்று சேர்க்கப் பெரியதொரு சடங்குண்டே! மந்த்ர முண்டே அந்தஎலாம் செய்யத்தான் வேன்டும் ஆணால் பெரும்பாளும் அகட்டிடுவேன் கூளி மட்டும் எந்தமட்டும் குடுக்கனுமோ குடுக்க வேனும் என்றுரைத்தான் எல்லாரும் சிரிப்பில் ஆழ்ந்தார். 15 மந்த்ரங்கல் - மந்திரங்கள், மட்டுமுல்ல - மற்றுமுள்ள, சடங்குகலும் - சடங்குகளும், வதூவரரை - மணமக்களை, வேண்டும் - வேண்டும். ஆணால் - ஆனால். பெரும் பாளும் - பெரும்பாலும் அகட்டிடுவேன் - அகற்றிடு வேன். கூளி - கூலி. குடுக்கனுமோ - கொடுக்கணுமோ. குடுக்கவேனும் - கொடுக்கவேணும். இயல் - 6 திருமண நாளில் காலையே, யானைமேல் சோடித்தமைத்த அம் பாரியில் கோவலன் கண்ணகி இருவரையும் அமர்வித்து, நகர்வலம் புரிவித்தார்கள். அவ்வூர் வலத்தில், ஆடிக்கொண்டே சென்றனர் அழகு மாதர்கள்; பாடுநர் பாடிக்கொண்டே சென்றார்கள்; புலிக்கொடிகள் பறந்தன. அப்போது ஓர் அறிஞன் அங்கங்கு நின்று ஊர்ப் பெரு மக்களை நோக்கிக் கோவலன் கண்ணகி இருவரும் இந்நாள் மணம் கொள்கின்றார்கள். அத் திருமணத்தை வாழ்த்திடவருவீர், என்று சொல்லிக்கொண்டு போனான். ஊர்வலம் காணுவோர் அனைவரும் மணமக்களை வியந்து வாழ்த்த நகர்சுற்றி இல்லம் சேர்வித்தார்கள் - என்பன இவ்வியலிற் காண்க. சோடித்த யானையின்மேற் பொன்னம் பாரி தூக்கி அதில் மாநாய்கன் பாக்கி யத்தை ஈடில் மா சாத்துவான் இளங்க ளிற்றை இழையாலும் பட்டாலும் பூக்க ளாலும் மூடியுடல் மூடாத இருமு கங்கள் முத்துநிலா பொற்சுடரே எனவி ளங்க நாடிநகர் வலம்புரிந்தார் பல்லியங்கள் நாற்றிசையும் அமிழ்தென்று பாய்ச்சு வித்தார். 16 சோடித்த - சுவடித்த; அழகு செய்த. பாக்கியம் - கண்ணகி. இளங் களிறு - கோவலன். ஆடிக்கொண் டேசென்றார் அழகு மாதர் அசைந்துகொண் டிருந்ததுவே மக்கள் வெள்ளம்! பாடிக்கொண் டேசென்றார் பழந்த மிழ்ப்பண்! பறந்தனவே புலிக்கொடிகள் வான ளாவிப் பீடுடைய ஓரறிஞன் இங்குக் காணும் பெருங்கற்புக் கண்ணகிதான் கோவ லன்தான் நாடுடையீர்! இந்நாளே மணங்காண் பார்கள் நன்மணத்தை வாழ்த்திடவே வருவீ ரென்பான்! 17 புலிக்கொடி - அந்நாட்டையாளும் சோழ மன்னன் கொடி. பீடு - பெருமை. மணிக்குவியல் மீதிலொரு மலர்மு கத்தில் வந்துவந்து வழுக்கிவிழும் இரண்டு கண்கள் அணித்திருந்து பார்த்தவர்கள் அன்பு ளங்கள் அணைந்துவரும் நிலைஇதுவாம் எனவி யப்பார்! பணித்திடினும் பணிவல்லார் இயற்ற ஒண்ணாப் பாவைஒன்றும் வீரம்ஒன்றும் பெண்மாப் பிள்ளை! மணக்கின்றார் வாழியவே என்பார் கண்டோர். மணமக்கள் நகர்சுற்றி இல்லம் சேர்ந்தார். 18 மணிக்குவியல் - கண்ணகி முகம், மலர்முகம் - கோவலன் முகம், வழுக்கி விழுதலாவது, இவள் முகத்தில் அவன் விழிகளும், அவன் முகத்திலும் இவள் விழிகளும் வீழாமற் காப்பினும் வீழ்வது. இரண்டு கண்கள் - இருவர் விழிகளும். அணித்து - அருகில் பணி வல்லார் - வேலைப்பாடு வல்லவர்; ஓவியர், தச்சர் முதலியவர்கள். பாவை - பாவை போன்ற கண்ணகி; உவமையாகு பெயர். வீரம் - கோவலன். இயற்ற ஒண்ணாப் பாவை - பறவாக் குழவி, பாயா வேங்கை என்பது போல. இயல் - 7 மணம் நடக்கும் மணிவீடு மல்லிகைகளாலும், மணமுரசு முதலியவைகளாலும், பூத்தொங்கல் முதலியவைகளாலும், அழகு மிகுதியாகிக் கண் கவர்ந்தது. நாட்டு மக்கள் ஏந்திழைமாரோடு வரத் தொடங்கினார்கள். மாசாத்துவானும், மனைவியும், மாநாய்கனும் மனைவியும் வருவாரை எதிர்நோக்கி மரியாதை செய்து வாயிலில் நின்றார்கள். தெருமறையத் தெளித்திருந்த பசுங்கோரை வருவார் கால் பட்டுச் சரசரவென்றன. குத்து விளக்குகள் தத்தி நடந்தன. என்னத் தக்க இளைஞர்கள் வந்தார்கள் - என்பன இவ்வியலிற் காண்க. மணநடக்கும் மணிவீடும் பல்லி யத்தால் மணமுரசால் பூமழையால் வான்வ ரைக்கும் இணைந்தபெரும் பந்தரினால் முத்துத் தொங்கல் இனியநறும் பூத்தொங்கல் கமுகு வாழை அணைந்ததனால் நகர்நடுவில் அழகின் காடே அணைவாரின் கண்கவர்ந்தே மனம்க வர்ந்தே இணையற்ற தாயிற்று! நாட்டு மக்கள், ஏந்திழைமா ரோடுவரத் தொடங்கி னார்கள்! 19 பந்தர் - பந்தல்; போலி, அழகின் காடு - அழகின் மிகுதி. மாசாத்து வானோடு மனையும் மற்றும் மாநாய்க னோடுதன் மனையும் ஆகத் தேசுற்ற மணவீட்டின் வாயில் முன்னே தெருநோக்கி வருவாரின் வரவு நோக்கிப் பூசற்கு நறுந்தேய்வும் பூணத் தாரும் போடற்கு நறுஞ்சுருளும் வணங்கக் கையும் பேசற்குச் செந்தமிழும் முற்ப டுத்திப் பின்பாரார்; நின்றிருந்தார் அன்பார்ந் தாராய்! 20 நறுந்தேய்வு - சந்தனம். தார் - மாலை. நறுஞ்சுருள் - மணமுள்ளதாக மடித்த வெற்றிலை பாக்குச் சுண்ணம். தெருமறையத் தெளித்திருந்த பசுங்கோ ரைப்புல் சேவடியும் பூவடியும் மேல்வ ருங்கால் சரசரெனும்! பூவடிகள் சிலம்பு பாடும்! தத்தும் பொற் குத்துவிளக் காம்இ ளைஞர் விரைந்தோட மார்பணிகள் கணக ணென்னும்! வெறுவெளியில் பெருகுபுனல் மணிவெள் ளம்போல் அரிவையுடன் அழகன்என நாட்டு மக்கள் அனைவருமே மணவீட்டை அடைகின் றார்கள். 21 சேவடி - ஆடவர் காலடி, பூவடி - மகளிர் காலடி, மணிவெள்ளம் - அழகிய வெள்ளம், அரிவை - பெண். கண கணென்னும் - கணகண என்னும். ஒலிக்குறிப்பு. இயல் - 8 மண வீட்டினுள் நுழையும் குறிப்பிடத்தக்க தலைவர் தலைவியர் பெயர்கள்- என்பன இவ்வியலிற் காண்க! அன்பரசி ஆணழகு கன்னல் பொன்னன் ஆடுமயில் அறிவழகன் அன்னம் நல்லான் தென்னழகு தமிழப்பன் முத்து முல்லை தேன்மொழியாள் மறவர்மணி திங்கள் செல்வன் பொன்னோடை பொன்னப்பன் கிள்ளை சேரன் புத்தமுது தமிழரசு தங்கம் சோழன் இன்பத்தேன் இளவழகன் ஔவை வேந்தன் இருங்கோவேள் வயவேங்கை எல்லி நல்லி 22 திருவிளக்கு மதியழகன் நிலவு செங்கோல் தேனருவி அருளப்பன் தோகை பாரி மருக்கொழுந்து பொன்வண்ணன் அல்லி வள்ளல் மல்லிகை மாவளவன் காவேரி சிங்கம் கரும்புபெருந் தகைமுத்துப் பந்தல் சேந்தன் கயற்கண்ணி காத்தமுத்து வீரி மன்னன் முருகாத்தாள் புகழேந்தி தேனி மானன் முத்தம்மா தமிழ்வாணன் தாயார் வேலன் 23 அழகம்மை ஆளவந்தான் வேனில் தென்றல் ஆரமுது தமிழ்த்தொண்டன் இலந்தை பொன்வேல் மழைமுத்து மன்னர்மன்னன் தத்தை எட்டி மணியம்மை பொன்முடிதே னாறு தென்னன் மொழியரசி இளந்திரையன் புன்னை நன்னன் முத்துநகை மாவரசு முதலி யோரை அழைத்தார்கள் வருகென்றே நலஞ்செய் தார்கள் அணிஅணியாய் அனைவருமே உட்சென் றார்கள் 24 வருகென்றே - வருக என்றே இயல் - 9 மணவறை புக்க மணமக்களை வாழ்த்தியபின் மகளிரும் ஆடவரும் கோவலனையும் கண்ணகியையும் அமளிக்கு வருக என்றார்கள். தொலையாதிருக்கும் ஒரு நாழிகையின் அரைக்காலின் முக்காற் பங்கான நேரத்தையும் இது என்ன நஞ்சாக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டிருக்கும் கோவலனும் கண்ணகியுமா வர மாட்டோம் என்பார்கள்? வந்தார்கள்; அனைவரும் வாழ்த்துக் கூறித் திரும்பினார்கள். பின் - இங்கே மணமக்களுடன் விருந்துண்ட அனைவரும் சந்தனம் பூசி, சுருள் மென்று வாயைநிறைத்துக் கொண்டு, பேச முடியாமல் விருந்துண்ட சிறப்பினைப் பேசலானார்கள். அப்போது தம் மார்பின் மேலேயே சிந்துகின்ற எச்சிலைக் கண்ட மற்றவர்கள் சிரிக்க லானார்கள். நான் மருந்துண்ணு கின்றேன் ஆதலால் விருந்துண்ணவே இல்லை என்று சொல்லிக் கொண்டே ஒருவன் மலை வாழைப் பழங்களில் மட்டும் நூறு உண்டேன் என்றான். நிறைய உண்டு விட்டேன் ஆதலால் என் நிலை கடுமையாய் இருக்கின்றதென்ற மதியழகனை நோக்கி, ஒரு துரும்பை நீ உள்ளே செலுத்தி உண்டதை வெளியாக்கிவிடு என்று தென்னன் சொல்லிய போது, அந்த மதியழகன் துரும்பு செல்ல வழியிருந்தால் அங்குக் கிடைத்த தேம்பாகை விட்டிருக்க மாட்டேனே என்றான் - என்பன இவ்வியலிற் காண்க! வாழியவே மணமக்கள் என்று சான்றோர் வாழ்த்தியபின் வாழ்வரசி மாரும் மற்றும் வாழ்விலுயர் பெரியோரும் அமளி நோக்கி கோவலனைக் கண்ணகியை வருக என்றார் நாழிகையின் அரைக்காலில் முக்காற் பங்கும் நஞ்சென்பார் பஞ்சணைக்கா வரம றுப்பார்? யாழ் ஒன்றும் இசைஒன்றும் அமளி ஏற எல்லாரும் வாழ்த்துரைத்துத் திரும்ப லானார்! 25 அமளி - பஞ்சணை. திருந்துண்ட மணமக்கள் இருவ ரோடு சேர்ந்துண்ட நாட்டுமக்கள் தேய்வு பூசி வருந்துண்ட அடைகாயின் சுருளை மென்று வாய்நிறைத்து முகமுயர்த்தி இதழ்விள் ளாமல் விருந்துண்ட சிறப்பினையும் விரிக்க லானார் விழும்எச்சில் கண்டவர்கள் சிரிக்க லானார் மருந்துண்டேன் விருந்துண்கி லேன்நான் என்றோன் மலைவாழை மட்டும்நூ றுண்டேன் என்றான். 26 திருந்துண்ட - திருந்திய, வருந்துண்ட - வரும் துண்ட. வருகின்ற துணிக்கையான அடைகாயின் சுருள் - வெற்றிலை பாக்கு முதலிய வைத்துக் கட்டியது. இந்நாள் இதைப் பட்டி என்பர். கறிவகையும் பண்ணியத்து வகையும் நல்ல கனிவகையும் என்நாவைக் கவர்ந்த தாலே நிறைமூக்கைப் பிடிக்கநான் உண்டு விட்டேன் நிலைகடுமை என்றுமதி அழகன் சொன்னான்; நிறைவயிறு குறைவதற்கு நீள்து ரும்பை நீஉள்ளே செலுத்தென்று தென்னன் சொல்லச் சிறுதுரும்பு செல்ல இடம் இருந்தால் வட்டில் தேம்பாகை விட்டிரேன் என்றான் அன்னோன் 27 அன்னோன் - மதியழகன், இயல் - 10 விருந்துண்டவர்கள் தத்தம் வீட்டை அடையக் கடைத் தெருவையும் நடுத்தெருவையும் மேட்டையும் காட்டையும் கால்நடை யாகவும் ஊர்திகள் வாயிலாகவும் கடந்து சென்றார்கள்; அவர்கள் விருந்தில் உண்ட உணவுவகைகளை மெச்சலானார்கள். செய்முறை அனைத்தும் புதுமுறை என்கிறான் ஒருவன்: வடையில் நெய் ஒழுகிற் றென்றான் ஓர் ஆடவன்; இல்லை! நெய்யிலே வடை ஒழுகிற் றென்றான் மற்றொருவன். முக்கனி இட்டார்; அதன் அளவு குடத்தளவு என்றான் முத்தன். அதுமட்டுமா? அதற்கு ஒரு குண்டான் தேன் இட்டார்கள் என்றான் எட்டி என்பவன். மற்றொருவன் இந்த நாட்டில் வழங்கும் விருந்து முறை மாறவேண்டும். இங்கு உண்ண இடவேண்டும். வீட்டுக்கு எடுத்துப் போகவும், அதைப் பின்னர்ப் பல நாட்கள் வைத்துண்ணவும் அமையவேண்டும் என்றான் பொன்னன். அதுகேட்ட மற்றவன் பின்னாட்களுக்கு வேண்டுமானால் வேறு வீடு பார்த்துக் கொள்க என்று கூறவே - ஏடா! இந்த நாட்டில் எவன் வீட்டில் புத்துருக்கு நெய்யில் இலையும் சோறும் கறியும் மிதக்கும்படி படைக்கப்படும் என்று கேட்டான் பொன்னன். அவரைக்காய் முதலிய ஐந்தையும் கூட்டினால், அந்தக் கூட்டில் மற்றொன்று தோன்றும். ஆனால் அதன் பெயர் தெரியவில்லை என்று கூறியவனுக்கு அதுதானடா உயிர்ச்சுவை என்பான் தேவன் என்பான். பேச்செல்லாம் விருந்தின் புகழே! - என்பன இவ்வியலிற் காண்க. கடைத்தெருவில் நடுத்தெருவில் காட்டில் மேட்டில் கால்நடையால் ஊர்திகளால் செல்வோர் யாரும் படைத்திட்ட உணவுகளைப் புகழ லானார் பாங்கெல்லாம் புதுப்பாங்கென் பான்ஒ ருத்தன் வடையினிலே நெய்ஒழுகிற் றென்றான் திண்ணன் நெய்யினிலே வடைஒழுகிற் றென்றான் வேங்கை! குடத்தளவு முக்கனியா என்றான் முத்தன்! குண்டான்தே னாஅதற்கே என்றான் எட்டி! 28 முக்கனி - மா, பலா, வாழை, பாங்கு - முறை. இந்நாட்டு விருந்துமுறை மாற வேண்டும் இங்குண்டோம் வீட்டுக்கும் எடுத்துச் சென்று பின்னாளும் வைத்துண்டோம் என்ப தில்லை! பேராசை கொண்டிவ்வா றுரைத்தான் பொன்னன்! பின்னாளில் பிறர்வீடு செல்க என்று பெரியண்ணன் சொல்லவே பொன்னன், ஏடா! இந்நாட்டில் எவன்வீட்டில் புத்து ருக்கில் இலைசோறு, கறியெல்லாம் மிதக்கும் என்றான்! 29 புத்துருக்கு - புத்துருக்கு நெய். அவரைக்காய் உப்புநெய் கடுகு தேங்காய் ஐம்பொருளைக் கூட்டமுதில் அறிய லானேன் அவற்றோடு மற்றொன்றும் உண்டு போலும்! எனினுமதன் பேரறியேன் என்றான் ஆண்டான்! அவைஐந்தின் கூட்டத்தால் மற்றொன் றுண்டாம்; அதன் பெயர்தான் உயிர்ச்சுவைஎன் றுரைத்தான் தேவன் எவைஎவையோ பேசுவார் அவற்றி லெல்லாம் இன்விருந்தைப் புகழாத எழுத்தே இல்லை! 30 உண்டுபோலும் என்பதில், போலும் அசை. இயல் - 11 வானத்து முகிலை எட்டும் எழுநிலை மாடத்தின் மேல் இட்ட பஞ்சணை யானது, கண்ணகியையும் கோவலனையும் தன் உள்ளிடத்தில் தழுவிக்கொண்டு அதனால் சிறப்பை அடையும்போது பலகணி வழியாக வந்த தென்றலானது இனிமையை வார்த்தது. அதனால் மகிழ்ந்தவராய்க், காதல் வயப்பட்டவராய் அம்மாடத்தின் நிலா முற்றத்தை அடைந்தார்கள். அப்போது, பெருந்தகையான கோவலன் சிரித்தான். கண்ணகி நாண முற்றாள். கோவலன் தன் நீண்ட கைகளை நீட்டினான், கண்ணகி அக்கைகளில் சாய்ந்தாள். அவன் தனி அவள் தனி என்ற நிலை அவர்கள் கூடியவுடன் இல்லா தொழிந்தது! இன்பத்தின் எல்லையை அடைந்தார்கள்! அவளின் கருங்குழலை விலக்கி முழுநிலவு போன்ற முகத்தைத் தன் இடது கையால் ஏந்தியபடி பலபடியாக அவளைப் பாராட்டினான். அவ்வாறு பாராட்டுவோன் புதிதாக அடைந்த இன்பம் பழையதாகும்படி மேலும் மேலும் இன்பத்தில் ஆழ்ந்திடுவான்; மீள்வான். பின்னும் அவ்வாறே - என்பன இவ்வியலிற் காண்க. முகில்தழுவும் எழுநிலைமா டத்துக் கட்டில் முழுநிலவு முகத்தாளை அழகன் தான்தன் அகம்தழுவிச் சிறப்புறுங்கால் சாள ரத்தால் அசைந்துவரும் நறுந்தென்றல் இனிமை வார்க்க மகிழ்ந்தவராய்க் காதல்மிகப் பட்டா ராகி மாடத்தின் நிலாமுற்றம் வந்து சேர்ந்தார்; தகைசிரித்தான் நாணமுற்றி ருந்தாள் மங்கை! தடங்கைகள் நீட்டினான் அவற்றில் சாய்ந்தாள்! 31 முகில் - மேகம், சாளரம் - பலகணி. தகை - கோவலன். தழுவும்உடற் கூட்டத்தில் தனிமை காணார் தமைஇழந்தார்; இன்பத்தின் எல்லை கண்டார்! முழுநிலவைத் தன்இடது கையால் ஏந்தி மூடவரும் சுரிகுழலை விலக்கி ஆளன், அழகுக்கோர் இலக்கணமும் நீயோ கண்ணே! அன்புசெய வாய்ந்தஇலக் கியமோ என்றன் அழல்நீக்கும் குளிர்நிழலே இன்பப் பாவாய்! அனைத்தும்பெற் றேனுன்னைப் பெற்ற தாலே! 32 முழுநிலவு - அவள் முகம். அழல் - வெப்பம். என்வாழ்வில் நிறைஅமிழ்தே நினைக்குந் தோறும் இனிப்பவளே! வாய்திறந்து பேசுந் தோறும் தென்தமிழின் நறுஞ்சாறாய்த் தித்திப் போளே! Ô©LbjhW« I«òyD« ï‹ãš Mœ¤J« bgh‹nd!e‹ K¤nj!என் பூவே! என்பான்! புதிதொன்று பழைதாக மேலும், மேலும், இன்பத்தில் ஆழ்ந்திடுவான் மீள்வான் பின்னும் இன்பத்தில் ஆழ்ந்திடுவான் கோவ லன்தான்! 33 இயல் - 12 கண்ணகி இல்லறம் நடத்துகையில் ஒரு நாள், இந்தா ஒரு பாட்டுக் கேட்டுப்போ என்றழைத்த கோவலனுக்கு, கூட்டு ஒன்று விருந்தினர்க் காகச் செய்கின்றேன்; இந்த நேரத்தில் - என்னை அழைக்காதீர் என்றாள். கோவலன் என் பாட்டைக் கேட்டலினும் விருந்தினர்க்குக் கூட்டுச் செய்தல் இனியதாயிற்றோ என்ன, அதற்குக் கண்ணகி, பாட்டுக்கும் நம் காதல் கூட்டுக்கும் நான் செய்து கொண்டிருக்கும் பாகற்காய்க் கூட்டு முறை இனியதென்றாள். அந்நாள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பகல் விருந்தினராய் வந்திருந் தனர். அவர்க்கு ஆற்ற வேண்டிய நலன்களையெல்லாம் ஆற்றி, அவர்கள் அமர்வதற்கும், ஆடல் விருப்பினர் ஆடியிருப்பதற் கும், பாடல் விருப்பினர் பாடியிருப்பதற்கும், காற்றை நுகர்வதற்கும், உலவு தற்கும்,காட்சிக்கும் வகைசெய்து வைத்துக் கலந்துண்ண வருகின் றீர்களா என அழைத்து உணவூட்டவே, விருந்தினர்கள் அவளிட்ட சோற்றுக்கும், சாற்றுக்கும், கறி வகைக்கும் இவைகளைப் படைத்தற் குரிய எண்ணத் தூய்மைக்கும் தாய்மைக்கும் மிக வியப் புற்றிருந்தார்கள். விருந்துண்டவர்கள் சந்தனம் பூசி மாலையணிந்து அடைகாய் மென்று, மற்றும் தங்கள் வாய்ப்புக்குப் பலவும் கேட்டுப் பெற்று நாட்டு வளம் பேசிச் செந்தமிழ் நூல் இன்பந் துய்த்துப் பட்டு மெத்தையிலும், சாய்ந்திருக்கத்தக்க கட்டிலிலும் அமைந்திருந்தார்கள். அவர்களில் ஒரு முதியோள் என் கால்கள் நோகின்றன என்று அழைத்தாள். அது கேட்ட கண்ணகி தன் வேலைகட்கிடையிலும் அவைகளை விட்டு ஓடி அம்முதியோள் கால்களைப் பிடித்தாள் - என்பன இவ்வியலிற் காண்க. பாட்டொன்று கேட்டுப்போ என்று சொல்லிப் பாவையினை அழைத்திட்ட கோவ லற்குக் கூட்டொன்று விருந்தினர்க்குப் பண்ணு கின்றேன்; கூவாதீர் என்றுரைத்தாள் அடிஎன் பாட்டைக் கேட்டலிலும், விருந்தினர்க்குக் கூட்டுச் செய்தல் இனியதோ கிளத்தென்றான் கோவ லன்தான்! பாட்டுக்கும் நம்காதல் கூட்டி னுக்கும் பாகற்காய்க் கூட்டுமுறை இனிதே என்றாள். 34 கூட்டொன்று - கூட்டு ஒன்று - கூட்டு - கூட்டுக்கறி. கிளத்து - சொல்லுவாய். நூற்றுக்கு மேற்பட்டோர் பகல்வி ருந்தாய் நோக்குவார் மனமகிழ வருகை தந்தார்; ஆற்றுநலம் ஆற்றிஅவர் அமர்வ தற்கும், ஆடற்கும் உலவுதற்கும் பாடு தற்கும் காற்றுக்கும் காட்சிக்கும் வகைபு ரிந்து கலந்துண்ண வாரீரோ எனஅ ழைக்கச் சோற்றுக்கும் சாற்றுக்கும் கறிக்கும் எண்ணத் தூய்மைக்கும் தாய்மைக்கும் வியந்தார்; உண்டார்! 35 ஆற்றுநலம் ஆற்றுதல் - நீர் ஏந்தல் அடைகாய் தரல் முதலியன. சாப்பிட்டார் கமழ்தேய்வு நிறக்கப் பூசிக் கண்மலர்த்தேன் மழைநனைந்தே அடைகாய் மென்றே வாய்ப்புக்குப் பற்பலவும் கேட்டு நாட்டு வளம்பேசிச் செந்தமிழ்நூல் இன்பந் துய்த்து மாப்பட்டு மெத்தையிலும் சாய்ந்தி ருக்க வாய்ப்புற்ற கட்டிலிலும் அமைந்தார் தம்மில் கூப்பிட்டாள் ஒருமுதியோள் கால்நோய் என்றே குறுக்கோடிக் கண்ணகிதான் கால்பி டித்தாள்! 36 வாய்ப்புக்குப் பற்பல கேட்டலாவது - பற்குற்றக் குற்றி கேட்டல், கொப்பளிக்க நீர் கேட்டல் முதலியவை. குறுக் கோடுதல் - வேலைகளுக்கு இடையில் அவைகளை விட்டு ஓடுதல். இயல் - 13 கண்ணகி, முதியோளின் கால்பிடித்தாள் அன்றோ? அக்கால்கள் கோவலன் தாயும் கண்ணகியின் மாமியுமான முதியோளின் கால்கள்! அவள், கண்ணகியின் கைகளைப் பிடித்துக் கொண்டு தோல் பிடித்தும் விதை முதிராப் பக்குவத்தில் அமைந்த பயற்றங் காயைத் துவட்டற் கறி வைத்தமுறை எங்கே கற்றாய்? அது மிக நன்றாயிருந்தது. நீயோ தாய் ஊட்டிய முலைப்பாலால் பிடித்த கறைமாறாத உதட்டை உடைய இளையை. நின் மனையறம் மிகப் பாங்கு; மிக மகிழ்ச்சி எனக்கு என்றாள். கண்ணகி ஓடித் தன் அத்தானிடம் நடந்ததைச் சொன்னாள்! அதே நேரம் இம் முதியோளும் அங்கு வந்தாள். வணங்கினார்கள். தென்னகத்துப் பண்பாடுகளை விளக்கும் ஒரு விளக்கை நீவிர் குன்றின்மேல் ஏற்றி வீட்டீர்கள். உங்கட்காக நான் பல்பொருள்களைக் கொண்டு வந்துள்ளேன் என்றாள் முதியோள். இருவரும் இருநூறு வண்டிகளில் பொருள்களை எதிரிற் கண்டார்கள் - என்பன இவ்வியலிற் காண்க. கால்பிடித்த கண்ணகியின் கைப்பி டித்தே, கண்ணகிக்கு மாமியவள் கோவலன்தாய் தோல்பிடித்தும் விதைமுதிராப் பயற்றங் காயை துவட்டுமுறை எவண்கற்றாய்? தாயூட் டிட்ட பால்பிடித்த கறைமாறா இதழி னாளே! பாங்கடிநின் மனையறந்தான் மகிழ்ச்சி என்றாள் சேல்பிடித்து வைத்தனைய விழிவி யக்கத் திடுக்கிட்டாள் கண்ணகிதான் பறந்தாள் ஓர்பால் 37 கண்ணகிக்கு மாமி என்றதோடு நில்லாமல்,கோவலன் தாய் என்றும் கூறியது கண்ணகியின் தாய்மாமன் மனைவி அல்லள் என்பதை விளக்க. எவண் - எங்கே. அத்தான்நும் அம்மாஎன் அருமை மாமி! அதோகாண்பீர்! விருந்துண்ட மகளிர் தம்மில் முத்தொன்றைச் சிப்பிமறைத் ததுபோல் நன்கு முக்காடு முகமறைக்க அமர்ந்துண் டாரே! அத்தகையோர் இத்தகையோர் எனக்காண் கில்லோம்; அறையினின்று கால்வலியாம் என்ற ழைக்க எத்தாயோ என்படுமோ என்று சென்றேன் இருகாலைத் தொட்டேன்என் இருகை தொட்டார். 38 முத்தொன்றைச் சிப்பி மறைத்தது போல் என்பதில் முத்து முகத்திற்கும் சிப்பி முக்காட்டுக்கும் உவமை. என்றேகண் ணகிகூற அதேநேரத்தில் எதிர்வந்தாள் கோவலனின் அன்னை தானும்! சென்றுவணங் கினர்இருவர் அன்பால் அள்ளித் தென்னகத்துப் பண்பாட்டுப் பொன்வி ளக்கைக் குன்றிலிட்டீர்!* நன்றாக வாழ்க நீவிர்; கொண்டுவந்தேன் பல்பொருள்கள் கொள்க கொள்க என்றுரைத்தாள்! அங்கிருவர் எதிரிற் கண்டார் இருநூறு வண்டிகளில் பல்பொ ருள்கள்! 39 தென்னகத்துப் பண்பாட்டுப் பொன்விளக்கு என்றது விருந்து புறந்தருதல் முதலியவற்றை. பொன் விளக்கு என்றது தென்னகத்துப் பண்பாட்டின் உயர்வை. குன்றில் இடுதல் - எவர்க்கும் புலனாகச் செய்தல். இயல் - 14 காவிரிப்பூம் பட்டினத்து மக்கள்தம் கண்ணும் காதும் கலைவெறி தலைக்கேறுதலால் நிலைகுலைந்தனவாகி மேலே விரித்த வளைவுக்கும் அழகிய அரங்க மேடைக்கும் நடுவில், மின்னலோ, கொடியோ, சான்றோரின் பாக்களால் விரித்துரைக்கப் பெற்ற ஆடல் இலக்கணமோ, குழலோ, யாழோ,பைந்தமிழோ நன்னிலவோ, வேறெதுவோ என்று நாவினால் விரித்துக்கூற, மாதவி ஆடுகின்றாள், உலகமே மகிழ்ச்சி மீதூர! காணுவோர் - இவ்வாடல் உலகத்தில் ஒரு புதுமையாம் என்று ஆடற்கலையில் பிழைபாடுடைய வடவரும் பேசினார்கள். மற்றும் பலர் பிற நாடுகளின் ஆடலாசிரியர்களும் இனியும் தமிழ் நாட்டின் ஆடற்பாங்கை அறிந்து கொள்வது அரிதே என்று புகன்றார்கள். மாதவியின் கரு விழிகள் கடை ஓடிக் காதற்கருத்தை விளக்கி யும், செவ்விதழில் மின்னியும் கிடத்தலைக் கண்டவர்கள் அவளின் இருதோள்களும் ஒரு சிற்றிடையும் அசைதலால் எழும்பிய பூப்பந்து போன்ற முலைகள் அழகிய மார்பில் குலுங்கும் புதுமை காணவில்லை! இருந்த இடத்திலேயே வலம்புரிச் சங்கு போன்ற கழுத்து இருக்க அதன் மேல், இடம் வலமாய் நிலவு போன்ற முகம் மிதப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்தவர்கள் வண்டுபாடும் மலர் புனைந்த சடையாகிய பாம்பு உடுக்கை போன்ற இடையைச் சுற்றுவதைப் பாராதவர் ஆனார் - என்பன இவ்வியலிற் காண்க. காவிரிப்பூம் பட்டினத்தின் கண்ணும் காதும் கலைவெறிதான் தலைக்கேற நிலைகு லைந்து மீவிரித்த வளைவுக்கும் மணிமே டைக்கும் நடுவினிலே மின்னலோ கொடியோ சான்றோர் பாவிரித்த இலக்கணமோ குழலோ யாழோ பைந்தமிழோ நன்னிலவோ யாதோ என்று நாவிரிக்க மாதவிதான் ஆடு கின்றாள் நானிலமே மகிழ்ச்சிக்கூத் தாட ஆட 40 பட்டினம் - பட்டினத்து மக்கட்கு பெயர்.மீ - மேல். முழவினோன் முழவின்மேல் ஒற்றும் கையும் மொய்குழலாள் அடைவுபெற மிதிக்கும் காலும் வழிஒத்தி ருக்குமிது கூர்ந்து காணின் வையத்துக் கொருபுதுமை ஆகும் என்று பிழைபாட்டு வடவர்களும் பேச லானார்! பிறநாட்டின் அறிஞரெலாம் பிற்றை நாளும் அழகிருந்த தமிழ்நாட்டின் ஆடற் பாங்கை அறிவதெனில் அருமையே எனப்பு கன்றார். 41 முழவு - மத்தளம்; அடைவு - காலடைவு. வடவர் - ஆரியரும், தமிழகத்திலுள்ள பார்ப்பனரும். கருவிழிகள் கடையோடி விரலில் காதற் கருத்துரைத்துச் செவ்விதழில் மின்னக் கண்டோர் இருதோளும் சிற்றிடையும் அடித்த பூப்பந் தெழில்மார்பின் மேற்குலுங்கும் புதுமை காணார் இருந்தபடி வலம்புரிதான் இருக்க மேலே இடம்வலமாய் ஒருநிலவு மிதக்கக் கண்டோர், சுரும்பிருந்து பாடுமலர்ப் பின்னற் பாம்பு துடியிடையைச் சுற்றுவது காணு கில்லார். 42 வலம்புரி - கழுத்து, பூப்பந்து - முலை, நிலவு - முகம், இவை அனைத்தும் உவமை ஆகு பெயர்கள். இயல் - 15 மாதவி ஆடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த மன்னன் - ஆடல், பாடல், அழகு ஆகிய மூன்றிலும், அந்தமிழின் மேன்மையை விளக்குவதிலும் எனக்கு ஈடானவர் எவருமில்லை என்று மாதவி கூறினாள் போலிருக்கின்றது. ஆடற்கலையில் இந்நாட்டுக்கு இணையாக எந்நாடுமில்லை என்று கூறினாள் போலிருக்கின்றது; அதனால் பெருமை அடைந்தவள் அவளல்லள் நானே! புகழ் அவளுக்கன்று; இந்நாட்டுக்கு! அவை யிலுள்ளார் அனைவரும் கலையை அடைந்து மகிழ்கின்றார்கள். இயலிசைநா டகமூன்றும் இந்தா என்றே இவ்வுலகு கண்டுகேட் டுணர்ந்து வக்கக் கயல்விழியால் மலர்வாயால் சுவடிக் காலால் கடிதீந்த திறம்அரிது. நாம்இ தன்முன் குயில்கேட்டோம் கிளிஅறிந்தோம் மயிலைப் பார்த்தோம் கூற்றும்பாட் டும் கூத்தும் ஒருங்கு காணோம் அயலார்பால் கண்டவெலாம் சுண்டைக் காய்கள் அரிவையால் பெற்றதுதேன் வாழை யாகும்! 43 இந்தா - இகரச் சுட்டின் திரிபு. உணர்ந்துவக்க என்பதை, உணர்ந்து உவக்க எனப்பிரிக்க கடிதீந்த - கடிது ஈந்த, சிறிது நேரத்தில்காட்டிய, சுவடிக்கால் - சுவடி போன்ற கால், பனையின் இளவெண் குருத்தை அளவாய் வாரிஎழுதிச் சேர்த்த ஓலைச்சுவடி. இவ்வாறு புகழ்ந்தானாய் மன்னர் மன்னன் இந்தாடி என்கண்ணே பச்சை மாலை செவ்விதின்நீ தலைக்கோலி ஆக! மேலும் தேடரும்பொன் ஆயிரத்தெட் டுக்க ழஞ்சே எவ்வாறும் விலைபெறும்என் றான்அ ளித்தான் இருந்தவர்கள் எல்லாரும் மகிழ்ந்தா ராகி அவ்வளவும் தகும்தகும்என் றுரைத்தார் ஆங்கே மற்றவரும் தகும்பரிசில் அடைந்து வந்தார்! 44 இந்தா ஏடி - இந்தாடி; திரிபுப் புணர்ச்சி. தலைக்கோலி ஆக - தலைக் கோற்பட்டம் உடையவளாக; ஆடலிற் சிறந்தவ ளாகத் திகழ்க என்றபடி. மற்றவரும் - ஆசிரியன், தண்ணுமை வல்லான், பாடலாசிரியன் முதலியவர்களும். இயல் - 16 ஆடல் கண்ட நாட்டு மக்கள் மாதவி பரிசில் பெற்றுச் சென்று விடுவதைப் பொறாதவர்களாகி ஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் கிடந்த அழகை விடைகொடுத்துப் பரிசில் தந்து நம் வேந்தர் விரைவாக அனுப்பிவிட்டாரே அந்தோ என்று சொல்லி, மனமும் கண்ணும் (அவளைப்) பின்பற்றிச் செல்ல, இன்பத்தை விடாது பற்றும் இயல் -புள்ள உயிர்செல்ல எல்லாரும் இனத்தோடு செல்கின்ற மாதவியோடு செல்லலானார்கள். ஆயிரம் கண்கள் அவள் இனிய தேனிதழில் மொய்க்கும்! இரண்டாயிரம் கண்கள் அவள் கண்ணாகிய நீலமலர்த் தேனில் மொய்க்கும்! இவ்வாறு சூழ்ந்துள்ள மக்கள் ஒரு கடல்! அக்கடலின் நடுவில் மாதவி ஒரு புள்ளி. அவள் முதுகின் பின்னே சென்ற ஒருவன் தன் கழுத்தை நீட்டி, அவள் மலர் முகத்தை உற்றுப் பார்க்கின்றான். துவளுகின்ற பின்னலைத் தொடுகின்றான் ஒருவன்! பொன்னா மின்னா என்று அவளுடம்பைப் பார்த்தபடி நடக்கின்றான் ஒருவன்! நெஞ்சுறுத்தும் காதலால், ஒருவன் வஞ்சியின் முதுகைத் தொட்டு நக்கிச் சுவைக்கின்றான். தன் மேற்பட்ட அவளின் மேலாடையைப் பூஞ்சோலை என்றான் ஒருவன் - என்பன இவ்வியலிற் காண்க. கடைஓடி நொடிமீளும் கண்ணென்ன கண்ணோ! காப்பியத்தின் பொருள்முடிக்கும் விரலென்ன விரலோ! துடைஅரங்க மின்னிநெளி இடைஎன்ன இடையோ! தூண்டாத மணிவிளக்கின் ஒளிப்பிழம்பு காற்றால் அடைவதென அடைவுபெறும் உடலென்ன உடலோ! ஆடிக்கொண் டும்பாடிக் கொண்டுமிருந் தவளை விடைகொடுத்துப் பரிசளித்து நம்வேந்தர் வேந்தன் விரைந்தனுப்பினான் அவளும் செல்லுகின்றாள் அந்தோ! 45 இதுமுதல் மூன்று விருத்தப் பாக்கள் அரையடி தோறும் மூன்றாம் சீர் மூவசைச் சீராய் வருவன. துடை அரங்க - துடை அரக்குதல் கொள்ள; அரக்குதல் - அழகுறப் புடை பெயர்தல். ஒளிப்பிழம்பு காற்றால் அடைவது நடுக்கம்; அசைவில் ஓர் விரைவு கொள்ளல். எனக்கூறி மனம்செல்லக் கண்களெலாம் செல்ல இன்பத்தை விடாதுபற்றும் இயற்கைஉயிர் செல்ல ïl«bjhlu1¢ செல்கின்ற மாதவியி னோடே, vyhU«2 செல்லலுற்றார் ஆயிரங்கண் அன்னாள் இனியதேன் இதழினிலே ஒருங்கோடி மொய்க்கும் இரண்டாயி ரங்கண்கள் கண்ணீலத் தேனில் உனக்கெனக்கென் றேஓடி மொய்க்கும்மிகு மக்கள் ஒருகடலே; மாதவிதான் நடுவில்ஒரு புள்ளி! 46 இயற்கை - இயல் - புள்ள. இனம் - ஆடலாசிரியன், பாடலாசிரியன்,முதலியவர்கள் புள்ளி - சிறப்புப் பொருள். உடன்முதுகின் பின்னிருந்த ஒருவன்தன் கழுத்தை ஒட்டி அவள் மலர்முகத்தை உற்றுப் பார்க்கின்றான். - கையெழுத்துப் படியில் உள்ள இவ்வடி இயல்பின்மை கருதி நீக்கப்பட்டுள்ளது. அவள்முதுகின் பின்னிருந்த ஓர்ஆள் கழுத்தை அணுகிஅவள் மலர்முகத்தை உற்றுப்பார்க் கின்றான் துவளுகின்ற பின்னலினைத் தொடுகின்றான் ஒருவன் சுடர்ப்பொன்னோ மின்னலோ என்றுடலை ஒருவன் கவலையுடன் பார்த்தபடி நடக்கின்றான் மற்றும் கருத்துறுத்தும் காதலால் வஞ்சியவள் முதுகை அவுக்கென்று தொட்டுநக்கிச் சுவைக்கின்றான் ஒருவன் அவள்ஆடை மேற்பறக்கச் சோலை என்றான் ஒருவன் 47 கவலை - மனம் ஊன்றல். கருத்துறுத்தும் கருத்து உறுத்தும். அவுக்கென்று - விரைவுணர்த்தும் குறிப்பு. பறக்க - செயவனெச்சம். காரணப்பொருட்டு இறந்த காலம். பறந்த காரணத்தால் என விரிக்க. இயல் - 17 நகர மக்களின் நெருக்கத்தால் மாதவிக்கு நலிவு வராதிருக்கப் பல்லோர் சேர்ந்து கை கோத்துக் கொண்டு பெரிய வட்டம் ஆக்கி, நடுவிலே நடத்திச் செல்லுகின்றார்கள். இவ்வாறு அரசர் தெருவை அடைந்த அவள் தன்னைச் சூழ்ந்துள்ள ஆடவரின் முகவரிசையில் தன் கண்களைச் செலுத்தும்போது, ஒரு காளை தன் நெஞ்சைத் தொட்டான். அவன் யார்? - அரசரும் கடன் கேட்கும் செல்வரின் பிள்ளை; கண்ணகியை மணந்த செம்மல்; பாவலரும் பாக்களுக்கு என்ன பொருள் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளத் தக்க தமிழ் வல்லவன்; பலரோடு மாதவியின் ஆடல்காண வந்தவன்; அவளின் பின்னோடு சென்றவன்; அவன் அவள்மேல் ஆசையுற்றதனால் அவள் என்னைத் திரும்பிப் பார்க்க மாட்டாளா என்று எண்ணிக்கிடந்தான். கடைக் கண் பிச்சை ஈந்தாள். ஏற்றுக்கொண்டான்! இவன் கண்கள் அவள் கண்களையும், அவள் கண்கள் இவன் கண்களையும், இவன் மனம் அவள் மனத்தையும் அவள் மனம் இவன் மனத்தையும் பறிக்கும் கதை நடக்கும்போது மாதவியின் சார்பில் ஒரு கூனி நம் மன்னவர் மகிழ்ந்து மாதவிக்கு அளித்த மாலைக்கு ஆயிரத்தெண் கழஞ்சு பொன் தந்து மாதவியை அடையலாம் என்று மக்களிடம் கூறுகின்றாள். அதுகேட்ட மாதவி உடனே கோவலன் தோளில் அம் மாலையைப் போட்டாள்! கோவலனும் உடன்பட்டுப் பொன்னைக் கொடுத்தான்! இருவரும் ஓடுகின்றார்கள். உடனிருந்தவர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைகின்றார்கள்! வருந்துகின்றார்கள் சிலர். அவ்விருவரின் மகிழ்ச்சியைக் கண்டும் அவனுக்கும் அவளுக்கும் உள்ள பொருத்தத் தைக் கண்டும் மகிழ்கின்றார்கள். சிலர் இன்னும் ஓடுகின்றார்கள்; மாதவி யின் வீடாகிய கூட்டை அடைந்தார்கள்; மாதவி கோவலன் ஆகிய அன்றிற் பறவைகள் - என்பன இவ்வியலிற் காண்க. நகரமக்கள் நெருக்கத்தில் மாத விக்கு நலிவுவரா திருக்கவே பல்லோர் சேர்ந்து தகுநெடுங்கை கோத்துமா வட்டம் ஆக்கித் தையலினை நடுவினிலே நடத்திச் சென்றார். திகழ்தருமோர் அரசர்தெருச் செல்லல் உற்ற திருநுதலாள் தனைச்சூழ்ந்த ஆட வர்கள் முகவரிசை மேற்றனது விழிசெ லுத்தும் வேளையொரு காளைதன் நெஞ்சைத் தொட்டான்! 48 மாவட்டம் - பெரிய வளையம். காளை நெஞ்சைத் தொட்டான் என்றது, கோவலன் மேல் தன் நெஞ்சம் சென்றதை. காவலரும் கடன்கேட்கும் செல்வர் பிள்ளை; கட்டழகன்; கண்ணகியை மணந்த செம்மல்; பாவலரும் பொருள்கேட்கும் தமிழ்வல் லாளன் பலரோடு மாதவியின் ஆடல் காணும் ஆவலினால் அங்குவந்தோன் வெளியிற் சென்ற அன்னாளின் பின்சென்றோன்; கடைக்கண் பிச்சை ஈவாளா எனக்கிடந்தோன் ஈந்தாள்; ஏற்றான் இரண்டுள்ளத் திறப்புவிழா இதுவாம் என்க. 49 காவலர் - அரசர்.செம்மல் - ஆடவரிற் சிறந்தவன். கண்ணைக்கண் மனத்தைமனம் கன்னம் வைக்கும் கதை முடிந்து போனவுடன் மங்கை சார்பில் நண்ணி ஒரு கூனிதான்ஒன்று கேட்பீர்! நம்மன்னர் உவந்தளித்த நன்மா லைக்கே உண்ணசையால் ஆயிரத்தெண் கழஞ்சு தந்தோன் ஓவியத்தை மாதவியைப் பெறுக என்றாள்! ஒண்ணுதலும் அவன்தோளில் மாலை போட்டாள்; உவப்போடு கோவலன்பொன் ஈந்தான் கையில்! 50 கன்னம் வைத்தல் - பறித்தல். உண்ணசை உள் நசை; உள மார்ந்த ஆசை. ஒண்ணுதல் - ஒண்மை நுதல், ஒளிபொருந்திய நெற்றியை உடைய மாதவி; பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஓடுகின்றார் ஓடுகின்றார் இருவர் தாமும்! உடனிருந்த கூட்டத்தார் ஏமாந் தார்கள்! வாடுகின்றார் அவர்களிலே சில்லோர்! சில்லோர் மகிழ்கின்றார் அவ்விருவர் மகிழ்ச்சி கண்டு, பாடுகின்றார் சில்லோர்அப் பாவை யாட்கும் பைந்தமிழச் செம்மலுக்கும் பொருத்தம் என்றே! ஓடுகின்றார்; மாதவியின் வீட்டுக் கூட்டின் உள்ளடைந்தார் மாதவிகோ வலன்அன் றில்கள். 51 கடைசி அடியின் ஓடுகின்றார் வினையாலணையும் பெயர்; எழுவாய். உள்ளடைந்தார் - பயனிலை. மாதவி கோவலன் - எழுவாய். அன்றில்கள் - பெயர்ப் பயனிலை. அன்றில் பறவைகள், ஒன்றைவிட்டு ஒன்றுபிரிந்தால், காதல் தோல்வியால் உயிர்பிரியும் இயல்புடையவை. இயல் - 18 மாதவியுடன் அவளில்லம் சேர்ந்த கோவலன், வீட்டில் கூடத்தை அடைந்தவுடன், பஞ்சணை அறையைக் கண்ணால் தேடினான். அவளும் அதை அறிந்து சுட்டிக் காட்டினாள். இருவரும் உட்புகுந்தனர். பஞ்சணை ஏறினார்கள். அவளை அவன் பாராட்டினான். முகத்தோடு முகம் சேர்த்தான். அவளின் புதுத்தேனில் ஊறவைத்த கனி இதழே எனக்குத் துணை என்றுஇன்புறலானான். இவ்வாறு கோவலன் கன்னல் ஒன்றுக்கு ஓரிலக்கம் பொன் விழுக்காடு செலவு செய்து வந்தான். ஒரு நாள் அறையின் பஞ்சணையிலிருந்த கோவலன் தனியே தெருவிற் சென்றுகொண்டிருந்த ஓர் இளைஞனைக் கண்டு திடுக்கிட்டான். அவள் என்ன என்றாள். என்போன்ற இவ்விளைஞன் தன் துணைவியைப் பிரிந்தும் வாழ்கிறான் என்றான் - என்பன இவ்வியலிற் காண்க. உட்புகுந்து கூடத்தின் நடுவில் நின்றே ஒண்டொடியின் முகம்பார்த்தான்; வீட்டைப் பார்த்தான் சுட்டினாள் பஞ்சணையின் அறையை! அன்னோன் தோகையினை அணைத்தபடி உட்பு குந்தே எட்டினான் பஞ்சணையை! உடன்ப றந்தாள்! இருபெருக்கின் ஒருவெள்ளப் புனலே யானார் கட்டிக்க ரும்படிஎ னத்தொ டங்கும் கவிக்கிடையில் முகத்தில்முகம் கவிழ்க்க லானான். 52 ஒண்டொடி - ஒண்மை தொடி; ஒளி உள்ள வளையலை அணிந்தவள்; மாதவி. புதுத்தேனில் ஊறவைத்த கனியு தட்டைப் புகல்என்றான் கண்ணகியை மறந்தே போனான்! எதிர்ப்பாரும் நட்பாரும் இலாத தான இன்பஉல கிதுவென்றே அவள்தோள் சாய்ந்தான் இதற்குத்தான் நான்பிறந்தேன் இவ்வை யத்தில் என்பான்போல் தழூஉமார்பை விடாதி ருந்தான் முதற்றொடங்கும் முத்தமழை கடைசி யூழி முடியுமட்டும் முடியாது போலும் அங்கே! 53 புகல் - உறுதுணை. தழூஉம் - தழுவும்; அளபெடை. கைந்நொடியை ஓரிலக்கம் பொன்னாற் போக்கிக் கைப்பொருளைப் போக்கிவரும் நாளில் அன்னோன் தன்அறையின் பஞ்சணையில் அவளின் தோளில் சாய்ந்தபடி பலகணியால் தெருவிற் சென்ற சின்னவனைக் கண்டிட்டான்; கோவ லன்தான், திடுக்கிட்டான்; உடலதிர்ச்சி உணர்ந்த மங்கை என்னஎன்றாள்; என்போன்றான் துணைவி இன்றி எவ்வாறு தனித்தும்உயிர் வாழ்ந்தான்? - என்றான். 54 கைந்நொடி - இமைக்கும் நேரம். கைந்நொடி ஒன்றை ஓரிலக்கம் பொன்னாற் போக்கி - இமைப்போது ஒன்றுக்கு ஓரிலக்கம் பொன்விழுக்காடு அவள் பொருட்டுச் செலவு செய்து. இயல் - 19 பாடுவன அனைத்தும் காதற் பாட்டுக்களே. கோவலன் பஞ்சணையில் இருந்தபடி உண்பான். அவளுக்கும் அவனுக்கும் மோதல் ஏற்பட்ட தில்லை; முத்துநகை இதழுக்குள் மறைந்ததில்லை. ஈதலும் ஏற்பதும் இல்லை. இன்பப் பொய்கை இறங்கினோர் கரை ஏறும் நினைப்பே இல்லாதவர் ஆனார்கள். கோவலனுக்கு அவள்; அவளுக்குக் கோவலன். அந்நாளில் மாதவி நிலாமுற்றத்தில் கோவலனிடம் இன்பமே நுகர்தல் போல பல மகளிரும் தம் மணாளர் தோளில் ஒடுங்குவார்கள். பாவை கண்ணகி மட்டும் கொழுநனின்றித் தைப் பொங்கல் உண்ணல் இழந்த உழவனைப்போல் தளரலுற்றாள். அவள் கண்ணில் மை எழுதாள்; பொட்டு வையாள்; தலைக்கு நெய்யணி செய்யாள்; மங்கல அணி அன்றி, மற்ற அணி அணியாள்; ஒப்பனைகள் மறந்தாள்; செந்தமிழ், புலவர்களை இழந்தால் சிறத்தல் உண்டோ? அது போலவே எங்குமுள்ள மாதர்களில் கண்ணகி போலவே இணை பிரிந்து துன்புறுவோர் பலர் ஆனார்கள். நிலவு ஒன்றே குளிர்ந்திருந்தும்; அழகு பெற்றிருந்தும் சிலர்க்கு அல்லலையும் சிலர்க்கு நலத்தையும் செய்தல் வியப்பே ஆகும் - என்பன இவ்வியலிற் காண்க. காதற்பாட் டேயன்றிப் பிறபாட் டில்லை கட்டிலிலே உண்பதன்றி இறங்கல் இல்லை மோதல்வரக் காரணமே இருந்த தில்லை முத்துநகை இதழுக்குள் மறைந்த தில்லை ஈதலில்லை ஏற்றலில்லை இன்பப் பொய்கை இறங்கினோர் கரையேறும் நினைப்பே இல்லை ஈதில்லை என்பதில்லை கோவ லற்கே இவளிருந்தாள் மாதவிக்கே அவனி ருந்தான். 55 முத்து நகை இதழுக்குள் மறைந்ததில்லை என்பது, அவர்கள் எப்போதும் சிரித்து மகிழ்ந்துகொண்டிருந் தார்கள் என்பதைக் காட்டுவதாயிற்று. அந்நாளில் மாதவிநி லாமுற் றத்தில் அன்பனிடம் இன்பமே நுகர்தல் போல பன்மகளிர் மணாளர்தோள் ஒடுங்கு வார்கள்! பாவைகண் ணகிமட்டும் கொழுந னின்றித் தன்பாற்பொங் கலைஇழந்த உழவ னைப்போல் தளர்வுற்றாள் பஞ்சணையிற் புரள லுற்றாள் இன்கண்ணில் மைஎழுதாள் பொட்டும் வையாள் இருண்டகுழல் நெய்யணியும் இன்றிச் சோர்வாள் 56 தன் பால் பொங்கலை இழந்த உழவன் துன்புறுதல் தன் கணவனை இழந்து துன்புறும் பெண்ணுக்கு உவமை. இன் கண் - காண்பார்க்கு இனிமை செய்கின்ற கண் என்க. மங்கலத்தின் அணியன்றி அணிம றந்தாள் வழக்கத்தால் செய்கின்ற ஒப்ப னைகள் மங்கைதான் செய்தறியாள் செந்தமிழ்தான் மாப்புலவர் இழப்பின்உயர் விழத்தல்போலே எங்குமுள்ளார் தம்மிற்கண் ணகியே என்ன இணைபிரிந்து சீரற்றார் பலரா னார்கள் திங்கள்ஒன்றே குளிர்கொண்டும் அழகு கொண்டும் சிலர்க்கல்லல் சிலர்க்குநலம் செயல்வி யப்பே 57 சிலர்க்கல்லல் - சிலர்க்கு அல்லல் இயல் - 20 கா விரிதல் போல், எங்கும் விரிதற் காரணத்தால் காவிரி என்றனர். அக் காவிரி சூழ்ந்ததால், அப்பட்டினம் காவிரிப்பூம்பட்டினம் என்று தலைநாளில் புலவர் பெருமக்கள் சொன்னார்கள். அதற்கு மூவேந்தரிலும் புகழ்வாய்ந்த மாவளவன் மன்னன். காவிரிப்பூம் பட்டினத்து மக்கள் வேளைக்கு வேளை இதோ வந்துவிட்டது என்று கூறும் காவிரி விழாவானது, நாளைக்கு என்றாகிப் பின்பு நடுப்பகலும் இராப் போதும் நடந்த பிறகு கடலில் ஞாயிறு தோன்றியது காவிரி யாற்றுத் திருநாள் என்று அரச யானை மேல் இருந்து ஒருவன் முரசறைந்தான் - என்பன இவ்வியலிற் காண்க. பூவிரிந்து வானெங்கும் தேன்வி ரிந்து பொன்விரித்தாற் போலுநறும் பொடிவி ரிந்த காவிரிதல் போலெங்கும் விரித லாலே காவிரிஆ றென்றார்கள்; அதன்தொ டர்பால் காவிரிப்பூம் பட்டினம்என் றேமுன் னாளில் கவிவிரியும் நாவினோர் நகரைச் சொன்னார் மூவிரிநூற் றமிழ்வேந்தர் மூவ ருள்ளும் முந்துபுகழ் மாவளவன் அதற்கு மன்னன். 58 கா - சோலை. பூவிரிந்து என்பது முதல்பொடிவிரிந்த என்பது வரைக்கும் காவுக்குச் சிறப்பு. மூவிரிநூல் தமிழ் வேந்தர் - இயலிசை நாடகம் என மூன்றாக விரிந்த நூற் புலமை மிக்க சேர சோழ பாண்டியர். சோழன் மாவளவன் என்க. காளைக்கு நாளெண்ணிக் காத்தி ருக்கும் காதலிபோல், இனிப்பான பதநீர்த் தென்னம் பாளைக்குக் காத்திருக்கும் ஊரார் போல்,அப் பட்டினத்து வாழ்கின்ற மக்கள் யாரும் வேளைக்கு வேளைஇதோ வந்த தென்று விளம்புமொரு காவிரிவி ழாநெ ருங்க நாளைக்கே என்றுமகிழ் கொண்டார். காலை நடுப்பகல்; இராப்போது நகர்ந்த பின்னே, 59 காளை - காதலன். பதநீர் - பனஞ்சாறு, பின்னே என்பது அடுத்த பாட்டைத் தொடர்கின்றது. இது குளகம். பழாமரத்திற் பழுத்தஒரு மாம்ப ழம்போல் பாசிபடர் குளத்திலொரு தாம ரைபோல் முழாக்கண்ணில் கையுற்ற வெள்வ டுப்போல் மொய்த்தகருங் குழற்கிடையில் மகள்மு கம்போல் எழாஉளத்தும் மகிழ்ச்சிஎழ இருளின் நாப்பண் எழுந்தஇள ஞாயிற்றின் ஒளியில் யாண்டும் விழாப்பெருநாள்; காவிரிநற் றிருநாள் என்று வேந்துமுர சானையின்மேல் அறைந்தான் வீரன். 60 முழா - மத்தளம். கண் - பக்க இடம். கையுற்ற வெள் வடு - கை யுற்றதால் ஏற்பட்ட வெண்ணிற வடு; ஞாயிற்றுக்கு உவமை. நாப்பண் - நடுவில். வேந்து முரசானை - வேந்து ஆனை முரசு என மாற்றி அரசயானை மேல் இட்ட முரசு எனப் பொருள் கொள்க. இயல் - 21 காவிரிப்பூம் பட்டினம், கடற் கரையை அடுத்த மருவூர்ப் பாக்கம், மன்னர் முதலியவர் தெருக்கள் அமைந்த பட்டினப்பாக்கம் ஆகிய இருபகுதிகளை உடையது. அவைகளின் சிறப்பை யாவர் இயம்ப முடியும்? புலவர் வேந்தனாகிய இளங்கோவடிகள் இயம்பினார். அவற்றால் நான் இங்குச் சில கூறினேன். முழுதும் தேவை என்பவர் சிலப்பதிகாரத்திற் காண்க. என்று கூறி ïªüyháÇa®* நூலைத் தொடர்கின்றார். அராபியர், கிரேக்கர் மற்றும் அயல்நாட்டார் வைகும் தெருக்களின் வரிசை கண்ணைக் கவர்வன. ஒரு புறம் வண்ணம் செஞ்சாந்து மலர்பலவும் கூவி விற்றுப் போவார் திரிகின்ற நகரத் தெருக்கள் சிறப்புடையன. பட்டுச் சாலியர் கடைகள் கூலக் கடைகள் நிறைந்த நீண்ட தெருக்கள், கன்னார் முதலியவர்களின் தெருக்கள் நகரின் தகுதியை விளக்குவன. குழல், யாழ் இசைப்பார், கலைஞர் வாழ்ந்திருப்பார்கள். இவையனைத்தும் மருவூர்ப் பாக்கத்தில்! பட்டினப்பாக்கத் திலோ மன்னர் தெருக்கள்,அறிஞர் தெருக்கள், மருத்துவர் தெருக்கள், கூத்தர் தெருக்கள், நாழிகைக் கணக்காயர், நாற்படை வல்லார் தெருக்கள் நாற்புறமும் சூழ்ந்திருந்தன - என்பன இவ்வியலிற் காண்க. காவிரிப்பூம் பட்டினத்தின் மருவூர்ப் பாக்கம் கடற்கரையை ஒட்டியதோர் பகுதி யாகும் மாவிரியும் மன்னர்பிறர் வாழ் தெருக்கள், பட்டினப்பாக் கப்பகுதி இவற்றின் மேன்மை யாவரியம் பிடவல்லார் புலவர் வேந்தன் இளங்கோதான் இயம்பினான் அவைகொண்டே நான் ஆவலினாற் சிலசொல்வேன் முழுதும் வேண்டின் அவருள்ளார் நீவிருள்ளீர் கண்டு கொள்க. 61 அவர் - அவர் நூல். அரபியரும் கிரேக்கர்களும், வாணி கம்செய் அயல்நாட்டு மாந்தர்களும் கலந்து வைகும் தெருவரிசை கண்கவரும்! வண்ணம் சுண்ணம் செஞ்சாந்து மலர்பலவும் கூறி விற்போர் திரிகின்ற தெருக்களெலாம் சிறக்கும்! ஈண்டு திகழ்பட்டுச் சாலியர்கள் நகைக்க டைகள் விரும்புகன் னார்தட்டார் தச்சர் கொல்லர் விளங்குகூ லக்கடைகள் தகுதி காட்டும். 62 வாணிகம் செய் - செய் வினைத்தொகை செய்கின்ற, செய்த, செய்யும் என முக்காலத்தும் வரும். ஏழிசையும் வழுவாமல் குழலும் யாழும் இசைக்கின்ற பாணர்களும் சிறப்பின் வாழ்ந்தார், வாழ்வினையே இன்புறுத்தும் கலைஞர் வாழ்ந்தார் வளமிக்க அம்மருவூர்ப் பாக்கந் தன்னில்! மாழ்கல்இலார் பட்டினப்பாக் கத்தில்உண்டு; மன்னர்தெரு! அறிஞர்தெரு! மருந்தர் கூத்தர் நாழிகைக்க ணக்கர்நாற் படைவல் லாரும் நாற்புறத்தும் குறைவின்றிச் சூழ்ந்தி ருந்தார் 63 சிறப்பின் - சிறப்பினோடு கலைஞர் - ஓவியம் முதலிய வைகளில் வல்லுநர். நாழிகைக் கணக்கர் - நாழிகை வட்டிலைக் கொண்டு, நாழிகை தெரிந்துரைப்பவர். இயல் - 22 மருவூர்ப்பாக்கம் பட்டினப்பாக்கம் ஆகியவற்றின் நடுப் பாங்கில், மரங்களே கால்களாகக் கல்லால் நெடிதாகக் கட்டிய நாளங்காடியைக் கால்நடையாக ஒருவர் சுற்றிப்பார்க்க ஓராண்டாகும். இன்றைக்குக் கப்பலில் ஏற்றக் குவிந்துள்ள சரக்கின் உயரம் பொதிகை மலை. இறக்குமதியாகக் கிடக்கும். சரக்கின் குவியல் உயரம் யானை மலை. வாணிகர் வரவுசெலவு எழுதும் கணக்கர்க்குப் பனந்தோப்பு ஓலை கொடுத்து மொட்டையாகும். கப்பல்கள் வந்தன! - என்பது கேட்ட வாணிகர் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு ஓர் கடற்கரை நோக்கி. கடல் முழக்கம், மக்கள் முழக்கமோ எனலாயிற்று. அங்குள்ள ஈக்களின் வாயின் தேனால் நனையும் வெல்ல மூட்டைகள்! இல்லை என்பது இல்லை என்பது நாளங்காடி. நாளங்காடிக்குச் சென்று பொன்னுடையும் பூப்போட்ட பட்டுப் பருத்தி ஆடைகளும் நாள்தோறும் போய் வண்டியிலேற்றிச் செல்வாரின் தலைப்பாகை வரிசையானது ஒருகல் நீளம்! மற்றும் - அவற்றின் பின் ஓடும் மிளகுவண்டிகள் மற்றும் தென்னகத்துச் சரக்குகள் ஒவ்வொன்றில் ஓரிலக்கம் வண்டிகள் ஊரையே அடைத்துக் கொள்ளும் - என்பன இவ்வியலிற் காண்க. நன்மருவூர்ப் பாக்கம்பட் டினப்பாக் கத்தின் நடுவினிலே வளர்மரங்கள் கால்க ளாகக் கன்மிகுக்கக் கட்டியதோர் நாளங் காடி கால்நடையாய்க் கண்டுவர ஓராண் டாகும்! இன்றேறும் சரக்குயரம் பொதிகைக் குன்றம்! இறக்குமதிச் சரக்கெல்லாம் யானைக் குன்றம்! பொன்வரவு செலவெழுதும் கணக்கர்க் கோலை பொழுதெல்லாம் தந்தபனந் தோப்பே மொட்டை! 64 கன் மிகுக்க - கல் மிகுக்க. பனந் தோப்பு எழுவாய். மொட்டை - பெயர்ப் பயனிலை. நாவாய்கள் வரவெண்ணி வாணி கத்தார் நா வாய்கள் வராதவராய்த் துறைமு கத்திற் போவாய்என் றொருவர்பின் ஒருவ ராகப் போவாரின் கூட்டத்தை நோக்கு வோர்கள் மூவாயில் கடல்நோக்கி முத்த மிழ்வாய் முழங்குகடல் எழுந்ததென மொழிவா ரானார்! ஈவாய்த்தே னால் நனைக்கும் வெல்லத் தைப்போய்! இல்லைஎன்ப தில்லைஎன்னும் நாளங் காடி! 65 நாவாய்கள் - கப்பல்கள். மூவாயில் கடல் - ஆற்றுநீர், ஊற்று நீர், வேற்று நீர் என்ற மூன்றின் வரவுடையகடல். ஈவாய்த் தேனால் வெல்லத்தைப்போய் நனைக்கும் என மாற்றுக. இல்லை என்பது, இல்லை என்று கூறுவதாகும், அந்த நாளங்காடி; எல்லாம் உண்டு என்றபடி. கப்பல் வந்த தென்று, விரைந்து ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு போகின்றவர்கள் பேச்சொலியைக் கடலின் எதிர் மற்றொரு கடல் முழங்கிற்று என்று கூறினார்கள் கண்டவர்கள் இரண்டாம் வரியில் வந்துள்ள நாவாய்கள் நா (நாக்கு) வாய்கள்(வாய்கள்) எனப் பிரித்துப்பொருள் கொள்க பொன்னாடை ஆயிரமும் பன்னி றத்துப் பூவாடை ஆயிரமும் நாடோ றும்போய்த் தன்மையினில் வண்டிகளில் ஏற்றி மீள்வார் தலைப்பாகை வரிசைஒரு கல்லின் நீளம்! பின்னோடும் மிளகுவண்டி அதன்பின் ஓடும் பெருஞ்சீர கத்துவண்டி அதன்பின் ஓடும் தென்னகத்துச் சரக்கேற்றி இலக்கம் வண்டி, சேர்ந்தவண்டி யின்கூட்டம் ஊர டைக்கும்! 66 பன்னிறத்துப் பூவாடை - பலநிறமுள்ள பட்டும் பருத்தியும் கொண்டு நெய்து பூவச்சுப் போட்ட ஆடைகள். தென்னகத்துச் சரக்கு - தென்னகத்தில் உண்டாகும் மற்றச் சரக்குகள். இயல் - 23 நாட்டு மகளிரும் ஆடவரும் காவிரியை வாழ்த்தி முழுகி வீடு வந்து உடைமாற்றி அணிகள் அணிந்து, அரசன் இடம் சென்று வாழ்த்துக் கூறிவிட்டு விருந்தினரோடு உண்டார்கள் - என்பன இவ்வியலிற் காண்க. நாட்டிலுள்ள ஆடவரும் மகளிர் தாமும் நலங்கொழிக்கும் காவிரியை வாழ்த்தித் தம்தோள் நீட்டித்,தாய் எனத்தழுவி அன்பால் மூழ்கி நிலைபெயரும் மலைகள்போல் நிலாக்க ளேபோல் வீட்டிலுற்றே, உடைமாற்றி அணிகள் பூண்டு வேந்தனைப்போய் மனமார வாழ்த்திப் பின்னர் கேட்டாலும் நாவூறும் பண்ணி யங்கள் கிடைப்பரிய அப்பங்கள் வெண்ணெய்ப் பிட்டே 67 நிலை பெயரும் மலை என்றது ஆடவரை; நிலாக்கள் என்றது மகளிரை. பிட்டே - ஏ அசை, இது குளகம், தேங்குழல்நற் பொரிவிளங்காய் பலாமா வாழை தேன்பால்நெய், நறும்பாகு, முதிர்ந்தி,லாத தீங்கிலவாம் வழுக்கைஇள நீர்ப ருப்புச் சேர்க்கையினால் பொங்கியதோர் ஓவப் பொங்கல் யாங்கிருந்தும் கொணர்ந்திட்ட காய்க றிக்கே இங்கிருக்கும் தமிழரன்றிப் பிறர்கா ணாத பாங்கிலுறு பச்சடிகள் குழம்பு கூட்டுப் பல்வகையின் வற்றல்கள் வறுவ லோடும் 68 தேங்குழல் - முறுக்கின் ஒரு வகை; நறும் பாகு - பல்வகை யான பாயசங்கள். முதிர்ந்திலாத தீங்கிலவாம் வழுக்கை இளநீர் என்றது, தேரை மோத்தல் முதலிய நோய் இல்லாததும் முதிராததும் ஆகிய இளநீரை. ஓவப் பொங்கல் - இதை வடவர் சித்ரான்னம் என்பர். ஓவம் - ஓவியம். யாங்கிருந்தும் - சிற்றூர் யாங்கு மிருந்து. வறுவலோடும் - முடியவில்லை குளகம். வெண்பட்டுக் குருத்திலைகள் மிகவி ரித்தே விருந்தினரைக் கையேந்தி அழைத்த ழைத்துக் கண்பட்டால் ஒளிதெறிக்கும் கைவ ளைகள் கவிபாடும் எழில்மடவார் இடவு வந்து புண்பட்டுச் சாவஅஞ்சும் ஆரி யர்கள் புகார்என்னும் பூம்புகார் அரசை வாழ்த்தி உண்கவே என இடுவார் இட்டிட் டேங்க உண்டார்கள் ஒவ்வொன்றின் சுவையு ணர்ந்தே. 69 வெண்பட்டுக் குருத்திலைகள் - வெண்பட்டுப் போன்ற குருத் திலைகள்; உவமைத் தொகை. புகார் - புகமாட்டார். உண்கவே என இடுவார் இட்டு இட்டு ஏங்க - உணவு படைப்போர் உண்ணுங்கள் உண்ணுங்கள் என்று இட்டு, வேண்டாம் வேண்டாம் என்று உண்பவர்கள் சொல்லு தலால் ஏக்கமடைய. இடும் ஒவ்வொன்றின் சுவையை உணர்ந்தபடியே உண்டார்கள் என்பதற்கு, ஒவ்வொன்றின் சுவையுணர்ந்தே எனப்பட்டது. இயல் - 24 நாற்படையும் தலைவருடன் நகரை வலம் வருகின்றன ஊரார் கண்டு மகிழும்படி! சோலைதோறும் மகளிர் பொன்னூசல் ஆடுகின்றார். ஓர்பால் ஆடவர் சிலர் பெரும்பந்து அடிக்கின்றார்கள். சிலர் - கோழி ஆடு கொண்டு போரிடச் செல்கின்றார்கள்; அவர்களில் ஒருவன் போரில் எனக்கு வெற்றிகிடைத்துவிட்டது என்கின்றான். உயிர்போகும் நேரத்தில் மே மே என்றுகத்தும் ஆட்டை யுடைய மற்றவன் நான் தோற்றேன் என்கின்றான்; இவ்விருவரையும் நோக்கி ஓர் வீரன் உங்களின் வெற்றி தோல்வி முடிந்திருக்கலாம். ஆனால் அந்த ஆடுகளின் வெற்றி தோல்வி இன்னும் முடியவில்லை என்று கூறுகின்றான். இவ்வாறு ஓரிமைப்போதும் ஒழிவின்றி வெளியில் ஆடி யிருந்தவர்களில் காளைகள் சிலர் வீடுவர அவர் காதலிமார் எமை மறந்தது என்ன என்று சீறுகின்றார்கள்! வேறு சிலரோ மாதவியைப் போல், தம் கணவர் தோளில் சாய்ந்து தம்மையே மறந்தவரானார். தன் அன்பனான கோவலனைப் பிரிந்திருந்த கற்புடைய கண்ணகி துன்புற்றுக் கிடந்தாள் என்பது இவ்வியலில் விரித்துரைக்கப்படும். இறவாத புகழுடைய படைமு தல்வர் யானைமேல் குதிரைமேல் தேர்மேல் ஏறி முறையாகப் படைதொடர நகரைச் சுற்ற முன்விட்டுப் பின்னோடு காலாள் கூட்டம் உறைகழற்றித் தூக்கியவாள் மின்னும் வண்ணம் ஊர்வியக்கச் சென்றார்கள்! சோலை தோறும் பிறைநுதலார் பொன்னூசல் ஆடலுற்றார் பெரும்பந்து காளையரும் அடித்தார் ஓர்பால் 70 படை முதல்வர் - படைத்தலைவர், பிறைநுதலார் - மகளிர். காளையர் - இளைய ஆடவர் சாகுமட்டும் சண்டையிடும் சேவற் கோழி தலையுடையும் வரைமோதும் ஆடு - கொண்டு போகின்றார் சண்டைக்கே! போர்மு டித்துப் போந்ததெனக் கேவெற்றி என்றான் ஓர்ஆள்; ஏகுமுயிர் ஏங்காமல் மேமே என்றே இயம்புகின்ற ஆடுடையான் தோற்றேன் என்றான் ஏ கெடுவீர், தோல்விவெற்றி உமக்கே கண்டீர் இவைஇன்னும் காண்கிலஎன் றான்ஓர் வீரன். 71 கோழி ஆடு இவைகளைக்கொண்டு போகின்றார் போருக்கே என்பது வரை ஒரு தொடர். ஒருவன் ஆட்டுப் போரை முடித்துக் கொண்டு வருகை யில் எனக்கு வெற்றி கிடைத்து விட்டது என்றான். உயிர் தத்தளிக்கும் நிலையிலும், மே மே என்று கூவும் மற்றோர் ஆட்டுக்கு உடையவன் நான் தோற்றேன் என்றான். மூன்றாவதாளான ஒரு வீரன் வெற்றி தோல்வி முடிந்தது என்பது உங்கட்குத்தான். ஆனால் சண்டையிட்ட இரண்டு ஆடுகட்கும் இன்னும் வெற்றி தோல்வியின் கணக்கு முடியவில்லை, என்றான். அவன் கருத்து என்னவெனில் உயிருக்குத் தத்தளிக்கும் நிலையிலும் அந்தக் கடா மே மே என்று - என்னை மேலும் விடு - என்பதால் இன்னும் அது தோற்கவில்லை. குறுக்கில் ஆட்டுக்குடையவன்தான் சண்டையை நிறுத்தினான் என்பது! ஏ கெடுவீர் - ஏ கெடத்தக்கவர்களே! காண்கில் - அவை காணவில்லை, இமைநேரம் ஒழிவின்றி வெளியில் ஆடி இருந்தவரிற் சிலர்,வீடு வந்த போதில் எமைமறந்த தேன்என்று மனைமார் சில்லோர் எரிவுற்றார்! காதலரின் இருதோள் பெற்றே தமைமறந்தார் மாதவியைப் போலே சில்லோர் தன்அன்பன் கோவலனைப் பிரிந்தி ருந்த அமைவுள்ள கற்புறுகண்ணகிதுன் பத்தின் அடிவீழ்ந்து கிடந்திட்டாள் விழாநாள் உள்ளும்! 72 வெளியில் ஆடுதல் - வெளியில் விழா இன்பத்தை நுகர்தல். எரிவுற்றார் - சினந்தார்; துன்பத்தின் அடி - துன்பக் கேணியின் அடிப்புறத்தில்; கலப்பில்லாத துன்பத்தில் என்றபடி. விழாநாள் உள்ளும் - விழா நாளிலும். உயர்வு சிறப்பு உம்மை. இயல் - 25 இந்நாள் முழுநிலவு நாள் என்று நாட்டினர் அனைவரும் கடலாடச் செல்லுகின்றார். அக் கடலாடு காட்சி பார்க்கும் ஆசையால் மாதவியும் கோவலனும் செல்லுகின்றார்கள். கடற்கரை சார்ந்த மணற்பரப்பில் ஒரு புன்னை நிழலில் திரையிட்டு அதனிடையில் கட்டில் இட்டு அமர்கின்றார்கள், மாதவியுடன் வந்த தோழியிடமிருந்த யாழை வாங்கிச் சரியாக்கிக் கோவலனிடம் நீட்ட அவன் வாங்கிப் பாடலொன்று பாடுகின்றான். இந்நாளே நிறைநிலா என்று நாட்டார் எல்லாரும் கடலாடச் செல்ல லுற்றார்! அந்நாளின் கடலாடும் காட்சி காண அழகுடைய மாதவியும் அவளை விட்டே எந்நாளும் பிரியாத செம்மல் தானும் எழிலான ஊர்தியினில் ஏறிக் காலை முன்னான போதினிலே கடற்க ரைபோய் முழுதுமணற் பரப்பினிலே புன்னை நீழல் 73 செம்மல் - கோவலன்: ஊர்தி - வண்டி - காலை முன்னான போது - முன் காலை நேரம். புன்னை நீழல் என்ற தொடர் அடுத்த அடியைத் தொடர்கின்றது; குளகம். அடிவளைத்த திரைக்கிடையில் இட்ட கட்டில் அமர்ந்தார்கள் அங்கதன்பின் தோழி கையில் நெடிதிருந்த யாழ்அதனை மங்கை வாங்கி நேர்செய்தே இசைஎழுப்பிச் செவியின் ஓர்ந்தே முடிவாக்கிக் கோவலன்பால் நீட்ட,அன்னோன், முன்னங்கை ஏந்தியே தன்ன கத்தின் வடிவாகப் பாடுவது தொடக்கம் செய்தான் மாதவியும் வரும்பாட்டில் செவியைச் சாய்த்தாள். 74 அடி வளைத்த என்பதை முதற்பாட்டின் கடைசியிலுள்ள நீழல் என்பதன்பின் இணைக்க. நீழல் அடிவைத்த திரைக்கிடையில் - நீழலின் அடியில் வளைத்துக் கட்டிய திரையின் நடுவிடத்தில். மங்கை - மாதவி. நேர் செய்தல், இசையெழுப்பல், செவியின் ஓர்தல் இவை யெல்லாம் யாழை இசைப்பதற்கு முன் செய்ய வேண்டியவை. ஓர்தல் - ஆராய்தல் தன் அகத்தின் வடிவு ஆக - தன் நெஞ்சிலுள்ள கருத்தை வெளியில் வடித்தது என்னும்படி. ஆரியரை அறவென்று வடக்கு நாட்டை அடிப்படுத்திக் கங்கையினை அகப்ப டுத்திச் சீரியசெங் கோற்சோழன் புணர்ந்திட் டாலும் திருவாரும் காவிரிநீ வருந்தாய்! வாழி! ஆரியத்துக் கங்கைதனைப் புணர்ந்திட் டாலும் அகம்நோவா திருந்ததுன்றன் கற்பே என்று தேரினேன் காவிரியே வாழி! - என்றே தேனென்று செந்தமிழைப் பாட லுற்றான். 75 அடிப் படுத்தல் - அடிமை நாடாக்குதல். அகப்படுத்தல் - அகப்படும்படி செய்தல். மற்றொரு பொருள்; உள்ளம் ஒப்பச் செய்துகொள்ளல். புணர்தல் - மூழ்கல். மற்றொரு பொருள் புணர்ச்சி செய்தல். இப்பாட்டினால் மாதவி வருந்தினாள் என்றால் காரணம். கங்கை என்னும் பெண்ணை அவள் பரத்தை என்றும் எண்ணாமல் புணர்ந்தாலும், உரியவளாகிய காவிரி என்னும் பெண்ணே நீ வருந்தமாட்டாய்; அவ்வாறு நீ வருந்தாதது கற்பு. இவ்வாறு பொருள்படவே, அதுகேட்ட அவளும் மனம் வேறு படுவதை அடுத்த பாட்டிற் காண்க. இயல் - 26 அப்பாடலில் தன்னைக் கைவிட்டு வேறொருத்தியை நாடுகின்றான் கோவலன் என்ற கருத்து உண்டு என வருந்திய மாதவி, யாழைப் பெற்றுப் பாடிய பாட்டில், வேறொருவனை அவள் கருதினாள் என்ற குறிப்பிருப்பதாக எண்ணிய கோவலன் அவளிடம் பிணைந் திருந்த கையைப் பிடுங்கிக்கொண்டு எழுந்துபோய் விடுகின்றான். அவளும் அவ்வாறு தனியே சென்று விடுகின்றாள். கண்ணகி வருந்தும்படி மாதவியை அடைந்த கோவலன் அறத்தை மறந்தவன். அறத்தை மறந்தவன் அறிவை இழந்து விடுவது வியப்பன்று. கோவலன் சொல்லின் கருத்தை அவள் அறியவில்லை; அவள் அறியும்படி அவன் சொல்லவில்லை! ஆனதால் அவனும் அவளும் விளைத்த இத்தீமை தமிழன்னைக்கே ஆயிற்று. இவர்கள் நன்றே வாழ்வார்கள் என்று எவன்தான் சொல்வான்? இனிய தமிழும் தமிழ்ப் புலவரும் நன்றே வாழ்க - என்பன இவ்வியலிற் காண்க. இவ்வாறு பாடியது கேட்டாள்; அன்னோன் எண்ணந்தான் வேறொருத்தி மேல தென்றே ஒவ்வாது மனம்கொதித்தும் உவந்தாள் போல ஒளிவிழியாள் மாதவிதான் யாழை வாங்கிக் கவ்வியதேன் மலர்மழையே பொழியும் சோலைக் காவிரியே பூவாடை அசையச் சென்றாய் செவ்விதின்வா ழியநீ தான் செல்வ தென்ன? செம்மலுக்கே உளம்பதைத்தாய் வாழி! என்றாள். 76 இவ்வியலின் முதற்பாட்டில், அவள் மனம் கொதித்து அதை வெளிக்காட்டாமல் மகிழ்ந்தாள் என்று கோவலன் நினைக்கும்படி செய்து அவனிடமிருந்த யாழை வாங்கினாள் என்பதற்கு உவந்தாள்போல யாழை வாங்கி எனப்பட்டது. தேன்மலர் மழை எனச் சேர்க்க. பூவாடை - பூக்கள் சிந்தப் பெற்றிருப்பதால் ஆற்றின் மேற்புறம் பூவாடை எனப்பட்டது. அவன் நல்லவன் அல்லன் என்று காவிரிப்பெண் அவ்வாறு போகின்றாள், என்று மாதவி கூறுவதன் வாயிலாகக் கோவலன் நடத்தைக்குத்தான் வருந்துவதாகக் காட்டினாள் என்பது இப்பாட்டில் அறியத் தக்கது. செவ்விதின் - செவ்வையாக. நான்ஒன்று பாடினேன் அவளும் அஃதே நவிலாமல் வேறொன்று நவில லானாள். தான்என்னை மறுத்தஒரு குறிப்புக் காட்டித் தனிக்கின்றாள் என்றுகோ வலன்நி னைந்து மீனவிழி மேல்இணைத்த கைவி லக்கி விரைந்துசென்றான் ஏவலர்கள் சூழ்ந்து செல்ல! ஆனதினால் மாதவியும் வண்டி ஏறி அகன்றாள்தான் பெற்றசெல்வம் அகன்றா ளாகி 77 அஃதே நவிலாமல் - உடம்பட்டுப் பாடாமல் என்றபடி. தனிக்கின்றாள் - தனித்தவளாகின்றாள். மீனவிழி - மாதவி. பெற்ற செல்வம் என்றது கோவலனை. அவள் வருந்த இவண்அடைந்தான், அறம றந்தான், அறமறந்தான் அறிவிழத்தல் வியப்பே அன்று! நுவன்றமொழிக் கருத்தறியாள் அவள்! இவன் தான் நுவலுவதை செவ்வையுற நுவன்றா னில்லை அவனுந்தான் அவளுந்தான் இழைத்த தீமை அழகுதமிழ் அன்னைக்கே ஆயிற் றென்றால் எவன்சொல்வான் இவர்நன்றே வாழ்வார் என்றே? இன்தமிழ்செந் தமிழ்ப்புலவர் வாழ்க நன்றே! 78 அறவுள்ளமே அறிவுடைமை என்பதற்கு அறமறந்தான் அறிவிழத்தல் வியப்பே அன்று எனப்பட்டது. செவ்வை - செம்மை. தமிழால் தம் கருத்தைச் செவ்வையாகச் சொல்லமுடியாத கோவலனும். சொல்லைக் கொண்டு உள்ளக்கருத்தை உணராத மாதவியும் இனி வாழ்வது எப்படி என்பதற்கு எவன் சொல்வான் ... ... என்றே எனப்பட்டது. அழகு தமிழ் - மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழி போல், எண்ணிடைப்படக்கிடந்த தல்லாத தமிழ். இயல் - 27 இளவேனில் வந்தது. தன் வீட்டு மேல்மாடியில் ஏறிய மாதவி நிலா முற்றத்தை யடைந்து கையில் எடுத்த யாழும் பண் மயங்கப், பாடிய பாட்டும் இசை மயங்கக் கண்டு தோழியே என் எண்ணம் துளியும் என்னிடமில்லை, துன்பம் பொறுக்க முடியவில்லை. ஆதலால் ஒரு திருமுகம் எழுதுகின்றேன் அதை அவனிடம் கொடு. என் நிலையை விளக்கு என்று கூறி ஒரு தாழை ஏட்டில் பித்திகை அரும்பே எழுத்தாணியாகச் செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்து எழுதப்போவதை வாய்விட்டுச் சொல்லிக்கொண்டே எழுதி முடித்தாள்; அது வருமாறு: இளவேனில் முறையறியாத ஓர் இள மன்னன், இளமதியும் காலமறியாச் சிறு பையன் தனிமையால் எளிமை எய்தியுள்ள என்னை அவர்கள் வருத்துவது வழக்கந்தானே! இதை நீவிர் அறிந்து அருள் புரிவீராக. அதனைத் தோழி மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டு சென்றாள். மாதவியோ தனிமை பொறுக்காமல் துன்புற்றுப் பஞ்சணையில் வீழ்ந்தாள் - என்பன இவ்வியல். இளவேனில் வந்ததென்று குயிலும் கூவ ஏகிய ஓர் மாதவி, தன் மேன்மா டத்தின் ஒளிநிலா முற்றத்தில் யாழெ டுத்தாள்: ஒருபண்ணாற் குரலெடுத்தாள்; பிறிதில் வீழ்ந்தாள் கிளிப்பண்ணாள் மற்றொன்றும் தொட்டாள் கெட்டாள் கேளாயோ தோழியே என்றன் எண்ணம் துளியில்லை என்னிடத்தில் பொறுக்கொ ணாத துன்பத்திற் புரளுகின்றேன் ஆத லாலே 79 ஏகிய மாதவி - கோவலனோடு மாறுகொண்டு சென்ற மாதவி, ஒரு பண்ணின் இசையுடன் வாய்ப்பாட்டுத் துவக்கினாள்; இலக்கணந்தவறி மற்றொரு பண்ணிற் கலந்தது. மற்றோரிசையை யாழிற் பதித்தாள். அதுவும் மயங்கிற்று என்பது யாழெடுத்தாள் ... ... ... கெட்டாள் என்பவற்றின் கருத்தாகும். பொறுக் கொணா - பொறுக்க ஒண்ணாத. அகரம் தொகுத்தல், ஆதலாலே அடுத்த பாட்டைத் தொடர்கின்றது குளகம். அவன்காணத் திருமுகம் ஒன் றெழுது கின்றேன் அளிக்கின்றேன் உன்னிடத்தில்! அவன்பால் சேர்த்தே நவில் என்நிலை; கையோடு கொணர்க என்று நற்றாழை வெள்ளேட்டில் எழுது தற்கே கவினார்பித் திகையரும்பே ஆணி யாகக் கடிதேசெம் பஞ்சியிலே தோய்த்தெ டுத்துத் துவரிதழில் எழிலாட வருங்க ருத்தைச் சொல்லிக்கொண் டேமங்கை எழுது கின்றாள்: 80 கவின் ஆர் பித்திகை - அழகு நிறைந்த சிறுசெண்பகம். ஆணி - எழுத்தாணி. கடிது - விரைவில். துவரிதழ் - செவ் வுதடு. மங்கை - மாதவி. எழுதியது அடுத்த செய்யுளில். இளவேனில் முறையறியா இளைய மன்னன்; இளமதியும் காலமறி யாத பையல் எளியேனை அவர் வருத்தல் புதிய தாமோ இதை நீவிர் அறிந்தருள்க - இதனைத் தோழி களியோடு கையேற்று வெளியிற் சென்றாள் கையிரண்டாற் கண்பொத்தி மெய்து டிக்க அளியாரோ அடைந்தவரை ஆட வர்கள் அன்பிலையோ எனப்பஞ்ச ணைமேல் வீழ்ந்தாள் 81 தலைவனைப் பிரிந்த தலைவியை இளவேனிலும், நிலவும் துன்புறுத்தும். ஆதலின், எளியேனை அவர் வருத்தல் புதிய தாமோ என்றாள். அளியாரோ அடைந்தவரை ஆடவர்கள் - பொதுவாக ஆடவரின் இயல் - பு அடைந்த பெண்களை ஆதரிப்ப தில்லையோ என்றபடி. இயல் - 28 மாலைப் போதில் தேவந்தி என்னும் ஒரு பார்ப்பனத்தி கண்ணகியை நோக்கி உன் வருத்தமெலாம் தீர நீ தெய்வம் தொழுது, திங்கட் குண்டம், கதிர்க்குண்டம் என்னும் பொய்கைகளில் முழுக வேண்டும் என்று கூறிக் கண்ணகிக்குத் துன்பத்தின் மேல் மற்றொரு துன்பத்தைச் சேர்த்தாள். அதற்குக் கண்ணகி தேவந்தியை நோக்கி, தெய்வம் நலம் செய்யும் என்கின்றாய்; தெய்வம் தொழவேண்டும் என்றும் சொல்வாய்; நீ சொல்லும் தெய்வம் எங்கேயோ திரை மறைவில் இருப்பதென எண்ணுகின்றாய்; தமிழர் ஒழுகலாற்றை நீ சிறிதும் அறிகிலை. ஆரியரின் பொய்யான வாழ்க்கைமுறை நன்று என்று புளுகு கின்றவரின் புளுகையல்லாமல் நீ எதையும் அறிய மாட்டாய்! தமிழ் மகளிரின் ஒழுகலாற்றில் நீ தெய்வத்தைக் காண்ப துண்டு போலும்! தலைநாள் தொடங்கி இன்று வரைக்கும் மகளிர்க் கெல்லாம் எல்லாம் ஆகி வந்தவர்கள் வருகின்றவர்கள் வர இருக்கின்றவர் தந்தை முதலியவர் அல்லர்; கணவரே ஆவார். நான் தளர்ந்துள்ள நிலை கண்டு உனது தீயொழுக்கத்தை இப்படி என் உள்ளத்தில் நுழைக்கின்றாயா? என்று கண்ணகி கூறத், தோழி சென்றாள் - என்பது இவ்வியல், செங்கதிர்போய் மறைந்திட்ட மாலைப் போதில் தேவந்தி என்னுமொரு பார்ப்ப னத்தி மங்கை எழிற் கண்ணகியே இந்நாள் உன்றன் மனக்கவலை யதுதீரத் திங்கட் குண்டம் பொங்குகதிர்க் குண்டமெனும் இருபொய் கைக்கும் போய்த்தெய்வம் தொழுதுநீ மூழ்க வேண்டும் இங்கிதனைச் செய்க என்றாள்; கண்ண கிக்கே இன்னலின்மேல் மற்றுமோர் இன்னல் சேர்த்தாள் 82 இன்னல் - துன்பம் தெய்வமெனல் நலஞ்செய்யும் என்கின் றாய்நீ! தெய்வத்தைத் தொழவேண்டும் என்கின் றாய்நீ! தெய்வமென நீசொல்லும் பொருள்எங் கேயோ திரைமறைவில் இருப்பதெனச் சொல்லு கின்றாய் மெய்வைத்த தமிழர்களின் ஒழுக லாற்றை மிகச்சிறிதும் அறிகிலாய் ஆரி யர்தம் பொய்வைத்த வாழ்க்கையினை நன்றே என்று புளுகுவார் புளுகல்லால் ஏதும் காணாய்! 83 கணவனே மனைவிக்கு எல்லாமாகினோன் என்பதால், எல்லாமாகியது தெய்வம் என்று பார்ப்பனத்தி எண்ணிய தனைத்தும் கண்ணகியால் மறுக்கப்படுகின்றது இச் செய்யுளில். அன்றியும் தெய்வம் நலம் செயும் என்பது யாண்டுமில்லை. அது மடமை யின் எழுந்த எண்ணமே யாதல் முயற்சி திருவினையாக்கும் என்பதனாலும் ஒழுக்கம் விழுப்பம் தரலால் என்பவற்றாலும் பிறவற் றாலும் நன்கு விளங்கும். புளுகு - புள் உகு என்று பிரித்துப் பொய்க்குப் பெயராதலை உணர்க. புள்ளி - உண்மை. புள்ளி கடைக்குறையே புள் என்பது, உகு - உகுத்தல் முதனிலை, புள்ளி உகுத்தல் ஆகுபெயராய், பொய்ம்மையை உணர்த்தியது, மெய்வைத்த செந்தமிழர் ஒழுகலாறு என்பதை, கற்புடைப் பெண்டிர் கணவனே யன்றி எவரையும் எதையும் தொழாமையும் - தெய்வம் தொழாஅள் என்பதும் இங்கு நினைவு கொள்ளத் தக்கது. செந்தமிழச் செல்வியரின் ஒழுக லாற்றில் தெய்வத்தை நீகண்ட துண்டு போலும்! முந்துநாள் முதல்இந்த நாள்வ ரைக்கும் மொய்குழலார் தமக்கெல்லாம் எல்லா மாகி வந்தோர்கள் வருகின்றோர் வருவோர் யாவர்? வாழ்தந்தை தாயரல்லர் கணவர் ஆவார்! நொந்துள்ள நிலைகண்டுன் தீயொ ழுக்கம் நுழைப்பதுண்டோ என்னுளத்தில் இவ்வா றென்றாள் 84 தமிழப் பெண்களின் ஒழுகலாற்றில் தெய்வத்தைக் காண முடியா தென்ற உண்மையை முதலடி விளக்கிற்று. கற்புடைய பெண்டிர்க் கெல்லாம் முன்னும், இன்றும், என்றும் எல்லாம் ஆகின்றவர் கணவரே அன்றித் தாயாருமல்லர் தந்தையரு மல்லர் என்பது மேலும் விளக்கினாள். நான் தனிமையால் தளர்ச்சியுற்றிருக்க, இந்த நிலையில் என் உள்ளத்தில் உன் தீயொழுக்கமாகிய தெய்வந் தொழுதலை நுழைக்கின்றாய் போலும் என்று மேலும் கண்ணகி வினாவிய அளவில் தோழி யாகிய பார்ப்பனத்தி, புறம் சென்றாள் என்க. இயல் - 29 கடிந்துரைத்தவுடன் பார்ப்பனத்தி இல்லம் விட்டுப் போனதைக் கண்ணகி கண்டாள். அவள் போனபின் தன் மணவாளனாகிய கோவலன் வரக்கண்டாள். எதிரில் ஓடி, வருக என் அத்தான் என்றழைத்தாள். வந்த கோவலன் நான் அந்த மாதவியின் வலையில் வீழ்ந்தேன். அரும் பொருள் அனைத்தையும் தோற்றேன் என்றான். மாதவியின் மகிழ்ச்சியைப் பெறப் பணமில்லாததால் அல்லலுற்றான் போலும் என்று எண்ணிய கண்ணகி, நகைத்து இரு சிலம்புகள் காட்டி இவை முழுதும் கொள்க என்று நீட்ட, கோவலனோ, பெருந்தன்மை யுடைய கண்ணகியே இச்சிலம்பின் விற்பனைப் பொருளை முதலாகக் கொண்டு, தமிழ் வளர்த்த மதுரை சென்று வாணிகத்தால் மிகுந்த பொருளைத் தேடலாம்; நீயும் என்னுடன் விரைவாக வா என்றழைத்தான். மிக மகிழ்ச்சியுடன் சென்றாள். இருவரும் காவிரியின் வடகரையோடு மேற்றிசை ஒரு காதம் சென்றார்கள் - என்பன இவ்வியல். கோணல்மனப் பார்ப்பனத்தி போதல் கண்டாள் கோவலனும் தலைவாயில் புகுதல் கண்டாள் வாணுதலாள் கண்ணகிதான்! எதிரில் ஓடி வருகவே என் அத்தான் என்ற ழைத்தாள்! ஆணழகன் மாதவியின் வலையில் வீழ்ந்தேன் அரியபொருள் அத்தனையும் தோற்றேன் என்றான்; ஆணிமுத்து நகைவாங்கப் பணமில் லாமல் அல்லலுற்றான் போலும் என நினைத்தாள் மங்கை 85 வாள் நுதலாள் - ஒளி பொருந்திய நெற்றியையுடையவள், அத்தான் - அகத்தான்; வீட்டுக்காரன் என்றும் இந்நாளில் வழங்குகின்றது; எப்போதும் நெஞ்சத்தில் இருப்பவன் எனலும் பொருந்தும். ஆணிமுத்து நகைவாங்க - மாதவியின் கெட்டிமுத்துப் போன்ற நகைப்பை, மகிழ்ச்சியைப் பெற ஆணிமுத்து என்பதே உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித்தொகையாக மாதவியைக் குறித்ததாகவும் கொள்ளலாம். மங்கை - கண்ணகி. நகைகாட்டி இருசிலம்பாம் நகையும் காட்டி நன்றுகொள்க எனநீட்டக் கோவ லன்தான் தகையுடையாய் இச்சிலம்பை முதலாக் கொண்டே தமிழ்வளர்த்த மதுரைபோய் வாணி கத்தால் மிகுபொருளைத் தேடலாம் வருக நீயும் விரைவாக என்றுரைத்தான் நன்றே என்று தொகையான மகிழ்ச்சியினை நெஞ்சந் தன்னிற் சுமந்தபடி அன்பனோடு செல்ல லானாள். 86 நகைகாட்டி - சிரித்து. இருசிலம்பாம் நகை - இரண்டு காற் சிலம்புகளாகிய நகை; இழை. நன்று கொள்க என்றபடி, தகையுடையாய் - பெருந்தன்மையுடையவளே, தொகையான - மிகுதியான கதிர்எழுந்து விடியலினைச் செய்யும் போதில் காதலிள மங்கையர்கள் கண்வி ழித்தே எதிருற்ற கணவர்தமைத் தொழுத வண்ணம் எழும்போதில் ஊர்க்கோழி கூவும் போதில் முதிராத சிற்றடிகள் விடாது பற்ற முன்நடந்தான் கோவலனே! இருவர் தாமும் அதிர்காவி ரிக்குவட கரையி னூடே ஆனமேற் றிசையிலொரு காதம் சேர்ந்தார் 87 எழுந்து என்றது விடியலிற்கான முயற்சியை. விடியல் - முற் காலை. எதிர் உற்ற கணவர் - மங்கைமார் எழுந்தவுடன் தம் கண்ணெதிர் படுக்கையில் இருந்த கணவர். முதிராத சிற்றடிகள் இளமையும் சிறியனவுமாகிய கால்கள் இது கண்ணகி பற்றியது. அதிர் காவிரிக்கு - வெள்ளத்தின் அதிர்ச்சியுடைய காவிரிக்கு. ஆன - கடக்கக் கழிந்த, ஒரு காதம் - ஒரு காதத் தொலைவிலுள்ள இடம் ஆகுபெயர். இயல் - 30 நடந்தறியாள் இத்தனை தொலைவுநடந்தாள்; நலிந்தறியாள் இவ்வாறு நலிந்தாள். அத்தான் மதுரை அருகிலுள்ளதோ என்று கேட்டாள் - அவள் அறியாமைக்கு நகைத்து ஆம் என்று கூறிப் பின்னும் நடக்கையில் கவுந்தியம்மை என்னும் அருக சமையத்துத் துறவியைக் கண்டு மதுரை போகவேண்டும் வழி ஏது என, அந்த அம்மையார் - நானும், பெரியோர்பால் அறங்கேட்கவும் அருகனை ஏத்தவும் மதுரை வருகின்றேன் என்றாராக, மூவரும் மேற்றிசையாகப் பூங்காவையும் வயல் வளங்களையும் கண்டு மகிழ்ச்சியால் நலிவை மறந்து, நாளைக்கொரு காதமாக நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அவ்வாறு செல்லுகையில் தமிழ்ச் சான்றோர் பலரைக் கண்டு செம்மை நெறி பற்றிக் கேட்டும் அருகனை ஏத்தியும் ஓடத்தால் காவிரி தாண்டி தென்கரையில் ஓர் பூம்பொழிலில் தங்கி, அங்குத் தீயரால் நேர்ந்த தீமைகளினின்று நீங்கி உறையூர் ஏகினார். பொழுதுபட்டது. வைகறையில் தென்றிசை நோக்கிச் சென்றார்கள் - என்பது இவ்வியல். நடந்ததில்லை இத்தொலைவு நடந்தாள் மேனி நலிந்ததில்லை இவ்வாறு நலிந்தாள்; அத்தான் அடைந்ததில்லை மாமதுரை அணித்தோ என்றாள். ஆம் என்றான் கோவலனும் நகைபு ரிந்தே! கடந்தார்கள் சிறுதொலைவு கண்டார் அங்கே கவுந்தியெனும் துறவுடையாள் உறையும் பள்ளி அடிகளே மாமதுரை செல்ல வேண்டும் அருளுகவே நன்னெறிதான் எனப்ப ணிந்தார். 88 இத்தொலைவு - இவ்வளவு தூரம். மேனி - உடல். அணித்தோ - அருகில் உள்ளதோ, உறையும் பள்ளி - வாழும் குடில். நன்னெறி - நல்வழி. அருகனுறு சமையத்துக் கவுந்தி அம்மை அவர்கட்கு வாழ்த்துரைத்து, யானும் அங்கே பெரியார்பால் அறிவுரைகள் கேட்க வேண்டும் பிழைதீர்ந்தே அறிவனைநான் ஏத்த வேண்டும் வருகின்றேன் என்றுசொல்ல மகிழ்ச்சி கொண்டார் வழியோடு மூவருமே மேற்கண் நோக்கி மருமலர்ப்பூங் காவயல்கள் வளங்கள் கண்டு மகிழ்வில்நலி மறந்துசென்றார் நாளோர் காதம். 89 அருகனுறு சமையம் - அருகன் கடவுளாய் உற்ற சமையம். அறிவன் - அருகன். மேற்கண் நோக்கி - மேற்றிசை நோக்கி, மருமலர் - மணமுள்ள மலர். மகிழ்வில் நலி மறந்து சென்றார் - மகிழ்ச்சியில் உடல் நலிவை மறந்து நடந்தார். நாளோர் காதம் - நாள் ஒன்றுக்கு ஒரு காதமாக செல்லுகையில் தமிழ்ச்சான்றோர் தம்மைக் கண்டார் செம்மை நெறி இன்னதெனக் கேட்டு வந்தார்; அல்லலிலா அருகனையும் ஏத்தி நின்றார் அங்கிருந்தே ஓடத்தால் ஆறு தாண்டி நல்லதொரு தென்கரையிற் பூம்பொ ழிற்கண் நலிதீர்ந்தார்! தீயோரால் நண்ண லுற்ற பொல்லாங்கெல் லாம்தவிர்ந்தார் உறையூர் சேர்ந்தார் பொழுதிருந்து வைகறையில் தென்பால் சென்றார். 90 ஆறு - காவிரி. பூம்பொழில் - சோலை. நலி - துன்பம், பொழு திருந்து - அந்தப் பொழுதுவரைக்கும் அங்கிருந்துவிட்டு, இயல் - 31 தென்திசை நோக்கிச்சென்ற கோவலன், கண்ணகி, கவுந்தி யம்மை மூவரும் வள வயல்கள் பொய்கைகள் உள்ளதான மலர்ப் பூங்காவில் தங்கினர். அப்போது அங்கே வந்த ஒரு பார்ப்பானை நோக்கி, உன் ஊர் எது? ஏன் வந்தாய்? என்று கோவலன் கேட்க, அதற்கு அவன் - குடமலை நாட்டின் மாங்காடு என்ற ஊர் என்னூர்; திருவரங்கத்தையும் வேங்கடத்தையும் காணும் ஆசையால் வந்தேன்; என்றான். கண் குளிர இந்தப் பாண்டிய நாட்டுச் சிறப்பைக் கண்டதனால் அதை வாழ்த்தியவாறு இருக்கிறேன் என்றான். மதுரைக்கு வழி கேட்டான் கோவலன். இந்த நெடுவழி கடந்தால் அங்கு மூன்று வழிகள் தோன்றும் வலப்பக்கத்து வழியே சென்றால் தென்னவன் சிறுகுன்றம் தோன்றும், அதை வலப்புறந்தள்ளிச் செல்வீர். இடப் பக்கத்தின் வழியேகுவீராயின் திருமால் குன்றம் இருக்கும். அங்கு ஒரு பிலம் உண்டு. அப்பிலத்தின் கண் மூன்று பொய்கைகள் காணப்படும்- என்பன இவ்வியல் தென்றிசைநோக் கிச்சென்றோர் வளநீர்ப் பண்ணை திகழ்பொய்கை சூழ்ந்தஓர் மலர்ப்பூங் காவில் நன்றிருந்தார்! அப்போதில் ஒருபார்ப் பான்தான் நண்ணலுற்றான் ஊர்யாது வந்த செய்தி என்ன என்ற கோவலற்கே குடம லைநாட் டின்மாங்கா டென்னுமூர்உ டையேன் இங்கே நன்றான திருவரங்கம் வேங்க டம்காண் கின்றஓர் நசையாலே வந்தேன் என்ன, 91 பண்ணை - வயல்; ஊர் யாது - உன் ஊர் யாது? வந்த தென்ன - வந்ததன் காரணம் யாது? வந்தேன் என்ன என்பது அடுத்த பாட்டைத் தொடர் கின்றது; குளகம்! என்ன - என்று சொல்லிய அளவில். மதுரைக்கு வழிகேட்டான் கோவ லன்தான் மற்றிந்த நெடுவழியைக் கடந்து சென்று முதுகொடும்பா ளூர்அடைந்தால் அங்குத் தோன்றும் மூவழியில் வலப்பக்க வழியே சென்றால் மதிதென்னர் சிறுகுன்றம் தோன்றும் அஃது வலந்தள்ளிச் செல்லுவீர் இடப்பக் கத்தின் அதர்ஏகத் திருமால்குன் றத்தைக் காண்பீர் அங்குண்டோர் பிலம்; அதன்கண் மூன்று பொய்கை 92 முது - பழமையான. தோன்றும் - தோன்றுகின்ற. மூவழி - மூன்று வழி, மதி - மதிக்கின்றது; வினைத்தொகை. தென்னன் - தென்னவன். அஃது - அதை; இரண்டன் தொகை. அதர் - வழி, ஏக - செல்ல. முதற்பொய்கை மூழ்கினால் ஐந்தி ரத்தை முழுதுணர்வீர் மற்றொன்றால் பழம்பி றப்பும் அதன்பின்ன தால்விரும்பும் பேறும் காண்பீர்; அவ்வழியே மதுரைக்குச் செல்லல் நன்றாம். இதுவன்றி நடுவிலுள வழியே சென்றால் இடர்உண்டாம் என்றுரைத்து நகைவி ளைத்தான். மதியுடைய கோவலனும் நகைத்தா னாகி வழுத்துவான் பார்ப்பனனும் விழித்தா னானான் 93 ஐந்திரம் - இந்திரனால் செய்யப்பட்டது; வடமொழியில் தத்திதம் என்பர்; இஃது ஒருநூல். அதை உலகின் முதற்றனி மொழியாகிய தமிழுக்கே முதனூல் என்று புளுகி வருகின்றார்கள் வடவர். ஒரு பொய்கையில் மூழ்கினால் ஐந்திரநூல் உணரலாமாம். மற்றொன்றால் அதாவது, மற்றொரு பொய்கையில் மூழ்கினால் பழம்பிறப்புத் தெரியுமாம். அதன்பின்னதால், அதாவது அதன் பின்னுள்ள பொய்கையில் மூழ்கினால் விரும்பியது பெறலாமாம். இவ்வாறு மாங்காட்டு மறையவன் புளுகிக் கோவலன் முதலியவர்களின் உள்ளத்தைத் தம் ஆரிய நெறியில் ஓர் ஆசையை உண்டாக்குகின்றான். இவ்வாறெல்லாம் கூறிக் கோவலன் முதலியவர்கள் எள்ளி நகையாடச் செய்கின்றான் என்பது கடைசி இரண்டு வரிகளின் கருத்து. படிவதனால் பொய்கையிலே ஐந்தி ரத்தைப் படித்தநிலை வந்திடுமோ! ஆரி யத்தைப் படிப்பதனால் ஆவதென்ன? பழம்பி றப்புப் படுபொய்யோ உண்மையோ முடிவார் கண்டார்? முடிவில்ஒன் றால் விரும்புவது கிடைக்கு மென்றால் முழுப் பொய்யை நம்புவார் உள்ளார் போலும்! நடப்பார்ப்பான் ஆரியத்தைப் பிறர்உள் ளத்தில்! நாம் நடப்போம் நடுவழியே என்றார், ஆங்கே 94 ஆரியத்தை - ஆரியரின் நெறி குறிக்கும் ஐந்திர நூலை. முடிவார் கண்டார் - முடிவு ஆர்கண்டார் எனப் பிரிக்க. ஆர் - யார் என்பதன் மரூஉ. முடிவில் ஒன்றால் - முடிவில் அதாவது மூன்றாவதாக உள்ள ஒரு பொய்கை யில் மூழ்குதலினால், உள்ளார் போலும்; இல்லை என்றபடி. ஆரியக் கருத்தை ஆரியரல்லாதார் உள்ளத்தில் நட்டுப் பயிராக்கப் பார்ப்பான் என்பதற்கு, நடப் பார்ப்பான் ... ... உள்ளத்தில் எனப்பட்டது. படிவதனால் பொய்கையிலே என்பதைப் பொய்கையிற் படிவதனால் என்று சொல் மாற்றிப் பொருள் கொள்க. இயல் - 32 அவன் சொன்ன மூன்று வழிகளில் நடுவழியே நாம் செல்லத் தக்கது என்ற அளவில், அவ்விடத்தில் வேட்டுவர்கள் ஒரு குமரிக்கு ஐயை எனக் கோலம் செய்து, விழாவில் மற்றவர்களும் கலந்து கொள்வதைக் கண்ணகி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கோவலன் கவுந்தியடிகளோடு நடக்க லானாள். அப்போது பொதிகையிற் றோன்றி மதுரையில் வளர்வதான தென்றல் வீசிற்று. வானிலவு பகலைச் செய்தது. இவ்வாறு சென்ற மூவரும் - ஒழுக்கந் தவறிய பார்ப்பனர் ஒதுங்கி வாழும் ஓர் ஊர்ப் புறத்தை அடைந்தார்கள். அங்கே காலையில் கண்ணகியையும் கவுந்தியடிகளையும் வேலி சூழ்ந்ததொரு காப்பான இடத்தில் இருத்திக் கோவலன் நீர்நிலை தேடி நெடிது தொலைவு செல்லுகையில், குரல் ஒன்று அங்குத் தனித்திருக்கும் மாதவியே என்ன அல்லல் அடைகின் றாயோ - எனக் காதிற்பட்டது; அது என்ன என்று எண்ணும் போதே ஒரு பார்ப்பான் தோன்றினான். நீசொன்னவற்றின் பொருள் என்ன என்று கோவலன் அவனைக் கேட்க, அப் பார்ப்பான் மாசாத்துவானும், அவன் மனைவியும் உறவினரும் நாள் முழுதும் தாம் வீழ்ந்த துன்பக் கடலினின்று கரையேற முடியாமல், கோவலன் என்ன துன்பம் உற்றான்? எங்கே இருக்கின்றான்? என்று உலகில் எங்கும் தேட ஆட்களை விடுவார் ஆனார் என்றான் - என்பது இவ்வியல். வேட்டுவர்ஓர் குமரிக்குக் கோலம் செய்து விழாநடத்தும் அதனையே முகந்தி ருப்பி நீட்டுவிழிக் கண்ணகிதான் பார்த்த வண்ணம் நேயனொடும் கவுந்தியொடும் நடக்க லானாள் வாட்டமுறு பொதிகையினிற் றோன்றித் தென்னன் மதுரையினில் வளர்தென்றல் வீச, மற்றும் ஊட்டுகுளிர் வானிலவு பகலைச் செய்ய ஒழுக்கமிலாப் பார்ப்பனர்வாழ் புறத்தே சேர்ந்தார் 95 கோலம் செய்து - அவ்விழாவில் ஒரு குமரிக்கு ஐயை போல அணி முதலியவை அணிந்து அழகு செய்து, வாட்டம் - உயர்ச்சி. உயர்ந்திருப்பவனை அவன் வாட்ட சாட்டாமாய் இருக்கின்றான் என்பது உலக வழக்கு, தென்னன் - பாண்டியன். ஊட்டுகுளிர் - வினைத் தொகை யாதலின் ஒற்று மிகலில்லை.பகலைச் செய்ய - பகல் போன்றவெளிச்சத்தைச் செய்ய. ஒழுக்கமிலாப் பார்ப்பனர் வாழ்புறம் என்றது பார்ப்பனர் ஒழுக்கமற்றவர் ஆதலின் அவர்களை அக்காலத்தில் ஊர் நடுவில் சேர்ப்பதில்லை. ஆதலின் அவர்கள் ஊரின் புறப்பகுதியில் ஒதுங்கி வாழ்ந்த நிலையை விளக்கியபடி, புறம் - நகரின் புறம்; புறத்திலுள்ள இடம். கவுந்தியினைக் கண்ணகியைக் காலை ஓர்பால் காப்பான வேலிசூழ் நல்இ டத்தில் உவந்திருப்பீர் என்றுரைத்து நீர்நி லைதான் உள்ள இடம் தேடியே நெடிது சென்றான்; அவண்தனித்த மாதவியே இந்நே ரத்தில் அல்லலென்ன உற்றனையோ என்னும் ஓர்சொல் எவணிருந்து வந்ததெனக் கோவ லன்தான் எண்ணினான் ஓர்பார்ப்பைக் கண்ணிற் கண்டான். 96 காப்பான வேலி சூழ் நல்லிடம் என்றது. அஃது, ஒழுக்க மிலாப் பார்ப்பனர் இருக்கும் புறம் ஆதலின் அவர்களில் ஒருவரும் காணாதவாறு அமைந்த வேலி சூழ்ந்து மறைப்பான நல்ல இடத்தை. உவந்திருப்பீர் - இங்கு ஒழுக்கமிலாப் பார்ப்பனர் வருதல் அரிது ஆதலின் மகிழ்ச்சியோடு இருங்கள். அவண் தனித்த மாதவியே இந்நேரத்தில் அல்லல் என்ன உற்றனையோ என்ற குரல் கேட்டதேயன்றி ஆள் காணப் படவில்லை. இக்குரல் எங்கிருந்து வந்தது என எண்ணும் போதே, பார்ப்பானைக் கண்டுவிட்டான் கோவலன். ஏதுரைத்தாய் அதன்பொருள்தான் என்ன என்றே எதிர்வந்த பார்ப்பனனைக் கோவ லன்தான், ஓதென்ன, மாசாத்து வானும் அன்னோன் உயிரனையாள் தானுமவர் உறவி னோரும் போதெல்லாம் துன்பமெனும் கடலுட் பட்டுப் புறமீள வகையின்றிக்கோவ லன்தான் யாதுற்றான்! எங்குள்ளான்? எனவை யத்துள் எப்புறத்தும் தேடவிட்டார் என்று சொன்னான். 97 ஏதுரைத்தாய் என்றதனால் நீ சொல்லியவற்றை நன்றாகச் சொல் என்றானாயிற்று. அதன் பொருள்தான் என்ன என்றதனால் அவ்வாறு நீ சொன்னதைச் சொல்லி அதன் விளக்கத்தையும் கூறு என்றானாயிற்று. ஓது - சொல். அன்னோன் உயிரனை யாள் - மாசாத்து வான் மனைவி. அவர் உறவினோரும் - மாசாத்து வான், மனைவி இருவரின் உறவினரும். போதெல்லாம் - முழுதும், புறமீள - கரையேற. பார்ப்பனன் எடுத்த எடுப்பில் கோவலன் மனத்தைத் தன் கருத்தின் பக்கம் இழுக்க இவ்வாறு முதலிற் சொன்னான். இயல் - 33 முதற்கண்ணே இவ்வாறு கூறியவள் - அதன்பின்னே மாதவி என்னை அழைத்துத் திருமுகம் எழுதித் தந்து இதைக் கொண்டு போய்க் கொடு என்றாள். என்னிடம் நீங்கள் பேசிய பேச்சுக் கொண்டு நீங்கள்தாம் கோவலன் என அறிந்தேனாதலின், அதை உங்களிடம் கொடுத்தேன் என்றான். அதைப் பெற்றுக் கோவலன் திறந்து பார்க்குமுன் மண் பொறியை உடைத்தான். அதில் மாதவியின் மேனி மணத்தை அடையலானான். அந்தத் திருமுகத்தில் பெற்றவர்கள் தம் முயிரைப் பிரிந்தார் போன்றார் மற்றவரும் வருந்துகின்றார்கள். நங்கையோடு நீவிர், எனைப் பிரிந்து சென்றுவிட்டீர்கள். தெரியாமல் சொன்ன என் பிழை பொறுப்பீர்கள்; என் மனத் துயரத்தை நீவிர் காண்க. - என்ற அவ்வஞ்சலின் உரைகளைப் படித்து விட்டுத் தன் பெற்றோருக்கு அஞ்சல் ஒன்று எழுதித் தந்து விரைவாக நீ போ என்றான். பார்ப்பனனும் வணங்கிப் போய் ஒழிந்தான். அதன்பின் - அரிவையையும் கவுந்தியையும் ஆரணங்கே அடிகளே! உள்ளீரோ என்று கூறிக் கொண்டே சென்று அவ்விடத்தை அடைந்தான் - என்பது இவ்வியல். முன்அதனைக் கூறினோன் பின்னும் ஐயா மொய்குழலாள் மாதவிதான் எனைஅ ழைத்தே தன்எழுத்துத் திருமுகத்தை என்பால் தந்து தருகஎன் கோவலனைத் தேடி என்றாள் சொன்னமொழி கொண்டும்மைக் கண்டு கொண்டேன் தூயோரேஎனத்தந்தான்! கோவ லன்தான் மன்னஞ்சல் திறக்குங்கால், மண்ண ழுத்தில் மாதவியின் மேனிமணம் மருவ லானான். 98 ஐயா - ஐயன் என்பதன் விளி. உயர்வு பற்றி உயர் திணை யில் வந்தது. தன் எழுத்துத் திருமுகம் - தன் கையால் எழுதிய அஞ்சல், என்னைக் கண்டதும் காணாததுமான நிலையில் நீவிர் சொன்ன மொழியைக் கொண்டு உம்மைக் கொண்டு உம்மைக் கண்டேன் எனப்பட்டது. தந்தான் - அஞ்சலைத் தந்தான். மன் - பெருமையான. மண்ணழுத்து - அரக்கு முதலிய மண்ணால் பிறர் திறவாமல், குறி வைத்தழுத்திய பொறி. மாதவி தொட்டழுத்திய மண்ணழுத்தில் அவள் உடலின் மணம் வீசியது; அதை அடையலானான் கோவலன். பெற்றவர்கள் தம்முயிரைப் பிரிந்து போகப் பெற்றவர்கள் ஆனார்கள் மற்று முள்ள உற்றவர்கள் தாம்பெற்ற செல்வம் ஏகல் உற்றவர்கள் ஆனார்கள் நாட்டி லுள்ள கற்றவர்கள் எல்லாரும் அழுது பாடக் கற்றவர்கள் ஆனார்கள் துறவி கொண்ட நற்றவர்கள் உமைத்துறக்க ஆற்று கில்லார் நங்கையுடன் சென்றீரே எனைப்பி ரிந்து! 99 - அஞ்சலில் இருந்த உரைஇது. பெற்றவர்கள் உயிர் பிரிந்தவர் போலானார்கள். உற்றவர்கள் செல்வம் போனவர்கள், கற்றவர்கள் அழுது பாடுகின்றார்கள். துறவிகள் உம்மைத் துறக்க முடியா தவர்கள். இவ்வாறாக நீவிர் கண்ணகியுடன் சென்றீர் என்னைப் பிரிந்து - என்பது இச்செய்யுள் கருத்தாதல் காண்க. நங்கை - கண்ணகி. ஆற்றுகில்லார் - பொறுத்தல் இல்லாதவ ரானார். சூழலுற்ற கோவலன்தான் அங்கு வந்து சூழலுற்ற பாணருடன் மகிழ்வி னோடும் யாழிசைத்தே மதுரைதான் எங்கே என்ன இதுமதுரைத் தென்றலே அஃதண் மைத்தே வாழ்கஎன்றார்! மூவருமே வழிக டந்து, வையையினைப் புணைமரத்தால் கடந்தே ஆற்றின் வீழ்புனலின் தென்கரையை மேவி ஆங்கே விரிமதுரை மதிற்புறத்தோர் சேரி புக்கார் 100 சூழலுற்ற கோவலன் - அடைந்த கோவலன், அல்லது மரங்கள் வேலிகள் சூழ்ந்த இடத்தை அடைந்த கோவலன். அங்கு வந்து சூழலுற்ற - அங்கு அப்போது சுற்றிக் கொண்ட. இது மதுரைத் தென்றலே - இதோ வருகின்றதான இது மதுரை யினின்று வரும் தென்றற் காற்றே, அஃது - ஆதலால் அந்த மதுரை நகர். அண்மைத்தே - அண்மையில் உள்ளதே, புணைமரம் - கட்டுமரம். விரி மதுரை - இடமகன்ற மதுரை, சேரி - சேர்தலாற் சேரி. ஊர்புக்கார் - அடைந்தார்கள். இயல் - 34 வைகறையில் கோவலன் முதலிய மூவரும் தங்கியிருந்த புறஞ்சேரி சார்ந்த பூம்பொழிலிடத்தும், வளவயலிடத்தும் புள்ளினங்கள் ஆர்த்தன. மக்கள் புகழ்ந்துரைக்கும் பொய்கையின் தாமரையரும்பின் இதழ் விரித்து எழுந்த இளம் பரிதியின் மென்மையான கதிரின் பொன்னொளிபோய் இன்னல் என்பதே இன்னதென்றறியாத மக்களின் துயில் எழுப்பின. முரசினாலும் சங்கினாலும் மதுரை பெற்ற மங்கல ஓசையை இவ்வுலகினர் எவரும் பெற்றார்கள். மதுரை நகரின்அமைப்பையும் மக்கள் வாழும் வகையையும் கண்டு வருகின்றேன்: இங்கு இருங்கள் என்று கண்ணகி கவுந்தி யார்க்குக் கூறிச்சென்ற கோவலன், உலகம் மதிக்கின்ற போர்த் துறையால் மேன்மை பெற்றுள்ள பாண்டியன் கோயிலையும், அமைச்சர் ஒற்றர் வாழும் பகுதிகளையும், அங்கே எதிர் வருவார் வந்து போவார் உள்ளப் பாங்கையும் கண்டான்; மேற்கொண்டு சென்றான். உயர்ந்த கொள்கையை உடைய தமிழ்ப் புலவர்களின் பேரவைகள், பெருமாடங்கள் நிறைந்த தெருக்கள், வாணிக நிலையங்கள், அற மன்றங்கள் மாதர் ஆடும் பூங்கா. அணி என்பது மனத்தில் அணியும் - அதுதான் கல்வி என்று பக்கங்களை யெல்லாம் அடைத்துக் கொண்டிருக்கின்ற கழகங்கள் ஆகியவற்றைக் கண்டான்; மேலும் காணும் அகத்தானாகித் தொழில் பலவும் காணச் சென்றான். புக்கிருந்த புறஞ்சேரிச் சார்பில் உள்ள பூம்பொழிலில் வளவயலில் புள்ளி னங்கள் ஒக்கவே எழுந்தார்ப்ப வைகறைக்கண் ஊர்சார்ந்த பொய்கைத்தா மரைஅ ரும்பின் மிக்கனவாம் இதழ்விரித்த இளஞா யிற்றின் மென்கதிரின் பொன்னொளிபோய் இன்னல் காணா மக்களினைத் துயிலெழுப்ப, முரசால் சங்கால் மதுரைபெற்ற மங்கலம், இவ் வுலகர் பெற்றார்! 101 புள்ளினங்கள் - பறவைக் கூட்டங்கள். ஆர்ப்ப - ஆரவாரம் செய்ய. வைகறை - முற்காலை. ஊரைச் சார்ந்த மக்கள் சிறப்பித்துச் சொல்லும் சொல் சார்ந்ததான, இன்னல் காணா - துன்பம் அறியாத. முரசால் சங்கால் - மதுரையில் எழும் முரசொலியால் சங்கொலி யால். மங்கலம் - மங்கல ஓசை. மதுரைநகர்ப் பாங்குகண்டு மக்கள் வாழ்வின் வகைகண்டு வருவேன் இங் கிருக்க என்று முதிர்அன்பு மங்கைபால், அடிக ளின்பால் மொழிந்தானாய்ச் செல்லுகின்ற கோவ லன்தான் மதிக்கலுறும் மறத்துறையின் விளங்கு கின்ற மன்னவனின் கோயிலையும் அமைச்சர் ஒற்றர் பதிபலவும் அவண்வருவார் போவார் நெஞ்சப் பாங்கினையும் கண்டுமேற் கொண்டு சென்றான் 102 பாங்கு - அமைப்பு, வகை - நடைமுறை, இருக்க - இருப்பீர்கள்: வியங்கோள். மங்கை - கண்ணகி, அடிகள் - கவுந்தியடிகள். கோயில் - அரண்மனை. பதி - உறை விடம். மேற்கொண்டு - மேலும் செல்லுவதை மனதிற் கொண்டு. மாண்அகத்துத் தமிழ்ப்புலவர் பேர வைகள் வான்எட்டும் மாடங்கள் மலிதெ ருக்கள் வாணிகத்து நிலையங்கள் அறமன் றங்கள் மான்எட்டும் விழிமாதர் ஆடும் பூங்கா, பூண்அகத்துப் பூண் அதுதான் கல்வி என்று புடைஎட்டும் கழகங்கள் கண்டான் மேலும் காண்அகத்தான் தொழில்பலவும் காணச் சென்றான் கண்டவர்கள் கோவலனைப் பின்தொ டர்ந்தார்! 103 மாண் அகத்து - பெருமை பொருந்திய கொள்கையுடைய; அத்துச் சாரியை. மான் எட்டும் விழி - மான் போன்ற விழி, எட்டும் - உவமை உருபு. பூண் அகத்துப்பூண் - அணியும் அணி என்பது, உள்ளத்தில் அணியும் அணியே. அதுதான் கல்வி - அவ்வணி தான் கல்வி யாகும். புடை எட்டும் - பக்கங்களை யெல்லாம் எட்டுகின்ற. காண் அகத்தான் - காண்பதோர் எண்ணமுடைய கோவலன். இயல் - 35 மாணகத்துத் தமிழ்ப் புலவர் பேரவை முதல் கல்விக் கழகங்கள் வரைக்கும் கண்டபின் - கோவலன், மக்கள் தன்னைத் தொடர்ந்துவரத் தொழில்கள் பலவற்றைக் காணச் செல்லுகையில், கோவலன் ஒரு கட்டடத்தைக் காட்டி இது என்ன என்று கேட்பான். அதற்கு விடையாக ஆயிரம் பேர்கள் இது இன்னதென்று விளக்குவார்கள். இன்னும் காணத் தக்க புதிது என்ன வென்றால். ஆயிரம் பேர்கள் வழிகாட்டி முற் செல்லுவார்கள். அவன் சொல்லும் சொல் எங்கிருந்து வந்ததோ அந்த இனிதான உள்ளத்தை அறிந்து மகிழ்வார்கள். தேன் ஓடும் பக்கத்தில் வண்டின் கூட்டம் ஓடுவது வியப்பன்று. தன்னைச் சூழவிருக்கும் நன்மக்களில் சிலர் வரலாறு கேட்கை யில், சொல்லாவிட்டால் அவர்கள் வருந்துவார்களே என்று எண்ணிச் சுருக்கமாகச்சொன்னான். மற்றும் தான் காண வேண்டுவனவற்றையெல்லாம் கண்டபின் கண்ணகியும். கவுந்தியடிகளும் இருக்குமிடத்தில், நான் இல்லாமை கருதி அஞ்சி மனத்துயர் அடைந்தார்களோ? நான் விரைவாகச் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவனாகி, எண்ணத்தில் ஆழ்ந்துள்ள அங்குள்ள மக்களிடம் சொல்லிக்கொண்டு வழி கண்டு தனியே சென்றான். சிரிக்கும் கண்ணை உடையவளான கண்ணகி, தன் காதலனை எண்ணி என் துணைக்கு ஒன்று நேர்ந்துவிட்டதோ என்று கதறினாள். அதே நேரத்தில் வந்த கோவலன் அவள் தோளுக்கு ஒன்றாகினான் - என்பது இவ்வியல். இதுவென்ன? - எனக்கேட்பான் கோவ லன்தான் இன்னதென விளக்குவார் ஆயி ரம்பேர்! புதிதென்ன இன்னும்எனில் ஆயி ரம்பேர்; போம்வழியைக் காட்டுதற்கே முன்நடப்பார்! எதுவேனும் அவன்சொன்னால் சொல்இ ருந்த இனிதான உளங்கொண்டு மகிழா நிற்பார் மதுஓடும் பக்கமெலாம் கூட்ட மான வண்டோடிக் கொண்டிருத்தல் வியப்பே அன்றாம்! 104 எனில் - என்று கோவலன் கேட்டால். போம் வழியைக் காட்டுதற்கே முன்னடப்பார் - அந்தப் புதிது இருக்கும் இடத்துக்கு வழி காட்டுதற்கே முன்னடப்பார். மது - தேன்; தேனாறு ஆகுபெயர். இது இல் பொருளுவமை. சூழ்ந்திருந்த நல்லோரிற் சில்லோர் கேட்கத் தூயமனம் வருந்தாமை கருதித் தான்முன் வாழ்ந்திருந்த வரலாற்றுச் சுருக்கம் சொல்லி மற்றுந்தான் காணுவன கண்டே, அஞ்சி வீழ்ந்தனரோ சேரியிலே தங்கி யுள்ளார் விரைந்துநான் சென்றிடத்தான் வேண்டு மென்றே ஆழ்ந்துள்ள எண்ணத்து மக்கள் தம்பால் அறிவித்து நெறிபற்றித் தனியே சென்றான்! 105 ஆழ்ந்துள்ள எண்ணத்து மக்கள் - கோவலன் வரலாறு கேட்டதால், எண்ணத்தில் ஆழ்ந்திருந்த மக்கள். மக்கள் - கோவலனுடன் தொடர்ந்து வந்துகொண்டிருந்த மக்கள். கோவலனுக்குப் புதிய ஊர் வழியறிந்து செல்வது அரிது ஆதலால் நெறிபற்றி எனக் கூறப்பட்டது. பற்றி - தெரிந்து. உடனிருந்த மக்களை அழைத்துச் செல்லாமல் தனியே சென்றான் என்று விளக்கியது காண்க. மக்கள் தம்பால் - மக்களிடத்தில், பால் ஏழனுருபு. விடிந்துவிடு முன் அகன்று வெங்க திர்போய் விழுந்தபின்னும் வரவிலையே! என்கண் ணீர்தான் வடிந்துவிடும் எனுங்கருத்தோ! துணைபி ரிந்தும் வாழ்ந்திருப்பேன் எனுங்கருத்தோ! என்உ யிர்தான் முடிந்துவிடு மோஎன்னும் நிலைய டைந்து மொய்குழலின் மலர்சிதற ஐயோ என்ற ஒடிந்துவிழும் பூங்கொடியைத் தாங்கி நின்றான்; உள்ளத்தும் கண்ணகியைத் தாங்கும் செம்மல் 106 வெங்கதிர் - வெப்பமிக்க கதிரவன். என் கண்ணீர்தான் வடிந்து விடும் - என் கண்ணிற் பெருகும் வெள்ளம் நின்றுவிடும். என - என்று எண்ணி. பூங்கொடி - கண்ணகி. செம்மல் - கோவலன். இயல் - 36 ஊரின் சிறப்புக் கண்டு புறஞ்சேரி மீண்ட கோவலன், தான் கண்ட மதுரைச் சிறப்பையெல்லாம் கவுந்தியடிகளிடம் செப்புகையில் தலைச் செங்கானத்து மாடலன் என்னும் பார்ப்பனன், குமரி மூழ்கி மீளுவோன் கவுந்தியடிகளைக் காணுதற்கு அங்கு வந்தான்; கோவலன் வருக என்றான். அவ்வாறு கோவலன் வரவேற்க மாடலன் சீர் மிக்க நீவிர் இந்த மாணிக்கக் கொழுந்து போன்ற கண்ணகியுடன் இங்கு வந்ததென்ன? உரைப்பீர் என்று கூற, அதற்குக் கோவலன்: ஐயா! இங்கு நான் வந்ததென்பது பெரிய துன்பச் செயலன்று, இனி வர இருக்கும் தீங்கு அதனினும் பெரிதாய் இருக்கும் போலிருக்கின்றது. என்னும் போதே உள்ளம் நடுங்கும் ஒரு கனவு கண்டேன் என்றான். இதுகேட்ட அடிகள் அறங்காணாப் பார்ப்பனர் இருப் பிடத்தில் குடிபுகுந்து அச்சமுற்றிருக்கின்றீர். உம் அச்ச நினைப்பே கனவாகும். ஆதலால் இதைவிட்டு நீவிர் மதுரை செல்க என்றார். அதே நேரம் அடிகளிடம் மாதரி வந்தாள் - என்பது இவ்வியல். ஊர்ஏகிப் புறஞ்சேரி மீண்ட செம்மல் உயர்மதுரைச் சிறப்பினையும் பாண்டி மன்னன் சீர்மிக்க வெற்றியையும் கவுந்தி யின்பால் செப்புகையில் தலைச்செங்கா னத்து வாழ்வோன்; ஓர்பார்ப்பான்; மாடலன் தான் குமரி ஆடி உடன்மீள்வோன் கவுந்தியினைக் காணு தற்கு நேர்வந்தான். கோவலனும் வருக என்றான் நெஞ்சத்து மிகமகிழ்ச்சி கொண்டான் பார்ப்பான். 107 செம்மல் - கோவலன்; குமரி ஆடி - குமரி என்ற தென் கடலில் மூழ்கி. வரவேற்ற கோவலனை மாட லன்தான் வண்மையிலும் தண்மையிலும் நிகரி லாதீர்! மருமலர்த்தார் மார்பனீர் நீவிர் இந்த மாணிக்கக் கொழுந்தோடு வந்த தென்ன உரைக்கஎனக் கோவலன்தான் ஐயா இங்கே உற்றதொன்று பெரிதன்றே வரவி ருக்கும் ஒரு பெரிய தீங்குண்டு போலும்! எண்ண உளநடுங்கும் கனவொன்று கண்டேன் என்றான். 108 வண்மை-செல்வம்; தண்மை-பிற உயிர்களிடத்து இரக்கம். மரு மலர்த்தார் - மணமுள்ள மலரால் கட்டிய மாலை. உற்ற தொன்று - உற்றது ஒன்று எனப் பிரிக்க. ஒன்று - ஒரு தீங்கு. எண்ண உளம் நடுங்கும் கனவு - எண்ணும்போதே மனம் நடுங்கும் அத்தனை கொடிய தான கனவு. அடிகள்தாம் அதுகேட்டுக் கூறு கின்றார் அறங்காணாப் பார்ப்பனர்கள் ஊர்ந்த ஊரில் குடிபுகுந்தீர் அச்சத்தில் குடிபு குந்தீர் கொள்நினைவே கனவாகும் ஆத லாலே நொடியில்இவ் விடம்விட்டு மதுரை செல்க நவிலஇது! கோவலனும் நன்றே என்றான். அடிகளிடம் மாதரிவந் தாள்அந் நேரம்! அன்னவள்ஓர் ஆயர்மகள்; முதியோள்; நல்லள்! 109 ஊர்தல் - குடியேறுதல். ஊர்ந்தது ஊர் எனக் காரணப் பெயராதல் அறிக. கொள்நினைவே கனவாகும் - அச்சத்தான் கொண்ட நினைவே அஞ்சத் தக்க கனவு ஆகும். நுவல இது - இது நுவல என்று மாற்றிப் பொருள் கொள்க, நுவலல் - சொல்லல். ஆயர் - இடையர். முதியோள் - ஆண்டின் மூத்தவள். நல்லள் - நற்குணமுடையவள். இயல் - 37 கவுந்தியடிகள் மாதரியைப் பற்றி அவள் கொடுமையில்லாத வாழ்க்கை யுடையவள்; நன்மையமைந்த இடையர் குடியினள்; முதியவள்; நல்லவள்; நடுவு நிலையுள்ளம் வாய்ந்தவள் ஆகிய மாதரியிடம் கண்ணகியை இருக்கச் செய்யலாம் என்று கூறக், கோவலன் மாதரியை நோக்கி அன்னையே, கண்ணகி என்னும் என் மனைவி நின் அடைக்கலம் என்று கூறிக் கண்ணகியின் கையை அவள் கையில் அளித்துக் கண்ணீர் சிந்தினான். அப்போது கண்ணகி, கோவலன் கண்டதாகக் கூறிய கனவை எண்ணி நெஞ்சில் கலக்கத்தையும் கண்ணில் நீர் அருவியையும் வைத்து, அங்குச் சூழ்ந்திருந்த அனைவர் நடுவிலும் மாதரியால் கை பிடிக்கப்பட்டும் முதலில் மறந்து பிறகு நினைத்துவந்து காட்டாத தன் முகம் காட்டித் தன்னைச் சாகாமல் வாழ வைத்த இனிய தன் கோவலனை இனிப் பிரிவதும் உண்டு போலும் என்று எண்ணி ஏங்கலுற்றாள் கண்ணகி. ஏங்கும் கண்ணகியை நோக்கிக் கோவலனும் ஏங்கினான். அங்கிருந்தார் அனைவரும் வருந்தினார்கள். இவ்விரு வரும் இவ்வாறு சிறுமையினில் ஆழ்கின்ற நிலையை எண்ணித் துறவு பூண்ட அடிகளும் அழுதார்கள். அப்போது - அடிகளே வணக்கம் என்று கோவலன் சொல்லி விடைபெற்றுக் கொண்டான். நீவிரும் எனைவிட்டு நீங்கினிரோ என்று கூறித் தொழுது கண்ணகியும் விடை பெற்றுக் கொண்டாள். இருவரும் நேரே மாதரியுடன் நடக்கலானார் - என்பது இவ்வியல். கொடுமையிலா வாழ்க்கையினை உடையாள் ஆப்பால் கொண்டளிக்கும் குடியுடையாள்; முதியாள்; நல்லள் நடுநிலையாள் மாதரிபால் அன்புமிக்க நங்கையினை இருத்தலாம் எனக் கவுந்தி அடிகள்தாம் உரைத்தவுடன் கோவ லன்தான் அன்னாய்என் கண்ணகியாம் மனைவி தான்நின் அடைக்கலமே எனவுரைத்து மனையாள் கையை அவள்கையில் பிடித்தளித்துக் கண்ணீர் வார்த்தான்! 110 கொடுமையிலா வாழ்க்கையினை உடையாள் என்றது, கொடுமை வாழ்க்கையினராகிய எயினர் முதலானோரின் வாழ்க்கையை விலக்குவதற்கு. ஆப்பால் கொண் டளிக்கும் குடியுடையாள் - ஆவின் பாலைக் கொண்டு மக்களைக் காக்கும் குடித்தனக்காரி. இருத்தலாம் - இருக்கச் செய்யலாம். என - என்று. நின் அடைக்கலமே - உன் காப்புக்கு வைத்த பொருள். கனவெண்ணி நெஞ்சத்தில் கலக்கம் வைத்தும் கண்களிலே அருவிவைத்தும், சூழ்ந்தி ருந்த அனைவோரின் நடுவின்மா தரிதான் ஏந்தும் அங்கையினாற் செங்கைதான் பற்றப் பட்டும் முனம் மறந்து பின்நினைந்து வந்து, காட்டா முகம்காட்டிச் சாவாளை வாழ வைத்த இனியவனை இனிப்பிரிதல் உண்டுபோலும் என்றெண்ணிக் கண்ணகிதான் ஏங்க லுற்றாள். 111 இனியவனை - கோவலனை. இனிப்பிரிதல் உண்டு போலும் என்றது, இவளை மாதரி பால் இருக்கும்படி செய்யலாம் என்று கவுந்தியடிகள் சொன்னபடி, கோவலன் மாதரிபால் தன்னை விட்டுச் செல்வான் என்று எண்ணி. சாவாளை - இறந்துபோகும் ஒருத்தியை, அதாவது தன்னை. ஏங்கலுற்றாள் - அழுதாள். ஏங்கினாட் கேங்கினான் கோவ லன்தான்! ஏங்கினார் அங்கிருந்த மக்கள் யாரும்! தீங்கற்றான்; தீங்கற்றாள் இன்ன வண்ணம் சிறுமையினில் ஆழ்கின்ற நிலையை எண்ணி ஆங்கிருந்த துறந்தாளும் அழுதி ருந்தாள் அடிகளே வணக்கம் என்றான் செம்மல்! மங்கை நீங்கினிரோ எனத் தொழுதாள்! நடக்க லுற்றார் நேயத்து மாதரியி னோடு நேரே. 112 ஏங்கினாட்கேங்கினான் - ஏங்கினாளுக்கு, அதாவது ஏங்கிய கண்ணகியின் பொருட்டு ஏங்கினான். அங்கிருந்த மக்கள் - அங்குக்கூடியிருந்த பெரு மக்கள். இன்ன வண்ணம் - இப்படிச் சிறுமையினில் ஆழ்கின்ற நிலை; கண்ணகிபால் கோவலன்பால் அந்நாள் காணப் படும் நிலை சிறுமை நிலை; அதாவது வறுமைநிலையில் ஆழ்தல்; வறுமை நிலை மேம்படுதல். துறந்தாளும் - உம் உயர்வு சிறப்பு. நேயத்து - அத்துச் சாரியை. கோவலனும் கண்ணகியும் வேறுபக்கம் எது கருதியும் போக வில்லை என்பதைக் குறிக்க நேரே எனப்பட்டது. இயல் - 38 மாதரி இல்லம் சேர்ந்து, மாதரி செய்ய வேண்டிய வேலைகளை யெல்லாம் நான் செய்வேன் நான் செய்வேன் என்று மாது கண்ணகி காய்கறிகளை அரிந்து சமையல் அனைத்தையும் மாதர் இவைசெய்ய முடியாதவை என்று சொல்லும்படி முடித்த ஓத அரிதான குணமுடை கோவலனுக்கு உணவிட்டு வெற்றிலை பாக்குத் தந்து நிற்க, காதலியான அந்தக் கண்ணகியைக் கோவலன் கேட்ட காற்சிலம்பு இரண்டில் ஒன்றை விரைவாகக் கொடுத்தாள். அவளை நோக்கிக் கோவலன், என்னோடு காட்டில் நடந்து துன்பமுற்றாய் இதனை என் பெற்றோர் எண்ணி என்ன துன்பம் அடைந்தார்களோ! யான் உனக்கு இழைத்த துன்பம் சிறிதன்று. தச்சன் பண்ணுதற்கரிய பொற்பாவை போன்றவளே நான் சுமந்த பழுதை யெல்லாம் நீக்கிவந்தவளே; அழவேண்டாம். இந்தச் சிலம்பை விற்றுக் கொண்டு விரைவில் வந்து விடுவேன் நல்லவளே என்று கூறிக் கோவலன் சென்றான். இந்தக் காட்சியை உடனிருந்துகண்ட மக்கள் மரக்கலங்கள் பாட்டுப் பாடிக்கொண்டு அயல் நாட்டில் விற்றுவிட்டு மீண்டும் அந்தக் கலம்பாடிக் கொண்டே அங்கிருக்கும் சரக்கை ஏற்றிக்கொண்டு வரும். தம் வறுமையைப் பாடி வருகின்றவர்க்கு இல்லை என்று சொல்ல மாட்டார். இனப் பெருமையைப் பாடும் புலவர்க்கே எம் சொத்தெல்லாம் என்பவர் தம் நலத்தை எடுத்துக் காட்டும் கடல்போன்ற செல்வத்தை யுடையவரும் நாட்டுக்குப் பாடுபடுபவருமாகிய பெருங்குடி மக்கள் பெற்ற மைந்தனான இக் கோவலன் இன்று சிலம்பொன்றின் விலைபாடிச் செல்லும் இந்தத் துன்பத்துக்குரிய காட்சியானது சிறுமை நிலைக்கு எதிரில்வைத்த கண்ணாடியாகும் என்றார்கள் - என்பது இவ்வியல். மாதரியின் இல்லத்திற் சேர்ந்தார் ஆக மாதர்இயற் றும்பணியை நான்நான் என்று மாதரிந்து காய்கறியைச் சமையல் முற்றும் மாதரிவை செயற்கரிய எனமு டித்தே ஓதரிய குணமுடைய கோவ லற்கே உணவிட்டு வெற்றிலைபாக் கீந்து நிற்கக், காதலியைக் கோவலன்தான் கேட்ட தான காற்சிலம்பி ரண்டிலொன்று கழற்றித் தந்தாள். 113 ஆக - அப்படியிருக்க. மாதர் இயற்றும் பணியை - மாதரி வீட்டில் மாதர் இயற்றக் கூடிய வேலைகளை. நான்நான் என்று - நான் செய்கின்றேன் நான் செய்கின்றேன் என்று. மாதரிந்து காய் கறியை - காய்கறியை மாது அரிந்து. மாது - கண்ணகி. மாதரிவை செயற்கரிய எனமுடித்து - பெண்கள் இவை செய்யமுடியாதவை என்று சொல்லும் படி அவ்வளவு சுவையுடையனவாக. ஓதரிய - ஓத அரிய. அகரம் தொகுத்தல். நிற்க - கண்ணகி நிற்க. தந்தாள் - கண்ணகி தந்தாள். கண்ணகியே என்னோடு காட்டி லெல்லாம் கால்நோவ நடந்ததனை என்பெற் றோர்கள் எண்ணியே என்னதுயர் எய்தி னாரோ! யானும்உனக் கிழைத்ததுயர் சிறிய தன்று! பண்ணரிய பொற்பாவாய்! நான்சு மந்த பழுதகற்ற வந்தவளே அழுதல் வேண்டாம். நண்ணிடுவேன் விரைவாக இதனை விற்றே நல்லவளே எனச்செம்மல் சொல்லிச் சென்றான். 114 சிலம்பொன்றை வாங்கிக் கொண்ட கோவலன், அவளைப் பலவாறு பாராட்டினமை காண்க. எய்தினாரோ - அடைந்தார்களோ. பண்ணரிய - பண்ண அரிய; அகரம் தொகுத்தல்; தச்சன் இயற்றுதற்கு அரிதான. பாவை - பாவாய் என விளியேற் றது. நான் சுமந்த பழுது - நான் மிகவாகத் தேடிக் கொண்ட பழி. நண்ணிடுவேன் - வந்துவிடுவேன். செம்மல் - ஆண் மக்களிற் சிறந்தவன்: கோவலன். கலம்பாடிச் சரக்கேற்றி அயலில் விற்கும்! கலம்பாடிச் சரக்கேற்றி நாடு மீளும்! இலம்பாடி வந்தோர்க்கே இல்லை என்னார்! இனம்பாடும் புலவர்க்கே எல்லாம் என்போர்! நலம்பாடும் செல்வமெலாம் கடல்போற் கொண்ட நாட்டுக்குப் பாடுபடு வாரின் மைந்தன். சிலம்பொன்றின் விலைபாடச் செல்லும் காட்சி சிறுமைக்குக் கண்ணாடி என்றார் கண்டோர்! 115 கலம் பாடி சரக்கு ஏற்றி அயலில் விற்கும் - கப்பலானது சரக்கை ஏற்றிக் கொண்டு அயல் நாட்டில் விற்கும். அது போலவே அங்கிருந்து சரக்கேற்றி நாடு மீளும் - சரக் கேற்றிக் கொண்டு நாடு திரும்பும். எது? அந்தக் கலமே. இலம் - வறுமை. இனம்பாடுதல் - தமிழர் என்ற இனம்பற்றிப் பாடுதல். நலம்பாடும் செல்வம் - உடையவர் புகழைப் பாடுகின்ற செல்வம்; புகழை எடுத்துக் காட்டுகின்ற செல்வம் என்ற படி. சிலம்பை விற்கச் செல்லும் இரங்கத்தக்க காட்சியானது, சிறுமையின் எதிரில் வைத்த நிலைக்கண்ணாடி. என்பது இவ்வாறு கூறப்பட்டது. இயல் - 39 அரண்மனை மகளிர் இல்லத்தில், அரசி ஒரு நாள் இரவு தன் மணாளனின் புணர்ச்சிக் காலத்தில் உடம்பில் பட்டு உறுத்தும் என்று தன் சிலம்புகளைக் கழற்றித் திருப்பள்ளி அறையின் ஒரு பக்கமிருந்த பெட்டகத்தின்மேல் வைத்தாள். அவற்றில் ஒரு சிலம்பைக் காலையில் துயிலெழுப்ப வந்தவர்களில் ஒருத்தியான வஞ்சி என்பவள், பணம் கொண்டு வந்தால் மணந்து கொள்வேன் என்று சொல்லியிருந்த கருங்கை என்பவனிடம் திருடிக் கொண்டுவந்து கொடுத்தாள் - அதைப் பெற்றுக் கொண்ட கருங்கை இதை எவரிடமும் சொல்லிவிடாதே. திருட்டு வெளியாகிவிட்டால் பெருங்கேடு நமக்கு என்று கூறி அனுப்பி விட்டான். அச் சிலம்பை நீ எடுத்தாயா என்று மறுநாள் அரசினர் கேட்டபோது எனக்கும் கருங்கை என்பாருக்கும் திருமணத்தை முடிக்கவும் எம்கையிற் காசில்லை. சிலம்பு இருந்தால் திருமணத்தை முடித்திருப்போமல்லவா என்று மறுத்துரைக்க இதுகேட்ட அரசினர் சும்மா இருந்துவிட்டார்கள். இவ்வாறு அரசினர் கேட்டதையும் தான் சொன்னதையும் அப்படியே கருங்கையிடம் வஞ்சி சொன்னதையும், கருங்கை - என் பெயரை ஏன் உரைத்தாய்? அவர்கள் நம்மீது ஐயப்பாடு கொள்ளும் நிலையை ஏற்படுத்திவிட்டாயே என்று கூறி அவளை அனுப்பிவிட்டு, அந்தச் சிலம்பை உளவாளிகள் தேடுவார்கள். நாம் அகப்பட்டுக் கொள்ள நேரும், இது நம் வீட்டில் இருக்கலாகாது என்று இடுகாட்டில் கொண்டுபோய்ப் புதைத்துவைத்துவிட்டு ஊரில் போவார் வருவாரை யெல்லாம் இவர்கள் துப்பறியும் ஆட்களோ என்று ஐயுற்று நடுங்கிக் கொண்டு தன் வீட்டின் அருகில் நிற்கையில் கோவலன் ஆயிர மக்கள் சூழச் சிலம்போ சிலம்பென்று கூவி வருவது கேட்டு, அவனிடம் ஓடி ஐயா அரசியார் என்னிடம் இன்னொரு சிலம்பு வேண்டும் என்று சொல்லியிருக் கின்றார். நான் அரண்மனைப் பொற்கொல்லன். ஆதலால் அந்தச் சிலம்பைத் தாரும். நான் அரசியாரிடம் காட்டிவரும் வரைக்கும் இதோ இந்தக் கோயிலில் தங்கியிருப்பீர் என்று கூறி, அதைப் பெற்றுச் சென்றுவிடுகின்றான் - என்பதன் சுருக்கம் இவ்வியல். நிலம்பிரிந்து நாலானாற் போலும், தண்மை நீர்பிரிந்து மூன்றானாற் போலும், ஒண்மைப் பொலம்பிரிந்து பல்அணிகள் ஆகி, வண்ணப் பூவுடம்பெல் லாம்குலுங்கப் பெற்ற மன்னி புலம்பிரியா மணவாளன் பஞ்ச ணைக்கண் புணருங்கால் பட்டுறுத்தும் என்று, பூண்ட சிலம்பிரண்டை யும்கழற்றி அணித்தி ருந்த திருப்பள்ளிப் பெட்டகத்தின் மீது வைத்தாள்! 116 நிலம்பிரிந்து நாலாதல் - உலகம் என்பதொன்றே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நால் வகையாகப் பிரிதல். நீர் பிரிந்து மூன்றாதல் - கடல், ஆற்று நீர், ஊற்றுநீர் எனப் பிரிதல். தண்மை - குளிர்ச்சி. ஒண்மை - ஒளி. பொலம் - பொன், திரிபு. பல் அணிகள் - பல நகைகள். வண்ணப் பூ - அழகிய பூ, மன்னி - அரசி. மன்னன் என்பதன் பெண்பால். பட்டுறுத்தும் - பட்டு உறுத்தும் எனப் பிரிக்க. அணித் திருந்த - அருகிலிருந்த. திருப்பள்ளி - உயர்வுடைய படுக்கையறை. மணம்வேண்டும் நாமொன்றி வாழ வேண்டும்; மனம்வைப்பாய் எனக்கேட்ட வஞ்சி தன்னைப் பணம்வேண்டும் எனக்கேட்டான் கருங்கை என்பான். பள்ளியினில் துயிலெழுப்பும் போதில் கண்ட வணம்சிறந்த சிலம்பிரண்டில் ஒன்றெ டுத்து வந்துகருங் கையிடத்தே வஞ்சி நீட்ட இணங்கி, என் கண்ணாட்டி உன்னை மன்னி எடுத்தாயா எனக்கேட்டால் இல்லை என்க. 117 இன்னுங்கேள் வஞ்சியே இக்கள் ளத்தை இம்மியள வுரைத்தாலும் நம்இ ரண்டு முன்னங்கை கால்கட்டித் தீயில் இட்டே முழுதுடம்பும் பொரித்தெடுத்துத் தெருவில் எங்கும் இந்நங்கை! இம்மைந்தன்! காண்பீர் என்பார். என்றுரைத்தான்! செத்தாலும் சொல்லேன் என்றாள் நன்மணந்தான் என்றென்றாள்! இச்சி லம்பு நமக்குறுதி யானவுடன் நடக்கும் என்றான். 118 ஒன்றி - ஒத்து. வணம் - வண்ணம்; வேலைப்பாடு, என்க - என்று சொல்லுக. வியங்கோள்; இந்நங்கை - இப்படிப்பட்ட பெண், இம்மைந்தன் - இப்படிப்பட்ட ஆள். இயல் - 40 நம் கோப்பெரும் பெண்டின் சிலம்பு எங்கே? எடுத்தீரோ என்று அரசினர் கேட்ட அளவில். நானறியேன்நானறியேன் என்று தனித் தனியே சொல்லிவிட்டார்கள்; அதன்பின்னர் ஒருபக்கம் தயங்கிக் கொண்டிருந்த வஞ்சியைக் கேட்டபோது அவள். எங்கள் திருமணம் முடிக்கவும் காசில்லை; கருங்கை என்னும் என் மாப்பிள்ளைக்கும் வேலை கிடைக்கவில்லை. உங்கள் சிலம்பு எங்களிடம் இருந்தால் இந் நேரம் மணமே முடிந்திருக்குமே என்று கூறினாள். இவ்வாறு அங்குக் கூறிய வஞ்சி என்பாள் கருங்கையிடம் ஓடிவந்து, அத்தான் சிலம்பு எடுத்தாயா என்று கேட்டார்கள்; நான் காணேன் என்றேன். குரங்கு போல் விழித்தார்கள். பிறகு அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை என்றாள். அதுகேட்ட கருங்கை அந்த அவையிலே அவர்கள் உன்னைக்கேட்ட தென்ன? அதற்கு நீ சொன்னதென்ன? அத்தனையும் சொல் என்றான். அரைக்கா காசும் கையிலில்லை. அவர்க்கும் வேலை கிடைக்கவில்லை; சிலம்பு எம்மிடம் இருந்திருந்தால் திருமணம் ஆகாமல் இருக்குமா என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டேன் என்றாள். அது கேட்ட கருங்கை. அடி கேடுகெட்டவளே, என் பெயரை ஏன் இழுத்து வைத்தாய்? இலை மறைக்க வேண்டியவள் அதன் காம்பை மட்டும் காட்டலாமா? அன்றியும் நான் எடுக்கவில்லை என்று நீ கூறினாய் இவ்வாறு. அதைக் கேட்ட அவர்கள் பேச்சை நிறுத்திக் கொண்டனர் என்றால், தம் ஐயப்பாட்டை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிலம்பு இருக்கு மிடத்தை உளவுகாண எண்ணித்தாமே. அவ்வாறு பேச்சை நிறுத்திக் கொண்டார்கள். காகா என்று காக்கை கத்துவதை நிறுத்தியது தனக்கு இரை இருக்கு மிடத்தைத் துப்பறிய அன்றோ என வருந்தினான் - என்பது இவ்வியல், நம்கோப்பெ ரும்பெண்டின் சிலம்பெங் கென்ன நானறியேன் நானறியேன் என்று கோயில் தங்குவார் தனித்தனியே சொல்லிப் பின்னர்த் தயங்கிநின்ற வஞ்சியினைக் கேட்ட போதில் எங்கள் மணம் முடிப்பதற்கும் காசே இல்லை என்கருங்கை மாப்பிள்ளைக்கும் வேலை இல்லை! உங்கள் சிலம் பெங்களிடம் இருந்தி ருந்தால் உடனேஎம் மணமுடியும் அன்றோ என்றாள்! 119 கோயில் - அரண்மனை அரசன் இல்லம் இது. கோவில் என்றும் வரும்; மாப்பிளை - மாப்பிள்ளை ளகரம் தொகுத்தல். கருங்கையிடம் ஓடிவந்த வஞ்சிஅத்தான் காற்சிலம்பு கேட்டார்கள்; காணேன் என்றேன்! குரங்காகி விழித்தார்கள் பின்னர் ஒன்றும் கூறவில்லைஎன்றுரைத்தாள்! கருங்கை யாளன் அரங்கிலவர் கேட்டதென்ன? சொன்னதென்ன? அப்படியே சொல்லென்றான் மணமுடிக்க அரைக்காசும் கையிலில்லை கருங்கை யார்க்கும் ஐயையோ வேலையில்லை! சிலம்பி ருந்தால் 120 ஆகாமல் இருக்குமா மணந்தான்? - என்றே அழுத்தமுறச் சொல்லிவிட்டேன் என்றாள் வஞ்சி! ஏகேடி என்பெயரை ஏன்இ ழுத்தாய்! இலைமறைக்கக் காம்பையும்நீ காட்ட லாமா? நீ கூறி னாய்நீட்டி நீட்டிக் கேட்டே நிறுத்திக்கொண் டார்அவர்தம் பேச்சை என்றாய் காகாஎன் பதைநிறுத்திக் கொண்ட காக்கை கருத்தையெல்லாம் துப்பறியச் செலுத்திற் றாகும்! 121 அரங்கில் - அரண்மனையில்; அவையில். இவ்விரண்டு பாட்டுகளிலும் முதற்பாட்டுக் குளகப் பாட்டு. சிலம் பிருந்தால் என முடியாமல் இருப்பதால். ஏகேடி - ஏகேட்டை அடைந்தவளே! கேடுகெட்டவளே! காகா என்பதை நிறுத்திக்கொண்ட காக்கை, கருத்தை யெல்லாம் துப்பறியச் செலுத்திற்று ஆகும் - காகா என்று கத்துவதைக் காக்கை நிறுத்திக்கொண்டால், அது தன் கருத்தை இரை இருப்பதைத் துப்பறியத்தானே திருப்பிய தாகப் பொருள். அது போல் அவர்கள் உன் பேச்சுக்கு ஒன்றும் சொல்லாமல் நிறுத்திக் கொண்டார்கள் என்றால் என்ன பொருள்? - உன் சொல்லால் அவர்கட்கு ஏற்பட்ட ஐயப்பாட்டின் அடிப்படையில் சிலம்பைத் தேடிப்பிடிக்க வேண்டும் என்பதை மனத்தில் வைத்துத்தானே! இயல் - 41 மற்றும் வஞ்சியை நோக்கிக் கூறுவான்: அரசினர் என்மேல் ஐயப்பாடு கொள்ள வைத்துவிட்டாய்! அரசரால் அனுப்பப்படும் உளவறிபவர்கள் உளவறிந்து கொண்டு - வையப்பா சிலம்பை என்று என்னை நோக்கிச் சொல்வார். அப்படியே நான் சிலம்பை அவர்கள் எதிரில் வைத்தால், வந்துவிடப்பா, உன்னோடு வஞ்சியையும் அழைத்துக் கொண்டு என்பார்கள். உன் உடம்பு நையும்படி அடிபடு அப்பா என்பார்கள். தலையை நறுக்கிப்போடப், படு அப்பா என்பார் என்று அஞ்சிச் சொன்னான். பின்னும் வஞ்சியை நோக்கி, மடமையால் இத்தீய செயலைச் செய்து விட்டோம்; என்பான். நாட்டு மக்கள் நம்மை மதிக்க மாட்டார்கள் என்று மனம் நைவான், உடைமையை (சிலம்பை) உடையவரிடம் கொண்டு போய்க் கொடுத்து எம்மை ஒன்றும் செய்யவேண்டாம். என்போம் என்பான். மடமடவென்று போய்ச் சிலம்பை எடுத்தான்; மீண்டும் அதை நோக்கினான். இதை மார்பில் அணைத்துக் கொண்டு என் வறுமை போக்கவந்த செல்வமே என்று கூறி மறுபடியும் அதை இருந்த இடத்தில் வைத்தான். மற்றும் தனக்குள் நினைக்கின்றான் - நமக்குத்தான் இந்தச் சிலம்பு மிகப் பெரிது. வேந்தர்க்கு இது சிறு துரும்புதானே! ஆதலால் கட்டாயம் தேவை என்று அரசர் தேடிக் கொண்டிருக்க மாட்டார் என்று நினைப்பான். அரசியாரின் திருமங்கலத்தைப் பகுத்துணராமல் கவர்ந்து போன பாவியைக் கண்டுபிடிக்க, பத்தாயிரம் பேர்களைப் போவீர்கள் என்று சினத்தால் தகத்தகவென்று ஆடுவார்; பல்லைத் தடதடவென்று கடித்துக் கொள்வார் வேந்தர் என்று நினைப்பான் - என்பன இவ் வியலிற் காண்க. ஐயப்பா டென்மீது கொள்ள வைத்தாய் அரசர்விடும் உளவறியோர் உளவ றிந்தால் வையப்பா சிலம்புதனை என்பார்; வைத்தால் வந்திடப்பா வஞ்சியையும் அழைத்துக் கொண்டு நையப்போ டப்படப்பா தலையைத் துண்டாய் நறுக்கிப்போ டப்படப்பா என்பார் என்றான் செய்யப்போய் நலமொன்றைத் தீயைப் போய்நீ திருடிவந்தாய் வஞ்சிஎன்றான் வருந்தி நின்றான். 122 நையப்போடப்படு அப்பா போடப்படு, அடிக்கப்படு. போடு அப்பா என்பது போடப்பா எனப் புணர்ந்தது. நறுக்கிப் போடப்படு அப்பா என்பதும் அப்படி. செய்யப்போய் நலமொன்றை நலம் தோன்றச் செய்யப்போய். தீயை என்றது சிலம்பை. போ ஏடி போடி மரூஉ, மடமையினால் இச்செயலைச் செய்தோம் என்றான் மக்கள்நமை மதியாரே என்று நைந்தான் உடைமையினை உடையவர்பால் சேர்த்தே எம்மை ஒன்றும் செய் யாதீர்கள் என்போம் என்றான் மடமடென வேநடந்தான்; சிலம் பெடுத்தான் மற்றுமதை நோக்கினான் மார்பில் வைத்தே மிடிபோக்கும் செல்வமே என்று கூறி மீண்டுமதை இருந்தஇடம் தன்னில் வைத்தான். 123 மடமை - அறியாமை. இச்செயல் - திருட்டுச் செய்கை. மிடி - துன்பம்; வறுமை. மிகப்பெரிது நமக்கெல்லாம் இச்சி லம்பு வேந்தர்க்குச் சிறுதுரும்பே ஆத லாலே அகத்தியமாய்த் தேடிடார் எனநி னைப்பான். அரசியார் திருவடியின் மங்க லத்தைப் பகுத்துணராப் பாவியினைத் தேடு தற்குப் பத்தாயிரம் பேரைப் போவீர் என்று தகத்தகெனக் குதித்திடுவார் வேந்தர்; பல்லைத் தடதடெனக் கடித்திடுவார் எனநி னைப்பான் 124 அகத்தியம் - இன்றிமையாதது; இதில் அகம் என்பது வேர்ச் சொல் திருவடியின் மங்கலம் - திருவடியின் நலம் செய்வதான சிலம்பு. இயல் - 42 மற்றும் கருங்கை என்பான். சிலம்புக்காக நம்வீட்டையும் வந்து ஆராயக் கூடும் என்று வேலங்காட்டில் ஒருபால் புதைத்து வைத்தான். பின்னர் அந்த வேலங்காட்டையும் ஆராயக் கூடும் என்று சிலம்பை எடுத்துச் சென்று இடுகாட்டில் ஒரு பால் புதைத்துவைத்தான். நாட்டில் உள்ள எவர்களையும் உளவு காணும் நாட்டத்துடன் இப்படி உலவுகின்றார் என்று எண்ணி நடுங்குவான். தோட்டத்து வேலியினின்று வெளியில் எட்டிப் பார்ப்பான். கடைசியாகத் தொலைவில் பார்த்துக்கொண்டே தன் வீட்டுத் தெருக் குறட்டில் நிற்கும்போது அந்தத் தெருவில் ஆயிரம் பேர்களுக்கு நடுவில் செல்லும் ஓர் ஆணழகன், ஒரு சிலம்பும் கையுமாக இந்தத் தெருவில் இருப்பவர்களே, இதை வாங்கிக் கொள்வீரோ. சிலம்போ சிலம்பு என்று கூறக் கேட்டான். நத்தை நிகர்த்த கண்களை உடையவனான அந்தக் கருங்கையன், ஐயா நம் அரசியார்க்கு இதுதான் வேண்டும் நீவிர் வைத்திருக்கும் சிலம்பை என்னிடம் கொடுப்பீர். இந்தக் கோயில் வாயிலிலே நின்றிருப்பீர் என்று சொன்னான். அதற்குக் கோவலன் யார் நீவீர் என்று கேட்க, நான் இந்த அரசவையின் பழைய பொற்கொல்லன். என்பேர் கருங்கை! இந்த நாட்டின் அரசியார் தாம், இருக்கும் சிலம்போடு இன்னும் ஒரு சிலம்பு தேவை என்று நேரில் என்னிடம் சொல்லிவைத்திருக்கிறார்கள். அதனால்தான் நீர் என்னிடம் கொடும் என்று கேட்கலானேன். ஒரு நொடிப்போதில் அவர்களிடம் காட்டிவிட்டு திரும்பிவந்துவிடுவேன். நீர் உரைத்த விலையைப் பெறுவீர் என்று கூறிச் சிலம்பைப் பெற்றுக் கொண்டுபோய்விட்டான் - என்பன இவ்வியலிற் காண்க. வீட்டையும்வந் தாராய்க் கூடும் என்றே வேலங்காட் டிற்சிலம்பைப் புதைத்து வைத்தான். காட்டையும்ஆய் வாரென்று சிலம்பைத் தோண்டிக் கடிதோடி இடுகாட்டில் புதைத்து வைத்தான். நாட்டிலுள்ள எவர்களையும் உளவு காணும் நாட்டத்தார் என்றெண்ணி நடுக்கம் கொள்வான் தோட்டத்து வேலியினிற் எட்டிப் பார்ப்பான் தொலைநோக்கித் தெருக்குறட்டில் நிற்கும் போதில் 125 தொலை - தூரம் அத்தெருவில் ஆயிரம்பேர் நடுவிற் செல்லும் ஆணழகன் ஒருசிலம்பும் கையு மாக இத்தெருவில் இதுகொள்வீர் உள்ளீர் கொல்லோ எழிற்சிலம்போ சிலம்பென்று கூறக் கேட்ட நத்தைவிழிக் கருங்கையான் ஓடிஐயா நம்அரசி யார்க்கொன்று வேண்டும்; நீவிர் வைத்திருக்கும் சிலம்பினுடன் இந்தக் கோவில் வாயிலிலே நின்றிருப்பீர் என்று சொன்னான். 126 ஆணழகன் - கோவலன். உள்ளீர் கொல்லோ - உள்ளீரோ - கொல் அசை, யார்நீவீர் எனக்கேட்ட கோவ லற்கே யான்இந்த அரசவையின் பழம்பொற் கொல்லன் பேர்கருங்கை; இந்நாட்டின் மன்னி யார்தாம் பின்னுமொரு பொற்சிலம்பு தேவை என்று நேர்என்பால் சொல்லிவைத்தார் அதனா லன்றோ நீவிர்இதை வைத்திருப்பீர் என்று சொன்னேன் ஓர்நொடியில் இதுசொல்லி மீளு கின்றேன் உரைத்தவிலை பெறுவீர் என்று விரைந்து சென்றான். 127 கோவலற்கு - கோவலனுக்கு ஒருமை. அரசவையின் உறுப்பினர் என்று - கோவலன் நினைத்துக் கொள்ளட்டும் என்று அரசவை யின் பழம் பொற் கொல்லன் என்று புளுகி வைத்தான். பொற்கொல்லன்-பொன் முதலியவற்றால் அணிகலன்கள் செய்கின்றவன். இயல் - 43 பாண்டியனிடம் தோழிவந்து சொல்லலுற்றாள். வேந்தரே! அன்னையார் வெப்பு நோய்க்கு ஆளானாரோ என்றெண்ணி அவ் வெப்பம் தீர மருந்தளித்தேன். குளிர்ச்சி காட்டுகின்ற அவள் மேலுக்கும் மாற்றளித்தேன். அப்போதும் அன்னையின் துன்பத்திற்குத் தீர்வு காணேன். அன்னையே என்ன உங்கட்கு என்று கேட்டேன் என்னை அடைந்துள்ள இந்த நோய் மனநோய் என்றன் தோழியே செப்புக் குடத்திற்கும் இளநீர்க் காய்க்கும் கொங்கை நிகர். சேலுக்கும் வேலுக்கும் கண்கள் நிகர் என்று உரைத்த என் உடையவர் எவரிடம் கண்டார்? யானிருக்கையில் அவளிடம் இவர்க்கு நாட்டம் எதற்கு? இவ்வாறு சொல்லி அன்னை அழுதாள். தேற்றினேன். தேறவே யில்லை. என்னை வெளியில் தள்ளி அறைக் கதவின் தாழிட்டாள். அன்றில் என்றால் ஓர் அன்றில் அங்கே மற்றொன்று இங்கேயா, அருமையான உயிரும் பெருமை மிக்க உடம்பும் பிரிவதுண்டா இன்றைக்குத் தான் இந்தப் புதுமையைக் காணுகின்றேன் என்று சொன்னாள். அதற்குப் பாண்டியன் பகர்ந்தான்: நான் பாட்டொன்று பாடினேன். எங்கே? என் அவையிலே என்று? இன்று அப்போது என் அண்டையில் இருந்த ஒரு பாவாணர் கேட்டு இது ஒப்பற்றது நல்லது என்று. விரைவிற் சென்று என் மனைவியிடம் சொன்னார். இதற்காக ஒரு பழியைப் போட்டு என்னைக் கொன்று விட்டாளே. புல்லை மலையாக்குவது நல்லதாமா? பால் குடிக்கும் கன்றும் தம் தாயை மறக்கும். உணர்வானது பேரின்பமாகிய அவளை மறவாது, என்று கூறினான் - என்பது இவ்வியலிற் காண்க. வெப்புக்கும் மாற்றளித்தேன்; குளிர்மை காட்டும் மேலுக்கும் மாற்றளித்தேன் வேந்தே, அன்னை எய்ப்புக்குத் தீர்வில்லை என்ன என்றேன் இப்புக்க நோய்மனநோய் என்றன் தோழி செப்புக்கும் இளநீர்க்கும் கொங்கை ஒக்கும் சேலுக்கும் வேலுக்கும் கண்கள் ஒக்கும் உப்புக்கும் துப்புக்கும் இதழ்கள் ஒக்கும் ஊற்றுக்கும் சாற்றுக்கும் சொற்கள் ஒக்கும் 128 என்றுரைத்த என்உடையார் எவள்பால் கண்டார்? யானிருக்க அவளிடத்தில் இவர்க்கேன் நாட்டம்? என்றிவ்வா றுரைத்தழுதாள் தேற்றத் தேறாள் எனைத்தள்ளி அறைக்கதவின் தாழும் இட்டாள் அன்றில்களில் ஒன்றங்கே ஒன்றிங்கேயா? ஆருயிரும் பேருடலும் பிரிவ துண்டா? இன்றுதான் காண்கின்றேன் புதுமை என்றே எழில்வேந்தர் வேந்தனிடம் தோழி சொன்னாள். 129 வெப்பு - வெப்பம்; மாற்று - மாற்றக் கூடிய மருந்து. குளிர்மை - குளிர்ந்த தன்மை. மேல் - உடலின் வெளிப்புறம். எய்ப்பு - துன்பம்; இப்புக்க நோய் - புக்க இந்நோய், புக்க - அடைந்த செப்பு - செப்புக்குடம். இளநீர் - இளநீர்க்காய். உப்பு - சோற்றுப்பு. அது இனிய பொருளில் ஒன்று துப்பு - பவழம்; ஊற்று - புதுக்கருத்து; சாறு - பழச் சாறு. என்றுரைத்த என்னுடையார் - என்று இவ்வாறெல்லாம் உரைத்த என்னுடையவராகிய தலைவர்; எவள்பால் கண்டார்? - எவளிடத்தில் அந்த உறுப்பு நலன்களை யெல்லாம் கண்டு மயங்கினார். அன்றில் - ஆணும் பெண்ணும் இணைபிரியாதிருக்கும் ஒரு பறவை இனம்.ஒன்று பிரிந்தால் மும்முறை அழைக்கும். வராவிடில் விழுந்து சாகும்; எழில் - அழகு. பாட்டொன்று பாடினேன் அவைக்கண் இன்று! பாங்கிருந்தார் தம்மிலொரு பாவா ணர்தாம் கேட்டொன்று நன்றென்று விரைவிற் சென்று கிளிஒன்று மொழியார்பால் கிளத்த லானார் போட்டொன்று கொன்றாளே என்னை மன்னி! புல்லொன்று மலையாகச் செய்கின் றாளே. ஊட்டொன்று கன்றும்தாய் தனை மறக்கும் உணர்வொன்று பேரின்பம் மறவா தென்றான் 130 பாட்டொன்று பாடினேன் அவைக்கண் இன்று என்பதை அவைக்கண் பாட்டு ஒன்று பாடினேன் என்று மொழி மாற்றி அமைத்துக் கொள்க, பாவாணர்தாம் கேட்டு ஒன்று நன்று என்று - பாவாணர் கேட்டு; இது ஒப்பற்றது; நல்ல பொருள் அமைந்தது என்று. கிளி ஒன்று என்பதில் உள்ள ஒன்று உவம உருபு. கிளி போன்ற. போட்டு ஒன்று கொன்றாளே - ஒன்று போட்டுக் கொன்றாளே. இங்குள்ள ஒன்று - பழி! பழி போட்டுக் கொன்றாளே. கொன்றாளே - கொன்றால் எப்படியோ அப்படிப்பட்ட தொல்லையைச் செய்தாளே. ஊட்டு ஒன்று - பால் ஊட்டப் பெறுதல் அமைந்த ஒன்று - வினைத் தொகை. ஒன்றுதல் - அமைதல். உணர்வு ஒன்று - உணர்வாகிய ஒன்று. உணர்வு பேரின்பத்தை மறவாது என்பதால் உணர்வே பேரின்பம் என்பது பெறப்பட்டது. இயல் - 44 இவ்வாறு பாண்டியன் நெடுஞ்செழியன் தோழியிடம் கூறித் தன் இருக்கையைவிட்டு எழுந்து மற்றொருபால் பெற்றதான பெருங் கோயிலின்கண் அன்னை மன்னி கொண்டுள்ள ஊடலைத் தவிர்க்கச் செல்லும் போதில் ஆண்டவரே தங்கள் கோயிற் சிலம்பொன்றைத் திருடியவன் அடியேனின் குடிலில் இருக்கின்றான். அக்குடிலும் தொலைவிலுள்ளதன்று; அண்மைத்தேயாகும். அந்தச் சிலம்பு அங்கே அவன்கையில் இருக்கின்றது என்று கருங்கை சொன்னான். அன்று மறைந்து இன்று வந்து சேருகின்ற காற்சிலம்பும் அரசியின் ஊடல் தீர்க்க ஏற்றதாகும் என்று போய்க்கொண்டே காவலரை நோக்கி, அந்த ஆளைக் கொன்று அந்தச் சிலம்பைக் கொண்டுவாருங்கள் என்றான் அந்தக் காவலர்கள் பின் தொடரக் கருங்கைத் தீயன் கோவலனை நோக்கி மகிழ்ச்சியோடு கைகளை வீசிக்கொண்டே நடந்து போகின்றான். அவ்வாறு போனவர்கள் கோவலனை அணுகினார்கள். அவர்களைக் கண்டு கோவலன் ஓடிவிடக்கூடும் என்று கருதிய கருங் கையன் இவர்கள் அரசன் ஆணையால் சிலம்பு பார்க்க வந்திருக் கிறார்கள் என்று கூறி நிறுத்தினான். வந்த காவலர்கள் கோவலன் முகக் குறியை நோக்கிய பின் இவன் முகத்தில் கள்ளம் காணவில்லையே என்று கருதிச் சொன்னார்கள். அங்கும் சூழ்ந்திருந்த ஊர்மக்களும் கருங்கையானின் தலைவாங்கும் ஏற்பாட்டை அறிந்து கொண்டார்கள். பாண்டியன்நெ டுஞ்செழியன் தோழியின் பால் இவ்வாறு பகர்ந்தேதன் இருக்கை நீங்கி ஆண்டியன்ற பெருங்கோயில் மன்னி கொண்ட ஊடலினை அகற்றுதற்குச் செல்லும் போதில் ஆண்டவரே நும்கோயில் ஒருசி லம்பைத் திருடியவன் அடியேனின் குடிலில் உள்ளான் ஈண்டுளதே அக்குடிலும் அச்சி லம்பும் இருக்கின்ற தென்றுரைத்தான் கருங்கைத் தீயன் 131 ஆண்டு - அங்கொருபால். இயன்ற - அமைந்த, கட்டப் பட்ட. பெருங்கோயில் - காப்பமைந்த மகளிர் இல்லம். பெருங்கோயில் மன்னி - பெருங் கோயிலிலுள்ள மன்னி. ஏழனுருபும் பயனும் உடன் தொக்க தொகை. நும்கோயில் - உங்கள் அரண்மனை. அன்றுபோய் இன்றுவரும் காற் சிலம்பும் அவள் ஊடல் நெருப்பணைக்க ஏற்ற தாகும் என்றுபோய்க் கொண்டேதன் எதிரில் வாளால் ஏவல்செயும் காவலரை நோக்கி ஆளைக் கொன்றந்தச் சிலம்புதனைக் கொணர்வீர் என்றான். கோவலனை நோக்கியந்தக் காவ லாளர் பின்தொடர முன்நடந்தான் கருங்கைத் தீயன் பெருமகிழ்ச்சி உள் ஊறக் கைகள் வீசி. 132 நான் அவள் ஊடலைத் தவிர்க்கச் சொல்லும் சொற்களே அன்றி அன்று போய் இன்று வரும் காற் சிலம்பும் அவளுடல் நெருப்பு அணைக்க ஏற்றதாகும் என்பதில் உம்மை சிறந்து நிற்றல் காண்க. உள் ஊற - உள்ளத்தில் நிறைய. தன் கொள்கையில் வெற்றி கண்டான் கைகளை வீசி நடத்தல் இயல்பு. கோவலனை அணுகினார்; கருங்கைத் தீயன் கோமானின் ஏவலால் சிலம்பு காணும் ஆவலினால் இவர்வந்தார், காட்டும்; என்றே அன்புரைபோல் வன்புரையை அமைத்துச் சொன்னான். காவலரோ கோவலனின் முகத்திற் கள்ளம் காணவில்லை யேஎன்று கருதிச் சொன்னார். தாவலுற்ற ஊராரும் கருங்கை யானின் தலைவாங்கும் ஏற்பாட்டின் நிலைய றிந்தார் 133 கருதி - ஆராய்ந்து. இயல் - 45 கோவலன் முகத்தில் நல்ல குறி தோன்றுகின்றதென்றால் அது அந்த முழுத் திருடன் தனித் திறமையைக் காட்டுவதாகும். அவன் அகத்தில் உள்ள தீய குறியை அறிய வேண்டும். அதுதான் அவன் கையிலுள்ள சிலம்பு என இவ்வாறு கருங்கை கூற இவ்வுரையைக் கேட்ட ஊரார் எவரும் மேலோர்மேல் இவ்வாறு பழி சுமத்துதல் கொள்கையோ என்றார்கள். அதே நேரத்தில் பகுத்துணர்தல் இல்லாத ஒரு கொடிய காவற்காரன் பட்டென்று கோவலனை வெட்டி வீழ்த்தி விட்டான். அதனைக் கண்ட ஊரார் நடுங்குகின்றார். மதுரையின் நலங்கள் அனைத்தும் கொலையுண்டு போயின என்று அவர்கள் நாணத்தில் ஒடுங்குகின்றார். கோவலனின் உடற் செந்நீர் ஊரில் ஆறு என ஓடுவது கண்டார். அந்தப் பாவிகளைக் கொல்லுங்கள் கருங்கையைக் கொல்லுங்கள் என்றார்கள் பலர். ஒருவன் என்னை விடுங்கள் என்று தன்னைப் பிடித்திருக்கும் ஊராரை நோக்கிச் சொன்னான். மற்றும் ஊராரிற் பலர் - வல்லவன், தான் வகுத்ததெல்லாம் வாய்க்கால் போலிருக்கிறது. அந்த வல்லான் வாய்மையினையும் கொல்லவல்லான் போலிருக்கிறது. இவ்வேந்தன் நல்லான்தான் என்று எண்ணி இருந்தோம். இவன் நடுவு நிலை கோணுதற்கு நாணாதவன், தொன்றுதொட்டு வந்த ஆளும் திறன் இழந்து விட்டான். மதுரையாகிய அன்னை இவனைச் சுமப்பாளா? பழி மூட்டையைச் சுமப்பாளா? செத்தான் கோவலன் என்பது உண்மைதான் என்றாலும் அவன், இந்த ஆட்சியைத் தொலைத்த பின்னும் இருப்பான் என்பது உண்மை - என்பன இவ்வியலிற் காண்க. முகத்திலொரு நல்லகுறி தோன்றிற் றென்றால் முழுத்திருடன் தனித்திறமை அதுதான். அன்னோன் அகத்திலொரு தீயகுறி உணர்தல் வேண்டும். அதுவன்றோ கையிலுள்ள காற்சி லம்பு! மிகுத்திவ்வா றுரைத்தஉரை கேட்டோ ரெல்லாம் மேலோர்மேற் பழிசுமத்தும் நூலோ என்றார் பகுத்துணராப் பாவி ஒரு காவ லன் தான் பட்டென்று கோவலனை வெட்டிச் சாய்த்தான். கோவலன் தனக்கே உரித்தான தனித் திறமையால் தன் முகத்தில் தோன்றவேண்டிய தீய குறியை மாற்றி நல்ல குறியை ஏற்றிக் கொண்டான் என்று குறிக்க முகத்தி லொரு... அதுதான் என்றான். நூலோ - கொள்கையோ, நூல் - கொள்கை. பகுத்துணரும் உணர்வு இல்லா... தம்மிற் பல. காவற்காரர் சொன்ன வற்றையும் எண்ணிப் பார்க்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கோவலனை வெட்டி வீழ்த்தி விட்டான் என்பது. பகுத்துணராக் காவலன் அங்கு அவற்றை உணரான். பட்டென்று கோவலனை வெட்டிச் சாய்த்தான் என்பதால் பெறப்பட்டது. நடுங்குகின்றார் கொலைகண்டு மதுரை மூதூர் நலங்களெலாம் கொலையுண்டு போன தென்றே; ஒடுங்குகின்றார் நாணத்தில் உடம்பின் செந்நீர் ஊர் ஆறாய் ஓடுவது கண்டார்; பல்லோர் அடுங்கள்அப் பாவிகளைக் கருங்கை யானை ஐயகோ என்றார்கள்! மற்றும் ஓர்ஆள் விடுங்கள்எனைப் பழிதீர்ப்பேன் என்றான் தன்னை விடாதிருந்த பல்லோரை நோக்கி ஆங்கே. நாணத்தில் ஒடுங்குதல் - நாணம் மிகுதியாதல், மதுரை மூதூர் - மதுரையாகிய பழம் பதி. செந்நீர் - குருதி, அடுங்கள் - கொல்லுங்கள், விடுங்கள் எனைப் பழி தீர்ப்பேன் என்பானை விடாமல் பற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களை நோக்கியே அவ்வாறு கூறினான். வல்லான் வகுத்ததெலாம் வாய்க்கால் போலும். வாய்மையினைக் கொன்றிடவும் வல்லான் போலும்! நல்லான் தான் என்றிருந்தோம் வேந்தன் தன்னை! நாணாதான் நடுவுநிலை கோணு தற்கே! தொல்லாண்மை இழந்தானை மதுரை அன்னை சுமப்பாளோ பழிமூட்டை சுமப்பா ளோதான்! இல்லான் தான் கோவலனே எனினும் அன்னோன் இருப்பான் தான் இவ்வாட்சி தொலைத்த பின்னும். வல்லான்தான் என்பதிலும் கோவலன்தான் என்பதிலும் உள்ள, தான் இரண்டும் அசை நிலைகள்; நீக்கிப் பொருள் கொள்க. இருப்பான்தான். நல்லான்தான், இல்லான் தான் என்ப வற்றில் தான் இரண்டும் தேற்றப் பொருள் தருவன. வல்லான் வகுத்த தெல்லாம் வாய்க்கால் போலும் - என்பதிலுள்ள போலும் என்ற சொற்போக்கால் வல்லான் வகுத்தான் என்ற காரணத்தால் அவன் வகுத்த வாய்க்கால் தகுதியுடையது ஆகிவிடாது என்பது பெறப்படும். தொல் ஆண்மை - பழய ஆளுந்தன்மை. திறமை இல்லா மற்றான் போனான் கோவலன் என்றாலும் அவன் இந்தப் பாண்டியனின் கொடுங்கோல் ஆட்சியைத் தொலைப்பான், தொலைத்த பின்னும் இருப்பான் என்பது இல்லான்தான் பின்னும் என்பதால் பெறப்படும். இவ்வாறு ஊரார் பலர் கூறினார்கள் என்க. இயல் - 46 மன்றத்தில் இருந்த தமிழ்ப் புலவர் அனைவரும் கோவலன் கொலை யுண்டு கிடப்பதை வந்து பார்த்து மனம் துடித்து மன்னவனுக்கு இருந்த சிறப்பெல்லாம் மறைந்தது என்றார். மற்றும் குறிஞ்சி, நெய்தல் முல்லை நிலத்துப் பெருமக்கள் தம் மனைவிமாரோடு ஒன்றான மனம் ஒத்து, பொன் நெடுந்தேர் போன்ற கோவலன் சாய்ந்து கிடந்த ஒரு துன்பக் காட்சியைக் கண்டு, தமிழகம் தென்றலுக்கும், செந்தமிழுக்கும் தாய் ஆகி இந்தச் சிறு செயற்கும் மடியேந்துவதுண்டோ? என்றார்கள். மற்றும் அதுகண்ட நல்லோர் அன்பு நீர்பாய்ச்சி அறத்தை வளர்த்து மக்களில் உயர்வு தாழ்வகற்றி அதனால் ஏற்படும் துன்பம் இல்லாமல் தமிழ்ச் சான்றோர் பலரைப் பெற்று இந்தப் பழமையான உலக மக்களுக் கெல்லாம் ஒழுக்க நெறிகாட்டி, தென்பு என்ற சொல்லுக்கே தென் னாட்டாரின் வீரம் என்பதையும், திறம் என்றாலே அறப்போர்த் திறமே என்பதையும் இன்பம் என்றால் மேலே சொன்ன இவைகளே என்பதையும் அருளிச் செய்த இத் தமிழ் நாட்டில் அறமே கண்டால் நாணத்தக்க படுகொலையா என்று கூறினார்கள். மற்றும் பல சான்றோர்கள் இவ்வுலகம் ஒரு மாணிக்கத்தை இழந்ததே; இந்த நாடு தான் பெற்ற புகழை இழந்துவிட்டதே, என்று மனம் பதைத்துப் பலரோடும் பல நாளும் பேசி வருந்துவார்கள். குழந்தைகளும் கோவலனின் உடல் வெட்டுண்ட கொடிய கனவே காணுவார் ஆனார் என்றால், இந்த நாட்டில் முழங்குவன வீரமுரசு. கொடை முரசு, மணமுரசு என்ற மும்முரசு, அன்றி ஆட்சி முடிக எனும் பெரு முழக்கமே என்றார்கள் - என்பன இவ்வியலிற் காண்க. மன்றத்துப் புலவரெலாம் வந்து கண்டு மனந்துடித்தார் மன்னவன்சீர் மறைந்த தென்றார்! குன்றத்து வாழ்மக்கள் நெய்தல் மக்கள் குளிர்முல்லைப் பெருமக்கள் மனைமா ரோடு ஒன்றொத்துப் பொன்நெடுந்தேர் சாய்ந் துடைந்த ஒருதுன்பக் காட்சிகண்டு தமிழ கந்தான் தென்றற்கும் செந்தமிழ்க்கும் தாயாய், இந்தச் சிறுசெயற்கும் மடியேந்தல் உண்டோ என்றார் 137 ஒன்றொத்து - ஒன்று ஒத்து ஒன்றில் ஒத்து - ஏழாவதன் தொகை நிலைத்தொடர். ஒன்றில் கொலைப்பட்ட இடத்தை கொலையுண்டானைப் பார்ப்பது என்பதான ஒன்றில், பொன் நெடுந்தேர் பொன்னால் ஆகிய பெரிய தேர் போன்றவனான கோவலன். தாய் என்பதற் கேற்ப ஆதரிப்பதை மடியேந்தல் எனப்பட்டது. அன்பென்ற நீர்பாய்ச்சி அறம்வ ளர்த்தே அவனுயர்ந்தான் இவன்தாழ்ந்தான் என்ப தான துன்பின்றித் தமிழ்ச்சான்றோர் பலரைப் பெற்றுத் தொல்லுலகுக் கொழுக்க நெறி பயிற்று வித்துத் தென்பென்றால் தென்னாட்டின் வீரம் என்றும் திறம் என்றால் அறப்போரின் திறமே என்றும் இன்பென்றால் இவைஎன்றும் அருளிச் செய்யும் எழில் நாட்டில் படுகொலையா என்றார் நல்லோர். 138 துன்பு-துன்பம் தொல்லுலகுக் கொழுக்க நெறி என்பதைத் தொல்லுலகுக்கு ஒழுக்க நெறி என்று பிரிக்க. தென்பு - தென் நாட்டாரின் வீரத் தனத்துக்கே சிறப்பாக வழங்கும் ஒரு காரணப் பெயர் என்பதை இங்குக் காண்க. இன்பு - இன்பம். இன்பென்றால் இவை என்றும் - இன்பத்துக்குக் காரணம் எது என்றால் மேற்சொன்ன இவைகளே என்றும். இழந்ததுவே இவ்வுலகோர் மாணிக் கத்தை! இழந்ததுவே இந்நாடு பெற்ற சீர்த்தி; பழந்தமிழர் இவ்வாறு பதைத்தா ராகிப் பல்காலும் பலரோடும் பேசி நைவார் குழந்தைகளும் கோவலனின் உடல் வெட்டுண்ட கொடுங்கனவே காணுவார் ஆனார் என்றால் முழங்குவன மும்முரசா அன்றி ஆட்சி முடிக எனும் பெருமுழக்கா என்றார் சான்றோர். 139 இவ்வுலகு ஓர் எனப் பிரிக்க, சீர்த்தி - புகழ். பழந் தமிழர் என்பதில் பழமை இயற்கை அடை. இனம் விலக்க வந்த தன்று. மும்முரசு - வீரமுரசு, கொடை முரசு, மணமுரசு. இயல் - 47 மாதரி வையையிலே நீராடச் சென்றாள்: மதுரையினின்று அங்கு வந்த மாது ஒருத்தி தீதறியான் கோவலனும் அவன் நாட்டரசி யின் சிலம்பைத் திருடியதாகத் தீயர் ஏதோ சொன்னார் என்று அரசன் கொலை புரியச் சொல்லி விட்டானாம். ஊரெல்லாம் இதைப்பற்றிய இரக்கப் பேச்சுக்களைக் கேட்ட என் காதெல்லாம் இரங்குவன ஆயின என்றால் என் நெஞ்சம் கலங்குவதில் என்ன வியப்பிருக்க முடியும்? வெட்டுண்டு கிடக்கும் அந்தக் கோவலனைக் காணுதற்கும், அதற்குக் காரணமாக என்ன நடந்தது என்றறிவதற்கும் எட்டுத் திசைகளிலும் அங்கங்கு உள்ளவர்கள் எல்லாரும் வந்துவிட்டார்கள். அவர்கள் கடல் போலத் தோற்றமளித்தார்கள். அவர்களால் திட்டுப் பெற்றான் மன்னவன். அவ்வாறு திட்டியதன் இரைச்சலோ அந்தக் கடலின் இரைச்சலாயிற்று. நான் அங்குப் போய் முட்டுப்பட்டேன். பெருமக்கள் நெருக்கம் அப்படி. மனம் முறிந்துவிட்டது. நான்கேட்ட சேதி அப்படி. இதுகேட்ட மாதரி தண்ணீரில் மூழ்கவில்லை. அவளின் அழுகையால் ஏற்பட்ட கண்ணீரில் தான் மூழ்கினாள். விரைவாக இல்லம் சேர்ந்தாள். கண்ணகி அவளைப் பார்த்தாள். நீவிர் நீராடற்கும் எண்ணவில்லையா? என்ன நேர்ந்தது? என்ன கேள்விப் பட்டீர்கள்! என்னை உடையவர்க்கு என்ன? அம்மா என் மனநிலை நலமிழந்துள்ளது. வருந்திக் கொண்டிருக்கின்றேன். சொல்லுங்கள் என்றாள் அவள். அதற்கு மேலும் பேசும் ஆற்றலும் இல்லாதவள் - என்பன இவ்வியலிற் காண்க. மாதரிதான் வையைநீர் ஆடச்சென்றாள் மதுரையினின் றங்குவந்த மாதொ ருத்தி தீ தறியான் கோவலனாம், நாட்டு மன்னி சிலம்புதனைத் திருடியதாய்த் தீயோர் ஏதோ ஓதியது கேட்டரசன் கொல்வித் தானாம் ஊரெல்லாம் இதுகுறித்த இரக்கம் கேட்கும் கா தெல்லாம் இரங்குவன என்றால் நான்உள் கலங்குவதில் வியப்புண்டோ என்று சொன்னாள் 140 வையை - வையை ஆறு. ஓதியது - சொன்னதை. கொல்வித் தானாம் - கொன்றானாம் என்பதன் பிறவினை. ஆளைவிட்டுக் கொல்லும்படி செய்தானாம் என்க. நான் உள்கலங்குவது - நான்உள்ளத்தில் கலக்க மடைவது. வெட்டுண்ட கோவலனை காணு தற்கும் விளைவென்ன என்பதனை அறிவ தற்கும் எட்டுண்டு திசையென்றால் அங்கங் குள்ளார் எல்லாரும் வந்துற்றார் கடலைப் போல்வார் திட்டுண்டான் மன்னவனே கூட்ட மக்கள் செப்பியவை அக்கடலின் இரைச்சல் போலும் முட்டுண்டேன் நான் மக்கள் நெருக்கத் தாலே! முறிவுண்டேன் உளம், சேதி கேட்டே என்றாள் 141 விளைவென்ன - விளைவு என்ன; கொலைக்குக் காரணமாக நடந்தவை என்ன; என்ன - எப்படிப்பட்டவை; எல்லாரும் வந்துற்றார் கடலைப் போல்வார் - எல்லாரும் ஒருங்கு வந்து சேர்ந்ததால் அக் கூட்ட மக்கள் கடலைப் போன்று இருந்தார்கள். திட்டு உண்டான் - வசை யடைந்தான்; உளம் முறிவுற்றல் - உளம் மிக வருந்துதல். தண்ணீரில் மூழ்குமுனம் இதனைக் கேட்ட தையலாள் மாதரிதான் அழுகை செய்த கண்ணீரில் மூழ்கினாள்; விரைந்தாள் இல்லம்! கண்ணகிகண் டாள் அவளை நீரா டற்கும் எண்ணீரோ? என்உற்றீர்? யாது கேட்டீர்? என்னுடையார் ஏதுற்றார்? அம்மா என்றன் உண்ணீர்மை நலமில்லை உழலு கின்றேன். உரைப்பீர் என்றாள் மேற்பேசும் ஆற்றல் அற்றாள். 142 என் உற்றீர் - என்ன தீங்கு அடைந்தீர்கள் யாது கேட்பீர் - என்ன கேள்விப்பட்டீர்கள். உள்நீர்மை நலமில்லை - மன நிலைமை நன்றாயில்லை. உழலுகின்றேன் - துன்புறுகின்றேன். உரைப்பீர் என்றாள் மேற் பேசும் ஆற்றல் அற்றாள் - மேலும் பேசும் ஆற்றலை இழந்தவளாகிய கண்ணகி உரைப்பீர் என்றவரைக்கும் சொல்லினாள். இயல் - 48 என்ன கேள்விப்பட்டீர் அம்மா என்று கேட்ட கண்ணகிக்கு மாதரி, கோவலனின் கையில் வைத்திருந்த சிலம்பு பாண்டியனின் மனைவி யின் சிலம்புதான் என்றும், அவன் அதைத் திருடினான் என்றும் சொன்ன பொய்ச் சொல்லை நம்பி மன்னன் கொன்று போடச் சொன்னான் கோவலனை. என்று நான் நீராடச் சென்ற பொய்கைக்கண் மதுரை வாழ்வாள் ஒருத்தி அறிவித்தாள். அதுகேட்ட நான் நீராடவில்லை, உன்னிடம் வந்தேன். இந்தச் சேதியை நான் என் வாயால் உன்னிடம் உரைக்கலாயிற்று என்று தன்னெதிரில் வீழ்ந்த கண்ணகிமேல் தானும் வீழ்ந்தழுதாள். ஆ ... ... ஐயோ என்று அரற்றி வீழ்ந்த கண்ணகி மயிலின் தோகை நிகர்த்த குழல் அவிழப் பெற்றவளாய்ச் சாவா என் அன்புக்கு? தமிழனென்று வாழ்வார் நல் வாழ்வு பெறும் பொருட்டுத் தமிழைக் காத்த பாண்டியர் வழியில் வந்தும் அறத்தைக் கொன்றான் கோவா (அரசனா) மேலும் அவன் கொடுங்கோலன். ஒருவன் கோத்து முடிந்த சொல்லைக் கொண்டு கொலை செய்யச் சொன்னானா? அதற்கு என் அன்பர் செய்த குற்றம் என்ன? ஓ, வானமே, காற்றே செங்கதிரே நீவிர் அறியாச் செய்தி ஒன்று இருக்கின்றதா சொல்லுங்கள். ஆம் ஆம் ஆம் அவன் அழிவான்! நாடும் தீயும் அறம் பிறழாத என் அன்பைக் கொன்றானின் வாழ்வு போம்! ஆம்! ஆம்; புதியதல்லாத தமிழ்ப் பழங்குடியின் தலைக்குச் சூடிய மாமணி போன்ற என்னுடை யானை, பழியாகிய மாசு துடைக்கக் கடவேன் என்று மாதரி ஐயை ஆகிய அங்கிருந்த மக்கள் ஆகியோரிடம் சொல்லிவிட்டுப் பூப்போன்ற அழகிய கையால் தன் முகத்தில் அறைந்து கண்ணகி சென்றாள் - என்பன இவ்வியலிற் காண்க. கைச்சிலம்பு மன்னியவள் சிலம்பே என்றும் கள்ளம்செய் தான் அதனை என்றும் சொன்ன பொய்ச்சொல்லை நம்பியே மன்னன் கொன்று போடச் சொன் னான் செம்மல் தன்னை என்றே அச்செழுநீர்ப் பொய்கைக்கண் மதுரை வாழ்வாள் அறிவித்தாள். நீராடேன்; உன்பால் வந்தேன்; இச்சேதி நானுரைக்க லாயிற் றென்றே எதிர்வீழ்ந்தாள் மீது, மா தரியும் வீழ்ந்தாள் 143 மன்னன் கொன்று போடச்சொன்னான் என்று மாதரி சொல்லும் போதே துயர் தாங்காமல் கண்ணகி தரையில் வீழ்ந்து விட்டாள் என்பதை எதிர் வீழ்ந்தாள் மீது மாதரியும் வீழ்ந்தாள் என்றதனால் அறிக. கைச் சிலம்பு-கோவலன் கையில் வைத்திருந்த கண்ணகி யின் சிலம்பு. கள்ளம் செய்தல் - திருடுதல். பொய்கைக் கண் - பொய்கை யிடத்தில். ஆஐயோ எனவீழ்ந்த கண்ண கிப்பேர் ஆடுமயில்; தோகைநிகர் குழல் விரிந்தே, சாவாஎன் அன்புக்கு? வாழ்வார் வாழ தமிழ்காத்தார் வழிவந்தும் அறத்தைக் கொன்றோன் கோவா? அக் கொடுங்காலன்? கோத்த சொல்லால் கொலைசெய்யச் சொன்னானே? குற்ற முண்டோ? ஓவானே! காற்றே! செங் கதிரே! சொல்வீர் ஒன்றுண்டோ நீவிர்அறி யாத செய்தி? 144 கண்ணகிப்பேர் ஆடுமயில் - கண்ணகி என்னும் பேரையு டைய ஆடுமயில். தோகை நிகர் குழல் - மயிலின் தோகையை ஒத்த தலை மயிர். அவிழ்ந்தே - அவிழப் பெற்றது. கோத்த சொல் - இட்டுக்கட்டிய பொய்ச் சொல்: ஆம்ஆம்ஆம் அவன் ஒழிவான் நாடும் தீயும்! அறம்திறம்பா என்அன்பைக் கொன்றான் வாழ்வு போம்ஆம்ஆம் பொய்ஏற்பான் ஆட்சி அற்றுப் போம்ஆம்ஆம் தமிழ்ப்பழங்கு டித்த லைக்கோர் தூமணியைப் பழிமாசு துடைப்பேன் என்று மாதரிஐ யை இருந்தார் இடம் உரைத்தே பூமணிக்கே முகத்தறைந்து மங்கை போனாள் புறத்திருந்தார் செயலற்று நின்றி ருந்தார். 145 ஓ, வானே, காற்றே செங்கதிரே சொல்வீர் என்று சொல்லிய கண்ணகி, உடனே ஆம் ஆம் ஆம் அவன் அழிவான், நாடு தீயும் என்ற குறிப்பால் அவன் நாடு தீய்ந்துபோகும் என்னும் உணர்வு பெற்றாள் என்பது பெறப்படும். ஆம் ஆம் ஆம் - மெய் மெய் மெய் அடுக்குத் தொடர். ஆகும் என்பது ஈற்றயல் அழிய ஆம் என்றாகும். பொருந்தும் என்பது பொருள். எனவே மெய் என்று ஆயிற்று. அறம் திறம்பா - அறநெறி பிசகாத. பூமணிக்கை - பூப் போன்ற அழகிய கை. புறத்திருந்தார் - புறத்து இருந்தார். மாதரி, ஐயை, மற்றுமிருந்த பொதுமக்கள். இயல் - 49 தன்சிலம்பு ஒன்றோடு இரண்டு கண்களின் (கண்ணீராகிய) கடல் ஓடி நானிலமெங்கும் நிறையக் கண்டோர் அஞ்ச வழிபார்த்து எழு வகையாய்ப் பரவியுள்ள உயிரினங்களின் தொண்டுகள் நிறைந்த பத்துத் திசைகளையும் பஞ்சாக்கும் சினமுடைய நெற்றியின் நெறிப்பில் பறக்கும் எரியோடு மதுரைத் தெருக்கள் தோறும் பாண்டியனுக்கு நஞ்சாகவும், மகளிர்க்கு அமுதாகவும் நான் கொலையுண்டவனின் மனையாள் என்றாள். மற்றும், எடுத்துவந்தது என் சிலம்பே அம்மைமாரே. எவள் சிலம்பையும் நாம் அறியோம் அம்மைமாரே. என் சிலம்பைத் தன் சிலம்பு என்று உரைக்கக் கேட்ட பாண்டியன் இரு துண்டாய் வெட்டச் செய்தான் என் துணையை. அம் மன்னனின் புன்செயலால் இந்த அமைதியான உலகம் என்பதொரு பூவிலிருந்து ஓரிதழ் போனதன்றோ. என் துணைவன் பன்னாளும் பரத்தையுடன் வாழ்ந்தவன்; அதனால் செல்வம் அனைத்தையும் பறிகொடுத்தவன்; பின் என்னை அடைந்து என் சிலம்புகளில் ஒன்றை இந்நாளில் இங்கு விற்று இங்குப் பிழைப்பு நடத்த வந்தவன், இனத்தில் உயர்ந்ததான தமிழ்ப் பழஞ்சீர்க் குடியில் பிறந்தவன். என் வாழ்வை இனிமேல் துலக்கும் பொன் விளக்கை இரு துண்டாய்க் காணுவதோர் இடமும் இன்னதென்று அறியேன் என்று கூறினாள் கண்ணகி. நாட்டினர் எல்லாரும் அவளைச் சூழ்ந்து கொண்டு நீ பட்ட துன்பம் யாம் பட்டோம் என்று கூறினார்கள் - என்பன இவ்வியலிற் காண்க. செஞ்சிலம்பே ஒன்றோடி ரண்டு கண்ணின் முந்நீர்போய் நானிலமே செறியக், கண்டோர் அஞ்சுவான் ஆறுபார்த் தெழுவ கைத்தாய் எட்டீகைத் தொண்டுவளர் திசைகள் பத்தும் பஞ்சாக்கும் வெஞ்சினத்து நுதல்நெ றிப்பின் பறக்கும்எரி யொடுமதுரைத் தெருக்கள் தோறும் நஞ்சுபாண் டியற்கமுது மகளிர்க் காக நான்காணீர் கொலையுண்டோன் மனையாள் என்றாள் 146 ஒன்றோடிரண்டு - ஒன்றோடு இரண்டு எனப் பிரிக்க. இரண்டு என்பதைக் கண்ணோடு சேர்க்க, முந்நீர் - கடல். நானிலம் - உலகு; செறிதல் - நிறைதல். அஞ்சுவான் - அஞ்ச. ஆறு பார்த்து - வழி பார்த்து. எட்டு ஈகை - (1) வழக்கத்தால் ஈதல் (2)உரிமையால் ஈதல் (3) அச்சத்தால் ஈதல் (4) ஏமாற்றத்தால் ஈதல் (5)உவகையால் ஈதல் (6) வெகுளியால் ஈதல் (7) அவலத்தால் ஈதல். இவற்றில் ஏமாற்றத்தால் ஈதல் என்பது உன் தந்தை இறந்து நுண்ணுடம் போடு மற்றோருலகில் இருக்கின்றான். அவனுக்கு மன நிறைவு உண்டாக எனக்குக் கொடு என்றவனுக்கு ஈதல். அவலத்தால் ஈதல் என்பது - இறந்தானின் வழியினர் இறந்தார் பொருட்டு ஏற்படும் அவலத்தால் பல்வகையாலும் ஈதல். வெஞ்சினத்து - கொடிய சினத்தையுடைய. நுதல் - நெற்றி, புருவம் நெறிப்பின் - சினத்தால் ஏற்படும் சுருக்கம். நஞ்சு பாண்டி யற்கமுது மகளிர்க் காக - நஞ்சு பாண்டியனுக்கு, அமுது மகளிர்க்கு ஆகத் தக்க அவள் சொல்லப்போகும் சொற்கள் பாண்டியனுக்கு நஞ்சாகும் நாட்டு மகளிர்க்கு அமுதாகும்; நாட்டு மகளிர் பாண்டியன் செய்த பெருங் குற்றத்துக்குத் தக்கவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆதலால் அவர்கட்கு அவன் சொன்ன சொற்கள் அமுதேயாகும். என்சிலம்பே எடுத்துவந்த தம்மை மாரே எவள்சிலம்பும் நாமறியோம் அம்மை மாரே என்சிலம்பைத் தன்சிலம்பென் றுரைக்கக் கேட்டோன் இருதுண்டாய் வெட்டுவித்தான் துணையை! மன்னன் புன்செயலால் இவ்அமைதி யுலகம் என்ற பூஒன்றில் இதழ்ஒன்று போயிற் றன்றோ! தென்னாட்டு வாழ்வரசி எதிர்பார்க் கின்ற திருவெல்லாம் வேரோடு சாய்ந்த தன்றோ 147 என் சிலம்பே எடுத்து வந்தது அம்மைமாரே என்பதை எடுத்து வந்தது என் சிலம்பே அம்மைமாரே என மொழி மாற்றுக. நாம் அறியோம் - என்று உளப்பாட்டுத் தன்மைப் பன்மை, தன் கணவனையும் உட்படுத்தி நாம் அறியோம் என்றாள். தன் சிலம்பு - என்றது பாண்டியனை. மன்னி சிலம்பு மன்னன் சிலம்பு தானே. வெட்டுவித்தான் - வெட்டும்படி செய்தான். இது வெட்டினான் என்பதன் பிறவினை. துணையை - கோவலன் வாழ்வரசி வாழ்க்கை யின் அரசி; குடும்பத்தின் அரசி; கட்டுக் கழுத்தி என்றும் சொல்வதுண்டு. வாழ்வரசி எதிர் பார்க்கின்ற திரு எல்லாம் - கணவனோடு வாழ்கின்ற ஒருத்தி எதிர் பார்க்கின்றவை உடன் உறைதல் துணையாதல், இன்பந்தருதல் மக்களைப் பெறுவித்தல் முதலியவை. பன்னாளும் பரத்தையிடம் வாழ்ந்தோன்; செல்வம் பறிகொடுத்தோன் என் அடைந்தென் சிலம்பில் ஒன்றை இந்நாளில் விற்றிங்குப் பிழைக்க வந்தோன் இனத்திலுயர் தமிழ்ப்பழங்கு டிப்பி றந்தோன்; என்வாழ்வை இனித்துலக்கும் பொன்வி ளக்கை இருதுண்டாய்க் காணுவதோர் இடமும் காணேன். என்னாமுன் கண்ணகியை எவரும் சூழ்ந்தார் - யாம்பட்டோம் நீபட்ட துன்பம் என்றார். 148 இனத்தில் - மக்கள் பிரிவில். உயர் தமிழ் - வினைத்தொகை, உயர்ந்த தமிழ். தமிழ்ப் பழங்குடி - உலகில் முதலில் தோன்றிய குடி. உலக மக்களின் முதலில் நாகரிகம் பெற்றகுடி என்க. அவன் இறந்து கிடக்கும் இடத்தை அறியாதிருக்கின்றேன் என்று குறிப்பிட்டாள் இரு துண்டாய் காணுவதோர் இடமும் காணேன் என்பதால். எவரும் சூழ்ந்தார் - கோவலன் கொலை யுற்றது முதல் நாட்டு மக்கள் அதே கவலையாய்த் தெருக்களிற் கூடி யிருந்தனர். ஆதலால் உடனே எவரும் சூழ்ந்தார் எனப் பட்டது. யாம் பட்டோம் நீ பட்ட துன்பம் என்றார் - என்பதை நீ பட்ட துன்பம் யாங்கள் பட்டோம் என மொழி மாற்றுக. இயல் - 50 கண்ணகியை மக்கள், கோவலன் உடல்கிடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று - இடத்தை - நெருங்கும்போது புண் விளங்கும் அவ்வழகிய உடம்பைச் சூழ்ந்திருந்த கடல்போன்ற பெருமக்களில் ஒரு புலவன் அவ் வுடலின் அருகில் நின்றபடி - பாண்டியன் நெடுஞ் செழியன் மதி கேடன். கொடுங்கோலன் என்பதை மக்களுக்குக் காட்டு மொரு திண்ணிய நெஞ்சினன் இந்நாட்டில் எவனுமில்லை என்று எண்ணிச் செத்தாய் என்றான். மற்றொருவன் சொல்லுவான்: பாதியுடல் கண்ணகிக்கும், உன்னுடைய மற்றொரு பாதியுடல் மாதவிக்கும் ஆக்கினாய் என்றால் இந்நாட்டில் புகுந்த சாதியை ஒழிப்பவன் வேண்டுமென்று அதற்காகத் தவங்கிடக்கும் தமிழகத்தின் குறை நீக்கச் செத்தாய் நீ. இனிதான தமிழ்ப் பண்பாடு உயிர் என்கின்றவனே! தீது அறியாதவனே! பாண்டியன் உன்னைக் கொன்றான். ஆயினும் உன்றன் சாகாத புகழுடம்பால் அவன் சீரழிந்தான். இவ்வாறு அங்குச் சூழ்ந்திருந்த பெருமக்கள் பலவாறாக இறந்தவனுக்கு இரக்கம் காட்டினார்கள்; அறநெறிக்கே ஒவ்வாத பாண்டியனைப் பழித்தார்கள். அதே நேரத்தில், ஒதுங்கிடுக! வழிவிடுக! என்பதான ஓர் செம்மையான ஒலியின் நடுவிலிருந்து திருந்திய கற்புடையவள். சேல் விழிதான் கரிய முகில் குழல்தான் என்று காட்டும் அந்த இளைய கண்ணகி; கோவலனின் அழகிய உடலின் மீது வீழ்ந்து புரளலானாள் - என்பன இவ்வியலிற் காண்க. கண்ணகியை அழைத்தேகி உடல்கி டந்த காட்சியினைக் காட்டுதற்கு நெருங்கும் போதில் புண்நகும்அப் பொன்னுடலைச் சூழ்ந்தி ருந்த பொங்குகடல் மக்களிலோர் புலவன் நின்று மண்ணகத்தின் தமிழரசன் பாண்டி யன்தான் மதிகேடன்; கொடுங்கோலன்; என்று காட்டும் திண்ணகத்தான் எவனுள்ளான் என்ப தெண்ணிச் செத்தாய்நீ என்றான்மற் றொருவன் சொல்வான் 149 நெருங்கும் போதில் - உடலிருக்கும் இடத்தை நெருங் கையில். நகும் - விளங்குகின்ற. பொன்னுடல் - அழகிய உடல். பொங்கு கடல் மக்கள் - பொங்குகின்ற கடல் போன்ற மக்கள். பொங்குதல் - கடல் முழக்கம்; மக்களிடம் அழுமொலிபோல; திண்ணகத்தான் - ஒருவருமில்லை என்று எண்ணிச் செத்தாய் நீ என்றது. நான் உயிர் இழப்பதன் மூலமாகவாவது பாண்டியனின் தகுதி யின்மையை மக்களுக்கு விளக்குகின்றேன் என்று செத்தான் என்பதை விளக்க. பாதியுடல் கண்ணகிக்கும் மற்றும் உன்றன் பாதியுடல் மாதவிக்கும் ஆனாய் என்றால் சாதிஒழிப் பான் ஒருவன் வேண்டு மென்று தவங்கிடக்கும் தமிழகத்தின் குறைத விர்க்க ஏதுடலம் எதுதொண்டு எவ்வா றுய்தல்? இனிதான தமிழ்ப்பண்பா டுயிரே என்போய் தீதறியாய்! மன்னனுனைக் கொன்றான்! உன்றன் சாகாத புகழுடம்பாற் சீர ழிந்தான். 150 பண்பாடுயிர் - பண்பாடு உயிர். தவங்கிடத்தல் - ஒழுக்க நெறி நின்று முயலல். இவ்வாறு பெருமக்கள் பலவா றாக இறந்தவனுக் கிரங்கலுற்றார் அறநெ றிக்கே ஒவ்வாத மன்னவனைப் பழித்தல் செய்தார் ஒதுங்கிடுக! வழிவிடுக என்ப தாம்ஓர் செவ்வொலியின் நடுவினின்று திருந்து கற்புச் சேல்விழிதான் கார்குழல்தான் என்று காட்டும் அவ்விளைய கண்ணகிதான் கோவ லன்தன் அழகுடலின் மேல்விழுந்து புரள லுற்றாள். 151 செவ்வொலி - செவ்வையான ஒலி - பொருளுள்ள ஓசை. புரிகின்ற பொருளுள்ள ஓசை. அழகுடல் - பிணத்தை; பிணத்தில் அழகிருக்குமா எனில் இருக்கும். இருந்தானின் அழகை இருக்கையில் உற்று நோக்கி மகிழ்வதில்லை மனை மக்கள், பிறர் எவரும். ஆனால் இறந்தபின்? இயல் - 51 கோவலன் உடல்மேல் விழுந்தழுது கண்ணகி நான் என் செய்வேன் என் துணையே. வாழ்க்கை இன்பம் எனக்கு ஏது உண்டு. பொன்னைச் செய்யலாம், பொருளைச் செய்யலாம், சாதல் அடைந்து போய்விட்ட உன்னை நான் இனியும் உண்டாக்கல் உண்டோ? அரசன் செய்த இக் கொலைத் தீர்ப்புக்கு முன்னமேயே மாண்ட ஒரு மாசில்லாதவனை மீண்டும் உயிர் பெறச் செய்தல் ஒன்று மட்டும் முடியாது என்று எண்ணியிருந்தால் இப்போது ஓவியம் போன்ற உன்னை இழப்பேனா என்றாள். கோவலன் இருக்கும் காலத்தில் அவன் முகத்தைக் காண்பாள். அப்போது அதை அவன் காண்பான் ஆதலால் நாணி அவள் பார்க்காமல் இருந்து விடுவாள். இப்போது இறந்து கிடக்கும் நிலையில் அவன் முகத்தைக் கண்டு கண்டு அம் முகத்தோடு தன் முகத்தை ஒற்றி அகத்திலுள்ள துன்பப் பெருக்கமே கண்ணீராகிப் பெருக்கெடுக்க அக் கண்ணீரால் அவன் முகம், கழுத்து,தோள்கள் முதலிய எல்லா உறுப்புக் களையும் தழுவி, அவன் காலின் நகம் கண்டு, கால் கண்டு, கைகள் கண்டு நடுக்கமுற்று அவன் விரலில் கண்ட கணையாழியில் சாய்ந்து விட்டாள். அவனுடைய நகம் சொன்ன கதை ஆழி சொன்ன கதை, பிற தோள் முதலியவை சொன்ன கதை அனைத்தையும் எண்ணி எண்ணி அரற்றலானாள் ... ... ... இன்னவைகள்தாம் நடந்தவைகள் என்று என்னிடம் சொல்லமாட்டீரா? ஏன் கொன்றான் என்பதையும் விளக்கமாட்டீரா? கன்ன மிட்டவன் கொள்ளத் தக்க தீர்ப்புக்குக் காரணத்தை நானறிய உரைக்க மாட்டீரா? அந்த மன்னவனை நான் கண்டு நம் குடிக்கு வாய்ந்த பழியைத் தீர்ப்பேன் என்று எண்ண வில்லையா? என்று இவ்வாறெல்லாம் சொல்லிக் கொண்ட கண்ணகியை நோக்கி இருந்த பெருமக்கள் நடந்தவைகளைச் சொல்லத் தொடங்கி னார்கள் - என்பவை இவ்வியலிற் காண்க. என்செய்வேன் என்துணையே? வாழ்க்கை தன்னில் ஏதுண்டாம் எனக்கினிமேல்? இந்நி லத்தில் பொன்செயலாம் பொருள்செயலாம் சாத லுற்றுப் போனஉனை நான்இனியும் படைத்தல் உண்டோ! மன்செய்த இக்கொலைத்தீர்ப் புக்கு முன்னே மாண்டஒரு மாசிலனை மீண்டும் ஆக்கல் ஒன்றுமட்டும் முடியாதே என்ப தெண்ணி இருப்பானேல் ஓவியத்தை இழவேன் என்றாள். 152 ஓவியத்தை - ஓவியம் போன்ற உன்னை, படர்க்கை, முன்னிலையில் வந்தது. இழவேன் - இழக்கமாட்டேன். மாசிலன் - மாசு இலன், குற்றம் செய்யாதவன். முகம்காண்பாள் அவன்காண முகங்கா ணாதாள் முகம்கண்டு முகங்கண்டு முகத்தை ஒற்றி அகம்கண்ட துயர்ப்பெருக்கே கண்ணீ ராக அகம்,கண்டம் முகம், தோள்கள் தழுவிக் காலின் நகம்கண்டு கால்கண்டு கைகள் கண்டு நடுக்குற்று விரலாழி கண்டு வீழ்ந்தாள் நகம்கண்டு சொன்னகதை. ஆழி சொன்ன நடந்தகதை எண்ணிஎண்ணி அலற லானாள். 153 சாகாதிருந்தபோது அவன் முகத்தைப் பார்ப்பாள். அப்படிப் பார்ப்பதை அவன் பார்ப்பதால் முகத்தைப் பார்க்க மாட்டாள். அவள் இப்போது அவனுடைய முகம் கண்டு, முகம் கண்டு வருந்துகின்றாள். அகம் என்றது இங்கே மார்பை, கண்டம் என்றது கழுத்தை, மார்பு முதலியவைகளை மட்டும் சொல்லி இருந்தாலும் நெற்றி தலை உச்சி முதலிய உறுப்புகளையும் கொள்க. நகம் கண்டு சொன்ன கதை யாவது: - நான் உன் மார்பில் புதைந்து வடுச்செய்தேன். அதை நீ காணும்போதெல்லாம் அன்புறுவாய் என்பது. மற்றும் தோள்கள் முதலிய உறுப்புக்கள் சொன்ன கதைகள் தெரிந்த கதைகளே. இன்னநடந் தனவென்று சொல்லீர் போலும்! ஏன்கொன்றான் என்பதையும் விளக்கீர் போலும்! கன்னமிட்டான் கொளத்தக்க கொடிய தீர்ப்பின் காரணத்தை நானறியச் சொல்லீர் போலும்! மன்னவனைக் கண்டுநான் நம்கு டிக்கு வாய்த்தபழி தீர்ப்பேன்என் றெண்ணீர் போலும் என்றுரைத்த கண்ணகியை நோக்க ஆங்கே இருந்தவர்கள் நிகழ்ந்தவற்றை உரைக்க லானார். 154 இன்ன - பலவின்பாற் குறிப்பு வினையாலணையும் பெயர். சொல்லீர் போலும் - சொல்ல மாட்டீர் போலும் - அசை. விளக்கீர் போலும் முதலியனவும் அவ்வாறே கொள்க. கண்ணகி இவ்வாறு சொன்னதின் உட்கருத்து சொன்னால் நல்லதாயிற்றே. அவை களையும் சொல்லாமற் போனீரே என்பதாம். ஆங்கே இருந்தவர் கண்ணகியை நோக்கி நிகழ்ந்தவற்றை உரைக்கலானார் என்பது வெளிப்படை. இயல் - 52 நடந்தவற்றை மக்கள் சொல்லலுற்றது: அம்மையாரே உம் காற் சிலம்பு ஒன்றை இவர்(கோவலன்) தெருத்தோறும் விலை கூறி வருகை யில் கருங்கையன் என்பவன் இப்படி ஒரு சிலம்பு வேண்டும் தேடுக என்று அரசி தன்னிடம் சொன்னதாய்ச் சொல்லித் தன் இல்லத்தின் எதிரில் கோயில் தெரு முன்றிலில் இருப்பீர் என்று இவரை இருக்கச் செய்து ஓடி அந்த மன்னனிடம், முன்னர் திருட்டுப்போன சிலம்பும் கையுமாக இருக்கின்றான் என்று சொன்னான். அப்பாவி அதைக்கேட்டு ஆராயாமல் அவனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வருவீர் என்று கூறிவிட்டான். கருங்கை யனும், காவலாளரும் வந்தார்கள். இவன் நல்லவன் எப்படி நாம் கொல்லுவது என்று சும்மா இருந்தார்கள். அப்போது கருங்கையன் இவன் திறமை மிக்க திருடன், ஆதலால் தான் நல்லவன் போல் நடிக்கின்றான் என்றான். அங்கிருந்த நாங்கள் அவர்க்கு ஊறு இழைப்பது சரியல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கையில் காவலர்களில் ஒரு முரடன் தன் வாளால் கொன்றுவிட்டான். அந்தக் கருங்கையன் யாவன்? - எனில் மன்னியாரின் கோவிலிலே அம்மன்னியின் சிலம்பைத் திருடி வந்த வஞ்சி என்பவளால் என்னை மணந்துகொள் என்று கெஞ்சப்பட்டவன். அவள் ஆசையினால் கருங்கையன் அச்சிலம்பை மறைத்துக்கொண்டு அச்சத்தால் அச்சிலம்புதான் இச்சிலம்பு என்றான், என்றார்கள். இதைக் கேட்ட கண்ணகி இறந்தவரே எழுந்துவந்து உரைத்தது என்று எண்ணிச் சென்றாள் - என்பன இவ்வியலிற் காண்க. அம்மையீர் உம்ஒருகாற் சிலம்பை ஊரி னகத்துவிலை காணுகையில் கருங்கை என்போன் நம்அரசி இவ்வாறொன் றெனக்கு வேண்டும் நாடுகெனச் சொன்னதாய்ச் சொல்லி இந்தச் செம்மலினைத் தன்னில்லத் தெதிர்த்த கோயில் தெருப்பக்கம் இருப்பிர்எனச் சொல்லி ஓடி அம்மன்னர் இடம், திருட்டுப் போன தான அருஞ்சிலம்பும் கையும்ஆய் உளான்ஆள் என்றான். 155 ஊரினகத்து - ஊரின் அகத்து, ஊருள். நம்மரசி என்று கூறிக் கோவலனைத் தன்னோடு ஒருவன் ஆக்கிக் கொள்கிறான் கருங்கையன் என்க. நாடுகென - நாடுக என, தேடு என்று. செம்ம லினை - கோவலனை இந்த என்றது அங்குள்ள கோவலன் உடலைச் சுட்டியது.எதிர்த்த கோயில் - எதிரில் அமைந்துள்ள கோயில். உளான் ஆள் - இருக்கின்றான் அந்த ஆள். அப்பாவி அதுகேட்டே ஆரா யாமல் அவற்கொன்று சிலம்புகொண்டு வருக என்றான். இப்பால்அக் கருங்கையன் காவ லாளர் வந்தார்கள் காவலரும்,குறிநன் றானார் எப்படிநாம் கொல்லுவோம் என இருந்தார் கருங்கையான்இவன்திருடன் திறமை மிக்கான் தப்பாது கொல்க என்றான் நாங்க ளுந்தாம் சரியல்ல எனமறுத்தோம் அதேநே ரத்தில் 156 அவற்கொன்று - அவன் கொன்று என்று பிரித்துப் பொருள் கொள்க. இப்பால் - இவ்விடம். குறிநன்றானார் - முகக் குறி நன்றாக அமையப் பெற்றிருக்கின்றார். என இருந்தார் - என்று கூறி சும்மா இருந்தார்கள். பாட்டு முடியவில்லை. அடுத்த பாட்டைத் தொடர்கின்றது. காவலரில் ஒருமுரடன் வாளாற் கொன்றான் கருங்கையன் யாவன்எனில், மன்னி யாரின் கோவிலிலே அவர்சிலம்பைத் திருடி வந்த கொடுவஞ்சி மணந்துகொளக் கெஞ்சப் பட்டோன்; ஆவலினால் கருங்கையன் அதைம றைத்தான் அச்சத்தால் இச்சிலம்பை அதுதான் என்றான் யாவும்இவை எனக்கேட்டாள் இறந்த வர்தாம் எழுந்துவந்து ரைத்தவைஎன் றெண்ணிச் சென்றாள். 157 அவர் என்றது அரசியை உயர்வுபடுத்திப் பலர்பாலாற் சொன்னது. கொடுவஞ்சி - கொடுமையான வஞ்சி என்பாள். கொடுவஞ்சி மணந்துகொளக் கெஞ்சப் பட்டோன் - கொடு வஞ்சியால் மணந்து கொள் என்று கெஞ்சப் பட்டவன்; கருங்கையன். எனக் கேட்டாள் இறந்தவர்தாம் எழுந்துவந்து உரைத்தவை என்று எண்ணிச் சென்றாள் - என்று மக்கள் சொல்லக் கேட்ட கண்ணகி இறந்தவரே (கோவலனே) எழுந்து வந்து உரைத்தவைபோல நடந்தவை நடந்தவாறு தெரிந்து கொண்டேன் என்று நினைத்துப் போனாள். இயல் - 53 பாண்டியன் நெடுஞ்செழியன் மனையாளின் கோயிலிற்குப் பரிவோடு வருகை தந்தான். மன்னி அவனை நோக்கி நாட்டு மக்கள் எங்கணும் கூடி நம்மைப்பற்றி இழிவான சொற்களைச் சொன்னார்கள் என்று கேள்வியுற்றேன். அவ்விடத்தில் நாம் உரைத்ததாகச் சொல்லும் தீர்ப்பும் அறத்திற்குக் கேடாயிற்றாம். கொலையுண்டான் மாண்புடையவன், குற்றவாளி அல்லன் என்றெல்லாம் மக்கள் வருந்துகின்றார்கள் என்றும் கேள்வியுற்றேன். மனநோய் அடைந்தேன். கொலையுண்டோனின் மனைவி ஒரு கற்புமிக்கவள்: - இவ்வாறு கூறுகின்றார்கள். அந்த மங்கையின் உள்ளம் துன்பம் அடைந்தால் நம் நிலைமை என்ன ஆகும்? அறம் பிழைத்தார் யார்? என்றன் உள்ளம் நிலை கலங்கலாயிற்று. அச்சம் என்ற நெருப்பினில் நானொரு புழுவானேன். இந்த நாட்டார் என்ற புலிவாயில் நம் வாழ்வு மானானாற்போன்ற ஒரு மனத் தோற்றம் கொண்டிருக்கின்றேன். கோமகள்தான் இவ்வாறு கூறும்போது கோடி மக்கள் கூடிவர உடன் நடந்த கண்ணகி கையிற் சிலம்பு ஒன்றோடும், மடித்த இதழ், மேலேறிய புருவம் சேர்ந்த விழியினோடும், வேகின்ற மனத்தோடும் எம் குடியின் சீரை வீழ்த்தினோனும், என் துணையை வீழ்த்தினோனும், ஆகிய மன்னனின் தீமை மிகுந்த கோயில் எங்கே என்று கேட்டாள் - என்பன இவ்வியலிற் காண்க. பாண்டியனெ டுஞ்செழியன் மனைவி யின்பால் பரிவோடு வருகைதந்தான் நாட்டு மக்கள் ஈண்டினார் எங்கணுமே நம்மைப் பற்றி இழிவுரைத்தார் என்றுநான் கேள்வி யுற்றேன் ஆண்டுநாம் இட்டதென்று சொல்லும் தீர்ப்பும் அறக்கேடே ஆயிற்றாம் கொலையுண் டானோன் மாண்புடையான்; குற்றமிலான் என்றெல் லோரும் வருந்துகின்றார் என்பதையும் உணர்ந்தேன் என்றாள். 158 பாண்டியன் நெடுஞ்செழியன் வருகை தந்தான் என்பதில் பாண்டியன் நெடுஞ்செழியன் எழுவாய். வருகை தந்தான் என அனைத்துமோர் சொல்லாகக் கொண்டால் அது பயனிலை. இல்லாவிடில் வந்தான் என்பதைப் பயனிலை என்றும், வருகை செயப்படுபொருள் என்றும் கொள்க. நாட்டு மக்கள் எனத் தொடங்குவது மன்னியின் சொற்கள். என்றாள் பயனிலை, மன்னி தோன்றா எழுவாய். பரிவோடு - ஆசையோடு. ஈண்டினார் எங்கணுமே - எங்கணுமே ஈண்டினார் என மாற்றுக. ஈண்டினார் - கூடினார். இழிவு - இழிவான பேச்சு; ஆகுபெயர். ஆண்டு - அங்கு; தீர்ப்புரைத்த வழியில். நாம் - நீங்கள் என்றபடி. கொலையுண்டோன் மனைவி ஒருகற்பின் மிக்காள்! கூறுகின்றார் இவ்வாறு! மங்கை உள்ளம் அலையுண்டால் நம்நிலைமை என்ன ஆகும்? அறம்பிழைத்தார் யார்வாழ்ந்தார்? என்றன் உள்ளம் நிலைகலங்க லாயிற்றே அச்சம் என்ற நெருப்பிலொரு புழுவானேன் நாட்டார் கூட்டம் புலிவாயில் நம்வாழ்வு மானே ஆனாற் போலுமொரு மனத்தோற்றம் உடையேன் என்றாள். 159 அலையுண்டால் - துன்புற்றால். அறம் பிழைத்தார் யார் வாழ்ந்தார் - அறம் பிழைத்தவர்களில் யார் வாழ்ந்தார்? நாட்டார் கூட்டம் புலி - நாட்டார் கூட்டம் என்கின்ற புலி. மனத் தோற்றம் என்றது எண்ணத்தில் பட்டதை. கோமகள்தான் இவ்வாறு கூறும் போது கோடிமக்கள் கூடிவர உடன் நடந்த மாமயிலாள் கையிலொரு சிலம்பி னோடும் மடித்தஇதழ் எடுத்தநுதல் விழியி னோடும் வேம்மனத்தி னோடும், எம் குடியின் சீர்த்தி வீழ்த்தினோன்; என் துணையை வீழ்த்தி னோனின் தீமையுறு கோயிலெங்கே? என்று கேட்டாள் சென்றவர்கள் ஓடிவர முன்வி ரைந்தாள்! 160 கோமகள் - பாண்டியன் மனைவி. மாமயிலாள் - அழகிய மயில் போன்றவளான கண்ணகி. விழியினோடும் என்பதி லுள்ள ஓடும் என்பதை மடித்த இதழ் என்பதனோடும் ஒட்டுக. எடுத்த நுதல் - மேலேறிய புருவம் அமைந்த. வேம்மனத்தினோடும் - வேம் - வேகும். ஈற்றயல்கு. கெட்டு வந்தது. நோகும் - நோம், போகும் - போம் எனப் பிறவும் காண்க. சீர்த்தி - புகழ், கோயில் - அரச மாளிகை. கோயில் எங்கே என்று கேட்டாள். சென்றவர்கள் ஓடிவர முன் விரைந்தாள் - அரசன் கோயில் எங்கே என்று கேட்டு உடன் வந்த கோடி மக்கள் ஓடிவரும்படி அவ்வளவு விரைவாக முன் சென்றாள். இயல் - 54 அரியணைமேல் இருந்த பாண்டியன் நெடுஞ்செழியன் அரண் மனை வாயில் காப்போனைத் தன்னிடம் அழைத்துப் பெருமக்களின் கூட்டத்தோடு அவள் (கண்ணகி) வருவாள். உட்புக வேண்டும் என்று கேட்பாள். உடனே என்னிடம் வா. பொங்கிவரும் கடல் போன்ற அந்த மக்களுக்கு அஞ்சாதே! தணற் பிழம்பு போன்ற அந்தக் கண்ணகிக்கு அஞ்சாதே! தான் வந்திருப்பதை அரசனிடம் புகல் (சொல்) என்பாள். அவ்வாறு என்னிடம் நீ வந்தால் நான் இடும் ஆணையில் தவறி விடாதே. போ அங்கே என்று கூறினான். அப்படியே அப்படியே என்று வாயிலோன் போனான். பெருமக்கள் பின்னால் இருக்க முன்னே வந்து கண்ணகி பிழை செய்தான் கடை காக்கும் காவலோயே ஒரு சிலம்பும் கையுமாய் உயிர் போன்ற மணவாளரை இழந்த ஒருத்தி வந்துள்ளாள். இதை நீ போய்ச் சொல் என்று உரைக்கக் கேட்டு, அந்தக் காவற்காரன் ஓடிவந்தான். ஒருத்தி மட்டும் உள்ளே வருக. உரைபோய் நீ என்று மன்னன் உரைக்கவே ஓடிவந்தான். கண்ணகிக்கும் கூடி இருந்த பெரு மக்களுக்கும் தொழுது எழுந்து, தாயே நீவிர் ஒருவர் மட்டும் உள்வரலாம். இது மன்னர் ஆணை! எழுந்தருள்க. நாட்டவரே இது மன்னர் ஆணை. அதுவன்றி என் விருப்பம் போல் நடத்தல் நல்லதா என்றான். தொழுத காவற்காரனைக் கை யமைத்து மக்கள் தம்மை கைதொழு தனியளாகப் பழுதுடையானாகிய பாண்டியனின் அவையின் நடுவில் பழுதில்லாக் கற்புடையாளாகிய கண்ணகி சென்று நின்றாள் - என்பன இவ்வியலிற் காண்க. சிங்கம்சு மந்திருக்கும் இருக்கை யின்மேல் சேர்ந்திருக்கும் நெடுஞ்செழியன் கடைகாப் போனை அங்கழைத்துப் பெருமக்கள் கூட்டத் தோடும் அவள்வருவாள்; புகக்கேட்பாள்; என்னி டம்வா பொங்கிவரும் கடற்கஞ்சேல் தணலுக் கஞ்சேல் புகல்என்பால் இடும்ஆணை தவறி டாதே அங்கேசெல் என்றுசொன்னான் கடைகாப் பாளன் அப்படியே அப்படியே என்றான் சென்றான். 161 சிங்கம் சுமந்திருக்கும் இருக்கை - சிங்கம் சுமந்திருத்தல் போலத் தச்சுவேலை செய்யப்பெற்றதான இருக்கை. கடை காப்போன் - வாயில் காப்போன். அவள் வருவாள் - என்றது அவள் என்றால் கண்ணகி என்பதை முன்னமே அனைவரும் அறிந்திருந்தார் ஆதலால் புகக் கேட்பாள் - அரண்மனையினுள் புக உத்தரவு கேட்பாள். கடல் - மக்கள் கூட்டம். தணல் - கண்ணகி, ஆணை - கட்டளை. இவ்வாறு முன்கூட்டியே அரசன் கூறியதுகொண்டு கோடி மக்களுடன் கண்ணகி வருவதும் அவர் நோக்கமும் அரசன் தெரிந்துகொண்டிருந்தமை தெரிகின்றது. பெருமக்கள் பின்னிருக்க முன்னேவந்து பிழைசெய்தான் கடைகாக்கும் காவ லோயே ஒருசிலம்பும் கையுமாய் ஒருத்தி வந்தாள் உயிர்போன்றான் தனைஇழந்த ஒருத்தி வந்தாள் உரைபோய்நீ என்றுகண் ணகிஉ ரைக்க ஓடினான் ஒருத்திமட்டும் வருக உள்ளே உரைபோய்நீ எனமன்னன் உரைக்கக் கேட்டே ஓடிவந்தான், கண்ணகிக்கும் மக்க ளுக்கும் 162 தொழுதெழுந்து தாயேஎன் தாயே நீவிர் ஒருவர்மட்டும் உட்செல்க மன்னன் ஆணை; எழுந்தருள்க! நாட்டவரே மன்னன் ஆணை என்விருப்பம் போல்நடத்தல் நன்றோ என்றான் தொழுதானைக் கையமைத்து மக்கள் தம்மைத் தொழுதுகை கண்ணகிதான் தனிய ளாகப் பழுதுடையான் பாண்டியனின் அவையின் நாப்பண் பழுதில்லாக் கற்புடையாள் சென்று நின்றாள். 163 கண்ணகி உரைக்க (அரசனிடம்) ஓடினான் என்றது அவன் அச்சத்தை. கண்ணகிக்கும் மக்களுக்கும் தொழுதெழுந்தான் என்றதால் கடை காப்போன் தான் உயிர் தப்பியதாய் உணர்ந்தான் என்பதாயிற்று, நாப்பண் - நடுவில். இயல் - 55 அவை நடுவில் வந்து நின்ற கண்ணகியை மன்னன் நீ சொல்வது என்ன என்று கேட்க அதற்கவள் என் ஒரு சிலம்பினை விலை கூறி இங்கு வந்தானை நீவிர் கொன்றது ஏன் என்று மங்கை கேட்டாள். அதற்கு வேந்தன் இடர் செய்து திரியும் கள்வனை நான் கொல்லச் செய்தேன். மற்றபடி என் செங்கோல் செய்யத்தக்கது என்னதான் என்று மன்னவன் கேட்கக் கண்ணகி, சிலம்புபற்றி நீவிர் என்ன ஆராய்ந்தீர்? உம் செங்கோல்தான் எப்படிப்பட்டது. என்று கூறிப் பின்னும், கள்வனை நீர் கண்டீரோ? விற்க வந்தவரின் கைச் சிலம்பை ஆராய்ந்தீரோ? மாசற்ற ஒருவன் விள்வு (சொல்வது) கேட்டீரோ? தீயவன் ஒருவன் விண்டதுவும் (சொன்னதுவும்) தக்கதென நினைத் திட்டீரோ? உள்ளுக்குள் நடந்தவற்றை நீவீர் தெரிந்து கொள்ள வில்லை. வாழ்க்கை இன்பத்தைக் கொள்ளும் ஒருத்தியும் அடைய ஒட்டாமல் என்னைக் கொண்டவனைக் கொல்வதுண்டோ என்று கூறி, உம்முடைய சிலம்பைக் கொண்டுவரும்படி செய்வீர். என் சிலம்பு இதோ உள்ளது! என்று கண்ணகி கூறிய அளவில் மன்னன் தன் சிலம்பைக் கொண்டு வரச் செய்து அதை அவள் முன் வைத்தான். மாலை அணிந்தவரே! உம் சிலம்பினுள் இருக்கும் பரல்கள் என்ன? சாற்றுக என்று கண்ணகி கேட்க, எம் சிலம்பின் பரல் முத்து என்றான். என் சிலம்பில் இருக்கும் பரல் மாணிக்கம். பார்க்கப் போகின்றீர் என்றாள் - என்பன இவ்வியலிற் காண்க. என்னநீ சொல்வதென மன்னன் கேட்டான் என்சிலம்பை விலைகூறி இங்குற் றோனை என்னநீர் கொன்றதென மங்கை கேட்டாள் இடர்விளைக்கும் கள்வனைநான் கொல்வித்தேன். மற் றென்னஎன் செங்கோல்தான் செய்யத் தக்க தென்றுரைத்தான் மன்னன்தான்! மங்கை நால்லாள் என்னநீர் ஆராய்ந்தீர் சிலம்பைப் பற்றி? என்னநும் செங்கோல்தான் என்று கூறி 164 கள்வனைநீர் கண்டீரோ, விற்க வந்தோன் கைச்சிலம்பை ஆய்ந்தீரோ மாசிலா தோன் விள்வனைத்தும் கேட்டீரோ ஒருதீ யோன்தான் விண்டதனை ஆயாமல் கொல்வீர் என்று விள்வதுவும் தக்கதென எண்ணிட் டீரோ விளைவுண்மை காணீரோ வாழ்க்கை இன்பம் கொள்வாளும் கொள்ளாமல்செய்தீர் என்னைக் கொண்டானைக் கொன்றீரே என்று கூறி 165 உம்சிலம்பைக் கொணர்விப்பீர் என்சி லம்பும் உள்ளதிதோ! என்றுரைக்க மன்ன வன்தான் வெஞ்சிலம்பைக் கொணர்வித்து முன்னே வைத்தான் வேந்தரே உம்சிலம்பின் பரல்கள் என்ன அஞ்சாமல் சொல்கஎன்று மங்கை கேட்க எம்சிலம்பின் பரல்முத்தே என்றான் மன்னன் வஞ்சமிலாக் கண்ணகிதான் என்சி லம்பின் மாணிக்கம் பார்க்கப்போ கின்றீர் என்றாள், 166 என்ன நீ சொல்வது என்பதை நீ சொல்வது என்ன என மாற்றுக. இங்குற்றேன் - இங்குஉற்றேன் - இந் நாட்டில் வந்தோன்; கோவலன். என்ன நீர் கொன்றது என்பதை நீர் கொன்றது என்ன என்று மாற்றிப் பொருள் கொள்க! இரண்டாம் பாட்டில் விள்வு - சொல்லல் தொழிலாகு பெயர். விளைவுண்மை - விளைவு உண்மை; உண்மை விளைவு. உண்மையாக நடந்தது. மூன்றாம் பாட்டில் வெஞ்சிலம்பு - வேந்தனுக்குத் தீமை செய்வதால் என்க. பரல் - கலகல என்ன இன்னொலி செய்யச் சிலம்பினுள் இடப்படும் சிறு கற்கள், விதைகள். செல்வர்கள் கல்லும் விதையும் தள்ளி முத்தும், மணியும் பிறவும் இடுவார்கள். அவையும் பரல் என்றே சொல்லப்படும். பார்ப்பீர் என்றாள் - உடைக்கப் போகின்றேன். சிலம்பைப் பார்க்கப் போகின்றீர்கள் என்றாள் கண்ணகி; விளம்புவீர் - சொல்லுவீர். இயல் - 56 அவையில் கொண்டுவந்து வைக்கப்பட்ட சிலம்பை நோக்கிக் கண்ணகி, என்னைப் பிரிந்தாய். என் துணைவன் கையிற் சென்றாய். மதுரையின் தெருக்களில் உலவினாய். உனைப் பிரிந்த என் துணைவ னின் உயிரைப் போக்கும் பொருட்டு அரசன் அரண்மனையில் இருந்தாய்; என் மனப்புயலை எழுப்பினாய் மன்னன் மாட்சியில் ஒரு வடுவும் தோன்றச் செய்துவிட்டாய். இனிதான என் சிலம்பே வா! வா! என்று கூறினாள். கூறி அரசனின் முகம் நோக்கிக் கூறலானாள் உம் சிலம்புதான் என்று கூறினீர் இச்சிலம்பை. அவ்வாறன்று இது என் சிலம்பு! என்று கூறிக் கையிலெடுத்துக் கீழே போட்டு உடைத்தாள். மாணிக்கங்கள் தோற்றமளித்தன. அதன் பிறகும் நும் சிலம்பு - (அரண்மனைக்குரியது) கொண்டுவரச் செய்க என்றாள். கொண்டு வரப்பட்டது. அதையும் உடைத்தாள். முத்துக்கள் தோற்றமளித்தன. அதன் பிறகும் தனது மற்றொரு சிலம்பையும் உடைத்து மாணிக்கங்கள் காட்டினாள். அது கண்ட பாண்டியன் மனமுடைந்தான்; ஐயையோ தீயவன் சொல்லைக் கொண்டு இந்தத் தீய தீர்ப்புக் கூறிவிட்டேன். கோவலனின் உயிரைப் பிரித்தேன். நானே கள்வன். கோவலன் கள்வன் அல்லன். பழநாட்டின் மன்னர் வழிவந்தேன். நாட்டை ஆளும்முறை தவறினேன். என்றான் இறந்தான் - என்பன இவ்வியலிற் காண்க. எனைப்பிரிந்தாய் என்துணைவன் கையிற் சென்றாய் இம்மதுரைத் தெருவினிலே உலவி வந்தாய் உனைப்பிரிந்த என்துணையின் உயிரைப் போக்க ஊராள்வோன் அரண்மனையில் இருந்தாய் என்றன் மனப்புயலை எழுப்பினாய் மன்னர் மன்னன் மாட்சியிலே வடுவொன்றும் தோன்றச் செய்தாய் இனிதான என்சிலம்பே வாவா என்றாள் ஏந்தலவன் முகம்நோக்கிக் கூற லுற்றாள். 167 தன் சிலம்பைக் கண்டவுடன் அதனை வரவேற்று அரசனை நோக்கிக் கூறத் தொடங்கினாள் என்கின்றது இச்செய்யுள். ஊர் - நாட்டுப் பொது மக்கள். ஏந்தல் - அரசன். உம்சிலம்பென் றீர்இதனை என்சி லம்பே என்றுரைத்தே அதைஎடுத்தாள் உடைத்தாள் போட்டே செஞ்சிலம்பின் மாணிக்கம் சிதறி மன்னன் விழிக்கெதிரில் உருக்காட்டிச் சென்று வீழ நும்சிலம்பே கொணர்கஎனக் கொண்டு டைக்க நுறுங்காத வெண்முத்தும் சிதறப் பின்னும் கொஞ்சுகிளி கைச்சிலம்பும் போட்டு டைத்துக் குண்டுமா ணிக்கங்கள் கண்டீர் என்றாள். 168 உம் சிலம்பே என்றீர் இதனை என் சிலம்பே - என் துணைவரிடத்துப் பறித்த இச் சிலம்பை உம் சிலம்பு என்று சொன்னீர். அவ்வாறன்று இது என் சிலம்பேயாகும். உடைத்தாள் போட்டே - போட்டே உடைத்தாள். ஏ அசை. போட்டு உடைத்தாள் என்க. போட்டுடைத்தாள் - கீழே அடித்து உடைத்தாள். கல், உளி பாறை முதலியவற்றால் உடைத்தல் உண்டு அவ்வாறன்று என்று காட்டவே போட்டு எனப்பட்டது. முன்பு காணப்போகின்றீர் என்றவள் உடைத்து வெளிப்படுத்திக் கண்டீர் என்று இறந்த காலத்தாற் சொன்னாள். அங்கு அரசன் வைத்த சிலம்பை இதுவும் உம் சிலம்பல்ல என் சிலம்பே என்றாள் எவ்வாறு கண்டு பிடித்தாள்? - தன் சிலம்பு தனக்குத் தெரியாதா? முதலில் அச்சிலம்பை உடைத்தவள் பின்னும் அரண் மனையில் முன்னே இருந்த சிலம்பை ஏன் கொண்டு வரச் சொல்லி உடைத்துக் காட்டினாள்? அரண்மனைச் சிலம்பு முத்துடையதே என்பதை அவையார்க்கும் அரசனுக்கும் காட்டுவதற்காக. அவ்வாறு காட்டாவிட்டால் அரண் மனைச் சிலம்பு மாணிக்கப் பரல் உள்ளதுதான், அரசன் மறதியாகச் சொல்லிவிட்டான் முத்துச் சிலம்பென்று என்றும் பிறகு சொல்லக்கூடுமன்றோ? அன்றியும் அரண் மனைச் சிலம்பு முத்துச் சிலம்பு என்பதைக் கண்ணகியும் தெரிந்து கொள்ளவேண்டுமன்றோ? இனி, அரண் மனைச் சிலம்பையும் ஆய்ந் தாயிற்று. மற்றும் தன் கைச்சிலம்பை உடைப்பானேன். மாணிக்கச் சிலம்பு என் சிலம்பு என்றவள் தன்னுடைய தல்லாததைத்தன்னுடையதென்று சொன்னாள் என்று அவையத்தாரும் மன்னனும் நினைக்கக்கூடுமல்லவோ? அதுகண்டான் பாண்டியன்தான் மனம்பி ளந்தான் ஐயகோ ஐயகோ தீயன் சொல்லால் இதுசெய்தேன் உயிர்பறித்தேன் நானே கள்வன் யான்துணிந்த கோவலனோ கள்வன் அல்லன் முதியவெலாம் தம்மினுமோர் முதிய தென்னும் முன்னான தென்னாட்டின் வழிவந் தேமன் பதைகாக்கும் முறைபிழைத்தேன் என்றான் வீழ்ந்தான் பதைக்காமல் துடிக்காமல் இறந்து யர்ந்தான். 169 அதுகண்டான் - கோவலன் சிலம்பே நம் சிலம்பன்று என்னும் அதுகண்டான்; கண்டான் பாண்டியன்தான் - கண்டவனான பாண்டியனே, மனம் பிளந்தான் - உள்ளத்தோர் பேரதிர்ச்சி கொண்டான்; இது செய்தேன் - அண்மையில் இவ்வாறு தீர்ப்பளித்தேன், உயிர்பறித்தேன் - கோவலன் உயிரைப் பறித்தேன், யான் துணிந்த - யான் கள்வன் என்று முடிவுசெய்த, முதியஎலாம் - பாண்டிய நாடு தவிர மற்றச் சேர சோழ நாடுகளும், ஆரிய நாடும், கடலுக் கப்பால் அமைந்தவைகளும், முன்னான தென்னாடு - கலை நாகரிகம், ஒழுக்கம் முதலியவற்றில் முன்னே நிற்கும், தென்னாட்டின் வழிவந்தே - தென்னாட்டு மக்களின் வழி வழியே வந்தே மன்பதை காக்கும் முறை - மக்களைக் காக்கும் ஆட்சி முறையில், பிழைத்தேன் - தவறினேன், என்றான் வீழ்ந்தான் - என்று சொல்லிக் கொண்டே தரையில் வீழ்ந்தான். பதைக்காமல் - சாவு நேருமே என்று மனம் பதைக்காமல், துடிக்காமல் - சாக்காட்டுத் துன்பத்தால் உடம்பு துடிக்காமல், இறந்து உயர்ந்தான் - அவ்வாறு இறந்ததனால் உயர்வுபெற்றான். முறை பிழைத்தவன், உயிர் பறித்தவன் ஆகிய பாண்டியன் இறந்து உயர்வது எப்படி? அறிந்து செய்தானல்லன் தவறிச் செய்தான். அதற்கே அவன் உயிரைவிட்டான். பிழை உணர்ந்து வருந்துவதே போதும் அதன் மேலும் உயிர் விடுதல் உயர்வே யாகும். அது அவன் பெற்ற புகழேயாகும். இயல் - 57 பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்தான் என்றால், பாண்டியனின் உயிர் போன்றவளான திருவாட்டி உயிரோடு இருப்பதென்பது உண்டோ? அவையிற் கூடியிருந்தோர் அனைவரும் இரங்கும்படி இறந்து போனாள். நத்தம்போற் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது என்ற வள்ளுவர் சொல் காண்பீர் என்று அதற்கு எடுத்துக் காட்டு ஆனார்போலும். காதல் வாழ்வு என்பதற்கு இலக்கணம் காட்டிச் சென்றார் போலும். மாணிக்கப் பரல் இட்டும் பொன்னும் இன்னும் மணி யிட்டும் பணி செய்து முடித்துள்ள பாணியைக் கண்டோர் ஆணிப் பொன்னால் செய்த சிலம்போ என்று சொல்லும்படி வெண்கலத்தால் அழகுண்டாக்கச் செய்து முடித்த சிலம்பை வைத்துப் பாண்டியனின் செந்நெறியையும் அவன் மனைவி ஆகியோரின் உயிரையும் வென்று பின் மன்னனின் அவையை விட்டுப்பெருமை உடைய வாயிலுக்கு அப்புறத்தே என் என்ற பெருமக்கட் கடலை அடைந்தாள் கண்ணகி. அங்கே கண்ணகி சொன்னது: என் மணவாளன் கள்வன் அல்லன் யானே கள்வன் என்று உயிர் பிரிந்தான். மன்னியும் உயிர் துறந்தாள் என்றால் என் மணவாளன் உயிர் பெற்று வந்துவிடுவானோ? அவன் இழப்பால் இனி நீங்கள்தான் இங்கு வாழமுடியுமா? பாண்டியனெ டுஞ்செழியன் இறந்தான் என்றால் பாண்டியனின் உயிர்போன்றாள் இருப்ப துண்டோ ஈண்டினோர் இரங்கிடவே தானும் ஆங்கே இறந்திட்டாள்! நத்தம்போற் கேடும் மற்றும் ஆண்டுளதாம் சாக்காடும் வித்த கர்க்கல் லாலரிது வள்ளுவனார் அருளும் இச்சொல் காண்டிரென எடுத்துக்காட் டானார் போலும் காதல்வாழ் வியல்காட்டிச் சென்றார் போலும். 170 ஈண்டினோர் - அவையில் கூடியிருந்தவர்கள் நத்தம் போற் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கல்லால் அரிது என்றது குறட்பா, மற்றும் ஆண்டு என்பவற்றைக் கூட்டியும் ஆகும் என்பதை ஆம் எனக் குறைத்தும் இப்பாட்டில் வந்துளது அடியளவு கருதி. இக் குறட்பாவின் கருத்து: செல்வம் பெருகும் காலத்திற் போலவே மனத்துயரின்றிச் சாக்காடு அடைவதும் ஆற்றலுடையார்க் கன்றி மற்றவர்க்கு இயலாது என்பது. நந்துதல் என்பதே நந்தம் அது வலிந்து நத்தம் ஆயிற்று. பெருகுதல் என்று பொருள். வித்தகர் - ஆற்றலுடையவர், வள்ளுவனார் அருளும் இச் சொல்... இக் குறட்பா. இச் சொல் காண்டிர் - காண்பீர். என - என்று, எடுத்துக் காட்டு ஆயினார் - எடுத்துக் காட்டுவார்போல உயிர் துறந்தார், காதல் வாழ்வு இயல் - காட்டிச் சென்றார் போலும் - அன்றியும் காதல் வாழ்வினது இலக்கணத்தை உலகிற்குக் காட்டிச் சென்றார் போலும். அது துணையின்றித் தனித்து வாழ ஒப்பாமை. மாணிக்கப் பரலிட்டு பொன்னும் மற்றும் மணியிட்டுப் பணியிட்ட பாணி கண்டார் ஆணிப்பொன் னேஎன்னும் வெண்க லத்தின் அழகான சிலம்பிட்டுப் பாண்டி யன்தான் கோணிட்ட நெறிவென்றும் அன்னோன் அன்பின் கோமாட்டி உயிர்வென்றும் அவை அகன்றே ஏணிட்ட வாயிலினின் றப்பு றத்தே என்என்ற பெருமக்கட் கடல் அடைந்தாள் 171 பணி இட்ட - வேலை செய்துள்ள, பாணி - தச்சுத்திறம். கோண் இட்ட - கோணுதலான,நெறி - பாண்டியன் போக்கு. அவை அகன்று - பாண்டியனின் அவையை நீங்கி. ஏண் - பெருமை. என் என்ற பெரு மக்கட் கடல் - கண்ணகி வெளியில் வரக் கண்டவுடன். என் - என்ன நடந்தது என்று ஆவலோடு வினாவுகின்ற பெருமக்களாகிய கடல். என்நல்லான் கள்வனல்லன் யானே கள்வன் என்றுரைத்தான் உயிர்பிரிந்தான் மன்னன் அன்பு மன்னியுந்தான் உயிர்பிரிந்தாள் எனினும் என்றன் மணவாளன் உயிர்பெற்று வருதல் உண்டோ மன்னிறந்தான் ஆனாலும் அவன்வ ழக்கம் மற்றரசின் துறைதோறும் படித லாலே இன்னலினைச் செய்யாதோ அருமை மக்காள் எவ்வாறு வாழுவீர் இனிமேல் இங்கே. 172 இயல் - 58 மற்றும் கண்ணகி கூறுகின்றாள். அரசனாகிய அவன் நாட்டின் பொதுச் சொத்தை இழந்து விடவில்லை. தன் தனிச்சொத்தை இழந்தவன். அந்த நிலையில் அவன் அரசனல்லன் ஒரு வழக்காளி முறையீட்டாளன் இவ்வாறாக. ஒருதனி ஆள் தன் வழக்கைத் தானே தன்பால் சொல்லிக் கொள்வதும், தீர்ப்பையும் தானே கூறிக்கொள்வதும் முறையோ? அல்லது அரசனின் ஆட்டமெலாம் சட்டந்தானோ? அரசன் அவையத்தார் படைத் தலைவர் அரசனுக்கே ஆட்கள் என்றால் அறம் என்ன ஆகும்? அவ்வமைச்சர் முதலியவர்களை ஆதரித்து வருவது பொதுமக்களாகிய உங்கள் பணமா? அல்லது அரசனின் கைக் காசா? இந்த அமைச்சர் முதலியவர்களால் வேறொன்றும் முடியாது. அரசனின் அழிவு வேலைக்கே துணைபோக முடியும் என்றால் அமைச்சர் ஏன்? அவையினர் ஏன்? படைத்தலைவர் ஏன்? இவர்கள் நோக்கம் அரசரோடு கூடிக்கொண்டு பொறுக்கித் தின்பதா? சமையப் பற்றோ தீயதான சாதிப் பற்றோ மற்றுள்ள தம் நலம் பற்றும் பற்றோ எந்தப் பற்றும் சிறிதும் இல்லாத தமிழ்ச் சான்றோர்கள் உதவியது சட்டம். இச்சட்டத்தில் உள்ளவாறே பொருந்தும் படி ஓர் எழுத்தும் தவறாதபடி ஆட்சியை நடத்திச் செல்பவன் எவனோ அவன் அரசன். இந்த ஆள் என் அருமையான துணையைக் கொன்று போட்டான். சட்டம் எங்கே? இவன் சட்ட நெறி நின்றான் என்பது எங்கே? - என்பன இவ்வியலிற் காண்க. அரசனவன் பொதுச்சொத்தை இழக்க வில்லை அரசனவன் தம்பொருளை இழந்தி ருந்தான் அரசனவன் அந்நிலையில் அரசன் அல்லன் அரசனவன் வழக்காளி, தனியாள்! என்றால் ஒருதனியாள் தன்வழக்கைத் தானே தன்பால் உரைத்துக்கொள் வதும்தீர்ப்பும் தானே கூறி அருந்துணையைக் கொல்வதுவும் முறையோ தீய அரசன்விளை யாட்டெல்லாம் சட்டம் தானோ! 173 தன்பொருள் - காணாமற்போன தன் சிலம்பு. அரசனவன் அந் நிலையில் அரசனல்லன் - தனக்குரிய சிலம்பை இழந்திருக்கின்றோமே என்று அவன் எண்ணுவதான அந்நிலையில். தீய என்பதை விளையாட்டு என்பதோடு கூட்டுக. இப்பாட்டில் அறியத்தக்கவை. பொதுச் சொத்துக்கு அரசன் என்ற அலுவலை ஏற்றுக்கொண்டுள்ள ஒருவன் சொந்தக்காரன் ஆகமாட்டான். அரசன் என்பவன் ஒரு தனியாளும், அரசு என்ற பதவியும் உடையவன் தனிச் சொத்து என்பது இவ்விடத்தில். சிலம்பு. அதுபற்றி அவன் முயலும் முயற்சி தனிமுறையைச் சேர்ந்தது. தன் சிலம்பு பற்றிய வழக்கைத் தானே தீர்ப்பதாகப் புகுந்தது பிழை. அதற்குத் தானே தீர்ப்புக் கூறியது முறையல்ல என்பவை முதலியவைகள். அமைச்சர்கள் அவையத்தார் படைத்த லைவர் அரசனுக்கே ஆட்களென்றால் அறம்என் னாகும்? அமைச்சர்களை அவையினரை படைமே லோரை ஆதரிப்ப தும்பணமா அவன்கைக் காசா? அமைச்சர்களால் அவையினரால் படைமே லோரால் அழிவுக்கே துணைபோக முடியும் என்றால் அமைச்சர்ஏன் அவையினர்ஏன் படைமே லோர்ஏன் அரசனொடு பொறுக்கித்தின் பதுவா நோக்கம்! 174 அவையத்தார் - அரசனுக்குக் கருத்துரைப் போரின் கூட்டம்; இவர்கள் மக்கள் நலம் கருதிப் பரிந்து பேசுவோர். படைமேலோர் - படைத் தலைவர்கள். படை: தேர்ப் படை, யானைப் படை, குதிரைப் படை, காலாட்படை, என்னும் நான்கு பிரிவுடையது. சமையப்பற் றோதீய சாதிப் பற்றோ தந்நலப்பற் றோமற்றும் எந்தப் பற்றும் உமியளவும் இல்லாத தமிழ்ச்சான் றோர்கள் உதவியது சட்டம்! அதில் உள்ள வாறே அமையும்வகை ஓரெழுத்தும் தவறா வாறே ஆட்சியினை நடத்துவோன் அரசன் ஐயோ தமியேனின்அருந்துணையைக் கொன்று போட்டான் சட்டம் எங்கே சட்டநெறி நின்ற தெங்கே 175 தந்நலம் - தம் நலம், தமிழ்ச் சான்றோர் என்பதால் பன்மையாற் கூறப்பட்டது. சமையப்பற்றோ என்பதில் உள்ள ஓ எண்ணுப் பொருளது. பிறவும் அப்படி. பற்றற்ற தமிழ்ச் சான்றோர்கள் - மக்களின் பொதுநலம் கருதித் தொண்டு செய்யும் இல்லத் துறவிகள். தமிழரசர் காலத்தில் சட்டம் செய்பவர் இல்லத் துறவிகளே. இயல் - 59 மேலும் கண்ணகி பேசுகின்றாள். அதன் தொடர்ச்சி வருமாறு: அரசனது தீய செயல்களே சட்டமானால் அச்சட்டமே நாட்டில் பரவி இருக்குமானால் அவ்வரசனின் அதிகாரத் தோரணையே மற்றும் ஆளும் கூட்டத்தாரின் தோரணையானால் மதுரை வாழும் பெரு மக்களே என் துணைவர் பெற்ற தீங்கைத்தாமே நீவிரும் பெற்றாக வேண்டும். உங்கள் மனைவிமாரும் என்போலத்தானே மங்கலமிழக்க வேண்டும். காதலின்பத்தை இழக்க வேண்டும். என் நிலையை நோக்குங்கள். என் துணைவரை இழக்கப் பெற்றேன். இனி நான் பெறப் போவதென்ன? பொன்னணி சுமக்கும் கேடு ஒன்றா எனக்கு. fG¤âš mªj ókhiy xU nflh?- என்று கூறி அவைகளைக் களைந்து மின்னல் வீசியதுபோல் மேலே விட்டெறிந்தாள். இது கண்ட பெருமக்கள் ஆ ஆ இன்னும் என்ன நடக்குமோ என்று வருந்தினார். கண்ணகி என் இளமை ஏன்? என்று கூறித் தன் கூந்தலைப் புய்த்தெறிந்தாள். இதுகண்ட பெருமக்கள் அம்மா எம் அம்மா எம் அம்மா என்று வேண்டிக் கெஞ்சுகின்றதையும் சிறிதும் கண்ணகி கருதாமல், என் கண்ணாளன் தனது வலது கையால் புணர்ச்சியின் தொடக்கத்திலேயே முதலில் ஏந்தும் இடது முலை விம்மல் எதற்கு? என்று அதனைப் புய்த்து எறிந்தாள்- என்பன இவ்வியலிற் காண்க. அரசனது விளையாட்டே சட்ட மானால் அச்சட்ட மேநாட்டை ஆளு மானால் அரசனவன் அதிகாரம் பரவல் ஆனால் அந்தோஅந் தோஎன்றன் அன்புமிக்க பெருமக்காள் என்துணைவர் பட்ட திங்கே பெறவேண்டும்! அவரன்பு மனைவி மாரே! இருக்கின்றீர் என்போலும் மங்க லத்தை இழப்பீரோ காதலின்பம்! இழக்க லாமோ! 176 மங்கலம் - என் கணவர் இருக்கின்றார் என்ற ஒரு நன்னினைவு. என்போலும் மங்கலத்தை இழப்பீரோ என்றது - இழக்கக் கூடாமை குறித்தது. காதலின்பமோ இழந்தால் வாழ முடியாது என்பாள். காதலின்பம் இழக்கலாமோ என்றாள். விளையாட்டு - தீய நடத்தை. அதிகாரம் - அதிகார தோரணை. என்நிலையைப் பாருங்கள் என்து ணைதான் இழக்கப்பெற் றேன்இனிநான் பெறுவ தென்ன! பொன்னெனக்கும் ஒருகேடா கழுத்த ணிந்த பூமாலை ஒருகேடாஎனக்க ளைந்தாள். மின்னெனமேல் விட்டெறிந்தாள்! மேலும் என்ன விளைந்திடுமோ எனமக்கள் ஆஆ என்றார் என்இளமை ஏன்என்றாள் விரிந்த கூந்தல் இழுத்திழுத்துப் புய்த்துப்புய்த் தேஎ றிந்தாள். 177 பெறுவதென்ன - பெறுவது ஒன்றும் இல்லை என்றபடி, பொன் னெனக்கும் ஒரு கேடா என்றது விரற் கணை யாழியை, பூமாலை - பொன்னில் பூப்போல் இயன்ற கழுத்தணி. பொன்னெனக்கும் - உம்மை இழிவு சிறப்பு, மின் என - மின்னல் என. கண்டோர் சொல்லும்படி. மேலும் என்ன விளையுமோ என்றது தற்கொலை செய்துகொள்ளக் கூடுமோ என்று எண்ணியதை. அம்மாஎம் அம்மாஎம் அம்மா என்றே அங்கைஏந் திப்பல்லால் கெஞ்சு வாரை இம்மிஅவள் கருதவில்லை என்கண் ணாளன் வலதுகையால் முதல்ஏந்தும் இடது கொங்கை விம்மல்ஏன் எனஅதனைப் புய்த்தெ றிந்தாள் வீறுகொண்ட மக்கள்எலாம் மதுரை தான்ஏன்? வெம்மைசேர் அரண்மனைஏன் படைஏன் வீடேன் அமைச்சகத்தின் தேவைஏன் என்றெ ழுந்தார். 178 பல்லாற் கெஞ்சுதல் - பல்லைக்காட்டிக் கெஞ்சுதல் - இதைப் பல்லெல்லாம் கெஞ்சுதல் என்பார்கள். கருதவில்லை - மக்கள் கெஞ்சுவது பற்றிய அவர்கள் எண்ணத்தைக் கருத்திற் கொள்ள வில்லை. முதல் - தொடக்கத்தில். புணர்ச்சியின் தொடக்கத்தில் கொங்கை விம்மல் - புணர்ச்சிக் காலத்தில் ஏற்படும் உணர்வின் பயன், புய்த்தல் - இது பிய்த்தல் என வழங்கும் அது பிழை வழக்கு, வீறு - வேறு ஒன்று இணைகொள்ள முடியாத சினம். படை ஏன் வீடேன் - என்றதால் வீடு பாசறை என்க. என்று எழுந்தார் - என்று கூறித் தம் கருத்துப்படி வேலை தொடங்கினார். இயல் - 60 மன்னவன் கோயில் அடியற்று வீழ்ந்தது. மக்கள் இட்ட தீ அதன் அடியை எரித்ததால். நடுவிடத்தை எரித்ததால். ஊர் என்பதே இல்லை என்னும்படி தெருக்கள் அனைத்தும் எரிந்தன. மடமடவென்றும் சடசடவென்றும் இருக்கும் நிலைகெட்டு வீழ்ந்தவை அனைத்தையும் எரியானது எரித்ததால் ஆங்காங்கு இருந்தவர், இருக்கின்றவர் ஓடியவர் அனைவரும் புகைந்து எரிந்தார்கள். அவர்களில் பெரியதனக்காரர் கூடப் பொரிந்து போனார்கள். நாடு எங்கே நகர் எங்கே இவை இருந்தன எங்கே என்பதற் குரிய அடை யாளங்கள் எங்கே என்று ஆராயும் ஆராய்ச்சியாளர் இவை இருந்தன என்பது பற்றிய வரலாற்றைக் கேட்ட செவிகள்தாம் எங்கே என்னும்படி கேடு செய்யும் தணற்காடு. இவ்வாறாகக் கண்ணகி புரட்சியை முன்னின்று நடத்துகின்றவர்கள், அமைச்சர் வீடில்லை. அவரும் தீர்ந்தார். மறவரில்லை, படைவீடில்லை. உச்சிக் குடுமிக்காரர் எவரும் இல்லை. அவர்கள் பிணங்கள் உறங்குவார்போல் காட்சியளிக்கக் கூடும் என்பதன்று; ஒரு மலை போன்ற சாம்பலையே காணலானார். யானை முதலியவுமில்லை. என்று கூறிச் சென்று கொண்டிருந் தார்கள் - என்பன இவ்வியலிற் காண்க. அறம்கொன்ற பாவிக்குத் துணையி ருந்த அமைச்சனார் வீடில்லை அவரும் தீர்ந்தார் திறங்காட்டும் மறவரில்லை படைவீ டில்லை சிறிதுச்சிக் குடுமியினோர் எவரு மில்லை உறங்கினார் போலிருப்பார் என்ப தில்லை ஒருகுன்றச் சாம்பலாய்க் காணப் பட்டார் முறஞ்செவிகள் முதல்யாவும் இறக்கக் கண்டார் முன்னின்ற கண்ணகிபு ரட்சிக் காரர் 179 பாவி - மனக்கோட்டமுடையவர். பாவுதல் - மனம் பொருள் களின் மேல் பரவுதல். பெயர் இறுதி நிலை. மறவர் - போர்வீரர், சிறிது ஆகிய உச்சிக்குடுமியினோர் எனப் பட்டது, குன்றம் - மலை. முறம்செவி - யானை. புரட்சியை முன்னின்று நடத்துகின்றவர் - முன்னின்ற கண்ணகி புரட்சிக்காரர் எனப்பட்டனர். இயல் - 61 அம் மதுரையைவிட்டுச் செல்லும் கண்ணகி இவ்வாறு சொல்லிக் கொண்டே செல்லுவாள். இருவராக நானும் என் கணவரும் மதுரையிற் புகுந்தோம். இன்று தனியாக நான் மட்டும் செல்லுகின்றேன், திரிகின்றேன். வஞ்சிக்கே (சேர நாடு) செல்வேன், அன்புடையானுடைய திருப்புகழில் எனக்கும் இடம்தேடிக் கொள்வேன். இருள்கொண்ட மதுரையில் அதற்குரிய வாயில் இல்லை. என் உடையானைச் சேருதற் குரிய வழியும் இல்லை. மகிழ்ச்சி நிலவாத நாட்டில் பிறந்தாலும் இறந்தாலும் பெருமை இல்லை. பிறந்தவர்கள் இறக்கும் வரைக்கும் துன்பமேயன்றி வேறில்லை. எனினும் பண்டைக் காலத்திலிருந்து ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்று சிறந்து வாழும் தென்னாட்டுத் தமிழர்எவரும் மறந் தறியாத அறம் அன்பு வாய்மை ஆகியவற்றைக் கொண்டு, வையத்துள் வாழ்வாங்கு வாழ்வாராயின் பிறந்தவர்கள் பெறக் கூடிய துன்பங்களைப் பெறுவதில்லை. அவர்களின் பிள்ளைகளும் அவ்வாறே. உலகம் தோன்றிய காலமாகத் தமிழகத்தில் உருப்பெற்ற ஒழுகலாறுகள் நன்றாக நிலைபெற்று வருவதால் ஒழுக்கம் என்பதே இதுதான் என்று பன்னாட்டு மாந்தர் எல்லாரும் மேற்கொண்டார்கள். விளக்க முறுகின்ற அவ்வொழுக்கம்தான் உயிரினும் காக்கப் பெறுதல் வேண்டும் என்று கூறியருளினார் திருவள்ளுவர். எலியொத்தவர் எழுந்தாரேல் புலிகள் ஆவார்கள். எளியவரும் வலியவரால் இறத்தல் இல்லை - என்பன இவ்வியலிற் காண்க. இருவேமாய் இந்நகரிற் புகுந்தோம் அந்தோ ஏகலுற்றேன் இதைவிட்டுத் தனியள் ஆகத் திரிகின்றேன்; வஞ்சிக்கே செல்வேன் அன்பன் திருப்புகழில் எனக்கும்இடம் தேடிக் கொள்வேன் எரியுண்ட மதுரையிலே வாயில் இல்லை. என்னுடையான் தனைச்சேர வழியு மில்லை. பெருமகிழ்ச்சி உலவாத நாட்டில் யாரும் பிறந்தாலும் இறந்தாலும் பெருமை இல்லை 180 இருவேம் - இருவராகிய யாம். திரிகின்றேன் - இன்ன இடம் செல்வதென்னும் உறுதியில்லாமல் திரிகின்றேன். வஞ்சிக்கே செல்வேன் - வேறு வழியில்லாமல் சேர நாட்டுக்கே செல்வேன். எரியுண்ட மதுரையில் என் அன்பனை அடைதற் குரிய வாயில் இல்லை. வழியு மில்லை. நிலவுதல் - பொருத்தி மேம்படுதல். எரி யுண்டுபோன மதுரையிலிருந்து நான் என் அன்பன் அடைந்த புகழை அடையவேண்டுமானால் அப்புகழ் தொடங்கப் பெறுவதுமில்லை, தொடக்கம் அடைந்தாலும் நீடிப்பது முடியாது என்பாள். எரியுண்ட மதுரையிலே வாயிலில்லை; சேர வழியுமில்லை என்றாள். பின், பெருமகிழ்ச்சியில்லாத நாட்டில் பிறத்தலும், சாதலும் பெருமை தரா என்பதையும் நோக்குக. பிறந்தவர்கள் இறக்கும்வரை பெறுவ தெல்லாம் பெருந்துன்பம் என்றாலும் பண்டு தொட்டே சிறந்தொருவற் கொருத்திஒருத் திக்கொ ருத்தன் என வாழும் தென்னாட்டுத் தமிழர் யாரும் பிறந்தறியா அறம்அன்பு வாய்மை கொண்டு பேருலகில் வாழ்வாங்கு வாழ்வா ராயின் பிறந்தவர்கள் பெருந்துன்பம் அடையார் அன்னோர் பிள்ளைகளும் துன்பமே பெறமாட் டார்கள். 181 பண்டுதொட்டே - பண்டைக்கால முதற்கொண்டே, அன்னோர் - அவர்களின். உலகுதொடங் கியநாளாய்த் தமிழ கத்தில் உருப்பெற்ற ஒழுகலா றுகள் தாம் நன்றே நிலைபெறலால் ஒழுக்கமெனல் இதுவாம் என்றே நீணிலத்து மாந்தரெல்லாம் மேற்கொண் டார்கள் இலகுமிவ் வொழுக்கந்தான் உயிரின் மேலாய் எண்ணியே ஓம்பிடுக என்றார் தேவர்; எலியானார் ஒழுக்கத்தால் புலிகள் ஆவர் எளியாரும் வலியாரால் இறப்ப தில்லை 182 ஒழுகலாறுகள் - நடந்துகொள்ளும் முறைகள். நீணிலத்து மாந்த ரெல்லாம் - பன்னாடுகளிலுமுள்ள மக்கள் எவரும், இலகும் - விளக்கமுறுகின்ற. மேலாய் - என்பதிலுள்ள, ஆய் ஆக என்பதின் திரிபு. ஆய் - செய்தென் வாய் பாட்டு வினையெச்சம் ஆக - செயவெனெச்சம். இவ்வாறு வருவன வந்தன. எலியானார் ஒழுக்கத்தால் புலிகள் ஆவார் - எலிபோலும் ஆற்றலிலாத வரும் ஒழுக்கந் தவறார் ஆயினால் அவர்களே புலிகள் போல் ஆற்றல் மிக்கவர் ஆவார். இயல் - 62 மதுரையிலே எரிமூளும் முன்பே சிலர் தீயமன்னன் இருக்கும் இம்மதுரை ஏன் என்று சோழ நாடு சென்றார்கள். சிலர் இது நன்று என்று சேர நாடு சென்றார்கள். இது காடல்ல தீதான ஆட்சி இல்லாததால் இது நாடுதான் என்று தங்கினார்கள் சிலர். பல இடங்களும் திரிந்தவர்கள் கடைசியாகச் சிலர் மிதித்தகிளையும் பிடித்த கிளையும் அற்று வீழ்வார் போல் தீயொழுக்கத்தால் விலகிவாழும் ஆரியர் ஊரில் சேர்ந்தார்கள். குன்றின் வாழ்க்கை விரும்பியவர்கள் அங்குச் சென்று தீ யொழுக்கமே யுடைய நாகர் இவர் என்று திரும்பினார்கள். ஓட்டமுள்ள இந்த ஆறு காட்டாறு என்று கண்டும் சிலர் அங்கே குடித் தனமும் தொடங்கினார்கள். செந்தமிழராகிய நாம் காடாயினும், மேடாயினும் நலம் ஏறும் என்று கூறினார்போல அங்குத் தங்கியவர்கள் நாடோறும் செவ்வையுற உழைத்து நலமே கண்டார்கள். தாயகம் மதுரை என்று சிலர் அதைவிட்டு நீங்காதவராய்த் தணலிலேயே புகுந்திறந்தார்கள். தாயகம் என்பது மதுரை மட்டுமன்று. தென்னாடாகிய பொன்னாடு முற்றும் தாயகம் தான் என்று எண்ணியவர்கள் மதுரையிற் புகுந்த தீய்க்குத் தப்பிக்க சோணாடு முதலிய எவ்விடத்திலும் சென்று வாழலானார்கள் - என்பன இவ்வியலிற் காண்க. மதுரையிலே தீமூளும் முன்பே தீய மன்னவனின் மதுரையேன் என்ற கன்றார் இதுநன்றே என்றாராய்ச் சேர நாட்டை எய்தினார் மகளிர்சிலர் மக்கள் சில்லோர். எதுநாடு? தீதாட்சி இன்மை யாலே அதுநாடே என்றுசிலர் சேர்ந்தார்; சில்லோர் மிதித்தகிளை பிடித்தகிளை அற்றார் ஆகி வீழ்ந்தார்கள் விலகிவாழ் ஆரி யர்பால் 183 என்றகன்றார் - என்று அகன்றார். இன்மையாலே - இல்லாததால். மிதித்த கிளையும் பிடித்த கிளையும் அற்றவர்கள். வீழ்ந்து துன்புறுதல் போலத் தீயொழுக்கத் தால் விலக்க விலகி வாழும் ஆரியர் வாழும் சேரியிலே சென்று துன்புற்றார்கள் என்பதுமிதித்த ... ... ... ஆரியர் பால் என்பதன் கருத்து. குன்றேறி வாழ்ந்திடலாம் என்று சென்றோர் குறுக்கினிலே திரும்பினார் தீயொ ழுக்கம் ஒன்றேறும் நாகரிவர் என்று கண்டே! ஓட்டாறு காட்டாறே எனினும் சில்லோர் சென்றேறிக் குடித்தனமும் செய்ய லானார். செந்தமிழர் சேருமிடம் காடோ மேடோ நன்றேறும் என்றார்கள் போலும் சென்றார் நாடோறும் நன்றுழைப்பார் நன்றே காண்பார். 184 குறுக்கில் - சென்றுகொண்டிருந்ததற்கு நடுவே, ஒன்று ஏறும் - ஒன்றாகக் குடியேறப் பெற்ற, நாகர் - தென்னகத் தில் முதலிலே குடியேறிய ஆரியர்; மலை வாழ்வோர். நாகம் - மலை. ஓட்டாறு - ஓடுதலுற்ற ஆறு. நன்று ஏறும் - நலம் மிகும். என்றார்கள் போலும் - என்று எண்ணினார். நன்று உழைப்பார் - அற வழியில் உழைக்கக் கூடியவர். நன்றே காண்பார் - நலத்தையே அடையக் கூடியவர்கள். தாயகத்தை விட்டகல எண்ணார் சில்லோர் தாயகத்தில் மூள்தணலும் நன்றே என்று தீயகத்திற் புகுந்தார்கள்! தாய கந்தான் தென்னாடு பொன்னாடென் றோர்தீத் தப்பிப் போயடைந்தார் சோணாடு சேர நாடு புறம்போக்கும் மலைநாடு யாண்டும் நன்றே தூயானைத் துறந்திட்டுத் துயரில் மூழ்கித் தோகையவள் என் ஆனாள் காண்போம் இங்கே. 185 எண்ணார் சில்லோர் - எண்ணாதவராகிய சிலர். தணலில் எரிவது மதுரையாயினும் அது தாயகம் என்று அத்தணலில் சிலர் மூழ்கி இறந்தனர். மற்றும் சிலர் தாயகம் என்பது மதுரை மட்டுமன்று தென்னாடாகிய பொன்னாடு தாயகமே என்று எங்கும் சென்று குடியேறினார்கள் என்பன இப்பாட்டிற் காண்க. கண்ணகி நிலை என்ன இனிக் காண்போம் என்று முடிக்கப்பட்டது. இயல் - 63 கண்ணகி தொல்லையான வழிகளையெல்லாம் கடந்து சேர நாட்டின் நெடுவேள் குன்றத்தின் நீழலடியில் வந்துற்றாள். அங்குத் தோன்றிய குன்றவாணரிடம் தான் பெற்ற துன்ப வரலாற்றைக் கூறி உயிர்விட்டாள். இதுகண்ட குன்றவாணர் நடுங்கிப் பாண்டியன் வஞ்சத்தைத் தாம் அறிந்தவரைக்கும் அங்கு வேண்மாள் என்ற தன் மன்னியோடும், மதுரை ஆசிரியர் சாத்தனா ரோடும் வந்திருந்த சேரன் செங்குட்டுவனிடம் கூற அவர்கள் மிகவும் வருந்தினார்கள். குன்றவாணர் சொல்லியவற்றோடு மற்ற வரலாற்றையும் கூறக் கேட்டான் மன்னன். மன்னன் தன் மனைவியாகிய வேண்மாள் என்பாளை நோக்கி அன்புடையவளே இது பற்றி உன் மனத்திற் பட்டதைக் கூறு என்றான் - என்பன இவ்வியலிற் காண்க. கெண்டைவிழி ஊற்றுநீர் ஆறே ஆகக் கிளிப்பேச்சும் அழுதழுதே ஒலிஇ ழக்கத் தொண்டையினில் நீர்வற்றக் கால்க டுக்கச் சுடுவெயிலும் படுகுழியும் வெள்ள நீரும் கண்டையோ எனக்கதறிக் கதறித் தாண்டிக் களைப்போடும் இளைப்போடும் சேர நாட்டில் அண்டைநெடு வேள்குன்றின் வேங்கை நீழல் அடிநின்றாள்; குன்றத்தார் வருதல் கண்டாள். 186 கண்டையோ - கண்டு ஐயோ, தாண்டி - கடந்து, களைப்பு - மனவலி இழப்பு, இளைப்பு - உடல்வலி இழப்பு, அண்டை - அருகு, நீழல் அடி - நிழலின் கீழ். நெஞ்சத்தே வழிந்துவரும் துன்பச் செய்தி நெடிதுரைத்தாள்; நின்றிருந்தாள் வீழ்ந்தி றந்தாள் நஞ்சொத்த நடுக்கத்தை நன்னீர் ஒத்த இரக்கத்தை நண்ணினோர் ஆகித் தென்னன் வஞ்சத்தை வேண்மாளோ டிருந்த சேர மன்னவனாம் செங்குட்டு வன்பால் சொன்னார் கொஞ்சத்தை அழுதபடி கேட்ட மன்னன் கொள்ளாத ஆவலுற்றான் பிறவும் கேட்க. 187 நஞ்சொத்த நடுக்கம் - நஞ்சுண்டார்க்கு ஏற்படுவது போன்ற நடுக்கம், நெஞ்சின் இளகலுக்கு நன்னீர் உவமை. தென்னன் - பாண்டியன். bjh‹kJiu MáÇa® rh¤j dh®jh« njh‹wbyhL 剿Uªjh® m¿nth« v‹W K‹dilªj ãwbtšyh« T¿ Ëwh® KojhHh¡ F£LtD« Kojhœª jh‹!அம் மன்னியவள் வாடாத முகம்வா டுற்றாள் மனமிரங்கி னார் இருவர் கண்ணீர் விட்டார் ! அன்புடையாய் உன்மனத்திற் பட்ட தென்ன அறிவிப்பாய் எனக்கேட்டான் குட்டு வன்தான். 188 தோன்றல் - செங்குட்டுவன், முடிதாழ்தல் - துன்பக்குறி. முகம் வாடுதலும் அது, அறிவோம் - நமக்குத் தெரியும் என்றபடி - தனித்தன்மைப் பன்மை. வாடுற்றாள். வாடு உற்றாள்; வாடுதல் உற்றாள். வாடினாள் என்க. இயல் - 64 உன் மனத்திற் பட்டதைக் கூறுக என்று சேரன் செங்குட்டுவன் கேட்டானன்றோ? அதற்குச் சேரன் மனைவியாகிய வேண்மாள். கண்ணகி தனித்திருந்தாள் தலைவனாகிய கோவலனோ மாதவி வீடாகிய அயலிடத்தில் வாழ்நாளெல்லாம் கழித்தான். அந்த நிலையிலும் கண்ணகி தன்னைத்தான் காத்துக்கொண்டாள். அதன்பின் கண்ணகியுடன் இன்பமடைய வந்த கோவலன் தன் வறுமை கூறிக் கேட்டான் அழகிய சிலம்புகளையும். கேட்டபடி கண்ணகி கொடுத்து அன்பு மாறாத மனத்தோடு மதுரைக்கு அவனுடன் சென்று பாண்டியன் கோவலன்மேற் சொன்ன பெரும்பழிச் சொல்லைத் தீர்ப்பதன் மூலம் தன்னை மணந்தானைக் காத்தாள். தமிழர் குடியின் தொல் சீர்த்தியையும் காத்தாள். அதன் பொருட்டு வந்த அல்லல்கள் எண்ணி அயர்ந்துவிட வில்லை. அதன்பின் அவன் இறந்ததற்காகத் தானும் இறந்தாள். பன்னாளும் கணவனோடு கூடி அடையத்தக்க இன்ப வாழ்வை அவள் பெற்றாளில்லை. தன் மணவாளன் ஒருநாள் படுகொலைக்கு உள்ளானான். ஆக அதற்குக் கண்ணகி துன்புற்றாளேனும் கோவலன் பெற்றதான தீய பழிச்சொல் நீடிப்பதைத் தடுக்க விரைவாகச் சென்று பாண்டியனிடம் வழக்கிட்டுத் தன் சிலம்பால் அவனை வென்றாள். அவ்வாறு வென்றதாகிய அந்தத் திருநாளை வாழ்த்தாமல் தீர்ந்துவரும் நாள் சிறிது போதே ஆனாலும் அது தீய நாளேயாகும். முன்னைய நாளில் அரிய செயல் செய்த மகளிரின் உருவை அமைத்து இயற்றிய தச்சுத்திறம் பொருந்திய கல்லைக் கண்டு மகளிர் அடைந்ததே கற்பு என்று கடலில் மூழ்கியுள்ள குமரி நாடு இயம்பும் என்று பின் நாளில் நாம் அறிந்து வைத்தோம். கண்ணகியின் அரிய செய்கை, பிழை செய்யும் பிற நாட்டு மாதர்கள் கண்டு திருந்தும்படி தெற்குப் பகுதியிலுள்ள இந்த வஞ்சி நாட்டிலே வஞ்சியாகிய கண்ணகியின் திருவுருவம் அமைந்த கல் நாட்டுவது நன்றாகும் என்று கூறினாள் - என்பன இவ்வியலிற் காண்க. தனித்திருந்தான் தலைவனயல் வாழ்நா ளெல்லாம் தன்னைத்தான் காத்துக்கொண் டாள்அ தன்பின் இனிக்கவந்தே இல்லாமை சொல்லிக் கேட்டான் எழிற்சிலம்பை! அளித்தேதன் அன்பு மாறா மனத்தோடு மாமதுரை சென்றே வாய்த்த மாப்பழிச்சொல் தீர்த்துமணந் தான்சீர் காத்தாள் அனைத்துலகும் புகழ்தமிழர் குடிச்சீர் காத்தாள் அல்லலெண்ணாள்; அவனிறந்தான் எனஇ றந்தாள் 189 முதல் வரியை தலைவன் அயல் வாழ்நாள் எல்லாம் தனித் திருந்தான் என மாற்றிப் பொருள் கொள்க. அயல் - மாதவி வீட்டில்! வாழ்நாள் எல்லாம் வாழும் நாட்களில்; வாய்த்த மாப்பழி - கோவலன் சிலம்பைத் திருடினான் என்பது. மாப்பழி - பெரிய பழிச் சொல் ஆகுபெயர். தற் காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற் காத்துச் சோர்விலாள் பெண் என்ற திருக்குறளைக் கண்ணகி ஒழுக்கம் ஒத்திருத்தல் இப்பாட்டில் காணப்பட்டது. ஒருநாளும் பெறத்தக்க இன்ப வாழ்வும் பெற்றறியாப் பொற்பாவை தன்ம ணாளன் ஒருநாளில் படுகொலைக்குள் ளாகத் துன்பம் உற்றான்என் றாலும்,அவன் பெற்ற தீச்சொல் வருநாளும் நில்லாமல் விரைந்து சென்று வழக்கிட்டுப் பாண்டியனைச் சிலம்பால் வென்ற திருநாளை வாழ்த்தாமல் இருந்த நாள்தான் சிறுநாளே எனினும்அதுதீய நாளே. 190 நீண்ட காலமாகக் கணவனிடமிருந்து பெறத்தக்க இன்ப வாழ்க்கையைப் பெற்றறியாத பொற்பாவை போன்ற கண்ணகி என்பாள் பெருநாளும் பெறத்தக்க - பொற் பாவை என்றாள், வருநாள் - அண்மையான எதிர்காலம். முற்கண்ட நாளிலெல்லாம் அரிது செய்த மொய்குழலார் உருவெழுதி இயற்றும் தச்சுக் கற்கண்டு பெற்றதுவே கற்பாம் என்று கடல்கண்ட குமரிநா டியம்பும் உண்மை பிற்கண்டோம்.கண்ணகியின் அரிய செய்கை பிழைகண்ட பிறநாட்டு மகளிர் காணத் தெற்கண்டை வஞ்சியிலே வஞ்சி யாளின் திருவுருவக் கல்நாட்டல் நன்றே என்றாள். 191 முற்கண்ட நாளில் - முற்காலத்திலெல்லாம், அரிது - செயற்கரிய செயல், இயற்றும் - செய்கின்ற, தச்சுக்கல் - தச்சுத்திறம் பொருந்தி யகல், கடல்கண்ட - கடல் விழுங்கிய, குமரி நாடு இப்போது கடல் கொண்டுள்ள தென்பெரும் பரப்பு ஆன நாடு. குமரி நாடு ஏழ்தெங்கம் முதலிய நாற்பத் தொன்பது உள் நாடுகளை உடையது. தமிழ் பெற்று வளர்த்து உலகிற்கு நாகரிகம் சொன்னது. தெற்கண்டை - தெற்கு அண்டை, தெற்கில் அண்டை, ஏழனுருபின் பொருளது. வஞ்சி - சேரநாடு, வஞ்சியாள் - வஞ்சிக்கொடிபோன்ற கண்ணகி. இயல் - 65 தன் குடிமக்களின் வறுமையை இழுத்துக் கட்டிச் சாகடித்து, வில்லின் நாணை இழுத்துக் கட்டித் தன் திறத்தால் வேற்று நாட்டுக் குடியைத் தன்பால் இழுத்து அன்பினால் கட்டித் தன்னாட்சியைக் காட்டத்தக்க கொடியைக் கம்பிக் கயிற்றை இழுத்து மேலே கட்டிய பாண்டியனைச் சீறித் தன் மடியை இழுத்துக் கட்டிக்கொண்டு மார்பின் மீது கச்சை இழுத்துக் கட்டிக்கொண்டு சென்ற கண்ணகியின் சீரை வாழ்த்தும்படி இழுத்துக் கட்டுவேன் உலகை என்று பனம் பூவை இழுத்துக் கட்டிய மாலையணிந்த சேரன் சொன்னான். இல்லத்தில் பொருந்துவதான வாழ்க்கை இன்பத்தைக் கொடாது கோவலன் சொல்லில் உள்ள ஓரெழுத்தும் தள்ளாது நடக்கும் இளம் பெண்ணாகிய கண்ணகி, வெல், அல்லது மாள் என்று பாண்டியனிடத்தில், விலக்கென ஒன்று போக மற்றொரு சிலம்பில் ஒளி பொருந்திய மாணிக்கம் என்று காட்டி அவனால் தன் கணவன் பெற்ற ஓரிழுக்கை விலக்கிய கற்பின் தாயாகிய கண்ணகிக்குக் கல் ஒன்று நாட்டு என்ற உன் சொல் ஒவ்வொன்றின் ஒரு காற்பகுதியும் கோடி பெறும். செல்லாது என்று கழிக்கப் பெறும் சொல் உன் சொற்களில் ஒன்றுமில்லை. தெள்ளி வைத்த தமிழில் நல்ல கருத்தைத் திருத்திவைத்த சொல்லாளே பொன்னை உருக்கிப் புள்ளிவைத்த பச்சை மடமயிலே நீ புகழ்ந்த கண்ணகியை மறவேன் என்று கூறிச்செங்குட்டுவன் வெள்ளியாற் செய்த தேர்ப்படியில் கால்வைத்துத் தன் வேண்மாளை ஒளிபொருந்திய நெற்றியுடையாளை இனிய அமிழ்தை அள்ளி வைத்துச் (தேரை) செலுத்து என்றான். தன்கோவிலின் முன் தான் அணைத்து வைத்தபடியே அந்த வேண்மாள் என்னும் பொன்னை இறக்கி வைத்தான் - என்பன இவ் வியலிற் காண்க. மிடியிழுத்துக் கட்டிச்சாக் காட்டில் தள்ளி வில்லிழுத்துக் கட்டித்தன் திறத்தால் மற்றக் குடியிழுத்துக் கட்டித்தூய் ஆட்சி காட்டக் கொடியிழுத்துக் கட்டியதென் னவனைச் சீறி மடியிழுத்துக் கட்டித்தன் மார்பின் கச்சு வாரிழுத்துக் கட்டியகண் ணகிசீர் வாழ்த்தும் படியிழுத்துக் கட்டிடுவேன் உலகை என்றான் பனையிழுத்துக் கட்டியபூந் தாரன் சேரன் 192 கண்ணகியின் திருவுருவக்கல் நாட்டுவது நன்று என்ற மன்னி வேண்மாளை நோக்கி மன்னன் சொன்னது இது! மிடி - வறுமைத் துன்பம். சாக்காடு - சாவு, தூய் ஆட்சி - தூய ஆட்சி, தென்னவனை - பாண்டியனை. பனை யிழுத்துக் கட்டிய பூந்தாரன் என்றதால் சேரனுக்குப் பனைமாலை உரியதெனல் அறியப்படும். இல்ஒன்று வாழ்வின்பம் அளியான் சொல்லின் எழுத்தொன்று தள்ளாத இளைய பெண்ணாள் வெல்ஒன்று மாள்ஒன்று பாண்டி யன்பால் விலைக்கொன்று போகமற் றொருசி லம்பில் எல்ஒன்று மாணிக்கம் காணக் காட்டி இழுக்கொன்று காத்தாட்குக் கற்பின் தாய்க்குக் கல்ஒன்று நாட்டெனும்உன் சொல்ஒவ் வொன்றின் கால்ஒன்று கோடிபெறும் கழிவொன் றில்லை. 193 இல் ஒன்று என்பதிலுள்ள ஒன்று பொருந்திய என்று பொருள் படுவது, ஒன்றுதல் - பொருந்துதல். ஒன்று வாழ் வின்பம் - பொருந்திய வாழ்வின்பம். வினைத்தொகை நிலைத்தொடர். அளியான் - கொடாதவன்; கோவலன். எழுத்தொன்று தள்ளாது இருத்தலாவது - ஓரெழுத்தும் பிழையாமல் நடந்து கொள்வது. வெல் ஒன்று மாள் - என்னை வெற்றி கொண்டு வாழ்ந்திரு அல்லது தோற்று மாண்டுபோ, எல் - ஒளி. ஒன்று - பொருந்திய, இழுத்துக் காத்தல் - இழுக்கினின்று காத்தல். இச்செய்யுளின் இல்லை, என்பது அடுத்த பாட்டினால் முடியும். தெள்ளிவைத்த தமிழினிலே நற்க ருத்தைத் திருத்திவைத்த சொல்லாளே பொன்னா லாகிப் புள்ளிவைத்த பசுந்தோகை மயிலே நீதான் புகழ்ந்துரைத்த கண்ணகியை மறவேன் என்று வெள்ளிவைத்த தேர்ப்படியிற் கால்வைத் தேதன் வேண்மாளை வாணுதலை இன்ன மிழ்தை அள்ளிவைத்துச் செலுத்தென்றான் கோயி லின்முன் அணைத்துவைத்த படிபொன்னை இறக்கி வைத்தான். வாள்நுதலை - ஒளிபொருந்திய நெற்றியை உடைய வேண் மாளை, வாணுதல் - அன்மொழித்தொகை. இன்னமிழ்தை - இனிய அமிழ்தை, அன்மொழித் தொகை, செலுத் தென்றான் - தேரைச் செலுத்து என்று தேர்ப்பாகனிடம் சொன்னான். கோவில் - அரசன் மாளிகை. பொன்னை - பொன் போன்ற மனைவியை. இயல் - 66 இளங்கோ வேண்மாளும், அமைச்சன் வில்லவன் கோதையும் சாத்தனாரும் விளங்குகின்ற ஓவியம் மிகுந்த அழகிய மன்றத்தில் தனியே கூடி, மென்மையான உள்ளத்தினனான கோவலனின் மெய்ம்மையைக் காக்கும் பொருட்டுப் பாண்டியன் ஒத்துக்கொள்ளும் முறையில் வழக்குரைத்துத் தன்சிலம்பால் வென்ற உலகத்து மாதர் மணியாகிய கண்ணகிக்கே வளம் பொருந்திய அரண்மனையை இடமாகக் கொண்டிருக்கும் பெரிய ஆட்சியானது. கல்லே கற்பு வரலாற்றைப் பேசும்படி ஓர் உருவத்தை நாட்ட எண்ணி முடித்தோம் என்று செங்குட்டுவ மன்னன் மக்கள் பேரவையி னரிடம் சொல்லி முடித்தான்; கேட்ட அவையினரில் மேலோர், கண்ணி முடியில் ஒழுகும் தேனை உண்ணும் வண்டுகள் வண்ணம் பாடக் கவிழ்ந்துள்ள முடியுடை மன்னவா வாழ்க, நீவிர் பண்ணி முடித்தோம் என்ற முடிவை நாங்கள் வாழ்த்திப்பாடி முடித்தோம் என்று பதிலைக் கூறி முடித்துக் கழுவி வேலை முடித்துப் பெற்ற மணியைப் பதித்தான சிலம்போடு வந்த வஞ்சியின் திருவுருவக் கல்லோடு வஞ்சி நாடும் வாழ்க என்றார்கள். இதைக் கேட்ட மன்னன் பின்னும் சொன்னான். ஒரு பாதி ஆடவர்கள் மற்றொரு பாதி மாதர்கள் ஆகிய இரு பாதியும் வாழ்கின்ற இந்த நாட்டில் இருக்கும் மனையாள் கணவன் ஆகிய இருவர்க்குள் உன்னில் ஒரு பாதி நான் என்று தன் மனைவியிடம் கணவன் சொல்வதுண்டு. அவ்வாறே மனைவி சொல்வதுண்டு என்றால் ஒரு பாதிக்கு வந்த துன்பம் மற்றொரு பாதிக்கும் உண்டு என்போம். அதைக் கண்ணகிபாற் கண்டோம் என்றான் - என்பன இவ்வியலிற் காண்க. இளங்கோவேண் மாள்தானும் அமைச்ச னான எழில்வில்ல வன்கோதை சாத்த னாரும் விளங்கோவ மணிமன்றில் தனி இருந்தே மென்கோவ லன்வாய்மை காக்கத் தென்னன் உளங்கொள்ள வழக்குரைத்துச் சிலம்பால் வென்ற உலகத்து மாதர்மணி ஆம்அ வட்கே வளங்கோயிற் பேரரசுகல்லே கற்பு வரலாறு பேசும்வகை உருவம் நாட்ட 195 இளங்கோ வேண்மாள் - செங்குட்டுவன் மனைவி, வில்லவன் கோதை - அமைச்சன், சாத்தனார் - மதுரை ஆசிரியர் சாத்தனார், விளங்கோவ மணிமன்றில் - விளக்கு ஓவம் மணிமன்றில், விளங்குகின்ற ஓவியம் பொருந்திய அழகிய மன்றத்தில், ஓவம் - ஓவியம், மணி - அழகு. மன்று - ஆராய்ந்து முடிக்கும் இடம், மென் கோவலன் - வலியுற்ற உள்ளத்தையுடைய கோவலன், வலியுற்ற உள்ளத்தனாயின் பரத்தையிடம் பொருளை இழத்தலும், அவளுடன் உறைதலும் செய்யான் என்க, உளங் கொள்ள - மனதில் படும்படி, வளங்கோயிற் பேரரசு - வளப்பம் உடைய அரசியல் ஆட்சி, கோயில் - அரசியலும், அரண்மனை யும், அரசன் இல்லமும் ஆகும். நாட்ட என்பது அடுத்த பாட்டில் தொடர்கின்றது. எண்ணிமுடித் தோமென்று குட்டு வன்தான் இயம்பிமுடித் தான் கேட்ட மக்கள் மேலோர் கண்ணிமுடித் தேன்வண்டு வண்ணம் பாடக் கவித்தமுடி மன்னவா, வாழ்க! நீவிர் பண்ணிமுடித் தோமென்ற முடிவை வாழ்த்திப் பாடிமுடித் தோம்என்று பதில்மு டித்தே மண்ணிமுடித் தேபெற்ற மணிச்சி லம்பின் வஞ்சியொடு வஞ்சிதான் வாழ்க என்றார். 196 எண்ணி முடித்தோம் என்று குட்டுவன் சொன்னான் எனில் இளங்கோ வேண்மாளும் அமைச்சனும் ஆசிரியர் சாத்தனாரும் உருவம் நாட்ட எண்ணி முடித்தோம் என்று கூறியவாறு. இவ்வாறு மற்றவரையும் தன்னுடன் உட் படுத்திக் கூறுவது உளப் பாட்டுத் தன்மைப் பன்மை யாகும். வில்லவன் கோதையோடும் உம்மையைச் சேர்க்க. மக்கள் மேலோர் - மன்னனின் அவைக் கண் கூடியிருந்த பெருமக்களின் முன்னிற்கும் தலைவர்கள். படித்திருவாளர் என்பர். இவர்களையே வடமொழியாளர் பிரதிநிதிகள் என்பர். கண்ணிமுடி - மாலை முடிப்பில் அல்லது கண்ணி சூடப்பெற்ற தலையில், கண்ணி - தலையில் சூடப் பெறும் மாலைத் துணிக்கைக்கும் சொல்க. மண்ணி முடித்தே பெற்ற மணி - மண்ணி மாசகற்றி, முடித்தே - மற்ற வேலைகளை முடித்தே, பெற்ற - அடைந்த, மணி - மாணிக்கம் முதலியவை. மண்ணப் படுவது, மணி காரணப் பெயர். மணி கல்லுடன் இருக்கும். அந்தக் கல்லாகிய மாசு தவிர்க்கப் பெறுவது மணி என்க. சிலம்பின் வஞ்சியோடு - சிலம்பாற் சிறந்த வஞ்சியும். மூன்றனுருபும் பயனும் உடன் தொக்கதொகை. வஞ்சி யொடு - ஒடு உம்மைப் பொருளது. ஒருபாதி ஆடவர்கள் வாழ்கின் றார்மற் றொருபாதி மாதர்களும் வாழ்கின் றார்இவ் விருபாதி யும் வாழும், இந்த நாட்டில் இருக்குமனை யின் கணவன் இருவர் தம்முள் ஒருபாதி நான் என்று மனைவி சொல்வாள் ஒருபாதி நான்என்பான் கணவன் என்றால் ஒருபாதி பெற்றதுயர் பிறபா திக்கும் உண்டென்போம்; கண்ணகிபால் கண்டோம் என்றான் 197 இச் செய்யுளின் கருத்து மக்களில் ஒரு பாதி ஆடவரை யும் ஒரு பாதி மகளிர்களையும் கொண்ட இந் நாட்டில் இருக்கும் மனைவி கணவன் என்ற இருவர் தமக்குள் கணவனாகிய நான் மனைவி யாகிய உன்னில் பாதி யல்லவா? மனைவியாகிய நான் கணவ னாகிய உன்னில் பாதியல்லவா? ஆதலால் உனக்கு வரும் இன்ப துன்பங் களில் எனக்கும் சரிபாதி பங்குண்டு என்பார்கள். அதனால் ஒருபாதி பெற்ற துயர் அவ்வுடம்பில் மற்றொரு பாதிக்கும் ஆக வேண்டும். இப்படி நாம் எண்ணுகிறோம். இது போலும் ஒழுக்கத்தைக் கண்ணகியிடம் கண்டோம் என்று செங்குட்டுவன் சொன்னான் பெருமக்களிடம் என்பது ஒருபாதி நான் என்று மனையாள் சொல்வாள் - உன் உடலில் ஒருபாதி நானென்று மணாளன் சொல்வான். இயல் - 67 மற்றும் செங்குட்டுவன் அவையினரிடம் கூறுவான். மணவாளன் தன் கைப்பிள்ளை பாலுக்கு வழியில்லாத குறை பாட்டைப் பொறுக்க முடியாமல் இறந்தான் என்றால் அவன் மனைவி அப் பிள்ளையின் தாய் என்ன செய்கின்றாள். மார்பில் அடித்துக் கொண்டு தலையை விரித்துக் கொண்டு கூத்தடித்துப் பாட்டொன்றும் நீளப் பாடி அண்டை அயல் மாதர்கட்கு வரவேற்பளித்துத் தன் அல்லல் நிலையை விரிவாகக் கூறிப் பாலில்லாத பிள்ளை தொண்டைவறண்டு ஒழியும்படி செய்கின்ற மன இருளுக்குக் கண்ணகி ஒரு சுடர் விளக்குப் போல்வாள். தன்னை அயல் ஆடவன் நெருங்காமல், தன்னை மணந்தவனை ஒரு தீமை நெருங்காமல், தன் பழங்குடிக்குரிய பெருமையைக் கெடுக்கின்றவன் அங்ஙனம் கெடுக்க நெருங்காமல், முயலுகின்ற அவளுடைய நெஞ்சத்தைச் சோர்வு நெருங்காமல் காப்பவள் எவளோ அவள்தான் இல்லக் கிழத்தி. நகை போட்டுக் கொள்வதும் நல்ல ஆடை உடுத்திக் கொள்வதும் கூத்துப் பார்க்கப் போவதுமே கடமை என்று எண்ணுகின்ற மனக் கப்பலானது தான் தத்தளிக்கும் துன்பக் கடலைத் தாண்டிச் சேர கண்ணகி ஒரு கலங்கரை விளக்க மல்லவா? இறந்தவனுக்கு இருக்கின்றவர்கள் உதவி செய்வது என்ப தென்ன? அவனிருந்தபோது அவனுக்கு இருந்த குறைபாடுகளை நீக்குவதேயாகும். அதுவல்லாமல் இறந்தவனின் உடலுக்குத் தேரும் மாலையும் ஏற்பாடு செய்வதும் அவன் வேறிடத்தில் சிறந்திருக்கின்றான் என்று எண்ணுவதும், அவ்விடத்தில் அவன் சீரடைய இங்குள்ள பார்ப்பன ருக்கு முறம் அரிசி முதல் செருப்பு ஈறாக முடி வணங்கிக் கொடுப்பது வும் மடமையாகும் என்றான் - என்பன இவ்வியலிற் காண்க. கொண்டவன்தன் கைப்பிள்ளை பாலில் லாத குறைதாங்க முடியாமல் செத்தான் என்றால் கொண்டவள் தன் மார்படித்துத் தலைவி ரித்துக் கூத்தாடிப் பாட்டொன்று நீளப் பாடி அண்டைஅயல் மாதர்களை வரவேற் றுத்தன் அல்லல் விரித்திருப்பாள் பால் இல்லாப் பிள்ளை தொண்டைவறண் டொழியவைப்பாள் மனஇ ருட்குத் தோகையவள் கண்ணகிஓர் சுடர்வி ளக்கே. 198 கைப்பிள்ளைக்குத் தாய்ப்பால் இல்லை. இந்தக் குறைபாட்டைக் குழந்தையின் தந்தை பொறுக்கமுடியாமல் இறந்து விடுகின் றான். இறந்துவிடவே உடனே அவன் மனைவி தன் மார்பில் அடித்துக்கொண்டு ஆடிப்பாடிவரும் மாதர்களை வரவேற்றுக் கொண்டிருந்தாள். பாலில்லாக் குழந்தை தொண்டை வறண்டு இறந்து போகின்றது. இந்த முட்டாள் தனத்துக்கு - மன இருட்டுக்குச் சுடர் விளக்காவாள் கண்ணகி என்பது இப்பாட்டு. சுடர் விளக்கு - கதிரவன்போல் ஒளி செய்யும் விளக்கு, சுடர் - கதிரவன். தனைஅயலான் நெருங்காமல் தனைம ணந்தான் தனைத்தீமை நெருங்காமல் தன்கு டீச்சீர் தனைக்கெடுப்பான் நெருங்காமல் முயல்வாள் நெஞ்சம் தனைச்சோர்வு நெருங்காமல் காப்பாள் இல்லாள்! புனைஆடை அணிகுவதும் கூத்துப் பார்க்கப் போவதுமே கடமைஎன எண்ணு கின்ற மனக்கப்பல் துயர்க்கடலைத் தாண்டிச்சேர மங்கைஒரு கலங்கரைவிளக்க மன்றோ? 199 கலங்கரை விளக்கு என்பதை ஆங்கிலத்தில் லைட் அவுசு என்பார்கள். காப்பாள் இல்லாள் - காப்பாள் எவளோ அவள் இல்லக் கிழத்தி, புனை ஆடை - அழகிய ஆடை, புனை - அழகு. மேற் பாட்டாலும் இப்பாட்டாலும் கண்ணகி தன் கணவன் இறந்தது கண்டும் அழுது கொண்டே இருந்து விடாமல் ஓடி வென்ற அருமையையும், தன்னலத்தைச் சிறிதும் நோக்காமல் - உண்ணாமல் - உறங்காமல் தன் குடிப் பெருமை காப்பதே முதற் காரியம் என்று எண்ணிப் புகுந்த அருமையையும் குறிப்பால் விளக்கியபடி. இனி மூன்றாம் பாட்டு வருமாறு இறந்தானுக் குதவிஎனல் இருந்த போதில் இருந்தபொதுக் குறைநீக்கல் ஆகும்; அன்றி இறந்தானின் உடலுக்குத் தேரும் தாரும் ஏற்பாடு செய்வதுவும் வேறி டத்தில் சிறந்தான்என் றெண்ணுவதும் அங்கே அன்னோன் சீரடைய இங்குள்ள பார்ப்ப னர்க்கு முறங்காணும் அரிசிமுதல் செருப்பீ றாக முடிதாழ்த்துக் கொடுப்பதுவும் மடமை என்றான். 200 இறந்தானுக்கு உதவி எனல் - இறந்த ஒருவனுக்கு இருப்பவன் செய்யும் உதவி என்பது, இருந்த போதில் - இருந்த பொதுக் குறை நீக்கல் ஆகும், அவன் உயிரோடு இருந்த போது அவனுக்கிருந்த பொதுக் குறையை நீக்குவதேயாகும். பொதுக் குறை என்பது, அவன் மாம்பழத்தின் மேல் ஆசைப்பட்டதும் பிறவற்றின் மேல் ஆசைப் பட்டதும் அல்ல. தன் குடும்பத்தின் மேல் பிறர் கொண்டபகை; குடிப்பழி போக்க எண்ணுவது; அவன் முடிக்காத நூல் திட்டம் முதலியவை, தார் - மாலை, வேறிடத்தில் சிறந்தான் - வேறு உலகத்தில் மக்களுடல் அல்லாத மற்றச் சிறப்புடல் பெற்றான், முறங்காணும் - அளந்தால் முறங் காணும் அளவு, இப்பாட்டால் கண்ணகி மடமை மேற் கொள்ளாமல் கோவலன் தன் குடிப்பெருமை காக்கும் பொருட்டுத் தான் மன்னன் சிலம்பைத் திருடியதில்லை என்பதை எண்பிக்க வேண்டும் என்று நினைத்து அக்குறைபாட்டை நீக்கத் துடித்தாள் என்பது பெறப்பட்டது. இயல் - 68 மேலும் செங்குட்டுவன் சொல்வான்: சோழ நாட்டில் பிறந்தாள். பாண்டி நாட்டில் தொல்லையுற்றாள். அதைச் சொல்ல வந்தவள் போல் நம் மேட்டுப் பாங்கான இடத்தில் அமைந்த நம் அருமை வஞ்சி நாட்டில் வந்தாள். உலகமெல்லாம் சென்று பரவும் கற்புடைய கண்ணகியின் திருவுருவை அமைப்பதற்கு வாய்ப்பான கல் எங்கிருந்து எடுப்பது என்று ஆராய்ந்தபோது இமய மலையின் கல்லே தகுந்தது என்று முடிவு செய்துள்ளோம். அதற்கு ஒரு காரணம் உண்டு. வடக்கு மலையிற் காணப்படும் கல் தெற்குமலைக் கல்லைப்போல் முதிர்ச்சியுடையதல்ல என்றாலும் தெற்குமலை நம்முடையது. அதனை உடமையாகக் கொண்டு காத்து வருகின்றவர் செந்தமிழர். அவர்கள் நம்மை இகழும் பகைவர் அல்லர். தெற்குடைய தமிழை இகழ்ந்த வடவரிடம் நம் திறத்தைக் காட்டி நாம் பெறும் கல்லிற் சிறப்பு உண்டு என்றான். இது கேட்ட மற்றவர்கள் பல யானைகட்கு இடையில் இருக்கும் ஆட்டுக்கு வால்குழைத்து எழுகின்ற வரிப்புலியே வெல்கஎன்றார்கள். மேலும் செங்குட்டுவன் சொன்னது: வடநாட்டிலிருக்கும் தமிழ்ச் சான்றோர்கள் இங்கு வந்து, ஆரியர் தமிழைப் பழித்தார் என்பதையும் சொல்லிச் சென்றார்கள், மேலும் அத்தமிழ்ச் சான்றோர் அவ்வாறு பழித்தவர்களிற் குறிப்பிடத்தக்கவர் கனகனும் விசயனும் ஆவார் என்றனர். அவர்களிடம் தென்னாட்டுப் போர்த் திறங்காட்டி அவர்களை வென்றோமில்லையானால் வடக்கின்கண் இருந்து வந்து சொல்லிப் போனவர்களின் நெஞ்சம் என்ன ஆகும். உலகம் முழுதிலும் தமிழன் சீர் என்ன ஆகும்? என்றான். அதுகேட்ட அவையினர், தமிழைப் பழித்தவன் எங்கிருந்தாலும் அங்கே சென்று அவனை அழித்துயர்க என்று கூறினார்கள் - என்பன இவ்வியலிற் காண்க. சோணாட்டிற் பிறந்துபின் பாண்டி நாட்டில் தோகைதான் பட்டதெல்லாம் சொல்லு வாள்போல் சேணுள்ள நம்அருமை வஞ்சி நாட்டைச் சேர்ந்தாள்! இப் பாரெல்லாம் செல்லும் கற்பு வாணுதலாள் திருவுருவம் அமைப்ப தற்கு வாய்ப்பான கல்எங்கே எடுப்ப தென்று காணுங்கால் இமையத்துக் கல்லே என்று கண்டுவைத்தோம் காரணம்உண் டதற்கும் என்றான். 201 சேண் - உயர்வு, பார் - உலகு, உண்டதற்கும் - உண்டு அதற்கும், இமையம் - ஒளிசெய்வது, இமைத்தல் - ஒளி செய்தல், - இமையம் - இமையமலை, கண்டு வைத்தோம் - முடிவு செய்து வைத் துள்ளோம், காரணம் அடுத்த பாட்டில். தெற்குமலைக் கல்லைப்போல் முதிர்ச்சி யில்லை வடக்குமலை யிற்காணும் கல்லில்! ஆனால் தெற்குமலை நம்முடமை அதனைக் காப்போர் செந்தமிழர் நமையிகழும் பகைவர் அல்லர் தெற்குடைய தமிழிகழ்ந்த வடக்கர் தம்பால் திறங்காட்டிக் கொள்ளும்கல் சிறப்பிற் றென்றான் மற்றுமுள்ளோர் பல்யானை இடையாட்டுக்கும் வால்குழைக்கும் வரிப்புலியே வெல்க என்றார். 202 தெற்குமலை - பொதிகை முதலிய மலைகள், வடக்குமலை - இமயமலை. தெற்கில் உள்ள மலைகள் மிக முதிர்ந்தவை என்பதும் வடக்கு மலைகள் இளையன என்பதும் இக்கால ஆராய்ச்சியாலும் கண்ட உண்மை. திறங்காட்டிக் கொள்ளும் கல் அவ்வகையில் சிறப்புடையது ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று, மற்றுள்ளோர் - அவையினர். மற்று அசை. பல யானைகளுக்கு மிடையில் தனக்குத் தேவைப்பட்டதான ஆட்டை உண்ணுவதற்காக வால் குழைக்கும் அதாவது பாய முயலும் வரிப்புலியே என்றனர் அவையினர் என்க. புலி வால் குழைப்பது எழுமுன். ஆங்கிருக்கும் தமிழ்ச்சான்றோர் ஈங்கு வந்தார் ஆரியர்கள் தமிழ்பழித்தார் என்று சொன்னார் தீங்குள்ளார் கனகனொடு விசயன் என்றார் செந்தமிழர் திறங்காட்டா திருந்தோ மானால் ஆங்கிருக்கும் தமிழ்ச்சான்றோர் நெஞ்சம் என் ஆம் அனைத்துலகில் தமிழன்சீர் என் ஆம் என்றான் யாங்குள்ளான் தமிழ்பழித்தான் ஆங்குச் சென்றே அழித்துயர்க என்றார்அங் கிருந்தோர் யாரும். 203 ஆங்கிருக்கும் தமிழ்ச் சான்றோர் - வடக்கில் இருக்கும் தமிழ்ச் சான்றோர், ஈங்கு - வஞ்சி நாட்டில், செங்குட்டுவனிடம். தீங் குள்ளோர் - தீங்கு எண்ணுபவர், திறம் - போர்த்திறம், நெஞ்சம் என் ஆம் - மனம் புண்படும் என்ற படி,உலகம் முழுவதும் பரவி இருக்கும் தமிழன் பெருமை என்ன ஆகும் என்பது அனைத் ... ... என்னாம் என்பதால் பெறப்படும். இயல் - 69 பெருமக்களிடம் இவ்வாறு இயம்பிய செங்குட்டுவ மன்னன் தன் அமைச்சன் வில்லவன் கோதையை நோக்கி உன் எண்ணம் எப்படி? மேலே நடப்பது எப்படி என்ற அளவில், அவ் வில்லவன் தன் சொல்மாரி பொழியத் தொடங்கினான். வரிப்புலியைக் கொடியாகக்கொண்ட சோழனும், கயலைக் கொடியாகக் கொண்ட பாண்டியனும் உம்மிடம் மாறுபட்டுக் கொங்கர் செங்களத்தில் வந்து தோளை எடுத்த எடுப்பிலேயே தோல்வியுற்று, அவ்வாறு தோற்றதற்கு அடையாளமாகத் தம் இரு கொடிகளையும் சேர்த்து நும்பால்கொடுத்த நாளில் அவர்கள் எடுத்த ஓட்டத் திசைகள் நன்றாக எடுத்துக் கூறக் கூடியவைகளே. கொங்கணர், கலிங்கர், கருநாடர், பங்களர், கங்கர், கட்டியர், ஆரியர் ஆகியோர் தமிழருடன் கை கலந்து போரிடும்போதே நும் அரிய யானை வேட்டையை நேரிலிருந்து நான் அன்றுகண்டேன். இன்றும் என் நெஞ்சமாகிய அரங்கில் காணாத நேரமில்லை. ஊரில் தங்கிப் பார்த்து வர எம் கோமாட்டி விற்கொடி கீழ் உமை எதிர்த்த ஆரியரின் ஆயிரம் தோள்கள் அறுதலைக் கண்டவர்கள் அவை பறந்து எங்கே போய்த் தங்கின என்பதைப் பார்த்தறியார் - என்பன இவ்வியலிற் காண்க. இவ்வாறு குட்டுவன்தான் பெருமக் கள்பால் இயம்பினோன், தன்னருமை முதல மைச்சர் வெவ்வேலிற் கண்வைத்தால் தெவ்வர் அஞ்சும் வில்லவன்கோ தைதன்னை நோக்கி எண்ணம் எவ்வாறு மேல்நடப்ப தென்ன என்றான் யாண்டுபல வாழ்கநின் கொற்றம் என்றே அவ்வமைச்சன் கார்முகிலாய்க் கண்கள் மின்னக் குரலிடித்துச் சொன்மாரி பொழிவா னாங்கே. 204 வெவ்வேலிற் கண்வைத்தால் தெவ்வர் அஞ்சும் வில்லவன் கோதை என்பதில் உள்ள வெவ்வேல் - வெம்மையான வேல். அவ்வேலை நோக்கிய அளவிலே பகை நடுங்கிவிடும் சிறப்புடைய வில்லவன் கோதை என்க. தெவ்வர் அஞ்சும் என்பதற்குத் தெவ்வர் அஞ்சும் சிறப்புடைய என்று கொள்க, தெவ்வர் - பகைவர். கார்முகில் - கரியமுகில், மாரி - மழை. வாளெடுத்த வரிப்புலியார் கயலார் நும்பால் மாறுபட்டார்; கொங்கர்செங் களத்தில் வந்தார்; தோளெடுத்த எடுப்பினிலே தோல்வி கண்டார் தொகுத்தெடுத்தே இருகொடியும் நும்பால் தந்த நாள், எடுத்த ஓட்டத்தைத் திசைகள் எட்டும் நன்றெடுத்துக் கூறுவன. கொங்க ணர்கள் கோளெடுத்த கலிங்கர்,மறக் கருந டர்கள் கொடும்பங்க ளர்,கங்கர் கட்டி யர்கள். 205 ஆரியர்க ளுடன் தமிழர் கைக லக்கும் அப்போரில் நும்மரிய யானை வேட்டை நேரிருந்து நான் அன்று கண்டேன் இன்றும் நெஞ்சரங்கில் காணாத நேர மில்லை! ஊரிருந்து பார்த்துவர எம்கோ மாட்டி உடன்சென்ற விற்கொடிக்கீழ் உமைஎதிர்த்த ஆரியத்து மன்னர்தோள் அறுதல் கண்டார் ஆயிரம்தோள் பறந்தவிடம் காணு கில்லார். 206 வரிப்புலியார் - புலிக்கொடியுடைய சோழன், கயலார் - கயற்கொடிப் பாண்டியன், கோள் - வலி, எடுத்த - கொண்ட, மறம் - வீரம், கொங்கணர் முதல் ஆரியர் ஈறாக இங்குக் கூறிய அனைவரும் கூடி வந்து இழைத்த போரில் தமிழர் கைகலந்து போரிட்டுக் கொண்டிருந்தனர் என்று ஒன்று கூட்டிப் பொருள் கொள்க. எங்கோமாட்டி என்றது இந்தச் செங்குட்டுவன் அன்னையை, ஊரிருந்து பார்த்தல் என்றது இமயத்தைச் சார்ந்த ஊர்களை. அடுத்த பாட்டைத் தொடர்கின்றது. இயல் - 70 அப்படிப்பட்ட தகுதியுடையீர் இந்நிலவுலகத்தைத் தமிழ் நாடாக்குவதான இந்தக் கொள்கையை எதிர்க்க என்ன தகுதி யடைந்தார்கள். எந்நாட்டிலுள்ள நல்லவர்களும் அடையத்தக்க மெய்த் தகுதியாகிய கற்பு நிலையை விளக்குவதற்கல்லவா இமையத்துக் கல் எடுக்க வில் எடுத்தீர். ஆதலால் நும் கொள்கையை விளக்கி அஞ்சல் எழுதுக வட புலத்து மன்னர்க்கு! நம் வருகையை அவர்கள் ஏற்றுக் கொள்வதற்காக. அன்றியும் இது குறித்து நம் நாட்டில் பறை முழக்கம் செய்து வைக்க. இது மற்ற நாட்டிலும் எட்ட வேண்டும். அதற்காகவே பல நாட்டு ஒற்றர் களும் இங்கு இருக்கின்றார்கள். எட்ட வைப்பது அவர்கள் கடமை. தமிழ்ப் படை எழுக, வீரமில்லாத வடநாடு நோக்கி. அந்த வடநாட்டார் நம்மை எதிர்க்க எண்ணினால் அவருண்டு, நம் வீரத்தை அறிந்துள்ள அவர்களின் மூத்தவர்கள் உண்டு. தென்னாட்டின் பழம் வீரம் அன்றும் இன்றும் என்றும் உண்டு. என்று தன் தோளைத் தூக்கிய வண்ணம் கூறினான் (வில்லவன் கோதை) அரசன் மகிழ்ந்து மாவீரர் எங்கே? நாற்படைத் தலைவர் எங்கே? பட்டத்து யானை எங்கே? ஆகட்டும் ஆகட்டும் பறை யறையச் செய்க என்று கூறினான் - என்பன இவ்வியலிற் காண்க. அத்தகையீர் கடல்சூழ்ந்த இந்நி லத்தை அந்தமிழ்நா டாக்குவதாம் இந்தக் கொள்கை எத்தகுதி எவருடையார் இதைஎ திர்க்க? எந்நிலத்து நல்லாரும் எய்தத் தக்க மெய்த்தகுதி யாம்கற்பு விளக்க அன்றோ வில்லெடுத்தீர் இமயத்துக் கல்லெ டுக்க! வைத்தெழுது வீர்அஞ்சல் உங்கள் கொள்கை வடபுலத்து மன்னர்க்கு வருகை ஏற்க 207 அத்தகையீர் - அப்படிப்பட்ட (மேற்கூறிய) தகுதியுடைய வேந்தரே! அந் தமிழ் நாடாக்குவதாம் இந்த - அந்தமிழ் நாடு ஆக்குவ தாகிய இந்த, எத்தகுதி என்பதிலுள்ள தகுதி - வீரம் என்க. இந்நாட்டில் இதுகுறித்துப் பறைமு ழக்கம் எழப்புரிவீர்; பன்னாட்டின் ஒற்றர் யாரும் தம்நாட்டிற் கறிவிக்கக் கடமைப் பட்டார் தமிழ்எழுக வீரமிலா வடக்கு நோக்கி! அந்நாட்டார் நமைஎதிர்க்க எண்ணு வாரேல் அவருண்டு நமையறிந்த மூத்தோ ருண்டு தென்னாட்டின் பழவீரம் அன்றும் இன்றும் என்றுமே உண்டென்றான் எடுத்த தோளான். 208 எழப் புரிவீர் - எழும்படி கட்டளையிடுவீர்! இந்நாட்டில் பறை யறைந்தால் அது பன்னாட்டிலும் பரவுமோ என்று எண்ண வேண்டாம். ஒற்றர் அதைத் தம்தம் நாட்டிற்கு எட்ட வைப்பது அவர்கள் கடமை என்பான். பன்நாட் ... ... பட்டார் என்றான், தமிழ் எழுக - தமிழர் படை எழுக. தமிழ் என்றால் தமிழர் படைக்கும் ஆகும். மட்டற்ற மகிழ்ச்சிகொண்ட மன்னன்எங்கே மாவீரர் எங்கேநாற் படைத் தலைவர்? பட்டத்து யானைஎங்கே? ஆக ஆக பறையறைவிப் பீர்என்றான் நாட்டி லெங்கும் குட்டுவனார் நம்மன்னர் வாழ்க நாளும் கோதைஉருக் கல்கொணர வடக்குச் செல்வார் வட்டத்து மன்னரெலாம் திறைகொ ணர்க வரவேற்க என்றுபறை முழக்கம் கேட்டான். 209 எங்கே மாவீரர்? எங்கே நாற்படைத் தலைவர்? பட்டத்து யானை எங்கே? என்பன விரைவு பற்றியவை. அரசன் பறை அறைவிப்பீர் என்று கூறினான், உடனே பறை முழக்கம் கேட்டான் என்ற நயம் இங்கே காண்க. ஆக ஆக - வேலை ஆகட்டும் ஆகட்டும் என்ற பொருளில் - அதாவது விரைவு பற்றி வந்த அடுக்குத் தொடர். வட்டத்து மன்னர் என்றது வழி முழுதும் உள்ள சிற்றரசரை, கொணர்க - கொண்டுவருக, இயல் - 71 வஞ்சி நாட்டின் இறைவன் வாழ்க! நிலைபெற்ற அவன் விற் கொடியும் வெண் கொற்றக் குடையும் வாழ்க! விரைந்து செல்லக் கூடிய வெகுளியினால் வெப்பம் அடைந்துள்ள கண்களையுடைய காலாட் படையினர் வாழ்க! வெற்றி பொருந்திய இன்பப் பனைமாலை வாழ்க! படையுடைய மன்னவன் நெஞ்சு எப்படியோ அப்படி வீர முழக்கம் செய்யப் பறைவாழ்க! நின்று எக்களிக்கின்ற சங்கு எனும் செல்வம் வாழ்க! எம் மூலச் சொத்தாகிய சங்கத் தமிழ் வாழ்க! எப்போதும் தெற்கில் வாழ் தமிழர் வாழ்க! போகும் வழி (படை வீரர் கால்பட்டு) குழியாகும்படியும், சுமக்கும் நிலமானது சுமை தாங்கமுடியாமல் நெளிவு அடையும்படியும், எட்டுத் திக்கிலும் தூள் எழும்படியும் அதனால் வானம் இருளடையும் படியும் ஒரு வீரனுடன் மற்றொரு வீரன் இடிபட்டு, அவர்கள் விழி நெருப்பைப் பொழிய மடமட வென்று முற்பட்டுத் தோளால் விடுக்கும் கருவிகளை யும் (அம்பு முதலிய) எறிகின்ற கருவிகளையும் (ஈட்டி முதலிய) தொட்டு வீசும் கருவிகளையும் (வாள் முதலிய) ஒன்றை ஒன்று எட்டும் படியும் நிலை கெட்டு ஒழியத் தகுந்தது பகைதான் ஒழியத் தகுந்தது பகைதான் என்றும் எமது இறைவனாகிய செங்குட்டுவன் பெறுவது புகழே என்றும் எம் வெற்றிப் பேச்சுக்கே எம்மொழி பயன்படட்டும் என்றும் ஒப்பற்ற தமிழர்கள் படையானது முற்பட்டுத் தீ முடுகியது என்று சொல்லும்படி விரைவது ஏன் எனில் வடபால் உள்ள மலையின்கல் எடுப்பதற்கே ஆகும். ஆடி நடந்தன படையின் குதிரைகள். வரிசையாக நடந்த யானைகள் அசைந்து நடந்தன. தேர்கள் கலகல என்று பாடி நடந்தன - முன்னணியிற் செல்லும் காலாட் படை தொடங்கிப் பின் வரும் தேர்ப் படைவரைக்கும் உள்ள அனைத்துப் படை வரிசைகளையும் ஓடிப் பார்ப்பதென்று எண்ணி நேரே ஓடுகின்றார் ஓடுகின்றார். அப்படியும் காணாதவராகி இன்னும் ஓடிக்கொண்டே இருக்கின்றார்கள். என்றால் உயர்வுடைய அந்த வஞ்சி நாட்டுப் படையின் நீளம் நீலமலை வரைக்கும் ஆகும் - என்பன இவ்வியலிற் காண்க. * தந்தத்தன தந்தத்தன தான தான தந்தத்தன தந்தத்தன தான தான வஞ்சிக்கிறை செங்குட்டுவன் வாழ்க வாழ்க மன்பொற்கொடி திங்கட்குடை வாழ்க வாழ்க மிஞ்சிச்செலும் வெங்கட்படை வாழ்க வாழ்க வென்றிப்பனை இன்பத்தொடை வாழ்க வாழ்க நெஞ்சொக்கமு ழங்கப்பறை வாழ்க வாழ்க நின்றெக்களி சங்கத்திரு வாழ்க வாழ்க துஞ்சத்தகு வெங்கட்பகை வீழ்க வீழ்க வஞ்சிப்படை வென்றிப்படி வாழ்க நேரே. 210 வஞ்சிக்கிறை - வஞ்சிக்கு இறை, வஞ்சி - வஞ்சி நாடு; கருவூர், இறை - மன்னன். மன் - நிலை பெற்ற, பொற்கொடி. மிஞ்சி - விரைந்து, வெங்கண் - பகைமேற்கொண்ட வெகுளியால் கொடுமை வெப்பம் கொண்ட கண்ணையுடைய, வென்றி - வெற்றி, தொடை - மாலை, நெஞ் சொக்க முழக்கப் படை - நெஞ்சு ஒக்க முழங்கு அப்படை, நெஞ்சொக்க முழங்குவ தாவது - தலைவன் நெஞ்சம் எப்படி வீறு கொண்டதோ அப்படி வீறு கொண்டு முழங்குவது, நின்றெக்களி - நின்று எக்களி; எக்களி - எக்களிக்கும்; ஆரவாரம். வினைத் தொகை. சங்கத்திரு - சங்கம் திரு சங்காகிய செல்வம். சங்கம் - அம் சாரியை, இவ்வாறு வீரப்பண் பாடிக்கொண்டு காலாட்படை சென்றதென்க. * தனதனதன தனதனதன தத்தத் தத்தா தனதனதன தனதனதன தத்தத் தத்தா வழிகுழிபெற நிலநெளிவுற எட்டுத் திக்கே மலிபொடிஎழ மிசைஇருள்பெற ஒட்டுப் பட்டே விழிஎரிதர மடமடஎன முற்பட் டுத்தோள் விடுபடைஎறி படைதொடுபடை எட்டத் தொட்டே ஒழிவதுபகை ஒழிவதுபகை தட்டுக் கெட்டே உறுவதுபுகழ் எமதிறைஎன வெற்றிச் சொற்கே மொழிஎனஒரு தமிழர்கள்படை முற்பட் டுத்தீ முடுகியதென விரைவதுவட வெற்புக் கற்கே. 211 மலிவு - மலிந்த; மிகுந்த, மிசை - வான். ஒட்டுப்பட்டே - ஒருவரோடொருவர் நெருங்குதல் பெற்று, தட்டுக் கெட்டே என்பது ஒழிவது பகை என்பதன் முன்னிருத்திப் பொருள் கொள்க, வெற்றிச் சொற்கே மொழி - வெற்றிப் பாட்டுப் பாடுவதற்கே எம்தமிழ் மொழி. வெற்பு - மலை, இமயமலை என்க. இவ்வாறு பாடிக்கொண்டே வஞ்சி நாட்டின் குதிரைப் படை, யானைப்படை, தேர்ப் படை சென்றன என்க. இதுவும் குழிப்பின் இயன்ற எண்சீர் வண்ண விருத்தம். ஆடிநடந் தனபரிகள்; அணியா னைகள் அசைந்துநடந் தனதேர்கள் கலக லென்று பாடிநடந் தன தேர்கள் கலக லென்று படைதொடங்கித் தேர்ப்படையின் கடைவ ரைக்கும் ஓடித்தான் பார்ப்பதென எண்ணி னோர்கள் ஓடுகின்றார் ஓடுகின்றார் காணார் இன்னும் ஓடிக்கொண் டேஇருக்கின் றார்கள் என்றால் படைநீளம் நீலமலை வரைக்கும் உண்டாம். 212 பரிகள் - குதிரைகள், அணி - வரிசையாகச் செல்கின்ற, கலகல என்று என்பதில் அகரம் தொகுத்தல். இமைய மட்டும் - இங்கிருந்து இமையம் வரைக்கு முள்ள நீளம் (அப்படையின் நீளம்) என்க. இயல் - 72 படைவரும் அதிர்ச்சியால் நீலமலை அதிர்ந்தது. அம்மலைப் புறத்தில் படை நடுப்பகலில் மன்னன் பாடி வீடிறங்க அண்டையிருந்த தானை அமைச்சர் படைத் தலைவர் முதலியோருடன் இருக்கையில் வீற்றிருந்தான். தேர்க்குதிரைகள் அவிழ்த்துவிடப்பட்டன. உயர்ந்த யானைகள் கரும்பு, வாழை, விளா, பலா ஆகியவற்றை வீழ்த்தி உண்டு உலவின. போர்மறவர் நீராடி உடைகள் மாற்றித்தெங்கின் இள நீரோடிருக்கும் முதிராத வழுக்கையை உண்டார்கள். அரசரும் போர் மறவர் எல்லாருமாகத் திருத்திய வாழைக் குருத்திலைகளை வரிசையாக இட்டுக் கறிகள் நெய் பண்ணியங்கள் சோறிட்டு அருகிற் சுவைநீர் இட்டே உலகினர் அனைவரும் வந்து விட்டார்களோ என்று எண்ணும்படி இரண்டு வரிசை மூவாயிரம் கோல் நீளத்தில் இருந்து உண்டார். விரைவில் எழுந்திருப்பாரெனத் தோன்ற வில்லை. வயிறு என்பது தனியாக அமைந்திருந்தால் வயிற்றுக்கு வந்ததை எல்லாம் வரவு வைத்துத் தோளில் தூக்கி உயிர் போய்விடுமே என்ற அச்சமில்லாமல் செல்லலாம் என்று சொன்னவனை மற்றொருவன் பார்த்து, அண்ணே துயரம் என்பது ஒன்று இல்லை என்றிருந்தால் நான் உண்ட தொண்ணூறு வடைகளும் ஒன்றுமே பண்ண மாட்டா என்றான். ஓர் அயலிலிருந்தவனின் கையைப் பிடித்து எழுந்தான். மற்றொருவன் அயலானைத் தூக்கி விட்டு விழுந்தான் - என்பன இவ்வியலிற் காண்க. கண்டதிரும் நீலமலைப் புறத்தே தானை கடும்பகலில் பாடிவீ டிறங்க மன்னன் அண்டையினோ ருடன்இருக்கை வீற்றி ருந்தான் அவிழ்த்துவிடப் பட்டனதேர்ப் பரிகள் எல்லாம் விண்தொடும்போர் யானைகளும் கரும்பு வாழை விளாவீழ்த்திப் பலாப்பழத்தோ டுண்டு லாவத் திண்டிறலோர் நீராடி உடைகள் மாற்றித் தெங்கிளநீர் முதிராவ ழுக்கை உண்டார். 213 கண்டதிரும் - கண்டு அதிரும்; வரும் படையைக் கண்டு அதிர்ச்சி அடைகின்ற, தானை - படை, கடும் பகல் - நடுப் பகல், பாடி வீடு - சென்ற விடத்துத் தங்குமிடம், அண்டையினோருடன் இருக்கை வீற்றிருந்தான் என்க. பரி - குதிரை, விண்தொடும் - உயர்ந்த தோற்றத்தை உடைய என்றபடி, திண்டிறலோர் - திண்திறல் மிக்க வலி பொருந்திய படைவீரர். அரசரொடு போர்மறவர் எவரு மாக அடியரிந்து நரம்பகற்றிக் குருத்தி லைகள் வரிசையினில் இட்டுச்சோ றிட்டு நெய்யா றதுபாய்ச்சிக் கறிவகைகள் பண்ணி யங்கள் பரிமாறிச் சுவைநீரும் அருகில் வைக்கப் பார்அங்கே பாரிலுளோர் இங்கே என்ன இருவரிசை மூவாயி ரங்கோல் நீளம் இருந்துண்டார் எழுவார்என எட்டவில்லை. 214 எவருமாக இருந்துண்டார் என இயைக்க. நெய்யாறு அது பாய்ச்சி என்றது சோறிட்டதும் அச் சோற்றின் மேல் நெய் விடும் வழக்கத்தை. பண்ணியம் - வடை அப்பம் முதலியவைகள். சுவைநீர் - சர்க்கரைப் பாகு முதலியவைகள், பார் அங்கே பாரிலுள்ளோர் இங்கே என்ன - வெறும் நிலமட்டுமே அங்கே. எல்லாமக்களும் இங்கே வந்து விட்டார்கள் என்று சொல்லத்தக்க வகையில் அவ்வளவு பெருங்கூட்ட மக்கள் என்றபடி. பார் - உலகம். இரண்டு வரிசையாகவும் மூவாயிரம், கோல் நீளமாகவும் உட்கார்ந்து உண்டார்கள். அவர்கள் விரைவில் உண்டு எழுந்து விடுவார்கள் என்பது (எட்டவில்லை) மனதிற் படவில்லை. வயிறொன்று தனிப்பெட்டி யாய்இ ருந்தால் வந்தஎலாம் வரவுவைத்துத் தோளில் தூக்கி உயிரச்சம் இல்லாமல் செல்ல லாமென் றுரைத்தவனை மற்றொருவன் நோக்கி அண்ணே துயர்என்ப தொன்றில்லை என்றி ருந்தால் தொண்ணூறு வடைஒன்றும் பண்ணா என்றான் அயல்நின்றான் கைப்பற்றி நின்றான் ஓர்ஆள் அயலானைத் தூக்கிவிட்டு வீழ்ந்தான் ஓர்ஆள். 215 உடலுக்கு வரும் தொல்லை வயிற்றுக்கு வரும் தொல்லை என்ப தில்லாமல் வயிறு தனிப்பெட்டியாய் இருந்தால் என்பான் - வயிறொன்று தனிப்பெட்டியாய் இருந்தால் என்றான். வந்த எலாம் - வந்தவை எல்லாம், வரவு வைத்து - நகைச்சுவை. உயிரச்சம் - உயிரைப் பற்றிய அச்சம். இரண்ட னுருபும் பயனும் உடன் தொக்க தொகை நிலைத் தொடர். அண்ணே துயர் ஒன்று உலகில் இல்லாதொழிந்துவிட்டால் இப்போது நான் உண்டிருக்கும் தொண்ணூறு வடைகளும், ஒன்றும் பண்ண மாட்டா என்றான் என்பது. இயல் - 73 உணவை முடித்து மன்னன் அமைச்சர் முதலியவருடன் அமர்ந்திருக்கும்போது ஒரு வீரன் வந்து வடநாட்டிலிருந்து தங்களைக் காண வந்திருக்கிறார்கள் வரவிடவோ? என்றான். அரசன் உடனே அவர்களை மடக்கிப் போட்டு அவர்கள் இன்னார் என்பதை ஆராய்க என்று கூறினான். அந்தச் சொற்களை அரசன் கூறி முடிக்குமுன் வீரன் அவர்கள் தமிழ்பேசும் துறவிகள் என்றான் நடுக்கத்தோடு. அரசனும் நடுங்கி, துறவிகளை நோக்கி ஓடினான்; வணங்கி நின்றான். உலகின் பொருளாசை எல்லாம் துறந்தும் தமிழ் துறவாத துறவோர்களே யானிருக்கும் இந்தப் பாடி வீட்டின்படி மிதித்த உங்கள் அடி வாழ்க என்று அழைத்துச் சென்று இருக்கை தருதல். முதலிய சீர் செய்து நின்றபடி என்னிடத்தில் நீவிர் காட்டும் திருவருள் என்ன என்று கேட்க, மன்னர் மன்னா அங்குள்ள தமிழரின் துன்பத்தைக் கேட்டால் ஆர் வருந்தமாட்டார்? அங்கு நீவிர் கல் கொணரச் செல்கின்றீர். அச் செயலை முடிக்க! அங்குள்ள தமிழரின் குறைபாட்டையும் கேட்க, குலம் ஒன்று. தெய்வம் ஒன்று, என்பதான தமிழர் கொள்கைக்குப் புறம்பாகக் குடி ஏறியவர்கள் இன்று தம் நலத்திற்காகப் பல்லாயிரம் தெய்வங்களைப் பேசுகின்றார்கள். பன்றி ஒரு தெய்வமாம்; நாயும் அப்படித்தானாம். அவைகளின் பச்சையூன் அவைகள் கொடுக்க இவர்கள் உண்பதால்! என்றைக்கு இத்தீயொழுக்கம் திருந்தும்? நம் இனத் தமிழர் அங்கே என்றைக்கு மகிழ்ந்திருப்பார்? என்றார்கள். குடக்கோமான் உணவருந்தி அமைச்சர் யாரும் கொண்டாட வீற்றிருக்கும் போதில்,ஐயா வடக்கிருந்து வந்துள்ளார் காண்ப தற்கு வரவிடவோ? என்றொருவன் வணங்கிக் கேட்க மடக்கிவைத் தாராய்க என்று மன்னன் வாயெடுக்கத் தமிழ் பேசும் துறவோர் என்று நடுக்குற்றே அவன்சொல்ல வேந்தர் வேந்தும் நடுக்குற்றான் ஓடினான் வணங்கி நின்றான் 216 குடக் கோமான் - மேற்கு நாட்டு அரசன், செங்குட்டுவன்; குடக்கு - மேற்கு. மேற்கு நாடு என்பது கருவூர், வஞ்சி எனப்படும். மடக்கி வைத்து ஆராய்க என்றது அவன் பகைவனின் உளவாளியாக இருக்கலாம். அவன் இன்னான் என்பதை ஆராய்ச்சி செய்வீர்கள் என்றதாம், மடக்கி-திரும்பிச் சென்றுவிடாமல் ஒருபால் இருத்தி, வாயெடுத்தல் - சொல்லத் தொடங்குதல்; சொல்லமுடியாத நிலை என்றபடி. வடக்கிருந்து வந்துள்ளார் எனச் சொல்லிய அளவில் வெகுண்ட மன்னன் தமிழ் பேசும் துறவோர் என்றவுடன் நடுங்கினான். அவர்களை நோக்கித்தானே ஓடினான். வணங்கினான் என்பது காண்க. பார்துறந்தும் தமிழ்துறவாத் துறவீர் என்றன் படிமீதில் அடிவாழ்க என்ற ழைத்துச் சீர்புரிந்து நின்றபடி என்பால் என்ன திருவருளோ எனக்கேட்கமன்னர் மன்னா ஆர்வருந்தார் அங்கிருக்கும் தமிழர் கொண்ட அல்லல்சொல் லக்கேட்டால்? கற்கோள் எண்ணாத் தேர்பரிகா லாள்யானை சேரச் சென்று செயல்முடிப்பீர் தமிழர்களின் குறையும் கேட்பீர் 217 அடுத்து வரும் செய்யுளின் என்றார் என்பதில் முடியும். பார் துறந்தும் தமிழ் துறவாத் துறவீர் - உலகின் எப் பொருளிடத்தும் உண்டாகும் பற்றெல்லாம் துறந்தும் தமிழ்ப்பற்று ஒன்று மட்டும் துறவாத துறவிகளே. பார் - உலகு. உலகப்பற்றுக்கு ஓர் ஆகுபெயர். என்றன் பாடி என்றது யான் இங்கிருக்கும் பாடி வீட்டின் தலை வாயில் என்றவாறு. சீர்புரிதல் - இருக்கை தரல், நலம் கேட்டல் முதலியவை. என்பால் என்ன திருவருளோ - என்னிடத்தில் கொண்ட திருவருள் என்னவோ; என்ன கருதி வந்தீர்கள் என்றபடி. ஆர் - யார் என்பதன் மரூஉ; கற்கோள் - கல்கோள், கல் கொள்ளுவது; குறை - குறைபாடு. ஒன்றன்று பலகுறைகள் உண்டு நீவிர் உயர் தமிழர் யாவர்க்கும் காட்சி தந்து நன்றொன்று செய்வீரேல், நன்றாம் என்றார் நகை ஒன்று புரிந்தரசர்க் கரசன் அந்தப் பன்றியுண்பார் கண்காணத் தமிழர் கட்குப் பரிவொன்று காட்டுவது கடமை என்றான் என்றென்றும் வாழியவே வேந்தே என்றே இரும் என்று சென்றார்கள் துறந்த மேலோர் 218 ஒன்றல்ல பல குறைபாடுகள் உண்டு என்பார் ஒன்றன்று பல குறைகள் உண்டு என்றார். உயர் தமிழர் யாவரும் உன்னை அங்குக் காண வருவார்கள். நீங்கள் அவர்கட்குக் காட்சி தருவதான நன்மை ஒன்றைச் செய்தல் வேண்டும். என்று கூறினார் என்க. நகை ஒன்று புரிதல் - ஒரு தன்மையாக நகைத்தல். தமிழர்க்கு நானா காட்சி தரமறுப்பவன் என்றபடி. தமிழர்க்குப் பரிவு - தமிழர்க்குப் பரிந்து ஒரு காரியம் செய்யும் தன்மை; இரும் - இருங்கள். இயல் - 74 குட்டுவன் ஒருவிரலை அசைத்தான். அதுகண்ட வீரர் சிலர் ஓடிப் பறையறைந்தார். சங்கொலி செய்தனர். அக்கணமே நாற் படையுள்ளோரும் வரிசையாக உண்டு (ஆயிற்று) என்று கூறுவது போலே நின்றார்கள். மன்னன் தேரில் ஏறி ஏறுக என்று கூறிய அளவில் பழநாள் தொட்டுத் தமிழ் மறவர் பாடுகின்ற படைப்பாட்டுக்குத் தக்கபடி நடை போட்டார் படை வீரர் எவரும். தமிழர்க்குப் பகையானோர் வாழ்வதெங்கே? தப்பி வாழ்ந்தாலும் அவர்களின் தலைகள் அறுபட்டுக் குவியாதா? சங்கே ஊது! தமிழ ராகிய எமை நத்திப் பிழைக்காத நிலைமையில் அவர்கள் துணைக்கு எங்கே போவார்கள்? இடருற்றுக் கெட்டுப் போவார்கள் சங்கே ஊது! நீர்மேற் குமிழ் போல நிலையற்றுத் திரிவார்க்கு வாழ்வும் ஒன்றா? பெரிய வெற்றியுடைய வெண்கொற்றக் குடையுடையாரே சேரர் அல்லவா? தமிழின் வெற்றித் திருநாள் வாழ்க என்று எட்டுத் திசையும் கேட்கச் சங்கே ஊது. இவ்வாறு படை சென்றதாகக் கங்கையாற்றைக் கண்டனர். அங்குள்ள நண்பர் ஆன நூற்றுவர் கன்னர் கொண்டுவந்த ஓடத்திலேறி அக்கரையிலுள்ள பகைவர் நாட்டில் புகுந்து நல்ல வகையில் அமைத்த பாசறையில் அமைதியுற்றிருந்தார்கள். இவ்வாறு தங்கியதைக் கனகவிசயரும் அவருடன் உள்ள மன்னரும் இங்கு அந்தத் தமிழர்களின் ஆற்றலைக் காண்போம் என்றார்களாம். அது கேட்டுத் தமிழரசும் நன்று என்றானாம் - என்பன இவ்வியலிற் காண்க. வண்கொங்கர் ஆடல்கண்டும் திறைகள் பெற்றும் மன்னன்தான் விரல்அசைக்க வீரர் சில்லோர் கண்டனர்போய்ப் பறையறைந்தார் சங்கெ டுத்தார் கணம்ஒன்றில் வரிசையுற நாற்ப டைகள் உண்டென்றார் போல்நின்றார்.மன்னர் மன்னன் ஒருதேரில் ஏறினான் ஏறு கென்றான் பண்டுமுதல் கொண்டு தமிழ் மறவர் பாடும் படைப்பாட்டில் நடைபோட்டார் வீரர் யாரும் 219 சங்கெடுத்தார் - சங்கு எடுத்தார் - சங்கை முழங்கினார். உண்டு என்றார் போல் நின்றார் - ஆம் அவ்வாறே ஆயினும் என்று சொல்லினர் போல வரிசை யுற்று நின்றார்கள். ஏறுக - என்றான் - ஏறு கென்றான் அகரம் தொகுத்தல். ஏறுக - முன்னேறுங்கள். படைப்பாட்டில் - படைப்பாட்டிற்குத் தக்க படிஒற்றுத் தவறாமல். தனதத்தத் தன தானா தான தந்தா தனதத்தத் தனதானா தான தந்தா தமிழர்க்குப் பகையானோர் வாழ்வ தெங்கே? தலையற்றுக் குவியாதோ ஊது சங்கே எமை நத்திப் பிழையாதார் போவ தெங்கே. இடருற்றுக் கெடுவாரே ஊது சங்கே! குமிழொத்துத் திரிவோரே வாழ்வும் ஒன்றோ? பெருவெற்றிக் குடையாரே சேரர் அன்றோ? தமிழ் வெற்றித் திருநாளே வாழ்க என்றே திசை எட்டப் படிமீதே ஊது சங்கே 220 எமை நத்திப் பிழையாதார் - பிறரை நத்திப் பிழைப்போம் என்னும் பகைவர். படி - உலகம். கங்கையாற் றைக்கடந்தார் நண்பர் ஆன கன்னயநூற் றுவர்கொணர்ந்தே ஓட மேறி அங்குள்ள பகைநாட்டிற் புகுந்து நன்றே அமைத்த ஒரு பாசறையில் இனிதி ருந்தார் தங்கியது கேட்டார்கள் ஆரி யர்க்குத் தலைவராம் கனகவிச யர்கள், மன்னர்! இங்கிந்தத் தமிழர்களின் ஆற்றல் காண்போம் என்றாராம் தமிழரசும் நன்றென் றானாம் 221 கடந்தார் - செங்குட்டுவனும் பிறரும், நண்பர் - செங்குட்டுவன் நண்பர். நன்றே அமைத்த பாசறை - தக்கபடி அமைத்த பாசறை, இனி திருந்தார் - மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். இங்கு - நம் நாடாகிய இவ்விடத்தில், என்றாராம் - என்றானாம் என்பவை சொல்லக் கேள்விப்பட்டார் என்றபடி மற்றதும் அப்படி. இயல் - 75 ஆரிய நாட்டரசர் பலரின் படையினரும், கனகவிசயர் படையினரும் ஒன்றாகக் கடல் போல் ஆகிப் போர்ப்பறையும் சங்கும் முழங்க, அந்நிலை கண்ட பல நாட்டினரும் இவ்வுலகத்திற்கு ஆரியர் தலைவராவாரா? தமிழர் தலைவர் ஆவாரா என்று கூறினார்கள். சேரர் படை அவர் படைமேல் புகுதல் கண்டார். சேரர்படை நடுவிலிருந்து ஓர் சிங்கம் புகக் கண்டார் ஆரியப் படை நடுவில். ஆரியர் எடுத்த வாளும், தமிழர் எடுத்த வாளும், ஆரியர் வாள்வீச்சும் தமிழரின் விரைந்த வீச்சும் தவறுதல் ஒன்றும் வீழ்ந்த தலை நூறும், ஆகச் சாய்ந்த குருதியில் மிதப்பதான பிணமலைகள்! எங்கே இவர்கள் கூட்டத்தோடு ஓடுகின் றார்கள் என்று துரத்தி ஓடுகின்றார்கள் வில்லேந்திய தமிழர்கள் ஒருபுறம். இவ்வாறு அரை நாளில் தமிழ்வெற்றித் திருநாளைக் கண்டார்கள் தமிழர்கள். கனக விசயர்கள் பக்கத்தவரான ஐம்பத்திரண்டு மன்னர்கள் தம் உருவத்தை மாற்றிக் கொண்டு ஒளிந்த வரும், சடை முடிகள் முகத்திலும் தலையிலும் ஒற்றிக் கொண்டவரும், கூரிய தம் அம்பினால் முகத்தில் கீறிக்கொண்டு அம்மா பிச்சை கொடுங்கள் என்று திரிகின்றவரும் ஆனார். மன்னனின் நேரில் கனக விசயர்கள் கட்டி நிறுத்தப்பட்டார். பல பேர் போவீர்கள் என்று துரத்தப்பட்டார்கள் - என்பன இவ்வியலிற் காண்க. ஆரியநாட் டரசர்களின் படைவீ ரர்கள் கனகவிச யர்படையோ டொன்று சேர்ந்து போரிடுவார் திரைகடலே போன்றார். சங்கும் போர்ப்பறையும் முழங்கினார் முழக்கம் கேட்டே ஆரியரா? தமிழர்களா? வைய கத்தை ஆளுவோர் யார்என்றார் பன்னாட்டாரும்! சேரர்படை புகக்கண்டார் தேரி னின்றே சிங்கமொன்று புகக்கண்டார் பகைப்ப டைக்குள் 222 இந்தப் போரில் ஆரியர் வென்றால் உலகாளுவோர் ஆரியர். தமிழர் வென்றால் உலகாளுவோர் தமிழர். ஆதலால் வையகத்தை ஆளுவோர் யார் என்று கூறினார்கள் பல நாட்டினரும் என்க. பன்னாடு - பலநாடு, சிங்கம் - செங்குட்டுவன். அவர்வாளும் தமிழ்மறவர் எடுத்த வாளும் அவர் வீச்சும் தமிழ் மறவர் விரைந்த வீச்சும் தவறொன்றும் வீழ்ந்ததலை நூறும் ஆகச் சாய்குருதி மிதப்பனவாம் பிணம லைகள்! இவர் எங்கே ஓடுகின்றார் கூட்டத் தோடே எனத்தொடர்வார் வில்லேந்து தமிழர் ஓர்பால்! அவன்கனகன் அவன்விசயன் என்பார் ஓர்பால்! அரைநாளில் தமிழ்வெற்றித் திருநாள் கண்டார் 223 அவர் வாளும் தமிழர் வாளும், அவரின் வாள் வீச்சும் தமிழரின் வாள்வீச்சும் தவறு ஒன்றைப் பெற்றது. அதனால் அறுந்த தலை நூற்றைப் பெற்றது. இந்நிலை அடையவே அங்குச் சாய்ந்த செந்நீரில், பிண மலைகள் மிதப்பன ஆயின என்பன முதலிரண்டு அடிகளின் கருத்து. ஒரு பக்கம் இவர்கள் கூட்டத்தோடு எங்கே ஓடுகின்றார்கள் என்ற குரல் கேட்கப்படுகின்றது. மற்றொரு பால் அவன் கனகன்; அவன் விசயன் என்ற கூச்சல் கேட்கப் படுகின்றது. இவ்வாறாக அரைநாளில் தமிழர் வெற்றித் திருநாள் ஏற்படுத்தினார்கள். என்பன பின் இரண்டு அடிகளின் கருத்தாகக் கொள்க. ஓரைம்பான் இருமன்னர் உருவம் மாற்றி ஒளிந்தவரும் சடைமுடிகள் ஒற்றி னோரும் கூரம்பால் முகம்கீறி அம்மா பிச்சை கொடுப்பிரெனத் திரிந்தோரும் ஆனார். மன்னன் நேரந்தக் கனகவிச யர்கள் கட்டி நிறுத்தப்பட் டார். பல்லோர் துரத்தப் பட்டார் ஆரங்கே வில்லவன்கோ தைகற் கொள்க கங்கைநீ ராட்டுவிழா முடிக்க என்றான். 224 ஓரைம்பான் இருமன்னர் - ஐம்பத்திரண்டு ஆரிய மன்னர், சடை முடிகள் ஒற்றினோர் - துறவு கொண்டோர்போல் காட்டிக் கொள்ளச் சடை முடிகளை முகத்தில் ஒட்டவைத்துக் கொண்டோர். ஆரங்கே - வெறுக்கத் தக்கவர்யார் இருக்கின்றார்கள் என்றபடி. கற் கொள்ள - இமையமலையில் கல் ஒன்று கொள்ள. கங்கை நீராட்டு விழா முடிக்க - கங்கையில் நீராட்டுவதோர் விழாவை முடித்திடுக. நேரந்த - நேர் அந்த. இயல் - 76 இமையத்தினின்று எடுக்கப்படும் கல்லைச் சுமப்பதற்குக் கனகனையும் விசயனையும் கையோடு கூட்டிக் கொண்டு தமிழ் வீரர் அனைவரோடு வில்லவன் கோதை இமயமலை யடைந்தான். அங்குச் சென்ற வேலையை முடித்துக்கொண்டு கனகவிசயர் தலையில் அந்தக் கல்லை ஏற்றி மற்றும் அவர்கட்கு உதவியாக சில வீரரையும் உதவினான். கல்லைக் கங்கையில் ஆட்டி வில், கயல், புலி ஆகிய கொடிகளோடு சங்கு ஒலிக்கப், பறை முழங்க, ஆடல் பாடல் தொடர நால்வகைப் படையும் உடன்வரப் புகழ் மிக்க வில்லவன் கோதையுடன் என் செய்வோம் என்று அழுதபடி விசயனும் கனகனும் கல்சுமந்து அங்கங்கு நின்று வருகின்ற ஊர் வலத்தில் எங்குள்ளோரும் ஆரியம் தோற்றது தமிழ் வென்றது என்று கூறினார்கள். இவ்வாறு ஊர்வலம் வந்து கொண்டிருக்கையில் பாசறையில் இருந்த செங்குட்டுவன் வடக்கில் வாழ் தமிழ்ப் பெரியோரை வரவேற்றுப் பேசும் போது, தமிழ் நெறியின் உயர்வையும் பிறர் போக்கின் சிறுமையையும் எடுத்துக் காட்டித் தலை வெட்டப்பட்டு வீழும் போதும் தமிழரின் நாக்கு, வெல்க தமிழ் என்று கூற வேண்டும். என்பதை உணரும்படி செய்து வரும் ஊர் வலத்தை அருகில் ஓடி வரவேற்று வாழ்க என்று கூறினான் - என்பன இவ்வியலிற் காண்க. கனகனையும் விசயனையும் கல்சு மக்கக் கையோடு கூட்டியே தமிழ வீரர் அனைவரொடும் இமயமலை தனைஅ டைந்தான் அறிவமைச்சன் வில்லவன்கோ தைதான் அங்கு வினைமுடித்தே அவர்தலையில் கல்லை ஏற்றி வீரரையும் உதவிக்குக் கங்கை ஆட்டிப் புனைவில்லும் பொற்கயலும் புலியும் வானின் பூண்எ ன்ன நீள்கொடிகள் மின்னைச் செய்ய 225 சங்கொலிக்கப் பறைமுழங்க ஆடல் பாடல் கதையுரைக்கப் பரியானை தேர்கா லாட்கள் பொங்குகடல் நடந்ததெனப் புகல வையப் புகழ்சுமந்த வில்லவன்கோ தைதன் னோடும் எங்குள்ளோ ரும் காணக் கற்சு மந்தே என்செய்வோம் எனக்கனக விசயர்கூற அங்கங்கு நின்றுவரும் ஊர்வ லத்தில் ஆரியம்தோற் றதுதமிழே வென்ற தென்பார் 226 வினை முடித்தல் - உருவமைக்க ஏற்ற கற் காணலும் வெட்டி எடுத்தலும். வீரரையும் உதவுவித்து - இருவர் மட்டும் சுமக்க இயலாதென்று போர் வீரர் சிலரையும் உதவியாகச் சுமக்கும்படி செய்து, உதவு வித்து - பிறவினை, கங்கை ஆட்டி - கல்லைக் கங்கை நீரில் அமிழ்த்துக் கழுவி. வானின் பூண் - வானுக்கு அணி, ஆடல் பாடல் கதையுரைத்தல் - ஆடலும் பாடலும் கல் காணும் வெற்றி வரலாற்றை உரைத்தல். புகல - எல்லாரும் சொல்லும்படி என்றார். எங்குள்ளோரும் அங்கிருந்த படியே கூறினார்கள். பாசறையில் குட்டுவன்தான் வடக்கில் வாழும் பைந்தமிழப் பெரியோரை வரவேற் றுப்பின் பேசுகையில் தமிழ்நெறியின் பெற்றி கூறிப் பிறர்போக்கின் சிறுமையினை எடுத்துக் காட்டி வீசுதலை விழும்போதும் தமிழர் நாக்கு வெல்கதமிழ் எனவேண்டும் எனவு ணர்த்தி ஆசையுடன் வருகின்ற ஊர்வ லத்தை அருகோடி வரவேற்று வாழ்க என்றான். 227 பெற்றி - உயர்வு, பிறர் போக்கு - பிற இனத்தவரின் வாழ்க்கை முறை, சிறுமை - தாழ்வு, அருகோடி - அருகு ஓடி. ஆசையுடன் என்பதை அருகோடி என்பதோடு இணைக்க. இயல் - 77 வஞ்சியில் மகளிர் இல்லத்தில், இளங்கோ வேண்மாள் வஞ்சி நாட்டுக்கு வரவில்லை என் மணாளன். மங்கை எனக்கும் அவன் முகம் காட்டினானில்லை. கஞ்சிக்கு வழியின்றித் தேள் ஒன்றும் கொட்டப் பெற்றுக் கலங்குகையில் கடன்காரன் வந்தாற்போல என் நெஞ்சுக்கு நெருப்பாக வந்து தோன்றிய வட்ட நிலாவுக்கு நான் தப்புவது எளிதா? தோழியே என் உடம்பு பற்றி எரிகின்றதே என்று துடித்தாள். இந்த மாலைப் போது எதற்காகத் தென்றலை அனுப்பிற்று. மல்லிகைப் பூ எதற்காக நறுமணத்தை என்னுடன் அனுப்பிற்று. கடலேன் முழக்கத்தை அனுப்பிற்று: சோலைதான் குயிலின் பண்ணை எதற்காக அனுப்பிற்று. நான் வருகிறேன் என்று ஓர் ஓலைதான் என் அன்பனிட மிருந்து வரவிட்டால் இவைகள் நடத்தும் இந்த வேலைகள்தான் செய்யுமா? தோழி சொல் என்று அழுதாள். மண்ணுக்கு மாணிக்கம் தேவை, மாதர் மனத்திற்குக் கற்பொழுக்கம் தேவை, காணப்படுகின்ற வானத்திற்கு வெண்ணிலவு தேவை. வீட்டிற்கு மணி விளக்குத் தேவை. அதுபோல் என் கண்ணுக்குக் கண்ணாளன் அவன் தேவை. காதற் கனலுக்கும் புனல் அவன் என்று வருந்தினாள் - என்பன இவ்வியலிற் காண்க. வஞ்சிக்கு வரவில்லை என்ம ணாளன்! மங்கைக்கு முகம்காட்ட எண்ண வில்லை! கஞ்சிக்கு வழியில்லான் தேளுங் கொட்டக் கலங்குகையில் கடன்காரன் வந்தாற் போல்என் நெஞ்சுக்கு நெருப்பாக வந்த வட்ட நிலவுக்குத் தப்புவதும் எளிதோ தோழி? பஞ்சுக்கு நிகரான என்உ டம்பு பற்றிற்றே எனத்துடித்தாள் இளங்கோ வேண்மாள் 228 வஞ்சிக்கு - வஞ்சி நாட்டிற்கு, மங்கை என்றது தன்னை. நெஞ்சுக்கு நெருப்பாக - என் நெஞ்சத்தையே சுடத் தக்க நெருப்பாக நிகரான - ஒப்பான, பற்றிற்றே - பற்றி எரிகின்றதே, இளங்கோ வேண்மாள் - செங்குட்டுவன் மனைவி. மணவாளன் என்பதன் மரூஉ மணாளன். மாலைதான் ஏன்அனுப்பும் தென்றற் காற்றை? மல்லிகைதான் ஏன் அனுப்பும் நறும ணத்தைச்? சோலைதான் ஏன்அனுப்பும் குயிலின் பண்ணைத்? தொல்கடல்தான் ஏன்அனுப்பும் பெருமு ழக்கை? ஓலைதான் வருகின்றேன் எனஎன் அன்பன் ஒன்றுதான் வரவிட்டால் அவை நடத்தும் வேலைதான் செல்லுவதும் உண்டோ தோழி விளம்பாயோ எனஅழுதாள் இளங்கோ வேண்மாள் 229 மாலை - மாலைப் போது. காதலனைப் பிரிந்த காதலிக்குத் தென்றலும் நறு மணமும் குயிலின் பண்ணும் கடல் முழக்கும் துன்பம் செய்வன. அவ்வாறு துன்பத்தை எனக்குச் செய்யட்டும் என்று தானே மாலைப் போதும் மல்லிகையும் சோலையும் கடலும் அவற்றை என்னிடம் அனுப்பின என்பாள் இவ்வாறு கூறினாள். நறுமணம் - இனிய மணம். தொல் கடல் - பழமையான கடல், விளம்பாயோ - சொல்ல மாட்டாயா? மண்ணுக்கு நன்மணிகள் வேண்டும் வைய மகளிர்க்குக் கற்பொழுக்கம் வேண்டும் காணும் விண்ணுக்கு வெண்ணிலவு வேண்டும் வாழும் வீட்டிற்குச் சுடர்விளக்கு வேண்டும் நல்ல பண்ணுக்கு மூன்றுதமிழ் வேண்டும் நீர்சூழ் பாருக்கு நல்லோர்கள் வேண்டும் என்றன் கண்ணுக்குக் கண்ணாளன் சேரர் தோன்றல் கட்டாயம் வேண்டுமென்றாள் இளங்கோ வேண்மாள் 230 நன் மணிகள் - வயிரம் முதலியவை. பண் - பாட்டு, பார் - உலகு. வைய மகளிர் - உலகிலுள்ள பெண்கள். மூன்று தமிழ் - மூன்றாக அமைந்த தமிழ். அவை இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ். இயல் - 78 மேலும் இளங்கோ வேண்மாள் தன் தோழியை நோக்கி யார் வந்து என்ன கேட்டாலும் இல்லை என்னாத குடியிற் பிறந்தவள் நீ, ஊரில் வந்தும் தெரு வெல்லாம் திரும்பி வந்தும் ஊர்வலத்தை முடித்து வருகின்ற என் கண்ணாளரின் தேர் வந்ததா? சென்று பார்த்து வந்து சொல்லேடி என்று நான் கூறினால் அதன்படி செய்யாமல் என் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நிற்கின்றாய். இப்படிச் செய்ய உனக்கு மனம் வந்ததா? என்று கேட்டாள். மேலும், அவர் வராத நேரம் அனைத்தும் எனக்குத் துன்ப நேரம். அவர் என் தோளைச் சேராத நேரம் என் உயிரினுள் தீராத நோய் இருந்து திருகும் நேரம். அவர் வரும் வழி மேற்சென்று பார்த்துவர மாட்டாயா? அவரைக் கையோடு பிடித்துவர மாட்டாயா என் நிலை? அழிவு நிலை என்று கூறினாள். அதே நேரம் பூவை (நாகண வாய்ப்புள்) மிகுதியாகப் பேசியதால் அது இருக்கும் கூட்டில் ஓடிப்புகும்படி பூப்போன்ற கையை நீட்டும் வேளையில் பூவை மறைத்தது போல பின்னிருந்து அவளின் முகப் பூவை இரு கைகளாகிய பூவால் மறைத்தபடி குட்டுவனும், நான் யார்? என்றான். அவள் அகமாகிய பூவில் வீற்றிருப்பவர்தாம் என்றாள். தாமரை இதழ் போன்ற அவள் உதட்டில் ஐந்து முத்தங்கள் வைத்தான் - என்பன இவ்வியலிற் காண்க. யார்வந்து கேட்டாலும் இல்லை என்னா இசைவந்த குடிவந்த பெண்ணே இந்த ஊர்வந்தும் தெருவெல்லாம் திரும்பி வந்தும் ஊர்வலத்தை முடித்துவரும் கண்ணொப் பாரின் தேர்வந்த தாஎன்று பார்போய்; வந்தால் திரும்பிவந்து சொல்லேடி என்றால், என்றன் நீர்வந்த கண்துடைத்து நிற்கின் றாயே நெஞ்சு வந்த தாஎன்றாள் இளங்கோ வேண்மாள் 231 இசை வந்த - புகழ் அமைந்த, நெஞ்சு வந்ததா - மனம் வந்ததா? நெஞ்சுஉவந்ததா எனப் பிரித்து இப்போதுதான் உனக்கு மனம் மிக மகிழ்ந்தது போலும் என உரைப்பினும் ஆம். வாராத நேரமெலாம் துன்ப நேரம் வாராயே கண்ணாட்டி என்றன் தோளைச் சேராத நேரமெல்லாம் உயிரி னுள்ளே தீராத நோயொன்று திருகும் நேரம் பாராயோ அன்னவரை வழிமேற் சென்று? பற்றித்தான் வாராயோ பற்றி லாரை? ஆராயா திருந்தாயே என்நி லைதான் அழிவுநிலை என்றுரைத்தாள் இளங்கோ வேண் மாள் 232 திருகும் நேரம் - துன்புறுத்தும் நேரம். காலம் தாழ்த்து வருவது கருதி பற்றில்லார் என்றாள். மிகப்பூவை பாடியதால் கூட்டில் ஓடி மெல்லிஎனைக் கொல்வதுமுன் கருத்தா என்றே புகப்பூவை நிகர்கைகள் நீட்டும் போதில் புதுநிலவை முகின்மறைத்த தெனப்பின் நின்று முகப்பூவை இருகைப்பூ வால்ம றைத்தே முந்துபுகழ் குட்டுவன்தான்நான்யார் என்றான் அகப்பூவில் வீற்றிருப்பார் என்றாள் வேண்மாள் அல்லிப்பூ இதழ்முத்தம் ஐந்து வைத்தான் 233 மிகப்பூவை பாடியதால் - பூவை மிகப்பாடியதால் எனமாற்றுக. பூவை நாகண வாய்ப்புள்; இந் நாள் இதனை மைனா என்று கூறுவர். புகப் பூவை நிகர் கைகள், - கூட்டில் புகும்படி பூவைப் போன்ற கைகள், முகப்பூ - மன்னியின் பூப்போன்ற முகம், இரு கைப்பூ - மன்னனின் இரண்டு கையாகிய பூ. நான் யார் - இவ்வாறு உன் முகத்தை மறைத்தவனாகிய நான்யார், அகப்பூ - நெஞ்சமாகிய மலர், அல்லிப்பூ - அக இதழ் சிறந்ததாமரை, அல்லி - அகவிதழ். புல்லி - புறவிதழ். இதழ் முத்தம் - இதழில் முத்தம். இயல் - 79 அதன்பின் கண்ணகிக்குப் புகழ்க்கல் எடுத்துப் போனீர்கள். பின்பு அங்கே நடந்ததென்ன என்று இளங்கோ வேண்மாள் கேட்கத் தன்படையின் திறத்தையும் நடந்தவற்றையும் விரிவாகக் கூறிக் கனக விசயனின் தலைமேல் கல்லேற்றி வந்த செய்தியைப் பாண்டியற்கும் சோழற்கும் சொல்லியனுப்பினேன் என்று செங்குட்டுவன் சொன்னான். அது கேட்ட மன்னி மதுரை, புரட்சிக்கு உட்பட்டதே. பிறகு அது பொலிவு பெற்றதுண்டோ? பாண்டிய மரபில் வந்தோன் இருக்கின் றானோ எனக் கேட்க. கொற்கையில் வாழ்ந்திருந்த பாண்டியன் வெற்றி வேற் செழியன் எரியுண்ட மதுரையைப் புதுக்கி மக்கள் இடையூறின்றி வாழும்படி செய்துவருகின்றான். இதை மாடலன் என்னிடம் கூறினான். தமிழின் வேர் இருக்கிறது. உலகும் இருக்கிறது. ஆதலால் தமிழ் இருக்கின்றது எனக் கூறினான். பெருமை மிக்க கண்ணகி கோவலன் ஆகியோரின் தந்தைமார் துறவுபூண்டனராம். தாய்மார் இறந்து போனார்களாம். இவ்வாறு மாடலனே கூறினான். என்று செங்குட்டுவன் செப்ப நும் சீர் வாழ்க! வருக நீராடுவீர்! mKJ©Õ®!என்று மன்னி யழைக்க, நன்றென்று மன்னன் சென்றான் - என்பன இவ்வியலிற் காண்க. பூம்புகார் பூவைக்குப் புகழெ டுக்கப் போனீரே பின்னடந்த தென்ன என்று பாம்புகார் சடைக்குழலி கேட்டாள். ஆங்கே படைச்செயலும் நடப்பெவையும் விரித்து ரைத்து வேம்பிகா ராத்திபுனை தமிழ் வேந்தர்க்கும் விற்சுமந்த பகைவர்தாம் கற்சு மந்து தாம்புகார் எனினும் அவர் புகுந்த செய்தி சாற்றுகென ஆள்விட்டேன் என்றான் மன்னன் 234 பூம்புகார் - அழகிய காவிரிப்பூம்பட்டினம், பூவைக்கு - கண்ணகிக்கு, புகழெடுக்க - புகழை விளக்குகின்ற கல்லெடுக்க. பாம்புகார்ச் சடைக் குழலி - பாம்புபோல் நீண்டதம் கார்போல் கரு நிறமுடையதுமாகிய சடை பின்னப்பட்ட கூந்தல் உடைய இளங்கோ வேண்மாள். பாம்பு - சடைக்கும் கார் குழலுக்கும் உவமை. கார் - மேகம், வேம்புகார் ஆத்திபுனை தமிழ் வேந்தர் - வேப்பமாலையையும் ஆத்திமாலையையும் புனைந்த தமிழ் வேந்தராகிய பாண்டியன் சோழன், வேப்பமாலை பாண்டியனுக்குரியது. ஆத்திமாலை சோழனுக்குரியது, கார் ஆத்தி - தேன் மழை பொருந்திய ஆத்தி, கார் - மழை, ஆத்தி மலரின் தேன் மழை என்க. தாம்புகார் - தாம்புகமாட்டார்கள். எனினும் புகுந்த சேதி - என்றாலும் எனக்கு அஞ்சிப் புகுந்த அரிய செய்தியை பீடுறுகண் ணகி கோவலன் தந்தைமார் பெருஞ்சிறப்புத் துறவடைந்தார்! இருவர் தாய்மார் நீடுமகிழ் சிறப்புலகைச் சேர்ந்திட் டாராம் நெடியமுடிச் சோழனவன் ஆட்சி நன்றாம் மாடலனே இவ்வாறு சொன்னான் என்றான் வாழியவே நம்சீர்த்தி வருக வேநீர் ஆடிடுவீர் அமுதுண்பீர் என்று மன்னி அழைத்திட்டாள் மன்னவனும் நன்றே என்றான் 235 பீடுஉறு - பெருமை மிகுந்த, நீடுமகிழ் - நீண்ட மகிழ்ச்சி யுடைய, சீர்த்தி - புகழ், நீர் ஆடிடுவீர் - நீராடுக. அமுது - இனிதாகிய உணவு, அமுது - அமிழ்து; இனிமைக்கு ஆயிற்று. நன்றே என்றான் - நல்லது என்று அவளுடன் சென்றான். இயல் - 80 அரசியல் பெருமன்றத்தில் வந்தமர்ந்த குட்டுவனிடம் மெய்க் காப்பாளர் நீலன் முதலியவர்கள் வந்து நாங்கள் சென்று பாண்டியனா ரிடத்தும் சோழனாரிடத்தும் வடநாட்டிற் சென்று செய்தவற்றையும் கனகவிசயர் முடியிற்கற் கொணர்ந்ததையும் கூறினோம். அதற்கவர்கள், எம்மிடத்தில் தோற்றவர்தாம் கனகவிசயர்கள். அவர்களைக் குட்டுவனார் போருக்கிழுத்ததுவே சிறுமையாகும். அவர்கள் சேரர் தம்மிடம் தோற்றத்தில் வியப்பென்ன இருக்க முடியும். தோற்ற அவர்கள் மறைந்து ஓடினார்கள். அந்த நிலையில் அவர்களைப் பிடித்து அவர் தலைமேல் சும்மாடு கோலி வைத்துக் கல்லை ஏற்றி இங்குக் கொணர்ந்ததில் பெருமை யில்லை. எம்மிடம் கனகவிசயர் என்ற நாய்க்குட்டி கதையைச் சொல்ல வேண்டியதில்லை. என்று மெய்க்காப்பாளர் சொல்ல, அது கேட்ட குட்டுவன் மீனக் கொடியாராகிய பாண்டியனாரும் புலிக்கொடியாராகிய சோழனாரும் நம்மீது பொறாமை கொள்கின்றார்கள். கண்ணகிக்கும், கோவலனுக்கும் வறுமை உண்டாக்கவும், மற்றும் கோவலனுக்குச் சாக்காட்டை உண்டாக்கவும் செய்த ஆட்சியாளர்கள், அவ் விருவருக்கும் செய்யத்தக்கன செய்த என்னை இகழ்ந்தார் என்றால் கொடியவர்க்குப் புகழ்பாடக் கொடியவரே வேண்டும் போலும் என்று கூறினான் சேரன் செங்குட்டுவன் - என்பன இவ்வியலிற் காண்க. அரசியல்மா மன்றத்தில் குட்டு வன்தான் அமர்ந்திருக்க நீலன்முதல் மெய்காப்பாளர் வரலுற்றார்; வாழ்த்துரைத்துச் சொல்ல லுற்றார்; மன்னவரே பாண்டியர்பால் சோழனார்பால் வரிசையுற வடநாட்டுச் செலவும், கல்லை மன்னவராம் கனகவிச யர்சு மந்து வருமாறு புரிந்ததுவும் சொன்னோம் கேட்ட மன்னர் அவர் சொன்னவுரை நன்றன் றென்றார் 236 மாமன்றம் - பெரியமன்றம், வடநாட்டுச் செலவு - வடநாடு சென்றமை. நன்று அன்று என்றார் - நன்றன் றென்றார் எனப் புணர்ந்தன. எம்மிடத்தில் தோற்றவரை மீண்டும் போருக்(கு) இழுத்ததுவே சிறுமையாம் சேர வேந்தர் தம்மிடத்தும் அவர் தோற்றார் எனில்வி யப்போ! தலைமறையப் புறங்காட்டி ஓடி னோரைச் சும்மாடு தலைவைத்துக் கல்லை ஏற்றிச் சுமந்துவரச் செய்ததுவும் பெருமை தானோ? நம்மிடத்தில் கனகவி சயர்கள் என்ற நாய்க்குட்டிக் கதையுரைக்க வேண்டாம் என்றார்` 237 என்றார் - என்று பாண்டியன் சோழனாராகிய இருவரும் சொன்னார்கள். மெய்காப்பார் இது சொல்லக்கேட்ட வேந்தன் மீன்கொடியார் புலிக்கொடியார் பொறாமை கொண்டார் துய்யவரே வறுமைபெறச் செய்த ஆட்சி துடுக்காகக் கோவலனைக் கொன்ற ஆட்சி செய்தவர்கள், கண்ணகிக்கும் கோவ லற்கும் செயத்தக்க செய்தஎனை இகழ்ந்தா ரென்றால் வெய்யவர்க்கு வெய்யவரே புகழ்ச்சி பாட வேண்டும்போ லும்காணீர் என்று சொன்னான் 238 மெய்காப்பார் - குட்டுவனின் மெய்காப்பாளர். நீலன் முதலியவர்கள். மீன்கொடியார் - பாண்டிய மன்னர். புலிக் கொடியார் - சோழ மன்னர். பன்மையாற் சொன்னது இகழ்ச்சிக் குறிப்பு. துய்யவர் - கண்ணகியும் கோவலனும் வறுமை பெறச் செய்த ஆட்சியை யும். கொன்ற ஆட்சியை யும் செய்தவர்களாகிய சோழனும் பாண்டியனும். அவர் கட்குச் செய்யத் தக்கதைச் செய்த என்னை இகழ்ந்தார்கள். என்று சேரன் சொன்னது காண்க. வெய்யவர் - கொடியவர், காணீர் - அவையினரே அறிந்து கொள்ளுங்கள். இயல் - 81 மேலும் செங்குட்டுவன் வில்லவன் கோதை என்னும் தன் அமைச்சனிடம் கூறுவான். கல்லில் உருக்காட்டும் அக்கண்ணகியைக் காணவேண்டும்; விரைவில் பணி முடிக்கும்படி கல் தச்சரிடம் சொல்லிவைக்க; கல்நாட்டு விழா நாள் இன்னதென்று குறித்து எல்லா நாட்டு மன்னர்க்கும் எவர்க்கும் தெரிவிக்க; கனக விசயரை என்னெதிரில் வரவழைக்க என்று கூறினான். அவ்வாறு வந்து நின்ற இருவரையும் நோக்கி மலை கடலாகலாம் பொந்து குன்றாகலாம் பொழில் பாலையாகலாம் வெந்த இடம் நகரும் ஆகலாம். ஆனால், செந்தமிழின் உண்மை நிலை எந்த நாளும் சிறிதும் மாறாது இதை நீவிர் நினைவில் வைக்க. தேவர்க்கு உவப்பாகும் என்று கூறி ஆடுவெட்டும் சிறு செயலைத் தமிழரெல்லாம் வெறுக்கின்றார்கள். ஒருத்தி பல ஆடவரை மணப்பதைத் தமிழர்கள் கான்றுமிழ்கின்றார்கள். பிறப்பினால் அனைவரும் நிகர் என்பாரை எதிர்க்கும் ஆரியரைத் தமிழர்கள் எதிர்க்கின்றார்கள். கொலைஞனுக்கும் கழுவாய் உண்டு என்று பேசும் கயவர்களைக் கழுவேற்றச் சொல்வார்கள் என்றான் - என்பன இவ்வியலிற் காண்க. கல்லினில்அக் கண்ணகியைக் கற்பின் தாயைக் கண்ணுறுதல் வேண்டுநாம்! கற்றச் சர்பால் சொல்லிடுக விரைந்துபணி முடிக்கச் செய்க துய்தான கல்நாட்டு விழாநாள் தன்னை எல்லார்க்கும் தெரிவிக்க வருவார்க் கெல்லாம் எல்லாமும் முன்னேற்பா டாக்கி வைக்க வில்லவனே கனகவிச யர்கள் தம்மை விரைவினிலே வரவழைக்க என்றான் மன்னன் 239 கற்றச்சர் - கல்தச்சர், எல்லார்க்கும் - அயல் நாட்டு மன்னர்கள் உள் நாட்டு மக்கள் முதலிய அனைவர்க்கும், எல்லாம் - இருக்க நலங்காண ஆகிய எல்லா வசதியும், வில்லவனே - வில்லவன் கோதையே, கண்ணுறுதல் வேண்டும் - பார்க்க வேண்டும். வந்துநின்ற இருவரையும் வேந்தன் நோக்கி மலைஇருந்த இடமெல்லாம் கடலும் ஆகும்; பொந்துநின்ற இடமெல்லாம் மலையும் ஆகும்; பொழில்நின்ற இடமெல்லாம் பாலை யாகும்; வெந்துநின்ற இடமெல்லாம் நகரும் ஆகும்; விரிந்துநின்ற இடஞ்சுருங்கல் ஆகும்; ஆனால் செந்தமிழின் உண்மைநிலை எந்த நாளும் சிறிதேனும் மாறாது நினைவில் வைக்க. 240 பொந்து - நிலக்குழி, பொழில் - சோலை, பாலை - நீரும் நிழலுமற்ற பெரும் பரப்பு நிலம். வெந்து நின்ற இடம் - வெந்த நகரம், நகரம் ஆகும் - புது நகரம் ஆகும். தேவரென்றும் உவப்பென்றும் ஆடு வெட்டும் சிறுசெயலைத் தமிழரெல்லாம் வெறுக்கின் றார்கள் ஆவலுற்றே ஒருமகளைப் பலர்ம ணத்தல் அறம்என்னும் தீயாரை உமிழ்கின் றார்கள் யாவருமே பிறப்பினிலே நிகர்என் பாரை எதிர்ப்பாரைத் தமிழரெலாம் எதிர்க்கின் றார்கள். காவாத கொலைஞனுக்கும் கழுவாய் பேசும் கயவர்களைக் கழுவேற்றச் சொல்வார் என்றான். 241 தேவர் என்றும் - தேவர் என ஒரு வகையானவர் இருக் கின்றார் என்றும். உவப்பென்றும் - அவர்கட்கு உவப்பாகு மென்றும், காவாத கொலைஞன் - வாய்ப்பு நேர்ந்த இடத்துக் காக்க வேண்டியதிருக்க அதை விட்டுக் காப்பாற்றாத கொலை யாளி, கழுவாய் - இதை ஆரியர் பிராயச் சித்தம் என்பர். கொலைக்குற்றம் மட்டும் செய்தவனை இங்குக் குறிப்பிட் டிருந்தாலும் திருட்டு முதலிய பிற குற்றங்களையும் கொள்க. இயல் - 82 திருடித்தான் உயிர் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று ஒருவன் சொன்னால் அதை விட நான் செத்துத்தான் என் புகழைக் கொள்வேன் என்பவன் தமிழன். ஓர் இடர் ஏற்பட்டிருக்கிறது என்றால் அதனின்று நீங்கும் பொருட்டுத் திருடுவதும் நல்லதே என்பவன் ஆரியன். கண்ணில் ஏற்பட்டுள்ள குருடு என்னும் நோய்க்கு மருந்து தேடிக் கொண்டிருக்க நாய்கள்போலத் தமிழர்களை நோக்கிக் குரைப்பது நல்லதா? இன மாசை நீக்கி வாழுங்கள் என்று நான் பணித்ததாக உம் இனத்தார்க்குக் கூறுங்கள். அழகிய எம் தமிழ் நான்மறைகளைப் பார்த்து நீங்களும் மறை வரைந்தீர்கள். ஆயினும் அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றின் உண்மை காணவில்லை. அதனால் தமிழர் துணை மறைகள் செய்து தந்தனர். ஆயினும் சிறிதேனும் ஒழுக்க நெறி காணுகிலீர். எம்தமிழை எம்தமிழ் இலக்கியத்தை ஈடழித்து எம்தாய் நாட்டைப் பற்றிக் குந்தியுண்ணத் திட்டமிட்டீர். அதற்கு முன்னே உங்கள் குதிகாலைக் காத்துக் கொள்வீர் என்றான். தமிழரசர்களாகிய நாங்கள் பல நாட்டின் கண் உள்ள புலிகளையும் எலிகளாக்கி அவர்களைப் புறங்காட்டி ஓடும்படி எங்கள் திறங்காட்டி அங்கு மக்களை ஆளுவோர்க்கு ஆளும் அறங்காட்டித் திரும்பினோம்: அதுவன்றி அங்கே எங்கள் கொடிகளில் அழகு காணப்படவேண்டும் என்று எண்ணியதுண்டா? அங்குள்ள மக்களின் செல்வ நிழலில் ஒதுங்கியதுண்டா? குறுங்காட்டு நரிகளே போவீர்கள் உங்கள் நாட்டிற்கு என்றான். கனக விசயர்களாகிய அவ்வாரியரும் மன்னனைக் கும்பிட்டுச் சென்றார்கள் - என்பன இவ்வியலிற் காண்க. திருடித்தான் வாழ்ந்திடுதல் வேண்டும் என்றால் செத்துத்தான் புகழ்காப்பேன் என்று சொல்வோன் இருள்தீர்ந்த பழந்தமிழன்! ஆரியன் தான் இடரென்றால் திருடுவதும் நன்றே என்போன் குருடகல வடக்கரெலாம் மருந்துண் ணாமல் குக்கலெனத் தமிழர்களைக் குரைத்தல் நன்றோ! துகள்தீர்க என்றுநான் பணித்த தாகச் சொல்லுகபோய் திருந்தாஉம் இனத்த வர்க்கே 242 குக்கல் - நாய், உம், இனத்தார் - உம் இனத்தவராகிய ஆரியர்க்கு, பழந்தமிழன் - உலகந் தோன்றிய நாள் தொட்டு மேம்பட்டுவரும் தமிழன். அந்தமிழ்நான் மறைகண்டு மறைகண் டீர்கள் அறம்பொருளின் பம்வீடு காணு கில்லீர் செந்தமிழர் துணைமறைகள் செய்தும் தந்தார் சிறிதேனும் ஒழுக்கநெறி கண்டீர் இல்லீர் எந்தமிழை எம்மருமை இலக்கி யத்தை ஈடழித்தே எம்மன்னை நாட்டைப் பற்றிக் குந்தியுண்ணத் திட்டமிட்டீர் அதன்முன் உங்கள் குதிகாலைக் காத்துக்கொள் வீர்கள் என்றான். 243 அந்தமிழ் - அம் தமிழ், அழகிய தமிழ். முதலில் தோன்றிய எங்கள் தமிழ் நான் மறையைப் பார்த்து உங்கட்கு என ஒரு மறையை உண்டாக்கிக் கொண்டீர். என்பான் இவ்வாறு நான் மறை ... ... கண்டீர்கள் என்றான், துணை மறைகளை - ஆரியர் உப நிடதங்கள் என்பர். புறங்காட்டி ஓடிடவே பலநாட் டின்கண் புலிகளையும் எலிகளே ஆக்கி எங்கள் திறங்காட்டி ஆளுவதோர் அறமும் காட்டித் திரும்பினோம் அல்லால்எம் கொடியை அங்கே நிறங்காட்டச் செய்தோமா மக்கள் செல்வ நிழல்காட்ட ஒதுங்கியதும் உண்டா? தீய குறுங்காட்டு நரிகளே செல்க என்றான் கும்பிட்டுப் போனார்கள் ஆரி யர்கள். 244 பல நாட்டின் கண் புறங்காட்டி ஓடிடவே புலிகளையும் எலிகளே ஆக்கி எங்கள் திறங்காட்டி என மொழி மாற்றி யமைத்துப் பொருள் காண்க. பகையரசர் நாடுகள் பலவற்றை நாங்கள் வென்றதுண்டு. அங்கு எங்கள் கொடியைப் பறக்கச் செய்து அங்குள்ள செல்வத்தைப் பயன்படுத்திக் கொண்டு குந்தியுண்டு நாங்கள் நாள் கழிக்க நினைத்ததே இல்லை என்பான் இவ்வாறு கூறினான். குறுங் காட்டு நரிகளே என்றது கனக விசயர்களை. ஆரியர்கள் - கனக விசயர்கள். இயல் - 83 ஊரில் உலவியும், உறவினரைக் கண்டு உவந்தும் கண்ணகிக்கு இயற்றுகின்ற உருவக் கல், கோயில் பற்றிய பணிகள் விரைவில் முடிய முடிப்பார்க்கு ஊக்கமூட்டியும் தன் அரண்மனைக்கு வந்து இன்னடிசில் உண்டு முக்கனியின் சுவையினும் மேம்பட்ட பேரின்பத்தை அளிக்கின்ற வேண்மாளை அணைத்தபடி சென்று நிலா முற்றத்தில் விட்டுக் காதல் விழாப் பற்றிய உன் சொற்பொழிவை நடத்துவாய் என்று கூறினான் குட்டுவ மன்னன். பேச்சைத் தொடங்கு என்று மன்னன் சொன்னது கேட்ட இளங்கோ வேண்மாள், வெண்ணிலவு பேசிக்கொண்டே இருக்கும். வெண்ணில விற்கு இடந் தந்துள்ள விண்ணோ பேச்சொன்றுமில்லாமல் இருக்கும். இவற்றில் வெண்ணிலவு ஆவல் நிறைவுபெற்றதல்ல, விண்ணோ எல்லாம் நிறைய உடையது என்று கூறினாள். அதுகேட்ட மன்னன் உள்ளத்திலுள்ள காதலின் அளவில் ஆணும் பெண்ணும் ஒன்றுதான் என்று கூறினான். இல்லை பெண்ணுள்ளம் பெரியதொரு காதற்பேழை என்று சிரித்துச் சொன்னாள் வேண்மாள். மன்னன், பேரின்பத்தை நுகரும் காதல் துறையிலே காதலிக்குப் பேச்சு இல்லை என்றுதான் பெரியோர் சொல்வார். ஆயினும் இன்பம் என்பது ஓர் ஆடவன் பெண்ணிடத்தும், ஒரு பெண் ஆடவனிடத்தும் கிடைப்பது தவிர வேறோர் இடத்தும் கிடைப்பதில்லையா என்று கேட்டான். அதற்கு வேண்மாள் தானிருக்கும் மேல்மாடியினின்று கீழ் நோக்கிப் பார்த்தவளாய் அங்குத் தெருவில் போய்க் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் குறித்து இவள் யார் யார் என்று வியப்போடு கேட்டாள் - என்பன இவ்வியலிற் காண்க. உலாவந்தும் உற்றாரைக் கண்டு வந்தும் கண்ணகிக்கே இயற்றுகின்ற உருவம், கோயில் எலாமுடியப் பணிமுடியும் ஊக்கம் தந்தும் இல்வந்தே இன்னடிசில் முடித்தும் நல்ல பலாவாழை மாஆன முக்க னிக்குட் படாததாம் பெரியசுவை வேண்மாள் தன்னை விலாஅனைய அணைத்தபடி நிலாமுற் றத்தில் விடாக்காதற் சொற்பொழிவை நடாத்தென் றான்மன். 245 உலாவருதல் - ஊரைச் சுற்றி வருதல், கண்டு வந்தும் - கண்டு உவந்தும்; உவந்தும் - மகிழ்ந்தும், பணி - வேலை, முக்கனிக்கு உட்படாதது ஆம் பெரிய சுவை வேண்மாள் - முக்கனிச் சுவையி னளவுக்குட் படாததாகிய பெரிய சுவை தருவாளாகிய வேண்மாள். விலா - விலாப்புறம், விடா - விட்டு; அவளை அமர்த்தி, மன் - மன்னன். காதல் கட்டத்தில் நீ: முதலில் பேசு என்று மன்னன் சொன்னான் என்றவாறு. வெண்ணிலவு பேசிக்கொண் டேஇ ருக்கும் விரிவானம் பேசாமல் இருக்கும் மேலும் வெண்ணிலவு உள்ளன்பு நிறைந்த தன்று விரிவானே அன்புடைய தாகும் என்றாள் உண்ணிறைந்த காதலிலே ஆணும் பெண்ணும் ஒன்றேயாம் எனவேந்தன் உரைத்தான் இல்லை பெண்ணுள்ளம் நிறைகாதற் பேழை என்று பிளந்தபா ளைச்சிரிப்புக் காரி சொன்னாள். 246 வெண்ணிலவு பேசிக்கொண்டே இருக்கும் என்றது. தன் தோற்றத்தை அது விளம்பரப்படுத்திக் கொண்டே இருப்பதை, விரிந்த வானமோ தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வ தில்லை விரிவானம் பேசாமல் இருக்கும் என்றாள். அவ்வாறு தன்னை விளம்பரப்படுத்தும் நிலவோ உள்ளே நிறைய அன்பை வைத்திருப்பதில்லை என்பாள். வெண்... ... ... அன்று என்றாள். விரிவானோ பேசாதிருந்தாலும் உள்ளத்திலும் நிறைந்த அன்புடையது என்பாள். விரிவானே... ... ... ஆகும் என்றாள். முற்பாட்டில் நீ பேசு என்று மன்னன் சொன்னான். அதற்கு இப் பாட்டில், உள்ளத்தில் எனக்கு நிரம்ப ஆசை உண்டு. ஆயினும் நான் பேசப்போவதில்லை என்று சொன்னாள் என்றபடி. அதன் மேல் அவன், இன்பம் என்பது ஆணுக்குப் பெண்ணிடத் திலும் பெண்ணுக்கு ஆணிடத்திலும் தானா உண்டு என்று கேட்டான் என்பது பின் வரிகளின் கருத்து. பேரின்பத் துறையினிலே காத லிக்குப் பேச்சில்லை என்றுரைப்பார் நன்று! பெண்ணே, பாரினிலே இன்பமெனல் ஆட வர்பால் பாவையரும் பாவையர் ஆ டவர் தம் பாலும் ஆருவதொன் றேதானா? என்று கேட்டான் ஐந்தடுக்கு மாளிகையி னின்று கீழே பார்வையினைப் போகவிட்ட இளங்கோ வேண்மாள் பச்சைமயில் இவளொருத்தி யார்யார் என்றாள் 247 காதற் கட்டத்தில் காதலிக்குப் பேச்சில்லை என்று கூறிய வேண்மாளின் சொல்லை மன்னன் ஒப்புக் கொண்டான். பேரின்... ... ... நன்று என்றான். அவ்வாறு நோக்கி உலகில் இன்ப மென்பது இது ஒன்றுதானா வேறும் உண்டோ? என்று கேட்டான். அதற்கு விடை சொல்லாமல் அவள் யார் யார் என்று கேட்டாள், என்பது பெண் ... யார் யார் என்பவற்றால் அறியப்படும், பேரின்பம் - பெரிய இன்பம். பெண் ஆண் கலப்பினால் ஏற்படும் இன்பம், ஆடவர்தம்பால் - ஆடவரிடம், பச்சை மயில் இவள் ஒருத்தி - பச்சை மயில் போன்ற சாயலுடைய இவள். இயல் - 84 தெருவில் சென்றுகொண்டிருந்த அவ்வொருத்தியை வேண் மாளும் மன்னனும் தம் உருவை மறைத்த படி பின் தொடர்கின்றார்கள். அங்கேதான் வேலைமுடிந்து கொண்டிருந்தது. ஓவியம் போன்ற சுவர் வேலை ஒருபக்கம் முடிந்துகொண்டிருந்தது. கோயிலின் மேற்கட்டும் முடிந்து கொண்டிருந்தது. அரசியும் அரசனும் அவ்விடத்தைத் தாண்டி அங்கொரு பெரு விடுதியினுள் நுழைகின்றார்கள். அங்குக் கண்ணகியின் உருக்கல் அமைத்துக் கொண்டிருக்கும் ஒரு கல் தச்சன் காலைப் போதையும் நடுப்பகலையும் மாலைப் போதையும் அனுப்பி இன்னும் தன் எண்ணத்தைப் பணியினின்று மீட்காமலும் தன் விழியையும் கையையும் வேறெதிலும் செலுத்தா மலும் இருந்தான். அவன் மனைவி - தெருவிற் கண்ட மயில் என்பாள் அவன் எதிர்வந்து நிற்பதையும் அவன் பார்க்கவில்லை. அவள் பாடினாள் கேட்கவில்லை. ஆடினாள். உயிர் இருக்கையிலும் உணர்வு அற்றுப் போனதோ என்று கூறி அவள் மீண்டும் ஆடிக் கொண்டிருக்கின்றாள். பண்ணுக்கும் முழவிற்கும் ஏற்ற வகையில் பச்சைமயில் ஆடிக் கொண்டே இருக்கையில் மழைக்கும் அசையாத குன்றம் போலத் தன் விழியைத் திருப்பாமல் கற்றச்சன் பணியேதானாகி இருந்தான். அவள்தன் கண்ணால் அவன் கண்ணில் அடித்தாள். கண்ணகி உருவக்கல்லுக்கு முகத்தை அடித்துவிட்டுப் பின் கண்ணை அடித்துக் கொண்டிருந்தான். அப்போது மயில், மண்மேடு ஆய்விட்டதோ உன் காதல் என்று கூறினாள். அதற்கு அவன் என் மனத்தைக் கலைதான் அடித்துக்கொண்டுபோய்விட்டது என்று கூறினான் - என்பன இவ் வியலிற் காண்க. வேண்மாளும் குட்டுவனும் உரும றைத்தே விரைந்துசெலும் அவ்வொருத்தி யைத்தொ டர்ந்தார் தூண்மாளும் வேலைஒரு புறத்தே! ஓவச் சுவர்எழும்பும் மற்றொருபால்! கோயில் தன்னைக் காண்பாரின் உளம்பறிப்ப தாம்மேற் கட்டுக் கற்றச்சர் இன்கனவை உண்மை ஆக்கும் வேண்மாளும் குட்டுவனும் அவற்றைத் தாண்டி விள்ளரிதாம் ஒருவிடுதி உள்ளே சென்றார். 248 தூண்மாளும் வேலை ஒருபுறத்தே - ஒரு புறத்தில் தூண்வேலை மாளும். கோயில் தூண்வேலை முடிந்து கொண்டிருந்தது ஒரு புறம் என்றபடி. ஓவச் சுவர்-வேலைப்பாடமைந்த சுவர்; மேற்கட்டு - மேற்கட்டுக் கோப்பு. இரவு நேரம் ஆதலின் இங்கு வேலை செய்வோர் எவருமில்லை; என்றறிக, விள் அரிதுஆம் ஒருவிடுதி - சொல்லரிதாகிய மிகப் பெரிய ஒப்பற்ற விடுதி. கண்ணகிக்குக் கல்லுருவம் அமைப்பான் அங்கே காலைபோம் நடுப்பகல்போம் மாலை யும்போம் எண்ணத்தை மீட்கவில்லை; கண்ணும் கையும் எடுத்ததில்லை வேறுபுறம்! மனைவி யான வண்ணமயில் எதிர்வந்தாள் பார்க்க வில்லை! வாய்ப்பாட்டும் கேட்கவில்லை ஆட லானாள் உண்ணின்ற உயிரிருந்தும் உணர்வில் லாமல் ஒழிந்ததுண்டோ எனமீண்டும் ஆடு கின்றாள். 249 அமைப்பான் - கல் தச்சன்; ஆடுகின்றாள் - ஆடிக்கொண்டிருக்கையில். பண்ணடிக்கும் முழவடிக்கும் தக்க தாகப் பச்சைமயில் ஆடிக்கொண் டேஇ ருக்க விண்ணடிக்கும் மழைக்கசையாக் குன்றம் போல விழிதிருப்பாக் கற்றச்சன் பணியே ஆனான் கண்ணடித்தாள் பச்சைமயில் முகம்அ டித்துக் கண்ணடித்துக் கொண்டிருந்தான் கற்றச் சன்தான் மண்ணடித்துப் போயிற்றோ காதல் என்றாள்; மனமடித்துப் போயிற்றுக் கலைதான் என்றான். 250 பண்ணடி - பாட்டின் அடிப்படை, முழவடி - முழவின் (மத்தளம்) கொட்டு, விண்ணடிக்கும் மழைக்கு - வான் விரைந்து பொழிவதான மழைக்கு,பணியே ஆனான் - பணிவேறு அவன் வேறு என்ற நிலைபோக இரண்டும் ஒன்றெனவேயானான். கண்ணடித்தாள் - தன் கண்ணால் அவன் கண்ணில் அடித்தாள் என்றபடி; இதனால் அவன் சிறிது திரும்பிப் பார்த்தான் அவளை என்பது குறிப்பு. கண்ணடித்துக் கொண்டிருந்தான் - அப்போது மீண்டும் வேலையில் குனிந்து கண்ணகி உருவத்திற்குக் கண் அமைத்துக் கொண்டிருந்தான். மண்ணடித்துப் போயிற்றா - மண்மேடாய் விட்டதா? மனம் - என் மனத்தை; அடித்துப் போயிற்றுக் கலை - கலையானது அடித்துக் கொண்டு போய்விட்டது. இயல் - 85 பொருள்களை நோக்கி அலைகின்ற மனமானது காதலின்பத்தைத் தள்ளிவிடுமா? அந்த இன்பத்தை மறந்து விடுவதென்பது உண்டா? என்று மயில் தன் கணவனாகிய கற்றச்சனை நோக்கிச் சொன்னாள். அதற்குக் கற்றச்சன் கலை இன்பம் ஒன்றுதான் கலைஞனின் இன்பம்; கவிபுனைதல் ஒன்றுதான் கவிஞனுக்கு இன்பம் ஆனது போல. தலைவன் தலைவி பிரியும்போது காதலின்பத்தை அவர்கள் இழந்து வாழ்கின்றார்கள். ஆனால் கலைஞனும் கலையும் பிரிவதே இல்லை. கலைஞனின் வாழ்நாள் எல்லாம்அவனுக்கு இன்ப நாளே. கலைஞனுக்குத் தன் மனைவியின் தோள் ஓய்வு மெத்தை. ஆதலால் எனக்குக் கைக்காத இன்பம் இதோ இந்தக் கருங்கல். என்று கூறிவிட்டுத் தன் பணிக்குத் தலைகுனிந்தான், சிற்றுளியை எடுத்தான். கல்லில் உருக்காட்டும் கண்ணகியும் கண்ணுமாய்ப் பணி தொடர்ந்தான். இதை எல்லாம் அறிந்த மன்னன் தன் மன்னியை நோக்கி வலை வீசும் விழியாளே என் கேள்விக்கு (ஆண் பெண் காதலில் மட்டும் தானா இன்பம் கிடைக்கும் என்ற கேள்வி) இதுதான் மறுமொழியோ என்றான். அதுமட்டும் அல்ல மலைக் கல்லைப் பேசவைக்கும் கல்தச்சு வேலை எவ்வளவு முடிந்தது என்று நேரில் சென்று அறிந்து கொள்வது எனக்கின்பம் என்று மன்னி கூறினாள். கலைஞனே உன்வேலை விரைவில் முடிய வேண்டும். கோயில் வேலையும் விரைவில் முடிய வேண்டும். மன்னி வேலை நடப்பதைப் பார்க்க மிகவும் ஆசைப்பட்டாள். அவள் உயிர் வாழ்வது கூட கண்ணகி கல்நாட்டு விழாவின் முடிவு காண்ப தற்கே என்று மன்னன் கூறினான். மன்னனும் மன்னியும் அரண்மனை சென்றார்கள். அலைமனது காதலின்பம் தனைத்தள் ளாதே! அவ்வின்பம் மறப்பதுண்டோ என்றாள் மஞ்ஞை கலை இன்பம் ஒன்றுதான் கலைஞற் கின்பம் கவி இன்பம் கவிஞனுக்கே ஆனாற் போலே! தலைவனுமே தலைவியுமே பிரியும் போது காதலின்பம் அவர்தவிர்ந்தும் வாழ்தல் கூடும் கலையுமொரு கலைஞனுமோ பிரிதல் இல்லை. கலைஞன்வாழ் நாளெல்லாம் இன்ப நாளே! 251 கலை - ஒட்பம்; விரும்பப்படுவதோர் திறம். தொழிலுக்கும் பொருளுக்கும் ஆகும் போது அது ஆகுபெயர். உலகம் தழீஇயது ஒட்பம் என்ற குறளடியும் இங்கு நோக்கத்தக்கது. மஞ்ஞை - மயில், கலைஞனுக்கே அவன் தொழிலே இன்பம் தருவது என்பது இப்பாட்டின் கருத்து என்க. கலைஞனுக்கு மனைவிதோள் ஓய்வு மெத்தை! கைக்காத இன்பமிந்தக் கருங்கல் என்று தலைகுனிந்தான் சிற்றுளியை எடுத்தான் கல்லின் தையலும்தன் கண்ணுமாய்ப் பணி தொ டர்ந்தான் வலைவீசும் விழியாளே என்கேள் விக்கு மறு மொழியும் இதுதானா என்றான். மன்னி மலைபேச வைக்கின்றான் கற்றச் சன்தான் வந்துநிலை யறிந்ததெனக் கின்பம் என்றாள். 252 பணி தொடர்ந்தான் - முன் செய்த வேலையைத் தொடர்ந்து செய்யலானான், தலைகுனிதல் - பணிமேற் செல்லல், கல்லின் தையல் - கல்லில் உருக்காட்டி வரும் கண்ணகி, என் கேள்விக்கு - அரண்மனை நிலா முற்றத்தில் நான் உன்னைக் கேட்ட கேள்விக்கு. மறுமொழியும் இதுதானோ - கல் தச்சன் தன் மனைவிக்குச் சொன்னதான இந்த மறுமொழி தானோ? மலை பேச வைக்கின்றான் என்றது; மலைக்கல்லில் உருக் காட்டும் திறத்தை. காதலியிடம் காதலனுக்கு இன்பம் கிடைப்பது தவிர வேறு எங்கும் கிடைக்காதா என்று அரண்மனை நிலா முற்றத்தில் மன்னன் கேட்டான். அதற்குக் கலைஞனுக்குக் கலைத் தொழிலிலிருந்து இன்பம் கிடைக்கும் என்ற விடையைக் கற்றச்சனிடமிருந்து பெற வைத்தாள் மன்னி. மேலும் அவன் அது மட்டுமல்ல வேறு இடத்திலிருந்தும் இன்பம் பெறமுடியும் என்று கூறுவாளாய். நடைபெறும் இந்த வேலையை வந்து பார்த்ததே எனக்கு இன்பம் என்று முடித்தாள். இதனால், நிலாமுற்றத்தில் - காதல் கட்டத்தில் மன்னி எனக்கு இப்போது காதலின்பம் இன்பம் என்று தோன்ற வில்லை. வேலை நிலையைப் பார்த்து வருவதில்தான் எனக்கு இன்பம் கிடைக்கும் என்று கூறினாள் என்பதுவும் பெறப்பட்டது. கற்றச்சுக் கலைஞனே வாழ்க உன்றன் கைத்திறத்தை விரைவினிலே முடித்து வைக்க மற்றந்தப் பெருங்கோயில் பணியும் தீர்க்க மன்னிஇவள் முடிந்துவரும் கலைகா ணற்கே உற்றதோர் ஆசையினை என்ன சொல்வேன் உயிர்வாழ்ந்தாள் எனில் இந்தக் கண்ண கிக்குக் கற்காணும் விழாமுடிக்க வாழ்ந்தாள் என்று காவலன்சொன் னான்அரசி யோடு சென்றான். 253 அரசியோடு சென்றான். சொன்னான் அரசியோடு சென்றான் என்பதில், சொன்னான் என்பது முற்றெச்சம் சொல்லி என்று பொருள்படுவதால். இயல் - 86 அரசியல் செயற்றுறை மேலவர் செங்குட்டுவனிடம் கண்ணகி கல்நாட்டு விழாவை முன்னிட்டுச் செய்துள்ளவைகளைச் சொன்னார்கள், மகளிர் கற்பின் எடுத்துக்காட்டு இவ்விழா என்று உள்நாட்டிற்கு முரசறைந்தார்கள். உலகுக்கெல்லாம் ஓலை செல்லவிட்டார்கள். அவ்வோலை கண்டவர்களும் அவர்களால் சொல்லக் கேட்டவர் களும் நம் வஞ்சி நாட்டை நோக்கிக் கிளம்பிவிட்டார்கள். உள் நாட்டாரும் ஆயத்தப்படுகின்றார்கள். வீட்டுக்கு வீடு இந்த மகிழ்ச்சிப் பேச்சாகவே இருக்கின்றது. விளையாட்டுக் குழந்தைகள் பாடும் பாட்டு அனைத்தும் கண்ணகி பாட்டே. அயல் நாட்டு மன்னர்கட்கும் மற்றவர்கட்கும் வந்தால் தங்குவது முதலியவற்றிற்கு எல்லாம் முன்னேற்பாடாகி உள்ளன. விழா நாளன்று வயலெல்லாம் புத்துருக்கு நெய்யே நிறையும்; வரப்பெல்லாம் அந்நெய் வெள்ளத்தை மறிக்கும் செங்கதிர்கூட அது செல்லும் வழியைவிட்டு ஒதுங்கிச்செல்ல வேண்டும். இல்லாவிட்டால் சோற்றுமலை இடிக்கும்: இந்நாட்டில் இருப்பதான பெரிய குளத்து நீர் இறைக்கப்படும். அங்குத் தயிர் தேக்கப்படும். மாடுகள் தரும் பாலை எல்லாம் தேக்கி வைக்கக் கடலையே இடங்கேட்க எண்ணி இருக்கிறார்கள் என்று சொன்னவர்கள், இன்னும் சொல்லலானார்கள் - என்பன இவ்வியலிற் காண்க. நாட்டுக்கு முரசறைந்தார் உலகுக் கெல்லாம் நல்லோலை செல்லவிட்டார் மகளிர் கற்பின் காட்டுக்குக் கண்ணகியின் கல்நாட் டென்றார் கண்டவரும் கேட்டவரும் நமது வஞ்சி நாட்டுக்கு வரஇன்றே கிளம்பி னார் - உள் நாட்டாரும் ஆயத்தம் ஆகின் றார்கள் வீட்டுக்கு வீடிந்த மகிழ்ச்சிப் பேச்சாம் விளையாட்டுப் பாட்டும்கண் ணகியின் பாட்டே. 254 காட்டுக்கு - எடுத்துக்காட்டுக்கு, ஆயத்தம் - முன்னேற்பாடு, விளையாட்டு - விளையாடும் குழந்தைகளின் என்று பொருள் கொள்க. அயல்நாட்டு மன்னவரும் பிறரும் வந்தால் அமைவதற்கும் ஆடுவதற்கும் பாடு தற்கும் துயில்வதற்கும் குளிப்பதற்கும் வெயில்ப டாமல் சுற்றுதற்கும் மற்றெதற்கும் தகுதி யான இயலமைந்த கருவிகளும் பொருளும் செய்தார் இல்லை எனச் சொல்லாமல் எல்லாம் வைத்தார் வயலெல்லாம் விழா நாளில் புத்து ருக்கே வரப்பெல்லாம் புத்துருக்கின் மிடாவி ளிம்பே 255 வெயில் படாமல் சுற்றுதற்குச் செய்துள்ளது நிழல் தரும் சாலை பந்தல், கருவிகள் - அமர்வதற்கு நாற்காலி; பாடுதற்கு யாழ் முதலிய பொருள், ஆடுதற்கான அரங்கு குளிப்பதற்குப் புதிதாகத் தோண்டப்படும் மடு முதலியன. புத்துருக்கு - புதிதாக வெண்ணெய் உருக்கிய நெய். மிடா - பெருஞ்சட்டி. செங்கதிரும் வேறுவழி செல்ல வேண்டும் செல்லாக்கால் சோற்றுமலை இடிக்கும். மற்றும் இங்குள்ள பெருங்குளத்து நீர்இ றைத்தே எம்மருங்கும் கரையெடுத்துத் தயிரைத் தேக்கித் தங்கமலை மாடெல்லாம் தரும்பால் தேக்கத் தடங்கடலை இடங்கேட்க வேண்டு மன்றோ செங்குட்டு வன்பாலிவ் வாறு சொன்னார் செயல் துறையின் மேலோர்கள், இன்னும் சொல்வார். 256 செல்லாக்கால் - செல்லாவிட்டால், மருங்கு - பக்கம்; தங்கமலை மாடு - தங்கமலை போன்ற மாடு, உவமைத் தொகை, மலை என்றதால் மாட்டின் உயர்தோற்றம் பெறப்பட்டது. தங்கம் என்றதால் உடற்றூய்மையாலாகிய ஒளி பெறப்பட்டது. இயல் - 87 மேலும் காய்கறிகள் ஏலக்காய் முதலிய நறுமணப் பொருள்கள், கரும்பின் கட்டி வெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய், பருப்பு வகை, மாவு, முட்டை, அரிசி, உளுத்தம் பயறு, மற்றவைகள் ஆகிய எல்லாப் பொருள்களையும் மிகுதியாகத் தூய்மை செய்தும் காய வைத்தும் உயர்ந்த பாக்கியமாக்கி வைத்தார்கள். மேலும் பல வகையிலும் உதவி செய்யும் ஆட்கள் ஒருத்தருக் கொருத்தர் விழுக்காடாக ஒப்பந்தம் செய்யப் பட்டிருக்கின்றார்கள் என்று மன்னனிடம் கூறினார்கள் - என்பன இவ்வியலிற் காண்க. காய்கறிகள் தோட்டங்கள் நூறு போதும் கமழ்ஏலம் முதலியன ஐந்து வீடு வாய்படுமுன் குடல் இனிக்கும் கரும்பின் கட்டி வண்டிஐ யாயிரமே முன்ஏற் பாடு. வேய்பிளந்த பெருமத்து விளைத்த வெண்ணெய் வெற்பளவு! நல்லெண்ணெய்க் குடம்இ லக்கம்! நோய்தீர்ந்த இளந்தேங்காய் உரிப்பார் ஓர்பால் நூறுவண்டி காத்திருக்கும் மட்டை ஏற்ற 257 கமழ்-மணக்கின்ற, கரும்பின் கட்டி - சர்க்கரை, கற்கண்டு, வெற்பளவு - மலையளவு, மட்டை ஏற்ற - மட்டையை ஏற்றிக் கொண்டு போய்க் கொட்ட. இவ்வாறு சேர்ந்திருக்கிறார்கள் என முடிக்க. பருப்பெல்லாம் இருப்பாக்கி மாஇ டித்துப் பையாக்கி நெல்லெல்லாம் அரிசி ஆக்கி, விருப்பாக்க விருந்தினரைக் கடுகும் ஈர்த்து வீணாக்கி டாதுவெயிற் காய்ச்ச லாக்கி நெருப்பாக்கி டாதுளுத்தம் பயற்றை எல்லாம் நெடியாக்கும் பொன்வறுவல் ஆக்கித், தாளிப் புரித்தான எல்லாமும் தூய்மை யாக்கி உயர்ந்தபாக் கியமாக்கி வைத்தார் என்றார். 258 பையாக்கி - மூட்டையாக்கி, ஈத்து - ஈரமாகி; நெருப்பாக் கிடாமல் - கருகச் செய்துவிடாமல், நெடியாக்கும் பொன் வறுவல் - உளுத்தம் பயறு மணம் கொடுக்கும் பதத்தில் வறுப்பது, தாளிப் புரித்தான - தாளிப்பு உரித்தான, தாளிப்புக்கு உரித்தான, பாக்கியம் - அரும் பொருள்; நெய்தல் நிலத் தூரான பாக்கத்தில் இறக்குமதி யாவனவும், விளைவு ஆவனவும் ஆகிய பொருளைக் குறித்துப் பின் அரும் பொருள்களைக் குறிப்பதாயிற்று. பாக்கம் ஆகு பெயராய்ப் பாக்கத்துப் பொருளுக்காயிற்று. பாக்கம் - பாக்கியம் என மருவிற்று. ஓவம் - ஓவியம் என மருவியது போல. குளிர்ப்பார்க்கு நறும்பொடிகள், தூங்கு தற்கும் குடிப்பார்க்குச் சுவைநீரே நீட்டு தற்கும் விளிப்பார்க்கே இதோ வந்தேன் என்ப தற்கும் வெந்நீரே கேட்பார்க்குத் தருவ தற்கும் வெளுத்தாடை தரக்கேட்டால் வெளுப்ப தற்கும் வியர்வென்றால் அயராமல் விசிறு தற்கும் ஒளிப்பின்றி ஒருவருக்கோர் ஆள்வி ழுக்கா(டு) ஒப்பந்தம் செய்யப்பட் டுள்ளார் என்றார். 259 நறும் பொடிகள் - உடம்பில் தேய்த்துக் குளிப்பதற்கான பச்சிலை, கிச்சிலிக் கிழங்கு, வெட்டிவேர் முதலிய சேர்த்து இடித்த பொடிகள். விளிப்பார்க்கு - கூப்பிடுகின்றவர்கட்கு, வெளுத் தாடை - வெளுத்து ஆடை, வியர் வென்றால் - வியர்வு என்றால், புழுக்கத்தால் வியர்வை உண்டாகிறது என்று கூறினால். இயல் - 88 மேற்றிசை நோக்கி அமைந்த கீழ்த்திசையான ஒரு கோயிலின் வெளிப்புறக் கதவு திறந்தது. பரிதி தோற்றம் அளித்தது. மக்கள் அனைவர்க்கும் இமைக் கதவு திறந்தது. கண்கள் தோன்றின. சோர்வு என்ற கதவு திறந்தது உணர்வு தோன்றிற்று. வானளவு உயர்ந்த கண்ணகிக்கெனக் கட்டி முடித்த பெரிய கோயிலின் மணிக்கதவு திறந்தது. கற்புத் தோற்றமளித்தது. திறல் வேந்தனான செங்குட்டுவன் அவ்வாறு கண்ணகி கோயிலைத் திறந்து வைத்துக் கேளீர் கேளீர் பிறர் நெஞ்சு புகாதவள், புகார் பெற்ற செல்வம். பிழை ஒன்றும் அறியானைத் தன் வாழ்விற்கே உறவான கோவலனைப் பழி சுமத்திக் கொன்றவனான பாண்டியனை நாட்டோடு ஒப்பற்ற புரட்சித் தீயில் இட்டுத் தன் ஊன் உடம்பை நீக்கிக் கற்பினால் புகழ் உடம்பு பெற்றாள், அவள் இவளே உலகீரே காண்மின் என்று கூறினான். அங்குக் கூடியிருந்த நாட்டு மக்களும் உலக மக்களும் வாழியவே கண்ணகியின் புகழ் என்று வாழ்த்தினார்கள். அகமுடையாள் பேர்காத்தல் அறம் என்று வாழுநெறி காட்டினாள். இக்கற்பின் அன்னை வாழ்க. என்று வாழ்த்தி நின்றாள் வேண்மாள். வாழியவே தமிழ்! என்றார்கள் மகிழ்ந்த வராகி. மலர் மாரி பெய்தார்கள், இசை மாரி பெய்தார்கள் - என்பன இவ்வியலிற் காண்க. மேல்நோக்கும் கீழ்த்திசையாம் கோவில் ஒன்றின் வெளிக்கதவு திறந்திடவும் பரிதி தோன்றும்! ஆன இமைக் கதவுதிறந் திடவும் கண்கள் அனைவோர்க்கும் வெளித்தோன்றும்! சோர்வே என்ற ஊனநெடுங் கதவுதிறந் திடவும் யார்க்கும் உணர்வுதோன்றும்! தோன்றஉ லகோர் வாழ்த்த வானுயர்ந்த கண்ணகியின் பெரிய கோயில் மணிக்கதவு திறந்திடவும் கற்புத் தோன்றும் 260 கீழ்த்திசை அதாவது கிழக்குத் திசையானது மேற்குத் திசை பார்த்து அமைந்திருக்கும் ஒரு கோயில் என்று கூறப்பட்டது. அக் கோயிலின் வெளியாகிய கதவு திறக்கப்பட்டவுடன் பரிதி(பகலவன்) தோன்றிற்று. சோர்வு - உணர்வின்மை, தோன்ற - இவ்வாறெல்லாம் தோன்றவே, இது காரணப் பொருட்டு இறந்த காலத் தெரிநிலை வினையெச்சம். சோர்வேயான ஊன நெடுங் கதவு - சோர்வு என்பதான ஊனமுள்ள நீண்ட கதவு, ஊனம் - கேடு, மணிக் கதவு - அழகிய கதவு; மணி கட்டிய கதவுமாம். திறல்வேந்தன் குட்டுவன்அப் பெரிய கோயில் திருக்கதவு திறக்கவைத்துக் கேளீர் கேளீர் பிறர் நெஞ்சு புகாள்;புகார் பெற்ற செல்வம் பிழை ஒன்றும் அறியானைத் தன்வாழ் வுக்கே உறவானைப் பழிகூறிக்கொன் றோன்நாட் டோடு ஒருபுரட்சித் தீயிலிட்டாள்; ஊன்உ டம்பை அறநீக்கிக் கற்பினாற் புகழ டைந்தாள் அவள் இவளே உலகீரே காண்மின் என்றான். 261 திறல் - வலிமை. திருக்கதவு - பெருமைமிக்க கதவு, பிறர் நெஞ்சு புகா - பிற ஆடவரின் உள்ளத்திற் கொள்ளும்படி தன்னைக் காட்டிக் கொள்ளாதவள்; எதிர்மறை வினையால ணையும் பெயர், புகார் - காவிரிப்பூம்பட்டினம்; சோழநாடு. உறவான் - சொந்தக்காரன் பழி கூறிக் கொன்றோன் - பாண்டியன். இந்நாளில் இதைத் திறப்பு விழாச் சொற்பொழிவு என்பார்கள், வாழியவே கண்ணகியின் சீர்த்தி என்று வாழ்த்தினார் நாட்டாரும் வந்தோர் யாரும் ஆழிசூழ் உலகத்து மகளிர்க் கெல்லாம் அகமுடையான் பேர்காத்தல் அறமாம் என்னும் வாழுநெறி காட்டினாள் கற்பின் அன்னை, வாழியவே என வாழ்த்தி நின்றாள் வேண்மாள் வாழியவே தமிழ் என்றார்! மகிழ்ந்தா ராகி மலர் மாரி இசைமாரி பெய்தி ருந்தார் 262 சீர்த்தி - புகழ். மலர் மாரி - மலர்மழை, இசைமாரி - இசை யாகிய மழை; பெய்திருந்தார் - பெய்து கொண்டே இருந்தார்கள். தமிழிலக்கியங்கள் தந்தவைகளே கற்பு முதலிய பண்பாடு. ஆதலால் தமிழ் வாழ்கென்றார். இயல் - 89 அதே நேரத்தில் மாதரியும் ஐயையும் தேவந்தியும் மற்றவரும் கண்ணகியைத் தேடித்தேடி இச் செய்தியை அறிந்தவர் சொல்லக் கேட்டு வந்தோம். மன்னரே மன்னியாரே என்ன துன்பமுற்றோம்! இனியும் அத்துன்பத்தைப் பொறுக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு ஓடி எதிர் நின்ற கண்ணகியின் அடியில் வீழ்ந்து நீ தீதுற்றாய் என்று எங்கு அலைந்தோம். அன்னையே திருவுற்றாய் புகழான உருவுற்றாய் என்று கண்ணகியின் முகம் பார்த்து ஏங்கி ஏங்கி அழுதார்கள். அதுகண்ட எழில் மன்னன் அவரால் எல்லா வரலாற்றையும் கேட்டுக் கோவலனின் கூத்தியாகிய மாதவி நிலை என்ன என்றான். அதற்கு அவர்கள் கோவலனுக்கன்றி வேறெவர்க்கும் முந்தானை விரித்தறியாத மாதவிக்கு ஒரு பாக்கியமாய் இருந்த கோவலன் மகள் மணிமேகலையும் நெஞ்சம் துறவொன்றே எனக் கொண்டு, அத் துறவில் தன் அழகைப் பெய்தாள் என்று சொன்னார்கள். அது கேட்ட குட்டுவனும் வியப்படைந்து, எதிர்நின்ற திருக்கோலமா யிருந்த கண்ணகியை நோக்கினான். அதே நேரத்தில் இலங்கை மன்னனாகிய கயவாகுவும் ஆரிய வேந்தரும் குடகக் கொங்கரும், மாளவ வேந்தரும் கண்ணகியை வணங்கி வஞ்சியர்க்கு (வஞ்சி நாட்டில் உள்ளவர்கட்கு) வாழ்வளிக்க வந்த அன்னாய் இனிதாக எம் நகர்க்கும் எழுந்தருள்க, என்று சொல்லி அந்தக் கண்ணகி திரு முகத்தில் விழி செலுத்தி நின்றார்கள் - என்பன இவ்வியலிற் காண்க. மாதரியும் ஐயையும்தே வந்தி தானும் மற்றவரும் கண்ணகியைத் தேடித் தேடி ஈதறிவேம் என்றவரின் வாய்ச்சொல் கேட்டே இங்கு வந்தோம் மன்னவரே மன்னி யாரே ஏதுற்றோம் யாம் பொறோம் என்றே ஓடி எதிர்நின்ற கண்ணகியின் அடியில் வீழ்ந்து தீ துற்றாய் என்றலைந்தோம் எனினும் அன்னாய் திருவுற்றாய் புகழான உருவும் உற்றாய் 263 என்றழுதார் திருமுகம்பார்த் தேங்கி ஏங்கி! எழில் மன்னன் அன்னவர்பால் பலவும் கேட்டே நன்றான கோவலனின் கூத்தி யான நங்கைநிலை ஏதென்றான், அவர்கள் வேந்தே முன்தானை கோவலற்கு விரித்த தன்றி முகமொன்றும் அறியாத மாத விக்கே ஒன்றான மகள்மணிமே கலையும் நெஞ்சம் ஒன்றானாள் துறவில்தன் இளமை பெய்தாள் 264 ஈதறிவேம் என்றவர் - கண்ணகி வஞ்சி புகுந்து இறந்ததான இச் செய்தியை யாம் அறிவோம் என்று சொன்னவர்கள், ஏதுற்றோம் - என்ன துன்பம் அடைந்தோம்? யாம் பொறோம் - இனிமேலும் நாங்கள் அத்துன்பத்தைப் பொறுக்க மாட்டோம், திருவுற்றாய் - மேன்மையுற்றாய், புகழான உரு - உருவக்கல் நாட்டப் பெற்றாய், முன்தானை - முந்தாணி முந்தானை, ஒருவனுக்கே விரித்ததன்றி - மாதவி கோவலன் ஒருவனுக்கே மனைவியாய் இருந்தாளே யல்லாமல், ஒன்றான மகள் - இணையற்ற தன்மையுள்ள மகள். நெஞ்சம் ஒன்றானாள் - மனம் துறவு கொள்கை ஒன்றே ஆயினாள். பெய்தாள் - இழந்தாள், நீர் வார்த்துத் தன்னை அளித்தாள் என்ற குறிப்பு. எனக்கேட்ட மன்னவனும் வியப்புற் றானாய் எதிரிலுறு கண்ணகியை நோக்கி நின்றான். புனைதாரன் இலங்கைக்கோன் கயவா கென்பான் பூண்முடிஆ ரியவேந்தர் குடகக் கொங்கர் மனமுயர்மா லைவேந்தன் வணங்கி வாழ்த்தி வஞ்சியர்க்கு வாழ்வளிக்க வந்த அன்னாய் இனிதாக எம்நகர்க்கும் எழுந்த ருள்க எனச்சொல்லித் திருமுகத்தில் விழிவைத் தார்கள். 265 புனைதாரன் - புனைந்த மாலையுடையவனான, பூண்முடி - பூண்டிருந்த முடியுடைய,மனம் உயர் - உயர்ந்த மன நிலையுடைய, எம் நகர்க்கும் - எம்முடைய நகர்கட்குத் தனித் தனியாக, நகர் - நகர்கள். இயல் - 90 கண்ணகியின் நின்ற திருக் கோலத்தை அவ்விழாவிற்கு வந்திருந்தோரில் பல்லோரும் பார்த்தபடியே இருந்தார்கள். அவ்வாறு பார்த்தவர்களின் நெஞ்சம் தான் விரும்பியதைக் கண்ணகி யிடமிருந்து பெற்றுக் கொண்டபின் மீளும். கண்ணகி அன்பர்கட்கு உதவி செய்ய மறுத்தாள் என்பதே இல்லை. இன்று ஒன்றை அவளுக்கு நாம் அளித்தால் நாளைக்கு ஒன்றை அவள் நமக்களிப்பாள் என்ற மடமை எண்ணம் அங்கு எவர்க்கும் உண்டாகவே இல்லை. குன்று தரும் அருவிபோல் அழகு வெள்ளம் கொழிக்கின்றன அவள் உறுப்புக்கள் யாவும் ஆங்கே. அவள் இதழ்கள் இரண்டும் பேசிக் கொண்டே இருப்பன போலத்தோன்றும்.கண்கள் அருளைச் சுரந்து கொண்டேயிருக்கும். நெற்றி ஒளியை வீசிக் கொண்டே இருக்கும்.நகைப்பு மகிழ்ச்சியை விளைத்துக் கொண்டே இருக்கும். புருவமானது செயலில் முற்செல்லக் கூசிக் கொண்டே இருக்கும் மகளிர்க்கு வீரத்தை விளைத்துக் கொண்டே இருக்கும். அவளின் முழுமைத் தோற்றம், தமிழரை இகழ்ந்து கொண்டிருக்கும் ஆரியர்க்கெல்லாம் தமிழறத்தை இயம்புவதாகும். அமைச்சனான வில்லவன் கோதையிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வேண்மாளோடு என் கோயிலிலிருந்தபடி மக்கள் தொண்டு செய்திருப்பாய் என்று அன்னை எனக்குச் சொன்னாள் என்று கூறி மன்னன் மன்னியுடன் கண்ணகி பெருங்கோயில் புகுந்தான். ஐயை முதலானோர் தாம் ஊருக்குச் செல்லுமுன் அரசனைக் கண்டு எங்கட்குக் கண்ணகி அகத்துணையாயிருப்பதாக அருளினாள் என்று கூறித் தம்மூர் நோக்கி நடந்தார்கள் - என்பன இவ்வியலிற் காண்க. நின்றிருந்த கோலத்தைப் பல்லோர் தாமும் நெடுநேரம் பார்த்தபடி இருந்தார்; நெஞ்சம் ஒன்றொன்றும் கேட்டதனைப் பெற்று மீளும். உதவமறுத் தாள்என்ப தொன்று மில்லை. இன்றொன்றை நாமளித்தால் நாளைக் கொன்றை எமக்களிப்பாள் எனும்மடமை எழவே இல்லை. குன்று தரும் அருவிபோல் அழகு வெள்ளம் கொழிப்பனவாம் உறுப்புக்கள் யாவும் ஆங்கே. 266 உருவப் பொருள் நிலை; நின்றதிருக்கோலம். இருந்த திருக்கோலம்; கிடந்த திருக்கோலம் என மூன்றாகக் கூறுவர். கண்ணகி உருவத்தின் நிலை நின்ற திருக்கோலம் ஆகும். நின்றபடி இருப்பதோர் அழகிய நிலை என்றபடி. உருவத்தைப் பார்த்தபடி நின்றவரின் நெஞ்சம் ஒன்றொன்றும் எது விருப்பமோ அதைப் பெற்றுக் கொண்டுதான் வேறு ஒரு பக்கம் போகுமென்பார் நெஞ்சம் ஒன்றொன்றும் கேட்டதனைப் பெற்று மீளும் என்றார். அந்த நெஞ்சங்கள் கேட்டது என்ன? அழகிய கருத்துக்கள் கண்ணகியின் படிவம் கொடுத்ததும் அதுதான். கற்றச்சனின் திறமும் கண்ணகி வரலாற்றுப் பயனும் கூறியபடி. இன்று பலி முதலியவற்றில் ஒன்றை உதவினால் அதுபற்றி நாளைக்கு அந்த உருவம் ஒரு நன்மையைத் தரும் எனும் உருவ வணக்கக் கொள்கை யாவதோர் மடமை அங்கு எழவேயில்லை, ஏன்? கண்ணகிக்கு உருவக்கல் நாட்டியதன் நோக்கமும் அதுவல்ல. காணவந்தார் எதிர்பார்ப்பதும் அதுவல்ல. * ஆதலின் இன்னொன்று ... ... ... எழவில்லை எனப்பட்டது. பேசிக்கொண் டேயிருக்கும் இரண்டி தழ்கள்! பீரிட்டுக் கொண்டிருக்கும் அருளைக் கண்கள்! வீசிக் கொண் டேயிருக்கும் ஒளியை நெற்றி விளைத்துக்கொண் டேயிருக்கும் நகைம கிழ்வைக்! கூசிக்கொண் டேயிருக்கும் மகளிர்க் கெல்லாம் கொடுத்துக் கொண் டேயிருக்கும் புருவம் வீரம்! ஏசிக்கொண் டேயிருக்கும் ஆரி யர்க்கே இயம்புவது தமிழறத்தை முழுமைத் தோற்றம் 267 பேசிக்கொண்டே இருக்கும் இதழ்கள் என்றது இதழ்கள் அசைவதுபோல் இருப்பதை. பேசிக்கொண்டே யிருப்பது போல் இருந்தன இதழ்கள் என்க. பீரிட்டுக் கொண்டிருக்கும் - மிகுதி யாய்க் கொண்டிருக்கும் என்றபடி. கல்லுருவத்தின் முழுத் தோற்றம் ஆரியர்க்கு ஒருவனுக்கு ஒருத்தியே என்பது *KjÈa தமிழறத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் என்பார் ஏசிக் கொண்... ... ... முழுமைத் தோற்றம் என்றார். வில்லவன்கோ தைதன்பால் ஆட்சி நல்கி வேண்மாளோ டிங்கிருந்து மக்கள் தொண்டைப் புல்லுகஎன் றருளினாள் அன்னை என்று புதுக்கோயில் மனைவியுடன் வாழ்ந்தான் மன்னன் செல்லுமுன் மன்னனிடம் இளைய ஐயை முதலானோர் செப்பினாள் எங்கள் அன்னை நல்லகத்திற் றுணையிருப்பேன் என்றாள் என்று நடந்தார்கள் ஊர்நோக்கி மகிழ்ச்சி யோடே 268 இளைய ஐயை முதலானோர் எங்கள் அன்னை நல்லகத்தில் துணையிருப்பேன் என்றே செப்பினாள் என்று நடந்தார்கள் என்று மொழி மாற்றுக. *f©z»íUt« தனக்கு உண்டாக்கிய எண்ணத்தை வில்ல ... ... ... புல்லுக என்று அருளினாள் என்று கூறினான் மன்னன். மற்றவையும் அவ்வாறே, நல்கி - ஒப்படைத்து, புல்லுக - அடைக. மேற்கொள்க என்றபடி. ஆட்சி புரிவதும் மக்கள் தொண்டுதான் என்றாலும் ஒழுக்கம், வழக்குத் தண்டம்என்பவற்றில் வழக்கும் தண்டமும் ஆகிய இரு துறைகளையும் வில்லவன் கோதையிடம் விட்டு ஒழுக்கத்துக்கு உழைப்பதை மட்டும் சிறப்பாகக் காட்ட மக்கள் தொண்டு எனப்பட்டது. ஐயை முதலியோர், அன்னை எங்கள் நல்ல உள்ளத்தில் துணையிருப்பேன் என்று கூறினாள் என்றனர். அதாவது, கண்ணகியின் வரலாறு தம் உள்ளம் தீ நெறியிற் செல்லாதபடி செய்யும் என்று அவர்கள் கூறியதாகும். இயல் - 91 இலங்கைக் கயவாகு மன்னன் மற்றும் ஆரிய மன்னர் முதலியவர் களுடன் அரசனை வாழ்த்தி வஞ்சி நாட்டில் நீவிர் நிறுவிய படிவமானது உலக மக்களின் மனத்திலெல்லாம் ஒழுக்க வரலாற்றினைச் செய்தது. எம்நாடுகளும் கற்பரசியாகிய கண்ணகியின் அடியில் வாழவேண்டும். அதற்கு இதனைச் செய்த கலைவல்லாராகிய கற்றச்சரை அனுப்பி உதவுக என்று கூறி இப்படிவத்தால் நீவிர் பெற்ற தென்ன என்று கேட்க அதற்கு கயவாகு நான் அன்னையை நோக்கி எம்பெருமைமிக்க இலங்கை மக்கட்கு உன்னையல்லால் ஏது துணை என்றேன். அன்னை அஞ்சல் என்று தன் வலக்கை தூக்கி நின்றாள். அதன் பிறகும் நேரில் அங்கு நின்றிருந்தவள் என் நெஞ்சில் எழுந்தருளி நீடூழி வாழ்க என்று வாய்திறந்து கூறினாள், என்றான். உடனிருந்த ஆரியமன்னன் கல்தச்சன் அன்னையின் நெஞ்சத்தைத் தன் நெஞ்சாக்கி, அதன்பின் அவளுருவத்தைக் கல்லில் சேர்த்தான். அன்னையைப் பார்க்கத் திரும்புமுன் அவள் நெஞ்சில் அறிவைச் சேர்க்கின்றாள். அதன்பின் அழகு காட்டுகின்றாள். அப்படிவம் இந்நிலத்துக் கொரு படிவம் எனச் செய்து பண்டுமுதல் இருந்துவரும் தமிழ்க் கலைக்கே மேன்மையைச் செய்து விட்டான் என்றான் - என்பன இவ்வியலிற் காண்க. வஞ்சியிலே ஒருபடிவம் உலக மக்கள் மனத்திலெலாம் ஒழுக்கவர லாறு வைத்த எம்சிறந்த தமிழ்வேந்தே வாழ்க நீவிர் எம்நாடும் கற்பரசி அடியில் வாழத் தம்சிறந்த துணைவேண்டும் இதனைச்செய்த தலைசிறந்த கலைவல்லோர் கற்றச் சர்தாம் வஞ்சியினை அங்கங்கு வைப்பார் நீவிர் வாழ்ந்தீர்போல் யாமெல்லாம் வாழ்வோம் என்றே 269 சீரிலங்கைக் கயவாகு செப்பி நின்றான் சீரியதே அஃதென்றார் உடனி ருந்தோர். பாரிலங்கு குட்டுவனும் நன்றே மற்றிப் படிவத்தால் நீவிர்உற்ற தென்ன என்றான் ஆரிலங்கைக் கேதுபுகல் என்றேன் அன்னை அஞ்சலென்ற தன்வலக்கை தூக்கி நின்றாள் நேரிலங்கு நின்றிருந்தோள் நெஞ்சில் வந்தாள் நீடூழி வாழ்கஎன வாய்ம லர்ந்தாள் 270 எம்நாடு கற்பரசி அடியில் வாழ - எங்கள் நாட்டு மக்களும் கற்பரசி யின் ஒழுக்கத்தின் அடிப்படையில் வாழ, தம் - தங்களின், வஞ்சி யினை அங்கங்கு வைப்பார் - வஞ்சிக் கொடி போன்ற கண்ணகி உருவக்கல்லை அந்தந்த நாட்டில் செய்து வைக்க முடியும் என்றும், கண்ணகி உருவத்தால் சிறப்புற்ற வஞ்சிநாட்டை அந்தந்த நாட்டில் உண்டாக்க முடியும் என்றும் பொருள் கொள்க. நீவிர் - வஞ்சி நாட்டினராகிய நீங்கள், படிவத்தால் உற்ற தென்ன - கண்ணகியின் இந்த உருவக் கல்லால் நீவிர் அடைந்ததென்ன, மற்றிப்படிவம் - மற்று இப்படிவம் எனப்பிரிக்க. புகல் - உறுதுணை, அஞ்சல் என்ற வலக்கை - அஞ்சற்க என்று காட்டும் வலது கை. வாய் மலர்ந்தாள் - வாய்திறந்து சொன்னாள். வாய் திறந்து சொன்னது போன்ற ஓர் மனத்தோற்றத்தை வெளியிட்டபடி. என்றுபல கயவாகு சொல்ல மற்றும் இருந்திட்ட ஆரியனும் கற்றச் சர்தாம் அன்னையினாள் நெஞ்சத்தைத் தன் நெஞ்சாக்கி அதன் பின்னர் அவளழகைக் கல்லில் தேக்கித் தின்னுமுன்னே சுவையூட்டும் தேன்கு ழல்போல் திரும்புமுன்னே அறிவூட்டி அழகைக் காட்டும் இந்நிலத்துக் கொருபடிவம் ஆக்கிப் பண்டே இருந்ததமிழ்க் கலைக்குமுடி கவித்தார் என்றான் 271 தேன்குழல் - முறுக்கினத்தில் ஒருவகைத் தின்பண்டம். பண்டு முதல் தமிழகத்தில் இருந்து வரும் கற்றச்சுக் கலைக்கு இப் படிவத்தைச் செய்ததன் மூலம் முடிசூட்டிவிட்டார் கற்றச்சர் என்பான் பண்டை முடிகவித்தான் என்றான். இயல் - 92 கண்ணகி விழாவுக்கு வந்தவர்களின் மனமலரில் ஏறிக் கொண்டு கண்ணகி போய்விட்டாள் என்றாலும் வஞ்சியிலும் இருந்தாள். மற்றும் உள் நாட்டினர் தங்கள் வீட்டு வாயில்கள் இந்தாரும் என்று அழைக்க ஏன்காணும் என்று உட்சென்றார்கள். விழாக்கண்டு வெளியூர் செல்லவேண்டிய குடும்பத்தின் ஒருதாய் முந்தாநாள் காணாமல் போன குழந்தையை அடைந்து மகிழ்ந்து செல்லுகின்றாள். தன்னூர்க்குப் போக வழிதெரியாமல் ஒரு செவிடனை வழி கேட்டுச் சிரிக்கின்றான் ஓர் ஆள். தங்குவதற்கு இடந்தந்த ஒருவனின் தங்கையை மனைவியாகக் கொண்டுவிட்டான் ஒருவன்! ஊருக்குப் போகும்போது அவ்விருவரும் தம் கைகூப்பி நின்றுவிடை கேட்க. அண்ணன் இங்கே தானையா மணம் நடக்கவேண்டும் என்று கூற, இருக்கின்றோம் என்றுரைத்துச் சிறிது நேரத்தில் யாருக்கும் தெரியாமல் போகும்போது தங்கையை நோக்கிக் கூடப் பிறந்த தங்கையா இது செய்வாள் என்றான். அதற்குத் தங்கை தங்கு ஐயா என்று கூறித்தான் தனியே தங்காமல் அவனோடு கம்பி நீட்டினாள் - என்பன இவ்வியலிற் காண்க. வந்தாரின் மனமலரிற் போனா ளேனும் வஞ்சியினை வஞ்சியா ளாயி ருந்தாள் இந்தாரும் எனவீடெ லாம்அ ழைக்க ஏன் காணும் என்றுள் நாட்டா ரும் சென்றார் முந்தாநாள் காணடிந்த சின்ன பிள்ளை முக்கூட்டுத் தெருவிலொரு வீட்டினின்று செந்தாழை தான் பெற்று வீடு சேர்ந்தாள் செவிடனைப்போய் வழிகேட்டுச் சிரித்தான் ஓர் ஆள் 272 வஞ்சியினை - வஞ்சிநாட்டை, வஞ்சியாள் ஆய் இருந்தாள் - வஞ்சனை செய்யாதவளாய் இருந்தாள். காணடிதல் - காணாமற் போதல். தங்கஇடம் தந்தானின் தங்கை கொண்டான் தங்கைகள் கூப்பிவிடை கேட்கும் போதில் இங்கையா மணம்நடக்க வேண்டும் என்ன இருக்கின்றோம் என உரைத்துப் போகும் போதில் எங்கையா போகின்றீர் என்று கேட்க ஏங்கையா எங்கள்மணம் ஆங்கென் றார்கள் தங்கையா ஒப்பினாள், என்றான் தங்கை தங்கையா எனச்சென்றாள் தங்கா ளாகி. 273 விழாக் கருதி வஞ்சிநகர் வந்த ஒருவன் தங்க இடம் கேட்டான். வீட்டுக்காரன் சரிஎன்றான். அவள் தங்கைக்கும் அவனுக்கும் மனத்தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்பது முதல்வரியின் கருத்து. விழா முடிந்தவுடன் நாங்கள் போய் வருகின்றோம் என்று அந்த இருவரும் தம் கைகள் கூப்பி விடை கேட்கும்போது என்பது அடுத்த வரியின் கருத்து. இங்கையா - இங்கு ஐயா. ஏங்குஐயா - ஏங்க ஐயா என்பதன் அகரம் தொகுத்தது. நீவிர் ஏங்கிக் கொண்டிரும், தங்கையா... தங்கஐயா - இங்கே தங்கி யிரும் ஐயா. கருவூரின் ஒருமுதியோள் விருந்திற் பெற்ற கனிவாழைத் தார்பலாச் சுளைகள் மற்றும் ஒருநூறு கொய்யாமா முப்பத் தைந்தும் ஒன்றாகக் கட்டி, அதைப்பேரர்க் கென்றே இருகையால் தூக்குவாள் முடிய வில்லை இருக்கவிட்டுப் போகமனம் வரவு மில்லை பெருங்குரங்கு பத்துவந்து விழுங்கித் தீர்த்தும் பின்னும் உண்டோ எனக் கேட்கும் கிழக்கு ரங்கை 274 முதியோள் கருவூரினள் எனினும் விழாவிருந்து நடந்த இடத்தி னின்று சிறிது தொலைவில் அமைந்த இடத்தினள் என்க. தன் பேரர்கட்கு ஆகட்டும் என்று நொள நொளத்த பழங்களை யெல்லாம் மூட்டைகட்டி வைத்திருந்தவள் எடுத்துப் போகத் தூக்குவாள் தூக்கமுடியவில்லை. விட்டுப் போகவும் மனமில்லை. ஆனால் குரங்குகள் வந்து அவைகளையெல்லாம் விழுங்கித் தீர்த்து இன்னும் மடியில் ஏதாவது வைத்திருக் கின்றாயா என்று அந்தக் கிழவியாகிய குரங்கை உறுத்திப் பார்த்தன. பின்னும் உண்டா எனக் கேட்கும் கிழக்குரங்கை - பின்னும் உண்டா என்று கேட்பது போலிருந்தன அக்குரங்குகள் பார்த்த பார்வை என்றவாறு. இயல் - 93 கண்ணகியினை மக்கள் பாடாத நேரமில்லை. கண்ணகியின் புகழ் வாழ்த்தானது மக்களின் காதில் விழா நேரமில்லை. விழாக் காண வந்த எண்ணற்றவர்கள் பல நாட்களாகச் சென்று கொண்டிருக் கின்றார்கள். அவர்களின் கண்ணகியின் புகழ் வாழ்க என்ற வாழ்த்து மொழியைக் கேட்டுக் கேட்டுப் பறவைகளும் அதையே சொல்லுவன ஆயின. வானில் பறந்துகொண்டிருக்கும் பருந்துகளும் அதே வாழ்த்தாகிய செந்தமிழ்த் தேனைச் சிந்தும். குலாலரும் இல்லத்தவரும் பாவை செய்யுநரும் தேனை முதலில் சிறிது எடுத்து இதழ் செய்து இதழால் சிரிப்பின் முதன்மையைச் செய்து பின் காது, மூக்கு,விழி செய்து கற்புமணியான கண்ணகி உருவை முடித்து அதன்பிறகு தான் தாம் தொட்ட பணி தொடங்குவார்கள். உழவு, தொழில், தச்சு, வாணிகம் வரைவு, கல்வி என ஆறின் வகை வாழும் பழங்குடியாம் தமிழரெலாம் இல்லந்தோறும், பகல்தோறும். இரவுதோறும் தம் ஒழுகலாறுகளில் ஏற்படும் சிறந்த பகுதியிலெல்லாம் ஒண்டொடியாள் கண்ணகியே வந்து நிற்பாள்! மழை, தென்றல், பெண் குழந்தை தமிழ் இவற்றின் நலத்தைத் தம்வாயூறி அடடா கண்ணகி தான் என்று சொல்லுவாரானார்கள் - என்பன இவ்வியலிற் காண்க. கண்ணில்விழா நேரமில்லை உருவம்! வாழ்த்துக் காதில்விழா நேரமில்லை நாள்க டந்தும்! எண்ணில்விழாக் காணவந்தோர் தம்ஊர் நோக்கி ஏகுவார் பன்னாளும் வாய்தி றந்து கண்ணகியின் புகழ்வாழ்க என்று சொல்லக் காதாரக் கேட்டுக்கேட் டங்கி ருந்த வண்கிளையிற் பறவைகளும் அதையே சொல்லும் வான்பருந்தும் செந்தமிழாம் தேனைச் சிந்தும் 275 உருவம் - கண்ணகி உருவம். எண்ணில் விழாக் காணவந் தோர் - எண்ணில்லாதவராகி விழாக் காண வந்தோர். செந்தமிழாம் தேன் என்றது கண்ணகியின் புகழ்வாழ்க என்பதை. பானைமுதற் செய்கின்ற குலாலர் தாமும் பண்ணியங்கள் செய்கின்ற இல்லோர் தாமும் யானைமுதற் செய்கின்ற வினைவல் லாரும் இரும்புமுதல் வார்ப்படத்துக் கன்னார்தாமும் தேனைமுதல் சிறிதெடுத்தே இதழ்கள் செய்தும் சிரிப்புமுதற் செய்துபின் மூக்கும் காதும் மானைநிகர் திருவிழியும் செய்து கற்பு மணிசெய்து பின் தொட்ட பணிசெய்வார்கள், 276 உருவம் அமைக்கும் தொழிலில் ஈடுபட்டவர்கள் முதலில் கண்ணகி உருவத்தைச் செய்தபிறகே அத்தொழிலைத் தொடங்குவார்கள் என்பது இப்பாட்டின் கருத்து. குலாலர் - குயவர், பண்ணியம் - உண்பன தின்பனவற்றின் பொதுப் பெயர். இல்லோர் - மனைமார்கள், கற்புமணி - கண்ணகி. உழவுதொழில் வாணிகமே தச்சுக் கல்வி உயர்வரைவே எனும்ஆறின் வகையின் வாழும் பழங்குடியாம் தமிழரெல்லாம் இல்லந் தோறும் பகல்தோறும் இரவுதொறும் காணு கின்ற ஒழுகலா றுகள்தம்மிற் சிறப்பி லெல்லாம் ஒண்டொடியாள் கண்ணகியே வந்து நிற்பாள்! மழைதென்றல் பெண்குழந்தை தமிழ்ந லத்தை வாயூறி அடடாகண் ணகிதான் என்பார். 277 தமிழரின் வாழ்க்கையிற் காணப்படும் ஒழுகலாறுகளில் ஏற்படும் சிறந்த பகுதியில் எல்லாம் கண்ணகியே வந்து தோற்றமளிப்பாள். மழை நலத்தை, தென்றல் நலத்தை, பெண் குழந்தையைத் தமிழ் நலத்தைக் காணும்போது அடடா கண்ணகி என்று அந் நலத்தைப் பெயரிட்டு மகிழ்வார். இனிதாக வந்து வீசும் தென்றலை அடடா இன்பம் என்று சொல்வதற்குப் பதிலாக அடடா கண்ணகி என்பார் என்க. உழவு முதல் வரைவு ஈறாகக் கூறப்பட்டது ஆறும் மக்கள் செயல்களின் ஆறு துறைகள். இயல் - 94 தமிழர்க்கு இருந்து வந்த அறம்பொருள் இன்பம் வீடுஎன்ற தமிழ் நான்மறைகள் மறைந்து ஒழிய நாம் ஆரிய நான் மறை செய்தோம். வள்ளுவரை மறைக்க மனுவைச் செய்தோம். எல்லா நூற்களும் தூய தமிழ் நூற்களே என்னும் நிலையை மறைத் தொழிக்க இழிந்த கொள்கைகளைக் கலந்த கலப்படத் தமிழ்நூற்களைச் செய்தோம். கண்ணகியை மறைக்க எந்நூலைச் செய்வது என்று தமக்குள் பேசிக் கொண்டார்கள் ஆரியர்கள். தமிழின் வேர் இருக்கும் வரைக்கும் தமிழ்க் கிளைகளும் அடி மரமும் இருக்கும். வேர் ஒழிந்தால்தான் தமிழ் ஒழியும் என்பது பற்றிய நம் முயற்சி கைகூடி வரும்போது நான்கு சாதியை ஒப்பிய நெடுஞ் செழியனையும் அவன் நாட்டையும் அழியும்படி செய்தாள். அவளைத் தொலைப்பதெந்நாள்? நாம் தலை எடுப்பது எந்நாள் என்றனர் ஆரியர்கள். செம்பில், கல்லில், மஞ்சட் சாந்தில். சாணியில் சேற்றில் எவன் அமைக்கும் உருவுக்கும் ஆரிய மறைவழியே உயிரேற்ற வேண்டும். இது சட்டம். இதைப் பொய் என்றாக்கிக் கண்ணகிக்கு உயிருண்டாக்கும் படி முடித்துவிட்டான் தமிழ்த் தச்சன். நம் பொய்க் கோட்டை தகர்ந்தது. நம் நாளைய நிலை என்ன என்றார்கள் ஆரியர்கள் - என்பன இவ்வியலிற் காண்க. செந்தமிழ்நான் மறைமறைக்க, வையம் கேட்டால் சிரிப்பதோர் ஆரியநான் மறையைச் செய்தோம், தந்ததிரு வள்ளுவன்நூல் மறைக்க நான்கு சாதிசொல்லும் மனுநூலைச் செய்தோம்.மற்றும் எந்நூலும் தமிழ்நூலே எனல் மறைக்க இழிநூலாற் கலப்படத்தைச் செய்தோம்; இந்தக் கல்நூலைக் கண்ணகியை மறைக்க இந்நாள் காணும்நூல் எதுஎன்றார் ஆரி யர்கள் 278 இழிநூல்-ஆரியரின் இழிந்த கருத்துக்களுடைய நூற்கள். இந்தக் கல்நூல் - இந்தக் கண்ணகியின் உருவமைந்த கல்லாகிய நூல், என்றார் - என்று தமக்குள் பேசிக் கொண்டார்கள். தமிழ்ஒழுக்க வேர்இருக்கும் வரைத மிழ்ச்சீர் தடங்கிளையும் அடிமரமும் இருக்கும். இந்நாள் தமிழ்ஒழுக்க வேரழிந்தால் தமிழர் வாழ்வு தலைகவிழும் எனும்முயற்சி கைகூ டுங்கால் அமைவுடைய நெடுஞ்செழியன் நான்கு சாதி அறம் என்றான்; நாட்டோடும் அழியச் செய்தாள் தமிழரசி கண்ணகியைத் தொலைப்ப தெந்நாள் தமிற்கூடி ஆரியர்இவ் வாறு ரைத்தார். 279 தமிற்கூடி ஆரியர் இவ்வாறுரைத்தார் - தம்மிற்கூடி ஆரியர் இவ்வாறுரைத்தார். செம்பிலும், கல்லிலும் மஞ்சள் சாணி, சேற்றிலும் எவனமைக்கும் உருவி னுக்கும் நம்பெரியோர் ஆரியர்கள் மறையைக் கொண்டே நல்லுயிர்ஏற் றுதல் வேண்டும் என்ற சட்டம் பொய்ம்மைஎன் றாக்கியே கண்ண கிக்கும் பொலிவுறவே உயிரமைத்தான் தமிழத் தச்சன் நம்பொய்மைக் கற்கோட்டை தூளா யிற்று நாளைநிலை என்என்றார் ஆரி யர்கள். 280 செம்பு முதலியவற்றில் எவன் எவ்வகை உருவு அமைப்ப தாயினும் அவ்வுருவுக்கு ஆரியர் மறையினால் ஆரியரைக் கொண்டே உயிர் ஏற்ற வேண்டும் என்பது சட்டம். அதைப் பொய்ம்மையாக்கி இந்தக் கண்ணகி உருவத்தை அமைத்து விட்டான் தமிழத் தச்சன். நம் பொய்க் கோட்டையைத் தூள் தூள் ஆக்கி விட்டான். நாளை நம் நிலை என்ன என்றனர் ஆரியர் என்பது இப்பாட்டின் கருத்து. பொலிவு - அழகு, உயிரமைத்தான் - ஆளுவதான உயிரை அமையச் செய்தான். இலக்கணப் படி உடலமைக்க உயிரமையும் என்றவாறு, இயல் - 95 வாழியகண் ணகிகற்பு! வைய மெல்லாம் வாழியசெந் தமிழ்மாண்பு! jÄH fªjh‹ thÊa!வா ழியதமிழர்! யாண்டும் நன்று வாழுகின்ற தமிழரெலாம் தமிழர் ஆட்சி ஆழ்கடல்சூழ் தமிழ்நிலத்தில் நிலவச் செய்தல் அறம் என்று திறங்காட்டும் தோள்கள் வெல்க. வாழியவே புலி, கயல், வில் ஒருங்கி யன்ற மணிக்கொடிதான்! வாழ்க அறம் வாழ்க நன்றே 281 வாழியவே புலி, கயல், வில் ஒருங்கியன்ற மணிக் கொடிகள் - சோழனுக்கே உரியதென இருக்கும் புலியும், பாண்டிய னுக்கே உரியதென இருக்கும் மீனும், சேரனுக்கே உரிய தென இருக்கும் வில்லும் ஒன்றாக இயன்றதான ஓர் அழகிய கொடி வாழ்க. அறம் வாழ்க, வாழ்க நன்றே என இயைக்க.  மணிமேகலை வெண்பா அழைப்பு! மாதவிக்கு மகளாகப் பிறந்தபோதிலும், பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் கூறியதுபோல காவலனைக் காற்சிலம்பால் வென்று கொலையுண்ட, கோவலன் கொண்ட குடிப்பேர் காத்த பாவையான கண்ணகியின் மகள்தான் என்பதை மணிமேகலை வாழ்ந்து காட்டினாள். காரிகையின் கற்பின் செம்மை இந்தக் காவியத்தில் பிரதிபலிக்கப் பழய சங்க இலக்கியமான இந்த வரலாற்றுக்குத் தம் காவிய கற்பனை நயத்தின் மூலம் புதுக் குருதி பாய்ச்சி அதன் பயனை மட்டும் புத்துயிர் கொடுத்து இலக்கியமாக்கி யிருக்கிறார்கள் பாவேந்தர். அதுதான் இந்த மணிமேகலை வெண்பா. இது இன்றைய இலக்கிய உலகிற்கு ஒரு புதிய பாதை. வெண்பா எழுதுவது என்றால் மிகவும் எளிதான காரியம் அல்ல. அதிலும் சொல்லுக்குச் சொல் புதுக் கருத்துத் தரும்படி ஒரே சொல்லிலேயே இருபொருள் தரத் தன் கற்பனையையும் குழைத்து தேனாக்கி அந்தப் பழய மணிமேகலை நூலின் பயனை வடித்துத் தெளித்துத் தந்திருக்கிறார்கள் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். வெண்பாவிற்குப் புகழேந்தி என்று கூறும் பழமொழி - பழய மொழியாகப் போய்விடும் போலும்! வெண்பா அடிக்கு அடி - சொல்லுக்குச் சொல் சுவை மிக்கதாய் இருக்கிறது. இதைத் தமிழ் இலக்கிய கருவூலத்திற்குக் காணிக்கை யாக்கியிருக்கிறோம். தமிழ்மக்கள் அனைவரும் அதனைப் படித்துப் பயன்பெறுமாறு அழைக்கிறோம். வாழ்க பாவேந்தர்! வளர்க தமிழ் இலக்கியம்!! அன்பு நூலகம் சென்னை - 26. பாவேந்தர் கூறுகிறார் ... ஆபுத்திரன் தான் பெற்ற அமுதசுரபி எடுக்க எடுக்கக் குறையாமல் உணவு தரும் என்பது என்ன? மணிமேகலையிடம் அக்கலம் வந்தது. அப்போதும் அது தன் தன்மையில் குறைந்துவிடவில்லை. எடுக்க எடுக்க உணவு குறையாமல் இருந்தது. இது பழைய மணிமேகலையில் உள்ளது. இப்படிக் கூறப்படுவதன் கருத்து என்ன என்பதை விளக்க வந்தது தான் என் மணிமேகலை வெண்பா. வெண்பா ஆகலின் எண்ணிய அளவு எளிய நடையில் தரமுடிய வில்லை; ஆதலின் உரை ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. பழைய மணிமேகலை என்பதில் அடிமரத்தை மட்டும் நான் கூறிக் கிளைகளைக் கூறாது விடுத்ததன் நோக்கம், அந்தப் பழைய மணிமேகலைக் காப்பியத்தையும் மக்கள் மறவாமல் அடிக்கடி படிக்க வேண்டும் என்பதற்காகவே. பாரதிதாசன் மணிமேகலை வெண்பா பொன்னிவிழாப் பறை முழக்கம் பொன்னி விழாநாளும் போந்த தெனவேந்தன் உன்னி விழாச்செய்தி ஊரெல்லாம் - பன்னிப் பறையானை அன்றே பறையறையச் சொன்னான் இறையானை சென்ற தினிது. 1 உரை: பொன்னி விழாநாளும் - காவேரி விழா நடை பெறுகின்ற நாள்; போந்தது என - வந்துவிட்டது என்று; வேந்தன் அரசன்; உன்னி - எண்ணி; விழாச் செய்தி; - ஊரெல்லாம் பன்னி - நாட்டிலுள்ள ஊர்தோறும் சொல்லி; பறையானை - பறையறைகின்றவனை; அன்றே பறை யறையச் சொன்னான் - அன்றே பறையறையும் படி கட்டளை யிட்டான். இறை யானை - பட்டத்து யானை; இனிது சென்றது - அவ்வாறே மகிழ்ச்சியுடன் வேலைக்குச் சென்றது. பன்னிப் பறையானைப் பறையறையச் சொன்னான் என்று கூட்டுக. வேந்தன்: மாவண் கிள்ளி. இறையானை பறையானைச் சுமந்து சென்றது. நகரை உள்ளும் புறமும் புதுக்குக அரசறைந்தான் அவ்வாறே ஆங்காங்கு நாட்டில் முரசறைந்தான் முந்து புகழ்சேர் - பெருமக்கள் உள்ளும் புறமும் புதுக்கநகர்! நெஞ்சத்தை அள்ளும்கா வேரிவிழா அன்று. 2 உரை: அரசு அறைந்தான் அவ்வாறே - அரசன் சொன்ன படியே; ஆங்காங்கு - நாட்டில் ஊர் தோறும் தெருக்கள் தோறும்; முரசு அறைந்தான் - முரசு முழக்கினான். என்ன என்று? முந்து புகழ் சேர் பெருமக்கள் - பழம் புகழ்மிகுந்த நாட்டு மக்கள்; உள்ளும் - வீட்டையும்; புறமும் - வெளி இடங்களையும் ஆக; நகர் புதுக்க - நகரத்தைப் புதுமை செய்க ; என்றைக்கு? நெஞ்சத்தை அள்ளும் காவேரிவிழா அன்று - மனங் கவரும் காவேரி விழா அன்று. நகர் புதுக்க: நகரிற் புதுக்க என்றும் அமையும். புதுக்க: வியங்கோள் வினைமுற்று. நகரின் அழகமைப்பு இதுமணலோ செம்பொற் பொடிதானோ என்னப் புதுமணல் ஓவம் புரிந்த - முதுநகரில் பட்டுக் கொடியும் பறக்கும்நறுந் தொங்கலிலே மட்டுக் கொடியும்மலர்க் காம்பு. 3 உரை: இது மணலோ - புதுக்கிய இது மணல் தானோ; செம்பொன் பொடிதானோ - செம்மையான பொன்னாலான பொடிதானோ; என்ன - என்று கண்டோர் கூறும்படி ; புது மணல் - புதிய மணல் கொண்டு ; ஓவம் புரிந்த - ஓவியம் செய்த; முதுநகரில் - முதியதான அந்த நகரில்; பட்டுக் கொடி யும் பறக்கும் - பட்டினால் ஆன கொடிகளும் ஆங்காங்குப் பறக்கும்; நறுந்தொங்கலிலே - தோரணமாகத் தொங்க விட்ட நறுமலர் மாலைகளில்; மட்டுக்கு - தேன் சுமைக்கு; மலர்க்காம்பு - மலர்களின் காம்புகள்; ஒடியும் - ஒடிந்துவிடும். மட்டுக் கொடியும் - மட்டுக்கு ஒடியும். மட்டு - தேன். மலர்களின் காம்பு ஒடியக் காரணம், அதிகப்பட்டு வரும் தேனைத்தாங்க முடியாமை. ஓவம் - ஓவியம். தோரணமும் விளக்கும் சிலந்திஎங்கும் என்னத் தெருத்தோறும் மேற்பால் கலந்தியங்கும் தோரணங்கள் காற்றால் - புலந்தியங்கப் பண்ணும்முன் வீடெல்லாம்! பாழிரவில் நற்பகலைப் பண்ணுமே பாவை விளக்கு. 4 உரை: எங்கும் சிலந்தி என்ன - நகரின் எல்லாவிடத்திலும் சிலந்தி வலை பின்னிற்றோ என்று கண்டோர் வியக்கும்படி; தெருத் தோறும் - ஒவ்வொரு தெருவிலும்; மேற்பால் - மேற்புறங்களில்; கலந்து இயங்கும் தோரணங்கள் - கலந்து அசைகின்ற தோரணங்களானவை; காற்றால் - காற்றினால்; முன் வீடெல்லாம் - முன் வீட்டின் எதிரில்; புலந்தியங்கப் பண்ணும் - அறிவு மயங்கும்படி செய்யும். அதுவுமல்லாமல்; பாவை விளக்கு - ஆங்காங்கு நிறுத்தப்பட்டிருந்த பாவை விளக்குகள்; பாழ் இரவில் நல் பகலைப் பண்ணும் - ஒன்றும் புரியாத இருளான இரவில் பட்டப் பகலைச் செய்யும்; சிலந்தி - சிலந்திவலை; ஆகுபெயர். தெருப் பச்சைப் பந்தல்கள் முன்றில்ஒவ் வொன்றுமே பன்மணியால் மூடுற்றே ஒன்றில்ஒவ் வொன்றும் ஒளிமிகுக்கும் - நன்றே இருப்பச்சை இல்லாப் பெருந்தேராய்த் தோன்றும் தெருப்பச்சைப் பந்தல்கள் சேர்ந்து. 5 உரை: முன்றில் ஒவ்வொன்றும் - வீட்டின் வாயில் ஒவ்வொன்றும்; பன் மணியால் மூடு உற்றே - பலவகையான மணிகளால் மூடப் பட்டு; ஒன்றில் ஒவ்வொன்றும் - ஒரு வாயிலைவிட அடுத்த வாயில் ஒவ்வொன்றும்; ஒளி மிகுக்கும் - ஒளி அதிகப்பட்டிருக்கும். தெருப் பச்சைப் பந்தல்கள் சேர்ந்து - தெருவில் இடப்பட்டிருக்கும் பச்சைப் பந்தல்கள் வரிசையாக நின்று; இருப்பு அச்சை இல்லாத பெருந்தேராய்த் தோன்றும் - இரும்பினால் ஆன அச்சில்லாத பெருந்தேர் முகடுகளாய்த் தோற்றமளிக்கும். இரும்பு அச்சு உள்ள தேர் நடக்கக்கூடும்; அச்சில்லாத தேர் அசையாமல் நிற்கும்; ஆதலால், இருப்பச்சை யில்லாத பெருந்தேர் எனப் பட்டது. பச்சைப் பந்தலானது, தேரின் ஒப்பனை செய்த மேற்பகுதி போல் இருந்தது என்க. இரும்பு + அச்சு = இருப்பச்சு. முன்றில் - இல்லத்தின் முற்புறம். தெரு விருபாலும் பூச்செடிகள் சாடிப் பலவண்ணப் பூச்செடிகள் பன்மணியைச் சாடித் தளிர்த்துத் தெருவெல்லாம் - நாடியே பண்டழைக்க வண்டினத்தைப் பாடுங்கள் என்றுதேன் கொண்டழைத்துக் கொண்டிருக்கும் அங்கு. 6 உரை: சாடி பலவண்ணப் பூச்செடிகள் - சாடியிலே வைத்துள்ள பன்னிறப் பூச்செடிகளும்; பன்மணியைச் சாடி - ஒளியுள்ள பல மணியை யும் தம் ஒளியால் வென்று; தளிர்த்து - மேலும் தளிர் விட்டு; தெருவெல்லாம் நாடி - தெருவிலுள்ள இடங்களை யெல்லாம் எண்ணி; பண்தழைக்க - இசை தழைக்கும்படி; பாடுங்கள் - பாடுவீர்கள்; என்று - என்று கூறி; தேன்கொண்டு வண்டினத்தை அழைத்துக் கொண்டிருக்கும் அங்கு - தன்னிடமுள்ள பூவிலுள்ள தேனை வைத்து வண் டினங்களை அழைத்துக் கொண்டிருக்கும் அவ்விடத்தில், சாடி - பூச்செடி வைக்கும் சாடி. ஆடல் பாடல் தெருமுடிவில் ஆடலும் பாடலும் கொள்வார் திருமுடிவில் வேந்தன் திறலே - ஒருமுடிவில் சீர்வாழ்த்தி மன்றப் புலவரெல்லாம் செந்தமிழின் பேர்வாழ்த்தி நிற்பார் பெரிது. 7 உரை: தெருமுடிவில் - தெருவின் கடைசி தோறும்; ஆடலும் பாடலும் கொள்வார் - ஆட்டக் கச்சேரியும் பாட்டுக் கச்சேரி யும் அடைந்து மகிழ்கின்ற மக்கள்; திருமுடிவில் வேந்தன் திறவே திரு முடியையும், வேந்தன் வில்லையும் வேந்தன் திறலையும் ஒரு முடிவு இல் - ஒப்பற்றதும் முடிவில்லாதது மான; சீர் வாழ்த்தி - சிறப்பினையும் வாழ்த்தி; நிற்பார் - இருப்பார்கள்; மன்றம் - மன்றத்திலுள்ள; புலவ ரெலாம் - புலவர்கள் அனைவரும்; செந்தமிழின் - செம்மை அமைந்த தமிழுக்குள்ள; பேர் வாழ்த்தி நிற்பார் - பெருமையை வாழ்த்தி யிருப்பார். பெரிது - மிகுதியும்; தெருமுடிவில் - தெரு வின் முடிவில்; திருமுடிவில் - வேந்தன் திருமுடி; அவனுடைய வில். ஒரு முடிவில் - ஒரு முடிவு இல் எனப் பிரிக்க. குழந்தைகள் தமிழ்ப் பாடல் மைச்சிட்டுப் பாடும் மருங்கில் அதன்ஒலியை அச்சிட்டுக் காற்சிலம்பு பாடவே - தச்சிட்ட பாவை அசைந்தாடும் பாங்கில் குழந்தைதமிழ் நாவை அசைத்தாடும் நன்கு. 8 உரை: மைச்சிட்டு பாடும் மருங்கில் - கரிய சிட்டு பாடுகின்ற தின் அருகில்; அதன் ஒலியை - அச்சிட்டின் ஒலியை; அச்சு இட்டு கால் சிலம்பு பாட - முழுதும் ஒத்திருக்கும்படி காலின் சிலம்பு பாட; தச்சிட்ட - தச்சுவேலைப்பாடு அமைந்த; பாவை - பாவையை; அசைத் தாடும் பாங்கில் - அசைத்து ஆடுகின்றது போல; குழந்தை - குழந்தை; தமிழ் நாவை - தமிழ் அமைந்த நாக்கை; அசைத்து ஆடும் - பாடி உடல் அசைக்கும். மருங்கு - பக்கம்; அருகு. அச்சிட்டு - அச்சடித்தது போல முழுதும் ஒத்து என்றபடி. தமிழ்நா - நாப் பிறக்கும் போது உடன்பிறந்தது தமிழ்; ஆதலின் தமிழ்நா எனப்பட்டது. தச்சு - தச்சுத் திறத்தை; வடவர், சிற்பம் என்பர். தமிழ் மலரும் மன்றங்கள் அறம்பொருள் இன்பம்வீ டென்னுமந் நான்கின் திறம்பொருள் இன்னவெனத் தேர - உறங்கும் சிலரும் விழிக்கத் தமிழின் சிறப்பு மலரும் புலவர்தம் மன்று. 9 உரை: அறம், பொருள்,இன்பம், வீடு என்னும் அந் நான்கின் - அறம் முதலிய நான்கினது; திறம் - திறத்தையும்; பொருள் - உண்மை நிலையையும்; இன்ன எனத் தேர - இன்னபடி என்று தெரிந்து கொள்ள; உறங்கும் சிலரும் விழிக்க - கடன் மறந்து தூங்கிவிழும் சிலரும் விழிப்படைய; புலவர்தம் மன்று - புலவர் மன்றங்கள்; தமிழின் சிறப்பு மலரும் - தமிழின் சிறப்பிதழ்கள் விரியும். மன்று: எழுவாய்; மலரும்: பயனிலை காவேரி சென்று ஆடினார்கள் காற்றினில் ஆடை பறக்கப்போய்க் காவேரி ஆற்றி னிலாமுகத்தார் ஆடுவார் - நேற்றிரா உண்டஇதழ் கொம்புத்தேன் காதலர்கள் அந்நேரம் கண்டஇதழ் மாணிக்கக் காடு. 10 உரை: காற்றினால் - காற்றால்; ஆடை பறக்க - பூண்ட ஆடைகள் பறக்கும்படி; போய் காவேரி ஆற்றில் - சென்று காவேரி ஆற்றிலே; நிலா முகத்தார் - நிலா போன்ற முகத்தை உடைய மகளிர்; ஆடுவார் - மூழ்குகின்றனர். காதலர்கள் - அவ்வாறு மூழ்கும் பெண்களின் காதலர்கள்; நேற்று இரா - நேற்றைய இரவு; உண்ட இதழ் - சுவைத்த அப்பெண்களின் வாயிதழ்கள்; கொம்புத் தேன் - கொம்புத் தேனாகும்; அந்நேரம் - அப் பெண்கள் மூழ்கு கின்ற அந்நேரத்தில்; எப்படி இருந்தது என்றால்? கண்ட இதழ்கள் மாணிக்கக் காடு போன்றிருந்தன. ஆற்றினிலா முகத்தார் என்பதை, ஆற்றில் நிலா முகத்தார் எனப் பிரிக்க. காடு: மிகுதியை உணர்த்தியது. மக்கள் நெருக்கம் நீராடி மீளும் நெடுந்தேர் பரிதாண்டி நேராடப் போவார் நெருக்கடைவார் - ஆரிழையார் பின்னடக்க மாச்செல்வர் பீடுமலர்க் கைபற்றி முன்னடக்க மாச்செல்வர் மொய்த்து. 11 உரை: நீராடி மீளும் நெடுந்தேர் - நீராடி விட்டுத் திரும்புகின்ற பெரிய தேர்களையும்; பரி - மக்களை முதுகிற் சுமந்துவரும் குதிரைகளையும்; தாண்டி - கடந்து; நேர் ஆடப்போவார் நெருக்கடைவர் - நேரே சென்று புனலாடப் போகின்றவர்கள் நெருக்கத்தில் தொல்லையடைவார்கள். மேலும்; ஆரிழையார் - நிறைந்த நகையணிந்த மங்கைமார்; பின்நடக்க - தம்பின் நடந்துவர; மாச் செல்வர் - பெருஞ்செல்வர்கள்; பீடுமலர்க் கைபற்றி - தம் மனைவிமாரின் பெருமையுடைய மலர் போன்ற கையைப் பிடித்தபடி; முன் - முன்னே; அடக்கமாச் செல்வர் - அடக்கமாகச் செல்வார்கள். மொய்த்து - நெருங்கி; முன்னடக்கமாச் செல்வர் என்பதை, முன் அடக்கமாகச் செல்வர் என்று பிரிக்க. அடக்கம் ஆ என்பதிலுள்ள ஆ, ஆக என்பதின் மாறு. பெண்கள் பின்னோடு வருகின்றார்கள்; கணவர்கள் அவர்கள் கையைப் பிடித்தபடி முன்னோக்கி அடக்கமாகச் செல்கின்றார்கள் என்க. அரசுக்கு வாழ்த்து வாழிய சோழன்மா வண்கிள்ளி செங்கோலே வாழிய சோழன் வரிப்புலி நீ - டூழி எனப்பாவை யார்வத்தால் பாடினார் கூத்த ரினப்பாவை யார் ஆடினார். 12 உரை: சோழன்மா வண்கிள்ளி வாழி - சோழன் மாவண் கிள்ளி வாழ்க; செங்கோல் வாழ்க - அவன்தாங்கிய செங்கோல் வாழ்க; வரிப் புலி - அவன் புலிக்கொடி நீடூழி வாழ்க ; என - என்று ; பாவை - பாட்டுக்களைப்; பாவலர்; ஆர்வத்தால் பாடினார் - ஆர்வத்தோடு பாடினார்கள். கூத்தரினப் பாவையார் - கூத்துத் தொழில் செய்கின்ற இனத்தைச் சேர்ந்த ஆடல் மகளிர்; ஆடினார் - ஆடினார்கள். பா - பாட்டு; பாவை, இரண்டாம் வேற்றுமை உருபேற்றது. பாவைப் பாடினார் என்றதால், பாவலர் தோன்றா எழுவாய் ஆயிற்று. அரசவையில் அவள் ஏன் இல்லை? போதவிழும் கூந்தலார் போந்தாடும் போதெல்லாம் மாதவியும் மேகலையும் வாராரோ - ஏதவர்க்கு நேர்ந்ததென் றார்சில்லோர் நேர்மைஇது வோஎன்றார் சேர்ந்ததிது தாயின் செவி. 13 உரை: போதவிழும் கூந்தலார் - சூடிய அரும்பு மலர்ந்து கொண்டிருக்கும் கூந்தலையுடைய ஆடல் மகளிர்; போந்து - அரசவைக்கு வந்து; ஆடும்போதெல்லாம் - ஆடுகின்ற அனைத்து நேரமும்; மாதவியும் மேகலையும் வாராரோ - மாதவியும் மணிமேகலை யும் வராமலா இருந்து விடுவார்கள்? ஏது அவர்க்கு நேர்ந்தது என்றார் சில்லோர் - அவ்விருவர்க்கும் என்ன இடையூறு நேர்ந்தது என்றார்கள் அவையினரில் சிலர்; நேர்மை இதுவோ என்றார் - இது நேர்மையா என்றார் சிலர்; இது - இந்த முணு முணுப்பு; தாயின் செவி சேர்ந்தது - அங்கு ஒரு புறமிருந்த மாதவியின் தாயின் செவியில் விழுந்தது. மாதவியின் தாய், மாதவியையும் மணிமேகலையையும் அழைத்துவா என்று பாங்கிக்குக் கூறினாள் பிழைஎன்றாள் மாதவிதாய் பெண்பேர்த்தி மாரை அழைஎன்றாள் மன்றத்தில் ஆட - உழையிருந்த பாங்கி நடந்தாள் அப் பச்சைமயில் அச்சவிடை ஏங்கிற்றோ என்ன எழுந்து. 14 உரை: மாதவி தாய் - உடனே மாதவியின் தாயானவள்; பிழை என்றாள் - மாதவி, மணிமேகலை வராதது தவறு என்றாள்; பெண் பேர்த்தி மாரை - பெண்ணாகிய மாதவியையும், பேர்த்தியாகிய மணி மேகலையையும்; மன்றத்தில் ஆட அழை என்றாள் - அவையில் ஆடுவதற்கு அழைத்துவா என்றாள். உழையிருந்த பாங்கி - அண்டையிலிருந்த பாங்கி யானவள்; நடந்தாள் - அழைக்க நடந்தாள்; அப்பச்சை மயில் - அந்தப் பச்சை மயில் போன்ற பாங்கி; அச்ச இடை - சிறிய இடுப்பு ஒடிந்து போகக் கூடுமே என்று; ஏங்கிற்றோ - ஏக்கம் அடைந்ததோ; என்ன - என்று நினைக்கும்படி; எழுந்து - சரேலென்று எழுந்து நடந்தாள். உழை - அண்டை. பாங்கி எழுந்தபோது, அவளின் பெரு மார்பைச் சிற்றிடை தாங்க ஏங்கிற்றோ என்று உலகு நினைப்பது இயற்கை. மாதவியிடம் பாங்கி உரைத்தாள் ஆங்கிருந்த மாதவியை அன்பால் அணுகியே நீங்கா உமதுகடன் நீங்கிற்றோ - ஊங்காட ஏன்மறந்தீர் ஏற்ற கலைவல்லீர்? மாமதிதான் வான்மறக்கு மோ என்றாள் மாது. 15 உரை: ஆங்கிருந்த மாதவியை - வீட்டிலிருந்த மாதவியை; அன்பால் அணுகியே - அன்பால் பாங்கியானவள் நெருங்கி; நீங்கா உமது கடன் நீங்கிற்றோ - அரசவைக்கண் வந்து ஆடுதல் என்ற உங்களுடைய கட்டாயக் கடமை ஒழிந்து போனதா? ஊங்காட - அவைக்குள் வந்து ஆட; ஏன் மறந்தீர் - மறந்துபோனமைக்கு என்ன காரணம்? ஏற்ற கலை வல்லீர்-தகுதிவாய்ந்த ஆடற் கலை வல்லவர்களே; மாமதி தான் - திங்களானது; வான் மறக்குமோ - வானத்தை மறப்ப துண்டோ? என்றாள் மாது - என்று கூறினாள் பாங்கி. ஊங்கு ஆட: அங்குமில்லை இங்குமில்லை அரசவை யில் ஆட என்றபடி. ஊங்கு - நடுவிடம். மாதவி பாங்கியிடம் கூறுகின்றாள் காவலனைக் காற்சிலம்பால் வென்று கொலையுண்ட கோவலன் கொண்டகுடிப் பேர்காத்த - பாவை தரத்தைஆய் வாளாதன் தாமரைபோற் கண்ணாள் பரத்தை ஆய் வாழ்வாளா பார். 16 உரை: காவலனை-பாண்டியனை; காற்சிலம்பால்-தன் காற் சிலம்பினால்; வென்று - வெற்றிகொண்டு: கொலையுண்ட - பாண்டியனால் கொலையுண்ட; கோவலன் குடிப்பெயர் காத்த - கோவலனின் குடிப்பெருமையைக் காப்பாற்றிய; பாவை - கண்ணகியின்; தரத்தை ஆய்வாளா - கற்பின் பெருமையை எண்ணுவாளா? பின் - அதுவல்லாது; தாமரைபோற் கண்ணாள் - தாமரைபோற் கண்ணையுடைய அந்த மணிமேகலை; பரத்தை ஆய் - பரத்தையாகி; வாழ்வாளா - உயிரை வைத்திருப்பாளா? பார் - நீயே எண்ணிப்பார். மாதவி, கண்ணகியை மணிமேகலையின் தாய் என்று சிறப்பித்துக் கூறினாள். பாவை என்றது - கண்ணகியை. மணிமேகலை அவைக்கு வரமாட்டாள் என்கின்றாள் மாதவி இன்பமெனல் நற்றவத்தால் எய்துவதாம் மற்றுள்ள துன்பமெனல் இவ்வுலகில் தோய்வதுவாம் - என்பதவள் எண்ணமணி மேகலைதான் ஏகாள் அவை; இஃது திண்ணம்எனச் செப்பினாள் தாய். 17 உரை: இன்பம் எனல் - நிலையான இன்பம் எனப்படுவது; நற்றவத்தால் எய்துவதாம் - நல்ல தவத்தின் பயனாக அடைவதேயாகும்; மற்றுள்ள - அதற்கு வேறானதான; துன்பம் எனல் - துன்பம் என்று சொல்லப்படுவது; இவ்வுலகில் தோய்வது ஆம் - இவ் வுலகப் பற்றில் உழலுவதேயாகும்; என்பது அவள் எண்ணம் - என்பது என்மகளாகிய மணி மேகலையின் எண்ணமாகும். மணிமேகலைதான் ஏகாள் அவை - ஆதலால் மணிமேகலை ஆடரங்கிற்கு ஏகாள்; இஃது திண்ணம் - இது உறுதி; எனச் செப்பினாள் தாய் - என்று சொன்னாள் தாயாகிய மாதவி. `உலகம் என்றது - உலகப் பற்றை. அறவண அடிகளிடம் மாதவி சொன்னாளாம் அல்லலுற்றேன் காதலனின் கண்ணகியின் அல்ல லெல்லாம் சொல்லலுற்றேன் வந்திங்கே! தூய்நெறியே - செல்லலுற்ற அண்ணல் அடிகள் அறவணர்பால்! நான்அதன்மேல் நண்ணல் நவின்றார் அவர். 18 உரை: அல்லலுற்றேன் - நான் அல்லலுக்கு உள்ளானேன்; மேலும் காதலனின் - என் காதலனாகிய கோவலனின்; கண்ணகியின் - அவன் மனைவியாகிய கண்ணகியின்; அல்ல லெல்லாம் துன்பத்தை எல்லாம்; சொல்லலுற்றேன் - சொன்னேன்; எப்போது எங்கே எனில்? வந்து இங்கே - கோவலனைப் பிரிந்து இங்கே வந்து; தூய் நெறியே செல்லலுற்ற - நன்நெறியிலே செல்லலுற்ற; அண்ணல் - பெருமைமிக்க; அடிகள் அறவணர்பால் - அறவணஅடிகள் இடத்தில் - அவ்வாறு சொன்ன அளவில்; நான் அதன்மேல் - நான் அதற்குமேல்; நண்ணல் நவின்றார் அவர் - நணுகிச் செய்ய வேண்டியது இன்னதென்று அவர் சொல்லியருளினார். நடந்தவற்றை அறவணவடிகளிடம் நான் சொன்னேன்; அவர் இனி நான் நடந்து கொள்ளவேண்டிய முறையைச் சொன்னார் என்றாள் மாதவி. அறவணர் சொல்லியது எப்பொருட்கும் ஆட்படுதல் இன்றி இடரற்ற மெய்ப்பொருள் ஆதல் விடுதலை - அப்பொருளின் பற்றுக்குப் பற்றுவிட வேண்டுமென்றார் மற்றஎலாம் எற்றுக்கென் றாள்மா தவி! 19 உரை: எப்பொருட்கும் ஆட்படுதல் இன்றி - மண், பெண், பொன் முதலிய எந்தப் பொருளுக்கும் கட்டுப் படாமல்; இடரற்ற - துன்பமில்லாத; மெய்ப்பொருள் ஆதல் விடுதலை - உண்மைப் பொருள் நாடுதல் ஒன்றே விடுதலை - அப் பொருளின் - அந்த மெய்ப்பொருளின்; பற்றுக்கு - மெய்ப் பொருளை அடைவதற்கு; பற்றுவிட வேண்டும் - பற்றுகளை எல்லாம் நீக்க வேண்டும்; என்றார் - என்று அறவணர் சொன்னார். அப்படி இருக்க; மற்ற வெல்லாம் - நீ சொல்கின்ற ஆடல் பாடல் எல்லாம்; எற்றுக்கு - எதற்கு? என்றாள் மாதவி - என்று கூறினாள் மாதவி. மாதவி ஆயத்தார்க்கும் அன்னைக்கும் சேதி அறிவித்தாள் அம்மைக்கே ஆயத்தி னோர்க்கே அறிவி என்று செம்மைக்கே ஆயத்தி செப்பினாள் - கைம்மேல் இருந்த மணியே இழந்தவள்போல் நெஞ்சம் வருந்த நடந்தாள்அம் மாது. 20 உரை: அம்மைக்கே - தன் தாய்க்கும்; ஆயத்தி னோர்க்கே - ஆயத்தார்க்கும்; செம்மைக்கே ஆயத்தி - செம்மை நெறி யேக ஆயத்தமாய் இருப்பவளாகிய மாதவி; செப்பினாள் - இவ்வாறு செப்பினாள். செப்பவே; அம்மாது - அந்தத் தோழி; கைம்மேல் - கையில், இருந்த மணியை - இருந்த மணி ஒன்றை; இழந்தவள் போல் - இழந்தவள் போல; நெஞ்சம் - மனமானது; வருந்த நடந்தாள் - வருந்தும்படி சென்றாள். ஆயத்தம் - செயல் தொடக்கம்; ஆயத்தி - செயல் தொடங்கு கின்றவள். ஆங்கு ஒருபுறம் பூத்தொடுக்கும் மணிமேகலை நிலை கோவலனின் மாதவியின் அன்பின் கொடை! அழகை மேவலரும் போற்றுமணி மேகலைதான் - ஆவலுடன் பாத்தொடுத்துக் கொண்டிருப்பார் போலுமொரு பாலிருந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள் ஆங்கு. 21 உரை: கோவலனின் மாதவியின் அன்பின் கொடை - கோவலனும் மாதவியும் அன்பு செய்ததன் பயனாகப் பிறந்தவளும்; அழகை - உள்ளத்தின் உடம்பின் அழகை; மேவலரும் - பகைவரும்; போற்றும் - பாராட்டுகின்ற; மணி மேகலை - மணிமேகலை என்னும் பெயருடையவளும் ஆகிய; தான் - அவள்; ஆவலுடன் - ஆவலோடு; பூத் தொடுத்துக் கொண்டிருந்தாள் ஆங்கு - பாங்கியுடன் மாதவி பேசிக் கொண்டிருந்த வீட்டில் ஒருபுறம் பூத்தொடுத்தலில் கருத் தூன்றியிருந்தாள்; பாத் தொடுத்துக் கொண்டிருப்பார் போலும் - பாட்டைப் பாவலர் உருவாக்குவதுபோல இருந்தது. அவள் பூத்தொடுத்துக் கொண்டிருந்தது. மணிமேகலை பூத்தொடுக்கும் திறம் பன்மலர்க்காம் பொவ்வொன்றும் பச்சைமயில் மேகலை தான் மென்மலர்க்கைக் காந்தள் விரல்பற்றித் - தன்மலர்க்கண் கூறுமுறை கோணாமல் கட்டுந்தார் வண்ணத்தை நூறுமுறை நோக்கல் தகும். 22 உரை: பன்மலர்க்காம்பு - பலவகை மலர்களுக்குள்ள ஒவ்வொரு காம்பையும்; பச்சை மயில் மேகலைதான் - பச்சை மயில்போன்ற மணிமேகலையானவள்; மென்மலர் கை காந்தள் விரல் பற்றி - மென்மையான மலர்போன்ற உள்ளங் கையிலமைந்த காந்தள் விரலால் பற்றி; தன் மலர்க்கண் - தன் மலர் போன்ற கண்கள்; கூறுமுறை கோணாமல் - கட்டளை இடுகின்றபடி; கட்டும் தார் - கட்டுகின்ற மாலையின்; வண்ணத்தை - அடுக்குநிற அமைப்பை; நூறுமுறை நோக்கல் தகும் - நூறுதரம் பார்த்தாலும் தகுதியுடையதே. ஒருமுறை இருமுறை பார்த்தால் போதாது: நூறு முறை பார்த்தாக வேண்டும்; அவ்வளவு வேலைப்பாடு கொண்டிருந் தது மாலை. மென் மலர்க்கை என்பதில் கூறப்படும் மலர் செந் தாமரை மலர்! கண் மலர் என்பதில் கூறப்படும் மலர் நீல மலர். காந்தள் விரல் - செங்காந்தளின் இதழ் விரலுக்கு உவமை. மாதவி பாங்கியிடம் கூறிய வரலாறு மணிமேகலையை வருத்தியது ஆங்கிருந்த மாதவிதன் ஆளன்மனை யாளிடரைப் பாங்கிருந்த பாங்கிக்குக் கூறியதைக் - கோங்கிருந்த வண்டார் குழலி மணிமே கலைசெவியால் மொண்டாள் முறிந்தாள் தன் நெஞ்சு. 23 உரை: ஆங்கு இருந்த மாதவி - அங்கே இருந்த மாதவி யானவள்; தன் ஆளன் மனையாள் இடரை - காதலால் தன்னை ஆண்ட கோவலனின் மனைவியான கண்ணகியின் துன்ப வரலாற்றை; பாங்கிருந்த பாங்கிக்குக் கூறியதை - தன் பக்கத்தி லிருந்த பாங்கியிடம் கூறியதை; கோங்கு இருந்த வண்டார் குழலி மணிமேகலை - கோங்கு மலரில் இருந்த வண்டுகள் ஆர்க்கும் குழலையுடைய மணிமேகலை; செவியால் - காதால்; மொண்டாள் - மொண்டாள்; அதாவது கேட்டாள். அதனால், தன் நெஞ்சு முறிந்தாள் - தன் உள்ளம் முறிந்து போனாள். மணிமேகலை கட்டிய மாலை கண்ணீரில் மிதந்தது காவலன்தன் காவல் பிழைத்ததுவும் கண்ணகியும் கோவலனும் மாண்டதுவும் கூறியதைப் - பாவை நினைப்பாள் நிலைதளர்வாள் கண்ணீரை ஊற்றி நனைப்பாள் நறுமலர்த்தா ரை. 24 உரை: காவலன்தன் காவல் - பாண்டியன் தன் மக்களைக் காக்குமுறை; பிழைத்ததும் - தவறியதும்; கண்ணகியும் கோவலனும் மாண் டதுவும் - கண்ணகியும் கோவலனும் இறந்ததுவும்; கூறியதை - மாதவி பின் விரித்துக்கூறியதை; பாவை நினைப்பாள் நிலை தளர்வாள் - பாவை போன்ற மணி மேகலை எண்ணுவாள்; எண்ணி நிலை தளர்வாள்; கண்ணீரை ஊற்றி - தன்கண்ணி னின்று பெருகும் நீரை ஊற்றி; நறு மலர்த்தாரை - மணக்கும் பூ மாலையை; நனைப்பாள் - நனையச் செய்வாள். கண்ணீர் பெருக் கெடுக்கின்றது; மாலையை அது நனைக்கின்றது; இதை அவள் நனைத்ததாகச் சொல்லுவது ஒருவகை உருவகம். மாதவி அறிந்தாள் கரும்பிருக்கும் சொல்லும் கனியுதட்டின் ஓரம் அரும்பிருக்கும் அஞ்சிரிப்பும் எங்கே? - திரும்பித்தாய் பெண்கண்டாள் பெண்தொடுக்கும் மாலைமிதக்கக் கண்டாள் கண்கண்டாள் கண்ணீர்கண் டாள். 25 உரை: கரும்பு இருக்கும் சொல்லும் - கரும்பின் இனிமை இருக்கின்ற பேச்சும்; கனி உதட்டின் ஓரம் அரும்பு இருக்கும். அம் சிரிப்பும் - முல்லை அரும்பின் வெண்மை இருக்கும் அழகிய சிரிப்பும்; எங்கே - மணிமேகலையிடம் இல்லையே; திரும்பித்தாய் - என்று திரும்பித் தாயாகிய மாதவி; பெண் கண்டாள் - தன் மகளாகிய மணிமேகலையைப் பார்த்தாள்; பெண் தொடுக்கும் மாலை மிதக்கக் கண்டாள் - மகள் தொடுத்துக் கொண்டிருக்கும் மாலை யானது மிதக்கக் கண்டாள். எதில்? கண்கண்டாள் - அவள் கண்களைக் கண்டாள்; கண்ணீர் கண்டாள் - கண்ணினின்று பெருகும் நீரைக் கண்டாள். கண்ணீரில் அவள் கட்டும் மாலை மிதந்தது; அஞ்சிரிப்பு - அம்சிரிப்பு - அழகிய சிரிப்பு; அம் - அழகு. துன்பத்தால் நிலைதளர்ந்தாள்; ஆதலின், அவள் கையினின்று மாலை தரையில் நழுவிற்று; அது கண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது எனக் கொள்க. கரும்பு - கரும்பின் சாறு; சாற்றின் இனிமையைக் குறித்தது. இதை இருமடி ஆகுபெயர் என்பர். அரும்பு இருக்கும் என்றது; அரும்பின் அழகு அமைந்த என்றபடி; இது ஆகுபெயர்; முதலாகு பெயர் என்க; அரும்பாகிய முதல் அதன் அழகுக்கு ஆகியது. வேறு மலர் வேண்டினாள் தாய் ஆறொன்று கண்ணீர் அலங்கலைத்தீ தாக்கியதால் வேறொன்று காணமலர் வேண்டென்று - வீறொன்று நெஞ்சினாள் மாதவிதான் நேர்ந்த துயர்மாற்றக் கெஞ்சினாள் கேட்டாள் கிளி. 26 உரை: ஆறு ஒன்று கண்ணீர் - ஆறுபோன்ற கண்ணீர்; அலங் கலை தீது ஆக்கியதால் - மாலையைத் தீயதாக்கி விட்டதால்; வேறு ஒன்று காண - வேறு ஒரு மாலையை உருவாக்க; மலர் வேண்டு - பூவைப் பறித்துவர விரும்புவாய்; என்று - என்று இவ்வாறு; வீறு ஒன்று நெஞ்சினாள் - பெருந்தன்மை பொருந்திய நெஞ்சுடையவளான; மாதவிதான் - மாதவி யானவள்; நேர்ந்த துயர்மாற்ற - மணி மேகலைக்கு நேர்ந்த மனத்துன்பத்தை மாற்றுவதற்காக; கெஞ்சினாள் - கெஞ்சலானாள். கிளி கேட்டாள் - கிளி போன்ற மணி மேகலை ஒப்பினாள். மணிமேகலை வெளியிற் செல்லுவதைப் பாங்கி எதிர்த்தாள் ஈதுரைக்கக் கேட்ட எழிற்பாங்கி அன்னையீர் ஏதுரைக்க லானீர் இதோஇந்த - மாதுரைக்கின் மையேந்து கண்ணாய் மயல்தீர்க்க வேண்டுமென்று கையேந்தும் கண்டால் உலகு. 27 உரை: ஈதுரைக்கக் கேட்ட எழிற்பாங்கி - இப்படி வேறு மலர் பறிக்கப் போ என்று தாய் கூறியதைக்கேட்ட பாங்கியானவள்; அன்னையீர் - அன்னையவர்களே! ஏதுரைக் கலானீர் - என்ன பேச்சுப் பேசுனீர்கள்? இதோ இந்த - இதோ நிறைந்த அழகோடு குந்தி யிருக்கும் இந்த; மாது உரைக்கின் - பெண்ணைப் பற்றிக் கூற வேண்டுமானால்; மையேந்து கண்ணாய் - கருமை நிறம் திகழும் கண்ணை உடையவளே; மயல் தீர்க்கவேண்டும் - நாங்கள் கொண்ட மையலை நீ தீர்க்க வேண்டும்; என்று - என்று கெஞ்சிய படி; கையேந்தும் கண்டால் உலகு - கை யேந்தும் எப்போது? கண்டால் - இந்த மணிமேகலையைப் பார்த்தால். எவரெவர்? - உலகிலுள்ள ஆடவர்கள். இவளை மலர் பறிக்க வெளியிற் போகச் சொல்லு கின்றீரே அன்னையீர்! இவள் வெளியிற் சென்றால் ஆடவர் உலகமே மொய்த்துக்கொண்டு என் மையலைத் தீர் என் மையலைத் தீர், என்று தொல்லைப் படுத்தக் கூடுமே! அவளோ காமத்தை வெறுத்தவளாயிற்றே என்று பாங்கி சொன்னபடி. மேலும் பாங்கி கூறுகின்றாள் போது பறிக்கஎங்கும் போகவிடா தீர்அழகு மாதுபறிக்க எங்கும் மாநிலத்தின் - மீது விழிதிறந்து வாழ்கின்றார் வேந்தர் அழிவுக்கு வழிதிறந்து வாழ்வோமா நாம். 28 உரை: போது பறிக்க எங்கும் போக விடாதீர் - மலர் பறிக்க அவளை எவ்விடத்திற்கும் போகவிட வேண்டாம்; அழகு மாது பறிக்க - அழகிய மாதைப் பறிக்க; எங்கும் மாநிலத்தின் மீது - மாநிலத்தின் மீது எவ்விடத்தும்; விழிதிறந்து வாழ்கின்றார் வேந்தர் - வேந்தர்கள் கண்ணால் அவள் வரும் வழியை உற்று நோக்கிய படி இருக்கின்றார்கள்; அழிவுக்கு - அப்படி இருக்க, மணிமேகலையின் அழிவுக்கு; வழிதிறந்து வாழ்வோமோ நாம் - வழியுண்டாக்கி வாழ முடியுமா நாம்? வெளியிற் போனால் மணிமேகலைக்கு அழிவு ஏற்படும் என்று மறுத்தாள் பாங்கி. உதய குமரனால் கேடு வரக்கூடும் எவ்வனமே சென்றாலும் ஏந்தலின் தோன்றலுக்குச் செவ்வனமே செப்பப் பலருள்ளார் - இவ்வனம் மல்லல் உவவனம்! மங்கையுடன் நானுமே செல்லலெனிற் செல்வேன் என்றாள். 29 உரை: எவ்வனமே சென்றாலும் - மணிமேகலை எந்த மலர் வனத்திற்குச் செல்வதாய் இருந்தாலும்; ஏந்தலின் தோன்றலுக்கு - அரசன் மகனான உதயகுமாரனுக்கு; செவ் வனமே செப்பப் பலருள்ளார் - செவ்வையாகத் தகவல் கொடுக்க ஆட்கள் பலர் அவனுக்குக் காத்திருக்கின்றார்கள்; இவ்வனம் - இங்கு அருகிருக்கும் இந்த வனமோ; மல்லல் உவவனம்- வளப்பமான உவவனம்; அவனுடைய ஆட்சிக்கு உட்பட்டதே! ஆதலால், மங்கையுடன் - மணிமேகலையுடன்; நானுமே - நானும்; செல்லல் எனில் - அவள் செல்வதாய் இருந்தால்; செல்வேன் என்றாள் - நான் போகின்றேன் என்று கூறினாள் பாங்கி. தாய் ஒப்புக்கொண்டதால் இருவரும் எழுந்தார்கள் தன்னில் எழுந்த தமிழ்ப்பாட்டும் சொல்மாற்றிப் பின்னி எழுந்த பிழைப்பாட்டும் - என்ன ஒருமணி மேகலையும் பாங்கியும் ஆன இருமணியும் சென்றார் எழுந்து. 30 உரை: தன்னில் எழுந்த தமிழ்ப்பாட்டும் - தானே சுரந்த தமிழ்ப் பாட்டும்; சொல்மாற்றிப் பின்னி எழுந்த பிழைப் பாட்டும் என்ன - சொற்களை மாற்றி வேறு சொல்லை வைத்துப் பின்னிச் செய்த பிழைப்பாட்டும் என்று சொல்லும்படி, ஒரு மணிமேகலையும் - ஒப்பற்றவளாகிய மணிமேகலையும்; பாங்கியும் - பாங்கியாகிய சுதமதியும்; ஆன - ஆகிய; இரு மணியும் - அழகிய இருவரும்; எழுந்து சென்றார் - எழுந்து மலர் வனம் நோக்கிச் சென்றார்கள். மணிமேகலை தன்னில் எழுந்த தமிழ்ப் பாட்டுப் போன்றவள்; சுதமதி சொல் மாற்றிப் பின்னி எழுந்த பிழைப் பாட்டுப் போன்றவள் என இருவருக்கும் வேறுபாடு காண்க. இருமணி என்றதில் உள்ள மணிக்கு அழகு என்று பொருள். பின்னி: செயவினை எச்சத் திரிபு. மணிமேகலையும் சுதமதியும் காட்சிக்கு மகிழ்வார் மனம் கவிழ்வார் கூட்டுக் கிளிகள் இருக்கை குறையாக்கிக் காட்டு மயிலாகிக் கால்வைத்த - பாட்டையெலாம் ஒவ்வொன்றும் காண்பார் வியப்பார் உருகுவார் எவ்வொன்றும் ஈடு படார். 31 உரை: கூட்டுக்கிளிகள் - கூட்டுக் கிளிகள் போன்ற மணி மேகலை சுதமதி இருவரும்; இருக்கை குறையாக்கி - அவர்கள் இருந்த இடத்தைக் குறைபாடுள்ளதாக்கி; காட்டு மயிலாகி - காட்டில் உலாவுகின்ற மயில் போலாகி; கால் வைத்த - தாம் கால் வைத்த; பாட்டையெல்லாம் - வழி யெல்லாம்; ஒவ்வொன்றும் காண்பார் - ஒவ்வொரு புதுமையை யும் பார்ப்பார்கள்; வியப்பார் - வியக்கத் தக்கவற்றிற்கு வியப்புறுவார்கள்; உருகுவார் - மனமிரங்கத் தக்கதற்கு மனமிரங்குவார்; ஆயினும்; எவ்வொன்றும் ஈடுபடார் - எதிலும் தொடர்பு கொள்ளமாட்டார்கள். ஒவ்வொன்றும்: ஏழாம் வேற்றுமைத் தொகை. ஒரு களி உண்ணா நோன்பியைக் கட்குடிக்க அழைக்கின்றான் பண்ணாத நல்ல சுவைநீர் பருகிடலாம் உண்ணாத நோன்பிகளும் உண்ணிலொன்றும் - பண்ணாதென் றுள்ளுக் கழைத்தான் ஒருகளி! நோன்பிகண்டான் கள்ளுக் கடைஎன்ற பேர். 32 உரை: பண்ணாத - மனிதரால் பண்ணியது அல்லாத; நல்ல சுவைநீர் - மிக்க சுவையுள்ள நீரை; பருகிடலாம் - நாம் குடிக்கலாம். உண்ணாத நோன்பிகளும் உண்ணில் ஒன்றும் பண்ணாது - உண்ணுதலை நீத்த நோன்பிகள் உண்டாலும் ஒன்றும் பண்ணி விடாது; என்று - என்று கூறி; உள்ளுக்கு அழைத்தான் - உள்ளே வா என்று அழைத்தான்; கள்ளுக் கடை என்ற பேரை நோன்பி கண்டான் - கள்ளுக்கடை என்று கடைக்குமுன் எழுதப் பட்டிருப்பதை நோன்பி கண்டான்; போக மறுத்தான் என்றபடி. கள் செயற்கை முறையால் உண்டானதல்ல; ஆதலால் பண்ணாத நல்ல சுவைநீர் எனப்பட்டது. களி: கள்ளுண்டு மயங்கு வோனுக்குப் பெயர். பெருங்களி இயல்பு மறுகு படுபிணத்தின் காதில் மகிணன் அறுகு செலுத்த அவனைக் - குறுகினான் கட்டிகுடித்தேன் ஓய்வெடுத்தேன் என்றான்ஏன் ஓய்வென்னக் கட்குடிக்கத் தான்என்றான் காய்ந்து. 33 உரை: மறுகு - தெருவில்; படுபிணத்தின் - கிடந்த பிணத்தின்; காதில் - காதிலே; அறுகு - ஓர் அறுகம்புல்லை; செலுத்த - விட; அவனை - அந்தப் பிணத்தை; மகிணன் - மகிணன் என்பவன்; குறுகினான் - நெருங்கினான்; கட்குடித்தேன் - கள் நிறையக் குடித்தேன்; அதனால் ஓய்வெடுத்தேன் - இப்படிப் படுத்தபடி ஓய்வெடுத்தேன்; என்றான் - என்று பிணம்போல் கிடந்தவன் சொன்னான். ஏன் ஓய்வு என்ன - அதற்கு மகிணன் ஓய்வு எதற்காக என்று கேட்க; காய்ந்து - எரிச்சல் அடைந்து; கட் குடிக்கத்தான் - மேலும் கள்ளைக்குடிக்கத்தான் என்று விடை கூறினான். பிணம்போல் கிடந்தானைப் பிணம் என்றே கூறப்பட்டது. நரி, நாய், பறவை சூழ வழிநடுவிற் கிடந்த சவமதனை என்ற வேதநாயகம் பிள்ளை பாட்டில், செத்தான் போற் கிடந்தானைச் சவம் என்றே கூறப்பட்டது காண்க. வையம் துன்பம் நிறைந்தது வைய நடைமுறையில் துன்பமே வாய்ப்பதன்றி உய்யுமா றில்லை எனஉரைத்துத் - துய்ய மணிமே கலைஅம் மறுகு நடந்தாள் அணிமேவும் அப்பாங்கி யோடு. 34 உரை: வையம் நடைமுறையில் - உலக நடைமுறையில்; துன்பமே வாய்ப்பதன்றி - துன்பமே வாய்க்கின்றதல்லாமல்; உய்யுமாறில்லை - ஈடேற்றம் என்பது கிடையாது; என உரைத்து - என்று சொல்லி; மறுகு நடந்தாள் - தெருவில் சென்றாள் மணி மேகலை; அணிமேவும் - அழகு பொருந்திய; அப்பாங்கியோடு - சுதமதியோடு. உய்யும் ஆறு எனப் பிரிக்க. ஆறு - வழி. எங்கும் குறைபாடு பொன்னைக் குவித்துவைத்தோன் பொங்கலுண்ணவாழையிலைத் தொன்னை திருடுகையில் தோதுகண்டு - பின்ஒருவன் மேலாடை மேற்சென் றிழுப்பான் அவன்செருப்பைக் காலாடி னான்ஒருவன் கண்டு. 35 உரை: பொன்னைக் குவித்து வைத்தோன் - பொன்னைக் குவியலாகக் குவித்து வைத்துள்ள ஒரு பணக்காரன்; பொங் கலுண்ண - வீட்டில் சமைக்கப்பட்டுள்ள பொங்கலை இட்டு உண்பதற்காக; வாழையிலைத் தொன்னை - ஒரு கடையி லுள்ள வாழையிலைத் தொன்னையை; திருடுகையில் - கடைக்காரன் காணாமல் எடுக்கையில்; பின் ஒருவன் - பின்னிருந்த ஒருவன்; மேலாடை - திருடன் மேலே போர்த் திருந்த ஆடையை; மேற்சென்று - அத்துமீறி; இழுப்பான் - திருட முயலுவான்; அவன் செருப்பை - அவ்வாறு திருட முயலுவானின் செருப்பை; ஒருவன் - மற்றொருவன்; கண்டு - ஏமாந்திருப்பதைக் கண்டு; காலாடினான் - காலால் திருடினான். நிறைவு படா நெஞ்சத்தையுடையது இவ்வுலகம் என்பது இப்பாட்டால் அறிக. பற்று நீங்க வேண்டும் இறைபாடென் பட்டாலும் இன்மைபோ னாலும் குறைபா டிலாமலிரா தென்று - மறைபாடும்! முற்று விடுதலை வேண்டின் *மனமே பற்று விடுதலை வேண்டு. 36 உரை: இறை - அரசன்; பாடு என் பட்டாலும் - என்ன பாடுபட்டாலும்; இன்மை போனாலும் - குடிகளிடத்துள்ள வறுமை தீர்ந்தாலும்; குறைபாடு - இன்னும் இல்லையே என்ற குறைபாடானது; இலாமல் இராதென்று - இல்லாமல் போய்விடாது என்று; மறைபாடும் - தமிழ் நான்மறையும், திருக்குறளும் விளங்கக் கூறும். மற்று - இவற்றிலெல்லாம் நீங்கி; விடுதலை வேண்டின் - விடுபட்ட தன்மையை ஒருவன் விரும்பினால்; மனமே - நெஞ்சமே; பற்று விடுதலை வேண்டு - உலகப்பற்று விடுவதை மேற்கொள். தமிழ் நான் மறை - அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கையும் அறிவிப்பது. மறை என்றது - திருக்குறளை. உவவனம் சேர்ந்தனர் மணிமேகலையும் சுதமதியும் என்றிளை யாளேதன் பாங்கியுடன் இங்குமங்கும் நின்றிளை யாததொரு நெஞ்சமுடன் - சென்றவளாய்க் காணா உவவனம் பாங்கிதான் காட்டிவே பூணா வியப்புப்பூண் பாள். 37 உரை: என்று - மேலே சொன்னவாறு சொல்லி; இளையாளே தன் - இளமையுடையாளான மணிமேகலை தன்னுடைய; பாங்கியுடன் - சுதமதியுடன்; இங்குமங்கும் - பல பக்கங்களிலும்; நின்று - நின்று அங்கங்கு நடப்பவற்றைக் கண்டு; இளையாதது ஒரு நெஞ்ச முடன் - சோர்வுறாத நெஞ்சத்தோடு; சென்றவளாய் - மேலே செல்பவளாக; காணா உவவனம் - அதற்குமுன் கண்டறியா உவ வனத்தை; பாங்கி தான் காட்டிடவே - சுதமதி காட்டியவுடன்; பூணாவியப்பு பூண்டாள்-அடைந்திராத மகிழ்ச்சியை அடைந்தாள். மணிமேகலை, மலர் வனத்தை அடைந்தாள் என்றபடி. பூணா வியப்பு: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத் தொடர். மணிமேகலை வந்தபோது அவளைக் கண்டவர்கள் என்ன ஆனார்கள்? மாது மலர்வனத்தைக் காண்பாள்! வழிநடந்த போது பலர்கண்டு பூண்டஇறும் - பூது புகல விரும்பினேன் பொன்றாத் தமிழ்விட் டகல விரும்புவார் ஆர்? 38 உரை: மாது - மணிமேகலை; மலர்வனத்தைக் காண்பாள் உவ வனத்தைக் காணும் பொருட்டு; வழி நடந்த போது - வழி நடந்து கொண்டிருந்த நேரத்தில்; பலர் கண்டு - பலபேர் பார்த்து; பூண்ட இறும்பூது - அடைந்த மகிழ்ச்சியை; புகல விரும்பினேன் - சொல்ல ஆசைப்பட்டேன்; பொன்றா - என்றும் நின்று நிலைக்கின்ற; தமிழ்விட்டு - கேட்பதை விட்டு; அகல விரும்புவார் ஆர் - மற் றொன்றில் மனம் செலுத்துபவர் எவர்? எவருமில்லை என்றபடி. புகல விரும்பினேன் என்றது, இந்நூலாசிரியர் கூற்று. இப்படி நான் புகல விரும்பினால் எவரும் இதை விரும்பிக் கேட்பார்களே தவிர வெறுப்புறார் என்பது புலப்பட வைத்தார் ஆசிரியர் என்க. ஆர் - யார் என்பதன் மருஉ. கட்குடத்தின் உள்ளிருந்த கள்ளிலும் மணிமேகலை உருவம் கட்கடைக்கே ஆளானார் கார்குழலைக் கண்டுகருங் கட்கடைக்கே ஆளாகக் காத்திருந்தார் - கட்குடத்தை எண்ணார்கள் எண்ணுகையில் கட்குடத்துள் கண்ணுக்குக் கண்ணாளைக் கண்டார் கவிழ்ந்து. 39 உரை: கள் கடைக்கே ஆள் ஆனார் - கள்ளுக் கடைக்கே அடிமைப் பட்ட குடியர் சிலர்; கார் குழலைக் கண்டு - கரிய கூந்தலை யுடைய மணிமேகலையை நேரிற் பார்த்துவிட்டு; கருங்கண் கடைக்கே ஆள் ஆகக் காத்திருந்தார் - அவளின் கரிய கடைக் கண்ணுக்கே ஆளாகக் காத்திருந்தார்; கட் குடத்தை எண்ணார்கள் - அதனால் அவர் அருந்தவேண்டிய கள்ளுக் குடத்தை மறந்து போனார்கள்; எண்ணுகையில் - பிறகு நினைப்பு வரப் பெற்றவர்கள்; கட் குடத்துள் - அந்தக் கட் குடத்தினுள்; கண்ணுக்குக் கண்ணாளை - மணி மேகலையை; கண்டார் கவிழ்ந்து - கவிழ்ந்து கண்டார்கள். ஒருகால் அவளைக் கண்டு கட்கடைய மறந்தார்கள் பின்னொரு கால் அவளை மறந்து கட் கடையை எண்ணி அதனுட் புகுந்து குடிக்கக் கட் குடத்தை நட்டுப் பார்த்தார்கள். கட் குடத்திலும் அவளையே காணலானார்கள். முதலில் உள்ள கட்கடைக்கே என்பதை கள் கடைக்கே என்று பிரிக்க; மற்றதைக் கண் கடைக்கே என்று பிரிக்க. மணிமேகலை துண்டு உடுத்துப் போகும்படி செய்தவர் யார்? பண்டுடுத்தும் பட்டில்லை பல்லிழைகள் இல்லை இவள் துண்டுடுத்துப் போகின்றாள்! தொல்லுலகு - கண்டெடுத்த தங்கப் படிவம் தவத்துக் குடன்பட்டாள் இங்கிப் படிச்செய்தார் யார்? 40 உரை: பண்டு உடுத்தும் பட்டு இல்லை - (இவள்) முன்னாளில் உடுத்துகின்ற பட்டுடை இன்றில்லை; பல் இழைகள் இல்லை - பல அழகிய நகைகளும் இல்லை; இவள் துண்டு உடுத்துப் போகின்றாள் - இந்த மணிமேகலை சிறிய துண்டை உடுத்து வெளியிற் செல்ல லுற்றாள்; தொல்லுலகு - தொன்மையாகிய இந்த உலகம்; கண்டு எடுத்த - அடையப் பெற்ற; தங்கப் படிவம் - தங்கத்தால் ஆகிய படிவம் போன்றாள்;தவத்துக்கு உடன் பட்டாள் - தவ நிலைக்கு ஒத்துக்கொண்டாள்; இங்கு - இந்த நாட்டில்; இப்படிச் செய்தார் யார் - இந்த நிலையைச் செய்தவர் யாராயிருக்கலாம்? பண்டு - தவக்கோலம் பூணுவதற்கு முன் என்க. படிவம்: வார்ப்பட உருவம். மணிமேகலை கண்டாலே தித்திக்கும் தேன் குன்றத்துக் கொம்புத்தேன் முல்லைவா ழைப்பழத்தேன் மன்றத்து மாப்புலவர் செந்தமிழ்த்தேன் - என்ற முத்தேன் உண்டாலே தேன்! இம் மணிமே கலைஒருத்தி கண்டாலே தித்திக்கும் தேன். 41 உரை: குன்றத்துக் கொம்புத்தேன் - மலையினின்று கொண்டு வரும் கொம்புத்தேன்; முல்லை வாழை பழத்தேன் - முல்லை நிலத்தி லிருந்து கொண்டுவரும் வாழையின் தேன்; மன்றத்து மாப் புலவர் செந்தமிழ்த்தேன் - சங்கப் புலவரிடமிருந்து கொண்டுவரும் செந்தமிழாகிய தேன்; என்ற முத்தேன் - என்று சொல்லப்பட்ட மூவகைத் தேனும்; கொண்டாலே தேன் - வாயிலிட்டு நுகர்ந்தால் தான் தேன் என்றாகும்; மணிமேகலை ஒருத்தி - ஆனால் இந்த மணிமேகலை என்னும் ஓர் அழகியோ எனில், கண்டாலே தித்திக்கும் தேன் - பார்த்த மட்டிலேயே தித்திக்கும் தேனாவாள். முல்லை - முல்லை நிலம்; காடும் காடு சார்ந்த இடமும். வாழைப் பழத் தேன் - தேன்வாழை. வைய விளக்கை யாருக்குமில்லாமல் ஆக்கினரே. தையலை இவ்வாறு தவக்குழியில் தள்ளுவதோ? வைய விளக்கை மருக்கொழுந்தை - ஐயையோ ஆருக்கு மில்லாமல் ஆக்கினரே பெண்ணழகின் வேருக்கு வெந்நீரை விட்டு. 42 உரை: தையலை - மணிகேலையை; இவ்வாறு - இப்படித் தோற்றமளிக்க; தவக்குழியில் - தவமென்கின்ற படுகுழியில்; தள்ளுவதோ - தள்ளிவிடுவதோ? வையவிளக்கை - உலகத்துக்கே ஓர் அழகு விளக்கத்தை; மருக்கொழுந்தை - மருக்கொழுந்து போன்ற வளை; ஐயையோ - ஐயோ ஐயோ; ஆருக்கும் இல்லாமல் ஆக்கினரே - ஒருவருக்கும் பயன்படா வண்ணம் செய்து விட்டார்களே? பெண்ணழகின் வேருக்கு வெந்நீரை விட்டு - பெண்ணழகின் முதன்மைக்கே வெந்நீரை விட்டு. வேருக்கு வெந்நீரைவிட்டு ஆருக்கு மில்லாமல் ஆக்கினரே என்று தொடர்புபடுத்துக. யாழெடுத்தவன் மணிமேகலையைக் கண்டு, யாழின் மேலேயே சாய்ந்து கிடந்தான் என்று பலரும் இயம்பி வருந்தினார் சென்று பரத்தை தெருவறைக்குள் - ஒன்றை நினைத்துயாழ் தொட்டஎட்டி நேரிழையைக் கண்டே அனைத்து மறந்திருந்தான் ஆங்கு. 43 உரை: என்று பலரும் - என்றிவ்வாறாய்ப் பலரும்; இயம்பி - சொல்லி; வருந்தினார் - வருத்தப்பட்டார்கள். சென்று பரத்தை தெருவறைக்குள் - பரத்தை தெருவறைக்குட் சென்று; ஒன்றை நினைத்து - ஒரு பண்ணை நினைத்து; யாழ் தொட்ட எட்டி - யாழை எடுத்து மீட்டத் துவங்கிய எட்டி என்பவன்; நேரிழையைக் கண்டே - அவ்வழிச் சென்ற மணிமேகலை யைக் கண்ட அளவில்; அனைத்தும் மறந்திருந்தான், ஆங்கு - அவ்விடத்தில்தான் நினைத்த பண்ணையும் அதை இசைக்கும் முறையையும் ஆகிய அனைத்தையும் மறந்து இருந்தான். பரத்தை - பொது மகள். தெருவறை - தெருப் பக்கத்தில் அமைந்த அறை; கூண்டறை என்பர் இந்நாள். உதயகுமரன் மணிமேகலை பற்றிக் கேள்விப்படுகிறான் அந்நேரம் தேரேறி அங்குவந்த வேந்தன்மகன் இந்நேரம் யாரால் நீ இன்னலுற்றாய் - முன்னே அதையுரைப்பாய் என்றுரைத்தான்! அன்னம் நடந்த கதையுரைப்பான் எட்டி கடிது. 44 உரை: அந்நேரம் - எட்டி அனைத்தையும் மறந்திருந்த அதே நேரத்தில்; தேரேறி அங்கு வந்த வேந்தன் மகன் - அங்கே வந்து சேர்ந்த வேந்தன் மகனாகிய உதயகுமரன்; இந்நேரம் - இப்போது; யாரால் நீ இன்னலுற்றாய் - நீ யாரால் துன்பம் அடைந் திருக்கின்றாய்? முன்னே அதையுரைப்பாய் என்றுரைத்தான் - முதலில் அதைப் பேசு என்று கூறினான். அன்னம் நடந்த கதை யுரைப்பான் எட்டி கடிது - எட்டி கடிது அன்னம் தவக்கோலத் தோடு நடந்த கதையை உரைக்க லானான். அன்னம் - மணிமேகலை; உவமையாகு பெயர். எட்டியின் இரக்கம் சின்னஞ் சிறியஇடைச் செல்விமணி மேகலையாம் அன்னம் அழகு சுமந்தகன்றாள் - முன்னமெல்லாம் பட்டுடுத்தும் பான்மையினாள் இன்று தவநெறிக்குட் பட்டுடுத்தும் பான்மையி னாள் ஆய். 45 உரை: சின்னஞ் சிறிய இடை செல்வி மணிமேகலையாம் அன்னம் - மிகச் சின்ன இடுப்பு உடையவளும், மாதவிக்குச் செல்வமாய் அமைந்தவளும் ஆகிய, மணிமேகலையாம் அன்னம் போன்றவள்; முன்னமெலாம் - முன்னாளி லெல்லாம்; பட்டு உடுத்தும் பான்மை யினாள் - பட்டை உடுத்தும் பான்மை கொண்டவள் இன்று - இந் நாளில்; தவ நெறிக் குட்பட்டு - தவநெறிக்குக் கட்டுப்பட்டு; உடுத்தும் பான்மையினாள் ஆய் - உடுத்துகின்ற பான்மை யுடையவ ளாகி; அழகு சுமந்து சென்றாள் - இயற்கையில் அவளுக்கு அமைந்த அழகைச் சுமந்தபடி சென்றாள். இன்று, மணிமேகலை தவநெறிக்கு உட்பட்டுத் துண்டு உடுத்திச் சென்றாலும், அவளின் இயற்கை அழகு இருக்கவே செய்தது என்று குறிப்பிட்டான் எட்டி. மணிமேகலையைப் பார்த்தேன்; கோவலன் வரலாறு நினைவுக்கு வந்தது; யாழிற் சாய்ந்தேன் அன்னாளைக் கண்டேன் அவள்தந்தை கோவலனின் முன்னாளை எண்ண முறித்ததுள்ளம் - என்யாழில் இட்டவிரல் தீநரம்பில் இட்டதாம் என்றெட்டி பட்டதுயர் சொன்னான் பதைத்து. 46 உரை: அன்னாளைக் கண்டேன் - தவக்கோலத்தோடு சென்ற அந்த மணிமேகலையைக் கண்டேன்; அவள் தந்தை கோவலனின் - அவள் தந்தையாகிய கோவலனுடைய; முன் நாளை எண்ணம் - முன்னாளைய நினைவானது; உள்ளம் முறித்தது - என் உள்ளத்தை உடைத்துவிட்டது; என் யாழில் - என் யாழிலே; இட்ட விரல் தீ நரம்பில் இட்டதாம் - இடப் பட்ட விரல் தீதான நரம்பில் இட்டது ஆயிற்று; என்று எட்டி - என்றிவ்வாறு கூறிய எட்டிப்பட்ட துயர் சொன்னான் பதைத்து - தான் பட்ட துன்பத்தைப் பதைப்போடு சொன்னான். தீநரம்பு - எண்ணிய நரம்புக்குப் பகையான நரம்பு. மணிமேகலையை என் தேரில் ஏற்றி வந்துவிடுவேன் அப்படியா அன்னாளைச் சென்று மணித்தேரில் எப்படியும் ஏற்றிவந்தென் இற்சேர்ப்பேன் - அப்பொன்னை நீணாள் நினைந்தும் நெருங்காத என்வாணாள் வீணாள்என் றானிளைய வேந்து. 47 உரை: அப்படியா - நடந்ததும் நிலைமையும் அப்படியா? அன்னாளை - மணிமேகலையை; சென்று மணித்தேரில் - மணித்தேரில் சென்று; எப்படியும் - என்ன முயற்சி செய்தும்; ஏற்றி வந்து - தேரில் ஏற்றிக் கொண்டு வந்து; என்இல் சேர்ப்பேன் - என்னுடைய இல்லத்திற்குள் சேர்த்துவிடுவேன்; அப்பொன்னை - பொன்னான அவளை; நீள் நாள் நினைந்தும் - நீண்ட நாளாக நினைத்திருந்தும்; நெருங்காத என் வாழ்நாள் - நெருங்காமலே இருந்த என் வாழ்நாட்கள்; வீண் நாள் என்றான் இளைய வேந்து - வீணான நாட்களே என்று சொன்னான் இளவரசனான உதயகுமரன். இற் சேர்ப்பேன் - இல் சேர்ப்பேன் எனப் பிரிக்க. நீணாள் என்பதை நீள் நாள் என்றும் , வீணாள் என்பதை வீண் நாள் என்றும் பிரித்துப் பொருள் கொள்க. உதயனின் கண்ணுக்கு வழியெல்லாம் மணிமேகலை குளிர்காற்றுக் கூந்தல் அருவியோ! தேமாந் தளிர்மாது மேனியோ! தண்டை - ஒளிர்வண்டோ? என்பான் எதிலும் மணிமே கலைகாண்பான்; தென்பா னடத்தினான் தேர். 48 உரை: குளிர்காற்று - வழியில் மெல்லென வீசிய குளிர் காற்றானது; கூந்தல் அருவியோ - அவளின் கூந்தலான அருவியோ! தேமாந் தளிர் - தேமாவின் தளிரானது, மாது மேனியோ - மணிமேகலை யாள் மேனியோ! ஒளிர் வண்டோ - இசை ஒளிரப் பறக்கும் வண்டுகளோ, தண்டை - தண்டைகள்; என்பான் - என்று சொல்வோனாகிய உதயன்; எதிலும் மணிமேகலை காண்பான் - இயற்கையின் அமைந்த எல்லா அழகுகளிலும் மணிமேகலையைக் காண்பான். தென்பால் நடத்தினான் தேர் - தன் தேரைத் தென்றிசை நோக்கி நடத்தினான். தென்பானடத்தினான் என்பதைத் தென்பால் நடத்தினான் என்று பிரிக்க. மணிமேகலையும் பாங்கியும் இன்னும் உவவனக் காட்சியைக் கண்டு மகிழ்கின்றார்கள் ஏடகத்துக் காட்டாத இன்பத்தை நல்லியற்கை நாடகத்தை நங்கையும் பாங்கியும் - தேடிஎப் பாலும்கண் டார்கள்! பகர்ந்து பகர்ந்துமேன் மேலும்கண் டார்கள் விழைந்து! 49 உரை: ஏடு - நூற்கள்; அகத்துக் காட்டாத - தன் உள்ளிடத்து நின்று காட்டாத; இன்பத்தை - காட்சியின்பத்தை; நல் இயற்கை நாடகத்தை - நல்லியற்கை அன்னையின் நாடகத்தை; நங்கையும் பாங்கியும் - மணிமேகலையும் சுதமதியும்; தேடி - கண்ணால் தேடி; எப்பாலும் கண்டார்கள் - உவ வனத்தின் எல்லாவிடத்தும் பார்த்தார்கள்; பகர்ந்து பகர்ந்து - இயற்கை யின் புதுமையைப் புகழ்ந்து பேசிப் பேசி; மேன்மேலும் கண்டார்கள் விழைந்து - விழைந்து மேன்மேலும் பார்த்தார்கள். ஏடு அகத்துக் காட்டாத எனப் பிரிக்க. பகர்தல் - புகழ்தலும் ஆம். மயில் தோகையில் மறைந்தது ஒரு மான் களித்தாடும் மஞ்ஞைக் கவின்தோகை யின்பின் ஒளித்தாடும் மானை ஒருமான் - விளித்தோடி மாவடிக்குப் பின்னிருந்த மந்தியின் செவ்வலரிப் பூவடிக்குப் புண்ணாகும் நெஞ்சு. 50 உரை: களித்து ஆடும் மஞ்ஞைக் கவின் தோகையின் பின் - களித்து ஆடுகின்ற மயிலின் அழகிய தோகையின் பின்னால்; ஒளித்தாடும் மானை - ஒளித்து ஆடுகின்ற மானை; ஒருமான் - வேறொரு மானானது; விளித்து ஓடி - அழைத்துக் கொண்டே ஓடி; மாவடிக்குப் பின் இருந்த - மாமரத்தின் அடியில் பின்புறமா யிருந்த; மந்தியின் செவ்வலரிப் பூவடிக்கு புண் ஆகும் நெஞ்சு - பெண்குரங்கின் செவ்வலரிப் பூவடிக்கு நெஞ்சு புண்ணாகும். மஞ்ஞை - மயில்; கவின் - அழகு; மாவடி - மாமரத்தின் அடி; பூவடி - பூவால் அடித்த அடி மாலை புனைந்து குளத்துக் கண்ணாடி பார்க்கும் ஒரு குரங்கு விண்ணாடி மாம்பூ விரிதார் புனைகடுவன் கண்ணாடி காணும் ஒருகுளத்தின் - உண்ணாடி மாம்பழத்தைப் போடப்போம் மந்தியினை நீள்வரால் ஆம்! பழத்தைப் போடென்னும் அங்கு! 51 உரை: விண் நாடி - மேலே ஆராய்ந்து; மாம்பூ விரிதார் - மாம்பூவால் தான் செய்த பெரிய மாலையை; புனை - புனைந்துகொண்ட; கடுவன் - ஆண் குரங்கானது. கண்ணாடி காணும் ஒரு குளத்தின் உள் நாடி - ஒரு குளத்தின் உள்ளே கூர்ந்து கண்ணாடியாகக் கொண்டு தன் அழகைப் பார்த்துக் கொள்ளும்; மாம்பழத்தை போடப்போம் ஒரு மந்தியினை - மாம்பழத்தால் அடிக்கப் போவதொரு மந்தியை; நீள் வரால் - நீண்ட வராலானது; ஆம் - நீ நினைத்தது சரிதான்; பழத்தைப் போடு என்னும் அங்கு - அவ்விடத்திலேயே இருந்து நீ போட நினைத்த மாம்பழத்தைப் போடு; நான் உண்ணுகின்றேன் என்று கூறும். இதற்கு மற்றோர் உரை: விண் நாடி - மேலே ஆராய்ந்து; மாம்பூ விரிதார் புனை கடுவன் - மாம்பூவால் தான் செய்த பெரிய மாலையைப் புனைந்த ஆண் குரங்கானது; கண்ணாடி காணும் - கண்ணாடி பார்க்கின்ற; ஒரு குளத்தின் - ஒரு குளத்தின்; உள் நாடி - உள்ளே கண்ணைச் செலுத்தி, மாம்பழத்தைப் போடப் போம் - மாம்பழத்தை வீசப் போகின்ற; மந்தியினை - பெண் குரங்கை நோக்கி; ஆம் - சரிதான்; பழத்தைப் போடு என்னும் - அந்தப் பழத்தை என் வாயிற் போடு என்னும்; அங்கு - அந்த இடத்தில். அதனால், கண்ணாடி பார்க்கும் கடுவனுக்கு இடையூறு நேர்ந்து விடுகின்றது. இந்த உரையில், காணும் பெயரெச்சம். தவளை விளைத்த குழப்பம் குவளை விழுந்த குளத்தில், எழுந்து தவளை தளபுளா என்ன - உவளுகின்ற கெண்டை நடுங்கும்; கிளிகுயில் வண்டெல்லாம் தொண்டை நடுங்கும் தொடர்ந்து. 52 உரை: குவளை - குவளைப்பூ; விழுந்த - விழப்பெற்ற; குளத்தில் - குளத்திலே; எழுந்து தவளை - தவளையானது எழுச்சிபெற்று: தளபுளாவென - தளபுளா என்று கத்திய அளவில்; உவளுகின்ற - அதில் உலவிய; கெண்டை நடுங்கும் - கெண்டை மீன் நடுங்கும்; கிளி குயில் வண்டு எல்லாம் - அதனால் அங்கிருந்த கிளியும் குயிலும் வண்டு மாகிய எல்லாம்; தொண்டை நடுங்கும் - கொஞ்சியும் பாடியும் இருந்த தொண்டை நடுங்கும். தொடர்ந்து - நிற்காமல். உவளுதல் - உடல் துவள மேய்தல். அல்லியை வெறுக்கும் பலாவைப் பாடும் வண்டு மூடிய அல்லிக்கு மொய்க்காமல் தாமரைக்குப் பாடிய வண்டு பலாமரத்தை - நாடியதன் பேருக்கும் தன்பெரிய பிள்ளைக்கும் முள்ளுக்கும் வேருக்கும் பாடல் வியப்பு. 53 உரை: மூடிய அல்லிக்கு மொய்க்காமல் - இதழ் மூடிய அல்லிப்பூவில் மொய்க்காமல்; தாமரைக்குப் பாடிய வண்டு - விரிந்திருந்த தாமரையை விரும்பிப் பாடிய வண்டானது; பலாமரத்தை நாடி அதன் பேருக்கும் - பலா மரத்தை அடைந்து அதன் பேருக்கும்; தன் பெரிய பிள்ளைக்கும் - அதன் பெரிய பிள்ளையாகிய பலாப்பழத்துக்கும்; முள்ளுக்கும் - அதன் மேலுள்ள முள்ளுக்கும்; வேருக்கும் பாடல் வியப்பு - வேருக்கும் பாடுவதானது வியப்பாகும். பேருக்குப் பாடியது-பலா என்ற பேர் எண்ணியவுடன் தேன் வழிந்தவாறு உணர்வு தோன்றியதால் என்க. முள்ளுக்குப் பாடியது முள்ளிலும் சுளையின் தேன் கசிதலால். வேருக்குப் பாடியது, வேரில் பழங்கிடந்ததால் தேன் சிந்தியிருத்தலை எண்ணி. பெரிய பிள்ளை - பெரிய பலாப்பழம். முத்துக்கு முல்லைச் சிரிப்பு நிகர்! என்றுக்கு வெண்முருக்கம் பூநிகர்! ஏழிசை மன்றுக்கு வண்டுநிகர்! வானிமிர்ந்த - கொன்றைப்பூங் கொத்துக்குப் பொற்காசின் கோவைநிகர்! முற்றுநிகர் முத்துக்கு முல்லைச் சிரிப்பு! 54 உரை: என்றுக்கு - கதிரவனுக்கு; வெள்முருக்கம்பூ நிகர் - வெண் முருக்கம்பூ ஒப்பு. ஏழிசை மன்றுக்கு - ஏழிசை பயிலும் மன்றத்திற்கு; வண்டுநிகர் - வண்டிசை ஒப்பு. வான் நிமிர்ந்த - வானளாவும்; கொன்றைப் பூங்கொத்துக்கு - கொன்றையின் பூங்கொத்துக்கு; பொற்காசின் கோவை நிகர் - பொற்காசு மாலை ஒப்பு; முத்துக்கு முல்லைச்சிரிப்பு முற்றும் நிகர் - முல்லையரும்பின் சிரிப்பு முத்துக்கு முழுதும் ஒப்பு. முல்லையினைக் காணும் போது அது சிரிப்பதுபோல இருந்ததால், முல்லை என்றது முல்லைச் சிரிப்பு என்றே சொல்லப்பட்டது. முருக்கம்பூ என்பது முருங்கைப்பூ அன்று; அது செம்முருக்கம்பூ என்றும் வெள்முருக்கம்பூ என்றும் இருவகைப்படும். முருக்கம்பூ மேனி நிறத்தாளே என்ற ஔவையார் பாட்டில் வரும் முருக்கம்பூ வெண்முருக்கம் பூவே; கலைவாணி நிறம் வெண்மைதானே. நெடுந்தொலைவிலிருந்து ஓர் ஒலி அண்டுமலர்ச் சோலை அழகு வரிசையெல்லாம் கண்டுவரும் போதுதன் காதினிலே - நண்டு நிகர்அங்கை சேர்த்து நெடுந்தொலை ஆய்ந்து பகர்வாள்தன் பாங்கியைப் பார்த்து. 55 உரை: அண்டும் மலர் சோலை - நெருங்கி மலர்ந்துள்ள மலர்ச் சோலையின்; அழகு வரிசையெலாம் - வரிசையான அழகை எலாம்; கண்டு வரும்போது தன் காதினிலே - கண்டு வருகின்ற போதில் மேகலைதன் காதில்; நண்டு நிகர் - அலவன் போன்ற; அங்கை சேர்த்து - அழகிய கைசேர்த்த படி; நெடுந்தொலை ஆய்ந்து - நெடுந்தொலைவின் ஓசையை உற்றுக் கேட்டு; தன் பாங்கியைப் பார்த்து பகர்வாள் - தன் பாங்கியாகிய சுதமதியைப் பார்த்துக் கூறுவாள்: உதய குமரன் தேரொலி ஓரொலி கேளாய் உதய குமரனவன் தேரொலி போலும்! தெரிவைஎன் - பேரில் விருப்புடையான் என்பர் விளைவறியேன்; நெஞ்சில் நெருப்புடையேன் என்றாள் நிலவு. 56 உரை: ஓரொலி கேளாய் - ஓர் ஒலி கேட்கின்றது அதை நீயும் உற்றுக் கேள்; உதயகுமரனவன் தேரொலி போலும் - உதய குமரன் வரும்தேரின் ஒலிபோல் இருக்கின்றது; தெரிவை என்பேரில் - என்மேல்; விருப்பு உடையான் என்பர் - அவன் விருப்பம் உடையவன் என்று சொல்லுவர்; விளைவறியேன் - ஆயினும், அதை நான் நேரில் அறியமாட்டேன்; நெஞ்சில் நெருப்பு உடையேன் என்றாள் நிலவு - என் நெஞ்சத்தில் இப்போது நெருப்பை அடைந்துள்ளேன் என்று கூறினாள் நிலவு போன்ற முகத்தாள். நெருப்புடையேன் - அச்சப்படுகின்றேன் என்றபடி. மணிமேகலையே பளிங்கு மாளிகையின் உள்ளே போய்விடு கேட்டது தேரின்மணி ஓசைதான் கேள்உன்னை மீட்பதுதே ரின்மணி மேகலையே - வாட்போர் உதையன்பால் தோன்றாதே மாளிகையின் உட்போ! இதையன்பால் ஏற்கஎன் றாள். 57 உரை: கேட்டது - காதில் விழும் அது; தேரின் மணி ஓசை தான் - உதையன் வரும் தேரின் மணி ஓசைதான்; கேள் உன்னை - கேள், உன்னை; மீட்பது தேரின் - அவன் தொல்லையினின்று மீட்கும் வகையை ஆராய்ந்தால்; மணிமேகலையே - என் மணிமேகலையே; வாள்போர் உதையன் பால் தோன்றாதே - வாட்போரில் வல்லவனான உதையன் கண்ணில் அகப்படாதே; மாளிகையின் உள்போ - பளிங்கு மாளிகையின் உட்புறம் போய் ஒளிந்து கொள்; இதை - நான் சொன்ன இதை; அன்பால் ஏற்க என்றாள் - என்மேல் வைத்த அன்பு காரணமாக நம்பி ஒப்புக்கொள் என்று பாங்கி சொன்னாள். முதலில் உள்ள தேரின் என்பதற்கு தேரினுடைய என்று பொருள். இரண்டாவதாக உள்ள தேரின் - ஆராய்ந்தால்; தேர்தல் - ஆராய்தல்; உதையன் - போலி; உதயன் இலக்கண முடையது. பறந்தோடினாள் பச்சை மயில் பறந்திட்டாள் பச்சை மயிலனையாள் ஓடித் திறந்த பளிக்கறை சேர்ந்தாள் - சிறந்த உதையன் மணித்தேரும் உற்றது பாங்கி அதையும்கண் டாள்உரைப்பாள் அங்கு 58 உரை: பறந்திட்டாள் பச்சைமயில் அனையாள் - பச்சை மயில் போன்ற மணிமேகலை, பாங்கி சொன்னபடி பளிங்கு மாளிகை நோக்கிப் பறந்து ஓடினாள்; ஓடி - அவ்வாறு ஓடி; திறந்த - திறந்திருந்த; பளிங்கு அறை சேர்ந்தாள் - பளிங்கு அறையை அடைந்தாள்; சிறந்த உதையன் மணித்தேரும் - சிறப்பமைந்த உதயகுமரனின் தேரும்; உற்றது - வந்து சேர்ந்து விட்டது; பாங்கி அதையும் கண்டாள் - பாங்கி அதையும் பார்த்தாள்; உரைப்பாள் - அங்கு உரைப்பா ளாகின்றாள். அவன் மட்டச்சரக்கை என்னிடம் விற்கட்டும் பளிக்கறையிற் சென்றாயா? தாழிடுவாய்! பச்சைக் கிளிக்கறைவ தைப்போல் கிளத்தேன் - வெளிப்புறத்தில் ஐந்துவிற்க டைத்தொலைவில் நானிற்பேன் ஆள்என்பால் வந்துவிற்க மட்டச் சரக்கு. 59 உரை: பளிக்கு அறையில் சென்றாயா - பளிங்கு அறையில் சென்று விட்டாயா? தாழ் இடுவாய் - தாழிட்டுக் கொள்; பச்சைக் கிளிக் கறைவதைப் போல் கிளத்தேன் - பச்சைக் கிளிக்குப் பேச்சுக் கற்றுக் கொடுப்பதுபோல மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன்; வெளிப்புறத்தில் - அறைக்கு வெளியே; ஐந்து வில் கடை தொலைவில் நான் நிற்பேன் - ஐந்து வில்லை ஒன்றன்பின் ஒன்றாக வைத்தால் எவ்வளவு தொலைவு இருக்குமோ அவ்வளவு தொலைவில் நான் நிற்பேன்; ஆள் என்பால் - உதயகுமரன் என்னிடத்தில்; வந்து விற்க மட்டச்சரக்கு - தன் மட்டமான கருத்துச் சரக்கை என்னிடம் வந்து விற்கட்டும். பளிங்கு + அறை = பளிக்கறை; மென்றொடர்க் குற்றிய லுகரம் வன்றொடராயிற்று மருத்துப்பை என்பதிற் போல. உதயகுமரன் வந்து, நோய்க்கு மருந்து வாங்கிவா என்கின்றான். நிறுத்தைய என்னத்,தே ரோட்டி நிறுத்தச் சிறுத்தை குதித்துச் செவியை - உறுத்தவே பாங்கிவா மேகலையுன் பாங்குள்ளாள் என்நோய்க்கு வாங்கிவா என்றான் மருந்து. 60 உரை: நிறுத்து ஐய என்ன - ஐயா நிறுத்து என்று உதயன் தேர்ப்பாகனை நோக்கிக் கூற; தேரோட்டி நிறுத்த - தேரோட்டி நிறுத்தியவுடன்; சிறுத்தை குதித்து - சிறுத்தை போன்றவனான உதயன் தேரை விட்டுக் குதித்து; செவியை உறுத்தவே - கேட்ட காது நோகும் படியாக; பாங்கி வா - பாங்கியே இங்கே வா; மேகலை - மணிமேகலையானவள்; உன் பாங்கு உள்ளாள் - உன் வசத்தில் இருக்கின்றாள்; என் நோய்க்கு - என் காதல் நோய்க்கு ; மருந்து வாங்கிவா என்றான் - மருந்தை வாங்கிக் கொண்டு என்னிடம் ஓடிவா என்று கூறினான். என் நோய்க்கு மருந்து வாங்கிவா என்றது அவளை அழைத்து வா என்றபடி. ஐயன் என்ற ஆண்பால் ஒருமைப் பெயர் ஐய என விளி உருபு ஏற்றது. அது நிறுத்து என்ற ஒருமைப் பயனிலை ஏற்றது. சிறுத்தை என்றது உதயனை. உனக்கு அறிவுறுத்த என்னால் முடியுமா? நரைமுடித்து நல்லிளமை நாணி நடுவின் உரைமுடித்தோற் குற்ற மருக! - விரைவில் அரசுக் கியலும் அறிவும் தரப்பெண் முரசுக் கியலுமா முன்? 61 உரை: நரை முடித்து - நரைத்ததான ஒரு தலைமயிரை ஒட்ட வைத்துக் கொண்டும்; நல் இளமை நாணி - தனக்கிருந்த இளம் பருவத்துக்கு நாணியும்; உரை முடித்தோற்கு - வழக்குத் தீர்ப்புரைத்த கரிகாற் பெருவளத்தானுக்கு; மருக - மருகனே! விரைவில் - விரைவாக; அரசுக்கு இயலும் - அரசனுக்கு வேண்டிய இலக்கணத்தையும்; அறிவும் - அறிவையும்; தர - தந்து முழங்க; பெண் முரசுக்கு இயலுமா - பெண் முரசான எனக்கு முடியுமா? முன் - எண்ணிப் பார்; முன்னுதல் - எண்ணுதல்; இது பாங்கி சொன்னது. காமம் ஒரு தீ! ஆயினும் ஒன்றுகேள் ஆடவர்க் குக்காம நோயினும் மாப்பெருநோய் இல்லையே - தீயினும் தீயது தீண்டாத போதினும் தீய்த்தலால்! நீயது நன்று நினை. 62 உரை: ஆயினும் ஒன்று கேள் - இருந்தாலும் நான் சொல்வ தாகிய ஒன்றைக்கேட்க; ஆடவர்க்கு - ஆடவர்கட்கு; காம நோயினும் - காமநோயை விட; மாபெரு நோய் இல்லை - மிகப் பெரிதான நோய் என்பதே இல்லை; தீயினும் தீயது - தீயைவிடக் கொடியது; தீண்டாத போதினும் தீய்த்தலால் - தொடாதபோதும் சுடும் ஆதலாலே. தொட்டாற் சுடும் தீ; தொடாதபோதே சுடும் காமத் தீ என்றபடி. தீண்டாத போதினும் தீய்த்தலால் தீயினும் தீயது என இயைக்க. பெண்ணழகு நிலையற்றது தோலழ கென்ப திளமைதொலை யின்இல்லை மேலழ காடை அணியாலாம் - ஞாலத் திதுகொண்டு மேலோர் இடர்கொள்ளார் என்றால் எதுகொண்டிங் கெய்தினை நீ? 63 உரை: தோல் அழகு என்பது இளமை - பெண்களுக்குத் தோலழகு என்பது இளமையே; தொலையின் - அந்த இளமை தொலைந்துவிட்டால்; இல்லை - தோலழகு இல்லையாய் விடும்; மேலழகு - செயற்கையழகென்பது; ஆடை அணியால் ஆம் - துணி மணியால் ஏற்படுவது; ஞாலத்து இதுகொண்டு மேலோர் - உலகில் இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அறிவின் மேன்மைப் பட்டவர்கள்; இடர் கொள்ளார் - துன்பத்தை அடைய மாட்டார்கள்; என்றால் - என்றால்; எதுகொண்டு இங்கு எய்தினை நீ - எந்த அடிப்படையில் நீ இவ்விடத்தில் வந்தாய்? ஞாலத்து - அத்துச் சாரியை ஏழாம் வேற்றுமைப் பொருள் கொண்டது. உள்ளே உலவும் மணிமேகலையை உதயன் கண்டு விட்டான் என்றிளங் கோவுக்கு மங்கைஇது சொல்லுகையில் நின்றிளங் கால்நோவு நீளாமல் - பின்துறையை நீங்கு பவளப் பளிக்கறைக்குள் நின்றாள்ஓர் பாங்கு பவளக் கொடி. 64 உரை: என்று இளங்கோவுக்கு - கதிர் போன்ற ஒளியுடல் அமைந்த உதயனுக்கு; மங்கை - பாங்கி; இது சொல்ல - இப்படிக் கூறும் போதே; நின்ற இளங்கால் நோவு நீளாமல் - இருந்த இளங்காலின் நோவானது மேலும் நீளாதிருக்க; பின்துறையை - பளிங்கறை யின் பின்பக்கத்தை; நீங்குபவள் - நீங்குகின்றவளாகிய மணி மேகலை; அப்பளிங்கு அறைக்குள்; நின்றாள் ஓர் பாங்கு - வந்து நின்றாள் ஒரு புறம்; பவளக் கொடி - பவளக்கொடி போன்றவள். நீங்கு பவளப் பளிக்கறை! நீங்குபவள் அப் பளிங்கு அறை என்று பிரித்துப் பொருள் கொள்க. நின்றாள் ஓர் பாங்கு பவளக்கொடி எனப் பின்னதைப் பிரிக்க. உள்ளே புக வாயில் தெரியவில்லை வெளிக்கறி விக்கும் அகத்தையெலாம் அந்தப் பளிக்கறையிற் பாவையைப் பார்த்தான் - கிளிக்கறையா? தூயில் தனைஅடைவாய் தூயோய்என் றோடினான் வாயில் தனையறியான் மற்று. 65 உரை: வெளிக்கு அறிவிக்கும் அகத்தை எலாம் - உள்ளிருப் பாரை வெளியில் காட்டுகின்ற; அந்த - அத்தகைமையுடைய; பளிக்கு அறையில் பாவையைப் பார்த்தான் - பளிங்கு அறையினுள் மணிமேகலையைப் பார்த்துவிட்டான்; கிளிக்கு அறையா? - கிளி போன்ற உனக்கு இந்த அறை தகுந்ததா? தூய் இல் தனை அடைவாய் - என் தூய்மையான இல்லத்தை அடைந்துவிடு; தூயோய் - தூயவளே; என்று - என்று சொல்லிக்கொண்டே; ஓடினான் - அவளைப் பிடிக்க ஓடினான்; வாயில்தனை அறியான் - உட்புகும் வாயிலை அறியாதவ னானான். மற்று: அசை. மணிமேகலையா? ஓவியமா? நற்பளிங்கின் உள்ளேநான் நண்ணல் அரிதேயோ! நிற்பளிங்கு நேரிழையோ! ஓவியமோ? - பொற்கொடியே எத்திறத்தள் மேகலைதான் என்றான் சுதமதியாள் அத்திறத்தைக் கூறுவாள் ஆங்கு. 66 உரை: e‰g˧»‹ cŸns eh‹ - eh‹ ešyjhd m¥ g˧F miwÆ‹ cŸns; e©zš - beU§FtJ; mÇnjnah - mÇjh?; நிற்பள் இங்கு நேரிழையோ ஓவியமோ? - É»‹wt sh»a mtŸ kÂnkfiy jhdh mšyJ XÉankh; bgh‰bfhona - bgh‰bfho ngh‹w Rjkâna; v¤âw¤jŸ nkfiyjh‹ - k nkfiy v¤jifa M‰wYilatŸ?; என்றான் - என்றிவ் வாறு கூறினான். சுதமதிதான் - பாங்கி யானவள்; அத் திறத்தைக் கூறுவாள் ஆங்கு - அவ்விடத்தில் மணிமேகலைக்கு அமைந்ததான அந்த ஆற்றலைக் கூறுவா ளானாள்; நற்பளிங்கு - நல் பளிங்கு; நிற்பளிங்கு: நிற்பள் இங்கு எனப் பிரிக்க. மணிமேகலை மனத்தை மாற்ற நீ யார்? நோற்றல் உடையாள்; நுவல்காமம் நண்ணாத ஆற்றல் உடையாள்; அவளுள்ளம் - மாற்றவே நீயார்என் றாள்பாங்கி! நின்ற உதையனும் நீயார்என் றான்கொதித்து நின்று. 67 உரை: நோற்றல் உடையாள் - தவத்தை மேற்கொண்டவள்; நுவல் - நும்போன்றார் சிறப்பித்துச் சொல்கின்ற; காமம் நண்ணாத ஆற்றல் உடையாள் - காமத்துறையை நெருங்காத ஆற்றலைக் கொண்டவள்; அவள் உள்ளம் மாற்ற - அத் தகையளான மணிமேகலையின் மனநிலையை மாற்றுதற்கு; நீ யார் என்றாள் பாங்கி - உனக்கு என்ன தகுதி உண்டு என்று கேட்டாள் சுதமதி. நின்ற உதையனும் - அதைக் கேட்டு நின்ற இளவரசனும்; நீ யார் என்றான் கொதித்து நின்று - மனக் கொதிப்போடு நின்று நீ யார் என்று கேட்டான். நீ யார் என்றாள், உன் வரலாறு என்ன என்றபடி. நீ யார் என்றான், உனக்கு என்ன தகுதியுண்டு என்றபடி. மாற்றவே: இதில் ஏ அசை. நின்ற உதையனும்: நின்று என்றது, போகாமல் மேலும் நின்றபடியே என்றவாறு. சுதமதி வரலாறு மாருத வேகன் மடக்கி எனைமணந்தான் தேருதல் செய்யவே என்தந்தை - ஊரெலாம் தேடினான் காவிரி தென்கடல் சேரிடத்து நாடினான் நான்கண்டேன் அங்கு. 68 உரை: மாருதவேகன் மடக்கி எனை மணந்தான் - மாருத வேகன் என்னும் வித்தியாதரன் சண்பை நகரத்தில் எனை மடக்கி மணந்தான்; தேருதல் செய்யவே என் தந்தை - என்னைத் தேடுவதற்காக என் தந்தையானவர்; ஊரெல்லாம் தேடினார் - பல இடங்களிலும் தேடியலைந்தார்; காவிரி தென்கடல் சேர் இடத்தில்-காவிரி ஆறானது தெற்குக் கடல் சேருகின்ற இடத்தில்; நாடினான் - நெருங்கினான்; அங்கு நான் கண்டேன் - அங்கேதான் அவரைக் கண்டேன். மடக்கி மணத்தல் - வலிய மணந்து கொள்ளுதல். மேலும் கூறுதல் சங்க தருமனால் புத்தன் சமையத்துச் சங்கம் அடைந்தேன்! தருமங்கள் - தங்குமொரு நாவே, பிறிது நவிலலும் இல்லைஇளங் கோவேவாழ் கென்றாள்பூங் கொம்பு. 69 உரை: சங்க தருமனால்- அதன்பின் சங்க தருமன் என்பவனால்; புத்த சமையத்துச் சங்கம் அடைந்தேன் - புத்த சமையத்துச் சங்கத்தை அடையப் பெற்றேன்; தருமங்கள் தங்கும் ஒரு நாவே; - அவளுக்குத் தருமங்கள் நிறைந்த ஒரு நாவே; பிறிது - அவையன்றி வேறு ஒன்றை; நவிலலும் இல்லை - நாக்கில் வைத்துப்பேசுவதும் இல்லை. இளங்கோவே - இளவரசே; வாழ்க என்றாள் பூங் கொம்பு - பூங்கொம்பு போன்றவளாகிய பாங்கி நீ வாழ்வாயாக என்று கூறினாள். வாழ்கென்றாள்: வாழ்க என்றாள்; அகரம் தொகுத்தல். புத்த தருமப் பேச்சே அன்றி அவள் நாவில் மற்றொன்றும் இடம் பெறுதல் இல்லை என்பாள் இவ்வாறு கூறினாள். நா தருமத்தை நவிலும்போது, உள்ளமும் அதையே உள்ளுவது உண்மை. அப்படிப்பட்ட நிலையி லுள்ள அவளைக் காதலுக்கு அணுகாதே; வாழ்ந்துபோ என்பாள், இளங்கோவே வாழ்க என்றாள். மணிமேகலையை நான் அடைவது சின்னது இன்னது கேட்ட உதையன் எனக்கிது சின்னது! சென்றுசித்தி ராபதியால் - பொன்னதுவே மின்னதுவே என்னுமணி மேகலையை நானடைவேன் என்னதுவே இன்பமென் றான். 70 உரை: இன்னது கேட்ட உதையன் - இதைக் கேட்ட உதய குமரன்; எனக்கு இது - மணிமேகலையை அடைவதான இது எனக்கு; சின்னது - இலேசானது; சென்று - நான் இப்போதே போய்; சித்திராபதியால் - அவள் பாட்டியாகிய சித்திரா பதியைக்கொண்டு; பொன்னதுவே - அது பொன்னே; மின்னதுவே - அது மின்னல்; என்னும் - என்று பலரும் புகழ் கின்ற மணிமேகலையை; நான் அடைவேன் - நான் அடைந்து கொள்வேன்; என்னதுவே இன்பம் என்றான் - அவளிடம் பலரும் எதிர்பார்க்கும் இன்பம் என்னதுவே என்று சொல்லிப் போனான். அது பொன் அது மின் என்று சுட்டிக் காட்டிச் சொல்லப்பட்ட மணிமேகலை என்ற பெயரால் குறிக்கப் பட்ட இழையை. என் மனம் அவன்மேல் சென்றது பிழை வாடி உதையன் மறைந்தபின் மற்றந்த ஆடி அறைதிறந்து பாங்கியை - நாடி இழந்தையோ நின்றேன் எதிரிபால் நெஞ்சைக் குழந்தையோ அன்னதென்றாள் கொம்பு. 71 உரை: வாடி உதையன் மறைந்தபின் - உதையன் வாட்ட மடைந்து மறைந்த பின்பு; மற்று அந்த - அந்த; ஆடி அறை திறந்து - கண்ணாடி அறையைத் திறந்துகொண்டு வந்து; பாங்கியை - சுதமதியை; நாடி - அணுகி; இழந்து ஐயோ நின்றேன் எதிரிபால் நெஞ்சை - ஐயோ, எதிரியாகிய உதய னிடம் நெஞ்சைப் பறி கொடுத்துக் கலங்கி நின்றேன்; அன்னது - அத்தன்மையுடைய என் மனமானது; குழந்தையோ என்றாள் கொம்பு - குழந்தை தானோ என்று கொம்பனைய மேகலை கூறினாள். குழந்தை கொண்டாடி னோரிடம் செல்லும்; அதுபோல் என் மனமும் கொண்டாடினவ னிடம் சென்றது என்றாள். ஆடி - கண்ணாடி; பளிங்கு. இழந்து ஐயோ எனப் பிரிக்க. ஐயோ: இரக்கக் குறிப்பு. என் மனம் அவன்மேற் சென்றது மீண்டது மின்றிறந்து மூடினாற் போலுமிம் மெல்லியுள்ளம் சென்றது மீண்ட தெனினுமந் - நன்றிலன்மேல் போமம் மனந்தான்என் கற்பைப் புரைசெய்தால் காமம் வலிதோ கழறு. 72 உரை: மின் திறந்து மூடினாற்போலும் - மின்னல் வெளிப் பட்டு உடனே மறைந்தது போல; இம் மெல்லி உள்ளம் - இம் மெல்லிதான என் உள்ளம், சென்றது மீண்டது எனினும் - அவன்பால் சென்றது உடனே மீண்டது என்றாலும்; அந் நன்றிலன் மேல் - அறமிலா னிடத்தில்; போம் அம் மனந்தான் என்கற்பைப் புரை செய்தால் - போன அம் மனமானது என் கற்பைக் குற்றப்படுத்தினதென்றால்; காமம் வலிதோ கழறு - ஒருத்தியிடம் திடீரென்று உண்டாகின்ற ஆசை வலு வுடைத்தோ நீ சொல்வாயாக. போம் - போகும்; ஈற்றயல் கெட்டது. காமம் ஒருபுறம் உணர்வு ஒருபுறம் புணர்வு நிலைதேடிப் போனது சாமா றுணர்வு நிலைபெறுதல் உண்டா? - கிணறு பலிகேட்கும் ஓர்பால் பழிதீர் நிலைகூம் ஒலிகேட்கும் ஓர்பால் செவி. 73 உரை: புணர்வு நிலை தேடிப் போனது - உதயனைப் புணர்வ தாகிய ஒரு நிலையைத் தேடிச்சென்ற என் நோக்கம்; சாமாறு உணர்வு நிலைபெறுதல் உண்டா? - நீங்கும்படி மெய்யுணர்வு நிலையைப் பெறுதல் உண்டு கொல்? கிணறு பலி கேட்கும் ஓர்பால் - கிணறு தன்னுள் விழுந்து சாகின்ற உயிரை அழைக்கும் ஒருபுறம்; பழிதீர் நிலை கூம் - குற்றமற்ற நிலை நாடிக் கூவுகின்ற; ஒலி கேட்கும் ஓர் பால் செவி - ஒலியை மடுக்கும் ஒரு பக்கம் காது. கிணற்றில் வீழ்ந்தான் என்ற ஒலியும், அதிலிருந்து மீளத் துடிக்கின்றான் என்ற ஒலியும் ஒரேநேரத்தில் கேட்பதுபோல, என் மனம் அவன் பால் செல்ல விழைகின்றது என்று குறித்த வாறு. கூம் - கூவும். உணர்வு - மெய்யுணர்வு: நிலையான இன்பம் இது என்று அறிந்த அறிவு. மற்றொரு மணிமேகலை நற்றவ முதியோள் மணிமே கலைஎன்ற ஓர்முதியோள் வையம் மணிமே கலைஎன்ற மாப்பேர் - அணியும் பெரும்புகழும் ஆன தவப்பயனும் பெற்றோள் கரும்புகளின் கண்ணேர்வந் தாள். 74 உரை: மணிமேகலை என்ற ஓர் முதியோள் - மணிமேகலை என்று சொல்லப்படுகின்ற ஓர் முதியவள்; வையம் - உலக மக்கள்; மணிமேகலை என்ற மாப்பேர் - மணிமேகலை என்ற சிறந்த பேரை; அணியும் - சூட்டிக் கொள்ளுகின்ற; பெரும் புகழும் ஆன - பெரிய புகழும் பொருந்திய; தவப்பயனும் பெற்றோள் - தவப்பயனையும் அடையப் பெற்றவள்; கரும் புகளின் கண் நேர் வந்தாள் - மணிமேகலை சுதமதி என்னும் இரு கரும்புகளின் எதிரில் தோன்றினாள். பெற்றோள் என்றது வரைக்கும் முதியோளுக்கு அடைமொழிகள்; அம் முதியோளுக்கு முதலில் மணிமேகலை என்ற பேர் சூட்டப் பட்டது; அதை உலகிற் பலரும் பின்பற்றினர் என்றால் முதியோளுக்குப் புகழைச் செய்யும் என்பது இதில் குறிக்கப்பட்டது. முதியோளைப் பணிந்தாள் மணிமேகலை அன்னை அடிபணிந்தார் ஆன அருளேஎம் முன்னே அடைந்தோம்என் றார்இருவர் - பின்னையே என்ன துயர்என்றாள் எல்லாம் துறந்தாளும் அன்னதுயர் பாங்கிசொன்னாள் அங்கு. 75 உரை: அன்னை அடிபணிந்தார் - எதிரில் தோன்றிய அன்னை போன்ற மணிமேகலையின் அடியைப் பணிந்தார்கள். ஆன - எமக்குப் பொருந்துவதான; அருளே - அருளையே; எம் முன்னே அடைந்தோம் - எங்கள்முன் பெற்றுவிட்டோம்; என்றார் இருவர் - என்று இருவரும் சொன்னார்கள். பின்னையே - அதன்பின்; என்ன துயர் என்றாள் எல்லாம் துறந்தாளும் - பற்றுக்களினின்று முற்றும் துறந்தவளாகிய முதியோள், என்ன உங்களுக்குத் துன்பம் என்று கேட்டாள். அன்ன துயர் அங்கு பாங்கி சொன்னாள் - அப்படிப்பட்ட தங்கள் துன்பத்தை அவ் விடத்தே பாங்கி சொல்லப் புகுந்தாள். முதுமகளிரை அன்னை யென்றும் அம்மா என்றும் சொல்லிச் சிறப்புறுத்துவது என்ற தமிழர் பண்பாடு பற்றி அன்னை அடிபணிந்தார்எனப்பட்டது. எல்லாம் துறத்தலாவது, நிலம் பொருள் சிற்றின்பம் அனைத்தையும் துறத்தல். சுதமதி சொன்னாள் பாவெடுக்கப் பாவலரும் பார்க்குமணி மேகலைதான் பூவெடுக்க வந்திட்ட போதமுதை - நாவெடுக்கக் காலெடுத்தான்; வாயிற் கதவறியான்; தேரேறிக் கோலெடுத்தான் அவ்விளங் கோ. 76 உரை: பா எடுக்கப் பாவலரும் பார்க்கும் மணிமேகலை - பாட்டெழுதத் துவக்குவதற்காகப் பாவாணரும் மாதிரிக்காகப் பார்க்கின்ற மணிமேகலை யானவள்; பூ எடுக்க - பூக்கொய்ய; வந்திட்ட போது - வந்திட்ட இப்போது; அமுதை - அமு தொத்த இவளை; நா எடுக்க - சுவைக்க; கால் எடுத்தான் - அவளைப் பிடிக்கக் காலெடுத்து வைத்தான்; வாயில் கதவு அறியான் - வாயிலின் கதவு இருப்பிடம் அறியாதவ னானான்; தேர் ஏறி - தன் தேரில் ஏறி; கோல் எடுத்தான் - சாட்டைக் கோலைக் கையில் எடுத்தான்; அவ்விளங்கோ - அந்த மன்னன் மகன். கோல் - சாட்டைக் கோல். மால் கொண்டான் கோல் கொண்ட மா என்ற நள வெண்பா அடியாலும் இஃதறிக. பெண்ணழகு பார்த்தெழுத முன் மாதிரியானவள் மணிமேகலை. அதனால், பாவலரும் பா வெடுக்கப் பார்க்கும் மணிமேகலை எனப்பட்டது. சுதமதி தொடர்ந்து சொல்கின்றாள் காண்பேன் அவள்திறத்தைக் கண்டமட்டும் என்திறந்தான் வீண்போதல் இல்லை விளம்புங்கால் - ஆண்சிங்கம் என்றுந்தித் தேர்ஏறி ஏகும் உதையன் என்றுந் திருந்தான்என் றாள் 77 உரை: காண்பேன் அவள் திறத்தை - அவள் திறமையை நான் பார்க்கின்றேன். கண்ட மட்டும் - உலகம் பார்த்த வரைக்கும்; என் திறம்தான் - என் திறமைதான்; வீண்போதல் இல்லை - வீணானதே இல்லை; விளம்புங்கால் - இன்னும் சொல்லப்போனால், ஆண் சிங்கம் - ஆண் சிங்கம் போன்ற வலியுடையேன்; என்று - என்று சொல்லி; உந்தி - குதித்து; தேர் ஏறி - தன் தேர் ஏறி; ஏகும் உதையன் - ஏகுகின்ற அவன்; என்றுந் திருந்தான் என்றாள் - என்றைக்கும் திருந்த மாட்டான் என்று பாங்கி கூறினாள். என்று + உந்தி = என்றுந்தி எனப் புணர்ந்தது. என்றும் + திருந்தான் = என்றுந்திருந்தான். உதயகுமரனிடம் அகப்படாமல் சக்கரவாளக் கோட்டம் போய்விடு. பின்னுமற்றே பின்னுமற்றே பித்தனுளம் ! காமந்தான் இன்னுமற்றே போகவில்லை என்செய்வாய்? - நன்னுதால் அக்கர வாளன் அகப்படுத்தல் இல்லாமல் சக்கரவா ளக்கோட்டம் சார். 78 உரை: பின்னும் அற்றே பின்னும் அற்றே பித்தன் உளம் - இங்கு வந்து போனபின்னும் பித்தன் உளம் அப்படித்தான் இருக்கின்றது; இன்னும் அற்றே போகவில்லை - இந்த நேரம் வரைக்கும் அப்படித்தான்! மாறவில்லை; என் செய்வாய் - நீ என்ன செய்ய எண்ணுகின்றாய்? நல்நுதால் - அழகிய நெற்றியை உடைய வளே! அக் கரவாளன் - அந்த மறைவான நெஞ்சுடையவன்; அகப்படுத்தல் இல்லாமல் - உன்னைத் தனக்கு உட்படுத்தல் இல்லாமல்; சக்கரவாளக் கோட்டம் சார் - சக்கரவாளக் கோட்டத்தை அடைந்துவிடு. அற்று - அத் தன்மை உடையதே. நன்னுதல் என்பது, நன்னுதால் என்று விளியாயிற்று. உதையன் கொண்ட காமமானது பின்னும் அற்றே இன்னும் அற்றே என்பது கருத்து; கரவாளன் - கரவான நெஞ்சுடையவன்; கள்ளன். சக்கரவாளக் கோட்டமா? என்று முதியோள் இயம்பச் சுதமதி ஒன்றுக்கு வேறொருபேர் ஒன்றுமா? - தொன்றுபிணக் கோட்டமா சக்கரவா ளக்கோட்டமா இதுவே நாட்டமா னாள்பாங்கி நன்று. 79 உரை: என்று முதியோள் இயம்ப - சக்கரவாளக் கோட்டம் சார் என்று முதியோள் சொல்ல; சுதமதி - சுதமதியானவள்; ஒன்றுக்கு வேறொரு பேர் ஒன்றுமா - ஒரு பொருளுக்கு அமைந்த இயற் பெயர் இருக்க, வேறொரு பேர் கூறினால் அது பொருந்துமா? தொன்று - பழ நாளில்; அதன் பெயர்; பிணக் கோட்டமா? சக்கர வாளக் கோட்டமா? - பிணம் புதைக்கும் வட்டாரமா? சக்கர வாளக் கோட்டமா? இதுவே நாட்டமானாள் பாங்கி நன்று - என்னும் இது பற்றியே நினைக்கலானாள் பாங்கி நன்றாக. நன்று நாட்டமானாள் என இயைக்க. சக்கரவாளக் கோட்டத்தின் கதை சுடுகாட்டுக் கோட்டத்தை வேறு பெயரி னொடுகாட்டல் ஏனோ உரைத்து - விடுகென்று பாங்கி பகர முதியோள் நெடிதுரைக்க வாங்கி மகிழ்வாள் மணி. 80 உரை: சுடுகாட்டுக் கோட்டத்தை - சுடுகாடாகிய ஒரு வட்டாரத்தை; வேறு பெயரினோடு காட்டல் - வேறு பெயரால் குறித்தல்; ஏனோ - எதற்காக? உரைத்து விடுக என்று -சொல்லிவிடுக என்று; பாங்கி பகர - சுதமதி சொல்ல; முதியோள் நெடிதுரைக்க - அம் முதியோள் விரிவாகச் சொல்ல; வாங்கி மகிழ்வாள் மணி - அவ்வாறு முதியோள் சொல்வதை மணிபோன்ற அழகினளான பாங்கி, காதில் வாங்கியபடி மகிழ்ந்திருப்பாள். மணி: உவமை ஆகு பெயர்; மணி போன்ற பாங்கி, கதை நடுவில் தூக்கம் காவிரிப்பூம் பட்டினமும் காடும் பிறவுமவள் நாவிரிப்பப் பாங்கி நடுச்செவியேற் - றியாவரிதை வாங்கிக் கிடப்பார்கள் என்பாள்போல் மண்ணிலுற்றுத் தூங்கிக் கிடந்தாள்மெய் சோர்ந்து. 81 உரை: காவிரிப்பூம்பட்டினமும் - காவிரிப்பூம் பட்டினத்தைப் பற்றியும்; காடும் - அதைச் சேர்ந்த காடு பற்றியும்; பிறவும் - மற்றவற்றைப் பற்றியும்; அவள் - முதியோள்; நாவிரிப்ப - விரிவாகச் சொல்லிக் கொண்டிருக்கையில்; பாங்கி - சுதமதி; நடுச்செவி ஏற்று - நன்றாகக் கேட்டபடி; யாவர் இதை வாங்கிக் கிடப்பார்கள் என்பாள் போல் - எவர்கள் இத்தனை நீளத்தைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்தவள் போல்; தூங்கிக் கிடந்தாள் மெய்சோர்ந்து - மெய் சோர்ந்து தூங்கிக் கிடந்தாள். நடுச்செவியேற்றி யாவரிதை என்றிருக்கிறது. இதை, நடுசெவி ஏற்று யாவர் இதை என்று பிரிக்க வேண்டும். ஏற்று + யாவர் = ஏற்றியாவர்; குற்றியலுகரத்தின் முன் யகரம்வரின் அவ்வுகரம் இகரமாகத் திரியும்; அது குற்றியலிகரம் எனப்படும். உதையன் தொல்லை ஒழிந்தது துணிபல்ல வம்மான் துயர்எய்தல் என்றே மணிபல்ல வம்சேர்ந்தாள்! வாட்டம் - தணித்தாள் மணிமே கலைதான்! மணிமே கலையைப் பிணியானப் பித்தன் இனி. 82 உரை: துணிபல்ல அம்மான் துயர்எய்தல் - அம்மான் போன்ற மணிமேகலை துன்பப்படுதல் என்பது என் துணிபு அல்ல; என்றே - என்று; மணிபல்லவம் சேர்த்தாள் - மணி பல்லவத் துக்குக் கொண்டு போய்ச் சேர்த்தாள்; வாட்டம் தணித்தாள் - அதனால் மணிமேகலையின் வாட்டத்தைத் தணித்துவிட்டாள்; மணிமேகலைதான் - முதியோளாகிய மணிமேகலைதான்; மணிமேகலையை - இளையோளாகிய மணிமேகலையை; அப்பித்தன் - அந்தக் காமப்பித்தனான உதையன். பிணியான் - பிடிக்கமாட்டான். துணிபு அல்ல அம்மான் என்பது, துணி பல்ல வம்மான் எனப் புணர்ந்தது. அம்மான் என்பதில், அ சுட்டு. நடுத்திட்டில் விட்டு எடுத்தாள் ஓட்டம் முதியோள் பன்னாள் நடந்தும் படுகடலை நன்னாவாய் தன்னால் தவிர்ந்துமணி மேகலையைத் - தென்பால் கடனடுவில் சோர்வுற்ற கண்ணாளை விட்டே உடனகன்றாள் ஓதுமுதி யோள். 83 உரை: பன்னாள் நடந்தும் - பல நாட்கள் கால் நடையாய் நடந்தும்; படுகடலை - பெருங்கடலை; நல் நாவாய் தன்னால் தவிர்ந்தும் - நல்ல கப்பலால் கடந்தும், மணிமேகலையை - மணிமேகலையை; தென்பால் கடல் நடுவில் - தென் புறத்தமைந்த கடல் நடுவில்; சோர்வுற்ற கண்ணாளை - சோர்ந்துபோன கண்ணை உடையவளை; விட்டே - தனியாய் விட்டுவிட்டு; உடனகன்றாள் ஓதுமுதியோள் - உடன் அகன்றுவிட்டாள் சிறப்பித்துச் சொல்லப்படும் முதியோள்! நடந்தும் கடந்தும் சோர்வுற்ற கண்ணாள் என இயைக்க. ஓதும் முதியோள் - படித்தவளாகிய முதியோள் எனினும் பொருந்தும். சுதமதியிடம் முதியோள் எங்குற்றாள் மேகலைதான் என்றிருந்தாள் பாங்கிதான் அங்குற்றாள் மாமுதியோள் அன்புடையாய் - மங்காப் பழமை மணிபல் லவம்சேர்த்தேன் பார் ஓர் கிழமையினில் மீள்வாள் கிளி. 84 உரை: எங்கு உற்றாள் மேகலைதான் - எங்கேபோய்விட்டாள் மணிமேகலை; என்று இருந்தாள் - என்று நினைத் திருந்தாள்; பாங்கிதான் - பாங்கியான சுதமதி. அங்கு உற்றாள் மா முதியோள் - அங்கே வந்து சேர்ந்தாள் சிறந்த முதியோளாகிய மணிமேகலை. அன்பு உடையாய் - அன்புள்ள சுதமதியே; மங்காப் பழமை மணி பல்லவம் சேர்த்தேன் - மங்காத பழம் புகழையுடைய மணிபல்லவத்திற் சேர்த்துவிட்டேன்; பார் ஓர் கிழமையினில் மீள்வாள் கிளி - நீ எதிர்பார்த்திரு; ஓர் ஏழு நாட்களில் மீண்டும் வந்துவிடுவாள் கிளி போன்ற மணிமேகலை. சுதமதிக்கு முதியோள் மன்னன் மகனுக்கும் வாய்மை பலகூறி அன்னம் தனையணுகல் ஆகாதென் - றின்னம் பலவும் பகர்ந்தேன்நற் பாங்கி உனக்குச் சிலவும் தெரிவிப்பேன் கேள். 85 உரை: மன்னன் மகனுக்கும் வாய்மை பல கூறி - உதயனுக்கும் பல வாய்மைகளையும் எடுத்துக் காட்டி; அன்னம் தனை அணுகல் ஆகாது என்று இன்னம் பலவும் பகர்ந்தேன் - மணிமேகலையை நீ அணுகுதல் சரி அல்ல என்று மேலும் பலவும் சொன்னேன்; நல் பாங்கி உனக்கு - நல்ல சுதமதியே உனக்கு; சில தெரிவிப்பேன் கேள் - உனக்கும் சில செய்திகளைத் தெரிவிக்கின்றேன் கேட்பாயாக. முதியோள் தெரிவிப்பதை அடுத்த பாட்டில் காண்க. அம்மாவிடம் இதை அறிவி ஊறு தவிர்ந்துமணி மேகலைஇவ் வூர்வருங்கால் வேறு வடிவமே மேற்கொளினும் - கூறின் உனக்கும் ஒளியாள்; இதனை அவள்தாய் தனக்கும் ஒளியாமற் சாற்று. 86 உரை: ஊறு தவிர்ந்து - துன்பமெலாம் நீங்கப்பெற்று, மணிமேகலை இவ்வூர் வருங்கால் - மணிமேகலை யானவள் இந்த ஊருக்கு வரும்போது; வேறு வடிவமே மேற் கொளினும் - அவள் வேற்றுருவை மேற் கொண்டாலும்; கூறின் - உண்மை கூறவேண்டுமானால்; உனக்கும் ஒளியாள் - உன் கண்ணுக்கும் தோன்றாமல் போய்விடமாட்டாள்; இதனை - இந்த உண்மையை; அவள் தாய் தனக்கும் ஒளி யாமல் சாற்று - அவள் தாய்க்கும் மறைக்காமல் சொல்லிவை. மணிமேகலை ஒரு கிழமையில் இங்கு வருவாள்; அவள் உருமாறி இருப்பாள்; எனினும் உன் கண்களுக்கு உண்மை உருத் தெரியும் என்றாள் முதியோள். என் பேர்தான் மணிமேகலை மாதவி பெற்ற மகளுக்கென் பேரையே கோதவி கோவலன் வைத்திட்டான் - ஈதுரைப்பாய் மாதவிக்கு நாளும் மணிமே கலைமனத்தின் தீதவிப்பாள் என்றதையும் செப்பு. 87 உரை: மாதவி பெற்ற மகளுக்கு - மாதவி ஈன்ற குழந்தைக்கு; என் பேரையே - மணிமேகலை என்ற என் பேரையே; கோது அவி கோவலன் வைத்திட்டான் - கோது அவித்த கோவலன் சூட்டினான்; ஈதுரைப்பாய் - இதை நீ மாதவிக்குச் சொல்; அதுவுமின்றி; மணிமேகலை - மாதவி பெற்ற அந்த மணிமேகலை; மாதவிக்கு நாளும் - மாதவிக்கு நாளடைவில்; மனத்தில் தீது அவிப்பாள் என்று அதையும் செப்பு - மனத் தொல்லையைத் தீர்த்து விடுவாள் என்று அதையும் சொல்வாயாக. என்றதையும் செப்பு: என்ற அதையும் எனப் பிரித்துப்பொருள் கொள்ளப்பட்டது. இனி என்றதையும் - என்று நான் சொன்னதையும் என்றும் பொருள் கொள்ளலாம். கோது குற்றம்; அவி வினைத்தொகை. அவித்த, அவிக்கின்ற, அவிக்கும் என முக்காலத்துக்கும் விரியும். சுதமதி மாதவிக்கு! என்று மொழிந்தவள்தான் ஏகச் சுதமதியும் சென்று தெரிவித்தாள் தேன்மொழிக்கே - கன்றைப் பிரிந்தா வருந்தாதா? பெண்ணைப் பிரிந்தால் வருந்தாதா பெற்ற மனம்? 88 உரை: என்று மொழிந்து அவள்தான் ஏக - என்றிவ்வாறு கூறி அவள் தான் சென்றபின்; சுதமதியும் - பாங்கி; சென்று தெரிவித்தாள் தேன்மொழிக்கே - போய்ச் சொன்னாள் மாதவிக்கு! கன்றைப் பிரிந்து ஆ வருந்தாதா - கன்றைப் பிரிந்தால் பசு வருந்த மாட்டாதா? பெண்ணைப் பிரிந்தால் - பெற்ற பெண்ணைப் பிரிந்தால்; வருந்தாதா பெற்ற மனம் - வருந்தாமலா இருக்கும் பெற்ற மனம்? மொழிந்தவள்தான்: மொழிந்து அவள்தான் எனப் பிரிக்க. பிரிந்தா என்பதும், பிரிந்து ஆ எனப் பிரிக்கப்படும். மணிபல்லவத்தில் மணிபல் லவத்தில் மணலில் துயின்ற மணிமே கலைகண் மலர்ந்தாள் - துணிவிழந்தாள் பண்டறி யாதனவே பார்த்தாள்; உறைவாரைக் கண்டறி யாதகற் கண்டு. 89 உரை: மணி பல்லவத்தில் - மணி பல்லவத் தீவில், மணலில் - மணல் தரையில்; துயின்ற - தூங்கியிருந்த; மணிமேகலை கண் மலர்ந்தாள் - மணிமேகலை கண் விழித்தாள்; துணி விழந்தாள் - இன்னது செய்வதெனும் துணிவை இழந்தாள்; பண்டு அறியாதனவே பார்த்தாள் - இதற்கு முன் பார்த்தறி யாத பொருள்களையே பார்த்தாள்; உறைவாரை - அங்கு வாழ்கின்ற மக்களை; கண்டு அறியாத கற்கண்டு - கண்டறி யாத கற்கண்டு போன்ற மணிமேகலை. கற்கண்டு: சொல்லுக்கு உவமை. முதியோள் விட்டுப்போனது அறமா? ஆங்கிருந்தேன் என்னை அழைத்திங்கு வந்திடுமுன் தூங்கினேன்! அந்நேரம் தூரத்தே - ஏங்கவிட்டுச் செல்லல் அறமா? செயத்தக்க இன்னவெனச் சொல்லல் அறமா தொடர்ந்து. 90 உரை: ஆங்கு இருந்தேன் என்னை - அங்கிருந்தவளாகிய என்னை; அழைத்து இங்கு வந்திடுமுன் - இங்கு அழைத்து வந்தவுடன்; தூங்கினேன் - தூங்கிவிட்டேன்; அந்நேரம் - அந்த நேரத்தில்; தூரத்தே - தொலைவில்; ஏங்கவிட்டு - என்னை ஏங்கும்படி இங்குவிட்டு; செல்லல் அறமா - போய் விடுதல் அறமாகுமா? செயத்தக்க இன்னவெனத் தொடர்ந்து சொல்லல் அறமா? - நான் செய்யத்தக்கவை இன்னவை என்று தொடர்ச்சியைச் சொல்லிப் போதல் அறமா? தூங்கும்போது தன்னைவிட்டுச் சென்ற முதியோள் செயல் அறமல்ல என்று வருந்தினாள் மணிமேகலை. கண் காணாத இடத்தில் கலங்குகின்றேன் தேரு மிலாது தெருவு மிலாதுழையார் யாரு மிலாதிருக்கும் இவ்விடத்தில் - சோருகின்ற கண்ணீரும் நானும் கதறுங்கால் என்உறவீர் எண்ணீரோ சற்றும் எனை. 91 உரை: தேரும் இலாது - தேருமில்லாமல்; தெருவும் இலாது - தெருவும் இல்லாமல்; உழையார் - அருகில் இருப்பவர்; யாரும் இலாதிருக்கும் இவ்விடத்தில் - எவருமில்லா திருக்கும் இந்த இடத்தில்; சோருகின்ற கண்ணீரும் - வீழ்கின்ற கண்ணீரும்; நானும் - நானும்; கதறுங்கால் - கதறும் போது; என் உறவீர் - என் உறவினரே! எண்ணீரோ சற்றும் எனை - கொஞ்சமும் எண்ண மாட்டீர்களா என்னை. என் உறவீர் என்றது, அன்னை முதலியவர்களை; உழையோர் அக்கம் பக்கத்தார் என்க. அம்மாவும் உதவவில்லை; அப்பாவையும் கண்டதில்லை பழிகூறிக் கொன்ற ஒரு பாண்டியனை உண்மை வழிகூறி மாளப் புரிந்த - எழிலான அப்பாவை யுங்காணேன் அன்றும்கா ணேன் இன்று அப்பாவை யுங்காணே னால். 92 உரை: பழிகூறிக் கொன்ற ஒரு பாண்டியனை - என் தந்தை மேல் பழிகூறி அவரைக் கொன்ற பாண்டியனை; வழி கூறி மாளப் புரிந்த- நேர்மை கூறிச் சாகும்படி செய்த; எழிலான - அழகிய; அப்பாவையும் காணேன் - அந்தப் பாவை போன்ற என் தாயையும் காணவில்லை; அன்றும் காணேன் இன்று அப்பாவையும் காணேன் - அப்பாவையும் அன்றும் காணேன் இன்றும் காணேன். ஆல்: அசை எழிலான அப்பாவை - அழகிய அந்தப் பாவை போன்ற மாதவி. அப்பாவை: புறச்சுட்டு. பாவை: இந்நாளில் பொம்மை எனப்படுவது. மரமா தேறுதல் கூறும்? விலங்கா தேறுதல் கூறும்? தீமையால் இங்குத் திரிகின்றேன் தெங்குபலா ஊமையாய் இங்கிருக்கும்; ஒன்றுரையா - ஆமையும் புள்ளிழுத்துக் கொள்ளும் புனற்கரைமா உண்டுதலை உள்ளிழுத்துக் கொள்ளும்எனை ஓர்ந்து. 93 உரை: தீமையால் - தனித்து விடப்பட்ட தீமையினால்; இங்கு திரிகின்றேன் - இவ்விடத்தில் திரிந்துகொண்டிருக்கின்றேன்; தெங்கு பலா ஊமையாய் இங்கிருக்கும் - தெங்கு பலா முதலிய மரங்களோ ஊமையாய் இங்கு இருக்கும்; ஒன்று உரையா - அவை என்னை நோக்கி ஒரு தேறுதலும் சொல்லுவதில்லை; ஆமையும், இங்குள்ள ஆமையோ என்றால்; புள் - கிளி முதலிய புட்கள், இழுத்துக் கொள்ளும் - இழுத்துப் பிடித்து அடைய நினைக்கின்ற; புனற்கரை - நீர் நிலையின் கரையிலிருக்கின்ற; மா உண்டு - மாம்பழத்தை உண்டு விட்டு; தலை - தலையை; உள் இழுத்துக்கொள்ளும் எனை ஓர்ந்து - என்னை நன்றாய்ப் பார்த்துவிட்டு உள்ளிழுத்துக் கொள்ளும். தான் உண்ண இருக்கும் மாங்கனியை உண்ட ஆமை, தன்னை நன்றாய்ப் பார்த்தும் தேறுதல் ஒன்றும் கூறாமல் தலையை உள்ளே இழுத்துக் கொண்டது என்று மணிமேகலை கூறினாள். ஓர்தல் - ஆராய்தல்; உற்றுக் காணுதல் என்றாம். கோலெடுத்துக் கொண்டு குறுக்கில் ஓடுகின்றது குரங்கு தேனோடும் பூவிற் சிறையோடும்! புல்லுக்கு மானோடும்! கொக்கு மடையோடும்! - நானோடி மேலெடுக்கும் வேலை எதென் றேன்குறுக்கே முள்வேலங் கோலெடுக்கும் ஓடும் குரங்கு. 94 உரை: தேன் ஓடும் பூவில் சிறை ஓடும் - தேன் பெருகி ஓடுகின்ற பூவில் வண்டு அதை உண்ண ஓடும்; புல்லுக்கு மானோடும் - புல் தின்ன மான் ஓடிக்கொண்டிருக்கும்; கொக்கு மடை ஓடும் - கொக்கு மீன் பிடித்துண்ண மடையை நோக்கி ஓடும்; நான் ஓடி - நான் அவை களிடம் ஓடி நின்று; மேல் எடுக்கும் வேலை எது என்றேன் - மேலே நான் செய்ய வேண்டிய வேலை எது என்று கேட்டு நின்றேன். அதே நேரம்; குறுக்கே - எனக்கும் அவற்றிற்கும் நடுப் புறமாக; குரங்கு - ஒரு குரங்கானது; முள் வேலங்கோல் எடுக்கும் - முள் வேல மரத்தினது கோலை எடுக்கும்; ஓடும் - அவ்வழியே ஓடும். குரங்கு இப்படிச் செய்ததால் வண்டும் மானும் கொக்கும் அஞ்சின; மணிமேகலை கேள்விக்கு அவை பதில் சொல்வ தெப்படி? சிறை - வண்டு. கொக்கு மடை நோக்கி ஓடியதால், அங்கு மீன் இருந்தன என்பது தானே பெறப்பட்டது. நண்டும் வண்டும் விளையாடும்! நானுமா விளையாடுவேன்! நண்டு விளையாடும்; நன்மா நிழற்காரைக் கண்டு மயிலாடும்; காவித்தேன் - மொண்டு விளையாடும் வண்டு; விளையாட வாநான்? களையா டினஎன்றன் கண். 95 உரை: நண்டு விளையாடும் - அங்கே நண்டு விளையாடிக் கொண்டிருக்கும்; நன்மா நிழல் காரை - நல்ல மாமரத்தின் நிழலாகிய முகிலை; கண்டு மயிலாடும் - கண்டதால் மயில் ஆடிக்கொண்டிருக்கும்; காவித் தேன் - கரு நெய்தலில் உள்ள தேனை; மொண்டு - வாயினால் மொண்டு; விளையாடும் வண்டு - வண்டு விளையாடிக் கொண்டிக்கும்; நான் விளை யாடவா? - அவற்றின் கூடவே நானும் விளையாடவா? களை யாடின என்றன் கண் - என் கண்ணில் களைப்பு விளையாடின. மணிமேகலை தன் மனத்தொல்லையைச் சொன்னபடி! நிழற் கார் - நிழலாகிய முகில்; தழையடர்ந்த பெருமா மரத்தின் நிழலை மயில், கார் என்று நினைத்தது. முதியோள் வந்தாள் திட்டில் அழுவாள் சிரிப்புக் கரைகாண எட்டி முதியோள் எடுத்தணைத்துக் - கட்டிக் கரும்பே உதைய னிடமிருந்து காத்தேன் திரும்பநான் சொன்னபடி செய். 96 உரை: திட்டில் அழுவாள் - தீவில் அழுது கொண்டிருக்கும் மணிமேகலை; சிரிப்புக் கரைகாண - மகிழ்ச்சிக் கரை ஏற; எட்டி முதியோள் எடுத்தணைத்து - கையால் தாவி முதியோள் எடுத்து அணைத்து; கட்டிக் கரும்பே - கட்டிக் கரும்பே; உதையனிடமிருந்து - உன்னை உதயகுமாரனிட மிருந்து; காத்தேன் - காத்து விட்டேன்; திரும்ப - இங்கிருந்து திரும்பிச் செல்லும்பொருட்டு; நான் சொன்னபடி செய் - நான் சொன்ன வண்ணம் நீ செய்க. தவப்பெரியார் அறம் உரையார் மிகச்சிறியை என்று புத்தன் புகன்ற திருவறத்தை நீ அடைதல் கத்தன் றெனஉணர்க கண்மணியே - புத்தம் புதிய இளமேனி காணும் புலவர் முதிய மறைஉரையார் முன். 97 உரை: புத்தன் புகன்ற திரு அறத்தை - புத்தபிரான் சொல்லி யருளிய திரு அறத்தை; நீ அடைதல் - நீ தெரிந்து கொள்ளல்; கத்து அன்று என உணர்க - பொய்யல்ல மெய்யாகவே முடியும் என்று நீ உணர்ந்து கொள்க; புத்தம் புதிய இளமேனி காணும் புலவர் - உன்னுடைய புதிதும் இளையதுமான மேனியைக் காண்கின்ற புலவர்கள்; முன் - உன் முன்னே; முதிய மறை உரையார் - முதுமையான புத்த அறத்தை உரைக்க மாட்டார்கள். நீயடைதல் கத்து அன்று - நீயடைதல் முடியாதது அன்று என்றபடி. கத்து - பொய்; புலவர் - மறையுணர்ந்தோர்; நீ சிறுமி; அதனால் உனக்கு உரையார்; முதியையாயின் உரைக்கப்படும். நினைத்த உருவம் கொள்ளும் புனைவினை நினையும் உருவத்தை நீயடையத் தக்க புனைவினை ஒன்று புகல்வேன் - தினையும் மறந்தார்க்குத் தோதுபடல் இல்லை உனைப்போல் துறந்தார்க்குத் தோது படும். 98 உரை: நினையும் உருவத்தை - நினைக்கின்ற உருவத்தை; நீ அடையத்தக்க - நீ அடையத் தக்கதான; புனைவினை - புனை தொழில்; ஒன்று புகல்வேன் - ஒன்றை நான் சொல்லிக் கொடுக்கின்றேன்; தினையும் மறந்தோர்க்குத் தோதுபடல் இல்லை - தினையும் மறந்து விடுவார்க்கு அது ஒத்து வராது; உன் மனத்தில் நிற்கும் என்றாள். புனைவினை உனைப்போல் துறந்தார்க்குத் தோதுபடும் - உன் போல் துறந்தவர்க்கு அது ஒத்துவரும். துறந்தார் மறந்தாராக மாட்டார்; அதனால் புனை வினை உன் மனதில் நிற்கும் என்றாள் புனைவினை - உருமாற்றும் தொழில் திறம். புனைவினை புகன்றாள் முதியோள் பன்னாட்டார் ஆடவர் பாவையர் பூண்களும் பன்னாளும் மாறிவரும் பாங்குகளும் - பன்மொழியும் மூத்தார் இளையார் நடைப்பாங்கும் முற்றிலும் மூத்தாள் மொழிந்தாள் அவட்கு. 99 உரை: பன்னாட்டார் ஆடவர் பாவையர் - பன்னாட்டினராகிய ஆடவர் மகளிரின்; பூண்களும் - பூணும் பூண்களும்; பன்னாளும் மாறி வரும் பாங்குகளும் - நாளடைவில் மாற்றமுறும் பாங்குகளும்; அன்றியும்; பன்மொழியும் - பல்வேறுபட்ட மொழிகளும்; மூத்தார் இளையார் நடைப் பாங்கும் - முதியவர் இளையவர்களின் நடைப் பாங்கும்; முற்றிலும் - முழுதும்; மூத்தாள் மொழிந்தாள் அவட்கு-முதியாள் சொன்னாள் மணிமேகலைக்கு. பல நாட்டார் பன்னாட்டார் எனப் புணர்ந்தது; பல மொழி, பன்மொழி. உறுப்புக்களை மாற்றும் முறை நோக்குப் பலவும் நுதல்பலவும் வாய்பலவும் மூக்குப் பலவும் முனை நடுவாம் - நாக்குப் பலவும் பலரின் உருக்காட்டப் பின்னும் பலவும் பகர்ந்தாள் அவட்கு. 100 உரை: நோக்குப் பலவும் - பார்க்கும் பார்வைகள் பலவற்றை யும்; நுதல் பலவும் - நெற்றி புருவம் மாறுதல் செய்யும் முறை பலவற்றையும்; வாய் பலவும் - மாறுதல் அடையும் வாய்கள் பலவற்றையும்; மூக்கு பலவும் - எதற்கு எப்புறம் காட்ட வேண்டும் என்ற முறையில் மூக்குமுறைகள் பலவற்றையும்; முனை நாக்கு நடு நாக்கு - மேற்கொள்ளும் முறையில் அமைந்த நாக்குப் பல வற்றையும் ; பலரின் உருக்காட்டப் பின்னும் பலவும் - பலவகை மக்களின் உருவைக் காட்டப் பின்னும் முறைகள் பலவற்றையும்; அவட்குப் பகர்ந்தாள் - மேகலைக்குச் சொன்னாள். முதியோள் மறைந்தாள் பலவாம் புனைவினை பாவைக்குச் சொல்லி நிலவாம் முகத்தாளே நேரிங் - குலவியிரு புத்தபீடி கையுங்காண் கோமுகியும் காண்;போய்ஊர் நத்துகஎன் றாள்மறைந்தாள் நன்று. 101 உரை: பல ஆம் புனைவினை - பலவாக அமைந்த புனை வினையை; பாவைக்குச் சொல்லி - மணிமேகலைக்குக் கூறி; மேலும் அவளை நோக்கி; நிலவாம் முகத்தாளே - நிலவு போன்ற முகத்தை யுடையவளே; நேர் இங்கு உலவி இரு - இங்கு நேரில் உலவிக் கொண்டிரு; புத்த பீடிகையும் காண் - புத்த பீடிகையையும் பார்; கோமுகியும் காண் - கோமுகிப் பொய்கையையும் பார்; போய் ஊர் - ஊர்போய்; நத்துக - உறவையும் பெரியோரையும் நத்துக: என்றாள் மறைந்தாள் நன்று - என்றாள், நன்று மறைந்தாள். தீவதிலகை காணப்பட்டாள் காவை மணற்குன்றைக் கண்டு நடக்கையிலே தீவ திலகைஎனும் தேமொழியின் - நாவில் அமுதெடுத்தால் அன்ன தமிழெடுத்தாள்! கண்ணின் இமையின் இணைப்பெடுத்தாள் பெண். 102 உரை: காவை மணற்குன்றை கண்டு நடக்கையிலே - மணிபல்லவத்தில் பூங்காவையும் மணற்குன்றுகளையும் கண்டு நடக்கையில்; தீவதிலகை எனும் தேமொழியின் - தீவ திலகை என்னும் இனிய மொழியுடையாளின்; - நாவில் அமுதெடுத்தாலென்ன நாவில் அமுதை ஏந்தினால் எப்படியோ அப்படி; தமிழ் எடுத்தாள் - தமிழ் பேசத் தொடங்கினாள். அதனால், கண்ணின் இமையின் இமைப்பு எடுத்தாள் பெண் - கண்ணின் இரண்டிமையின் ஒட்டுதலை விலக்கினாள் மணிமேகலை. ஒருவரிடமும் ஒரு பேச்சுப் பேசவும் நேர்ந்திராத மணிமேகலை தமிழ்ப் பேச்சைக் கேட்டாள் என்றால், அவளுக்குத் தூக்கமுமா வரும்? கண்ணைத் திறந்தாள், அமுது - தமிழுக்கு உவமை. தீவதிலகைக்கு மணிமேகலை கப்பல் கவிழ்ந்ததனால் கண்டமணி பல்லவத்தில் தப்பல் நினைத்துத் தனித்தடைந்த - தொப்பதுநின் தோற்றம்நீ யாரென்னத் தோகை வரலாறு மாற்றம் இலாதுரைத்தாள் மற்று. 103 உரை: கப்பல் கவிழ்ந்ததனால் - வந்த கப்பல் கவிழ்ந்து போனதால்; கண்ட - கண்ணில் தட்டுப்பட்ட; மணிபல்லவத் தில் - இம் மணி பல்லவத்தில்; தப்பல் நினைத்து - தப்ப வேண்டியதை எண்ணி; தனித்து அடைந்தது ஒப்பது நின் தோற்றம் - தனித்து அடைந் ததை ஒக்கும் உன் தோற்றம்; நீ யார் என்ன - நீ யார் என்று தீவதிலகை கேட்க; தோகை - மணிமேகலை; வரலாறு - தன் வரலாற்றை; மாற்றம் இலாது உரைத்தாள் - சிறிதும் மாற்றம் இல்லாமல் சொன்னாள். உன் முகத்தோற்றத்தைக் காணும்போது கப்பல் கவிழ்ந்ததனால் நடுவிலுள்ள இந்தத் தீவை அடைந்தாய் என்று எண்ணும்படி இருக்கிறது என்றாள், தீவதிலகை. தீவதிலகையும் மணிமேகலையும் முத்தன்ன வெண்ணகையார் முற்சென்றார் அங்கிருந்த புத்தனார் பீடிகையில் போதுவிழி - வைத்தனர் நாமுகிழ்த்தாள் நன்றதன்சீர் தீவ திலகைதான்! கோமுகியும் காட்டினாள் கொம்பு. 104 உரை: முத்து அன்ன வெண்ணகையார் - முத்துப் போன்ற வெண்மையான நகைப்புடைய மணிமேகலையும் தீவ திலகையும்; முன் சென்றார் - மேலே செல்லலானார்கள்; அங்கு இருந்த - போகும் வழியிலிருந்த; புத்தனார் பீடிகை யில் - புத்த பீடிகையில்; போது விழி வைத்தனர் - மலர் போன்ற விழியைச் செலுத்தினர்; நா முகிழ்த்தாள் நன்று அதன் சீர் தீவதிலகைதான்- தீவதிலகை அதனது சிறப்பையெல்லாம் நன்றாகச் சொன்னாள்; கோமுகியும் காட்டினாள் கொம்பு - பூங்கொம்பு போன்ற தீவதிலகை கோமுகி என்னும் பொய்கை யையும் மணிமேகலைக்குக் காட்டினாள். நா முகிழ்த்தல் - நாவிற் பேச்சை எடுத்தல்; போது - மலர். கோமுகிப் பொய்கையில் அமுத சுரபி உண்ணாடிக் கண்டால் தன்உள்ளதுகாட் டும்தெண்ணீர்க் கண்ணாடிப் பொய்கைக் கரைநோக்க - எண்முப் பதக்கும் பிடிக்கும் பழங்கலம் ஒன்று மிதக்கும் பிடிக்கும்அதை மின். 105 உரை: உள் நாடி கண்டால்- உட்புறத்தை ஊன்றிப் பார்த்தால்; தன் - தன்னிடத்தே; உள்ளது காட்டும்-இருக்கின்ற (பிறர்) உருவத்தைக் காட்டுகின்ற; தெண்ணீர் - தெளிந்த நீராகிய; கண்ணாடிப் பொய்கைக் கரை நோக்க - கண்ணாடி போன்ற கோமுகிப் பொய்கைக் கரையைப் பார்த்தபோது; எண் முப்பதக்கும் பிடிக்கும் பழங்கலம் ஒன்று - இருபத்து நான்கு பதக்கும் கொள்ளத்தக்க ஒரு பழைய கலமானது; மிதக்கும் - மிதந்து வந்தது; பிடிக்கும் அதை மின் - மின்னொத்த இடையுடைய மணிமேகலை அந்தக் கலத்தைப் பிடித்துத் தூக்கினாள். எண் முப்பதக்கு - இருபத்து நான்கு பதக்கு என்றும், எண்ணப்படுகின்ற மூன்று பதக்கு என்றும் பொருள் கொள்க. பதக்கு - இரண்டு குறுணி. எண் முப்பதக்கு என்பது முகத்தல் அளவை; அது ஆகுபெயராய் அவ்வளவுடைய மணிகட்கு ஆகும். பிடிக்கும் - பிடிப்பாள்; செய்யுமென் முற்று; அது பலர்பால் ஒழிந்த மற்ற நாற்பாலுக்கும் வரும். அமுதசுரபியுடன் திரும்புதல் கமழ்வது தாமரை, காணிற் கலம்அஃ(து) அமுதசுரபி என்றாள் அன்னம் - அமைய இருகையில் ஏந்திய மங்கை திரும்பி வருகையில் மற்றுங்கேட் டாள்! 106 உரை: கமழ்வது தாமரை - தாமரை மலரின் மணம் வீசுவது; காணில் - ஆனால் கண்டால்; கலம் - ஓர் கலமாகக் காட்சி யளிக்கும்; அஃது அமுதசுரபி என்றாள் அன்னம் - அதன் பேர் அமுதசுரபி என்று கூறினாள் தீவதிலகை; அமைய - பொருந்த; இருகையில் ஏந்திய மங்கை - இரண்டு கையாலும் ஏந்திக்கொண்ட மணிமேகலை; திரும்பி வருகையில் - மீண்டு வரும்போது; மற்றும் கேட்டாள் - கேளாது விட்ட வரலாற்றையும் கேட்பாளானாள். காணும்போது கலம் , முகரும்போது தாமரை என்பது முதலடியின் கருத்து. தீவதிலகை செப்பினாள் நீபத்து நூறுமுறை நேரிற்கா ணுங்கலத்தை ஆபுத் திரன்இட்டான் அந்நீரில் - நீ போய் அறவணர்பால் கேட்பாய் அதன்வரலா றென்றாள் திறவணத்தாள் தீவதில கை 107 உரை: நீ பத்து நூறு முறை நேரில் காணும் கலத்தை - நேரில் வைத்துக்கொண்டு நீ ஆயிரம் தடவை அழகு பார்க்கின்ற அந்த அமுத சுரபியை; ஆபுத்திரன் இட்டான் அந்நீரில் - அந்தப் பொய்கை யில் ஆபுத்திரன் என்பவன் போட்டான்; நீ போய் - நீ இங்கிருந்து சென்று; அறவணர்பால் கேட்பாய் அதன் வரலாறு - அதன் மற்ற வரலாறுகளையெல்லாம் அறவணரிடம் கேட்டுத் தெரிந்துகொள்; என்றாள் - என்று கூறினாள். யார்? திறவணத்தாள் தீவதிலகை - திறமை நிரம்பிய தன்மையுடைய தீவதிலகை. அந்நீர் - அந்த நீர். பொய்கை; ஆகுபெயர். அந்தக் கலந்தான் இந்தக் கலம் இட்டுப் புகழ்பெற்ற ஏழைதான் ஏற்றசோ றிட்டுக் கறிபிசைந் தீந்ததுவும் - இட்டே எடுக்கஎடுக் கக்குறையா தென்றதும் பொய்கை அடுத்ததுவும் இக்கலமே ஆம். 108 உரை: இட்டுப் புகழ்பெற்ற ஏழைதான் - ஈந்து புகழடைந்த ஏழைதான் - ஈந்து புகழடைந்த ஏழையாகிய ஆபுத்திரன் தான்; ஏற்ற சோறு இட்டு - இரந்து பெற்ற சோற்றை வைத்து; கறி பிசைந்து - அதனோடு பொரிக்கறி குழம்பு முதலிய வற்றைப் பிசைந்து; ஈந்ததுவும் - இல்லாதவர்க்கு இடக் காரணமாயமைந்ததும்; இட்டே - இட்டபின்; எடுக்க எடுக்கக் குறையாது என்றதுவும் - எடுக்க எடுக்கக் குறைவுபடாது என்று சொல்லப்பட்டதும்; பொய்கை அடுத்ததுவும் - கடைசி யில் இந்தப் பொய்கையை அடைந்ததும்; இக்கலமே ஆம் - இந்த அமுத சுரபியே ஆகும் . அமுத சுரபியில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாது என்று கூறுவார்கள்; அது புனைந்துரையே. பசியுள்ள இடத்தில் புசி என்று போ அறியாமை வேரோ டழியாது; வாழ்வை எறியாமைத் தீப்பசிதான் ஏகா - துறவேகேள் ஓரூரி லாவிடினும் ஓரூரில் உண்டுபசி நேரூர்ந்தும் அப்பிணியை நீக்கு. 109 உரை: அறியாமை வேரோடு அழியாது - அறியாமை என்பது அடியோடு போய்விடாது; வாழ்வை எறியாமை தீ பசிதான் ஏகாது - ஒருவன் வாழ்க்கையில் துன்பத்தைச் செய்யாமல் கொடிய பசி போகாது; உறவே கேள் - எனக்கு உறவினள் போன்ற மணிமேகலையே கேட்பாயாக; ஓரூர் இலாவிடினும் - ஓரூரிற் பசி என்பதே இல்லாதிருந்தாலும்: ஓரூரில் உண்டு பசி - பசித்துன்பம் வேரூரில் இருக்கும்; நேரூர்ந்தும் அப்பசியை நீக்கு - அப் பசித்துன்பத்தை, நேரே நகர்ந்து சென்றாயினும் நீக்கி உதவு; நேரூர்ந்தும் - என்றது, தேர் முதலியவற்றிற் செல்ல முடியாவிடினும், காலால் நடக்க முடியாவிடினும், நகர்ந்தாவது நேரில் செல்லவேண்டும் என்பதே. எறியாமை - துன்புறுத்தாமல். மே, மை, மல், எதிர் மறை வினையெச்ச இறுதி நிலைகள். எறியாமை என்பதில் மை இறுதிநிலை; எறியாமல் என்பது பொருள். ஏகா துறவே கேள் என்பதை, ஏகாது உறவே கேள் என்று பிரிக்க. அறியாமை அடியோடு நீங்காது; அறியாமை இருக்குமட்டும் வறுமை இருக்கும்; வறுமை இருக்குமட்டும் பசித்துன்பம் இருக்கும்; என்பது இப்பாட்டால் உணரப்படும். வையப் புகழ் உனக்கே இளமையில் எய்துமோர் இன்பம் வெறுத்தாய்! வளமையிற் போதல் மடக்கி - உளம்காத்தாய்! வையப் புகழுனக்கே வாய்திறந்தால் கோடிவரும் வெய்ய பசியை விலக்கு. 110 உரை: இளமையில் எய்துமோர் இன்பம் வெறுத்தாய் - இளமைப் பருவத்திலே உயிருடையார் அடைந்து மகிழ்கின்ற காதல் இன்பத்தை நீ வெறுத்து ஒதுக்கிவிட்டாய்; வளமையில் போதல் மடக்கி - வளப்பத்தை நாடிப் போவதை மறித்து; உளம் காத்தாய் - உன் உள்ளத்தை நீ காப்பாற்றிவிட்டாய்; ஆதலால் வையப் புகழ் உனக்கே - வையகம் அடங்கலும் உண்டாகும் புகழ் அனைத்தும் உனக்கே ஆகும்; வாய் திறந்தால் கோடி வரும் - பிறர் நலம் எண்ணி நீ ஒன்று வேண்டும் என்றுகேட்டால் கோடிக் கணக்கான பொன் கிடைக்கும்; வெய்ய பசியை விலக்கு - ஆதலால் மக்களுக்கு ஏற்படும் கொடிய பசித்துன்பத்தை நீக்கிக் காக்க வேண்டும். போதல் மடக்கி - போதலை மடக்கி: இரண்டாவதன் தொகை. ஆபுத்திரன் போல் அளி வயிற்றுப் பசிநீக்கு வாழ்வறியார் தூக்குக் கயிற்றை விழலாக்கு! கண்ணை - எயிற்றை மகிழ் வேபுகுத்தாய் நீஉன்றன் வாழ்நா ளெலாமந்த ஆபுத் திரன்போலம் மா. 111 உரை: வயிற்றுப்பசி நீக்கு - உணவு இன்மையால் வயிற்றுக் குலையில் ஏற்படும் பதைப்பை நீக்கி உதவு; வாழ்வு அறியார் தூக்குக் கயிற்றை - வாழ வகையறியாதவர்கள் பசி தாங்காமல் தூக்குப் போட்டுக்கொள்ள எடுக்கும் கயிற்றை; விழல் ஆக்கு - அம் முயற்சி பயன்படாமற் பண்ணி உதவு; கண்ணை - ஏழைகள் கண்களையும்; எயிற்றை - பற்களையும். மகிழ்வே புகுத்தாய் - மகிழ்ச்சியிலே புகும்படி செய்வாய்; நீ உன்றன் வாழ்நாள் எல்லாம் - நீ வாழ்கின்ற காலமெல்லாம்; அந்த ஆ புத்திரன் போல் - அந்நாளில் ஈந்து புகழ்பெற்ற ஆபுத்திரன் போல்; அம்மா - அம்மையே! தீவதிலகை மணிமேகலையை அம்மா என்று அழைப்பதன் வாயிலாக உயர்வுபடுத்தினாள். ஏழைகளின் கண்ணையும் பல்லையும் மகிழ்ச்சிக்கு உட்படுத்துவதாவது, கண்ணில் ஒளிகுன்றாதிருக்கும்படியும், பல்லில் நகை குன்றாம லிருக்கும்படியும் செய்தல்; பசி நீக்கத்தால் அவை உண்டாகும். ஏழைக்கிடுவதே தவம் வேலையில்லை தந்தைக்கு! வெள்ளைநூல் அன்னையிடம் பாலில்லை பச்சைக் குழந்தைக்கே - தாலிவிற்றால் வாங்குவா ரில்லை;அங்கு வாட்டும் பசிநீக்கித் தாங்குவார் தாம்தவம்செய் வார். 112 உரை: வேலை இல்லை தந்தைக்கு - தந்தைக்கோ வேலை கிடைக்க வில்லை; வெள்ளை நூல் அன்னையிடம் - வெள்ளை நூலைப் போல வெளுத்துப்போன தாயிடம்; பால் இல்லை பச்சைக் குழந்தைக்கே - பச்சைக் குழந்தைக்குப் பால் கிடைக்கவில்லை; தாலி விற்றால் - மனைவியின் தாலியை விற்பதாயிருந்தால்; வாங்குவார் இல்லை - விலைகொடுத்து வாங்குகின்றவர்களும் எவருமில்லை; அங்கு - அந்த நிலையில்; வாட்டும் பசி நீக்கி - மக்களை வாட்டு கின்ற பசியை நீக்கி; தாங்குவார் தவம் செய்வார் - ஆதரிப்பார் எவரோ அவரே தவப்பயன் பெற்றவராவார். தாம்: அசை. அறத்தின் சாறு சோறில்லை என்பார்க்குச் சோறு தருவதுதான் கூறறங்க ளின்சாற்றுக் கூட்டம்மா - வேறேதான் எங்குண்டம் மாபசிக்கே ஈர்ம்பழஞ்சோ றிட்டுவக்கும் அங்குண்டம் மாநல் லறம். 113 உரை: சோறு இல்லை என்பார்க்கு- வயிற்றுக்குச் சோறில்லை என்று துன்புறுகின்றவர்க்கு; சோறு தருவது தான் - சோறு தந்து உதவுவதுதான்; கூறு அறங்களின் சாற்றுக் கூட்டு - சிறப்பித்துச் சொல்லுகின்ற அறச்சாற்றின் தொகுதி; வேறே எங்குண்டு-அது வன்றி அறம் என்பது எங்குண்டு? மாபசிக்கு - பெரும் பசிக்கு; ஈர்ம்பழஞ்சோறு - ஈரப்பழஞ்சோற்றை; இட்டு உவக்கும் - இட்டு மகிழ்கின்ற; அங்குண்டு நல்லறம் - அங்கே உண்டு தலையாய அறம். அம்மா, மூன்றிடத்தும் வந்து மணிமேகலையை உயர்வு படுத்தியதோடு, தீவ திலகையின் மன உருக்கத்தையும் விளக்கின. அறங்களின் சாற்றையெல்லாம் கூட்டிய கூட்டுத்தான் சோறு தருவது என்பது முதலிரண்டடிக் கருத்து. அங்குண்டு - ஈத்துவக்கும் மனத்தில் உண்டு என்றபடி. இன்றியமையா நிலையில் இடும் சோற்றுக்குச் சாவு அல்லது வாழ்வு கூன்மாடு விற்றுக் குதிரைவாங் கற்கென்றன் கான்மாடு நின்றார்க்குக் காசளிக்க - நான்மாட்டேன் இன்றி யமையா நிலையில் இடும்சோற்றுக் கொன்றுசாக் காடொன்று வாழ்வு. 114 உரை: கூன்மாடு விற்று - மாடு சற்றே கூனாயிருப்பது கருதி அதை விற்றுவிட்டு; குதிரை வாங்கற்கு - அழகிய வண்டிக்கு குதிரை வாங்குவதற்காக; என்றன் கால் மாடு நின்றார்க்கு - என்னை உதவி செய்யச் சொல்லி என் கால்மாட்டில் காத்திருப்பவர்கட்கு; காசு அளிக்க நான் மாட்டேன் - பணம் கொடுக்க நான் ஒப்ப மாட்டேன்; இன்றியமையா நிலையில் - இல்லாவிட்டால் உயிர் நில்லாது என்ற நிலையில்; இடும் சோற்றுக்கு - இடவேண்டிய சோற்றுக்காக; ஒன்று சாக்காடு ஒன்று வாழ்வு - சாவது ஒன்று வாழ்வது ஒன்று. அந்த ஏழை இப்போது சோறுண்ணாவிடில் சாவான்; சோறிருந்துண்டால் வாழ்வான் என்றால், அந்தச் சோற்றை நான் தேடுவதில் எனக்குச் சாவு வந்தாலும் சரி, வாழ்வு வந்தாலும் சரி, தேடி அவனுக்கு இட்டே தீருவேன் என்பது இப் பாட்டின் கருத்து. இன்றியமையாமை - கட்டாயத் தேவை; இல்லாவிடில் வாழாமை; கால்மாடு + கான்மாடு என்று புணரும். தீவதிலகை சென்றாள் உயிர்வாழ்வேன் மக்கள் உறுபசி தீர்ப்பேன் செயிர்தீரச் செப்பியது கேட்டேன் - வெயிற்கு நிழல்அவ் வடிகள்பால் செல்வேன் நினைவு தொழல்என்றாள் தோகைசென் றாள். 115 உரை: உயிர் வாழ்வேன் - உயிர் வாழ்கின்றவளாகிய நான்; உறுபசி தீர்ப்பேன் - மக்கள் உற்ற பசியைத் தீர்த்து வைக்கக் கடவேன்; செயிர் தீரச் செப்பியது கேட்டேன் - நான் குற்றங்களினின்று நீங்கும் பொருட்டு நீவிர் செப்பிய அறவுரை கேட்டிருந்தேன்; வெயிற்கு நிழல் அவ்வடிகள் பால் - வெயிற் கொடுமையினின்று நீங்கி ஒதுங்கத்தக்க நிழலை ஒப்பவராகிய அறவண அடிகளிடம்; செல்வேன் - நீவிர் அருளிச் செய்தபடியே செல்லக்கடவேன்; நினைவுதொழல் என்றாள் - என் நினைவெல்லாம் அடிகளைத் தொழுவது தான் என்று மணிமேகலை கூறினாள்; தோகை சென்றாள் - தீவதிலகை போகலுற்றாள். செயிர் - குற்றம். உயிர் வாழ்வேன் : வினையால ணையும் பெயர். மாதவி மகளைக் கண்டாள் மாதவி யாழ்துன்பச் சுதமதிதம் வாயினின் றேதவியாழ் பெற்ற இடர்என்றே - தீதுறுவார் சோறுபெற்ற தூய்கலத்தா ளைப்பெற்றார் முப்பழத்தின் சாறுபெற்றார் தாவி யணைத்து. 116 உரை: மாதவி - மாதவியும்; ஆழ் துன்பச் சுதமதியும் - ஆழ்ந்த துன்பத்தையுடைய சுதமதியும்; தம் வாயினின்று - தம் வீட்டு வாயிற்படியினின்றே; ஏது அவ் யாழ் பெற்ற இடர்என்று - அந்த யாழ் போன்ற மணிமேகலை அடைந்த துன்பம் என்ன என்று; தீதுறுவார் - மனத்தில் துன்பம் அடைந் திருந்தார்கள். அப்போது; சோறுபெற்ற தூய்கலத்தாளைப் பெற்றார் - முன்னாளில் ஆபுத்திரனால் சோறு பெறப்பட்ட தூய்மையான அமுதசுரபியும் கையுமாயுடைய மணி மேகலையை அடையப் பெற்றார்கள் - அதனால்; முப் பழத்தின் சாறு பெற்றார் தாவி அணைத்து - முக்கனிச் சாற்றை ஒரே தாவாகத் தாவி அடைந்தார்கள். மாதவி யாழ் துன்பம் என்பதை மாதவி ஆழ் துன்பம் எனப் பிரிக்க. ஏதவியாழ் என்பதை ஏது அவ் யாழ் என்று பிரிக்க. அவ்+ யாழ் = அவ்வியாழ் என்றாகும்; பின் அவ்வியாழ் என்பது அவியாழ் என வ் அழிந்தது. அறவண அடிகளைப் பணிந்தார்கள் ஆய அனைத்தையுமே அன்னையிடம் பாங்கியிடம் ஏய உரைத்தாள் இளமங்கை - தூய அறவணத்தார் பக்கல் அணுகியே தாளில் உறவணைத்தார் உச்சந் தலை. 117 உரை: ஆய அனைத்தையும்-மணிபல்லவம் சென்றது, கலம் பெற்றது முதலாகிய எல்லாவற்றையும்; அன்னையிடம் பாங்கியிடம் - அன்னையாகிய மாதவி பாங்கியாகிய சுதமதி யிடத்தில்; ஏய உரைத்தாள் இளமங்கை - இளமங்கையான மணிமேகலை தொடர்பாகச் சொன்னாள்; அதன்பின்; அற வணத்தார் பக்கல் - அறவண அடிகளிருப்பிடம்; அணுகி - சென்று; தாளில் அவர் திருவடிகளில்; உறவணைத்தார் உச்சந் தலை - தம் உச்சந் தலையைப் பொருந்தும்படி இணைத்தார்கள். திருவடி பணிந்தார் என்றபடி. அறவணத்தார் அணிவித்தார் அடிகள் உரைப்பார்; அப்புத்த நெறியைக் குடிகள் தொடர்தல் குறைய - மிடிகள் மலிய மறவலி ஆர்ந்தது மக்கள் மெலியலா னார்அதன் மேல். 118 உரை: அடிகள் உரைப்பார் - அறவண அடிகள் உரைப்பா ராயினார்; அப் புத்த நெறியை - அந்தப் புத்தர் காட்டிய வழியை; குடிகள் தொடர்தல் குறைய - குடிமக்கள் பின் தொடர்வது குறைந்து விட்டதால்; மிடிகள் - துன்பங்கள்; மலிய - பெருக; மறவலி ஆர்ந்தது - பாவத்தின் கை வலுத்து விட்டது; மக்கள் மெலிய லானார். அதன் மேல் - உலக மக்கள் மெலிவுறலானார்கள். இந்த நிலை ஏற்பட்டதன் பின். அடிகள் - தத்துவ உணர்வுடையவர்; அடி - தாள். தத்துவம்: ஒரு பொருள். புத்தநெறி உலகில் பரவ வேண்டும் கொடிதுசேர் கோட்டையில் புத்த நெறிதான் கடிதுசே ராதே எனினும் - நெடிது முயலுவேன் நீயும் முயலுக நன்கு பயிலுக என்றார் பரிந்து. 119 உரை: கொடிது சேர் கோட்டையில் - தீமைகளையெல்லாம் அடைந் திருக்கும் கோட்டை போன்ற இவ்வுலகத்தில்; புத்த நெறிதான் - புத்தநெறிதான்; கடிது சேராதே எனினும் - விரைவாக நுழையாது என்று சொன்னாலும்; நெடிது முயலுவேன் - மிகுதியாக முயற்சி செய்யக் கடவேன்; நீயும் முயலுக - நீயும் முயலக்கடவாய்; ஆதலால் நன்கு பயிலுக என்றார் பரிந்து - நன்றாக (புத்த அறங்களை) அறிந்து கொள் பரிவோடு என்றார். புத்தநெறியை எதிர்க்கும் ஆற்றல் கொடிது. ஆபுத்திரன் பற்றி அறவண அடிகள் மன்பதைக்கு நேரும் பசிப்பிணி மாற்றுக! பின்பதைக் கண்டு தருமமீ - தென்பதை நீபெற் றிடலாம்! நிகழ்த்துகின் றேனினி ஆபுத்தி ரன்சீரென் றார். 120 உரை: மன்பதைக்கு நேரும் - மக்களுக்கு உண்டாகின்ற; பசிப்பிணி மாற்றுக - பசித்துன்பத்தை நீ தீர்க்க வேண்டும்; பின்பு அதைக் கண்டு - பிறகு அதைப் பார்த்து; தருமம் ஈது என்பதை-அறம் என்பது இதுதான் என்பதை, நீ பெற்றிடலாம் - நீ உணர்ந்திடலாம்; நிகழ்த்து கின்றேன் இனி - இனிமேல் கூறுவேன்; ஆபுத்திரன் சீர் என்றார் - ஆபுத்திரனின் சிறப்பை என்று அடிகள் கூறினார். மன்பதை - மாந்தர்; ஆபுத்திரன் சீர் - ஆபுத்திரன் வரலாறு எனக் கொள்க. ஆபுத்திரன் புகழ் விண்ணினும் பெரிது ஒழுக்க மெனுநல் லுறுதுணைக் கேபே ரிழுக்கம் புரிவார்க் கெதிர்ப்பு - முழக்கம் புரிந்திட்ட ஆமகன் பெற்ற புகழ்தான் விரிந்திட்ட விண்ணிற் பெரிது. 121 உரை: ஒழுக்கம் எனும் நல் உறுதுணைக்கே - மக்கள் உறு துணையாகிய ஒழுக்கத்திற்கே; பேரிழுக்கம் புரிவார்க்கு - பெரியதொரு கேடு இழைக்கின்றவர்கட்கு; எதிர்ப்பு முழக்கம் புரிந்திட்ட ஆமகன் - எதிர்ப்பாகிய முழக்கத்தைக் கிளப்பிய ஆபுத்திரனானவன்; பெற்ற புகழ்தான் - அடைந்த புகழானது; விரிந்திட்ட விண்ணில் பெரிது - விரிவான விண்ணைப் பார்க்கிலும் விரிந்ததாகும். விண்ணிற் பெரிது: இன் ஐந்தனுருபு, எல்லைப் பொருட்டு. கொலை வேள்வியை எதிர்த்தவன் ஆபுத்திரன் வேள்வி எனஉரைத்து மாடாடு வெட்டலும் கேள்வியே இன்றிக் கிளத்தலும் - நீள்வியான் ஆமகன் பெற்ற புகழ்தன்னை அந்நாளில் கோமகன் பெற்றானா கூறு. 122 உரை: வேள்வி என உரைத்து - இது தூய வேள்வி தான் என்று சொல்லிக் கொண்டு; மாடு ஆடு வெட்டலும் - மாட்டை யும் ஆட்டையும் வெட்டிக் கொலை செய்வதும்; கேள்வியே இன்றிக் கிளத்தலும் - பிறர் கேட்க வரும் கேள்வி தோன்றாத வாறு வாயடி அடித்தலும்; ஆகிய இந்நிலையை; நீள்வியான் - நீளும்படி விடமாட்டான்; ஆமகன்-ஆபுத்திரன்; பெற்ற புகழ் தன்னை - அடைந்த புகழை; அந்நாளில் - அந்தக் காலத்தில்; கோமகன் பெற்றானா கூறு - அரசனும் பெற்றதுண்டா? மணிமேகலையே நீயே சொல். கேள்வியை இன்றிக் கிளத்தலும் என்பதற்குச் சான்றோர் கருத்துக்களைக் கேட்காமலேயே தீநெறி பரப்புதலும் என்று பொருள் கூறினும் அமையும். நீள்வியான் - நிலைமையை நீளும்படி விடமாட்டான்; முற்றுப்புள்ளி வைத்து விடுவான். கோமகன்: இந்திரன் எனினுமாம். எத்தீமைக்கும் ஆபுத்திரன் இளைத்துவிடவில்லை அறத்தினைச் சார்ந்தே அடைந்த புகழை அறத்தினுக் கேசெல வாக்கும் - திறத்தைக் குறுகிய கொள்கையார் கொல்ல நினைத்தார் இறுகிய நெஞ்சா இறும்? 123 உரை: அறத்தினைச் சார்ந்தே அடைந்த புகழை - அறத்தைச் சார்பாகப் பற்றியதால் அவன் பெற்ற புகழை; அறத்தினுக்கே செலவு ஆக்கும் திறத்தை; மேலும் மேலும் அறத்திற்கே செல விடும் திறத்தை. குறுகிய கொள்கையார் - குறுகிய கொள்கை யுடையார்; கொல்ல நினைத்தார் - மாய்க்க நினைத்தார்கள்; இறுகிய நெஞ்சா இறும்-ஆபுத்திரன் தான்கொண்ட கொள்கையினின்று மாறுவானா? இறுகிய - உறுதிபெற்ற; நெஞ்சா இறும் - மனமா உடைந்துவிடும் என்றபடி. பிற்போக்காளரின் தலைவன் ஆபுத்திரனைக் கெடுக்க நரிவேலை செய்தான் இருளில் உலகை நடத்துவார்க் கேந்தல் அருளில் நடந்தானை அண்டி - மருளில் நடத்த நரிவேலை செய்ததும் உண்டு கடப்பானா கொண்ட கருத்து. 124 உரை: இருளில் உலகை நடத்துவார்க்கு ஏந்தல் - மடமையை நோக்கி உலகை நடத்துகின்ற வைத்தியர்க்கு அரசன்; அருளில் நடந்தானை அண்டி - அருள்நெறிச் செல்வா னாகிய ஆபுத்திரனை நெருங்கி; மருளில் நடத்த - மயக்க நெறியை மேற்கொள்ளும்படி செய்ய; நரிவேலை செய்ததும் உண்டு - நரி வேலை செய்து பார்த்ததும் உண்டு. கடப்பானா கொண்ட கருத்து - ஆபுத்திரன் தான் கொண்ட கொள்கையி னின்று மாறுவானா? நடத்துவார்க் கேந்தல் - நடத்துவார்க்கு,ஏந்தல் - அரசன். மருள் - மயக்கம். ஆபுத்திரன் வரலாறெல்லாம் சொல்லி முடிக்கப்பட்டது என்று சிறப்பிடங்கள் சுட்டி அறவணர் நன்று முதலிருந் தீறுவரை - ஒன்றவே ஆமகனின் அன்பு வரலாறெ லாம்சொல்லிப் போமகளே என்றார்அப் போது. 125 உரை: என்று-இவ்வாறு; சிறப்பிடங்கள் சுட்டி-ஆபுத்திரன் வரலாற்றில் சிறப்பான இடங்களை எடுத்துக் காட்டி; அறவணர் - அறவண அடிகளானவர்; நன்று முதலிருந்து ஈறுவரை - நன்றாகத் தொடக்கமுதல் கடைசிவரைக்கும்; ஒன்றவே - பொருந்தும்படி; ஆமகனின் - ஆபுத்திரனின்; அன்பு வரலாறு எல்லாம் சொல்லி - அன்பு சார்ந்த வரலாறு முழுதும் கூறி; போ மகளே என்றார் அப்போது - அதே நேரத்தில், போய்வா மகளே என்று கூறினார். ஒன்றுதல் - பொருந்துதல். மணிமேகலை பிச்சைக்காரியானாள் ஏன்று கலம்ஏந்தி மேகலைதான் அன்னவரை மூன்று முறைசுற்றி முன்வணங்கி - மான்போல் மருண்டு வழிநடந்தாள் மற்றவரை விட்டே ! தெருண்டு வழிநடக்கும் தேன். 126 உரை: மேகலைதான் - மணிமேகலை; ஏன்று - அறவணர் சொல்லியவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு; அன்னவரை - அந்த அடிகளை; மூன்று முறை சுற்றி அவர்முன் வணங்கி - மூன்று முறை சுற்றி அவர் முன்னே வணங்கி; மான்போல் மருண்டு - மான்போல் மருண்டவளாய்; மற்றவரை விட்டே வழி நடந்தாள் - மாதவி முதலியவரை விடுத்துத் தனியே வழி நடப்பாள் ஆயினாள்; எப்படிப்பட்டவள் எனில்; தெருண்டு - மனத் தெளிவுபெற்று; வழி நடக்கும் தேன் - நன்னெறி படரும் தேன் போன்றவள். தேன் - மணிமேகலை. எல்லோரும் மணிமேகலையைச் சூழ்ந்து கொண்டார்கள் ஊர்ப்பிச்சைக் காரி உருவடைந்தாள் அவ்வுருவைச் சேர்ப்பித்தாள் நல்ல தெருவழியே - வார்ப்படத்துத் தங்கப் படிவம் தரையில் வரக்கண்டோர் அங்கப் படியேசூழ்ந் தார். 127 உரை: ஊர்ப்பிச்சைக்காரி உருவடைந்தாள் - ஊரில் திரிகின்ற பிச்சைக்காரி உருவத்தை அடைந்தாள்; அவ்வுருவை - அந்தப் பிச்சைக்காரி உருவினை; நல்ல தெரு வழியே சேர்ப்பித்தாள் - நல்ல தெருவின் வழியாகச் சேரும்படி செய்தாள்; வார்ப்படத்துத் தங்கப் படிவம் - வார்ப்படம் செய்த தங்கப் படிவமானது; தரையில் வரக் கண்டோர் - தரையில் நடந்துவரக் கண்ட மக்கள்; அங்கு அப்படியே சூழ்ந்தார் - அவ்விடத்தில் கை வேலை எல்லாம் விட்டு விட்டுச் சூழ்ந்து கொண்டார்கள். அப்படியே சூழ்ந்தார் நின்ற நிலையிலேயே, என்றபடி. எல்லோரும் வரவேற்கிறார்கள் கண்ணம்மா உன்வரவு! கைநிறைய இட்டிடுவோம் உண்ணம்மா என்றேஓ ராயிரம்பேர் - வண்ணம் இருக்கும் படிவத்தார் சொன்னார்கள் சற்றே இருக்கும் படிசொன்னாள் யாழ். 128 உரை: கண் அம்மா உன் வரவு; - கண் போன்றது அம்மா உன் வரவு; கை நிறைய இட்டிடுவோம் - உன் கை நிறையும் படி உணவு இடுவோம்; உண்அம்மா - நிறைய உண்க அம்மா; என்றே - என்று சொல்லி; ஓராயிரம்பேர் - ஆயிரவர்; வண்ணம் இருக்கும் படிவத்தார் - அழகு இருக்கின்ற உருவப் பெண்கள்; சொன்னார்கள் - கூறினார்கள்; சற்றே இருக்கும்படி சொன்னாள் யாழ் - யாழ் போன்ற மணிமேகலை சற்றே பொறுக்கும்படி கேட்டுக் கொண்டாள். உணவிட வந்தவர்களை நோக்கி மணிமேகலை, சற்றே பொறுத்திருங்கள் என்றது, ஆதிரையிடம் முதலில் பிச்சை எடுக்க வேண்டும் என்பதை எண்ணி. ஆதிரை வீட்டில் மணிமேகலை கற்புப் புகழ்வாய்ந்தோள் உள்ளாளோ அன்னவளின் இற்புக்கு முன்இடக்கேட் பாய்என்ற - சொற்பெருக்கிக் காயசண்டி கைஎன்பாள் ஆதிரைஇல் காட்டினாள் போயறங்கேட் டாள்சுடர்ப் பொன். 129 உரை: கற்புப் புகழ் வாய்ந்தோள் உள்ளாளோ - கற்புப் புகழ் வாய்த்த வளான ஆதிரை இருக்கின்றாளோ வீட்டில் இல்லையோ; அன்னவளின் - அந்த ஆதிரையின்; இற்புக்கு - இல் புகுந்து; முன் இடக்கேட்பாய் - முதலில் பிச்சையிடும் படி கேட்பாய்; என்ற சொல் பெருக்கி - என்ற சொல்லை விரித்து; காயசண்டிகை என்பாள் - காயசண்டிகை என்பவள்; ஆதிரை இல் காட்டினாள் - ஆதிரையின் இல்லத்தைக் காட்டினாள்; சுடர்பொன் - ஒளி விடும் பொன்போன்ற மணிமேகலை; போய் அறம் கேட்டாள் - போய்த் தருமம் கேட்டாள். இற்புக்கு - இல் புக்கு; புக்கு - போய்; புகு என்னும் முதனிலை ஒற்று இரட்டி, இறந்த காலம் காட்டிற்று. ஆதிரை வரவேற்பு கையிற் கலத்தோடும் கண்ணில் அருளோடும் பொய்யில் துறவென்னும் பூட்கையொடும் - துய்யமணி மேகலையை ஆதிரை கண்டாள் மிகமகிழ்ந்தாள் ஆகஅம் மாஎன்றாள் ஆய்ந்து. 130 உரை: மேகலையை - மணிமேகலையை; கையிற் கலத்தோடும் - கையில் அமுதசுரபி என்னும் கலத்தோடும்; கண்ணில் அருளோடும்; இரு கண்ணிலும் மக்கள் மேல் வைத்த அருளோடும். பொய் இல் துறவு என்னும் பூட்கை யொடும் - பொய்யில்லாத துறவு என்னு மோர் எடுத்துக் காட்டோடும்; ஆதிரை கண்டாள் - ஆதிரை பார்த்தாள்; மிக மகிழ்ந்தாள் - மிகவாக மகிழ்ச்சி கொண்டாள்; ஆய்ந்து - மணிமேகலை நோக்கத்தை ஆராய்ந்தவளாய்; ஆக அம்மா என்றாள் - வாழ்க அம்மா என்று வாழ்த்தினாள். ஆதிரை கறியொடு சோறிட்டாள் தேவர் உலகம் சிறப்பென்னும் ஆரியர்சொல் ஈவார் உலகம் இழிவாக்கப் - பாவை கலமே நிறையக் கறியொடு சோறிட்டாள் இலமே இலம்என்னு மாறு. 131 உரை: தேவர் உலகம் சிறப்பு என்னும் - தேவர் உலகம் என்பது உண்டு அது சிறப்புடையது என்று சொல்லும்; எது சொல்லும் என்றால்; ஆரியர் சொல் - ஆரியருடைய நூல்; ஏன் அவ்வாறு சொல்லுகிறது எனில், ஈவார் உலகம் இழிவு ஆக்க - ஈவார் நிறைந்த இந்த உலகை இழிவுபடுத்துவதற்காக; பாவை - மணிமேகலையின்; கலமே நிறைய - அமுத சுரபி நிறையும்படி; கறியொடு சோறிட்டாள் - பல்சுவைக் கறிகளுடன் சோறிட்டாள்; இலமே இலம் என்னும் ஆறு - வறுமை என்பது இனி இங்கே இருக்கமாட்டோம் என்று பறக்கும்படி. இலமே இலம் - இதில் முதற்கண் உள்ள இலம் வறுமை; இரண்டாவதான இலம் தன்மைப் பன்மை எதிர் மறை வினைமுற்று; இல்லாமற் போவோம் என்று பொருள். ஆதிரை வாழ்த்து அழகும் இளமையும் எண்ணாய் துறவே பழகும் இளையாய் பசுநெய் - ஒழுகக் கலத்திலிட் டேனிரு கையாலும் சோறு நிலத்து நிலைக்கநின் சீர். 132 உரை: அழகும் இளமையும் எண்ணாய் - உன்னிடம் அமைந்த அழகையும் இளமையையும் வைத்துச் சிற்றின்பத் தில் திளைக்க எண்ணாதவள்; துறவே பழகும் இளையாய் - துறவறமே பழகுகின்ற இளைய பெண்ணே; பசுநெய் ஒழுகஇருகையாலும் கலத்தில் இட்டேன் சோறு - பசுநெய் ஒழுகும்படி என் இரு கையாலும் சோறு கலத்தில் இட்டேன்; நின் சீர் - உன்புகழ்; நிலத்து நிலைக்க - உலகில் நிலைபெறுக. நிலம் - உலகு; சீர் - புகழ். ஆதிரை இட்ட அமிழ்து கண்டனர் ஊரார் கடிதுகேட் டார்பாரோர் மண்டினோர் எல்லாரும் வாழ்த்தினார் - அண்டுமுயிர் ஏதிரை என்னாமைக் கிங்கு முதன்மையாம் ஆதிரை இட்ட அமிழ்து. 133 உரை: ஆதிரை இட்ட அமிழ்து - ஆதிரை அவ்வாறு முதலில் போட்ட பிச்சையை; கண்டனர் ஊரார் - ஊரார் கண்டனர்; கடிது கேட்டார் பாரோர் - விரைவில் உலகத்தார் கேள்விப்பட்டார்கள்; மண்டினோர் எல்லோரும் வாழ்த் தினார் - அவள் எதிர் வந்து நிறைந்த மக்கள் எல்லோரும் மணிமேகலையை வாழ்த்தினார்கள்; அண்டும் உயிர் - உலகில் தோன்றிய மக்கள்; ஏது இரை என்னாமைக்கு இங்கு முதன்மையாம் - ஏது உணவு என்று வருந்தாமல் இருக்க இங்கு முதற்காரணமாகிய (ஆதிரை; இட்ட அமுது என்று தொடர்புபடுத்துக.) அண்டும் உயிர் ஏது இரை என்னாமைக்கு இங்கு முதன்மை ஆம் ஆதிரை இட்ட அமிழ்து கண்டனர் ஊரார், கடிது கேட்டார் பாரோர், அண்டினோர் எல்லோரும் வாழ்த்தினார் என்று மொழி மாற்றுக. மணிமேகலை எல்லார்க்கும் இட்டாள் இலம்நிறைந்தார்க் கெல்லாம் மனம்நிறைந்த தென்னக் கலம்நிறைந்து போனது கண்டு - நலம்நிறைந்தாள் வாரீர்உண் பீர்என்பாள் வந்துண்பார், பின்னும்இலார் வாரீர்என் பாள் உண்பார் வந்து. 134 உரை: இலம் நிறைந்தார்க்கு எல்லாம் - வறுமை நிறைந்தவர்க் கெல்லாம்; மனம் நிறைந்தது என்ன - மன நிறைவு ஏற்பட்டது என்று சொல்லும்படி; கலம் நிறைந்து போனது கண்டு - அமுத சுரபி நிறைந்து போனதைக் கண்டு; நலம் நிறைந்தாள் - நற்குணமே நிறைந்த மணிமேகலை; வாரீர் உண்பீர் என்பாள் - வாருங்கள் உண்ணுங்கள் என்று சொல்லி உணவிடுவாள்; வந்து உண்பார் - வந்து உண்டு மகிழ்வார்கள்; பின்னும் - மேலும்; இலார் - இல்லாதவர்கள்; வாரீர் என்பாள் - வாருங்கள் என்று அழைப்பாள்; உண்பார் வந்து - அவ்வாறே வந்து உண்பார்கள். நலம் நிறைந்தாள் - அழகு நிறைந்தவள் எனினும் பொருந்தும். காயசண்டிகை சொன்னாள் காயசண்டி கைஎன்பாள் மாதவியின் கண்ணாள்முன் நீயறத்தின் செல்வியென்று நேர்வந்து - தாயேநான் யானைத்தீ என்னும் பசியுடையேன் வற்றாஉன் தேனத்தி னேன்என்றாள் தேர்ந்து. 135 உரை: காய சண்டிகை என்பாள்-காய சண்டிகை என்ற பேர் உடையவள்; மாதவியின் கண்ணாள் முன் - மாதவியின் கண் போன்றவளான மணிமேகலையின் முன்; நீ அறத்தின் செல்வி என்று நேர் வந்து - நீ அறத்திற்குக் காரணமானவள் என்று கூறி நேரில் வந்து நின்று; தாயே நான் யானைத் தீ என்னும் பசி உடையேன் - அம்மையே நான் ஆனைத்தீ என்ற பசி நோய் உடையேன்; வற்றா உன் தேன் நத்தினேன் - எடுக்கக் குறையாத உன் தேன் போன்ற உணவை விரும்பினேன்; என்றாள் தேர்ந்து - என்று எண்ணிக் கூறினாள். மாதவியின் கண்ணாள் - மணிமேகலை; தேர்ந்து - இவள் தேவையுள்ள மட்டும் உணவு தருவாள் என்பதை எண்ணி. யானைத் தீ - இந்நோய்க்கு யானை என்றும் ஒரு பெயர் உண்டு; உண்டது உடனே அற்றுப் போகவுடனே பசியை வளர்ப்பது. யானை உண்ட, விளங்கனி என்றால், யானைத் தீ என்ற நோய் அடைந்த விளாம்பழம் என்க. அந்த விளங்கனியில் உள்ளீடு இராது. யானைத் தீ என்பதென்ன? வயிறுநிறைந் தாலும் மனநிறையார்க் குள்ள இயல் பின்பேர் யானைத்தீ என்பர் - துயரறுக சாப்பிடுநீ சாப்பிடுநீ சாப்பிட்டு நன்னிலையைக் கூப்பிடுநீ என்ன குறை? 136 உரை: வயிறு நிறைந்தாலும் - உணவு வயிற்றில் நிறைந்தாலும்; மனம் நிறையார்க்கு உள்ள - மனம் நிறையாதவர்களுக்கு ஏற்படும்; இயல்பின் பேர் - ஓர் இயல்புக்குப் பேர்தான்; யானைத் தீ என்பர் - யானைத் தீ நோய் என்று சொல்லுவார் கள்; துயர் அறுக - துன்பம் நீங்குவாயாக; சாப்பிடு நீ சாப்பிடு நீ சாப்பிட்டு - மேலும் மேலும் சாப்பிட்டு; அப்படிச் சாப்பிட்டு; நன்னிலையைக் கூப்பிடு நீ - உடல் நலமே வா என்று கூப்பிடு நீ; என்ன குறை? - நானிருக்கையில் உனக்கு என்ன குறை ஏற்பட்டுவிடும். இச் செய்யுள் அடுத்த செய்யுளில் முடிகிறது; ஆதலால் இது குளகம். குளகம் பல பாட்டு ஒருவினை கொள்ளும் என்பது இலக்கணம். சொல்லால் பாதி தொல்லை போயிற்று என்றுரைத்தாள் மேகலைதான் ஈபவளே சொன்னதனால் நின்றபிணி யிற்பாதி நீங்கிற்றாம் - நன்றுண்டாள் மேலுண்டாள் மற்றுண்டாள் மேன்மேலுண்டாள் நாட்கள் நாலுண்டாள் நன்னிலையுண் டாள் 137 உரை: என்றுரைத்தாள் மேகலைதான் - என்றிவ்வாறு மேகலை சொன்னாள்; ஈபவளே சொன்னதனால் - இவ்வாறு உணவு ஈகின்றவளே சொன்ன காரணத்தால்; நின்ற பிணியிற் பாதி - இருந்த பிணியில் ஒரு பாதியளவு; நீங்கிற்றாம் - நீங்கி விட்டதுபோல் ஆயிற்று; நன்றுண்டாள் - அதன் பிறகு காய சண்டிகை நன்று உண்டாள்; மேல் உண்டாள் - மேலும் உண்டாள்; மற்றுண்டாள் - பின்னும் உண்டாள்; மேன் மேலுண்டாள் - மேலே மேலே உண்டாள்; நாட்கள் நாலுண்டாள் - இவ்வாறு நாலு நாள் உண்டாள்; நன்னிலை உண்டாள் - நன்னிலையடைந்து விட்டாள். சோறிடுபவளே இவ்வாறு சாப்பிடு சாப்பிடு என்று சொன்ன காரணத்தால், நின்ற பிணியிற் பாதி நீங்கிற்றாம் என்றதில் உள்ள உண்மை கருதத்தக்கது. காயசண்டிகை நோயகன்றது ஆறென்றால் ஆறாத யானைத்தீ ஆறியது! சோறென்றால் முப்போதே துய்க்கின்றேன் - கூறென்றால் பட்டதொல்லை பஞ்சு படாதம்மா! பெற்றுவிட்டேன் விட்டதொல்லை யாலே மிடல். 138 உரை: ஆறு என்றால் ஆறாத யானைத் தீ ஆறியது - காய சண்டிகை ஆறுவதற்கென்று எத்தனையோ மருந்துண்டும் ஆறாதது ஆறி விட்டது; சோறு என்றால் முப்போதே துய்க்கின்றேன் - சோறு மற்றவர்போல் மூன்று வேளைதான் உண்ணுகின்றேன்; கூறு என்றால் - நீ பட்ட பாட்டைக் கூறு என்றால் என்னைக் கேட்டால்; பட்ட தொல்லை பஞ்சு படாதம்மா - நான் பட்ட தொல்லை ஆலைவாய்ப் பஞ்சு கூடப் படாது தாயே; பெற்று விட்டேன் விட்ட தொல்லை யாலே மிடல் - தொல்லை என்னைவிட்டுத் தொலைந்ததால் உடல் வலிவும் பெற்றுவிட்டேன். முப்போது மட்டுமே சோறு உண்கின்றேன் என்றாள் எனினும், சோற்றுக்கினமான சிற்றுணவையும் கொள்க. காயசண்டிகை கணவனை நொந்தாள் என்னை உடையான் எனக்குநோய் என்றவுடன் தன்னை உடையாளைத் தான்பிரிந்தான் - பின்னுமவன் காவிரிப்பூம் பட்டினத்தில் காத்திருந்தால் சான்றோர்கள் நாவிரிப்பார் நன்றாம்என் றான். 139 உரை: என்னை உடையான் - என் கணவன்; எனக்கு நோய் என்றவுடன் - எனக்கு யானைத் தீ நோய் என்று நான் சொல்லக் கேட்டவுடன்; தன்னையுடையாளைத் தான் பிரிந்தான் - தன் அன்புக்கு உடையாளான என்னைத் தானே பிரிந்துவிட்டான்; பின்னும் அவன் - அதுவல்லாமல் அவன்; காவிரிப்பூம்பட்டினத்தில் காத்திருந்தால் - காவிரிப்பூம் பட்டினம் போய் அங்கே காத்திருப்பாயானால்; சான்றோர்கள் நாவிரிப்பார் நன்று ஆம் என்றான் - தமிழ்ச் சான்றோர் நோய் போக்கும் பொருட்டு ஏதாவது சொல்லுவார் உன் நோய் நலமாகும் என்று கூறினான். தன்னை உடையாளை - தனக்குத் துணைவியாகக் கொண்ட என்னை என்றபடி. நாவிரிப்பார் - நாவினால் மருந்து கூறுவார் என்றபடி. என் கணவர் ஒரு மரம் சிற்றுளியும் தன்மை சிதைந்தால் சிதைவகற்றிப் பொற்றுளிபோல் போற்றத் தவறிடார் - நற்றொழிலோர்! தீராநோய் எங்கேனும் தீர்த்துவா என்றானை ஆராயின் அன்னோன் மரம். 140 உரை: சிற்றுளியும் தன்மை சிதைந்தால் - தச்சர் சிற்றுளியும் தன்மை சிதையுமானால்; பொற்றுளிபோல் போற்றத் தவறிடார் - பொன் துளியைப் போற்றுவது போல் போற்றுவதில் தவற மாட்டார்கள்; யார் எனில்; நற்றொழிலோர் - சிற்றுளியைக் கொண்டு தொழில் செய்கின்ற நல்லோர்; தீராநோய் எங்கேனும் தீர்த்து வா என்றானை - தீராதடுத்த நோயை எங்கேனும் போய்த் தீர்த்துக் கொண்டு வந்து சேர் என்று சொன்னவனை; ஆராயின் - ஆராய்ந்து பார்க்கின்; அன்னோன் மரம் - அவன் அன்பில்லாத மரம். நோயைத் தீர்த்துக் கொண்டு என் வீட்டில் நுழை என்று கணவன் சொன்னானாம்; இவனும் அவளுடன் போனால் என்னவாம்.! தமிழ்நாட்டின் அருமை பெருமை நோயென்றால் ஓடுவதும் நோயின்றேல் ஒட்டுவதும் நாயென்றால் பின்னோடும் நாய்ச்செயலே - தீயேம்யாம் அன்புற் றிருந்தறம் செய்தோமா? ஈன்றாளா இன்பத் தமிழ்த்தாய் எமை? 141 உரை: நோய் என்றால் ஓடுவதும் - மனைவிக்கு ஒரு நோய் வந்து விட்டால் அவளை விட்டு ஓடுவதும்; நோயின்றேல் ஒட்டுவதும் - அவளுக்கு நோயில்லாதபோது அவளிடம் ஒட்டிக் கொள்வதும்; நாய் என்றால் பின் ஓடும் நாய்ச் செயலே - நோயற்ற நாய்தான் என்றால் பின்னாலேயே ஓடுகின்ற நாயின் செயலேயாகும்; தீயேம் யாம் - தீயேமாகிய நாங்கள்; அன்புற்று இருந்து அறம் செய்தோமா? - தமிழர் போல் அன்பு பெற்றிருந்து இல்லறத்தை நடத்தும் நிலையைப் பெற்றோமா இல்லையே! இன்பத் தமிழ்த் தாய் எமை ஈன்றாளா - இன்பம் நிறைந்த தமிழ்த் தாய்தான் எமை ஈன்று புறந்தரும் பேறு பெற்றோமா? இல்லையே! தீயேம் யாம்: தன் இனத்தாரை உட்படுத் துரைத்தாள். அறம் எது? அறஞ்சென்று கெட்டாரு மில்லை அறத்தின் புறஞ்சென்று வாழ்ந்தாரு மில்லை - பறந்த கிளிவாய்ப் பழம்நழுகிக் கீழ்ப்பசித்தோன் வாயில் துளிவீழல் தூயற மன்று. 142 உரை: அறம் சென்று - அறநெறியே சென்று; கெட்டாரும் இல்லை - கேடு அடைந்தவருமில்லை; அறத்தின் புறஞ் சென்று வாழ்ந்தாரு மில்லை - அறத்தின் புறத்ததான பாவத்தைப் புரிந்து வாழ்ந்தாரு மில்லை; பறந்த - மேலே பறந்து கொண்டிருந்த, கிளிவாய்ப் பழம் - கிளியின் வாயிலிருந்த பழமானது; நழுகி - தவறி; கீழ் - கீழே இருந்து; பசித்தோன் வாயில் - பசிகொண்டு துன்புறுவோன் வாயில்; துளி வீழ்தல் தூயறமன்று - துளியளவு விழுமானால் அது தூயதான அறம் என்று சொல்லத்தக்கது அன்று. அறஞ் செல்லல் - அறம் செல்லல்; அறவழியே செல்லுதல். நல்லறம் அறிந்து பசித்தோர்க் கருளல் அறமாம் முறிந்த மனத்தாலே மூன்று - முறஞ்சோறு போடல் அறமன்றே என்று புரிந்தாய் வாடல்இங் கேன்என்றாள் மாது. 143 உரை: அறிந்து - நிலையறிந்து; பசித்தோர்க்கு அருளல் - பசி யுற்றவர்களுக்கு ஒன்று கொடுப்பது; அறமாம் - அறமாகும். முறிந்த மனத்தாலே - அன்பில்லாமல்; மூன்று முறம் சோறு போடல் - மூன்று முறத்தளவு சோறிடுவதென்பது; அறமன்றே - அறமாகாது. என்று புரிந்தாய் - என்ற உண்மையைத் தெரிந்து கொண்டு நீ அறம் புரிகின்றாய்; இங்கு வாடல் ஏன் என்றாள் மாது - இங்கு இருந்தபடி தொல்லை அடைவது சரியில்லை என்று கூறினாள் சண்டிகை. இன்ன இடத்தில் இனிதிருந்து அறம் செய்திருப்பாய் என்று காயசண்டிகை, அடுத்த பாட்டில் கூறுகின்றாள். உலக அறவி பற்றிக் காய சண்டிகை உலக அறவி புகுந்தே உலகின் கலகப் பசிநோய் களைந்து - நிலவுகவே என்றுசெல் லும்காய சண்டிகையை இன்னமுதே நன்றுசெல்க என்றாள் நகை. 144 உரை: உலக அறவி புகுந்தே - உலக அறவி என்னும் நிறுவனத்தை அடைந்து; உலகின் கலகப் பசி நோய் களைந்து நிலவுகவே - உலகில் மலிந்துள்ள கலகத்தை விளைவிக்கும் பசித் துன்பத்தை அகற்றிப் புகழை நிலை நிறுத்துக; என்று - என்றிவ்வாறு கூறிவிட்டு; செல்லும் காய சண்டிகையை - போகக் கிளம்பிய காயசண்டிகையைப் பார்த்து; நகை - மணிமேகலையானவள்; இன்னமுதே நன்று செல்க என்றாள் - இனிய அமிழ்து போன்ற காய சண்டிகையே நன்றே சென்றுவா என்றாள். மணிமேகலை உலக அறவி அடைந்தாள் ஈந்து மகிழ்வாள் எழிற்றா மரைமுகத்தேன் ஏந்துவாள் போற்கலத்தை இன்னமுதோ - டேந்திய வண்ணம் உலக அறவி மருவினாள் தண்ணம் தமிழ்க்குயில் தான். 145 உரை: ஈந்து மகிழ்வாள் - அறஞ் செய்து மகிழ்கின்ற மணிமேகலை யானவள்; எழில் தாமரை முகத்தேன் - அழகிய தாமரை போன்ற முகத்தினின்று ஒழுகுகின்ற தேனை; ஏந்துவாள் போல் - சிந்தாமல் பிடிப்பவள் போல; கலத்தை இன்னமுதோடு ஏந்திய வண்ணம் - அமுதசுரபியை அதிலுள்ள உணவோடு ஏந்தியபடி; உலக அறவி மருவினாள் - உலக அறவியை அடைந்தாள். தாமரை முகத்தேன் என்பதை, முகத்தாமரைத் தேன் என மாற்றிப் பொருள் கொள்ளினும் பொருந்தும். தாமரை முகத்துக்கும் தேன் அருளுக்கும் உவமை. உலக அறவி புக்காள் மணிமேகலை ஒளிந்து நடந்த ஒருமயிலை ஊரார் தெளிந்து செறிந்து வரவும் - குளிர்ந்தநிலா இன்னம் உணவுண்ண வாரீரோ என்றபடி தன்னந் தனிநுழைந்தாள் உள். 146 உரை: ஒளிந்து நடந்த ஒரு மயிலை - யாருக்கும் தெரியாமல் நடந்து செல்லும் மணிமேகலையை; ஊரார் தெளிந்து - ஊர் மக்கள் புரிந்துகொண்டு: செறிந்து வரவும் - நெருங்கி வரவும்; குளிர்ந்த நிலா - மணிமேகலையானவள்; இன்னம் உணவுண்ண வாரீரோ - உணவுண்ண இத்தனை நேரம் சென்ற பிறகும் வராமல் இருப்பீரோ; என்றபடி- என்று அழைத்தபடி; தன்னம் தனி நுழைந்தாள் உள் - தனியாக உள்ளே நுழைந் தாள். யாருக்கும் தெரியாமல் சென்றது, காமுகர்க்கு அஞ்சி! மறைமலை அடிகளின் சொற்பெருக்கா? அறவி அகத்தும் புறத்தும் இளைய துறவி முகம்பார்த்துச் சூழ்ந்தார் - நிறைகலி ஆர்கலியோ அண்ணல் மறைமலைசொல் கேட்டாரால் நேர்கலியோ என்னும் நிலம். 147 உரை: அறவி அகத்தும் புறத்தும் - உலக அறவியின் உள்ளும் புறமும்; இளைய துறவி முகம் பார்த்துச் சூழ்ந்தார் நிறைகலி - இளைய துறவியான மணிமேகலை முகம் பார்த்துச் சூழ்ந்து கொண்டவர் களின் நிறைந்த ஓசையானது; ஆர்கலியோ - கடல் ஓசையோ; அல்லது, அண்ணல் மறைமலை சொல்கேட்டாரால் - அண்ணலான மறைமலை யடிகளாரின் சொற்பெருக்குக் கேட்டவரால் ஏற்பட்ட; நேர்கலியோ - நேர்மையான ஓசையோ? என்னும் நிலம் - என்று ஐயுறுவார்கள் உலகினர். கேட்டாரால் நேர்கலியா - கேட்டவரால் நேர்ந்த ஓசையோ என்றும் பொருள் கொள்க. சித்திராபதி வீட்டில் பேர்த்தி துறவும் பெருநிலையம் சென்றதுவும் நேர்த்தி எனவிரல் நேர்உதட்டில் - சேர்த்தியே மாதென்ன மாதோ வழிதப்பக் கேட்டஎன் காதென்ன காதோஎன் றாள். 148 உரை: பேர்த்தி துறவும்-தன் பேர்த்தியாகிய மணிமேகலை யின் துறவும்; பெரு நிலையம் சென்றதுவும் - உலக அறவிக்கு அவள் போன ஒன்றும்; நேர்த்தி - மிக நேர்மை; என - என்று; விரல் - விரலை; நேர் உதட்டில் - பல்லில்லாமையால் நேரில் தொங்குகின்ற தன் உதட்டின் மேல்; சேர்த்தி - வைத்து; மாது என்ன மாதோ - மங்கை யிவள் என்ன மங்கையோ; வழி தப்பக் கேட்ட என் - வழி தவறினாள் மணிமேகலை என்று சொல்லக் கேட்ட என்; காது என்ன காதோ என்றாள் - என் காது என்ன காதோ என்று கூறினாள் சித்திராபதி. சித்திராபதியின் காது நல்ல காதாய் இருந்தால்,உன் பேர்த்தி விலை மாதாய் இருந்து புகழ் பெறுகின்றாள் என்ற சொல்லைக் கேட்டு மகிழ்ந்திருக்கும். நேர்த்தி - நேர்மை யானது; இது இகழ்ச்சி செய்ததாகிறது இங்கு. உதயகுமரனிடம் ஓடினாள் சித்திராபதி எனச்சித்தி ராபதிதான் ஏதேதோ கூறி மனச்சிற்றில் வேக மடிகண் - சினத்தால் எரிய இளவரசன் எங்கென்று கூந்தல் சரியச்சென் றாள்வீட்டை விட்டு. 149 உரை: என - என்று; சித்திராபதிதான் - சித்திராபதியானவள்; ஏதேதோ கூறி - மற்றும் ஏதேதோ உளறியவளாய்; மனச் சிற்றில் வேக - தன் மனமாகிய சிறுகுடில் வேகும்படியும்; மடி கண் - குழி விழுந்த கண்; சினத்தால் எரிய - எரிச்சலால் எரியும்படியும்; இளவரசன் எங்கு என்று - உதயகுமாரனிடம் செல்லுவேன் என்று; கூந்தல் சரிய - கூந்தல் சரியவும்; வீட்டைவிட்டுச் சென்றாள் - தன் வீட்டை விட்டுப் போனாள். ‘ïstur‹ v§F? என்ற சொற்போக்கால், இளவரசனிடம் செல்கின்றேன் என்று கூறினாள் என்று பொருள் கூறப்பட்டது. ஆள் போய் உதயனிடம் சொன்னான் இல்லில்லை என்று பளிக்கறையில் ஓர்ஆள்போய்ப் பல்லில்லை என்று படுகிழவி - பொல்லா உதட்டால் உமைப்பார்க்க வேண்டுமென் கின்றாள் அதட்டவா என்றான் அவன். 150 உரை: இல்- உதயனானவன் தன் இல்லத்தில்; இல்லை என்று - இல்லை என்று கூறி; ஓர் ஆள் - ஓர் ஆளானவன்; பளிக்கு அறையில் போய் - உதயனின் பளிங்கு அறையில். சென்று; பல் இல்லை என்று படுகிழவி - தனக்குப் பற்கள் இல்லாத காரணத்தால்; பொல்லா உதட்டால் - அழகில்லாத உதட்டினால்; உமைப் பார்க்க வேண்டும் என்கின்றாள் - தங்களைப் பார்க்கவேண்டும் என்று கூறுகின்றாள்; அவளை, அதட்டவா - அதட்டித் துரத்தட்டுமா? என்றான் அவன் - என்று கேட்டான் அப்பணியாளன். அவளுக்குப் பல்லில்லாததால், அவள் உதட்டால் பேசுகின்றாள் என்றான் வேலைக்காரன். சித்திராபதியைக் கூட்டிவா என்றான் உதயன் கண்டசித்தி ராபதியைக் கையோடு நீ கூட்டிக் கொண்டுவா என்றுதையன் கூறவே - பண்டைக் கிழமே! கிளிக்காட்டில் கெட்ட சுளைமாம் பழமேபோ பார்என்றான் ஆள். 151 உரை: கண்ட சித்திராபதியை - நீ கண்ட அந்தச் சித்திரா பதியை; கையோடு கூட்டிக்கொண்டுவா - கையோடு கூட்டிக் கொண்டு வரவேண்டும்; என்று உதயன் கூறவே - என்று இளவரசன் கூறிய அளவில்; அவன் ஓடி; பண்டைக்கிழமே - பழங்காலத்துக் கிழமே; கிளிக் காட்டில் - கிளி நிறைந்த இடத்தில்; கெட்ட கேடடைந்த; சுளை மாம்பழமே போ - சிதைந்த சுளையுடைய மாம்பழமே போ - இளவரசனிடம் ஓடு; பார் - அவரைப் பார்த்துப் பேசு; என்றான் ஆள் - என்று கூறினான் ஆள். கிளிக்காட்டில் கேடடைந்த சுளை மாம்பழம் உருக் குலைந்திருக்கும்; முது மக்கள் உடல் அப்படித்தான் இருக்கும். மந்தியுடன் மன்னன் மகன் குந்தி யிருந்த குமரனெதிர்க் கூன்முதுகு மந்தி இருந்துதன் வாய்திறந்தாள் - சிந்தும் கொழகொழத்த ஓசையெலாம் கொண்டுபொருள் கொள்வான் இழவேஎன் றேஇளங் கோ. 152 உரை: குந்தியிருந்த - வீற்றிருந்த; குமரனெதிர் - உதயகுமரன் எதிரில்; கூன் முதுகு மந்தி - முதுகு கூனிய மந்தியாகிய சித்திராபதி; இருந்து - அமர்ந்து; வாய் திறந்தாள் - பேசத் தொடங்கினாள், சிந்தும் கொழ கொழத்த ஓசையெலாம் - அவள் வாயினின்று சிந்துகின்ற கொழ கொழ ஓசை எல்லா வற்றையும்; கொண்டு - மனத்திற்கொண்டு; பொருள் கொள்வான் - இன்னதுதான் அவள் சொன்னாள் என்று தெரிந்துகொள்வான்; இழவே என்றே இளங்கோ - மிக வெறுப்போடு இளவரசன். கூன்முதுகு மந்தி - சித்திராபதி. என் மகள் பகை ஐயா கோவலன் செத்ததனைக் கொண்டுமகள் மாதவிதான் நோவத் தவத்துறையை நோக்கினாள் - யாவர் நகையாரை யா? நங்கை யல்லா லெனக்குப் பகையாரை யாநூற் படி. 153 உரை: கோவலன் செத்ததனைக் கொண்டு - கோவலன் இறந்ததைக் காரணமாகக் கொண்டு: மகள் மாதவி தான் நோவ - என் மகளான மாதவி நான் வருந்த; தவத்துறையை நோக்கினாள் - தவத்துறை நாடினாள்; யாவர் நகையார் ஐயா - இது கேட்டால் எல்லாரும் சிரிப்பார்கள் ஐயா; நங்கை யல்லால் எனக்கு - இந்த மணி மேகலையை யல்லாமல் எனக்கு; வேறு பகை ஆரையா - பகையாளி யாரையா இருக்க முடியும்? நூற்படி - பொதுமாதர் கொள்கைப்படி பார்த்தால். மாதவி சென்ற நெறி மணிமேகலை சென்றாள் ஆதலின் மாதவிமேல் தான் சித்திராபதிக்கு வருத்தம். பொது மகளிர் வழக்கம் முற்புணர்ந்தான் செத்தால்பெண் முற்றும் துறப்ப தெனும் கற்புணர்ந்தால் கைச்செலவு கட்டுமா? - இற்புகுந்து தொட்டாலே பொன்கேட்போம் தொட்டிருந்தால் சொத்தடைவோம் விட்டாலோ வேறாள்என் போம். 154 உரை: முன் புணர்ந்தோன் செத்தால் - முதலிற் புணர்ந்திருந் தவன் இறந்து போனால்; முற்றும் துறப்பது எனும் - காதல் வாழ்க்கை முழுதும் துறந்திருப்பது என்கின்ற; கற்பு உணர்ந்தால் - கற்பொழுக்கத்தின்படி நடந்தால்; கைச்செலவு கட்டுமா - நாட் செலவுக்குப் பணம் கிடைக்குமா? இல் புகுந்து தொட்டாலே பொன் கேட்போம் - பொதுமகளிராகிய யாம் எம் வீட்டில் ஓராடவன் நுழைந்து எம்மை விரலாலே தொட்ட அளவிலேயே பொன் கொடு என்று கேட்போம் ; தொட்டு இருந்தால் சொத்து அடைவோம் - தொட்டதோடு அல்லாமல் உடன் தங்கி யிருந்தால் அவன் சொத்தை நாங்கள் அடைந்து விடுவோம்; விட்டாலோ வேறு ஆள் என்போம் - அவன் எம்மைக் கைவிட்டுப் போய்விட்டால் உடனே வேறுஆள் வரட்டும் என்று சொல்வோம். முற்புணர்ந்தோன்: முன் புணர்ந்தோன்; புணர்தல் வைப்பாக வைத்துப் புணர்தல். யாழ் பொது பாணன் இறந்துவிட்டால் யாழோ பலர்க்காகும்! காணுமலர் உண்ணும் கருவண்டு - நாணமேன்! பொன்றருமாண் பாலோர் புணரத் தகுந்தவரே இன்றைக்கா யாமிப் படி. 155 உரை: பாணன் இறந்து விட்டால் யாழோ பலர்க்கு ஆகும் - பாணன் ஒருவன் இறந்துவிடுவானானால், அவன் வைத்திருந்த யாழ் அவனுடன் செல்லுவதில்லை. இருப்பவர் பலர்க்கும் அது பயன் படும்; கருவண்டு - கருவண்டானது; காணும் மலர் உண்ணும் - கண்ணிற்பட்ட மலரின் தேனை அருந்தத் தவறுதல் இல்லை; நாணம் ஏன் - இந்த வகையில் பொது மகளிர்க்கோ விரும்பு வோர்க்கோ நாணம் எதற்கு?. பொன்தரும் ஆண்பாலோர் - எமக்குப் பொன்னைக் கொடுக்கின்ற ஆண்பாலர் எவரும்; புணரத் தகுந்தவரே - எம்மைப் புணரும் தகுதியுடையவர்களே யாவர்; இன்றைக்கா யாம் இப்படி? - இன்றைக்குத்தானா நாங்கள் இவ்வாறு நடந்து கொள்ளுகின்றோம். பொன்றருமாண்பாலோர் - பொன்தரும் ஆண்பாலோர். இன்பத்திற்கு வாழ்வா? துன்பத்துக்கா? வளவரை சேர்மந்தி பலாவை விடாநாட் டிளவரசே! என்றன் இளையாள் - உளவரைக்கும் இன்ப முழுவதுவும் எய்தலாம்; எய்தாமல் துன்பமுழு தும்தோய் வதா? 156 உரை: வளவரைசேர் மந்தி - வளப்பம் பொருந்திய மலை சார்ந்த மந்தி யானது; பலாவை விடா நாட்டு - பலாவைக் கண்டவிடத்துப் பற்றி யுண்ணாமல் விடாத நாட்டின்; இளவரசே - இளவரசாகிய உதய குமரனே; என்றன் இளையாள் - என் மகள் மணிமேகலை; உள வரைக்கும் - இருக்கும் வரைக்கும்; இன்பம் முழுவதும் எய்தலாம் - முழு இன்பத்தையும் அடையலாம்; எய்தாமல் - அவ்வாறு அடையாமல்; துன்பம் முழுதும் தோய்வதா - துன்பம் முழுதையும் அடைவதா? அது சரியல்ல என்றபடி. மந்தி தனக்குப் புலப்பட்ட பலாவை விடாததுபோல, நீயும் மணிமேகலையை விடாதே என்று குறிப்பிடுவாள், இவ்வாறு கூறினாள். முழுது இன்பம் எய்தலாவது - வாழ்நாள் முழுதும் எய்துவது; அவளை அவன் அடையா விட்டால், அவன் வாழ்நாள் முழுதும் துன்பநாளே என்பாள், எய்தாமல் துன்பம் முழுதும் தோய்வதா என்றாள். மணிமேகலையைக் கொள்ளாமல் விடுதல் இழிவு என்னழகை என்றன் மகளழகை மற்றழகைத் தன்னழகாக் கொண்ட தனியரசைப் - பின்னரசே கொள்ளல் புகழைக் கொடுக்கும்; புனிதத்தைத் தள்ளல் இகழைத் தரும். 157 உரை: என் அழகை - எனக்கிருந்த அழகையும்; என்றன் மகளழகை - என் மகள் மாதவி அழகையும்; மற்ற அழகை - என் உறவினர் கொண்டிருந்த அழகையும்; தன் அழகாக் கொண்ட தனியரசை - தன் அழகாகக் கொண்ட அழகின் தனியரசை. பின் அரசே - பின்னால் பட்டத்துக்கு வர வேண்டிய இளவரசே; கொள்ளல் புகழைக் கொடுக்கும் - காதலியாகக் கொள்வது உமக்குப் புகழைக் கொடுக்கவல்லது; புனிதத்தை- தூயளாகிய மணிமேகலையை; தள்ளல் - ஒதுக்கித் தள்ளிவிடுவதானது; இகழைத் தரும் - இகழ்ச்சியைக் கொடுக்கும். மற்ற + அழகு = மற்றவழகு எனப் புணர வேண்டும்; மற்றழகு எனப் புணர்ந்தது இடையில் அகரம் தொக்கது. புனிதம் - மணிமேகலை. மணிமேகலையைக் கொள்வது பண்பாடு முகத்தை நிலவால் முடித்து விரலின் நகத்தைக் கிளிமூக்கால் நாட்டி - முடித்த அழகு முடிப்பை எடுத்து முடித்தல் பழகுமுடி வேந்தர்பண் பாடு. 158 உரை: முகத்தை நிலவால் முடித்து - முகத்தை நிலவால் முடிக்கப் பெற்று; விரலின் நகத்தை கிளி மூக்கால் நாட்டி - விரலின் நகத்தைக் கிளிமூக்கால் முடிக்கப்பெற்று; முடித்த - ஒரு பெண்ணாகச் செய்து முடித்த; அழகு முடிப்பை - அழகான் அமைந்த ஓர் சிற்பத்தை; எடுத்து முடித்தல் - தூக்கித் தலையில் கண்ணியாக முடித்துக் கொள்வது; பழகுமுடி வேந்தர் பண்பாடு - தொன்மையோடு பழகலுற்ற முடிவேந்தரின் பண்பாடாகும். அவள் மெய் இன்ப ஊற்று மைவேண்டாம்; கண்ணல்ல நெய்தல் மலர்கள் நெய்ஏன்; குழலன்று நீளருவி - பொய்யன்று பூண்வேண்டாம்; மேனியன்று; பொன்னின் ஒளிப்பிழம்பே ஊண்ஏன்? மெய் அன்றின்ப ஊற்று. 159 உரை: மை வேண்டாம் - என் பேத்திக்குக் கண்மை வேண்டியதில்லை; ஏனென்றால்; கண் அல்ல - அவை கண்கள் அல்ல; நெய்தல் மலர்கள் - கரு நெய்தல் மலர்கள்; நெய் ஏன் - குழலுக்கிடும் நெய் எதற்கு? வேண்டியதில்லை. ஏனென்றால்; குழலன்று - அது கூந்தல் அன்று; நீளருவி - நீண்டிழியும் அருவி; பொய் அன்று - நான் சொல்லும் இது பொய்யல்ல; பூண் வேண்டாம் - நகைகள் வேண்டாம்; ஏனென்றால்; மேனி அன்று - அது உடலன்று; பொன்னின் ஒளிப் பிழம்பு - பொன்னொளியின் பிழம்பேயாகும்; ஊண் ஏன்? - அவளுக்கு உணவு எதற்கு? மெய் அன்று - அவளுக் கமைந்தது உடம்பல்ல; இன்ப ஊற்று - இன்பம் ஊறுவதோர் ஊற்றே. மலையினின்று வீழும் அருவி: குழலுக்கு உவமை. தாமரைப் பொய்கை பணிமே வரசுக்குப் பட்டத் தரசி மணிமே கலையல்லால் மற்றார் - தணியாத ஆசை அனலுக்குத் தாமரைப்பொய்கை அன்றோ மீசையுளார் சொல்க விரைந்து 160 உரை: gÂnkî muR¡F - murfhÇa§fËš gyt‰iw íila murD¡F; g£l¤J muá kÂnkfiy mšyhš k‰W M® - g£l¤J muá v‹w jFâaila¤ j¡ftŸ kÂnkfiy mšyhkš ntW vtŸ cŸshŸ?; தணியாத - தணிய முடியாத; ஆசை அனலுக்கு - ஆசையாகிய நெருப்புக்கு; தாமரைப் பொய்கை அன்றோ - தாமரைப் பொய்கை அல்லவா? மீசை உள்ளார் சொல்க விரைந்து - மீசையுடைய ஆடவர் விரைவாக இதற்குப் பதில் சொல்லட்டும். மீசையுடையவர் நான் சொன்னதை மறுக்க முடியாது என்றாள். மேகலை கிடைத்தால் எல்லாம் கிடைக்கும் பல்லெல்லாம் வெண்முத்துப் பந்தர்! கிளிநாணும் சொல்லெல்லாம் முத்தமிழ்ச் சோலையே - வெல்லரிய தென்றுவரின் கொத்துச் சிரிக்குமிதழ் மேகலைதான் ஒன்றுவரின் எல்லாம் உனக்கு. 161 உரை: பல் எல்லாம் வெண் முத்துப் பந்தர் - பல்அமைப்பு வெள்ளிய முத்துப் பந்தரை ஒக்கும்; கிளி நாணும் சொல் எல்லாம் - கிளி கேட்டால் நாணத்தக்க அவள் சொல் ஒவ்வொன்றும்; முத்தமிழ்ச் சோலையே - முத்தமிழ் மலரும் சோலை போன்றதாகும்; வெல்லரிய தென் துவரின் கொத்துச் சிரிக்கும் இதழ் - பிற நாட்டின் பவழத்தால் வெல்லுவதற்கரிய தென்னகப் பவழத்தின் கொத்தே சிரித்துக் கொண்டிருக்கும் அவள் இதழ்கள்; மேகலைதான் ஒன்றுவரின் - அந்த மேகலை உன்னிடம் வந்துவிட்டால்; எல்லாம் உனக்கு - எட்டுவகைச் செல்வமும் உனக்கே சொந்த மாகும். மேகலை சொல்லால் அஃறிணையாதல் கொண்டு ஒன்று என்று குறிக்கப்பட்டது. எல்லாம் உனக்கு - எல்லாம் உனக்கு ஆகும் என முடியும்; துவர் - பவழம். என் விண்ணப்பம் காண்! கட்டழகா காண்பாய்என் விண்ணப்பம் ! உன்னடியில் இட்டழவே இங்குற்றேன் என்னெனில் - ஒட்டாரக் காரிதனைக் கைக்கொள்க காற்றாய்ப் பறக்குமுன் தேரிதனைச் செய்க விரைந்து. 162 உரை: கட்டழகா காண்பாய் என் விண்ணப்பம் - நிரம்ப அழகிய இளவரசே என் விண்ணப்பம் நோக்கு; உன்னடியில் இட்டு அழவே இங்குற்றேன் - உமது திருவடியில் இவ் விண்ணப்பத்தை வைத்து அழுது கேட்டுக் கொள்ளவே இவ் விடத்திற்கு நேரே வந்தேன்; என் எனில் - அது என்னவென்று கேட்டால்; ஒட்டாரக் காரிதனைக் கைக்கொள்க - கொண்டது விடாதவளாகிய மணிமேகலையைக் கைப்பற்றிக் கொள்க; எப்படி எனில்; காற்றாய்ப் பறக்கும் உன் - காற்றைப்போற் கடிது செல்லக்கூடிய உன்னுடைய; தேர் இதனைச் செய்க விரைந்து - தேர் இந்தக் காரியத்தை விரைந்து செய்யட்டும். இதனை - அவளைக் கைக்கொள்வதான இக் காரியத்தை. அவள் உலக அறவியில் உள்ளாள் உலக அறவியினில் உள்ளாள்என் மூச்சு விலக அறவிடேல் என்னை - இலகணையின் மென்பஞ் சுமக்கமையும் வேளைஇது! மற்றிதுவே இன்பஞ் சுமக்கும் இனிது. 163 உரை: உலக அறவியினில் உள்ளாள் - மணிமேகலை இப்போது உலக அறவியில் இருக்கின்றாள்; மூச்சு விலக அறவிடேல் என்னை - மூச்சு விலகும்படி என்னை அறவே கைவிட்டு விடவேண்டாம்; இலகு அணையின் - விளங்குகின்ற பஞ்சணையின்; மென் பஞ்சு - மென்மையான பஞ்சானது; உமக்கு அமையும் வேளை இது - மணிமேகலை அரசகுமாரன் ஆகிய உமக்குப் பொருந்துவதான நல்ல வேளை இதுவேயாகும்; மற்றும் இதுவே - மேலும் இந்த வேளைதான்; இன்பம் இனிது சுமக்கும் - இன்பத்தை இனிதாகத் தாங்கி நிற்பது. அவள் உலக அறவியில் இருக்கின்றாள். அவளை நீஅடைந்தால்தான் என் உயிர் நிற்கும். இந்த நேரமோ எல்லா வகையிலும் உங்கள் இன்ப நுகர்ச்சிக்குப் பொருத்தமாய் அமைந்துள்ளது என்று கூறினாள் என்க. உதயன் தேரேறி விரைவாய்ச் சென்றான் ஏற்பாரை நோக்கிக் கிழவி இடலானாள் மேற்பாரை நீங்கமலை விட்டெழுந்தீப் - போற்பாரோர் தங்கோமான் பிள்ளைபோய்த் தட்டிய தேர்ப்பரிகள் தங்கோமான் என்பன; தாம், 164 உரை: ஏற்பாரை நோக்கி - பசி என்று கேட்பவர் நிலையைப் பார்த்து; கிழவி இடலானாள் - கிழவியானவள் உணவிட லானாள்; அதனால்; மேல்பாரை நீங்கவிட்டு எழுந்த தீ போல் - அடை பட்டிருந்ததன் மேலே அடைத்திருந்த மேல் பாரை யானது அகன்றுவிடவே அங்கிருந்து உந்தி எழுந்த தீயைப் போல; பாரோர்தம் கோமான்-உலகாளும் அரசனின்; பிள்ளை - மகனான உதயன்; போய் தட்டிய தேர்ப்பரிகள் - சென்று தட்டிய தேரின் குதிரைகள்; தங்கோம் மான் என்பன - நாங்கள் இங்குத் தங்கமாட்டோம், நாங்கள் விரைந்து செல்லுவதில் மான் போன்றோம் என்று கூறிப் பறந்தன. தாம்: அசை. ஏற்பாரை நோக்கிக் கிழவி இடலானாள் - பசியால் இரப்பவரைக் கண்டு கிழவி இடலானாள் என்றது, காமம் உடையவன் இவன் என்று கண்டு, மணிமேகலையின் செய்தியைச் சொல்லலானாள் என்று மொழிந்ததாகும்; இது பிறிது மொழிதல் அணி. தாம் என்பது, தாவும் என்பதன் ஈற்றயல் கெட்டதாகக் கொண்டு, குதிரைகள் தாவும் என்று பொருள் கொள்ளுவதும் பொருந்தும். மணிமேகலையை உதயன் மறித்தான் உலக அறவி உலவு நிலவை விலக விடாது மறித்து - நிலமீது செப்புக் குடம்படல் தெண்ணீர்க்கும் ஆம்காம வெப்புக்கு டம்படல் வேண்டு. 165 உரை: உலக அறவி உலவும் நிலவை - உலக அறவியினுள் உலவியிருந்த நிலவுபோல் முகத்து மணிமேகலையை: விலக விடாது மறித்து - அப்புறம் செல்ல விடாமல் மறித்து; நிலமீது - உலகில்; செப்புக்குடம் படல் தெண்ணீர்க்கும் ஆம் - செப்புக் குடத்தின் உட்புகுதல் சேற்றுநீர்க்கு மட்டுமல்ல தெளிந்த நீருக்கும் பொருள் தருவதே; காம வெப்புக்கு உடம் படல் வேண்டு - என் காமமாகிய வெப்பம் தணிக்கவும் நீ உடம்படுவதை விரும்புவாயாக. நிலவு - மணிமேகலை. நீர் முகப்பது செப்புக்குடம் எனில், தெளிந்த நீராகிய என்னையும் அது முகந்து வைக்க வேண்டியதுதானே என்பதற்குச் செப்புக்குடம் படல் தெண்ணீர்க்கும் ஆம் என்றான்; வெப்புக் குடம்படல் - வெப்புக்கு உடம்படல் எனப் பிரிக்க. இன்பம் துறப்பது கட்டாயமா? ஏனித் துறவு மணிமே கலைஎன்தீர் மானித் துறவு மறந்தாய் - நான்நீ இறப்பதுகட் டாயம் இடைநடுவில் இன்பம் துறப்பதுகட் டாயமா சொல்? 166 உரை: ஏன் இத் துறவு மணிமேகலை - மணிமேகலையே இத் துறவு உனக்கு என்ன பயன் தரும்; என் தீர்மானித்து உறவு மறந்தாய் - என்ன முடிவு செய்து உன் சொந்தக்காரரை யெல்லாம் மறந்திருக் கின்றாய்? நான் நீ இறப்பது கட்டாயம் - நானும் நீயும் எல்லாரை யும் போல் இறப்பது திண்ணம்; இடை நடுவில் - இடைக் காலத்தில்; இன்பம் துறப்பது கட்டாயமா சொல் - அடையத்தக்க இன்பத்தைத் துறந்து விடுவது கட்டாயமா கூறு. ஏனித்துறவு - ஏன் இத்துறவு எனப் பிரிக்க. தீர்மானித் துறவு என்பதை, தீர்மானித்து உறவு எனப் பிரிக்க. மணிமேகலை கூறுவாள் என்றுதையன் சொல்ல எதிர்வணங்கி ஐயாவே ஒன்றுதையல் சொல்வேன் உளங்கொள்க - என்றும் இடும்பை மலையென எள்ளென நேரும் இடும்பைஇவ் யாக்கை அன்றோ? 167 உரை: என்று உதையன் சொல்ல - என்று இளவரசன் சொல்ல; எதிர் வணங்கி - அவன் எதிரில் வணக்கம் காட்டி; ஐயாவே - ஐயனே; ஒன்று தையல் சொல்வேன் - தையலாகிய நான் உமக்கு ஓர் உண்மையைச் சொல்லுவேன்; உளங்கொள்க - மனத்தில் வைக்க; என்றும் - எப்போதும்; இடும்பை - துன்பமானது; மலை என எள்ளென நேரும் - மலை போலப் பெரிய அளவிலாயினும் எள் போலச் சிறிய அளவிலாயினும் உண்டாகும்; இடும்பை இவ் யாக்கை அன்றோ - அதனை இட்டுவைக்கும் ஒரு பைதானே இந்த உடம்பு. முற்சொன்ன இடும்பை துன்பம்; பின்னது இடுகின்ற பை. மும்மைத் தமிழ் காண்க பொன்னெனப் பூவெனப் போரென நேரென என்னென சொல்லினும் இன்னலின் - முன்வலைஎன் றான்றோர் அணுகார் அவற்றால் துயரெய்தார் சான்றோர்க; மும்மைத் தமிழ். 168 உரை: பொன் என - பொன் என்றும்; பூவென - பூவென்றும்; போரென - போர் என்றும்; நேர் என - அமைதி என்றும், என் என சொல்லினும் - என்னென்ன சொன்னாலும் அவை இன்னலின் முன் வலை- வரும் துன்பத்துக்கு முன் வீசப்பட்ட வலையாம்; என்று - என்று எண்ணி; ஆன்றோர் அணுகார் - அறிவுடைப் பெரியோர் அவற்றையெல்லாம் நெருங்க மாட்டார்கள்; அவற்றால் துயர் எய்தார் - அவைகளால் துன்புறாமல் இருப்பர்; சான்று ஓர்க மும்மைத் தமிழ்: சான்றாக ஆராய்க முத்தமிழை! நேர் - போரில் அமைதி; என்னென - என்னென்ன; என் - தொகுத்தல். மும்மைத்தமிழ் - முத்தமிழ் - இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ். வள்ளுவர் சொல் ஓர்க யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் என்றே - ஓதினார் வள்ளுவர்! அன்னாரின் வாய்மை யதனையோ எள்ளுவர் எய்தார் நலம். 169 உரை: யாதனின் யாதனின் நீங்கியான் - எது எதனின்று பற்றை நீக்கி னானோ; அதனின் அதனின் நோதல் இலன் - அது அதனால் வரும் துன்பம் இல்லாதவனாகிவிடுகின்றான்; என்றே ஓதினார் வள்ளுவர் - என்று திருவள்ளுவர் கூறி யருளினார்; அன்னாரின் வாய்மை அதனையோ எள்ளுவர் - அத்தகைய வள்ளுவரின் வாய்மையையோ இகழ்வார்கள்; அப்படி இகழ்ந்தார்; நலம் எய்தார் - நன்மை அடைய மாட்டார்கள். வாய்மையதனையோ - வாய்மையையோ. யாதனின் ... ... இலன் - திருக்குறள். மணிமேகலை உருமாறினாள் ஈதுபுகன்ற மணிமே கலைஇனியும் தீது செயக்கூடுமே என்றுட்போய் - மாதான காயசண்டி கைபோலக் காணுருமாற் றித்தெருவிற் போயகன்றாள் கைக்கலமும் பூண்டு. 170 உரை: ஈதுபுகன்ற - இவ்வாறு உதயனுக்குக் கூறிய; மணி மேகலை - மணிமேகலையானவள்; இனியும் தீது செயக்கூடும் என்று - இவ்வாறு எடுத்துக் கூறியபின்னும் தீங்கு செய்யக் கூடும் என்று; உள்போய் - அறவியின் உட்புறம் சென்று; மாதான காய சண்டிகை போலக் காண் உருமாற்றி - மாதிற் சிறந்தவளான காய சண்டிகை போலக் காணுகின்ற உருவை மாற்றிக்கொண்டு; தெருவில் போய் அகன்றாள் கைக்கலமும் பூண்டு - கையிலுள்ள கலத்தோடு தெருவிற் போய் மறைந்தாள். உடனே உட்புறம் சென்று காயசண்டிகையாகத் தன்னுரு மாற்றித் தெருப்புறம் போய் மறைந்தாள். உதயன் ஏமாற்றம் இன்னுமவள் உள்ளே இருக்கின்றாள் என்றிருந்தான் பின்னும் அவளைப் பெறாதகலேன் - என்றங்கே நின்றிருந்தான் நெஞ்சை நிலைகேட்டான் வீடுபோய் நன்றிருந்தான் நாட்டான் மகன். 171 உரை: இன்னும் அவள் - இப்போதும் மணிமேகலை; உள்ளே இருக் கின்றாள் என்று இருந்தான் - அறவியில்தான் இருக்கின்றாள் என்று எண்ணியிருந்தான்; பின்னும் - மீண்டும்; அவளை - மணி மேகலையை; பெறாது அகலேன் - அடையாமல் திரும்ப மாட்டேன்; என்று அங்கே நின்றிருந்தான் - என்று உறுதி செய்து அவ்விடத்திலேயே நின்று கொண்டிருந்தான்; நெஞ்சை - தன் நெஞ்சை நோக்கி; நிலைகேட்டான் - மணிமேகலையின் நிலை இப்போது என்ன வென்று கேட்டான்; பிறகு; வீடுபோய் - தன் வீடு சென்று; நன்று இருந்தான் - சாகாமல் பிழைத்திருந்தான்; யார் எனில், நாட்டான் மகன் - அரசன் மகன். நன்று இருத்தல் - சாகாது இருத்தல் என்க. மணிமேகலை தொண்டு நிலையத்தில் நல்லுணவு வந்துவந்து நீட்ட மலையத் தனையளவும் மண்ட - அலைபோல் வறியார்கள் வந்து வயிறார்ந்திட் டார்தேக் கெறிவார்கள் எண்ணற் றவர். 172 உரை: நிலையத்தில் - உலக அறவியில்; நல்லுணவு-நல்ல உணவுகளை; வந்து வந்து நீட்ட - ஓயாமல் வந்து அளிக்க; அதனால், மலை யத்தனை அளவும் மண்ட - மலையின் அளவாகக் குவிய; அலை போல் - கடல்போல்; வறியார்கள் வந்து - எளியவர் நெருங்கி; வயிறு ஆர்ந்திட்டார் - வயிறு நிரம்பப் பெற்றார்கள்; தேக்கெறி வார்கள் எண்ணற்றவர் - எண்ணற்றவர்கள் ஏப்பமிடுவார்கள்; நீட்ட - மகிழ்ச்சியோடு கொடுக்க என்றபடி. அவள் பறித்த அறம் இடுகை மகிழ்ந்திடுவாள் ஏழைகள் தன்பால் கடுகையில் தன்கை கடுக - மடமடென அள்ளி இடுவாள்நல் லின்பம் அதிற்பறிப்பாள் கள்ளி மணிமே கலை. 173 உரை: இடுகை மகிழ்ந்து இடுவாள் - இடுவதை மகிழ்ச்சி யோடு இடுவாள்; ஏழைகள் தன்பால் - ஏழைமக்கள் தன்னிடம்; கடுகையில் - விரைந்து சூழ்கையில்; தன் கை கடுக - தன் கையும் விரைய; மடமடென அள்ளி இடுவாள் - மடமடவென்று அள்ளி இடுவாள்; நல் இன்பம் - நல்லதொரு மன மகிழ்ச்சியை; அதிற் பறிப்பாள் - அவ்வீகையில் பறித்திடுவாள்; யார் எனில்; கள்ளி மணிமேகலை - அறக்கள்ளியாகிய மணிமேகலை. ஈத்துவக்கும் இன்பம் உடையாள் மணிமேகலை என்றறிக. என் மாற்றுருவம் பயன்பட்டது என்றாள் தான்கொண்ட காய* சண்டிகையின் நல்லுருவம் நான்கொண்டி ருப்பதே நன்றென்பாள் - ஏன்றவர்கள் தேன்கண்டு நெய்பால் தயிர்கொண்டு வந்தாலும் தான்கண்டு வாங்குவாள் தாழ்ந்து. 174 உரை: தான் கொண்ட காய சண்டிகையின் நல்லுருவம் - மணிமேகலை தான் கொண்ட மாற்றுருவம்; நான் கொண்டு இருப்பதே நன்று என்பாள் - நான் புனைந்து கொண் டிருப்பதே நல்லதாயிற்று என்று எண்ணுவாள்; ஏன்றவர்கள் - இயன்றவர்கள்; தேன்கண்டு நெய்பால் தயிர்கொண்டு வந்தாலும் - தேன் கற்கண்டு நெய் பால் கொண்டுவந்து கொடுத்தாலும்; தான் கண்டு - தானே முன் போய் அவர்களைக் கண்டு; வாங்குவாள் தாழ்ந்து - தாழ்ந்து வாங்கி வைப்பாள். கண்டு - கற்கண்டு. தன்னுரு மாறியிருத்தலால் பொருள் கொண்டு வந்தவர்கள் மயங்கக்கூடும் என்று, தானே தன் சொந்த உருக்காட்டியபடி தாழ்ந்து வாங்குவாள் என்றபடி. ஏந்துகை காணாத நேரம் கண் துயிலும் நேரம் ஈந்தன எல்லாம் இனப்படுத்திச் சோறுகறி வாய்ந்தன ஆக்கி வறியோரின் - ஏந்துகை காணாத நேரம்தன் கண்துயிலும் நேரமென்றாள் வாணாள்வா ணாளாக்குகின்ற மான். 175 உரை: ஈந்தன எல்லாம் - இடுவாரால் இடப்பட்ட எல்லா வற்றையும்; இனப்படுத்தி - இனவாரியாய்ப் பிரித்து; சோறுகறி - சோறு கறிகளை; வாய்ந்தன ஆக்கி - உண்ணத்தக்கனவாக ஒழுங்கு படுத்தி; வறியோரின் - எளியவர்களின்; ஏந்து கை காணாத நேரம் அவர்கள் ஏந்துகின்ற கைகளைக் காணாத நேரம், தன் கண் துயிலும் நேரம் - என்றாள் - தன் கண்கள் துயில்கின்ற நேரம் ; ஆகும் என்று காட்டினாள். யார்? வாணாள் வாணாள் ஆக்குகின்ற மான் - வாழ் நாட்களைப் பயனுள்ள நாள் ஆக்குகின்ற மான் போன்ற மணிமேகலை. நேரம் என்றாள் என்றது, தன் செயலிற் காட்டினாள் என்பதை. வாழ்நாள் - வாணாள் என்று புணர்ந்தது. ஊருக்குத் தாய் தெருவில் கடையில் சிறுமுடக்கில் வீட்டின் அருகில் முதியோர் அழிந்தார் - திரியுறுப்பர் வாயூட்டி நெஞ்சம் மகிழ்வாள் தமையீன்ற தாயூட்டி னாற்போலும் சார்ந்து. 176 உரை: தெருவில் - தெருக்களிலும்; கடையில் - கடைத் தெருக்களிலும்; சிறு முடக்கில் - தெருக்களின் முடக்கு களிலும்; வீட்டின் அருகில் - வீடுகளின் அருகாமைகளிலும்; உள்ள; அழிந்தார் - நோயாளிகட்கும்; திரி உறுப்பர் - நொண்டி நொள்ளை முதலியவர்கட்கும்; வாய் ஊட்டி - வாயிற் சோறூட்டி; நெஞ்சம் மகிழ்வாள் - மன மகிழ்வாள்; தமை ஈன்ற தாய் ஊட்டினாற் போலும் சார்ந்து - அந்த ஏழைகளின் தாயே வந்து ஊட்டினாற்போல் அவர்களிடம் சார்ந்து. சார்ந்து என்றதனால், அவர் இருப்பிடம் சென்றமை புலனாயிற்று; நொண்டியும் நோயாளியும் இடந்தெரிந்து சேர்வது முடியாதன்றோ. சிறைப்பட்டோரும் திருத்தப்பட்டார் வேந்து சிறைக்கூடம் மேகலைதான் சென்றங்கே ஈந்த முதலீகைக் கெட்டாநாள் - தேர்ந்த கொலைகண்டார் தாமும் குறைகண் டுணர்ந்த நிலைகண்டாள் நெஞ்சுவந் தாள். 177 உரை: வேந்து சிறைக்கூடம் - அரசின் சிறைக்கூடத்திற்கு; மேகலை தான் சென்று - மணிமேகலை போய்; அங்கே ஈந்த - குற்றவாளி கட்கு உணவளித்த; முதல் ஈகைக்கு - தொடக்கக் கொடைக்கு; எட்டாம் நாள் - எட்டாவது நாளே; தேர்ந்த கொலை கண்டார் தாமும் குறைகண்டு உணர்ந்த நிலை கண்டாள் - தெரிந்து கொலைசெய்த குற்றவாளிகளும் தம் குற்றத்தை உணர்ந்து திருந்திய நிலையைக் கண்டாள்; நெஞ்சு உவந்தாள் - மன மகிழ்ச்சியடைந்தாள். இந்தப் பாட்டால் நாம் அடையத்தக்கது, மணிமேகலை சிறைக்கூடமும் சென்று, அவர்களின் நிலைக்கு இரங்கி, எவர்க்கும் எத்தீமையும் செய்யக் கூடாதென்று அறங்கூறி நிறையச் சோறிட்டதோடு, உங்கட்கு எப்போதும் சோறிடுவேன் திருடல் வேண்டாம் என்றும் கூறினாள்; அதனால் அவர்கள் எட்டு நாட்களிலே திருத்தினார்கள் என்பதாம். எல்லாரும் திருந்தினார்கள் சோறு மிகக்கொடுத்துச் சொற்பொழிவும் தானடத்தி ஊறு பிறர்க்கொருவர் உன்னாத - வாறு முறைகண்டாள் மூன்று தமிழ்கண்டாள், நாட்டில் சிறைகண்டார் தீங்குகண்டார் யார். 178 உரை: சொற்பொழிவு - ஒழுக்கம் பற்றிய பெருஞ்சொல் விளக்கம்; ஊறு - கெடுதி; உன்னாத - எண்ணாத; முறை கண்டாள் - மக்கள் முறையாக வாழ்தலைக் கண்டாள். நாட்டு நிலையறிதல் நாட்டு நிலையறிந்து தொண்டு நலமறிந்து காட்டுக் குயிலைக் கடிதழைத்துச் - சூட்டும் முடியரசும் ஆட்சி முறைஎவ்வா றென்றான் குடியரசும் சொன்னாள் குறை. 179 உரை: தொண்டு நலம் - மணிமேகலையின் தொண்டால் விளைந்து வரும் நன்மையை; காட்டுக் குயில் - ஓர் எடுத்துக் காட்டாக நாட்டில் கூவி வரும் குயிலை; மணிமேகலையை; கடிது - விரைவில்; சூட்டும் - சூட்டப்பெற்ற; முடியரசும் - முடியுடைய அரசனும்; ஆட்சி முறை எவ்வாறென்றான் - என் ஆட்சிமுறை எப்படி என்று கேட்டான்; குடியரசும் - அந் நாட்டுக் குடிகளின் அரசி போன்ற மணிமேகலையும்; குறை சொன்னாள் - இருக்கும் குறைகளை எடுத்துச் சொன்னாள். அரசன் மேகலை நேர்பாடு முறையிருக்கும் போது சிறைஎதற்கு வேந்தே? குறையிருக்க ஆட்சிசெயல் குற்றம் - இறைகேட்க; மாணவரின் வாய்க்குத் தமிழும், மனத்துக்கச் சாணி அறிவும் உயிர். 180 உரை: முறையிருக்கும் போது சிறை எதற்கு வேந்தே - தக்க ஆட்சி முறை இருக்கும்போது சிறைக்கூடம் எதற்காக அரசே; குறை இருக்க ஆட்சி செயல் குற்றம் - மக்களுக்கு குறைபாடு இருக்கும் படி ஆட்சி செய்வதானது குற்றமாகும்; இறை கேட்க - அரசர் இன்னும் கேட்பாராக; மாணவரின் வாய்க்குத் தமிழும் - மாணவர் களின் வாய் பயின்று களிக்கத் தமிழ் ஒன்றும்; மனத்துக்கு அச்சாணி அறிவும் உயிர் - அவர்களின் மனத்துக்கு அச்சாணி போன்று ஆதரவான தமிழறிவும் உயிராகும். மனத்துக் கச்சாணி என்பதை, மனத்துக்கு அச்சாணி என்று பிரிக்க. வண்டிக்கு ஆதரவானது அச்சாணி. ஆதலால், ஆதரவு தருவதை அச்சாணி என்றே சொல்லுவர். வாய்க்குத் தமிழும் மனத்துக்குத் தமிழறிவும் மாணவர் உயிர் என்றாள். தமிழறிவானது தமிழ் நூற்கள் கூறும் அறிவு. இல்லாமை என்ற குறைபாடு இருக்கும்படி ஆள்வது குற்றம் என்று எடுத்துக் கூறினாள் மணிமேகலை. கட்டாயக் கல்வி தேவை கல்லார் கடைப்பட்டார் ஆதலினால் கல்விதான் எல்லார்க்கும் கட்டாயம் வேண்டுமால் - இல்லார்க்கோ ஊணுடை நல்ல உறையுள் படிப்பளித்தல் மாணுடை மன்னர் கடன். 181 உரை: கல்லார் - கல்லாதவரெல்லாம்; கடைப்பட்டார் - கடைப்பட்டவர் கள் ஆவார்கள்; ஆதலினால் - ஆகையால்; கல்விதான் எல்லார்க்கும் கட்டாயம் வேண்டும் - கல்விதான் நாட்டு மக்களுக்குக் கட்டாய முறையில் கற்பிக்கப்பட வேண்டும்; இல்லார்க்கோ - படிப்புக்கு வேண்டிய உணவு உறையுள் இல்லாதவர்கட்கோ என்றால்; ஊண், உடை, நல்ல உறையுள் படிப்பு அளித்தல் - ஊணும் உடையும் வசதியாகிய உறையுளும் படிப்பும் அளிக்க வேண்டுவது; மாணுடை மன்னர் கடன் - பெருமைமிக்க அரசார்க்குக் கடனாகும். வேண்டுமால் என்பதில், ஆல் அசை. தமிழின் இன்றியமையாமை ஆசைக் களவில்லை ஆதலினால் மாந்தர்கள் காசைப் பெருக்கக் கருதுவர் - ஆசைதான் உந்தா தடக்குதற்கும் உள்ளுணர்வு சேர்வதற்கும் செந்தமிழைச் சேர்க்க இறை. 182 உரை: ஆசைக்கு அளவு இல்லை - ஆசைக்கு ஓர் எல்லை இல்லை; ஆதலினால் - ஆதலால்; மாந்தர்கள் - மக்கள்; காசைப் பெருக்கக் கருதுவர் - செல்வத்தை மேலும் மேலும் பெருக்குவதையே எண்ணி இடர்ப்படுவார்கள்; ஆசைதான் - அத்தகைய ஆசை யானது; உந்தாது அடக்குதற்கும் - பொருள்மேல் குதித்தோடாமல் அதை ஒரு வழி அடக்குவதற்காகவும்; உள்ளுணர்வு சேர்வதற்கும் - உள்ளம் மெய்யுணர்வு அடைவதற்காகவும்; இறை - அரசர்; செந்தமிழைச் சேர்க்க - செந்தமிழைப் பயிலச் செய்க. தமிழ் படித்தால்தான் ஆசை அறும்; மெய்யுணர்வு பெறும் என்று அரசனுக்கு இடித்துரைத்தாள். வேந்தன் வேலை தொடங்கினான் மேகலை இவ்வாறு விளம்பச் சிறையினை மாகலைக் கூடமா மாற்றுதற்குப் - போகஎன நல்லமைச்சர்க் காணை நவின்றான் நவின்றஅச் சொல்லமைச்சுத் தொட்டார் வினை. 183 உரை: மேகலை இவ்வாறு விளம்ப - மணிமேகலை இவ் வாறாகச் சொன்ன அளவில்; சிறையினை - சிறையை; மா - சிறந்த; கலைக் கூடம் ஆ - கலைக்கூடமாக; மாற்றுதற்கு - மாற்றி அமைக்க வேண்டியதற்கு; போக என - போவீர்கள் என்று; நல் அமைச்சர்க்கு ஆணை நவின்றான் - தன் நல்ல அமைச்சர்கட்கு ஆணைச் சொல் சொன்னான்; நவின்ற அச் சொல் அமைச்சு தொட்டார் வினை - சொல்லிய அந்தச் சொல்லை அடிப்படையாகவைத்து வேலை தொடங்கினார்கள். சொல் அமைச்சு - சொல்லை அமைத்து; அமைச்சு - போலி. மணிமேகலை போக விடை பெற்றாள் எல்லார்க்கும் கல்விதான் கட்டாயம் என்றபடி இல்லார்க்குக் கல்வியும் ஏற்றவை - எல்லாமும் ஆம்படி ஆக்குவேன் என்றான் விடைகேட்டாள் போம்படி சொன்னான் புகழ்ந்து. 184 உரை: எல்லார்க்கும் - மக்கள் அனைவர்க்கும்; கல்வி தான் கட்டாயம் என்றபடி - கல்வி கட்டாயமே என்று நீ சொல்லிய படியே; இல்லார்க்கு - ஏழைகளுக்கு; கல்வியும் ஏற்றவை எல்லாமும் - கல்வியும் அவர்கட்குத் தேவைப்பட்ட உணவு முதலிய எல்லாமும்; ஆம்படி - கிட்டும்படி; ஆக்குவேன் - ஏற்பாடு செய்வேன்; என்றான் - என்று அரசன் சொன்னான்; விடை கேட்டாள் - மணிமேகலை போவதற்கு விடை கோரினாள்; போம்படி சொன்னான் புகழ்ந்து - அரசன் மணி மேகலையைப் புகழ்ந்து போக விடைகொடுத்தான். எல்லார்க்கும் கல்விதான்; இல்லார்க்குக் கல்வியும் ஏற்றவை எல்லாமும் கட்டாயம் என்றபடி என்று - சொற்களை இயைபுபடுத்திப் பொருள் காண்க. போகும்படி ஆகும்படி என்பவை, போம்படி ஆம்படி என ஈற்றயல் கெட்டு வந்தன. உதயகுமாரன் மனக் கண்முன் தார்வேந்தன் மைந்தன் தனியிருந்து மேகலைதன் நேர்வாய்ந்தாற் போலும் நினைவாக - வார்வாய்ந்த கொங்கையார் கோமாட்டி கொள்கலத்தோ டங்ககன்ற மங்கையார் என்றான் மதித்து. 185 உரை: தார்வேந்தன் மைந்தன் - அலங்கலணிந்த வேந்தன் மகனான உதயன்; தனி இருந்து - தன் மாளிகையில் தனியே இருந்தபடி மேகலை, தன் நேர் வாய்ந்தாற்போலும் நினைவு ஆக - மணிமேகலையானவள், தன் நேரில் வாய்ந்தால் எப்படி அப்படிப்பட்ட நினைவு கொண்டு; வார் வாய்ந்த கொங்கை ஆர் கோமாட்டி - வாரணிந்த கொங்கை யுடைய பெண்கள் நாயகமே; கொள்கலத்தோடு - கையிற் கொண்ட ஒரு கலத்துடன்; அங்கு அகன்ற - அவ் அறவியி னின்று வெளியிற் சென்ற; மங்கையார் என்றான் மதித்து - மங்கை எவள் என்று கேட்டான் எண்ணி. மணிமேகலை அங்கு இல்லாதிருக்கவும், இருக்கின்றாள் போல் எண்ணி இவ்வாறு கேட்டான். வானிலவு எங்கே? உலக அறவியின் உட்சென்றாய்! ஓர்பெண் விலகி வெளியில் நடந்தாள் - நிலையத்துள் மீனெலாம் கண்டேன் மிகுநேரம் என்னருமை வானிலா எங்கே வழுத்து. 186 உரை: உலக அறவியின் உள்சென்றாய் - நீ உலக அறவியின் உள்ளே போனாய்; ஓர் பெண் - அதே நேரத்தில் ஒரு பெண்ணானவள்; விலகி வெளியில் நடந்தாள் - அறவியை விட்டு விலகி வெளியிற் சென்றாள்; அதன்பின்; நிலையத்துள் - அறவியிற் சென்ற நான்; மீன் எல்லாம் கண்டேன் - விண் மீன்கள் போன்ற பல பெண்களைக் கண்டேன்; மிகுநேரம் - மிகு நேரமாக; ஆனால், என்னருமை வானிலா எங்கே - என் அருமை வான் நிலவு எங்கே? வழுத்து - அதை நீ கூறு. என்றிவ்வாறு உளறுகின்றான். மணிமேகலையை நோக்கி, மணிமேகலை எங்கே என்றான் போலும்! நிலவு - மணிமேகலை. நான் புகார் நாடன் யானைத்தீ நோயாளி போல எழில்மாற்றிப் பானைத்தேன் நீவெளியிற் பாய்ந்தாயோ - மானுக்கு வேடனா உள்ளத்து மன்னியோய் வேண்டுபுகார் நாடனான் நன்கு மதி. 187 உரை: யானைத் தீ நோயாளிபோல எழில் மாற்றி - யானைத் தீ என்னும் நோய்க்காரியாகிய காயசண்டிகை போல உன் எழிலை மாற்றிக் கொண்டு; பானைத்தேன் நீ வெளியிற் பாய்ந்தாயோ - பானைத் தேன் போன்றவளாகிய மணி மேகலையே நீ அறவிக்கு வெளியே பாய்ந்து ஓடினையோ; மானுக்கு வேடனா உள்ளத்து மன்னியோய் - என் உள்ளத்திலே நிலை பெற்றிருப்பவளே, நான் வலிதில் மானை வேட்டை ஆடி அதன் தசையை விரும்பியவனா? வேண்டு புகார் நாடன் நான் - எவரும் விரும்புகின்ற புகார் நாட்டுக்குத் தலைவன் நான்; நன்கு மதி - நன்றாக மதித்துக் கொள். இதுவும் உதயன் மணிமேகலையின் உருவெளித் தோற்றத்தை நோக்கிக் கூறியதே. சித்திராபதி வரக்கண்டான் பெண்நேரில் உள்ளாள்போற் பேசும் உதையனின் கண்நேரில் கூனிவரக் கண்டுவிட்டான் - புண்நடுவில் வேலொன்று பெற்றதுபோல் வெட்கினான் வந்தகிழத் தோலொன்று சொல்லலா னாள். 188 உரை: பெண் நேரில் உள்ளாள்போல் பேசும் உதயனின்- மணிமேகலை எதிரில் இருந்தால் எப்படியோ அப்படிப் பேசுகின்ற உதயனின்; கண்நேரில் - கண் எதிரில்; கூனிவரக் கண்டுவிட்டான் - கூனியாகிய சித்திராபதி வருவதைக் கண்டுவிட்டான்; புண் நடுவில் வேல் ஒன்று பெற்றதுபோல் வெட்கினான் - புண் நடுவிடத்தில் ஒரு வேல் பாயப்பெற்றது போல் வெட்கத்தால் நொந்தான்; வந்த கிழத்தோல் ஒன்று சொல்லல் ஆனாள் - வந்த கிழத்தோலாகிய சித்திராபதி ஒன்று சொல்லத் துவக்கினாள்; கூனி - சித்திராபதி; கிழத்தோல் என்றதும் அவளை. மணிமேகலையை இதோ கொண்டு வருகின்றேன் என்றவனாகிய உதயன், அது செய்ய முடியாமற் போனதால், வெட்கத்தால் துன்பமுற்றான். வேங்கை வெள்ளாட்டுக்குத் தள்ளாடுமா? வெள்ளாடு கண்ட ஒருவேங்கை இரைதவறித் தள்ளாடும் இஃது தனிவியப்பே - எள்ளாடும் செக்கும் எருதிழுக்கும் தேன்சிட்டும் நின்வலைக்குச் சிக்கும்என் றாள்உடைந்த சீப்பு. 189 உரை: வெள்ளாடு கண்ட வேங்கை - வெள்ளாட்டைக் கண்ட ஓர் ஒப்பற்ற வேங்கையானது; இரை தவறி - இரையாக்கிக் கொள்ள முடியாமல்; தள்ளாடும் இஃது தனிவியப்பே - வலிவற்று இருக்கும் இது, தனியான வியப்புக்கு உரியதாகும்; எள் ஆடும் செக்கும் எருது இழுக்கும் - எள் ஆடுகின்ற செக்கையும் எருதானது இலேசாக இழுத்துச் செல்வதுண்டு; அதுபோல்; தேன் சிட்டும் - தேன் சிட்டுப் போன்ற மேகலை யும்; நின் வலைக்குச் சிக்கும் என்றாள் உடைந்த சீப்பு - நீ விரிக்கும் வலைக்குள் அகப்படும் என்று பல் உடைந்த சீப்பை ஒத்த சித்திராபதி கூறினாள். எருது செக்கை இழுப்பதுபோல அத்தனை இலேசு உதயன் மேகலையைக் கைப் பற்றுவது என்று குறிப்பிட்டாள் சித்திராபதி. சித்திராபதியை உடைந்த சீப்பு என்றது, அவள் பல் இல்லாமையைக் கருதி. தனி வியப்பு - எங்கும் காணாத வியப்பு. களிறு கன்னல் ஒடிப்பதும் அரிதா? நாளைக்கே ஏதிலான் நாடு பிடித்தாளும் காளைக்கே வஞ்சியின் காம்பான - தோளைப் பிடித்தல் அரிதா பெருங்களிறு கன்னல் ஒடித்தல் அரிதா உரை. 190 உரை: நாளைக்கே ஏதிலான் நாடு பிடித்து ஆளும் - வரும் நாளில் பகைவன் நாட்டைப் போரிட்டுப் பிடித்து அதை ஆட்சி செய்யும் தகுதியுடைய; காளைக்கே வஞ்சியின் காம்பான தோளை - இளைஞருக்கே மணிமேகலையின் மூங்கில் போன்ற தோளை; பிடித்தல் அரிதா? - கைப்பற்றுதல் அரிய செயலா? பெருங்களிறு - பெரியதோர் ஆண்யானை; கன்னல் ஒடித்தல் அரிதா - அண்மையிலுள்ள கரும்பை ஒடித்தல் அரிய செயலா? உரை - நீரே கூறும்; ஏதிலான் - பகைவன். சித்திராபதி எண்ணம் என்ன? என்று முடுக்கினாள் அன்னாள் இளவரசை ஒன்று கொடுத்தொன்றை வாங்கியே - தின்று கொழுக்கலாம் என்னுமொரு கொள்கையால் கூனி முழுக்கலாம் மூட்டினாள் ஆங்கு. 191 உரை: என்று முடுக்கினாள் அன்னாள் இளவரசை - இவ்வாறு முடுக்கிவிட்டாள் கிழவி உதயனை; ஒன்று கொடுத்து ஒன்றை வாங்கியே - மணிமேகலையை உதயனிடம் விற்று அவனிட மிருக்கும் செல்வமாகிய ஒன்றை வாங்கி; தின்று கொழுக்கலாம் என்னும் ஒரு கொள்கையால் - நாளெல்லாம் தின்று கொழுத் திருக்கலாம் என்ற உள் எண்ணத்தால்; கூனி - கூனியாகிய சித்திராபதி; முழுக்கலாம் மூட்டினாள் ஆங்கு - முழுமையான கலகத்தை அவ்விடத்தே மூட்டினாள். அவனை முடுக்கிவிட்டதற்குக் காரணம் விளக்கப் பட்டது பின் மூன்றடியால். மணிமேகலையிடம் ஓடினான் உதயன் மாலையுற்றான் மாலையிற்றான் மேகலைமேல் மாலைவைத்தே ஆலையுற்றான் அக்கரும்பின் சாறுபற்றல் - ஏலுமென்றே காயசண்டி கையுருவின் கண்ணகியின் பெண்ணையுற்றுத் தீயசண்டை கைவிடென்றான் சேய். 192 உரை: மாலை உற்றான் - ஆத்திமாலையுடைய உதயன்; மாலையில்தான் மேகலைமேல் மாலைவைத்தே - மாலைப் போதில் மேகலை மேல் ஆசை வைத்தவனாக; ஆலை யுற்றான் - கரும்பாலைக்குட் புகுந்தவனுக்கு; அக்கரும்பின் சாறுபற்றல் ஏலும் என்று - அங்குள்ள கருப்பஞ்சாற்றைப் பிடித்துண்ணமுடியும் என்று எண்ணி; காயசண்டிகை உருவில் கண்ணகியின் பெண்ணை உற்று - காயசண்டிகை உரு வினையுடையவளும் கண்ணகியின் பெண்ணுமான மணி மேகலையை அணுகி; தீய சண்டை கை விடென்றான் சேய் - தீய சண்டையை வளர்த்துவதைக் கைவிட்டு என்னுடன் வந்துவிடு என்றான். மாலையுற்றான் என்பதில், மாலை - அவன் புனைந்த ஆத்திமாலை. மாலையில் தான் என்பதில் மாலை - மாலைப் பொழுது. மாலை வைத்தே என்பதில், மாலை - ஆசை; மால் என்பது ஐ என்னும் இரண்டன் உருபு ஏற்றது. என்னை அல்லால் உனக்கு யார்? மைகாரி சண்டிகையாய் மாறி உலவுகின்ற கைகாரி மேல்நடக்கும் காரியம்என் - மொய்காரின் கூந்தலாய் வாஎன்று கூறினோன் யார்இந்த ஏந்தலை அல்லால் இனிது. 193 உரை: மைகாரி சண்டிகையாய் - கண்ணில் மை அப்பிய சண்டிகையாய்; மாறி உலவுகின்ற - உருமாறி இங்கு உலவுகின்ற; கைகாரி - வல்லவளே; மேல் நடக்கும் காரியம் என்? - மேலே நடக்க வேண்டிய காரியங்கள் என்ன? மொய் காரின் கூந்தலாய் - மொய்க்கின்ற கருமுகில் போன்ற கூந்தலையுடையவளே; வா என்று கூறினோன் யார் - உன்னை இவ்விடத்தில் வந்திரு என்று சொன்னவன் எவன்? இந்த ஏந்தலை அல்லால் இனிது - இந்த ஏந்தலான என்னை யல்லாமல் உன்னிடம் இனிதாக. இந்த ஏந்தலை அல்லால் இனிது வா என்று கூறினோன் யார்? என்று தொடர்புபடுத்திப் பொருள்கொள்க. தன் தகுதியை மேலும் கூறுகிறான் உதயன் என்னிலும் மேலோன் இருக்கின்றான் போலும்நான் உன்னிலும் மேலாய் ஒருத்தியையும் - உன்னுகிலேன் அன்றில் உனையழைத்த அன்றில்யான்! யாவர்சொல் மன்றில் உனையழைத்தார் மற்று. 194 உரை: என்னிலும் மேலோன் - என்னைவிட இவ்வுலகத்தில் மேன்மையுடையவன்; இருக்கின்றான் போலும் - இருக்கின்றான் போலிருக்கின்றது; அப்படிப்பட்ட நான் - நானும்; உன்னிலும் மேலாய் ஒருத்தியையும் உன்னுகிலேன் - உன்னைவிட மேலாக ஒருத்தியையும் எண்ணுவதில்லை; அன்றில் - நீ அன்றிற் பறவை; உனையழைத்த அன்றில் யான் - உன்னைப் பிரிந்திருக்க முடியாமல் அழைத்த நானும்; ஓர் அன்றிற் பறவையே யாவர் சொல் மன்றில் உனை அழைத்தார் - இந்த மன்றுக்கு வந்திரு என்று உன்னை அழைத்தவன் எவன்? அதைச் சொல்லிவிடு. முன்னும் கேட்டான்; இப்போதும் உன்னை இங்கு அழைப்பவன் யார்? என்றான். ஐயுற்றதால் கூறியது கூறினான்; நீ என்னை வெறுப்பதைக் கொண்டு எண்ணிப் பார்த்தால், என்னைவிட மேலானவன் உனக்கு இருக்கின்றான் போலும் என்பது உதயனின் உட் கருத்து என்க. துணை பிரிந்த அன்றில் மூன்று முறை துணையை அழைக்கும்; அழைப்புப் பயனற்றால் உயிர் விடும். தன்னை அன்றில் என்றான், விரைவில் தன்னை ஆதரிக்க வேண்டும் என்று காட்ட. இளமை நிலையாமையை எடுத்துக் காட்டினாள் மணிமேகலை அங்கு விழுந்தெழுந் தாடிநிற்கும் ஓர்கிழத்தைத் திங்கள் எழுந்த திருமுகத்தாள் - இங்கேகாண் எங்கே அழகிளமை? எத்தனைநாள் முத்துப்பல் தொங்கும் துரிஞ்சில் முலை. 195 உரை: அங்கு - உதயன் இவ்வாறு சொன்ன இடமாகிய உலக அறவியின் ஓர்பால்; விழுந்து எழுந்து ஆடி நிற்கும் ஓர்கிழத்தை - தடுக்கி விழுந்து தள்ளாடி எழுந்து நிற்க முடியாமல் ஆடி நிற்கும் ஒரு கிழவியை; திங்கள் எழுந்த திருமுகத்தாள் - திங்கள் தோன்றியது போன்ற திருமுகத்தை யுடைய மணிமேகலை; இங்கே காண் - இவ்விடத்தில் இந்த உடம்பைப்பார்; எங்கே அழகு இளமை - அழகு எங்கே போயிற்று? இளமை எங்கே போயிற்று? அன்றியும் எத்தனை நாள் முத்துப்பல் - முத்தென்று நீவிர் கூறுகின்ற பல் எத்தனை நாள் இருக்கும்? முலை - அதோ அவள் முலையோ; தொங்கும் துரிஞ்சில் - தலைகீழ்த் தொங்கி ஒட்டிய துரிஞ்சில்! உதயன் அவ்வாறு கூறும்போது, அங்கு இருந்த தள்ளாத கிழவியைக் காட்டி, மணிமேகலை இளமை நிலையாமையை விளக்கினாள். அழகிளமை - அழகும் இளமையும்; உம்மைத் தொகை, காப்பது தவமே பற்றினோர் துன்பமே பற்றினோர்! நற்றுறவு பற்றினோர் துன்பமே பற்றாதார் - எற்றுக்கோ காமம் எதற்கு மனக்கோட்டம் இவ்வுலகில் ஏமம் எவர்க்கும் தவம். 196 உரை: பற்றினோர் - பற்றுடையவர்கள்; துன்பமே பற்றினோர் - துன்பத்தையே பற்றிக் கொண்டவராவார்கள்; நல்துறவு பற்றினோர் துன்பமே பற்றாதார் - நல்ல துறவைப் பற்றினோர் துன்பத்தையே அடையாதவராவார்; அப்படியிருக்கையில்; எற்றுக்கோ காமம் - காமம் என்ன பயனைச் செய்யும்? எதற்கு மனக்கோட்டம் - தன்னிலையில் நிற்க வொட்டாமல் மனத்தைப் பொருள்களின்மேல் செல்லும்படி விடுவதால் என்ன பயன்? இவ்வுலகில் - இந்தவுலகில்; எவர்க்கும் தவம் ஏமம் - எல்லார்க்கும் தவமே காப்பளிப்பது. மனக் கோட்டம் - மனம் பொருள்களின் மேல் ஓடும் நிலை. காஞ்சனன் ஐயப்பாடு வாஞ்சநன் மாற்றமெலாம் மங்கைசொலும் போதங்குக் காஞ்சனன் வந்துகண்டான் கண்ணேரில் - தீஞ்சொல்லாள் காயசண்டி கைதான் கசந்தாளோ என்னைஎன்றான் ஆயஅண்டி னான்அவளை அங்கு. 197 உரை: வாஞ்ச நன் மாற்றம் எலாம் - பொருந்துவதாகிய நல்ல சொற்களை யெல்லாம்; மங்கை - மணிமேகலை; சொலும் போது அங்கு - சொல்லிக்கொண்டிருக்கும்போது அவ் விடத்தில்; காஞ்சனன் வந்து கண்டான் கண்நேரில் - காய சண்டிகையின் கணவனாகிய காஞ்சனன் என்பவன் தன் கண்ணெதிரில் வந்து கண்டான்; தீஞ் சொல்லாள் காய சண்டிகைதான் கசந்தாளோ என்னை - இனிது பேசுகின்ற காயசண்டிகை என்மேல் கசப்புற்றாளோ; என்றான் - என்று தனக்குள் வினவினான்; அவளை - அந்தக் காய சண்டிகையை; ஆய - ஆராய; அங்கு அண்டினான் - அங்கொரு பக்கம் அணுகினான். வாஞ்ச என்பது, வாய்ந்த என்பதன் போலி, மாற்றம் - சொல். காஞ்சனன் வந்து கண்டான் - காஞ்சனன் வந்து (மணிமேகலை) காயசண்டிகை உதயனுக்கு அறம் கூறுவதைக் கண்டான் என்க. காஞ்சனன் சொல்லைக் காதில் வாங்காமல், காய சண்டிகையான மணிமேகலை தன் பேச்சைத் தொடர்ந்தாள். என் காயசண்டிகையே என்காய சண்டிகையே இன்னல்சேர் உன்நோயும் நன்காய தோஎன்றான்! நங்கைதான் - வன்காயை மெல்ல நினையாள்போல் வேந்தன் மகனிடத்தே சொல்ல நினைந்தாள் தொடர்ந்து. 198 உரை: என் காயசண்டிகையே - எனக்குரிய காய சண்டிகையே; இன்னல் சேர் உன் நோயும் - துன்பத்தைக் கொடுத்துவந்த உன் நோயும்; நன்கு ஆயதோ என்றான் - நலமாயிற்றோ என்று கேட்டான்; நங்கைதான் - மணிமேகலையாகிய காய சண்டிகை; வன் காயை மெல்ல நினையாள் போல் - காட்டுக் காயை மென்று தின்ன எண்ணாதவள் போல், அதைப் பொருட் படுத்தாமல்; வேந்தன் மகனிடத்தே - உதயனிடத்தே; தொடர்ந்து சொல்ல நினைத்தாள் - சொல்லிக் கொண்டிருந் ததைத் தொடர்ந்து சொல்ல எண்ணினாள். என் - என் சொந்த; நன்காயதோ என்பதை, நன்கு ஆயதோ என்று பிரிக்க. மனத் தூய்மையே தவம் மனந்தன் நிலையினில் மன்னல் பொரூளாம் மனம்பெண்பொன் மண்மேற் செலுமேல் - துனியாம் உவந்தலை யாது மனம்பயில் விப்பவர்* தவந்தலைப் பட்டவர் தாம். 199 உரை: மனம் தன் நிலையில் மன்னல் பொருள் ஆம் - மனமானது புறத்தில் செல்லாமல் தன்னிலையிலேயே நிற்கும் அதுதான் பெறத்தக்க பேறு ஆகும்; மனம் பெண் பொன் மண் மேல் செலுமேல் துனியாம் - அதுவன்றி மனமானது பெண் பொன் மண் என்ற மூவகைப் பொருள்மேல் செல்லுமானால் துன்பம் வந்து சேரும்; உவந்து அலையாது மனம் பயில்விப்பவர் தவம் தலைப்பட்டார் - பொருள்களின் மகிழ்ச்சி கொண்டு அலையாமல், தம் மனத்தை நன் முறையில் பயிலும்படி செய்பவர் தவத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றவரே யாவார். பொருள் - பெறத்தக்க பேறு. தவம் துயர் மாற்றும் மருந்து தனக்கென வாழாமை தான்பிறர்க் காதல் சினம்பகை என்றும்எண் ணாமை - அனைத்தும் வருந்துயர் நீக்கிடும்ஆ யின்நற்ற வந்தான் இருந்துயர் எற்றும் மருந்து. 200 உரை: தனக்கு என வாழாமை - தன்னலத்தின் பொருட்டு வாழாமையும்; தான் பிறர்க்கு ஆதல் - பிறர் நலத்தின் பொருட்டு உழைத்தலும்; சினம் பகை என்றும் எண்ணாமை - சினத்தையும் பிறரைப் பகைத்தலையும் மனத்தால் எண்ணா திருத்தலும்; அனைத்தும் - ஆகிய அனைத்தும்; வரும் துயர் நீக்கிடும்- வருகின்ற துன்பத்தை யெல்லாம் வராமல் தடுக்கும். ஆயின் - ஆராய்ந்தால்; நல்தவந் தான் - நல்ல தவம் ஒன்றே; இருந்துயர் எற்றும் மருந்து - பெரிய துன்பத்தை நீக்கத்தக்க மருந்தாகும். இருந்துயர்: இருமை, துயர் என்று பிரியும்; இருமை - பெருமை; மிகுதி. அருளின் தழைவே தவம் தவமோ அருளின் தழைவாம்; அருளோ எவர்மாட்டும் ஏதில் இரக்கம் - உவப்பப் பிறர்க்குழைத் தின்புற் றிருப்பதும் நன்றே இறப்பதும் இவ்விரண்டும் வீடு. 201 உரை: தவமோ அருளின் தழைவாம்-தவம் என்பது தழைந்த அருள் ஆகும்; அருளோ எவர் மாட்டும் ஏதில் இரக்கம் - அருள் எது எனில் எல்லார் மாட்டிலும் ஒரு காரணமுமின்றி யுண்டாகின்ற இரக்கம்; உவப்ப பிறர்க்கு உழைத்து இன்புற்று இருப்பதும் - மனமகிழ்ச்சியோடு பிறர்க்கு உழைத்து இன்புற் றிருப்பதும்; நன்றே- துன்பமில்லாமல்; இறப்பதும் - சாவதும்; இவ்விரண்டும் வீடு - ஆகிய இரண்டு வகைப்படுவது வீடு. நன்றே இறப்பது - சாகும்போது பற்று விட்ட நிலையில் ஏற்படும் மகிழ்ச்சியோடு இறப்பது; ஏதில் - ஏது இல்; காரணம் இல்லாத அதாவது; இவர் உறவினர் இவர் நண்பர் என்ற காரணத்தால் உண்டாகாமை. காஞ்சனன் ஐயப்பாடு இதுகண்ட காஞ்சனன் என்சொல் விரும்பாள்; எதுகண்ட வன்பால் இருந்தாள்? - அதுகாண்பேன் என்றே ஒளிந்திருந்தான் இன்னல் மனத்துடன் ஒன்றி அறவியி னுள். 202 உரை: இதுகண்ட காஞ்சனன் - காய சண்டிகை உருவத்தோடு மணி மேகலை உதயனிடம் பேசிக்கொண்டிருந்த இதனைக் கண்ட காஞ்சனன்; என் சொல் விரும்பாள் எது கண்டு அவன் பால் இருந்தாள் - நான் சொல்லுவதைக் காதிற் போட்டுக் கொள்ளவில்லை; அந்த உதயனிடம் இவள் எதைக்கண்டு அவனிடம் மனம் செலுத்தினாள்; அது காண்பேன் - அந்த உண்மையை நான் அறிவேன்; என்றே ஒளிந்திருந்தான் - என்று எண்ணி ஒளிந்து கொண்டிருந்தான். இன்னல் மனத்துடன் - துன்புற்ற உள்ளத்தோடு; ஒன்றி அறவியினுள் - தனித்தவனாய், உலக அறவியின் உட்புறம். காயசண்டிகை கணவன் காஞ்சனன். ஒன்றி - உடல் ஒடுக்கி எனினும் அமையும். உதயகுமரனின் ஐயப்பாடு தன்மனத்துள் மன்னன் மகனுமே சாற்றுவான் என்மனத்தை வேறொன்றில் ஏகவைத்தாள் - அன்னவன் பால் அன்புடையாள் போலும்! அறிவேன் எனச்சொல்லி வன்புடையான் சென்றான் மறைந்து. 203 உரை: தன் மனத்துள் மன்னன் மகனுமே - மன்னன் மகனாகிய உதயகுமரன் தனக்குள்ளே; சாற்றுவான் - சொல்லுவா னானான்; என் மனத்தை வேறு ஒன்றில் ஏக வைத்தாள் - என் உள்ளத்தை நிலையாமை கூறி வேறு ஒன்றில் போகும்படி செய்தாள்; அன்னவன்பால் - உதயனிடம்; அன்புடையாள் போலும் அன்பை வைத்திருக்கின்றாள்; போலிருக்கின்றது; அறிவேன் - அதை நான் ஆராய்வேன்; எனச் சொல்லி - என்று தன்னுள் எண்ணி; வன்புடையான் சென்றான் மறைந்து - வன்பனாகிய உதயன் மறைவாகச் சென்றான். வன்புடையான் - கொடிய எண்ணமுடையவன் எனினுமாம். உதயன் பின்னே காஞ்சனன் சென்றான் உலக அறவியில் உள்ள அறையில் உலவி யிருந்த ஒருத்தி - நிலையினை உற்றறிய வந்த உதையனைக் காஞ்சனன் முற்றறியச் சென்றான் முனைந்து. 204 உரை: உலக அறவியில் உள்ள அறையில் - உலக அறவியில் உள்ள ஓர் அறையில்; உலவியிருந்த ஒருத்தி நிலையினை - உலவிக் கொண்டிருந்த மணிமேகலையின் நிலையை; உற்றறிய வந்த உதயனை - கண்டறிய வந்த உதயகுமரனை; காஞ்சனன் முற்று அறிய - காஞ்சனன் முழுதும் அறியும் பொருட்டு; முனைந்து சென்றான் - ஊக்கத்தோடு சென்றான். ஒருத்தி- மணிமேகலை; முனைந்து- பின்னிடாமல் என்றபடி. உதயனைக் காஞ்சனன் வெட்டி வீழ்த்தினான் எட்டியடி உள்ளறையில் இட்ட இளங்கோவை வெட்டியடி வீழ்த்தினான் காஞ்சனன் - கட்டிக் கரும்பே எனநெருங்கக் கண்ட இளமான் விரும்பேல் விளம்புதல் கேள். 205 உரை: எட்டி அடி உள்ளறையில் இட்ட இளங்கோவை - பாய்ந்து காலை உள்ளறையில் இட்ட உதயனை; வெட்டி அடி வீழ்த்தினான் காஞ்சனன் - வாளால் வெட்டிக் கீழே சாய்த்தான் காஞ்சனன்; அவ்வாறு வெட்டி வீழ்த்திவிட்டு; கட்டிக் கரும்பே என நெருங்கக் கண்ட இளமான் - என் கட்டிக் கரும்பே என்று நெருங்குவதைப் பார்த்த மணி மேகலை; விரும்பேல் விளம்புதல் கேள் - அவாவுதல் வேண்டாம் நான் சொல்வதைக் கேள் என்றாள். அவள் சொல்வதை அடுத்த பாட்டில் காண்க. அடி வீழ்த்தல் - கீழே சாய்த்தல்; அடி - கீழ். காயசண்டிகை அல்லள்; இவள் மணிமேகலை மணிமே கலையேநான் மாற்றுருவம் பூண்டேன் அணிமேவு காயசண்டி கைபோல்! - துணிய எனைப்பார் எனத்தன் இயல் - உருவம் காட்டி அனுப்பினாள் காஞ்சனனை அங்கு. 206 உரை: மணிமேகலையே நான் - நான் காயசண்டிகை அல்லேன், மணிமேகலைதான்; மாற்று உருவம் பூண்டேன் அணிமேவு காய சண்டிகை போல் - அழகு பொருந்திய காயசண்டிகை போல் உருமாறியிருந்தேன்; துணிய - நான் சொல்லுவது சரியென்று நீ உறுதிகொள்ள; எனைப் பார் எனத் தன் இயல் - உருவம் காட்டி - என்னை உற்றுப்பார் என்று கூறித் தன் இயற்கை உருவைக் காட்டி; அனுப்பினாள் - காஞ்சனனை அனுப்பினாள். இயல் - உருவம் - மணிமேகலையின் இயற்கை உருவம். இறந்த உதயனுக்கு அழுதாள் மணிமேகலை தன்னுடைபூண் டாள்காய சண்டிகைத்தோற் றம்தணந்தாள் பொன்னுடை வேந்தன் புதல்வனைப்போய் - என் அசையா நெஞ்சும் அசைத்தென் நினைவாற்செத் தாய்என்று கொஞ்சி அழுதாள் குயில். 207 உரை: தன் உடை பூண்டாள் - மணிமேகலை தான் முன்னணிந்த உடையையே பூண்டு கொண்டாள்; காய சண்டிகைத் தோற்றம் தணந்தாள் - தான் பூண்டிருந்த காயசண்டிகையான தோற்றத்தை நீங்கினாள்; பொன் உடை வேந்தன் புதல்வனைப் போய் - பொன்னாடை பூண்ட அரசன் மகனான இறந்த உதயனை அணுகி; என் அசையா நெஞ்சும் அசைத்து - என் கற்புள்ளத்தை அசையும்படி செய்து; என் நினைவால் செத்தாய் - என் நினைவு காரணமாகச் செத்தாய்; என்று - என்று அலறி; கொஞ்சி அழுதாள். குயில் - குயில் போன்ற மணிமேகலை கொஞ்சி அழுதாள். அசையா நெஞ்சும் அசைத்து என்றது, எவர் மேலும் சென்றறியாத என் மனத்தையும் உதயனை நாடும்படி செய்தது என்றபடி. அறம் பயிலும் நான் இறந்தானுக்கு அழுவதா? அறந்தான் தவம்பயில் பள்ளிஅஃ தல்லால் இறந்தானை எண்ணுதல் என்னாம்? - மறந்தும் அழுந்தேன் துயரினில் என்றாளுக் காம்என் றெழுந்தான் கிழக்கினில் என்று. 208 உரை: அறந்தான் தவம் பயில் பள்ளி - தவப் பயிற்சிக்குரிய பள்ளி; அறந்தான் - இல்லாதவர்க்கு ஈதலாகிய தருமந்தான்; அஃது அல்லால் - அதுவல்லாமல்; இறந்தானை எண்ணுதல் என் ஆம் - இறந்த உதயனை எண்ணி அழுது கிடத்தலால் என்ன பயன் விளையும்; மறந்தும் அழுந்தேன் துயரினில் என்றாளுக்கு - மறந்தும் உலகத் துன்பச் செய்தியில் அழுந்த மாட்டேன் என்று கூறிய மணிமேகலைக்கு; ஆம் என்று - அது சரிதான் என்று கூறுவான் போல்; எழுந்தான் கிழக்கினில் என்று - கதிரவன் கீழ்பால் எழுந்தான். என்று - கதிரவன். உலகத் துன்பத்தில் அழுந்த மாட்டேன் என்று முடிவு செய்தாள் மணிமேகலை. அதே நேரத்தில், கதிரவன் கீழ்பால் எழுந்ததானது அவள் முடிவை ஆம் என்றது போலிருந்தது. அமுதசுரபியைக் கண்டு பிச்சையிட்டவர்கள் பின்பு அஃது இருக்கும் இடம் வந்து பிச்சையிடலானார்கள் அமுத சுரபி அடையாளம் கண்டே அமுதளித் தோர்பின் அதுதான் - அமைவிடம் சென்றீய லாயினார் சென்றீயல் தம்கடன் என்றீய லாயினார் பின். 209 உரை: அமுதசுரபி அடையாளம் கண்டு அமுது அளித்தோர் - அமுத சுரபி என்னும் அடையாளத்தை எண்ணி இந்நாள் வரை உணவு அளித்து வந்தவர்கள்; பின் அதுதான் அமை விடம் சென்று ஈயல் ஆயினார் - நாளடைவில் அது எங்கிருக் கின்றதோ அங்கேயே சென்று உணவு இடலானார்கள்; சென்றீயல் - அவ்வாறு சென்று இடுவதை; தம் கடன் என்று ஈயல் ஆயினார் பின் - அதன் பிறகு தம் கடன் அது என்ற உணர்வோடு இட்டுவரலானார்கள். முதலில் மணிமேகலை யின் புகழ் கருதிப் பிச்சை யிட்டு வந்தவர்கள் அவள் உருவம் மாறுபடுவது எண்ணிக் கலத்தைக் கண்டு இடலானார்கள்; அதன்பின் அவள் இருப்பிடம் நோக்கியே சென்று இடலானார்கள்; அதன்பின் இடுவதென்பது தம் நீங்காக் கடன் என்ற உணர்வோடு இட்டு வரலானார்கள் என்பதை இச் செய்யுளால் நினைத்து இன்புற வேண்டும்; அடையாளம் - அறிகுறி; அமுதசுரபியில் இட்டது எடுக்க எடுக்கக் குறையாது என்பது மெய்யன்று. ஆபுத்திரன் கையில் இருந்த போதும் ஆபுத்திரனது புகழ் செய்த புதுமையைத்தான் கலத்திற்கு இட்டு வழங்கியதும் என்க. ஈதல் என்றால் அமுதசுரபிக்கு ஈதல்தான் ஈதல் அமுத சுரபிக்கே ஈதல்என் றோதலும் ஆனார் உலகத்தார் - ஈதல் அமுத சுரபியே ஆகி ஈவானும் அமுத சுரபிஆ னான். 210 உரை: ஈதல் அமுத சுரபிக்கே ஈதல் என்று ஓதலும் ஆனார் - நாளடைவில் ஈதல் என்றால் அமுதசுரபிக்கு ஈதல்தான் என்று சொல்லவும் ஆயினார்; சிலர் அல்லர்; உலகத்தார் - உலக மக்கள் எல்லோரும்; அதன் பிறகோ; ஈதல் அமுதசுரபியே ஆகி - ஈதலின் பெயரே அமுதசுரபி என்று ஆகி; ஈவானும் அமுத சுரபி ஆனான் - ஈவானையும் அமுதசுரபி என்றே அழைக்கவும் ஆனார். ஆகி: செயவென் எச்சத் திரிபு. ஈதலின் பெயரே அமுத சுரபி ஆயிற்று என்பது என்ன? ஈதல் அறம் என்றான் ஒருவன். நாளடைவில் அமுத சுரபியே அறம் எனலானான் என்பது. ஈவானும் அமுதசுரபி ஆனான் என்றது என்ன? ஈத்துவக்கும் நல்லோன் அதோ செல்கின்றான் என்று கூறிய ஒருவன், நாளடைவில் அமுத சுரபி அதோ செல்கின்றான் எனலானான் என்பது. ஓதல் - சொல்லல். ஐயம் ஏற்கும் மணிமேகலை அறமே செய்கின்றாள் ஓம்புகார் என்னப் பசித்தோர்க் குதவுமோர் பூம்புகார்க் கேநற் புகழெல்லாம் - ஆம்படி செய்யு மணிமே கலையின் செயலெல்லாம் ஐய மெனினும் அறம். 211 உரை: ஓம்புகார் என்ன - உலகை ஓம்புவதான முகிலைப் போல; பசித்தோர்க்கு உதவும் ஓர் பூம்புகார்க்கே நல்புகழ் எல்லாம் ஆம்படி - பசித்தவர்க்கு உதவுகின்ற ஒப்பற்ற பூம்புகார் என்னும் நகருக்கே புகழ் எல்லாம் ஆகும்படி; செய்யும் மணிமேகலை யின் - அறஞ்செய்யும் மணிமேகலை யின்; செயல் எல்லாம் - செயல் அனைத்தும்; ஐயம் எனினும் அறம் - ஏற்றல் எனினும் ஈதலேயாகும். ஓம்புதல் - காத்தல். அறவி முனிவர் அறிந்தார்கள் அறமா மணிபால் உதையன் அடைவும் மறமேவு காஞ்சனன் வாளால் - எறிந்ததுவும் ஓர்ந்தார் உலக அறவி முனிவரெலாம் போந்தார் புரைதீர்ந்தாள் முன். 212 உரை: அறமா மணிபால் - அறம் புரிவதில் மாணிக்கம் போன்ற மணி மேகலையிடம்; உதயன் அடைவும் - உதயன் அணுகியதும்; மறம் மேவு காஞ்சனன் வாளால் எறிந்ததுவும் - வீரமிகுந்த காஞ்சனன் தன் வாளால் உதயனை வெட்டியதையும்; ஓர்ந்தார் உலக அறவி முனிவர் எலாம் - கேள்வியுற்றார்கள் உலக அறவியிலிருந்த முனிவர் எல்லாரும்; போந்தார் புரை தீர்ந்தாள் முன் - மணிமேகலை யிடம் வந்தார்கள். ஓர்தல் - ஆராய்தல், அறிதல், தெரிதல். புரை தீர்ந்தாள் - குற்றமற்ற மணிமேகலை. நடந்தது கேட்ட முனிவர்கள், தம் வருகையை அரசனுக்குச் சொல்லி அனுப்பினார்கள் அறைந்திருக்க உற்றவற்றை அன்னவர்பால் மங்கை! மறைந்திருக்க! மாய்ந்தோன் உடலும் - மறைத்து வைக்க! என்றார் முனிவரெலாம் ஏந்தலைக் காணுதற்குச் சென்றார் வரவுரைத்தார் தேர்ந்து. 213 உரை: அறைந்திருக்க உற்றவற்றை அன்னவர்பால் மங்கை - மணி மேகலை நடந்தவற்றை முனிவரிடம் சொல்லி முடித்த அளவில்; மறைந்து இருக்க, மாய்ந்தோன் உடலும் மறைத்து வைக்க - மணிமேகலையே நீ இவ்வறவியில் மறைந்திரு; இறந்தவனின் உடலையும் மறைத்து வை; என்றார் முனிவ ரெல்லாம் - என்று கூறிய முனிவர்கள்; ஏந்தலைக் காணுதற்குச் சென்றார் - அரசனைக் காணும் பொருட்டுச் சென்றார்கள்; தேர்ந்து வரவு உரைத்தார் - தக்க நேரத்தைத் தேடித் தம் வருகையை அரசனுக்குச் சொல்லி அனுப்பினார்கள். மாய்ந்தோன் உடல்: உதயன் உடல். வாயில் காப்போன் முனிவர் வரவை மன்னனுக்கு உரைத்தான் அன்னது கேட்டநல் வாயிலோன் அங்கோடி இன்னது செய்தியாம் என்னலும் - முன்னர் வரவிடு கென்றுமா வண்கிள்ளி சொன்னான் விரவினர் வேந்தன்முற் சென்று. 214 உரை: அன்னது கேட்ட வாயிலோன் - முனிவர் சொன்னதைக் கேட்ட அரண்மனை வாயில் காப்போன்; இன்னது செய்தியாம் என்னலும் - முனிவர்கள் காண வந்திருப்பதான இன்னதுதான் சேதியாகும் என்று கூறிய அளவில்; முன்னர் வரவிடுக என்று மாவண்கிள்ளி சொன்னான் - முன்னதாக அவர்களை வர விடுவாய் என்று மாவண்கிள்ளி சொன்னான்; விரவினர் வேந்தன் முற்சென்று - முனிவர்கள் வேந்தன் முன்னிலையில் சென்று கூடினார்கள். வரவிடுகென்று - வரவிடுக என்று; அகரம் தொக்கது. முனிவர் முடிந்தது கூறினார்கள் வாழ்கமா வண்கிள்ளி நாளுமே செங்கோல்தான் சூழ்கமா வண்புகழ்! தூயோய்நின் - வாழ்வில் இதுவரை எய்தாத இன்னல்எய் திற்றால் அதுவரை அன்று; பெரிது! 215 உரை: வாழ்க மாவண்கிள்ளி நாளுமே - மாவண்கிள்ளி என்றும் வாழ்க; செங்கோல்தான் சூழ்க மாவண் புகழ் - செங் கோலானது பெரும் புகழ் எய்துக; தூயோய் - தூய அரசனே; நின் வாழ்வில் - உனது வாழ்நாட்களில்; இதுவரை எய்தாத இன்னல் எய்திற்று - இதுவரைக்கும் ஏற்பட்டிராத ஓர் துன்ப நிகழ்ச்சி ஏற்பட்டுவிட்டது; அது - அத் துன்ப நிகழ்ச்சியானது; வரை அன்று - ஓர் அளவான தன்று; பெரிது - மிகப் பெரிதாகும். எய்திற்றால்; ஆல் அசை. வரை அன்று - மலை அளவன்று, பெரிது - அதனிற் பெரிது எனினும் பொருந்தும். வரை - மலை. காமத்தால் செத்தவர்களின் கதைகள் பல ககந்தன் மகன்தான் மருதிஎனும் கன்னல் உகந்தன்னான் தந்தையால் ஊறுற் - றிகழ்வுற்றான் முந்தை விசாகையினை மூத்தசேய் முன்னியதால் தந்தையால் தானிறந் தான். 216 உரை: ககந்தன் மகன்தான் - காவிரிப் பூம்பட்டினம் ஆண்ட ககந்தனின் மகன்; மருதி எனும் கன்னல் உகந்து - மருதி என்னும் கரும்பை விரும்பி; அன்னான் தந்தையால் - அன்னவனின் தந்தையாகிய ககந்தனால்; ஊறு உற்று இகழ்வு உற்றான் - சாக்காட்டை அடைந்ததோடு, உலகத்தாரால் இகழ்ச்சியையும் பெற்றான். முந்தை - முன்னாள்; விசாகை யினை - விசாகையை; மூத்த சேய் - மூத்தமகன்; முன்னிய தால் - எண்ணித் தீங்கு செய்ததால்; தந்தையால் தானிறந்தான் - தன் தந்தையாலேயே இறந்துபோனான். ககந்தன் காவிரிப் பூம்பட்டினத்தரசன். அவன் பிள்ளையாகிய இருவரில் இளையவன், பார்ப்பினி மருதியை யும், மூத்தோன் வணிகன் மகளாகிய விசாகையையும் விரும்பித் தீங்கு செய்ததை அறிந்த தந்தையாகிய ககந்தன் வாளாற் கொன்றான். இதை முனிவர்கள் அரசனுக்கு நினைவு படுத்தினார்கள். அன்று பல நடந்தன என்ற முனிவரை இன்றும் உளதோ என்றான் மன்னன் காமக்கள் உண்டவர் கற்பழித்துச் செத்ததனை யாமிதற்கு முன்னுங்கேட் டோமன்றோ - கோமானே என்று முனிவர் இயம்ப அரசனவன் இன்று முளதோஎன் றான். 217 உரை: காமக்கள் உண்டவர் - காமமாகிய கள்ளை உண்டவர்கள்; கற்பு அழித்துச் செத்ததனை - பெண்களின் கற்பை அழித்து அதனால் செத்த வரலாறுகளை; யாம் இதற்கு முன்னும் கேட்டோம் அன்றோ - முன்னும் யாம் கேட்டிருக்கின்றோம் அல்லவா; கோமானே என்று முனிவர் இயம்ப - அரசனே என்று முனிவர் சொல்லிய அளவில்; அரசனவன் - மன்னன்; இன்றும் உளதோ என்றான் - இன்றும் அதுபோல் ஏதாவது நடந்ததோ என்று கேட்டான். முன்னும் நடந்தன என்று முனிவர் சொன்னதால், இன்றும் அப்படி ஏதாவது நடந்ததோ என்று மன்னன் கேட்டான். மாதவி துறந்தாள் மகளும் துறந்தாள் கோவலனார் குற்றமிலார்; ஆயினும் கோள்கேட்ட காவலனார் கொல்லென்று காய்ந்தார்என் - றோவத்து மாதவியும் நற்றவத்தில் மன்னினாள்; பெண்மணியும் மாதவியே ஆனாள் மனம். 218 உரை: கோவலனார் குற்றம் இலார் - கோவலனார் குற்றமற்றவர்; ஆயினும் - அவ்வாறிருக்கவும்; கோள்கேட்ட காவலனார் - அவர் மேல் எழுந்த கோளுக்குக் காதுகொடுத்த பாண்டிய மன்னர்; கொல் என்று காய்ந்தார் என்று - கொலை செய் என்று சீறினார் என்று; ஓவத்து மாதவியும் - ஓவிய மொத்த அழகிய மாதவியும்; நற்றவத்தில் மன்னினாள் - நல்ல தவத்தை மேற் கொண்டாள்; பெண்மணியும் - அவள் பெண்ணாகிய மணிமேகலையும்; மனம் மாதவியே ஆனாள் - கொள்கையால் மாதவியே ஆய்விட்டாள் (அவளும் தவம் மேற்கொண்டாள் என்றபடி). கோள் கேட்டது, அரண்மனைச் சிலம்பைத் திருடியவன் கோவலன் என்ற கோளைக் கேட்டது. மனம் மாதவியே ஆனாள் - மனத்தால் மாதவியை ஒத்தவளானாள்; அதாவது மணிமேகலையும் தன் தாயின் கொள்கையையே பின்பற்றினாள்; தவமேற்கொண்டாள். மணிமேகலையிடம் உதயகுமரன் தன் கையிருப்பைக் காட்டினான் காயசண்டி கைஎன்று கண்டார் நினைக்கஅவள் ஆயஉரு மாற்றி அம்பலத்தில் - தூயளாய் ஏற்றலும் ஈதலும் செய்திருந்தாள் மன்னன்மகன் ஆற்றலும் காட்டினான் ஆங்கு. 219 உரை: காய சண்டிகை என்று கண்டார் நினைக்க - இவள் காய சண்டிகைதான் என்று பார்ப்போரெல்லாம் நினைக்கும்படி; அவள் -அந்த மணிமேகலையானவள்; ஆய உருமாற்றி - இயற்கை உருவை மாற்றி; அம்பலத்தில் - அறவியில்; தூயளாய் - தூய மனத்தினளாய்; ஏற்றலும் ஈதலும் செய்திருந் தாள் - இரத்தலும் ஈதலும் புரிந்திருந்தாள்; மன்னன் மகன் - மன்னனாகிய உன் மகன்; ஆற்றலும் காட்டினான் ஆங்கு - அவ்விடத்தில் அணுகிய தோடன்றித் தன் வன்செயலான கையிருப்பையும் காட்டினான். காஞ்சனன் உதயனைக் கொன்றான் நள்ளிரவில் நங்கையினை நண்ணும் இளங்கோவை எள்ளியே காயசண்டி கைகணவன் - துள்ளியே வாளால் எறிந்தான் வழுவின்றி அங்குளோம் ஆளால் அறிந்தோம்என் றார். 220 உரை: நள்ளிரவில் நங்கையினை நண்ணும் இளங்கோவை - நடு இரவில் மணிமேகலையை நெருங்கும் உதயகுமரனை; எள்ளியே - இலேசாக எண்ணி; காயசண்டிகை கணவன் - காய சண்டிகை கணவனாகிய காஞ்சனன்; துள்ளியே - துடுக்கடைந்து; வாளால் எறிந்தான் - கை வாளால் வெட்டி விட்டான்; வழு இன்றி அங்கு உளோம் - ஒரு குற்றமும் இல்லாமல் அங்கு இருந்தோ மாகிய யாம்; ஆளால் அறிந்தோம் என்றார் - அங்கிருந்த ஆட்களால் இச் சேதியை அறியலானோம் என்றார்கள். நங்கை - மணிமேகலை. அங்குளோம் - அங்கு உளோம்; அங்கு இருக்கின்ற யாம். மாண்டானா மைந்தன்! மாண்டானா மைந்தனவன் மற்றென்பின் மாநிலத்தை ஆண்டானா அஃதும் இலையேஎன் - றீண்டிய கண்ணீர் உகுத்துக் கதறினான் ஆங்கும்ஓர் எண்ணத்துள் ஆழ்ந்தான் இறை. 221 உரை: மாண்டானா மைந்தனவன் - இறந்தானா என் மைந்தன்; மற்று என்பின் மாநிலத்தை ஆண்டானா அஃதும் இலையே - இருந்து எனக்குப் பின் நாளில் இந்தப் பெரு நாட்டை ஆண்டானா அதுவு மில்லையே; என்று - என்று கூறி; ஈண்டிய கண்ணீர் உகுத்து - நிறைந்த கண்ணீரை நிலத்தில் ஒழுகவிட்டு; கதறினான் - கதற லானான்; ஆங்கும் - அந்தத் துன்பத்திலும்; ஓர் எண்ணத்துள் ஆழ்ந்தான் இறை - அரசன் ஒருவகையான எண்ணத்துள் ஆழ்வான் ஆயினான். மற்று - அசை. இத் துன்பநேரத்திலும் ஓர் எண்ணத்துள் ஆழ்ந்தான் என்பதை அடுத்த பாட்டில் காண்க. காஞ்சனன் தூயவன் இப்படியோர் போற்றும் அறத்தின் இளையாளை அப்படியா செய்திறந்தான் அன்புமகன் - எப்படிநாம் கண்டாலும் காஞ்சனன் நெஞ்சாலும் கைவாளின் தொண்டாலும் தூயனே ஆம். 222 உரை: இப்படியோர் போற்றும் - இந்த உலகோர் போற்றும்; அறத்தின் இளையாளை - அறஞ் செய்வதில் இளைத்த லில்லாத மணி மேகலையை; அப்படியா செய்து இறந்தான் அன்பு மகன் - இவ்வாறா தீமை செய்து இறந்தான் என் அன்பான மகன்? எப்படி நாம் கண்டாலும் - எந்த வகையில் நாம் ஆராய்ந்து பார்த்தாலும்; காஞ்சனன் நெஞ்சாலும் கை வாளின் தொண்டாலும் தூயனே ஆம் - காஞ்சனன் தன் நெஞ்சத்தாலும், வாளால் என் மகனை வெட்டியதன் தொண்டினாலும், தூயனே ஆவான். காஞ்சனன் மணிமேகலையைக் கண்டானில்லை; அவள் மாற்றுருவமாகிய காய சண்டிகையையே கண்டான்; அவளை உதயன் கெட்ட எண்ணத்தோடு நெருங்கக் கண்டான்; கொன்றான். ஆதலால் அவன் நெஞ்சு தூயதே; அவன் வாளின் தொண்டு தூயதே எனப்பட்டது. உரிய தண்டனையை உதயன் பெற்றான் வழிவந்த கன்றைத்தேர் வாட்டியதால் மன்னன் வழிவந்த சேயை மடித்தான் - வழிவந்த யான்பெற்ற மைந்தனவன் காமத்தால் காஞ்சனனால் தான்பெற்ற தண்டம் தகும். 223 உரை: வழிவந்த கன்றைத்தேர் வாட்டியதால் - வழியில் துள்ளி ஓடிவந்த பசுவின் கன்றைத் தன் மகன் ஏறிச் சென்ற தேர் கொன்ற காரணத்தால்; மன்னன் வழிவந்த சேயை மடித்தான் - மன்னன் வழிவந்த மகனை அவன் தந்தை மடியச் செய்தான்; வழிவந்த யான் - அப்படிப்பட்ட மன்னனின் வழிவந்த நான்; பெற்ற மைந்தனவன் - அடைந்த மகனாகிய உதயகுமரன்; காமத்தால் - தான் கொண்ட காமம் காரணமாக; காஞ்சனனால் - காஞ்சனன் கை வாளால்; தான் பெற்ற தண்டம் தகும் - அவன் அடைந்த இந்தத் தண்டனை தக்கதே. முதலில் உள்ள வழிவந்த என்பதற்குப் பாதையில் வந்த என்று பொருள் கொள்க. மணிமேகலையைச் சிறையில் இடுக மகனுடலுக்கு இறுதிக் கடன் நடக்க துறவோர் அருளிய தொல்லறநூற் சீர்த்தி இறவாது காத்தல் எனது - மறவாக் கடன்! மேகலை சிறைகாண்கவே மைந்தன் உடன்மேவ உற்ற கடன். 224 உரை: துறவோர் அருளிய - துறவற மேற்கொண்ட பண்டைத் தமிழ்ச் சான்றோர் அருளிச் செய்ததான; தொல் அற நூல் சீர்த்தி - தொன்மையான சட்ட நூலின் புகழானது; இறவாது காத்தல் - மங்காமல் காக்க வேண்டுவது; எனது மறவாக் கடன் - என்னுடைய மறக்க முடியாத கடமையாகும்; மேகலை சிறை காண்கவே - மணிமேகலை சிறையில் இடப் பட வேண்டும்; மைந்தன் உடல் - என் மகனின் பிணம்; மேவ உற்ற கடன் - உரிய இறுதிக் கடன்களைப் பொருந்தவேண்டும். கொலைக்குக் காரணமாயிருந்தவள் மணிமேகலையா? கொலை செய்தவள் மணிமேகலையா? நள்ளிரவில் உருமாறி யுலவிய மணிமேகலை குற்றம் புரிந்தவள் அல்லவா? என்பவை முதலியவை ஆராயப்பட வேண்டும். மணி மேகலை குற்றவாளி யாயின் தண்டனை பெறவேண்டும். அவள் இல்லாதவர்க்கு இடுதல் ஒன்றையே கருதி, பண்டைத் துறவோர் அருளிய சட்ட நூலை நான் புறக்கணித்தல் கூடாது. ஆதலால் அவளைச் சிறையில் இட வேண்டும். ஐயப்பாட்டுக்கு இடனாய்க் கிடக்கும் என் மகன் உடலை இறுதிக் கடனுக்கு உள்ளாக்க என் ஆணை வேண்டும். அவ்வாறு இறுதிக் கடன் நடக்கட்டும் என்று கூறினான் என்க. சீர்த்தி - புகழ். உடன்மேவ - உடல் மேவ எனப் பிரிக்க. அம்மா உன்னையும் சிறையிட வந்தோம் மன்னனை வாழ்த்தியே மாமுனிவர் சென்றனர் அன்னம் நிகர்த்தாளை அங்கிருந்தோர் - தன்னம் தனிக்கண்டு சாற்றுவார், அன்னாய் சிறைக்கே உனைக்கொண்டு போவதும் உண்டு. 225 உரை: மன்னனை வாழ்த்தியே - மாவண்கிள்ளிக்கு வாழ்த்துக் கூறி; மாமுனிவர் சென்றனர் - அங்கு வந்த மாமுனிவர் சென்றனர்; அன்னம் நிகர்த்தாளை அங்கு இருந்தோர் - மணிமேகலையை அரசவையிலிருந்த காவலர்; தன்னந் தனிக்கண்டு - தன்னந் தனியாக இருந்த நிலையில் கண்டு; சாற்றுவார் - சொல்லுவா ரானார்; அன்னாய் - அன்னையே; சிறைக்கே உனைக்கொண்டு போவதும் உண்டு - சிறையி லடைக்க உன்னை அழைத்துக் கொண்டு போவதான புதுமை யும் ஏற்பட்டுள்ளது. கண்டு - உலக அறவியில் கண்டு. சிறையில் உனக்கென்ன குறைச்சல்? இறையும் உனக்கீந்த இன்னல் மிகுந்த சிறையும் திருக்கோயி லாகும் - நிறையும் படியாரை அச்சிறையில் பார்ப்பின்எம் அம்மைக் கடியார் அலால்மற்றி யார். 226 உரை: இறையும் உனக்கு ஈந்த - எல்லாம் உணர்ந்துள்ள அரசரும் உனக்கு அளித்ததான; இன்னல் மிகுந்த சிறையும் - துன்பமிகுந்த சிறைக் கூடமும்; திருக்கோயில் ஆகும் - அரச மாளிகையாகும்; நிறையும் - அச்சிறைக் கூடத்தில் நிறைந்துள்ள; படியாரை - அரசுக்காக முன்னின்று பணி யாற்றும் அதிகாரிகளை; அச் சிறையில் பார்ப்பின் - அந்தச் சிறைக் கூடத்தில் நீ காண்பாயானால்; எம் அன்னைக்கு - எம் தாய் போன்ற உனக்கு; அடியார் அலால் மற்று யார் - அடியவரே அல்லாமல் வேறு எப்படிப்பட்டவர்? எல்லா நிலைமைகளையும் அறிந்த இறையே என்பதற்கு இறையும் என உம்மை கொடுத்துச் சொன்னார். திருக்கோயில் - நலம் வாய்ந்த மன்னர் மாளிகை. படியார் என்பதற்குப் பிரதிநிதி என்பர் வடவர். ஊண் இட்ட உண்மை மறப்பாரோ? மாணிட்ட மாதர்க் கரசேஇவ் வையத்தார்க் கூணிட்ட உன்னை மறந்தவர்கள் - காணின் இறந்தவர்கள் என்க அருள்சேர்ந்த நின்தாள் பிறந்தார் பெறத்தக்க பேறு. 227 உரை: மாண்இட்ட மாதர்க்கு அரசே - பெருமையைத் தமக்கு இழையாய் அணிந்த மாதர்கட்கெல்லாம் அரசாகிய அன்னையே; இவ் வையத்தார்க்கு - இந்த உலக மக்கட்கு; ஊண் இட்ட உன்னை மறந்தவர்கள் - உணவிட்டுக் காப்பாற் றிய உன்னை மறந்தவர்களை; காணின் - பார்ப்போமாயின், அவர்கள் எல்லாம்; இறந்தவர்கள் என்க - இறந்தவர்களே என்று எண்ணிக் கொள்க; அருள் சேர்ந்த நின்தாள் - அருள் உள்ள உன்னுடைய திருவடியானது; பிறந்தார் பெறத்தக்க பேறு - பிறந்தவர்கள் அடையத்தகுந்த பேறு ஆகும். மாண் - பெருமை; காணின் - ஆராய்ந்தால் எனினும் ஆம். அரசுக்கு எதிர்ப்பு என்றார் மணிமே கலையைச் சிறைக்கழைத்துச் சென்றார் இதையறிந்தோர் சீறியே - ஒன்றாய் விடுவீரெம் தாயையே காவலரே நின்றால் படுவீரென் றார்கள் பரிந்து. 228 உரை: என்றார் - என்று சொல்லிய காவலர்; மணி மேகலையைச் சிறைக்கு அழைத்துச் சென்றார் - மணி மேகலையைச் சிறைக் கூடத்திற்கு அழைத்துப் போனார்கள்; இதை அறிந்தோர் - இதைத் தெரிந்துகொண்ட பொது மக்கள்; சீறியே - சீற்றம் அடைந்து; ஒன்று ஆய் - தம்மில் ஒன்று பட்டவராய்; விடுவீர் எம் தாயையே - எம் தாயான மணி மேகலையைச் சிறைக்கு அழைத்துச் செல்லவேண்டாம், விட்டுவிடுவீர்; காவலரே - அரச காவலரே; நின்றால் - எம் சொல்லைப் புறக்கணித்து இங்கு நிற்பீரானால்; படுவீர் என்றார்கள் பரிந்து - மணிமேகலைமேல் பரிவுகாட்டி, நீவிர் தொல்லையடைவீர்கள் என்று காவலர்களிடம் கூறினார்கள். முன்னிற்கும் மணிமேகலையைக் கருதியே எம் தாயை என்றார்கள். மணிமேகலை மக்களுக்கு அறங் கூறினாள் ஏவலரென் றெண்ணீரோ என்னைச் சிறைப்படுத்தல் காவலரின் கட்டளையாம் காணீரோ - தீவழியே நண்ணலும் ஏற்குமோ மக்காள் நலிவுசெய எண்ணலும் ஏற்காதென் றாள். 229 உரை: ஏவலர் என்று எண்ணீரோ - என்னைச் சிறைக்குக் கொண்டு போகும் இவர்கள் அரசின் பணியாளர் என்று நீங்கள் நினைக்க வில்லையா; என்னைச் சிறைப்படுத்தல் காவலரின் கட்டளை யாம் காணீரோ - என்னைச் சிறைப் படுத்தியதானது அரசரின் ஆணையாகும். அதையும் நோக்க மாட்டீரோ; தீவழியே நண்ணலும் ஏற்குமோ மக்காள் - என்னை மீட்டுப் போக எண்ணுவதாகிய ஒரு தீய வழியை நாடலும் சரியோ மக்களே; நலிவு செய எண்ணலும் ஏற்காது என்றாள் - ஏவலராகிய இவர்களுக்குத் தொல்லை கொடுக்க மனத்தால் நினைப்பதும் சரியாகாது என்று மணிமேகலை கூறினாள். ஏவலரை எதிர்த்த மக்களைத் தணிவு கூறி அனுப்பினாள் மணிமேகலை. மணிமேகலை சிறையில் சேர்க்கப்பட்டாள் ஊர்ச்சா வடியைச் சிறையாக்கி ஒன்றவே நீர்ச்சாலும் கூழ்க்கலமும் நேர்வைத்துக் - கூர்ச்சுடர்வேல் வைத்தாரை வைத்துமணி மேகலையை உள்ளடைத்து வைத்தார்கை யோடுகொண்டு வந்து. 230 உரை: ஊர்ச்சாவடியைச் சிறை ஆக்கி - உள்ளூரிலிருந்த சாவடியைச் சிறைச் சாலையாக மாற்றி அமைத்து; ஒன்றவே - பொருந்தும் படி; நீர்ச்சாலும் கூழ்க்கலமும் நேர் வைத்து - நீர் நிறைந்த சால் ஒன்றையும் கூழ் கொள்ளக் கலம் ஒன்றையும் நேரிலே இருக்கச் செய்து; கூர்ச்சுடர்வேல் வைத்தாரை வைத்து - கூரான ஒளி வேல் வைத்திருக்கும் காவலரைக் காவல் வைத்து; மணிமேகலையை - மணி மேகலையை; உள் அடைத்து வைத்தார் - சிறைக்குள் அடைத்து வைத்தார். கையோடு கொண்டுவந்து - ஏவலாளர் கையோடு கூட்டி வந்து. சிறையில் குற்றவாளிக்குச் செய்யும் சிற்றுதவிகள் நீர்ச்சாலும் கூழ்க்கலமும். சிறையிலும் மக்கள் சீற்றம் காவிரிப்பூம் பட்டினத்துக் கண்ணகியின் பெண்ணாளை நீவிரித்துன் பப்படுத்தல் நேர்த்தி என்று - தாவிச் சிறைகாப்போர் வேலும் சிதைத்தும்மை வைத்த முறைகாப்போர் எங்கென்றார் மொய்த்து. 231 உரை: காவிரிப்பூம் பட்டினத்துக் கண்ணகியின் - காவிரிப் பூம்பட்டினத் தாளான கண்ணகியின்; பெண்ணாளை - மகளான மணிமேகலையை; நீவிர் இத்துன்பப்படுத்தல் - காவற்காரர்களே, நீங்கள் இப்படித் துன்பப்படுத்துவது; நேர்த்தி என்று - நேர்மையான காரியமே என்றுகூறி; தாவி - அவர்மேற் பாய்ந்து; சிறை காப்போர் வேலும் சிதைத்து - சிறை காப்போராகிய அவர்களின் வேலையும் ஒடித் தெறிந்து; உம்மை வைத்த - உங்களை இங்கே காவல் வைத்த; முறை காப்போர் எங்கு என்றார் மொய்த்து - முறை செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் அரசர் எங்கே அமைச்சர் எங்கே என்று கூச்சலிட்டார்கள், பெருங் கூட்டமாகச் சேர்ந்து. நேர்த்தி என்றது, இழிவுபடுத்தியவாறு. முறை காப்போர் என்று பன்மை யாற் குறிப்பிட்டது; அரசரையும் அமைச்சரையும். நீவிரித் துன்பப் படுத்தல் - நீவிர் இத்துன்பப்படுத்தல் எனப் பிரிக்க. சீறினோருக்கு மணிமேகலையின் ஆறுதல் வம்பிட்ட மக்களின் முன்வந்து மாதரசி கும்பிட்டுக் குற்றம் இதுவென்றாள் - வெம்புற்றே அம்மாநின் றாவதென்ன அம்மன்னன் தீயனென்றே சும்மாநின் றார்மெய் துடித்து. 232 உரை: வம்பு இட்ட மக்களின் முன் வந்து மாதரசி - வன்செயலில் ஈடுபட்ட அந்த மக்களின் முன் மாதரசி வந்து; கும்பிட்டுக் குற்றம் இது என்றாள் - கை கூப்பி இப்படிச் செய்வது குற்றமாகும் என்று கூறினாள்; வெம்பு உற்றே - அது கேட்ட மக்கள் வேதனை அடைந்தவர்களாய்; அம்மா நின்று ஆவது என்ன - அம்மா இவர்களைச் சும்மாவிட்டு இங்கு நின்றுகொண்டு இருப்பதால் என்ன பயன்? அம்மன்னன் தீயன் - உன்னைச் சிறைப்படுத்தச் சொன்ன அந்த மன்னன் கொடியவன்; என்றே சும்மா நின்றார் மெய் துடித்து - என்று கூறி மெய்துடித்துச் சும்மா நின்று கொண்டிருந்தார்கள்; வன்செயல் குற்றம் என்று கூறிய மணி மேகலையை நோக்கி, அந்த மன்னன் கொடியன் என்று கூறின மக்கள், வெளியிற் செல்லாமல் அங்கேயே சும்மா நின்றிருந் தார்கள். ஏன் எனில், தம் வன்செயலுக்கு மணிமேகலையின் ஆதரவை எதிர்பார்த்து நின்றார்கள் என்க. மணிமேகலைக்குச் சாப்பாடு வந்தது நின்றிருந்த மக்கள் நினைவு பலிக்கவில்லை என்றிருந்தார் மாதின் எதிர்வணங்கிச் - சென்றிருந்தார் ஈப்பாடு தாரோனின் ஏற்பாட்டாற் சிற்சிலர் சாப்பாடு தாம் கொணர்ந்தார் தாய்க்கு. 233 உரை: நின்று இருந்த மக்கள் - மணிமேகலையின் உத்தரவுக்கு நின்றபடியிருந்த மக்கள்; நினைவு பலிக்கவில்லை என்றிருந்தார் - நம் நினைப்பு நிறைவேறவில்லை என்று இருந்தார்கள்; பிறகு; மாதின் எதிர் வணங்கி - மணிமேகலை முன் வணங்கி; சென்றிருந்தார் - போய்விட்டார்கள்; உடனே; ஈப்பாடு தாரோ னின் - ஈக்கள் பாடுகின்ற மலர் மாலை அணிந்த மன்னனின்; ஏற்பாட்டால் - ஆணையால்; சிற்சிலர் - ஆட்கள் சிலர்; சாப்பாடு தாம் கொணர்ந்தார் தாய்க்கு - சாப்பாடு கொண்டு வந்தார்கள் சிறையில் தாய்க்கு. சிறைப் பணியாளர் கூற்று கேழ்வரகின் கூழ்கொடுக்கச் சொன்னார்; கெடுவார்கள்! வாழ்வரசுக் கீய மனம்வருமா - தாழ்விலராய் வாழையிலும் யாம்உனக்கு முப்பழம் பாற்சோறும் வாழையிலை போட்டிட்டோம் வந்து. 234 உரை: கேழ்வரகின் கூழ் கொடுக்கச் சொன்னார் - கேழ்வரகு ஆக்கிய கூழைக் கொடுக்கும்படி எமக்கு உத்தரவிட்டார்கள் மேலாளர்கள்; கெடுவார்கள் - அவர்கள் கேடு அடையத் தக்கவர்கள்; வாழ்வு அரசுக்கு ஈய மனம் வருமா - எம் வாழ்வுக்கே அரசாக அமைந்த உனக்கு அவைகளை இட மனம் வருமா எமக்கு; தாழ்வு இலராய் வாழையிலும் யாம் உனக்கு - ஒரு குறைவும் இல்லாமல் வாழு கின்ற யாம் உனக்கு; முப்பழமும் பால் சோறு - முப்பழங் களையும் பாற் சோற்றையும்; வாழையிலை போட்டு இட்டோம் வந்து - வாழையிலையை இதோ விரித்து அதில் அவற்றைப் படைத்தோம் இங்கே வந்து. சிறையின் மேலாளர் கூழிடச் சொன்னார்கள்; பணி யாளர் முப்பழமும் பாற்சோறும் இட்டார்கள். போட்டிட்டோம் - போட்டு இட்டோம். முப்பழம் - வாழை, மா, பலா. இனி வேண்டாம் கூழே போதும் என்று சிறைப்பணி யாளர் இயம்பினார் ஒன்று மணிமே கலையுரைப்பாள் - இன்று கொடுத்தீர்! இனிஎனக்குக் கூழ்போதும் என்றாள் வடுத்தீர்ந்த மங்கைநல் லாள். 235 உரை: என்று - என்று இவ்வாறு; சிறைப்பணியாளர் - சிறையின் வேலைக் காரர்கள்; இயம்பினார் - சொன்னார்கள்; ஒன்று மணிமேகலை உரைப்பாள் - மணிமேகலை ஒரு செய்தி உரைப்பாளானாள்; இன்று கொடுத்தீர் - இன்று இவ்வாறு நல்லுணவிட்டீர்கள்; இனி எனக்குக் கூழ் போதும் என்றாள் - நாளை முதல் எனக்குக் கூழே போதியது என்று கூறினாள்; வடுத்தீர்ந்த மங்கை நல்லாள் - குற்றமில்லாத நன்மகளாகிய மணிமேகலை. அரச ஆணைக்கு மாறாகக் கொண்டுவந்த சிறப்புணவை அவள் வேண்டாம் என்று மறுக்கவில்லை, ஆட்களின் முக முறிக்க முடியாததால். அவ்வாறு மறுத்தால் ஆட்கள் கூழ் தேடியாக வேண்டும். அதனால் அவர்களின் குற்றம் வெளியாய்விடவும் கூடும். இனி அவ்வாறு குற்றம் செய்யற்க என்று கூறி அமைந்தாள். தெருவார் தருவார் பாலடிசில் நெய்யடிசில் பத்துக் கறியோடும் காலையிலும் மாலையிலும் கன்னிக்கே - சாலத் தெருவார் தருவார் சிறையாளர் கொண்டு தருவார் திருவார் தமிழ்க்கு. 236 உரை: பாலடிசில் - பாற்சோறும்; நெய்யடிசில் - நெய்ச்சோறும்; பத்துக் கறியோடும் - பத்து வகைக் கறிகளோடும்; காலை யிலும் மாலையிலும் கன்னிக்கே - காலை மாலை இரு வேளைகளிலும் மணிமேகலைக்கு; சால - மிகவும்; தெருவார் தருவார் - தெரு மக்கள் கொண்டு வந்து கொடுப்பார்கள்; அதனைச் சிறையாளர் கொண்டு தருவார் திருவார் தமிழ்க்கு - அதை அப்படியே வாங்கிக்கொண்டு வந்து தருவார் சிறைப் பணியாளர், திருவார்ந்த தமிழ்போல் இனிய மணி மேகலைக்கு. திருவார் - நலம் நிறைந்த; தமிழ்க்கு - மணி மேகலைக்கு உவமை ஆகுபெயர். சிறைப் பணியாளரைச் சீர்த்தி கேட்டாள் இறைவிநற் சீர்த்திதான் ஏவலரைக் கூவிச் சிறையினில் மேகலையின் செய்தி - அறைகென்னக் கேழ்வரகை ஒன்றிரண் டாக்கிக் கிளறிய கூழ்தருவோம் கொள்வாள் என்றார். 237 உரை: இறைவிநல் சீர்த்திதான் - அரசியும் நலமிக்கவளும் ஆகிய சீர்த்தி என்பாள்; சிறைப்பணியாளரைக் கூவி - சிறைப் பணியாளரை அழைத்து; சிறையினில் மேகலையின் சேதி அறைக என்ன - சிறையிலே மணிமேகலை எப்படி இருக்கின்றாள் சொல்க என்று கூறிய அளவில்; அவர்கள்; கேழ்வரகை ஒன்று இரண்டு ஆக்கிக் கிளறிய கூழ் தருவோம் - ஒன்றும் இரண்டுமாய் உடைத்த கேழ்வரகை இட்டுக் கிளறிய கூழைக் கொடுப்போம்; கொள்வாள் - அதை மறுக்காமல் உண்பாள்; என்றார் - என்று கூறினார்கள். சீர்த்தி - அரசி. அறைக என்ன என்பது, அறை கென்னப் புணர்ந்ததில், அகரம் தொகுத்தல். சிறையில் மணிமேகலையைப் பார்த்தாள் சீர்த்தி ஒருநாள் சிறைகாணல் உற்றனள் சீர்த்தி திருநாள் திருக்கச்சிக் கோயில் - இருநாளும் உண்டாலும் தீரா உளுத்தவடை உண்டாள்கற் கண்டு மணிமே கலை. 238 உரை: ஒருநாள் சிறை காணல் உற்றனள் சீர்த்தி - சீர்த்தி ஒருநாள் சிறையில் இருக்கும் மணிமேகலையைப் பார்க்க லானாள்; திருநாள் திருக்கச்சிக் கோயில் இருநாளும் உண்டாலும் - திருநாளில் திருக்கச்சி என்னும் ஊரில் அமைந்த கோயிலிலிருந்து இரண்டுநாள் அளவும் வைத்து உண்டாலும்; தீரா - உண்ண முடியாத அத்தனை பெரிய; உளுத்தவடை - உளுந்துவடையை; உண்டாள் - உண்டபடி இருந்தாள். யார்? கற்கண்டு மணிமேகலை - கற்கண்டு போன்ற மணிமேகலை. காஞ்சிக் கோயிலில் திருவிழா நாளில் செய்யப்படும் உளுத்த வடை சிறப்புடையது என்பதோடு, பெரிதும் ஆகும். அதை உண்டு இருந்த மணிமேகலையைச் சீர்த்தி பார்த்தாள். சிறைப் பணியாளர் சீர்த்தியிடம் முன் சொன்னதென்ன? மணி மேகலைக்குக் கேழ்வரகின் கூழிட்டு வருகின்றோம் என்றனர் அன்றோ? சீர்த்தி நேரிற் கண்டதென்ன? திருமால் வடை உண்டு மகிழ்ந்திருந்தாள் அன்றோ? சீர்த்தி மனம் வேதனை யுற்றிருக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். சீர்த்தி மன்னனிடம் ஓடினாள் நிறைந்திருந்த நெஞ்சின் மணிமே கலையை மறைந்திருந்து கண்டஅம் மன்னி - பறந்தோடி மங்கட்டும் என்னேல் மணாளா அவள்என்பால் தங்கட்டும் என்றாள் தனித்து. 239 உரை: நிறைந்திருந்த நெஞ்சின் மணிமேகலையை - குறைபாடில்லாத மனத்துடனிருந்த மணிமேகலையை; மறைந்திருந்து கண்ட அம்மன்னி - மறைந்திருந்து பார்த்த மன்னன் மனைவி; பறந்து ஓடி - விரைந்து சென்று; மங்கட்டும் என்னேல் மணாளா - என் மணவாளா மணிமேகலை சிறையிற் கிடந்து வாழ்நாள் மங்கிப் போகட்டும் என்று விட்டு விட வேண்டாம்; அவள் என்பால் - அந்த மணிமேகலை என்னிடம்; தங்கட்டும் என்றாள் தனித்து - தங்கி நலம் அடையட்டும் என்று தனிமையிற் கண்டு கூறினாள். மங்கட்டும், தங்கட்டும் என்பன ஒருவகை வியங்கோள் வினைமுற்றுக்கள். மணிமேகலை சிறையில் தொல்லை யுறுவது அரசிக்குப் பிடிக்கவில்லை; அதனால் அரண்மனை யில் தன்னுடன் வைத்துக்கொள்ள எண்ணுகின்றாள் போலும் என்று மன்னன் எண்ணும்படி செய்துகொண்டாள் மன்னி; என் சார்பில் மணிமேகலை இருக்கட்டும் என்றாள். உன்சார்பில் மணிமேகலை இருக்கட்டும் சிக்கிச் சிறைவலையில் தீங்குபடும் அப்பசுங்கி ளிக்கிச் சிறைநீக்கம் தக்கதே - புக்கில் இருந்தால் இருக்கட்டும் என்றான்தன் காதல் மருந்தால் பிழைக்கின்ற மன். 240 உரை: சிக்கிச் சிறைவலையில் தீங்குபடும் அப் பசுங்கிளிக்கு - சிறை யாகிய வலையிற் சிக்கி இன்னலுறும் அந்தப் பசுங் கிளி போன்ற மணிமேகலைக்கு; சிறை நீக்கம் தக்கதே - சிறையி னின்று விடுபடுவது தகுதியுடையதே; புக்குஇல் இருந்தால் இருக்கட்டும் - உன்னிடம் வந்து இருக்க அவள் ஒப்பினால் வந்திருக்கட்டும்; என்றான் - என்று கூறினான்; காதல் மருந்தால் பிழைக்கின்ற மன் - அரசியால் வரும் காதல் நோய்க்கு உள்ள மருந்தால் பிழைத்திருக்கின்ற அரசன். அரசியின் அன்பில் மிக்க ஈடுபாடு உடையவன் மன்னன் என்பது இப்பாட்டால் புரிகின்றது. புக்கில் - புக்கு இல். கொடியவளுக்குக் கூழும் கொடாதீர் அரண்மனையில் ஓர்பால் அடைத்தாள் அறையில் திரண்முகில் கூந்தல் திருவைப் - புரண்டழவே கூழும் கொடாதீர் கொடியவட்கென் றாள்தன்கீழ் வாழும் பலர்க்கரசி மற்று. 241 உரை: அரண்மனையில் ஓர்பால் அடைத்தாள் சிறையில் திரள்முகில் கூந்தல் திருவை - அரசி தன் அரண்மனையில் ஒருபுறம் சிறையில் அடைத்தாள், திரண்ட முகில் போலும் கூந்தல் உடைய மணிமேகலையை; புரண்டு அழவே - அந்த மணிமேகலை புரண்டு அழும்படி; கூழும் கொடாதீர் - அவளுக்குக் கூழைக் கூடக் கொடுக்கவேண்டாம்; கொடிய வட்கு என்றாள் - கொடியவளுக்கு என்று கூறினாள்; தன்கீழ் வாழும் பலர்க்கு அரசி - தன்கீழ்ப் பிழைத்திருக்கும் பல ஆட்களுக்கு அரசி; மற்று: அசை. திரு: மணிமேகலை. ஒன்றும் மணிமேகலைக்குக் கொடோம் என்றவர்கள் எல்லாம் கொடுத்து வந்தார்கள் ஒன்றும் கொடோமென் றொருதட்டில் பண்ணியங்கள் அன்றும் கொடுத்தார் அதன்பின்னும் - என்றும் குளநீரும் சோறும் குறையாது தந்தார் இளநீரும் வேளைக் கிரண்டு. 242 உரை: ஒன்றும் கொடோம் என்று - அரசியிடம் மணிமேக லைக்கு ஒன்றும் கொடுக்கமாட்டோம் என்று கூறிவிட்டு; ஒரு தட்டில் பண்ணியங்கள் - தட்டு ஒன்று நிறையப் பண்ணி யங்கள்; அன்றும் கொடுத்தார் - பணிப்பெண்கள் ஆருக்கும் தெரியாமல் அன்றும் கொடுத்தார்கள்; அதன் பின்னும் - பண்ணியத்தின் மேலும்; என்றும் குளநீரும் சோறும் குறையாது தந்தார் - தூய குளத்துக் குளிர்புனலும் சோறும் குறைவில் லாமல் என்றும் தந்தார்; இளநீரும் வேளைக்கு இரண்டு - வேளைக்கு இரண்டு இளநீரும் (தந்தார்); ஒன்றும் கொடோம் என்று, ஒரு தட்டில் பண்ணியங்கள் அன்றும் கொடுத்தார்; அதன்பின்னும் குளநீரும் இளநீரும் வேளைக்கு இரண்டு குறையாது தந்தார் என மொழி மாற்றிப் பொருள் கொள்க. ‘kÂnkfiy br¤JÉ£lhsh? என்று சீர்த்தி கேட்டாள்! இட்டினியும் காக்க இருப்பாரை மன்னிதான் பட்டினியாற் செத்தாளா பாவை? என்று - கிட்டி வினாவினாள் உள்ளாள்என் றோதலும் சிங்கக் கனாவினாள் உள்அஞ்சி னாள். 243 உரை: இட்டு இனியும் காக்க இருப்பாரை - மணிமேகலைக்கு இனியும் இட்டுக் காக்க இருப்போராகிய பணிப்பெண்களை நோக்கி; மன்னிதான் - அரசியான சீர்த்தி என்பாள்; பட்டினியால் செத்தாளா பாவை - மணிமேகலை பட்டினி போடப்பட்ட காரணத்தால் இறந்து ஒழிந்தாளா; என்று; கிட்டி வினாவினாள் - அருகில் வந்து யாருக்கும் கேட்காமல் மெதுவாகக் கேட்டாள்; உள்ளாள் என்று ஓதலும் - அந்தப் பணிப்பெண்கள் இருக்கின்றாள் சாகவில்லை என்று கூறிய அளவில்; சிங்கக் கனாவினாள் - சிங்கக் கனாக் கண்டவள் போன்ற அரசியானவள்; உள் அஞ்சினாள் - உள்ளத்தே அச்சம் அடைந்தாள். சிங்கக் கனாவினாள் - சிங்கக் கனவு கண்டவரைப் போன்றவள் என்க. பணிப்பெண்களின் மேல் ஐயப்பட்ட சீர்த்தி தன் மனமொத்த பாங்கிமாரிடம் சொன்னாள் மனமொத்த தன்பாங்கி மாரைஅவள் சாவை இனமொத்துக் காப்பீர்கள் என்றாள் - புனலற்ற நாவுக்குத் தேன்வார்க்கும் நல்லமணி மேகலையின் சாவுக்குத் தாளா துலகு. 244 உரை: மனம் ஒத்த தன் பாங்கிமாரை - அகமொத்த தன்னுடைய பாங்கிமாரிடம்; அவள் சாவை இனம் ஒத்துக் காப்பீர்கள் என்றாள் - மணிமேகலையைச் சாகடிப்பதை நாமெல்லாம் ஓரினத்தார் என்ற கொள்கையோடு ஆதரிக்க வேண்டும் என்று சீர்த்தி கேட்டுக் கொண்டாள்; புனல் அற்ற நாவுக்குத் தேன் வார்க்கும் நல்ல மணிமேகலையின் சாவுக்குத் தாளாது உலகு - உணவுடன் உட்கொள்ளும் தண்ணீரையும் அடைவில்லாத நாவுக்கு உணவோடு தேன் வார்த்துக் காத்த நல்ல மணிமேகலையின் சாவுக்கு உலகு ஒத்துக்கொள்ளாது. ஒரே அரண்மனையைச் சேர்ந்தவர் களை ஓரினம் ஆக்கிப் பேசினாள் அரசி. பின்னிரண்டடிகளின் கருத்து ஆசிரியருடையதாகக் கொள்க. மணிமேகலை சாகடிக்கப்பட வேண்டும்; அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று கூறினாள் அரசி. பாங்கிமார் மடியிற் கட்டிவந்து கொடுப்பார்கள் நொடியும் மறவாமல் நூறு கறிகள் மடியும் தெரியாமல் மாதர் - அடிசிலொடு கொல்லையால் வந்து கொடுப்பார் அரசியிடம் இல்லையே என்பார் இனிது. 245 உரை: நொடியும் மறவாமல் - பாங்கிமார் ஒரு நொடிப் போதாவது மணி மேகலையை மறக்காமல்; நூறுகறிகள் மடியும் தெரியாமல் மாதர் அடிசிலொடு - அடிமடியில் மறைத்தபடி பாங்கிமார் சோற்றொடு நூறுவகையான கறிகளுடன்; கொல்லையால் வந்து கொடுப்பார் - கொல்லைப் புறமாக வந்து மணிமேகலைக்கு இடுவார்கள்; ஆனால்; அரசியிடம் - அரசியிடமோ; இல்லையே என்பார் இனிது - அப்படிச் செய்தீர்களா என்று அரசி கேட்டால், இல்லையே என்று இனிதாகக் கூறிவிடுவார்கள். அரசிக்குத் தெரிந்துவிடக்கூடும் என்று, மடியில் மறைத்துக்கொண்டு கொல்லைப் புறமாக வந்து கொடுத்தார்கள், அரசிக்கு மனமொத்த பாங்கிமாரே. சாவாள் என்று எண்ணினேன்! அவள் மணலிற் பிடுங்கிய வள்ளிக் கிழங்கு உணற்கிழந்து சாவாள்என் றெண்ணினேன் ஓங்கும் மணற்கிழங்கு போலும் அவள்வாழ்ந்தாள் - தணற்பிழம்பில் பொற்பைக்காண் பேன்எனில் வையம் பொறாதிவள் கற்பைக்காண் பேன்என்றாள் காய்ந்து. 246 உரை: உணற்கு இழந்து - உணவை இழந்ததால்; சாவாள் என்று எண்ணினேன் - செத்துப் போவாள் என்று நினைத்தேன்; ஓங்கும் மணல் கிழங்கு போலும் அவள் வாழ்ந்தாள் - நாளுக்கு நாள் பருத்து வருகின்ற மணலிற் பிடுங்கிய வள்ளிக் கிழங்கைப்போல் அவள் வாழ்கின்றாள்; தணற் பிழம்பில் பொற்பைக் காண்பேன் எனில் - எரியும் தீயில் அவள் அழகிய உடம்பை இட்டு எரிக்கலாம் என்றால்; வையம் பொறாது - உலக மக்கள் பொறுக்க மாட்டார்கள்; ஆனதால்; இவள் கற்பைக் காண்பேன் என்றாள் காய்ந்து - இந்த மணிமேகலையின் கற்பை அழிப்பேன் என்று எரிச்சலோடு சொல்லிக் கொண்டாள். பொற்பு - அழகு; அழகுள்ள உடம்பைக் குறித்ததால் ஆகுபெயர். உணற்கு: இரண்டாம் வேற்றுமை நாலாம் வேற்றுமையாக மயங்கிற்று; உணலை இழந்து என்க. தணற் பிழம்பில் பொற்பைக் காணலாவது, அவளைத் தீயிலிட்டுக் கொல்வது. கற்பைக் காண்பது என்பதற்குக் கற்பை அழிப்பது என்பதே பொருளாகக் கொள்க. பூக்காரி மகனை அழைத்து மணிமேகலையின் கற்பைக் கெடுத்துவிடு என்றாள் சீர்த்தி! அவன் பட்டாடை கேட்டான் பூக்காரி பெற்றஒரு பொன்னனைக் கற்பழிக்கும் தீக்காரி யத்தில்நீ செல்லென்றாள் - நாக்குநீர்ச் சொட்டோடு தூயசீர் மன்னியே வேண்டுமே பட்டாடை என்றான் பணிந்து. 247 உரை: பூக்காரி பெற்ற ஒரு பொன்னனை - தன் பூக்காரி மகனான பொன்னனை நோக்கி; கற்பு அழிக்கும் தீக் காரியத்தில் நீ செல் என்றாள் - மணிமேகலையின் கற்பழிப்ப தான தீய காரியத்தைச் செய்ய நீ போ என்று சீர்த்தி சொன்னாள்; நாக்கு நீர்ச் சொட்டோடு - நாக்கில் ஊரும் நீர்ச் சொட்டுடன்; தூயசீர் மன்னியே - தூய்மையும் சீர்மையும் பொருந்திய அரசியாரே; வேண்டுமே பட்டாடை என்றான் பணிந்து - அதற்கு எனக்குப் பட்டாடை வேண்டுமே என்று பணிவோடு சொன்னான். கனியும் கன்னியும் கையிற் கிடைக்குமுன் நாக்கில் நீருறுவது உண்டு. மணிமேகலை ஆகிய அழகிய பெண் கிடைக்கப் பெற்றாள் என்று எண்ணிய பொன்னன் நாக்கில் நீர் சொட்டியது காண்க. மணிமேகலை தன்னை விரும்ப வேண்டும் என்பதற் காகப் பட்டாடை கேட்டான் பகட்டாக உடுத்து நெருங்க. கடுக்கன் வேண்டும் என்றான் காதுக்குக் கல்லிழைத்த நல்ல கடுக்கன்இப் போதுக்குத் தந்திட்டாற் போதும் என்றான் - மாது மணிமே கலையின் மனம்பறிக்கச் சீர்த்தி அணிஎன் றளித்தாள் அவை. 248 உரை: காதுக்குக் கல் இழைத்த நல்ல கடுக்கன் - காதில் அணிந்து கொள்ளத் தக்கதும் கல் இழைத்ததும் நல்லதுமான கடுக்கன்; இப்போதுக்குத் தந்திட்டால் போதும் என்றான் - இப்போதுக் குள்ள தேவையை நிறைவு செய்வதற்குக் கொடுத்தால் அதுவே போதும் என்று பொன்னன் சொன்னான்; மாது மணிமேகலையின் - மாதான மணிமேகலையின்; மனம் பறிக்க - எண்ணத்தைப் பொன்னன் கவரவேண்டுமே என்பதற்காக; சீர்த்தி - அரசி யானவள்; அணி என்று அளித்தாள் அவை - பட்டாடையும் கடுக்கனுமாகிய அவைகளை அணிந்து கொள் என்று கொடுத்தாள். கடுக்கன் எப்போதுமே வேண்டும் என்று கேட்டால், அரசி மறுக்கக்கூடும் என்று எண்ணிய பொன்னன், இப்போதுக்குத் தந்திட்டால் போதும் என்றான். பொன்னன் உடுத்துக் கொண்டு எழுந்தான்; விழுந்தான் காலுக்குத் தோற்செருப்புக் கையில் விரித்தகுடை மேலுக்குக் காண விளக்கொருகை - ஏல எழுந்தான் இரவிலே வேட்டி தடுக்க விழுந்தான் விலைபோகா மாடு. 249 உரை: காலுக்குத் தோற் செருப்பு கையில் விரித்த குடை மேலுக்குக் காண விளக்கு ஒரு கை ஏல - காலுக்குத் தோற் செருப்பும், கையில் விரித்துப் பிடித்த குடையும், பிறர் கண்டு மெச்ச ஒரு கையில் ஏற்றிய விளக்கும் பொருந்த; எழுந்தான் இரவிலே - இராப்போதிலே மணிமேகலையிடம் போக எழுந்தான்; வேட்டி தடுக்க - புதிய பட்டு வேட்டி காலைத் தடுக்கவே; விழுந்தான் விலைபோகா மாடு - விலைபோகாத மாடுபோன்ற பொன்னன் விழுந்தான். இதற்கு முன் பட்டாடை கட்டி அறியாதவன்; அப் பட்டாடையும் புதியது, பெரியது, மொடமொடப்பானது; தடுக்கி விழுந்தான். ஏல - இயல என்பதன் மருஉ. மணிமேகலை இல்லை; மீசைக்காரனைப் பார்த்தான் பொன்னன் ஆசைவைத்தேன் உன்மேலென் றேநுழைந்த அப்பொன்னன் மீசைவைத்த ஓராளை உட்கண்டான் - ஓசையின்றிச் சீர்த்தியிடம் ஓடிவந்தான் செய்தி தெரிவித்தான் பார்த்ததுபொய்; பார்போய்என் றாள். 250 உரை: ஆசை வைத்தேன் உன்மேல் என்றே நுழைந்த அப் பொன்னன் - உன்மேல் நான் ஆசை வைத்தேன் என்று சொல்லிக் கொண்டே மணிமேகலை அறையுள் சென்ற அந்தப் பொன்னனானவன்; மீசை வைத்த ஓர் ஆளை உட்கண்டான் - மீசை வைத்திருப்பவனாக ஓர் ஆளை அவ்வறையினுள் பார்த்தான்; ஓசை இன்றி - ஓசை காட்டாமல்; சீர்த்தியிடம் ஓடிவந்தான் - அரசியிடம் ஓடி வந்தான்; செய்தி தெரிவித்தான் - நடத்த சேதியைத் தெரிவித்தான்; அதற்கு அவள்; பார்த்தது பொய் - நீ பார்த்ததாகச் சொல்லியது பொய்யாகும்; பார் போய் என்றாள் - போய் நன்றாய்ப் பார் என்று கூறினாள். மணிமேகலை அறையில் மணிமேகலை இல்லை; அதே இடத்தில் ஒரு மீசைக்காரன் இருக்கக் கண்டேன் என்ற பொன்னன் சொல்லை, அரசி நம்பவில்லை. நீ பார்த்தது பொய் என்று அதட்டி அனுப்பினாள் என்க. ஆண் பிள்ளைதான் என்று பொன்னன் ஓடிவந்தான். காட்டுக்குப் பாய்கின்ற கால்வாய் நிகர்பொன்னன் வீட்டுக்குள் ஓடி விடலைகண்டே - ஓட்டம் பிடித்தான் பிடித்தால் பிடிகாணாப் பையன்! கடித்தாள் அரசிதன் கை. 251 உரை: காட்டுக்குப் பாய்கின்ற கால்வாய் நிகர் பொன்னன் - காட்டுக்குப் பாய்கின்ற கால்வாய் போல் பயனற்ற வேலை செய்யும் பொன்னனானவன்; வீட்டுக்குள் ஓடி - மணி மேகலை இருந்த அறைவீட்டுக்குள் ஓடி; விடலை கண்டே - ஆடவனைக் கண்டு; ஓட்டம் பிடித்தான் பிடித்தால் பிடி காணாப் பையன் - பிடித்தால் ஒரு பிடி அளவும் இல்லாத சிறு பையனான அவன் அரசியை நோக்கி ஓட்டம் பிடித்தான்; அரசி தன் கை கடித்தாள் - மீண்டும் திரும்பி அஞ்சி ஓடி வந்த எரிச்சலால் அரசி தன் கையைக் கடித்துக்கொண்டாள். அரசி தன் கை கடித்தாள் - இது வெகுளி யாலும் தன் தவற்றை உணர்ந்ததாலும் ஏற்படும் மெய்ப்பாடு. அரசிக்குப் பெண்ணாகப் பொன்னனுக்கு ஆணாகத் தோற்றமளித்தாள் மணிமேகலை தான்கண்டாள் தையலையே அவ்வறைக்குள்! பொன்னனவன் தான்கண்டான் ஆடவனைக்! கண்டிருவர் - மேனடந்தார் கண்டுமலைத்தேன் என்றான் காட்டுப்பூக் காரிமகன் கண்டுமலைத் தேன் என்றாள் காம்பு. 252 உரை: தான் கண்டாள் தையலையே அவ்வறைக்குள் - அந்த அறையினுள் அரசியானவள் மணிமேகலையைக் கண்டாள்; பொன்னன் அவன் தான் கண்டான் ஆடவனை - பொன்னன் முன்கண்ட ஆடவனைக் கண்டான்; கண்டு இருவர் - அவ்வாறு பார்த்தபின் இருவரும்; மேல் நடந்தார் - மேற்புறத்தே சென்றார்கள்; கண்டு மலைத் தேன் என்றான் காட்டுப் பூக்காரி மகன் - அவனைக் கண்டு நான் மலைத்து விட்டேன் என்று காட்டுப் பூக்காரி மகனாகிய பொன்னன் சொன்னான்; கண்டு - அங்குக் காணப்பட்ட மணிமேகலை ஒரு கற்கண்டு; மலைத்தேன் - மலைப்புறத்துள்ள சிறந்த தேன்; என்றாள் காம்பு - மூங்கிலை நிகர்த்த தோளையுடைய அரசி இவ்வாறு கூறினாள். தோற்றத்தின் இனிமைக்குக் கற்கண்டும் மலைத் தேனும் உவமை. பொன்னன் முன்கண்ட மீசைக்காரனையே கண்டதனால் மலைத்தான். காம்பு - மூங்கில்; பெண்கள் தோளுக்கு உவமை. இது பெண்ணுக்கு ஆனதால் உவமை ஆகுபெயர். எனக்கு அமிழ்து மணிமேகலையே! உண்ணாமல் வாழ்கின்றாள்! உற்றொருவன் கற்பழியப் பண்ணாமல் மாற்றுருவம் பற்றுகின்றாள் - தண்ணார் தமிழன்றோ சாருநெறி தன்னலமே எண்ணாள் அமிழ்தன்றோ அன்னாள் எனக்கு. 253 உரை: உண்ணாமல் வாழ்கின்றாள் - ஊண் இன்றியே இனிது வாழ்ந்திருக்கின்றாள்; உற்று ஒருவன் கற்பு அழியப் பண்ணாமல் - நெருங்கி ஒருவன் கற்பை அழியச் செய்யாமல்; மாற்று உருவம் பற்றுகின்றாள் - மாற்றுருவம் பூணுகின்றாள்; தண்ணார் - தண்மை பொருந்திய; தமிழ் அன்றோ சாரும் நெறி - தமிழ் நெறி அல்லவா நான் சாருதற்கு ஏற்ற நெறி; தன் நலமே எண்ணாள் - மணிமேகலை தன்னலத்தைச் சிறிதும் எண்ணாதவளா யிருக்கின்றாள்; அமிழ்தன்றோ அன்னாள் எனக்கு - நான் சார்ந்து உய்தற்கு அவள் அமிழ்து போல் இனியவள் அல்லவா? தண்ணார் - தண்மை ஆர்ந்த; தண்மை - குளிர்ச்சி. என் மகனை மணிமேகலை கொல்லவில்லை! என்மகனைக் கொன்றாள் இவளென்றால் அம்முனிவர் நன்மகளைக் கொண்டாட நாணுவரே - தன்மகனாய்த் தன்மகளாய்த் தந்தையாய் இவ்வுலகைக் காணுகின்ற பொன்மகளே என்றன் புகல். 254 உரை: என் மகனைக் கொன்றாள் இவள் என்றால் - என் மகனான உதயகுமரனைக் கொன்றவள் இந்த மணிமேகலை தான் என்று சொன்னால், அம் முனிவர் நன் மகளைக் கொண்டாட நாணுவரே - அங்கிருந்த அந்த முனிவர்கள் நன்மகளாகிய மணிமேகலையைப் பற்றிப் புகழ்ந்து பேச நாணியிருப்பார்களே; தன்மகனாய் - தான் பெற்ற பிள்ளை என்றும்; தன் மகளாய் - தான் பெற்ற பெண் என்றும்; இவ் வுலகைக் காணுகின்ற - இவ்வுலக மக்களை யெல்லாம் எண்ணுகின்ற; பொன் மகளே என்றன் புகல் - பொன் போற் சிறந்த இம் மணிமேகலைதான் என் புகலிடம். அங்கிருந்த முனிவர்களும் மணிமேகலையைப் புகழ்வதால் அவள் என் மகனைக் கொல்லவில்லை என்று சீர்த்தி கருதினாள். மணிமேகலையைக் கொல்லுவது அறமா? பண்டு துறந்தோர் குறைபாடு பட்டவரைக் கண்டு நிறைபாடு காண்பார்போல் - தொண்டுதவம் என்பாளை வீழ்த்தல் இளநீர்க்காய் ஈன்தென்னை மென்பாளை வீழ்த்தல்என் றாள். 255 உரை: பண்டு துறந்தோர் - பண்டைத் தமிழ்த் துறவிகள்; குறைபாடு பட்டவரை - குறைபாடு கொண்ட பொதுமக்களை; கண்டு - அவர்களின் நிலையை அறிந்து; நிறைபாடு காண்பார் போல் - நிறைபாடு அடையும் வகையில் தொண்டு செய்வார் போலவே; தொண்டு தவம் என்பாளை - பொதுமக்கட்குச் செய்யும் சிறந்த தொண்டுதான் தவமாகும் என்று எண்ணிச் செயல் செய்கின்றவளை; வீழ்த்தல் - கொல்லுவதென்பது; இளநீர்க்காய் ஈன் தென்னை மென்பாளை வீழ்த்தல் - இளநீர்க் காயைத் தருகின்ற தென்னை மரத்தின் மென்மையான பாளையைச் சாகடிப்பதே போலும்; என்றாள் - என்று சீர்த்தி தனக்குள் சொல்லிக் கொண்டாள். தென்னம் பாளையைச் சாகடித்தால் உலகுக்கு இளநீர் கிடைக்காமற் போய்விடும்; அதுபோல் மணிமேகலையைச் சாகடித்தால் பொதுத் தொண்டே அற்றுப்போகும் என்று சீர்த்தி கருதினாள். சீர்த்தி வாய்மை கண்டாள்! அறமா மணிமே கலையை அழித்தல் அறமா அதுமா நிலமாள் - திறமா எனஅறி வைந்திலும் எய்தினாள் ஆறாம் மனஅறிவில் வாய்மைகண் டாள். 256 உரை: அறமா மணிமேகலை - அறச் செயலிற் சிறந்த மணிமேகலையை; அழித்தல் - ஒழித்து விடுவது; அறமா - அறமாகுமா? அன்றியும்; அது - அவ்வாறு அழிப்பது; நிலம் ஆள் திறமா - உலகை ஆளும் எமக்குரிய ஆட்சித் திறமா? என - என்று இவ்வாறு; அறிவு ஐந்திலும் எய்தினாள் - சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் ஆகிய ஐந்தறிவையும் அடைந்து ஆய்ந்து பார்த்தாள் கடைசியில்; ஆறாம் - ஆறாவதாகிய; மன அறிவில் - மன அறிவினால்; வாய்மை கண்டாள் - உண்மை இன்னதுதான் என்று தெரிந்துகொண்டாள் சீர்த்தி. 1. வாய் என்னும் பொறிவாயிலாகச் சுவை என்னும் அறிவைக் கொண்டு ஆராய்ந்தாள். 2. கண் என்னும் பொறிவாயிலாக ஒளி என்னும் அறிவைக் கொண்டு ஆராய்ந்தாள். 3. உடல் என்னும் பொறிவாயிலாக ஊறு என்னும் அறிவைக் கொண்டு ஆராய்ந்தாள். 4. காது என்னும் பொறி வாயிலாக ஓசை என்னும் அறிவைக் கொண்டு ஆராய்ந்தாள். 5. மூக்கு என்னும் பொறி வாயிலாக நாற்றம் என்னும் அறிவைக் கொண்டு ஆராய்ந்தாள்; பயனில்லை. கடைசியாக மனம் என்னும் ஒன்றின் வாயிலாக உணர்வு என்பதைக் கொண்டு மணிமேகலையைக் கொல்வது சரியில்லை என்னும் உண்மையைக் கொண்டாள். பூவை விலக்கி மணிமேகலையின் பொன்னடியைப் பூணேனா? சாவை விலக்கித் தமிழ்த்தொண்டு செய்யேனா பூவை விலக்கியவள் பொன்னடியே - தேவைஎனப் பூணேனா என்தலையில் பூவாய்ப் பொழியும்அறம் காணேனா பற்றுக் கடந்து. 257 உரை: சாவை விலக்கி - என்றும் வாழ்வதோர் ஆற்றலைப் பெற்று; தமிழ்த் தொண்டு செய்யேனா - மணிமேகலை மேற்கொண்ட தமிழ்முறைத் தொண்டைச் செய்ய மாட்டேனா; பூவை விலக்கி - என் தலையில் உள்ள மலரை நீக்கிவிட்டு; அவ்விடத்தில்; அவள் பொன்னடியைத் தேவை எனப் பூணேனா என் தலையில் - என் தலையில் அவளின் பொன் அடியைச்சூடிக் கொள்ள மாட்டேனா; பூ வாய் - பூப்போன்ற அவளின் வாயானது; பொழியும் - பொழிகின்ற; அறம் - அறத்தை; பற்றுக் கடந்து - காமம் முதலிய பற்றை நீக்கி; காணேனா - மேற்கொண்டு நடக்க மாட்டேனா. பூவாய் பொழியும்: எழுவாய்த் தொடர். மணிமேகலை எதிரில் சீர்த்தி கலையுணர்ந்த மேலோரும் காணற் கரிய நிலையுணர்ந்த சீர்த்தி நிறைபால் - முலையாவின் கன்றேபோல் சென்று மணிமே கலையின்முன் நின்றே அழுதாள் நெடிது. 258 உரை: கலையுணர்ந்த மேலோரும் - கல்வி வல்ல மேலோர் களும்; காணற்கு அரிய - கண்டறிவதற்கு அரிய; நிலை யுணர்ந்த சீர்த்தி - மணிமேகலை தவமுடையாள் என்ற உண்மை நிலையை உணர்ந்த சீர்த்தியானவள்; நிறைபால் முலை ஆவின் கன்றே போல் - பால் நிறைந்த முலையுடைய பசுவின் கன்றுபோல; சென்று மணிமேகலையின் முன் - தன்னிடத்தை விட்டுச் சென்று, மணிமேகலை எதிரில்; நின்றே அழுதாள் நெடிது - நின்றபடி நெடிது அழுதாள் சீர்த்தி; நெடிது - நீண்ட நேரம். சீர்த்தியின் விண்ணப்பம் ஒறுத்தோம் சிறையினில் உய்த்தோம் இடவும் மறுத்தோம் இடரெலாம் வைத்தோம் - பொறுத்தருள்க தீயைச் சிறுவீடு சேரினும் தீவைத்த சேயைத் தழுவும்தாய் கை. 259 உரை: ஒறுத்தோம் - குற்றங்காட்டித் தண்டித்தோம்; சிறையில் உய்த்தோம் - சிறைக்கூடத்திற் தள்ளினோம்; இடவும் மறுத்தோம் - உணவு இடவும் ஒப்பாமல் இருந்தோம்; ஆதலால்; இடர் எல்லாம் வைத்தோம் - துன்பத்தையெல்லாம் ஏற்படுத் தினோம்; பொறுத் தருள்க - மன்னித்தருள வேண்டும்; தீயைச் சிறுவீடு சேரினும் - சிறுவீடு தீப்பற்றிக் கொண்டாலும்; தீவைத்த சேயை - தீவைத்த அந்தப் பிள்ளையை; தாய் கை தழுவும் - தாயின் கை விலக்காது தழுவிக்கொள்ளும். அந்தத் தாய் போல் நாங்கள் செய்த குற்றங் களைப் பொறுத்தருளுக என்றாள் அரசி. இடுதல் - உணவு இடுதல். நான்தான் தவறு செய்தேன் என்றாள் மேகலை முந்தா தடங்கி மொழிந்திட்ட சீர்த்திக்குச் செந்தா மரைவாய் திறந்தாள்முன் - வந்தது நான்செய் தவறு பொறுத்ததாம் நல்லோய்நீ தான்செய்த தென்ன தவறு. 260 உரை: முந்தாது அடங்கி - எதிரில் நெருங்காமல் ஆடை ஒதுக்கி; மொழிந்திட்ட - இவ்வாறு விண்ணப்பித்துக் கொண்ட; சீர்த்திக்கு - அரசிக்கு; செந்தாமரை வாய் திறந்தாள் - மணிமேகலை தன் செந்தாமரை போன்ற வாய் திறந்து மறுமொழி கூறினாள்; முன் வந்தது - அரசியே இவ்வாறு என் முன் நீ வந்ததானது; நான் செய்தவறு பொறுத்தது ஆம் - நான் இழைத்த குற்றத்தைப் பொறுத்துக் கொண்டதற்கு அடையாள மாகும்; நல்லோய் - நற்குணமுடையவளே! நீதான் செய்தது என்ன தவறு - நீ செய்த தவறு என்ன இருக்கிறது? ஒன்று மில்லை என்றபடி. இளவரசன் இறப்புக்கு நான் தான் காரணமா யிருந்தேன்; என் குற்றத்திற்குத் தண்டனை தேடினீர்; நீவிர் செய்த குற்றம் ஒன்றுமில்லை என்று மணிமேகலை கூறினாள். முந்தாது - முற்படுதல் இல்லாமல்; நெருங்காமல் என்றபடி. சற்று விலகிநின்று பேசுவதும் ஆடை விலக்குவதும், பெரியாரிடம் காட்டவேண்டிய மரியாதை ஆதலால், அரசி அவ்வாறு நடந்து கொண்டாள் என்க. மகன் செத்தது உனக்குத் துன்பம்! என்னைச் சிறையில் வைத்தது எனக்கு மகிழ்ச்சி உன்னழகைப் பாரில் உரித்துக்கொண் டேபிறந்த பின்னழகும் முன்னழகும் பெற்றமகன் - என்னழகால் செத்தது துன்பம் உனக்குச் சிறையில்எனை வைத்தது மாமகிழ்ச்சி எற்கு. 261 உரை: உன் அழகைப் பாரில் - உலகில் உன் அழகை; உரித்துக் கொண்டே பிறந்த - உரித்துக்கொண்டு பிறந்த; பின்னழகும் முன் னழகும் பெற்றமகன் - பின்னழகும் முன்னழகும் அடையப் பெற்ற உன் பிள்ளை; என் அழகால் - என் அழகில் வைத்த ஆசையால்; செத்தது - இறந்ததானது; துன்பம் உனக்கு - உனக்குத் துன்பம் தருவதாயிற்று; சிறையில் எனை வைத்தது - என்னைச் சிறையில் வைத்தது; மாமகிழ்ச்சி எற்கு - எனக்குப் பெரியதொரு மகிழ்ச்சி தருவதாயிற்று; பெற்றோர் போலவே பிள்ளையிருந்தால் பெற்றோரை உரித்துக்கொண்டு பிறந் துள்ளான் என்று கூறுவது உலக வழக்கம். எற்கு - எனக்கு; என் என்பது கு என்ற நான்கனுருபு ஏற்கும்போது, அகரச் சாரியை பெற்று வருவது பெரும் பான்மை; ஆனால் எற்கு என்பது அகரச் சாரியை பெறாது வந்தது. அரசனிடம் அரசி இலவை இதழ்என்னும் மன்னி மறுவில் நிலவைச் சிறைவைத்தல் நேர்மை - அலவென்று காவலன்பால் சொன்னாள் கடிது கருங்குயிலின் கூவலன்பால் ஒப்பினான் கோன். 262 உரை: இலவை இதழ் என்னும் மன்னி - இலவுதான் என் வாயிதழ் என்று உலகுக்குக் காட்டுவாள் போன்ற அரசி; மறு இல் நிலவை - குற்றமற்ற நிலவுபோன்ற மணிமேகலையை; சிறை வைத்தல் நேர்மை அல - சிறையில் வைத்திருத்தல் நேர்மை அல்ல; என்று - என்றிவ்வாறு; காவலன்பால் சொன்னாள் - அரசனிடம் கூறினாள்; கடிது - உடனே; கருங் குயிலின் - கருங்குயில் போன்ற அரசி யின்; கூவல் - கூவல் போன்ற சொற்களை; அன்பால் ஒப்பினான் கோன் - அரசன் அன்பினால் ஒத்துக் கொண்டான். இலவு - வாயிதழுக்கு உவமை. கருங்குயில் என்பதற்கு ஏற்ப அவள் சொல்லைக் கூவல் என்றார். மணிமேகலையை விடுதலை செய்தார்கள்! அணங்கின் அடிமலர் மன்னவன் மன்னி வணங்கி அரண்மனை வாயில் - பிணங்கி இருந்த தமிழருக் கீந்தார் சிறையில் இருந்த தமிழை எடுத்து. 263 உரை: அணங்கின் அடிமலர் - மணிமேகலையின் மலர் போன்ற அடியை; மன்னவன் மன்னி வணங்கி - அரசனும் அரசியும் வணங்கி நின்று; அரண்மனை வாயில் - அரண்மனை முகப்பில்; பிணங்கி இருந்த தமிழருக்கு ஈந்தார் சிறையில் இருந்த தமிழை எடுத்து - மாறுபட்ட எண்ணத் தோடிருந்த தமிழ் மக்களுக்குச் சிறையில் இருந்த தமிழான மணிமேகலையை எடுத்துக் கொடுத்தாற்போல் மகிழ்ந்து கொடுத்தார்கள் அரசனும் அரசியும். தமிழை அதன் இனிமை கருதி அமிழ்தென்று கூறுவது இயல்பு. மணிமேகலையைத் தமிழ் என்று கூறியதற்கு ஏற்றாற்போல், எடுத்துக் கொடுத்தார் எனப்பட்டது. வாய் - வாயில்; முகப்பு. பிணங்கி - மணிமேகலையை விடுதலை செய்யாமையால் மனம் மாறுபட்டு. சிறைமீண்ட செல்விக்கு வரவேற்பு நீர்க்கும் உணவுக்கும் கையேந்தி நிற்கின்றார் யார்க்கும் தமிழ்வேண்டும் என்றேற்றார் - வேர்க்கே அறிவொன்று வேண்டும் அதற்குத் தமிழின் நெறிஒன்று வேண்டுமென் றார். 264 உரை: நீர்க்கும் உணவுக்கும் - தண்ணீர்க்கும் அதனோடு சேர்ந்த உணவாகிய கஞ்சிக்கும்; கையேந்தி நிற்கின்றார் யார்க்கும் - கையேந்தி நிற்கின்ற எல்லார்க்கும்; தமிழ் வேண்டும் - தமிழாகிய நீ தேவை; என்று - என்று கூறி; ஏற்றார் - மணிமேகலையை வரவேற்றார்கள். அன்றியும்; வேர்க்கே - வாழ்க்கையின் அடிப்படைக்கே; அறிவு ஒன்று வேண்டும் - அறிவாகிய ஒப்பற்ற பொருள் தேவை; அதற்கு - அந்த அறிவுக்கு; தமிழின் நெறி ஒன்று வேண்டும் என்றார் - தமிழ் நெறியாகிய ஒப்பற்ற பொருள் தேவை என்று சொன்னார்கள். நீ தமிழ், எங்கள் நல்வாழ்வுக்குத் தமிழ் இன்றி யமையாதது என்று கூறி, மணிமேகலையை வரவேற்றார்கள். அறிவு வேண்டும்; அறிவுக்கும் ஆதாரமாகத் தமிழ் வேண்டும்; தமிழ் நூற்களால் வரும் அறிவே சிறந்தது என்பது கருதத் தக்கது. பிற மொழி நூற்களினால் வரும் அறிவு வாழ்க்கைக்குப் பெரும்பயனை விளைக்காது என்பன இச் செய்யுளால் அறிந்து பயனெய்துக. பிறமொழி நூற்கள், கொலை முதலிய செய்தார்க்கும் கழுவாய் கூறி அக் கொலை முதலிய குற்றத்தை வளர்க்கும். மக்களின் பிறப்பிலேயே உயர்வு தாழ்வுகூறிக் கலாம் பல விளைக்கும். இன்னல் வந்துற்ற காலை இன்னாதனவும் செய்க என்று கூறி, உலகைத் தாழ்வில் செலுத்தும். ஒருத்திக்கொருவனே என்ற சிறந்த கொள்கையை மறுத்துக் கற்பைக் கெடுக்கும். பிறவும் இவ்வாறே. தமிழில்லார் அறிவில்லார்! அந்தமிழ் இல்லார் அறிவில்லார் அன்னவர்க்குக் குந்தக் குடிசை குடிக்கக்கூழ் - கந்தை அடைய விடாரே அறிவின் இடையார் அடைவிப்பார் முற்றுணர்ந் தார். 265 உரை: அந்தமிழ் இல்லார் அறிவில்லார் - அழகிய தமிழ்நூற் பயிற்சி இல்லாதவர்கள் அறிவில்லாதவர்களே; அன்னவர்க்கு - தமிழறியாத அவர்கட்கு; குந்தக் குடிசை - உறையுளும்; குடிக்கக் கூழும் - உண்ண உணவும்; கந்தை - கட்டக் கந்தை யும்; அடைய விடாரே அறிவின் இடையார் - இடைப்பட்ட அறிவினோர் அடையும்படி விடமாட்டார்கள்; அடைவிப்பார் - அடையும்படி செய்வார் யார் எனில்; முற்றுணர்ந்தார் - தமிழுடையாரே; அறிவின் இடையார் -அறிவிலே இடைப் பட்டவர்கள். தமிழறியார் ஒழுக்கமறியார் ஆதலின் இடைப் பட்ட அறிவினர்; அவர்கட்கு உறையுள் முதலிய எதுவும் கிடைக்க விடமாட்டார்கள். தமிழுணர்ந்த முற்றுணர்வினர் அவர்கட்குத் தமிழ் உணர்த்தி நலம் புரிவார் என்பது இச் செய்யுளின் கருத்து. தமிழிலக்கியம் கண்டவர்க்கே உணர்வு வரும் கடையார் அறிவிலார் இடையர் சிறிதே உடையர்! தலையார் உணர்ந்தார் - தடையின்றி வெள்ளத் தமிழின் இலக்கியம் வேண்டினோர்க் குள்ளத் துணர்வு வரும். 266 உரை: கடையர் அறிவிலார் - அறிவில்லாதவர்கள் உலகில் கடைப்பட்டவர்கள்; இடையர் சிறிதே உடையர் - சிறிதளவு அறிவுடையவர் இடைப்பட்டவர் ஆவார்; தலையார் உணர்ந்தார் - உணர்வு நிரம்பியவர்கள் தலையாகியவர்கள்; தடை யின்றி வெள்ளத் தமிழின் இலக்கியம் வேண்டினோர்க்கு - தங்கு தடையில்லாமல் வெள்ளம் போன்று மிகுந்துள்ள தமிழிலுள்ள இலக்கியங்களை விரும்பி அடைந்தவர்க்கு; உள்ளத்து உணர்வு வரும் - உள்ளத்துக்கு வேண்டிய அளவு உணர்வு வந்தமையும். ஆதலின் தமிழிலக்கியம் படிக்க வேண்டும்; படித்து மக்களில் தலையானார் என்று புகழப் படுதல் வேண்டும் என்பது கருத்து. இல்லாரை எள்ளுவர் இன்னிசை வெண்பா கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தகவென்ற நேயத்து வள்ளுவர் வாய்மையை உள்ளுக உள்ளாரை எள்ளுவர் இல்லாதார் என்று. 267 உரை: கற்க கசடு அற - ஐயமும் திரிபும் நீங்குமாறு கற்க வேண்டும்; கற்பவை கற்ற பின் - அவ்வாறு கற்கத்தக்க நூல்களைக் கற்ற பின்; நிற்க அதற்குத் தக - கற்றவாறு அதற்குத் தக்கபடி நடக்க வேண்டும்; என்ற - என்று அருளிச் செய்த; நேயத்து - மக்கள் பால் இரக்கமுடைய; வள்ளுவர் வாய்மையை - திருவள்ளுவரின் உண்மைக் கருத்தை; உள்ளுக - மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்; உள்ளாரை - எண்ணிப் பார்க்காதவரை; இல்லாதார் என்று - இவர் அறி வில்லாதவர் என்று; எள்ளுவர் - உலகத்தார் இகழ்வார்கள். வாய்மை - காலத்தாலும் இடத்தாலும் நடைமுறை யாலும் மாறுதல் இல்லாத உண்மை. உள்ளுவர் என்பதன் எதிர்மறை உள்ளார் என்பது. உள்ளார் - நினையாதவர். இவ்வாறெல்லாம் மணி மேகலை சொன்னாள் என்று கொள்க. மணிமேகலை உலக அறவிக்குச் சென்றிருந்தாள் என்று கலத்தோடும் ஏற்ற உணவோடும் நன்று மணிமே கலைநடந்து - சென்றிருந்தாள் தாம்புகார் ஆயின் தழைவிலைஎன் றான்றோர்வாழ் பூம்புகார் மன்றம் புனைந்து. 268 உரை: என்று - என்றிவ்வாறு வரவேற்றவர்க்குக் கூறி; கலத்தோடும் - அமுதசுரபி என்ற கலத்தோடும்; ஏற்ற உணர்வோடும் - அதில் இரந்து பெற்ற உணவோடும்; நன்று மணிமேகலை நடந்து - கலத்தோடு மணிமேகலை கால் நடையாய் நடந்து; சென்றிருந் தாள் - போய் அமைந்தாள்; எங்கே; தாம்புகார் ஆயின் தழைவு இலை என்று ஆன்றோர் வாழ் - தாம்புக்கு வாழ்தல் இல்லா விட்டால் தழைவு ஏற்படா தென்று ஆன்றோர் சென்று வாழ்கின்ற; பூம்புகார் மன்றம் புனைந்து - பூம்புகாரில் அமைந்த அறவி என்ற நிறுவனத்திற்கு அழகு செய்து. சென்று தாம்புகார் ஆயின் தழைவு இலை என்று ஆன்றோர் வாழ் பூம்புகார் மன்றம் புனைந்து இருந்தாள் என மொழிமாற்றிப் பொருள் காண்க. மேகலை காஞ்சி சென்றாள் அறவணரும் அன்னம் சுதமதியும் காஞ்சி உறஇருக்கும் செய்தி உணர்ந்த - அறமா மணிமே கலைதான் மணிக்கல மென்னும் அணிமேவச் சென்றிட்டாள் அங்கு. 269 உரை: அறவணரும் - அறவண அடிகளும்; அன்னம் சுதமதியும் - அன்னம் போன்ற சுதமதியும்; காஞ்சி உற இருக்கும் - காஞ்சிக்கு வர இருப்பதான; செய்தி உணர்ந்த - செய்தியை உணர்ந்த; அறம் மா மணிமேகலைதான் - அறத்திற் சிறந்தவளான மணிமேகலை; மணிக்கலம் என்னும் - அழகிய கலம் என்பதான; அணிமேவ - இழை பொருந்த; சென்றிட்டாள் அங்கு - போனாள் காஞ்சிக்கு. மன்னனின் விண்ணப்பம் அரசனும் மற்றும் அலுவலர் தாமும் வரிசையின் வந்து வணங்கித் - திருவார் அறவணரே அம்மையே காஞ்சியின் அல்லல் அறவருள வேண்டுமென்றார் ஆங்கு. 270 உரை: அரசனும் மற்று அலுவலர் தாமும் - காஞ்சிக்கு மன்னனும் மற்று முள்ள அமைச்சர் முதலிய அலுவலர்களும்; வரிசையான் வந்து வணங்கி - மாலை கனிவகை முதலிய வரிசையுடன் வந்து வணக்கம் செய்து; திருவார் அறவணரே - பெருமைமிக்க அறவண அடிகளே; அம்மையே - சுதமதி அம்மையே; காஞ்சி யின் அல்லல் - காஞ்சி அடைந் திருக்கும் பசித்தொல்லையை; அற அருளவேண்டும் - நீங்கும்படி அருள் செய்யவேண்டும்; என்றார் ஆங்கு - அவ்விடத்தில் இவ்வாறு கூறினார்கள். வரிசை யின் வந்து - வரிசையாக வந்து நின்று என்று கூறினும் ஆம். மற்றும் வேண்டுகோள் மழையில்லை கஞ்சி வளமில்லை எம்மேற் பிழையில்லை எங்கும் பெரிதும் - தழைந்துள்ள பஞ்சம் அகற்றஅருட் பஞ்சமா என்றுரைத்தான் நெஞ்சு துடித்தரசன் நின்று. 271 உரை: மழை இல்லை - நீண்ட நாட்களாக மழையே இல்லை; அதனால்; கஞ்சி வளமில்லை - காஞ்சியில் பஞ்சம் வந்துள்ளது; என்மேற் பிழையில்லை - ஆட்சி நடத்தும் எங்கள்மேல் சொல்வதோர் பிழை கிடையாது; எங்கும் பெரிதும் - எவ்விடத்திலும் பெரிய அளவில்; தழைந்துள்ள - தழைந்திருக்கின்ற; பஞ்சம் அகற்ற - பஞ்சத்தை நீக்குவதற்கு வேண்டிய; அருள் பஞ்சமா - அருளுக்குப் பஞ்சமா நேர்ந்து விடும்; என்று உரைத்தான் நெஞ்சு துடித்து அரசன் - அரசன் நெஞ்சு துடித்து எதிர் வந்து நின்று இவ்வாறு கூறினான். அருட் பஞ்சமா உங்கள் அருளுக்கும் பஞ்சமா என்ற வினா மறைவினா; இல்லை என்றபடி. அறவணர் ஆறுதல் மன்னர் நிறைகொற்றம் வாழ்கவே காஞ்சிதான் நன்னர் நலமடைதல் திண்ணமே - என்னும் நிலைக்கும் நினைப்புடையோம் மாது மணிமே கலைக்கும் நினைப்புண்டு காண். 272 உரை: மன்னர் நிறை கொற்றம் வாழ்கவே - அரசரின் நிறைந்த வெற்றி வாழ்வதாக! காஞ்சிதான் - காஞ்சிநகரானது; நன்னர் நலம் அடைதல் திண்ணமே என்னும் - மிகவும் நலமடைதல் உறுதி என்பதொரு; நிலைக்கும் நினைப்புடை யோம் - நிலையான நினைவுடையேம்; மாது மணிமேகலைக் கும் - மாதரிற் சிறந்த மணிமேகலைக்கும்; நினைப்பு உண்டு - இத்தகைய நினைவே உண்டு; காண் - நீ அறிவாயாக. நன்னர் நலம் - மிகவும் நலம். காண்: அசையெனினு மாம். மேலும் அறவணர் சாற்று கவிகை அரசர்மனத் தாழ்வெல்லாம் மாற்றும் மணிமே கலைஎன்று - போற்றும் அடிகள் உரைத்தார்! அவளும் உரைத்தாள் மிடிகள் விலகிடும் என்று. 273 உரை: சாற்று - சிறப்பித்துச் சொல்லுகின்ற; கவிகை - வெண்கொற்றக் குடையையுடைய; அரசர் - அரசரின்; மனத்தாழ்வெல்லாம் - மனத்தொல்லையை எல்லாம்; மாற்றும் மணிமேகலை என்று - மணிமேகலை தீர்த்துவிடுவாள் என்று; அடிகள் உரைத்தார் - அறவண அடிகள் சொன்னார்; அவளும் உரைத்தாள் மிடிகள் விலகிடும் என்று - சுதமதியும் தொல்லைகள் நீங்கிவிடும் என்று கூறினாள். சாற்று கவிகை; வினைத்தொகை நிலைத்தொடர். மேலும் மணிமேகலை சொன்னாள் மேலும் விளம்புவாள்; வேந்தேநீ வாழ்கநின் கோலும் கிடப்பக் கொடியோர்க்கு - மேலும் கிடப்பக் கிடைநெல் ஒருபாற் குவிந்து கிடப்பதேன் என்றாள் கிளி. 274 உரை: மேலும் விளம்புவாள் - மேலும் மணிமேகலை கூறுவாள்; வேந்தே நீ வாழ்க - அரசே வாழ்க நீ; நின் கோலும் கிடப்ப - உனது செங்கோலும் இருக்க; கொடியோர்க்கு வேலும் கிடப்ப - கொடியோரை அடக்க கையில் வேலும் இருக்க; கிடைநெல் ஒருபால் குவிந்து கிடப்பதேன் - கட்டுக் கிடையாய்ப் பணக்காரர் இடத்தில் குவிந்து கிடப்பது எதன் பொருட்டு; என்றாள் கிளி - என்று அரசனைக் கேட்டாள் மணிமேகலை. கிளி - கொஞ்சிப் பேசும் மணிமேகலை. கிடை நெல் - இதற்கு முன் கிடைத்த நெல் எனினுமாம். ஒருபால் என்பது - பணக்காரர் கூட்டத்தை. மற்றும் மணிமேகலை உள்ளார் இசைவேண்டி இல்லார்க் குதவுவர் உள்ளார் கடனென் றிலார்க்குதவ - உள்ளுக! உள்ளார் உடைமைஎனல் இல்லார் இழந்ததே பள்ளநீர் பாய்ந்தநீ ராம். 275 உரை: உள்ளார் இசைவேண்டி இல்லார்க்கு உதவுவர் - செல்வர்கள் புகழ்கருதி வறியோர்க்கு உதவி செய்வார்கள்; உள்ளார் - அந்தச் செல்வர்கள்; கடன் என்று இல்லார்க்கு உதவ உள்ளுக - வறியோர்க்கு உதவுதல் கடமை என்று உதவும்படி நீர் எண்ணிக் காரியம் செய்க; உள்ளார் உடைமை எனல் - செல்வரின் செல்வம் என்பது; இல்லார் இழந்ததே - வறியவர் இழந்ததுதான்; பள்ளநீர் - பள்ளத்திலுள்ள நீர் என்பன; பாய்ந்த நீராம் - மேட்டிலிருந்து பாய்ந்த நீர் தானே. செல்வர்கள் புகழ் கருதி இல்லார்க்குக் கொடுப்ப துண்டு; அது சரி அன்று. அவர்கள் இல்லார்க்குக் கொடுக்கக் கடமைப் பட்டவர்கள் என்று நீவிர் கருதி அதற்கு ஆவன செய்ய வேண்டும் என்றாள் மணிமேகலை. பள்ள நீர் பாய்ந்த நீர் - வயல் முதலிய பள்ளமான இடத்தில் தேங்கியுள்ள நீர் மேட்டி னின்று பாய்ந்ததுதான் என்று உவமையும் கூறினாள் என்க. மேலும் மணிமேகலை இனமென எண்ணி இடுக! இடாரேல் மனமெனும் மங்கை தனது - தனிமை பொறாது மறுபுலம் போதலும் உண்டு உறாதார்க் குதவலும் உண்டு. 276 உரை: இனமென எண்ணி இடுக - வறியார்க்கு ஒன்றை இடுகின்றவர் இவர்கள் மக்கள் இனத்தைச் சார்ந்தவர்கள் தாமே என்று எண்ணி இடவேண்டும்; இடாரேல் - அவ்வாறு எண்ணி இடா விட்டால்; மனம் எனும் மங்கை - மனமாகிய பெண்; மறுபுலம் போதலும் உண்டு - பகைப்புலம் செல்லுவதும் உண்டாகும்; உறாதார்க்கு உதவலும் உண்டு - பகைவர்க்குத் தம் ஆதரவை அளிக்கவும் கூடும்; மறுபுலம் - வேற்று நாடு; உறாதார் - பகைவர்; வறியவர் செல்வ வாய்ப்புப் பெறாத நிலை நீடித்தால், அயல் அரசைக் கொண்டு நாட்டில் புரட்சியை ஏற்படுத்தவும் கூடும் என்று குறிப்பாகக் கூறினாள் மணிமேகலை. மணிமேகலை காஞ்சியிலே அடிவைத்ததால் பஞ்சம் பறந்தது! அடிவைத்தாள் மேகலை ஆங்குற்றார் யாரும் மிடிவைத்தார் தம்மை மிசைவித் - திடவே கலத்திற் கலத்தைக் கவிழ்த்துக் கலச்சோ றிலத்திற் கிலஞ்செய்தார் இட்டு. 277 உரை: அடிவைத்தாள் மேகலை - மணிமேகலை காஞ்சியில் அடி வைத்தாள்; ஆங்கு உற்றார் யாரும் - அக்காஞ்சியின் மக்கள் அனைவரும்; மிடிவைத்தார் தம்மை மிசைத்திடவே - வறுமைத் துன்பத்தை யுடையவர்களை உண்பிக்க வேண்டி; கலத்தில் - மணிமேகலையின் அமுத சுரபியில், கலத்தைக் கவிழ்த்துக் கலச் சோறு - ஒருகலம் அளவுள்ள சோற்றுக் கலத்தைக் கவிழ்த்து; இலத்திற்கு இலம் செய்தார் இட்டு - இல்லாமைக்கு இல்லா மையைச் செய்தார்கள் அறமாக இட்டு. ஆங்கு உற்றார் யாரும் மிடி வைத்தார் தம்மை மிசைவித்திடவே, கலத்தில் கலச்சோறு கலத்தைக் கவிழ்த்து இட்டு இலத்திற்கு இலம் செய்தார் என்று மொழிமாற்றுச் செய்து பொருள் காண்க. மிசைவித்தல் - உண்பித்தல்; பிறவினை. காஞ்சிக்குத் தேரும் திருவிழாவும் கல்லார்க்குக் கல்வி அருளும் புலவரைப்போல் இல்லார்க்குச் சோறுகறி இட்டாள்மேல் - செல்விக்கே ஆரும் புகழ்வைத் தளித்ததே காஞ்சிக்குத் தேரும் திருவிழா வும். 278 உரை: கல்லார்க்குக் கல்வி அருளும் புலவரைப்போல் - பெரு நூல் கல்லாத மாணவர்க்குப் பெருநூற் பொருளை அருளி மகிழ்கின்ற தமிழ்ப் புலவர்களைப் போல; இல்லார்க்குச் சோறு கறி இட்டாள் - உணவில்லாதவர்க்கெல்லாம் சோறும் கறியும் உதவி மகிழ்ந்தாள் மணிமேகலை; மேல் - அதன் மேல்; செல்விக்கே - மணி மேகலைக்கே; ஆரும் - நிறைந்த; புகழ் வைத்து - புகழைச் சேர்த்து; அளித்ததே - அளிப்பதான ஒரு செயலே; காஞ்சிக்குத் தேரும் திரு விழாவும் - காஞ்சியில் தேர்போலவும் திருவிழாப் போலவும் இருந்தது. ஆடவரும் மாதரும் கலத்திற் சோறும், சிறு கலங்களில் கறிவகையும் இடையறாது கொண்டு வருவதும் போவதும், தேரும் திருவிழாவுமாய்த் தோற்றமளித்தது என்க. மணிமேகலையே சோறுகறியாக்கத் தொடங்கிவிட்டாள்! ஈயப் பெரும்பானை இட்டுச்சோ றாக்குவோர் ஓயப் பொருள்கள் உதவுவார் - தூயமணி மேகலையும் சோறாக்கி வெஞ்சனம்செய் வாள்பிஞ்சுப் பாகலையும் சென்று பறித்து. 279 உரை: ஈயப் பெரும்பானை இட்டுச் சோறாக்குவோர் ஓயப் பொருள்கள் உதவுவார் - மணிமேகலைக்குப் போடப்பெரும் பானைவைத்துச் சோறாக்குகின்றவர்கள், ஓய்வு பெறுவதற் காக, ஆக்குவதற்கு வேண்டிய பொருள்களையே மணி மேகலையிடம் கொண்டு வந்து குவிப்பாரானார்கள்; தூய மணிமேகலையும் - தூயளாகிய மணிமேகலையும்; சோறு ஆக்கி வெஞ்சனம் செய்வாள் - சோறாக்கி அதற்கு வேண்டிய கறிவகைகளையும் செய்வாள் ஆனாள். அவள், பிஞ்சுப் பாகலையும் சென்று பறித்து - பிஞ்சான சிறு பாகற்காய்களையும் தேடிப்பறித்து. மணிமேகலையும் சோறாக்கி என்பதில் உள்ள உம்மையால், உதவியாளரே அல்லாமல் தானும் சோறாக்கி என்பது பெறப்பட்டது. இந்த உம்மையை இறந்துதழீஇய எச்ச உம்மை என்பர். ஈய - கொடுக்க. சோறுகறி ஆக்கி இட்டவர்கள் நாளடைவில் ஆக்குவதற்கான அரிசி பருப்பு முதலிய பொருள்களையே கொண்டுவந்து அவள் இருப் பிடத்தில் குவிக்கத் தொடங்கி னார்கள். கறிகாய்களுக்காக அவை பயிராகும் தோட்டங் களையே கொடுத்தார்கள். ஆட்களும் சமைக்க, மணி மேகலையும் சமைப்பாளானாள். தனக்கு வரும் புகழையும் மற்றவர்க்குப் பயன்படுத்தும் செய்கை அரியது! உள்ளவர் தத்தமக் குள்ளது போகமற் றுள்ளதை இல்லார்க் குதவுகின்ற - உள்ளம் அரிதன்று; பெற்றபுகழ் மற்றவர்க் காக்கல் அரிதென் றறவணர்சொன் னார். 280 உரை: உள்ளவர் - இருப்பவர்; தத்தமக்கு உள்ளது போக - தத்தமக்குப் பயன்பட்டது போக; மற்று உள்ளதை - மிகுதியா யிருந்ததை; இல்லார்க்கு உதவுகின்ற உள்ளம் - இல்லா தவர்க்கு உதவிடுகின்ற உள்ளமானது; அரிதன்று - அரி தாகாது; பெற்ற புகழ் - தான் அடைந்த புகழை; மற்றவர்க்கு ஆக்கல் அரிது - மற்றவர் களுக்குப் பயன்படுமாறு செய்வது அரிதாகும்; என்று அறவணர் சொன்னார் - என்று இவ்வாறு அறவண அடிகள் சொல்லியருளினார். இல்லாதவர்க்கு இரந்தும் கொடுப்பதால் ஏற்பட்டு வரும் புகழை மணிமேகலை தனக்குச் சிறிதும் பயன்படுத்த வில்லை. பிறர்க்கே பயன்படுமாறு உழைக்கின்றாள் ஆதலின் அறவண அடிகள், மணிமேகலையை இவ்வாறு புகழ்ந்தார். மழை பெய்தது காஞ்சியில் அழையாது வந்தஎம் அம்மைகால் வைக்கப் பிழையாத யாமும் பிழைத்தோம் - மழையா மழையும் மழைத்தது வாழ்கின்றோம் என்றார் தழையாத காஞ்சியார் தாம். 281 உரை: அழையாது வந்த எம் அம்மை கால் வைக்க - அழையா திருக்கவும் அருளால் வந்துள்ள எம் தாய் போன்றவள் கால் வைத்த அளவில்; பிழையாத யாமும் பிழைத்தோம் - பிழைக்க வழியில்லாதிருந்த யாங்களும் சாகாமல் பிழைத்தோம்; மழையா மழையும் மழைத்தது - பெய்ய மறுத்த முகிலும் பெய்தது; வாழ்கின்றோம் - நல்லபடி வாழலானோம்; என்றார் - என்று சொன்னார்கள்; யார்; தழையாத காஞ்சியார் தாம் - முன்னர் தழைதலின்றிக் கிடந்த காஞ்சி மக்களே. மழைத்தல் - மழை பெய்தல்; அதன் எதிர் மறை மழையா என்பது. மழையும் மழைத்தது என்பதில், மழை முகில். காஞ்சி மன்னன் வணங்கி வழியனுப்பினான் அறவணர் ஆய்ந்த சுதமதி யோடும் உறவண மேகலை ஓவம் - புறவணம் கால்வைத்தாள் அக்கால் தலைவைத்தான் நன்றிஎன்றான் கோல்வைத்த காஞ்சியின் கோ. 282 உரை: அறவணர் ஆய்ந்த சுதமதியோடும் - அறவண அடிகளுடனும் ஆய்ந்த சுதமதியுடனும்; உறவு அண - தொடர்பு நெருங்க; மேகலை ஓவம் - மணிமேகலையாகிய ஓவியம் போன்றாள்; புறவணம் - காஞ்சியின் புறத்தே; கால் வைத்தாள் - காலை வைத்தாள்; அக்கால் - அந்தக் காலை; தலை வைத்தான் - தன் தலைமீது வைத்து வணங்கினான்; நன்றி என்றான் - நன்றி என்று கூறினான்; யார்? கோல் வைத்த காஞ்சியின்கோ - ஆட்சியைத் தன்பால் கொண்ட காஞ்சி நாட்டு மன்னன். புறவணம் என்பதில் வணம் ஏழனுருபின் பொரு ளுடையது; புறவணம் - புறத்தில். மணிமேகலை போகக்கண்ட மங்கைமார் வாழ்த்தினார்கள் முன்னாலே சோறின்றி முட்டுண்டோம் அம்மையே உன்னாலே உள்ளோம் என் றேவாழ்த்திப் - பொன்னாலே பூணிட்ட செவ்வுலக்கைப் பாட்டுப் புதுக்கினார் நாணிட்டு நங்கையினைக் கண்டு. 283 உரை: முன்னாலே சோறு இன்றி முட்டுண்டோம் - நீ வருவதற்கு முன்னாலே சோற்றுக்கு வழியில்லாமல் முட்டுப் பட்டோம்; அம்மையே - தாயே! உன்னாலே உள்ளோம் - நீ இங்கே எழுந்தருளிச் சோறிட்டதனாலே உயிர் வாழ லானோம்; என்றே வாழ்த்தி - என்று மணிமேகலையை வாழ்த்தி; பொன்னாலே பூண் இட்ட செவ்வுலக்கைப் பாட்டுப் புதுக்கினார் - பொற்பூண் பூட்டிய செம்மையாகிய உலக்கை கொண்டு நெற்குற்றுவதான பாட்டில் புதுமை சேர்த்துப் பாடினார். நாண் இட்டு நங்கை யினைக் கண்டு - நாணப்பட்டு மணிமேகலையைப் பார்த்து. முன்பு மணிமேகலையிடம் அறவுணவு பெற்று உண்டவர்கள், இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள்; ஆதலால் மணி மேகலையைக் கண்ட போது அவர்கட்கு நாணம் உண்டாயிற்று. உழவர் வாழ்த்தினார்கள் பல்வாளை மேயும் பழனத்தைத் தாண்டியே செல்வாளை எங்கள் சிறுமையினைக் - கொல்வாளை நினையாமை வாழ்வோமா என்றார்கள் நீரார் சினையாமைச் செய்யுழவர் சேர்ந்து. 284 உரை: பல்வாளை மேயும் பழனத்தைத் தாண்டியே - பலவாகிய வாளைமீன்கள் உலவுகின்ற வயலைத் தாண்டி; செல்வாளை - செல்லுகின்றவளான மணிமேகலையை; எங்கள் சிறுமையினைக் கொல்வாளை நினையாமை வாழ்வோமா என்றார்கள் - எங்கள் வறுமை நிலையைத் தீர்க்கின்றவளை மறந்து வாழ்வோமா என்று கூறினார்கள்; நீரார் சினை ஆமைச் செய்யுழவர் சேர்ந்து - நீரில் நிறைந்த சினையாமையை உடைய வயலுழவர் ஒன்றுசேர்ந்து. வாளை மீன்கள் மேயும் வயலைக் கடந்துசெல்லும் மணி மேகலையைச் சினையாமைகள் மேயும் வயலுழவர் கண்டு இவ்வாறு கூறினார்கள். கொல்வாள் என்று படர்க்கையாற் கூறியது, முன்னின்றாரை வாழ்த்தும் வாழ்த்துச் சிறப்புற வேண்டும் என்பதற்காக. தையலார் சாப்பிட்டுப் போகச் கெஞ்சினார்கள் மின்னுக்கும் நல்லறத்து வேளுக்கும் முன்நடக்கும் பொன்னுக்குப் பூவெடுத்தார் போலெடுத்த - முன்கைகள் கூப்பிட்டு வாழ்த்திய கோதைமார் கெஞ்சினார் சாப்பிட்டுப் போம்படியே தாழ்ந்து. 285 உரை: மின்னுக்கும் - சுதமதிக்கும்; நல்லறத்து வேளுக்கும் - நல்லறத்தை உலகுக்கு நல்கும் அறவண அடிகட்கும்; முன் நடக்கும் - முன்னால் நடந்து செல்கின்ற; பொன்னுக்கு - பொன் போற் சிறந்த மணிமேகலைக்கு; பூ எடுத்தார்போல எடுத்த முன்கைகள் - தாமரை மலரை எடுத்தவர்களைப் போல எடுத்த முன்கைகளை; கூப்பு இட்டு - கூப்பி; வாழ்த்திய கோதைமார் - வாழ்த்துரைத்த மகளிர்; கெஞ்சினார் சாப்பிட்டுப் போம்படியே தாழ்ந்து - சாப்பிட்டுப்போம்படி தலைதாழ்த்திக் கெஞ்சினார்கள். கூப்பிட்டு - கூப்பி; இதில் இடு துணைவினை விகுதி. மற்றும் பலர் வாழ்த்தினார்கள் கல்லாமை நீக்கிக் கடும்பசிக்கு நீர்ச்சோறும் இல்லாமை நீக்கினீர் என்றுரைத்துப் - பல்லோர்தம் போரடித்த நெல்லைஎலாம் பொன்னாக்கிப் போகவரத் தேரடித்துக் கொண்டிருந்தார் சென்று. 286 உரை: கல்லாமை நீக்கி - கல்லாமையை நீக்கக் கல்வி கற்பிக்கவைத்து; கடும் பசிக்கு - எங்களின் கடிதாகிய பசிக்கு, நீர்ச்சோறும் - நீரிலிட்ட சோறும்; இல்லாமை - இல்லாமற் போய்விட்ட நிலைமையை; நீக்கினீர் - தீர்த்தீர்கள்; என்று உரைத்து - என்று கூறி; பல்லோர் - பலராகக் கூடியோர்; தம் - தமது; போரடித்த நெல்லை யெல்லாம் பொன்னாக்கி - போரடித்துக் குவித்த நெல்லையெல்லாம் விற்றுப் பொன்னாக்கி; போகவர - போக்குவரவுக் காக; தேர் அடித்துக் கொண்டிருந்தார் சென்று - பட்டறையில் சென்று தேர்செய்து கொண்டிருந்தார்கள். காஞ்சியின் வளப்ப நிலை காட்டியபடி. மற்றும் மக்கள் வாழ்த்து கண்பொங்கக் கையெடுத்தால் காலெடுக்கும் செல்வரிடம் வெண்பொங்கல் வாங்கி விலாப்புடைக்க - உண்கென்றாய் உள்ளளவும் ஊருக் குழைத்தவளே வாழ்கென்றார் எள்ளளவும் யாம்மறவோம் என்று. 287 உரை: கண்பொங்க - உண்ணாமை வெப்பத்தால் கண் பொங்க; கை எடுத்தால் - உதவி செய்க என்று கும்பிடக் கையெடுத்தால்; கால் எடுக்கும் - உதைக்கக் காலைத் தூக்கி வருகின்ற; செல்வரிடம் - பணக்காரரிடம்; வெண் பொங்கல் வாங்கி - எங்களுக்காக வெண் பொங்கலை வாங்கி; விலாப் புடைக்க உண்க என்றாய் - விலாப் புடைக்கும்படி உண்ணுங்கள் என்று கொடுத்தாய்; உள்ளளவும் ஊருக்கு உழைத்தவளே - மனங்கொண்ட மட்டும் பொது மக்களாகிய எங்கட்கு உழைத்த புண்ணியவதியே; எள்ளளவும் யாம் மறவோம் என்று - உன்னை எள்ளளவும் யாம் மறக்க மாட்டோம் என்று; வாழ்கென்றார் - வாழ்க என்றார். அகரம் தொகுத்தல். உண்கென்றாய் என்பதும் அப்படி. மற்றும் பலர் என்றும் அறியா எமைஈன்ற தாய்போலும் ஒன்றும் எதிர்பாரா தூர்க்குழைத்தாய் - இன்றே எமைவிட் டகன்றாலும் எம்முள் நீஉள்ள சுமைவிட் டகலாதென் றார். 288 உரை: என்றும் அறியா எமை - இதற்குமுன் எப்போதும் அறிமுகமில்லாத எங்களை; ஈன்ற தாய்போலும் - ஈன்றெடுத்த தாய்க்கு ஒப்பாக; ஒன்றும் எதிர்பாராது ஊர்க்கு உழைத்தாய் - எம்மிடம் கைம்மாறு எதையும் எதிர்பாராமலேயே பொதுவுக்கு உழைத்தாய்; இன்றே - இன்னும் சில நாட்கள் தங்காமல் இன்றைக்கே; எமைவிட்டு அகன்றாலும் - எம்மைவிட்டு நீங்கினாலும்; எம்முள் நீ உள்ள சுமைவிட்டு அகலாது என்றார் - எங்கள் உள்ளத்தில் நீ நிலைத்ததால் ஏற்பட்ட நினைவுச்சுமை அகலாது என்று கூறினார்கள். இதற்குமுன் எமை அறிந்ததில்லை; ஆயினும் பெற்ற தாய்போலக் கைம்மாறு கருதாது எமக்கு உழைத்தாய். இன்னும் சில நாட்களாவது இங்குத் தங்கி அருளாமல் இன்றே செல்கின்றாய் எனினும், உன் நினைவுச்சுமை எம்மை விட்டு நீங்காது என்று இயம்பியது காண்க. ஊர்க்குழைத்தாய் - ஊர்க்கு உழைத்தாய் என்று பிரிக்க; ஊர்க்கு உழைத்தல் - பொதுவுக்கு உழைத்தல். 