உரைவேந்தர் தமிழ்த்தொகை 27 சிவநெறிச் சிந்தனை - 1 (கட்டுரைகள்) ஆசிரியர் ஒளவை துரைசாமி பதிப்பாசிரியர்கள் முனைவர் ஒளவை நடராசன் முனைவர் இரா. குமரவேலன் இனியமுது பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 27 ஆசிரியர் : ஒளவை துரைசாமி பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 328 = 352 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 220/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு இனியமுது பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம். இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்த ராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந்தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை. “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும், “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின் 107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள். நன்றி - பதிப்பாளர் பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! பொற்புதையல் - மணிக்குவியல் “ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன் மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள் உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன் அள்ளக் குறையாத ஆறு” என்று பாவேந்தரும், “பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில் கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல் காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும் தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!” என்று புகழ்ந்ததோடு, “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால் அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்” எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும். பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடையவராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன. உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார். பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டுகிறது. பாட்டுக் களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது. கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன. “இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற் பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து, கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த பெரும்புலமைக் கல்வி யாளர்! விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல், வடமொழிநூல், மேற்பால் நூல்கள் நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய நற்றமிழ் தழைக்க வந்தார்!” என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும். கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார். ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம். ஒளவை நடராசன் நுழைவாயில் செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை. எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார். சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார். பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது. சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச் செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார். தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர். ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று. ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக் கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரைவரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும். ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார். ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன. அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப் படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவு படுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர். ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது. ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர் களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர். “தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற் றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர். ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப்பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம். ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன். முனைவர் இரா.குமரவேலன்` தண்டமிழாசான் உரைவேந்தர் உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும். ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும். நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று. எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார். “ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் அமைபவன் நூலுரை ஆசிரியன்” எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர். உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார். தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர். எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற் போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார். “இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு, “ வாதம் வெல்லும் வகையாதது வென்னில் ஓதி வெல்ல லுறுவார்களை என்கை கோதுகொண்ட வடிவின் தடியாலே மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’ என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன. சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன. நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார். “ தாயாகி உண்பித்தான்; தந்தையாய் அறிவளித்தான்; சான்றோ னாகி ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான் அவ்வப் போ தயர்ந்த காலை ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்; இனியாரை யுறுவேம்; அந்தோ தேயாத புகழான்தன் செயல் நினைந்து உளம் தேய்ந்து சிதைகின்றேமால்” எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார். இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும்பங்காற்றியவர். அவர்தம் பெருமுயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம். உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும். “ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக் கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன் பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை வாயார வாழ்த்தாத வாய்” எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக! வாழிய தமிழ் நலம்! முனைவர் வேனிலா ஸ்டாலின் உரைவேந்தர் தமிழ்த்தொகை தொகுதி - 1 ஞானாமிர்த மூலமும் பழையவுரையும் தொகுதி - 2 சிவஞானபோத மூலமும்சிற்றுரை தொகுதி - 3 சிலப்பதிகாரம் சுருக்கம் மணிமேகலைச் சுருக்கம் தொகுதி - 4 சீவக சிந்தாமணி - சுருக்கம் தொகுதி - 5 சூளாமணி சுருக்கம் தொகுதி - 6 பெருங்கதைச் சுருக்கம் தொகுதி - 7 சிலப்பதிகார ஆராய்ச்சி மணிமேகலை ஆராய்ச்சி சீவகசிந்தாமணி ஆராய்ச்சி தொகுதி - 8 யசோதர காவியம் தொகுதி - 9 தமிழ் நாவலர் சரிதை தொகுதி - 10 சைவ இலக்கிய வரலாறு தொகுதி - 11 மாவை யமக அந்தாதி தொகுதி - 12 பரணர் தெய்வப்புலவர் The study of thiruvalluvar தொகுதி - 13 சேரமன்னர் வரலாறு தொகுதி - 14 நற்றிணை -1 தொகுதி - 15 நற்றிணை -2 தொகுதி - 16 நற்றிணை -3 தொகுதி - 17 நற்றிணை -4 தொகுதி - 18 ஐங்குறுநூறு -1 தொகுதி - 19 ஐங்குறுநூறு -2 தொகுதி - 20 பதிற்றுப்பத்து தொகுதி - 21 புறநானூறு -1 தொகுதி - 22 புறநானூறு -2 தொகுதி - 23 திருக்குறள் தெளிவு - பொதுமணித்திரள் தொகுதி - 24 செந்தமிழ் வளம் - 1 தொகுதி - 25 செந்தமிழ் வளம் - 2 தொகுதி - 26 வரலாற்று வாயில் தொகுதி - 27 சிவநெறிச் சிந்தனை -1 தொகுதி - 28 சிவநெறிச் சிந்தனை -2 கிடைக்கப்பெறாத நூல்கள் 1. திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை 2. தமிழகம் ஊர்ப் பெயர் வரலாறு 3. புதுநெறித் தமிழ் இலக்கணம் 4. மருள்நீக்கியார் (நாடகம்) 5. மத்தவிலாசம் (மொழியாக்கம்) உள்ளடக்கம் பதிப்புரை iii பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! v நுழைவாயில் ix தண்டமிழாசான் உரைவேந்தர் xv நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் xxiii நூலடக்கம் சிவநெறிச் சிந்தனை - 1 தேவாரம் என்பதன் பொருள் 1 1. திருவோத்தூர் தேவாரத் திருப்பதிக உரை 4 2. ஞானசம்பந்தர் ஞானவுரை 26 3. தேவாரத்திலுள்ள அகத்துறைப் பாடல்கள் 67 4. குமரகுருபரர் பண்டார மும்மணிக்கோவை 90 5. திருவெம்பாவை 139 6. திருமுருகாற்றுப் படை 154 7. திருவாமாத்தூர் யானை 182 8. விஞ்ஞானமும் தத்துவஞானமும்* 187 9. ஏரொளிச் சக்கரம் 193 10. ‘இரந்தார்க்கீதல்’ 202 11. பழந்தமிழர் சமயம் 208 12. சைவ சித்தாந்தம் 223 13. சைவத்தின் இற்றைநிலை 230 14. ஞானசம்பந்தரின் ஞானக் காட்சி நெய்தல் 241 15. கண்டவர் விண்டது 254 16. தில்லையில் நாவுக்கரசர் 268 17. தில்லையில் சுந்தரர் 290 18. கயிலையும் அரசும் 300 19. நம்பியாண்டார் நம்பியும் ஞானசம்பந்தரும் 307  தேவாரம் என்பதன் பொருள் தேவாரம் என்பதற்கு அறிஞர் பலவேறுவகைப் பொருள் களைக் கூறுவாராகலின் அவற்றையெல்லாம் திரட்டிச் சைவத்திரு, யாழ்ப்பாணத்து வண்ணைநகர். சுவாமிநாத பண்டிதரவர்கள் விரித் தெழுதியுள்ளார்கள். அவற்றை யாவரும் அறிந்து இன்புறுவரெனக் கருதி இங்கே கூறுதும். 1. "தேவாரம் - தே + வாரம் : தேவினிடத்து வாரத்தை விளைவிப்பது. அஃதாவது சிவபிரானிடத்து (அதனை ஓது வார்க்கும் கேட்பார்க்கும்) அன்பை உண்டு பண்ணுவது என்பதாம். பேரழகு, பேராண்மை, பெருங்கல்வி, பேரறம் முதலியற்றை உடைய ஆண்மகனது இலக்கண முதலியவற்றை ஓதல் கேட்டல்களைச் செய்த துணையானே மகளிர்க்கு அவன் மாட்டுக் கழிபெருங் காமம் மீதூர்தல் போல, சிவபிரானது இலக்கணங்களும் அருட் குணங்களும் பிறவும் திராவிட வேதத்தின்கண் (தேவாரத் திரு முறையிற்) கூறப்பட்டிருத்தலான் அவற்றை ஓதல் கேட்டல்களைச் செய்த துணையானே மக்கட்குக் கழிபெருங் காதல் மீதூருமென்று உணர்க." 2. "தே + வாரம் : சிவபிரானுக்கு (த்தன்னிடத்தும் தன்னை யோ துவாரிடத்தும்) இன்பை விளைவிப்பது. அதனிடத்தும், அதனையோதும் பத்தர்களிடத்தும் சிவபிரான் வாரமுடைய வராவர் என்பது கருத்து." 3. "தே + ஆரம் : சிவபிரானுக்கு ஆரம் போல அலங்கரிப்பது. அதனைப் 'பழுதிலாத சொல் மணியினைப் பத்தி செய்தன்பு, முழுதுமாகிய வடத்தினான் முறை தொடுத்தலங்கல், அழுது சாத்து மெய்யன்பருக் ககமகிழ்ந்தையர்' என்பதனான். உணர்க." 4. "தே + ஆரம் ; தெய்வத்தன்மை பொருந்திய பாமாலை. அது, 'பன் மாலைத் திரளிருக்கப் பாமாலைக்கே நீதான் பட்ச மென்று, நன்மாலை யாவெடுத்துச் சொன்னார் நல்லோர்,' என்பதனான் உணர்க. இப்பொருட்குத் தேவ + ஆரம் எனப் பிரிப்பினும் அமையும்." 5. "தே + வாரம் : சிவபெருமானுக்கே உரிமையுடையது. வாரம், உரிமை, வேதம் போலாது சிவபெருமான் ஒருவரையே பதியெனக் கொண்டு போற்றலின் சிவபிரானுக்கே உரிய தென்னும் பொருளும் சிறந்தமை காண்க." 6. "தே + வாரம் : தெய்வத்தன்மை பொருந்திய வாரமா யுள்ளது என்பாருமுளர். வாரம் என்பது இசையின் இயக்கம் நான்கினுள் ஒன்று, உரு, தெய்வப் பாடல், பற்று எனப் பொருள் படும். அது, 'வார நிலத்தைக் கேடின்று பார்த்தாங்கு,' எனவும், 'வாங்கிய வாரத்து' எனவும், வாரம் பாடும் தோரிய மடந்தையும், எனவும் வரூஉம் செய்யுட்களாற் பெற்றாம். முதனடை, வாரம், கூடை, திரள் என்று சொல்லப்பட்ட இசையியக்கம் நான்கனுள் முதற்கண் உள்ளது. மிகவும் தாழ்ந்த செலவினையுடைத்தாகலானும், இறுதிக்கண் உள்ள திரள் என்பது முடுகிய நடையினையுடைத் தாகலானும், இடைப்பட்ட இரண்டனுள் வாரப் பாடலே சொல் லொழுக்கானும், இசையொழுக்கானும் சிறந்ததாகலின். அதுவே இசைத்தமிழ்ப் பாடற்குரிய சிறப்பியக்கம் என்க. அத்துணை விசேடவியக்கமுடைமையோடு தெய்வத் தன்மையும் அமைதலின், தேவாரம் என்பதும் ஒன்று." உருவாவது கந்த முதலாகப் பிரபந்தவுரு ஈறாகவுள்ள அக நாடகங்களுக்குரியன இருபத்தெட்டும், தேவ பாணி முதலாக அரங்கொழி செய்யுள் ஈறாகவுள்ள புறநாடகங்களுக்குரியன எல்லாமுமாகிய மங்கலப் பண்ணாற் பாடப்படும் பாட்டுக்களாம். இவை நாடகவியற்குரியன என்க. மூவர் முதலிகள் திருவாய் மலர்ந்தருளிய தமிழ் வேதப் பதிகங்களும் மங்கலப் பண்களால் இயற்றப்பட்டு, மங்கலச் சொற்களையுடையனவாய், உக்கிரம், துருவை, ஆபோகம், பிரகலை என்னும் நாலுறுப்புகளும் குறை பாடில்லாத உருவுக்குச் சொற்படுத்தியும், இசைப்படுத்தியும் தேவர்ப் பராவும் தேவபாணியாகக் கொட்டும் கூத்தும் நிகழ்த்தித் தெய்வத் திருவருள்வழி அருளப்பட்டன வாகலின், தேவாரம் என்னும் பெயர்த்து என்க. "தெய்வப் பாடல் என்பது நாடகத்தில் அவதாளம் நீங்கவும், தாளம் பொலிவுறவும், நன்மையுண்டாகவும், தீமை நீங்கவும், முதலிலும் இறுதியிலும் பாடப்படுவதாம். அங்ஙனே தமிழ் வேதமும், சிவபெருமான் திரு முன்னிலையிலே நின்று தற்போதம் கெடவும். சிவகரணம் பொலிவுறவும் உலகர்க்கு நன்மை விளை விக்கவும், மூவகை துன்பம் இரிவிக்கவும், ஓதியருளப்பட்டமை யானும், நாடகம் போன்ற பிரவஞ்ச வியாபாரங்களில் முதலினும் இறுதியினும் ஓதப்படற்குரிமையானும் தேவாரம் என்னும் பெயரையுடையத்து என்க." "பற்றாவது விதிப்படி கொண்ட அரங்கத்திலே தலைக்கேற் பட்ட முற்ற அரிவையென்பாள் அகக்கூத்து, புறக்கூத்துக்குரிய வரி, பாணி, தூக்கு, குயிலுவக்கருவி என்னும் நான்குமுணர்ந்து, நால்வகை அவிநய நிலத்து நின்று கூத்தாடி முடிந்த பின்பு, அவள் காலுக்கு ஒத்தறுத்து, இடத்தூணிற் சேர்ந்து நின்று, தோரிய மடந்தை, தலைப்பாட்டுக் கூத்தி, இடைப்பாட்டுக் கூத்தி என்னுல் பாடல் மகளிர் மூவரானும் பாடப்படும். ஓரொற்றவாரம். ஈரொற்றவாரம் என்னும் தேவாகானமாம். இத்தமிழ் வேதமும் பற்றென்னும் பாடல் போன்றதாகலின், வாரம் எனப்பட்டது. எங்ஙனமெனில், பெருமை வாய்ந்த திருச்சபைகளில் ஏறி, யாவர்க்கும் எவற்றிற்கும் தலைமையாக விளங்கும் சபா நாதனாகிய நடராசப் பெருமான், ஆன்மாக்களின் இருவினை கட்கு மேற்ற தனு, கரண, புவன, போகம் என்னும் நான்கையும் உணர்ந்து பஞ்சகிருத்திய தாண்டவம் நிகழ்த்துழி, அவன் திரு வடிக்கு ஒத்தறுத்து, அவன் அருள் வழி நின்று, நால்வேத வாய்மை வைத்து, மூவர் மகளிர் போலும் மூவர் முதலிகளாற் பாடப்பட்ட வாரம் ஆகலின், தேவாரம் ஆயிற்றென்க." திருச்சிற்றம்பலம் திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளிய 1. திருவோத்தூர் தேவாரத் திருப்பதிக உரை பண் - பழந்தக்கராகம் 1. பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி ஏத்தா தாரில்லை எண்ணுங்கால் ஓத்தூர் மேய வொளிமழுவா ளங்கைக் கூத்தீர்! உம்ம குணங்களே. உரைப்பாடம் :- ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கைக் கூத்தீர்! உம்ம குணங்களை(ப் பாராட்டி) நின் பொன் அடி, பூ ஆயன தேர்ந்துகொண்டு, (அருச்சித்து) ஏத்தாதார் எண்ணுங்கால் இல்லை என்பது. உரை:- திருவோத்தூரின்கண் விரும்பி எழுந்தருளியுள்ள பிரகாசம் பொருந்திய மழுவாகிய ஆயுதத்தை ஏந்திய அழகிய கையினையுடைய கூத்தாடும் பரமனே. உம்முடைய குணங்களைப் பாராட்டி, உன் பொன்னடிகளில் பூவும், பூசைக்கு வேண்டும் மற்ற பொருள்களும் நல்லவாய் ஆராய்ந்து கொண்டு வந்து அருச்சித்துத் துதிக்காதவர்கள் ஆராயுமிடத்து, ஒருவருமிலர் என்றவாறு. பாராட்டி முதலாயின அவாய் நிலை. ஒருவரும் என்பது வருவிக்கப்பட்டது. பூசைக்கு வேண்டும் மற்ற பொருள் களாவன: நீரும், பாலும், நெய்யும் முதலாகிய அபிஷேக ஆராதனைக்குரிய பொருள்கள். "தேனெய் பால் தயிர் தெங்கிளநீர் கரும்பின்தெளி, ஆனஞ்சாடு முடியானும் ஐயாறு டையையனே"1 என்பதனானும் இவை அறியப்படும். ஓத்தூர் என்பது, ஓத்து, ஊர் எனப் பிரியும். ஓத்து, ஓதப்படுவது; பாடப்படுவது பாட்டு என்றாற் போல. "குண்டர் ஓதும் ஓத்தை உணராதெழு நெஞ்சே"1 என்பதனானும், ஓத்து என்பதற்குச் சுவாமிகள் கருத்தும் இதுவே என்பது துணியப் படும். மேய என்பதில் மேவுதல், விரும்புதல். "நம்பு மேவு நசை யாகும்மே"2 என்பது விதி, மேவிய என்று இருக்க வேண்டியது மேய என நின்றது. "சேயோன் மேய மைவரையுலகமும்"3 என்றும், "சேறுயர் பூவின் மேய பெருமானும்"4 என்றும் முறையே முருகனும் பிரமனும் கூறப் பெறுதல் காண்க. இவற்றால், சேயோனாகிய முருகனுக்கு மலை நிலமும், பெருமான் என்ற பிரமனுக்குத் தாமரைப் பூவும் உரிய இடமானது போல, திருவோத்தூர், பரமனுக்கு உரிய இடமென்பதாம். மழு, தாருகவனத்து முனிவர் விடுத்த நெருப்புப்படை. வாள், இங்கே, அப்பெயரையுடைய கருவியாக்காகாது, படையென்னும் பொதுப் பொருளையே குறிக்கும். "கானமும் சுடலையும் கற்படு நிலமும் காதலர் தீதிலர் கனல் மழுவாளர்" என்றும் "கூர்மலி சூலமும் வெண்மழுவும் அவர் வெல்படை"5 என்றும் கூறுவராகையால் "ஒளி மழு" என்றார். இனி, மழுவாள் என்பது இரு பெயரொட்டுப் பண்புத்தொகை யென்று கூறி மழுவாகிய வாள் என விரித்துரைப்பார் இராமநந்த யோகிகள். ஒரு சாரார் மழு என்பதற்கு இரும்பின் கட்டி6 என்று பொருள் கூறி, மழு, ஆள், அங்கை எனப்பிரித்து மழுவாயுதத்தை உபயோகப் படுத்தும் அங்கை என்று உரைப்பர். "கொடு மழுவாட் படை" (பா.5) என்று பின்னரும் கூறுவாகையால் யோகிகள் கூறுவதும் பொருந்தும் என்க. அங்கை என்பதற்கு உள்ளங்கை (அகங்கை) என்று கூறலும் ஒன்று. கூத்தர் என்னும் பெயர் "அருவும் ஆரும் ஈரோடு சிவனும்"7 என்ற விதியினால் கூத்தீர் என விளி யேற்று நின்றது. இனி, முன்னிலை வினைப்பெயர் அண்மைவிளி பெற்றது எனினுமாம். பிற இடங்களிலும் இதுவே கூறிக்கொள்க. பரமன் அளவில்லாத குணமுடையவனாகையால், "குணங்களே" என்றார். உம்ம என்பதில் அகரம் ஆறாம் வேற்றுமை உருபு. இது தொல்காப்பியத்தில் சொல்லதிகாரத்து வெளிப்படையாகக் கூறப்படவில்லையாயினும், "அவை தாம், பெயர் ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளி என்னுமீற்ற"1 என்ற சூத்திரத்துள் உத்திவகை யாலும், "ஆறாகுவதே"2 எனத் தொடங்கும் சிறப்புச் சூத்திரத்தில் இலேசினாலும் கொள்ளப்படும். சுவாமிகள் தேவாரத்திற்குச் சுமார் ஐந்நூறு வருஷங்களுக்குப் பின் தோன்றிய நன்னூல், இலக்கண மாகாதாகையால், தொல் காப்பியமே ஈண்டுக் கொள்ளப்படு வதாயிற்று. பொன்னடி என்பதற்கு, "பொலிவினையுடைத்தாகிய திருவடி" என்பர் சிவப்பிரகாசத்தம்பிரான் சுவாமிகள். அப் பொருளின் சிறப் பின்மை பின்னர்க் கூறப்படும் விசேட உரையால் விளங்கும். இலர் என்று கூறாமல் இல்லை என்றதனால், உயர்திணையில் அடங்கும் உயிர்களேயன்றி, அஃறிணையின் பாற்படும் உயிர்களும் தமக்கான முறையில் வழிபாடு செய்யும் என்க. பறவையும், விலங்கும் பூசித்து முத்தி பெற்ற செய்திகள் புராணங்களில் பரக்கக் காணலாம். மேலும், மனிதவுயிர் பரமனை ஏத்தும் போது இவ் வஃறிணையுயிர்களும் பரமன் புகழ் பாடக் கேட்கின்றன. பரமன் புகழ் பாடக் கேட்பதும் வழிபாடே என்பது, சுவாமிகள், "ஆதரித் திசை கற்று வல்லார் சொலக் கேட்டுகந்தவர் தம்மை, வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்தடையாவே"3 என்று கூறுதலால் அறியலாம். இனி, "பத்தியடியவர் பச்சிலையிடினும், முத்தி கொடுத்து முன்னின்றருளித் திகழ்ந்துளதொருபால் திருவடி"4 எனப் பட்டினத் தார் கூறுவதை நோக்கின், பரமனுக்கு வேண்டிய பூ இது, வேண்டாத பூ இஃது என்ற வேறுபாடு இல்லை, என்பது தோன்றும். ஆனால், அருச்சனை புரியும் அன்பர்கள், தங்கள் மனத்திற்கு உகந்த பூ, பரமனுக்கு உகந்த பூவாகும் என்று கருதுவர். அதனால், "பூவைத் தேர்ந்து" என்று கூறினார். வண்டு மொய்த்ததும், வாடினதும், சூடினதுமாகிய பூ பரமனுக்கு ஆகாது என்றும், "கொன்றையொடு வில்வமலர் சங்கரற்கு நேயம்"5 என்றாற் போல, மகேசபேதங் களுக்கு வெவ்வேறு பூக்களை விதிப்பதாலும், "பூத்தேர்ந்து" என்றார் என்றலுமாம். "ஆய்மலர் தெரிந்திட்டு வான்பலி தூவித் தெய்வம் பராயமெய்யருந் திருவினர்"1 என்று ஏனைப் பெரியாரும் கூறினர். உயிர்கள் அனாதியே ஆணவம் என்னும் மலத்தால் பற்றப்பட்டு அறியாமை கொண்டு வருந்துகின்றன. இவ்வருத்தம் தீர்தற்குரிய ஆணவத்தின் சேட்டை கெடுவது குறித்து, பரமன். அவற்றிற்குத் தேகம், கரணம், புவனம், போகம் ஆகியவற்றைக் கொடுத்து, அவற்றால் உயிர்கள் தன்னையுணர்ந்து, மலத்தின் நீங்கிப் பேரின்பமடையும் மார்க்கத்தைக் காட்டியுள்ளார். இவ்வாறு காட்டிய பரமனுடைய பெருங்கருணையை நினைந்து ஆன் மாக்கள் அவனிடத்தில் அன்பு செய்தலும், அதற்கு விரோத மாகாதபடி மனத்தை அவனுக்கே இடமாக்கி விடுதலும் செய்யும். இவற்றுள், மலரிட்டு அருச்சித்தல், மனதை அவனுக்கு உரிமை செய்தலும், அன்பு செய்தல். அபிஷேகாதிகளைச் செய்தலும் எனப்பெரியோர் கூறுவர், அன்பு செய்வதிலும், மனத்தை அவனுக்கே உரியதாக்குதல் அரிய செய்கையாதல் பற்றி, "பூத்தேர்ந்தாயன கொண்டு" என்பதில் பூவை முதலில் கூறினார். மேலும், சைவர்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நால்வகை ஒழுக்கம் உடையவர் ஆவர். அவருள், சரியை, கிரியை என்ற இருவகை ஒழுக்கத்தாருக்கும் சாதாரணப் பூவாதலும், மற்றவர்க்கு ஞானப் பூவாதலும் என இரண்டு வித இயல்பு, பூவால் அருச்சிக்கும் முறைக்கு உண்டு. இதனை "நாவால் நாதன் நாமம் ஓதி நாடோறும் பூவால், நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே"2 என்றும் "ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெட எண்ணில், ஞானமாமலர் கொடு நணுகுதல் நன்மையே"3 என்றும், "நெஞ்சமிது கண்டுகொள் உனக்கென நினைத்தார், வஞ்சமறுத்தருளும் மற்றவனை"4 என்றும் வரும் திருவாக்குகளாய் உணரலாம். இதன் சிறப்பை வலியுறுத்த வேண்டியே, சித்தம் தெளிவீர்காள்"5 என்று தொடங்கும் திருப்பதிகத்தில், "பக்தி மலர் தூவ, முக்தியாகுமே (பா-1) என்றும், "நன்பொன் மலர் தூவ இன்பமாகுமே" (பா-3) என்றும், "ஆருரரைக் கண்டு மலர் தூவ, விண்டு வினைபோமே" (பா-5) என்றும், "வாச மலர் தூவ, நேச மாகுமே" (பா-6) என்றும், "செய்ய மலர் தூவ, வையமும தாமே" (பா-7) என்றும் கூறியருளினார். இதன் இயல்பு களெல்லாம் அறிவு நூல்களில் விரிக்கப் பெறுகின்றன. இனி, புட்பமும் மற்ற பொருள்களும் கொண்டு ஏத்து கின்றவர் பெறும் பயன், பரமன் திருவடியைச் சார்வதேயாகும். ஆதலால், "நின் பொன்னடி" என்று கூறினார். இது, "போதும் பெறாவிடில் நெஞ்சுண்டன்றே இணையாகச் செப்பும், சூதும் பெருமூலைப் பங்கர் தென்தோணி புரேசர் வண்டின், தாதும் பெறாத அடித்தாமரை சென்று சார்வதற்கே"1 என்பதனான் விளங்கும். திருநாவுக்கரசு சுவாமிகளும், "துன்பறத் தொண்டு பட்டார்க், காதார மாவன காண்க வையாறன் அடித்தலமே"2 என்று கூறியருளினார். ஆகவே, பரமன் திருவடி சேர்வதற்குரிய உபாயமும், இந்த மலரிட்டு அருச்சித்தலாகும் என்பதும் துணியப்படும். இச்சிறப்பு டைய பொருள் காணமாட்டாதார், பூவை வழங்குமிடத்து, உயர்ந்தோர், தாழ்ந்தோர் முடியிலும், தாழ்ந்தோர் உயர்ந்தோர் அடியிலும் வழங்குதல் முறையாதல் பற்றி, பொன்னடி கூறினார் என்பர். பொன்னடி, போகம் அளிக்கும் திருவடி. போகம் அனுப விப்பதற்குரிய புண்ணியவுலகத்தைப் பொன்னுலகம் என்று பெரி யோர் கூறுவர். சுவாமிகளும், "பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார்"3 என்று கூறுவர். அதுபோலச் சிவானந்தப் பெரும் போகத்தைத் தருவதற் குரிய திருவடியினை, "பொன்னடி" என்றார் "பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்"4 என்றும் "விமுத வல்ல சடையான் அடி உள்குவார்க் கமுத நீழல் அகலாததோர் செல்வமாம்"5 என்றும், "பேணித் தொழுமவர் பொன்னுல காளப் பிறங்கருளால், ஏணிப் படிநெறியிட்டுக் கொடுத்(து) இமையோர் முடிமேல், மாணிக்க மொத்து மரகதம் போன்று வயிரமின்னி, ஆணிக்கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே"6 என்றும் வரும் திருவாக்குகள் இப்பொருளை வலியுறுத்தும். பொன்னிறமுடைய திருவடி என்றும் கூறலாம். "பொன்னிற மன்னின" என்பர் நாவரசர், "பாற்றுறை மேவிய, பத்துநூறு பெயரனை"1 எனவும், "நாமம் நூறாயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும்"2 எனவும். "ஞானப் பேராயிரம் பேரினான்"3 எனவும் கூறுவதால், தோன்றுதற் கேதுவாகிய குணங்களும் அளவில் அடங்கா வாயின. "அநந்த கல்யாண குணமுடைய பரமன்" என அறிவு நூல்கள் கூறும். ஆயினும், அக் குணங்களை அறிந்த வகையில் ஆன்மாக்கள் கூறித் துதிக்குமாயின், நிறைந்த செல்வமும், சிறந்த ஞானமும் பெற்று இன்புறும் என்பதை யாவரும் அறிந்து ஒழுகுகின்றார்கள் என்பார், "ஏத்தாதார் இல்லை" என்றார். அருமணியை அடிபணிந்தால், நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறுவாரே"4 என்றும், "மாசில் தொண்டர் மலர்கொண்டு வணங்கிட, ஆசையார வருள் நல்கிய செல்வத்தர்"5 என்றும் கூறியதால் நிறைந்த செல்வம் பெறு வதும், "சார்ந்தவர்க்கின்பங்கள் தழைக்கும் வண்ணம் நேர்ந்தவன்"6 என்றும் "ஊனில் வெண்டலைக் கையுடையானுயர் பாதமே. ஞானமாக நின்றேத்த வல்லார் வினை நாசமே"7 என்றும் வரும் திருவாக்குகளால் சிறந்த ஞானம் பெறுதலும் அறியப்படும். "தோட்டீரே" (பா.4) எனத் தொடங்கும் பாசுர முதல் நான்கு பாசுரங்களிலும் முறையே செல்வமும், ஞானவின்பமும் சுவாமிகள் வேண்டி நிற்பர். இனி, உடல் பெற்றதன் பயன் அவன் திருவடி யேத்துதலே, வேறே நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற எண்ணத்தால் யாவரும் ஏத்துதலை விடுவதில்லை என்றார். என்று மாம். "கடல்தாயின நஞ்சம் உண்டபிரான் கழல் சேர்தல் கண்டாய், உடல்தான் உளபயனாவ சொன்னேன் இவ்வுலகிலுள்ளே"8 என்றார் சேரமான் பெருமாள் நாயனார். இருள்மலம் உடைய மக்கள் ஆகையால், அவர்களுள் ஏத்தாதாரில்லை யென்பதை ஆராய்ந் தல்லது கூறமுடியாதாகலின், "எண்ணுங்கால்" என்றார். திருமாற் பேற்றிற்கு சென்றிருந்த போழ்தும், சுவாமிகள், இக்கருத்தை, "உரையாதாரில்லை ஒன்றும் நின் தன்மையைப் பரவாதாரில்லை நாள்களும், திரையார் பாலியின் தென்கரை மாற்பேற், றரையானே அருள் நல்கிட"1 என்று கூறினார். பலவேறு வகையான கொள்கை களையுடைய ஆன்மாக்கள் இருந்தனவாயினும், "நாதவித உருவாய் நமையாள்வான்"2 என்றும், மூவருமாகி யிருவருமாகி முதல் வனுமாய் நின்ற மூர்த்தி"3 என்றும், ஒருவனுமே பலவாகி நின்ற தொரு வண்ணமே"4 என்றும் "எத்தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம்பெருமான் இது என்கொல் சொல்லாய்"5 என்றும் வரும் திருவாக்குகளால் யார் யார் எவ்வெப் பொருளை எவ்வெவ் வகையில் வழிபடுகிறார்களோ, அவரவர்க்கு அவ்வப்பொருளாய் அவ்வவ்வகையே அருள்புரிபவன் என்பது கருத்து என்று தோன்று வதால், "ஏத்தாதாரில்லை எண்ணுங்கால்" என்பதன் உண்மை விளங்கும். "யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே, மாதொரு பாகனார் தாம் வருவர்"6 என்பது சிவஞான சித்தியார், ஒரு கால் ஏத்தாதார் இருப்பாராயின், அவர்கள் உயிருடைய பொருளாகவே கருதப்படார் என்பது, "எண்ணுங் கால்" என்புழிக் குறிப்பாய்த் தோன்றுகிறது. இனி, ஞானத்தால் உயர்ந்த பெரியோர்கள் நாளும் ஓதி வழிபடுவதற்குத் துணையாகிய வேதத்தை ஓதுவிக்கும் பொருட்டுக் கொண்ட இடமாகையால், "ஓத்தூர்" என்றும், அங்கே அவர்கள் தன்னை விரும்பாதவரும் இனி விரும்புமாறு ஓதும் சிறப்பைக் கண்டு மகிழ்ந்திருக்கின்றான் என்பது தோன்ற "மேய" என்றும் கூறினார். விழையாருள்ளம் நன்கெழு நாவில் வினைகெட வேதமாறங்கம், பிழையா வண்ணம் பண்ணிய வாற்றால் பெரியோரேத்தும் பெருமான்"7 என்று வரும் திருவாக் கினால் அறியலாம். பெற்றதன் பெயர்த்துரை நியமப் பொருட்டு" என்ற நியாயப் படி, அம்பலத்தில் நடிப்பவரும், ஓத்தூரில் எழுந்தருளி யிருப்பவரும் ஒருவரே என்பார், "ஒளி மழுவளங்கைக் கூத்தீர்" என்றார். எனவே, பகைவர் விடுத்த ஆயுதம் தன்மேல் வந்தபோது அது தன்செயல் அடங்கி விளங்கும்படி கையிலேந்தியபடியே மகிழ்ந்து கூத்தாடு கின்றார் என்றவாறு. பகைவர் தன்னுடைய உண்மை நிலையை அறியாமல் செய்த குற்றத்தைப் பொருட் படுத்தாது அவர்களுக்கு உணர்வு பிறக்கும் வகையில் அருள் நடனம் பண்ணுகின்றா ரென்பது பயன். ஆன்மாக்களைப் பற்றிக் கொண்டிருக்கும் மலம் நீங்கு வதற்குரிய பக்குவம் வரும் பொருட்டு, அவர்கள் செய்கின்ற கருமத்தின் பலனை அனுபவிக்கப்பண்ணி, அதனால் அவர்கள் பக்குவம் பெற்ற பொழுதில் ஞானம் வரபண்ணி, அந்த ஞானத் தால் தன்னை அறிந்து, தன் சிவபோகத்தை அடையப் பண்ணுவது பரமனாடும் திருக்கூத்தின் கருத்து. இது, "மாயைதனையுதறி வல்வினையைச் சுட்டுமலம், சாய வமுக்கியருள் தான் எடுத்து நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத்தான் அழுத்தல், தானெந்தையார் பதம்தான்"1 என்ற பெரியார் வாக்கினால் அறியப் படும். இத்தகைய அருட் கூத்தாடும் பரமன் குணங்களைக் கூறி, அவன் திருவடியை அருச்சித்து வணங்குவோர், ஞானம் பெற்றுச் சிவம் எய்துவர் என்பதும், எனவே, அஃறிணையிடத்து உயிர்களும், அவன் புகழ் கேட்கும் புண்ணிய விசேடத்தால் தூயவாம் என்பது மாம். திருவடி நீழலின் சிவபோகத்தை அனுபவிக்கும் பொழுது சுத்தஞேயமாய் நிலவும் சிவமே விளங்கி நிற்பதும், சத்தியோடு கூடி ஒன்றாய்ப் பலவாய், அருவம், உருவம், அருவுருவம் எனப் பல உருவபேதமாய் நிற்குந்தோறும், பலவாகிய குணம் தோன்றப் பன்மையாய் விளங்கி நிற்பதும் உணர்த்துதற்கு, "நின் பொன்னடி" என ஒருமைவாய் பாட்டாலும் "உம்ம குணங்களே" எனப் பன்மை வாய் பாட் டாலும் கூறியருளினார்.2 இஃது உபநிடதக் கருத்து. இனி, இப்பாசுரத்தில் குணத்தை வியத்தல் மனத்தின் செய லாகவும், ஏத்துதல் வாக்கின் தொழிலாகவும், பூத்தேர்ந்து ஆயன கொண்டு வருதல் மெய்யின் செயலாகவும் கொண்டு, இதனால் திரிகரணத்தாலும் பரமனை வணங்கும் விதம் கூறப்பட்டிருத்தல் காண்க. செய்யுளாகலின் முறை பிறழ்ந்து நின்றது. அகண்டாகார சச்சிதானந்தப் பிழம்பாகிய முதல்வன் ஆன் மாக்கள் வழிபட்டு உய்யும் பொருட்டுப் பிழம்பாய் நிற்கும் அந்நிலையேயன்றி, அதிசூக்குமம், சூக்குமம் தூலம் என மூன்று திருமேனி கொள்வன். இத்திருமேனிகளை முன்னர்க் கூறிய சரியை முதலிய ஒழுக்கத்தினர் உருவாகிய சகளத் திருமேனியையும், கிரியையர் தூல சூக்குமங்களாகிய சகளநிட்களத் திருமேனியையும் வணங்கி வழிபடுவர். யோகியர் அகளமாய் நிற்கும் அதிசூக்குமத் திருமேனியினை யும், ஞானிகள் அவ்வகண்டாகார சச்சிதானந்தப் பிழம்பையும் தியானித்து வழிபடுவர். இப்பொழுது திருக்கோயில் களில் எழுந்தருளியிருக்கும் திருமேனிகள் சகளமாய், நினைந்த வழி நினைவின் கண்சகள நிட்களமாய்த் தோன்றுவனவாம். "அகளமாய் யாரும் அறிவரிதப் பொருள், சகளமாய் வந்ததென்றுந் தீபற, தானாகத் தந்ததென்றுந் தீபற"1 என்பது உய்ய வந்த தேவநாயனார் திருவாக்கு. இத்திருமேனிகளுள் அகளகாய், ஆன்மாக்கள் மலபந்தம் நீங்கி, ஞானம் பெற்று, முத்தி பெறுவதற்கு யோக்கியமாகும்படி விளங்கும் திருமேனி, திருநடனம் புரியும் திருமேனியாகும். ஆகவே, அதனை முதற் பாசுரத்தில், "ஒளி மழுவாள் அங்கைக் கூத்தீர்" என்பதனால் உணர்த்தினார். அப்பொழுது ஆன்மாக்கள் மாயையுடன் ஒடுங்கியுள்ள சிவசக்தியைத் தன்னிடத்தே ஒடுக்கி நிற்கும் பரமன், அச்சக்தியில் ஆன்மாக்களும் மாயையும் மீளக் காரியப்படுவதற்காக அதனை நோக்கி நின்று நடிப்பன். அச்சத்தி, சகளத்தில் உமாதேவி யாகலின், அவர் காண நடிக்கும் நடனத்தைப் "பாலொத்தனைய மொழியாள் காண ஆடும் பரவனார்"2 என்பர். ஆனந்தமாய் நிற்கும் அகளத் திருநடனம், இப்பாசுரத்தில் கூறின மையின் அடுத்த பாசுரத்தில் சகள நிலைக்குரிய தேவியினைக் கூறுகின்றனர் போலும். "அகளத்தில் ஆனந்தத் தானந்தியாயே, சகளத்தில் தையலுடன் தோன்றி - நிகளத்தைப் போக்குவதும் செய்தான்"3 என்றார் பெரியாரும். இதனால் ஒடுங்கி நின்ற ஆன்மாவும், மாயையுமாகிய இவற்றிற்குப் புனருற்பவம் நிகழ வேண்டியும், நிகழ்ந்த பின், ஆன்மா மலபந்தத்திலிருந்து நீங்கி வீடு பெறவும் திருவுள்ளம் கொண்டு நடிக்கும் கூத்தனது முதன்மை யுணர்த்தி, அவனைத் திரிகரணங் களாலும் வழிபடும் கிரமத்தைக் கூறினாராம். ஒரு சார், திருவோத் தூர் வாழ்கின்ற வர் உண்மையுணர்ந்து, பரமனை வழிபடும் கிரமத்தை உலகறிய உணர்த்தியவாறுமாம். இனி, தனக்கு பயன்பட ஏத்துதலும், பிறர்க்குப் பயன்பட ஏத்துதலும் என்ற இருவகைப் பயப்பாடுகளுள், இது பிறர்க்குப் பயன்பட ஏத்தியதாம். புராண வரலாறு, ஆண்பனை பெண்பனை யாதல் வேண்டுமென்று கருதிய அன்பர் பொருட்டுப் பாடியருளப் பட்டது என்று கூறும். 4. தோட்டீரே, துத்தி யைந்தலை நாகத்தை ஆட்டீரே, அடியார்1 வினை ஓட்டீரே,2 உம்மை ஏத்துதும்; ஓத்தூர் நாட்டீரே! அருள் (உரைப்பாடம் :-) தோட்டீ(ராய்), துத்தி ஐந்தலை நாகத்தை ஆட்டீ(ராய்), அடியார் வினை ஓட்டி(ராய்), ஓத்தூர் நாட்டீரே! உம்மை ஏத்துதும், (ஆகலின்), அருள் நல்குமே என்பது. உரை :- தோடும், புள்ளிகளையுடைய ஐந்தலை நாகத்தை யாட்டுதலும், அடியார்களின் வினையைப் போக்குதலும் உடைய வராய்த் திருவோத்தூர் நாட்டின் கண் எழுந்தருளிய பரமனே! உம்மை ஏத்துகின்றோம்; ஆகையால், எங்களுக்குத் திருவருள் பாலிப்பீராக, எ-று. தோடு, இடது காதில் அணியும் ஆபரணம். "வாணுதற் பட்ட மின்ன வார்குழை திருவில் வீசப், பூண்முலைப் பிறழப் பொற்றோ(டு) இடவயின் நுடங்க3 என்று திருத்தக்கதேவர் கூறியதி னால், தோடு, இடது காதிலும், குழை, வலது காதிலும் அணிவன என்பதாம், "தோடக மாயொர் காதும் ஒரு காதிலங்கு குழைதாய வேழ வுரியன்"4 என்று சுவாமிகள் கூறுவர். இத்தோடு பெண் களுக்கும் உரித்து. தோட்டீர் முதலாக நின்ற குறிப்பு முற்றுக்களை எச்சமாக்கி நாட்டீர் என்புழி தொக்க ஆக்கத்தை விரித்து, "சடையீர்" (பா.2) என்புழி முடித்தாங்கு முடித்தியைக்க, "வினையெஞ்சு கிளவிக்கு வினையும் குறிப்பும், நினையத் தோன்றிய முடி பாகும்மே ஆவியிற் குறிப்பே ஆக்கமொடு வருமே"1 என்ற சூத்திரவுரையின் கண், ஆசிரியர் சேனாவரையர், "ஆக்கமொடு வரும் என்றது பெரும்பான்மை குறித்ததாகலின், சிறுபான்மை ஆக்கமின்றியும் வரும்" என்றாராயினும், பொருள் நோக்கின் கண் ஆக்கம் விரிந்து முடிந்து இயைதலின், ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியவாறு ஆக்கம் தொக்கதென்றலே சிறப்பென்றறிக. "அதுச் சொல் வேற்றுமை யுடைமையானும், கண்ணென் வேற்றுமை நிலத்தினானும், ஒப்பி னானும் பண்பினானு மென்றப்பாற்காலம் குறிப்பொடு கொள்ளும்"2 என்றதன்கண், ஆட்டுதலும், ஓட்டுதலும் தொழிற்பண்பு மாத்திரை யாய், "பண்பினானும்" என்பதனுள் அடங்கும் என்க. இனி ஆட்டீர், ஓட்டீர் என்பனவற்றைச் செய்யீ ரென்னும் வாய்பாட்டு முன்னிலைத் தெரிநிலை முற்று வினையாகக் கொள்ளின், அவை செய்யுமென்னும் பொருளவாய், பொருட் சிறப்பிலவாம் என்க. ஓட்டுதலும், ஆட்டுதலும், தோடு அணிதலும், பரமன் இயல்பாகவே உடையவன் என்பது குறிப்பு வினையாயவிடத்து இனிது பெறப்படும்; அனாதியே யுடையவன் என்று கருதுவார்க்கு அப்பொருட்டாதலும், நிகழ்வின்கண் உடையவன் என்று கருதிய வழி, நிகழ்காலக் குறிப்பும் பிறவும் குறிப்பு வினையின் பயன் இதனை, "அதுச் சொல்"3 என்று தொடங்கும். சூத்திரத்துக்கு ஆசிரியர் தெய்வச் சிலையார் உரைத்த விசேட வுரையிற் காண்க. ஏகாரங்களுள் முன்னின்ற மூன்றும் அசை. நல்குமே என்பது, "அட்டிலோலை தொட்டனை நின்மே"4 என்புழிப் போல, ஏகார வீற்று முன்னிலை வினைமுற்று. "முன்னிலை முன்னர் ஈயும் ஏயும் அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே"5 என்பது விதி இனி, இஃது எதிர்கால வினை நிகழ்ச்சியுணர்த்தும் செய்யுமென் முற்றென்றும், ஏகாரம் அசை நிலையென்றும் சிலர் கூறுவது பொருந்து மாயிற் கொள்க. தோடுங் குழையுமாகிய இரண்டனுட் குழையினை அடுத்த பாசுரத்திற் கூறுகின்றாராகலின். "தோட்டீரே" என்றார். இவ்வாறு பிரித்துக் கூறலும் மரபு என்பதனைத் "தோடுடைய செவியன்"1 என்றதனான் அறிக. தாம், பரமனுடைய திருவருளை வேண்டு கின்றாராகயாலும். அத்திருவருள் அவனுடைய அருட்சத்தியே யாகையாலும் அதற்குரிய உமைநங்கையிருக்கும் இடப்பாகத்துக் காதணி யை முதலில் ஏத்தினார். அவன் அதனைத் தன்னிடத்தே ஒடுங்கியிருப்பினும், அவன் அதனோடு கூடியே அடியார்க்கு அருள்புரிவன் என்பதனை, "ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருள் நல்கிச் சேண் நின்றவர்க்கின்னம் சிந்தை செயவல்லான்,"2 எனவரும் திருவாக்கினால் உணரலாம். இனி, தாருகவனத்து முனிவரவர்கள், பரமனை அழிக்க எண்ணி விடுத்த கருநாகத்தைத் தன்கரத்திற் பற்றி, அவர் தவமும் வேள்வியும் தன் அருள் இல்லாவிடிற் பயன்படா என்று அம்முனிவர் உணரவும், எல்லாம் வல்ல முதற் பொருளாகிய தன்னை எத்தகைய தவமும் வேள்வியும் ஈறு செய்ய முடியாதாகலின் தானே முழு முதற்பொருள் என்பதை அவர்கள் அறிந்து தெளியவும், அவர்கள் தெளிந்த அறிவில்லாமையால் செய்த செய்கையைப் பொருளாகக் கொள்ளாது, குழந்தை தன் தாய்க்குச் செய்த பிழையை அவள் பொறுத்து, பின்னர் அதனை அதற்குக் காட்டித் தெருட்டு மாறு போலவும், கரத்திலேந்தி ஆட்டினாராகையால் அத்தாய்மைநிலை தோன்ற, "ஐந்தலை நாகத்தை ஆட்டீரே" என்றார். இனி ஐம்புலன் களையும் தலையாகக் கொண் டொழுகும் உயிர், ஈண்டு உருவகம் செய்யப்பட்ட ஐந்தலை நாகமென்றும், துத்தி என்பது, நாகம் என்றதற்கேற்ப வந்த விசேடணமென்றும், அதனைத்தான் ஆட்டுத லாவது, உயிர்க்குயிராய் நின்று, அவ்வுயிர்த்திரளை ஆட்டுவிக்கும் இயல்பு என்றும் கூறுதல், உண்மை நயம் என உணர்க. "பையாரும் அரவங்கொடு ஆட்டிய கையானென்று வணங்குவர், மையார் நஞ்சுண்டு மாற்பேற்றிருக்கின்ற, ஐயா நின்னடியார்களே"3 என்ற திருப்பாசுரக் கருத்தும் இதுவே என்பர். பரமனது தாயாந்தன்மை, "தீயுறவாய வாக்கையது பற்றி வாழும் வினைசெற்றவுற்றவுலகின், தாயுறு தன்மையாய தலைவன்"4 என்பதனால் அறியப்படும். "ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே"5 என்பது, உண்மை நயத்துக்கு ஆதாரமாய் நிற்பது. பந்தம், வீடு என்னும் இரண்டின் இயல்புகளையறிந்து பிறப்பினையறுத்து, வீடு பெறுதற்குரிய மார்க்கங்களில், முதல்வ னாகிய பரமனுக்கு அடிமைத் தொழில் புரிவது தாதமார்க்க மெனப்படும். அடிமை நெறியென வழங்குவதும் இதுவே. அதனால், ஞானம் பெற்று, பிறவிக்கு ஏதுவாகிய வினையையறுத்தல், அந்நெறியின் பயன். இவ்வுண்மையுணர்ந் தொழுகுவார், "எம் சிவனார்க்(கு) அடிமைப் படுவார்க்கினியில்லை யேதமே"1 என்ற கொள்கைய ராகிய அடியவர் ஆவர். இவர்கள் வேண்டுவன வினை நீக்கமும் ஞானப் பேறுமே யன்றிப் பிற அல்லவாகலின், "அடியார் வினை ஓட்டீரே" என்றார். "அடியராகி நின்றேத்தவல்லார்தமை யருவினை யடையாவே"2 என்பதனானும், இது கருத்தாதல் துணியப் படும் படவே, ஆன்மாக்களுள், அடியாராவார் அல்லல் நீங்குவது பயனாகப் பரமனைப் பத்தி பண்ணுவதும். "ஊனமிலராகியுயர் நற்றவமெய் கற்றவை யுணர்ந்த அடியார், ஞானமிக நின்று தொழ நாளுமருள் செய்யவல நாதனி டமாம்"3 என்ற திருவாக்கினால், ஞானப் பேறும் உணரப்படு மென்க. இக்கருத்தே, "வினையால சத்து விளைதலால் ஞானம், வினைதீரினன்றி விளையாவாம்"4 என்றார் மெய்கண்டதேவ நாயனார். இனி வினையாவது, மனம், வாக்கு, காயம் என்ற மூன்று கரணத்தினுடைய அசைவினாலும், அசைவின்மையாலும் பிறக்கும் கருமபலன் என்பது. "இருவினையென்பது என்னை கொல் அருளிய, மனமே காய வாக்கெனு மூன்றின், இதமே யகிதம் எனுமிவை"5 என்பதனாலும் இஃது உணரப்படும். இலக்கணக் கொத்துடையார், இவற்றோடு அறிவையும் கூட்டி, "மனமொழி மெய்யறிவாகிய நான்கின், அசைவே யாகியும் அவ்வசைவின்றியும்"6 வினை நடக்கும் என்பர். உலகிற் காரியங்களெல்லாம், "ஒருங்கே தோன்றாது, அடைவே தோன்றுவதற்குக் காரணம் வினை யேயன்றிப் பிறிதின்மையானும் வினையுண்மை துணியப் படும் என்றும் "வினையில்லையாயின் விதித்தன செய்து விலக்கியன வொழிதலாற் பயனின்றாய் முடியும்; ஆகலானும் வினையுண்மை துணியப்படும்" என்றும் ஆசிரியர்1 சிவஞான யோகிகள் விளக்கிக் கூறியவாற்றால் இவ்வினை உண்டெனப் படுவதேயாகும். ஆகவே இவ்வாறு நடக்கும் வினைகளுள் நல் வினைகள் மீட்டும் பிறப்புக்குக் காரணமாய் நிற்பதனால் அவையும் அடங்க, "வினை" என்று பொதுப்படக் கூறினார். ஆசிரியர் திருவள்ளுவனார், "இருள் சேர் இருவினையும் சேரா இறைவன், பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு"2 என்று விளங்கக் கூறினார். இனி ஒருவன் ஒரு வினையைச் செய்தவிடத்து, அஃது அவனை விடாதே சென்று, தன்பயனை அவன் நுகரும் அளவும் அவனுயிர் செல்லும் இடந்தோறும் பின் தொடர்ந்து சென்று, இறந்தால் அவன் உயிரின் கண் தங்கி, அவன் எத்தனை யுடம்புகள் எடுப்பினும், அத்துணையுடம்பு களிலும் சென்று தன்பயனை அனுபவிக்கப் பண்ணும் வன்மை உடையதாகும். மரத்தின்பழம் பிறிதோர் மரமுண்டாதற்கு மேதுவாதல் போல, ஒரு வினைப்பயன் பிறிதோர் வினை நிகழ்ச்சிக்கும் ஏதுவாதல். வினைகட்குரிய இயல்புகளுள் ஒன்று, இதனை "எனைப்பகையுற்றாரும் உய்வர் வினைப்பகை, வீயாது பின் சென்றடும்"3 என்றும், "மேலைக்கு வித்துமாகி, விளைந்தவை யுணவுமாகி, - ஞாலத்து வருமா போல நாம் செய்யும் வினைகளெல்லாம், ஏலத்தான் பலமாச் செய்யும் இதம் அகிதங்கட்கெல்லாம், - மூலத்ததாகி என்றும் வந்திடும் முறைமையோடே"4 என்றும் பெரியோர் கூறினர். இத்தகைய வினை, சடமாதலால், இதனை ஓட்டு தலாவது, செய்த வினையின் பயனை அனுபவிக்குமுகத்தால். வேறே வினைக்கு ஏதுவாகாத சிவஞானச் செயலை உண்டு பண்ணுதல் என்க. "உணவு வேண்டு" மென்பவன், "என் பசியைப் போக்க வேண்டுகின்றேன்" என்பது போலக் குறிப்பின்கண் வந்ததாம். "கை வினை செய்தெம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம், செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்"5 என்ற அருமைத் திருவாக்கினால் இப்பொருள் வலியுறுதல் காண்க. பரமன் அருட்சத்தியொடு கூடியிருப்பதும், ஐந்தலை நாகத்தை யாட்டும் செய்கையால், உயிர்க்குயிராய் அன்றித் தாயாய்ப் பரிந்து குற்றம் போக்கிக் குணம் காட்டி மகிழ்வதும், தன்னையடைந்த அடியார் வினையை அறுக்குமாற்றால் ஞானம் அருளுவதும் இத் திருப்பாசுரத்திற் கூறினார். இவ்வாறு அருளும் ஞானமுமுடைய பரமனிடத்து, அவற்றைப் பெறவிரும்புவோர், வணங்கித் துதித்து, இரந்து நின்று பெறவேண்டுமே தவிர அவற்றிற்காகத் தரக்கூடியது ஒன்றுமில்லை. ஆதலாற்றான். "உம்மை ஏத்தும்" என்றார். "கோட் பாலனவும் வினையும் குறுகாமை எந்தை, தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க தக்கார்"1 எனப் பிறாண்டும் கூறியருளினர். கூறவே அருளும் ஞானமும் பெருகத் தரவல்ல பரமன் எழுந்தருளிய நாட்டில், இல்லாத பொருள் ஒன்றும் இல்லை யாதலால், "நாட்டீரே" என்றார். நாடென்பநாடா வளத்தன - நாடல்ல-நாடவளந்தரு நாடு"2 என்பது திருக்குறள். மூவகையான் மாக்கள் பொருட்டு, பரமன் எழுந்தருளும் முறையை முதல் மூன்று பாசுரங்களிற் கூறி, அவருள் ஒரு மலமும் இருமலமும் உடைய ஆன்ம வர்க்கத்துக்கு ஞானநிலை நிற்க, மும்மலத்தையுடைய சகலர் பக்குவமாதற் பொருட்டு, அறமுதலிய நான்கு பொருளையும் தருமாறு வேண்டி, இதன்கண், இல்லிருந்து நல்லறஞ் செய்து, பின், அருளுடைமை முதலிய விரதங்களால் ஞானம் பெறுவதற்கு யோக்கியமான அறம் வேண்டுகின்றா ராகலின், "அருள் நல்குமே" என்று முடிக்கின்றார். "அறம் அறியார் அண்ணல் பாதம் நினையும் திறம் அறியார்"3 என்றும் "திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி, இளைப்பினை நீக்கும் இருவழி யுண்டு. கிளைக்கும் தனக்கும் அக்கேடில் புகழோன், விளைக்குந்தவம் அறம் மேற்றுணையாமே"4 என்றும் சான்றோர் கூறியருளினர். இனி "அடியார் வினையை, ஓட்டீரே" என்ற பாடத்துக்குத் தொக்கியிருந்த ஐயுருபு விரிந்து நின்றதாக வுரைக்க. ஆயினும், இத்திருப்பதிகப் பாசுரங்களில் நேரசை யால் தொடங்குவன, முதலடி மெய் ஒழிந்த பதினோ ரெழுத்துக்கு மிகாமலும், அயலடி எட்டெழுத்துக்கு மிகா மலும் இயன்றிருத்தலினாலும், உருபு விரிந்த விடத்து, ஓசை நெடுகி ஒத்தறுத்தற்குப் பொருந்தாமை யினாலும் அப்பாடம் பொருந்தாது என்க. "உமை ஏத்துதும்" என்ற பாடத்தினும், "உம்மை ஏத்துதும்" என்ற பாடம் இலக்கண முறைக்கு நேரிதாம். இசை கெடாதபொழுது சொற்கள் விகார மடைதல் இல்லை. செய்யுட்கணோசை சிதையுங்கால் ஈரளபும் ஐயப்பாடின்றியமையுமாம் - மைதீரொற்றின்றியும் செய்யுட் கெடினொற்றையுண்டாக்கு, குன்றுமேல் ஒற்றளபும் கொள்"1 என்றதில் இவ்விதி தோன்ற, "ஓசை சிதையுங்கால்" என்றும் "செய்யுட் கெடின்" என்றும் "குன்று மேல்" என்றும் பெரியோர் பலமுறையும் கூறியிருத்தல் காண்க. 8. "என்! தான் இம்மலை," என்ற அரக்கனை வென்றார் போலும் விரலினால்; "ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர் என்றார் மேல் வினை யேகுமே. (உரைப் பாடம் :-) "இம்மலைதான் என்!" என்ற அரக்கனை, விரலினால் வென்றார் போலும்; ஒன்றார் மும்மதில் எய்துவன் ஓத்தூர்" என்றார் மேல்வினை ஏகும் என்பது. உரை :- "இம்மலைதான் எனக்கு யாதாகும்!" என்று கூறி அதனை எடுக்க முயன்ற அரக்கனாகிய இராவணனைத் தம் கால்விரலை யூன்றி வென்றவரும், பகைவராகிய திரிபுரத் சுரர்களின் மூன்று மதில்களையும் அம்பை எய்து அழித்தவருமாகிய பரமனுடைய திருவோத்தூர்?" என்று சொல்லிப் புகழ்பவருடைய, இனிமேல் அனுபவிக்க வேண்டிய வினைப்பயன் அவரை விட்டு நீங்கிப் போகும், எ-று. எவன் என்னும் வினாப்பெயர் என்னென்றாய், ஈண்டு, "அற்பம்" என்னும் பொருள் குறித்து நின்றது. தான் அசைநிலை. போலும் உரையசை. "ஒப்பில் போலியும் அப்பொருட்டாகும்"2 என்பது விதி. இதனை வாக்கிய யலங்காரம் என்றும் கூறுவர். "சென்றார் போலும்" (பா. 9) என்புழியும் இதுவே கூறிக்கொள்க. ஒன்றார் பகைவர். மும்மதில், மூன்றாகிய மதில். அவை பொன் மதில், வெள்ளிமதில், இரும்புமதில் என்பன. "வெள்ளி, இரும்பு, பொன் எனப்பெற்ற மூன்றுபுரம்"1 என்றார் கல்லாடனாரும். இனைத்தென அறிந்த முற்றும்மை, விகாரத்தால் தொக்கது. மேல்வினை, இனிமேல் அனுபவிக்க வேண்டிய வினைப்பயன். காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது. என்றாருடைய வினை என இயையும். இலங்கைக்கு அரசனான இராவணன் ஒரு காலத்தில் தேர்மே லேறிக் கயிலைமலைப் பக்கத்தே வந்து கொண்டிருந் தான். எதிரே கயிலைமலை நிற்கவே, அவன் தேர் நேராகப் போகமுடிய வில்லை. அவன் "முன்நின்று சண்டைசெய்ய வல்லவர் ஒருவரும் இல்லையென்று" சொல்லத் தகும் பெருவிறல் உடையவன்; ஆகையால், தன்னுடைய பலத்தையே பொருளாக நினைத்து எதிர் நிற்கும் மலை உலகமுழுவதும் தானேயாகிய பரமனைத்தன் சிகரத்தே தாங்கிக் கொண்டிருக்கும் பெருமையுடைய தென்பதை நினைத்திலனாயினான். இவ்வாறு மறமிகுதியால், இம்மலையை எடுத்தல் ஆகாத காரியம் என அறியாமல், "எனக்கு எதிர்நின்று போர் செய்வார் யார்" என்ற தருக்கினால், அந்த மலையின் அடிவாரத்தில் நுழைந்து தூக்க முயன்றானாகலின், "என்தான் இம்மலை என்ற அரக்கனை" என்றார். இச்செய்தியைச் சுவாமிகள் பதிகந்தோறும் அமைத்துப் பாடுவர். அவர் திருவாக்குகளில், "வண்ண மால் வரை தன்னை மறித்திட லுற்ற வல்லரக்கன், கண்ணுந் தோளும் நல்வாயும் நெறிதரக் கால்விரலூன்றி"2 என்றும், "முன்னிற்பவர் இல்லா முரண் அரக்கன்"3 என்றும் "மறந்தான் கருதி வலியை நினைந்து மானாய் எடுத்தான்"4 என்றும், "சிவன்மலையை ஓராதெடுத் தார்த்தான்"5 என்றும், "பொருவார் எனக் கெதிர் ஆர் எனப் பொருப்பை எடுத்தான்"6 என்றும் வருவனவற்றால் இவ் வரலாறு துணியப்படுதல் காண்க. இனி, பரமன் தேவியுடன் இருந்தருளிய கயிலை மலையை இராவணன் சிறிது தூக்கின அளவில், அம்மலை அசைய, அதுகண்டு உமாதேவியார் அஞ்சினராக, பரமன் புன்னகையுடன் தேவியைத் தழுவிய வண்ணமே தமது திருவடித் திருவிரலை மெதுவாக ஊன்றினர். அதனால் அம்மலை அசையாது அழுந்திற்று. அரக்கன் அதனடியில் அகப்பட்டுக் கொண்டு, கண் பிதுங்கி வருந்தினான். ஆகலின். "வென்றார் போலும் விரலினால்" என்றார். அத் திருவிரல் ஊன்றிய சிறப்பினால், அவனுக்குச் சிறிது ஞானம் தோன்றிற்று. பின்னர், அவன் தான் மாறாகச் செய்த காரியத்துக் காக வருந்திப் பரமனுக்கு விருப்பம் தருவது சாமவேத கீதம் என்று உணர்ந்து, அதனை மனம் ஒன்றிப் பாடினான். பரமனும் அவனுக்கு வேண்டும் வரம் தந்து அனுப்பியருளினர். திருவிரல் ஊன்றிய விசேடத்தால் அவனுக்கு ஞானம் பிறந்த சிறப்பை யுணர்த்துவார், "விரலினால்" எனப் பிரித்துக் கூறினார். இச்செய்திகள் "ஒளிகொள் வாளெயிற் றரக்கன் அவ்வுயர் வரை எடுத்தலும் உமையஞ்சிச், சுளிய ஊன்றலும் சேர்ந்திட"1 என்றும், "பத்தோர் வாயான் வரைக்கீழ் அலறப் பாதந்தான், வைத்தாரருள் செய்தான்"2 என்றும், "சாமவேத மோர்கீத மோதியத் தசமுகன் பரவும், நாமதேயம துடையார்"3 என்றும் "மனம் ஒன்றி உரையார் கீதம்பாட வுலப்பில் அருள் செய்தான்"4 என்றும் "கவிழ மலைதளரக் கடகக் கையால் எடுத்தான் தோள், பவழ நுனைவிரலால் பையவூன்றிப் பரிந்தாரும்"5 என்றும் வரும் திருவாக்குகளால் உணரப் படுகின்றன. இனி இராமாயண உத்தர காண்டம், "பிறைச் சடை முடிக் கடவுள் பொற்றிரு வடிப்பெரு விரற்றலையினால், நெருக்கென அழுத்திட உடற்பொறை பதைப்ப நிருதர்க் கிறைவன்"6 என்று கூறுகின்றது. நெருக்கென அழுத்துவதை விடப் பையவூன்றுதலே பரமனுடைய பெருங் கருணைச் செயலாகும். நெருக்கென ஊன்றி விட்டால், இராவணன் கீதம் பாடுவது ஏது? அருள் பெறுவது ஏது? பையவூன்றுதல் அவருக்கு இயல்பு என்பதை வலியுறுத்தவே, "வள்ளல் இருந்த மலையதனை வலஞ்செய்தல் வாய்மையென, உள்ளம் கொள்ளாது கொதித்தெழுந்தன் றெடுத் தோன் உரம் நெரிய, மெள்ள விரல் வைத்தென் உள்ளம் கொண்டார்"1 என்று பிள்ளையார் பரிந்து கூறுகின்றார். தன் மறத்தின் மிகுதியால், 'இம் மலைமேல் என்னினும் பலமுடையோன் ஒருவன் உளனோ?' எனப் பதைத்து வந்தான் ஆகையால், அவனை மலைக்கீழ் அடர்த்த செய்தியை "வென்றார்" என வெற்றி வாய்பாட்டினாற் கூறினார். இஃது "ஒருவரையும் மேல்வலி கொடேன் என எழுந்தவிற லோனிப் பெருவரையின் மேலோர் பெருமானுமுளனோ என வெகுண்ட, கருவரையும் ஆழ்கடலும் அன்னதிறல் கைகளுடையோன்"2 என்ற திருவாக்கினால் தெரிகிறது. இனி, திரிபுரத்தை யாண்ட அசுரர்கள் ஆதியில் சிவனை யன்றித் தெய்வம் வேறே இல்லை என்ற கொள்கை யினையுடைய சுத்த சைவராய் இருந்தனர். சிவன் அருளால் அவர்கள் பெருவலி யுடை யராய், வானத்திற் பறக்கும் மூன்று மதில்களையுடைய ராயினர். ஆயினும் அசுரர் ஆகலின், தேவர்களாகிய சுரர்களுக்கு இடுக்கண் விளைத்தலை விட்டிலர். இதனால், திருமால் முதலிய தேவர்கள், புத்தர்களாய்த் திரிபுரம் சென்று, தங்கள் தந்திரத்தாலும், மந்திரத்தாலும், அவ்வசுரர் கொண்டிருந்த சைவ சமய உணர்ச்சி யைப் போக்கி, சிவபெருமானை வெறுத்தற்குரிய உணர்ச்சியை அவர்கள் மனத்திற் கிளர்த்தி விட்டனர். தேவர்கள் செய்த சூழ்ச்சி யால் சிவத்துரோகிகளாய் விட்ட திரிபுரர்கள், சிவனையும், சைவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினர். இதனால் பரமன், மேருமலை, ஆதிசேடன், திருமால் முதலியோரை முறையே வில்லும், நாணியும், அம்புமாக, பூமி தேராக வேதம் குதிரையாக, பிரமன் ஓட்டுவோனாக அமைத்துக் கொண்டு திரிபுரத்தை நோக்கிப் போர்க் கோலங் கொண்டு சென்றருளினர். அசுரர்களும் அவர்முன் பகைத்து நின்றனர். பரமன் நாணிலேற்றுவதற்காக மலையை வளைக்க, அது அசுரரை நோக்கி விடுவார், புன்னகை செய்தருளினார். உடனே, "புரங்கள் நெறு நெறு நெறுவென நீறின"3 அப்பொழுது அசுரர் தலைவரான வாணன் முதலிய மூவருமே யெஞ்சினர்; பிற அசுரர் கூட்டம் முற்றும் அழிந்து சாம்பராய் விட்டது. அம்மூவரும், பின்னர், நல்லுணர்வு பெற்றுப் பரமனை வணங்கி, அவனருளால், முறையே முழாமுழக்குவோரும், துவார பாலகரு மாயினர் என்பது புராண வரலாறு. இனி, ஒன்றார் என்னும் சொல், ஒன்று+ஆர் என முதனி லையும் ஈறுமாய்க் கூடி நின்று உடன்பாட்டுப் பொருள் தந்தது. பின்னர், எதிர்மறைப் பொருளைத் தரும் ஆகார விகுதிபுணர்ந்து, ஓன்று+ஆ+ஆர் என எதிர்மறைப் பொருண்மை வினைச் சொல்லா யிற்று. ஆயினும், மறைப் பொருட்டாய ஆகார விகுதி மட்டில் அப்பொருண்மை நிற்க கெட்டமையின், நின்ற ஒன்று+ஆர் என்பவற்றின் கூட்டமாகிய ஒன்றார் என்பது எதிர்மறைப் பொருண்மை யிற்றீராது நிற்பதாயிற்று; தூய ஆன்பாலில் நீல மணியைப் பெய்த விடத்து அது கெடுதலும், பின்னர், நீக்கினும் பாலின் கேடு நீங்காது நிற்றலும் போல. இவ்வாறு விகுதி புணர்ந்து கெட்ட மறைச் சொல்லால் திரிபுராதியரைக் குறித்ததன் பயன், பண்டெல்லாம் சிவபத்தராய் விளங்கிய அவர்கள் தேவர்கள் சூழ்ச்சியால், புத்தர் களாகி, தேவர் நீங்கினும், தாம் நீங்காது புத்தர் களாகவே இருந்து கெட்ட செய்தியைக் குறிப்பது என்பர் ஆசிரியர் சீகாழி கோவிந்த சாமி ரெட்டியாரவர்கள். அளவில்லாத கூட்டத்தோடு மூன்று மதில்களும் சூழ்ந்து வர வந்து, அசுரர் பரமனை எதிர்த்துப் போர்க்குரிய செயல் பலவும் செய்தாராயினும், தான் ஒருவனே நின்று, வில் வளைத்து நாணி யேற்றி, வளையாத மலையும் வளைந்ததே எனக் கண்டு நைகப் பான் போலக் குறுநகை காட்டிய அளவில்' அவர் தொகையும் படையும் காட்டுத் தீமுன் பஞ்சுத்துய் போல எரிந்து நீறுபட்ட சிறப்பும், அவர் செயலெல்லாம் அடங்க, பரமன் செயல் ஒன்று மட்டுமே தலையோங்கி நின்ற நலமும் தோன்ற, "எய்தவன்," என ஒருமையாற் கூறினார். இனி, பரமன் கயிலையில் தேவியுடன் ஒருவனும், ஒருத்தியு மாய் இருந்தருளிய காலத்தில் இராவணனை அடர்த்தருளினார். ஆகலின், அக்காலை, அவரைக் கூறுவார், அவளைப் பிரித்தலா காமையின், "வென்றார்" எனப் பன்மை வாய்பட்டாலும், முப்புரம் எரித்த காலையிற் பெண்ணு ருவைத் தன்னுட்கரந்து, ஒருவனே சென்றெய் தினமையின், "எய்தவன்" என ஒருமை வாய் பாட்டாலும் கூறினார் எனினுமாம். "எண்ணரும் பாசறைப் பெண்ணொடு புணரார்"1 என்பது விதியாகலின், உமை நங்கையின் குறிப்பு இன்றென உணர்க. இனி, "எம் கட்புலங் காண விட்புலம் போயது, இறும்பூது போலும்"2 என்பதில் போயது என்றதனைப் போய, அது எனப் பிரித்துப் பொருள் செய்தல் போல, எய்தவன் என்பதனை எய்த+ அவன் எனப் பிரித்து, அவன் என்பதற்கு உலகனைத்தும் தான் வேட்டபடியெல்லாம் ஆட்ட வல்ல பேராற்றலை இயல்பாகவே யுடைய அப்பரமன் என்றுரைத்தலும் ஒன்று. "மாந்தர் பிணங்க வேட்டான், விரை சென்றடைந்த சூழலாளை அவ்வேனிலானே"3 என்புழிச் சீவகனை அவ்வேனிலான் என்பதற்கு, சுட்டு நயத்தையுட் கொண்டு ஆசிரியர் நச்சினார்க்கினியர் "நுதல் விழிக்கு அழியாத காமன்" எனப் பொருள் கூறும் திறம், இப்பொருள் நெறிக்கு உபகாரமாகும். இதனாற் பயன், திரிபுரத்தை எய்த கருவியைப் பிரித்து வாங்கி, "காரமண் கலிங்கத் துவராடையர்" (பா-10) என்ற பாசுரத்தில், ஒரு பொருள் கருதி வரும் "ஓரம்பால் எயில் எய்தவன்" என்புழிச் சிறப்புற முடித்தல் என்க. இதனை விரிக்கிற் பெருகும். இனி, உயிர்கள் அனுபவிக்கின்ற வினைகள், அனுபவித்த வினை, அனுபவிக்கின்ற வினை, இனி அனுபவிக்க வேண்டிய வினை என மூவகைப்படும். அவற்றுள் முதலிரண்டு வினைகளையும் கூறவேண்டியதில்லை யாகலின், இனி அனுபவித்தற்குரிய எதிர்கால வினைகளை ஈண்டு "மேல் வினை" என்றார் என்க. இனி, எய்தவன் ஓத்தூர் என்றார் மேல்வினை நீங்குமாறு ஒருவாறு கூறுதும். திருவடியின் கீழ் இராவணனையழுத்தி, அவனது அறியாமை சேர்ந்த மனத்திற் சிறிது ஞானம் பிறப்பித்து, வரம் பலவும் தந்து வாழச் செய்ததும், மூன்றாகிய மதில் களையுடையவராய், இயற்கை யறிவையும் இழந்து, மதில்களுடன் ஓடித்திரிந்த அசுரர் புரம் மூன்றையும் அழித்து, திருக்கோயில் முன் திருப்பணி புரிய விதித்ததும் ஆகிய பரமன் செயல்களைக் கூறி, இப்பெற்றியோனுடைய திருவோத்தூர் என்று கூறுவோர், எனச் சுவாமிகள் கூறியருளினா ராயினும் முப்புரம் எரித்த செய்கையை முதலிலும், இராவணனை யடர்ந்தருளியதைப் பின்னரும் கூறலே நெறியாகக் கொள்க. இதனாற் பயன், இவ்வாறு கூறித் துதிப்போர் மூன்றாகிய மலங் களைச் சுட்டெரித்து உண்மை ஞானத்தால் தம்மையும் தம்மை யுடைய முதல்வனையும் உணர்ந்து, அவன் திருவடி ஞானத்தால் தம்மையும், தம்மையுடைய முதல்வனையும் உணர்ந்து, அவன் திருவடி ஞானத்தால் அதற்குரிய ஞானவொழுக்கங்களைப் பின் பற்றுவர் என்பது. அவரைப் பற்ற நிற்கும் வினை அறியாமையுண்டு பண்ணும் இயல்பிற்றா கலின், 'இருள்' எனப்படும். படவே விளக்கின்முன் இருள் நில்லாதவாறு போல, வினைகளும் அவர் களை விட்டு நீங்கும். அது பற்றியே, "ஓத்தூர் என்றார் மேல்வினை ஏகுமே" என்றார். ஞானவொளி யுடையாரை வினையிருள் பற்றா தென்பதனைப் பிள்ளையார், "எரியுறுநிற இறைவனதடி இரவொடு பகல் பரவுவர் தம, தெரியுறுவினை செறுகதிர்முனை இருள்கெட நனி நினைவெய்துமதே"1 என்றும், ஆசிரியர் திருவள்ளுவனார், "சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச், சார்தரா சார்தரு நோய்"2 என்றும் கூறினார். மும்மலமெரித்தது, மும்மலக் கேட்டின் குறிப்பென்பது "முப்புரமாவது மும்மல காரியம், அப்புரம் எய்தமை யாரறீவாரே"3 எனவரும் திருமந்திரத் திருவாக் கினால் உணரப்படும். இதனால் திருவோத்தூரின் பெயர் கூறிப் பரவுவார் பெறும் பயன் கூறியவாறாம்.  2. ஞானசம்பந்தர் ஞானவுரை 1. முன்னுரை "சைவத்தின் மேற்சம யம்வே றிலை; அதிற் சார்சிவமாந் தெய்வத்தின் மேல்தெய்வஇல்லெனும் நான்மறைச் செம்பொருள்வாய் மைவைத்த சீர்த்திருத் தேவரா முந்திரு வாசகமும் உய்வைத் தரச்செய்த நால்வர்பொற் றாள்எம் உயிர்த்துணையே." இந்த அழகிய பாட்டு, ஒவ்வொரு சைவரும் நாடோறும் இறைவனைப் பாடி வழிபடும் பாட்டுக்களுள் ஒன்றாகும். இதன் கருத்தைச் சிறிது ஊன்றி நோக்குவோமாயின், ஒரு சிறந்த பொருளை நாம் அறியலாம். சைவத்தினும் மேற்பட்ட சமயம் வேறே ஒன்றும் இல்லை. அச்சைவத்துக்கு உரிய முதற் பொருளாகிய சிவத்தை விடப் பரம்பொருள் இல்லை என்று நான்மறைகள் கூறுகின்றன. அந்த மறைப்பொருளின் உண்மையைத் தேவாரமும் திருவாசகமும் வற்புறுத்துகின்றன. இவற்றைத் தமிழுலகிற்கு வழங்கித் தமிழ் மக்களை உய்திபெறச் செய்தவர் திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர், நம்பியாரூரர், மாணிக்கவாசகர் என்ற நால்வருமாவார்கள். திருவருட் பெருக்கில் திளைத்தாடித்தாம் இன்புறும் சிவபோகப் பேரின்பத்தை ஏனை மக்களும் பெற்று நலம் எய்த வேண்டுமென்ற திருவுள்ளங்கொண்டு இத்தேவாரத்தையும் திருவாசகத்தையும் வழங்கியருளிய நால்வரும், சிவஞான நெறியுரைத்த பேரருட் குரவன்மார்களாதலால், அவர் திருவடிகளை நாம் நம் உயிர்த் துணையாகக் கொண்டு உய்திபெறவேண்டும் என்பது இப்பாட்டின் கருத்தாக இருப்பதை அறிகின்றோம். இப்பாட்டு, "நான்மறைச் செம்பொருள் வாய்மைவைத்த சீர்த்திருத் தேவாரமும் திருவாசகமும்" என்று கூறுவதை நோக்கி னால், தேவாரத் திருமுறைகளும் திருவாசகமும் மறைகள் நான்கும் உரைக்கும் செம்பொருள் எதுவோ அதனை உணர்த்துகின்றன என்று அறிகின்றோம். நான்மறையுரைக்கும் செம்பொருள் யாது எனின், சைவசமயமே சமயம், சிவபரம்பொருளே முதற்பொருள் என்பது. இதனை, இப்பாட்டு, "சைவத்தின் மேற்சமயம் வேறிலை, அதிற் சார்சிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வம் இல்லென்னும் செம்பொருள்" என்று கூறுகின்றது. இனி, இத்தேவாரங்களும் திருவாசகமும் சைவர்களுக்கு விளைவிக்கும் பயனை, "உய்வைத்தர" என்பதனால் இப்பாட்டு உணர்த்துகின்றது. தேவார திருவாசகங்களை ஓதியவழி, மக்கள், பிறவித் துன்பத்தின் நீங்கி உய்தி பெறுவது உறுதியென்பதும், அக்கருத்தே பற்றி, திருஞானசம்பந்தர் முதலிய திருவருட் குரவன் மார்கள் இவற்றை வழங்கியருளினர் என்பதும் நன்கு விளங்க "உய்வைத் தரச்செய்த நால்வர்" என்ற தொடர் இப்பாட்டின் இறுதியடியில் நின்று இயம்புகின்றது. இவ்வாற்றால், திருஞானசம்பந்தர் முதலிய சான்றோர் நால்வரும் திருவாய்மலர்ந்தருளிய தேவார திருவாசகங்கள் சைவ மக்கட்கு உய்திநல்கும் அறிவுநிலையமென்பது இனிது விளங்கும். இவை நான்மறையின் செம்பொருளை யுணர்த்துகின்றன என்பது பொதுவாகிய கருப்பொருளாகும். இப்பெருமக்கள் நால்வரும் வழங்கிய திருப்பாட்டுக்களை, இப்பாட்டு, தேவாரம் திருவாசகம் என இரண்டு கூறிட்டுக் காட்டுகின்றது. திருவாசகம் மணிவாசகப் பெருந்தகையால் அருளப்பட்டதாகும். தேவாரம் திருஞான சம்பந்தர் முதலிய மூவரும் பாடிய திருப்பாட்டுக்களைக் குறிக்கும். இவ்வாறு இப்பாட்டு மூவர் பாடியருளியவற்றைத் தேவாரமெனப் பொதுப்படக் கூறிற்றாயினும், இடைக்காலத்தில் ஞானசம்பந்தர் பாடியவற்றைத் திருப்பதிகமென்றும், நாவரசர் வழங்கியவற்றைத் திருப்பாட்டென்றும், நம்பியாரூரர் பாடியவற்றைத் தேவார மென்றும் வகுத்துச் சிறப்பித் தோதுவதும் ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது. நால்வர் பாடியருளிய இத்தேவார திருவாசகங்கள் நான் மறைச் செம்பொருள் வாய்மையை உணர்த்துமென்பது இப்பாட்டினால் விளக்கமெய்துவதுபோல, இந்நாற்பெரு மக்களும் நால்வகைச் சைவநன்னெறிகளைத் தனித் தனியொழுகிக் காட்டினர் என்று சான்றோர் கூறுவர். அந்நான்கும் முறையே சரியை கிரியை யோகம் ஞானமென்றும், சற்புத்திரமார்க்கம், தாசமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கமென்றும், கூறப்படும். இவ்வாறு நெறி வேறுபட்டுத் தோன்றினும் முடிவில் எய்தும் சிவபோகம் ஒருமைத் தன்மையில் மாறுவதில்லை. ஒருமை முடிவு எய்தியோர், மேற்கொண் டொழுகிய நெறிவகையில் வேறுபட்டுத் தோன்றுதலால், அவ்வேறுபாட்டிற்கேற்ப, அப்பெருமக்கள் வழங்கியருளிய அறிவுரைகளும் சிற்சிலவகையில் வேறுபடுதற்கு இடமுண்டு. அதனால், அவர்கள் வழங்கிய அருட்பாட்டுக்களை ஆராய்தல்இன்றியமை யாததாகின்றது. ஆனது பற்றியே, இப்போது அவருள் ஞானசம்பந்தர் வழங்கியருளிய ஞானப்பாட்டுக்களை ஓராற்றால் ஆராய்கின்றோம். அவையனைத்தையும் மேற்கொண்டு, அவற்றால் உரைக்கப்படும் பொருள் அனைத்தையும் கண்டு ஆராயாது சமயநெறி பற்றியவற்றையே வரைந்துகொண்டு ஆராய்தலால், "ஓராற்றால் ஆராய்கின்றோம்" எனல் வேண்டிற்று. 2. ஞானசம்பந்தர் வரலாற்றுக் குறிப்பு திருஞானசம்பந்தர் இற்றைக்குச் சுமார் 1300 ஆண்டுகட்கு முன் சீகாழிப்பதியில் சிவபாதவிருதயர் என்ற அந்தணர்க்கும் பகவதியார் என்ற அவர் மனைவியார்க்கும் தவமகனாய்ப் பிறந்த சான்றோராவர். சிவபாதவிருதயர் தம் பெயர்க்கேற்பச் சிவபரம் பொருளின் திருவடிமறவாச் சிந்தையராவார். அவர் மனை வாழ்க்கைத் துணைவியாராகிய பகவதியார், "எவ்வுலகும் பெறற் கரிய பெருமை யினார்" என்றும், "கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்தமைந் தார்"1 என்றும் சேக்கிழார் பெருமானால் சிறப்பிக்கப்படுபவர். அக்காலத்தே புறச்சமயங்கள் தென்னாட்டிற் புகுந்து மக்களிடையே செல்வாக்கு மிக்குற்றதன் பயனாகச் சிவ நெறியின் சீரொளி மழுங்கி யிருந்தது. இதனை, "ஆதி அருமறை வழக்கம் அருகி அரன் அடியார்பால், பூதிசாதன விளக்கம் போற்றல் பெறாது" ஒழிந்தது என்று வரலாற்று1 நூல் கூறுகிறது. இந்நிலையைக் கண்ட சிவபாத விருதயர் வேதநெறி தழைத்தோங்கவும், சைவத்துறை மிக்க விளக்கமுறவும் வேண்டி ஒருமகனை அருளவேண்டுமென இறைவனை நாடோறும் வழிபட்டனர். பகவதியாரும் அதேகருத்துடன் சிவபரம் பொருளை நாளும் பரவிவந்தனர். இப்பெருமக்களின் கருத்து இனிது முடிவது பொருளாக இறைவனருளால் பகவதியார் மணிவ யிற்றிற் பிறந்தருளினார் ஞானசம்பந்தப் பிள்ளையார். ஒரு தாய் கருவுற்றிருக்குங் காலத்தே எத்தகைய நினைவு செயல்களை மேற்கொள்ளுகின்றாளோ அவற்றிற் கேற்பவே அவள் வயிற்றிற்பிறக்கும் குழந்தையின்பால் அத்தகைய நினைவு செயல் கட்குரிய குணஞ்செயல்கள் உண்டாகும் என்று இக்காலத்து அறிஞர் கூறுவர். மேனாட்டில் முற்காலத்தில் நிகரற்ற வீரனாய்த் திகழ்ந்த நெப்போலியன் என்பானை அவன் தாய் கருவுற்றிருந்த போது உயரிய வீரர் வரலாறுகளைப் படித்துக் கொண்டிருந்தாள். அதனால் அந்த நெப்போலியன் உலகுமுற்றும் உட்கத்தக்க உயர் வீரனாய் விளக்க முற்றானென்று சான்றும் காட்டுவர். அன்றியும், ஒருத்திதான் பெற்ற குழந்தைக்குப் பாலூட்டும்பொழுதும் அவளுடைய நினைவு செயல்கள் அமைதியும் அன்பும் அறமும் பொருந்தி யிருக்குமாயின், அவளது பாலையுண்ணும் குழந்தைக்கு அந்நல மனைத்தும் நன்கு படியும் என்பர். இதற்கு வரலாற்று நூல்களிலிருந்தும் மேனாட்டு வெளியீடு களிலிருந்தும் பல சான்றுகளைக் காட்டுகின்றனர். இக்கருத்துக்களனைத்தும் ஞானசம்பந்தர் வரலாற்றிலும் காணப்படுகின்றன. பகவதியார் இவரைக் கருக்கொண்டிருந்த போது, தம் நினைவு செயல் முழுவதையும் சிவபரம்பொருளின் திருவருளிலே ஈடுபடுத்தியிருந்தனர். "அரவணிந்த சடைமுடியார் அடியலால் அறியாது பரவு திருநீற்றன்பு பாலிக்கும் தன்மையராய், விரவுமறை மனை வாழ்க்கை வியப்பெய்த" வாழ்ந்து வந்தாரென்று வரலாறு எடுத்துரைக்கின்றது.2 ஞானசம்பந்தப்பிள்ளையாரை மனங் குளிரப் பெற்றுப்பாலூட்டியபோதும், அப்பகவதியார் சிவ பெருமான் திருவடிக்கண் பதிந்த அன்போடு பாலூட்டினார். இதனைச் சேக்கிழார் பெருமான், " பெருமலை பயந்தகொடி பேணுமுலை யின்பால் அருமறை குழைத்தமுது செய்தருளு வாரைத் தருமறைவி யார்பரமர் தாள்பரவு மன்பே திருமுலை சுரந்தமுது செய்தருளு வித்தார்."1 என்றும், அக்குழந்தைக்கு நீராட்டிக் காப்பிட்டபோதும் அப்பகவதியார் சிவநெறிக்குரிய சீலமே நினைந்து, "வேறு பல காப்புமிகை என்றவை விரும்பார், நீறு திருநெற்றியில் நிறுத்தி நிறைவித்தார்"2 என்றும் ஓதுகின்றார். இதனால் ஞானசம்பந்த பிள்ளையாரைப் பெற்ற பெரியோர் சிவநெறிக்குரிய நினைவு செய்கைகளை மேற்கொண்டொழுகியிருந்த செம்மை நிலை நன்கு விளக்கமாதலைக் காணலாம். இவ்வண்ணம் சிவனடியே சிந்திக்கும் செம்மை யுடையாரது கருவிலே தோன்றிச் சைவத் திருப்பணிக்குரிய காலத்திலே பிறந்து, சிவநெறிக்குரிய செவ்விய சீலத்திலேயே வளர்ந்த ஞானசம்பந்தர், தமது மூன்றாமாண்டினில், ஒரு நாள் தம் தந்தையாருடன் திருக் குளத்துக்குச் சென்று, திருவருளால் சிவஞானசம்பந்தரானார். தந்தையாருடன் திருக்குளத்துக்குச் சென்ற பிள்ளையார் குளக்கரையில் நிற்ப, சிவபாதவிருதயர் குளத்துள் இறங்கி நீராடலுற்றார். கரையில் நின்ற பிள்ளை யார் தம் தந்தையாரைக் காணாது "அம்மே அப்பா3" என்று அழுதார். அந்த அழுகை நிலையைச் சேக்கிழார். " கண்மலர்கள் நீர்ததும்பக் கைம்மலர்களாற் பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப எண்ணில்மறை யொலிபெருக எவ்வுயிரும் குதூகலிப்பப் புண்ணியக்கன் றனையவர்தாம் பொருமியழு தருளினார்"4 என்றொரு சொல்லோவியம் தீட்டிக் காட்டுகின்றார். இவ்வண்ணம் அழுது நின்ற பிள்ளையாரின் நிலை கண்ட சீகாழிப்பரமன் தேவியுடன் அங்கே எழுந்தருளினர். பிள்ளையாரது பிள்ளைமை நிலையின் பெற்றிகாணும் உமையம்மையார் அன்பு பெருகத் தம் திருமுலையில் பால் பொழிய நின்றார். பரமன் அவரை நோக்கியருளி, "பொழி கின்ற பாலடிசில் பொன் வள்ளத் தூட்டுக1" என்றாராக, அவரும் அவ்வாறே பொற்கிண்ணத்திற் கறந்து, பிள்ளையார்க்கு ஊட்டி, அப்பொற்கிண்ணத்தையும் அவர்கையில் தந்து அழுகை தீர்த்து விட்டு நீங்கினார். சிறிது போதில் சிவபாத விருதயர் போந்து, பிள்ளையார் பாலுண்டிருப்பதைக்கண்டு வெகுண்டு, "எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டுக"2 என்று சொல்லி, ஒரு சிறிய மாறுகொண்டு ஓச்சி அச்சுறுத்தினார். அப்போது, தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய பொருளாகிய சிவஞானம் குழைக்கப்பெற்ற பாலையுண்ட பண்பினால், பிள்ளை யார், மலர்போலும் தமது அருமைத் திருக்கையைத் தூக்கி, ஒரு விரலால், எட்டியுஞ் சுட்டியும் காட்டப்படாத முதல்வனைச் சுட்டிக்காட்டி, " தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப்பொடி பூசியென் உள்ளங் கவர்கள்வன் ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த வருள்செய்த பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மானிவ னன்றே"3 என்பது முதலிய திருப்பதிகத்தைப் பாடியருளினர். தேவியார் தந்த ஞானப்பாலை யுண்ட சிறப்பால், அவர் ஞானசம்பந்தர் எனப்படுவாராயினர். அவர் பெற்ற ஞானத்தை யுரைக்கப் போந்த சேக்கிழார், " சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதனை யறமாற்றும் பாங்கினிலோங்கிய ஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தரமுணர்ந்தார் அந்நிலையில்"4 என்று விரித்துக் கூறுகின்றார். ஞானசம்பந்தரும் தாம் பாடிய திருப்பதிகங்களுள் ஒன்றில், தமக்கு இறைவன் பாலூட்டியதையும், தந்தை வெகுண்டதையும் குறித்துக் காட்டுவாராய் " போதையார் பொற்கிண்ணத் தடிசில் பொல்லாதெனத் தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்; காதையார் குழையினன் கழுமல வளநகர்ப் பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே"1 என்று தாமே பாடிக் காட்டுகின்றார். இவ்வாறு தேவியார் அருளிய ஞானப்பாலூண்டு ஞானசம் பந்தராகிய பிள்ளையார் தமிழகத்தில் உள்ள சிவாலயங்கள் பலவற்றிற்குஞ் சென்று மிகப்பல திருப்பதிகங்கள் பாடியுள்ளார். இடையிடையே அவர் தாளம் பெற்றதும், முத்துக் சிவிகை பெற்றதும், பொற்கிழி பெற்றதும் படிக்காசு பெற்றதுமாகிய பலபேறுகளையும், திருமருகலில் விடம்தீர்த்ததும், திருமறைக் காட்டில் மறைக்கதவங் களைத் திறக்கவும் மூடவும் பாடியதும், பாண்டிய நாட்டில் சைவத்தை நிலைநாட்டியதும், திருக்கொள்ளம் பூதூரில் ஆற்றில் ஓடம் செலுத்தியதும், திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கியதும், திருமயிலாப்பூரில் என்பைப் பெண்ணாக்கியது மாகிய பல அற்புதச் செயல்களையும் அவரது வரலாறு கூறுகின்றது. ஞானசம்பந்தராகிய வரலாறு மட்டில் நமக்கு இன்றியமையாமை பற்றி அது மட்டில் சிறிது விரிவாக ஈண்டுக் காணப்படுகிறது. 3. திருப்பதிகங்கள் ஞானசம்பந்தப் பெருமான் பாடியருளிய திருப்பதிகம் பதினாயிரம் என்றும், திருமுறை கண்ட காலத்தில் முந்நூற்று எண்பத்துநான்கே கிடைத்தன என்றும், அவை மூன்று திருமுறை களாக வகுக்கப்பெற்றன என்றும் திருமுறைகண்ட புராணம் கூறுகின்றது. அவை, "தோடுடைய செவியன் முதல் கல்லூரென்னும் தொடைமுடிவாப் பரசமயத் தொகைகள் மாளப் பாடினார் பதிகங்கள் பாவிலொன்றாம் பதினாயிர முளதாப் பகருமன்றே"2 என்றும், "பண்புற்ற திருஞானசம்பந்தர் பதிக முந்நூற்றெண்பத்து நான்கினால் இலங்கு திருமுறை மூன்று"1 என்றும் அப்புராணம் கூறுகிறது. இவ்வாறு ஞானசம்பந்தர் பாடிய பதிகங்களுள் முந்நூற் றெண்பத்து நான்கே முறைவகுத்த காலத்தே கிடைத்தனவாயினும், இப்போது அவற்றுள் ஒரு திருப்பதிகம் காணப்படவில்லை. முந்நூற்றெண்பத்துமூன்றே கிடைத்துள்ளன. அவற்றோடு, கல்வெட்டினின்றும்2 எடுக்கப்பட்ட திருவிடைவாய்த் திருப்பதிகத்தைக் கூட்டினால், முந்நூற்றெண்பத்து நான்கென்னும் தொகை நிரம்பி விடும். ஆனால், அதன்கண் பண்வகுப் பொன்றும் காணப் படாமையால், அஃது இத்திருமுறைகளுள் அடங்கியதோ மறைந்த வற்றுள் ஒன்றோ என்று துணியக் கூடவில்லை. அன்றியும், கிடைத்திருக்கும் முந்நூற்றெண்பத்து நான்கு திருப்பதிகளுக்கும் பதிக மொன்றுக்குப் பதினொன் றாகக் கணக்கிடின் நாலாயிரத்து இருநூற்றிருபத்து நான்கு பாட்டுக்களாகும். ஆனால் கிடைப்பன நாலாயிரத்து நூற்றியைம்பத்தெட்டேயாகும். எனவே, அறுபத்தாறு பாட்டுக்கள் இடைக்காலத்தே மறைந்து போயின என்றறிகின்றோம். இனி, ஞானசம்பந்தப் பெருமான் இந்த முந்நூற் றெண்பத்து நான்கு திருப்பதிகங்களால் நம்மனோர் அறிந்து உய்தி பெறும் பொருட்டுக் காட்டியருளிய நன்னெறியைக் காணத்தொடங்குமுன், அத்திருப்பதிகங்கள் தோன்றுவதற்குக் காரணமாயிருந்த அக்காலத்தின் நிலையினை நாம் முதற்கண் அறிதல் வேண்டும். இப்பதிகமனைத்தும், சமயநெறி பற்றிய திருப்பாட்டுக்களாதலால், நாம் காண வேண்டியதும் அக்காலத்துச் சமயநிலையே யாகும். அத்திருப்பதிகங்கள் அக்காலத்துச் சமயநிலையே அன்றி, மக்களின் சமூகம், வாணிபம் முதலிய நிலைகளை உணர்த்தும் குறிப்புகளும் கொண்டுள்ளன. அவற்றை ஆராய்தல் ஈண்டைக்குப் பொருளன் மையின், அவற்றை விடுத்துச் சமயநிலையினையே இங்கு எடுத்துக் கொள்கின்றோம். 4. திருக்கோயில் திருவிழா முதலியன ஞானசம்பந்தர் காலத்துக்கு முன்னும் சங்ககாலத்துக்குப் பின்னுமாகிய இடைக்காலத்தில் சமயத்துறையில் மிகப்பல மாறுதல்கள் நம் நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன. சங்க காலத்தில் சைவசமய உண்மைக்குரிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. ஆனால், ஞானசம் பந்தர் காலமாகிய ஏழாம் நூற்றாண்டில் இருந்தது போலக் கோயில் களும் குளங்களும் பெருகியிருக்க வில்லை. "பணீஇய ரத்தை நின்குடையே முனிவர், முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே"1 எனக் காரிகிழாரும், "அணங்குடை முருகன் கோட்டத்துக், கலந்தொடா மகளிரின் இகழ்ந்து நின்றவ்வே"2 என்று பொன்முடியாரும், "ஞால நாறும் நலங்கெழு நல்லிசை, நான்மறை முதுநூல் முக்கட் செல்வன், ஆலமுற்றம் கவின்பெறத்தைஇய, பொய்கை சூழ்ந்த பொழில்"3 என்று பரணரும் இவ்வாறே பிறரும் கூறுவன வற்றால் சிவபெருமானுக்கும் முருகனுக்கும் பிறதெய்வங் கட்கும் கோயிலுண்மை யறிகின்றோம். இந்நூல்களில் அருகித் தோன்றும் இக்கோயில்கள், இளங்கோவடிகள் காலத்தே சிறிது பெருகியிருக் கின்றன. "பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும், அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும், வால்வளை மேனி வாலியோன் கோயிலும், நீலமேனி நெடியோன் கோயிலும், மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்"4 "அமரர்தருக் கோட்டம் வெள் யானைக் கோட்டம் புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில் உச்சிக்கிழான் கோட்டம் ஊர்க்கோட்டம் வேற் கோட்டம், வச்சிரக்கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்"5 முதலிய கோட்டங்களும் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன. இனி, சிலப்பதிகாரத்தின் நீங்கி வருவோமாயின், ஏழாம் நூற்றாண்டாகிய ஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் காலத்தில் தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு மாத்திரம் இருநூறுக்கு மேற்பட்ட கோயில்கள் இருந்திருக்கின்றன. இக்கோயில்களில் நாடோறும் பாலும் நெய்யும் தயிரும் நீரும் கொண்டு திருமேனியை நீராட்டலும், பூக்கொண்டு வழிபடுதலும், திங்கள்தோறும் அடியார்க்கு அட்டிட்டல், ஐப்பசி ஓணவிழா, கார்த்திகை விளக்கீடு, மார்கழித் திருவாதிரை, தைப்பூசம், மாசிக் கடலாட்டு, பங்குனி யுத்தரம், அட்டமி விழா, பொற்றாப்பு, பெருஞ்சாந்தி முதலிய விழா வயர்தலும் காணப் படுகின்றன. இவ்விழாக்களைக் "கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்"1 என்று ஞானசம்பந்தர் கூறுவதை நோக்கின், இவ்விழாக்களைக் காண்பது கண்பெற்ற பயனாகக் கருதப்பட்டமை துணியப்படும். திருவாரூர்த் திருவாதிரை விழாவைத் திருநாவுக்கரசர் சிறப்பித்துக்கூறும் திருப்பதிகம் அவ்விழா நிகழ்ச்சியை நம் மனக் கண்முன் அழகு திகழக் காட்டுகின்றது. "வீதிகள்தோறும் வெண் கொடியோடு விதானங்கள்" பக்கங்களில் சாதிகளாய பவளமும் முத்தும் கலந்த தாமங்கள்: வந்து கூடுவோர் "நணியார் சேயார் நல்லார் தீயார்" எல்லாருமாவர். பத்தரும் பாவையரும் விரதியரும் வானோரும் அவ்விழாவிற் காணப்படுகின்றனர். பிணியுற்றோர் பலர் அது தீர்வு குறித்து அவ்விடத்தே கிடக்கின்றனர். விழாக்காண் போர் வாயிலிருந்து, "துன்பம் நும்மைத் தொழாத நாட்கள், இன்பம் நும்மை ஏத்தும் நாட்கள்" என்பன முதலிய சொற்கள் கேட்கப் படுகின்றன. அவர்கள் செல்லும் செலவு குறித்துப் பாடலுற்ற நாவரசர், " முடிகள் வணங்கி மூவாதார்கள் முன்செல்ல வடிகொள் வேய்த்தோள் வானரமங்கையர் பின்செல்லப் பொடிகள் பூசிப் பாடுந்தொண்டர் புடைசூழ அடிகள் ஆரூர் ஆதிரைநாளா லதுவண்ணம்"2 என்று பாடுகின்றார். இதன்கண் மூவாதாரும் மங்கையரும் முறையே முன்னும் பின்னும் செல்லத் தொண்டர்கள் புடைசூழ, இடையே ஆரூர் இறைவன் செல்கின்றானென்பது எத்துணை இன்பமாகவுளது, காண்மின். இக்கூட்டத்தில் உயர்ந்தோர் உயர்வும் தாழ்ந்தோர் தாழ்வும் மதிக்கப்படவில்லை. "எம்மான் ஈசன் எந்தை என் அப்பன்" என்று இறைவனை ஏத்தும் எண்ணமிகுதியால் "தம்மாண் பிலராய்த் தரியார் தலையால் முட்டுவாராய்" முற்படுகின்றனர். இவ்விழாவில் சங்கும் பறையும் குழலும் யாழும் கூத்தும் பாட்டும் குறைவின்றியிருக் கின்றன. இதனால் ஏழாம் நூற்றாண்டில் மக்களுள்ளத்தே சமயவுணர்வு நன்கு வேரூன்றி விட்டமை இனிது புலனாகிறது. 5. கோயில் வரலாறு திருப்பணி முதலியன இனி இவர் காலத்திலே புராணங்களின் செல்வாக்கு மிகுந்து தக்க இடம் பெற்றிருக்கிறது. திருக்கோயில்களுக்குத் தலபுராணங்கள் உண்டாகியிருக்கின்றன. அவை நூல்வடிவில் இருந்தனவோ என்னவோ தெரியவில்லை. புராணவரலாறுகள் வழக்கிற்கு வந்து விட்டன. கோயில்களில் வருவோர்க்கு அவ்வரலாறுகள் உரைக்கப் பட்டிருக்கின்றன. ஞானசம்பந்தர் சென்றபோது அவர் அவற்றைக் கேட்டுத் தாம் பாடியருளிய திருப்பதிகங்களில் குறித்திருக்கின்றார். பிரமதேவன் சீகாழிப்பதியில் இறைவனை வழிபட்டான் என்பதை "ஏடுடையமலரான் முனைநாள் பணிந்தேத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான்"1 என்றும், திருமறைக் காட்டிலும் அவனே தான் ஓதும் மறைகளோடு கூடி அவை கூறும் முறையே நின்று வழிபட்டானென்பதை, "உலகினில் உயர் ஒளி பெறுவகை நினைவோடு மலர், மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம்"2 என்றும், திருத்தென்குடித் திட்டையில் மறைகள் வழிபட்டன. என்னும் புராண வரலாற்றை "முன்னைநான் மறையவை முறை முறை குறையொடும், தன்னதாள் தொழுதெழ நின்றவன்"3 என்றும் கூறுகின்றார். திருமாம்பேற்றில், "மாவினார் வழிபாடு செய் மாற்பேற்று நீலமார் கண்ட"4 என்றும், திருமாணி குழியில், "நித்த நியமத்தொழிலானாகி நெடுமால் குறளனாகி மிகவும், சித்தம தொருக்கி வழிபாடு செய்கின்ற சிவன்"5 என்றும், திருமால் வழிபட்ட செய்தி காணப்படுகிறது. சீகாழியிலும் திருவெண்காட்டிலும் தேவர்கோனாகிய இந்திரன் வழி பட்டது கூறப்படுகிறது. திரு வெண்காட்டில் அவ்விந்திரனே அன்றி, அவனது ஊர்தியாகிய வெள்ளை யானையும் வழிபட்டதென்பார், "அடைந்து அயிராவதம் பணிய, மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடு6 என்றும், "இந்திரன் கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்"7 என்றும் உரைக்கின்றார். தசரதன் மகனான இராமன் வழிபட்ட செய்தி இராமேச்சுரத் திருப்பதிகத்தில் மிகுதியும் எடுத்துப் பேசப்படுகிறது. "தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன், பூவியலும் முடி பொன்று வித்த பழிபோயற, ஏவியலுஞ் சிலை யண்ணல் செய்த இராமேச்சுரம்"8 என்று வருவது காணலாம். இவ்விராமாயணச் சார்பே கொண்டு நோக்கின், அதன் கண் வரும் வாலியென்பான் சிவபெருமானைத் திரு வடகுரங்காடு துறையில் வழிபட்டானெனக் கூறும் அவ்வூர்ப் புராண வரலாறு கொண்டு, "நீலமா மணிநிறத் தரக்கனை யிருபது கரத்தொ டொல்க வாலினாற் கட்டிய வாலியார் வழிபடமன்னு கோயில்"1 என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். மேலும், அவர் வாலியை "வாலியார்" என உயர்த்துக் கூறுவது அவன்பால் அவர்க்குள்ள நன்மதிப்பை நாம் அறிய விளக்கு கிறது. இவ்வண்ணமே திருவுசாத்தானத்தில் (கோயிலூர்) சாம்புவன், சுக்கிரீவன், அனுமன் முதலியோர் வழிபட்டன ரென்றும், திருப் புள்ளிருக்கு வேளூரில் சடாயு வழிபட்டா னென்றும் கூறுகின்றார். இப்பதிகத்தில் சடாயுவை, "ஆதித்தன் மகனென்ன அகன்ஞாலத் தவரோடும் போதித்த சடாயென் பான்" என்றும், "பொய்சொல்லா துயிர்போனான்" என்றும் புகன்றுரைக்கின்றார். அவன் உடன்பிறந்த சம்பாதி யென் பவனும், புள்ளிருக்கு வேளூரில் இருந்து, "யோசனை போய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே, பூசனை செய் தினிதிருந்தான்" என்றும், "வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப், போதத்தால் வழிபட்டான்" என்றும் ஞானசம்பந்தரால் சிறப்பிக்கப்படுகின்றான். இனி, *"பாரத வீரர்களுள் பாண்டவரில் ஒருவனான விசயன் வழிபட்டுப் பாசுபதம் என்னும் அம்புபெற்ற வரலாறு, திருக்கோகரணத் திருப்பதிகத்தில், "பாசமதறுத் தவனியிற் பெயர்கள் பத்துடைய மன்ன னவனைக் கூசவகை கண்டுபின் அவற்கருள்கள் நல்கவல் கோகரணமே2" என்று கூறப்படுகிறது. இங்கே விசயனைப் "பெயர்கள் பத்துடைமன்னன்" என்றது போலவே, பிறிதோரிடத்தில், "பத்தொரு பெயருடை விசயனை3" என்பர். இவ்வாறு திருக்கோயில்களைப் பற்றிய புராணச் செய்தி களைக் கூறியருளுவது போலவே, சிவத்தொண்டர் வரலாறு களையும் ஆங்காங்கு ஞானசம்பந்தப் பெருந்தகையார் உரைத் துள்ளார். கண்ணப்பர், சண்டேசுரர் என்ற இருவர் வரலாற்றக் குறிப்புக்களைப் பலவிடங்களில் உரைக்கின்றார். கண்ணப்பர் தமது கண்ணை யப்பி நலம்பெற்ற வரலாறு திருக்காளத்தியில் நிகழ்ந்ததாதலின், திருக்காளத்தித் திருப்பதிகத்தில் பிள்ளையார் "வாய் கலசமாக வழிபாடு செயும் வேடன் மலராகு நயனம், காய்கணையி னாலிடந் தீசனடி கூடுகாளத்தி மலேயே1" என்பர். இதனையே கூடசதுக்கத் திருப்பதிகத்தில் "கண்ணப்பர்க் கருள் செய்த கயிலை2" என்றும், தென்குடித் திட்டைப் பதிகத்தில், "கானலைக்கும் அவன் கண்ணிடந் தப்பநீள், வானலைக்குந் தவத் தேவுவைத்தான்3" என்றும் கூறுகின்றார். சண்டேசுரர் தம் தந்தையின் தாளற வீசிக் சண்டேசநிலை யெய்திய நிகழ்ச்சி திருச்சேய் ஞலூருக்கு உரியதாதலால் அவ்வூர்ப் பதிகத்தில், "பீரடைந்த பாலதாட்டப் பேணாதவன் தாதை, வேரடைந்து பாய்ந்ததாளை வேர்தடிந்தான் தனக்குத், தாரடைந்த மாலை சூட்டித் தலைமை வகுத்த தென்னே4" என்று பாராட்டிய பிள்ளையார், அச்சண்டே சுரர் புகழை, திருக்கோளிலி, திருவூறல், திருவேட்டக்குடி முதலிய திருப்பதிகங் களிலும், திருப்பாசுரத்திலும் நிலைபெறச் செய்துள்ளார், இவ்விருவiம் போலவே, புகழ்த்துணையார், முருகநாயனார், நீலநக்கர், சிறுத் தொண்டர், நமிநந்தி, குலச்சிறையார், மங்கையர்க் கரசியார் முதலிய பெருமக்களையும் தாம் அருளிய திருப்பதிகங்களில் குறித்துள்ளார். இனி, இத் திருக்கோயில்களில் திருப்பணியும், வழிபாடும் புரிந்த பண்டைய அரசர்களையும் பிள்ளையார் குறித்தருளு கின்றார். திருப்பூவணத் திருப்பதிகத்தில், "முறையால் முடிசேர் தென்னர், சேரர், சோழர்கள் தாம் வணங்கும், திறையா ரொளிசேர் செம்மை யோங்கும் தென்திருப்பூவணமே5" என்றும், திருமூக்கிச்சரப் பதிகத்தில், "சீரினாலங்கொளிர் தென்னவன் செம்பியன் வில்லவன், சேரும் மூக்கீச்சுரத்தடிகள்1" என்று மூவேந்தரையும் பொதுப்படக் கூறகின்றார். இம்மூவர்க்கும் முறையே கயல், புலி,வில் என்ற மூன்றும் கொடியாம் என்றும், சோழர்க்கும், சேரர்க்கும் உறையூரும், வஞ்சியும் தலைநகரமென்றும் இத்திரு மூக்கீச்சரப் பதிகத்தே குறித் திருப்பதோடு, இம்மூவருமே இத்திருமூக்கீச்சரக் கோயிலுக்குத் திருப்பணி செய்தனரென்றும் கூறியிருக்கின்றார். காவிரிப்பூம்பட்டினத்துத் திருக்கோயில் பல்லவனீச்சுரம் எனப்படுவதை நோக்கின் ஞானசம்பந்தர் காலத்துக்கு முன்பே பல்லவ வேந்தர் இத்திருப்பணியில் கலந்து கொண்டமை தெரிகிறது. திருப்பிரமபுரத் திருப்பதிகத்துட் காணப்படும் "நட்டார் நடுவே நந்தனாள"2 என்ற தொடர்க் கண்வரும் நந்தன் ஒரு பல்லவனாக நினைக்கப்படுகின்றான். கோச்செங்கட்சோழன் செய்த சைவப் பணியைப் பிள்ளையார் பல திருப்பதிகங்களில் குறிக்கின்றார். வைணவ ஆழ்வாருள் ஒருவராகிய திருமங்கைமன்னன், திருநறையூர்த் திருமால் கோயிற்கு அவன் செய்த திருப்பணியை வியந்துரைக்க வந்த விடத்துச் சிவன் கோயில்கட்கு அவன் செய்துள்ளபணி மிகுதியாதலை விதந்து, "இருக்கிலங்கு திருமொழிவாயெண்டோளீ சற்கு எழில்மாடம் எழுபதுசெய் துலகமாண்ட திருக்குலத்து வளச்சோழன்"3 என்றது சீரிய சரித்திரச் சான்றாகிறது. இதுகாறும் கூறியவாற்றால் ஞானசம்பந்தப் பிள்ளையார் காலத்தே தமிழ்நாட்டில் சைவசமயம் நன்கு வேரூன்றியிருந் தமையும், அதனை வற்புறுத்தும் சான்றுகளாக மிகப்பல திருக் கோயில்கள் விளங்கினமையும், அவற்றில் நாடோறும் திங்கடோறும் வழிபாடும் விழாக்களும் நிகழ்ந்தமையும், அரசர்களும், செல்வர்களும், தொண்டர்களும் திருப்பணி புரிந்தமையும் இனிது விளங்குகின்றன. சிவநெறிக் குறிப்புக்கள் இனி, இச்சிவநெறிக்கண் சிவபரம்பொருளின் திருவருட் செயல்களாகப் பலசெய்திகள் வழங்கி வந்திருக்கின்றன. சிவபெருமான், கணபதியையும், முருகனையும் பெற்றது. கங்கையைத் திருச்சடையில் தாங்கியது, உமைகாண நடமாடியது, காளியைக் கொண்டு தாருகனை அடக்கியது. தக்கன் வேள்வியைக் கெடுத்தது, முப்புரத்தை எரித்தது, காமனைக் காய்ந்தது, பிரமன் சிரம் அரிந்தது, திருமாலுக்கு ஆழி அருளியதும், ஆலின்கீழ் இருந்து முனிவர் நால்வர்க்கு அறமுரைத்தது, விடமுண்டது, தாருகவனத்து முனிவர் விடுத்த யானையை உரித்தது, பலிவேண்டிச் சென்றது, குபேரனைத் தோழனாகக் கொண்டது, காலனைக் காய்ந்தது, திருமாலும் பிரமனும் அடிமுடி தேடியது, இராவணனை அடர்த்தது முதலிய பல செய்திகள் பிள்ளையார்காலத்தே நாட்டு மக்களிடையே பரவியிருக்கின்றன. மேலே கூறியவாறு திருக்கோயில்களுக்குத் தலபுராணங் களும் சிவபெருமானைப் பற்றிய புராணங்களும் நாட்டில் பரவிச் சைவசமயத்துக்கு ஆக்கம் பயந்து நிலவுகையில், திருக்கோயில்களில் எழுந்தருளும் திருமேனியைச் சிவமென்றே தெளிந்து வழிபடும் நன்மக்கட்குச் சமயவொழுக்கமும், நெறிகளும் தோன்றிச் சமய வொழுக்கங்களை உண்டு பண்ணின. அவற்றின் சார்பாக நான் மறையும், ஆகமங்களும் சமயவுணர்வுடையோர் இடையே நிலவுவனவாயின. வழிபாட்டிலும் விழாக்களிலும் மறையோது வோர் உளராயினர். திருக்கோயில் அமைப்பும் வழிபாட்டிற்குரிய நெறியும் ஆகமங்களின் வாயிலாக உரைக்கப்படலாயின. அவ்வாக மங்களே சமயவுணர்வு ஒழுக்கங்களுக்கு வேண்டும் அறிவுரைகள் பெறுதற்கு வாயில்களாயின. இம்மறையும் ஆகமங்களும் இறைவனால் வழங்கப்பட்டன என்ற கருத்து ஞானசம்பந்தர் காலத்தேயே கற்றோரிடையே வேரூன்றி விட்டது. "தொகுத்தவன் அருமறை யங்கம் ஆகமம், வகுத்தவன்"1 என்றும், "ஆறுபதமும் ஐந்தமர் கல்வியும், மறைமுதல் நான்கும், மூன்றுகாலமும் தோன்றநின்றனை"2 என்றும் பிள்ளையார் ஓதுகின்றார். வேதங்களின் முடி பொருளும் ஆகமங்களின் அரியபொருளும் சிவபரம் பொருளையே உணர்த்துவன என்பது அறிஞர் கருத்து. "வேதியன் விண்ணவரேத்த நின்றான் விளங்கும் மறையோதிய ஒண்பொருளாகி நின்றான்"3 என்று அக்கருத்து இனிது விளங்க வற்புறுக்கும் பிள்ளையார், "வேதமோதிய வொண்பொருளாயினான்" என்றனர். அவ்வேத நூலறிவே முடிந்த அறிவென்று கொள்ளலாகாது. அவன் வேதத்தால் தொழப்படுபவன். வேதத்துள்ளும் அதன் முடிவிலும் அதற்கு வேறாயும் உளன் என நிலவும் அறிவுநூற் கருத்துக்களையும் எடுத்தோதுகின்றார். "அங்கமும் நான்மறையும் அருள்செய்து அழகார்ந்த அஞ்சொல் மங்கையோர் கூறுடையான்"1 "விழையாவுள்ளம் நன்கெழ நாவில்வினைகெட வேதமாறங்கம், பிழையாவண்ணம் பண்ணிய வாற்றால் பெரியோ ரேத்தும் பெருமகன்"2 என்பனபோலும் உரைகளால் மறைகள் அவனால் அருளப்பட்டன என்று வற்புறுத்துவர். "முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடும், தன்னதாள் தொழுதெழ நின்றவன்"3 என, வேதம் தன் குறை பாட்டால் அவனை வழிபடுவது கூறி, "மறைகள் முற்றுமாகி வேறுமானான்"4 என்பதனால் வேதத் துள்ளும் அதற்கப்பாற் பட்டும் விளங்குதலை நமக்கு அறிவுறுத்தி யுள்ளார். இவ்வாறு மறைகளின் வேறாகியும், முற்றுமாய் "மறை அவன்"5 என்று பரவப்படுதலின், மறைவழியே நின்று வேள்வி முதலியன வேட்டு மறையோதி வழிபடும் நெறியும் புலன்களையடக்கி, காமம் முதலிய குற்றங்களைக் கடிந்து, யோகக் காட்சியால் வழிபடும் நெறியும், இல்லிருந்து நல்லறம் புரியுமாற்றால் வழிபடும் நெறியும் ஞானசம்பந்தர் காலத்தே தமிழகத்தே இருந்திருக்கின்றன. இவை முறையே வைதிக நெறியென்றும், யோக நெறியென்றும், ஏனையவை அவரவர் வல்லவாறியற்றும் பத்தி நெறியென்றும், அவை எண்ணிலாதன என்றும் பிள்ளையாரால் கூறப்படுகின்றன. இவற்றுள் வைதிக நெறி மறையவரிடத்தே வைத்து அவரால் காட்டப்படுகிறது. இதனை, "மண்ணின் மறையோர் மருவு வைதிகமும், மாதவமும் மற்று முலகத்து, எண்ணில் பொருளாயவை படைத்த இமையோர்கள் பெருமான்"6 என்று உரைப்பது காணலாம். யோகநெறியின் இயல்பை "பத்திப் பேர் வித்திட்டே பரந்த வைம்புலன்கள்வாய்ப் பாலே போகாமே காவாப் பகையறும் வகைநினையா, முத்திக்கே விக்கத்தே முடிக்கு முக்குணங்கள்வாய் மூடாவூடா நாலந்தக்கரணமும் ஒரு நெறியாய்ச், சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப்பரம்பொருள் சேர்வார் தாமே தானாகச் செயுமவன்"1 என்று தெரிவிக்கின்றார். இவையிரண்டு மல்லாத எளிய பத்திநெறி பற்றுவோர் கற்று வல்லோரும் ஏழையடி யாருமாகின்றனர். அவருள் கற்றுவல்லோரது வழிபாட்டினை, "பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள் கொண்டணிந்து பரிசினாலே, காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து நின்றேத்தும் கழுமலமே"2 என்றும், ஏனையோர் வழிபாட்டைக் "கோழைமிடறாக கவி கோளுமில வாக இசைகூடும் வகையால், ஏழையடியாரவர்கள் யாவை சொனசொல் மகிழும் ஈசன்"3 என்றும் விளக்கியருளு கின்றார். இறுதியிற் கூறிய எளிய வழிபாட்டினை ஆடவரும் மகளிருமென்ற இருபாலரும் பெரும்பாலும் மேற்கொண் டொழுகு கின்றார்களென்பர். "மாதரொடும் ஆடவர்கள் வந்தடி யிறைஞ்சி நிறைமா மலர்கள் தூய்க், கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல்கின்ற வளர் கோகரணமே" என்றும், "நல்ல மடமாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்த முழுகக், கொல்லவிட நோயகல் தரப்புகல்கொடுத் தருளு கோகரணமே"4 என்றும் எடுத்தோதுவது காண்க. இதுகாறும் காட்டிய வைதிகம், யோகம், பத்தியென்ற முக்கூறாய் நிலவும் சைவசமயத்தின் வேறாய்ப் புத்த சமயமும் சமண சமயமும் பிள்ளையார் காலத்தே இத்தமிழகத்தில் நிலவியிருந் திருக்கின்றன. சங்க இலக்கிய காலத்திலே காணப்படாத இச்சமயங்கள், மணிமேகலை சிலப்பதிகார மென்ற இருபெரு நூல்களின் காலத்தே தமிழகத்தில் தோன்றி இருக்கின்றன. இவ்விரு நூல்களையும் நோக்கின் புத்த சமயமும் சமண சமயமும் பெரும்பாலும் சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் பரவியுள்ளனவேயன்றிப் பிற பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் அத்துணையில்லை என்று தெரிகிறது. இவை பிள்ளையார் வாழ்ந்த ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்து மேலைக் கடற்கரை நாடு ஒழிய, ஏனை எல்லாப் பகுதியிலும் பரவி இருந்திருக்கின்றன. அவர்கள் தமிழையோ ஆரிய மொழியையோ பயிலாது பாகதமென்ற மொழியையே பயின்றிருக்கின்றனர். புத்தர்கள் பிடக நூலும் சமணரது அங்காகமமும் பிள்ளையாரால் எடுத்தோதப் படுகின்றன. அவர்கள்பால் அறமுரைத்தலும் சொற் போர் செய்வதும் பெருகக் காணப்படுகின்றன. சமணர் கூறும் சப்தபங்கி என்னும் நியாயம் பிள்ளையாரால் காட்டப் படுகிறது. அவர்களால் வேத வேள்விகள் மறுக்கப்பட்டுள்ளன. இவ்விரு சமயத்தவரின் ஒழுக லாறுகள் ஞானசம்பந்தரால் மிகச்சில பதிகங்களொழிய ஏனை எல்லாவற்றிலும் ஒழியாது உரைக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சியாளர் சிலர், இச்சமண சமயம் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி, ஆறாம் நூற்றாண்டிறுதியில் மிக்க செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டுமென்று1 கருதுகின்றனர். இவையேயன்றி, பிள்ளையாரால் அறுவகைச் சமயங்கள் அடிக்கடி குறிக்கப்படுகின்றன. மேலே கூறிய அக்கோகரணத் திருப்பதிகத்திலேயே, ஆறு சமயங்களும்2 குறிக்கப்படுகின்றன. ஆயினும், இவ்வாறனுக்கும் முதல்வன் சிவபெருமானே என்று கூறுவதை நோக்கின், இவை அகச்சமயங்களெனப்படும் ஆறையும் குறிக்கின்றனவோ என்ற எண்ணமுண்டாகிறது. "ஆறு சமயங்கட் கொருதலைவன்"3 என்றும், "முன்னமிரு மூன்று சமயங்களவையாகிப் பின்னையருள் செய்த பிறையாளன்"4 என்றும் பிள்ளையார் ஓதுகின்றார். முன்னே குறித்த கோகரணத் திருப்பதிகப்பாட்டும், "ஆறு சமயங்களும் விரும்பி யடிபேணி, அரன் ஆகமம் மிகக் கூறுமனம் வேறிரதி வந்தடியர் கம்பம்வருகோகரணமே" என்று கூறுகிறது. மேலும் ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சி புரிந்த மகேந்திரவர்ம பல்லவன் சமணனாய் இருந்தபோது மத்தவிலாச பிரகசனம்5 என்றொரு நாடகம் எழுதி அதன்கண் காபால சமயத்தவரையும் பாசுபத சமயத்தவரையும் எள்ளிப் பேசியுள்ளான். இதனை நோக்கு மிடத்து, பிள்ளையாரால் குறிக்கப்படும் சமயங்களாறும் சாத்தம், காபாலம், பாசுபதம், மாவிரதம், கௌளம், யாமளம் என்ற ஆறுமாக இருக்கலாம் என்று எழும் எண்ணம் ஓரளவு ஆதரவு பெறுகிறது. பிள்ளையாரால் மறுத்துப் பேசப்படும் புத்தரும் சமணரும் புறச் சமயத்தைச் சேர்ந்தவராவர். இவை வேதத்தை மேற்கொள்ளாதன வாதலால் இவ்வாறு புறமென்று கூறப்படு கின்றன. "வேத வேள்வியை நிந்தனை செய்துழல், ஆதமில்லி யமணோடு தேரரை" என்றும், "வைதிகத்தின் வழியொழுகாத அக்கைதவம்முடைக் காரமண் தேரரை"1 என்றும் ஞானசம்பந்தர் கூறுதல் காண்க. ஞானவுரை இனி, இவ்வைதிக பௌராணிக வழக்காறுகளும் கருத்துக்களும், சமயப் பிரிவுகளும், பௌத்தம் சைனம் முதலிய புறச்சமயங்களும் விரவிநின்ற காலம் ஞானசம்பந்தர் காலமென்பது இத்துணையும் கூறியவாற்றால் விளக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியால் மக்களிடையே சமய நிலையில் துறவுள்ளமும், வினையுணர்வும், கோயில் வழிபாட்டில் பற்றின்மையும் நிலவத் தொடங்கின. உடல் கருவிகளைக் கொண்டு இந்நிலவுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து செய்வன செய்து பெறும் நுகர்ச்சிகளை நுகர்வதில் வெறுப்புற்று, மனைவாழ்க்கையைத் துறந்து ஒழுகும் ஒழுக்க நெறியே துறவறமாகும். இத்துறவினை ஆசிரியர் தொல்காப்பியர் "காமஞ் சான்ற கடைக்கோட் காலை, ஏமஞ்சான்ற மக்களொடு துவன்றி, அறம்புரி சுற்றமொடு" வாழும் ஆண்மகன் மேற்கோடற் குரித்தென்று கூறினர். சங்க இலக்கிய காலத்தும், "இன்னா தம்ம வுலகம், இனிய காண்கிதன் இயல்புணர்ந்தோரே"2 என்றும், "ஓடி யுய்தலுங் கூடுமன், ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே"3 என்றும் சான்றோர் கூறுமாற்றால், துறவுள்ளம் நிலவிய வகையினை அறிகின்றோம். ஆயினும், இத்துறவு இளமைப் போதிலே மேற் கொள்ளப் பெற்றதாகவோ பெறுதல் வேண்டுமென்றோ பண்டைத் தமிழ் நூல்களில் எவராலும் எங்கும் உரைக்கப் படவில்லை. இளமைக் களிப்பில் மயங்கி, அதற்கே யடிமையாயொழியாது. அதன் நிலையாமையை யுணர்ந்து, அறஞ் செய்தல் வேண்டுமென்றே பண்டைச் சான்றோர் வற்புறுத்தியிருக்கின்றனர். சமண சமய முனிவர் பலர் தோன்றி, அறங் கூறலுற்ற போது,1 இளமைத் துறவினை யெடுத் தோதினர். அதனால் துறவு நெறிக்கண் கூடாவொழுக்கங்கள் உண்டாயின. ஞானசம்பந்தர் காலத்தும் இத்துறவு நிலவியிருக்கிறது. இதனை, "பிறவியால் வருவன கேடுள, ஆதலால் பெரிய இன்பத், துறவியார்க் கல்லது துன்பம் நீங்காதெனத் தூங்கினாயே" என்றும், "தந்தைதாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரமென்னும், பந்தம் நீங்காதவர்க் குய்ந்து போக்கில்லெனப் பற்றினாயே"2 என்றும் "பிறவிப்பிணி மூப்பினொடு நீங்கி யிமையோ ருலகு பேணலுறுவார், துறவியெனும் உள்ளமுடையார்கள்"3 என்றும் ஓதுமாற்றால் அறிகின்றோம். வினையுணர் வென்பது தமிழ்நாட்டு வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டே இருந்து வருவதாகும். தொல் காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் இவ்வினையுணர்வு காணப்படுகிறது. வினை யானது உயிரறிவை மறைத்து நிற்கிறதென்றும் அதன் நீக்கம் அறிவின் விளக்கமென்றும் கூறுவர். ஆசிரியர் தொல்காப்பியனார் "வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்"4 என்று கூறுவதும், பாண்டியன் கானப்பேர்தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரைக் கண்ட ஒளவையார், "இரவலர்க் கருங்கலம் அருகாது வீசி, வாழ்தல் வேண்டுமிவண் வரைந்த வைகல், வாழச் செய்த நல்வினை யல்லது, ஆழுங்காலைப் புணை பிறிதில்லை"5 என்று அறிவுறுத்துவதும் மேலே கூறிய முடிபினை வற்புறுத்துவன வாகும். இவற்றிற்குப் பின்னே தோன்றிய தமிழ் நூல்கள் அனைத்திலும் வினையுணர்வு காணப்படாமல் இல்லை. வடநாட்டு வடமொழிக் கண்ணுள்ள தொன்னூல்கள் பலவற்றிலும் இது பெரிதும் பேசப்படுகிறது. அவற்றுள் மிகத் தொன்மையவான வேதங்களின் அந்தமெனப்படும் உபநிடதங்களிலும் ஆகமங்களிலும் இவ்வினையுணர்வு6 குறிக்கப் பட்டுள்ளது. நமது இந்திய நாட்டில் தோன்றிய எல்லாச் சமயங்களிலும் வினையுணர்வு இடம் பெற்றிருக்கிறது. வைதிக சமயமேயன்றி, புறச்சமயங்களான பௌத்தம் சைனம் முதலிய சமயங்களும் இவ்வினையுணர்வை வற்புறுத்துகின்றன. மேனாட்டாராய்ச்சியாளர் சிலர், இவ்வினையுணர்வு மேனாடுகளிலும் அமெரிக்க நாட்டிலும் அறிஞருள்ளத்தே நிலவியிருக்கிறது1 என்கின்றனர். இவ்வினையுணர்வு தொடக்கத்தே உயரியதொரு நோக்கம் பற்றியே சான்றோர்களால் ஆராய்ந்து காணப்பட்டது. உலக வாழ்வில் மக்களறிவுக்கு எட்டாத நிலையில் நிகழும் நிகழ்ச்சி கட்குக் காரணமாய் நின்று ஆராயும் அறிவுக்கு அமைதி தருகின்றது. ஒருவ ரெய்தும் ஆக்கக் கோடுகட்கும் இன்பத் துன்பங்கட்கும் காரணமாய் அவர் மனத்தே உவப்பும் உலைவும் இலவாகச் செய்கிறது. அதனால் அவர் தமக்குத் துன்பம் செய்தார்பாலும் அன்பு செய்தற்குப் பெருந்துணையாகிறது. தாழ்ந்தோர் உயர்ந்தோரை நோக்கி அழுக்கற்று அவலமெய்தாது அமைதற்கும், உயர்ந்தோர் தாழ்ந்தோர்பால் அருள்கொண்டு ஆவன செய்தமைதற்கும் இவ் வினையுணர்வு பெரிதும் வேண்டப்படுகிறது. ஒருவர் ஓருயிரிக்குச் செய்யும் நலந்தீங்குகள் அவர் புத்தியின்கட் கிடந்து அவர் எடுக்கும் பிறப்புத்தோறும் சென்று இன்பத் துன்பங்களைப் பயக்கும் என்பது வினையுணர்வின் முடிபொருளாகும். ஆதலால் வினையுணர்வும் மறுபிறப்பு உண்மையும் ஒன்றையொன்று இன்றியமையாது இணைந்து நிற்கின்றமை நோக்கிச் சான்றோரால் இவ்விரண்டும் ஒப்பவைத்து உரைக்கப்படுகின்றன. இற்றை நாளிலும் நம் நாட்டவர் நினைவிலும் சொல்லிலும் அடிக்கடி வினையும் பிறப்பும் பொருளாகக் கொண்ட சொற்கள் நிகழ்வது காணலாம். வினைகளே பிறப்புக்குக் காரணமாதலின், வினை நீக்கத்தின் கண் அறிஞர் அறிவு நுனித்துச் சென்றது. வினையென்பது ஒருவர் செய்யப் பிறக்கும் செய்கையாதலின், அவர் தாம் வேண்டியவாறு செய்து வினைக்கு அடிமையாகாது அவ்வினையைத் தமக்கு அடிமையாகச் செய்து பயன்கொண்டொழியலாம் என்று கண்டனர். ஏனைய அறிவில்லாதார் வினைகட்குரிய வினைமுதல் தாமேயாதலை நோக்காது, அவ்வினையால் விளையும் துன்பத்தால் தாம் உழக்கும் துயரையே நோக்கி "அந்தோ வினையே" என்று அழுங்கலுற்றனர். வினையை நெறிப்படுத்தித் தமக்கு வேண்டும் நலம் பயக்குமாறு செய்து கொள்ளும் மனத்திட்பம் தம்பால் இல்லாமையை நினையாது, திட்பமெல்லாம் வினைகளிடத்தே உள்ளன என்று எண்ணி, வினை மிக்க வன்மையுடைய தென்றும், அதனை நீக்கும் வன்மை தெய்வங் கட்குமில்லை யென்றும், கருதி வினைக்கே அடிமையாயினர். "பண்டு செய்வினை யலால் பரவு தெய்வமொன்று உண்டெனில் தான்பயன் உதவவல்லதோ" என்றும், "செய்வினை யின்றெனில் தெய்வம் என்செயும்" என்றும் உரைப்பாராயினர். "செய்தீவினை யிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்தவ ருமோ இருநிதியம்" என்பதுபோலும் அறிவுரைகள் அவர்களால் வினையினது வன்மையும் தலைமையும் உணர்த்துவனவாக உணரப்பட்டன. இந்நிலையில் அறிவுடையோர், "வினையென்பது செய்வோர் செய்தியேயாகும். அஃது அறிவில்லது, செய்வோர் செய்திப் பயனை நுகர்விக்கும் அறிவன் இறைவன். ஒருவர் செய்யும் வினை தனக்குரிய பயனைப் பயக்கும் நெறியில் ஒரு சிறிதும் தவறுவதில்லை. அது செய்த உயிரோடு கிடந்து செய்திப்பயனை விளைவிக்கும் வகையில் எத்தனைப் பிறவியெடுக்கினும் நீங்காத வன்மையுடையது. அதுபற்றியே அஃது அருவினையென்றும் வல்வினையென்றும் கூறப்படுகிறது" என்று உரைக்கலுற்றனர். அவ்வுரையை மனங் கொள்ளாத அம்மடவோர், "செயல்களே பலத்தைச் செய்யும் தெய்வம் வேண்டா இங்கு"1 என்பதுபோலும் வாதங்களை யெழுப்பித் "தெய்வ வழிபாடு வினைப்பகையை நீக்காது. அவரவர் வினையே அவரவர் செல்வ நல்குரவுகட்கும் உயர்வு தாழ்வுகட்கும் காரணமாவது" என்ற கொள்கையை நாட்டிற் பரப்பி விட்டனர். நாட்டில், கல்லாதவரும் நல்குர வாளருமே பெரும்பாலராதலின், அவர் கொள்கை எளிதில் பரவி விட்டது. வினைகளே தமக்குரிய பயனாகிய துன்ப வின்பங்களைத் தம்மைச் செய்த உயிர்க்குக் கொடுத்து நுகர்விக்கும் என்ற கொள்கையினையுடைய சமயங்களும் அக்காலத்தே வந்து அவர் தம் கொள்கைக்கு ஆதரவு செய்யத் தலைப்பட்டன. இன்னோரன்ன காரணங்களால் நம் தமிழ் நாட்டில் ஞானசம்பந்தர் காலத்தேயே கடவுள் வழிபாட்டில் கருத்தூன்றாது நெகிழ்ந்து நீங்கும் சிறுமை நிலவுவதாயிற்று. அந்நாளில் தோன்றியருளிய ஞானசம்பந்தப் பிள்ளையார் இக்கூறிய குறைகளைக் கண்டறிந்து அவற்றைக் களையுமாற்றால் வழிபாடொன்றே வினைநீக்கமும் வீடுபேறும் தரவல்லதாம் என்பதனை வற்புறுத்தியுரைக்கும் நன்னெறியினை மேற்கொள்ள வேண்டிய வரானார். ஆதலால் அவர் புதுக்கொள்கையொன்றும் உரைக்காது, வினையினை நெறிப்படுத்திக் கோடற்கும், முன்னை வினைப்பயனை நுகரும் நுகர்ச்சியால் மேல்வினை நிகழ்தற்கு இடமாகாவாறு செய்து கோடற்கும், உயிர்கட்கு ஏற்ற வன்மையும் உரிமையும் தகுதியும் உண்டென்று எடுத்துரைக்கும் கடமையுடையராயினார். சுருங்கச் சொன்னால், வினையுணர்வுக்கு அடிமையாய்க் கிடந்த மக்கட்கு அதனின்றும் விடுதலை வழங்கினார் ஞானசம்பந்தப் பிள்ளையார் என்பது சாலவும் பொருந்துவதாம். இறைவன் வழிபாட்டால் வினைத்தொடர்பினின்றும் உயிர்கள் உய்திபெறக்கூடும். வினைகள் உயிர்களைத் தொடர்ந்து துயருறுத்தா வண்ணம் இறைவன் தடுத்து நலம் அருள்வன் என்ற கருத்துக்களை மக்கட்கு உணர்த்தப் புக்க ஞானசம்பந்தப் பெருமான், "வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்! கடிகொள் கொன்றை கலந்த சென்னியன் நொடிகொள் விழவார் கோலக்காவுள் ளம் அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே"1 என்றும், "உய்ய லுறுவீர்காள்! ஐயன் ஆரூரைக் கையினால் தொழ நையும் வினைதானே"2 என்றும், " ஊடினாளினி யாவதென்னுயர் நெஞ்சமே! யுறுவல்வினைக் கோடிநீயுழல் கின்றதென்? அழலன்று தன்கையிலேந்தினான் பீடுநேர்ந்தது கொள்கையான் பிரமாபுரத் துறைவேதியன் எடுநேர்மதியோட ராவணி யெந்தையென்று நின்றேத்திடே"1 என்றும் பலமுறையும் வினைநீக்கம் வேண்டுவோர் இறைவனை வழிபடுவதே நெறியென்று அறிவுறுத்து வாராயினர். இவ்வறிவுரை நிகழ்த்துமிடத்து, தம்மை வழிபடுவாரைப் பற்றி நிற்கும் வினையைக் கெடுத்து அவர்கட்கு இறைவன் உய்தி நல்குவனென்பதைப் பல திருப்பதிகங்களில் எடுத்தோதி வற்புறுத்து கின்றார். "வந்தித்திருக்கும் அடியார் தங்கள் வருமேல் வினையோடு, பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமன்"2, "புந்தியொன்றி நினைவார் வினையாயின தீரப்பொருளாய், அந்தியன்னதொரு பேரொளியான்"3, "தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழுவாரவர்தங்கள், வினைபகையாயின தீர்க்கும் விண்ணவர்"4, தம்பெருமை பேசும் அடியார்மெய்த், திண்ணமரும் வல்வினைகள் தீரவருள் செய்த லுடையான்"5, "பணிந்தவர் அருவினைபற்றறுத் தருள்செயத் துணிந்தவன்"6, "நெறிகொள் சிந்தையராகி நினைபவர் வினைகெட நின்றார்"7 என்பனபோலும் அருண்மொழிகள் மிகப்பல தம்முடைய திருப்பதிகங்களில் குறித்துரைக்கின்றார். இவ்வாறு வழிபாட்டால் வினைநீக்கம் பெறுந்திறமும், வழிபாடு செய்வோர் வினையை இறைவன் தீர்த்தருளும் இயல் புடையனாயிருக்கும் திறமும் கூறி வழிபாட்டின்கண் மக்கள் கருத்தைத் தெருட்டி உறுவித்த பிள்ளையார், வழிபடும் திறமும் கூறுகின்றார். இறைவனை அவன் திருப்பெயரை ஓதி, நீராட்டிப் பூச்சூடி வழிபட வேண்டுமென்பார், "நாவால் நாதன் நாமம் ஓதி நாடோறும் பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே"8 என்றும், "தெரிந்த அடியார் சிவனே யென்று திசைதோறும் குருந்த மலரும் குரவினலரும் கொண்டேந்தி இருந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும்சீர் முரிந்து மேகந் தவழுஞ் சோலை முதுகுன்றே."9 என்றும், "பாலொடுநெய் தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம், காலையும் மாலையும் போய்ப்பணிதல் கருமமே"1 "பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே"என்றும் கூறுகின்றார். இப்பரமன் திருப்பெயர் பல்லாயிரமாதலின், வழிபடற் குரியதனை அறிந்தோர்பாற் கேட்டுக் கொண்மின் என்றற்கு "அறிவோரால் நாமம் அறிந்துரைமின்"2 என்று அறிவிக்கின்றார். அன்றியும் அதனை, "நக்கர்தம் நாமம் நமச்சிவாய வென்பார் நல்லரே"3 என்றும், அது, "காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது" என்றும், "நெஞ்சில் அன்பு மிகப் பெரிதும் நினைந்து அக்குமாலையால் எண்ணி அத்திருப்பெயரை ஓதுதல், ஓதுவோரை உயர்ந்தோராக்கும் என்றும்4 உரைத்தருளுகின்றார். இவ்வாறு வழிபாட்டின் திறத்தை யோதுமிடத்து, இறைவன் திருப்பெயரை அறிந்தோரால் அறிந்துரைக்க வேண்டும் என்றவர், இறைவன் திருவேடத்தையும் தொண்டரையும் இறைவனென்றே தேறி வழிபட வேண்டும் என்று வற்புறுத்துகின்றார். இறைவன் திருவேடங்கள் மருந்தும் மந்திரமுமாவன; வினையைக் கெடுப்பன; ஓதியோர்க் ககப்படா வொண்பொருளை ஓர்விப்பன; மனமாசு, நீக்கி வானுலக போகவாழ்வு எய்துதற்கு வேண்டும் வழிகளைக் காட்டுவன; துளக்கமில்லாதன; தூயதோற்றத்தை யுடையன; அல்லல் கெடுக்கும் அருமருந்தாவன; இவற்றால் உணர்த்தப்படும் நெறிகள், " விண்ணுலாவும் நெறி வீடுகாட்டும் நெறி மண்ணுலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி தெண்ணிலா வெண்மதி தீண்டு தேவன்குடி அண்ணலா னேறுடை அடிகள் வேடங்களே"5 என்று பிள்ளையாரால் பெரிதும் புகழ்ந்தோதப் படுகின்றன. இத்திருவேடங்களைக் கண்டு இவற்றைச் சிவமென்று தேறி வழிபடு வோர்க்கு இறைவன் வினைத்தொடர்பைக் கெடுத்து வீட்டுநெறி காட்டுவன் என்ற கருத்தை, "வீடு காட்டும் நெறி" யென்றார். இதற் கேற்பப் பிறிதோரிடத்தும், "வேடநிலை கொண்ட வரை வீடுநெறி காட்டி வினை வீடுமவரே"6 என்று கூறுகின்றார். இவ்வாறு பிள்ளை யாரால் விதந்தோதப்படும் திருவேடத்தின் இயல்பைக் கண்ட மெய்கண்டதேவர், "மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும், அரனெனத் தொழுமே"1 என்று உரைத் தருளினார். அதற்கு உரைகண்ட அருணந்திசிவனார், "அறிவரியான் தனையறிய ஆக்கை யாக்கி, அங்கங்கே உயிர்க் குயிராய் அறிவுகொடுத்தருளால் செறிதலினால் திருவேடம் சிவனுருவேயாகும்"2என்று உரைக்கின்றார். இதனால், இறைவனை வழிபடும் எண்ணமுடையோர்க்குத் திருவேடத்தின் இன்றியமை யாமையைப் பிள்ளையார் வற்புறுத்தியிருத் தலைப் பெறுகின்றோம். இத்திருவேடங்களுள் ஒன்றாய் இறைவன் திருமேனிக் கண் கிடந்து நல்லொளி திகழும் திருநீற்றினைச் சைவராவார் அணிதல் வேண்டும் என்றற்கு அத்திருநீறே பொருளாகப் பிள்ளையார் திருநீற்றுப்பதிதகத்தைப் பாடியருளியுள்ளார். அதன்கண் அவர், திருநீறு மந்திரமும் தந்திரமும் ஆவது; வெந்துயர் தீர்ப்பது; போதந் தருவது; புன்மை தீர்ப்பது; முத்தி தருவது; பத்தி தருவது; பேணி யணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது; பெருந்தவத்தோர் களுக்கெல்லாம் ஆசை கெடுப்பது; அவலம் அறுப்பது; வருத்தம் தணிப்பது; இருமைக்கும் உள்ளது; ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது; எண்திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது; இராவணன் முதலாயினாரும் அணிவது என்பது போலும் இயல்புகள் அத்திருநீற்றுக் குண்டென அத்திருப்பதிகத்தே எடுத்தோதுகின்றார். இனி, புறத்தே சிவவேடமும் அகத்தே சிவனடி நிலவும் சிந்தையுமுடைய திருத்தொண்டர்களையும் பேணுதல் வேண்டும்; அவரோடு இணங்குதல் வேண்டும் என்று பிள்ளையார் வற்புறுத்து கின்றார். இத்தகைய வேடமுடையோர் வினைநீக்க முற்றோராதலால் அவர்களைப் பேணுவதும் அவர்களோடு கூடியிருப்பதும் வேண்டும். இதனைத் "தோடுலாவிய காதுகளாய் சுரிசங்க வெண் குழையாய் என்றென்று உன்னும் வேடங்கொண்டவர்கள் வினைநீங்கலுற்றாரே"3 என்றும், அவருள்ளத்தே இறைவன் எழுந்தருளும் சிறப்பை, "பெரியார்(தன்) கழலென்றுந் தொழுதேத்த, உள்நிலாவி அவர் சிந்தையுள் நீங்கா ஒருவன்", "உள்ளமார்ந்த அடியார் தொழுதேத்த உகக்கும் அருள்தந்து, எம் கள்ள மார்ந்து கழியப் பழி தீர்த்த கடவுள்"1 என்பன முதலியவற்றால் உணர்த்துகின்றார். இவ்வடியவர்களைப் பேணிவழிபடல் கடன் என்பாராய், பிள்ளையார், "எம் ஈசர் தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள் தூநெறி எளிதாமே"2 என்றும் "கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான், நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சுள்ளானே"3 என்றும் அறிவுறுத்தி, அடியார் வழிபாட்டின் இன்றியமையாமையை எதிர்மறை முகத்தால் வைத்து, " பொடியார் மெய் பூசினும் புறவின் நறவம் குடியா வூர் திரியினும் கூப்பிடினும் கடியார்பூம் பொழிற் சோலைக் கள்ளில் மேயான் அடியார் பண்பிகழ்வார்கள் ஆதர்களே"4 என்று வற்புறுத்துவதைக் காண்மின். அடியார் வழிபாட்டினைக் குலச்சிறையார் செயலில் வைத்து, "கணங்களாய்வரினும் தமியராய் வரினும் அடியவர் தங்களைக் கண்டால், குணங்கொடு பணியுங் குலச்சிறை" என்றும், "நாவணங் கியல்பாம் அஞ்செழுத் தோதி, நல்லராய் நல்வியல்பாகும் கோவணம் பூதி சாதனங் கண்டால் தொழுதெழ குலச்சிறை"5 என்றும் உரைக்கின்றார். இனி, தாமே இறைவன்பால், அடியவர் இயல்புகளை எடுத்தோதிப் பரவி, அவர்க்கெய்தும் இடர்களைக் களைதல் வேண்டுமெனப் பணிந்து கேட்பதும் இவர் செயல்களுள் ஒன்றாகக் காணப்படுகிறது, அடியார் இயல்புகளை, "கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார், "பாடல் ஆடல் பேணி இராப்பகலும் நினைத்தெழுவார்", "பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும் நின்னடியார்", "நின்தாணிழற் கீழ் நிலைபுரிந்தார்", "சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு கொண்டார்", "நல்ல வாய் மொழியா லேத்தி, இராப்பகலும் நின்று நைவார்", "நின்னடியே நெஞ்சில் வைப்பார்"6 என்று புகழ்ந்து, இவரது "இடர்களையாய்" என்று வேண்டுகின்றார். "எம்பெருமான் அணிந்த நீறு கொண்டார்"7 என்பது போல, பிறிதோரிடத்தே, "தோளின் மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர்" என்று புகழ்ந்தோதுவர். மேற்கூறிய தொண்டர்கள் தொண்டுபட்டுப் பரவும் முதல் வனாகிய சிவபரம்பொருள், உலகில் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிலவும் இயல்பை உடையனென்று அறிவு நூல்களால் அறிகின்றோம். ஒன்றாம் நிலையில் உலகெலாமாகியும், வேறாம் நிலையில் உலகினை நீங்கியும், உடனாம் நிலையில் உலகுயிர்க்குயிராய் நிறைந்தும் அருள் செய்வன் என்பது துணியப்படும். இக்கருத்தை ஞானசம்பந்தர் பல திருப்பதிகங்களில் எடுத்தோதுகின்றார். "ஈறாய் முத லொன்றாய் இரு பெண்ணாண் குண மூன்றாய், மாறா மறை நான்காய் வருபூதம்அவை யைந்தாய், ஆறார் சுவை யேழோசை யோடெட்டுத்திசை தானாய், வேறாய் உடனானானிடம் வீழிம் மிழலையே"1 என்பதனால் அம்மூவகை நிலையினையும் பிள்ளையார் உரைப்பது காண்மின். ஒன்றாம் நிலையினை, "மண்ணோடுநீர் அனல்காலோடு ஆகாயம் மதியிரவி, எண்ணில் வரும் இயமானவன் இகபரமும் எண்டிசையும், பெண்ணினொடாண் பெருமையோடு சிறுமையுமாம் பேராளன்"2 என்றும், வேறாம் நிலையினை, புவி முதலைம் பூதமாய்ப் புலனைந்தாய் நிலனைந்தாய்க் கரணம் நான்காய், அவையவை சேர்பயனுருவாய் அல்ல வுருவாய் நின்றான்"3, என்றும், உடனாய் நிற்கும் நிலையினை, "உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனிபேதம், நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்"4 என்றும் உரைக்கின்றார். இப்பரமன் மும்மூர்த்திகளாய் உலகினைப் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலையும் செய்வன் என்பார், "படைத் தளித் தழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை"5 என்று தெரிவிக்கின்றார். இவ்வாறே பிறாண்டும் "பவமலி தொழிலது நினைவொடு பதும நன் மலரது மருவிய சிவன்", "உலகுகள் நிலைபெறுவகை நினை வொடு மிகும், அலைகடல் நடு அறிதுயிலமர் அரியுருவியல் பரன்", "உயிரவையவை, முழுவதும் அழிவகை நினைவொடு முதல் உருவியல் பரன்"6 என்று விளக்குகின்றார். இவ்வாறு உயிர்களை யொடுக்குதற்குக் காரணமாகிய பரமனே முதல்வன் என்ற கருத்தையும் பிள்ளையார், "முதலுருவியல் பரன்" என்பதனால் குறித்திருத்தலைக் காணலாம். இப்பரமன் நீதியே வடிவாகவுடையன் என்பர்; "இன்னவுரு இன்னநிறம் என்றறிவ தேலரிது நீதிபலவும் தன்னவுருவாமென மிகுத்த தவன்"1 என்று கூறி, பிறாண்டும், அக்கருத்தை, "நிலமிகு கீழுமேலும் நிகர்யாது மில்லையென நின்ற நீதியதனை, நலமிகு தொண்டர் நாளும் அடிபரவல் செய்யும் நனிபள்ளி"2 என்று வற்புறுத்துகின்றார். இம்முதல்வன், ஒருபால் உமை யமர்ந்து விளங்க, முடியிற் சடையும், பிறையும், கங்கையும் உடையனாய் விடமுண்டான்; இருவர் தேட நின்றான் என்பன முதலிய வரலாறுகளை யுடையன் என்று நூல்கள் கூறுவதுண்டு. இவையாவும் உயிர்கட்கு அருள்செய்தற் பொருட்டே நிகழ்ந்தனவாம் என்பர்; "நாடுந் திறத்தார்க்கு அருளல்லது நாட்டலாமே"3 என்று பிள்ளையார் ஓதுகின்றார். சென்னியில் பிறையும் பாம்பும் கங்கையும் கொண்டது உயிர்கள் மெய்ந்நெறி யுணர்ந்து நலம்பெறுதற்கு என்பார், "தூநெறி பெறுவா ரெனச், சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார்"4 என்றும், "நிலன் நாள்தோறும் இன்புற நிறைமதி யருளினனே"5 என்றும் உயிர்கள் போகம் நுகற்தற் பொருட்டுத்தான் உமையோடு கூடினான் என்றற்கு, "தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக, விரைமலி குழலுமையொடு விரவதுசெய்து நரைதிரை கெடுதகவது அருளினன்"6 என்றும், அண்ட ருய்யவும் அவுணர் மாயவும் விடமுண்டார்7 என்றும் பிள்ளையார் விளக்கியருளு கின்றார். இவ்வாறே, பரமன் பலிக்கு உழன்ற செய்தியும் அருள் காரணமாக நிகழ்வதே யன்றிப் பலியேற்று உண்டல் வேண்டியன்று என்பார், "மனமுலாம் அடியவர்க் கருள் புரிகின்ற வகையலாற் பலிதிரிந் துண்பிலான்"8 என்பர். இவ்வண்ணம் உயிர்கட்கு அருள்செய்வது காரணமாகப் பல செயல்களை நிகழ்த்தும் பரமன் உள்ளன்போடு தன்னைப் பரவிப் பணியும் அடியாரது உள்ளத்தேயிருந்து இன்புறுத்தும் இயல்பினைப் பல திருப்பாட்டுக்களில் விளக்கியுரைக்கின்றார். "மெய்யராகிப் பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து, செய்யரானார் சிந்தையானே"1 என்றும், "அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற் றைம்புலனு மடக்கி ஞானம் புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளி யிருக்கும் புராணர்"2 என்றும், "தேனுமா யமுதாகி நின்றான் தெளிசிந்தையுள்"3 என்றும், "கழலுன்னி எண்ணுந்தனையும் அடியா ரேத்த அருள் செய்வான், உண்ணின்றுருகவுவகை தருவார்"4 என்றும், "உரிமையுடைய அடியார்கள் உள்ளுற வுள்கவல்லார் கட்கு, அருமையுடையன காட்டி அருள் செயும் ஆதிமுதல்வர்"5 என்றும் இவ்வாறு பலவிடத்தும் கூறுவர். "அருமை யுடையன காட்டி யருள்செயும்" என்றது, "நாயினேற்கே காட்டாதென வெல்லாம் காட்டிப் பின்னும் கேளாதன வெல்லாம் கேட்பித் தென்னை, மீட்டேயும் பிறவாமற் காத்தாட்கொண்டான்"6 என்ற மணிவாசகத்தை நினைப்பிக்கின்றது. இனி, இறைவன் உயிர்கட்கு உவகைதரும் நெறியினை யுணர்த்தி, மக்களை அந்நெறிக்கண் நிறுத்தி இன்பம் பெறுவிக்க வேண்டுமென்ற கருத்தால், "உள்ளம் உருகில் உடனாவர்"7 என்றும், "தேனுமாயமுதாகி நின்றான் தெளி சிந்தையுள்"8 என்றும் இவை போல்வன பலவும் பல பதிகங்களில் எடுத்துக்கூறி வற்புறுத்து கின்றார். உள்ளம் உருகுதற்கேதுவாகிய அன்பும், சிந்தைத் தெளிவும் பெறுவது எங்ஙனம்? சிந்தைக்கண் தெளிவு பிறக்கின், இறைவன் தேனும் அமுதுமாய் இன்புறுத்துவன்; அதனால் அவன்பால் அயரா அன்பு செய்தால், அது காரணமாக அவன் உடனாய் நிற்கும் நிலையுணர்ந்து அவன் பணியென நிற்கும் அருள்வழி யொழுக்கம் கைகூடும்; வினை நீக்கமும் வீடுபேறும் உண்டாம். சிந்தையில் தெளிவு நிகழாமைக்குக் காரணம் இயற்கையாகிய உயிரறிவும் செயற்கையாகிய கல்வியினாலாம் பாசவறிவும் முனைத்து நிற்பதேயாகும். இவ்விருவகை யறிவும் முதல்வனைக் காண்டற்குத் துணைசெய்வன அல்ல அவனுடைய திருவடி ஞானமே துணையாவது. அந்த ஞானத்தாலே சிவபெருமானைச் சிந்தைக்கண் நாடி அவன்; உயிர்களிடையே ஒன்றாயும் உடனாயும் நிற்றலை யுணர்தல் வேண்டும். ஒன்றி உடனாய் நின்று, காணும் கண்ணுக்குக் காட்டியும் உடனிருந்து கண்டும் உயிர் ஒழுகு மாறுபோல, பரமன் உயிர்கட்கு அறிவினை அறிவித்தும் அறிந்தும் உபகரிக்கும் உண்மையை யுணர்தல் வேண்டும். அவன் அறிவித்தாலன்றி உயிர்கள் அறிய மாட்டாவாய் இருக்கின்றன என்பதை யுணருமிடத்து அவனது திருவருள் கண்ணாகக் காணும்திறம் புலனாகும். அக்குறிப்புத் தோன்றப் பிள்ளையார், "மண்ணிடை வாழும் உயிர்க்கெல்லாம் கண்ணானே"1 என்றும், "வானவரோடு மனிதர்க்கும் கண்ணினை"2 என்றும், "கண்ணாவார் கருத்தனார்"3 என்றும் ஓதுகின்றார். இவ்வாறு, அவனது திருவருளே கண்ணாக அம்முதல்வனையும் அவனை இன்றியமையாமையும், அறிவுக்கறிவாய் நின்று அறிவித் தருளும் அவனது அருள் நலமும் உயிர்கள் அறியுந்தோறும் பசுபோதம் கெடுதலால் வற்றாத பேரின்பம் சுரக்கும்; அதனால் அவன்பால் பேரன்பு செலுத்தும் தன்மையுண்டாகிறது. அந்த அன்பால் அம்முதல்வனது நினைவே உயிர்கட்கு நிகழ்ந்தவண்ண மிருக்கிறது. அதனால், முதல்வன் தன்பால் ஒன்றாயும் உடனாயும் நின்று இயக்குவதால், தன் கருவிகரணங்கள் தொழிற்படுகின்றன என்னும் உண்மை யுணரப்படுகிறது. அவ்வுணர்வு, தன்செயலென ஒரு செயலும் உயிர்க்கில்லை யென்னும் உயர்நிலையைப் பயந்து விடுகிறது. உயிரறிவு தன் தன்மைகெட்டு முதல்வன் அறிவொளியில் ஒன்றி யுடனாதலால், அவ்வுயிரறிவை மறைத்து நின்ற மலவிருள் நீங்குகிறது. ஆகவே மலநீக்கமும் உண்மையறிவும் பொருந்திய சிந்தை தெளிவெய்துவதால், முதல்வனது திருவருள் ஞானம், தேனும் அமுதுமாய் இன்புறுத்த, இறவாத இன்ப அன்பு உயிர்க்கு இறைவன்பால் உண்டாகும். ஆனதுபற்றியே பிள்ளையார், "உருகுவா ருள்ளத்தொண்சுடர், தனக்கென்றும் அன்பராம் அடியார்கள் பருகு மாரமுது"4 என்றும், "ஊனமிலராகியுயர்நற்றவ மெய் கற்றவை யுணர்ந்த அடியார், ஞானமிக நின்றுதொழ நாளும் அருள்செய்ய வலநாதன்"5 என்றும், "ஞானத்திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார்மேல், ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப் பொருள் போலும்"1 என்றும் ஓதியருளுகின்றார். இறைவனை, அவன் திருவடி ஞானத்தாலே வழிபட வேண்டியிருத்தல் பற்றி, "ஞானமா மலர் கொடு நணுகுதல் நன்மையே"2 என்றும், "ஊனத்திருள் நீங்கிட வேண்டில், ஞானப்பொருள் கொண்டடி பேணும்"3 என்றும் அருளுகின்றார். அன்பால் நினைவாரது உள்ளத்தில் இறைவன் எழுந்தருளுதலால், ஊனத்திருள் எனப்படும் மலவிருள் நீங்குகிறது; அது நீங்குதலால் ஞானவொளியே நிலவுதல்கண்டு, "ஏம மனத்தராய், இகழா தெழும் தொண்டர், தீபமனத்தார்கள் அறியார் தீயவே"4 என்று பிள்ளையார் ஓதுகின்றார். ஞாயிற்றின் முன் இருள் நில்லாமையால், அவ்விருளை ஞாயிறு அறியாதொழிதல் போல தீபமனத்தார் முன் தீய பயக்கும் மலங்கள் நில்லாமையால், "அறியார் தீயவே" என்று இயம்புகின்றார். இக்கூறிய நலங்கேட்டு வழிபாட்டின்கண் மனம் வைப்பவர்க்குத் தெளிவும் உண்மையறிவும் அன்பும் உண்டாதற்குப் பிள்ளையார் ஒரு நன்னெறியை உணர்த்துகின்றார். இறைவன் உயிர்க்கு அருள் செய்யும் முதல்வனாதலை அறிந்து அவனை வழிபடுவோர் வழி பாட்டின்கண் ஒன்றிய மனமுடைய ராதல் வேண்டும். "எண்ணொன்றி நினைந்தவர் தம்பால், உண்ணின்று மகிழ்ந்தவனூராம்"5 என்றும், "நெஞ்சொன்றி நினைந் தெழுவார்மேல் துஞ்சும் பிணியாயின தாமே"6 என்றும், "நெறிகொள் சிந்தையராகி நினைபவர் வினைகெட நின்றார்"7 என்றும் கூறுவர். நெறிகொள்வதாவது, பல்பொருள் மேலும் சென்று அவற்றாற் பெறலாகும் சிற்றின்பம் வேண்டி யலைகின்ற மனத்தை இறைவன்பால் செலுத்துதல், "செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம், துப்ப னென்னாது; அருளே துணையாக ஒப்பர்"8 என்று பிள்ளையார் கூறுதல்காண்மின், சிற்றின்ப நாட்டத்தால் சிவன் திருவடியை மறந்து நீங்குதல் பற்றி "மறவியென் சிந்தனை மாற்றி வாழவல்லார் தமக்கென்றும் பிறவி யறுக்கும் பிரானார்"9 என்று ஞானசம்பந்தப் பிள்ளையார் நயமுற உரைக்கின்றார். இவ்வாறு மறக்கும் மனத்தினை மாற்றி இறைவன் திருவடியில் ஒன்றி நினைப்பார்க்கு அவரது உள்ளத்து மாசினைப் போக்கி இம்மையின்பமும் மறுமை நலமும் அருளுவர் என்று பிள்ளையார் அறிவுறுத்துகின்றார். "உள்ளமார்ந்த அடியார் தொழுதேத்த வுகக்கும் அருள் தந்துஎம், கள்ளமார்ந்து கழியப் பழி தீர்த்த கடவுள்"1 என்றும், "கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு அருத்தி யோடு, உள்ள மொன்றியுள்குவார் உளத்துளான்"2 என்றும், "நெஞ்சமிது கண்டு கொள் உனக்கென நினைந்தார் வஞ்சமது அறுத்தருளும் மற்றவனை"3 என்றும் பல விடத்தும் பரிந்து பேசுகின்றார். இவ்வாறு அவன் திருவடியை இடையறாது எண்ணுவோர், உலகினில் பிறிது இரைபெறும் உடல் பெறுகுவ தரிது"4 என்பர். "பிறி திரை பெறும் உடல் பெறார்" எனவே, சிவபோகம் துய்க்கும் சிவஞான வுடம்பு பெறுதல் பெற்றாம். இனி, அவர்கள் இம் மண்ணுலகில் பெறும் பயனைக் கூறலுற்ற பிள்ளையார், திருவீழிமிழலைத் திருவிராகப் பதிகத்தின்கண் விரியக் கூறுகின்றார். இறைவனை ஒன்றிய மனத்தோடு வழிபட்டு நினைப்போர், "அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்வர்;" அவரே "இருநிலம்இதன்மிசை எழில்பெறும் உருவினர்;" "கலைமகள் தலைமகன் இவன்என வருவர்", "மாடமச் சனம் மகிழ்தரும் மனமுடையவர்", "புகழ்மகள் துணையினர்", "அன்றினர் அரியென வருபவர்", "கரம்பயில் கொடையினர்", "ஒருக்கிய உணர்வினோடு ஒளிநெறி செலுமவர்" "அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்", "மன் மதனென ஒளிபெறுவர்"5 என்று கூறியருளுகின்றார். இவ்வாறு இறைவனை வழிபட விளையும் பல நன்மைகளை யுணர்த்திப் போந்த ஞானசம்பந்தப் பிள்ளையார் திருமுன், சிலர் தோன்றி உண்மையாகவே தம் உள்ளத்தில் எழுந்த ஐயங்களைத் தெரிவிக்கலானார்கள். அவர்கட்குத் தக்க விடைகளை நெஞ்சின் மேல் வைத்துப் பிள்ளையார் உரைத்தருளுகின்றார். உயிர் நின்று உலவும் இவ்வுடம்பு, நிணம், குடர், தோல், நரம்பு, என்பு முதலியவற்றாலாகிய ஆக்கையாகும்; இதன் கண் குற்றம் மலிந்திருக்கிறதேயன்றிக் குணமில்லை. குணமே நிறைந்த இறைவனைக் குற்றமே நிறைந்த உடம்பு கொண்டு செய்யும் வழிபாடு எவ்வாறு பயன் விளைவிக்கும் என்பது அவர்கள் முதற்கண் கொண்ட ஐயம், "இவ்வாற்றால் உடம்பு நிலையற்றதாயினும், குணமும் குற்றமும் நிறைந்த உடம்புடைய வானவரும் தானவரும் வழிபட்டு உய்தி பெறுகின்றார் களென்றோ; ஆதலால் நீவிரும் உய்திபெறலாம்; ஐயத்தால் மையல்கொண்டு அஞ்சவேண்டா" என்பராய்ப் பிள்ளையார், " நிணங்குடர் தோல்நரம் பென்புசே ராக்கைதான் நிலாயதன்றால் குணங்களார்க் கல்லது குற்ற நீங் காதெனக் குலுங்கினாயே; வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனங்கொடேத்தும் அணங்க னாரூர் தொழு துய்யலாம் மையல்கொண்டஞ்சல் நெஞ்சே" என்று உரைக்கின்றார். "இவ்வாறு பிறவியால் துன்ப முண்டாதலால், அது காட்டி மயக்கும் இன்பத்தை விரும்பாது துறுவுபூண்டார்க் கன்றி ஏனையோர்க்குத் துன்பம் நீங்குமாறில்லை; ஆதலால் வழிபாடு துன்பம் நீக்குவது யாங்ஙனம்?" என்று அடுத்தபடி எழுந்த ஐயத்தை நீக்குவார், வழிபாடு ஒன்றே துன்பத்தைத் துடைக்கும் நன்னெறியாம் என்று அறிவுறுக்கின்றார், "திறங்கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே, அறங்கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான்"1 என்று பிறிதோரிடத்து உரைத்துள்ளவாறே, ஈண்டும், அம்முதல்வன் அறக்கடவுளாதலால், வழிபடுவார் நோயை நீக்கி இன்பம் செய்வன் என்பாராய்., " பிறவியால் வருவன கேடுள வாதலால் பெரியஇன்பத் துறவியார்க் கல்லது துன்பநீங் காதெனத் தூங்கினாயே மறவல்நீ மார்க்கமே நன்ணினாய் தீர்த்தநீர் மல்குசென்னி அறவ னா%ர் தொழுதுய்யலாம் மையல்கொண்டஞ்சல் நெஞ்சே"1 என்று தெருட்டுகின்றார். இவ்வாறு தெளியத் தகுவனவற்றைத் தெளியவுரைத்தும் தெருளாது பிணங்குவோரை, "உருவிலான் பெருமையை உளங் கொளாத அத் திருவிலார் தங்களைத் தெருட்டலாகுமே"2 "பேச்சி னாலுமக் காவதென் பேதைகாள் பேணுமின்"3 என்று கழறிக் கூறி நெறிப்படுத்துகின்றார். இதனாலும் தெருளாது நீங்குவோரை ஏனை நன்மக்கள் கண்டு அருவருத்தாராக, பிள்ளையார், "அன்றின்றொ டென்றும் அறிவானவர்க்கும் அறியாமை நின்ற அரன்"4 ஆதலால் அவரைப் பரவுவோரும் பழித்து இகழ்வோருமுண்டு; அவரை இகழன்மின் என்பார் இறைவனார், "பரவுவாரையும் உடையார் பழித் திகழ் வாரையும் உடையார்"5 என்று கூறியருளுகின்றார். இவ்வண்ணமே, பிணங்கி நிற்கும் பௌத்தரையும் சமணரையும் வெகுளாதீர்கள் என்று அறிவுறுத்துகின்றார்; அவர் கூறும் சொற்களைக் கேட்டுப் பிணங்கும் நம்மவரையும் நோக்கி, "ஆதர் அமணோடு சாக்கியர் தாஞ்சொல்லும் பேதைமை கேட்டுப் பிணக்குறுவீர் வம்மின், நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய, வேதன தாள் தொழ வீடு எளிதாமே"6 என்றும், அச்சமண புத்தர்களால் தொழப்படும் தேவராலும் நம் இறைவன் தொழப்படுவான் என்பார், "மூடிய சீவரத்தார் முதுமட்டையர் மோட்டமணர், நாடிய தேவரெல்லாம் நயந்தேத்திய நன்னலத்தான்"7 என்றும் கூறி நல்வழியருளுகின்றார். இனி, தாம் பாடியருளிய திருப்பதிகங்களால் மக்களை இருவகுப்பினராகக் கொண்டு ஒருதிறத்தாரைப் பெரியோரென்றும் ஒருதிறத்தாரைச் சாதாரண மக்களென்றும் கருதித் தாம் உரைக்கக் கருதும் நல்லுரைகளை உரைத்தருளுகின்றார். பெரியோராவார் புலன்களை அடக்கி அறுவகைக் குற்றங்களைக் கடிந்து இறைவனை ஞானக்கண்ணினால் தம்முள்ளே கண்டு அவனோடு ஏகனாகி இறைபணி நிற்பதும், அவன்பால் அயரா அன்புகொண்டு மறவாது ஏத்துவதும் செய்வோராவர். அவர்கட்குத் தாம் உரைக்க வேண்டுவ தொன்றுமின்மையின், பிள்ளையார் அவர்தம் செயலை எடுத்துப் பாராட்டி அதனைக் காணும் பிறரும் அப் பெரியோர் பெருமை யறிந்து வழிபட்டொழுகு மாறு செய்தருளுகின்றார். "கற்றல் கேட்டலுடையார் பெரியார் கழல் கையால் தொழுதேத்தப், பெற்ற மூர்ந்த பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே"1 "பெரியார் கழலென்றுந் தொழுதேத்த, உள்நிலாவி அவர் சிந்தையின் நீங்கா ஒருவன்"2 "ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை முழுதுணர்ந்து ஐம்புலன்கள் செற்று, மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து தவம்புரியும் முதுகுன்றமே"3 "ஊனமிலராகி யுயர்நற்றவமெய் கற்று அவையுணர்ந்த அடியார், ஞானமிக நின்று தொழ நாளும் அருள் செய்யவல நாதன்"4 என்பன முதலிய திருப்பாட்டுக்களால் அப் பெரியார் பெருமையை எடுத்தோதுவதைக் காணலாம். ஏனை யெல்லாரையும் நோக்கி ஏனைப்பதிகங்கள் பலவற்றையும் அருளிச் செய்கின்றார். பெரியோர் பெருமையும் செயலும் கண்டு தம்மாட்டா மையால் வருந்துவோரை நோக்கி, " சாநாளும் வாழ்நாழும் தோற்றம் இவை சலிப்பாய வாழ்க்கை யொழியத் தவம் ஆமா றறியா தலமந்து நீர் அயர்ந்தும் குறைவில்லை; ஆனேறுடைப் பூமாண் அலங்கல் இலங்கு கொன்றைப் புனல்பொதிந்த புன்சடையினா னுறையும் தூமாண் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே"5 என்றும், " சீர்கெழு சிறப்போவாச் செய்தவ நெறிவேண்டில் எர்கெழு மடநெஞ்சே! இரண்டுற மனம்வையேல்; கார்கெழு நறுங்கொன்றைக் கடவுளதிடம் வகையால் பார்கெழு புகழோவாப் பருப்பதம் பரவுதுமே"1 என்றும் இவைபோல்வன பலவும் பிள்ளையார் உரைப்பதைக் காண்கின்றோம். எல்லோரையும் தம்மோடு உளப்படுத்தி, இறைவனை வணங்கி வினைப்பகையைக் கெடுப்போம் என்பவர், கேளாது அயல்நெறிகளிற் செல்வோரைப் "பேய்த் தேர்ப்பின் குடங்கொண்டு நீர்க்குச் செல்வார் போதுமின்"2 என்று விலக்கி விடுகின்றார். எல்லோரும் சூழ்ந்துநிற்ப; இறைவனை வழிபடலுற்ற பிள்ளையார், "அவர் அனைவரும் தாம் செய்யும் வழிபாட்டில் பிணிப்புண்டு நிற்றற்பொருட்டு", "அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர், உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக் கூனமன்றே, கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்"3 என்று உரைக்கின்றார். நாம் அடிமைகளாதலின், இறைவனுக்குக் கைவினை செய்வதன்றிப் பிறிதொன்றும் செய்தற் கில்லோம் என்றற்குக் "கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றதும்" என்று அருளியிருத்தலைக் காண்மின். அக்கைவினைகள் இவை யென்று கூறுவார், "காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனிமனத்தால், ஏவினையால் எயில்மூன் றெரித்தீர்! என்று இரு பொழுதும், பூவினைக் கொய்து"4 இறைவன் திருவடியைப் போற்றுவதாகும் என்கின்றார். இனி, வழிபடுங் காலத்து வழிபடும் தமது மனக்கருத்தின் நிலைமையை விளக்கி, " மறக்கும் மனத்தினைமாற்றி யெம்ஆவியை வற்புறுத்திப் பிறப்பில் பெருமான் திருவடிக்கீழ் பிழையாதவண்ணம் பறித்த மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம் சிறப்பில் இத்தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்"5 " கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம்கழலடிக்கே உருகி மலர் கொடு வந்துமை யேத்துதும் நாம் அடியோம்"6 என்று தெரிவித்தருளுகின்றார். இவ்வழிபாட்டால் இறைவன், உலகியற் போகங்கள் மேற்செல்லும் வேட்கைகள் போந்து தம்மை அலைத்துவருத்தாவண்ணம் ஆண்டான் என்பார், "முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்றவையும் எல்லாம், விலைத்து அலையா வணம் கொண்டு எமையாண்ட விரிசடையீர்" என்றும் வியந் தோதுவதைக் காணலாம். இவ்வாறு பல்வகையிலும் பத்திநெறியின் நலத்தைப் பல திருப்பதிகங்களால் தாம் எடுத்தோதினராதலால், அவற்றைப் பலரும் மேற்கொண்டு பொருளுறவுணர்ந்து பாடிப் பரவுதல் வேண்டுமெனப் பரிந்தோதுகின்றார். கற்றோர் விரித்தோதும் விரதங்களும் ஞானங்களும் ஆகிய எல்லாம் இப்பத்திச்செயலுக் குரிய ஞானமேயாகும் என்பது ஞானவேட்கை யுடையாரை ஒருப்படுத்துகின்றது. "வீடும் ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால், வாடு ஞானமென்னாவதும் எந்தைவலஞ்சுழி, நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ் கொண்டிசை, பாடும் ஞானம் வல்லார் அடிசேர்வது ஞானமே"1 என்பது காண்மின். என்னாவதும் என்பதன் ஈற்றிலுள்ள உம்மை ஆக்கப் பொருளதாய், விரதங்களால் வாடும் ஞானம் என்னாவதாம் என்று பொருள் தருகிறது. நன்னெறிக்காட்டும் ஞானசம்பந்தத் திருப்பதிகங்களைப் பயின்றோதினால் வரும் பயனைக் காட்டுவதும் ஞானசம்பந்தர் மேற்கொண்டுரைக்கும் நன்னெறியாதலின், அதனைக்கூறி இக்கட்டுரையை முடித்துக் கொள்ளுகின்றோம். "சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்" மெய்கண்ட தேவர் காட்டும் மெய்ம்மொழியாகும்; "தன்னையடைந்தோர் வினைதீர்ப்பதன்றோ தலையாயவர் தம் கடனாவதுதான்"2 என்று நாவரசரும், "தாமென்றும் மனம் தளராத் தகுதியயராய் உலகத்துக், காமென்று சரண் புகுந்தார் தமைக்காக்கும் கருணையினான்"3 என்று ஞானசம்பந்தரும் கூறுவர். இவ்வாறு தன்னையடைந்தாரை அருளும் தலைவனான பரமன், அருளுந்திறமோ மிக வியப்பானது; தன்னையடைந்தோர், தன்னைப் போலவே இன்பம்பெற அருளு கின்றான் என்பாராய்ச். "சங்கரனார் தம்மைப்போலத் தம்மடி யார்க்கும் இன்பளிப்பவர்"4 என்று கூறுகின்றார். அவ்விறைவனோ போகமும் யோகமும் ஒருங்குடையவன்; "நல்லூர்ப் பெருமணத் தான் நல்ல போகத்தான் யோகத்தையே புரிந்தான்"1 என்பது காண்மின். இத்திருப்பதிகத்தைப் பயின்றோதிப் பரவுவோரும், போகமும் யோகமும் பெறுவர் என்பதற்கு "வெங்குருவில் வேதியன் விரும்புதமிழ் மாலைகள் வல்லார், சித்திர விமானமமர் செல்வ மலிகின்ற சிவலோக மருவி, அத்தகு குணத்தவர்களாகி யனுபோக மொடு யோகமுமவரதே"2 என்று உரைத்தருளுகின்றார். திருப்பதிகப் பயிற்சியால் விளையும் அனுபோகம் சிவலோகானு போகமாகிய சிவபோகமாகும் என்பதனால், சிவஞானம் இத்திருப்பதிகங்களால் விளையுமென்பது இனிது பெறப்படும். முடிப்புரை இதுகாறும் திருஞானசம்பந்தப் பெருந்தகை வழங்கிய ஞான நெறிகள் இவையென்பது கண்டோம்; இவையேயன்றி, ஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகங்களில் மிகப் பல சமயவுண்மைகளும் இயற்கை நலங்களும் மலிந்து கிடக்கின்றன. இறைவழிபாட்டில் ஈடுபடு வோர்க்கேயன்றி, இலக்கிய வழிபாட்டில் ஈடுபட்டோர்க்கும் இப்பெருமான் வழங்கிய திருப்பாட்டுக்கள் சீரிய இன்ப நிலையங் களாதல் இனிது புலனாகும். இத்திருப்பதிகங்களால் விளக்கப்படும் இறைவன் இயல்பையும், அவன் எழுந்தருளும் திருப்பதிகளின் சிறப்பையும், ஆங்காங்கு இறைவனை வழிபடும் நன்மக்கள் இயல்பைபும், அவர் செய்யும் வழிபாட்டின் மாண்பையும், ஞான சம்பந்தப்பெருமான் திருவாய் மலர்ந்தருளியதன் பயனாக, பிற்காலத்தே வாழ்ந்த அரசர்களும், செல்வர்களும் பிறரும் சைவத்திருப்பணியில் ஈடுபட்டுச் சைவத்தின் மாண்பினை நிலைபெறச் செய்யலுற்றனர். திருப்பதிகங்களைத் திருக்கோயில்களில் நாடோறும் ஓதுதல் வேண்டும் என நிவந்தங்கள் நிறுவிய வேந்தர் பலரைக் கல்வெட்டுக்கள் ஒளிக்காது கூறுகின்றன. சில பதிகங்கள் கற்களிற் பொறிக்கப்பட்டிருத்தலையும் அறிகின்றோமன்றோ! "ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்சோதிக்க வேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி" என்று கடவுளுண்மை தெளிவித்து, "ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும், கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா, கோட்பாலனவும் வினையும் குறுகாமை யெந்தை, தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க தக்கார்"1 என்றதனால் வழிபாட்டு நெறியே முடிந்த முடிபான நன்னெறியென ஞானசம்பந்தர் நிலைநாட்டியது. இன்று பலர் சைவரென்றும், தமக்குரியது சைவசமய நெறியென்றும் நினைந்தும் பேசியும் இறைபணியில் ஈடுபட்டுய்தற்கு ஏதுவாயிற் றெனின் அது மிகையாகாது. இனி, நம் தமிழ்மொழி இயலிசை நாடகமென முத்திறத்த தென்பது உலகறிந்த செய்தியாகும். இயல் ஒழிந்த இசை நாடகங்கலை யுணர்த்தும் பண்டைத்தமிழ் நூல்கள் பல இறந்தொழிந்தன என்பதும் யாவரும் அறிந்தது சிலப்பதிகாரமும் திருமுறைகளும் இல்லை யென்றால் தமிழர்க்கு இசைச்சுவையே தெரியாது என்று பேசக்கூடிய இசைவீரர்கள் நம்நாட்டிலேயே தோன்றியிருப்பர். பண்டைத் தமிழிசையின் ஒருபகுதிக்குச் சீரிய இலக்கியமாக இத்திருப்பதிகங்கள் இலங்குகின்றன. இறைவன் வழிபாட்டு நெறியை வற்புறுத்தப் போந்த ஞானசம்பந்தப் பெருமான் தமது அருமைத் திருப்பதிகங்களை இசைப்பாட்டுக்களாகவே அமைத்தது ஒரு நன்னெறியாயிற்று. இவற்றிற்காணும் இசை நுட்பங்களை, திரு. விபுலானந்த அடிகள் ஆராய்ந்து முடிபுசெய்துள்ளார்கள். "அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியும் செந்தமிழ்க் கீதமும் சீரினால் வளர்தர"2, என்றும், "ஊறுபொரு ளின்றமிழியற்கிளவி தேரு மடமாதருடனா, வேறுதிசையாடவர்கள் கூற இசை தேரும் எழில் வேதவனமே"3 என்றும் பிள்ளையார் ஓதுவது காண்மின். "ஊறு பொருள்...... வேதவனமே" என்ற பகுதியில் தமிழ் மொழியினாலமைந்த இசைப் பாட்டுக்களை இசைநலங் கனிய மகளிர்பாட வேற்றுநாட்டு ஆடவர் அப்பாட்டிசையை அம்மகளிருடன் உடனிருந்து பாடி இசைநலம் தேர்ந்து இன்புறுகின்றனர் என்று ஞானசம்பந்தர் கூறுவதை நோக்கின், தமிழ்ப்பாட்டின் வாயிலாக இசைக்கலையை வளர்த்தல் வேண்டுமென்பது நன்கு புலனாகின்றது. ஞானசம்பந்தப்பெருமான் "செந்தமிழ்க்கீதம்" என்றும், "செய்ய தண் தமிழிசை" யென்றும், "எண்ணுமொரெழுத்து மிசையின் கிளவி தேர்வார் கண்ணு முதலாய கடவுள்"1 என்றும் கூறிக் கண்ணெனப்படும் எண்ணும் எழுத்தும்போல இசையும் ஒத்த மதிப்புடைய தென்றும், எண்ணெழுத்துக் களோடு இசையுங் கற்றற்குரிய தென்றும், இவற்றைக் கற்போர் வழிபடும் முதற்கடவுள் சிவபரம்பொருளென்றும் உயர்த்தோதி ஒள்ளிய தமிழிசையை வளர்ப்பது, உயர்ந்த செல்வத் துரவோர்க்கும் இறைவழிபாடு நயக்கும் யாவர்க்கும் கடன் என்பது குறித்தேயென உணரவேண்டும். பிறர் எவ்வாறாயினும், தமிழ்ச்செல்வர்களும், ஆதீனங்களும், கோயிலார்களும் செந்தமிழால் இயன்ற இசையினையே பேணிப் புரக்கும் கடமையுடையராவர்; திருஞானசம்பந்தர் செய்தருளிய இத்திருப்பணியை நாளும் மேற்கொள்வதால் சைவத்துக்கும் சைவத் தமிழ்க்கும் குறைவிலா நிறைவே எய்துமாலின், இந்நெறியினை அவர்கள் மேற்கொண்டு தகுவன செய்வார்களாக. இக்காலம் கற்றவர் கல்லாதவர், செல்வமுடையவர், இல்லாதவர், முதியவர், இளையவர், ஆடவர் பெண்டிர் எல்லாரும் இசைமேல் பெருவேட்கை கொண்டிருக்கும் காலமாகும்; இவ்வேட்கை மக்களை வேறு வழிகளிற் செலுத்திக் கடவுட்கொள்கை நல்லொழுக்க முதலியவற்றை நெகிழ்வித்துத் துன்பத்திலாழ்த்துமோ என்ற அச்சம் அறிஞர்கட்குத் தோன்றியிருக்கிறது. இதை யுணர்ந்து அறவோரும் செல்வரும் ஒருமித்த நோக்கத்துடன் தமிழிசை வாயிலாக ஞானசம்பந்தப் பெருந்தகை முதலாயினார் வற்புறுத்திய நன்னெறிகளைப் பரப்பு வார்களாக. எதிர்காலவுலகத்தின் செம்மைநிலை வேண்டிப் பல்வேறு முறைகளைக் காணுங்கால் சமயநெறி யொழுகும் சான்றோர் இதனைக் கருத்திருத்தி வேண்டுவன முயல்வார்களாக. "ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென் ஆலவாயி லுறையும் எம் ஆதியே"  3. தேவாரத்திலுள்ள அகத்துறைப் பாடல்கள் தேவாரம் என்பது சைவர்களாகிய நாம் செய்த தவப்பயனாகத் தோன்றி நிலவும் செந்தமிழ்த் திருமறையாகும். தமிழறிவு சிறந்த சைவர்களுள், தேவார மென்பது இன்னது என்று தெரியாதவர்கள் இல்லை. ஆகையால், தேவாரத்திற் பயிற்சிமிகுந்து நிற்கும் உங்கள் முன்பு, தேவாரத்தின் பொதுவும் சிறப்புமாகிய இயல்புகளைப் பேசத் தொடங்குவது மிகையாகும் என்று கருதுகின்றேன். மேலும், தேவாரத்துள், திருஞானசம்பந்தப் பெருமான் தேவாரம் இப்போது நல்ல இனிய திருந்திய முறையில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே, தேவாரத்தைப்பற்றி ஒன்றும் விரித்துரையாமல், அதன்கண் உள்ள அகத்துறைப் பாடல்களைப் பற்றிப் பேசத் தொடங்குகின்றேன். அகத்துறைப் பாடல் என்பதில், அகம் என்பது கூடுதற்குரிய பான்மையுடைய ஒருவனும் ஒருத்தியும் கூடுமிடத்து, அக்கூட்டத்துப் பிறக்கும் இன்பத்தைக் குறிக்கும். அஃது அகத்தே விளங்கி, உயிர் களால், அகத்தேயே நுகரப்படும் அருமையுடையதாகலின், அதனை அகம் என்றே கூறுகின்றனர். துறையாவது, அகமாகிய அவ்வின்பத்தை நுகர்வதற்காக ஒருவனும் ஒருத்தியுமாகிய அவ்விருவரிடத்தும் நிகழும் நிகழ்ச்சியாகும். ஆகவே, அகத்துறைப் பாடல் என்பது, அகமாகிய இன்பத்தை நுகர்வதற்காக நிகழும் முயற்சி நெறிப் பொருளாகப் பாடப் பெற்ற பாடல் என்னும் பொருள் தருவதாகின்றது. அகத்துறைப் பாடல்கள், நமது அருமைச் செந்தமிழ் மொழிக்கே சிறப்பாக அமைந்துள்ள பாட்டு வகையாகும். இவை அகப்பாட்டு என்றும் துறைப்பாட்டு என்றும் கூறப்படும். அகப்பாட்டு என்னும் பெயர் பொருளிலக்கண மறிந்தோர் பலராலும் பயில வழங்கும் பெயராகும். துறைப்பாட்டு என்பது ஏனையாவராலும் வழங்கப் படுவது. யாவரும் அறிந்து கொள்வதற்காக, இங்கு அகத்துறைப் பாடல் என்னும் பெயர் கொள்ளப்படுவதாயிற்று. அகப்பாட்டுக்கள், செந்தமிழ்ப் பாட்டுக்களுள் மிக்க அருமை வாய்ந்தவை; அகப்பாட்டு ஒன்று கிடைக்குமாயின் அதற்குப் பொருள் காண விரும்புவோர், அது கூறும் பொருள், அடங்கு தற்குரிய திணை, துறை, கூறுவோர், கேட்போர், மெய்ப்பாடு, பயன் உவமநலம் எனப் பலவற்றை ஆராயவேண்டும். இவற்றைக் கண்டு முடிவு செய்வதற்குக் காலமும் நீட்டிக்கும்; மனத்திற்கும் வேலை மிகுதியாக இருக்கும். இவ்வாறு ஆராய்ந்து பொருள் காண்பது மிக்க இன்பமாகவே இருந்தபோதிலும், முடிவில், அதனால் மிக்க களைப்பும் உண்டாகும். அகப்பாட்டுகளுக்குப் பொருள் காணும் துறையில் முயல்வோர் பலர்க்கும் இவ்வுண்மை தெரிந்திருக்கும். இவ்வுண்மையினை நம் மணிவாசகப் பெருந்தகையே திருக்கோவை யாருள் உலகறிய விளக்கிக் கூறியிருக்கின்றார். ஒரு தலைவன், தலைவி ஒருத்தியைத் தனியே கண்டு, அவள் பால் தன் கருத்தைப் போக்கி வேட்கையால் மெலிவுற்று வருகின்றான்; அவனை அவனுடைய நெருங்கிய தோழன் கண்டு, "அன்ப, உனக்கு இம்மெலிவு ஏன் உண்டாயிற்று? உன்போன்றோர்க்கு மெலிவு உண்டாகவேண்டுமாயின் அதற்கு இரண்டு காரணம் உண்டு. நம் செந்தமிழ்ப் பாட்டு வகைகளில் துறைப்பாட்டுக்களை ஆராய்வது ஒன்று, இசைப்பாட்டுக்களில் கருத்தைச் செலுத்தி ஆராய்வது ஒன்று நீ இவற்றுள் எதையேனும் செய்தனையோ? உனக்கு இம் மெலிவு தோன்றுவதற்குக் காரணம் என்னை?" என்று வினவுகின்றான். இக்கருத்தினைத் திருவாதவூரடிகள், " சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும், என் சிந்தையுள்ளும், உறைவான் உயர்மதிற் கூடலில் ஆயந்தஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோ?அன்றி ஏழிசைச் சூழல்புக்கோ இறைவா! தடவரைத் தோட்கென் கொலாம்மெலி வெய்தியதே?"1 என்று கூறியருள்கின்றார். இதனால், இனிய தமிழ்த்துறைப் பாட்டும், இசைப்பாட்டும் அறிஞர் அறிவைப் பெரிதும் வேலை கொள்ளும் அருமையுடையவை என்பது இனிது விளங்கும். இத் திருப்பாட்டின்கண், அடிகள், துறைப்பாட்டுக்களை முன்னும், இசைப்பாட்டுக்களைப் பின்னும் வைத்திருப்பதனால், இசைப்பாட்டு ஆராய்ச்சியினும், துறைப்பாட்டாராய்ச்சி பெரிதும் அருமை உடையதென்பது புலனாகும். இனி, இவ்விரண்டின் இயல்புகளையும் ஒருங்கேயுடைய பாட்டு உளதாயின், அஃது எவ்வளவு அருமை யுடையதாகும் என்பதை அறிஞர்களே அறிந்து கொள்வார்கள். அவ்வாறே, தேவாரத்திலுள்ள அகத்துறைப் பாடல்கள் யாவும், அகத்துறை நலனும் இசைத்துறை நலனும் ஒருங்கு பெற்றவை யாகையால், இவற்றைப்பற்றிப் பேசுவது என்பது அருமையான செயலென்பது கூறாமலே விளங்கும். அகப்பொருள், கைக்கிளை, பெருந்திணை, ஐந்திணை என ஏழு திணைகளாக வகுத்துக் கூறப்படும். இவற்றுள், கைக்கிளை என்பது பெருந்திணை ஐந்திணை என்ற இரண்டிற்கும் தோற்றுவாய் போல்வது. ஐந்திணை யென்பது, எல்லாவகையாலும் ஒத்த இயல் புடைய தலைவனும் தலைவியும் கூடிப் பெறும் இன்பம் காரணமாக நிகழும் நிகழ்ச்சிகளைக் கூறும். பெருந்திணை என்பது ஒவ்வாத இயல்புடைய தலைமக்கள் பின்னர்த் தம்மிற் கூடிப் பெறும் இன்பம் பொருளாக நிகழும் நிகழ்ச்சிகளைக் கூறுவது. தேவாரத்திலுள்ள அகத்துறைப் பாடல்கள் பலவும் "முன்னைப் பழம் பொருட்கு முன்னைப்பழம் பொரு"ளாய்ப் "பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றிய"னாய் உள்ள சிவபெருமானைத் தலைவனாகவும், சிவபத்தியிற் சிறந்து உயர்வற உயர்ந்த மானிட மகள் ஒருத்தியைத் தலைவியாகவும் கொண்டு நிகழ்கிறபடியால், இவை பெருந்திணைக்கே உரியவாகின்றன. "கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்" என்று கொண்டு, இவற்றைப் புறப்பொருட்கேயுரிய பாடாண்டினை என்று கொள்ளக் கருதுவர் சிலர். அத்திணையில், கூட்டமும், அதன்பின்னர் நிகழ்தற்குரிய நிகழ்ச்சியும் கூறாமல், கூடுதற்கெழுந்த வேட்கை மாத்திரமே கூறப்படும். பெருந்திணைக்கண், கூட்டத்தையும், அதற்கு முன்னும் பின்னும் நிகழ்தற்குரிய நிகழ்ச்சி யினையும் கூறுவதால் அ வ்வாறு கூறப்படும் தேவார அகத்துறைப் பாடல்கள் பெருந்திணைக்கே உரியவாகின்றன. இப்பெருந்திணையின் இலக்கணம் தொல்காப்பியத்தில் சுருக்கமாகவே கூறப்பட்டிருக்கிறது. புறப்பொருள் வெண்பா மாலை என்னும் நூலில் சிறிது விரியக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அது தேவார காலத்ததோ, அதற்கு முன்னதோ என்பது இப்போது துணிவதற்கில்லை. இந்நிலையில் இப்பாடல்களை ஆராய்வது சிறிது கடினமாகவே இருக்கிறது. தேவாரத்திலுள்ள அகத்துறைப்பாடல்கள் மூவர் முதலிகளால் பல்வேறு திருப்பதிகளில் பாடப்பெற்றிருக் கின்றன. அவை அனைத்தையும் ஒருங்கு திரட்டித் தனித்தனியே திணையும், துறையும், கூற்று நிகழ்த்துவோரும், கேட்போரும் ஆகிய துறை யுறுப்பைக் கண்டு, ஒரு நெறிப்படுத்தி, அகப்பொருள் நலம் காணவேண்டி யிருக்கிறது. இவற்றைத் தனித்தனியே பிரித்துக் கொள்வது அரிதன்று. ஆயினும், பிரித்தவற்றிற்குத் திணை துறை முதலியவற்றைக் கண்டு நெறிப்படுத்துவதற்குத் தான் ஒரு வழியும் தெரிந்திலது. இனி, நாமாகவே, ஒரு வழியினை அமைத்துக் கொள்ளலாம் என்றால், என் போன்றோர் கல்விப்பயிற்சி வேறு பட்டிருக்கிறது. தேவாரம் பாடிய சான்றோர், தமிழ் நலமே நுகர்ந்து, தமிழ் நூலிலேயே பயின்று தமிழறிவு சிறந்த மனப்பான்மை யுடையர், என் போன்றோர், இளமையிற் சிறிதே தமிழ் பயின்று, பிறகு ஆங்கிலம் விரவிய கல்வி பயின்று அக்கலப்புத் துறையிலே நினைந்து ஒழுகும் மனப்பான்மை பெற்றவர். ஆகவே, தேவாரம் பாடிய சான்றோர் மனப்பான்மை தனித் தமிழ்ப்பான்மையேயாக, என் போன்றோர் பான்மை வேற்று நெறி விரவிய கலப்புப் பான்மையாக நிற்றலின், நாமாக ஒரு நெறி வகுத்துக் கொள்வதும் சீரிதாகத் தோன்றவில்லை. இந்நிலையில் தேவாரம் பாடிய சான்றோரது மனப்பான்மை கண்டு, அப்பான்மை வழியே நமது மனத்தைச் செலுத்தி, அவர் பாடலை ஆராய்வது தக்கது என்று தோன்றிற்று. அதற்குத் தேவாரம் பெரிதும் இடம் தருகின்றது. ஒரு சமயத்தில் தேவாரத் திருப்பதிகம் பாட்டியல் வகையில் எதன்பாற்படும் என்று ஓர் ஐயம் பிறந்த காலத்தில், காலஞ் சென்ற ஆசிரியர் அரசஞ் சண்முகனார் என்பார் "தேவாரத் திருப்பதிகம் தொல்காப்பியம் கூறும் விருந்து என்னும் யாப்பு வகையின்பாற்படும்;" இதுவும் தேவாரத்திலேயே கூறப்பட்டுள்ளது,"என்று கூறி, நம்பியாரூரர் பாடிய "விருந்தாய சொல்மாலை கொண்டேத்தி" எனத் தொடங்கும் திருப்பாட்டினை ஆதாரமாகக் காட்டினர். மேலும் அவர், "தேவா ரத்துக்குப் பொருளும் அதனை ஆராய்தற்குரிய நெறியும் அத் தேவாரத்திலேயே பெறலாம்" என்றும் கூறினர் என்ப.* இவற்றை நினைவிற் கொண்டு, இச்சொற்பொழிவுக்குரிய நெறியும் தேவாரத் திலேயே பெற வேண்டும் என்று கருதி, யானும் தேவாரத்திலேயே கருத்தைச் செலுத்தினேன். திருநாவுக்கரசர் திருவாரூரில் பாடிய திருத்தாண்டகங்களைப் படிக்கையில், "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்" எனத் தொடங்கும் திருப்பாசுரம், இவ்வாராய்ச் சிக்கு ஒரு நெறி காட்டியாகத் தோன்றிற்று. அந்நெறியே பற்றித் தேவாரத்திலுள்ள அகத்துறைப் பாடல்களைத் தொகுத்தும் வகுத்தும் ஆராய்வேனாயினேன். அவையனைத்தும் கூறின், காலம் நீட்டிக்கும் என்று அஞ்சி சிலவற்றையே கூறத் தொடங்குகின்றேன். "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்; மூர்த்திஅவன் இருக்கு வண்ணம் கேட்டாள்; பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்; பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்; அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்; அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை; தன்னை மறந்தாள்; தன்நாமம் கெட்டாள்; தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே;"1 என்பது நம் நாவுக்கரசர் பாடியருளிய திருப்பாசுரமாகும். இதன்கண், ஒரு நங்கை பரமனுடைய நாமம், வண்ணம், ஊர் முதலியவற்றைக் கேட்டு அவன்பால் காதல் வேட்கை கொள்ளுகின்றாள். பின்பு அவனையே தனக்கு அன்னையும் அத்தனுமாவன் என்று கொண்டு, அவனுடைய பரபோகத்துக்குரிய ஆசாரத்தை மேற்கொண்டு, அதற்கு இயையாத மண்ணுலகத்து ஆசாரத்தை மறந்து ஒழுகு கின்றாள். முடிவில் தான் என்னும் தற்போதமிழந்து, அதனால் தனக்கெய்திய பெயரையும் துறந்து, பரபோக எல்லையைத் தலைப் பட்டுப் பரமசிவானுபூதியைப் பெறுகின்றாள் என்பது இதன் பொருள். இதன்கண் நாமம் கேட்டல், வண்ணம் கேட்டல், ஊர் கேட்டல், பிச்சியாதல் என்ற நான்கும் தேவாரத்துப் பெருந்திணைக் குரிய கைக்கிளையாகும். அதற்கேற்ப, இவையாவும் தலைவிபாலே நிகழ்தல் காண்க. நாமம், வண்ணம், ஊர் முதலியவற்றைக் கேட்க எழுந்த வேட்கையால் தலைவனைக் கூடிக் காதற் காமவேட்கை பெற்றுக் களிப்புற்று நிகழ்த்தும் கூற்றுக்கள் பெருந்திணைக்கண் பொதுவாகக் காணப்படுவன. "நாமம் கேட்டாள், வண்ணம் கேட்டாள், ஊர்கேட்டாள் எனத் தலைவி செயலைக் கேள்விமேல் வைத்துக் கூறியிருப்பதை நோக்கினால், தலைவி கேள்விக்குரிய பருவமாகிய "காமஞ் சான்ற பருவத்தாள்" என்று தெரிகிறது. கேள்வி தானும் முன்பே கேட்டலாற் பயிற்சி பெற்றில்லாதவழிப் பயன்படாது. "கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால், தோட்கப்படாத செவி"1 என்பர் நம் திருவள்ளுவப் பெருந்தகையார், "கேட்டாள்" என்றது கேள்விப்பயன் உடையவள் என்பது தோன்ற நிற்பதால் தலைவி காமஞ் சாலா இளமைப் பருவத்தேயே பரமனைப் பற்றிய கேள்விப் பயிற்சி யுடையாள் என்பது துணியப்படுகிறது. படவே, அவள் தான் பிறந்து மொழி பயின்றதுமுதல் பரமன் நாமத்தையும் வண்ணத்தையும் கேள்வியுற்றிருந்தாளாம் கேள்வியால் ஒருவர்பால் ஒருவர்க்கு அன்பு பிறத்தல் உண்டன்றோ? அம்முறையே தலைவிக்கும் அவனது நாமவண்ணக் கேள்வியால் அவன்பால் அன்பு உளதாயிற்று, ஆயினும் அது, செயற்கை யண்பாகலின் காரணம் தோன்றும்போது நினைவில் நிலவுவதும், தோன்றாக் காலங்களில் மறைவதுமாகவே இருந்து வந்தது. இவ்வாறாக, ஒருநாள் பரமனாகிய தலைவன் பலியேற்கும் மிக்கோன் ஒருவனைப்போல உருக்கொண்டு, தலைவியின் இல்லத் துக்குப் பலி வேண்டி வந்தான். அதுபோது தலைவி, அன்னை ஏவியதனால் வந்து பலியிட்டவள், அவனது திருவுருவைக் கண்ணாரக் கண்டாள். உடனே அவள் மனத்தில் பண்டு அவனைப் பற்றிக் கேள்வியுற்றிருந்த வடிவமும் வண்ணமும் தோன்றின. அவையும் இப்போது நேரிற்காணும் வடிவு வண்ணங்களும் ஒத்து நின்றன. அதனால் அவனது உண்மைநிலையை ஆராயவேண்டும் என்னும் அவா பிறந்தது. ஒன்றன்பின் ஒன்றாகப் பல எண்ணங்கள் அவள் மனத்தில் எழுந்தன. அவள் மிக்க நாணம் உடையவள்; ஆகையால் பல கேட்டற்கு அஞ்சி, முதலில் "ஐய, நும் பெயர் யாது?" என்று கேட்டாள். கேள்வி வழியாக முன்பே அவனுடைய நாம வண்ணங் களை அறிந்திருந்தமையின் முதற்கண் அவனுடைய நாமமே கேட்டாள். அறிந்திராளாயின் வேறுவகையாக வினவி யிருப்பாள். அவன் தன் பெயரைக் கூறினன். பெயரும் பண்டு கேட்டிருந்த பெயராகவே யிருந்தது. அவனது திருவுரு முற்றும் அவள் மனத்தில் இடம்பெறுவதாயிற்று; அதன் பயனாக வண்ணங்களின் ஒற்றுமை காண விரும்பி, அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள். இதன்கண் நம் நாவரசர் மூர்த்தி என்றும், இருக்கும் வண்ணம் என்றும் கூறியருளி யிருத்தலால், கேள்வியாலும் காட்சியாலும் உண்டான அவனது திருவுரு அவள் மனத்தில் நிலைபெற நின்றமையும், வடிவும் வண்ணமும் ஒத்து நின்றமையும் இனிது விளங்குகின்றன. இதனால் அவள் மனத்தில் அவன்பால் உண்டாகியிருந்த செயற் கையன்பு உண்மையன்பாகி, மெய்க்காதலாகத் திரிவதாயிற்று. "அன்னவரே எங்கணவர் ஆவர்; அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வேன்" என்னும் துணிவு அவள் நெஞ்சில் நிற்பதாயிற்று. ஆனால், மனம் என்பது நிலைபெற நில்லாது அலையும் இயல்பிற்று, மேலும், பெண்மனம் என்ற வழி, அதன் அலைச்சலுக்கு அளவில்லை. ஏனெனில், "மகளிர் மனம்போல வேறுபடும்"1 என்றும், "உண்ணிறை உடையவல்ல; ஓராயிரம் மனத்தவராகும்"2 என்றும் சான்றோர் கூறுப. அதனால், தலைவி "அவனைக் கூடுதல் முடியுமோ? முடியாதோ? அவன் ஊரையேனும் அறிந்திருப்பின், தோழி முதலாயினாரை விடுத்து அவன் அருள் நிலையை அறியலாம்; சமயம் வாய்க்கின், நாமாகிலும் நேரிற்சென்று, நம் கருத்தை முற்றுவித்துக் கொள்ளலாம்" என்பன போலும் எண்ணங்களால் அலைப்புண்பாளாயினாள். பின்பு ஒருவாறு தேறி, அவன் உறையும் ஊரையும், அதன் இயல்பையும் அறிந்து கொள்ள நினைந்து, "எவ்வூரீர் எம்பெருமான்?" என்றாள். அதற்கு, அவன், "ஆரூர்" என்று செப்பினான். அதன் இயல்பு கேட்கு முகத்தால் தனது வேட்கையும் தோன்ற, "பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்" அதற்கு விடை கூறப் புகுந்த பரமன், அவள் வேட்கை நிலையினைத் தெளிய அறிந்தவனாகலின் அதுமிகுந்து அவள் பிச்சியாகுமாறு தன் நடை யாலும், மாய மொழிகளாலும் பேதுறுவித்தான். இதனால், அவள், "பட்டுடுத்துப், பவளம்போல் மேனியெலாம் பசுஞ்சாந்தம் கொண்டணிந்து பாதம் நோவ இட்டெடுத்து நடமாடி, இங்கே வந்தார்க்(கு) "எவ்வூரீர் எம்பெருமான்?" என்றேன்; ஆவி விட்டிடுமா றதுசெய்து, விரைந்து நோக்கி, வேறோர் பதிபுகப் போவார் போல, வட்டணைகள் படநடந்து, மாயம் பேசி வலம்புரமே புக்கங்கே மன்னினாரே"3 என்பன போல்வன கூறி அலமருவாளானாள். தலைவன் அவளை விரைந்து நோக்கி, வட்டணை4பட நடந்து மாயம் பேசி நீங்கினதும், அவளது நெஞ்சும் நிறையும் நெகிழ்ந்து நீங்குவவாயின. அவள் இன்பத்தை வெறுத்தாள்; துன்பத்துப் புலம்பினாள்; எதிர்பெய்து பரிந்தாள்; ஏதம் ஆய்ந்தாள்; பசியட நின்றாள்; பசலை பாய்ந்தாள்; உண்டியிற் குறைந்தாள்; உடம்பு நனி சுருங்கினாள்; கண்டுயில் மறுத்தாள்; கனவொடு மயங்கினாள்; சுருங்கக்கூறின், "பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்". இதன்கண், "அவனுக்கே" என்றது, பண்டு கேள்வியாலும், பின்பு கண்ணாலும் கேட்டும் கண்டும் அறிந்து கொண்ட பரமனது மூர்த்தமேயாகலின், அதனையே வற்புறுத்தி நின்றது. காணாத முன்பு மனக் கோயிலில் வைத்து அன்பு செய்து போந்த திருமூர்த்தமே, கண்ணாற் கண்ட பின்பும் அங்கு நின்று நிலைபெற்ற அன்பால் பூசிக்கப் படுகிறது என்பது தோன்ற, "பெயர்த்தும்" என்று கூறப்பட்டிருத்தல் காண்க. இவ்வாறு தலைமகள், பசலை பாய்ந்தும், உண்டியிற் குறைந்தும், உடம்பு நனி சுருங்கியும் பெரிதும் வேறுபட்டு வருவதைத் தோழி அறிந்தாள். இவள் புலம்பித் தோன்றுவது காணும் தோறும், "இவள் மனத்துட் புகுந்து கலக்குவான் ஒரு காளை உளனாதல் வேண்டும்" என்று துணிந்து அறிதற்குரிய காலம் நோக்கியிருந்தாள். இதற்குள், தலைவனும் பலமுறை இவள் இல்லத்துக்குப் பலியேற்பான் வந்து, இவளை யாவரும் "பித்தேறினாள் பிச்சி" என்று கூறத்தக்க அத்துணைப் பேதுறவு எய்துமாறு திருவருள் செய்துவிட்டான். அதனால் இவள் பெருந்திணை நெறிமையிற் புகுந்து நாணம் மடம் முதலிய பெண்மைக் குணங்களைக் கடந்து, "இறந்த போலக் கூறும் கிளவி"1 யைக் கூறலாயினள். அப்போழ்து, தோழி உனக்கு இவ்வேறுபாடு எதனாயிலாற்று? என்றாளாக, அதற்குத் தலைவி, " சிறையார் வண்டுந் தேனும் விம்மு செய்யமலர்க் கொன்றை மறையார் பாடலாட லோடும் மால்விடை மேல்வருவார், இறையார், வந்தென் இல்புகுந்தென் எழில்நலமும் கொண்டார் கறையார் சோலைக் கானூர்மேய பிறையார் சடையாரே"2 என்று கூறினாள். இதன்கண், தலைவி தான் வாளா விருக்கவே, அவன் தானே வலிய வந்து, என் இல்புகுந்து, என் எழில்நலமும் கொண்டான் என்று உரைப்பதனால், தன்பால் குற்றமின்மை தோன்றக் கூறித் தோழியைத் தழீஇக் கொள்கின்றாள். இறைவராதலின் தனக்குரிய இறைப்பொருளாமென என் எழிலும் நலமும் கொண்டார்; தடை செய்வாரும் இலர் என்பது தோன்ற "இறையார்" என்பது அறியத்தக்கது. "இவ்வாறு நின் தொல்கவின் கெடுத்த அவனை மறுபடியும் கண்டதனாலன்றோ இவ்வேறுபாடு பெரிதாயிற்று? ஆதலின் அவனை இனி மறப்பதே செயற்பாலது" என்று தோழி கூறினாள். அதுகேட்ட தலைவி "ஆம், நீ கூறுவது ஒக்கும். ஆனால், அவன் கனவிடை வந்தன்றோ காட்சி தருகின்றான்; கண்டவழித் தொழ வேண்டுதலின், அவனை மறத்தல் யாங்ஙனம்?" என்பாளாய், " செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள் திகழ் முத்தனைய நஞ்சணி கண்டன் நல்லூர்உறை நம்பனை நான் ஒருகால் துஞ்சிடைக் கண்டு கனவின்தலைத் தொழுதேற் கவன்றான் நெஞ்சிடை நின்றகலான் பல காலமும் நின்றனனே"1 என்று இசைக்கின்றாள். "இப்பரமனுக்கு கனவிலும் நனவிலும் போந்து கூடி மகளிர் நலன் அழிக்கும் செயலால் யாதொரு மாண்பும் இருப்பதாகத் தெரிந்திலதே" என்று கூறும் கருத்துடையளாய்த் தோழி தலைவனைச் சுட்டி, " துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப் பணிவளர் கொள்கையர் பாரிடம்சூழ ஆரிடமும் பலி தேர்வார்; அணிவளர் கோலமெலாம் செய்து பாச்சி லாச் சிராமத் துறைகின்ற மணிவளர் கண்டரோ, மங்கையைவாட மயல்செய்வதோ, இவர் மாண்பே" என்றாள், "ஆரிடமும் பலி தேர்வர்" என்பது பலரிடத்தும் பலி தேர்ந்து, இவ்வாறே மயல்செய்து வாடுவிக் கின்றார், இஃது இவர்க்கொரு "மாண்பு போலும் என்ற கருத்துக்கு ஏதுவாகின்றது. அதனைக் கேட்டதும் பொறாளாய தலைவி," "அவர் அன்னர் அல்லர்; அவர் என்னொருத்தியைத் தான் இவ்வாறு செய்துள்ளார்; அவர் வேதமாகிய ஒழுக்க நூலை உலகிற் குபகரித்த முதல்வர் காண்" என்பாள், " போது பொன்திகழ் கொன்றை புனைமுடி நாதர் வந்தென் கலங்கொண்டார் பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை வேதம் ஓதும் விகிர்தரே" என்றாள். தலைவி கூறியது கேட்ட தோழி, "நீ அறியாய்; நீ நயந்த பரமன் பெண்களில் ஒருத்திக்கும் நல்லன் அல்லன்" என்பாள். " ஒருத்தி தன்தலைச் சென்றாளைக் கரந்திட்டான் உலகமேத்த ஒருத்திக்கு நல்லனாகி மறுப்படுத் தொளித்து மீண்டே ஒருத்தியைப் பாகம் வைத்தான் உணர்வினால் ஐயம்உண்ணி ஒருத்திக்கும் நல்ல னல்லன் ஒற்றியூருடைய கோவே" என்று கூறினாள். "அங்ஙனம், கங்கைக்கும் உமைநங்கைக்கும் அருள் செய்தானாயினும் என்னை வைத்தற்கு வேறிடம் இன்மையின், என்னைத் தன் பக்கலிலே வைத்தருள்வன் காண்" என்று தலைவி செப்பினாள். தோழி, "நீ இன்னும் அறிந்திலை" " முல்லை வெண்நகை மொய்குழலாய்! உனக்(கு) அல்ல னாவதறிந்திலை; நீகனித் தொல்லையார் பொழில் தோணி புரவர்க்கே நல்லையாயிடுகின்றனை, நங்கையே!" என்றாள். இதன்கண், "நின்பால் பலியேற்பான் வந்து நலங்கவர்ந்து சென்றவன், நீ மயல்கொண்டு வாடிய வழியும் வாராமையின், அல்லனாவ தறிந்திலை" என்றற்கு, "உனக்கு அல்லனாவதறிந்திலை" என்றும், "அவ்வன்மைத் தன்மை யறியாமையால் நீ நல்லையா கின்றாய்; நங்கையாதலின் நினக்கு அது பண்பே" என்பாள், "நல்லை யாயிடுகின்றனை, நங்கையே" என்றும் கூறியது காண்க. இதைக் கேட்ட தலைவி பொறாளாய், " ஒன்றுதா னறியார் உலகத்தவர் நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர் துன்று வார்பொழில் தோணி புரவர்தம் கொன்றை சூடுங் குறிப்பது வாகுமே" என்று கூறினாள். மேலும் அவள் என் மனத்தில் உள்ளது ஒன்றே; அது யாதெனில், பசலையாற் பொன்னிறங் கொண்ட எனக்கு வேண்டுவது பொன்னிறக் கொன்றைமாலையேயாகும். இவ்வுலகத்தார் அதனை யறியாது ஆகாதனபலவும் நேர்நின்று சொல்லி, ஆவனவாய் நிகழ்ந்தவற்றை அறவே நினையாதொழி கின்றனர். ஒரு பொருள் பற்றிய உண்மையினை ஒருவர் கூறுமிடத்து, ஆகாதன பல கூறுவதும், ஆவது ஒன்றையும் கூறாதொழிவதும் ஒரூரிடத்துமட்டும் காணப் படுவதொன்றன்று; உலகமெங்கும் காணப்படுவது; அதுபற்றியே நீயும், யான் அக்கொன்றை சூடும் குறிப்பால் அதன் நிறமே விளங்கப் பொன்னிறங் கொண்டது காணாது கூறினை" என்றாள். இவ்வாறே திருவள்ளுவனாரும், "நனவினால் நந்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூரவர்" (குறள்.1220) என்ற வழியும், தோழிபால் அயன்மை தோன்ற, "இவ்வூரவர்" என்று புலனெறி வழக்கம் செய்தமை காண்க. இதன்மேல் தோழி சொல்லாடுவதை விடுத்துச் செல்வாள், செவிலியைக் காண்டலும், அவள் பலி வேண்டி வந்தாரைக் கண்டு நின் தோழி பரிவுற்று மெலிகின்றாள் என்று ஊரவர் அலர் கூறுவதை அறிதியோ? என்று மொழிந்தாள். அதுகேட்ட தோழி, அதனை மறைத்து, " துஞ்சும் போழ்தும் துயிலின்றி யேத்துவார், வஞ்சின்றி வலங்கொள் மறைக்காடரோ பஞ்சின் மெல்லடிப் பாவை பலிகொணர்ந்(து) அஞ்சி நிற்பது மைந்தலை நாகமே" என்கின்றாள். பலியிட வந்த எம்பாவை, அவன் மேனி மேல் பூணாரமாய்க் கிடந்த ஐந்தலை நாகத்தைக் கண்டு அஞ்சி நின்றதை அறியும் திறமின்மையின், ஏதிலார், அவன்மேற் கருத்தைப் போக்கினாள் என்றார் என்றாள். இது தோழிபால் தோன்றிய புறஞ்சொல் மாணாக் கிளவி. இஃது இங்ஙனமாக தலைவி தலைவன்பாற் கொண்ட அன்பு முதிர்ந்து, அவன் பிரிவாற்றாளாய், இன்பத்தை வெறுத்தும், கண்படை யின்றியும் கலங்கஞர் உறுவாள். வண்டுகளை நோக்கி, " வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும் ஒண்டரங்க இசைபாடும் அளியரசே! ஒளிமதியத் துண்டர் அங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும் பண்டரங்கர்க் கென்னிலைமை பரிந்தொருகாற் பகராயே" எனவும், நாரையை நோக்கி, " கானருகும் வயலருகும் கழியருகும் கடலருகும் மீனிரிய வருபுனலின் இரைதேர்வெண் மடநாராய்! தேனமர்தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டாங் குடிமேய வானமரும் சடையார்க்கென் வருத்தம்சென் றுரையாயே" எனவும், குயில்களை நோக்கி, " சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான் முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப் பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ" எனவுங், கிளி, பூவை முதலியவற்றை நோக்கி, " பறக்குமெம் கிள்ளைகாள்! பாடுமெம் பூவைகாள்! அறக்கண் என்னத்தகும் அடிகள் ஆரூரரை மறக்க கில்லாமையும், வளைகள் நில்லாமையும், உறக்க மில்லாமையும் உணர்த்த வல்லீர்களே" எனவும் கூறிப்போந்தாள். அதுகேட்ட தலைவி, பொறாளாய் "எம்பெருமான், இவர்களால் என்பொருட்டு ஏசுண்ணப்படு கின்றான்; அவன் பெருமையினை இவர் அறிந்திலரே" என்பாள், " நல்லா ரும்அவர் தீயர் எனப்படும் சொல்லார் நன்மலர் சூடினார் பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை எல்லாரும் தொழும் ஈசரே"1 என்றும் "எம்பெருமான் தீ நிறத்தனாகையால் அவனை நல்லோர் பலரும் தீயர் என்பர்; அந்நயமுணராத பேதையர் அவனைத் தீமைப் பண்புடையர் என்னும் பொருண்மைகொள்வர். அவர் எல்லாரும் தொழும் ஈசராவர்" என்று தோழிக் கூறினாள். அதுகேட்ட தோழி, "அன்னாய், இஃது என்னால் நிகழ்ந்ததன்று. அயலார் பலரும் அலரெடுத்துக் கூறிப் பழி செய்தனர், காண்" என்றாள். அது பொறாத தலைவி வெகுண்டு என் பெயரையும் கோடிகாவுறை வான் இயற்பெயரையும் இணைத்துக் கூறி ஏசுகின்றனர் என்ப, " நாவளம் பெறுமாறும் அந்நன்னுதல் ஆமளஞ்சொலி அன்புசெயி னலால் கோமளஞ் சடைக் கோடிகாவாஎன ஏவள்இன்றெனை ஏசும் அவ்வேழையே" " வீறுதான் பெறுவார் சிலராகிலும் நாறுபூங் கொன்றைதான் மிகநல்கானேல் கூறுவேன் கோடிகாவுளாய் என்றுமால் ஏறுவேன், நும்மால் ஏசப்படுவனோ" என்று கூறி வருந்துவாளாயினாள். அதனாற் பெரிதும் ஆற்றாளாய தோழியைத் தலைவன்பால் தார் பெற்றவருமாறு தூது விடக் கருதிய தலைவி, " கரும்பமர் வில்லியைக் காய்ந்து காதற்காரிகை மாட்டருளி அரும்பமர் கொங்கை யோர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்பரிதால் பெரும்பகலே வந்தென் பெண்மை கொண்டு பேர்ந்தவர் சேர்ந்தஇடம் சுரும்பமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத் தோணி புரந்தானே" எனவும், " என்ன தெழிலும் நிறையும் கவர்வான் புன்னைமலரும் புறவில் திகழும் தன்னைமுன்னம் நினைக்கத் தருவான் உன்னப் படுவான் ஒற்றி யூரே" எனவும் கூறுமுகத்தால், தலைவனுடைய இயலும் இடமும் கூறினாள். காமத்துக்குரிய காமனைக் காய்ந்து, காமத்திற் சிறந்த காதற் காமம் நிறைந்த உமைநங்கையினைப் பாகமாக வுடையான் என்றும், "தன்னை முன்னம் நினைக்கத் தருவான்" "உன்னப்படுவான்" என்றும் கூறியன இயல்கள். தோணிபுரம், ஒற்றியூர் என்பன இடம். இன்ன செயல்களால் பெரிதும் மேனி வேறுபட்டு நின்ற தலைவிக்குத் தாயர் செய்த மருந்தும் மந்திரமும் பயன்படாமை கண்ட செவிலி, தோழியை நோக்கி, இவள் இன்னளாமாறு செய்தான் யாவன்? என்றாள். அவட்குத் தோழி, தலைவன் இயல்பும் தலைவியின் காதலும் ஆய்ந்து, " கருகுகண் டத்தன் காய்கதிர்ச் சோதியன் பருகுபா லமுதே யெனும் பண்பினன் அருகு சென்றிலள் ஆவடுதண்டுறை ஒருவன் என்னை உடையகோ என்னுமே" என்றும், தலைவியின் காதலை, " வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்; எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்; கண்ணுலாம் பொழில்சூழ் கழிப்பாலைஎம் அண்ணலே அறிவான் இவள் தன்மையே" என்றும் கூறினாள். இதனைக் கேட்ட செவிலி, இவள் காதலித்த பெரியோன் எல்லாமாய் அல்லதுமாய் எப்பொருட்கும் இறைவனுமாய் நிற்கும் பரமனாகலின், அவன் இவளை ஏன்று கொள்ளுதல் கூடாதே. அவனை விரும்பி யொழுகுதலால் பயன் இல்லை. இதனை இவள் பெற்றோர்க்குக் கூறி, நம் குடிக்கு ஆசாரமாவனவற்றைச் செய்வோம் என்றாள். அதனையறிந்த தலைவி அவளை நோக்கி, "அன்னாய், அவன் எனக்கு அந்நியனல்லன். எனதுரை தனதுரையாகக் கொண்டு அநந்நியமாய் என் நெஞ்சிற் கலந்துளானாகலின், அவன் புணரப் புணரும் எனது எழில் நலம், நீங்க நீங்குதல் இயல்பு" என்பாளாய் " உளங்கொள்வார் உச்சியார் கச்சி யேகம்பன் ஒற்றியூர் உறையும் அண்ணாமலை அண்ணல், விளம்புவான் எனதுரை தனதுரையாக வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன், குளம்புறக் கலைதுள மலைகளும் சிலம்பக் கொழுங்கொடி எழுந்தெங்கும் கூவிளங் கொள்ள இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணிஎன் எழில்கொள்வதியல்பே"1 என்றாள். தன் மகள் உற்ற வேறுபாட்டைக் கண்டு ஆற்றாளாய அன்னை, செவிலியை நோக்கித் தன் மகள், " பிறந்திளைய திங்கள் எம்பெம்மான் முடிமேல தென்கின்றாளால் நிறங்கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால் மறங்கிளற் வேற்கண்ணாள் மணிசேர் மிடற்றவனே என்கின்றாளால் கறங்கோத மல்கும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ"1 என்று வினவினாள். அதுகேட்ட செவிலியும், " கண்பனிக்கும் கைகூப்பும் கண்மூன்றுடை நண்பனுக் கெனைநான் கொடுப்பேனெனும் வண்பொன்னித் தென்வலஞ் சுழிமேவிய பண்பன் இப்பொனைச் செய்த பரிசிதே"2 என்றாள், உடனே அன்னை மனம் மருண்டு, அத்தகையோன் முறையே வந்து மனம் பேசி வரைந்து கொள்ளாது தாழ்த்து ஒழுகுதலின், நாம் அவனுடைய செயலைப் பலரறியக் கூறிப்பழிப் போம் வம்மின் என்பாள், " ஊசலாம் அரவல்குலென் சோர்குழல் ஏசலாம்பழி தந்தெழில் கொண்டனர்; ஓசொலாய் மகளே! முறையோ என்று பூசல் நாமிடுதும் புகலூரர்க்கே"3 என்றாள். அன்னை கூறிய இப்பூசலைக் கேட்ட தலைவி நெஞ்சு கலுழ்ந்து " பொன்னொத்த நிறத்தானும் பொருகடல் தன்னொத்த நிறத்தானும் அறிகிலாப் புன்னைத் தாது பொழிற்புக லூரரை என்அத்தா என என்னிடர் தீருமே"4 என்றதனால், பூசலுக்கும் ஏசலுக்கும் ஒரு பயனும் எய்தாது; அவற்றைச் செய்த பிரம விட்டுணுக்கட்கு அரியனானான். அவர் பின்பு 'அத்தா' என ஏத்தியவழி எளியனானான். ஆகலின், அவனையே அன்னையும் அத்தனுமாக வழிபடுவதே என் துயர் களைதற்கு மருந்தாம் என்றனள். இவ்வாறு தலைவி கனவிலும் நனவிலும் அவனையே நினைந்து கண்படையின்றி வருந்தி நிற்ப, அவன் மார்பிலணிந்த தார் வேண்டித் தோழி செல்கின்றனள். சென்றவள், பரமனுக்கு உரியார் பலரைக் கண்டு, " சித்தம் தேறும் செறிவளை சிக்கெனும் பச்சை தீரும்என் பைங்கொடி; பான்மதி வைத்த மாமயி லாடு துறையான் கொந்தி னிற்பொலி கொன்றை கொடுக்கிலே;" என்றும், " அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும் கண்டு வீற்றிருக் கும்கருத் தொன்றிலோம் வண்டு சேர்மயி லாடு துறையான் தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே"1 என்றும் கூறினாள். பின்பு பரமனைக் கண்டு "ஐயனே! என் தோழி நின்னை எய்தாவிடின் இறந்துபாடு எய்துதல் குறித்து நின்னால் அருளப்படுதல் தலையாய அறம் என்று கூறினாள்" என்பாள், " சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய் உறநெற்றி விழித்த எம்உத் தமனே விறல்மிக்க கரிக்கருள் செய்தவனே அறமிக்க தென்னுமென் ஆயிழையே"2 என்றும், " குன்றே யமர்வாய்! கொலையார் புவியின் தன்தோ வூடையாய்! சடையாய்! பிறையாய்! வென்றாய் புரமூன்றை! வெண் நாவலுளே நின்றாய்! அருளாய் எனும் நேரிழையே" என்றும் கூறினாள். "சடையாய் எனுமால் சரணீ எனுமால்" என்னும் பதிகமும் இப்பொருண்மைக்கு ஏற்புடைத்தாயினும், அதற்கெனத் தனித்த வரலாறுண்மையின் ஈண்டுக் கொண்டிலம். தோழி தார்பெறுவான் சென்றவள் விரைய வாராமையின், தலைவி பலபட நினைந்து மெலிந்து, நள்ளிரவில் தானே தலைவன் பதிபுக நினைந்து " வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடைக் கொண்டன் கோலமதியோ டரவமும் விண்டார் மும்மதி லெய்தவன் வீரட்டம் கண்டா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே" என்று துணிவுற்றிருந்தாள். இருக்குங்கால், தோழி, பரமனை எதிர்ப்பட்டு அவன் மார்பின் மாலை பெற்று வந்து தலைவிக்குத் தந்தாள். அதனை ஏற்ற தலைவி மெய்ம்மறந்து இன்பத்தால் ஏமுற்றாள். அதனைக் கண்ட தாயரும் ஆயமும் பெருமகிழ்வு கொண்டு, " மங்கை காணக் கொடார் மணமாலையைக் கங்கை காணக் கொடார்முடிக் கண்ணியை நங்கைமீர் இடை மருதர் இந்நங்கைக்கு எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே" என்று பாராட்டுவராயினர். பின்பு தலைவி, பரமன் வரவெதிர்ந்து நின்று, கூட விழைத்து வருந்தியிருந்தான் என்பது, " நீடு நெஞ்சுள் நினைந்து கண்ணீர் மல்கும் ஓடுமாதலின் ஓண்டொடி மாதராள் மாடநீள் மருகற் பெருமான் வரில் கூடுநீ என்று கூடல் இழைக்குமே"1 என்பதனால் விளங்குகிறது. இவ்வாறு தலைவன்பால் தீராவேட்கையளாய் நின்ற தலைமகள் நிலையினை நம் நாவரசர் "பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்" என்கின்றார். இது பெருந்திணைக்கண் "மிக்க காமத்துமிடல்" எனப்படுகின்றது. அஃதாவது காமத்து மிகுதியும், அம்மிகுதியால் உளதாகும் வன்மையும் என்று உணரப்படும். இவ்விரண்டினையும் பிரித்துக் காண்டல் கூடாமைபற்றி, மிக்க காமத்து மிடல் என்ப. எனினும், நம் தாண்டக வேந்தர், இதன் பயனை இதனாற் பிறக்கும் செயல்மேல் வைத்து விரிப்பர்; பெற்றோர்க்கு அஞ்சி யொழுகிய தன்மையிறந்து, உலகியலையும் உட்கொள்ளாது, மிக்கு நிற்கும் காமமே, மன முதலிய மூன்றன் செயற் பயனாகக் கொண்டொழுகுவது எனப் பொருள் உணர்வித்து "அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள், அகன்றாள் அகலிடைத்தார் ஆசாரத்தை" என்று விளக்கியுள்ளார். அன்னையையும் அத்தனையும் அஞ்சி யொழுகிய அச்சத்தின் நீங்கல், தலைவியின் நற்றாய் கூறும் கூற்றால் தெரியப்படும். தலைவியுற்ற வேறுபாட்டைக் கண்டு பொறாளாய அன்னை, "யான் கடிந்து கூறினும், பரிந்து கூறினும் அயலார் போலக் கருதி என்னைப் பழித்துரைக்கின்றாள்" என்பாள். " மருந்து வானவர் உய்ய நஞ்சுண்டுகந்(து) இருந்தவன் கழிப்பாலையுள் எம்பிரான் திருந்து சேவடி சிந்தையுள் வைத்திவள் பரிந்துரைக்கிலும் என்சொற் பழிக்குமே" என்று கூறுகின்றாள், பிறிதொரு காலத்தில் அன்னை, தலைவியின் வேறுபாடு கண்டு ஆற்றாளாய், "இப்பரமன் இவளை முறையே வரைந்து கொள்ளாமல், தொன்னலம் கெட்டுத் துயர் எய்துமாறு இவளை விடுவது இப்பரமனுக்குத் தகாது என்று கூறிப் பழிப்போம், வம்மின்" என்பாள், " ஊசலாம் அரவல்குல் என்சோர்குழல் எசலாம் பழிதந் தெழில் கொண்டனர்; ஓ சொலாய், மகளே! முறையோ? என்று பூசல்நாம் இடுதும் புகலூரர்க்கே" என்று கூறினாள். இதனைக் கேட்டாள் தலைவி. "நன்னலம் தொலைய நலம் மிகச் சாஅய், இன்னுயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு, அன்னையும் அத்தனும் அல்லரோ, புலவிய தெவனோ அன்பிலங்கடையே"1 என்றும், "எள்ளின் இளிவாம் என்றெண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு"2 என்றும் வரும் பெண்மைக் கருத்தினை உட்கொண்டு, " பொன்னொத்த நிறத்தானும் பொருகடல் தன்னொத்த நிறத்தானும் அறிகிலாப் புன்னைத் தாது பொழிற்புக லூரரை என்அத்தா என என்னிடர் கெடுமே" என்றாள். இவற்றால் தலைவி தன் பெற்றோர்க் கஞ்சிய அச்சத்தின் நீங்கினமை பெறப்படும். இனி, பிறர் கூறும் பழிப்புரை கேட்டு அன்னை செயிர்த்து நோக்கினள் என்று தோழி கூற, தலைவி, அது கேட்டு அஞ்சி ஒழுகும் ஆசாரத்தின் நீங்கி, " நாவளம் பெறுமாறும் அந்நன்னுதல் ஆமளஞ் சொலி அன்பு செயினல்லால் கோமளஞ் சடைக் கோடிகாவா என எவள் இன்றெனை ஏசும் அவ்வேழையே" என்றாள். தலைவன் தழையும் தாரும் கையுறையாகக் கொண்டு வந்து தலைவிக்குக் கொடுத்துக் காண்டல், "அகலிடத்து ஆசாரம்" இங்கு தலைவிதானே, தலைவன்பால் கொன்றைமாலை வாங்கி வருக எனத் தோழியை விடுத்தனள். "கங்கைகாணக் கொடார் முடிக் கண்ணியை; மங்கை காணக்கொடார் மணமாலையை" என்று கூறி ஏதிலார் மயக்கினர். அது குறித்து வருந்தி ஒடுங்கும் மென்மை யளாய தலைவி, வன்மை படைத்துக்கொண்டு, " வீறுதான் பெறுவார் சிலராகிலும், நாறுபூங் கொன்றைத் தார்மிக நல்கானேல் கூறுவேன் கோடி காவுளாய் என்று! மால் ஏறுவேன்! நும்மால் ஏசப்படு வனோ" என்று கூறுவது முதலியன ஆசாரத்தின் நீங்கிய மிக்க காமத்துமிடல் ஆயின. இங்ஙனம், தலைவி பிச்சியாயவாற்றினை முதற்கண் வகுத்தும் தொகுத்தும் கூறிய நம் தமிழரசர், பிச்சேறிய செயலை இரண்டாகக் காட்டி, முடிவில், அங்ஙனம் ஆகிய அவள், பெற்ற பேரின்பத்தை, "தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள், தலைப்பட்டாள் நங்கை தலைவன் தானே" என்பதனால் விளக்குகின்றார். இது, தன்னை மறத்தல், தன் நாமம் கெடுதல், தாள் தலைப்படுதல் என மூன்று பகுதியாகப் பிரிக்கப்படும் எனினும், தன்னை மறத்தலும், நாமம் கெடுதலும் உடனிகழ்ச்சியாகலின், அவ்விரண்டனையும் ஓரடியின் ஒரு பகுதியிலும், தாள்தலைப்படுதலை ஒரு பகுதியிலும் அமைத்தருளியுள்ளனர். தலைவியின் மெலிவு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி கூறுங்கால், " கண்பனிக்கும் கைகூப்பும் கண்மூன்றுடை நண்பனுக்கெனை நான் கொடுப்பேன் எனும் வண்பொனித் தென்வலஞ் சுழி மேவிய பண்பன் இப்பொனைச் செய்த பரிசிதே" என்று கூறுகின்றாள், இதன்கண் "நண்பனுக்கு எனை நான் கொடுப் பேன் எனும்" என்ற தலைவி கூற்றினைத் தோழி கொண்டு கூறியிருத்தலால், தலைவி தன் தன்மை மறந்து, தன்னை அவற்கு ஓர் உடைமையாகவும் கொடைப் பொருளாகவும் கருதிக் கொடுப்பேன் என்கின்றாள். ஆகவே, அவள் தன்னை மறந்தமையும் அதனால் அவட்குரிய பெயர் நீங்க, யாரும் "இப்பொன்" எனக் கூற நிற்றலால் நாமம் கெட்டமையும் விளங்கும். "உளங்கொள்வார் உச்சியார்" என்னும் பாசுரத்து, "விளம்புவான் தனதுரை எனதுரையாக" என்பது. தலைவி தலைவன் தாள் தலைப்பட்டமை உணர்த்துகிறது. " என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே மின்னு வார்சடை வேதவி ழுப்பொருள் செந்நெ லார்வயல் சேறையுட் செந்நெறி மன்னுசோதி நம்பால் வந்து வைகவே" எனத் தலைவி, தலைவனைக் கூடியிருந்தவள், தன்னுள் மகிழ்ந்து கூறும் பாசுரம், தலைவி, தலைவன் தாள் தலைப்பட்டமையினை இனிது விளக்குவதாம். ஆகவே, தேவாரத்திலுள்ள அகத்துறைப் பாடல்கள் என்பதில், தேவாரம் என்பது சைவ மக்களாகிய நாம் செய்த தவப்பயனாய் எய்திய செந்தமிழ்த் திருமறை யென்பதும், அது நமக்கு இப்போது எளிதில் கிடைப்பதால், அதை நாளும் ஓதி யின்புறுவது கடன் என்பதும், அகத்துறைப்பாடல்கள் என்பது, அகமாகிய இன்பத்தை ஒருவனும் ஒருத்தியும் நுகர்வது குறித்து நிகழும் நிகழ்ச்சி பொருளாக நிகழும் பாட்டுக்கள் என்பதும், அவை மிக்க அருமையும் பெருமையும் உடையன என்பதும், தேவாரத்தில் வந்துள்ள அகத்துறைப் பாடல்களை ஆராய்தற்குரிய கருவிகள் சுருக்கமாகவே இருக்கின்றன என்பதும், தேவார ஆராய்ச்சிக்குத் தேவாரமே வேண்டிய கருவிகளை உதவுகிற தென்பதும், அதற்குரிய நெறியினைத் திருநாவுக்கரசர் தேவாரத்துத் திருவாரூர்த் திருத்தாண்டகம் உதவுகிற தென்பதும், நாமம் கேட்டல், வண்ணம் கேட்டல், ஊர் கேட்டல் என்பன தேவாரப் பெருந்திணைக்குக் கைக்கிளை போல்வன என்பதும், பிச்சியாய்ச் செய்வன செய்தலே பெருந்திணை யென்பதும், ஆண்டுத் தலைவியும் தோழியும் தாயரும் கூறியனவும், அக்கூற்று வகை மிக்க காமத்துமிடலாகிப் பெற்றோரை நீத்தல், ஆசாரத்தின் அகறல் என இரண்டாதலும் பிச்சியாயதன் பயன் தன்னை மறத்தல், தன் நாமம் கெடுதல், தலைவன் தாள் தலைப்படுதல் என மூன்றாம் என்பதும், இவை ஒவ்வொன்றிற்கும் கூடிய அளவில் தேவாரத்தில் உள்ள அகத்துறைப்பாடல்கள் அமைந்திருக்கின்றன என்பதும் பிறவும் கூறப்பட்டனவாம்.  4. குமரகுருபரர் பண்டார மும்மணிக்கோவை திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனத்தில் நான்காம் பட்டத்தில் எழுந்தருளிய மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்மீது குமரகுருபர சுவாமிகள் பாடிய இனிய செந்தமிழ் நூலாகும் இப்பண்டார மும்மணிக்கோவை என்பது. இது படிக்குந் தோறும் படிக்குந்தோறும் செஞ்சொற் கவியின்பம் சிறப்ப அளிக்கும் சீர்மையுடையது; சித்தாந்த சைவப் பெருநூல்களில் காணும் நுண்மாண் பொருளை இடையிடையே படிப்போர் சிந்தையில் பதிய உரைக்கும் பண்புடையது; திருவாரூர் மதுரை தருமபுரம் என்ற இம் முப்பெரும் பதிகளின் இயற்கை யழகைத் தெரிவிக்கும் இன்பச் சொல்லோவியமுமாவது. இனி, பண்டார மும்மணிக்கோவை யென்பதில் மும்மணிக் கோவை என்பது தமிழில் வழங்கும் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று; மூன்று வகையான பாக்களால் அந்தாதித் தொடையமையப் பாடுவது; அவை, அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை என மூன்றாகும். இதன் செய்யுள்தொகை முப்பது. இதற்குரிய இலக்கணத்தை இலக்கண விளக்கம் என்னும் நூல், " அகவல் வெண்பா அசையெண் கலித்துறை தொகைமுப் பதுபெறச் சொற்றொடர் நிலையில் கூறுதல் மும்மணிக் கோவை யாகும்"1 என்று கூறுகின்றது. இந்நூலின் பாட்டுடைத் தலைவரான திரு. மாசிலாமணி தேசிக மூர்த்திகள் ஆதின மகாசந்நிதான குருமூர்த்தியாதலால், அவர்கட்குப் பொதுவாக வழங்கும் பெயரால் இந்நூல் பண்டார மும்மணிக்கோவையெனப் பெயர் பெறுவதாயிற்று. பண்டார மும்மணிக்கோவை யென்னும் ஞான பண்டாரத்தை ஆராய்தற்குமுன், அஃது எழுந்த காரணத்தைக் காண்டல் முறையாம். பாண்டிய நாட்டுக் கயிலாயபுரத்தில்1 தோன்றிச் செந்தில் முருகன் திருவருள் நலம் பெற்றுச் செந்தமிழ்ப் புலமையுஞ் சித்தாந்த சைவப் பேரொழுக்கமுஞ் சிறக்கக்கொண்டு திகழ்ந்து போந்த குமரகுருபரர். சோழநாட்டுத் திருப்பதிகள் பலவற்றையும் தரிசித்து வந்தார்; வருபவர் திருவாரூர் போந்து தியாகேச வள்ளலைத் தரிசித்துப் பரவித் திருவாரூர் நான்மணிமாலையைத் தேன்சொரியப் பாடிச் சிந்தை களித்து மகிழ்ந்து உறைந்தார். அந்நாளில், தருமையாதீன மகாசந்நிதானமாகிய திரு மாசிலாமணிதேசிக சுவாமிகளின் ஞானவண்மையைக் கேள்வியுற்று, அவர்திரு முன் அடைந்து திருவடிகளைச் சென்னியுற வணங்கி நிற்ப, ஞானபானுவாய் எழுந்தருளியிருந்த மகாசந்நிதானம் திருக்கடைக்கண் சாத்தியருளிச் சீரிய ஞானமணங் கமழும் திருமொழிகள் பகர்ந்து நீவிர் சென்று காசியாத்திரை செய்து வருக; பின்னர் ஞானோபதேசம் செய்வோம்" என்று அருளாணையிட்டருளினர். அதனைச் சிரமேற்கொண் டெழுந்த குமரகுருபரர் "அவ்வண்ணமே செய்து திரும்புங் காறும் அடியேன் உடல் நிற்குமோ" என்று ஐயற்று மொழிய மகாசந்நிதானம், "அன்றேல், தில்லையம்பதியில் சின்னாள் இருந்து வருக" எனப் பணித்தருளினர். அது கேட்டுப் பேரானந்தமுற்ற குமரகுருபர அடிகள் அவ்வாறே செய்து போந்தனர். ஞானதேசிகர் அவரை அன்பு கனிய வரவேற்று அருள் நிரம்பிய மொழி மொழிந்து சிந்தை தெருளத் திருநோக்கம் செய்தருளினர். அப்பார்வை, குமரகுரு பரருடைய மனமொழி மெய்கள் முறையே கரைந்து நெக வுருகி, அமிழ்து பொதிசெஞ்சொல் அன்பால் குழற, அடிவீழ்ந்து வணங்கி வழிபடச் செய்தது. அதன் விளைவாய் எழுந்த சாத்திர நூலே இப்பண்டார மும்மணிக்கோவை யாவது. இவ்வரலாற்றால் நூலாசிரியராகிய குமரகுருபர சுவாமிகள் இக்கோவை நூலைப் பாடியதன் நோக்கம் ஞானதேசிகர்பால் ஞானோபதேசம் பெறுதல் வேண்டுமென்பது இனிது விளங்கும். இதனை, " மாசிலா மணியென வண்பெயர் நிறீஇ மேன்மையோடு அமர்ந்த ஞானசம்பந்த ஈண்டு உனைத் தமியனேன் வேண்டுவது யாதெனில் .......................................................சைவசித்தாந்தத்து இறவா நிலைமைபெற்று இன்பமார்ந்து இருக்கும் பிறவா நன்னெறி பெறப்புரிவதுமே"* என்றும், " சரியையில் தாழ்க்கலை கிரியையிற் பணிக்கலை யோகத் துய்க்கலை பாகமும் நோக்கலை நாளை இன்று எனவொரு வேளையும் நவிற்றலை ஈண்டு எனக்கு அருளாதி இறைவ"1 என்றும் வருவனவற்றால் விளங்கக் காணலாம். ஞானோபதேசம் பெறுதலையே நோக்கமாகக் கொண்ட குமரகுருபர சுவாமிகள், தமக்கு அந்த ஞானத்தை உபதேசித்தருளும் ஞானசாரியராகிய மாசிலாமணி தேசிகரின் குணஞ்செயல்களை வியந்து பாராட்டுகின்றார். தம்பால் வரும் மாணவர்க்குரிய பக்குவ சத்திநிபாதநிலை முதலியவற்றை முற்றவுணர்ந்து அவர் உளங்கொள வுபதேசிக்கும் அருளுரையாற்றல் மகாசந்நிதானத்தின் பால் பெருகி யிருத்தலைக் குமரகுருபரர் தாம் நேரிற் கண்டு மதிமை சான்ற மருட்கை மீதூர்ந்து தீவிய கவிகளால் தேனொழுகப் பாடி நம்மையும் தம்மோடு கூட்டி அவரை வழிபடச் செய்யுந்திறம் கற்றோர்க்கு மிக்க இறும்பூது பயப்பது; ஆகலின், அதனை ஈண்டுச் சிறிது காண்பாம். ஞானதேசிக மூர்த்திகளாகிய மாசிலாமணி தேசிகரைக் குமரகுருபரர் தம் மனத்தின்கண் நினைக்கும்போது அவரது அருமைத் தோற்றம் ஞானபோனகராகிய திருஞானசம்பந்தப் பெருமானது அருளுருவை நினைப்பிக்கின்றது. அதனை விடாது பற்றிய அடிகளுடைய உள்ளம், "கைம்மா றற்ற கணக்கில் பேரின்ப, மோன வாழ்வளிக்கும் ஞானதேசிகன்" "பேரருட் குரிசில்" "அருட்பெருஞ் சைவத்து அருங்கலன் நாப்பண், ஆசற விளங்கும் மாசிலாமணி" என்று பாராட்டுகின்றது; திருஞானசம்பந்தப் பெருந்தகையின் தோற்றமே தன்னை முழுதும் கவவி நிற்றலின், " அமண் மாசறுத்த கவுணியர் பெருந்தகை பிள்ளைமை விடுத்த தள்ளரும் பருவத்து உள்ளதன் படிவம் உணர்த்துவ கடுப்ப மாநிலத் தமர்ந்த ஞானசம்பந்தன்" என்று பரவிப் பணிந்தொழுகுகின்றது. இனி, தருமபுரத்திற் கோயில்கொண்டிருப்பவரும், கமலை ஞானப்பிரகாச தேசிகருக்குச் சீடரும் அத்தேசிகமூர்த்திகளாலேயே "குருஞானசம்பந்தா" எனச் சிறப்பித்து அழைக்கப் பெற்றவருமான அருள் திரு. குரு ஞானசம்பந்த தேசிகருக்கு நான்காவது பட்டத்தில் எழுந்தருளி ஞானசம்பந்தர் என்ற சிறப்புப் பெயர் பூண்டு நிற்பதுபற்றி திரு. மாசிலாமணி தேசிகரை இவ்வாறு கூறினாரென்பர். எனினும் ஞானசம்பந்தர் என்ற பெயர் பூண்டிருத்தலொடு அப்பெருந் தகையேபோலத் தன் திருவடியை உன்னி ஞானம்வேண்டி வந்தடைந்தார்க்கு அத்திருவருள் ஞானத்தை வழங்குவது ஒருதலை யாதலைக் காண்டலின் அப்பெருந் தகையின் நினைவு தோன்றி நம் குமரகுருபரர் உள்ளத்தை இவ்வாறு ஏவல் கொள்வதா யிற்றெனத் தெளிகின்றோம். இக்கருத்தே "மன்வடிவால் வெம்பந்தம் நீக்கும் விமலநீ, மெய்ஞ்ஞானசம்பந்தன் என்பதனால் தான்"1 என்பதனால் வலியுறுவதைக் காணலாம். "மாசிலாமணியென வண்பெயர் நிறீஇ. மேன்மை யோடமர்ந்த ஞானசம்பந்த"2 "மாசிலாமணி ஞானசம்பந்த னென்று அருந்தவர் துதிப்ப ஓர் பெரும் பெயர் நிறீஇ"3 எனப் பலவிடத்தும் அடிகள் தமது ஞானசிரியரை மாசிலாமணி ஞானசம்பந்த தேசிகர்4 என்று பாராட்டுகின்றார். அப்பாராட்டுகளில் முதற்கண் ஞானசம்பந்தர் என்ற சிறப்புப்பெயர் திருஞானசம்பந்தப் பெருந்தகையார் திருமேனித் தோற்றத்தையும் செயலையும் நினைப்பித்து மகிழ்வித்தது போல, மாசிலாமணியென்ற இயற்பெயரும் அவருள்ளத்தே தனக்குரிய சொற்பொருளைக்காட்டி மிக்க இன்பம் எய்துவித்துள்ளது. மாசற மண்ணப்பெற்ற மணி மாசிலாமணி யெனப் படுதலின், அதனை அனைவரும் முடியிலணிந்து மகிழ்வார்கள். அப்போது அது சூளாமணியாம்; அவ்வியைபு தோன்ற, நூலின் தொடக்கத்தே மாசிலாமணி தேசிகரை "எண்டிசைக்கும் சூளாமணி மாசிலாமணி" என்று உரைக்கின்றார். அம்மணி மகளிர் அணியும் அருங்கலத்தின் நடுவே இருந்து தனது விளக்கத்தால் மேம்படும் இயல்புண்டு ஞானமாகிய மங்கைக்குச் சைவமென்பது சீரிய அருங்கலமென்றும், அதன் நடுநாயகமணியாய் மாசிலாமணி தேசிகர் திகழ்கின்றார் என்றும் கூறுவார், "திருக்கிளர் ஞானத் திருந்திழைக்கணியாம், அருட்பெருந் சைவத் தருங்கல நாப்பண், ஆசற விளங்கும் மாசிலாமணி" என்று பாடிக் களிக்கின்றார். சிவபரம்பொருள் ஏனை எல்லாக் கடவுளர்க்கும் முடிமணியாய்ப் பாராட்டப்படும் உயர்வற உயர்ந்த உயர்வுடையார்; அது குறித்துக் கடவுள்மணி யெனப்படுவர்; அவரே சகலான் மாக்கள் உய்தற் பொருட்டு ஞானதேசிகராய் எழுந்தருளுவர் என்பது சான்றோர் முடிபு. அப்பரம்பொருளுக்கு மிடற்றில் கடல் விடம் அடைத்த கறையுண்டு. அக்கறை ஞானசிரியராய் எழுந்தருளுங் காலத்தில் மறைவது இயல்பு. அந்த ஆசிரிய மூர்த்தம் திரு. மாசிலாமணி தேசிகரின் திருமூர்த்தமாதலை மனதிற்கொண்டு, " சுடர்விடு செங்கதிர்க் கடவுள்மா மணிக்கு விளங்கெழில் மிடற்றோர் களங்கமுண் டென்ப, அக் காசுலா மலினம் கரந்த காரணத்தால் மாசிலா மணியென வண்பெயர் நிறீஇ மேன்மையோடு அமர்ந்த ஞானசம்பந்த" என்று உரைக்கின்றார். மாசில்லாத மணி கிடைப்பின் மக்கள் அதனைக் கோவைசெய்து மெய்யில் புனைந்து இன்புறுவர்; இம் மாசிலாமணியை அடியேன் இப்பண்டார மும்மணிக்கோவையென்னும் செய்யுள் நூலில் கோத்தணிந்து மகிழ்வேன் என்பாராய், " கண்ணிற் கணியாங் கதிர் மாசிலாமணியைப் பண்ணிற் கணியாப் பகர்வரால் - எண்ணுங்கால் பன்னூலிற் கோக்கப்படும் மணியன்று இம்மணி, மற்று இந் நூலிற் கோக்கும் மணி என்று" என்று பாடிப் பரவுகின்றார். கண்ணிற் கினிய கதிர்விட்டு விளங்கும் மணிகள்பால், அக்கதிரொளியால் புறத்தே செறியும் இருளைக் கெடுக்கும் இயல்பு உண்டு. எங்கள் மாசிலமணி தேசிகராகிய மாமணி ஞானவொளி கான்று அகத்தே படிந்து கிடக்கும் பாசவிருள் மறுபடியும் தொடராவண்ணம் அழித்தொழிக்கும் என்பார், "பாசமாம் இருட்கோர் படர்மணி விளக்கெனும் மாசிலாமணித் தேசிகராய"1 என்று ஓதுகின்றார். மாசறக் கழுவிய மணி யொன்றினைக் காண்போர், அதன் வகைகளில் யாதென ஆராய்ந்த பின்பே இன்னதெனத் தெளிவர்; அவ்வாறே எங்கள் மாசிலாமணி தேசிகரைக் காண்போரும் தத்தம் அறிவுநிலைக் கேற்பப் பலவேறு கடவுளருள் வைத்துக் கூறுவர். ஆயினும் முடிவில், "சிவனெனும் நாமம் தனக்கே யுடைய செம்மேனியம்மா" னாகவே கருதுவர் என்பார், " இன்றோர் வியப்புளதால் மாசிலாமணி என்றிருப்பது ஒன்று; ஓர்மணிகண்டவர் பலரால் அதற்கு ஓர் மருங்காய் நின்றோர் பல பல பேதங்களாச் சொல்வர் நீக்கமறச் சென்றோர் மற்று இம்மணி செம்மணியே என்று செப்புவரே" என்று உரைக்கின்றார். செம்மணி மாணிக்க மணியையும் அதன் நிறமே கொண்ட சிவபரம்பொருளையும் குறிக்கும் அமைதியுடையது. இனி, திரு மாசிலாமணி தேசிகரின் இயற்பெயர்க்கண் அமைந்த மணியினை ஏனை மணிகளின் வேறு வைத்துச் சிறப்பித் துரைத்துக் குமரகுருபரர் தம்மனம் குளிர்ப்பெய்துகின்றார். உலகிலுள்ள ஏனை மணிகள் தம்முடைய ஒளிப்பெருமையால் எல்லாவற்றையும் அடக்கி நிற்குமேயன்றிப் பிறவற்றில் தாம் அடங்கி நிற்பதில்லையாக, ஆசிரியராகிய மாசிலாமணி தேசிகர், சிவபோகத்தே நிலைபெற நின்று என்னைத் தன்பால் அடக்கியும், யான் ஆன்ம போதத்தால் தலையெடுத்து நிற்குங்கால் எனக்குள் மறைந்தும் நிற்கின்றார் என்ற கருத்து எய்த, " தான் நின்றெனைத் தனக்குள்ளே யொளிக்கும் என்தன்மைநிற்க யான் நின்றபோது எனக்குள்ளே ஒளித்திடும் இப்பரிசே வான் நின்ற சின்மய மாமாசிலாமணி மன்னும் தன்மை நான் இன்று கண்டனன் காணேன் இதற்கு ஒத்தநன்மணியே" என்று இயம்புகின்றார். மாசில் மணிகளுள் தலையாயது சிந்தாமணி; அது நினைவோர் நினைவெல்லைக்குட்பட்ட பொருள்களை நினைந்த அளவு தரவல்லதாகும். நினைவெல்லைக்கு அதீதமான சிவஞானப் பெரும்போகத்தை ஞானாசிரியராகிய எங்கள் மாசிலாமணி தேசிகர் பெரிதும் வழங்கி என் கண்ணுள் மணியாய் இன்புறுத்து கின்றார் என்றற்கு. " கடல் பெற்ற தோர்மணி சிந்தித்த நல்கும் கருத்துக்கெட்டா மிடல் பெற்ற பேரின்பம் நல்கியவா அருள்வேலை பெற்றென் உடல் பெற்ற கண்மணிக்குண் மணியாகி யொண்கூடல்வைகும் அடல் பெற்ற ஞானச்சுடர் மாசிலாமணி யானதொன்றே" என்று பராவுகின்றார். மேலும் உலகிலுள்ள ஏனை மணிகளை பெறக் கருதுகிறவர், கருதியும், உடல் கருவி முதலியன கொண்டு நெடுநாள் அரிது முயன்றும் பெறற்குரியர்; எங்கள் ஞானமூர்த்தியாகிய மாசிலாமணியைக் கருவி கரணங்களை அடக்கிச் சும்மா இருந்தவர் எளிதில் பெறலாம் என்பார், " எம் ஆருயிராம் எழில் மாசிலாமணியை அம்மா பெறுதற்கு அரிதன்றே - சும்மா இருந்தாரே பெற்றார் மற்று எவ்வுலகில் யாரே வருந்தாது பெற்றார் மணி" என வியப்புத்தோன்ற விளம்புகின்றார். மேலும் உலகினர் முயன்று தேடிப்பெறும் மணிகள், தம்மைக் கொண்டவர்க்கு உடைமையாவதன்றி, அவரைத் தமக்கு ஆளாகக்கொள்ளும் மதுகைஉடையவல்ல; ஞானமூர்த்தியாகிய திரு மாசிலாமணி தன்னைக் கண்டமாத்திரையே கண்டவர்களை ஆட்கொண்டு பணிகொள்ளும் பெருமையுடையது என்பார், " மணி கொண்டவர்தம் பொருளாவதன்றி அம்மாமணியாம் அணிகொண்டவரைக் கொண்டு ஆள்வதுண்டே; அருட்கூடல் வைகும் கணிகொண்ட கொன்றைத் தொடை மாசிலாமணி கண்டவுடன் பணிகொண்டு தொண்டுங் கொண்டு ஆளும் கொள்வோமென்று பார்க்கு முன்னே" என்று தம்மை அடைந்தாரை ஆட்கொள்ளும். அருணெறியையும் உடன்புணர்த் துரைத்து உவகையூட்டு கின்றார். பிறவிடத்தும் இக்கருத்தை "அம்மணி பிறர்கொண்டு ஆளாமணி எமை ஆட்கொள் சிந்தாமணி" என்று வற்புறுத்துகின்றார். பிறமணிகள் மருந்து மந்திரம் என்பவற்றோடு கூடியே உயிர்கட்கு உண்டாகும் நோயை நீக்குவன; ஞானாசிரியராகிய திருமாசிலாமணி, அம் மூன்றாலும் ஒரு சிறிதும் போக்க முடியாத பிறவி நோயை எளிதில் போக்கும் தலைமையுடையது என்ற கருத்தால், "மீளா மணி மந்திர மருந்தாற் சென்ம வெவ்விடநோய், வாளா மணி யொன்றினால் மீண்டவா"1 என்று வியந்தோதுகின்றார். உலகில் மணி வேண்டுவோர் பொன் னென்றே கொடுத்து அதனைப் பெறுவர்; எங்கள் மாசிலாமணியை விரும்புவோர் தம் உடல் பொருள் உயிர் என்ற மூன்றையும் கொடுத்தல் வேண்டும் என்பார், " பொன்னே யல்லாமல் பொருளொடு உடல் உயிர் விற்று என்னே மணியொன்று எவர் கொள்வார் - கொன்னே குருமாசிலாமணியைக் கொள்வோர் கொள்ளாமுன் தருவார் மற்று இம்மூன்றும் தான்" என்று ஞானாசிரியர்பால் அருள் பெறுதற்குரிய நெறியும் முறையும் சேரக் கூறுகின்றார். ஞானதேசிக மூர்த்திகளாகிய திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், வேண்டும் அடியார்கட்கு வேண்டுவன வேண்டியாங்கு அளிக்கும் இயல்புண்டு "சிந்தாமணி" என்றும், ஞானவொளி வழங்கி அறியாமையிருளைப் போக்குதலால் அவரவரும் தத்தம் முடிமேற்கொண்டு ஏத்தும் முறைமை கண்டு "சூடாமணி" யென்றும், ஒட்டுப் பற்றின்றி உலகைத் துறந்தொழுகும் முனிவர் வணங்கும் தலைமையுடைமை பற்றி "முனிவர் சிகாமணி" யென்றும் உணர்ந்து வழிபடற்குரியர் என நம்மனோர்க்கு உபதேசிக்கின்றார். இம்மாசிலாமணி, சிந்தாமணி யென்பது முதல் பலவகையாகப் பாராட்டிப் பரவப்படும் பண்புடைத்தாதலேயன்றி, இரும்பைக் கவரும் காந்தமணி யென்றற்கும் இயைபுண்டு என்பாராய் இரும்பை யொத்து என் வசம் எட்டுணையும் நில்லாத என் நெஞ்சினைக் குழைவித்துத் தன்பால் இழுத்து மீளாவகை நிறுத்துகின்றது என்பார், " என் வசமாக நில்லாத நெஞ்சாம் இரும்பைக் குழைத்துத் தன்வசமாகக் கொண்டு இழுக்கின்றதால் தொண்டர் தம்மையருள் மன்வசமாகச்செய்யு மாசிலாமணி மாமணிக்குப் பொன்வசமாகச்செய் காந்தமென்றே சொல்லப் போந்ததுவே" என்று புகழ்ந்து மகிழ்கின்றார். இவ்வாறு ஞானசம்பந்தர் என்ற சிறப்புப் பெயராலும், மாசிலாமணியென்ற இயற்பெயராலும் தம்முடைய ஞானாசிரியர் இயல்புகளைப் பல்வகைச் சுவையும் மெய்ப்பாடும் எய்தப் பாடிப் பரவிய குமரகுருபர சுவாமிகள், அவரது ஞானநலத்தை "தன்னேரிலா ஞானசம்பந்தன் தாள் அடைந்தார்ககு. இருள் வெளியாம்" என்றும், "நான்மறைக் கிழவநற்றவ முதல்வ, நுன்முறை பயின்ற நுண்மைசா லறிஞ, சொற்சுவை பழுத்த தொகைத் தமிழ்க் கவிஞ. கற்றவர் வியக்கும் காவியப் புலவ" என்றும், சமயப் பூசலைக் கெடுத்துச் சைவத்தின் மாண்பினை நிலைநாட்டும் திறத்தைப் "பின்னம் படைத்த சமய விரோதப் பிணக்கறுத்து ஓர், சின்னம் படைத்த முனி மாசிலாமணி" (24) என்றும் குறிக்கின்றார். இனி சிவபெருமான் சகலான்மாக்கள் உய்யும் பொருட்டுக் குருமூர்த்தியாய் எழுந்தளிப்போந்து உண்மை ஞானத்தை யுணர்த்துவன் என்பது சைவசிந்தாந்த நூன்முடிபாகும். ஆன்மாக்கள் விஞ்ஞானகலர் பிரளயாகலர் சகலர் என முத்திறப்படுவர். அவருள் முதல்வர் ஆணவமலம் ஒன்றும் பிரளயாகலர் ஆணவ கன்ம மலங்கள் இரண்டும், சகலர் ஆணவம் கன்மம் மாயையென்ற மும்மலங்களும் உடையரென்றும், விஞ்ஞானகலர்க்கு முதல்வன் உண்ணின்றும் பிரளயாகலருக்கு முன்னிலையினும் அருள் புரிவனென்றும், ஏனைச் சகலர்க்கு அவர்போல் அருட்டிருமேனி கொண்டு ஞான குருவாய் எழுந்தருளி உண்மை ஞானத்தை அருள்செய்வனென்றும் சித்தாந்த மெய்ந்நூல்கள் செப்புகின்றன. இதனால் ஞானோபதேசம் செய்யும் ஆசிரியன் சிவபரம்பொருளேயாதல் தெற்றெனத் தெளியப்படும். அங்ஙனமே தெளிந்த சிந்தையினராகிய குமரகுருபர சுவாமிகள் தம் ஞானாசிரியராகிய ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த மூர்த்திகளைச் சிவமென்றே தேறிச் செப்புவன பலவும் இனி ஆராயப்படும். முதற்கண் ஞானதேசிகன் உயிர்க்கு அருள் புரியும் செயலை, " செவிதொறுஞ் செவிதொறுந் தெள்ளமுது ஊட்டுபு கவிஞர்வயின் நிரப்பும் கல்விப் பிரசங்க வெள்ளிடைத் தோன்றாது உள்ளத்து உணர்த்தவும் செய்நிலை நின்று திருக்கண் சாத்தவும் சாயா மும்மலச் சகலரேம் உய்ய எம்முருக் கொண்டும் எம்மொடு பயின்றும் மும்மலக் கிழங்கை முதலொடும் அகழ்ந்து சிற்பரம் உணர்த்தும் சற்குரு ராய" என்பதனால் உணர்த்துகின்றார். இதன்கண் குறித்த உள்ளத் துணர்த்துதல், திருக்கண் சாத்தல் என்ற இரண்டும் முறையே விஞ்ஞானகலர் பிரளயாகலர் இருவர்க்கும் உரியன. தமது ஞானா சிரியரைச் சிவபரம் பொருள் எனத் தெளிந்திருத்தலைப் பிறவிடத்தும் எடுத்தோதுகின்றார். "அவமாசு இலா மனத்தார்க்கு ஆரூயிராம் ஞானோற்பவ மாசிலாமணிச் சம்பந்தா"1 என்றும், "எம் ஆருயிராம் எழில் மாசிலா மணியை அம்மா பெறுதற் கரிதன்றே"2 என்றும் வருவன இந்த ஞானதேசிக மூர்த்திகள் தம் நற்சீடர் அன்பில் தோய்ந்து அவர்தம் உயிர்க்குயிராய் நிறைந்து அருளின்பம் வழங்கும் திறத்தை அறிவிக்கும். இவ்வாறு உயிர்க்குயிராய் நிறைந்திருந்து ஞானம் வழங்கும் மாட்சியினை வேறொரு பாட்டின்கண்3 உழவுத் தொழிலில் வைத்துச் செஞ்சொல் தேமழையொன்று பொழிகின்றார். அதன்கண் சுத்தம் அசுத்தம் பிரகிருதி என்ற மூவகை வீடுபட்டது. மாயாபுவனங்களில் உயிர்கள் நால்வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்பும் எண்பத்துநான்கு நூறாயிரயோனி வேறுபாடும் உற்று ஊழ்வழியே ஆதி தெய்வீகம், ஆதியான்மிகம், ஆதி பௌதிகம் என்னும் மூவகைத் துன்பமும் எய்தி ஆசைவாயிலாக வரும் போகம் குறித்து இதம் அகிதம் என்னும் இருவகை வினைகளை ஈட்டி, மேன்மேலும் பிறப்பிற்கே ஏதுவாய் நிலவுதலும், மந்திரம் முதலிய ஆறத்துவாக்களாலும் வினையை நெறிப்படுத்திப் பிராரத் தத்தை நுகர்வித்தலும், ஆகாமியத்தை விளைவித்தலும், முடிவில் அவ்வினைவிளைவைக் களைந்து சிவஞானப் பெரும்போக வாழ்வில் திளைப்பித்தலும் ஞானதேசிகனுடைய அருட்செயல்கள் என விரித்தோதும் நலம் அறிவு நெறிக்கண் நிற்கும் திருவுடையோர் கண்டு விம்மிதம் கொள்ளும் மேன்மையுற்றிருக்கிறது. இத்தகைய சிவஞானச் செயலுடைய ஞானதேசிகர் வழங்கி யருளும் ஞானபோனகத்தை நம் குமரகுருபர அடிகள், " பரமானந்தப் பரவையுள் தோன்றிய இன்பவா ரமுதம்; அவ்வமுதம் அன்பருக்கெளிது எளிது அரிது விண்ணவர்க்கே"1 என்று இயம்புகின்றார். இங்கே காட்டிய அருட்செயல்களும் ஞானாமிர்தமும் ஞானதேசிக மூர்த்திகள் சிவபரம்பொருளே என்பதை நம் அறிவில் பதிவித்தலை நாம் உணர்கின்றோம். அவ்வுணர்வே வடிவாயுற்ற குமரகுருபர சுவாமிகள், சிவபரம்பொருளே மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த மூர்த்திகள் என்று பன்முறை எடுத்தோதியும் அமையாது, " ஒள்ளொளி பரப்பும் வெள்ளி வேதண்டத்து ஒருபாற் பொலிந்த மரகதம் கவினச் சுடர்விடு செங்கதிர்க் கடவுள் மாமணிக்கு விளங்கெழில் மிடற்று ஓர் களங்கமுண்டு என்ப, அக் காசுலா மலினம் கரந்த காரணத்தால் மாசிலாமணியென வண்பெயர் நிறீஇ மேன்மையோடு அமர்ந்த ஞானசம்பந்த" என்று நயம்பெருக நவில்கின்றார். இஃதிவ்வாறாக, தருமையாதீன குருமூர்த்திகள் மதுரைச் சொக்கநாதனைத் தம் ஆன்மார்த்த பூசனைப் பரம்பொருளாகக் கொண்டு நாளும் வழிபட்டுவரும் நன்மாண்புடைய ரென்பது உலகறிந்த செய்தி. மேலும் அச் செயற்குரிய சொக்கலிங்கம் இவ்வாதீன ஆதி கருத்தருக்கு ஆலவாய் அண்ணல் தாமே அன்பு சிறந்து அளிக்கப்பெற்றதென்றும், அதனைப் பெற்ற பெருமகிழ்ச்சியால் சொக்கநாதக் கலித்துறையென்னும் நூலைப்பாடி அதன் முதற் பாட்டிலேயே, " கண்ணுக்கினிய பொருளாகிய என் கரத்தில் வந்தாய் விண்ணும் பரவிடும் அற்புதமே யென்ன விஞ்சை இதால் மண்ணும் புகழ்ந்திட என்னையும் பூரண வாரியுள்ளே நண்ணும்படிசெய் மதுராபுரிச் சொக்கநாயகனே" என்று தாம் சொக்கலிங்கப் பெருமானைப் பெற்ற பேற்றினை வியந்து பரவினாரென்றும் ஆதீன வரலாற்றால் அறிகின்றோம். இவ்வரலாறு ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் இங்கே எழுந்தருளிய காலத்து அவர்க்கு இனிது உணர்த்தப் பெற்றதோடு, அச்சொக் கலிங்கத்தை நேரிற்கண்டு தம் கண்பெற்ற பயனைப் பெற்றுக் கழிபேரின்பம் உற்றிருக்கின்றார். காணும் காட்சியைக் கண்டாங்குப் பாடும் கவிநலமுடைய அப்பெருமான் இப் பண்டார மும்மணிக் கோவைக்கண் இச்செயலை, " அங்கயற்கண்ணி பங்கில் வீற்றிருந்த செக்கர் வார்சடைச் சொக்கநாயனை ஈரெண்திறத்து உபசாரமும் வாய்ப்பப் பூசனை புரியுந் தேசிகராய"1 என்று எடுத்தோதுகின்றார். ஸ்ரீ மாசிலாமணி தேசிகரைச் சிவமெனவே தேறித்திருவருள் ஞானோபதேசம் வேட்டுநின்ற குமரகுருபர அடிகள் மீண்டும் அவர் சொக்கநாயகனை வழிபட்டார் என்பது அவர் தம்மைத் தாமே வழிபட்டார் என்பதாகி முன்பின் முரண்வது போலத் தோன்றுவது கண்டு அதற்குத் தக்கதோர் அமைதியும் கூறிவிடு கின்றார். அஃதாவது உருத்திர கணங்களாய அடியவர்கள் தம்மை வழிபடும் திறம் இஃது எனக்காட்டுவது என்பது. இதனை, "அருத்தியோடு எம்மை நம் உருத்திர கணங்கள், தெரித்து மற்று இவ்வாறு அருச்சனை புரிதிர்"1 என்பதனால் அறியலாம். மேலும், இதற்கோர் எடுத்துக்காட்டுக் கூறுவாராய், திருவிடைமருதூர்ப் புராணத்தே, உமையம்மையாருக்கு அறிவிப்பது குறித்துப் பரமன் தன்னைத் தான் பூசித்துக் காட்டிய அருட்செய்தியை விதந்து, " பொன்னவிர் கடுக்கைப் புரிசடைப் புங்கவன் அமையாக் காதல் இமையவல்லிக்கு வழிபடல் முறைமை விழுமிதின் உணர்த்தத் தானே தன்னைப் பூசனை புரிந்தென"2 என்று ஓதுகின்றார். தருமையாதீனை குருமூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் திருப் பதிகளையும் குமரகுருபர சுவாமிகள் புகழ்ந்தோது கின்றார். அத்திருப்பதிகள், தருமபுரம், திருவாரூர், மதுரை என்ற மூன்றுமாகும். இவற்றுள் தருமையென்பது தற்போதைய தருமபுரமாகும். இச்சிவம் பெருகும் திருநகரம் இன்றுகாறும் தருமபுர ஆதீனத்தின் தனியிருப்பாகத் திகழ்கின்றது. இதன் சிறப்பை எடுத்தோதப் புகுந்த குமரகுருபரர் மனக்கண்ணிற்கு இந்நகர்மேவும் மருத நிலப்பகுதியின் மாண்பு இனிய காட்சி வழங்குகின்றது. காவிரியின் தென்கரைக்கண் பொருந்திய இந் நகரம் நாற்புறமும் மருதத்தண்பணை சூழ்ந்து நீர்வளம் சிறந்திருக்கிறது. நீர்நிலைகளில் மகளிர் நீர் விளையாட்டயர் கின்றனர். அக்காலை, அவரது தோற்றம் நீராமகளிரின் சீர்த்த நலத்தை நினைப்பிக்கின்றது இக்காட்சியை, " சிற்றிடை படைத்த பேரமர்க் கண்ணியர் கரைகொன்று இரங்கும் திரைசெய் நீர்பட்டத்து மைவிழி சேப்பச் செவ்வாய் விளர்ப்பக் கருங்குழல் சரிய வெள்வளை கலிப்பச் சீராட்டு அயரும் நீராட்டு அயர்ந்து நீரமகளிர் பேரெழில் காட்ட மருதம் வீற்றிருந்து பெருவளம் சுரக்கும் தருமையம்பதி"1 என்று நாம் கண்டுணரக்காட்டுகின்றார். "தருமையும் கமலையும் விரிதமிழ்க் கூடலும்" என்ற விடத்து இறுதிக்கண் வைத்தோதிய கூடல்மா நகரத்தை ஸ்ரீ குமரகுருபர அடிகள், "பந்தனைதவிரா" என்று தொடங்கும் திருவகவலில் பாராட்டிப் பாடுகிறார். கூடல் நகரை அடிகள் நினைக்கும்போதே. அவர் மனம் அங்கே பரமன் நன்பாட்டுப் புலவனால் எழுந்தருளி ஆராய்ந்த "ஒண்தீந் தமிழின் துறைவாய் நுழைந்து" உலவாப் பேரின்பத்தில் மூழ்கி மகிழ்வு மிகுமாறு தோன்ற நன்கு சிறப்பித்துப் பாடுகின்றார். இத்தருமையம்பதியில் எழுந்தருளும் மகாசந்நிதானங் கட்குத் தருபுரமேயன்றித் திருவாரூரும் கூடற்பதியும் எழுந்தருளுந்திரு நகரங்களாக இருப்ப, தருமையும் கூடலும் போலாது திருவாரூரை மட்டில் அடிகள் பன்முறை இந்நூற்கண் சிறப்பித் தோதியது அத்திருவாரூர் இவ்வாதீனத்தின் ஆதி மகாசந்நிதானமாகிய குரு ஞானசம்பந்தருக்கு ஞானோபதேசம் செய்தருளிய கமலைஞானப் பிரகாச சுவாமிகள் வீற்றிருந்த திருப்பதியாவது பற்றியாம். மேலும், "தருமையும் கமலையும் விரிதமிழ்க் கூடலும் திருநகராக அரசு வீற்றிருக்கும் மாசிலாமணித் தேசிகராய" என்ற விடத்து கமலை யெனத் திருவாரூரை நடுவண் வைத்தோதியது. "மேதினிக் காதல் மங்கையிதயகமலமாம், மாதொர் பாகனார் ஆரூர் மலர்ந்ததால்" (திருமலை 33) எனச் சேக்கிழார் பெருமான் தெரித்தோத அதனைத் தாமும் மேற்கொண்டு திருவாரூர் நான்மணிமாலைக்கண் பரமன் கோயில் கொண்டருளும் அத்திருவாரூர் பூமகட்கு இதயக்கமலமென்று எடுத்தோதும் கருத்தினராதலினாலென்றும் கொள்ளலாம். இந்த அரிய செந்தமிழ் நூற்கண் பல பாட்டுக்களில் அடிகளார் மாசிலாமணி தேசிகரை முன்னிலைப்படுத்தியே பரவியிருப்பதை இந்நூல் இனிது எடுத்துக் காட்டுகின்றது. அவ்வாறு பரவுமிடத்து அவர் வாளா முன்னிலைப் பரவலாகவே மொழிந்தொழியாது பரவுந்தோறும் பல வேண்டுகோளைப் பணிந்து செய்து கொள்கின்றார். அவையனைத்தும், ஞானப்பேற்றினகண் அவர்தம் உள்ளத்தெழுந்த வேட்கை மிகுதியைப் புலப்படுத்துவன; எனினும் ஞானம் வேட்கும் நற்சீடனொருவன் அதனைவேட்டுப் பெறுதற்கு அடிப்படையாக வேண்டியிருக்கும் உண்மை நூலறிவும் இவ்வண்ணம் இருத்தல் வேண்டு மென்பதனையும் நாமெல்லாம் நன்குணரக் காட்டுகின்றன. இனி, இவ்வேண்டுகோள்கள் சித்தாந்த சைவ செந்நெறிக்கண் நிற்றற்குரிய மனவொருமை வேண்டலும், மெய்யுணர்வு வேண்டலு மென இருகூற்றுள் அடங்குகின்றன. முதற்கட்கூறிய மனவொருமை வேண்டுமிடத்து அவர் சித்தாந்தச் செந்நெறியின் சிறப்பினைத் தெரியத்தேர்ந்து பலவகையாலும் வகுத்துரைக்கின்றார். "மணிவடஞ் சுமந்த" என்று தொடங்கும் திருவகவற்கண் அடிகள் தாம் சித்தாந்த சைவச் செந்நெறிக்கண் நின்று பெறும் பேரின்பப் பெருவாழ்வெய்த வேண்டு மென்பார், " திவ்வியம் பழுத்த சைவ சித்தாந்தத்து இறவா நிலைமைபெற்று இன்பமார்ந் திருக்கும் பிறவா நல் நெறி பெறப்புரிவதுவே"1 என்று கூறுகின்றார். இறைவனுக்கும் உயிர்கட்கும் உரிய இடையைப் பல்வேறு சமயத்தவர் பலவேறு கூறுவர். மாத்துவர் இவ்வியைபு பேதம் (அந்நியம்) என்பர்; மாயாவாதிகள் அபேதம் என்பர்; பாஞ்சராத்திரிகள் பேதாபேதம் என்று கூறுவர். இக்கூற்றுக் களைத் தாம் உடன்படாமை தோன்ற, அடிகள் "அந்நியமென்றும் அநநியமென்றும் இந்நிலையிரண்டும் எய்திற்றென்றும், பல்வேறு உரைக்குநர் சொல்வழிப் படாது" என்று உரைக்கின்றார். இறாவ நிலைமையாவது பொருளால் இரண்டாகியிருந்தும் வேறறக் கலந்து உடனாய் நிற்பதாகிய அத்துவித நிலைமை, இதனை எய்தினார் மீண்டும் பிறத்தல் இன்மையின் "பிறவா நன்னெறி பெறப்புரிக" என்று வேண்டுகின்றார். இவ்வாறு "பிறவா நன்னெறி வேண்டினவர், அது பெறுவது அரிது; மீட்டும் பிறத்தற்குரியை" என்று ஞானதேசிகர் அருளிப்பாடு உண்டாகுமாயின், அப்பிறப்புக் குறித்துத் தம் கருத்து இதுவென உரைக்கலுற்று உயர் பிறப்புக்களாகிய இந்திரன், பிரமன், திருமால் என்ற பிறவிகளைத் தமக்கு வேண்டாவென்கின்றார். இதற்கு அவர் காட்டும் ஏதுவாவது, "அவைதாம் ஆரா இன்பமென்று அரும்பெயர் பெறினும் வாரா வல்வினை வருவிக்கும்மே" என்பது. இவ்வேண்டுகோளையே "முற்படுமாயை" என்ற திருவகவலில் வேறுவாய் பாட்டால் ஓதுகின்றார். அங்ஙனம் ஓதுமிடத்து சைவ சித்தாந்தச் செந்நெறியைத் தெளிந்து மேற்கொண்டொழுகுதல் அருமையாகும். அதனால் அவ்வொழுக்க முடையோர் சிலரேயாவர் என்பார். " ஓரும் வேதாந்தம் என்று உச்சியிற் பழுத்த ஆரா இன்ப அருங்கனி பிழிந்து சாரங் கொண்ட சைவ சிந்தாந்தத் தேனமுது அருந்தினர் சிலரே"1 என்று உரைக்கின்றார். வேதாந்தத்தை உச்சி என்றது, வேதத்தை மரமாக உருவகம் செய்கின்றாராதலின், அதனை இவ்வகவற்கண்ணே. " குடிலை யென்னும் தடவயல் நாப்பண் அருள் வித்திட்டுக் கருணைநீர் பாய்ச்சி வேத மென்னும் பாதவம் வளர்த்தனை"2 என்று ஓதுகின்றார். வேதமாகிய மரத்தின் உச்சியிற் பழுத்த கனியைப் பிழிந்து வடித்துத் தெளியக்கொண்ட சாரம் சைவசித்தாந்தம் என்றது, "வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தத் திறன்"3 என்பதனை நினைப்பிக்கின்றது. வேதம் - நான்மறை; அந்தம் - உபநிடதங்கள்; அருங்கனி - ஆகமங்கள்; அவற்றுள் பூருவபக்கமும் சித்தாந்தமும் விரவிக் கிடத்தலின், பூருவபக்கத்தை விலக்கிச் சித்தாந்தப் பகுதியை மட்டில் கோடல் வேண்டியிருத்தல் பற்றி, "அருங்கனி பிழிந்து சாரங்கொண்ட சைவ சித்தாந்தத் தேன்" என்று அருள்கின்றார். ஒருகால், அடியேன் இச்சைவ சித்தாந்தப் பேற்றுக்கு உரிய னல்லன் என ஒதுக்கப்படினும், அடியேன் வேறு நெறிக்கண் ஒதுங்கேன் என்பார், "யான் அவர் நன்னிலை பெறுதற்கு அந்நியனாயினும், அன்னவர் கமலப் பொன்னடி விளக்கிய தீம்புனலமுதம் ஆர்ந்தனன் அதனால், வேம்பெனக் கொண்டனன் விண்ணவ ரமுதே" என்று தமக்கு அந்தச் சைவ சித்தாந்தத்தின்பாலுள்ள அயராவேட் கையினை அறிவிக்கின்றார். இனி, இச் சித்தாந்தச் செந்நெறிக்கண் நின்று பெறும் மெய்யுணர்வினைத் தமக்கு அருள் செய்யுமாறு குமரகுருபர அடிகள் மாசிலாமணி தேசிகரைப் பல பாட்டுக்களில் விண்ணப் பிக்கின்றார். "பூமலி சததள" என்று தொடங்குவதான முதற்பாட்டி லேயே தமக்கு உண்மை ஞானத்தை உபகரிக்குமாறு வேண்டுகின்றார். உண்மை ஞானத்தாலல்லது. ஒருவற்கு உய்தியில்லை என்றற்கு, "ஏனைய முத்தி நாடு எய்த, ஓர் ஞானவாரணம் நல்குதி" என்கின்றார். அந்த ஞானம் இவ்வழி உயிர் ஐம்புலன்கட்கும் அடிமையாகி அவற்றிற்கு உரிய பொருளும் வினையும் ஈட்டிப் பிறப்பு இறப்புக் களால் வருந்தும் என்று துணிந்துரைப்பாராய் "ஐம்புலக்களிறும் தம்புலத்து இழுப்ப, ஊனிடைப் பிறவிக் கானகத்து உழலாது" என்றார். உயிர்கள் முன்னைப் பிறவிகளில் முயன்ற சரியையாதி தவப்பயனால் தீவிரதர பக்குவமுற்றபோது சத்திநிபாதம் நிகழ, பரமன் அருளே திருமேனியாகவுடைய குருமூர்த்தியாய் எழுந்தருளி உண்மை ஞானத்தை யுணர்த்தியருள்வன்; தீவிரதர சத்திநிபாதம் நிகழாதவழி, உண்மை ஞானம் கைகூடா தென்பது நூன்முடிபு இதனை ஆதரவாகக் கொண்டு, நம் குமரகுருபர சுவாமிகள் மாசிலாமணி தேசிகரை வணங்கி "அருட்டிருமேனியையுடைய பரமகுரு மூர்த்திகளாகிய தேவரீர் திருமுன் அடியேன் வந்து தரிசித்து நிற்கும் பேறுபெற்றமையின் அடியேனுக்குச் சத்திநிபாதம் எய்தியிருப்பது இனிது விளங்கும்; ஆதலால் அடியேனுக்கு ஞானோபதேசம் செய்தல் வேண்டும் என்று வேண்டுகின்றார். இவ்வாறு ஞானப்பேற்றுக்குத் தீவிரதர சத்திநிபாதம் நிகழ்தல் வேண்டுமென்ற கருத்தைப் பிறாண்டும், "சத்திநிபாதத்தன்மை வந்தடைந்தோர்க்கு, அப்பொருள் புரிதற்கு அது பொழுதாகலின் மெய்ப்பொருள் உணர்த்துதல் வியப்பெனப் படாதே"1 என்று வற்புறுத்துகின்றார். இனி, "ஞானதேசிக மூர்த்தி பக்குவமில்லார்க்கு உண்மை ஞானத்தை உபதேசித்தல் குற்றமாம் என்று கருதி அடியேனுக்கு அதனைச் செய்கின்றிலிராயின், அச்செய்யாமையும் குற்றமேயாகும்" என்று நகுநயம் தோன்றக் கூறுவாராய், "தாகமின்றாகலிற் பாகமின்று எனக்கென, அருளாது ஒழியினும் பரிபவம் நினக்கே"2 என்றும், நீ உபதேசிக்கும் ஞானம் சமயாதீதப் பழம்பொருளாதலால் அதனை வழங் கற்குக் காலம் நோக்கவேண்டா என்பார். "சமையந் தீர்ந்த தனிப்பொருள் தெரித்தற்கு, அமையம் தேர்கலை அருளுதி"3 என்றும் வேண்டுகின்றார். இதுகாறும் உண்மை ஞானத்தின்பால் உலவாவேட்கை மேலிட்டுப் பல் வகையாலும் விண்ணப்பித்து நிற்கும் குமரகுரு பரவடிகள், அந்த ஞானத்தின் பயனாக, தம்முடைய பசுகரணங்கள் பதிகரணங்களாய்த் திரிந்தமை கண்டு வியந்து, " வாக்கும் மனனும் யாக்கையும் ஒன்றாச் சொற்றரு கரண மற்றிவை மூன்றும்...... அவகரணங்களே யல்ல, மற்று, அம்ம சிவகரணங்களாய்த் திரிந்தன வன்றே"4 என்று ஓதுகின்றார். முடிவில் தமக்கு ஞானதேசிகர் உபதேசிக்க உண்டான ஞானானுபவத்தை, " ஆராஇன்பம் ஒன்று ஆர்ந்தனம் யாமே, அதுவே, .................................. பரமானந்தப் பரவையுள் தோன்றிய இன்பவா ரமுதம்; அவ் வமுதம் அன்பருக் கெளிது எளிது, அரிது விண்ணவர்க்கே"5 என்று எடுத்தோதுகின்றார். இதன் விளைவாகத் தமக்கு உண்டாகிய தெளிவினை, " தன்னேரிலா ஞானசம்பந்தன் தாளடைந்தார்க்கு என்னே இருள் வெளியாம் என்பரால் - அன்னோன் அருளாதபோது வெளியாய் இருந்த எல்லாம் இருளாய் இருந்த எனக்கு"1 என்று அடிகள் தெரிவிக்கின்றார். இத்தெளிவால் மாசிலாமணி தேசிகரது திருவருள் பெற்றோர் உலக வாழ்வில் விருப்பும் வெறுப்பு மின்றி ஒருதன்மையராக இருப்பர் என்பார், " ஆரூர் அமர்ந்த ஞானசம்பந்த நின் புகழ்ந்து இறைஞ்சும் கற்பின் மாக்கள் விருப்பு வெறுப்பு அற்றிருப்பர் என்ப பொருள் துணிபு உணர்ந்த புலமையோரே"2 என்று கூறுகின்றார். இவ்வாறு, உண்மை ஞானத்தின்கண் தீராவேட்கையுற்று, மாசிலாமணி தேசிகரிடத்தில் பல்வகையாலும் வேண்டிப் பரவும் குமரகுருபர சுவாமிகள், ஓரிடத்தே தம்மைப் பெண்ணாகக் குறிப்புருவகம் செய்து, ஞானதேசிக மூர்த்தியைத் தலைவனாக நிறுத்தி, அவரைக் கூடிப் பெறும் இன்பமே சிவானுபவமாக இன்பச்சுவை கனியக் கூறுகின்றார். இது பற்றியே இப்பகுதியை மேலே கூறாது ஈண்டுக் கூறிக் காட்டுகின்றோம். " உயர்ந்தோன் தலைவன் ஒத்தோட் புணரினும் இழிந்தோட் புணரினும் இழிபெனப் படாதே ஆதலின் யாம் உனைக் காதலித்தனமால் காதலின் எமை அருட்கைப் பிடித்தருளி ஒருவரும் உணராப் பரம வீட்டில் இருள் அறை திறந்த பெருவெளி மண்டபத்து உயர் நாதாந்தத் திருமல ரமளியில்...... ஞான வாரமுத பானமது அருந்தி..... பரமானந்தப் பரவையுள் படிந்து பேரா இயற்கை பெற்றினிது இருப்ப ஆரா இன்பம் அளித்தருள் எமக்கே"3 என்பது. "மிக்கோ னாயினும் கடிவரை யின்றே"1 என்று ஆசிரியர் தொல்காப்பினார் உரைத்ததுகொண்டு ஈண்டு அடிகள் "இழிந்தோட் புணரினும் இழிபெனப்படாதே" என்று உரைக் கின்றார். அம்மிக்காரொடு கூடற்கு, கூடும் இருவர்பாலும் ஒத்த காதல் உளதாவது இன்றியமையா தாகலின், "யாம் உனைக் காதலித்தனமால்" என்றும், "காதலின் எமை அருட்கைப் பிடித்தருளி" என்றும், அக்கூட்டம் சிறப்பது குறித்துக் காமபானம் பண்ணுதல் முறையாதலின், "ஞானவாரமுத பானமது அருந்தி" என்றும், களிப்புக் கவற்சிகளும் பிறப்புப் பிணி மூப்பு இறப்புக்களும் பிறவுமின்றி உயிர் நிரதிசய இன்பத்த தாயே நிற்றலின், வீட்டினைப் "பேரா இயற்கை" என்றும் கூறினார். இதுகாறும் கூறியவாற்றால் வைதிக சமய நெறிகள் பலவற் றுள்ளும் சித்தாந்த சைவச் செந்நெறியினையே குமரகுருபர சுவாமிகள் விரும்பிப் பேணும் மேலோர் என்பது இனிது விளங்கும். "ஓரும் வேதாந்த மென்று உச்சியிற் பழுத்த, ஆராவின்ப வருங்கனி பிழிந்து, சாரங்கொண்ட சைவ சிந்தாந்தத்தேன்" என்றும், "திவ்வியம் பழுத்த சைவ சித்தாந்தத்து இறவா நிலைமை" என்றும் ஓதுவனவும் பிறவுமே அவரது உட்கோளைத் தெற்றெனத் தெரிவித்தலின் வேறு கூறல் மிகையாம்; ஆயினும், இப்பண்டார மும்மணிக்கோவைக்கண் சைவசித்தாந்தக் கருத்துக்கள் பல காணப்படுதலால் அவற்றை ஓரளவு தொகுத்து ஆராய்தல் முறையாகும். அவை சித்தாந்த சைவச் செந்நெறியின் செம்மைப்பண்பிற்குச் சிறந்த எடுத்துக் காட்டுக் களுமாம். இச்சைவ நன்னெறிக்கண் பதி பசு பாசம் என்ற மூன்றும் நித்தமென்றும் அநாதி யென்றும் கூறுவர் இம்மூன்றும் நான்மறை நவின்ற நற்பொருள் என்று குறித்து "நான்மறை நவின்ற நற்பொருள் இவையென, மோனவாசகத்தான் முப்பொருள் நவிற்றுபு, நன்னலம் புரியும் ஞானப் பிரகாசன்"2 என்று அடிகள் கூறுகின்றார். இவற்றுள் பதியாவான் பசுவாகிய ஆன்மாக்களைப் போல நித்தமும் அநாதியுமாதல் பற்றி, குமரகுருபர அடிகள், பசுவுக்கும் பதிக்குமுள்ள ஒத்த இயல்புகளை, "ஒன்றே தன்மை" என்று தொடங்கும் திருவகவலில் வடித்துக் கூறுகின்றார். இவ்வாறு பதியும் பசுவும் முழுதும் ஒத்த இயல்பின போலக் கூறினாராயினும் பசுவும் பதிப்பொருளேயாம் எனத் துணியலாகாது; பதிப்பொருள் பசுவினும் உயர்ந்தது; ஈண்டுக் காட்டிய ஒப்புமை ஒருபுடை ஒப்புமையே யென்பார் "உன்னுடன் எம்மையும் ஒப் பெனப்படுத்து, முன்னர்க் கூறிய முறைமையிற் சிற்சில முழுவதும் ஒவ்வா தொழியினும் ஒழிக" என்று தெருட்டுகின்றார். இவ்வொவ் வாமையினை ஆசிரியர் அருணந்தி சிவாசாரியர், "சிவன் சீவன் என்றிரண்டும் சித்து ஒன்றாம் என்னில், சிவன் அருட்சித்து, இவன் அருளைச் சேரும் சித்து, அவன் தான் பவம் கேடு புத்தி முத்தி பண்ணும் சித்து, அவற்றிற் படியும் சித்து, அறிவிக்கப்படும் சித்தும் இவன்தான் அவன் தானே அறியும் சித்து" என்று ஓதியருளிய வாற்றால் ஓரளவு உணர்ந்து கொள்ளலாம். இனி, பதிப்பொருளாகிய முதல்வன் உயிர்கட்குச் செய்யும் திருவருளை உணர்த்துவார், முதற்கண் அவன் உயிர்கள் ஈட்டும் நல்வினை தீவினைக்குரிய இன்பத் துன்பங்களை, அவ்வுயிர்களே அனுபவித்துக் கழிக்குமாறு நுகர்விக்கின்றான் என்றும் அதனால் அவன் உயிர்களின் செய்கை நோக்கியிருந்து பிறவி தோறும் முன்னைச் செய்வினைப் பயனைக் கூட்டுகின்றான் என்றும் கூறலுற்று, " வறிஞன் ஓம்பிய செறு ஒன்று ஏய்ப்பப் பருவம் நோக்காய் பவந்தொறும் பவந்தொறும் இருவினைப் போகமும் எற்கொண் டார்த்துபு"1 என்று உரைக்கின்றார். இவ்வாறே இறைவன் உயிர்கட்கு வினைப் பயனைக் கூட்டும் திருச்செயலை, " இன்னவினை யின்னதலத் தின்னபொழு தின்னபடி இன்னதனா லெய்து மெனவறிந்தே - அன்னவினை அன்னதலத் தன்னபொழு தன்னபடி யன்னதனால் பின்னமறக் கூட்டும் பிரான்"2 என்று சிவபோகசாரம் விளக்கிக் கூறுவது காண்க, இனி, உயிர்கள் தாம் பசுவாதலின் இறைவன் அறிவித்தாலன்றித் தாமே உணருமாறில்லை யெனவும், அதுபற்றி சான்றோரும், "காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே" என்று அருளிச் செயதனரெனவும், அவன் தன் பேரருளால் காட்டுமிடத்து விண்ணிடத்து ஞாயிறுபோல் காட்டியும், கண்ணிடத்து மணிபோல் உடன் நின்று கண்டும் உபகரித்தருள்வன் எனவும் வரும் சித்தாந்த சைவச் செந்நெறி முடிபினைக் குமரகுருபர அடிகள் "விண்மணியாய் காண்போர் விழிக்குட் பொலிந்த துணைக் கண்மணியாய் நின்று எவையும் காடடுமால்"1 என்று இயம்புகின்றார். இதன்கண் காட்டும் என்றதனால் காணும் என்பதும் தானே போதரும். இவ்வாறு முதல்வன் திருவருளால் காட்டக்காணும் இயல் பினவாகிய உயிர்கள், அனாதியே ஆணவ மலத்தால் மறைப்புண்டு மெலிவது கண்டு அருளும் பரமன் அவை அம்மலத்தின் நீங்கி உய்திபெறும் பொருட்டு மாயாகாரியமாகிய உடல், கரணம், புவனம், போகம் என்ற இவற்றை உதவி, இவற்றிடையே அவை செய்யும் வினைகட்கேற்ப, நால்வகைத் தோற்றமும், எழுவகைப் பிறப்பும், எண்பத்துநான்கு நூறாயிரம் பிறவிவேற்றுமையும் படைத்து, அவற்றிற் பிறப்பித்தும், வினைப்பயனை அத்துவாக்களால் நெறிப் படுத்து நுகர்வித்தும் உய்விக்கின்றான் என்னும் சித்தாந்த நூன்முடி பினை, "முற்படுமாயை முதற்கரை நாட்டில்"2 என்ற திருவகவலில் விரித்துரைக்கின்றார். உயிர்கள் மெய்யுணர்வு பெற்று இன்பப்பேற்றுக்கு உரிமை யெய்த வேண்டின் சரியையாதித் தவங்களைச் செய்து ஞான நிலையை அடைய வேண்டும் என்றும், அக்காலை அவற்றிற்குச் சத்திநிபாதம் உண்டாமென்றும், அவ்விடத்துப் பரமன் குருவாய் எழுந்தருளி உண்மை ஞானத்தை உபதேசித் தருள்வன் என்றும் சித்தாந்த மெய்ந்நூல்கள் கூறும். குமரகுருபர அடிகள் ஞானதேசிக மூர்த்திகளை ஞானோபதேசம் அருளுமாறு வேண்டுமிடத்துத் தம்மைச் சரியையாதி தவநெறிகளில் மீட்டும் செலுத்தா தருளுமாறு வேண்டுவாராய் "சரியையில் தாழ்க்கலை கிரியையிற் பணிக்கலை யோகத்து உய்க்கலை" எனப் பரவுகின்றார். சத்திநி பாதமாவது* உயிர்கள் பரிபக்குவ மெய்துங்காறும் மறைந்து நின்ற திரோதானசத்தி, அஃது எய்தியவழி மறையாது வெளிப்படுதல், அப்போது பரமன் குருவாய் எழுந்தருளி ஞானத்தை அருளிச் செய்வன், இதனை, " சத்திநிபாதத் தன்மை வந்தடைந்தோர்க்கு அப்பொருள் புரிதற்கு அது பொழுது"1 என்றும், "சத்திநிபாதம் நின் சந்நிதிப் பட்ட இத்திறத்து எளிதினில் எய்தியது எனக்கே"2 என்றும் கூறுமாற்றால் அறியலாம். "அப்பொருள் புரிதற்கு அது பொழுது" என்பது ஞானோபதேசத்துக்குச் சத்திநிபாதம் வேண்டு மென்பதை வற்புறுத்துவதைக் காண்க. இனி, பரமனே குருமூர்த்தியாய் எழுந்தருளிவந்து ஞானம் உபகரிப்பன் என்ற சித்தாந்தக் கருத்தைக் குமரகுருபர அடிகள் இந்நூல் முழுதும் பாடல்தோறும் எடுத்தோது கின்றார். "சாயா மும்மலச் சகலரேம் உய்ய, எம்முருக் கொண்டும் எம்மொடு பயின்றும், மும்மலக் கிழங்கை முதலொடு மகழ்ந்து, சிற்பர முணர்த்தும் சற்குருராய"3 என்றும், "தாழ் சடிலத்தானவன் நாகம் பெறா மாசிலாமணிச் சம்பந்தனே"4 என்றும் பிறவாறும் கூறுதலை இந்நூற்கண் காணலாம். இவ்வண்ணம் குருவாய் எழுந்தருளும் பரமனது திருமுன் அடைந்தவர்க்கு அவன் அவர் தன்மையைக் கெடுத்துத் தன் தன்மையை எய்துவித்துத் தானாகச் செய்வன் என்பது "எரி இரும்பைச் செய்வதுபோல் இவனைத் தானாக்கி, அரும்பித்து இந் தனத்தை அனல் அழிப்பதுபோல் மலத்தை அறுத்து"5 எனவரும் திருவாக்கால் உணரப்படும். இக்கருத்தையே குமரகுருபர அடிகள், "தானவனாகிய தன்மை பெற்றானடி தாழப்பெற்றால் தாளவனாகிய தன்மை பெற்றுய்வன்"1 என்னும், சிவஞானத்தால் சிவோகம் பாவனை புரிந்து சிவமாந் தன்மை யெய்தும் திறத்தை, "நற்கமலை ஊரிற் குறுகினேன். ஓர் மாத்திரை அளவு என் பேரிற் குறுகினேன் பின்" என்றும் உரைக்கின்றார். என்பேர் சீவன் என்பது; இஃது ஒரு மாத்திரை குறுகியவழி சிவன் என்று ஆகும். மேலும், சிவஞான மெய்துமிடத்து, பசுகரணங்கள் செயலொழிந்து பதிகரணங்களாக மாறுதலின் அந்நிலை சும்மாயிருக்கும் தூயநிலையாகிறது. ஆகவே, அதனை ஏதுவாகக் கொண்டு சிவஞானப்பேறு சித்தியாதலின் அதனை, " வாக்கும் மனனும் யாக்கையும் ஒன்றாச் சொற்றரு கரணம் மற்றிவை மூன்றும் நின்புகழ் நவிற்றியும் நினைத்தும் நின் துணைத்தாள் அன்புடன் இறைஞ்சியும் இன்பம் உற்றனவால்; அவகரணங்களே யல்ல; மற்று அம்ம சிவகரணங்களாய்த் திரிந்தன அன்றே"2 என்றும், இவ்வாறு கரணங்கள் செயலொழியும் நலத்தை, " எம் ஆருயிராம் எழில் மாசிலாமணியை அம்மா பெறுதற்கு அரிதன்றே - சும்மா இருந்தாரே பெற்றார்; மற்று எவ்வுலகில் யாரே வருந்தாது பெற்றார் மணி" என்றும் பாடுகின்றார். இவற்றைப் போலவே வேதம் சிவாகமம் முதலியன சுத்தமாயையில் தோன்றும் என்பதும், அவை உணர்த்துவது பாசஞானம் என்பதும், மலம் மூன்றென்பதும், பிறவும் அடிகளால் நன்கு குறிக்கப்படுகின்றன. வேத வழக்கொடுபட்ட சமயங்கள் பலவும் சைவத்திறத்தை அடைதற்குப் படிமுறையாம் என்ற கருத்துத் தோன்ற இவர் பாடிய பாட்டொன்று இந்நூற்கண் காணப்படுகிறது. " பல்லுயிர்த் தொகுதியும் பயங்கொண்டு உய்க எனக் குடிலை என்னும் தடவயல் நாப்பண் அருள் வித்திட்டுக் கருணைநீர் பாய்ச்சி வேதமென்னும் பாதவம் வளர்த்தனை; பாதவம் அதனிற் படுபயன் பலவே; அவற்றுள் இலைகொண்டு உவந்தனர் பலரே; இலை ஒரீஇத் தளிர்கொண்டு உவந்தனர் பலரே; தளிர் ஒரீஇ அரும்போடு மலர் பிஞ்சு அருங்காய் என்று இவை விரும்பினர் கொண்டு கொண்டு உவந்தனர் பலரே; அவ்வாறு உறுப்பும் இவ்வாறு பயப்ப ஓரும் வேதாந்தமென்ற உச்சியிற் பழுத்த ஆரா இன்ப அருங்கனி பிழிந்து சாரம் கொண்ட சைவ சித்தாந்தத் தேனமுது அருந்தினர் சிலரே"1 என்பது அப்பாட்டு. இதன்கட் கூறப்படும் சமயங்கள் பலவும் வேதநூல் முதலாக எழுந்து ஒன்றின் ஒன்று உயர்ந்து சிறப்பெய்தி நிற்பதும், அம்முறையே சைவசித்தாந்தம் மிகச் சிறந்ததென்பதும் விளங்குகின்றன. இனி இவ் வேதமென்னும் மரத்தின் இலை முதலியன காட்டும் சமய வகைகளைச் சிவஞானபோத வசனாலங்கார தீபம் என்னும் நூல் "இங்கே வேதவிருக்ஷத்து இலையினால் தார்க்கிக மதத்தினரும், தளிரினால் மீமாஞ்சகமதத்தினரும், அரும்பினால் சாங்கிய மதத் தினரும், மலரினால் யோக மதத்தினரும், பிஞ்சினால் பாஞ்சராத்திர மதத்தினரும், காயினால் ஏகான்மவாத மதத்தினருமாக மூலப்பிர கிருதியைப் பற்றிய அறுவித சமயத்தினர் சூசிக்கப்பட்டார். உச்சியிற் பழுத்த பழத்தினால்"2 சிவாத்துவித வேதாந்தமும், "சித்தாந்தோ வேதாசாரத் வாத்" (சித்தாந்தம் வேதசாரமா யிருத்தலான்) என்று சுப்ரபேதமும், "வேதசாரம் இதந் தந்திரம்" (இந்தச் சித்தாந்தம் வேதசாரம்) என்றும், "வேதாந்தார்த்தம் இதம் ஞானம் சித்தாந்தம் பரமம் சுபம் (வேதாந்தார்த்தமாகிய இந்தச் சைவ சித்தாந்த ஞானமானது பரமோசிதமாம்) என்றும் மகுடாகமும், "வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத்திறன் இங்குத் தெரிக் கலுற்றாம்" என்று சிவப்பிரகாசமும் கூறுமாற்றால், உச்சியிற் பழுத்த சிவாத்துவித வேதாந்தமாகிய1 பழத்தின் சாரத்தினால் சைவ சித்தாந்தமும் சூசிக்கப் பட்டனாவம் என்க என்று விளக்கி கூறுகின்றது. இனி குமரகுருபர சுவாமிகள் இப்பண்டாரமும்மணிக் கோவையின்கண் பண்டைப் புராண வரலாறுகள் சிலவற்றை இடையிடையே ஏற்றவிடங்களில் குறித்துத் தாம் கூறக் கருதும் கருத்துக்களைச் சிறப்பிக்கின்றார். அவற்றைத் தொகுத்துக் காணு மாற்றால், அவை எவ்வெக்கருத்துக்களை எவ்வெவ் வகையில் சிறப்பிக்கின்றன என்று காட்டுவது ஆராய்ச்சி நெறிக்குச் சீரிதென்பர்; அதுபற்றி ஈண்டு நாமும் அவற்றை ஆராய்வாம். திருமாலும் பிரமனும் முறையே ஏனமும் அன்னமுமாய் உருக்கொண்டு பரமனுடைய அடிமுடிகளைக் காணமுயன்றனர் என்றும், அம்முயற்சியின் முடிவில் அவர் தோல்வியுற்றனர் என்றும் கூறுவர். இதனை நம் குமரகுருபர அடிகள் "..................பழமறைக் கிழவனும்.......... கமலக் கண்ணனும், அஞ்சிறைச் சுதைநிறச் செஞ்சூட்டு அன்னமும் செம்மயிர்க் கருங்கண் வெள்ளெயிற்று ஏனமும் ஆகுபு தனித்தனி அலமர நிவந்த மீகெழு பரஞ்சுடர்"2 என்று காட்டி, இவ்வாறு பிரமனுக்கும் திருமாலுக்கும் அரிது முயன்று தேடியும் காண்டற்கரியனாகிய பரஞ்சுடர் முதல்வன், சகலராகிய நம்போல்வார் எளிதிற் கண்டு இனிது வழிபடுமாறு மாசிலாமணி யென்னும் ஞானதேசிக மூர்த்தியாய் எழுந்தருளி யுள்ளான் என்னும் பொருண்மை சிறக்க, " மீகெழு பரஞ்சுடர் வெளிப்பட்டு அம்ம 1எம்மனோர் போல இனிது எழுந்தருளிக் கைம்மாறற்ற கணக்கில் பேரின்ப மோனவாழ்வு அளிக்கும் ஞானதேசிகன்"2 என்று இயம்புகின்றார். இனி, திருஞானசம்பந்த சுவாமிகள், பிள்ளைமைப் பருவத்தே சிவஞானசம்பந்தம் உற்றுச் சமண் சமயத்தை மறுத்த செயலை அடிகள் சிறிதே குறிக்கின்றார். ஈண்டு மாசிலாமணிதேசிக மூர்த்திகள் ஞானசம்பந்தர் என்ற சிறப்புப் பெயரும், சமயப் பிணக்கறுத்த சால்பும் உடையராதலைச் சிறப்பிப்பாராய், " ஆசற விளங்கும் மாசிலாமணி அமண்மாசு அறுத்த கவுணியர் பெருந்தகை பிள்ளைமை விடுத்த தள்ளரும் பருவத்து உள்ளதன் படிவம் உணர்த்துவ கடுப்ப மாநிலத்து அமர்ந்த ஞானசம்பந்தன்"3 என்று பாராட்டுகின்றார். பெயரும் செயலும் ஒத்தல்போல மேனிநிலை ஒவ்வாது முதுமை எய்தியிருப்பதனால், மாசிலாமணி தேசிக மூர்த்திகளை, "பிள்ளைமை விடுத்த தள்ளரும் பருவத்து" என்று சிறப்பிக்கின்றார். மாசிலாமணி தேசிக மூர்த்தி சமயப்பிணக் கறுத்த செயலைப் பிறாண்டு, "சின்னம் படைத்த முனி மாசிலாமணி"4 என்று கூறுகின்றார். இத்தருமையாதீனத்து ஆதி குருமகா சந்நிதான மாகிய குரு ஞானசம்பந்த சுவாமிகள், கண்கட்டி மறைஞான பண்டார மென்பார் ஆன்மாநந்த நெறியைப் படைத்து மேற்கொண் டொழுகிவர அவரோடு வாதம்செய்து அவர் நெறியினை அறவே மறுத்து வென்று முத்தி நிச்சயம் என்னும் நூலை இயற்றியருளினர் என்று அம் முத்திநிச்சய நூலின் சிறப்புப்பாயிரச் சிற்றுரை கூறுகின்றது. அக்குருமகா சந்நிதானத்தின் மூர்த்தமே மாசிலாமணி தேசிக மூர்த்தி என்பவாகலின் இவ்வாறு கூறப்பட்டதென வறிக. இனி, குரு ஞானசம்பந்த தேசிக மூர்த்திகள் திருவாருரில் எழுந்தருளி யிருந்த கமலை ஞானப் பிரகாசரென்னும் ஞானாசிரியர் பால் ஞானோபதேசம் பெற்ற வரலாறு, " நான்மறை நவின்ற நற்பொருள் இவையென மோனவாசகத்தான் முப்பொருள் நவிற்றுபு நன்னலம் புரியும் ஞானப்பிரகாசன் இன்னருள் பழுத்த செந்நெறிச் செல்வன்"1 என்பதனால் குறிக்கப்படுகிறது. இக்குறிப்பால் குமரகுருபர வடிகள் தமது ஞானாசிரியரது ஞான வரலாற்றினைச் சிறப்பிக்கின்றார். இதனைக் குருஞானசம்பந்த சுவாமிகள் தமக்கு ஞானோபதேசம் செய்த கமலை ஞானப்பிரகாசர்மீது பாடிய ஞானப்பிரகாச மாலையின் கண், " ஞானப்ரகாசன் கமலையில்வாழ் குருநாதன் சொன்ன மோனப்ரகாசத்தைக் கேட்ட வன்றே நெடுமூச்சலைவற்று ஊனப்ரகாசச் செயலற்று என்உள்ளம் உருக்கியென்றும் வானப்ரகாசத்து நேயத்திலே சென்று மண்டியதே" என்று விதந்தோதியது இவ்வரலாற்றுக்கு நல்ல சான்று பகர்கின்றது. இனி, வடவரையை மத்தாகவும் வாசுகியை நாணாகவும் கொண்டு தேவர்கள் பண்டு கடல் கடைந்தனர் என்பது புராண வரலாறு. இதனை மகளிர் தம் மார்பில் தொய்யிலெழுதிக் கச்சணிந்து மேலாடை போர்த்து விளங்கும் இயல்பினைச் சிறப்பித்தற்கண், " போந்தையங் கண்ணி வேந்துவிற் பொறித்த மன்பெருங் கிரியின் மென்கரும்பு எழுதித் தேசுலாம் பசும் பொன் சிகரமந்தரத்தின் வாசுகி பிணித்தென மணிக்கச்சு இறுக்கிக் கடாம் பொழி கரடக் களிநல் யானைப் படாம் புனைந்தென்னப் பைந்துகில் போர்த்துப் பிதிர் சுணங்கணிந்த கதிர்முகை மடந்தையர்"1 என உரைக்கின்றார். மார்பின் உயர்வும், மணி நிறக்கச்சின் மாண்பும் விளங்க முறையே வடவரையும் வாசுகியும் காட்டிக் கடல் கடையப் பெற்ற வரலாற்றை நினைப்பிக்கின்றார். மார்பு முன்றிலில் எழுதிய கரும்பாகிய தொய்யிலை, இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் வடநாடு சென்று ஆங்கு நிற்கும் வடவரையில் பொறித்த விற்குறிக்கு எடுத்துக் குறிக்கின்றார். அதனைப் "போந்தையங் கண்ணி வேந்துவிற் பொறித்த மன் பெருங்கிரி" என்று ஓதுதல் காண்க. இனி ஈழநாட்டரசன் மகள் மூங்கையாய் இருந்தாளை மணிவாசகப் பெருந்தகை தில்லையம்பதியில் பேசுவித்தாரென்பது அவரது புராண வரலாறு. இதனைக் குமரகுருபர சுவாமிகள் தமது ஞானாசிரிய மூர்த்திகளை, தமக்கு ஞானோபதேசம் செய்தருளு மிடத்து "இவ்வுபதேசத்தைச் சத்தி நிபாதத் தன்மையடைந்த தகுதியாளர்க்கு அருளுவது ஒரு வியப்பாகாது;" " சொற்றமிழ் விரகன் துணைக்கண் சாத்த முற்றுணர் கேள்வியர் பற்பலராயினும் கைசொலக் கேட்கும் கட்செவி மூங்கைக்கு உய்வகை புணர்த்தது ஒருவியப்பு ஆகலின் அன்னது கடுப்ப நின் சந்நிதி விசேடத்து இன்னருள் பெறாதவர் யாவரும் இலர் என வியப்புள தாக நயப்பது ஒன்றுளதே"2 என்று காட்டி இயைபுபடுத்துகின்றார். இதன்கண் சொற்றமிழ் விரகன் என்பது மணிவாசகப் பெருமானை, ஊமைகள் கைக்குறி களாற் சாடைகாட்டிச் சொல்லக் கண்ணாற் கண்டறியும் இயல் பினராதலின், "கைசொலக் கேட்கும் கட்செவி மூங்கை" யென்றார்; "கையினாற் சொலக் கண்களிற் கேட்டிடும் மொய்கொள் சிந்தையின் மூங்கையு மாயினேம்"3 என்று திருத்தக்க தேவரும் கூறியிருத்தல் காண்க. எண் பதத்தால் செலச் சொல்லும் ஏற்றமிக்க கல்வி கேள்வியுடைய ராயினும், மூங்கைகட்குக் கையிற் சொல்லிக் கண்ணாற் கேட்பித்தலே செயற்பாலர் என்றற்கு "முற்றுணர் கேள்வியர் பற்பலராயினும்" என்றார். எவ்வாற்றானும் செவியிற் கேட்டலும் வாயாற் சொல்லலுமாகிய தகுதியிலாத மூங்கைப் பெண், மணிவாசகப் பெருமானுடைய சந்நிதி விசேடத்தால் பேசும் தகுதிபெற்றதே வியப்புத் தருவதாம். அதுபோல ஞானம் பெறுதற்குப் பக்குவமில்லார்க்கு அதனைப் பெறுவிப்பது தேவரீருடைய சந்நிதானச் சிறப்பு; இதுவே பெருவியப்பாவது என்பார், "நின் சந்நிதி விசேடத்து இன்னருள் பெறாதவர் யாவரும் இலரென, வியப்புளதாக நயப்பது ஒன்று உளதே" என்று கூறுகின்றார். இனி, இறைவன் மார்க்கண்டனுக்கு வயது பதினாறென்று குறித்தருளியதும், அவ்வெல்லைக்கண் அவன் உயிரைப்பற்றற்குப் போந்த நமன் இயலாது உயிர் தோற்றதுமாகிய வரலாறு புராணத்துட் கண்டது. இதனை, " சமையந் தீர்ந்த தனிப் பொருள்தெரித்தற்கு அமையம் தேர்கலை அருளுதி யாயினும் எண்ணீராண்டைக்கு இலக்கமிட்டு இருந்த அண்ணலங் குமரற்கு ஆருயிர் தோற்ற கடாவிடை யூர்திபாற் கண்டும் அடாதென மொழிகுநர் யார்கொல் மற்று உனையே"1 என்பதன் கண் கூறுகின்றார். "வேதவழக்கொடுபட்ட ஏனைச் சமயங்கள் எல்லாவற்றிற்கும் அதீதமான சிவஞானத்தை உபதேசித் தற்குக் காலம் நோக்குதல் வேண்டா; நீ காலம் நோக்குவதில்லை; நோக்காமை நினக்குப் பழிப்புமன்று" எனத் தாம் செய்துகொள்ளும் வேண்டுகோட்குச் சிறந்த ஆதரவாக இவ்வரலாற்றினை அடிகள் எடுத்துக்காட்டும் திறம் மிக்க இன்பம் பயப்பதாகும். பதினாறென வயதெல்லை குறிக்கப் பட்டவன் மார்க்கண்டன்; அத்தகைய குறிப்பொன்றும் இல்லாதவன் நமன்; மார்க்கண்டன் இறவாமையும் நமன் இறந்தமையும் நீ காலம் நோக்கும் கருத்துடையையல்லை என்பதை வற்புறுத்துகின்றன என்பார், "எண்ணீராண்டைக்கு இலக்கமிட்டிருந்த அண்ணலங் குமரன்" என்றும், "ஆருயிர் தோற்ற கடாவிடை யூர்தி" என்றும் குறிக்கின்றார். அண்ணலங் குமரன் - மார்க்கண்டன், விடை-எருமை. யார்கொல் என்பது ஒருவரும் இலரென்பதுபட நின்றது. நமன் உயிர் தோற்றான் என்பதை "பால்முளை தின்று மறவி உயிர் குடித்த கான்முளையே போலுங்கரி" என்று பிறாண்டும் இவரே கூறுதல் காண்க. இனி, திருவிடைமருதூரில் தவம்புரிந்த உமையம்மைக்கு வழிபாட்டு நெறியை அறிவித்தற்குச் சிவபெருமான் தானே சிவபூசனை செய்து காட்டினான் என்பது அவ்வூர்ப் புராண வரலாறு. மாசிலா மணிதேசிகர் "செக்கர்வார் சடைச் சொக்கநாயகனை, ஈரெண்திறத்து உபசாரமும் வாய்ப்பப் பூசனைபுரியும்" திருச் செயற்கு அமைதி காட்டுதற்கு இவ்வரலாற்றினை, " சூழ்போய்நிவந்த ஆழ்கடல் உலகத்து இன்னருள் திறத்தால் இடைமருது அமர்ந்த பொன்னவிர் கடுக்கைப் புரிசடைப் புங்கவன் அமையாக் காதல் இமைய வல்லிக்கு வழிபடல் முறைமை விழுமிதின் உணர்த்தத் தானே தன்னைப் பூசனை புரிந்தென"1 என்று புகழ்கின்றார். குமரகுருபர சுவாமிகளின் செந்தமிழ்ப் பாடல்களைக் காண்போர் அவர்களுடைய புலமை, பாவன்மை, நாவன்மை என்பனவற்றை நினைந்து நினைந்து இன்புறுவது தமிழ்நாட்டில் பெருவழக்கு. புறத்தே காணப்படும் இயற்கைக் காட்சியைத் திரிபு சிறிதுமின்றிப் பொறிவாயிலாக வாங்கி உள்ளக் கிழியில் உருப்பட வகுத்தமைத்து, அதன் நலம் தேர்ந்து இன்புறும் புலமை நலமும் அக்காட்சியைச் சீரிய கூரிய தீஞ்சொற்களால் படிப்போரும் கேட்போருமாகிய நன்மக்கள் மனத்தே தோற்றுவித்து இன்புறுத்தும் பாநலமும், அக்காட்சிக்கண் நிலவும் ஒவ்வொரு பொருளின் உண்மை நிலையையும் உள்ளவாறு தீட்டுஞ் சொல்வன்மையும் நினைக்குந்தோறும் நினைக்குந் தோறும் பேரின்பம் சுரக்கும் நிர்மையனவாகும். திருவாரூரின் சிறப்பினைக் கூறலுற்ற அடிகள், அதன் கண் செழுமலரோடையும், செண்பகாடவியும் வியன்மணிப் புரிசையும் திருவுற அமைந்திருத்தலை எடுத்தோதி, அங்கே வாழ்பவர் கற்றும் கேட்டும் இன்புறும் தமிழ் மாண்பினை வியந்து, "வண்டமிழ்க் கமலைப் பெரும்பதி" என வழுத்துகின்றார். ஏனைப் புரிசை முதலிய வற்றைச் சிறப்புறக் கூறுமிடத்து விண்ணுலகத்துள்ள கற்பகச் சோலைக்கு "வேலியிட்டன்ன வியன்மணிப் புரிசை" என்றும், செண்பகாடவி அண்ட கோளகை, எண்திசை என்ற இவற்றைத் தன்தடக்கையை "நீட்டி அளந்தன்ன, சேட்படநிவந்த செண்பகாடவி" என்றும் கூறினவர் செழுமலரோடையை இனிய செஞ்சொற்களால் ஓவியம் செய்கின்றார். நீரோடையின் கண் செந்தாமரையின் இலைகள் பரந்திருக்கின்றன; அவற்றின் இடையிடையே செந்தாமரைப் பூக்கள் செவ்விதழ் விரிந்து மலர்ந்திருக்கின்றன; இக்காட்சியை அடிகள் நம்மனோர் மனத்தே சொல்லோவியம் தீட்டக் கருதி, உவமையொன்று காட்டுகின்றார்; அஃதாவது, மரகதத்தால் இயன் ற தகடொன்றில் சிவந்த மாணிக்கமணிகளை இடையிடையே பதித்தாற்போல இம்மலரோடையுளது என்பது. இதனை, " விரிகதிர் பரப்பும் மரகதத் தகட்டில் சுடர்செய் செம்மணி இடையிடை பதித்தெனப் பாசடைப் பரப்பிற் பதும ராசிகள் சேயிதழ் விரிக்கும் செழுமலரோடை"1 என்று வரும் பாட்டடிகளிற் காண்க. இனி, கூடற்பதியின் இயற்கை நலத்தைக் காட்டப் புகுந்த குமரகுருபர சுவாமிகள் அதன் தமிழ் கமழும் பெருநலத்தை மறவாதே "தமிழ்ப் பெருங் கூடல்" என்று மனமகிழப் பாடி, அதனைச் சூழ்ந்துள்ள தண்பணையை நமக்கு அறிவிக்கின்றார். அத்தண்பணைச் சோலைக்கண் வேங்கையும் புன்னையும் மலர் செறியப் பூத்து நிற்ப, புன்னைக்கிளையில் ஒரு மயில் தன்கோலக் கலாபத்தை விரித்து அசைந்தாடுகிறது; அதன் தோற்றம், கற்பகச் சோலையில் ஐராவதத் தின்மேல் தோன்றும் இந்திரனது இருப்பை ஒத்திருக்கிற தென்பார், " பொன்துணர் பொதுளிய கற்பகப் பொதும்பர்....... ........................கோடு பல தாங்கிக் கவளம் கொள்ளாத் தவளமால் களிற்றின் கண்பல படைத்த கார்முகில் வண்ணத்து இந்திரன் பொலியும் எழில்நலம் காட்டும்"1 என்று இசைக்கின்றார். இங்கே கூறிய வண்டு மூசாத மலர்களை யுடைய கற்பகப் பொதும்பரை நினைப்பித்து வேங்கை மரங்கள் நிற்கும் காட்சியை, " கொளற்குரி மாந்தர்க்கு அளித்தல் செய்யாது அரும்பூண் சுமந்த அறிவிலாளரின் சுரும்பு ஊண் வெறுத்த துதைமலர் வேங்கை தன்மருங்குறீ இப் பொன்மலர் பிலிற்ற"2 என்றும், ஐராவதத்தின் காட்சியை நல்கும் வெள்ளிய மலர் நிறைந்த புன்னைமரத்தை, "இலையறப் பூத்த துதைமலர்ப் புனனை" என்றும் சிறப்பித்து, அதன் கிளையில் அசைந்தமரும் கலாபம் விரிந்த மயிலின் தோற்றத்தை, " மெய்ப்புலன் நோக்கார் கட்புலன் கடுப்ப இமையா வறுங்கண் இமைத்த பைங்கூந்தல் பசுந்தார் மஞ்ஞை அசைந்தமர் தோற்றம்"3 என்று பகர்கின்றார். இவ்வாறு கூறும் இவர், இவ்வேங்கையும் புன்னையும் மிடைந்து இருள் மண்டிக் கிடக்கும் பொழிலின் பொது வியல்பை, " பந்தனை தவிராச் சிந்தனை நிகர்ப்பப் பாயிருள் பரந்த மாயிரும் பொழில்"4 என்று தெரிவிக்கின்றார். இனித் தருமையம்பதியின்கண் நாற்புறமும் மருதத் தண்பனை சூழ்ந்து, இடையிடையே நீரோடைகள் நிறைந்திருப்பதும், அவற்றில் மகளிர் நீராட்டயர்ந்தும், புலவியின் தீர்ந்து கலவியிற் களித்தும் நீராமகளிரின் பேரெழிலைக்காட்டுகின்றன ரென்கின்றார். இவ்விடத்தே அம்மகளிர்க்கு இடைசிறுத்திருக்கும் சிறப்பை, " ஈயா மாக்கள் தீமொழி கவர்ந்த சிற்றிடை"1 என்றும் அவர்கள் நீராட்டயரும் அழகை, " மைவிழி சேப்பச் செவ்வாய் விளர்ப்பக் கருங் குழல் சரிய வெள்வளை கலிப்பச் சீராட்ட யரும் நீராட்டு"2 என்றும் எடுத்துக்காட்டுகின்றார். இவ்வாறே, அடிகள், திருவாரூரை வேறுபல பாட்டுக்களிலும் சிறப்பித்திருத்தலை முன்பே கண்டுள்ளோ மன்றோ! அடிகள் காட்டும் சொல்லோவியங்கள் சிலவற்றை இனிக்காண்போம். பல்வளம் சுரக்கும் பைந்தமிழ்க் கமலையை மனக்கண்ணில் காணும் குமரகுருபர அடிகள், ஆங்கே இருக்கும் செய்குன்று களையும், சந்திரகாந்தத்தாற் செய்த குன்றுகளையும் கண்டு அவற்றின் நலத்தை எடுத்துக் கூறுகின்றார் முதற்கண் கூறிய செய்குன்று மாளிகைகள் நிறைந்த இடத்தே காணப்படுகிறது; அம்மாளிகைகள் விண்ணுலகையும் கடந்து உயர்ந்து நிற்கின்றன; செய்குன்றுகள் மதிமண்டலத்தையும் விஞ்சி நிமிர்ந்துள்ளன. சந்திரகாந்தச் செய்குன்றுகள் முற்கூறிய செய்குன்றருகே உள்ளன. அக்குன்றிடத்தே மடந்தையர் இருந்து கின்னரர் வியக்கும் கீதம்பாடுவாராக, அவர் முகமாகிய மதியின் ஒளியால் அச்சந்திர காந்தச் செய்குன்றுகள், அம்மகளிரைக் காணும் மைந்தர்போல உருகுகின்றன என்று கூறுவார், " மடந்தையர், ............................... கின்னரம் வியக்கும் கீதம் பாட நகைநிலவு எறிக்கும் முகமதி காQஉச் சந்திர காந்தத்திற் சமைத்த செய்குன்றம் மைந்தர் போன்று உருகி மழைக்கணீர் சொரிய"3 என்று பாடுகின்றார். செய்குன்றின் உயர்வைத் திங்கள் பிடரைக் கையில் தாங்கி மேலே அண்ணாந்து பார்க்கும் என்ற கருத்துப்பட "சுவல்கைத் தாங்குபு மதி யணந்து பார்க்க" என்றது. முன்பு மதுரைக் கலம்பகத்தில், "தூணறா முழவுத் தோள்மடித்து உம்பர் சுவல்பிடித் தணந்து பார்த்து உணங்கும் தோரணமாடக் கூடலின் சோமசுந்தரா சந்திர சேகரனே" என்று கூறியதனை ஒத்திருக்கின்றது. சந்திர காந்தச் செய்குன்றம், திங்களின் ஒளியால் உருகவேண்டியிருப்ப அத்திங்கள், சுவல் கைத்தாங்கி, மேலே அணந்து சேணிகந்து ஓங்கும் செய்குன்றின் பொலிவு நோக்குதலின், கீழ் நோக்கி விளங்கிய மகளிரின் முகமாகிய மதியின் ஒளிக்கு உருகிற் றென்பாராய் அவர்தம் மேனிநலத்தால் அறிவு மயங்கும் ஆடவரை உவமித்து "மைந்தர் போன்றுருகி மழைக்கணீர் சொரிய" என்று இயம்புகின்றார். இவ்வாறு அறிவு பிறிதாகி மயங்கும் ஆடவர் செய்கையைப் பளிங்கினால் அமைத்த நிலாமுற்றத்தே மகளிர்சிலர் விளையாட் டயரக்கண்டு, அவர்தம் குழலும் கண்ணும் முகமும் முறையே, " சைவலம் படர்ந்து தடங்கயல் உகளும் செய்யபூங் கமலச் செழுமலரோடை யென்று"1 நினைப்பிக்க மயங்கி, முதற்கண் தேவமகளிரெனக் கருதி, "வம்மின் வம்மின் மடந்தையர் நீவிர் மற்று, அம்மெல்லோதி அரம் பையராதலின்" என்றும், பளிக்குநிலா முற்றமென ஓராது "நீர்நிலை நிற்றிரால்" என்றும், அதனால் நீவிர் நீரரமகளிரோ என்றும், தேவமகளிர் நீர்நிலைநிற்றல் இன்மையின் உங்களைத் தேவமகளி ருள்ளும் நீரரமகளிருள்ளும் இன்னாரெனத் தெளிதல் அரிதாகிறது; அதனால், நீவிர் இவ்விருவகையினருள், "யார் கொல்; யார்கொல்; இசைமின், இசைமின்" என்று இரந்து பின்னிற்ப, அவர்கள் மறுமொழி கொடாது குறுநகை முகிழ்த்துத் தாம் மானிடமகளிரை என அவர்தம் ஐயுறவை அகற்றித் தெளிவிக்கின்றார்கள் என்றும் நயம் படவுரைக்கின்றார். ஐயமிகுதியால் அமைதிபெறாதார்க்கு வாயாற் பல சொல்லித் தெளிவித்தலினும், குறிப்பால் உய்த்துணர வைத்தல் சீரிது என்பார்போல், "மறுமொழி கொடாது குறுநகை முகிழ்த்தாங்கு, ஐயுறவு அகற்றும்" என்கிறார். திருவாரூர்த் தண்டலைகளில் வேர்ப்பலா மரங்கள் நிற்கின்றன. உரிய காலத்திற் பெய்த மழையால் அவை நன்கு தழைத்துப் பழுத்துப் பழங்கள் பல வேரிடைக் கிடக்க விளங்குகின்றன. அவ்விடத்தே மந்தியொன்று போந்து, வேர்ப்பலாப் பழம் ஒன்று தரைக்குள் வெடித்திருப்பக் கண்டு, அவ்வெடிப்பிடம் சென்று, அதனைக் கீண்டு, சுளைபலவற்றைத் தோண்டியெடுக்கின்றது. இதனை ஒரு சொல்லோவியந் தீட்டி நம்மை இன்புறுத்தக் கருதும் அடிகள், " மழைக்குலம் தழைப்பத் தழைத்த தீம்பலவின் வேரிடைப் பழுத்துப் பாரினுட் கிடந்த முட்புறக் கனிகள் விட்புறக் காண்டலும் சிறு கண் மந்தி குறிவழிச் சென்று கீண்டுபொற் சுளைபல தோண்டுவது, அம்ம,"1 என்று முதலில் மந்தியின் செயலைக் கண்டாங்கு அறிவித்து, தமக்கு இயல்பாகவுள்ள மதிநுட்பத்தால் உவமையொன்று காட்டி நம் உணர்வின்கண் உவகை பெருகுவிப்பார், " முற்பகல் ஒருவர் பொற்குடம் நிரம்பப் புதைத்தனர் வைத்த நிதிக்குழாம் அனைத்தும் வஞ்சகம் பழகும் அஞ்சனக் கள்வர் கண்டு கண்டு எடுக்கும் காட்சித்து"2 என்று கவிநலம் செய்கின்றார். "புதைத்தனர் வைத்த நிதிக்குழாம்" தரையினுள் தமது உண்மையினைப் பலாவைப் போலத் தோற்றுவியா வென்பதைப் பரிகரிப்பார். அதனைக் காண்டற்கு அக்கள்வர் தம்பால் அஞ்சனமை வைத்திருக்கின்றார்களென்பார் அஞ்சனக் கள்வர் என்று ஓதுகின்றார். இவ்வாறு, பொழிற்காட்சியால் மகிழ்வித்த அடிகள் நீர் நிலைகளில் காட்சியொன்றை நினைப்பிக்கின்றார். நீர் நிலைகளில் சங்குகள் நிரம்ப இருந்து மிக்க ஒளிவீசும் முத்துக்களை ஈன அவற்றின் வெள்ளிய ஒளி பரந்து நிலவினைச் செய்கிறது. அந்நிலவைக் கண்டு மலர்ந்த செந்தாமரை இதழ் குவிகிறது. அக்காலை, அதன்கண் வீற்றிருந்த வெள்ளிய அன்னம் அதன் அகத்தே அடங்குகிறது. இதனை, " கரையெறிந்து ஆர்க்கும் பொருபுனற் படுகரில் பணிவம் ஈன்று அளித்த மணிநிலாப் போர்ப்பத் தருணவெள் ளெகினம் தன்னகத் தடங்க அருண முண்டகம் அகவிதழ் முகிழ்ப்பது"1 என்று பாடுகின்றார். தருணவெள்ளெகினம் என்றது வெள்ளை யன்னத்தின் பார்ப்பு; முதியதாயின் தாமரைப் பூவிற்குள் அடங்கா தாகலின் "தருணவெள்ளெகினம்" என்கிறார். அருண முண்டகம் - செந்தாமரை. மணி - முத்து, மனவுணர்வில்லாத ஓரறிவுயிராதலால் முண்டகம் முத்தின் வெள்ளொளியை நிலவொளியென்று கருதி முகிழ்த்தது என அறிக. இனி, இம்முத்தின் நிலவொளியை வெள்ளாடை யாகவும் செந்தாமரையை நீர்மகட்குக் கையாகவும் அமைத்து, அவள் அவ்வன்னப் பார்ப்பினைப் பிடிப்பதாகக் காட்டி, " அருண முண்டகம் அகவிதழ் முகிழ்ப்பது தெண்டிரை உடுத்த தீம்புனல் மடந்தை வெண் துகிற்படாஅம் விரித்தனள் போர்த்து வள்ளவாய்க் கமலம் மலர்க்கையால் வளைத்துப் பிள்ளை வெள்ளெகினம் பிடிப்பது கடுக்கும்" என்று அழகுறுத்துவது மிக்க இறும்பூது பயக்கின்றது. முன்னர், பளிக்கு நிலா முற்றத்தில் நின்ற மகளிரைக் கண்டு ஐயுற்றுத் தடுமாறிய ஆடவர்போலச் சேவலன்ன மொன்று தனது பெடையன்னம் தாமரையின் தாதளைந்து நிறம் வேறுபட்டுத் தோன்றக் கண்டு மருளும் காட்சியொன்றினை "ஏழுயர் மும்மதச் சூழிமால் யானை" என்று தொடங்கும் திருவகவலில் தெரிவிக்கின்றார். நீர் மிக நிறைந்த வாவியொன்றில் வெண்டாமரைகள் செறிய மலர்ந்திருக்கின்றன. அவ்வாவியில் யானையொன்றைப் பாகர் நீராட்டுகின்றனர். அவ்யானை நீரை உழப்பதால் எழுந்த அலைகள் வெண்டாமரைப் பூக்களை அலைப்ப, அப்பூவின் பொன்னிறத்தாது பூவொன்றில் வீற்றிருந்த பெடையன்னத்தின் மேற் படிந்துவிடவே, அது மேனி நிறம் வேறுபடுகிறது. பின்பு அங்குப் போந்த அதன் சேவலன்னம், அவ்வேறுபாடு கண்டு மருண்டு "இது நம் பெடையன்று! இவ்வாவி மலரோடையுமன்று" என்று கருதிக்கொண்டு " படரும் வெண்டாமரை படர்ந்ததையன்று, இது கவுடளர் அமுதம் கடைந்த பாற்கடலே" என்றும், அங்கே படிந்து நீராடும் அக்களிறு, " காந்து வெங்கனற்கண் களிறுமன்று, இது கடல் சாய்ந்தெழு மந்தரத் தடங்கிரியதுவே" என்றும் நீராட்டும் யானைப்பாகரை நோக்கி, " போகுவா லுறுப்பும் புழைக்கையும் தைவரும் பாகரோ வாசுகி பற்றும் வானவரே" என்றும், ஆங்கே சிதறித் தோன்றும் முத்துக்களை, " பொங்கி வெண்ணிலவு பொழிந்த வெண் தரளமன்று, இங்கு இது அங்கு அதில் எழுந்த ஆரமுதே" என்றும், பரந்து தோன்றும் இலைகளைப் பார்த்து, " கொடிவிடு பாசடைக் குழாமன்று, இங்கு இது அக் கடலிடைத் தோன்றிய கற்பகாடவியே" என்றும், நிமிர்ந்து மலர்ந்து நிற்கும் செந்தாமரைகளைக் கண்டு, " சேயிதழ் விரிக்கும் செந்தாமரை இது அன்று, ஆயதன் வடிவாய் அமர்ந்த மாநிதியே" என்றும், சங்குகளைக் கண்டு சமழ்ந்த அவ்வன்னம், அதனோடு ஆங்கிருந்த செந்நெட்டியையும் தனித்தனியே நோக்கி, " சங்கம் அன்று இது, அதன் தனிப்பெயர் நிதியே; செங்கிடை அன்று, இது சிந்தாமணியே; என்றும் எண்ணி, "இவ்வாற்றால், இவ்வன்னம் நமது பேடையன்று; தாமரையில் தோன்றிய திருவேயாகும்" என்று மருளுகின்ற தென்பார், " ஆதலின் நமது பேட்டன்னமும் அன்று இது, அப் போதில் அங்கு உதித்த பொலங்கொம்பன்றே என்றுஉளம் மருளஓர் எழில்நலம் பயக்கும்"1 என்று இனிமை கனிய இசைக்கின்றார். பதிப்பொருளாகிய முதல்வன் உயிர்களிடத்தில் வைத்த பெருங்கருணையால் அவை உண்மை ஞானத்தால் பந்தத்தின் நீங்கி வீடுபெறும் பொருட்டு வேதத்தை யருளியதும். அதனை முதலாகக் கொண்டு அதன் முடிவில் தெளிந்துணரப்படும் சித்தாந்த சைவச் செந்நெறியினை மேற்கொள்ளாது, அவ்வேதத்திற் கிளைத்துத் தோன்றும் பிறவற்றைப் பல உயிர்கள் மேற்கொண்டதும் எடுத்துக் கூறக் கருதும் குமரகுருபர அடிகள் அதனை ஒரு மரமாக உருவகம் செய்து, " பல்லுயிர்த் தொகுதியும் பயங்கொண்டு உய்க எனக் குடிலை யென்னும் தடவயல் நாப்பண் அருள் வித்திட்டுக் கருணைநீர் பாய்ச்சி வேதமென்னும் பாதவம் வளர்த்தனை"2 என்று உரைக்கின்றார். இதனால் பரமனது திருவருளினின்றும் சுத்தமாமையில் தோன்றி அவனுடைய கருணையால் சிறப்பெய்தியது வேதம் என்று கூறும் அடிகள், அதனைத் தோற்றுவித்த நோக்கம் இதுவென்பார், "பல்லுயிர்த் தொகுதியும் பயம் கொண்டு உய்க" என்பதே என்கின்றார். பழமென்னாது பயம் என்றதனால் பழத்தின் சாரமாகிய தேனே பெறற்குரியதென்றும், அது சித்தாந்த சைவச் செந்நெறியே என்பதும் கூறினாராயிற்று. இதனைச் சிலரே கொண்டனர்; பலர் பயம் கொண்டு உய்யாது, இலையும் தளிரும் அரும்பும் பூவும் பிஞ்சும் காயும் என்ற இவற்றையே கொண்டனர் என்கின்றார். இவ்விலை முதலாயின இவையென முன்னர்க்கூறினாம். "சைவ சித்தாந்தத் தேனமுது அருந்தினர் சிலரே" என்றது இந்நெறி யினைச் சாரும் தவத்தைச் செய்தோர் சிலரே என்றவாறு. இனி, இறைவன் உயிர்கட்கு அருளுமாற்றால் இருநூற்றிருபத்து நான்கு புவனங்களையும், நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்புக்களையும், எண்பத்து நான்கு நூறாயிரம் பிறவி வேறுபாடு களையும், வினை வகைகளையும், அவற்றின் பயனை நுகர்வித்தலையும், பிறவற்றையும், ஒருநாடு, நாட்டின் பகுதி, நீர்வரும் கண்ணாறு, வயல்தரம், வயல்கள், பயிர், மதகு, வாய்க்கால், புனல் புனலடைப் பதும் விடுப்பதும் செய்யும் மடை. ஊற்று ஏரி என்பன முதலியவற்றோடு உருவகம் செய்துரைத்தலை "முற்படுமாயை முதற்கரை நாட்டில்" என்று தொடங்கும் திருவகவற்கண் காண்க. இனி, புலன்களின்மேற் செல்லும் அவாவினால் உயிர்கள் ஈர்ப்புண்டு பிறப்பிறப்புக்களால் பெருந்துன்பம் உற்று உழல்வதை, யானைகளால் ஈர்ப்புண்டு வெவ்விய காட்டகத்தே உலவும் செயலில் வைத்து, " இருகால் சுமந்த ஒருபெருஞ் சேவகத்து ஐம்புலக் களிறும் தம்புலத்து இழுப்ப ஊனிடைப் பிறவிக் கானகத்து உழலாது" என்று ஓதுகின்றார். புலக்களிறு தமது புலமாகிய கானகத்தே இழுத்தலால் கானகம் புகுந்து வருந்தாது இன்பவீடு அடைந்து இனிதிருத்தற்கு, " ஏனைய முத்திநா டெய்த ஓர் ஞான வாரணம் நல்குதி" என்பது மிக்க இன்பமும் நயமும் பொருந்தியிருக்கிறது. இனி, அடிகள் தமது ஞானாசிரியரைத் தனக்கு ஞானோபதேசம் செய்தருள வேண்டுகின்றார். அவ்வுபதேசம் பெறுதற்குரிய பக்குவம் நின்பால் இன்றெனக்கூறி அருளாதொழியின் என் செய்வது என்ற கருத்தால், "அவ்வாறு செய்யின் நினக்கே பரிபவமாம்" என்பார், "பாகம் இன்று எனக்கென அருளாதொழியினும் பரிபவம் நினக்கே" என்று இறைஞ்சி மொழிகின்றார். எவ்வாறென்னின், "இப்போது எம்முருக் கொண்டு எம்போல் வந்து எழுந்தருளிய நீ பின்னர் அடியேன் பக்குவம் எய்துங் காலத்தும் இவ்வாறு எழுந்தருளவேண்டி யிருத்தலின், அருளா தொழியின் வருவது பரிபவமே என்பாராய், "எனைப்போல் அடிக்கடி தோன்றலை, ஈதியால் இன்னருள் இன்னணம் எனக்கே" என்று இயம்புகின்றார். இறைவன் குருமூர்த் தமாய் ஒருகால் வந்தவன் பின்னரும் வருவன் என்பதற்கு ஏது கூறுவார், உவமையும் ஓர் அளவையாவது பற்றி உவமையொன்று எடுத்துக்காட்டிச் சாதிக்கின்றார். இறைவன் உயிர்கட்குத் தாயாகித் தலையளிக்கும் தட்பமுடையனாகும் இயைபுபற்றி, " சேய்முகம் பாராள் சினந்தனள் ஏகினும் போயெடுத்து ஆற்றும் அத்தாய் மீட்டன்றே" என்றுகாட்டி, "ஆதலின் எனைப்போல் அடிக்கடி தோன்றாது இப்போதே நின் இன்னருளைச் செய்தருள்க" என்று வேண்டுகின்றார். இனி, குமரகுருபர சுவாமிகள் அருள் வள்ளலாகிய மாசிலாமணி தேசிகர்பால் தாம் வேண்டும் ஞானோ பதேசத்தைப் பரிசில் வேண்டி வள்ளலொருவன்பாற் சென்று இரக்கும் புலவன்போல வேண்டுவாராய் வள்ளியோர் இயல்பு இஃது எனக்கூறி அன்ன இயல்பினையுடை நீ எனக்கு அருளல் வேண்டும் என்பார், " மாசிலாமணி ஞானசம்பந்த! எனையாட் கொள்ள வந்தெய்தினை யாதலின் முனியாது ஒன்றிது மொழிகுவன் கேண்மதி" என்று முன்மொழிந்துகொண்டு, மேலும் சொல்வாராய், " கற்றன ராயினும் கல்லா ராயினும் அற்றன ராயினும் அடைந்தனர் தமையெனில், காலம் பாரார் கருத்தினை யளவார் சீலம் நோக்கார் தீக்குணம் கொள்ளார் பரிசிலர் வேண்டிய பரிசு மற்றெல்லாம் வரிசையோடு அளிப்பது வள்ளியோர் கடனே" என்று வள்ளியோரின் கொடைச் சிறப்புக் கூறித் தம் கருத்தை விண்ணபித்துக் கொள்கின்றார். மாசிலாமணி தேசிகர்க்கு ஞானசம்பந்தர் என்னும் சிறப்புப் பெயருண்டாதலால், அச்சொற் பொருளைக் கொண்டு இன்ப வுரையாட்டொன்று செய்கின்றார். ஞானசம்பந்தம் என்பது சம்பந்த மென்றும் வழங்கப் படுவதுண்டு. சம்பந்தம் என்னும் சொல் கொள்வதும் கொடுப்பதுமாகிய இரண்டினையும் ஒருங்குணர்த்தும் ஒட்பமுடையது. அதனால், குமரகுருபர அடிகள், தமது குரு மூர்த்தி களைப் பார்த்து வணங்கி, "தேவரீர் அடியேனது வடிவத்தைக் கொண்டதனால், தேவரீரது வடிவத்தை அடியேனுக்கு அருளல் வேண்டும்" என்பார், " என்வடிவம் நின்வடிவாக் கொண்டாய் எளியேற்கு உன் தன்வடிவம் நல்கத் தரும் கண்டாய்" என்று மொழிந்து, இதற்கு ஆதரவு கூறலுற்று, "-மன்வடிவால் வெம்பந்தம் நீக்கும் விமல நீ மெய்ஞ்ஞான சம்பந்தன் என்பதனால் தான்" என்று இயம்புகின்றார். இவ்வாறே பிறிதோரிடத்தும், "சம்பந்தப் பெயர் தரித்தமையால் எமைச், சம்பந்தம் செய்யத் தகும் தகும் நினக்கே"1 என்று உரையாடுகின்றார். குமரகுருபர சுவாமிகள் தமது ஞானாசிரியர் திருமுன்நின்று தமக்குச் சிவஞானத்தின்கண் விருப்புண்மையும் அஃதல்லாத பிறவாற்றின்மேல் வெறுப்புண்மையும் வணக்கமாகத் தெரிவிக்கின்றார். "ஐயனே, தேவரீர் திருப்புகழ்பாடிப் பரவிப் பணியும் நல்லோர் விருப்பு வெறுப்பு அற்றவர் என்பர் மெய்ந்நூற் புலவர்" என்ற பொருள்பட, " ஆரூர் அமர்ந்த ஞானசம்பந்த நிற்புகழ்ந்து இறைஞ்சும் கற்பின் மாக்கள் விருப்பு வெறுப்பு அற்றிருப்பர் என்ப பொருள் துணிபு அறிந்த புலமையோரே" என்கின்றார். இவ்வாறு கூறுபவர், விருப்பு அற்றிருப்பரெனப் பிரித்துநோக்கி வெறுப்பும், வெறுப்பற்றிருப்பரென்பதால் விருப்பும் அவர்பால் உளவாதல் பெறப்படுதலால், அவர்கள், "விருப்பு வெறுப்புள்ள கருத்தினராகவும் கண்டனம் யாமே" என்று உரைக் கின்றார். இதனைச் சாதித்ததற்கு இருவகைப் பொருள்களைக் காட்டிப் பரிகரிக்கின்றார். " இகபரம் இரண்டினும் எதிர்நிறை கொளினும் தொகுதியுள் வேற்றுமைத் தொகைப்பொருள் கொளினும் முன்னவர் மொழிந்ததற்கு அந்நிய மாகலின்" என்று கூறுகின்றார். விருப்பு வெறுப்பற்றிருப்பவர் என்பதை, இகம் பரம் என்ற இரண்டினும் இயைத்து, எதிர் நிரல்நிறையாக இகத்தில் வெறுப்பற்றிருப்பர், பரத்தில் விருப்பற்றிருப்பர் எனக் கூட்டிச் செய்யும் பொருள்கோளும், அறுவகைத் தொகை வகைகளுள் வேற்றுமைத் தொகையாக, இகவிருப்பற் றிருப்பர் பரவெறுப் பற்றிருப்பர் என நிறுத்தி, இகத்தில் விருப்பற்றிருப்பர் பரத்தில் வெறுப்பற்றிருப்பர் எனவிரித்துக் கொள்ளும் பொருள்கோளும், முன்னவராகிய புலமையோர் மொழிந்த கருத்துக்கு வேறாதலின் அவற்றைக் கொண்டிலேன் என்பார். "இன்னவர் மொழிந்த தற்கந்நிய மாகலின்" என்றார். எனவே, அவ் விகபரங்களைக் கொள்ளாது "வேண்டுதல் வேண்டாமையிலான்" என்றாற் போல, "விருப்பு வெறுப்பற் றிருப்பர்" எனவே கொண்டு, அற்றிருப்பர் என்பதனை விருப்பொடு கூட்டி விருப்பற்றிருப்பரென்றும், வெறுப்பற்றிருப்ப ரென்றும் வைத்து நோக்குமிடத்து, விருப்பு வெறுப்புக்கள் அக் "கற்பின் மாக்கள்" பால் உண்டெனத் துணிந்துகூற முடியாதவாறு போல, அவை அவர்பால் இல்லையென்று கூறற்கும் முடியாமையால், "விருப்பு வெறுப்புளவாய கருத்தினராகவும் கண்டனம் யாமே" என்றார். உம்மை எதிர்மறையாகலின், அக்கற்பின் மாக்கள்பால் விருப்பு வெறுப்புக்கள் இல்லையென்பதே அடிகளின் உட்கொள் என்று அறிக. அற்றாகவும், அடிகள் அப்பெரியோர்பால் விருப்பு, வெறுப்பு இலவாகவும் உளபோலப் பொருள் கொண்டுரைத்தது, அவ்விருப்பு வெறுப்புக்களையுடைய அடியேனுக்கும் அருள் செய்தல் வேண்டு மென்பது குறிப்பெச்சத்தால் பெறவைத் தவாறாம். அக் கற்பின்மாக்கள்பால் விருப்பு வெறுப்புக்கள் உள போலக் கூறியது, "மனிதப் பிறவியும் வேண்டுவதே யிந்த மாநிலத்தே" எனவும், "வீடும் வேண்டா விறலினார்" எனவும் வரும் திருவாக்குகள் உளவாதலை எண்ணியென்றறிக. இனி, மகாமகோபாத்தியாய, டாக்டர் உ.வே. சாமிநாதை யரவர்கள், "இகபரம் இரண்டினும் எதிர்நிறை கொளினும் - அவ்விருப்பு வெறுப்புக்களை இகபரம் என்பவற்றின் எதிரே நிறுத்தலைக் கொள்ளினும்; ... ... .... .... கொள்ளுமாறு; இகத்தில் வெறுப்பற்றிருப்பர், பரத்தில் விருப்பற்றிருப்பர் என்பது. இம்மை வாழ்வையே இன்ப வாழ்வாகக் கொண்டு முத்தியுலகத்தில் விருப்ப மற்றிருப்ப ரென்றவாறு. தொகுதியுள் வேற்றுமைத் தொகைப் பொருள் கொள்ளினும் பலவகைத் தொகைகளுக்குள் வேற்றுமைத் தொகையாக வைத்து அதற்கு ஏற்பப் பொருள் கொண்டாலும்; என்றது விருப்பினிடத்தே வெறுப்பற்றிருப்ப ரென்று விரித்து விரும்பத்தக்க உலகவாழ்வு முதலியவற்றில் அடியார்க்கு இருக்கவேண்டிய வெறுப்பு நீங்கி இருப்பரென்று பொருள் கொள்ளுதல்; உலகவாழ்வை விரும்புவரென்பது கருத்து. இவ்விரு வகைப் பொருள்களும் முன்னவர் விருப்பும் வெறுப்பும் அற்றிருப்ப ரென்னும் பொருள்படக் கூறியமைக்குப் புறம்பானவையாகும். அந்நியம் - புறம்பு. விருப்பு வெறுப்புளவாய கருத்தினராகவும் கண்டனம் - இம்மை வாழ்விலே விருப்பும் மறுமைவாழ்விலே வெறுப்பும் உளவாய கருத்தினராகவும் கண்டோம். " தெய்வப் பொன்னித் திருநதிசூழ் சிறப்பு மிருநான் கொருகோடி சித்தர் வாழுந் திருவரசும் அதன்கீ ழொருமா சிலாமணியும் மைவைத் தனைய இருட்டறையில் குருட்டா மானும் ஆன்மாக்கள் மலநோ யகற்றிக் கதியளிப்பான் வந்தங் கவர்புன் றலைமீது கைவைத் தருளி முறையேபொற் கழலும் சூட்டும் கோமுத்திக் கருணைக் கடல்பஞ் சாக்கரதே சிகன்சீ ரடியார் கலந்திருக்கும் சைவத் திருவோ லக்கமுமங் குண்டேல் கைலை தனையொருகால் சார்ந்து மீள்வேன் மற்றங்குத் தரியேன் அங்குத் தரியேனே" (தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் பாடல்) என்னும் செய்யுளில் இக்கருத்து ஒருவகையாக அமைந்திருத்தல் காண்க என்று தாம் எழுதிய குறிப்புரையில் கூறுகின்றார்.* அறிஞர் நல்லது தேர்ந்து கொள்வார்களாக. குமரகுருபர சுவாமிகள் தமது ஞானாசிரியரொடு உரையாடி இவ்வுலகம் காரியமாய்த்தோன்றி நின்று அழிவதால் பொய்யென்றும், சூக்கும மாகிய காரணமாய் நிலைபெறுதலால் மெய்யென்றும், வினைப்பயன் நுகரப்பட்டு ஒழியுங் காறும் உடல் நிலைபெறுவது குறித்து அதனை மெய்யென்றும் வினை தேய்ந்தொழிந்தவழி நிலை பெறாமையால் பொய்யென்றும் உபதேசித்த உண்மையினை "-பாரேறப் பொய்யென்றான் மெய்யென்றான் பொய்யான பொய்யுடலை மெய்யென்றான் பொய்யென்றான் மீண்டு"1 என்று கூறுகின்றார். எனவே, எங்கள் பரமாசாரியன் உண்மைகளை முன்பின் முரணுவனபோலத் தோன்றக்கூறி எம்மனோரைத் தெருட்டுகின்றான் என்றாராம். இவ்வாறு கூறியதற்கு என் கூற்றே காரணம் என்கின்றார். ஊரும் பேரும் இல்லாத இந்த ஞான மூர்த்திக்கு ஊர் ஆரூர் என்றும், பெயர் மாசிலாமணி என்றும் கூறினேன்; அதனால் அவனும் அவ்வாறு கூறினான், என்பார். " ஆருரே ஊர், பேர் அருள் மாசிலாமணியென்று ஓர் ஊர் பேர் இல்லாற்கு உரைத்தேன்"1 என்று பாடுகின்றார். இனி நம்முடைய மனம் மொழி மெய் என்ற முக்கரணங் களும், ஞானமூர்த்தியாகிய மாசிலாமணி தேசிகரைத் தரிசித்துப் பரவிய காரணத்தால் சிவகரணங்களாய்த் திரிந்தமைகண்டு இம்முக்கரணங்களையும் திரிகரணம் என்று வழங்கும் வழக்கு மூன்றாகிய கரணங்கள் எனப் பொருள் படுதலேயன்றி, திரிந்த கரணம் எனப் பொருள்படுவது மாயிற்றென்பார். "சிவகரணங்களாய்த் திரிந்தன அன்றே, அதனால், திரிகரணங்கள் என்றுரை செயும் அப்பெயர் ஒருபொருட் கிளவி யெல்லோர்க்கும்; இருபொருட் கிளவியாய் இருந்தது இன்று எனக்கே"2 என்று கூறி இன்புறுத்துகின்றார். இவ்வாறு தம் கரணங்கள் சிவகரணமாய்ச் சிவமாந்தன்மை யெய்திய திறத்தை, "அடியேன் மாசிலாமணி தேசிகரைக் கண்டு பணிந்து பரவியமாத்திரையே சீவபோதம் நீங்கிச் சிவமாயினேன்" என்பாராய், " எற்கமலம் செய்யும் எழில் மாசிலாமணி தன் பொற்கமலம் சென்னி பொலிவித்தேன் - நற்கமலை ஊரிற் குறுகினேன் ஓர் மாத்திரையளவு என் பேரிற் குறுகினேன் பின்"3 என்று இசைக்கின்றார். இனி, மாசிலாமணி தேசிகரது திருவருள் பெற்ற சித்தர் எனச் சித்து என்னும் ஒருவகைக் கலம்பக வுறுப்பை இந்நூற்கண் அடிகள் புணர்த்துரைக்கின்றார். ஒரு சித்தர் அமுது வேண்டித் தெருவில் வருபவர் தமக்கு அன்னம் படைக்குமாறு மக்களை வேண்டு மிடத்து, எமக்கு அன்னம் படைப்பவர் பெறாதன எவையுமில்லை; எல்லாம் பெறுவர் எனவும், அன்னப்பறவையை ஊர்தியாகக் கொண்ட பிரமதேவர் புவனமடங்கலும் படைத்தார் எனவும் இரு பொருள் தோன்ற, " ... .... .... ....முனி மாசிலாமணிச் சித்தர்யாம் இன்னம் படைத்தவர் ஏதுபெறார் அமுது இங்கு எமக்கு என்று அன்னம்படைத்தவர் பெற்றார் புவனம் அடங்கலுமே"1 என்று பாடுகின்றார். இனி, குமரகுருபர சுவாமிகள், மாசிலாமணி தேசிக மூர்த்தி களின் திருப்பெயரில் வரும் "மாசிலாமணி" எனவரும் சொற்பொருளைக் கொண்டு வேறு வேறு வகையிற் கற்போர்க்கு மிக்க இன்பம் தோன்றும் வகையில் பல பாட்டுக்களைப் பாடியுள்ளார்; அவற்றை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளின் நலம் பாராட்டல் என்ற பகுதிக்கண் ஆராய்ந்து இன்புற்றோமாதலின் மீட்டும் ஈண்டெடுத்துக்கூறுதல் வேண்டாதாயிற்று. இது நிற்க, இந்நூற்கண் குமரகுருபர அடிகள் தமிழ்வகை மூன்றனுள் ஒன்றாகிய இசையின்கண் பேராதரவு புரிந்திருக் கின்றனர். திருவாரூரைச் சிறப்பித் துரைக்கு மிடத்து, ஆங்கே மகளிர் "சூளிகை வகுத்த மாளிகை" மலிந்த இடத்தே செயற்கையால் அமைத்த செய்குன்றின் மேல் இருந்து, கின்னரம் வியக்கும் கீதம் பாடுகின்றனர் என்று அவர் தம் இசையினைச் சிறப்பிப்பார், "ஆடகத்தியன்ற சூடகக் கரத்தால் மாடகத் திவவுயாழ் மருமமீது அணைத்து மூவகை நிலையத்து ஏழுசுரம் நிறீஇக் கொவ்வைவாய் திறந்து குயிலென மிழற்றுபு மென்னரம்பு உகிரான் விரல் முறைதடவிக் கின்னரம் வியக்கும் கீதம்பாட, நகைநிலவு எறிக்கும் முகமதி காணுஉச் சந்திரகாந்தத்திற் சமைத்த செய்குன்றம் மைந்தர் போன்றுருகி மழைக்கணீர்" சொரிகின்றதென இன்னிசைக்கு நாமும் உருக நயந்துரைக் கின்றனர். செய்குன்றில் இருக்கும் மகளிர் ஆடகப் பொன்னாற் செய்த சூடகவளையைக் கையில் அணிந்திருப்பதும், யாழைத் தம் மார்பில் அணைத்து அதன் மெல்லிய நரம்புகளைத் தமது கைவிரலால் தடவுவதும், அக்காலையில் அவ்யாழிடத் தெழும் இன்னிசை, வலிவு மெலிவு சமம் என்னும் மூவகை நிலையும் பொருந்தி எழுவகைச் சுரங்களொடு கூடி இன்புறுத்துவதும் அச்செவிச்சுவை யமுதத்தை மடுக்கும் உள்ளத்தின் உவகை அம்மகளிரின் முறுவலால் ஒளிவிட்டுத் திகழ்வதும் திகழொளி நிலவுகண்டு சந்திரகாந்தச் செய்குன்று நீராயுருகி யொழுகுவதும் பிறவும் இப்பாட்டின்கண் எத்துணை அழகாகக் கூறப்பட்டிருக்கின்றன காண்மின். இத்தகைய ஞான இன்பக் கருவூலமாக விளங்கும் இந்நூலைச் சிறப்பிக்கும் மூன்று பாட்டுகள் இந்நூற்கண் காணப்படுகின்றன. அவற்றுள், முதற் செய்யுள் இம் மும்மணிக்கோவையை நித்தமும் ஓதித் துதிக்கவல்லவர், எடுத்துள்ள இப்பிறவியிலே முத்தியின்பம் பெறுவர் என்னுங்கருத்துப்பட " தடுத்த பிறவித் தளையாம் விலங்குதனை முறித்து விடுத்த கருணைக் கடல் மாசிலாமணி மெய்ப்புகழால் தொடுத்த தமிழ் மும்மணிக்கோவை நித்தம் துதிக்கவல்லார் எடுத்த சனனத்தில் எய்தாத பேரின்பம் எய்துவரே" என்று பாடுகின்றார். குமரகுருபர அடிகள், தம் உள்ளத்தில் திருவருள் நின்று உணர்த்த, அவர் நாவில் வாசம் செய்கின்ற கலைமகள் மாசிலாமணி தேசிக மூர்த்திகளின் புகழ்ப் பரப்பில் எள்ளத் தனையளவே எடுத்து இந்நூலைப் பாடினளேயன்றி அடியேன் பாடினேனில்லை என்று அவையடக்கம் கூறும் அமைதியில் இரண்டாவது செய்யுள் இருக்கின்றது. அது, " உள்ளத்தருள் நின்று உணர்த்த என் நாவில் உறைந்த வெள்ளை வள்ளக் கமலத்தவள் மாசிலாமணி வண்புகழில் எள்ளத்தனையளவு ஓர் தொடையாக்கி இசைத்தனளால், கள்ளப்புலன் கொண்டு உரைத்தேனலன் இக்கவி முற்றுமே" என்பது. மூன்றாவது செய்யுள் இந்நூல்பாடி முற்றுவித்த செயலொன்றே அடியேனுக்குச் சரியையாதி தவங்களாய் நின்று ஞானப்பயனைத் தந்தது என அடிகள் கூறும் கூற்றாக அமைந்தது. அது, " விரிக்கும் சரியை இப்பாமாலை சேர்த்தது; மெய்க்கிரியை தரிக்கும் படிக்கின்று சாத்தியதே; மற்று என்தன் தமிழ்நீ தெரிக்கின்ற போதருள் செய்ததுவே சிவயோகம்; உண்மை பரிக்கின்ற ஞானமொன்றே மாசிலாமணி பாலித்ததே" என அழகுதிகழ விளங்குகின்றது. இதுகாறும் நாம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளைக் குமரகுருபர சுவாமிகள் பாடியிருளிய பண்டார மும்மணிக் கோவை யென்னும் சித்தாந்த சைவ மெய்ந்நூல் நலமும் தமிழிலக்கிய நலமும் செறிந்து விளங்கும் இவ்வழகிய இனியநூலை, நூல் வரலாறு, நூலின் நோக்கம், பாட்டுடைத் தலைவர்களாகிய மாசிலாமணி தேசிக மூர்த்திகளின் நலம் பராட்டல், அந்த ஞானமூர்த்திகள் எழுந்தருளும் இடங்கள், அம்மூர்த்திகள்பால் குமரகுருபர் செய்து கொள்ளும் விண்ணப்பங்கள், சைவ சித்தாந்தக் கருத்துக்கள், வரலாறுகள் இந்நூற்கண் காணப்படும் சொல்லோவியங்கள், உவமை வகையால் ஏனைப் பொருணலம் காட்டல், இனிய உரையாடல்கள் என்ற தலைப்புகளின்கீழ் ஒருவாறு ஆராய்ந்து அடிகளார் அந்தமில் அறிவின்பத்தை ஆர நுகர வழங்கும் திறத்தை அறிகின்றோம்.  5. திருவெம்பாவை திருவெம்பாவை என்பது பழந்தமிழ் நூல்கள் காட்டும் பாவைப் பாட்டு வகையாகும்; அஃதாவது மகளிர் நீர்த்துறையில் பாவையமைத்து நீராடி விளையாடுவது பொருளாக வரும் பாட்டு பாவையை வண்டற் பாவை யென்றும் இவ்விளையாட்டை வண்டலாட்டு என்றும் வழங்குவதுண்டு. "வண்டற் பாவை வௌவலின், நுண்பொடிஅளை இக் கடல் தூர்ப்போள்"1 என வருவது காண்க. இவ்விளையாட்டு ஒரு சிறந்த நீராட்டாகவும் சங்ககாலத்தே நிகழ்ந்திருக்கின்றது. இதைத் தைந்நீராடல் என்றும் அம்பாவாடல் என்றும் பரிபாடல் முதலிய நூல்கள் தெரிவிக்கின்றன. இந்நீராட்டை விரிந்த நூல்வல்ல சான்றோர் முன்னிருந்து தொடங்கு விக்கின்றனர். மணமாகா மகளிர் "வெம்பாதாக வியன்நில வரைப்பு" என, இந்த அம்பாவாடலை மேற்கொள்ளுகின்றனர். மகப்பெற்று முதிர்ந்த மகளிரான தாயர்களும் முனித்துறை முதல்வியர்களும் சிறுமகளிர்க்குத் துணையாக முன்னின்று இந் நீராட்டினை அமைத்துத் தருகின்றனர். இதுபற்றியே இது, "தாயருகா நின்று தவத் தைந்நீராடுதல்" என்று குறிக்கப்படுகிறது. அழகியபாவைகளைத் துறைக்கண் நிறுத்தி ஆடுதலாதலால் இஃது அம்பாவாடல் என்று பெயர் பெற்றது. அம்பாவையாடல் அம்பாவாடல் என மருவி வழங்கிற் றெனக் கொள்வது பொருத்தமாக இருக்கிறது. பண்டை நாளில், முழுத் திங்கள் வழியே மாதங்கள் கணக் கிடப்பட்டன. அதனால் மாதத்தைத் திங்கள் என்று குறிப்பது தமிழ் வழக்கம். பழந்தமிழ் நூல்கள் எல்லாவற்றிலும் "மாதம்" என்ற சொல் காணப்படாது. அதன் பொருளே தோன்றத் "திங்கள்" என்ற சொல்லே காணப்படுகிறது. பண்டையோரும் இந்நாளையவரும் சித்திரைத் திங்கள், மார்கழித்திங்கள் என்று வழங்கியது. இதுபற்றி யேயாகும். வராகமிகிரர் காலத்துக்குப் பின்னரே இம்முறை மாறி ஞாயிற்றை வழியாகக் கொள்ளும் முறையாயிற்று. நாம் இப்போது வழங்கும் மார்கழித் திங்கள். பண்டை நாளில் மார்கழி முழுமதியன்றோடு முடியும்; மறுநாள் தொடங்கிய தைத்திங்கள் தைம்மாதத்து முழுமதியோடு முடியும். பண்டையோர், மார்கழி முழுமதியன்று ஆதிரை நாள் வந்து கூடுதலின், அந்நாளில் இப்பாவை விளையாட்டாகிய அம்பாவாடலைத் தொடங்கினர்; அதனால் இதனை மார்கழி நீராட்டென்றும் சில சான்றோர் வழங்கலாயினர். இந்நீராட்டுத் தைத் திங்கண் முழுதும் நடைபெற்ற தனால் சங்ககாலத்தார் இதனைத் தைந்நீ ராடல் என்று பலபடியாக எடுத்தோதியிருக்கின்றனர். இவ்வாறே, "தையின் நீராடிய தவம்"1 என்றும், "நறுவீ யைம்பால் மகளி ராடும், தைஇத்தண்கயம்"2 என்றும் சான்றோர் கூறுதலால் இந்நீராட்டுத் தைந்நீராடல் என்றே சங்ககாலத்தில் வழங்கி வந்தமை நன்கு தெளிவாம். தைத்திங்கள் நீராட்டை மேற்கொண்ட மகளிர் வையைத் துறையில் நீராடிய நிகழ்ச்சியைக் கூறவந்த நல்லந்துவனார், இந்நீராட்டெடுக்கும் காலத்தை, "பனிப்படு பைதல் விதலைப் பருவத்து, ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து, மாயிருந் திங்கள் மதிநிறை யாதிரை"3 என்று குறிக்கின்றார். மாரிப்பிற்குளம் என்றது மழைக்காலத்துப் பிற்பகுதி என்றவாறு மார்கழியைக் குளம் என்பது வானநூல் வழக்கு. மார்கழி முழுத் திங்களும் திருவாதிரை நாளும் கூடிய நன்னாளில் இந்நீராட்டுவிழா தொடங்குகிறது. இதனை அவர், "குளத்து, மாயிருந் திங்கள் மதிநிறை ஆதிரை, விரிநூ லந்தணர் விழவு தொடங்க"4 என்று குறிக்கின்றார். அப்போது தாயருகே நின்று தைந்நீராடும் மகளிர், "தைந்நீரே, நிறந்தெளிந்து நீராடற்குத் தக்கவாறு ஒழுகும் நீ, பிரியாத கணவரைப் பெறவருளுக; யாம் விரும்பும் கணவர் எல்லா நலங்களும் எய்துக; பிறப்புத் தோறும் இடையறாத நிலையில் யாம் கணவனும் மனைவியுமாய் மக்கட்பேறும் சுற்றமும் பெற்று நிலைபெற வருளுக"5 என்று வேண்டுகின்றனர். நீராட்டிறுதியில், இம்மகளிர், " இன்ன பண்பின் தைந்நீ ராடல், மின்னிழை நறுநுதல் மகள்மேம் பட்ட கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம இன்னியல் மாண்தேர்ச்சி இசைபரி பாடல் முன்முறை செய்தவத்தின் இம்முறை இயைந்தேம், மறுமுறை அமையத்தும் இயைக நறுநீர் வையை நயத்தகு நிறையே" என்று பாடி முடிக்கின்றனர். இத்தைந் நீராட்டினைக் கலித்தொகையிற் பாடிய கபிலர், இதனைத் "தையில் நீராடிய தவம்" என்று சிறப்பிப்பதற்கொரு காரண முண்டு. தைந் நீராடுங்கால் இள மகளிர் பலர் தம்மை நீராட்டுக்கேற்ற ஒப்பனை செய்து கொண்டு விளங்கச் சிறப்புடைய மகளொருத்தி அதனைத் தொடுங்குவாள். அவள் நீர்த்துறைக்குச் செல்லுமுன் தன் ஆய மகளிர் மனைதோறும் சென்று அம்மகளிரை அழைத்துக் கொள்வ தோடு ஐயமும் சிறிது பெற்றுத் தொகுப்பாள். பின்பு நீர்த்துறையில் நீராடி ஆங்கு வந்துசேரும் அந்தணர்க்குக் கொடை வழங்குவாள். மேலும், தான் நிறுத்தும் பாவையாகிய மகனுக்குப் பிறளொருத்தியின் பாவையாகிய மகளை மணம்பேசித் திருமணம் செய்து சிறு சோறிட்டு ஆயத்தார் எல்லோரையும் இருத்தி விருந்தோம்புவாள். இதனை, " வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்துநீ தையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ பொய்தல மகளையாய்ப் பிறர்மனைப் பாடிநீ எய்திய பலர்க்கீத்த பயம்பயக் கிற்பதோ சிறுமுத்த ளைப்பேணிச் சிறுசோறு மடுத்துநீ நறுநுத லவரொடு நக்கதுநன்கு இயைவதோ"1 என்பதனால் அறிகின்றோம். இவ்வாறு மணம் புணர்த்தலும், பொருள் செய்தலும், விருந்தோம்பலும், அறவோர்க்களித்தலுமாகிய செயற் கூறுகளால் இத் தைந் நீராட்டுத் தவம் எனப்படும் தகுதி யுடையதாயிற்று. இத் தைந் நீராடலில் இளமகளிர் செய்து கொள்ளும் வேண்டு கோளையே, மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவை மகளிரும் "உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம். அன்னவரே எங்கணவராவார் அவருகந்து சொன்னபரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்"1 என்றும், "எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம் கேள், எங்(கள் தோள்)நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க"2 என்றும் வேண்டுகின்றனர். "வெம்பாதாக வியன் நில வரைப்பு" எனப் பரிபாடலில் தைந் நீராடும் மகளிர் வேண்டியது போலவே, ஆண்டாள் அருளிய திருப்பாவை மகளிர், "நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து நீங்காது செல்வம் நிறைந்து"3 என்று கூறுகின்றனர். இவ்வாற்றால், திருப்பாவையும் திருவெம்பாவையும் சங்க காலத்துத் தைந் நீராடலையே குறிப்பது தெற்றென விளங்கும். இம் மணிவாசகப் பெருமானும் ஆண்டாளும் சங்க காலத்துக்குப் பின்னர்த் தோன்றியவர்கள்; அவர்கள் காலம், இன்று போல் ஞாயிற்றின் செலவை அடிப்படையாகக் கொண்ட காலம்; அதனால் இருவரும், "போற்றியாம் மார்கழிநீர் ஆடலோரெம்பா வாய்" என்றும், "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால், நீராடப்போதுவீர்" என்றும் முறையே குறிக்கின்றார்கள். இவ்வாறு திங்களைக் கணக்கிடும் காலமுறையே யன்றி, இத் தைந் நீராட்டுக் கொள்கையிலும் சில வேறுபாடுகள் இவர்கள் காலத்தில் தோன்றியிருக்கின்றன. இச்சான்றோர் காலத்தில் பலவேறு சமய ஒழுக்கங்களும் சமயவுணர்வுகளும் பெருகப்பரவியுள்ளன. பௌத்தம், சமணம், சாங்கியம், வைசேடிகம், சைவம், வைணவம் முதலிய சமயங்கள் தமிழகத்தில் தோன்றிப் புதிய சில ஒழுக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. சங்க நாளில் தினைகாவல் முதலிய செயல் செய்த செல்வ மகளிரிடையே சிவன்கோயில்களில் திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், பூத்தொடுத்தல் முதலிய திருப்பணிகளைச் செய்வதாகிய சமயப்பணி தோன்றியுள்ளது. மணமாகாத இளமகளிர்க்குக் கோயில்கள் தெய்வக் காப்புடைய இடங்களாயின. இம்மகளிர் கோயிற் பெண் பிள்ளைகள் என்று வழங்கப்படலாயினர். அந்நெறியில் தைந்நீராடல் மார்கழி நீராட்டாகி இவர்களிடையே ஒருவகை நோன்பாகவும் மாறிவிட்டது. நெய்பால் முதலியன உண்ணாமை, கண்ணுக்கு மையெழுதுதல், கூந்தலில் பூமுடித்தல் முதலிய ஒப்பனை செய்துகொள்ளாமை ஒழுக்கங் களாயின. நீர்த்துறைக்கண் நிறுத்தப் படும் பாவைகளைத் தெய்வத்தன்மையுடையவையாகக் கருதி வழிபடுவது இயல்பாயிற்று. திருமாலை வழிபடும் மகளிரும் மார்கழி நீராட்டில் பாவையை "காத்தியாயினி"யாகக் கருதி வழிபாடு செய்ததைப் பாசுவத புராணம் கூறுகிறது. பழஞ் செய்யு ளொன்று, " சேயரி நாட்டமும் செவ்வாயும் அல்குலுமே - அம்மானாய் ஆய்மலரும் தொண்டையும் ஆழியந் திண்டேரும் - அம்மானாய் மாயிருந் தானைமயிடன் தலையின்மேல் - அம்மானாய் பாயின சீறடிப் பாவைப் பகவதிக்கே - அம்மானாய்" என்று கூறுவது காண்க. இக்காலத்தே நிலவிய சமயச் சான்றோர்கள், தத்தம் சமயக் கருத்துக்களைப் பொதுமக்களிடையே பரப்பவேண்டி, மகளிர் விளையாட்டுக் காலத்தே பாடும் பாட்டுக்களின் வண்ணத்தில் புதுமுறையில் பல பாட்டுக்களைப் பாடினர். இந்நாளில் அரசியல் வாழ்வில் இயங்குவோர் தத்தம் கட்சிக் கொள்கைகளைப் புதிய புதிய வண்ணத்தில் பாட்டமைத்து விடுப்பதைக் காண்கின்றோம். இத்துறையில் மக்கட் பண்பு என்றும் ஒரு தன்மைத்தாகலின், விளையாட்டுப் பாடல் வண்ணத்தில் இடைக்கால மக்கள் தத்தம் சமயக் கருத்துக்களைப் பாடிவிட்டதில் வியப்பில்லை. யாப்பருங்கல வுரையும் தொல்காப்பியவுரையும் காண்போர்க்கு இம்முறை பன்னெடு நாட்களுக்கு முன்பே தமிழகத்தில் தோன்றிவிட்டமை நன்கு தெரியும். " ஏதங்கள் நீங்க எழிலிளம் பிண்டிக்கீழ்ப் - புறாவே வேதங்கள் நான்கும் விரித்தான் விரைமலர்மேல் - புறாவே பாதம் பணிந்து பரவுதும் பல்காலும் - புறாவே" என்பது முதலாக வருவன ஆயிரத்துநூறு ஆண்டுகட்கு முன்னர் நிலவிய பாட்டுக்களாகும். இதுபற்றியே, சேக்கிழாரும், "வண்டல் பயில்வனவெல்லாம் வளர்மதியம் புனைந்த சடை, அண்டர்பிரான் திருவார்த்தை அணையவருவன" என்று குறித்தருளினார். இவ்வகைய வழக்காறு கொண்டே மணிவாசகனாரும், திருவெம்பாவை, திருவம்மானை, திருப்பொன்னூசல், திருப்பொற் சுண்ணம், திருப்பூ வல்லி என்பன முதலியவற்றைப் பாடியருளினார். திருமால் அடியாருட் சிறந்த ஆண்டாள் திருப்பாவை பாடியதும் இந்நெறி பற்றியதேயாம். இனி ஆண்டாள் அருளிய திருப்பாவையில் முதற் பாட்டில் "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னா" ளன்று மகளிரையழைப் பதும், இரண்டாம் பாட்டில், பாவை நோன்புக்குரிய நெறிமைகளும், மூன்றாம் பாட்டில் மார்கழி நீராட்டால் விளையும் பயனும், நான்கு ஐந்தாம் பாட்டுக்களில் மழையை வாழ்த்துவதும் திருமாலைக் கையால் மலர்தூவித் தொழுது வாயாற்பாடி மனத்தால் சிந்திக்க வரும் பயனும் கூறப்படுகின்றன. ஆறாம் பாட்டு முதல் பதினைந்தாம் பாட்டு ஈறாகவுள்ள பத்துப்பாட்டுகளில் ஆய மகளிரைத் துயில் எழுப்புவதும், பதினாறாம் பாட்டு முதல் இருபத்தைந்தாம் பாட்டு ஈறாகக் கண்ணனைத் துயிலெழுப்பிக் "கருத்திருத்த வந்தோம், பறைதகுதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி, வருத்தமும் தீர்ந்து மகிழ்வேம்" என்று கேட்பதும், இருபத்தாறு இருபத்தேழாம் பாட்டுக்களில், மார்கழி நீராட்டத்துக்கென, சங்கும் வாச்சியங்களும் பல்லாண்டு பாடுவோரும் விளக்கு கொடி, விதானமும் பிறவும் நல்குக எனவும், இருபத்தேழாம் பாட்டில், சூடகம் தோல்வளை, தோடு செவிப்பூ பாடக முதலிய அணிகலன்களும் ஆடையும் பெற்று, பாற்சோறும் "நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்துண்"டிருக்க வேண்டுமெனவும், இருபத்தெட்டாம் பாட்டில் மகளிர் தங்கள் பிழை பொறுத்தருள வேண்டுமெனவும் கேட்பதும், இருபத்தொன் பதாம் பாட்டில் "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமேயாவோம், உனக்கே நாம் ஆட்செய்வோம்" என்பதும் கூறப்படுகின்றன. இறுதிக் கண்ணதாகிய முப்பதாம் பாட்டு. திருப்பாவைப் பாட்டு முப்பதையும் தப்பாமல் உரைப்பார். திருமால் திருவருள் பெற்று இன்புறுவர் என்று பயன் கூறி முடிக்கின்றது. மற்று மணிவாசகரது திருவெம்பாவை சங்ககால வழக்கைப் பெரிதும் ஒத்து நிற்கிறது. மகளிர் விடியலில் ஒன்று கூடுவதும், தாயர் முறைமைகாட்டுவதும், மகளிர் அம்முறைப்படி நீராடுவதும், இனிய கணவர் வேண்டுமென வேண்டிக் கொள்வதும், பாவை யாட்டின் முறையும் செயலுமாக உள்ளன. திருவெம்பாவை முதல் எட்டுப் பாட்டுக்களில் மணமாகாத இளமகளிர் ஒருவரையொருவர் துயிலுணர்த்திக் கொண்டு நீர்த்துறைக்குச் செல்லுகின்றனர். ஒன்பதாம் பாட்டில் எல்லோரும் சேர்ந்து நீர்த்துறையில் பாவையை நிறுவிச் சிவபெருமானாகக் கருதிக்கொண்டு, " முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்னவகையே எமக்கு எங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோம்" என்று வேண்டிக்கொண்டு நிற்ப "முனித்துறை முதல்வியர்" எனப் பரிபாடல் குறிக்கும் தாயர் முற்போந்து, பத்து பதினோராம் பாட்டுக்களில் சிவபெருமானது பரமாந்தன்மையை வியந்து "பாதாளமேழினும் கீழ்ச் சொற்கழிவு பாதமலர், போதார் புனை முடியும் எல்லாப் பொருள்முடிவே" என்று காட்டி, "ஏதவனூர் ஏதவன்பேர் யார் உற்றார் யார் அயலார் ஏது அவனைப் பாடும் பரிசு" என்றும், "ஐயாவழியடியோம் வாழ்ந்தோங்காண்" எனவும், "ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின், உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம், எய்யாமற் காப்பாய் எமை" எனவும் பாடி நீராடலுறுகின்றார்கள். அத்தாயர் பக்கலில் இருந்து இளமகளிர் பலரும் பன்னிரண்டு முதல் பதினைந்தாம் பாட்டு ஈறாக நான்கு பாட்டுக்களில் நீராட்டயர்கின்றனர் பதினாறாம் பாட்டில் இளையரும் முதியருமாகிய மகளிர் அனைவரும் மழை பெய்தல் வேண்டுமென மழையைப் பரவுகின்றனர். இந்நீராட்டுப் பெரும்பான்மையும் இளமகளிர் நல்ல கணவனையடைந்து இன்ப வாழ்வு பெறுவது குறித்து நிகழ்வதால், மழையை வாழ்த்துவது முறையாயிற்று. திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துக்குபின் வான்சிறப்புக் கூறியதும், இளங்கோவடிகள், மங்கலவாழ்த்தின் தொடக்கநிலையில் "மாமழை வாழ்த்துதும்" என மழையைச் சிறப்பித்ததும் இந்நெறிக்கு அடிகோலித்தருகின்றன. பின்னர் முதுமகளிரான தாயர், பதினேழு பதினெட்டாம் பாட்டுக்களில் தேவர்கட்கும் அவர் தலைவர்கட்கும் பெறமுடியாத இன்பம் நம்பாலதாக நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளும் நம்பெருமானைப் பாடியாடுவோம் எனவும், விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணாரமுதமுமாய் நின்ற இறைவன் கழல்பாடி ஆடுவோம் எனவும் பரவி நீராடிக் கரையேறுகின்றனர். அவருடனே கூடி நீரில் மூழ்கி விளையாடிய இளமகளிர், பத்தொன்பதாம் பாட்டில், முன்னர் ஒன்பதாம் பாட்டிற் செய்து கொண்ட வேண்டுகோளையே வேறு வாய்பாட்டில், " எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம் கேள் எம்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க, எம்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழில்என் ஞாயிறு எமக்கேலோ ரெம்பாவாய்" என்று பாடுகின்றார். இறுதியாகிய இருபதாம் பாட்டில் எல்லோரும் ஒன்றுகூடி இறைவன் திருவருளை வியந்து, "போற்றியருளக நின்ஆதியாம் பாதமலர்" எனத் தொடங்கி, "போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோ ரெம்பாவாய்" எனப் பாடித் திருக்கடைக்காப்புச் செய்கின்றனர். இத் திருவெம்பாவையின் கண் அடங்கியிருக்கும் கருத்து பண்டையோர் ஒருவரால் சத்தியை வியந்தது என்று குறிக்கப் பட்டுள்ளது. இதற்கேற்ப, மனோன்மணி, சருவபூததமனி பலப் பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரௌத்திரி, சேட்டை, வாமை என ஒன்பதின்மர் சத்திகள் என்றும், மனோன்மணி போந்து முதற்பாட்டில் சருவபூதத மனியை எழுப்ப, அவள் மற்றவளை எழுப்ப இவ்வாறு முதல் எட்டுப் பாட்டுக்களில் இச் சத்திகள் எழுப்பபடுகின்றனரென்றும் கூறுவர். மகாமகோபாத்தியாய பண்டிதமணி, மு. கதிரேசச் செட்டியாரவார்கள். பேதையரும் பெதும்பையருமாகிய ஐந்தாமண்டு முதல் பன்னிரண்டா மாண்டு ஈறாகவுள்ள மணமாகாத மகளிர் துயிலுணர்த்தப் பெறுகின்றன ரென்றும், அவருள்ளும் பன்னிரண்டாமாண்டு மகளிர் முதற்கண் எழுந்து முதலில் தம்மை யொத்த மகளிரையும் பின்னர் முறையே தம்மின் இளையோரையும் எட்டுப் பாட்டுக்களில் எழுப்புகின்றா ரென்றும் கொள்ளுதற்கு இடமுண்டு என உரைப்பர். இனி உறங்கியெழுந்து வருவோரை ஆண்டவன் உண்மையும் அவனது அருள் நலமும் உரைப்பார் உரைக்கக் கேட்டு உணர்ந்து வரும் நன்மக்களாகவும், நீர்த்துறையை இறைவன் அருள் நிலையமாகவும், அதன்கண் படிந்தாடிப் பரவுவது திருவருளில் தோய்ந்து இன்புறுவதாகவும் கூறுவர். அந்நிலையில் இறைவனுடைய பெருநலங்களும் அடியார் பெருமையும் அவர்க்கு மக்கள் அடிமைப் பணிபுரியும் கடமையும் குறிக்கப்படுகின்றன. தாயர்போலும் சான்றோர், "இறைவன் பாதமலர் சொற்கழிவு; திருமுடி, எல்லாப் பொருட்கும் முடிவு; பேதை ஒருபால் திருமேனி; ஒன்றல்லன்; வேதமுதல்; ஒரு தோழம் தொண்டருளன்; அவனுக்கு ஊர் பேர் ஏது? உற்றார், அயலார் யார்? அவனைப்பாடும் பரிசு ஏது? எய்யாமற் காப்பாய் என வேண்டுவதே செய்தற்குரியது" என்று அறிவுறுத்துகின்றனர். அவர் வழி நிற்கும் உலகவர், இறைவன் திருக்கூத்தின் சிறப்பும் அவன் புரியும் ஐவகைத் தொழிலின் அமைதியும் அறிந்து இன்புறுவதும், காணப்படும் இவ்வுலகு ஆணும் பெண்ணுமாகிய உருவில் அம் முதல்வனைக் காட்டக் கண்டு மகிழ்வதும் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த இறைவியின் திருவருளை வியந்து உவப்பதும் இறைவனால் ஆட் கொள்ளாப் பெற்றவர், மறந்தும் புறந்தொழாத மாண்பு கொண்டு உயர்வதும் மகளிர் நீராடும் பாட்டுக்களின் குறிப்பு என்பர், திருப்பாதிரிப்புலியூர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள். தாயரும் மகளிரும் கூடி மழையை வாழ்த்து முகத்தால் திருவருள் அறிவு பெற்றோர்க்கு அத் திருவருள் முதல்வன் அவரவர் உள்ளத்திலும் எழுந்தருளி இன்பந் தருவன்1 என்றும், ஞாயிற்றின் நல்லொளி எழக்கண்டு தாயர் நீர் மூழ்குவதுபோல, இறைவனது அருளொளி தோன்றக் கண்டு நல்லறிஞர் அதன் இன்பத்தில் மூழ்குவரென்றும்1 குறிக்கப்படுகின்றன. மகளிர், "உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்" எனத் தம்மைக் கையடைப்படுப்பதுபோல உலகவர் தம்மை இறைவன் அருட்கு உரிமை செய்தல் பத்தொன்பதாம் பாட்டின் குறிப்பு என்பர். இறுதிப்பாட்டில் இறைவன் திருவடியே எல்லாவற்றிற்கும் ஆதியும் அந்தமுமாவன என முன்மொழிந்து பின்பு, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல் என்ற ஐவகைத் தொழில் களையும் செய்வன அவன் திருவடிகளே என வற்புறுத்தி அவனருளை நினைந்து வாழ்வதே உயிர்கட்குக் கடன் என்பது பெறவைப்பர் மதுரைச் சிவப்பிரகாசர். சூடிக்கொடுத்த நாச்சியார் எனப்படும் ஆண்டாள் அருளிய திருப்பாவைக்கு உரை கண்ட சான்றோர்கள், வேறு வகையாக முன்னுரை வழங்குகின்றார்கள். "கண்ணபிரான் தூர்த்தனாயிரா நின்றான்; இவன் முகத்திலே பெண்கள் விழிக்கலாகாது என்று பார்த்து, இவர்களை (கோவியர் பெண்களைக் கொண்டுபோய் நிலவறைகளிலே யடைக்க, பெண்களும் கிருஷ்ணனும் பண்ணின பாக்கியத்தாலே வர்ஷமின்றிக்கே யொழியப் பெண்கள் இருந்து மனோரதிக்கிறார்கள். கோதனராயிருக்கிற இடையர் வர்ஷார்த்தமாக நம்மை நோற்கச் சொல்லக் கடவர்கள்; கிருஷ்ணன் இதுக்குக் கடைக்கூட்டனாகவும் கடவன்; நமக்கொரு துக்கமில்லை என்று பெண்கள் பிரீதைகளாய்த் தரித்திருக்கிற தசையிலே வர்ஷமின்றிக்கே இருக்கிறபடியைக் கண்டு கோபவிருத்தரெல்லாரும் திரண்டு பசுக்களும் மனுஷ்யரும் பிழைக்கும் விரகு ஏதோ என்று பார்த்து வர்ஷார்த்தமாக நோற்க வர்ஷமுண்டாம் என்று இவ்வூரில் பெண்கள் அடைய நோற்கக் கடவர்கள்; இந்நோன்புக்கு இங்குத் தைக்கு அதிபனான ஸ்ரீகந்தகோபர் மகன் கிருஷ்ணன் கடகனாவன் என்று அத்யவசித்துப் பெண்பிள்ளை அடைய அழைத்துக் கிருஷ்ணனையும் அழைத்துப் பெண்களை நோற்கச் சொல்லி இவர்கள் நோன்புக்கு நீ கடகனாக வேணும் என்று கிருஷ்ணனை அபேக்ஷிக்க அவன் எனக்கு க்ஷமமன்று என்ன. இத்தனையும் செய்ய வேணுமென்று மறுக்க வொண்ணாதபடி நிர்ப்பந்திக்க, அவனும் இசைந்த பின்பு எல்லாரும் திரள இருந்து, பெண்கள் நோற்பார்; இதுக்கு வேண்டுவது கிருஷ்ணன் சககரித்துக் கொடுப்பான் என்று கிருஷ்ணன் கையிலே பெண்களைக் காட்டிக்கொடுத்துக் கோப விருத்தரெல்லாரும் போன பின்பு, பெண்களும் கிருஷ்ணனும் கூடவிருந்து திருக்குரவை கோத்த ராத்திரி போலே பெண்காள்! இதுவும் நமக்கு ஒரு ராத்திரியே என்று கிருஷ்ணன் கொண்டாடி இனி அசிர்ப்புப் பிறக்க வைகல் இருப்போமல்லோம்; இப்போது எல்லோரும் போய் அபரராத்திரியிலே வந்து எழுப்புங்கோள் நோன்புக்குக் குளிக்கலாம்படி என்று அருளிச்செய்து கிருஷ்ணனும் பெண்களைப் பிரிந்துபோய்த் தரிக்கமாட்டாமே நப்பின்னைப் பிராட்டி திருமாளிகையிலே புக்கான். "பெண்களும் பரஸ்பரம் சம்ஸ்லேஷத்தாலே கால்நடை தந்து போய்த் தந்தம் மாளிகையிலே புக்கு உறங்கப் புக்கவிடத்தில் கண்ணுறங்காமையாலே முற்பட உணர்நதவர்கள் கிருஷ்ண குண சேஷ்டிதங்களை நினைத்து எழுந்திருக்க மாட்டாதே கிடக்கிறவர்களை உணர்த்தத் தனித்தனியே சென்று எழுப்பி எல்லாரும் கூடி உத்தேசியமான ஸ்ரீநந்தகோபர் திருமாளிகையிலே சென்று கிருஷ்ணனை யெழுப்பித் தங்கள் அபேக்ஷிதத்தை அறிவித்து அபேக்ஷிதம் பெற்று முடிக்கிறது. உத்தேசியம் வேறொன்றாய் நோன்பு வியாஜமாத்ரமாகில் இவர்களுக்குத் தேவதை வர்ஷிக்குமோ வென்னில் விரதோபவாச கர்சிதமான வடிவைக் கண்டால், சேதனமன்றோ, வர்ஷியாதோ என்று பார்த்தார்கள்."1 இனி, மகளிர் பிறமகளிரைத் துயிலெழுப்புங்கால், ஒருத்தியை நோக்கி, "இப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ, நேரிழையாய்" என்று கேட்க, அவள் அவர்களை நோக்கி, "சீசி இவையும் சிலவோ? விளையாடி ஏசும் இடம் ஈதோ" என்று கூறுபவள், "நேரிழையீர்" என்று குறிக்கின்றாள். வைகறைப் போதில் நீர்த்துறைக்கு நீராடச் செல்லுதலால், நீக்கத் தக்க இழைகளை நீக்குவதாகிய குறிப்புத் தோன்ற "நேரிழையாய்" என்றும், "நேரிழையீர்" என்றும், ஒருவரையொருவர் குறிப்பு மொழியால் உரைப்பதைத் திருவெம்பாவையிற் காண்கின்றோம்; அது போலவே, திருப்பாவையிலும், "நீராடப் போதுவீர், போதுமினோ, நேரிழையீர்" என்றொரு குறிப்புக் காணப்படுகிறது. அதற்கு விளக்கங்கூறிய உரைகாரர்கள், நேரிழையீர் என்றதற்கு "ஆபரணத்தை யுடையீர்" என்று பொருள் கூறி, "விலக்ஷணமான விஷயத்தை க்ஷணகாலம் விஸ்லேஷிக்கும் போதும் விஸ்லேஷ விசனம் பெரிதாயிருக்க, இப்போது, ஆபரணமும் பூண்டிருப்பரோ? நேரிழையீர் என்று சம்பாதிக்கும்படி என்னென்ன இதற்கு மூன்று பரிகாரம் அருளிச் செய்கின்றார்." என உரைத்து "இவர்கள் போதுமினோ என்ற பின்பு அவர்கள் வடிவிலே பிறந்த புதுக்கணிப்பு இருந்தபடி; அன்றிக்கே, "கொங்கைமேற் குங்குமத்தின் குழம்பழிய என்கிறபடியே கிருஷ்ணனுடைய வரவைக் கடாக்ஷித்து அவன் எப்போது வந்து மேல்விழும் என்று அறியாதபடியாலே தங்களை எப்போதும் அலங்கரித்த படியே இருப்பார்கள் என்றுமாம்; "வஸதி ஹ்ருதி ஸௌமிய ரூப: என்னுமாபோலே முன்புத்தை கிருஷ்ண னோட்டைக் கலவியால் பிறந்த புகர் இப்போது தோற்றும்படி இருக்கையாலே சொல்லவுமாம்" என்று கூறினர். இனி, மழை பெய்தல் வேண்டுமென வழிபடும் பகுதியொன்று இப்பாவைகள் இரண்டினும் உளது; "மழையே, நீ உமையம்மையின் மேனிபோல் கருத்து, அவளது சிற்றிடை போல் மின்னிப் பொலிந்து, அவளுடைய திருவடிப் பொற்சிலம்பு போல முழங்கி, திருப்புருவம் போல வில்லிட்டு அவள் சுரக்கும் இன்னருள் போல மழையைப் பொழிதல் வேண்டும்," எனத் திருவெம்பாவை கூறுகிறது. "மழையே, ஊழிமுதல்வன் உருவம்போல் மெய்கருத்து, அவனது ஆழிபோல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து சார்ங்கம் உதைத்த சரமழை போல் பெய்திடாய்" என்று திருப்பாவை கூறுகிறது. அவ்விடத்தே, "வருஷ தேவதையான பர்ஜன்யன் நாம் இச்சேர்த்தியிலே கிஞ்சித் கரித்து ஸ்வரூபம் பெற வேண்டுமென்று வந்து நான் இங்குத்தைக்குச் செய்யவேண்டும் அடிமையை நியமிக்கவேணும் என்ன, செய்யக் கடவபடியை இன்னபடியும் இன்னபடியும் என்று கையோலை செய்து கொடுக்கிறார்கள்," என்று இப்பாசுரத்துக்கு முன்னுரை காட்டி "வ்ர்ஷதேவதை அடியேனுக்கு ஒரு கிஞ்சித்காரம் நியமித் தருளவேணும் என்று பிரார்த்திக்க இவர்கள் அவனுக்குக் கைங்கர்யம் நியமித்தபடியைச் சொல்லுகிறது" என்று ஸ்வாபதேச வியாக்கி யானத்தில் முன்னுரை சொல்லி, தாற்பரியம் கூறுமிடத்து, "இப்பாட்டில் வர்ஷதேவதைக்கு அவன் அதிகரித்த காரியத்தையே தங்களுக்கு இஷ்டமாக நியமிக்கையாலே பகவத் பாகவத இஷ்டத் வேத நித்திய நைமித்திகாதி தர்மங்களை யாதாவாக அனுஷ்டிக்கை பிரபந்நாதிகாரிகளுக்கு ஆவசியக மென்ற தாய்த்து" என்று பெரியோர்களால் கூறுகின்றார்கள். இத்துணையும் கூறியதனால் திருவெம்பாவை சிவபெருமானது திருவருட் சத்தியை வியந்து பாராட்டும் கருத்துடைய தென்றும், திருப்பாவை கோவலர் மகளிர் கண்ணனது கூட்டத்தை விரும்பிய வேட்கை மிகுதிபற்றி ஆயர்பாடியில் நிகழ்ந்த நிகழ்ச்சியை நிகழ்த்தும் நீர்மையதென்றும் இரு வேறு கருத்துக்கள் காலவரலாற்றில் கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது விளங்கும். இங்கே விரியக்கண்ட பாவைப்பாட்டு இரண்டும் தோன்றியது ஆயிரத்து இருநூறு யாண்டுகட்கு முன்பாயினும், அவை இன்றும் புதுமைப்பண்பும் சுவைமிகுதியும் பெருகக் கொண்டிருப்பது கண்கூடு. இடைக் காலத்தே விசயாலயன் வழிவந்த சோழ வேந்தர்களும் பாண்டிய மன்னர்களும் பிறரும் திருவெம்பாவையின் சிறப்பை நன்கு உணர்ந்து, மார்கழியில் நடைபெறும் விழாக்களில் திருவெம்பாவையைக் கோயில்களில் ஓதுவதற்கென நிவந்தங்கள் பல அளித்துள்ளனர் கி.பி. பதினோராம் நூற்றாண்டில் கங்கை கொண்ட சோழன் மக்களில் ஒருவனான இரண்டாம் இராசேந்திரன் ஆட்சியில் ஐந்தாமாண்டில் நடுநாட்டுத் திருக்கோவலூரில் திருவெம்பாவை யோதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; அந்த இராசேந்திரன் தம்பி முதல் வீரராசேந்திரன் காலத்தில் திருவொற்றியூரில் இத்தகைய ஏற்பாடொன்று உண்டாயிற்று.1 சோழநாட்டில் எண்வகை வீரட்டங்களுள் ஒன்றான வழுவூரில் வீரட்டேசுரர் கோயிலில், கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில், இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் திருவெம்பாவை ஓதுதற்கென நிவந்தம் விடப்பட்டதென அவ்வூர்க் கல்வெட்டுக்1 கூறுகிறது. கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி புரிந்தபோது தென்பாண்டி நாட்டு நாங்குநேரியிலுள்ள சிவன் கோயிலில் அவனிநாராயணப் பல்லவரையர் என்னும் தலைவர் ஒருவரால் திருவெம் பாவையை ஓதுவதற்கென்று நிவந்தம் ஏற்படுத்திய செய்தியை அவ்வூர்க் கல்வெட்டு2 கூறுகிறது. கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் நம் தமிழ்நாட்டையாண்ட விசய நகர வேந்தருள் ஒருவரான அரியர தேவராயர் காலத்தில் சென்னையின் வடபகுதியான திருவொற்றியூர்க் கோயில் செயல்முறைகளை ஆராய்ந்து செம்மை செய்யும் நிகழ்ச்சியொன்று நடந்தது; அப்போது பழைய வழக்குகள் சில புதுப்பிக்கப்பட்டன. அவற்றுள் திருவெம்பாவை ஓதுவதும் ஒன்றாகக் கல்வெட்டிறிக்கை3 குறிக்கிறது. திருவெம் பாவைபோலத் திருப்பாவையைத் திருமால் கோயில்களில் ஓதுவதற்காக விசயநகர வேந்தர்கள் காலத்தில் நிவந்தங்கள் பல அழகர்கோயில் முதலிய இடங்களில் அளிக்கப்பட்டிருப்பதைக் கல்வெட்டுக்கள்4 எடுத்துரைக்கின்றன. இவ்வாறு தமிழகமெங்கும் சீரிய நிலையில் வைத்துச் சிறப்பிக்கப் பெற்ற திருவெம்பாவை கீழைக்கடலைக் கடந்து சயாம் நாட்டுக்கும் சென்றிருக்கிறது. திருப்பாவையும் உடன் சென்றது சயாம்நாட்டு மன்னர்கள் இரண்டையும் சிறப்பாக வரவேற்றனர். அவர்களது முடிசூட்டு விழாவில் ஓதப்பெறும் தமிழ் மந்திரம் இத்திருவெம்பாவை; இதற்கு அவர்கள் "லோரிபாவாய்" என்று பெயரிட்டுள்ளனர். மார்கழித் திங்களில் அவர்கள் பெரிய விழாச் செய்கின்றனர். அவ்விழாவில், முதல் பதினைந்து நாள் திருவெம்பாவை விழா என்றும், பின் ஐந்து நாள் விழா திருப்பாவை விழா என்றும், இவையிரண்டையும் தாங்கள் சயாம் மொழியில் "லோ-ஜின்-ஜா" என்றும் குறிக்கின்றனர். இவ்விழாக்களைப்பற்றிய விரிந்த குறிப்பை H.G. குவாரிட்சு வெல்சு என்பார்5 எழுதிய சயாம்நாட்டு அரச வாழ்க்கையென்ற ஆங்கில நூலில் விரியக் காணலாம். 1918-ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் வெளிவந்த வெளியீடொன்றால், இந்தோனீசியாவிலும், பிற பகுதிகளிலும் திருவெம்பாவை தமிழ் மந்திரமாக நிலவிய செய்தியை அவரே வெளியிட்டுள்ளார். கி.பி. பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னும் தோன்றிய காலம் தமிழர் வாழ்வுக்குப் பெருங்கேடு விளைந்த காலமாகும். தமிழ்மொழி பிறமொழிகட்கு முதலிடம் தந்து சீரழிந்தது. அரசியலில் செல்வாக்கிழந்ததேயன்றி, திருக்கோயில் வழிபாடுகளிலும் செந்தமிழ் தன் சீரிய இடத்தைக் கைவிட்டது. திருமுறைகளும் திருவெம்பாவையும் தாம் பெற்றிருந்த சிறப்பை இழந்தன. அவற்றை நிலைபெறுவித்த நிவந்தங்கள் “கோயிற் பூனைகட்கும்”, “கோயிற் பெருச்சாளி” கட்கும் இரையாயின. தமிழ்மக்கள் உள்ளத்தை உருக்கி, திருக்கோயிலில் எழுந்தருளி யிருக்கும் இறைவன் திருவருளில் இனிய எளிய முறையில் ஈடுபடச் செய்த திருமுறையும் திருவாசகமும் அங்கே ஓதுவாரையும் ஓதக் கேட்பாரையும் இழந்தன; அவற்றின் பொருளை உணர்வாரும் உணர்த்தக் கேட்பாரும் இலராயினர். ஓதுவதும் உணர்வதும் தமக்கு இழிவெனக் கருதும் தமிழ்ச்செல்வர்களும் தலைவர்களும் உளராயினர் எனின் வேறு கூறுவானேன்? சென்ற சில ஆண்டுகட்கு முன் திருக்கோயில்களில் திருமுறை திருவாசக திவ்விய பிரபந்தப் பாட்டுக்களைக் கோயிற் சுவர்களில் அழகுற எழுதிவைக்கும் முறையொன்று உண்டாயிற்று. கோயிலுக்குச் செல்வோர் கண்களை அவைகள் கவர்ந்தன; அவர் வாயில் அப்பாட்டுக்கள் தோன்றின; அவர் தம் உள்ளத்தில் ஒருவகை ஒளி பிறந்தது. பின்னர், அவ்வெழுத்துக்களின் தோற்றம் மறையலுற்றது; புதுக்குவோர் அருகினர்; புதுக்கக் கருதுவோர் இலராயினர். இன்று திருவெம்பாவை விழாக்களும் திருவாசக விழாக்களும் எழுகின்றன. மறைந்த ஒளி விளங்க முயல்கிறது. வீழ்ந்த திருமுறை எழத் தலைப்படுகிறது. மடிந்து கிடந்த தமிழகம் எழுந்துநிற்க முயல்கிறது. ஒடிந்து வீழ்ந்து உணர்விழந்து கிடந்த தமிழன் புரண்டு எழுந்து கண்ணைப் பிசைந்து கொண்டு எழுந்திருக்க முயல்கின்றான். எழுக திருவெம்பாவை! எழுக திருவாசகம்! எழுக திருமுறை வாழ்க தமிழ்! வாழியர் தமிழர்; வாழி தமிழகம். 6. திருமுருகாற்றுப் படை 1. தோற்றுவாய் செந்தமிழ் நாட்டுப் பண்டைய இலக்கியங்களுள் சங்க இலக்கியங்கள் தலையாயவை. மிக்க தொன்மைவாய்ந்த தொல்காப் பியத்துக்கும் தொன்மை மிக்க பாட்டுக்கள் கங்க இலக்கியங்களுள் உண்டு என்பர். அவை எட்டுத்தொகை பத்துப்பாட்டு என இருதிறப் படும். அவற்றுள் பத்துப்பாட்டின் கண் முதற்கண் நின்று இனிய இலக்கியக்காட்சி வழங்குவது திருமுரு காற்றுப்படை. முதற்கண் நிற்கும் திருமுருகாற்றுப் படையின் வேறாக, நான்கு ஆற்றுப்படைகள் இப்பத்துப் பாட்டினுள் உள்ளன. அவை பொருநராற்றுப்படை, சிறு பாணாற்றுப் படை, பெரும்காணாற்றுப் படை, கூத்தராற்றுப் படையாகிய மலைபடுகடாம். என்பனவாகும். திருமுருகாற்றுப் படை பெரும்பாணாற்றுப்படை யீறாக, நான்கனையும் முறையே நிறுத்தி, வேறு பாட்டுகள் ஐந்தனை இடையே நிறுத்தி இறுதியில் கூத்தராற்றுப் படையை வைத்துப் பத்துப்பாட்டுத் தொகுக்கப் பட்டுள்ளது. இத்தொகுதியில் உள்ள பாட்டுப் பத்தனுள், செம்பாகம் ஆற்றுப்படை யாகவே இருப்பதும், தொடக்கத்தில் நான்கு ஆற்றுப்படைகளை நிறுத்தி, இறுதியிலும் ஆற்றுப்படையே நிற்கத் தொகுத்திருப்பதும் காணுமிடத்து ஆற்றுப் படைபத்து என்று பெயர் கூறுமாறு இஃது அமைந்து இருப்பது புலனாகும். சில உரைகாரர்கள், இப்பத்துப் பாட்டை, ஆற்றுப்படை யென்பதும் இதனால் பொருத்த மாதல் தெளியப்படும். 2. ஆற்றுப்படை விளக்கம் ஆற்றுப்படை என்பது சங்கச் சான்றோர் பாடுதற்குக் கொண்ட பாட்டுவகை களுள் ஒன்று. ஆற்றுப்படையாவது ஆற்றின்கட் படுப்பது; ஆறு என்பதுவழி; படுப்பது செலுத்துவது. அஃதாவது, ஒருவர்க்குச் செல்லவேண்டும் வழிதுறைகளைச் சொல்லித் தெரிவித்து அவற்றைப் பின்பற்றிச் செல்க எனச் செலுத்துவது என்பதாம். ஆகவே, செல்ல வேண்டும் குறிப்பு உடைய ஒருவனுக்குச் சென்று பயின்ற ஒருவன் செல்லுதற்குரிய நெறியைத் தெரிவித்துச் செலுத்துவது ஆற்றுப் படையின் கருத்தாம். இக்கருத்தே முடத்தாமக் கண்ணியாரது பொரு நராற்றுப் படையிலும் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத் தனாரது சிறு பாணாற்றுப்படையிலும், கடியலூர் உருத்திரங் கண்ணணாரது பெரும் பாணாற்றுப் படையிலும், இரணிய முட்டத்துப் பெருங் குன்றூர்ப் பெருங்கோசிகனாரது கூத்தராற்றுப் படையிலும் அமைந் திருக்கிறது. ஏனைப் புறத்திலும் பதிற்றுப்பத்திலும் காணப்படும் ஆற்றுப் படைகளும் இக் கருத்தையே குறித்து நிற்கின்றன. இனி, ஆசிரியர் தொல்காப்பியனார், “ கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்” (தொல்,புறத்:36) என்று ஆற்றுப் படையின் இயல்லைபப் பொதுப்படக் கூறினார். பின்வந்த சான்றோர் புரவலன் ஒருவனிடம் சென்று பெரும்பொருள் பரிசிலாகப் பெற்ற பொருநர், பாணர், விறலியர், புலவர் முதலியோருள் ஒருவன் ஏனைப் பரிசிலருள் ஒவ்வொருதிறத்தார்க்குப் புரவலனுடைய நாடு, ஊர், பெயர், பரிசில் முதலியவற்றை எடுத்தோதி அவன் பாற்சென்று தாம்பெற்றவாறே பெறுக எனச் சொல்லி விடுப்ப தென்றும், இவ்வாறு பாடும் பாட்டு ஆயிரம் அடிப் பெருமை உடைய தென்றும் கூறினார். இவ்வாறு இயன்றுவரும் ஆற்றுப்படைகள் பலவும், பரிசில் பெற்ற ஒருவன் பெறாதான் ஒருவனுக்குத் தான் பெற்ற பெருவளத் தையும் அதனை நல்கிய தலைவன்பாற் செல்லுதற்குரிய வழிதுறை களையும் எடுத்துச்சொல்லி அங்கே சென்று பெறுமாறு செலுத்துவது கருத்தாக அமைந்துள்ளன. இதுநிற்க. சிலர் ஆற்றுப்படையை வழிகாட்டிபோல்வதென்று கருதுகின்றனர். வழிகாட்டியென்பது ஆற்றுப்படைபோல வழிச்செல்வோனை அவ்வழியையே பின்பற்றிச்சென்று பயன்பெறுமாறு வற்புறுத்தும் நீர்மையதன்று. ஆசிரியர் தொல்காப்பியனார் “சென்று பயனெதிரச் சொன்ன பக்கம்” என்று விளங்கக் கூறுவது ஆற்றுப்படையின் கருத்தாதலைத் தெளிதல் வேண்டும். 3. முருகாற்றுப்படையின் சிறப்புநிலை இனி, திருமுருகாற்றுப் படையில் வரும் ஆற்றுப்படைப் பகுதி ஏனை ஆற்றுப் படைகளிலும் ஒராற்றால் வேறுபட்டதாகும். ஏனைப் பொருநராற்றுப்படை, பாணாற்றுப்படை முதலிய வற்றால் சிறப்பிக்கப்பெறும் தலைவர், மக்களிற் சிறந்த முடிவேந்தரும், குறுநிலத் தலைவருமாவர். அவர் நல்கிய பெருவளம் உலகியற் செல்வங்களாகும். ஆதலால், அவைகள் ஆற்றுப்படுக்கப்படு வோரால் பெயர் கூறப்படுகின்றன. பொருநனை ஆற்றுப்படுப்பது பொருநராற்றுப்படை, பாணனை ஆற்றுப்படுப்பது பாணாற்றுப் படை; கூத்தரை ஆற்றுப்படுப்பது கூத்தராற்றுப்படை; விறலியை ஆற்றுப்படுப்பது விறலியாற்றுப்படை, புலவரை ஆற்றுப்படுப்பது புலவராற்றுப்படை என வருவது காணலாம். முருகாற்றுப் படையில் வீடுபேறு கருதிய சான்றோர் ஒருவரை, முருகன் திருவருளால் வீடுபேற்றுக்குரிய திருவடி ஞானம் கைவரப் பெற்ற சீவன் முத்த ரொருவர், முருகண்பால் ஆற்றுப்படுக்கின்றார். வீடுபேற்றுக்கமைந்த திருவருள் ஞானத்தை நல்குதலில், தலைசிறந்து நிற்கும் குரவன் முருகப்பெருமான் ஆதலால், ஆற்றுப்படைக்கு இடனாகின்ற வகையில் முருகப்பெருமான் திருப்பெயரால், இந்த ஆற்றுப்படை திருமுருகாற்றுப்படை என வழங்குகின்றது. இவ்வாறு ஏனை ஆற்றுப் படைகளிலும் ஒரு வகையில் வேறுபட விளங்குவது பற்றி முருகாற்றுப்படை யென்பது வேறு பொருள் கொள்ளும் வகையில் நிற்கின்றது. இம்முருகாற்றுப்படை குறவர்கள் முருகனைவழி படும் இடத்தை “முருகாற்றுப் படுத்த உரு கெழு வியனகர்” (244) என்று குறிக்கின்றது. முருகாற்றுப் படுத்த என்றதற்கு நச்சினார்க் கினியார் “பிள்ளையார் வரும்படி வழிப்படுத்தின்” என்று பொருள் கூறுவர்; “பிள்ளை யாரைத் தம் வழிப்படுத்தின” என்பர் பிறர். ஆறு: வழியெனவும், படை, படுப்பதெனவும் பொருள் படுதலின், ஆற்றுப் படையென்பது வழிப்படுப்பது எனப் பொருள் படுமாறும் காணப்படும். படவே, முருகாற்றுப்படை என்பது முருகன் அருள் வழிப்படுவது என்று பொருள் தருமாறும் பெறப்படும். முருகனை வழிபடுவதாவது, முருகன் உறையும் இடமறிந்து சென்று வழிபடுவ தென்பதாம். வழிபாட்டின்கண் முருகன் திருவுருநலமும், திருவருள் நலமும், அவன் உறையும் திருப்பதிகளின் நலமும், வழிபடும் திறமும், வழிபாட்டின் இறுதியில் அப்பெருமான் போந்து அருள் வழங்குக் திறமும் நன்கு விளக்கப்படும். இச் சிறப்பு கருதியே, இது சைவத் திருமுறைகளுள் பதினொராந் திருமுறையில் ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளது. 4. முருகாற்றுப் படையின் கருப்பொருள் இனி, “முருகப் பெருமான், காலை இளங்கதிரவன் கடற்கண் தோன்றுங்காலல் திகழும் ஒளியைப் பொருந்தியவன்; தன்னை அடைந்தாரைத் தாங்கும் அழகு பொருந்தியது அவனது திருவடி; தன்னை வெறுத்துப் பகைத்தாரைப் பழிக்கும் வலிமிக்கது அவனது திருக்கை. கற்பால் மாசு மறு இல்லாதவர் அவன் தேவியர்; அவனது திருமார்பில் செங்கடம்பின் உருள்பூவால் தொடுக்கப்பட்ட தண்ணிய தார் கிடந்து புரளும். திருமுடியில், சுடர் விட்டுத் திகழும் காந்தட் பூவாலாகிய பெருந்தண் கண்ணி இருந்து இனிய காட்சி வழங்கும். கடல்நடுவிற் புகுந்து, ஆங்கே வாழ்ந்த சூரனை அடியோடு தொலைத்த நெடுவேல் அவன் பால் இருந்து அவனது அடல்விக்கி நிற்கின்றது. பகைவரான அவுணர்க்கு வலியும் அரணும் நல்கி வந்த மாமரத்தை வேரோடு தொலைத்ததினால் உண்டான மறுவில்லாத வெற்றியால், என்றும் அழியாத புகழ்பெற்றுச் செவ்வே லேந்தும் இந்த முருகனுடைய செம்மை விளங்கும். திருவடியை நீ நினைந்து, வெம்மல் உள்ளம் பெற்றனை; அவ்வுள்ளத்தால் நலம்புரி கொள்கையை மேற்கொண்டு பிறவிக் கேதுவாகிய புவன்கள் வழிச்செல்லாது முருகன் திருவடிக்கண் சென்று சேரும் அருள் நெறியில் செல்லும் செலவையே நீ விரும்புகின்றாய்; அதனால் நன்னெறித்தாகிய நின்நெஞ்சின்கண் நோயமாகிய இனிய ஞானவேட்கை நன்கு கைகூடக், கருதிய பேற்றைக் கருதியவாறே இப்போதே பெறுவாய்” என்று சீவன் முத்தராகிய சான்றோர் முருகனது திருவடிஞானம் விழைந்துவந்த சான்றோர்க்கு உரைக்கின்றார். கேட்ட சான்றோர் தமது உள்ளத்தே, “முருகப்பெருமான் எங்கும் எல்லாமாய் இருக்கும் பரம்பொருளாதலால், எங்கே சென்று எப்படிக் காண்பது?” என எண்ண மிடுகின்றார். அதனை யவர் முகக்குறிப்பால் உணர்ந்துகொள்ளும் சீவன்முத்தர்,-- கூடல் நகர்க்கு மேற்கிலுள்ளதும், ஞாயிறு தோன்றிய காலைப் போதில், வண்டினம் போந்து ஒலிக்கும் மலர் நிறைந்தசுனையை யுடையது மான பரங்குன்றத்தில் நெஞ்சமர்ந்து உறைவன்; அதுவே யன்றி, உலகத்து நன்மக்களது புகழால் உயர்ந்த திருச்சீரலைவாய்க்கு விசும்பாறாகசு செல்வதும் அவனுக்கு நிலைத்த பண்பாகும். தேவரும் முனிவரும் பிறரும் வந்து தன்னைக் காணும்படியாகத் திருவாவினன்குடியில் மடந்தையுடன் சின்னாட்கள் இருப்பன்; அதுவேயன்றி இருபிறப்பாளர் தனக்குரிய ஆறெழுத்து மறையை ஒதி மலரிட்டு வழிபட அதனைப் பெரிதும் உவந்து திருவேரகத்தில் எழுந்தருளியிருத்தற்கும் உரியன். அதுவேயன்றிக் குறமகளிராடும் குரவைக் கூத்துக்கு முதற்கை கொடுத்து அவரோடு குன்றுதோறும் விளையாடுவதும் அவன்பால் நிலைபெற்ற பண்பு; அதுவேயுமன்றி, ஊர்தோறும் மக்கள் செய்யும் திரு விழாக்களிலும், தன்பால் அன்புடையார் ஏத்துதற்கு அமைத்த இடங்களிலும், வேலேந்தி வேலன் வெறியாடும் இடங்களிலும், காடுகளிலும் காக்களிலும் அழகிய ஆற்றிடைத் தீவுகளிலும் குளங்களிலும் வேறுபல அழகிய இடங்களிலும், சதுக்கம், சந்தி முதலியவற்றிலும், புதுப்பூ மலரும் கடம்பு மரங்களிலும், மன்றங்களிலும், பொதியில்களிலும், கந்து நிற்கும் கந்துடை நிலைகளிலும், வேறுபிற இடங்களிலும் ஆங்காங்குத் தன்னை வேண்டுவோர் வேண்டியவாறு வழிபட எழுந்தருளுவன்” என்று கூறுகின்றார். அது கேட்டு மகிழ்ச்சியால் முகமலர்கின்றார் சான்றோர். அவரைச் சீவன் முத்தர் நோக்கி, ஆங்காங்கு அவன் எழுந்தருளக் கண்டதும், அவனது தெய்வ வடிவு நோக்கி அஞ்சாமல் அன்புடன் முகனமர்ந்து துதித்துக் கைகூப்பித் தொழுது அவன் திருவடியில் தலை பொருந்த வீழ்ந்து வணங்கி, `செல்வ, ஆல் கெழு கடவுள் புதல்வ, மலைமகள் மகனே, மாற்றோர் கூற்றே, கொற்றவை சிறுவ, பழையோள் குழவி, தானைத் தலைவ, மாலைமார்ப, புலவ, ஒருவ, மள்ள, அந்தணர் வெறுக்கை, சொன்மலை, மங்கையர் கணவ, பெருஞ் செல்வ, குறிஞ்சிக் கிழவ, புலவர் ஏறே, பெரும்பெயர் முருக, இசை பேராள, பொலம்பூண் சேய், நெடுவேள், பெரும் பெயர் இயவுள், மதவலி, பொருந, குரிசில்’ என்று இவ்வாறு யான் கூறும் அளவில் அமையாது மேலும் பல சொல்லி, `நின்பெருமை அளந்தறிதல் மன்னுயிர்க்கரிது; நின் திருவடிபெற வேண்டி வந்தேன். நின்னோடு ஒப்பார் பிறர் இல்லாத மெய்ஞ்ஞானமுடைய வனே,’ என மொழிந்து, `உன் மனத்திற் கருதும் கருத்தைப் புலப்படுத்து வாயாயின், அங்கே பல வேறு உருவுடன் குறியராகிய பல கூளியர் நின் கருத்தை உணர்ந்து கொண்டு விழா அயரும் களத்தின்கண் எழுந்தருளும் முருகன் திரு முன்னே வணங்கி நின்று, `பெரும, மிக்க வாய்மையுடைய புலவன் ஒருவன் நின் திருவருளை இரந்து இனியவும் கேட்போர்க்கு நலம் பயப்பனவுமாகிய நின் புகழை விரும்பிப் பல சொற்களால் வாழ்த்திக்கொண்டு வந்துள்ளான்,’ என்று தெரிவிப்பர். உடனே முருகன் தெய்வத்தன்மையோடு கூடிய வன்மை பொருந்திய தன்வடிவின் வானளாவி நிற்கும் பெருமை யொடு எழுந்தருளிக் “கண்டார்க்கு அச்சம் பயக்கும் தன் உயர் நிலையைத் தன்னுள் அடக்கிக்கொணடு பண்டு தான் கொண்டிருந்த தெய்வமணங்கமழும் இளமைக் கோலத்தைக் காட்டி, “வீடு பேற்றுக்குரிய ஞானம் வேண்டி வந்த நின் வரவினை அறிவேன்; அஞ்சற்க,” என்று அன்பு பொருந்திய நன்மொழிகளை யருளிச் செய்து, கடல் சூழ்ந்த இந்நிலவுலகத்து வாழ்வோருள் நீ ஒருவனே வீடுபெறத்தக்கவன் என்று பலரும் விளங்கத் தெரியுமாறு விழுமிய வற்றிற்கெல்லாம் விழுமியதும் பிறர் பெறுதற்கரியதுமாகிய திருவருள் ஞானத்தை, மiல கிழவோனாகிய அவன் நல்குவன்,” என்று கூறுகின்றார். 5. பரிசில் விளக்கம் இங்கே கூறிய இப்பொருளைத் தன்னகத்தை கொண்ட இத்திருமுருகாற்றப் படையில் திருவருள் ஞானம் “விழுமிய பெறலரும் பரிசில் (294,5) எனப்படுகிறது. நச்சினார்க்கினியர் அதனைக் கந்தழி என்று கூறி “கந்தழியைப் பெற்றா னொருவன் அதனைப் பெறாதான் ஒருவனுக்குப் பெறுமாறு கூறி அவனை வழிப்படுத்துக் கூறுவான்,” என்னும் “கந்தழியாவது ஒருபற்று மற்று அருவாய்த் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள்,” என்றும் “இதனை `உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம்போல் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்,’ என அதனை யுணர்ந்தோர் கூறியவாற்றானுணர்க,” என்றும் கூறினர். கந்து பற்றுக்கோடு எனப் பொருள்படுவதாகலின், கந்தழியாவது சார்பினால் தோன்றாது, சார்பிறந்து நிற்கும் தூயபரம் பொருள் என்பதாகக் கொண்டார். பரம்பொருளை நல்கப்பெறுவ தென்பது, அதற்குரிய ஞானத்தைப் பெறுவதாம். பரம்பொருளை எய்தினோர் மீள உலகிற்கு வாராராதலால், நல்குதற்கும் பெறுவதற்கும் உரியது பரஞானமேயாம் எனத் தெளிதல் வேண்டும். “பரஞானத்தால் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர், பதார்த் தங்கள் பாரார்” (சிவ. சித்தி) எனப் பிற்காலத் தான்றோர் இதனை விளங்கக் கூறியிருப்பது காணலாம். 6. முருகனுடைய திருப்பதிகள் இனி, இத்திரு முருகாற்றுப் படையில் அடங்கியுள்ள பொருளைக் காணு மிடத்து, முதற்கண் முருகனுடைய உருநலம், செயல் நலம் கூறுவதும், பின்னர் அவன் எழுந்தருளும் பரங்குன்றம் முதலாக வரும் இடங்களைக் கூறுவதும், பின்பு இறுதியாக முருகனை வழிபடுந்திறம் கூறுவதும் அவ்வழி பாட்டை யேற்று அவன் எழுந்தருளிக் காட்சி வழங்கி யருளுவது கூறுவதும் காணப்படும். முருகப்பெருமானுடைய உருநலன் செயல்நலன் ஆகியவற்றை முருகாற்றப் படையில் கருப்பொருட் பகுதியில் கண்டோம். இனி, அவன் எழுந்தருளும் இடங்களைக் காணலாம். 1. பரங்குன்றம் மதுரைமாநகர்க்கு மேற்கில் உள்ளது; மதுரைமாநகரின் வாயிலில் போர்குறித்து நெடுங்கொடி நிறுவப்பட்டிருக்கிறது; கொடியில் சிறியதொரு பாவையும் பந்தும் தொங்கவிடப்பட்டுள்ளன. நகர வாயில் பகையச்சமின்றித் திறந்தே கிடக்கிறது. பொருதற்கக் கருதும் பகைவரும் இல்லையாயினர். வாயிலைக் கடந்து சென்றால் திருவீற்றிருக்கும் கடைத்தெரு உளது: அதற்கப்பால் இருமருங்கும் மாடங்கள் நிற்கும் நெடுந்தெரு நிலவுகிறது. இத்தகைய சிறப்புடன் திகழும் மதுரைமாநகரின் மேற்கில் வளவிய சேறு பரந்த நெல் வயல்கள் காட்சி நல்குகினறன. அகன்ற அவ்வயல்களிடையே தாமரை மலர்ந்து விளங்குகின்றது. அவற்றிற் படிந்து வண்டுகள் தேனுண்ணும்; இந்நிலையில் பகற்பொழுது மறைதலால் தாமரை குவிந்துவிடும்; அப்போது தேனுண்டு கிடக்கும் வண்டு அம்மலரிடத்தே உறங்குகிறது. விடியலில் அவ்வண்டு வெளிவரும். அப்போது நெய்தல் புதுப்பூமலர, அதனுள் அவ்வண்டு படிந்து தாதளைந்து தேனுண்ணும்; இதற்குள் ஞாயிறு எழுந்துவிடும். உடமே அவ்வண்டு பரங்குன்றத் துக்குச் சென்று அங்குள்ள சுனையில் மலர்ந்திருக்கும் நீலமலர்களின் தேனையுண்டு சூழ்வந்து பாடும். இத்துணை இயற்கை நலம் சிறந்த பரங்குன்றத்தில் முருகன் விரும்பி உறைகின்றான். 2. திருப்பரங்குன்றத்தில் அமர்ந்துறையும் முருகப் பெருமான், திருச்சீரலைவாய்க்கு யானையேறிச் செல்வன். அந்த யானை நெற்றியிலே பட்டமும், பக்கத்தில் மாறியொலிக்கும் மணியும் கட்டப்பெற்றது; கூற்றத்தையொக்கும் வன்மையும் காற்றை யொத்த கடுநடையும் உடையது. இதன்மேல் காட்சியளிக்கும் முருகனுடைய சென்னியில் பலவகை ஒளிமிக்க மணிகள் இழைத்த முடியிருந்து அழகு செய்யும். அவன் காதுகளில் அணிந்துள்ள மகரக்குழைகள் முகம் முழுத் திங்கள்போல இருத்தலால், முழுமதியைச் சூழ்ந்து திகழும் விண்மீன்கள்போல விளங்குகின்றன. தத்தம் கொள்கையில் தப்பாது, மேற்கொண்ட தொழிலைச் செய்து முடிக்கும் திறலுடையவர் சிந்தையின்கண் அவனுடைய திருமுகம் ஒளிவிளங்கித் தோன்றும். முகம் எனப் பொதுப்படக் கூறினும், அம்முகம் ஆறெனக் கொள்ளல் வேண்டும். திருமுகங்கள் ஆறனுள், ஒருமுகம், புறவிருளிலே அழுந்திக் கிடக்கும் உலகம் குற்றமின்றி விளங்குமாறு பலவேறு ஒளிக்கதிர் களைப் பரப்பி ஞாயிறுபோல ஒளிசெய்யும்; ஒருமுகம், தன்பால் அன்பு செய்யும் அடியவர்கள், தன்னை வழிபட அவ்வழிபாட்டை மகிழ்ந்தேற்று அவர்கள் விருப்பத்துக்கேற்ப இனிதொழுகி, அவர் வேண்டும் வரங்களை அன்புடன் நல்குகின்றது. ஒருமுகம் மறைகளில் விதித்த முறையில் தவறாமல் அந்தணர்கள் செய்யும் வேள்வி குறித்து அதற்குத் தீங்கு வாராதபடி பாதுகாக்கின்றது. ஒருமுகம், நூலறிவாலும் இயற்கையறிவாலும் உணரப்படாத உண்மைப் பொருளை, இருள் நீங்கத் தண்ணிய நிலவிணப் பொழிந்து விளக்கும் கலை நிறைந்த திங்களைப் போல், அறியாமை நீங்கத் தண்ணிய அருளொயியைச்செய்து உண்மை ஞானத்தைத் தலைப்படுவிக்கின்றது. ஒருமுகம், அன்பராயினாருடைய பகைவரை வலியழித்து அவர் செய்யக் கருதும் போரைக் கெடுத்து அதுவே வாயிலாகக் கறுவு கொண்ட நெஞ்சத்தால் அவர் செய்யும் களவேள்வியை நிகழச் செய்கின்றது. ஒருமுகம், குறவருடைய இளமைநலங் கனிந்த மகளும், கொடிபோன்ற இடையையுடையவளுமாகிய வள்ளியுடன் மகிழ்ச்சி கொண்டாடுகின்றது. இங்ஙனம் விளங்கும் முகங்கள் ஆறுக்கும் ஏற்ப, அவனுடைய கைகள் பன்னிரண்டும் முறையே பணிபுரிகின்றன. அகன்றுயர்ந்த அவனது மார்பின்கண் சிவந்த வரிகள் கிடந்து சிறப்புச் செய்கின்றன. வெற்றியாலும் கொடையாலும் வீறு மிக்குப் புகழால் அவனுடைய தோள்கள் உயர்ந்திருக்கின்றன. புறவிருளை நீக்கும் திருமுகத்திற் கேற்ப, ஒருகை ஞாயிற்றொளியின் மிகுதியைத் தாங்கி விண்ணிடத்தே ஞாயிறொடு திரியும் முனிவர் களைத் தாங்கிச் செல்ல, ஒருகை, இடையிலே ஊன்றியிருக்கும்; யானைமேல் தோன்றி வரங் கொடுக்க வரும் திருமுகத்திற்கேற்ப ஒருகை அங்குசம் ஏந்த, ஒருகை, துடையின்மேல் கிடக்கம். அந்தணர் வேள்வி காக்கும் திருமுத்துக் கியைய ஒருகை கேடகத்தை யேந்த, ஒருகை வேலைச் சுழற்றிக் கொண்டிருக்கும். உண்மை ஞானமுணர்த்தும் திருமுகத்துக்கொப்ப ஒருகை மார்பின்கண் ஞானக்குறிப்பொடு விளங்க, ஒருகை அம்மார்பின் மாலை யோடே அழகாகத் தவழ்ந்து கிடக்கும்; களவேள்வி காணும் திருமுகத்துக் கேற்ப, ஒருகை தான் அணிந்த கொடியுடனே மேலே சுழன்று கொண்டிருக்க, ஒருகை மணிகள் மாறி மாறி யொலிக்கச் செய்யும், வள்ளியொடு நகைமகிழும் திருமுகத்துக்கமைய ஒருகை நீல முகிலை மழை பெய்விக்கும்; ஒருகை வானர மகளிர்க்கு மணமாலை சூட்டி மகிழ்வுறுத்தும். பன்னிரண்டு கைகளும் இவ்வாறு முறையே பணி செய்ய, வானத்தே துந்துபி முழ்ங்க, கொம்பு என்னும் இசைக்கருவி ஒருபால் இசைக்க, ஒருபால் சங்கு ஒலிக்க, இடிபோல் முழங்கம் முரசமும், கொடிமிசை யெழுதிய மயிலும் ஒலிக்க வானமே வழியாக, உலகத்து நன்மக்கள் புகழும் சிறப்பமைந்த திருச்சீரலைவாய்க்கு முருகப்பெருமான் விரைந்து செல்வன். 3. அலைவாய்க்கு யானைமேற் செல்லும் முருகப் பெருமான் திருவாவிநன்குடியில் சின்னாள் தங்கியிருப்பன். அப்போது பலவேறு முனிவர்களும் விரதிகளும் தாபதர்களும் முன்னேவர யாழ்வன்மையும் மென்மொழியும் உடைய இசைவாணர் நரப்புக் கருவிகளை இசைத்துவர, உடல்நலமும் மேனிநலமும் கற்புநலமும் உடைய நன்மகளிர் உடன் போந்து விளங்க, திருமாலும், உமைய மர்ந்து விளங்கம் திருமேனியையுடைய சிவபெருமானும், வெள்ளை யானை யேறும் இந்திரனும், முருகனால் ஒறுக்கப்பட்ட பிரமன் பொருட்டு வந்து காண, ஆதித்தர், உருத்திரர், வசுக்கள், மருத்துக்கள் என நால்வகைய ராகிய முப்பத்துமூவரும், பதினெண் கணங்களும் தாம் உறுகுறை தீர்ந்து முறை பெறல் வேண்டி விண்மீன் போன்ற தோற்றமும் காற்றொத்த செலவும், இடிகெபன்ற குரலும் உடைய வராய் வான் வழியாக வந்து வழிபாடு செய்வர். அக்காலை முருகப்பெருமான் மடந்தையோடு திருவோலக்கமிருந்து அவர்கட்குத் தன் திருவருளை வழங்குவன். ஆவிநன்குடி யென்பது இப்போது பழனியென வழங்கும் ஊர்; இது சங்ககாலத்தில் பொதினியென்ற பெயருடன் ஆவியென்னும் வேளிர் தலைவனுக்கு உரியதா யிருந்தது. இதன் அருகில் ஆய்க்குடியென இருக்கும் ஊர் ஆவிகுடியென்பதன் மரூஉ வழக்கு. இப்பகுதியைக் கல்வெட்டுக்கள் வையாவி நாடு என்றே குறிக்கின்றன. ஆவி குடியனும் இப்பொதினிப் பகுதி நன்செய் வளம் சிறந்திருந்தது பற்றி இது ஆவிநன்குடியென வழங்கிற்று. இவ்வரலாறு விளங்காத காலத்தில் பொதினி பழனி யாயிற்று; திருவாவிநன்குடி திரு, ஆ, இனன், கு, டி என்று பிரிக்கப்பட்டுத் திருமகளும், காமதேனுவும், ஞாயிறும், நிலமகளும், தீக்கடவுளும் வழிபட்ட இடம் எனப் புராண வரலாறு பெறுவதாயிற்று. 4. திருவேரகம் என்னும் திருப்பதியில் அடியார் வழிபட முருகன் எழுந்தருளுவன். இந்த அடியார்கள், உயர்குடியில் தோன்றி நாற்பத்தெட்டாண்டுகள் பிரம சரியங் காத்து அறங்சுறும் கொள்கையும் நாடோறும் முத்தீயோம்பும் முறைமையும் உடைய இருபிறப் பாளராகிய வேதியராவர். ஒவ்வொருநாளும் காலமறிந்து வேத மோதுவது இவர்களது தொழில்; மார்பிலே ஒன்பது புரிகொண்ட மூன்றாகிய பூQல் அணிந்திருப்பர். அவர்கள் நாட்காலையில் நீராடி, ஈரவுடை தானே புலருமாறு அரையில் உடுத்து இருகை களையும் தலைமேல் குவித்து முருகன் திருப்புகழை யேத்தி, அப்பெருமானுக்குரிய ஆறெழுத்து மந்திரத்தை நாப்பிறழு மளவும் பன்முறையும் ஓதி மணமிக்க புதுமலர்களை அவன் திருவடியில் இட்டு வழிபடுவர். அவ்வழிபாட்டை முருகன் பெரிதும் உவந்தேற்று அவ்வூரிலே எழுந்தருளியிருப்பன். ஏரகம் என்பது தஞ்சை சில்லாவில் உள்ள சுவாமிமலை யென்று கூறுவர். இதற்கு அருணகிரிநாதரது திருப்புகழ் ஆதரவு தருகிறது. நச்சினார்க்கினியர் “மலைநாட்டகத்தொரு திருப்பதி” என்று எழுதுகின்றார். தென்கன்னடம் சில்லாவில் உடுப்பிப் பகுதியில் ஏரகம் என்ற பெயருடைய ஊர் ஒன்று உளது; இது மலைநாட்டது; இங்கே பழமையான முருகன் கோயில் இருந்திக்கிறது. “சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும், ஏரகமும் நீங்கா இறைவன்” என்ற சிலப்பதிகாரக் குன்றக் குரைவ கூறும் இடங்களுள் வெண்குன்றைச் சுவாமிமலையென அரும்பதவுரைகாரர் கூறியிருப்பது நினைவுகூரத் தக்கது. இதனால் ஏரகத்தைப்பற்றித் துணிபு கோடற்கு நன்கு ஆராய்ச்சி செய்யவேண்டியிருக்கிறது. 5. முருகன் குறிஞ்சிநிலக் கடவுளாதால், குன்றுகள் எல்லாம் அவன் விளையாட்டயரும் இடங்களாகும், இக்குன்றுகளில் வாழ்பவர் குறிஞ்சிநில மக்களான குறவர்களாவர். இக்குறவர்கள் முருகனை வழிபடுங்கால், இவர்களுள் வழிபாட்டுக் கென ஓருவன் இருப்பான். அவன் முருகனது வேற்படையைக் கையிலேந்தில் தன்னை இன்னான் எனத் தோற்றுவிக்கும் வகையில் இருப்பன்; அவனை அக்குறவர்கள் வேலன் என அழைப்பர். பச்சிலைக் கொடியில் சாதிக்காயும், தக்கோலக்காயும் இடையிடையே விரவ, காட்டுமல்லிகையும் வெண்கூதாளியுமாகிய பூக்களைக் கலந்து கண்ணி தொடுத்துச் சென்னியிற் சூடுவன்; மார்பின்கண் நறிய சந்தனம் பூசிக்கொள்வான். இவ்வேலன் முருகனை வழிபடுதற்கென ஓரிடங் கண்டு தூய்மை செய்து பச்சிலைப் பந்தரமைத்து கோழிக் கொடி நட்டுக் கோயிலமைப்பன். அவ்விடத்தே குறவர்கள் அனைவரும் வந்துகூடி மூங்கிற் குழாய்களில் பெய்து வைத்திருக்கும் தேன்பெய்து செய்யும் கட்டெளிவை உண்பர்; பின்பு இளையரும் முதியருமாகிய பலருங்கூடிக் குரவைக் கூத்தாடுவர். அக்காலையில் தொண்டகம் என்னும் சிறுபறை முழங்கும். அதன் தாளத்துக் கிசையவே கூத்தும் நடைபெறும். அவ்விடத்தே சில நல்லிளமகளிர் முருகனைச் சேவித்து நிற்பர். அவர் கூத்தலில் சுனைகளிற் பூத்த நீர்ப்பூக்களின் அரும்பு களைக் கொய்து அவற்றைக் கைவிரலால் அலர்த்தித் தொடுத்த கண்ணி சூட்டப்பெற்று இருக்கும். கண்ணிக்குப் பின்னே, வேறுபல மலர்ந்த பூக்களின் இதழ்களைப் பிரித்துத் தொடுத்த மாலை சுற்றப்படும். அவர்கள் இடையில் கஞ்சங்குல்லைப்பூவும் வேறுபிற பூங்கொத்துக்களும் பைந்தழைகளும் விரவித்தொடுத்த தழையுடை அணிந்திருப்பர். முடிமுதல் அடிகாறும் பன்னிறப் பூக்களும் பைந்தழையும் புனைந்து மென்மெல இயலும் அவரது இயல் மயிலின் சாயாலைக்காட்டில் மாண்புறுத்துகிறது. இந்நிலையில், யாழிசை போலும் இனிய மிடற்றோசையை யுடைய மகளிர் சிலர் சேவித்துப் பாடுவர். இம் மகளிரிடையே முருகன் தோன்றிக் குரவையாடும் மகளிர்க்குத் தலைக்கை தந்து அவர்களோடு குன்று தோறும் விளையாடுவன். அவனுடைய பண்புகளுள் இதுவும் ஒன்றாகும். இவ்வாறு விளையாடுமிடத்து அவன் சிவந்த ஆடையணிந்து காதில் காம்பு சிவந்த அசோகந் தளிரைச் செருகிக்கொள்வன். இடையிற் கச்சையும் காலிற் கழலும் அணிந்துகொண்டு, வெட்சிப் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியைத் தலையிற் சூடுவன். ஒருபால் குழலும் ஒருபால் கொம்பும், ஒருபால் குறிய பல இயங்களும் இசைக்க, யாட்டுக்கிடா பின்வரத் தான் மயில் மேலேறி கோழிக் கொடி உயரத்திற் பறக்க நெடியோனாய்க் காட்சி நல்குவன். அவன் தோளில் தொடிகிடந்து அழகு திகழும். இடையில் கட்டிய அரைக்கச்சையின் மேலே கிடந்து நிலத்தளவும் தொங்குமாறு மேலாடை தரித்துக் கொள்வன். 6. குன்றுதோறும் விளையாடும் பண்புடையனாகிய முருகன் இழும் என்னும் ஒசை நிலவ வீழும் அருவியொடு சோலை களிற் பழுத்திருக்கும் பழங்கள் கனிந்து வீழும் பழமுதிர் சோலை மலைக்கு உரிய தலைவனாவன். இவ்வருவிகள் மலையினின்று வீழுங்கால் பல வேறு ஆடைகளை விரித்துத் தொங்கவிட்டாற் போலத் தோன்றுகின்றன. அருவிநீர் அகிற்கட்டைகளைச் சுமந்து வருகிறது; வருங்கால் அயலிலுள்ள சந்தன மரங்கள் அலைப்புண்டு உருண்டு வீழ்கின்றன. பூச்சுமந்து நிற்கும் சிறு மூங்கில்கள் வேர் அரிப்புற்று வீழும்; வான் அளாவிநிற்கம் மலையுச்சியில் ஞாயிற்று வட்டம்போல் இருக்கும் தேனடை சிதைந்து வீழ, ஆசினிப் பலாப்பழங்கள் வீழ்ந்து பிளந்து, சுளைசுளையாகப் பிரிந்து அருவி நீரில் கலக்கின்றன; மலைமேல் நிற்கும் சுரபுன்னைப் பூக்கள் அருவியின் அதிர்ச்சியால் உதிர்கின்றன; நீர் வீழ்ச்சியில் புகைப்படலம் போல் எழுந்து பரவும் நீர்த்திவலைகளின் குளிரால் கருங்குரங்குகளும் முசுக்கலைகளும் நடுங்குகினறன; பிடியானைகள் குளிரால் வேறிடத்துக்குச் சிதறி யோடுகின்றன; பெருங்களிறுகளின் மருப்பின் கண் உண்டாகும் முத்துக்கள்பல அருவிநீரில் கலக்கின்றன. மேலிருந்து வீழ்ந்து தலைகீழாய்க் கலங்குங்கால் நல்லபொன்னும் மணியும் மேல்வந்து அழகிய நிறத்தைச் செய்கின்றன. கரையில் நிற்கும் மலைவாழைகள் அருவியின் பெருக்கால் வேரொடு அரிக்கப் படுகின்றன; தென்னைகள் தாம் தாங்கும் இளநீர்கள் உதிருமாறு தாக்கப்படுகின்றன; மிளகுக் கொடிகள் கரியதுணரொடு அறுப்புண்டு மெலிய, அருகில் மேயும் மயில்களும் கானக்கோழிகளும் அஞ்சி நீங்குகின்றன; காட்டுப்பன்றிகளும் கரடிகளும் அஞ்சிக் கற்குகைகளில் ஒடுங்குகின்றன. இம்முருகாற்றுப்படை பழமுதிர்சோலைமலை கிழவோன் என்றது கொண்டு, பழமுதிர்சோலைமலையென ஒருதிருப்பதி முருகனுக்கு உரியதாகக் கூறுவதுண்டு. நச்சினார்க்கினியார் உரையால் அத்தகையதொரு திருப்பதி இருப்பதென அறிய இயலவில்லை; முருகாற்றுப்படையின் சொல்லமைப்பும் அதனை வற்புறுத்த வில்லை. ஆயினும், பழமுதிர்சோலையென ஒன்று தனியே கொண்டு, அதுவே மதுரைக் கண்மையில் அழகர்மலையென வழங்கும் பகுதி யென்பவரும் உண்டு. அதனைத் திருமாலடியார்கள் “திருமாலிருஞ் சோலைமலை” யென்கின்றனர். அவர்கள் சோலை மலையென வழங்குவதும், முருகாற்றுப்படை பழமுதிர்சோலைமலையென வழங்குவதும் ஒத்திருப்பதுபற்றி இவ்வாறு கோடற்கு இடமுண்டா கிறது. இதுவும் நன்கு ஆராய்தற்குரியது. 7. இத்தகைய பொருள் நலஞ்சிறந்த அருவிகளோடு கூடிய மலைகட்குரியனான முருகன் குன்றுதோறும் விளையாடிக் காட்சி நல்குவதோடு, ஊர் தோறும் மக்கள் விழாச் செய்யும் இடங்களிலும், தன்பால் அன்புடையவர் தன்னை நினைந்து பரவும் இடங்களிலும், வேலன் வெறியாடுமிடங்களிலும், காடுகளிலும் பூங்காக்களிலும், அழகு பொலியும் ஆற்றிடைத் தீவுகளிலும், ஆறு குளங்களிலும், இவைபோலும் வேறு இடங்களிலும், சதுக்கம், சந்தி, மன்றம், பொதியில் முதலிய இடங்களிலும், புதுப்பூ மலரும், கடப்பமரங்கள் நிற்கும் இடங்களிலும் கந்துடை மன்றங்சளிலும் வேண்டுவோர் வேண்டியவாறு வழிபட, அவர்கள் வேண்டியவாறு ஆங்காங்கு எழுந்தருளுவன். 7. வழிபாடுகள் முருகன் எழுந்தருளும் சீர்த்த இடங்களைக் கூறியபோது, திருவாவிநன் குடியில் முனிவர் முதல் பதினெண் கணங்கள் ஈறாகத் தேவர் பலரும் வழிபடுந்திறமும், திருவேரகத்தில் வேதியர் வழிபடு மியல்பும் விளங்கக் காண்கின்றேம்.இவ்வாறே, சூரர மகளிரும், குறமகளிரும் முருகனைப் பரவும் திறம் தொடக்கப்பகுதியிலும் இறுதிப் பகுதியிலும் குறிக்கப்படுகின்றன. சூரர மகளிர் வானளாவ உயர்ந்த மலையிடங்களில் செழித்து விளங்கும் சோலைகளில் விளவின் தளிர்களைக் கிள்ளி விளையாடுவர்; அப்போது ஒருவாமேல் ஒருவர் எறிந்து, அது தம்பால் பட்ட பொழுது மகிழ்ச்சி கூர்ந்து முருகனுடைய “ கோழி யோங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிது,” என்று ஏத்தி அவன் புகழைப் பாடியாடுவர். அவர்கள், தம்முடைய சிறிய அடிகளில் கிண்கிணி யணிந்திருப்பர்; கணைக்கால் நன்கு திரண்டிருக்கிறது; இடை வளைந்து நுண்ணிதாக இருக்கும்; தோள் பெருத்துளது; அவர்கள் உடுத்திருக்கும் ஆடை தம்பலப் பூச்சிபோல் இயல்பாகச் சிவந்த செந்நிறங் கொண்டுளது; அது செயற்கையாக நிறம் ஊட்டப்படுவதன்று; இடைக்கும் முழந்தாளுக்கும் இடைப் பகுதியாகிய அல்குலிடத்தே பல மணிகள் கோத்த மேகலை அணியப்பெற்றுள்ளது; அவர்கள்பால் தோன்றும் அழகு பிறர் ஒப்பனை செய்வதாற் பிறக்கும் செயற்கை யாகாது இயற்கை யழகாகும்; அணிந்திருக்கும் இழைகள் சாம்புநதம் என்னும் உயரிய பொன்னால் இயன்றவை. அவரது மேனியொளி நெடுந்தொலையில் சென்று விளங்குகிறது. அவர்களுடைய கூத்தலொழுங்கு காணும் ஆயமகளிர் நன்று நன்று எனப் பாராட்டுகின்றனர். இணையொப்பப் படிந்த கூந்தலில் வெட்சிப் பூவை வட்டமாகப் புனைந்து இடையே குவளைப்பூவின் இதழ்களைக் கிள்ளி யிட்டுச் சீதேவிக்கோலம் ஒருபாலும் வலம்புரிக்கோலம் ஒருபாலும் செய்து கொள்கின்றனர். நெற்றியாகிய பிறையை விழுங்குதற்கு மகரமீன் ஒன்று வாயைத் திறந்து கொண்டு கிடப்பது போலத் தலைவகிரின் ஒழுங்கில் மகரமீன் கோலம் செய்கின்றனர். நெற்றியில் மணங்கமழும் திலகம் இடப்பெற்றிருக்கிறது. இவ்வாறு வேண்டுங் கோலமெல்லாம் குறைவறச் செய்யப்பெற்ற கொண்டையில் செண்பகப் பூவைச் செருகிப் பின்பு மருதம்பூவின் கொத்துக்களை அதற்குமேற் சூடுவர். நீரின்கீழ்ப் பச்சென்ற காம்பு பெற்று மேலே சிவந்து தோன்றும் நீர்ப்பூ வரும்புகளை மாலையாகத் தொடுத்து அதனைச் சுற்றி வளைத்துக் கட்டுவர். அசோகின் தளிர்களுள் இணையொத்த இரண்டைப் பூணார மணிந்த மார்பின்கண் தொங்கியசையுமாறு இரண்டு காதுகளிலும் செருகிக்கொள்வர். மார்பின்கண் சந்தனக் குழம்பை மருதிணர் போலும் தோற்றம் அமையப் பூசி அதன் ஈரம் புலர வேங்கைப் பூவின் நுண்ணிய தாதினைத்தூவுவர். இது சூரரமகளிரின் ஒப்பனை. குறமகளிர் முருகனை வழிபடக் கருதியதும் வழிபாட்டுக் கென ஓரிடம் கண்டு நன்கு தூய்மை செய்வர். அங்கே கோழிக் கொடியை நிறுவி, அதனை நெய்யும் வெண்கடுகும் கலந்து பூசி அதற்குரிய மறைமொழியை மந்தமாக வாய்க் குள்ளே ஓதுவர். பின்பு, அதனெதிரே வணங்கி நின்று தூய பூக்களைத் தூவுவர். உள்ளே ஓர் ஆடையை யுடுத்து அதன் நிறத்துக்கு மாறுபட்ட நிறமுடைய வேறோராடையை மேலே உடுத்திக் கொண்டு கையில் சிவந்த நூலாற் காப்புக் கட்டிக்கொள்வர். காப்பு முடிந்ததும், வெள்ளிய பொரிகளைச் சொரிந்து, கிடாயினது குருதி கலந்து பிசைந்த வெள்ளரிசிச் சோற்றைச் சிறு சிறு பிரப்புக் கூடைகளில் படைச்சலிட்டு வைப்பர். அதன்பின் சிறு மஞ்சளை அரைத்துச் சந்தனக் குழம்போடு கலத்து தெளிப்பர். அதனைக் கூந்தல் தெளித்தல் என்று இக்காலத்துக் குறவர் வழங்குகின்றனர். இனி, அக்கொடியில் செவ்வலரிப்பூவையும் வேறு பல நறிய பூக்களையும் தம்மில் ஒப்பத்தொடுத்து இணை யொப்பத் தொங்குமாறு கட்டிவிடுவர். பின்பு குறமகள் முன்வந்து மலைப்பக்கத்தில் அமைந்ததம் ஊர்கள் பசியும் பிணியும் பகையுமின்றி வசியும் வளமும் சிறக்க என்று வாழ்த்தி நறும்புகை காட்டிக் குறிஞ்சிப் பண்ணிற் பல பாட்டுகளைப் பாடுவள். ஒருபால் அருவியொலிக்க, பலவகை இயங்களும் ஒலிக்கும். பாட்டு முடிந்ததும் சிவந்த பூக்களைத் தூவிக் குருதி கலந்த தினை யரிசியைப் பரப்பி முருகன் விரும்பும் இயங்களை இயக்குவர். அப்போது அவ்வழிபாட்டின்கண் முரணிய கருத்துடையவர்களும் கண்டால் முரண் நீங்கி வழிபடுவர். இவ்விடத்தேதான் வேலன் வெறியாடுவதும் செய்வன். நெறியாடுகளம் எதிரொலிக்க அதற்கு ஏற்ற பாட்டுக் களைப் பாடிக் கொம்புகள் பலவற்றை வாய்வைத்து ஊதி, கொடிய ஓசையைச் செய்யும் மணியை ஒலிப்பிப்பர். இறுதியில் முருகன் ஏறிவரும் யானையை வாழ்த்தித் தம் வேண்டுகோள் புலப்பட நின்று வழிபடுவர். திருவாவிநன்குடியில் முருகனை வழிபடும் முனிவர்கள் இயல்பை இனிக் காணலாம். இம் முனிவர்கள் அரையில் மரவுரியை யுடுப்பர்; தலைமயிர் வலம்புரிச் சங்கின் நிறம்போல வெளுத்து நரைத்திருக்கும்; காலந்தோறும் நீராடும் இயல்பினராதலால் அவர் மேணி மிக்க தூய்மையாய் ஒளிவிட்டு விளங்கும். மார்பில் கிருட்டினாசினம் என்னும் மான்தோலை யணிந்திருத்தலின், விரதங்களால் பட்டினியிருந்து மேனி கரைந்திருத்தலின், அவர் உடல் எலும்பை நன்றாகக் கண்களால் எண்ணலாம்; பல நாட்கள் வரை உண்ணா நோன்பு மேற்கொண்டிருந்து சிறிதே உண்ணுவர் அவர் நெஞ்சில் எதனிடத்தும் மாறுபட்ட உணர்வோ எவ்வுயிர் மீதும் பகைமையோ இருப்பது கிடையாது; எல்லாம் கற்ற பேரறி வினர்க்கும் தெரியாத பெருநுட்பமுணர்ந்த பேரறிவுடைவர். கற்றோர் எனப்படுவார் எல்லோருக்கும் தலைவராக இருக்கும் கல்விச் சால்பு மிக்கவர். அவர்பால் காமமும் கடுஞ்சினமும் கடுகளவும் இல்லை; ஒன்றை வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவராதலால், எவ்வகைத் துன்பமும் அவர்கள் அறிந்திலர்; ஒருவரையும் வெறுத்து நோக்கும் இயல்பில்லாதவர் இம்முனிவர்கள். இவரிடையே முருகன் திருப்புகழைப் பாடும் இசைவாணர் உள்ளனர். அவர்கள் இடையில் புகைபோன்ற மெல்லிய ஆடைய ணிந்து, மார்யில் புதிது மலர்ந்த பூவால் தொடுக்கப்பட்ட மாலை அணிந்துகொள்ளுகின்றனர். நல்லயாழ்ப் பயிற்சியும் அன்பு நிறைந்த நெஞ்சும் உடையர்; இவருடைய வாயில் மென்மையான மொழிகளே நிலவுகின்றன. இப்பெற்றியோர் நரம்பை இயக்கி இனிய இசையை இசைக்கின்றனர். இவர்களுடன் மிடற்றாற் பாடும் நன்மகளிர் உள்ளனர். அவர் நோயின்றியன்ற உடம்புல் மாந்தளிர்போலும் மேனியும் உடையர் அம்மேனியில் பொன்னிறம் கொண்ட தேமல் பூத்துளது. இவர்கள் அல்குலிடத்தே பரும மென்னும் மேகலையணிவர். இவரது கற்பு மாசுமறுவற்றது. திருவேரகத்தில் முருகனை வழிபடும் வேதியர் அறுதொழி வோர் என்ற இலக்கணத்திற் குறைவில்லா தவர்; தாய்தந்தையர் நற்குலத்தவர் என உலகினர் புகழும் பல்வேறு குடியினர். நாற்பர் தெட்டு யாண்டு பிரமசரியம் காப்பவர்; எப்பொழுதும் அறம் கூறும் கொள்கை யுடையர்; மூன்றுவகையான தீயை வளர்ப்பதையே செல்வமாகக் கொண்டவர்; முப்புரிநூல் மூன்று கொண்ட பூQல் விளங்கும் மார்பையுடையர். இவ்வண்ணம் முருகனை வழிபடுவோர் இயல்பை மிகநுட்ப மாக அறிந்து கூறும் ஆசிரியர் நக்கீரர், மகளிர் நலங்கூறுமிடத்து அவரது கற்புமாண்பை “மாசில்கற்பு” என்றும் “மறுவில்கற்பு” என்றும் எடுத்துக்காட்டி வற்புறுத்துவதும் அவர்கள் ஆடவரிடை யிலும் முருகன் திருமுன்பும் இருக்கும் நிலையின் தூய்மைநலத்தை “மறுவின்றிவிளங்க” என்று சுருங்கக் காட்டி விளக்குவதும் நுனித் தெண்ணி இன்புறத்தகுவன. மகளிர் நலம்புனைந் துரைத்த பண்டைச் சான்றோருள் இவர்போல மகளிரது யாக்கையமைப்பை வியந்து “நோயின்றியன்ற யாக்கையர்” என்றது போல மொழிந்தோர் பெரும்பாலும் சிலர் என்றே கூறலாம். மகளிரது யாக்கை நோயின்றி யன்ற அமைதியுடையதாக வேண்டுமென்க கருதிக்கூறும் இப்புலமையுரை பொன்போற் போற்றத்தக்கது. இனி, இம் முருகாற்றுப்படையினை இவ்வாறு வளமிகக் கூறும் ஆசிரியர், முருகனைக் கண்டு வழிபடுவோர் அவன் புகழ்களை யெடுத்தோதும் வகையைச் சிறிது விரித்துரைக்கின்றார். “ நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை யேற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ, ஆல்கெழு கடவுள் புதல்வ, மால்வரை மலைமகள் மகனே, மாற்றோர் கூற்றே, வெற்றிமேல் போர்க் கொற்றவை சிறுவ இழையணி சிறப்பின் பழையோள் குழவி, வானோர் வணங்குவில் தானைத் தலைவ, மாலை மார்ப், நூலறி புலவ, செருவில் ஒருவ, பொருவிறல் மள்ள, அந்தணர் வெறுக்கை, அறிந்தோர் சொன்மலை, மங்கையர் கணவ, மைந்த ரேறே, வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ, குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ, பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே, அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக, நசையுநர்க் கார்த்தும் இசைபே ராள, அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் செஎய், மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப், பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள், பெரியோ ரேத்தும் பெரும்பெயர் இயவுள், சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி, போர் மிகு பொருந, குரிசில்” என்பது முருகனைப் பரவுவோர் சொல்லி யேத்துதற்குரிய புகழுரை, “ நெடும்பெரும் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை யேற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ” என்றது நெடும்பெரும் சிமயமாகிய இமயத்தின்கண் இறைவன் தந்த சருப்பத்தினை இந்திரன் வாங்கி முனிவர்பால்தர, அவர்கள் அதனைத் தாங்கமாட்டாது தீயின்கட் பெய்து தம் மனைவியர்பால் தந்தாராக, அவருள் அறுவர் தலைக்கொரு குழவியாக நீலம் மலர்ந்த பசிய சுனையின்கண் பதுமப் பாயலிபெற்றெடுப்ப அந்த ஆறும் சேர்ந்து ஆறுமுகமும் பன்னிரண்டு கையுமுடையனார் அமர்ந்த செல்வனே என்பது. ஐவருள் ஒருவன் ஏற்ப அறுவர் சிமயத்துப் பைஞ்சுனைப் பயந்த ஆறமர் செல்வ என இயையும். ஆல் கெழுகடவுள் புதல்வ என்றது, கல்லாலின் கீழிருந்து முனிவர்க்கு அறமுரைத்த கடவுளாகிய சிவபரம் பொருட்கு மகன் என்பது. இழையணி சிறப்பின் பழையோள் குழவி என்றது, இழையணிந்து விளங்கும் சிவசத்தியாகிய பழையவளின் குழவி யென்றவாறு. இறைவன் பங்கிலுறையும் உமைநங்கையை மலைமகள் என்றும் கொற்றவையென்றும் பழையோள் என்றும் மூவகையாகப் பிரித்துக் கூறுகின்றார். சிவசத்தியாய் இறைவனுக்குத் திருமேனியையும் எல்லாவுயிர்கட்கும் வேண்டிய உடல் கருவி கரணங்களையும் உலகுகளையும் உலகியற் பொருள் நுகர்ச்சிகளையும் தரும் முதலாய் அமைதலின் பழையோள் என்றும், வெற்றிக்கு வேண்டிய ஆற்றலே தன் வடிவாகக் கோடலின் கொற்றவையென்றும், உயிர்கள் ஆணும் பெண்ணுமாய்க் கூடி உலகியல் நடாத்தி உய்திபெறுவித்தலின் மலைமகள் என்றும் கருதப்படுவது விளங்க இம்மூவகையினையும் எடுத்தோதினார். நுண்Qற் பொருள்களைச் சான்றோர்க்கு ஐயமறத் தெளிவித்துரைக்கும் சீர்மிக்க ஆசிரியன் என்பது விளங்க நூலறி புலவன் என்றும், பலர் புகழும் நல்லுரையால் சமயப்புலவர் தொடுக்கும் வாதங்களைவென்று மேம்படும் உயர்வு தோன்ற, “பலர் புகழ் நன்மொழிப் புலவ ரேறே,” என்றும் கூறுகின்றார். என்றுங் குன்றாத இளமையும், பெறற்கரிய வீடு பேறு நல்குதலும் தனக்கு உரிமையாக வுடைமைபற்றி “அரும்பெறல் மரபின் பெரும் பெயர் முருக” என்றார். பிறரால் இடுக்கண்பட்டு வருந்தி வருவோர்க்கு, நடுவு நின்று முறை வழங்கும் செம்மையுடைமை தோன்ற “அலந்தோர்க் களிக்கும் பொலம்பூண் சேஎய்” என்றார். நெடுவேள் என்பதற் கேற்பத் தன்னை யடைந்த பரிசிலர்க்கு வேண்டுவன பெருக நல்கித் தாங்குவது தோன்றப் “பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்” என்றார். எத்தகைய பெரியோர்க்கும் பெருமைக்குரிய செயலாற்றுதற் கேற்ற மனத்திட்பமும் வினைத்திட்பமும் இன்றியமையாதன; அவற்றிற்குரிய அவரது ஆற்றலை எழுப்பி இயக்கும் திருவருள் இயக்கத்துக்கு அவன் முதலாதல் தோன்றப் “பெரியோ ரேத்தும் பெரும்பெயர் இயவுள்” என்றார். உலகியல் நுகர்ச்சிக்கு இளமையும் வினைத்திட்பத்துக்கு இயக்கமும் பெறற்கு முதலாதலின் இரண்டையும் உணர்த்தும் முருகன், இயவுள் என்ற பெயர்களைப் பெரும் பெயரெனச் சிறப்பித்தார். எல்லையில் காலமாகப் பல்வகைப் பிறப்பும் பிறந்து பிறந்து அறிவு சிறந்துவரும் மன்னுயிரெல்லாம் தன்னுள் ஒடுங்கத் தான் அவற்றை ஒடுக்கி மேற்பட விரிந்து நிற்றலின், அவ்வுயிர்கட்கு அவன் பண்பெல்ாம் அறிதல் இயலாமையின், “நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமை” என்றும், அவ்வருமை யுணர்ந்து அவை செயற்பாலது அவன் அடியில் வணங்குவது அன்றி வேறில்லை என்பார், “நின்னடி உள்ளி வந்தனன்” என்றும் கூறினார். ஞானசம் பந்தரும் “தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க தக்கார்” என்பது காண்க. இதுபோது கோயில் களில் நடைபெறும் வழிபாடு களில் இறைவனை அருச்சிப் போர். முடிவில், “நானாவித மந்திர புஷ்பாணி சமர்ப்பியாமி” என்று சொல்லி முடிப்பது முறையாக இருக்கிறது. இங்கே முருகனை அருச்சிப்போர் “அருச்சனை” முடிவில் “நின்னளந் தறிதல் மன்னுயிர்க கருமையின், நின்னடி உள்ளி வந்தனென் நின்னொடு, புரையுநர் இல்லாப் புலமை யோய்” என முடிப்பது அறிவு நெறிக்கு மிகவும் ஒத்திருப்பது நோக்கத் தக்கது. இத் திருமுருகாற்றுப்படை, முருகன் திருவடி ஞானம் பெறுதற்குத் துணையாகும் திருமுறையாவதைவும், அவ்வாறு ஆகுமிடத்து இடையிடையே கூறும் முருகனுடைய அருளுருச் செயல் களையும் பிறவற்றையும் காணும் நாம் இயற்கைப் பொருள்கள் சிலவற்றின் அமைப்பியல்புகளையும் காண்கின்றோம். 8. காந்தட்கண்ணி அடுக்கம் என்பது மலைப்பக்கத்தைக் குறிக்கும் சொல். மலைப்பக்கம் மண் படிந்து மரங்கள் வானளாவ உயர்ந்து வளர்தற் குரிய இடம். மரங்கள் செறிந்த சோலைகளும் அங்கே நிறைந் திருக்கும்; சூரரமகளிர் அச்சோலைகளில் விளையாடுவர். குரங்கேறாத மரமில்லையென்பது பழமொழி; அத்தகைய குரங்குகளும் ஏறியறி யாத உயரமுடைய மரங்கள் அடுக்கங்களில் நிற்கின்றன. அங்கே காந்தள் மலர்ந்து தேன் நிறைந்து மணம் கமழ்ந்துகொண்டிருக் கின்றன. இக்காந்தட்பூவால் தொடுக்கப்படும் கண்ணி முருகன் திருமுடியில் பெருமையும் தட்பமும் கொண்டு விளங்குகிறது. 9. கூதளங்கண்ணி:-(192) கூதளம் என்பது தாளியைக் குறிக்கும் சொல். இது வெண் கூதாளி, செங்கூதாளியென இருவகைப்படும்; இவையே வெண்டாளி யென்னும் செந்தாளியென்னும் வழங்கும். முருகனது வேலேந்தி விளையாட்டயரும் வேலன், இதனால் தொடுக்கப்படும் கண்ணி யணிகின்றான். பச்சிலைக்கொடியை நாராகக் கொண்டு சாதிக்காய் தக்கோலம் என்ற இவற்றோடு காட்டு மல்லிகையை இடையிடையே விரவி இத் தாளிப் பூங்கண்ணி தொடுக்கப்படுகிறது. சாதிக்காய் நறுமணம் பெற்று விளங்குதலால் அதனை நறைக்காய் என்றும், தக்கோலத்தின்காய் புட்டில் போன்றிருத்தலின் புட்டில் என்றும் முருகாற்றுப்படை மொழிகின்றது. உருள் பூந்தார்:-(11) செங்கடம்பின் பூவால் தொக்கப்படும் தார் உருள் பூந்தார் எனப்படுகிறது. கடம்பின் பூ தேருருள் போலும் வடிவினையுடை மைபற்றி உருள் பூ எனப்பட்டது. இப்பூ இவ்வாறு உருண்டு திரண்ட காட்சி பெறுதற்கு வாயிலாக, முகில் கடற்குச் சென்று நீரை நிரப்ப முகந்து மேனிகருத்து வானத்திற் பரந்து கார்காலத்து முதல் மழையைப் பெய்கிறது. அக்காலத்தே இருளுண்டாகச் செறியத் தழைத்தி ருக்கும். இக்கடம்பு அடிபருத்து அழகுறப் பூத்து நிற்கும். இப்பூவால் தொடுக்கப்படும் தார், முருகன் திருமார்பில் கிடந்து இனிய காட்சி வழங்குகிறது. வண்டுசூழ்ந் தொலிக்கும் சுனைமலர் பரங்குன்றத்தின் சிறப்புக் கூறவரும் முருகாற்றுப்படை, அங்குள்ள சுனையிடத்து மலர்ந்திருக்கும் பூக்களை வண்டினம் மொய்த்து ஒலிக்கும் காட்சியை எடுத்துக் காட்டுகிறது. கூடல் நகர்க்குக் குடபாலில் கருஞ்சேறு பரந்த அகன்ற வயல்கள் உள்ளன; அங்கே நீர் இடையறாமையின் தாமரைகள் இதழ் விரிந்து பூத்துள்ளன. இரவுப்போதில் தாமரை குவிதலின், வண்டினம் இரவெல்லாம் குவிந்த அத்தாமரை மலர்க்குள் இருந்து உறங்கும். வைகறைப் போதில் நெய்தல் மலருதலின் அவ்வண்டு தாமரையின்ன்றும் வெளிப்போந்து புதிது மலரும் நெய்தற்பூவிற் படிந்து தாதூது கின்றன. ஞாயிறெழுந்து வெயில் பரப்புங்கால் நெய்தலை நீங்கிச் சுனையையடைந்து அதன்கண் தோன்றி மலர்ந்திருக்கும் சுனைப் பூக்களைச் சூழவந்து ஒலிக்கின்றன. பேய் மகள் துணங்கை பேய்மகள் நெய்ப்பசையின்றி யுலர்ந்த தலைமயிரும் அகன்ற வாயும் உடையள்; அவள் வாயில் அங்கொன்னும் இங்கொன்றுமாக நிரையொவ்வாமல் பற்கள் முளைத்திருக்கின்றன. அவளுடைய பசுங்கண்கள் எப்போதும் சினந்து சுழன்று திரியும்; கண்பார்வை மிகக் கொடுமையானது; காதுகளில் கூகையும் பாம்புகளும் வாழ்கின்றன; நீண்டு தொங்கும் அடிக்காது மார்பில் வீழ்ந்து அசைகிறது. வயிற்றின் மேந்தோல் பனையின் பட்டைபோல் சுரசுரப்பாக இருக்கும். அவள் நடக்கும் நடை காண்பார்க்கு அச்சம் தருகிறது. அவளது பெரிய கையில் போரிலே வீழ்ந்தாருடைய தலை இருக்கிறது. அதன் கண்களைக் கைவிரல் நகத்தால் குடைந்து தோண்டியெடுத்துத் தின்கின்றாள்; அவ்வாறு செய்வதால் அவள் கையில் குருதிபடிந்து சிவந்திருக்கிறது. இந்நிலையில், நிணத்தைத் தின்றுகொண்டே கையைத் தோளுறமுடக்கி விலாப்புறத்தை யடித்து ஒசை செய்துகொண்டு கூத்தாடுகிறாள். இது முருகன் அவுணரைக் கொன்றழித்த போர்க்களத்துக் காட்சிகளுள் ஒன்று. உடை உடையைப்பற்றிக் கூறவந்தபோது இந்நூல் உடையென்பதன் வேறாகத் துகில், காழகம், உடுக்கை முதலிய சொற்களை எடுத்தாளு கின்றது. உடையென்பது கையால் முகந்த புகைபோல மென்மையும் நொய்மையு முடையதெனவும், இதனை மென்மொழி வழங்கும் யாழ்வல்லுநர் உடுக்கின்றனரெனவும் கூறுகிறது. துகிலென்பது சூரரமகளிடத்தும், முருகனிடத்தும் காணப்படுகிறது. அரமகளிர் அணிந்திருக்கும் துகில் செந்நிறமுடையது; அந்நிறம் அதற்கு இயல்பாய் அமைந்ததேயன்றிச் செயற் கையாய்த் தோய்க்கப் பட்டதன்று முருகன் திருமேனியில் கழுத்தைச் சூழ்ந்து மார்பின் இருமருங்கும் ஒழுகி உதரபந்தத்தின் உள்ளே இறுகி நிலத்தளவும் தாழ விடப்பட்டுளது; அதன்பால் நறுமணமும் மென்மையும் அமைந்துள்ளன. அருவி வீழுங்கால் அவற்றின் தோற்றம் குறியவும் நெடியவுமாகிய பல துகில்களை உவமமாகக் காட்சிகின்றது. மேலும் அம்முருகன் அரையில் செந்நிறமுடைய ஆடை திகழ்கிறது. முனிவர்கள்பால் மரவுரியுடுக்கையும் முருகாற்றுப் படுக்கும் குறமகள்பால் மாறுபட்ட நிறமுடைய அறுவைகளும் இருபிறப் பாளரிடையே காழகமும், முருகனோடு விளையாடும் மகளிர்பால் தழையுடையும் காணப்படுகின்றன. கடல் கடல் நிலவுலகைச் சூழ்ந்து நிற்பது; அந்நிலவுலகு தோன்று தற்குமுன் தோன்றிய தொன்மையும் இதற்குண்டு; இதனால் இது பார்முதிர்கடல் எனப்படுகிறது. இஃது எப்போதும் நீரறாத நிலைய மாதலின் இதனைப் பனிக்கடல் என்றார். அளக்கலாகாத ஆழத்தால் நீலநிறங்கொண்டு தோன்றும் இதன்கண் விடியற்காலத்தில் செஞ்ஞாயிறு தோன்றுவது, நீலமயின்மீது செம்மேனி யனாகிய முருகன் காட்சியளிப்பது போன்றிருக்கும். இதன் நலங்கண்டே இந்நூல் “ஞாயிறு கடற்கண்டாங்கு ஒவற இமைக்கும் சேண்விளங் கவிரொளி” எனக் கூறுகிறது. எத்துணைக் கலங்கள் படரினும் காற்றுத்திரண்டு மோதினும் கலங்காத இக்கடல், முருகன் சூர்மருங் கறுத்தற்கு உள்புக்கபோது கலக்க மெய்திற்றென்றார், கலங்காத கடலையும் கலக்கின முருகன் சூர் மருங்கறுப்பது அருமை யன்றென்பதற்கு. அதனை அவன் படைமேலேற்றிச் “சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்” என்றார்.முகில்கள் நிலவுலகிற் பரந்து சென்று பெய்யும் மழைநீர்க்கு முதல் இக்கடலே; இதுபற்றியே இது கார்கோள் எனவும் சிறப்பிக்கப்படுகிறது. கணவீரம் இதுசெவ்வலரிப் பூவுக்குப் பெயர்; இப்பூ பெருமையும் தட்பமும் உடையது; இதன் நறுமணம் குறித்துக் குறவா முருகனைப் பரவுமிடத்தே, மாலையாகக் கட்டி வழிபடுகளத்தை ஒப்பனை செய்கின்றனர். களிறு இதன் பெண்ணினம் பிடி எனப்படும். அது களிறு போலக் கொம்புடையதன்று. இக்களிறும் பிடியும் அருவிவீழும் மலைச்சாரற் காட்டில் காணப்படுகின்றன. அருவியின் தட்பத்தால் பிடியாணை குளிர்மிகுந்து நீங்குகிறது; களிறுகள் வீழ்வதால் அவற்றின் மருப்புக்கள் நீர்ப்பெருக்கில் நீங்கி யோடுகின்றன; அவற்றிடையே முத்துக்கள் உள்ளன; முருகன் ஊர்ந்துவரும் களிற்றை இந்நூல் வேழமென்ற சொல்லால் குறிக்கிறது. இதன் நெற்றி தோட்டியால் தாக்குண்டு வடுப்பெற்று விளங்குகிறது; அந்நெற்றியில் வரிகள் கிடந்து அழகு செய்கின்றன. அந்நெற்றிமேல் முகபடாம் அணிவர்; அதனைச் சூழ்ந்து பொன்னரிமாலை அணியப் பெற்றுளது. இம்மாலையும் முகபடாமும் நெற்றிமேல் கிடந்தசைகின்றன. மாலையில் உள்ளபூ பொன்னாற் செய்யப்பட்டமையால் அது வாடாமாலை யெனப் படுகிறது. இருமருங்கிலும் மணிகட்டப்பெறும், வேழம் அசைந்து செங்லலுங்கால் அம்மணிகள் மாறிமாறி யொலிக்கும். நடையில் ஒசையும் எளிதில் வளைந்து திரும்பும் மென்மையும் இல்லாமையால் இம்மணி இன்றியமையாதாயிற்று. விரைந்த நடையும் தன்னால் குறிக்கப்பட்ட பகையுயிரைக் கொன்றல்லது மீளாத கொள்கையும் இவ்வேழத்தின் தனிப்பண்பு. இதனால் இதன்வன்மை, “கூற்றத்தன்ன மாற்றரு மொய்ம்பு” எனப்படுகிறது. படவே, இதனைச் செலுத்துவோர் கையில் தோட்டி இன்றியமை யாமைபற்றி முருகன் கைகளின் இயல்பு கூறியவிடத்து “ஒருகை அங்குசம் கடாவ” என்றார். ஆகம் கழுத்திற்குக்கீழுள்ள மார்பகம் ஆகம் எனக் குறிக்கப்படுகிறது; சூரரமகளிரின் ஆகம் நுண்ணிய பூண் அணிந்து விளங்குகிறது (32); இசைவாணர் ஆகத்தின் கண் மொட்டலர்ந்த பூக்களால் தொடுக்கப் பட்டமாலை சூழ்ந்து கிடக்கின்றது. (139). ஆசினி அருவிவீழும் மலைப்பக்கத்தில் செழித்திருக்கும் பலாவகையுள் ஒன்று. இது பழுத்து முதிருங் கால் வெடித்து நிற்கும்; அருவி வீழுங்கால் இதன் பழமுதிர்ந்து சுளைசுளையாகச் சிதர்ந்து நீர்ப்பெருக்கில் கலந்து வரும். ஆமா காட்டுப் பசுவகை; இதன் ஏறு வலிய கோடுகளையுடையது; காட்டில் கொடிய பகைவிலங்குகள் பல வாதலின், அவற்றோடு பொருதற்கென அமைந்திருத்தலின், ஆமா ஏற்றின் கோடுகள் வலியுடைய வெனச் சிறப்பிக்கப்படுகின்றன. “கருங்கோட்டு ஆமா நல்லேறு” என்பது காண்க. இறால் இறால் என்பது தேனடை; வானளாவ உயர்ந்த மலைப் பாறைகளில் தேனீக்களால் கட்டப்பெற்றிருக்கும் தோனடை இப்பாட்டில் இடம்பெறுகிறது; நெடிதுயர்ந்து நீனிறங்கொண்டு தோன்றும் நெடுவரையில் தேனிறால் தன்பொன்னிறத்தால் ஞாயிற்று மண்டிலம் போல் காட்சி யளிப்பது. உளியம் இது கரடியைக் குறிப்பது. இதன் உடல் மயிர் மேலே கருமையும் தோலடியில் வெண்மையும் கொண்டு உள்ளே அடியில் வெளுத்து மேலே கருத்துத் தோன்றும் பனைச்செறும்பை ஒத்திருக்கும். கரடியின் அடி உள்வளைந்து காணப்படும். முடிப்புரை இறுதியாக ஒன்று கூறி இச்சொற் பொழிவை முடிக்கின்றாம்: பரங்குன்றில் உறைதலும், அலைவாயிற்சேறலும், ஆவிநன்குடியில் அசைதலும், ஏரகத்து உறைதலும் குன்றுதோறும் விளையாடலும் முருகன் செய்யும் செயல்வகையென இம்முருகாற்றுப்படை மொழிகின்றது. உறைதற்கு இரண்டிடமும் பிறசெயல்கட்கு முறையே ஒவ்வோரிடமும் கூறப்படுகின்றன. அசைதல் என்பதற்கு உரைகாரர் இருத்தல் என்றே உரை கூறுகின்றார். எனினும், முருகாற்றுப்படை கூறுவதையே கொண்டால் உறையுமிடத்து, பரங்குன்றும் ஏரகமும் என்ற இரண்டுமேயாம். உறையுமிடத்து, பரங்குன்றில் அமர்ந்துறை வன் என்றும் ஏரகத்தில் பெரிதுவந்து உறைவன் என்றும் நக்கீரர் சிறப்பித்துக் கூறுவது குறிக்கத்தக்கது. ஏரகத்தில் உவந்து உறைவதுபோலவே பரங்குன்றில் அமர்ந்துறைவன் என்பதனால் ஏரகத்தில் அவன் உவத்தற்கேற்ப இருபிறப்பாளர் வழிபாடு செய்யக் காண்பதுபோலும் வழிபாடொன்று பரங் குன்றிலும் நிகழ்வது பெறப்படும். ஆனால் பரங்குன்றில் அகன் வயலில் மலர்கள் மலர்தலையும் வண்டினம் தேனுண்டு கிடந்து சென்று சுனைமலரைச் சூழ்ந்து ஒலித்தலையும் காண்கின்றோம். வண்டின் நிகழ்ச்சியில் வழிபாடொன்று உள்ளுறுத்தப்படுவது இதனால் உணரப்படுகிறது. அவ்வழிபாடு யாது? தாமரையைச் செல்வர் மனையாகவும், தாமரையில் துஞ்சிய வண்டினைச் செல்வராகவும், வைகறையில் நெய்கலை யூதுவது செல்வர் வைகறையில் எழுந்து நீராடிச் செல்வதாகவும், அவ்வண்டினம் சுனைமலரை யடைந்து ஒலிப்பதைச் செல்வர் பரங்குன்றடைந்து முருகனை வழிபடுவதாகவும் கொண்டால், மதுரைமாநகரிடத்து வாழும் செல்வப் பெருமக்கள் நாட் காலையில் எழுந்து நீராடிப் பரங்குன்றம் சென்று முருகப்பெருமானை வழிபடக் கண்டு அவன் அங்கே அமர்ந்து உறைகின்றான் என்பது புலனாகிறது. ஆகவே, ஏரகத்தில் முத்தீச்செல்வர் வழிபாடும் பரங்குன்றில் மதுரைச் செல்வர் வழிபாடும் நிகழ்வது காணலாம். மேலும் முருகனை, தேவரும், முனிவரரும் பதினெண் கணங்களும், எண்வகை வசுக்களும் மக்களுட் செல்வரும் இருபிறப் பாளரும் குறவரும் வழிபடுவதும், மகளிருள் சூரர மகளிர் முதல் குறவர் மகளிர் ஈறாகப் பலரும் வழிபடுவதும், உயர்ந்தோர்க்குப் பரங்குன்றம் முதலிய இடங்களில் எழுந்தருளி அவர் செய்யும் வழிபாட்டையேற்று உவந்தருளும் முருகன், குறவர் வெறியயர் களத்தும் குறமகளிர் குரவைக் கூத்தாடுமிடத்தும் எழுந்தருளி அவர் மகிழக் கலந்து தலைக்கை தந்து விளையாடுவதும் காணும் நமக்கு முருகப்பெருமான் எளியார்க்கெளியனாய் எழுந்தருளி இன்பம் அளிக்கும் இனிய பெருமான் என்பது தோன்றி ஊக்கம் தருகிறது. இவ்வாறு அறிவுக்கு இன்பமும் வழிபாட்டில் ஊக்கமும் பயக்கும் காட்சிகள் பலவற்றை இம் முருகாற்றுப்படை நமக்கும் காட்டி உலகியல் வாழ்வின் புன்மையையும் சொல்லோவியம் செய்து மெய்யுணர்வுப் பேற்றின்கண் நம்மை ஈடுபடுத்தி நிற்கிறது. புறக்காட்சிகளால் நம் உள்ளத்தைக் கவர்ந்து அகக்காட்சிகளால் முருகனுடைய திருவருட் காட்சிகளைக்கண்டு இன்புறுவித்து அவற்றின் வாயிலாக நம்மை முருகன் திருவடிக்கண் ஆற்றுப் படுத்தும் பெருமைவாய்ந்த முருகாற்றுப் படையின் நலம் ஆயுந் தோறும் இன்பந்தரும் இயல்பிற் றென்பது தெளிவாம்.  7. திருவாமாத்தூர் யானை தென்னார்க்காடு மாவட்டம், ஒளவையார் குப்பத்தில் வேளாள கருணீகர் குலத்தில் சுந்தரம் பிள்ளை சந்திரமதி ஆகிய பெற்றோர் களுக்குத் திருமகனாராக 1903 இல் இவர்தோன்றினார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பைத் திண்டிவனத்தில் கற்று வேலூர் ஊரிஸ் கல்லூரியில் பயின்று தேர்ந்தார். கரந்தைத் தமிழ்ச் கங்கத்தில் தமிழவேள் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் ஆதரவில் தமிழ் பயின்றார். கரந்தைத் தமிழ்ச் சங்கம், திருப்பதி ஓரியண்டல் கல்லூரி, அண்ணா மலைக் பல்கலைத் கழகம் ஆகியவற்றில் தமிழாசிரியப் பணிபுரிந் துள்ளார். தற்போது மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகத் தொண்டாற்றி வருகின்றார். மணிமேகலை, புறநானூறு, பத்துப்பாட்டு, ஐங்குறுநூறு ஆகிய வற்றினுக்குச் சிறந்த உரை எழுதியுள்ளார். சேரர் வரலாறு, சைவத் தமிழிலக்கியங்கள் முதலான பல நூல்களும் இயற்றியுள்ளார். `சித்தாந்த கலாநிதி' `பேராசிரியர்' என்னும் சிறப்புப் பட்டங்கள் பெற்றவர். பண்டை நாளில், செல்வமிக்க பெருங் கோயில்களில், யானைகளை வைத்துப் பேணுவது வழக்கம். இப்போதும், திருவண்ணாமலை, சீகாழி, திருவரங்கம் முதலிய பெரும் பதிகளில் யானை இருப்பது காணலாம். திருவிழாக் காலங்களில் இறைவன் திருவுருவங்கள் ஊர்வலம் வரும்போது, இந்தயானைகளை ஒப்பனை செய்து முன்னே அழகுற நடந்துவரச் செய்வர். சில சிறப்புக் காலங்களில் பெருங் குடங்களில் நீர் கொணர்தற்கும் இவைகள் பயன்படும். வழிபாட்டுக்குரிய பொருள்களையும் யானைகள் சுமந்து வருவதுண்டு. சில கோயில்களில் சிற்சில சிறப்புக் காலங்களில் பூரணகும்பங்களும் திருப்பலியும் யானைமேல் வைத்துத்தான் கொணர்தல் வேண்டு மென்ற கட்டளை நிலவுகிறது. இவ் வழக்கங்கள், நூல்களால் விதிக்கப்பட்டன அல்லவாயினும், பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றன. செல்வம் குறைந்த கோயில்களில் இவை நின்று போயின. பண்டை நாளில், கோயில்களில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகள் குறை வில்லாமல் நடத்துவதில் வேந்தர் கண்ணுங் கருத்துமாய் இருந்தனர். கோயில்களில் காணப்படும் பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுக்கள் இதனை வற்புறுத்துகின்றன. இவ்வாறு யானைகளைக் கோயில்களில் வைத்துப் பேணுதற் கென்றே பண்டைய வேந்தர்கள் நிவந்தங்கள் ஏற்படுத்தியிருந்தனர். யானைகட்கென விடப்பட்ட நிலங்களின் வருவாய் யானைகட்கே பயன்படும்; யானைகளை மேய்ப்பதும் பாதுகாப்பதும் செய்தற்கெனப் பாகர்கள் நியமிக்கப் பெற்றிருந்தனர். அவர்கள் யானைகட்குக் காலந்தோறும் உணவுநல்கி நீராட்டி அன்போடு வளர்ப்பர். அப்பாகர்களுக்கும் வேதனம் உண்டு. அவர்கட்கு வேதனம் குறையின், தம்தொழிலை அன்போடு செய்யமாட்டார்களென்ற கருத்தால், அவர்கட்கும் நிலம்விடுவர். அந்நிலத்து வருவாய், பாகர்கட்கு வேண்டும் உணவு முதலியவற்றிற்கு உதவும். யானைக்கு வேறாகவும் யானைப் பாகர்க்கு வேறாகவும் இன்றி ஒன்றாயமையின் ஒன்றினொன்று மேலூர்ந்து இரண்டிலொன்றன் வருவாயைக் குறைத்து விடும். பெரும்பாலும் யானையே உணவு குன்றி வாடநேரும். இவ்வகையில் யானை சார்பாக உளதாகும் செலவு மிகுந்தே யிருக்கும். இது பற்றியே `யானைகட்டித் தீனி போடுவதென்பது கடினம்' என்ற பழமொழியும், `யானை அசைந்து தின்னும் வீடு அசையாமல் தின்னும்' என்ற பழமொழியும் நாட்டில் சிலவுவவாயின. இருந்தாலும், செல்வம் மிக்க செல்வர்களும் வேந்தர்களும் யானைகளை வைத்துப் பேணுவதைத் தம் செல்வ வாழ்வுக்குச் சிறப்பாகக் கருதினர். செல்வம் மிக்க கோயில்களில் எழுந்தருளும் இறைவன் ஏனைவேந்தரினும் மிகமிக வுயர்ந் தோனாதலின், அவனுடைய திருக்கோயிலிலும் யானை இருப்பது சிறப்பெனக் கருதினர். ஆனால் வேந்தர்கள் தம் பெருமனை போலவே இறைவன் திருக்கோயில்களும் யானைகளால் பொலிதல் வேண்டுமென்று கருதினர். திருவாமாத்தூர் என்பது தென்னார்க்காடு மாவட்டத்து விழுப்புரத்துக்கு அண்மையிலுள்ள பேரூர்; இப்பகுதிக்குப் பண்டைநாளில் அருவா நாடு என்பது பெயர். அருவா நாட்டில் உட்பகுதியுண்டு; அவற்றுள் வாவலூர் நாடு என்பது ஒன்று. இதனால் இவ்வாமாத்தூர், அருவா நாட்டு மீவழி வாவலூர் நாட்டுத் திருவாமாத்தூர் எனப்படும். இதனருகே பம்பையாறு ஓடுகிறது. இதனை ஞானசம்பந்தர், "கரவின் மாமணி பொன்கொழித் திழிசாந்து காரகில்தந்து பம்பை நீர் அருவிவந் தலைக்கும் ஆமாத்தூர்" என்று சிறப்பிப்பார். இந்த ஆற்றங்கரையில் மிக்க அழகுறத் திருவாமாத்தூர் இறைவன் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவனை முன்னோர் பெருமானடிகள் என்று பெயர் வழங்கி வழிபட்டு வந்தனர். இதற்குக் காரணமும் உண்டு. திருஞான சம்பந்தர் முதலியோர் இவ்வூர்க்கு எழுந்தருளி இறைவனைப் பாடிய காலத்தில் "ஆமாத்தூர் அம்மான்" என்றும், "ஆமாத்தூர் அம்மான் எம்பெம்மான் என்று ஏத்தாதார் பேயரிற் பேயரே" என்றும் பாடினர். இதைக் கண்ட சான்றோர் பெம்மானென்று ஏத்துவாராய், பெம்மான் என்பது பெருமான் என்பதன் திரிபாதல் கண்டு, பெருமானடிகள் என்று போற்றிவழிபட்டு வந்தனர். இத் திருவாமாத்தூர்க் கோயில் அந்நாளில் மிக்க செல்வம் படைத்த திருக்கோயிலாக விளங்கிற்று. இதற்கு இத்திருவாமாத்தூரே தேவதானமாக இருந்தது. இவ்வூர் வருவாய் முற்றும், இத்திருக் கோயில் நித்திய நைமித்திய நடைமுறை கட்கே உரியதாயிற்று. இதற்குத் திருப்பலி கொணர்தற்கென யானை யொன்றும் இருந்து வந்தது. இந்த யானையைப் பேணும் பாகனுக்கும் நில நிவந்தம் விடப்பட்டிருந்தது. இவ்வாறே இக்கோயில் தன்கண் இருந்து தொண்டு செய்வார்க்கு உணவு நல்கும் அறச்சாலையாகவும் விளங்கிற்று. இதனால் இக்கோயில் எல்லாவகையாலும் சிறப்புற்று இருந்து வந்ததெனச் சுருங்கக் கூறலாம். பண்டம் நிறைந்த நிலையங்களில் ஊடறுத்தழிக்கும் எலிகளும் பெருச்சாளிகளும் பெருகுவதுண்டு. இவ்வாறே செல்வம் மலிந்த திருக்கோயில்களிலும் எலியும் பெருச்சாளியும் போன்ற மனமுடைய மக்கள் உளராவது இயல்பு. ஆகவே இக்கோயில்களிலுல் அத்தகை யோர் அவ்வக்காலங்களில் உண்டாயினர். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் பெருச்சாளிகளின் கொடுமையால் கோயில் தொண்டர் கட்கு திருஞானசம்பந்தர் இவ்வூர்க்கு வந்திருந்தார். அக் காலத்தே கோயில் தொண்டர்கட்கு உணவு முட்டுப்பாடுண்டாயிற்று. `உண்ட களைப்புத் தொண்டர்க்கும் உண்' டென்பது உலகுரை; ஆனால் இவ்வூரிலிந்த தொண்டர்க்கு உண்ணாமையால் வரும் களைப்பே மிக்கிருந்தது. அதனைக் கண்ட திருஞானசம்பந்தர், "தொண்டர் வந்து வணங்கி மாமலர் தூவி நின்கழல் ஏத்துவர்; அவர் உண்டியால் வருந்த இரங்காத தென்னைகொலாம்" (குன்றவார். 5) என்று பாடினர். அது கண்ட கோயிலதிகாரிகள் மிகவும் அஞ்சித் தொண்டர்க்கு நேர்ந்த வருத்தத்தைப் போக்கினர். அக் காலத்தே தொண்டரைப் பற்றிய தீவினை நீங்கிற்றா யினும், அஃது அவ்விடத்தின் நீங்காதிருந்து முதற்பராந்தகன் காலத்தில் யானைப்பாகனைப் பற்றியது. அவனுக்கென வைக்கப் பெற்றிருந்த நிலம் தகவிலார் கைப்பட்டுப் போதிய விளைவுதாரா தாயிற்று. அந் நிலத்தைப் பயிரிட்டோர் அதனைத் தமக்குரிய தாக்கிக் கொண்டனர். அவன் யானைக்கு நல்கும் அரிசியைத் தன் மனைவாழ்க்கைக்கு வேண்டிஎடுத்துக் கொண்டான்; யானை வலிகுன்றியது; முடிவில் உணவு முட்டுப்பாடு பெருகி அவனையும் யானையையும் வருத்தத் தொடங்கிற்று. அவன் கோயிலாரிடம் தெரிவித்துக் கbண்டான். ஏழை பேச்சு அம்பல மேறாதென்பது போல அவனுடைய முறையீடு பயன்படா தொழிந்தது. முடிவில் அவன் தன்னைப் பேணுதற்கே பெரும்பாடு படலானான்; யானை பேணற்பாடிழந்தது. அவனும் உரிய காலத்தில் தன் கோயிற் பணியைச் செய்ய இயலாதவனாய் விட்டான். இந் நிலையில் கோயிற் சிறப்பொன்று நடைபெற்றது; அப்போது திருப்பலி கொணர்தற்கு யானைப்பாகனை நாடினர்; அவன் யானையின் மாட்டாமை கூறி மறுத்து விட்டான். அதனால் திருப்பலி முட்டுப் பட்டது. இம் முட்டுப்பாடு இவ்வாறு பன்முறையும் உண்டாகத் தலைப்பட்டது. கோயிற் றொண்டர்களான மகேச்சுரர்களுக்கு இது மிக்க வருத்தத்தைத் தந்தது. அவர்கள் கோயில் காரியம் பார்ப் போர்க்கும் ஊரவர்க்கும் தெரிவித்தனர். அக்காலத்தே திருவாமாத்தூர் இருந்த வாவலூர் நாட்டைப் பெற்றுக் காவல்புரிந்து வந்த சோழ சிகாமணிப் பல்லவரையரும் இதனைச் செவியிற் கொள்ளாது புறக்கணித் திருந்தமையால், ஒருவரும் மகேச்சுரருடைய முறையீட்டை ஏற்கவில்லை. இந் நிலையில் திருவாமாத்தூர் மகேச்சுரர்களிற் சிலர் சோழ வேந்தனான பராந்தகனைக் கண்டனர். வேந்தன் அவர்தம் நலம் கேட்டுக் கோயில் காரியங்களின் செம்மை நிலையைத் தெரிவிக்கு மாறு பணித்தான். அவர்கள் உள்ளதன் உண்மையை உள்ளவாறு விண்ணப்பித்தனர். அது கேட்டதும் அவன் அமைச்சரோடு ஆராய்ந்து திருப்பலி முட்டுப்பாடின்றி நிகழுமாறு வேண்டிய நிவந்தங்களைப் பணித்து, அவற்றை விரைந்து கொடுக்கு மாறு சோழசிகாமணிப் பல்லவரையர்க்குத் திருமுகம் விடுத்தான். பல்லவரையர்க்குத் திருமுகம் வந்ததும் அவர் திடுக்கிட்டுக் கோயிலார்க்கு அத்திருமுகப்படியைத் தந்து யானைப்பாகனுக்கு நிவந்தமாக விட்டநிலத்தையளந்து கொடுக்குமாறு செய்து, அதனைக் கல்லிலும் வெட்டுமாறு ஏற்பாடு செய்தார். யானைப்பாகன் அரசன் விடுத்த நிவந்தம் பெற்று வறுமை நீங்கினான்; திருப்பலி முட்டுப் பாடும் தீர்ந்தது. இந் நிகழ்ச்சி முற்றும் திருவாமாத்தூர்க் கோயில் மண்டபத்தின் தென்சுவரில் வெட்டப்பட்டுள்ளது.  8. விஞ்ஞானமும் தத்துவஞானமும்* இக்காலம் சயன்ஸ் எனப்படும் விஞ்ஞானத்துக்குச் சிறப்பளித்து அதனாற் பெறலாகும் அறிவியல் நலங்கட்கு முதன்மை தந்து நிலவும் காலமாகும். விஞ்ஞானத்தால் விளக்கப்படும் பொருள்களே உண்மை யெனவும், கொள்ளத்தகுவன எனவும் கருதுவது இக்காலத்தில் சிறப்பியல்பு. சிவமாகிய கடவுட் பொருள் விஞ்ஞான முறையில் காணப்பட்டா லொழியக் கொள்ளத்தகுவதன்றெனவும் இக்காலம் கருதுவதுண்டு. அறிவென்பதுகூட விஞ்ஞான முறையிற் பெறுவது தான் சிறப்பு என்று இக்காலத்தவர் கருதுகின்றனர். இவர்கட்கு முன்னணியில் நிற்பவர் இம்மானுவேல் காண்டு (immanuel kant) என்பாரும், அகஸ்டின் காந்தே (augustine conte) என்பாருமாவர். இவ்விருவரும் தத்தங்கொள்கை வகையில் பெரிதும் வேறுபாடு உடையவராயினும் “அறிவாவது விஞ்ஞான முறையிற் பெறப்படும் அறிவே” என்ற வகையில் ஒத்துள்ளனர். விஞ்ஞான முறை அறிவாவது நியூட்டன் (newton) கண்ட அறிவியல் முறைப்படி அறியவேண்டி யவற்றை அறிவதாகும். உலகியற் பொருளொன்றை விஞ்ஞான முறையில் அறிவதென்பது, குறித்த பொருளின்பால் பிற பொருட்குள்ள தொடர்புகளைக் கணக்கியல் வாய்பாட்டாற் கண்டறிவதென்பர். சிவமாகிய செம்பொருள் உலகியற் பொருள்களுள் ஒன்றாக வைத்து விஞ்ஞான முறையிற் காணக்கூடியது அன்மையின் அச்செம்பொருள் அறியக்கூடியதன்று; ஆகவே, அதனைப்பற்றிப் பேசுவது வீண் செயல் என்பது அவர் கொள்கை. ஆயினும், உலகியல் நிகழ்ச்சிக்கு அத்தகைய செம்பொருளொன்று உளதாக வைத்துச் செய்வன செய்யவேண்டியிருக்கிறது எனவும், எனவே, அது நம்மால் வகுத்துக் கொள்ளப்பட்ட தொன்றே தவிர, அறிவியல் ஆராய்ச்சியால் அறிந்துகொள்ளக்கூடிய ஒன்றன்று எனவும் காண்டு (kant) என்பவர் கூறுகின்றார். காந்தே (conte) என்பார் வேறு வகையில் தமது நாவன்மையைச் செலுத்தி இந்த முடிவுக்கே வந்துசேர்ந்தார். இவர்தம் கொள்கைகளுள் காண்டென்பாரைப் பின்பற்றி ஐர்மனி நாட்டில் பால்சென் (aeulsen) வைசிங்கர் (vaishinger) முதலியோரும், பிரெஞ்சு நாட்டில், ரினோவியர் (renovier) முதலியோரும், அமெரிக்காவில் லியோன் பிரன்சிவிக் (prof leon brunschvieg) முதலியோரும், காந்தேயைப் பின்பற்றி இங்கிலாந்தில் Iன் ஸ்டூவர்ட் மில் (john stuart mill) ஹெர்பர்ட் ஸ்பென்சர் (herbart spencer) முதலியோரும், பிரெஞ்சு நாட்டில் எமில்லித்ரே (`emile littre’) எமில் டர்க்கீம் (`emile durkheim’) முதலியோரும் நாட்டிற் பரப்பலுற்றனர். புதுமையில் மக்கட்கு விழைவும் வியப்பும் உண்டாதல் இயல்பு. விஞ்ஞானிகள் இங்ஙனம் புது முறையில் தமது பேச்சு வன்மையும் எழுத்து வன்மையும் கூட்டிக் கடவுட் கொள்கையைத் தாக்கத் தொடங்கியதும், விஞ்ஞானம் காட்டும் புதுமைகள் கண்டு வியப்பால் விழுங்கப்பட்டுக்கிடந்த மக்களது உள்ளம் நிலைகலங் கிற்று. விஞ்ஞானத் துறையின் நோக்கத்தை நுணுகிக் காணும் திறம் இழந்தவர், அவர் கொள்கைகட்கு இரையாயினர். உலகியற் பொருள்களின் ஆக்கக்கூறுகளும், அவை, தம்மில் இயைந்து அமைந்திருக்கும் அமைதியும், அவற்றின் ஊடே நிலவும் ஒழுங்கும் கண்டு எப்படி யமைந்துள்ளன என்று கண்டறிவதே விஞ்ஞானத்தின் முழுத்த நோக்கமாகும். பொருள்களின் தோற்றம், நிலை, கேடு ஆகியன உண்டாதல் எங்ஙனம் என்று கண்டு, அவை ஏன் அங்ஙன மாயின என்று காணாது போதலால், விஞ்ஞானத்தாற்பெறும் உலகியலறிவு முழுத்த அறிவாகாதென்பதை மக்கள் அறிந்திலர். பொருள் களின் ஆக்க அமைதிகளை ஆராயுங்கால் புதிய புதிய அறிவும் அவ்வழி அவற்றால் உண்டாகும் இன்பமும் அவரது ஆராய்ச்சியறிவை மழுப்பி விடுவதால், விஞ்ஞான அறிவு ஒருமருங்கு பற்றியதாக இருத்தலை விஞ்ஞானிகள் தாமும் அறியாதொழி கின்றனர். மேலும் அவர்கட்குக் கடவுளாகிய செம்பொருள் விஞ்ஞான நெறியில் ஆராயத்தக்க பொருளாக இல்லை. விஞ்ஞான நெறியிற் காணப்படும் பொருளின்கண் ஊடுருவி நிற்கும் இயற்கையே முழுமுதலாகிறது. அதனைக் காட்டும் பொருள்களின் ஆக்க அமைதிகட்கு உரிய காரணத்தை (ஆக்கமும் அமைதியும் ஏன் உண்டாயின எனக் காணும் காட்சியால் அறிதற்கெழும் உரிய காரணத்தை) நோக்கும் நிலையில் நாம் இருத்தலால் அவர் கருத்தை ஏற்கின்றோமில்லை. நீர் எப்படி யுண்டாகிற தென விஞ்ஞானத்தைக் கேட்பின், அஃது இரு கூறு நீர்க்காற்றும், ஒரு கூறு நெருப்புக்காற்றும் கூடி நீருண்டாகிறது என்றும்; இவ்வாறு ஏன் உண்டாக வேண்டும் என்றால், விஞ்ஞானம் விடை தராது. பொருள்களின் ஆக்க அமைதிகண்டு ஏன் என்னாது எப்படி யென வினாவிச் சேரல் விஞ்ஞானத்தின் குறிப்புப் எப்படி யென்னாது ஏன் என வினாவிச் செல்வது தத்துவ ஞானத்தின் குறிப்பாகும். இதனை மேனாட்டார் ஃபிலாசஃபி (Philosophy) என்பர். விஞ்ஞான தத்துவ ஞானமும் தத்தமக்குரிய எல்லைக்கண் நிற்குமாயின், உண்மை யறிவு விளக்கமுறும். இவ்விரு ஞானங்களும் தம்முள் மாறுகொண்டு ஒன்றனையொன்று கெடுத்தற்கே முயன்றுள்ளன. உலக வரலாறு காண்போர், தத்துவ ஞானத்தின் செல்வாக்கால் விஞ்ஞானிகள் பலர் பெருங்கேட்டுக் குள்ளாகியதைக் காண்பர். விஞ்ஞானிகள் பலர் நாடு கடத்தப்பட்டதும், உயிர்க்கொலை செய்யப்பட்டதும் வரலாற்று நூல் வாய்விட்டரற்றுகிறது. கால வேறுபாட்டால் தத்துவஞானம் செல்வாக்குக் குறையலுற்றதும், விஞ்ஞானம் செல்வாக்குற்றுத் தத்துவஞான எல்லைக்குள் புகுவதா யிற்று தன்னெல்லைக்குட்படாத செம்பொருளை விஞ்ஞானம் தேடியா ராய்ந்து “அற்புதமோ சிவனருளோ அறியேன்” என அலமருகிறது. தத்துவ ஞானமும், விஞ்ஞானமும் வேறு வேறு குறிப்பின வாயினும், தத்துவ ஞானத்துக்கு விஞ்ஞானம் இன்றியமையாது வேண்டப்படும். உண்மை வழிநின்று கடவுளுண்மை காணும் நெறி, தத்துவ ஞான நெறியின் வயப்பட்டு இயலுவது. ஆதலால், தத்துவ ஞானியொருவர் ஒன்றனைப்பற்றிப் பேச வருமுன் அதுபற்றி விஞ்ஞானி யாது கூறுகின்றார் என்பதை முதற்கண் காண்டல் வேண்டும் என்பர். ஒரு பொருளின் ஆக்கம் எங்ஙனமாயிற்றென்பது கண்டால் அஃது அங்ஙனம் ஏன் ஆயிற்றெனக் காணுமாற்றால் உண்மைத் தன்மை யுணரல் கூடும் என்று சர். nம்ஸ் ஜீன்ஸ் (sir james jeans) என்பார் கூறுகின்றார். விஞ்ஞானக் காட்சியிற் செல்லு மிடத்து மிக்க விழிப்போடு செல்லவேண்டும். சிறிது அயர்ந்தவிடத்து, விஞ்ஞானம் தத்துவஞான எல்லைக்குட் புகுந்து மயக்கத்திற் செலுத்திவிடும். பின்னர், தத்துவ ஞான நெறியிற் காணும் பொருள்கட்கு விஞ்ஞான நெறியில் விளக்கங் காணச் செலுத்தி உழல்விக்கும் விஞ்ஞானமும் தத்துவ ஞானமும் ஒருங்கு டையராகிய சர். nம்ஸ் ஜீன்ஸ் 1930-ஆம் ஆண்டில், தத்துவ ஞானப்பொருட்கு விஞ்ஞான விளக்கங்கூறத் தலைப்பட்டு முடிவில் “அற்புத பிரபஞ்சம்” (the mysterious universe) என்ற நூலை எழுதி முடித்தார். இப்பிரபஞ்சம் அற்புதமானது என்றதற்கு ஒரு விஞ்ஞானி வேண்டுமா? மக்கள் நாகரீகமின்றி விலங்குபோல் வாழ்ந்த காலத்தேயே இவ்வுலகம் அற்புதமானது என்பது அறியப்பட்டது. விஞ்ஞானத்தின் கருத்து பிரபஞ்சத்தின் அற்புதத் தன்மையை மாற்றி விளங்கவைப் பதாகும். அத்துறையில்முயன்று அஃது எவ்வளவோ விளக்கத்தைத் தந்திருக்கிற தன்றோ! இந்நாளில் பள்ளியில் பயிலும் ஒரு மாணவன் தாமஸ் ஆக்வினாஸ், அரிஸ்தாத்தல், பிளேடோ முதலாயினோர் அறியாத உண்மைகளை நன்கு அறிந்துள்ளான். அவர்கட்குப் பெருமயக் கத்தைத் தந்த உலக நிகழ்ச்சிகட்கு இக்கால விஞ்ஞானம் தெளிவுடைய விளக்கந் தந்துள்ளது. இங்ஙனமிருக்க, விஞ்ஞானிகள் இவ்வுலகம் அற்புதமான தென்பாராயின், அவர் கூற்று நன்கு சிந்திக்கத்தக்கதொன்றாம். சிந்தித்தவிடத்து உண்மை புலனாகிறது. தத்துவநெறியிற் காண்பனவற்றை விஞ்ஞானமாகக் கருதி அதற்கு விஞ்ஞான முறையில் விளக்கங் கூறப்புகுவதே அவர் செய்யும் தவறு. அதனால் அவர்கள் உலகம் அற்புதமானது என்று கூறவேண்டிய வராயினர். தத்துவ ஞானக் காட்சிப் பொருள் விஞ்ஞானக் காட்சிக்கு அகப்படாமையின், விஞ்ஞானம் அதனைக் காண்டற்குத் துணைசெய்யாதாயிற்று என்பதே அவர் கூறுவதன் கருத்தாகும். மேலும், விஞ்ஞான முறையிற் காணப்படும் கொள்கைகள் ஒரு நிலைமையனவல்ல. காலஞ்செல்லச் செல்லப் புதுக்காட்சிகளால் மாறுபடுவன. “குறைபாடு உள்ள தற்கன்றோ வளர்ச்சியுள்டாவது” என்பர் திருக்கோவையாருக்கு உரைகண்ட பேராசிரியர். மேன்மேலும் வளர்ந்து சிறத்தலால் குறைபாடுடைய விஞ்ஞானம், ஒரு முடிவுகண்டு முற்றி நிற்கும் தத்துவஞானத்தோடு இயையாதா கலின் பிரபஞ்சத்தின் அற்புத நிலைமையை விளக்காதாயிற்று. “வந்தவாறு எங்ஙனே போமாறேதோ, மாயமாம்பெரு வாழ்வு” என்றார் நம் நாவரசர். இதன் முதற்பகுதிக்கு உரைகூறு வோர்போல, மக்களுயிர் உலகிற்கு வந்தவாற்றைக் கூறலுற்று, விண்மீன் வீழ்ச்சியும், ஞாயிற்றுத் தெறிப்பும், நிலவுலகின் தோற்றமும் பிறவும் விரியக்கூறி “இந்நிலவுலகிற்கு மக்களுயிர் வந்ததுதற் செயலாக அமைந்தது என விஞ்ஞானம் கூறுகிறது”1 என்று சர் nம்ஸ் ஜீன்ஸ் உரைத்தார். தற்செயல் (accident) விளக்கமில்லாத சொல்லாதலின், “வந்தவாறு” காண்டற்கு விஞ்ஞானம் வலியிழந்து நிற்கிறதென்பது தெளிவாகும். பின்பு அவர், ஐன்ஸ்டன் (einstein) ஹீசன்பர்க் (heisenberg) திரா அக் (dirac) லெமேத்தர் (lemaitre) லூயிஸ்-தெ-புரேக்ளி (louis-de-broglie) முதலாயினர் கண்ட பௌதிக வுலகை விளக்கிக் கூறி, முடிவில் தத்துவ ஞானமென்ற ஆழ்கடலுள் மூழ்குகின்றார். அதன்கண் பிரபஞ்சம் “கடசக்கரர் எந்திரமெனச் சுழ்ல்வது”2 எனக் காண்கின்றார். முடிவில், இது “படைக்கப்பட்டதே” என்று தேறி, இதுவும் சங்கற்பத்தால் படைக்கப்பட வேண்டும் எனவும்3 இதனைப் படைத்தோன், ஒவியம் வல்லானொருவன் தான் தீட்டும் ஒவியக் கிழிக்குப் புறம்பே நின்று ஒவியத்தை எழுதுவதுபோல, காலம், இடம் முதலியன கடந்து நின்றே படைத்திருத்தல் வேண்டும் என இன்றை விஞ்ஞானக்கொள்கை நம்மை நினைக்குமாறு வற்புறுத்து கிறது என்ற கருத்துப்படவும் கூறி முடிக்கின்றார். பிரபஞ்சவட்டமெனவும், சங்கற்பசிருட்டியெனவும் இவர் கூறுவன மேனாட்டுச் சாக்ரடீஸ் முதலிய தத்துவ ஞானிகட்கும் நம் நாட்டுப் பௌக்கர மெழுதிய புட்கரர் முதலிய சிவஞானி கட்கும்4 முன்னிருந்த முன்னோர்கள் கண்டனவாகும். இவை பல நூற்றாண்டுக்கு முன்பே நம் முன்னோர் கண்டு உரைத் திருப்பவும், சுற்றிப்போயும் சுங்கச்சாவடிக்கே வந்தது போல, புதிய புதியவாக விஞ்ஞான நெறியில் நுணுகிச்சென்று நுணுக்கரிய நுண்ணுணர்வுகாணும் ஐன்ஸ்டன் முதலாயினோர் இந்த முடிவையே கண்டுரைக் கின்றார்கள் என்பது சர் nம்ஸ் ஜீன்ஸ் கூறுவதனால் விளங்குகிறதன்றோ? இனி, ஜூலியன் ஹக்ஸிலி (julian huxley) என்பார் உலகில் உயிர்களின் தோற்ற வரலாற்றை யாராய்ந்து கூறிச் செல்லும் கூற்றுக்களிலும் a.h. காம்ப்டன் (a.h.compton) கூறுவனவற்றிலும், விஞ்ஞானமும், தத்துவஞானமும் தம்முள் மயங்கிப் பலதலையான முடிவுகண்டு அலமருவது நன்கு புலனாகும். அன்றியும், அணுவைப்பற்றிய ஆராய்ச்சி தோன்றி அவர்களது மயக்கத்தை மிகுதிப்படுத்துகிறது. பௌதிக ரசாயன அணுக்களின் கூட்டுறவால் உண்டாகும் பொருள்களினிடையே உயிரணுக்கள் நிலவுகின்றன. இந்த உயிரணுக்கள் எங்ஙன முண்டாயின எனக் காணும் விஞ்ஞானிகள் பெருமயக்க முற்று நிற்கின்றனர். இதுகாறும் ஒரு விஞ்ஞானியும் உயிரணு வொன்றைப் படைத்தது கிடையாது. உயிரணுவென்பது பௌதிக அணுவோடு கூடியே யிருக்கிறது. அவ்வணுவின் பௌதிகப்பகுதிக்கு வேறாக யாதும் அதன்கண் இதுகாறும் காணப்படவில்லை. பௌதிகப்பகுதியின் வேறாக உயிர்த்தன்மை அதன்பால் எங்ஙன முண்டாயிற்றென. மேலும் அணுத்திரள்களின் இடையே, புரோடான்ஸ் (protons), எலக்ட்ரான்ஸ் (electrons) நீயூட்ரான்ஸ், (newtrons), ஃபோட்டான்ஸ் (photons) என்ற அணுக்கள் காணப்படுகின்றன. இவற்றிற்கு விஞ்ஞான முறையில் விளக்கங் காண முடியவில்லை. இவ்வாறு விஞ்ஞானம் காட்டும் காட்சிகள் பல நமது உண்மைக்கே விளக்கம் புலப்படுத்தாமல் உள்ளன. இன்னோரன்னவற்றால் மயக்கமும், தத்துவஞானம் பண்டை நாளில் செய்த தவறுபற்றி அதன்பால் காழ்ப்பும் கொண்டு, கடவுளாகிய செம்பொருளுண்மை கண்டு மேற்கொள்ளாது, blind evolution எனவும், clear sighted orthogenesis எனவும் பிறவும் சில விஞ்ஞானிகள் கூறுவதுபற்றி, கற்ற அறிஞர்கள் மயங்கி யொழிதல் கூடாது. 9. ஏரொளிச் சக்கரம் ஏரொளிச் சக்கரம் என்பது திருமந்திரத்து நான்காம் தந்தி ரத்துள் ஆதார ஆதேயங்களை அடுத்து நிற்கும் பகுதியாகும். யோக நெறியில் சக்கரங்களையும் அவற்றுள் அடங்கும் மந்திர எழுத்துக் களையும் கண்டு தியானிக்கும் முறைகளில் ஒன்று. சைவத்திரு முறைகளில் பத்தாந் திருமுறையாகிய இத்திரு மந்திரம் ஏனை ஒன்பது திருமுறைகளினும் பெரிதும் வேறுபட்டது. அவற்றுள் பத்தி நெறியே முழுக்க முகுக்க உணர்த்தப் படுகிறது என்பது நாடறிந்த செய்தி. பததி நெறி விளைவிக்கும் ஞானம் கைவருதற்கும் வந்த ஞானத்தைப் பயன் கொள்ளற்கும் அமைந்த நெறிகளில் யோக நெறியும் ஒன்று. “தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த” எனவரும் சிவஞான போதத்துக்குப் உரை கண்ட பெரியோர் சரியை கிரியா யோகங்கள் தவத்துக்குப் பொருளாகக் கண்டனர். சரியை முதலியவற்றை ஆங்காங்கு அறிவித்த திருமுறையாசிரியர்கள், யோகத்தின் இயல்பையும் சுட்டிக் காட்டியுள்ளனர். திருவைந் தெழுத்தின் நலங்களை உரைத்தருளிய ஞானசம்பந்தர், யோகியரின் யோகநெறியில் உளவாகும் இடர்களைப் போக்குதற்கும் திருவைந் தெழுத்துத் துணை செய்யும் என்று தெரிவிக்கிள்றார். “ ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர் ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து ஏனை வழிதிறந்து ஏத்து வார்க்கு இடர் ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே” என்பது அவரது அருளுரை. இவ்வாறே திருநாவுக்கரசர் முதலிய பெருமக்களும் யோக நெறியைக் குறித்துள்ளனர். இவ்யோகத்தை மேற்கொண்ட பெருமக்கள், ஞானசம்பந்தர் அருளியுரைப்பது போல “அகன் அமர்ந்த அன்பிரைாய் அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையராய்” இம்மண்ண கத்தே உறைபவர். பொறி புலன்கள் அடைபட்டுப் போவதால், அவர்கள், நம்மைப் போல், நிலமும் பொழுதுமாகிய இருவகைப் பொருள்களையும் அறியும் வாய்ப்பு இல்லாமற் போகிறது. ஆனால், ஏனைச் சரியை கிரியைகட்கு வேண்டுவது போல யோகத்துக்கும் இடமும் காலமும் வேண்டியிருக்கின்றன. யோகம் கலையாமலே இவற்றைக் காண்பதற்குத் துணையொன்று வேண்டப்படுகிறது. அதுவே இங்கே இப்பொழுது கூற நிற்கும் ஏரொளிச்சக்கரம். ஏரொளிச் சக்கரம் என்பது ஏரொளியையும் அதனிடையே காணப்படும் விந்து சக்கரம், பிரணவச் சக்கரம் ஆகியவற்றையும் உரைக்கும் பகதியாகும். ஏரொளி என்பது எழுகின்ற ஒளி; அஃது உந்தியில் தோன்றி நேராக எழுந்து தலையுச்சிவரை நிமிர்ந்து நிற்கும் உள்ளொளி. இவ்வேரொளி தோன்றும் உந்தி, நான்கு இதழ்களையுடைய தாமரை போல்வது. “ஏரொளி உள்ளெழு தாமரை நாலிதழ்” என்பர். இதனை அகக் கண்ணாற் காணும்போது, அரசிலே போல நடுவே ஏரொளியும், பக்கத்தே விந்து நாத ஒளிகளும் தோன்று கின்றன. ஆனால், தொடக்கத்தில் ஏரொளியும், பின்பு விந்துவும், அதன்பின் நாதவொளியும் தோற்றமாகின்றன. இதனைக் காணக் காண, அவ்வொளி உடலெக்கும் பரவுகின்றது. அந்நிலையில் நடுவே ஒளிமிக்க வட்டமான சக்கரமொன்று காணப்படுகிறது. அதுவே ஏரொளிச் சக்கரம். இதனைத் திருமந்திரம். “ ஏரொளி உள்ளெழு தாமரை நாலிதழ் ஏரொளி விந்துளி னால்எழு நாதமாம் ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின் ஏரொளிச் சக்கரம்; அந்நடு வன்னியே” என்று உரைக்கிறது. வன்னி - உந்தியில் எழுந்து ஏரொளி செய்யும் தீ. இம் மாபெருஞ் சக்கரத்தை நோக்குவோமாயின் அதன்கண் எழுத்துக்கள் காணப்படுகின்றன. அவை மிக்க பலம் வாய்ந்தவை; வானளாவ உயர்ந்து ஓங்குவனவாகும் என்பர். “ வன்னி எழுத்தவை மாபலம் உள்ளன வன்னி எழுத்தவை வானுற ஓங்கின” என்பர் திருமூலர். இவ்வேரொளியின் பக்கத்தே சூழ்ந்து வட்டமாய் நிற்கும் விந்துவில் பன்னிரண்டு எழுத்துக்கள் உள்ளன. அதனோடு நாத ஒளி கலக்கிறது. அதனால் அப்பன்னிரணடும் தம்மில் பெருகி 144 எழுத்துக்களாகின்றன. இவற்றை, “சொல்விடும் நூறொடு நாற்பத்து நாலுரு” “எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்” என்று குறிக்கின்றது திருமந்திரம். இவையாவும் அச்சக்கரத்துள் பதிந்து உலகமாய்க் காட்சி தருகின்றன. ஆகவே, சக்கரமும் அதனுள் அடங்கும் எழுத்துக்களும் விந்து நாதங்களால் உருவாகுவதும், அவ்வெழுத்துக்கள் உலகமாவதும் பெறப்படும். இதுபற்றியே, “ ஞாலம தாக விரிந்தது சக்கரம் ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும் ஞாலம தாக விரிந்தது எழுத்தே” என்று ஆசிரியர் கூறுகின்றார். இங்ஙனம் ஞாலமாகிய நிலம் கண்டபின், நீரும் நெருப்பும் காற்றும் விசும்பாகிய ஆகாசமும் ஒன்றன்பின் ஒன்றாகக் காணப் படுகின்றன. ஆகாசம் தோன்றும்போது, விந்துவும் நாதமும் அவ்வெழுத்துக்குள்ளே காண நிற்கின்றன. அக்காட்சி காணும் உள்ளத்துக்குப் பேரின்பமாக இருக்கிறது. அதுவே சிவானந்தம் என்பர், “சிவானந்தம், ஆகாச அக்கரமாவது அறிமினே” என்று திருமந்திரம் செப்புகிறது. இவ்வாறு சிவானந்தம் நல்கும் விந்து நாதங்களைத் தரிசிக்கையில விந்துவின்கண் 25 எழுத்துக்கள் அடங்கிய விந்து சக்கரம் காட்சிப் படுகிறது. அச்சக்கரத்துள் இருபத்து நான்கு அறைகள் உண்டு. நாதத்துக்குரிய அகரம் ஏனை எல்லா எழுத்துக்கiம் இயக்கும் வகையில் அவற்றுள் ஒள்றாய்த் தேய்ந்து விடுவதால் ஏனை இருபத்து நான்கு எழுத்துக்களும் வரிசைக்கு ஆறாக நான்கு வரிசையில் நிற்கும் அறைகளில் பதிகின்றன. ஒவ்வொரு அறைக்கும் அஃதாவது வீட்டுக்கும் ஒவ்வொரு தேவருண்டு. அவர்கள் அனைவர்க்கும் முழுமுதலாக நிற்கும் தேவதேவன் சூரியனாகக் காட்சி தரும் சிவமாகும். ஆசிரியர், “அறிந்திடும் அவ்வெழுத்து அப்பதி யோர்க்கும் அறிந்திடும் அப்பக லோன்நிலை யாமே” என்று குறிப்பர். இவ்வகையில் விந்து சக்கரத்தை முதலிற் காண்கின்ற யோகியர் சிவ சூரியனைத் தரிசிப்பர் என்று அறிகின்றோம். இனி, இவ்விந்து சக்கரத்தை நோக்குவோம். வரிசைக்கு ஆறாக நான்கு வரிசைகளில் இருபத்து நான்கு எழுத்துக்கள் உண்டு என்று முன்பே கண்டோம். முதல் வரிசை சிவத்துக்கும், இரண்டாம் வரிசை அம்மைக்கும், மூன்றாவது உயிர்க்கும், நான்காவது திரோத சத்திக்கும் உரியனவாகும். இதனை, “அம்முதல் ஆறும் அவ்வாதி எழுத்தாகும் அம்முதல் ஆறும் அவ்வம்மை எழுத்தாகும் இம்முதல் நாலும் இருந்திடும்; வன்னியே இம்முத லாகும் எழுத்தவை யெல்லாம்” என்று திருமந்திரம் கூறுகிறது. முதலிற் கண்ட ஏரொளிச் சக்கரத்துக்கும் இவ்விந்து சக்க ரத்துககும் வேறுபாடு என்னை எனின், ஏரொளி 144 எழுத்தும், இவ்விந்து சக்கரம் அகரம் உள்ளிட்ட இருபத்தைந்து எழுத்தும் உடையன. ஏரொளிச் சக்கரம், மூலமாகிய உந்தியது நாலிதழ்த் தாமரையகத்து எழும் வன்னியின் (மூலாக்கினியின்) கண் காணப் படுவது; விந்து சக்கரம் அவ்வேரொளிச் சக்கரத்தின் உள்ளே, உடலின் நடுவிடமாகிய நெஞ்சின் கண் காணத் தோன்றுவது. தோன்றினும் இதற்கும் அடிப்படை அவ்வன்னியே என்பதற்காகத்தான். “வன்னியே இம் முதலாகும் எழுத்தவை எல்லாம்” என்று இத் திருமந்திரத்தில் ஞாபகம் செய்கின்றார். மேலும் இவ்விந்து சக்கரத்துள் காணப்படும் எழுத்துக்களும் அந்த ஏரொளியில் உளள 144இல் உள்ளனவே யாகும். இவை அவ்வெழுத்துக்களின் ஆறாவது கூறாகும். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என ஆதாரம் ஆறு ஆதலால், இவ்வெழுத்து 144-ம் ஒவ்வொன்றிற்கும் 4 விழுக்காடு கூறுபடுகின்றன போலும். மணிபூரகம் என்ற ஆதாரமாகிய நடுவி டத்தே இவ்விந்து சக்கரம் இருபத்து நான்கு எழுத்தோடு தோன்றுகிறது. இதனை, “எழுவத்தவை நூறொடு நாற்பத்து நாலும் எழுத்தவை ஆறது; அந்நடு வன்னி” என்பதனால் அறிகின்றோம். இவ்விருபத்து நான்கினுள் சிவத்திற்கு முதல் வரிசையில் உள்ள ஆறு எழுத்துக்களும் உரியன. சிவம் ஈறும் முதலும் இல்லாத தாகலின், அதற்குரிய எழுத்து ஆறுக்கும் அந்தம் இல்லை. ஏனைப் பதினெட்டுக்குமே அந்தம் உண்டு. வகரமாகிய அருட சத்தியும், நகரமாகிய திரோத சத்தியும் ஆன்மாவும் சிவத்தில் ஒடுங்குபவை ஆதலால், அவற்றிற்குரிய எழுத்துப் பதினெட்டு அந்தம் உடையவாகும். ஆவவே, “ அந்தமும் ஈறும் முதலா னவை அற அந்தமும் அப்பதி னெட்டுட னாகும்” என்கிறது திருமந்திரம். அங்ஙனம் ஆகுமிடத்து, யோகம் புரியும் ஆன்மா, அருளாகிய அம்மைக்குரிய ஆறிலும், சிவத்துக்குரிய ஆறிலும், தோய்ந்து கடந்து பதின் மூன்றாம் நிலையாகிய நாதத்துக்குரிய அகரத்தில் அமரும்; அமர்ந்த பின், அமுத வடிவான சந்திரனைக் காணும். “ அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின் அந்தமும் இந்துகை ஆருட மானதே” என்பது காண்க. இந்துகை, சந்திரிகை. ஆருடம்-காட்சி. எனவே, விந்து சக்கரத்தின் தோற்றத்தை நோக்கும்போது சிவசூரியனையும், ஒடுக்கத்தில் நோக்கும்போது அமுத சந்திரனையும் தரிசிக்கின்றனர் என்று தெளிகின்றோம். இவ்வாறு விந்து சக்கரத் தோற்றத்தில் கண்ட சூரியனால் நிலம் நீர் முதலாக விரிந்த உலகம் தெரிய வந்தது; எழுத்துக்களின் ஒடுக்கத்தில் காணப்படும் சந்திரனால் நாட்கள் 360 ம் நாள் பதினைந்து கொண்ட பக்கங்களும், திங்கள் 12-ம் பருவம் 6-ம் அமைகின்றன. மேலும், சூரியனால் நாழிகையும் பன்னிரண்டு ராசியும் காணப்படுகின்றன. நாள் 360 கொண்ட ஆண்டும் இந்தச் சூரியனால் விளங்குகிறது. இங்கே இராசி சக்கரம் தோன்றுகிறது. இராசி சக்கரம், மேடம், ரிடபம், மிதுனம் என முத்திற வீதி யுடையது. மேடவீதி - ரிடபம், மிதுனம், கடகம், சிங்கம்; ரிடபவீதி - மேடம், கன்னி, துலாம், மீனம்; மிதுன வீதி-தனு, மகரம், கும்பம், விருச்சிகம், இந்த ராசிகள் விந்துவில் அடக்கமாய் நாதத்தால் இயங்குவன வாகும். விந்து சக்கரம் பன்னிரண்டு வீடு கொண்ட இராசி சக்கரமாம்; வீடு ஒவ்வொன்றுக்கும் நட்சத்திரம் 2¼ ஆக அடக்க, இராசி சக்கரம் தாரகைச் சக்கரமாகும். அதன் பேரொளியில் சந்திர சூரியர் தோன்றினும் எங்கும் தாரகை மயமாகவே விளங்கும். “தாரகை தாரகை தாரகை கண்டதே” என்று திருமந்திரம் கூறுகிறது. எங்கும் தாரகையாகக் காட்சி தரும் நட்சத்திரச் சக்கரத்தை நோக்கும்போது, அதன் பேரொளியில் விந்துவும் நாதமும் ஏரொளிக கொழுந்தும் தோன்றுகின்றன. மேலும் நோக்குகையில், விந்து நாதங்களுக்கு அப்புறத்தே காரொளி ஒன்று தோன்றுகிறது. அது சிவசத்தியாகிய அம்மையின் நீலமேனிக்கண் தோன்றும் காரொளி. எனவே, தாரகைச் சக்கரத்தின் வாயிலாக அம்மையின் தரிசனம் பெறப்படுவது காணலாம். அக் காரொளியில் அண்டமும் நிலம் நீர் முதலிய உலகும் புலனாகும்; அந்நிலையில் அவையனைத்தையும் அடக்கி நிற்கும் முறையில் ஏரொளியும் தோன்றுகிறது. அதற்கு விந்து ஆக்கமும் வன்மையும் தருகிறது. திருமந்திரம் “நின்ற விவ்வண்டம் பலமது விந்துவே” என்று கூறுகிறது. இவ்விந்து நாதங்கள் ஒன்றோடொன்று கலக்கின்றன. சமநிலையில் கலக்கும்போது பீசாட் சரத்துக்குக் கருவுண்டாகிறது. விந்துவின் பன்மடங்கு விரிந்து பரந்த நாதம் சுருங்கி விந்துவின் அளவுக்கு சமநிலையில் நிற்பது பின்பு அதனின் மிகும். குறைந்து தோன்றும் விந்துவில் எட்டில் ஒரு கூறாகப் பீசாட்சரம் இருக்கும். “விந்துவிற் குறைந்திடும் நாதம் எழுந்திடில் விந்துவை எண்மடி கொண்டது வீசமே” இந்தப் பீசம்தான் இரண்டாகும்; அவற்றுள் ஒன்று மேனோக்கும்; மற்றது கீழ் நோக்கும். மேனோக்குவது நாதத்தளவும் விரியும். கீழ் நோக்குவது விந்துவின் அளவும் விரியும்; விரிந்தபின், அப்பீசம் விந்துவில் ஒடுங்கி மறைந்துவிடும். அந்நிலையில் விந்து அதனின் 64 மடங்கு பெருகி அண்டங்கள் உலகுகள் அனைத்திற்கும் வித்தாகும். அதன் கண் மறைந்த பீசத்திலிருந்து உலகுடம்புகட்குரிய எழுத்துக்கள் தோன்றுகின்றன. விந்துவும் நாதமுமாகிய இவ்வெழுத்துக்கள் சக்கரமாக அடங்கி உடம்பினுள் ஓதப்படும் மந்திர எழுத்தாகும். அவற்றுள் ஒன்று எரிவட்டமாக அமையும்; மற்றவை அதன் சக்கரமாய் நடுவே நிற்கும். அவற்றைப் பிரணவம் சுற்றி வளைத்துப் பந்தித்து நிற்கிறது. அதனைப் “பந்தம தாகும் பிரணவம்; உன்னிடே” என்பர் திருமூலர். உள்ளே அடங்கிய எழுத்துக்களை உன்னாமல் விடுவதால் குறையில்லை. பிரணவத்தை உன்னுங்கால தன்முனைப் பற்று அதன் பின்னே ஒடுங்குதல் வேண்டும். “ தன்னிட் டெழுந்த தகைப்பறப் பின்னிற்கப் பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே” என்பர். இப்பிரணவ மந்திரத்தை உன்னுவோர், அதனைத் தம் கருத்தில் இருத்திச் சிந்தைத் தடத்தில் தியானிக்க வேண்டும். அதனால் நுணுக்கரிய நுண்பொருள் (பரசிவம்) பெறலாம். திருமந்திரம், “ பார்க்கலு மாகும் பகையறு சக்கரம் காக்கலு மாகும் கருத்தினில்; தடமெங்கும் நோக்கலு மாகும் நுணுக்கற்ற நுண்பொருள் ஆக்கலு மாகும் அறிந்துகொள் வார்க்கே.” என்று கூறுகிறது. இப்பிரணவ சக்கரத்து அகரம் சிவம்; மேல் வரும் உகரம் அருட்சத்தி; எஞ்சிய மகரம், நிலம் நீர் முதலியனவாம். இச்சக்கரம், தம்பனம், மோகனம், வசியம், மாரணம், உச்சாடனம், வித்துவேடணம் என ஆறு இயல்புகளையுடையது. மாரணம் ஒழிந்த ஐந்தும் நன்மை செய்வன. மாரணம் மாறான இயல்புடையது. இச்சக்கரத்தின் தோற்றமே அம்மை; அவள் கனலை ஒப்பள். எழுத்துக்களுக்கும் அவளே முதல்வியாதலால், அவளது அருளின்றி அவ்வெழுத்துக்கள் செயல்படா. “ மதித்திடும் அம்மையும் மாமா தாகும் மதித்திடும் அம்மையும் அம்கனல் ஒக்கும்; மதித்தங் கெழுத்தவை காரண மாகில் கொதித்தங் கெழுத்தவை கூட கிலாவே.” என்பர். இவ்வெழுத்துக்களைத் தெளிந்தவர்க்குத் தம்பனம், வசியம் மாரணம் என்பன எளிதில் கை கூடும்; பாடியாகிய சிந்தையுள் தங்கிய வழி இம்மந்திரம் பகையச்சத்தைப் போக்கி விடும். திருமந்திரம், இதனை, “ கூடிய தம்பனம் மாரணம் வசியம் ஆடியல் பாக அமைந்து செறிந்திடும்; பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்.” என்று கூறுகிறது. மூலாதாரத்தில் அகரத்தை நடுவாகக் கொண்டு அதனைச் சூழ்ந்து கிடக்கும் குண்டலினியை எழுப்பி அதனொடு கூடிச் சக்கரத்தைக் காண்போமாயின, விரும்பியன யாவும் கை கூடும். “ தெளிந்திடும் சக்கரம் மூலத் தினுள்ளே அளிந்த அகரத்தை அந்நாடு வாக்கிக் குளிர்ந்த அரவினைக் கூடியுள் வைத்து அளிந்தவை அங்குஎழும் நாடிய காலே” என்பது காண்க. இப்பிரணவ சக்கரத்து மந்திர எழுத்தைக் கால், அரை, முக்கால் முழுது என ஓதுவதுண்டு. காலளவு ஓதின் அது உள்ளத்தே தழைத்து அமையும்; அரையளவு ஓதின், உள்ளத்தில் ஊறி நிற்கும்.  10. 'இரந்தார்க்கீதல்' ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் பொன்னார் திருவடி களுக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். தலைமை தாங்கும் பெருமகனே! பெருமக்களே! எந்த நூலைக்கண்டு நான் அஞ்சுவேனோ அந்த நூலைப் பேசும் வாய்ப்பு எனக்கு வந்திருக்கிறது. என் அறிவின் எல்லைக்கு அப்பாலுள்ள ஒரு நூல் இருக்கிறது என்றால் அது திருமந்திரந்தான். ஒரு காலத்தில், ஒரு பாட்டிற்குப் பத்து ரூபாய் தருகின்றோம்; திருமந்திரத்திற்கு உரை எழுதவேண்டும் என்றார்கள். அவர்கள் அப்பொழுது சொன்ன போது நான் பண்டிதமணி கதிரேசஞ்செட்டியார் அவர்களிடம் எப்படித் தொடங்குவது? என்று கேட்டேன். அவர்கள் சொன்னார்கள்; "எனக்குந்தான் தெரியவில்லை" என்று. பலமொழிகளில் புலமைவாய்ந்த -பல கற்ற பண்டிதமணி யாய் விளங்கிய அந்தப் பெருமகனே உள்ளம் அசைவுற்றார் -உடல் அசைவுற்றார் என்றால் என்னைப் போன்றவர்களுக்கு அச்சமாகத் தான் இருக்கிறது என்று சொல்லவேண்டுவதில்லை. ஒருசில நூல்களைப் படித்துப் பார்த்துப் பழகிய அந்த அளவில் இப்போது பேச வந்திருக்கிறேன். அன்றும் அச்சந்தான்; இன்றும் அச்சமேதான்; ஏனென்றால் திருமூலர் ஒரு ஆண்டுமுழுவதும் தவம் கிடப்பாராம்; பிறகு ஒரு பாடலைப் பாடுவாராம். இப்படி மூவாயிரம் ஆண்டுகள் பாடிவந்ததாகச் சொல்லப்படுகிறது வரலாறு. ஒவ்வொரு ஆண்டும் தவம் இருந்து எழுதிய பாடலை -பாடலிலுள்ள கருத்துக்களை ஒருசிலமணி நேரங்களில் சொல்ல நினைப்பது எனக்கு அச்சமாகத் தான் இருக்கிறது. இதற்கு முன்னால் ஈதலின் சிறப்பைப் பற்றிப் பேசக் கேட்டோம். அடுத்தபடியாக இரந்தார்க்கீதல் என்பதைப் பார்ப்போம். இரவாத வரும்உண்டு, இரப்பவருமுண்டு. இரப்பது யாரும் விரும்பத்தக்கது அல்ல. ஈதல் என்பது பொருள் உள்ளவர்களுக்கு இருக்கக்கூடிய பண்பு. இரத்தல் என்பது தகாத ஒரு செயல். எல்லோரும் செய்ய வேண்டிய அறம் ஈதல் என்பது. இரத்தல் யாரும் செய்யக்கூடாதது. ஆனால் எல்லோரும் இரக்கமாட்டார்கள். ஆகவே நாம் இரப்பவர் களுக்கு ஈதல் வேண்டும். "இரப்பவர்களுக்கு ஈயவைத்தார்" என்று இதுபற்றித் திருநாவுக்கரசர் அழகாகக் கூறியிருக்கிறார். இந்த முறையிலே இரந்தார்க்கு ஈதல் என்று வருகிறபோதுதான் இரப் பவர்கள் மிக அதிகம் எனத்தெரிகிறது. ஒரு பசு இறக்கும் நிலையில் இருக்கிறது. அதற்குத் தண்ணீர் கேட்கிறான் ஒருவன். அதுவும் பசுபுண்ணியந்தான். ஆனாலும் அந்தமாதிரி தர்மம் செய்வதற்குக் கூட ஒருவன் இரக்கக்கூடாது என்று ஒரு வள்ளுவர் கூறுகிறார். திருமந்திரத்திலே ஒரு அழகிய கேள்வி எழுகிறது. ஏன் ஈதல் வேண்டும்? ஈதல் என்பது என்ன? நான் என்னுடைய ஒரு பொருளைப் பிறருக்குக் கொடுப்பதுதான் ஈதலா? ஏன் கொடுக்க வேண்டும்? இரக்கிறவர்கள் இருப்பார்கள். நண்பர் அவர்கள் கூறியதுபோலக் கொடுக்காதே, கொடுக்காதே என்று கூறுகிறோம். ஏன் ஈதல் வேண்டும்? ஈதல் என்று வரும்போது ஒரு பொருளை ஒருவனுக்குக் கொடுக்கிறோம். அந்தப்பொருள் எனக்கு எப்படி வந்தது? நான் உழைக்கின்றேன். அதன் பயனாக எனக்கு வந்தது. என் உழைப்பால் வந்த பொருளை உழைக்காத ஒருவனுக்கு நான் கொடுப்பானேன்? நம்நாட்டிலே இரப்பவர் தொகை பெருகிவருகிறது. பொருள் இல்லாமையினால் அல்ல; படித்திருப்பவர்கள் தொகை பெருகி வருவதே. அவர்களுக்குப் பொருள் கொடுக்கவேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு வந்திருக்கிறது. வேலையில்லாதபடி திண்டாடு கின்றவர்களின் ஒரு பட்டியலை எடுத்து அவர்களுக்கு ஒரு தொகை கொடுக்கவேண்டும் என்ற முறையில் அரசியலும் அமைந்து வருகின்றது. உள்ளவர்களிடத்திலிருந்து பணத்தை வாங்கி, அவர் களுக்கு வழங்கும் பணியை அரசாங்கம் செய்கிறது. இதை ராஜாஜி அவர்கள் "வள்ளுவர் வாசகம்" என்ற நூலில் காட்டியிருக்கிறார்கள். இப்போது உழைக்கிறவன் ஒருவன்; அதன் பயனைப் பெறு கிறவன் மற் றொருவன். தான் உழைத்துப் பெற்ற பொருளைப் பிறருக்குக் கொடுக்கவேண்டியதா? ஏன் கொடுக்க வேண்டும்? ஈதல் என்பது எல்லோருக்கும் வரவேண்டுமானால் உள்ளம் பக்குவம் அடையவேண்டும். ஒருவன் ஈட்டுகிற பொருள் அவனுக்கே உரியது தானா? பிறருக்கு உரியதா? என்று எண்ணுகிற பொழுது தந்தை உழைக்கிறான்; பொருள் வருகின்றது. அவனுடைய பொருளினால் பயன் பெறுவது மகன். உழைக்காத மகனுக்கும் பொருள் உரிமை யாகிறது; ஏன் என்றால் அவன் தன்னுடைய மகன்; தனக்கும் மகனுக்கும் தொடர்பு உண்டு; ஆதலால் அவனுக்கும் உரிமை உண்டு. ஒருவன் என்னை இகழாது இருக்க வேண்டுமானால் நான் அவரோடு தொடர்பு கொள்ளவேண்டும். பிறகு நானும் அவரும் சமமாகிவிடுகிறோம். நானும் அவரை இகழ மாட்டேன். அவரும் என்னை இகழமாட்டார். பிறர்பால் அன்புசெலுத்த, பிறருக்கும் தமக்கும் தொடர்பு இருக்க வேண்டும். இவனும் வாழப்பிறந்தவன்; நானும் வாழப் பிறந்தவன். நான் பெற்ற இன்பத்தை அவனும் பெறவேண்டும். இப்படி நினைவு வந்தாலொழிய ஈதல் செவ்வையாக நடைபெறாது. ஈதலுக்கு மனம் பக்குவப்பட வேண்டியது அவசியம். தமக்கும் உலகத்தாருக்கும் உள்ள தொடர்பு; தமக்கும் பிறருக்கும் உள்ள தொடர்பு என்று பாகு படுத்தும் சம்பந்தாசம்பந்தத்தை உணர்ந்தவர்களே தத்துவஞானி. இது அமையாது போனால் எதுவும் பயன் இல்லை. யாவர்க்கும் மாம்இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே. பிறரிடத்தில் இனிமையாகப் பேசுதல் போன்ற மனப்பண்பு வேண்டும். எடுத்த எடுப்பிலே கருத்தாழத்திலே இறங்கியிருப்பது திருமந்திரத்தின் சிறப்பு. ஒளவையார் 'ஈதல் அறம்' என்று சொன்னார். அற்றுநின் றாருண்ணும் ஊணே அறனென்னும் கற்றன போதங் கமழ்பவர் மானிடர் உற்றுநின் றாங்கொரு கூவற் குளத்தினிற் பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே. என்கிறார் திருமூலர். அறத்தைப்பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லிக்கொண்டே போவார்கள். திரு மூலர் தாம் கற்றவற்றுள்ளே, மக்களுக்கு உணவு கொடுத்தல்தான் ஈதல் என்கிறார். இன்சொலால் முகம்மலர்ந்து காண நாம் மகிழ்கிறோம். ஒருவனுடைய முகமலர்ச்சிகண்டு நமக்கும் மலர்ச்சி ஏற்படுகிறது. அவன் உள்ள நிலைகண்டு உள்ளத்திலே உணர்வு பெருக வேண்டும். புன்சிரிப்பும், நகைத்தலும் ஒருவித தொத்துநோய் என்று ஒரு பெரிய அறிஞன் கூறுகிறான். அவர் சிரித்தார்; நானும் சிரித்தேன் என்று சிலர் கூறுவார்கள். இந்த நுணுக்கமான உண்மையை உலகுக்கு உணர்த்திச் செல்கிறார். இங்கு ஆண்களிலே திரு மூலரையும் பெண்களிலே காரைக்காலம்மையாரையும் குறிப் பிடலாம். இவர்கள் ஆண்டவனை வணங்குதல் நமது கடன் என்று கூறியவர்கள். இவர்களுடைய காலத்திலே தான் திருவருளைப் பற்றிப் பேசுவது. முன் இல்லை. அருள் என்னும் சக்தி நம்மை யெல்லாம் இயக்குகிறது. அருளே உலகம். நான் பேசுகின்றேன் என்றால் என் உள்ளத்திலே எண்ணங்கள் தோன்ற வேண்டும்; நான் பேசும்போது சொற்கள் ஒழுங்காக வரவேண்டும். இலக்கண வரம்போடு பேச வர வேண்டும், இவைகளெல்லாம் சரிவர நடக்க வேண்டுமானால் அருளிருக்க வேண்டும். அது ஒழுங்காக இயக்கவேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பம் நாதம். இன்பமில்லாத உயிர் கிடையாது. தான்பெற்ற இன்பம் பெறுக வையகம் என்று நினைக்கும் தனிச்சிறப்பு மனிதனுக்கு உண்டு. அந்த முறையிலே பல பொருள்களைப் பார்க்கிறோம். பல பொருள்களைச் செய்கிறோம். நாம் நூல்களைப் படிக்கிறோம். அறிவினால் தாம்பெற்ற அனுபவங்களைத் திருமூலர் நூல்வாயிலாகத் தருகிறார். நாம் தவறு செய்கிறோம்; பிறகு அதை மறந்து நாம் நல்ல வழியில் செல் கிறோம். பதினைந்து வயது நிரம்பியவனுக்கும் பதினெட்டு வயது நிரம்பியவனுக்கும் அறிவாற்றலில் வேறுபாடு உண்டு. கல்வியறிவு உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. ஒரு பெரியவர் சொல்லுகிறார் என்றால் அதை நாம் எடுத்துக் கொள்ளுதல் அறிவுடைமை. இந்த உலகத்திலே ஏன் பிறந்தோம்? வாழப்பிறந்தோம். அறிவு விளக்கம் பெறப் பிறந்தோம். நமக்கு அறிவு இல்லையா? நமக்கு ஆற்றல் இல்லையா? முன்னும் பின்னும் இருள் நிற்க நடுவில் வெளிச்சம் பெற்று நாம் போகிறோம். காரணம் என்ன? நாம் இருளால் சூழப்பட்டிருக்கிறோம். நமது அறிவும் இருளால் மூடப்பட்டிருக்கிறது. இதில் நீங்கக்கூடிய இருள் நீங்கக் கூடாத இருள் என்று உண்டு. இந்த இருள் நீங்கவேண்டும். பள்ளி மாணவன் பரீட்சை எழுதுவான். மணி ஆகிவிடும். காகிதத்தைக் கொடுத்துவிட்டு வெளியில் வருவான். வெளியே வரும்போது சில ஞாபகம் வரும். ஏன் அது அப்போது நினைவுக்கு வந்திருக்கக் கூடாது? அவன் தனக்குத் தோன்றிய அறிவை ஐயுற்றான். ஆனால் நமக்கு ஏன் இந்த மறைப்பும் தெளிவும் உண்டாகிறது. ஏதோ ஒன்று மறைக்கிறது. இதை எப்படிப் போக்குவது? இதைநம் வாழ்க்கையிலே பல இடங்களில் பார்க்கிறோம். நாமே உணர்கிறோம். உழைக்கிறான்; உண்கிறான். நான் உழைத்தேன்; பெற்றேன். ஆதலின் பிறருக்குக் கொடுக்க இயலான். நான் பெற்ற அந்த எண்ணம் உழைப்பின்வழி நிற்கிறது; உழைப்பால் அவன் பெற்றது அறிவு விளக்கம். சுருக்கமாகச் சொன்னால் அழுக்கு நீக்கம். இதை எண்ணாமல் எனக்கு உரியது என்று சொல்வது தவறு. இந்த அழுக்கு மனதைவிட்டு நீங்கினாலொழிய அறிவு வளராது. இதைப் போக்குவதற்கு ஒருவழி. அதுதான் தவம். அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர் தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர் விழித்திருந் தென்செய்வீர் வெம்மை பரந்து விழிக்கவன் றென்செய்வீர் ஏழைநெஞ் சீரே. இப்படி ஒவ்வொரு பாடலுக்கும் சொல்லிக்கொண்டே போவது என்றால் கடல் போல் வளர்ந்து கொண்டேபோகும். இன்றையதினத்தில் நான் கேட்டுக்கொள்வது இந்தத் திருமூலர் திருமந்தித்தை எல்லோரும் படிக்க வேண்டும்; சட்டம் படிக் கின்றவர்களும் இதைப் படிக்கவேண்டும் என்று கூறி எனக்கும் ஒரு வாய்ப்பளித்த குருமகாசந்நிதானத்திற்கு மறுமுறையும் எனது நன்றியறிதலைத் தெரிவித்து என் உரையை முடித்துக் கொள்ளு கிறேன். - ஏழாவது திருமந்திர மாநாட்டு மலர் 1961 -ஜனவரி மூன்றாம் நாள் உரை விகாரி - தை  11. பழந்தமிழர் சமயம் பழந்தமிழர் என்ற சொற்றொடர் நம் கண்ணிலும் காதிலும் பட்டவுடனே நமது நினைவு தொல்காப்பியம் சங்க இலக்கியங்கள் ஆகிய நூல்கள் எழுந்த காலத்துக்கு நம்மைக் கொண்டு செல்லுகிறது. அக்கால மக்களின் வாழ்க்கைக் கூறுகள் நம் மனக் கண்ணில் தோன்றுகின்றன. அவர்களின் சமய உணர்வு ஒழுக்கங்களை உணர்தற்கெனச் சில சொற்களும் சொற்றொடர்களும் சிறந்த சான்று களாக அக்கால நூல்களில் நின்று நம் அறிவைப்பணி கொள்கின்றன. அந்நாளைய கல்வெட்டுக்களோ ஓவச் செய்திகளோ பிறவோ கிடைக்கவில்லை. நல்லிசைப் புலமைச் சான்றோர் சிலர் அவ்வக் காலத்தில் பாடிய பாட்டுக்கள் சிலவற்றைப் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை எனப் பண்டையோர் வகுத்துள்ளனர். அவை பலவும் தேர்ந்து கொள்ளப்பட்ட சில சான்றோர்களின் சிலவும் பலவுமாகிய பாட்டுக்களாதலால் அவற்றைக் கொண்டு வரலாற்று முறையில் வைத்துச் சமய வுண்மைகளைக் காண்பது அரிதாகவுளது. தொல்காப்பிய முதலிய இலக்கணங்களும் சங்க இலக்கியங்களும் அக்காலத்தே நிலவிய உலக வழக்கும் செய்யுள் வழக்குமாகிய இருவகை வழக்குகளையும் முதலாகக் கொண்டு எழுந்தவை. "தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்" என்றே தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வழங்கிய பனம்பாரனார் குறிக்கின்றார். இவ்விருவகை வழக்குகளில் நிலவிய சமயக் கொள் கைகளைக் காண்பதே நமது முன்னிற்கும் பயனாகிறது. சமய வாழ்வுக்கு இன்றியமையாத அடிப்படை கடவுட் கொள்கையாகும். கடவுள் ஒருவர் உண்டு என்ற உயர்வும், அவரை வாழ்த்தி வழிபட்டு இயலுவது சமய வாழ்வு என்ற கருத்தும் சமயத்தின் உட்கிடை. இவற்றை மேற்கொண்டு ஒழுகுவது சமய வாழ்வாகும் என்பது நாடறிந்த கொள்கை. சமயத்தின் தோற்றம் மிகமிகத் தொன்மையானது; மக்கள் இயற்கையில் கண்ட பெரு நிகழ்ச்சிகளால் உள்ளத்தே கொண்ட அச்சமும் அவலமும் காரணமாகக் கொண்டது என்பர் வரலாற்றறிஞர். அச்சத்திற் கருவுற்றெழுந்த சமயம், இயற்கையின் கூறுகளான நிலம், நீர், தீ, காற்று, வான் என்ற ஐந்துக்கும் அப்பாலாய் அவற்றை ஆக்கிப் படைத்து ஆட்டிவைக்கும் முதல் பொருள் ஒன்று உண்டு என வுணர்ந்து அதற்கும் உலக வாழ்க்கைக்கும் தொடர்பு அமைத்து, அதனை உணர்ந்து இனிது ஒழுகச் செய்யும் முறையில் நல்ல தொண்டாற்றியிருக்கிறது. அந்த முதற் பொருளைப் பழந்தமிழர் கடவுள் என்றும் இயவுள் என்றும் வரும் இரண்டு சொற்களால் குறித்துள்ளனர். "கடவுள் வாழ்த்து", "பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்" என்ற தொடர் மொழிகள் யாவரும் நன்கு அறிந்தன. கடவுள், இயவுள் என்ற சொற்கள் கடத்தல், இயக்குதல் என்ற பொருட்குரியன. அக்குள், விக்குள் என்றாற்போல இவையும் கடவுள் இயவுள் என்று இயலுவ தால் உள்ளும் புறமும் கடந்து நிற்பது, இயக்கி நிற்பது என்று பொருள் பட்டுக் கடவுள் எனப்படும் முதற்பொருள் என்பது எல்லாப் பொருட்கும் உள்ளும் புறமும் கலந்து நின்று இயக்குவதும் அவற்றைக் கடந்து நின்று அவற்றின் செயல்முறை கட்கு ஆணை செலுத்துவதும் செய்தொழுகுவது என்ற கருத்தை உணர்த்துகின்றன. இக்கடவுட்கொள்கைக்கு நிலைக்களம் உயிரும் உலகமும் ஆகும். உலகமாவது "நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம்" என்பது தொல்காப்பியம். சமயச் சூழ்நிலையில், "காலம் உலகம் உயிரே உடம்பே, பால் வரை தெய்வம் வினையே பூதம், ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம் ஆயீரைந்தும்" சிறந்த பொருள் களாக நிற்கின்றன. உயிர்கள் புல் பூடுகளாகிய ஓரறிவுயிர் முதல் மக்கள் ஈறாக ஆறு வகையாகப் பிரிகின்றன. இவ்வுயிர்கள் யாவும் "மன்னுயிர்" என்றும், "தொல்லுயிர்" என்றும் சிறப்பிக்கப்படுவதால் அவை கடவுளாகிய முதற் பொருளால் படைக்கப்படாமல் அப்பொருளே போல என்றும் நிலை பேறுடைய உள்பொருளாகும். ஏனை உலகமும் உலகிலுள்ள பொருள்களும் அம்முதற் பொருளால் படைக்கப் படுவனவாம். கடவுளை முதற்பொருள் என்று குறிப்பதோடு "உலகு இயற்றியான்" எனவும், "உலகு படைத்தோன்" (நற். 240) எனவும் குறித்திருப்பது இக்கருத்துப் பற்றியே யாம். உயிர்கள் இன்ன உரு இன்ன நிறம் என்று சொல்ல வொண்ணாத உருவுடையன; ஆயினும் அவை உலகியற் பொருள்களான உடம் பையும் ஏனைப் பொருள்களையும் இயக்குவதும் அவற்றோடு கூடி இயங்குவதும் செய்வன; அவ்வியக்கத்தால் அவற்றிடையே வினைகள் தோன்றி நிலவுகின்றன. "வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும்" என்று நூலோர் கூறுகின்றனர். செய்யும் தொழிலுக்கேற்ப ஊதியமும் உறையுளும் அமைவது போலச் செய்யும் வினைக்கேற்ப உயிர்கட்கு நுகர்ச்சியும் உடம்பும் அமைகின்றன. உடம்பையும் நுகர் பொருளையும் படைத்து அளிக்கும் வகையில் முதற் பொருளாகிய கடவுள் மேன்மையுற்று விளங்குகிறார். இதனால் கடவுட்கும் உலகத்துக்கும் உள்ள தொடர்பு படைப்போனுக்கும் படைக்கப்படுபொருட்கும் உள்ள தொடர்பாய்க் கடவுளை உலகைத் தனக்குரியதாகக் கொண்ட உடையவனாகவும், உலகம் அவனது உடைமையாகவும் நிறுத்துகிறது. உயிர்கள் உலகிடைத் தோன்றும் உடம்பை இடமாகக் கொண்டு வினை (தொழில்) செய்து பயன்பெறுவதால் இவ்வுலகம் உயிர்களின் பொருட்டே படைக்கப்பட்டு அவற்றிற்கு உதவப்பட்டிருப்பது என்பது பழந்தமிழர் சமயக் கொள்கை. இதனால் கடவுட் பொருட்கும் உயிர் கட்கும் உள்ள தொடர்பு உதவி செய்வோனுக்கும் உதவி செய்யப்பட்டோர்க்கும் உள்ள தொடர்பாய், உதவி பெற்றோன் உதவி செய்தோனுக்குக் கடமைப் பட்டு அவன் நன்றியினை நினைந்தொழுகுவது போல உயிர்கள் கடவுளது அருளை நினைந்து வழிபட்டொழுகுவது கடனாகும் என்பதை வற்புறுத்துகிறது. இதனால்தான் தொல்காப்பியனார் கடவுள் வாழ்த்துப் பகுதிக்குச் சிறப்பாக இலக்கணம் வகுத்துக் காட்டியுள்ளார். உயிர் வகையுள் மக்களைத் தனிப்பட நிறுத்தி உயர் திணை உயிர் என்றும், ஏனை உயிர் வகையை அஃறிணையுயிர் எனவும் பழந்தமிழர் கொண்டனர். "உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே, அஃறிணை என்மனார் அவரல பிறவே" என்பது தொல்காப்பியம். மக்களினத்துள் அடங்காமல், கடவுளாகிய முதற் பொருளுமாகாமல் இரண்டற்கும் இடைப் பட்ட நிலையில் தெய்வங்கள் காணப்படு கின்றன. இவை மக்களுயிர் போல மனவுணர்வும் வினை செய்தலும் இன்ப துன்ப நுகர்ச்சியும் உடையவாய்ப் பிறத்தலும் இறத்தலும் செய்வன. இவற்றின் செயல் முறையும் வாழ்க்கையும் மக்களுயிரின் மேனிலையில் உள்ளன. "தெய்வம் சுட்டிய பெயர் நிலைக்கிளவி" மக்கள் இனத்தன அல்ல வாகலின் "இவ்வென அறியும் அந்தம் தமக்கு இல" என்றும், சொல்லுலகில் "உயர்திணை மருங்கின பால்பிரிந்து இசைக்கும்" என்றும் ஆசிரியர் தொல்காப்பியர் வகுத்துரைக்கின்றார். பழந்தமிழர் சொல்லுலகை உயர்திணை அஃறிணை எனக் கொண்டாற்போலப் பொருளுலகைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாக வகுத்துக் கொண்டனர். இப்பகுதியுள் வாழ்ந்த மக்கள் முறையே குன்றவர், ஆயர், வேளாளர், பரதவர், எயினர் எனக் குறிக்கப் பெற்றனர். அவர்களைத் திணை நிலை மக்கள் என்பது வழக்கம். அவரவர் வாழ்க்கைக்குரிய உணவு தொழில் முதலியன தனித்தனியே உள்ளன. அவற்றோடு சமய வொழுக்கத்தைக் கூட்ட மேலே குறித்த தெய்வங்களையும் ஒவ்வொரு பகுதிக்கும் உரிமை செய்துள்ளனர். குறிஞ்சிக்கு முருகனும், முல்லைக்கு மாயவனும், மருதத்துக்கு இந்திரனும், நெய்தலுக்கு வருணனும், பாலைக்குக் கொற்றவையும் தெய்வமாவர். இவர்கட்கு நாட்பூசனையும் விழாவும் வழிபாடும் செய்வது சமய வொழுக்கமா கிறது. கடவுள் என்பது இத்தெய்வ வகைகட்கு மேற்பட்டு நின்று எல்லாம் வல்ல முழு முதற் பொருளாக நிலவுகிறது. எல்லா நிலப் பகுதிகட்கும் நீர் தீ வளி விசும்பு ஆகிய அனைத்திற்கும் மேலாய் எல்லாம் தன் ஆணை வழி நிற்கப் பண்ணுவது பற்றிக் கடவுட் பொருட்கெனத் தனியே நிலம் கிடையாது; எல்லா நிலங்களிலும் இக்கடவுட் குறிப்புப் பொதுவாகக் காணப்படுவதொன்றே இதற்குப் போதிய சான்று. குறிஞ்சி நிலத்து முருகன் முதலாய தெய்வ வகை எல்லாவற்றிற்கும் தோற்றம் நிலை வேறு கூறப்படுவது போலக் கடவுளாகிய முதற் பொருளுக்குத் தோற்றமும் ஈறும் கூறப்படுவதில்லை. இப்பொருளைக் குறிக்கும் போதெல்லாம் சங்க இலக்கியங்கள் பிறை முடியும், முக்கண்ணும், கறைமிடறும் உடையனாகக் குறிக்கின்றன. இதனால் இன்று சிவம் என்ற சொல்லால் குறிக்கப்படும் பொருள் இவ்வடையாளங்களைத் தன்பால் கொண்டிருப்பது கொண்டு, சிவ பரம்பொருளே பழந்தமிழர் சமயத் துறையில் நிலவிய கடவுள் என்பது தெளிவாகத் தோன்றுகிறது. தெய்வங்கட்குத் தோற்றமும் கடவுட்கு அது கூறப்படாமையும் நோக்கின், பிறவா வாழ்க்கைப் பெருமையுடையது கடவுள் என்றும், பிறந்து நிலை வேறு கொண்டு இயலுவன தெய்வங்கள் என்றும் பழந்தமிழர் கருதிய கொள்கை களாகின்றன. மக்கள் வாழ்வில் வினையுணர்வும் மறு பிறப்பும் வீடு பேற்றின் பமும் நிரயத் துன்பமும் சொல்வழக்கில் நிலவுகின்றன. மக்களுடைய மனம் மொழி உடம்பு மூன்றின் அசைவு அசைவின்மை களால் வினைகள் தோன்றுகின்றன. வினையில்லாத உயிரே உலகில் இல்லை. ஒவ்வொரு வினைக்கும் பயன் உண்டு. இன்பம் பயப்பது நல்வினை; துன்பம் தருவது தீவினை. நல்வினை செய்தோர் இன்பத்துக்கும் தீவினை செய்தோர் துன்பத்துக்கும் உரியராவர். வினை உயிரோ உணர்வோ இல்லாத தாகலின், அது தானே சென்று வினை செய்தவனுக்கு உரிய பயனை நல்குவதில்லை. வினை செய்தோனுக்கு வினைப் பயன் அவனையே அடைதற்குரிய தொழிலைச் செய்யும் வகையில் தெய்வங்கள் பணிபுரிகின்றன. அதுபற்றியே அவற்றைப் "பால்வரை தெய்வம்" என்று சான்றோர் குறிக்கின்றனர். செய்யப்படும் வினைப்பயன்களுக்கேற்ப உயிர்கட்கு இம்மை மறுமை வீடுபேறு என மூவகையுலகுகள் காட்டப்படுகின்றன. வினை செய்தற்குரிய உலகம் நாம் வாழும் மண்ணுலகம். நல்வினைப் பயனை நுகர்தற்குரிய மறுமையுலகம் நிரயம் என்றும், வினைத் தொடர்பினின்றும் அறவே நீங்கி விளங்கும் அறிவுடைச் சான்றோர்க் குரியது வீடுபேறு என்றும் பழந்தமிழர் கருதினர். வினை தோன்றும்போதே அதன் பயனும் உடன் தோன்றுகிறது. வினை முடிவில் அதன் முழுத்த பயன் உருவாகி வினைசெய்த ஒருவனை அடையும் நிலையை எய்துகிறது. அவன் அப்பயனை நுகரும்வரை அவனுக்கு அஃது ஊழ்கனிபோல் நின்று நுகர்ச்சிக்குரிய காலம் வந்ததும் தெய்வத்தின் ஆணையால் அவனை எவ்வகையா லேனும் அடைந்துவிடுகிறது. அதனால் அதனை ஊழ்வினை என்று அறிஞர் அறவிக்கின்றனர். ஊழ்வினையை ஊட்டுவிக்கும் பணி கடவுட் பொருளின் ஆணைவழி இயங்கும் தெய்வங்களின் செயலா தலால், தெய்வ வழிபாட்டால் வினைப்பயனது நுகர்ச்சி காலவகையில் வேறுபடும் என்ற கருத்துப் பண்டையோர் கொண்டிருந்தனர். குன்றவர் முருகனுக்கு வழிபாடாற்றி வேட்டம் செல்வதும், ஆயர் மாயோனுக்குக் குரவையாடி வழிபாடியற்றுவதும், வேளாளர் இந்திர விழா எடுத்தலும், பரதவர் சுறவுக்கோடு நட்டு வருணனுக்கு வழிபாடு செய்து மீன் வேட்டம் புரிவதும், கொற்றவையை வழிபட்டு எயினர் மறத்தொழில் செய்வதும் சங்க இலக்கியங்களில் காணப்படுவது இது பற்றியேயாகும். உலக வாழ்வில் காணப்படும் உயிர்கள் அனைத்துக்கும் இன்பம் பெறுவது ஒன்றே குறிக்கோளாகும். "எல்லா உயிர்க்கும் இன்பம் என்பதுதான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்" என்பது தொல்காப்பியம். இந்த இன்பப் பயன் பெறுவது குறித்தே உலக வாழ்வு நடைபெறுகிறது; உயிர்களால் செய்யப்படும் வினைகள் யாவும் இக்குறிக்கோளையே நாடி நிற்கின்றன. இந்த இன்பப் பயன்பெறுவது பற்றித் தோன்றும் வினை இடையீடு படுமிடத்தும் இடையூறு எய்துமிடத்தும் அவற்றை நீக்கும் செயல் வகைகளில் மக்களின் அறிவும் முயற்சியும் பெரிதும் ஈடுபடுகின்றன. இடையீடும் இடையூறும் அவ்விரண்டின் எல்லையைக் கடந்து போகிறபோது சமயவுணர்வும் வழிபாடும் தோன்றுகின்றன. பெருமழை, மழையின்மை, கடுங்காற்று, கொடுவிலங்கு, பெரும்பகை முதலியவற்றால் இடையூறு உண்டாகுமாயின் மக்கள் தெய்வ வழிபாட்டில் சிறந்து நிற்கின்றனர். பெருமழைக்கு வருந்திய மலையுறை குறவர், " மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய் மாரி யான்று மழைமேக் குயர்கெனக் கடவுட் பேணிய குறவர் மாக்கள் பெயல்கண் மாறிய உவகையர்" (புறம். 143) எனச் சான்றோர் குறிப்பது காண்க. செய்யும் வினை காரணமாகத் தோன்றும் சமய வழிபாடு, வினையின் தொடக்கத்தில் இடையூறு வாராமை கருதியும், இடையில் வந்த இடையூறு நீங்குவது கருதியும், முடிவில் வினைப்பயன் நல்கும் இன்பம் குறித்தும் நடைபெறுகிறது. மக்களுடைய வாழ்வை அகம் புறம் என இரண்டாக வகுத்து முறை செய்து கொண்டவர் பழந்தமிழர். அகம் என்பது தனியே இருந்து வாழ்க்கை நடத்தும் உடல் வளர்ச்சியும் ஒருங்கு பெற்ற ஒருவனும் ஒருத்தியும் ஒருவரையொருவர் தனித்தும் கொண்டு காதலுறவு கொண்டு உள்ளத்தால் ஒன்றுபட்டு மணம் செய்து கொண்டு மனையறம் புரியும் ஒழுகலாறாகும். அக்காலத்துத் தோன்றும் காதலுறவு இடையீடும் இடையூறும் எய்துமிடத்து, காதலர் மேனிக்கண் தோன்றும் வாட்டமும் மெலிவும் குறித்துத் தேய்வ வழிபாடு நடைபெறுகிறது. குன்றவரிடையே நடக்கும் வெறியாட்டு இதற்குச் சீர்த்த சான்றாகும். புற வாழ்வு என்பது மனையறம் புரிந்தொழுகும் மக்களிடையே பொருளும் புகழும் போர் வென்றியும் பிறவும் பற்றி நிகழும் ஒழுகலாறாகும். புறவாழ்வின்கண், அகத்துறை இன்பம் நுகர்ந்தும் புறத்துறைப் புகழும் வென்றியும் எய்தியும் உவர்ப்புற்ற சான்றோர் "சிறந்தது பயிற்றல்" என்னும் துறவு வாழ்க்கை மேற்கொள்வது பண்டைத் தமிழர் சமயக் கொள்கையாகும். "காமம் சான்ற கடைக் கோட் காலை ஏமம் சான்ற மக்களோடு துவன்றி, அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும், சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே" என்பது தொல் காப்பியம். இங்கு இறத்தல் என்றது வயது முதிர்தல். பொருள் இன்பங்களின் சுவை காணாத ஒருவன் துறவு மேற்கோடல் என்பது தமிழர் சமயக் கொள்கைக்குப் புறம்பானது. இச்சான்றோர் இன்பமும் துன்பமுமாகிய இரண்டினையும் ஒரு சேரவுவர்த்து வினையின் நீங்கி விளங்குபவராதலின், இவர்கட்குத் தெய்வ வழிபாடு கிடையாது. இவர்களால் வழிபடப்படுவது கடவுள் எனப்படும் முழுமுதற் பெரும் பொருளேயாகும். அதனால் இத் துறவிகளையும் கடவுளர் என்பது பழந்தமிழ் மரபாயிற்று. சடை முடித்துப் பலகாலும் நீராடித் தோலுடுத்துக் காய்கனி கிழங்கு இலைகளை உண்டு காடும் குன்றுமாகிய இடங்களில் வாழ்வது துறவோர் நிலைமையாகும். இவர்கள் ஏனையோர் போல நல்வினை செய்து துறக்க வின்பம் பெறவிழையாது, உற்ற நோய் பொறுத்தலும் உயிர்கட்கு ஊறு செய்யாமையுமாகிய தவம் மேற்கொண்டு மெய்யுணர்ந்து அவாவறுத்து ஒழுகுவர். இப்பெருமக்களது வாழ்வு முழுதுமே சமய நெறியில் இயங்குதலால், இவர்கட்கெனத் தனி நிலையில் சமய வாழ்வும் வழிபாடும் இல்லை. இவர்கள் சொல்லு வனவும் நினைப்பனவும் யாவுமே கடவுட் பெரும் பொருளோடு கலந்து பிரிப்பின்றிப் பிறங்கும். இவர்கள் நெஞ்சின்கண் நின்று நிலவும் கடவுள், "பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீலமணிமிடற்றுப்" பெரும் பெயர்க் கடவுள். முற்றுந் துறந்த முனிவரரும் முடியுடைய மூவேந்தரும் தலைசாய்த்து வணங்கியது இக்கடவுளையேயாகும். "பணீஇயர் அத்தை நின்குடையே முனிவர் முக்கட்செல்வர் நகர்வலம் செயற்கே" என்று சான்றோர் தெருட்டுதல் காண்க. முழுமுதல் கடவுட்கும் மண்ணுலக வுயிர் கட்கும் இடையே நிலவும் தெய்வங்கள் மக்களுடைய வழிபாட்டையேற்று அவர்கள் நலம்பெறத் துணை புரியும் என்ற கருத்தால் பகைப்பொருளை வெல்வதற்கும் துன்பத்தினின்றும் உயிர்களைக் காத்தற்கும் அத்தெய் வங்களின் தொடர்பு சமய வாழ்வில் சிறந்து நின்றது. மக்களுயிர் களுள்ளும் அல்லன கடிந்து நல்லனவே புரிந்தவை மறுமையில் தெய்வங்களா யினவும் உண்டு இவ்வாற்றால் தெய்வங்களைப் பற்றிப் பல வேறு வரலாறுகள் சமயத்துறையில் காணப்பட்டன. அவற்றை இந்நாளில் புராண வரலாறுகள் என்பது வழக்கம். மக்கள் வாழ்க் கையைப் பொருளாகக் கொண்டெழுந்த பழந்தமிழ் இலக்கியங்களில் தெய்வங்கள் சார்பான புராண வரலாறுகள் பல உளவாயின. குறிஞ்சிநிலத் தெய்வமான முருகனைப் பற்றிய வரலாறுகளில், அம்முருகன் தாமரைப்பூவில் பிறந்தான் என்பதை "நிவந்தோங்கு இமயத்து நீலப்பைஞ்சுனைப், பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல்" என்று பரிபாடல் முதலிய நூல்கள் குறிக்கின்றன. கடலிடத்தே இருந்து குறும்பு செய்து உயிர்களை வருத்தித் திரிந்த சூரபன்மாவின் காவல் மரமான மாமரத்தைத் தடிந்து அவனையும் கொன்று முருகன் மேன்மையுற்றான் என்பதை, " நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி அணங்குடை யவுணர் ஏமம் புணர்க்கும் சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் கடுஞ்சின விறல்வேள்" என்று பதிற்றுப்பத்தும். " அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர் மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்" என்று முருகாற்றுப் படையும் பிறவும் குறிக்கின்றன. "குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின், மடவரல் வள்ளியொடு நகைய மர்ந்த" முருகனைச் சிறப்பிக்கும் சான்றோர், வள்ளியை, "முருகுவு ணர்ந்தி யன்ற வள்ளி" என்றும். அவளுடைய பெற்றோரைக், "குறிஞ்சிக்குன்றவர் மறங்கெழு வள்ளி தமர்" என்றும் எடுத்துரைக் கின்றனர். முல்லை நிலத் தெய்வமான மாயோன், கண்ணனால் முல்லை நிலத்து ஆயரிடையே யமுனைக் கரையில் விளையாடிய வரலாறு, "வடாஅது, வண்புன் தொழுகை வார்மண லகன்றுறை அண்டர் மகளிர் தண்டழை யுடீஇயர் மரஞ்செல மிதித்த மாஅல்" என்றும், கஞ்சன் விடுப்பக் குதிரை வடிவில் வந்த அசுரனை வென்ற செய்தியை, " காயாம்பூங் கண்ணிப் பொதுவன் தகைகண்டை மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை வாய்பகுத்திட்டுப் புடைத்த ஞான்று இன்னன்கொல் மாயோன் என்றுஉட் கிற்றுஎன் நெஞ்சு" என்றும் சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன. இவ்வாறே மருதத்துக்குரிய தெய்வமான இந்திரன், முருகன் முதலிய தெய்வங்கட்குப் படையுதவிய பண்பும், அகலிகை பொருட்டு மேனி முழுதும் கண்பெற்ற கதையும் பழந்தமிழரிடையே நிலவின. பாலைக்குரிய தெய்வமான கொற்ற வையை முருகனுக்குத் தாய் என்றும், அவளே எல்லாத் தெய்வங் கட்கும் பழையவள் என்றும் கூறுகின்றனர். தாருகன் உரம் கிழித்த தறுகண்மையும், எருமை வடிவில்வந்த அவுணனை வென்று சிறந்த வீறுடைமையும் அவள் செய்தியில் விளக்கம் பெறுகின்றன. வருண னாகிய நெய்தல் நிலத் தெய்வத்தைப் பற்றி ஒரு செய்தியும் பழந்தமிழ் நூல்களில் எவராலும் எவ்விடத்தும் கூறப்படவில்லை. இச்செய்திகளை விழாக்காலங்களில் மக்கட்குக் காவியங் கூறியும் ஓவியம் காட்டியும் உரைப்போர் இருந்திருக்கின்றனர். இதனை, " இந்திரன் பூசை இவள்அக லிகைஇவன், சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு ஒன்றியபடி இதுஎன்று உரைசெய் வோரும்" உளர் எனப் பரிபாடல் பகர்வது காண்க. இத்தெய்வங்கட்கெல்லாம் மேலாய் உலகு உயிர்களின் வேறாய் ஒன்றாய் உடனாய் நிலவும் கடவுள் நிலையில் சிவ பரம்பொருளை வைத்து அவன் வடிவத்தை, " பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீலமணி மிடற்று ஒருவன்" என்றும், " பேரிசை நவிரம் மேஎய் உறையும் காரியுண்டிக் கடவுள்" என்றும் கூறுவர். அவன் முப்புரம் எரித்த வரலாற்றை, " ஒங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப் பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த கறைமிடற் றண்ணல்" என்றும், " தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக அடங்காதார் மிடல்சாய அமரர்வந் திரத்தலின் மடங்கல்போற் சினைஇ மாயம்செய் அவுணரைக் கடந்தடு முன்பொடு முக்கண்ணால் மூவெயிலும் உடன்றான்" என்றும், " உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண், மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வன்" என்றும் பழந்தமிழர் தம்முட் பாராட்டிப் பரவி வந்துள்ளனர். பழந்தமிழர் சமய வாழ்வில் கார்த்திகை விளக்கீடும், மார்கழித்தைந் நீராட்டும், பங்குனி உள்ளி விழாவும், சித்திரை இந்திர விழாவும், வேனில் விழாவும் பிறவும் சிறந்து விளங்கின. கார்த்திகை விளக்கீட்டு விழா இன்றைய தீபாவளிப் பொங்கற் புதுநாள் விழாவும் ஆகிய இரண்டன் சிறப்புக்களை ஒருங்கே தன்கண் கொண்டிருந்தது.இதனை, " மழைகால் நீங்கிய மாக விசும்பில் குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள் மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவுடன் அயர வருகதில் அம்ம" என்றும், இக்காலத்தே புது மணமகளிர் புது நெல்கொண்டு அவலிடித்துப் பாற் பொங்கல் இட்டு மகிழும் திறத்தை, இதே பாட்டில், " புதுமண மகடூஉ வயினிய கடிநகர்ப் பல்கோட் டடுப்பிற் பால்உலை இரீஇக் கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர் பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப் பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கை " என்றும் நக்கீரனார் நவில்வதனால் நன்கு அறியலாம். மார்கழித் திருவாதிரை நாளில் தொடங்கித் தைப்பூசம் வரையில் நடைபெறும் தைந்நீராட்டு, பரிபாடலில் பாரித்துக் கூறப்படுகின்றது. விசயநகர வேந்தர் காலத்துத் தோன்றிய மொழி நிலை உணர்வு வேறுபாட்டால் கார்த்திகை சீரழிந்தது; தீபாவளி புதிது தோன்றிற்று; தைந் நீராடல் தலை தடுமாறிற்று; வேனில் விழா காமன் பண்டிகையாயிற்று. இக் காலத்தில்தான் தெய்வ நிலைங்களில் வழிபாட்டில் வடமொழி இடம்பெற்றது. ஊர்ப் பெயர்களும் தெய்வங்களின் பெயர்களும் வடமொழியில் மாறின: பின்னர் மக்கட் பெயரும் வடமொழிப் பெயர்களாயின. பழந்தமிழரிடையே சமய வழிபாட்டில் அவரது தமிழ் மொழியே நிலைபெற்றிருந்து. தெய்வங்கட்குக் கோயில்கள் இருந்தன. அவற்றை நகர் என்றும் தேவகுலம் என்றும் வழங்கினார். மலை முடியும் கடற்கரையும் தெய்வங்களுறையும் கோயில் எடுக்கும் சிறப்புடைய இடங்களாயின. தவிர மலையின் முடியில் முக்கட் செல்வனுக்கு இருந்த கோயில் மலை படுகடாம் என்ற சங்க இலக்கியம் குறிக்கின்றது. இக்கோயில்கள் பலவும் மரத்தாலும் மண்ணாலும் பண்டை நாளில் கட்டப்பெற்றன. பல்லவர் காலத்தில் தான் கோயில்களைக் கருங்கற்களால் அமைக்கும் முறை உருக் கொண்டு சிறப்பதாயிற்று. சிவபரம் பொருள் எல்லாத் தெய் வங்கட்கும் மேலாம் நிலையில் எல்லா நிலங்கட்கும் பொதுவாய் இலங்குவது பற்றிச் சிவத்துக்கு எடுக்கும் கோயில்களில் சிவனை நடுவில் வைத்துக் குறிஞ்சிக்குரிய முருகனையும், முல்லைக்குரிய மாயோனையும், பாலைக்குரிய கொற்றவையையும் பிறவற்றையும் "பரிவார தேவதைகள்" என்ற பெயரால் சூழவைத்துச் சமய ஒருமை கண்டவர் பழந்தமிழர். இவையேயன்றி, ஊர்தோறும் அன்பர்கள் கூடிப் பரவுமிடந் தோறும் தெய்வங்கட்குக் கோயில்கள் இருந்தன இவற்றின் வேறாக, காடும் காவும் கவின்பெறு துருத்தியும் யாறும் குளனும் வேறுபல் வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும் தெய்வ வழிபாடுகள் சிறப்புற நடைபெற்றன. கந்துடை நிலை என்றது பிற்காலத்தே சிவலிங்கம் என மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது. சிவவடிவம் கந்தும், அதன் பீடம் நிலையுமாகும். இவ்வுண்மை யறியாத மடவோர் கந்தினை ஆண்குறி என்றும், நிலையினைப் பெண்குறி என்றும் பிதற்றினர். சிலர் இப்பேதைமையை அறிவு டைமையாக எண்ணிப் பொய்க் கதை புனைந்து மனத்தே மான வுணர்வின்றி எழுத்தால் வரைந்துவிட்டனர். தெய்வ வழிபாட்டில் உயிர்ப் பலியும் குருதி கலந்த சோறும் படைக்கப் படுவதுண்டு. எங்கும் விளக்குகளை ஏற்றித் தெய்வங்கட்கு நீராட்டிப் பூச்சூடி மணி இயக்கி நறும் புகை எடுப்பர்; அக்காலை பலவேறு நிறமுடைய பூக்களைத் தூவி வழிபாட்டுக்குரிய தெய்வங்களைப் பரவுவர். முருகனை வழிபடுவோர், கையால் தொழுது காலுற வணங்கி, நெடும் பெருஞ் சிமயத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்தே ஆறமர் செல்வ, ஆல்கெழு கடவுட் புதல்வ, மால்வரை மலைகள் மகனே, மாற்றோர் கூற்றே, வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ, இழையணி சிறப்பின் பழையோள் குழவி, வானோர் வணங்குவில் தானைத் தலைவ மாலை மார்ப நூலறி புலவ செருவில் ஒருவ பொருவிறல் மள்ள அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொன்மலை மங்கையர் கணவ மைந்தர் ஏறே வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக நசையுநர்க் கார்த்தும் இசைபே ராள அலந்தோர்க் களிக்கும் பொலம்பூண் சேஎய் மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள் பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந குரிசில், எனச் சொல்லி முடிவில், " நின்அளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின் நின்னடி உள்ளி வந்தனென் நின்னொடு புரையுநர் இல்லாப் புலமை யோய்" என்று கூறி வணங்குவர். வேறு சிலர், " யாஅம் இரப்பவை, பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே" என்றும், வேறு சிலர், யாமும் எம்சுற்றமும் பரவுதும் ஏம வைகல் பெறுக யாம்எனவே என்றும் வழிபடுகின்றனர். சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுக என்பது தமிழர் வழிபாட்டு முறை. இன்றைய தமிழர், தெய்வ வழிபாட்டில் தாம் அறியாத மொழியில் "முறம் போன்ற காதுகளையுடையவனே", "குடம் போன்ற வயிற்றை யுடையவனே". "பெண்ணின்பத்தைப் பெரிதும் விரும்புபவனே" என்று ஆண் தெய்வங் களையும், "மலைபோன்ற கொங்கைகளையுடையவளே", "கடல் போன்ற நிதம்பத்தை யுடையவளே", "இடையறாத போகத்தை விரும்புபவளே" என்று பெண் தெய்வங்களையும் வழிபாடு என்ற பெயரால் வசைபாடுகின்றனர். இன்றைய வழிபாட்டு அருச் சனைகளில் தெய்வ தூஷணமும், வஞ்சனையும் பெருகியிருக்கிற தேயன்றிப் பூசனையும் வணக்கமும் இல்லை என்றால் அது மிகை யாகாது. வடமொழித் தொடர்களைக் கேட்கும் வடமொழி அறிஞர் மனத்தே வெறுப்பும் முகத்தே சுளிப்பும் கொண்டு வருந்து கின்றனர். அரசியல், கல்வி, வாணிபம் முதலிய எல்லாத் துறைகளும் மக்கள் வழங்குகின்ற மொழியிலேயே இயங்க வேண்டும் என்ற வேட்கை மீதூர்ந்திருக்கும் இந்நாளில் தமிழருள் சிலர் மொழி வெறி கொண்டு தாம் சமய வழிபாட்டில் செய்து வரும் பெரும் பிழையைத் திருத்திக் கொள்ளாமல் விடாப்பிடியாக இருப்பது சமய வளர்ச்சிக்கு ஆதரவு தருவதாகத் தோன்றவில்லை. வடமொழியறிஞர்க்கும் வெறுப்பைத் தந்து நாட்டு மக்களுக்கு இருளை விளைவித்துச் சமய உணர்வொழுக்கங்களில் மக்கள் உள்ளத்தில் புறக்கணிப்பை நல்கும் இப்பிழைபட்ட வழிபாட்டு முறையைச் சமய நிலையங்கள் இனியும் நீடிக்க விடுவது அறமாகாது. மேலும் வடமொழி ஆகமங் களோ தமிழ்ச் சமய இலக்கியங்களோ யாதும் எக்காலத்தும் எவ்விடத்தும் வடமொழியில்தான் வழிபாடு நடைபெற வேண்டு மென்ற விதியை வகுத்ததே கிடையாது. வாழ்க்கைத் துறையில் தான் போலிச் செயல் பெருகிற்றென்றால் வழிபாட்டிலும் போலியுரை வளருமானால் தெய்வங்களின் அருள் தான் கைவருமோ என்று உள்ளம் அஞ்சுகின்றது. தெய்வந்தான் துணைசெய்ய வேண்டும். 'தமிழர் வாழ்வு' (கட்டுரைத் தொகுப்பு) மதுரைத் தமிழ்ச் சங்கம், மதுரை, (மே, 1967)  12. சைவ சித்தாந்தம் (சிவ வழிபாடு பண்டைநாளில் உலகில் பல இடங்களிலும் காணப்பட்டதாக ஆராய்ச்சி வல்லார் கூறுகின்றனர். அச்சிவ வழிபாடு இந்நாளில் சுருங்கித் தமிழ்நாட்டெல்லையளவாக நிற்கிறது. அச்சிவத்தொடு தொடரப்பட்ட சமய உண்மையே சைவ சித்தாந்த மாகும். இச்சைவ சித்தாந்தத்தை எடுத்துரைக்கும் முதல் நூலாக இப்போதுள்ளது சிவஞானபோதமாகும். அச்சிவஞான போதப் பெருங்கடலின் நிலை கண்டுணர்ந்து, அதற்குப் பேருரைகண்டு, சைவ சித்தாந்தப் பெருந்தலைவராய்த் திகழ்ந்தவர் சிவஞான முனிவர் ஆவர். முப்பொருள் உண்மை கூறும் சைவ சித்தாந்தக் கருத்துள் இறைவன் உயிர் இயல்பு களை விளக்கிக் காட்டும் சிவஞான முனிவரின் தெளிவுரைகள் கட்டுரையகத்தே அழகு செய்து நிற்கின்றன.) சைவ சித்தாந்தம் என்பது சைவருடைய சமய முடிவு என்று பொருள்தரும் சொற்றொடர். சைவர் யார் என்றால், சைவ சமயத்தை மேற்கொண் டொழுகுபவர். சைவக்கொள்கையுடைய அனை வரும் சைவரே யாவர். சைவரென்னும் சொல் சாதி குலம் வேறுபாடின்றி யாவர் யாவர் சைவ சமயக் கொள்கையை மேற் கொண்டு ஒழுகுகின்றார்களோ அவரவர்களுக்கு உரியதாகும். சைவப் பெரியோர்கள் "ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால் மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க" என்றே வற்புறுத்தி யுள்ளார்கள். ஆகவே, சைவருடைய சித்தாந்தம் என்றவுடனே, சைவரென்று கூறிக்கொள்ளும் ஒரு சாதியாருடைய கொள்கையென்று எண்ணுவது குற்றமாகும். இவ்வாறு எண்ணும்படியான நிலைமை யுண்டானதற்குக் காலந்தான் காரணமாகும். காலத்தை நொந்துகொள்வதைத் தவிர அவ்வாறு கூறிக் கொள்பவர் களையோ மற்றவர்களையோ நோவது தவறாகும். அவர்களுக்கு உண்மையை யுள்ளபடி அறிவிப்பது சைவருடைய கடமை. காலமும் கல்வியறிவில்லாமையும் புகுந்து செய்த அட்டூழியத்தால், சைவரிடையே சாதிச் சைவர் களெனவும் உண்மைச் சைவர்களெனவும் பிரிவு உண்டாயிற்று. இப்பிரிவால் உண்டான கேடுகள் பல. சமுதாயத் துறையில் ஒற்றுமைக் குறைவும் அரசியலில் செல்வாக்குக் குறைவும் ஒருபக்கம் தோன்றி வருத்த, பொருளாதாரத் துறையில் ஆண்டுதோறும் சுமார் இரண்டுகோடி ரூபாய் கெடுகிறது. இதனைப் பின்னர் விளக்குவோம். சைவ சமயக் கொள்கையை மேற்கொண்டு ஒழுகுபவர் சைவரானால், சைவம் என்பது யாது? "சைவம் சிவத்தோடு சம்பந்தமாவது", என்றார் திருமூலர். சிவம் என்பது எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளுக்குத் தென்னாடுடைய தமிழர் இட்டு வழங்கிய பெயர். "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்ற இத்தொடர்கள் மேற்கூறிய பொருளை வற்புறுத்தி நிற்பதைக் காணலாம். சிவத்துக்கும் உலகத்துக்கும் உள்ள தொடர்பு சைவம்; உயிர்களுக்கும் உலகத்துக்கும் உண்டாகும் தொடர்பு சிவத்தால் உண்டாக்கப்படுவது; அதனால் அத் தொடர்பும் சைவமே. இம்மூவகைத் தொடர்புகளையும் எடுத்தோதி மக்களை வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வ வாழ்வு பெறுவிப்பது சைவ சித்தாந்தம் என்பது முதலில் நினைவிற் கொள்ள வேண்டிய தொன்று. சிவமென்னும் செம்பொருள் உருவமுடைய பொருளன்று; அருவமும் அன்று; அருவுருவமும் அன்று. அதற்கென ஒரு பெயரும் இல்லை; குணமும் இல்லை. அதற்குத் தோற்றமும் இல்லை; கேடும் இல்லை. கட்டுறுவதும் பின்பு கட்டிலிருந்து நீங்குவ தாகிய வீடுபேறும் அச்சிவத்துக்கு இல்லை. சிவத்தைவிடப் பெருமை மிக்க பொருளும், நுண்மையான பொருளும் இல்லை; பெருமைக்கும், நுண்மைக்கும் சிவமே எல்லை. பேரறிவு வடிவே சிவம் என்னலாம். சிவம் இன்பமேயானது. எங்கும் எப்பொருட்கும் சிவமே முதன்மையும் தலைமையும் உடையது. ஒளிமயமான அருளாற்றலை யுடையது இச்சிவ முதற் பொருள். அவ்வாற்றல் அழிவில்லாதது; ஒங்கியுயர்ந்து எங்கும் நிறைந்திருப்பது; சிவமும் அந்த அருளாற்றலோடு நீங்காமல் கூடியிருப்பதாகும். சிவமாகிய முதற்பொருள் மற்ற உயிர்ப்பொருளையும் உலகப் பொருளையும் நோக்க வேறாக இருப்பினும், அவைகளோடு ஒன்றாயும் நோக்க வேறாக இருப்பினும், அவைகளோடு ஒன்றாயும் உடனாயும் விரவி இருப்பது. உயிரும் உலகும் தத்தமக்குரிய தொழிலை ஒழுங்குவழுவாமல் செய்வதற்குச் சிவ முதற் பொருளே காரணமாகும். உயிர்கள் தத்தம் தொழிலாகிய வினைகளைச் செய்து பயன்களை நுகர்ந்து கொண்டே வந்து பக்குவப்படும்போது, சிவமாகிய செம்பொருள் உண்மையறிவு விளங்கச்செய்து வீடுபேற்றினை எய்துவிக்கும். இக்கருத்தையே, " அருவுருவம் குறிகுணங்கள் முதல்ஈறு கட்டுவீடு அனைத்தும் இன்றி பெருமையதாய் நுண்ணியதாய்ப் பேருணர்வாய் ஆனந்தப் பிழம்பாய் எங்கும் ஒருமுதலாய் அழிவின்றி ஓங்கொளியாய் நிறைந்துளதாய் உயிர்கள் தோறும் விரவிஉடன் தொழிற்படுத்துப் புலம் கொளுத்தி வீடுய்க்கும் பதியாம் எம்மை." என்று சிவஞான முனிவர் கூறுகின்றார். இனி, உயிர்கள் எண்ணில்லாதனவாகும். இவற்றை ஒருமலம் உடையவை, இருமலம் உடையவை, மும்மலம் உடையவையென மூவகையாகக் கூறுபடுத்திச் சித்தாந்த நூல்கள் உரைக்கின்றன. பளிங்குக்கல் எந்தப் பொருளைச் சார்கிறதோ அந்தப் பொருளின் வண்ணத்தை யடைவது போல், உயிர்களும் சார்ந்த பொருளின் தன்மையைத் தாமும் பெறும் இயல்புடையவை. உயிர்ப் பொருளுக்கு எக்காலத்தும் அழிவு இல்லை; என்றும் உள்ள பொருளேயாம். சத்து இது அசத்து இது எனப் பகுத்தறிய வல்லது சத்தாகிய உயிர். நம் கண்ணொளியானது; இருளோடு சேர்ந்தபோது இருளாயும் ஒளியோடு சேர்ந்தபோது ஒளியாயும் நிற்கும். அப்படி நின்றாலும் கண்ணொளி இருளும் ஒளியுமாகாது வேறே. அது போல, உயிர்ப் பொருள் சத்தொடுகூடிச் சத்தாகியும், அசத்தோடுகூடி அசத்தாகியும் சதசத்து என வேறாகவே நிற்பது. உயிர் எவ்வெவ் வுடம்பிற் சென்று தங்குகிறதோ அவ்வவ் வுடம்பளவும் நிறைந்து நிற்கும்; சிவ முதற் பொருளின் அருளால் கட்டு நீங்கி வீடுபேறடையும் தன்மையுடையது. உயிர் உணரும் தன்மை யுடையதேயாயினும் தானே எதனையும் உணராது; பிற அறிவுடைப் பொருள் உணர்த்த உணரும் சிறுமை யுடையதாகும். உயிரது அறிவு, உணர்த்த உணரும் சிறுமையும், உலகுயிர்களை ஒன்றொன்றாய்ப் பார்த்தறியும் சிறுமையும் உடையது. இதனை, " எண்ணிலவாய் வகைமூன்றாய் வெண்சிலைபோல் பற்றியவை தாமாய் என்றும் உண்மையவாய்ச் சத்தசத்தும் பகுத்துணர் சத்தாய் இருளும் ஒளியு மல்லாக் கண்ணியல்பாய் வசிப்பவரு நிறைவாய் எம்மருளால் கட்டறுத்த வீடு நண்ணுபவாய் உணர்த்தஉணர் சிற்றறிவிற் பலவாம்நற் பசுக்கள் தன்மை" என்று வரும் செய்யுளில் காணலாம். உயிர்களுக்கும் உலகுக்கும் தொடர்புண்டாவதற்குக் காரண மாகிய கட்டு (பாசம்) மூவகைப்படும். அவை மலம், மாயை, கன்மம் என்பனவாகும். மலம் என்பது ஒன்றாய் அழிவில்லாத அளவிறந்த உயிர்களையும் அனாதியேபற்றி அவற்றின் அறிவை மறைக்கும் பலவேறு ஆற்றல்களை யுடையதாய் இருப்பது. மேலும் இம்மலத்துக்கும் உயிர்கட்கு முண்டான தொடர்பு செம்புக்கும் களிம்புக்கும் உள்ள தொடர்புபோல, 'என்று உயிருண்டு அன்றே மலமும் உடனுண்டு' என்னும் பழமைத் தொடர் பாகும். இவ்வாறு தொன்மைத் தொடர்புடைய தாயினும் உயிரறிவை. மறைத்து இருளாய்த் தோன்றும் இம்மலம். சிவமுதற் பொருளின் அருளொளி யால் மறைப்பு நீங்கும் தன்மையுடையது. இவ்வாறு மலத்தால் தோன்றும் அகவிருளை நீக்குதற்கு முதல்வன் திருவருள் துணையாவதுபோல, அத்திருவருளாற்றலால் தோற்றுவிக்கப்படும் உடல், கருவி, உலகு, நுகர்ச்சிகளாகிய மாயையும் துணையாகும். இம்மாயையின் காரியமாகிய உடல் முதலியன மலவிருள்களைச் சிறிது நீக்கி உயிரறிவு தொழிற்படுதற்குரிய விளக்கத்தைத் தருகின்றன. இந்த மாயை சுத்தமாயை, அசுத்தமாயை என இருவகைப் படும். இனி, இந்த உயிர்கள் நல்வினை தீவினை யென்ற இரண்டினையும் செய்தற்கு ஏதுவாக இருப்பது கன்மம். இந்த மலமாயை கன்மங்களோடு கூடி நின்று இவற்றைத் தொழிற் படுத்தி உயிர்கள் கட்டினின்றும் நீங்குதற்கேற்ற செவ்வி பெறுவிக்கும் அருளாற்றலும் உண்டு. அது திரோதானம் என்று வழங்கும். திரோதானம் மறைப்பது. மல முதலிய வற்றோடு கலந்து நின்று மறைத்தலைச் செய்விப்பது பற்றி இப்பெயர் உண்டாயிற்று. இவ்வாற்றல் மலம், சுத்தமாயை, அசுத்தமாயை, கன்மம், திரோதம் எனக் கட்டு ஐற்தாதலைக் காணலாம். இந்த ஐந்தையும், சிவஞான முனிவர், " ஒன்றாகி அழிவின்றிப் பலவாற்றலுடைத்தாய்ச் செம்புறுமா சென்னத் தொன்றாகி அருள்விளைவில் நீங்கும் இருள் மலத்துடன் அத்தொடக்குநீப்ப மின்தாவும் உடலாதி நல்கும் இருமாயை இருவினைகட்கேது என்றோது கருமம் இவை நிகழ்த்துதிரோ தமும் என்னும் ஐவகைப்பாசத்தை" என்று உரைத்தருளுகின்றார். இதுகாறும் கூறிய சிவம், உயிர், கட்டு எனப்படும் மூன்றினையும் சிறப்புற அறியும் அறிவு மெய்ஞ்ஞானம் எனப்படும். இம்மூன்றின் இலக்கணத்தையும் பொதுவிலக்கணம் சிறப்பிலக்கணம் என இரண்டாகக் கூறுவர். சிவமுதற் பொருளில் பொது விலக்கணம், சிறப்பிலக்கணம் என்றும், உயிர்ப் பொருளில் பொது விலக்கணம் சிறப்பிலக்கணம் என்றும் பாசப்பொருளில் பொது விலக்கணம் சிறப்பிலக்கணம் என்றும் இலக்கணம் காணப்படும். இவற்றுட் பொது விலக்கணத்தால் அறிவதை விடுத்துச் சிறப்பிலக்கணத்தால் அறிவதைத்தான் மெய்ஞ்ஞானம், உண்மைஞானம், என்று கூறுவர். இந்த ஞானம் பெறற்கரிய பெருஞானமாகும். இந்த ஞானம் வாய்க்கப் பெற்றவர்கள் மலக்கட்டினின்றும் நீங்கிச் சிவானந்தப் பேரின்பத்தை நுகர்வார்கள். அவர்களை இந்நிலையில் விட்டு நீங்கும் மலத்தின் ஆற்றல் அழிவது கிடையாது; இறைவன் அருளாற்றலில் அழுந்திவிடுமாதலால் மீளவும் வந்து உயிர்களைப் பற்றுவதும் கிடையாது. இதுவே, " திரிபுணர்வு பொதுமாற்றிச் சிறப்பியல்பால் உணர்ந்தெண்ணித் தெளிந்து தேறும் அரியபெறல் சன்மார்க்க ஞானநிலை இதுகிடைத்த அறிவால் மிக்கோர் பெரியமலப் பிணியவிழ்த்துச் சிவானந்தப் பெரும்பேறு மருவிப் பாசம் இரிவதூஉம் புகுவதூஉம் இன்றியொரு நிலையாம்அவ் வியல்பு தன்னில்" என வருகிறது இவ்வாறு உண்மைஞான வொழுக்கத்தால் கட்டற்ற உயிர் அறிவு வடிவாய்ச் சிவமுதற் பொருளைச் சேர்ந்து நிற்குங்கால், அறிவானும் அறியப்படு பொருளும் அறியும் அறிவுமாகிய மூன்றாகப் பகுத்தறியவாராமல், அறியப்படும் பொருளேயாய் அதனுள் அழுந்திநிற்கும். நிற்குங்கால் அதன் நிலை கண்ணொளியும் ஞாயிற் றொளியும் போலவும், நீரும் அதன் நிழலும் போலவும், நெருப்பும் அதனொடு கலந்து வெந்து சிவந்து நிற்கும் இரும்பும் போலவும், நீரும் உப்பும் போலவும். ஞாயிற்றொளியும் விண்மீனொளியும் போலவும் ஒன்றாதலும் வேறாதலும் இன்றி ஒன்றி உடனாய் நிற்கும் நிலையாகும். இதனையே அத்துவித நிலை யென்று நம் சைவ சித்தாந்தம் கூறுகிறது. இந்த நிலையினைப் பெற முயலும் அன்பர்கள் உள்ளத்தில் இறைவன் திருக்கோயில் கொள்வான். இதனைக் குறிக்கவந்த சிவஞான முனிவர், " உணர்பொருளும் உணர்வானும் உணர்வும் எனும் பகுப்பொழியா தொழிந்து பானும் புணர்விழியும் நீர்நிழலும் தீயிரும்பும் புனலுவரும் பரிதி மீனும் துணையவிரண் டறுகலப்பின் எம்முடனாய்ப் பேரின்பந் துய்த்து வாழ்வார் இணர்விரைத்த மலர்க்கோதாய் அவர்வடிவே எமக்கினிய கோயி லாமால்" என்று இயம்புகின்றார். - 'செந்தமிழ்ச் செல்வி' (1947 - 48)  13. சைவத்தின் இற்றைநிலை நம் தமிழ் நாட்டிலும் இதனைச் சூழவுள்ள பிறநாடுகளிலும் இப்போது பல வேறு துறையில் மாறுதல்கள் வேண்டி மக்களிடையே கிளர்ச்சிகள் தோன்றி நிலவுகின்றன. சிறப்பாக, தமிழ் மக்களிடையே அரசியல், வாணிபம், பொருளாதாரம், சமுதாயம் முதலிய பல வகைகளிலும் கிளர்ச்சிகள் உண்டாகியிருக்கின்றன. அரசியல் கிளர்ச்சி யாவரும் நன்கறிந்தது. வாணிபத் துறையில் வடநாட்டு முதலாளிகளும் பிறநாட்டவரும் புகுந்து தமிழ் மக்களைச் சுரண்டிச் செல்வது கூடாது; விற்பனை வகைகளில் மிகுதியான கட்டுத் திட்டம் கூடாது; அது தனித்து வளர வேண்டுமெனக் கிளர்ச்சி யெழுகிறது; பொருளாதாரத் துறையில், நாட்டில் வாழும் மக்களது வருவாய் குறைந்திருப்பதால், வாழ்க்கை முறை தாழ்ந்த நிலையில் உளது; வாழ்க்கை நிலையை யுயர்த்தல் வேண்டும்; அதற் கேற்பப் பொருள் வகைகள் உயர்ந்தோர்க்குப் போல எளியவரும் பெறத்தக்க வசதி யுண்டாதல் வேண்டும்; கைத்தொழிற் சாலைகளும் பிறவும் பொதுவுடைமை யாதல் வேண்டுமெனும் கிளர்ச்சி தோன்றியுளது. சமுதாயத்தில் சாதி வேற்றுமையும் மக்களிடையே படிப்பின்மையும் இருத்தலாகாது; வாழ்க்கைக்கு இன்றியமையாத துறைகளில் எல்லாம் சாதி சமுதாய வேற்றுமைகளைப் புகுத்துதல் சமுதாய வளர்ர்ச்சியைக் கெடுத்து நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கிறது; இவற்றைத் தொலைக்க வேண்டும்; ஒரு சாதி பிறசாதிகளை யடக்கி மேனிற்பதும் ஒதுக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் எந்நாளும் முறையே ஒதுக்கப் படுவதும் தாழ்த்தப்படுவதும் ஒழிய வேண்டும் என்பன போன்ற கிளர்ச்சிகள் எழுந்துள்ளன. இந்நிலையில் சமயத் துறையில் மாறுதல்களும் கிளர்ச்சிகளும் உண்டாகாமல் இல்லை. சமயங்களின் குறிகளாக விளங்கும் கோயில்கள் தூய்மையாலும் நற்செயல்களாலும் தெய்வ மணங் கமழ்வனவாதல் வேண்டும். தீயொழுக்கம், தீச்செயல், தீநினைவு தோன்றுமிடங்கலாக நிற்பது தீதாகும். கோயிலுக்குரிய மிக்க செல்வங்கள் செவ்விய முறையில் பயன்படுதல் நன்று; கோயிற் பாதுகாப்புப் பணி வாணிபமாக நடத்தல் அறமாகாது; கோயில்கள் சாதிகுல வேற்றுமைகட்கு இடமாய், அவற்றை வளர்த்து மக்களொ ருமைக்குக் கேடு விளைவிக்கும் தீய நிலையமாய் இருப்பது ஒழிய வேண்டும் என்பன போன்ற கிளர்ச்சிகள் எழுந்துள்ளன. இவையொருபுறம் நிற்க, சிறுவர் கல்வி பயிலும் கல்வித் துறையிலும் பல மாறுதல்களுக்குரிய கிளர்ச்சிகள் தோன்றியுள்ளன. இளைஞரது கல்வி துறை பல நூல்களையும் படித்து நெட்டுருச் செய்யும் தொழிலாதல் கூடாது; கற்கும் கல்வி ஒருவனைப் பிறர்க்குச் சுமையா யிராது தனித்து வாழும் தகுதி பயப்பதாக இருத்தல் வேண்டும். கற்கும் சிறுவர், வாழ்க்கைக்குரிய பொருள்களைத் தாமே தமித் தெண்ணித் துணியும் மனத்திண்மையுடையவராக, மனப்பயிற்சி பெறுதல் வேண்டும். நலந் தீங்குகளைப் பகுத்தறிந்து செயல் முறையில் கொள்ளுவதும் தள்ளுவதும் செய்தற்குரிய வினைத் திட்பம் மன வளர்ச்சியின் பயனாக வுண்டாவது; அதற் கேற்பக் கல்விமுறையமைய வேண்டும் என்பன போலும் உணர்வு காரணமாகக் கிளர்ச்சிகள் எழுந்துள்ளன. இங்ஙனம், எல்லாத் துறைகளிலும் மாறுதல் வேண்டிய கிளர்ச்சிகள் மிக்கிருக்க, நம் சமயத் துறையில் ஒரு முயற்சியும் இல்லை யென்றெண்ணு தற்கு இடமில்லை. சென்னையில் உள்ள தென்னிந்திய சைவ சித்தாந்த சமாசம் சமய நூல்கள் பலவற்றையும் பல்லாயிரக் கணக்கில் அச்சிட்டு அடக்க விலைக்கு விற்குமாற்றால் பல்லாயிரக் கணக்கான மக்கள் சமய வுணர்வினராமாறு பெருந் தொண்டு செய்துள்ளது. இந்து அற நிலையப் பாதுகாப்புச் சட்டத்தின் விளைவாகத் தோன்றிய இந்து அற நிலையப் பாதுகாப்புச் கழகம், சமாசத்தின் துணைகொண்டு பல கோயில்களிலும் விழாக் காலங் களிலும் பிற காலங்களிலும் சமய வுணர்வு கொளுத்தும் சொற் பொழிவு நிகழ்த்தியும் சொற் பொழிவாளர்களை நிறுவியும் சமய வுணர்வு மக்களிடையே நிலவுமாறு செய்துள்ளது. ஈண்டுக் கூறிய இந் நிகழ்ச்சிகளிடையே, நாட்டில் பரவிய மேனாட்டுக் கல்வி, அரசிய லுணர்வு, விஞ்ஞான ஆராய்ச்சி, உலகியலறிவு முதலியவற்றின் பெருக்கத்தால், சில இயக்கங்கள் தோன்றி மக்களிடையே அரசியல், சமயம், சமுதாயம் முதலியவற்றின் பெயரால் நிகழ்ந்த தீய கொள்கை, செயல் ஆகிய இத்தீமைகளை எடுத்தோதி மக்களைத் தெருட்ட முற்பட்டன. உயிரொடு அனாதியே கிடக்கும் மலத்தின் கேடு குறித்து, அதன் மறைக்குந் திறங்களை அருட்சத்தி தோய்ந்து வெளிப்படுவது போல, சமய வொழுக்கத் தோடு மணந்து கிடந்த மடமையின் தீச் செயல்களை இக்கிளர்ச்சி வேகம் தோய்ந்து வெளிப்படுத்திவிட்டது. இந்நிலையில் சைவர்களாகிய நாம் நம் சைவத்தின் வளர்ச்சி வரலாற்றை யாராய்ந்து, இதன் பயன் மக்கட்கு எய்தா வகையில் தடுத்து நிற்கும் இடையீடுகளையும் இடையூறுகளையும் விலக்கும் கடமையுடையராகின்றோம். 'தொன்மையவா மெனும் எவையும் நன்றாகா, இன்று தோன்றிய எனுமெவையும் தீதாகா' என உமாபதி சிவனார் கூறிய உயரிய கருத்தையுட்கொண்டு இக் காலத்துக்கும் நிலைக்கும் உரியவற்றைச் செய்ய முற்பட வேண்டும். 'தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சாரும், ஊழ்' என்று அருணந்தி சிவனார் கூறியது நல்லறிவைப் பொருளற்ற மடமைக்கு அடிமை யாக்கும் தன்மையன் றென்பது சைவரறியாத தன்று. சைவம் என்பது சிவத்தோடு தொடர்பு கூட்டும் சமயமாகும். சைவம் சிவத்தோடு சம்பந்தமாவது என்று திருமூலரும் கூறினர். ஆகவே, சிவத்தை வழிபடும் சமயம் சைவமென்பது விளங்கும். இச்சிவ வழிபாடு எக்காலத்திற் றோன்றியதென்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. மோகெஞ்சதாரோ, அரப்பா முதலிய இடங்களிலும் சிவ வழிபாடு காணப்படுதலால், இப்போதைக்கு ஐயாயிரமாண்டு கட்கு முன்னும் சிவ வழிபாடு இருந்ததென்று அறிகின்றோம். இனி, நம் தமிழகத்தில் சிவ வழிபாடே மிக்கிருக்கிறது. செல்வத்தாலும் சிறப்பாலும் மேன்மையுற்றுத் திகழ்வன சிவன் கோயில்களே. இதனால் தமிழுலகம் சைவ வுலகம் என்றும், சைவ உலகம் தமிழுலகம் என்றும் ஒற்றுமை நயம்படக் கூறும் மரபும் உண்டாகியிருக்கிறது. சைவமும் தமிழும் வாழ்க என்று மக்கள் கூறுவதும் இக் கருத்தை அடிப்படை யாகக் கொண்டிருப்பதை யறியலாம். தமிழகத்தின் தொன்மை நிலையைக் காண்டற்கு இப்போது துணை செய்யும் தமிழ் நூல்கள் தொல்காப்பியமும் சங்க விலக்கியங் களும் பிறவுமாம். தொன்மைக் காலத்தில் தமிழ் இயல், இசை, கூத்து என்று முப்பிரிவில் வைத்து ஆராயப்பெற்றது. இயற்பகுதிக்கு வேண்டும் உலக வழக்கும் செய்யுள் வழக்கும் பொருளாகக் கொண்டு தொல்காப்பியம் உண்டாயிற்று. இதற்குச் சிறப்புப் பாயிரம் கூறிய பனம்பாரனார் என்பவரும், 'தமிழ் கூறும் நல்லுலகத்து, வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்' என்றே குறிக்கின்றார். ஏனை இசை, நாடகம் என்ற இரண்டன் இயல்புகளையும் தொல் காப்பியம் கூறுகின்றிலது. இதனால், தமிழின் தொன்மை நலம் காட்டற்குத் தொல்காப்பிய மொன்றே போது மென்பது நிரம்பா தென்று விளங்கும். இனிச் சங்க விலக்கியங்களும் சங்க காலத்து நிலவிய நூல்கள் அனைத்தையும் கொண்டுள்ளன வல்ல. எத்துணையோ நூல்கள் இறந்து போயின. கிடைத்தவை இப்போதுள்ளனவே. இவற்றால் அறியப்படும் தமிழ் நாகரிகம் முழுதும் அறியப்பட்ட தொன்றன்று. இவை, பொருளிலக்கணத் துறைக்கு அமைதியுடையவாய், பண்டைத் தமிழர் நாகரிகத்தை யுணர்தற்கு ஓரளவு கருவியாவனவாய், பண்டைத் தமிழரின் உலகியல் வாழ்விற்கமைந்த பண்பாட்டை யெடுத்தோதும் பெரு விளக்கங்களாய் நிலவுகின்றன. உலகியலோடு கலந்தும் கலவாமலும் செல்லும் சமய வுணர்வு கொளுத்தும் நூல்கள் தொல்காப்பியத்துக்கு முன்பேயிருந்தன என்றற்குச் சான்று இல்லாமல் இல்லை. 'அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே' என்று தொல் காப்பியம் கூறுகிறது. இறந்தது, வயது முதிர்ந்தது. சிறந்தது, சமயம் கூறும் உணர்வொழுக்கம். சிறந்தது பயிற்றல் கூறுவதால், பயிற்றுதற்குரிய நூல்களும் நெறிகளும் இருந்திருக்கும் என்பது நன்கு விளங்கும். சங்கவிலக்கியங்களும் தவமும் துறவும் கடவுள் வழிபாடும் பிறவும் ஆகியவற்றைக் குறிக்கின்றன. இத்தவ முதலியனவே பொருளாக எழுந்த நூல்களா தலால், இவற்றை ஆங்காங்குக் குறித்துக் காட்டுவதே இயல்பாக அமைந்திருக்கிறது. மேலும் காண்போ மாயின், வேள்வி வேட்டலும் சங்க விலக்கியங்களில் அருகிக் காணப்படுகிறது. தொல்காப்பியம் வேள்வி வேட்டலைத் தமிழர் வாழ்க்கையில் காணாமையால், அதனை அவர் தம் இல்வாழ்க்கைக் குறிப்பில் குறிக்கவில்லை. இது நிற்க, சங்க விலக்கியங்களிலும் தொல் காப்பியத்திலும் தமிழர்களால் வழிபடப்பட்ட கடவுளர் பெயர்கள் காணப்படுகின்றன. இந்திரன், பிரமன், திருமால், முருகன், சிவன் ஆகிய கடவுளர் செய்திகளும் சங்க நூல்களில் குறிக்கப்படுகின்றன. இவர்களைப் பற்றிச் சங்க நூல்கள் குறிக்கும் வரலாறுகள் பின் வந்த திருமுறை களிலும் புராணங்களிலும் காணப்படுகின்றன. சங்க காலத்துக்குப் பின் வந்த சிலப்பதிகாரத்திலும் சங்க நூல்களிற் காணப்பட்ட குறிப்புக்கள் உள்ளன. சங்கவிலக்கியத்துட் காணப்படும் இசைப் பாட்டுக்களும், சிலப்பதிகாரத்துட் காணப்படும் இசைப் பாட்டுக்கள் பலவும் கடவுள் வழிபாடே பொருளாகக் கொண்டுள்ளன.பின் வந்த சைவத் திருமுறைகளும் இசைப் பாட்டுக் களாகவே யுள்ளன. இவற்றை நோக்குமிடத்துப் பண்டை நாளில் நிலவிய இசைத் தமிழ்ப்பகுதி கடவுட் கொள்கைக்கு ஏற்றதாக அமைந்திருக்கு மென்பது புலப்படும். அப்பகுதி கிடைக்காமையால், அக்காலத் தமிழர் சமயம் இன்னதெனத் தெளிய அறிய இயலாதாகின்றது. சங்க விலக்கியங்களிற் காணப்படாத சமண் சமயம் சிலப்பதி காரத்தும், பௌத்தம், சைவம், வைணவம், நியாயம், வைசேடிகம், சாங்கியம், மீமாமிசம் முதலியன மணிமேகலையிலும் காணப் படுகின்றன. மணிமேகலை காலத்துச் சைவ வாதம். *" இருசுடரோ டியமான னைம் பூதமென்று எட்டு வகையும் உயிரும் யாக்கையும் கட்டிநிற் போனும் கலை யுருவினோனும் படைத்து விளையாடும் பண்பினோனும் துடைத்துத் துயர் தீர் தோற்றத்தோனும் தன்னில் வேறு தானொன் றில்லோனும் அன்னோ னிறைவனாகும்." என்று கூறுகிறது. இதனால், சிவனே இறைவன்; உயர்வற உயர்ந்த ஒருவன்; நிலம், நீர், காற்று, தீ, விண், ஞாயிறு, திங்கள், உயிர் என்ற எண்வகையும் அமைத்திருப்பவன்; உயிரையும் உடம்பையும் கட்டி நிறுத்துபவன்; பல்வகைக் கலைகளும் தன் வடிவாக வுடையவன்; படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐவகைத் தொழிலும் உடையவன்; இத் தொழில்களை விளையாட்டாகச் செய்வது அவற்குப் பண்பு என்பது விளங்கும். மணிமேகலையில், அளவை வாதத்துக்குப் பின் இது கூறப்படுதலால், அவ்வளவைகளும் அவற்றால் அளந்து காணப்படும் தத்துவங்களும் இச் சைவத்துக்கும் உரியவாம் என்பதும் விளங்கும். இவ்வாறு மணிமேகலை காலத்தில் சைவ முதலாகப் பல்வகைச் சமயங்களும் நிலவுதற் கிடமாகிய இத் தமிழகத்தில், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்குள், சைவ முதலிய சமயங்கள் ஒளி மழுங்க, சமணமும் பௌத்தமும் மேம்பாடெய்தின. காபாலம், பாசுபதம் முதலிய சமயங்களும் தோன்றியிருந்தவையாயினும், சமண பௌத்தங்களின் முன்னே செல்வாக்கிழந்திருந்தன. விரைவில் சமணமும் பௌத்தத்தை யொடுக்கி நிமிர்ந்து நிற்பதாயிற்று. பாண்டி நாட்டிலும் தொண்டை நாட்டிலும் சமண் சமயமே அரசியல் செல்வாக்கால் சிறப்பு மிகுவதாயிற்று. தொண்டை நாட்டில் மகேந்திரவன்ம பல்லவனும் பாண்டி நாட்டில் நெடுமாறனும் சமண்சமய வேந்தர்களாகத் திகழ்ந்தனர். ஏழாம் நூற்றாண்டில் நாவரசர், ஞானசம்பந்தர் என்ற இருவரும் தோன்றி, பண்டைச் சைவ சமயத்தைத் தமிழக முழுவதும் சென்று திரிந்து பரப்பி நிலைநாட்டுவாராயினர். நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், மீமாஞ்சை என்ற சமயாங்களின் நற்கொள்கைகளுட் பல சைவத்தில் கலந்து கொண்டன. அடுத்து வந்த ஐந்து நூற்றாண்டு களுக்குள் தமிழகம் எங்கும் சைவமே மேலிடம் பெறுவதாயிற்று. பண்டைத் திருமால் வழிபாடும் ஓரளவு ஓங்குவதாயிற்று. மீமாஞ்சை சமயக் கலப்பால் நாட்டில் வேள்வி செய்தலும் மிகுவ தாயிற்று. நாவரசர் முதல் சேக்கிழார் ஈறாகவுள்ள சைவச் சான்றோர் நூல்கள் வேள்வி கேட்கும் செயல்கள் ஆங்காங்கு நிகழ்வதைக் குறிக்கின்றன. பௌத்தமும் சமணமும் ஒளி மறைந்ததற்குக் காரணம், அவற்றால் கண்டிக்கப்பட்ட கொலை வேள்விகள் ஒழியத் தலைப்பட்டது மொன்றாகும். இந்நிலையில் பத்தாம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் வந்த தமிழ் மன்னர்களும் பிற செல்வர்களும் கோயில்களைப் பெருஞ்செல்வ நிலையங்களாக்கத் தலைப்பட்டனர். ஒருபால் கோயில்கள் கல்வி நிலையங்களாகவும் கலைக் கோயில்களாகவும் திகழ வேண்டுமென்ற கொள்கை தோன்றி உருப்படுவதாயிற்று. வடமொழிப் புலவர் பலர் பல்லவ வேந்தராலும் தமிழ் வேந்தர்களாலும் தமிழகத்திற் குடியேறினர். சைவநூற் கொள்கைகளும் கருத்துக்களும் வடமொழியில் இடம்பெற்றன. அந்த வடமொழி யாகமங்கள் சைவக் கோயில்கள் தோறும் சட்டங்களாக அமைந்தன. இவ்வாறு இரண்டு நூற்றாண்டுகள் கழிந்தன. இக்காலத்தில் தமிழகத்தில் நிலவிமறைந்த பல்வகைச் சமய நற் கருத்துக்களோடி யைந்து, சிவபரம் பொருளை முதற்பொருளாகக் கோயில்கட்குச் சென்று வழிபட்டொழுகும் உண்மைச் சைவநெறி உருப்பட்டு வருவதாயிற்று. ஆயினும் கற்றோரிடையே, தத்துவங்கள் ஆராய்தலும் அவற்றின் வாயிலாக இறைவனை யடைதற்குரிய நெறி காண்டலும் பற்றி பேராராய்ச்சி நிலவத் தொடங்கிற்று. சாங்கியம் யோகம் என்ற சமயக்கலப்பால் யோக முறையும் சைவத்திற் கலந்து மேம்பட்டது. இந்நிலையில் உய்யவந்த தேவநாயனார் முதலிய சான்றோர் தோன்றி, தத்துவ ஆராய்ச்சியும் யோகப் பயிற்சியும் சிவவழிபாடும் வேண்டுவன என வற்புறுத்தினர். தத்துவ ஆராய்ச்சியும், யோக நூலாராய்ச்சியும், பண்டைய வழிபாட்டுச் சிவநெறியும் கற்றோரிடையே பெருங்கலக்கத்தைச் செய்தன. உய்யவந்த தேவநாயனார், "எத்தனையோ தத்துவங்கள் எவ்வெவர் கோட்பாடுடைய, அத் தனையும் சென்றங்களவாதே" என்பனபோன்ற உரை களால், வழிபாட்டு முறையை நிலைநாட்டினர். இவ்வாறிருக்கையில் மெய்கண்ட தேவர் தோன்றித் தத்துவா ராய்ச்சியும் சிவவழிபாடும் சிவனடியார்களைப் பேணலுமாகிய மெய்கண்ட சைவநெறியைத் தாம் பாடிய சிவஞான போதத்தால் வெளியிடலானார். இதன்கண் சங்ககாலம் தொட்டு வந்த சிவவழி பாடும், நாவரசர் முதலியோரால் அருளிச் செய்யப்பட்ட வழிபாட்டு நெறிகளும், சேக்கிழார் முதலியோரால் வற்புறுக்கப்பட்ட சிவனடியார்ப் பேணலும் அமையக்கண்ட தமிழ் நன்மக்கள் அதனைப் பெரிதும் மேற்கொள்வா ராயினர். அக்காலத்தே சகலாகமபண்டித ராக விளங்கிய அருணந்தி சிவனார் தாமும் அதனை மேற்கொண்டு, இதற்குள் வடமொழியில் தோன்றி யுருவாய் விளங்கிய ஆகமக் கருத்துக்களை இயைத்துச் சிவஞான போதத்துக்குச் சிவஞான சித்தியென்னும் பெயரால் உரையெழுதினார். இக்காலத்தே சங்கரரால் நிறுவப்பட்ட வேதாந்த மெனப்படும் சமயமும் இராமானுசர் நிறுவிய வைணவ சமயமும் நாட்டில் தக்க இடம் பெறலாயின. சைவநெறிக்குள்ளே கொள்கை வேறு பாட்டால் பல அகச் சமயங்கள் தோன்றின. இதனால், சமய நூல்கள் பலவும் புறமத மறுப்பும் தன்மத நிறுப்புமாகிய நெறிகளில் எழுதப்படுவன வாயின. பண்டு தொட்டே நிலவிச் சிறந்து வந்த சைவநூல்கள் பல, வடமொழியில் புகுந்துவிடவே தமிழரிடையே நிலவுந்திறம் இழந்தன. இக்காலத்தே ஆங்கிலமொழியின் ஏற்றத்தால் நாட்டு மொழி நூல்கள் பல பேணுவாரின்றி யொழிந்ததுபோல, அக்காலத்தே வடமொழி யேற்றம் பெற்றதனால், சைவத் தமிழ் நூல்கள் பல மறைந்தன. தமிழில் எழுந்த சிவஞானபோதம் வடமொழி ரௌரவாகம மாகியதும் இக்காலத்தேயாம். பதினான்காம் நூற்றாண்டின் தொடகத்தே கொற்றவன்குடி உமாபதிசிவனார் முதலிய சான்றோர் தோன்றிச் சிவப்பிரகாசம் முதலிய நூல்களால், சிவஞானபோதம், சிவஞான சித்தியென்ற தமிழ் நூல்களை முதலாகக் கொண்டும் சைவாகமங்களைத் துணை யாகக் கொண்டும் இன்றைய சைவ சித்தாந்த சமயத்தை உருப்படுத்தித் தருவாராயினர். இவ்வாறே வடமொழியிலுள்ள ஆகமங்களுட் சிலவற்றிற்கு வடமொழியில் உரைகள் காணப்பட்டன. வடமொழி யாளர்க்குள்ளேயும் சங்கர வேதாந்தத்தைப் பின் பற்றினோர் தொகை மிகுவதாயிற்று. அவர்கள் வேதாந்த மெனப்படும் உபநிட தங்களையும் வியாசர் பாரதத்துட் கூறிய பகவத் கீதையையும் துணையாகக் கொண்டு சிவாகமங்கள் பிரமாணமாகா என வாதம் புரியவே, சைவ சித்தாந்த நெறி நிற்போர், சிவாக மங்களும் பிரமாணமே என நிலைநாட்டும் கடமை யுடையராயினர். "வேத சாரம் இதம் தந்தரம் சித்தாந்தம் பரமம் சுபம்" என மகுடாகம முதலாயின கூறலாயின. இவ்வகையில் சைவ சித்தாந்த நெறி பழமையும் புதுமையும் கலந்து செவ்விய வகையில் தமிழகத்தில் நிலைபெறுவதாயிற்று. இந்நிலையில் அரசிலில் பெருங்குழப்பங்கள் உண்டாயின. வடுக வேந்தரும், முகமதிய மன்னரும் ஆங்கிலர் முதலிய மேனாட்ட வரும் தம்முள் போராடி நிற்க, பெருஞ்செல்வ நிலையங்களாக இருந்த கோயில்கள் செல்வாக்குடையார், அவர் வழி நிற்கும் பண்டிதர் ஆகிய இவர்தம் கைவசமாயின. பொது மக்கட்கும் கோயில்களுக்கும் தொடர்பு நெருக்கமாக உண்டாகாவண்ணம், கோயில் நிகழ்ச்சிகள் முழுதும் வடமொழியில் உண்டாயின. திருமுறையோதுவோர். திருப்பதிகம் விண்ணப்பஞ் செய்வோர் முதலியோர் விலக்கப்பட்டனர். சுருங்கச் சொல்லுமிடத்து, தமிழ் நாட்டுத் தமிழர்கோயிலுள் தமிழ்மொழி விலக்கப்பட்டது. கோயிலில் உள்ள கடவுட்கும், கோயில்களுள்ள வூர்கட்கும் வடமொழிப் பெயர்கள் உண்டாய் விட்டன. வடமொழி யறியாத தமிழருள் மக்கட் டொகை மிகுதியும், செல்வாக்கும் இல்லாதார் தாழ்த்தப்பட்டோரும், ஒதுக்கப்பட்டோருமாய் விலக்குண்டொழிய, கோயில்கள் தீய தொழில்கட்கும், செல்வக் களியாட்டுகளுக்கும் இடங்களாயின. தமிழருள் கோயில்கட்குச் சென்று வழிபடும் தகுதி பெற்றோர்க்கு ஆகமங்களிற் கூறப்படும் தத்துவங்களும், சிவபேத சத்திபேதங்களும் மந்திர வகைகளும், புவன வகைகளும் நடைமுறையில் பயிலப்பட வேண்டும் என்ற கருத்தால், தீக்கைகளும், சந்திமந்திரங்களும் சிவ பூசைகளும் வடமொழியில் கற்பிக்கப்பட்டன. பொருளறியாத வடமொழியில் கற்பிக்கப்பட்ட தமிழர், இவற்றைச் செய்வதேயமையும்; கோயில் வழிபாடு இன்றியமையாத தோன்றன்று என்றெண்ணி, கோயில்கட்குச் செல்வதை விடுத்தனர். இவற்றைக் கற்பிப்பாரும் கற்போரும் குருடும் குருடும்கூடிக் குருட்டாட்டமாடுவது போலப் பொருளறியாத வடமொழியில் தீக்கையும் சிவபூசையும் பெறுவித்தும் பெற்றும் ஆண்டவனும் அடிமையும்போல ஒழுகலாயினர். இவற்றைக் காண்போருள் அறிவுடையோர், அருவருப்புற்றும், பொருளில்லார் அச்சமுற்றும் நீங்கினர். கோயிற்குச் செல்லும் தகுதியுள்ளோருட் பலர் ஆங்கு காணப்படும் உயர்வு தாழ்வு, சாதிகுல வேற்றுமை, தீச்செயல் முதலியவற்றால் கோயில் வழிபாட்டையும் கை விடு வாராயினர். சுருங்கச் சொல்லுமிடத்து, சங்ககாலத்துச் சமயநூல்கள் காணப்படாமையால் நமக்குத் தெளிய விளங்காதிருந்த சிவவழி பாடாகிய சைவம், மூவர் முதலிகள் காலத்தில் நன்கு நிறுவப்பட்டு அவர் கட்குப் பிற்காலத்தே திருந்தியகோயில்களை இடமாகக் கொண்டு, மன்னர் செல்வர் முதலியோ ரால் பேணப்பெற்று, மெய்கண்ட தேவர் முதலிய சான்றோர்களால் செவ்விய ஒழுக்கம் வகுக்கப் பெற்றுச் சிறப்புற்ற சைவம், இன்று சாதிகுல வேற்றுமையிலும் தனித்துண்ணும் சோற்றிலுந்தான் நிற்கிறது. மூவர் முதலிகள் வழிபட்டுப் பரவிக் காட்டிய சைவநெறியில்லை; மெய்கண்டார் சாதனமும் பயனுமாக வகுத்தோதிய சமயவுணர்வு இல்லை. கோயில்களிலும் மூவர் முதலிகள் அருளிய திருப்பாடல்கள் பூசை செய்வோரால் ஓதப்படுவதில்லை. பொதுமக்கள் விளங்கிக் கொள்ளத் தக்க மொழியில் பூசனைகளும் நடைபெறுவதில்லை; பொது மக்கள் பலரும் சென்று அங்குள்ள இறை வனை வழிபடுதற்கு இடமும் தரப்படுவதில்லை. சமய நூல்களைப் படிக்குமிடத்துக் காணப்படும் பொருட்குக் கோயில்களில் சான்றுகளும் இல்லை. சமய வுணர்வு வேறாகவும் கோயிலில் நிகழ்வன வேறாகவும் உள்ளன; சமய நிலையங்களாய கோயில்கட்கும் சமய ஞானம் நல்கும் நூல்கட்கும் தொடர்பில்லாத வகையில் சைவம் நிற்கிறது. சைவநெறி நிற்பார் மேற் கொண்டொழுகத் தக்க நெறியை மெய்கண்டார் ஒரு வரியில் சிறு சொற்றொடரால் கூறியுள்ளார். அது "தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்" என்பது. தம்மையுணர்ந்து தம்மை அடிமையாகவுடைய சிவபரம்பொருளை யுணர்தற்கு வேண்டும் அறிவு நிகழ்ச்சிகள் கோயில்களில் காணப் படுவதில்லை. தலைவனாகிய இறைவனை யுணர்ந்தோர், எல்லா மக்களையும் தம்மைப் போலப் பேணி மதிக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். முதல்வன் திருமுன்னாகிலும் யாவரும் ஒரு தன்மையராகப் பேணப்படுவது சைவர்களுக்குத் தலையாய அறமாகும். அவ்வறத்தைக் கொன்று, தாம் வாழ ஏனோர் தமக்கு அடிமையும் கீழோருமாகக் கோயில்களில் மதிக்கப்பட வேண்டு மென்போர் கையில் சைவமும் சைவக் கோயில்களும் தங்கிக் கீழ்மையுறுவது சைவத்தின் இற்றை நிலையாக வுளது. காணார்க்கும் கேளார்க்கும் மெய்யால் உழைக்கும் திறமிழந் தார்க்கும் சமய வுணர்வு கொளுத்தலும் உணவும் எடையும் மருந்தும் கொடுத்துதவு முகத்தால், உடம்பு தாங்கி, பதி புண்ணியம் புரிந்து உய்தி பெறச் செய்தற்கென விரிவாக அமைக்கப்பெற்ற கோயில்கள் அத்துறையில் பயன்படா தொழிவது சைவத்தின் இற்றை நிலையாகவுளது. இவ்வாறே, சமய நூல்களும் கூறும் வகையில் உண்மைச் சைவராயினார் செய்தற்குரிய நற்செயல்கள் பலவும் சைவர்கள் கோயிலில் நடைபெற வேண்டியிருக்க, அவை நடைபெறாதிருப்பது இற்றை நிலையாக வுளது. " ஞாலம் நின்புகழே மிக வேண்டுந்தென் னாலவாயி லுறையு மெம்மாதியே." அனைத்திந்திய வரலாற்றுக் காங்கிரசில் நிகழ்த்திய ஆங்கிலச் சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு (1943)  14. ஞானசம்பந்தரின் ஞானக் காட்சி நெய்தல் நெய்தல் என்பது கடற்காட்சியும் கடற்கானற் காட்சியும் தன் கண் கொண்டது. ஞானசம்பந்தர் நெய்தல் நிலத்தில் தோன்றி அது நல்கும் இயற்கைக் காட்சிகளில் தோய்ந்த உள்ளம் படைத்தவர். கடற் பரப்பும் அதன் கரை சேர்ந்த நாட்டின் நல்ல எழிலும் அங்கு நிலவும் உயிர் வாழ்வின் ஏற்றமும் அவரது ஞானக் கண்ணுக்கு இனிய விருந்து செய்துள்ளன. அவரது ஞானவுள்ளம் உலகியல் வாழ்வில் அவ்வப்போது தோன்றும் தூசும் துரிசும் கலந்து மாசுபடாத மாண்புடையது. பொறி வாயிலாக அறிவுப்பயிர் முளையும் இளமைக் காலத்தேயே சிவஞானப்பால் பாய்ந்து சிறப்புச் செய்த மையின் அதன்கண் சிவப்பயிர் முளைத்துச் செந்தமிழ்க் கவிமணிகளை ஈன்று சிவஞானச் செழும்பயனே விளைவித்தது. திருஞானசம்பந்தர் பிறந்து வளர்ந்து ஞானப் பேறு பெற்றது இச்சீர்காழி; இது நெய்தல் நிலத்தின் நீர்மை நிறைந்த பழம்பதியாகும். தென் தமிழ் நாட்டின் தென்பகுதியும் தென்கீழ்ப் பகுதியும் கடற்கு இரையான போது பேரலைப் பெருக்கால் (tidal wave) இப்பகுதி முற்றும் கடல்நீர் புகுந்து பரவிற்று. அந்நாளில் இக்காழி நகர் ஒன்று தவிரப் பிற ஊர்கள் பலவும் நீருள் மூழ்கின. இதனை அப்பெருமான், “ கருமை யற்ற கடல்கொள்ள மிதந்ததோர் காலம் இது என்ன பெருமை பெற்ற பிரமாபுரம்” என்று மொழிகின்றார். கடலாற் கவரப்படாத பெருமைபற்றி இதனைப் பிரமபுரம் என் றனர். பிரமம் என்ற சொல்லே பெருமை என்னும் பொருள் தருவது. அந்த உண்மை புலப்படவே பெருமை பெற்ற பிரமாபுரம் என்று இவ்வாறு கூறுகின்றார். இனி, இதற்குப் பொதுவாக வழங்கும் காழி என்ற பெயர். கடற்பெருக்கால் கரைக்க மாட்டாத காழ் பொருந்திய இடம் என்று பொருள்படுவதாகும். தொண்டை நாட்டுத் திருவோத்தூருக்குக் கிழக்கில் உள்ள ஊர், ஒரு கால் சேயாறு பெருகி இடையிலுள்ள ஏரியின் கரையைச் சிதைத் தேகியபோது, சிதைவுறாமல் நின்ற ஊர் என்று பொருள் படக் காழியூர் எனப்பட்டது. அதன் அழியாப் பெருமை கண்ட சான்றோர், தொண்டை நாட்டுக் கோட்டங்களில் ஒன்றிற்கு அதனைத் தலை மையூராக்கிக் காழியூர்க் கோட்டம் என்றனர். “ஒள்வாழைக் கனி தேன் சொரி ஓத்தூர்”, “குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்” என ஞானசம்பந்தர் பாராட்டும் திருவோத்தூரைப் பல்லவர் கல்வெட்டுக்கள், “தொண்டை நாட்டுக் காழியூர்க் கோட்டத்துக் காழியூர் நாட்டுத் திருவோத்தூர்” என்று கூறுகின்றன. காழிநாடு என்றால் சீர்காழியைச் சேர்ந்த நாடென்று பொருள்படும். அதனை எண்ணியே தொண்டை நாட்டுப் பண்டைச் சான்றோர், அதனைக் காழி நாடு என்னாமல் காழியூர் நாடு என்றது மிக்க மகிழ்ச்சி தருகிறது. பிற்காலத்தே சீர்காழி, சிய்யாழி, ஷியாஷி என ஆனது போலக் காழியூரும், காளியூர் என்றும் காலியூர் என்றும் மாறியதைக் கல்வெட்டுக் கூறுகிறது. இதனால், பெருநீர்க்குக் கரைந்து கெடாத காழ் உடைமை பற்றிக் காழி என்றும் காழியூர் என்றும் தமிழ் மக்கள் பெயரிட்டிருக்கும் சிறப்பை நன்கு தெளியலாம். திருஞானசம்பந்தர் நம் தமிழகத்தில் நெய்தலைச் சார்ந்த ஊர்கள் பலவற்றிற்குச் சென்று இறைவனையும் இயற்கையையும் கண்டு இன்புற்றுப் பாடியுள்ளார். அவையெல்லாவற்றையும் கண்டுரைப் பதாயின் காலம் நீட்டிக்கும்; ஆதலால், இக்காழி நாட்டிலுள்ள சிலவூர்களில் ஞானசம்பந்தர் கண்ட நெய்தற் காட்சி களைக் கூறவிரும்புகிறேன். 1. தில்லைப் பெரும்பதிக்குக் கிழக்கில் இருப்பது திருவேட்களம்; முந்நூறு ஆண்டுகட்கு முன் அச்சுதப்ப நாயக்கர் ஆட்சியில் வேட்களம் என்ற பெயரை திருவேழ்க்களம், திருவேள்விக்களம் என மாற்றும் முயற்சியொன்று தோன்றிற்று; ஊரவர் அதனை எதிர்த்து ஞானசம்பந்தர் அருளிய வேட்கள நன்னகர் என்ற தொடரைக் காட்டி முறியடித்தனர். (கி.பி. 1666). இவ்வேட்களத்தின் கிழக்கில் கொள்ளிடம் கடலொடு கலப்பதும் அங்குள்ள கானற் சோலை களில் பல்வகைப் புள்ளினங்கள் தங்கி ஒலிப்பதும் ஒருபாலாக, ஒருபால் வேதமுழக்கமும் வேள்வியார வாரமும் ஞானசம்பந்தரை மகிழ்விக்கின்றன. இதனை, ஓதமும் கானலும் சூழ்தருவேலை உள்ளம் கலந்து இசையால் எழுந்த வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன்னகராரே, என்று பாடுகின்றார். ஒருசார் திரையெழுந்தலைக்கும் கடலும், தண்ணிய கழிகளின் நீர்ப்பெருக்கும், கரையில் நிற்கும் கானற்சோலையில் வண்டினம் பண்பாட எங்கும் மலர்மணம் கமழ்கிறது; இதனை திரைபுல்குதெண்கடல் தண்கழி ஓதம் தேனலங்கானலில் வண்டுபண்செய்ய விரைபுல்குனபம் பொழில் சூழ்ந்த வேட்களநன்னகராரே. என்று பாடுகின்றார். 2. இந்நகர்க்குத் தெற்கில் திருக்கழிப்பாலை என்ற திருவுடைய ஊர் தோன்றுகிறது. அதன் அருகே கடல் தரும் காட்சி இறைவன் பெருமையை நினைவுறுத்துகிறது. நடம் நண்ணியோர் நாகம் அசைத்தவனே விடம் நண்ணிய தூமிடறா விகிர்தா கடல் நண்ணு கழிப்பதி காவலனே உடல் நண்ணி வணங்குவன் உன்னடியே கடல்துறையில் கலங்கள் வந்து தங்கி வாணிகம் புரிகின்றன. அக்காட்சி காண்பார் மனக்கவலையை மாற்றி இன்பம் கிளர்விக்கிறது. அதனை நினைந் தருளும் ஞானசம்பந்தர், “கலங்கள் வந்துலவும் கழிப்பாலையை வலங்கொள்வார் வினையாயினமாயுமே” என்று இசைக்கின்றார். 3. கொள்ளிடத்தின் தென்கரையில் கடல் அலைகள் கொணர்ந்த நுண்ணிய வெண்மணலைக் கடற்காற்று நன்கு பரப்பி அழகு செய்திருக்கும் காட்சி ஞானசம்பந்தரின் கருத்தைக் கவர்கிறது. முத்துக்கள் மணலிடத்தே ஒதுங்கிக்கிடக்கின்றன. நிழல் தழுவிய மணற்பரப்பில் விளையாட்டயரும் இளம் பெண்கள் தங்கள் பாவைக்குத் திருமணம் செய்து மகிழ்கின்றார்கள். அது காணும் ஞான சம்பந்தர் இது நல்லூர்ப் பெருமணம்; இங்கே எங்கள் பெருமான் பெண்ணொடு பாகனாய் வீற்றிருக்கின்றான். அதனால் இவ்வூர்க்கண் திருமணக்காட்சி சிறந்து தோன்றுகிறது போலும் என்ற பொருள் விளங்க, தருமணல் ஓதம் சேர் தண்கடல் நித்திலம் பருமணலாக் கொண்டு பாவை நல்லார்கள் வருமணம் கூட்டி மணம் செயும் நல்லூர்ப் பெருமணத்தான் பெண்ணோர் பாகம் கொண்டானே என்று பாடியருளுகின்றார். இங்ஙனம் இல்லிருந்து நல்லறம் புரிதற்கு ஒத்த நிகழ்ச்சி மல்கிய இப்பகுதி, ஒழுக்கத்து நீத்த உரவோர்க்கும் உரிய இடம் என்ற கருத்தைப் புலப்படுத்துகிறார். மேகத்த கண்டன் எண்தோளன் வெண்ணீற்று உமை பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த நாகத்தன் நல்லூர்ப் பெருமணத்தான் நல்ல போகத்தன் யோகத்தையே புரிந்தானே என்று பாடுகிறார். 4. சிறிது தொலைவில் வடகிழக்கில் கடற்கரையில், மேகம் தவழும் கோபுரமும் வனப்பு விளங்கும் மாளிகையும் கொண்ட மயேந்திரப் பள்ளி தோன்று கிறது. கடற்கரைக் கானற்சோலயில் கண்டலும் கைதையும் கமலமலரும் பொருந்தி வாவியும் காணப் படுகின்றன. நேரிற் கண்டு இன்புறும் ஞானச் செல்வர், “ கொண்டல் சேர் கோபுரம் கோலமார் மாளிகை கண்டலும் கைதையும் கமலமார் வாவியும் வண்டடுலாம் பொழிலணி மயேந்திரப்பள்ளியிற் செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே” என்று இனிமை கெழும இசைக்கின்றார். ஊர்க்குள் கடல்தரு பவளமும் முத்தும் மலைதந்த வயிரமணி களும் அகிலும் பண்டமாற்று கின்றன. செல்வ வாணிகம் திகழ்வது காண்பவர், “ திரைதரு பவளமும் சீர்திகழ் வயிரமும் கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும் வரைவிலால் எயில்எய்த மயேந்திரப் பள்ளியுள் அரவரை அழகனை அடியிணை பணிமினே” என்று பாடிப் பரவுகின்றார். அங்குள்ளவர் ஞானசம்பந்தர்க்குச் சந்திரன் சூரியன் பிரமன் இந்திரன் முதலியோர் வழிபட்டது இத்திருப்பதி என்று கூறக் கேட்டு மகிழ்கின்றார். இப்போது அது கோயிலடிப்பாளையமாக இருக்கின்றது. கடற்கானற்சோலை நல்லூர்ப் பெருமணம் எழுப்பிய யோகவுணர்வை மயேந்திரப் பள்ளியும் வற்புறுத்துவதை ஞானசம்பந்தர் நோக்குகின்றார். “ மாகணைந்து அலர்பொழில் மயேந்திரப் பள்ளியுள் யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே” என்று இயம்புகின்றார். இனி அடுத்தபடியாக நம் சீர்காழி பின் கிழக்கிலுள்ள தென் திருமுல்லைவாயில் ஞானசம்பந்தரை அழைக்கிறது. 5. திருமுல்லை வாயிலே அடைகின்ற ஞான சம்பந்தர் தெருவெல்லாம் முத்துக்கள் சிதறிக் கிடக்கும் அதன் நெய்தல் வளத்தை நேரிற் கண்டு வியக்கின்றார். கடலிலும் கடற்கரையிலும் இருக்கும் அவை தெருவுக்கு வருவானேன் என்று நினைந்து, கடல் அலைகள் எழுப்பும் ஓசை கேட்டு அஞ்சி இவ்வாறு தெருவில் தெரிகின்றன என்று காண்கின்றார். “ உருவத்தில் மிக்க ஒளிர்சங்கோடிப்பி அவை ஓதம் ஓதவெருவித் தெருவத்தில் வந்து செழுமுத்தலைக்கொள் திருமுல்லை வாயிலதுவே” என்று உரைக்கின்றார். ஒருபால் காவிரி கொணர்ந்த சந்தனமும் அகிலும் சிறக்க, கடல் அலைபோந்து மனையவர் சிந்தும் தேறலை உண்டு தேக்கெறி கிறது. இதனை, வரைவந்த சந்தோடகிலுந்திவந்து மிளிர்கின்ற பொன்னிவடபால் திரைவந்து வந்து செறிதேறலாடு திருமுல்லைவாயிலிதுவே என்று தேன் சொட்டப் பாடுகின்றார். 6. இவ்வூர்க்கருகே கலிக்காமூர் காட்சி தருகிறது. (அன்னப்பன் பேட்டை) நெய்தற்கரிய சங்கு இப்பி ஆகியவற்றுடன் “ துறைவளர் கேதகைமீது வாசம் சூழ்வான் மலிதென்றல் கறைவளரும் கடலோதம் என்றும் கலிக்கும் கலிக்காமூர்” என்ற திருப்பாட்டால் கலிக்காமூர் என்ற பெயர்க்குக் காரணம் காட்டுகின்றார். 7. காவிரியாறு கடலொடு கலக்கும் துறையில் இருப்பது சாய்க்காடு; பைஞ்சாய்க் கோரை காடு போல் வளருமிடம்; இதன் கருத்தறியாமல் கைதை சோறாயினும் கைந்நிறைய வேண்டும் என்ற பேராசைப் பேய் போல எதுவாயினும் வடமொழியில் மாற்றவேண்டும் என்ற கூட்டம் இதனைச் சாயாவனம் என்று மாற்றி விட்டது. சாய்கிற பக்கமே சாயும் தன்மையால் தமிழர்களும் அதனைச் சாயாவனம் என்றே சொல்லி வாழ்கின்றார்கள். இச்சாய்க்காடு காவிரிப்பூம்பட்டினத்தின் ஒருபகுதி; அதற்குப் பூம்புகார் என்றும் பெயருண்டு. இவ்விரண்டையும் ஞானசம்பந்தர் மிக்க ஆர்வமுடன் “காவிரிப்பூம் பட்டினத்துச் சாய்க்காட்டு எம்பர மேட்டி” என்றும், “தண்புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன்” என்றும் எடுத்துரைக்கின்றார். காவிரியும் கடலும் கூடும் காட்சியை, “ மத்தயானையின் கோடும் வண்பீலியும் வாரித் தத்துநீர்ப் பொன்னி சாகரம் மேவும் சாய்க்காடே” என்பர். சாய்க்காட்டுக் கானற் பொழிலைக் காண்கின்ற சம்பந்தப் பெருமான் பூக்கள் நல்கும் தேனுண்டு மகிழும் வண்டுகளின் விளையாட்டை நோக்குகிறார். தன் காதல் வண்டு புன்னையங் கானலுக்குச் சென்று மலர்த் தேனுண்டு தாது அளைந்து வருகிறது. அதன் பெடை வண்டு அது பொறுக்காமல் பொழிலகம் புகுந்து மறைகின்றது. காதல்வண்டு அதைத் தேடி அடைகிறது. பெடை வண்டு ஊடிப்பிணங்குகிறது. இதனை, “ மாதர் வண்டு தன்காதல் வண்டு ஆடிய புன்னைத் தாதுகண்டு பொழில்மறைந்து ஊடுசாய்க் காடே” எனப் புகல்கின்றார். ஒரு பக்கம் செருந்தியும் கோங்கும் மலர்ந்த கழிக்கரையில் தாழையரும்பி மலர்கிறது. செருந்தியும் கோங்கும் பொன்தட்டுப் போல் விரிந்து நிற்க அதன்கண் தாழம்பூவின் தாது உதிர்ந்து திருநீறு பரந்த பொற்றட்டுப் போலத் தோன்றுகிறது; அதனைக் கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின்; பொன்னியன்ற தட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கமரும் தாழ்பொழில்வாய் மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்கும் காவிரிப்பூம் பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே என்று பாடுகின்றார். ஞானசம்பந்தர் காலத்திற் காவிரிப் பூம் பட்டினம் தன் செல்வநிலை பெரிதும் குன்றவில்லை. கடல் கோட் காலத்தில் பவுத்தர்கள் அஞ்சி நீங்கினரேயன்றிப் “பதியெழுவறியா” நன்மக்களாதலால் பலர் அங்கே வாழ்ந்தமையின், நகர் வளத்தை, “ விண்புகார் என வேண்டா வெண்மாட நெடுவீதித் தண்புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன்தாள் சார்ந்தாரே” என வுரைக்கின்றார். 8. அங்குள்ள பல்லவனீச்சுரத்தைச் சம்பந்தர் தமது ஞானக் கண்ணால் நோக்குகின்றார். அது நெடு நாட்களுக்கு முன்பே பல்லவன் ஒருவனால் கட்டப்பட்டது. புகார் நகரம் கடற்கு இரையாகிய குறிப்பும் அவர்க்குத் தெரிகிறது. “ கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலமெல்லாம் உணரப் பார் அரக்கம் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே” இது நல்லமதில் சூழ்ந்த நகரம் என்பார், “ கடையார் மாடம் நீடி எங்கும் கங்குற்புறம் தடவப் படையார் புரிசைப்பட்டினம்சேர் பல்லவனீச்சரமே” என்று பாடுகிறார். பழங்குடிமக்கள் இருந்து வாழும் இயல்பைக் காண்பவர், “ மண்ணார் சோலைக் கோலவண்டு வைகலும் தேன் அருந்திப் பண்ணார் செய்யும் பட்டினத்தப் பல்லவனீச்சரமே” 9. அதற்கு மேற்பால் உள்ளது வெண்காடு. வெள்ளை யானை வழிபட்டதனால் இவ்வூர் வெண்நாடு என ஊரவர் உரைக்கின்றார்கள். இளங்கோ கூறும் சோம சூரிய குண்டங்கள் இங்கே முக்குளமாய் விளங்குன்றன. “ அயிராவதம் பணிய மிக்கதனுக்கருள் சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும் முக்குளம் நன்குடையானும் முக்கணுடை இறையவனே” இங்குள்ள கழிகளும் பொழில்களும் ஞானம் பெற்ற பெரு மானுக்கு நல்ல காட்சி தந்து இன்புறுத்து கின்றன. கழிநீரில் தோன்றிய தாழைப்பூவின் நிழலை நீர்க்குருகென்று கெண்டை மீன் கண்டுமருண்டு தாமரைப் பூவின் அடியில் மறைகிறது; அதனை அங்கே கிடைக்கும் ஒள்ளிய முத்துக்கள் அதனைக் காட்டி மகிழ்வதுபோல் ஒளி செய்கின்றன. அதனை, “ விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டில் தண்புறவின் மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று தடமண்டு துறைக் கெண்டை தாமரையின் பூமறையக் கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டும் காட்சியதே ஒரு பொழிலில் மயில் ஆடுவதும், கடல் முழங்குவதும், வண்டு பாடுவதும் ஓர் இசையரங்கு போல் இன்பம் செய்கின்றன. இதனை, கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல் முழங்க விண்மொய்த்த பொழிவரிவண் டிசைமுரலும் வெண்காடே என்று பாடிக்காட்டுகின்றார். 10.இறுதியாக, நெய்தற் காட்சியை சீர்காழிப் பதியோடு முடிக்கின்றேன். (1) வாழை வளமாகக் கனிந்திருப்பது கண்ட மந்தி உண்ணவிரும்பி நின்று நோக்க, அதன்கனம் தாங்காமல் இலை மட்டை கீழிறங்கவே, மாட்டாமல் குரங்கு தவிக்கிறது. “ தேனார்ந் தெழு கதலிக்கனி உண்பான் திகழ்மந்தி மேனோக்கி நின்று இறங்கும் பொழில் வேணுபுரம் இதுவே” (2) தாமரைப்பூவில் வீழவே அது சாயக் கண்ட இளவாளை மேனோக்கித் துள்ளுகிறது. அதனை, “ தண்ணார் நறுங்கமல மலர்சாயவ் விளவாளை விண்ணார் குதிகொள்ளும் வியன்வேணுபுரம் அதுவே”, என வுரைக்கின்றார். இன்பச் சுவைக்கு நான்கு அடிப்படை வகுத் தொல்காப்பியர் அவற்றைச் “செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த உவகை நான்கே” என்றார். இவற்றுள் புலன் என்பது பொறி புலன்களாற் கண்டவற்றை மனத்தில் வைத்து எண்ணியின்புறுதல். ஞானசம்பந்தர் முதலிய சான்றோர் வெறும் புலனுகர்ச்சியளவில் நிற்பவரன்று; அது “பசுபாச வேதனை”என அவரே தமது திருமுறையில் உய்த்துணரவுரைக்கின்றார். மேனாட்டவர் புலனுகர் வின்பமே இலக்கியப் பயன் என்று கருதினர்; அவர் நூல்களைப் பயின்ற நம் நாட்டவர் அதுவே மக்களுலகிற்கே பொதுவறம் என்று கொண்டு திறனாய்வு என்றும், விமரிசனம் என்றும் மேற்கொண்ட, சான்றோர்களில் உள்ளுறை காணும் கூர்த்த மதி நுட்பம் இன்றிச் சவலைகளாய்ச் சமழ் கின்றார்கள். பரந்துபட்டுப் பலவாய்த் தோன்றும் இயற்கை நிகழ்ச்சிகளில் சிலவரைந்து கொண்டு கூறுவதன் குறிப்பு யாது என்று நோக்குவது புலமை நோக்கு விஞ்ஞான நெறி (scientific method) என்பது. பொறி புலன்களாற் கண்டதைச் சொல்லுருக் கொடுத்துரைப்பது உண்மைப் புலமை கலந்த பாவன் மையாகாது, சொல்லார வாரமாய்ப் பயனில மொழிதலாகும். நுண்ணறிவு கொண்டு நோக்குவோர்க்கு இனிய தொருபயன் தந்து மகிழ்விக்க வேண்டும் என்பது தமிழ்ச் சான்றோர் கொள்கை. இம்மரபு பற்றியே வைணவப் பிரபந்தங்களுக்கு உரை கண்ட சான்றோர் உள்ளுறை என்ற சுவோபதேசம் கண்டு உரைத்துள்ளனர். அந்த நெறியில் நின்று ஆயுமிடத்துச் சீர்காழியில் காட்டிய காட்சிகள் ஞானப் பொருளை உள்ளீடாகக் கொண்டிருப்பதை உணரலாம். வாழைக் தோட்டத்திற்குட் புகுந்து மந்தி உயரத்தில் வாழைப் பழம் கனிந்து விளங்குதல் கண்டு தானொரு வாழை மடல் மேல் இருந்து தாவிப்பற்ற நினைந்து இருகாலில் நின்றது; அதன் கனம் பொருமடல் கீழ்நோக்கித் தாழவே மாட்டாமல் கனி பெறற்கின்றி நீங்குகிறது. இதனையே, “ நானாவித உருவால் நமையாள்வான் நணுகாதார் வானார் திரிபுர மூன்றெரி உண்ணச்சிலை தொட்டான் தேனார்ந்தெழுகதலிக்கனி உண்பான் திகழ்மந்தி மேனோக்கி நின்று இறங்கும் பொழில் வேணுபுரம் இதுவே.” என்று பாடியருள்கின்றார். சிவபெருமானை நண்ணாது மாறுபட்ட திரிபுரத்தசுரர், தமது வலிமைச் செருக்காலாகிய முப்புரத்தை நின்று உயர்வு பெற்று இன்புற எண்ணினர்; திரிபுரம் அவர் செயற்கொடுமை பொறாது சிவனது நகைப்பிற் பிறந்த தீக்கிரையாகி வெந்து வீழ்ந்தது; அவர் செயலின் புலமையை மந்தியின் செயல் குறிப்பாய்ப் புலப்படுத்துவது பற்றி, கதலிக் கனியுண்பான் மந்தி தான் இருந்த மடலின் மென்மை நினையாது நிற்கவும், வாழைமடல் கீழ்நோக்கித் தாழ்வதுதானும் கீழே தரையில் வீழ்ந்து நீங்கும் காட்சியை உரைக்கின்றார். கடல் தான் கொள்ளக் கருதிச் சூழ்ந்தபோது, காழிநாகர் மேல் மேல் உயர்ந்த திறத்தை, இடத்தின் செயல் இடத்து நிகழ் பொருட்டும் உண்டென்னும் இயைபு தோன்றத் தான் தங்கிய தாமரை மலர் நீர்ப் பெருக்கில் சாய்ந்து மூழ்குவதறிந்த இளம்வாளை மேனோக்கித் துள்ளுவதாயிற்று என்ற பொருள்பட, “ தண்ணார் நறுங்கமலம்மலர் சாயவ்விளைவாளை விண்ணார் குதி கொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே” என்று பாடியருள்கின்றார். இவ்வாற்றால் ஞானசம்பந்தர் காட்டும் இயற்கைக் காட்சிகள் இனிய சொல்லோவியமாக வொழியாது ஞான நிலையமாகவும் அமைந்திருப்பது அறிந்து இன்புறற் பாலது.  15. கண்டவர் விண்டது "கண்டாரும் விண்டதில்லை; விண்டாரும் கண்டதில்லை" என்பது நந்தனார் சரித்திரக் கீர்த்தனையில் காணப்படுவது. இதன்கண் முன்னடியினும் பின்னடியைத் திருவாசகத்தில் கீதங்கள் பாடுதல் ஆடுதல்லால் கேட்டறியோம். உனைக் கண்டறிவாரை என வரும் தொடர் உறுதிப் படுத்துகிறது. கண்டவர் விண்டிலர் என்ற கருத்து ஒரு கால் என் மனத்தை இயக்கிற்று. சமயக் குரவர் பலரும் இறைவனைக் கண்டவர்களாயிற்றே என்ற எண்ணம் எழுந்தது. "கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறியதன கண்டேன்" எனத் திருநாவுக்கரசர் அருளிய திருமொழி நினைவுக்கு வரவும், அவர் கண்ட திறம்காண முயன்றேன். அம் முயற்சியின் விளைவு இக்கட்டுரை. நாவுக்கரசர் வரலாறு நாடு நன்கறிந்தது. நாவுக்கரசர் என்ற பெயர், அவரது இயற் பெயரன்று, அவருக்குப் பெயர் மருள் நீக்கியென்று சேக்கிழார் கூறுகின்றார். "உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிரே போல், மலருமருள்நீக்கியார் வந்தவதாரம் செய்தார்" என்பது அவரது கூற்று. உலகில் வருகின்ற இருளை நீக்கி ஒளி விளங்கத் தோன்றும் ஞாயிறு போல, நாட்டில் விரிந்த மருட்சி நீக்கித் தெருட்சி விளங்கத் திருநாவுக்கரசர் தோன்றினார் என்பது இதன் கருத்து. மருள் என்பது, பொருளல்ல வற்றைப் பொருள் என்றுணர்வது என்பர் திருவள்ளுவர். பரம் பொருளாகிய சிவத்தை யல்லது பிறவற்றைப் பரம் எனக் கருதும் மருள் அந்நாளில் பரவிய தனால், அம்மருளை நீக்கிச் சிவமே பரம் எனக் காட்டுவர் என்று உணருமாறு அத்தொடர் நிற்பது காணலாம். எனவே சிவத்தைத் தெளியக் கண்டுணர்த்தும் திறம் திருநாவுக்கரசர் பால் அவர் தோன்றும் போதே உடன் தோன்றியது என்று காட்டுவது போல மருணீக்கியார் என்ற திருப்பெயர் வலியுறுத்துகிற தன்றோ? இனி, பொருளல்லவற்றைப் பொருளென உணரும் மருள் எப்போது தோன்றுகிறது? பொருளல்லவற்றுள் மூழ்கித் திளைக்கிற போது, அவை பொருளெனத் தோன்றுகின்றன; அறிவும் மருளுகிறது. அம்மருட்சி தெளியும்போது தான் பொருளென மயங்கியவை பொருளல்ல என்பது விளங்குகிறது. அதற்கொப்பவே, மருள் நீக்கியார் தம்மைப் பெற்ற தந்தை தாயரை இழந்து பெருமருட்சியுற்றுத் தம் தமக்கையின் துணையால் ஒருவாறு தெளிவு பெறுகிறார். "பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்" என்பது போலக் கலிப்பகையார் "போர்க்களத்து உயிர் கொடுத்து" மறைந்தது திலகவதியாரின் வாழ்வொளியை மறைத்தது; மருள் நீக்கியார்க்கு உண்டாகிய மருள் பெரிதாயிற்று. "தம்பியார் உளராக வேண்டுமென" திலகவதியார் மனத்துள் "வைத்தயா" அவரை உயிர் வாழச் செய்தது; இல்லை யாயின் மருள் நீக்கியார் தாமும் அது நீங்காது சைவவுலகினும் அதனை நீக்காது போயிருப்பர். இதனால் அவர் மருள் நீங்கினார் என்று கூறிவிடலாகாது, தமக்கையார் அவர்க்குத் தாயினும் பரிந்து சான்றோனாக்கும் பணியில் தந்தையினும் சிறந்து விளங்கினாராகவும், சமய நூற் பயிற்சியில் தலைப்பட்ட மருள் நீங்காது வேற்றுச் சமய மருட்சியில் மூழ்கினார். சேக்கிழாரும், "சமயங்களான வற்றின் நல்லாறு தெரிந்துணர்ந்தும்" மருள் நீங்கும் "திறமிலரானார் என்றும், அதற்குக் காரணம் நம்பரது அருளில்லாமை என்பது விளங்க "நம்பர் அருளாமை யினால்" வேற்றுச் சமயம் குறுகினார் என்றும் கூறுகின்றார்." மருளுடையார் பொருளல்லவற்றுள் மூழ்கித் திளைக்குங்கால் அது பொருளெனக் கருதித் தம் கண்ணையும் கருத்தையும் செலுத்து வது போல, மருணீக்கியாரும் சமண் சமயத்தைச் சார்ந்து அதுவே பரமெனக் கருதிப் புலமைமிகுந்து, அவர் சமண் தருமம் பரப்பும் தானைக்குத் தலைவராகித் தருமசேனர் ஆனார். சேக்கிழார் "அந்நெறியில், புலன் சிறப்ப" என்று குறிக்கின்றார். பின்பு அவர், தம்மைத் தாக்கி வருத்திய சூலைநோய் செய்த துன்பத்தால் மருட்சி நீங்கினார்; திருவதிகைப் பெருமானை மருணீங்கிய தெருட்சி விளக்கும் பாக்களைப் பாடி நாவுக்கரசர் என்ற திருப்பெயரை எய்தினார். இத்திருப்பெயரையும் அரசரோ, சான்றோரோ, பொது மக்களோ இடவில்லை; வானொலியொன்று தெரிவித்தது, "நாவுக் கரசு என்று உலகேழினும் நின்நாமம் நயப்புற மன்னுக என்று யாவர்க்கும் வியப்புற மஞ்சுறை வானிடையே ஒரு வாய்மை எழுந்ததுவே" என்று வரலாறு கூறுகிறது. திருவதிகையில் திலகவதி யாரால் சைவராகிச் சிவபிரானைச் செந்தமிழாற் பாடவும் இது நிகழக் கண்ட மக்கள் பலரும் அவ்வானொலி கேட்டு வியப்பும் உவப்பும் மீதூர்ந்தனர் என்பது "யாவர்க்கும் வியப்பு உற மஞ்சுறை வான் இடையே ஒரு வாய்மை எழுந்தது"என்பதனால் தெளிவாகிறது. இனி, நாவுக்கரசரை அப்பர் என்பது பெரு வழக்கு. நாவுக்கரசர் திருப்பூந்துருத்திக்குச் சென்றிருக்கையில், ஞானசம்பந்தர் பாண்டி நாட்டினின்றும் அங்கு வந்தார். அவர் முத்துச் சிவிகை வருவது மரபு. பூந்துருத்தியெல்லையில் அவரை வரவேற்ற கூட்டத்துள் ஒருவராய் நாவுக்கரசரும் சென்று, சிவிகை சுமப்பாருடன் கலந்து அதனைத் தமது முதிய தோளில் தாங்கி வந்தார். அதனையறியாத ஞானசம்பந்தர், நாவுக்கரசரைக் காணவிழைந்து "அப்பர் எங்குற்றார்" எனக் கூட்டத்து மேலோரை வினவினார். அது கேட்டதும் நாவுக்கரசர் நம்மைத்தான் கேட்கின்றார் சம்பந்தர் எனவுணர்ந்து, "இங்கு உற்றேன்" என்பவர், அன்பால் மனம் உருகி, "உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெரு வாழ்வு வந்தெய்தப் பெற்று இங்கு உற்றேன்" என்றார். இங்ஙனம் ஞானசம்பந்தரால் அப்பர் என்ற இன்சொல் பொதுவாகத் தந்தைக்குரிய முறைப் பெயராயினும், தந்தை நிலையில் வைத்துப் போற்றற்குரியவரை, அப்பா என்றும் அப்பர் என்று வழங்கும் இயல்பினால், இங்கே நாவுக்கரசர் "அப்பர்" எனப்படுகின்றார். இந்நிலையில் சிவபரம் பொருளையும் தந்தை, எந்தை என்பது போல அப்பன், என்று உரைப்ப துண்டு. திருநாவுக்கரசரும் சிவனை, "ஆதிரை நாளா அமர்ந்தார் போலும் ஆக் கூரில் தான் தோன்றி அப்பானாரே" எனவும் "அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ" எனவும் "அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன்" "அந்தணனை அறநெறியில் அப்பன் தன்னை" எனவும் பல பாட்டுக்களில் பாராட்டுவர். அது கண்டவர் சிலர், சிவபெருமானை அப்பர் என்று பாடியதனால் நாவுக்கரசர்க்கு அப்பர் என்பது பெயராயிற்றெனச் சொல்லுகின்றனர். நாவுக்கரசரேயன்றி, ஞானசம்பந்தரும் நம்பியாரூ ரரும் மணி வாசகரும் பிறரும் சிவனை அப்பன் என்றும் அப்பா என்றும் வழங்குவராதலால் அது பொருந்தாது. சிவபெருமானையும் நாவுக்கரசரையும் அப்பன் என்று கொள்வோமாயினும், சிவனை அப்பன் என்ற ஒருமைச் சொல்லும் நாவுக்கரசரை அப்பர் என உயர் சொற்கிளவியால் உரைப்பதும் மரபு. சிவபரம்பொருள் கண்டற்கரியது. அதன் அருமையை, "ஒருத்தரால் அறிய வொண்ணாத் திருவுருவுடைய சோதி" (23.2) என்றும், " அண்டமார் இருளூடு கடந்து உம்பர் உண்டு போலும் ஓர் ஒண்சுடர் அச்சுடர் கண்டு இங்கு ஆர் அறிவார்" (211.2) என்றும் " என்னிறம் என்று அமரர் பெரியார் இன்னம்தாம் அறியார்" (88.8) என்றும் நம் அப்பர் அறிவிக்கின்றார். இங்கே ஒருத்தரால் என்ற விடத்துத் தொக்கிநிற்கும் உம்மையை விரித்து ஒருத்தராலும் எனக் கொள்ள வேண்டும், எத்துணையுயர்ந் தோராயினும் சிவன் காண்பதற்கு அரியவன் என்பது கருத்து. ஒருத்தராலும் அறியவொண் ணானாயின், அவனை நினைத்தலும் அடைதற்கு முயலலும் வீண் அன்றோ எனின், காணாவாறு இருளில் மறைந்து கிடந்து ஒழியாது யாவரும் கண்டறிவதற்காகவே பேரொளி யாய்ப் பிறங்குகிறான் என்றதற்கே "திருவுருவுடைய சோதி", "உம்பர் உண்டுபோலும் ஓர் ஒண்சுடர்" என்று இயம்புகின்றார். அப்பே ரொளிதான் எங்கே உளது என்பார்க்கு, அண்டத்து அப்பால் உளது என்பாராய், "இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழுலகும் கடந்து அப்பால் நின்ற பேரொளி" (215.10) என்று உரைக்கின்றார். அப்பேரொளியின் உண்மை யுணர்ந்த விண்ணவரும் மண்ணகத்துப் பெரியோரும், அதன் நிறம் இன்னது என்று அவர்களால் அறிய முடியவில்லை; அதனால் "என்னினும் என்று இன்னம் தாம் அறியார்"என்று இயம்புகின்றார். பெரியோருள், அண்டம்கடந்து அதனைச் சூழ நிறைந்த இருள் கடந்து அதற்கு அப்பால் உள்ளது ஒரு பேரொளி என அறிந்தோர் உண்டு என்பது இனிது புலப்படவே, "அண்டமார் இருளூடு கடந்து உம்பர் உண்டு போலும் ஓர் ஒண்சுடர்" என்றார் போலும். உரையசை அங்ஙனம் ஒளியைக் கண்டும் அதன் நிறம் உரு முதலிய கூறுகளை அறிய இயலாமைப் பற்றிக் "கண்டு யார் அறிவார்" ஒருத்தரும் இல்லை என்பதாம். எல்லாம் வல்ல இறைவன் "காட்சிக்கு எளிய"னாதல் அவற்கு மாட்சியாக இருப்ப, ஒருத்தராலும் அறியவொண்ணாதவனாக காண்டற்கு அரியனாக இருப்பது எவ்வாறு பொருந்தும்? எனின், காண்டற்கு உரிய நெறியுளது; அந்நெறியே நோக்கினால், மிக்க எளியனாய்த் தோன்றி இன்புறுத்துவன். விஞ்ஞான நெறியில் நுண்பொருள் காண விழைவார்க்கு அந்நெறிக்குரிய அறிவு வேண்டும்; மருத்துவ நெறியின் முயல்வார்க்கு மருத்துவ வறிவு முற்பட வேண்டும். பொறியியல் அறிவுடையார்க்கே பொறியியல் துறையில் நுண்மை தேர்ந்து புதுமை காண முடியும். அவ்வாறே, சிவத்தைக் காண்டதற்குச் சிவஞானம் வேண்டப்படுகிறது. சிவஞானமுடை யார்க்குச் சிவம் பெறுதல் கூடும். இதுபற்றி ஆராய்ந்து சிவஞானம் கைவரப்பெற்ற மெய்கண்ட தேவர், சிவபரம்பொருள் நமது இயற்கையால் அறியப்படுவதன்று; அறியப்படாமை யால் இப்பொருள் என்று சொல்ல முடியாது; சிவஞானத்தால் உணர்வார்க்குத் தெற்றென விளங்கும் செம்பொருள், சிவசத்தாம் என்பது விளங்க, "உணர்உரு அசத்து எனின், உணராது இன்மையின், இருதிறனல்லது சிவ சித்தாம்" என்று கூறுகின்றார். சிவஞானம் பெறுவது எங்ஙனம் எனின், சிவநெறிக்கண் முயல்வது. அறிவுத் துறையில் முயலும் மாணவர்க்கு அந்நெறியில் மயக்கமுண்டாகுங்கால் ஆசிரியன் வந்து அதனை நீக்கி உரிய நெறியை அறிவுறுத்துவதை நாம் காண்கின்றோம். அவ்வாறே சிவநெறிக்கண் முயலுங்கால் தோன்றும் அறியா மையைப் போக்கிச் சிவஞானத்தை அருளுவன். சிவநெறிக்கண் முயலும் நெறியும் அதன்கண் சிவபரம் பொருள் அருளும் திறமும் நமக்குச் சமய குரவ ரென்ற முறைமை தோன்ற; " பொறிப்புலன்களைப் போக்கறுத்து உள்ளத்தை நெறிப்படுத்து நினைப்பவர் சிந்தையுள் அறிப்புறும் ஆமதாயவன் ஏகம்பம் குறிப்பினாற் சென்று கூடித்தொழுதுமே" (162.4) என்று நாவரசரே நவில்கின்றார். இங்ஙனம் பொதுப்படக் கூறிய அப்பர் பெருமான், தனக்கு இறைவன் சிவநெறி அருளிய திறத்தை "நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டி ஆண்டாய்" என்று உரைக்கின்றார். நன்னெறி காட்டிய வகையையும் நாவுக்கரசர் தெரிவிக்காமல் விடுகின்றாரில்லை. நமது உயிர் இருள் செய்யும் மலம் கலந்து, அதன் வழித்தோன்றும் வினை செய்து இடர்ப்பட்டுத் தெளிவு பெறாது தடுமாறித் தியங்குவது இயல்பு; அதனைக் கெடுத்துச் சிவஞானத்தைச் சிவபெருமான் அருளுகின்றான் என்று உரைக்கலுற்று. "இருளாய உள்ளத்தின் இருளை நீக்கி, இடர்பாவம் கெடுத்து ஏழையேனை உய்யத்தெருளாய சிந்தைகளைத் தெருட்டித் தன்போல், சிவலோக நெறியறியச் சிந்தை தந்த அருளானை" (268.4) என்று பாடுகின்றார். சிந்தையைத் தெருட்டியது எவ்வாறு? என இங்கே ஒருவாறு விளக்கப்படுகிறது. அதனைத் திருவெறும்பியூர்த் தாண்ட கத்தில் தன்னையும் தன் திறத்தறியாப் பொறியிலேனைத் தம் திறமும் அறிவித்து நெறியும் காட்டி, அன்னையையும் அத்தனையும் போல அன்பாய், அடைந்தேனைத் தோடர்ந்து என்னை ஆளாகக் கொண்ட தென் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் யானே" (305.1) என்று விளக்குகின்றார். இவ்வண்ணம் தன்னையும் தன் திறத்தையும் அறிவித்து, அதற்குரிய நெறியையும் காட்டிய பொழுது அந்நெறியைக் கடைப்பிடித்துச் செல்லும் தமக்கு இறைவன் காட்சியருளிய திறத்தை நாவுக்கரசர் நமக்கு அறிவிக்கின்றார். நூல்கள் "அந்நிய மின்மையின் அரன் கழல் செலும்" என்றம், "அயரா அன்பின் அரன் கழல் செலும்" என்றும் கூறுகின்றன; ஆயினும் உலகில் வேந்தன் அருளினாலன்றி அவன் திருமுன் செல்ல ஏனோர்க்கு முடியாது; உலகியல் தலைவரும் அப்பெற்றியரே. அவ்வாறே இறைவனைக் காண்டற்கும் அவன் திருவருள் வேண்டும். அது பற்றியே நாவுக்கரசர், "அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால், இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாது" என்று கூறுகின்றார். இயல்பிலே காணலாகாத நுண்ணிய பொருள் களைக் காண்டற்கெனக் கருவிகள் அமைதல் போல இறைவனைக் காண்டற்கு அவன் திருவருள் கருவியாகும். ஆனால் அக்கருவிகட்கு அடிப்படை அறிவு ஆவது போலத் திருவருளும் அறிவு வடிவாய்க் காண்பார். அறிவிற் கலந்து அவனைக் காணச் செய்வதுதான் இங்கே திருவருளே கண்ணாகக் காண்பது என்று கூறப்படுகிறது. வேந்தனருளோ, தலைவனதருளோ அவனைச் சூழவுள்ளோரது துணையால் பெறப்படுகிறது; இறைவன் திருவருள் எவ்வாறு எய்தும்; அவன் உலகில் தலைவர் போல அன்றி, "இருநிலனாய்த் தீயாகி நீருமாகி, இயமானனாய் எறியும் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்ட மூர்த்தியாய்" இருத்தலின் "அவனது அருள் பெறுமாறு யாங்ஙனம் எனின், அவன் இருநிலனு மாவன்; அல்லனுமாவன்; உயிர்கட்கு அருளல் வேண்டியே இவ்வாறு நிலமுதலியனவாகவும் அல்லனாகவும் உள்ளான். உமை கேள்வனான திருவுருவும் நமக்கு அருள்வது குறித்ததே என்பார். "விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேதவிதியல்லர் விண்ணும் நிலனும் திரிதருவாயுவல்லர் செறுதீயு மல்லர் தெளிநீருமல்லர் தெரியில் அரிதரு கண்ணி யானை ஒருபாகமாக அருள் காரணத்தின் வருவார்" (8.2) என்று அறிவிக்கின்றார்." இவ்வாறு அருளுதல் காரணமாக எழுந்தருளும் இறைவன், நமக்கு அருளும் செயல் மிக்க விளப்பாக உளது. உயிரறிவு அது நின்ற உடம்பின் அமைப்புக்கு ஏற்ப விளக்கமுறுகிறது; அதுபற்றியே திருமூலர், "உடம்பால் அழியின் உயிரால் அழிவர், திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்" என்று கூறுகின்றார். இதனால், திருவருள் ஞானம் பெறுதற்கு உடம்பு பெருங் கருவியாவது தெற்றென விளங்கும். உடம்பு, ஊன், உயிர், உணர்வு என்ற மூன்றுக்கும் உறைவிடம் அருள் ஒளி பெறுதற்குரியது உயிருணர்வாயினும், அதற்கு ஊனுடம்பு கொள்கல மாதலின், அதுவும் அருள் ஒளி நிறைதல் வேண்டும். ஊனும் உயிரும் உணர்வும் அருளில் தோய்ந்து ஒன்றாயினன்றி உண்மை ஞானம் கைவர முடியாது. இதனை நாவரசர், "ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகிப் பிற அனைத்தும் நீயேயாகி, நான் ஏதும் அறியாதே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்" என்று உரைக்கின்றார். உயிர் உணரும் தன்மைத்தாயினும் உணர்வு இருக்குமிடம் உயிரே என்பது தோன்ற "உயிராகி அதனுள் நின்ற உணர்வாகி" என்று சுட்டிக் காட்டுகின்றார். இங்ஙனம் ஊனும் உயிரும் உணர்வுமாயினும் திருவருள் அவ்வாறு ஆவது உயிருணர்வால் அறியப்படுவதில்லை; உடம்பிற்குள் உடன் உறையினும், அதன் கண் உருவாகும் நோய், உயிருக்குத் தெரிவதில்லை; அதுபோலத் திருவருளின் தோய்வும் உயிருக்குத் தெரியாது போகிறது. அது விளங்குதற்கே "நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து" என்றும், உடலினுள் தோன்றிய நோய் விளைவிக்கும் துன்பத்தால் அதன் உண்மை வெளிப்படுவது போல, அதற்கு மறுதலையான திருவருள் உயிருணர்விற் கலந்து நல்லன தீயன காட்டும் போது அதன் உண்மை உணரப்படும். அதற்காகவே, "என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டாநின்றாய்" என்றும், அடியேற்குக் காணாகாட்டும் கண்ணாம் கருகாவூர் என்றும் நம் நாவேந்தர் நவிற்றுகின்றார். நல்லறிவால் நோயுண்மை உணர்ந்தவன், மருத்துவ வறிவு சிறந்தவராயின் நோய் முதல் நாடுவர். ஆதுபோல, நன்ஞானிகள் முன்பு தெரியா திருந்த நல்லனவும் தீயனவும் பின்பு தெரிகின்றபோது அதற்குக் காரணம் திருவருளின் காட்டும் உதவி எனத் தெரிகின்றனர். நல்லதன் நலனும் தீயதன் தீமையும் காணுங்கால் இன்பம் பெருகுவது இயல்பாக அறிந்தது. அந்த இன்பமும் திருவருளின் பயன் என்பதை சிவஞானிகள் தெளிந்து, திருவருட்கு முதலாகிய சிவத்தைக் காண்பதற்கு விருப்ப மிகுவர். இவ்விருப்ப மிகுதியால் திருநாவுக்கரசர் சிவத்தைக் காண முயல்கின்றார். காணும் திறம்யாது? காணப்படும் உருவும் அருவமு மாகிய உலகியற் பொருள்களையும் அவற்றின் செயல்களையும் அறிவதும், அறிந்தவற்றை மனத்தால் எண்ணுவதும், பின்பும் மனத்தின் கண் உள்ள எண்ணங்களை உள்ளத்தின்கண் கொணர்ந்து உணர்வதும் என வரும். இவற்றை நால்வகைப்படுத்து முறையே வாயிற் காட்சி, மானதக் காட்சி, தன் வேதனைக் காட்சி யோகக் காட்சி என்றும் கூறுவர். மானதக் காட்சி மானதம் என்றும் கனவு என்றும் இரு வகைப்படும். இவற்றை முறையே பொறி புலன்களால் புறத்தே உலகப் பொருள்களை அறிவது வாயிற்காட்சி; பொறிகளை விடுத்து அளவு காட்டியவற்றை மனத்தால் காண்பது கனவுக் காட்சி; மனத்தின் நடுக்கூறாகிய சித்தத்துள் சிந்தித்துணர்வது மானதக் காட்சி. இவை நிகழும் போது உயிருணர்வு முறையே புருவ நடுவிலும், கழுத்திலும் மார்பிலும் இவற்றின் மனத்தால் எண்ணியவற்றையே கனவின் கண் கண்டு உண்மை மெய்ப்படு மிடத்தும் கனவு; பொறிகளாற் கண்டனவும் மனத்தால் எண்ணினவும் தன் முன் மயங்கி வேறு வேறு தோற்றங்களாய்ப் பொய்ப்படுமிடத்தும் கனவேயாகும். இவற்றின் வேறாகத் தன் வேதனைக் காட்சி, யோகக் காட்சி என இரண்டு கூறுவர். அக்காட்சிகள் தவறான மனவெல்லைக்கு அப்பாற்படுதலால் அவை சொல்லுக்கு அகப்படுவதில்லை; இன்பம் துன்பம் என்பன உண்மையுணர் வேயாயினும் அவை உணர்வாய் ஒழிகின்றனவேயன்றி உரைப்பதற்கு அகப்படுவ தில்லையன்றோ! அதனால், கண் முதலிய பொறிகளாற் காணும் வாயிற் காட்சி, கனவுக் காட்சி, சிந்தைக் கண் வைத்துக் காணும் மானதக் காட்சி என்ற மூன்றாலும் சிவ பரம்பொருளைத் தாம் கண்ட இயல்பை நாவுக்கரசர் "பாவுற்றசிலர் செற்தமிழ் இன் சொல்" வளப்பதிகங்களில் பகர்கின்றார். கண்ணாகிய பொறி வாயிலாகச் சிவபரம் பொருளைத் திருப்பாசூரில் "வேலை சூழ்ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்புமாகி ஏபலகம் தொழுதேத்திக் காண நின்ற கண்ணாகி மணியாகிக் காட்சியாகிக் காதலித்தங் கடியார்கள் காண நின்ற பண்ணாகி இன்னமுதாம் பாசூர்மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தவாறே" எனவும், திருநாரையூரில் "அடியேற்கு நினைதோறும் அண்ணிக்கின்ற நாவானை நாவினில் நல்லுரை யளானை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே", எனவும் உரைக்கின்றார். திருவாய்மூரில், "பரிந்தார்க்கருளும் பரிசும் கண்டேன். பாராகிப் புனலாகி நிற்கை கண்டேன். விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன், மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே" எனக் கண்ட காட்சியை விரித்துக் கூறுகின்றார். அவர் திருப்பூந்துருத்தியில் "நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை கல்லாதன வெல்லாம் கற்பித்தானைக் காணாதன வெல்லாம் சொல்லி யென்னைத் தொடர்ந்து இங்கு அடியேனை ஆளாக்கொண்டு பொல்லாவென் நோய் தீர்த்த புனிதன் தன்னைப் புண்ணியனைப் பூந்துருத்தி கண்டேன் நானே" எனவும் இசைக் கின்றார். இவ்வாறு பலவகையிலும் பரமனைக்கண்டு மகிழ்ந்த நாவரசர்க்கு ஆராமை மீதூர்கிறது. வேறு சில திருப்பதிகட்குச் சென்று வழிபடுகையின் அவ்வாராமை தீரக் காண்கின்றார். கஞ்சனூர் சென்று கண்ணுதற் கடவுளைக் கண்டு பரவுகின்றார். அக்காட்சியால் அவரது ஆர்வம் நிறைகிறது. அதனால், "உருத்திரனை உமாபதியை உலகானானை உத்தமனை நித்திலத்தை ஒருவர் தன்னைப் பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பினானைப் பசும் இரவாய் நீர் வெளியாய்ப் பரந்து நின்ற, நெருப்புதனை நித்திலத்தின் தொத் தொப்பானை நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக், கருத்தவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு உயர்ந்தேனே" என்று பாடி மகிழ்கின்றார். கழுக்குன்றத்தில் பெற்ற சிவக் காட்சியை "மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை முதுபிணக்காடு உடையானை முதலானானை ஆவினில் ஐந்து கந்தானை அமரர் கோனை ஆலாலமும் உண்டுகந்த ஐயன் தன்னைப், பூவினில் மேல் நான்முகனும் மாலும் போற்றப் புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைக் காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே" என்றும், கற்குடியில் பெற்ற காட்சியை, "பெண்ணவனை ஆணவனைப் பேடானானைப் பிறப்பிலியை இறப்பிலியைப் பேராவானில் விண்ணவனை விண்ணவர்க்கு மேலானானை வேதியனை வேதத்தின் கீழ்பாடும் பண்ணவனைப் பண்ணில் வரு பயனானைப் புராவனைப் பாரில் வாழ் உயிர்கட் கெல்லாம் கண்ணவனைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே" என்றும் படிப்பவரும் படிக்கக் கேட்பவரும் மனமுருகுமாறு இயம்புகின்றார். சிவபரம் பொருளைக் கண்ணாரக் கண்டு இன்புற்ற திறம் கற்பகம் போலா நாவரையார்க்கு இன்பப் பயன் தந்துள்ளது. அதனை வியந்தே, தாண்டகந்தோறும் கற்பகம் என்று கனிந்து மொழி கின்றார். மேலும் அக்காட்சி அவர்க்கு மிக்கதோர் இன்பத்தைச் செய்துளது. அதனால், காளத்தியில் வழிபட்டுப்பாடிய திருத்தாண்டகத்தில், " அண்ணாமலையான் காண் அடியாரீட்டம் அடியிணைகள் தொழுதேத்த அருளுவான்காண், கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சியான் காண் காளத்தியான் அவன் என் கண்ணுளானே" என்று இசைக்கின்றார். இங்ஙனம் நனவிற் கண்டு பாடிய நாவரசர், இறைவனைக் கனவிலும் கண்டு இன்புறுகின்றார். திருவொற்றியூரில் வழிபட்டவர், ஒற்றிப் பெருமானைக் கனவிற் கண்டு தாம் பெற்ற பயனை, "வண்டோங்கு செங்கமலம் கழுநீர்மல்கும் மதமத்தம் சேர் சடைமேல் மதியம் சூடி திண்டோர்கள் ஆயிரமும் வீசிநின்று திசை சேர நடமாடிடச் சிவலோகனாா உண்டார் நஞ்சு உலகுக்கோர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார் கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்றன் கடும் பிணியும் நடுதொழிலும் கைவிட்டவே" என்று உரைக்கின்றார். ஒரு கால் அவர் ஆலவாய்ப் பெருமானைக் கனவில் கண்டார்; அக்காட்சி கனவுபோல இன்புறுத் தினமையின், அதனை " பட்டமும் தோடும் ஓர் பாகம் கண்டேன் பார்திகழப் பலிதிரிந்து போதக்கண்டேன் கொட்டிநின்று இலயங்கள் ஆடக்கண்டேன் குழைகாதில் பிறை சென்னி இலங்கக் கண்டேன் கட்டங்கக் கொடிதிண்தோள் ஆடக்கண்டேன் கனமழுவாள் வலம் கையில் இலங்கக் கண்டேன் சிட்டனைத் திருஆலை வாயில் கண்டேன் தேவனைக் கனவில் நான் கண்டவாறே" என்று பாடிக் காட்டுகின்றார். இவ்வாறே, திருநல்லூரில் கண்ட கனவை, " செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள் திகழ்முத்தனைய நஞ்சணிகண்டன் நல்லூர் உறை நம்பனை நான் ஒருகால் துஞ்சிடைக் கண்டு கனவின் தலைத் தொழுதேற்கு அவன்தான் நெஞ்சிடை நின்று அகலான் பல காலமும் நின்றனவே" என்று உரைத்து, கனவிடைப் போந்த இறைவன் தமது நெஞ்சின் கண்ணே நிலை பெற்று விட்டான்; மறையவில்லை என்று தெரிவிக் கின்றார். இவ்வண்ணம் நனவிலும் கனவிலும் இறைவனைக் கண்டு இன்பம் எய்திய நாவுக்கரசர், பொறிவாயிற் காட்சியைப் போக்கறுத்துச் சிந்தைக்குள் நோக்கும் மானதக் காட்சியில் சிவனைக் காண்கின்றார். அந்நிலையிற் கண்டதனை, பொன்னொத்த மேனிமேற்பொடியும் கண்டேன் புலித்தோல் உடைகண்டேன் புணரத்தன்மேல் மின்னொத்த நுண்ணிடையாள் பாகம்கண்டேன் மிளிர்வ தொருபாம்பும் அரைமேற்கண்டேன் அன்னந்தேர் ஊர்ந்த அரக்கன் தன்னை அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன் சின்னமலர்க் கொன்றைக் கண்ணி கண்டேன் சிவனை நான்சிந்தையுட் கண்டவாறே என்று உரைக்கின்றார். சிவபொருமான் சிந்தைக்குள் தோன்றுவது எங்ஙனம்? சிந்திப்பவர் சிந்தையும் அதன்கண் பிறக்கும் தெளிவும் அவன் திருவருளால் அமைவனவாய் அவனேயாதலால் அவன் அங்கே தோன்று வதில் ஐயமில்லை. இக்கருத்தைத் திருவாப்பாடி நேரிசையில், "சிந்தையும் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி வந்தனன் பயனுமாகி" என்று அறிவிக்கின்றார். இதனால் தெளிந்த சிந்தையில் சிவம் தோன்றி இன்பம் செய்யும் என்பது இனிது விளங்குவது காணலாம். " முன்நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார் தம் நெஞ்சம் தமக்குத்தாம் இலாதவர்; வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லிரே என் நெஞ்சில் ஈசனைக் கண்டது என் உள்ளமே" என்று தெரிவிப்பது காண்க. மேலும், இதன்கண், தன் நெஞ்ச தனக்கேயாக, தன் வழி நிற்பதாக நிறத்திக் கொண்டவழி மூர்க்கத் தன்மை கெடும்; அது போதாது; அதன்கண் சிவனைக் காணவேண்டும்; அக்காட்சியால் நெஞ்சம் வன்மை நீங்கி மென்மையும் கசிவும் பெறும்; அதுபற்றியே "வன்னெஞ்சம் அது நீங்குதல் வல்லிரே" என்று இசைக்கின்றார். மென்மையால் நன்மையெய்திய நெஞ்சில் இறைவன் எழுந்தருளு கிறான் என்பதற்குச் சான்று வேறு வேண்டா என்பார்," "என் நெஞ்சில் ஈசனைக் கண்டது என் உள்ளமே" என்று எடுத்துரைக்கின்றார். உடம்பு முழுவதும் கண்ணுக்கத் தெரியாத துவாரங்கள் நிறைந்ததாயினும், இதனுள் இருக்கும் மனத் தாமரையில் சிவபரம் பொருள் இருப்பான்; அவனை அதன் கண் வீற்றிருக்கக் காணலாம்; அவனை வானவர் முதலிய பலர்க்கும் காண்பரியன் என்பர்; மற்று யானோ, என் நெஞ்சத் தாமரையில் நன்கு கண்டேன் என்பாராய், அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினைமின் நீர்கள் பொள்ளல் இக்காயம் தன்னுள் புண்டரீகத்திருந்த வள்ளலை வானவர்க்கும் காண்பரிதாகி நின்ற துள்ளலைத் துருத்தியானைக் தொண்டனேன் கண்டவாறே" என்று உரைக்கின்றார். இங்ஙனம் சிந்தையிற் சிவனைக் காண்டற்கு வழியாது? நம் சமயக் குரவரான நாவுக்கரசர், அதனைக் கூறாமல் இல்லை. "கொள்வோன் கொள்கைவகையறிந்து" நல்லறிவு கொளுத்தும் ஞானாசிரியராதலால், சிவபரம்பொருளைச் சிந்தையிற் காண்டற் கெனத் திருக்கன்றாப்பூர்த்தாண்டகத்தில் விடிவதுமே வெண்ணீற்றை நிறையப் பூசி வெளுத்தமைத்த கீளொடு கோவணமும் தற்று செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றும் செங்கதிக்கு வழிகாட்டும் சிவனே என்றும் துடியனைய இடைமடவாள் பங்கா என்றும் சுடலைதனில் நடமாடும் சோதீ என்றும் கடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே, என்று அறிவுறுத்துகின்றார். 'அப்பரடிகள்' தமிழ்நாடு தெய்விகப் பேரவை சென்னை - 1973 பக் முதல் 15 வரை 16. தில்லையில் நாவுக்கரசர் ஞானசம்பந்தர் காலத்தில் உடனிருந்தவர் திருநாவுக்கரசர். அவர் சமணசமயத்தினின்றும் நீங்கித் திருவதிகையில் சைவராகித் திருப்பதிகங்கள் பாடத் தொடங்கினார் என்பது வரலாறு. அவர் திருப்பாதிரிப் புலியூர் முதலிய பதிகளை வணங்கி வழிபட்டுப் பதிகங்கள் பாடிக் கொண்டு திருவெண்ணெய் நல்லூர், திருவாமாத் தூர், திருக்கோவனூர் முதலிய திருப்பதிகளில் வழிபாடாற்றித் திருத் தூங்கானை மாடத்தில் சிவக்குறி பெற்று முதுகுன்றப் பெருமானை முழுதும் பரவித் தில்லைப் பதி நோக்கினார். அதனையுரைக்கவந்த சேக்கிழார், " ஆனாத சீர்த்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற வானாறு புடைபரக்கும் மலர்ச்சடையார் அடிவணங்கி ஊனாலும் உயிராலும் உள்ளபயன் கொளநினைந்து தேனாரும் மலர்ச்சோலைத் திருத்தில்லை மருங்கணைந்தார்" என்று இசைக்கின்றார். தில்லையம்பலத்தே ஆடுகின்ற பெருமானை வணங்குவது, ஊனும் உயிரும் பெற்ற பயன் என்பது இதனால் விளங்குவது காணலாம். ஊன் உடம்பின் மேலும், உயிர் உணர்வின் மேலும் நிற்கின்றன. உடம்பில் வழி உணர்வு வடிவிற்றாய உயிர் ஞானமும், உயிரில் வழி உடம்பு ஞானத்தின் பயனாகிய இன்பப் பேறும் எய்துமாறில்லை. ஆகவே, இரண்டும் ஒன்றாய் இயைந்தே இறைவனை நினைந்து பாடிப் பணிந்து பயன்பெறல் வேண்டும் என்ற கருத்தால் "ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து" என்றும், ஞான நிலையம் திருவம்பலமும், ஞானப் பேரின்பத் திருக்கூத்தும் ஆதல் "மெய்ஞ்ஞானமேயான அம்பலமும் உண்ணிறை ஞானத்து எழும் ஆனந்த ஒருபெரும் தனிக் கூத்தும்" என்பதால் அறியப்படும். அம்பலம் அணைந்து கண்ணாரக் கண்டு கும்பிடுதல் ஊனால் கொள்ளும் பயன்; ஆங்கெய்தும் இன்பக் களிப்பு உயிராற் கொள்ளவரும் பயன். திருநாவுக்கரசர் தில்லைப் பெரும் பதியின் எல்லையை அடைகின்றார். அவரது பொன்னிறம் கொண்ட மேனியில் தூய வெண்ணீறு திகழ்கிறது; மார்பில் அக்குமணி வடம் கிடந்து அழகு செய்கிறது; கை உழவாரப்படை தாங்கக் கண்கள் நீர்பொழிய, வாய் சிந்தை சிவன் திருவடிவத்தாய்த் தாங்குகிறது. இத்திருவுருத்தை மனக் கண்ணிற் கண்ட தெய்வப் புலமைச் சேக்கிழார், " தூயவெண்ணீறு துதைத்தபொன் மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடிதைவரு சிந்தையும் நைந்துருகிப் பாய்வதுபோல் அன்பு நீர்பொழி கண்ணும் பதிகச் செஞ்சொல் மேயசெவ்வாயும் உடையார்" என நம்மனத்தே தோன்ற உரைக்கின்றார். இப்பெற்றியரான நாவுக்கரசர், மருதவளம் சிறந்த தில்லை யெல்லை பூம்பொழி லும், புனற் பொற்கையும், புள்ளுறையும் சோலைகளும், சூழ்ந்து பொற்புற்று விளங்குகிறது. கானில் களிமயில்கள் ஒன்றுக்கொன்று எதிர் நின்றாட வாவிகளில் மலர்ந்து மணம் கமழும் தாமரைகள் மக்களின் முகம் போல நின்று அவரை வரவேற்கின்றன. ஒருபால் வளமிக்க வயல்கள் பரந்து தோன்றுகின்றன. அவற்றிடையே மலர்ந்து தேன் சொரிய நிற்கும் தாமரை முதலிய பூக்களில் புதியவற்றைத் தேர்ந்து எருமைகள் மேய்கின்றன. அருகில் மூங்கிற் புதர்கள் நின்று விளங்க, அவற்றோடு ஒப்ப வயல்களில் கரும்பு பெருகிக் காடு போல் செழித்துக் கணுக்களில் முதிரும் முத்துக்களைச் சொரிகின்றன. அது, நாவரசராகிய பெரியவர் திருவடியைக் கண்டு நெஞ்சுருகிக் கண்ணால் நிர்துளிப்பது போல் நின்றது என்பாராய், "இங்குப் பெருகிப் புடை முதிர்தரவம் சொரிவன பெரியோரவர் திருவடிவைக் கண்டு உருகிப் பரிவுறுபுனல் கண்பொழிவன என முன்புள்ள வயல் எங்கும்" என்று சேக்கிழார் இன்புற்று இயம்புகின்றார். மருதவயல் வழிவரும் வாகீசப் பெருந்தகை நெல் வயல்களைக் கடந்ததும் நந்தவனம் எதிர் நிற்கக் காண்கின்றார். அதனுட் புகுந்ததும், "அறிவிற் பெரியார் அயல் நெல்பனை வயவனை பிற்படும் வகை" அணைகின்றமை கண்ட குயிலினங்கள் இனிது கூவத் தலைப்படுகின்றன. அவற்றின் இன்பொலி, " பிறவிப்பவ நெறிவிடுவீர் இருவினைபெருகித் தொடர்பிணி உறுபாசம் பறிவுற்றிட அணையுமின்" என்று உரைப்பது போன்றுளது. கிளிகளும் பூவைகளும் "அரகர" என இசைக்கின்றன. அதனோடு, அவற்றின் ஒலி தவம் முன்புரிதலில் வருதொண்டு எனும் நிலைதலை நின்று உயர் தமிழ் இறையோராம் இவர்தம் திருவடிவதுகண்டு அதிசயம் என்று பொருளைத் தருகிறது. முன்னைத் தவத்தால் இப்பிறப்பில் சிவத் தொண்டு புரியும் நிலைமை எய்திற்றென்றும் அதன்கண் நின்று உயர்ந்தனர் நாவுக்கரசர் என்பதும் அதன் கருத்து. இங்ஙனம் கிளியும், பூவையும் பாடும் நந்தவனம் புகுந்து போந்த வானளாவியுயர்ந்த மதில் சூழ்ந்த தில்லை நகரின் குடதிசை வாயிற்புறம் வந்துற்றார். வருகையறிந்த தில்லையுறையும் தவமுதல் வர்களான அடியார்கள் அவரை எதிர் கொள்ள வாயில் கடந்து வயல்பக்கம் சென்ற வழியூடு சென்று நாவரசை எதிர் தொழுது அணைந்தனர். குடதிசைக் கோயில் வாயிற் புறத்து உள்ளது சிவமே நிலவிய வீதி; அங்கே கல்வித்துறை வல்லபலரும் மறை முதல் கரை கண்டவரும் வாழும் செல்வக் குடிகள் நிறைந்தது. சிற்றம்பலம் மேய செல்வன் கழல் தொழும் செல்வம் மிக்கன அக்குடிகள் என்பாராய்க் "கழல் பேணும் செல்வக் குடி நிறை நல்வைப்பு" என்று சேக்கிழார் சிறப்பிக்கின்றார். மணிமாலைகளும், மலர்மாலைகளும் நிறைந்த அவ்வீதியில் பல்வேறு புவனங்கட்கு முதல்வரான இமையவர் முடிகள் தாக்குண்டு உதிரும் மணித்துகள் பரவுகிறது; அதனைக் காற்றுக் கடவுள் துடைக்க வருணன் நீர் தெளித்துப் பணிமாற அதனால் தூய்மை போதாமை கண்டு அடியார்கள் அலசி விடுவதும் புனல்விடுவதும் செய்கிறார். திருக்கோயிலை அடுத்துள்ள வீதிகளில் வான வெல்லையிற் பறக்கும் கொடிகளால் ஞாயிற்றின் வெயிற் கதிர் நுழைவது அரிது; அந்த அழகுமிக்க திருவீதியை நாவுக்கரசர் முறைப்படி வணங்கி, மறையொலியும், முனிவரின் ஏத்தொலியும் பெருகி நிற்கும் எழுநிலைக் கோபுரம் கண்டு வணங்கி உள்ளே புகுந்தனர். கோபுரவாயிலைக் கடந்ததும் உள்ளே கிடப்பது திருமாளிகை வீதி; அதனை வலம் வரும் நாவுக்கரசர் உள்ளத்தே அம்பலக் கூத்தன்பால் உண்டாகிய ஆர்வம் அளவிற் பெருக அலமரல் எய்துகிறது. அன்பு கடல் போற் சிறந்து தோன்ற உடலெங்கும் புலம் உண்டாகிறது. அந்நிலையில் பொற்கோபுர வாயிலை அடையும் நாவரசர், சிவபெருமான் நடம்புரியும் பொன்மன்ற எதிர் தோன்றக் காண்கின்றார். திருமிக்க அம்மன்றின்கண் ஒலிபெருகி நிறைந்து நினைவு செல்லுகிறது. அதனைச் சென்று கூடற்கு அன்புமிக்கு எழவும், கூடற் கண் தோன்றும் இன்ப நுகர்ச்சிக்கு ஒத்த சத்துவகுணம் மேம்படுகிறது; அவரும் திருநடம் கண்டு ஆராப்பேருவகையுற்றுத் தொழுவாராயினர். இதனைச் சேக்கிழார் பெருமான், "நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளிநிறை அம்பலம் நினைவுற நேரே கூடும்படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெறவரும் நிலை கூட.... ஆடுங்கழல் புரி அமுதத்திருநடம் ஆராவகை தொழுது ஆர்கின்றார்" என்று கூறு கின்றார். இதன்கண் திருஎன்பது பேராசிரியர் கூறுவது போலக் கண்டார் விரும்பும் தன்மை. இத்திருவுடன் ஒளியும் பெருகுவது பற்றி நீடும் திருவின்பயன், கண்ட நாவரசின் உள்ளத்தே அன்பு பெருகச் செய்தலால் அங்கே நிறையும் பெருகொளி துக்க மோகங் களைப் பயக்கும் இராசத் தமோகுண இருளைப் போக்கிச் சத்துவகுணத்தை விளங்கச் செய்வது தோன்ற "இன்புறுகுணம் முன்பெறவரும் நிலைகூட" என்று இயம்புகிறார். இசையும், தாளமும், மெய்ப்பாடும், ஒன்ற நிகழும் ஆடல் பொதுவாக இன்பம் தருவதாகலின், ஆடலரசாகிய சிவபரம் பொருள் அடி எடுத்தாடும் திருக்கூத்து அமுதம் பொழிதலால், "ஆடும் கழல்புரி அமுதத் திருநடம்" என அறிவுறுத்தப்படுகிறது. ஆதிபந்தமில்லாத அருள்நடனமாதலின் அதன் இன்பத்தை இடையறவின்றிக் கண்டும் நாவுக்கரசர் ஆர்வம் தணியாமை புலப்பட "ஆராவகை தொழுது" ஆர்கின்றார் என்று பாடுகின்றார். இங்ஙனம் பாடி மகிழும் சேக்கிழார் நாவரசர் கூத்தப்பெரு மானைக் கண்டு ஆர்வம் பெருக இன்புற்றதை நுணுகி நோக்கி அவருடைய அகமும் புறமுமாகிய கருவி கரணங்களின் செயல்வகை களைத் தனித்தனியாக எடுத்துரைப்பது நாமும் கண்டு இன்புறத் தக்கதாகும். " கையும் தலைமிசை புனையஞ்சலியன கண்ணும் பொழிமழை ஒழியாதே பெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவின பேறெய்தும் மெய்யும் தரைமிசைவிழும் முன்பெழுதரும் மின்தாழ்சடையொடு நின்றாடும் ஐயன்திருநடம் எதிர்கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவின்றால்" கைகள் தலைமேற் குவிந்துள்ள; கண்ணில் மழை போல் நீர் ஒழுகுகிறது; இவைகள் புறக்கருவிகள். அகக் கருவிகளான மனம், சித்தம், அகங்காரம், புத்தி, என்ற கரணங்களும் அன்பால் உருகுகின்றன; இவ்விருகருவிகட்கும் இடமாகிய நாவுக்கரசரின் மெய்விழுவதும் எழுவதுமாகவுளது. மனமுதலிய கரணங்கள் அன்பால் உருகினாலன்றிக் கைகள் தலைமேலேறி அஞ்சலி கூப்புதலும், கண்ணில் நீர்பொழி வதும் நிகழாவாதலால், கையும் கண்ணும் கூறியவுடன் கரணங்களைக் கூறுகின்றார். கரணம் நான்காதலால், அவை உருகிய வழிப்பெருக்கம் மிகுதலால், "பெய்யும் தகையன கரணங்களும்" என்று உரைக்கின்றார். உருகுதற்கேது அன்பு என்பார், "உருகும்பரிவின" என்கின்றார். அகமும் புறமும் ஒன்றப் பெறுவதுடன், ஆடும்பரமன் திருக்கூத்துக் காணும்பேறும் அதுவாயிலாக அவன் ஆடும் அம்பலத்தை மெய்யால் அடைந்து ஆராவகையால் தொழுது வணங்கும் பேறும் ஒழுங்கு எய்துவது பற்றி, "பேறு எய்தும் மெய்" என்று விளம்புகின்றார். கரணங்கள் உருகும் பரிவின ஆயினமையின், விசைக்கயிறற்ற பாவைபோல அவரது மெய்தானாகவே விழுவதும் எழுவதுமாயிற்று என்பார், "மெய்யும் தரைமிசை விழுமுன்பு எழுதரும்" என்கின்றார். இனி, அம்பலத்தின்கண் ஆடும் பெருமான் திருநடத்தை, "மின்தாழ் சடையொடு நின்றாடும் ஐயன் திருநடம்" என்று இசைக்கின்றார். இருந்தும் கிடந்தும் ஆடல்வகையுண்டு எனினும், அவை பலரும் கண்டு இன்புறற்கு ஆகாமையின், கூத்த பிரான் நின்றாடுகின்றான் என்றும் ஆடுங்கால் அவன் திருமுடியிலுள்ள செஞ்சடை உலகெங்கும் உயிர் தோறும் ஒளிசெய்யுமாற்றால், ஒலியாலும் நிறத்தாலும் ஒருபுடையொக்கும் விண்ணிற்றோன்றும் மின்னலைத் தாழச் செய்தலின், "மின்தாழ் சடை" என்றும் குறிக்கின்றார். தாழநின்று ஆடும் ஐயன் திருநடம் பன்முறை வணங்கியெழும் நாவுக்கரசர்க்கு உள்ளத்தே ஆர்வம் பெருகுகிறது; பெருமானுடைய திருமுகக் குறிப்பு என்று வந்தாய் என்பது போலவும் உளது; இதனால் அவர்மனத்தெழும் ஆர்வம் அளவிறந்து விடுகிறது. அதனால் "அவர் ஆர்வம் பெருகுதல் அளவின்றால்" என்று தெரிவிக்கிறார் ஆசிரியர் சேக்கிழார். இறைவனது திருமுகத் தருட்குறிப்பு அவரது அருள் நலத்தைக் காட்ட, அதனால் கழி பேரின்பம் எய்தும் வாகீசப் பெருந்தகை, " பாளையுடைக் கமுகோங்கிப் பன்மாடம் நெருங்கியெங்கும் வாளையுடைப் புனல்வந்தெறி வாழ்வயல் தில்லைதன்னுள் ஆளவுடைக்கழல் சிற்றம் பலத்தான் ஆடல்கண்டால் பீளையுடைக் கண்களால் பிள்ளைப் பேய்த் தொண்டர் காண்பதென்னே" என்று தொடங்கும் விருத்தத் திருமொழியையும், " கருநட்டகண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச் செருநட்டமும்மதில் எய்ய வல்லானைச் செந்தீமுழங்கத் திருநட்டமாடியைத் தில்லைக் கிறையைச் சிற்றம்பலத்துப் பெருநட்டமா டியை வானவர்கோண் என்று வாழ்த்துவனே" என்று தொடங்கும் விருத்தத் திருமொழியையும் பாடுகின்றார். இவ்வாறு மனமகிழ்வால் மைந்துற்றுப் பாடிய திருநாவுக்கரசர், தில்லைச் சிற்றம்பலத்துக்குத் தாம் வந்த காரணத்தை " பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகி எத்தினாற்பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா முத்தனே முதல்வாதில்லை அம்பலத்து ஆடுகின்ற அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே" என்று தொடங்கும் திருநேரிசையைப் பாடலுற்றார். விருத்தத் திருமொழிகள் தமது பத்தி நலத்தைப் பெருகக் காட்டாது சொல் நலத்தையே காட்டு கின்றன என்ற கருத்தாலோ, ஆராமையாலோ, எடுத்த எடுப்பில் "பத்தனாய்ப்பாடமாட்டேன்" என்று ஓதிக் கூத்தப் பெருமானை, நீ எனது பத்தி எல்லைக்கு அப்பால் மேம்பட்டுள்ளாய் என்பார். பரமனே என்றும், யோகியராவார் கருவிகரணங்களின் நீங்கி அறிவை மறைக்கும் மலத்தை வாட்டி அகக் காட்சியில் இன்புறுவாராக, போகங்களில் கலந்து ஒன்றாய் நின்றும் போகக் காட்சியொழியாத யோகம்புரிகின்றவனே என்பார் "பரமயோகி" என்றும் எடுத்துரைக்கின்றார். ஞானசம்பந்தரும் இதனை வியந்து, "நல்லூர்ப் பெருமணத்தான் நல்லபோகத்தன் யோகத்தையே புரிந்தானே" என்று இயம்புகின்றார். பரம யோகியாகிய உன்பால் பத்தி கொள்வ தாயின், அவ்யோக நெறியே பொருத்தமாயிருக்க, யான் அது செய்யாது திருக்கோயில் திருவலகிடல் மெழுகல் உழவராம் செய்தல் முதலிய எளிய செயல்களையே செய்கின்றேன்; யோக ஞான நெறிகளை மேற்கொள் வேனல்லேன் என்றற்கு "எத்தினால் பத்தி செய்தேன்" என்றும், இதுபற்றி என்னை இகழ்ந்து அருளாமை கூடாது என்பார், "என்னை நீ இகழவேண்டா" என்றும் கூறுகின்றார். முத்திச் செல்வனும் அதற்கு முதல்வனும் அவனாதல் அவற்றையே தமக்கு நல்க வேண்டும் என்பதற்கு முத்தனே முதல்வா என்றும் இதற்கு அம்பலத்தே ஆடு ம் ஆடல் காட்சி வாயிலென்பது தோன்ற "தில்லை அம்பலத்து உன் ஆடல் காண்பான் அடிய னேன் வந்தவாறே" என்றும் உரைக்கின்றார். இங்ஙனம் பத்தனாய்ப் பாடமாட்டேன் என்றனர். அடுத்த பாட்டில், பத்தி பண்ணற்குரிய கருத்துடைமை தோன்றவும் நான் பாட இயலாதவன் என்பார், "கருத்தனாய்ப் பாடமாட்டேன்" என்றும், அதற்குக் காரணம் நீ ஒருத்தராலும் கருவிகரணங் களைக் கொண்டு அழியும் அறிவுக்கு எட்டாதவன் என்பார் "ஒருத்தரால் அறியவொண்ணாத் திருவுருஉடைய சோதி" என்றும், ஆயினும், நீ எம்போல்வார் அறிதல் வேண்டும் என்ற பேரருளால் தில்லை யம்பலத்துக் கூத்தாடும் பெருமானாக உருவு கொண்டு அருள்புரி கின்றாய் என்பார். "தில்லை தன்னுள்.... சிற்றம்பலத்தே திருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்தவாறு" என்றும், அதற்குத் தில்லைப் பதியைத் தேர்ந்து கொண்டதற்குக் காரணம் அதன் திருத்தமுடைமை என்றற்குத் "திருத்தமாம் தில்லை" என்றும் கூறுகின்றார்; வைதிகமும் சைவமும் கை கலந்து களிநடம்புரியும் எல்லையாதல் தோன்றத் திருத்தமாம் தில்லை எனப்பட்டது. எதுகை நோக்கி பெருமானது கூத்து திருத்தம் எனப்பட்டது. காணும் அவாமிகுதியால் நேர்பட வந்தவாறு என்றார். யான் வந்த காரணத்தைக் கேட்குமுறையில் என்னை நின்வாய் திறந்து கேட்பாயாகில் என்பார் "கேட்குமா கேட்டியாகில்" என்றார். என்று வந்தாய்? என்று கேட்பது போலப் பெருமானது திருக்குறிப்பு இருந்தமையின், இவ்வாறு கூறினார் என்றலும் ஒன்று. அதற்கு விடை கூறும் நாவுக்கரசர், நினது உமையாள் காண ஆடும் நலமும் அதனிடைச் சுரக்கும் இன்பத்தையும் நான் ஒருவரும் கூறக்கேட்ட தில்லை; ஏனெனில், யான் என்கிளைகளாக இருந்த சமன் சான்றோர் குழலினின்றும் பிரிந்த தில்லை என்பார், "கேட்டிலேன் கிளைபிரிவேன்" என்றும், பின்னர் நின் திருவருள் வாய்த்தமையின், நின் திருவடியை நெஞ்சில் நிலைபெறக் கொண்டேனாக திருக்கூத்துக் காணும் வேட்கை எழுதலால் நான் வந்தேன் என்றற்கு "நாட்டினேன்.... நெஞ்சினுள்ளே.... ஆடுமாறு" என்றார். ஒன்றைச் செய்யுமிடத்துச் சிறிது நேரம் அதன்கண் ஒன்றி நிற்பதும் இடையீடுபட்ட வழித்திகைத்துப் பிறிதொன்றைப் பற்றிச் செல்வதும் மனத்துக்கு இயல்பு. அவ்வாறின்றி மேற்கொண்ட நின் திருவடிக்குரிய பணியை என் சிந்தை கலக்கறாது செறிவுடன் செய்தற்கு நீ அருகுதுல் வேண்டும் என்று அடுத்த பாட்டில் வேண்டுகின்றனர். செய்தற்குரிய பணிவகை யறியாமல் மயங்குகின்றார். அதனால் "யாது நான் செய்வது" என்றும், அதனை அறியாத தமது நிலைமைக்கு இரங்கி என்னே என்றும், நடம்புரியும் இறைவன் திருவடியைக் காண்கின்றார். சிறிது நிற்பினும் கால்வலி காணும் தம்மைப் போல இறைவன் திருவடி இரவும் பகலும் இடையாறாது ஆடல்புரிவதால் வருத்துமே என ஐயுற்று, "தில்லைச் சிற்றம்பலத்தே அந்தியும் பகலும் ஆட அடியினை அலசுங் கொல்லோ" என வருந்துகிறார். இறைவன் ஆடும் சிற்றம்பலத்தை அடைந்தவர், "இறைவ, உலகவர் ஏத்த நீ ஆடுமாற்றைக் கண்டவாறே திரிந்து நாளும் நின் திருப்பாதம் கருத்திற் கொண்டிருந்து நின் அருட்குறிப்பின்வழி நின்று ஆடிப்பாடிக் கூடுவேன் என்று கண்டவா.... ஆடுமாறே" என்று பாடுகின்றார். எண்டிசையோரும் கண்டு ஒத்த ஆடும் முறையைக் கண்டதனால், அங்ஙனமே அதனை எங்கும் காணத்திரி யுமாறு தோன்றக் "கண்டவாதிரிந்து" என்றும், ஆடும் திறம் கண்ட வாறே கண்ட அப்பொழுதே கரணம் திரிந்து கருத்திடை நின்னைக் கொள்வேனாயினேன் என்றும் குறித்தவாறு. பார்த்திருந்து... வந்தவாறே. இதன்கண், சிற்றம் பலத்துக் கூத்தா நான் கூடவந்தவாறு உன் கூத்துக் காண்பான் வந்தேன்; அதனால், நான் பார்த்திருந்து பரவுவன்; பாடியும் ஆடியும் உன்னை மூர்த்தியே என்பன்; மூவரில் முதல்வன் என்பன். நீயும் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்; இனி ஒரு குறையும் இல்லை என்றும் இயம்புகிறார். பொய்யினை.... வந்தவாறே பரம, அம்பலத்தே நின் ஆடல் காண்பான் நான் வந்தவாறு இது; வந்துகாண்டலால், யான் பொய்தவிர்த்து அகத்தடிமை செய்ய நீ அருளல் வேண்டும்; ஆதிமுதலும், ஆதிமூர்த்தியும் நீயாதலால் உனக்கு இது அருமையன்று; பொய் தவிர்த்தலான்றி மெய்யடிமை யாதல் நில்லாமை பற்றிப் பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா அடிமை செய்ய அருளிச் செய் என்றார். புறமலா அடிமை, அகத்தடிமை; மெய்யடிமை. மனத்தினால்....வந்தவாறே மனத்தே திகைப்புண்டு நாடோறும் மாண்பலா நெறியிற் சென்று மக்கள் இடர்ப்பட்டு ஓலமிடு கின்றனர்; அதுகண்டு கலங்குகின்ற நான் வேறு செயல்வகை அறியேன்; அதனால் நின் இலயம் காண்பான் வந்தேன் என்று இப்பாட்டிற் கூறுகின்றார். நெஞ்சினை....ஆடுமாறே. என் நெஞ்சைத் தூயதாக்கி நன்னினைவுகளை நினைப்பிக்காமல், வேற்று நினைவுகளால் வேதனையை நான் எய்தச் செய்கின்றாயாதலால், அதனின் நீங்கற்கு அஞ்சொலாள் காண அம்பலத்தே நீ ஆடும் ஆடல் காண்பான் வந்தேன். நினது அருட்கூத்து என் நெஞ்சினை நேர்ப்படுத்தும் என்று இப்பாட்டில் கூறுகின்றார். மண்ணுண்ட.....ஆடுமாறே மண்ணுண்டமாலும் மலர் இருந்த அயனும் விண்ணுண்ட திருவே விரும்பி முயன்றமையின் நின் உருவம் காணமாட்டாராயினர்; திருமிக்க அம்பலத்தின் பண்ணுண்டபாடலோடு நீ ஆடும் திறம் காணின் அவர் விரும்பிய அடிமுடியும் காணலாம் என்று இப்பாட்டில் கூறக்கின்றார். இவ்வண்ணம் பாடிப் பரவிய நாவுக்கரசர். திருவம்பலத்தின் முற்றத்திலும் பக்கங்களிலும் உழவாரப்பணி செய்து பின் திருவீதியிலும் அதனைச் செய்து மகிழ்வாராயினர். இத் திருப்பணியால் தமக்குத் திருவருளின்பம் எய்துதலால் பெருமகிழ்ச்சி கொள்வது நாவரசரின் நல்லுள்ளம். இந்நிலையில் சிற்றம்பலம் அடியார்க்கு வேண்டும் உணவும் உடையும் உறையுளும் தந்து வாழ்விக்கும் சிறப்புடைமை கண்டு வியக்கின்றார். உழவாரப் பணி மேன்மேலும் உலகையே மிகுவிக் கின்றது; கண்ணீர் வெண்ணீற்றைக் கரைத்துக் கொண்டு ஒழுகுகிறது. "பெருந்திருத் தொண்டு செய்து விருப்புறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்டலாட" மகிழ்கின்றார் எனச் சேக்கிழார் உரைக்கின்றார். இவ்வாறு பன்னாள் கழிகின்றது. இந்நாளில் "அன்னம் பாலிக்கும்" என்று திருக்குறுத் தொகையைப் பாடினார். 1. அன்னம்...பிறவியே இப்பாட்டில் சிற்றம்பலம் அன்னமும் பொன்னும் பூமிசை பெருக நல்கும்; இதன் காட்சி அன்பு பெருகுவித்தலால், இடையறாது கண்டு இன்புறுதற்கு இப்பிறவி இன்னமும் கிடைக்குமோ. தில்லை அன்னமும் சிற்றம்பலம் பொன்னும் பாலிக்கும்; அம்பலக் காட்சி அன்பு பெருகுவிக்கும்; இவற்றைப் பெற்று இன்புறும் பிறவி இன்னும் கிடைக்குமா? என்று கூறுகின்றார். 2. அரும்பற்றப்பட....எம்பிரானையே இப்பாட்டில், அரும்புகள் விலக்கப்பட நின்ற மலர்கள் கொண்டு, சுரும்பு தாதுண்ட பூக்களை விலக்கிக் காமனைக் காய்ந்தவனான எம்பிரானைத் தூவி வழிபடுவீராக என்று நமக்கு அறிவுறுத்து கின்றார். அம்பலம் இருக்கும் கோயில் திருமூலட்டானம் பெரும் பற்றப் புலியூர் அது புலியூர் என்றும் வழங்கும். 3. அரிச்சுற்ற.... உய்ம்மிளே. இதன் கண் வினையால் அரிப்புண்டு வருந்தும் நீர் எரியிடைப் படுமறு இறந்துவிட்டனரென்று பலரும் சிரித்து ஒழிக்கா முன் திருச்சிற்றம்பலம் சென்றடைக என்று இயம்புகின்றார். 4. அல்லல்....பூண்டேனுக்கே சிற்றம்பலர்க்கு எல்லையில்லா அடிமை பூண்டேனாதலால் அல்லலோ அருவினையோ, தொல்லை வினைத்தொத்தமோ ஒன்றும் ஒரு தீங்கும் செய்யாது என்று தெளிவுற்றுக் கூறுகின்றார். 5. ஊனிலாவி....வைப்பரே இதன்கண், சிற்றம்பலவனாகிய என் நாதனை என் உடம்பில் உயிர் இருக்குங்காறும் நான் பரவிப் பணிந்து கொண்டிருப்பேன்; அவர் என்னை வானுலகத்தே வாழவும் செய்விப்பர் என்கிறார். 6. சிட்டர்....காலனே இப்பாட்டில் சிட்டரும் வானவரும் தொழும் சிற்றம்பலவன் சேவடி கைதொழச் செல்லும் அச்சிட்டர் பால் காலன் அணுகான் என்கிறார். 7. ஒருத்தனார்...அறிவரே இப்பாட்டின்கண், சிற்றம்பலவனார் உலகுக்கு ஒரு சுடராயினும் ஒருத்தனார், திருத்தனார்; விருத்தனார்; இளையார்; விடமுண்ட அருத்தனார்; அவர் அடியாரை அறிந்த அருள் புரிவதில் தவறார் என்று கூறுகின்றார். 8. விண்ணில் நீத்தோர்...ஒருவனே இதன்கண், வெள்ளழலின் உருவாகி இருவர்க்கு அறிவொணாது, அம்பலத்துள் நிறைந்து நின்றாடுவன் ஒருவன் என்று உரைக்கின்றார். 9. வில்லை....உண்மையே இதன்கண் வில்லை வட்டமுற வளைத்து அவுணரது வட்டமான மதில் மூன்றையும் மாய்த்த வனது தில்லை வட்டத்தைத் தொழுவார் வினை அவர் வட்டம் கடந்து ஓடுமென்பது உண்மை என்பர். 10. நாடி....இருக்கவே. தில்லையம்பலத்தாடிபாதம் என் நெஞ்சுள் இருக்கையில் நாரணனும் நான் முகனும் தேடித் திரிந்துகாணவல்லரோ என்று இயம்புகிறார். 11. மதுரவாய்....உய்ம்மினே இதன்கண், மங்கை பங்கினனும் சதுரனுமான அம்பலவன் மலையை ஆர்த்தெடுத்த இராவணன் முடிபத்தும் இறுமாறு மிதித்த சேவடியைச் சென்றடையின் என நம்மைத் தெருட்டுகின்றார். இன்னோரன்ன குறுற்தொகைகள் பாடி இன்புற்ற நாவுக்கரசர், தில்லையின் நீங்கி வேட்களம் பணிந்து கழிப்பாலைக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்தார். ஓரிரு நாட்களில் அவர்க்குத் தில்லைப்பதியின் நினைவு வந்துவிட்டது. தில்லைப்பெருமானே நினைவுக் கெட்டாத நிலையினனாதலால், நினைத்தற் கரியன்; அவனது நினைவு எழுந்ததும் அவரால் கழிப் பாலையில் இருக்க முடியவில்லை. கடலில் வாழினும் கரையை நினைந்து போந்து வளைகள் முத்தின் கொழுந்து களை மனப்படப் பையில் சொரியும் காட்சி கழிப்பாலையில் அவனது அருட்கடலில் திளைக்கினும்,அவருள்ளம் தில்லையம்பலத்தை நோக்கிச் சென்று அவனைப்பாடவே விரும்பி அவரை உந்திற்று. இதனைச் சேக்கிழார் "மனைப்படப்பில் கடற் கொழுந்து வளைசொரியும் கழிப்பாலை" என்று குறிக்கின்றார். கழிப்பாலை ஞாழல்மரங்கள் நிறைந்த சோலை சூழ்ந்தது; அதனூடு அவர் நுழைந்து வருகையில், எப்பொழுது சென்று தில்லை காண்பது என்ற வேட்கை மிகுந்து அவரை மருகவே, நினைப்பவர் மனம் கோயில் கொள்ளும் அம்பல வாணனை நினைந்து பனைக்கை மும்மத வேழம் உரித்தனன் என்று தொடங்கும் குறுந்தொகையைப் பாடலானார். அதனைச் சேக்கிழார், "கழிப்பாலை மருங்கு நீங்கி, நனைச்சினைமென்குளிர் ஞாழல் பொழிலூடு வழிக்கொண்டு நன்ணும் போதில் நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டருளும் அம்பலத்து நிருத்தனாரைத் தினைத்தனையாம் பொழுதும் மறந்து உய்வனோ எனப்பாடித் தில்லை சார்ந்தார்." என்று உரைக்கின்றார். 1. பனைக்கை....உய்வனோ இப்பாட்டில், வேழம் உரித்தவனும், நினைப்பவர் மனத்தில் கோயில் கொள்பவனும், அனைத்துப் பொருளையும் தனக்கு மேனியாகக் கொள்பவனும் ஆகிய அம்பலக் கூத்தனைத் தினையளவு காலமும் மறந்து உயிர் வாழேன் என்கிறார். நினைப்பவர் நெஞ்சில் நினைந்த அப்பொழுதே நேர்படத் தோன்றி நிற்கும் நீர்மையன் என்றற்கு; நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் என்றும், விரைவு பற்றிக் கொள்பவன் என்னாது கொண்டவன் என்றும் கூறுகின்றார். உருவும் அருவுமாகிய எப்பொருளிலும் அப்பெருமான் வீற்றிருப்பது பற்றி அனைத்தும் வேடமாம் என்றும், அப்பெற்றியோன் தமக்குள்ளே இருப்பவும் அவனை நினையாதிருத்தல் உய்தியில் குற்றமாதலால் தினைப் பொழுதும் மறந்து உய்வானோ என்றும் கூறுகின்றார். 2. தீர்த்தனை....உய்வனோ இதன்கண், கூத்தப்பெருமானைச் சிவன், சிவலோகன், தீர்த்தன், மூர்த்தி, முதலாய ஒருவன் என்றும், பார்த்தனுக்கருளிய பரமன் என்றும் கூறி அவனைக் கொடியனாய் மறந்து உய்யேன் என்கிறார். தீர்த்தன், உயர்ந்தவன்; கங்கையாய தீர்த்தம் உடையவன் என்றுமாம். மூர்த்தங்களுக்கெல்லாம் முதல்வனாய் ஒருவனாய் நிற்றல் பற்றி முதலாய ஒருவன் என்றும், அடிசேர்வார் உறையும் உலகத்தை யுடையவனாதலால் சிவலோகன் என்றும் செப்புகின்றார். 3. கட்டும்...உய்வனோ இதன்கண், யாரும் விரும்பாத இடுகாட்டில் விரும்பிக் கையில் எரியேந்தி அடும் பரமன், சிட்டர் விரும்பும் சிற்றம்பலத்தும் கூத்தாடுவன் என்கிறார். எட்டனைப் பொழுது, எள்ளத்தனைச் சிறுபோது. 4. மாணி....உய்வனோ இதன்கண், பால்கறந்து ஆட்டிய மாணியாகிய சண்டேசுரர்க்கு உலகமெல்லாம் ஆளும் திருவை நல்கியது குறிக்கின்றார். நீருலகம், நீணுலகம். ஆணி "உழுவார் உலகத்தார்க்கு அணி" என்றார் போல. 5. பித்தனை....உய்வனோ இதன்கண் பெருங்காடு அரங்காக உடையனாயினும் யாவர்க்கும் முத்தியளிக்கும் முதல்வன் என்றற்கு முத்தனை என்றும், யாவர், சித்தத்துள்ளும் சிறக்க இருத்தலால் சித்தன் என்றும், அவனுக்கும் உயிர்கட்கும் உள்ள தொடர்பு தந்தைக்கும் மகற்கும் உள்ளதாம் என்றற்கு அத்தன் என்றும் கூறுகிறார். 6. நீதியை....உய்வனோ இதன்கண் எங்கும் நீக்கமற நிறைந்திருக்குமாறு விளங்க நிறைவை என்றும், இன்னதன்மையன் என்று அறிவொண்ணாமை பற்றி ஒருவர்க்கும் அறிவொண்ணான் என்றும், அவன் அருளால் அறியலுறுவார்க்கு அருட்பேர் ஒளியாய்த் தோன்றலின் சோதியை என்றும் கூறுகின்றோர். பொன்னில் வேய்ந்த அம்பல மாதலின் செம்பொன்னின் அம்பலம் என்று குறிக்கப்படுகிறது. 7. மைகொள்....உய்வனோ மை, கருமை, பை, படம். செம்பொன் நிறைந் திருத்தலின் திருமகட்கு இடமாதல் தோன்றச் செய்ய மாதுறை சிற்றம்பலம் என்றும், தலைமை பற்றி ஐயன் என்றும் குறிக்கின்றார். 8. முழுதும்....உய்வனோ இதன்கண், முன்பெல்லாம் செம்பொன் எனப் பொதுப்படக் கூறினாராகலின், அதன் தனிச் சிறப்புணர்த்த ஈண்டுத் தூய செம்பொன் என்றும், முன்னரே எழுதித் திட்டமிட்டு மேய்ந்தது என்றற்கு எழுதி மேய்ந்த சிற்றம்பலம் என்றும் கூறுகின்றார். 9. காருலாம்...உய்வனோ கொன்றை கார்காலத்து மலர்வது பற்றிக் காருலாம் மலர்க் கொன்றை என்கிறார். தேரோடும் திருவீதியையுடைய தில்லையைத் தேருலாவிய தில்லை என்கிறார். வாயால் உண்ணப்படாது உணர்வால் சுவைக்கப்படுதலின் ஆர்கிலா அமுது என்றார். 10. ஓங்கும்....உய்வனோ இங்கே, தொண்டல்லது வேறு துணை யில்லாமை பற்றிப் பாங்கிலாத் தொண்டனேன் என்றார். இவ்வாறு பாடிக் கொண்டே நடந்து தில்லையை அடைந்த நாவுக்கரசர், சிற்றம்பலத்தை நெருங்கியதும், அரியானை என்று தொடங்கும் தாண்டகத்தைப் பாடலுற்றார். தாண்டகப் பாவினும் சிறியவும் பெரியவும் என இருவகையுண்டு. அவற்றைப் பிறரெல்லாம் குறுந்தாண்டகம் நெடுந்தாண்டகம் என்பர். நாவரசர் பாடியவை நெடுந்தாண்டகமாகவும், சேக்கிழார் பெரிய திருத்தாண்டகம் என்று குறித்து, அதனை அடியார்கள் எப்போதும் ஓதியோதிச் சிந்தைக்கண் நீங்காதவாறு பாடுவர் என்ற கருத்துப் புலப்பட "அவர்தம் சிந்தை பிரியாத பெரிய திருத்தாண்டகச் செந்தமிழ்" என்று குறிக்கின்றார். செந்தமிழ் என்றதனால், இத் தாண்டகம் அரிய செஞ்சொற்களே கொண்ட மைந்தது என்பது பெற்றாம். அரியானை யந்தணர்தஞ் சிந்தையானை யருமறையி னகத்தானை யணுவை யார்க்குத் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கடங் கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப்புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. இதன்கண், அரியவற்றுள் எல்லாம் அரிய பொருளாதலின் பரம்பொருளை அரியானை என்றும், அந்தணர் சிந்தையுள் அகலாமை பற்றி "அந்தணர்தம் சிந்தை யானை" என்றும், அவர்தம் அகத்துறையும் மறைநூற்பொருளில் உள்ளீடாக இருத்தலால் அருமறையின் அகத்தானை என்றும், அகத்தேயும் அணுவுக்கணுவாய் எழுந்தருளுதலால் அணுவை என்றும் கூறுகின்றார். தத்துவப் புலவர் பலரும் சிவதத்துவத்துக்கு அப்பாற் சென்றில ராகலின், அதற்கப் பாலாய் உள்ள பரசிவநிலையை எண்ணி "யார்க்கும் தெரியாத தத்துவனை" என்றார். தத்துவம் கடந்து நோக்கும் யோகக் காட்சியில் காண்பார்க்குத் தேனும் பாலுமாய் இனிமை செய்தலின் தேனைப் பாலை என்றும், அவ்விடத்தும் ஒளி வடிவிற்றோன்றுதலின் திகழ் ஒளியை என்றும் ஓதுகின்றார். இதுகாறும் அகக்காட்சி கூறிய நாவுக்கரசர், புறக்காட்சிக்கு ஐம்பெரும் பூதமாயும் அவற்றை இயக்கும் திருமால் முதலிய தேவர்களாயும் அவர் கட்குப் பெரிய தலைவனாயும் இருத்தலால் பெரியானை என்றும், இப்பெற்றியுடைய பெருமானைப் பிறந்தநாள் முற்றும் பேசிப் பேசிக் கழிக்க வேண்டியிருத்தலால் பேசாத நாளெல்லாம் பிறவா நாள் என்றும் பேசுகின்றார். கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக் காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை அற்றார்க்கு மலந்தார்க்கு மருள்செய் வானை யாரூரும் புகுவானை யறிந்தோ மன்றே மற்றாருந்தன்னொப்பா ரில்லா தானை வானவர்க ளெப்பொகுதும் வணங்கி யேத்தப் பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. இதன்கண் கற்றோர்க்கு வரம்பாய் அறிவின்பம் நல்கிக் கல்லார் நெஞ்சில் நில்லாமையின், சிவனைக் கற்றானை என்றார். பேரருளாளனாதலின் அற்றார்க்கும், அலந்தார்க்கும் அருள் செய்வானை என்றும், தனிமுதலாதல் விளங்க மற்றோரும் தன்னொப் பார் இல்லாதானை என்றும், செய்வினையின்றி வினைப் போகமே நுகரும் இயல்பால் வானவர் மறுத்தற்குரிய ராயினும், அவர்தாமும் மறவாது தாமும் வணங்கி வழிபடப் பெறுதலின் வானவர்கள் எப்பொழுதம் வணங்கியேத்தப் பெற்றானை என்றும் கூறினார். கருமானி னுரியதளே யுடையா வீக்கிக் கனைகழல்கள் கலந்தொலிப்ப வனல்கை யேந்தி வருமானத் திரடோள்கண் மட்டித் தாட வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி அருமான வாண் முகத்தா ளமர்ந்து காண வமரர்கணம் முடிவணங்க வாடுகின்ற பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. இதன்கண் மான்தோல் உடையாக, காலில் கனைகழல் ஒலிப்ப, உமையவள் அமர்ந்து காண அமரர் வணங்க இறைவன் அம்பலத்தே ஆடும் நலம் சிறப்பிக்கப்படுகிறது. மட்டித்தல், மடங்குதல். அருந்தவர்க டொழுதேத்து மப்பன் றன்னை யமரர்கடம் பெருமானை யரனை மூவா மருந்தமரர் கருள்புரிந்த மைந்தன் றன்னை மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணுந் திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுத் திரிசுடர்க ளோரிரண்டும் பிறவு மாய பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே இதன்கண், உமையொடு கூடியிருந்தே யோக மூர்த்தியாய் விளங்குதலின் அருந்தவர்கள் தொழு தேத்தும் அப்பன் தன்னை என்றார். கருவி கரணங்களின் யோகமின்றித் தவமின்மையின் யோகியரை அருந்தவர் என்றார். அருந்தவரை நெறிகாட்டி யோகச் சால்புடைய ராக்குதலால் அப்பன் என்றார். அப்பன், தந்தை, சான்றோனாக்குவன் தந்தை. பூதங்கள் தோறும் நிற்றல் அவர்க்கும் பெருந் தகைமையாதலால் பிறவுமாய பெருந்தகை என்றார். அருந்துணையை யடியார்த மல்லல் தீர்க்கு மருமருந்தை யகன்ஞானத் தகத்துட் டோன்றி வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு வான்புலன்க ளகத்தடக்கி மடவா ரோடும் பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப் பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும் பெருந்துணையை பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. அடியார்தம் அருந்துணை; என முன்னும் கூட்டுக. அடியார்க்கு அறிவருளி நெறிகாட்டி உய்க்கும் செயலால் சிவனை அருந்துணை யென்றார். அல்லல் பிறவி நோயுமாம். ஞானமாய மருந்தருளிப் பிறவி நோயை நீக்குதலால் அருமருந் தென்றார். சுற்றத் தொடர் பறுத்து இருவகைப் பற்றும் அற்று, புலன்களை அடக்கி, பெண் போகத்தை மாற்றிப் பொது நீக்கிடும் இறைவனது நிலை எல்லோர்க்கும் பெருந்துணை புரிவது இதன்கண் கூறப்படுகிறது. கரும்பமரு மொழிமடவாள் பங்கன் றன்னைக் கனவயிரக் குன்றனைய காட்சி யானை அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் றன்னை யருமறையோ டாறங்க மாயி னானைச் சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச் சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. இதன்கண் வானம் மண் முதலிய துளங்கினும் துளங்காவியல் பினதாதலின் துளக்கில்லா விளக்கென்றார். வரும்பயனை யெழுநரம்பி னோசை யானை வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி அரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த வம்மானை யலைகடனஞ் சயின்றான் றன்னைச் சுரும்பமருங் குழல்மடவர் கடைக்க ணோக்கிற் றுளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப் பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. இதன்கண் துறந்தோர் இயல்பு கூறி அவர் கட்குப் பெரும்பயன் நல்கும் திறம் கூறப்படுகிறது. காரானை யீருரிவைப் போர்வை யானைக் காமருபூங் கச்சியே கம்பன்றன்னை ஆரேனு மடியவர்கட் கணியான் றன்னை யமரர்களுக் கறிவரிய வளவிலானைப் பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை யெண்ணில் பேரானைப் பெரும்பற்றப் பூலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. இதன்கண் அடியவர் எத்திறத்தாராயினும் அவர்க்கு அணி யனாய் அருளுவதும், அமுதுண்டு செய்வினையின்றி வாழும் தேவர் அறிவுக்கு அளக்க வொண்ணாமையும், பாரும் விண்ணும் பரவ நட்டம் புரிவதும் கூறப்படுகின்றன. இறைவனுடைய குணஞ் செய்லகள் எண்ணிறந்தன வாகலின் அவன் எண்ணில் பேரான் எனப்படுகின்றான். முற்றாத பால்மதியஞ் சூடி னானை மூவுலகுத் தானாய முதல்வன் றன்னைச் செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றன்னைத் திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக் குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் றன்னைக் கூத்தாட வல்லானைக் கோனை ஞானம் பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. இதன்கண், மூவுலகம் அவனே என்றும், அவ்வாறு தன்னைப் பிறர் ஆக்காது தானே ஆயதன்மை விளங்க மூவுலகம் தானாய முதல்வன் என்றும் கூறுகின்றார். முருகனிடம் ஞானம் பெற்ற குறிப்புத் தோன்ற ஞானம் பெற்றானை என்கிறார் போலும். காரொனிய திருமேனிச் செங்கண் மாலுங் கடிக்கமலத் திருந்தவனுங் காணா வண்ணஞ் சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத் திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும் ஏரொளியை யிருநிலனும் விசும்பும் விண்ணு மேழுலுகுங் கடந்தண்டத் தப்பா னின்ற பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. நிறம் கார்முகில்போற் கரிதாயினும் ஒளி யுடைமை பற்றிக் காரொளிய திருமேனிச் செங்கண் மால் என்றார். செங்கண், இயல்பாகவே சிவந் திருப்பது என்பர் பரிமேலழகர். சிந்திப்பவர்க்குச் சிந்தனைக்கண் தோன்றும் மயக்கங்களை ஞானத் தால் தெளிவித்து ஒளிபெறுவிப்பது பற்றிச் சிவனைச் சிந்தை தனை மயக்கம் தீர்க்கும் ஏரொளி என்றார். "அண்டமார் இருளூடுகடந்து உம்பர் உண்டு போலும்" ஒண்சுடராகலின், அப்பால் நின்ற பேரொளியை என்றார். தாண்டகம் பாடித் தமிழால் வழிபட்டு வரும் நாளில், செஞ்சடைக்கற்றை எனத் தொடங்கும் திருநேரிசையைப் பாடி அப்பதிகத்தில் சிற்றம் பலத்தே அருள் திகழத் துளங்கெரியாடுதலால், நஞ்சுடைக் கண்டனாரைக் கண்ணாரக் காணலாம் என்று கூறுகின்றார். அப்பதிகத்துள், தில்லையை, மஞ்சடை சோலைத்தில்லை (1);நாறு பூஞ்சோலைத் தில்லை (2);கடிகொள்பூந்தில்லை (3);செய் யெரிதில்லை (4);காரிடம் தில்லை (5);மதர்த்து வண்டறையும் சோலைமல்குதில்லை (6);சிறைகொள் நீர்த்தில்லை (7);நீடிரும் பொழில்கள் சூழ்ந்த மதியந் தோய்தில்லை (8); என்று சிறப்பிக் கின்றார். இவ்வாறு கூத்தப் பெருமானை இடையறவின்றி வாய் மலர்ந்து பாட நெஞ்சு அன்பு சூழ்ந்து உருக, கண்ணிலே நீர் நிறைந்து சொரிய திருக்கை உழவாரப்பணி செய்யத் திருநாவுக்கரசர் தில்லையில் பன்னாள் தங்கிச் சீர்காழியில் சம்பந்தர் தோன்றி" ஞானசம்பந்தரானது கேள்வியுற்று அவரைக் காணச் சென்றார். சென்றவர் வேறுபல பதிகட்குச் சென்று முடிவில் திருப்புகலூரில் சிவன் சேவடி அடைந்தார். மீட்டும் அவர் தில்லைக்கு வந்த குறிப்பு வரலாற்றில் இல்லை.  17. தில்லையில் சுந்தரர் திருவெண்ணெய்நல்லூரில் சிவபெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட பின் நம்பி ஆரூரர் சுற்றத் தொடர்பு அகன்று, திருத்துறையூர் திருவதிகை முதலிய பதிகளில் இறைவனைப் பாடிப் பரவிக் கொண்டு தில்லைப்பதியின் எல்லையை அணுகினார். அப்பொழுது அவர் செவியில் தில்லை நகரில் எழும் பல்வேறு ஒலிகள் கேட்டன. அவற்றை யாழொலி, முழவொலி, வேதவொலி, கீதவொலி எனப் பிரித்துணர்ந்து உரைக்கும் சேக்கிழார், "நரம்புடையா ழொலிமுழவின் நாதவொலி வேதவொலி, அரம்பையர்தம் கீத ஒலி அறாத்தில்லை" என்று தெரிவிக்கின்றார். தில்லைப்பதியின் எல்லையை "மல்லலம் பதியின் எல்லை" என்று சேக்கிழார் சிறப்பிக்கின்றார். மல்லல், வளமை. தில்லை மருத நிலத்தூராதலின், சுற்றிலுமுள்ள வயல்கள் நீர் நிறைந்துள்ளன; அதன்கண் கயல் மீன்கள் வாழ்கின்றன; அவற்றைப் புள்ளினங்கள் மேய்வான் இருப்பனவற்றால் நீர் அலம்பித் திரையெ ழுப்புகிறது. அதனிடையே வாளை மீன்கள் துள்ளிப் பாய்கின்றன; மலங்குகள் வேறு மல்கியுள்ளன. மலங்குகளை நினைவார்க்கு உயிர்களைப் பற்றி வருத்தும் மலங்கள் நினைவிலெழுதலின், அவற்றை அறக்கெடுக்கும் நலம் தில்லையம்பதிக்கு உண்டு என்று தெளிவுறுத்தற்குத் "தொழுவார்கள் தம் மும்மை மாமலங்கள் அறவீடருள் தில்லை"என்று கூறுகின்றார். நிற்க, தில்லை எல்லைக்குட் புக்க ஆரூரர், எதிரே தோன்று நந்தன வனங்களைக் காணுகின்றார். கருத்தில் மகிழ்ச்சியிருக்கிறது. அவ்வனத்தில் வன்னி, கொன்றை, வாழை, சண்பகம், ஆரம் (சந்தனம்) பலாசம், செருந்தி, மந்தாரம், கன்னி காரம் (கோங்கு) புன்னை முதலிய மரங்கள் நின்று மலர்ந்து அழகு செய்கின்றன. அவை தில்லைப் பெருமானுக்கு மலர் வழங்கி மாண்புறுதலால் அவற்றையும் ஆரூரர் பணிந்து செல்கிறார். மணம் கமழும் மலர்மாலை பால் மாவிருப்புடையராதலால், கற்பு, முல்லை, கூவிளம், வில்வம், மாலதி, மல்லிகை, கரவீரம், அலரி முதலிய அம்பலர்க்கு மணமலர் வழங்கும் மரங்கட்கு வணக்கம் செய்கின்றார் என்பது தோன்ற மணம் கமழ்தாரான் என்று ஆரூரரைக் குறிக்கின்றார். நந்தவனத்தை அடுத்து நகரைச் சூழ்ந்து கிடக்கும் அகழி காட்சி தருகிறது. அது பெருங்கடல் போந்து வலங் கொள்வது போலவுளது. கடல் வளம் கொளற்குக் காரணம் யாது? உலகுக்கெல்லாம் தனிநாயகியான உமையம்மை கண்டு மகிழவும், புவனங்களெல்லாம் உய்திபெறவும், பெருமான் ஆடல் புரிகின்றான்; நான்மறைகளும் ஆடும் சேவடியலப்பும் சிலம்பின் ஒலியைப் பேணிப் பரவுகின்றன; ஆகவே, நாமும் வலம் வந்து வணங்குவோம் என்று கருத்தால் வலம் கொள்கிறது என்பாராய், "இடமருங்குதனி நாயகி.... புடை சூழும்" என்று உரைக்கின்றார். கிடங்கில் கரையெடுத்து வானளாவி உயர்ந்த மதில் நிற்கிறது. உயர்ச்சி பற்றி முகிலினம் அதன் உச்சியிற் படிந்து தவழ்கிறது. மதிலும் கிடங்கும் தரும் இனிய காட்சி ஆரூரரின் தமிழ் உள்ளத் தில் அளவிறந்த அன்பு பெருகு விக்கிறது. மகிழ்ச்சி மிகுகின்றார். அகழியின்கண் தாமரைகள் மலர்ந்து விளங்கு கின்றன; அவற்றின் தாது படிந்துண்ட வண்டினம் கரையில் நின்று மலரும் கைதையிற் படிந்து மேனி வெளிதாகிப் பூத்தோறும் சென்று சென்று பாடுகின்றன. வண்டின் காட்சி சிவனடியார்களின் செயலை உள்ளுறுத்து நிற்பது சேக்கிழார்க்குத் தெரிகிறது. தாமரைமலர் செல்வமனையாகவும், அதன்கண் உறைந்த வண்டினம் செல்வத் தொண்டர் களாகவும் கைதைப் பொடி கலந்து வெண்ணிறம் பெற்றது வெண்ணீற்றில் மூழ்கிய திறமும் பூத்தொறும் வண்டு சென்று முரல்வது அத்தொண்டர் பரவும் தூய செயலாகவும் தோன்றி நம் அறிவைப் பணி கொள்கிறது. நகர்ப்புறத்தே தோன்றும் காட்சிகள் பல இருக்க, கமல வண்டு தாதும் காட்சி எடுத்தோதப் பட்டதற்குக் காரணம், அம்பலத்தாடும் இறையருள் தேனாகவும் அதனையுண்டு பாடும் நான்மறையாளர் வண்டாகவும் தோன்றுவதே என்பார், "மன்றுளாடுமது...மருங்கே" என்றார். புறக் காட்சி அகத்தே நிகழும் அருணிலையை நினைப்பித்தலால், ஆரூரர் சிந்தையில் அன்பு பெருகிக் குழைந்து வடக்கு வாயிலை அடைகின்றார். வாயில்கள் நான்கும் நாற்றிசையை விளக்க, கொடிகளிற் கட்டிய மணி நாவொலி மறைமுழக்கம் போன்று ஒலிக்க நான் முகந்தோறும் மறையோதும் நான்முகன் போல்வது கண்டு அயன் பொன்.... வாயில்கள்" என்று உரைக்கின்றார். வடதிருவாயிலை எய்தியதும் அவரைத் தில்லை வாழ் அடியார்கள் வணங்கி எதிர் கொண்டனர்; சுந்தரரும் அவர்களை வணங்கி மகிழ்ந்தார். இவ்விரு திறத்தாருள் தொண்டர் முன் வணங்கினரா? ஆரூரர் வணங்கினரா? என்றோர் ஐயம் இங்கே எழும்; அதனை நீக்கக் கருதிய சேக்கிழார், "அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ முன்பு இறைஞ்சினர் யாவர் என்று அறியாமுறைமை யால் எதிர் வணங்கி மகிழ்ந்தனர்" என்று உரைக்கின்றார். பின்பு நம்பி ஆரூரர் வாயிலின் அகத்தே அகன்று கிடக்கும் திருவீதி (பிராகாரம்) புகுந்தார். அங்கே எம்மருங்கும் முழக்கமே பெருத்திருந்தது; அவை மறையொளியும், வானதுந்துபி முதலிய முழக்கொலியும், பூமாலைகளில் மொய்க்கும் வண்டொலியும், தொண்டர் போற்றிசைக்கும் ஒலியும் எனப் பலவாம். வானத்து இந்திரன் உறையும் பொன்கோயில் போலும் மாளிகைகள் வானளாவி நிற்க, அவற்றின் உச்சியில் கட்டப்பட்ட கொடிகள் ஒலிக்கின்றன. யோக சிந்தையரான வேதியர்கள் வளர்க்கும் ஓமப்புகை சென்று வானத்தில் படிந்த கருமுகில் போல் பரவுகின்றன; அவற்றிடையே தோன்றும் மாளிகைக் கொடிகள் மின்னல் அடங்குவன போல விளங்குகின்றன. "மாளிகைக் கொடிகள்.....விளங்கும்" என்று சேக்கிழார் கூறுகின்றார். மாளிகையின் மேலிடத்தேயுள்ள நாசிகளில் தோகை மயில்கள் நிற்கின்றன; ஆகுதி செய்யும் வேள்விச் சாலைகளில் அரசிக்கட்டையின் தீச்சுடர் எழுகிறது; வாயில்கள் தோறும் மணித்தாமங்கள் தொங்கு கின்றன; மேடைகளில் எல்லாம் கலசங்கள் இருந்து காட்சிதருகின்றன; நேர் வரிசைகளில் செவ்விய ஒளி தோன்றுகிறது; சாலைகள் தோறும் செந்நெல்குவை மலைபோல் நிற்கின்றன; பந்தர் தோறும் தண்ணிய புனல் தரப்படுகிறது; நெடிய இடைவெளிகளில் தேவர்களும் சிறந்து திகழ்கின்றனர். உலகில் அழகுடையவென எத்தனையோ பொருள்களும் இடங்களும் கூறப்படுகின்றன. உலகுகளும் எத்தனையோ பல உள்ளன. அவ்வழகுகள் அனைத்தும் ஒருங்கே திரண்டு மண்ணில் தில்லைப் பதியகத்தை வந்தடைந்தது போலும் அழகு மலிந்துளது. அவற்றிடையே தூய அன்பர்கள் போற்றிப் பரவும் பொன்னம்பலம் நடுவில் இருக்கிறது; அதனைச் சுற்றி ஓர் அழகிய வீதியுண்டு. நம்பி ஆருரர் அதனை அடைந்ததும் அடியற்ற மரம் போல் வீழ்ந்து வணங்கினார். பின்பு அதனை வலம் வந்து திருவாயிலை அடைந்தார். எதிரே சிற்றம்பலம் தெரியக்கண்டதும், அதன்கண் கூத்தப் பிரானது ஆடற்கோலம் கட்புலனாக, அவருடைய கைகள் தாமே குவிந்தன. திருக்கூத்தால் வையகம் வாழ்கிறது; மறைகளில் ஞான வொலியை எழுப்பும் சிலம்பு ஒலிக்க அறிவு வெளியில் ஆடும் பெருமானை அறிவால் காண்கின்றார். ஆன்மவறிவு வழி நிற்கும் கண்கள் ஆடும் பெருமான் திருவடியில் திளைக்கின்றன; மனமுதலிய அந்தக் கரணங்கள் அக்காட்சியில் கலந்துவிடுகின்றன. ஆன்மவட்டத்தில் ஊறிப் பெருகும் மெய்யன்பு மிக்கெழுந்து உந்துதலால், அம்பலத்தை அடைதற்குரிய களிற்றின் முகவடிவில் அமைந்த படியே அடைந்து நம்பி யாரூரர் வணங்கி எழுகின்றார். அந்நிலையில் அவருடைய உடலும் கருவி கரணங்களும் தம்மில் ஒடுங்கி ஒன்றுகின்றன. உடற்கண் அமைந்த கண் காது முதலிய பொறிவழியியங்கும் அறிவு ஏனையவற்றை விடுத்து நீங்கிக் கண் ஒன்றே இடமாக நிற்கிறது; அதற்கு உடலாக இருக்கும் அந்தக் கரணங்களில் மனம் அகங்காரம் புத்தி முதலியன தம்மில் கரைந்து சித்தம் ஒன்றேயாய்க் கண்வழி இயங்கும் ஆன்ம அறிவாற் காணப்பட்ட கூத்தப் பிரான் திருவுருவைச் சித்தம் சிந்திப்பதில் தோய்ந்து நிற்கிறது. கரணங்களின் இயக்கம் சத்துவம் முதலிய குணநிலைக் கேற்பத் தெளிவும் கலக்கமும் மயக்கமம் பெறுதலால், சிந்தனையில் தெளிவு நிலவுமாறு, தாமசம் இராசதம் என்ற இரண்டின் இயக்கத்தை ஒடுக்கிச் சத்துவ மொன்றே நிலைபெறுகிறது. ஆகவே, சத்துவ விளக்கத்தில் தெளிந்த சிந்தனை வழியாக ஆன்ம அறிவுக்கண் வழிப்புறத்தே சென்று அம்பலத்தாடியின் அருமைத் திருவுருவைப் பற்றியதும், பேரின்பம் அவ்வறிவின் கண் ஊறிப் பெருகுகிறது; இன்ப வெள்ளத்தில் மூழ்கித் திளைக்கின்றார் ஆரூரர், இதனைச் சேக்கிழா ரடிகள், "ஐந்து பேரறிவும்.... மலர்ந்தார்" என்று எடுத்துரைக்கின்றார். கண் காது முதலிய அறிகருவிகள் ஐந்தாகலின் அவற்றின் வழியாக அருவமும் உருவமுமாகிய உலகம் கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியப் படுதலால் "ஐந்து பேரறிவு" என்றும், அப்பேரறிவு கண்ணிடமே ஒன்றி நிற்குமாறு விளக்க, கண்களே கொள்ள என்றும் கூறுகின்றார். பொறிவழியாகப் பரந்து இயங்கும் அறிவை ஒருமுகப்படுத்து வதும், ஒருமுகமாக நிற்பதைப் பலதலையாகப் பிரிப்பதும் அந்தக் காரணமாகலின், அதனைப் பின்னர்க் கூறுகின்றார். அவை மனம், சித்தம், அகங்காரம், புத்தி என நான்கு நிலைத்தாய்ப் படி முறையில் அமைந்தன. மனத்தை அடுத்துச் சித்தமும் அதனை யடுத்து அகங் காரமும் அதன் மேல் புத்தியும் நிற்கும். மனம் பற்றிய பொருளைச் சிந்திப்பது சித்தம்; சிந்தித்தவற்றைக் கொள்வது அகங்காரம்; உறுதி செய்வது புத்தி, மனம் ஒரு பொருளைப் பற்றச் சித்தம் சிந்தித்தலைச் செய்யப் புத்தி தெளிந்து நிச்சயிக்கும். இவை நான்கும் தமக்குரிய செயற்பாடின்றிக் கூத்தப் பெருமானது கூத்தினைக் கண்டு சிந்தையே யாய் நால்வகையாய் விரிந்து கழியும் மனோசத்தி அவ்வாறாகாது சிந்தையிலே தேக்கிச் செயல்படுவது காட்ட, சிந்தையேயாக என்று கூறுகிறார். இங்கே கூறிய வாயிற் காட்சி, மானதக் காட்சி என்ற இரண்டையும் தொழிற்படச் செய்வது குணத்தத்துவம். சத்துவம் தாமதம், இராசதம் என்று மூன்றாகி முறையே தெளிவு, கலக்கம் மயக்கம் என்று மூன்று நிலையைக் கருவிகட்கு உண்டாக்கும். குணப்பகுதி மூன்றாகிக் கணந்தோறும் மாறும் செயலாதாகலின் அச்செயலெல்லாம் ஒடுங்கித் தெளிவு நிலை ஒன்றையே நிலவுவித்து மனமும் பொறியும் திருக்கூத்தில் தோய்விக்குமாறு விளங்க, குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமேயாக என்றார். கலக்கமோ மயக்கமோ இன்றி உள்ளதன் உண்மையை உள்ளவாறு கண்டு சிந்தித்துத் தெளிவு பெறுவிக்கும் கருவியாதல் பற்றித் திருந்து சாத்துவிகம் என்றார். இங்ஙனம் குணமும், கரணமும், பொறியும், ஆகிய மூன்றும் ஒன்றி ஒருமுகப்பட்டு நோக்குமிடத்து கூத்தப் பெருமானது அருட் கூத்து நோக்கும் அறிவின்கண் இன்பம் சுரத்தலால் ஆனந்தக் கூத்து என்றும்; அவ்வாடலும் முடிவின்றியும் வேறு ஒப்புக் காண்டற்கின்றியும் பெருமையுற்றுப் பிறங்கிடுவது பற்றி எல்லையில் தனிப் பெருங்கூத்து என்றும்; சேக்கிழார் கூறுகின்றார். கரணமும் கருவியும் ஒன்றிக் காணக்காணச் சிவானந்தம் உவட்டெடுத்துப் பெருக அதன்கண் திளைத்து, மகிழ்ந்து, உளம் உருகி, உடல் பூரித்த ஆரூரை, "மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்" என்றார். உலகியல் மகிழ்ச்சியில் மலர்ந் தார்க்கு மறுகணத்தே நெகிழ்ச்சியும் சோர்வு முண்டாதலால் சிவபோகமகிழ்ச்சி, மாறிலா மகிழ்ச்சி எனப்பட்டது. இவ்வண்ணம் மகிழ்ச்சியால் மலர்ந்த ஆரூரர், சிவபரம் பொருளின் அருட்கூத்துக் காணும் பேரின்பத்தில் திளைத்த தமது மெய்யறிவு கைவரப் பெற்றுத் தாம் கண்டு துய்த்து மகிழ்ந்த திருக்கூத்தின் சிவபோகத்தின் நலம் பாராட்டலுற்று, "தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்தன் திருநடம் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் என்று" கண்களில் நீர் சொரியக் கைகள் தலைமேற்குவிய, வாய் இனிய பண் கலந்து பாடப் பரவினர்; பின்பு மெய்யாற் பணிந்தார். திருநடம் கும்பிடும் பேறு எய்தியதால் மண்ணில் கிடைத்த பிறவி தனக்குத் தூயதும் இன்பமுமாம் என்கிறார். மண்ணில் பிறவி தூயதன்று என்னும் கொள்கைபற்றி. பணிந்து எழுந்தக்கால், "ஆரூரில் நம் பால்வருக" என்றொரு சொல் வானில் பிறந்தது. கேட்டதும் ஆரூரர் திருவாரூர் நோக்கிப் புறப்பட்டு இறைவனைத் தொழுது அம்பலத்தை வலங்கொண்டு வெளிப் போந்து எழுநிலை கோபுரம் கடந்தார். அக்கோபுரம், வானுலகம் பணிய உயர்ந்த பொன்மலை போலக் காட்சியளித்தது. மேனி நிலத்திற் படிய விழுந்து வணங்கினவர் திருவீதியைப் பணிந்து தெற்குத் திருவாயில் வழியாகச் சென்று தில்லையின் எல்லையை இறைஞ்சிக் கொள்ளிட நதிக்கரை அடைந்தார். நாடெங்குமுள்ள சிவன் கோயில்கட்குச் சென்று வழிபாடாற்றி வரும் நம்பியாரூரர், திருமுது குன்றத்தே இறைவன் தந்து பொன்பெற்று அத் திருவாரூர்க் குளத்திற்பெறுவேன் என முதுகுன்றத் தருகிலோடும் மணிமுத்தாற்றிற் பெய்துவிட்டுத் தில்லை நோக்கி வருவாராயினர். வழியில் கடம்பூர் பரவிக் கொண்டு தில்லையை அடைந்த ஆரூரர், திருவீதியைத் தாழ்ந்து வணங்கிப் "புள்ளிய வினைவாய் ஓங்கும்" திருவாயிலை நண்ணி அதன் முன்னர்த் தமது திருமார்பு பொருந்த மண்மேல் வீழ்ந்து வணங்கினார். வணங்கி எழுந்தவர், திருமாளிகைப் பத்தியைச் சுற்றி வந்து, கையாற் தொழுது கும்பிட்டு, சிற்றம்பலத்தின் முன்னிற்கும் கோபுரத்தின் ஊடே சென்று பொன்னம்பலத்தை அடைந்தார். உள்ளத்தே ஊறிய இன்பம் பெருக்கெடுத் தொளிர, கண்களில் நீர் சொரிய நின்றார். அன்பு மேலும் மேலும் பெருகுதலால் வாய் குளறி நிலத்தில் படிய வீழ்ந்து பணிந்து, இறைவன் திருக்கூத்தின் கண் உள்ள விருப்பத்தால் திண்மை யெய்தவே வஞ்சமிலாரைக் கண்டவிடத்து எய்துவது போலும் மனநிறைவு கொண்டார். அன்பால் பரவும் உள்ளத்துக்கு உரம் மிகுவிப்பது பற்றி இறைவன் திருக்கூத்தை, "வேட்கை உரனுறுதி திருக்கூத்து" என்று சேக்கிழார் தெரிவிக்கின்றார். இங்ஙனம் மனநிறைவெய்தியதும் நம்பி ஆரூர் அம்பலத் தானைப் பாடத் தொடங்கியதும். பேரூரில் அவனைக் கண்ட நிலை நினைவெய்தவும் அந்நினை வோடே பாடுவாராயினர். 1. புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றமாகலின், தருமன் தமர் செக்கிலிடும் போது தடுத்தாட் கொள்வான். மடித்தாடும் அடிமைக்கண் அன்றி-மேன் மேலும் ஆசைகளில் வீழ்ந்து ஐம்புலங்கட்கு அடிமையாய் வருந்துவதின்றி வாழ்நாள் முழுதும் தருமனார் தமர் கைப்பட்டுத் துன்புறாமல் தடுத்தாட் கொள்வான். 2. காமத்தில் பேராது சென்றாற் போலன்றி-விரும்பிய போகப் பொருளில் மீளாது சென்று வீழ்ந்தாற் போலன்றி-(போலாது) இடையறாநினைவால் அன்பராய்ச் சென்று அடிவீழும் திருவினாரை நமன்தமர் ஓராது செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான். 3. நரியார்தம் கள்ளத்தால் பக்கான பரிசு ஒழிந்து-நரியின் கள்ளத்தால் ஒன்றியிருந்த எருதுகள் பிரிந்து தனித்து மடியுந்தன்மை நீங்கி, திரியாத அன்பராய்ச் சென்று அடிவீழும். சிந்தையான நமன்தமர் வருத்தும் போது தடுத்தாட் கொள்வான். 4. நமன்தமர் நம்மைக் கட்டியகட்டு அறுப்பிப்பான்; அருமை யான தனது சிவலோகத்தைத் தருவான்; ஆதலால் சிற்றம்பலத்துப் பெருமானை நமக்கு உரியனாகப் பெற்றாம். பல்லவர்க்குத் திறைகொடாமன்னவரை மறுக்கம் செய்யும் பெருமையார் வாழும் புலியூர்ச் சிற்றம்பலம் என்க. 5. கூற்றத்தை உருண்டோட உதைத்து உகந்து உலவா இன்பம் தருவான்; நமன்தமர் செக்கிலிடும் போது தடுத்தாட் கொள்வான்; ஆகையால் பெருமானைப் பெற்றாம். 6. உள்ளமே, என்னை உய்த்து ஆடித் திரியாதே; ஊன்கண் ணோட்டம் ஒழி. ஊனுடம்பின் நிலையாமை கண்டு இரங்கி அதனை நிலையுமாறு பண்ணும் நினைவு செயல்களில் ஈடுபடுதலை யொழிக. 7. மூவாயிரவர்க்கு மூர்த்தியென்னப்பட்ட வனும் பத்திபாவிப் பார் பாவமும் வினையும் கெடுத்தவனும் இராவணனை அடர்த்த வனுமாகிய புலியூர்ப் பெருமானைத் தலைவனாகப் பெற்றாம். 8. கல்குழையுமாறன்றி மெல்லக் கருதக்கூடியவர்க்கு எற்றாலும் குறைவில்லையென்பர்; புலியூர்ப் பெருமாளைத் தலைவனாகப் பெற்றமையால் அவன் நம்மைத் தடுத்தாட் கொள்வான். கல்கனியக் குழைதல் மிக்க அன்புடையார்க்கே அமையும்; நமக்கு ஆகாதுதான்; ஆயினும் நாம் கருது மளவில் கருதினால் அதுவே போதும்; எத்துணைச் சிறிதாயினும் குறைவில்லை என்று சிவஞானச் செல்வர் கூறுவர்; அது பற்றிக் கவலற்க. 9. இறைவன் நாடுடைய நாதன்; அவன்பால், மனமே, நீ நன்று என்றும் செய்வாயாக; தருமன் தமரிடமிருந்து தடுத்தாட் கொள்வான். பெருமானைப் பெற்றாமாதலால். தாடுடைய தருமன், தாவடியிட்டுச் செல்லு தலையுடைய நமன். ஒரு தாவடிதாட்டு எனப்படும். தாட்டு தாடு எனவந்தது. தாடு, வலிமையுமாம். 10. பெருமானைச் சிற்றம்பலத்தே காணப் பெற்றாமாகலின் தருமன் தமரிடமிருந்து தடுத்தாட் கொள்வான். ஆரூரன் தம்பிரான் ஆரூரன்-ஆரூரருக்குத் தலைவனாகிய திருவாரூர் இறைவன். * * * காஞ்சிவாய்ப் பேரூரில் நம்பியாரூர் கண்ட காட்சியின் இயல்பைச் சேக்கிழார் இனிது எடுத்து உரைக்கின்றார். ஆருரர் திருப்பாண்டிக் கொடுமுடி வணங்கி நமச்சிவாயத் திருப்பதிகம் பாடிப் பரவிக் கொண்டு காஞ்சிவாய்ப் பேரூரை அடைகின்றார். அவர் வரவு அறிந்த பேரூர் வாழும் மெய்த்தவர் பலரும் சூழ்வரத் திருக்கோயிலுட்புகுந்த நம்பிகள், தில்லைமன்றுள் சிவபரம் பொருள் நின்றாடும் நீடிய கோலம் கண்டார். கைகள் தலையில் குவிந்தன; கண்கள் உவகைக் கண்ணீரைக் சொரிந்தன. கைதொழுத ஆரூரர் தரைமிசை வீழ்ந்து எழுந்திருக்கவும், உள்ளத்தே கரைகடந்து பெருகிய அன்பு அவரது என்பினையுருக்கிற்று; அவரது மெய்யுணர்வின் ஒரு வகை உயரிய இன்பம் பொங்கி எழுந்தது. உணர்வின்கண் எழும் இன்பம் யாவும் ஐம்புலன்களால் அறியப் பிறக்கும் இயல்பின, ஆனால், மெய்யுணர்வில் ஊறும் மேதக்க இன்பம் அவ்வாறு பொறிபுலன்களால் அளந்தறியப்படாமை பற்றி, "பூண்ட ஐம்புலனில் புலப்படா இன்பம்" என்று சேக்கிழார் தெரிவிக்கின்றார். இந்த இன்பப் பெருக்கம், கூத்தப் பெருமான் புரியும் ஆனந்தக் கூத்திடைத் தோன்றுதலால், அதனைக் காணும் பேறு ஆரூரர்க்கு அரிதிற் கிடைத் தமை விளங்க "தாண்டவம் புரியும் தம்பிரானாரைத் தலைப்படக் கிடைத்தலின்" என்றார். அக்காலையில் ஆரூரர் சிவனடியார்க்குரிய கோலமே பூண்டிருந்தாராகலின் அவரைச் "சைவ ஆண்டகை" என்றார். இங்ஙனம், இறைவனது அருட்கூத்தைக் கண்டு இன்ப வெள்ளத்தில் மூழ்கிய ஆரூரர் எய்திய உவகையைத் தமது புலமையாற் காணலுற்ற சேக்கிழார் அது மனமொழிகளின் எல்லை கடந்து நிற்கும் பெருமையை வியந்து, "அந்நிலைமை விளைவையார் அளவற்றிதுரைப்பார்" என்று ஆர்வம் பெருகியுரைக்கின்றார். அந்நிலையில் ஆரூரர், வாய்மலர்ந்தது.  18. கயிலையும் அரசும் வரலாற்றுக் காலத்திலிருந்தே தமிழகத்திற்கும் வடக்கில் இமயத்திற்கும் தொடர்புண்டு. இமயத் தாபதர் தென்குமரி போந்து நீராடுவதும், தென்னகத் துறவியரும் வேந்தரும் வடவிமயம் சென்று கங்கை நீராடுவதும் மரபாக இருந்து வந்துள்ளன. தென்தமிழ் வேந்தர் வடவிமயத்தில் தங்கள் புலி வில் கெண்டை முத்திரைகளைப் பொறிப்பது சிறப்புடைச் செயலாக மேற்கொண்டு வந்தனர். பின்பு சமய வாழ்வு உலகியல் வாழ்விற் சிறப்பிடம் பெற்றது. அரசியல், பொருளியல், முதலிய வாழ்வியல்களைக் கைதுறந்து சமயம் கூறும் புராண வரலாறுகட்குத் தலைமையிடம் தந்து பயில்வது முறையாகக் கொண்டனர். சமயஞானிகள் வடவிமயத் தினின்றும் தென் குமரி நோக்கிப் படர்ந்து தமது சமயவுண்மைகளையும் வரலாறுகளையும் மக்களிடையே பரப்பினர். அவ்வாறே தென் னாட்டுச் சமய வாழ்வினர் வடபுலநோக்கிச் சென்று ஆங்கு வழங்கிய சமய தத்துவ சாத்திரங்களைப் பயின்றனர். வைதிக சமயங்களாகிய சைவ வைணவங்களேயன்றிச் சயின புத்த சமயங்களும் தழைத்து ஓங்கிய போது, வடபுலம் தென்புலம் என்ற வேற்றுமை யின்றிச் சமயவுண்மைகள் நமது பாரதநாடு முழுதும் பரவி நின்றன. எண்ணிறந்த சமய நோக்குடைய புராணங்கள் பெருகின. விண் ணுலகும் மண்ணுலகும் புராணவுலகில் சமவாழ்வு நடத்தின. விண்ணவர் மண்ணவரோடும் மண்ணவர் விண்ணவரோடும் தம்மிற் கலந்து உறவாடினர். முனிவர்களும் தேவர்களும் விஞ்சையர் களும் எனப் பலவேறு இனத்தவர் பாரத நாட்டுப் பண்பமைந்த மக்களாகக் கலந்து வாழ்ந்தனர். புராணங்கள் நாட்டிய பௌராணிக சமயவாழ்வில், சிவன் திருமால் பிரமன் இந்திரன் முதலிய தேவர்கள், தேவ லோகத்தவராயினும் நமது பாரதநாட்டில் ஆங்காங்கு இடம் கொண்டு வாழ்ந்தனர். சிவன்கயிலையிலும், திருமால் கடலிலும் பிரமன் தாமரைப் பூவிலும், இந்திரன் கிழக்கிலும் இருந்தனர். சிறப்புடைய நகரங்களில் சிவன் முதலிய கடவுளரைத் திருமால் முதலிய தேவர்கள் தவம் கிடந்து வழிபட்டு வரம் பெற்ற வரலாறு களைத் தலபுராணங்கள் விரிவாகப் பெசுகின்றன. அவையாவும் வடமொழிப் புராணங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. வேண்டுவோர் அவற்றைத் தங்கள் தங்கள் மொழியில் பெயர்த்து எழுதிக் கொண்டனர். பெருங்காடு களிலும் மலைகளிலும் பெரிய பெரிய ஆற்றல் வாய்ந்த முனிவர்கள் வாழ்ந்தனர். அவர்களும் தேவர்களைப் போலச் சிவன் முதலிய தேவதேவர்கள் வாழிடங்களுக்கு வந்து அவர்களை வழிபட்டுச் செல்வர். நாடாளும் வேந்தர்களும் தேவதேவர் களோடு முனிவர்களையும் இருடிகளையும் முறையாக வழிபட்டு வரம் பெற்றுச் சென்றனர். இங்ஙனம் தேவ தேவர்களையும் முனிவர் களையும் பிறஞானச் செல்வர்களையும் அவர்கள் உறையும் இடங்கட்குச் சென்று வழிபட்டு வருவதென்பது உயரிய கடமையாக உருவாயிற்று. சமய வொழுக்கம் உரைக்கும் நூல்கள், இதனைச் "சரியாசாரம்" என்று வகுந்து உரைப்பனவாயின. வைதிக சமயத்தினர்க்கே யன்றிப் பவுத்த சயின சமயத்தவரும் இந்தச் சரியாசாரத்தை மேற்கொண்டனர். அவர்களிடையே போதிசத்துவர் இருந்த கயையும், வர்த்தமான வீரருக்குரிய பாடலியும் மேன்மையுற்றன. இவ்வாறே சைவரும் வைணவரும் சிறப்புடையதலங்கள் பலவற்றிற்குச் சென்று தேவ தேவனாகிய சிவனையும் திருமாலையும் வழிபடும் சமயவொழுக் கத்தைக் கைக்கொண்டனர். இதனை இவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் கற்றுக் கொண்டனர் என்பதற்கில்லை. ஒருவர்க் கொருவர் முன்பின் என்று சொல்ல முடியாதவாறு சமய புராணவரலாறுகள் பின்னிப் பிணங்கிக் கிடக்கின்றன. அகத்தியர் தென்னாடு வந்ததும் தருமபாலன் நாலந்தா சென்றதும், குமரிலபட்டர் வடநாடு புகுந்ததும், திருமூலர் தென் தமிழ்நாடு வந்ததும், காரைக் காலம்மையார் வடகயிலை நோக்கிச் சென்றதும் பௌராணிக வுலகில் காலத்தொடு படாது கலந்து வந்த வழக்காறுகளாகும். அவ்வகையில் 1300 ஆண்டுகட்கு முன் பல்லவராட்சி புகழ் பரந்து பொலிந்து விளங்கிய காலத்தில் திருநாவுக்கரசர் தமிழ்நாட்டில் சிவபெருமான் எழுந்தருளும் திருக்கோயில்கட்குச் சென்று திருப்பதிகம் பாடிச் செந்தமிழ்ச் சைவத் தொண்டு ஆற்றிவந்தார். அக்காலத்தே சீர்காழியில் தோன்றிச் சிவனருளால் உமையம்மை தந்த சிவஞானப் பாலையுண்டு திருஞானசம்பந்தர், நாவுக்கரசர் போலவே திருக்கோயில் சென்று திருப்பதியம் ஓதும் திருப்பணி செய்தார். இருவரும் செந்தமிழ் நாட்டு எல்லைக்குள் இருந்து இனிய சைவப்பணி புரிந்துவருகையில் திருநாவுக்கரசர்க்கு வடவியமத்தில் சிவனுறையும் திருக்கயிலை சென்று காண வேண்டுமென்ற வேட்கையுண்டாயிற்று. காரைக்காலம்மையார் கயிலை சென்ற வரலாறு அவர் கருத்தை உருக்கிற்றுப் போலும். காளத்தி சென்று கண்ணுதற் பெருமானை வழிபட்ட நாவுக்கரசர் கயிலை நோக்கிச் செல்வாராயினர். சிவபெருமான் "பேணுதிருக்கயிலைமலை வீற்றிருந்த பெருங்கோலம் காணுமது காதலித்தார், கலைவாய் மைக்காவலனார்" என்று சேக்கிழார் தெரிவித் திருக்கின்றார். கயிலைகாணச் செல்வார்க்கு இக்காலத்துள்ள வாய்ப்புக்களும் உடை உணவுவகைகளும் 1300 ஆண்டுகட்கு முன் இல்லை. ஆயினும் நாவுக்கரசர், கயிலை காணும் காதலே ஊக்கமும் உறுதியும் வாய்ப்புமாகக் கொண்டு கயிலை நோக்கிச் செல்லலானார். காதலும் ஊக்கமும் பிறவும் கருத்தளவில் துணைசெய்தன; அவற்றை உள்ளே தாங்கிச் செல்லும் நாவரசரின் முதுமை சான்ற நல்லுடல் செலவு ஆற்றும் வலியுடையதாக இல்லை. அதுவும் தேய்ந்து கெட்டது. " மார்பமும் தசை நைந்து ந்தி வரிந்த என்பு முரிந்திட நேர்வரும் குறிநின்ற சிந்தையின் நேசம் ஈனைநேடும் நீடு ஆர்வம் அங்கு உயிர்கொண்டு உகைக்கும் உடம்பு அடங்கவும் ஊன்கெடச் சேர்வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர்" என்று சேக்கிழார் நமக்கு அறிவிக்கின்றார். இங்கே தருமயாதீனத் தலைவர் கயிலைக்கு முனிவர்கள் திருப்பனந்தாள் தம்பிரான் சுவாமி களுடன் கயிலைக்குச் சென்று அதனடியில் நின்று எழுந்த நிழற்படம் மனக்கண்ணில் காட்சி தருகிறது. எங்கும் பனிபரந்து தண்ணென் காற்று வீச, அச்சூழ்நிலைக் கமைந்த உடையுடுத்து அவர்கள் கயிலையைக் காண்பது நமக்கு மகிழ்ச்சி தருகிறது. அன்று திருநாவுக்கரசர், இன்று தவம் பெருகு கயிலைக்குருமணியும் தம்பிரான் சுவாமிகளும் சென்று காண்பது போலக் காணும் திறம் இல்லாமை நினைக்கும் போது நெஞ்சு வருந்துகிறது. இன்றைய பெருமக்கட்கு முன்னோடியாய்க் கயிலை நோக்கிச் சென்ற நாவுக்கரசரைச் சேக்கிழார் பெருமான் "கலை வாய்மைக் காவலனார்" என்று பாராட்டியுரைக் கின்றார். உடல் தேய்ந்து புரண்டு செல்வதன்றி வேறு போக்கிலா நிலையில் நாவுக்கரசர் வருந்துங்கால் வேதியர் ஒருவர் தோன்றி, "கயிலைமால் வரையாது காசினி மருங்கு பயிலும் மானுடைப் பான்மையோர் அடைவதற்கு எளிதோ அயில் கொள் வேற்படை அமரரும் அணுகுதற்கரிதால்" என்று சொல்லி, "மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன்" என வற்புறுத்தினார். உடல் உறுப்புக்கள் தேய்ந்து குறையினும் உள்ளமும் ஊக்கமும் ஒரு சிறிதும் குறையாத நாவுக்கரசர், "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்" எனத் தமது மனக்கோளைத் திண்மையுடன் எடுத்தியம்பினார். சிறிது போதில் விண்ணில் ஒரு குரல் எழுந்து, "ஓங்கு நாவினுக்கு அரசனே, எழுந்திரு" எனப் பணித்தது. நாவரசரும் மறாது பணிந்த வுள்ளத்தராய், "விண்ணிலே மறைந்து அருள்புரிவேதநாயகனே கண்ணினால் திருக்கயிலையில் இருந்த நின் கோலம் நண்ணி நான் தொழ நயந்தருள்புரிக" என வேண்டினார். "கயிலையில் இருந்த அம் முறைமை, பழுதில் சீர்த் திருவையாற்றிற் காண்க" என இறைவன் ஆணையிட்டருளினார். அங்கே தடம்புனல் ஒன்று நாவரசர் கண்முன் தோன்றிற்று. அதன்கண் மூழ்கிய அவர் திருவையாற்றில் ஒருமலர்ப் பொய்கையிற் கரையேறினார். கரைக்கண் திருவையாற்றில் அவர் காண்பன அனைத்தும் தத்தம் துணையுடன் காட்சி தருவது கண்டார். அதனைச் சேக்கிழார், "அப்பதி நிற்பவும் சரிப்பவும் ஆன, புடையமர்ந்ததும் துணையொடும் பொலிவன கண்டார்" எனப் புகழ்கின்றார். காண்பன பலவும் துணையொடும் பொலிதற்குக் காரணம் யாதென நினைக்கும் உள்ளத்துக்கு, "பொன்மலைக் கொடியுடன் அமர் வெள்ளியம்பொருப்பின் தன்மையாம்படி சத்தியும் சிவமும் ஆம் சரிமைப் பன்மையோனிகள் யாவையும் பயில்வன" எனவுரைத்து ஆசிரியர் பெருமான் ஐயம் அறுக்கின்றார். திருவையாற்றுத் திருக்கோயில் நாவுக்கரசர்க்குத் திருக்கயிலை யாய்த் தோற்றமளித்தது. தேவரும் மாதவரும் கயிலையிலுள்ளவாறே காட்சி தந்து இன்புறுத்தினர். உமாதேவியுடன் வீற்றிருந்த சிவபெரு மானைக் கண்ணாரக் காண்கின்றார். இதனை, "வெள்ளிவெற்பின்மேல் மரகதக் கொடியுடன் விளங்கும் தெள்ளுபேரொளிப் பவளவெற்பென இடப்பாகம் கொள்ளும் மாமலையாளுடன் கூடவீற்றிருந்த வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார்" என வரலாறு கூறுகிறது. கண்ட நாவரசர் அன்புருவாகிச் செந்தமிழ்த் தேன் பிலிற்றும் திருப்பதிகங்களும் தாண்டகங்களும் பாடலானார். காணப்படுவன பலவும் சிவமும் சத்தியுமாய்க காட்சி தருவதை வியந்தவர், "மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும்பாடிப் போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர்பின்பு புகுவேன்" என்று கயிலையாய்க் காட்சிதரும் திருக்கோயிலுள் புகுகின்றதைப் பாடுகின்றார். அவர் புகும் போது அவர்க்கு முன்னே பலரும் பூவும் நீரும் சுமந்து சிவனை உமா தேவியொடும் பிணைத்துப் பேரன்புடன் பாடிக் கொண்டே செல்கிறார்கள். பிறைக் கண்ணி சூடிய பெருமானை உமாதேவியுடன் சேர்த்துப் பலரும் பாடிச் செல்கின்றார்கள். அவர் பின்பு யான் கோயிற்குள் புகுகின்றேன் என்பது நாவரசரின் உள்ளத்து நிறைந்து வழியும் சிவப் பேரின்பத்தையே இனிது தெரிவிக்கின்றது ஒருபால் "மலையடியில் களிறுகள் பிடியொடுவருவது தெரிகிறது. இவ்வாறே கோழிபெடையொடுகூடிக் குளிர்ந்து வருவதும், பேடைகள் மயிற் சேவலொடும் கூடி வருவதும் பிறவும் காணக் காண நாவரசர்க்கு இன்பம் மிக்குப் பொலிகின்றது. அன்பு அளவு கடந்து பெருகுகிறது." அதனை உணர்ந்து " அளவுபடாததோர் அன்போடு ஐயாறடைகின்றபோது இளமணநாகு தழுவி ஏறுவருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்" என்று பாடுகின்றார். பாட்டுத் தோறும் உயிர்கள் பலவும் ஆணும் பெண்ணுமாய்க் கூடி மகிழ்ந்து வரக் கண்ட நாவுக்கரசர், அதுவே இறைவன் திருவடிக்காட்சி என்பாராய், "கண்டேன் அவர் திருப்பாதம்" என வுரைக்கின்றார். உலகுயிர்கள் ஆணும் பெண்ணுமாய் அன்பும் இன்பமும் உற்றுக் கூடிக் குலவித் தோன்றும் காட்சி சிவமும் சத்தியும் கலந்த சிவயோகக் காட்சி உன்ற உண்மையைப் புலப்படுத்துவது காண்கின்றார். அக்காட்சியில் உளதாகும் பயன், காணப்படும் உலகினும் கண்டறிந்தோர் உரைத்த நூல்களினும் காணப்படாத நள்ளரிய சிவானந்த ஞான மாதல் புலப்பட, "கண்டறியாதன கண்டேன்" எனக் கனிந்துரைக்கின்றார். காணாதன காட்டலும், கேளா தன கேட்பித்தலும் திருவடிக்காட்சியின் விளைவு என்பதைச் சான்றோர் களின் திருப்பாடல்கள் தெளிவாக வுரைத்தலின், நாவரசர் கயிலைக் காட்சியில் வைத்துக் " கண்டேன் அவர் திருப்பாதம்; கண்டறியாதன கண்டேன்" எனக் கட்டுரைக்கின்றார். கயிலையை நினைந்து பாடும் திருநேரிகையில், அப்ப மூர்த்திகள், இராவணனது அறியாமையையும் அவனைச் சிவபெரு மான் திருத்திய அருளுடைமையையும் நினைந்து பரவுகின்றார். ஒருபால் இராவணன் கண் சிவந்து கயிலையை எடுப்பதும் உமைதேவி அஞ்சுவதும் நாவரசர் நினைக்கின்றார். " கருத்தனாய்க் கண் சிவந்து கயிலைநன் மலையைக் கையால் எருத்தனாய் எடுத்தவாறே ஏந்திழை அஞ்ச" என்று பாடுகின்றார். உடனே, அத்துணை ஆற்றலும் ஆர்வமும் உடையனாதலால் அரக்கனாயினும் திருந்துதற்குரியன் எனச் சிவன் திருவுள்ளம் கொண்டு நின்றான்; அதனை நாவுக்கரசர், நன்குணர்ந்து, "திருத்தனாய் நின்ற தேவன்" என்றும், திருத்தி உய்வித்த சிறப்புத் தோன்றச் சிவன் "திருவிரல் ஊன்ற வீழ்ந்தான்" என்றும் உரைக்கின்றார். திருவருள் நலத்தை "வருத்துவான் ஊன்றினானேல் மறித்து நோக்கு இல்லையன்றே" என்று சிறப்பிக்கின்றார். இவ்வாறே திருக்கயிலாயத் திருத்தாண்டகம் அடிதோறும் சிவஞானக் கருவூலமாகத் திகழ்கிறது. " சில்லுருவாய்ச் சென்று திண்டாய் போற்றி தேவர் அறியாத தேவே போற்றி புல்லுயிர்க்கும் பூட்சியுணர்த்தாய் போற்றி போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி கல்லுயிராய் நின்ற கனலே போற்றி கயிலைமலை யானே போற்றி போற்றி" என்ற திருத்தாண்டகம் எத்துணை ஆழமிக்க அரிய ஞானக் கருவறையாய் விளங்குகிறது காண்மின்.  19. நம்பியாண்டார் நம்பியும் ஞானசம்பந்தரும் இற்றைக்கு ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முன்னே நம் தமிழ்நாட்டில் தோன்றித் தமிழும் சைவமும் உய்யத் திருநெறித் தமிழோதி நம்மை உய்வித்த பெருமக்களான சமயக் குரவர் நால்வர் பாலும் பேரன்பும், அதனால் அவர்பால் பேரீடுபாடும் உற்று அவர்களை வியந்து பல தமிழ் நூல்கள் எழுதிய சான்றோர் பலராவர். அவருள் நம்பியாண்டார் நம்பிகள் தொன்மையும் முதன்மையு முடையவராவர். இவர் தாம் பாடியருளிய திருத்தொண்டர் திருவந்தாதியில் ஞானசம்பந்தரையும், நாவரசரையும், நம்பியாரூ ரரையும் வியந்து பாடியுள்ளார். இன்னும், பதினோராந் திருமுறையில் ஞானசம்பந்தரையும், நாவரசரையும் இவர் புகழ்ந்து பாடிய நூல்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. அவற்றுள்ளே திருவந்தாதி நீங்கலாக ஏனையவை ஞானசம்பந்தருக்கும், நாவரசுக்கும் உரியவாய் இருத்தலை நோக்கின், இவ்விரு பெருமக்கள் பாலும் நம்பிகட்குப் பெருமதிப்பும் பேரீடுபாடும் உண்டென்பது புலப்படுகிறது. நம்பியாண்டார் நம்பிகள் இன்றைக்குத் தெள்ளாயிரமாண்டு கட்கு முன்பே சோழநாட்டுத் திருநாரையிலே ஆதிசைவர் குடியிலே பிறந்தவர். இதனை "நாரையூரினில் ஆதிசைவ மறையோன்பால், வையமெலா மீடேறச் சைவம் வாழ மாமணிபோல்" பிறந்த ருளினாரெனத் திருமுறை கண்ட புராணம் கூறுகின்றது. பத்தாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்த இராசராசசோழன் காலத்தே இருந்தவர். அவன் மூவர் முதலிகள் வழங்கியருளிய சைவச் திருமுறைகளைப் பெறுதற்குத் துணைசெய்தவர். முதலேழு திருமுறைக்கும் நம்பியாண்டார் நம்பிகளே திருவருள் துணையாகக் கொண்டு இசை வகுத்தாரென்றும் கூறுவர். நம்பியாண்டார் நம்பிகளின் பெற்றோர் பெயர் முதலியன விளங்கத் தெரிந்தில. இவர் இளமையிலேயே திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் திருவருள் பெற்றுப் பொல்லாப்பிள்ளையார் மேல் பாடிய திருவிரட்டை மணிமாலையும் தொகுக்கப் பெற்றிருக்கிறது. இராசராசன் திருமுன்பே திருமுறை தொகுக்கப் பெற்றதென்பது. "நம்பிகழல் மன்னர்பிரான் மகிழ்ந்திறைஞ்சச் சித்திதரும் இறைமொழிந்த திருமுகப்பாசுரமுதலா, உய்த்த பதிகங்களையுமொரு முறையாச் செய்க எனப் பத்திதருந் திருமுறைகள் பதினொன்றாப் பண்ணினார்." என்ற திருமுறை கண்டபுராணத் திருவிருத்தத்தால் அறிகின்றோம். நம்பியாண்டார் நம்பிகள் பொல்லாப் பிள்ளையார் திருவருள் பெற்று அவர்பால் கலைத்துறை பலவும் கற்றுப் புகழ் நிறுவிய பின்பு வேந்தன் இராசராசன் வேண்டுகோட்கிசைந்து பிள்ளையார் அருளால் திருமுறை கண்டனர். அதன் பயனாக அவர் நம்பியாரூரர் அருளிய திருத்தொண்டத் தொகையின் பொருளாக உணர்ந்த வற்றைத் திருத்தொண்டர் திருவந்தாதியாகத் தொடுத்துப் பாடியருளினார். நம்பியாண்டார் நம்பிகள் சோழவேந்தன் இராசராசன் பொருட்டுத் திருமுறை கண்டதும் பண் வகுத்ததுமாகிய செயல்களைச் செய்ததோடு திருச்சிற்றம் பலமுடையான்பேரில் திருவிருத்தமும், ஞானசம்பந்தர், நாவரசர் என்ற இருவர் பேரிலும் பல நூல்களும் செய்துள்ளார். இது முன்பும் கூறப்பட்டது. இவர் இயற்றி யனவாகப் பதினோராந் திருமுறையில், பத்து நூல்கள் காணப்படுகின்றன. அவற்றுள், பொல்லாப் பிள்ளையாரைத் திருவிரட்டைமணி மாலையாலும், திருச்சிற்றம் பலமுடையானைக் கோயிற்றிருப் பண்ணியர் விருத்தத் தாலும், திருத்தொண்டர்களைத் திருவந்தாதியாலும், திருநாவுக் கரசரைத் திருவேகாதச மாலையாலும் அவர் பாராட்டிப் பரவியிருக் கின்றார். எஞ்சி நிற்கும் ஆறு நூல்களும் ஞானசம்பந்தரைப் பாராட்டிப் பரவுவனவேயாகும். திருவந்ததாதியிற் காணப்படாத திருவாதவூரரை, கோயிற்றிருப் பண்ணியர் விருத்தத்தில், " வருவா சகத்தினில் முற்றுணர்ந்தோன் வண்டில்லை மன்னைத் திருவாதவூர்ச் சிவபாத்தியன் செய்திருச் சிற்றம்பலப் பொருளார் தரு திருக்கோவை கண்டேயு மற்றப்பொருளைத் தெருளாத வுள்ளத்தவர் கவிபாடிச் சிரிப்பிப்பரே" (58) என்று பாராட்டியுள்ளார். இவ்வாற்றால் நோக்கின், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், திருவாதவூரர் ஆகிய நால்வரையும் நம்பியாண்டார் நம்பி பாராட்டியிருப்பது தெளிவாகும். ஆயினும் ஞானசம்பந்தரை மட்டில் ஆறு தமிழ் நூல்களாற் சிறப்பித்துப் பரவியிருப்பது, அவர்பால் இந்நம்பிகட்கு இருந்த தனி மதிப்புப் பெரிதென்பது துணியப் படும். இவையாறும் ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி திருச்சண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திருவுலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை யென்பனவாகும். இவையாவும் ஞானசம்பந்தர் வரலாறு, அவர் செய்த அருட்செயல், அருளிய திருப்பதிகம் பிறந்த சீர்காழிப்பதியின் சிறப்பு முதலியவற்றைப் பாராட்டிப் புகழ்கின்றன. இவற்றுள்ளும் ஆளுடையபிள்ளையார் திருத்தொகையில் வரலாற்று நிகழ்ச்சி முற்றும் கூறப்படுகின்றன. ஏனையவற்றுள், சிற்சிலவே சிறப்பிக்கப்படும். திருமும்மணிக்கோவைக்கண் ஞானசம்பந்தரின் செயல்வகை சிலவற்றை அழகுறக் கூறுவர். அரிசினக் கடகரி யதுபட வுரித்த படர்சடைக் கடவுள்தன் திருவரு ளதனால் பிறந்தது, கழுமல மென்னும் கடிநக ரதுவே; வளர்ந்தது, தேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு பூங்குழல் மாதிடு போனக முண்டே; பெற்றது, குழகளைப் பாடிக் கோலக்காப் புக்கு அழகுடைச் செம்பொற் றாள மவையே; தீர்த்தது, தாதமல் மருகல் சடையனைப் பாடிப் பேதறு பெண்ணின் கணவனை விடமே; அடைத்தது, அரைசோ டிசையா வணிமறைக் காட்டுக் குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே; ஏறிற்று, அத்தியுமாவும் தவிர அறத்துறை முத்தின் சிவிகை முன்னாள் பெற்றே; பாடிற்று, அருமறை யோத்தூர் ஆண்பனை யதனைப் பெருநிற மெய்தும் பெண்பனை யாவே; கொண்டது, பூவிடு மதுவில் பொறிவண் டுழலும் ஆவடு துறையில் பொன்னா யிரமே; கண்டது, உறியொடு பீலி யொருகையிற் கொள்ளும் பறிதலைச் சமணர் பல்கழு மிசையே; நீத்தது, அவிழ்ச்சுவை யேயறிந் தரனடி பரவும் தமிழ்ச்சுவை யறியாத் தம்பங் களையே; நினைந்தது, அள்ளல் பழனக் கொள்ளம் பூதூர் இக்கரை ஓடம் அக்கரைச் செலவே; மிக்கவர் ஊனசம்பந்தம் அறுத்து உயக் கொள்ள வல்ல ஞானசம்பந்தன் இஞ் ஞாலத் திடையே. ஞானசம்பந்தரின் செயல்களுட் சிற்சிலவற்றைத் திருவந்தாதியில், " அடைத்தது மாமறைக் காடர்தம் கோயிற் கதவினை, அன்று உடைத்தது பாணன்தன் யாழின் ஒலியை; உரகவிடம் துடைத்தது; தோணிபுரத்துக் கிறைவன் சுடரொளிவாய்ப் படைத்தது தண்மையை நள்ளாற்றரசு பணித்திடவே." என்றும், திருக்கலம்பகத்தில், " பண்டமுது செய்தது உமை நங்கையருள் மேவு சிவ ஞானம்; பைந்தருள நன்சிவிகை செம்பொன் அணி நீடுகிற தாளம், கொண்டது..................." என்றும் ஓதுகின்றார். இவற்றுள் சில செய்திகளை நம்பியாண்டார் நம்பிகள் பலவிடங்களில் பல படியாகப் பாராட்டுகின்றார். இவற்றுள் முன்னணியில் நிற்பது சம்பந்தர் ஞானப்பால் உண்டதாகும். இதனை மட்டில் ஐந்தாறு இடங்களில் பாராட்டிப் பேசுகின்றார். ஆளுடைய பிள்ளையார் திருத்தொகையின்கண் ஞானமுண்ட திறத்தை இனிமையுற விரித்துக் கூறலுற்று, " பூவார் திருநுதல்மேல் பொற்கட்டி இட்டொளிரக் கோவாக் குதலை சிலம்பரற்ற - ஓவாது அழுவான், பசித்தான் என்று ஆங்கு இறைவன் காட்டத் தொழுவான், துயர் தீர்க்கும் தோகை - வழுவாமே முப்பத் திரண்டறமும் செய்தாள் முதிராத செப்பொத்த கொங்கைத் திருநுதலி - அப்பன் அருளாலே ஊட்டுதலும் அப்பொழுதே ஞானத் திரளாகி முன்நின்ற செம்மல்" என்று கூறுகின்றார். உலக வாழ்வில் ஈடுபட்டு இன்ப துன்பங்களால் மலம் நீங்குதற்குரிய பக்குவமுற்று இறைவன் திருவருட் பேற்றுக்கு இலக்காவது உயிர்த்தொகைகட்கு இயல்பு. அவ்வாறின்றி நம் சம்பந்தப்பெருமான் குழவிப் பருவத்திலேயே ஞானம் கைவரப் பெற்றது மிக மிக அரிய செயலாகும். அவ்வருமையால், பெரியரும் அரியருமாய் விளங்கும் அவரது பெருந்தகைமை அறிந்து வழிபடுவதும் அரிதாக இருக்க, எனக்கு அது எளிதாக வந்துவிட்டது என்று மகிழ்ச்சி சிறக்கும் நம்பிகள், திருவந்தாதியில், " எளிவந்தவா எழில்பூவரை கொண்மணித் தார் அழுங்கத் துளிவந்த கண்பிசைந் தேங்கலும் எங்கள் அரன்துணையாம் கிளிவந்த சொல்லி பொற்கிண்ணத்தில் ஞானவமிர்தளித்த அளிவந்த பூங்குஞ்சி இன்சொல் சிறுக்கன்றன் ஆரருளே" என்றும் திருச்சண்பை விருத்தத்தில் " கொங்கு தங்குங்குஞ்சி கூடாப்பருவத்துக் குன்றவில்லி பங்குதங்கும் மங்கை தன்னருள் பெற்றவன் பைம்புணரிப் பொங்குவங்கப் புனல் சேர்த்த புதுமணற் புன்னையின் கீழ்ச் சங்கு தங்கும் வயல் சண்பையர் காவலன் சம்பந்தனே" என்றும் பாராட்டி யுரைக்கின்றார். பட்டினத்தடிகள், ஞானசம்பந்தப் பெருமானது இச் செயலையே வியந்து, தாம் பாடிய திருக்கழுமல மும்மணிக் கோவையில், " தாதையொடு வந்த வேதியச் சிறுவன் தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த அன்னாயோ என்று அழைப்ப முன்நின்று ஞானபோகத் தருளட்டிக் குழைத்த ஆனாத் திரளை யவன்வயின் அருள, அந்தணன் முனிந்து தந்தார் யார் என அவனைக் காட்டுவன், அப்ப, வானார் தோஓடுடைய செவியன் என்றும் பீஇடுடைய பெம்மான் என்றும் கையிற் சுட்டிக்காட்ட ஐய நீ வெளிப்பட்டருளினை யாங்கே" என்று உரைக்கின்றார். இவ்வண்ணமே ஞானசம்பந்தர் கோலக்காவில் தாளம்பெற்ற செய்தியைப் பாராட்டியுரைப்பவர், அவர் திருவாயால் பாட்டிசைத்து கையால் தாளம்போடுவது கண்ட பரமன், அவர் கை நொந்திடுமென்று பொற்றாளம் தந்தார் என்று கூறுகின்றார். நம்பியாரூரர், "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளம்ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளன்" என்று அருளியிருப்பது நாம் அனைவரும் தெரிந்த செய்தி; இவர் கூறுவதைக்காண்மின்: " கண்ணார் திருநுதலான் கோலக்காவிற் கரநொடியால் பண்ணார் தரப்பாடு சண்பையர்கோன் பாணி நொந்திடுமென்று எண்ணார் எழுத்தஞ்சும் இட்ட பொற்றாளங்கள் ஈயக்கண்டும் மண்ணார் சிலர் சண்பைநாதனை யேத்தார் வருந்துவதே", என்று பாடுகின்றார். இவ்வாறே முத்துச் சிவிகை பெற்ற செய்தியும், ஆவடு துறையுள் பொன் ஆயிரம் பெற்றதும் பரவப் படுகின்றன. திருமருகலில் கணவன் விடந்தீண்டியதால் இறந்துபடக் கண்டு வருந்திய வணிகமகள்பொருட்டு நம் சம்பந்தர் அவ்விடம் தீர்த்து அவள் வருத்தம் போக்கிய செய்தி நம்பியாண்டார் நம்பிகளால் பல விடங்களில் பாராட்டப்படுகிறது. " வயலார் மருகல் பதிதன்னில் வாளரவால் கடியுண்டு அயலா விழுந்த அவனுக் கிரங்கி அறிவழிந்த கயலார் கருங்கண்ணி தன்துயர் தீர்த்த கருணைவெள்ளப் புயலார் தருகையினான் என்னத் தோன்றும் புண்ணியமே" என்று திருவந்தாதியும், " குவளைக்கருங்கண் கொடியிடை துன்பம் தவிர அன்று துவளத் தொடுவிடம் தீர்த்த தமிழின் துறை செய்தவன்* திவளக் கொடிக்குன்ற மாளிகைச் சென்னியின்வாய்த் தவளப் பிறைதங்கு சண்பையர் காவலன் சம்பந்தனே" என்று திருச்சண்பை விருத்தமும் சிறப்பித்துக் கூறுவது காண்க. திருவுலாமாலையில் இச்செய்தியை வேறொரு வகையால் விதந்து பரவுகின்றார். நம் ஞானசம்பந்தப் பெருந்தகை திருவீதி உலா வருகின்றார். இவர் நலம் கண்டு மகளிர் சிலர் கருத்திழந்து மெலிந்து தம்முட் சொல்லாடுகின்றனர். அமணரை வாதில்வென்று கழுவேற்றிய இவன் தன் மாலையை தமக்குத் தருவான் என்று நாம் கருதுவது பேதைமை என்ற கருத்துப்பட, "நங்கைமீர், இன்றிவன் நல்குமேல், எண்பெருங் குன்றத்தில் அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் - பொன்ற உரைகெழுவு செந்தமிழ்ப்பா வொன்றினால் வென்றி நிரைகழுமேல் உய்த்தானை நேர்ந்து - விரைமலர்த்தார் பெற்றிடலாம் என்றிருந்த நம்மிலும் பேதையர்கள் மற்றுளரோ என்று வகுத்துரைப்பார்" ஆயினர். அதுகேட்ட, வேறுசிலர் அவரை மறுத்து, சம்பந்தப் பெருந்தகை இரக்கம் மிகவுடையர் என்று சாதிப்பாராய், மருகல் விடம் தீர்த்த செய்தியை எடுத்து, "மற்றிவனே பெண்ணிரக்கம் அன்றே, பிறைநுதலீர், மாRணத்தின் நண்ணு கடுவிடத்தால் நாட்சென்று - விண்ணுற்ற ஆருயிரை மீட்டன்று அவனை அணிமருகல் ஊரறிய வைத்தது எனவுரைப்பார்" இவ்வாறே, நம் சம்பந்தப்பெருமான் திருமயிலையில் என்பைப் பெண்ணாக்கிய அருட்செயலைத் திருவருணைக் கலம்பகமுடையார் மிக்க நயமுறக் கூறிப் பாராட்டுகின்றார். ஒத்த அன்பால் பிணிக்கப் பட்ட ஒருவனும் ஒருத்தியும் இல்லிருந்து நல்லறம் புரிந்து வருகின்றனர். வருங்கால், அவனுக்குத் தன் கல்வியறிவைப் பெருக்கிக் கொள்வதற்கு வேட்கை மிகுகின்றது. நல்லாசிரியர் ஒருவர் சேய்மையில் இருப்பதை அறிகின்றான். அவர்பாற் செல்லவும் விரும்புகின்றான். கல்வி குறித்துப் பிரியக் கருதும் கருத்தைத் தன் மனைக்கிழத்திக்குத் தெரிவிக் கின்றான். அவள் சீரிய கூரிய அறிவுநலம் படைத்தவள். ஆதலால், அவள் அவனை நோக்கி " ஆரும் விரும்பிய கல்விமேல் ஆசை யுமக்குள தாயிடின் பாருள வென்பொரு பாவையாப் பாடிய பாவலர் போலவே நீரும் அருந்தமிழ் செப்பிடும் நீர்மையறிந்திவண் ஏகுவீர் மேரு நெடுஞ்சிலையத்தனார் வீறருணாபுரி வெற்பரே" (செய் 20) என்று கூறுபவள், தன் பிரிவாற்றாமையும், ஆற்றாது உயிர் நீங்கிய வழி மீட்டும் அதனை வருவித்துப் பொருந்துவிக்கும் அருட்கவி வேண்டும் என்பதை வற்புறுத்தலும், ஞானசம்பந்தர் என்பைப் பெண்ணாக்கிய நலமும் தோன்ற "என்பொரு பாவையாப் பாடிய பாவலர் போலவே நீரும் அருந்தமிழ் செப்பிடும் நீர்மை அறிந்து இவண் ஏகுவீர்" என்று உரைக்கின்றாள். இனி, நம் ஞானசம்பந்தப் பெருந்தகை பாடியருளிய திருப் பதிகம் 16000 என்று நம்பியாண்டார் நம்பிகள் குறிக்கின்றார்கள். ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியில், " நகரம் கெடப்பண்டு திண்தேர் மிசைநின்று நான்மறைகள் பகரங் கழல வனைப்பதினாறா யிரம்பதிகம் மகரம் கிளர்கடல் வையம் துயர்கெட வாய்மொழிந்த நிகரங் கிலிகலிக் காழிப் பிரான்என்பர் நீணிலத்தே" என்று ஒதுகின்றார். இக்கருத்தே, திருத்தொகையில், "கொச்சைச் சதுரந்தன் கோமானைத் தான்செய்த பச்சைப் பதிகத் துடன்பதினா றாயிரம்பா வித்துப் பொருளை விளைக்க வலபெருமான்" என்றும், திருவுலாமாலையில், " பன்னு தமிழ்ப்பதினா றாயிரம் நற்பனுவல் மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் - முன்னிய சிந்தனையால் சீரார் கவுணியர்க்கோர் சேய்என்ன வந்தங் கவதரித்த வள்ளல்" என்று எடுத்தோதி வற்புறுத்துகின்றார். இப்பதிகங்களின் வகைகளையும் தம்முடைய பிரபந்தங்களில் நம்பிகள் காட்டியிருக்கின்றார். இசைக்குரிய பண்முறையே வரும் பதிகங்களைப் பதிகமென்றும், திருப்பாசுரத்தைப் பாசுரம் பல்பத்து என்றும், ஏனைச் சிறப்புடைய இயல்பமைந்தவற்றை திருவிராகம், திருவிருக்குக்குறள், யாழ்மூரி, சக்கரமாற்று, ஈரடி. முக்கால் என்றும் விரித்துரைக்கின்றார். திருவுலாமாலையில், "எப்பொழுதும் நீக்கரிய இன்பத் திராக மிருக்குக்குறள் நோக்கரிய பாசுரம்பல் பத்தோடும் - ஆக்கரிய யாழ்மூரி சக்கரமாற் றீரடி முக்காலும் பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய - ஊழி உரைப்பமரும் பல்புகழால் ஓங்க வுமைகோனைத் திருப்பதிகம் பாடவல்ல சேயை" என்று உரைப்பது காண்க. இனி, ஞானசம்பந்தர் தம்முடைய திருப்பதிகத்துள் பாராட்டிய சைவப்பெருமக்கள் இவர் என்றும் அவர்களை இவ்விவ்வகையில் பாராட்டியிருக்கிறார் நம்பியாண்டார் நம்பிகள் ஆராய்ந்து கூறுகின்றார். இப்பெருமக்களும் ஞானசம்பந்தரை நினைக்கும் போதே பாண்டிமாதேவியார் தாம் நம் மனக்கண்ணே முந்து நிற்பவர். நம்பிகளும் அம்முறையே திருத்தொகையின்கண், " பத்திச் சிவமென்று பாண்டிமா தேவியொடும் கொற்றக் கதிர்வேல் குலச்சிறையும் கொண்டாடும் அற்றைப் பொழுதத்து அமணரிடு வெந்தீயைப் பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை என்னவலான்" என்றும், முருகநாயனார், திருநீலநக்க நாயனார் என்ற இவர் தம் சிறப்பை, " வர்த்தமானீசர் கழல் வணங்கி வாழ்முருகன் பத்தியை ஈசன் பதிகத்தே காட்டினான்; அத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான்" என்றும் உரைக்கின்றார். திருவந்தாதியில், " ஏந்தும் உலகுறுவீர் எழில்நீல நக்கற்கும் இன்பப் பூந்தண் புகலூர் முருகற்கும் தோழனைப் போகமார்ப்பைக் காந்தும் கனலில் குளிர்படுத்துக் கடற் கூடலின்வாய் வேந்தின் துயர் தவிர்த்தானை யெப்போதும் விரும்புமினே" என்று தொகுத்தோதுகின்றார். இங்ஙனம், ஞானசம்பந்தரால் பாராட்டப்பட்ட பெருமக்களை நம்பிகள் எடுத்தோதி வந்தாரே; அவரால் திருச்செங்காட்டாங்குடிப் பதிகத்துள் பாசுரந்தோறும் பாராட்டப் பெற்ற சிறுத்தொண்டரைப் பாடிற்றிலரே என்று நினைக்கலாம். அச்சிறுத்தொண்டற்கு நம் ஞானசம்பந்தர் ஒரு திருப்பதிகம் முழுதும் அமைத்த அமைதி நலத்தை நன்கு ஆராய்ந்து ஒரு சிறந்த கருத்தினை நாம் அறிந்தொழுகு மாறு நம்பியாண்டார் நவில்கின்றார். திருஞானசம்பந்தப் பெருந் தகையின் திருவருள்பெற வேண்டுவோர் சிறுத்தொண்டர் சிறப்பறிந்து பரவுதல் வேண்டும் என்பார், " விரும்பும் புதல்வனை மெய்யரிந்தாக்கிய இன்னமிர்தம் அரும்பும் புனற்சடையா யுண்டருள் என்றடி பணிந்த இரும்பின் சுடர்க்களிற்றான் சிறுத்தொண்டனை ஏத்துதிரேல் சுரும்பின் மலர்த் தமிழாகரன் பாதம் தொடர்வெளிதே" என்று பரிந்தோதுகின்றார். சுட்டுணர்வுக்கெட்டாத முதல்வனை நம் ஞானசம்பந்தப் பெருமான் சுட்டிக்காட்டிய திறந்தை வியந்த பட்டினத்தார், "தோஓடுடைய செவியன் என்றும், பீஇடுடைய பெம்மான் என்றும் கையாற் சுட்டிக்காட்ட" என்றாரன்றோ; அதனையே நம்பியாண்டார் நம்பிகள் வேறொரு திறத்தால் நமக்கு உரைப்பாராய், " வாட்டுவர் தம்தம் துயரை வன்கேழலின் பின்பு சென்று வேட்டுவர் கோலத்து வேதத்தலைவனை மெல்விரலால் தோட்டியல் காதன் இவன் என்று தாதைக்குச் சூழ்விசும்பில் காட்டிய கன்றின் கழல் திறமானவை கற்றவரே" என்று உரைக்கின்றார். இனி, ஞானசம்பந்தர் பாடியருளிய திருப்பதிகங்களின் பொதுக்கருத்தும் அவற்றால் மக்கட்குண்டான பயனும் சிற்சில இடங்களில் நம்பியாண்டார் நம்பிகள் நமக்கு அறிவுறுத்துகின்றார். " பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத் துறவியெனும் தோல்தோணி கண்டீர் - நிறையுலகில் பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன் தன்மாலை ஞானத் தமிழ்" என்பதனால், திருப்பதிகங்கள் பிறவிக்கடலை நீந்தற்குத் துணை செய்யும் என்று உணர்த்துபவர், திருக்கலம்பகத்தில், " பெறுபயன் மிகப்புவியுள் அருளுவன பிற்றைமுறை பெருநெறி யளிப்பனபல் பிறவியை ஒழிச்சுவன உறுதுயாழிப்பன" என்று மீட்டும் வற்புறுத்துகின்றார். இத்திருப்பதிகங்கள் முற்கூறியவாறு பிறவிப்பிணி கெடுத்தற்குப் பெருந் துணையாம் என்பதை, " அந்தம் உந்தும் பிறவித்துயர்தீர அரனடிக்கே பந்த முந்துந் தமிழ் செய்த பராபரன்" என்று சண்பை விருத்தத்தில் வலியுறுத்தி, இவை பத்தி நெறியை மக்கட்கு உணர்த்தி, அதுவே சிவனருளைப் பெறுதற்கு நேரிய பெருவழியாம் என்று பல பாசுரங்களால் நமக்கு அறிவுறுத்து கின்றார். ஆளுடையார் திருத்தொகையில், இப்பதிகங்களைப் பற்றிக் கூறலுற்ற நம்பியாண்டார் நம்பிகள், "கத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே, பத்தித் தனித்தெப்பம் பார்வாழத் தந்தபிரான்" என்று உரைத்துப் பின்னர், பதிகப்பெருவழி காட்டப் பருப்பதக் கோன்பயந்த மதியத் திருநுதல் பங்கன் அருள்பெற வைத்த எங்கள் நிதியைப் பிரமாபுரநகர் மன்னனை என்னுடைய கதியைக் கருத வல்லோர் அமராவதி காப்பவரே என்றும், " தேறும் புனல்தில்லைச் சிற்றம்பலத்துச் சிறந்துவந்துள் ஊறும் அமிர்தப் பருகிட்டெழுவதோர் உட்களிப்புக் கூறும் வழிமொழி தந்தெனை வாழ்வித்தவன் கொழுந்தேன் காறும் அலங்கல் தமிழாகரன் என்னும் நன்னிதியே" என்றும், திருச்சண்பை விருத்தத்தில், " ஆறதேறுஞ் சடையானருள் மேவ அவனியர்க்கு வீறதேறும் தமிழால் வழி கண்டவன்" என்றும் கூறியுள்ளார். இனி, ஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகத்தை ஓதும்போது திருநனிபள்ளித் திருப்பதிகத் திருக்கடைக் காப்பில், "இடுபறை என்ற அத்தன் பியல் மேலிருந்து இன் இசையால் உரைத்த பனுவல், நடுவிருள் ஆடும் எந்தை நனிபள்ளியுள்க வினை கெடுதல் ஆணை நமதே" என்றும், கோளறுபதிகத் திருக்கடைக்காப்பில், "தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய், ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணைநமதே" என்றும் அருளுவதைக் காணுந்தோறும் நமக்கு வியப்பும் இறும்பூதும் உண்டாகின்றனவன்றோ? நனி பள்ளிக்குப் போம்போது ஞானசம்பந்தர், "நாம் அத்தன் பியன்மேல் இருந்து இன்னிசையால் உரைத்த பாசுரம் பத்தும் ஓதுபவர் வினைகெடுவர்; அதற்கு நமது ஆணை" யென்பது காணும்போது "இச்சிறுபிள்ளை தன் தந்தை தோளில் இருந்து கொண்டு சொல்லும் இறுமாப்பு என்னே" என்றெழும் நினைவை நம் சேக்கிழார் பெருமான் உடனே நம்மைத் தெருட்டிப் பணிவிக்கின்றார். தந்தை தோள்மேல் இருந்தார் என்றது பரமன் திருவடிக் கீழ் இருந்தார் என்பதை யுணர்த்தும்; திருவடிக் கீழ் எனவே, அவர் திருமுடிமேல் பரமன் திருவடியிருப்பது பெறப்படும். படவே, அவர் மனத்தே தம்முடியில் பரமன் திருவடியிருப்பது கருதி நிற்கின்றாராம்; சேக்கிழார், "மாதவம் செய்தாதையார் வந்தெடுத்துத் தோளின்மேல் வைத்துக்கொள்ள, நாதர்கழல் தம்முடிமேல் கொண்ட கருத்துடன் போந்தார் ஞானமுண்டார்"1 என்றும், திருநனிபள்ளித் திருப்பதிகத் திருக்கடைக்காப்பில் "ஆணை நமதே" என்றதை வியந்து, "நாரியோர் பாகர் வைகும் நனி பள்ளியுள்குவார்தம், பேரிடர் கெடுதற் காணை நமதெனும் பெருமைவைத்தார்"2 என்றும் உரைக்கின்றார். இவ்வாறு ஆணைநமதே என்னும் பெருமை மொழியை நன்கு கண்டு இறும்பூதெய்திய நம்பியாண்டார், திருத்தொகையில், "மூத்திப் பகவன் முதல்வன் திருவடியை," "அத்திக்கும் பத்தர் எதிர் ஆணை நமது என்னவலான்" என்று பாராட்டி யுரைக்கின்றார். இங்ஙனம் அடியாரைப் பற்றும் வினைகளைக் கெடுத்தற்கும் கோள் முதலியவற்றால் எய்தும் தீமை கெடுதற்கும் ஆணையிட்டுக் கூறும் பெருமை படைத்த ஞானசம்பந்தப் பெருந்தகையாரை வழிபடுவதும் சிவ வழிபாடே என்றும், அதனாற் பெறும் பயனும் சிவ போகமே என்றும் நம்பியாண்டார் நம்பி கூறுகின்றார். அப்பகுதியைத் தொடங்குவதற்கு முன் அகத்திணை நெறியில் அவரை நம்பிகள் பாடியிருக்கும் திறம் சிறிது கூறுகின்றோம். ஒருத்தி ஒரு தலைமகனைக் கண்டு அவன் நட்புப் பெற்றுக் களவு ஒழுக்கம் பூண்டு ஒழுகுகின்றாள். அவள் அவனை இடையறாது கூடியிருப்பதற்கு இயலாமையால் மேனி வேறுபடுகின்றாள். அவ்வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகிறது. அதனை அவள் தோழிக்குக் குறிப்பிக்க, அவள் தலைவிக்கும், தலைவனுக்கும் உண்டான தொடர்பினைச் செவிலிக்கு உரைக்கின்றாள். இது களவொழுக்கத்தில் அறத்தொடு நிலையென்று வழங்கும். தலைவி புனத்தே இருக்குங்கால் யானையொன்று போந்து அச்சுறுத்துகிறது. அதுகண்டு தலைவி அலமருகின்றாள்; அப்போது தலைமகன் போந்து அவ் யானையை வெருட்டி யோட்டி அவளைக் காக்கின்றான். அந்நன்றி மறவாமல் அவள் அவன்பால் அன்புற்று மெலிகின்றாள் என்ற இக்கருத்தை அத் தோழி உரைக்கத் தொடங்கி, " மன்னங் கணைசெந் தமிழா கரன் வெற்பில் வந்தொருவர் அன்னங்கள் அஞ்சன்மின்என்றே, அவ்வேழத் திடைவிலங்கிப் பொன்அங்கு அலைசாவகை எடுத்தாற்கு இவள்பூண்அழுந்தி இன்னந் தழும்புளவாம் பெரும்பாலும் அவ்வேந்தலுக்கே" என்று உரைக்கின்றாள். இவ்வாறு அகனைந்திணை யொழுக்கமே பற்றி வருவன பல. மகளைப் பேதுறுவித்தான் என நற்றாய் ஏசல் என்ற துறையில் நம்பியாண்டார் நம்பிகள் ஞானசம்பந்தப் பெருந்தகையைப் பிள்ளையென்ற நிலையில் வைத்து தனமலி தமலத் திருவெனும் செல்வி விருப்பொடுந் திளைக்கும் வீயா இன்பத்து ஆடக மாடம் நீடு தென்புகலிக் காமரு கவினார் கவுணியர் தலைவ பொற்பமர் தோள, நற்றமிழ் விரக, மலைமகள் புதல்வ, கலைபயில் நாவ, நினாது, பொங்கொளி மார்பில் தங்கியதிருநீறு ஆதரித் திறைஞ்சிய பேதையர் கையில் வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின் பிள்ளையாவது தெரிந்தது பிறர்க்கே1 என்ற அழகிய பாட்டொன்றைப் பாடுகின்றார். இதன்கண், "வெள்வளை வாங்கி" என்ற உடம்பு நனி சுருங்கல், "செம்பொன் கொடுத்தல்" என்பது பசலை பாய்தல் பிள்ளைகளன்றிப் பெரியோர் வெள்வளைக்கு மாறாகச் செம்பொன் தாரர்; என்பதும் பேதையர்க்குச் செம்பொன்னைத் தெரிந்தவர் கொடார்; சிறு பிள்ளைகள் அப்பொன்னின் அருமை தெரியாராதலின் அவர் தான் கொடுப்பார்; நீ இவற்றைச் செய்தனையாதலின், "பிள்ளையாவது தெரிந்தது பிறர்க்கென்னார்" என்றார். பிறர்க்கு என்றவிடத்து எச்சவும்மை தொக்கதாகக் கொள்ளின், எனக்கேயன்றிப் பிறர்க்கும் இது நன்கு தெரிந்துவிட்டது என்றாளாம். "பிள்ளையாவது தெரிந்தது பிறர்க்கே" என்றதன்கண் "பிறரெல்லாம் இவ்வாறு காரணம் காட்டிப் பிள்ளையென நின்னையேசுகின்றனர்; யான் நீ பெரியன் என்றே பேணிப் பரவுகின்றேன்; நீ நின் மார்பின் மாலையைத்தந்து என் மகள் கொண்ட பேதுறவைத் தீர்த்தருள வேண்டும்" எனத் தாய் தார் வேண்டிநிற்கும் நிலையைத் தோற்று விக்கும் நயத்தையும் காண்மின். ஞானசம்பந்தர்பால் உண்டான காதல் வேட்கையால் கண்ணுறக்கமின்றிக் கைவளை சோர்ந்து மேனி வேறுபட்டு இருக்கும் ஒருத்தியைத் தோழி நெருங்கி "எத்துணை வேறுபாடு எய்தினும் இவ்வாறு கைவளை சோர நிற்றல் நன்றன்று" என்று கூற, அவட்கு விடையிறுக்கும் அத்தலைவி, " ஊரும் பசும்புர வித்தே ரொளித்த தொளிவிசும்பில் கூரும் இருளொடு கோழிகண் துஞ்சா கொடுவினையேற்கு ஆரும் உணர்த்திலர், ஞானசம்பந்தன்அம் தாமரையின் தாரும்தருகிலன் எங்ஙனம்யான் சங்கு தாங்குவதே"1 என்று கூறுகின்றாள். இதன்கண் இரவு முழுதும் அவள் கண்ணுறக்க மின்றி யிருந்த குறிப்பை, தேர்ஒளித்தது. இருள்கூர்ந்தது., கோழி கூவிற்று என அந்திமாலையும், நடுவியாமமும் விடியற்காலமும் அக்கால நிகழ்ச்சி வாயிலாக உணர்த்து மாற்றால் தோற்றுவிக் கின்றாள். என்னோடு இருக்கும் தோழியாகிய நீ நன்கு உறங்கினை; என் கலக்கத்தை அறிந்திலை யென்பாள், "ஆரும் உணர்ந்திலர்" என முன்னிலைப் புறமொழியாகப் புகல்கின்றாள். இனி, இதனால் வேறு ஒரு கருத்தும் குறிக்கின்றாள். என் கைவளை சோர்வது கண்டு நெருங்கி யுரைக்கும் நீ, அச்சோர்வுக்குரிய ஏதுவினை யுணர்ந்து ஞானசம் பந்தன்பால் சென்று தார்பெற்றுவர முயல்கின்றிலை யென்றற்கு. "ஆரும் உணர்ந்திலர்" என்கின்றாள் இதனால், தாயர் முதலாயினார் இவட்குற்ற வேறுபாட்டினை நன்கு ஓராது வெறியயர்தலும் கட்டுக் காண்பதும் பிறவும் வீணே செய்கின்றனர் என்பதும் பெறப்படும். உங்கள் உணர்வின்மையைக் கண்டு, அந்த ஞானசம்பந்தனாகிலும், வந்து கூடுதல் நினையானாயினும் தன் மாலையாயினும் தருகின்றானோ எனினும் அது தானும் இல்லை. அதனால் யான்சோர்ந்து மெலியாது ஆற்றியிருப்பது எவ்வாறு முடியும் என்பாள், "எங்ஙனம் யான் சங்கு தாங்குவதே" என்கின்றாள். தோழியின் துணைபெற்றுத் தலைவியொடு கூடியொழுகும் தலைமகனைக் சேட்படுக்கலுற்ற தோழி, அவனை, "பகற்போது மறைந்தது; இங்கு நில்லற்க" என்று கூறுபவள் ஞானசம்பந்தப் பிள்ளையார் சிவ பரம்பொருளின் திருமுன்நின்று அருள்பெறும் திறத்தை " சிறுபால் கலித்த விளிகுரல் கிண்கிணி சேவடி புல்லிச் சில்குரல் பயிற்றி அமுதுண் செவ்வாய் அருவி தூங்கத் தாளம் பிரியாத் தடக்கை யசைத்துச் சிறுகூத் தியற்றிச் சிவனருள் பெற்ற கற்றமிழ் விரகன் பற்றலர் போல இடுங்கிய மனத்தொடும் ஒடுங்கிய சென்று பரிதியும் குடகடற் பாயந்தனன் கருதி நிற்பது பிழை கங்குல் இப்புனத்தே" (கோவை 19) என அழகு திகழக் கூறுகின்றாள். இதன்கண் ஞானசம்பந்தப் பிள்ளையார் பாதத்திற் கட்டிய கிண்கிணி சிறு குரல் மிழற்ற, திருவாய் அமுதூற நின்று திருப்பதிகம் பாடத் திருக்கை அதற்கேற்பத் தாளம் போட, தம்மை மறந்து சிவனருளில் தோய்ந்து நிற்றலின் திருவடி அடி பெயர்த்துச் சிறு கூத்தாடத் தோன்றும் இன்பக் காட்சி நம் கண் முன் தோன்றுவது காண்மின். இவருடைய பாட்டுக்களில் அகப்பொருட்டுறையில் இது காறும் எப்புலவராலும் காட்டப்படாத புதுப்புதுத் துறைகளும் கருத்துக்களும் பல்கியிருக்கின்றன. அவற்றை யெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டுவது வேண்டா கூறலாம். இவர் பாட்டுக்களை மட்டில் தனியே எடுத்து ஆராய்ந்து காண விரும்புவோர்க்கு அவை பொருளாம். இனி, நம்பியாண்டார் நம்பிகள் ஞானசம்பந்தப் பெருமானைத் தனித்த முறையில் எடுத்தோதி நமக்கு அறிவுறுத்துவனவற்றைச் சிறிது கூறி இச் சிற்றுரையை முடித்துக் கொள்கின்றேன். முதற்கண், ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருநாமத்தை ஓதுவதே வேண்டுவதென்கின்றார். ஒருவன் பெறவிரும்பும் பேறுகள் அனைத்தையும் பெறுதற்கு அதுவே வழியென்பார், " உறவும் பொருளும் ஒண் போகமும் கல்வியும் கல்வியுற்ற துறவும் துறவிப்பயனும் எனக்குச் சுழிந்தபுனல் புறவும் பொழிலும் பொழில்சூழ் பொதும்பும் ததும்பும் வண்டின் நறவும் பொழில்எழில் காழியர்கோன் திரு நாமங்களே" என்று கூறுகின்றார். பிறிதோரிடத்தில் இக் கருத்தைச் சிறிது மாற்றி, " எனவே இடரகலும் இன்பமே எய்தும் நனவே அரனருளை நாடும் - புனல்மேய செங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன் கொங்கமலத் தண்காழிக் கோ" என்று நமக்கு அறிவுறுத்துகின்றார். ஆகவே ஞானசம்பந்தர் என்ற திருப்பெயர் ஓதினார்க்கு உயர்நலம் பெறுவிக்கும் உறுதியுடைய தென்பது வற்புறுத்தினாராயிற்று. இனி ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவடியை அனைவரும் பரவிப் பணியவேண்டும் என்பார் அவற்றின் பெருமையைப் பலவிடங்களில் பாராட்டிக் கூறுகின்றார். நினைவார் நினைவில் எழுந்தருளி இன்பத்தேன் பெருகுவது அவர் திருவடியின் மாண்பு என்பார். " என்றும் அடியவர் உள்ளத்திருப்பன, இவ்வுலகோர் நன்று மலர்கொடு தூவித்துதிப்பன, நல்லசங்கத்து ஒன்றும் புலவர்கள் யாப்புக்குரியன, ஒண்கலியைப் பொன்றுங் கவுணியன் சைவசிகாமணி பொன்னடியே" என்று திருமும்மணிக் கோவையிலும், " கவிக்குத் தகுவன, கண்ணுக்கினியன, கேட்கில்இன்பம் செவிக்குத் தகுவன, சிந்தைக்குரியன, பைந்தரள நவிக்கண் சிறுமியர் முற்றில்முகந்துதம் சிற்றில்தொறும் குவிக்கத் திரைபரக்கும் கொச்சைநாதன் குரைகழலே" என்று திருவந்தாதியிலும் பாராட்டியிருக்கின்றனர். இவ்விரண்டு பாட்டுக்களிலும் ஞானசம்பந்தர் திருவடி சிந்தித்தற்குரியனவாம் என்று வற்புறுத்துகின்றாரன்றோ? சிந்திப்பதால் உண்டாகும் பயனே ஞானப்பேறு என்று சேக்கிழார் பெருமான் தெரிவிக் கின்றார். "வாழ்க அந்தணர்" என்று தொடங்கும் திருப்பாசுரத்துக்கு அவர் பேருரை விரித்து அதன் முடிவில், அப்பேருரையினைத் தாம் எழுதுதற்குத் துணைசெய்தது எந்தை ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவடி ஞானமே என்பார் "வெறியார் பொழிற் சண்பையர் வேந்தர் மெய்ப் பாசுரத்தைக் குறியேறிய எல்லை அறிந்து கும்பிட் டேனல்லேன்; சிறியேன் அறிவுக்கு அவர்தம் திருப்பாதம் தந்த, நெறியே சிறிதுயான் அறிநீர்மை கும்பிட்டேன் அன்பால்" என்று ஓதுகின்றார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவடிப்பேறு ஞானப்பேறே என யாப்புறுத்தற்கு இதன்கண், அவர்தம் திருப்பாதம் தந்த நெறியென்று சேக்கிழார் பெருமான் கூறுகின்றார். சிவப்பிரகாச சுவாமிகளும் இத் திருவடிப்பேறு வீடு பேறே என்பர். "பூவான்மலிமணி நீர்ப்பொய்கைக் கரையினியல், பாவான்மலி ஞானப்பாலூண்டு நாவால், மறித்தெஞ்செவியமுதா வார்த்த பிரான் தண்டை வெறித் தண் கமலமே வீடு" என்று ஓதியிருத்தலை நாம் நன்கு அறிகின்றோம். ஞானசம்பந்தர் திருவடி பணிவார் பெறும்பயன் ஞானமும் வீடும் என மேலே காட்டிய பெருமக்கள் வழங்கிய நல்லுரையால் தெளிந்தோமாயினும் நம்பியாண்டார் கூறுவது காண்போம். அவரும் திருவடிப்பேறு சிவபோகப் பேறே என்பார், " பெறுவது நிச்சயம், அஞ்சல் நெஞ்சே, பிரமா புரத்து மறுவது பொற்கழல் ஞானசம் பந்தனை வாழ்த்துவ தால் வெறியுறு கொன்றை மறியுறு செங்கை விடை யெடுத்த பொறியுறு பொற்கொடி எம் பெருமான் அமர் பொன்னுலகே" என்று அழுத்தமும் திருத்தமும் பொருந்தக் கூறுகின்றார். சிவபோகம் பெறுதல் எளிதன்றே; திருஞானசம்பந்தர் திருவடி வழிபாடு அதனைத் தருமென மிக எளிதாகக் கூறுகின்றீரேயெனின், "எளிது எளிதே" என வற்புறுத்துவாராய், பிறிதோரிடத்தில், " முத்தன வெண்ணகை யார்மயல்மாற்றி முறை வழுவாது எத்தனை காலம் நின்றேத்தும் அவரினும் என்பு அணிந்த பித்தனை எங்கள் பிரானை அணைவது எளிது கண்டீர், அத்தனை ஞானசம் பந்தனைப் பாதம் அடைந்த வர்க்கே" என்று உரைக்கின்றார். இதனைக் கேட்டதும், நம்மனோர் மனத்தில், "அஃது எவ்வாறு இயலும்; ஞானசம்பந்தர்க்கு அடியோம் என்பதனால் சிவபோகப் பேறு எய்தும் என்பது எங்ஙனம் அமையும்?" என் றெல்லாம் எண்ணம் எழுகிறது. அதற்கும் நம்பியாண்டார் நம்பி நல்ல காரணம் கூறுவார், "சுரபுரத்தார்தம் துயருக் கிரங்கிச் சுரர்கள் தங்கள் பரபுரத்தார் தம்துயர் கண்டருளும் பரமன்மன்னும் அரபுரத்தானடி எய்துவன் என்பது அவனடிசேர் சிரபுரத்தான் அடியார் அடியான்எனும் திண்ணனவே" என்று கூறுகின்றார். இவ்வாறு எடுத்து மொழிந்தவர், இதற்குத் தக்க எடுத்துக்காட்டும் ஓதுகின்றார். எடுத்துக்காட்டு அளவை வகைகளுள் என்று. அது, " காரங்கணைபொழில் காழிக் கவுணியர் தீபன்நல்லூர்ச் சீரங்கணை நல்பெருமணந் தன்னில் சிவபுரத்து வாரங்கணை கொங்கை மாதொடும்புக்குறும்போது வந்தார் ஆர்அங்கு ஒழிந்தனர் பெற்றதல்லால்அவ் வரும்பதமே" என்பது. இதனைக் கேட்குமவர் நெஞ்சில் தாமும் ஞானசம்பந்தர் திருவடி பரவி அப்பேரின்ப வாழ்வு பெறுதற்கு முயலவேண்டும் என்ற வேட்கை கொள்வர், நினைத்தலும் செய்வர். அந்நினைவு நெடிது செல்லாது இடையற்றுப் போதலும் உண்டு. அப்போது, தம்மை, நினைவொட்டாது தடுப்பது வினையென்னும் உணர்வு தோன்றி அவர் உள்ளத்தை அலைக்கும். அதனால் அவர் மனம் கலங்குவர். அக்கலக்கமறிந்தே, நம்பியாண்டார் நம்பிகள், "உங்கள் முயற்சியை முன்னை வினைப்பயன் போந்து இடையூறு செய்து கெடுப்பதாக எண்ணுகின்றீர்கள்; ஞானசம்பந்தன் திருவடி வழிபாடு அவ்வினைப் பகையைச் சிதைக்கும்; நீவிர் கவலுதல் வேண்டா" என்பாராய், " நலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்பம் நனி பனிமதியணிந்த பொழில்சூழ் பொலமதில் இரும்புகலி அதிபதி விதம்பெருகு புனிதகுணன் எந்தம்இறைவன் பலமலி தருந்தமிழின் வடகலை விடங்கன்மிகு பரசமய வென்றியரிதன் சலமலி தருங்கமல சரண்நினைவன் என்றனது தகுவினைகள் பொன்றும் வகையே" என்று ஓதி வினைப்பகையைக் கெடுத்தற்கு விரகு கூறித் தெருட்டு கின்றார். இவ்வாறு, திருஞான சம்பந்தப் பெருந்தகையின் திருவடி நினைந்து வழிபடும். நெறியில் நம்மை அறிவுறுத்திக் கூட்டுவிக்கும் இச்சான்றோர் இவ்வகையால் அடியாராயினார் பெருமை இது எனப் பல பாசுரங்களின் வாயிலாகத் தெரிவிக்கின்றார். ஒன்று காட்டுதும். " மேனாட் டமரர்தொழ இருப்பாரும் வினைப்பயன்கள் தரநாட் டருநரகில் தளர்வாரும் தமிழர்தங்கள் கோனாட்டருகர் குழாம்வென்ற கொச்சையர் கோன்கமலப் பூநாட்டடி பணிந்தாரும் அல்லாத புலையருமே" என்பது காண்க. இதன்கண் அடிபணியும் பெரியோர் பேரின்ப வாழ்வில் இனிதிருப்பரென்பதும், பணியாதார் நரகில் தளர்வ ரென்பதும் நிரனிறையாகக் கூறி, பணியாதவரைப் புலையரென்று இழித்துரைப்பதும் காண்க. இந்நிலையில் திருமாலும் அயனும் சிவபரம்பொருளின் திருவடியும் திருமுடியும் முறையே காண முயன்று அலமந்த செய்தியை நினைந்து, அவர் தாமும், நம் ஞானசம்பந்தர் திருவருளை நாடியிருப்பின், அவர்கட்கு அவர் அவற்றைக் காட்டியிருப்பா ரென்பார் " நிலமேறிய மருப்பின் திருமாலும் நிலம்படைத்த குலமேறிய மலர்க் கோகனகத் தயனும் கொழிக்கும் சலமேறிய முடிதான் கண்டிலர் தந்தைகாண அன்று நலமேறிய புகழ்ச்சம்பந்தன் காட்டிய நாதனையே" என்று கூறுகின்றார். இவ்வாறு மாலும் அயனும் காண்பதற்கரிய பரமனைத் தாம் எளிதிற்கண்டு, அதனோடமையாது தந்தைக்கும் காட்டியருளிய அருளாளரான ஞானசம்பந்தப் பெருந்தகையைத் தாம் எளிதில் பற்றிப் பரவுதற்கு நேர்ந்த நேர்பாட்டினைத் தாமே வியந்து, " செப்பியஎன்ன தவமுயன்றேன் நல்ல செந்தமிழால் ஒப்புடை மாலைத் தமிழாகரனை உணர்வுடையோர் கற்புடை வாய்மொழி யேத்தும்படி கதறிட்டிவர மற்படு தொல்லைக் கடல்புடை சூழ்தரு மண்ணிடையே" என்று பாடி மகிழ்கின்றார். இம்மகிழ்ச்சி மிகுதியால், இனி ஞான சம்பந்தரையன்றிப் பிறரைப் பாடுதற்கு என் மனம் செல்லாது; ஆனைமேல் அம்பாரி கட்டிச் செல்லும் அரிய செல்வம் சிறந்த வாழ்வு தானே வந்தமைவதாயினும் அதனை வேண்டேன் என்று கூறுவாராய், " உகட்டித்து மோட்டு வராலினம் மேதி முலையுரிஞ்ச அகட்டிற் சொரிபால் தடநிறை கொச்சை வயத்தரசை தகட்டில் திகழ்மணிப் பூண்தமிழாகநரன் றன்னையல்லால் பகட்டிற் பொலிவினும் வேண்டேன் ஒருவரைப் பாடுதலே" என்று கூறுகின்றார். இவ்வண்ணம் ஞானசம்பந்தர்பால் திண்ணிய அன்பராகுமிவர். இப்பாட்டின்கண் ஒருவரை யென்றது, சிவனடியாரல்லாத பிறர் ஒருவரையாகும் எனக்கொள்ளல் வேண்டும். என்னை, திருநாவுக்கரசரைத் திருவேகாதசமாலை பாடிப் பரவியிருக் கின்றராகலின், அல்லதூஉம் அவர் திருஞான சம்பந்தரொடு கூடியிருந்து படிக்காசு பெற்ற செய்தியை விதந்து, இவ்விரு பெருமக்களும் கூடியிருந்த கூட்டத்தின் பயனே இன்றும் சைவவுலகு நிலைபெற்றிருத்தற்கு ஏதுவாயிற்றென்பர், " பாடிய செந்தமிழாற் பழங்காசு பரிசில் பெற்ற நீடிய சீர்த்திரு ஞானசம்பந்தன் நிறைபுகழான் ஏடியல்பூந் திருநாவுக்க ரசோ டெழில் மிழலைக் கூடிய கூட்டத்தினா லுளதாய்த்திக் குவலயமே" என்று அடியார்களைச் சிறப்பித்து ஓதுகின்றார்.  1. ஞானசம் ஐயா. 5 இனி, பெயர் குறியாது தலப்பெயர் மட்டில் குறிக்கப் பெறுவனயாவும் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளின் தேவார மென்றுணர்க. 1. சோ. துறை 10. 2. தொல். சொல். 329 3. தொல். பொ. 5 4. நாரை. 9 இடைச் 5. தரும்பு. 9 6. தக்க. யா. தா. 453. உரை 7. தொல். சொல். 138 1-2. தொல். சொல். 64,79. 3. வலஞ் .11. 4. திருவிடை மும்மணி 1. 5. புட்பவிதி. 1. கல்.17. 2. அரி-க. புத்தூர். 2 3. கானப் 7. 4. நள். 5 5. ஆரூர் இருக்கு 1. கழு மும்மணி 12. 2. திருநாவு ஐயா விருத் 15 3. பிரம, சீகாம 11. 4. பிரம. 5.கருகா.2 6. திருநா. திருவை. விருத.6 1. பாற். 11 2. புகலி . 5 3. கானப். 5 4. பிரம. 7 5. கருகா. 6 6. 7. வல். 5 7. மங்கல. 5 8. பொன்வண்.13 1. மாற் 6. 2. வேணு. 5. 3. பேணு. 2 4. இராமேச். 8 5. புகலி & வீழி. 10 6. சிவ சித்தி சூ. 2: 25 7. பேணு.7. 1. உண். விளக். 36. 2. முண்டகோபநிஷத். முண்டக. iii அத் - 2:6, சங்கராபஷ்யம். 1. திருவுந்தி.1 2. ஈங்கோ. 2 3. திருக்களிற். 94 1.வினையை என்றும். 2. உமை என்றும் பாடம் ஓதுவர். 3. சீவக. 1257 4. நறை. 3. 1. தொல் சொல்.432 2.ஷை.ஷை. 213. 3. தொல். சொல். தெய்வ. 207 4. நற். 300 5. தொல். சொல். சே. 451 1. பிரம. 1 2. நாகை.5. 3. மாற்.3. 4. நாரை.6. 5. திருநா. தனித்தாண். 3. 1. நாரை.4. 2. விற்குடி 1. 3. வைகா.3 4. சிவ.போ. சூ.12 அதி 4 மேற் 2 5. இருபாலிரு 14 :47 6. இலக்கொத் 81 1. சிவ.போ.மாபாடி பக். 113. 2. குறள் 5. 3. குறள் 207 4. சிவ. சித்தி 2 : 12 5. நீலகண் 1. 1. பொது, வாழ்க. 4. 2. குறள் 739 3. திருமந். 262 4. ஷை 258 1. தொல். எழுத் நச். மேற் 2. தொல் சொல் 278. 1. கல் 23 : 40- 1 2. அரசி. 8 ; 3. வீழி. 8 ; 4. அண்ணா, 8. 5. இடும்பா. 8 ; 6. விய. 8 ; 1. கோட். 8 ; 2. நறை. சித். 8 ; 3. வர்த்தமா. 8 ; 4. நறை. சித். 8; 5. ஆலங். 9; 6. கம்ப. இரா. உத்தர. வரையெடுத்த. 71; 1. தோணி. 8 ; 2. அவளிவ. 8 ; 3. காஞ். சிப்பு. முதற்கா. கயிலாயம் 23 1. தொல். பொ. 175 2. சிலப். பதிக. 8.9., 3. சீவக. 1063 1. கழும. 3 2. குறள். 359 3.திருமத் .343 1. திருந்தொண்டர் புராணம் : திருஞானசம்பந்தர் 16. 1. திருந்தொண்டர் புராணம் : திருஞானசம்பந்தர் 18. 2. திருந்தொண்டர் புராணம் : திருஞானசம்பந்தர் 17. 1. திருந்தொண்டர் புராணம் : திருஞானசம்பந்தர் 42. 2. திருந்தொண்டர் புராணம் : திருஞானசம்பந்தர் 43. 3. திருந்தொண்டர் புராணம் : திருஞானசம்பந்தர் 63. 4. திருந்தொண்டர் புராணம் : திருஞானசம்பந்தர் 62. 1. திருந்தொண்டர் புராணம் : திருஞானசம்பந்தர் 66. 2. திருந்தொண்டர் புராணம் : திருஞானசம்பந்தர் 73. 3. திருஞானசம்பந்தர் தேவாரம் 9; 1 4. திருத்தொண் திருஞானசம்பந்தர் 70 1. திருஞானசம்பந்தர் 282 ; 2. 2. திருமுறைகண் 14. 1. திருமுறைகண் 25. 2. Annual Report : Madras Epigraphy : No. 8 of 1918 1.புறம் 6, 2.புறம் 299, 3.அகம் 18 4. சிலப் 5: 169 - 173 5. சிலப்9:9-12 1. ஞானசம் 183:8 2. திரு நாவுக். 21:8. 1. திருஞான. 1 : 1 2. 22 : 6 3. 293 : 1. 4. 55 : 4 5. 335 : 4. 6. 184-7 7. 273 : 7 8. ஞானசம் : 268 : 2. 1. 349 - 8. * பாரதப்போர் நிகழ்ச்சி வேத காலத்துக்கும், மோஹெஞ் சோதாரோ ஹாரப்பா என்பவற்றிற் கண்ட தொல் காலத்துககும் முந்தியதென ஹீராஸ் பாதிரியார் (Rev. Father Heras) கூறுகின்றார். 2. 337 : 10. 3. 344 : 7. 1. 327 : 4. 2. 367 : 7. 3. 293 : 7. 4. ஞான. 48:7 5. 64:1 1. 256:9. உறையூரிலுள்ள திருக்கோயிலுக்கு மூக்கீச்சுரம் என்பது பெயர் 2. 63:11 2. பெரிய திரு. vi: 6:8 1. 281:6 2. 128. 3. 270:1 1. 108:4 2. 42;7 3. 293:7 2. 53:2 3. 121;8 4. 338:6, 1. 126:7 2. 129:9 3. 329 : 1 4. 337:2,7. 1. Saivism In south india p.304, 2. ஞான 333:6 3. 131:1 4. 165:5 5. இந்த நாடகம் இந்நூலாசிரியரால் தமிழில் மொழி பெயர்க் கப்பட்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பருவ வெளியீட்டில் (Journal Of the Annamalai university Vol. Xv. March 1950) வெளியாகிருக்கிறது. 1. 351:1 2. புறம் : 194 3. புறம் : 193 1. “நரைவரு மென்றெண்ணி நல்லறிவாளர், குழவியிடத்தே துறந்தார்” என்று சமண முனிவரும், தாமெழுதிய சௌந்தரானந்த காவியத்தில் பௌத்த சான்றோரான அசுவகோச ரென்பாரும் கூறுதல் காண்க (நாலடி.11) 2. 215:5,9 3. 331:7, 4. தொல்.மரபு.95 5. புறம் : 367 6 Prof. Radhakrishhan’s The philosophy of the Upanisad pp. 120 - 5. . 1. Vide rage 114-5 of “Indian Buddhism” by Rys David’s Hibbert Lectures 1. சிவஞான சித்தியார்: 2.17 1. 23;6 2. 91;1 1. 295:64 2. 67:7 3. 3:5 4. 205:2 5. 339 :7 6. 120:1 7. 229:7 8. 199:27 9. 200:4 1. 105:2,5 2. 115:10 3. 267 : 9 4. 307:1,3 5. 283:5 6. 331:1 1. சிவஞானபோதம் சூ.12 2. சிவ. சித்தி சூ. 12:3 3. 185:3, 1. 2:3,7 2. 240 :10 3. 119:4 4. 119 :7 5. 378:4,8 6. 52:1-47-9 7. 187:2 1. 11:2 2. 184:3,2 3. 129:7 4.132:4 5. ஞான : 128 6.21:1,2,3 1. 329:4 2. 220:8 3. 312:6 4. 214:5 5. 261 : 1 6. 123;6 7. 271:7 8. 76:6 1. 50:4 2. 132:6 3. 146:6 4. 196:7 5.203 :10 6. சதக : 28 7. 247 :3 8. 245:6 1. 151:3 2. 150:9 3. 322:1 4. 245:5 5.329 :3 1. 69:3 2. 284 :7 3. 38:3 4.86:8 5. 37:2 6. 38:4 7. 229 :7 8. 28:1 9. 203: 8 1. 2:7 2. 237 :6 3. 169 :5 4. 122:2 5. 124 1. 179 : 6 1. 215:3,5 2. 272 :2 3. 145:1 4. 224 :4 5. 230 :5 6. 383 :10 7. 317 :10 1. 1:2 2. 2:3 3. 131 :10 4. 329 :3 5. 59:3 1. 118:6 2. 118 :10 3. 116 :1 4. 116 :2 5. 116 :6 6. 116 :8 1. 138 :11 2. 1:4 3. 176 :2 4. 238:2 1. 384 :7 2. 338 :11 1. 312 :4 2. 286:3 3. 334 :4 1. 107:4 1. திருக்கோவை 20 * இச்செய்திகளை எனக்குக் காலஞ்சென்ற விண்ணமங்கலம். திரு. தண்டாயுத பாணிக்காடவராயர் அவர்கள் கூறினார்கள். 1. திருநாவுக். 239:7 1. குறள். 974 1. குறள் 974, 2. சீவக.1597 3. திருஞான. 272:7 4. வட்டணை - கூத்துவகையுள், அவிநயவகை, முகவட்டணை, கைவட்டணை, கால்வட்டணை எனப் பல வகை யுண்டென அடியார்க்கு நல்லார் கூறுவர். 1. தொல் பொருள். பொருள். 42 2. திருஞான. 73:3 1. திருநாவு. 98:4 1. ஞானசம்.90 1. ஞானசம்.123 1. திருநா. 12 2. திருநா. 264 3. திருநா.234 4. திருநா. 234 1. திருநா.224 2. சம்.257 1. நா.204 1. குறுந்.93 2. குறள் 1298 1. பாட்டியல் .சூ. 55 1. இப்போது சீவைகுண்டம் எனப்படும் ஊரின் ஒரு பகுதி கலியாயபுரம் என்பது * பண்டார மும்மணிக்கோவை.4 2. பண்.மும்.28 1. பண்.மும். 2 2. பண்.மும்.4 3. பண்.மும்.25 4. பண்.மும்.10 1. பண்.மும்.16 1. பண்.மும்.21. 1. பண்.மும்.கோ.5 2. பண்.மும். கோ. 8 4. பண்.மும்.கோ.10 1. பண்.மும். கோ.25 1. பண்.மும். கோ.22 1. பண்.மும். கோ.22 2. பண்.மும். கோ.22 1. பண்.மும். கோ. 4 1. பண். மும். கோ.4 1. பண்.மும். கோ. 10 2. குடிலை - சுத்தமாயை 3. சிவப்பிரகாசம் 7. 1. பண்.மும். கோ.16 2. பண்.மும். கோ.19 3. பண்.மும்.கோ.19 4.பண்மும். கோ. 22 5. பண்.மும். கோ.25 1. பண். மும்.கோ.17 2. பண்.மும்.கோ.13 3. பண்.மும். கோ.7 1. தொல். களவு.2 2. பண்.மும். கோ.1 1. பண். மும். கோ. 19 2. பண்.மும். கோ.94 1. பண்.மும். கோ. 26 2. பண்.மும்.கோ.10 * இச்சந்திநிபாத நிலையை, “அன்புமிகு வுண்டாய் அதிலே விவேகமுண்டாய்த் துன்பவினையைத் துடைப்பத் துண்டாய் - இன்பந் தரும் பூரணத்துக்கே தாகமுண்டாய் ஓடி வரும் காரணர்க் குண்மை ணைவ” 16 என்ற சிவபோகசாரச் செய்யுளால் உணரலாம். 1. பண்.மும்.கோ.16 2. பண். மும். கோ. 28 3. பண்.மும்.கோ.19 4. பண்.மும். கோ.12 5. சிவ. சித். 321 1. பண்.மும். கோ.12 2. பண்.மும்.கோ.22 1. பண்.மும்.கோ.10 2. இவ்வாறு இந்நூல் கூறிற்றேனும்வேதாந்தமாவது பரசுருதிகளாகிய சைவோபநிட தங்களின் தொகுதியேயாகும் என்றும் 1. வேதாந்தமென்று இப்போது வழங்கும் ஏகான்மவாதம் இப்பாட்டிற் காட்டிய வேதாந்தமென்ற உச்சியிற் பழுத்த பழம் ஆகாதென்றும் அந்நூல் உரைக்கின்றது; அதனை ஆண்டுக்காண்க. 2. பண்.மும். கோ.1 1. இக் கருத்தையே குருஞானசம்பந்த தேசிக சுவாமிகளும் “அரியயற்கு முன்னாள் அடிமுடியுங் காணாப் பெரியவனே வந்து பிறந்து - துரியம் பெருக்கின்றான் ஞானப் பிரகாசனாகி இருக்கின்றான் ஆரூரில் இன்று” (4) என்று சிவபோக சாரத்தில் கூறியிருத்தல் காண்க. 2. பண். மும். கோ.2 3. பண். மும். கோ. 1 4. பண்.மும். கோ.24 1. பண். மும். கோ.1 1. பண். மும். கோ.16 2. பண். மும். கோ.16 3. சீவக.997 1. பண். மும். கோ.19 1. பண். மும். கோ. 22 1. பண். மும். கோ. 1 1. பண்.மும். கோ. 13 2. பண்.மும். கோ.13 3. பண்.மும். கோ. 13 4. பண்.மும். கோ.13 1. பண்.மும்.கோ.4 2. பண்.மும்.கோ.4 3. பண்.மும்.கோ.16 1. பண்.மும். கோ. 19 1. பண்.மும்.கோ. 22 2. பண். மும. கோ. 22 1. பண்.மும். கோ.25 1. பண்.மும்.கோ.28 2. பண்.மும். கோ.10 1. பண்.மும்.கோ.8 * “இனி எதிர்நிறைகோளினுமென்பதற்கு, ஒன்றற்கொன்று நேர்நேராக நிறுத்தப்படும் நிரனிறைப்பொருள்கோளினும் என்றும், எதிர்மருவு நிரனிறைப்பொருள்கோளினு மென்றும், வேற்றுமைத் தொகைப் பொருள்கோளென்பதற்கு, இரண்டாம் வேற்றுமைத் தொகைப் பொருள் கோளினுமென்றுங் கொண்டு, விருப்பற்றிருப்ப ரெனின் வெறுப் பற்றிருப்பரென்றும் வெறுப்பற்றிருப்பரெனில் விருப்புற்றிருப்பரென்றும் விருப்பை யற்றிருப்பர் வெறுப்பையுற்றிருப்பரென்றும் இவ்வண்ணம் சாதுரியப்பொருள் கூறுதலும் ஒன்று” என்பதுஈசானியமடத்து இராமலிங்கசுவாமிகள் உரைக்குறிப்பாகும். 1. பண்.மும்.கோ.26 1. பண்.மும்.கோ.26 2.பண்.முன்.கோ.22 3. பண்.மும். கோ.23 1. பண்.மும்.கோ.24 1. ஐங்.124 1. கலி.59 2. ஐங்.84 3. பரி.11:75-7 4. பரி.11:76-8 9 5.பரி 11;115-121. 1. 59 1. திருவெம். 2. திருவெம்.19 3. திருப்பாவை 3 1. 17 1. 18 1. திருப்பாவை - அவதாரிகை 1. Madras Epigraphy Annual Report For 1926- 7 Page 26 Ar 128 of 1912 1. Do A.R.No 421 of 1921 2. Do A.R.no for 1927-8 Para 19 3. Madras Epigraphy A.R for 1913 Para 51 4. Do A.R402 of 1916 354 of 1921 3 of 1931 -2 etc 5.H.G. Quartich Wales - The Lord Chamberlains Repartment of the Courtofsiam. 1. ஞானசம் ஐயா. 5 இனி, பெயர் குறியாது தலப்பெயர் மட்டில் குறிக்கப் பெறுவனயாவும் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளின் தேவார மென்றுணர்க. 1. சோ. துறை 10. 2. தொல். சொல். 329 3. தொல். பொ. 5 4. நாரை. 9 இடைச் 5. தரும்பு. 9 6. தக்க. யா. தா. 453. உரை 7. தொல். சொல். 138 1-2. தொல். சொல். 64,79. 3. வலஞ் .11. 4. திருவிடை மும்மணி 1. 5. புட்பவிதி. 1. கல்.17. 2. அரி-க. புத்தூர். 2 3. கானப் 7. 4. நள். 5 5. ஆரூர் இருக்கு 1. கழு மும்மணி 12. 2. திருநாவு ஐயா விருத் 15 3. பிரம, சீகாம 11. 4. பிரம. 5.கருகா.2 6. திருநா. திருவை. விருத.6 1. பாற். 11 2. புகலி . 5 3. கானப். 5 4. பிரம. 7 5. கருகா. 6 6. 7. வல். 5 7. மங்கல. 5 8. பொன்வண்.13 1. மாற் 6. 2. வேணு. 5. 3. பேணு. 2 4. இராமேச். 8 5. புகலி & வீழி. 10 6. சிவ சித்தி சூ. 2: 25 7. பேணு.7. 1. உண். விளக். 36. 2. முண்டகோபநிஷத். முண்டக. iii அத் - 2:6, சங்கராபஷ்யம். 1. திருவுந்தி.1 2. ஈங்கோ. 2 3. திருக்களிற். 94 1.வினையை என்றும். 2. உமை என்றும் பாடம் ஓதுவர். 3. சீவக. 1257 4. நறை. 3. 1. தொல் சொல்.432 2.ஷை.ஷை. 213. 3. தொல். சொல். தெய்வ. 207 4. நற். 300 5. தொல். சொல். சே. 451 1. பிரம. 1 2. நாகை.5. 3. மாற்.3. 4. நாரை.6. 5. திருநா. தனித்தாண். 3. 1. நாரை.4. 2. விற்குடி 1. 3. வைகா.3 4. சிவ.போ. சூ.12 அதி 4 மேற் 2 5. இருபாலிரு 14 :47 6. இலக்கொத் 81 1. சிவ.போ.மாபாடி பக். 113. 2. குறள் 5. 3. குறள் 207 4. சிவ. சித்தி 2 : 12 5. நீலகண் 1. 1. பொது, வாழ்க. 4. 2. குறள் 739 3. திருமந். 262 4. ஷை 258 1. தொல். எழுத் நச். மேற் 2. தொல் சொல் 278. 1. கல் 23 : 40- 1 2. அரசி. 8 ; 3. வீழி. 8 ; 4. அண்ணா, 8. 5. இடும்பா. 8 ; 6. விய. 8 ; 1. கோட். 8 ; 2. நறை. சித். 8 ; 3. வர்த்தமா. 8 ; 4. நறை. சித். 8; 5. ஆலங். 9; 6. கம்ப. இரா. உத்தர. வரையெடுத்த. 71; 1. தோணி. 8 ; 2. அவளிவ. 8 ; 3. காஞ். சிப்பு. முதற்கா. கயிலாயம் 23 1. தொல். பொ. 175 2. சிலப். பதிக. 8.9., 3. சீவக. 1063 1. கழும. 3 2. குறள். 359 3.திருமத் .343 1. திருந்தொண்டர் புராணம் : திருஞானசம்பந்தர் 16. 1. திருந்தொண்டர் புராணம் : திருஞானசம்பந்தர் 18. 2. திருந்தொண்டர் புராணம் : திருஞானசம்பந்தர் 17. 1. திருந்தொண்டர் புராணம் : திருஞானசம்பந்தர் 42. 2. திருந்தொண்டர் புராணம் : திருஞானசம்பந்தர் 43. 3. திருந்தொண்டர் புராணம் : திருஞானசம்பந்தர் 63. 4. திருந்தொண்டர் புராணம் : திருஞானசம்பந்தர் 62. 1. திருந்தொண்டர் புராணம் : திருஞானசம்பந்தர் 66. 2. திருந்தொண்டர் புராணம் : திருஞானசம்பந்தர் 73. 3. திருஞானசம்பந்தர் தேவாரம் 9; 1 4. திருத்தொண் திருஞானசம்பந்தர் 70 1. திருஞானசம்பந்தர் 282 ; 2. 2. திருமுறைகண் 14. 1. திருமுறைகண் 25. 2. Annual Report : Madras Epigraphy : No. 8 of 1918 1.புறம் 6, 2.புறம் 299, 3.அகம் 18 4. சிலப் 5: 169 - 173 5. சிலப்9:9-12 1. ஞானசம் 183:8 2. திரு நாவுக். 21:8. 1. திருஞான. 1 : 1 2. 22 : 6 3. 293 : 1. 4. 55 : 4 5. 335 : 4. 6. 184-7 7. 273 : 7 8. ஞானசம் : 268 : 2. 1. 349 - 8. * பாரதப்போர் நிகழ்ச்சி வேத காலத்துக்கும், மோஹெஞ் சோதாரோ ஹாரப்பா என்பவற்றிற் கண்ட தொல் காலத்துககும் முந்தியதென ஹீராஸ் பாதிரியார் (Rev. Father Heras) கூறுகின்றார். 2. 337 : 10. 3. 344 : 7. 1. 327 : 4. 2. 367 : 7. 3. 293 : 7. 4. ஞான. 48:7 5. 64:1 1. 256:9. உறையூரிலுள்ள திருக்கோயிலுக்கு மூக்கீச்சுரம் என்பது பெயர் 2. 63:11 2. பெரிய திரு. vi: 6:8 1. 281:6 2. 128. 3. 270:1 1. 108:4 2. 42;7 3. 293:7 2. 53:2 3. 121;8 4. 338:6, 1. 126:7 2. 129:9 3. 329 : 1 4. 337:2,7. 1. Saivism In south india p.304, 2. ஞான 333:6 3. 131:1 4. 165:5 5. இந்த நாடகம் இந்நூலாசிரியரால் தமிழில் மொழி பெயர்க் கப்பட்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பருவ வெளியீட்டில் (Journal Of the Annamalai university Vol. Xv. March 1950) வெளியாகிருக்கிறது. 1. 351:1 2. புறம் : 194 3. புறம் : 193 1. “நரைவரு மென்றெண்ணி நல்லறிவாளர், குழவியிடத்தே துறந்தார்” என்று சமண முனிவரும், தாமெழுதிய சௌந்தரானந்த காவியத்தில் பௌத்த சான்றோரான அசுவகோச ரென்பாரும் கூறுதல் காண்க (நாலடி.11) 2. 215:5,9 3. 331:7, 4. தொல்.மரபு.95 5. புறம் : 367 6 Prof. Radhakrishhan’s The philosophy of the Upanisad pp. 120 - 5. . 1. Vide rage 114-5 of “Indian Buddhism” by Rys David’s Hibbert Lectures 1. சிவஞான சித்தியார்: 2.17 1. 23;6 2. 91;1 1. 295:64 2. 67:7 3. 3:5 4. 205:2 5. 339 :7 6. 120:1 7. 229:7 8. 199:27 9. 200:4 1. 105:2,5 2. 115:10 3. 267 : 9 4. 307:1,3 5. 283:5 6. 331:1 1. சிவஞானபோதம் சூ.12 2. சிவ. சித்தி சூ. 12:3 3. 185:3, 1. 2:3,7 2. 240 :10 3. 119:4 4. 119 :7 5. 378:4,8 6. 52:1-47-9 7. 187:2 1. 11:2 2. 184:3,2 3. 129:7 4.132:4 5. ஞான : 128 6.21:1,2,3 1. 329:4 2. 220:8 3. 312:6 4. 214:5 5. 261 : 1 6. 123;6 7. 271:7 8. 76:6 1. 50:4 2. 132:6 3. 146:6 4. 196:7 5.203 :10 6. சதக : 28 7. 247 :3 8. 245:6 1. 151:3 2. 150:9 3. 322:1 4. 245:5 5.329 :3 1. 69:3 2. 284 :7 3. 38:3 4.86:8 5. 37:2 6. 38:4 7. 229 :7 8. 28:1 9. 203: 8 1. 2:7 2. 237 :6 3. 169 :5 4. 122:2 5. 124 1. 179 : 6 1. 215:3,5 2. 272 :2 3. 145:1 4. 224 :4 5. 230 :5 6. 383 :10 7. 317 :10 1. 1:2 2. 2:3 3. 131 :10 4. 329 :3 5. 59:3 1. 118:6 2. 118 :10 3. 116 :1 4. 116 :2 5. 116 :6 6. 116 :8 1. 138 :11 2. 1:4 3. 176 :2 4. 238:2 1. 384 :7 2. 338 :11 1. 312 :4 2. 286:3 3. 334 :4 1. 107:4 1. திருக்கோவை 20 * இச்செய்திகளை எனக்குக் காலஞ்சென்ற விண்ணமங்கலம். திரு. தண்டாயுத பாணிக்காடவராயர் அவர்கள் கூறினார்கள். 1. திருநாவுக். 239:7 1. குறள். 974 1. குறள் 974, 2. சீவக.1597 3. திருஞான. 272:7 4. வட்டணை - கூத்துவகையுள், அவிநயவகை, முகவட்டணை, கைவட்டணை, கால்வட்டணை எனப் பல வகை யுண்டென அடியார்க்கு நல்லார் கூறுவர். 1. தொல் பொருள். பொருள். 42 2. திருஞான. 73:3 1. திருநாவு. 98:4 1. ஞானசம்.90 1. ஞானசம்.123 1. திருநா. 12 2. திருநா. 264 3. திருநா.234 4. திருநா. 234 1. திருநா.224 2. சம்.257 1. நா.204 1. குறுந்.93 2. குறள் 1298 1. பாட்டியல் .சூ. 55 1. இப்போது சீவைகுண்டம் எனப்படும் ஊரின் ஒரு பகுதி கலியாயபுரம் என்பது * பண்டார மும்மணிக்கோவை.4 2. பண்.மும்.28 1. பண்.மும். 2 2. பண்.மும்.4 3. பண்.மும்.25 4. பண்.மும்.10 1. பண்.மும்.16 1. பண்.மும்.21. 1. பண்.மும்.கோ.5 2. பண்.மும். கோ. 8 4. பண்.மும்.கோ.10 1. பண்.மும். கோ.25 1. பண்.மும். கோ.22 1. பண்.மும். கோ.22 2. பண்.மும். கோ.22 1. பண்.மும். கோ. 4 1. பண். மும். கோ.4 1. பண்.மும். கோ. 10 2. குடிலை - சுத்தமாயை 3. சிவப்பிரகாசம் 7. 1. பண்.மும். கோ.16 2. பண்.மும். கோ.19 3. பண்.மும்.கோ.19 4.பண்மும். கோ. 22 5. பண்.மும். கோ.25 1. பண். மும்.கோ.17 2. பண்.மும்.கோ.13 3. பண்.மும். கோ.7 1. தொல். களவு.2 2. பண்.மும். கோ.1 1. பண். மும். கோ. 19 2. பண்.மும். கோ.94 1. பண்.மும். கோ. 26 2. பண்.மும்.கோ.10 * இச்சந்திநிபாத நிலையை, “அன்புமிகு வுண்டாய் அதிலே விவேகமுண்டாய்த் துன்பவினையைத் துடைப்பத் துண்டாய் - இன்பந் தரும் பூரணத்துக்கே தாகமுண்டாய் ஓடி வரும் காரணர்க் குண்மை ணைவ” 16 என்ற சிவபோகசாரச் செய்யுளால் உணரலாம். 1. பண்.மும்.கோ.16 2. பண். மும். கோ. 28 3. பண்.மும்.கோ.19 4. பண்.மும். கோ.12 5. சிவ. சித். 321 1. பண்.மும். கோ.12 2. பண்.மும்.கோ.22 1. பண்.மும்.கோ.10 2. இவ்வாறு இந்நூல் கூறிற்றேனும்வேதாந்தமாவது பரசுருதிகளாகிய சைவோபநிட தங்களின் தொகுதியேயாகும் என்றும் 1. வேதாந்தமென்று இப்போது வழங்கும் ஏகான்மவாதம் இப்பாட்டிற் காட்டிய வேதாந்தமென்ற உச்சியிற் பழுத்த பழம் ஆகாதென்றும் அந்நூல் உரைக்கின்றது; அதனை ஆண்டுக்காண்க. 2. பண்.மும். கோ.1 1. இக் கருத்தையே குருஞானசம்பந்த தேசிக சுவாமிகளும் “அரியயற்கு முன்னாள் அடிமுடியுங் காணாப் பெரியவனே வந்து பிறந்து - துரியம் பெருக்கின்றான் ஞானப் பிரகாசனாகி இருக்கின்றான் ஆரூரில் இன்று” (4) என்று சிவபோக சாரத்தில் கூறியிருத்தல் காண்க. 2. பண். மும். கோ.2 3. பண். மும். கோ. 1 4. பண்.மும். கோ.24 1. பண். மும். கோ.1 1. பண். மும். கோ.16 2. பண். மும். கோ.16 3. சீவக.997 1. பண். மும். கோ.19 1. பண். மும். கோ. 22 1. பண். மும். கோ. 1 1. பண்.மும். கோ. 13 2. பண்.மும். கோ.13 3. பண்.மும். கோ. 13 4. பண்.மும். கோ.13 1. பண்.மும்.கோ.4 2. பண்.மும்.கோ.4 3. பண்.மும்.கோ.16 1. பண்.மும். கோ. 19 1. பண்.மும்.கோ. 22 2. பண். மும. கோ. 22 1. பண்.மும். கோ.25 1. பண்.மும்.கோ.28 2. பண்.மும். கோ.10 1. பண்.மும்.கோ.8 * “இனி எதிர்நிறைகோளினுமென்பதற்கு, ஒன்றற்கொன்று நேர்நேராக நிறுத்தப்படும் நிரனிறைப்பொருள்கோளினும் என்றும், எதிர்மருவு நிரனிறைப்பொருள்கோளினு மென்றும், வேற்றுமைத் தொகைப் பொருள்கோளென்பதற்கு, இரண்டாம் வேற்றுமைத் தொகைப் பொருள் கோளினுமென்றுங் கொண்டு, விருப்பற்றிருப்ப ரெனின் வெறுப் பற்றிருப்பரென்றும் வெறுப்பற்றிருப்பரெனில் விருப்புற்றிருப்பரென்றும் விருப்பை யற்றிருப்பர் வெறுப்பையுற்றிருப்பரென்றும் இவ்வண்ணம் சாதுரியப்பொருள் கூறுதலும் ஒன்று” என்பதுஈசானியமடத்து இராமலிங்கசுவாமிகள் உரைக்குறிப்பாகும். 1. பண்.மும்.கோ.26 1. பண்.மும்.கோ.26 2.பண்.முன்.கோ.22 3. பண்.மும். கோ.23 1. பண்.மும்.கோ.24 1. ஐங்.124 1. கலி.59 2. ஐங்.84 3. பரி.11:75-7 4. பரி.11:76-8 9 5.பரி 11;115-121. 1. 59 1. திருவெம். 2. திருவெம்.19 3. திருப்பாவை 3 1. 17 1. 18 1. திருப்பாவை - அவதாரிகை 1. Madras Epigraphy Annual Report For 1926- 7 Page 26 Ar 128 of 1912 1. Do A.R.No 421 of 1921 2. Do A.R.no for 1927-8 Para 19 3. Madras Epigraphy A.R for 1913 Para 51 4. Do A.R402 of 1916 354 of 1921 3 of 1931 -2 etc 5.H.G. Quartich Wales - The Lord Chamberlains Repartment of the Courtofsiam. * இக்கருத்துச் சைவத்திருமுறைகளிலே யன்றி, ஆதிசங்கரரெழுதிய தக்கிணாமூர்த்தி துதியிலும் (9) காணப்படுகிறது. 1. ஞான சம்.பு.113 2. ஞானசம்பு. 115 1. கோவை. 10 1. கோவை.19