பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 49 செந்தமிழ்ச் சிறப்பு ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 49 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2001 மறு பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8 + 144 = 152 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 95/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை .iii வான்மழை வளசிறப்பு v நூல் 1. மதிப்படைச் சொற்கள் 1 2. தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 6 3. தமிழின் தனியியல்புகள் 16 4. தமிழ் பற்றிய அடிப்படை உண்மைகள் 26 5. தமிழின் தொன்மையும் முன்மையும் 32 6. தமிழும் திராவிடமும் தென்மொழியும் 33 7. தமிழ் வேறு, திரவிடம் வேறு 37 8. செந்தமிழும் கொடுந்தமிழும் 47 9. திசைச்சொல் எவை? 53 10. மலையாளமும் தமிழும் 59 11. இசைத் தமிழ் 72 12. ``கடிசொலில்லை காலத்துப் படினே'' 80 13. புது மணிப்பவளப் புன்மையும் புரைமையும் 85 14. போலித் தமிழ்ப்பற்று 94 15. மதுரைத் தமிழ்க் கழகம் 99 16. உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு 105 17. தமிழனின் பிறந்தகம் 112 18. தமிழன் உரிமை வேட்கை 119 19. உரிமைப்பேறு 128 பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள் 134 தாய்மொழிப்பற்றே தலையாயப்பற்று 140 பாவாணர் பொன்மொழிகள் 142 செந்தமிழ்ச் சிறப்பு 1 மதிப்படைச் சொற்கள் மக்கள் பெயருக்குமுன் மதிப்புக்குறித்துச் சேர்க்கும் அடைச் சொற்கள் கீழ்வருமாறு: பெயர் அடைச்சொல் மணமாகாத இளைஞன் பெயருக்குமுன்... குமரன் (Master) மணமாகாத இளைஞை பெயருக்கு முன்... குமரி (Miss) இளந்தை (Youth) கடந்த ஆடவன்பெயருக்குமுன்... திருவாளன் (Mr.) இளந்தை கடந்த பெண்டின் பெயருக்கு முன்... திருவாட்டி (Mrs.) கண்ணியம் வாய்ந்த ஆடவன்பெயருக்குமுன்...bgUkh‹ கண்ணியம் வாய்ந்த பெண்டின் பெயருக்கு முன்... பெருமாட்டி னகரமெய்யும் ளகரமெய்யும் இகரவுயிரும் இறுதியிற் கொண்ட ஒருமை யீறுகள் உலக வழக்கில் உயர்வு குறியாமையின், கல்வி செல்வம் பதவி அறிவு, மூப்பு முதலியவற்றால் உயர்வு பெற்றவர் பெயரையும், அவர் பெயருக்கு முன்வரும் அடைச்சொல்லையும், உயர்வுப்பன்மை வடிவிலேயே குறித்தல் வேண்டும். ஒருமை உயர்வுப் பன்மை பன்மை அழகன் அழகனார் அழகர், அழகன்மார் தந்தை தந்தையார் தந்தையர், (தந்தைமார்) அப்பன் அப்பனார் அப்பன்மார் தகப்பன் தகப்பனார் தகப்பன்மார் அம்மை அம்மையார் அம்மையர், அம்மைமார் தாய் தாயார் தாயர்,தாய்மார் இளைஞன் இளைஞனார் இளைஞர் குமரன் குமரனார் குமரர், குமரன்மார் இளைஞை இளைஞையார் இளைஞையர் குமரி குமரியார் குமரியர், குமரிமார் ஆடவன் ஆடவனார் ஆடவர், ஆடவன்மார் திருவாளன் திருவாளர் திருவாளர், திருவாளன்மார் திருவாளனார்} திருவாட்டி திருவாட்டியார் திருவாட்டிமார் பெண்டு பெண்டார் பெண்டிர்(உயர்வு) பெண்டுகள்(உயர்வின்மை) பெருமான் பெருமானார் பெருமானர், பெருமான்மார் பெருமாட்டி பெருமாட்டியார் பெருமாட்டியர், பெருமாட்டிமார் துறவி துறவியார் துறவியர் அடிகள் அடிகள், அடிகண்மார் அடிகளார் இளந்தையர் என்பது இருபாற் பொதுப்பன்மைப் பெயர் (Young men or women or both) இளந்தை = இளமை மகரமெய்யீற்று இயற்பெயரை (Proper name) உயர்வுப் பன்மையிற் குறித்தல் வேண்டின், னகர மெய்யீற்றுப் பெயராக மாற்றிக்கொள்ளலாம். எ-டு: பெயர் உயர்வுப் பன்மை பன்மை செல்வம் - செல்வன் செல்வனார் செல்வர், செல்வன்மார் மேற்காட்டிய எடுத்துக்காட்டுகளினின்று பொதுவாக அர் ஈறு பன்மையையும் ஆர் ஈறு உயர்வுப் பன்மையையும் உணர்த்தும் என அறிந்து கொள்க. குமரன் என்னும் தென்சொல் கும் என்னும் அடிப்பிறந்து, கூட்டத்திற்குத் தகுந்தவன் அல்லது திரண்டவன் என்னும் பொருளில் இளைஞனையே குறித்தது. இதன் பெண்பால் வடிவான குமரி என்னும் சொல்லும் இதே பொருளில் இளைஞையைக் குறித்தது. கும் - கும்முதல் = கூடுதல், திரளுதல். கும் - கும்மல் = குவியல். கும் - குமி - குவி - குவை, குவால், குவிவு, குவவு. குமி - குமியல் - குவியல், கும்மிருட்டு = திணிந்த காரிருள். குவவுத்தோள் = திரண்டதோள். கும் - கும்பு - கும்பல் = கூட்டம், கும்புதல் = கூடுதல். கும்பு = கூட்டம். கும் - குமர் = திரண்ட இளமை, இளமை கன்னிமை அழியாத்தன்மை, குமர் -குமரன், குமரி. குறிஞ்சிநிலத் தெய்வமான முருகனும் பாலைநிலத் தெய்வமான காளியும், என்றும் இளமையர் என்னுங் கருத்துப்பற்றியே முறையே குமரன், குமரி எனப்பட்டனர். காளியின் பெயராலேயே, மூழ்கிப் போன பழம் பாண்டிநாட்டுத் தென்கோடி மலையும் வடகோடி யாறும் குமரியெனப் பெயர் பெற்றிருந்தன. குமரிமலையின் பெயராலேயே, மூழ்கிப் போன தென் கண்டத்தைக் குமரிக்கண்டம் என்கின்றோம். குமரிமலை யிருந்த காலம், ஆரியர் என்ற இனமே தோன்றாத தொன்முது பண்டைக் காலமாகும். வடமொழியாளர் தமிழன் தொன்மையை முற்றும் மறைத்துத் தமிழை வடமொழியின் வழியதாகக் காட்டல் வேண்டி, பின்வருமாறு குமரன், குமரி யென்னும் இரு சொற்களின் வடிவையும் பொருளையும் திரித்தும் மிகுத்தும் உள்ளனர். குமரன் - குமார = குழந்தை, பையன், இளைஞன், மகன் (இருக்கு வேதம்) குமரி - குமாரீ = சிறுமி, பத்திலிருந்து பன்னீரகவைப் பட்டவள், இளைஞை, மகள் (அதர்வவேதம்) இவ் விரு சொற்களையும் ஆரியச் சொல்லாகக் காட்டுமாறு மூலத்தையும் கீழ்வருமாறு திரித்துள்ளனர். கு + மார = எளிதாக இறப்பது. இப் பகுப்பும் சொற்பொருட் கரணியமும் இயற்கைக்கு மாறாகவும் உத்திக்குப் பொருந்தாமலும் இருப்பதையும், மகன், மகள் என்னும் பொருள் தமிழிலின்மையையும் நோக்குக, இன்றும். ` இந்தச் சுமையைத் தூக்க முடியாத நீ ஒரு குமரனா?’ என்று ஓர் இளைஞனை நோக்கி மக்கள் வினவுவதை யும்,கோடிச் சேலைக்கு ஒரு வெள்ளை, குமரிப்பெண்ணுக்கு ஒரு பிள்ளை என்னும் பழமொழி வழக்கையும், ஊன்றி நோக்கி உண்மையை அறிக. குமரன் குமரி என்னும் சொற்களை வடசொல்லென்று நீக்கிவிடின், வடமொழியாளர் கூற்றை ஒத்துக்கொண்டதாகவும், குமரிமலை மூழ்கியது ஆரிய வருகைக்குப் பிற்பட்டதாகவுமே முடிதல் காண்க. திரு என்னும் சொல்லின் பல பொருள்களுள், தெய்வத்தன்மை என்பதும் ஒன்று. எ-டு: திருக்கண்ணப்பர், திருக்குறள், திருவரங்கம், திருவிழா, திருநீறு, திருமணம் முதலிய சொற்களில் திரு என்பது தெய்வத்தன்மைக் கருத்தோடு தூய்மைக் கருத்தையும் உணர்த்தும். மதிப்பான மக்கட்டன்மையைக் குறிக்கும் திருவாளன் என்னும் அடைச்சொல், திரு. என்று குறுகி நிற்கும்போது முற்றுப்புள்ளி பெற வேண்டும். அல்லாக்கால், தெய்வத்தன்மை யுணர்த்தும் திரு என்னும் சொல்லோடொப்பக் கொண்டு மயங்க நேரும். எ-டு: திருநாவுக்கரசு (இறையடியார் பெயர்). திரு. நாவுக்கரசு (பொதுமகன் பெயர்). இறையடியார் பெயரே. பொதுமகன் பெயராயின் அப்படியே யிருக்கலாம். புள்ளி வேண்டியதில்லை, துறவியார் பெயருக்கு முன் தவத்திரு என்பதையும், தமிழ்த்தொண்டர் பெயருக்கு முன் தமிழ்த்திரு என்பதையும், மறையொழுக்கத்தினர் பெயருக்குமுன் மறைத்திரு என்பதை யும் அடைச்சொல்லாக ஆளலாம். எ-டு : தவத்திருக்குன்றக்குடியடிகள், தமிழ்த்திரு மறைமலை யடிகள், மறைத்திரு மணியம் அவர்கள். ஸ்ரீ ல ஸ்ரீ என்னும் சிவமட வழக்கைத் திருத்தவத்திரு அல்லது பெருந்தவத்திரு என்று குறிக்கலாம். திருமதி என்னும் அடைச்சொல், திரு. என்னும் தென்சொல்லையும் மதி என்னும் வடமொழியீற்றுத் திரிபையுங் கொண்ட இருபிறப்பி (Hybrid) ஆதலால், அதை அறவே விலக்கல் வேண்டும். திருமகன்-திருமாள்- ஸ்ரீமத் (வ.) - ஸ்ரீமதீ (பெண்பால்) திருமதி- ஸ்ரீமதீ, திருவாட்டி என்னும் தூய தென்சொல்லை நீக்கிவிட்டுத் திருமதி என்னும் இருபிறப்பியை ஆள்வது, பேதைமை யென்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல் (குறள். 831 ) என்னும் திருக்குறட்கே எடுத்துக்காட்டாம். ஒருகால், திருமதி என்பதன் ஈற்றை அறிவுப் புலனைக் குறிக்கும் தென்சொல்லாகக் கருதிக்கொண்டனர் போலும்! அறிவுத் திறனைக் குறிக்கும் மதி என்னும் தென்சொல் வேறு; பெண்பாலுணர்த்தும் மதீ என்னும் வடமொழியீறு வேறு. இனி மதிப்படைச் சொற்கள், (1) முன்னடைச் சொற்கள், (2) பின் னடைச் சொற்கள் என இரு வகைய. கண்ணியம் வாய்ந்தவர் பெயருக்குப் பின், அவர்கள் என்று குறிப்பது பின்னடைச் சொல்லாகும். அது, உயர்வுப்பன்மை. அதற்கு ஒருமையும் பன்மையும் இல்லை. எ-டு: திரு. மாணிக்கவேல் செட்டியார் அவர்கள். ஆற்றலும் தேர்வுப்பட்டமும் புலமையும் தொழிலும் குறித்து வரும் சொற்கள் முன்னடையாக வரின் வேறடை தேவையில்லை. எ-டு: பண்டிதமணி கதிரேசன் செட்டியார், புலவர் சின்னாண்டார், பேராசிரியர் சொக்கப்பனார், மருத்துவர் கண்ணப்பர். நாவலர் வேங்கடசாமி நாட்டார், புதுப்புனைவர் கோ. துரைச்சாமி நாயக்கர் (G.K. நாயுடு), பண்டாரகர் (Dr) சாலை இளந் திரையனார். பேராசிரியர் என்பதைப் பேரா. என்று குறுக்கலாம். சில சொற்கள் முன்னடையாகவும் பின்னடையாகவும் ஆளப் பெறும். எ-டு : புலவர் புகழேந்தியார், புகழேந்திப் புலவர், பெரியார் ஈ.வே.இரா. ஈ.வே.இராப். பெரியார். ‘அவர்கள்’ என்னும் பின்னடையை எவர் பெயருக்கும் பின் குறிக்க லாம். அது எழுதுவாரின் நிலைமையையும் விருப்பத்தையும் பொறுத்தது. அரசினர் வழங்கும் பட்டங்களான அடைச்சொற்களைப் பின் வருமாறு மொழிபெயர்க்கலாம். எ-டு: பத்மஸ்ரீ: தாமரைத்திரு வ. சுப்பையாப் பிள்ளை அவர்கள். செர் (Sir) : வயவர் தியாகராசச் செட்டியார் அவர்கள் ராஜா செர் (Rajah Sir): அரசவயவர் முத்தையாச் செட்டியார் அவர்கள். ராய் பஹதூர்: அரைய ஆண்டகை. ராவ் பஹதூர்: அராவ ஆண்டகை பவானந்தம் பிள்ளை அவர்கள். திவான் பஹதூர்: அமைச்ச ஆண்டகை நாராயணசாமிப் பிள்ளை அவர்கள். ராவ் சாஹிப்: அராவ அண்ணல் கோதண்டபாணிப் பிள்ளை அவர்கள். அரசியற் பதவிகள் பற்றிய முன்னடைகள் The Hon’ble - பெருந்தகை The Rt. Hon’ble - மா பெருந்தகை His Worship - வணங்கு தகை His Lordship - குரிசில் தகை His Excellency - மேன்மை தங்கிய His Highness - உயர்வு தங்கிய His Majesty - மாட்சிமை தங்கிய மதவியல் பற்றிய முன்னடைகள் Rev. - கனம் Rt.Rev. - மா கனம் His Grace - அருட்டிரு His Holiness - தவத்திரு - ``முதன்மொழி'' 2.9.1971 2 தமிழின் தனிப்பெருந் தன்மைகள் மூவாயிரத்திற்கு மேற்பட்ட உலக மொழிகளுள், இன்றும் பல்வேறு வகையில் முதன்மையாகவுள்ளது, பொன்னினும் மணியினுஞ் சிறந்ததாக வும், உணவினும் மருந்தினும் இன்றியமையாததாகவும், தெய்வமும் திருமறையுமெனக் கண்ணியமாகவும் நம் முன்னோர் போற்றி வளர்த்த செந்தமிழே யென்பது, முகடேறி நின்று முரசறைந்து விளம்பத்தக்க முழு வுண்மையாகும். அதற்கேதுவான தமிழின் தனிப்பெருந் தன்மைகள் வருமாறு: 1. முன்மை இஞ் ஞாலத்தில் மிகப் பழைமையான நிலப்பகுதி யென்று தமிழ் வரலாற்றால் அறியப்பட்டதும், நிலநூல், கடல்நூல், உயிர்நூல் ஆராய்ச்சி யாளரால் உய்த்துணரப்பட்டதும், மாந்தன் பிறந்தகமென்று மாந்தனூலாராற் கண்டுபிடிக்கப்பட்டதும், தெற்கே இந்து மாவாரியில் மூழ்கிப் போன குமரிக்கண்டம் (Lemuria) ஆகும். ``பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள'' (சிலப். 11 : 19-20) என்று ஆயிரத்தெண்ணூறாண்டுகட்கு முன்பே, முற்றத் துறந்த முழு முனிவரும் நடுநிலைக்குத் தலைசிறந்தவரும் பல்கலைப் பெரும்புலவரு மாகிய இளங்கோவடிகள் கூறியிருப்பது, கடுகளவுங் கட்டுச் செய்தியன்று. அத் தொன்னிலத்தில் உலக முதல் உயர்தனிச் செம்மொழியாகத் தோன்றியதனாலேயே. ``ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்'' (தண்டியலங்கார வுரைமேற்கொள்) என்று பண்டைச் சான்றோரால் தமிழ் சிறப்பித்துப் பாடப்பட்டது மென்க. இனி, மறைமலையடிகள், பூரணலிங்கம் பிள்ளை, கா. சுப்பிரமணியப் பிள்ளை, துடிசைகிழார் முதலிய பேரறிஞர் குமரிநாட்டுத் தமிழ்த் தோற்றத்தைப்பற்றித் தெளிவாகக் கூறியிருப்பவும், என் அரை நூற்றாண்டு மொழியாராய்ச்சியால் அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கவும், அது கட்டுக் கதையென்று கூறிவரும் வையாபுரிகளும் ஆராய்ச்சியிலிகளும், ``உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும்'' (குறள். 850) என்னும் குறட்கே சிறந்த இலக்கியமாவர். மேலும், பல்கலைத் தெளிவும் நடுநிலை பிறழா வாய்மையுங் கொண்ட தலைசிறந்த உரையாசிரியருள் ஒருவரான அடியார்க்குநல்லார், தம் சிலப்பதிகார வேனிற் காதை யுரைத் தொடக்கத்தில், ``அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னு மாற்றிற்கும் குமரி யென்னு மாற்றிற்கு மிடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின் பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின்காறும் கடல் கொண்டொழிதலால், குமரியாகிய பௌவ மென்றார் என்றுணர்க.'' என்று தெற்கே ஈராயிரங் கல் தொலைவு நீண்டிருந்த பழம் பாண்டி நாட்டைப் பல்வேறு சிறு நாடுகளாகப் பகுத்துக் கூறியிருப்பது, பழைய ஏட்டினின்று பெயர்த்தெழுதிய மரபுவழி வரலாற்றுச் செய்தியாகவன்றி, புதுவது புனைந்ததாகவோ சேரநாட்டுப் பஃறுளியாற்றைப் பிறழவுணர்ந்த தாகவோ இருக்க முடியாதென்று கூறிவிடுக்க. 2. மென்மை தமிழர் மாந்தன் வரலாற்றிற் குழந்தைபோல் முந்தித் தோன்றிய இனத்தவராதலால், அவர் வாயில் குழந்தைகளும் முதியவரும் களைத்த வரும் நோயாளிகளும்கூட எளிதாய் ஒலிக்கத் தக்கனவும், பெரும்பாலும் எல்லா மொழிகட்கும் பொதுவானவுமான (உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாக) முப்பது எழுத்தொலிகளே பிறந்திருந்தன. அதோடு, தனி மெய்யொலியில் தொடங்கும் சொற்களும், வல்லின மெய்யொலியில் இறுஞ் சொற்களும், சில மெய்யொலிகட்குப் பின் சில மெய்யொலிகள் தமித்தோ உயிர்மெய்யாகவோ இடையில் வருஞ் சொற்களும், அவர் வாயில் வந்ததில்லை. இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பல் என்னும் முறையில், அக்காலத்து வரையறுக்கப்பட்ட முதலிடை கடை யெழுத்து வரம்புகளே, இக்காலத் திலக்கண நூல்களும் ஏற்றுக் கூறுகின்றன. தமிழினின்றே திரிந்த திரவிடம் உட்படப் பிறமொழிகளில் இத்தகைய வரம்பீடில்லை அதனால், ``எண்பெயர் முறைபிறப் புருவம் மாத்திரை முதலீ றிடைநிலை போலி யென்றா பதம்புணர்ப் பெனப்பன் னிருபாற் றதுவே'' (57) என்னும் நன்னூல் நூற்பாவிற் குறிக்கப்பட்டுள்ள எழுத்திலக்கணம் பன்னிரண்டனுள், `முதலீ றிடைநிலை'' என்னும் மூன்றும் தமிழுக்கே சிறப்பாக வுரியனவாம். பிற மொழிகளில் எந்த எழுத்தும் எந்த இடத்திலும் வரலாம் . தமிழில் அங்ஙனம் வரமுடியாது. இனி, வடமொழி வல்லின மெய்களின் நால்வகையுள், உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிக்கும் பின் மூன்று வகைகளேயன்றி, இயல்பான தாகக் கருதப்படும் முதல் வகையும், தமிழ் வல்லினத்தோடு ஒவ்வாது இருமடி வலித்தொலிக்கும் கடுவல்லினமாம். காகத்தைக் குறிக்கும் `kaka' எனும் வடசொல் வடிவம். தமிழில் `காக்க' என்று ககரம் இரட்டித்து எழுதப் பட்டால்தான், ஒருமருங்கு வடமொழியை ஒத்தொலிக்க முடியும். `மேக்கர்' (maker) என்னும் ஆங்கிலச் சொல்லும் இத்தகையதே. இவ் வேறுபாட்டை, எழுத்தொலிகளை நுண்ணிதாகக் கண்டவர்போல் தம்மைக் காட்டிக் கொள்ளும் மேலை வண்ணனைமொழி நூலாரும் இன்னும் அறியவில்லை. மெலியும் வலியுமாக அடுத்துவரும் ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற என்னும் இணைமெய்கள், ஆரியத்திலும் திரவிடத்திலும் போல `ங்க்க', `ஞ்ச்ச',` ண்ட்ட',` ந்த்த', `ம்ப்ப', `ன்ற்ற' என்று என்றேனும் தமிழில் வலித்தொலிப்பதில்லை. மூச்சொலி (Aspirate) தமிழில் இல்லவேயில்லை. எடுப்பொலி (Voice Sound) மெலியடுத்த வலிக்கே யுண்டு. சொல்லிடையில் நிகழும் உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்னும் இருவகை மெய்ச் சேர்க்கையுள், முன்னதில் இரண்டாவது மெய் `சுக்கு'. `பட்டு' என்பவற்றிற்போல் உயிரோடு கூடியதாகவே யிருக்கும்; பின்னதில் இரண்டாவது மெய் காய்ப்பு. வாழ்க்கை என்பவற்றிற் போல் தனிமெய்யாகவோ, `வெட்கம், `பயிற்சி' என்பவற்றிற் போல் உயிரோடு கூடிய மெய்யாகவோ இருக்கும். ஆயின், இரு தனி மெய்களே யன்றி, `ஸாந்த்வ், `சமற்க்ருத' என்னும் வடசொற்களிலும், camps, tempts என்னும் ஆங்கிலச் சொற்களிலும் போல், முத்தனி மெய்களும் நாற்றனி மெய்களும் தமிழில் வரவே வரா. இங்ஙனம் தமிழ் பெரும்பாலும் மெல்லோசை மொழியாயிருப்பத னாலேயே, அது உலக முதன்மொழியாய்த் தோன்றியும் இறந்து படாமல் இன்னும் இளமை நிலையில் இருந்து வருகின்றது. அதைத் தாய்மொழியாகக் கொண்டவரும் முயற்சி வருத்தமின்றி எளிதாகப் பேசி வருகின்றனர். காலஞ்சென்ற பா.வே. மாணிக்க நாயகர், ஒரு முறை உலகப் பெருமொழி களுள் ஒவ்வொன்றிலும் அவ் வாயிரம் சொற்களை யெடுத்து, அவற்றிற்குச் செலவிடும் மூச்சை மூச்சுமானி கொண்டு அளந்து பார்த்ததில், சமற்கிருதத் திற்கே மிகுந்தும் தமிழுக்கு மிகக் குறைந்தும் இருப்பதாகக் கண்டார். இவ் வுண்மையையே, மறைமலையடிகள், க்ருதம், த்ருஷ்டி, த்வரிதம், ச்ருஷ்டி, ஹ்ருதய என்னும் வடசொற்களோடு, இழுது, பார்வை, விரைவு, படைப்பு, நெஞ்சம் என்னும் தென்சொற்களை ஒப்புநோக்கி எளிதாக விளக்கிக் காட்டினார். ஒரு மொழிக்கு வேண்டியது சொல் வளமே யன்றி ஒலிவளமன்று. ஆரியம், சேமியம் முதலிய மொழிக் குடும்பங்கள் தோன்றாத அத் தொல் பண்டைக் காலத்திலும், எக்காலத்தும் மாந்தன் உள்ளத்தில் எழக்கூடிய கருத்துகளை யெல்லாந் தெரிவிக்கத் தக்க சொற்களையும் சொல்லுறுப்பு களையும், நம் குமரிநாட்டு முன்னோர் படைத்து வைத்துள்ளனர். ஆதலால். ஒலிமென்மையால் தமிழுக்கு உயர்வேயன்றி இழிவில்லை என்றும், அதைப் பேசுவார்க்கு மூச்சு வருத்தமும் பேச்சு வருத்தமு மின்மையால் வாழ்நாள் நீடிக்குமென்றும், அறிந்துகொள்க. 3. தாய்மை பெற்றோரைக் குறிக்கும் அம்மை அப்பன் என்னும் குமரிநாட்டுத் தமிழ்ச்சொற்கள், ஆரியம் உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றில் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன. நூன், நூம் என்னும் பண்டைத் தமிழ் முன்னிலைப் பெயர்கள், வடநாட்டு இந்தியில் து, தும் என்றும், இலத்தீனில் து, வே என்றும், கிரேக்கத்தில் தூ (சூ), ஹ்மேயி என்றும் பழைய ஆங்கிலத்தில் தூ, யி(யூ) என்றும், சமற்கிருதத்தில் த்வம், யூயம் என்றும் முறையே திரிந்து வழங்குகின்றன. அல்லது வழங்கியிருக்கின்றன. மேலை மொழிகளிலுள்ள தென்சொல்லொத்த சொற்கட் கெல்லாம் மூலம் தமிழிலேயே இருக்கின்றன. எ-டு : அயற்சொல் தமிழ்ச்சொல் மூலம் இலத்தீன்-மன்ஸு மனை மன் கிரேக்கம்-மாதிகோ (mastigos) மத்திகை மொத்து ஆங்கிலம்-துரூ துருவ துள் துருக்கி-கான் கோன் கோவன் கொரொ கரு கள் சீன மொழியில் மா என்பது குதிரையையும் தா என்பது வலிமை யையும் குறிப்பதாகச் சொல்லப்படுகின்றது. தமிழின் சொல்வளத்தைக் குறிக்க வந்த கால்டுவெலார். அம் மொழி தனக்கே சிறப்பாக வுரிய வீடு என்னும் சொல்லை மட்டுமன்றி, இல் என்னும் தெலுங்கச் சொல்லையும், மனை என்னும் கன்னடச் சொல்லையும், சமற்கிருதத்திற்கும் பின்னிய (Finnish) மொழிகட்கும் பொதுவான குடி என்னும் சொல்லையும், தன்னகத்துக் கொண்டுள்ளதென்று, அது திராவிடத் திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும் என்னும் உண்மையைக் குறிப்பாகக் கூறியிருக்கின்றார். மேலும், தமிழ் உலக முதன்மொழிக்கு மிக நெருங்கியதென்றும், ஆரியத்திற்கு முந்தியதென்றும், பல்வேறிடங்களில் வெளிப்படையாகவும் கூறியுள்ளார். சமற்கிருதத்தில் ஐந்தி லிருபங்கு தமிழ் என்பது இன்று ஆராய்ச்சியால் தெரியவருகின்றது. ஆ, ஈ. ஊ என்னும் முத்தமிழ்ச் சுட்டெழுத்துகளினின்றே ஆரியச் சுட்டுச் சொற்களும் படர்க்கைப் பகரப் பெயர்களும் (Demonstratives and Pronouns of the third Person) தோன்றிப் பற்பலவாறு திரிந்து வழங்கு கின்றன. பல ஆரிய அடிப்படைச் சொற்களும் தமிழாயிருக்கின்றன. எ-டு: இலத்தீன் amo (அமர்), ser (சேர்), do (தா). அமர்தல் - அன்பு கூர்தல். சுருங்கச் சொல்லின், தமிழ்ச்சொல்லே யில்லாத உலகப் பெருமொழி ஒன்றுமே யில்லை யென்பது மறுக்க முடியாத உண்மையாகும். 4. தூய்மை தமிழ் குமரிநாட்டில் தானே தோன்றி வளர்ந்த தனிமொழியாதலாலும், அதை நுண்ணறிவு மிக்க பொதுமக்களும் புலமக்களும் பண்படுத்தி வளர்த்தமையாலும், நீராவியையும் மின்னியத்தையும் துணைக் கொள்ளாத எல்லாக் கலைகளையும் அறிவியல்களையும் பண்டைத் தமிழரே கண்டறிந்துவிட்டமையாலும், ஆயிரக்கணக்கான உலக வழக்குச் சொற்களும் நூல் வழக்குச் சொற்களும் இறந்துபட்ட இக்காலத்தும், எப்பொருள் பற்றியும், பழஞ்சொற் கொண்டும் புதுச்சொற் புனைந்தும், முழுத் தூய்மையாகப் பேசத் தமிழ் ஒன்றில்தான் இயலும். இவ் வுண்மையை அறிந்தே, தமிழ் வடமொழித் துணையின்றித் தனித்து வழங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவுஞ் செய்யும் என்று கூறினார் கால்டுவெலார். செந்தமிழ்ச் சொல்வளத்தைக் காண, ஒரு பருக்கைப் பதமாக நிலைத்திணைச் சொற்களை நோக்கினும் போதும். குமரிநாட்டுத் தமிழ்ப் பொதுமக்கள், இலைகளை நால்வகையாக வகுத்து, வேம்பும் வாழையும் போல மெல்லிதாயிருப்பதை இலையென்றும். நெல்லும் புல்லும் போலத் தாளை (தண்டை)யொட்டி நீண்டு சுரசுரப்பாக விருப்பதைத் தாள் என்றும், சோளமுங் கரும்பும் போலப் பெருந்தாளாக நீண்டு தொங்குவதைத் தோகை யென்றும், தென்னையும் பனையும் போலத் திண்ணமா யிருப்பதை ஓலையென்றும் வழங்கினர். பூ நிலைகளை ஐவகையாகக் கண்டு தோன்றிய நிலையில் அரும்பு என்றும், மலரத் தொடங்கிய நிலையிற் போது என்றும், மலர்ந்த நிலையில் மலர் என்றும், உதிர்ந்து விழுந்த நிலையில் வீ யென்றும், வாடிச் சிவந்த நிலையிற் செம்மல் என்றும், சொல்லினர்; காய்நிலைகளை நால்வகையாகக் கண்டு தோன்றிய நிலையிற் பிஞ்சு என்றும், சற்றுப் பருத்த நிலையிற் பிருக்கு என்றும், முற்றும் பருத்த நிலையிற் காய் என்றும், பழுத்த நிலையிற் பழம் (மஞ்சள் நிறமானது) அல்லது கனி (கனிவாயிருப்பது) என்றும், பெயரிட்டனர். இனி, பிஞ்சு நிலையிலும் வாழைக்குக் கச்சல் என்றும், மாவிற்கு வடு என்றும், பலா விற்கு மூசு என்றும், தென்னை பனைக்குக் குரும்பை என்றும், பிறவற்றிற்குப் பிறவாறும், சிறப்புப் பெயர் குறித்தனர். ஆங்கிலம் இலக்கக்கணக்கான சொற்களைக் கொண்டிருந்தும், ஏறத்தாழ எல்லா மொழிகளினின்றுங் கடன் கொண்டும், காயைப் பழுக்காத பழம் என்று குறிப்பதும், வெயிலையும் நிலவையுங் குறிக்கத் தனிச் சொல் இல்லாதிருப்பதும், இங்குக் கவனிக்கத்தக்கது. தமிழின் இயல்பை யறியாத சிலர், ஆங்கிலம் போல் தமிழையுங் கருதிக்கொண்டு, ஒரு மொழி பிற மொழியினின்று கடன் கொண்டால்தான் வளர முடியுமென்றும், மொழித் தூய்மை யென்பது பொருளற்ற மொழிவெறி யென்றும், கூறுவர். காலதர், சாளரம், பலகணி என முச்சொல் லிருக்கவும், சன்னல் என்னும் போர்த்துக்கீசியச் சொல்லை வேண்டாது வழங்கியதால், அம் முச்சொல்லும் வழக்கற்றுப் போய்த் தமிழ் வறுமை யடைந்துள்ளமை காண்க. ``தமிழர்க்குள்ள பெருமையெல்லாம் அவர் தொன்றுதொட்டுத் தூய்தாக வழங்கி வருந் தமிழ்மொழியினையே சார்ந்திருக்கின்றது'' என்று, மறைமலையடிகளார் கூறியிருப்பதை இனிமேலாயினுங் கருத்தாய்க் கவனிக்க. 5. செம்மை சொற்களும் சொற்றொடர்களும் வடிவிலும் பொருளிலும் இலக்கண முடிபிலும் வழாநிலை, வழுநிலை, வழுவமைதிநிலை என முந்நிலைப் படும். அவற்றுள், வழுநிலையில்லது செந்தமிழ் என்றும், அஃதுள்ளது கொடுந் தமிழ் என்றும், தமிழை இருவகையாக வகுத்தனர் இலக்கண நூலார். மக்கட்கு ஒழுக்க வரம்பு எத்துணை இன்றியமையாததோ, அத்துணை இன்றியமையாததே மொழிக்கு இலக்கண வரம்பும். சொற்களின் திருந்திய வடிவையும் ஓரிய லொழுங்கையும் தமிழிற்போல் வேறெம்மொழியிலுங் காண முடியாது. எ-டு: தமிழ் தெலுங்கு தன்மைப் பெயர் யான், யாம் ஏனு, மேமு நான், நாம் நேனு, மனமு முன்னிலைப் பெயர் நீன்(நீ). நீம் நீவு, மீரு படர்க்கைப் பெயர் தான், தாம் தானு, தாமு அ,இ,உ என்னும் முச்சுட்டெழுத்துகளையும் எ,ஏ, யா என்னும் மூவினாவெழுத்துகளையும் அடியாகக் கொண்ட தமிழ் ஐம்பாற் பெயர்களின் ஓரியலொழுங்கு, மொழிநூலறிஞரின் உள்ளத்தை மிகக் கவரத் தக்கது. இது போன்ற அழகிய மெய்ப்பொருளிய லொழுங்கை வேறெம் மொழியிலேனும் மொழிக் குடும்பத்திலேனும் காண முடியாதென்று. கால்டுவெலார் வியந்து கூறியிருத்தலைக் காண்க. புதுப்பெருக்கு நீரைக்குறிக்கும் வெள்ளம் என்னும் செந்தமிழ்ச் சொல் மலையாளத்தில் நீர்ப் பொதுவைக் குறிப்பதும், விடை சொல்லுதலைக் குறிக்கும் செப்புதல் என்னும் செந்தமிழ்ச் சொல் தெலுங்கிற் பொதுவாகச் சொல்லுதலைக் குறித்தலும், ஒன்றைச் செய்ய ஆற்றுதலை (திறமையோ டிருத்தலை)க் குறிக்கும் மாட்டுதல் என்னும் செந்தமிழ்ச்சொல் கன்னடத் தில் (மாடுதல் என்னும் வடிவில்), பொதுவாகச் செய்தலைக் குறிக்கின்றமை யும் கொடுந்தமிழ் நிலையாம். கூர்ந்து பார்த்தலைக் குறிக்கும் நோக்குதல் என்னும் சொல், மலையாளத்திற் பொதுவாகப் பார்த்தலைக் குறித்தலும் அஃதே. செந்தமிழெழுத்துகள் கொடுந்தமிழிற் பலவாறு திரியுமேனும், வலி மெலித்தல் மலையாளத்திற்கும் ரகரம் தொகல் தெலுங்கிற்கும் பகரம் மூச்சொலியாதல் கன்னடத்திற்கும், சிறப்பாகும். எ-டு: மலையாளம் : கஞ்சி-கஞ்ஞி, நீங்கள்- நிங்ஙள், வந்து- வந்நு. தெலுங்கு : சுருட்டு - த்சுட்ட, பருப்பு - பப்பு, மருந்து - மந்து. கன்னடம் : பள்ளி - ஹள்ளி, பாளை - ஹாளெ, பொன் - ஹொன்னு. வடசொற்கள் பின்வருமாறு பலவகையில் திரியும்: ஆயிரம் - ஸகர, கலுழன் - கருட (g), கோட்டம் - கோஷ்ட, கோட்டை - கோட்ட, சாயை - சாயா (c), தூணம் - தூணா, நகரம் - நகர (g), பள்ளி - பல்லி, மயில் - மயூர, முகம் - முக (kh), வட்டம் - வ்ருத்த. இங்ஙனம் தமிழுக்கு எது வழுநிலையோ, அது பிற மொழிகட்கு வழாநிலையாம். தமிழுக்குச் செம்மை இன்றியமையாத பண்பாயிருத்தலி னாலேயே, அது செந்தமிழ் எனப்பட்டது. ஒருவன் பொதுமக்களோடு எத்துணைக் கொச்சையாய்ப் பேசினும், ஏடெடுத்தெழுதும் போதும் மேடை யேறிப் பேசும் போதும் இலக்கண நடையைக் கையாளவேண்டு மென்பதே தமிழ் மரபு. அம் மரபே, மூவாயிரம் ஆண்டாகத் தமிழைக் கெடுக்கப் பகைவர் சூழ்ச்சி செய்துவரினும், அது கெடாவாறு அதனைக் காத்து வந்திருக்கின்றது. உலக வழக்கு வேறு; கொச்சை வழக்கு வேறு. உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே. ஆதலால், பிற மொழிகள்போல் தமிழையுங் கருதிக்கொண்டு, பொதுமக்கள் கொச்சை நடையே உலக வழக்கென்பது தமிழுக்கு எட்டுணையும் பொருந்தாதென்க. 6. மும்மை கி.மு. பத்தாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய தலைக்கழகக் காலத்திலிருந்தே, இசையும் நாடகமும் இயற்றமிழோடு சேர்க்கப்பட்டு, இலக்கியத்தமிழ் முத்தமிழென வழங்கி வந்திருக்கின்றது. அதனால் , முதலிரு கழகத்திலும் வழங்கிய இலக்கண நூல்கள் முத்தமிழும் பற்றியன வாகவே யிருந்ததாகத் தெரிகின்றது. இங்ஙனம் வேறெம் மொழியிலுமில்லாத வழக்கிற்கு, இசையும் நடிப்பும் பேச்சொடு இயல்பாகக் கலந்திருப்பதொடு, பண்டைத் தமிழரின் இசை நாடகக் கலைத் தேர்ச்சியும் பண்டைத் தமிழிலக்கியம் முற்றும் செய்யுள் வடிவிலிருந்தமையும் கரணியமாகும். 7. இயற்கை வளர்ச்சி தமிழில் இடுகுறிச் சொல்லே யில்லை. ``எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே'' என்பது தொல்காப்பிய நூற்பா (640). ஒருமை பன்மை யெண்ணும் பொருட்பாலுமன்றி, ஆரியத்திற்போல் இருமை யெண்ணும் சொற்பாலும் தமிழமைப்பில் அமையவில்லை. பனுவல்களில் ஒரு நாட்டை வரணிக்கும்போது உள்பொருளையும் உள்நிகழ்ச்சியையுமே யன்றி, இல்பொருளையும் இல்நிகழ்ச்சியையும் ஆரிய வருகைக்கு முற்பட்ட பண்டைத் தமிழ்ப் புலவர் கூறுவதில்லை. செய்யுளணிக ளெல்லாம் இயற்கையாக அமைந்தன வன்றிச் செயற்கையாக அமைக்கப்பட்டனவல்ல. 8. இலக்கண நிறைவு மற்றெல்லா மொழியிலக்கணங்களும் எழுத்தும், சொல்லும், சொற்றொடரும், யாப்பும், அணியும் ஆகிய ஐந்தையே கூற, தமிழிலக்கணம் மட்டும் அவற்றொடு செய்யுட்கும் நூற்கும் உள்ள பொருளையுஞ் சேர்த்து அறுகூறுகளைக் கூறுகின்றது. ஆயின் சொற்றொடரும் யாப்பும் அணியும் பொருளில் அடக்கப்பட்டு, எழுத்தும் சொல்லும் பொருளும் என முப்பாலவாகவே பண்டை யியற்றமிழ் இலக்கணங்க ளெல்லாம் வழங்கி வந்திருக்கின்றன. அகம் புறம் என்னும் இருவகைப் பாகுபாட்டுள் எல்லாப் பொருள் களும் அடக்கப்பட்டுவிட்டன. புறப்பொருள் பற்றிய எழுதிணைகளுள், முதலைந்தும் அரசனுக்குச் சிறப்புக் கொடுத்தற்பொருட்டு அவனுக்குரிய போர்த் தொழிலையே பற்றிக் கூறினும், வாகை பாடாண் என்னும் இறுதியிரண்டும், மற்றெல்லா மக்கள் தொழில்களையும் சேர்த்துத் தழுவுவன வாகும். இதை யறியாதார் தமிழ்ப் பொருளிலக்கணம் குறைபாடுள்ளதெனக் குறை கூறுவர். ``கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ'' (திருவிளை. நாட்டுப்.) என்னும் பரஞ்சோதி முனிவர் பாடல் இங்குக் கருதத் தக்கது. ``வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும்'' (தொல்.1594) என்றவாறு, முற்றத் துறந்த முழுமுனிவரே தமிழிலக்கண முதனூல் இயற்றியவராதலின், தனித்தொலிப்பதும், தனித்தொலியாததும், தனித் தொலிப்பதோடு கூடியொலிப்பதும் ஆகிய மூவகை யொலிகளும், தனி யுயிரையும் தனிமெய்யையும் (உடம்பையும் அல்லது உயிரில்லாப் பொருளையும்) உயிரோடு கூடிய மெய்யையும் முறையே ஒத்திருப்பதால், அவற்றிற்கு உயிர், மெய், உயிர்மெய் என்ற பெயர்களையே உவமையாகு பெயராக இட்டிருக்கின்றனர். அதற்கேற்ப, உயிருக்குப் புள்ளியில்லா வடிவும் மெய்க்குப் புள்ளியுள்ள வடிவும் உயிர்மெய்க்குத் தனிக்கூட்டு வடிவும் அமைத்திருக்கின்றனர். இவ் வரிவடிவமைப்பும் முறையென்னும் வரிசையமைப்பும் முதன்முதற் கொண்டெழுந்தது, தமிழ் நெடுங்கணக்கே. அதைப் பின்பற்றியதே சமற்கிருத வண்ணமாலை. அதற்கும் பிந்தினவே, தெலுங்கு கன்னட மலையாளத் தென்னாட்டு நெடுங்கணக்குகளும் வங்க குசராத்தி வடநாட்டு நெடுங்கணக்குகளும். தமிழெழுத்து, சில தமிழ்ப் பகைவர் கூறுகிறபடி, அசோகன் கல்வெட்டுப் பிராமியெழுத்தினின்று திரிந்த தன்று. பகுத்தறிவுள்ள மக்களையே உயர்வாகவும் மற்றெல்லாவற்றையும் தாழ்வாகவுங் கொண்டு பொதுமக்களே தமிழ்மொழியை அமைத்து விட்டமையால், இலக்கியங் கண்டதற் கிலக்கணம் இயம்பும் முறையில், உயர்திணை அஃறிணை என்ற குறியீடுகளை மட்டும் இலக்கண ஆசிரியர் இட்டிருக்கின்றனர். பெயர்கட்கு முதன்முதலாக எட்டு வேற்றுமை வகுத்துக் கூறியதும் தமிழிலக்கணமே. அதைப் பின்பற்றியதே சமற்கிருதம். கால்டுவெலார் கருதுகிறபடி தலைமாறாக நிகழ்ந்ததன்று. 9. செய்யுட் சிறப்பு பண்டைத் தமிழிலக்கியம், உரையும் (Commentary), உரிச்சொற் றொகுதியும் (நிகண்டும்) உட்பட, முற்றும் செய்யுள் வடிவிலேயே இருந்தது. ``பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் ........................................... யாப்பின் வழிய தென்மனார் புலவர்'' (1336) என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க. காதலும் வழுத்தும்பற்றிப் பாடுதற்குச் சிறந்த கலிப்பாப் போன்ற செய்யுள்வகை, வேறெம்மொழியிலும் காண்பதற்கில்லை. அகப்பொருட் செய்யுள்களில், பண்டைத் தமிழக நிலையை அறியக் கூடியவாறு செய்திகளை யமைத்துப் பாடும் புலனெறி வழக்கம் என்னும் செய்யுண் மரபு தமிழுக்கே சிறப்பாம். ஒவ்வொரு தலைமுறையிலும், கடுத்துப் பாடவும் செய்யுளிலேயே உரையாடவும் வல்ல பல்லாயிரக் கணக்கான புலவர் பண்டைத் தமிழகத் திருந்தனர். 10. அணிச்சிறப்பு பொருளணியில், உள்ளுறையுவமம் தமிழுக்குச் சிறப்பாகவுரிய தாகும். சொல்லணியில், திருப்புகழ் போன்ற வண்ணங்களும் ககரப்பாட்டும் தகரப் பாட்டும் போன்ற ஓரெழுத்துப் பாட்டும், வல்லினப் பாட்டும் மெல்லினப் பாட்டும் இடையினப் பாட்டும் ஆகிய ஓரினப் பாட்டும், ஒரே செய்யுளைப் பல்வேறு செய்யுள்களாகப் பகுக்கக் கூடிய பதின்பங்கி (தசபங்கி), நூற்றுப்பங்கி (சதபங்கி) முதலியனவும், ஆழிக்கட்டு (சக்கரபந்தம்), தேர்க்கட்டு (ரதபந்தம்), எண்ணாகப் பிணையல் (அட்டநாக பந்தம்) முதலிய மிறைப்பாக்களும் தமிழிற்போல் வேறெம்மொழியிலும் பாட முடியாது. 11. நூற்சிறப்பு ஆரிய வருகைக்கு முற்பட்ட ஆயிரக்கணக்கான தனித்தமிழ் இலங்கு நூல்களெல்லாம் அழிந்தும் அழிக்கப்பட்டும் போனபின்பும், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூலும் திருக்குறள் போன்ற அறநூலும், வேறெம்மொழியிலும் இல்லையென்பது வெள்ளிடைமலை. இத்தகைய விழுமிய நூலையும் வியத்தகு பண்பையுங் கொண்ட உலக முதல் உயர்தனிச் செம்மொழியை, இற்றைத் தமிழன் இனி மேலாயினும் போற்றிக் காத்து முன்னேற முயல்வானாக. - ``கழகப் பொன்விழா மலர்'' கடகம் 1970 3 தமிழின் தனியியல்புகள் தமிழ், வரலாற்றிற் கெட்டாத முதுபழந் தொன்மொழியாதலாலும், அது தோன்றிய பழம் பாண்டிநாடு தென்மாவாரியில் முழுகியும், அந் நிலத் தெழுந்த முதலிரு கழக நூல்களும் தமிழ்ப் பகைவரால் அழியுண்டும் போனதனாலும், அதன் தனியியல்புகள் நெடுங்காலத் திடமன நடுநிலை ஆராய்ச்சியின்றித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராலும் அறியவொண் ணாதனவா யிருக்கின்றன. அவ்வியல்புகளாவன:- 1. தொன்மை ``ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்'' என்பது, தண்டியலங்கார உரையில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள பழம் பா. தமிழை உலகத் தகவிருளை யகற்றும் சுடராகச் சொன்னதின் கருத்து, அது உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி யென்பதே. அதனாலேயே, அப் பாவைப் பாடியவர், தமிழை ஒப்புயர்வற்ற மொழியென்றுங் கூறி முடித்தார். எட்டாம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் புறப்பொருள் வெண்பா மாலையின் ஆசிரியராகிய ஐயனாரிதனார், குறிஞ்சியும் முல்லையுங் கலந்த பாலைநிலத்து மறவர் குடியின் பழைமையைக் குறிக்குமிடத்து, ``பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக் கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி'' (பு. வெ. 35) என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. குறிஞ்சி முல்லைவாணர் மிகப் பழைமையான தமிழ் வகுப்பார். அவர் குடியின் தொன்மை கூறவே, தமிழின் தொன்மையும் உடன் கூறியவாறாம். இனி, முத்தமிழ்த் துறைபோகி முற்றத் துறந்து மூவேந்தரையும் முத்தமிழ் நாட்டையும் ஒப்பப் புகழ்ந்த சேரமுனிவர் இளங்கோவடிகள், கி.பி. 2ஆம் நூற்றாண்டிறுதியில் தாமியற்றிய சிலப்பதிகாரத்துள், ``பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி'' (11:19-22) என்று பாடியிருப்பதும்; அடியார்க்குநல்லார், ``தொடியோள் பௌவமும்'' என்னும் சிலப்பதிகார வேனிற்காதைத் தொடருக்கு, ``அக்காலத்து, அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லை யாகிய பஃறுளியென்னு மாற்றிற்கும் குமரியென்னு மாற்றிற்குமிடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ் முன்பாலை நாடும், ஏழ் பின்பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின்காறும், கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவமென்றாரென்றுணர்க'' என்று விளக்கவுரை வரைந்திருப்பதும்; தென்மாவாரியில் மூழ்கிப்போன பழம்பாண்டி நாட்டையும் அதன் பரப்பையு முணர்த்தும். பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடைப்பட்ட தொலைவின் அளவும், பல்வேறு நிலப்பகுதிகளின் பெயர்களும், இறந்துபட்ட முந்து நூல்களுள் அல்லது உரைகளுள் குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். அடியார்க்குநல்லார் அவற்றைக் கட்டிக் கூறியிருக்க முடியாது. இறையனா ரகப்பொருளுரையிற் காணும் முக்கழக வரலாற்றிற் குறிக்கப்பட்டுள்ள, தென்மதுரைத் தலைக்கழகமும் கபாட (கதவ?) புர இடைக்கழகமும், முழுகிப்போன பழம்பாண்டி நாட்டுட்பட்டனவே. ஒரு காலத்தில், தென்னிந்தியா, முழுகிப்போன தென்னில வாயிலாக ஆத்திரேலியாவுடனும், தென்னாப்பிரிக்காவுடனும் இணைக்கப்பட்டிருந்தத னாலும், தமிழ் உலக முதன்மொழியாதலாலும், தமிழ் உலக முதன்மொழி யாதலாலும், மாந்தன் பிறந்தகம் மடகாசுக்கர்ப் (Madagascar) பக்கம் என்று எக்கேல் (Haeckel) பேராசிரியரும், தங்கனியிக்காப் (Tanganyika) பக்கம் என்று இலீக்கி (Leakey) என்னும் மாந்தனூல் ஆராய்ச்சியாளரும், கூறியிருப்பவை, பழம் பாண்டிநாட்டை ஒரு பகுதியாகக் கொண்ட குமரிக் கண்டம் என்னும் ஒரு பெருந் தென்னிலப் பரப்பு, ஒருகாலத்திருந் தமைக்குப் புறச்சான்றுகளாம். தமிழரின் முன்னோர் தென்னாட்டுப் பழங்குடி மக்களாதலால், தமிழ் வரலாற்றிற்குக் குமரிநாட்டுக் கொள்கை இன்றியமையாத அடிப்படைச் செய்தியாகும். மூவேறு கடல்கோள்களாற் படிப்படியாக முழுகிப்போன குமரி நாட்டின் தென்கோடியிலிருந்தது குமரிமலை யென்றும், வடகோடியி லிருந்தது குமரியாறு என்றும், வேறுபாடறிதல் வேண்டும். 2. மென்மை மாந்தன் பிறந்தகமும் தமிழன் பிறந்தகமும் பழம் பாண்டிநாடும் ஆகிய குமரிநாடு, நாகரிக நாடாயினும், உலக முதல் நாடாதலால், அதில் வாழ்ந்த பழங்குடி மக்களான தமிழரின் வாயில், உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாக முப்பதெழுத்துகளே தோன்றின. அவற்றுள்ளும், ழ, ள, ற, ன என்னும் நான்கும் பிந்தித் தோன்றியவையாகும். தமிழ்ச்சொன் முதலில் தனிமெய்யும் சில உயிர்மெய்யும், சொல்லிடையில், சில மெய்கட்குப் பின் சில வேற்றுமெய்யும், சொல்லிறுதி யில் வல்லின மெய்யும், வருவதேயில்லை. இக் கட்டுப்பாடும் விலக்கும் வேண்டுமென்று செய்யப்பட்டவை யல்ல. மாந்தன் வாயொலி வளர்ச்சி நோக்கின், அக்காலத் தமிழர் சிறுபிள்ளை நிலையிலிருந்ததனால், அவர் வாயில் எளிய முறையில் ஒலிக்கக்கூடிய தனியொலிகளும் கூட்டொலி களுமே பிறந்தன. இக்காலத்தும், நெல்லை மாவட்ட நாட்டுப்புற மக்கள், சாக்ஷி என்னும் வடசொல்லைச் சாக்கி என்றும், ஜாதி என்னும் வடசொல்லைச் சாதி என்றும், ஒலிப்பதைக் காணலாம். இங்ஙனம் எளிய வொலிகளைக் கொண்டிருந்தும், தமிழின் ஓசையினிமைக்கு எள்ளளவுங் குறைவில்லை. ``தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக் கொண்டல்கள் முழவி னேங்கக் குவளைகண் விழித்து நோக்கத் தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ'' (நாட்டுப். 4) என்னுங் கம்பராமாயணச் செய்யுளைப் பாடிக் காண்க. ஒரு மொழிக்கு வேண்டியவை சொற்களே யன்றித் தனியெழுத்துக ளல்ல. குமரிநாட்டுப் பொதுமக்கள், முப்பதொலிகளைக் கொண்டே, அக்காலத்தில் மட்டுமன்றி இனிவருங் காலத்தும் மாந்தன் மனத்தில் தோன்றக்கூடிய எல்லாக் கருத்துகளையும் குறிக்கத்தக்க, வேர்ச்சொற் களைப் பிறப்பித்திருப்பதால், தமிழுக்குப் பிறமொழி யொலிகளே தேவையில்லை. உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிக்கும் மூவகைச் செயற்கை வல்லொலிகளும், மூச்சொலியும், தமிழிலின்மையால் அது சிறு பிள்ளை களும் நோயாளியரும் கழிபெரு மூப்பினரும் எளிதாய் ஒலிக்கத் தக்கதா யிருப்பதுடன்; ஏனை மொழிகளி லியலாத நூற்றுக்கணக்கான திருப்புகழ் வண்ணங்களும்; வல்லினப் பாட்டு, மெல்லினப் பாட்டு, இடையினப் பாட்டு அடிமடக்கு, இரு பொரு ளிரட்டுறல், பல்பொரு ளிரட்டுறல், நடுவெழுத்தணி, முப்பாகி, பதின்பங்கி, பதிற்றுப் பதின்பங்கி முதலிய சொல்லணிகளும்; கோமூத்திரி, சுழிகுளம், தாமரைக் கட்டு, சக்கரக்கட்டு, தேர்க்கட்டு, இருநாகப் பிணையல், எண்ணாகப் பிணையல் முதலிய மிறைப் பாக்களும் (சித்திரக் கவிகளும்); பாடற்கேற்றதாயு மிருக்கின்றது. 3. தாய்மை மக்கட் பெருக்கம், வணிகம், கொள்ளைக்கும் போருக்கும் பழிக்கும் தப்பல், புதுநாடு காணல், கடல்கோள் முதலிய பல கரணியங்களால், தமிழர் வடக்கு நோக்கிச் சென்று, நாளடைவில் தமிழ் திராவிடமாகத் திரிந்ததால் தாமும் திராவிடராயினர். பின்னர்த் திராவிடருள் ஒரு சாரார், மேற்கூறிய கரணியம் பற்றியே வடமேற்காகச் சென்று, ஐரோப்பாவை யடைந்து ஆரியராக மாறினர். ஆதலால், குமரிநாட்டுத் தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத் திற்கு மூலமுமாயிற்று. தமிழ் எங்ஙனந் திரவிடமாகத் திரிந்ததென்பதற்கு, ஒரு தெலுங்கு வினைச்சொல்லின் கூறுகளே போதுமானவை. எ-டு: ஆகு என்னும் வினைச்சொல் சொல்வகை தமிழ் தெலுங்கு முதனிலை ஆ, ஆகு அவு ஏவல் ஒருமை ஆ, ஆகு கா ஏவல் பன்மை ஆகும், கம்மு, கண்டி ஆகுங்கள் இ. கா. ஆ. பா. வினைமுற்று ஆயினான் அயினாடு இ. கா. பெயரெச்சம் ஆன அயின, ஐன இ. கா. வினையெச்சம் ஆய், ஆகி அயி, ஐ எ. கா. வினையெச்சம் ஆக கா, அவ நிலைப்பாட்டு வினையெச்சம் ஆயிற்றேல் அயித்தே எ. கா. வினைமுற்று ஆகும், ஆம் அவுனு மறுப்பிணைப்புச் சொல் ஆனால், கானி, ஆயின், அயினனு ஆயினால் ஒத்துக்கொள் விடைச்சொல் ஆம் (yes) அவுனு படர்க்கை ஒன்றன்பால் எ. கா. எதிர்மறை வினைமுற்று ஆகாது காது தொழிற்பெயர் ஆதல், அவுட்ட, ஆகுதல் காவடமு கூட்டுவினை ஆகவேண்டும் காவலெனு திராவிட மொழிகளெல்லாம் பிற்காலத்துத் திரிமொழிகளாதலால், அவற்றில் தமிழிலில்லாத வல்லொலிகள் தோன்றியுள்ளன. எ-டு: தமிழ் தெலுங்கு குடி (=வீடு, கோவில்) gudi செய் ceyu (சேயு) சறுகு ஜறு (jaru) தேங்காய் tenkaya (தெங்க்காய) மிஞ்சு mincu (மிஞ்ச்சு) குண்டு (சிறுகுட்டை) kunta (குண்ட்ட) மொந்தை munta (முந்த்த) கும்பு gumpu (கும்ப்பு) என்றார் antaru (அண்ட்டாரு) எடுப்பொலிகள் (voiced sounds) ஆரியத்திற் போன்றே திரவிட மொழிகளிலும் வழங்குவதால், குமரிநாட்டுத் தமிழ்த் தோற்றத்தை அறியாதவரும் ஒப்புக்கொள்ளாதவரும், தமிழிலும் முற்காலத்தில் ga, ja, da, da, ba என்னும் எடுப்பொலிகள் வழங்கிப் பின்னர்க் க, ச, ட, த, ப என்னும் எடுப்பிலா (unvoiced) வொலிகளாக மாறிவிட்டன என்பர். இங்ஙனங் கொள்பவர் அயல்நாட்டாரும் தமிழ்ப் பகைவரும் வையாபுரிகளும் ஆவர். பிஞ்சு முற்றிக் காயான பின் மீளப் பிஞ்சாகாததுபோல், எடுப்பிலா வொலி பொலிந்து எடுப்பொலியானபின், மீள எடுப்பிலா வொலியாக மாறாதென அறிக. தென்னாட்டுப் பழங்குடி மக்களை மேனாட்டினின்று வந்தேறிகளாகத் தலைகீழாய்க் கொண்டதனாலேயே, இங்ஙனம் தலைகீழான முடிபிற்கு வர நேர்ந்தது. இது இயற்கைக்கு மாறானதென்பதை, குழந்தை வாயொலி களையும் வளர்ந்தோன் வாயொலிகளையும் ஒப்புநோக்கிக் காண்க. தமிழ் ஆரியத்திற்கு மூலம் என்பதை, பல்வேறு தமிழ் வேர்ச்சொற் களினின்றும் திரிந்து குடும்பங் குடும்பமாகவும் குலங்குலமாகவும் வழங்கும் சொற்களுட் சிற்சில, ஆரியத்திற் குடும்பத் தொடர்புங் குலத்தொடர்புமின்றித் தனித்தனியாய் வழங்குவதனால் அறியலாம். எ-டு: குல் - குலவு. குலவுதல் = வளைதல். L. clino = to bend. Gk. klino = to slope. குல் - குலி - குளி - குளிகை = மாத்திரை யுருண்டை. குளி - குழி - குழியம் = 1. வளைதடி, 2. நறுமண வுருண்டை. குல் - குள் - குளு - குழு - குழவி = உருண்டு நீண்ட அரைகல் (அம்மிக்குழவி). குளிகை - வ. (Skt.) குளிகா. L. globus, E. globe = spherical body குலவு - குரவு, குரவுதல் = வளைதல். L. curvo = to bend. E. curve. குரவு - குரவை = எழுவர் அல்லது பன்னிருவர் வட்டமாக நின்று ஆடிப்பாடிச் சுற்றிவருங் கூத்து. Gk. choros = (orig.) a dance in a ring. L. and E. chorus. குரவு - குரகு - குரங்கு. குரங்குதல் = வளைதல். AS. cringan, crincan, E. cringe, crinkle, crank, D. krinkel, W. crom (bent). குல் - குர் - குரு - குருள். குருளுதல் = சுருளுதல். E. curl (formerly `crull'), D. krullen, Dan. krolle, E. scroll, scrowl. குரு - குருகு = 1. வளையல், 2. வளைந்த கழுத்துள்ள நாரை, கொக்கு, ஓதிமம் (அன்னம்) முதலிய நீர்ப்பறவைப் பொது. AS. cran, E. crane, D. craan, Ger. krahn, kraniah, Ice. trani, Dan. trane. Amor. karan, W. garan, Gk. geranos, L. grus, OF. grue. குரு - குறு - கிறு. கிறுகிறுத்தல் = 1. சுற்றுதல், 2. சுழலுதல். கிறுகிறுப்பு = தலை சுற்றுவது போன்ற மயக்கம். கிறுகிறுவாணம் = சுழற்றி வீசும் பொறிவாணம். Gk. guros = ring, E. gyre, gyrate = to go in circle, to whirl. குறு - கறு - கறகு - கறங்கு=1. சுழற்சி, 2. காற்றாடி. கறங்கு-கறங்கல் = வளைதடி. OE., OS., OHG. hring, ON. hringr, E. ring = circle, circular ornament, (மோதிரம்). குல் - குள் - குளம் = 1. வளைந்த நெற்றி, 2. வெல்லவுருண்டை. குள் - குண்டு = உருண்டையானது. மரா. குண்ட. குண்டு - குண்டலம் = வட்டம், சுன்னம், காது வளையம். வ. குண்டல. குண்டு - குண்டான், குண்டா = உருண்டு வாயகன்ற கண்ணாடிச் சட்டி. மரா. குண்டா (gunda). குளம் - குடம் = 1. வளைவு. 2. உருண்டையான நீர்க்கலம். வ. குட, கட (ghata) குடம் - குடந்தம் = உடம்பை வளைத்துக் (குனிந்து) கும்பிடும் வழிபாடு. குடந்தம் - குடந்தை = வளைவு. குடம் - குடி = 1. வளைந்த புருவம். வ. (Skt) ப்ரு - குடீ. (முதற்காலத்தில் வட்டமாக அமைக்கப்பட்ட) சிறுவீடு, வீடு. AS. cote, cyte, OE, E., cot, Ice., MDu., ON. kot, ML G. kot, kote, koth, E. cot, Skt. kuti. குடி - குடிகை - குடிசை = கூலிக்காரர் வாழும் சிறு கூரைவீடு. E. cottage. குடி - குடில் = 1. ஆட்டுக்குட்டிகளை யடைக்கும் வட்டமான கூடு. 2. சிறு குடிசை. Skt. kutira (குடீர). குடில் - குடிலம் = வளைவு. Skt. kut@ila குல் - கொல் - கோல் = உருண்டு நீண்ட கம்பு. கோல் - கோலி = சிறு விளையாட்டுக் குண்டு. மரா. கோலீ (goli). குள் - கொள் - கொடு = வளைந்த. கொடுங்கோல் = வளைந்த கோல். கொடு - கொடுக்கு = வளைந்த உறுப்பு, கொட்டும் முள். Ice. krokr, Sw. krok, Dan. krog, D. cruk, W. crwg, Gael. crocan, OF. crok, E. crook. ட - ர. ஒ. நோ; படவர் - பரவர், முகடி - முகரி. குடகு - Coorg, தரங்கம்பாடி - Tranquebar. கொள் - கொள்ளு - கொட்கு - கொட்கு - கொக்கி. AS. hoc, hooc, D. hock, Ice. haki, Ger. haken, OHG. hako, L.G. hakc, E. hook. கொள் - கோள் - கோளம் = உருண்டை. Skt. gola (கோல). கோள் - கோண் - கோணம். Gk. gonia, E. penta gon. கோண் - கோடு - கோட்டம் = 1. வளைவு. 2. மதில் சூழ்ந்த கோவில், மதில் சூழ்ந்த சிறைச்சாலை. Skt. kostha (கோஷ்ட). கோட்டம் - கோட்டை = 1. நிலாவைச் சூழும் வட்டக்கோடு, 2. மதில் சூழ்ந்த அரண்மனை அல்லது நகர், வ. (Skt.) கோட்ட. L. castrum. இவற்றை ஒரு பானைச் சில் பருக்கைப் பதம் போலக் கொள்க. இங்ஙனம் ஏராளமான தமிழ்ச்சொற்கள் ஆரியச் சொற்களோடு ஒலியும் பொருளும் ஒத்திருப்பது, கொடிவழித் தொடர்பினாலன்றித் தற்செயலாக இருக்க முடியாது. 4. தூய்மை உலக மொழிகளுள், தூய்மையை வேண்டுவதும், அதைக் காத்துக் கொள்ள வல்லதும் தமிழ் ஒன்றே. இதன் விளக்கத்தை `வளம்' என்னும் சிறுதலைப்பின்கீழ்க் காண்க. 5. செம்மை தமிழர் பேரினமாய்ப் பெருகிப் பெருநிலத்திற் பரவியபின், சொற்களின் வடிவு பொதுமக்கள் வாயில் இடந்தோறும் வேறுபடுவதையும், அவ் வேறுபாட்டிற்கு எல்லையின்மையையும், கண்ட இலக்கண நூலார், திருத்தமான வடிவையே அளவைப்படுத்தி அதற்குச் செந்தமிழ் எனப் பெயரிட்டனர். இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு, கீது என வெவ்வேறிடத்தில் வெவ்வேறு வடிவில் வழங்கினாலும், ஏடெடுத்தெழுதும் போதும் மேடையேறிப் பேசும் போதும், இருக்கின்றது அல்லது இருக்கிறது என்னும் வடிவையே ஆளவேண்டுமென்பது, தொல்லாசிரியர் கட்டளையிட்ட செம்மையென்னும் வரம்பாம். ``மக்கள் தாமே ஆறறி வுயிரே.'' ``உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே'' என்று மக்கள் இயல் வரையறை செய்யப்பட்டிருப்பதால் அதற்கேற்ப எல்லா வினைகளையும் பண்பட்ட முறையில் இயற்றுவதே விலங்கினும் உயர்ந்த நிலைமையைக் காட்டுவ தாகும். ஆயினும், இச் செம்மையைத் தமிழளவு ஏனை மொழிகள் பேண இயலாது. தமிழில் வழுநிலையாயிருப்பன பல ஏனைமொழிகளில் வழா நிலையாம். ஆதலால், தென்மொழிகள் தமிழும் திராவிடமும் என இரண்டாகப் பிரித்தறியப்படும். தூய்மையுஞ் செம்மையும் உண்மை யின்மைகளே இதற்குக் கரணியம். 6. மும்மை இலக்கிய நிலையில், இசையும் நாடகமும் இயலொடு சேர்க்கப் படுவதால், தமிழ் முத்தமிழ் எனப்படும். 7. இயன்மை ஏனை யிலக்கியப் பெருமொழிகளிலும், இலக்கணம் எழுத்தும் சொல்லும் யாப்பும் அணியும் என நாற்கூறே கொண்டது. தமிழிலோ, எல்லாப் பொருள்களையும் அறிவியல் முறையிற் பாகுபடுத்தும் பொரு ளிலக்கணமும் உண்டு. சிலர், காதலும் போரும் ஆகிய இரண்டையே பொருளிலக்கணங் கூறுமென்பர். அவர் அறியார். காதலல்லாத எல்லாப் பொருள்களும் புறப்பொருளாக வாகைத் திணையுள் அடங்கும். 8. வியன்மை சில தமிழ்ச்சொற்கள் உலகெங்கும் பரவியுள்ளன. எ-டு: அம்மை அப்பன் முதலிய பெற்றோர் பெயர்கள். 9. வளமை தெற்கில் ஈராயிரங் கல் தொலைவு நீண்டிருந்த பழம் பாண்டிநாடு நீருள் மூழ்கிவிட்டதனாற் பல்லாயிரக்கணக்கான உலக வழக்குச் சொற்களும், முதலிரு கழக நூல்களும் அழிக்கப்பட்டுவிட்டதனாற் பல்லாயிரக்கணக்கான இலக்கிய வழக்குச் சொற்களும், இறந்துபட்டு மீளா நிலையடைந்தன. ஆயினும், இக்காலத்தும், இலை, தாள், தோகை, ஓலை என்னும் நால்வகை இலைப் பெயர்களும்; அரும்பு, போது, மலர், வீ, செம்மல் என்னும் ஐந்நிலைப் பூப்பெயர்களும்; கச்சல் (வாழை), வடு (மா), மூசு (பலா), குரும்பை (தென்னை, பனை) என்னும் பல்வேறு பிஞ்சுகளின் சிறப்புப் பெயர்களும், உள்ளன. யானையைக் குறிக்க இருபத்தைந்திற்கு மேற்பட்ட பெயர்கள் உள்ளன. தொத்துநோய் (Infectious disease), ஒட்டுவாரொட்டி (Contagious disease), திக்குதல் (to stammer), கொன்னுதல் (to stutter) என நுட்ப வேறுபாடு குறிக்கும் ஒருபொருட் பலசொற்களும் நிரம்பவுள்ளன. இவ் வியல்பை யறியாதார் வடசொற் கடன்கோள் தமிழுக்கு இன்றியமையாத தென்பர். வடசொற் கலப்பால், தென்சொற்கள் வழக் கிறந்தும் வழக்குக் குன்றியும் பொருள் மாறியும் வேர்ப்பொருள் மறைந்தும் இறந்துபட்டுமே போயின. அதனால் தீமையேயன்றி நன்மையில்லை. எ-டு: தென்சொல் வடசொல் வழக்கிறத்தல்: சூள், கழுவாய் ஆணை, பிராயச்சித்தம் வழக்குக் குன்றல்: ஆண்டு, மகிழ்ச்சி வருஷம், சந்தோஷம் பொருள்மாறல்: உயிர்மெய், தோள் பிராணி, புஜம் வேர்ப்பொருள் மறைதல்: அகங்கரி, பத்தினி அஹங்கார, பத்நீ மேலும் வடமொழியென்னும் சமற்கிருதமே ஆயிரக்கணக்கான அடிப்படைச் சொற்களைத் தமிழினின்று கடன் கொண்டுள்ளது. அம் மொழிச் சொற்களுள், ஐந்தி லிருபகுதி தமிழ்; ஐந்தி லொருபகுதி மேலையாரியம்; ஐந்தி லொருபகுதி வடநாட்டுப் பிராகிருதம்; ஐந்தி லொரு பகுதி புதிதாகப் புனையப்பட்டவை. வடமொழித்துணையின்றித் தமிழ் வழங்க முடியும்; ஆயின் தமிழ்த் துணையின்றி வடமொழி வழங்கமுடியாது. என் ``The Primary Classical Language of the World'' என்னும் நூலைப் பார்க்க. 10. இளமை தமிழ் உலக முதற்றாய் மொழியாயிருந்து பதினெண் திராவிட மொழிகளைப் பிறப்பித்தும், ஏறத்தாழ ஐம்பான் ஆரிய மொழிகளைத் தோற்றுவித்தும், இன்றும் இளமையாயிருப்பது, அதன் அழியாத் தன்மையைக் காட்டும். ``என்றுமுள தென்றமிழி யம்பியிசை கொண்டான்'' என்றார் கம்பர். ``ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன், சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே'' என்றார் சுந்தரம்பிள்ளை. - உரிமை வேட்கை பொங்கல் மலர் 1974 4 தமிழ் பற்றிய அடிப்படை உண்மைகள் ஒருவர் தமிழின் இயல்பை அல்லது சிறப்பைச் செவ்வையாய் அறிய வேண்டுமெனின், மூவடிப்படை யுண்மைகளை முற்பட வுணர்தல் வேண்டும். அவையாவன: 1. தமிழ் குமரிநாட்டில் தோன்றியதென்பது தமிழ் குமரிநாட்டில் தோன்றியதென்பதனால், தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்கள் என்பதும் உடன் பெறப்படும். ``பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி'' (சிலப். 11 : 19 - 22) என்று பதினெண் நூற்றாண்டுகட்கு முன்னரே, நற்றிற நடுநிலை முத்தமிழ் முனிவன் இளங்கோவடிகள் கூறிய தேர்தல் வேண்டாத் தெண்பொருட் கூற்றும், ``தொடியோள் பௌவமும்'' என்னும் சிலப்பதிகார வேனிற்காதைத் தொடருக்கு அடியார்க்குநல்லார் உரைத்த வுரையும், இறையனா ரகப் பொருளுரை முக்கழக வரலாறும், தமிழின் குமரிநாட்டுத் தோற்றத்திற்குப் போதியனவும் மறுக்க வொண்ணாதனவுமான சான்றுகளாம். தமிழ் வரலாற்றிற்கெட்டாத தொன்முது பழைமையான உலக முதன் மொழியாதலால், கிறித்துவிற்குப் பிற்பட்ட காலத்து முக்கழக வரலாற்றிற் பல காலமுரண்பட்ட குழறுபடைகள் குழம்பிக் கிடப்பது இயல்பே. அச் சிக்கல்களைக் களைந்து உண்மைகளை வடித்தெடுத்தல் வரலாற்றாராய்ச்சி யாளன் கடமையாகும். அக் கடமையை மேற்கொண்டே, திரு. (P.T.) சீநிவாசய்யங்காரும் பேரா. (V.R.) இராமச்சந்திர தீட்சிதரும் தமிழரின் தென்னாட்டுப் பழங்குடிமையைத் தத்தம் நூல்களில் ஐயந்திரிபற நாட்டிச் சென்றனர். ஆயினும், எல்லையற்ற இனவெறியும் மொழிவெறியும் பித்தொடு கலந்த பேய்கோள் போல் வருத்துவதால், பேரா. (கே) நீலகண்ட சாத்திரி யாரும் அவர் மாணவரான பர். (Dr.) (N.) சுப்பிரமணியனாரும், பிறரும், இடைக்காலத்தில் தீத்திறமாகவும் தெற்றுமாற்றாகவும் புகுத்தப்பட்ட சமற்கிருத மேம்பாட்டை என்றும் போற்றிக் காத்தற்பொருட்டு, தமிழரின் குமரிநாட்டுத் தோற்றத்தை விடாப்பிடியாய் மறைத்து வருகின்றனர். இன்றும் திராவிட மொழிகட்குள் முந்தியதும் தலைமையானதும் தமிழேயாதலால். ஆழ்ந்த தமிழ்ச் சொல்லாராய்ச்சி செய்யாதவர் தமிழன் பிறந்தகத்தை ஆய்ந்து காண்டலரிது. சொற்களின் வடிவொப்புமை காண்டல் வேறு; அவற்றின் முன்மை பின்மை ஆய்ந்தறிதல் வேறு. பர். (Dr.) (N.) இலாகோவாரி (Lahovary) தம் `திரவிடத் தொற்றமும் மேற்கும்' (Dravidian Origins and the West) என்னும் நூலில், சொற்களின் வரலாற்றை ஆராயாது ஒருசார் வடிவொப்புமை யொன்றே கொண்டு, திரவிடன் பிறந்தகம் நண்ணிலக் கடற்கரைப் பாங்கர் எனக் காட்ட முயல்கின்றார். திரவிடத்திற்கு மூலம் (குமரிநாட்டுத்) தமிழ் என்றும், திரவிடனுக்கு முந்தியவன் தமிழன் என்றும், தமிழம் என்னுஞ் சொல்லே த்ரமிள--த்ரமிட--த்ரவிட--த்ராவிட எனத் திரிந்ததென்றும், அடிப்படை யுண்மைகளையே அவர் அறியவில்லை. பல சொற்களைத் தவறாகவும் பிரித்துள்ளார். கால்டுவெலார் காலத்தில், தொல்காப்பியமும் கடைக்கழக (சங்க) இலக்கியமும் தலைமைத் தமிழ்ப் புலவர்க்குந் தெரியாது மறையுண்டு கிடந்தமையாலும், மறைமலையடிகள் போலும் வழிகாட்டியின்மையாலும், அவர் அயல்நாட்டினராதலாலும், ஏதேன் தோட்டக் கதையை எழுத்துப்படி நம்பிய `கிறித்தவக் குரவராதலாலும், அவர் தமிழரின் முன்னோரை மேனாட்டினின்று வந்தேறியராகக் கொண்டதிற் குற்றமொன்றுமில்லை. அவர் அங்ஙனங் கொண்டவிடத்தும், தமிழ் ஆரியத்திற்கு மூத்ததென்றும், உலக முதன்மொழியொடு நெருங்கிய தெர்டர்புடையதென்றும், கூறியது மிகமிகப் பாராட்டத்தக்கதாம். இன்று, சென்னைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியிதழில் (Journal of the Madras University), திரவிடத் தோற்றப் புதிர்வினா--ஒரு மொழியியல் மாந்தனூலியல் பழம் பொருட் கலையியல் அடுத்தாய்வு (The Problem of Dravidian Origins--A Linguistic, Anthropological and Archaeological Approach) என்னும் தலைப்பில், 1956 - 57-ல் பேரா. (T.) பாலகிருட்டிண நாயர் நிகழ்த்திய வயவர் வில்லியம் மெயெர் மானியச் சொற்பொழிவுகள் (Sir William Meyer Endowment Lectures) வெளியிடப்பட்டு வருகின்றன. அவை ஆழ்ந்த தமிழ்ச் சொல்லிய லாராய்ச்சியில்லார்க்கு முழு மெய்போலத் தோன்றும், தமிழன் பிறந்தகம் மேனாட்டதென்பதற்கு அவை காட்டும் சான்றுகளின் போலிமை, அடுத்த ஆண்டு நான் வெளியிடவிருக்கும் The Lemurian Language and Its Ramifications என்னும் நூலில் விரிவாக விளக்கப் பெறும். அடிப்படைக் கொள்கை தவறாயிருப்பின் எத்துணைப் பேரறிஞர் உறழாடினும் முடிவு தவறாகவே யிருக்கும், தென்குமரி நாட்டானை மேனாட்டானென்று தலைகீழாகக் கொண்டதனாலேயே, சமற்கிருத நெடுங்கணக்கினின்று தமிழ் நெடுங்கணக்குத் தோன்றிற்றென்றும், தமிழ் வேற்றுமைப் பாகுபாடு சமற்கிருத வேற்றுமைப் பாகுபாட்டைத் தழுவியதென்றும், கால்டுவெலாரும்; g, j, d, t, b ஆகிய ஆரிய எடுப் பொலிகள் க, ச, ட, த, ப ஆகிய தமிழ் எடுப்பிலா வொலிகளாக மாறினவென்று பர். (Dr.) சு. கு. சட்டர்சியும்; வ்ருத்த என்னும் வடசொல் பிராகிருதத்தில் வட்ட என்றும் தமிழில் வட்டம் என்றும் திரிந்ததென்று வடமொழியாளரும்; தலைகீழாக உரைப்பாராயினர். 2. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவென்பது ``எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.'' (பெயரியல்,1) என்பது தொல்காப்பிய நூற்பா'' தமிழ் இயன்மொழியாதலால், அதிலுள்ள பெயர் வினை யிடை யென்னும் மூவகைப்பட்ட எல்லாச் சொல்லும், வேர்ப்பொருளுணர்த்தும் கரணியக் குறிகளே. ஆரியம் திரிமொழியாதலின், அதிலுள்ள சில பல சொற்கள், மேன்மேலுந் திரிந்து முதனிலையுருத் தெரியாவாறு முற்றுஞ் சிதைந்து, வேர்ப்பொருள் அறிய முடியா நிலையில் உள்ளன. அதனால், வடமொழியிலக்கண நூலார், வேர்ப்பொருள் விளங்காச் சொற்களை இடுகுறி யென்றனர். ஆயின், இவற்றை வண்ணனைமொழி நூலாரோ, எல்லா மொழியும் இடுகுறித் தொகுதியென்றொரு நெறியீடு செய்து, தம் இரு கண்ணையும் இறுகக் கட்டிக்கொண்டனர். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவேனும், வேர்ப்பொருள் சிலவற்றில் விளங்கித் தோன்றும்; சிலவற்றில் விளங்கித் தோன்றாது. அதை ஆய்ந்தே காணல் வேண்டும். இதனையே, ``மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா'' (உரியியல், 96) என்று குறித்தது தொல்காப்பியம்'' எ-டு: சுல்-சுள்-சுடு-சுடல்-சுடலை (விழிப்பத் தோன்றல்) புல்-புள்-புழு-புழல்-புடல்-புடலை (விழிப்பத் தோன்றாமை) காலஞ் சென்ற வையாபுரியார், பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு உலக முழுதும் இருண்டுவிட்டதென்று கொண்டாற்போல, தம் அறியாமையைத் தொல்காப்பியர் மீதும் ஏற்றி, ``Tolkappiyar only says that the origin of words is beyond ascertainment'' என்று கூறிவிட்டார். வட மொழியென்னும் சமற்கிருதத்தில் ஐந்தி லிருபகுதி தமிழாத லால், அதை மறைத்தற்பொருட்டுப் பல வடசொற்கட்குப் பொருந்தப் பொய்த்தலாகவும் பொருந்தாப் பொய்த்தலாகவும் பொருள் கூறி வருகின்றனர். எ-டு : தென்சொல் வடசொல் வடவர்கூறும் மூலப்பொருள் இஞ்சிவேர் ச்ருங்கவேர (மான்) கொம்புபோன்ற வடிவுடையது. உலகு-உலகம் லோக பார்க்கப்படுவது. முத்து-முத்தம் முக்த (சிப்பியினின்று) விடுதலை பெற்றது. வடம்-வடவை படபா பெட்டைக் குதிரை முகத்தில் (முகம்) தோன்றியது (ஊழித்தீ) ``காலம் உலகம் உயிரே உடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல்என வரூஉம் ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம் பால்பிரிந் திசையா வுயர்திணை மேன'' (கிளவியாக்கம், 58) என்னும் தொல்காப்பிய நூற்பாவின் பொருளையுணர்ந்து உண்மை தெளிக. 3. சமற்கிருதத்தைத் தாக்காது தமிழை வளர்த்தல் இயலாதென்பது தமிழ் சிவமதமும் திருமால் மதமும் தோன்றிய ஒப்புயர்வற்ற உலக முதல் உயர்தனிச் செம்மொழியா யிருந்தும், வழக்கற்றுப் போன கீழையாரியம் கடலிற் காய முரசினது போல் வடநாட்டுப் பிராகிருதத்தொடு கலந்து போனதனாலாகிய வேத மொழியை, தமிழொடு கலந்தாக்கிய ஒரு காலும் உலக வழக்கிலில்லாத இலக்கிய நடைமொழியாகிய சமற்கிருதத்தை, தேவமொழியென்று ஏமாற்றி, வழிபாட்டிற்குத் தகாத இழிந்தமொழியென்று தமிழைத் தள்ளி, அதற்குத் தலைமாறாகத் திருக்கோவில் வழிபாட்டு மொழியாகவும் திருமணக் கரணமுள்ளிட்ட சடங்கு மொழியாகவும், கடந்த மூவாயிரம் ஆண்டாக ஆண்டு வருகின்றனர் ஆரியப் பூசாரியர். முதன் முதல் தோன்றிய குமரிநாட்டுத் தமிழெழுத்து, அசோகன் கல்வெட்டுப் பிராமியெழுத்தினின்று தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. அடிப்படைத் தமிழ்ச்சொற்க ளெல்லாம் ஆரியச் சொல்லாகக் காட்டப்படுகின்றன. இசை நாடகம் கணியம் மருத்துவம் முதலிய தமிழறிவியல்க ளெல்லாம், ஆரிய வண்ணமாக்கப்பட்டுள்ளன. இருவகை அறநெறியும் அரசியல் முறையும் இம்மையின்பமும் கூறும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை, இறந்துபட்டதாகக் கூறும் திரிவர்க்கத்தின் மொழிபெயர்ப்பென்றும், தரும சாத்திரம் அருத்த சாத்திரம் காம சூத்திரம் ஆகிய வட நூல்களைத் தழுவிய தென்றும், அஞ்சாது அலப்பி வருகின்றனர். ஐவகை யிலக்கணமுங் கூறும் தொல்காப்பியத்தை, எழுத்தும் சொல்லுமே கூறும் பிராதிசாக்கியங்களையும் பாணினீயத்தையும் பின்பற்றியதென்று பிதற்றி வருகின்றனர். மெய்ப்பொருள் திரிப்பாலும் தொன்மக் கதைகளாலும் சிவமதமும் திருமால் மதமும் ஆரியமாக்கப்பட்டுள்ளன. தமிழர் கண்ட அறம்பொரு ளின்ப வீடென்னும் நாற்பொருட் பாகுபாடு, `தர்மார்த்த காமமோட்ச' என்னும் ஆரியச் சொற்றொடரின் மொழிபெயர்ப்பாகக் கூறப்படுகின்றது. தமிழன் பிறப்பிற் பிராமணனுக்குத் தாழ்ந்தவனென்றும், அத் தாழ்வு மறுமையில்தான் நீங்குமென்றும் கூறும் நெஞ்சத் திமிரும் வாய்க்கொழுப்பும் வெளிப்படையாக இருந்துவருகின்றன. இங்ஙனம், அடிமுதல் முடிவரை, தமிழ்மொழி யிலக்கிய நாகரிகப் பண்பாடனைத்தும் தருக்கப் பொருளாக்கப்பட்டிருப்பதால், சமற்கிருதத் திற்கும் தமிழுக்கும் இடைப்பட்ட உறவு, தாக்குவோனுக்கும் தற்காப் போனுக்கும் இடைப்பட்டதாகும். ஆகவே, அடிமையரும் அறிவிலியரும் கோழையருங் கோடன் மாருமா யிராது, உண்மையை எடுத்துரைத்துத் தாம் இழந்தவுயர்வை மீளப் பெறுவதே உயர்திணை மக்கட்குரிய பண்பாம். ``வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து வாளாண்மை யாலும் வலியராய்த் - தாளாண்மை தாழ்க்கும் மடிகோ ளிலராய் வருந்தாதார் வாழ்க்கை திருந்துத லின்று.'' (பழ. 151) - இலண்டன் தமிழ்ச்சங்க ஆண்டு மலர் 1972-73 5 தமிழின் தொன்மையும் முன்மையும் இவ் வுலக மொழிகள் ஏறத்தாழ மூவாயிரம். அவற்றுள், தமிழே தொன்மையும், முன்மையும், தாய்மையும், தலைமையும் வாய்ந்ததென்பது, உண்மையான ஆராய்ச்சியாளரெல்லாராலும் அடிக்கடி சொல்லவும் எழுதவும்பட்டு வருகின்றது. சென்ற நூற்றாண்டில் முதல் முதலாகத் தமிழையும், திரவிட மொழிகளையும் தமிழ்நாட்டிலிருந்து நிலையாக ஆராய்ந்து, தாம் கண்ட அல்லது தமக்குத் தோன்றிய முடிவுகளை உலகிற்கெடுத்துக் கூறிய பெரியார் கால்டுவெல் மேற்காணியார். அவர் காலத்தில், கடைக்கழக இலக்கியமும் தொல்காப்பியமும் தமிழ்ப் புலவர்க்கே தெரியாதவாறு மறைந்து கிடந்தன; மறைமலையடிகள் போன்ற தனித்தமிழ்ப் புலவர் இல்லை; தலைக்கழகக் குமரிநாட்டைப் பற்றி ஒருவர்க்கும் ஒன்றுந் தெரியாது; கா.சு.போன்ற ஆராய்ச்சியாளருமில்லை; நயன்மைக் கட்சி தோன்றாமையால் இன வுணர்ச்சியும் ஒருவர் உள்ளத்திலும் எழவில்லை; எல்லாத் துறையிலும் தமிழர் தம்மைப் பிராமணர்க்குத் தாழ்ந்தவராக வெளிப்படையாகக் காட்டிக் கொண்டனர். தமிழர் வெளிநாட்டினின்று வந்தவரென்று தாம் நம்பியத னாலும், எல்லாத் துறையிலும் பிராமணர் மேம்பட்டிருந்ததனாலும், இந்திய நாகரிகத்தைக் காட்டும் இலக்கியம் இன்று சமற்கிருதத்திலேயே உண்மை யாலும் தமிழர் வடசொற்களை விரும்பிக் கலந்து தமிழைக் கலவை மொழியாகவே வழங்கியதனாலும், தமிழ நாகரிகத்தின் உயர்ந்த கூறு ஆரியர் கண்டதென்று கால்டுவெலார் தவறாகக் கூற நேர்ந்துவிட்டது. ஆயினும், தமிழ் ஆரியத்திற்கு முந்தினதென்னும் உண்மைமட்டும், அவர் கண்ணிற்குத் தப்பமுடியாது விளங்கித் தோன்றிவிட்டது. ஆனாலும், தமிழ் மாபெருஞ்சொல் வளத்ததென்றும், தமிழ் வடமொழித் துணை யின்றித் தனித்து வழங்கக்கூடியதென்றும் கண்டறிந்தார். இவ் வீருண்மை களையும் பற்றி அவர் கூறியிருப்பன வருமாறு: “திரவிட மொழிக் குடும்பத்தை, இந்தோ ஐரோப்பியத் தொகுதியை யும் சித்தியத் தொகுதியையும் இணைக்கும் அண்டாக (வளையமாக) மட்டுமன்றி சில கூறுகளில், சிறப்பாக மூவிடச் சுட்டுப் பெயர்கள் தொடர்பாக, மாந்தன் மொழி வரலாற்றில், இந்தோ - ஐரோப்பிய நிலைக்கு முந்தியதும், சித்திய நிலைக்கு முந்தியதும், அவ் விரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிவதற்கு முந்தியதுமான, ஒரு கால நிலைமையைக் காட்டி எஞ்சி நிற்கும் தலைசிறந்த படிநிகரியாகவும் (சுநயீசநளநவேயவiஎந) கருத ஏது விருப்பதாகத் தோன்றவில்லையா?’``சில திரவிடச் சொல் வடிவுகளும் வேர்களும் மாந்தரின் முதற் பெற்றோரினின்று முதற்காலத் திரவிடர்க்கு வழிவழியாக இறங்கிவந்துள்ள மொழியியற் பேற்றின் ஒரு கூறாக அமையாவா என்பது வேறொரு வினா. எங்ஙனமிருப்பினும், அத்தகைய மொழியியல் வழிமுறைப் பேற்றின் தடங்களை, மிக எளியனவும் மிகத் தேவையானவும் அதனால் மிக முந்தியனவுமான மொழிக் கூறுகளான சுருங்கிய சூழலில்தான் காண வேண்டியவனாக இருக்கின்றேன்.'' ``எங்ஙனமும், உள்ளிருந்து திரவிட மொழிகள் எல்லாவற்றுள்ளும் மிக உயர்வாகப் பண்படுத்தப் பெற்றுள்ள தமிழ் வேண்டுமெனின், வடமொழியை முற்றும் விலக்கித் தனித்து வழங்க மட்டுமன்று, தழைத்தோங்கவுஞ் செய்யும்.'' ``.... திரவிட மொழிக் குடும்பம், சமற்கிருதத்திற்கு முந்தினவும் மிகத் தொன்மை வாய்ந்தனவுமான கூறுகளைப் போற்றிக் கொண்டுள்ளது. சிறப்பாக, அதன் சுட்டெழுத்துகள் சமற்கிருதத்தினின்று கடன் கொள்ளப் பெறாமல் அந்தப் பழைய யாப்பேத்திய அடிகளை ஒத்திருக்கின்றன. அவ் வடிகளினின்றே, சமற்கிருதத்திலும் ஆரியக் குடும்பத்தைச் சேர்ந்த வேறு பல மொழிகளிலும் உள்ள சுட்டுச் சொற்கள் திரிந்துள்ளன.'' இங்ஙனம் கால்டுவெலாரே சென்ற நூற்றாண்டில் திட்டவட்டமாகவும் தெள்ளத் தெளிவாகவும் கூறியிருக்க, அண்மையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற திரவிட மொழியாராய்ச்சி மாநாட்டில், தமிழ் வடமொழித் துணையின்றித் தனித்து வழங்கவியலாதென்றும், அதன் மடியிலேயே வளர்ந்து வந்ததென்றும் 542 திரவிடச் சொற்களே வடமொழியிலுள்ளன வென்றும், வங்கநாட்டுப் பிராமணரும் வடமொழி வெறியரும் தமிழ்ப் பகைவரான தென்னாட்டுப் பிராமணர் தமிழைப்பற்றி ஆங்கிலத்தில் தவறாக எழுதியுள்ளவற்றைப் படித்துத் தமிழறிந்தவருமான பர். சட்டர்சி துணிந்து கூறியுள்ளார். அதையே, பர். தெ.பொ.மீ.யாரும் பிற வையா புரிகளும் பாராட்டிக் கேட்டுக்கொண்டிருந்திருக்கின்றனர். திருவனந்தபுரத்துக் கேரளப் பல்கலைக்கழகம் மட்டுமன்றி, தமிழ் நாட்டு முப் பல்கலைக்கழகங்களும் இன்று சட்டர்சியையும், தெ.பொ.மீ. யாரையும் பின்பற்றி நிற்கின்றன. இதற்கு அங்குள்ள தலைமைத் தமிழ்ப் பேராசிரியன்மாரே அடிப்படைக் கரணியம். சமற்கிருதம் மேலையாரியமும், பிராகிருதமும் தமிழுங்கலந்த கலவை மொழியென்றும் அதில் ஐந்திலிரண்டு பங்கு தமிழென்னும் உண்மையறிக. - முதன்மொழி 2.7.1971 6 தமிழும் திராவிடமும் தென்மொழியும் தமிழ், திரவிடம், தென்மொழி என்னும் முப்பெயரும் ஒருபொருட் சொற்களாய்த் தமிழையே நெடுங்காலம் குறித்து வந்திருப்பினும், இன்றை நிலைக்கேற்ப, தமிழின் மூவேறு நிலைகளை உணர்த்தற்குரியனவாய் உள்ளன. குமரிநாட்டுத் தமிழ்மக்களுள் ஒரு சாராரும் அவர் வழியினரும் மக்கட் பெருக்கம், கடல்கோள் முதலிய கரணியம் (காரணம்) பற்றி மெல்ல மெல்லப் படிப்படியாய்ப் பனிமலை (இமயம்) வரை படர்ந்து பரவிய பின், வேங்கடக் கோட்டத்திற்கு வடக்கிலுள்ள நாவலந்தேயப் பகுதி, தட்ப வெப்பநிலை, உண்டி, பழக்கவழக்கம், சுற்றுச் சார்பு முதலியவற்றின் வேறு பாட்டினாலும், பாண்டிநாட்டுத் தொடர்பின்மையாலும், நாளடைவில் சிறிது சிறிதாய் வடக்கு நோக்கி மொழி பெயர் தேயமாய் மாறிற்று. அங்குச் செந் தமிழ்ப் புலவரும் அவரைப் போற்றும் சீரிய புரவலரும் இன்மையால் மக்கள் மொழியுணர்ச்சியும் பலுக்கல் (உச்சரிப்பு) முயற்சியும் குன்றி முன்னோர் மொழியைப் பல்வேறு வகையில் திரித்தும் சிதைத்தும் பேசலாயினர். அதன் பின் திரியாத் தமிழ் செந்தமிழ் என்றும், திரிந்த தமிழ் கொடுந்தமிழ் என்றும் பெயர் பெற்றன. வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து என்று கி.மு. 7ஆம் நூற்றாண்டினதாகிய தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார் கூறுவதால், தொல்காப்பியர் காலத்திலும் வேங்கடம் (திருப்பதி) வரையும் செந்தமிழ் நாடும் அதன் வடக்கே கொடுந்தமிழ் நாடும் பரவியிருந்தமை பெறப்படும். தென் பெருவாரியில் முழுகிப் போன குமரிக்கண்டத் தமிழ்நிலம் முழுவதும் பழம் பாண்டி நாடாதலாலும், தமிழ் தோன்றி வளர்ந்ததும் முத்தமிழ்க் கழகமும் நிறுவப்பெற்றதும் தமிழ்நாடெனச் சிறப்பித்து சொல்லப் படுவதும் பாண்டிநாடே யாதலாலும். இன்றும் தமிழ் தெற்கு நோக்கியே சிறந்து தென்கோடியில் தூய்மை மிக்கிருப்பதாலும், குமரிக்கண்டம் முழுகும் முன் வேங்கட முதல் தென்பாலிமுகம் வரையும் (ஏறத்தாழ 2500 கல் தொலைவு) செந்தமிழ் நாடாயே இருந்திருத்தல் வேண்டும். இனி, இந்தியாவின் வடமேற்கில் பிராகுவீ என்னும் திரவிட மொழியும் வடகிழக்கில் மாலெர் (மாலிற்றோ) என்னும் திரவிட மொழியும் இன்றும் பேசப்படுவதாலும், வட இந்திய ஆரியமொழிகளாகக் கருதப்படும் இந்தி, வங்கம் முதலியவற்றின் அடிப்படை திரவிடமா யிருப்பதாலும், நேபாள மொழியில் சில சொற்கள் இயற்சொல்லாய் வழங்குவதாலும், குச்சரம் (குசராத்தி), மராட்டி (மகாராட்டிரம்) ஆகிய விரண்டும் பழம் பஞ்ச திரவிடத்திற் சேர்க்கப் பெற்றிருந்தமையாலும், சென்னையிலிருந்து வங்கம் வரையும் கீழையிந்தியாவில் திரவிட மொழிகள் தொடர்ந்து பேசப் பெறுவதாலும், விந்தியத்தை யடுத்த நடுவிந்தியாவிலும் கோண்டி முதலிய திரவிட மொழிகள் வழங்குவதாலும், வேத காலத்தில் சோடர் என்னும் தெலுங்கச் சோழர் கங்கைக் கரையில் ஆண்டு வந்ததாகச் சொல்லப் படுவதாலும், வேங்கடத்திலிருந்து பனிமலை வரையும் (ஏறத்தாழ 2000 கல் தொலைவு) கொடுந்தமிழ் நாடா யிருந்ததாகவும் தெரிகின்றது. முதன்முதல் தமிழராற் பிரித்துணரப் பெற்ற கொடுந்தமிழ் மொழி வடுகு அல்லது வடுகம் என்னும் தெலுங்கே. வடுகு என்பது வடகு என்பதன் உயிரிசைவு மாற்றத் (Harmonic Sequence of Vowels) திரிபு. வடக்கில் வழங்குவதால் வடகு எனப்பட்டது. வகரம் கன்னடத்தில் பகரமாகத் திரிதல் இயல்பாதலால், தெலுங்க நாட்டையடுத்து வாழ்ந்த ஒருசார் கன்னடியர் நீல மலையிற் குடியேறியபின் படகர் (வடகர்) எனப்பட்டனர். வடக்கினின்று வந்த கருநடர் வடகர். சொன்முதல் உயிர்மெய்யினின்று உயிரை நீக்கி ரகர மேற்றும் வடமொழி வழக்கிற்கேற்ப, தமிழ் அல்லது தமிழம் என்னும் சொல் வடநாட்டில் முதற்கண் `த்ரமிள' என்று திரிந்து, பின்னர் முறையே த்ரமிட - த்ரவிட - த்ராவிட - த்ராவிடீ என வடிவு பெறலாயிற்று. ழகரம் பிறமொழிக் கின்மையால், வடநாட்டில் ளகரமாகத் திரிதல் இயல்பே. கொடுந்தமிழ் மொழிகள் செந்தமிழினின்று வடநாட்டாரால் பிரித் துணரப்படுமுன், த்ரவிட என்னும் பெயர் தமிழுக்கினமான மொழிகளை யெல்லாம் தமிழுள்ளேயே அடக்கிற்று. கி.பி. 7ஆம் நூற்றாண்டினரான குமாரிலபட்டர், தெலுங்கைத் தமிழினின்று வேறுபடுத்தி, தமிழும் அதன் இன மொழிகளும் சேர்ந்த தொகுதியை ஆந்திர - திராவிடப் - பாசை (ஆந்த்ர - த்ராவிட பாஷா) என்னும் இணைமொழிப் பெயராற் குறித்தனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, குசராத்தி ஆகிய ஐம்மொழி நாடுகளும், வடவரால் முறையே திராவிடம், ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம் என்னும் பஞ்ச திராவிடம் என அழைக்கப்பெற்றன. மராட்டியும் குசராத்தியும் இன்று ஆரிய மொழிகளாய் மாறிவிட்டன. பஞ்ச திராவிடம் என்னும் பாகுபாடு அதாவது மராட்டியும் குசராத்தியும் திராவிட மொழிகளோடு சேர்க்கப் பெற்றமை. ஒரு காலத்தில் இவ் விரு மொழிகளும் திரவிட மொழிகளாய் இருந்தமையை உணர்த்தும் இது, தமிழ் திரவிட மாயும். திரவிடம் ஆரியமாயும் திரிந்தமைக்கும், ஆரியம் பரவப் பரவத் திரவிடப் பரப்பும் திரவிடம் பரவப் பரவத் தமிழ்ப் பரப்பும் குன்றி வருவதற்கும், ஒரு சான்றாம். தமிழ் எனினும் செந்தமிழ் எனினும் ஒன்றே. செந்தமிழினின்று கொடுந்தமிழ் அல்லது கொடுந்தமிழ்கள் பிரித்துணரப்படு முன்பும், பிரித்துணரப்பட்டபின்பும், தமிழைத் திராவிடம் என்னும் பெயராலேயே வடவர் குறித்து வந்திருக்கின்றனர். வேத காலத்து வட்டார மொழிகளாகிய பிராகிருதங்களுள் ஒன்றான தமிழ் திராவிடீ எனப்பட்டது. ஆந்திர - திராவிடப் பாசை என்னும் கூட்டுப் பெயரிலும், பஞ்ச திராவிடப் பெயர்களுள்ளும் தமிழ் திராவிடம் என்றே குறிக்கப் பெற்றது. கி.பி.5ஆம் நூற்றாண்டில் மதுரையில் புத்த நெறியினரால் நிறுவப் பெற்ற தமிழ்க் கழகம், தமிழ்ச் சங்கம் எனப்பட்டது. இற்றைக்கு ஏறத்தாழ 480 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பிள்ளை லோகார்ய சீயர் தமிழ்நூலைத் திராவிட சாத்திரம் (த்ராவிட சாத்தரம்) என்றனர். கி.பி.18ஆம் நூற்றாண்டி லிருந்த தூய தமிழரான தாயுமான அடிகளும் வடநூல் வழக்கையொட்டி. ``வல்லா னொருத்தன் வரவுந்திரா விடத்திலே வந்ததா விவகரிப் பேன்'' என்றார். இதனால் தமிழ் (தமிழம்) என்னும் பெயரே வடமொழியில் திராவிடம் எனத் திரிந்துள்ளமை தேற்றம். ``செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி'' (883) என்று தொல்காப்பியர் கொடுந்தமிழ் நிலங்களைப் பன்னிரண்டாகக் கூறினர். ஆயின், அவை எவை எனக் குறித்திலர். அவர் காலத்தில் வேங்கடம் செந் தமிழ்நாட்டு வடவெல்லையா யிருந்தமையாலும், கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை யிருந்த கடைக்கழகக் காலத்திலும் வேங்கடம் வரை தமிழகமா யிருந்தமையாலும், தொல்காப்பியத்திற் குறிக்கப்பெற்ற பன்னிரு கொடுந்தமிழ் நிலங்களும் வேங்கடத்திற்கு அப்பாற்பட்டவை யாயே இருந்திருத்தல் வேண்டும். தமிழிலக்கண உரையாசிரியரெல்லாம் கி.பி.11ஆம் நூற்றாண்டிற்கு மேற்பட்டவராதலால், பண்டை வரலாற்றை யறியாமல் தம் கால நிலைக்கேற்ப, ``தென்பாண்டி குட்டங் குடற்கற்கா வேண்பூழி பன்றி யருவா அதன்வடக்கு - நன்றாய சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெண்'' எனக் கொடுந்தமிழ் நிலங்களைப் பிழைபடக் குறித்தனர். இனி, தொல்காப்பியத்திற்கு ஒருமருங்கு மாறாக, ``செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொல் என்ப'' (நன். 273) எனக் கி.பி.12ஆம் நூற்றாண்டினரான நன்னூலார் மிகைபடக் கூறியதும் வழுவுற்றதே. தமிழையும் அதன் இனமொழிகளையும் மொத்தம் பதின்மூன்றென முதன்முதற் கால்டுவெல் கண்காணியார் குறித்தனர். இன்று அமெரிக்கப் பேராசிரியர் எமனோவும், ஆங்கிலப் பேராசிரியர் பரோவும் அவற்றைப் பத்தொன்பதாகக் காட்டினர். இத் துறையாராய்ச்சியைத் தொடங்கி வைத்த கால்டுவெலார் காலத்தில், தமிழை அதன் இனமொழிகளினின்று பிரித் துணருந் தேவையே யின்மையால், அவர் அவ் விரு பாலையும் திராவிடம் என்னும் பொதுப்பெயராற் குறித்துப் போந்தார். இன்றோ, இவ் வாராய்ச்சி மிகுந்து தமிழரும் ஆழ்ந்து ஈடுபட்டுத் தமிழின் தனித்தன்மையைத் தெளிவாய் உணர்ந்திருப்பதாலும் மொழிவாரிப் பைதிர (மாகாண)ப் பிரிவினால் தென்னாட்டுத் தமிழினப் பெருமொழிகள் நில வகையிற் பிரிந்து போனமையாலும், இந்தியைப் பொதுமொழியாய் ஏற்றுக்கொள்வதுபற்றித் தமிழர்க்கும் ஆந்திர கன்னட மலையாளியர்க்கும் நேர்மாறான நிலைமை வேறுபாடிருப்பதாலும், தமிழை அதன் இனமொழிகளினின்று பிரித்துச் சுட்ட வேண்டும் என்ற தேவை ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழைத் தமிழ் என்றும், அதன் இனமொழிகளையே திரவிடம் என்றும், இவ் விருபாலை யும் பொதுப்படத் தென்மொழி என்றும் கூறுவதே இனித் தக்கதாம். செந்தமிழ், கொடுந்தமிழ் என்னும் பாகுபாடு தொன்று தொட்டு வழக்கி லிருந்து வருவதாலும், செந்தமிழினின்று திரிந்த கொடுந் தமிழ் மொழிகளைத் தமிழ் என்னும் செந்தமிழ்ச் சொல்லின் திரிபான திரவிடம் என்னும் திரிசொல்லாற் குறிப்பதே தக்கதாமாதலாலும், வட இந்திய மொழிகளை யெல்லாந் தழுவும் வடமொழியென்னும் பெயர்போல் தென்னிந்திய மொழிகளையெல்லாந் தழுவுவது தென்மொழி என்னும் பெயரேயாதலாலும், தமிழ், திரவிடம், தென்மொழி என்னும் முப்பெயர்க்கும் பகுத்தொதுக்கிய பொருட்பாடு எல்லா வகையிலும் ஏற்றுள்ளமையறிந்து கடைப்பிடிக்க. - ``தென்மொழி'' பிப்பிரவரி 1963 7 தமிழ் வேறு, திரவிடம் வேறு தமிழும் திரவிட மொழிகளும் ஓரினமாயினும் மிக வேறுபட்டவை என்பதைப் பலர் அறிந்திலர். செந்தமிழும் கொடுந்தமிழும் குமரிக்கண்டத்தில் தோன்றி வளர்ந்து பல்லூழிகளாகப் பண்படுத்தப் பட்ட தமிழ், முதற்காலத்து எவ்வகை அடைமொழியும் பெறாது தமிழ் என்றே வழங்கியிருப்பினும், இடைக் காலத்துப் புலவராலும் அரசராலும் போற்றப் பெறாத நாடுகளில் பல்வகையில் திரிந்து கொடுந்தமிழ் எனப் பெயர் பெற்றபின், ஒப்பு நோக்கிய முறையில், செந்தமிழ் என இனச் சுட்டுப் பண்புகொள் பெயர்க்கொடை பெற்றது. செந்தமிழ்ச் சொற்கள், சொல்லியல் (Etymology) முறைபற்றி (1). இயற்சொல், (2) திரிசொல் என இரு பாலாகப் பகுக்கப் பெற்றன. இயற் சொல்லாவது இயல்பான முந்துநிலைச் சொல் (Primitive); திரிசொல்லாவது, அதனின்று திரிக்கப்பட்ட சொல் (Derivative). வெள் என்பது ஓர் இயற் சொல். வெள்ளம், வெள்ளந்தி, வெள்ளி, வெள்ளில், வெள்ளை, வெளி, வெளில், வெளிறு,வெளு, வெள்கு (வெட்கு), வெட்டை, வெறு முதலியன அதனின்று திரிக்கப்பட்ட திரிசொற்கள் இவ்வாறு, சொற்கள் மென்மேலும் பன்மடியாகத் திரியுமாதலால், இன்னது இயற்சொல்லென்றும் இன்னது திரிசொல் லென்றும் வரையறுத்துக் கூற இயலாதெனவும், ஒரே சொல் தன் பகுதியை நோக்கத் திரிசொல்லும் தன் திரிபை நோக்க இயற்சொல்லுமாகு மெனவும் அறிந்துகொள்க. எடுத்துக்காட்டாக மணல் என்னும் சொல் மண் என்பதை நோக்கத் திரிசொல்லும், மணலி என்பதை நோக்க இயற்சொல் லும், ஆதல் காண்க. இவ் விளக்கம் தொல்காப்பியர் காலத்திலேயே மறைந்து போனதாகத் தெரிகின்றது. கொடுந்தமிழ்ச் சொல்லியல்பு பல்வகைப்பட்டதேனும், சொற்றிரிபு பொருட்டிரிபு, செய்யுட் சொல் வழக்கு, புதுச் சொல்லாக்கம் என நால் வகையுள் அடக்கப்பெறும். எ-கா. தமிழ் தெலுங்கு போயினான் போயினாடு - சொற்றிரிபு செப்பு (விடைசொல்) செப்பு (சொல்) - பொருட்டிரிபு மூங்கில் வெதுரு (வெதிர்) - செய்யுட் சொல் தூட (கன்று) - புதுச்சொல் இவற்றுள் பொருள் திரிசொல்லும் செய்யுட் சொல்லும் புதுச் சொல்லும் திசைச்சொல் எனப்படும். நால்வகை இலக்கியச்சொல் தொல்காப்பியர், தொல்காப்பியத்து ஆளப்பட்ட நிச்சல், சாதி, வைசியன், சூத்திரம் என்னும் சொற்கள் போல் அக்காலத் தமிழிலக்கியத்தில் வேண்டாது புகுத்தப்பட்ட ஒருசில வடசொற்களைக் கண்டு, அவையும் தமி ழுக்கு வேண்டுவனவாகப் பிழைபடக் கொண்டு, தமிழிலக்கியச் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்காக வகுத்து. ``இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.'' (880) ``அவற்றுள் இயற்சொற் றாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமை இசைக்குஞ் சொல்லே.'' (881) ``ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி.'' (882) ``செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி.'' (883) ``வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.'' (884) என நூற்பா இயற்றினார். இவற்றுள், இயற்சொல் என்பன செந்தமிழ் நாட்டு வழக்கொடு பொருந்தித் தத்தம் பொருளைத் தப்பாது உணர்த்தும் சொல் என்றார் இளம்பூரணரும் தெய்வச்சிலையாரும். செந்தமிழ் நாட்டில் மட்டுமன்றிக் கொடுந்தமிழ் நாட்டிலும் தப்பாது பொருளுணர்த்துவன என்றார், சேனாவரையரும் நச்சினார்க்கினியரும். இவ் ஈருரையும் ஏறத்தாழ ஒன்றே. ஆயின், செந்தமிழ்நிலத் தெல்லையைப் பற்றித் தெய்வச்சிலையார் ஒருவரே ஓரளவு தெளிந்த அறிவுடையவராகத் தோன்றுகின்றார். பிறரெல்லாம், ``செந்தமிழ் நிலமாவது, வையை யாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும்'' என உரைப்ப, இவர் மட்டும். ``இவ்வாறு உரைத்தற்கு, ஓர் இலக்கணங் காணாமையானும்; வையை யாற்றின் தெற்காகிய கொற்கையும், கருவூரின் மேற்காகிய கொடுங் கோளூரும், மருத யாற்றின் வடக்காகிய காஞ்சியும், தமிழ்திரி நிலமாதல் வேண்டுமாதலானும்; அஃது உரையன்று என்பர் உரைக்குமாறு: ``வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு, நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி'' என்றமையானும், இதனுள் தமிழ் கூறும் நல்லுலகம் என விசேடித்தமை யானும். கிழக்கும் மேற்கும் எல்லை கூறாது தெற்கெல்லை கூறியவதனாற் குமரியின் தெற்காகிய நாடுகளை யொழித்து வேங்கட மலையின் தெற்கும், குமரியின் வடக்கும், குணகடலின் மேற்கும், குட கடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலமென்றுரைப்ப'' என வரைந்திருத்தல் காண்க. பாண்டிநாட்டைத் தமிழ்நாடென்றும் பாண்டியனைத் தமிழ் நாடனென்றும் உரிச்சொற்றொகுதிகள் (நிகண்டுகள்) விதந்து கூறுவதாலும், தமிழ் வளர்த்த முக்கழகங்களும் வையைக்குத் தெற்கேயே இருந்தமை யாலும் ``................................ நல்லரவப் பாட்டுடைத்து சோமன் வழிவந்த பாண்டியநின் நாட்டுடைத்து நல்ல தமிழ்'' என்று ஔவையார் பாடியிருப்பதாலும், இன்றும் வையைக்குத் தெற்கிலுள்ள நெல்லை மாவட்டத்தில் நல்ல தமிழ் வழங்குவதாலும், செந்தமிழ் நிலத்தை வையைக்கு வடக்கெனக் கூறுவது உரையாசிரியர் அறியாமையையே உணர்த்து மென்க. திரிசொற்கு இலக்கணங் கூறப் புகுந்த தொல்காப்பியர், ஒருபொருள் குறித்த வேறு சொல், வேறுபொருள் குறித்த ஒரு சொல் எனத் திரிசொல்லை இரண்டாகப் பகுத்தனர். அதற்கு இலக்கணம் கூறிற்றிலர். ஒருபொருட் பல சொல், பலபொரு ளொருசொல், என்னும் இரட்டைப் பகுப்பு, பெயர் வினை யிடையுரி என்னும் நான்கிற்கும் இயற்சொல் முதலிய நான்கிற்கும் பொதுவாதலின், இது திரிசொல்லின் இலக்கணமாகாமை காண்க. இயற் சொல்லைத் ``தம்பொருள் வழாமை யிசைக்குஞ் சொல்'' என்று தொல் காப்பியர் கூறியதினாலும், உரையாசிரியரெல்லாம் அருஞ்சொற்களையே திரிசொல்லாக எடுத்துக் காட்டியமையாலும், நன்னூலார், எளிதுணர் பொருளன இயற்சொல் என்றும் அரிதுணர் பொருளன திரிசொல்லென்றும் கூறிப் போந்தார். இக் கருத்திற்கு இயல்பாய்ப் பொருளுணர்த்தும் சொல் இயற்சொல், அவ்வாறு பொருளுணர்த்தும் தன்மையினின்று திரிந்த சொல் திரிசொல் என்பன பொருளாம் ஆயின், ``கிள்ளை. மஞ்ஞை என்னும் தொடக்கத்தன ஒரு கூறு நிற்ப ஒரு கூறு திரிந்தன. உந்தி, அடுக்கல் என்னுந் தொடக்கத்தன முழுவதூஉம் வேறுபடத் திரிந்தன என்று இளம்பூரணரும், ``திரிசொல்லது திரிவாவது உறுப்புத் திரிதலும் முழுவதுந் திரிதலுமான இருவகைத்து, கிள்ளை. மஞ்ஞை என்பன உறுப்புத் திரிந்தன; விலங்கல், விண்டு என்பன முழுதுந் திரிந்தன.'' என்று சேனாவரையரும், ``அவ் வியற் சொல்லைத் திரிக்குங்கால் தம் எழுத்துச் சிறிது நிற்பத் திரிப்பனவும் அவ் வியற்சொற்றம்மையே பிறசொற் கொணர்ந்து முழுவதூஉந் திரிப்பனவும் என இரு வகையவாம்'' என்று நச்சினார்க் கினியரும், ``இவ்வாறு திரிந்து வருதலிற் றிரிசொல்லாயிற்று'' என்று தெய்வச் சிலையாரும், உரைத்திருப்பதினின்று இயற்சொல் என்பது முந்துநிலைச் சொல் (Primitive) என்றும், திரிசொல் என்பது அதனின்று திரிக்கப்பட்ட சொல் (Derivative) என்றும் , முதற்கண் பொருள்பட்டிருக்கலா மென்று உய்த்துணரற் கிடமுண்மை காண்க. திசைச்சொல் என்பது கொடுந்தமிழ்ச் சொல். கொடுந்தமிழ் நாடு செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த அல்லது சூழ்ந்த பன்னிரண்டெனத் தொல் காப்பியர் தொகை குறித்தனரேயன்றி அவற்றின் பெயர் கூறிற்றிலர். உரையாசிரியர் பெரும்பாலும் 10 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவராதலின், அவருட் பலர் தொல்காப்பியர் கருத்தையும் பண்டைத் தமிழக எல்லை யையும் உணராது, தங்காலத்திற் கேற்ப, ``செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலமாவன: 1. பொதுங்கர் (பொங்கர்) 7. சீதம் 2. தென்பாண்டி 8. பூழி 3. ஒளி 9. மலை (மலையமான்) 4. குட்டம் 10. அருவா 5. பன்றி 11. அருவா வடதலை 6. கற்கா 12. குடம் என இவை'' என்றுரைப்பர். இவற்றைச் செந்தமிழ் நாட்டுத் தென்கீழ்பால் முதலாக வடகீழிறுதியாக எண்ணிக்கொள்ளச் சொல்வர் சேனாவரையரும் நச்சினார்க் கினியரும். பிற்காலத்தார், பொதுங்கர், ஒளி என்னும் இரண்டை நீக்கி அவற்றுக்குப் பதிலாக வேண், சோழம் என்னும் இரண்டைச் சேர்ப்பர். தெய்வச்சிலையார் கொடுந்தமிழ் நாடுகளைப் பற்றி, `` பன்னிரு நிலமாவன................. (பொங்கர் ) நாடு, ......................... அருவாவடதலை'' என்ப, இவை செந்தமிழ் நாட்டகத்த. செந்தமிழ் நாடென்றமையால், பிற நாடாகல் வேண்டுமென்பார் உதாரணங் காட்டுமாறு: ``கன்னித் தென்கரைக் கடற் பழந்தீபம் கொல்லங் கூபகஞ் சிங்களமென்னும் எல்லையின் புறத்தவும், கன்னடம் வடுகம் கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றகம் என்பன குடபாலிருபுறச் சையத்துடனுறைபு கூருந் தமிழ் திரி நிலங்களும், முடியுடையவ ரிடுநிலவாட்சியின் அரசு மேம்பட்ட குறுநிலக் குடுமிகள் பதின்மரும் உடனிருப் பிருவருமாகிய பன்னிருவர் அரசரும் படைத்த பன்னிரு தேயத்தினும், தமிழ்ச் சொல்லாதற்கு விருப்புடையன'' என்றமையானும்; ``தமிழ்கூறு நல்லுலகத்து, வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின், எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி'' என நிறுத்துப் பின்னும் ``செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு'' என ஓதியவதனாற் சிவணிய நிலமாவது எல்லை குறித்த நிலத்தைச் சார்ந்த நிலமென வேண்டுதலானும்; பன்னிரு நிலமாவன;- குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடகமும் குன்றக மும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமும், என்று கொள்ளப்படும். ``இவற்றுள், கூபகமுங் கொல்லமுங் கடல் கொள்ளப்படுதலின், குமரியாற்றின் வடகரையைக் கொல்லமெனக் குடியேறினார் போலும். பஞ்ச திராவிடமெனவும் வடநாட்டார் உரைப்பவாகலான். அவையைந்தும் வேங்கடத்தின் தெற்காதலுங் கூடாமையுணர்க'' என உரைத்திருப்பது சாலச் சிறந்ததாகும். நச்சினார்க்கினியர் ``செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்'' என்பதற்கு, ``செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரண்டு நிலத்தும் பன்னிரண்டையும் புறஞ் சூழ்ந்த பன்னிரண்டு நிலத்தும்'' எனப் பொருள் கூறி, ``இனிப் பன்னிரண்டையுஞ் சூழ்ந்த பன்னிரண்டாவன: சிங்களமும் பழந்தீவும் கொல்லமும் கூபமும் கொங்கணமும் துளுவும் குடகமும் கருநடமும் கூடமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமுமாம்.'' என உரைத் திருப்பது. தெய்வச்சிலையாரைப் பின்பற்றிப் போலும்! இவ் வுரைகளாலும், திசைச்சொற்கு எடுத்துக்காட்டப் பெற்றவற்றுள், வடுகர் சொல்லுதலைச் செப்புதல் என்றும், கருநடர் அகப்படுதலைச் சிக்குதல் என்றும், துளுவர் மாமரத்தைக் கொக்கு என்றும், குடநாட்டார் தந்தையை அச்சன் என்றும் சொல்வர், என வரும் பகுதிகளானும்; திசைச் சொல் என்பது கொடுந்தமிழ்ச் சொல்லே யென்பதும், அது செந்தமிழ் நிலத்தைச் சூழப் பல திசையினும் வழங்கியதால் திசைச்சொல் எனப்பட்ட தென்பதும், செந்தமிழ் நிலம் வரவரக் குறுகியும் கொடுந்தமிழ் நிலங்கள் வரவரப் பல்கி விரிந்தும் போனதினால், பிற்கால உரையாசிரியர்கள் பண்டைச் செந்தமிழ் நிலத்திற்குள்ளேயே பன்னிரு கொடுந்தமிழ் நிலங்களையும் வகுக்க நேர்ந்ததென்பதும், கொடுந்தமிழ் நிலத்து மொழிகள் பிற்காலத்துத் திரிபு மிகுதியாலும் ஆரியச் சேர்க்கையாலும் கிளைமொழி நிலையுங் கடந்த உடன்பிறப்பு மொழிகளாகவும் வேற்று மொழிகளாகவும் கருதப்பட்டதினால், ``செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொல் என்ப'' என நன்னூலார் நூற்பா யாக்க நேர்ந்துவிட்ட தென்பதும், பிறவும் அறியப்படும். வடசொல் என்பது வடமொழிச் சொல். இயற்சொல் முதலிய நான்கனுள் இஃதொன்றே அயன்மொழிச் சொல். ஆகவே, இயற்சொல், திரிசொல் ஆகிய இரண்டும் செந்தமிழ் என்றும், திசைச்சொல் என்பது கொடுந்தமிழ் என்றும், வடசொல் ஒன்றே அயற்சொல் லென்றும், அக்காலத்துத் தமிழில் கலந்த அயன்மொழிச் சொல் வடசொல் ஒன்றே யென்றும், ஆங்கிலம் போர்த்துக்கீசியம் முதலிய பிறமொழிச் சொற்களை அவ்வம் மொழிப் பெயராலேயே அழைத்தல் வேண்டுமென் றும், அவற்றைத் திசைச்சொல்லுள் அடக்குவது வழுவென்றும், அறிந்து கொள்க. திரவிடம் என்னும் பெயரும் மொழிகளும் தமிழ் என்னும் சொல், தெலுங்கம் குடகம் துளுவம் என்பன போல் சிறுபான்மை `அம்' ஈறு பெற்றுத் தமிழம் எனவும் வழங்கும். கடல் கோளுக்குத் தப்பிய குமரிக்கண்டத் தமிழருள் ஒருசாரார் வடக்கே செல்லச் செல்ல, தட்பவெப்பநிலை வேறுபாட்டாலும் பலுக்கல் (உச்சரிப்பு). தவற்றாலும் மொழிக்காப்பின்மையாலும், அவர் மொழி மெல்ல மெல்லத் திரவிடமாகத் திரிந்ததும். திரவிடராக உடன் திரிந்தனர். தமிழ் சிறிது சிறிதாகப் பெயர்ந்து திரவிடமாய்த் திரிந்ததினாலேயே, வடநாடுகளை வேற்று மொழி நாடென்னாது ``மொழிபெயர் தேயம்'' என்றனர் முன்னோர். ``மொழிபெயர் தேஎத்த ராயினும்'' என்பது குறுந்தொகை (11) தமிழ் திரவிட மொழிகளாகத் திரிந்த முறைக்கிணங்கத் தமிழம் என்னும் பெயரும் திரமிளம் - த்ரமிடம் - த்ரவிடம் எனத் திரிந்தது. ஒ.நோ: தோணி - த்ரோணி (வ.), பவழம் - ப்ரவாளம் (வ.) பித்தளை - இத்தடி (தெ.), குமி - குவி ( த.). தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தமையாலும், திரவிடம் எனச் சொல்லப்படும் மொழிகளுக்குள் தமிழ் ஒன்றிலேயே பண்டைக் காலத்தில் இலக்கிய மிருந்தமையாலும், முத்தமிழ் வேந்தரான சேர சோழ பாண்டியர் தொன்றுதொட்டுத் தமிழகத்தைப் புகழ்பெற ஆண்டு வந்தமையாலும், முதலாவது, திராவிடம் என்னும் பெயர் தமிழையே சுட்டித் திரவிட மொழிக் குடும்பம் முழுவதையுங் குறித்தது. வேதகாலத்துப் பிராகிருத மொழிகளுள் ஒன்று த்ராவிடீ எனப்பட்டதையும், ஐந்நூறாண்டு கட்கு முன்பிருந்த பிள்ளை லோகார்யசீயர் தமிழிலக்கணத்தைத் `த்ராவிட சாத்ரம்' எனக் குறித்திருப்பதையும், காண்க. திரவிடம் எனப்படும் மொழிகட்குள் தமிழினின்று முதன்முதல் பிறராற் பிரிக்கப்பட்டது. தெலுங்காகும். கி.பி. 7ஆம் நூற்றாண்டிலிருந்த குமாரிலபட்டர் திரவிட மொழிக் குடும்பத்தை `ஆந்த்ர - த்ராவிட பாஷா' என்றார். வடுகு என்று தமிழராற் பொதுவாகக் குறிக்கப்பெறும் தெலுங்கு, கி.மு. பன்னூற்றாண்டுகட்கு முன்னரே தனிமொழியாகப் பிரிந்துவிட்டது. இதை, ``வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்'', என்னும் சிறுகாக்கை பாடினியார் கூற்றாலும், ``குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும்'' என்னும் மாமூலனார் கூற்றாலும், அறியலாம். ``கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்'' என்று சிலப்பதிகாரம் கருநாடகத்தை ஒரு கொடுந்தமிழ் நாடுபோற் குறித் திருப்பதால், இளங்கோவடிகள் காலத்திற் கன்னடம் ஒரு நடை மொழியாக (Dialect) மட்டுமிருந்தமை அறியப்படும். கடைக்கழகக் காலத்தில் வேங்கடம் தமிழக வடவெல்லையா யிருந்ததும் இதை வலியுறுத்தும், பின்பு, 12ஆம் நூற்றாண்டிற்கு முன் (9ஆம் நூற்றாண்டுபோல்) அது தனிமொழியாகி விட்டமை, ``வடகலை தென்கலை வடுகு கன்னடம் இடமுள பாடையா தொன்றி னாயினும்.'' என்னும் கம்பர் கூற்றால் அறியப்படும். இதனாற் கம்பர் காலத்தில் மலை யாளம் தனிமொழியாய்ப் பிரியவில்லை யென்பதும் உணர்த்தப்பெறும். 17ஆம் நூற்றாண்டிலிருந்த துஞ்சத்து எழுத்தச்சன், `ஆரிய எழுத்து' என்னும் வடவெழுத்துக் கலந்த நெடுங்கணக்கை மலையாளத்திற்கு வகுத்த பின்னரே, அது தனிமொழியாகப் பிரிந்தது. இவற்றிற்கிடையே வெவ்வேறு காலத்தில் துளு, குடகம் என்னும் திருந்திய மொழிகளும், தொதுவம், கோத்தம், கோண்டி முதலிய திருந்தா மொழிகளும் பிரிந்தன. கால்டுவெல் கண்காணியார் திரவிட மொழிகளைப் பதின்மூன்றாகக் கணக்கிட்டார். இற்றை மேலை மொழிநூல் வல்லார் அவற்றொடு பர்சி, கோலாமி, நாயக்கி, ஒல்லாரி முதலியவற்றைச் சேர்த்துப் பத்தொன்பதும் மேலுமாகக் காட்டுவர். மலையாளத்தின் நால்நிலைகள் மலையாளம் 10ஆம் நூற்றாண்டு வரை செந்தமிழாகவும், அதன் பின் 12ஆம் நூற்றாண்டு வரை கொடுந்தமிழாகவும், அதன் பின் 17 ஆம் நூற்றாண்டு வரை கிளைமொழியாகவும், இருந்து, பின்பு தனிமொழியாய்ப் பிரிந்துவிட்டது. மலையாளத்தின் இடைநிலைமை பழஞ் சேரநாட்டுத் தமிழே பல்வகையில் திரிந்தும் ஆரியத்தொடு கலந்தும் மலையாளம் என வழங்குவதாலும், இன்றும் அது ஆரியச் சொற்கள் நீங்கினவிடத்துப் பெரும்பாலும் தமிழாகத் திரும்புவதாலும், பழஞ் சோழ பாண்டி நாட்டுப் பகுதிகளாகிய இற்றைத் தமிழ்நாட்டில் வழங்காத பண்டைத் தமிழ்ச்சொற்களிற் பல மலையாள நாட்டில் முடங்கிக் கிடப்பதாலும், மலையாளியர் மனம் வைப்பின் இன்றும் கேரள (சேரல) நாடு தமிழ்நாடாக மாறும் வாய்ப்புண்மையாலும், மலையாள மொழி தமிழிற்கும் பிற திரவிட மொழிகட்கும் இடைப்பட்ட நிலைமை தாங்குவதாகும். தமிழின் தூய்மையும் திரவிடத்தின் ஆரியத் தன்மையும் தமிழ் ஒன்றே வடமொழித் துணையின்றித் தனித்தியங்க வல்ல தென்றும், திரவிட மொழிகளுக்குள் மிகத் திருந்தியதென்றும், முது தொன்மை வாய்ந்ததென்றும், வழக்கற்ற பழந் திரவிடச் சொற்களையும் சொல்வடிவுகளையும் தன்னகத்துக் கொண்டுள்ளதென்றும், கால்டுவெல் கூறியிருப்பினும், இனத்தொடர்பு பற்றித் தமிழையும் தெலுங்கு கன்னடம் முதலிய திரவிட மொழிகளையும் திரவிடம் என்னும் பொதுப்பெயராற் குறித்தற்குள்ள தேவையை அவர் உணர்ந்தாரேயன்றி, தமிழினின்று பிற திரவிட மொழிகளை ஒரு தனிச்சொல்லாற் பிரித்துக் காட்டற்குள்ள தேவையை உணர்ந்தாரல்லர். அதற்குரிய சூழ்நிலையும் அக்காலத்தி லில்லை. தமிழுக்கும் பிற திரவிட மொழிகட்கும் உள்ள வேறுபாடுகளாவன; தமிழ் பிற திரவிட மொழிகள் 1. மெல்லோசை கொண்டது மெல்லோசையும் வல்லோசையும் கொண்டன. 2. வடசொற் கலப்பால் தாழ்வது வடசொற் கலப்பால் உயர்வன. தமிழ் பிற திரவிட மொழிகள் 3. ஆரியச்சார்பற்ற பண்டை பெரும்பாலும் ஆரியச் சார்பான இலக்கணவிலக்கியமுள்ளது. பிற்கால இலக்கண விலக்கியமே யுள்ளன. 4. இந்திச் சொற்களை ஏற்காதது. இந்திச் சொற்களை ஏற்பன. 5. தூய்மை, இயக்கம் மேற்கொண்டது. தூய்மையியக்கம் மேற்கொள்ளாதன. இதனால், தமிழ் என்றும் தமிழாகவே நிற்க, திரவிடம் திரிந்து ஆரியமாகவும் செய்யும். வடஇந்தியாவிற் சில திரவிட மொழிகள் அரை யாரியமாகவும் முழு ஆரியமாகவும் திரிந்துள்ளன. லதா, பரியா என்னும் இரு திரவிட மொழிகள் அரை யாரியமும் (அரைத் திரவிடம்) அலபீ என்பது முழு ஆரியமும் ஆயினவென்று, 1906-ல் இந்திய மொழிக் கணக்கெடுத்த கிரையர்சன் கூறியுள்ளார். மராட்டியும்,குச்சரமும் (குசராத்தி) பழம் `பஞ்ச திராவிட' மொழிகளுள் இரண்டாகக் கொள்ளப்பட்டமையும், இன்று அவை ஆரியத்தோ டெண்ணப்படுவதையும், நோக்குக. வந்தே மாதரம், ஜெய் ஹிந்த், நமகாரம் (நமதே), வன மகோத்ஸவம், பாரத் சேவக் சங்க், ஆகாசவாணி முதலிய ஆரிய அல்லது இந்திச் சொற்களைப் பிற திரவிட மொழிகள் முழுமனமாய் வரவேற்க, தமிழ் அவற்றைத் தாய்நாடே போற்றி, இந்தியா (நாவலம்) வெல்க. வணக்கம், மரம் நட்டு விழா, இந்திய வூழியக் கழகம், வானொலி என மொழிபெயர்த்தே வழங்கும் திறத்ததாயிருப்பதனாலும், பால் திரைந்து தயிரான பின் மீண்டும் பாலாகாமை போல் தமிழ்த் திரிபான திரவிடம் மீண்டும் தமிழாகாமை யாலும், தமிழல்லாத பிற திரவிட மொழிகளையே திரவிடம் அல்லது திராவிடம் என்றும், தமிழையும் திரவிட மொழிகளையும் ஒருங்கே தமிழியம் (Tamulic) என்றும், இனிமேல் வழங்க வேண்டும். தமிழ், தமிழன், தமிழ்நாடு திரவிட மொழிகள் பெலுச்சித்தானமும் வங்காளமும் வரை பரவியும் சிதறியும் கிடப்பதாலும், தமிழும் திரவிடமும் ஒன்றுசேர முடியாவாறு வேறு பட்டு விட்டமையாலும், ஆந்திர கன்னட கேரள நாடுகள் தனி மாகாணங்க ளாகப் பிரிந்து போனமையாலும், திரவிடர் தமிழரொடு கூட விரும்பாமை யாலும், ஆரியச் சார்பைக் குறிக்கும் திராவிடம், திராவிடன், திராவிட நாடு என்னும் சொற்களை அறவே யொழித்து, தூய்மையுணர்த்தும் தமிழ், தமிழன், தமிழ்நாடு என்னும் சொற்களையே இனி வழங்கவும் முழங்கவும் வேண்டும். தமிழன், தமிழனல்லாதான் எந்நாட்டிலும், மக்கள் பற்றிய இரட்டைப் பகுப்பில், உள்நாட்டு மக்களை முதற் குறிப்பதே மரபும் முறைமையுமாதலால், இனித் தமிழ்நாட்டு மக்களையும் தமிழர், தமிழரல்லாதார் என்றே பிரித்தல் வேண்டும், ஆயினும், தமிழைப் போற்றுவாரெல்லாம் தமிழரென்றே கொள்ளப் பெறுதல் வேண்டும். தமிழன் உயர்ந்தவன் உலகில் முதன்முதல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடைந்து, அவற்றைப் பிற நாடுகளிற் பரப்பினவன் தமிழனே. ஆதலால், அவன் எட்டுணையும் ஏனையோர்க்குத் தாழ்ந்தவனல்லன். தமிழ் வல்லோசையற்ற மொழியென மூக்கறையன் முறையிற் பழிக்கும் திரவிடர் கூற்றையும், பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவினை பற்றித் தமிழனே இழித்துக் கூறும் ஆரிய ஏமாற்றையும், பொருட்படுத்தாது, `நான் தமிழன்' என ஏக்கழுத்தத்துடன் ஏறுபோற் பீடு நடை நடக்க. தாழ்வுணர்ச்சி நீங்குந் தகைமைக்கட் டங்கிற்றே வாழ்வுயர்ச்சி காணும் வழி. தமிழ் வாழ்க! - அண்ணல் சுப்பிரமணியனார் மணிமலர் 1959 8 செந்தமிழும் கொடுந்தமிழும் செந்தமிழ், கொடுந்தமிழ் என்னும் தொடர்களிலுள்ள செம்மை கொடுமை என்னும் அடைகள், முறையே நேர்மை,கோணல் என்னும் பொருள்களை உணர்த்தும். இலக்கண நேர்மையுள்ள தமிழ் செந்தமிழ்; அது கோணிய தமிழ் கொடுந்தமிழ். செம்மை, கொடுமை என்னும் பண்புகளை மட்டும் எடுத்துக் கொள்ளின், அவற்றுள் எது முந்தியது எது பிந்தியது எனச் சொல்ல வியலாது. ஏனெனின், இயற்கையில் நேரான பொருள்கள் செயற்கையில் கோணலாக்கப்படுவனவும், இயற்கையில் கோணலான பொருள்கள் செயற்கையில் நேராக்கப்படுவனவும் எத்துணையோ கண்கூடாகக் காண்கின்றோம். ஆயின், செந்தமிழ், கொடுந்தமிழ் என்னும் இரண்டனுள் எது இயல்பு எது திரிபெனின், செந்தமிழே இயல்பாம், கொடுந்தமிழே திரிபாம். இது மறுக்கொணாத வுண்மையாயினும், ஆராய்ச்சி யில்லாதார்க்கு மயங்கற் கிடனாம். செந்தமிழ், கொடுந்தமிழ் என்பவற்றின் இயல்களை அல்லது இலக்கணங்களை அறிவாராயின், எவரும் மயங்கார். செந்தமிழின் திரிபே கொடுந்தமிழ் என்னும் உண்மையை உணர்தற்கு, முதலாவது அவ் விரண்டும் வழங்கும் திசையை நோக்குதல் வேண்டும். தமிழ்நாட்டின் வடபாலுள்ள நாடுகளே பழந்தமிழ் இலக்கண விலக்கியங்களுள், மொழிபெயர் தேயம் என்றும் தமிழ்திரி நிலம் என்றும் சுட்டப்படுகின்றன. இன்றும், நாவலந் தேயத்தின் தென்கோடியிலேயே தமிழ் வழங்கவும், தமிழ்நாட்டின் வடக்கும் வடமேற்கும் கொடுந்தமிழ்த் திரிபான திரவிட மொழிகளே வழங்கவும், தமிழ்நாட்டின்கண்ணும் தெற்கு நோக்கியே தமிழ் திருந்திச் செல்லவும் காண்கின்றோம். கொடுந்தமிழின் பண்பாடே செந்தமிழாயின், செந்தமிழ் நிலம் முந்துநிலையில் கொடுந்தமிழ் நிலமாயிருந்திருத்தல் வேண்டும். இதற்கொரு சான்று மில்லாமையோடு, பண்டொருகால் செந்தமிழ் நிலமாயிருந்த பகுதிகள் இன்று கொடுந்தமிழ் நிலங்களாகத் திரிந்துள்ளமையுங் காண்கின் றோம். ககர வொலியின் நுணுக்கமாகிய ஆய்தமொழிந்த (உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாகிய) முப்பான் ஒலிகளே, தமிழுக்கு அல்லது செந்தமிழுக்கு உரியவாம். கொடுந் தமிழ் மொழிகளாகிய திரவிட மொழிகளுள், தமிழுக்கு ஏலாதனவும் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிப்பனவுமான செயற்கை வல்லொலிகளையும் காண்கின்றோம். இவை ஆரியக் கலப்புற்ற பிற்காலத்து விளைவல்ல; ஏனெனின், தூய திரவிடச் சொற்களிலும் இவ்வொலிகள் சொல்லுறுப்பாக அமைந்துள்ளன. தமிழ் தெலுங்கு எ-டு : Fo-Gudi (குடிகை) வேங்கடா வெங்க்கட்ட எந்து (என்னது) எந்த்து தமிழில் சொன்முதல் வராத எழுத்துகள், கொடுந்தமிழில் இலக்கணப் போலித் திரிபு காரணமாகச் சொன் முதல் வருகின்றன. தமிழ் தெலுங்கு எ-டு : இலது லேது பொழுது ப்ரொத்து உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிக்கும் ஆரிய அல்லது திரவிட வொலிகளெல்லாம், தமிழிலுள்ள (க ச ட த ப ற) என்னும் வல்லினத்தின் திரிபுகளே. அதனாலேயே, ஐவருக்க முதலில் தமிழெழுத்துகளே அல்லது தமிழொலி யெழுத்துகளே வரையப்படுகின்றன. ஒரே தமிழ் வல்லிய வெழுத்து, திரவிடத்தில் வெவ்வேறிடத்தில் வெவ்வேறொலியாய்த் திரிவதுண்டு. தமிழ் தெலுங்கு எ-டு : செய் ச்சேயு ஜேசு (`தொலினே ஜேஸின') சால த்ச்சாலா ஆரியத்திலும் இங்ஙனமே. தமிழ் ஆரியம் எ-டு : பொறு A.S. berau, L. Fero, gero, Gk. Phero, Skt. bhri. விதிர் Skt. vithura, Vidhura. இனி, ஆரிய மொழிகளில் அயற்சொற்களன்றித் தன் சொற்கள்கூட ஒரேயெழுத்தொலியை எடுத்தும் எடுக்காதும் ஆள்வதுமுண்டு. எ-டு : உரப்பாவொலி எடுப்பொலி purse bursar, disburse. இவ்வெடுத்துக் காட்டுகளால், வவ்லின வெழுத்தொலிகட்கெல்லாம் தமிழ் வல்லொலிகளே மூலம் என்பது பெறப்படும். ``ஐவருக்கத் திடையின் மூன்றும் அவ்வம் முதலும்'' என்று பவணந்தியார் கூறியதும் இங்கு நோக்கத்தக்கது. எடுக்கா வொலியினின்று எடுப்பொலி தோன்றுமேயன்றி, எடுப்பொலியினின்று எடுக்கா வொலி தோன்றாது. குழந்தை வாயில் எடுக்கா வொலியே முந்தித் தோன்றும். முந்தியல் மாந்தன் குழந்தை போன்றவன். முன்னைத் தமிழன் முந்தியல் மாந்தன்பாற்பட்டவன். ஆகையால், எடுக்கா வொலியே இயற்கையாம். தென்கோடியில் வாழும் அநாகரிக மக்கள் மொழியில் எடுப்பொலிகள் இல்லை. முன்னாரியமாகிய மேலை மொழிகளில் அவை தோன்றிப் பின்னாரியமாகிய சமற்கிருதத்தில் முற்றுகின்றன. தமிழ்ச் சொற்கள் திரிந்தே கொடுந்தமிழ் தோன்றும். அத்திரிவு : (1) சொற்றிரிபு, (2) பொருட்டிரிபு என இரு வகைப்படும். அவற்றுள், சொற்றிரிபு பல்வேறு வகைய. அவற்றுள் சிலவே ஈண்டுக் காட்டப்படும். தமிழ் தெலுங்கு திரிபுவகை ஊர் ஊரு மிகை கண் கன்னு திரிதலும் மிகையும் நீர் மீரு போலியும் மிகையும் அவன் வாடு இலக்கணப் போலியும் திரிதலும் மாற்றம் மாட்ட திரிதலும் கெடுதலும் எழுபது டெப்பதி இலக்கணப் போலியும் போலியும் திரிதலும் சுருட்டு சுட்டு தொகுத்தல் வெண்ணெய் வென்ன சிதைவு பொருட்டிரிபு, (1) ஆட்சி வேறுபடல், (2) சிறப்பு நீங்கள் என இருவகைத்து. `அதே' என்னும் சொல்லை `ஆம்' என்னும் பொருளிலும், `மதி' என்னும் சொல்லைப் `போதும்' என்னும் பொருளிலும், மலையாளத்தில் வழங்கல் ஆட்சி வேறுபடல். விடைசொல்லுதலைக் குறிக்கும் செப்பு என்னும் சொல்லைச் சொல்லுதல் என்னும் பொருளிலும், விரல் மடக்கிய கையால் அல்லது குச்சால் அடித்தலைக் குறிக்கும் கொட்டு என்னும் சொல்லை அடித்தல் என்னும் பொருளிலும், தெலுங்கில் வழங்கல் சிறப்பு நீங்கலாம். தமிழ்நாட்டில் வழங்காது பிற திரவிட நாடுகளில் மட்டும் வழங்கும் சிறப்புச் சொற்கள் திசைச்சொற்களாகும். தமிழ்நாட்டிற்குள்ளேயே ஒரு பொருட்கு ஓரிடத்தில் ஒரு சொல்லும் மற்றோரிடத்தில் மற்றொரு சொல்லும் வழங்கும்போது, செந்தமிழ் நாட்டில் வழங்காத புதுச் சொற்கள் கொடுந்தமிழ் நாட்டில் வழங்குவது வியப்பன்று. பையானி(மலையாளம்), அல்லுண்டு (தெலுங்கு), கொக்கு(துளு) என்பன இத்தகைய. (பையானி = ஒருவகை நச்சுப் பாம்பு, அல்லுண்டு = மருமகன், கொக்கு = மாமரம்.) தமிழிலுள்ள ஒருபொருட் பல சொற்களில் சில, தமிழ்நாட்டில் வழக்கற்றுப் போயினும், கொடுந்தமிழ் நாடுகளில் வழக்கறாதுள்ளன. அஃதாவது, தமிழ்நாட்டு இலக்கிய வழக்குச் சொற்கள் சில கொடுந்தமிழ் நாட்டு உலகவழக்கில் உள்ளன. எ-டு: தமிழ் தெலுங்கு வெதிர் வெதுரு சால த்சாலா பணி பனி நெய்த்தோர் நெத்துரு இங்ஙனம் ஒலித்திரிபு, சொற்றிரிபு, பொருட்டிரிபு, திசைச்சொல், இலக்கியச் சொல்வழக்கு ஆகிய ஐவகை இயல்பே செந்தமிழைக் கொடுந்தமிழாக்குகின்றன. இவற்றொடு வடமொழிக் கலப்பும் சேரின், கொடுந்தமிழ் திரவிடமாகத் திரிகின்றது. சேரநாட்டுச் செந்தமிழ் கொடுந் தமிழாகிப் பின்பு மலையாளமாய்த் திரிந்துள்ளமை காண்க. இதுகாறும் கூறியது மொழித்திறமே. இலக்கண விலக்கியத்திறம் நோக்கின், தமிழுக்குள்ள தனிப்பட்ட தொன்முது இலக்கண விலக்கியம் கொடுந்தமிழுக்கில்லை. அவற்றுக்குள்ளன வெல்லாம் பிற்காலத்தனவும் ஆரியத்திற் குரியனவுமே. இதனால், மொழிநிலையால் மட்டுமன்றி இலக்கிய நிலையாலும் முற்பட்ட செந்தமிழ், அதற்குப் பிற்பட்டதும் அதன் திரிபானதுமான கொடுந்தமிழினின்று தோன்றியிருத்தல் முடியாதென்பது தேற்றம். செந்தமிழின் திரிபே கொடுந்தமிழ்; திரிபின்றேல் கொடுந்தமிழில்லை. ஆகவே தமிழ்த் திரிபே திரவிடம்; திரிபின்றித் திரவிடமில்லை. தெலுங்கு, கன்னடம் முதலிய திரவிட மொழிகளெல்லாம் திருந்திய வடிவில் பேசவும் எழுதவும் படின், தமிழேயன்றி அவ்வத் திரவிட மொழிகளாகாமை காண்க. சிலர், உண்டை(உருண்டை), கொடு(கொண்டு) எனத் தமிழில் இருவகை வழக்கிலும் அருகி வழங்கும் ஐந்தாறு சொற்களைக் கொண்டு, தமிழும் திரவிடம்போல் திரிபுடையதே என நாட்ட விரும்புகின்றனர். எவ்விதிக்கும் விலக்குண்டாதலின், விலக்கைக்கொண்டு விதியை மறுக்க முடியாது. ஒரு பொருளின் பெரும்பான்மை யியல்பையே அதன் உண்மை யியல்பாகக் கொள்ளல்வேண்டும். தமிழ் பெரும்பாலும் இயல்புடையதென் றும், திரவிடம் பெரும்பாலும் திரிபுடையதென்றும் அறிதல்வேண்டும். இதனாலேயே செந்தமிழையும் கொடுந்தமிழையும் முறையே தமிழும் திரவிடமும் என இடைக்காலத்து இலக்கணிகள் சிலர் வழங்கிவந்தனர். இதனைப் பின்பற்றித் தமிழுக்கினமான மொழிகளையெல்லாம் திரவிட மெனப் பிரித்துக் கூறுவதே சாலப் பொருத்த முடைத்தாம். திரவிடம் என்னும் தொகுதி தமிழை உளப்படுத்தாமையின், அவ் விரண்டையும் ஒருங்கே குறிக்கத் தமிழம் என்னும் சொல்லையே ஆளவேண்டும். நூன், நூம், நுங்கள்; யான், யாம், யாங்கள்; நான், நாம், நாங்கள்; நீன், நீம், நீங்கள்; தான், தாம், தாங்கள்; அவன், அவள், அவர், அது, அவை; என மொழிக் கடிப்படையான மூவிடப் பெயர்களும், தமிழில் இயல்பாகவும் ஒழுங்காகவும் இருக்கவும்; தெலுங்கில், நேனு, மேமு; மனமு, நீவு, மீரு; தானு, தாமு; வாடு, அதி(ஆமெ), வாரு, அதி, அவி எனத் திரிந்தும், ஒழுங்கற்றும் இனமிழந்தும் இருத்தல் காண்க. மொழிக்கடிப்படையானவும் பெரும்பாலும் திரியாதனவும் ஓரசைப்பட்டனவும் உலக மொழிகட்கெல்லாம் தொடர்பு காட்டுவனவும் அடிக்கடி சொல்லப்படுவனவும் நிலைத்து வழங்குவனவு மான மூவிடப் பெயர்களே இத்துணைத் திரிபடைந்திருப்பின், வேறு சொற்களைப்பற்றிச் சொல்லவேண்டுவதில்லை. இம் மூவிடப் பெயர்களை ஒரு சோற்றுப் பதமாகவே கொள்க. இங்ஙனம் இயல்பையும் திரிபையும் முறையே தம் சிறப்பியல்பாகக் கொண்ட தமிழையும் திரவிடத்தையும் எங்ஙனம் ஒன்றாக இணைக்கவொண்ணும்? தமிழ் இயல்பாகவே செம்மையுடைமையின், தமிழ் எனினும் செந்தமிழ் எனினும் ஒன்றே. தமிழின் திரிபாகிய கொடுந்தமிழினின்றும் பிரித்துக் கூறவே செந்தமிழ் எனப்பட்டது, இயல்பான பால் தண்ணீர்ப் பாலினின்றும் பிரித்துக் கூறத் தனிப்பால் எனப்பட்டாற்போல. தமிழ் ஒன்றே மிகுந்த இலக்கண வரம்புடையது. கண்ணு தற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ? என்று பரஞ்சோதி முனிவர் தருக்கிக் கூறியதைத் தமிழரனைவரும், சிறப்பாகத் தமிழ்ச்சைவர், கவனித்துக் காண்பாராக! எல்லா மொழிகட்கும் பொதுவான எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகிய நான்குமே, தமிழில் மிகுந்த வரம்பும் விரிவும் கொண்டுள்ளன. இனி, பிறமொழிகட் கில்லாத பொருளிலக்கணத்தைப் பற்றியோ சொல்லவே வேண்டுவதில்லை. பிறமொழிகளை மக்கள் எங்ஙனமெல்லாம் பேசியும் எழுதியும் வருகின்றனரோ, அங்ஙனமெல்லாம் அவற்றின் இயல்பும் இலக் கணமும் அமைகின்றன. ஆனால், தமிழ் எங்ஙனம் பேசப்படினும், மேடை யேறிப் பேசும்போதும் ஏடெடுத் தெழுதும் போதும் இலக்கண வரம்புட னேயே பேசவும் எழுதவும்பட வேண்டும். இதுவே தென்றமிழுக்கு இலக் கணிகள் இட்ட என்றுமுள வரம்பு. இவ் வரம்புடையதே தமிழ் அல்லது செந்தமிழ். தமிழ் இயல்பு தனிப்பட்டது. இதனாலேயே, தன்னே ரிலாத தமிழ் எனப்பெற்றது. ஆகையால் பிராகிருதத்தினின்று சமற்கிருதம் ஆக்கப் பெற்றாற்போல், கொடுந்தமிழாகிய திரவிடத்தினின்று செந்தமிழாகிய தமிழ் ஆக்கப்பெற்றது என்பது ஒருசிறிதும் பொருந்தாது. தமிழ் மிகத் திருந்தியதும் பண்பட்டதுமான மொழியாகும். இலக்கண வரம்பிலா மொழி என்று பரஞ்சோதி முனிவர் இழித்துக் கூறியவற்றுள் வடமொழியாகிய சமற்கிருதமும் ஒன்று என்பதை மறந்து விடல் கூடாது. தில்லைச்சிற் றம்பலத் தும்என் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தஒண் டீந்தமிழ் என்று மாணிக்கவாசகரே வியந்தும் நயந்தும் கூறுவராயின், தமிழ் எத்துணை விழுமிய மொழியாகும். எண்ணுக்கு மெட்டாத் தொன்மைதொட்டுத் தமிழ் வழங்கிவரினும், இன்றும் அதன் பெரும்பாற் சொற்கள் வேர்ப்பொருள் தோன்றும் இயல்பு நிலையிலுள்ளன; கொடுந்தமிழ்ச் சொற்களோ பெரும்பாலும் வேறுபட்டும் வேரற்றும் உள்ளன. ஆக, ஆகாது, ஆயிற்றேல், ஆம்(ஆகும்) என்ற சொற்கள், தெலுங்கில் முறையே கா, காது, அயித்தே, ஔனு எனத் திரிந்துள்ளன. ராய் (அறை), லெய்(எழு), லோ(உள்), லு(கள்), ரோலு(உரல்), ரா (வார்) முதலிய தெலுங்குச் சொற்களில் எங்ஙனம் வேர்காண முடியும்? ஆக, உள் என்ற சொற்கள் திரிந்து, கா, லோ என்ற சொற்கள் தோன்றுமா? அல்லது, கா, லோ என்ற சொற்கள் திரிந்து ஆக, உள் என்ற சொற்கள் தோன்றுமா? இயல்பிலிருந்து திரிபு தோன்றியதா? திரிபிலிருந்து இயல்பு தோன்றியதா? இவற்றை யெல்லாம் ஆய்ந்து பாராது கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங் களிலும் தலைமைத் தமிழ்ப் புலமை நடாத்தும் பெரும் புலவருங்கூடப் பிராகிருதத்திலிருந்து சமற்கிருதம் தோன்றியவாறே, கொடுந்தமிழிலிருந்து செந்தமிழ் தோன்றியிருத்தல் வேண்டுமென்ற குருட்டுக் கொள்கை யுடையராயிருக்கின்றனர். இனிமேலாயினும், அவர் ஆய்ந்து உண்மை காண்பாராக! திரவிட மொழிகள் பலவாயினும், அவற்றுள், முந்தித் திரிந்ததும் தலைமையானதும் தருக்குற்றதும் தமிழைப் பழிப்பதுமான தெலுங்கே இங்குப் பெரும்பாலும் எடுத்துக்காட்டப்பட்ட தென்க. - ``செந்தமிழ்ச் செல்வி'' செப்பிடெம்பர் 1948 9 திசைச்சொல் எவை? தொல்காப்பியர் தம் காலத் தமிழ்ச் செய்யுட் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்லென நால் வகைப்படுத்தினார். அவற்றுள், இயற்சொல்லும், திரி சொல்லும் செந்தமிழ் நாட்டுச் சொல்லும், திசைச் சொல் கொடுந்தமிழ் நாட்டுச் சொல்லும் ஆகும். வட சொல் என்றது ஆரியச் சொல்லையும் வட நாட்டுச் சொல்லையும் ஆகும். வடநாட்டுச் சொல்லாவது, பிராகிருதம் என்னும் வட திரவிடச் சொல். அஃது ஆரியத்திற்கு முந்தியது. அக்காலத்துத் தமிழில் வழங்கிய அல்லது புகுத்தப்பட்ட அயன் மொழிச் சொல் ஆரியச் சொல் ஒன்றே. அதனால் அதைத் திசைபற்றி வட சொல் என்று பிரித்துக் கூறினர். அவ்வாறே இக்காலத்து அயன்மொழிச் சொற்களையும் , ஆங்கிலச் சொல், இலத்தீனச் சொல், கிரேக்கச் சொல், சீனச்சொல் என அவ்வம் மொழிப் பெயராலேயே குறித்தல் வேண்டுமே யன்றித் திசைச் சொல்லுள் அடக்குதல் கூடாது. மேற்குறித்த நால்வகைச் சொல்லும் பற்றிய தொல்காப்பிய நூற்பாக்கள் வருமாறு: ``இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.'' (தொல். எச்ச. 1) ``அவற்றுள், இயற்சொற் றாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமை இசைக்குஞ் சொல்லே.'' (தொல். எச்ச. 2) ``ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறு பொருள் குறித்த ஒருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி.'' (தொல். எச்ச. 3) ``செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி'' (தொல். எச்ச. 4) ``வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.'' (தொல். எச்ச. 5) ``செந்தமிழ் சேர்ந்த ...... திசைச் சொற் கிளவி'' என்றதனால், கொடுந்தமிழ் நாட்டுச் சொல்லே திசைச்சொல் என்பது பெறப்படும். `சேர்ந்த' என்பது `அடுத்த' என்று பொருள்படுமே யன்றி, `சூழ்ந்த' என்று பொருள்படாது. தமிழின் பிறந்தகம் குமரிநாடேயாதலால், செந்தமிழ் நாடு தெற்கும் கொடுந்தமிழ் நாடு அதன் வடக்கும் உள்ளன என்றறிதல் வேண்டும். பாண்டியனுக்கே தமிழ்நாடன் என்று சிறப்பாகப் பெயருண்மையும், ``திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவன்'' என்னும் வழக்கும், கவனிக்கத் தக்கன. கொடுந்தமிழ் நாட்டுச் சொல் வேறு. கொடுந்தமிழ்ச் சொல் வேறு. கொடுந்தமிழ் நாட்டில் தோன்றிச் செந்தமிழ்ச் செய்யுளில் இடம் பெறத் தக்க திருந்திய சொல்லே திசைச்சொல்லாம். அது சமாளி (சமாளிசு) என்னுங் கன்னடச் சொல் போல்வது. jšÈ (bj.), தம்முடு (தெ.) என்பன போன்ற கொச்சைச் சொற்கள் செந்தமிழ்ச் செய்யுளில் இடம்பெறா. ``ஏமிரா வோரி யென்பாள் எந்துண்டி வதி யென்பாள்'' என்னும் கொண்டுகூற்றும், ``ஏமிரா வோரி யென்பாள் எந்துண்டி வத்தி யென்பாள்'' என்றே யிருத்தல் வேண்டும். அல்லாக்கால், அயலெழுத்துப் புணர்ந்து அயன்மொழியாகிவிடும் என அறிக. தொல்லிலக்கண நூலார் திசைச்சொல் வழக்கிற்கும் இடந்தந்தா ரென்று, அயன்மொழிச் சொற்களையெல்லாம் திசைச்சொல்லென்று கொள்வது திரிபுணர்ச்சியாகும். ``செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துந் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி'' (தொல். எச்ச. 4) இதன் இளம்பூரணர் உரை: செந்தமிழ் நாட்டை அடையும் புடையும் கிடந்த பன்னிரு நிலத்தார் தங் குறிப்பினையே இலக்கணமாக வுடைய திசைச்சொற் கிளவிகள் என்றவாறு, வரலாறு: தாயைத் தள்ளை என்ப குடநாட்டார். நாயை ஞமலி என்ப பூழிநாட்டார். பிறவும் அன்ன. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலமாவன: பொதுங்கர் நாடு, தென்பாண்டி நாடு, ஒளிநாடு, குட்ட நாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழி நாடு, மலை நாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு, குடநாடு. சேனாவரையர் உரை: செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு நிலத்துந் தாங்குறித்த பொருள் விளக்குந் திசைச்சொல் என்றவாறு என்றது, அவ்வந் நிலத்துத் தாங்குறித்த பொருள் விளக்குவதல்லது அவ் வியற்சொல் போல எந்நிலத்துந் தம் பொருள் விளக்கா வென்றவாறாம். பன்னிரு நிலமாவன: பொங்கர் நாடு, ஒளிநாடு, தென்பாண்டி நாடு, குட்ட நாடு, குட நாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழி நாடு, மலை நாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு எனச் செந்தமிழ் நாட்டுத் தென் கீழ்ப்பான் முதலாக வடகீழ்ப்பா லிறுதியாக எண்ணிக் கொள்க. தென்பாண்டி நாட்டார் ஆ, எருமை என்பவற்றைப் பெற்றமென்றும், தம்மாமி யென்பதனைத் தந்துவை யென்றும் வழங்குப. பிறவுமன்ன. நச்சினார்க்கினியர் உரை: திசைச்சொல்லாகிய சொல், செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரண்டு நிலத்தும், பன்னிரண்டையும் புறஞ்சூழ்ந்த பன்னிரண்டு நிலத்துந் தாந்தாங் குறித்த பொருளையே விளக்குந் தன்மையை உடையன எ-று. உம்மையை எச்சவும்மையாக்கிப் பொருளுரைக்க. எனவே, இயற் சொல் போல எந்நிலத்துந் தம் பொருள் விளக்காவாயின. பன்னிரு நிலமாவன: பொங்கர் நாடு, ஒளி நாடு, தென்பாண்டி நாடு, குட்ட நாடு, குட நாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழி நாடு , மலையமா நாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு எனத் தென்கீழ்ப்பால் முதலாக வடகீழ்ப்பா லீறாக எண்ணுக. இனிப் பன்னிரண்டையுஞ் சூழ்ந்த பன்னிரண்டாவன: சிங்களமும் பழந்தீவுங் கொல்லமுங் கூபமுங் கொங்கணமுந் துளுவுங் கடகமுங் கருநடமுங் குடமும் வடுகுந் தெலுங்குங் கலிங்கமுமாம். தென்பாண்டி நாட்டார் ஆ, எருமை என்பவற்றைப் பெற்ற மென்றும்: குட்ட நாட்டார் தாயைத் தள்ளை என்றும் நாயை ஞெள்ளை யென்றும்; குட நாட்டார் தந்தையை அச்சனென்றும்; கற்கா நாட்டார் வஞ்சரைக் கையரென்றும், சீத நாட்டார் ஏடாவென்பதனை எலுவனென்றும், தோழியை இகுளையென்றும், தம்மாமி யென்பதனைத் தந்துவை யென்றும், பூழி நாட்டார் நாயை ஞமலியென்றும், சிறுகுளத்தைப் பாழியென்றும்; அருவா நாட்டார் செய்யைச் செறுவென்றும், சிறுகுளத்தைக் கேணியென்றும்; அருவா வடதலையார் குறுணியைக் குட்டையென்றும் வழங்குப. இனிச் சிங்களம் அந்தோவென்பது, கருநடம் கரைய, சிக்க, குளிர என்பன; வடுகு செப்பென்பது; தெலுங்கு எருத்தைப் பாண்டி லென்பது; துளு மாமரத்தைக் கொக்கென்பது. ஒழிந்தவற்றிற்கும் வந்துழிக் காண்க. தெய்வச்சிலையார் உரை: செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரு நிலத்துமுள்ளார் தத்தங் குறிப்பினையுடைய, திசைச்சொல்லாகிய சொல் - எ-று. பன்னிரு நிலமாவன: வையை யாற்றின்... நாடு, ஒளி நாடு, தென்பாண்டி நாடு, கருங்குட்ட நாடு, குட நாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழி நாடு, மலாடு, அருவா நாடு, அருவா, வடதலை நாடு என்ப. இவை செந்தமிழ்நாட்டகத்த, செந்தமிழ் நாடென்றமையால், பிற நாடாகல் வேண்டுமென்பார் உதாரணங் காட்டுமாறு: ``கன்னித் தென்கரைக் கடற் பழந்தீபம், கொல்லங் கூபகஞ் சிங்களமென்னும் எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம், கலிங்கம், தெலிங்கம், கொங்கணம், துளுவம், குடகம், குன்றகம் என்பன குடபா லிருபுறச் சையத் துடனுறைபு கூருந் தமிழ்திரி நிலங்களும், முடியுடையவ ரிடுநிலவாட்சியின் அரசு மேம்பட்ட குறுநிலக் குடுமிகள் பதின்மரு முடனிருப் பிருவருமாகிய பன்னிருவர் அரசரும் படைத்த பன்னிரு தேயத்தினும் தமிழ்ச் சொல்லாதற்கு விருப்புடையன'' என நிறுத்துப் பின்னும் ``செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல் கண்டு'' என ஓதியவதனாற் சிவணிய நிலமாவது எல்லை குறித்த நிலத்தைச் சார்ந்த நிலமென வேண்டுதலானும், பன்னிரு நிலமாவன: குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமுந் துளுவமுங் கடகமுங் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும். இவற்றுள், கூபகமுங் கொல்லமுங் கடல் கொள்ளப்படுதலின் குமரியாற்றின் வடகரையைக் கொல்லமெனக் குடியேறினார் போலும். பஞ்சதிராவிடமெனவும் வடநாட்டார் உரைப்பவாகலான், அவை யைந்தும் வேங்கடத்தின் தெற்காதலுங் கூடாமை யுணர்க. அந்நிலத்து வழங்குஞ் சொல்லாகிச் செஞ்சொல்லின் வேறுபட்டுச் சான்றோர் செய்யுளகத்து வருவன நீக்கப்படா எ-று. குடாவடி யுளியம் என்றவழிக் குடா என்பது குடகத்தார் பிள்ளை கட்கு இட்டபெயர். அந்தோ என்பது சிங்களவர் ஐயோ என்பதற்கிட்ட பெயர். யான் தற்கரைய வருது என்றவழிக் கரைதல் என்பது கருநாடர் விளிப்பொருளுணரக் கூறுவது. செப்பு என்பது வடுகர் சொல்லுதற்குப் பெயராக வழங்குவது. பாண்டில் என்பது தெலிங்கர் பசுவிற்கும் எருத்திற்கும் பெயராக வழங்குவது. கொக்கு என்பது துளுவர் மாவுக்குப் பெயராக வழங்குவது. பிறவும் இவ்வாறு வருவன பலவற்றையும் வந்தவழிக் கண்டுகொள்க. செஞ்சொல் = இயற்சொல் ``செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப.'' (நன். பெய. 16) சடகோப இராமாநுச கிருட்டிணமாச்சாரியார் உரை: செந்தமிழ் நாடாகிய பாண்டி நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளி லும், பதினெட்டுத் தேசங்களுள் தமிழ்நாடு ஒழிந்த பதினேழு நாடுகளிலும், வசிப்பவர்கள் தமது பேசும் பாழைகளிலுள்ள பதங்கள், அப் பொருளோடு செந்தமிழில் வந்து வழங்குவன திசைச் சொற்களாம் என்று சொல்வர் (புலவர்) எ-று. திசைச்சொல் - திசைகளில் வழங்குகின்ற தேச பாழைகளிலிருந்து செந்தமிழில் வந்து வழங்கும் சொற்கள். கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டாவன: தென்பாண்டி நாடு, குட்ட நாடு, குட நாடு, கற்கா நாடு, வேணாடு, பூழிநாடு, பன்றி நாடு, அருவாநாடு, அருவா வடதலை நாடு, சீதநாடு, மலையமானாடு, சோழ நாடு என்பன. தென்பாண்டி நாடு - செந்தமிழ்ப் பாண்டி நாட்டுக்குத் தென்திசையிலுள்ளது. எ-டு : 1. பசுவைப் பெற்றம் என்பதும் தென்பாண்டி நாட்டுச்சொல் சோற்றைச் சொன்றி என்பதும் } 2. தாயைத் தள்ளை என்பது - குட்டநாட்டுச் சொல் 3. தந்தையை அச்சன் என்பது - குடநாட்டுச் சொல் 4. வஞ்சகரைக் கையர் என்பது - கற்கா நாட்டுச் சொல் 5. தோட்டத்தைக் கிழார் என்பது - வேணாட்டுச் சொல் 6. சிறுகுளத்தைப் பாழி என்பது - பூழி நாட்டுச் சொல் 7. வயலைச் செய் என்பது - பன்றி நாட்டுச் சொல் 8. சிறுகுளத்தைக் கேணி என்பது - அருவா நாட்டுச் சொல் 9. புளியை எகின் என்பது - அருவாவடதலை நாட்டுச் சொல் 10. தோழனை எலுவன் என்பதும் தோழியை இகுளை என்பதும் - சீத நாட்டுச் சொல் 11. நல்ல நீரை வெள்ளம் என்பது - மலையமானாட்டுச் சொல் 12. தாயை ஆய் என்பது - புனனாட்டுச் சொல் தமிழ்நாடு ஒழிந்த நாடு பதினேழாவன: சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கௌடம் குசலம். மாமரத்தைக் கொக்கு என்பது - துளுவநாட்டுச் சொல் அகப்படுதலைச் சிக்குதல் என்பது - கன்னட நாட்டுச் சொல் கருத்தாக இருத்தலை எச்சரிக்கை என்பதும் சொல்லுதலைச் செப்புதல் என்பதும் - தெலுங்க நாட்டுச் சொல் மற்றவையும் இப்படியே ஆங்காங்கு வருதல் கண்டுகொள்க. ஐயோ என்பதை அந்தோ என்பது சிங்கள நாட்டுச் சொல் என்று முன்னைய உரையாசிரியர்கள் எழுதியிருந்தாலும், அது `ஹந்த' என்னும் வடசொல்லின் சிதைவு என்று தெரிதலால், இங்குக் கொள்ளப்படவில்லை. பழஞ் செய்யுள்கள் ``தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி பன்றி அருவா அதன்வடக்கு - நன்றாய சீதம் மலாடு புனனாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெண்'' ``சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந் துளுக்குடகம் கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலுங்கங் கலிங்கவங்கம் கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலந் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே.'' பண்டைக் கொடுந்தமிழ் மொழிகளே வரையிறந்து வடசொற் கலந்து, இன்று திரவிட மொழிகள் என்று வழங்குகின்றன. தமிழ், ஆரியச் சொல் ஒன்றும் வேண்டாத தூய மொழியாதலாலும், தெலுங்கு, கன்னட, மலை யாளம் முதலிய ஏனைய இனமொழிகள் ஆரியத்தை யகற்றும் ஆற்றலற்றுப் போனமையாலும், தமிழையும் திரவிட மொழிகளையும் பிரித்தறிதல் வேண்டும். தலைக்காலக் கொடுந்தமிழ் மொழிகள் பிராகிருத மொழிகளாகவும், இடைக்காலக் கொடுந்தமிழ் மொழிகள் திரவிட மொழிகளாகவும் பிரிந்து போனதினாலும்; கடல் தாண்டிய வெளிநாட்டு இடப்பெயர்கள் பல வணிகத் தொடர்பால் வந்து வழங்கியதனாலும், நச்சினார்க்கினியரும், தெய்வச் சிலையாரும், பன்னிரண்டையுஞ் சூழ்ந்த பன்னிரு நிலங்களையும் கொடுந்தமிழ் நிலங்களாகக் கொண்டனர். பவணந்தி முனிவரோ, பதினெண் மொழி நாடுகளுள் தமிழொழிந்த பிறவற்றையெல்லாம் கொடுந்தமிழ் நாடுகளாகக் கூறிவிட்டனர். இதுவே பிறமொழிச் சொற்களையெல்லாம் திசைச்சொல்லெனச் சிலர் மயங்குதற்கு இடந் தந்துவிட்டது. `அந்தோ' என்பது `அத்தோ' என்பதன் திரிபான செந்தமிழ்ச் சொல்லே. இது வடமொழியில் `ஹந்த' என்று திரியும். ஆதலால், இது சிங்களச் சொல்லுமன்று; வடசொற் சிதைவு மன்று. வடசொல், மொழியாராய்ச்சி இல்லாக் காலத்தில் வேண்டாது புகுத்தப்பட்டதனால், அது இனி அறவே விலக்கப்படும். அதனோடு பிற அயன்மொழிச் சொற்களும் விலக்கப்படும். தூய்மையே தமிழுக்கு உயிர்நாடியாதலால், தமிழ் வாழ்தற்கு, அயன்மொழிச் சொல் விலக்கு இன்றியமையாததென அறிக. - ``தமிழம்'' 1.7.1974 10 மலையாளமும் தமிழும் இந் நாவலந் தேயத்துப் பழைய மொழிகளிற் பெரும்பாலன, வட மொழி, தென்மொழி என்னும் இருபெரு மொழிகளுள் அடங்கும். அவற்றுள், வடமொழிச் சார்பின வடஇந்தியாவிலும், தென்மொழிச் சார்பின தென்னிந்தியாவிலும் வழங்கிவருகின்றன. ஆரியம் இந்தியாவிற்குட் புகுமுன்னரே, திரவிடம் இங்கு எண்ணரு நூற்றாண்டுகளாக வழங்கி வந்ததால், இந்தியாவின் தொன்முதுமொழி திரவிடம் என்னும் தென் மொழியே. குமரி முதல் பனிமலை (இமயம்) வரை ஒரு காலத்தில் இந்தியா முழுதும் தென்மொழியே வழங்கிவந்ததென்பதற்கு, பெலுச்சித் தானத்திலும் வங்காளத்திலும், முறையே, பிராகுவி அரசமகால் என்னும் திரவிட மொழிகள் வழங்கிவருவதும், வடநாட்டு ஆரியமொழிகளின் அடிப்படை ஒருமருங்கு திரவிடமாயிருப்பதும், குமரியொடு வடவிமயத் தொரு மொழிவைத் துலகாண்ட சேரலாதற்கு என்னும் சிலப்பதிகார வாழ்த்துக் காதை உரைப் பாட்டுமடை யெடுப்புத்தொடரும் போதிய சான்றாம். இனி, கடைக்கழகக் காலம்வரை வேங்கடத்திற்குத் தெற்குப்பட்ட நாவல்நிலம் முழுவதும் தமிழ்நாடா யிருந்தமை, வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து (தொல். சி. பா.) வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு பொருது கிடந்த நாட்டியல் வழக்க நான்மையிற் கடைக்கண் யாப்பின திலக்கண மறைகுவன் முறையே. (சிறுகாக்கைபாடினியம்) நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமுந் தமிழ்வரம் பறுத்த தண்புன னன்னாட்டு. (சிலப். வேனிற்காதை) குமரி வேங்கடங் குணகுட கடலா மண்டினி மருங்கிற் றண்டமிழ் வரைப்பில் (சிலப். நூற்கட்டுரை) என்னும் செய்யுட் பகுதிகளாலும், இற்றை மலையாள நாடு அற்றைச் சேரநாடா யிருந்தமையாலும் அறியப்படும். தமிழகம், தொன்றுதொட்டுக் கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை, சேர சோழ பாண்டியம் என்னும் முத்தமிழ் நாடாகவே யிருந்துவந்தது. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு (தொல். 1336) என்றார் தொல்காப்பியர். கடந்தடு தானை மூவிருங் கூடி (புறம். 110) என்றார் கபிலர். பொதுமை சுட்டிய மூவ ருலகமும் (புறம். 337) என்றார் பிரமனார். மும்மலையு முந்நாடும் என்பது திருவள்ளுவமாலை. மூவர் கோவையும் மூவிளங் கோவையும் என்றார் ஔவையார். கி.பி. 12ஆம் நூற்றாண்டிற்குப்பின் பழஞ்சேர மரபு அற்றுப்போய்ச் சேரநாடும் கேரளம் என வழங்கத் தலைப்பட்டதேனும், அது 16ஆம் நூற்றாண்டு வரை கொடுந்தமிழ் நாடாக இருந்துவந்திருக்கின்றது. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த துஞ்சத்து எழுத்தச்சனே, ஆரிய எழுத்து என்னும் சமற்கிருதங் கலந்த நெடுங்கணக்கைப் புகுத்தியும் வடமொழிப் பனுவல்களை மொழிபெயர்த்தும், அளவிறந்த வடசொற்களைத் தற்சம முறையில் தழுவியும், அடிப்படையிலிருந்தே வடமொழியிலக்கணத்தைக் கையாண்டும் சேரநாட்டுத் தமிழைக் கெடுத்தான். அன்றிருந்து, அது தமிழெனப்படாது கேரளம் அல்லது மலையாளம் என்னும் பெயரால் ஒரு திரிபுடைத் திரவிடமொழியாகவே வழங்கிவருகின்றது. மலையாளம், மூக்கொலி மிகையாலும் திசைச்சொற் றொகுதியாலும் கொச்சைத் திரிபாலும் தமிழினின்றும் வேறுபட்டிருப்பினும், இன்றும் அதிற் கலந்துள்ள ஆரியக் கூறு நீக்கப்பெறின், எஞ்சி நிற்பது சொல்லளவில் தமிழேயாம். மலையாளம் என்னும் பெயரே தமிழ்ச்சொல்லாதல் காண்க. மலையில் அல்லது மலைநாட்டில் வாழ்பவன் மலையாளி. மலையாளியின் மொழி மலையாளம். கேரளம் என்பது சேரலம் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு. சேரல் - சேரலன் - சேரலம் - கேரளம். மலையாளம் வடமொழி கலந்த பழந்தமிழே யாயினும், தமிழொடும் தமிழரொடும் நெடுங்காலம் தொடர்பின்மையாலும் பண்டை வரலாற்றை அறியாமையாலும், இடைக்காலத்தில் ஆரியர்க்கும் ஆரியத்திற்கும் உயர்வும் திரவிடருக்கும் தமிழுக்கும் இழிவும் ஏற்பட்டுவிட்டதினாலும், மலையாளியர், தமிழின் பெருமையை உணராதிருப்பதுடன், மலையாளத் தினின்று தமிழ் வந்ததென்றும் வடமொழியே மலையாளத்திற்குத் தாய் என்றும், கூறிவருகின்றனர் தமிழருள் சில வகுப்பாரே தம்மை க்ஷத்திரியர் என்றும், வடசொற் கலவாது தனித்தமிழிற் பேசுவது தாழ்வென்றும் கொண்டிருப்பதை நோக்கும்போது. மலையாளியர் கூற்றில் எள்ளளவும் வியப்பிற்கிடமின்றாம். தமிழைச் சரியாய் அறிதற்குப் பிற திராவிட மொழிகளைப்பற்றிய அறிவும் இன்றியமையாததென்று கூறியுள்ளார் கால்டுவெல் கண்காணியார். இது உயர்வுநவிற்சிபோல் தோன்றினும் உண்மைநவிற்சியே. வரலாற்றுக் காலத் தமிழகத்திற்குப் புறம்பான வடுகு, கோண்டு முதலிய வடபால் திரவிடமொழி அறிவே தமிழைச் செவ்வையாய் அறிதற்கு இன்றியமையாத தெனின், தொன்றுதொட்டுத் தமிழகத்தின் அகத்துறுப்பானதும் அதில் மூன்றிலொரு கூறானதுமான சேரநாட்டுத் தமிழும் வடமொழிக் கலப்பா னேயே அண்மையிற் பிரிந்துபோனதுமான மலையாளமொழி யறிவு, அதற்கு எத்துணை இன்றியமையாததெனச் சொல்லவும் வேண்டுமோ? தமிழம் என்னும் பெயர் வடநாட்டில் அல்லது வடமொழியில் திரவிடம்(தமிழம்-த்ரமிளம்-த்ரமிடம்-த்ரவிடம்) என்று திரிந்திருப்பது போல் தமிழ்மொழியும் பல்வேறு திரவிடமொழிகளாகத் திரிந்திருப்ப தாலும், தமிழல்லாத திரவிடமொழிகள் வழங்கும் நாடுகளில் ஆங்காங்குச் சிறப்பாக உரிய பொருள்கட்குப் புதுச்சொற்கள் தோன்றியிருப்பதாலும், பல திரவிடமொழிகள் தாய்மொழியாம் தமிழினின்று தெரிந்துகொண்ட கூறுகளுட் சில தமிழில் இறந்துபட்டமையாலும், சில திரவிடமொழிகள் தனித்தனி ஒரோவொரு கூற்றினை வளர்த்துள்ளமையாலும், எல்லாத் திரவிட மொழிகளும் சேர்ந்ததே முழுத்தமிழ் என்று கொள்வது இழுக்காகாது. திரவிட மொழிகளுள் இடம் பற்றியும் இயல்புபற்றியும் தமிழுக்கு மிக நெருக்கமானது மலையாளமாகும். அதில் வடசொற்கள் அளவிறந்து கலந்துள்ளன என்று கால்டுவெல் கண்காணியார் கூறியுள்ள நிலைமை, அதன் நூல்வழக்கைச் சார்ந்ததேயன்றி உலகவழக்கைச் சார்ந்ததன்று. இன்றும், மலையாளப் பேச்சு வழக்கை நோக்கின், அது பெரிதும் வடசொற் கலப்பற்ற தென்பது புலனாம். இற்றைத் தமிழில் வழங்கும் சில வடசொற்கும் ஆங்கிலச் சொற்கும் நேர் தென்சொல் மலையாள மொழியில்தான் வழங்குகின்றன. எ-டு: வடசொல் தென்சொல் மைத்துனன் அளியன் மத்தியானம்-மதியம் உச்சி வருஷம் ஆண்டு, கொல்லம்(நகர்) ஆரம்பம் துவக்கம் உபாத்தியாயர்-வாத்தியார் எழுத்தச்சன் அமாவாசை கறுத்த வாவு(காருவா) பூரணை-பௌர்ணமி வெளுத்த வாவு(வெள்ளுவா) ஆங்கிலச்சொல் தமிழ்ச்சொல் (சேரநாடு) பென் தூவல் பாத்ரூம் குளிமுறி டிராயர்(மேசை) வலிப்பு காம்பவுண்டு பரம்பு வேக்கன்சி ஒழிவு கோட்டு குப்பாயம் வெராந்தா கோலாயி உச்சி, ஆண்டு, துவக்கம் முதலிய தென்சொற்கள் தமிழ்நாட் டிலும் வழங்கினும் மலையாள நாட்டிற்போல் அத்துணைப் பெருவழக்காக வும் நாடு முழுமையும் வழங்குகின்றில. இற்றைத் தமிழ்நாட்டில் வழங்கும் சில தென்சொற்கட்கு எதிர்ப்பாற் சொற்கள் இன்று மலையாளநாட்டு வழக்கிலேயே உள்ளன. எ-டு: தமிழ் மலையாளம் அச்சி(தாய், தமக்கை) அச்சன்(தந்தை) சிறுக்கி செறுக்கன்(சிறுக்கன்) தம்பிரான் தம்பிராட்டி சோழ பாண்டி நாடுகளில் வழக்கற்றுப்போன சில ஒருசொல் வினை கள், சேரநாடாகிய மலையாள நாட்டிலேயே இன்று வழங்கி வருகின்றன. எ-டு: மலையாளம் இற்றைத் தமிழ் (ஒருசொல்வினை) (இருசொல்வினை) கட்குன்னு-கக்குன்னு களவு செய்கிறான் குலெக்குன்னு குலைதள்ளுகிறது முருடுன்னு முருடாகின்றது குழிக்குன்னு குழி தோண்டுகிறான். சேரநாட்டுத் தமிழின் சிறந்த சொல்வளம், மலையாளமொழியின் வாயிலாகவே இன்று அறியக்கிடக்கின்றது. எ-டு: ஆழ்ச்ச = கிழமை, ஆழ்ச்சவட்டம் = வாரம் பகர்க்குக = படியெடுக்க. பையானி = தசையைக் கொத்திப் பிடுங்கும் ஒருவகைப் பாம்பு. நொண்ணு = உள்வாய் முத்தாழம்(முற்றாலம்) = காலையுண்டி அத்தாழம்(அற்றாலம்) = இராவுண்டி. அயக்கூற, ஆகோலி, ஏட்ட, குளவன், நோங்ஙல்(கல்), மாலா முதலியன, தொன்றுதொட்டுச் சேரநாட்டில் வழங்கிவரும் மீன் பெயர்கள். திசைச்சொல் முறையில் மலையாளத்தில் வழங்கும் தென்சொற்கள் மாபெருந் தொகையின. எ-டு: கயறு = ஏறு (ஏவல் வினை) கரிச்சல் = குடலை குறுக்கன் = நரி, குள்ளநரி கோளாம்பி = படிக்கம் பகரம் = பதில், பதிலாக மேடி = வாங்கு(ஏ.வி.) வெடிப்பாக்கு = துப்புரவாக்கு(ஏ.வி.) வெளுத்தோடன், அலக்குக்காரன் = வண்ணான் சூட்ட = தீவட்டி மலையாளத்தில் வழங்கும் திசைச்சொற்களுட் பெரும்பாலன சற்றே பொருள் திரிந்த தமிழ்ச்சொற்களே. எ-டு: அதே = ஆம் (yes) அடுக்கல் = பக்கம், கிட்ட, இடம் என்றெ அடுக்கல் = என்னிடம் ஒடுக்கம் = முடிவு, முடிவில் களி = விளையாடு (களித்தாடு) குட்டி = பிள்ளை தெற்று = தப்பு, பிழை நேராக்க = செப்பனிடுக செறுமன் = களமன், களத்தடிமை. செறு = வயல் வலிய = பெரிய. வளரே = மிக விடக்கு = கெட்ட, விடக்குகுட்டி = கெட்ட பிள்ளை கழியும் = முடியும். செய்வான் கழியும் = செய்யமுடியும் கள(களை) = விடு. வன்னுகள = வந்துவிடு மதி = போதும் (போதிய அளவு) கேரளத்தில் சிறப்பாகப் பயிரிடப்பெறும் தென்னைமரம்பற்றி மலையாளத்தில் வழங்கும் பற்பல பெயர்கள் கவனிக்கத்தக்கன. நால்வகைத் தெங்கு: 1. சாதாரணத் (பொதுவகை) தெங்ஙு 2. செந்தெங்ஙு 3. கைதத் தாளி 4. காப்பாடன் தெங்ஙு தெங்கமர இருநிலைகள் 1. தைத்தெங்ஙு 2. பலத்தெங்ஙு தைத்தெங்கின் முந்நிலைகள் 1. மொட்டத்தை 2. கிளியோலத்தை 3. குழித்தை தைத்தெங்க முருட்டின் இருநிலைகள் 1. குதிரக்கொளம்பன் 2. ஆனயடியன் தெங்கின் உறுப்புகள் அல்லி(அலச்சில்) = தென்னம்பூ கொதும்பல் = பாளை மூடி குலச்சில் = பாளைத்தண்டு வெளிச்சில் = சிறுகுரும்பை கரிக்கு = பெருங்குரும்பை ஏணு = தேங்காயின் மூலை மொத்தி = இதக்கை (calyx) செகரி = தேங்காய்மட்டை கழம்பு = பருப்பு பயல = வழுக்கை நால்வகைக் கள் 1. இளய கள்ளு 2. மதுரக் கள்ளு 3. கைப்புக் கள்ளு 4. மூத்த கள்ளு சில தென்சொற்கள் பழம் பொருளிலேயே இன்றும் மலையாள நாட்டில் வழங்குகின்றன. எ-டு: கோயிலகம் = அரண்மனை அம்பலம் = கோயில் பொன்னம்பலம், வெள்ளியம்பலம், சிற்றம்பலம், பேரம்பலம் என்னும் வழக்குகளை நோக்குக. வெயில்என் கிளவி மழையியல் நிலையும் (தொல். புள்ளி. 82) என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி வெயில் என்னும் நிலைமொழி அத்துச் சாரியை பெற்றும் புணரும் புணர்ச்சியை, இன்று, வெயிலத்துச் சென்னு, வெயிலத்துப் போகருது என மலையாள நாட்டு வழக்கில்தான் காண்கின் றோம். பதிற்றுப்பத்து என்னும் புணர்மொழிப் பெயரோடொத்த முப்பதிற்றுப்பத்து, அம்பதிற்று நாலு முதலிய இற்றுச் சாரியைப் புணர்ச்சித் தொடர்மொழிகளும் இன்று மலையாள நாட்டில்தான் வழங்குகின்றன. சில மலையாள நாட்டுத் தென்சொற்கள் முந்து நிலையையே இன்றும் தாங்கி நிற்கின்றன. எ-டு: மலையாளம் தமிழ் அரி அரிசி உள்ளு(உள்) உண்டு நல்லு(நல்) நன்று எல் எலும்பு பரந்து பருந்து போழ் போழ்து ``அரி யெறிஞ்ஞால் ஆயிரம் காக்க'', ``கரயுன்ன குட்டிக்கே பாலுள்ளு'', வம்பனோடு வழுது நல்லு என்பன மலையாளப் பழமொழிகள். புரம் = உயர்வு. புரையுயர் பாகும் என்பது தொல்காப்பியம் (உரி. 4). புரம் - பரம் = மேல். சொற்றிரிவில் உகரமுதல் அகரமுதலாதல் இயல்பு. எ-டு: முடங்கு - மடங்கு, குடும்பு - கடும்பு, குடம் - கடம். பரம்பு - பறம்பு = (உயர்ந்த) மலை. பரண் = மேலிடம். பரந்து - பருந்து = உயரமாகப் பறக்கும் பறவை. உயரவுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? என்னும் தமிழ்ப் பழமொழியும், பணத்தின்னு மீதெ பரந்தும் பறக்கயில்ல என்னும் மலையாளப் பழஞ்சொல்லும் இங்கு நோக்கத்தக்கன. பரந்து என்னும் சொல்லின் இடையிலுள்ள அகரம், ஈற்றிலுள்ள உகரச்சார்பால் உகரமாயிற்று. இது உயிரிசைவு மாற்றம் (Harmonious sequence of vowels) என்னும் நெறிமுறையாம். ஒ.நோ: பரம்பு-பரும்பு. பராந்து, பிராந்து என்னும் உலகவழக்கும் இங்கு நோக்கத்தக்கன . போழ்-போழ்து-பொழுது-போது. போழ்து-போழ்தம். ஒ.நோ: வீழ்-வீழ்து-விழுது. தமிழிலுள்ள சில இலக்கணச் சொல்வகைகளின் வரன்முறை, மலையாளச் சொற்றுணை கொண்டே அறியமுடிகின்றது. எ-டு: (1) நிகழ்கால இடைநிலை கின்று என்னும் நிகழ்கால இடைநிலை, குந்நு, உந்நு என்று மலையாளத்திலும், குந்-உந்(உன்) - ந் என்று தமிழிலும் திரியும். எ-டு : செய்கின்றான்-செய்குந்நான்-செய்குநன். செய்குந்நான்-செய்யுந்நான் - செய்யுநன்-செய்நன். மகிழ்நன், வாணர் (வாழ்நர்), ஆஅகுந (தொல். 932), ``களையுநர் (குறள். 879), பாடுநர்,`ஈகுநர்' (புறம். 235), `பகருநர்', `ஓசுநர்', `தருநர்'(சிலப். இந்திர.) முதலிய நிகழ்கால வினையாலணையும் பெயர்களெல்லாம், மேற்கூறிய வகையில் அமைந்தவையே. கின்று என்னும் இயல்நிலைக்கும் குந்-உந்-ந் என்னும் இறுதித் திரிநிலைகட்கும் உள்ள தொடர்பை, குந்நு, உந்நு என்னும் இடைத்திரிநிலைகளாகிய மலையாள வடிவுகளே காட்டி நிற்றல் காண்க. இவ் நிகழ்கால இடைநிலையின் இயல்பை விரிவாக விளக்கினாம். ஆண்டுக் காண்க. (2) எதிர்மறை ஏவல்வினை செய்யாதே என்னும் எதிர்மறை ஏவல் அல்லது முன்னிலை விலக்குவினை, மலையாளத்தில் செய்யருது என்னும் வடிவு கொண்டு நிற்கும். தமிழ் வடிவில் விளங்காத இயல்பு மலையாள வடிவில் விளங்கித் தோன்றுகின்றது. செய்யருது என்பது செய்யரிது என்பதன் திரிபு. செய்யரிது என்பது செய்ய முடியாது என்னும் பொருளது. பெரும்பாலும் முடியாமை அல்லது இயலாமைப்பொருட்டுச் சொற்களே விலக்கு வினையாகின்றன. செய்யக்கூடும், செய்யக்கூடாது; செய்யப்படும், செய்யப்படாது என்னும் வினைகள், உடன்பாட்டு வடிவில் முடிதற் பொருளையும் எதிர்மறை வடிவில் முடியாமைப் பொருளை அடியாகக் கொண்டு விலக்குப்பொருளையும், முறையே, உணர்த்துதல் காண்க. செய்யாதே என்னும் வினை செய்யருதே என்னும் ஏகாரவீற்று வடிவின் திரிபாம். ஆயின், செய்யாதே என்பது தமிழில் ஒருமைக்கு மட்டும் உரித்தாயிருக்க, செய்யருது என்பது மலையாளத்தில் ஒருமை பன்மை இருமைக்கும் பொதுவாம். செய்யருதே என்பது மலையாளத்தில் செய்யருதெ என்றும் நிற்கும். இனி, அருது என்பது மலையாளத்தில் துணைவினையாய் மட்டுமன்றித் தனிவினையாகவும் வரும். எ-டு : ஈ ஆள்க்கு வேறே பணி அருது = இவ் ஆட்கு வேறு வேலை கூடாது. (3) இகரவீற்று இறந்தகால வினையெச்சம் இறந்தகால வினையெச்ச வடிவுடன் ஆல் விகுதி சேர்வதால், ஒருசார் எதிர்கால வினையெச்சந் தோன்றும். எ-டு: வந்து + ஆல் - வந்தால் கண்டு + ஆல் - கண்டால் சென்று + ஆல் - சென்றால் கிட்டி + ஆல் - கிட்டியால்-கிட்டினால் யகரம் சிலவிடத்து நகரமாக மாறுவது இயல்பு. ஒ.நோ: யான் - நான், யமன் - நமன். இம் முறையில், எழுதியால் - எழுதினால், ஊதியால் - ஊதினால், தீண்டியால் - தீண்டினால், கூடியால் - கூடினால், தோன்றியால் - தோன்றினால், தேறியால் - தேறினால் என யகர வுடம்படுமெய் பெற்ற எதிர்கால வினையெச்சங்களி லெல்லாம், அவ் யகரமெய் னகரமெய்யாகத் திரியப் பெறும். இம் முறையிலேயே, ஆயால்-ஆனால், போயால் - போனால் எனவும் வரும். ஆயின், ஆயினால், போயினால் எங்ஙனம் ஆயினவெனின் ஆயி போயி என்னும் வடிவுகளே ஆல் விகுதி சேர்ந்து ஆயியால்-ஆயினால், போயியால் - போயினால் என முறையே திரிந்தனவென்க. இதனால் இன் என ஓர் இறந்தகால விடைநிலை இல்லை என்பதும் பெற்றாம். இறந்தகால வினையெச்ச வடிவுகளே, முதற்காலத்தில் இற்றை மலையாளத்திற்போல் முற்றாகவுமிருந்து பின்னர் முற்றை வேறுபடுத்து வான் வேண்டி பாலீறு பெற்றனவாதலின், இறந்தகால முற்றுகளை உறுப்புப் பிரித்துக் காட்டற்கு முதற்கண் எச்சமும் ஈறுமாகவே பிரித்துக் கோடல் வேண்டும். எ-டு: வந்து + ஆன் - வந்தான் கண்டு + ஆன் - கண்டான் சென்று + ஆன் - சென்றான் காட்டி + ஆன் - காட்டியான்-காட்டினான் போயி + ஆன் - போயியான்-போயினான் போயி-போய் + ஆன் - போயான்-போனான் இங்ஙனம் பிரித்துக் காணும்போது, நிலைமொழிக்கு உகர வுயிர்மெய் யீறும் இகர வுயிர்மெய் யீறுமன்றி இன் ஈறின்மை கண்டு தெளிக. எழுதியால், கிட்டியால் என்னும் யகர வுடம்படுமெய் பெற்ற எதிர்கால வினையெச்சங்களும், ஆயி, போயி என்னும் இகரவீற்று இறந்தகால வினையெச்சங்களும், சோழ பாண்டி நாடுகளில் வழக்கு வீழ்ந்து போயினும், மலையாள(சேர) நாட்டில் இன்றும் வழக்காற்றில் இருந்துவருகின்றன. இவையே முந்திய வடிவுகளாம். இகர யகரம் இறுதி விரவும் (தொல். மொழி. 25) என்னும் தொல்காப்பிய நூற்பா இங்குக் கவனிக்கத்தக்கது. நாஇ - நாயி - நாய் என்பதுபோன்றே ஆஇ - ஆயி - ஆய் என்பதும் என அறிக. இனி, வடநாட்டு மொழியாகிய இந்தியிலும் பிற ஆரிய மொழி களிலும் எழுவாய்ப் பெயரையும் பெயர்ப் பயனிலையையும் இணைக்கும் இரு என்னும் புணர்ப்புச் சொற்கும் (copula), மலையாளம் அடிகோலி யிருந்திருக்கின்றது என்னலாம். எ-டு: இது எந்தாகுன்னு(எந்தாணு)? இது ஒரு மரமாகுன்னு(மரமாணு). யஃ கியா ஹை? What is this? யஃ பேட் ஹை. This is a tree. இனி, இறுதியாக, மலையாள நாட்டிற் சிறப்பாகவும் சிறப்பான வடிவிலும் வழங்கும் பழமொழிகளிற் சிலவற்றையும், எடுத்துக்காட்டுவாம். மலையாளத்தில் ஏறத்தாழ ஈராயிரம் பழமொழிகள் வழங்கி வருகின்றன. அவற்றுள் ஒரு பகுதி வடசொற் கலந்தது; இங்குக் காட்டப் பெற்றவற்றுள் இரண்டொன்று நீங்கலாக ஏனையவெல்லாம் தூய தென்சொற் பழமொழிகளே. மலையாளத்திற் பழமொழி பழஞ்சொல் எனப்பெறும். முதுசொல் என்பது தொல்காப்பியம். அகத்திட்டால் புறத்தறியாம். (அறியாம் = அறியலாம்) அகத்துக் கத்தியும் புறத்துப் பத்தியும். அகலே போன்னவனெ அரிகெ விளிச்சால் அரக்காத்துட்டு சேதம். அஞ்செரும கறக்குன்னது அயலறியும், கஞ்சி வார்த்துண்ணுனது நெஞ்சறியும். அடி வழுதியால் ஆனயும் வீழும். அரிகே போகும்போழ் அரப்பலம் தேஞ்ஞு போகும். அழகுள்ள சக்கயில் சுளயில்ல. ஆகும் காலம் செய்தது சாகும் காலம் காணும். ஆட்டிக்கொண்டு போகும்போழ் பிண்ணாக்கு கொடுக்காத்தவன் வீட்டில் சென்னால் எண்ண கொடுக்குமோ? ஆர்க்கானும் கொடுக்கும்போழ் அருதென்னு விலக்கருது. ஆழமுள்ள குழிக்கு நீளமுள்ள வடி. (வடி = தடி) இளமான் கடவறியா, முதுமான் ஓட்டம் வல்லா. ஈர் எடுத்தால் பேன் கூலியோ? ஈழத்தெ கண்டவர் இல்லம் காணுக யில்ல. உரத்த பாம்பின்னு பருத்த வடி. (பாம்பின்னு = பாம்பிற்கு) உலக்கெக்கு முறிச்சு குறுவடியாயி. உள்ளது பறஞ்ஞால் உறியும் சிரிக்கும். ஊருண்டெங்கில் உப்புவிற்றும் கழிக்காம். எள்ளோளம் தின்னால் எள்ளோளம் நிறயும். (ஓளம் = அளவும்) ஏதானும் உண்டெங்கில் ஆரானும் உண்டு. ஏற்றத்தின்னு ஒரு இறக்க முண்டு. ஏறியதும் குறஞ்ஞதும் ஆகா. ஒரு கொம்பு பிடிக்கூலும் புளிக்கொம்பு பிடிக்கேணம். (பிடிக்கூலும் = பிடிக்கிலும்) ஒருத்தனாயால் ஒருத்தி வேணம். கக்குவான்(கட்குவான்) பரிச்சால் ஞேலுவான் பரிக்கேணம். ( = களவு செய்யப் படித்தால் தூக்கிலிடப்படவும் படிக்கவேண்டும்.) கடிக்குன்னது கரிம்பு, பிடிக்குன்னது இரிம்பு. கண்டறியாஞ்ஞால் கொண்டறியும். (= தானே கண்டறியாதவன் தண்டனையால் அறிவான்.) கண்டதெல்லாம் கொண்டால் கொண்டதெல்லாம் கடம். கண்ட மீனெல்லாம் கறிக்காகா. கணக்கு பறஞ்ஞால் கஞ்ஞிக்கு பற்றில்ல. கம்பிளிக்குண்டோ கற? கரிக்கட்ட கழுகுந்தோறும் கறுக்கும். கழுத்தறுத்தால் கண்கட்டு. காக்க நோக்கறியும், காட்டி ஆளறியும். காடிக் கஞ்ஞியும மூடிக் குடிக்கேணம். காண்மான் வன்னவன் கழுவேறி. கும்பத்தில் மழபெய்தால் குப்பயெல்லாம் சோறு. கொச்சி கண்டவன்னு அச்சிவேண்டா, கொல்லம் கண்டவன்னு இல்லம் வேண்டா, அம்பலப்புழ கண்டவன்னு அம்மயும் வேண்டா. கோடிக்கோடி கோடி கொடுத்தால் காணி கொடுத்த பலம், கோடாதெ காணி கொடுத்தால் கோடி கொடுத்த பலம். கோழியிறைச்சி தின்னுமாறுண்டு,கோழிப்பூ சூடுமாருண்டோ? சுண்டங்ங கொடுத்து வழுதினிங்ங வாங்ஙல்ல. சுமடொழிச்சால் சுங்கம் வீட்டேண்டா. சொல்லிக்கொடு, நுள்ளிக்கொடு, தல்லிக்கொடு, தள்ளிக்கள. சோறுண்டாகும்போழ் சாறில்ல, சாறுண்டாகும்போழ் சோறில்ல. ரண்டும் உண்டாகும்போழ் ஞானில்ல. தனக்குத் தானும் புரெக்கு தூணும். தவிடு தின்னூலும் தக்ருதி களயருது. தாழெ கொய்தவன் ஏற சுமக்கேணம். தூபங் காட்டியாலும் பாபம் போகா. தூரத்தெ வழிக்கு நேரத்தே போகணும். தெங்ஙுள்ள வளப்பில் தேங்ஙா கொண்டு போயிக்கூடே? தேறியோனெ மாறல்ல, மாறியோன தேறல்ல. தொட்டாவாடி நட்டு வளர்த்தேணமோ? நாடு ஓடும்போழ் நடுவே நாமும் ஓடணும். நாணம் கெட்டவனெ கோலம் கெட்டும். காலாள் பறஞ்ஞால் நாடும் வழங்ஙணம். நிடும்பன போயால் குறும்பன நிடும்பன. பத்தம்ம சமெஞ்ஞாலும் பெற்றம்ம யாகுமோ? பழுக்கான் மூத்தால் பறிக்கேணம். புரெக்கு மீதெ வெள்ளம் வன்னால் அதுக்கு மீதெ தோணி. பெண்சொல் கேள்க்குன்னவன் பெருவழி. பொன் சூசி குத்தியாலும் கண்ணுபோம். போன புத்தி ஆன வலிச்சால் வரில்ல. மகர மாசத்தில் மழபெய்தால் மலயாளம் மடிஞ்ஞுபோகும். மஞ்சச்சேர மலர்ன்னு கடிச்சால் மலநாட்டில் எங்ஙும் மருன்னில்ல. மயக்கத்தின்னு மருன்னு இரிம்பு. முதிரெக்கு மூன்னு மழ. முற்றத்தே முல்லெக்கு மணம் இல்ல. மூத்தது நன்னெங்கில் மூன்னும் நன்னு. மூத்தோன் வாக்கும் முதுநெல்லிக்காயும் மும்பில் கைக்கும், பின்னே மதுரிக்கும். வற்றோனும் வல வீத்தோனும் கட்டோனும் கடம் கொண்டோனும் ஆசவிடா. (வற்றோன் = தூண்டிலால் மீன் பிடிப்போன்) வாயிக்கு நல்லது வயிற்றின் னாகா. வானம் வீணால் முட்டிடாமோ? (வீணால் = வீழ்ந்தால்) விளிக்காதெ வன்னால் விளம்பாதெ போகேணம். வேதம் அறிஞ்ஞாலும் வேதனை விடா. (குறிப்பு: மலையாளத்தில் றன்னகரம் வழக்கற்றுப்போய் அதற்கீடாகத் தந்நகரமே வழங்குகின்றது. வசதிபற்றி ஈண்டுத் தமிழ் முறையில் எழுதப்பட்டுள்ளது.) இனி, மொழித்துறையில் மட்டுமன்றிக் கலைத்துறையிலும் பழந்தமிழ் மரபு மலையாள நாட்டிலேயே போற்றப்பட்டு வருவதைக் காணலாம். மாதங்களை ஓரைப் பெயராற் குறிப்பதும் கதகளி என்னுங் கூத்துவகையும் பழந்தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளே. இதுகாறும் கூறியவற்றால், மலையாளம் வடமொழி கலந்த சேர நாட்டுக் கொடுந்தமிழே என்றும், அது தமிழ்த்தூய்மைக்கும் திரவிடச் சொல்லாராய்ச்சி மொழியாராய்ச்சிக்கும் பெரிதும் துணையாவதென்றும், அதிலுள்ள தென்சொற்கள் கலந்தாலன்றித் தமிழ்ச்சொற்றொகுதி நிரம்பா தென்றும் தெற்றெனத் தெரிந்து கொள்க. - ``செந்தமிழ்ச் செல்வி'' நவம்பர் 1955 11 இசைத் தமிழ் இசைத்தமிழ்க் கிளர்ச்சி ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ். என்று முன்னோர் புகழுமாறு, உலகிலேயே முதன்முதல் இலக்கிய முறை யாய்ப் பண்படுத்தப் பெற்றதும் இசை நாடகம் முதலிய பல அருங்கலை நூல்களெழுந்ததுமானது தமிழே. இது தற்போது புன்சிறு புதுமொழியினும் தாழ்வாகக் கருதப்படுகின்றது. இம் மாபெருங் கொடுமையைப் போக்கும் வண்ணம், வயவர்(சர்) செட்டிநாட்டரசர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் இசைத்தமிழ்க் கிளர்ச்சியைத் தோற்றுவித்தார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரும் தமிழால் வாழ்க்கை நடாத்துவாரும் ஆகிய இரு சாராரும், அன்னாரை நெஞ்சார நினைத்து வாயார வழுத்த வேண்டும். இதற்குப் பதிலாக, இசைத்தமிழ்க் கிளர்ச்சி இசைக்கலைக்கே உலை வைப்பதென்றும், இசைக்கு மொழி வரையறை யில்லையென்றும், தமிழில் இசைப்பாட்டில்லை யென்றும், தமிழ் இசைக் கேற்காதென்றும் ஒரு சிறு கூட்டத்தார் வேண்டுமென்றே கட்டுப்பாடாய் உத்திக்கும் கலைக்கும் உண்மைக்கும் மாறாகப் பேசியும் எழுதியும் வருவது மிகமிக இரங்கத்தக்க தொன்றாம். இசைத்தமிழ்த் தொன்மை ஆரியர் வருமுன்பே, கி.மு. 2000 ஆண்டுகட்கு முன்னரே, குமரி நாட்டில் நீடித்து வழங்கிய தலைச்சங்கத் தமிழ் முத்தமிழாயிருந்தது. தலைச்சங்கத் திறுதியில் செய்யப்பட்ட வழிநூலாகிய அகத்தியம் முத்தமிழிலக்கணம். தமிழ் தோன்றி வளர்ந்தது, பன்னூறாயிரம் ஆண்டுகள் நிலைபெற்ற தும் மனிதன் தோன்றியதும் நாலாயிரம் ஆண்டுகட்கு முன் தென்பெருங் கடலில் அமிழ்ந்துபோனதுமான குமரிநாடே (Lemuria) யாதலின் தமிழே முதல் இசைமொழி. தமிழரின் இசையுணர்ச்சி தலையாயது. அதனாலேயே, இழவுக்கு அழுவதைக்கூட இசையோடு அழுவது தமிழ்ப்பெண்டிர் வழக்கம். தமிழர் இசையில் சிறந்திருந்ததினால்தான் இசையை மொழிப்பகுதி யாக்கி இசைத்தமிழ் என்றனர். அதோடு நில்லாது, நாடகத்தையும் சேர்த்து முத்தமிழ் என வழங்கினர். இயற்றமிழின்றி இசைத்தமிழில்லை; இயற் றமிழும் இசைத்தமிழு மின்றி நாடகத்தமிழு மில்லை. ஆகவே, இயலிசை நாடகம் மூன்றும் முறையே ஒருதமிழும் இருதமிழும் முத்தமிழுமாகும். இங்ஙனம் இசை நாடகக் கலைகளை மொழிப்பகுதியாக்கினது வேறெந் நாட்டிலு மில்லை. இசையென்னும் தனிச்சொல் முதலாவது இசுவென்று (hissing) ஒலிக்கும் இயல்பான ஓசையைக் குறித்து, பின்பு இனிய ஓசையாகிய பண்ணைக் குறித்தது. இணைத்தலைக் குறிக்கும் இசை என்னும் சொல் வேறு. வடமொழியில் கீதம்(பாட்டு) என்னும் பெயர் சம் என்னும் முன் னொட்டுப் பெற்றுச் சங்கீதம் என்றாகி இசைக்கலையைக் குறித்தது. இதனால், இசைத்தமிழ் முந்தின தென்றும் இயல்பான தென்றும் அறியலாம். இசைத்தமிழ் பற்றிய தொல்காப்பியச் சான்றுகள்: அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர். (எழுத்து. 33) தெய்வம் உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப. (அகத். 20) துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே (களவு. 1) பாணன் பாடினி இளையர் விருந்தினர் கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்'' (கற்பு. 52) பாட்டின் இயல பண்ணத்தி யியல்பே (செய். 173) தொல்காப்பியம் இடைச்சங்க நூல். இதன் காலம் கி.மு. 2000. இஃது ஒரு வழிநூலாதலின் இதிற் கூறப்பட்டுள்ளவை யெல்லாம் தலைச்சங்க நூல்களிற் கூறப்பட்டவையே. இசைத்தமிழ்த் தேர்ச்சி இசைக் குரியவை சுரம், பண், தாளம், பாட்டு, கருவி என ஐந்து. அவற்றுள் சுரம் ஏழு. அவற்றின் பெயர் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. அவற்றை இசைமுறையிற் பயிலும்போது, முற்காலத்தில் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் ஏழ் நெடில்களாலும், பிற்காலத்தில் ச ரி க ம ப த நி என்னும் எழுத்துகளாலும் குறித்தார்கள். எழுசுரத்தின் ஏற்ற முறைக்கு ஆரோசை என்றும், இறக்க முறைக்கு அமரோசை என்றும் பெயர். ச ப வொழிந்த மற்ற ஐஞ்சுரங்களும் அரைச் சுரம் முழுச்சுரம் எனத் தனித்தனி இரு நிலைய. அரைச் சுரத்திற்கு ஆகணம் என்றும் முழுச் சுரத்திற்கு அந்தரம் என்றும் பெயர். எழுசுரக் கோவைக்கு நிலை என்று பெயர். மக்கள் பாட இயலும் 3 நிலைகட்கும் முறையே மெலிவு, சமன், வலிவு என்பன பெயராகும். பண்கள், பண்(7 சுரம்), பண்ணியம்(6 சுரம்), திறம்(5 சுரம்), திறத்திறம்(4 சுரம்) என நாற்றிறத்தின. பெரும்பண்கள் மருதம், குறிஞ்சி, செவ்வழி, பாலை என நான்கு. இவற்றுள், ஒவ்வொன்றும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என நந்நான்கு வேறுபாடுடையது. பண்களைப் பிறப்பிக்கும் முறை, ஆயப்பாலை, வட்டப் பாலை, முக்கோணப்பாலை, நாற்கோணப்பாலை என நால்வகைத்து. பண்களின் பெயர்களெல்லாம், குறிஞ்சி, நாட்டை, கொல்லி, தக்கேசி, யாழ்முறி, நேரிசை, செந்துருத்தி, செவ்வழி, புறநீர்மை எனத் தமிழ்ச்சொற்களாகவே யிருந்தன. பிங்கல நிகண்டில் 103 பண்கள் கூறப்பட்டுள. நரப்படைவா னுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற் றொன்றாகிய ஆதியிசைகள் என்று அடியார்க்குநல்லார் கூறுவதால் (சிலப். ப. 109) பண்டைத் தமிழிசையின் பரப்பை உணரலாம். தாளம் கொட்டு, அசை, தூக்கு, அளவு என நான்கு உறுப்புகளையுடையது. தாளத்திற்குப் பாணி யென்றும் பெயர். “miu மாத்திரையுடைய ஏகதாளம் முதல் 16 மாத்திரையுடைய பார்வதிலோசனம் ஈறாக 41 தாளம் புறக்கூத்திற்குரிய என்று அடியார்க்குநல்லார் கூறுகிறார். இக் கூற்றிலுள்ள தாளப் பெயர்கள் தமிழ்ப் பெயர்க்குப் பதிலாய்ப் புகுத்தப்பட்ட வடமொழிப் பெயர்கள். இசைப்பாட்டுகள் தலைச்சங்க காலத்திலும் இடைச்சங்க காலத்திலும் எண்ணிறந்திருந்தன. அவை யாவும் இறந்தொழிந்தன. கடைச்சங்க நூல்களில் ஒன்றான பரிபாடல் இசைத் தமிழிலக்கியமே. கருவிகள், தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி, தாளக்கருவி (கஞ்சக்கருவி) என நான்கு. அவற்றுள், தோற்கருவிகள் பேரிகை படகம் இடக்கை உடுக்கை மத்தளம் சல்லிகை கரடிகை திமிலை குடமுழா தக்கை கணப்பறை தமருகம் தண்ணுமை தடாரி அந்தரி முழவு மதி(சந்திர) வளையம் மொந்தை முரசு கண்விடுதூம்பு நிசாளம் துடுமை சிறுபறை அடக்கம் தகுணிச்சம் விரலேறு பாகம் துணையுறுப்பு(உபாங்கம்) நாழிகைப் பறை துடி பெரும்பறை முதலியவாகப் பல்வகைய. இவை, அகமுழவு அகப்புறமுழவு புறமுழவு புறப்புறமுழவு பண்ணமைமுழவு நாண்முழவு காலைமுழவு என எழுவகைப்படும்; மீண்டும், பாட்டுறுப்பு (கீதாங்கம்), கூத்துறுப்பு (நிருத்தாங்கம்), பொதுவுறுப்பு (cgah§f«) என மூவகைப்படும். துளைக்கருவி புல்லாங்குழல் நாகசுரம் முதலியன. நரப்புக்கருவி பல்வகைத்து. அவற்றுள், பேரியாழ்(21 நரம்பு), மகரயாழ் (19 நரம்பு), சகோடயாழ் (14 நரம்பு), செங்கோட்டியாழ் (7 நரம்பு) என்பன பெருவழக்கானவை. இவற்றுள் செங்கோட்டியாழே இதுபோதுள்ள வீணை. நரப்புக் கருவிகட்கெல்லாம் யாழ் என்பது பொதுப்பெயர். வீணை என்னும் பெயர் பிற்காலத்தது. பழமலை (KJF‹w«), மறைக்காடு முதலிய தமிழகத் தூர்ப்பெயர்கட்குப் பதிலாக விருத்தாசலம் வேதாரணியம் முதலிய வடமொழிப் பெயர்கள் வழங்குவது போன்றே, யாழ் என்னும் தமிழ்ச் சொற்குப் பதிலாக வீணை என்னும் வடசொல் வழங்கி வருகின்றது. யாழ்கள் செங்கோடு(சிவப்புத் தண்டி), கருங்கோடு(கறுப்புத் தண்டி) என இருநிறத் தண்டிகளை யுடையவையா யிருந்தன. செங்கோட்டையுடைய யாழ் செங்கோட்டியாழ், கருங்கோட்டுச் சீறியாழ் எனப் புறப்பாட்டில் வருதல் காண்க. ஆங்கிலத்தில் Fiddle எனப்படும் கின்னரி தமிழகத்தினின்று மேனாட்டிற்குச் சென்றதே. இதை மேனாட்டாரும் ஒப்புக்கொள்கின்றனர். இஃது இராவணனால் மிகுதியாய்ப் பயிலப்பட்டதென்றும், அதனால் `இராவணாசுரம்' எனப்பட்டதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். சிலர் மிடற்றையுங் கருவியாகக் கொண்டு கருவி ஐந்தென்பர். மிடறு = தொண்டை, வாய்ப்பாட்டுக் கருவி. மேற்கூறிய கருவிகளை யெல்லாம் தொன்றுதொட்டுச் செய்துவந்தவரும் இயக்கி வந்தவரும் தனித் தமிழரே. அவர் பாணர், மேளக்காரர்(நட்டுவர்) என இரு வகுப்பினர். இசைத் தெய்வத்திற்கே மாதங்கி (பாடினி) என்றுதான் பெயர். ஆரியப் பார்ப்பனர் ஆலாபன இசை அறியாமை பிராமணர் இசை பயிலக் கூடாதென்று பண்டு ஒரு விலக்கிருந்தது. மனுதர்ம சாத்திரம் 4ஆம் அத்தியாயம் 15ஆம் விதியில், பிராமணர் பாட்டுப் பாடுவது கூத்தாடுவது.... இப்படிக் கொத்த சாத்திர விருத்தமான கருத்தினால் பொருளைத் தேடிக்கொள்ளக் கூடாது என்று கூறப்பட் டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் வழிபாட்டு மந்திரம் இசையோடு பாடப் படுவதே. ஆனால், அஃது ஆலாபன இசையன்று. வடமொழி வேத மந்திரங்கள் இப்போதுகூட ஆலாபித்துப் பாடப்படுவதில்லை. உதாத்தம் அனுதாத்தம் சுவரிதம் என்னும் ஒலிப்பு வேறுபாடும் மாத்திரைக் கணக்கும் வேதமந்திரத்திற்கு மிகக் கண்டிப்பானவை. ஓர் எழுத்துத் தவறாக ஒலிக்கப் படினும் மந்திரத்தின் வலி குன்றிவிடுவதுடன் ஓதினவனுக்குப் பெருங் கேடும் விளையும் என்பது வடமொழியாளர் கொள்கை. ஆதலால், காட் டாளத்தி பண்ணாளத்தி நிறவாளத்தி ஆகிய மூவகை ஆலாபனையும் வடமொழி மந்திரத்திற்கில்லை என்பது தெளிவு. வேதத்தை ஓதாது வரிப்பாட்டைப் பாடி வேதவொழுக்கத்தினின்று தவறியதால், சில ஆரியப் பார்ப்பனர் விலக்கப்பட்டு ஓர் ஊருக்கு வெளியே போய்க் குடியிருந்தனர் என்னும் செய்தி சிலப்பதிகாரத்தில்(புறஞ்சேரி. 35, 39) கூறப்பட்டுள்ளது. பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தமிழைச் சிறப்பாய் வளர்த்துவந்தவர் பறையருள் ஒரு பிரிவினரான பாணரே. இதனாலேயே பாண்சேரிப் பற்கிளக்கு மாறு என்னும் பழமொழியும் எழுந்தது. பாணபத்திரர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்பாணாழ்வார் முதலிய யாழ்வேந்த ரெல்லாம் பாணரே. 11ஆம் நூற்றாண்டில் தேவாரத்திற்கு இசைவகுத்தது திருநீலகண்ட யாழ்ப்பாணரின் மரபினரான ஒரு பெண்டாவர். தொல்காப் பியர் காலத்திற்கு முன்னிருந்து வழங்கிவரும் பாணாற்றுப்படை கூத்தராற்றுப் படை முதலிய செய்யுள்களும் நூல்களும் பாணரின் இசைத் தலைமையைப் புலப்படுத்தும். ஆரியப் பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்த பின்பே வடமொழியில் இசைநூல்கள் எழுந்தன. அவர்கள் தமிழ்நாட்டில் வதிந்து பல தலைமுறை யாக இசை பயின்றதினாலேயே தியாகராச ஐயர் தலைசிறந்த இசைப்புலமை வாய்க்கப் பெற்றனர் என்பதையும், அவருக்கும் தீட்சிதர்க்கும் முன்பே முத்துத்தாண்டவர் அரிய தமிழ்க் கீர்த்தனைகள் பாடியிருந்தனர் என்பதை யும், அவரைப் பின்பற்றியே ஐயரும் தீட்சிதரும் பாடினர் என்பதையும், அவர்கள் தமக்கிருந்த அளவிறந்த வடமொழிப் பற்றினாலேயே திரவிட மொழிகட்குள் மிகுந்த வடமொழித் தொடர்புள்ள தெலுங்கிலும் வடமொழியி லும் கீர்த்தனையியற்றினர் என்பதையும் அறிதல்வேண்டும். இசைத்தமிழ் கெட்ட வகை பாட்டுத்தொழிலால் மதிப்பு, பெருவருவாய், மக்களை வயப்படுத்தல் முதலிய பயன்களைக் கண்ட ஆரியப் பார்ப்பனர் பிற்காலத்தில் அத் துறையில் இறங்கிப் பிறப்பால் உயர்வு தாழ்வு வகுக்கும் குலமுறை யமைப்பினால் பாணர்க்குப் பிழைப்பில்லாது செய்துவிட்டனர். அவர் தம்மை நிலத்தேவர் (பூசுரர்) என்று தமிழரை யேமாற்றி ஒவ்வொரு துறை யிலும் முதலிடமும் முழுவிடமும் பெற்றனர். முத்தமிழ் முடிவேந்தரிடத்தும் எச்சமயத்திலும் அறிவிப்பில்லாமலே செல்லக்கூடிய பாணர் மரபினர் பார்ப்பனத் தெருவிலும் பொதுச் சாலையிலும் நடக்கவும் விடப்பட்டிலர். இசைத்தமிழ் இடைக்காலத்தில் மறைந்துபோனமைக்கு இதுவே பெருங் காரணம். இசைத்தமிழ் நூல்கள் படிப்பாரற்று எரிக்கும் சிதலுக்கும் இரையாயின. இதுபோதும் பார்ப்பனர் பார்ப்பன இசைவாணரையே போற்றிப் புகழ்வதும் தமிழ் இசைவாணரைத் தூற்றியிகழ்வதும் வழக்கமா யிருந்துவருகிறது. அவர் பார்ப்பன இசைவாணரின் அரங்கு எவ்வளவு இன்பமற்றிருப்பினும் இறுதிவரையிருந்து தலையாட்டியும் கைதட்டியும் பாராட்டுவதும், நாலுபக்கமும் கூலியாள்களை யிருத்திப் பாராட்டுவிப்பதும், செய்தித்தாள்கட்குச் சிறப்பித்தெழுதி விளம்பரஞ் செய்வதும், தமிழ் இசைவாணரின் அரங்கு எவ்வளவு இன்பமுற்றிருப்பினும் முகத்தில் ஈயாடாமல் சிறிது நேரம் இருந்துவிட்டு இடையில் ஒவ்வொருவராய் எழுந்துபோய்விடுவதும் இன்றும் கண்கூடாகக் காண்கின்றோம். வாய்ப் பாட்டிற்கு நயினாப்பிள்ளையும், கின்னரி (பிடிலு)க்குக் கோவிந்தசாமிப் பிள்ளையும், மிருதங்கத்திற்கு அழகநம்பியும், டோலக்கிற்கு வேணுசெட்டி யாரும், சிஞ்சிரி (கஞ்சிரா)க்குத் தட்சிணாமூர்த்திப்பிள்ளையும் குணக் குரலுக்குப்(கொனுக்கோல்) பக்கிரிசாமிப் பிள்ளையும் நாகசுரத்திற்குப் பொன்னுசாமிப் பிள்ளையும் வெண்பாவிற்குப் புகழேந்திபோல் தத்தம் துறையில் தனியாற்றல் படைத்த எத்துணை ஒப்புயர்வற்ற வல்லுநர்! ஆயினும், தக்க அளவு அவர்கள் போற்றப்படவில்லை. தமிழர் அயலாரைப் போற்றித் தம்மவரைப் புறக்கணித்ததினால், தமிழ் இசைவாணர்க்குப் பெரும்பாலும் இசையரங்குகளில் இடமில்லாது போயிற்று. இதனால், தமிழும் தமிழரும் ஒருங்கு கெட்டனர். இன்று வானொலி நிலையங்களில் கூடத் தமிழ் இசைவாணர்க்குப் போதுமான இடமளிக்கப்படுவதில்லை யென்று எங்கும் முறையீடும் கூக்குரலுமா யிருக்கின்றது. நூற்றுக்குத் தொண்ணூற்றெழுவரான தமிழர் இங்ஙனம் தம் உரிமையும் மானமுமிழந்து எருமையினும் உணர்ச்சியற்று, இவ் விருபதாம் நூற்றாண்டில் கூலத்திற்குச் செலவும் ஞாலத்திற்குப் பொறையுமாயிருப்பது எற்றுக்கோ? அழிந்துபோன இசை நாடக நூல்கள் அகத்தியம் (முத்தமிழ் நூல்), பரிபாடல் (தலைச்சங்க இலக்கியம்), பெருநாரை, பெருங்குருகு, இசைநுணுக்கம், வரி, சிற்றிசை, பேரிசை, இந்திரகாளியம், தாளசமுத்திரம், தாளவகை யோத்து , சச்சபுட வெண்பா, பஞ்சமரபு, பஞ்ச பாரதீயம் முதலிய பண்டை இசைத்தமிழ் நூல்களும்; முறுவல், குணநூல், சயந்தம், செயிற்றியம், கூத்தநூல், மதிவாணனார் நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து (இலக்கியம்), சுத்தானந்தப் பிரகாசம், பரதம், பரத சேனாபதியம் முதலிய பண்டை நாடகத்தமிழ் நூல்களும் அந்தோ! அயலார் சூழ்ச்சியால் மீட்பற இறந்தொழிந்தன. இப்போதுள்ள இசைத்தமிழ் இலக்கியம் பரிபாடல், தேவாரம், நாலாயிரத் தெய்வப் பனுவல், திருப்புகழ் , தேவபாணி, வரிப்பாடல், குரவைப்பாடல், முத்துத்தாண்டவர் வேதநாயகம் பிள்ளை முதலியோர் கீர்த்தனைகள், சீகாழி அருணாசலக் கவிராயர் இராம நாடகக் கீர்த்தனை, கோபாலகிருட்டிண பாரதியார் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து, வழிநடைப் பதங்கள், நொண்டிச் சிந்துகள், தில்லானா, தென்பாங்கு முதலிய பல இசைத்தமிழ் இலக்கியங்களும் பாடல்களும் இதுபோது தமிழிலுள்ளன. இன்னும் வேண்டிய வகைகளெல்லாம் வேண்டியவாறே தமிழில் ஆக்கிக் கொள்ளலாம்; இன்று ஆக்கப்பட்டும் வருகின்றன. இசைக்கு மொழிவரையறை யுண்மை இசையானது ஒலிவடிவாய் வெளிப்படும் ஒருவனது மகிழ்ச்சிப் பெருக்கம். அம் மகிழ்ச்சியைத் தன் தாய்மொழிச் சொற்களால் அறிவிக் கின்றான் நாகரிக மாந்தன். ஊமையரும் விலங்கு பறவைகளும் பேச்சின்மையால் ஒலிவடிவாய் மட்டும் மகிழ்ச்சியைக் காட்ட முடியும். ஒருவனது இசை கருத்தோடு கூடியிருப்பின், அஃது உணர்ச்சியுள்ளதும் உண்மையானதும் உயர்ந்ததுமாயிருக்கும். ஒருவரது கருத்து, தாய் மொழியிற் போல வேறெம் மொழியிலும் சிறக்க வெளிப்படாது; அறியாத மொழி யாயின் வெளிப்படுத்தவே முடியாது. மனிதனின் சிறந்த பேறுகளில் ஒன்றானதும் அவனை உயர்திணைப்படுத்துவதும் மொழியாம். அதை அவன் பயன்படுத்தாவிடின் கடைப்பட்ட அறிவிலியும் அஃறிணையு மாகின்றான். இசை ஒருவரது உள்ளத்தை உருக்கும் தன்மை வாய்ந்த தாதலின், அதைக் கடவுள் வழிபாட்டிற்கும் ஊடல் தீர்ப்பிற்கும் தொன்று தொட்டுப் பயன்படுத்தி வருகின்றனர். விளங்காத மொழியில் கடவுளை வேண்டின் அஃது உளறுவது போல்வதோடு கடவுளைப் பகடிசெய்து பழிப்பதுமாகின்றது. இசையினால் பாடுவார்க்கு மட்டுமன்றிக் கேட்பார்க்கும் இன்பம் விளைகின்றது. விளங்கும் மொழியில் பாடினால்தான் கேட்பார்க் கும் இன்பம் விளையும். பருந்தும் நிழலும் போலப் பொருளும் பண்ணும் பொருந்தியிருக்கும் உயர்ந்த இசையைப் பண்பட்ட தமிழன்தான் நுகர முடியும்; அயலார் நுகர முடியாது. ஆகையால், அவர் அதைக் குறை கூறுவது பொருந்தாது. மேனாட்டிசைக்கு அராகம் (ஆளத்தி), தாளம், சுரம் பாடல் என்ற மூன்றுமில்லை; மெட்டுகள்தா முண்டு. ஐரோப்பாவில் இத்தாலி இசைக்குச் சிறந்தது. ஐரோப்பா முழுதும் வழங்குவது ரோம-கிரேக்க இசையே. அவ் விசையே பண்டைக் காலத்தில் இங்கிலாந்திற்குச் சென்றது. ஆங்கில இசைக் குறியீடுகளெல்லாம் இலத்தீன்-கிரேக்கச் சொற்களே. எ-டு: music - Gk. mousike, gamut (Gk.), solo(It.), soprano(It.), chorus (L.,Gk.), choir (F.,L.Gk.), Tune.tone,Gk. tonos. இங்ஙனமிருந்தும் மெட்டு வேறுபாட்டிற்காக ஓரிரு செருமானிய இத்தாலியப் பாட்டுகளைக் கேட்கிறார்களேயன்றி முற்றிலும் அயன்மொழிப் பாட்டைக் கேட்பதில்லை. ஆகையால், அயன்மொழிப் பாட்டைத் தழுவுமாறு பொருந்தாத ஆங்கில உவமங்கூறித் தமிழரை ஒருவர் ஏமாற்றப் பார்ப்பது தம் அறியாமையை வெளிப்படுத்துவதாகும். தெலுங்கர் வாளா(சும்மா) இருப்பவும், தெலுங்கறியாத, தமிழையே தாய்மொழியாகக் கொண்ட ஒரு சிறு குழுவார் இசைத்தமிழை எதிர்த்துக் கூக்குரலிடுவது அவர்க்குத் தமிழ்மீதுள்ள நச்சுப் பகைமையையன்றி வேறெதைக் காட்டுகின்றது! தமிழனாயிருந்தால் தமிழ்ப்பாட்டை வெறுக்கவும் முடியுமா? தீட்டிய மரத்தில் கூர்பார்த்தலும் கொல்லத் தெருவில் ஊசி விற்றலும் இந்து தேசத்து இசைக்கே இசைத்தமிழ்தான் அடிப்படை. முதலாவது இசைத்தமிழ் வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. கேள்வியைச் ச்ருதி என்றும் நிலையை ஸ்தாய் என்றும் மொழிபெயர்த்தனர். பண்களுக்கெல்லாம் தமிழ்ப்பெயரை நீக்கி ஆரியப்பெயரை இட்டுத் தமிழ்நாட்டிலும் வழங்கச் செய்தனர். ராகம் என்பது அராகம் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு. ஒ.நோ: அரங்கன்-ரங்கன். சுரம் தாளம் பாணி என்பவையும் தமிழ்ச்சொற்களே. இந்துத்தானி இசை இசைத்தமிழின் திரிபே. அக்பர் அவைக்களத்தில் தென்னாட்டு இசைத்தமிழ்வாணரும் இருந்தனர். இந்துத்தானி இசையிலும் சுரம் தாளம் அராகம் என்பவற்றிற்குத் தென்னாட்டிசையில் இன்று வழங்கும் பெயர்களே வழங்கிவருகின்றன. கருநாடக இசை இசைத்தமிழே. புரந்தரதாஸ் என்பவர் கன்னடத்தில் சில கீர்த்தனைகள் இயற்றினார். மகமதியர் தென்னாட்டிற்கு வந்தபோது திரவிட நாட்டில் தமிழரசர் வலிகுன்றிக் கருநட மன்னர் தலைமையாயிருந்ததால், திரவிட நாட்டைக் கருநாடகம் (கர்நாட்டக்) என்றும் திரவிட இசையாகிய தமிழிசையைக் கருநாடக சங்கீதம் என்றும் அழைத்தனர். கருநாடகம் என்னும் சொல்லும் கருநடம் (கன்னடம்) என்னும் மொழியும் தமிழின் திரிபே. ஆகவே, இசைத்தமிழே உருமாறியும் குறியீடு மாறியும் இந்துத்தான் கருநாடக இசைகளென வழங்கி வருகின்றது. சிலபல புதுமெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதினால், அவை வேறிசையாகா. இடைக்காலத்தில் தமிழர் ஊக்கப்பட்டிருப்பின் அவரும் புதுமெட்டுகள் கண்டுபிடித்திருப்பர். ஐயருக்கு முந்தின மெட்டுகளெல்லாம் தமிழ் மெட்டுகளே. இந்துத்தானிசை கருநாடக இசை தெலுங்கிசை என்பவை யெல்லாம் மொழியால் வேறுபட்டவையே யன்றி இசையால் வேறுபட்டவை யல்ல. அவற்றை அவ்வம் மொழிப்பெயரால் இன்னின்ன பாட்டென்று சொல்லுதலேயன்றி இசையென்று அழைத்தல் தகாது. இசைத்தமிழ்க் கலையே மொழி வேறுபாட்டால் வெவ்வேறு பெயர் பெற்று வழங்கி வருகின்றதென்க. இசை வேறு; பாட்டு மொழி வேறு. மலையாளத்தில் சில பாட்டுகளிருப்பதால் மலையாள இசை என ஒன்று ஏற்படாது. ஆகவே, இதுபோது தமிழ்நாட்டிலுள்ள இசை, கலையால் தமிழும் மொழியால் பிறிதும் ஆகும் என்றறிந்து தீட்டிய மரத்திற் கூர்பாராமலும் கொல்லத் தெருவில் ஊசி விற்காமலும் இசைத்தமிழை ஆர்வத்துடன் தழுவுக. தமிழ் வாழ்க! இசைத்தமிழ் வாழ்க! வளவர்கோமான் செட்டி நாட்டரசர் சர் அண்ணாமலை வள்ளலார் நீடூழி வாழ்க! பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். (குறள். 573) - ``செந்தமிழ்ச் செல்வி'' நளி 1943 12 கடிசொலில்லை காலத்துப் படினே ``கடிசொ லில்லை காலத்துப் படினே'' (எச்ச. 56) என்பது ஒரு தொல்காப்பியச் சூத்திரம். இதற்குச் சேனாவரையர் உரை வருமாறு: இதன் பொருள்: இவை தொன்றுதொட்டன வல்லனவென்று கடியப் படுஞ் சொல்லில்லை; அவ்வக் காலத்துத் தோன்றி வழங்கப்படு மாயின் என்றவாறு. உதாரணம்: சம்பு, சள்ளை, சட்டி, சமழ்ப்பு என வரும். இவை தொன்றுதொட்டு வந்தனவாயின், முதலாகாதனவற்றின்கண் சகரக் கிளவியு மவற்றோ ரற்றே அ ஐ ஔவெனு மூன்றலங் கடையே (தொல். எழுத்து. 62) என விலக்கார் ஆசிரியர்; அதனான் அவை பிற்காலத்துத் தோன்றிய சொல்லேயாமென்பது. இஃது எழுவகை வழுவமைதியுள் ஒன்றாகாது ஓர் பாதுகாவலாதலிற் கிளவியாக்கத் தியைபின்மையான் ஈண்டுக் கூறினாரென்பது. இனி ஒரு சாராருரை: இன்ன அநுவதிக்குங் காலமா மக்காலத்து, அவை வழுவன்மை எல்லா ஆசிரியர்க்கும் உடம்பாடாகலின், அதனைத் தழுவிக்கொண்டவாறென்க. இவை யிரண்டும் இச் சூத்திரத்துக்குப் பொருளாகக் கொள்க. இனி ஒன்றென முடித்தலாற் புதியன தோன்றினாற் போலப் பழையன கெடுவனவும் உளவெனக் கொள்க. அவை அழான் புழான் முதலியனவும், எழுத்திற் புணர்ந்த சொற்கள் இக்காலத்து வழங்காதனவுமாம். தன்னுரையும் மன்னுரையுமாகச் சேனாவரையர் கூறிய ஈருரைகளுள், முன்னுரையே சூத்திரத்திற்குப் பொருந்திய உண்மையுரையாம். சம்பு சள்ளை சட்டி சமழ்ப்பு என்னுஞ் சொற்கள், தொல்காப்பியராற் கொள்ளப்படாவிடினும் அல்லது தொல்காப்பியர் காலத்து வழங்கவே யில்லை யென்று (ஒருசாரார் கொள்கைப்படி) கொள்ளினும், அவை தூய தென்சொற்கள் என்பதை எவரும் மறுக்கமுடியாது. சம்பு என்பது ஒருவகைக் கோரை. சம்புதல் என்பது எரிதல். சம்பு-சாம்பு-சாம்பல். சாம்பன்-சாம்பான் = பிணத்தைச் சுடுபவன். அவ்வக் காலத்தில் தோன்றும் புதுச் சொற்களைத் தழுவிக்கொள்ள வேண்டுமென்னும் விதியைக் கூறும் வேறொரு தொல்காப்பியச் சூத்திரம், குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும் மரம்பயில் கூகையைக் கோட்டான் என்றலும் செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும் வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும் குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும் இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும் எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும் முடிய வந்த அவ்வழக் குண்மையின் கடிய லாகா கடனறிந் தோர்க்கே (மரபு. 69) என்பது இதன் பொருள் வெளிப்படை. இதன் உரையில், பேராசிரியர், `கடனறிந்தோர்' என்றதனான், வழக்கினுஞ் செய்யுளினும் அவை வந்தமையிற் கடப்பாடறிவோர்க்குக் கடியலாகாதென்றவாறு. இன்னும் இப் பரிகாரத்தாலே கோழியை வாரணமென்றலும், வெருகினை விடையென்ற லும் போல்வன பலவுங் கொள்க. அவை, கான வாரண மீனுங் காடாகி விளியு நாடுடை யோரே (புறம். 52) வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ (திருமுருகு. 21) வெருக்கு விடையன்ன வெருணோக்குக் கயந்தலை (புறம். 324) என வரும், எனக் கூறியுள்ளார். இச் சூத்திரத்திலும் இதனுரையிலும் காட்டப்பெற்ற சொற்கள் யாவும் தூய தமிழ் என்பது வெளிப்படை. கடுவன் = கடுமையானது. கோட்டான் = கோட்டில் வசிப்பது. கோடு = மரக்கிளை. தத்தை = இலை காய் கனியொடு தொத்திக் கொண்டு கிடப்பது. தொத்துதல் = ஒட்டுதல். உடுமீன் தொத்தப் பொலிகன கக்கிரி (கம்பரா. பிரமாத். 117) தொத்துதல் = தொங்குதல். செச்சைக் கண்டத் தொத்தூன் போல (ஞானா. பாயி. 5, 12) இவ் விரு பொருளும் தத்தைப் பெயர்க்குப் பொருந்தும். தொத்து-தொத்தை-தத்தை. பூசை என்பது வீட்டுப்பூனை. பூசு-பூசை-பூனை-பூஞை. நிலத்திற் பூசினாற்போல மெத்தென்று நடப்பது பூசை. பூனையைப் பூசு பூசு என்றழைப்பது நெல்லை வழக்கு. சேவல் என்பது பொதுவாய் ஆண்பறவையைக் குறிப்பினும், ஆண் விலங்கையும் குறிப்பதற்குச் சிறிதும் விலக்கில்லை. சேவல் என்பதன் மூலமான சே என்னுஞ் சொல் விலங்கின் ஆணைக் குறித்தல் காண்க. சே = காளை. சேங்கன்று = காளங்கன்று, ஆண்கன்று. சே-சேவு-சேவல். ஏனம் = கரிய விலங்கு, பன்றி. இருமை = கருமை. இரு - எரு - எருமை = கரிய மாடு. இரு - இனு - எனு - ஏனு - ஏனம். ஏனு - ஏனை - யானை. தெலுங்கில் எருமையை எனுமு என்றும், யானையை ஏனுக என்றும் கூறுதல் காண்க. யானையை ஏனையென்று இன்றும் தென்னாட்டுக் குடியானவர் கூறுவர். கண்டி = கடுமையானது. கண்டம் = கடுமை, கொடுமை. கண்டன் = கொடியவன். ஆணெருமை மிகக் கொடியது. அதன் கொடுமையை இயற்கைநிலையில்தான் காணமுடியும். புலியினும் மடங்கலினும் காட்டெருமை கொடிதா யிருத்தல்பற்றியே, அது கூற்றுவனுக்கு ஊர்தியாகக் கூறப்பட்டதென்க. எருமைமறம் என்று புறப்பொருள் வெண்பா மாலையும்(7 : 13), ஒருவ னொருவனை யுடைபடை புக்குக் கூழை தாங்கிய எருமையும் (பொருள். 72) என்று தொல்காப்பியமும் கூறும் புறத்துறையை நோக்குக. வாரணம் = நிலத்தையும் குப்பையையும் வாரிக் கிளைப்பது. கோழி என்னும் பெயரும் இப் பொருளுடையதே. விடை = பருத்தது, பருத்த ஆண்விலங்கு. விடைத்தல் = பருத்தல். விலங்கிலும் பறவையிலும் ஆண் பருத்திருத்தலைக் காண்க. இச் சொற்களெல்லாம் தூய தென்சொற்களா யிருத்தலாலேயே கடிய லாகா கடனறிந் தோர்க்கே என்றார் தொல்காப்பியர் . இதனால், அவ்வக் காலத்துத் தோன்றும் புதுப்புது சொற்களெல்லாம் தூய தென் சொற்களா யிருந்தால், அவற்றை விலக்குதல் கூடாது என்பதே, கடிசொ லில்லை காலத்துப் படினே என்னும் சூத்திரத்தின் பொருளாகும். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே (நன். 462) என்னும் பொருளும் இதுவே. இக்காலத்துத் தோன்றிக் கடியலாகாச் சொற்கள், மளிகை (பலசரக்குக் கடை), செயலாளன், சொற்பொழிவு, மாநாடு, தேர்வு(பரீட்சை) முதலியன. மாந்தர் என்னும் சொல்லின் ஒருமை வடிவம் வழங்கிய பண்டை நூல்கள் இறந்துபட்டமையின், சில புலவர் மாந்தன் என்னும் சொல்லை ஏற்றுக்கொள்கின்றிலர். பலர்பாற் சொல்லினின்று ஒருமைச் சொல்லை வகுத்துக் கொள்வதற்குப் புலமை வேண்டுவதில்லை; பகுத்தறிவே போதியதாகும். சிலர் புலவர், அல்லது புலவர் சிலர் என்று வழங்கிய பண்டை வழக்கு வீழ்ந்து, இன்று சில புலவர் என்னும் வழக்கு எழுந்துள்ளது. சில என்னும் சொல் அஃறிணை வடிவின தென்னுங் காரணத்தினால், அறிஞர் சிலர் அதனை ஏற்கின்றிலர். ஆயினும், நல்ல, பெரிய, வந்த, போன முதலிய அகரவீற்றுக் குறிப்புப் பெயரெச்சங்களும் தெரிநிலைப் பெய ரெச்சங்களும் போல, சில பல முதலிய அகரவீற்றுக் குறிப்புப் பெய ரெச்சங்களும் கொள்ளப்படுவதற்குத் தடையில்லை யென்க. இவையும் இன்னோரன்ன பிறவுமே கடிசொ லில்லை காலத்துப் படினே என்னும் சூத்திரத்தால் தழுவப்படுமேயன்றி, `சபாஷ்', `சலாம்' என்ற சொற்களும் இவைபோன்ற பிறவுமல்ல என்பது, தமிழரும் தமிழ் மாணவரும், தமிழ்ப் புலவரும் கவனித்தறிவாராக. சபாஷ் சலாம் என்ற உருதுச் சொற்கள் இற்றைக்கு 300, 400 ஆண்டு கட்கு முன்னரே சிறந்த தமிழிலக்கியங்களில் இடம்பெற்றுவிட்டன என்று சில புலவர் கருதுகின்றனர். தமிழில் சொற்கள் தழுவப் பெறுதற்கு அவற்றின் தகுதியும் தூய்மையும் காரணமாகுமேயன்றி, அவை வழங்கும் 300, 400 ஆண்டுக்காலம் காரணமாகாது . அங்ஙனம் காலம் காரணமாயின், 23ஆம் நூற்றாண்டில் தழுவப்படுமாறு இன்று எவரும் எத்துணை அயன்மொழிச் சொற்களையும் தமிழிற் புகுத்தலாமே! இனி, சபாஷ் சலாம் என்ற உருதுச் சொற்களைத் தமிழிற் புகுத்தியவர் புலவர் பெருமக்கள்(அருணகிரிநாதரும், குமரகுருபரரும்) என்று ஒரு காரணங் காட்டுகின்றனர், அவற்றைத் தழுவ விரும்பும் தமிழ்ப்புலவர். இத்தகைய இடர்ப்பாட்டு நிலைகளில், தமிழ் சிறந்ததா, தமிழில் வீணாக அயற்சொற்களைப் புகுத்தி அதன் தூய்மையைக் குலைக்கும் புலவர் சிறந்தவரா என்று நோக்குதல் வேண்டும். தமிழ்ப்புலவரினும் தமிழ் சிறந்தது என்பதை எவரும் மறுக்கார். மேலும், அருணகிரிநாதரும் குமருகுருபரரும் இருந்த காலம் சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் இல்லாத காலம். வடமொழி உண்மையில் தேவமொழி யென்றும், தமிழ் அதன் கிளைமொழியென்றும், வடசொற்கள் கலப்பது தமிழுக்குப் பெருமை என்றும் கருதப்பட்ட காலம்; பல துறைகளில் பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தாது தமிழன் தன்மான மற்றிருந்த காலம். இத்தகைய நிலையில் வேண்டாது புகுத்தப் பெற்ற அயற்சொற்களை அளவையாகக் கொள்வது, தமிழறிஞர்க்குச் சற்றும் பொருந்தாது. எம்மொழியிலாயினும் ஒருபொருட்கு அல்லது கருத்திற்குச் சொல் லிருக்கும்போது, அதை நெகிழவிட்டு அதற்கீடாக அயற்சொல்லை மேற் கொள்வது அறிவுடைமையாகாது. தமிழுக்கோ இவ் வரம்பு மிகக் கண்டிப்பானது. அயற்சொற்களால் மட்டுமன்றி அயன்மொழிகளாலும் அளவிறந்து நெருக்குண்டு, இருப்பதா இறப்பதா என்னும் நிலையில் தமிழ் தத்தளிப்பது இக்காலம். இத்தகைய நெருக்கடியான நிலையில், பொறுப்பு வாய்ந்த புலவர் தமிழின் தூய்மையையும் நிலையையும் காக்கவேண்டியது கடன். தமிழுக்குக் கேடான பல அயல்நாட்டுக் கருத்துகள் தமிழரின் உள்ளத்திற் குடிகொள்ளத் தொடங்குங்கால், அவற்றைப் பெயர்த்தெறிவது தமிழ்ப் புலவர் கடமையாயிருக்க, அங்ஙனம் செய்யாது அவற்றை மேன்மேலும் வேரூன்றச் செய்வது அவர்க்குத் தகுமா? எது தமிழ் என்றும், எங்ஙனம் தமிழை வளர்த்தல் வேண்டும் என்றும், அறியாது மாணவர் இடர்ப்படும் இக்காலத்தில், தமிழ்ப் புலவரே தமிழைத் தளர்த்தற்கு அடிகோல்வது எத்தகைய கேடான செயல். தமிழின் தொன்மை முன்மை தாய்மை தலைமை முதலிய பண்புகளை அறிதற்குப் பிற்காலத் தமிழாகிய புராணத் தமிழும் கல்வெட்டுத் தமிழும் உறுதுணை செய்யா; மேற்கணக்கு நூல்களையும் உழவர் தமிழையும் நோக்குதல் வேண்டும். இங்ஙனம் நோக்காது மனம் போனவழி பேசுவதும் எழுதுவதும், ``ஒருவனுக்குப் பகைவர் அவன் வீட்டாரே'' என்னும் மறைமொழியையே மெய்ப்பிக்கின்றது. ஏதேனும் ஒரு புதுக்கருத்துத் தோன்றினால் அல்லது கொள்ளப்பட் டால், அதற்கு ஏற்கெனவே உள்ள பழஞ்சொல்லினின்றே புதுச்சொல் திரித்துக்கொள்ள வேண்டும். இதுவே திருந்திய மொழியிற் கையாள வேண்டிய நெறிமுறையாகும். Radius என்னும் பழஞ் சொல்லினின்று Radio என்னும் புதுச்சொல், ஆங்கிலத்தில் திரிக்கப்பட்டிருத்தல் காண்க. புதிய மேலைக் கலைக்கருத்துகளை யுணர்த்தத்தக்க புதுச் சொற்களை ஆக்கிக்கோடற்கு வேண்டிய கருவிச் சொற்கள், தமிழில் நிரம்பவுள. புதுக்கருத்துகளை யுணர்த்தும் புதுச்சொற்களைப் புனைதற்கே தமிழ் வளம்பெற்றிருக்கும்போது, பழங்கருத்துகளை யுணர்த்தும் பழஞ்சொற்களைத் தள்ளிவிட்டு அவற்றுக்குப் பதிலாக அயற்சொற்களைப் புகுத்தித் தமிழின் தூய்மையைக் குலைத்தற்குத் தமிழ் எங்ஙனம் இடந்தரும்! ஆகவே, சபாஷ் சலாம் என்ற அயற்சொற்களால் தமிழுக்குப் பெருந் தீங்கேயன்றிச் சிறு நன்மையுமில்லை யென்றும், தமிழில் அயற்சொற் புகுத்துவதை விரிந்த மனப்பான்மை யென்று வியப்பவர் விலைமகளின் விரிந்த மனப்பான்மையை வியப்பவரே என்றுங் கொள்க. - ``செந்தமிழ்ச் செல்வி'' மே 1949 13 புது மணிப்பவளப் புன்மையும் புரைமையும் அந்தோ! நிறைபுல மறைமலையடிகள் போலும் மும்மொழிச் செம்மலும், வேங்கடசாமி நாட்டார் போலும் விழுத்தமிழ்ப் புலவரும், சுந்தரம் பிள்ளை போலும் மெய்ப்பொருட் பேராசிரியரும், பூரணலிங்கம் பிள்ளை போலும் ஆங்கிலப் பேராசிரியரும், இராமசாமிக் கவுண்டர் போலுங் கல்லூரி முதல்வரும், மகிழ்நன்(சந்தோஷம்) போலும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியரும், பவானந்தம் பிள்ளையும், துடிசை கிழார் என்னும் துடிப்புமிக்க சிவனியத் தமிழரும் போலுங் காவல் துறைப் பேரதிகாரியும், சோமசுந்தரம் பிள்ளை போலும் இலக்கணப் பெரும் புலவரும், மாணிக்க நாயகர் போலும் பொறிவினை மாணிக்கமும், சோம சுந்தர பாரதியும் கா.சு. பிள்ளையும் உமாமகேசுவரம் பிள்ளையும் போலும் வழக்கறிஞரும், இன்று தமிழ் காத்தற்கில்லை. தமிழ்நாடு நால்வாசங் கோட்டை (``நால்வாசங் கோட்டை நாலு பக்கமும் ஓட்டை'') போல நாற்றிசையுந் திறந்த வெளி. அதில் தமிழ்த் துறையோ திறந்த மடம். அதிலுள்ள தமிழ்ப் புலவரோ ஊருக்கிளைத்த பிள்ளையார் கோயிலாண்டி, ஆங்கிலந் தெரிந்தாற் போதும். எவரும் எப் பதவியும் பெறலாம். எங்ஙனமும் எத்துணையுந் தமிழைக் கெடுக்கலாம். அதை எவருஞ் சொல்லப்புகின் உள்ளதும்போம். ஆதலால், ஒருவரும் வாய் திறப்பதில்லை. இதுவே விடுதலை மாட்சிமை. இவ்வுலகில் 18ஆம் நூற்றாண்டு நடுவரை இருந்து வந்தது கைவினை நாகரிகம். அதன் பின்னர்த் தோன்றியது பொறிவினை நாகரிகம். முன்னதைத் தோற்றியவர் குமரிநாட்டுத் தமிழர்; பின்னதைத் தோற்றியவர் ஆங்கிலரும் அவர் வழியினரான அமெரிக்கரும். ஆங்கில ருயர்விற்கும் ஆங்கில வளர்ச்சிக்குங் கரணியங்கள் 1. ஐபீரியர், (அறுவகுப்பாரான) கெலத்தியர், (ஆங்கலர், சாகசனர், சூட்டர் என்னும்) மூவகுப்புச் செருமானியர், தேனியர், நார்மானியர் முதலிய பல்வேறு மக்களினக் கலவையா யிருத்தலும் மதி விளக்கமும். 2. தொழில்பற்றிய குலவகுப்பும் ஒற்றுமையும். 3. பாராளுமன்ற ஆட்சியும், பொதுமக்களும் பெருமக்களாதலும். 4. அடிமைத்தன வெறுப்பும் உரிமை யார்வமும். 5. உருவ வணக்க வொழிப்பும் ஒரு தேவ வழிபாடும். 6. மனவமைதிக்கும் முன்னேற்ற முயற்சிக்கும் துணை செய்யும் ஆங்கில நாட்டுச் சமதட்ப வெப்பநிலை. 7. தீவு வாழ்வும், கலப்படைப் பெருக்கமும், 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் உலகில் 1/3 பங்கைக் கட்டியாண்டு அறிவும் பொருளும் பெருக்கிக் கொண்டமையும். 8. ஆராய்ச்சியாளரையும் பேரறிஞரையும் வள்ளலாரையும் புதுப்புனைவாளரையும் புது நாடு காணியரையும் அரசும் பொதுமக்களும் ஊக்கியமை. 9. இங்கிலாந் தாங்கிலர் 1765-ல் நீராவிச் சூழ்ச்சியப் பொறியும், 1829-ல் இருப்புப் பாதைச் சூழ்ச்சிய வண்டியும், 1831-ல் மின்னாக்கப் பொறியும் புதுப் புனைந்தமையும்; அமெரிக்க ஆங்கிலர் 1835-ல் மின் தொலைவரிப் பொறியும், 1876-ல் தொலைபேசியும், 1876-ல் ஒலிப்பதிவானும், 1878-ல் மின் விளக்கும், 1893-ல் திரைப்படமும், 1903-ல் வானூர்தியும், புதுப்புனைந்தமையும், 1970-ல் திங்களை யடைந்தமையும். 10. 1875-ல் இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வியைப் புகுத்தினமை. 11. தகுதிபற்றிப் பதவியளித்து வருகின்றமை. 12. மூவேறு அரசியற் கட்சிகளும், தாய்மொழியையும் தம் இலக்கியத்தையும் பண்பாட்டையும் உயிர்நாடியாகக் கொண்டு போற்றி வருகின்றமை. தமிழர் தாழ்விற்கும் தமிழின் தளர்ச்சிக்குங் கரணியங்கள் 1. மூவேந்தரும் ஆரியக் குலவொழுக்கத் திட்டத்தையும் கூட்டுமத முறையையும் மேற்கொண்டு, ஒற்றுமையையும் அரசையும் இழந்தமை. 2. வேத மொழியையும் சமற்கிருதத்தையும் திருக்கோயில் வழிபாட்டு மொழியும் வீட்டுச் சடங்கு மொழியுமாக்கித் தமிழைத் தாழ்த்தியமை. 3. ஆரியர் வருகைக்கு முற்பட்ட பல்துறைத் தனித்தமிழிலக்கியம் அனைத்தும் அழியுண்ணவும், பிற்பட்ட நூல்களுட் பெரும் பாலன இறந்துபடவும் விட்டமை. 4. சமற்கிருதச் சொற்களை வேண்டாது வழங்கி, ஆயிரக் கணக்கான அருந்தமிழ்ச் சொற்கள் வழக்கறவும் இறந்துபடவுஞ் செய்தமை. 5. ஒரே பேரினமாயிருந்த தமிழர் ஐம்பதிற்கு மேற்பட்ட அகமணப் பிறவிக் குலங்களாகப் பிரிந்து போனமையும், தத்தம் பெயருக்குப் பின் பிரிவினை முத்திரையாக வெவ்வேறு பொருளற்ற பட்டத்தைச் சேர்த்துக்கொண்டமையும், தமிழருள் தலையாய வகுப்பினரும் தம்மை அயலாருக்குத் தாழ்ந்தவராகக் கருதிக் கொள்ளுதலும். 6. மூவாயிர வாட்டை யடிமைத்தனத்தால், தமிழருள் நூற்றுக் கைம்பது பேர் பகுத்தறிவு தன்மானம் நெஞ்சுரம் ஆகிய மூவகக் கரணங்களை அறவே யிழந்துள்ளமை. 7. ஆங்கிலரும் நயன்மைக் கட்சித் (Justice Party) தலைவரும் கண் திறந்தும் கண்ணை மூடிக் கொண்டமை. 8. சுந்தரம் பிள்ளையும் மறைமலையடிகளும் விழிப்பூட்டி வழி காட்டிய பின்பும், வையாபுரிகளைப் போற்றிப் பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் அமர்த்தி வருதல். 9. சிறந்த புதுப்புனைவாளரான கோவைத் துரைச்சாமி நாயக்கரை ஊக்காது வயிறெரிய வைத்தமை. 10. தமிழ்நாட்டில் இந்தியைப் புகுத்திய இராசகோபாலாச்சாரியாரே, அதன் தீமையுணர்ந்து ஆங்கிலத்தையே இந்தியப் பொது மொழியாக்க அறிவுறுத்தியும், பேராயத் தமிழர் இந்தியைக் குரங்குப் பிடியாய்ப் பிடித்தல். 11. தமிழைத் தி.மு.க அல்லது அ.தி.மு.க மொழியென்று பேராயக் கட்சித் தமிழரும் பிறரும் புறக்கணித்தல். 12. அறிவியல் முறைப்பட்ட கொடிவழி (Geneological) முறை மொழி நூலைப் புறக்கணித்து, தமிழுக்குக் கேட்டை விளைக்கும் வண்ணனை மொழிநூலைத் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களிற் புகுத்தியிருத்தல். தமிழ் உலக முதன்மொழியும் உயர்தனிச் செம்மொழியுமாதலால், மென்மையும் தூய்மையும் அதன் இன்றியமையாத இயல்புகளாகும். குமரிநாட்டுத் தமிழர் வாயில் தோன்றிய ஒலிகள், உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாக மொத்தம் முப்பதே. பிற மொழிகள் பிற்காலத்திலும் வன்புலங்களிலும் தோன்றியமையால், அவ்வக்கால வளர்ச்சிக்கும் நில வியல்பிற்கும் தட்பவெப்ப நிலைக்கும் குரல் வாயமைப்பிற்கும் ஏற்றவாறு சில பல வல்லொலிகள் தோன்றியுள்ளன. ஆயினும், எம் மொழியிலும் எல்லா வொலிகளு மில்லை. இலத்தீன் மொழியில் ஜ, ஷ, ழ, ற முதலியன இல்லை. கிரேக்க மொழியில் ஜ, ஷ, ச, ழ, ற, F முதலியன இல்லை. ஆங்கில மொழியில் ழ,ற முதலியன இல்லை. மிகுந்த ஒலிப் பெருக்கமுள்ள சமற்கிருதத்திலும் எ, ஒ, ழ, ற, ன, F, Z முதலியன இல்லை. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனி ஒலியுடல் உள்ளது. எல்லா மொழிகளிலும் எல்லா வொலிகளையுஞ் சேர்த்தல் இயலாது. சேர்ப்பின் மொழி மாறிவிடும். தமிழிலுள்ள ஒலிகளெல்லாம் மென்மையானவை. அதில் வல்லொலி களைச் சேர்த்து வல்லொலி மொழியாக்க விரும்புவது, மெல்லியலான பெண்மேனியை வல்லியலான ஆண்மேனியாக மாற்ற முயல்வதொத்ததே. தமிழ் முப்பான் மெல்லொலிகளே கொண்டதேனும், நம் முன்னோ ரான குமரிநில மக்கள், தம் நுண்மாண் நுழைபுலத்தால், அக் காலத்தில் மட்டுமன்றி எக்காலத்துந் தோன்றும் புதுப்புதுக் கருத்துகளையெல்லாம் புலப்படுத்தத்தக்க சொற்களைத் தோற்றுவிக்குமாறு, ஏராளமான வேர்ச் சொற்களை யாக்கியுள்ளனர். எடுத்துக்காட்டாகத் தொழிற் பெயரீறுகளை நோக்குக. தமிழிலுள்ள அளவு தொழிற் பெயரீற்று வளம் வேறெம் மொழியிலு மில்லை. ஒரு மொழியின் வளத்தைக் காட்டுவன அதன் சொற்களேயன்றி ஒலிகளல்ல. மொழி தோன்றியது சொற்களாகவேயன்றி எழுத்தொலிகளாக வல்ல. இலக்கணம் ஏற்பட்டபோதே, சொற்கள் எழுத்தொலிகளாகப் பகுக்கப்பட்டன. எ-டு: காகா - காக்கா - காக்கை, காகா - (காக) - காகம். க் + ஆ + க் + ஆ என்று தோன்றவில்லை. சொற்களே பொருளுணர்த்தும்; எழுத்தொலிகளல்ல. ஓரெழுத்துச் சொல்லேயாயினும், பொருளளவிற் சொல்லேயன்றி எழுத்தொலியன்று. பலவெழுத்துச் சொல்லைத் தனித்தனி எழுத்துகளாகப் பகுத்துவிடின், பொருள் தராது. தமிழில் அயலொலி கலத்தல் கூடாதென்பதை யுணர்த்தவே, ``வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே'' (எச்ச. 5) என்று தொல்காப்பியரும், ``இடையில் நான்கும் ஈற்றி லிரண்டும் அல்லா வச்சை வருக்க முதலீ(று) யவ்வாதி நான்மை ளவ்வாகும் ஐயைம் பொதுவெழுத் தொழிந்த நாலேழுந் திரியும்'' (நன்.பத. 19) என்று பவணந்தியாரும், கூறிப் போந்தனர். ஆகவே, சொற்றூய்மை போன்றே ஒலித்தூய்மையும் தமிழுக்கு இன்றியமையாத பண்பாம். தமிழைக் குமரிநாட்டிலேயே செந்தமிழ் கொடுந்தமிழ் எனப் பகுத்து, செந்தமிழையே பேணிவந்தனர். கொடுந்தமிழ் நாடுகளில் வழங்கிய சிறப்புச் சொற்களை மட்டும் திசைச் சொற்கள் (Provincial Words) என்று ஏற்றுக் கொண்டனர். ``இயற்சொற் றாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமை இசைக்குஞ் சொல்லே.'' (தொல். எச்ச. 2) ``செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி.'' ( 4) அக் காலத்துக் கொடுந்தமிழ் நாடுகள் வேறு; தொல்காப்பிய வுரையாசிரியர் கூறும் கொடுந்தமிழ் நாடுகள் வேறு. வெளிநாடுகளினின்று வந்த பொருள்களெல்லாம் செந்தமிழ்ப் பெயர் பெற்றன. உருளைக்கிழங்கு, ஏழிலைக்கிழங்கு, கரும்பு, சாத்துக்குடி, செந்தாழை (அன்னாசி), புகையிலை, மிளகாய் முதலிய நிலைத்திணைப் பொருள்களும், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி, கழுதை, கோவேறு கழுதை (அத்திரி), குதிரை, வரிக்குதிரை, நீர்யானை முதலிய விலங்குகளும்; தீக்கோழி, வான்கோழி முதலிய பறவைகளும்; மிதிவண்டி, புகைவண்டி, சூழ்ச்சிய வண்டி முதலிய ஊர்திகளும்; குண்டுக்குழாய், வைத்தூற்றி, மண்ணெண்ணெய் முதலிய பல்வகைப் பொருள்களும், வெளிநாடுகளி னின்று வந்தவையே. குதிரை ஒன்றே பன்னிரு வகையாக வகுக்கப்பட்டு வெவ்வேறு பெயர் பெற்றுள்ளது. குச்சுக்கிழங்கு இடந்தொறும் பெயர் வேறுபட்டுப் பன்னிரு சொற்களாற் குறிக்கப்படுகின்றன. ஆதலால், வெளிநாட்டுப் பொருள்கட் கெல்லாம் வெளிநாட்டுப் பெயர்களே யிருத்தல் கூடுமென்பது பொருளற்ற உறழாட்டே. பிறமொழிகளெல்லாம், தமிழ்போல் சொல்வளமும் சொல்லாக்க வாய்ப்பும் தூய்மை மரபும் உடையனவல்ல. ஆங்கிலர் கடந்த முந்நூற் றாண்டுகளாகப் புதுப் புனைவுகளால் தம் அறிவைப் பெருக்கிக் கொண் டனர். தம் புத்தறிவுக் கருத்துகளைக் குறிக்கத் தம் மொழியிற் சொல் லின்மையால், இலத்தீன் கிரேக்க மொழிகளினின்று ஏராளமாய்க் கடன்கொண்டு தம் கருத்திற்கேற்பத் திரித்துக்கொண்டனர். எ-டு: புதுக்கருத்து கடன்சொல் திரிப்பு சூழச்சியப்பொறி L. ingenium engine (சூழ்ச்சி) மின் Gk. electron electricity (அம்பர்) இங்ஙனம் ஆங்கிலர் தம் கருத்தையுணர்த்தப் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தியது, பங்கீட்டுக் காலத்தில் மிகுதியாய் அரிசி கிடைக்குமிடத்திற் பையையும், உழவன் தான் விளைத்த கூலத்தைச் சந்தைக்குக் கொண்டுபோக வண்டியையும், இரவல் பெற்றதொக்கும். ஆங்கிலத்தில் மட்டுமன்றி இலத்தீன் கிரேக்க மொழிகளிலும் பல அடிப்படைச் சொற்கள் தமிழாயிருப்பதால், இற்றை ஆங்கில அறிவியற் கம்மியக் கலைக் குறியீடுகளிற் பல தமிழ்ச்சொற்களையே அடிப்படை யாகக் கொண்டும் உள்ளன. மேலும், ஆங்கிலக் கலைக்குறியீடுகளெல்லாம் பல்வேறு வகையில் மிக எளிய முறையில் அமைந்துள்ளன. அம் முறைகளைக் கையாளின், எல்லாக் கலைக்குறியீடுகளையும் தமிழிற் செவ்வையாக மொழிபெயர்த்துக் கொள்ளலாம். என் புதிய வெளியீடான ``மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை'' என்னும் பொத்தக முடிவுரையில் இவ் வுண்மைகளெல்லாம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஆண்டுக் கண்டு தெளிக. தமிழ்நாட்டரசு சட்டத்துறை தவிர வேறெதிலும் குறியீடுகளை மொழிபெயர்க்க இதுவரை எத்தகை முயற்சியும் செய்யவில்லை. காலஞ் சென்ற இ. மு. சுப்பிரமணியப் பிள்ளை போன்ற தனிப்பட்ட தமிழ்ப் புலவரும், கிண்டி, கோவை, காரைக்குடி அண்ணாமலை நகர் முதலிய இடங்களிலுள்ள கல்லூரி மாணவருமே, தம் அளவிறந்த தமிழ்ப் பற்றினால், ஆட்சிச் சொற்களையும் பல்வேறு அறிவியற் குறியீடுகளையும் தொகுத்தும் மொழிபெயர்த்தும் உள்ளனர். அரசு அவற்றையெல்லாம் தொகுத்து அளவைப்படுத்தி, ஆட்சிச் சொற்களைப் போன்றே பிறவற்றையும் ஆட்சிக்குக் கொண்டுவருதல் வேண்டும். இதற்காகத் தக்காரைக் கொண்ட ஒரு நிலையான குழுவையும் அரசு அமர்த்துதல் வேண்டும். மூவேந்தரும் ஆரியக் கொள்கைகளைத் தழுவியபின் தனித்தமிழ்க் காவலரான புலவர் மரபு அற்றுப் போனதினால், 10ஆம் நூற்றாண்டிலிருந்து வடசொற்கள் தமிழில் வரைதுறையின்றிப் புகுந்து தமிழ்ச்சொற்களை வழக்கு வீழ்த்தவும் தமிழைக் கலவை மொழியாக்கவும், தொடங்கின. வடமொழி வெறியரான மாலிய(வைணவ)ப் பிராமணர், நாலாயிரத் தெய்வப் பனுவல்களின் உரைகளையும் மாலியக் கோட்பாடுகளையும் வடசொல்லுந் தென்சொல்லுங் கலந்த மணிப்பவள நடையிலேயே வரைந்து வந்தனர். அது தமிழில் விளக்க முடியாத மாலிய மருமங்களை (இரகசியங்களை) அறிய விரும்பிய அறிஞர்க்குமட்டும் வரையப்பட்ட தன்று. தமிழ்நாட்டு மாலியர் சிறுபான்மையராதலால், அது தமிழைப் பெரிதுந் தாக்கவில்லை. ஆயினும், 11ஆம் நூற்றாண்டில் எழுந்த வீரசோழியம் என்னும் புத்தமித்திரன் புன்னூல், ``இடையே வடவெழுத் தெய்தின் விரவியல் ஈண்டெதுகை நடையேது மில்லா மணிப்பிர வாளநற் றெய்வச்சொல்லின் இடையேமுடியும்பதமுடைத்தாம்.......'' (வீர. அலங். 40) என்றுநுவலுமளவுதமிழ்தாக்குண்ணவபட்டது. “கி.பி. 9ஆம்நூற்றாண்டிற்குப்பிறகுமிதமிஞ்சியவடமொழிக்கலப்பால்கேரளஇலக்கியத்தின்ஒருபகுதிமணிப்பிரவாளநடையில்எழுதப்பட்டது. பண்டைய வட்டெழுத்தின் இடத்தில் ஆரிய எழுத்து இடம் பெற்றது. கி.பி. 12ஆம் நூற்றாண்டளவில் மணிப்பிரவாள இலக்கியங்கள் தோன்றின. வைசிக தந்திரம், உண்ணுநீலி சந்தேசம், உண்ணிச்சிரிதேவி சரிதம், உண்ணியச்சி சரிதம், அனந்தபுர வர்ண்ணனம், ஆகியநூல்கள்லீலாதிலகத்திற்குமுன்னர்த்தோன்றியமுக்கியமானமணிப்பிரவாளஇலக்கியங்கள்.இவற்றை அடிப்படையாகஅமைத்துவடமொழியில்எழுதப்பட்டதே,கி.பி.14ஆம் நூற்றாண்டில் எழுந்த லீலா திலகம் என்ற மணிப்பிரவாள இலக்கணம்.” (தமிழ் லீலாதிலகம், முன்னுரை, பக். 6-7).இன்று இரண்டொருவர் அல்லது ஒருசிலர் விரும்பும் மணிப் பவளமோ, லீலாதிலகம், போலாது, வடமொழியும் ஆங்கிலமும் அவற்றின் சிறப்பெழுத்தொடு தமிழிற் கலக்கும் இருமடி மணிப்பவளம் அல்லது மும்மணிக் கலவை. சேர வேந்தர் குடி அற்றபின், மலையாள நாட்டில் தலைமையாக விருக்கும் நாயர் வகுப்பைச் சேர்ந்த மன்னரும் மக்களும் ஆரியத்திற்கு முற்றும் அடிமைப்பட்டுப் போனதினால், சேரநாட்டுச் செந்தமிழ் முன்பு கொடுந்தமிழாக மாறிப் பின்பு தெலுங்கு கன்னடம் முதலிய திரவிட மொழிகளினுங் கேடாகச் சிதைந்து, மணிப்பவள மொழியாக வழங்கி வருகின்றது. இனி, தமிழ் மும்மொழிக் கலவையாயின், எந்நிலை யடையுமோ, இறைவனுக்குத்தான் வெளிச்சம். மாந்தன் பேசக் கற்றதிலிருந்து தொடர்ந்து படிப்படியாக முழு வளர்ச்சியடைந்து கடந்த ஐம்பதினாயிரம் ஆண்டுகளாக வழங்கிவரும் ஒப்புயர்வற்ற தன்னந்தனித் தூய தமிழை, மறைமலையடிகள் போன்ற நிறை புலவர்க்கும் மாற்றவும் சிதைக்கவும் அதிகாரமில்லை. அங்ஙனமிருக்க, தமிழ்ப் புலமையும் தமிழாராய்ச்சியும் தமிழ்ப் பற்றுமில்லாத ஒருசிலர் தமிழை உருத் தெரியாது மாற்ற உரிமையுடையரோ? 20-5-1978 அன்று, ``திருச்சிராப்பள்ளித் தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் திரு. நா. ஞானசம்பந்தம் அவர்கள், தமிழில் உள்ள சொற்கள் அனைத்துக்கும் வேர் இருக்கின்றது என்று கண்டுபிடித்திருப்பதாக, நான்கு நாள்கட்குமுன் வந்தவர்கள் சொன்னார்கள். ஒரு பக்கம் அறிஞர் சிலர் இவ் வகையில் ஆராய்ந்து வரும்போது, கொச்சைத்தமிழ் நடையும் மணிப் பிரவாள நடையும் மறைமலையடிகள் கொள்கைக்கு மாறாகப் பெருகி வருவது வருந்துதற்குரியது. புலவர்கள், பேராசிரியர்கள் கவனிக்கின்றார்க ளில்லை'' என்று வருந்தி எனக்கெழுதிய தாமரைச் செல்வர், திடுமென்று மனந்தடுமாறி, ``ஆழ்ந்து எண்ணிப் பார்ப்போமானால், பல்துறை அறிவியல் அறிவையுந் தமிழில் கொடுப்பதற்கு, நாமும் பிற மொழியினரைப்போல அறிவியல் கலைச்சொற்களை அப்படியே எடுத்துக்கொண்டு, தமிழியல் புகட் கேற்ப அமைத்து அறிவியல் நூல்களை ஆக்கிக் கொள்வதே தக்க வழியாகும்,'' ``கலைச்சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டு தனித்தமிழில் நூல்கள் ஆக்கவேண்டுமே யல்லாது, வழக்கத்திலுள்ள பொதுவான தமிழ்ச் சொற்களையும் கைவிட்டுப் பிறமொழிச் சொற்களைக் கூட்டியும் கொச்சைச் சொற்களைப் புகுத்தியும் இலக்கணப் பிழையுறவும் எழுதுதல் கூடாது.'' என்று மேழச் `செல்வி' ஆசிரியவுரை வரைந்திருப்பது, ஒரு கன்னி சிலரொடு மட்டும் சிலமணிநேரம் கூடி விளையாடிவிட்டு, ஏனைப்பொழுதெல்லாம் தன் கற்பைக் கண்டிப்பாய்க் காத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வது போலிருக்கின்றது. இனி, ஆடவைச் `செல்வி' யிதழில், `புதிய முத்தமிழ்'க் கட்டுரையின் கீழ், ``இக் கட்டுரையில், ஆசிரியர் வடமொழி எழுத்துகளை அறிவியல் சொற்களைத் தமிழில் எழுதுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்று, அறுதியிட்டுக் கூறுவதை நோக்குக. இலக்கிய நடைக்கு இவ் வெழுத்து களைப் பயன்படுத்தக்கூடாது என்று, கண்டிப்பாகக் கூறுவதை வரவேற்க லாம்'' என்று தாமரைச் செல்வர் குறிப்பு வரைந்திருப்பது, இந்தியை ஆட்சிக்கும் எழுத்துப் போக்குவரத்திற்குந்தான் பயன்படுத்த வேண்டும்; இலக்கியத்திற்குப் பயன்படுத்தக் கூடாது, என்று சொல்வது போன்றே யிருக்கின்றது. பாடப் பொத்தகங்களும் ஒருவகை இலக்கியமே என்பதை அவரறியாதது வருந்தத்தக்கது. இன்று பாடப் பொத்தகத்திற்கு நேர்வதே நாளை இலக்கியத்திற்கும் நேரும். அதன்பின் இடைக்கால நிகண்டுகள் போல, அகரமுதலிகளும் அயன்மொழிச்சொற்களை யெல்லாம் அவற்றின் சிறப்பெழுத்துகளுடன், ``நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலக மாதலின் இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்'' (மரபு. 90) என்று கி.மு. 7ஆம் நூற்றாண்டிலேயே, தொல்காப்பியம் ஓம்படை கூறியிருத்தல் காண்க. இன்னும் மூவாண்டுள், `செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் நெறிமுறைகள்' என்னும் நூல் உருவாகும். அதன்பின், அதைப் பின்பற்றி, எப் புதுச் சொல்லும் புனைந்து கொள்ளலாம்; எக் கலைக் குறியீட்டையும் மொழி பெயர்க்கலாம். அதுவரை பொறுமையாயிருத்தல் வேண்டும். ஆட்பெயர், இடப்பெயர் முதலிய மொழிபெயர்க்கக் கூடாத சிறப்புச் சொற்களையும், தமிழெழுத்திலேயே எழுதுதல் வேண்டும். எ-டு. சேக்கசுப்பியர், ஆப்பிரிக்கா, பிற சொற்களையெல்லாம் மொழிபெயர்த்தே யாதல்வேண்டும். இனி, `புதிய முத்தமிழ்' வகுத்த புதிய புணர்ச்சி நெறிப்படி, 1. நிலைமொழி யீற்றில் நிற்பது மெய்யேல் வருமொழி ரலமுன் வாரா வென்க கலைமான் இரண்டு கண்டே னிலக்கில் எனவுரைத் தெழுதுக இதுமுது நெறியே. 2. நிலைமொழி யீற்றில் உயிரொலி நிற்பின் வருமொழி ரலமுன் வரலா மென்க கலைமா ரெண்டு காணுக லெக்கில் எனவுரைத் தெழுதுக இதுபுது நெறியே. என்று புணர்ச்சி யிலக்கணத்தை மாற்றவும் நேரும். இதன் தீங்கை அறிஞர் கண்டுகொள்க. ஒருவர் ஏதேனும் உயர்பதவி பெறின், தாம் தேர்ச்சி பெற்ற துறையிலேயே சிறப்புப் பணி செய்தல் வேண்டும்; தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அடாததில் தலையிடக் கூடாது. தமிழ்நாடு இன்னும் விடுதலை பெறவில்லை. தமிழ்நாட்டு உண்மையான வரலாறும் இன்னும் எழுதப்படவில்லை. எதிர்காலத்தில் ஒரு தமிழ்க் கமால் பாசா தோன்றி எர்க்குலிசு திறவகையில், தமிழரின் மூவாயிர வாண்டடிமைத்தன விளைவையும் ஒருங்கே அகற்றிவிடலாம். ஆதலால், வரம்பு கடந்த நடத்தையை விட்டொழிக. இன்றே, முடிவுகொள்ள வேண்டுமெனின், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமிப்பிள்ளை, பெரும்புலவர் வேணுகோபாலப் பிள்ளை, அருட்டிரு அழகரடிகள், தவத்திருக் குன்றக்குடி அடிகள் முதலிய பேரறிஞரைக் கூட்டிப் பெரும்பான்மைத் தீர்ப்பை ஏற்றுக் கொள்க. ``ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்-ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்'' ``கண்ணு தற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ.'' - ``செந்தமிழ்ச் செல்வி'' ஆகத்து 1978 14 போலித் தமிழ்ப்பற்று உலகிற் பல பொருள்கள் போலியாக வுள்ளன. பொதுவாக, வெளிப் பார்வையில் போலிப் பொருள்களே உண்மைப் பொருள்களினும் பொலிந்து தோன்றுகின்றன. இப் பொதுவியல்பு போலித் தமிழ்ப் பற்றாளர்க்கு விலக்கன்று. (1) அயன்மொழிப் பெயர் ஆரியர் வருமுன் தமிழர் பெயரெல்லாம் தூய தமிழ்ச் சொற் களாகவே யிருந்தன என்பதைச் சொல்லவேண்டுவதில்லை. அவர் வந்து ஆயிரம் ஆண்டுகட்குப் பிற்பட்ட கடைக்கழகப் புலவர் நாற்பத் தொன்பதின்மர் பெயருள்ளும் தொண்டே (ஒன்பதே) முழுமையாகவோ பகுதியாகவோ வடசொல்லா யிருந்தன. அக் காலத்தில் மொழியாராய்ச்சி இன்றுள்ள வகையிலும் அளவிலும் இல்லை. ஆரியமும் பிராகிருதமுங் கலந்த வேதமொழியும், அதனொடு தமிழ்கலந்த சமற்கிருதம் என்னும் வடமொழியும், தேவமொழியென முற்றிலும் நம்பப்பட்டன. அங்ஙன மிருந்தும் ஆரியரொடு பழகிய தமிழ்ப் புலவருள் ஐந்திலொரு பகுதியினரே வடசொற்பெயர் தாங்கினர். ஆரியர் தொடர்பு சிறிதுமற்ற நாட்டுப்புறத் தமிழர் பெயர் பெரும்பாலும் தூய தமிழ்ச்சொல்லாகவே யிருந்திருத்தல் வேண்டும். எனினும், அன்றிலிருந்து 1916ஆம் ஆண்டு வரை, வடசொற்கள் தமிழ்ப் பேச்சிலும் இலக்கியத்திலும் தமிழின் தொண்டை நெரியுமளவு சிறிது சிறிதாய் மேன்மேலும் தொடர்ந்து கலந்து வந்ததினால், தமிழர் பெயரும் அந் நிலைமை யடைந்தன. தமிழர்க்கு நற்காலமாக, 1916ஆம் ஆண்டு தவத்திரு மறைமலை யடிகள் வடசொற்களை அறவே களைந்து, தமிழ்ப்பயிர் மீண்டும் தழைத் தோங்குமாறு செய்தருளினார்கள். அன்றிலிருந்து தனித்தமிழ் கல்லாப் பொதுமக்களிடையும் கடுகிப் பரவி வருகின்றது. ஆயின், இந் நிலைமைக்கு முற்றும் மாறாக, தலைமைத் தமிழ்ப்பேராசிரியரும் தமிழ்க்காவலரும் தமிழ அமைச்சரும் வடசொற் பெயர் தாங்கிவருவது வியக்கத்தக்க வேடிக்கைச் செய்தியே. அவர் வடசொற் பெயர் தாம் தாங்குவது மட்டுமன்றித் தம் மக்கட்கும் பேரப்பிள்ளைகட்கும் இட்டு ஆரியமரபை அழியாது காத்து வருகின்றனர். பேரா. பரிதிமாற் கலைஞன் பிராமணராயிருந்தும் தனித்தமிழ்க்கு வித்தூன்றித் தம் பெயரைத் தூய தமிழ்ச்சொல்லாக மாற்றிக்கொண்டார். தமிழ்ப்பெயர் தாங்காதவர் உண்மைத் தமிழ்ப் பற்றுற்றுள்ளவராக இருக்கவே முடியாது. இம் மூவகையாரும், சிறப்பாகத் தமிழ்நாட்டு அமைச்சர், தாமும் தம் கான்முளையரும் தமிழ்ப்பெயர் தாங்காக் குற்றத்தை மறைக்க ஒருவழி கண்டுபிடித்திருக்கின்றனர். அஃது அரசியல் அலுவலகங்கட்கும் தாம் தங்கியிருக்கும் கட்டடங்கட்கும் தமிழ்ப்பெயரிடுவதே. ஐயறிவுள்ள அரிமாவும் வரிமாவும் கரிமாவும் நரிமாவும் முதலிய விலங்குகட்கும் தமிழ்ப்பெயர் சூட்டின் அவை இம்மியும் எதிர்க்காது ஏற்றுக்கொள்ளும். அங்ஙனமிருக்க, ஓரறிவுயிருமற்ற கட்டடங்கள் அமைதியாய் ஏற்காது என் செய்யும்? இனி, கட்டடங்கட்குப் பெயரிடுவதில் ஓர் ஏந்தும் (வசதியும்) உள்ளது. விலங்காயின், அவற்றின் கழுத்திற் கட்டித் தொங்கவிட்ட பெயர்ப் பலகைகளைச் சிதைத்துவிடலாம் அல்லது எங்கேனும் வீழ்த்திடலாம். கட்டடங்களோ பெருமழை பெய்தாலொழியப் பெயர் அழியப்பெறா; நிலநடுக்கம் உண்டானாலொழியப் பலகை சிதையப்பெறா. இனி, நகரப் பேரியங்கிகளில் திருக்குறள் எழுதிவைப்பது அல்லது திருக்குறட்பலகை ஆணியறைந்து வைப்பதும், திருக்குறள் அறிவையோ, தமிழ்ப்பற்றையோ அவற்றில் ஏறிச்செல்வார்க்கு உண்டாக்கிவிடாது. முன்னும் பின்னும் நிற்கும் அல்லது இருக்கும் ஆள் தெரியாதவாறு சிறிதுநேரம் நெருக்கி நின்று, இறங்குமிடம் சென்று சேர்வதைக் கவனிப்பதி லேயே கண்ணுங் கருத்துமாயிருந்து ஏந்தாகச் சீட்டு வாங்கவும் இயலாத வழிப்போக்கர், திருக்குறட் பலகையிருக்குமிடங் கண்டு வாசித்து அதன் பொருளுணர்ந்து அதன்படி நடப்பர் என்பது, வெண்ணெய் தடவிக் கொக்குப் பிடிப்பதை நம்புவதினுங் கேடானதே. ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ் (குறள். 156) என்னுங் குறளைப் படித்துப் பொருளுணர்ந்திருந்தால், சென்ற ஆண்டு மாணவர்க்கும் சென்னை மாநகரப் பேரியங்கித் தொழிலாளர்க்கும், இடை நிகழ்ந்த சச்சரவு நேர்ந்தேயிராது. குறள்நெறியைக் கைக்கொள்ளாமற் குறளைப் பார்த்தால் மட்டும் போதுமெனின், ஒவ்வொரு கட்டடத்திலும் சுவருக்கொரு குறளோ குறளதிகாரமோ எழுதி, சிறுகட்டடங்களில் ஓரீரியலையும் பெருங்கட்டடங்களில் ஓரிருபாலையும் மாபெருங் கட்டடங்களில் முப்பாலையும் முடித்துவிடலாம். மேலும், தனிப்பட்டவர் பேரியங்கிகளிலும் மாட்டுவண்டி குதிரைவண்டிகளிலும் ஒவ்வொரு குறள் அட்டை தொங்கவிடலாம். திருவள்ளுவர் கள்வெறியைக் கண்டிப்பதுபோன்றே கவறாட்டையுங் கண்டிக்கிறார். கவறாட்டுத் தன்மையுள்ள சீட்டாட்டெல்லாம் கவறாட்டே. (2) கலவைநடைப் பேச்சு இற்றைத் தமிழிற் கலந்துள்ள அயன்மொழிச் சொற்களெல்லாம் ஒவ்வொரு சொல்லாகத் தமிழிற் புகுந்தவை அல்லது புகுத்தப்பட்டவையே. அவை புகுத்தப்படுமுன் அவற்றால் இன்று வழக்கு வீழ்த்தப்பட்டுள்ள தூய தமிழ்ச்சொற்களெல்லாம் எல்லார்க்கும் எளிதாய்ப் பொருள் விளக்கினவே. அவற்றின் இடத்தில் இன்று எளிதுணர் பொருட்சொற்கள் போல் வழங்கும் அயற்சொற்களும் தொடக்கத்தில் அரிதுணர் பொருட்சொற்களா யிருந்தனவே. ஆதலால், எளிய வழக்குச் சொற்களை நீக்கிவிட்டு அரிய வழக்கற்ற சொற்களைப் புகுத்துதல் கூடாதென்று கூறுவார், அறிவாராய்ச்சி யில்லாதவரும் தமிழ்ப் பகைவருமே யாவர். ஒருநாளுக்கு ஓர் அயற் சொல்லை விலக்கினாலும் ஓரீராண்டிற்குள் ஒருவர் தனித்தமிழ் பேசப் பயின்றுகொள்ளலாம். ஒவ்வொருவரும் நூற்றிற்கு நூறு தூய்மையாகப் பேசாவிடினும் இயன்றவரை பேசினாற் போதும்! (3) வழுநடைப் பேச்சு இனி, தூய தமிழையும் இலக்கணப் பிழையின்றித் திருந்திய வடிவிற் பேசுவதே கற்றோர்க் கழகாம். கல்விக் கழகு கசடற மொழிதல், என்றார் அதிவீரராமபாண்டியர். பண்டைக் காலத்திற் குமரிநாட்டிற் பொதுமக்களும் திருத்தமாய்ப் பேசி வந்தனர். இன்று புலமக்களும் பிழையின்றிப் பேசுவதில்லை. கொச்சைத் தமிழை விரும்பும் காமில் சுவலெபில் என்னும் செக்கோசிலாவக்கியத் தமிழறிஞரும் தம் தமிழ் வரலாற்றிலக்கணச் சொற்பொழிவுகள் (Lectures on Historical Grammar of Tamil) என்னும் ஆங்கிலச் சுவடியில், எழுத்திற்கும் முறைப்பட்ட பேச்சிற்கும் பயன்படுத்தப்பெறும் இலக்கிய நடைத் தமிழை, தமிழ்நாட்டுத் தலைசிறந்த கல்வியாளரும் வழக்கமான உரையாட்டில் ஒருபோதும் கையாள்வதில்லை. பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் தம் மனைவியாரொடு அல்லது மக்களொடு பேசும் போது சொல்கிறேன் என்று சொல்வதில்லை, சொல்ரேன் என்றே சொல் கிறார். தமிழ் எழுத்தாளர் ஒருவர் தம் நண்பரொடு பேசும்போது, இல்லா விட்டால் என்ற வடிவத்தையன்று, இல்லாட்ட என்ற வடிவத்தையே பயன்படுத்துகின்றார். (பக். 5-6) என்று இற்றைத் தமிழ்ப் பேராசிரியரையும் எழுத்தாளரையும் பழித்திருக்கின்றார். வழுநடையைப் போன்றே இலக்கண நடையும் வழக்கமாயின் எளிதாவதே. சில சொற்களின் வழுவடிவம் உண்மையில் திருந்திய வடிவத்தினும் பலுக்கல் (உச்சரிப்பு) அரிதா யிருக்கும். ஆயினும், வழக்கங் கரணியமாக எளிதாக வாய்க்கு வரும். எடுத்துக்காட்டாக, தஞ்சை வட்டாரத்தில் எண்பது என்னும் சொல்லின் எம்பளது என்னும் திருந்தா வடிவம் எளிதாக வழங்குதல் காண்க. (4) சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலித் திருத்தம் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி, வேண்டுமென்றே தமிழ் சமற்கிருதத்தின் கிளை என்று அயலார் கருதுமாறு, தமிழ்ப் பகைவரான பிராமணத் தமிழ்ப் புலவரால், ஆதி வையாபுரியாரைத் துணைக்கொண்டு திட்டமிட்டுத் தொகுக்கப்பட்டுள்ளது. இதில், அக்கை, அச்சன், அச்சு, அப்பம், ஆப்பம், அம் (ஆம், அம்பு) அம்பலம், அரக்கு, அரங்கு (அரங்கம்), அரசு (அரசன்), அரத்தம், அவை (அவையம்) ஆசிரியன் (ஆசிரியம்) ஆணி, ஆயிரம், இலக்கணம், இலக்கியம், உவணம் (சுவணம்), உவமை, உரு (உருவு, உருபு, உருவம்), உலகு (உலகம்), ஐயன் முதலிய ஆயிரக்கணக்கான அடிப்படைத் தமிழ்ச் சொற்கள் ஆரியச் சொற்களாகக் காட்டப்பட்டுள்ளன. பேரா. பரோ, பேரா. எமனோ ஆகிய மேனாட்டுப் பேராசிரியர் இதை அடிப்படையாகக் கொண்டதினாலேயே, தம் திரவிட ஒப்பியல் அகரமுதலியையும் குன்றக் கூறலாகவும் வழுப்படவுந் தொகுத்துள்ளனர். இந்தி தமிழ்நாட்டிற் புகுவதற்கும் கடந்த ஈருலகத் தமிழ் மாநாடுகளும் தமிழ்ப் பழிப்பு மாநாடுகளாக முடிந்தமைக்கும், சென்னைப் ப.க.க.த. அகரமுதலியே கரணியம். இதைத் திருத்துமாறு தி.மு.க. அரசிற்கு எத்துணையோ தமிழ்ப் பேராசிரியரும் தமிழ் மன்றங்களும் எத்துணையோ முறை வேண்டியும், அஃது இம்மியும் பொருட்படுத்தவில்லை. சென்னைப் ப.க.க.த. அகரமுதலித் திருத்தத்தினும் தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாதது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பு. இதுபற்றிப் பர். (Dr) மெ. அழகனார் (சுந்தரம்) தி.மு.க. ஆட்சி ஏற்றவுட னேயே அறிஞர் அண்ணாதுரையிடம் எத்துணையோ எடுத்துச் சொல்லியும், அவர் செவிசாய்த்திலர். (5) கடந்த 2ஆம் உலகத் தமிழ்மாநாடு தமிழ்நாட்டுத் தலைநகரில், மறைமலையடிகள் வாழ்ந்த இடத்தில், நடந்தும் கோலாலம்பூர் மாநாட்டைவிடக் கேடாக முடிந்தது. மறைமலையடிகள் வழியினர் விலக்கப்பட்டனர். வங்கநாட்டுப் பிராமணர் மொழித்துறைத் தலைவ ராயினர். தில்லியில் நடுவணாட்சித் துறையைச் சேர்ந்த பிராமணரொருவர், தமிழெழுத்தும் தொல்காப்பியமும் அசோகன் கல்வெட்டிற்குப் பின் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் தோன்றினவென அச்சிட்ட கட்டுரை படித்தார். பிரெஞ்சுக்கார ரொருவர், பண்டைக்காலத்தில் சமற்கிருதமே இந்தியப் பொதுமொழியா யிருந்ததென்றும், அதன்வழி வந்ததே தமிழென்றும், கட்டுரை படித்தார். திரு. காமில் சுவெலபிலார் மறைமலையடிகளையும் நாவலர் சோமசுந்தர பாரதியையும் புரட்சிப்பாவலர் பாரதிதாசனையும் மொழித்துறைப் பண்பாடற்றவராக வன்மையாகக் கண்டித்த கட்டுரை யொன்றை அச்சிட்டு வழங்கினார். தமிழ்நாட்டு முப் பல்கலைக்கழகத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரும் இதைத் தடுக்கவில்லை. தமிழரசும் கண்டிக்கவில்லை. மாநாடு பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே நடை பெற்றது. (6) தமிழ்நாட்டு அரசினர் பேரியங்கிப் போக்குவரத்துத்துறை வண்டிகளிலும் அலுவலகங்களிலும், தமிழ்க் கூட்டுச் சொற்களும் தொடர்களும் புணர்ச்சிப் பிழையாக எழுதப்பட்டுள. (7) கல்லூரிகளிற் கற்பிக்கப்படும் அறிவியல் துறைப் பாடங்கட்குரிய குறியீடுகள் முற்றும் தனித்தமிழில் மொழிபெயர்க்கப்பட வில்லை. (8) வழக்கற்று வரும் தமிழ்ச்சொற்களைத் தொகுக்கவும், இசை நாடகம் கணியம் மருத்துவம் முதலிய துறைக்குறியீடுகளை ஆரியர் வருமுன் னிருந்ததுபோல் தூய தமிழாக்கவும், கோயில் வழிபாட்டைத் தமிழில் நடைபெறுவிக்கவும், இன்னும் ஒரு முயற்சியும் செய்யப்பெற வில்லை. ஆயினும், தமிழ் அரியணை யேறிவிட்டதாகச் சொல்லப்படு கின்றது. (9) தனித்தமிழ் ஆராய்ச்சி நூல்கட்கும் தமிழ் வரலாற்று நூற்கும் தனித்தமிழ் ஏடுகட்கும் அரசியலுதவி ஒருசிறிது மில்லை. (10) மறைமலையடிகளார் வழியினர் தமிழ்த்தொண்டு செய்ய ஆவலாகக் காத்திருந்தும் அவர் புறக்கணிக்கப்பட்டு, அவர் இருக்க வேண்டிய இடத்திற்கு அரைகுறையான தகுதியுடையவரே அமர்த்தப்படு கின்றனர். (11) தமிழின் பெயரால் அரசியற்கட்சி வளர்க்கப்படுகின்றதே யொழிய, தமிழ் வளர்ச்சிக்கான தகுந்த வழி ஏதும் கையாளப்பெறவில்லை. இவற்றையெல்லாங் கவனியாது இந்தியெதிர்ப்புக் கூட்டங்கள் நடத்துவதும் திருவள்ளுவர் ஈராயிர ஆண்டுவிழாப் பற்றி அறிக்கை விடுவதும், வணிக வளர்ச்சியும் பெயர் விளம்பரமும் நோக்கியனவே யன்றி வேறல்ல. அயன்மொழிப் பெயரை மாற்றாது தமிழ்ப்பற்றுக் காட்டுவ தெல்லாம், பெற்றோர்க்கு ஓரளவு உதவினும் அவரைப் பிறரிடத்து மற்றோராகக் காட்டி மறைப்பது போன்றதே. - ``தென்மொழி'' கும்பம் 1969 15 மதுரைத் தமிழ்க் கழகம் தமிழ்மொழியும் இலக்கியமும் நாகரிகமும் பண்பாடும் வரலாறும் போற்றுதல் பற்றி, தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு ம.கோ. இராமச்சந்திரனார் இதுவரை செய்துள்ள ஏற்பாடுகளுள், வருகின்ற புத்தாண்டு வாழ்த்துப்போல் சனுவரித் தொடக்கத்தில், பாடல்மிக்க கூடலுற்ற மாட மதுரையில், பனிமலை யெழுச்சியும் குமரிமலை முழுக்கும் கண்ணெதிரில் நிகழ்ந்தாற்போல் காட்டவிருக்கும் திரைப்படப் பிடிப்பும், சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவா னுயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழ் என்று மாணிக்கவாசகர் பாடிய தமிழ் வளர்க்குங் கழகம் ஒன்று நிறுவும் திட்டமும், உலகம் பாராட்டுமளவு தலைசிறந்தனவாகும். இவற்றுள், கனவுபோல் தோன்றி மறையும் திரைப்படத்தினும், நனவாக நிலைத்து நின்று நாட்டிற்கு நலம் பயக்கும் கழக நிறுவனம் சாலச் சிறந்த தென்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. ஒரே கழகம் பண்டைத் தமிழகம் சேர சோழ பாண்டியம் என்னும் மூவேந்தக மாகப் பிரிந்து, குமரிமலைமுதற் பனிமலை வரை பரவியிருந்ததேனும், பாண்டியம் என்னும் ஒரே நாட்டில், ஒவ்வொரு காலத்திலும் ஒரே கழகம் இருந்து வந்தது. தமிழுலகெங்கணுமுள்ள தலைமைப் புலவரெல்லாம் அதிற் கலந்திருந்தனர். தலையிடை கடையென முக்கழகம் இருந்ததாகச் சொல்லப்படினும், பாண்டிநாட்டிலேயே பாண்டியரே கழகம் நிறுவி வந்ததால், உண்மையில் அம் மூன்றும் ஒன்றே. கடல்கோளாற் பாண்டியராட்சி இடையீடுபட்ட தினாலேயே, மூவேறிடத்தில் மூவேறு காலத்தில் கழகம் நிறுவ நேர்ந்தது. இரு கடல்கோளும் நிகழ்ந்திராவிடின், தலைக்கழகம் என்னும் ஒன்றே இறுதிவரை தொடர்ந்திருந்திருக்கும். பழம் பாண்டிநாடாகிய குமரிநாடு, தமிழ் தோன்றிய நிலமாதலாலும், அயன்மொழி வாடை இம்மியும் வீசாத செந்தமிழ் நாடாதலாலும், பாண்டியர்க்குத் தாய்மொழிப் பற்றுத் ததும்பி வழிந்ததனாலும், தமிழ்மகளே கலைமகளுமாயிருந்ததனாலும், அறிவை வளர்த்தல் அரசன் கடமையாத லாலும், பாண்டியர்க்குத் தமிழை வளர்த்துப் போற்றிக் காக்கும் கழகம் நிறுவாதிருத்தல் இயலவில்லை. 17ஆம் நூற்றாண்டிலிருந்த தளவாய் இரகுநாத சேதுபதி யென்னும் சிற்றரசர் பன்னிரு புலவரைப் போற்றிக் காக்கவும், இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில் பாலவநத்தம் வேள் பாண்டித்துரைத்தேவர் புலவர் இரு வரைப் போற்றிக் காக்கவும் நூற்றுவர்க்கு மேற்பட்டவரை ஆட்டை விழாவிற் கூட்டவும் ஆற்றலரா யிருந்திருக்கவும், பத்தாயிரம் ஆண்டுகட்கு முன் இந்தியா அளவு நிலப்பரப்புள்ள குமரிநாட்டை ஒரு குடைக்கீழ் ஆண்ட பாண்டியனுக்குத் தமிழ்ப்பற்றும், புலவர் ஐந்நூற்று நாற்பத் தொன்மரைப் போற்றிக் காக்கும் செல்வச் சிறப்பும் இருந்திராதென்று கொள்வது, எத்துணை இரங்கத்தக்கதாகும்! தலைக்கழகத்தில் அகத்தியரும் தொல்காப்பியரும் இருந்ததில்லை. தலைக்கழகக் காலம் கி.மு. தோரா. 10,000-5,000. அகத்தியர் தமிழகம் வந்த காலம் கி.மு. தோரா. 1200. தொல்காப்பியர் காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு. தமிழின் முதுபழந் தொன்மையாலும், வரலாற்றறிவும் காலவாராய்ச்சியும் இன்மையினாலும், முக்கழக வரலாற்றில் முன்னவரையும் பின்னவரையும் ஒருகாலத்தவராக மயக்கிவிட்டனர். இதனால், கழகமே யிருந்ததில்லை யென்பது காட்டிக் கொடுக்குந் தன்மையைத்தான் காட்டும். நகர அடிப்படையிலும், மாவட்ட அடிப்படையிலும், மாநில அடிப்படையிலும், நாட்டு அடிப்படையிலும், பல்வேறு தமிழ்க் கழகங் களைத் தோற்றியிருப்பதை அறவே நீக்கிவிட்டு, பழம் பாண்டிநாட்டுத் தமிழ்க் கழகம் போன்று ஒரே உலகப் பொது மாபெருந் தமிழ்க் கழகம் நிறுவ வேண்டும். அதன் கிளைகள் பல்வேறிடங்களில் இருக்கலாம். நில வரம்பின்மை தமிழர் பல நாடுகளிலும் தீவுகளிலும் குடியேறியிருப்பதால், தமிழுலகம் அனைத்தையும் தழுவிய தமிழ்க் கழகமா யிருத்தல் வேண்டும். தொகை வரம்பின்மை தலைக்கழகப் புலவர் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மர்; இடைக் கழகப் புலவர் ஐம்பத்தொன்பதின்மர், கடைக்கழகப் புலவர் நாற்பத் தொன்பதின்மர். நிலப்பரப்பிற் கேற்றவாறு புலவர் தொகை வேறுபட் டிருந்தது. மற்றப்படி, சிவனியப் புலவர் எழுவர், திருமாலியப் புலவர் எழுவர், சமணப் புலவர் எழுவர், புத்தப் புலவர் எழுவர், ஆரிய மதப் புலவர் எழுவர், உலகியல் மதப் புலவர் எழுவர், மதமற்ற புலவர் எழுவர் என்றோ, வேறு வகையாகவோ புலவர் தொகை அமையவில்லை. தகுதியுடையவர் அனைவரும் இடம்பெறல் வேண்டும். புலவர் தகுதி ஒரு தமிழ்ப்புலவர் கல்லூரியில் மாணவராகப் பயின்றோ தனியாக ஒரு பெரும் புலவரிடம் கற்றோ, பல்கலைக்கழகங்கள் நடத்தி வரும் தேர்வெழுதித் தேறிப் புலவர் பட்டம் பெற்றவர்க்குள், நுவலாசிரியராகவோ (போதகாசிரியராகவோ), நூலாசிரியராகவோ, உரையாசிரியராகவோ, இதழாசிரியராகவோ, ஆராய்ச்சியாளராகவோ பல்லாண்டு பணியாற்றி அவரவர் துறையில் அதிகாரியென அறிஞரால் ஒப்புக்கொள்ளப்பட்டவரே, தமிழ்ப்புலவர் கழக வுறுப்பினராகத் தக்கார். இலக்கண அறிவும் புலவர் பட்டமும் இன்றியமையாத அடிப்படைத் தகுதியாகும். ஆங்கிலத்திற் பட்டம் பெற்றவரையே ஒப்புக்கொள்ளும் முறையைத் தமிழிலும் கடைப்பிடித்தல் வேண்டும். மேடைப் பேச்சாள ராகவோ இதழாசிரியராகவோ இருந்தால் மட்டும் போதாது. இலக்கண அறிவிற்குப் பல்கலைக்கழகப் புலவர் பட்டமே சான்றாதல் வேண்டும். தேர்வெழுதாது பெறும் கண்ணியப் (Honorary) பட்டமும் சான்றாகாது. வரிசையறிதல் புலமைச் சான்றான பல்வேறு திறங்களுள், கடைக்கழகச் செய்யுட்கும் பனுவற்கும் உரை வரையும் ஆற்றல் சாலச் சிறந்தது. நாவலர் வேங்கடசாமி நாட்டாருக்குப் பின் அடுத்தபடியாக அத் திறமையுடையார், முதுபெரும் புலவர் உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிப்பிள்ளையே. அவரைத் தலைவராகக் கொண்டு புலவரைத் தேர்ந்தெடுப்பது தலைசிறந்த வகையாகும். புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க பூம்புன லூர பொதுமக்கட் காகாதே பாம்பறி யும்பாம்பின் கால். (பழ. 7) அவருக்கு அடுத்தவர் முதுபெரும் புலவர் வேணுகோபாலப் பிள்ளையே. தமிழ்ப்புலவருள், வையாபுரி வழியினர் (Heretic School) என்றும், மறைமலையடிகள் வழியினர் (Orthodox School) என்றும், இரு முரண்பட்ட கூட்டத்தார் உளர். மறைமலையடிகள் போல் முற்றும் தனித்தமிழே வழங்க வேண்டும் என்பதை எவரும் மறுக்கலாம். ஆயின், உண்மையான வரலாற்றை ஒருவரும் மறுக்கவோ மறைக்கவோ மாற்றவோ ஒண்ணாது. ஆதலால், சமற்கிருதத்திலிருந்து தமிழ் வந்ததென்றும், அடிப்படைத் தமிழ்ச்சொற்களெல்லாம் சமற்கிருதமென்றும், பாணினீயத்தின் வழிப் பட்டது தொல்காப்பியம் என்றும், சிந்துவெளி நாகரிகம் ஆரியர தென்றும், இருக்கு வேதத்திற்குப் பிற்பட்டது தமிழ் என்றும், தமிழர் வடமொழிப் பரத சாத்திரத்தினின்று நடமும் நாடகமுங் கற்றுக்கொண்டனர் என்றும், கொச்சைத் தமிழையும் செந்தமிழ்போற் கொள்ளவேண்டு மென்றும், அசோகன் கல்வெட்டுப் பிராமியெழுத்தினின்று தமிழ் நெடுங்கணக்குத் தோன்றிற் றென்றும், வடமொழி தேவமொழி யென்றும், பிராமணர் நிலத்தேவர் என்றும், திருக்கோயில் வழிபாடு வடமொழியிலேயே நடைபெறல் வேண்டுமென்றும், இந்தியை எதிர்த்தல் கூடாதென்றும், தமிழர் வெளிநாட்டினின்று வந்தவர் என்றும், பிறவாறுந் தமிழுக்கு மாறாகவும் கேடாகவும் சொல்வாரும் எழுதுவாரும் எல்லாம் தமிழ்க்கழகத்தில் இடம்பெறத் தக்காரல்லர். தமிழை முழுத்தூய்மையாகப் பேசாவிடினும், இயன்றவரை தூய்மையாகப் பேச முயல வேண்டும்; தமிழ்ப்பெயருந் தாங்க வேண்டும். உலகப் பொதுமை இன குல மத இட கட்சி வேறுபாடின்றித் தகுதியொன்றேபற்றி, எல்லாருஞ் சேர்தற்கேற்ற கழகமா யிருத்தல் வேண்டும். இருப்பிடம் மதுரை. நடைமுறை பல்துறைப்பட்ட தமிழாராய்ச்சியே தமிழ்க்கழகத்தின் தலைமைப் பணியாயிருத்தல் வேண்டும். பண்டைத் தமிழ்க்கழகங்களும் செய்த பணி இதுவே. அவர் தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப, அவர் தமிழாராய்ந்தது கபாடபுரம் என்ப, “அவர் தமிழாராய்ந்தது உத்தர மதுரையென்ப, என்றே முக்கழகப் பணியும்பற்றி முக்கழக வரலாறு கூறுதல் காண்க. “சிறைவான்....உயர்மதிற் கூடலி னாய்ந்த வொண்டீந்தமிழ் என்றே மாணிக்கவாசகரும் பாடியிருத்தல் காண்க. ஆராய்ச்சித் தகுதி, மதிநுட்பம், பரந்த கல்வி, நடுநிலைமை, அஞ்சாமை, தன்னலமின்மை, மெய்யறி யவா என்னும் ஆறாம். இவ் வாறும் இல்லார் போலியாராய்ச்சியார், பொருளீட்டவே வல்லார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இக் கழகமும் ஒன்றாகவே யிருக்கலாம். உரைவேந்தர் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை மதுரையிலேயே யிருப்பதால், அடிக்கடி சென்று கழக ஆராய்ச்சியை மேற்பார்த்து வரலாம். நாடாட்சித் தலைவர் (முதலமைச்சர்) பாண்டியன்போல் என்றும் நிறுவனத் தலைவராயிருப்பார். ஆண்டுதோறும் ஆட்டைவிழாவும் அரங்கேற்றமும் நிகழலாம். அரங்கேற்றமும் பரிசளிப்பும் பண்டை நாட்போன்றே நடந்தேறல் வேண்டும். கழகத்தில் அரங்கேறிய நூலே நாட்டில் உலவுதலும் நிலவுதலும் வேண்டும். செலவு பொருள் வருவாய்கள் தமிழ்நாட்டரசு ஒதுக்கீடு, நடுவணரசு ஒதுக்கீடு, திரவிடநாடுகளின் ஒதுக்கீடு, பெருஞ்செல்வர் நன்கொடை, தமிழ்நாட்டுத் திருமடங்களின் திருத்தானம், திருப்பதி வேங்கடவர் திருவீகை, பல்கலைக்கழகங்களின் பணவுதவி, ஒன்றிய நாட்டினங்களின் கல்வியறிவியற் பண்பாட்டுக் கழக (UNESCO) ஒப்புரவுத்தொகை, பல்கலைக்கழக நல்கைக் குழு (U.G.C.) நல்கை முதலியன கழகச் செலவிற்குப் பொருள்தேடும் வழிவகைகளாம். கழகப் பெயர் முதலிரு கழகங்களும் கழகம், கூடல், தொகை, அவை, மன்றம் முதலிய சொற்களாலேயே குறிக்கப்பட்டு வந்தன. அக் காலத்தில் ஆரியம் என்னும் பேரும் தோன்றவில்லை. சங்கம் என்னும் வடசொல் கி.பி. 9ஆம் நூற்றாண்டிலேயே சமணரொடு தமிழகம் புகுந்திருத்தல் வேண்டும். பதினாறாம் நூற்றாண்டினரான பரஞ்சோதி முனிவர், தம் திருவிளை யாடற் புராணத்தில், கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து என்று பாடியிருப்பதால், இன்றும் கழகம் என்னும் சொல்லையே ஆளலாம். வடமொழியிற் சங்கம் என்னும் சொல் ஸம்க (samga) என்னும் வடிவுபெறும். அதை samgha என்றும் திரித்து ஸம்ஹன் என்பதன் திரிபாகக் கூறுவர். ஸம்க என்னுஞ் சொற்கு உடன்செல்லுதல் அல்லது ஒன்றுசேர்தல், கூடுதல் என்பதே பொருள். கும்முதல் = கூடுதல், குவிதல். கும் - கும்மல் (குவியல்) - L. cumulus, heap. உம் - கும் - கும்பு - கும்பல். கும்மலிடு - L. cumulate. கும் - L. cum - E. cum, com. L. cum(F«), Gk. sum([&«), Skt. sam([«) = உடன், கூட. E. sym. ஏ(ஏகு) - யா - இ. ஜா, fh(ga); E. go, Skt. gam, to go. Skt. gam - ga, samga = to go together, to unite. samgha = combination, collection, assembly, association, society. இதனால், சங்கம் (ஸம்க) என்னும் வடசொல்லும் தென்சொல்லின் திரிபே என்று தெரிந்துகொள்க. ஆகவே, கழகம் என்னும் சொல்லே இருமடிப் பொருத்தமாகும். உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாட்டின் பயன்பாடு இதுவரை நடைபெற்ற நான்கு மாநாடுகளாலும் தமிழுக்குக் கேடேயன்றி, ஒரு நலமும் விளைந்ததில்லை. அவற்றை நடத்திவருவது ஒரு வையாபுரிக்குழு. எனக்கும் என் போன்றார்க்கும் ஓர் அறிவிப்புக்கூட இல்லை. எனக்கே அழைப்பும் அறிவிப்பும் இல்லாவிடின், என்னினும் பன்மடங்கு அறிவும் ஆற்றலும் பெற்ற மறைமலையடிகள் இன்று இருந்திருப்பாராயின், அவருக்கு எங்ஙனம் அழைப்பு விடுத்திருப்பர்? அவருக்கு அழைப்பில்லாத உலகத் தமிழ் மாநாடொன்று இவ் வுலகில் நடைபெறுமாயின், அது எத்தகையதா யிருக்கக்கூடும்? தமிழ்நாட்டில் நடைபெறும் மாநாடுகட்கே எனக்கு அழைப்பு வந்தது. அதுவும், முந்தின மாநாட்டில் மாண்புமிகு அண்ணாதுரையாலும், இம் மாநாட்டில் மாண்புமிகு ம.கோ. இரா.வாலுமே எனக்குக் கிட்டிற்று. உலகத் தமிழ் மாநாடுகள் தோன்றுமுன் சிந்துவெளி நாகரிகம் திரவிடரதென்று பின்னிய இரசிய ஆராய்ச்சி யறிஞரால் தீர்க்கப்பட்டிருந்தது. பின்போ, அம் முடிபு வன்மையாக மறுக்கப்பட்டு வருகின்றது. ஆதலால் மாண்புமிகு அழகமதியாரே (இராமச்சந்திரனாரே) இக் குழுவைக் கலைத்து மாநாடு நடத்தும் உரிமையைக் கைப்பற்றி, மதுரையில் நிறுவவிருக்கும் தமிழ்க் கழகத்தைத் துணைக்கொண்டே ஐயாட்டை யிறுதி உலகத் தமிழ் மாநாடுகளை ஒழுங்காக நடத்தி வருவாராக. - ``செந்தமிழ்ச் செல்வி'' நவம்பர் 1980 16 உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு இன்று, இறைவனருளால், ஐந்தாம் உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு மாண்புமிகு முதலமைச்சர் ம.கோ.இராமச்சந்திரனார் தலைமையில் நிகழவிருக்கின்றது. கடந்த மூவாயிரம் ஆண்டாக மறையுண்டு கிடந்த குமரிநாட்டு முழுக்கு, கண்ணெதிரில் நிகழுங் காட்சிபோல் தெள்ளத் தெளியக் காட்டும் திரைப்படம், உண்மைத் தமிழர் அனைவரும் மகிழவும், ஒப்புயர்வற்றதென்று உயர்ந்தோர் புகழவும், உலகஞ் சுற்றிவந்து என்றுந் திகழவும் இருக்கின்றது. தமிழாரியப் போராட்டம் தமிழர் தம் நாட்டிலேயே வாழ்ந்து தம் தாய்மொழியைப் போற்றி வருகின்றனர்; வேறெந்நாட்டிற்குஞ் சென்று வேற்று மொழியைத் தாக்க வில்லை. தமிழ் கி.மு. நூறாயிரம் ஆண்டுகட்குமுன் குமரிநாட்டில் தோன்றிய உலக முதன்மொழி. வைய மீன்றதொன் மக்கள் உளத்தினைக் கையி னாலுரை கால மிரிந்திடப் பைய நாவை யசைத்த பைந்தமிழ் ஐயை தாள்தலை கொண்டு பணிகுவாம். ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ். உலகில் முதன்முதல், எழுதுறைப்பட்ட முழுத்தூய செய்யுளிலக்கிய மும், பொருளிலக்கணத்தொடு கூடிய பிண்டவிலக்கணமும், இயலிசை நாடக மென்னும் முத்தமிழ் இணைந்த மாபிண்டத் தமிழும் தோன்றிய காலம் தோரா. கி.மு. 10ஆம் நூற்றாண்டு. ஐரோப்பாவிற் கிரேக்க நாட்டிற்குக் கிழக்கில் நடுமேலையாசியாவில், கிரேக்கத்திற்கு இனமான ஒரு மொழியைப் பேசிக்கொண்டு, நாடு நகரின்றி மாடுமேய்க்கும் நாடோடி களாய்த் திரிந்த ஒரு மாந்தர் கூட்டம், இலக்கியமின்றியும் எழுத்தின்றியும் சில சிறு தெய்வ வழுத்துகளை மட்டும் கொண்டு, இந்தியாவிற் புகுந்த காலம் கி.மு. தோரா. 1500. அவர் சிறுபான்மையராயிருந்ததனால், பழங்குடித் திரவிட மக்களொடு கலந்துபோயினர். அவர் மொழி வழக்கற்றது. அதனால் தாம் புகுந்த நாட்டுமொழியையே தாய்மொழியாகக் கொண்டனர். அவருடைய பூசாரியர் மட்டும் தம்மை ஆரியர் என்று கூறிக்கொண்டு தம் முன்னோர் மொழியும் பிராகிருதம் என்னும் பழங்குடி மக்கள் மொழியுங் கலந்த வேத மொழியிற் பல சிறுதெய்வ வழுத்துகளையும் பாடி வந்தனர். அப் பாடற்றிரட்டே இருக்குவேதம் என்னும் முதல் ஆரிய இலக்கியம். தமிழரொடு தொடர்புகொண்டு அவர் நாகரிகத் தலைமையைக் கண்ட ஆரியப் பூசாரியர், காளி வணக்கத்தையும் முருக வழிபாட்டையுங் கைக்கொண்டு, பின்னர்ச் சிவமதம், திருமால்மதம் ஆகிய இரு பெருந் தமிழ மதங்களையும் மேற்கொண்டு, முத்திருமேனிக் கொள்கை வாயிலாக அவற்றை ஆரிய வண்ணமாக்கி இந்துமதம் என்று பெயரிட்டுக் கொண்டனர். இந்துமதம் என்று ஒரு தனி மதமில்லை. ஆரியரின் சிறுதெய்வ வேள்வி வழிபாடும் தமிழரின் இருபெரு மதங்களும் கலந்த கலவையே இந்துமதம். சிவனையும் திருமாலையும் தனித்தனி முத்தொழில் தலைவராகக் கொள்ளும் தமிழ் மதங்களும், தனித்தனி ஒரு தொழில் தலைவனாகக் கொள்ளும் முத்திருமேனிக் கொள்கையும் முரண்பட்டன வாகும். ஆதலால், இது தமிழர்க்கு உடன்பாடன்று. இதன் விளக்கத்தை என் தமிழர் மதம் என்னும் நூலிற் காண்க. ஆரியப் பூசாரியர் தம் வெண்ணிறத்தால் தம்மை நிலத்தேவரென்றும், தம் முன்னோர் மொழியின் எடுப்பொலியால் அதைத் தேவமொழி யென்றும், மூவேந்தரையும் ஏமாற்றிவிட்டனர். அவரும், தம் பழங்குடிப் பேதைமையாலும் மதப் பித்தத்தாலும் கொடைமடத்தாலும் ஏமாறிக் கெட்டனர். அவ் வேமாற்றை, அவர் வழியினர், அறிவும் ஆராய்ச்சியும், மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டிலும் தொடர முயல்கின்றனர். இது வீட்டார் தூங்கும்போது திருடிய திருடன், அவர் எழுந்த பின்பும் திருடக் கருதுவது போன்றதே. நான் 1943ஆம் ஆண்டு சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியனாக இருந்தபோது, அப் பள்ளித் தலைமையாசிரியர் ஞா. இலக்குமணசாமி செட்டியார் என்னிடம், ஐயா, பரிதிமாற்கலைஞன் என்னும் சூரியநாராயண சாத்திரியார் எனக்குக் கிறித்தவக் கல்லூரியிற் கலையிளைஞன் (B.A.) வகுப்பில் தமிழ் கற்பித்த போது, பிராமண மாணவரையும் வைத்துக் கொண்டு பிராமணர் தமிழரை ஏமாற்றிவிட்டனர் என்று சொன்னாரையா! என்று கூறியது, இன்றும் இன்று சொன்னது போன்றே யிருக்கின்றது. ஆரியப் பூசாரியர், தம்மைப் போற்றிக் காத்த தமிழரை நன்றி கெட்ட தனமாக நால்வகைப் பிறவிக் குலமாகப் பிரித்து, அவர் ஒற்றுமையைக் குலைத்துப் பகுத்தறிவிலிகளாகத் தாழ்த்தியது மன்றி, அவர் முன்னோரின் விலைமதிப்பில்லா எழுநிலச் செய்யுளிலக்கணத்தையும் முத்தமிழிலக் கணத்தையும் முற்றும் அழித்துவிட்டனர். அங்ஙனமிருந்தும், எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறள். 110) என்பதற் கேற்பப் பழிக்குப் பழி வாங்காது, இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு (குறள். 987) என்னும் உயர்நெறியைக் கடைப்பிடித்துச் சான்றாண்மை பூண்டொழுகும் தமிழ்ப் புலவரையும் சற்றும் பொருட்படுத்தாது, குமரிநாட்டுக் கொள்கை புலவர் புனைந்துரையென்றும், அதைத் தூள்தூளாக்குவே மென்றும் வாய் காவாது வரம்பிறந்து சொல்வளர்ப்பது, தம்மைத் தமிழர் தூள்தூளாக்கும் நிலைமையைத் தாமே வலிய வருவிப்பது போன்றதேயாகும். பண்டையாரியப் பூசாரியரின் இரண்டகச் செயல் விளைவை நன்குணர்ந்து அதைத் தடுப்பதற்கே, வாய்மையும் நடுநிலைமையும் வாய்ந்த (P.T.) சீநிவாசையங்காரும் (V.R.) இராமச்சந்திர தீட்சிதரும் Stone Age in India, History of the Tamils, Pre-Historic South India, Origin and Spread of the Tamils முதலிய அரிய வரலாற்றாராய்ச்சி நூல்களை வரைந்து போந்தனர். அவற்றை, ஆரிய வெறிபிடித்த நீலகண்ட சாத்திரி யாரும், அடிமைத் தனத்திற் பிறந்து வளர்ந்த பாலகிருட்டிண நாயரும், எத்துணை மாற்றியெழுதினும் உண்மை ஒருபோதும் மறையாது. எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேற்படும் (“Oil and truth will get uppermost at last”). தமிழரும் பிராமணரும் தழுவி வாழ்தல் பிராமணரின் முன்னோர், தமிழகத்திற் புகுந்து மூவாயிரம் ஆண்டா கின்றது. அவர் தமிழர்க்குப் பயன்படும் கல்வியராகவும் வரவில்லை; செல்வராகவும் வரவில்லை; பொருமறவராகவும் வரவில்லை; பெருந் தொகையராகவும் வரவில்லை; ஒவ்வொருவராகவும் சிற்சிலராகவும் கையுங் காலுமாக வந்தனர். தமிழர், அகத்தியர் முதலான ஆரியரை வரவேற்று, திருக்கோவிலி லும் திருமடத்திலும் ஊட்டுப்புரையிலும் ஊர்ச் சத்திரத்திலும் உறையு ளளித்து, அவியுணவும் செவியுணவும் ஆரவூட்டி அறிஞராக்கினர். ஆரியர் தமிழ் நெடுங்கணக்கினின்று வடமொழி வண்ணமாலை வகுத்து, ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்களை வேத மொழியொடு சேர்த்தும், தூய தென்சொல் வேர்களினின்று நூற்றுக்கணக்கான திரிசொற்களைத் திரித்தும், சமற்கிருதம் என்னும் விரிவான இலக்கிய மொழியைத் தோற்றுவித்து, பல்துறைத் தமிழ் முதனூல்களையும் அதில் மொழிபெயர்த்தபின், மூல நூல்களை யழித்து மொழிபெயர்ப்பு நூல்களையே மூலமாகக் காட்டி, இந்திய நாகரிகம் ஆரியரதென்று மேலையரும் நம்புமாறு செய்துவிட்டனர். பிராமணர் தம்மை நிலத்தேவரென்றும், தம் இலக்கிய மொழி தேவமொழியாதலாற் பிறமொழியினின்று கடன் கொள்ளாதென்றும் ஏமாற்றியதைப் பேதை வேந்தரும் பொதுமக்களும் புலவரும் நம்பி விட்டதனால், ஆரியர் சொல்லிற்கும் செயலிற்கும், திருவள்ளுவர் காலம் வரை எவ்வகை யெதிர்ப்பும் இல்லாது போயிற்று. வேதமொழிக்குப் பிந்தினது சமற்கிருதம். இரண்டும் எழுத்து மொழியேயன்றிப் பேச்சு மொழியல்ல. இறந்துபட்ட இலத்தீனைக் கற்றுப் பேசுவதுபோன்றே, பையற் பருவத்தினின்று பத்து அல்லது பதினைந் தாண்டு கற்றுப் பேசுகின்றனர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரஞ்சு போலச் சிறு பிள்ளைகள் தம் பெற்றோரினின்று சமற்கிருதத்தைக் கற்றுப் பேசமுடியாது. அதனால், அது உயிருள்ள மொழியன்று. அதே சமயத்தில் அது இறந்த மொழியுமன்று. பிறந்ததே யிறக்கும். சமற்கிருதம் பிறந்ததும் இல்லை; இறந்ததுமில்லை; படிமையும் பாவையும் போன்றது. இலத்தீன் போன்றதே சிறந்த மொழி. ஆரியரின் பேரறியப்படா முன்னோர் மொழி கிரேக்கத்தைப் பெரிதும் ஒத்தது. பாடுமேர் (Bodmer) எழுதிய “The Loom of Language” என்னும் மொழிநூலைப் பார்க்க. சமற்கிருதம் தேவமொழியாயின், அதற்கு இனமான கிரேக்கமும் இலத்தீனமும் செருமானியமும் தேவமொழிகளாயும், ஆரியமொழிக் குடும்பத்திற்கு அடிமூலமான தமிழ் தேவதேவமொழியாயும் இருத்தல் வேண்டும். இங்ஙனமே, பிராமணர் நிலத்தேவராயின், ஆரிய மொழி பேசும் ஏனையரும் நிலத்தேவராயும் தமிழர் மூலநிலத்தேவராயும் இருத்தல் வேண்டும். பிராமணர் பிறர்போல் மணஞ்செய்வதினாலேயே பிள்ளை பிறக்கின்றதென்றும், கலப்பு மணத்தினாலும் பிள்ளை பிறக்கு மென்றும், இந்தியாவில் மட்டும் பிராமணருள்ளன ரென்றும், நன்னிறமுள்ள பிற வகுப்பாரும் பூணூலணிந்துகொண்டும் பிராமணர்போற் பேசிக்கொண்டும் பிராமணராகலா மென்றும், பிராமணர்க்கே சிறப்பான உடற்கூறொன்று மில்லை யென்றும், பிறப்பாற் சிறப்பில்லையென்றும், இதையே, பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (குறள். 972) என்று திருவள்ளுவர் விதந்தோதினார் என்றும் அறிக. பிராமணர் தமிழ்நாட்டை விட்டுப் பெயரவும் முடியாது. இனிமேல் தமிழரை அவர் ஏமாற்றவும் முடியாது. எல்லாத் தமிழரும் சான்றோரு மல்லர்; எல்லாப் பிராமணரும் கயவருமல்லர். ஆரியத்தை யெதிர்த்துத் தமிழைப் பேணிய நக்கீரர், பரிதிமாற் கலைஞர், சீநிவாச ஐயங்கார், இராமச்சந்திர தீட்சிதர், Dravidian India எழுதிய சேச(சேஷ) ஐயங்கார், கடை வள்ளலார் காலம் எழுதிய (S) கிருட்டிணசாமி ஐயங்கார் முதலிய பிராமணர் பலர், வையாபுரிப் பிள்ளையினும், தெ.பொ.மீ.யினும் சிறந்த தமிழரே. ஆதலால், இனிமேல், பிராமணர் அனைவரும் பிணக்கின்றித் தமிழரொடு பிணைந்து வாழ்ந்து, தமிழ்நாட்டரசிலும் தலைமை தாங்கித் தமிழையே பேணித் தமிழராகவே விளங்குவராக. இந்து, இந்தியன் எக்கசுபிரசு (Express) ஆகிய இரு சிறந்த உலகப் பொது ஆங்கில நாட்சரி ஆசிரியர் இதைக் கவனிப்பாராக. மாநாடு நடைமுறை மண்ணுலகில் மதிமாந்தன் (Homo Sepiens) தோன்றியதிலிருந்து இடையறாது வழங்கிவரும் உலக முதல் உயர்தனிச் செம்மொழியாகிய தமிழ், இலத்தீன் போன்று இறந்த மொழியுமன்று; சமற்கிருதம் போன்று எழுத்து மொழியுமன்று. ஆதலால், மாநாட்டு நிகழ்ச்சிகள் யாவும் பொதுமக்கட்கும் விளங்குமாறு தமிழிலேயே நடைபெறுதல் வேண்டும். மாநாட்டு மண்டபம் எல்லாரையும் கொள்ளாதாதலால்,வெளிநாட்டு விருந்தினரும் புலவரும் பெருமக்களும் மண்டபத்திற்குள்ளும், பொது மக்கள் மண்டபத்தின்முன் வெளியே ஒலிபெருக்கிகளும் தொலைக் காட்சிகளும் சுடர்விளக்குகளும் பொருத்தி மாபெரும் பந்தலடியிலும் இருத்தல் வேண்டும். வெளிநாடுகளினின்று வரும் படிநிகராளியரும் (Representatives) தமிழ் பேசவியலாவிடினும் அச்சிட்டதைப் படிக்கவாவது தெரிந்திருத்தல் வேண்டும். ஓர் ஆங்கில மாநாட்டில், ஆங்கில மறியாத ஒருவர் தம் தாய்மொழியிற் பேசவாவது படிக்கவாவது இசைவுபெற இயலுமா என்று எண்ணிப் பார்த்தல் வேண்டும். இதுவரை நான்கு மாநாடுகள் ஆங்கிலத்தில் நடைபெற்றுவிட்டதனால், இந்த மாநாட்டில் மட்டும் தமிழ் தெரியாத வெளிநாட்டார்க்குத் தவிர்ப்புக் கொடுக்கலாம். ஆயின், அது ஒரு தனி நிகழ்ச்சியாயிருத்தல் வேண்டும். இது மொழி மாநாடாதலால், அதிகாரம், கட்சி, செல்வம், நட்பு முதலிய சார்பின்றி, இயன்றவரை புலவரின் வரிசையறிந்து போற்றல் வேண்டும். மாநாட்டுக் கட்டுரைகளையும் நிகழ்ச்சிகளையும் அடக்க விலைப் பதிப்பில் வெளியிட்டு விற்றல் நன்று. உண்மைத் தமிழர் கடமை வருகின்ற மதுரை உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாட்டிற்கு உண்மைத் தமிழர் கடல்போல் திரண்டு வருக. இம் மாநாடு இதுவரை நடந்தவை போன்றதன்று. அயல்நாட்டறிஞர் ஆயிரவர் வரலாம். தமிழ் மாந்தன் தோன்றிய குமரிநாட்டு உலக முதன்மொழி யென்னும் உண்மை, பகைவர் மனத்திலும் பசுமரத்தாணிபோற் பதியுமாறு, திரைப்பட வாயிலாகக் காட்சியளவையிற் காட்டப்பட விருக்கின்றது. தமிழின் தொன்மை முன்மை தென்மை முதலிய தன்மை களையும், தமிழ் நாகரிகத்தின் தனிச் சிறப்பையும், பண்டைத் தமிழரின் பல்வகைப் பெருமையையும் அணிவகுத்துக் காட்டிவரும் அட்டோலக்க வூர்வலம் ஒன்று ஆரவாரமாக நிகழும். நிலையான ஓர் அருங்காட்சியகமும் கண்கவர் கவினோடமையும். இற்றைத் தமிழகத்தில் வரலாற்று முறையில் தலைசிறந்த பண்டைப் பாண்டியன் தலைநகராகிய மதுரை மாநகரும், புதியதோர் கோலங்கொள்ளும். கடைக்கழகம் போன்ற ஒரு புலவர் கழகமும் நிறுவப்பெறும். தமிழன் பிறந்தகம் மாந்தன் பிறந்தகமாகிய குமரிநாடே யென்னும் அடிப்படையுண்மை, இம் மாநாட்டில் அறுதியும் இறுதியும் உறுதியுமாக முடிபுறல் வேண்டும். அடுத்த மாநாடு 1985-ல் வடஆப்பிரிக்கச் செனகெல் (Senegal) நாட்டில், அதன் குடியரசு தலைவர் மேன்மை தங்கிய (இ)லியபோல்டு செங்கோர் தலைமையில் நடைபெறல் வேண்டும். அதற்குத் தமிழ்நாட்டுப் புலவர் குழுவை முதலமைச்சரே நடத்திச் செல்லல் வேண்டும். அம் மாநாட்டில், தமிழே உலக முதன்மொழியென்றும், ஆரியத்திற்கு அடிமணை யென்றும், இந்திய நாகரிகம் தமிழரதென்றும், யாம்(பிறரும் யானும்) ஐயந்திரிபற நாட்டுவேம். அதை இந்தியா, செருமனி, பிரெஞ்சு, இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய பன்னாட்டு ஆரியப் புலவரும் பட்டிமன்றத்தில் எதிர்க்கலாம். இறைவனருளால், அப் போலி யெதிர்ப்பை யெல்லாம் தவிடுபொடியாகத் தகர்த்தெறிவேம். பேரன் சேயானை அதாவது பாட்டனைப் பெற்ற பூட்டனைப் பெற்றான் என்பதுபோல், ஆரியத்தினின்று தமிழ் பிறந்த தென்பதும்; முட்செடியில் முந்திரிப் பழம் பழுத்தது என்பதுபோல், ஆரியச் சிறுதெய்வ வணக்கத்தினின்று சிவதிருமாற் பெருந்தேவ மதங்கள் திரிந்தன வென்பதும்; மரப்பாவை ஓர் உயிர் மகவை ஈன்றது என்பதுபோல், பாணினீயத்தினின்று தொல்காப்பியந் தோன்றிற் றென்பதும், அன்றோ டொழிதல் வேண்டும். தென்மொழி வடமொழிகளின் முன்மை பின்மையையும் மென்மை வன்மையையும் நாட்ட, அவற்றின் தோற்றக் காலமும் நெடுங்கணக்குமே போதிய சான்றாகும். தமிழ்நாட்டு அரசிலும் பல்கலைக்கழகங்களிலும் தமிழே தலைமை யாகவும் (Main), சமற்கிருதம் கீழ்த்துணையாகவும் (Subsidiary) வழங்குதல் வேண்டும். தமிழ்நாட்டுத் திருக்கோயில் வழிபாடு, தமிழிலேயே தமிழப் போற்றிமாராலேயே நடைபெறல் வேண்டும். பாரதக் காலத்திற்குப் பின்னரே, பிராமணர் தமிழ் வழிபாட்டு மரபை மாற்றி வடமொழி வழிபாட்டை வஞ்சகமாகப் புகுத்தும் ஆகமங்களைத் தோற்றுவித்துள்ளனர் (History of the Tamils, pp. 105-12). இந்திய வொன்றிய நடுவணரசு, சமற்கிருதம், அரபி, பாரசீகம் ஆகிய மும்மொழித் தலைமைப் புலவர்க்கும் ஆண்டுதோறும் வழங்கும் பரிசையுஞ் செய்யுஞ் சிறப்பையும் தமிழ்ப் புலவர்க்கும் வழங்குதலும் செய்தலும் வேண்டும். இவையெல்லாம் நிகழ்ந்த பின்னரே தமிழ்நாடு உண்மையான விடுதலை பெற்றதாகும். ஆங்கில ஆட்சி நீக்கத்தால் தமிழ்நாடு பேரடிமைத் தனமே பெற்றுள்ளது. தமிழ் வாழ்க! தமிழ்ப்பகை வீழ்க! தமிழ்நாட்டு முதலமைச்சர் கையைத் தவ வலுப்படுத்துக. - ``செந்தமிழ்ச் செல்வி'' திசம்பர் 1980 17 தமிழனின் பிறந்தகம் ஒரு வீட்டிற்கு ஆவணம் போன்றே, ஒரு நாட்டிற்கு வரலாறு உரிமைச் சான்றாகும். ஆயின், ஓர் ஆவணத்தில் எதிரிகளால் ஏதேனும் கரவடமாகச் சேர்க்கப்படலாம். அதுபோன்றே, ஒருநாட்டு வரலாறும் பகைவரால் அவர்க்கேற்றவாறு மாற்றப்படலாம். ஆதலால், இவ் விரு வகையிலும், உரிமையாளர் விழிப்பாயிருந்து தம் உரிமையைப் போற்றிக் காத்துக்கொள்ளல் வேண்டும். தமிழக வரலாறு, ஆரியர் தென்னாடு வந்ததிலிருந்து கடந்த மூவாயிரம் ஆண்டாக மறைக்கப்பட்டும் மாற்றப்பட்டும் வந்துள்ளது. இதன் உண்மையான நிலைமையை அறிதற்கு, இந்திய வரலாற்றைத் தெற்கினின்று தொடங்கல் வேண்டும். இந்திய வரலாற்றுத் தந்தையாகக் கருதப்படும் வின்சென்று சிமிது (Vincent Smith), தம் `இந்திய முந்திய வரலாறு' (Early History of India) பொத்தகத்தில், பேரா. சுந்தரம் பிள்ளையின் கூற்றைப் பின்வருமாறு எடுத்துக் கூறியுள்ளார்: INDIA PROPER IN THE SOUTH ``The attempt to find the basic element of Hindu civilization by a study of Sanskrit and the history of Sanskrit in Upper India is to begin the problem at its worst and most complicated point. India, South of the Vindhyas the Peninsular India-still continues to be India Proper. Here the bulk of the people continue distinctly to retain their pre-Aryan features, their pre-Aryan languages, their pre-Aryan social institutions. Even here, the process of Aryanization has gone indeed too far to leave it easy for the historian to distinguish the native warp from the foreign woof. But. if there is anywhere any chance of such successful disentanglement, it is in the South: and the farther South we go the larger does the chance Grow. The scientific historian of India, then, ought to begin his study with the basin of the Krishna, of the Cauvery, of the Vaigai, rather than with the Gangetic plain, as it has been, now long, too long, the fashion.'' - (Tamilan Antiquary, No. 2 (1908), p.4.) இந் நெறிமுறையைக் கடைப்பிடித்துத் தமிழக வரலாறு வரைந்தவர் பி.டி. சீநிவாசையங்கார், வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் என்னும் இருவரே. ஒரு நாட்டு வரலாறு வரைதற்குப் பயன்படும் மூலவாய்கள் (Sources) பின்வருமாறு ஐவகைப்படும்: 1. மரபு வழக்கு (Tradition) 2. அயல் நாட்டார் குறிப்பு 3. தொல்பொருட் சான்று (Archaeological evidence) 4. நாட்டிலக்கியம் 5. நாட்டுமொழி. பழம் பாண்டிநாடான பண்டைத் தமிழகம் கடலுள் முழுகிப் போனதனாலும், ஆரியர் வருகைக்கு முற்பட்ட அனைத்திலக்கியமும் அழிக்கப்பட்டுவிட்டதனாலும் தொல்பொருட் சான்றும் பண்டை இலக்கிய மும் தமிழக வரலாற்றிற்குப் பயன்படாவாறு அடியோடு இறந்துபட்டன. அதனால், இன்று வரலாற்றுச் சான்றாக உதவுவது பெரும்பாலும் மொழியே. இற்றை இலக்கியச் சான்றுகள் தமிழ் தோன்றியது தென்மாவாரியில் முழுகிப்போன குமரிநாடே. ஆதலால், தமிழன் தோன்றியதும் அந் நாடே. குமரிக்கண்டத் தென் கோடியில், பனிமலைத் தொடர்போலும் பன்மலையடுக்கத்துக் குமரிமலைத் தொடரும், அதனின்று பாய்ந்தோடிய பஃறுளியென்னும் கங்கை போலும் பேரியாறும் இருந்தன. அப் பழம் பாண்டிநாட்டை யாண்ட பாண்டி வேந்தருள் ஒருவன் நெடியோன் என்பான். ``முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.'' (புறம். 9: 10-11) அவன் காலத்திலோ, பின்போ, ஒரு பெருங் கடல்கோள் நிகழ்ந்து, குமரிமலையும் பஃறுளியாறும் அதன் கரையிற் கட்டப்பட்ட பாண்டியன் தலைநகராகிய (தென்) மதுரையும் உள்ளிட்ட பழம் பாண்டி நாட்டின் தென்பெரும் பகுதியை முழுக்கிவிட்டது. அதுவே தமிழிலக்கியங் கூறும் முதல் கடல்கோள். கடல்கோளுக்குத் தப்பிய அல்லது பிற்பட்ட பாண்டியன் ஒருவன், வடதிசையிலுள்ள பனிமலையையும் கங்கையாற்றையுங் கைப்பற்றி, தான் இழந்த குமரிமலைக்கும் பஃறுளியாற்றிற்கும் ஈடு செய்துகொண்டான். இதையே, ``அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி'' (சிலப். 11 : 17-22) என்று பாடினார் இளங்கோவடிகள். அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி வடிவேலெறிந்து வான்பகை கொண்டவன், நெடியோனுக்கு முந்திய வடிம்பலம்ப நின்ற பாண்டியன். நெடியோன் முந்நீர்க்கு விழாக் கொண்டாடி அதனொடு நட்புப் பூண்டவன். குமரிக்கண்டத்தின் தென்பகுதி மூழ்கியபின், வடபகுதியில் நெய்தல் நிலத்தில், கதவம் (கபாடம்) அல்லது புதவம் அல்லது அலைவாய் என்று பெயர் பெற்ற இரண்டாம் பாண்டியத் தலைநகர் தோன்றிற்று. பின்பு அதையுங் கடல் கொண்டது. அஃது இரண்டாம் கடல்கோள். அதற்குத் தப்பிய பாண்டியன், தன்போல் எஞ்சியிருந்த தன் குடிகளைச் சோழநாட்டிலும் சேர நாட்டிலும் ஒவ்வொரு பகுதியைக் கைப்பற்றிக் குடியிருத்தினான். இதனையே, ``மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப் புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்'' (104 : 1-4) என்று முல்லைக்கலி கூறும். ``சோழநாட் டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும் சேர மாநாட்டுக் குண்டூர்க் கூற்றமும் என்னும் இவற்றை, இழந்த நாட்டிற்காக ஆண்ட தென்னவன்'' என்று அடியார்க்குநல்லார் உரைத்ததும் இதுபற்றியதே. இங்ஙனம், இரு கடல்கோள்களால் குமரிக்கண்டத்தின் தென்கோடி யிலிருந்த பஃறுளியாற்றிற்கும் வடகோடியிலிருந்த குமரியாற்றிற்கும் இடைப்பட்ட நில நீட்சியை ``எழுநூற்றுக் காவதவாறு'' (ஏறத்தாழ ஈராயிரம் கல்) என்றும், அந் நிலப்பரப்புப் பகுதிகளை, ``ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ் குறும்பாலை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும்'' என்றும், அடியார்க்கு நல்லார் உரைத்திருப்பது, கடுகளவுங் கட்டுச் செய்தியாயிருக்க முடியாது. அருச்சுனன் தெற்கே திருநீராட்டிற்கு வந்த பாரதக் காலத்திலும், அதற்குப் பிற்பட்ட தொல்காப்பியர் காலத்திலும் (கி.மு. ஏழாம் நூற்றாண்டு) பஃறுளி மதுரை நோக்கி, வடமதுரையென வழங்கிய வைகை மதுரை தோன்ற வில்லை, குமரியாறு ஓடிற்று. பின்னர் அதுவும் கடலுள் மூழ்கிற்று. அதன் பின்னரே, ``தொடியோள் பௌவம்'' என்று இளங்கோவடிகள் குறிக்கவும், ``தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின்காறுங் கடல்கொண் டொழிதலால்'' என்று அடியார்க்குநல்லார் உரைக்கவும் நேர்ந்தது. குமரியாற்றைக் கடல்கொண்டது மூன்றாங் கடல்கோள். மணிமேகலை காலத்திற் புகார் கடலுட் புகுந்தது நாலாங் கடல்கோள். இறையனா ரகப்பொரு ளுரையிலுள்ள முக்கழக வரலாறு, முதலிரு கடல்கோள்களைக் குறிக்கின்றது. இது நம்பத்தக்க செய்தியே. பனிமலை கடலுட் பதுங்கியிருந்த தொன்முது பண்டைக் காலத்தில், நாவலந்தீவின் தென்பாகம் உயர்ந்தும் வடபாகம் தாழ்ந்தும் இருந்தன. பனிமலை கிளர்ந்து குமரிமலை நாடு மூழ்கியபின், வடபாகம் உயர்ந்தும் தென்பாகம் தாழ்ந்தும், வடதென் திசைகள் முறையே உத்தரம் தக்கணம் எனப்பட்டன. ஒ.நோ: கீழ் - கீழ்க்கு - கிழக்கு X மேல் - மேற்கு. உ (மேல், உயர்) + தரம் = உத்தரம். தக்கு = தாழ்வு. தக்குத் தொண்டை = தாழ்ந்த குரல் தொண்டை. தக்கு = தக்கணம் (Deccan). வலத்தை அல்லது வலதிசையைக் குறிக்கும் தக்ஷண (L. dexter-dexterity) என்னும் வடசொல் தக்ஷ் மூலத்தினின்று பிறந்ததாதலின், வேறு சொல்லாம். மானியர் உவில்லியம்சு சமற்கிருத ஆங்கில அகரமுதலியில் உத்தர (uttara) என்னும் சொல்லைப் பார்க்க. தமிழ் தெற்கே தோன்றிய மொழியாதலால், தென்மொழி, தென்கலை, தென்னாடு, தென்னிலம், தென்புலம், தென்புலத்தார், தென்பாலி, தென்னகம், தென்பாண்டி, தென்மதுரை, தென்னன், தென்னவன் முதலிய சொல்வழக் கெழுந்தன. இராமன் தன் கானக வாழ்க்கையில் அகத்தியரைக் கண்டபோது, பின்னவர் முன்னவனை அன்புடன் வரவேற்றதை, கல்வியிற் பெரியவரும் பாவலருள் மாவலருமான கம்பர், ``நின்றவனை வந்தநெடி யோனடிப ணிந்தான் அன்றவனு மன்பொடுத ழீஇயழுத கண்ணான் நன்றுவர வென்றுபல நல்லுரைப கர்ந்தான் என்றுமுள தென்றமிழி யம்பியிசை கொண்டான்'' (கம்பரா. அகத். 47) என்று இனித்த தனித்தமிழ்ப் பாவாற் பாடி, தமிழின் கன்னித் தூய்மையை யும், தென்குமரிநாட்டுத் தோற்றத்தையும், என்று மழியாத் தன்மையையும், அகத்தியர் அதைக் கற்றுத் தேர்ந்ததையும் முத்தமி ழிலக்கணம் இயற்றிப் புகழ் பெற்றதையும், ஒருங்கே தெள்ளத் தெரிவித்தார். The Tamils Indigenous to South India ``Some writers conduct the ancient Dravidians with the self-confidence of a Cook's guide through the North-western or North-eastern mountain passes of India and drop them with a ready-made foreign culture on the banks of the Kaveri or the Vaigai. The slender evidence on which they rely for this elaborate theorizing is the fact that Brahui, a dialect spoken in the northern corner of India, possesses a few words allied to Tamil words. The only legitimate inference from this is that the Tamil language or a language allied to it prevailed upto the North-west province in ancient times. This inference is supported by another fact, viz., that the modern dialects of Northern India now called Sanskritic or Gaudian, have a fundamental grammatical frame work and a scheme of syntax, the same as that of the Dravidian dialects, so much so that sentences from the one set of dialects can be translated into any one of the other set of dialects by the substitution of word for word without causing any breach of idiom. These facts can only prove that people speaking dialects allied to Tamil once inhabited the whole of India and not that these people must necessarily have come into India from outside the country. No single fact has yet been adduced that compels us to believe that the ancient people of India were not autochthones.'' (The History of the Tamils by P. T. Srinivasa Iyenger, p.2.) Where This Evolution First Took Place The five sub-division of the habitable regions occur contiguous to each other and in a small fraction of the earth's surface in India South of the Vindhyas. It is therefore easy to understand how increase of population and alterations in the natural supply of food-stuffs brought about here at different periods the migration of men from region to region and the consequent development of the different stages of human culture, the hunter, the nomad, the pastoral, the coastal and the agricultural, due to the different stimuli provided by the changing milieu; in other words, the geographical control of the growth of human civilization can be worked out and set forth clear as on a map, by a study of man's progress in this restricted portion of the surface of the earth. Outside India, these five natural, regions occur on a vast scale, e.g., the Mullai, the vast steppe land extending from the Carpathians to the foot hills of the Altais, the Kurinji or the great mountain chain from the Pyrenees to the Himalayas and beyond, forming a great girdle round the waist of mother earth the Neydal, the coasts of the Mediterranean sea, and the Indian and the Atlantic oceans, and the Palai, the great desert of Sahara and its continuation in Arabia, Persia and Mongolia''. (Ibid., p.14.) The myth of the importation of the South Indian languages from outside India. ``Certain investigators assume that everything Indian must have been imported at some remote times from outside India. They hold that the speakers of primitive Tamil and other South Indian languages, to whom they give the name of the Dravidian race, must have settled in India from Central Asia. These theorists drag large bodies of ancient along the map of Asia and Europe as easily as chessmen are shifted on the chess-board, and make them wander aimlessly from country to country, merely to support their baseless theories. It happens that certain words of the Brahui dialect of Baluchistan resemble certain Tamil words. To explain this solitary fact, which is susceptible of various interpretations, they will have it that an ancient Dravidian race, evolved somewhere outside India in the Asiatic highlands, undertook a pilgrimage to India through the North-western Gate, and reached the extreme South through strange and devious ways. Foote constructs an itinerary for the wandering of these peoples, which is a specimen of perverse ingenuity without any historicl evidence to support it. Surely the Neolithians of India were not dumb animals, but spoke languages of their own. The simplest hypothesis under the circumstances is, as Tamil traditional history holds, that the Tamils and other allied peoples were indigenous and their languages were evolved where they are now spoken'' (Stone Age in India by P.T. Srinivasa Iyengar, pp. 46-7) பேரா. வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் ஆங்கிலத்தில் எழுதிய `வரலாற்று முன்னைத் தென்னிந்தியா' (Pre-Historic South India), தமிழர் தோற்றமும் பரவலும்' (Origin and Spread of the Tamils) என்னும் இரு வரலாற்று நூல்கள், தமிழர் குமரிநாட்டில் தோன்றிப் பாரெங்கும் பரவியதை நடுநிலையாகவும் மறுப்பிற் கிடமின்றியும் விளக்கிக் கூறுகின்றன. வடநூல்களுள், சதபத பிராமணம், ஒரு தென்திசைக் கடல் கோளுக்குத் தப்பிய பாண்டியனைத் திரவிடபதியென்று குறிக்கின்றது. மொழியியற் சான்றுகள் 1. தமிழும் அதன் திரிபான திரவிட மொழிகளும் இந்தியாவிற் குள்ளேயே வழங்குதலும், அவற்றுள் இலக்கியமுள்ள முதன்மையான நான்மொழியும் தென்னிந்தியாவிற்குள்ளேயே வழங்குதலும், அவற்றுள் ளும் தலைமையான தமிழ் தென்கோடியில் வழங்குதலும், அதன் வழக்கும் தெற்கிற் சிறந்திருத்தலும், வடக்கே செல்லச் செல்ல ஏனைத் திரவிட மொழிகள் இலக்கணமின்றியும் இலக்கிய மின்றியும் பண்பாடின்றியும் சொல்வளமின்றியும் கொச்சையாகியும் மேன்மேலும் சிறுத்தும் சிதைந்தும் கலவையாகியும் போவதும், இந்தியாவிற்கு வெளியே சிதைந்த தமிழ் அல்லது திரவிடச் சொற்களன்றி மொழியேதும் வழங்காமையும். 2. இந்தியின் அடிப்படைச் சொற்கள் சிதைந்த தென் சொல்லா யிருத்தல். முதல் கருப்பொருட் சான்றுகள் 1. கால வேறுபாடும் இயற்கை நிலைமைகளும் உயிரின வகைகளும் விளைவுப் பொருள்களும் தொன்றுதொட்டு மாறாதிருந்து வருதல். 2. சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள காரோதிமம் (காரன்னம்) இன்று ஆத்திரேலியாவிலும் தாசுமேனியாவிலும் மட்டும் இருத்தலும், தென்றிசைப் பெயருக்குக் காரணமான தென்னைமரம் தென்கிழக்குத் தீவுகளில் மட்டும் இயற்கையாக வளர்தலும். மறுப்பிற்கு மறுப்பு மேனாட்டு இடப்பெயரீறுகட்குத் தமிழிலேயே பொருளிருத்தலாலும், குமரி நாட்டிலிருந்து நண்ணிலக் கடற்கரை நாட்டிற்கு முதற்கண் சென்ற மக்கள் நீள்மண்டையரா யிருந்ததனாலும், ஊர் என்னும் மருதநிலக் குடியிருப்புப்பெயர் குமரிநாட்டிலேயே தோன்றியமையாலும், பருங்கற் கட்டட அமைப்பே சிறுகற் கட்டட அமைப்பிற்கு முந்துவது இயற்கையாத லாலும், இலாகோவாரி (Lahovary), பாலகிருட்டிணன் நாயர் முதலியோர் தமிழின் அல்லது தமிழரின் தொன்மையை மறுப்பது அறியாமை பற்றியதே யென்று கூறி விடுக்க. முடிந்த முடிபு தமிழ், தென்னாட்டிற்கும் தெற்கில் தென்மாவாரியில் முழுகிக் கிடக்கும் தென்கண்டத்தின் தென்கோடி நாடான தென்பாலியில் தோன்றிய தென்மொழியே. அதனால், அதைத் தோற்றி வளர்த்த தமிழன் பிறந்தகமும் அத் தென்புலமே. இவ் வடிப்படையிலேயே, தமிழின் அமைப்பும் அதன் திரவிடத் திரிபும் ஆரிய வேறுபாடும் தெளிவான விளக்கம் பெறுகின்றன. இவ் வுண்மையை அறியாதார் அல்லது உணராதார் தமிழின் இயல்பை மட்டுமன்றி ஒப்பியன் மொழிநூலையும் அறியாதவரே யாவர். - ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர் 1981; செ.செ. பெப்பிரவரி 1981 18 தமிழன் உரிமை வேட்கை உரிமை என்றால் என்ன? மாந்தன் இவ் வுலகில் இருக்கை, காலந்தள்ளுகையும் வாழ்க்கையும் வாழ்வும் என முத்திறப்படும். வருமானம், நுகர்பொருள், உடல்நலம் முதலியன குன்றியிருத்தல் காலந்தள்ளுகை; அவை இன்றியமையாத அளவிருத்தல் வாழ்க்கை ; அவை அளவிறந்திருத்தல் வாழ்வு. இவற்றைப் புல்வாழ்க்கை, அளவு வாழ்க்கை, நல்வாழ்க்கை என்றுங் கூறலாம். வாழ்வும், உரிமை வாழ்வு, அடிமை வாழ்வு என இருவகைப்படும். தன் இல்லத்திற் குடியிருந்து, உடலுழைப்பாலோ மனவுழைப்பாலோ தானே தேடிய பொருளைக் கொண்டு, இறைவனடியார், விருந்தாளர், ஏழையுறவினர், இரப்போர், புலவர் ஆகிய ஐவகுப்பார்க்கு அளித்துண்டு, தன் தாய்மொழி இலக்கியச் செம்மொழியாயின் அதில் இயன்றவரை தூய்மையாகப் பேசியெழுதி, கடவுள் நம்பிக்கையிருப்பின் தன் தாய் மொழியிலேயே வழிபட்டு, தன் முன்னோர் வளர்த்த பண்பாட்டைப் போற்றிக்காத்து, பகுத்தறிவோடும் தன்மானத்தோடும் வாழ்வதே, தனிமகன் உரிமை வாழ்வு. தம் நாட்டில் அல்லது தமக்கென்றுரிய ஒரு தனிநிலப் பகுதியில் வதிந்து, மேற்கூறியவாறு வாழ்ந்து வருவதே ஒரு நாட்டினத்தின் அல்லது மக்கள் வகுப்பின் உரிமை வாழ்வு. தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் (குறள். 1107) என்று திருவள்ளுவர் கூறுதல் காண்க. கல்விக்கும் அயல்நாட்டுறவிற்கும் ஒரு மொழியைத் தெரிந்து கொள்வதும், உரிமையின் பாற்பட்டதே. மூவகை வாழ்க்கையும், உரிமையின்றேல் அடிமை வாழ்க்கையே. தமிழனுக்கு உரிமையுண்டா? தமிழன் என்றது இற்றைத் தமிழனை. ஒரு வீட்டிற்கு ஆவணம் போல், ஒரு நாட்டிற்கு உரிமைச் சான்று உண்மையான வரலாறு. இந்த நூற்றாண்டுத் தொடக்கத்திலேயே, மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம்பிள்ளை, இந்தியா சரியானபடி தெற்கிலுள்ளதென்றும், இந்திய வரலாற்றைத் தெற்கினின்றே தொடங்க வேண்டும் என்றும், எழுதி வெளியிட்டார். இந்திய வரலாற்றுத் தந்தையெனத் தகும் வின்சென்று சிமிதும், தம் முந்துகால இந்தியா (Early India) என்னும் வரலாற்றுப் பொத்தகத்தில், சுந்தரம் பிள்ளையின் கூற்றைப் பாராட்டி, எதிர்கால இந்திய வரலாற்று ஆசிரியரெல்லாரும் தம் வரலாற்று நூலைத் தெற்கினின்றே தொடங்க வேண்டுமென்று வலுவுறச் சார்ந்துரைத்தார். அக் கொள்கையைத் தழுவி, பி.தி.சீநிவாசையங்கார் இந்தியக் கற்காலம் (Stone Age In India), ஆரியர்க்கு முன்னைத் தமிழ்க் கலை நாகரிகம் (Pre-Aryan Tamil Culture), தமிழர் வரலாறு (History of the Tamils) முதலிய நூல்களையும்; வி.ரா. இராமச்சந்திர தீட்சிதர் தமிழர் தோற்றமும் பரவலும் (Origin and Spread of the Tamils), வரலாற்றிற்கு முன்னைத் தென்னிந்தியா (Pre-Historic South India) முதலிய நூல்களையும், எவரும் மறுக்க முடியாதவாறு திறம்பட எழுதிப் போயினர். ஆயின், அவர் மறைந்தபின், பேரா. கே. நீலகண்ட சாத்திரியார் அவர் கொள்கைக்குங் கூற்றிற்கும் நேர்மாறாக, ஆரிய வேதத்தையே அடிப்படை யாகக் கொண்டு இந்திய வரலாற்றை வடக்கினின்று தொடங்கி, உண்மைக் கும் உத்திக்கும் ஒவ்வாவாறு பேரன் பாட்டனைப் பெற்றான் என்பதுபோல், தமிழர் வரலாற்றைத் தலைகீழாக வரைந்துள்ளார். தமிழன் பிறந்தகம் தெற்கில் முழுகிப் போன குமரிநாடென்னும் அடிப்படையிலேயே, தமிழின் சிறப்பையும் தமிழன் உயர்வையும், உண்மையாக உணர்தலொண்ணும். வரலாற்றிற்கு முன்னைத் தென்னிந்தியா என்னும் வரலாற்றுப் பொத்தகம் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாயிருந்தும், அதைப் படியாமையாலோ, தம் இயற்கையான அடிமைத்தனத்தாலோ, வையாபுரித் தன்மையாலோ, தலைமைப் பதவித் தமிழ்ப் பேராசிரியரும் பேராசிரியர் நீலகண்ட சாத்திரியாரை எதிர்க்கத் துணிவதில்லை. அதனால், தமிழின் தொன்மையும், முன்மையும், தாய்மையும், தலைமையும் தமிழ்நாட்டிலும் ஒப்புக்கொள்ளப்படாமலே யிருக்கின்றன. ஒரு மொழியின் சிறப்பை எடுத்துக்காட்ட, அகரமுதலிபோற் சிறந்தது வேறொன்றுமில்லை. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகரமுதலி (Lexicon) 23 ஆண்டுகளாகப் பொதுமக்கள் பணத்தில் நாலரையிலக்கம் உரூபா செலவிட்டுத் தொகுக்கப்பட்டது. ஆயின், மூல (ஆதி) வையா புரியாரைத் துணைக்கொண்டு தமிழ்ப் பகைவரான பிராமணத் தமிழ்ப் புலவரே அதைத் தொகுத்ததனால், தமிழ் ஒரு புன்சிறு புதுக்கலவை மொழியெனக் காட்டப்பட்டுள்ளது. அவ் வகரமுதலியின் குற்றங்குறைகளை யெல்லாந் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டியும், தன்னலப் பிண்டங் களான தலைமைத் தமிழ்ப் பேராசிரியருட் சிலரும் அதைப் புறக்கணியாது போற்றி வருகின்றனர். இங்ஙனம், தமிழ் வரலாறு மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும், தமிழ்மொழி தாழ்த்தப்பட்டும் வீழ்த்தப்பட்டும் இருப்பதால், தமிழ் அனைத்திந்திய ஆட்சி மொழியாகாதும், திருக்கோவில் வழிபாடு தமிழில் நடைபெறாதும் போகின்றன. இதனால் தமிழ் வளர்ச்சியும் தமிழன் முன்னேற்றமும் தடைப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் முன்னேறும் வழி மொழியே. அது தாய்மொழியாகவும் இருக்கலாம்; அயன் மொழியாகவும் இருக்கலாம். தாய்மொழியில் முன்னேற்றத்திற்கேற்ற இலக்கியமில்லாவிடின், அஃதுள்ள அயன்மொழியே முன்னேற்ற வழியாகும். இதற்கு, ஆப்பிரிக்க ஆத்தி ரேலிய அமெரிக்கப் பழங்குடி மக்களே தலைசிறந்த எடுத்துக்காட்டாவர். தமிழில் ஓரளவு பண்டையிலக்கியம் இருப்பினும், இக்காலக் கல்வி அறிவியமும் அதன் வழிப்பட்ட நுண்கம்மியமுமே யாதலால், மக்கள் முன்னேற்றத்திற்கு ஆங்கிலம் போன்ற ஒரு மேலை மொழியறிவு இன்றியமையாததாகின்றது. அதனால், அது அயலாரால் வலிந்து புகுத்தப் படாது மக்களாலேயே விரும்பிக் கற்கப்படுகின்றது. இது அடிமைத் தனமன்று. ஆயின், உலகில் வேறெங்கணும் காணமுடியாத ஒரு வேடிக்கையும் வியப்புமான மொழியடிமைத்தனம், இந் நாவலந் தேயத்தில், சிறப்பாகத் தமிழ்நாட்டில், கடந்த மூவாயிரம் ஆண்டாக இருந்துவருகின்றது. அது வேதமொழியும் சமற்கிருதமும் தேவமொழியென்பதும், அதை இலக்கிய வழக்காக வழங்குவோர் நிலத்தேவர் (பூசுரர்) என்பதும், அதினின்று ஏனை மொழிகளெல்லாம் கடன் கொள்ளுமென்பதும், அது மட்டும் வேறெம் மொழியினின்றும் கடன் கொள்ளாதென்பதும், அது பிராமணனாலேயே சரியாகப் பலுக்கப்படும் (உச்சரிக்கப்படும்) என்பதும், அதன் பலுக்கம் இம்மி திறம்பினும், பெருங்கேடு விளையும் என்பதும், அதிற் செய்யப்படும் வழிபாடே இறைவனுக்குப் பேரின்பந் தருவதென்பதும், பிராமணனுக்குத் தொண்டு செய்வதே அரசர், வணிகர், வேளாளர், கைத்தொழிலாளர் ஆகிய பிறவகுப்பாரெல்லாம் உய்யும் வழி யென்பதும், பிறவுமாம். இவ் வுலகில் தொன்றுதொட்டு வாழ்ந்து வருபவர் மக்களே. ஆதலால், உலகமொழிகள் எல்லாம் மக்கள் மொழிகளே. வேத மொழியோ சமற் கிருதமோ தேவமொழியாயின், அவற்றோடு நெருங்கிய தொடர்புற்ற கிரேக்க மொழியும், அதற்கினமான இலத்தீனம், செருமானியம் முதலிய ஐரோப்பிய மொழிகளும் தேவமொழிகளா யிருத்தல் வேண்டும். அவை அங்ஙனம் இல்லை. பிராமணரின் முன்னோர் வெண்ணிறத்தரா யிருந்ததனால் தேவ ரெனப் பட்டாரெனின், இன்று அவர் வழியினர். அந் நிறத்தராயில்லை. இன்று ஐரோப்பியரும் அவர் வழியினருமே நிலத்தேவர் எனப்படல் வேண்டும். வேதம் என்னும் மறைநூலால் ஆரியம் தேவமொழியாயிற்றெனின் சிறுதெய்வ வழுத்துத் திரட்டாகிய வேதத்தினும் வீடுபேறளிக்கும் பெருந் தேவ வழுத்துத் திரட்டும் கடவுள் வழுத்துத் திரட்டுமாகிய தமிழ்மறைகள், கோடிக்கணக்கான மடங்கு சிறந்தனவாதல் வேண்டும். இனி, வேதமொழி வல்லோசையும் மூச்சொலியும் நிரம்பியதனால் தேவமொழி யெனப்படும் எனின், அவ் விரண்டும் பன்மடங்கு சிறந்த காளவாய்க் கத்தலும் தேவமொழிக் கினமாதல் வேண்டும். இனி, வேதமொழியும் சமற்கிருதமும் எத்தகைய மொழிகள் என்பதைப் பார்ப்போம். வேதமொழி என்பது எத்தகையது? வேத ஆரியர் மிகச் சிறுபான்மையரா யிருந்ததனால், கிரேக்கத்திற்கு மிக நெருக்கமாயிருந்த அவர் மொழி, அக்காலத்து வடநாட்டு வட்டார மொழியாகிய பிராகிருதத்தொடு இரண்டறக் கலந்து, அதன் பான்மையதாகி எகர ஒகரக் குறில் இழந்து இருமொழிக் கலவையாயிற்று. சமற்கிருதம் எத்தகையது? தமிழிலுள்ள பல்துறை யிலக்கியத்தை மொழிபெயர்த்தற்கு வேத மொழி போதிய சொல்வளமின்றி யிருந்ததனால், ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களை வேதமொழியோடு கலந்து, சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கை யிலக்கிய மொழியை உண்டாக்கினர். சமற்கிருதம் (ஸம்ஸ்க்ருத) என்றாலே கலந்து செய்யப்பட்டது என்பதுதான் பொருள். கும்முதல் = கூடுதல், கலத்தல். கும் - கும்மல் = கும்பல், குவியல். L. cumulus, heap. இதினின்றே cumulate, accumulate முதலிய ஆங்கிலச் சொற்கள் பிறக்கும். கும் - கும்மி = கை குவித்தடித்துப் பாடியாடும் கூத்து. கும் - குமி - குவி. குமி - குமிழ் - குமிழி = குவிந்த நீர் மொட்டு. குவி - குவியல், குவால், குவை. கும் - கும்பு - கும்பல். கும்பு - குப்பு - குப்பல், குப்பை, குப்பம், கொப்பம். கும்பு - கூம்பு - கூப்பு, கூம்புதல் = குவிதல். கை கூப்புதல் = கை குவித்தல். கும்பு - கும்பிடு, கும்பிடுதல் = கை குவித்தல். கும் - கொம் - கொம்மை. கொம்மை கொட்டுதல் = கை தட்டி யழைத்தல். கும்மி - கொம்மி = கும்மியாட்டம். கொம்மி - தெ. கொப்பி (gobbi). Cum (கும்) என்பது இலத்தீன் மொழியில் ஒரு கூட்டிணைப்புச் சொல் (Cumulative Conjunction). அது ஆங்கிலத்தில் com, con, col, cor, co என்று திரிந்து with, together, altogether, completely என்று பொருள்படும் முன்னொட்டு (prefix) ஆகும். அதுவே கிரேக்க மொழியில் sym, syn, syl, sy என்று திரிந்து together, together with, in union with என்று பொருள்படும் முன்னொட்டாகும். அதுவே சமற்கிருதத்தில் ஸம் என்று திரிந்து, with, together with, along with, together, altogether என்று பொருள்படும் முன்னொட்டாகும். ஸம்ஸ்க்ருத என்னும் சொல்லிற்கு, put together, constructed, well or completely formed, perfected என்று மானியர் உவில்லியம்சு சமற்கிருத - ஆங்கில அகரமுதலி பொருள் கூறுதல் காண்க. கருத்தல் என்பது, செய்தல் என்று பொருள்பட்டுக் கட்டல் (களவு செய்தல்), வின்னல் (வினவுதல்) என்பன போலக் குமரிநாட்டில் வழங்கிப் பின்னர் வழக்கற்றுப் போன ஒரு தூய தென்சொல். தமிழகத்தில் தொன்றுதொட்டு வெள்ளாளர், காராளர் என்று இருவேறு நிறத்தார் இருந்துவந்திருக்கின்றனர். அளவிறந்து வெயிலிற் காய்பவர் கருத்திருத்தலும், நிழலில் வேலை செய்பவர் வெளுத்திருத்தலும் பெரும்பான்மை யியல்பு. கையிற் காழ்ப்பேற வேலைசெய்யின் கருப்பர் கை கருத்தும், சிவப்பர் கை சிவந்தும் போகும். அதனால், செய்தலைக் குறிக்கக் கருத்தல் செய்தல், என இரு வினைச்சொற்கள் தோன்றின. செய்த கை சேவேறும் செய்யாத கை நோவேறும் என்பது பழமொழி. கரு - கருமம் - கம்மம் = கம்மியத் தொழில். கம்மஞ்செய் மாக்கள் (நாலடி. 393) கம்மம் - கம் - கம்மவர் - கம்மவாரு (தெ.) = முதல் தொழிலான உழவைச் செய்யும் தெலுங்க வகுப்பார். கருமம் - (வ.) கர்மன் கம் = 1. தொழில் ஈமுங் கம்மும் உரும்என் கிளவியும் (தொல். எழுத்து. 33) 2. கம்மியர் தொழில் (நன். 223, விருத்.) கம் - காம் (இந்தி) கம் - கம்மாளன் = 1. கொல்லன், தச்சன், கற்றச்சன், தட்டான், கன்னான் என்னும் ஐவகைக் கொல்லருள் ஒரு வகுப்பான். 2. பொற்கொல்லன். கம்மாளன் - பிரா. கம்மார, (வ.) கார்மார. கம் - கம்மி = 1. தொழிலாளி, மட்கலஞ்செய் கம்மி (பாரத. திரௌ. 64) 2. கற்றச்சன். கம் - கம்மியம் = 1. கைத்தொழில், 2. கம்மாளத்தொழில், 3. கட்டடத்தொழில் (வ.) கர்மண்ய. கம்மியன் = 1. தொழிலாளி கம்மியரும் ஊர்வர் களிறு (சீவக. 495) 2. கம்மாளன் 3. கற்றச்சு. கம்மிய நூல் = கட்டட நூல் (சிற்ப சாஸ்திரம்) ``கம்மியநூற் றொல்வரம் பெல்லை கண்டு (திருவிளை. திருநகரங். 38) கம்மக்குடம் = கன்னான் செய்த குடம் (நன். 222, மயிலை). கம்மகாரர் = 1. கலத்தச்சர் 2. கப்பலோட்டிகள். கம்மகாரர் கொண்டாடும்படி நன்றாக ஓடிற்று (சீவக. 501, உரை) கரு என்னும் முதனிலையைக் க்ரு என்று திரிப்பர் வடமொழி யாளர். ஒ.நோ. : துரு (துருவு) - (வ.) த்ரு. பெரு - (வ.) ப்ருஹ். பொறு - (வ.) ப்ரு (bhru). செய் = சிவப்பு. செய்ய = சிவந்த செய்யன் = சிவந்தவன், சிவன். கருத்தல், செய்தல் என்னும் இரண்டும் உறவியற் சொற்கள் (Relative terms) கரு - கருவி = கருமஞ் செய்வதற் கேதுவான துணைப்பொருள். இச் சொல் வடமொழியில் இல்லை. கரு + அணம் = கரணம் = 1. செய்கை. 2. கருவி. இச் சொல்லினின்று காரண, கார்ய என்னும் இரு சொற்களைப் பிறப்பித்துள்ளனர் வடமொழியாளர். இவை மேலையாரிய மொழிகளுள் ஒன்றிலுமில்லை. கருத்தல், செய்தல் என்னும் இருவினைகளும், வெளுத்தல் (சலவை செய்தல்) என்பதுபோல, தன்வினையாகவும் பிறவினையாகவும் ஆளப்பெற்றன. சமற்கிருதம் என்னும் மொழிச் சிறப்புப் பெயர் மட்டுமன்றிப் பாஷை (பாஷா) என்னும் பொதுப்பெயரும் தென்சொல் திரிபே. ஒருவர் வாயினின்று சொற்கள் வருவது, ஒரு துளையினின்று நீர் ஒழுகுவதும் வானத்தினின்று மழை பெய்வதும் போன்றிருக்கிறது. நீரொழுக்குச் சிறுத்திருப்பின் பெய்தல் என்றும், திரண்டிருப்பின் பொழிதல் என்றும் சொல்லப்படும். அங்ஙனமே, ஒருவர் கடல்மடை திறந்தாற்போல் தட்டுத்தடையின்றிப் பேசின், கோடை மழைபோற் பொழிகிறார் என்று சொல்வது வழக்கம். அதுபற்றியே சொற்பொழிவு என்னும் கூட்டுச் சொல்லும் தோன்றிற்று. ஆகவே, விரைந்து பேசுவது பொழிவதும் விரைவின்றிப் பேசுவது பெய்வதும் ஆகும் என்பது பெறப்பட்டது. பெய்தல் என்ற சொல் கொச்சை வழக்கில் பேய்தல் என்று வழங்கும். அதனால், பேய்ந்துங் கெட்டது, ஓய்ந்துங் கெட்டது என்னும் பழமொழி எழுந்தது. பேய் - பேயு - பேசு - பேச்சு. பேசு - (வ.) பாஷ் (bhash) - பாஷா ஒ.நோ. : தேய்-தேயு-தேசு (வ.) தேஜஸ். தேசு - (இ.) தேஜ். கொச்சை வழக்கினின்றும் செஞ்சொல் அல்லது இலக்கணச் சொல் பிறப்பதுண்டு. எ-டு : கொண்டுவா - கொண்டா - கொணா - கொணர். கொண்டா என்பது கொச்சைச் சொல்லாகவும், கொணா, கொணர் என்பன செஞ்சொல்லாகவும், கொள்ளப்படுதல் காண்க. இனி, ஆரிய முதனூலானதும், இறைவனாலும் இயற்றப்படாது என்றுமுள்ளதாகச் சொல்லப்படுவதுமான வேதத்தின் பெயரே, தென் சொல்லின் திரிபாயிருப்பது, சிறப்பாகக் கவனிக்கத் தக்கதும் மிக மகிழ்ச்சி தருவதுமாகும். விழித்தல் = 1. கண்திறத்தல், 2. கவனித்துப் பார்த்தல், 3. அறிதல், 4. விளங்குதல், 5. தெளிதல். விழி = 1. கண் 2. அறிவம் (ஞானம்). தேறார் விழியிலா மாந்தர் (திருமந். 177) விழி - L. vide, Gk. (w)eid. OE. wit, Skt. வித். வித் - வேத = அறிவு, அறிவு நூல், மறை. செவியுறுதல் = கேட்டல். செவியுறு - (வ.) ச்ரு - ச்ருதி = 1. கேள்வி, 2. கேட்டறியப்படும் வேதம். முன்னுதல் = கருதுதல், AS. mun (to think) முன்னம் = 1. கருத்து, 2 கருதும் மனம் (திவா.). முன் - முன்னம் - முனம் - மனம். (வ.) மனஸ். L. mens, E.mind. மன் + திரம் = மந்திரம் = 1. கருதுந்திறம் 2. (திண்ணிய) எண்ணம் (பிங்.) 3. சூழ்வு, 4. நிறைமொழியான மறைமொழி. (தொல். செய், 176). 5. திருமூலர் திருமந்திரம் 6. பேய்வினை மறைமொழி. (வ.) மந்த்ர. மன்னுதல் = பொருந்துதல், கூடுதல், நிலைபெறுதல். மன் - மன்று - மந்து - மந்தை மன் - மனை. மன் + திரம் = மந்திரம் = 1. வீடு. மந்திரம் பலகடந்து (கம்பரா. ஊர்தேடு. 138) 2. அரண்மனை (பிங்.). 3.திருக்கோவில் (பிங்.). 4. குதிரைச்சாலை (பிங்.). 5. குகை. அரிமந் திரம்புகுந்தால் (நீதிவெண். 2). மந்திரம் - (வ.) மந்திர மண்டுதல் = வளைதல், மண்டியிடுதல் = காலை மடக்குதல், மண்டு - மண்டலம் = 1. வட்டம், 2. வட்டாரம் 3. நிலப்பகுதி, 4. காலப்பகுதி (40 அல்லது 48 நாள்) 5. நூற்பகுதி 6. வேதநூற் பகுதி. மண்டுதல் = 1. நெருங்குதல், 2. கூடுதல், 3 நிறைதல். மண்டு - மண்டகம் = மக்கள் கூடும் கூடம். மண்டகப்படி என்னும் வழக்கை நோக்குக. மண்டகம் - மண்டபம். ஒ.நோ. வாணிகம் - வாணிபம். மண்டபம் - (வ) மண்டப. முன் - மன் = சிறப்பாகக் கருதியறியும் மாந்தன், மன்பதை = மக்கட் கூட்டம். OE. man, OS., OHG, man, Goth. manna, Skt. மனு - மனுஷ்ய - (மனுடன், மானிடன், மனிதன்) இங்ஙனம், சமற்கிருதச் சொற்களுள் ஐந்தி லிருபகுதி தமிழ். சமற்கிருதத்திலும் ஏனையாரிய மொழிகளிலும் உள்ள சுட்டுச் சொற்கட் கெல்லாம் மூலம், அ,இ,உ ஆகிய தமிழ் முச்சுட்டுகளே. கிறித்துவிற்கு முற்பட்ட காலத்திலேயே, ஆரியப் பூசாரியர் தம்மை நிலத்தேவரென்றும் தம் இலக்கிய மொழியைத் தேவமொழியென்றும் சொல்லி, பல்வேள்விச்சாலை முதுகுடுமிப் பெருவழுதி, இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பல்யானைச் செல்கெழு குட்டுவன் போன்ற மூவேந்தரை யும் ஏமாற்றி, ஆகமங்களை எழுதி வைத்துக்கொண்டனர். அவை அறிவாராய்ச்சி மிக்க இக்காலத்திற் செல்லா. நாடு தமிழ்நாடு. மக்கள் தமிழ்மக்கள். மதம் தமிழர் மதம். கோவில் தமிழரசர் அல்லது திரவிட அரசர் அல்லது தமிழ் நாட்டரசர் கட்டியவை. அவற்றிலுள்ள தெய்வப் படிமைகள் தமிழக் கம்மியர் செதுக்கியவை. எந்நாட்டிலும் தாய்மொழியில் வழிபாடு செய்வதே, இயல்பும் முறைமையும் பயன்படுவதும் இறைவனுக்கு ஏற்புமாகும். சமற்கிருதம் அயன்மொழியும், பெரும்பாலும் தமிழ்க் கலப்பா லானதும், தமிழை ஒழிக்க வேண்டுமென்றே புனையப்பட்டுக் கரவாகப் புகுத்தப்பட்டதும், எங்கேனும் என்றேனும் வழங்காது இலக்கிய மொழியாகவே யிருந்து வருவதும், தமிழர்க்கு இம்மியும் பொருள் தெரியாததும், ஆரியப் பூசாரியர்க்கும் தெளிவாய் விளங்காததும், தமிழர் முன்னேற்றத்திற்கு வலுத்த முட்டுக்கட்டையானதும், தமிழின ஒற்றுமையைக் குலைப்பதும், அவரது அடிமைத்தனத்தை நிலைநிறுத்துவதுமான போலிமொழி யாதலால், திருக்கோவில் தமிழ் வழிபாட்டை வேட்பதும், அதற்கேற்ற சட்டம் இயற்றுவதும், இறைவனும் எதிர்க்கவொண்ணாப் பிறப்புரிமையே. அதை மறுத்தற்கு ஒன்றிய நாட்டினங்கள் (U.N.) சார்பான உலகத் தீர்ப்பு மன்றத்திற்கும் அதிகாரமில்லை. தமிழ் விடுதலையே தமிழன் விடுதலை. தமிழன் இன்னும் விடுதலை பெறவில்லை. தமிழர், தாம் குமரிநாட்டுப் பழங்குடி மக்களின் வழியினர் என்னும் வரலாற்றுண்மையறிந்து, முழுவுரிமையும் விரைந்து பெறுக. - ``உரிமை வேட்கை'' பொங்கல் மலர் 1975 19 உரிமைப்பேறு ஒருவர்க்கு உரியது உரிமை. அது புறவுடல் பற்றியதும் அகவுடல் பற்றியதும் ஆக இருதிறப்படும். முன்னது எல்லார்க்கும் பொது; பின்னது பண்பட்ட மக்கட்கே சிறப்பு. மாந்தர்க்கு ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு அல்லது சிற்சில உரிமைகள் தேவை. அவை நீர்வேட்கையும் உணவு வேட்கையும் போன்றவை. அவற்றை முயன்றோ, பிறரை வேண்டியோ, அவரோடு போராடியோ, பெறல் வேண்டும். இருதிற வுரிமைகளும் பின்வருமாறு ஐவகைப்படும். 1. வளர்வுரிமை கணவன் மனைவியரின் இன்பக் கூட்டத்தோடு பிள்ளைப்பேறு தொடர்புபடுத்தப்பட்டிருப்பதால், பெற்றோர் விரும்பினும் விரும்பா விடினும் பெரும்பாலும் பிள்ளைகள் பிறந்துவிடுகின்றன. நிலத்தில் விதைத்த விதை முளைத்தல் போன்றே பிள்ளைப்பேறும் இருப்பதால், கேளாதே வந்து கிளைகளா யிற்றோன்றி (30) என்று நாலடியார் கூறுவது பொருந்தாது. பிள்ளைகள் பெற்றோர் வினையாலேயே பெறப்படுவதால், அவற்றை வளர்ப்பது அவர் கடமையும், அவரால் வளர்க்கப்படுவது அவற்றின் உரிமையும், ஆகின்றது. எம்மைக் கேளாது ஏன் பிறந்தாய்? என்று, பெற்றோர் தம் பிள்ளை வளர்ப்பைத் தட்டிக் கழித்துவிட முடியாது. குழவி பிறந்தவுடன் உணவிற்கு அழுவதே, ஓர் உரிமை வேட்கை யும் அதைப் பெறும் முயற்சியும் ஆகின்றது. சில சமயங்களில் தாய் வீட்டு வேலையில் ஆழ்ந்திருக்கும்போது, உரிய வேளையில் தன் சேய்க்குப் பால் கொடாதிருப்பதும் உண்டு. அவ் வேளையில் குழந்தையின் அழுகையொலி கேட்டுத் தாய் பால் கொடுப்பது வழக்கம். அதனால், அழுதபிள்ளை பால் குடிக்கும் என்னும் பழமொழியும் எழுந்தது. குழவிப் பருவத்திலும் குழந்தைப் பருவத்திலும் பிள்ளைப் பருவத்திலும் வளர்ப்பதும், பையற் பருவத்திலும் இளமட்டப் பருவத்திலும் உணவளித்துக் காப்பதோடு ஓர் அலுவற்கோ தொழிலுக்கோ பயிற்று விப்பதும், பருவம் வந்தபின் மணஞ்செய்து வைப்பதும், பெற்றோரின் கடமையாம். அந்நன்மைகளைப் பெறுவது பிள்ளைகளின் உரிமையாம். கைத்தொழிற் பயிற்சியினுங் கல்விப் பயிற்சி சிறந்ததாதலாலும், இருவகைப் பயிற்சியும் ஒருங்கே பெறுதலுங் கூடுமாதலாலும், தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல். (குறள். 67) ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் (குறள். 69) என்று திருவாய்மலர்ந்தார் திருவள்ளுவர். 2. வாழ்வுரிமை ஒருவர் இவ் வுலகில் வாழ்வதற்குக் கல்விப் பயிற்சி அல்லது தொழிற் பயிற்சி, வேலைப்பேறு, பாதுகாப்பு - இம் மூன்றும் இன்றியமையாதன. ஒரு குடும்பத்திற் பிறந்தவனுக்கு எங்ஙனம் வளர்வுரிமையுண்டோ, அங்ஙனமே ஒரு நாட்டிற் பிறந்தவனுக்கு வாழ்வுரிமையுண்டு. அதற்குரிய மூன்றையும் அளிக்கக் கூடியதும் கடமைப்பட்டுள்ளதும், ஆளும் அரசே. பயிற்சியின்றி எவ்வேலையும் பெறவும் செய்யவும் இயலாதாகை யால், நாட்டிற் பிறந்தவர்க்கெல்லாம், அவரவர் திறமை, விருப்பம், உடற்கூறு, மனப்பான்மை, மதிவன்மை முதலியவற்றிற்குத் தக்கவாறு, வெவ்வேறு துறையிற் பயிற்சியளித்தல் வேண்டும். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். ஆதலால், முதற்கண், நாலகவைக்கு மேற்பட்ட எல்லாப் பிள்ளை கட்கும் இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வியளித்தல் வேண்டும். எந்த அமைப்பும் நிலையாகவும் உறுதியாகவும் இருத்தற்கு அடிப்படை அகன்றிருத்தல் வேண்டும். இன்றேல், மேற்படை குலைந்துபோம். விளையும் பயிர் முளையில் தெரியும்.'' ஆதலால், துவக்கப்பள்ளிக் கல்விப் பருவத்திலேயே, பெற்றோரும் ஆசிரியரும் பிள்ளைகளின் திறமையையும் மனப்பான்மையையும் கூர்ந்து நோக்கியறிந்து, அகக்கரண வலிமை விஞ்சியவரை மேற்கல்விப் பயிற்சிக்கும், புறக்கரண வலிமை விஞ்சியவரைத் தொழிற்பயிற்சிக்கும், அனுப்புதல் வேண்டும். மேற்கல்விப் பயிற்சியிலும், அன்பும் தொண்டு மனப்பான்மையும் உள்ளவரை மருத்துவக் கல்விக்கும் நாவன்மையும் நினைவாற்றலும் நடுநிலையும் உள்ளவரைச் சட்டக் கல்விக்கும், ஓவிய வரைவாற்றலும் புதுப் புனைவுத் திறனும் கணித மதியும் உள்ளவரைப் பொறிவினை அல்லது சூழ்ச்சியவினைக் கல்விக்கும், இடைவிடாப் படிப்பும் எடுத்து விளக்குந் திறனும் உள்ளவரை ஆசிரியப் பயிற்சிக் கல்விக்கும், வளர்த்தியும் உடல் வலிமையும் அஞ்சாமையும் துணிசெயல் மறமும் உள்ளவரைப் படைத் துறைக் கல்விக்கும், இன்குரலும் இசைவிருப்பும் நீள்விரலும் உள்ளவரை இசைக்கல்விக்கும், தெய்வப்பத்தியும் தூயவொழுக்கமும் மறைநூல் விருப்பும் உள்ளவரை மதவியற் கல்விக்கும், இவ்வாறே பிற துறைகட்கும் தெரிந்தெடுத்தல் வேண்டும். கல்லூரிகளில் இடமில்லாவிடின், புதுக்கல்லூரிகளைத் தோற்று வித்தல் வேண்டும். காரைக் கட்டடம் இல்லாவிடின் கூரைக் கட்டடத்தி லேனும் தொடங்குதல் வேண்டும். கணிதம் வேண்டியவனை வரலாற்று வகுப்பிலும், மருத்துவப் பயிற்சி விரும்புபவனைச் சட்டக் கல்லூரியிலும், இங்ஙனமே ஏனைத் துறைகளிலும் தாறுமாறாகச் சேர்ப்பது, வண்டியிற் கட்டவேண்டிய காளையை வீட்டுக் காவற்கும், வீட்டுக் காவற்குரிய நாயை இறைவையேற்றத்திற்கும், பொதி சுமக்க வேண்டிய கழுதையை ஊர்வலத்திற்கும், ஊர்வலத்திற்குரிய யானையை நரகல் வண்டிக்கும், வைப்பதும் கட்டுவதும் அமர்த்துவதும் போன்றதே. தொழிற்பயிற்சியாயினும் மேற்கல்விப் பயிற்சியாயினும், பயிற்சி பெற்ற எல்லாரும் வேலைக்குரியர். பலருக்கு வேலையில்லை யென்று கைவிரிப்பது பொறுப்பாட்சியன்று. மக்கள்தொகை மிக்கிருப்பின், அதைப் பல்வேறு வழிகளில் மட்டுப்படுத்தலாம். ஆயின், இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் (குறள். 1062) என்று திருவள்ளுவர் இறைவன் மீதே வசை பாடியிருத்தலை நோக்குக. மக்கள்தொகை மட்டிற்கு மிஞ்சிய இக்காலத்தில், தனியுடைமை யாட்சிக்கு இடமின்றேல், அளவுடைமை யாட்சியும், அதுவும் போதா தெனின் கூட்டுடைமை யாட்சியும், இன்றியமையாதனவாம். ஒரு நாட்டிற் பிறந்து வேலைப் பயிற்சி பெற்ற எல்லார்க்கும் குலமதக் கட்சி வேறு பாடின்றித் திறமைக்கேற்றவாறு வேலையளிப்பதே கூட்டுடைமையாட்சி யாம். அதுவே இரசியாவிலும் சீனாவிலும் இன்று இருந்துவருவது. அதைப் பொதுவுடைமையாட்சியென்பது தவறு. பொதுவுடமையாட்சி பணமின்றிக் குடும்ப வாழ்க்கைபோல் நடப்பது. அது ஒரு நாட்டிற்கு ஏற்காது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை (குறள். 302) என்று அக்காலத்திலேயே திருவள்ளுவர் கூறியிருத்தல் காண்க. அளவுடைமையாட்சி யெனினும் வரம்புடைமையாட்சி யெனினும் ஒக்கும். இனி, குருடர் முடவர் முதலியோர் ஐயம் (பிச்சை) பெறுவதும், வறிய நாடுகள் செல்வ நாடுகளினின்று உதவி பெறுவதும் வாழ்வுரிமையின்பாற் படுவதே, 3. விடுதலையுரிமை தனிப்பட்ட அடிமை தன் தலைவனிடத்தினின்றும், பண்ணை யாள்கள் தம் ஆண்டையினின்றும், ஒரு குலத்தார் இன்னொரு குலத்தாரி னின்றும், ஒரு நாட்டார் இன்னொரு நாட்டாரினின்றும், விடுதலை பெறுவது விடுதலையுரிமையாம். ஆடவர்போற் கல்வி பெறுவதும் தேர்தல்களிற் குடவோலை யிடுவதும், அலுவலகங்களில் ஆடவருடன் வேலை செய்வதும், கணவன் இறந்தபின் கைம்மை (கைம்பெண்) வாழ்வு வாழ்வதும் மறுமணம் செய்து கொள்வதும், பெண்டிர் பெற வேண்டிய உரிமைகளாம். குலக் கட்டுப்பாடும் பெற்றோர் தடையும் மீறிச் சிறந்த முறையில் உலகம் போற்றுமாறு கூடி வாழ்வது, மணமக்கள் உரிமையாம். இனி, கட்சித் தலைவர்க்குரியது பேச்சுரிமை; எழுத்தாளருக்கும் நூலாசிரியருக்கும் உரியது எழுத்துரிமை; ஒருவன் தன் தாய்மொழியிற் பேச இடமிருப்பது மொழியுரிமை; ஒரு வகுப்பார் ஒருவகை உணவையுண்ணச் சட்டத் தடையில்லாதிருப்பது உணவுரிமை. இனி, தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமான உலக முதல் உயர்தனிச் செம்மொழியாதலால் அனைத்திந்திய ஆட்சி மொழியாகத் தமிழும் அமைவது தமிழரின் மொழியுரிமையாம். 4. பொதுநலவுரிமை தனி வாழ்க்கையில் ஒருவன் எவ்வளவும் ஈட்டலாம்; எங்குஞ் செல்ல லாம். ஆயின், கூட்டு வாழ்க்கையில், பொதுநலம்பற்றிப் பற்பல கட்டுப் பாடுகளும் வரம்பீடுகளும் வகுக்கப்பட்டுள்ளன. அவை தனிவாழ்க்கையில் உரிமைத் தடையேனும், கூட்டு வாழ்க்கையில் உரிமையேயாம். இரு பிள்ளைகட்குமேற் பெறக்கூடாதென்பது பிள்ளை வரம்பீடு; பதினைந்து செய்கட்குமேல் நிலம் வைத்திருக்கக் கூடாதென்பது, செல்வ வரம்பீட்டில் ஒருவகையான நிலவரம்பீடு. இவையெல்லாம், ஒரு மாநகரிற் பகல் வேளையில் போக்குவரத்து மிக்க இடத்தில், ஒருவன் ஒரு சாலையின் குறுக்கே செல்லக் கூடாதென்பது போன்றவையே. 5. மதவுரிமை உலகிற் காணப்பட்ட பொருள்களைப் பற்றியும் கருத்து வேறு பாடிருக்குமாறு, மக்கள் மனப்பான்மை பல்திறப்பட்டுள்ளது. ஆகவே, காணப்படாத கடவுளைப் பற்றியும் மறுமையைப் பற்றியும் கருத்து வேறு பாட்டிற்கு எத்துணை யிடமுண்டென்பதைச் சொல்லவே வேண்டுவ தில்லை. மதநம்பிக்கையெல்லாம் ஏரண முறைக்கும் அறிவியல் மெய்ப்பிற் கும் அடங்காது, அப்பாற்பட்டு, ஓரளவு குருட்டுத்தனமாகவோ குரங்குப் பிடியாகவோ இருப்பினும், உயிர்வாழ்வையும் பொருட்படுத்தாத அளவிற்கு மக்கள் மனத்தை இறுகப் பிணிக்கும் செய்திகளுள் தலைசிறந்தது மதமாதலால், பண்பாடு மிக்க செங்கோலரசெல்லாம், தம் குடிகட்கு மதவுரிமை யளித்தேயுள்ளனர். நம் இந்தியக் குடியரசு பன்னாட்டுக் கூட்டாட்சியாதலால், மதவுரிமை யளித்திருப்பது மிகத் தக்கதே. இனி, சிவமதமும் திருமால் மதமும் தென்னாட்டுத் தூய தமிழ் மதங்களாதலால், இனிமேல் தமிழ்நாட்டுத் திருக்கோவில்களில், பயிற்சி பெற்ற பல்வகைத் தமிழ் வகுப்பாரே, தமிழில் மட்டும் வழிபாடாற்றுதல் வேண்டும். இது தமிழர் மதவுரிமையாகும். பிராமணர் வெளிநாட்டினின்று வந்தேறிகளின் வழியினராதலாலும், சிறுபான்மையராதலாலும், தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருப்ப தாலும், ஆரியம் திரவிடத்தின் திரிபாதலாலும், ஆரிய மந்திரங்களெல்லாம் தமிழர் அறியாத சிறுதெய்வக் கொலைவேள்வி வழிபாடு பற்றியனவாத லாலும், சமற்கிருதம் வேதமொழியும் தமிழுங் கலந்த இலக்கிய மொழி யாதலாலும், ஆரியமொழி தேவமொழியென்றும் பிராமணர் நிலத்தேவ ரென்றும் ஏமாற்றப்பட்டதனாலேயே, இடைக்காலத் தமிழர் பிராமணர் ஆரிய மந்திரங்களைக் கொண்டு திருக்கோவில் வழிபாடு செய்ய இடந்தந்தனராதலாலும், அவ் வேமாற்று இன்னுந் தொடர இம்மியுந் தகுதியில்லை என அறிக. பிராமணர் தமிழுக்கு உண்மையாயிருந்து தமிழிலேயே வழிபாடு நடத்தின், அவர் பூசைத் தொழிலைத் தொடர்ந்து செய்யலாம். இதுகாறும் உயர்திணையான மக்களின் பல்வேறு உரிமைகள் கூறப்பட்டன. இனி, வாயில்லா ஏழை அஃறிணை உயிரினங்கள் சிலவற்றின் உரிமையை நாம் நமதுபோற் பேண வேண்டாவா? அதையும் பேணா விடின், நாம் உயர்திணையென்று தருக்குவது எங்ஙன் தகும்? மாடுகளும், குதிரைகளும், ஏருழவும் நீரிறைக்கவும் வண்டியிழுக்க வும், இரவும் பகலும் வற்புறுத்தப்பட்டு, போதிய வுணவின்றியும் முரட்டுத் தனமாக அடியுண்டும் குத்துண்டும், புண்மேற் புண்பட்டும் எத்துணைத் துன்பப்படுகின்றன! அவை எங்ஙன் யாரிடம் முறையிடும்? எங்ஙனம் மாநாடு கூடும்? எங்ஙனம் கூட்டணி சேரும்? எங்ஙனம் வேலை நிறுத்தஞ் செய்யும்? உண்ணாநோன்பினாலும் வன்செயலாலும் தம் தொல்லைகளை யும் துன்பங்களையும் தெரிவிக்கவோ தீர்த்துக் கொள்ளவோ இம்மியும் அவற்றிற்கு இடமில்லையே! மக்களிடத்து அன்பு செய்ய வேண்டுமென்றும், மற்ற வுயிர்களிடத்து அருள்பூண்டொழுக வேண்டுமென்றும், ஆயிரக்கணக்கான பனுவல்களும் நம்மிடத்துள்ளன. இருந்தும் என் பயன்? அமெரிக்கரும் மேனாட்டாரும் நம்போல நடிக்காவிடினும், பொறிவினைப் புரட்சியை உண்டுபண்ணி எல்லா வினைகளையும் சூழ்ச்சியத் துணைகொண்டே செய்துவருவதால், குதிரையினமும் கழுதையினமும் முற்றும் விடுதலை பெற்றுள்ளன. மாட்டினம் உணவிற்கன்றி வேறெவ் வகையிலுங் கொல்லப்படுவதில்லை. நாமும் மேலையர்போற் பொறிவினைப் புரட்சியை யுண்டாக்கி, மேற்கூறிய விலங்கினங்களின் உரிமையைக் காப்போமாக. - ``உரிமை வேட்கை'' பொங்கல் மலர் 1973 ----- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள் தி.பி. 1933 (1902) : திருநெல்வேலி மாவட்டம், சங்கரநயினார் கோயிலில் சுறவம் - 26ஆம் நாள் (7.2.1902) பிறந்தார். தந்தை : ஞானமுத்து தாய் : பரிபூரணம் தி.பி. 1938 (1907) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் மிசௌரி தொடக்கக்கல்வி : நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப் பள்ளி. உயர்நிலைக்கல்வி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, திருச்சபை விடையூழிய உயர்நிலைப் பள்ளி (9,10,11 - வகுப்பு) தி.பி. 1950-52(1919-21) : முகவை மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள சீயோன் நடுநிலைப் பள்ளியில்முதற்படிவ ஆசிரியப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1952-53(1921-22) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில் (தாம் பயின்ற பள்ளி) உதவி ஆசிரியராய்ப் பணியாற்றினார். தி.பி. 1955 (1924) : மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம்நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றி பெற்றார்.(ï› வாண்டில் பாவாணரைத் தவிர வேறொருவரும்வெற்றி பெறவில்லை). உதவித்தமிழாசிரியர், சென்னை, திருவல்லிக் கேணிக் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். தி.பி. 1956 (1925) : தமிழாசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். சிறுவர் பாடல் திரட்டு நூல் வெளியீடு. தி.பி. 1957 (1926) : திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் இவர் ஒருவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.பி. 1959 (1928) : தலைமைத் தமிழாசிரியர், மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு. தி.பி. 1961 (1930) : நேசமணி அம்மையாரை மணந்தார். தி.பி. 1963 (1932) கிறித்தவக் கீர்த்தனம் - நூல் வெளியீடு. தி.பி. 1965 (1934) : தலைமைத் தமிழாசிரியர், பிசப்பு ஈபர் உயர்நிலைப் பள்ளி, புத்தூர், திருச்சிராப்பள்ளியில் பணியாற்றி னார். கீழைக்கலைத் (B.O.L.) தேர்வில் வெற்றி பெற்றார். தி.பி. 1968 (1937) : முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக் கொண்டு - செந்தமிழ்க்காஞ்சி நூல் வெளி யீடு. இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார். ``கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்''நூல் வெளியீடு. தி.பி. 1971 (1940) : ஒப்பியன் மொழிநூல் முதற்பாகம் இயற்றமிழ்இலக்கணம்ஆகிய நூல்கள் வெளியீடு. கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கண நூல் வெளியீடு. தி.பி. 1972 (1941) : ``தமிழர் சரித்திரச் சுருக்கம்'' வெளியீடு : தமிழக இளைஞர் மன்றம், திருச்சிராப்பள்ளி. ``தமிழன் எப்படிக் கெட்டான்'' ஆகிய நூல்கள் வெளியிடல். தி.பி. 1974 (1943) : தலைமைத் தமிழாசிரியர், சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். : சுட்டு விளக்கம் - நூல் வெளியீடு. - பண்டிதமணி கதிரேசனார் தலைமையில் நடை பெற்ற முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். தி.பி. 1975 (1944) : - தமிழ்த்துறைத் தலைவராகச் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றினார். - திரவிடத்தாய் - நூல் வெளியீடு. தி.பி. 1980 (1949) : சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - நூல் வெளியீடு. பாவாணர்க்குத் தவத்திரு மறைமலையடிகளார் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். பாவாணர் அவர்கள் சேலம் கல்லூரியில் பணி யாற்றியபோது தென்மொழி ஆசிரியர் பெருஞ்சித்திர னார் அவர்கள் அக்கல்லூரியில் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.பி. 1981 (1950) : உயர்தரக் கட்டுரை இலக்கணம் (மு.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1982 (1951) : உயர்தரக்கட்டுரை இலக்கணம் (இ.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1983 (1952) : சென்னைப்பல்கலைக்கழகத்தில் கலைமுதுவர் (M.A.) பட்டம் பெற்றார். பழந்தமிழாட்சி - நூல் வெளியீடு. தி.பி. 1984 (1953) : முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் - நூல் வெளியீடு. தி.பி. 1985 (1954) : தமிழ்நாட்டு விளையாட்டுகள் - நூல் வெளியீடு. தி.பி. 1986 (1955) : `A Critical Survey of Madras University Lexicon' என்னும் ஆங்கில நூல் வெளியிடப் பெற்றது. தி.பி. 1987 (1956) : தமிழர் திருமணம் - நூல் வெளியீடு. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1988 (1957) : பெரியார் ஈ.வே.ரா. தலைமையில் சேலம் தமிழ்ப் பேரவை இவரின் தொண்டைப் பாராட்டித் `திராவிட மொழிநூல் ஞாயிறு' எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. திசம்பர் 27, 28, 29-ல் தில்லியில் நடைபெற்ற அனைத் திந்தியக் கீழைக்கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார். தி.பி.1990 (1959) : தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல் லாக்கத்தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித்தமைக் காகத் தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு ஆளுநரால் அவருக்குச் செப்புப் பட்டயம் வழங்கப்பட்டது. மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட `தென்மொழி' இதழ் பாவலரேறு பெருஞ் சித்திரனார் அவர்களால் தொடங்கப் பெற்றது. தனித்தமிழியக்க வளர்ச்சிக்கு இவ் விதழ் இன்றளவும் பெரும் பங்காற்றி வருகிறது. தி.பி. 1992 (1961) : சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியின் சீர்கேடு - நூல் வெளியீடு. - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால் எனக்கு வறுமையும் உண்டு, மனைவியும், மக்களும் உண்டு - அதோடு எனக்கு மானமும் உண்டு - என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேறினார். என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார். தி.பி. 1994 (1963) : துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு. தி.பி. 1995 (1964) : முனைவர் சி.இலக்குவனார் தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் - தமிழ்ப் பெருங் காவலர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. ``என் அண்ணாமலைநகர் வாழ்க்கை'' என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழியில் வெளிவந்தது. தி.பி. 1997 (1966) : இசைத்தமிழ்க் கலம்பகம் பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் ``The Primary Classical Language of the World'' என்னும் நூல்கள் வெளியீடு. தி.பி. 1998 (1967) : தமிழ் வரலாறு வடமொழி வரலாறு “The Language Problem of Tamilnadu and Its Logical Solution” ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 1999 (1968) : மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இவரின் மணிவிழாவைக் கொண்டாடி மொழிநூல் மூதறிஞர் எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 06-10-1968-ல் இவரைத் தலைவராகக் கொண்டு உலகத் தமிழ்க் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? வண்ணனை மொழிநூலின் வழுவியல் - ``Is Hindi the logical solution of India'' ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2000 (1969) : பறம்புக்குடியில் உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு. இம் மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் முனைவர் சி. இலக்குவனார், முனைவர் வ. சுப. மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது. இம் மாநாட்டில் - திருக்குறள் தமிழ் மரபுரை இசையரங்கு இன்னிசைக் கோவை “jÄœ fl‹bfh©L jiH¡Fkh?'' - ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2002 (1971) : பறம்புமலையில்தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்றபாரி விழாவில்பாவாணர் செந்தமிழ்ஞாயிறு என்று பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தென் மொழியில் அறிவிக்கப்பட்ட `செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்டம்' வகுக்கப் பெற்றது. தி.பி. 2003 (1972) : தஞ்சையில் இவர் தலைமையில் உலகத் தமிழ்க்கழக மாநாடு - தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடாக நடந்தது. - தமிழர் வரலாறு, தமிழர் மதம் ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2004 (1973) : வேர்ச்சொற் கட்டுரைகள் நூல் வெளியீடு. தி.பி. 2005 (1974) : 8.5.1974-ல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநராகத் தமிழ்நாட்டரசால் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் அமர்த்தப்பட்டார். செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் பேரகர முதலியின் முதல் மடல முதற் பகுதி அவரின் மறைவிற்குப் பிறகு 1985-ல் வெளியிடப்பட்டது. தி.பி. 2009 (1978) : மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை - நூல் வெளியீடு. சென்னையில் உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரனார் தலைமை தாங்கினார். தி.பி. 2010 (1979) : தமிழ் இலக்கிய வரலாறு - நூல் வெளியீடு. வாழ்நாள் முழுவதையும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய இப் பெருமகனுக்குத் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் `செந்தமிழ்ச் செல்வர்' என்னும் சீரிய விருது வழங்கப்பட்டது. தி.பி. 2011 (1980) : `Lemurian Language and Its Ramifications - An Epitome' எனும் ஆங்கில நூல் மதுரையில் நடை பெறவிருந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு அயல் நாட்டுப் பேராளர்களுக்காக (52 பக்க அளவில்) உருவாக்கப்பட்டது. தி.பி. 2012 (1981) : மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் என்னும் தலைப்பில் தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டிப் பேசினார். சுறவம் 2ஆம் நாள் சனவரி 15-ல் இரவு 12.30-க்கு இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்தார். தாய்மொழிப்பற்றே தலையாயப்பற்று தாய்மொழிப் பற்றில்லாத் தன்னாட்டுப் பற்றே தன்னினங் கொல்லவே தான்கொண்ட புற்றே மொழியொன் றில்லாமலே இனமொன்று மில்லை இனமொன்றில் லாமலே நாடொன்று மில்லை! மதியுணர் வின்றியே மடிவெனுந் தூக்கம் மயங்கிக் கிடக்கின்றாய் மறுத்தெழு தமிழா! கரந்தும் அண்டைவீட்டுள் கால்வைத்த லின்றிக் கண்மூடித் தூங்குவாய் கடிதெழு தமிழா! வருமானங் குன்றியே வறியவ னானாய் வாழ்நாள் வீணாகாமல் வல்லெழு தமிழா! அருசுவை யுண்டியே ஆக்கிடின் உன்கை அருந்த மறுக்கின்றார் ஆய்ந்தெழு தமிழா! ஒலியொடு வரியும்பின் ஒழியவே அண்மை உறும்தேவ நாகரி உணர்ந்தெழு தமிழா! பார்முதல் பண்பாடு பயின்றவன் தமிழன் பலரையும் உறவெனப் பகர்ந்தவன் தமிழன். பிறப்பாலே சிறப்பில்லை தமிழா - இதைப் பெருநாவ லன்சொன்னான் தமிழா! மறத்தாலும் திறத்தாலும் தமிழா - மேன்மை மதியறி வொழுக்கத்தால் தமிழா! தமிழினுக் குலகினில் தகுவதே தலைமை தமிழரும் அடையவே தாழ்விலா நிலைமை இமிழ்தரு மொழியியல் எய்துக நலமே எமதுமெய் வரலாறே எழுகவே வலமே. வேனிலிற் கான்மலை வெம்மைகொள் பாலையின் விளைநில மாவதிந் நாடு மின்னும்பல் மணிகளும் மிகுவிலை யாற்பெற மேலுலகும் விரும்பும் நாடு கொன்றுதன் மகனையே கொடுமையை நிமிர்த்துச்செங் கோன்முறை குலவிய நாடு நீலியின் கணவற்கு நிகழ்த்திய வாய்மொழி நிறைவேற்றின வேளாளர் நாடு அறியாது முரசணை அயர்ந்திடும் புலவர்க்கும் ஆலவட்டம் விசிறும் நாடு சித்தரின் மருத்துவம் சிறந்தபொன் னாக்கமும் சிலம்பொடு திகழ்ந்ததிந் நாடு பாவாணர் பொன்மொழிகள் மாந்தனெனக் குமரிமலை மருவியவன் தமிழனே! மாண்புடைய நாகரிகம் மலர்ந்தவனும் தமிழனே! மொழிவளர்ச்சி முதன்முதலாய் முற்றியவன் தமிழனே! மோனையுடன் சிறந்தசெய்யுள் பேசியவன் தமிழனே! துறைநகரால் கடல்வணிகம் தோற்றியவன் தமிழனே! பிறநிலத்து வணிகரையும் பேணியவன் தமிழனே! தொன்மையொடு முன்மை; தொன்மையொடு நன்மை; தாய்மையொடு தூய்மை; தழுவிளமை வளமை. பகுத்தறிவே மானமுடன் படைத்தவனும் தமிழனே! பகுத்தறிவால் திணைவகுத்த பண்புடையான் தமிழனே! பனிமலையை முதன்முதற்கைப் பற்றியவன் தமிழனே! பலமுறைமீன் புலிவில்அதிற் பதித்தவனும் தமிழனே! பலகலையும் பலநூலும் பயிற்றியவன் தமிழனே! பலபொறியும் மதிலரணிற் பதித்தவனும் தமிழனே! இருதிணைக்கும் ஈந்துவக்கும் இன்பமுற்றான் தமிழனே! ஈதலிசை யாவிடத்தே இறந்தவனும் தமிழனே! கடல்நடுவே கலஞ்செலுத்திக் கரைகண்டவன் தமிழனே! கலப்படையால் குணத்தீவைக் காத்தவனும் தமிழனே! பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி மிகுத்ததனால் உண்டோ பயன்? தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான். தமிழா உன்றன் முன்னவனே தலையாய் வாழ்ந்த தென்னவனே அமிழ்தாம் மாரி அன்னவனே அழகாய் முதனூல் சொன்னவனே. பஃறுளி நாட்டிற் பிறந்தவனாம் பகுத்தறிவுப் பண்பிற் சிறந்தவனாம் பகையாம் மலையை உறழ்ந்தவனாம் பாலும் புலியிற் கறந்தவனாம். அன்பென்பது ஏசுவும் புத்தரும்போல் எல்லாரிடத்தும் காட்டும் நேயம். ஆட்சி ஒப்புமை நட்புறவிற்கே அன்றி அடிமைத்தனத்திற்கு ஏதுவாகாது. ஓய்வகவையைத் தீர்மானிக்கும் அளவையாய் இருக்க வேண்டியது பணித் திறமையேயன்றி அகவை வரம்பன்று. துறவு தம்மாலியன்றவரை பொதுமக்கட்குத் தொண்டு செய்வது சிறந்த துறவாகக் கருதப்படுகின்றது. இந்தியாவில் விலங்கினம் இருக்கும் நிலைமையை உணர்த்த அவற்றின் கழுத்துப்புண்ணும் விலாவெலும்புத் தோற்றமும் போதும். கட்டுப்பாட்டில்லாவிடின் காவலனுங் காவானாதலாலும் செங்கோலாட்சியொடு கூடிய இருகட்சியரசே குடியரசிற் கேற்றதாம். பிறமொழி பேசும் சிறுபான்மையர் பிள்ளைகளும் அவ்வந் நாட்டுப் பெரும்பான்மை மொழியையே கற்றல் வேண்டும்.... கால் மொழிவாரி மாநிலப் பிரிவு என்பது பொருளற்றதும் பயனற்றதுமாம். மாந்தன் வாழ்க்கை, இல்லறம் துறவறம் என இருவகைத்து. மனைவியோடு கூடி இல்லத்திலிருந்து அதற்குரிய அறஞ் செய்து வாழும் வாழ்க்கை இல்லறம்; உலகப் பற்றைத் துறந்து அதற்குரிய அறத்தோடு கூடிக் காட்டில் தவஞ் செய்து வாழும் வாழ்க்கை துறவறம். ஒருவன் இல்லத்தில் இருந்து மனையாளோடு கூடிவாழினும் அறஞ் செய்யாது இருப்பின் அவன் வாழ்க்கை இல்லறமாகாது வெறுமனான இல்வாழ்க்கையாம். இலங்கையில் இடர்ப்படும் மக்கள் பெரும்பாலும் தமிழராயிருத்தலின் அவர்களின் உரிமையைப் பேணிக்காத்தற்கு அங்குள்ள இந்தியத் தூதாண்மைக் குழுத்தலைவர் தமிழராகவே இருத்தல் வேண்டும். கருத்துவேறுபாட்டிற் கிடந்தந்து ஒரு சாராரை ஒருசாரார் பழிக்காதும் பகைக்காதும் இருப்பதே உண்மையான பகுத்தறிவாம். இவ் வுலகில் தமிழனைப் போல் முன்பு உயர்ந்தவனு மில்லை; பின்பு தாழ்ந்தவனும் இல்லை. இற்றைத் தமிழருட் பெரும்பாலாரும் தம்மைத் தாமே தாழ்த்துவதிலும், இனத்தாரைப் பகைத்துப் பகைவரை வாழவைப்பதிலும், பகைவர் மனங்குளிரத் தம் முன்னோரைப் பழிப்பதிலும், தம்மருமைத் தாய்மொழியைப் புறக்கணித்துப் பகைவரின் அரைச்செயற்கைக் கலவை மொழியைப் போற்றுவதிலும் ஒப்புயர்வற்றவராய் உழல்கின்றனர். தந்தையும் அரசும் ஒரு குடும்பத்திற் பிறந்த பிள்ளைகட்கெல்லாம் ஊணுடை யுறையுள் அளிக்கத் தந்தை கடமைப்பட்டிருப்பது போன்றே, ஒரு நாட்டிற் பிறந்த குடிகட்கெல்லாம் வேலையும் பாதுகாப்பும் அளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது. கோவில் வழிபாடும் இருவகைச் சடங்குகளும் தமிழில் நடைபெற்றாலொழிய, தமிழ் விடுதலையடைந்து தன் பழம்பெருமையை மீளப் பெற முடியாது. தமிழுயர்ந்தால்தான் தமிழன் உயர்வான். அந்தணன் ஐயன் என்னும் பெயர்கள் முதன்முதல் தமிழகத் துறவியரையே குறித்தது போன்று பார்ப்பான் என்னும் பெயரும் முதன்முதல் தமிழப் பூசாரியையே குறித்தது. தமிழன் என்னும் இனம் தமிழ்பற்றியதே யாதலால். தமிழ் தோன்றிய இடமே தமிழன் பிறந்தகமாம். அது தென்வாரியில் மூழ்கிப் போன குமரிநாடே. 2ஆம் நூற்றாண்டில் வெளிநாட்டினின்று வந்த முகமதியர் சிறுபான்மையரேனும் ஆங்கிலர் நீங்கியவுடன் தமக்கெனக் கோன்மை (Soveriegnity) கொண்ட தனிநாடு பெற்றுவிட்டனரே. நூறாயிரம் ஆண்டிற்கு முன்னமே தோன்றி ஒருகால் நாவலந்தேயம் முழுதும் ஆண்ட பழங்குடி மக்களான தமிழர் ஏன் தம் நாட்டையும் பெறவில்லை?..... இதற்குக் கரணியம், முகமதியர்க்குள்ள ஓரின வுணர்ச்சியும் ஒற்றுமையும் மறமும் மானமும் இற்றைத் தமிழருட் பெரும்பாலார்க்கு எள்ளளவும் இன்மையேயாம். எல்லாக் கேடுகளும் பாடுகளும் துன்பங்களும் தொல்லைகளும் நீங்கி எல்லாரும் இன்பமாக வாழவேண்டு மென்னும் இன்னருள் நோக்கம் கொண்டே தெள்ளிய மனமும் ஒள்ளிய அறிவும் திண்ணிய நெஞ்சும் நுண்ணிய மதியும் கொண்ட திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். பணநாட்டமின்றி, எல்லாரும் தத்தமக்கியன்ற பணியைச் செய்து, எல்லாப் பொருள்களையும் ஒத்த உரிமையோடு பயன்படுத்தி ஒற்றுமையாக ஒருங்கே வாழும் குடும்ப அல்லது கூட்டுக் குடும்ப வாழ்க்கையே பொதுவுடைமை யாகும். ஒரு குடும்பத்திற் பிறந்த எல்லார்க்கும் எங்ஙனம் திறமைக்குத் தக்க பணியும் தேவைக்குத் தக்க நுகர்ச்சியும் உண்டோ, அங்ஙனமே ஒரு நாட்டிற் பிறந்த எல்லார்க்கும் இருத்தல் வேண்டும். இதுவே பாத்துண்டல் என்னும் வள்ளுவர் கூட்டுடைமை. 